திரு.வி.க. தமிழ்க்கொடை 21 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 21 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 26+318=344 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை கடவுள் காட்சியும் தாயுமானாரும் கடவுள் ஆய்வுக்கு முடிவு இல்லை. சுட்டுணர்வு கொண்டு கடவுளை முற்றுணரற்கியலாது. ஆதலால், கொலை களவு கள் காமம் பொய் முதலிய மனமாசுகளை நல்லறிவால் கழுவி உண்மையில் மூழ்கி நிற்பின், அவர்கட்குக் கடவுள் முழுநிலை புலனாகும் என்று அநுபூதிமான்கள் அறிவுறுத்தியிருக்கிறார். அவ்வநுபூதிமான்களுள் தாயுமானாரும் ஒருவர். முன்னுரையில் கடவுளைக் காணும் நெறி காட்டுகிறார் திரு.வி.க. குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய கடவுள் காட்சி என்னும் கட்டுரையே இப்பெயரிய சுவடியாக வெளிப்பட்டுளது. தாயுமானார் அருளிய ஐவகை யெனும் பூதம் என்னும் பாடலின் பொருள் விரிவாக்கமே கட்டுரையாய், நூலாய் உருக்கொண்டது என்க. (1928) உயிர்கள் அறியாமைக்கட்கு விலகி ஒளியுற இறைவன் உடலம் தந்தான்; உலகு தந்தான்; உயிரின் பொருட்டு அடியார் வாயிலாக அருள்நூல்களை வழங்கினான். சான்றோர்களால் சமயங்கள் உருவாக்கப்பட்டன. அச்சமயங்கள் அனைத்தும் ஒரு கடவுளையே அடையும் வழிகள் என்னும் பொதுநிலை உருவாகச் செய்தான். இறைவன் செயற்பாடுகள் இவை எனின், உயிர்களின் கடமை என்ன? இறையருளைப் பெற உயிர்களுக்குத் தடையாக இருப்பவை பொய் முதலாம் மாசுகள். உண்மையே கடவுள். உண்மையாலேயே கடவுளை அடைய முடியும். ஆதலால் பொய் முதலாம் மாசுகளை உயிர்கள் தம் பகுத்தறிவு கொண்டு விலக்குதல் வேண்டும். பொய் முதலியவை அகன்ற மெய்யர் அறிவில் இறைவன் புலப்படுவான். அம்மெய்யறிவால் அடையும் பேறு சமரச அறிவு; பொய்யிலா மெய்யன் சமரச அறிவால் இறையோடு இரண்டறக் கலந்து பிறவா இறவா நிலையை எய்துகிறான். நல்லியல்பை விழையும் ஒருவன் சத்துணவு உண்டு வருவானாக. அவ்வுணவுடன் அவன் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பானாக. அவைகளுடன் அவன் அழிவிலாச் சத்தியத்தை - உண்மையை - கடவுளை- இடையறாது எண்ணி வருவானாக. அவ்வாழ்வுடைய மக்களுக்கு ஆண்டவன் அருள் கூடும். அருளால் சமரச ஞானம் உண்டாகும்; சமரச ஞானத்தால் அவன் கடவுள் காட்சி பெறுவன் என நூலை நிறைவு செய்கிறார். ஒருபாடலின் ஆழிய எண்ணம் இந்நூலாக்க மூலம். இதன் விளக்க உருவாக்கம் கூடிய இடமும் காலமும் எவை? இயற்கை வளம் செறிந்த இடங்களிலும் வெட்ட வெளிகளிலும், இன்னோரன்ன சில இடங்களிலும் அந்திவான் கூடும் பொழுது யான் பாடி இன்புறும் பாடல்களில் இஃதும் ஒன்று என்கிறார். இடமும் காலமும் முதற்பொருள்கள்! ஆதலால் மூலம் தந்த மூலம் இவ்விளக்கம் என்க. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் பொழிவு இதழில் ஏறி நூலுருக் கொண்டவற்றுள் இந்நூல் ஒன்று. 26.1.1929இல் (தைப்பூசம்) நிகழ்ந்த சன்மார்க்க மாநாட்டில் திரு.வி.க. பொழிந்த தலைமையுரை வழி வெளிப்பட்ட நூலே இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்னும் இந்நூலாம். அருள் ஒளி பரப்ப வந்த எழுஞாயிறாக வள்ளலாரைக் காண்கிறார் திரு.வி.க. இற்றைக்கு ஒருநூற்றாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு இராமலிங்க சுவாமிகள் என்கிறார். திருவுள்ளம் காணும் வழியை, ஒருவரது உள்ளக் கிடக்கையையுணர அவரது உரைகளைக் கருவியாகக் கோடலே அறம் என அறுதியிடும் திரு.வி.க. அவ்வழியே வழியாகக் காண்கிறார்; காட்டுகிறார். திருவள்ளுவரை உணர அவர் அருளிய திருக்குறளை யான் கொள்வேனேயன்றிப் பிறரால் எழுதப் பெற்ற அவர்தம் வரலாற்றைக் கொள்ளேன். அவ்வழக்கை ஒட்டியே இராமலிங்க சுவாமிகளைக் காண அவர் அருளிய திருவருட்பா என்னும் கண்ணாடியை உறுகருவியாகக் கொள்வேன் என உறுதி மொழிகிறார். மேலும், படங்கள் உருவத்தை உணர்த்துமே யன்றி உள்ளத்தை உணர்த்தமாட்டா. உள்ளத்தை உணர்த்தும் படங்களும் உண்டோ? உண்டு. அவைகள் யா? அவைகளே நூல்கள். ஒருவரது உள்ளநிலையை அவர் எழுதிய நூல்கள் வாயிலாக உணர்வதே சால்பு என்கிறார். தம் பொழிவை நாற்பகுப்பாக்கிக் கொள்கிறார். அறிவுறுத்தல், முறை, பேறு, இளமை முயற்சி என்பவை அவை. பொழிவுப் பொழுதினும் பெருக்கமான முழுமையான பாடல்களை நூலுருவின் போது கொண்டதையும் புலப்படுத்து கிறார். அதனால், மேற்கோள் சான்றொப்பப் பாடல்கள், நூலளவில் செம்பாதிக்கு மேலும் இடம் பெறுகின்றன. திரு.வி.க.வின் அருட்பாத் தோய்வையும், வள்ளலார் வாக்கை வைத்து மெய்ப்பிக்கக் கருதும் கருத்தையும் விளக்கிக் காட்டு கின்றன இவை. வள்ளலார் அறிவுறுத்தியதை அருட்பெருஞ்சோதி - தனிப்பெருங்கருணை எனச் சுருங்க உரைக்கலாம் என்னும் திரு.வி.க. அருட்பா வழியாக, யோகாந்த கலாந்த நாதாந்த போதாந்த வேதாந்த சித்தாந்தம் என்றும் வள்ளலார் அறிவுறுத்தியதை வரிசைப்படுத்தி உரைக்கிறார். ஒவ்வொன்றை யும் பொருள் விளக்கம் செய்து, அவை அருட்பாவில் சொல்லப் படும் வகையையும் காட்டி நிறைவிக்கிறார். தம்கால அளவில் ஏற்பட்டு வரும் மாறுதலையும் அவர் எண்ணாமல் இல்லை. யோகாந்தம் கலாந்தம் முதலிய குறியீடுகளைக் கேட்கும் போதே சிலர்க்கு வெறுப்புத் தோன்றுவ துண்டு. இவ்வந்தங்களைத் தெரிந்து கொள்வதால் இக்கால வாழ்விற்கு என்ன பயன்? என்று கருதுவோருமுளர். இது காலத்தின் கோலம்! என் செய்வது! என இரங்குகிறார். ஒன்றுவித்தல் (யோகாந்தம்), ஆணவநீக்கம் (கலாந்தம்), ஒலியுறுதல் (நாதாந்தம்), அறிவுறுதல் (போதாந்தம்), அறிவு விளக்கம் (வேதாந்தம்), இரண்டறல் (சித்தாந்தம்) என விளக்கம் தந்து சான்று காட்டுகிறார். யோகாந்தம் கூறும் போது, அடயோகம் என்னும் பெயரால், சில கயவர் நிகழ்த்தும் அடாத செயல்களால் யோகக் கல்விக்கே இடையூறு நேர்ந்திருக்கிறது. யான் இளமை தொட்டுக் கல்லூரி விடுத்த நாள் முதல் - உண்மை யோகிகளைத் தேடித் தேடித் திரிகிறேன்; எனது வாணாளில் யோகிகள் என்று சொல்லப்படுவோர் பலரைக் கண்டிருக்கிறேன். அவருள் இரண்டொருவர் தவிர ஏனையோ ரெல்லாரும் அசட்டு யோகிகளாவர். அவர்தம் மோசங் களையும் ஏமாற்றங்களையும் ஈண்டு விரிக்கிற் பெருகும். அப்பேய்களைப் பற்றிய நினைவும் ஈண்டு வேண்டுவதில்லை. மேற்குறிப்பிட்ட இரண்டொரு நல்லாரும் இல்லறத்திருப்பவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார், ஆறந்தங்களை விளக்கிய திரு.வி.க. சமரசம், சன்மார்க்கம், சங்கம் என்பவற்றையும் முறையாக விளக்குகிறார். உலகில் தோன்றிய அறிஞர் அனைவரும் சமரசத்தை அறிவுறுத்தினர் என்றும் இப்பொல்லா உலகம் சமரசத்துக்குச் செவி சாய்த்தியலது என்றும் வருந்தும் திரு.வி.க. சமரசம், வாழ்வில் நுழைந்து ஆட்சிபுரியின், உலகில் போர் ஏது? பூசல் ஏது? புரட்சி ஏது? சமரசம் பரவின் அரசு எற்றுக்கு? சட்டம் எற்றுக்கு? நீதிமன்றம் எற்றுக்கு? இவை யாவும் உலகில் சமரசம் பரவாமையை அல்லவோ விளக்குகின்றன! என வினாக்களைத் தொகுத்து ஏங்குகிறார். நாடு, மொழி, சமயம், சாதி முதலியவற்றால் சமரசம் கெடுவதையும் சீர்திருத்தம் என்னும் பெயரால் சீரழிவு நேர்தலையும் எடுத்துரைத்து ஆன்மநேயச் சமரசத்தை வள்ளலார் வழியில் பெற்றுய்ய வேண்டுகிறார். சமரசத்திற்குரிய மார்க்கம் சன்மார்க்கம் என்றும் அது இயற்கையோடு இயைந்த இறைமார்க்க மென்றும் அது பிற உயிரைத் தம் உயிர்போல் கருதும் நிலை என்றும் விளக்குகிறார். அருளாளர் கூட்டமே சங்கம் என்றும், எந்நாட்டவராயினுமாக; எவ்வகுப்பினராயினுமாக; எச்சமயத்தவராயினும் ஆக அவர் அருளாளரேல் சங்கத்தார் என அறிவுறுத்தலை நிறைக்கிறார். முறை என்பதில், கடவுள் உறுதி, இயற்கை வாழ்வு, முறையீடு, அருளொழுக்கம், என்னும் நாற்பொருள் பற்றி விளக்குகிறார். கடவுளிடத்துறுதியே - அதன் வெளிப்பாடே அருட்பா என்கிறார். அடிகள் கொண்ட இயற்கைத் தோய்வு, பொருந்திய இயற்கை உணவு முதலியவற்றை இயற்கை வாழ்வில் விளக்குகிறார். அடிகளார் முறையீட்டை உருகி உருகி உரைக்கும் திரு.வி.க. வுக்குத் தம் இளமை எண்ணம் புகுந்தது. அழுகையின் திறன் எனக்கு இளமையில் விளங்கா தொழிந்தன; இலக்கணங்களைக் கட்டியழுதேன்; இலக்கியங்களைக் கட்டியழுதேன்; தர்க்கத்தில் புரண்டேன்; தத்துவத்தில் புரண்டேன்;வாதத்தின் வீழ்ந்தேன். ஆண்டவனை நோக்கி முறையிடக் கற்றேனில்லை. அழுக்கற்றேனில்லை. முறையீட்டை முனிந்தேன்; அழுகையை வெறுத்தேன்; பாவியானேன் என்கிறார். முறையீட்டின் நுட்பமும் அழுகையின் திறமும் விளங்கிய பின்னரே திருவாசகத்தின் மாண்பும், அதைப் போற்றிய இராமலிங்க சுவாமிகளின் மாண்பும் ஒருவாறு எனக்கு விளங்கின. இப்பொழுது முறையீட்டில் முனைந்து நிற்கிறேன் என்கிறார். அவர்தம் முறையீடு எத்தனை எத்தனை பாடல் களாயின! நூல்களாயின! என்பதை அவர்தம் நூல்களை அறிவார்,அறிவர். அருளொழுக்கம் பற்றிக் கூறும் திரு.வி.க. முறையீடும் அழுகையும் முனைப்பைச் செகுத்து மாசைக் கழுவி அருளைக் கூட்டும் என்பதை விளக்கி, இராமலிங்கருக்கு இரக்கமே உயிர்: இரக்கமே உடல்; இரக்கமே அவர் என்கிறார். சான்றுகள் பலப்பல (25 பாடல்கள்) காட்டுகிறார். உறுதிநிலை, திருவருள் நிலை, சாகாநிலை என்னும் முப்பகுப்பில் பேறு, பேசப்படுகிறது. குறைபாடுகளை முறையிட்டுத் தன்னை ஆண்டவனிடம் ஒப்புவிக்கும் மகன் திருவருட் பயன் எய்துதல் ஒருதலை யான் என்னும் நினைவே அற்ற அவ்விடத்தில் திருவருள் புகுந்ததும் அவன் செயல்களெல்லாம் திருவருள் செயல் களாகும். அந்நிலையில் துன்பமென்னும் நச்சு எரிந்து கொண் டிருந்த இடத்தில் இன்பத்தேன் பிலிற்றும்;நாளடைவில் அத்தேன் பெருக்கெடுத்தோடும். அப்பெருக்கில் அன்பர் தோய்வர்; ஆடுவர்; பாடுவர் என்று கூறி விளக்குகிறார். இளமை முயற்சி என்னும் நான்காம் பகுதி குரு, நூல், வழிபடுகடவுள் என்னும் மூன்று உட்பிரிவு கொண்டது. அடிகள் திருஞானசம்பந்தரை ஞான குருவாகக் கொண்டவர் என்பதையும் தம் உயிரெனப் போற்றிய ஒரு நூல் திருவாசகம் என்பதையும், தம் வழிபடு கடவுளாக முருகப் பெருமானைக் கொண்டார் என்பதையும் தெளிவிக்கிறார். மேலும், கடவுள் அருள் உருவம் கண்டு, காம வெகுளி மயக்கங்களைப் போக்கி, யாண்டும் கடவுள் நீக்கமற நிறைந்திருத்தலை உணர்ந்து, எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை என்னும் அருளறத்தை வளர்த்து, அவ்வருள் நெறியே சமரச சன்மார்க்க மென்று தெளிந்து அம்மார்க்கத்தை உலகிற்கு அறிவுறுத்தி, இறுதியில் சாகாநிலை யெனும் பெருவாழ்வு பெற்றார் என்று கூறி நிறைவு செய்கிறார். அடிகளார் வாழ்விலும் வாக்கிலும் ஆழப்பதிந்து அவராகத் தாம் மாறித் திரு.வி.க. அடிகளார் திருவுள்ளம் கண்டுரைத்த சீர்மை ஈதெனக் கேட்டவர் மகிழ்ந்தமை போலக் கற்பாரும் மகிழ்வர் என்பதாம். இராமலிங்க சுவாமிகள் நெஞ்சத் திரட்டு இந்நூல் என்க. தமிழ் நூல்களில் பௌத்தம் 6. 4. 1928இல் தென்னிந்திய பௌத்த சங்கச் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை உயர்பள்ளி நிலையத்தில் ஒரு மணி நேர அளவு செய்த பொழிவே இச்சுவடியாக வெளிப்பட்டுள்ளது. சுவடிக்கு ஏற்பப் பொழிவு சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாலும் அம்மாற்றத்தில் மற்றைச் சில பொழிவு நூல்கள், கட்டுரை நூல்கள் போல இச்சுவடி விரிவாக்கம் பெற்றியது. பொழிவும் காலக் கட்டிலேயே அமைந்திருக்கிறது என்பது பொழிவுக் குறிப்புகளாலே புலப்படுத்துகின்றது. சமயங்கள் பல எனினும் அவற்றின் உள்ளீடாம் உண்மை ஒன்றே என்பதை முன்னுரையில் உண்மை, என்றும் ஒருபெற்றியா இலங்குவது. முறைப்பாடுகள் கால தேச வர்த்தமானத்தை ஒட்டிக் கோலப்படுவன. அவைகளில் வேற்றுமை இருத்தல் இயல்பு. அவைகள் மாறுந்தகையன. மாறத் தக்க முறைகளையே அடிப்படையான உண்மை என்று கோடல் அறியாமை. இந்நுட்பம் விளங்கப்பெறுவோர்க்கு உண்மையில் பன்மை உணர்வு தோன்றுதல் அரிது என்கிறார். புத்தர் தோன்றிய தோற்றத்தை, உண்மையை உணர்த்தும் அறிவெனும் கருவியை வேதம் என்னும் ஒரு நூலாகக் கொண்டும், உண்மையை விளங்கச் செய்யும் தியாகத்துக்குரிய யக்ஞம் என்னும் யாகத்தைக் கொலைக்குழியாக்கியும், தியாகத்துக்குரிய யக்ஞம் என்னும் யாகத்தைக் கொலைக்குழியாக்கியும், பிறப்பில் சகோதரர்களாகத் தோன்றிய மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தும் உண்மைக்கு மாறுபட்ட இழிவுகள் இன்னோரன்ன பல நிகழ்த்தியும் சமயத் துறைகட்குச் சிலர் சூழ்ந்த கேட்டால் மன்பதை இருளில் மூழ்கி இடுக்கணுற்ற வேளையில், புத்தர் என்னும் பெருஞாயிறு தோன்றிற்று என்கிறார். புத்தர் பூதவாதி அல்லர் என்றும், அறம் என்றும் கடவுளைச் சீலாமன்று அறிவுறுத்தினார் என்றும், புத்த சமயத்தின் மேல் சொல்லப்படும் குறைகளுக்குத் தீர்வு வழங்குகிறார் திரு.வி. க. வேதம் யாகம் என்பவற்றைத் திரித்த பொல்ல உலகம் பௌத்த அறத்திற்குக் கேடு சூழ்ந்தது என்றும், அறத்தில் பெரிதும் ஒற்றுமை வாய்ந்த சமண பௌத்தங்களே பின்னாளில் ஒன்றோடு ஒன்று மலைந்து போரிட்டன என்றும் பௌத்தர் எனப்பட்டார். தங்களுக்குள் சீலத்தை மறந்து சினத்தைக் கொண்டார் என்றும் கூறுகிறார். திருஞான சம்பந்தர் சமண பௌத்தங்களின் பெயரால் படர்ந்த மாசுக்களைக் கழுவப் போந்தாரே யன்றி அவற்றை அழிக்கப் போந்தாரல்லர் என்பதையும் முன்னுரையில் சுட்டுகிறார். சமய குரவர் என்று சொல்ப்படும் அனைவரும் அண்ணன் தம்பிமார் போல எனக்குத் தோன்றுகிறார் என்னும் திரு.வி. க. வின் சன்மார்க்க ஒப்புரவுப் பார்வையுடையார் எவரேனும் சமயச் சார்பினருள் உண்டேயோ உண்டேயோ என்று விளாவி, விடை காண இயலா நிலையே இருத்தல் கண்கூடு. முதற்கண் பௌத்தர்களேனும் இச்சால்பைக் கொள்வரோ எனின் நிலைமை மிக இரங்கத்தக்கதாகவே உள்ளமையும், தம் சமயத்தைத் தாமே புதை குழிக்குள் தள்ளும் வெறியராய்ப் பெரிதும் விளங்குவதும் கண்கூடு. தமிழ் நூல்களில் பௌத்த நெறி விரவிக் கிடப்பதுடன், பௌத்த இலக்கியங்களில் தலைமணியாம் மணிமேகலை தமிழ்வளமாக அமைந்துள்ளது. புத்தமித்திரர் என்பார் இயற்றிய வீரசோழிய இலக்கணம் உண்டு. தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்ந்து ஒரு சில பாடல்கள் அளவில் வைத்து மறைந்த குண்டலகேசி என்னும் காவயிம் உண்டு. விரிவு மிக்க வரலாறாம் இது, கால இடச் சூழலால் சுருக்கத்தில் சுருக்கமாகப் பொழிவுற்றுச் சுவடியாக்கம் பெற்றுள்ளது. நாலடியாரும் திருக்குறளும் ஊன்வேள்வியையும் கொலையையும் கண்டித்திருக்கும் குறிப்புகளால், புத்தர் பெருமான் செந்நெறியின் வெற்றி விளக்கமாகிறது என்கிறார். பத்துப்பாட்டு முதலியவற்றில் கொலை கொல்லாமை, கள்ளுண்ணல் கள்ளுண்ணாமை, ஊன் வேள்வி ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளி என்பவை உண்மை, பௌத்தச் சார்புகாட்டும் என்கிறார். மணிமேகலையார் சமயக் கணக்கர்களிடம் அவரவர் சமயம் பற்றிக் கேட்கும்போது பூதவாதியையும் கேட்கிறார். பௌத்தம் பூதவாதமன்று. நல்வினை, தீவினை, இம்மை, மறுமை, நிர்வாணம் என்பவற்றையுடையது பூதவாதமாகாது என்கிறார். திருமுறைகளில் பௌத்தம் உண்டு என்பதை, நீதி பலவும் தன்னவுருவாமென மிகுத்ததவன், தாயமூல தர்மன், சீலமே, பண்பே என்பவற்றை மூவர் பாடல்களிலிருந்து எடுத்துக் காட்டி உரைக்கிறார். மணிவாசகர் ஊமைப் பெண்ணைப் பேச வைத்துப் பௌத்தார்களை வாதில்வென்றதற்கு அப்பதிகத்தில் சான்று இல்லை என்றும், பௌத்தத்தை மணிவாசகர் கண்டித்தது கொண்டு புனையப்பட்டது அது என்றும் கூறுகிறார். சமணரைக் கழுவேற்றியதையும் சான்று காட்டி மறுக்கிறார். சீதையாரை இராவணன் தூக்கிச் சென்ற முறை வான்மீகத்திலிருந்து மாற்றம் பெற்றதும், இராமன் சீதை முதலியோர் புலாலுண்ணாமை மேற்கொண்டதுமாகிய கம்பர் செய்தி, பௌத்த அறத்தின் வழிப்பட்டது என்கிறார். புத்தக சாதகக் கதைகளே தமிழ்ப் புராணங்களுக்கு மூலம் என்றும், முப்பத்திரண்டு அறம் கூறியதற்குப் பௌத்தமே மூலம் என்றும் புராணங்களில் பௌத்த முண்மை குறிக்கிறார். தாயுமானவர் பாடல், வள்ளலார் பாடல் ஆகியவற்றில் பௌத்த நெறியுண்மையும், சிரார்த்தச் சீர்திருத்தம், இந்துக் கோயி லமைப்பு, விழாக்கள் ஆகியவற்றிலும் பௌத்தம் புகுந்துள்ளமை யும் உரைத்துப் பொழிவை நிறைவு செய்கிறார். பௌத்தம் என்பது பகைமை பொறாமை முதலிய பேய்மையற்றது. அவ்வகையில் தொண்டாற்றும் அறவர் வேண்டும் என்று முடிக்கிறார். தமிழில் உள்ள பௌத்த நூல்களைக் கோடிட்டுக் காட்டும் நூல் இது எனின் தகும். சைவத்திறவு சைவ உண்மை உணர வழிகாட்டுவது கொண்டு இச்சுவடி சைவத்திறவு ஆகியது. இந்நூற் கடமையின் இன்றியமை யாமையை, கடையாயார் கூற்றுக்களான், இடையாயார் கேடுறாதவாறு காக்க வேண்டுவது, தலையாயார் கடன் என்னும் அணிந்துரை நூலியற்றிய நோக்கைத் தெளிவிக்கிறது. திரு.வி.க. அவர்கள் 28.12.1928, 29.12.1928 ஆகிய இரண்டு நாட்களில் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் ஆற்றிய தலைமை உரையே சைவத்திறவாகியது. உருவ வழிபாடு பற்றிய ஐயங்கள் பல இந்நூலால் அகலும் என்கிறார். (அணிந்துரை) தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னும் மணிவாசகத் தொடரை முன்வைத்துப் பொழியும் திரு.வி.க. முதற்கண் நினைப்பற நினைத்தல் என்பதை விரிவாக விளக்குகிறார். நினைப்பு அற நினைத்தால், இறையை அல்லாமல் பிறிதொன்றும் இல்லாமை அல்லாது எங்கும் எல்லாமும் இறையாதல் தோற்றமுறும் என்பதைப் பல்வேறு வரலாறு உவமை வழியாக நிறுவுகிறார். தன்நினைவு தற்சார்பு அற்றுப்போன மனத்தில் முற்றும் இறைமையே விளங்கும் என்பதைத் தெளிவிக்கிறார். மாணிக்க வாசகர் ஆனந்த வடிவான மாதவர். அன்புருவம் அருளுருவம் ஆகிய பெற்றபின் இன்புருவம் ஆனவர். அந்நிலையை அந்நிலையடைந்த இராமலிங்க அடிகளார் கண்டு கொண்டார். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னும் தொடர் இறைவன் ஒருவனே என்பதாம். இயற்கை இறைவன் உடன்; இயற்கையின் உயிர் இறைவன். நம்நாடு வைப்புமிக்க நாடு. இந்நாட்டுமக்கள் இறையை வெப்பாகக் கொண்டனர். வெப்பின் சான்று தீ. தீவண்ணம் செம்மை; சேய், சிவம் என்பவை தீயின் செவ்வண்ணம் குறிப்பவை. ஆண்டவன் அருள் நிலை கூடப் பெற்றவர்க்கு இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் புலப்படும். அப்பரடிகள் பிறப்பால் சைவர்; ஆய்வால் சமணர்; பின்னைத் சைவர். ஆனால் அவர் கொண்ட தெளிவு சமயப் பெயர் பல எனினும் இறைமை ஒருமையை வேறுபடுத்துவதில்லை என உணரச் செய்தது. அதனால், சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோ டிசைபாடல் மறந்தறியேன் நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்னாவில் உன்நாமம் மறந்தறியேன் எனத் தம்நிலையை எடுத்தோதினார். அதனால், யாதோர் தேவர் எனப்படு வார்க்கெலாம் மாதேவன்லால் தேவர்மற் றில்லையே என்னும் முடிவுகண்டார். இன்னஉரு இன்னநிறம் ஒன்றுமில்லான் என்று நினையும் போது உள்ளத்தில் ஒன்றும் படிவதில்லை. தோடுடைய செவியன் செவியன் விடையேறி என்னும் போது உள்ளத்தில் ஓருருவம் படிகிறது. உணர்வு கடந்த ஒன்றை உணர்வு கடந்து உணரும் நிலை கூடும் வரை உருவ வழிபாடு இன்றி யாது வேண்டத்தக்கது. அதற்கே உருவ வழிபாடு உண்டாயது. இது சைவத்திறவு என்கிறார். திருவுருவ விளக்கம், ஓங்காரம் என்பவற்றை மேலே விளக்கி, நெஞ்சம் நிலைத்து நிற்றற்கு ஒரு கொழு கொம்பு வேண்டற்பாலதே; அஃது உருவழிபாடு என்று கூறும் திரு.வி.க. இயற்கை வடிவங்களையோ நடமாடுங் கோயில்களாகிய உயிர்களையோ வழிபடுவோர்க்கு வேறு எவ்வழிபாடும் வேண்டுவதில்லை. என்று பொழிவை நிறைவு செய்கிறார். உளவியல் வழியே விளக்கும் உருவ வழிபாட்டு நெறி இந்நூலால் அறியக் கிடக்கின்றது என்க. நினைப்பவர் மனம் நினைப்பவர் மனம் - திருக்கோயிலில் பொழியப் பட்டதா? சமயம் சார்மன்றிலே - மாநாட்டிலே பொழியப் பட்டதா? இல்லை! திருமிகு நாராயணசாமி என்னும் நம்பி திருமிகு அலர்மேல் அம்மாள் என்னும் நங்கையை வாழ்க்கைத் துணையாக் கொண்ட திருமணப் பொலிவு கொலுவீற்றுள்ள வேளையில் நடைபெற்றது. மீண்டும் படியுங்கள் - நினையுங்கள்! தாலி பூட்டிக் கொண்டு இருக்கும்போதே எழும் கூட்டத்தை - வாழ்த்துரைக் குத் தானும் செவி சாயாத கூட்டத்தைக் காணும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 29.8.1930 இல் தென்னார்க்காடு மாவட்டம் கிழக்கு மருதூரில் நிகழ்ந்த சைவ சித்தாந்த சமாச வெள்ளிவிழாவே, மணவிழா வொடும் ஒன்றி நிகழ்ந்தது! நினைப்பவர் மனம் எத்தகையதாக இருந்தது என்பதை நாம் எண்ணலாம். பொழிவு செய்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அல்லரோ என்பார் நினைவும் தோன்றவே செய்கிறது! இப்பொழுதும் நினைப்பவர் மனமே விடை காண வேண்டும். நினைப்பவர் மனமே கோயிலாக் கொண்டவன் என்பது நாவுக்கரசர் வழங்கிய நன்மொழி. இத்தொடரமைந்த பாடல் விளக்கம், ஒருபாடலை எப்படி யெல்லாம் நயம் காணவும் திறனாய்வு செய்யவும் வேண்டும் என்பதை ஆய்வு மாணவர்க்குப் பண்பட்ட பேராசிரியர் விளக்கிக் காட்டினும் காட்டற்கரிய சிறப்பில் திரு.வி.க. பொதுமக்கள் அவையில் பொழிகிறார் என்றால், அந்நிலையைத் தமிழுலகம் மீளவும் எய்துமோ? என்னும் நினைவே கிளர் கின்றது. நினைப்பவர் மனமே கோயிலாக் கொள்ளும் இறை என்றால், நினையார் மனத்தில் கோயில் கொள்ளாதோ? கொள்ளாது எனின், வேண்டுதல் வேண்டாமை இலான், நீக்கமற நிறைந்தான் என்னும் இறைமை இலக்கணங்களுக்கு மாறாகாதோ? என வினாக்களை எழுப்பி, அரிய வாழ்வியல் காட்சிகளை எடுத்துக்காட்டாக்கி மெய்ப்பித்தல் திரு.வி.க. புலமைச் சிறப்பை அன்றிச் சால்பையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.அப்பரடிகள் எக்கருத்துப்பற்றி இத்தொடரைக் கூறினார் என்பதை எல்லா உயிர்களிலும் ஆண்டவன் கோயில் கொண்டிருத்தலை உணர்த்துவது ஆண்டவன் நினைவே ஆகும். ஆண்டவனை ஓர் உருவின் வாயிலாக நினைந்து, பின்னை இயற்கையின் வாயிலாக நினைந்து, பின்னைத் தன் வாயிலாக நினைந்து அவ்வாண்டவன் உள்ளங்கோயில் கொண்டதை உணர்தல் வேண்டும். இம்முறை பற்றி யொழுகாது நெஞ்சில் ஆண்டவன் இல்லையே! என்று கருதுவது தவறு. ஆண்டவன் கோயில் கொண்டிருத்தலை உணர நெஞ்சைப் பண்படுத்துதல் வேண்டும். அதற்கு ஆண்டவன் நினைவே உறுகருவி போன்றது. இக்கருத்துப் பற்றியே நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்று நினைத்தலை அடிகள் வலியுறுத்திக் காட்டியுள்ளார் என்கிறார். நினைந்துருகும் அடியவர் உள்ளமே ஆண்டவனுக்குரிய சிறந்த கோயிலாகும் என்பதை விரிவாகக் கூறும் திரு.வி.க. நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால், நனைந்து நனைந்து என்னும் வள்ளலார் அருள்மொழியாலும், நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர் என்னும் தாயுமானவர் தண்மொழியாலும் பொழிவை நிறைவிக்கிறார். இமயமலை அல்லது தியானம் சைவசித்தாந்த சமாச இருபத்தைந்தாம் ஆண்டும் விழா பண்டிதமணி தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திரு. வி. க. செய்த பொழிவு நூல் இந்நூலாகும். பொழிவு நிகழ்ந்த நாள் 27. 12. 1930. இந்நூல் நடையிட்டுச் செல்லும் வகையை முன்னுரைக் குறுந்தலைப்புகளால் இனிதே காட்டுகிறார். இமயமலை பருப்பொருள்; அதன் நுண் பொருள் தியானம் இரண்டும் நூற்பெயரால் பயில்வார் பெறச் செய்கிறது. பேசிய தலைப்பு இமயமலை என்பதை அறிய முடிகிறது. நூலின் சுருக்கம் அமைதி வாழ்வு என்கிறார். இமயமலை பனிமலை எனக் குறிக்கும். திரு.வி.க. அப்பனியின் வெண்மை, தூய்மை பற்றி உரைக்கிறார். குமரிக்கண்ட வீழ்ச்சி, இமய எழுச்சி, கடலாயிருந்து கிளர்ந்த சான்று என்பவற்றைக் கூறி, விந்தியத்தை நோக்க இமயம் குழந்தை என்பதைச் சுட்டுகிறார். பசுமையில் தொடங்கி, கருமையில் நடந்து, வெண்மையில் தவழ்ந்து, நீலவானில் நிறுத்தும் இமயக் காட்சியை வியந்து கூறுகிறார். பசுமைக்காடு; கருமலை; வென்பனி; நீலவான் என வண்ணச் சிறப்பு மட்டுமா? காட்டின் பயன், ஆற்றுவளம், மூலிகைப் பேறு, வாழ்வுத் தோற்றம், இயற்கை நலம் இறைமைத் தோற்றம் என்பவற்றை நிரலே விளக்குகிறார். மலை முகடு நிமிர்பார்வையும், பள்ளத்தாக்கு தணி நோக்கையும், மலைமுகடு கோயில் கோபுர மூலமாதலையும், மலை காலம் காலமாக அறிவரையும், கலைவல்லாரையும் கவர்ந்த கவர்ச்சியையும் விரித்துரைக்கிறார். இமயம் பெண்ணொருபாகம், கரியுரி, பொன்னார்மேனி, நீலகண்டம், செஞ்சேய் ஆகிய காட்சிகளைக் கலை வல்லார்க்கு வழங்கிச் சிவக்கோலம் காட்டியதையும், இருபாகங்களிலும் உள்ள தொடர்களும் எட்டுக்கைகளாகவும் அவற்றில் உள்ள பொருள்களாகவும் பாறைத் தொங்கல்கள் தாழ்சடைகளாகவும், மேக மண்டலங்களைக் கங்கை நீர்த் தேக்கமாகவும் அந்திவான்பிறை முடிப்பிறையாகவும் தோற்றந் தந்திருக்கும் என அகக்கண் கொண்டு அருமையாகச் சுட்டுகிறார். சிவ வுருவைப் பற்றிய ஐயப்பாடுகள் இளமையில் தோன்றியதையும், கதிரைவேலரால் ஒருவாறு களையப் பட்டதையும், பின்னே திருமூலரால் தெளிவுற்றமையையும் குறிக்கிறார். இமயத்தை அக நோக்கில் ஆய்ந்தால், நாமும் ஓர் இமயமாய் இருத்தல் உணரலாம். பசுமை மாயை; கருமை ஆணவம்; வெண்மை மெய்யறிவொளி என்பதை விளக்கித் தெளிவிக்கிறார். இராவணன் இமயம் அகழ்ந்தது; அப்பர் கயிலை நோக்கியது; சுந்தரர் கயிலை சென்றது; காரைக்காலம்மையார் கயிலை சென்று மீண்டது என்பவற்றைத் தம் நுண்ணாய்வு நோக்கின் வழியே தீட்டிக் காட்டுகிறார். மலையை மௌன குருவாக - தக்கணாமூர்த்தியாக - க் கொள்ளும் திரு.வி.க. தியானத்திற்கு வேண்டும் குறிகளுள் மலையே சிறந்த குறி என்கிறார். மலை, தியானம், போலவா, தியானமாகவே நிற்கிறது என அழுத்திக் கூறுகிறார். அமைதி நம் பெருஞ்செல்வம். அதுவே அழியாச் செல்வம்; இமயச் செல்வம் எனப் பொழிவை நிறைவு செய்கிறார். மலைக்காட்சி எத்தனை எத்தனை பேர்களை வயப்படுத்தி யுள்ளது! அதன் மாண்பு என்னே என்னே வியப்புறுத்துகிறது! நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்னும் குறள்மணிகள் நம்முள் பளிச்சிடுகின்றன. ஆலமும் அமுதமும் ஆலமும் அமுதமும் முரண்பட்டவை. முரணிலும் அரண் உண்டு. அரிய அமுதமாம் மருந்தொடும் உரிய அளவாம் ஆலமும் (நஞ்சும்) உண்டு என்பது மருத்துவ உலகம் நன்கு அறிந்தது. பாடாணங்களில் மருந்து செய்தல் பண்டைத் தமிழர் மருத்துவச் சிறப்பு எனப் பாராட்டுவார் திரு.வி.க. ஆலமும் அமுதமும் பேசப்பட்டது ஆலவாய் எனப்படும் மதுரை மாநகர்க் கண்ணேயாம். ஆலமென அச்சுறுத்தும் உலகப் போர் மூண்டிருந்த காலம் (*1943) அமுதப் பொழிவெனத் திரு.வி.க. பொழிய அமைந்த சைவ சித்தாந்த சமாச மேடை. தலைமைப் பொழிவுச் செய்தி, நூல் தலைப்புப் பெயராயிற்று. நூல் அணிந்துரையில் ஆல அமுதங்களைச் சுட்டுகிறார்: ஆலம் எது? அமுதம் எது? ஆலம் மக்கள் நிகழ்த்தும் பாவம். அமுதம் ஆண்டவன் திருவருள் என்பது அது. மதுரையின் மாண்பினை எடுத்துரைக்கும் திரு.வி.க. சங்கம் வளர்த்த மாண்பு இக் கூடற்பதிக்கு உண்டு. அன்று சங்கத்தில் வளர்ந்த தமிழ் இன்றும் தமிழ்நாட்டின் தனிமையைக் காத்து வருகிறது. தமிழ்நாடு தனிநாடு என்று தமிழன் வீறுடன் கூறிப் பீடுடன் நடக்கும் ஏக்கழுத்தம் நல்கிய மதுரை - நான்மாடக் கூடல் - வாழ்க; வாழ்க என வாழ்த்துகிறார். தமிழ்நாடு என்பதன் பொருள் என்ன? தனிநாடு என்பதன் அடையாளம் என்ன? தமிழ்தானே! தண்டமிழ் வேலித் தமிழ் நாட்டகம் என்பது தமிழ் மதுரைப் பரிபாடற் செய்தி அல்லவோ! சித்தாந்தக் கொள்கையின் சிறப்பை முன்வைக்கிறார் திரு.வி.க: உலக வாழ்க்கையைச் சித்தாந்தம் வெறுக்கவும் இல்லை; துறக்கவும் இல்லை; உயிர்களின் விடுதலைக்கு உலகவாழ்க்கை இன்றியமையாக் கருவி என்பது சித்தாந்தத்தின் உட்கிடக்கை என்றும், உலக வாழ்க்கையை நீத்தல் வேண்டும் என்னும் கொள்கை யும், உலகமே பொருள் என்னும் கொள்கையும் மன்பதையின் நலத்துக்கு உரியனவாகா. மன்பதையை முன்னையது ஒருவழியில் பாழ்படுத்தியது; பின்னையது வேறு வழியில் பாழ்படுத்தியது. அது கீழ்நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது; இது மேல் நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது. சைவம் அதையும் விலக்கி இதையும் விலக்கி உயிர்களின் விடுதலைக்கென்று ஆண்டவன் அருளிய கொடை உலகம். அவ்வுலகைக் கொழு கொம்பாகக் கொள்வது அறம் என்று உலகை ஏற்கிறது என்றும் கூறுகிறார். உலகப்போர் கனன்று கொண்டிருந்த நாளில் உலகைப் பற்றி எண்ணும் திரு.வி.க. பொழிவு, அதன் மேல் தாவுகிறது. அதனை ஆலமாகக் கருதுகிறது. உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது? எக்காட்சி வழங்குகிறது? அந்தோ! பொல்லாக் காட்சி! உலகம் குண்டு - குண்டு - மயமாயிருக்கிறது. எங்கே குண்டு இல்லை? குண்டு இல்லாத இடமுண்டோ? நிலத்திலே குண்டு! நீரிலே குண்டு! வானிலே குண்டு! எங்கும் எங்கும் குண்டு! குண்டுமழை! குண்டு வெள்ளம்! உலகம் எரிகிறது! ஆலகாலம் பொங்குகிறது! என்கிறார். குரோசிமா நாகசாகி குண்டுக்கு இரையாகாத காலம்! ஆம்! அணுக்குண்டு அறியாக் காலம்! ஆனால் அதன்பின் அறுபான் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பொங்கும் குண்டு ஆலகாலத்தை அவர் இருந்து கண்டிருந்தால்! நாம் காணவைத்து அமுதம் நாடிச் சென்றுவிட்டார்! ஆல அமுதக் கதையை - புராணத்தை - அறிவுக் கண் கொண்டு திரு.வி.க. பார்க்கிறார். அப்படி எவர் பார்த்தார்; பார்த்ததையும் பாராத கண்மூடிக் கதையர் கண்ணையா திறப்பர்! பிறர் எவ்வகையாலும் கண்ணைத் திறந்து விடக் கூடாது என்று கட்டுக் கோப்பாகக் கண்ணை மூடிக்கொண் டிருப்பவர் அல்லரோ அவர்! எந்த அருச்சகராவது- புராணப் பொழிவராவது - திரு.வி.க.வின் இத்தெள்ளுரையைக் கொள்பவர் ஆவரோ? இக் (கதைக்) கூற்றின் உள்ளுறை என்ன? மனிதர் எவ்வாறோ பாவம் செய்வோராகிறார். பாவம் ஆலமாய் அவரை எரிக்கிறது. எளிய மனிதர் மனம் திரும்பித் தம் குறைகளை யும், தவறுதல்களையும் ஆண்டவனை நோக்கி முறையிட்டு அழுகின்றனர். அழுகை - உண்மையான அழுகை - ஆண்டவனைப் பாவமாகிய ஆலத்தை ஏற்கச் செய்யும்; அருளமுதத்தைப் பொழியச் செய்யும். ஆல ஒடுக்கத்துக்கும் அமுத எழுச்சிக்கும் மனம் திரும்புதலும் முறையீடும் அழுகையும் தேவை. இவ்வழுகையில் கூர்ந்து விளங்குவது சமய உண்மை என்கிறார். சமதர்மம் என்னும் பொதுவுடைமையையும் சமயக்கண் கொண்டு பார்க்கிறார் திரு.வி.க. சமதர்மம் எற்றுக்கு? எல்லார்க்கும் பொதுவில் நடமிடும் செம்பொருளை உணர்தற்கு என்று அறுதியிட்டுக் கூறலாம். அவ்வுணர்வுக்குப் பயன்படாத சமதர்மம் உலகாயதமாகும். இது பற்றியே யான் சமதர்மத்தைச் சன்மார்க்க முற்ற சமதர்மம் என்றும், சன்மார்க்கம் அற்ற சமதர்மம் என்றும் சொல்வது வழக்கம். சன்மார்க்க மற்ற சமதர்மம் ஓரளவில் புற அமைதியைக் காப்பதாகும். வாழ்க்கைக்குப் புற அமைதி மட்டும் போதாது. அதற்கு அக அமைதியும் வேண்டும். அகஅமைதிக்குச் சன்மார்க்க முற்ற சமதர்மம் தேவை என்கிறார். காலப்போக்கு மாற்றத்தை எண்ணி மகிழ்கிறார். அம்மகிழ்வு கொள்ளும் வகையில் காலப் போக்கு மாறியதா? நினைத்துப் பார்க்க அவர் உரை அளவு கோலாம். காலப்போக்கு இனிச் சாம்ராஜ்யங்களும் மடங்களும் பிறவும் தங்கள் ஆட்சியைச் செலுத்த விடுதல் அரிது. காலப்போக்கு மாறிவிட்டது. சாம்ராஜ்யங்களெல்லாம் சமதர்ம ராஜ்யங்களாகும் காலம் இது. மடங்களும் பிறவும் மாறுதல் அடையும் காலம் இது. பலதிறச் சீர்திருத்த இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றி ஆக்கம் பெற்றுப் பரவிவரும் காலம் இது. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகும் காலம் இது. புறக்கோலங்களே சமயம் என்று போற்றாத காலம் இது. எல்லாரும் ஓர் உயிர்; எல்லாரும் ஓர் குலம் என்னும் கொள்கை வீறுகொண்டு பெருகி வரும் காலம் இது. இக்காலமா சமயப் பன்மைக்கும் வெறிக்கும் போருக்கும் இடம் தரும்? வருங்காலத்தில் சமயப் போலி ஒழிந்து, சமய உண்மை நிலவும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. உள்ளுவ எல்லாம் உயர் வுள்வோமாக என்பது அவருரை. திரு.வி.க. இன்றிருந்து இக்காலப் போக்குகளைக் காண்பாரே யானால் இங்கே சொல்லியவாறு மகிழ்ந்திருக்க முடியுமா? அம்மகிழ்வு அண்மை யில் தோன்றும் அறிகுறியாவது நமக்குப் புலப்படுகிறதா? அவ்வாறானால் திரு.வி.க. கூறியது? திரு.வி.க. கூறியது அவரால் அவ்வாறு அல்லாமல் கூற முடியாது! ஏனெனில், உள்ளுவ எல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் அல்லரோ! அவர் வேட்கை உரைத்ததாகக் கொண்டு, அவர்தம் உள்ளம் மகிழும் பணியை ஒவ்வொருவரும் தம் பொறுப்பாகத் தாங்கிச் செயலாற்றுதல் நம்கடன் எனக் கொள்ளலே சால்பாம்! நம் கடனுமாம்! இதனையும் அவர் மொழியாலேயே காண்போம்: மனம் திரும்பலைச் சாற்றினேன்; முறையீட்டை முறை யிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப் புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம் என்கிறார் அவர். நமக்கு கடமை உண்டு அல்லவோ! திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் கடவுள் காட்சியும் தாயுமானாரும் முன்னுரை 2 கடவுள் காட்சியும் தாயுமானாரும் 5 இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் முன்னுரை 28 தோற்றுவாய் 31 1. அறிவுறுத்தல் 36 2. பேறு 99 3. இளமை முயற்சி 120 4. இறுவாய் 144 தமிழ் நூல்களில் பௌத்தம் முன்னுரை 148 தோற்றுவாய் 153 1. தொல்காப்பியம் 154 2. பத்துப்பாட்டு முதலியன 158 3. ஐம்பெருங் காப்பியங்கள் 160 4. திருமுறைகள் 164 5. கம்பராமாயணம் 169 6. புராணங்கள் 170 7. பிற்பட்ட நூல்கள் 172 சைவத் திறவு அணிந்துரை 179 சைவத் திறவு 181 நினைப்பவர் மனம் நினைப்பவர் மனம் 225 இமயமலை அல்லது தியானம் முன்னுரை 243 தோற்றுவாய் 245 ஆலமும் அமுதமும் அணிந்துரை 287 ஆலமும் அமுதமும் 289 கடவுள் காட்சியும் தாயுமானாரும் முன்னுரை பொய்வளரு நெஞ்சினார்கள் காணாத காட்சியே கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி யாண்டும் நடந்தவண்ண மிருக்கிறது. அவ்வாராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. சுட்டுணர்வு ஆராய்ச்சிக்கு முடிவு ஏது? எவரெவர் ஆராய்ச்சி எங்கெங்கே சென்று முட்டுப்படு கிறதோ அவரவர் அங்கங்கே நின்று அவ்வம் முட்டுற்ற நிலையை முடிந்த ஒவ்வொன்றாகத் தொடக்கத்தில் கொள்கிறார். பின்னே அறிவு விளங்க அவர்கள் அவ்வந்நிலை கடந்து சிறிது மேலேறு கிறார்கள். ஆண்டிருந்து மீண்டும் ஆராய்ச்சி எழுகிறது. மறுபடி யும் முட்டு நேர்கிறது. மேலும் அறிவு விளக்கம் பெறுகிறது. அதனால் மற்று மொரு புதிய நிலை காட்சி அளிக்கிறது. இவ்வாறு மக்கள் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. இவ்வாராய்ச்சியான் கடந்த பொருளாக அவ்வப்போது காட்சியளிக்கும் பொருள்கள் யாவும் கடவுள் கூறுகளேயாகும். கடவுள் யாண்டும் உண்மையான் அதன் கூறுகள் ஆராய்ச்சி தோறும் ஒவ்வொரு விதமாகப் புலனாதல் இயல்பே. சுட்டுணர் வாராய்ச்சியான், கடவுள் கூறுகளை உணரக்கூடுமேயன்றி, அதன் முழுமையை உணரல் இயலாது. கடவுள், எல்லை கடந்த இன்பப் பொருள். சுட்டுணர்வு ஒவ்வொர் எல்லைக்குள் கட்டுப்பட்டுச் சுழல்வது. இதனால் கடவுளின் முழுமையை அறிதல் எங்ஙனம் இயலும்? ஆகவே, மக்கள் புலனறிவால் கடவுள் காட்சிபெற அதையும் இதையும் ஆராய்ந்து ஆராய்ந்து இடர்ப்படுவதினும், கொலை களவுகள் காமம் பொய் முதலிய மன மாசுகளை நல்லறிவால் கழுவி, உண்மையில் மூழ்கி நிற்பின், அவர்கட்கு முழு நிலை புலனாகு மென்று அநுபூதிமான்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அவ்வநுபூதிமான்களுள் தாயுமானாரும் ஒருவர். கடவுள் காட்சி மெய்யிலிருத்தலைத் தாயுமானார் பல பாக்களால் விளங்க ஓதியிருக்கிறார். அப்பாக்களுள் சிறந்ததெனச் சிறியேனுக்குத் தோன்றுவது ஒன்று. அஃது, ஐவகை யெனும் பூதம் என்னும் பா. கடவுள் காட்சி என்னும் நினைவு தோன்றும் போதெல்லாம் என்னுள்ளஞ் சில ஆன்றோர் பாட்டுக்களில் தோய்வது வழக்கம். அப்பாட்டுக்களுள் இந்த ஐவகை என்பதும் ஒன்று. இயற்கை வளஞ்செறிந்த இடங்களிலும், வெட்ட வெளிகளிலும், இன்னோரன்ன சில இடங்களிலும், அந்திவான் கூடும்பொழுது, யான் பாடி இன்புறும் பாடல்களில் இஃதும் ஒன்று. குமரன் ஆண்டு, (1928) மடலுக்குச் சமயக்கட்டுரை ஒன்று வரைந்தளிக்குமாறு அப்பத்திரிகையின் ஆசிரியர் என்னைக் கேட்டார். அப்பொழுது பற்பல பொருண்மீது எனது நெஞ்சம் சுழன்று சுழன்று உழன்று, இறுதியில் தாயுமானாரை அடைந்து, அவரருளிய ஐவகை என்னும் பாட்டிற் புகுந்து படிந்தது. அத்திருப் பாட்டைத் தழுவிக் கடவுள் காட்சி என்னும் ஒரு கட்டுரை அவ்வாண்டு மடலுக்கென அடியேனால் எழுதப் பட்டது. சில அன்பர்கள் விரும்பியவாறு அக்கட்டுரை இச்சிறு நூலாக வெளியிடப்பட்டது. கடவுள் காட்சி என்னுங் கட்டுரை தாயுமானார் திருவாக்கை ஒட்டி எழுதப்பெற்றமையான், அக்கட்டுரையைக் கொண்ட இந்நூலுக்குக் கடவுள் காட்சியும் தாயுமானாரும் என்னும் முடி சூட்டப்பட்டது. கட்டுரை நூல் வடிவம் பெற்றமையான், நூன் முறைக் கேற்பச் சிற்சில மாறுதல் ஆங்காங்குச் செய்துள்ளேன். நூலின் திரண்ட கருத்து, மெய்ம்மையில் கடவுள் காட்சி பெறலாமென்பது. அக்கருத்துக்குச் சமரசம், சமய வொழுக்கம், மறை, நல்லறிவு, உடல், உலகம் முதலிய அரண்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. குற்றங் குறைகளை மன்னிக்குமாறு அன்பர்களை வேண்டு கிறேன். பொய்யிலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதா காரமாய்ப் போக்கு வரவற்ற பொருளே இராயப்பேட்டை 13. 9. 28 திருவாரூர். வி. கலியாணசுந்தரன் சோதி யேசுட ரேசுக மேதுணை நீதி யேநிச மேநிறை வேநிலை ஆதி யேஉனை யானடைந் தேன்அகம் வாதி யாதருள் வாய்அருள் வானையே - தாயுமானார் கடவுள் காட்சியும் தாயுமானாரும் ஐவகை யெனும்பூதம் ஆதியை வகுத்ததனுள் அசரசர பேத மான யாவையும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை ஆதி நூலையும் வகுத்துச் சைவமுத லாமளவில் சமயமும் வகுத்துமேற் சமயங் கடந்த மோன சமரசம் வகுத்தநீ உன்னைநான் அணுகவும் தண்ணருள் வகுக்க இலையோ பொய்வளரு நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய்யிலா மெய்யர் அறிவில் போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்கு வரவற்ற பொருளே தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தட்சணா மூர்த்தியே சின்மயா னந்த குருவே - தாயுமானார் தாயுமானார் அருளிய இத்திருப்பாட்டை முற்றும் நோக்கு வோமாக; உற்று நோக்கி அது வழங்கும் அடிப்படையான உயிர்ப் பொருள் என்னை என்று உன்னுவோமாக, ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று தோன்றும். எனது சிற்றறிவிற்கும் ஒன்று புலனா கிறது. அஃதென்னை? அது கடவுள் காட்சி என்பது. அக்காட்சி எனது உள்ளத்தைக் கவர்கிறது. கடவுள் காட்சி இத்திருப்பாட்டில் யாண்டுப் பொலி கிறது? அக்காட்சி திருப்பாட்டின் ஒரு பாங்கரில் சில சொற்களில் பொலிகிறது. சில சொற்களில் அப்பெருங் காட்சியைப் பொலிவுறச் செய்த பெருமை வாய்ந்த தாயுமானாரை மனமொழி மெய்களால் வழுத்துகிறேன். இத்திருப்பாட்டில், கடவுள் காட்சி என்னும் உயிர் மட்டும் ஒளிரவில்லை; அதற்கு அரணாகப் பல உறுப்புக்களைக் கொண்ட உடலும் அமைந்திருக்கிறது. இவ்வுடற் கூறுகளை ஆராயுமுகத்தான் அவ்வுயிருண்மையைக் காண முயல்வோம். இத்திருப்பாட்டுக்கு உரை காண ஈண்டுப் புகுகிறே னில்லை. இதனைக் குறிக்கோளாகக் கொண்டு, கடவுள் காட்சி என்னும் பொருளைப் பற்றி எனது உள்ளக் கிடக்கையைக் கிளந்து கூறவே புகுகிறேன். குறிக்கோளாகக் கொள்ளும் ஒன்றற்குக் கொண்டு கூட்டல் வழி எவ்வுரையையுங் கண்டு கூட்டவேண்டுவதில்லை. கடவுள் காட்சிக்கு அக்கடவுள் துணை இன்றியமை யாதது; அத்துணையுடன் உயிர்கள் முயற்சியும் வேண்டும். இவ்விரண்டும் ஒன்றும்போது கடவுள் காட்சிப் பேறு நிகழும். இவ்விரண்டு மின்றி அக்காட்சியைப் பெறுதல் அரிது. கடவுள் துணை, உயிர்கள் முயற்சி, கடவுள்காட்சி என்னும் இம்மூன்றற்குமுரிய வழி துறைகள் இத்திருப்பாடற்கண் உண்டோ எனில் உண்டு என்று நல்லிறையிறுக்க. அவ்வழி துறைகள் பன்முகந்தாங்கி நிற்கின்றன. அவற்றைத் தொகுத்து முக்கூறு படுத்தல் ஈண்டைக் கேற்புடைத்தாகு மெனத் தோன்றுகிறது:- (1) கடவுள் உயிர்கட்கு அருளுந் துணை முறை. (2) அத்துணைபெறும் உயிர்கள் கடவுளுக்கு எவ்வழியில் கடமைப்பட்டு ஆளாதல் வேண்டும் என்பது. (3) அக்கடமையால் உயிர்கள் அடையும் பேறு. இம்மூன்றுந் திருப்பாட்டில் இயைந்து நிற்கும் முறை வருமாறு:- (1) ஐவகை . . . . . .வகுத்தநீ . . . . . .வகுக்க இலையோ - இப்பகுதி கடவுள் துணை முறையைக் குறிப்பது. (2) பொய்வளரும் . . . . . . மெய்யர் - இக்கூறு உயிர்களின் கடமையை உணர்த்துவது. (3) அறிவிற்போத . . . . . . .பொருளே . . . . . .குருவே - இஃது உயிர்கள் அடையும் பேற்றைத் தெரிவிப்பது. இம்மூன்றையும் எடுத்த பொருளுக்குரிய அதிகரணங்க ளாகவுங் கொள்ளலாம். (1) கடவுள் துணை திருப்பாட்டின் முதற்பகுதியில் வகுத்து என்னுஞ் சொல் அடிக்கடி பெய்யப்பட்டிருக்கிறது. வகுத்தல் எனில் யார் - யாருக்கு - எதை - என்னும் வினா பிறக்கும். இதற்குக் கடவுள் - உயிர்கட்கு - உலகை - வகுத்தார் என்னும் விடைபெறலாம். ஈண்டு உலகு என்பது, அசுத்தமாயா காரியமாய தனுகரண புவன போகங்களையும், சுத்தமாயா காரியமாய அறிவு நூல்களையுங் குறிப்பதென்க. இத்தோற்றுவாயுடன் முற்பகுதிமீது கருத்துச் செலுத்துவோம். (1) ஐவகை யெனும் பூதம் ஆதியை வகுத்து கடவுள் உயிர் உலகு என்னும் மூன்றைப் பற்றிய ஆராய்ச்சி யாண்டும் என்றும் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. இம்மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியினின்றும் இதுகாறும் வெளிப்போந்துள்ள உண்மைகள் பலப்பல. அவ்வாராய்ச்சியில் நுழைந்து முடிவு தெரிவிப்பது இந்நூலின் நோக்கமன்று. முப்பொருளுள் நடுவணதாயுள்ள உயிரை எடுத்துக் கொள் வோம். உயிரின் முன்னிலை பின்னிலை முதலியவற்றை ஏதுக் களால் நிறுவிக்காட்டல் அரிது. ஆனால், இவ்வுலக நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டு, உயிரின் முன்னிலை பின்னிலை முதலியவற்றை ஒருவாறு அளந்து கூறலாம். உலகிடைப் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரூஉம் யான் எதையும் என்னறிவால் தொடக்கத்தில் உணர்கிறேனில்லை. ஒரு பொருள் குறித்து யான் ஆராயப் புகும்போது, முதலில் அதைப் பற்றிய அறிவு எனக்கு விளங்குவதில்லை. மூதறிஞர் எழுதிய நூற்றுணையானும், ஆன்ற அறிவும் அன்பும் அடைவுமுடைய ஆசிரியர் அறிவுறுத்தலானும், வேறு சில கூட்டுறவானும் அப் பொருளைப் பற்றிய அறியாமை சிறிது விலகி, அவ்விடத்தில் அவ்வளவில் சிறிது அறிவு விளங்குகிறது. அவ்வறிவு விளங்கப் பெற்றதும் அதனூடே ஒளி, நினைவு, இன்பம் முதலியன தோன்றுகின்றன. அவ்வறிவு விளக்கத் துக்கு முன்னர்-அதாவது அறியாமை பீடித்திருந்தபோது - அவ்விடத்தில் இருள், மறப்பு, துன்பம் முதலியன படிந்திருந்தன. இவ்வாறே யான் ஆராயப் புகும் ஒவ்வொரு பொருட் கண்ணும் அறிவுவிளங்க விளங்க அவ்வப் பொருளைப் பற்றிய அறியாமை தேய்தல் - தேய்தல் - பெறுகிறேன். இதனால் என் வாழ்வில் அறிவு அறியாமை என்னும் இரண்டும் விரவி நிற்றலை உணர்வோனாகிறேன். என் மாட்டு இவ்வறிவு அறியாமை இருத்தல் கொண்டு முழு அறிவுக்கும் முழு அறியாமைக்கும் இருப்பு நிறுவலாமன்றோ? யான் முழு அறிவு - முழு ஒளி - முழு நினைவு - முழு இன்பம் - உள்ள நிலையினின்றும் இந்நிலை எய்தி யிருப்பேனா அல்லது முழு அறியாமை - முழு இருள் - முழு மறப்பு - முழுத் துன்பம் - உள்ள நிலையினின்றும் இந்நிலை எய்தியிருப்பேனா என்பது உன்னற் பாலது. முழு அறிவு - முழு ஒளி - முழு நினைவு - முழு இன்பம் - நிலவும் நிலையினின்றும் , அறிவும் அறியாமையும், ஒளியும் இருளும், நினைப்பும், மறப்பும், இன்பமும் துன்பமும் விரவியுள்ள இவ்விடத்திற்கு யான் ஏன் போதரல் வேண்டும்? ஒளியில் வதியும் ஒருவன் இருளில் போந்து வீழ்ந்து இடர்ப்பட ஒருப்படுவனோ? ஒருப்படான். ஆதலின், யான் எந்நிலையி னின்றும் இந்நிலை எய்தியிருத்தல் வேண்டுமென்று எளிதில் ஊகித் துணரலாம். அறிவு விளக்கம் சிறிதுமின்றி, முழு அறியாமை - முழு இருள் - முழுமறப்பு - முழுத்துன்பம் - சூழ்ந்த நிலையினின்றும் இவ்வுலக வாழ்வை யான் எங்ஙனம் பெறுதல் கூடும்? இவ் வாழ்வைப் பெறுதற்கு ஒரு துணை வேண்டுமன்றோ? அத்துணை எத் தன்மையதா யிருத்தல்வேண்டும்? அஃது என்னைப் போன்றாதா யிருத்தல் ஆகாது. அஃது என்னைப் போன்றதா யிருப்பின், அஃதும் அறியாமை இருளில் வீழ்ந்து கிடக்கும் ஒன்றாயிருத்தல் வேண்டும். ஆதலால், அறியாமை இருளினின்றும் என்னை எடுத்து எனக்கு இவ்வுலக வாழ்வை நல்குதற்கு அறியாமை என்பது சிறிதும் இல்லாததாய் முழு அறிவாயுள்ள ஒன்றே வேண்டற்பாலது. அவ்வொன்றே கடவுள் என்பது. (கடவுளை அவர் அவன் அவள் அது என்று கூறுதல் உலக வழக்கு.). கடவுள் என்பது அறியாமை கடந்து முழு அறிவாய் விளங்கு வது. அறியாமையுள்ள இடத்திலேயே பொய் பொறாமை பகைமை காழ்ப்பு முதலிய தீ நீர்மைகளிருக்கும். அறியாமை இல்லாத இடத்தில் அவைகட்கு இருப்பே இல்லை. கடவுளோ அறியாமை கடந்து அறிவாய் ஒளிர்வது. அதன் மாட்டுப் பொய்யில்லை; பொறாமையில்லை; இன்னோரன்ன பிற எவையும் இல்லை. அன்பு அதன் உயிர்ப்பு; அருள் அதன் உடல். அன்பே சிவம் என்றும், கருணையே வடிவமாகி என்றும் பெரியோர்கள் அருளிய மெய் யுரைகளை நோக்குக. கடவுள் அருளாளன் என்பதற்கு அறிகுறி என்னை? உயிர் களின் துன்பங்கண்டு, இரங்கி, அவைகளை அத்துன்பத்தி னின்றும் நீக்கத் திருவுளங் கொண்டு துணை புரிவதேயாகும். ஒருவன் தன்னால் விரும்பப் பெற்ற மற்றொருவன் துயருறு வதைக் காணும் போது, அவன் மனமிரங்கி, இவனுக்குத் தன்னால் இயன்ற துணை புரிய முயல்வதைப் பார்க்கிறோம். இம்முயற்சிக்குப் பிறப்பிடம் யாது? அவனது நெஞ்சத்துள்ள அருளேயாகும். mtD¡F mUŸ j‹dhš ÉU«g¥bg‰w tÇl¤J k£LŠ Ru¡»wJ.; மற்றவரிடத்துச் சுரப்பதில்லை. என்னை? அவனுக்கு விருப்பு வெறுப்பு உண்மையான் என்க. všyh«tšy M©ltndh nt©Ljš nt©lhik ïšyhjt‹; âUtUisna âUnkÅahf¡ bfh©lt‹.; பகைமை முதலியவற்றைக் கடந்து நிற்பவன். ஆதலால், அவன் எல்லா உயிர்களின் நலன்நாடி அருள் சொரிகிறான். கடவுள் வலிந்து ஏன் உயிர்கட்குத் துணைபுரிதல் வேண்டும்? உயிர்கள் இருளில் கிடந்தால் என்னை என்று சிலர் கருதலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொர் இயல்பு உண்டு. கடவுளுக்கும் ஓர் இயல்பு உண்டு. அவ்வியல்பாவது உயிர்களின் துன்பங் கண்டு, இரங்கி, அவைகட்குத் துணை புரிவது. ஆண்டவன் ஏழை உயிர்கட்கு எவ்வழியில் துணை புரிகிறான்? ஆண்டவன் என்னை அறியாமையினின்றும் எடுத்துத் தன்னைப்போ லாக்குதற்கு மாயை என்னுங் கருவியைக் கொள் கிறான். அம்மாயையின் காரியமே இவ்வுடல் உலகம் முதலியன. அக்கருவியால் ஆண்டவன் என் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்குகிறான். உயிர்களின் அறியாமை நீக்கத்துக்கென்றே ஆண்டவன் இவ்வுடல் உலகு (தனு கரண புவன போகம்) முதலியவற்றை அவ்வுயிர்கட்குக் கொடுக்கிறான். காரிட்ட ஆணவக் கருவறையி லறிவற்ற கண்ணிலாக் குழவி யைப்போல் கட்டுண் டிருந்தவெமை வெளியில்விட் டல்லலாங் காப்பிட் டதற்கி சைந்த பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல் பெலக்கவிளை யமுத மூட்டிப் பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற பெரியவிளை யாட்ட மைத்திட் டேரிட்ட தன்சுருதி மொழிதப்பி னமனைவிட் டிடருற வுறுக்கி யிடர்தீர்த் திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில் இசைந்து துயில்கொண்மி னென்று சீரிட்ட வுலகன்னை வடிவான எந்தையே - தாயுமானார் ஆண்டவன் கொடைப் பொருளாகவுள்ள உடல் உலகம் (தனுகரண புவன போகம்) முதலியன மாயாகாரியமென்று தத்துவ நூலோர் கூறுப. மாயா காரிய வரலாற்றை ஈண்டு விரிக்கிற் பெருகும். மாயா காரியங்களுள் மிகமிக நுண்ணிய கூறுகளை (தத்துவங்களை) நம்மவர் யோகக் காட்சியால் கண்டனர். அந்நுண்ணிய தத்துவங்களின் உண்மையை நிறுவிக்காட்டுதற்கு நிலைக்களனாக நின்று துணை புரியும் பொருள் ஐந்து (பஞ்சபூதம்) ஐந்து பூதங்களை ஆய்ந்து ஆய்ந்து, ஏனைய தத்துவங் களின் உண்மையைக் காணல்வேண்டும். ஐந்து பூதமும் ஆராய்ச் சிக்கும் ஏதுக்கட்கும் பொருளாகும் நிலையில் இருக்கின்றன. அவற்றின் உண்மையை மறுப்போர் எவருமில்லை. ஐந்து பூத உண்மை, பல்லாற்றானும் அறிஞரால் நிறுவிக் காட்டப்பட்டது. வேறு பல தத்துவங்களைப் பற்றியாதல் கருத்து வேற்றுமை உண்டு. ஐந்து பூதங்களின் இருப்பைப் பற்றி எங்குங் கருத்து வேற்றுமை இல்லை. ஆண்டவனை உயிர்கள் பொருட்டு முதல் முதல் வகுக்குந் தனுகரண புவன போகங்கட்குக் காரணமாயுள்ள மாயகாரியத் தத்துவங்களுள், ஆராய்ச்சிக்கும் ஏதுக்கட்கும் புலனாகக் கூடியனவாய், எவரும் மறுப்பின்றி ஏற்கத்தக்கனவா யிருப்பன ஐம்பூதங்களேயாகும். அவ்வைந்தின் பெற்றி நோக்கியே தாயுமான சுவாமிகள் முதல் வகுப்பைக் குறிக்குமிடத்து, ஐவகை யெனும் பூதம் ஆதியை வகுத்து என்று, திருப்பாட்டைத் தொடங்குகிறார். இப்பொழுது உயிர்கள் பொருட்டுப் பூதகாரியமாகிய உடல் உலகு முதலியன வகுக்கப்பட்டன. இவ்வளவில் ஆண்டவன் துணை நின்றுவிடின், உயிர்கள் உய்ந்து விடுமோ? படிப்படியே துணை புரிந்து, உயிர்களைத் தன்னைப் போலாக்கு தற்கு ஆண்டவன் முயல்கிறான். ஆண்டவன் உயிர்கட்கு இன்னும் என் செய்கிறான்? (2) அதனுள் அசரசரபேதமான யாவையும் வகுத்து வெறும் உடலையும் உலகையும் வைத்துக்கொண்டு உயிர்கள் என் செய்யும்? உடல் முதலியவற்றில் ஒருவித வளர்ச்சி யிருந்தாலன்றி உயிர்கள் மேலும் மேலும் அறிவு விளக்கம் பெறமாட்டா. அறிவு வளர்ச்சி நாடி ஆண்டவன் தன் படைப்பில் அசரம் சரம் என்னும் வேற்றுமை அமைத்துள்ளான். தொடக்கத்தில் உயிர்கள் அசர உடலங்களைத் தாங்கு கின்றன; பின்னை அவ்வுடலங்களை நீத்துச் சரவடிவங்களைத் தாங்குகின்றன. இவ்வேற்றுமை உருவங்கள் உயிர்களின் அறிவு வளர்ச்சிக்குரிய கருவிகளாகும். இவ்வளர்ச்சிக்குக் கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) என்னும் இயற்கை அறம் துணை புரிந்து வருகிறது. உள்ளது சிறந்து வளரும் முறையைப்பற்றி மேல்நாட்டுப் பூத பௌதிக ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள நூல்கள் பல. அந்நூல்களை இக்காலத் தமிழ்மக்கள் பயில்வரேல், அவர்கள் தங்கள் முன்னோரின் கூர்த்தமதியும் யோகக்காட்சியும் விளங்கப் பெறுவார்கள். உள்ளது சிறத்தல் என்னும் இயற்கை முறைவைப்பு இத்தாயுமானார் திருவாக்கில் படிப்படியாக அமைந்திருத்தல் அறிஞர்க்கு இனிது புலனாகும். உயிர்கள் அறியாமை நீங்கி, அறிவு விளக்கம் பெறுதற் பொருட்டு, முதல் முதல் உடல் முதலியன வகுக்கப்பட்டன; பின்னை அவற்றுள் அசரம் சரம் என்னும் பிரிவு வகுக்கப் பட்டது. இன்னும் ஆண்டவன் உயிர்கட்கு என்ன வகுக்கிறான்? பார்ப்போம். (3) நல்லறிவையும் வகுத்து நிலையில் (அசரம்) இயங்கியல் (சரம்) என்னும் இரண்டை யும் பெற்ற உயிர்கள், இன்னும் அறிவு வளர்ச்சிபெற்று, ஆண்டவன் நிலையெய்தல் வேண்டும். அதற்கு ஆண்டவன் செய்யுந் துணையைத் தாயுமானார், நல்லறிவையும் வகுத்து என்று குறிக்கிறார். அறிவெனக் கூறாது நல் என்னும் அடை தந்து கூறியதன் நோக்கம் என்னை? அந் நோக்கம் கூர்ந்து உன்னத்தக்கதே. உயிர் அசர உடல் தாங்கியபோதும் - சர உடல் தாங்கிய போதும் - அவ்வவ்வுடல் நிலைக்கேற்ற அளவினதாக அறிவு விளங்கப் பெறுகிறது. அசரத்தினின்றுஞ் சரம் பிரிவதுபோல், சரத்துள்ளே மற்றொரு பிரிவு தோன்றுகிறது. அஃதென்னை? விலங்கு முதலியனவும் இயங்குதிணை யென்னுஞ் சரவுலகின் பாற்பட்டனவே. மனிதனும் அவ்வுலகினனே. இவ் விரண்டு உலகினுக்கும் வேற்றுமை உண்டென்பது வெளிப்படை. இங்கே சரவுலகில் விலங்கினின்றும் மனிதன் தோன்றுவதை உளங் கொள்ளல் வேண்டும். இதுவே சரவுலகினின்றும் பிறந்த ஒரு பிரிவு. மனிதன் எவ்வேற்றுமையுடன் தோன்றுகிறான்? வேற்று மைகள் பல திறத்தன. அவற்றுள் தலையாயது ஒன்று. அதுவே பகுத்தறிவென்னும் நல்லறிவு. இந்நுட்பம் விளங்கத் தாயுமானார் அறிவை நல் என்னும் அடையால் அணிசெய்தார். ஈண்டு நல்லறிவு என்றது சரத்துள் மனித உலகைக் குறிப்பதென்க. இப்பொழுது உயிர் மனித உலகிற் புகுந்தது. ஆண்டிருந்து அது பெற வேண்டுவதென்னை? (4) மறையாதி நூலையும் வகுத்து நல்லறிவெனும் பகுத்தறிவிற்கு அறிகுறி யாது? உண்டு கழித்து விலங்கெனத் திரிவதா? அன்று; அன்று. நான் யார்? நான் யாண்டிருந்து போந்தேன்? vd¡F ï›thœit¤ jªjt® aht®? என்று இன்னொரன்ன ஆராய்ச்சியில் தலைப்படுவது பகுத்தறி வுடைமைக்கு அறிகுறியாகும். இவ்வாராய்ச்சியால் கடவுள் உணர்வு மனிதன்மாட்டு அரும்பும். பகுத்தறிவுக்குரிய பிறவி தாங்கிய அனைவரும் இவ்வாராய்ச்சியில் தலைப்படு கின்றனரா? இல்லை. பகுத்தறிவைப் பயன்படுத்தாது மனிதருள் கெடுவோர் பலர். இக்காரணத்தால் மனித உலகம் இரு வகை யாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மாக்கள் உலகம்; இன் னொன்று மக்கள் உலகம். பகுத்தறிவு வெனும் ஆறாவதறிவைப் பயன்படுத்தாது, அவ்வறிவு விளக்கத்கைத் கெடுத்து விலங்கென வாழ்வோர் மாக்களெனப்படுவர். ஆறாவதறிவை நல்வழியில் பயன்படுத்துவோர் மக்களெனப்படுவர். மனிதப் பிறவி தாங்கிய உயிர்கள் மாக்களாகாது, மக்களாகி வாழுமாறு துணைபுரிதற் பொருட்டே மறை நூல் வகுக்கப்படுகிறது. மறை நூல் எது? இறைவன் அருளியது மறை நூல் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இறைவன் எதையும் நேரே அருள்கிறானில்லை. மெய்யடியார் வாயிலாகவே இறைவன் பல வினைகளை நிகழ்த்துகிறான். மெய்யடியார் யாவர்? நான் என்னும் முனைப்பற்றவரே மெய்யடியாராவர். முனைப்பற்ற இடத்திலேயே ஆண்டவன் அருள் கொழித்தல் இயல்பு. அவ்வருள் கொழிக்கும் உளமுடையார் மொழிகள் யாவும் ஆண்டவன் மொழிகளாகும். உலகில் ஆண்டவன் மொழிகள் என்று சொல்லப்படும் எல்லாவற்றையும் அவன் அருள் பெற்ற மெய்யடியார் மொழிகளெனக் கொள்க. உயிர்களுள் மக்களாய்ச் செருக் கொழித்து, ஆண்டவன் அருள்பெற்று, அவன் நிலை எய்திய மெய்யடியார்கள், தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்று தங்கள் அடைவுகளைத் திருவாய் மலர்வதுண்டு. அத்திரு மொழிகள் உலகில் மறை நூல்கள் என்று வழங்கப்படுகின்றன. அம்மறை நூல்கள், இந்நாட்டில், இம் மொழியில், இம்முறையில் பிறத்தல் வேண்டும் என்னும் நியதியில்லை. மறைமொழி, யாண்டாதல், எம்மொழியிலாதல், எம் முறையிலாதல் பிறக்கலாம். உயிர்கள் பொருட்டு (மெய்யடியார் வாயிலாக) மறையாதி நூலை வகுத்த ஆண்டவன், பின்னுந் தொடர்ந்து அவ்வுயிர் கட்கு எவ்வழியில் துணை செய்கிறான்? அன்பர்களே! நோக் குங்கள். துணை படிப்படியாக வகுக்கப்படுகிறது. (5) சைவமுதலாம் அளவில் சமயமும் வகுத்து மக்கள் மறைவழி நிற்க நிற்க அவர்கட்குக் கடவுள் உணர்வு அரும்புகிறது. அவ்வுணர்வு கடவுளைக் காட்டுஞ் செந்நெறி நாடல் இயல்பு. அச்செந்நெறியே சமயம் என்பது. இச்சமயம் விலங்கிற்கு இல்லை. இது மக்களுக்கே உரியது. சமயநெறி நில்லாதவர் மக்கள் அல்லர். சமயம் ஒன்றாயிராது பலவாக ஏன் இருத்தல் வேண்டும்? ஆண்டவன் அருள் பெற்று மறைமொழிந்த மெய்யடியார் அனைவரும் முடிவில் பெற்ற நிலை ஒன்றாயினும், அந்நிலை பெற அவரவர் தொடக்கத்தில் ஏற்ற முறை வெவ்வேறு, அவ்வம் முறையை அவரவர் அருளிய மறைமொழிகளிற் காணலாம். அம்முறைகளே உலகில் சைவ முதலாம் அளவில் சமயங்கள் என நிலவுகின்றன. முறைகள் பலவாயினும் அவற்றின் முடிவு ஒன்றென்பதை மறத்தலாகாது. சமயங்கள் பலவாக வகுக்கப்பட்டதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவை ஈண்டு எற்றுக்கு? மக்கட்குத் தொடக்கத்தில் பன்மையிலேயே பற்றுண் டாகும். உயிர்கட்குப் பன்மை வழி ஒருமை கூட்ட வேண்டு மென்பது ஆண்டவன் திருவுள்ளக் கிடக்கை போலும்! பலவகைப் பட்ட சமயங்களின் உட்கிடக்கைகளை ஆராய்ந்துழி முடிவில் ஒன்றிய கருத்தே பெறலாம். ஒன்றுமாய்ப் பலவுமாய் ஆறுசமயங்க டொறும் வேறுவே றாகிவிளை யாடுமுனை யாவரறி வார் அன்னே யனே யெனுஞ் சிலசமய நின்னையே ஐயாஐ யாவென்னவே அலறிடுஞ் சிலசமய மல்லாது பேய்போல அலறியே யொன்றுமிலவாய்ப் பின்னேது மறியாம லொன்றைவிட் டொன்றைப் பிதற்றிடுஞ் சிலசமயமேற் பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி பிறவுமே நிலயமென்றுந் தன்னே ரிலாததோ ரணுவென்று மூவிதத் தன்மையாங் காலமென்றுஞ் சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய் நெறிகடாம்பல பலவுமா யந்தந்த நெறிக்காஞ் செறியுந் தெய்வமும் பலபலவாகவுஞ் செறிந்தால் அறியுந்தன்மையிங் காருனை யறிவினா லறிந்தோர் பிரியுந் தன்மையில் லாவகை கலக்கின்ற பெரியோய் அன்றோவா மோவெனவுஞ் சமய கோடி யத்தனையும் வெவ்வேறா யரற்ற நேரே நின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கே நின்னருள் கொண்டறிவ தல்லால் நெறிவேறுண்டோ ஒன்றாய்ப் பலவா யுலகமெங்குந் தானேயாய் நின்றாயை யாவெனைநீ நீங்கற் கெளிதாமோ ஆன மான சமயங்க ளாறுக்குந் தான மாய்நின்று தன்மயங் காட்டிய ஞான பூரண நாதனை ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும் வீறுபரை திருத்தாள் மேவுநாள் எந்நாளோ - தாயுமானார் ஒவ்வொரு சமயத்தையுந் தனித்தனி எடுத்து ஆராய்ந்தால் அதன் அதன் மாட்டு முடிவில் ஒருமை விளங்கல் காணலாம். ஒவ்வொரு சமயமும் கடவுள் ஒன்றே என்று சொல்கிறது. அக் கடவுள் யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றுஞ் சொல் கிறது. யாண்டுமுள்ள ஒன்று பலவாயிருத்தல் எங்ஙனம்? அஃது ஒன்றாகவே இருத்தல் வேண்டும். அதன் பெயர் பலவா யிருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றே. சமயகோடிக ளெல்லாந் தந்தெய்வ மெந்தெய்வம் என்று, எங்குந் தொடர்ந்து எதிர்வழக் கிடவும் நின்றது எது மைவிடா தெழுநீல கண்டகுரு வேவிஷ்ணு வடிவான ஞானகுருவே மலர்மேவி மறையோது நான்முகக் குருவே மதங்கடொறு நின் றகுருவே ஏதுபாவித் திடினும் அதுவாகிவந் தருள்செய் எந்தைநீ குறையும் உண்டோ சமரச சொரூப சுகம் உற்றிட ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்துபுகும் ஆதிநட்பே. சைவமுதல் மதங்களாகி மதாதீத மானவருண் மரபுவாழி வேறுபாடு சமயமெலாம் புகுந்து பார்க்கில் விளங்குபரம் பொருளேநீன் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா என்று தாயுமானார் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஓர்க. பன்மை யுணர்வுடைய மக்களை அப்பன்மை வழி ஒருமை யில் கூட்டக் காணப்பெற்ற சமயங்கள் பின்னே போருக்கும் பூசலுக்கும் நிலைக்களன்களாய் விட்டன. இக்குற்றம் சமயங் களின் பாலதன்று; சமயங்களை வளர்ப்பதற் கெனப் பின்னாளில் புறப்பட்ட குருமார்களின் பாலது. பிற்காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்கென ஏற்பட்ட மடங்களுங் கோயில்களுமே சமயங்களின் நிலைகளைக் குலைத்தன. எவரெவர்க்கு எவ்வெச் சமயத்திடை அன்பு படிகிறதோ அவரவர் அவ்வச்சமய வழி நின்றொழுகுவது அறிவுடைமை. அவ்வொழுக்கம் விரைவில் ஒருமை இன்பத்தைக் கூட்டல் ஒருதலை. அவ்வாறொழுகாது பிற சமயங்களைக் குறைகூறிச் சமய வாதத்தில் தலைப்படுவது ஒருபோதும் ஒருமை இன்பத்தைக் கூட்டவே கூட்டாது. மதசம்மதம் பெறாச் சாலம்ப ரகிதமான மாறுபாடு தர்க்கந் தொடுக்க அறிவார்சாண் வயிற்றின் பொருட்ட தாக சமய நெறி காணாத காட்சிநீ சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும் அல்ல லொழிவதென்றைக் கையா பாராபரமே தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு நிற்குமவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத் தவரும் வாத தர்க்கமிடு படிறருந் தலை வணங்கிட - தாயுமானார் சமயங்கள் போருக்காக வகுக்கப்பட்டன அல்ல. சமரச ஞானப் பேற்றிற்கெனவே அவைகள் வகுக்கப்பட்டன. சமயங் களின் நோக்கம் மக்களை வேற்றுமையுணர்வினின்றும் விலக்கி, ஒற்றுமை யுணர்வில் நிறுத்த வேண்டுமென்பதே. சமயங்களைத் துருவித் துருவி ஆராய்ந்தால் அவற்றின் அடியில் சமரசம் நிலவுவது காணலாம். அச்சமரசம் கடவுள் காட்சிக்குரியது. சமயங்களை வகுத்த கடவுள், அவற்றின் முடிவில் சமரசத்தைக் கிடத்தாதொழிவனோ? உயிர்களின் முழு அறியாமையை நீக்கி அவைகளைத் தன்னைப் போலாக்க வேண்டுமென்பதன்றோ கடவுள் திருவுள்ளக் கிடக்கை? அவ்வுள்ளக் கிடக்கை முற்றுப் பெறும்வரை உயிர்களின் அறிவு வளர்ச்சிக்குரிய துறைகளைப் படிப்படியாக இறைவன் கோலியே வருவன். இது காறுஞ் சமயங்கள்வரை துறைகள் கோலப்பட்டன. இனி வருந்துறை காண்போம். (6) மேற் சமயங்கடந்த மோன சமரசம் வகுத்த நீ மக்கள் சமயங்களிற் புகுந்து பெறவேண்டுவது சமரசமே யாகும். அச்சமரசத் துறையையும் என் அருமை ஆண்டவன் வகுக்கிறான். ஆரூயிர் மக்களே! ஆண்டவன் துணையைக் கூர்ந்து கூர்ந்து நோக்குங்கள். நமது ஆண்டவன் அருள் இருந்தவா றென்னே! என்னே! அவ்வாண்டவனையா மறப்பது? மறந்தா உலகில் வாழ்வது? அன்பர்களே! ஆண்டவனை நினையுங்கள்; அவன் அருளைக் கருதுங்கள்; அவன் துணையை நோக்குங்கள். இன்னும் நம்பொருட்டு அவன் என்ன செய்கிறான்? சமயங் கடந்த மோன சமரசத்தை வகுக்கிறான். அவ்வாண்டவனை மனமொழி மெய்களால் வணங்குவோமாக; நமது உடல் பொருள் ஆவி மூன்றையும் அவனுக்கு அர்ப்பணஞ் செய்வோமாக. எல்லாம் அவனுடைமை; எல்லாம் அவன் செயல்; அவனன்றி ஓரணுவும் அசையாது. எல்லாம் அவன் என்னும் உணர்வு பெற்று, அவ்வழி நிற்பதே சமயங்கடந்த மோன சமரசமாகும். இச்சமரசம் கடவுள் காட்சியை வழங்கும். சமரசம் மக்கள் வாழ்வின் முடிந்த நிலை என்பது ஈண்டு உன்னத்தக்கது. தாயுமானார் மிகத்திறம்பட அந்நுட்பத்தை இத்திருப்பாட்டில் அமைத்திருக்கிறார். சுவாமிகள் ஒவ்வொரு படியையும் வகுத்து வகுத்து என்று கூறிக்கொண்டே போந்து, சமரசத்தை மட்டும் வகுத்த நீ என்று முடித்துக் கூறி யிருத்தல் காண்க. சமரசம் முடிந்த வகுப்பு என்பது சுவாமிகள் கருத்து. கடவுள் ஒருவரா யிருக்கும்போது அவர்க்குரிய நெறியும் ஒன்றாகவே இருத்தல் வேண்டும். உலகின் பொருட்டுப் போர்வைகள் பலவா யிருக்கின்றன. அப்போர்வைகளின் உள்ளுறை மட்டும் ஒன்றே. போக்கு வரவிலா வெளி (ஆகாயம்) பல பொருள்களில் நீக்கமற நிறைந்துள்ள தன்மையை ஈண்டு அன்பர்கள் நெஞ்சிற் கொள்வார்களாக. சமரச நுட்பந்தேறாது, சமயவாதிகள் வாதப்போரில் தலைப்பட்டு, முடிவில் சமயப் பொருளையே யுணரா தொழி கிறார்கள். சமயவாதமிடுதலுக்கும், சமயவழி நிற்றலுக்கும் வேற்றுமை உண்டு. சமயவாத மிடுவோர் பன்மைப் படுகுழியில் வீழ்ந்து இடர்ப்படுவர். சமயவழி நிற்போர் ஒருமைகண்டு கடவுள் நிலையெய்துவர். பல கடவுள் உணர்வு உய்யு நெறி காட்டல் அரிது அரிது என்று ஈண்டு அறை கூவுகிறேன். பல சமயங்களிலும் ஓராண்டவன் அருளாடல் கண்டு ஒருமை யுணர்வு பெற வேண்டுவது மக்கள் கடமை. அவ்வொருமை யுணர்வே மோன சமரசம் என்பது. ஈண்டுச் சமயவாதிகளைப்பற்றி இரண்டோர் உரைபகர விரும்புகிறேன். ஒரு சமயவாதி இன்னொரு சமயத்தை வெறுக் கிறான்; பழிக்கிறான். அவன்தான் தொழுங் கடவுள் தன்னால் வெறுத்துப் பழிக்கப்படுஞ் சமயத்திடை இல்லை என்று எண்ணுகி றான் போலும்! இப்போலி மனிதன் எந்நாளில் மெய்ப் பொருளை உணரவல்லான்? கடவுள் என்னிடத்தில் மட்டும் வீற்றிருக்கிறார்; என் வீட்டில் மட்டும் விளையாடுகிறார் ; என் சமயத்தில் மட்டும் கிடக்கிறார் என்று நினைந்து வாழ்வு நடாத்து வோனை எத்தகையன் என்று சொல்வது? இவன் கடவுளையா தொழுகிறான்? ஆ! ஆ! இவனினும் பொய்யன் வேறு ஒருவன் இருப்பனோ? பாவங்களில் தலையாயது பொய்ம்மை. இவ் ஒன்றுள்ள இடத்தில் மற்றெல்லாப் பாவங்களும் இருக்கும். இவ்வொன் றில்லாத இடத்தில் மற்றப் பாவ நிகழ்ச்சியும் இராது. இவ்வுண்மையை, பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்று திருவள்ளுவனார் சுருங்கிய உரையால் பொய்யாமைத் திறத்தை விளக்கி இருத்தல் காண்க. எங்குமுள்ள ஆண்டவனை அங்கிருக்கிறான்; இங்கில்லை என்றும், இங்கிருக்கிறான்; அங்கில்லை என்றும் வாதப்போருக் குட்படுத்துவது எத்தகைய அறியாமை? எத்தகைய பொய்ம்மை? இப்பொய்ம்மையாளர்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தவே தாயுமானார் நூற்றொடக்கத்தில் ஆண்டவன் உண்மையை எங்கும் பிரகாசமாய் என்னும் அளவில் நிறுத்திக் கூறாது, அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் என்று விளக்கிக் கூறினார். இங்கே பொய்யர் எவர் மெய்யர் எவர் என்பது கருதற்பாலது. எங்குமுள்ள ஆண்டவனை அங்கு இங்கு என்று சுட்டி, அவனைக் கூறுபடுத்துங் குறுகிய நோக்குடைய சமயவாதி களைப் பொய்யர்களென்க. ஆண்டவன் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருத்தலை உணர்ந்து, எதனிடத்தும் எவரிடத்தும் பகைமை கொள்ளாது, அன்பு கொள்ளுஞ் சமரச நோக்குடையாரை மெய்யர்களென்க. கடவுள் எங்கும் இருப்பதை மெய்ஞ்ஞானியாகிய தாயுமான சுவாமிகள், எங்கணுநீ யென்றா லிருந்தபடி யெய்தாமல் அங்குமிங்கு மென்றலைய லாமோ பராபரமே அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே எங்கெங்கும் பார்த்தாலு மின்புருவாய் நீக்கமின்றித் தங்குந் தனிப்பொருளைச் சாருநா ளெந்நாளோ எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே அண்டரண்டம் யாவுநீ கொண்டுநின்ற கோலமே தொண்டர்கண்டு சொரிகணீர் கண்டநெஞ்சு கரையுமே எவ்வுயிருந் தன்னுயிர்போ லெண்ணுந் தபோதனர்கள் செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ அங்குமிங்கு மெங்குநிறை யற்புதனார் பொற்பறிந்து பங்கயத்துள் வண்டாய்ப் பயன்பெறவா நல்லறிவே ஆங்கென்று மீங்கென்று முண்டோ-சச்சி தானந்த சோதி யகண்ட வடிவாய் ஓங்கிநிறைந்தது கண்டாற் -பின்னர் ஒன்றென் றிரண்டென் றுரைத்திடலாமோ சங்கர சங்கர சம்பு என்று பலசெவ்விய மொழிகளால் விளக்கியிருத்தல் காண்க. ஆகவே, உலகீர்! ஆணடவனை அங்கு இங்கு என்று சுட்டிச் சமயவாதத்தில் இறங்கன்மின்; அச்சுட்டுணர்வை அழிக்குஞ் சமரசத் துறை நண்ணுமின்; அத்துறை படிந்து கடவுளைக் காண்மின்; கண்டு இன்புறுமின். எல்லாவற்றிலும் ஆண்டவன் வீற்றிருக்கும் போது எதைத் தள்ளுவது? எதைக் கொள்ளுவது? தள்ளல் கொள்ளல், பகைமை பொறாமையுள்ள விடத்தில் நிகழ்வன. கடவுள் நெறியோ இவை களையெல்லாம் கடந்து நிற்பது. கடவுள் நெறி நிற்போர், உலகி லுள்ள பலதிற வேற்றுமைகளைக் கண்டும், வேற்றுமை யுளம் பெற மாட்டார். சில காரணம் பற்றி உலக வளர்ச்சிக்கெனப் பலதிற வேற்றுமைகள் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வேற்றுமைகள் பலதிற முத்துக்கள் போன்றன. பரம்பொருள் அம் முத்துக்களினூடே நுழைந்துள்ள கயிறு போன்றது. ஆகவே, எல்லா வேற்றுமைகளும் நிலவுதற்கு அடிப்படையாயுள்ள ஒன்றை உணர முயல்வதே அறிவுடைமை. ஒருவன் பாடுகிறான்; இன்னொருவன் யாழ் வாசிக்கிறான்; மற்றொருவன் முழவு கொட்டுகிறான்; வேறொருவன் தாளம் போடுகிறான். இவைகளின் (பன்மையின்) பயன்என்னை? இசை யெனும் ஒன்றே. இசை என்பது இப்பன்மைகட்கு அடிப்படை யாய் யாண்டும் நிலவுவது. அது பாடுவோன்மிடறு, மற்ற யாழ் - முழவு -தாளம் முதலிய பன்மை வாயிலாக வெளிப்படுகிறது. பன்மை, ஒருமைக்குத் துணைசெய்யவே ஏற்பட்டதென்க. பன்மைக்குப் பிறப்பிடம் ஒருமை என்பதையும் ஓர்க. இவ்வாறே இயற்கையின் பாலுள்ள பலதிற வேற்றுமைகளுந் தங்கட்கு நிலக் களனாயுள்ள ஒன்றை உணர்த்துதற்குக் கருவி களாக நிற்கின்றன என்று தெளிக. ஓதரியதுவி தமே அத்துவித ஞானத்தை உண்டு பணு ஞானமாகும் என்றார் தாயுமானாரும். இசையெனும் ஒருமை யின்பம் நுகராது, முழவு யாழ் தாளம் முதலிய பன்மைமீது(வடிவங்கள் மீது) கருத்துச் செலுத்துவோரு முளர். இவர் இசையின்பம் இழக்கிறார். இவரனையார் வேற்றுமைகளில் மட்டுங் கருத்தைப் படிய வைப்போரென்க. வேற்றுமைகள் ஒற்றுமை யுணர்விற்குத் துணைசெய்யவே ஏற்பட்டன என்பதையும், ஒற்றுமையிலிருந்தே வேற்றுமைகள் தோன்றின என்பதையும் மீண்டும் வலியுறுத்து கிறேன். வேற்றுமைகளையே பொருளாக்கொண்டு உயர்வு தாழ்வெனும் நரகக் குழியில் வீழ்ந்து இன்பத்தைக் குலைத்துக் கொள்வது அறிவுடைமையாகாது. எங்கும், எல்லாம் ஆண்டவன் என்னும் உணர்வு பெற்று, அவ்வுணர்வு வழி நின்று, அநுபூதி நிலைபெறும் ஒருவன் தன்னுயிர்க்கும் மற்ற வுயிர்க்கும் வேற்றுமை காண்பா னில்லை. அவன் தன்னுயிர் போல் மன்னுயிரையும் பார்ப்பான். இந்நிலை எய்திய ஒருவன் பிறப்பு இறப்பு என்னும் மயக்கத்தி னின்றும் விடுதலை யடைகிறான். இதுவே சமரச ஞானத்தால் விளையும் பேறு. இப்பேறு பெற்ற நந்தாயுமானார் தமது அடைவைப் பல பாக்களால் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார். அவற்றுள் சில பாக்களை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். பார்த்த இடமெல்லாம் பரவெளியாய்த் தோன்றஒரு வார்த்தை சொலவந்த மனுவே பராபரமே எட்டுத் திசையுமொன்றா யின் பமாய் நின்றவுன்னை விட்டுப் பிரியவிடம் வேறோ பராபரமே ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப் போதனையும் உண்டோ புகலாய் பராபரமே எண்ணில்பல கோடியுயிர் எத்தனையோ அத்தனைக்குங் கண்ணிற் கலந்தவருட் கண்ணே பராபரமே மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன் கண்ணி லிருக்கவும்நான் கண்டேன் பராபரமே கண்டவறி வகண்டா காரமென மெய்யறிவில் கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே பெற்றார் அநுபூதி பேசாத மோனநிலை கற்றார் உனைப்பிரியார் கண்டாய் பராபரமே எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே தம்முயிர்போல் எவ்வுயிரும் தான் என்று தண்ணருள்கூர் செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும் அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டையுன்னிப் பார்க்கின் அன்பர்க்கென்ன பயங்காண் பராபரமே எண்ணிறைந்த மேன்மைபடைத் தெய்வுயிர்க்கு மவ்வுயிராய்க் கண்ணிறைந்த சோதியைநாங் காணவா நல்லறிவே. எவ்வடிவும் பூர்ணமாம் எந்தையுரு வென்றிசைந்த அவ்வடிவுக் குள்ளே யடங்குநா ளெந்நாளோ எவ்வுயிருந் தன்னுயிர்போ லெண்ணுந் தபோதனார்கள் செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ நானான தன்மை நழுவியே யெவ்வுயிர்க்குந் தானான வுண்மைதனைச் சாருநா ளெந்நாளோ இன்னுஞ் சமரசத்தைப்பற்றிப் பலபடப் பேச வேண்டுவ தில்லை. சமரசஞானப் பேறே வாழ்வின் முடிந்த நிலை. அந்நிலை பெற ஒவ்வொருவரும் முயல்வோமாக. இதுகாறும் இறைவன் அருண் மேலீட்டான் உயிர்கட்கு வகுத்த படிகள் நிரலே கிளந்து கூறப்பட்டன. உலகம் முதல் சமயம் ஈறாயுள்ள படிகள் கோலப்பட்டன. முடிவில் சமரச நிலையமுங் கோலப்பட்டது. இறைவன் உயிர்கட்கு எவ்வெத் துணை செய்ய வேண்டுமோ அவ்வத்துணை செய்து முடித்தான். இனிப் படிகளேறி நிலையம் புகுந்து கடவுள் காட்சி பெற வேண்டுவது எவர் கடமை? (2) உயிர்கள் கடமை (1) உன்னை நான் அணுகவுந் தண்ணருள் வகுக்கவிலையோ சமரசம் மெய்ந்நெறியே; அது முடிந்த நிலையே; அதனால் உயிர்கட்கென்னை? அப்பேற்றை உயிர்கள் எங்ஙனம் பெறும்; அதற்கேதாயினும் வழி உண்டா என்று சிலர் ஐயுறலாம். தாயுமானாரும் ஆண்டவனை நோக்கி உன்னை நான் அணுகவுந் தண்ணருள் வகுக்கவிலையோ என்று வினவியிருக் கிறார். உயிர்கள் பொருட்டு உலகையும் அறிவையும் மறையை யும் சமயங்களையும், இவை கடந்த மோன சமரசத்தையும் வகுத்த இறைவன் சமரச ஞானப் பேற்றிற்குத் தண்ணருள் பாலியா திருப்பனோ? உயிர்கள் அப்பெரு நிலை பெறுதல் வேண்டும் என்பதன்றோ இறைவன் திருவுள்ளம். அது குறித் தன்றோ அவன் எல்லாவற்றையும் உயிர்கட்கு வகுத்தான்? அவ் வருளுடைய இறைவனோ உயிர்களின் இறுதிப் பேற்றிற்குத் துணை செய்யா தொழிவன்? பின்னை எற்றுக்குத் தாயுமானார் வினவியிருக்கிறார்? அவ்வினாவின் பொருளை உற்று நோக்குக. அவ்வினா எப் பொருளின் மேலது? அது கொள்பொருளில் அமைந்து கிடத்தல் காண்க. ஆதலால், உயிர்களின் இறுதிப் பேற்றிற்கும் ஆண்டவன் அருட்டுணை உண்டு என்றுணர்க. அவ்வருட்டுணையைப் பெறுவது எங்ஙனம்? இங்கேதான் உயிர்கட்குக் கடமை ஏற்படுகிறது. அக்கடமையை உணர்த்தவே சுவாமிகள் உலகு அறிவு முதலியவற்றை வகுத்து வகுத்து என்று சொல்லிக் கடந்த சமரசத்தை வகுத்த நீ என்று முடித்து/ அருளை மட்டும் வகுக்க விலையோ என்று வேறுதுணையும் உயிர்களின் கடமையும் இரண்டுந் திகழ்தலால், இஃது அரிமா நோக்குமுறையில் இடையில் கிடத்தப் பட்டிருக்கிறது. ஆண்டவன் அருட்பேறு பெரிதும் உயிர்கள் முயற்சியைப் பொறுத்து நிற்றலான் அதனை யானும் உயிர்கள் கடமை என்னுந் தலைப்புக்கீழ் வைத்துப் பொருளை முறைப்படுத்த லானேன். ஆண்டவன் அருளை உயிர்கள் பெறாதவாறு சில தடைகள் தகைகின்றன. அவைகளைக் களைய மக்கள் முயலல் வேண்டும். அவைகளின் ஊற்றாய் உயிராயுள்ள ஒன்று களையப்படின், மற்றவைகளெல்லாந் தாமே வீழ்ந்துபடும். அவ்வொன்று எது? பொய்ம்மை. (2) பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே ஈண்டு அடிகள் ஆண்டவனைக் காட்சியே என்று விளிக் கிறார். அதன் பொருள் என்னை? ஆண்டவன் காட்சிக்குரியன் என்பதன்றோ? காட்சிக்குரிய அவனைக் காணாதவாறு தகைவது எது? அஃது எவர் பாலுளது? பொய்வளரு நெஞ்சினர்கள் காணாத காட்சியே எனவரூஉஞ் செம்மொழிகளைச் சீர்தூக்கிப் பார்க்க. எவர் காணாத காட்சி? பொய் வளரும் நெஞ்சினர்கள். எனவே மெய்வளரும் நெஞ்சினர்கள் காணுங்காட்சி நமது கடவுள் என்று தெளிக. கடவுள் காட்சியை மறைக்குங் கொடுமை பொய்ம்மைக் கிருத்தல் பெரிதுங் கருதத்தக்கது. மகனைக் கெடுப்பது பொய்யன்றி வேறென்னை? அதன் புன்மை தெரிக்கவேண்டி மீண்டுஞ் சுவாமிகள் அதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். (3) பொய்யிலா மெய்யர் பொய்யின் புன்மையையும் மெய்யின் மேன்மையையும் அடிகள் மக்கட்கு அறிவுறுத்துகிறார். பொய்யின் புன்மை என்ன? மெய்யின் மேன்மை என்ன? எங்குமுள்ள ஆண்டவனைக் காண ஒண்ணாதவாறு தகைவது பொய்யின் புன்மை. ஆண்டவன் காட்சியைத் தகையாது புலப்படுத்துவது மெய்யின் மேன்மை. அப்பொய் நீத்து மெய்வழி நின்று உண்மை காண முயலாது வாயில் வந்ததை உளறுவது மடமை. பொய்ம்மை பாவங்கட் கெல்லாந் தாயகம் என்பது முன் னருஞ் சொல்லப்பட்டது. எங்குமுள்ள ஆண்டவனை அங்குளான் இங்கில்லை; இங்குளான் அங்கில்லை என்று சொல்வது எத்தகைய பொய்! ஆண்டவன் துணையை மறுப்பதும் மறப்பதும் எத்தகைய பொய்! இன்னோரன்ன பொய்களில் வீழ்ந்துழலும் மனிதன் பேச்சொடு பேச்சுக்கெல்லாம் பொய் வழங்கிச் செயலொடு செயலுக்கெல்லாம் பொய் நிகழ்த்திப் பொய் வாழ்வினனாகிறான். இவன் எங்ஙனம் கடவுள் காட்சி பெறுவன்? பொய்ம்மையினின்றும் பிறக்குங் குழவிகளோ பற்பல. அவை அழுக்காறு, வெகுளி, கொலை, களவு, காமம் முதலியன. இக்குப்பைகளை நெஞ்சில் பதியவைத்து, ஆண்டவன் அருள் நாடினால், அவனருள் எப்படிக் கூடும்? இவைகளெல்லா வற்றையும் விலக்கி, உண்மையில் உறைந்து நின்றால், ஆண்டவன் அருள் கூடும். கன்னங் கரியநிறக் காமாதி ராக்ஷசப்பேய்க் கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன்மாக்கள் இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே வஞ்சனையும் பொய்யுமுள்ளே வைத்தழுக்கா றாயுளறும் நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே கொலைகளவு கள் காமம் கோபம்விட்டா லன்றோ மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே இத்திருப்பாக்களை உற்று நோக்குக. மனிதன் பகுத்தறிவு பெறும்வரை ஆண்டவன் துணை செய்து வருகிறான். அப்பகுத்தறிவு கொண்டு மனிதன் மெய்யில் உறுதிகொள்ளல் வேண்டும். மெய்யினின்றும் வழுவி வீழ்வது எவர் குற்றம்? வழுவி வீழினும் மீண்டுமாதல் மெய்ந்நெறி பற்ற முயலுதல் வேண்டும். மெய்யில் கருத்தின்றிப் பொய்யில் புகுந்து புகுந்து போனால் ஆண்டவன் அருளொளி எங்ஙனம் படரும்? பொய்க் கடலில் வீழ்ந்த மனிதன் எங்ஙனம் மெய்க்கரை நண்ணுவன்? அவனுக்கொரு துணை வேண்டுமே என்று சிலர் வினவலாம். பொய்யில் வீழ்ந்துள்ள மனிதனுக்குத் துணை வேண்டற்பாலதே. அத்துணை பெறுதற்குப் பொய்யில் வெறுப்பாதல் மகனுக்குத் தோன்றல் வேண்டுமன்றோ? பொய்யில் சிறிது வெறுப்பாதல் தோன்றினால் போதும். அம்மகனை ஆட்கொள்ள ஆண்டவன் அருள் விரைந்து நிற்கிறது. பொய்யில் வெறுப்புற்று, ஆண்டவனே! யான் மனிதன்; அடிக்கடி நெறியி னின்றும் பிறழ்ந்து விழுகிறேன். என்னைக் கரையேற்றல் வேண்டும்; உன் துணை நாடிநிற்கிறேன் என்று கழிவிரக்கங் கொண்டு ஆண்டவனை நோக்கிக் கதறிக் கதறியழுதால், ஆண்டவன் அருட்டுணை கிடைக்கும். அழுதால் உன்னைப் பெறலாம் என்றார் மணிவாசகனார். ஒரு முயற்சியிலுந் தலைப்படாது பொய்யில் கிடப்போனுக்கு உய்வு யாண்டிருந்து வரும்? ஆண்டவன் அருட்பேற்றிற்குச் சிறிதள வாதல் மனித முயற்சி தேவையே. மெய்ம்முயற்சியில் தலைப்படாது பொய்ச்சேற்றிலேயே நெளிந்து நெளிந்து, ஆண்டவனாவது; ஐயனாவது; ஒன்று மில்லை என்று நாத்திகம் பேசுவது அறிவுடைமையாகாது. பொய் நீத்து மெய்வழி நின்னால் அருள் கூடும். பொய் வார்த்தை சொல்லிலோ திருவருட்கயலு மாய்ப் புன்மையேன் ஆவன் அந்தோ பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண மெய்ய தாம் இன்பம் என்று விளைவதே மெய்திகழும் அஷ்டாங்க யோகபூ மிக்குள்வளர் வேந்தரே குணசாந்தரே உய்யும்படிக்குன் றிருக்கருணை யொன்றைக் கொடுத்தா லுடையாய்பாழ்ம் பொய்யுமவாவு மழுக்காறும் புடைபட்டோடு நன்னெறியாம் மெய்யுமறிவு பெறும்பேறும் விளங்குமெனக் குன்னடியார்பாற் செய்யும் பணியுங் கைகூடுஞ் சிந்தைத்துயருந் தீர்ந்திடுமே ஐயவாதனைப் பழக்கமே மனநினை வதுதான் வையமீதினிற் பரம்பரை யாதினு மருவு மெய்யினின்றொளிர் பெரியவர் சார்வுற்று விளங்கிப் பொய்யதென்பதை யொருவிமெய் யுணருதல் போதம் பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன் மெய்யருளே யன்றோ விளம்பாய் பராபரமே கல்லாதே னானாலுங் கற்றுர்ந்த மெய்யடியார் சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர் ஐயமிலை யையமிலை யையா பராபரமே கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போன் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ பொய்ம்மயமே யான புரைதீர வெந்தையின்ப மெய்ம்மயம்வந் தென்னை விழுங்கவைத்தா லாகாதோ அன்பருக் கன்பான மெய்யன் -ஐயன் ஆனந்த மோன னருட்குரு நாதன் தன்பாதஞ் சென்னியில் வைத்தான் -என்னைத் தானறிந்தேன் மனந் தானிறந்தேனே சங்கர சங்கர சம்பு (தாயுமானார்) கடவுள் என்பது உண்மை அல்லது சத்தியமன்றி வேறென்னை? மாறுதலின்றி, அழிவின்றி என்றும் ஒரு பெற்றியா யிருக்கும் உண்மையே கடவுள். அவ்வுண்மையை உண்மையால் உணர முயல்வதே அறிவுடைமை. இதுவே உயிர்கள் ஆற்றத்தக்க தலையாய கடமை. ஆகவே, எவர் அறிவில் ஆண்டவன் பொலிவன்? பொய்யிலா மெய்யர் அறிவில் என்க. (3) பேறு (1) அறிவில்போத பரிபூரண அகண்டிதாகாரமாய்ப் போக்கு வரவற்ற பொருளே. . . . மெய்ம்மையால் அடையும் பேறு யாது? சமரச ஞானம். சமரச ஞானமாவது எங்குமுள கடவுள் காட்சி பெற்று, இரண்டறக் கலந்து, பிறவா இறவா நிலை அடைவதாகும். பொய்யுள்ள மட்டும் அறியாமை உண்டு. அறியாமை யோடு கூடிய பொய்யறிவில் சுட்டுணர்வே விளங்கிக் கிடக்கும். பொய் ஒழிந்தால் அறியாமை ஒழியும். அறியாமை ஒழிந்தால் மெய்யறிவு தோன்றும். மெய்யறிவால் சுட்டுணர்வு தொலையும். சுட்டுணர்விற்குக் கண்டம் பொருளாகுமேயன்றி அகண்டம் பொருளாகாது. அகண்டாகார நிலையோ ஓதற்கரியது. உயிர்கள் அடையத்தக்க இறுதிப் பேறு இதுவேயாகும். இந்நிலையே கடவுள் காட்சி என்பது. உயிர்கள் இக்காட்சி பெறல் வேண்டுமென்றே அருட் கடவுள் அவைகட்குப் பலதிறத் துணை புரிகிறான். அத்துணை பெறும் உயிர்கள், வாழ்வில் இறங்கும்போது, தங்கட்கு வாழ் வளித்த ஆண்டவனையும் அவனருளையும் மறவாது, மெய்ந் நெறி நின்றொழுகல் வேண்டும். அம்மெய்யொழுக்கம் கடவுள் அருள் கூட்டிச் சமரச உணர்வளித்து, முடிவில் கடவுள் காட்சியையும் பெறுவிக்கும். கடவுள் காட்சி பெரிதும் மக்களின் மெய்ம்மைக் கடமையைப் பொறுத்து நிற்றல் கருதற்பாற்று. மெய்ம்மையைப்பற்றிப் பல்லாயிரம் பேச்சுப் பேசலாம்; பல்லாயிரம் நூல்கள் எழுதலாம். அவைகளால் பயன் விளையுங் கொல்! விளையாது. மெய்ம்மையை - வாழ்வில் -நடையில் -கொணரவே உழைத்தல் வேண்டும். அந்நடை முறைக்குரிய துறைகளைப் பலர் பலவாறு கூறுப. அத்துறைகளில் சிலவற்றை யாதல் குறிப்பிட இந்நூல் இடந்தராது. எவரும் எளிதில் ஏற்கத்தக்க முறைகளில் இரண்டொன்றை மட்டும் நினைவூட்டி நின்று விடுகிறேன். கடவுள் சத்துப் பொருளென்று அறிஞர் பலர் முடிவு கண்டு, அம்முடிவை உலகிற்கும் அறிவுறுத்திப் போந்தார். அச்சத்து மண் புனல் தீ காற்று வெளி ஞாயிறு முதலியவற்றில் ஊடுருவி நின்று, உயிர்கட்குப் பல்லாற்றானுந் துணைசெய்து வருகிறது. ஈண்டுக் குறிக்கப்பெற்ற ஐம்பெறும் பொருளும் ஞாயிற்றொளியும் வாழ்விற்கு இன்றியமையாதன என்பது எவரும் ஒப்பமுடிந்த உண்மை. இவைகளின் வாயிலாக ஊடுருவி நிற்குஞ் சத்தானது பசுங்கீரையிலும் செங்காயிலும் பழங்களிலும் தானியங்களிலும் பரிணமித்து, உயிர்கட்கு உணவாகிறது. அச்சத்துணவை மனிதன் அளவாக முறைப்படி உண்டு வரவர அவனுக்குச் சத்தியத்தில் நாட்டஞ் செல்லும். உணவுக்கும் இயல்புக்கும் தொடர்புண்டு. ஆகவே, நல்லியல்பை விழையும் ஒருவன் சத்துணவு உண்டு வருவானாக. அவ்வுணவுடன் அவன் நல்லொழுக்கத்தைக் கடைப் பிடிப்பானாக. அவைகளுடன் அவன் அழிவிலாச் சத்தியத்தை - உண்மையை - கடவுளை - இடையறாது உன்னி வருவானாக. அவ்வாழ்வுடைய மக்களுக்கு ஆண்டவன் அருள் கூடும்; அருளால் சமரசஞானம் உண் டாகும்; சமரச ஞானத்தால் அவன் கடவுள் காட்சி பெறுவான். புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங் ககன மேனியைக் கண்டன கண்களே. - தாயுமானார்.  இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் முன்னுரை அருணெறி என்று ஒரு நெறி நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அந்நெறி நாளுக்குநாள் பலதிறப் பெயர்களைப் பெற்றுவிட்டது. காலதேச வர்த்தமானத்துக் கேற்பப் பலதிறப் பெயர்கள் பிறப்பது வழக்கம். அப் பெயர்கள் மீது மட்டுங் கருத்துச் செலுத்துவது அறியாமை. அதனால் இடரும் விளையும். அப் பெயர்களின் பொருள்மீது கருத்துச் செலுத்துவதே அறிவுடைமை. பொருள் ஒன்றே. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றார் திருமூலரும். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரூஉம் அருணெறிக்கு முதலாசிரியர் யாவர்? கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளும் தட்சணாமூர்த்தியே அந்நெறிக்குத் தோற்றுவாயாக நிற்பவர். இம்மோனஞான மூர்த்தியால், அருணெறி, சனத்குமாரர் உள்ளிட்ட நால்வருக்குச் சின்முத்திரை வாயிலாக அறிவுறுத்தப் பட்டது. இந் நால்வர்வழிப் பற்பலர் வாயிலாக அருணெறி உலகிடை வளர்ந்து வரலாயிற்று. இவ்வரலாற்றைத் திருவருள் ஞானங் கைவரப் பெற்ற பெரியோர் நன்கு விளக்கியிருக்கிறார். பன்னிரு திருமுறை, பதினான்கு சாத்திரம், தாயுமானார் பாடல் முதலிய நூல்களை ஆராய்ந்து பார்க்க. மக்கள் அறியாமை காரணமாக இடையிடையே அருணெறி யை மறந்து கெடுவதுண்டு. அவ்வப்போது பெரியோர் தோன்றி மாசைத் துடைத்துக் காலதேச வர்த்தமானத்துக்கேற்ற முறை யில் அச் செந்நெறியை ஒம்பிச் செல்வர். இற்றைக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ் விருள்கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்க சுவாமிகள். சுவாமிகள் சமரச சன்மார்க்கம் என்னும் பெயரால் பழம் பெரு நெறியை ஓம்பிச் சென்றார். இராமலிங்க சுவாமிகள் திருவருட்பா பாடிய அளவில் நின்றாரில்லை. அவர் வடலூரில் சமரச சன்மார்க்கக் கோயில் என்று சொல்லத்தக்க ஒரு ஞானசபை கண்டார். அச்சபையில் தைப்பூசந் தோறும் அன்பர் பல்லாயிரவர் கூடி அருணெறியை நினைவூட்டிக் கொள்கிறார். தைப்பூச விழாவை யொட்டி ஆங்கே பலதிறச் சிறப்புக்கள் நிகழ்கின்றன. அவைகளுள், சன்மார்க்க மகாநாடு கூட்டி, அறிஞரைக் கொண்டு, அருணெறி குறித்துச் சொற் பொழிவுகள் நிகழ்த்துவிப்பது மொன்று. சென்ற விபவ ஆண்டு, தைத்திங்களில் உற்ற பூசநாள் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு ஜனவரித் திங்கள் இருபத்தாறாம் நாள்) விழாவைத் தொடர்ந்து கூடிய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேறு அடியேனுக்குக் கிடைத்தது. அம் மகாநாட்டில் அடியேன் நிகழ்த்திய தலைமை யுரையைச் செவிமடுத்த அன்பர் பலர், அதைப் பத்திரிகையில் எழுதிவருமாறு கேட்டனர். அவ்வாறே அத் தலைமையுரையை எனது நவசக்தியில் வாரந் தோறும் எழுதி வரலானேன். அக் கட்டுரைகளைக் கொண்டதே இந்நூல். இந் நூலுக்கு இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்னும் பெயர் சூட்டப் பட்டது. ஒருவரது உள்ளக்கிடக்கையை யுணர அவரது உரை களைக் கருவியாகக் கோடலே அறம். ஒல்லும்வகை அவ்வறநெறி நின்றே எனது கடனாற்றியிருக்கிறேன். இச் சிறுநூல் பெரிதும் சுவாமிகளின் திருவாயினின்றும் உதிர்ந்த மலர்கள் சிலவற்றால் கோவை செய்யப்பட்டிருத்தல் கருதற்பாலது. இடையிடையே யுள்ள சிறியனேன் புன்மொழிகள் சுவாமிகளின் செவ்விய மலர்களைத் தாங்கி நிற்கும் நாருகள் போன்றன என்க. தலைமையுரை நிகழ்த்தியபோது, காலத்தின் அருமை நோக்கி, எடுத்துக்காட்டாகக் கொண்ட சுவாமிகளின் திருவாக்குகள் பல வற்றை முற்றுஞ் சொற்றேனில்லை; எடுத்த பொருளுக்கியைந்த சொற்களையும், சொற்றொடர்களையும், அடிகளையுமே ஆங்கொன்று ஈங்கொன்றாகக் குறிப்பிட்டுச் சென்றேன். அன்பர்கட்குப் பயன்படுமாறு அத்திருவாக்குகள் முற்றும் நூற்கண் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இராமலிங்க சுவாமிகள் சமரச ஷடாந்த சன்மார்க்கத்தில் நின்று, அருணெறி யோம்பி, உயிர்கள் வழிபாடே கடவுள் வழிபாடு என்பதை யுணர்ந்து, சமய வாழ்வு நடாத்திய விதம், அவர் ஆண்டவனை நோக்கிச் செய்த முறையீடு, அழுத அழுகை, அவர் கொண்ட குரு, பொருணூல், வழிபடு கடவுள், அவரடைந்த மரணமிலாப் பெருவாழ்வு, அதற்குரிய முறை முதலியன தெளிவாக இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல் காலத்துக் கேற்ற ஒன்று என்பது, நூலை முற்றும் வாசிப்போர்க்கு இனிது விளங்கும். இக் காலதேச வர்த்தமானம் வேண்டுஞ் செம்மைச் சீர்திருத்தங்கள் பல இந் நூற்கண் மிளிர்கின்றன. பெரியோர் திருவுள்ளத்தை அளந்து கூறுதற்கு அடியேன் அருகனல்லன். பலர் உலகியல் கண்கொண்டு பெரியோரைப் பார்க்கிறார்; சிலர் கல்விக் கண்கொண்டு அவரைப் படிக்கிறார். மிகச் சிலர் அகக்கண்ணெனுஞ் சமயக் கண்கொண்டு அவரைக் காண்கிறார். அகக்கண்ணெனுஞ் சமயகண் திறக்கப்பெற்றவர் நோக்கிற்கே பெரியோரின் உண்மைநிலை உள்ளங்கை நெல்லிக் கனியெனப் புலனாகும். ஏழையேன் எக்கண் கொண்டு சுவாமிகளைப் பார்த்துக் கடனாற்றினேன் என்பதை இந் நூற்கண் போந்துள்ள என் புன்மொழிகள் புலப்படுத்திவிடும். எனது சிறு அறிவு ஆராய்ச்சிக் கெட்டிய நெறி நின்று, சுவாமிகள் திருவுள்ளத்தைக் காண இம்முறை முயன்றேன்; இம் முயற்சியிலும் வழுவி வழுவி வீழ்ந்திருப்பேன். யான் மனிதன்; குற்றமுடை யேன்; குறையுடையேன். குற்றங் குறைகளை அன்பர் பொறுத்தருள் வாராக. இராயப்பேட்டை 10.10.1929 திருவாரூர்-வி. கலியாணசுந்தரன் தோற்றுவாய் சகோதரிகளே! சகோதரர்களே!! இராமலிங்க சுவாமிகளால் காணப்பெற்ற ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கத்தின் இவ் வாண்டுவிழாக் கூட்டத்தில் தலைமைவகிக்குமாறு அடியேனைத் தெரிந்தெடுத்த சங்கத்தார்க்கு எனது நன்றியறிதலான வணக்கம். ஈண்டு யான் தலைவன் என்னும் எண்ணத்துடன் நிற்கிறேனில்லை. என்னை ஒரு முன்னிலைச்சுட்டுத் தலைவனாகவே நீங்கள் கருதல் வேண்டும். சமரச சன்மார்க்க சங்கத்தின் தனித் தலைவன் எல்லாம் வல்ல இறைவனே. அவனடித் தொண்டனாக நின்றே யான் கடனாற்றப் புகுகிறேன். மாயவர மென்னும் மயூரத்தில் - மயிலாடுதுறையில் - (7-5-1927) கூடிய சன்மார்க்க மகாநாட்டில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதன் பொருள் விளக்கத்தையும், அச்சங்க அமைப்புமுறை யையுந் தொகுத்துக் கூறியுள்ளேன். விளக்கம், என் தலைமை யுரைகள் அடங்கிய தமிழ்த் தென்றல் என்னும் நூலிற் பார்க்க. ஈண்டு அவ்வமைப்பு முறையை மட்டுஞ் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறேன். சமரச சன்மார்க்க சங்கத்தின் தலைவர் எல்லாம் வல்ல கடவுள்; அமைச்சர் இயற்கை அன்னையார்; நிருவாக அங்கத்தவர் மெய்யறிவு பெற்று அருள்நெறி ஓம்பிய அடியவர்; சந்தா, தயை என்னும் அருள். இச் சந்தா செலுத்துவோர் அனைவரும் உறுப்பினராவர். சமரச சன்மார்க்க சங்கம் நண்ண விரும்புவோர் இவ்வமைப்பு முறையைக் கருத்திலிருத்தி வாழ்வு நடாத்துவாராக. இராமலிங்க சுவாமிகளும், சமரச சன்மார்க்க சங்கத் தனித் தலைவர் எல்லாம் வல்ல இறைவரென்றும், தயை, என்னும் அரு ளுடையார் அனைவரும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்த அகவினத்தா ரென்றும், ஏனையோர் புறவினத்தாரென்றும், அகவினத்தார் புறவினத்தாரையும் தம் வழிப் படுத்தச் சன்மார்க்கத் தொண்டாற்றல் வேண்டுமென்றும், இத்தொண்டே இறைபணி யென்றும் உலகிற்கு அறிவுறுத்திப் போந்தார். இக்கருத்துப் பொதுள அவர் அருளிய பாக்கள் பல உண்டு. அவற்றுள் சில வருமாறு:- அமரரு முனிவரும் அதிசயித் திடவே அருட்பெருஞ் சோதியை அன்புட னளித்தே கமமுறு சிவநெறிக் கேற்றியென் றனையே காத்தென துளத்தினிற் கலந்தமெய்ப் பதியே எமனெனும் அவனினி யிலையிலை மகனே எய்ப்பற வாழ்கவென் றியம்பிய வரசே சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனிநட ராஜவென் சற்குரு மணியே நன்மார்க்கத் தவருள நண்ணிய வரமே நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே என்மார்க்க மெனக்களித் தெனையுமே லேற்றி இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனிநட ராஜவென் சற்குரு மணியே தயையுடையா ரெல்லாருஞ் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே இங்கவர்கள் தம்மோடுங் கூடி நயமுறுநல் லருணெறியிற் களித்துவிளை யாடி நண்ணுகவென் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே உயலுறுமென் னுயிர்க்கினிய உறவேயென் னறிவில் ஓங்கியபே ரன்பேயென் னன்பிலுறு மொளியே மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுமணி மன்றில் மாநடத்தென் னரசேயென் மாலையணிந் தருளே அருளுடையா ரெல்லாருஞ் சமரசசன் மார்க்கம் அடைந்தவரே யாதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருணெறியிற் களித்துவிளை யாடிச் செழித்திடுக வாழ்கவெனச் செப்பியசற் குருவே பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே போதாந்த முதலாறும் நிறைந்தொளிரு மொளியே மருளுடையார் தமக்குமரு ணீக்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசேயென் மாலையுமேற் றருளே கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரு நினது குலத்தாரே நீயெனது குலத்துமுதன் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியவென் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கு நித்தியனே எல்லா நிலையும்விளங் குறவருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேயென் புகலுமணிந் தருளே உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லரவர் புறவினத்தார் அவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தன் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கமவர் அடையளவு மிதுதான் நம்மாணை என்றெனக்கு நவின் றவரு ளிறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் னரசேயென் மாலையணிந் தருளே சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் நுமது தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடுங் கேட்பீர் என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவன்எனக் கொள்வீர் எல்லாஞ்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் புன்மார்க்கத் தவர்போல வேறுசில புகன்றே புத்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த் தன்மார்க்க மாய்விளங்குஞ் சுத்தசிவம் ஒன்றே தன்னாணை என்னாணை சார்ந்தறிமின் ஈண்டே தங்கமே யனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவுஞ் சங்கஞ் சார்திருக் கோயில்கண் டிடவுந் துங்கமே பெருஞ்சற் சங்கநீ டூழி துலங்கவுஞ் சங்கத்தி லடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் சற்சபைக் குரியார் தம்மொடுங் கூடித் தனித்தபே ரன்புமெய் யறிவும் நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித் தெற்சபை யுலகத் துயிர்க்கெலாம் இன்பஞ் செய்வதென் னிச்சையாம் எந்தாய் இனி எப்பொருள் பற்றி முன்னுரை நிகழ்த்துவது? எல்லா ருள்ளமும் எவர்மீது படிந்து கிடக்கிறதென்று யான் சொல்ல வேண்டுவ தில்லை. அவரைப் பற்றிப் பேசுவதே பொருத்தம் என்று எனக்குத் தோன்றுகிறது. இராமலிங்க சுவாமிகள் இற்றைக்கு நூற்றாறு ஆண்டு கட்கு முன்னர் நந் தமிழ்நாட்டிற் றோன்றியவர்; ஐம்பதாண்டு கட்கு முன்னர் மறைந்தவர். அவரை எதன் வாயிலாக உணர்ந்து பேசுவது? அவரை உணர்தற்குரிய கருவியுண்டோ? உண்டேல் அஃது எது? சிலர் அவரது வரலாற்றை நினைக்கலாம். சிலர் அவரது திரு வாய்மொழியை நினைக்கலாம். இவ்விரண்டனுள், சுவாமிகள் திருவாயினின்றும் பிறந்த அருண்மொழி என்னுந் தமிழ்த் தேன் கூட்டைக் கோடலே சிறப்பு. நமது நாட்டில் சரித்திரமுறையில் பெரிதும் வரலாறுகள் எழுதப்படுவதில்லை. சிலர் பகைமை மேலீட்டான் ஒருவரை இழித்துப் பழிப்பதுண்டு. சிலர் அன்பு மேலீட்டான் ஒருவரை வானில் ஏற்றிப் புகழ்வதுண்டு. இவ்வரலாறுகளைக் கொண்டு ஒருவர் உள்ளத்தை எங்ஙனம் உணர்தல் கூடும்? திருவள்ளுவரை உணர அவர் அருளிய திருக்குறளை யான் கொள்வேனே யன்றிப் பிறரால் எழுதப்பெற்ற அவர்தம் வரலாற்றைக் கொள்ளேன்; அவ்வாறே சேக்கிழாரை உணர்தற்குப் பெரிய புராணத்தையே கொள்வேன்; மற்றவரையும் அவரவர் நூல் கொண்டே உணர முயல்வது எனது வழக்கம். அவ்வழக்கை ஒட்டியே இராமலிங்க சுவாமிகளைக் காண, அவர் அருளிய திருவருட்பா என்னுங் கண்ணாடியை உறுகருவியாகக் கொள்கிறேன். இக்காலத்தில் படங்கள் எழுதப்படுவதும் பிடிக்கப்படுவதும் உங்கட்குத் தெரியும். அப் படங்கள் உருவத்தை உணர்த்துமே யன்றி உள்ளத்தை உணர்த்தமாட்டா. உள்ளத்தை உணர்த்தும் படங் களும் உண்டோ? உண்டு. அவைகள் யா? அவைகளே நூல்கள். ஒருவரது உள்ளநிலையை அவர் எழுதிய நூல்கள் வாயிலாக உணர்வதே சால்பு. புகைப்படங்களும் பிறவும் மலியும் இந்நாளில், காவியப் படங்களின் அருமை அருகிவருகிறது. நூல்கள் வாயிலாக நூலுடையாரின் உள்ளத்தையும் உணரலாம்; கூர்த்தமதியால் அவர்தம் உருவத்தையும் உணரலாம். அவ்வுணர்வு மீண்டும் உலகில் புத்துயிர் பெறல்வேண்டும். அன்பர்களே! இராமலிங்க சுவாமிகளின் - அருள் கனிந்த நெஞ்சங் கொண்ட - அழகிய வடிவைக் காணஅருட்பா என்னும் பளிங்கறையை நோக்குவோம். அருட்பாவை ஆராய்ந்தால் பற்பல செம்பொருள் பெறலாம். அவற்றை ஈண்டு நான்கு கூறாகத் தொகுத்துக் கொள்கிறேன். 1) சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தியது என்னை என்பது. 2) அவ்வறிவுறுத்தலை நடையில் கொணர்தற்கு அவர் கோலிய முறை. 3) அம் முறைபற்றி நடந்தமையால் அவர் பெற்ற பேறு. 4) அப்பேறு பெறுதற்கு அவர் இளமையில் எம் முயற்சியில் தலைப்பட்டார் என்பது. 1. அறிவுறுத்தல் சுவாமிகளின் அறிவுறுத்தல் அவர் அருளிய திருமுறை களின் பன்முகங்கொண்டு பெருக்கெடுத் தோடுகிறது. அப் பெருக்குத் தேங்கி நிறைந்த ஏரிபோல் காட்சியளிக்கும் இடம் ஒன்றுளது. அதுவே ஆறாந் திருமுறை. அத்திருமுறைக்கு முகம்போல ஒளிர்வது அருட்பெருஞ்சோதி அகவல். அவ் வகவலை அருட்பாவின் அட்டவணை அல்லது பொருளடக்கம் என்றுங் கூறலாம். அவ்வகவல், சுவாமிகளின் அறிவுறுத்தலைச் சுருங்கிச் சொல்லி விளங்க வைக்கிறது. சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தியதைச் சுருங்கக் கூறின், அருட்பெருஞ் சோதி - தனிப்பெருங் கருணை என்று கூறலாம். இன்னும் அவர் அறிவுறுத்தலை அவரால் காணப்பெற்ற ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பெயரும் பொருளும் நனிவிளங்கச் செய்யும். இச் சங்கப் பெயரையும் பொருளையும் ஒருமைப்படுத்தி, அவற்றின் உள்ளுறையை அருட்பா என்னுங் கருவி கொண்டு ஆராய்ந்தால், சுவாமிகளின் திருவுள்ளம் நன்கு புலனாகும். ஆகவே, அத் துறையில் சிறிது இறங்கலாமெனக் கருதுகிறேன். ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கம் 1. ஷடாந்தம் ஷடாந்தம் என்பது ஆறு கோடி என்னுந் தமிழ்ப் பொரு ளுடையது. ஈண்டுக் கோடி என்றது முடிவு அல்லது ஈறு என்னும் பொருளின் மேற்று. எழு கோடி மந்திரம் என்னும் வழக்கை ஓர்க. மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் என்றார் உமாபதி சிவனாரும். ஷடாந்தத்தின் விரிவு என்னை? விரிவு இராமலிங்கசுவாமி களாலேயே விளக்கப்பட்டிருக்கிறது. பலவிடங்களில் பாச்செய்யு ளாகவும், சிலவிடங்களில் உரைச் செய்யுளாகவும் ஷடாந்தத்தைச் சுவாமிகள் விளக்கிக் காட்டியுள்ளார்கள். தூயக லாந்தச் சுகந்தரு வெளியெனும் ஆயசிற் சபையி லருட்பெருஞ் சோதி ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் சோதி விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமலசிற் சபையி லருட்பெருஞ் சோதி பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் சோதி சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் சோதி சுத்தசித் தாந்தச் சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் சோதி நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்த முடனே நவில்கின்ற சித்தாந்த மென்னுமா றந்தத்தின் ஞானமெய்க் கொடி நாட்டியே மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரமெலாம் முன்னிப் படைத்தன் முதலாம் முத்தொழிலு மிருதொழிலு முன்னின் றியற்றியைம் மூர்த்திகளு மேவல் கேட்ப வாதாந்த முற்றபல சத்திகளொ டுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்ய இன்ப மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்து மரசே சூதாண்ட நெஞ்சினிற் றோயாத நேயமே துரியநடு நின்ற சிவமே சுத்தசிவ சன்மார்க்க நீதியே அருட்பெருஞ் சோதிநட ராஜ பதியே இம் மெய்ம்மொழிப் பொருள் விளக்கத்தி னெல்லை எங்ஙன மெனின்; யோகாந்த கலாந்த நாதாந்த போதாந்த வேதாந்த சித்தாந்த மென்னும் ஷடாந்தாநுபவ சாத்தியர்களும், அவற்றை விரும்பி அவ்வழிக்கணின்ற சாதகர்களும், அந்தராநுபவ திட்டாந்தமாக உபாசிக்க விளங்குகின்ற சிதம்பர ரகசியத்தைக் குறிக்குஞ் சிற்சபைக்கண்ணே சேக்கிழாரென்னும் தெய்வப்புலவர் பொருட்டு இறைவர் பரமாகாய வாக்கான் மொழியப்பட்டுச் சமரசாநுபவ சாட்சாத்காரமாய் ஆறந்தத்தினு நடிக்கின்ற சிதம்பர நடனத் திருவருட் பதத்தை வாச்சிய லட்சியமாகக் கொள்ளப்பட்ட தாகலின், ஷடாந்த சமரச லட்சியப் பொருள் எல்லையை யுடைய தென்க. இவ் வாறந்த முறைவைப்பு, செய்யுட்களில் சிலவிடங்களில் மாறுபட் டிருக்கிறது. அம்மாறுபாடு, பாட்டின் போக்கை ஒட்டிய தென்க. பொருள்கொள்ளும்போது அவைகளை ஒழுங்குபடக் கொண்டு கூட்டிக் கொள்ளுதல் வேண்டும். ஈண்டுச் சுவாமிகள் எழுதிய உரைச்செய்யுள் வழிநின்று ஆறந்தத்தையும் நோக்குவோம். யோகாந்தம் கலாந்தம் முதலிய குறியீடுகளைக் கேட்கும் போதே சிலர்க்கு வெறுப்புத் தோன்றுவதுண்டு. ‘ï› tªj§fis¤ bjǪJbfhŸtjhš ï¡fhy thœÉ‰F v‹d ga‹? என்று கருதுவோருமுளர். இது காலத்தின் கோலம்! என் செய்வது! கால நிலையை உன்னி எடுத்த பொருளுக்கேற்ப ஆறந்தத்தைப் பற்றிச் சிலவுரை பகர்ந்து மேற்செல்கிறேன். (1) யோகாந்தம் யோகம் என்னுஞ் சொற்கு ஒன்றல் என்பது பொருள். ஒன்றில் உள்ளத்தை ஒன்றச்செய்வதற்கு யோகம் என்று பெயர். அவ்வொன்று தொடக்கத்தில் அவரவர் கருத்தைக் கவரும் ஏதாவதா யிருக்கலாம். தொடக்கத்தில் வேண்டற்பாலது அலையும் மனத்தை ஒன்றில் ஒன்றச் செய்வதே யாகும். ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை என்றார் அப்பரும். ஒன்றல் இருவிதம். ஒன்று இருளில் ஒன்றுவது; மற்றொன்று ஒளியில் ஒன்றுவது. மனிதன் நாடோறும் உறங்குகிறான். அவ்வுறக்கத்தில் அவன் மனம் ஓய்வுபெற்று ஒன்றுகிறது. அஃது எதன்கண் ஒன்றுகிறது? இருளில் என்று சொல்லவேண்டுவதில்லை. இது கேவலம் என்று சொல்லப்படும். சுவாமிகள் குறிப்பிட்ட யோகம் முதலியன சுத்தத்தின்பாற் பட்டன. சுத்தமாவது இருளில் உறங்காது. ஒளியில் உறங்குவது. இதனை அறிதுயில் அல்லது யோக நித்திரை என்றுஞ் சொல்வதுண்டு. மேற்போந்த இரண்டுந் தூக்கமே. ஒன்று மயக்கத்தால் இருளில் தூங்குவது; மற்றொன்று அறிவு விளக்கத்தால் ஒளியில் தூங்குவது. அதாவது அமைதியுற்றிருப்பது. இவ் வறிதுயிலை, சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த ஒளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே என்றும், தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முளே தூங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முளே தூங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முளே தூங்கிக் கண்டார் நிலைசொல்வ தெவ்வாறே என்றுந் திருமூலர் விளக்கி யிருத்தல் காண்க. தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் என்று சுவாமிகளும் அறிதுயிலைச் சிறப்பித்திருக்கிறார். மூச்சை ஈர்ப்பதும், நிறுத்துவதும், விடுவதும் யோகம் என்று சிலர் கூறுப. இஃது உடல்நலன் கருதிச் செய்யப்படும் மலயோகப் படிகளுள் ஒன்று. முயன்று மூச்சை ஈர்த்து, நிறுத்தி, விடாமலும் யோகஞ் செய்யலாம். இஃதே அறிதுயிலின் பாற்பட்ட அமலயோக மாகும். அமலயோகர் உளவை யெலாம் என்று சுவாமிகளும் அமலயோக உண்மையை உணர்த்தியுள்ளார். யோகக் கூறுகள் பலப்பல. அவற்றைக் கலையளவிலாதல் பயில மக்கள் இப்பொழுது விழைகிறார்களில்லை. யோகமென்பது இழிவாகவுங் கருதப்படுகிறது. அடயோகம் என்னும் பெயரால், சில கயவர் நிகழ்த்தும் அடாத செயல்களால், யோகக் கல்விக்கே இடை யூறு நேர்ந்திருக்கிறது. யான் இளமைதொட்டுக் - கல்லூரி விடுத்த நாள் முதல் உண்மை யோகிகளைத் தேடித் தேடித் திரிகிறேன்; எனது வாணா ளில் யோகிகள் என்று சொல்லப்படுவோர் பலரைக் கண்டி ருக்கிறேன்; அவருள் இரண்டொருவர் தவிர ஏனையோரெல் லாரும் அசட்டு யோகிகளே யாவர். அவர் தம் மோசங்களையும் ஏமாற்றங்களையும் ஈண்டு விரிக்கிற்பெருகும். அப்பேய்களைப் பற்றிய நினைவும் ஈண்டு வேண்டுவதில்லை. மேற்குறிப்பிட்ட இரண்டொரு நல்லாரும் இல்லறத்திருப்பவர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். யோகத் துறைகளுள் தலைசிறந்தது தியானயோக மென்பது எனது உள்ளக்கிடக்கை. மூச்சைப் பிடிக்குஞ் சிலர், தியானயோகத்தை எள்ளி நகையாடுவதுண்டு. நேரிய தியான யோகம் பின்னைப் பெருநிலை கூட்டுதல் ஒருதலை. தியானத்தில் அகத்தியானமே விழுமியது. மலயோகம், உடல்நலனுக்குரிய வாயூறல் என்னும் அமுதநீர் வழங்குவதுபோல, அகத்தியான மெனும் அமலயோகமும் உயிர் நலனுக்குரிய ஆனந்தநீரைப் பெருக்கிப் பொழியும். அவ்வமிர்த தாரை எழுத்தில் அடங்கு வதோ? அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பர மல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்புமுழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய்சிவபெருமானே சீருடைச்சிவ புரத்தரைசே தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ அன்பர்களே! இம் மணிவாசகத்தை நோக்குங்கள்; நோக்கி நோக்கிக் குழைந்து குழைந்து உருகுங்கள்; உருகி உருகி அழுங்கள். அவ்வழுகை நாயேனுக்கு என்று வருமோ என்று அழுகிறேன். தியானயோகத்தின் இயல்பை ஏழையேன் எச் சொல்லால் சொல்வேன்! அழுதடி அடைந்த ஆனந்த மாதவனார் அமுத மொழியைப் பாருங்கள். அம்மொழி, தியானயோகத்தின் இயல்பைத் தெரிக்கும். தியான யோகத்தின் மாண்பை இராமலிங்க சுவாமிகள் ஆ! ஆ! ஓரிடத்திலா! பல்லாயிரம் இடத்தில் பாடிப்பாடிப் பரவு கிறார். அப்பாடல்களை யெல்லாம் ஈண்டுக் காட்ட இயலுங் கொல்! எனக்கினிய - என் உயிர்க்கினிய- சில பாடல்களை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். அப்பாடல்களைப் பன்முறை பாடிப் பாடி இன்பத்தில் தோயுங்கள். நினைந்துநினைந்து உணர்ந்துஉணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந்து ஏத்துதுநாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழுங் குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச வாதகன்ற ஞானியர்தம் மதியி லூறும் வானமுதே யானந்த மழையே மாயை வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில் தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே அருளருவி வழிந்துவழிந் தொழுக வோங்கும் ஆனந்தத் தனிமலையே அமல வேதப் பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கண் மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் இந்திரியம் அவைகலந்துள் இயங்கு கின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத் தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச வெண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேயின் இசைவீசத் தண்பனிநீ ரெடுத்து வீசப் பெண்ணமுத மனைவியர்விண் ணமுத மூட்டப் பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக் கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்து மின்பங் கலந்துகொளத் தருங்கருணைக் கடவுட் டேவே இவ்வாறு ஒருமையில் ஒன்றும் பயிற்சி முதிர முதிர, அதன் முடிவில் பலதிற அக நிகழ்ச்சிகள் தோன்றிக் கொண்டே போகும். சுவாமிகள் அந்நிகழ்ச்சிகளைக் கலாந்தம் முதலியன வாக முறைப்படுத்தித் தொகுத்துக் காட்டுகிறார். ஆகவே, யோக முடிவில், முதலில் விளங்குவது கலை எனக் கொள்க. (2) கலாந்தம் கலை என்பது ஒரு தத்துவம். அது நியதியினின்றும் பிறப்பது; வித்தையின் தோற்றத்துக்கு நிலைக்களனா யிருப்பது. இக்கலையின் வினை, அவித்தை அல்லது ஆணவம் என்னும் மறைப்பை அவரவர் முயற்சிக்கேற்ற அளவில் சிறிது சிறிதாக நீக்கத் துணைபுரிவது. ஆன்மா, கலையில் தோய்தற்குமுன்னர்ச் சிறிதும் விளக்க மின்றிக் கிடக்கிறது. கலையோடு கூடிய பின்னர் அஃது அறிவு விளக்கம் பெறுகிறது. விளக்கம் சித்தியார் முதலிய நூல்களிற் காண்க. கலைக்கு இருதலையுண்டு. உடுக்கையை நினைத்துக் கொள்ளுங்கள். ஒருதலை இருண்மயமா யிருக்கும்; மற்றொன்று ஒளிமயமா யிருக்கும். கலையின் இருட்பக்கம் விளங்குவது மயக்க அறிவு. இது கலைஞானம் எனவும் படும். கலையின் ஒளிப்பக்கம் விளங்குவது மெய்யறிவு. இதை உண்மை ஞானம் என்றுங் கூறுப. மயக்க அறிவே பலசமயப் போருக்கும், கண்மூடி வழக்க ஒழுக்கங்கட்கும், பிற கேடுகட்குங் காரணமாக நிற்கிறது. உண்மை ஞானம் விளங்கப்பெற்றதும் பல சமய உணர்வு, கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் முதலிய யாவும் பொன்றச் சன்மார்க்கமென்னும் அருளொழுக்கம் இடம்பெறும். இவ்வுண்மையைச் சுவாமிகள், மணிக்கதவந் திறவாயோ மறப்பையெலாந் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ கணக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே கரைகடந்த பெரும்போகங் கண்டிடச்செய் யாயோ தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே தாங்கமுடி யாதினியென் தனித்தலைமைப் பதியே திணைக்கலையா தியவெல்லாம் பணிக்கவல்ல சிவமே சித்தசிகா மணியேயென் திருநடநா யகனே கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக் கூவுகின்றார் பலனொன்றுங் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தா யாங்கே இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியுறப் புரிவாய் சித்தசிகா மணியேயென் திருநடநா யகனே கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறுசன் மார்க்கமொன்றே நிலைபெறஎவ் வுலகும் வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினையென் றனக்கே உலைவறுமிப் பொழுதேநற் றருணமென நீயே உணர்த்தினைவந் தணைந்தருள்வா யுண்மையுரைத் தவனே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருப்பொதுநிற் கின்றோய் சித்தசிகா மணியேயென் திருநடநா யகனே எனவரூஉம் பாக்களில் விளக்கி யிருத்தலை உன்னுக. சுவாமிகள் கதவு என்றது கலாதத்துவத்தை என்க. இக்கலை முடிவில் முழங்குவது நாதம். (3) நாதாந்தம் நாதம் என்னுஞ் சொற்கு ஒலி என்பது பொருள். ஒலிகள் பலதிறத்தன. அவைகட்கெல்லாம் தாயகமாயுள்ளது ஒன்று. அஃது ஓங்காரம். அதுவே நாதமென்னும் ஒலி. அது சிலம்பொலி முதலிய பெயர்களானும் வழங்கப் பெறுகிறது. அருட்சோதி தெய்வமெனும் நடராசபதியின் காட்சிக்கு முன் இவ்வொலி கேட்கும். நாதஞ் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்தே நடிக்கும் பாதஞ் சொல்கின்ற பத்தரே நித்தரென் றறிமின் வேதஞ் சொல்கின்ற பரிசிது மெய்மையான் பக்க வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே விந்தோ நாத வெளியுங் கடந்து மேலு நீளுதே மேலை வெளியுங் கடந்துன் னடிய ராணை யாளுதே அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவா ரில்லையே அறிந்தா ருலகி லின்ப வடிவ மாவ ரொல்லையே இத் திருப்பாக்களின் கருத்தை ஓர்க. நாத தத்துவத்தில் சுத்தம் என்னும் ஒளிவழியில் ஆன்மா தனித்துத் தோயும்போது, சிவம் நாதமயமா யிருப்பது புலனாகும். அந்நாதகீதம் சொல்லுந்தரத்ததன்று. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்றார் அப்பரும். அவ்வொலி ஓம் என்னும் அடியினின்றும் பிறக்கிறது. அதைச் சிலம்பொலி என்றுங் கூறுப. இந் நாதமுடிவைத் தொடர்ந்து நிற்பது போதம். மணி யோசைக்குப் பின்னே யானை வருவதுபோல என்க. அருளாம் பெரிய வெளிக்குட் சோதி வடிவ னாகியே அரசு செலுத்துந் தனித்த தலைமைப் பரம யோகியே பொருளா யெனையு முளங்கொண் டளித்த புனித நாதனே போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாதனே (4) போதாந்தம் போதம் = அறிவு; கலையில் விளங்கிய மெய்யறிவு; அதாவது ஓங்காரத்துள் சோதிமயமாகக் காட்சி வழங்கும் ஒரு நிலை. நாதாந் தத்தில் அப் போதநிலை உருக்கொள்கிறது. அறிவைச் சோதிமய மாகக் காணும் ஒரு நிலையைப் போதம் என்று சுருங்கச் சொல்லலாம். நாத - ஒலி கேட்ட பின்னரும் உயிர்கட்குச் சாய்வு நேர்தல் உண்டு. ஆண்டிருந்து மேலே இவர்ந்து செல்ல இயலாது சிலர் இழிதலுமுண்டு. கலையில் ஆணவ நீக்கமும் மெய்யறிவு விளக்கமும் உற்றாலும், ஆணவ வேர்மட்டும், நாதத்துக்கும் போதத்துக்கும் இடையிலேயே அறுபடுகிறது. அது முற்றும் அறுபட்ட பின்னரே அறிவெனுஞ் சோதி காட்சி வழங்கும். சீவபோதம் சாகும்போது தன் வீரத்தைக் காட்டியன்றோ சாகும்? விளக்கு அவியும்போது கொழுந்துவிட்டெரிந்தன்றோ அவிகிறது? நாதத்தில் சாகும் நிலையில் வீறிட்டெழும் சீவ போதத்துக்கு இரையாகாது, தன்னைக் காப்பதே அறிவுடைமை. அங்கே சில இடரும் விளைதலுண்டு. அவ்விடர் களைய அன்பர் ஆண்டவன் அருளில் இடையறா நாட்டஞ் செலுத்துவர். அவ்விடர்க் கடலைக் கடந்துவிடின், பின்னை ஆன்ம முயற்சி வேண்டுவதில்லை. அதற்குமேல் சீவன் சிவனுடைமையாய் விடுகிறான். சீவன் சிவனைத் தந்தை என்று உணரும் இடமும் அதுவே. இதுகுறித்து இங்கே விரித்துரைக்க வேண்டுவதில்லை. இவ்வநுபவங்களைச் சுவாமிகள் பல விடங்களில் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்கியிருக்கிறார். அவர் அருளிய சில பாக்கள் வருமாறு:- ஓங்கார அணைமீது நானிருந்த தருணம் உவந்தெனது மணவாளர் செவந்தவடி வகன்றே ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார் இருந்தருள்க எனவெழுந்தேன் எழுந்திருப்ப தெனநீ ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழித்தனனப் போது நான்றானோ அவர்தானோ அறிந்திலன்முன் குறிப்பை ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் ஆங்கே உறைந்தவநு பவந்தோழி நிறைந்தபெரு வெளியே நாதவரை சென்றுமறை ஓரனந்தங் கோடி நாடியிளைத் திருந்தனவா கமங்கள்பர நாத போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப் புணர்ப்பறியா திருந்தனவென் றறிஞர்புகல் வாரேல் பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப் படிவமெடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால் புகலவச மாமோநீ புகலாயென் தோழி நாதமட்டுஞ் சென்றனமேற் செல்லவழி அறியேம் நவின்றபர விந்துமட்டும் நாடினமே லறியேம் ஏதமிலாப் பரநாத எல்லைமட்டுஞ் சென்றேம் இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெரு வெளிக்கே ஆதரவிற் சென்றதன்மேற் செல்லவழி தெரியேம் அம்மம்ம என்றுமறை ஆகமங்க ளெல்லாம் ஒதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின் உண்மைசொல வல்லவரார் உரையாயென் தோழி நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ ஞானவொளி நடுவின்ப நடந்துதரிசிப் பேனோ போதாந்தத் திருவடியென் சென்னிபொருந் திடுமோ புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியிற் சுத்தசிவ வெளிமயந்தா னுறுமோ பாதாந்த வரைநீறு மணக்கமன்றி லாடும் பரமர்திரு வுளமெதுவோ பரமமறிந் திலனே வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும் நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி நடவாம லென்மொழி கடப்பாயோ தோழி நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும் சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி துட்ட நெறியிற் கெடுவாயோ தோழி களக்கமறப் பொதுநடநான் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியே னுளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ குரங்குகவ ராதெனது குறிப்பிலகப் படினும் துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ சோதிதிரு உளமெதுவோ ஏதுமறிந் திலனே நாதாந்தத்துக்கும் போதாந்தத்துக்கும் இடையில் நிகழுஞ் சில நிகழ்ச்சிகளைச் சுவாமிகள் தலைவன் தலைவி என்னும் முறைப்படுத்தி, அணிபெறப் பாடிய பாக்களைப் படிக்குந்தொறும் படிக்குந்தொறும், அகத்திலெழும் இன்பை அவ்வகமன்றோ உரைத்தல் வேண்டும்? ஆண்டவன் அருட்டிறத்தைத் தேனென இனிக்குந் தீந்தமிழில் எவர்க்கும் விளங்கும் எளிய நடையில் இதுகாறும் எவரே பாடினார்? அப்பாக்களைத் திங்கள் உமிழும் நிலவென் பேனா? இளந் தென்றல் என்பேனா? யாழுங் குழலும் அமிழ்துங் குழைந்த ஒன்றென்பேனா? ஏழையேன் என்னென்பேன்? என்னென் பேன்? இவ்வுலகெனும் நீற்றரையில் நின்று அப் பாக்களைப் பாடும்போது, இவ்வுலகம் மாசில் வீணையும் மாலை மதியமும் - வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் - மூசு வண்டறை பொய்கையும் போன்றிருக்கிறது என்று சொல்வேன். அந்நறும் பாக்களில் எதைக் காட்டுவேன்! எதை விடுப்பேன்! இங்கித மாலையில் எந்நெஞ்சந் தோய்கிறது. வேறு சில பாக்கள் வருமாறு:- என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான் என்னிறைவன் பொதுவினட மியற்றுநட ராஜன் தன்னையறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான் தன்னையறிந்த பருவத்தே எனையறிய விரும்பான் பின்னையன்றி முன்னுமொரு பிழைபுரிந்தே னில்லை பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கு மழகோ கன்னலென்றாற் கைக்கின்ற கணக்குமுண்டோ அவன்றன் கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாயென் தோழி கண்ணனையான் என்னுயிரிற் கலந்துநின்ற கணவன் கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன் தண்ணனையாம் இளம்பருவந் தன்னிலெனைத் தனித்துத் தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான் பெண்ணனையார் கண்டபடி பேசவுநான் கூசாப் பெருமையொடும் இருந்தேனென் அருமையெலா மறிந்தான் உண்ணனையா வகைவரவு தாழ்த்தனனின் றவன்றன் உளமறிந்தும் விடுவேனோ உரையாயென் தோழி திருப்பொதுவிற் றிருநடநான் சென்றுகண்ட தருணம் சித்தியெனும் பெண்ணரசி எத்தியென்கைப் பிடித்தாள் கருப்பறியா தெனையதன்முன் கலந்தபுத்தி யெனுமோர் காரிகைதான் கண்டளவிற் கனிந்துமகிழ்ந் திடுமோ விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ விவர்க்குநிதஞ் சண்டைவிளைந் திடுமோ தருப்பொதுவி லிருவருக்குஞ் சந்ததியுண் டாமோ தடைபடுமோ திருவுளந்தான் சற்றுமறிந் திலனே மனையணைந்த மலரணைமேல் எனையணைந்த போது வடிவுசுக வடிவானேன் என்றவத னாலோ இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவமென் புகல்வேன் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் புனைமுகமோர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி பனையுலர்ந்த ஓலையெனப் பெண்களொலிக் கின்றார் பண்ணவரென் நடராயர் எண்ணமறிந் திலனே போத நிலையில் சிவம் சோதிவடிவாகத் தோன்றும். அச்சோதி தரிசனம் பெறப்பெற உயிர்க்கு இன்ப உணர்வு பெருகிக் கொண்டே போகும். அப்போதத்தில் நிலைத்து நிற்போர் கீழ்நிலைகளில் வீழ்ந்து இடர்ப்படுதல் அருமை. ஆண்டிருந்து அவர் மேலே இவர்ந்தே செல்வர். அங்கேதான் காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோலச் சீவனைச் சிவன் ஈர்த்தல் நிகழும். சீவன் சிவனைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வான். சிவநாட்டமன்றி வேறு நாட்டம் சீவனுக்குறாது. சோதியே சுடரே சூழொளி விளக்கே என்று ஆண்டவனை விளித்துச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே என்று மாணிக்கவாசகனார் அருளியது ஈண்டுப் பெரிதும் உன்னற்பாலது. போத நிலையில் பொலிவுறும் அருட்சோதியைப் பற்றியும், அதனால் விளையும் இன்பத்தைப் பற்றியும் இராமலிங்க சுவாமிகள் அருளிய பாக்கள் பலப்பல. அவைகளுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். கொழுந்தேனுஞ் செழும்பாகுங் குலவுபசும் பாலுங் கூட்டியுண்டாற் போலினிக்குங் குணங்கொள்முடிக் கனியே தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்றவிடம் கழுத்தினுள்ளே தோன்றிநின்ற சுடரே எழுந்தேறு மன்பருளத் தேற்றுதிரு விளக்கே என்னுயிர்க்குத் துணையேயென் னிருகண்ணுண் மணியே அழுந்தேற அறியாத அவலநெஞ்சம் அந்தோ அபயமுனக் கபயமெனை யாண்டருள்க விரைந்தே சோதி மலையிற் கண்டே னின்னைக் கண்க ளிக்கவே துய்த்தே னமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்கவே ஓதி யுணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணியே ஓதா தனைத்தும் உணர்கின் றேனின் அருளை எண்ணியே எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்குதே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதஞ் சனிக்குதே கண்ணுங் கருத்து நின்பா லன்றிப் பிறர்பாற் செல்லுமோ கண்டே னுன்னை இனிமே லென்னை மாயை வெல்லுமோ இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவனோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ குறுகப் பயந்து கூற்று மோடிக் குலைந்து போயிற்றே கோவே யுன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற்றே நீயே வலிந்திங் கென்னை யாண்ட நீதிச் சோதியே நின்னைப் பாட என்னை வளர்க்கு நிமலச் சோதியே தாயே யெனவந் தென்னைக் காத்த தருமச் சோதியே தன்மை பிறரா லரிதற் கரிய தலைமைச் சோதியே ஈசனரு ளாற்கடலி லேற்றதொரு வோடம் ஏறிக்கரை யேறினே னிருந்ததொரு மாடம் தேசுறுமம் மாடநடுத் தெய்வமணிப் பீடம் தீபவொளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் இச் சோதி தரிசனம் பின்னை இறவாநிலை கூட்டுவ தொன் றாகலான், இதனைப் பற்றிப் பாடிய அளவில் சுவாமிகள் நின்றார்களில்லை. அச்சோதியை மக்கள் வாயார வாழ்த்தி வாழ்த்தியும், கண்ணாரக் கண்டு கண்டும் மனத்திற்கொள்ளச் சில முறைகளையுஞ் சுவாமிகள் வகுத்தார்கள். அம்முறை களுள் மூன்று சிறப்பாகக் குறிக்கத்தக்கன. ஒன்று, அருட் பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை என்னும் முழக்கம். மற்றொன்று வடலூர் சபையில் பூச நாளில் சோதிக் காட்சி வழங்கல்; இன்னொன்று மேட்டுக் குப்பத்தில் என்றும் எரியும் விளக்கு. இச்சோதியை நினைத்தலும், சொல்லலும், வணங் கலுமே சுவாமிகள் கோலிய வழிபாட்டுமுறை என்றுங் கூறலாம். நமது நாட்டில் விளக்கைக் கண்டதும் தொழும் ஒரு வழக்க மிருத்தல் உங்கட்குத் தெரியும். அதன் நுட்பம் என்னை? போத நிலையில் விளங்குஞ் சோதியை நினைப்பூட்டும் அறிகுறியே யாகும்.ஓசை ஒலியெலாம் என்னுந் திருத் தாண்டகத்தில், தேச விளக்கெலாம் ஆனாய் நீயே என்றும், திருவையா றகலாத செம் பொற் சோதி என்றும் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்ததை உன்னுக. சோதி நினைவு அருகிய இந்நாளில், சுவாமிகள் அதனைப் பெரிதும் பலவழியில் வலியுறுத்திச் சென்றார். இச் சோதி வழிபாடாதல் நாட்டில் பெருகுவதாக. முதல் முதல் சோதி தரிசனம் நிகழும் இடம் புருவமத்தி என்று யோக நூல்கள் கூறும். அவ்விடத்தைக் குறிக்கவே நம் நாட்டார் சந்தனம் முதலியவற்றான் பொட்டிடுதலுமுண்டு. சுவாமிகள் அப் புருவமத்தியைச் சுட்டிப் பாடிய பாக்களில் இரண்டொன்றைப் பார்ப்போம்: தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே தலைவரெலாம் வணங்கநின்ற தலைவனட ராஜன் இனித்தசுக மறிந்துகொளா இளம்பருவந் தனிலே என்புருவ நடுவிருந்தான் பின்புகண்டே னில்லை அனித்தமிலா இச்சரிதம் யார்க்குரைப்பே னந்தோ அவனறிவான் நானறிவேன் அயலறிவா ருளரோ துனித்தநிலை விடுத்தொருகாற் சுத்தநிலை அதனில் சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாயென் தோழி கண்களிக்கப் புகைசிறிதுங் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம வல்லியென மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் னரும்புமணிந் தருளே கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு இப் போத முடிவில் விளங்குவது வேதம். இக் கருத்துக் கொண்டே சுவாமிகளும் போதாந்தத்தின் பின்னர் வேதாந்தத்தை அமைத்தனரென்று யான் கருதுகிறேன். (5) வேதாந்தம் வேதம் என்பது அறிவு விளங்குமிடம். போதத்தில் சோதிமயமாய்த் திரண்டு காட்சியளித்த அறிவு, இப்பொழுது யாண்டும் விளங்குகிறது. இந்நிலையே வேதநிலை யென்பது. இவ்வேத அந்தத்தில் எல்லாம் அறிவு மயமாய் விளங்கும். போதத்தில் ஓரிடத்தில் திரண்டு காட்சியளித்த சிவசோதி இங்கு யாண்டும் ஒளிர்கிறது. இப்பெருநிலையை, ஒளியாகி யுள்ளொளியா யுள்ளொளிக்குள் ளொளியாய் ஒளியொளியி னொளியாயவ் வொளிக்குளுமோ ரொளியாய் வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் மேல்வெளிமேற் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் அளியாகி யதுவாகி யதுவுமல்லா தாகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாந் தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபைத்தலைவா நின்னியலைச் சாற்றுவதெவ் வணமே வாக்கொழிந்து மனமொழிந்து மதியொழிந்து மதியின் வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற விடத்தும் போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமா யதுவும் போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேயென் னுடைய நேயமே யானந்த நிருத்தமிடும் பதியே ஏக்கொழிந்தா ருளத்திருக்கும் இறையேயென் குருவே எல்லாமா யல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே உடலெலா முயிரெலா முளமெலா முணர்வெலாம் உள்ளன வெலாங் கலந்தே ஒளிமயம தாக்கியிரு ணீக்கியெக் காலத்தும் உதயாத்த மான மின்றி இடலெலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமா யேக போக இன்பநிலை யென்னுமொரு சிற்சபையி னடுவே இலங்கிநிறை கின்ற சுடரே கடலெலாம் புவியெலாங் கனலெலாம் வளியெலாங் ககனெலாங் கண்ட பரமே காணாத பொருளெனக் கலையெலாம் புகலவென் கண்காண வந்த பொருளே தொடலெலாம் பெறவெனக் குள்ளும் புறத்துமெய்த் துணையாய் விளங்கு மறிவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே யருட்பெருஞ் சோதிநட ராச பதியே சிவமயமே வேறிலையெல் லாமெனநீ தானே தேமொழியாய்! பற்பலகால் செப்பியிடக் கேட்டேன் தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர் தத்துவர்தத் துவத்தலைவ ரவர்தலைவர் தலைவர் இவரவரென் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை இயம்புவதென் னென்றாமீ தென்கொலென்றாய் தோழி நவமயநீ யுணர்ந்தறியா யாதலிலிவ் வண்ண நவின்றனைநின் னையமற நான்புகல்வேன் கேளே ஒளியொன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்ற தன்றியண்ட பகிரண்டங் களிலும் வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்புமகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே உளநின்ற இருணீக்கி இலங்குகின்ற தன்மை உலகறியும் நீயறியா தன்றுகண்டாய் தோழி தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமுந் தானெனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே யெல்லாம் பகர்சிவமே எனவுணர்ந்தோ மாதலினால் நாமே பிரமமெனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் உரமிகுபே ருலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் உள்ளனவே காரணத்தா லுள்ளனவில் லனவே தரமிகுபே ரருளொளியாற் சிவமயமே யெல்லாந் தாமெனவே யுணர்வதுசன் மார்க்கநெறி பிடியே எனவரூஉம் பாக்களால் சுவாமிகள் விளக்கியிருத்தல் காண்க. (6) சித்தாந்தம் வேத அந்தத்தில் திகழ்வது சித்தாந்தம். யாண்டும் நீக்கமற நிறைந்தொளிரும் அருட்பெருஞ்சோதியைத் தான் அஃது என்னும் இரண்டற உணரும் ஒரு நிலை சித்தாந்தமென்பது. இதனை வேதாந்தத்தோடு தொடர்புபடுத்தியுங் கூறலாம். பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தவனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித் தாந்தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கனிந்துளத்தே கனிந்துநினைத் துரைத்திடிலப் பொழுதே காணாத காட்சியெலாங் கண்டுகொள லாமே எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலுந் தோன்றி இயங்குமிட மாகியெல்லா முயங்குமிட மாகித் தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டா லிரவில் எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையிலொன் றளித்தாய் அவ்வுலக முதலுலகம் அனைத்துமகிழ்ந் தேத்த அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே இத் திருப்பாக்களின் உள்ளக் கிடக்கையை ஆராய்க. தான் அஃது என்னும் இரண்டற்ற நிலைமீது விளங்கும் அநுபவங்கள் எழுத்தில் அடங்குவனவல்ல. அவற்றை ஏழையேன் எங்ஙனம் எடுத்துரைக்க வல்லேன்? நாதாந்த வரையுமெங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ போதாந்த நிலையுமுயர் யோகாந்த நிலையும் புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும் வேதாந்த வெளியுமிகு சித்தாந்த வெளியும் விளங்குமிவற் றப்பாலும் அதன்மேலப் பாலும் வாதாந்தத் தன்மேலும் அதன்மேலப் பாலும் மன்றாடி அருட்செங்கோல் சென்றாட லறியே என்றார் சுவாமிகளும். இவ் வாறந்தங்களினும் படிப்படியாய், அவ்வவ் வந்த அநுபவமாய் விளங்குஞ் சிவம் ஒன்றே என்பதை, ஆறந்த நிலைகளின் அநுபவ நிறைவே அதுவது வாயொளிர் பொதுவுறு நிதியே கூறெந்த நிலைகளு மொருநிலை யெனவே கூறியென் உள்ளத்திற் குலவிய களிப்பே பேறிந்த நெறியெனக் காட்டியென் றனையே பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே சாறெந்த நாள்களும் விளங்குமோர் வடல்வாய்த் தனிநட ராசவென் சற்குரு மணியே என்னும் பாட்டான் சுவாமிகள் விளக்கியுள்ளார். ஈண்டுக் குறிப்பிட்ட அந்தங்களின் வைப்புத், தொகுப்பு முறை யென்க. ஒவ்வோர் அந்தமுங் கோடி கோடி கூறுகளாகப் பிரிந்து பிரிந்து கிடத்தலைச் சுவாமிகள் பலவிடங்களில் அறிவுறுத்துகிறார். நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி வழுத்துமொரு நாதாந்தப் பதிகள்பல கோடி இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் என்னரசே என்மாலை இனிதுபுனைந் தருளே இவ் வாறந்தங்களில் நிகழும் ஒவ்வோர் அநுபவத்தையும் ஒவ்வொரு முகமாக ஞானிகள் கூறுவது வழக்கம். இக் கருத்துப் பற்றியே தமிழ்மக்கள் முழுமுதற் பொருட்கு ஆறுமுகங் கூறினர் போலும்! மனிதன் ஐந்தறிவால் பெரிய உண்மையை ஆராய்ந்தறிதல் இயலாது. ஆறாவது அறிவு விளங்கப் பெற்ற பின்னரே அவன் உண்மை உணரும் பேறு பெறுகிறான். இது குறித்து, முருகன் அல்லது அழகு என்னும் நூலிலும் என் கருத்தைத் தெரிவித் துள்ளேன். யோகாந்தம் முதலிய நிலைகளில் ஆண்டவன் வடிவம் ஒவ்வொரு விதமாகப் புலனாதலையும், முடிந்த நிலையில் ஆண்டவன்றன் சண்முகம் புலனாதலையுஞ் சுவாமிகள் தெள்ளத் தெளியக் கூறியுள்ளார். யோகமே யோகத்தின் பயனே யோகத் தொருமுதலே யோகத்தி னோங்குந் தூய போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான யாகமே யாகத்தின் விளைவே யாகத் திறையேயவ் விறைபுரியு மின்பே யன்பர் மோகமே மோகமெலா மழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே காட்சியே காண்பதுவே ஞேய மேயுட் கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே யோங்கு மாட்சியே உண்மையறி வின்ப மென்ன வயங்குகின்ற வாழ்வேமா மௌனக் காணி ஆட்சியே யாட்சிசெயு மரசே சுத்த அறிவேமெய் யன்பேதெள் ளமுதே நல்ல சூட்சியே சூட்சியெலாங் கடந்து நின்ற துரியமே துரியமுடிச் சோதித் தேவே மறைமுடிக்குப் பொருத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்தம் மனத்தே நின்ற குறைமுடிக்குங் குணக்குன்றே குன்றா மோனக் கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப் பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப் பெம்மானே செங்கமலப் பிரானே இந்த இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற இறையேயிவ் வுருவுமின்றி யிருந்த தேவே கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழுங் குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச வாதகன்ற ஞானியர்தம் மதியி லூறும் வானமுதே ஆனந்த மழையே மாயை வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில் தீதகன்ற மெய்யடியார் தமக்கு வாய்த்த செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே இம் மகாதேவமாலைப் பாக்களை யோகக் கண்கொண்டு நோக்குமாறு அன்பர்களாகிய உங்களை வேண்டுகிறேன்; அவற்றைப் புராணக் கண்கொண்டு நோக்கி இடர்ப்படா திருக்குமாறு உங்களை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். ஆறந்த அநுபவங்களைப் புராணங்கள் கதை வடிவமாகக் கழறும். இவ் வாறந்தங்களைப்பற்றி யான் அறிந்தவாறு சுருக்கிச் சொற்றேன். அவற்றின் நுட்பங்களைப் பெரியோர் பால் கேட்டுத் தெளிவுறுதல் நலன். இந்த ஷடாந்தத்தில் விளங்குவது சமரச சன்மார்க்கம். யோகம் முதலியவற்றில் தலைப்படாது, ஆணவத்தில் அழுந்திக் கிடப்போர் சமரச சன்மார்க்க நிலையெய்தல் அரிதே. ஆணவ மற்ற ஒரு நிலையை, ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்று சுவாமிகள் அறிவுறுத்திப் போந்தார். இனிச் சமரசம், சன்மார்க்கம், சங்கம் என்பவற்றின்மீது கருத்துச் செலுத்து வோம். 2. சமரசம் சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பொருளில் முதலாவது சமரசத்தை எடுத்துக்கொள்வோம். சகோதரிகளே! சகோதரர் களே! சமரசத்தைப் பற்றி இதுகாறும் எழுந்த பேச்சுக்கள் எத்தனை! எழுத்துக்கள் எத்தனை! அவைகட்கோர் அளவு முண்டோ? சமரசத்தைப் பற்றி எழுந்த பேச்சுக்களும் எழுத்துக் களும் மலையெனவுங் கடலெனவும் நிற்கின்றன; முழங்கு கின்றன. உலகிடைத் தோன்றிய அறிஞர் அனைவருஞ் சமரசத்தையே அறிவுறுத்திச் சென்றனர். இப் பொல்லாத உலகம் சமரசத்துக்குச் செவி சாய்க்கிறதா? அதை நடையில் கொணர வேட்கையாதல் கொள்கிறதா? இல்லையே. சமரசம், வாழ்வில் நுழைந்து ஆட்சி புரியின், உலகில் போர் ஏது? பூசல் ஏது? புரட்சி ஏது? சமரசம் பரவின் அரசு எற்றுக்கு? சட்டம் எற்றுக்கு? நீதிமன்றம் எற்றுக்கு? இவை யாவும் உலகில் சமரசம் பரவாமையை யல்லவோ விளக்குகின்றன! இத்துணைநாள் உலகிடைச் சமரசம் பரவாதிருந்ததற்குக் காரணம் யாது? காரணம் பலபடக் கூறலாம். மனிதன்பாலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலியன அவனைச் சமரச ஞானி யாக்குவதில்லை என்று சுருங்கச் சொல்லலாம். மனிதன் அழுக்காறு முதலிய பேய்களான் தொடக்குண்டு இடர்ப்படும் வரை அவன் சமரச ஞானியாதல் அரிது; அரிது. சமரசத்தைப் பற்றிப் பேசுதல் எளிது; எழுதுதல் எளிது. அதை நடையில் கொணர்வதோ அரிது. மனிதன் சமரசத்தைப் பற்றிப் பேசுவதினும், எழுதுவதினும் அதை நடையில் கொணர முயல்வதே அறிவுடைமை. அதற்கு மனிதன் என் செய்தல் வேண்டும்? மனிதன், அழுக்காறு முதலியவற்றைப் போக்கவல்ல வாழ்வில் தலைப்படல் வேண்டும். அவ்வாழ்விற்கு இடையூறாக உள்ள கொடுமைகளைக் களைய முயலல் வேண்டும். அக் கொடுமைகள் யா? அவை பலப்பல. ஈண்டுப் புற உலகியல் வழி நின்று சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். இச் சிலவற்றைக் களையும் ஆண்மையை மனிதன் பெறுவானாயின், அவன் அழுக்காறு முதலியவற்றைப் படிப்படியாக நாளடைவில் களையும் ஆற்ற லுடையவனாவன். அச்சில யாவை? நாடு, மொழி, சமயவெறி, சாதி முதலியன. நாடு ஒருவன் தான் பிறந்த நாட்டைத் தாய்போல் நேசிக்கலாம். ஆனால் அந்நேசத்தை மற்ற நாடுகளின் துன்பத்துக்குப் பயன் படுத்தலாகாது. இப்பொழுது நாட்டுப் பற்று அல்லது தேசபக்தி என்பது பிற நாட்டைத் துன்புறுத்தும் வழி நிகழ்ந்துவரல் கண்கூடு. கடல்களும், மலைகளும், காடுகளும், பிறவும் நாடுகளைப் பிரிக்கின்றன. இப்பிரிவுகொண்டு ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரை ஏன் வருத்தல் வேண்டும்? வாழ்வுக்கேற்ற பொருள் களை இயற்கை உதவுகிறது. அப்பொருள்களைப் பெற்றும் மாறியும் மனிதன் இன்ப வாழ்வு நடாத்தலாமன்றோ? மனிதன் அப்பொருளளவில் உள்ள நிறைவு கொள்கிறானோ அவன்பா லுள்ள ஆசைபேய் வளாகிடக்கிறதோ? இப்பொழுது ஒரு நாட்டார் இன்னொரு நாட்டைப் பற்றி அதன் வளத்தைக் கவருவதிலேயே கருத்துக்கொண்டு வாழ்கிறார். இஃதோர் அறமாகவுங் கருதப்படுகிறது. இம்மறத்தை அறமாகக் கருதுவது மடமை. இம்மடமைக்குப் பிறப்பிடம் மேல்நாடு என்று கூறல் மிகையாகாது. மேல்நாட்டார் தாம் பிறந்த நாட்டின் பொருட்டுப் பிறநாடுகளைப் பற்றுவதில் திறமை வாய்ந்தவர். அதற்கென அன்னார் செய்யும் முயற்சிக்கு ஓர் எல்லையில்லை. ஆகாய விமானங்களும், நீர்மூழ்கிகளும், நச்சுக்காற்றும், பிறவும் காணப்படுகின்றன. இவ்வளவும் எற்றுக்கு? பிற நாட்டாரை வருத்துதற்கன்றோ? என்ன அறியாமை! இம்மக்கள் தங்கள் நாட்டையே கடவுளாகக் கருதுகிறார்கள். மற்ற நாட்டாரிடமுங் கடவுளிருத்தல் இவர்க்குப் புலனாவதில்லை போலும்! இவர்க்குத்தான் பசி முதலியன உண்டு போலும்! மற்றவர்க்கு அவை இல்லைபோலும்! இக்கருத்துடையார்க்குச் சமரச உணர்வு யாண்டிருந்து பிறக்கும்? எல்லா நாட்டாருஞ் சகோதரர் என்பதை இவர் எந்த நாளில் உணரப்போகிறார்? இவ்வாறு பலர் நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழக்கிறார். மொழி சிலர் மொழியை முற்கொண்டு சமரசத்துக்குக் கேடு சூழ்கிறார். மொழிகள் அவ்வந்நாட்டின் இயல்புக்கேற்ற வண்ணம் பலவாய்த் தோன்றி யிருக்கின்றன. அவரவர் தத்தம் தாய்மொழியைப் போற்றி வரலாம். ஒருவன் தன் தாய்மொழி யின் பொருட்டு மற்ற மொழியை ஏன் குறை கூறல் வேண்டும்? ஏன் தூற்றுதல் வேண்டும்? உலகில் சில பகுதிகளில் மொழி காரணமாகவும் மக்களுக்குள் போர் நிகழ்கிறது. ஒரு மொழி யினர் இன்னொரு மொழியினரைப் பகைவராகக் கருதுவது சமரச உணர்வைக் குலைப்பதாகும். எல்லா மொழிகட்கும் அடிப்படை ஒன்றே. அஃது ஒலி அல்லது நாதம். அவ்வொலியினின்றும் பிறந்த மொழிகளில் ஏற்றத் தாழ்வு கற்பித்துப் போரிடல் அநாகரிகம். மொழி காரணமாகவுஞ் சிலர் சமரசப்பே றெய்தாதொழிகிறார். சமய வெறி சமயவெறி கடவுள் அன்பைக் கெடுக்கிறது. ஒருவன் வெறியால் தன் சமயத்தின் மாட்டுப் பற்றுக் கொண்டு மற்ற சமயத்தாரை நிந்திக்கிறான். இஃதென்ன அறியாமை! சமய மென்பது ஒன்றே. அதுவே சமரசம் என்பது. சமய வெறியர்க்குப் பல சமய உணர்வு தோன்றும் போலும்! பல சமய உணர்வும், தன் சமயப்பற்றும் சமரசத்தை அழித்து விடுகின்றன. ஆதலால் சமய வெறி கூடாதென்க. சாதி பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் பெருங்குற்றம் நமது நாட்டுக்கே சிறப்பாக உண்டு. எல்லாக் கொடுமைகளினும் தலையாயது இக்கொடுமை. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் உள்ளத்தில் சமரசச் சாயலும் படராது. நமது நாட்டிலுள்ள சாதிக் குறைபாட்டைக் களைய அவ்வப்போது தோன்றிய பெரியோர் பெருமுயற்சி செய்தார். அம்முயற்சிகள் யாவும் விழலுக்கிரைத்த நீராயின. நமது நாட்டில் ஒரு பெருங்கொலை நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது. அக்கொலை உலகிற்குப் புலனாவ தில்லை. அதாவது பெரியோர் அறிவுறுத்திய கொள்கைகளைக் குழி வெட்டிப் புதைத்து, அவர்தம் உருவத்துக்குமட்டும் வந்தனை வழிபாடு செய்வது. இப் படிற்றொழுக்கம் நீண்ட நாள் வழக்கி லிருந்து வருகிறது. சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்திர முங்குல முங்கொண் டென்செய்வீர் என்றும், சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் என்றும் அருளிய பெரியோரை வழி படுவோர் சாதியைப் பாராட்டுகிறாரா இல்லையா என்பது கவனிக்கத்தக்கது. இம்மக்கள் சாதியையே கடவுளாகவுஞ் சமயமாகவுங் கொண்டிருத்தல் வெள்ளிடைமலை. இவர், சாதியை மறுத்துச் சமரசத்தில் திளைத்த பெரியோரை வழிபடுவதற்கு ஏதாயினும் பொருளுண்டா? வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது வழி பாடாகுமா? பெரியோர் அறிவுறுத்திய நெறி நின்றொழுகுவதன்றோ அவரை உண்மையில் வழிபடுவ தாகும்? நம் நாட்டார், முன்னோர் அறிவுறுத்திய கொள்கைக்குக் கல்லறை யிட்டுப் புதைத்து, அவரின் உருவங்களை மட்டும் வழிபடுவதில் பேர் பெற்றவர். இக் கரவும் வஞ்சனையும் வளர்ந்துவரும் நாட்டுக்கு உய்வுண்டோ? உரிமை யுண்டோ? இற்றைக்குச் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வதிந்து மறைந்த நம் இராமலிங்க சுவாமிகள், சாதிமத வேற்றுமைகளைப் பலவுரையால் மறுத்துச் சமரச ஞானத்தை அறிவுறுத்திக், கோயில்களெல்லாஞ் சாதிக் கோயில்களாக மாறியது கண்டு, எல்லாரும் போந்து வழிபடுதற்கென இச் சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் சாதிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது? எச்சபைப் பொதுவென இயம்பினர் அறிஞர்கள் - அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் சோதி என்று சுவாமிகள் அருளிச் செய்துள்ளார். இச்சபை அந்நோக்குடன் சுவாமி களால் நிறுவப்பட்டது. இஃது இப்பொழுது எல்லா நாட்டினர்க்கும், எல்லா மொழியினர்க்கும், எல்லாச் சமயத்த வர்க்கும், எல்லாச் சாதியார்க்கும் பொதுவாகப் பயன்படுகிறதா? எச்சமயத் தவரும்வந் திறைஞ்சா நிற்பர் என்று தாயுமான சுவாமிகள் சிதம்பரத்தின் பொதுமை தெரித்துப் போந்தார். இப்பொழுது சிதம்பரத்தில் எல்லார்க்கும் இடமுண்டா? தாயுமானார் காலத்தில் பொதுவுடைமையாகக் கருதப்பட்ட சிதம்பரம், இப்பொழுது சிலருடைமையாகவே கருதப்படுகிறது. அக் கொடுமை கண்டே இராமலிங்க சுவாமிகள் இங்கு இச் சபைக் கோயிலை நிறுவினார். இதுவும் தன் பொதுமையை இழந்து நிற்கிறது. பெரியோர் கொள்கையை வீழ்த்தி அவர் தம் உருவத்துக்கு மட்டும் நம்மவர் விழாக் கொண்டாடு கின்றனர். இக்கொடுமையை யாண்டுச் சென்று முறையிடுவது? ஆண்டவனே! உன்னிடத்திலேயே முறையிடுகிறேன். வேறு களைகணில்லை. என் நாட்டார்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்துவாயாக. சமரசம் என்பது நாடு, மொழி, சமயவெறி, சாதி முதலிய வற்றில் கட்டுப்படாது கடந்து நிற்பது. எல்லா நாட்டார், எல்லா மொழியினர், எல்லாச் சமயத்தார், எல்லாச் சாதியாரிடத்திலும் புகுந்து நிற்பது சமரச ஞானம். நாடு மொழி சமயம் சாதி முதலியவற்றைக்கொண்டு, சமரச உணர்வை இழப்பது அறியாமை. இப் பன்மைகளினூடே படர்ந்து நிற்கும் ஒருமையே சமரசம். அச் சமரசமே கடவுள் காட்சியை நல்கும். அதையே இயற்கை அன்னை மக்களிடை ஓம்ப முனைந்து நிற்கிறாள். அவள் முயற்சிக்கு எவருங் குறுக்கே நிற்றலாகாது. இதுகாறும் மனிதன் அறியாமையால் இயற்கை அன்னையை மறந்து இடர்ப்பட்டது போதும்! போதும்! இனியாதல் சமரசத்திற்கு மனிதன் இடந்தந்து வாழ்வானாக. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, இனி வரும் உலகிற்கு வேண்டற்பாலதாய சமரசத்தை இராமலிங்க சுவாமிகள் அறிவு றுத்திச் சென்றார். அவர் அருளிய சமசரப் பாக்கள் ஒன்றா? இரண்டா? ஆயிரம்; ஆயிரம். அவற்றை அருட்பாவில் பார்க்க. தாலிபுலாக நியாயம் பற்றிச் சில பாக்களை மட்டும் ஈண்டுத் தருகிறேன். சாதியும் மதமும் சமயமுங் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ் சோதி சாதியும் மதமுஞ் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி சமயங் குலமுதல் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய அருட்பெருஞ் சோதி சமரச சத்தியச் சபையில் நடம்புரி சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையுந் தணந்தேன் நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையுஞ் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம் அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீயறிந் ததுநான் உரைப்பதென் னடிக்கடி யுனக்கே குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்துநீ யென்னுள மெனுமம் பலத்திலே நின்றாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயங் கிடைத்ததெனத் துளக்கமலங் கிளந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி யாச்சிரமா சாரஞ் சமயமதா சாரமெனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழக்குவெளுத் ததுசிவமேபொருளெனுஞ்சன் மார்க்க முழுநெறியிற் பரநாத முரசுமுழங் கியதே மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணாச் சிரமமெனு மயக்கமுஞ் சாய்ந்தது கொதித்தலோ காசாரக் கொதிப்பெல்லா மொழிந்தது கொலையுங் களவுமற்றைப் புலையு மழிந்தது நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணந் தோல்வருணங் கண்டறிவா ரிலைநீ விழித்திதுபா ரென்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணிலலை யாதே காண்பனவெல் லாமெனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேயென் மாலையணிந் தருளே எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே என்னாணை என்மகனே இரண்டில்லை யாங்கே செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோற் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே ஒவ்விடச்சிற் சபையிடத்தும் பொற்சபையி னிடத்தும் ஓங்குநடத் தரசேயென் னுரையுமணிந் தருளே பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையென் கணவர்திருப் பேர்புகலென் கின்றாய் அருகர்புத்த ராதியென்பேன் அயனென்பேன் நாரா யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவ மென்பனிவை சித்துவிளை யாட்டே சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தரென்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயரென் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயருமவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யுமொரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெளியுமிது தோழி எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெரும் சோதியரே இறைவரென்ப தறியாதே இம்மதவா திகடாங் கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் நவ்விவிழி யாயிவரோ சிலபுகன்றா ரென்றாய் ஞானநடங் கண்டேன்மெய்த் தேனமுத முண்டேன் செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே சேர்ந்தேனத் தீமொழியுந் தேமொழியா யினவே எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப கரிக்கின்றாரி யாவர் அந்தச் செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின் செயலெனவே தெளிந்தேன் இங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடவென் வாய்மிகவு மூர்வ தாலோ எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை யுடையவரா யுகக்கின்றார் யாவரவ ருளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்த தாலோ எல்லா வுயிர்களு நல்லாரெனத் தொழும் எல்லாம் வல்லீரிங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர் எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி, எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம், முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ் சோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட்பெருங் கருணைக்கு வந்தனம்! tªjd«! என்னருமைச் சகோதரிகளே! சகோதரர்களே! இவ் வருட் பாடல்களையும், இப் பொன்னுரைகளையும் உற்று நோக்குங்கள்; சாதி, மதம் முதலிய வேற்றுமைகளைச் சுவாமிகள் எவ்வாறு கடிந்துள்ளார் என்பதை உணருங்கள்; வேற்றுமை உணர்வு உள்ளவரை சமரச ஞானம் பெறல் இயலாது என்பதைத் தெளி யுங்கள். சாதி, மதம் முதலிய வேற்றுமைகளால் விளைந்துள்ள தீமைகளைக் கண்டே, அவைகளைக் களைந்து, சமரசத்தை நிறுவச் சுவாமிகள் முயன்றார். சுவாமிகள் அம்முயற்சியில் தலைப்பட்டது உண்மை. எவ்வழி நின்று அவர் அம்முயற்சியில் தலைப்பட்டார்? முனைப்பை அடிப்படையாகக் கொண்டா? காழ்ப்பை அடிப் படையாகக் கொண்டா? பகைமையை அடிப்படையாகக் கொண்டா? இல்லை; இல்லை. முனைப்புங் காழ்ப்பும் பகைமையுங் கடந்த ஒரு நிலையில் நின்றே சுவாமிகள் அப் பெருமுயற்சியில் தலைப்பட்டார். சாதி, மதம் முதலிய வேற்றுமைகளால் உலகம் இடர்படு வதைக் கண்ட சுவாமிகள், அவற்றைக் களைந்து சுத்த சன்மார்க் கத்தை அறிவுறுத்த எல்லாம் வல்ல இறைவன் திருவருளைக் கொழுகொம்பாகப் பற்றினார். ஆண்டவன் திருவருட்டுணை கொண்டே சுவாமிகள் சீர்திருத்தத் தொண்டில் இறங்கினார். திருவருளில் கருத்துச் செலுத்தாது, முனைப்பால் - காழ்ப்பால் - பகைமையால் - சீர்திருத்தத் துறை நண்ணுதல் மடமை; மடமை. இக்காலத்தில் சிலர் சீர்திருத்தம் என்னும் பெயரால், ஆண்டவன் உண்மையை மறுத்தும், அவன் அருள்பெற்ற அடி யாரை நிந்தித்தும், ஆன்மநேயத்தைக் குலைத்தும் வருவது உங்கட்குத் தெரியும். அவர் வினையால் உலகம் செம்மை யுறுங்கொல்? செம்மைக்குப் பதிலாகக் கேடு நிகழும். நாத்திகச் சீர்திருத்தத்தால் பிளவும் பிணக்கும் போருமே விளையும். நம் இராமலிங்க சுவாமிகள் நாத்திகத்தைக் கனவிலுங் கருதாது, ஆண்டவனுண்மையில் உறுதிகொண்டு, முனைப்பு, காழ்ப்பு, பகைமை முதலிய பேய்களுக்கு இரையாகாது, ஆண்டவன் அருள்வழி நின்று, அவனருள் பெற்ற அடியாரைப் போற்றி, சாதி மதம் முதலிய வேற்றுமைகளைக் களைந்து, ஆன்ம நேயத்துக்குரிய சமரச ஞானத்தை ஓம்பப் புகுந்தார். சீர்திருத்தக் காரர் என்று வெளிவருவோர் இச் செந்நெறி பற்றி நடப்பாராக. இறைவா நின்னைக் கனவிலேனும் யான்மறப்பனோ எந்தா யுலகத் தவர்கள்போல்நா னினியிறப்பனோ மறைவா சகமும் பொருளும்பயனு மதிக்குமதியிலே வாய்க்கக் கருணை புரிந்துவைத்தாய் உயர்ந்தபதியிலே அம்பலத்தி லெங்களைய ராடியநல் லாட்டம் அன்பொடு துதித்தவருக் கானதுசொல் லாட்டம் வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம் நாத்திகஞ்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவது நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறு மம்பலவர் சீர்புகன்ற வாக்கு செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு இப் பாக்களால் சுவாமிகள் நாத்திகத்தைக் கனவிலுங் கருதாமை பெறப்படுகிறது. சுவாமிகள் ஆண்டவன் உண்மையையும், அவனருட்டிறத் தையும் விளக்கிப் பாடிய பா ஒன்றா? இரண்டா? அன்பர்களே! அப்பாக்கள் ஆயிரம்; ஆயிரம். அவர் எண்ணமெலாம் ஆண்டவன் எண்ணம்; அவர் சொல்லெலாம் ஆண்டவன் சொல்; அவர் செயலெலாம் ஆண்டவன் செயல். உடல் பொருள் ஆவி மூன்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்பணஞ்செய்து, ஆண்டவன் அருள்வழி நின்று வாழ்வு நடாத்தியவர் நம் இராமலிங்க அடிகள். சீர்திருத்தக் காரர்களே! சுவாமிகள் நிலையோர்ந்து சுவாமிகள் வழி நிற்க முயலுங்கள். தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னைநிக ரில்லாத தனித்தலைமைத் தெய்வம் வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் மலரடியென் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் கருணைநிதித் தெய்வமுற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் என்னையுமென் பொருளையுமென் னாவியையுந் தான்கொண்டிங் கென்பா லன்பால் தன்னையுந்தன் பொருளையுந்தன் னாவியையுங் களித்தளித்த தலைவன் றன்னை முன்னையும்பின் னையுமெனக்கே முழுத்துணையாய் இருந்தமுழு முதல்வன் றன்னை அன்னையைச்சிற் றம்பலத்தென் னருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை அருட்பெருஞ்சோ தியினானை அடியன் அன்பிற் செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியிற் சென்றார் தம்மைப் பிறிந்தானை என்னுளத்திற் கலந்து கொண்ட பிரியமுள்ள பெருமானைப் பிறவி தன்னை எறிந்தானை எனையெறியா தெடுத்தாண் டானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே உண்ணவுண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ டுயிருணர்வுங் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே ததும்பியென்றன் மயமெல்லாந் தன்மயமே யாக்கி எண்ணியவென் எண்ணமெலாம் எய்தவொளி வழங்கி இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே என்பெரிய பொருளேஎன் னரசே புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே கருவிற் கலந்த துணையேயென் கனவிற் கலந்த வமுதேயென் கண்ணிற் கலந்த ஒளியேயென் கருத்திற் கலந்த களிப்பேயென் உருவிற் கலந்த அழகேயென் உயிரிற் கலந்த உறவேயென் உணர்விற் கலந்த சுகமேயென் னுடைய ஒருமைப் பெருமானே தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் அதுவென்றே வாயே பறையா யறைகின்றேன் எந்தாய் கருணைவ லத்தாலே சத்தியஞ் சத்திய அருட்பெருஞ் சோதித் தந்தைய ரேயெனைத் தாங்குகின் றீரே உத்தம மாகுநுந் திருச்சமு கத்தென் உடல்பொரு ளாவியை உவப்புட னளித்தேன் இத்தகை யுலகிடை யவைக்குமென் றனக்கும் ஏதுஞ் சுதந்தர மில்லைஇங் கினிநீர் எத்தகை யாயினுஞ் செய்துகொள் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் யின்பந்தந் தீரே சாதிமதஞ் சமயமுதல் சங்கற்ப விகற்பமெலாந் தவிர்ந்து போக ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ நான்சொன்ன வார்த்தையெலாந் தான்சொன்ன வார்த்தையென்று நயந்தா னென்னை ஏன்சொன்ன தென்றிறையும் வினவியதும் இல்லையுள மிசைந்தா னந்தோ தேன்சொன்ன மொழியம்மை சிவகாம வல்லிகண்டு சிறக்க நாளும் வான்சொன்ன மணிமன்றில் நடம்புரிவான் பெருங்கருணை வாய்மை யென்னே நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்சொல் வார்த்தையன்றி நானுரைக்கும் வார்த்தையன்று நாட்டீர்நான் ஏனுரைப்பேன் நானா ரெனக்கெனவோர் ஞானவுணர் வேதுசிவம் ஊனாடி நில்லா வுழி இத் திருப்பாடல்களை நோக்கிச் சுவாமிகளின் நிலையைத் தேர்க. சுவாமிகள் அடியார்களைப் போற்றிய பாக்கள் பல. அவற்றுள் சிலவற்றை நோக்குக. முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால் அன்புறு நிலையாற் றிருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய வரசே என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம் இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிரெனுங் குருவே விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி மேவியமெய்ப் பொருளையுள்ளே விரும்பி வைத்துக் களங்கறுமெய் யன்பரெலாங் களிப்ப வன்றோர் கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து துளங்குபெறுஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத் துணையேநந் துரையேநற் சுகமே யென்றும் வளங்கெழுமா கமநெறியை வளர்க்க வந்த வள்ளலே நின்னருளை வழங்கு வாயே ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய தோழனுமா யென்றுமுன்னீ சொன்னபெருஞ் சொற்பொருளை ஆழநினைத் திடிலடியேன் அருங்கரணங் கரைந்துகரைந் தூழியலின் புறுவதுகா ணுயர்கருணைப் பெருந்தகையே மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வா ரெல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவ மடைந்துபின்னர் இன்புருவ மாயினைநீ எழில்வாத வூரிறையே 3. சன்மார்க்கம் சமரசத்துக்குரிய மார்க்கம் எது? உலகில் எத்துணையோ மார்க்கங்க ளிருக்கின்றன. அவற்றுள் எதைச் சமரசத்துக்குரிய மார்க்கமாக் கொள்வது? எம்மார்க்கத்தின் முதல் யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கிறதோ அதுவே சமரசத்துக்குரிய மார்க்க மாகும். யாண்டும் நீக்கமற நிற்பது ஒன்றே. அதுவே சத்தெனுஞ் செம் பொருள். அச் சத்மார்க்கமே சமரசத்துக்குரியதாகும். ஆகவே, சமரசத்துக்கும் சன்மார்க்கத்துக்கும் உள்ள தொடர்பு என்றும் பிரியாததென்க. ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்றும் இயல்பாக நிலவும். சத்+மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; மார்க்கம் - வழி. தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியா யிலங்குவது சத் அல்லது உண்மை என்பது. அச் சத்தெனுஞ் செம்பொருள் வழி நிற்க மக்கள் கடமைப்படல் வேண்டும். மக்கள் வாழ்விற்குரிய வழி அஃதொன்றே. சத்தின் மார்க்கம் எது? பலர் பலவாறு கூறுப. அவற்றைத் திரட்டி ஆராய்ந்துழிப் பெறுவது ஒன்று. அஃது இயற்கை என்பது. இயற்கை, சத்தெனுஞ் செம்பொருளைக் கூட்டும் மார்க்கமென்க. சத்தெனுஞ் செம்பொருள் மாற்ற மனங் கடந்து நிற்பது. அத்தகைய ஒன்றன் உண்மையை நாம் எதன் வாயிலாக உணர் கிறோம்? இயற்கையின் வாயிலாக உணர்கிறோம். இயற்கை என்பது சத்தெனுஞ் செம்பொருளின் உடல். அவ்வுடலைக் கொண்டே உயிரெனுஞ் செம்பொருளை உணர்தல் வேண்டும். நம்மாட்டுள்ள உயிர் நமக்குப் புலனாகிறதா? உயிர் புலனாகாமையான், அதற்கின்மை கூறுகிறோமா? இல்லையே. அவ்வுயி ருண்மையை எதைக்கொண்டு உணர்கிறோம்? கண் கூடாகக் காட்சியளிக்கும் நமது உடலைக்கொண்டன்றோ உணர்கிறோம்? இவ்வாறே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கையென்னும் உடலைக்கொண்டு, உயிரென்னுஞ் சத்பொருளை யுணர்தல் வேண்டும். இயற்கை, உடல்; சத், உயிர். உலகமே வடிவமாக யோனிகள் உறுப்பதாக (சிவஞானசித்தி) இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே (தேவாரம்) நிலநீர் நெருப்புயர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனொ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ (திருவாசகம்) என வரூஉம் ஆன்றோர் உரைகளை நோக்குக. இந்நுட்பத்தை இராமலிங்க சுவாமிகளும் பல விடங்களில் உலகிற்கு அறிவுறுத்தி யிருக்கிறார். அவற்றுள் சில பாச்செய்யுள்; சில உரைச்செய்யுள். இரண்டினுஞ் சில வருமாறு:- இயற்கை உண்மையதாய் இயற்கை யின்பமுமாய் அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் சோதி பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ வுலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தவனு பவமே துரியமுடி யனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கைஉண்மைத் தனிப்பதியே யென்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடிலப் பொழுதே காணாத காட்சியெலாங் கண்டுகொள லாமே இயற்கையுண்மை வடிவினரே யணைய வாரீர் எல்லாஞ்செய் வல்லவரே யணைய வாரீர் இயற்கைவிளக் கத்தவரே யணைய வாரீர் எல்லார்க்கு நல்லவரே யணைய வாரீர் இயற்கையின்ப மானவரே யணைய வாரீர் இறைமையெலா முடையவரே யணைய வாரீர் இயற்கைநிறை வானவரே யணைய வாரீர் என்னுடைய நாயகரே யணைய வாரீர் இயற்கை யுண்மைத் தனிப்பெரும் பொருளாயும், இயற்கை விளக்கத் தனிப்பெரும் பதமாயும், இயற்கை இன்பத் தனிப்பெருஞ் சுகமாயும், பிரிவின்றி நிறைந்த பெருந்தன்மை யராய அருட்பெருஞ் ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்களனைத்தை யும் வென்று நின்மல ராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மை உணர்ந்து இயற்கை உணர்ச்சியைப் பெற்று இயற்கை உண்மைக் கண் இயற்கை இன்பாநுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும், சுத்த கலாந்தர்களும், சுத்த போதாந்தர்களும், சுத்த நாதாந்தர்களும், சுத்த வேதாந்தர்களும், சுத்த சித்தாந்தர் களுமாகிய சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து அற்புதப் பெருஞ்செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதித் தனிப்பெரும் பதியான கடவுளின் இயற்கைத் திருவருட் சமுகமிருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும் என்று விண்ணப்பிக்கின்ற தோறும் எல்லாப் பொருள்கட்கும், எல்லாக் குணங்கட்கும், எல்லாச் செயல்கட்கும், எல்லாப் பயன்கட்கும், எல்லா அநுபவங்கட்கும், மற்றெல்லாவற்றிற்கும், உருவ சொருப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமே யாகியும், தாமல்லராகியும், தாக்கியுந் தாக்கற்றும், அகத்தும் அகப்புறத்தும், புறத்தும் புறப்புறத்தும், நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமுகமிருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம் எவ்வாறு கருதுவோம் என்னென்று கூறுவோம் என்று அவ்வக் கூட்டங்களினும் தனித்தனி உரைத் துரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும், இயக்குவித்தலும், அடக்குவித்தலும், மயக்கு வித்தலும், தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத் தற்குரிய பூரண சுதந்திரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் தடைபடாத நித்திய சுத்த சத்தஞான தேகிகளாய்ப் பூதசித்தி, கரணசித்தி, இந்திரியசித்தி, குணசித்தி, பிரகிருதிசித்தி, கலாசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி, சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்டசித்தி, அண்டரண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திகளெல்லா வற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்ய வல்லவராய்ச் சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்திவிலாசத் திருச்சபைக் கண்ணே புண்ணிய வசத்தாற் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்ற சர்வ சுதந்திரராய சத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமுக மிருந்தவண்ணம் திருவுளம்பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டுமென்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்த்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆனந்தநீர் பொழிந்து சும்மா இருக்கின்றன ரென்றும் உணர்ந்தோர் விரைந் துரைப்பக் கேள்வியுற்று இயற்கைத் திருவருட் சமுகமிருந்த வண்ணம் என்னையோ என்னையோ என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன் திருவருட் சமூகப் பெருங்கருணைப் பெரும்பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!! ஓ ஒப்புயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே! தேவரீர் திருவண்ணமும் திருவருட் சமூகத்தின் வண்ணமும், அறிதற்கும், கருதுதற்கும், துதித்தற்கும், எத்திறத்தாயினும் கூடாவாயினும் அடிமை அளவிற்கியன்றபடி அறியாதறிந்தும் கருதாது கருதியும் துதியாது துதித்தும் எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றவ னானேன். வந்தனம் வந்தனம். இயற்கையிற்றானே விளங்குகின்றவரா யுள்ளவ ரென்றும், இயற்கையிற்றானே யுள்ளவராய் விளங்குகின்றவ ரென்றும், இரண்டுபடாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங் களையும், எல்லா வுலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சக்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலை களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களை யும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா வுயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களை யும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால், தோற்றுவித் தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும், எல்லாமானவ ரென்றும், ஒன்றுமல்லாதவ ரென்றும், சர்வகாருணிய ரென்றும், சர்வ வல்லப ரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற் றானும் ஒப்புயர் வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் சோதியரென்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார். சத்தின் மார்க்கமாகிய இயற்கையோடியைந்து வாழ வேண்டுவது மக்கள் கடமை. அக் கடமையினின்றும் வழுவி நிற்பது சன்மார்க்கம் பற்றி நடப்பதாகாது. இந்நாளில் இயற்கை வாழ்வு செம்மை நிலையிலில்லை என்பது வெள்ளிடைமலை. இயற்கை வாழ்வு அருக அருகக் கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத் துக்கும், மன்பதைக்கு முள்ள தொடர்பும் அறுந்துகொண்டே போகும். அத் தொடர்பிற்கு ஆக்கந்தேட அவ்வப்போது பெரியோர் தோன்றுவது வழக்கம். நமது தமிழ்நாட்டில் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இராமலிங்க சுவாமிகள் தோன்றிக் காலதேச வர்த்தமானத்துக் கேற்ற முறையில் இயற்கை வாழ்வெனுஞ் சன்மார்க்கத்தை ஓம்பினார். சன்மார்க்கமென்பது உலகில் பல சமயப் பெயர்களாக வழங்கப்பட்டு வருகிறது. அச் சமயம் ஒவ்வொன்றுஞ் சன்மார்க் கத்தையே குறிக்கொண்டு நிற்கிறது. வெறும் பெயர்களை மட்டுங் கொண்டு போரிடுவது அறியாமை. அவ்வறியாமை யுள்ளவரை கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கம் புலனாதல் அரிது இதுபற்றி மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலில் சமய வாழ்வு என்னும் பகுதியில் விரித்துக் கூறி யுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. சன்மார்க்கத்தைப் பற்றிச் சுவாமிகள் அருளிய பாக்களுள் மிகச் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். சுத்த சன்மார்க்க சுகநிலை தனிலெனைச் சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே ஆன்ற சன்மார்க்கம் அணிபெற எனைத்தான் ஈன்றமு தளித்த இனியநற் றாயே அழகனே ஞான அமுதே என்றன் அப்பனே அம்பலத் தரசே குழகனே இன்பக் கொடியுளங் களிக்கும் கொழுனனே சுத்தசன் மார்க்கக் கழகநேர் நின்ற கருணைமா நிதியே கடவுளே கடவுளே எனநான் பழகநேர்ந் திட்டேன் இன்னுமிவ் வுலகிற் பழங்கணா லழுங்குத லழகோ கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும் கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக மலைவுறுசன் மார்க்கமொன்றே நிலைபெறஎவ் வுலகும் வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் றனக்கே உலைவறுமிகப் பொழுதேநற் றருணமென நீயே உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மையுரைத் தவனே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே மாட்சி அளிக்குஞ் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர் சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின் ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக் காட்சி கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே திருநெறியொன் றேயதுதான் சமரசன் மார்க்கச் சிவநெறியென் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட் கொண் டருளமுத மளித்து வல்லபசக் திகளெல்லாம் வழங்கியவோர் வள்ளல் பெருநெறியிற் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருந்தருணம் இதுவே கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினாற் கருத்தொருமித் துண்மையுரைத் தேனே அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆறந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும் எச்சார்பு மாகியுயிர்க் கிதம்புரிதல் வேண்டும். எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்களெலாந் தவிர்ந்தே எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் உச்சாதி அந்தமிலாத் திருவடியில் யானும் உடையாயுங் கலந்தோங்கும் ஒருமையும்வேண்டு வனே உலகிலுள்ள சமயங்கள் யாவுஞ் சன்மார்க்க மொன்றையே குறிக்கொண்டு நிற்றல் உண்மை. அவற்றின் நுட்பந்தேறாது மக்கள் சமயப் பெயர்களை மட்டுங்கொண்டு, சமயநெறி விடுத்துச் சமயவெறியர்களாய், உலகில் நிகழ்த்திய போர்கள் பல; இட்ட வழக்குகள் பல. இனி அச்சமயப் பெயர்கட்குப் பதிலாக அவை களின் உள்ளுறையாக உள்ள சன் மார்க்கத்தை வழங்குவதே சால்பு. இனி உலகில் போருக்கும் பிளவுக்கும் பிரிவுக்குங் காரணமா யுள்ள துன்மார்க்கங்கள் பொன்றுவதே சிறப்பு. அவை பொன்றுங் காலம் சேய்மையிலில்லை என்று இறும்பூதுடன் இயம்புகிறேன். சன்மார்க்கம் ஓங்க; துன்மார்க்கம் சாய்க. கண்கொண்ட பூதல மெல்லாஞ் சன்மார்க்கங் கலந்துகொண்டே பண்கொண்ட பாடலிற் பாடிப் படித்துப் பரவுகின்றார். விண்கொண்ட சிற்சபை யொன்றே நிறைந்து விளங்குகின்ற தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவு மிறந்தனவே எனவரூஉஞ் சுவாமிகளின் ஆர்வமொழியை உற்று நோக்குக. யாண்டும் நீக்கமற நிறைந்துள்ள சத்தென்னுஞ் செம் பொருளுடன் இயற்கைவழித் தொடர்புகொண்டு வாழ்வோர் பிறவுயிரைத்தம்மைப்போலக் கருதும் ஒருநிலை எய்தல் ஒருதலை. அவர்க்கு உலகு உயிர்களெல்லாம் ஆண்டவன் உடலுறுப்புக்களாகத் தோன்றும். பிற உயிர்கட்குத் தீங்கு செய்தல் தம்முயிர்க்குத் தீங்கு செய்தலாக முடிவது அவர்க்கு நன்கு தெரியும். இப் பெருநிலையே சன்மார்க்க நிலை என்பது. இஃது இயற்கையுடன் இயைந்து வாழ்வதுமாகும் இந்நிலை அடைதற்கு மக்கள் கடைப்பிடித் தொழுகத்தக்க அறத் துறைகள் பல உண்டு. அவற்றை ஈண்டு விரிக்கிற்பெருகும். அவை யெல்லாவற்றிற்கும் அடிப்படை அருளறம் ஒன்றே. அவ்வறவொழுக்கம் சன்மார்க்கத்தைக் கூட்டுவது உறுதி. எனவே சன்மார்க்கப் பேற்றிற்கு வேண்டற்பாலது அருள் என்க. இராமலிங்க சுவாமிகளுஞ் சன்மார்க்கத்துக்கு அருளறத் தையே பெரிதும் அறிவுறுத்திச் சென்றார். அருளில்லாத இடத்தில் சன்மார்க்கமில்லை என்பது சுவாமிகளின் உள்ளக் கிடக்கை. சுவாமிகள் அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை என்று முழங்குமாறு மன்பதைக்கு அறிவுறுத்தினார்; அருட்பெருஞ் சோதி வழிபாட்டிற் கென்றே வடலூரில் ஒரு கோயில் கட்டினார். ஆண்டவனை அருட்பெருஞ் சோதி ஆண்டவன் என்று போற்று வது சுவாமிகள் வழக்கம். தமது கருத்துக்களெல்லாம் ஒரே இடத்தில் பொதுள சுவாமிகள் அருளிய ஒரு தனி அகவற்கு அருட்பெருஞ் சோதி அகவல் என்னும் பெயர் சூட்டினார். சுவாமிகள் பாக்கள் முழுவதும் அருண்மணங் கமழ்ந்து கொண்டிருத்தல் வெள்ளிடை மலை. அருளலா தணுவும் அசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை அருளுற முயல்கஎன் றருளிய சிவமே அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி எனஎனக் கியம்பிய சிவமே அருள்பெறிற் றுரும்புமோர் ஐந்தொழில் புரியும் தெருளிது வெனவே செப்பிய சிவமே அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே அருட்சுகம் ஒன்றே அரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே அருட்பே றதுவே அரும்பெறற் பெரும்பே றிருட்பே றறுக்கவென் றியம்பிய சிவமே அருட்டனி வல்லபம் அதுவே எலாஞ்செய் பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே அருளறி யார்தமை அறியார் எம்மையும் பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே அருணிலை யொன்றே அனைத்தும் பெறுநிலை பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே அருள்வடி வதுவே அழியாத் தனிவடி வருள்பெற முயலுகென் றருளிய சிவமே அருளே நம்மியல் அருளே நம்முரு அருளே நம்வடி வாமென்ற சிவமே அருளே நம்மடி அருளே நம்முடி அருளே நம்நடு வாமென்ற சிவமே அருளே நம்மறி வருளே நம்மனம் அருளே நங்குண மாமென்ற சிவமே அருளே நம்பதி அருளே நம்பதம் அருளே நம்மிடம் ஆமென்ற சிவம் அருளே நந்துணை அருளே நந்தொழில் அருளே நம்விருப் பாமென்ற சிவமே அருளே நம்பொருள் அருளே நம்மொளி அருளே நாமறி வாயென்ற சிவமே அருளே நங்குலம் அருளே நம்மினம் அருளே நாமறி வாயென்ற சிவமே அருளே நஞ்சுகம் அருளே நம்பெயர் அருளே நாமறி வாயென்ற சிவமே அருளொளி அடைந்தனை அருளமு துண்டனை அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே அருணிலை பெற்றனை அருள்வடி வுற்றனை அருளர சியற்றுகென் றருளிய சிவமே உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள் வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத் தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனிலெனைச் r¤âa dh¡»a jÅ¢át gâna! எனவரூஉம் அருண்மொழிகளை நோக்குக. சுவாமிகள் அருளிற் றோய்ந்து அருளுருவாய் வாழ்வு நடாத்தியதைக் குறித்துப் பின்னுங் கூறுவேன். 4. சங்கம் இனிச் சுவாமிகள் கண்ட சங்கத்தைப்பற்றி இரண்டோர் உரை பகர்ந்து மேற் செல்கிறேன். ஒவ்வொன்றுஞ் சங்கத்தின்வழி வளர்வதே சிறப்பு. வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் என்றார் அப்பர். இணங்கத் தன்னடியார் கூட்டமும் வைத்து என்றார் மாணிக்கவாசகனார். நான்குபேர் சேர்ந்து ஜெபஞ் செய்யும் இடத்தில் நானிருக்கிறேன் என்றார் கிறிது. சங்கஞ் சரணங் கச்சாமி என்று புத்தர் சங்கத்திற்கே வணக்கங் கூறியுள்ளார். நடராஜ வள்ளல் ஆனந்த நடம் புரிவது மன்றமே. திருமால் அறிதுயில் புரிவதும் அரங்கமே. வேறு பல அரசியல் வினைகளும், உலகியல் வினைகளும், மன்றங்களின் வாயிலாகவே நடைபெறுகின்றன. மக்கட்குச் சங்கத்தால் பல நலன்களுண்டு. அவையிற்றின் விரிவு ஈண்டு வேண்டுவதில்லை. ஷடாந்த சமரச சன்மார்க்கத்தார் சேர்ந்துழைத்தற் குரிய சங்கத்தைப்பற்றியும், அதன் அமைப்பைப்பற்றியுந் தொடக்கத்தில் சிறிது விளக்கி யுள்ளேன். மீண்டும் அவைகளை ஈண்டுக் கூறவேண்டுவதில்லை. ஷடாந்த சமரச சன்மார்க்கத்தார் யாவர்? அருள் - தயை - இரக்கம் - கருணையுடையார் அனைவரும் ஷடாந்த சமரச சன் மார்க்கத்தவரே யாவர். அவர் அனைவரும் ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்தவரே யாவர். அவர் எந்நாட்டவ ராயினுமாக; எம் மொழியின ராயினுமாக; எவ்வகுப்பின ராயினுமாக; எச் சமயத்தவ ராயினுமாக. அருளுடையா ரெல்லாருஞ் சமரச சன்மார்க்க மடைந்தவரே என்றும், தயையுடையா ரெல்லாருஞ் சமரச சன்மார்க்கஞ் சார்ந்தவரே என்றுஞ் சுவாமிகள் அருளிய மொழிகளைக் காண்க. இச்சன் மார்க்க சங்கம் உலக முழுதுங்கொண்ட ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை. அதற்கு இயற்கை அன்னை திருவருள் சொரிந்து வருகிறாள். கொலைத்தொழில் மிடைந்துள்ள நாடுகளிலுங் கொல்லா அறம் வளர்ந்து வருதலை உற்று நோக்குவோர்க்கு உண்மை புலனாகும். சமரச சன்மார்க்க சங்கம் ஓங்க; ஓங்க. அருள்நெறி செழிக்க; செழிக்க. பன்மார்க்க மெல்லாம் பசையற் றொழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் கொல்லா நெறியருளைக் கொண்டு துன்மார்க்க மெல்லாந் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ சன்மார்க்க சங்கந் தலைப்பட்டேன் - என்மார்க்கம் நன்மார்க்கம் என்றேவா னாட்டார் புகழ்கின்றார் மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து. மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மையிது தூக்கமெலா நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் நன்மார்க்கஞ் சேர்வீரிந் நாள் இதுகாறும், சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தியதென்னை என்பதைச் சுவாமிகள் கண்ட ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பெயரையும், பொருளையுங் கொண்டு ஒருவாறு சுருங்கக் கூறினேன். இனி அவ்வறிவுறுத்தலை நடையில் கொணர்தற்குச் சுவாமிகள் கோலிய முறை என்னை என்பது பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். 2. முறை சுவாமிகள் பாடிய பாக்களையும் எழுதிய உரைகளையும் நோக்குழிச் சுவாமிகள்கொண்ட முறைகள் இன்ன இன்ன என்று புலனாகின்றன. அம் முறைகளைப் பொது சிறப்பென இரு கூறிட்டுப் பேசலாம். ஈண்டுப் பெரிதுஞ் சிறப்பு முறைகள்மீதே நாட்டஞ் செலுத்தக் கருதியிருக்கிறேன். அச் சிறப்பு முறை களுள்ளுஞ் சுவாமிகள் இளமையில் கொண்ட வழிபாட்டு முறைகளைத் தனியாக இறுதியில் எடுத்துக்காட்ட எண்ணு கிறேன். அவையல்லாத பிறவற்றையே ஈண்டுச் சுருங்கச் சொல்லப் புகுகிறேன். 1. கடவுளிடத்துறுதி அருட்பாவென்னுங் கருவிகொண்டு சுவாமிகள் வாழ்வை நோக்கினால், அவர் வாழ்வில் முதல்முதல் புலனாவதொன்று. அவ்வொன்றே அவர் வாழ்வைச் சிறப்புச் செய்தது. அவ்வொன்றே எல்லார் வாழ்வையும் மேன்மையுறச் செய்வது. அவ்வொன்றிலா வாழ்வு எத்தகையாதாயினும், அது சவலையுற்றுச் சாம்பி அழுகிச் சாகும். அவ்வொன்று எது? கடவுளிடத்து உறுதி. அது வாழ்விற்குக் கொழுகொம்பு போன்றது. இராமலிங்க சுவாமிகள் அக் கொம்பரைத் தாம் வேறு அது வேறு என்று கருதாதவாறு உடும்பெனப் பற்றிக் கொண்டார். சுவாமிகளின் எண்ணஞ் சொல் செயல் எல்லாம் கடவுளிடத்தே படிந்து கிடந்தன. அவர் ஊன் உயிர் உடல் எல்லாம் அதனூடே உருவி நின்றன. சுவாமிகள் கடவுளிடங் கொண்ட உறுதியை அருட்பா முழுதுங் காணலாம். அருட்பாவை ஓதியுணரும் ஒருவர் ஆண்டவனிடத்து உறுதிகொள்ளுதல் ஒருதலை. அப்பாநின்னை யன்றியெங்கும் அணைப்பா ரில்லையே அந்தோநின்னை யன்றியெங்கும் அருள்வா ரில்லையே எப்பாலவர்க்கு நின்னையன்றி இறைமை யில்லையே எனக்குநின்மே லன்றியுலகில் இச்சை யில்லையே உன்னைமறக்கில் எந்தாயுயிரென் னுடம்பில் வாழுமோ உன்பாலன்றிப் பிறர்பாலென்ற னுள்ளஞ் சூழுமோ என்னைக்கொடுக்க வாங்கிக்கொண்ட தென்ன கருதியோ எந்தாய்நின்னைக் கொடுக்கவென்பா லின்றி வருதியோ இறைவாநின்னைக் கனவிலேனும் யான்ம றப்பனோ எந்தாயுலகத் தவர்கள்போல்நான் இனியி றப்பனோ மறைவாசகமும் பொருளும்பயனும் மதிக்கு மதியிலே வாய்க்கக்கருணை புரிந்துவைத்தாய் உயர்ந்த பதியிலே இறுகப்பிடித்துக் கொண்டேன்பதத்தை யினிநான் விடுவனோ எந்தாய்பாதம் பிடித்தகையால் வேறு தொடுவனோ குறுகப்பயந்து கூற்று மோடிக் குலைந்து போயிற்றே கோவேயுன்றன் அருட்சிற்சோதி என்ன தாயிற்றே அன்பர்களே! இப்பாக்களின் உள்ளக்கிடக்கையை ஓர்க. அடிகள் ஆண்டவனிடத்துக் கொண்ட உறுதியைத் தேர்க. தந்தையுந் தாயுங் குருவும்யான் போற்றுஞ் சாமியும் பூமியும் பொருளும் சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றுநீ யென்றே சிந்தையுற் றிங்கே யிருக்கின்றே னிதுநின் திருவுளந் தெரிந்ததே யெந்தாய் நிந்தைசெய் யுலகில் யானுளங் கலங்கல் நீதியோ நின்னருட் கழகோ ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னைத் தான்பெறு தாயுந் தந்தையுங் குருவும் தனிப்பெருந் தெய்வமும் தவமும் வான்பெறு பொருளும் வாழ்வுநற் றுணையும் மக்களும் மனைவியும் உறவும் நான்பெறு நண்பும் யாவுநீ என்றே நம்பினேன் கைவிடே லெனையே சோறு வேண்டினுந் துகிலணி முதலாம் சுகங்கள் வேண்டினுங் சுகமலாற் சுகமாம் வேறு வேண்டினும் நினையடைந் தன்றி மேவொ ணாதெனு மேலவர் உரைக்கே மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் சாறு வேண்டிய பொழில்வட லரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே எனவரூஉம் பாக்களால் தமக்குரிய எல்லாம் இறைவனே என்று சுவாமிகள் விளக்கியிருத்தல் காண்க. சுவாமிகள் தெய்வம் தெய்வம் என்று ஒரு பெரும் பதிகம் பாடியுள்ளார். அதன்கண் அன்புக்கடவுளை எவ்வெவ்விதமாகத் தமிழில் சுவாமிகள் வடித்துக் காட்டுகிறார். இரண்டொரு பாக்கள் வருமாறு:- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்குநிறை தெய்வம் என்னுயிரிற் கலந்தெனக்கே இன்பநல்குந் தெய்வம் நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம் நற்சபையி லாடுகின்ற நடராசத் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம் காரணமாந் தெய்வமருட் பூரணமாந் தெய்வம் செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னைநிக ரில்லாத தனித்தலைமைத் தெய்வம் வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் மலரடியென் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் கருணைநிதித் தெய்வமுற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் 2. இயற்கை வாழ்வு இவ்வுறுதி யுடையார் இயற்கைக்கு மாறுபட்டு வாழ்வு நடாத்த ஒருப்படார். இயற்கை நெறியே செந்நெறி யென்பது அவர்க்குச் செவ்வனே விளங்கும். நம் சுவாமிகள் இயற்கையோடி யைந்து வாழ்வு நடாத்தி, அதன் உள்ளுறையாகிய இறைவ னிடத்து அன்பு செலுத்தி வந்தார். சுவாமிகள் இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்தினார் என்பதற்குச் சான்றுகள் பலவுள. இயற்கை வாழ்வின் இன்றியமை யாமையைச் சுவாமிகள் எழுதிய உரைப்பகுதிகளிற் காண்க. சுவாமிகள் நீராடல், காற்றில் மூழ்கல், இளங்கதிரொளி யில் படிதல் முதலியவற்றை ஆற்றிக்கொண்டிருந்தார். அடிகள் நீராடிய ஓடை உங்களிற் பெரும்பான்மையோர்க்குத் தெரியும். நாளை அடியவர்கள் இங்கிருந்து அருட்பா ஓதிக்கொண்டு சுவாமிகள் அடைந்த ஞானசித்தபுரம் போகும் வழியில் அவ்வோடையில் மூழ்குவார்கள். கண்ணையுங் கருத்தையும் கவரும் அவ்வழகிய ஓடையில் மூழ்குவதை ஒரு வழக்கமாகவும் அன்பர்கள் கொண்டிருக்கிறார்கள். இராமலிங்க சுவாமிகள் அடிக்கடி வெளியில் உலவுவார் களென்று கேள்வியுற் றிருக்கிறேன். அவ்வுலவலில் காற்றில் மூழ்கலும் ஞாயிறொளியில் படிதலும் நிகழ்கின்றன. சுவாமிகள் கோடையில் குளிர் நிழலில் அமர்ந்து அந்நிழலை ஆண்டவன் வடிவெனக்கொண்டு மகிழ்ந்து மகிழ்ந்து உருகுவாராம். சுருங்கக் கூறின் சுவாமிகள் ஆண்டவன் வடிவான இயற்கையோடியைந்து வாழ்வு நடாத்தினார் என்று கூறலாம். இராமலிங்க அடிகள், இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்தி, அதன் வாயிலாக இறைவன் துணைபுரியும் அருட் டிறத்தை யுணர்ந்து, அவ்வுணர்வைப் பாட்டாகப் பாடிப் பாடி இன்புற்றார். இயற்கையில் இறைவன் பாட்டாகக் காட்சியளிப் பதைக் கண்ட அடிகள், அவ்வியற்கைப் பாட்டைத் தெள்ளிய தீந்தமிழ்ப் பாட்டுப் படமாக வரைந்து நமக்கு உதவியுள்ளார். கோடையிலே யிளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே யூறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற வரசேயென் னலங்கலணிந் தருளே இப்பாட்டில் இயற்கைக் கூறுகளை ஆண்டவனாகக் கண்டு கண்டு சுவாமிகளுற்ற மகிழ்ச்சியில் தமிழ் அன்பர்களே! கருத்திருத்துங்கள்; பாட்டுளத்துடன் அப் பாட்டில் திளை யுங்கள்; பாட்டு வடிவான இயற்கை இறையின் நிழலில் இருங்கள்; தண்ணீரில் ஆடுங்கள்; மலர் மணத்தை முகருங்கள்; காற்றில் மூழ்குங்கள்; அருளின்பத்தை நுகருங்கள்; நுகர்ந்து மகிழ்வுறுங்கள். அம் மகிழ்ச்சியே உடலையும் உயிரையும் ஓம்பும் அமிழ்தம் அமிழ்தமென்க. அவ்வமிழ்தப் பெருக்கே சுவாமிகள் அருளிய அருட்பா. அத்தமிழ் விருந்துண்ண எழுங்கள்; எழுங்கள். உண்ணவுண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் னுடம்போ டுயிருணர்வுங் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்துந் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே ததும்பியென்றன் மயமெல்லாந் தன்மயமே யாக்கி எண்ணியஎன் எண்ணமெலா மெய்தவொளி வழங்கி இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே யென்பெரிய பொருளேயென் னரசே புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும்வண்ண முளதாய்க் கையுமெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவையீ குவதாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே ஆட்சியுற வருளொளியாற் றிருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி யரசேயென் னலங்கலணிந் தருளே இயற்கை வாழ்விற்குரிய துறைகள் பலவுண்டு. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். சிலவற்றை மட்டும் ஈண்டுக் குறித்து மேற் செல்கிறேன். இயற்கை வாழ்விற்கு இன்றியமையாதனவற்றுள் உணவு மொன்று. உணவுக் கேற்ற குணம் என்பது பழமொழி. பொருந்தா உணவால் மனிதன் குணநல னிழந்து இயற்கைச் செந்நெறி விடுத்துப் பிறழ்ந்து வீழ்வது முண்டு. ஆகவே, உணவை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டுவது மக்கள் கடமை. இராமலிங்க சுவாமிகள் பொருந்திய உணவெனுஞ் சைவ உணவு அருந்தி அருந்திச் சிவனொடு தொடர்புகொள்ளும் ஒரு நெறி நின்றார். சுவாமிகள் கீரையுணவே பெரிதும் உண்டு வந்தாரென்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். புலால் உணவைச் சுவாமிகள் கடிந்து மறுத்து உரைத்ததைப் போல வேறு எவருங் கூறவில்லை என்றுஞ் சொல்லலாம். அவ்வுணவால் மக்கள் உடல்நல னிழந்து, உயிர்நலனிழந்து கேடுறுவதைச் சுவாமிகள் நன்குணர்ந்து, அதை மறுக்கலானார். அம் மறுப்புமொழிகள் பலபடக் கிடக்கின்றன. அவைகளுள் சில வருமாறு :- ஊழ்வகைக்குத் தக்கபடி மிருகம் பறவை முதலிய சீவர் களுக்கு அருளால் நியதியாகார மாத்திரமிருக்க மனிதர்களுக்கு மாத்திரம் ஊழ்நியதி யாகாரத்தோடு ஆகாமிய முயற்சி யாகாரமும் வேண்டுவது அவசியமென்றது எப்படி யெனில் : - மனிதர்கள் பிராரத்தப்படி நியதியாகாரத்தைப் புசித்துப் பிராரத்த அநுபவத்தை நீக்கிக் கொள்வதற்கும், ஆகாமியத்தால் முயற்சி யாகாரத்தைப் புசித்துக்கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்துகொண்டு சன்மார்க்க சாதனத்தை அநுசரித்துச் சித்திமுத்தி இன்பங்களைப் பெறுதற்கும் பிராரத்த ஆகாரமும் ஆகாமிய முயற்சி ஆகாரமும் அவசியம் வேண்டு மென்றறிய வேண்டும். மிருகம், பட்சி, ஊர்வன, தாபரமென்கிற சீவதேகங்கள் தண்டனை நிமித்தம் வகித்த தேகங்களாதலால் பிராரத்த ஆகாரம் கடவுள் விதித்த வண்ணம் அருட்சத்தியால் தடைபடாமல் கொடுக்கப்படுமாகலால் ஆகாமிய ஆகாரம் சம்பாதிக்க வேண்டாமென்றறிய வேண்டும். ஆனால் சீவகாருணியம் எல்லாச் சீவர்களுக்கும் பொது வென்று முதலில் குறிக்கப்பட்ட தென்னையெனில்; சீவகாருணிய வொழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும், பசியைப் போல் வேறுவகையினால் சீவகொலை நேரிடுவதானால் அந்தச் சீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடைசெய்து உயிர்பெறுவித்துச் சந்தோஷிப்பிக்க வேண்டு மென்றும், பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில், அத் துன்பங்கள் தங்களால் நீங்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும், மிருகம் பறவை ஊர்வன தாவரம் முதலிய சீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தை யும் கொலையினால் வரும் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்யவேண்டுமென்றும், அவற்றுள் துட்ட சீவர் களிடத்தும் சிறிது பயத்தினால் வருந்துன்ப மாத்திரமே யல்லது கொலையினால் வரும் துன்பங்களைச் செய்யப்படா தென்றும், இவ்வகை முழுவதும் சீவகாருணியமே யாதலால் எல்லா வுயிர்களிடத்தும் சீவ காருண்யம் வேண்டுமென்று கடவுளால் ஆணைசெய்ததென் றறியவேண்டும். மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகச் சம்பாதிக் கின்ற உயிர்களில் சில உயிர்கள் தாமச ஆகாரமாகிய மாமிச ஆகாரம் செய்வதனால் அவைகளுக்குப் பசியாற்றுவிக்கும் போது அந்த ஆகாரத்தைக் கொடுத்து ஆற்றுவிக்கப்படாதோ வென்னில் ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்ல வென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகளுக்கு முழு விரோத மென்றும் அறியவேண்டும். எல்லாச் சீவர்களுக்கும் இயற்கை யுண்மை ஏகதேசங்களாகிக் கடவுளியற்கை விளக்கம் ஒன்றோ டொன்று மாறுபடாதாகலாலும், கடவுளியற்கை விளக்கமுஞ் சீவவியற்கை விளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்கு கின்றபடியாலும் ஒரு சீவனை வதைத்து அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய வொழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறிய வேண்டும். புலி சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு சீவனைக் கொன்று தின்று தாமசவாகாரத்தால் பசியாற்றித் திருப்தி யின்பத்தை யடைந்து சந்தோஷிக்கின்றன. அந்தச் சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏகதேசமும் சீவவியற்கை விளக்க நிறைவு மெனவுங் கொள்ளக்கூடாதோ வென்னில், கூடாது. தாமசவாகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கை விளக்க ஏகதேசமும், ஏகதேச சத்துவமாகிய ஆன்ம வியற்கை விளக்கமும் விளங்கா. இருளால் ஒளி விளங்காதது போல். இதைத் தாமசவாகார மென்பது என்னவெனில் கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை. ஆகாரமாகலால் தாமசவாகார மாயிற்று. இந்த ஆகாரத் தால் திருப்தி யின்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்கம் எனில், அனாதி பசு கரண மாயா விளக்கமென்று அறிய வேண்டும். பசுவென்பது என்னை? ஆணவம், மாயை, கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது. அப்பசுவிற்கு விளக்கந் தோன்றுவது எப்படியென்னில் - சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப் பிரகாச விசேஷந் தோன்றுவதால் அவ்விருளும் விளக்க மாக வழங்குகின்றது. அதுபோல், அசுத்தமாயா கரணங்களுந் தாமச குணமும் இருள் வண்ணமுடையவாயினும் தம்மால் மறைக்கப்பட்ட பரசீவ விளக்க விசேஷத்தால் அசுத்தமாயா கரணமும் தாமச குணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால் தாமச வாகாரத்தில் வரும் விளக்கம் அசுத்த மாயாகரண விளக்கமே என்று அறியவேண்டும். ஆனால் மரம் புல் நெல் முதலான தாபரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே அவைகளை இம்சை செய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமசவாகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷ மல்லவோ என்னில் - மரம் புல் நெல் முதலான தாபரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சை செய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமசவாகாரந் தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷம் அசுத்த கரண சந்தோஷந்தான். ஆனால் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஒரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவ விளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள்போல் சடமாதலாலும் அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறு செய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றுதற்கிட மான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி, அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து, காய், கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலியவைகளை வாங்கும்போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாதபடியாலும் தாபரவர்க்கங்களுக்கு மன முதலான அந்தக்கரணங்கள் விருத்தியில்லாதபடியாலும் அஃது உயிர்க்கொலையுமல்ல; துன்பம் உண்டுபண்ணுவதுமல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது; அந்த ஆகாரத் தால் வந்த சந்தோஷம் சீவ விளக்கசகிதமான கடவுள் விளக்கமே யாகு மென்றறியவேண்டும். மா முதலிய தாபரங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற்கிடமாகிய சடங்களென்பது எப்படியென்னில் வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளையவேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்துஞ் சில வித்துக்கள் விளையாமலேயே இருக்கின்றன; அன்றியும் வித்தென்பது காரணம்; இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே என்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம் நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்திய மாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறியவேண்டும். ஆனால் வித்துக்களினிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி என்னில் - நிலத்திற் கலந்த வித்திற்கு நீர் விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந் நிலத்தின் பக்குவ சக்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றனவென்று அறிய வேண்டும். முளைகளையே பிடுங்கப் படாதென்று சிலர் சொல்லுகின்றார்கள். வித்து, காய், இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வது எப்படி என்னில் - வித்து நிலத்திற் படிந்தபின் நீர்வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சக்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால் முளையானது வித்து காய் முதலியவைகளைப்போலச் சடமல்ல. ஆதலால் முளைகளைப் பிடுங்கக் கூடாதென்பது உண்மை யென்று அறியவேண்டும். வித்து, காய், கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லா விடினும் நகம், ரோமம், சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்த மாவதில்லையோவென்னில் - தத்துவ விருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை. ஆதலில் மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலிய வற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்லவென்று அறிய வேண்டும். மாமிச ஆகாரம் புலி முதலாகிய துட்ட மிருகங்களுக்கு நியதியாகாரமல்லவோ என்றறியவேண்டில், அது அவ்வுயிர் களுக்குச் சிருட்டி நியதி ஆகாரமல்ல. பரம்பர வழக்கத்தாற் பெற்ற ஆகாரமாம் என்றறியவேண்டும். ஆகலில் அதை நிவர்த்தி செய்வித்துச் சத்துவ ஆகாரங்களைப் புசிப்பிக்கச் செய்யவுங் கூடும்; ஒரு சீலமுடையவன் கிரகத்தில் வழங்குகின்ற பூனைக்கும் நாய்க்கும் வேறிடங்களிற் போய் அசுத்த ஆகாரங் கொள்ளாமல் காவல்செய்து அடிநாள் தொடங்கிச் சுத்தவாகார வழக்கமே செய்விக்கின்றான். அவைகள் அவைகளைப் புசித்து உயிர்வழங்கி வருகின்றன. அப்படியே புலி சிங்க முதலிய துட்டவர்க்கங்களை யும் மேல் நின்று சுத்த ஆகாரத்தில் பழக்குவாரில்லாமையினால் அசுத்தாகாரங்களைப் பழக்கத்தாற் புசிக்கின்றன என்றறியலாம். ஆகலில் ஒரு சீவனைக்கொன்று மற்றொரு சீவனுக்குப் பசியாற்று வித்தல் கடவுளருளுக்குச் சம்மதமுமல்ல; சீவகாருணிய வொழுக்கமல்லவென்று சத்தியமாக அறியவேண்டும் மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற் கண்விழித்து வயங்கு மப்பெண் உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற வுறுவ னேனுங் கருவாணை உறவிரங்கா துயிருடம்பைக் கடித்துண்ணுங் கருத்த னேலெங் குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொ ணாதே கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரு நினது குலத்தாரே நீயெனது குலத்துமுதன் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியவென் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கு நித்தியனே எல்லா நிலையும்விளங் குறவருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேயென் புகலுமணிந் தருளே உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்க ளெல்லாம் உறவினத்தார் அல்லரவர் புறவினத்தார் அவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தன் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கமவர் அடையளவும் இதுதான் நம்மாணை என்றெனக்கு நவின்றவருள் இறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் னரசேயென் மாலையணிந் தருளே 3. முறையீடு மனிதன் கடவுளிடத்து உறுதிகொண்டு, இயற்கைச் செந்நெறி நின்று, வாழ்வு நடாத்திவரும் வேளையில், தொடக்கத் தில், முன்னை ஊழாலோ, வேறு சில குறைபாடுகளாலோ வழுக்கி வீழினும் வீழ்வன். வீழ்தல் இயல்பு. வீழ்ந்துபடும் மகன் என்செயல் வேண்டும்? அவ்வீழ்ச்சி குறித்து வருந்துதல் வேண்டும்; ஆண்டவனை நோக்கி முறையிடல் வேண்டும். வருந்தாமலும், முறையிடாமலும் வீழ்ந்து வீழ்ந்து செல்லும் ஒருவன் இயற்கை இறை வாழ்வினின்றும் விலகி விடுகிறான். அதனால் அவன் பிறவிப்பேற்றை இழந்தவ னாகிறான். தவறி வீழும் ஒருவன், முதலாவது அத் தவறுதல் குறித்து உளம் நொந்து வருந்துதல் வேண்டும். அவ்வருத்தம் மீண்டுந் தவறுதல் உறாத முறையில் ஆண்டவன் துணையைக் குறிக்கொண்டு நிகழ்வதா யிருத்தல் வேண்டும். உண்மையாகக் கசிந்து கசிந்துருகும் உளத்தில் திருவருள்பதிதல் உறுதி. ஆண்டவன் எற்றுக்கு இருக்கிறான்? மகன் வழுக்கி வீழ்ந்து அலமந்து வருந்தும்போது துணைபுரியவே ஆண்டவன் இருக் கிறான். ஊழின்மீது பழி சுமத்துவோர் கடவுளிடத்து உறுதி இல்லாதாரென்க. ஆண்டவனருளால் எல்லா வினைகளையும் வெல்லலாம். வேண்டாற்பாலது ஆண்டவனிடத்து உறுதி; உறுதி. நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே என்றார் அருணகிரிநாதர். அவ்வுறுதியில் நிலைத்து நின்று, தொடக்கத்தில் நிகழும் பிழைபாடுகளை அஞ்சாது முறையிட்டு, அழுது அழுது, குற்றங் களைந்து களைந்து சென்றால், நாளுக்கு நாள் குறைபாடு ஒழிந்து, ஆண்டவன் அருள்நிறை கூடும். அந்நிறையில் மூழ்கும் நிலை கூடிய பின்னை மகன் எப்பிழையும் நிகழ்த்தான். அவன் செயல் சிவன் செயலாகிறது. தொடக்கத்தில் சிறிது முயன்றே தீரல் வேண்டும். ஆகவே, இயற்கை வாழ்விற்கு முறையீடும் வேண்டற்பாலது. ஆண்டவன் அடியார் ஒவ்வொருவருங் குறைபாடுகளை முறையிட்டு முறையிட்டே பின்னைப் பெருநிலை எய்தினர். குறைபாடுகளை முறையிட அஞ்சுகிறவன் பாவமென்னும் பேயின் புதல்வனாவன். அவன் ஆண்டவன் பிள்ளை ஆகான். இராமலிங்க சுவாமிகளின் முறையீடுகளை என் உரையால் எங்ஙனம் முறையிட வல்லேன்? முறையீடும் அழுகையும் அல்லவோ இராமலிங்க சுவாமிகட்குப் பிறவிப் பேறளித்தன? இராமலிங்க சுவாமிகள் ஆண்டவனை நோக்கி முறையிட்ட முறையீடு - அழுத அழுகை - என்னே! என்னே! அழுதால் உன்னைப் பெறலாமே என்னும் மணிவாசகத்தின் நுட்பத்தை இராமலிங்க சுவாமிகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்ந்து, அதை வாழ்வில் கொணர்ந்தார். அவரது அழுகை அவரது மாசைக் கழுவி அவரை ஆண்டவன் பிள்ளை யாக்கிற்று. சகோதரிகளே! சகோதரர்களே! குறைகளை முறை யிடுங்கள்; அழுங்கள். ஆண்டவன் பிள்ளைகளாகலாம். முறை யீட்டின் நுட்பமும், அழுகையின் திறமும் எனக்கு இளமையில் விளங்கா தொழிந்தன. இலக்கணங்களைக் கட்டியழுதேன்; இலக்கியங்களைக் கட்டியழுதேன்; தர்க்கத்தில் புரண்டேன்; தத்துவத்தில் புரண்டேன்; வாதத்தில் வீழ்ந்தேன். ஆண்டவனை நோக்கி முறையிடக் கற்றேனில்லை. அழக் கற்றேனில்லை. முறையீட்டை முனிந்தேன்; அழுகையை வெறுத்தேன்; பாவியானேன். முறையீட்டின் நுட்பமும், அழுகையின் திறமும் ஒரு போது எனக்குத் திடீரெனப் புலனாயின. இதற்குப் பெருந்துணைவர் களாக நின்ற என் நண்பர்கள் டி. ஜே. இரத்தினம், எக்பர்ட் இரத்தினம். இவர்களுக்குப் பெருங் கடப்பாடுடையேன். முறை யீட்டின் நுட்பமும், அழுகையின் திறமும் விளங்கிய பின்னரே திருவாசகத்தின் மாண்பும், அதைப் போற்றிய இராமலிங்க சுவாமிகளின் மாண்பும் ஒருவாறு எனக்கு விளங்கின. இப்பொழுது முறையீட்டில் முனைந்து நிற்கிறேன். ஆனால் இன்னும் அழுகை பெருகவில்லை. இஃது என்பாலுள்ள குறைபாடு! என் செய்வேன்! இந்நிலையிலுள்ள சிறியேற்குக் கிறிதுவின் வாக்கும், நால்வர் மொழியும், ஆழ்வார் உரையும் எவ்வாறு துணைசெய்து வருகின்றன என்பதை யான் அறிவேன். அருணகிரியாரும் தாயுமானாரும் என் ஆவிக்குப் பெருந் துணைசெய்து வருகிறார். இப்பெரியோர் அழுகை யெல்லாம் பின்னாளில் தேங்கிய இடம் இராமலிங்க சுவாமிகள் அருட்பாவாகும். முறையீட்டில் அஞ்சாமையையும், அழுகையில் வேட்கையையும் அருட்பா எழுப்புகிறது. முறை யீடும் அழுகையுமே வேண்டும்; அவ்வன்பே வேண்டும். சுவாமிகள் முறையீடோ மலையென நிற்கிறது; அழுகையோ கடலெனக் காட்சியளிக்கிறது. அம் மலையையும் கடலையும் அருட்பாவில் பாருங்கள்; பாருங்கள். ஈண்டுச் சிலவற்றை மட்டும் அகழ்ந் தெடுத்துக் காட்டுகிறேன். குலத்திடையுங் கொடியனொரு குடித்தனத்துங் கொடியேன் குறிகளிலுங் கொடியனன்றிக் குணங்களிலுங் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலுங் கடையேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன் நலத்திடையோ ரணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்குமிக விழிந்தேன் நிலத்திடைநான் ஏன் பிறந்தேன் நின்கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே தொழுதெலாம் வல்ல கடவுளே யெனநிற் றுதித்திலேன் தூய்மையொன் றறியேன் கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவிற் கலந்துணக் கருதிய கருத்தேன் பழுதெலாம் புரிந்து பொழுதெலாங் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் எழுதலாம் படித்தன் றெனமிக வுடையேன் என்னினுங் காத்தரு ளெனையே சீரிடம் பெறுமோர் திருச்சிற்றம் பலத்தே திகழ்தனித் தந்தையே நின்பாற் சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் போரிட முடியா தினித்துய ரொடுநான் பொறுக்கலேன் அருள்கஇப் போதே போது தான் விரைந்து போகின்ற தருணீ புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் தீதுதான் புரிந்தேன் எனினுநீ யதனைத் திருவுளத் தடைத்திடு வாயேல் ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ என்னுயிர்த் தந்தைநீ யலையோ தந்தைநீ யலையோ தனையனா னலனோ தமியனேன் தளர்ந்துளங் கலங்கி எந்தையே குருவே இறைவனே முறையோ என்றுநின் றோலிடு கின்றேன் சிந்தையே யறியார் போன்றிருந் தனையேற் சிறியனேன் என்செய்கேன் ஐயோ சந்தையே புகுந்து நாயினிற் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே யாரினுங் கடையேன் யாரினுஞ் சிறியேன் என்பிழை பொறுப்பவர் யாரே பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழைபொறுத் திலையேல் ஊரினும் புகுத வொண்ணுமோ பாவி உடம்பைவைத் துலாவவும் படுமோ சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக் கடாதவ னென்றே அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீயறி யாயோ பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால் பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன் வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் எத்தி யஞ்சலை எனவரு ளாயேல் ஏழை யேன்உயிர் இழப்பனுன் னாணை சத்தி யம்புகன் றேன்வட லரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல் படித்தவர் தங்களைப் பார்த்து நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்தம் உறவு பிடித்தனன் உலகிற் பேதையர் மயங்கப் பெரியரிற் பெரியர்போற் பேசி நடித்தனன் எனினும் நின்னடித் துணையே நம்பினேன் கைவிடே லெனையே படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே பட்டதெலாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடலுயிரா தியவெல்லாம் நீயெடுத்துக் கொண்டுன் உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாயென் கண்ணுண் மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான் பயப்படவு மாட்டேன்உன் பதத்துணையே பிடித்தேன் விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் மெய்ம்மையிது நும்மாணை விளம்பினன்நும் அடியேன் கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவு மாட்டேன் கிளரொளியம் பலத்தாடல் வளரொளிநும் மல்லால் நடமாட்டேன் என்னுளத்தே நான்சாக மாட்டேன் நல்லதிரு வருளாலே நான்றானா னேனே குற்றம் புரிதலெனக் கியல்பே குணமாக் கொள்ள லுனக்கியல்பே சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பு முகமன் யாதுளது தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே 5. அருளொழுக்கம் இம் முறையீட்டானும், அழுகையானும் நான்என்னும் முனைப்பு வீழ்ந்துபடும். முனைப்பு வீழ்ச்சியான் மனமாசகலும். மனமாசு அகல அகல ஆண்டவன் அருள் பதிந்து கொண்டே போகும். முறையீடும் அழுகையும் முனைப்பைச் செகுத்து, மாசைக் கழுவி, அருளைக் கூட்டல் கருதற்பாலது. இயற்கை வாழ்வின் முடிந்த நிலை அருளொழுக்கப் பேறேயாகும். அருளொழுகும் இடத்தில் பிற தீமை ஒழுகுங் கொல்? அருளொழுகும் இடத்தில் எல்லா நலன்களும் இருத்தல் இயல்பு. ஆங்குத் தீமைக்குத் துச்சிலும் இல்லை என்க. இராமலிங்க சுவாமிகள் அருளொழுக்கத்தில் தலை சிறந்து விளங்கியது உலகறிந்த தொன்று. அவர் கொண்ட இயற்கை வாழ்வு அவருக்கு அந்நிலையைக் கூட்டிற்று. இராம லிங்க சுவாமிகள் அருளையே நினைந்து நினைந்து அருண் மயமாய், அருள்நெறி நின்று அருளறத்தையே ஓம்பினார். இராமலிங்க சுவாமிகள் அருளின் தன்மையை நன்கு உணர்ந்து, அவ்வருளாயினார் என்பது அவரெழுதியஜீவகாருண்ய ஒழுக்கம் முதலிய கட்டுரைகளாலும், வேறு பல பாக்களாலும் நனி விளங்கும். இராமலிங்க சுவாமிகளின் சமயம் என்ன என்று எவரேனுங் கேட்பின், அவர்க்குச் சுவாமிகள் சமயம் ஜீவகாருண்ய சமயம் அல்லது அருணெறி என்று கூறலாம். சத்தெனுஞ் செம்பொருளைக் கூட்டவல்லது அருள் ஒன்றே. சத்தெனுஞ் செம்பொருளை உணர்த்தக் கூடிய மார்க்கம் இயற்கை என்று மேலே கூறியுள்ளேன். அவ்வியற்கைவழி வாழ்வு நடாத்தின், அஃது அருளைக் கூட்டுகிறது. ஆகவே, சத்தை உணர்த்தி, அதனுடன் உயிரைச் சேர்க்கவல்லது அருள்நெறி என்பதை அன்பர்கள் உணர்வார்களாக. உலகில் தோன்றிய பெரியாரெல்லாரும் அருள் நெறியையே அறிவுறுத்திச் சென்றனர். உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் அருள்நெறியையே அறிவுறுத்துகின்றன. நல்லாற் றான் நாடி அருளாள்க பல்லாற்றால் - தேரினும் அஃதே துணை என்றார் வள்ளுவனாரும். ஆகவே, உயிர் நலத்துக்குரிய பொது நெறி அருணெறியே என்க. அதைக் கூட்டும் ஒன்றே சமரச சன்மார்க்கம் என்பது. இராமலிங்க சுவாமிகள் அருளின் திறத்தையும், நலத்தை யும் தமது வாழ்வில் நன்குணர்ந்து, அருணெறி ஓம்புவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தார். இராமலிங்கர் என்னும் பெயருக்கு ஜீவகாருண்யமூர்த்தி என்று பொருள் கொள்ள லாம். அவர் சமயம் ஜீவகாருண்யம் என்று மீண்டும் அறை கூவுகிறேன். சுவாமிகள் இரக்க நிலையை அளந்துகூற யான் அருகனோ? சுவாமிகளின் இரக்கநிலை அளந்து கூறற்பால தன்று. அவரது இரக்கம் எல்லை கடந்தும் ஓடியிருக்கிறது. இரக்கமே அவர் உயிர்; இரக்கமே அவர் உடல்; இரக்கமே அவர் என்று கூறல் மிகையாகாது. சுவாமிகளின் இரக்கநிலையை, வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கிலென் மனஞ்சென்ற தோறும் வெருவிநின் னடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் என்றும் உருவவென் உயிர்தான் உயிரிரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம் ஒருவிலென் உயிரும் ஒருவும்என் னுள்ளத் தொருவனே நின்பதத் தாணை தலைவர்க ளெல்லாந் தனித்தனி வணங்குந் தலைவனே இன்றும்என் னுளமும் மலைவிலென் னறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிரிரக் கத்தால் இலகுகின் றனம்நா னென்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே நிலைபெறும் இரக்கம் நீக்கில்என் உயிரும் நீங்குநின் திருவுளம் அறியும் ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே யன்றியோர் விடயக் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லையென் றிடலிப் போதலாற் சிறிய போதுமுண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் னினக்கே என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றா இருக்கவே இசைவித்திவ் வுலகில் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் பன்னலென் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோ ரிறையுமிங் கிலையே சீர்த்தசிற் சபையென் னப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே ஆர்த்தவிவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் வேர்த்தமற் றயலார் பசியினாற் பிணியால் மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளமறி யாதோ அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே பொன்னையே யுடையார் வறியவர் மடவார் புகலுமா டவரிவர் களுக்குள் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணமீ தெனவே சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீயறி யாயோ காவியல் கருணை வடிவனே தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே மேவிய ஒளியே இவ்வுல கதிலூர் வீதியா திகளிலே மனிதர் ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம் பாவியேன் உள்ளம் பகீரென நடுங்கிப் பதைத்ததுன் உளமறி யாதோ மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர் உறையுறு வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாந் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன் நிறைவுமிவ் வுலகிற் கொலையெனில் எந்தாய் என்னுள நடுங்குவ தியல்பே பல்லிகள் பலவா யிடத்துமுச் சியினும் பகருநேர் முதற்பல வாயினும் சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின்ற வோவெனச் சூழ்ந்தே மெல்லிய மனநொந் திளைத்தனன் எந்தாய் கூகைவெங் குரல்செயுந் தோறும் வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ யறிவாய் காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன் தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரற் பறவையாற் றளர்ந்தேன் வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் ஒடுங்கினேன் எந்தாய் வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோரென் நேருறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன் துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன் கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையுந் தூண்டிலுங் கண்ணி வகைகளுங் கண்டபோதெல்லாம் எண்ணியென் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவருள் அறியும் நடுநிலை யில்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடார் தமையரை நாளுங் கெடுநிலை நினைக்குஞ் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலாற் கிளத்தாப் படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம் விடுநிலை உலக நடையெலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலிற் போக விட்டீர் கொலைத்தொழிலிற் கொடியிர்நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக் கலைத்தொழிலிற் பெரியருளங் கலங்கினரைக் கலக்கமெலாங் கடவுள் நீக்கித் தலைத்தொழில்செய் சன்மார்க்கந் தலையெடுக்கப் புரிகுவதித் தருணந் தானே கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் ளிருந்தீர் பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர் எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே எனவரூஉம் அருட்பாட்டுகளால் உணர்க. இரக்கமே நிலவும் நெஞ்சில் பொறாமை பகைமை முதலிய தீய இயல்புகளின் நீழலும் நிலவல் அரிது. இரக்கமுடைய நெஞ் சினர்க்குப் பகைவரேயிரார். நெஞ்சிற்பகைமையுடை யார்க்கே பகைவரிருப்பர். அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த- இன்னா உலகம் புகல் என்றார் வள்ளுவனார். அருள்பூத்த நெஞ்சினார்க்குப் பகைவரின்மையால், அவர் எவ்வுயிரையுந் தம்முயிர்போல் கருதி நலஞ்செய்யப் புகுகிறார். அந்நலம் புரிதலையே அவர் அருட்பெருங் கடவுட்டொண் டாகக் கருதுவர். எவ்வுயிரையும் பொதுவெனக் கொள்வோர் உள்ளம், பொய் பொறாமை பகைமை முதலியவற்றை அறியாத தொன்றாகலான், அதுவே ஆண்டவன் நடம் புரியும் பெருஞ் சபையாகும். இப் பெருநிலையை இராமலிங்க சுவாமிகள் எய்தினர். அதற்குக் காரணமாக நின்றது அவர்தம் அருள்பூத்த நெஞ்சம் என்பதை நாம் மறத்தலாகாது. எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப கரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின் செயலெனவே தெரிந்தேன் இங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடவென் வாய்மிகவும் ஊர்வ தாலோ எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்த தாலோ கருணையொன்றே வடிவாகி எவ்வுயிருந் தம்முயிர்போற் கண்டு ஞானத் தெருணெறியிற் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருணெறிசற் குணசாந்தப் புண்ணியர்தந் திருவாயாற் புகன்ற வார்த்தை அருணெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் வார்த்தைகளென் றறைவ ராலோ உயிரெலா மொருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுவென அறிந்தேன் செயிரெலாந் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன் மயிரெலாம் புளகித் துளமெலாங் கனிந்து மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப் பயிரெலாந் தழைக்கப் பதியெலாங் களிக்கப் பாடுகின் றேன்பொதுப் பாட்டே நேயர்களே! இப் பாக்களின் உள்ளக்கிடக்கையை ஓர்க. இன்னுஞ் சுவாமிகள் ஆண்டவனை நோக்கிச் செய்யும் வேண்டுதலையும் பாருங்கள். அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாநான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணுநான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும். தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அணுத்துணையுஞ் சினங்காமம் அடையாமை வேண்டும் மருளாய உலகமெலாம் மருணீங்கி ஞான மன்றிடத்தே வள்ளலுனை வாழ்த்தியிடல் வேண்டும் இருளாமை யுறல்வேண்டும் எனையடுத்தார் சுகம்வாய்ந் திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும். பொருளாமோ திருவடிவி லுடையாயும் நானும் புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல் வேண் டுவனே கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத் தருணநின் னருளால் தவிர்த்தவர்க் கின்பந் தரவும்வன் புலைகொலை இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலா நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய் மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணுமவ் வருத்தந் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்? இவ் வேண்டுதலால் சுவாமிகள் உயிர்களிடத்துக் கொண் டுள்ள அன்பும், அருணெறியில் அவர்க்குள்ள வேட்கையும் அவரது பயன்கருதாத உள்ளமும், பிறவும் புலனாதல்காண்க. சுவாமிகள் கடவுளிடத்து உறுதிகொண்டு, இயற்கையோ டியைந்து வாழ்ந்து, அருள்பெற்று, உயிர்கட்கு அன்பு செய்தலே கடவுளுக்கு அன்பு செய்தல் என்னும் அருணெறியில் நின்று, உயிர்கட்குத் தொண்டு செய்யும் முறையைக் கொண்டமையான், அவரடைந்த பேறு யாது என்பதை இனி ஆராய்வோம். 3. பேறு மகன் ஆண்டவன் திருவருளில் காதல்கொண்டு, கசிந்து கசிந்து உருகி, அழுது அழுது குறைபாடுகளை முறையிட்டு, வேண்டுதல் செய்யச் செய்ய, ஆண்டவன் திருவருள் ஞாயிறென எழுந்து, இருள்கடிதல் ஒரு தலை. திருவருட்பேற்றிற்கு வேண்டற் பாலது குறைகளை முறையிட்டுக் கசிந்து கசிந்து உருகும் அழுகை அழுகை என்று மேலே ஒல்லும்வகை வலியுறுத்தி யிருக்கிறேன். அவ் வழுகைநீர், நெஞ்சினைத் தூய்மைப்படுத்தும். இதனை அனுபவத்திற் காணலாம். இராமலிங்க சுவாமிகள் குறைகளை முறையிட்டார்; கசிந்து கசிந்து உருகினார்; அழுதார்; மனமாசைக் கழுவினார்; ஆண்டவன் அருள் பெற்றார்; இன்புற்றார்; இறுதியில் பெறற்கரிய பெரும்பேறெய்தினார். இப்பேற்றிற்கு அடிப்படை எது? அவர் ஆண்டவனிடத்துக் கொண்ட உறுதியேயாகும். 1. உறுதி நிலை உறுதியைக் குலைக்கவல்ல தொல்லைகள் இடையிடையே நிகழ்வதும் உண்டு. அத்தொல்லைகள் பெத்த நிலையில்மட்டுமல்ல, சீவன் முத்த நிலையிலும் புகுந்து துன்புறுத்தி மகனைத் தங்கள் வயப்படுத்த முயலும். அவ்வேளைகளில் அன்பன் மிக எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும். சோதனைகட்கு இரையாகாது மகன் தன்னைக் காக்கப் புகுவதே அறிவுடைமை. இடையிடையே விழ நேரினும் மீண்டும் எழுந்து இறைவனடியைப் பற்றிக் கொள்ளல் வேண்டும். முழுத் திருவருள் படியும்வரை இடையிடை முனைப் பெழுந்து தாக்கித் தாக்கி அடியவனது முயற்சிக்குக் கேடு சூழும். அத் தாக்குதலால் நிகழுங் குறைபாடுகளை ஆண்டவனிடத்து முறையிட்டு, முனைப்பின் ஆற்றலைச் சாய்க்க அடியவன் முயலல் வேண்டும். ஆண்டவனிடத்து உறுதிகொண்டு, குறை பாடுகளை முறையிட்டுத் தன்னை ஆண்டவனிடம் ஒப்புவிக்கும் மகன் திருவருட்பேறு எய்துதல் ஒருதலை. இதற்கு இராமலிங்க சுவாமிகளின் வாழ்வு பேரிலக்கியமாக நிற்கிறது. தனிப்பெருந் தலைவரே தாயவ ரேயென் தந்தைய ரேபெருந் தயவுடை யவரே பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேயெம் பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா இறையவ ரேஉமை இங்குகண் டல்லால் அநித்திய உலகினைப் பார்க்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீ ராணைநும் மீதே சத்தியஞ் சத்தியம் அருட்பெருஞ் சோதித் தந்தைய ரேயெனைத் தாங்குகின் றீரே உத்தம மாகுநுந் திருச்சமு கத்தென் உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் இத்தகை உலகிடை அவைக்குமென் றனக்கும் ஏதுஞ்சு தந்திர மில்லையிங் கினிநீர் எத்தகை யாயினுஞ் செய்துகொள் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் யின்பந்தந் தீரே காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவிலாள் காமமா திகளாம் பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் பயம்புரி வித்தனள் பலகால் தேய்ந்திடு மதியென் றெண்ணினாள் குறையாத் திருமதி எனநினைந் தறியாள் சாய்ந்தவிச் செவிலி கையிலே என்னைத் தந்தது சாலுமென் றாயே கலையெலாம் புகலுங் கதியெலாங் கதியிற் காண்கின்ற காட்சிக ளெல்லாம் நிலையெலா நிலையி னேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவின் மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையால் நடத்துமோர் தனிமைத் தலைவனே எனது தந்தையே நினது தனையனான் தளருத லழகோ செய்வகையென் னெனத்திகைத்தேன் திகையேலென் றொருநாள் திருமேனி காட்டியெனைத் தெளிவித்தாய் நீயே பொய்வகையன் றிதுநினது புந்தியறிந் ததுவே பொன்னடியே துணையெனநான் என்னுயிர்வைத் திருந்தேன் எய்வகையென் நம்பெருமான் அருள்புரிவான் என்றே எந்தைவர வெதிர்பார்த்தே இன்னுமிருக் கின்றேன் ஐவகையிவ் வுயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருளிப் பொழுதே உன்னைமறந் திடுவனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்னாணை இதுநீ என்னைமறந் திடுவாயோ மறந்திடுவா யெனில்யான் என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினுந் தயவுடையாய் நீமறந்தா யெனினும் அகிலமெலா மளித்திடுநின் அருள்மறவா தென்றே இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே தெருவிடத்தே விளையாடித் திரிந்தவெனை வலிந்தே சிவமாலை அணிந்தனையச் சிறுவயதில் இந்த உருவிடத்தே நினக்கிருந்த ஆசையெலாம் இந்நாள் ஓடியதோ புதியவொரு வுருவுவிழைந் ததுவோ கருவிடத்தில் எனைக்காத்த காவலனே உனது கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடியன் றதுதான் வெருவிடத்தென் னுயிர்ப்பிடிகாண் உயிரகன்றா லன்றி விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டே னானே இப்பாக்களால் சுவாமிகளின் உறுதிநிலை புலனாதல் காண்க. 2. திருவருள் நிலை முனைப்புடன் போராடிப் போராடி அதனைச் செயலறச் செய்ததும் ஒருபெரும் மாறுதல் அன்பன்பாலுறும். யான் என்னும் நினைவே அற்றுப்போகும். யான் என்னும் நினைவிருந்த அவ்விடத்தில் திருவருள் குடிபுகும். திருவருள் புகுந்ததும், மகன் செயல்களெல்லாம் அத் திருவருளின் செயல்களாகும். அவனன்றி ஓரணுவும் அசையாது என்னும் பேருரைக்குத் திருவருட் செல்வன் பொருளாவன். ஆண்டவன் ஆட்டத் தான் ஆடுவதை அவன் உணர்வன். தனக்கென ஒன்றின்மையை அவன் செயலில் விளங்கப்பெறுவன். முனைப்புள்ளவரை இவ்வுணர்வு பிறத்தல் அரிது. ஆண்டவன் தன்னை இயக்குவதை உணராது, தானே இயங்குவதாகக் கருதி, ஆணவத்தின் சேயாகக் கிடக்கும் ஒருவன், உண்மைதெளிந்து முனைப்பைச் செகுத்துத் திருவருட்பேறு எய்திய பின்னை, ஆண்டவன் தன்னை இயக்கத் தான் இயங்குவதை உணர்ந்து, ஆண்டவன் சேயாகிறான். ஆணவத்தோடத்துவித மானபடி மெய்ஞ்ஞான - தாணுவினோ டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ எனவரூஉந் தாயுமானார் திருவாக்கை நோக்குக. இராமலிங்க சுவாமிகள், தாம் முனைப்பை வீழ்த்தி, ஆண்டவன் அருள்பெற்றுத் தற்சுதந்திரமிழந்து, ஆண்டவன் வயப்பட்டு நின்றதைப் பலவிடங்களில் பாடியுள்ளார். அப் பாக்களில் சில வருமாறு:- என்னாலோர் துரும்புமசைத் தெடுக்கமுடி யாதே எல்லாஞ்செய் வல்லவனென் றெல்லாரும் புகலும் நின்னாலிவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே நின்னருள்பெற் றழியாத நிலையையடைந் திடவென் தன்னாலோர் சுதந்திரமு மில்லைகண்டாய் நினது சகலசுதந் திரத்தையென்பாற் றயவுசெயல் வேண்டும் பின்னாலென் றிடிற்சிறிதுந் தரித்திருக்க மாட்டேன் பேராணை யுரைத்தேனென் பேராசை யிதுவே இப்பாரி லுடலாவி பொருளுமுன்பாற் கொடுத்தேமற் றெனக்கென் றிங்கே எப்பாலுஞ் சுதந்திரமோர் இறையுமிலை அருட்சோதி இயற்கை என்னுந் துப்பாய உடலாதி தருவாயோ இன்னுமெனைச் சோதிப் பாயோ அப்பாநின் திருவுளத்தை அறியேனிவ் வடியேனால் ஆவ தென்னே பாட்டுவித்தாற் பாடுகின்றேன் பணிவித்தாற் பணிகின்றேன் பதியே நின்னைக் கூட்டுவித்தாற் கூடுகின்றேன் குழைவித்தாற் குழைகின்றேன் குறித்த வூணை ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே உடுப்பவனும் உண்பவனும் நானேயென் னவுநாணம் உறுவ தெந்தாய் தடுப்பவனுந் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி எடுப்பவனுங் காப்பவனும் இன்பவநு பவவுருவாய் என்னு ளோங்கி அடுப்பவனு நீயென்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே மகன் தற்சுதந்திர மிழந்து, எல்லாம் ஆண்டவன் செயல் என்று ஆண்டவன் வயப்பட்டு நிற்கும்வரை பலதிறமாயாப் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். அவன் முற்றும் ஆண்டவன் வயப்பட்ட பின்னரே போராட்டங்கள் தொலை யும். அந்நிலையில் அவனை மாயா மனம் என் செய்யும்? ஆணவம் என் செய்யும்? பிற என் செய்யும்? அவைகள் தலை காட்டவும் இடம் பெறுதல் இல்லையென்க. இராமலிங்க சுவாமிகள் திருவருளால் விழுங்கப்பெற்று ஆண்டவன் பிள்ளையானதும், மனமுதலிய பேய்களெல்லாம் தத்தம் அரசிழந்து நாணி ஓடி ஒளித்தன. அவைகளை முன்னிலைப் படுத்திச் சுவாமிகள் பேசிய பேச்சுக்கள் ஆண்டவன் திருவருள் மீது வேட்கையை எழுப்புகின்றன. அவ் வீரமொழிகளை யான் பன்முறை படித்துப் படித்து, ஆண்டவன் திருவருள்நிலை குறித்து இறுமாப் பெய்துவதுண்டு. அவ் விறுமாப்பு நமக்கு வேண்டும். இறுமாந் திருப்பன்கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் - சிறுமான் ஏந்திய சேவடிக்கீழ்ச் சென்று அங்கு இறுமாந் திருப்பன்கொலோ எனவரூஉம் அப்பர் இறுமாப்பு மொழிகளைக் கண்டு இறுமாப்புக் கொள்ளுங்கள். மக்களாகப் பிறந்த நாம் திருவருளில் நாமார்க்குங் குடி யல்லோம் என்று இறுமாந்து நிற்றல்வேண்டும்; நிற்கப் பயிலல் வேண்டும். மக்களாகப் பிறந்து மனத்திற்கா அடிமையாகி மாள்வது? ஆணவத்திற்கா அடிமையாகி அழிவது? மக்களாகப் பிறந்தவர்கள் ஆண்டவனுக்கே அடிமைப்பட்டுத் திருவருட் பேறெய்த விரைந்து நிற்றல் வேண்டும். அன்பர்களே! இராமலிங்க சுவாமிகள் வாழ்வை நோக்குங்கள். அவர்கள் வாழ்வு ஆண்டவன் அருளையே குறிக்கொண்டு இயங்கியதை உணருங்கள். இராமலிங்க சுவாமிகள் முயன்று முயன்று, பல்கால் உழைத்து உழைத்து, ஆண்டவன் அருள் பெற்றார்; ஆண்டவன் பிள்ளையானார். அடிகள் ஆண்டவன் பிள்ளையான பின்னர் மனமும், அகங்காரமும், பிறவும் தத்தம் ஆற்றலிழந்து அடங்கி ஒடுங்கி ஒழிந்தன. அவைகளைச் சுவாமிகள் முன்னிலைப்படுத்தி ஏசி ஏசிப் பாடிய பாக்களை - அன்பர்களே! படித்துப் பாருங்கள். மனமும், அகங்காரமும், அவைகளின் இனமும் நம்மை என்னனென்ன செய்கின்றன? அவைகள் சுவாமிகளிடம் என் செய்கின்றன? எத்துணையோ நாள் அரசு செலுத்திய மன மாதியன, சுவாமிகளின் முன் வலியிழந்து செயலின்றிக் கிடக் கின்றன. பாவம்! பாவம்! அவைகளின் நிலை இரங்கத்தக்கதா யிருக்கிறது. மனமெனுமோர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் மற்றவர்போ லெனைநினைந்து மருட்டாதே கண்டாய் இனமுறவென் சொல்வழியே இருத்தியெனிற் சுகமாய் இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலையா னாலோ தினையளவுன் அதிகாரஞ் செல்லவொட்டேன் உலகம் சிரிக்கவுனை அடக்கிடுவேன் திருவருளாற் கணத்தே நனவிலெனை அறியாயோ யாரெனவிங் கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே அகங்கார மெனும்பொல்லா அடவாதிப் பயலே அடுக்கடுக்கா எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய் செகங்காணத் தலைகாலுந் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின்செபந்தான் சிறுதுநட வாது இகங்காண அடங்குகநீ அடங்காயேற் கணத்தே இருந்தவிடந் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன் சுகங்காண என்றனைநீ அறியாயோ நான்றான் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை நானே கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே தாபவுலோ பப்பயலே மாற்சரியப் பயலே தயவுடனிங் கிசைக்கின்றேன் தாழ்த்திருக்கா தீர்காண் தீபமெலாங் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர் சிறிதுபொழு திருந்தாலும் திண்ணமிங்கே அழிவீர் சாபமுறா முன்னமறிந் தோடுமினோ என்னைத் தானறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே எனவரூஉம் பாக்களை ஓதியுணர்ந்து ஆண்டவன் திருவருளில் காதல் கொள்ளுங்கள். மனவொடுக்கமும், ஆணவ நீக்கமும், பிற தத்துவங்களின் அழிவும் பெற்ற அருளாளர் எண்ணும் எண்ணங்களும், பேசும் பேச்சுக்களும் யாருடையன? அவை ஆண்டவனுடையன என்று சொல்லலும் வேண்டுமோ? ஆண்டவன் உடைமையெல்லாம் அவர்களுடைமை யாகின்றன என்று சுருங்கச் சொல்லலாம். நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வானுரைத்த மணிமன்றில் நடம்புரியெம் பெருமான் வரவெதிர்கொண் டவனருளால் வரங்களெலாம் பெறவே தேனுரைக்கும் உளமினிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் னுடனெழுமின் சித்திபெற லாகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையுஞ் சுகத்தினைநீர் தானடைதல் குறித்தே எல்லா உலகமும் என்வச மாயின எல்லா வுயிர்களும் என்னுயி ராயின எல்லா ஞானமும் என்ஞான மாயின எல்லா வித்தையும் என்வித்தை யாயின எல்லாப் போகமும் என்போக மாயின எல்லா இன்பமும் என்னின்ப மாயின எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் எல்லாம் நல்கியென் னுள்ளத்துள் ளாரே என்றார் சுவாமிகளும். தத்துவங்களெல்லாம் ஒடுங்கப்பெற்று, ஆண்டவன் அருளில் திளைத்துக் கிடப்போர்க்கு உலகியல் வேற்றுமை களும், சாதிமத வேற்றுமைகளும், மற்ற வெறிகளும் தோன்றவே மாட்டா. அவர்க்கு எல்லாம் ஒன்றாகவே தோன்றும். அப் பெருநிலையே சமரச சன்மார்க்கம் மென்பது. சமரச சன்மார்க்கத்தைப்பற்றி முன்னரும் பேசியுள்ளேன். ஈண்டுச் சுவாமிகள் மொழிகளிற் சிலவற்றை மட்டும் பொறித்துச் செல்கிறேன். கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் கிடைத்ததென துளக்கமலங் கிளர்ந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி யாச்சிரமா சாரம் சமயமதா சாரமெனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழக்குவெளுத் ததுசிவமே பொருளெனுஞ்சன் மார்க்க முழுநெறியிற் பரநாத முரசுமுழங் கியதே ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் னுளத்தே நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்திய னாயினேன் உலகீர் சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்தசன் மார்க்க வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாருஞ் சேர்கதி பலபல செப்புகின் றாரும் பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் மெய்வந்த திருவருள் விளக்கமொன் றில்லார் மேல்விளை அறிகிலர் வீண்கழிக் கின்றார் எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் எனைப் பள்ளி எழுப்பிமெய் யின்பந்தந் தீரே வெறிக்குஞ் சமயக் குழியில்விழ விரைந்தேன் றன்னை விழாத வகைமறிக்கும் ஒருபேர் அறிவளித்த வள்ளற் கொடியே மனக் கொடியைச் செறிக்கும் பெரியர் உளத்தோங்குந் தெய்வக் கொடியே சிவஞானங் குறிக்குங் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே சதுமறை ஆகம சாத்திர மெல்லாஞ் சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்திற் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என்றோழி நீதான் அதுவிது வென்னாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரமன் றெனவே ஆதியிலென் னுளத்திருந்தே அறிவித்த படியே அன்பாலின் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் ஓதியுணர்ந் தோர்புகழுஞ் சமரசசன் மார்க்கம் உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாஞ் சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்தசிவ நிறைவையுள்ளே பெற்றுமகிழ்ந் தேனே சமரச சன்மார்க்க நிலையெய்தி, கடவுள் காட்சி பெற்ற அடியாரை விடுத்து, அழுக்காறு, அவா, வெகுளி முதலியன விலகியொழிதலான், அவற்றின் பயனாய துன்பமென்னும் நச்சு எரிந்து கொண்டிருந்தவிடத்தில் இன்பத்தேன்பிலிற்றும். நாளடைவில் அத் தேன் பெருக்கெடுத் தோடும். அப் பெருக்கில் அன்பர் தோய்வர்; ஆடுவர்; பாடுவர். ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாக நின்னைத் - தேடுவது நின்னடியார் செய்கை பராபரமே என்றார் தாயுமான சுவாமிகளும். அவ்வானந்த நிலையை - அதன் மேலீட்டை - அதன் களிப்பை - யான் எம்மொழியால் விளக்க வல்லேன்? சுவாமிகள் மொழிகொண்டு அவ் வானந்தத் தேனை ஈண்டுச் சிறிது பொழிகிறேன். அதனில் மூழ்குங்கள்; அதனைப் பருகிப் பருகிக் களிப்புறுங்கள்; ஆடுங்கள்; பாடுங்கள். ஆனந்தம்! ஆனந்தம்!! கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாங் கண்டேன் அடர்கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும் அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாந் தழைத்தேன் உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன் இடர்தவிர்க்குஞ் சித்தியெலாம் என்வசமோங் கினவே இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவனருட் செயலே தன்னைவிடத் தலைமையொரு தகவினுமிங் கியலாத் தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே பொன்னடியென் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான் என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன் இருவருமொன் றாகியிங்கே இருக்கின்றோம் இது தான் நின்னருளே அறிந்ததெனிற் செயுஞ்செய்கை அனைத்தும் நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண் டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்யின்ப மெய்தியதோர் தண்ணிய லாரமு துண்டனன் கண்டனன் சாமியைநான் நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேனிந்த நானிலத்தே தூக்கமுந் துயரும் அச்சமும் இடருந் தொலைந்தன தொலைந்தன வெனைவிட் டேக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் ஆக்கமும் அருளும் அறிவுமெய் யன்பும் அழிவுறா வுடம்புமெய் இன்ப ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மையிவ் வாசகம் உணர்மின் காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் ஐயர் திருவடிக் கானந்த மாகப் பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே கள்ளத்தை யற்ற உள்ளத்தைப் பெற்றேன் கன்றிக் கனிந்தே மன்றிற் புகுந்தேன் தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை யுண்டேன் செய்வகை கற்றேன் உய்வகை யுற்றேன் அள்ளக் குறையா வள்ளற் பொருளை அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே பன்னிரண் டாண்டு தொடங்கி யிற்றைப் பகலின் வரையுமே படியிற் பட்ட பாட்டை நினைக்கின் மலையுங் கரையுமே துணியா தந்தப் பாடு முழுதுஞ் சுகம தாயிற்றே துறையே நின்மெய் யருளிங் கெனக்குச் சொந்த மாயிற்றே ஈரா றாண்டு தொடங்கி யிற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்புங் கரையுமே ஏரா யந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற்றே இறைவா நின்மெய் யருளிங் கெனக்குச் சொந்த மாயிற்றே காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தினேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கினேன் சிற்றம் பலத்து நடங்கண்டு வந்து மிகவு மோங்கினேன் எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்குதே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதஞ் சனிக்குதே கண்ணுங் கருத்து நின்பா லன்றிப் பிறர்பாற் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ஈன மறுத்துமெய்ஞ் ஞான விளக்கென் இதயத்தி லேற்றினர் வாரீர் உதயச் சுடரினீர் வாரீர் சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் சிவவெளிக் கேறுஞ் சிகரத்தி லேற்றிச் சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநடச் சோதி பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேனடி - அக்கச்சி ஐயரைக் கண்டேனடி நாத முடியானென் றூதூது சங்கே ஞான சபையானென் றூதூது சங்கே பாத மளித்தானென் றூதூது சங்கே பதித்தது பூசையென் றூதூது சங்கே ஆனந்த நாதனென் றூதூது சங்கே அருளுடை அப்பனென் றூதூது சங்கே தானந்த மில்லானென் றூதூது சங்கே தத்துவச் சோதியென் றூதூது சங்கே பொய்விட் டகன்றேனென் றூதூது சங்கே புண்ணிய னானேனென் றூதூது சங்கே மெய்தொட்டு நின்றேனென் றூதூது சங்கே மேல்வெளி கண்டேனென் றூதூது சங்கே கொடிகட்டிக் கொண்டோமென்று சின்னம்பிடி கூத்தாடு கின்றோமென்று சின்னம்பிடி அடிமுடியைக் கண்டோமென்று சின்னம்பிடி அருளமுத முண்டோமென்று சின்னம்பிடி பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப் புறத்து மகத்தும் புணர்ந்த மருந்து கையிற் கிடைத்த மருந்து - சிவ காம கொடியைக் கலந்த மருந்து ஆரணத் தோங்கு மருந்து - அருள் ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து காரணங் காட்டு மருந்து - எல்லாங் கண்டமருந் தென்னுட் கொண்ட மருந்து காலையில் நான்கண்ட சோதி - எல்லாக் காட்சியும் நான்காணக் காட்டிய சோதி ஞாலமும் வானுமாஞ் சோதி - என்னுள் நானாகித் தானாகி நண்ணிய சோதி சுத்த சிவமயச் சோதி - என்னைச் சோதி மணிமுடி சூட்டிய சோதி சத்திய மாம்பெருஞ் சோதி - நானே தானாகி யாளத் தயவுசெய் சோதி சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இச்சமய வாழ்விலெனக் கென்னையினி யேச்சு என்பிறப்புத் துன்பமெலா மின்றோடே போச்சு சிற்பொதுவும் பொற்பொதுவும் நானறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு இப்பெரிய இவ்வுலகில் என்னையினி யேச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு 3. சாகாநிலை ஆனந்தத் தேனை - அமிழ்தை - உண்ணும் அருளாளன் சாகாநிலை அடைவன். மக்கள் வாழ்வின் இறுதிப்பேறு சாகா நிலையே யாகும். அப்பேறெய்துமட்டும் மக்கள் பிறந்தும் இறந்தும் உழன்றுகொண்டே யிருப்பார்கள். என்றாதல் ஒருபோது, மக்கட்பிறவி தாங்கிய ஒவ்வொருவரும் அந்நிலையடைந்தே தீரல்வேண்டும். சாகாநிலையெனும் முடிந்த நிலையை உயிர்கள் அடைதற் பொருட்டே, எல்லாம் வல்ல இறைவன் அவைகட்குப் புல், பூடு, மரம், செடி, கொடி, புழு, மீன், புள், விலங்கு முதலிய உடல்களைத் தந்து தந்து, படிப்படியாக அறிவை விளங்கச் செய்து, இறுதியில் பகுத்தறிவு விளங்குதற்குரிய மக்கள் உடலைத் தருகிறான். அவ்வுடலில் ஆறாவது அறிவை விளக்க வல்ல கருவி கரணங்கள் அமைந்திருக்கின்றன. ஆண்டவன் கருணையால் அளித்த அப்பிற வியைச் சாகாநிலைப் பேற்றிற்குப் பயன்படுத்தலே அறி வுடைமை. அப் பிறவியை வேறு வழியில் பாழ்படுத்துவது அறியாமை. மக்கட் பிறவியின் விழுப்பமுணர்ந்த ஆன்றோர் பலரும் அரும்பாடுபட்டு அப்பிறவியைப் பயன்படுத்திக் கொண்டனர். சாகாநிலையெனும் பெறற்கரிய பேற்றிற்கே ஆன்றோர் பிறவியைப் பயன்படுத்தியது வெள்ளிடைமலை. அவர் சாகா நிலைக்குரிய வழி கண்டு, அவ்வழியை உலகிற்கும் அறிவுறுத் தினர். அவ்வழி எல்லார்க்குந் திறக்கப்பட்டிருக்கிறது. சாகாநிலை என்பது என்னை? மீண்டும் பிறவாத ஒரு நிலையென்க. இறவாதார் எவரோ அவரே மீண்டும் பிறவாதா ராவர். ஆகவே, இறவா நிலையடைய உழைப்பதே, மீண்டும் பிறவாமைக்குக் கால்கொள்வ தென்பது உன்னத்தக்கது. ஈண்டோர் ஐயம் இயல்பாக எழும். பிறந்தவர் அனைவரும் இறந்தே போதலைக் காண்கிறோம். எல்லாரும் இறந்து படுதலால், இறவாநிலை என்பதற்குப் பொருள் என்னையோ தெரியவில்லை என்று சிலர் ஐயுறலாம். இப் பருவுடல் மறைவைமட்டுங் கொண்டு இறவாநிலைமீது ஐயங் கொள்ளுத லாகாது. ஏறக்குறைய எல்லார்க்கும் இப்பருவுடல் வீழ்ந்து படுவது இயல்பு. மிகச்சிலர் இப்பருவுடலைச் செழுஞ்சோதிப் பிழம்பாக்கிக் கொள்வர். அவர்க்கும் பழைய உடல் தோற்றம் மறைவுறுதலுண்டு. நல்லான் ஒருவன் உயிரும் பிரிகிறது; தீயான் ஒருவன் உயிரும் பிரிகிறது இருவர் பருஉடலங்களும் மறைகின்றன. இவ்விருவரும் ஒரு நிலையினரா என்பது கருதற்பாலது. நல்லானது நுண்ணுடல் மீண்டும் இவ்வுலகு நோக்காது; அதாவது பிறவாது. தீயானது நுண்ணுடல் மீண்டும் இவ்வுலகு நோக்கும்; அதாவது பிறக்கும். இவ்விருவருள் முன்னவன் அடைந்தநிலை இறவாமை: அதாவது மீண்டும் பிறவாமை. இவ்வேற்றுமையை உணராது, வெறும் பருவுடல் மறைவைமட்டுங் கொண்டு இறவாமைக்குப் பொருள் கூறல் பொருத்தமாகாது. ஆதலால், சாகாநிலை என்பதற்கு மீண்டும் பிறவாநிலை யெனக் கொள்க. இக்காய நீக்கி இனியொரு காயத்திற் - புக்குப் பிறவாமற் போம்வழி தேடுமின் எனவரூஉந் திருமூலர் திருவாக்கின் பொருளை ஆராய்ந்து உண்மை தெளிக. பிறப்பென்பது இரண்டு வகை. ஒன்று வினைக்கீடாகப் பிறப்பது. மற்றொன்று உலகநலன் கருதி உடல் தாங்குவது. திருஞானசம்பந்தர் போன்றவர் உலகநலன் கருதி உடல் தாங்கினவர். வீனைக்கீடாகப் பிறப்பது துன்பந்தருவது. வினைக் கீடாகப் பிறந்திறந் துழல்வதை அறிஞர் விரும்புவதில்லை. பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே என்றும், மரணம் பிறப்பென்னும் இரண்டின் மயக்கறுத்த - கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பி, என்றும் மாணிக்கவாசகனார் அருளியிருத்தலைக் காண்க. பிறப்பிறப்புத் துன்பத்துக்கும், அவையில்லா இன்பத்துக்குங் காரணமாயிருப்பன அவரவர் எண்ணும் எண்ணங்களே யாகும். தீய எண்ணங்களும், தன்னல எண்ணங்களும் மீண்டும் பிறத்தற்கு வித்தாகின்றன. நல்லெண்ணங்களும், மற்றவர் நலன் கருதலும் பிறவி வேரை அறுத்தெறிவன. ஆகவே, மக்கள் நல்லெண்ணங்களையே நினைக்கக் கடமைப்படுவார்களாக. இதுபற்றியே திருவள்ளுவனாரும், நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லவற்றை - அன்றே மறப்பது நன்று என்று கூறிப் போந்தார். நன்றல்லவற்றை அன்றே மறக்கும் பயிற்சி மக்கட்குப் பெரும்பேறளிக்கும். இப்பயிற்சியில் நடக்கப் பயிலாது மூக்கைப் பிடித்துக் காட்டுக்கோடுவது பிறப்பிறப்பை வெல்லுந் துறை நண்ணுவதாகாது. தீமையை நினைக்க நினைக்கத் தீய எண்ணங்கள் பெருகிக் கொண்டே போகும்; நன்மையை நினைக்க நினைக்க நல் லெண்ணங்கள் பெருகிக்கொண்டே போகும். தீமையை விலக்கி நன்மையை நினைப்பதற்கு வழி யாது? நன்மைக்கு அறிகுறியாக ஏதாயினும் ஒன்றை இடையறாது நினைத்தல் வேண்டும். அதுவே தியான யோகம் எனவும்படும். தியான யோகத்தைப் பற்றி யோகாந்தத்தில் சிலவுரைபகர்ந்துள்ளேன். நன்மைக்கு அறிகுறியாக எதைக்கொள்வது? அழுக்காறு அவா வெகுளி முதலியன இல்லாத ஒன்றையே நன்மைக்கு அறிகுறியாகக் கோடல் வேண்டும். அவ்வொன்றைக் கடவுள் என்று உலகம் போற்றுகிறது. நன்றுடையானைத் தீயதில்லானை என்றார் ஞானசம்பந்தப்பெருமான். அந் நன்றுடைக் கடவுளை உன்ன உன்ன அப்பொருளாதல் இயல்பு. உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணமாத லன்றோ? பிறவிக்கு வித்தாயிருப்பன அழுக்காறு முதலிய தீமைகள். அவையில்லா ஒன்றற்குப் பிறப்புமில்லை; இறப்புமில்லை பிறப் பிறப்பில்லா ஒன்றுடன் ஒன்ற ஒன்றப் பிறப்பிறப்புத் துன்பம் தானே ஒழியும். அவ்வொன்றலே தியான யோகமென்பது. சாகா நிலையைப்பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைக ளுண்டு அக் கடையை ஈண்டுப் பரப்ப விரும்புகின் றேனில்லை. சுருங்கிய முறையில் சில கூற விரும்புகிறேன். சாகாநிலை யென்னும் ஒரு நிலையுண்டு என்பது எனது ஆராய்ச்சியில் விளங்கிய உண்மைகளுள் ஒன்று. அது குறித்து எனக்கு எவ்வித ஐயமாதல், திரிபாதல், மயக்கமாதல் இல்லை. அந்நிலையில் எனக்கு உறுதியுண்டு. நமது நாட்டு ஆன்றோர் ஒருமுகமாக அறிவுறுத்திய அப் பெருநிலை இப்பொழுது மேல்நாட் டறிஞர் பலராலும் உறுதிசெய்யப்பட்டு வருகிறது. ஸர் ஆலிவர் லாட்ஜ் முதலிய பேரறிஞர் ஆராய்ந்து கண்ட உண்மைகள் பல எனது ஐயந் திரிபு மயக்கங்களைப் போக்கின. சாகாநிலையைப்பற்றி இதுபோழ்து எனக்கு எவ்வித ஐயப்பாடு மில்லை. அந்நிலைபெற முயலவேண்டுவது எனது கடமை. இப்பிறவியிலேயே அந்நிலை எய்துதல் வேண்டு மென்பது எனது வேணவா. ஆண்டவன் அருளையும், அவன் அருள்பெற்ற அடியார் துணையையும் நாடி நிற்கிறேன். சாகாநிலை யென்னும் பெருநிலை ஒன்று உண்டு. அது குறித்து எவரும் ஐயுறவேண்டுவதில்லை. ஐயுறாது உறுதி கொண்டு அந்நிலையெய்த உழைக்க விரைந்து எழுங்கள்! எழுங்கள்!! சகோதரிகளே! சகோதரர்களே! கண்ணுக்குப் புலனாகும் இவ்வுடல் மறைந்ததும் நமதுவாழ்வும் முடிந்துவிட்டதெனக் கருதாதேயுங்கள். நமக்கு மேலுந் தொடர்ந்தவாழ்வு உண்டு. நமக்கு முத்திற உடலங்களிருக்கின்றன. அவை பருமை நுண்மை முதல் உடலங்கள் (தூலசூக்கும காரண சரீரங்கள்). கண்ணுக்குப் புலனாகும் பருவுடலைப்பற்றி எவரும் ஐயங்கொள்வதில்லை. நுண்ணுடலைப்பற்றிச் சிலர் ஐயுறலாம். நுண்ணுடல் உண்மையைப் பற்றிப் பேராராய்ச்சி நிகழ்த்த வேண்டுவதில்லை. நம்மிடத்திருந்து எண்ணங்கள் பிறக் கின்றனவா? இல்லையா? அவ்வெண்ணங்கள் யாண்டிருந்து பிறக்கின்றன? உன்னிப் பாருங்கள். எண்ணங்கள் பிறக்குமிடம் மனம் என்று சொல்லலும் வேண்டுமோ? அம் மனத்தினின்றும் பிறக்கும் எண்ணங்களின் பரிணாமமே நம்மைச் சூழ்ந்துள்ள பொருள்கள் யாவும். ஒருவன் ஓரழகிய கட்டிடத்தைக் கட்டுதற்கு முன்னர் அதை முதலாவது எண்ணத் தில் அவன் உருப்படுத்திக்கொள்கிறான். அவ்வெண்ண வடிவமே பின்னால் கண்ணுக்குப் புலனாகும் ஒரு நிலைய மாகிறது. நுண்மை எண்ணங்களே பின்னைப் பருமை வடிவங்களா கின்றன. இக் காரணங்கொண்டே எண்ணத்துக்கும் வடிவம் நிறம் முதலியன உண்டு என்று மேல்நாட்டறிஞர் ஆராய்ச்சியிற் கண்டனர். பருவுடல் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையானாலும் அதற்குமூலமாகவுள்ள நுண்ணுடலுக்கு அழிவுநேர்வதில்லை. உயிர் அந் நுண்ணுடலுடன் மேற்செல்கிறது. ஆகவே, பருவுடல் மறைந்த பின்னரும் வாழ்வு உண்டு என்பது உணரற்பாற்று. அந்நுண்ணுடல் பெரிதும் எண்ணங்களின் இயல்பைப் பொறுத்தமைவது. தீய எண்ணங்களை எண்ணி எண்ணி ஒருவன் சாகிறான்; மற்றொருவன் நல்லெண்ணங்களை எண்ணி எண்ணி மறைகிறான். இவ்விருவரும் ஒரு நிலையையா எய்துவர்? தீய எண்ணங்களை எண்ணியஒருவன் மீண்டும்பருவுடல் தாங்குவன் என்றும், நல்லெண்ணங்களை எண்ணிய ஒருவன் மீண்டும் அவ்வுடல் தாங்கான் என்றும் மேலே சொல்லியதை உங்கட்குநினைவூட்டுகிறேன். தீய எண்ணங்கள் பிரகிருதியின் பாற்பட்டன. நல்ல எண்ணங்கள் அப்பாற்பட்டனவல்ல. ஒரு கல்லை எறிந்தால் மீண்டும் அது மண்ணை நாடி விழுவதைக் காண்கிறோம் காரணம் என்னை? மண் மண்ணை நாடல் இயல்பு. எழுநாவிட்டெரியும் நெருப்புப் பந்தைத் தலை கீழாகச் சாய்த்துப் பிடித்தாலும், எழுநா வானோக்கியே நிற்கும். காரணம், வானத்துள்ள கோள்கள் நெருப்புமயமாயிருப்ப தேயாகும். இனம் இனத்தை ஈர்க்கும். மண்ணனைய தீய எண்ணங்கள் மகனை மண்ணில் பருவுடல் தாங்கச் செய்கின்றன; மற்ற நல்லெண்ணங்கள் மகனை மேனோக்கச் செய்கின்றன. நுண்ணுடலுக்கு மேற்பட்ட காரண உடலைப்பற்றி ஆராயவேண்டுவதில்லை. அதன் நிலை நுண் ணுடலின் நிலையைப் பொறுத்து நிற்கும். நுண்ணுடலை நல் லெண்ணங்களால் பண்படுத்திக்கொள்ள வேண்டுவது நமது கடமை. நுண்ணுடலைக் கடந்த ஒரு நிலை (அதாவது காரண உடல்நிலை) பேச்சுக் கெட்டாத ஒன்று. அதைப்பற்றிய பேச்சே வேண்டா. அது பேச்சற்ற அநுபூதி நிலை. பருவுடலுடன் வாழும் நாம் என் செய்தல் வேண்டும்? நல் லெண்ணங்களால் நுண்ணுடலைப் பண்படுத்தி மீண்டும் பிற வாமை என்னும் சாகா நிலையெய்த வேட்கைகொண்டு உழைத்தல் வேண்டும். அதற்கு நன்றுடைக் கடவுளை நினைந்து நினைந்துருகப் பயிலல்வேண்டும். இராமலிங்க சுவாமிகள் இறுதிப் பேறாகிய சாகா நிலையைக் குறிக்கொண்டே வாழ்வு நடாத்தினார். அவர் தூய நல்லெண்ணங்களால் நுண்ணுடலைச் செம்மை செய்தனர். எவ்வுயிரையுந் தம்முயிர்போல் கருதும் அருணெறியில் சுவாமிகள் உறைந்து நின்றதை முறை என்னுந் தலைப்பில் எடுத்துக்காட்டியிருக்கிறேன். அதை நினைவூட்டிக் கொள்ளுங்கள். எவ்வுயிரையுந் தம் முயிர்போல்கருதும் ஒருவர் நெஞ்சில் தீய நினைவு எங்ஙனம் இடம்பெறும்? அந் நெஞ்ச மன்றோ ஆண்டவன் கோயில்? ஆண்டவன் கோயில் கொள்ளத் தக்க நெஞ்சினைச் சுவாமிகள், ஆண்டவனை நினைந்து நினைந்து, கசிந்து கசிந்து, உருகி உருகிப் பெற்றனர். அப் பேற்றால் சுவாமிகள் ஆனந்தத்தில் தோய்ந்து, ஆனந்த மயமாய், ஆனந்த வடிவினராயினர். ஆனந்த வடிவம் சாகுநிலையைக் கூட்டுங் கொல்? ஒருபோதுங் கூட்டாது. சுவாமிகள் ஆனந்தத்தில் திளைத்துச் சாகாநிலை பெற்றனர். அப் பெரு நிலையைச் சுவாமிகள் விழைந்ததும், அதற்கெனப் பாடுபட்டதும், இறுதி யில் அதைப்பெற்றதும் சுவாமிகள் அருட்பாவில் பல இடங் களில் மிளிர்கின்றன. சுவாமிகள் உரைநடையிலுள்ள சாகாநிலையைப் பற்றிய குறிப்புக்கள் சில வருமாறு:- இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்து மழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது. எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரமொன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி யறிந்தேன். பின்னர்த் திருவருட் சுதந்திரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து எனது யானென்னும் தேக சுதந்திரம், போக சுதந்திரம் ஜீவ சுதந்திரம் என்னு மூவகைச் சுதந்திரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். ஆகலில் எனது சுதந்திரமாகக்கொண்டிருந்த தேக சுதந்திரத்தையும், போக சுதந்திரத்தையும், ஜீவ சுதந்திரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்திரமாகக் கொடுத்துவிட்டேன். கொடுத்த தருணத்தே இத்தேகமும், ஜீவனும் போகப் பொருள்களும் சர்வ சுதந்திர ராகிய கடவுள் பெருங்கருணையாற் கொடுக்கப்பெற்றனவன்றி, நமது சுதந்திரத்தாற் பெற்றனவல்லவென்னும் உண்மையை அருளாலறிவிக்கவும் அறிந்துகொண்டேன். இனி இத்தேகத்தி னிடத்தும், ஜீவனிடத்தும், போகப் பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்திரத் தோற்றமும் தோற்றமாட்டாது தேவரீர் திருவருட் சுதந்திரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையுந் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்வேண்டும். இத்தேகத் தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர் களாக்கி, வாழ்வித்தல் வேண்டும். எல்லா உயிர்களையும் பொதுமையினோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல்வேண்டுமென்னுங் கருணை நன் முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து, எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னுஞ் சாகாக் கலாநுபவ தேகங்களும், தற்சுதந்திரத்தால் தத்துவங்களெல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெறு வல்லப மும், கடவுளொருவரே என்றறிகின்ற உண்மை ஞானம், கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும், பெற்று வாழ் கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பெருஞ் சோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருங் காட்சி களைக் காட்டுவித்தும், நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மைப் பெரு நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அநுபவித்தற்கரிய உண்மைப் பேரநுபவங் களை அநுபவிப்பித்தும், எனது அகத்தினும் புறத்தினும் இடை விடாது காத்தருளி, எனது உள்ளகத்திருந்து உயிரிற் கலந்து பெருந் தயவால் திருநடஞ் செய்தருளுகின்றீர். இங்ஙனஞ் செய் தருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன் அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை, இவ் வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளை யடைந்து, அழிவில்லாத சத்தியசுக பூரணப் பெரு வாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும், பலவேறு மதங்களிலும், பலவேறு மார்க்கங் களிலும், பலவேறு லக்ஷியங்களைக்கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துக்களினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள். இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கையுடையராய் எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பை யும் அடைந்து வாழும் பொருட்டு மேற் குறித்த உண்மைக் கடவுள், தாமே திருவுளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தாலியற்றுவித்து, இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் என்னுந் திருக்குறிப்பை வெளிப் படுத்தி, அருட்பெருஞ் சோதியராய் வீற்றிருக்கின்றார். சுவாமிகளின் பா நடையிலுள்ள சில குறிப்புக்களை நோக்கு வோம்: என்னையும் பணிகொண் டிறவா வரமளித் தன்னையி லுவந்த அருட்பெருஞ் சோதி இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி அருட்பெருஞ் சோதி சாவா நிலையிது தந்தனம் உனக்கே ஆவா எனவருள் அருட்பெருஞ் சோதி உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் சோதி மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரு முறைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச் சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும் அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும் ஓருரு வாக்கியான் உன்னிய படியெலாஞ் சீருறச் செய்துயிர்த் திறம்பெற அழியா அருளமு தளித்தனை அருணிலை ஏற்றினை அருளறி வளித்தனை அருட்பெருஞ் சோதி நரைமரண மூப்பறியா நல்லவுடம் பினரே நற்குலத்தார் எனவறியீர் நானிலத்தீர் நீவிர் வரையிலுயர் குலமென்றுந் தாழ்ந்தகுல மென்றும் வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் புரையுறுநுங் குலங்களெலாம் புழுக்குலமென் றறிந்தே புத்தமுத முண்டோங்கும் புனிதகுலம் பெறவே உரைபெறுமென் றனித்தந்தை வருகின்ற தருணம் உற்றதிவண் உற்றிடுவீர் உண்மையுரைத் தேனே சாகாத கல்வித் தரமறிதல் வேண்டுமென்றும் வேகாத காலுணர்தல் வேண்டுமுடன் - சாகாத் தலையறிதல் வேண்டுந் தனியருளால் உண்மை நிலையடைதல் வேண்டும் நிலத்து நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனா லுடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதுநாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரநீர் ஏனடைய மாட்டீர் மறந்திருந்தீர் பிணிமூப்பிற் சம்மதமோ நுமக்கு மறந்துமிதை நினைக்கினல்லோர் மனநடுங்குங் கண்டீர் சிறந்திடுசன் மார்க்கமொன்றே பிணிமூப்பு மரணம் சேராமற் றவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத யாக்கை பெற்றேன் கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவு கின்றேன் பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை அன்பினொடும் பாடிப்பாடி நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன் எண்ணமெலா நிரம்பி னேனே காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறவியற்றுங் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தையருட் பெருஞ்சோதி இறைவனைச்சார் வீரே உடைய நாயகன் பிள்ளைநா னாகிலெவ் வுலகமும் ஒருங்கின்பம் அடைய நானருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெலாம் மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத் தடைய தற்றநற் றருணமித் தருணமாத் தழைக்கவித் தனியேற்கே சாதல் பிறத்த லென்னு மவத்தை தவிர்த்துக் காலையே தனித்துன் னருளி னமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓத லுணர்த லுவத்த லெனக்கு நின்பொற் பாதமே உலக விடயக் காட்டிற் செல்லா தெனது போதமே சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே தன்னோர் முடியொன் றெனது முடியிற் றரித்த சோதியே ஏகாக் கரப்பொற் பீடத் தென்னை ஏற்று சோதியே எல்லாம் வல்ல சித்தி யாட்சி ஈந்த சோதியே சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இச்சமய வாழ்விலெனக் கென்னையினி யேச்சு என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு ஐயரருட் சோதியர சாட்சியென தாச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு எய்யுலக வாழ்விலெனக் கென்னையினி யேச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. 4. இளமை முயற்சி இராமலிங்க சுவாமிகள் பெற்ற இப்பேற்றை எல்லாரும் பெறலாம். அதற்கு எத்தகைக் கட்டுமில்லை; காவலுமில்லை. அக்கதவு எல்லார்க்குந் திறக்கப்பட்டிருக்கிறது. ஆன்றோர் பலரும் தாம் பெற்ற பேற்றை மற்றவரும் பெறுதல்வேண்டும் என்னும் வேட்கை மேலீட் டானே, தம் அனுபவங்களை வெளியிட்டுச் சென்றனர். மனிதர்கா ளிங்கே வம்மொன்று சொல்லுகேன் கனிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழ லீச னெனுங்கனி இனிது சாலவு மேசற் றவர்கட்கே - அப்பர் நான் பெற்ற வின்பம் பெருகவிவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்குவன் ஊன்பற்றி நின்ற வுணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே - திருமூலர் காக முறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக வெளியாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரும் செகத்தீரே - தாயுமானார் இராமலிங்க சுவாமிகளும், வாது பேசிய மனிதர் காளொரு வார்த்தை கேண்மின்கள் வந்துநும் போது போவதன் முன்ன ரேயருட் பொதுவி லேநடம் போற்றுவீர் தீது பேசினீ ரென்றி டாதுமைத் திருவு ளங்கொளுங் காண்மினோ சூது பேசிலே னன்மை சொல்கின்றேன் சுற்ற மென்பது பற்றியே என்று பாடியிருத்தலை நோக்குக. சாகா நிலையைப்பற்றிப் பேசுவது எளிது; எழுதுவது எளிது. அப் பேச்சாலும் எழுத்தாலும் அப் பெருநிலை கூடுங் கொல்? சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் என்றார் வள்ளுவனார். இறவா நிலைக்குரிய வழி யாது என்று கண்டு, அவ்வழி நின் றொழுக உறுதிகொள்வதே அறிவுடைமை. இராமலிங்க அடிகள் எம்முறைகளைக் கடைப்பிடித் தொழுகினரென்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. அவ்விடத்தில் அடிகள் இளமையில் கொண்ட முறைகளை இறுதியில் குறிப்பிட்டுப் பேசுவதாக யான் சொற்றது உங்கள் நினைவிலிருக்கும். அம்முறைகளிற் சிறந்த சிலவற்றை ஈண்டுச் சிறிது விரித்துக் கூற விரும்புகிறேன். அம்முறைகள்மீது கருத்துச் செலுத்தி, அவற்றை நடையில் கொணர உறுதிகொள்வோமாக. அடிகளின் இளமை முயற்சியை ஈண்டுச் சிறப்பாகக் குறித்துப் பேசுவது எற்றுக்கு என்று சிலர் கருதலாம். அடிகள் அடைந்த நிலையை நினைந்து, வெறும் பேச்சுப் பேசுவ தினும், அடிகள் அவ்வடைவிற்குக் கொண்ட முறைகளை உணர்ந்து அவைகளைச் செயலிற் கொணரப் புகுவதே சிறப்பாகும். ஆகவே, அடிகளின் இளமை முயற்சியை ஈண்டுச் சிறப்பாக எடுத்துக்கொண்டேன் நமக்கு வேண்டற்பாலது அதுவே. அதுவே நம்மைக் கரையேற்றும். ஒருவனது பின்னை வாழ்வு பெரிதும் அவனது இளமை வாழ்வைப் பொறுத்து நிற்கிறது. ஒருவனது பின்னை வாழ்வைச் செம்மை செய்வது அவனது இளமை வாழ்வேயாகும். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும், விளையும் பயிர் முளையிலே தெரியும், இளமையிற் கல் எனவரூஉம் பழமொழிகளைப் பார்க்க. அடிகள் இளமையில் என் செய்தார்? ஆண்டவன் அருள்பெற்றுப் பிறப்பிறப்புத் துன்பத்தை ஒழித்தல் வேண்டும் என்னும் வேட்கை அடிகள் உள்ளத்தில் முருகி மூண்டெழுந்தது. அவ் வேட்கையை நிறைவேற்ற அடிகள் நிகழ்த்தியதென்னை? அன்பர்களே! அச்செயலைக் கருதுங்கள்; அச்செயலை நிகழ்த்த உறுதி கொள்ளுங்கள். அச்செயல் நமக்குச் சாகாநிலை அளிக்கும். ஐயம் வேண்டாம்; மயக்கம் வேண்டாம். அடிகள் வரலாற்றையும், அவர் அருளிய மொழிகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர் ஒரு குருவை, ஒரு நூலை, ஒரு வழிபடு கடவுளைக் கொண்டார் என்பது நன்கு புலனாகிறது. அடிகள் கொண்ட குரு யார்? நூல் யாது? வழிபடுகடவுள் எவர்? குரு திருஞானசம்பந்தர்; நூல் திருவாசகம்; வழிபடு கடவுள் முருகப்பெருமான். இம் மூன்றும் அடிகள் வாழ்வைத் தூய்மைப் படுத்தி, அவர்க்குப் பெறுதற்கரிய பேற்றையும் அளித்தன. 1. குரு இராமலிங்க சுவாமிகள் திருஞானசம்பந்தரை ஞான குருவாகக் கொண்டவர். நமது நாட்டிற்றோன்றிய இராமலிங்க சுவாமிகள் திருஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டது பெரிதுங் கருதற்பாலது. இராமலிங்க சுவாமிகள் மட்டும் திருஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டாரில்லை. திருஞானமென்னுங் கடவுள்ஞானத்தில் சம்பந்தங் கொள்ளவிழைவோர் அனைவருந் திருஞானசம்பந்தப் பெருமானாரைக் குருவாகக் கொண்டே தீர்தல் வேண்டும். இந் நுட்பம் விளங்கப் பெறுவோர் இறவா நிலையெனும் இறை இன்பத்தை உணர்வளவிலாதல் குறிக் கொண்டு நிற்பர். அவ்வுணர்வொடு பொருந்திய செயல் அரும்பின், மேலாம்நிலை யெய்தல் ஒருதலை. நம்பியாண்டார் நம்பி, கண்ணுடைவள்ளலார், சிவஞான வள்ளலார் முதலிய பெரியோர் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டதை ஈண்டு விரித்துரைக்க வேண்டுவதில்லை. அவர்கள் அருளிய நூல்களைப் பார்க்க. வேதாந்த சித்தாந்த சமரசச் செல்வராகிய தாயுமான சுவாமிகள், வெம்பந்தந் தீர்த்து உலகாள் வேந்தன் திருஞான சம்பந் தனையருளாற் சாருநா ளெந்நாளோ என்று ஞானசம்பந்தப் பெருமானைப் போற்றியிருத்தலைக் காண்க. திருஞானசம்பந்தர் காலத்திருந்த நாயன்மார் அவரைப் போற்றியதையும், அவர் காலத்துக்குப் பின்னே தோன்றிய ஆதி சங்கரர் முதலிய அறிஞர் பலரும் அவரை (ஞானசம்பந்தரை)ச் சிறப்பித்ததையும் ஈண்டு ஓர்க. ஞானசம்பந்தர் மாண்பு ஞான சம்பந்தமுடைய நல்லோர்க்கே தெரியும். மற்ற நாட்டு அன்பர்க்கு ஞானவேட்கை எழும்போது, அவர் எவரைக் குருவாகக் கொண்டு வேட்கை தணியப் பெறுகிறார் என்னும் ஐயம் பலர்க்குப் பிறக்கலாம். அவர்க்கும் ஞானசம்பந்தரே குருவாக நின்று கடவுளைக் காட்டுகிறார். ஆனால் பெயர் வேறு. அப்பெயரை நீக்கிப் பொருளைப் பார்த்தால் திருஞானசம்பந்தரைக் காணலாம். தமிழ் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானாராகத் தோன்றிய ஒருவரே, மற்ற நாடுகளில் வெவ்வேறு பெயருடையராய், ஆங்காங்கே ஞான வேட்கையினர்க்கு அருள் சுரந்து வருகிறார் என்று சுருங்கச் சொல்கிறேன். இஃதென்ன புதுமை என்று பலர் வியப்புறுவர். பருவுடல் அழிவுடன் வாழ்வு முடிகிறது என்று ஆராய்ச்சியை நிறுத்தி, அதற்கு மேல் ஆராயாது வாழ்வோர்க்கு ஞான சம்பந்தர் நிலை புதுமை யாகவே தோன்றும்; மற்றவர்க்கு அது புதுமையாகத் தோன்றுவதில்லை. மனிதன் புலனறிவு கொண்டு நிகழ்த்தும் ஆராய்ச்சியால் முடிந்த உண்மை இஃதென நிறுவிக் காட்டல் இயலாது. அவனுக்கு இன்று ஒன்று முடிந்த உண்மையாகத் தோன்றும்; நாளை அதுவே திரிபாகத் தோன்றும். இம்மனிதன் ஆராய்ச்சியிற் புலனாகாத நுண்மைகள் எத்துணையோ இருக்கின்றன. மாறும் இயல்புடைய பொய்யறிவிற்கு விளங்காத நுட்பங்கள் பலப் பல உண்டு. அவை மனிதன் பருவுடல் உணர்விற்குச் சில வேளை களில் வெறும் பாழெனவுந் தோன்றும். அவ்வுணர்வளவில் நின்று ஒருவன் தனக்கு விளங்காத பொருள்களைப் பொய் யெனும் முடிவிற்கு வருதல் அறிவுடைமை யாகாது. பருவுடல் அறிவு ஆராய்ச்சிக்கு எட்டாத பொருள்களை உணர்தற்கு மன உணர்வைப் பெருக்க முயலல் வேண்டும். அவ்வுணர்வைப் பெருக்கப் பெருக்க மனக்கண் திறக்கும். பருவுடலுக்குக் கண்களிருப்பதுபோல நுண்ணுடலாகிய அகத்துக்குங் கண்களிருக்கின்றன. அக் கண்கள் திறக்கப் பெறுவோர் எல்லாவற்றையும் பார்ப்பர். அவரே பார்ப்பனர் என்னும் பெயரால் பண்டை நாளில் வழங்கப்பட்டு வந்தனர். மக்களாகப் பிறந்த அனைவர்க்கும் பார்ப்பனராகும் உரிமை யுண்டு. பின்னாளில் பார்ப்பனர் என்னுஞ் சொல் பிறப்பை ஒட்டி ஓர் இனத்தார்க்கு வழங்கப்பட்டது. பண்டை நூல்களில் வரூஉம் பார்ப்பனர் என்னுஞ் சொல் ஓர் இனத்தை குறிப்ப தன்று. இது பற்றிய விரிவு ஈண்டு வேண்டுவதில்லை. பருவுடற் புலனறிவிற்கு விளங்காத நுட்பங்களெல்லாம் அகக்கண்ணுக்குச் செவ்வனே விளங்கும். அங்கே ஐயந் திரிபு மயக்கங்களெல்லாம் அழிந்துபடும். முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்றார் திருமூலர். ஆணிப்பொன் னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி - அம்மா அற்புதக் காட்சியடி என்று இராமலிங்க சுவாமிகள் பாடியிருத்தலையும் பார்க்க. அகநோக்கிற்கு யோகக் காட்சி அல்லது மானதக்காட்சி (Clairvoyance) என்று பெயர். அக் காட்சி பெறுதற்குரிய வழிகள் பல காணப்பட்டிருக்கின்றன. அவற்றுள் தலையாயது அழகிய ஒன்றில் உளத்தை ஒன்றச் செய்வது. ஒன்றில் உளத்தை ஒன்றச் செய்யும் பயிற்சி முதிர, முதிர மாறி நின்று மயக்கும் புலன்கள் அடங்கி, மனவுணர்வெழுச்சிக்கு இடந் தருகின்றன. இதற் கெனவே உருவ வழிபாடு அமைக்கப்பட்டது. அஃது இந்நாளில் விக்கிரக ஆராதனையாக மாறிவிட்டது. இந் நாளிலும் யோகக் காட்சி யாளர் சிலர் ஆங்காங்கே வதிகிறார். யோகக் காட்சியால் திருஞானசம்பந்தரை நோக்கு வோர்க்குத் திருஞானசம்பந்தர் காட்சியளித்தல் ஒருதலை. அவசியம் நேரும்போது அவர் பருவுடல் தாங்கியும் வருவர். திருஞானசம்பந்தரைப் பற்றிய சில நுட்பங்கள் நூல்கள் வாயிலாக உணரத்தக்கனவா யிருக்கின்றன; பல நுட்பங்கள் யோகக் காட்சியால் உணரத்தக்கனவா யிருக்கின்றன. அடியேன் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் படித்தேன்; அவர் அருளிய தேவாரத்தை ஓதினேன்; அவர் உருவத்தையும் வழிபட்டேன். திருஞானசம்பந்தர் நினைவு தோன்றும் போதெல் லாம் என்னை அறியாமலே எனக்கு ஒருவித நெகிழ்வு தோன்று வது வழக்கம். எனது வாழ்வில் திருஞானசம்பந்தரைப் பற்றிப் புரிந்த ஆராய்ச்சிக்கோர் அளவில்லை. அவரது நிலை பருவுடல் அறிவு ஆராய்ச்சியையுங் கடந்து நிற்றலை உணர்வளவில் தெளியலானேன். தமிழ்நாட்டில் இருள் சூழ்ந்துள்ள இவ் வேளையில் யோகக்காட்சிப் பயிற்சியில் கைபோய சிலரை நண்பராகப் பெறும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஞான சம்பந்தர் பருவுடல் தாங்கிப் பாடிய தேவாரத்தில் எல்லா நுட்பங்களும் அடங்கியிருக்கின்றன. அவை அவரவர் அறிவாற்றலுக் கேற்றவாறு விளங்கா நிற்கும். தமிழ்நாட்டில் ஒருபோது திருஞானசம்பந்தர் என்னும் பெயரால் தோன்றிய பெரியார், முன்னரும் பலமுறை பல பெயர்கொடு இவ்வுலகில் தோன்றியவர். அவர் பெருமையை அளந்து கூறுதற்கு யான் அருகனல்லேன். ஆண்டவன் எல்லாவற்றையுங் கடந்தும், எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்தும் அறிவாய் ஒளிர்பவன். அவனை நினைத்தலும் இயலாது. அப்பேரறிவை உணர்வதெப்படி? அதை உணர்தற்கு வேண்டற்பாலது அமைதி. திரையற்ற நீர் போல் சிந்தை தெளி வார்க்குப், புரையற் றிருப்பன் புரிசடையோனே எனவரூஉந் திருமந்திரத்தை உன்னுக. அவ்வமைதி நிலை யுணர்த்தும் ஒரு பெரு வடிவம் பருமையுலகு கடந்த நுண்மையுலகில் வீற்றிருக் கிறது. அவ்வடிவுடைய மூர்த்தியின் குறிப்புணர்ந்து உலகை நடாத்திவரும் பெருமைவாய்ந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் என்றும் அழியா அழகொழுகும் இளைஞராக விளங்குகிறார். மேற்குறிப்பிட்ட அமைதிவடிவும், இவ்விளமைவடிவும் பொருளில் வேறல்ல. இரண்டும் ஒன்றே. மக்கள் வழி பாட்டுக் கெனத் திகழ்வது இவ்வழகு வடிவம். ஆண்டவன் வாக்கு மனங் கடந்து நிற்கும் நிலை, அவன் அமைதி வடிவாய் அமர்ந்துள்ள நிலை, அவன் உயிர்கள் தன்னை வழிபடுதற்கெனக் கொண்ட இளமை நிலை முதலியவற்றின் ஒருமைப்பாடு, ஷடாந்தசன்மார்க்க நுட்பம் அநுபவத்தில் கைவரப்பெற்ற பெரியோரின் அகக்கண்ணுக்குச் செவ்விதிற் புலனாகும். உருவத்தை மட்டும் நினைக்கவல்ல மனவுணர்வுடன் கீழ்ப்படியிலுள்ளவர், அந்நிலைகளைக் குறித்து இடர்ப்பட வேண்டுவதில்லை. முழுமுதற்பொருளை நிர்க்குணம் அல்லது சொரூபமென்றும், சகுணம் அல்லது தடதமென்றும் ஆன்றோர் கூறிப் போந்ததை ஆய ஆய உண்மை விளங்கும். கீழ்ப்படியிலுள்ளவர்க்கு வேண்டற்பாலது வழிபாடு. அவ்வழிப்பாட்டுக்கு ஓருருவம் வேண்டும். அவ்வுருவமே மேற் குறிப்பிட்ட இளமை அழகு வடிவம். அவ்வழகை அவரவர் மனத்துக்கினிய முறையில் எப்பெயராலும் வழிபடலாம். அவ் விளமை அழகை உருவிற்கொண்டு வழிபட வழிபட, அதன் திருவருளால் பேசவொண்ணாப் பெருநிலை கூடும். செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா விருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே எனவரூஉம் அநுபூதி மொழியைக் காண்க. இராமலிங்க சுவாமிகள் அருளிய மகாதேவமாலை யிலும் இந்நுட்பம் விளங்குகிறது. யோகாந்தம் என்னுந் தலைப்பின்கீழ்ச் சில பாக்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றன. அவற்றை உற்று நோக்குமாறு அன்பர்களை வேண்டு கிறேன். இளமையும் அழகும் பொலியுங் கடவுளின் திருவருள் பெற்று, அவராய் விளங்குவோர் சிலர் இருக்கிறார். அவர்க்குத் தலைவர் ஒருவரிருக்கிறார். அத்தலைவரை இளமைத் தெய்வ மென்றும் அன்பர் அன்பால் கூறுவதுமுண்டு. அத்தலைவர் வாயிலாகவே ஆண்டவன் திருவருள் பெறுதல் வேண்டும். விரிவு சித்த ஞானமறைகளிற் காண்க. அப் பெரியார் சில வேளைகளில் பருவுடல் தாங்கியும் உலகை ஓம்புவர். அவர் சிலர் முனிவரர் வாயிலாக உணர்த்திய உண்மை நெறிக்கு ஒருபோது இடர் நேர்ந்தது. அவர் அப்பொழுது இடப தேவராகத்தோன்றி அருள்நெறி யுணர்த்தினர்; பின்னர் அந்நெறி பாழ்பட்டபோது புத்தராகப் போந்து அறம் வளர்த்தனர்; பின்னே கிறிதுவாகப் பிறந்து அன்பை விளக்கினர்; மற்றவராகத் தோன்றிய ஆண்டவன் உண்மையை நிறுவினர். அவரே தமிழ் நாட்டில் திருஞானசம்பந்தராகத் தோன்றிக் கடவுளைக் காட்டினர். சமண பௌத்தங்களை அழித்த ஒருவரை இடபதேவரென்றும் புத்தரென்றும் சொல்லுவ தெப்படி என்று சிலர் வினவலாம். திருஞானசம்பந்தர் சமண பௌத்த அறங்களை அழிக்கப் போந்தவரல்லர் என்பதை, தமிழ் நூல்களில் பௌத்தம் என்னும் நூலின் முன்னுரையில் விளக்கிக் கூறியுள்ளேன். உண்மை காண்டல் வேண்டும் என்னும் நோக்குடன் திருஞானசம்பந்தர் தேவாரத்தை ஆராய்ந் தாலும், அவர் சமண பௌத்த அறங்களை அழிக்கப் போந்தவ ரல்லர் என்பது இனிது புலனாகும். தமிழ் நாட்டில் அந்நாளில் சமணம் பௌத்தம் என்னும் பெயரால் மறவிருள் சூழலாயிற்று. அதைக் கடியவே ஞானசம்பந்தர் போந்தனர். ஞானசம்பந்தர் என்றும் இருப்பவர். யோகக் காட்சியால் அவரைக் காணலாம். அவர் உலகில் கடவுளைக் காட்டியதைப் போலத் தம்மை அடைவோர்க்குக் கடவுளை என்றுங் காட்டிய வண்ண மிருக்கிறார். அவர் வாயிலாகவே கடவுளைக் காண்டல் வேண்டும். இராமலிங்க சுவாமிகள் முன்னை ஊழ்த்திறத்தால் இளமையிலேயே, ஞானசம்பந்தப் பெருமானைக் குருவாகக் கொள்ளும் பேறுபெற்றார். அப்பேற்றான் இராமலிங்க சுவாமிகள் அடையத்தக்கதை அடைந்தார். தாம் ஞான சம்பந்தப் பெருமானைக் குருவாக் கொண்டதையும், அதனால் விளைந்த நலன்களையும் சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தியுள்ளதை, ஞானத்தில் நாட்டமுடையார் உற்று நோக்கி உண்மை தெளிவா ராக. உயிரனு பவமுற் றிடிலத னிடத்தே ஓங்கருள் அனுபவ முறுமச் செயிரினல் அனுப வத்திலே சுத்த சிவவனு பவமுறும் என்றாய் பயிலுமூ வாண்டிற் சிவைதரு ஞானப் பான்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம் பயிர்தழைந் துறவைத் தருளிய ஞானசம் பந்தனென் றோங்குசற் குருவே தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்ததன் மயமா நின்னைநீ யின்றி உற்றிடல் உயிரனு பவமென் றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை யன்றோ சித்தநற் காழி ஞானசம் பந்த செல்வமே எனதுசற் குருவே முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னினின் றுளமயக் குறுங்கால் அன்புறு நிலையாற் றிருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம் இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிரெனுங் குருவே வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறவளித் தனைநின் உறுபெருங் கருணையென் னுரைப்பேன் பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலா ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபிற் றிகழ்விளக்கே தெவிட்டா துளத்தில் தித்திக்குந் தேனே அழியாச் செல்வமே காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என்னிரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே ஏரார் பருவ மூன்றிலுமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும் இன்பக் குதலை மொழிக்குருந்தே என்னா ருயிருக் கொருதுணையே பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப் பேசுகின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்திற் பிறங்குவரே இப் பாக்கள் சுவாமிகள் ஞானசம்பந்தரை நால்வருள் அமைத்துப் பாடிய பதிகங்களில் உள்ளன. சுவாமிகள் ஞான சம்பந்தர்க்கென ஒரு தனிப் பாட்டும் ஓதியுள்ளார். அன்பர்களே! அவ்வன்புப் பாட்டைப் பாருங்கள்; இராம லிங்க சுவாமிகள் ஞானசம்பந்தப் பெருமானிடங் கொண்டுள்ள அன்பை உணருங்கள். சுவாமிகள் ஞானசம்பந்த வள்ளலை எவ்வெம்மொழியால் போற்றுகிறார்; புகழ்கிறார். ஞானசம்பந்த ரால் சுவாமிகள் அடைந்த நலன் சுவாமிகட்கன்றோ தெரியும்? சுவாமிகள் அந்நலன் குறித்துத் தமது அடக்கவொணா ஆர்வத்தை வெளியிடுகிறார். உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதி தயம் ஒளிபெற விளங்கு சுடரே உதயநிறை மதியமுத உணவுபெற நிலவுசிவ யோகநிலை அருளு மலையே உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை உணரென உணர்த்து நிறைவே உளவெனவும் இலவெனவும் உரைஉபய வசனமற ஒருமொழியை உதவு நிதியே ஒன்றுடன் இரண்டென விதண்டையிடு மிண்டரொடும் ஒன்றலற நின்ற நிலையே உன்னலற உன்னுநிலை இன்னதென என்னுடைய உள்ளுணர உள்ளு மதியே உன்னிலையும் என்னிலையும் அன்னிய மிலைச்சிறிதும் உற்றறிதி என்ற ஒன்றே உண்மைநெறி அண்மைதனில் உண்டுளமொ ருங்கிலென ஓதுமெய்ப் போத நெறியே அலகின்மறை மொழியுமொரு பொருளின்முடி பெனவென தகந்தெளிய அருள்செய் தெருளே ஐம்பூதம் ஆதிநீ அல்லையத் தத்துவ அதீதவறி வென்ற நன்றே ஆறத்து வாநெறி அகன்றநிலை யாதஃது அதீதநிலை என்ற பொருளே ஆணைஎம தாணைஎமை அன்றியொன் றின்றென அறிந்திடுதி என்ற முதலே அன்பினிலை யேசிவம்அ மர்ந்தநிலை எனவெனக் கறிவித்த சுத்த அறிவே அத்துவித நெறிதுவித நெறிநின்ற பின்னல தடைந்திடா தென்ற இறையே ஆனந்தம் அதுசக்தி தானந்த மேயிஃது அறிந்தடைதி என்ற நலமே அட்டசித் திகளுநின தேவல்செயு நீயவை அவாவியிடல் என்ற ஒளியே இலகுபரி பூரணவி லாசமல திலையண்டம் எங்கணுமெ னச்சொல் பதியே இரவுபகல் அற்றவிடம் அதுசகல கேவலம் இரண்டினடு என்ற பரமே இச்சைமன மாயைநீ கண்டவை யெலாம்வெளி இருந்துகாண் என்ற தவமே யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தொருமையின் இருத்தியென உரைசெய் அரசே என்களைக ணேஎனது கண்ணேஎ னிருகண் இலங்குமணி யேயெ னுயிரே என்னுயிர்த் துணையே யெனறிவே யெனறிவூ டிருந்தசிவ மேயெ னன்பே என்தெய்வ மேஎனது தந்தையே எனையீன் றெடுத்ததா யேயெ னுறவே என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே என்னருட் குருவடி வமே கலகமன முடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட கருணையங் கடலமு தமே காழிதனி லன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர் கருதுசம யாதி பர்களுங் கைகுவித் தருகுநின் றேத்தமூ வாண்டிற் களித்துமெய்ப் போதம் உண்டு கனிமதுர மொழுகுசெம் பதிகச் செழுஞ்சொன்மழை கண்ணுதற் பவள மலையில் கண்டுபொழி அருண்முகிற் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூ ரினிற் கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக் கதியுல கறிந் துய்யவே கரையற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடுங் காட்சியே சிவஞானி யாம் கருதவரும் ஒருதிருப் பெயர்கொண்மணி யேஎமைக் காப்பதுன் கடனென் றுமே இப்பாட்டில் ஞானசம்பந்தர் தமக்கு அறிவுறுத்திய உண்மைப் பொருள்களைச் சுவாமிகள் நிரலே கிளந்து கூறியிருத்தலைக் கூர்ந்து நோக்குக; நோக்கி ஞானசம்பந்தர் நிலையை உணர்ந்து, அவரைக் குருவாக் கொள்க; கொண்டு பார்க்க; உண்மை புலனாகும். சுவாமிகள் ஞானசம்பந்தப் பெருமானை நோக்கிப் பாடிய பாக்களை பொருளுணர்ந்து ஓத ஓத, அப்பெருமான் வாயிலாகப் பேறு பெறுதல் வேண்டும் என்னும் வேட்கை நன்மக்கட்கு எழாமற் போகாது. திருஞானசம்பந்தரைப் பெறுவதெப்படி? அதுகுறித்து ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. திருஞானசம்பந்தரைப் பெற்ற இராமலிங்க சுவாமிகள் ஒரு வழிகாட்டியுள்ளார். அவ் வழிநிற்போர் ஞானசம்பந்தரை அடையலாம். அவ்வழி யாது? சைவந் தழைக்கத் தழைத்தாண்டி - ஞான சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி பொய்வந்த உள்ளத்திற் போகாண்டி - அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி இப்பாடலில் வழி விளங்குகிறது. பொய்யைக் கடிந்து மெய்யில் நிற்பவர் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருள்வர். அம் மெய்வழி நிற்க; நிற்க. கடவுள் காட்சிக்கு ஞானசம்பந்தரைக் குருவாக் கொள்ளும் வழக்கம் முன்னாளிலிருந்தது நாளடைவில் மக்கள் கருத்து வெவ்வேறுவழியில் திரிந்து உழன்றது. இராமலிங்க சுவாமிகள் வழிகோலியுள்ளார். தமிழ் மக்களே! இராமலிங்க சுவாமிகள் பெற்ற பேற்றை உணருங்கள்; அப்பேற்றிற்கு முதல்வராக இருந்தவர் யாவர் என்பதை உன்னுங்கள். கடவுளைப்பற்றிய கவலை நமக்கு வேண்டா; கடவுளைக் காட்டிய கடவுளைப்பெற முதலில் முயலுங்கள், பின்னே எல்லாம் பெறலாம். இராமலிங்க சுவாமிகள் கூறுமாறு திருஞானசம்பந்தரே நம் தந்தை, குரு, தெய்வம். எல்லாம், எல்லாம். அவரை மறவாதேயுங்கள். அவர் கடவுளைக் காட்டிய வண்ண மிருக்கிறார். அவர் திருவடியைப் பற்றுங்கள்; பற்றுங்கள். 2. நூல் இனி இராமலிங்க சுவாமிகள் உயிரெனப் போற்றிய ஒரு நூல்மீது கருத்துச் செலுத்துவோம். அவ் வொருநூல் திருவாசகம் என்று முன்னர் சொல்லப்பட்டது. சுவாமிகள் திருவாசகத்தை ஓதி ஓதி உருகுவாராம்; உருகி உருகிச் செயலற்றுக் கிடப்பாராம். வழிநடைப்போழ்தும் யாண்டிருந்தேனும் திருவாசக ஒலி செவிக் கெட்டுமேல், சுவாமிகள் செயலற்று நிற்பாராம்; அவர் கண்களி னின்றும் இன்ப நீர் பொழியுமாம். சுவாமிகட்குத் திருவாசகத்தின் மாட்டிருந்த அன்புக்கு ஓர் அளவில்லை. சுவாமிகளின் நெஞ்சை உருக்கும் அன்பு அழலெனத் திருவாசகம் அவருக்குத் துணை புரிந்தது என்று சுருங்கச் சொல்லலாம். திருவாசகத்தை எத்துணையோ பேர் ஓதுகிறார். அவரெல் லாரும் நெக்கு நெக்குருகி நிற்கிறாரா? இல்லையே இராமலிங்க சுவாமிகளுக்கு அந்நெகிழ்ச்சி யுறுவானேன்? இராமலிங்க சுவாமிகள் திருவாசகத்தை எம்முறையில் ஓதினார் என்பதைத் தெரிந்துகொள்ளின், அவ்வுண்மை புலனாகும். இராமலிங்க சுவாமிகள் திருவாசகத்தின் எழுத்தை எண்ணி எண்ணி ஓதினா ரில்லை. சுவாமிகள் திருவாசகத்துடன் கலந்தார். அவர் திருவாசக மானார் என்றுங் கூறலாம். அக்கலப்பு என் செய்யாது? அஃது இருப்பு நெஞ்சையும் உருக்கும்; நீராக்கும்; அந்நீரைக் கண்வழிப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும். வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாம லினிப்பதுவே என்று திருவாசகத்தைத் தாம் பாடிய முறையைச் சுவாமிகள் குறிப்பிடுதல் காண்க. இன்னுந் திருவாசக மாண்பைச் சுவாமிகள், வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும்என் னுடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியோ வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே என்று ஓதியிருத்தலை நோக்குக. இப்பாக்களை நோக்குழிச் சுவாமிகள் திருவாசகத்துடன் எவ்வாறு கலந்து அன்புருவானார் என்பது நனி விளங்கும். சுவாமிகட்குத் திருவாசகத்தில் தணியாக்காதல் தோன்றிய தற்குப் பல காரணங்களுண்டு. அவைகளுள் திருவண்டப் பகுதி யில் ஒளிரும் ஒரு நுட்பத்தைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். அந் நுட்பம் சுவாமிகட்குப் புலனாயிற்று. சுவாமிகள் இறவாமை என்னும் மீண்டும் பிறவாநெறி அடைதல் வேண்டுமென்னும் வேட்கையால் விழுங்கப்பட்டிருந்தார். அவ்வேட்கையை நிறை வேற்றத்தக்க பொருளைச் சுவாமிகள் திருவாசகத்தில் கண்டார். பன்னெடுநாள் முயன்று முயன்று, பலவிடங்களில் அலைந்து அலைந்து, திரிந்து திரிந்து, ஒருவன் தேடிக்கொண் டிருந்த பொருள் அவனுக்குக் காட்சியளித்தால், அதைத் தேடித் திரிந்த அம்மகனுக்கு எத்தகை இன்பம் பொங்கிப் பெருகு மென்று சொல்லலும் வேண்டுமோ? சுவாமிகள் அரும்பாடு பட்டுத் தேடிக்கொண்டிருந்த ஒன்றைத் திருவாசகத்திற் கண்டார். அதைக் கண்ட சுவாமிகள் எந்நிலை யுற்றிருப்பர்? நீங்களே ஓர்ந்து உணருங்கள். திருவாசகத்தில் அப்பொருள் ஒளிருமிடத்தை நோக்குவோம். சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தானெனைச் செய்தது தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித் துவாக்கட னள்ளுநீ ருள்ளகந் ததும்ப வாக்கிறந்து அமுத மயிர்க்கால் தோறுந் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறு நாயுடல் அகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் திருவண்டப் பகுதியில் ஒளிரும் அப்பொருளைச் சுவாமிகள் உணர்ந்தார் என்பது, உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ இருவென்ற தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே என்று அவர் பாடியவாற்றான் விளங்குகிறது. இறவா நிலை காட்டும் ஒரு நூலின்மீது, அந்நிலை வேட்டு நிற்போர்க்கு எத்தகைக் காதல் நிகழுமென்று சொல்லால் சொல்லலும் முடியுமோ? எழுத்தால் எழுதலும் இயலுமோ? அக் காதற்பெருக்கை, தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின் ஆசகன்ற அநுபவநான் அநுபவிக்க அருளுதியே மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவ மாயினைநீ எழில்வாத வூரிறையே தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையிற் சின்மயமாய் ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருகான் மாற்றுதியே சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினுமின் பெய்துவதே எனவரூஉம் சுவாமிகள் பாக்களால் உணர்க. அத்தகைத் திருவாசகம் ஒரு காலத்தில் தெருவெல்லாம் ஓதப்பட்டது. இப்பொழுதோ? மீண்டும் பிறவாமைக்குரிய மருந்து திருவாசகத்திற் கிடக் கிறது. ஆனால் அதை உண்பார் பலரில்லை. அதைப் பலர் உண்ணாமையால் பிறவிநோய் பெருகுகிறது. இராமலிங்க சுவாமிகள் அம்மருந்து கண்டார்; உண்டார்; பிறவிவேர் அறுத்துக் கொண்டார்; இறவாநிலைபெற்றார். என்னருமைச் சகோதரி களே! சகோதரர்களே! திருவாசகத்தை மறவாதேயுங்கள்; பிறவிப் பிணி யறுக்குந் திருவாசகத்தை மறவாதேயுங்கள்; இராமலிங்க சுவாமிகளை உய்வித்த திருவாசகத்தை ஓதுங்கள்; ஓதுங்கள்; சுவாமிகள் அதை எவ்வாறுஓதினரோ அவ்வாறு ஓதுங்கள். உள்ள முருகும்; உய்யுநெறி விளங்கும்; சுவாமிகள் பெற்ற பேறுங் கிடைக்கும். 3. வழிபடு கடவுள் சகோதரிகளே! சகோதரர்களே! நீண்ட நேரம் பேசிவரு கிறேன்; காலத்தின் அருமை எனக்குத் தெரியும். ஒல்லும் வகை முயன்று ஒவ்வொன்றையுஞ் சுருங்கச் சொல்லியே செல்கிறேன். இன்னும் ஒன்றே உளது. அதுபற்றிச் சிலவுரை பகர்ந்து முன்னுரையை முடித்துக்கொள்கிறேன். மக்கட்பிறவி தாங்கியுள்ளவர்க்குக் கடவுள் வழிபாடு இன்றியமையாதது. கடவுள் வழிபாடில்லா வாழ்வு மக்கள் வாழ் வாகாது; அது விலங்கு வாழ்வாகும். இதுபற்றியே திருவள்ளுவ னாரும், கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் - நற்றாள் தொழாஅ ரெனின் என்று அருளிப் போந்தார். கடவுள் வழிபாடெனில் எக்கடவுள் வழிபாடு என்று சிலர் ஐயுறலாம். கடவுள் ஒருவரே என்று முன்னர் விளக்கிக் கூறியுள் ளேன். அதுகுறித்து அடிக்கடி பேசவேண்டுவதில்லை. ஒரே கடவுளை உலகோர் பற்பல பெயரால் போற்றி வருகிறார். போற்றும் முறைகளும் அவ்வந்நாட்டு வழக்கவொழுக்கத்துக் கேற்றவண்ணம் பலபட அமைந்திருக்கின்றன. பெயர் வேற்றுமை பற்றியும், முறை வேற்றுமைபற்றியும் உலகில் வாதப்போர் நிகழ்வதுமுண்டு. அப்போர் அநாவசியம்; முற்றிலும் அநாவசியம். எப்பெயர் கொண்டாதல் எம்முறை பற்றியாதல் கடவுளை வழிபடலாம். எல்லாம் ஒருமைக் கடவுளிடமே செல்லும். பெயர்ப்போரும் முறைப்போருங் கடவுளுக்கு வேண்டுவனவல்ல. கடவுளுக்கு வேண்டுவது ஒன்று. அஃது அன்பு. அவ்வன்பால் கடவுளை வழிபட வேண்டுவது மக்களின் தலையாய கடமை. இராமலிங்க அடிகள் வழிபடு கடவுளாக முருகப் பெரு மானைக் கொண்டார். முருகன் என்னும் பெயர் கடவுளைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல். அச்சொற் பொருளை முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விளக்கியுள்ளேன். விளக்கம் ஆண்டுக் காண்க. முருகப் பெருமான் வழிபாடு இறவாநிலை யெனும் மீண்டும் பிறவாநிலையைக் கூட்டுதல் ஒருதலை. வெட்டுங் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் விடுங்கயிற்றால் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங் குலகிரி எட்டும்விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாஅந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவி டேன்வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன் புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே என வரூஉம் அருணகிரியார் வீர மொழிகளை நோக்குக. இராமலிங்க அடிகள் இளமையிலேயே முருகக் கடவுளை வழிபடலாயினார். முருகன் வழிபாட்டில் அடிகள் உறைந்து நின்றார். அவர் தணிகைமலை போந்து, ஆண்டவனை நோக்கிக் குறையிரந்து வேண்டி வேண்டி, அழுது அழுது உய்யுநெறி கண்டார். தணிகையை மனத்தில் நிறுத்தி அடிகள் அழுத அழுகை, அவரைத் தூய்மைப்படுத்தி, மேலாம் நிலையையும் வழங்கிற்று. ஆண்டவன் வழிபாட்டிற்கு நிலைத்த நெஞ்சம் வேண்டும். நெஞ்சின் அலைவால் வழிபாட்டிற்கு இடர் நேர்வது முண்டு. இராமலிங்க சுவாமிகள் நெஞ்சைச் செம்மைப் படுத்தி நிலை பெறுத்தத் தணிகையமர் பெருவாழ்வின் முன்னிலையில் தங் குறைபாடுகளை முறையிட்டு நெக்கு நெக்குருகிச் செய்த வேண்டுதலை ஐந்தாந் திருமுறையிற் காணலாம். அத் திருமுறை யில் உயிர் பண்படும் முறைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஐந்தாந் திருமுறை மனிதரது குறைபாட்டை உணர்த்தி, அதை நீக்குதற்குரிய வழியையுங் காட்டுவது என்பதை உணர்தல் வேண்டும். ஆறாந்திருமுறையிலுள்ள பேறுகட்கு வழிகாட்டியா யிருப்பது ஐந்தாந்திருமுறை என்பது எனது உள்ளக்கிடக்கை. ஐந்தாந் திருமுறைப் பயனை ஆறாந் திருமுறையில் அறிஞர் காண்பர். அப்பயனுக்குரிய உழைப்பு பொதுவாக எல்லாத் திருமுறைகளிலும், சிறப்பாக ஐந்தாந் திருமுறையிலும் பொலிந்து கொண்டிருக்கிறது. ஐந்தாந் திருமுறை ஆண்டவ னிடத்து வேட்கையை எவ்வெவ்வாறு எழுப்புகிற தென்பது, அதனை அன்புடன் ஓதி உருகுவோர்க்கு இனிது விளங்கும். இராமலிங்க சுவாமிகள் ஆண்டவனை நோக்கி நிகழ்த்திய முறையீடுகள் பலதிறத்தன. அவைகளையெல்லாம் அவர் அருளிய பாக்களிற் பார்க்க. தாலிபுலாக நியாயம்பற்றிச் சிற்சில வற்றை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். நன்னெறியில் வாழ்வு நடாத்தி, நிலைத்த நெஞ்சம் பெறுதற்கு முதலாவது நல்லோரிணக்கம் வேண்டற்பாலது. தீயோர் கூட்டுறவால் பலதிறக் கேடுகள் விளையும். இக்காரணம் பற்றியே தீநட்பு களைதலை ஓர் அதிகாரத்தில் ஆசிரியர் திருவள்ளுவனார் வலியுறுத்தி யுள்ளார். தீயோர் எவர்? நல்லோர் எவர்? கடவுளிடத்துறுதியின்றித் தீயொழுக்கத்திற் கிடப்போர் தீயோராவர்; கடவுளிடத் துறுதி கொண்டு நல்லொழுக்கமுடையராய் வாழுநர் நல்லோராவர். கண்ணாவ ரேனுமுனைக் கைகுவியா ராகிநின்றால் - மண்ணா வார் நட்பை மதியேன் பராபரமே என்னுந் தாயுமானார் திருவாக்கும் ஈண்டுக் கருதற்பாற்று. இராமலிங்க அடிகள் தீயோர் கூட்டுறவில் கைப்புக் கொண்டு, நல்லோரிணக்கை வேட்டு, ஆண்டவனைப் போற்றி யிருக்கிறார். நன்மைய வெல்லாம் அளித்திடும் உனது நளினமா மலரடி வழுத்தாப் புன்மைய ரிடத்திவ் வடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் சின்மயப் பொருணின் றொண்டர்பால் நாயேன் சேர்ந்திடத் திருவருள் புரியாய் தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே தணிகைவாழ் சரவண பவனே நிலையருள் நினது மலரடிக் கன்பு நிகழ்ந்திட நாடொறு நினையாப் புலையர்தம் இடமிப் புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் மலையர சளித்த மரகதக் கொம்பர் வருந்தியீன் றெடுத்தமா மணியே தலையர சளிக்க இந்திரன் புகழுந் தணிகைவாழ் சரவண பவனே நண்ணாத வஞ்ச ரிடநாடி நெஞ்ச நனிநொந்து நைந்து நவையாம் புண்ணாகி நின்ற யெளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை எண்ணாத பாவி இவனென்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன் தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே எனவரூஉந் திருப்பாக்களை நோக்குக. தீமையினின்றும் விலகி, நன்மையில் நெஞ்சை நிலை பெறுத்த இராமலிங்க சுவாமிகள், அந்நெஞ்சிற்கு அறிவுறுத்தும் முறையில் பாடிய பாக்கள் பல. அவற்றுள் சிலவற்றை நோக்குவோம். நாளை யேகியே வணங்குது மெனத்தின நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை உன்னியே வாழ்ந்திலர் உயிருடல் தணந்திடல் தனைஇந்த வேளை என்றறிவுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருண்மருந்தின் நெறியாந் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ எறியா திரவும் பகலுந் துதிசெய் திடுதிகண்டாய் குறியா திருக்கலை என்னாணை என்றன் குணநெஞ்சமே வல்வினைப் பதியான் மயங்கி வஞ்சர்தங் கொல்வினைக் குழியிடைக் குதிக்கு நெஞ்சமே இல்வினைச் சண்முக என்று நீறிடில் நல்வினை பழுக்குமோர் நாடு வாய்க்குமே தீமையின் கொடுமையை நினைந்து வருந்திச் சுவாமிகள் ஆண்டவனைப் போற்றிய பாக்களில் இரண்டொன்று வருமாறு:- இன்னும் எத்தனை நாட்செல்லும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற மின்னும் வேற்படை மிளிர்தருங் கைத்தல வித்தகப் பெருமானே துன்னு நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயிலேறி மன்னு முத்தம வள்ளல் நின்திரு மனக்கருத் தறியேனே பாவி யேனின்னு மெத்தனை நாட்செலும் பருவரல் விடுத்துய்யக் கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன் ஆவி யேயெனை யாள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே வாவி யேர்தருந் தணிகைமா மலைமிசை மன்னிய வருட்டேனே சுவாமிகள் தணிகைப் பெருமானை நினைந்து புலம்பிய பாக்கள் பல. அவற்றுள் மிகச் சிலவற்றை ஈண்டுக் காட்டுகிறேன். அண்ணாவோ என்னருமை ஐயாவோ பன்னிரண்டு கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னாவோ என்றென்றே எண்ணாவோ துன்பத் திருங்கடற்குண் மன்னினனே மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத் துன்னப் பாராது சுழன்றேன் அருணகிரி தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும் என்னப்பா இன்னுமிந்த ஏழைக் கிரங்காயே பொன்பிணிக்கு நெஞ்சப் புலையேனை இவ்வுலகில் வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறுமணியே அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே வன்னோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்றுயரும் என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ சுவாமிகள், ஆறுமுக கடவுள் திருமுன்னர்க் கசிந்து கசிந் துருகிச் செய்த வேண்டுதல்கள் கருங்கல் மனத்தையும் உருகச் செய்யும். அப்பாக்கள் வாயிலாக நாமும் ஆண்டவனை நோக்கி வேண்டுதல் செய்யலாம். அப் பாக்களிற் சில வருமாறு:- ஊனே யுடையே பொருளேயென் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர்துணைநின் னடியன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநற் சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளுந் தியங்கியழு தோங்குமிந்தச் சேய்க்கு நீகண் பாராத செயலென்னே யெந்தா யெந்தாய் பாவியென விட்டனையோ பன்னா ளாக ஏராய வருடருவா யென்றே யேமாந் திருந்தேனே என்செய்கேன் யாரு மில்லேன் சீராருந் தணிகைவரை அமுதே ஆதி தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே கல்லாத வஞ்சகர்பாற் சென்று வீணாய் கழித்துநிற்குங் கடையனிவன் கருணை யில்லாப் பொல்லாத பாவியென எண்ணி என்னைப் புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே எல்லாஞ்செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறையவனே மயிலேறும் எம்பி ரானே சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ சாக்ஷியாய் நிறைந்தருளுஞ் சகச வாழ்வே நண்ணேனோ மகிழ்வினொடுந் திருத்தணிகை மலையதனை நண்ணி என்றன் கண்ணேநீ அமர்ந்த எழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ மெய்கொள் புளக மூடேனோ மெய்யன் பர்கள்பாற் கூடேனோ பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகான் மாடேனே ஆறு முகங்கொண்ட வையாவென் றுன்ப மனைத்துமின்னும் ஏறு முகங்கொண்ட தல்லா லிறங்கு முகமிலையால் வீறு முகங்கொண்ட கைவேலின் வீரம் விளங்காவென்னைச் சீறு முகங்கொண்ட வத்துன்ப மோடச் செலுத்துகவே பண்கொண்ட சண்முகத் தையா அருண்மிகும் பன்னிரண்டு கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோவென் கவலைவெள்ளந் திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே உளமெனது வசநின்ற தில்லையென் தொல்லைவினை ஒல்லைவிட் டிடவு மில்லை உன்பதத் தன்பில்லை யென்றனுக் குற்றதுணை உனையன்றி வேறு மில்லை இளையனவ னுக்கருள வேண்டுமென் றுன்பால் இசைக்கின்ற பேரு மில்லை ஏழையவ னுக்கருள்வ தேனென்றுன் எதிர்நின் றியம்புகின் றோரு மில்லை வளமருவு முனதுதிரு வருள்குறைவ தில்லைமேன் மற்றொரு வழக்கு மில்லை வந்திரப் போர்களுக் கிலையென்ப தில்லைநீ வன்மனத் தவனு மல்லை தளர்விலாச் சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே குறைகளை முறையிட்டுருகும் அடியவர் துயர் களைய வேண்டுவது ஆண்டவன் கடமை. முறைப்பாடு நேரியதாயிருத்தல் வேண்டுமென்று முன்னர்ப் பலவிடங்களில் வலியுறுத்தி யிருக் கிறேன். அதை மீண்டும் ஈண்டு விரித்துக் கூறவேண்டுவ தில்லை. இராமலிங்க சுவாமிகள் நேரிய வழி நின்று குறைபாடுகளை முறையிட்டமையான், அவர் வேண்டுகோட்கிரங்கி, ஆண்டவன் அவரை ஆட்கொண்டான். கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட் கரும்பேயென் கண்ணேமெய்க் கருணை வாழ்வே புண்ணியநன் னிலையுடையோ ருளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போக மேசீர் எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த என்னரசே ஆறுமுகத் திறையாம் வித்தே திண்ணியவென் மனமுருக்கிக் குருவா யென்னைச் சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே கற்றறிந்த மெய்யுணர்ச்சி யுடையோ ருள்ளக் கமலத்தே யோங்குபெருங் கடவு ளேநின் பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற புண்ணியர்தங் குழுவிலெனைப் புகுத்தி யென்றும் உற்றவருட் சிந்தனைதந் தின்ப மேவி உடையாயுன் னடியவனென் றோங்கும் வண்ணஞ் சிற்றறிவை அகற்றியருட் குருவா என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே கந்தார் வரையுட் சிந்தா மணிநேர் தணிகேசர் மந்தா நிலமே வுந்தார் மறுகின் மயிலேறி வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக் கொந்தார் குழலென் னிலையுங் கலையுங் கொண்டாரே எனவரூஉம் பாக்களைப் பார்க்க. ஆறுமுகக் கடவுள் தமக்கு வழங்கிய காட்சியைச் சுவாமிகள், சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறுந் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களுந் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலு மயிலுநற் கோழிக் கொடியுமருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமுமென் கண்ணுற்றதே என்னும் பாட்டில் பதித்துப் பாடியிருக்கிறார். ஆண்டவன் அருளுருவக் காட்சி வழங்கும்வரை, காமம் முதலிய குற்றங்களினின்றும் மகன் விடுதலையடைதல் அரிது. அக் காட்சிக்குப் பின்னரே காமவெகுளி மயக்கங்களெல்லாம் ஞாயிறு முற்பட்ட பனிபோல் பறந்துபோகும். இவ்வுண்மையைச் சுவாமிகள், வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில் மேல்கொண்ட வீறு மலர்முக மாறும் விரைக்கமலக் கால்கொண்ட வீரக் கழலுங்கண் டாலன்றிக் காமனெய்யுங் கோல்கொண்ட வண்மை அறுமோ தணிகைக் குருபரனே என்னும் பாட்டில் விளக்கியிருத்தல் காண்க. சுவாமிகள் முருகப்பெருமானை வழிபட்டு, அருளுருவங் கண்டு, காம வெகுளி மயக்கங்களை யோட்டி இன்புற்றார். அவ்வின்பப் பெருக்கைச் சுவாமிகள் பல பாக்கள்வழி உலகிற் குதவினார். சுவாமிகள் தாங்கண்ட கடவுள் காட்சியையும், பிற வற்றையும் ஒரு கும்மி வாயிலாக வெளியிட்டுள்ளார். அக் கும்மிப் பாக்களுள் சிலவற்றை நோக்குவோம்: குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி மாமயி லேறி வருவாண்டி - அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமை யிலாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி பன்னிரு தோள்க ளுடையாண்டி - கொடும் பாவிகள் தன்னை அடையாண்டி என்னிரு கண்க ளனையாண்டி - அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி சீர்திகழ் தோகை மயின்மேலே - இளஞ் செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள் ஆறு முகங்களிற் புன்சிரிப்பும் - இரண் டாறு புயந்திக ழற்புதமும் வீறு பரஞ்சுடர் வண்ணமுமோர் - திரு மேனியும் பாருங்கள் வெள்வளைகாள் ஆனந்த மான அமுதனடி - பர மானந்த நாட்டுக் கரசனடி தானந்த மில்லாச் சதுரனடி - சிவ சண்முக நற்குரு சாமியாடி தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர தத்துவ மன்றித் தொடங்காண்டி சத்துவ ஞான வடிவாண்டி - சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி சச்சிதா னந்த உருவாண்டி - பர தற்பர போகந் தருவாண்டி உச்சிதா ழன்பர்க் குறவாண்டி - அந்த உத்தம தேவனைப் பாடுங்கடி அற்புத மான அழகனடி - துதி அன்பர்க் கருள்செய் குழகனடி சிற்பர யோகத் திறத்தனடி - அந்தச் சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி ஒன்றிரண் டான வுளவாண்டி - அந்த ஒன்றிரண் டாகா வளவாண்டி மின்றிரண் டன்ன வடிவாண்டி - அந்த மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி அறுமுருகப்பெருமான் காட்சியால் சுவாமிகள் பெற்ற ஆனந்தப் பெருக்கு இக் கும்மிப் பாக்களில் தேங்குதல் காண்க. அன்பர்களே! இராமலிங்க சுவாமிகள் அறுமுகக் கடவுளை வழிபட்டுப் பெற்ற பேற்றை உன்னுங்கள்; உருவ வழிபாட்டின் நுட்பத்தை உணருங்கள். அகண்டாகாரம் அகண்டாகாரம் என்று ஏமாறாதீர்கள். அகண்டத்தை எப்படி நினைப்பீர்கள்? எப்படிப் போற்றுவீர்கள்? அகண்டாகாரத்தை உணர்ந்து இன்புறு தற்கு உருவ வழிபாடு இன்றியமையாதது. அகண்டத்தின் சுருக்கமே ஆண்டவன் அருளுருவம். அவ்வுருவின் பெருக்கே அகண்டாகாரமாகும். உருவின் உறுப்புக்கள் யாவும் பலதிறத் தத்துவ நுட்பங்களைக் குறிக்கொண்டு நிற்கின்றன. அவைகளை உணராது பிதற்றுவோரின் மாயவலையிற் சிக்கி ஏமாற்ற மடைதல் வேண்டா. உருவ வழிபாடு நிகழ்த்திய பலர் பெரும் பேறு பெற்றார். இராமலிங்க சுவாமிகட்கும் பெருவாழ்வளித்தது அவ்வழிபாடே யாகும். ஆதலால் அவ்வழி பாட்டைச் செய்யுங்கள்; செய்யுங்கள். இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! இராமலிங்க சுவாமிகள் திருஞானசம்பந்தப் பெருமானைக் குருவாக்கொண்டு, திருவாச கத்தைப் பொருணூலாக்கொண்டு, முருகப்பெருமானை வழிபடு கடவுளாகக்கொண்டு, கடவுள் அருளுருவங்கண்டு, காம வெகுளி மயக்கங்களைப் போக்கி, யாண்டுங்கடவுள் நீக்கமற நிறைந்திருத் தலை உணர்ந்து, எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை என்னும் அருளறத்தை வளர்த்து, அவ்வருணெறியே சமரச சன்மார்க்க மென்று தெளிந்து, அம்மார்க்கத்தை உலகிற்கு அறிவுறுத்தி, இறுதியில் சாகா நிலையெனும் பெருவாழ்வு பெற்றார். அவ் வாழ்வே நமது குறிக்கோள். அதை நிறைவேற்றச் சுவாமிகள் கொண்ட முறைகளைக் கொள்ளவேண்டுவது நமது கடமை. இதுகாறும் எனது புன்மொழியைப் பொறுமையுடன் செவிமடுத்துவந்த உங்கட்கு எனது நன்றியறிதலான வணக்கம். எனது பேச்சில் குற்றங் குறைகள் நிகழ்ந்திருக்கலாம். அவை களைப் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன். தூக்கமுந் துயரமும் அச்சமும் இடருந் தொலைந்தன தொலைந்தன எனைவிட் டேக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் ஆக்கமும் அருளும் அறிவும்மெய் யன்பும் அழிவுறா வுடம்புமெய் யின்ப ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மையில் வாசகம் உணர்மின் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியென் னுளத்தே நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்த்தே சத்திய சுத்தசன் மார்க்க வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே - இராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை! கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகலும் இசையுமணிந் தருளே - இராமலிங்க சுவாமிகள்  தமிழ் நூல்களில் பௌத்தம் முன்னுரை மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கி னின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+சமயம் = மனிதன். எனவே, மனிதனுக்குச் சமயம் இன்றியமையாதது. அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்குஞ் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச் சமயம் பலவாகவே தோன்றும். மெய்யறிவல்லாத பிறவறிவுகொண்டு, பொருளுண் மையை ஆராய்வோர்க்கு, அவ்வுண்மை, அவரவர் அறிவாற்றலுக் கேற்ற அளவில், இன்றைக்கொரு விதமாகவும், நாளைக்கொரு விதமாகவும் விளங்கும். அவர்கள் நிலைத்த முழு உண்மையை உணராமையான், அவர்கட்குப் பல சமய உணர்வு பிறக்கிறது. மெய்யறிவு விளங்கப் பெற்றதும் அப்பன்மை உணர்வு பொன்றும். உலகில் நானாபக்கங்களிலுந் தோன்றி உண்மை ஞானத்தை அறிவுறுத்திய சமய குரவர்கள் பலரும் மெய்யறிவு பெற்றவர்கள் அல்லவோ? அவர்கள் அறிவுறுத்திய சமயக் கொள்கைகள் ஒன்றோ டொன்று முரண்பட்டுப் பன்மை உணர் விற்கு நிலைக்களனாக நிற்றற்குக் காரணம் என்னை? என்று சிலர் வினவலாம். சமய குரவர்கள் அனைவரும் அறிவுறுத்திய உண்மை ஒன்றே. ஆனால் அவ்வுண்மைப் பேற்றிற்குரிய முறை களில் வேற்றுமை உண்டு. அடிப்படையான உண்மையையும், முறைப்பாட்டையும் ஒன்றெனக் கொண்டு பலர் வாதம் புரிகிறார். அவ்வாதப் போர் ஈண்டு எற்றுக்கு? உண்மை, என்றும் ஒரு பெற்றியா இலங்குவது. முறைப்பாடு கள் காலதேச வர்த்தமானத்தை யொட்டிக் கோலப்படுவன. அவைகளில் வேற்றுமை யிருத்தல் இயல்பு. அவைகள் மாறுந் தகையன. மாறத்தக்க முறைகளையே அடிப்படையான உண்மை யென்று கோடல் அறியாமை. இந்நுட்பம் விளங்கப்பெறு வோர்க்கு, உண்மையில் பன்மை உணர்வு தோன்றுதல் அரிது. விளக்கம், அடியேனால் எழுதப்பெற்ற மனித வாழ்க்கையுங் காந்தியடிகளும், சைவத்தின் சமரசம், முருகன் அல்லது அழகு, கடவுள் காட்சியும் தாயுமானாரும் என்னும் நூல்களிற் காண்க. சமயம் ஒன்றே. முறைகள் பல. முறைகளிற் சிற்சில வேளை களில் மாசு படிவதுண்டு. அம்மாசைப் போக்கப் பெரியோர்கள் தோன்றுவது வழக்கம். நமது பாரத நாட்டிலும், சமயம் என்னும் உண்மை நெறிக்குரிய முறைகளில் திரிபு நேரும்போதெல்லாம், பெரியோர்கள் தோன்றித் திரிபைப் போக்கி முறைகளைச் செம்மை செய்தார்கள். அப்பெரியோருள் புத்தர் பெருமானும் ஒருவர். புத்தர் பெருமான் எந்நாளில் தோன்றினார்? உண்மையை உணர்த்தும் அறிவெனுங் கருவியை வேதம் என்னும் ஒரு நூலாகக் கொண்டும், உண்மையை விளங்கச் செய்யுந் தியாகத்துக் குரிய யக்ஞம் என்னும் யாகத்தைக் கொலைக்குழியாக்கியும், பிறப்பில் சகோதரர்களாகத் தோன்றிய மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தும், உண்மைக்கு மாறுபட்ட இழிவுகள் இன்னோ ரன்ன பல நிகழ்த்தியுஞ் சமயத்துறைகட்குச் சிலர் சூழ்ந்த கேட்டால், மன்பதை இருளில் மூழ்கி இடுக்கணுற்ற வேளையில், புத்தரென்னும் பெருஞாயிறு தோன்றிற்று. அஞ்ஞாயிறு, அக்கால தேச வர்த்தமானத்துக்கேற்ற வழியில், அறமுறைகள் கோலி, உண்மைமீது படர்ந்திருந்த பனிப்படலத்தை நீக்கிற்று. சுருங்கக்கூறின், சீலம் என்பதன் வழிப் புத்தர் உலகைச் செம்மை செய்தார் என்று கூறலாம். அந்நாளில் சீலம் மறக்கப்பட்டமை யான், சீலம் வலியுறுத்தப்பட்டது. பௌத்தம் பூதவாதமென்று சிலவிடங்களில் கருதப் படு கிறது. அது தவறு. பௌத்த நூல்களில் ஏதாவதொன்றைச் சிறிது பார்த்தவரும் இங்ஙனங் கூறார். இது குறித்து நூலினுள் சில உரை பகர்ந்துளேன். புத்தர், கடவுளைப்பற்றி ஒன்றுங் கூறாமையான், அவரை நாத்திகரெனச் சிலர் கருதுகிறார். புத்தர், அறமெனுங் கடவுளைச் சீலமெனும் வழிநின்று உணருமாறு அறிவுறுத்திப் போந்தார். கடவுளை வேதமென்னும் நூலாகவும், யாகமெனுங் கொலைக் குழியாகவும், சாதியெனுஞ் சாக்கடையாகவும் மன்பதை கொண்டதை மாற்றப் போந்த அறவோர் புத்தர் பெருமானாதலால், அவர் கடவுளை அறமென்றும், அதற்குரிய வழியைச் சீலமென்றும் அறிவுறுத்தினார். வேதம் யாகம் முதலியவற்றைத் திரித்துக் கேடு சூழ்ந்த பொல்லாத உலகம், புத்தருக்குப் பின்னைப் பௌத்த தர்மத்துக்குங் கேடு சூழ்ந்தது. பிற்றை ஞான்று பௌத்தம் பலப்பல வழியில் மாறுதலடைந்தது. ஜப்பானிலுள்ள பௌத்தத்துக்கும் இலங்கையிலுள்ள பௌத்தத்துக்கும் பெரும் வேற்றுமை உண்டு. புத்தர் பெருமான் போதனை இப்பொழுது பௌத்தரென்று சொல்லிக்கொள்ளும் பலரிடஞ் சாதனையில் இல்லை என்று சொல்லலாம். புத்தர் பெருமான் போதனை மட்டுமன்று, மற்றும் பல சமய குரவர் போதனைகளும் சாதனையிலில்லை என்றுங் கூறலாம். சமய குரவர்கள் சொல்வழி எப்பொழுதும் உலகம் நிற்ப தில்லை. சமய குரவர் உருவங்கட்கு மட்டும் வந்தனை வழிபாடுகள் நிகழ்த்தி, அவர்கள் அறிவுரைகளைக் குழிவெட்டிப் புதைப்பது உலகின் இயல்பாகிவிட்டது. சமயத்தவர் என்று சொல்லிக் கொள்ளும் பலரிடத்தும் இக்குறைபாடிருக்கிறது. இதற்குச் சமய குரவர்கள் என் செய்வார்கள்? சமயம் என் செய்யும்? அறத்தில் பெரிதும் ஒற்றுமை வாய்ந்த சமண பௌத்தங் களே பின்னாளில் ஒன்றோடொன்று மலைந்து போரிடலாயின. பிற்காலத்திய சமண பௌத்தர்கள் போரைத் தங்கள் அளவிலாதல் நிறுத்திக்கொண்டார்களா? இல்லையே. அவர்கள் தங்களுக் குரிய அறவொழுக்கங்களையும் முற்றும் மறந்து, கடவுள் இன்மை என்பதில் மட்டுங் கருத்துச் செலுத்தி, மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி, கடவுளுண்மையில் உறுதி யுடையாரைப் பல் லாற்றானுந் துன்புறுத்தினார்கள். கண்டு முட்டு; கேட்டு முட்டு என்பதுபோன்ற கொடிய வழக்கங்கள் அவர்கள் வாழ்வில் நுழைந்த ஒன்றை ஈண்டுக் குறித்தல் சாலும். சமண பௌத்தர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் தங்களுக்குரிய சீலத்தை விடுத்துச் சினத்தைக் கொண்டார்கள் என்று கூறல் மிகையாகாது. இதற்குச் சமணம் என் செய்யும்? பௌத்தம் என் செய்யும்? மழைநீர் வானத்தினின்றும் புறப்படும்போது எவ்வளவு தூய்மையதா யிருக்கிறது? அது நிலத்தில் வீழ்ந்த பின்னை அஃதடையும் நிலைகளை என்னென்று சொல்வது! இவ்வாறே, ஒவ்வொரு போழ்துஞ் சமயகுரவர்களின் போதனைகள் தோற்று வாயில் செம்மையாயிருக்கின்றன. அவைகள் மக்களிடைப் பரவும் போது, அவைகள் மீது பலதிற மாசுகள் படர்ந்துவிடு கின்றன. குறைபாடு யாண்டையது? பிற்காலச் சமண பௌத்தர்கள், சீலங்கள் மீது கருத்திருத் தாது, கடவுள் உண்மை கூறுவோரை இடர்ப்படுத்துவதில் மட்டுங் கருத்துச் செலுத்தலானார்கள். நந் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார் முதலியோர்க்குப் பின்னரே நாளடைவில் சமண பௌத்த அறநிலைகள் குலையலாயின என்று கூறலாம். திருவள்ளுவர் உள்ளிட்டார் காலத்தில் சமண பௌத்தங்கள் மக்களை அறவழியில் நிறுத்தி ஆண்டுவந்தன என்பதில் ஐயமில்லை. நாளடைவில் நிலை மாறிவிட்டது. அறநெறியில் படர்ந்த மாசுகளைத் துடைத்துச் சீலத்தை வலியுறுத்தி யோம்பப் புத்தர் பெருமான் தோன்றியது போலக் கடவுளுண்மையை வலியுறுத்தப் பலவிடங்களில் பல சான்றோர்கள் தோன்றினார்கள். அவருள் திருஞான சம்பந்தரு மொருவர். இடபதேவர், மஹாவீரர், புத்தர், அசோகர், திருவள்ளுவர் முதலியோர் காலத்திய சமண பௌத்தங்களை நெஞ்சிற்கொண்டு, சிலர் திருஞான சம்பந்தர்மீது வீண்பழி சுமத்துகிறார். மேற்குறிப்பிட்ட பெரியோர்கள் காலத்தில் நிலவியவாறே சமண பௌத்தங்கள் நிலவி யிருப்பின், திருஞான சம்பந்தர் வருகைக்கே இடன் நேர்ந்திராது. திருஞானசம்பந்தர், சமண பௌத்தங்களின் பெயரால் மக்களிடைப் படர்ந்த மாசுகளைக் கழுவப் போந்தாரே யன்றிச் சமண பௌத்தங்களையே வேரோடு கல்லப் போந்தாரில்லை. அவர் பாக்களிற்போந்துள்ள சமண பௌத்த மறுப்புரைகள், அவர் காலத்திய சமண பௌத்தங்களைக் குறிப்பன என்க. திருஞானசம்பந்தர் சமண பௌத்தங்களை அழிக்கப் போந்தவ ராயின், சமண் சாக்கியம் ஆக்கியவாறே என்று பாடியிரார். இத்திருவாக்கால் சமண பௌத்தமும் ஆண்டவனருளால் தோன்றியன என்னும் உண்மையன்றோ புலப்படுகிறது? கால நிலை, மக்கள் நிலை முதலியவற்றை உன்னி, காய்தல் உவத்தல் அகற்றி, ஆராய்ச்சித்துறை நண்ணுவதே அறிவுடைமை. இது காலத்துக்குரிய ஒன்றாகலின், இதை ஈண்டுக் குறிப்பிடலானேன். பெயரளவில் சமயங்கள் பலவாயிருப்பினும், அவைகளின் உள்ளுறை ஒன்றையே குறிக்கொண்டு நிற்றலான், எச் சமயத்தை யும் அழிக்க எவ்வறிஞரும் முற்படார். மனித வாழ்விற்கு இன்றி யமையாத சமயம் என்னும் ஒன்றைக் காக்கவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதை அழிக்க முந்துவார்களோ? பெரியோர்கள் கோலும் முறைப்பாடுகளில் வேற்றுமை யிருத்தல் உண்மை. அம்முறைப்பாடுகள் காலதேசவர்த்தமானத்தை யொட்டிக் கோலப்படுவன வாகலான், அவைகளில் வேற்றுமை யிருந்தே தீரும். அவ்வேற்றுமைக்கும் முதலென்னும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. சமயகுரவர் என்று சொல்லப்படும் அனைவரும் அண்ணன் தம்பிமார்போல் எனக்குத் தோன்றுகிறார். அவர்களிடைப் பகைமை யிருந்ததாகக் கருதும் மனம் எனக்குறவில்லை. எனது அநுபவத்தை உலகிற்குச் சொல்கிறேன். ஏதாயினும் வேற்றுமை காணப்படின், அதைக் காலதேச வர்த்தமானத்தின் பாற்படுத்தி, ஒதுக்கி, ஒற்றுமையை மட்டுங் கொண்டு, உய்யுநெறி காணல் வேண்டுமென்று இயற்கை அன்னை எனக்கு அறிவுறுத்துகிறாள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் அருளிய ஒருமை வழியே எனக்குரிய வழி. எனது சமயம் சமரச சன்மார்க்கம். உலகிலுள்ள சமயம் ஒவ்வொன்றும் இச்சமரச சன்மார்க்கத்தையே அறிவுறுத்துகிறதென்பது எனது கொள்கை. ஆகவே, யான் எச்சமயத்தையும் போற்றுவேன்; எச்சமயக் கூட்டத்துக்குஞ் செல்வேன். எனக்குச் சமய வேற்றுமை யென்பது கிடையாது. எச்சமயப் பெயராலாதல் சன்மார்க்கத் தொண்டு நிகழல் வேண்டுமென்பது எனது உட்கிடக்கை. இக்கொள்கையுடையஅடியேனைத் தென்னிந்திய பௌத்த சங்கச் சார்பாகச் சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை ஹைகூல் நிலையத்தில் 1928வருடம் ஏப்ரல் மாதம் 6ஆம்நாள், அறிஞர் லட்சுமிநரசு நாயுடு அவர்கள் தலைமையின் கீழ்க் கூடிய தென்னிந்திய பௌத்த மகாநாட்டில், தமிழ் நூல்களில் பௌத்தம் என்னும் பொருள்பற்றிப் பேசுமாறு, அச்சங்கத்தார் பணித்தார். அப்பணி மேற்கொண்டு, ஆண்டுப் போந்து, அடியேன் நிகழ்த்திய விரிவுரையே இந்நூலின் உள்ளுறை. தமிழ் நூல்களில் பௌத்தம் என்னும் பொருள் ஒரு மணி காலப் பேச்சில் அடங்குவதன்று. அஃது ஒரு விரிந்த நூலுக் குரிய பொருள். அதை எங்ஙனம் ஒருமணி நேரத்துள் அடக்குவது? அவ்வொரு மணி நேரத்தில் குறித்துப் பேச எண்ணிய சில பொருளுள்ளுஞ் சில விடுபட்டன. அவைகளுள் இன்றியமைத இரண்டொன்றை இம்முன்னுரையில் பொறித்துள்ளேன். இது கருதியே முன்னுரை சிறிது விரிவாக எழுதப்பட்டது. சொற்பொழிவு நூல்வடிவம் பெற்றமையான், அதற்குரிய சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன. புது மாறுதலொன்றும் பெரிதுஞ் செய்யப்படவில்லை. இந்நூலால் சமரச சன்மார்க்க உணர்வு நாட்டிடைப் பரவுதல் வேண்டுமென்பது எனது வேட்கை. இராயப்பேட்டை சென்னை 16. 2. 1929 திரு. வி. கலியாணசுந்தரன் தோற்றுவாய் தலைவர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இப்பொழுது உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக் கொண்ட பொருள் தமிழ்நூல்களில் பௌத்தம் என்பது. ஈண் டொரு சமயக் கணக்கனாக நின்று கடனாற்றப் புகுகின்றே னில்லை; ஓர் ஆராய்ச்சிக்காரனாக நின்றே கடனாற்றப் புகுகிறேன். விரிந்த இப்பொருள் பற்றி ஒரு மணி நேரத்துக்குள் ஒழுங்குபெறப் பேசி முடித்தல் அரிது என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை. குறித்த காலத்துக்குள் எவ்வெப் பொருளைத் தொடுத்தும் விடுத்துஞ் செல்லவேண்டுமென்று எனது சிற்றறிவு உந்துகிறதோ, அவ்வழி நின்று, அவ்வப் பொருளைத் தொடுத்தும் விடுத்துஞ் செல்வேன். நூன் முறைப்பாடு முதலாவது நூல்களை ஒருவாறு முறைப்படுத்தி எடுத்த பொருளுக்கு ஓர் எல்லை கோலிக்கொள்வது நலன் என்று தோன்றுகிறது. 1. தொல்காப்பியம். 2. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு. 3. ஐம்பெருங் காப்பியம். 4. திருமுறைகள். 5. கம்பராமாயணம். 6. புராணங்கள். 7. பிற்பட்ட நூல்கள். இக்கூறுபாடு காலமுறையைப் பெரும்பான்மை தழுவியும், சிறுபான்மை தழுவாமலுஞ் செய்யப்பட்டதென்க. 1. தொல்காப்பியம் பழந்தமிழர் தமிழ் மொழியில் இப்பொழுது கிடைத்துள்ள பழைய நூல்களுள் மிகத் தொன்மையது தொல்காப்பியம். தொல் காப்பியக் காலம் தூய பழந்தமிழ்க் காலமென்று சொல்ல முடியாது. அந்நூற் கண் ஆரியக் கலப்புஞ் சிறிது உண்டு. ஆனால் அந்நூல் பழந்தமிழர் வழக்க ஒழுக்கங்களையே பெரிதும் அறிவுறுத்துகிறது. தொல்காப்பியத்தைக்கொண்டு தூய பழந் தமிழர் வழக்க ஒழுக்கங்களை ஒருவாறு ஊகித்துக் கொள்ள லாம். காலம் தொல்காப்பியக் காலம் பலரால் பலவாறு கணிக்கப் பட் டிருக்கிறது. அக்காலத்தைப் பற்றிய கருத்து வேற்றுமைகள் பல உண்டு. இதுகாறும் ஆராய்ச்சிக்காரர் கண்ட முடிபுகளை நோக் குழித் தொல்காப்பியக் காலம் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னையதா யிருத்தல் வேண்டும் என்று அறுதியிட்டுக் கூற இடம்பெறுகிறது. தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டு களுக்குப் பிற்பட்டது என்று ஆராய்ச்சித்துறையில் கைபோய அறிஞர் எவருங் கூறியிருக்கின்றனர் என்று தெரியவில்லை. எனவே தொல்காப்பியம் புத்தர் பெருமானார் இவ்வுலகிடைப் பிறப்பதற்கு முன்னரே தோன்றிய ஒரு நூல் என்பது கவனிக்கத் தக்கது. தமிழ் நாட்டெல்லை தொல்காப்பியப் பாயிரத்தில் தமிழ்நாட்டின் எல்லை குறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட எல்லை வேங்கடம் என்று அப் பாயிரங் கூறுகிறது. தமிழ் நாட்டின் தெற்கு வரம்பைப் பற்றி ஈண்டுக் கருதவேண்டுவதில்லை. ஈண்டு வேண்டற்பாலது வடக்கு வரம்பு ஒன்றே. வேறு பல சான்று களான் தமிழகத்தின் வட எல்லை விந்தியம் என்றுந் தெரிகிறது. தமிழகத்தின் அவ்வெல்லையை இமயம்வரை என்று சொல்வோருமுளர். ருக் வேதம் ஆரியமக்கள் இந்தியா புகுமுன்னரே இந்தியாவில் நாகரிகத்திற் சிறந்த மக்கள் வதிந்தார்கள் என்பது ருக் வேதத்தால் அறியக் கிடக்கிறது. அம்மக்கள் பழந்தமிழ் மக்கள் என்று சில ஆராய்ச்சிக்காரர் கூறுப. பழந்தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தவர் களாயினுமாக. அதைப்பற்றிய விரிந்த ஆராய்ச்சி ஈண்டு எற்றுக்கு? ஈண்டு நமது ஆராய்ச்சிக்குச் சிறப்பாக ஒன்று தேவை. அஃதென்னை? அது, பழந்தமிழ் மக்களின் (அதாவது புத்தர் பெருமானார்க்கு முன்னர் இருந்த தமிழ் மக்களின்) சமயநிலை என்னை என்பதே. இதுகுறித்தே ஈண்டு முதலில் தொல்காப்பியம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொல்காப்பியத்துள் போந்துள்ள மக்களின் வாழ்வுத் துறைகளினின்றும், அம்மக்களின் சமய நிலையை அளந்துகூறப் பல சான்றுகளில்லை; சிற்சில குறிப்புக்களே இருக்கின்றன. அவைகளில் இரண்டொன்றை உங்கள் முன் கிளத்துகிறேன். கடவுள் தொல்காப்பியனார் நூல் யாக்கப் புகுந்த போது தொடக்கத் தில் கடவுள் வாழ்த்துக் கூறினாரில்லை. அந்நாளில் அவ்வழக்கம் இல்லை போலும். நூலினுள்ளே மட்டும் நிலக் கடவுளர் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நால்வகை நிலங்கட்கெனக் கடவுள்கள் குறிக்கப்பட்டிருப்பதுபோல, அந்நிலங்கட்கென மரம், பூ, புள் விலங்கு முதலியனவுங் குறிக்கப்பட்டிருக்கின்றன. இப் பாகுபாடுகள் நிலங்களின் இயற்கைக் கேற்றவண்ணம் அமைந்திருப்பன. அவ் வமைப்பைத் தொல்காப்பியனார் தெருட்டி யிருக்கிறார். கடவுள் பெயர்களும் நிலங்களின் இயல்புக்கேற்றவாறு அமைந்திருத்தல் வேண்டும். இயற்கையழகே கடவுள் பழந்தமிழர்கள் இயற்கை அழகையே உயர்ந்த பொருளாக அதாவது கடவுளாகக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் மலைமீது வாழ்ந்தபோது அவர்கள் உள்ளத்தைக் காலையிலும் மாலையிலும் ஞாயிற்றின் செம்மையும், வானத்திற் படருஞ் செம்மையும், பிற செம்மையுங் கவர்ந்தன. அச் செவ்விய இயற்கையழகை அவர்கள் சேய் என்று போற்றினார்கள். அம் மக்கள் தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேலெனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை யழகை மால் என்று வழுத்தி னார்கள். அவர்கள் மருதநிலத்தில் குடி புகுந்த போது, அங்கே பெரிதும் தங்கள் இனமாகிய மக்கள் கூட்டத்துடன் நெருங்கி நெருங்கிப் பழக நேர்ந்தமையான், மக்கள் மாட்டொளிரும் இறைமை என்னும் இயற்கை அழகைக் கண்டு அதை வேந்து என்று கொண்டார்கள். அவர்கள் கடற்கரை நண்ணிய போது கடலின் இயற்கையழகை வண்ணம் என்றார்கள். பழந்தமிழ் மக்கள் அவ்வந்நில இயற்கை அழகுக்கிட்ட பெயர்களே சேய் மால் வேந்து வண்ணம் என்பன. இவை யாவும் இயற்கை அழகெனும் ஒன்றையே குறிப்பனவாம். இதுகுறித்து முருகன் அல்லது அழகு என்னும் நூலில் சிறிது விரித்துக் கூறியிருக் கிறேன். இவ்வியற்கை அழகுப் பெயர்கள் தொல்காப்பியனார் காலத் திலேயே அன் விகுதி பெறலாயின. பின்னை நாளடைவில் இப்பெயர்கள் பிரிவுபட்ட கடவுளராகச் சமய வாதிகளால் கொள்ளப்பட்டன. பழந் தமிழ் மக்கள் கொண்ட கடவுள், இயற்கை அழகு என்பதை மட்டும் நாம் மறத்தலாகாது. கந்தழி கந்தழி என்னும் மற்றுமொரு பெயர் தொல்காப்பியத்தி லிருக்கிறது. இது பழந்தமிழ் மக்களின் கடவுள் பெயர் என்றும் வழங்கப்படுகிறது. கட்டற்ற ஒன்றே கந்தழி என்று சொல்லப்படு கிறது. அழுக்காறு அவா வெகுளி பகைமை முதலிய கட்டுகளைக் கடந்த நிலையே கந்தழி என்பது. வீடு தொல்காப்பியத்தில் வீட்டைப் பற்றி விளக்கமான உரைகள் உண்டா என்பது பெரிதுங் கூர்ந்து கூர்ந்து உன்னத் தக்கது. தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றே விளங்க ஓதப்பட்டிருக்கின்றன. ஈண்டுக் கிளத்திய இவ்விரண்டொரு குறிப்புக்களைக் கொண்டு பழந்தமிழர்களின் சமய நிலையை நீங்கள் அளந்து கொள்ளலாம். உயர்வு தாழ்வு பழந்தமிழர்களிடம் பிறப்பில் உயர்வு தாழ்வு குறிக்கும் சாதி வேற்றுமை கிடையாது. சாதி யென்னுஞ் சொல்லே தமிழ்ச் சொல் லன்று. பெண் மக்கள் உரிமை பழந் தமிழர்களிடை ஆட்சியி லிருந்தது. பிறவற்றை விரிக்கிற் பெருகும். ஆரியர் வருகைக்கு முன்னே - புத்தர் பெருமான் பிறத்தற்கு முன்னே - தமிழ் மக்கள் நிலை இவ்வாறிருந்தது. புத்தர் காலமும் நாட்டு நிலையும் இனி மற்றுமுள்ள தமிழ்நூல்களைத் தொடுதற்கு முன், புத்தர் பெருமான் அறநெறி குறித்து இரண்டோர் உரை பகர விரும்புகிறேன். புத்தர்பெருமான் அறநெறி புதுக்க நுழைந்த தற்குக் காரணம் யாது? அறநெறியின் வீழ்ச்சியே காரணமாகும். அக்காலத்தில் கடவுள் பெயரால், சமயத்தின் பெயரால், வேள்வியின் பெயரால் உயிர்க் கொலைகள் நிகழ்த்தப்பட்டன; குடி பெருகலாயிற்று; மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கப்பட்டன. மக்களுக்குள் பூசுரர் என்றொரு கூட்டத்தார் கிளம்பினர். அவர்கள் மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி மற்ற மக்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள். கொலையுங் குடியுஞ் சாதிக் கொடுமையும் யாண்டுங் கடவுள் நெறியாகக் கருதப்பட்டன என்று சுருங்கச் சொல்லலாம். இக் கொடுமைகளை யொழிக்கவே புத்தர்பெருமான் அறக்கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றார். புத்தர் பெருமான் முயன்று உண்மை ஞானம் பெற்று அறநெறியை அறிவுறுத்தலானார். யாகங்களில் கொலை செய்தல், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் முதலிய கொடுமைகளைத் தொலைத்து, யாண்டும் ஜீவகாருண்யம் சீலம் சமரசம் முதலிய அறங்களை அவர் ஓம்பி வந்தார். இக் கொள்கைகள் மேலே குறிப்பிட்ட பழந்தமிழர் கொள்கைகளுடன் எவ்வளவு தூரம் அரண் செய்கின்றன என்று நீங்களே நினைந்து பாருங்கள். 2. பத்துப்பாட்டு முதலியன ஆரியமும் பௌத்தமும் இனிப் பத்துப்பாட்டு முதலிய நூல்களின்மீது நோக்கஞ் செலுத்துவோம். இந்நூல்களின் காலத்தில் புத்தர் பெருமான் அறநெறி தென்னாட்டில் பரவிற்று. இந்நெறி பரவுதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரியருடைய வழக்க ஒழுக்கங்கள் தமிழ்நாட்டில் பரந்து விளையாடி நிலைபெற்றன. ஆரியக் கலப்பு, தொல்காப்பியனார் காலத்திலேயே நேர்ந்ததென்று மேலே சொல்லி யிருக்கிறேன். தமிழ் மக்களிற் பலர் ஆரியருடைய வழக்க ஒழுக்கங்களில் தோய்ந்து கிடந்தார். அவ்வாறு கிடந்த தமிழ் மக்களிடைப் புத்தர் பெருமான் அறவொளியும் படரலாயிற்று. இதை வலியுறுத்த இந்நூல்களில் பல சான்றுகளிருக்கின்றன. ஒவ்வொரு நூலாக எடுத்துச் சான்றுகள் காட்டிச் செல்லக் காலவரை இடந்தாராது. தொகுப்பாகச் சிற்சில கூறிச் செல் கிறேன். கலம்பகம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு களில் கொலை கொல்லாமை, கள்ளுண்ணல் கள்ளுண்ணாமை, ஊன் வேள்வி ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளிகள் மற்றச் சமயக் கோயில்கள், பல கடவுளர் வழிபாடுகள் முதலியன சொல்லப் பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அந்நாளில் பெருங் கலம்பகமாயிருந்தது என்று சுருங்கச் சொல்லாம். ஆனால் அக்கலம்பகத்தால் கலகம் விளையவில்லை. நாலடியாரும் திருக்குறளும் நாளடைவில் புத்தர் பெருமான் அறநெறியே நாட்டில் ஓங்கி வளர்ந்தது. பதினெண் கீழ்க்கணக்கின்பாற்பட்ட நாலடியாரும் திருக்குறளும் இக் கருத்தை உறுதிப்படுத்தும். நாலடியாருந் திருக்குறளும் ஊன் வேள்வியையுங் கொலையை யும் எவ்வளவு உரமாகத் தடிந்திருக்கின்றன என்று விரித்து உரைக்க வேண்டுவதில்லை. இதனால் விளங்குவதென்னை? புத்தர் பெருமான் செந்நெறியின் வெற்றியே விளங்குகிறது. நாலடியாருந் திருக்குறளும் பௌத்த நூல்களா என்னும் ஐயம் ஈங்குள்ள சிலர்க்குப் பிறக்கலாம். சமணமும் பௌத்தமும் அறத்தில் பெரிதும் வேறுபடுவனவல்ல. மிகச் சிறு வேறுபாடு களே யுண்டு. அவ்வேற்றுமைகளை ஈண்டுக் கருதல் அநாவசியம். உயிரைப்பற்றி இருசாரார்க்கும் அடிப்படையான வேற்றுமை யுண்டு. சமணர் உயிருண்மையை வலியுறுத்துவர்; பௌத்தர் அதை மறுப்பர். திருவள்ளுவர் சமயம் நாலடியார் சமண நூலென எல்லாரும் ஏற்றுக் கொள்கி றார். திருக்குறளை ஒவ்வொரு சமயத்தாருந் தத்தஞ் சமயநூல் என்று செப்புகிறார். எனது சிற்றாராய்ச்சியில் திருக்குறள், சமண அறத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த பொது நூல் என்று விளங்கியிருக்கிறது. புத்தர் பெருமான் அருளறம் திருக்குற ளில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருத்தலே ஈண்டுக் கருதற் பாலது. அறத்தில் சமண பௌத்த சமயங்களில் எவ்வித மயக்க மும் எவருங் கொள்ள வேண்டுவதில்லை. 3. ஐம்பெருங் காப்பியங்கள் இனி ஐம்பெருங் காப்பியங்களை எடுத்துக்கொள்வோம். இவைகளை ஈங்குக் கால முறைபற்றிக் கொள்ளவில்லை; வழக்கு முறைபற்றியே கொள்கிறேன். சிந்தாமணி சிந்தாமணி சமண நூல் என்பது எவரும் அறிந்ததொன்று. ஆனால், அந்நூற்கண் பௌத்த அறங்கள் இடம் பெறாம லில்லை. அதன்கண் போந்துள்ள அறங்கள் யாவும் பௌத்தத் துக்கு அரண் செய்வனவேயாகும். சமண அறங்களில் பௌத்த அறங்களும் ஒன்றிவிடும். சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் நினைவு தோன்றும்போதே எனது உள்ளம் இன்பக் கடலாடு கிறது. அவ்விரண்டு நூல்களையும் ஈன்ற தமிழ்நாட்டை மீண்டுங் காணவேண்டுமென்பது எனது தணியாக் காதல். சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தைச் சமண நூல் என்று ஆராய்ச்சிக்காரர் பலர் கூறுப. மணிமேகலை யென்னும் நூல் சிலப்பதிகாரத்தோடு பெரிதுந் தொடர்புடையது. மணிமேகலை பௌத்த நூல் என்பது வெள்ளிடைமலை. இதனால் சிலப்பதிகாரத்தையும் பௌத்த நூலெனக் கூறுவது பொருத்தமெனச் சில அறிஞர் கருதுகிறார். சிலப்பதிகாரம் சமண நூலாயினுமாக; பௌத்த நூலாயினுமாக. அதன்கண் புத்தர் பெருமான் அருளறம் முற்றும் மலிந்து கிடக்கிறது. பௌத்த தர்மமே சிலப்பதிகாரமென்னும் நாடகத் தமிழ் நூலாக உருக்கொண்ட தென்று நான் கூறுவேன். புத்தர் பெருமான் உலகிற் கறிவுறுத்திய அறம் சிலப்பதிகாரத்தில் எவ்விடத்தில் பொலியாமலில்லை? கண்ணகியும் கோவலனும் சோழநாடு விடுத்துப் பாண்டி நாடு நோக்கி நடந்த வழிகளையுஞ் சோலைகளையும் காடுகளையும் வருணிக்கப் புகுந்த இளங்கோ அடிகள், அவைகளெல்லாவற்றையும் புத்தர் பெருமான் தர்ம மயமாக்கி விட்டனர். வழிநடை வருணனையிலும் சிலப்பதிகாரத் தில் பௌத்த அறங்கள் ஒழுகி வழிகின்றனவெனில், மற்றப் பகுதி களில் அறநிலைகளை அடுக்கி அடுக்கிக் கூறவும் வேண்டுமா? மணிமேகலை மணிமேகலை யெனும் அறநிலையத்தை அணுகுவோம். மணிமேகலை அறநிலையமே. மணிமேகலைச் சொல்லெலாம் அறம்; பொருளெலாம் அறம். மணிமேகலையின் நாடெலாம் அறம்; காடெலாம் அறம். புத்தர் பெருமானைத் தமிழிற் காட்டும் ஒரு மணிநிலையம் மணிமேகலை என்று மொழிகிறேன். பௌத்தமும் பூதவாதமும் மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை யென்றொன்றுண்டு. அதன்கண் அந்நாளில் தமிழ் நாட்டில் நிலவிய சமயங்களெல்லாம் மிளிர்கின்றன. அவைகளைக் குறித்து எனது கருத்தை ஈண்டு வெளியிடவேண்டுவது அவசிய மென்று தோன்றவில்லை. ஆனால் பௌத்தத்துக்கும் பூதவாத மெனும் உலகாயதத்துக்கும் வேற்றுமையுண்டா இல்லையா என்பதைப்பற்றி இரண்டோர் உரையாதல் பகராது மேலே செல்ல எனது மனமெழவில்லை. பௌத்தத்துக்கும் பூதவாதத் துக்கும் வேற்றுமையுண்டு. அவ் வேற்றுமையை மணிமேகலை வாயிலாகவே எடுத்துக் காட்டுகிறேன். மணிமேகலை அம்மையார் ஒவ்வொரு சமயக் கணக்கரை யும் அவரவர் சமய உண்மையை உரைக்குமாறு கேட்டது போலப் பூதவாதியையும் நோக்கி அவனது கொள்கையைக் கூறுமாறு கேட்டனர். அப்பொழுது பூதவாதி சொற்றது வருமாறு : பூத வாதியைப் புகனீ யென்னத் தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங் குற்றிடும் பூதத் துணர்வு தோன்றிடும் அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகளின் வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும் உயிரில் லாத உணர்வில் பூதமும் அவ்வப் பூத வழியவை பிறக்கு மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே கண்கூ டல்லது கருத்தள வழியும் இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே பொய்ம்மை மறுமை யுண்டாய் வினைதுய்த்தல். இவ்வுரை கேட்ட அம்மையார், புத்த பீடிகையால் நாம் பழம்பிறப்புணர்ந்தது அநுபவத்திலிருக்கிறது. இவரென்ன இம்மையில்லை; மறுமையில்லை; மறுபிறப்பில்லை; கர்ம மில்லை என்று கழறுகிறார் என்று நகைத்தனர். என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு நன்றல வாயினும் நான்மா றுரைக்கிலேன் பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின் அறிந்தோ ருண்டோ வென்றுநக் கிடுதலும் மணிமேகலை அம்மையார் நகைத்தல் கண்ட உலகாயதன், தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினு மைய லுறுவார் மனம்வே றாம்வகை ஐய மன்றி யில்லை யென்றலும் மீண்டும் அம்மையார் அவனை நோக்கி, நின்றந்தை தாயரை யனுமானத் தாலல திந்த ஞாலத் தெவ்வகை யறிவாய் மெய்யுணர் வின்றிமெய்ப் பொருளுணர் வரிய ஐய மல்ல திதுசொல் லப்பெறாய் என்று கூறி அவனுக்கு அறிவு கொளுத்தினர். பௌத்தம், உலகாயதம் என்று சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர் பௌத்த நூல் ஆராய்ச்சியில்லாதார். நல்வினை தீவினை, இம்மை மறுமை, உயரிய நிர்வாண நிலை முதலியன பௌத்தத்திலுண்டு. இவ்வுண்மை மணிமேகலையை ஒரு முறை வாசிப்போர்க்கும் இனிது புலனாகும். மெய்யுணர்வு விளங்கியதும் பழம்பிறப்புணர்தல் என்பது பௌத்தத்தின் சிறந்த கொள்கைகளுள் ஒன்று. மணிமேகலைக் காலநிலை மணிமேகலைக் காலத்தில் தமிழ்நாடு அறஞ்செறிந்த செழிய நாடாக அன்றோ பொலிந்தது? அந்நாட்டை மீண்டுங் காண்பேமா? காண முயலல் வேண்டும். மணிமேகலை நமக்கு வழங்கும் அமுதச் செம்பொருள்களைப் பருகாத மக்கள் மக்களா என்று வினவுகிறேன். மணிமேகலையில் எங்கணும் அறம்; எங்கணும் அன்பு; எங்கணும் அருள். மணிமேகலையில் சாதி கடிதல், பலி யொழித்தல், உயிர்க்கொலை நிறுத்தம் முதலியன யாண்டும் யாண்டும் மிளிர்கின்றன. மணிமேகலையில் ஒப்புர வில்லா இடமுண்டோ? பழம்பிறப்புணர்வோ மணிமேகலை யில் பரந்தொளிர்கிறது. அவ்வற நூலின் மாண்பை என்னென்று சொல்வேன்? வளையாபதி இந்நூல் முற்றிலுங் கிடைக்கவில்லை. ஆன்றோர் சிலர் எடுத்துக்காட்டாகக் கொண்ட மிகச் சில பாக்களே நாட்டில் உலவுகின்றன. அச் சில பாக்களிலும் பௌத்த அறம் உயிர் நாடியாக ஓடிக்கொண் டிருக்கிறது. குண்டலகேசி குண்டலகேசி பௌத்த காவியம் என்பதில் சிறிதும் ஐய மில்லை. இக் காவியம் முழுவதும் பெறும் பேற்றை இற்றைநாள் தமிழ் மக்களாகிய நாம் இழந்து நிற்கிறோம். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நீலகேசி யென்னுஞ் சமண நூல் கொண்டு குண்டலகேசியைப் பௌத்த நூல் என்று நிறுவலாம். இப்பொழுது வழக்கிலுள்ள குண்டலகேசிப் பாக்களில் பழம் பௌத்தம் ஒளிர்வது கண்கூடு. பின்னாளில் அதாவது அறநெறி குன்றிய நாளில், சமணர்கட்கும் பௌத்தர்கட்கும் பெரும் பெருஞ் சமய வாதங்கள் நடந்தமையான், ஈண்டுப் பழம் பௌத்தம் என்று சொல்லலானேன். சமணமும் பௌத்தமும் பின்னாளில் அறமென்னும் உயிர்நாடி யறப்பெற்று, வெறும் பெயர் என்னும் உடலங்களாக மட்டும் நிலவலாயின. ஒவ்வொரு சமயமும் நாளடைவில் உயிர்நாடியற்று உலவுவதாகிறது. காரணம் மக்களிடத்துள்ள குறைபாடே யாகும். இது நிற்க. 4. திருமுறைகள் இனித் திருமுறைகளை நோக்குவோம். திருமுறை என்றதுஞ் சிலர்க்குக் கலக்கம் உண்டாகலாம்; திருமுறைக் காலந்தானே தமிழ்நாட்டில் பௌத்தத்தைச் செகுத்த காலம் என்று சிலர் கருதலாம். சமயக் கணக்கனாக ஈங்கு நான் நிற்கவில்லையென்று தொடக்கத்திலேயே சொல்லி யிருக்கிறேன். எக்காரணம் பற்றித் திருமுறைக்காரர்கள் பௌத்தத்தைச் சாய்த்தார்கள் என்பது போன்ற ஆராய்ச்சியில் ஈண்டு யான் நண்ணப் போவதில்லை. m¡fhuz« gyKiw gy Él§fËš v‹dhš ngr¥g£oU¡»wJ.; எழுதப்பட்டிருக்கிறது. எடுத்துக் கொண்ட பொருள் தமிழ் நூல்களில் பௌத்தம் என்பது. திருமுறைகளென்னுந் தமிழ் நூல்களில் பௌத்த தர்மம் எவ்வளவு புகுந்திருக்கிறது என்பதே நமது ஆராய்ச்சிக்குரிய பொருள். அவ்வழி நின்று பணியாற்றுவது எனது கடன். ஒவ்வொரு திருமுறையையுந் தனித் தனியாக எடுத்துப் பேசிக் கொண்டு போகக் காலமில்லை. எனக்குக் குறிக்கப் பெற்ற காலவரையும் நெருங்கி என்னை நெருக்கப்போகிறது. இந்நிலை யில் தாலிபுலாக நியாயம்பற்றி இரண்டொன்று குறிப்பதே சால் புடைத்து. திருஞான சம்பந்தர் திருஞானசம்பந்த சுவாமிகள் முதலியோர் சமண பௌத்தங் களை மிக உரமாகத் தாக்கி மறுத்திருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் பௌத்த தர்மத்தைக் கொண்டார்களா இல்லையா எனில், கொண்டார்கள் என்றே யான் விடையிறுப்பேன். திருஞான சம்பந்த சுவாமிகள், இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும் தன்னவுரு வாமென மிகுத்ததவன் நீதியொடு தானமர்விடம் என்று தமது இறைவனை, நீதிபலவும் தன்னவுருவாமென மிகுத்த தவன் என்று போற்றி யிருக்கிறார்கள். இக்கருத்து, பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நடுநிலையில் நின்று உண்மை ஆய்வோர் எவருங் கூறுவர். திருநாவுக்கரசர் தயாமூல தர்மன் என்னுஞ் செம்மொழி திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் மிளிர்கிறது. இம்மொழி பௌத்த தர்மத்தை முதலாகக் கொண்டது என்று சொல்ல வேண்டுவ தில்லை. நீதியால் நினைசெய் நெஞ்சே, சீலமும் நோன்பு மாவார், நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவி லேனே எனவரூஉஞ் சுவாமிகளின் பிறமொழிகளையும் உற்று நோக்குக. சுந்தரமூர்த்தி தாழாதறஞ் செய்ம்மின் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அறத்தைப் பொருளாக அருளிச் செய்திருக்கிறார்கள். சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றில் பௌத்த சமயத்துக்கு அரண் செய்யத்தக்க வேறு சில குறிப்புகளுமுண்டு. அவையிற்றுள் இரண்டை ஈண்டுச் சிறப்பாகப் பொறிக்கிறேன். ஒன்று, அடிகள் கைலையில் காரிழையார் இருவரைக் காமுற்ற காரணத்தால் இவ்வுலகில் மனிதப் பிறவி யெய்தி அவ்வின்பந் துய்த்தது; இன்னொன்று, அவர் சங்கிலியார் பொருட்டு மகிழ மரத்தடி யில் கூறிய உறுதிமொழியினின்றும் பிறழ்ந்த காரணத்தான், கண்ணிழந்த நாள்தொட்டு ஆண்டவனைச் சீலமே என்றும், பண்ப என்றும் விளித்து விளித்துப் பாடியது. இன்னும் மற்றத் திருமுறைகளிலும் புத்தர் பெருமான் அறத்தை அறிவுறுத்துஞ் செம்மொழிகள் பலவுண்டு. அவைகளை இங்கே விரிக்கிற் பெருகும். ஊமைப் பெண் மாணிக்கவாசக சுவாமிகள் வரலாற்றில் ஈண்டொன்று நினைவிற்கு வருகிறது. அதாவது மாணிக்க வாசகனார் ஊமைப் பெண்ணைப் பேசவைத்துப் பௌத்தர்களை வாதில் வென்றன ரென்பது. இதற்குச் சான்றாகப் பூசுவதும் வெண்ணீறு என்னுந் திருப்பதிகங் காட்டப்படுகிறது. அப் பதிகத்தில் வினாவிடைகள் பெரிதுமிருக்கின்றன. ஊமைப் பெண் குறிப்பு யாண்டாதல் உண்டா என்று ஆராய்தல் வேண்டும். அக்குறிப்பே அப்பதிகத்தி லில்லை. வாதவூரடிகள் பௌத்த மதத்தைச் சிலவிடங்களில் தாக்கி யிருத்தல் உண்மை. அத்தாக்குதல் கண்டு பின்னே வந்தவர்கள் பலவிதமாகப் புராணங்கள் எழுதியிருத்தல் வேண்டுமென்று நான் ஊகிக்கிறேன். கழுவேற்றிய கதை திருஞானசம்பந்த சுவாமிகள் சமணர்களைக் கழுவேற்றிய கதையும் இத்தன்மைத்தே. திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்பதற்குப் போதிய அகச்சான்றில்லை. அகச் சான்று கிடைத்தாலன்றி அவ் வரலாற்றை யான் சரித்திர அமைப்பு முறையில் கொள்ளேன். பின்னே எழுதப்பெற்ற புராணங்களைக் கொண்டு பலவாறு பிதற்றல் அறிவுடைமை யாகாது. புராணங்களில் பல திரிபுகள் உண்டு என்பதைக் கவனித்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக இரண்டொன்று குறிக்கிறேன். புராணப் புரட்டு சங்க இலக்கியங்கள் ஆர்க்காடு என்று சாற்றியிருப்பதைப் புராணங்கள் ஆறுகாடு என்று கொண்டு, ஆறு முனிவர்கள் தவங்கிடந்ததாகக் கதைகட்டி யிருக்கின்றன. ஆர்க்காடு எனில் ஆத்திமரம் நிரம்பிய காடு என்பது பொருள். அப்பர் சுவாமிகள் சிங்கமே என்று இறைவனை விளித்துப் பாடியிருத்தலைக் கண்ட, பின் வந்த பௌராணிகர்கள் அப்பர் சுவாமிகளை ஆண்டவன் சிங்கமாக விழுங்கினான் என்று எழுதி வைத்தார்கள். அவ்வெழுத்தை ஆதாரமாகக் கொண்டு சிலர் ஓவியம் வரைந் திருக்கிறார்; சிலர் பாடல் பாடியிருக்கிறார்; சிலர் திருவிழா நடாத்துகிறார். ஏறக்குறைய போக்குவரவுச் சாதனங்கள் பெருகி யுள்ள இந்நாளிலேயே பத்திரிகையுலகில் எவ்வளவு திரிபுகளைக் காண்கிறோம்! போதிய சாதனங்களில்லா அந்நாளில் நிகழ்ச்சி முறைகள் திரிபுபடுதல் இயல்பே. அத்திரிபுகளை நம்புவோர் நம்புக. ஆராய்ச்சியுலகம் அவைகளைப் பொருளாக்கொண்டு இடர்ப்படலாகாதென்பதை ஈண்டு வலியுறுத்துகிறேன். ஞானசூரியன் இப்பொழுது ஞானசூரியன் என்றொரு நூல் தமிழ் நாட்டில் உலவுகிறது. அதன் ஆசிரியரை யான் அறிவேன். அந் நூற்கண் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியதைப் பற்றிய குறிப்புப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவ்விடத்தில், அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாது செயத்திரு வுள்ளமே என்னுந் தேவாரத்திலுள்ள திறங்கள் என்னுஞ் சொல் சிரங்கள் என்று மாற்றப்பட்டிருத்தல் கண்டேன். இளமையில் நான் மனப்பாடஞ் செய்தது தவறோ என்று ஐயுற்று என்னிட முள்ள மூன்று பிரதிகளைத் திறந்து பார்த்தேன். அவைகளில் திறங்கள் என்ற சொல்லே மிளிர்கிறது. வேறிடங்களிலுள்ள ஏடுகளையும் பார்த்தேன். அவைகளிலும் திறங்கள் என்ற சொல்லே காட்சி யளிக்கிறது. மணிமேகலையில் சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை என்றொன்றிருக்கிறது. இதனால் சமயச் சார்பில் திறம் என்னுஞ் சொல்லாட்சி அற்றைநாளி லிருந்த தாகத் தெரிகிறது. பின்னே நூலாசிரியரை நேரே கண்டு கேட்டல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஒருநாள் வழக்கம்போல அந்நூலாசிரியர் கவளி கமண்டலத்துடன் எனது நிலையம் போந்தார். அன்று அவர் கவளியில் தேவாரத் திருமுறை இருந்தது தான் வியப்பு. இஃதென்ன நூல் என்று கேட்டேன். தேவாரம் என்றார். உடனே அத்தேவாரத்தை வாங்கி இப் பதிப்பிலிருப்பது திறமா சிரமா என்று மிக விரைவுடன் பார்த்தேன். அதன் கண்ணும் திறமென்றே இருத்தல் கண்டேன். அது கண்டு, சுவாமிகளே! ஞானசூரியனில் திறம், சிரமாக மாற்றப்பட்டதன் நோக்கம் என்னை? என்று கேட்டேன். அப்படி யொன்றுமிராதே என்று அவர் பதிலிறுத்தார். உடனே ஞான சூரியனைத் திறந்து அவ்விடத்தைக் குறித்துக் காட்டினேன். இஃது அச்சுப் பிழையாயிருத்தல் வேண்டும். இந்நூல் மலை யாளத்திலும் எழுதப்பட்டிருக்கிறது என்று தமது கவளியைப் பிரித்து அந்நூலை எடுத்துத் திறங்களை என்று அவர் படித்துக் காட்டினார். எனக்கு மலையாள எழுத்துத் தெரியாது. அங்ஙன மாயின் சுவாமிகள் பிழை திருத்தஞ் செய்து பத்திரிகைகட்கு அனுப்புவது அறம் என்று கூறினேன். பின்னை 1அப்பிழை திருத்தம் பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்தது. அச்சிரம் எனது கண்ணுக்குப் புலனாகாதிருந்தால், திறத்தின் கதியென்ன வாயிருக்கும்? பின்வருவோர்க்கு அது பெருவிருந்தா யிருக்கும்! பின்னாளில் புத்திபூர்வமாவும் அபுத்திபூர்வமாகவும் பிழை நிகழ்தல் இயல்பு. அப்பிழைபாடுகளைச் சரித்திர உலகிலேற்று வது ஆராய்ச்சிக்காரர் செயலன்று என்று சொல்கிறேன். சரித்திர உலகம் என்பது தனியாக நிற்பது. அதற்குத் துணை செய்யுங் கருவிகளுஞ் சான்றுகளுமே கொள்ளற்பாலன. சரித்திர உலகிற்கும் ஆராய்ச்சி உலகிற்கும் அடங்காது கடனாற்றுவோரைப் பற்றி நாம் கவலையுற வேண்டுவதில்லை. பெரியபுராணம் திருமுறைகளுள் இறுதியது பெரியபுராணம். இப் புராணத் துள்ளும் பௌத்த தர்மம் நுழைந்திருக்கிறது. இப்புராணம் வேள்வியை ஊனமில் வேள்வி என்று புகல்கிறது. ஊன் வேள் வியை ஊனமில் வேள்வியாகச் செய்தது எது? புத்தர் பெருமான் அறமன்றோ? திருமுறைகள் பௌத்த மதத் தத்துவங் களை மறுத்துரைப்பினும், பௌத்த சீலங்களை ஏற்றுக்கொண் டிருத்தல் கருதத்தக்கது. 5. கம்பராமாயணம் கம்பராமாயணத்தைத் தனியாக மேலே குறிப்பிட்டிருக் கிறேன். கம்பராமாயண காலத்தை ஒரு தனிக்காலமென்று கூறுவது மிகையாகாது. வடமொழியும் தென்மொழியும் தமிழ்நாட்டில் முழுஆக்கம் பெற்றிருந்த காலத்தில் கம்பர் புலவராக விளங்கினவர். இருமொழி நாகரிகக் குறிப்புக்களையுங் கம்பராமாயணத்தில் பரக்கக் காணலாம். கம்பர் சமண பௌத்த காவியங்களை நன்கு பயின்றிருந்தார் என்பதற்கு அவர் இராமா யணத்தில் பல சான்றுகளுண்டு. அவைகளுள் சிலவற்றையாதல் உங்கள்முன் கிளத்த நேரமில்லை. இரண்டொரு குறிப்பை மட்டும் உங்கள் முன் கிளத்துகிறேன். சீதா தேவியாரை இராவணன் தூக்கிச் சென்ற முறையை வான்மீகி எவ்வாறு சொல்லியிருக் கிறார்? கம்பர் எவ்வாறு சொல்லியிருக்கிறார்? சகோதரிகளே! சகோதரர்களே! சிந்தியுங்கள். பெண்ணை இழிவுபடுத்தக் கம்பர் நெஞ்சம் எழ வில்லை. இம்மாற்றத்துக்குக் காரணம் யாது? கம்பர் உளத்திற் புகுந்துள்ள தமிழ் பௌத்த அறமேயென்று யான் சொல்வேன். மற்றுமொன்று கூற விரும்புகிறேன். வான்மீகி இராமாயணம், இராமன் சீதை முதலியோர் புலால் உண்டதாக உரைக்கிறது. கம்பராமாயணம் அங்ஙனம் அறையவில்லை. இதற்கு என்ன காரணம்? மேற்சொற்ற காரணமே. பௌத்த அறம் தமிழ் நூல்களில் புகுந்து செய்யும் நலத்தை என்னென்று நவில்வேன்? 6. புராணங்கள் இனிப் புராண காலத்தின்மீது புந்தி செலுத்துவோம். புராண உலகந் தோன்றிய காரணத்தை உற்றுநோக்கல் வேண்டும். புராண உலகத் தோற்றத்துக்குக் காரணமாக நின்றது பௌத்த மதமேயாகும். சாதாரண மக்கட்குப் பௌத்த தர்மம் பயன்படும் பொருட்டுப் புத்தர் ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன. அவைகள் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. கதைகள் பெரும்பான்மையோர் நெஞ்சைக் கவர்வது இயல்பு. ஜாதகக் கதைகளால் விளையும் பயன்களைக் கண்ட ஆரியர்கள் புராணக் கதைகளை எழுதி னார்கள். அப்புராணங்கள் பின்னே தமிழுலகிலும் புகுந்தன. புராணக் கதைகள் அவ்வக்கால மக்கள் மனோநிலைக் கேற்ற வண்ணம் புனையப்படுவன. ஆதலால், கதைகளின் அமைப்பு எங்ஙன மாயினுமாக. அப்புராண உலகம் பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பதே ஈண்டுவேண்டற் பாலது. புராணங்களில் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், தவம், அன்பு, அறிவு, மெய் என்னும் எட்டு மலர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பல காணலாம். முப்பத் திரண்டு அறங்கள் யாண்டிருந்து முளைத்தன? உயிர்கட்கு உதவல் என்னுங் கருத்துக்கே பிறப்பிடம் பௌத்த மதமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அக்கருத்து, பின்னே பல சமயங்களில் நுழைந்தது. கொல்லாமை ஜீவகாருண்யம் முதலியன எங்கெங்குள்ளனவோ ஆங்காங் கெல்லாம் பௌத்த தர்மமுண்டெனக் கொள்க. புராணங்களில் அறவொழுக்கப் பாக்கள் அளவின்றிக் கிடக்கின்றன. அவை யாவும் பௌத்த மதத்தின் செல்வாக்கைக் குறிப்பன என்பது எனது உள்ளக் கிடக்கை. அறமே மறங்கண் முழுதழிக்கும் அறமே கடவு ளுலகேற்றும் அறமே சிவனுக் கொருவடிவம் ஆகுஞ் சிவனை வழிபடுவோர்க் கறமே யெல்லாப் பெரும்பயனும் அளிக்கும் யார்க்கும் எவ்விடத்தும் அறமே யச்சந் தவிர்ப்பதென அறைந்தான் சாதா தபமுனிவன் தருமமே யுலகம் போற்றச் சகலகா ரணம தாகுந் தருமமே யழியா தென்றுந் தாபர மாகி நிற்குந் தருமமே தனைவேட் டோர்க்குச் சவுக்கிய மனைத்துநல்குந் தருமமே முத்தி சேருஞ் சாதன மென்றுட் கொள்வான். இப்புராணப் பாடல்களை நோக்குக. அறவொழுக்கத்துக்கு மாறுபட்ட புராணங்களுஞ் சிலவுண்டு. அவை அறம் பொலி யாத நெஞ்சுடைய மறவோரால் எழுதப்பட்டன என்று யான் சொல்வேன். 7. பிற்பட்ட நூல்கள் பிற்பட்ட நூல்களின் பெயர்களில் சிலவற்றையாதல் குறிப் பிடவும் அஞ்சுகிறேன். குறிக்கப்பெற்ற காலவரை நெருங்கி விட்டது. தாயுமான சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் முதலிய வர்கள் பாக்களில் புத்தர் பெருமான் எழுந்தருளியிருத்தல் கண்கூடு. கொல்லாமை எத்தனைக் குணக்கேட்டை நீக்கும் கொல்லா விரதங் குவலயமெல் லாமோங்க எல்லார்க்குஞ் சொல்லுவ தென்னிச்சை பராபரமே கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே கொலைகளவு கட்காமங் கோபம்விட் டாலன்றோ மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே எனவரூவுந் தாயுமானார் திருவாக்குகளை நோக்குக. அவைகளில் பௌத்த தர்மம் தாண்டவம் புரிவதைக் காண்க. இராமலிங்க சுவாமிகள் ஆண்டவனை அருகர் புத்தராதி என்பேன் என்று, வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். அக் கருத்தடங்கிய பாடல் வருமாறு:- பெருகியபே ரருளுடையா ரம்பலத்தே நடிக்கும் பெருந்தகையென் கணவர்திருப் பேர்புகலென் கின்றாய் அருகர்புத்த ராதியென்பேன் அயனென்பே னாரா யணனென்பேன் அரனென்பே னாதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரபிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிரை வென்பேன் சுத்தசிவ மென்பனிவை சித்துவிளை யாட்டே. பௌத்தமும் ஹிந்து மதமும் சகோதரிகளே! சகோதரர்களே! இன்னும் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளையிட விரும்புகிறேனில்லை. இப்பொழுது உலகம் சமரசத்தை விரும்புகிறது. அச்சமரசத்துக்குப் பௌத்தத் தின் துணை இன்றியமையாதது. பௌத்த தர்மம் எச்சமயத்தி லில்லை? எல்லாச் சமயங்களிலும் அது நுழைந்திருக்கிறது. சிராத்தம் ஹிந்து மதத்தில் பௌத்த தர்மங்கள் பல நுழைந்திருக் கின்றன. சிராத்த காலங்களில் கன்றுக்கால்கள் முள்ளம்பன்றி முதலியன பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பொழுது அவைக ளிடத்தில் வாழைத்தண்டு பலாக்காய் முதலியன புகுந்திருக் கின்றன. இம் மாற்றத்துக்குக் காரணம் யாது? பௌத்த தர்மமே யாகும். கோயில்கள் சைவம் வைணவம் என்னும் மதங்களின் சார்பாகப் பின் னாளில் அமைந்துள்ள கோயில்கள் முதலியனவும் பௌத்தத் தினின்றும் அரும்பின என்று ஆராய்ச்சிக்காரர் கூறுகிறார். ஈண்டுத் தலைமை வகித்துள்ள பெரியார் இற்றைக்கு இருபத்தைந் தாண்டுகட்கு முன்னர் இராயப்பேட்டையில் நிகழ்த்திய சொற்பொழிவொன்றில், அரங்கநாதர் புத்தரே என்று விளக்கிக் காட்டினார். அப்பொழுது யானும் அச்சொற் பொழிவைச் செவி மடுத்தேன். சைவ வைணவாலயங்களின் பிற்கால அமைப்பு, புத்தருக்கு முன்னர் இருந்ததென்று தெரிய வில்லை. வேத காலத்தில் தற்போதைய ஆலய வழிபாடில்லை என்பது வெள்ளிடைமலை. சிவபிரான் கோயில்களின் விழாக்களை உற்றுநோக்கி ஆய்ந்தால், புத்தர் வாழ்வு செவ்விதிற் புலனாகும். சென்ற திங்கள் திருமயிலையில் கபாலீச்சுரத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்றது. அதில் தேர்விழா முதலியன நடைபெற்ற பின்னைப் பிச்சாண்டி சேவை யென்றொன்று நடைபெறுகிறது. அஃது அறிவுறுத்துவதென்னை? கௌதமர் அரசவாழ்வு நீத்து நிர்வாணநிலை யெய்தியதை யன்றோ அறிவுறுத்துகிறது? பிச்சாண்டி சேவைக்கு முந்திய சேவைகள் புத்த பெருமானின் முன்னைய அரச நிலையை அறிவிப்பன. பிச்சாண்டி சேவை அவரது பின்னைய அறநிலையைத் தெரிவிப்பது. இவ்வாறு பௌத்தம் பல துறைகளிலும் ஹிந்து மதத்தில் நுழைந்திருக் கிறது. மகாத்மா காந்தி ஆனால் ஹிந்து மதத்தில் நுழைந்த அறநுட்பங்கள் பல இந்நாளில் போலியாய்விட்டன. எனவே, மீண்டும், பழம் பௌத்த தர்மந் தேவையென்று நான் சொல்ல வேண்டுவ தில்லை. பௌத்தம் இந்தியாவினின்றும் துரத்தப்பட்டது என்று சிலர் சொல்கிறார். அது முற்றிலுந் தவறு. பௌத்தம் ஹிந்து மதத்தில் நுழைந்தேயுள்ளது. ஹிந்து மதத்திலுள்ள குப்பை களைத் தொலைக்கவே பௌத்தம் தோன்றிற்று. சமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்துடன் பிணக்குறுவனவல்ல என்றும், சமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்தைப் போதியளவு சீர்திருத்தின என்றும், பௌத்தம் அகத்தூய்மையை நேர்மை வழியில் வலியுறுத்திற்று என்றும், பௌத்தம் அகத்தூய்மைக் குரிய தென்றும், அது போலிச் செருக்குயர்வுகளைக் களைந்த தென்றும் மகாத்மா காந்தி பன்முறை கூறியிருக்கிறார். கடவுள் கடவுளைப் பற்றி ஹிந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் பிணக்குண்டு என்று சொல்லப்படுகிறது. ஹிந்துக்கள் சிவபெருமா னையும் திருமாலையும் வழிபடுவது போலப் பௌத்தர்களும் புத்தரை வழிபடுகிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் கடவுளைப் படைப்பாதிப் தொழில் புரியும் ஒன்றாகக் கொள்கிறார்கள். பௌத்தர்களோ கடவுளை அவ்வாறாகக் கொள்வதில்லை. அவர்கள் கடவுள் என்பதை அறமாகக் கொள்கிறார்கள். இத் தத்துவ முறையிலுள்ள வேற்றுமைகளைச் சமய வாதிகளுக்கு விட்டுவிடலாம். அவைகளைப் பற்றி ஈண்டு விரித்தலே வீணாகும். கடவுள் ஐந்தொழில் புரிவதாயினுமாக; அறமாயினு மாக. வேண்டற்பாலது அகத்தூய்மை. புத்தர் பெருமான் திருவுருவம் அகத்தூய்மைக்குரிய அறத்தை நினைவூட்டும் ஓர் அறிகுறி என்பதே ஈண்டுக் கருதற்பாலது. இப்பொழுது மறந்தேய்ந்து அறம் வளரல் வேண்டும். அவ்வற வளர்ச்சிக்குப் பழம் பௌத்தம் பெருந்துணை என்பதில் ஐயமில்லை. தொண்டர்களின் இயல் பௌத்த அறத்தை வளர்க்கப் புகுந் தொண்டர்கள் பகைமை பொறாமை முதலிய எரிகள் கனன்றெழா முறையில் சேவை செய்தல் வேண்டும். பிற சமயத்தார் மனம் புண்படு முறை யில் எவருந் தொண்டாற்றலாகாது. விலங்கு நீர்மையினின்றும் விலகி மெய்யறிவு விளங்கப்பெறுவதே பௌத்தம் என்பது. பௌத்தம் என்பது, பகைமை பொறாமை முதலிய பேய் நீர்மைக ளினின்றுங் கடந் தொளிர்வது. அத்தகைய ஒன்றைப் பகைமை பொறாமையிற் படுத்தலாகாது. சமரச வுணர்வும், அறவுணர்வுங் கொண்ட பௌத்த தர்மப் பிரசாரம் இப்பொழுது வேண்டும்; வேண்டும். அத்தொண்டாற்ற எழுங்கள்; எழுங்கள். எனக்குத் தந்த காலவரை சிறிது கடந்தும் விட்டது. அன்பர் களே! இதுகாறும் பொறுமையுடன் எனது புன் மொழிகளைச் செவிமடுத்த உங்களுக்கு எனது வணக்கம். எனது பேச்சில் குற்றங் குறைகளிருக்கலாம்; கருத்து வேற்றுமைகளு மிருக்கலாம். யான் மனிதன்; தவறுதலுக்கு ஆளாவோன்; மன்னிக்குமாறு வேண்டு கிறேன்.  சைவத் திறவு அணிந்துரை ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீருல குக்குயி ராவது நன்றுகண் டீரினி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே -திருமூலர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழுமுதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்கவேண்டுவது தலையாயார் கடன். கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மை யுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழிகோலினார் மிகச் சிலர். அம் மிகச்சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக் காரணம் பற்றியே இந்நூற்குச் சைவத் திறவு என்னும் பெயர் சூட்டப்பட்டது. தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையின் நாற்பத்தைந்தாம் ஆண்டு விழா, ஆயிரத்தித் தொள்ளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு, டிசம்பர் திங்கள், இருபத்தெட்டு இருபத்தொன்பதாம் நாட்களில், அடியேன் தலைமையில் நடைபெற்றது, அவ்விழாவில் தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்னுந் திருவாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு அடியேன் தலைமையுரை நிகழ்த்தலானேன். அத் தலைமையுரையைக் கொண்டது இந்நூல். இந்நூலிடை, மாணிக்கவாசகனார் நிலை, திருவண்டப் பகுதி நுட்பம், நினைப்பற நினைத்தலின் விளக்கம், மூவித உடலங்களின் பாகுபாடு, ஒரே கடவுளுண்மை, தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்பது, இறைக்கும் இயற்கைக்கு முள்ள தொடர்பு, சேய் சிவம் என்பது, சமரசம், இறைவனை யுணரும்வழி, இறைவனது சொரூப தடத்த இயல்புகள், காவியங்களின் இன்றியமையாமை, நம்பிக்கையின் அவசியம், ஆராய்ச்சியின் அளவு, சைவத் திறவுள்ள இடம், கடவுளின் அகண்டாகாரப் படம், தோடுடைய செவியன் என்பதின் உள்ளுறை, ஆண்டவன் பெண் ஆண் வடிவமாக இருக்கும் நுட்பம், தோடு விடை மதி சுடலை முதலியவற்றின் உட்பொருள், கோயில்களின் நோக்கம், தற்காலக் கோயில்கள், சாதிப்பேய் நூல்களுங் கோயில்களே என்பது, சீர்திருத்தம், பெரிய புராணம் சீர்திருத்த நூல் என்பது தவப்பேறு முதலிய பொருள்கள் சுருங்கிய முறையில் ஆங்காங்கே விளக்கப்பட்டிருக்கின்றன. உருவ வழிபாட்டின் நுட்பமும், இன்றியமையாமையும் விளக்கமாக இந்நூற்கண் ஓதப்பட்டிருக்கின்றன. இந்நூலைப் படிப்போர்க்கு உருவ வழிபாட்டைப் பற்றிய பலதிற ஐயப்பாடுகள் நீங்குதல் ஒருதலை. கடவுள் நெறியைப் பற்றியும், அந்நெறி யோம்பிய அடியார் களைப் பற்றியும், திருக்கோயில் வழிபாட்டைப் பற்றியும் நாட்டிடைப் பலதிற ஐயந்திரிபு மயக்கங்கள் தோன்றியுள்ள இவ்வேளையில் வெளிவந்த இந்நூலைப் பற்றி ஈண்டு யான் விரிவுரை கூறவேண்டுவதில்லை. பிழை பொறுக்க. ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை - அப்பர் சென்னை 2 . 6. 1929 திருவாரூர்-வி. கலியாணசுந்தரன் சைவத் திறவு தென்னா டுடைய சிவனே போற்றி! எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி! சகோதரிகளே! சகோதரர்களே! அடியேன் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபைக்குப் புதியவனல்லன்; இற்றைக்குப் பதினெட்டாண்டுகட்கு முன்னர் இருமுறை சொற்பொழிவாளனாகப் போந்தேன்; 41-ம் ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேறு பெற்றேன். அத்தலைமைப் பேற்றை மீண்டும் இவ்வாண்டு சபையார் அடியேனுக்கு வழங்கி யிருக்கிறார். சபையார் நல்கிய வரவேற்புக்கும், மொழிந்த அன்புரைக்கும் எனது நன்றியறிதலான வணக்கம். 1924-ம் ஆண்டில் தலைமை வகித்தபோது சைவத்தின் சமரசம் என்னும் பொருள் பற்றி முன்னுரை நிகழ்த்தினேன். அத் தலைமையுரை ஒரு நூலாகித் தமிழுலகில் உலவுவது உங்கட்குத் தெரியும். அதன்கண் சைவ சமயத்தின் சமரசம், பொருளுண்மை, அன்புநிலை தொண்டு முதலியன ஓதப்பட் டிருக்கின்றன. இப்பொழுது எப்பொருள் பற்றி முன்னுரை நிகழ்த்தலா மென்று உன்னிப் பார்த்தேன். நேற்றிரவு சபையார் அடியேனை வரவேற்றபோது, தென்னா டுடைய சிவனே போற்றி - எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி! என்னுந் திருமொழியை முழக்கினர். அம் முழக்கம் என்னுள்ளத்தில் பசுமரத் தாணிபோல் பதிந்தது. அப் பெருமொழியைக் குறிக்கோளாகக் கொண்டு இப்பொழுது தலைமையுரை நிகழ்த்தலாமென்று கருதுகிறேன். பொருண்மீது கருத்துச் செலுத்துதற்கு முன்னர், அப் பொருண்மொழியை உலகிற்கு அருளிய ஆசிரியர் நிலையைச் சிறிது ஆராய வேண்டுவது எனது கடனென உணர்கிறேன். மாணிக்கவாசகனார் தென்னா டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்னும் அருண்மொழியைத் திருவாய் மலர்ந்தருளிய மாணிக்கவாசகனார் எத்தகையினர் என்பதும், எந்நிலையினர் என்பதும் ஆராயற்பாலன. மாணிக்கவாசகனார் நிலையை அளந்துணர்தற்கு அவர் அருளிய திருவாசகத்தைக் கருவியாகக் கொள்வதே சிறப்பு. திருவாசகத்தில் பல இடங் களில் அவரது நிலை புலனாகிறது. இரண்டோரிடங்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடலாமெனக் கருதுகிறேன். இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தான்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே. நினைப்பற நினைத்தல் இத் திருவாசகத்தில் நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை என்னும் பகுதியை ஊன்றி நோக்குவோமாக. ஆண்டவனல்லால் பிறிதும ற்றின்மை என்னும் நிலை எப்பொழுது கூடும்? நினைப்பற நினைக்கும் நிலையில் அப் பெருநிலை கூடுமென்க. நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சில் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் என வரூஉம் திருமூலர் திருவாக்கும் ஈண்டுக் கருதற்பாற்று. நினைப்பும் மறப்பும் அறும் நிலை ஒன்றுண்டா என்னும் ஐயம் சிலர்க்குப் பிறக்கலாம். இந்நாளில் அவ்வையம் சிறப்பாகப் பிறக்கலாமென்று சொல்வேன். காலத்தின் கோலம்! நாட்டின் நிலை! சமயக்கல்வி குறைபாடு! என்செய்வது! எடுத்துக்கொண்ட மாணிக்கவாசகனார் திருவாக்கையே துருவிப் பார்க்கலாம். நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை என்றருளிய பெருமான் அதற்குரிய வழியையுங் குறிப்பாக அதன்பாங்கர் கோலிக் காட்டியுள்ளார். சென்று சென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்*** என்று நம்பெருமான் அருளிய மெய்யுரையின் நுட்பத்தை எனக்கொரு பெரியார் அறிவுறுத்தியவாறு ஈண்டுக் கிளத்துகிறேன். சென்று சென்று தேய்ந்து தேய்ந்து சென்று சென்று என்ற இருமுறையும், தேய்ந்து தேய்ந்து என்று இருமுறையும் மணிவாசகனார் கூறிய தன் கருத்தென்ன? முதல் சென்று பருவுட (தூலம்)லினின்றும் நுண்ணுட (சூட்சுமம்) லுக்குச் செல்வதைக் குறிப்பது; இரண் டாவது சென்று நுண்ணுடலி னின்றும் முதல் (காரண) உடலுக்குச் செல்வதைத் தெரிவிப்பது. இவ் வாழ்வில் முதலுடல் காட்சி பெற்றதும் உடலெடுப்புக்குத் துணையாக நிற்கும் கன்மமலம் தேய்வுறும். கன்மம் ஒடுங்கியதும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகவுள்ள ஆணவம் அல்லது அவித்தை தேய்வுறும். அவித்தை ஒடுங்கியதும் ஒன்றாம் நிலையுறும். ஆகவே தேய்ந்து தேய்ந்து என்னும் இரண்டில் முன்னையது கன்மத் தேய்வை யும், பின்னையது ஆணவத் தேய்வையும் அறிவுறுத்தல் உணரற் பாலது. இவ்வாறு பருவுடலினின்றும் நுண்ணுடலுக்கும், நுண் ணுடலினின்றும் முதலுடலுக்கும் போதரும் பேற்றையும், அதனால் கன்ம அழிவும் ஆணவ ஒடுக்கமும் உறும் பேற்றையும் அடைவோர் நினைப்பும் மறப்பும் அற்ற ஒரு நிலை எய்துவர் என்று அறிஞர் கூறுப. மாணிக்கவாசகனார் இப் பெருநிலை பெற்ற பெரியாரென்பது, நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை. சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்*** என்று அவர் அருளிய உரைகளால் அறியக் கிடக்கிறது. ஓருடலுணர்வினின்றும் இன்னோருடலுணர்விற்குப் போந்து நிற்றல், கன்மம் ஆணவம் ஒடுங்கல், நினைப்பற நினைத்தல் முதலியன வாய்வேதாந்தமென்று சிலர் எள்ளுவர். இப் பருஉடலுணர்வோடு வாழும் நம்மனோர்தம் புலன்களுக்குப் பொருளாகாத நுட்பங்களை உலகியலறிவு கொண்டும், அறிவியல் துணை கொண்டும் ஆராய்ந்து முடிவு காண முயலல் வேண்டும். அம் முயற்சியில் தலைப்படாது எல்லாம் பொய், புரட்டு என்று சொல்வது மிக எளிது. அவ்வெளிய உலகில் வாழ்ந்து இன்புறுவோரைப் பற்றி நாம் கவலையுற வேண்டுவ தில்லை. அவர் நிலை குறித்து இரங்கி, அவர் உண்மை ஆராய்ச்சி யுலகில் இறங்கி யுழைக்கும் நெஞ்சம் பெறுமாறு ஆண்டவனை வழுத்த வேண்டுவதே நமது கடமை. மூவித உடல் ஐய உலகில் வாழ்வோர்க்கு மற்றவர் தம்தம் ஆராய்ச்சியில் கண்ட நுட்பங்களைச் சொல்ல வேண்டுவது அவரவர் கடமை. எனது சிற்றறிவு கொண்டு சில ஆண்டுகளாக யான் ஆராய்ந்து கண்ட சில நுட்பங்கள், பருவுடல், நுண்ணுடல், முதலுடல் முதலியவற்றின் உண்மையையும், அவ்வவ்வுடலின் உணர்வு நிலையையும், பிறவற்றையும் என்னறிவில் உறுதிப்படுத்தி யிருக்கின்றன. பருவுடல், நுண்ணுடல், முதலுடல் முதலியவற்றின் உண்மைகளை நமது நாட்டு நூல்கள் பல அறிவுறுத்துகின்றன. இப்பொழுது மேல்நாட்டறிஞர் சிலர் அவ்வுடல் நிலைகளை ஆராய்ந்து பலதிற உண்மைகளை வெளியிட்டு வருகிறார். ஸர் ஆலிவர் லாட்ஜ் முதலியோர் புரிந்து வரூஉம் ஆராய்ச்சி நமது சமய ஆராய்ச்சிக்குப் பெருந் துணையாக நிற்கிறது. பருவுடலி னின்றும் ஆவி பிரியும் வேளையில் அதன் படம் இப்பொழுது எடுக்கப்படுகிறது. இம் முயற்சியில் தலைப்பட்டவருள் ஒருவர் பாரி நகரவாசியாகிய டாக்டர் பாரடக் (Dr. Baraduc of Paris) என்பவர். இது குறித்து ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. மனோ நிலை மக்கள் உலகை எடுத்துக் கொள்வோம். மக்கள் வடிவம் எல்லாரும் பெற்றிருக்கிறார். ஆனால் அறிவு நிலையில் எல்லாரும் ஒத்திருக்கிறாரா என்பது உன்னற்பாலது. சிலர் விலங்கு மனம் பெற்றிருக்கிறார்; சிலர் இளைய மனம் பெற்றிருக்கிறார்; சிலர் தெய்வ மனம் பெற்றிருக்கிறார். இன்னும் பலதிற மனமுடையாரு மிருக்கிறார். இத்திற மனமுடையார் ஆராய்ச்சியில் தலைப்படுவ ரேல் அவரவர் தத்தம் அறிவாற்றலுக்கு ஏற்ற அளவினதாகவே பொருளுண்மை பெறுவர். பர்மாவில் ஒரு சிறுவன் கல்லூரி போந்து கணிதம் பயிலா மலே மிகச் சிக்கலான கணக்குகளுக்கு நொடிப்பொழுதில் விடையிறுக்கிறான். ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞன் இயற்கை யாகவே கணித ஞானம் பெற்றிருந்தது. உங்கட்குத் தெரியும். ஓட்டப்பிடாரத்தில் ஓரிளம் பாலகன் திருக்குறள் அவதானஞ் செய்வதை நான் நேரிற் கண்டேன். இவ்விளைஞர்களுக்கு இவ்வாற்றல் யாண்டிருந்து பிறந்தது? இவ்வாற்றல் பெறாத ஒருவன் இவைகளெல்லாம் கட்டுக்கதை; ஏமாற்றம் என்று சொன்னால் அவனை நாம் என்செய்வது? காலஞ்சென்ற கும்பகோணம் இராமாநுஜனார் பெற்றிருந்த கணக்கறிவைத் தான் பெறாத காரணங்கொண்டு ஒருவன் அவ்வறிஞரை இழித்தும் பழித்துங் கூறினால், அக் கூற்றை அறிஞர் எங்ஙனங் கொள்ளல் வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுபோல மெய்யறிவு பெற்ற ஆன்றோர்களை, அவ்வறிவு பெறாத விலங்கு மனமுடையார் ஏசிக் கூறினால் நாம் என் செய்வது? அவ்விலங்கு மனம் மாறித் தெய்வமனம் பெறும்வரை அச் சகோதரர்கட்குச் சில நுட்பங்கள் புலனாதல் அரிதே. பனிக்கட்டி உலகியல் வழிநின்று ஈண்டோர் எடுத்துக்காட்டுத் தரு கிறேன். பனிக்கட்டியை எடுத்துக் கொள்வோம். அஃது எப்படிக் கிடக்கிறது? அஃதோர் எல்லைக்குட்பட்டுத் திண்ணெனக் கிடக்கிறது. அக் கட்டிமீது வெம்மை படரப் படர அது நீராக மாறுகிறது. அந் நீரின்மீது மேலும் மேலும் வெம்மை படியப் படிய அது காற்றாக மாறுகிறது. அக் காற்றின் மீது கதிரொளி பாயப் பாய அஃதொரு அதிதீவிர சக்தியாக மாறுகிறது. முதலில் கட்டியாய், பின்னே நீராய், காற்றாய், அதிதீவிர சக்தியாய் மாறி மாறிச் சென்ற பொருள் ஒன்றா? பலவா? பொருள் ஒன்றே. ஆனால் வெம்மையின் தாக்குதற்கேற்ப அது பன்னிலை எய்கிறது. இவ்வாறே அறிவு ஒன்றாயினும், அதன் நிலை, பருமை நுண்மை முதலிய உடல்களின் சார்புக்கேற்ற அளவில் விளக்க முறும். பனிக்கட்டியாய்க் கிடந்த ஒன்று, பின்னை எங்ஙனம் நீராகி, காற்றாகி, எல்லை, கட்டு முதலியவற்றிலடங்காத வொன் றாக மாறுகிறதோ, அங்ஙனே பருவுடலில் கட்டுப்பட்டுக் கிடக்குந் திண்மை அறிவு, ஆண்டவனருள் ஒளியால் நுண்ணுடல் முதலுடல் முதலிய உடல்களின் சார்பு பெறும்போது, படிப்படியாக அகண்டாகாரத்தைப் பெறும் ஆற்றல் பெறுகிறது. உலகியற் பொருள்களின் நிலை மாறுதலுறுதற் போல, அறிவு விளக்க நிலையிலும் மாறுதலுறுதல் உண்டு. ஆகவே, மக்கள் உட லமைப்பை மட்டுங்கொண்டு எல்லாரும் ஒரு தன்மையினர் என்று கொள்ளல் அறிவுடைமை யாகாதென்க. மக்கள் மனோ நிலையில் பலதிற வேற்றுமைகளை யுடையவரா யிருத்தல் வெள்ளிடைமலை; வெள்ளிடைமலை. மாணிக்க வாசகனார் நிலை இனி, மாணிக்கவாசகனார் நிலைமீது கருத்துச் செலுத் துவோம். அவர் நிலையென்ன? அவர் அறிவு பருவுடலளவிலா கட்டுப்பட்டுக் கிடந்தது? அவர் மாறுதற்குரிய கலைப்புலமை கொண்டா பாக்கள் பாடினர்? அவர் பனிக்கட்டியனைய பருவுடலுணர்வு கடந்து, காற்றனைய முதலுட லுணர்வில் நின்று, கன்மமும் அவித்தையும் கழியப் பெற்று, நினைப்பற நினைக்குந் தன்மையெய்தி, ஆண்டவனல்லால் பிறிது மற்றின்மைகண்டு, மாறா இன்பத்தில் திளைத்து இருந்தவர். அந்நிலையில் நின்று அப்பெரியார் நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற்றின்மை - சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்*** என்று அருளினார். இவ்வருண்மொழி யான் மாணிக்கவாசகனார் நிலை நனி விளங்குதல் உணர்க. மாணிக்கவாசகனார் தம் வாழ்வில் பெற்ற பெரு நிலையை மற்றுமோரிடத்தில் விளக்கியிருக்கிறார். அந்நிலையை அவர் அருண்மொழியில் காணும்போதெல்லாம் எனதுள்ளம் குழைந்து குழைந்து உருகும். அந்நிலையன்றோ பிறவியெடுத்த ஒவ்வொருவரும் உறல்வேண்டும்? அப்பெருவாழ்வை என்றே பெறுவேம்! மாணிக்கவாசகா! நின்னருள் வேண்டும்; வேண்டும். அன்புடைச் சகோதரர்களே! மாணிக்கவாசகனார் நிலையை ஓர்மின்! ஒர்மின்!! உளையா வன்பென் புருக வோலமிட் டலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தி னாற்றே னாக வவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தன னேற்றார் மூதூ ரெழினகை யெரியின் வீழ்வித் தாங்கன் றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடி லொருத்தரும் வழாமை யொடுக்கினன் றடக்கையி னெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியே னாயேன் றானெனைச் செய்தது தெரியே னாவா செத்தே னடியேற் கருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியு மொல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடற் றிரைபுரைவித் துவாக்கட னள்ளுநீ ருள்ளகந் ததும்ப வாக்கிறந் தமுத மயிர்க்கா றோறுந் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழை குரம்பை தோறு நாயுட லகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான வமுத தாரைக ளெற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை யமைத்தன னொள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்ப தாக்கின னென்னிற் கருணை வான்றேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் இப் பொன்மொழிகள் திருவண்டப் பகுதியினிறுதியில் ஒளிர்வன. மாணிக்கவாசகனார் தமது மாயாவுடல், அருளமிழ்தப் பொன்னுடலாக மாறியதை வியந்து வியந்து கூறுகிறார். அலைகடற் றிரையின் ஆர்த்து ஆர்த்து என்றும், அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனம் என்றும், பருகியும் ஆரேன், விழுங்கியும் ஒல்ல கில்லேன் என்றும் அமுதம் மயிர்க் கால் தோறும் தேக்கிடச் செய்தனன் என்றும், அற்புதமான அமுத தாரைகள் எற்புத்துளைதொறும் ஏற்றினன் என்றும், கள்ளூ றாக்கை யமைத்தனன் என்றும், என்னையு மிருப்ப தாக்கினன் என்றும், என்னில் கருணை வான்றேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் என்றும் வரூஉம் அமிழ்த மொழிகளைப் பருகிப் பருகி உன்னுவோமாக. இராமலிங்க சுவாமிகள் இந்நிலையெய்திய மாணிக்கவாசகனாரைப் பருவுடலுணர் வுடன் கட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவன் தன்னுடன் ஒப்ப நோக்கி ஆராய்வது அறிவுடைமை யாகாது. மாணிக்கவாசகனார் ஆனந்த வடிவான மாதவர் என்பதை ஓர்தல் வேண்டும். மாணிக்கவாசகனார் மெய்ந்நிலையை அவர் பின் வந்த பலர் வியந்து வியந்து போற்றியிருக்கிறார். இற்றைக்குச் சுமார் ஐம்ப தாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வதிந்த இராமலிங்க சுவாமிகள் மாணிக்கவாசகரைப் பற்றிப் பாடிய பாக்களை - அன்பர்களே! - படித்துப் பாருங்கள். அப் பாடல்களில் இரண்டோ ரடிகளை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். மாணிக்கவாசகனே ஆனந்த வடிவான மாதவனே என்றும், அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்த பின்னர் - இன்புருவம் ஆயினைநீ எழில் வாதவூரிறையே என்றும், ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடு கின்ற ஆரமுதே என்றும் இராமலிங்கசுவாமிகள் வாதவூரடி களை வழுத்தியிருத்தல் காண்க. மேலே எடுத்துக்காட்டப் பெற்றுள்ள திருவண்டப் பகுதியின் நுட்பத்தை இராமலிங்க சுவாமிகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோ லுணர்ந்து, அதன் பெற்றியைச் சிறப்பாகப் போற்றியிருத்தல் ஈண்டு உன்னற்பாலது. உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ இருவென்றத் தனியகவ லெண்ணமெனக் கியம்புதியே என்று இராமலிங்க சுவாமிகள் திருவண்டப்பகுதியின் உள்ளக் கிடக்கையை உணர வேட்கை மீக்கூர்ந்து நின்றதை ஓர்க. ஆனந்த நிலை நமது ஆனந்த வடிவான மாதவனார் நிலையை எனது புன்மொழியால் இன்னும் புகன்று போதல் வேண்டுமோ? அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக - என்பரமல்லா இன்னருள் தந்தாய் ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே - திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே சிறை பெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந் திருப் பெருந் துறையுறை சிவனே தந்தது உன் றன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் - அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்தம் அருளிப் பிறவிவேர் அறுத்து என்குடி முழுதாண்ட பிஞ்ஞகா ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்துஎன் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே தேனாய் இன்னமுதமாய்த் தித்திக்குஞ் சிவ பெருமான் - தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற்கருள் செய்த ன் - ஊனாரும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே எனவரூஉம் மணிவாசகனார் இன்பமொழிகளால் அவரது நிலை இனிது புலனாதல் காண்க. தென்னா டுடைய சிவனே போற்றி! - எந்நாட் டவக்கும் இறைவா போற்றி! என்னும் அருண்மொழி எந்நிலையினர் திருவாக்கி னின்றும் பிறந்தது? அன்பர்களே! உன்னுங்கள். நினைப்பற நினைந்து ஆண்டவ னல்லால் பிறிதுமற் றின்மை என்னும் ஒரு பெரும் நிலையுற்ற ஒருவர் திருவாய் மலர்ந்தது, தென்னா டுடைய சிவனே போற்றி! - எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி! என்னும் அருண்மொழி. ஒரே கடவுள் பொருள் இனித் தென்னா டுடைய சிவனே போற்றி! - எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி! என்னும் பொருண்மீது கருத்துச் செலுத்துவோம். இப் பெருமொழியின் பொருள் வெள்ளிடை மலை. தென்னா டுடைய சிவன் எந்நாட் டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட் டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத் திருவாசகத்தின் கருத்து. எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப் பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வந் நாட்டின் இயற்கை நிலையை யொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை. ஒரு நாமம் ஓருருவம் ஒன்று மில்லாற்கு ஆயிரந் - திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ என்றார் திருவாசகனார். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னுந் திருமூலர் மொழியும் ஈண்டு உன்னற்பாலது. சிவம் தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னுஞ் செம்மொழியால் வழுத்துகிறோம். சிவம் என்னுஞ் சொல் வட மொழியிலும் வழங்கப்படுகிறது; தென்மொழியிலும் வழங்கப் படுகிறது. தென்மொழி வல்லார் சிவம் என்பதற்குச் செம்மை யென்று பொருள் கூறுகிறார். செம்மை யென்னுஞ் சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக்கொண்ட பொருளுக் கேற்பச் செம்மை யென்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டுங் கொள்கிறேன். தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச் சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர். இதற்குக் காரணமென்னை? இறையும் இயற்கையும் இறைவன் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங் காட்டொணாதே என்றார் அப்பர் சுவாமிகள். இத்தகை அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையை யுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதா அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக் கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும். இயற்கைவழி இறைவனை உணர்ந்தவரே ஞானிகளெனப்படுவர். இயற்கையில் வெம்மை இயற்கை முதல் ஒன்றாயினும், அது காரியப்படும் போதும் பல இயல்புடையதாய்ப் பரிணமிக்கிறது. நமது நாட்டின் இயற்கைநிலை என்னை? நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்று எவருங் கூறுவர். நிரட்சரேகை (Equator) நமது நாட்டின் பாங்கர் பாய்ந்து செல்கிறது. அக் கோட்டின் பாங்கருள்ள நாடுகள் வெம்மை செறிந்தனவா யிருத்தல் இயல்பு. இயற்கை வழி நின்று ஆராய்ந்தால் நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்பது செவ்வனே புலனாகும். நமது நாட்டு இயற்கையின் காரியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து ஆய்ந்து சென்றால் அவைகளின் காரணங்கள் யாவும் வெம்மை மயமாயிருத்தல் பெறலாம். அவ்வியற்கை வெம்மைவழி இறைவனை நமது நாட்டுப் பெரியோர்கள் உணர்ந்தார்கள். இறைவனுடல் இயற்கை யென்று மேலே சொல்லப்பட் டிருக்கிறது. நமதுநாட்டின் இயற்கையோ வெம்மையோ அடிப் படையாகக் கொண்டது. ஈண்டு இறைவனுக்குரிய இயற்கை வடிவம் எத்தகையதா யிருத்தல் வேண்டும் என்று உன்னுவோ மாக. தீவண்ணம் அதனை வெம்மைக்குரிய நெருப்பு வடிவமென்று விளக்க வேண்டுவதில்லை. அந் நெருப்பு மேனியைப் பெரியோர்கள் பலவாறு புகழ்ந்து புகழ்ந்து போற்றி யிருக்கிறார்கள். அவ்வுரை களை ஈண்டு விரிக்கிற் பெருகும். மாணிக்கவாசகனார் அருளிய திருவாசகத்தினின்றுஞ் சில பொன்மொழிகளை மட்டும் ஈண்டு அகழ்ந்தெடுத்துக் காட்டுகிறேன். தூயமேனிச் சுடர் விடு சோதி ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை விரிசுடராய் நின்ற மெய்யன் செந்தழல் போற் றிருமேனி ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே சோதியாய்த் தோன்றும் உருவமே சோதியே சுடரே சூழொளி விளக்கே கடுந்தழற் பிழம் பன்ன மேனி என வரூஉந் செம்மொழிகளை உற்று நோக்குக. சேய் - சிவம் வெம்மை நெருப்பின் நிறமென்னை? செம்மையன்றோ? அச் செம்மையைச் சேயென்றும் , சிவமென்றும் இயற்கை நுட்ப முணர்ந்த நம் முன்னோர்கள் போற்றினார்கள். செய்ய மேனி யனே செய்வகை அறியேன் என்றும், செஞ்சுடர் வெள்ளமே என்றும், ஆடகச் சீர்மணிக் குன்றே என்றும், வெம்பவள வெற்பிற் றேசுடையாய் என்றும், செக்கர்போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்து என்றும் வாதவூரடிகள் இறைவன் தீவண்ணத்தைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க. சிவத்துக்குஞ் செம்மேனிக்கு முள்ள தொடர்பை, சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான் என்று அப்பர் சுவாமிகளும் விளக்கி யிருத்தலை ஓர்க. வேறு பல ஆன்றோர் கள் இறைவன் தீவண்ணத்தைக் குறித்துப் பாடிய பாக்கள் பலப்பல. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். இறைவனது இயற்கை வடிவஞ் செக்கச் செவேலெனத் திகழ்தல் நோக்கி மாணிக்கவாசகனார் தென்னாடுடைய சிவனே போற்றி என்று வழுத்தி, அச்சிவனே மற்ற நாடுகளின் இயற்கைக் கேற்ப வெவ்வேறு பெயரான் அழைக்கப்படும் இறைவன் என்பதை அறிவுறுத்தப் பொதுவாக எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி என்றருளிச் செய்தார். இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந் துள்ள ஒருவன் என்பது பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் இத் தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறா னென்க. இறைவன் ஒருவனே என்பதை முன்னர் இரண்டோர் உரைகளால் விளக்கியுள்ளேன். அக்கருத்தை மீண்டும் வலி யுறுத்துகிறேன். தென்னாடுடைய சிவனே எந் நாட்டவர்க்கும் இறைவன் என்று பன்னிப் பன்னி அடிக்கடி சொல்ல வேண்டுவ தில்லை. இறைவனை எவர் எப்பெயரான் போற்றினாலென்ன? மொழி வேற்றமையைப் பொருள் வேற்றுமையாகக் கோடல் அறியாமை. இவ்வறியாமை சிலவிடங்களில் சமயவெறியூட்டுவ தாகிறது. சமரசம் நந்தமிழ்ப் பெரியோர்கள் சமரசத்தையே அறிவுறுத்திச் சென்றார்கள். அச்சமரச நுட்பத்தை ஈண்டு விரிப்பின் அஃதொரு நீண்ட சொற்பொழிவாகுமே என்று அஞ்சுகிறேன். ஆகவே, சில உரைகளால் மட்டும் அச் சமரசத்தை விளக்கிச் செல்ல விரும்புகிறேன். அப்பர் சுவாமிகள் இங்கே அப்பர் சுவாமிகள் வரலாறு நினைவிற்கு வரு கிறது. அப்பர் சைவ சமயத்தில் பிறந்தாரென்றும், பின்னர் சமண சமயம் புகுந்தாரென்றும், மீண்டும் சைவ சமயம் சார்ந்தா ரென்றும் அவர் வரலாறு சொல்கிறது. இப் போக்கு வரவெல் லாம் ஒரே கடவுள் நெறியில் நிகழ்தற்கு இடனுண்டோ? அன்பர் களே! உன்னுங்கள். பின்னை அப்பர் வரலாறு பொய்ம்மையா? அவ்வரலாற்றின் உண்மைகாண முயல்வதே அறிவுடைமை. இருநிலை இறையருள் பெறாது சமய நுட்பங்களைக் கலையளவில் ஆராயுங்கால் மக்கட்குப் பல கடவுளுணர்வு பல சமயவுணர்வு தோன்றுதல் இயல்பு. ஆண்டவன் அருள் நிலை கூடப்பெற்ற வர்க்குப் பன்மை உணர்வு அறுந்து ஒருமை உணர்வு அரும்பும். இங்கே அப்பர் நிலையை இரு கூறாகப் பிரித்துக் கொள்ளல் வேண்டும். ஒன்று இறையருள் பெறாத நிலை; மற்றொன்று இறையருள் பெற்ற நிலை. அப்பர் சுவாமிகள் முதல் முதல் கொண்ட சைவ சமயம் அவர் தாய் தந்தையர்வழி நின்று கொண்டது. பின்னே நூல்களை ஆய ஆய அவர்க்குச் சமண சமயம் மெய்ச்சமயமெனத் தோன்றிற்று. அவர் அச்சமயம் புகுந்தார். அவர் தவம் அவர்க்கு ஆண்டவன் அருள் நெறியைப் பின்னே கூட்டிற்று. அவ்வருள் நெறி நின்று அப்பர் தமது பழைய நிலையை உன்னுகிறார். முன்னர்ச் சைவனா யிருந்த போது ஒரு கடவுளையும் பின்னர் சமணனாயபோது மற்றொரு கடவுளையுமா போற்றிக் கொண்டிருந்தோம்? அப்போற்றலை ஒரு கடவுளும், இப் போற்றலை வேறொரு கடவுளும் ஏற்க வில்லை என்பது இப்பொழுது புலனாகிறது. இரண்டையும் ஒரே கடவுள் ஏற்றல் இப்பொழுது விளங்குகிறது என்னுங் கருத்துத் தோன்ற சலம்பூவொடு தூப மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன், நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்நாமம் என்னாவில் மறந்தறியேன் என்று பாடினார். இச்சமரசமே ஆண்டவன் அருள்நெறி என்பது இதுவே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அறிவுறுத்திய சிவநெறி யாகும். இந்நெறி பின்னால் பலவாறு திரிக்கப்பட்டது. அப்பர் சுவாமிகள் அருளிய சலம் பூவொடு என்னுந் திருப்பாட்டின் உள்ளக்கிடக்கை இதுதானா? காலத்துக்கேற்ற முறையில் நீங்கள் இவ்வாறு அதைத் திரித்துக் கூறுகிறீர்களா என்று சிலர் வினவ லாம். அப்பர் சுவாமிகள் பலவிடங்களில் சமரசக் கருத்தைப் பெய்து பாடியிருக்கிறார். அவைகளுள் ஈண்டொரு திருப் பாடலை எடுத்துக் காட்டுகிறேன்: வாது செய்து மயங்கு மனத்தராய் ஏத சொல்லுவீ ராகிலு மேழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே. இத் திருப்பாடலால் அப்பர் சுவாமிகளின் சமரச உணர்வு தெற்றென விளங்குதல் காண்க. தமிழ்ப் பெரியோர்கள் ஒரே கடவுள் என்னும் உண்மையில் உறைந்து நின்றவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. அவைகளை ஈண்டு விரித்துக்கூற வேண்டுவதில்லை. மொழி களின் பன்மைகொண்டு கடவுளுக்கும் பன்மை கூறல் அறியாமை. அறுவகைச் சமயத் தறுவகையோர்க்கும் வீபேறாய் நின்ற விண்ணோர் பகுதி என்றும், வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் என்றும் மணிவாசகனார் அருளிய மெய்யுரைகளின் உள்ளக்கிடக்கையை உணர்க. இறைவன் ஒருவனே. அவன் இத் தென்னாட்டில் சிவன் என்னும் பெயரால் போற்றப்படுகிறான். அவ்விறைவனாஞ் சிவனை மெய்யறிவால் உணர்ந்த தமிழ்ப் பெரியோர்கள், அவனை எவ்வெவ்வாறு வழுத்தினார்கள் என்பதைச் சிறிது ஆராய்வோம். சிவனுரு அருவு மல்லன் சித்தினோ டசித்து மல்லன் என்றார் அருணந்தி சிவனார். யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார் அந்த அகலமும் நீளமும், பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதன், வேர் அறியாமல் விளம்புகின் றேனே என்றார் திருமூலனார். மாணிக்கவாசகனார் திரு மொழியில் சிலவற்றைப் பார்ப்போம். பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் உள்ளப்படாத திருவுருவை கீதமினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான், பாதமிரண்டும் வினவிற் பாதாள மேழினுக்கப்பாற், சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை, ஆதிகுண மொன்று மில்லா னந்தமிலான் வரக் கூவாய் எண்ணுதற் கெட்டா எழிலார் சுழல் மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே போக்கும் வரவு மிலாப் புண்ணியனே - இத் திருமொழிகளை நோக்குக. சிவனை உணரும் வழி எந்நாட்டவர்க்கும் இறைவன் - நமது தென்னாடுடைய சிவன் - மாற்ற மனங்கடந்து, ஊர்பேரின்றி, ஆதியந்தமின்றி இருக்கிறான் என்று ஆன்றோர் கூறிப்போந்தனர். அச் சிவனை எப்படி உணர்வது? சிவன் உணர இயலாத ஒருவனா? என்று ஐயுற இடனுண்டு. சிவன் மாற்ற மனங்கடந்தவன், போக்கு வரவு மிலாப் புண்ணியன், ஒரு நாமம் ஓருருவ மில்லாதவன் என்றருளிய நமது பெயரியார், சிவனை உணராது அவ்வுரை களைப் பகர்ந்திரார். அவர் எங்ஙனம் உணர்ந்தார்? நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை என்று உணரும் வழியை அப் பெரியார் காட்டா நிற்கிறார். இறைவன் இயல்பு மாற்ற மனங்கடந்த ஒன்றை மாற்ற மனங்கடந்தே பார்த்தல் வேண்டும். போக்கு வரவிலா ஒன்றை மன ஓட்டமில்லா விடத்தி லிருந்தே நோக்கல் வேண்டும். கருவி கரணங்களில்லா ஒன்றைக் கருவிகரணங் கடந்து நின்றே காண்டல் வேண்டும். பருவுடல் உணர்வுமட்டுங்கொண்டு மாற்ற மனங்கடந்த இறைவன் எங்கே என்றால் எங்கே எங்கே என்று தான் ஏங்கியொழிதல் வேண்டும். உரையுணர்வு இறந்துநின்று உணர்வதோர் உணர்வே எனவரூஉம் இன்னுரையை உற்று உற்று ஊன்றி ஊன்றி நோக்குவோமாக, உணர்வதோர் உணர்வே என்று முழுமுதற் பொருளை நம் பெருமான் விளிக்கிறார். எந்நிலையில் நின்று அச் செம்பொருளை உணர்வது என்பதை அன்பர் உலகிற்கு உணர்த்தாமற் போகவில்லை. அந்நிலை எது? உரையுணர்வு இறந்து நிற்கும் நிலை என்று அடிகள் அறிவுறுத்துகிறார். அப் பெருநிலையே நினைப்பற நினைக்கும் நிலையென்க. நினைப்பற நினைக்கும் நிலையில் இறைவ னல்லால் பிறிதுமற்றின்மை என்னுங் காட்சி பெறுதல் கூடும். இந்நிலை நின்றே மாணக்க வாசகனார் நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை*** என்று இறைவனுண்மையை இனிதெடுத் துரைக் கிறார். நினைப்பற நினைக்கும் ஒரு நிலை, பருவுடல் நுண்ணுடல் கடந்த ஒரு நிலை; கன்மம் தேய்ந்து ஆணவம் ஒடுங்கும் ஓர் உணர்வு நிலை. அந் நிலையில் இறைவன் திருவருள் பதியும். அத் திருவருளால் இறைவன் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் உண்மையை உணரக் கூடும். இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதியுங் காட்டொணாதே என்ற அப்பரெம் பெருமானார், அவனருளே கண்ணாகக் காணினல் லால் இந்நிறத்தன்*** காட்டொணாதே என்று ஆண்டவன் அருளால் அவனுண்மை உணர்தலைத் தெரித்தல் காண்க. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்றார் மணிவாசகனாரும். அகக்கண் ஆண்டவனருளால் அகக்கண் திறக்கப்பெற்ற மெய்யடியார் கட்கு இயற்கையினூடே ஆண்டவன் நீக்கமற நிறைந்து நிற்றல் செவ்விதற் புலனாகும். அக் கண் திறக்கப் பெறாதார்க்கு அந் நிறைவு புலனாதலில்லை. இறைவனுக்கு, இயற்கை உடலாகப் பொலிதலை மெய்யடியார்கள் சாத்திர வாயிலாகவும், தோத்திர வாயிலாகவும் உலகிற்குப் பலபட விளக்கிப் போந்தார்கள். காவியங்கள் முதலியன இயற்கை இறைவன் வடிவம் என்பதை உணர்த்த உலகில் எழுந்த பாக்கள் எத்தனை! காவியங்கள் எத்தனை! நாடகங்கள் எத்தனை! அப் பாக்களையும் காவியங்களையும் நாடகங்களை யும் படிக்க படிக்க, அவைகளின் அழகில் அறிவு படியப் படிய, கருவி கரணச் சேட்டைகள் ஒடுங்கி இயற்கை வடிவான இறை இன்பத்தில் திளைக்கும் பேறு பெறலாம். கதைகட்கு மட்டுங் காவியங்களைப் படித்தலால் விளையத் தக்க பயன் விளையாது. இயற்கை இறைவனுடல் இறைவன் இயற்கையை உடலாக் கொண்ட உயிர் என்பதை நந்தமிழ்ப் பெரியோர்கள் செவ்வான உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கச் செய்திருக்கிறார்கள். அத் திருவாக்குகளில் இரண்டொன்று வருமாறு: :உலகமே வடிவமாக யோனிகள் உறுப்பதாக - இஃது அருணந்தி சிவத்தின் திருவாக்கு. இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமா யட்ட மூர்த்தி யாகிப், பெருநலமுங் குற்றமும் பெண்ணுமாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமேயாகி, நெருநலையா யின்றாகி நாளையாகி நிபுர்புன் சடையடிகள் நின்றவாறே - இஃது அப்பர் தேவாரம். திருஞானசம்பந்தப் பெருமான் பலவிடங்களில் தமது பாக்களில் இயற்கையையும், இறைவனையும் அழகொழுகப் பாடியிருத்தல் ஈண்டுக் கருதற்பாலது. இயற்கையாம் அன்னையையும் இறைவ னாம் அப்பனையும் திருஞானசம்பந்தர் தமது இனிய பண்ணிசைப் பாக்களில் ஓவியமாக வரைந்திருக்கிறார். இந் நோக்குடன் அவர் தேவாரப் பண்ணிசைப் பாக்களை ஆராயு மாறு அன்பர்களை வேண்டுகிறேன். எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்க ணாடி உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங் கோயில் கொழுந்தரள நகைகாட்டக் கோகநத முகங்காட்டக் குதித்து நீர்மேல் விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வழிகாட்டு மிழலை யாமே உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிறைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான் கோயில் வரைசேரு முகின்முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலை யாமே இத் திருப்பாட்டுகளை நோக்குக. தென்னா டுடைய சிவனே போற்றி - எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்னுந் திருவாசகத்தை நமக்களித்த தமிழ்ப் பெருமானார் நமது மாணிக்கவாசகனாரும், இறையின் உடலாக இயற்கை இலங்குதலை இனிது ஓதியிருக்கிறார். அம்பரமே நிலனே அனல் காலொ டொப்பா னவனே நிலநீர் நெருப்புயர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ இம் மெய்ம்மொழிகளில் இறைவன் இயற்கையில் கோயில் கொண்டுள்ள ஒழுங்கை ஓர்க. மக்கள் அறியாமை இறைவன் இயற்கை வடிவினனாயின், எமக்கு அவ்விறைவ னுண்மை புலனாகவில்லையே. எமக்கு இயற்கைத் தோற்ற மட்டுமன்றோ புலனாகிறது? என்று பெத்த நிலையிலுள்ள என் போன்றார் வினவலாம். எனக்குப் புலனாகாத எல்லாவற்றையும் பொய்யென்று யான் கூறுவது அறிவுடைமையாமா? உலகியற் பொருள்களிலேயே ஒருவர் உணர்ந்ததை மற்றொருவர் உணராது வாழ்கிறார். ஒன்றை உணராது வாழ்வோர், அவ்வொன்றன் உண்மையை மறுப்ப தழகாமோ? வான நூல் வல்ல ஒருவனுக்கு நிலத்திலுள்ள பல நுட்பங்கள் தெரிவதில்லை. அங்ஙனே நில நூல் ஆராய்ச்சியுடைய ஒருவனுக்கு வானக்கோள் நுட்பங்கள் பல தெரிவதில்லை. இதனால் அவன் நில நுட்பங்களை மறுத்தும், இவன் கோள் நுட்பங்களை மறுத்துங் கூறவேண்டுங்கொல்? மறுப்பதைப் பார்க்கினும் அவ்வத்துறைபற்றி உழைத்து உண்மை காண்டலே அறிவுடைமை. நம்பிக்கை ஐலண்டின் இருப்பைப் பூகோள நூல் வாயிலாகவும், பிற வாயிலாகவும் அறிந்திருக்கிறோம். ஐலண்டை யான் நேரே பாராது அதன் இருப்பை யான் ஏற்கமாட்டேன் என்று ஒருவன் வாதம் புரிந்தால் நாம் என் செய்வது? அவன் நிலை குறித்து இரங்கவேண்டுவதே. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வருங் கண்ட பின்னரே நம்புவதென்பது இயலாத தொன்று. சில வற்றைச் சிலரே காண்பர். வேறுசிலர் அதை நம்பி ஆராய்ந்து உண்மை காணவே முயலல் வேண்டும். ஆராய்ச்சித் துறையில் நண்ணுதற்கு முன்னரே அவநம்பிக்கை என்னும் பேயை மணப்போர்க்கு சூந்யம் என்னும் பாழுஞ் சேயே பிறக்கும். என் செய்வது? ஆராய்ச்சி பெத்த நிலையிலுள்ள என் போன்றார் இறையுண்மை புலனாகவில்லையே என்று அதனுண்மையை மறுத்து வாழ்தல் கூடாது. கண்ணுக்குப் புலனாகும் இயற்கையென்னும் உடலை ஆராய்ந்து உன்ன உன்ன இறையுண்மையில் ஐயந் தோன்றாது. அவ்வாராய்ச்சியான் முதலாவது ஐயத்தைப் போக்கும் ஒருவித உணர்வு பெறுதல் ஒருதலை. அவ்வுணர்வு இறை உண்மையை நிறுவிக்காட்டும் அவ்வுணர்வு கொண்டு மெய்யுணர்வு பெற முயலவேண்டுவது மகன் கடமை. இயற்கையின் உள்ளுறையாய் ஒளிருஞ் செம்பொருளைக் காண்டற்கு நினைப்பற நினைக்கும் மெய்யுணர்வு வேண்டற் பாலது என்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வுணர் வினர்க்கு இயற்கையினூடே இறை கோயில் கொண்டிருத்தல் புலனாகும். மற்றவர்க்கோ இயற்கை மட்டும் புலனாகும். இங்ஙனமாயின் மெய்யுணர்வு பெறாதார் கதி என்னை? அவர்கட்குக் கடவுள் காட்சி வேண்டாமா? அவர்கள் அக் காட்சியை எங்ஙனம் பெறுவது? அப் பேற்றிற்குறிய வழி யாது? பருவுடல் உணர்வுடனும், உருவங்களையே கருதவல்ல கட்டுப்பட்ட மன உணர்வுடனும் வாழ்வோர், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தை - உறுப்பிலா ஒன்றை - மாற்ற மனங்கடந் தொளிரும் மணியை - எங்ஙனம் போற்றுவது? எங்ஙனம் வழிபடுவது? இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி*** ஆண்டவன் நிற்கிறானெனில், எனக்கு காடுஞ் செடியும் மலையுங் கடலுமே தோன்றுகின்றன. அவைகளினூடேயுள்ள பொருளுண்மை எனக்குப் புலனாகவில்லை. யான் என் செய்வேன் என்றே கேட்பேன். பெரியோர்கள் இரக்கம் இயற்கையினூடே இறையெனும் உயிரை நினைப்பற நினைந்து கண்ட பெரியோர்கள், தங்கள் அளவில் கடவுள் இன்பத்தைத் துய்த்துச் சென்றார்களில்லை. அவர்கள் அருளாளர்கள்; நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னங் கருத்துடையார்கள். அவர்கள் பெத்த நிலையிலுள்ள உயிர்களை மறந்தார்களில்லை. அவ்வுயிர்கள் மீது கொண்ட கருணையாலன்றோ அவர்கள் மறை மொழிகளை உலகிற்கு உதவிச் சென்றார்கள்? நினைப்பற நினைந்து இறைவனல்லால் பிறிது மற்றின்மை கண்ட மணிவாசகனார் எற்றுக்குத் திருவாசக மென்னுந் தேனைச் சொரிந்தார்? மற்றவர்களும் தேவாரம் திருவாய்மொழி முதலிய மறைகளை ஏன் அருளினார்கள்? மெய்யடியார்கள் நமக்குப் புரிந்துள்ள உதவியை என்னென்று கூறவல்லோன்? என் ஒரு நாவால் கூறவல்லேனோ? பிறநாட்டுப் பெரியோர்கள் அன்பர்களே! தமிழ் நாட்டில் - தென்பாண்டி நாட்டில் - தூத்துக்குடியில் - சைவ சித்தாந்த சபையில் - நின்று பேசுதலால், தமிழ் நாட்டுப் பெரியோர்களையுஞ் சைவப் பெரியோர்களை யும் அடிக்கடி குறித்து வருகிறேன். மற்ற நாடுகளில் தோன்றிய மெய்யடியார்களும் ஆண்டவன் அருள் பெற்றவர்களே. அவர் களும் மறைமொழிகளை வழங்கிச் சென்றார்கள். அவர்களும் பெத்த நிலையிலுள்ளவர்கட்குக் கால வர்த்தமானங்களை யொட்டிப் பல முறைகள் கோலிச் சென்றார்கள். உலகில் தோன்றிய அடியவர்கள் கோலியுள்ள முறைகளில் வேறுபா டிருத்தல் உண்மை. ஆனால் அடிப்படையாகவுள்ள அறமுதலில் வேற்றுமையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். முறைகள் எப்பொழுதும் காலதேச வர்த்தமானங்களை யொட்டி எழுவன. அவைகளில் வேற்றுமை யுறுதல் இயல்பு. அவ் வேற்றுமைகளையே சமயங்களாகக் கொண்டு போரிடுவது அறியாமை. திறவு நந் தமிழ்நாட்டிற் றோன்றி, ஆண்டவனுண்மையை யாண்டுங்கண்ட பெரியோர்கள் பெத்த நிலையிலுள்ள மக்கட்கு எவ்வழியில் துணை புரிந்தார்கள் என்பதே இப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள். இறைவன் திருஉருவோ உள்ளப்படாதது. உள்ளப்படாத திருஉருவைக் கட்டுப்பட்ட உள்ளமுடையோர் எங்ஙனம் உள்ளுவது? நேயர்களே! இங்கேதான் சைவ சமயத்தின் திறவு இருக்கின்ற இடம். இத் திறவுகொண்டே சைவக் கோயிலெனும் இயற்கைக் கோயிலின் வாயிலைத் திறந்து எந்நாட்டவர்க்கும் இறைவனாகவுள்ள தென்னாடுடைய சிவனைக் காணல் வேண்டும். அத் திறவு எது? பெரிய உருவங்களைச் சிறிய உருவங்களாகவும், சிறிய உருவங்களைப் பெரிய உருவங்களாகவுங் காட்டுங் கருவி களிருத்தல் நமக்குத் தெரியும். வானத்துள்ள கோள்களின் அளவுப் பெருக்கை உன்னிப் பார்ப்போம். அப் பெருக்கை என்னென்று கூறுவது? நாம் வாழும் பூமியைப் பார்க்கினும் பருமனுள்ள கோள் களிலிருக்கின்றன. அத்தகைக் கோள்கள் அணித்தே தோன்றுவது போல, அவைகளைக் காட்டுங் கருவிகள் காணப்பட்டிருக் கின்றன. அளவிலே பூமியினும் பருத்து விளங்குங் கோள்களைப் படமெடுத்தும், ஓவியமெழுதியும் இப் பூமியில் மாணாக்கர் கட்கு அவைகளின் நுட்பங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. முதலில் படத்தில் ஓவியத்தில் கோள்களைக் காணும் மாணாக்கன், பின்னே கருவிகள் வாயிலாகவும், பிற வாயிலாகவும் இயற்கைக் கோள்களைப் பார்த்துப் படிக்கப்போகிறான். நமது உடலளவை முன்னே நோக்குவோம். பின்னே கோள்களின் வடிவங்களை உணர்த்துங் கருவியின் முன்னே நின்று நமது உடலளவை நோக்குவோம். அந்தோ! முன்னதற்கும் பின்னதற்கும் எத்தனை வேற்றுமை! அணுவுக்கும் மலைக்கும் உள்ள வேற்றுமை! துளிக்கும் கடலுக்கும் உள்ள வேற்றுமை! பெரும் பெரும் மலைகளும், பெரும் பெரும் காடுகளும், பெரும் பெரும் மேக மண்டலங்களும் ஒன்றோ டொன்று பின்னித் தொடர்ந்து கிடக்கும் ஒரு வடிவோயாம் என்னும் நினைவுந் தோன்றும். நமது உடற்பருமை நமது எண்ணத்தையுங் கடந்தோடுகிறது. சிலர் தமது வடிவை அணுவுருவாகப் படமெடுத்து அதை மோதிரக் கல்லின் அடியில் பதித்து, அடிக்கடி அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்வுறுவதுண்டு. மோதிரத்தில் மனிதனுடல் எத்துனைச் சிறிய அணுவாகக் காட்சியளிக்கிற தென்பது கருதற்பாலது. இன்னும் உலகியல் எடுத்துக் காட்டுகள் வேண்டுவதில்லை. இவ்வளவில் நின்று எடுத்த பொருண் மீது செல்கிறேன். இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற இயற்கை யினூடே நிற்கிறான். உள்ளப்படாத அவன் உருவை என் போன்றார் எங்ஙனம் உள்ளுவது? என் போன்றோர் அப் பெரு வடிவை உள்ளும் முறையில், நினைப்பற நினைந்து இறைவ னல்லால் பிறிது மற்றின்மை கண்ட அகக்கண்ணாளர் கள் அருள்வழி கோலியிருக்கிறாகள். அவ் வழியே சைவ சமயத் தின் திறவு என்க. அகண்டாகாரப் படம் ஆண்டவனது அகண்டாகாரத்தை ஒவ்வொரு பெரியார் ஒவ்வொரு விதமாகப் படமெடுத்து நமக்கு வழங்கியிருக்கிறார். அவ்வடிவைப் பெருக்கிப் பெருக்கிச் சென்றால் இறைவனது இயற்கையகண்டம் உணர்வில் விளங்கும். பெருக்கிச் செல்லும் அவ்வழியே, வழிபாடென்பது. மனிதனிடத்திலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலியன ஒடுங்க ஒடுங்க ஆண்டவன தகண்டம் படிப்படியாக விளங்கிக்கொண்டே போகும். இறைவன் திருவுருவ விளக்கம் மனிதனது தீ நீர்மை விலக்கின் அளவைப் பொறுத்து நிற்கிறது. திருஞான சம்பந்தர் இறைவனது உள்ளப்படாத திருவுருவைப் படம் பிடித்த பெரியோர் பலர். அவருள் முதலில் திருஞான சம்பந்தரை எடுத்துக் கொள்வோம். அவர் இறைவன் இயற்கை வடிவை எங்ஙனம் உலகிற்கு விளக்கிக் காட்டினார் என்பதைச் சிறிது ஆராய்வோம். திருஞான சம்பந்தர் ஆண்டவனருளால் ஆண்ட வனது உருவற்ற நிலையை உணர்ந்தவர். அவர் ஆண்டவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிறைந்திருத்தலை அறிந்தவர். இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது எனவும், புவி முதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் (கரண நான்காய் அவையவை சேர் பயனுருவாய் அல்ல வுருவாய் நின்றான் என வரூஉம் அவர் திருவாய் மொழிகளை நோக்குக. இப் பெருவடிவைப் பெத்த நிலையிலுள்ள மக்கள் எங்ஙனம் ஆராய்வது? பெத்த நிலை ஆராய்ச்சி நாத்திக உணர்வையே நல்கும். அவ்வுணர்வு மக்களிடை அரும்பாதவாறு காக்க ஞான சம்பந்த வள்ளல் கருணையால் வாய் மலர்ந்த அருள்மொழிகள் பல உண்டு. அவைகளில் இரண்டொன்று வருமாறு : ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்கத் தக்கார், ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீ ரிறையே வந்து சார்மின்களே. வழி இத் தேவாரங்களால் இறைவன் இயல்பு, புலனறிவு ஆராய்ச்சி ஏதுக்களில் அடங்காத ஒன்று என்பதும், புலனறிவிற் கெட்டும் ஒன்றை மட்டும் உணரக்கூடிய பெத்த நிலையி லுள்ளார் தமது கட்டுப்பட்ட அறிவு கொண்டு, மாற்ற மனங் கடந்து நிற்கும் ஒன்றை உணர இயலாதென்பதும், ஐயந்திரிபு வழிகளில் நுழையாது வழிபாட்டி லிறங்குதல் அறிவுடைமை என்பதும் பெறப்படுதல் காண்க. இது குறித்து முன்னருஞ் சில உரை பகர்ந்துளேன். அவைகளை மீண்டும் ஈண்டுத் திருப்பிக்கூற வேண்டுவதில்லை. ஈண்டு நாம் வேண்டி நிற்பது ஒன்றே. அஃதென்னை? மாற்ற மனங்கடந்து, இயற்கையை உடலாகக் கொண்டு, தென்னாடுடைய சிவனாய், எந் நாட்டவர்க்கும் இறைவனாய் நிற்குஞ் செம்பொருளைப் புலனறிவில் கட்டுப் பட்டுக் கிடப்போர் எங்ஙனம் உன்னுவது என்பதேயாகும். அதற்கு ஞானசம்பந்தப் பெருந்தகையார் கேட்பான்புகில் அளவில்லை என்றும், ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டாம் என்றும் மக்கட்கு அறிவு கொளுத்தி, தாட்பால் வணங்கித் தலை நின்று என்றும், மனம் பற்றி வாழ்மின் என்றும் வழி காட்டுகிறார். திருவுருவப் படம் எதைக்கொண்டு தாட்பால் வணங்குவது? மனம் பற்றுவது? அதற்குப் பெருமான், உள்ளப்படாத ஆண்டவன் திருவுருவை என் போன்றார் உள்ளும் முறையில் படம் பிடித்துத் தருகிறார். அப் படம் ஆண்டவனது அகண்ட இயற்கை வடிவின் இயல்பைத் தன்னகத்தே கொண்டதென்க. தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி காடுடைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளங் கவர் கள்வன் இத் தேவாரப்படத்தை உற்றுஉற்று நோக்குவோம்; ஊன்றி ஊன்றி உன்னுவோம். இறைவனை இன்னவுரு இன்ன நிறம் என்றறிவ தேல்அரிது என்று கூறிய ஞான சம்பந்தர் - புவி முதல் ஐம்பூதமாய் *** என்று புகன்ற ஞானசம்பந்தர் - அவ் விறைவனை ஈண்டுத் தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடி - காடுடைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன் என்கிறார். இதன் நுட்பமென்னை? உள்ளப் படாத இறைவன் திருவுருவம் பெத்தர்கள் உள்ளத்தில் படியு மாறு ஞான சம்பந்தர் அருள் செய்திருக்கிறார். திருவுருவம் கோள்களைப் பற்றியும் அவைகளின் படங்களைப் பற்றியும் மேலே யான் புகன்ற உரைகளை ஈண்டு நினைவூட்டிக் கொள் ளுங்கள். இறைவனை இன்னஉரு இன்ன நிறம் ஒன்றுமில்லா தவன் என்று உன்னும்போது எனது உள்ளத்தில் என்னபடி கிறது? ஒன்றும் படிவதில்லை. அவ்விறைவனைத் தோடுடைய செவியன் விடையேறி*** என்று நினைக்கும்போது எனது உள்ளத் தில் இறைவன் வடிவம் படிகிறது. இத் திருவடியே பெரியோர் களால் உலகிற்கு வழங்கப்பெற்ற அருள்வடிவம். உருவ வழிபாடு எங்குமுள்ள ஆண்டவனை இப்படியா நினைப்பது? அஞ்ஞானம் அஞ்ஞானம் என்று சிலர் கருதலாம். அம் மெய்ஞ் ஞானிகளைப் பற்றிய பேச்சே ஈண்டு வேண்டுவதில்லை. உணர்வு கடந்த ஒன்றை உணர்வு கடந்து உணரும் நிலை கூடும் வரை, உருவ வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதே. இக் கருத்துக் கொண்டே மெய்யடியார்கள் உருவ வழிபாட்டைப் பெரிதும் உலகிற்குக் வலியுறுத்திச் சென்றார்கள். இல்லையேல் வாயால், அங்கிங்கெனாதபடி எங்குமுள்ள கடவுள் என்று சொல்லி கொண்டே, மனதில் சூந்ய உணர்வுடன் வாழ்தல் நேரும். ஒரே உருவம் மனம் பற்றி நிற்பதற்கு ஒன்று வேண்டும். அவ்வொன்றே உருவ வழிபாடு. மனத்தைக் கவரும் அவ்வுருவம் எத்திறத்த தாகவும் இருக்கலாம். அதைப்பற்றிய கவலை எவருக்கும் வேண்டுவதில்லை. எவ்வுருவு கொள்ளினும் அவ்வுருவை இறைவன் திருப்படம் என்றுமட்டுங் கொண்டால் போதும். ஆனால் ஒருவன் தொடக்கத்தில் ஆண்டவன் நிலையிலே பல உருவங்களை நினைத்தல் தவறு. ஒவ்வொருவரும் தமது மனத்தைக் கவரும் ஓர் உருவையே ஆண்டவன் நிலையில் கொண்டு போற்றுதல் சிறப்பு. இதைப்பற்றி ஈண்டு விரிவிரை வேண்டுவதில்லை. இயற்கையை உடலாகக் கொண்ட இறைவனைக் குறிக்கும் எப்படத்தையும் நல்லறிவு கொண்டு ஆராய்ந்து அதைப் பெருக்கிப் பார்த்தால், அஃது இயற்கையில் பரவலாக முடிதல் பெறலாம். அதைப் பெருக்கிப் பார்க்கும் அறிவு விளக்கம் அவரவர் நிலையைப் பொறுத்து நிற்கிறது. உலகில் பலவிடங் களில் தோன்றிய அருளாளர்கள் பிடித்த தெய்வப் படங்கள் யாவும் பெருக்கப்படும் போது, அவை, இறைவன் இயற்கை வடிவாக முடியுமென்பதில் ஐயமில்லை. இயற்கை இறைவன் வடிவம் என்னும் உணர்வில்லாதார் ஒவ்வொரு தெய்வப் படத்தையும் ஒவ்வொரு தெய்வமாகக் கருதி இடர்ப்பட்டு மெய்ப்பொருளை உணராதொழிவர். ஈண்டு ஞானசம்பந்தர் பிடித்துக் கொடுத்த ஒரு படத்தைப் பார்ப்போம். திருவுருவ விளக்கம் தோடுங் குழையும் தோடுடைய செவியன் - இங்கே தோடு எது? தோடு என்பது பெண்மக்கள் அணியும் ஒருவிதக் காதணி. ஆண் மக்கள் அணியுங் காதணிக்குக் குழையென்று பெயர். ஞானசம்பந்தர் தோடுடைய செவியள் என்று கூறாது தோடுடைய செவியன் என்று கூறியிருக்கிறார். இம்மயக்கத்தைக் களைந்து கொள் வோம். செம்மை நீலம் இறையின் வடிவம் செம்மை நெருப்பு என்று மேலே சொல்லப்பட்டது. செம்மையின் விளிம்பின் நீலமிருத்தலைக் காண்கிறோம். செம்மைக்கும் நீலத்துக்கும் உள்ள தொடர்பு நிறத்தியல் வல்லார்க்கு நன்கு தெரியும். செம்மையில் நீலமும் நீலத்தில் செம்மையும் மிளிர்தல் இயல்பு. எல்லா நிறங்களும் இவ்விரண்டில் ஒடுங்குதலும் ஈண்டுக் கருதற்பாற்று. செம்மை எது? நீலம் எது? செம்மை, வெம்மையைக் குறிப்பது; நீலம், தண்மையைக் குறிப்பது. வெம்மை (Heat) தண்மை (Cold) என்னும் இரண்டானும் உலகம் ஆக்கப்பட்டு இயங்கிவருகிறது. இவ்வெம்மை ஆணென்றும் தண்மை பெண்ணென்றும் உள்ளத்தில் பதியுமாறு உருவகிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள இறைவன்பால் வெம்மைக் கூறும் உண்டு; தண்மைக்கூறும் உண்டு. வெம்மைக் கூற்றை ஆணென்றும் தண்மைக் கூற்றைப் பெண்ணென்றும் ஆன்றோர் கூறிப் போந்தனர். அக்கூறுகளின் பரிணாமமாக உலகமிருத்தல் கண்கூடு. உலகம் பெண் ஆண் மயம் உலகம் பெண்மயமா யிருக்கிறதா? ஆண்மயமாயிருக்கிறதா? உலகம் பெண் ஆண் மயமாயிருத்தல் கண்ணுள்ள எல்லார்க்குந் தெரியும். காரியமாய உலகம் பெண் ஆண் மயமா யிருப்பதைக் கொண்டு காரணமாய கடவுள் பெண் ஆண் மயமாயிருத்தலை நிறுவக் கூடும். இதைப் பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூல் தொடக்கத்தில் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. தண்மை வெம்மை யெனும் பெண் ஆண் மயமாக முழுமுதற் பொருளிருத்தல் ஒன்றே ஈண்டைக்கு வேண்டுவது. ஆண்டவனை அப்பன் என்று போற்றுவோர், அவனை அம்மை என்று போற்றினால் என்ன இழுக்கு நேரும்? இது நிற்க. இயற்கையின் பெண் ஆண் கூறு இயற்கையின் வடிவாக உள்ள இறைவன் தண்மை வெம்மையெனும் பெண் ஆண்மயமாக இருத்தலை உணர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் அந் நுட்பத்தை, தோடுடைய செவியன் என்று பாட்டுப் படமாக வரைந்து காட்டுகிறார். தோடுடைய செவியன் என்பது இயற்கை இறையின் பெண் ஆண் தன்மையை விளக்கும் எழுத்தோவியம் என்க. இவ் வோவியத்தைப் பெருக்கிப் பார்த்தால் அது தன்மை வெம்மை யாகப் பொலியும் வாக்குமனங் கடந்த இறைவனது இயற்கை வடிவத்தை உணர்த்துதல் பெறலாம். இவ்வியற்கைப் பெரு வடிவை மணிவாசகனார் தமது முதிர்ந்த மதியால் தமது கனிந்த மனத்தில் எழுதிய ஓவிய மொன்றை ஈண்டுத் தருகிறேன்: தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. இயற்கையின் தண்மை வெம்மை என்று சொல்லால் பிரித்துக் கூறலாமே யன்றிப் பொருளால் பிரித்துக்கூற இயலாது. வெம்மையில் தண்மையும், தண்மையில் வெம்மையும் பிரிவின்றிக் கிடக்கின்றன. அவை இரண்டும் ஒன்றன் கூறுபாடுகள். அப் பிரிவின்மையை உணர்த்தவே தோடு என்று பெண்மையையும், செவியன் என்று ஆண்மையையும் ஆளுடைய பிள்ளையார் பொறித்திருத்தல் காண்க. தோடுடைய செவியன் என்னும் எழுத்தோவியத்தை - அன்பர்களே - நினைந்து பாருங்கள்; அதை அறிவால் பெருக்கிப் பாருங்கள்; அதை இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாய் எறியுங் காற்றுமாகி - அருநிலைய திங்களாய் ஞாயிறாய் ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி*** இறைவன் நிற்கும் பெரு நிலையென் றுணருங்கள். ஆ! ஆ! அப் பெருவடிவை என்னென்று பேசுவது! அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர் எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும் அல்லார்போ னிற்பா ரவர். ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு என்றார் உய்யவந்த தேவ நாயனார். பேச்சுக் கடந்த அப் பெருவடிவைச் செல்வன் கழலேத்துஞ் செல்வம் பெற்ற நமது ஞானசம்பந்தச் செல்வம் தோடுடைய செவியன் என்று நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. தோடுடைய செவியன் என்பது இயற்கை வடிவின் இருபெருங் கூறுகளை அறிவிப்பதென்க. இனித் தோடு முதலிய உறுப்புக்களைப்பற்றிச் சிறிது ஆய்வோம். தோடு ஓங்காரம் தோடு என்பதைப் பெருக்கிப் பார்த்தால் அஃது எதுவாக முடியும்? அஃது ஓங்காரமாக முடிதல் பெறலாம். தோடு என்பதிலுள்ள முதலெழுத்துத் தகர வித்தையோடு கூடிய ஓங்காரத்தைக் கொண்டிருத்தல் கருதற்பாலது. ஒலி எல்லாவற்றிற்கும் அடிப்படை ஓங்கார ஒலி என்பதை விளக்கவேண்டுவதில்லை. ஒலியைப் பற்றிய ஆராய்ச்சி இந்நாளில் முதிர்ந்து வளர்ந்து வருகிறது. இவ்வண்டமெலாம் ஒலியென்னும் ஒன்றை நிலைக்களனாகக் கொண்டிருக்கின்றன. ஒலி யாண்டில்லை; இப்பொழுது யான் இங்கே பேசுகிறேன். இப் பேச்சொலி யாண்டும் முழங்குகிறது. அதைக் கருவி கொண்டு கேட்டுணரல் கூடும். வெம்பிலி பொருட்காட்சியில் நமது அரசர் பெருமான் பேசியது உலகில் பலவிடங்களில் கேட்குமாறு செய்விக்கப்பெற்ற அருமையை நீங்கள் பத்திரிகை களில் படித்திருப்பீர்கள். கம்பியில்லாத் தந்தியால் ஒலியின் இயல்பும் திறனும் பிறவும் செவ்வனே விளங்குகின்றன. கருவி காணப்பெறாத காலத்திலுஞ் சிலர் சேய்மையில் பேசப்படுவதைச் செவியினால் உணர்ந்து வந்தனர். இப் புலனறிவு இப்பொழுது பெரிதும் வீழ்ந்துபட்டது. சேய்மையில் பிறர் பேசுவதை மட்டுமன்று - பிறர் நினைப்பதையும் - உணரும் ஆற்றல் சிலர் பெற்றிருந்தனர். இந்நாளில் மேல்நாட்டில் இப் பயிற்சி சிலவிடங்களில் அரும்பி வருகிறது. கருவியின்றிச் சேய்மையொலி கேட்டலைப் பற்றிச் சிலர் வியப்புறலாம். சேய்மையொலியைக் கேட்பிக்குங் கருவி காணப் படுவதற்கு முன்னர் கருவியால் சேய்மையொலியைக் கேட்கக் கூடும் என்று எவராவது சொல்வரேல், அச் சொல் ஏற்றுக் கொள்ளப் பெறுதல் அருமையே. இஃதுலகியல். ஒலியின் நுட்பத்தை நம் முன்னோர்கள் செவ்வனே உணர்ந்திருந்தார்கள். ஒலியின் பெற்றி நோக்கியே அதைச் சப்த பிரமம் என்றுஞ் சில அறிஞர் கூறிப் போந்தனர். ஓசை ஒலி யெலாம் ஆனாய் நீயே என்றார் நமது அப்பரும். ஆகாயம் ஒலி ஆகாயத்தின் கூறு. ஆகாயம் என்னும் பூதம், எல்லாப் பூதங்களினும் பாய்ந்து விரவி நீக்கமற நிறைந்து நிற்பது. ஆகாய மில்லாத பூதமில்லை; இடமுமில்லை. ஆகவே ஒலியில்லாத இடமில்லையென்று சுருங்கக் கூறலாம். பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி எனவரூஉந் திருவாசகத்தை ஓர்க. சப்தம் பாரிடை ஐந்து - சப்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் (ஓசைஊறு ஒளி சுவை நாற்றம்). நீரிடை நான்கு - சப்தம் பரிசம் ரூபம் ரசம். தீயிடை மூன்று - சப்தம் பரிசம் ரூபம். வளியிடை இரண்டு - சப்தம் பரிசம். வெளியிடை ஒன்று-சப்தம். எல்லாப் பூதங்களிலு மிருப்பது சப்தம். யாண்டுமுள்ள ஒலி ஏன் யாண்டுங் கேளாது? கேட்குமெனில் கருவி எற்றுக்கு? ஐம்பூத உடலுடன் ஐம்பூத உலகில் வாழும் மனிதன் முயன்று முயன்று ஐம்பூதக் கூறுகளை ஆராய்தல் வேண்டும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம் இவ்வைந்தின் - வகைதெரிவான் கட்டே உலகு என்றார் வள்ளுவனார். இவ்வாராய்ச்சியில் தலைப்படாது வாளா கிடப்போர்க்கு ஒலியின் நுட்பம் எங்ஙனம் புலனாகும்? இந்நாளைய வாழ்வு அவ்வாராய்ச்சியில் தலைப் படவுந் துணைபுரிதலில்லை. பனிக்கட்டி போன்ற பருவுடலில் கட்டுப்பட்ட அறிவுடன் வாழ்வோன், தனிப்பட்ட ஆகாய தத்துவத்தில் எங்ஙனம் உலவ வல்லான்? அவன் ஆகாயங் கலந்த ஏனைய பூதங்களில், சிறப் பாகப் பெரிதும் மண்ணெனும் பூதத்திலேயே கட்டுப்பட்டுக் கிடக்கிறான். அவன் பரிச ரூப ரச கந்தங்களுடன் விரவி, மருவி யுள்ள ஒலியை மட்டும் அணித்தே யிருந்து கேட்க வல்லான். சேய்மையிலுள்ள ஒலியை உணரும் ஆற்றலை அவன் செவிப் புலன் பெறவில்லை. இக்காரணத்தால் மனிதன் சேய்மையொலி கேட்கக் கருவி நாடுகிறான். மண் முதலிய தத்துவங்களினூடே வாழும் மனிதன், ஆகாய தத்துவத்தில் தனித்துலவுதற்குறிய வழிகள் காணப்பட்டிருக்கின்றன. அவ்வழி நிற்போர்க்குச் சேய்மையிலெழும் ஒலியுங் கேட்கும். ஓங்காரம் ஆகாயத்தின் கூறாகவுள்ள ஒலிக்கு நிலைக்களன் எது? அதுவே ஓங்காரமென்பது. ஓமெனும் ஓரெழுத் துண்ணின்ற ஓசை போல் என்றார் திருமூலர். அவ்வோங்காரத்தி னின்றுமே எல்லாம் பிறக்கின்றன. ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள் - ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் எனவரூஉந் திருமூலர் திருவாக்கை நோக்குக. இவ்வோங்காரத்தை அதிட்டித்தே அறிவெனுஞ் சிவம் அண்டாண்டங்களை இயக்கி வருகிறது. இத்தகை ஓங்காரத்தை மனதினால் அளந்து கூற முடியுமோ? அன்பர்களே! உன்னுங்கள். அவ்வோங்காரம் மனதிற்படுமாறு அதைச் சிறிய தோடாக வடித்துக் காட்டுகிறார் நமது திருஞான சம்பந்தர். ஓங்காரமே தோடு ஆண்டவன் இயற்கைப் படத்தில், அவ்வியற்கையுடலின் உறுப்புக்களும் படத்தின் அளவிற்கேற்ற வண்ணம் அரும்புகள் போல் பொலிதல் வேண்டுமன்றோ? இதோ எல்லாப் பூதங்கட்கும் நிலைக்களனாக உள்ள ஓங்காரம் ஞானசம்பந்தர் எழுதிய பாட்டோவியத்தில் தோடாகக் காட்சியளித்தலைக் காணுங்கள். அத்தோட்டைப் பெருக்கிப் பெருக்கிச் சென்றால் அஃது ஓங்காரமாக முடியும். இயற்கை இறைவன் ஓங்காரமே ஓவிய இறைவனது தோடென்க. சமஷ்டி வியஷ்டி இனி விடையேறி என்னும் நுட்பத்தை ஆய்வோம் அன்பர்களே! எதற்குங் காரண காரியமுண்டு. காரணம் நுண்மை; காரியம் பருமை. நுண்மை சூட்சுமம், சமஷ்டி எனவும்படும். பருமை தூலம், வியஷ்டி எனவும்படும். ஓங்காரமும் சமஷ்டி வியஷ்டி என்று பிரிகிறது. இதுகாறுங் கூறிவந்த ஓங்காரம் சமஷ்டியெனும் முதல், அதாவது நுண்மை. அதன் அறிகுறியே தோடு என்பது, அதன் வியஷ்டியையும் அதாவது பருமையை யும் ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். எங்ஙனம் குறிப்பிடுகிறார்? உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதியுமாறு ஓர் அழகிய உருவத்தில் அதைப் பெருமான் குறிப்பிடுகிறார். விடை விடையேறி என்பதைக் கூர்ந்து நோக்குவோம். விடை வியஷ்டியின் அறிகுறி என்க. சிவபெருமான் விடையில் வீற்றிருக்குங் கோலத்தை மனதில் உருவகித்துக் கொள்வோமாக. திருவாசியோடு கூடிய விடை அளிக்குங் காட்சியை உன்னுவோ மாக. ஓங்கார நிலையை விடையேறி என்று ஞானசம்பந்தர் படம் பிடித்து காட்டுகிறார். விடை அறம் அறத்தை அறிவுறுத்துவது விடை என்று சில நூல்கள் கூறுகின்றனவே. அஃதென்னை என்று சிலர் ஐயுறலாம். இயற்கை நியதியே அறமென்பது. அவ்வியற்கையின் காரியப் பாட்டுக்கு நிலைக்களனாக நிற்பது ஓங்காரம். எனவே ஓங்காரம் அறக்கோடாக நிற்பதாகிறது, அதை அறிவிக்க விடையை அறமென்று நூல்கள் கூறுவது பொருத்தமே யாகும். ஆண்டவன் அறக்கோட்டில் நின்றுகொண்டே அருட் கடனாற்றுகிறான். அதனை விடையேறி என்று ஞானசம்பந்தர் நமது மனதில் படியச் செய்கிறார். விடையேறி என்பது இறைவன் ஓங்காரத் துள்ளொளியா யிருக்கிறான் என்பதைத் தெரிவிப்பதென் றுணர்க உய்ய என் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப் பாகா என்று மாணிக்கவாசகனார் ஓதியிருத்தலைக் காண்க. அம்மா விடையின்பால் பல நறுங்குணங்களுண்டு. அவைகளை விரித்துக்கூற வேண்டுவதில்லை. விடை அம்மா என்று அழகொலி செய்கிறது அம்மா என்னும் ஒலி எத்தகை மகிழ்ச்சி யூட்டுகிறது! அன்பர்களே! நினைந்து பாருங்கள்! அவ்வொலி கேட்கும்போது உள்ளம் அடையுங் குளிர்ச்சியை - மகிழ்ச்சியை - என்னென்று சொல்வேன். தோற்றத்துக்குரிய தாய் அம்மையல்லளோ? அவ்வம்மை யல்லளோ இயற்கைத் தாய்? அவ்வியற்கையின் முதற் காரணம் அல்லது தாயகம் ஓங்காரமன்றோ? ஓங்காரம் சக்தியின் கூறு என்று ஞான நூல்கள் முழங்குகின்றன. விடையின் அம்மா என்னும் ஒலியில் அத் தாய்மை விளங்குகிறதா? இல்லையா? உன்னுங்கள்; உன்னுங்கள். ஓங்காரத்தின் முதல் எது? அகரமென்று எவருங் கூறுவர். அவ்வகரமன்றோ எல்லாம்; எல்லாம்! அவ்வகர ஒலி முழக் கத்தையே இயற்கை அடிப்படையாக் கொண்டு இயங்கலான், அவ்வகரத்தை முதலாக் கொண்டு வியஷ்டியாக எழும் ஓங்காரத்துக்கு விடையை அறிகுறியாக நம் முன்னோர்கள் கொண்டார்கள். கடவுள் உண்மைக்கும் கடவுள் நினைவிற்கும் இயற்கைப் பொருளைக் கோடலே அறிவுடைமை. விடையுடன் மக்களுக் குள்ள தொடர்பைக் கூறுதல் வேண்டுமோ? நமது நாட்டில் நமது வாழ்வுடன் விடை எவ்வளவு கலப்புற்றிருக்கிறது? நமது வாழ்வுடன் கலப்புற்றுள்ள ஒன்றைக் கடவுளியல்பின் கூறுபாட் டிற்கு அறிகுறியாக நம்மவர்கள் கொண்டது பெரிதும் உன்னத் தக்கது. விடையைப்பற்றி இன்னும் விரிக்கிற் பெருகும். இவ்வாறு ஒவ்வொன்றையும் விரித்துச் சென்றால், காலம் இடந்தாராதாகலான், இனிச் சுருக்கிக் கூறவே முயல்கிறேன். ஞானநூல்களை ஆராய ஆராய அவரவர் அறிவாற்றலுக் கேற்றவாறு இத்தகை நுட்பங்கள் பல உணரக்கூடும். மதி ஓர் தூவெண்மதி சூடி இதன் உள்ளக்கிடக்கையை நோக்குவோம். இயற்கையைப் போர்வையாக் கொண்டுள்ள இறைவன் அறிவு மயமாய் எல்லாவற்றையும் அறிபவனா யிருப்பவன். அது தூவெண் மதியால் விளக்கப் படுகிறது. அறிவுக்கு நிலைக்களன் மூளை என்பதும் ஈண்டுக் கருதற்பாலது. தூவெண்மதி தூநெறியென்னும் அறிவு ஒளிக்கு அறிகுறி என்க. தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி - யாமதி யாளென அமைத்த வாறே என்று பதினோராந்திருமுறை பகர்தல் காண்க. சுடலையாடி காடுடைய சுடலைப் பொடி பூசி என்பதன் கருத்தைச் சிறிது பார்ப்போம். சிவபெருமானுக்குச் சுடலையாடி என்றொரு பெயருண்டு. சுடலையென்று எதற்குப் பெயர்? இறந்த உடலங்களைச் சுட்டுச் சாம்பராக்கு மிடத்துக்குச் சுடலை என்று பெயர். இறைவனாஞ் சிவனுக்கு இயற்கையுடலென்று மேலே பலவிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலாகிய இயற்கை பல வடிவங்களாகப் பரிணமிக்கிறது. அப் பரிணாமமே நமது கண்ணுக்குப் புலனாகும் பல பலதிற இயற்கைப் படிவங்கள். நாமரூபங்கள், என்றாதல் ஒருபோது அழிதன் மாலையன. தோற்ற முண்டேல் மரணமுண்டு என்பது மறைமொழி. இயற்கை, இறைவன் வடிவாதலால், அஃது அரும்பி மலருங் (பரிணமிக்கும்) காலத்தும் இறைவனுக்கும் உடலாகவே யிருக்கிறது; அம்மலர்ந்த வடிவங்கள் தன்னகத்தே ஒடுங்கும் போதும் அஃது (இயற்கை) இறைவனுக்கு உடலாகவேயிருக் கிறது. இயற்கை இறையுடலாதலால், அது மலரும் போதுங் குவியும்போதும் வேறிடம் புகுதல் இல்லை. இயற்கையின் நாமரூபப் பரிணாமங்கள் அழிந்து பொடியாகிச் சாம்பராகும் போது, அச்சாம்பர் இறைவனை விடுத்து எங்ஙனம் அகலும்? ஆகவே எல்லாம் ஒடுங்கும் ஓரிடமே இறைவனது சுடலை என்க. ஒடுங்கின யாவும் நின்று மீண்டும் பரிணமித்தற்கு நிலைக்கள னாக உள்ள ஒன்றே சத்தெனுஞ் செம்பொருள். தோற்ற ஒடுக்கம் சத்தெனுஞ் செம்பொருள் சடமன்று; அஃது அறிவுப் பொருள். அறிவுக்குத் தோற்றக் கேடுகளில்லை. தோற்றக் கேடில்லாத ஒன்றனிடத்தன்றோ தோற்றக் கேடுள்ள எல்லாம் இறுதியில் ஒடுங்கி நிற்கும்? அத் தோற்ற ஒடுக்கத்துக்குந் தோற்ற ஒடுக்கமில்லாத ஒன்றன் துணை இன்றியமையாததென்று சொல்லவும் வேண்டுமோ? அறிவுத் துணையின்றிச் சடம் எங்ஙனம் இயங்கும்? அறிவெனும் இறைவன் துணையால் இயற்கையினின்றும் வடிவங்கள் தோன்றுகின்றன; ஒடுங்கு கின்றன. நாமரூப ஒடுக்கமென்னுஞ் சுடுகாட்டினின்றும் மீண்டும் நாமரூபங்களை உண்டுபண்ண ஒலி என்னும் ஓங்கார முதலைத் தூண்டுவது அறிவின் வேலை. இதனையும் பெரியோர்கள் உருவகப்படுத்தி உலகிற்கு வழங்கி யிருக்கிறார்கள். கங்காள ராய் நின்று வருங்கடன் மீள எம் இறை நல்வீணை வாசிக்குமே எனவரூஉம் அப்பர் திருவாக்கை நோக்குக. அறிவான இறைவன் தன்பால் ஒடுங்கிய ஒன்றை மீண்டுந் தோற்றுவிக்க ஓங்கார முதலின் வாயிலாகத் துணைபுரியும் திறம் மனதால் நினைக்குந் தகையதோ; வாயால் சொல்லுந்தகையதோ? மாற்ற மனங் கடந்த அந்நிலையை எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று எவ்வளவு அழகாகச் சுருங்கிய சொற்களால் நமது அப்பர் உருவகித்துக் காட்டுகிறார்? அந் நுட்பம் ஒராது புராணக்கதை வழி நின்று போரிடுவது உண்மையுணர முயல்வதாகாது. காடுடைய சுடலைப்பொடி பூசி என்பது எதற்கறிகுறி? நாமரூபங்களெல்லாம் ஒடுங்கிப் பொடியாகி இறைவனுக்கு உடலாக நிற்றலுக்கு அறிகுறி. அப் பெருநிலையை ஞான சம்பந்தர் காடுடைய சுடலைப்பொடி பூசி என்று நமதுள்ளத்திற் படியுமாறு ஓவியம் வரைந்து காட்டுகிறார். அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து, வாக்குமனங் கடந்து, எல்லாமாகியும் வேறாகியும் நிற்கும் முழு முதற் பொருளை நினைக்க இயலாத பெத்தர்கள் - முத்தர்களல்லாதவர்கள் - தங்கள் உள்ளத்தில் நினைந்து நினைந்து போற்ற, தோடுடைய செவியன் என்றும், விடையேறி என்றும், ஓர் தூவெண்மதி சூடி என்றும், காடுடைய சுடலைப் பொடி பூசி என்றும் எழுத் தோவிய வழிச் சுட்டிக் காட்டி உலகை உய்வித்த பெருமான் நமது ஞானசம்பந்த அடிகள். அத்திருவுருவம் ஒரு பெரும் அகண்டகாரத்தின் படம் என்பதை எவரும் மறுத்தலாகாது, அவ் வடிவே இறை; இறை பிறாண்டில்லை என்று கொண்டு வழிபாடு செய்வது விக்கிரக ஆராதனையின் பாற்படும். உள்ளப்படாத ஒன்றை உள்ளுதற்கு மெய்யடியார்கள் பிடித்துக் கொடுத்த ஒரு படமென்னும் உணர்வுடன் உருவவழிபாடு செய்வதே அறிவுடைமை. அழகோவியம் ஆண்டவனது அகண்டாகாரத்தை உணர்ந்த அருளாளர்கள், உலகமும் அவ்வுணர்வு பெறுதல் வேண்டுமென்னும் பெருங் கருணையான் மக்கள் நெஞ்சில் புகத்தக்க முறையில் ஆண்டவன் அழகு வடிவைப் பாட்டோவியமாகப் பலப்பல வழியில் எழுதிச் சென்றார்கள். அவ்வழகு ஓவியங்கள் புலன்களைக் கவர்கின்றன; புத்தியைக் கவர்கின்றன; உயிரைக் கவர்கின்றன; அவைகளுள் எத்துணை எடுத்து ஏழையேன் ஈண்டுக் காட்ட வல்லேன்! குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண் ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே. அன்பர்களே! இவ் வழகோவியத்தைப் பாருங்கள். ஆண்டவனது பரந்த இயற்கை வடிவம். இப் பாட்டோவியத்தில் மிளிரும் அழகை என்னென்று கூறுவேன்! அதை என் சொல்லால் விளக்க முடியாது. மனதால் அவ்வழகை நோக்குங்கள். என்ன அழகு! என்ன அழகு! காண முடியாத அழகை அப்பர் பாட்டில் காட்டுகிறார். குனித்த புருவமாம் கொவ்வைச் செவ்வாயாம் குமிண் சிரிப்பாம் பனித்த சடையாம் பவளம் போல் மேனியில் பால் வெண் ணீறாம் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமாம் - அந்தோ! அவ்வழகு வடிவை உன்ன உன்ன மயிர் சிலிர்க்கிறது; உள்ளங் குழைகிறது. அன்பர்களே! இத் திருப்படத்தை விடுத்து அகண்டாகாரத்தை எங்ஙனம் நினைக்க வல்லோம்? வாய் வேதாந்தம் வாய் வேதாந்தம் வெறும் பாழையே மனதிற் படிவிக்கும். ஏமாந்து போகவேண்டாம். வேண்டாம். அழகுருவை நோக்குங்கள்; உன்னுங்கள்; உருகுங்கள்; உணர்வு பெற்றுப் பேச முடியாத பெருவடிவின் திருப்படத்தை அகங்கொள்ளுங்கள். செக்கச் செவேலெனச் சிவந்து கிடக்குஞ் செம்பொருளைப் பவளம்போல் மேனி என்று நம் பெருமான் நமது உள்ளத்தில் படிய வைக்கிறார். பவள மேனியில் பால் வெண்ணீறாம்! என்ன அழகு! தமிழ்ச் செல்வர்களே! தமிழ்ப் பாவாணர்களாய் அப் பேரழகை நோக்குங்கள். இத் தமிழ் ஓவியங்களே உருவ வழிபாட்டுக்குப் பெருந் துணை செய்து வருகின்றன. உருவ வழிபாட்டின் நுட்பம் மேலே பலவிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உருவ வழிபாட்டின் நுட்பந் தேறாது, குறை கூறுவோரைப் பற்றியும், கண்மூடி வழியில் நின்று அவ் வழிபாட்டை நிகழ்த்துவோரைப் பற்றியும் பெரிதும் இரங்குதல் வேண்டும். மன உணர்வுடைய பெத்தர் களுக்கு உருவ வழிபாடு மிக மிக இன்றியமையாதது. யாண்டுமுள்ள ஒன்றன் உண்மையை உணர்தற்கு உலகில் பலதிற வழிகள் கோலப்பட்டிருக்கின்றன. அவைகளுள் தலை யாயது, ஆண்டவனது அகண்ட நிலையை அறிவிக்கும் நுட்பங் களைக் கொண்ட அருள் உருவத்தை வழிபடுவதேயாகும். நம் பெரியோர்கள் உருவ வழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்தியதை மடமையெனச் சிலர் கருதுகிறார். வழிபாட்டிற்கெனக் கொள்ளப்படும் உருவமே கடவுளல்ல அல்ல என்று அறை கூவுகிறேன். அவ்வுருவம் ஆண்டவனது வாக்கு மனங்கடந்த அகண்டாகாரத்தின் இயலை நினைவூட்டும் ஓர் அறிகுறி என்க. உருவத்தையே முழுமுதலாகக் கொள்வது அஞ்ஞானம். எண்ணமும் உருவமும் மனத்தின் இயல் என்ன? உருவத்தில் ஒன்றுவது. ஆண்டவனோ உருவங் கடந்து ஒளிர்பவன். அவனை எப்படி உன்னுவது? உருவமென்பது கல் மண் வடிவங்கள் மட்டுமன்று. எண்ணம், ஒலி, எழுத்து, சொல் எல்லாம் உருவத்தின்பாற் பட்டனவே, எண்ணத்தால் இறைவனை வழிபடுவதும் உருவ வழிபாடே யாகும். மணவுணர்வு உள்ளவரை உருவ வழிபாட்டி னின்றும் விடுதலையடைய முடியாது. ஆகவே உருவ வழிபாட்டின் வழியே உள்ளப்படாத ஒன்றை உணர்தல் வேண்டும். ஆண்டவனை அகண்டம் என்று பன்மொழிகளால் பகர்ந்த அறிஞர்களே, தலையே நீ வணங்காய் என்றும், வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் என்றும், வணங்கத் தலைவைத்து என்றும் அறிவுறுத்தி யிருத்தலை ஆழ்ந்து ஆராயுங்கள். நெஞ்சம் நிலைத்து நிற்றற்கு ஒரு கொழுகொம்பு வேண்டற் பாலதே. மனம் ஒன்றில் ஒன்றஒன்ற உள்ளொளி பெருகும். நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. இத் திருத்தாண்டகத்தின் நுட்பத்தை ஓருங்கள். நிலைத்த நெஞ்சம் பெறுதற்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பது புலனாகும். இதுகுறித்து அடியேன் எழுதிய என்கடன் பணி செய்து கிடப்பதே என்னும் நூலில் சிறிது விரித்துக் கூறி யுள்ளேன். விளக்கம் ஆண்டுப் பார்க்க. தற்காலக் கோயில்கள் உருவ வழிபாடு என்றதும் தற்காலக் கோயில்கள் மீது சிலர் நினைவு செல்லும். தற்காலக் கோயில்களின் நிலைகொண்டு, உருவ வழிபாட்டைக் குறைகூறல் அறமாகத் தோன்றவில்லை. உருவ வழிபாடு நன்னோக்கமுடையது. அந் நோக்க நிறை வேற்றத்துக்கெனவே கோயில்கள் காணப்பட்டன. அக் கோயில்கள் இழிந்த நிலையுற்றிருத்தல் உண்மையே. உயரிய நோக்கமுடைய உருவ வழிபாட்டிற்கு நிலைக்களன்களாகவுள்ள கோயில்கள் இழிநிலையுறுமேல், அவைகளை ஒழுங்குபடுத்த முயலவேண்டுவது அறிஞர்கள் உடமையாகும். செந்நெறியி னின்றும் பிறழ்ந்த கோயிலைக் கள்ளர் குகை என்று கிறிது நாதரும், வேசையர் விடுதி என்று மகாத்மா காந்தியும் கூறிய செம்மை மொழிகள் நினைவிற்கு வருகின்றன. தற்கால கோயில்களை வன்மொழியால் யானும் பன்முறை கடிந்திருக்கிறேன். இழிவுற்ற கோயில்களைக் கடிவது உருவ வழிபாட்டைக் கடிவதாகாது. உருவ வழிபாடு, கோயில் புகுந்தே நிகழ்த்தவேண்டு மென்னும் நியதியில்லை. கோயில் புகாமலும் அவ் வழிபாட்டை நிகழ்த்தலாம். கோயில்களிலுள்ள இழிவுகளைச் சிலர் கருதாமலும், சிலர் பாராட்டாமலும் கோயில் புகுந்து வழிபாடு நிகழ்த்து கிறார். அத்தகைய ஞானிகளைக் கோயிலுக்குப் போதல் வேண்டா மென்று எவருந் தகைய வேண்டுவதில்லை. கோயில் களிலுள்ள இழிவுகளைக் கண்டு மனமுடையும் மக்கள் அக் கோயில் போகாது, வேறிடத்திருந்து வழிபாடு நிகழ்த்தலாம். அவர் கோயில்களின் இழிவை உளங் கொண்டு வழிபாட்டையே விடுவது கூடாது. இயற்கை வடிவங்களையோ நடமாடுங் கோயில் களாகிய உயிர்களையோ வழிபடுவோர்க்கு, வேறு எவ் வழிபாடும் வேண்டுவதில்லை. எவ்வழியிலாவது நிலைத்த நெஞ்சம் பெறுதற்கும் அன்பு எழுதற்கும் ஒருவித வழிபா டிருத்தல் வேண்டு மன்பது எனது உட்கிடக்கை. மனவுணர்வு கொண்டு நிகழ்த்தும் வழிபாட்டு முறைகள் யாவும், உருவ வழிபாட்டின் பாற்பட்டன என்பதை எவரும் மறத்தலாகாது. வழிபாட்டின் வரலாறு உருவ வழிபாட்டின் வரலாற்றை ஈண்டுச் சுருங்கச் சொல்லல் நலம் என்று தோன்றுகிறது. முதல் முதல் மக்கள் இயற்கை வடிவங்களை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னே அவ் வியற்கை வடிவங்களின் ஓவியங்களாக வரையப்பெற்ற உருவங் களை வணங்கத் தொடங்கினார்கள். ஆண்டவன் இயற்கை வடிவினன் என்னுங் குறிப்புத் தோன்ற ஆண்டவன் அருளுருவத்தை மரத்தடியில் வைத்து மக்கள் போற்றிய காலமுண்டு. இன்னும் இவ்வழிபாடு சிலவிடங்களில் நிகழ்ந்து வருகிறது. பின்னாளில் ஓவியத் துறை வளர வளர, ஓவியம் வல்லார், இயற்கையின் வேறுபல கூறுகளையும் ஓவியங்களில் வடித்து ஆண்டவன் உருவத்தைச் சுற்றி அணி செய்தார். அவ்வோவிய அணிகள் நாளுக்கு நாள் கோபுரங்களாகவும் மண்டபங்களாகவும் பெருகின. இந்நாளில் ஓவிய நுட்ப உணர்வும் ஒடுங்கிற்று, வெறுக்கத்தக்க இழிந்த உருவங்கள் கோபுரங்களிலும் மண்டபங்களிலும் விலங்கு மனத்தால் பொறிக்கப்படுகின்றன. அவைகள் இக்கால மக்களின் மனோநிலையைப் புலப்படுத்துகின்றன. நாளுக்கு நாள் இக் கோயில்கள் தொகையில் பெருகலாயின. கோயில்கள் பெருகப் பெருக அவைகள் வாணிபக் கூடங்களாயின. தற்காலக் கோயில்கள் பலவற்றைக் கொலை களவு கள் காமம் பொய் என்னும் ஐம்பெரும் பாவங்கட்குரிய உறைவிடங்கள் என்றுங் கூறலாம். அந்தோ! இக்காலக் கோயில்களின் இழிவை என்னென்று கூறுவேன்! கூறிக் கூறி என் நாவும் தழும்பேறி விட்டது; எழுதி எழுதி என் கையும் மரத்துவிட்டது; கோயில்களின் கொடுமை ஒன்றா? இரண்டா? ஆயிரம்; ஆயிரம். சாதிப்பேய் வெளியில் மக்களிடையில் தோன்றிய கண்மூடி வழக்க ஒழுக்கங்களும், மூடக் கொள்கைகளும், பிடிவாதங்களும் பிறவுங் கோயில்களில் புகுந்து உருவ வழிபாட்டின் நோக்கத்தையே சிதைத்துவிட்டன. கோயில்களில் ஒரு பெரிய பேய் தலைவிரித் தாடுகிறது. அப் பேய் எது என்று உங்கட்குத் தெரியும். அச் சாதிப் பேய் அரசு செலுத்துங் கோயில்களில் அன்புக் கடவுளுக்கு இடமேது? கோயில்கள் மிக இழிந்த நிலையுற்றிருக்கின்றன. சில அன்பர்கள் கோயில்களைச் சீர்திருத்தஞ் செய்ய முயன்று வருகிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி தரின் நலன் விளையும். கட்டுப்பாடில்லை கோயில்கள் இவ்விழிநிலை யுற்றதைக்கொண்டு உருவ வழிபாட்டையே கைவிடுதல் கூடாதென்பதை மீண்டும் வலி யுறுத்துகிறேன். ஆண்டவனது அகண்டாகாரத்தின் அறிகுறி யாகிய உருவத்தை வீட்டிலும் வழிபடலாம்; வேறிடங்களிலும் வழிபடலாம். அவ்வுருவை இருந்து கொண்டும் நினைக்கலாம்; நடந்துகொண்டும் நினைக்கலாம் எப்படி எவ்வழியில் அவ் வுருவை நினைந்தாலென்ன? எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் - மன்னியசீர் சங்கரன்றாள் மறவாமை பொரு ளன்றே என்றார் சேக்கிழார். வழிபாட்டிற்கெனக் குறிப்பிட்ட ஓரிடம் வேண்டுவதில்லை. குறிக ளும்அடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே எனவரூஉம் அப்பர் திருவாக்கை நோக்குக. இளமையில் எனக்கிருந்த கோயில் பற்றுக்கோர் அளவில்லை. நாளடைவில் அப் பற்று இறுகலாயிற்று. காரணம் என்னை? தற்காலக் கோயில் வழங்கும் ஆபாசக் காட்சியே யாகும். ஆபாசம் புகாத கோயில்கள் இன்னுஞ் சில இடங்களில் இருக்கின்றன - கோயில்களின் ஆபாசங்கள் கடவுளிடத்திருந்து பிறந்தன அல்ல. அவை மனிதன் பாழும் உள்ளத்தினின்றும் பிறந்தனவேயாகும். அவ்வாபாசங்களைக் கண்டு உருவ வழி பாட்டில் ஏன் வெறுப்புக் கொள்ளுதல் வேண்டும்? அவ்வழி பாட்டுக்குரிய முறைகள் பலவுண்டு. அவைகளில் ஏதாயினும் ஒன்றைக் கொள்வது அறிவுடைமை. தியானம் யோகம் ஆண்டவன் இயற்கையை உடலாகக் கொண்டவன் என்றும், அந் நுட்பத்தை அறிவறுத்தவே அருளாளர்களால் அழகுப் படங்கள் எழுதப்பட்டன என்றும் மேலே சுருங்கச் சொல்லியிருக்கிறேன். அவ்வழகு உருவங்களை உன்ன உன்ன, அவைகள் நெஞ்சை ஒருமைப்படுத்தி, இயற்கைக் கடவுளை உணர்த்துகின்றன என்பதையும் முன்னர்ச் சிறிது விளக்கியிருக் கிறேன். நூல்கள் கோயில்கள் நினைப்பற நினைந்து கடவுளின் அகண்ட நிலையை உணர்ந்த அன்பர்கள் அருளிய நூல்கள் எனக்கினிய கோயில் களாகத் துணை புரிகின்றன. அக் கோயில்களின் உள்ளே நுழைந்தால், ஆண்டவனை, அவனது உடலாகிய இயற்கை வாயிலாக உணரலாம். அன்பர்களே! மெய்யடியார்கள் எழுதிய பாட்டோவியங் களின் திறத்தை என்னென்று விரிப்பேன்? அவ்வோவியங்களில் ஆண்டவன் உடலையுங் காணலாம்; உயிரையுங் காணலாம். இயற்கை உடல்; இறைவன் உயிர் என்னும் உண்மையை ஞான சம்பந்தர் உள்ளிட்ட பெரியோர்கள் தங்கள் பாட்டோவியங் களில் வடித்துக் காட்டியிருக்கிறார்கள். அவ்வோவியங்கள் கண்ணைக் கவர்கின்றன. கருத்தைக் கவர்கின்றன; உயிரைக் கவர்கின்றன. உயிர் உள்ளம் உடல் எல்லாவற்றாலும் அவைகள் ஆண்டவன் அமுதைப் பருக செய்கின்றன. அத் திறத்தை எடுத்துக் கூற யானோ அருகன்? அத் திறத்தைத் தாயுமானார், இராமலிங்க சுவாமிகள் முதலிய தமிழ்ப் பெருமக்கள் உலகிற்கு விளக்கியுள்ளார்கள். வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வலனேந்திக் கனலெரி யாடுவர் காடரங்காக விரிவளர் தருபொழி லிளமயிலால வெண்றித் தருவிகள் திண்ணெனவீழும் எரிவளரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வணமென்னே. கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க்கொன்றைக் கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை நீர்கொண்ட சடையினர் விடையுயர்கொடியர் நிழல்திகழ்மழு வின ரழல்திகழ் நிறத்தர் சீர்கொண்ட மென்சிறை வண்டுபாண்செய்யும் செழும்புனலனையன செங்குலைவாழை ஏர்கொண்டபலவினொ டெழில்திகழ்சாரல் இடைச்சுரமேவிய இவர்வணமென்னே. ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள் போலும் ஏனத் திரளோ டினமான் கரடி யிழியு மிரவின்கண் ஆனைத் திரள்வந் தணையுஞ் சாரல் அண்ணா மலையாரே கைம்மக வேந்திக் கடுவனொ டூடீக் கழைபாய்வான் செம்முகமந்தி கருவரை யேறுஞ் சிராப்பள்ளி வெம்முக வேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம் காவிவாய்ப் பண்செயுங் கானப்பே ரண்ணலை நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர் தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே! செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி அவிகளுய்க் கப்படு மடிகள்வே டங்களே. நிறையுடை நெஞ்சுகளும் நீருளும் பூவுளும் பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே. கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில் ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே. ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும் பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய் சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. வம்பார் குன்றந் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார் சோலைக் கோலவண் டியாழ் செய் குற்றாலம் அம்பால் நெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை நம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள். செல்வமல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் வில்லி னொல்க மும்மதிலெய்து வினைபோக நல்கு நம்பான் நன்னகர்போலுந் நமரங்காள், ஞானசம்பந்தர் வரைந்த இத் தமிழ் ஓவியங்களைப் பாட்டுளங்கொண்டு பார்க்க; உன்னுக. இயற்கையை உடலாக இறைவன் கொண்டுள்ள உண்மையை ஞானசம்பந்தர் பாட்டுவழி உணர்த்துதலைத் தெளிக. இயற்கை உடல்; இறைவன் உயிர் என்னும் உண்மையை ஞானசம்பந்தப்பெருமான் அழகிய பாட்டோவியத்தில் எழுதிக் காட்டுகிறார். இவ்வோவியங்களில் நமது அன்னை இயற்கையைக் காணுங்கள் நமது அப்பன் ஆண்டவனைக் காணுங்கள் அன்பர்களே! தேவாரக் கோயிலி னுள் நுழைவோம். இயற்கை வடிவான இறைவனை - தென் னாடுடைய சிவனை - வழிபடுவோம். ஞானசம்பந்த ருள்ளிட்ட பெரியோர்கள் பாடல்களை ஓதி, ஓதி, அப்பொருட்களில் திளைத்து நிற்பதுஞ் சிறந்த வழிபாடாகும். இன்னும் விரிக்கிற் பெருகும். சீர்திருத்தம் சீர்திருத்தம் என்னும் பெயரால் ஆண்டவன் நினைவு என்னும் வேரையே அறுத்துச் சாய்க்கச் சிலர் முயன்று வருகிறார். அச் சீர்திருத்தத்தால் மக்கள் வாழ்வு நலம் பெறா தென்பது ஒருதலை. முன்னோர்கள் நமக்களித்த சமயநூலெனும் ஞான வாள் கொண்டே இடையில் முளைத்த அஞ்ஞானக் களைகளை அறுத்தெறியலாம். எடுத்துக்காட்டாகப் பெரிய புராணமென்னும் பெருநூலை உங்கட்கு நினைவூட்டுகிறேன். பெரிய புராணம் ஒரு பெரிய சீர்திருத்த நூல் என்பது எனது உள்ளக்கிடக்கை. சேக்கிழார் பெருமான், தாம் வாழ்ந்த கால தேச வர்த்தமானத்துக் கேற்றவாறு ஆண்டவன் அருள்வழி நின்று செம்மைசேர் சீர்திருத்தம் நிகழ்த்தினார். சேக்கிழார் சேக்கிழார் காலத்தில் சாதிப்பேய் பேராக்கம் பெற் றிருந்தது. அப்பேயை ஓட்டுதற்கு, அக்காலம் இடந்தரு வழி நின்று, சேக்கிழார் சீரியகடன் ஆற்றினார். கடவுளன்பு என்னும் பெயரால் அக்காலக் குறைபாடுகளைச் சேக்கிழார் களைந்தார். ஆதி சைவராகிய வன்றொண்டப் பெருந்தகையார் உருத்திர கணிகைக் குலத்திற் றோன்றிய பரவையாரையும், வேளாள மரபிற் பிறந்த சங்கிலியாரையும் மணங்கொண்டதும், அந்தணர் பெருமானாராகிய அப்பூதியடிகள் வேளாள குல திலகராகிய அப்பர் சுவாமிகளைக் குருவாக் கொண்டதும், அவ்விருவம் உடன் உண்டதும், கட்டடக்கோயிலைக் கடவுள் கருதாது, பூசலார் உள்ளக்கோயிலை அவர் விழைந்ததும், இன்னோரன்ன பிறவும் உங்கட்குத் தெரியும். இத்தகைச் சீர்திருத்த முறைகளால் தமிழ் நாட்டைச் செம்மை செய்த சேக்கிழார் பெருமானையும் இப்பொழுது சிலர் குறை கூறுகிறார். அன்னார் சேக்கிழார் திருவுள்ளத்தை அறியாதார் என்பது எனது கருத்து. நாயன்மார் அறுபான்மும்மை நாயன்மார்களைப் பற்றி ஈண்டு இரண்டொரு குறிப்பை மட்டும் வெளியிடக் கருதுகிறேன். நாயன்மார்கள் வாழ்ந்த காலம், சாதி வேற்றுமை ஆக்கம் பெற்றிருந்த காலம். அக்காலத்தில் எவ்வழி நின்று சாதி வேற்றுமையை நீக்க வேண்டுமோ அவ்வழிநின்று அறிஞர்கள் கடனாற்றினார்கள். கலப்புமணம், உடன்உண்ணல் முதலியன பெரியபுராணத்திலிருத்தல் காணலாம். நாயன்மார்கள் அனைவரும் பற்பல சாதியில் தோன்றினவர். இவர்களை முதன் முதல் பாமலரால் போற்றினவர். தம்பிரான் தோழரெனுஞ் சுந்தரமூர்த்தி சுவாமிகள். குல முறைப்படி அவர் அந்தணர். அவ்வந்தணர் எல்லாச் சாதியாரையும் அடியார்க்கு மடியேன் - அடியார்க்கு மடியேன் என்று வழுத்தியிருத்தல் காண்க. அறுபான்மும்மை நாயன்மார்களை அம் முறையில் இப்பொழுதும் அன்பர்கள் வழிபடுகிறார்கள். இவ்வாறு கடவுள் அன்பு என்னும் வழிநின்று, காலத்திற்கேற்ற சீர்திருத்தம் நிகழ்த்திய பெரியோர்களை இழித்துக் கூறுவது. பெருந்தகைமையாது. அவ்வருளாளர் வழிநின்று இக்காலத்துக்கேற்ற சீர்திருத்தம் நிகழ்த்துவதே அறிவுடைமை. தீக்கிளர்ச்சியும் தவமும் இப்பொழுது நமது நாட்டில் தோன்றியுள்ள சில தீக் கிளர்ச்சிகளைக் கண்டு சில அன்பர்கள் மனங் கவல்கிறார்கள்; சில அன்பர்கள் சீற்றங் கொள்கிறார்கள். கவற்சியும் வேண்டாம்; சீற்றமும் வேண்டாம். வேண்டுவது ஒன்றே. அது தவம்; தவம். முன்னை நாளிலும் நாட்டிடைப் பல தீக்கிளர்ச்சிகள் தோன்றாமலில்லை. அந்நாளில் அறிஞர்கள் கவன்றதுமில்லை; சீறியதுமில்லை. சிவபாதவிருதயர் என்செய்தார்? மங்கையர்க் கரசியார் என் செய்தார்? அன்பர்களே! உன்னுங்கள்! அவர்கள் தவங்கிடந்தார்கள். அத் தவநெறியில் நிற்குமாறு உங்களையும் நான் வேண்டுகிறேன். திருவருட்டுணை மனித முயற்சிக்கு ஆண்டவன் அருள் தேவை. ஆண்டவன் திருவருள் வலத்தைப் பெற முயலவேண்டுவது நம் பெருங் கடமை. நமது ஞானசம்பந்தவள்ளல் தீக்கிளர்ச்சியைத் தொலைக்க ஆண்டவன் திருவருளையே வேண்டி நின்றார். ஈனர்கட் கெளியேனலேன் திருஆலவாய் அரனிற்கவே என்றும், செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே அஞ்சலென் றருள்செய் என்றும், அன்று முப்புரம் செற்ற அழக நின் - துன்று பொற்கழல் பேணா அருகரைத் - தென்ற வாது செயத் திருவுள்ளமே என்றும், நமது ஆண்டகை முதல்வன் அருளை வேண்டி வேண்டி நின்றது காண்க. தீக்கிளர்ச்சிகளின் தோற்றத்துக்குரிய காரணங்களையும் நாம் கருதல் வேண்டும். காரணங்கள் பலப்பல கூறலாம். நமது கவலையீனமும் ஒரு காரணமாகும். சமய வளர்ச்சிக்காக நாம் என் செய்கிறோம்? எத்துணைச் சமயப் பள்ளிக்கூடங்களை நிறுவியிருக்கிறோம்? எத்துணைப் பேர் தேவாரத்தைப் பொரு ளுணர்ந்து ஓதுகிறார்? சிவதீட்சையின் நுட்பம் எத்துணைப் பேர்க்குத் தெரியும்? சிவநேசத்துக்குப் பதிலாகச் சாதி நேச மன்றோ நாட்டில் வளர்கிறது? கோயில்களில் சாதி! மடங்களில் சாதி! சைவத் திருக்கூட்டங்களில் சாதி! இக்கொடுமைக ளல்லவோ தீக்கிளர்ச்சித் தோற்றத்துக்குக் காரணங்களாக நிற்கின்றன? இக் கொடுமைகள் இன்று களையப்படுமேல் நாளை தீக்கிளர்ச்சிகள் மாண்டொழியும். சமயத்தில் நம்மவர்க்குள்ள கவலையீனத்தைக் காலத்தின் அருமை நோக்கி விரித்துக்கூற அஞ்சுகிறேன். ஏறக்குறைய இரண்டேகால் மணிநேரம் உங்கள் முன்னிலையில் பேசியிருக் கிறேன். இன்னும் பல சொற்பொழிவுகள் நடைபெறுதல் வேண்டும் பிறவற்றைப் போதிய காலங் கிடைப்பின் சொற்பொழிவுகளைத் தழுவி முடிவுரையில் கூறலாமெனக் கருதுகிறேன். இதுகாறும் எனது புன்மாழியைப் பொறுமையுடன் செவிமடுத்த உங்கள் அனைவர்க்கும் எனது நன்றியறிதலான வணக்கம். சகோதரிகளே! சகோதரர்களே! எந்நாட்டவர்க்கும் இறைவன், நமது தென்னாடுடைய சிவன் என்பதை என் சிற்றிறிற் கெட்டிய வரையில் விளக்கிக் கூறினேன். தென்னா டுடைய சிவனே போற்றி - எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி என்னும் மணிவாசகத்தின் உட்கிடக்கையை ஓர்ந்து ஓர்ந்து மகிழ்ச்சி யுறுங்கள்; அச் சிவத்தை உணர முயலுங்கள்; அதற்குறிய வழிபாட்டைச் செய்யுங்கள்; வழிபாட்டிற்குரிய வழிகளைக் கோலிய ஞான சம்பந்தப் பெருமானையும் மற்றவரையும் மறவாதேயுங்கள். அவர்களே நமக்கு வழி காட்டிகள். மீண்டு மொருமுறை எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்து கிறேன். எனது பேச்சில் குற்றங் குறைகள் காணப்படுமேல் மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.  நினைப்பவர் மனம் நினைப்பவர் மனம் குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி - மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப் பெறுந் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார், அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப் போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து, மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பாங்கர், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வெள்ளிவிழாக் கூட்டம் இன்று (29-8-1930) கூடியிருக்கிறது. இக்கூட்டத்துக்குத் தலைமைவகிக்கும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இப்பேற்றை எனக்கு வழங்கிய சமாஜ அமைச்சுக் குழுவினர்க்கும், வரவேற்புக் கூட்டத்தார்க்கும், ஈண்டு ஈண்டியுள்ள மற்ற அன்பர்கட்கும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன். சைவ சித்தாந்த மகா சமாஜம் தோன்றி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. இச்சமாஜம் கெடில நதிக்கரையில், திருப் பாதிரிப்புலியூரில், ஞானியார் சுவாமிகள் மடத்தில், சுவாமி வேதாசலம், அறிஞர் நல்லசாமிப் பிள்ளை முதலியோர் முயற்சி யால் காணப்பட்டது. சமாஜத்தின் வெள்ளி விழா, கெடில நதிக் கரையிலேயே, சைவக் கண்கள் இரண்டு பிறந்த இருபெரும் பதிகளின் நடுவண் ஒளிருங் கிழக்குமருதூர்க்கண், திருச்சிற்றம்பல இல்லத்தில், வழிவழிச் சைவத் தொண்டாற்றி, அப்பர் சுவாமி களிடத்து அன்பு செலுத்திப் பேரும் புகழும்பெற்ற பெருங் குடியிற்றோன்றிய சைவச் செல்வர் - திருவாளர்- கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் புதல்வரும், சைவ இளைஞருலகில் உயிரனை யாரும், எனது கெழுதகை நண்பரும், உழுவலன்பருமாகிய திருமிகு - நாராயணசாமியென்னும் நம்பி, திருவாளர் - வெ. பால கிருஷ்ண நாயுடு அவர்களின் புதல்வி திருமிகு- அலர்மேல் அம்மாள் என்னும் நங்கையை, வாழ்க்கைத் துணை யாகக் கொண்ட திருமணப் பொலிவு கொலுவீற்றுள்ள இவ் வேளையில், நடைபெற நேர்ந்தமை குறித்து மகிழ்வெய்து கிறேன். குவளைக் கண்ணி கூறன் திருவருளால் மணமக்கட்கு நலன் பெருக பெருக என்று வாழ்த்துக் கூறி, எனது பணிமேற் செல்கிறேன். இருபத்தைந் தாண்டுகளாக ஒல்லும்வகை முயன்று, சைவ சித்தாந்த மகா சமாஜம் சமயத்தொண்டாற்றி வருகிறது. சமாஜத்தின் நிகழ்ச்சி முறைகள், அதன் சார்புப் பத்திரிகையாகிய சித்தாந்தத் தில் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. சமாஜம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, அதன் நலன்கருதி யுழைத்துவந்த அன்பர்கட்கெல்லாம் எனது வணக்கம் உரியதாக. இவ்வெள்ளிவிழாக் கூட்டத்தில் அப்பர் அருண் மொழி களுள் ஏதாவதொன்றைக் குறிக்கோளாக் கொண்டு தலைமை யுரை வழங்குமாறு மணமகனும் மற்றுஞ் சிலரும் விரும்பினர். அவர் விரும்பியவாறே அப்பர் அருண்மொழிகளில் எனது உளத்தைச் செலுத்தித் துழவினேன். ஒரு திருப்பாட்டில் எனது நெஞ்சம் படிந்தது. அது வருமாறு:- பனைக்கை மும்மத வேழ முரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ இத்திருப்பாட்டில் இரண்டாம் அடியாக அமைந்துள்ள நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்பதைத் தழுவித் தலைமையுரையைச் சுருக்கமாக நிகழ்த்த முயல்கிறேன். குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு உங்களை வேண்டு கிறேன். நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் என்னுஞ் சீரடியை உற்று நோக்குவோம். முதலாவது, ஆண்டவன் தன்னை நினைப்பவர் நெஞ்சங் கோயிலாக் கொண்டானெனில், அவன் தன்னை நினையாதார் நெஞ்சங் கோயிலாக் கொண்டிலையோ என்னும் ஐயம் பிறக்கிறது. இவ்வையம் பிறத்தல் இயல்பு. ஆண்டவன் ஓரிடத்திற் கோயில் கொண்டு, மற்றோரிடத்திற் கோயில் கொள்ளாதவனல்லன். அவன் நீக்கமற்ற யாண்டும் நிறைந்து நிற்பவன். அவன் ஓரிடத்தை விரும்பிக்கொள்வோனு மல்லன்; மற்றோரிடத்தை வெறுத்துத் தள்வோனுமல்லன். அவன் கோயில்கொள்ளல் கொள்ளாமை அவனைப் பொறுத்தன வல்ல. அக்கொள்ளல் கொள்ளாமை உயிர்களின் நிலையைப் பொறுத்து நிற்பனவென்க. கதிரொளி யாண்டும் ஒரு தன்மையதாகவே படர்ந்து நிற் கிறது. அவ்வொளிக்கு ஒருவரிடம் விருப்பும், இன்னொருவரிடம் வெறுப்புமில்லை. அவ்வொளி யின்பத்தைக் குருடன் நுகர் கிறானா? இல்லையே. இக் குறைபாடு கதிரொளியின் பாலதா? குருடன் பாலதா? மின்சாரம் யாண்டும் நிலவுகிறது. யாண்டும் நிலவும் அது யாண்டுங் காட்சியளிக்கிறதோ? இல்லை. பின்னை அது யாண்டுக் காட்சி வழங்குகிறது? அதைத் தொழிற்படுத்தி, ஒழுங்கு செய்யு மிடத்தில் அது காட்சி வழங்குகிறது. சிற்சில இடங்களில் மின்சாரம் விளங்கித் தோன்றுவது கண்டு, மற்றைய இடங்களில் அஃது இல்லையென்று கூறுவது பொருத்தமாகுங்கொல்! கதிரொளியைப் போலவும், மின்சாரத்தைப் புரையவும் ஆண்டவன் திருவருள் விளங்குகிறது. ஆண்டவன், தன்னருளை எல்லா இடங்களிலும் விருப்பு வெறுப்பின்றிப் பொழிந்து கொண்டிருக்கிறான். மெய்யறிவு விளங்கப் பெற்றோர்க்கு அது புலனாகும். ஏனையோர்க்கு அது புலனாகாது. உயிர்கட்குப் புலனாதல், புலனாகாமை முறையே ஆண்டவன் கோயில் கொள்ளல், கொள்ளாமை என்று வழங்குதல் மரபு. கவலையால் பெரிதும் பீடிக்கப்பட்ட ஒருவன், மண்ணில் நடந்துகொண்டே மண்ணை மறந்துவிடுகிறான். மண்ணுமிருக் கிறது; அதன்மீது நடையும் நிகழ்கிறது. ஆனால் நடப்பவன் நிலையென்ன? அவன் கவலை, அவனைத் தாங்கும் மண்ணையே மறைத்துவிட்டது. இவ்வாறே எல்லாவற்றிற்குந் தாரகமாக ஆண்டவன் திருவருள் நிற்கிறது. அதை ஞானிகள் உணர்கிறார்கள். மற்றவர்கள் உணர்கிறார்களில்லை. ஈண்டு உணரல் உணராமை யாருடையன? ஆண்டவன் உயிர்களிடைக் கோயில்கொண்டிருத்தலை உயிர்கள் உணரும் நிலை யொன்று; உணராநிலை யொன்று முன்னையது ஞானநிலையென்றும், பின்னையது அஞ்ஞான நிலையென்றுஞ் சொல்லப்படும். இவ்விரு நிலைகளும் உயிர்களின் பாற்பட்டனவாகலின், நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் என்றும், நினையாதார் மனங் கோயிலாகக் கொள்ளாதவன் என்றும் ஆண்டவனைக் கருதலாகாது. ஆகவே, இதைப் பற்றி ஐயுற வேண்டுவ தில்லை. நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் என்னும் அடிக்கண் போந்துள்ளகொண்டவன் என்பது, புதிதாக ஓரிடங் கொள்வதைக் குறிப்பதன்று. அது முன்னரே (கோயில்) கொண்டமையைக் குறிப்பதென்க. இதனைச் சுவாமிகள் மற்று மோரிடத்திலும் என் மனமே சென்று புக்கனன் போந்த சுவடி ல்லையே என்று விளக்கியுள்ளார்கள். போந்த சுவடில்லையே என்பது மனத்தில் இறைவன் புதிதாகப் புகுதலைப் புகல்வதன்று. ஆண்டவன் பண்டே நெஞ்சங் கோயில் கொண்டுள்ளான். அவன் நினைவு அதை யுணர்த்துவதாகிறது. அப்புத்துணர்விற்கு ஆண்டவன் நெஞ்சில் புகுந்தது போலத் தோன்றுதல் இயல்பு. உண்மையில் ஆண்டவன் புதிதாக யாண்டும் புகுதலில்லை யென்க. பூவினிற் கந்தம் பொருந்தியவாறு போல் - சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது எனவரூஉந் திருமூலர் திருவாக்கை யோர்க. மலர்மிசை ஏகினான் என்னும் வள்ளுவர் வாக்கும், அதற்குப் பரிமேலழகர் வரைந்துள்ள உரைக்குறிப்பும் ஈண்டு உன்னற்பாலன. ஆண்டவன் நெஞ்சில் கோயில் கொண்டிருத்தலை உயிர்கள் உணராதவாறு அறியாமை தகைந்து நிற்கிறது. அறியாமை ஒடுங்க ஒடுங்க ஆண்டவன் நெஞ்சில் கோயில் கொண்டிருத்தல் உயிர் கட்குப் புலனாகும். உயிர்கட்கு அறியாமைக் கட்டிருத்தல் வெள்ளிடைமலை. கற்றல் கேட்டல் முதலியவாற்றான், பல பொருள்களைப் பற்றிய அறியாமை நீங்கிச் சிற்றறிவு விளங்குதலை அநுபவத்தில் பெறுகி றோம். இதனால், முழு அறியாமை யொடுக்கமும், முழு அறிவு விளக்கமும் என்றாதல் ஒருபோது உற்றே தீரல்வேண்டு மென்பதை யூகித்துணரலாம். உயிர்கள் அறியாமையினின்றும் விடுதலை யடைவதே வீடுபேறென்பது. அவ்வீடு பேற்றிற்கு உயிர் எதைப் பற்றுதல் வேண்டும்? தன்னைப் போன்ற கட்டுடைய ஒன்றையா பற்றுதல் வேண்டும்? குருடன் குருடனை வழிகாட்டியாக்கொள்ள விழைதலுண்டோ? கட்டுடைய ஒன்று கட்டில்லா ஒன்றைப் பற்றுவதே நியாயம். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் - பற்றுக பற்று விடற்கு என்றார் திருவள்ளுவனார். ஆண்டவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கின வனாய், முற்றறிவுடையனா யிருப்பவன். அவனைப் பற்றினால் உயிர்கள் கட்டினின்றும் விடுதலை அடைந்து இன்பந் துய்த்தல் உறுதி. ஆண்டவனைப் பற்றுவது எப்படி? அதற்குரிய வழிகள் பலப்பல. அவைகளுள் எளியதும், விரைவில் பேற்றை யளிக்கவல்லதுமாயிருப்பது ஒன்று. அதுவே ஆண்டவனை நினைத்தல் என்பது. நினைத்தலை, நெஞ்சால் பற்றுவது என்றுஞ் சொல்லலாம். இதனைத் தியானயோகம் என்றுங் கூறுப. தியானம் உயிர்நலனுக்கு இன்றியமையாதது. ஆண்டவனை நினைந்து நினைந்து உருக உருக, அவன் நெஞ்சங் கோயில் கொண்டிருத்தலை யுணர்ந்து வீடுபே றெய்த லாகும். வேண்டற்பாலது ஆண்டவன் நினைவு நினைவு என்று வலியுறுத்துகிறேன். அநுபவத்தில் ஆண்டவன் நினைவின் விழுப்பமுணர்ந்த ஆன்றோர்கள், பின் வருவோரை நோக்கி, ஆண்டவனை நினையுங்கள் நினையுங்கள் என்று அருளிப் போந்த பொன் னுரைகள் மலைக்குலங்களெனத் திரண்டு கிடக்கின்றன. அவைகளை எவ்வளவு படித்தாலும் இப்பாழும் நெஞ்சந் திருப்புகிறதா? ஆண்டவன் நினைவுக்கென்றே நெஞ்சம் அமைக்கப் பட்டிருக்கிறது; நெஞ்சிற்கெனக் காரணங்கள் வகுக்கப்பட் டிருக் கின்றன; காரணங்கட்கென உடல் வழங்கப்பட்டிருக்கிறது; உடலுக்கென உலகம் வாழ்வு கல்வி செல்வம் முதலிய எல்லாம் அளிக்கப்பட் டிருக்கின்றன. நெஞ்சந் திரும்பி ஆண்ட வனைப் பற்றினால், பிறவெல்லாம் அதன் வழி நின்று, ஆண்டவன் வயப்படும். ஆண்டவன் நினைவிற்கென்றே இவை யாவும் வழங்கப்பட் டிருக்கின்றன. இவைகளைப் பெற்றும் ஆண்டவனை நினையாத நெஞ்சை என்னென்று கூறுவது? ஏ! மடநெஞ்சே! பாழ் நெஞ்சே! பெரும்பற்றப் புலியூரனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளாகும். ஆதலால் நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை; நெஞ்சே! நீதியால் அவனை நினைசெய். தோற்ற முண்டேல் மரணமுண்டு என்பது வன்றொண்டர் வாய்மொழி. என்றாதல் பருவுடல் மறைதல் ஒருதலை. மறைந்த ஒன்று மீண்டும் வருதல் வேண்டுங்கொல்? மீண்டும் பிறவாநிலை தேடிக் கொள்ளலே அறிவுடைமை. இக்காய நீக்கி இனியொரு காயத்திற் - புக்குப் பிறவாமற் போம் வழிதேடுமின் என்றார் திருமூலர். இதற்கு என் செய்தல் வேண்டும்? நல்ல யாக்கை யுள்ள போதே தோற்றக் கேடில்லாத ஆண்டவன் நினைவில் உறைந்து நிற்கப் பயிலல் வேண்டும். பருவுடல் மறையுங்கால் தோன்றாத் துணையாய்ச் செல்வது எது என்று நினைந்து பாருங்கள். அதை நினைக்க நினைக்க ஆண்டவன் நினைவின் இன்றியமையாமை புலப்படும். ஆண்டவன் நினைவின் இன்றியமையாமை தெரிகிறது; ஆண்டவன் நினைக்கவும் நெஞ்சம் எழுகிறது; ஆனால் உயிர்ச் சார்பும் பொருட் சார்பும் இடையூறாக நிற்கின்றன என்று சிலர் சொல்கிறார். இஃது அறியாமை. ஆண்டவனை நினைத்தற்கு மனைவி மக்களைத் துறத்தல் வேண்டுமென்றும், வீடு வாசல்களை வெறுத்தல் வேண்டுமென்றும் நினைப்பதே ஆண்டவன் நினைவிற்குக்கேடு சூழ்வதாகும். உயிர்ச்சார்பை யும் பொருட் சார்பையும் ஆண்டவன் நினைவிற்கு அரணாகப் பயன்படுத்தி வாழ்வதே சிறந்த இன்ப அன்பு வாழ்வாகும். அவைகள் யாவும் வாழ்விற்கென்று ஆண்டவனால் அளிக்கப் பட்டன. அவைகளை வெறுப்பது ஆண்டவனை வெறுப்பதாக முடியும். உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை மாயை யென்றும், கட்டென்றும் பெரியோர்கள் இழித்துக் கூறியதன் நோக்க மென்னை யென்று சிலர் வினவலாம். உயிர்ச்சார்பு பொருட் சார்புகளை ஆண்டவன் நினைவிற்கு அரணாக் கொள்ளாது, அவைகளையே பொருளாக் கொண்டு, ஆண்டவனை மறந்து, மதிமயங்கித் திரியும் உலோகாயதர்கட்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வேண்டிப் பெரியோர்கள் அவைகளை இழித்துக் கூறினார்கள். அவர்கள் கூற்றுக்களின் உள்ளக்கிடக்கையை யுணராது, வெறுத்தல் துறத்தலில் கருத்தை இருத்துவது இழுக்காகும். நமது நாட்டில் இடைக்காலத்தில் ஒருவித போலித் துறவு தோன்றலாயிற்று. அது மக்கள் வாழ்வையே குலைத்து வருகிறது. அது குறித்துப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்கைத் துணை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தி யடிகளும் முதலிய நூல்களின் வாயிலாக எனது கருத்தை விரித்துக் கூறியுள்ளேன். நம் ஆண்டவன் அம்மையப்பன்; சோமாகந்தன். அவனை வழிபட்டுப் பேறெய்திய நாயன்மார்களிற் பலர் மனைவி மக்களைத் துறந்தவரல்லர்; வீடு வாசல்களை விடுத்தவரல்லர். அவர்கள், உள்ளன வெல்லாம் எம்பிரானுடைமை என்று இல் வாழ்வு நடாத்திப் பேறெய்தியவர்கள். அவர்கள் அடிச்சுவட்டைப் பற்றி நடக்கவேண்டுவது நமது கடமை. ஆகவே ஆண்டவன் நினைவிற் கென்று வீட்டையும் விடவேண்டுவதில்லை; காட்டுக்கும் ஓட வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களுடன் வாழ்ந்தே - ஆண்டவனை நினைக்கலாம். ஆண்டவன் நினைவிற்கென்று குறிப்பிட்ட புறக்கட்டுப் பாடு ஒன்றும் வேண்டுவதில்லை. கரவில்லா அன்புளங் கொண்டு எந்நிலையில் நின்றும் எக்கோலம் பூண்டும் ஆண்டவனை நினைக்கலாம். எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண் டாலும் -மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொரு ளென்றே என்பது பெரியபுராணம். ஆண்டவனை எப்பொழுது எப்படி நினைப்பது? ஆண்டவனை இந்நேரத்தில் நினைத்தல் வேண்டுமென்னும் நியதியில்லை. ஆண்டவனை எந்நேரத்திலும் நினைக்கலாம். வாய்ப்பு நேரும்போ தெல்லாம் ஆண்டவனை நினைந்து நினைந்து, அந்நினைவை இடையறாத ஒன்றாக்கிக்கொள்ளல் வேண்டும். குறிக்கோளாக எடுத்துக்கொண்ட திருப்பாட்டின் இறுதி யடியை நோக்குக. தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ என்று அப்பர் அலமருகிறார். தினைப்பொழுது ஆண்டவனை மறந்தால், அப்பொழுதில் எத்துணையோ தீயநினைவுகள் தோன்றும். அவைகள் உய்யு நெறியை இடர்ப்படுத்தும். ஆதலால் இடையீடின்றி ஆண்டவனை நினைத்தல் வேண்டுமென்று அப்பர் அறிவுறுத்துகிறார். எந்நேரமுஞ் சிவனை ஏத்துங்கள். போற்றுங்கள் என்றும், நின்று மிருந்துங் கிடந்தும் நினை செய்க - என்னுஞ் சிவன் தாள் இணை என்றும் ஆன்றோர்கள் கூறிப் போந்தார்கள். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே - வழுவா திருக்க வரந்தரல் வேண்டும் என்னும் அடிகளின் வாக்கு, ஆண்டவனிடத்து இடையறாத நினைவின் இன்றியமையாமையை வலியுறுத்துதல் காண்க. இடையறாத நினைவு தொடக்கத்தில் உறுதல் அருமை. பின்னே பின்னே நாளடைவில் அவ்வருமை நீங்கும். இதற்கு உயிர்களின் முயற்சியுடன் ஆண்டவன் திருவருளும் ஒன்றுதல் வேண்டும். பாவத்துக்கஞ்சிச், செய்த பாவங்களை முறையிட்டு, அழுக்காறு முதலிய குற்றங்களைக் களைந்து, ஆண்டவன் திருவடிப் பற்றையே பற்றாக்கொண்டு, அத்திருவடியை நினைந்து நினைந்து உருகியுருகிக் கண்ணீர் சொரிந்து அழ அழ, ஆண்டவன் திருவருட்டுணை தானே வரும். இடையறாத நினைவிற்குத் திரு வருட்டுணை பெரிதும் வேண்டற்பாலது. பாவச் செயல்களை வெறுத்து, ஆண்டவன் திருவடி நினைவில் உயிர்கள் கொள்ளும் வேட்கையளவினதாகத் திருவருட்டுணை கிடைக்கும். ஆண்டவன் நினைவை இடையறாத ஒன்றாக்கிக் கொள் வதற்கு எப்படி அவனை வழிபடுவதென்பதிற் சிறிது கருத்துச் செலுத்துவோம். முறைகள் எண்ணிறந்து கிடக்கும். ஒவ்வொரு வர்க்கு ஒவ்வொரு முறை யிருக்கலாம். அவைகளில் நுழைந்து மல்லாட வேண்டுவதில்லை. முதலாவது அலையும் நெஞ்சை ஆண்டவன் நினைவில் நிலை பெறுத்த முயல்வது ஒழுங்கு. அலையும் நெஞ்சு எங்குமுள்ள ஆண்டவனை எவ்வாறு நினைக்க வல்லதாகும்? பரம் பொருள் அகண்டமாயிருப்பது. அகண்டமாவது மனத்தின் எல்லை கடந்து நிற்பது. எல்லை கடந்த ஒன்றை மனம் எங்ஙனம் நினைக்கும்? ஆதலால் தொடக்கத்தில் ஆண்டவன் நினைவூட்டக்கூடிய ஒரு குறியில் நெஞ்சை நிலைபெறுத்தப் பயிற்சி செய்தல் வேண்டும். அக்குறி, கண்ணையுங் கருத்தையுங் கவரக்கூடிய வனப்புடைய தாய், ஓவியம் நிரம்பியதாயிருத்தல் மிகச் சிறப்பாகும். அக் குறியின் கண் நெஞ்சம் படியப்படிய அலைதல் ஒழிந்து நிலைதல் பெறும். அந்நிலைத்த நெஞ்சில் வேறு எண்ணங்கள் அருகுதலும், ஆண்டவன் எண்ணம் பெருகுதலும் இயல்பில் நிகழும். இதற் கென்றே திருக்கோயில் வழிபாடு ஏற்படுத்தப்பட்டது. திருக்கோயில் வழிபாட்டின் நோக்கம் விழுமியது. அதன்கண் உயிர் நலனுமுண்டு; உடல் நலனுமுண்டு. இந்நுட்பம், நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் - புலவர்தன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் - அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும் ஆரூரா என்றென்றே யலறா நில்லே என்னும் திருத்தாண்டகத்தில் செறிந்து விளங்குதல் காண்க. நிலைத்த நெஞ்சம் பெறுதற்கென ஏற்பட்ட கோயில்களிற் பல இப்பொழுது எந்நிலையுற்றிருக்கின்றன? அவைகள், அலையும் நெஞ்சை இன்னும் அலைக்கும் பேய்க்கூடங்களாகி விட்டன என்று சுருங்கச் சொல்கிறேன். அக்கூடங்களில் தற்போது ஒருவிதப் பேயா ஆடுகிறது? எத்தனையோ விதப் பேய்கள் தலை விரித்தாடுகின்றன. சாதிப்பேய், கட்டுப்பேய், துட்டுப்பேய், வழக்குப்பேய், போட்டிப்பேய், சூதுப்பேய், வாதுப்பேய், பொய்ப்பேய், காமப்பேய், சோற்றுப்பேய் முதலிய பேய் களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இப்பேய்களை யோட்டச் சில அறவோர் முயன்று வருகிறார். அவரை மனமார வாழ்த்து கிறேன். கோயில் என்னும் பொருளிழந்து, வெறுங் கோபுரங் களையுங் கட்டிடங்களையுந் தாங்கி நிற்கும் நிலையங்களின் தற்கால நிலை கண்டு, சிலர் ஆண்டவன் வழிபாட்டையே மறுக்கப் புகுகிறார். அது தவறு. அந்நிலையங்கள்மீது கொண்ட சீற்றத்தை ஆண்டவன் வழிபாட்டின்மீது செலுத்துவது அறமாகாது. தொன்மை நோக்கத்தி னின்றும் வழுக்கி வீழ்ந்துள்ள நிலையங் களில் புகாமலும் ஆண்டவனை வழிபடலாம். எந்த இடத்தை யும் நல்லெண்ணத்தால் கோயிலாக்கிக் கொள்ளலாம். கோயில் என்பது வெறுங் கோபுரந்தாங்கியன்று. ஆண்டவன் நினைவூட்டி, அந்நினைவை நிலைபெறுத்தும் இயல்பு வாய்ந்த இடம் கோயிலாகும். மனத்தைக் கோயிலாக்கவே தொடக்கத்தில் சில இடங் களைக் கோயில்களாக் கொள்கிறோம். நாடு நகரமும் நற்றிருக் கோயிலும் - தேடித்திரிந்து சிவபெருமான் என்று - பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் - கூடிய நெஞ்சத்துக் கோயில் கொள்வானே - இது திருமந்திரம். நமது குறிக்கோள் நெஞ்சைக் கோயிலாக்க வேண்டு மென்பதே யாகும். அந்நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள யாண்டாதல் உருவ வழிபாடு செய்ய லாம். வழிபாட்டுக்கு எவ்வுருவைக் கொள்வது? எவரெவர் நெஞ்சம் எவ்வெவ்வுருவில் கவர்ச்சி பெறுகிறதோ அவரவர் அவ் வவ்வுருவைக் கொள்வாராக. உருவம் ஆண்டவன் நினைவுக்கு அறிகுறியேயாகும். ஆண்டவன் நினைவூட்டும் உருவம் எதுவாயி னுமாக. பன்னிறப் பசுக்கள் பன்னிறப்பாலையா சொரிகின்றன? எவ்வுருவைக் கொள்ளினும் அவ்வுரு ஆண்டவன் நினை வூட்டக்கூடியதா யிருத்தல் வேண்டும். ஆண்டவன் ஒருவனே. அவனை எவ்வுருவில் வழிபட்டா லென்ன? இதனை அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனை என்று மூன்றாமடியில் அப்பர் சுவாமிகள் குறிப்பா லுணர்த்துகிறார்கள். அப்பனை நந்தியை ஆரா அமுதினை - ஒப்பிலிவள்ளலை ஊழி முதல்வனை - எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் - அப்பரி சீசன் அருள்பெற லாமே என்றார் திருமூலர். ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போலத் - தருவனிவ்வுருவ மெல்லாம் தன்மையுந் திரியா னாகும் என்பது சிவஞானசித்தி. அழகிய ஓர் உருவில் மனம் ஒன்றிப் படியப் படிய மனத்தில் ஒருவித ஆற்றல் பிறக்கும். அவ்வாற்றல், ஆண்டவன் வேட்கை பெருகவும், மற்ற வேட்கைகள் சுருங்கவுந் துணை செய்வதாகும். நாளடைவில் மனத்தின் அலை அடங்கும்; மறவினைகளில் தோய நெஞ்சம் அஞ்சும்; நெஞ்சில் அமைதியும் ஒருமைப்பாடும் உறும்; நிலைத்த நெஞ்சம் உண்டாகும். இந்நிலையில் ஆண்டவன் திருவருளால் குருநாதன் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்துவன். மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாற் றொடங்கி னர்க்கோர் - வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்று தாயுமானார் அருளிய அநுபவ மொழியை நோக்குக. மெய்க்குரவன் காட்சிக்குப் பின்னை மனத்தில் உறும் மாறு தல்கள் பலப்பல. அவைகளுள் ஒன்று ஒருவித ஒளியெழுச்சி. அவ்வொளி தானே வலிந்து உயிரை இயற்கை வழிபாட்டில் உந்தும். இயற்கை வழிபாட்டு முறைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். இன்னுஞ் சில சொற்பொழிவுகள் இங்கே நடை பெறல் வேண்டும். உங்கள் அரிய காலத்தை யானே கொள்ளை கொள்ள விரும்புகிறேனில்லை. இயற்கை வழிபாட்டைப் பற்றி முருகன் அல்லது அழகு என்னும் நூலில் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். இயற்கை வழிபாடுகள் பலதிறத்தன. அவைகளுள் சிறந்தது ஞாயிறு வழிபாடு. ஞாயிறு வழிபாடு பழைய பழைய மாசு களைக் கடிந்து உயிரை ஒளிமயமாக்கும். அவ்வுள்ளொளி, இயற்கை உடலாகவும், இறை அதன் உயிராகவும் உள்ள நிலையைப் புலப்படுத்தும். இது, தன் வழிபாடென்னும் உயிர் வழிபாட்டைக் கூட்டும். தன்னில் ஆண்டவனை நினைந்து நிகழ்த்தும் வழிபாடு, தன்னிலுந் தன்னனைய உயிர்களிலும் ஆண்டவன் கோயில் கொண்டிருத்தலை யுணர்த்தும். இவ்வுணர்வு, உயிர்கட்கு விடுதலை நல்கும். தன்பால் கோயில்கொண்டுள்ள ஆண்டவன் மற்ற உயிர் களிடத்துங் கோயில்கொண்டிருத்தலையுணரும் ஒருவன் எவ் வுயிர்க் காதல் தீங்கு செய்ய நினைப்பனோ? எவனுந் தன் னுறுப்புக்குத் தானே தீங்கு செய்ய உடன்படான். தன்னுயிரும் பிறவுயிரும் ஆண்டவனுக்கு உறுப்புக்களாக இருத்தலை யுணரும் ஒருவன், பிறவுயிர்க்குத் தீங்கு நினையான். எல்லா உயிரையுந் தன்னைப்போல் பார்க்கும் ஒரு நிலை, ஆண்டவனைப் படிப்படியாக நினைப்பதால் கூடுவ தாகும். இந்நிலை வாசா கைங்கரியத்தால் கூடாது. உயிர்கள் வழிபாடு என்று வாயால் பேசுவதால் பயன் விளையாது. உயிர்கள் வழிபாடு என்று வாயால் பேசிக்கொண்டு, உயிர்கள்மாட்டுப் பகை பூசல் இகல் முதலியவற்றை வளர்த்து வருவது உயிர்கள் வழிபாடா காது. இந்நாளில் மன்பதைக்கண், நாடு, நிறம், மொழி, வகுப்பு, சமயம் முதலிய பெயர்களால் பகைமை, பூசல், இகல் முதலியன வளர்ந்துவரல் கண்கூடு. இப்பிரிவுகளையும் பிணக்குகளையும் எவ்வுயிரும் பராபரன் சந்நிதி என்னும் உணர்வு உண் டாக்குமோ? அன்பர்களே! உன்னுங்கள். இந்நாளில் உலகிடைப் பெரிதும் இம்மெய்யுணர்வை நல்கவல்ல கல்வியுண்டோ? அரசியலுண்டோ? வாழ்வுண்டோ? நாடு நிறம் மொழி சாதி சமயம் முதலிய பெயர்களால் ஒருவரை யொருவர் வஞ்சித்து வருத்தும் முறையன்றோ வாழ்வாகப் பரிணமிக்கிறது? இம்முறை வளர வளர மன்பதைக்கண் அன்பு அருகும். அன்பு அருகினால் மனிதன் என்னாவன்? சொல்லவும் வேண்டுமோ? எவ்வுயிரிலும் ஆண்டவனுண்மையை யுணர்த்துங் கல்வி, அரசு, வாழ்வு முதலியன உலகிடைப்பரவுதல் வேண்டும். இதற்குச் சமய ஞானம் வேண்டற்பாலது. சமய ஞானமென்று சமயவாதத்தை வளர்த்தலாகாது. சமய வாதங்களே சகோதர நேயத்தைக் கெடுத்து வந்தன; வருகின்றன. ஆண்டவனுண்மை யையும், அன்பு நெறியையும் அறிவுறுத்திச் சென்ற குருமார் பெயர்களால் பல சமயங்களும், அவைகட்கென மடங்களும், சங்கங்களும் பின் வந்தவர்களால் அமைக்கப்பட்டன. அவ் வமைப்புகள் கலகத்துக்கும் பிணக்குக்கும், கொலைக்கும் பயன் பட்டு வருகின்றன. அவைகளின் கொடுமைகளே உலகில் நாத்திகத்தைப் பரப்பி வருகின்றன. அவ்வமைப்புக்கள் கட்டுப்பாடு கட்கும் கண்மூடி வழக்கங்கட்குந் தாயகமாகவும் நிற்கின்றன. சைவ சிந்தாந்த மகா சமாஜ வெள்ளி விழாக் கூட்டத்திடை யான் பேசுவதால், சைவ மடங்கள் மீது எனது நெஞ்சம் ஓடுகிறது. எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவனென்று - எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்னும் அருண் மொழிக்கு இலக்கியமாக எத்துணைச் சைவ மடங்கள் இப்பொழுதிருக்கின்றன? சைவ மடங்கள் சைவத்தை மறந்து நீண்ட நாட்களாயின என்று சொல்கிறேன். என்ன அநியாயம்! சைவ மடங்களில் திருநீரு பொலிகிறது. கண்டிகை மிளிர்கிறது; சிவபூசை நிகழ்கிறது. என்ன இல்லை? irtÄšiy v‹W Twyhkh? என்று சிலர் சீறுவர். சைவ மடங்களில் சைவமில்லை என்று மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். வெளிவேடம் சைவமாகாது. சைவத்தின் உயிர் அன்பு. அன்புக்குச் சாதி முதலிய வேற்றுமைகளுண்டோ? இது நிற்க. ஆன்ம நேயத்தை வளர்க்கவல்ல அமைப்புக்கள் இப் பொழுது தேவை. ஆன்மநேயத்தை வளர்க்க வல்லது எவ் வுயிரிலும் ஆண்டவனிருத்தலை உணர்த்தும் உணர்வாகும். அவ்வுணர்வைப் பெருக்கத் தக்க கல்வி பரவும் நாளே மன்பதை யின் நலத்துக்குரிய நன்னாளாகும். எல்லா உயிர்களிலும் ஆண்டவன் கோயில் கொண்டிருத் தலை உணர்த்துவது ஆண்டவன் நினைவே யாகும். ஆண்டவனை ஓர் உருவின் வாயிலாக நினைந்து, பின்னை இயற்கையின் வாயிலாக நினைந்து, பின்னைத் தன் வாயிலாக நினைந்து, ஆண்டவன் உள்ளங் கோயில் கொண்டதை உணர்தல் வேண்டும். இம்முறை பற்றி யொழுகாது நெஞ்சில் ஆண்டவ னில்லையே என்று கருதுவது தவறு. ஆண்டவன் கோயில் கொண்டிருத்தலை யுணர நெஞ்சைப் பண்படுத்தல் வேண்டும். அதற்கு ஆண்டவன் நினைவே உறு கருவி போன்றது. இக் கருத்துப் பற்றியே நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் என்று நினைத்தலை அடிகள் வலியுறுத்திக் காட்டியுள்ளார். நினைப்பவர் நெஞ்சிற்கு ஆண்டவன் கோயில் புலனாதல் ஒருதலை. ஆண்டவன் கோயிலுக்குரிய இடம் நெஞ்சமாகும். இதனைத் தமிழ்நாட்டிற் றோன்றி அன்பு நெறி வளர்த்த நால்வரும் ஒரு முகமாகத் தொடக்கத்திலேயே உலகிற்கு நினைவூட்டி யுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் தோடுடைய செவியன் என்னும் முதற் றிருப்பாட்டில் என்னுள்ளங் கவர் கள்வன் என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்னும் முதற்றிருச் செய்யுளில் பிரியாது வணங்குவன் என்றும், (பிரிந்து வணங்குதல் ஒன்று; பிரியாது வணங்குதல் மற்றொன்று. முன்னையது ஆண்டவனைத் தன்னில் வேறுபடுத்தி வணங்குவது; பின்னையது அவனைத் தன்னுள் பிரிவின்றி வணங்குவது. இவை முறையே துவித வழிபாடு அத்துவித வழிபாடு என்றுஞ் சொல்லப்படும்) வன்றொண்டப் பெருந் தகையார் பித்தா பிறைசூடி என்னும் முதற் றிருப்பாவில், நினைக் கின்றேன் மனத் துன்னை என்றும், வாதவூரடிகள் திருவாசகத் தொடக்கத்தில் நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க - இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்றாள் வாழ்க என்றும் அருளிச் செய்திருத்தலைக் காண்க. நெஞ்சத் தாமரையை ஆண்டவன் திருக்கோயிலென்று அறிவு நூல்களெல்லாம் முழங்குகின்றன. நெஞ்சகம் உயிர்ப்புக்கு இடமாயிருப்பது. அஃது என்றும் தொழில் புரிவது. அதன் இயக்கம் நிற்குமாயின் உயிர் உடலைவிட்டு பிரியும். நெஞ்சினை இடமாக் கொண்டே ஆண்டவன் உயிர்களை இயக்குகிறான். என்னில் யாரும் எனக்கினியாரில்லை - என்னிலும் இனி யானொரு வன்னுளன்- என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு - என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே என்று அப்பர் சுவாமிகள் அருளினமை காண்க. உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம் - வள்ளற்பிரானார்க்கு வாய்கோபுர வாசல் - தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்சிவ லிங்கம் - கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே என்றார் திருமூலரும். நெஞ்சின் சிறப்பை இன்னும் விரிக்கிற் பெருகும். அத்தகை நெஞ்சை - ஆண்டவனுக்குரிய பீடத்தைத் - தூய்மை யாக வைத்துப் பாதுகாத்தல் வேண்டும். அதனை அழுக்காறு அவா வெகுளி கரவு முதலிய அழுக்குகளால், பாழ் படுத்துவது மடமை. இவ்வழுக்குகளுள்ளவரை ஆண்டவன் கோயில் கொண்டிருத்தல் புலனாதலரிது. ஆதலால் உள்ளத்தைத் தூய்மை செய்க; செய்க. நெஞ்சைத் தூய்மைசெய்து, அதனை ஆண்டவனுக்குரிய பள்ளியாக்குவதைப் பட்டினத்தடிகள் திருக்கழுமல மும்மணிக் கோவையிலும், திருவிடைமருதூர் மும்மணிக் கோவையிலும் அழகுபடத் திருவாய்மலர்ந்துள்ளார். அத்திருவாக்குகள் வருமாறு:- கருமுதற் றொடங்கிப் பெருநா ளெல்லாங்-காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந் - தூய்மையில் குப்பை தொலை வின்றிக் கிடந்ததை - அரிதி னிகழ்ந்து போக்கிப் பொருதிறன் - மையிரு ணிறத்து மதனுடையடுசினத் - தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி - அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித் - துன்ப விருளைத் துரந்து முன்புற - மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய - கீழ்மையிற் றொடர்ந்து கிடந்த என்சிந்தைப்-பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி - செந்தை நீ யிருக்க விட்டனன். * * * * * * * * * நெஞ்சப் புனத்து வஞ்சக்கட்டையை - வேரற அகழ்ந்து போக்கித் தூர்வை செய் - தன்பென் பாத்தி கோலி முன்புற - மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில் - பத்தித் தனிவித் திட்டு நித்தலும் - ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று - தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் -பட்டி அஞ்சினுக் கஞ்சியுட்சென்று - சார்ந்த வேலி கோலி வாய்ந்தபின் - ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் - கருணை இளந்தளிர் காட்ட அருகாக் - காமக் குரோதக் களையறக் களைந்து - சேமப் படுத்துழிச் செம்மையி னோங்கி - மெய்ம்மயிர்ப் புளக முகிழ்த்திட்டம் மெனக் - கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய - அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி - காள கண்டமுங் கண்ணொரு மூன்றுந் - தோளொரு நான்குஞ் சுடர்முக மைந்தும் - பவளநிறம் பெற்றுத் தவள நீறுபூசி - அறுசுவை அதனினும் உறுசுவை யுடைத்தாய்க் - காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருஞ் - சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி - பையப் பையப் பழுத்துக் கைவர - எம்ம னோர்க ளினிதி னருந்திச் -செம்மாந் திருப்பச் சிலரிதின் வாராது -மனமெனும் புனத்தை வெறும் பாழாக்கிக் - காமக்காடு மூடித் தீமைசெய் -ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக -இன்பப் பேய்த்தே ரெட்டா தோடக் -கல்லா வுணர்வெனும் புல்வாய் அலமர -விச்சைவித் துதிர்த்துழி யானெனப் பெயரிய - நச்சு மாமர நனிமிகு முளைத்துப் -பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் -பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக் -கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து - துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு-மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து -தமக்கும் பிறர்க்கும் உதவா -திமைப்பிற் கழியு மியற்கையோ ருடைத்தே நினைந் துருகும் அடியவர் உள்ளமே ஆண்டவனுக்குரிய சிறந்த கோயிலாகும். படமாடுங் கோயில் நடமாடுங் கோயில் என்று திருமூலர் கோயிலை இருவகைப்படுத்தி, நடமாடுங் கோயிலுக்கே சிறப்பு கூறியுள்ளார். முகமெலாங்கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்-அகமலாற் கோயிலில்லை யையனை யாற னார்க்கே என்றார் அப்பரும். தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்றொரு திருப்பதி யுண்டு. அஃது இப்பொழுது தின்னனூர் என்று வழங்கி வருகிறது. அவ்வூரில் பூசலார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் ஆண்டவனுக்கு ஒரு புறக்கோயில் கட்ட முயன்றார். அம்முயற்சி பயன் படாமையான், அவர் ஆண்டவனை நினைந்து மனக் கோயில் கட்டலானார். அந்நாளில் காடவர் கோமானால் காஞ்சியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் ஆண்டவன் திருவுருவை நாட்ட நாள் குறிக்கப்பட்டது. முன்னாளிரவு ஆண்டவன் அரசன் கனவிற்றோன்றி, நாளை நாம் திருநின்ற வூரிலுள்ள பூசலார் கோயிலில் புகப்போகிறோம். உனது செயலைப் பின்னே வைத்துக்கொள் என்றாரென்று புராணங் கூறுகிறது. இதன் நுட்பமென்னை? புறக்கோயிலைவிட அகக் கோயிலே ஆண்டவனுக் குகந்ததென்பது வெளிப்படை. ஆதலால் நடமாடுங் கோயில்களை வழிபடுவது சிறப்பென்க. ஆண்டவனை நினைந்து அகத்தை ஆண்டவன் கோயிலாக்கிய அடியவர்களை ஆண்டவனாக வழிபடுதல் ஒரு மரபாகக் கொள்ளப்பட் டிருத்தலும் ஈண்டுக் கருதற்பாற்று. ஆண்டவனை இடையறாது நினைந்து நினைந்து, உருகி உருகி, இன்பநீர் பெருக்கிப், பாவத்தைக் கழுவி, மனத்தை ஆண்டவன் கோயிலாக்கி, அழியா விழுச் செல்வத்தைப் பெற முயலவேண்டுவது நம் பெருங் கடமை. அச்செல்வ வாழ்வு பெற முயல்வோமாக. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே நிறைந்து நிறைந் தூற்றெழுங் கண்ணீரதனா லுடம்பு -நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று - வனைந்துவனைந் தேத்துது நாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் -புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே - இராமலிங்க சுவாமிகள் இதுகாறும் எனது புன்மொழிகளைப் பொறுமையுடன் செவிமடுத்த அன்பர்களாகிய உங்கட்கு மீண்டும் எனது நன்றி யறிதலைச் செலுத்துகிறேன். சைவசித்தாந்த மகா சமாஜம் வாழ்க வாழ்க என்று அறுமுகச் சிவன் திருவடியை நினைந்து வாழ்த்தி வணங்கு கிறேன். நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தமன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே - தாயுமானார்  இமயமலை அல்லது தியானம் முன்னுரை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில், பண்டித மணி - கதிரேசஞ் செட்டியார் தலைமையில் 1930 - ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25, 26, 27ஆம் நாட்களில் நடைபெற்றது. மூன்றாம் நாள் கூட்டத்தில் இமயமலை என்னும் பொருள் பற்றிப் பேசும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொருள் பற்றிப் பேசித் தொகுப்புரை கூறி யான் அமர்ந்ததும், மேடை மீதிருந்த பலர், அப்பேச்சைப் பத்திரிகை யில் எழுதி வருமாறும், பின்னே அதை நூலாக வெளியிடுமாறும் விண்ணப்பித்தனர். அவருள் சமாஜ அமைச்சர் - திருவாளர் - மயிலை - பால சுப்பிரமணியனாரும், திருவாளர் - கிழக்கு மருதூர் - நாராயண சாமியாரும் பெரிதும் வலியுறுத்தி உறுதிமொழியும் பெற்றுக் கொண்டனர். அன்பர்கள் விருப்பத்துக்கிணங்கி, எனது பேச்சை நவசக்தியில் வாரந்தோறும் எழுதி முற்றுவித்தேன். அப்பேச் செழுத்துப் பொருளைக் கொண்டதே இந்நூல். நூலின் உள்ளுறைக் கேற்ப நூலுக்கு இமயமலை அல்லது தியானம் என்னும் முடி சூட்டப்பட்டது. இந்நூற்கண் - இமயத்தின் புற அகப்பொருள், இமயத்தின் தொன்மையும் விழுப்பமும், மலைகளின் சிறப்பு, மலைக்கும் மக்கள் வாழ்வுக்குமுள்ள தொடர்பு, மலை வாழ்வின் பெற்றி, உயர்நோக்கின் மேன்மை, அமைதியில் அறிவு விளக்கம், கோபுரங் களின் நோக்கமும் நுணுக்கமும், உலகில் ஆங்காங்கே தோன்றிய குருமார் மலையுடன் தொடர்பு கொண்டமை, தமிழரின் மலை வாழ்வு, காவியங்களில் மானத மலைப்படைப்பு, மலைவாழ்வால் உடலும் உயிரும் நலனுறல், தற்கால அமைதியில்லா வாழ்வுச் சிறுமை, மேல் நாட்டுப் புலவர்கள் மலையைக் கொண்ட சிறப்பு, இமயம் ஈனும் பொருள்கள், இமயத்தில் பெரியோர் வாழ்தலின் உட்கிடக்கை, இமய இயற்கையினின்றுங் கடவுள் தோற்றத்தைப் புலவர்கள் கொண்டது, இமயத்துள்ள பெருங்குருவின் நிலை, அவரைச் சமயவாதிகள் கொண்ட விதம், குருமார்க்குங் கடவுளுக்குமுள்ள வேற்றுமை, குருமாரைக் கடவுளாகச் சிலர் கொள்ளும் முறை - சிலர் கொள்ளா முறை, இமயத்தின் கூறுகள், அக்கூறுகளின் வெளிப்பொருள் - உட் பொருள், காற்றின் திறம், ஆகாய விமானி களின் அநுபவம், கயிலாயத்தின் அகப்புற விளக்கம், இமயவுச்சி காணுதற்குத் தற்கால முற்கால முறைகள், கௌரி சங்கரத்தைப் பற்றிய பல சமயத்தார் கொள்கைகள், அக் கொள்கையிலுள்ள ஒருமை, சச்சிதானந்த விளக்கம், மூம்மூர்த்தி களை உலகங்கொண்டவகை, முழுமுதற் பொருள் ஒன்றே என்பது, சமயங்களில் அடிப்படையிலுள்ள ஒற்றுமை, மோனத்தின் தத்துவம், இளமைப்பேறு, இமயத்தின் குறி தியானம் என்பது, தியானத்தின் இன்றியமையாமை, கயிலாயம் சாந்தமென்பது, அமைதித் தவம், சாந்தச் செல்வம் முதலிய பொருள்கள் அடங்கி யிருக்கின்றன. அமைதி வாழ்வை அறிவுறுத்தும் நூல் இந்நூல் என்று சுருங்கச் சொல்லலாம். எரிமிகுந்த இந்நாளில், இந்நூலின் உள்ளுறை அமைதிச் செல்வத்தை நல்கி, நாட்டின் வாயிலாக உலகுக்கு நலஞ் செய்யு மென்று நம்புகின்றேன். குற்றங் குறைகளை அன்பர்கள் மன்னிப்பார்களாக. சென்னை இராயப்பேட்டை 15. 8. 1931 திருவாரூர். வி. கலியாணசுந்தரன் தோற்றுவாய் தலைவர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இப்பொழுது உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக் கொண்ட பொருள் இமயமலை என்பது. இமயம் மிகப் பெரியது. மிகப் பெரியதற்கு மிகப் பெரிய பேச்சு வேண்டும். யானோ சிறியன்; தற்போது உடல் நலமுங் குன்றப் பெற்றிருப்பவன்; இமயத்தை எங்ஙனஞ் சுமக்க வல்லேன்? குறிக்கப் பெற்றுள்ள காலம் வரையாதல் அதைச் சுமக்க முயல்கிறேன். ஒருவேளை சிறிது காலங் கடக்க நேரின், தலைவரின் கருணைத்துணையும், உங்கள் பொறுமைத் துணையும் வேண்டும். ஈண்டுத் தலைமை வகித்துள்ள பெரியார் ஓர் இமயம். வட மொழி தென்மொழி இலக்கிய ஆராய்ச்சியில் இவர் இமயம் போன்றவர். இவ்விமயத்தின் சாரலில் நின்று, இமயத்தின் நீழலை நோக்கிப் பேசுகிறேன். சமய உலகில் நின்று இமயத்தை நோக்கும்போது, இமயத்தின் பொருள் இமயம் போல் ஓங்கி நிற்கும். அப்பொருளோ பேச்சைக் கடந்த ஒன்று. அதுபற்றியே இமயத்தின் நீழல் என்று குறிப்பிட லானேன். இமயத்தின் புறத்தைப் பற்றியே அதன் அகத்தை உணர முயல்வது சிறப்பு. ஆகவே, இமயத்தின் புறத்தைப் பற்றி, அதன் வாயிலாக, அதன் அகமும் ஊடே ஊடே விரவி வருமாறு பேசலா மென்று எண்ணுகிறேன். பொருள் முதலாவது இமயமலை என்பதன் பொருளை உன்னுவோம். இமயமலை என்பது பனிமலை என்று பொருள்படும். ஹிமயம் -பனி. இம் மலைக்கு ஹிமாலயம் என்னும் வழக்கும் இருக்கிறது. ஹிம் ஆலயம் - பனி வீடு. உலகில் உயர்ந்த பனி வீடு நமது ஹிமயம். வெண்மைக்குறி : பனியின் நிறம் என்னை? வெண்மை. வெண்மை எதற்கு அறிகுறி? வெண்மை புனிதத்துக்கு அறிகுறி. அழுக்காறு முதலிய கட்டுகளைக் கடந்த ஒரு நிலையே புனிதம் என்பது. அந்நிலைக்குப் பல மொழியில் பல பெயர்களுண்டு. கயிலை இமயத்தின் சிறந்த வெண்மைப் பகுதி கயிலாய மென்று வழங்கப்பட்டு வருகிறது. கயிலையைப் பற்றிய வருணனைகள் பலபடக் கிடக்கின்றன. இவ்வேளையில் சேக்கிழார் பெருமான் வருணனை மீது எனது கருத்துச் செல்கிறது. பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப் பன்னு நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும் மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை இத்திருப்பாட்டில் ஆசிரியர் இமயமால் வரைக்கணுள்ள, அதன் சிறந்த உறுப்பாகிய கயிலையை அணி செய்திருத்தல் காண்க. மேலும் சேக்கிழார் பெருமான் தொடர்ந்து, அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின் நண்ணி மூன்றுல குந்நான் மறைகளும் எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது. நிலவும் எண்ணில் தலங்களும் நீ டொளி இலகு தண்டளி ராக எழுந்ததோர் உலக மென்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண் மலர் போல்வதம் மால்வரை என்று பாடி மகிழ்கிறார். புண்ணியந் திரண்டுள்ளது. போல் வது என்பதும், வெண்மலர் போல்வது, என்பதும், உள்ளத்தைக் கவர்கின்றன. இவ்விரண்டும் எடுத்த வெண்மைப் புனிதத்துக்கும் வேண்டப்படுவன. வெண்மையைப் புனிதத்துக்கு - அல்லது புண்ணியத்துக்கு - உவமித்துக் கூறுவது மரபு. தூய வெண்மையைப் புனிதத்தின் - அல்லது புண்ணியத் தின் - திரட்சி என்று பகர்வது அழகுடைத்தன்றோ? கயிலையின் புறவெண்மையும், அதன் உள்ளுறையாம் புனிதமும் ஒன்றிவரும் முறையில் சேக்கிழார் பாடியிருத்தல் போற்றற்குரியது. தொன்மை .இமயமலையின் தொன்மைமீது சிறிது கருத்துச் செலுத்து வோம். இமயமலையின் தொன்மையைக் காலத்தால் அளந்து கூறல் இயலாது. இதுகாறும் வெளிப்போந்துள்ள நிலவியல் ஆராய்ச்சிகளையும், மற்ற ஆராய்ச்சிகளையும் கூர்ந்து நோக்குழி, இமய மலையைப் பற்றிய நுட்பங்கள் பல கிடைக்கின்றன. இப்பொழுது இந்து மகா சமுத்திரம் என்று சொல்லப்படும் நீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்த ஞான்று, இமயமலையின் உடலும், அதன் சூழல்களும் நீருள் மூழ்கிக்கிடந்தன என்றும், விந்திய மலையின் வடக்கேயுள்ள நிலப்பரப்பு நீருள் அழுந்திக் கிடந்ததென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. இமயம் நீருள் இமயமலையின் பல பாகங்களில் கடல்படு பொருள்கள் சில இன்னும் படிந்து கிடத்தல் கண்கூடு. அப்பொருள்கள் நிலவியல் நீரியல் ஆராய்ச்சிக்காரருக்குக் கருவிகளாக நின்று துணை செய்கின்றன. அவைகளைக் கொண்டும், வேறு பல நிகழ்ச்சி களைக் கொண்டும் இமயத்தின் உடல் நீருள் கிடந்தமை நிறுவப்பட் டிருக்கிறது. இந்து மகா சமுத்திரம் நிலமாயிருந்தது எக்காலம்? விந்தியத்தின் வடபுலம் நீராயிருந்தது எக்காலம்? இக்கால நிலைகளைப்பற்றி வெளிப்போந்துள்ள ஆராய்ச்சி நூல்களைப் பார்த்தால், ஆண்டுகள் ஆயிரக்கணக்கைக் கடந்து, இலட்சக் கணக்கையும் மேலிட்டு நிற்கின்றன. இங்ஙனமாயின், இமய மலையின் தொன்மையை எக்கால எல்லையில் அளவிட்டுக் கூறுதல் கூடும்? விந்தியத்தை நோக்க இமயம் குழந்தை யென்று சொல்வோரு முளர். அவர் கூற்றுக்குஞ் சான்றுகளில்லாமலில்லை. இக்காலம் ஆராய்ச்சிக்காலம். ஆராய்ச்சியினின்றும் போதரும் முடிபு களிலும் முரண்பாடுகளிருக்கின்றன. ஒருவர் கண்ட முடிபு மற்றொருவர் கண்ட முடிபுடன் மாறுபடுகிறது. சரித்திரக் காலத்துக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் மாறுபட்ட கருத்துக்களுறுதல் இயல்பே. ஆதலால் ஆராய்ச்சி களினின்றும் போதரும் முடிபுகளை யெல்லாம் முடிந்த முடிபு களாகக் கோடல் தவறு, அதனால் இடர்ப்பாடும் நேரும். முதலாவது கல்விக்கண் பெறுதல் வேண்டும். அக்கண் ஆராய்ச்சிக் கண்ணைத் திறக்கும். ஆராய்ச்சிக்கண் நாளடைவில் மற்றுமொரு கண்ணைத் திறக்கும். அவ்வொப்பற்ற கண் திறக்கப் பெறும்வரை எம் முடிபையும் முடிந்த பொருளாகக் கோட லாகாது. இது நிற்க. இமயமலையின் தொன்மையைக் காலத்தால் அளந்து அறுதி யிட்டுக் கூறல் அருமை. இமயமலை மிக மிக மிகத் தொன்மை வாய்ந்தது. விழுப்பம் இமயமலை தொன்மையில் மட்டும் விழுப்பமுடைய தன்று. வேறு பலவற்றிலும் அம்மலை விழுப்பமுடையது. அதன் வீழுப்பம் அளவிடற்பாலதன்று. இமயம் உலகிலுள்ள எல்லா மலைகளிலும் உயர்ந்தது. அதுவே மலையரசு. அவ்வுயரிய மலையை முடியாக அணிந் துள்ள பெருமை நமது நாட்டுக்கு உண்டு என்று இறுமாந்து கூறுகிறேன். மன்னும் இமய மலையெங்கள் மலையே என்று பாரதியார் களித்தாடுவதைப் பாருங்கள். நாட்டைப்பற்றிப் பாடநேரும் போதெல்லாம் இமயமலை என்னில் மறைவ தில்லை. பனிவரையை முடியாகப் பலநதியை யணியாக என்றும், மலைகளிலே உயர் மலையை மகிழ்ந்தணியு நாடு என்றும், பாடிப் பாடி உள்ளங் குளிரப் பெறுவது எனது வழக்கம். இமயத்தை உள்ளத்திருத்தி வான்நோக்கி நின்றால், அது வழங்குங் காட்சிப்பெருக்கை என்னென்று சொல்வது? உலகிலேயே அத்தகைக் காட்சி இல்லை யென்று சொல்லலாம். பச்சைப் பசேலெனத் துவங்கிச் சுழன்று சுழன்று, கன்னங் கருமையில் நடந்து நடந்து வெள்ளை வெண்மையில் தவழ்ந்து தவழ்ந்து, நீலவானில் (அமைதியில்) நிறுத்துங் காட்சியை மண்ணையும் விண்ணையும் முட்டிக் கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்து சேணோங்கும் அப்பெருங் காட்சியை - எச்சொல்லால் சொல்வது? எவ்வெழுத்தால் எழுதுவது? இச்சேண்மைக் காட்சியளவில் இமயத்தின் விழுப்பம் அடங்கி விடுங்கொல்? அது வேறு பல வழியிலும் விழுப்ப முடையது. அவ் விழுப்பக் கூறுகளை நிரலேகிளந்து கூறுதற்கு யான் அருகனல்லன். எடுத்த பொருளுக்கேற்பச் சிலவற்றை யாதல் செப்ப முயல்கிறேன். அச்சிலவற்றைத் தெருட்டிச் செப்புதற்கு முன்னர் மலைக்குலங்களைப் பற்றிப் பொதுப்படச் சிலவுரை பகர்தல் ஈண்டைக் கேற்புடைத் தாகுமென்று கருது கிறேன். அப்பொதுமையில் இமயத்தின் மாண்பு சிலவும் ஒன்றும். மலைப் பொது மலை, உயிர்களின் வாழ்க்கைக்குத் தாயகம் என்று கூறல் மிகையாகாது. உயிர்களின் வாழ்க்கைக்குரிய பொருள்கள் பல வற்றை மலை வழங்குகிறது. முதல் முதல் மலையின் போர்வை யாகவுள்ள காட்டின்மீது நாட்டஞ் செல்கிறது. காடு அடர்ந்த மலையைக் காண்பதுங் கருதுவதும் பெருந்திருவென்றே சொல் வேன். காடடர்ந்த பசுமலை கண்ணுக்குங் கருத்துக்கும் எத்தகை விருந்தளிக்கிறது! அவ்விருந்து உடலையும் ஒம்பி, உயிரையும் ஒம்பி, இளமையழகுப் பேற்றையும் நல்குகிறது. காடு காடின்றேல் நாடு ஏது? நாட்டைப் பல வழியிலும் ஒம்பி வருவது காடன்றோ? காடளிக்கும் மரத்தைக் கொண்டு வீடு கட்டுகிறோம்; விறகைக் கொண்டு அட்டில் அமைக்கிறோம்; காய்கனிகளைக் கொண்டு வாழ்வு நடாத்துகிறோம். கால்நடை களுக்குக் காடு பயன்படுகிறது. வயல்களுக்குக் காடு பயன்படு கிறது கொண்டல்கள் தவழ்ந்து தேங்கி மழை பொழிதற்குங்காடு துணை புரிகிறது. காடு தெய்வம் போன்று நாட்டைக் காத்து வரலான், அதனை வன தேவதை என்று பாவலர்கள் போற்ற லானார்கள். இத்தகைய காட்டை அணிந்திருப்பது மலை. ஆறு மலையினின்றும் ஆறுகள் ஓடி வருகின்றன. ஆறுகள் ஆரங்களாக இயற்கையன்னையை அழகு செய்கின்றன. மலை படு பொருள்கள் பல ஆறுகள் வாயிலாகவே நாட்டுக்கு வருகின்றன. ஆறுகள் நாட்டுக்கு விளைவையும் வளத்தையும் நல்குகின்றன. ஆறுகளால் விளையும் நலன்கள் பலப்பல. இவ்வாறுகளை அளிப்பது மலை. மூலிகை மலையில் வளரும் மூலிகைகளின் பெருக்கை என்னென்பேன்? ஆயுளைப் பெருக்கும் மூலிகைகளும், கொடிய விலங்குகளை மருட்டும் மூலிகைகளும் மலையில் வளர்கின்றன. பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும், பலதிற மணிகளையும் மலை வழங்குகிறது. மலை வழங்கும் பொருள்கள் எண்ணில; எண்ணில. வாழ்வுத் தோற்றம் மக்கள் வாழ்வு முதல் முதல் மலையிலேயே துவங்கப் பட்டது. மலையினின்றுமே மக்கள் மற்ற நிலங்கள் போந்தார்கள். தற்போது உலகில் நிலவும் நாகரிகங்கள் யாவும் மலையிலேயே கால் கொண்டன. பின்னே அவைகள் பற்பல மாறுதலுடன் மற்ற நிலங்களில் வளர்ந்து வரலாயின. மனிதன் முதல்முதல் மலையில் வாழ்ந்தபோதே வாழ்வுத் துறைகளின் மூலங்கள் பலவற்றை அவன் கண்டான். வாழும் வீடு, நீட்டல் முகத்தல் எடுத்தல் முதலிய அளவைகள், நாடோறும் பயன்படும் வாழ்வுப் பொருள்கள் முதலியவற்றின் ஆதி வரலாற்றை ஆராய்ந்தால் அவைகள் மலைபடு பொருள்களால் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும். மொழி, சொல், பாட்டு மொழியுஞ் சொல்லும் பாட்டும் மலையிலேயே பிறந்தன. ஒலிவழி நின்று பழஞ்சொற்களின் தோற்றத்தை ஆய்ந்தால் உண்மை புலப்படும். இவ் வாராய்ச்சிக்குப் பழந்தமிழ்ச் சொற் களை - சிறப்பாக நெருங்கிய உறவினரைக் குறிக்குஞ் சொற்களை- பொருளாகக் கொள்வது பொருத்தம். செங்கோல் முதல் முதல் செங்கோல்(அரசு) தோன்றிய இடம் எது? கோல் தோன்றிய இடம் எதுவாயிருத்தல் வேண்டும்? மலை யென்று சொல்லலும் வேண்டுமோ? அம் மலையிலேயே வேறு பல நாகரிகத் துறைகளும் வகுக்கப்பட்டன. புலன்களும் இயற்கையும் மலையில் வாழ்ந்த மனிதனுக்கு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தும் பேறு கிடைத்தது. இயற்கைப் பொருள் களிலேயே அவன்றன் புலன்கள் படிந்து கிடந்தன. அவன் கண்டன கேட்டன உயிர்த்தன உற்றன உண்டன வெல்லாம் இயற்கைப் பொருள்களாகவே யிருந்தன. புலன்களால் இயற்கையைக் கூர்ந்து கூர்ந்து உணரும் வாய்ப்பு அவனுக்கு நேர்ந்தது. இதனால் மண் புனல் தீ காற்று வெளிகளின் இயல், மரஞ் செடி கொடிகளின் இயல், புள் விலங்கு முதலியவற்றின் இயல் முதலியவற்றை அவன் தெரியலானான். மலைவாழ் மனிதனுக்குக் கதிரொளியில் மூழ்கல் நேர்வது இயல்பு. அம்மூழ்கலின் பயனாக அவன் கதிரொளியின் திறங்களை யுணரலானான். வானத்தை அண்ணாந்து பார்க்கும் பயிற்சி அவனுக்கு அடிக்கடி கூடியது. அக்கூட்டால் கோள் களின் இயக்கம் அவனுக்குப் புலனாயிற்று. இவ்வாறு இயற்கைக் கூறுகளின் நுட்பங்களிற் பலவற்றை மலையிலிருந்தே மனிதன் தெளிந்து கொண்டான். .இயற்கைக் கூறுகளின் தன்மைகளை உணர உணர மனித னுக்குத் தன்னியல் விளங்கிற்று. தன்னியல், அன்பு என்னுங் காதலை யெழுப்பிற்று. இக்காதலெழுச்சி கடவுளுணர்வுக்கு தோற்றுவாயாக நின்றது. இயற்கையின் ஆராய்ச்சியும் உணர்வும், அதன் உள்ளுறையாகிய இறையுண்மையை உணர்த்தும் இயல்பின என்று சுருங்கச் சொல்கிறேன். இயற்கையோடியைந்த வாழ்வு என்றாதல் ஒருபோது இறையொளியைப் புலப்படுத்தல் ஒருதலை. ஆகவே, கடவுளுணர்விற்கும் பிறப்பிடம் மலை யென்பது கருதற்பாலது. கடவுள் தோற்றம் கடவுள் என்பது எல்லாவற்றிற்குந் தாரகமாய்க் கட்டின்றி அகண்டமாயிருப்பது. அகண்டப்பொருளை நினைத்தலும் அரிது; இத்தகைத்தெனச் சொல்லுதலும் அரிது, அஃது அளவை கடந்து நிற்பது. அளவை கடந்த ஒன்றை எப்படி உணர்வது? இதற்குப் பல வழிகள் பின்னே காணப்பட்டன. அவைகளைச் சமய நூல்களிலும் தத்துவ நூல்களிலும் காண்க. அவைகளை இங்கே யான் விரிக்கப் போவதில்லை. அகண்டாகாரக் கடவுளின் நினைவைத் தோற்று விப்பதற்குக் காரணமாக நின்ற ஒன்றையே இங்கே குறிக்க விரும்புகிறேன். பரந்து வானளாவ நீண்டு உயர்ந்து ஓங்கி நிற்கும் ஒன்றே, எங்கும் பரந்து நிற்கும் ஒன்றன் நினைவை யூட்டவல்லதாகும். பரந்து வானளாவ நீண்டு உலர்ந்து ஓங்கி உலகிடை நிற்பது எது? ஓங்கல் என்னும் மலை என்று எவருங் கூறுவர். வானளாவ உயர்ந்து ஓங்கி நிற்கும் ஒன்று மனிதனுடைய அறிவையும் உயர்த்துந் தன்மையதாகும். உலகியல் நிகழ்ச்சியை நோக்குவோம். மேல் கீழ் நோக்கு மனிதனுக்கு ஒன்றைப்பற்றி ஐயப்பாடு நிகழும் போது, அதைக் களைந்துகொள்ள அவன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்கிறான். அச்சிந்தனை மேல் நோக்கில் செல்கிறதா அல்லது கீழ் நோக்கில் வீழ்கிறதா என்பதை உன்னிப் பாருங்கள். ஒன்றை ஆழ்ந்து சிந்திக்கின்றவன் முகம் வான்நோக்கில் நிற்பதைக் காண்கிறோம். துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் நோக்கு யாண்டுச் செல்கிறது? அவன் தலை சாய்த்துக் கீழ்நோக்கி நிற்றலைப் பார்க்கிறோம். என்னை? துன்பத்துக்குக் காரணம் அறியாமை. அறியாமை மிகமிக, மனிதன் நோக்கு, கீழ்ப்புறத்தே வீழ்கிறது. கீழாகிய மண் பிரகிருதியின் பாற்பட்டது. பிரகிருதி தன் சகோதரமாகிய அறியாமையைத் தன்பால் ஈர்க்கிறது. மண் மண்ணை ஈர்த்தல் இயல்பு. பரந்த வான்வெளியோ தீவண்ணமா யிருப்பது. அங்கே உருளுங் கோளங்கள் பெரிதும் அனற்பிழம்பா யிருப்பன. அழற் சோதியின் இயல்பென்னை? இருளை யோட்டுவதன்றோ? நோக்கு, மேற்பாற் செல்லச் செல்ல அறியாமை இருள் அகன்று அகன்று, அமைதி உற்று உற்று, அறிவு விளக்கம் பெற்றுக் கொண்டே போகும். ஆகவே, எப்பொழுதும் அறிவு விளக்கத்துக்கு வான் நோக்கு வேண்டற்பாலது. உள்ளுவ எல்லாம் உயர்வுள்க என்றார் வள்ளுவனார். அன்பர்களே! ஓங்கலை உன்னுங்கள்; உன்னி அதை நோக்குங்கள், உங்கள் எண்ணம் மேல் நோக்குகிறதா அல்லது கீழ் நோக்குகிறதா பாருங்கள். உயரிய நோக்கே கடவுளுணர்வுக்கு அடிப்படை. கடவுளுணர்விற்கும் மலை துணை செய்வதாகிறது. கோபுர நுட்பம் : மலையில் வாழ்ந்து, அங்கே கடவுளுணர்வு பெற்ற மக்கள், பின்னே மற்ற மற்ற நிலங்களில் குடிபுகுந்த போதும், கடவுளுணர் வூட்டக்கூடிய மலையை அவர்கள் மறந்தார்களில்லை. கடவுளைத் தொழுதற்குக் கோயில்களைத் தாங்கள் வாழும் வீடுகள்போல அவர்கள் கட்டினார்களில்லை. அவர்கள் மலை நினைவூட்டும் உயரிய கோபுரங்கள் அமைத்தே கோயில்கள் கட்டினார்கள். கோபுரங்கள் மலைமேல் உயர் நினைவை யூட்டுவனவாம். உயர் நினைவு கடவுளுணர்விற்கு இன்றியமையாத தென்று தெரி கிறது. எச்சமயப் பழங் கோயில்களிலுங் கோபுரங்களிருத்தல் கண் கூடு. எந்நாட்டவருங் கோயில்களில் கோபுரங்கள் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேல்நாட்டுப் பழங்கோயில் களிலுங் கோபுரங்களுண்டு, கீழ்நாட்டுப் பழங்கோயில்களிலுங் கோபுரங்களுண்டு. ஆனால் கோபுரங்களின் அமைப்பு மட்டும் பலவிதமாயிருக்கும். வானோக்கை யுணர்த்துவ தொன்றே ஈண்டு வேண்டற்பாலது. மாதாக் கோயில்களிலும், மசூதிகளிலும், சமண பௌத்த சைவ வைணவக் கோயில்களிலும் பலப்பல விதமாக அமைக்கப்பெற்ற கோபுரங்கள் வானோக்கி நிற்றலை நீங்கள் பாத்திருப்பீர்கள். நமது நாடு கோபுரங்களில் பேர்பெற்றது. அவைகளில் நெஞ்சைக் கவரவல்ல அழகிய ஓவியங்கள் பொறிக்கப் பட்டிருக் கின்றன. கோபுரத்தின் உள்ளுறையும், ஓவிய நுண்மையும் பொரு ளிழந்து நிற்கும் இந்நாளில், சிலர் ஆபாசங்களைக் கோபுரங் களில் பதிக்கிறார்கள். மக்கள் மனோநிலை மாறிவிட்டது! என் செய்வது! பெரியோரும் மலையும் காலதேச வர்த்தமானத்துக் கேற்றவாறு கடவுள் நெறியை ஆங்காங்கே ஓம்பப் போந்த பெரியோர் பலரும் தம் வாழ்வில் பெரும் பொழுதோ அல்லது சிறு பொழுதோ மலையுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதைக் கருத்திலிருத்திப் பார்ப்பின், கடவுள் நெறிக்கும் மலைக்கும் நெருங்கிய தொடர்பிருத்தல் எளிதில் புலனாகும். முதல்முதல் உலகுக்கு அஹிம்ஸா பரமோ தர்மா என்னும் அருளறத்தை அறிவுறுத்திய விருஷப தேவர் தமது வாழ்வில் பன்முறை மலைத்தொடர்பு பெற்றிருந்ததோடு, இறுதி நாளில் அவர் ஒரு மலை நோக்கியே சென்றார். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லையென்றும், எவ்வுயிரும் பொதுவென்றும், சீலமே சிறந்த தென்றும் அறநெறியை வலியுறுத்திச் சென்ற கௌதம புத்தர் மலைசூழ்ந்த ஓரிடத்திலேயே பிறந்தார். கௌதமர் பிறப்பதற்கு முன்னர் அவர் அன்னையார் கனவில் ஒரு மலையிடமே தோன் றிற்று. கௌதமர் உண்மையுணர வேண்டிக் காடுகளிலும் மலை களிலும் திரிந்தே புத்தரானார். இறுதிநாளில், நிர்வாணம் அடையுந் தறுவாயில், புத்தர் உண்ணநேர்ந்த கிழங்கும் இமயச் சாரலில் விளைந்ததாகும். அன்பே கடவுள் என்று உலகுக்கு அருளிப் போந்த இயேசு கிறிதுவும் மலை செறிந்த பதியிலேயே தோன்றினார். அவர் மலைமீதிவர்ந்து நாற்பது நாள் தவங்கிடந்தார். அங்கே அவர் உருமாறப் பெற்றார்; அவர் உடை வெளுத்தது. அவர் மாணாக்கர்கட்குத் திருவருள் செய்ததும் மலையிடமே, அவர் மலையில் அருளிய பொன் மொழிகளே சுவிசேஷத்தில் உயிர் நாடியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர் திருவுருவமும் மலையிலேயே மறைந்தது. இயேசுவின் வாழ்விற்கும் மலைக்கும் பெருந் தொடர்பிருந்தது. ஆண்டவன் ஒருவனே. அவன் பிறப்பிறப்பில்லாதவன் என்பதை உலகில் நிலைபெறுத்தத் தோன்றிய நபிநாயகத்தின் வரலாற்றிலும் மலைத் தொடர்புண்டு. அவரும் மலைக்குகையில் தெய்வத் திருவருள் பெற்றார்; மலைக்குகையில் நன்மொழிகள் அருளினார். பாரத நாட்டு மலைகள் பல முனிவரர் பெயரை அணிந் திருத்தல் கருதற்பாலது. முனிவரர் வாழ்வு பெரிதும் மலை வாழ் வாகவே நடந்தது. முதல் முதல் மலையில் தெய்விகங்கண்ட நாடும் நம் பாரத நாடு என்று கூறல் மிகையாகாது. தமிழரும் மலையும் : நமது அருமைத் தமிழ்நாடு மலையின் மாண்பைக் கண்ட திறத்தை ஈண்டு விரிக்கிற் பெருகும். தமிழர், ஆண்டவனை மலை கிழவோன் என்றும், குன்றுதோறாடுவோன் என்றும் வழுத்து வதும், தம் மொழி பிறந்தவிடம் மலையென்று கருதுவதும், இன்னோரன்ன பிறவும் சிறப்பாகக் குறிக்கத்தக்கன. தமிழ் நாட்டில் ஒருபோது, ஆண்டவன் உண்மையில் தோன்றிய ஐயப்பாடு களைந்து, ஆண்டவன் உண்மையை நிறுவிச் சென்ற பெரியோர் பன்முறை மலை நோக்கியுள்ளனர். அவர்தம் மனமொழி மெய்கள் மலையுடன் கொண்டிருந்த தொடர்பை என்னென்று கூறுவேன்? அத்தொடர்பின் பெருக்கு மலைபோன்றது -கடலனையது - என்று சொல்வேன். அம் மலையையுங் கடலையுந் தேவார திருவாசக நாலாயிரப் பிரபந்தங்களிற் காண்க. அவைகளிற் சிறுதுகளையாதல் சிறு திவலையையாதல் எடுத்துக் காட்டவும் போதிய நேரமில்லை. பின்னே இமயம் நிற்கிறது! தாலிபுலாக நியாயம்பற்றி இரண் டொரு குறிப்புக்களை மட்டும் நினைவூட்டிக் கொள்கிறேன். அப்பர் சுவாமிகள் வரலாறு உங்கட்குத் தெரியும். அவர் நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி - அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்த வேளையில் அருளிய இறுதிப் பதிகத்தில் கழுக்குன்றத் துச்சியாய் கடவுளே என்று ஒரு சிறந்த மலை யுச்சியை நினைந்து கொண்டனர். பெறற்கரிய ஒரு பெரும் நிலை கூடிய போழ்தும் அப்பர் சுவாமிகள் நினைவில் ஒரு மலையுச்சியே யுற்றது. மலையுச்சியின் மாண்பு அவரனைய பெரியோர்க்கன்றோ தெரியும்? ஈண்டு மலையுச்சியென்றது புறத்தையுங் குறிக்கும்; அகத்தையுங் குறிக்கும். அகமலையுச்சி நண்ணுவதே பேரின்ப நிலையாகும். அதை நிர்வாணமென்றும் சத்திநிபாத மென்றும் பலர் பலவாறு கூறுப. முடிவில் இதைச் சிறிது விளக்குவேன். காழிப் பெருமான் மலைப்பதிகளிற் போந்து திருவாய் மலர்ந்த திருப்பதிகங்கள் பல. அவைகளைப் பொருளுணர்ந்து ஓதும்போது, அவைகள் அகத்தில் மலைக் காட்சியை வழங்கி இன்பூட்டுகின்றன. மானத மலை : மலைப்பதிகளின் திருப்பதிகங்களில் மலையைக் காண்டல் சிறப்பன்று. மலையில்லாப் பதிகளின் திருப்பதிகங்களில் மலையைக் காண்டலே சிறப்பு. மலையில்லாப் பதிகளிலும் ஞானசம்பந்த பெருமான் மலை நினைவை உண்டாக்குகிறார். அவர் உள்ளம் பிரகிருதி யென்னுங் கீழிற் படிந்ததில்லை; மெய்யறிவை விளக்கவல்ல வானோக்கிலேயே படிந்து கிடந்தது. அவர், தங்கருத்தில் மலைபோன்ற உயர்வை உற்பத்தி செய்கிறார். இங்கே மலையில்லாத் திருப்பதிகள் இரண்டு நினைவிற்கு வருகின்றன. ஒன்று திருச்சிற்றம்பலம்; மற்றொன்று திருவையாறு. இவ்விரண்டு திருப்பதிகளின் திருப்பாக்களில் ஒவ்வொன்றையே இங்கே எடுத்துக் காட்டுகிறேன். செல்வ நெடுமாட சென்று சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே இத்திருப்பாட்டைப் பண்ணுடன் பாடிப் பாருங்கள்; உங்கள் மனம் எங்கே செல்கிறது? உற்று உணருங்கள். வானோக்கும் மலையில்லாவிடத்திலும், அந்நோக்கை ஞான சம்பந்த வள்ளல் எவ்வாறு கருத்தில் எழுப்பிப் பாட்டில் படைத்துச் செல்கிறார் பாருங்கள்! பெரியார், செல்வம் என்று துவங்குகிறார். இப்பாட்டில் எல்லாச் செல்வங்களு மிருக்கின்றன. செல்வம் என்னும்போதே நெஞ்சில் பரவலும் உயர்வும் எழுச்சியுந் தோன்றி மகிழ்ச்சி நிரம்புகிறது. அம்மகிழ்ச்சிச் செல்வம் படிப்படியே அகப்புலனை வானோக்கிற் செலுத்துகிறது. எப்படிச் செலுத்துகிறது? நெடு, அதற்குமேல் மாட, அதற்குமேல் சென்று, அதற்கு மேல் சேண், அதற்குமேல் ஓங்கி -ஒவ்வொரு சொல்லுந் தொடர்ந்து தொடர்ந்து, இவர்ந்து இவர்ந்து. நெஞ்சை வானோக்கிலேயே உந்தா நிற்கிறது. இச் சொற்களின்வழி உள்ளம் எவ்வாறு படியேறிப் படியேறி வானோக்கிற் செல்கிறதென்பதைக் கூர்ந்து நோக்குங்கள். சிந்தை எத்துணைத் தூரஞ் செல்கிறது? சேணோங்கி என்று, செல்வமதி தோய என்கிறார், நோக்கு வானிடைப் புகுகிறது. அந்நோக்கு வானள விலாதல் நின்று விடுகிறதா? இல்லை. அது மேலுந் துருவிச் செல்கிறது. அதனைச் செல்வம் உயர்கின்ற செல்வம் என்கிறார். உயர்வைப் பெருமான் நிகழ்காலத்தில் குறிப்பிடுதல் கருதற்பாலது. சிந்தையும் மனமுஞ் செல்லா நிலைமைத்தாய ஓர் உயர்வை ஞானசம்பந்த பெருமான் அகமுகத்தில் உணர்த்துகிறார். செல்வம் படிப்படியாக ஓங்கி ஓங்கி, வானளவில் ஓங்கி, மெய்யறிவில் அமர்ந்து, அமைதியில் திளைக்கிறது. இச் செல்வ மன்றோ வான் செல்வம்; விழுச்செல்வம்; அழியாச் செல்வம்? பிறவற்றை உங்கள் ஊகத்துக்கு விடுகிறேன். புறவோங்கலில்லா ஓரிடத்தில் அகவோங்கலை ஆளுடைய பிள்ளையார் படைத்து, அதற்குப் படிகளும் அமைத்திருத்தலைக் காணுங்கள், மேலோர் அகக்கண் வானோக்கிலேயே செல்லுதல் இயற்கை. மற்றொரு பாட்டு வருமாறு:- புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே - திருஞானசம்பந்தர் இங்கும் புறமலையில்லை. ஞானசம்பந்தர் உள்ளம் ஈண்டும் வான் நோக்கியே செல்கிறது. மழை மனத்தை வான் நோக்கிற்குச் செலுத்துகிறது. மரமேறி என்பது அதைப் படியேற்றுகிறது. முகில் பார்க்கும் என்பது அதை வான் மலையிற் சேர்த்து அமைதியில் நிறுத்துகிறது. வான் மலையை அழகிய பாட்டில் இயற்கை வழி அமைத்திருக்கிறார் ஞான சம்பந்தர். பெரியோர் உள்ளம் கீழ்நோக்கில் வீழாது, வான் நோக்கிற் சென்றுகொண்டே போகும். இப்பெருநோக்கை உலகில் வழங்கி ஈர்ப்பது எது? மலையன்றோ? கடவுள் நெறிக்கும் மலைக்குமுள்ள தொடர்பை இன்னும் விரிக்கில் உங்கள் அரிய காலத்தை யானே கொள்ளை கொண்டவ னாவேன். இன்னும் இமயம் நோக்கல் வேண்டும். உடல் நலன் உயிர் நலத்துக்குக் கடவுள் உணர்வு வாயிலாக மலை துணை நிற்பதோடு, உடல் நலத்துக்கும் அது துணை நிற்கிறது. உடலுயிருக்குரிய நலன்களை மலை ஒருங்கே வழங்குகிறது. வாழ்வுக்கு உயிர் நலன் உடல் நலன் இரண்டுந் தேவை. ஒன்றின் றேல் மற்றொன்றுமில்லை. ஒன்றற்கொன்று இன்றியமையாதது. உடம்பா ரழியி லுயிரா ரழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே - திருமூலர் மலையேறும் ஒருவன் உடற்பயிற்சி செய்கிறவனாகிறான். எல்லாப் பயிற்சிகளினுஞ் சிறந்தது மலையேறுவது. இதயத் துடிப்பு, இதயப் பரவல் முதலிய நோய்களால் பீடிக்கப் பட்டவர் மட்டும் மலையேறலாகாது. மலையேறுகிறவன் கதிரொளியிலுங் காற்றிலும் மூழ்கிக்கொண்டே போகிறான். மண்ணுலகும் விரிந்து விரிந்து தனது பரந்த காட்சியை அவனுக்கு வழங்கா நிற்கின்றது. குறுகிய மண்ணையும் விண்ணையும் பார்த்த மனிதன் விரிந்த மண்ணையும் விண்ணையும் பார்க்கிறவ னாகிறான். அவன் மலையில் அருவி நீராடி, மரத்தடியில் அமர்ந்து, இளஞாயிறு உமிழும் ஒளிவிராவிய காற்றைப் பருகுகிறான். கதிரொளியுங் காற்றுங் கலந்த உயிர்ப்பினும் உடலோம்பும் அமிழ்தம் பிறிதொன்றுண்டோ? ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வார்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே - திருமூலர் பிராணாயாமத்துக்கு மலை உரிய இடம்; சாலவும் உரிய இடம். மலைக்காற்றில் தும்பு தூசுகள் படிவதில்லை. அது நறுங் காற்று. அஃது உடலையோம்பி அமைதி கூட்டும். தும்பு தூசுகளும் சாக்கடைகளும் வேறுபல நஞ்சுகளும் நிரம்பிய நகரங்களில் பிராணாயாமஞ் செய்வதால் நலன் விளைதல் அரிது. நலனுக்குப் பதிலாகத் தீமை விளையினும் விளையும். ஆதலால் பிராணாயாமத்துக்கு மலையைக் கோடல் சிறப்பு. கதிரொளி, காற்று, நீர் முதலிய உணவுகளைக் கொண்ட பின்னைக் கதிரொளியால் கனிந்த பழம் காய் கீரை கிழங்கு முதலியவற்றை உண்ணுதல் நலந்தரும். மலைவாழ் மக்கள் திருவுடையர். அவர்கள் திருவை, தேனும் செந்தினை இடிகளும் தீஞ்சுவைக் கனியும் (ஊனும்) துய்ப்பன; உடுப்பன மரவுரி தழைகள் வானுந் தோய்சுனை ஆடுவ; மணிவரை இருப்ப; ஏனஞ் சூழ்ந்தகுன் றவர்க்கொரு நல்குர வின்றே என்று கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணத்தில் குறிப்பிட் டுள்ளார். பெரியோர் இருக்கை மலை நலன்கள் இன்னும் பலவுள. அவைகளை இங்கு விரிக்கிற் பெருகும். ஒன்றை மட்டும் சிறப்பாக இங்குக் குறிப்பிட்டு மேற்செல்கிறேன். அவ்வொன்றென்னை? பெரியோர் இருக்கை. பெரியோர் மலையைத் தமக்குரிய இருப்பிடமாகக் கொண் டிருக்கின்றனர். அவர் உள்ளொளி ஜோதி விருட்சம் போல் பிரகாசிக்கிறது. அவ்வொளி மற்ற நிலங்களிலும் மின்சாரம் போலப் படர்ந்து உயிர்கட்கு நலஞ் செய்கிறது. மலைப் பெரியோர் இயற்கையோ டியைந்து நின்று இறை யுண்மை யுணர்ந்தவர். அவர் மூழ்குவது ஏழ்கதிர்; தோய்வது காற்று; ஆடுவது அருவி; புகுவது பொதும்பர்; இருப்பது கொழு நிழல்; கிடப்பது பாறை; உயிர்ப்பது நறுமணம். மயிலின் ஆட்டமும் மானின் ஓட்டமும் அவர் காண்டல். அருவியின் முழவும் குயிலின் கீதமும் கிளியின் பாட்டும் வண்டின் மூரலும் அவர் கேட்டல். கதிரொளியுங் காற்றுங் கலந்த உயிர்ப்பும், அவ்வுயிர்ப்புறையும் பழமும் அவர் உணவு. திருவருள் அவர் நினைவு. அவர், ஞாயிறு தோன்றும் போது காலைவான் செம்மையையும், ஞாயிறு மறையும்போது அந்திவான் செக்கரையும், இரவுப்போது மீன்கள் மின்னத் திங்கள் நிலவுகாலப் பரந்து பொலிதரும் வான் நீலத்தையும் ஆண்டவன் வடிவாகக்கண்டு கண்டு, தம்மை மறந்து, ஒருமை யின்பத்தில் திளைப்பர். இப்பெரியோரைத் தாங்கி நிற்பது மலை. இன்னோரன்ன சிறப்புக்கள் பலவற்றையுடையது மலை. அம்மலையையா மறப்பது? மலையை மறந்து நகரமென்னும் நரகக் குழியில் கிடப்பது? மலையினின்றும் மற்ற நிலங்கள் போந்த பழைய மக்கள், தங்கள் தாயகமாகிய மலையை மறந்தார்களா? மலைப்பித்து அவர்கள் மலை நினைவின் பொருட்டுக் கோபுரங்க ளெழுப்பினார்கள், காவியங்க ளெழுதினார்கள்; ஓவியங்கள் வரைந்தார்கள்; இவை போன்ற மற்றும் செய்தார்கள். அவ்வளவி லாதல் அவர்கள் நின்றார்களா? இல்லை. அவர்கள் மலைப் பித்தரானார்கள். மலைப் பித்து அவர்களை விட்டகன்ற தில்லை. அடிக்கடி அவர்கள் மலை சென்று திரும்பும் முறை களையும் துறைகளையுங் கோலினார்கள். அவர்கள் முயற்சியால் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன: விழாக்கள் எடுக்கப் பட்டன; விழாக்கட்கெனத் திருநாட்கள் காணப்பட்டன மலைச் செலவிற்கென இன்ன பிற வகுக்கப்பட்டன. இவைகட்கெல்லாம் அடிப்படையான நோக்கம் மக்கள் மலையுடன் தொடர்பு கொண்டு வாழ்தல் வேண்டுமென்பதே. மலைப் பதிகள் திருப்பதி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், பழனி முதலிய மலைப்பதிகள் நினைவிற்கு வருகின்றன. திருப்பதி ஏழு மலைகளை யுடையது. அம்மலைகள் மீதேறி இறங்கினால் எத்துணையோ நலன்கள் விளையும். மலைகளை வலம் வந்து அவைகள் மீதிவர்ந்து இழிதருவதால் எத்துணையோ உயிர் நலன் - உடல் நலன் - விளையும். அந்தோ! பழைய நோக்கம் இப்பொழுது நிலவுகிறதா? அது வீழ்ந்து பட்டதே. ïa‰if¡ flîŸ FiffŸ, fhR g¿¡F« fŸs® Fiffshtšynth kh¿É£ld? என்று உங்களிற் சிலர் கருதல் கூடும், அங்ஙனங் கருதநேர்வது இயல்பே. கருதி ஒதுங்குவதால் பயனில்லை. கள்ளர் வயப்பட்டுள்ள குகைகளை இயற்கைக் கடவுள் குகைகளாக மாற்றமுயலல் வேண்டும். அப்பொறுப்பை யேற்றுக் கடனாற்றல் வேண்டும். அஃதே அறிஞர் கடமை. அக்கடனாற்றச் சிலர் புகுந்திருக்கிறார். அவர்க்கு எனது வாழ்த்து உரியதாக. காசு பறிக்குங் கள்ளர் பொருட்டு மலையை மறந்து விடுவது அறிவுடைமையாகாது. அன்பர்களே! மலையை மறவாதேயுங்கள்; மலைக்கேகுங்கள்; அங்கே கள்ளர்க்கு ஆட்படாதேயுங்கள்; இயற்கை ஆண்டவனுக்கு ஆட்படுங்கள்; குற்றங் களைந்து குணத்தைக் கொள்ளுங்கள். நகரமென்னும் நரகத்தில் வாழும் நாம், சில போதாவது மலைநோக்கித் திரும்புதல் வேண்டாவா? வேனிற் காலத்தில் சிலர் மலைநோக்குவது உங்கட்குத் தெரியும். அமைதிக்கு மலை வாழ்வு மிகமிக இன்றியமையாதது. மலை, அமைதி வழங்குதற் போலப் பிறிதொன்று வழங்குதல் அரிது. திரையற்ற நீர்போல் சிந்தை தெளிந்து ஆண்டவனை யுன்னுதற்குப் பெரியோர் மலைத்தொடர்பு கொண்டதை முன்னே சுருங்கச் சொல்லி யிருக்கிறேன். வாழ்விற்கு அமைதி வேண்டுமா வேண்டாவா? எவ்வமைதி வேண்டும்? புற அமைதிமட்டும் போதாது. அக அமைதியும் வேண்டும். அது, மற்ற அமைதிகளைத் தானே பெறுவிக்கும். அப்பேரமைதியை நகரம் அளிக்குமா? நகரமும் வாழ்வும் தற்கால நகரங்கள் ஒருபோதா, ஒரு வழியிலோ அமைதியைக் கெடுக்கின்றன? என்றும் எல்லா வழியிலும் அவைகள் அமைதியைக் கெடுத்து வருகின்றன. அமைதி இன்னதென்று வாழ்வில் உணராமலே நகர மனிதன் சாகிறான். நகரம் ஒரு பெருஞ் சந்தை. சந்தை இரைச்சலில் மனிதனுக்கு அமைதியேது? பலதிற வண்டிகளின் ஓட்டங்கள், பெரும் பெருந் தொழிற் சாலைகளின் ஈட்டங்கள், திரள்திரளான மக்கள் கூட்டங்கள், அக்கூட்டங்கட்குரிய ஆட்டங்கள், பிழைப்பில்லாத் திண்டாட் டங்கள், உரிமைப் போராட்டங்கள், முதலாளி தொழிலாளிப் போர்கள், இகலின் எழுச்சி - கிளர்ச்சி - புரட்சி - கொலை - இரத்த ஆறுகள், அடக்குமுறைகள், படையெடுப்புகள் - துப்பாக்கி பீரங்கி முழக்கங்கள், பசிபட்டினிகள், பரீட்சைக் கவலைகள், பட்டப் பதவிக் கவலைகள், ஒருவரையொருவர் வீழ்த்த முயற்சிகள், சூது வாது வஞ்சனைச்சூழ்ச்சிகள், தேர்தல் அலைவுகள், பொய் பொறாமைகள் முதலிய பேய்களும் பூதங் களும் காளிகளும் கூளிகளும் சண்ட தாண்டவமாடும். பாழும் நகரத்திலா அமைதி? பாழும் நரகத்திலா அமைதி? சகோதரிகளே! சகோதரர்களே! நகரத்தை விடுங்கள், நரகத்தை மறந்து மலையை நினையுங்கள்; மலையை நோக்குங்கள். நகரச் சந்தையில் அகப்பட்டு, அடியுண்டு அயர்ந்த மேல்நாட்டுப் புலவர் ஒருவர், ஓ! என்னாருயிரே! நாம் நம்முடைய மலைக்குப் போவோம்; நீயும் நானும் ஒரு போது மலையிடத்தவரா யிருந்தோம்; நீண்ட காலமாக இச்சந்தை யுலகில் தங்கிவிட்டோம்; நாம் நம்முடைய மலைக்குப் போவோம் என்னுங் கருத்துப்படப் பாடினார், அப்பாட்டின் ஒரு கூறு வருமாறு:- ‘O my soul, let us go unto our hills We were native to them one day you and I We have stayed in this market place too long; * * * * O my soul let us go unto our hills’ - T. Garrison மேல்நாட்டுக் கீழ்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டுப் புலவர்கள் மலையின் சிறப்பை மூன்று நூற்றாண்டுகளாகவே உணர்ந்து இன்பந் துய்த்து வருகிறார்கள். சிறப்பாக வோர்ட் வொர்த், ரூஸியோ, கோயத் முதலிய இயற்கைப் புலவர்க்குப் பின்னரே மேல்நாட்டார் மலையின் நுட்பத்தை உணரலானார். இப்பொழுது மேல்நாட்டார்க்கு மலை பெருவிருந்தாயிருக்கிறது. நம் நாட்டுப் பாவலர்கள் மலை யின்பத்தை யுணர்ந்து நுகர்ந்து இன்புற்ற காலம் முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலுங் கடந்து நிற்கிறது. குறிஞ்சிக்கலி, திருமுருகாற்றுப்படை, மலைபடுகடாம் முதலியன எந்நாளில் தோன்றின? அந்நாளுக்கு முன்னரே நம் நாட்டுப் புலவர்கள் மலையின்பத்தை நன்கு உணர்ந்து நுகர்ந்தார்கள். அவர்கள் வழி வழி வந்த நாம் இன்று எந்நிலையிலிருக்கிறோம்? மலையின்பம் பிறந்த இடம் மலையின்பத்தை இழந்து கிடக்கிறது! மலைப் பொதுமையை இவ்வளவில் நிறுத்திக்கொள்கிறேன். மலையரசு இதுகாறுங் கூறிவந்த மலைப் பொதுவியல்களை மலையர சாகிய இமயத்துக்குஞ் சேர்த்துக்கொள்க. அவைகளை மீட்டும் இமயத்தின்பாற்படுத்திக் கூற வேண்டுவது அநாவசியம். அவை களிற் சிலவற்றை மட்டுந் தழுவி இமயத்தின் சிறப்புக்கள் சிலவற்றைச் சொல்லப் புகுகிறேன். மலைவாழ்வில் உடல் நலன் - உயிர் நலன் - உண்டு எனில், மலையரசின் வாழ்வில் எத்தகை உடல் நலன் - உயிர் நலன் - இருக்குமென்று சொல்லவேண்டுவதில்லை. இமயத்தில் ஆயுளை வளர்க்க வல்ல மூலிகைகளும், மரணத்தைத் தவிர்க்க வல்ல மூலிகைகளும் பல வளர்கின்றன என்று முனிவரர்கள் கூறியுள் ளார்கள். அவைகளுள் ஒன்று இந்நாளில் ஸர் ஜெகதீச சந்திர போஸால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இமயச் சாரலில் வதிவோர் நீண்ட ஆயுள் பெற்றிருக்கிறா ரென்று சொல்லப்படு கிறது. அவருட் சிலரை இமயத்தின் உச்சி காண முயன்று சென்ற ஐரோப்பியர்கள் கண்டார்கள். இமய மூலிகைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுதற் கென்றே ஓர் ஐரோப்பியப் பெண்மணி நம்நாடு நோக்கியிருக்கிறார். இவைகள் யாவும் அணித்தே புதினத் தாள்களில் வந்தனவே இவைகளை நீங்கள் படித்து மிருக்கலாம்; கேட்டு மிருக்கலாம். ஆறுகள் இமயத்தில், பெரிய பெரிய ஆறுகள் தோன்றி இழிதரு கின்றன. அத் தெய்வீக நதிகளின் சிறப்பை என்னொரு நாவால் எங்ஙனஞ் சொல்வேன்? அவைகள், கம்பன் பாக்களிலும் பரப் புடையன; ஆழமுடையன; அழகுடையன. அகன்று பரந்து நிரம்பித் ததும்பியோடும் பெருக்கில் தெய்விகமன்றோ தோன்று கிறது? சிந்துவென்ன, கங்கையென்ன, பிரமபுத்திராவென்ன இவ்வானாறுகள் - இக்கடலாறுகள் - புலன்களைக் கவ்வுவன வல்லவோ? இப்பேரியாறுகள் எத்துணை எத்துணைக் கோடி கோடி உயிர்கட்கு நலஞ் செய்கின்றன! இவ்வாறுகளை ஈன்ற இமய வல்லியின் சிறப்பென்னே! என்னே! பெரியோர்கள் இமயம், பெரியோர்களிருப்புக்குப் பேர் பெற்றது; மெய் யுணர்விற்கு ஊற்றுக்களனா யிருப்பது. இமயக்காற்றிலே இறை யொளி வீசுகிறது. மெய்யுணர்விற்கு இமயச் சேர்க்கை இன்றியமை யாதது. தத்துவத்துக்கு இமயம் என்னும் ஒரு வழக்கே யிருக்கிறது. இமயம் போந்து மெய்யுணர்வு பெற்றோர் பலர். இக்கால மக்களில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர் பிளவட்கி அம்மையாரும் சாது சுந்தரசிங்குமாவர். இவர்கள் வரலாறு களை ஆராய்க. ஆராய்ந்தால் இவர்கள் திருவருட்செல்வம் பெற்ற இடம் இமயம் என்று உணர்வீர்கள். இவர்கள் மொழிகளிலும் இமயத்தின் மாண்பு புலனாகும். கடவுள் காட்சி அகண்டாகாரக் கடவுள் நினைவைப் பரந்து வானளாவிய மலை உண்டாக்குகிறது என்று மேலே சொல்லியுள்ளேன். இமயமோ மலையரசு! மலையரசின் அகலமென்னை? நீள மென்னை? உயரமென்னை? அவ்வளவைகள் காட்சிக் கெட்டாதன. அப்பெரிய மலையை நோக்கும்போது, அது கடவுள் நினைவை யூட்டியே தீரும். இமயத்தினும் பெரியதொன்று இவ்வுல கிலில்லை. பெரிய வொன்று பெரிய வொன்றன் நினைவூட்டுதல் இயல்பே. இமயத்தினின்றும் முதல் முதல் கடவுள் உணர்வு தோன்றியிருத்தல் வேண்டும். கடவுள் உணர்வூட்டும் இமயத்தைக் கடவுள் உருவாக இயற்கைப் புலவர்கள் வருணித்திருப்பார்கள். அவ்வருணனையில் அடங்கிய உறுப்புக்கள் பின்னே கடவுள் உறுப்புக்களாகக் கொள்ளப்பட் டிருத்தல் வேண்டும். கடவுள் ஒரு நாமம் ஓருருவ மில்லாத ஒன்று. அதற்குப் பல நாமம் பலவுருவம் புலவர்களால் அணி செய்யப்பட்டன. அந் நாமங்களுள் சிவநாமமும் சிவவுருவமும் மிகவுந் தொன்மையன. சிவமும் இமயமும் சிவ வழிபாடு ஒருபோது உலக முழுவதும் பரவியிருந்தது. பூபதனங்களிலுஞ் சுரங்கங்களிலுஞ் சிற்சில சமயங்களில் சிவவுருவங்கள் அகப்படுகின்றன. நீல நதிக்கரையிலும், பால்டிக் கடலோரத் திலும், வேறு பல விடங்களிலுஞ் சிவலிங்கச் சிதைவுகள் காணப்படுகின்றனவென்று சரித்திரக்காரர் சொல்கின்றனர். பண்டை மக்கள் பல இடங்களில் தீயை வழிபட்டதும், குழியில் எரியோம்பி வழிபட்டதும், ஞாயிற்றை வழிபட்டதும் ஈண்டுக் கருதற்பாலன. இன்னோரன்ன பிற, சிவந்த சிவவழிபாட்டின் தொன்மையைக் குறிப்பன. ஒரு போது உலக முழுவதும் பரவி யிருந்த ஒரு வழிபாட் டிற்குக் கருவியாக நின்ற சிவ வடிவத்தை ஊன்றி ஆய்ந்தால், அதனை இமயத்தோற்றத்தின் ஓர் அழகிய ஓவியம் என்று கூறுதற்கு இடனுண்டாகும். இயற்கை இறை யுடல். அவ்வுடலுக்கு அழகிய உறுப்புக்கள் அமைத்து அதனை ஓவியமாக்கி வழிபடுவது தவறாகாது. அழகுக் கடவுளிடம் உயிர்களின் உணர்வு செல்லுதற்கு ஓவியம் ஒரு பாலம் போலத் துணை செய்வது. முருகன் அல்லது அழகு என்னும் நூலில் இந்நுட்பத்தை ஒல்லும் வகை விளக்கியிருக் கிறேன். இக்கூட்டத்தில் வட இந்தியா போந்து, இமயக்காட்சியை நேரே கண்டவரிருக்கலாம்; இமயமலையைப் பற்றிய காவியங்கள், கதைகள், கட்டுரைகள் படித்தவரிருக்கலாம்; அம்மலைப் படத்தையாதல் பார்த்தவரிருக்கலாம்; எம் முறையிலாதல் இமயத்தை உணர்ந்தவர் ஈண்டுக் குழுமியுள்ளாரென்று கருது கிறேன். அன்பர்களே! இமயத்தை நினைந்து கொள்ளுங்கள்; சேய்மையில் நின்று அதை நோக்குவதுபோல் எண்ணிக் கொள்ளுங்கள்; அது சிவவுரு வழங்குவதைக் கவனியுங்கள். இமயம் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று பசுமை; மற்றொன்று கருமை; இன்னொன்று வெண்மை. பசுமை, அடியில் துவங்கி இடப்பாலொதுங்குவது போலெழுந்து, அமர்ந்துள்ள காடுகளின் செறிவு; கருமை, உடலின் குறுக்கே பதிந்துள்ள பாறைகளின் மிடைவு; வெண்மை, உச்சியிலுள்ள பனிக்கூடல். சிவவடிவத் தோற்றம் அடி துவங்கி, இடமொதுங்கிப் பச்சைப் பசுங்கடலின் பொங்கலே போன்றெழுந்து, அமர்ந்துள்ள பச்சையழகு, பண்டை இயற்கைப் புலவர்கட்கு எக்காட்சி தந்திருக்கும்? கரும் பாறைகளின் மிடைவு அப்பாவலர்கட்கு எத்தோற்றத்தை நல்கி யிருக்கும்? பனிக் கூடல் தன்னில் கதிரொளி துருவிப்பாய்ந்து படரும் வேளையில் (அவ்வொளி) எவ்வண்ணத்தை அவ்வறிஞர் கட்குப் புலப்படுத்தி யிருக்கும்? பனிக்கோட்டி லொளிரும் நீலம் அக்கூர்த்த மதியினர்க்கு எவ்வெண்ண மூட்டியிருக்கும்? செம்மை யோங்க லுக்கும் பசுமையோங்கலுக்கும் இடையில் புகும் ஞாயிற் றொளிதாக்கும் செங்கோடு அவர்கட்கு எவ்வாறு தோன்றி யிருக்கும்? இவ்வழியில் இயற்கைப் பாவலர்கள் வாயிலாக முறையே பெண்ணொரு பாகம், கரியுரி, பொன்னார்மேனி, நீலகண்டம், செஞ்சேய் பிறந்திருத்தல் வேண்டும். இமய ஓங்கலின் இரு புறத்திலுந் திரண்டு திரண்டு நீண்டு நீண்டு வளைந்து வளைந்துள்ள தொடர்களையும், அவைகளின் நுனிகளிலுள்ள சிதைந்த திரட்சிகளையும் முறையே எட்டுக் கைகளாகவும், அவைகளிலுள்ள பொருள்களாகவும் இயற்கைப் புலவர்கள் கொண்டிருப்பார்கள். இமயத்தின் பின்னே தலையி னின்றும் பாளம் பாளமாக இடைவிட்டுப் பிளவுண்டு சுருண்டு உருண்டு திரண்டு முறுக்கேறிய வடங்கள் போல வீழ்ந்துள்ள பாறைத் தொங்கல்களைத் தாழ் சடைகளாக அப்புலவர்கள் கருதியிருப்பார்கள். மலையரசின் உச்சியில் சூழ்ந்து துதைந் துள்ள மேக மண்டலங்களைக் கங்கைநீர்த் தேக்கமாக அவ் வறிஞர்கள் எண்ணியிருப்பார்கள். முடிமீது தவழும் அந்திவான் பிறையை இறைவன் முடிப்பிறையாக அவர்கள் உணர்ந்தி ருப்பார்கள். இவ்வாறு இமயத்தின் உறுப்புக்கள் பல சிவவுருவின் உறுப்புக்களாகப் பண்டைப் புலவர்கட்குத் தோன்றியிருக்கும். இமயமளித்த சிவ வுருவம்(சிவமன்று) பின்னே காவியங்களிலும் ஓவியங்களிலும் பிறவற்றிலும் பற்பல வழியில் கூட்டல் குறைத்தலுற்று, ஒழுங்கு பெற்றிருத்தல் வேண்டும். நாளடைவில் பலர் இமயவுருவம் சிவ வுருவம் என்பதை மறந்தும் பலதிறக் கதைகளெழுதியிருக்கலாம். இங்கே சிலர்க்கு ஐயப்பாடுகள் நிகழ்தல் கூடும். என்ன! இமயமென்னும் ஒரு மலையிலிருந்தா சிவபிரான் வடிவம் பிறந்திருக்கும் என்னும் வியப்புந் தோன்றலாம். இது பற்றித் தோன்றும் ஐயப்பாடுகளைக் களைதற்கு இஃது இடமுமன்று; நேரமுமில்லை; எடுத்த பொருளும் முடியாது. ஆயினுஞ் சுருங்கச் சில கூறுகிறேன். சிவம் என்றுமுள்ளது; அநாதி. அஃது ஒன்றினின்றுந் தோன்றுவதுமில்லை; ஒன்றில் ஒடுங்குவது மில்லை. அது தோற்றக் கேடுகளில்லாதது; எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பேரறிவு. அதற்கு உடல் இயற்கை. இயற்கை வாயிலாக அதனிருப்பையுணர்தல் வேண்டும். இயற்கைக் கூறுகளில் அரசுபோன்றது மலை, இமயமோ மலையரசு. மாற்றமனங் கடந்தொளிரும் அகண்டாகார ஒன்றை, மாற்ற மனமுடைய உயிர்கட்கு நினைவூட்டவல்ல இயற்கை யரசின் அரசாகவுள்ள இமயத்தினுஞ் சிறந்த ஒன்று இவ்வுலகில் இருக்குங் கொல்? உலகிலுள்ள பெரிய ஒன்று அதனினும் பெரிய ஒன்றை யுணர்த்துவதாகும். ஆதலால், சிவவுணர்விற்கு இமய மலை கருவியாக நின்றிருக்குமென்று கோடல் தவறாகாது. மின்சாரம் யாண்டுமிருப்பினும் அது தொழிற்படு மிடத்திலேயே விளங்கித் தோன்றுகிறது. அதுபோல யாண்டும் நீக்கமற நிறைந்துள்ள சிவம் அல்லது பேரறிவு, அறியாமை விலகுமிடத்தில் விளங்கித் தோன்றும் இயல்பினது. வான் நோக்கு அறியாமையை நீக்கி அறிவை விளக்குவ தென்பதும், அதுபற்றியே பெரியோர் மலை வாழ்வைக் கொள் கிறார் என்பதும் மேலே ஒருவாறு விளக்கப்பட்டிருக்கின்றன. வான் நோக்கை வழங்குவதில் இமயம் தலையாயது என்று அடிக்கடி சொல்ல வேண்டுவதில்லை. அந்நோக்கு அறியாமையை விலக்குவது. அறியாமை விலகும்போது தோன்ற வேண்டுவது எது? பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே - திருமந்திரம் வானோக்கு இரண்டு விதம். புறவழி நிகழும் வானோர்க்கு ஒன்று; அகவழி நிகழும் வானோக்கு மற்றொன்று. இவ் விரண் டையும் முடிவில் சிறிதாதல் விளக்க எண்ணியிருக்கிறேன். யாண்டுமுள்ள சிவம் இமய வானோக்கில் நன்கு விளங்கித் தோன்றுகிறது. அத்தோற்றத்துக்கு நிலைக்களனாக நிற்கும் இமய வடிவைச் சிவவடிவமாகக் கொள்தால் இழிவென்னை? கனலைக் காற்றைக் கனகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானை என்பது போன்ற ஆன்றோர் அனுபவ மொழி களை நோக்குக. ஓவிய நுட்பம் ஒன்றை ஒருவன் ஓவியமாக வரைகிறான். அவ்வோவியம் பல நிறங்களால் ஆக்கப்படுகிறது. பன்னிறத்தால் ஆக்கப் பெற்ற ஓவியம் நிறமா என்பது கேள்வி. நிறத்தின் வழிக் கலைஞன் தன் கருத்திலுள்ள உருவை யிறக்குகிறான். கருத்தில் உருவை ஒழுங்கு படுத்துவது அறிவு. ஆகவே ஓவியமென்பது நிறத்தின் வாயிலாக வெளிப்படுங் கலைஞன் அறிவாகும். ஓவிய நிலையில் அதை எவரும் நிறமென்று கூறார். ஓவியங் குலைந்ததும் அது நிறமென்னும் பெயர் பெறுகிறது. ஆண்டு ஓவியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த கலை, கலைஞன் அறிவிற் கலக்கிறது. இவ்வாறே ஒவ்வோர் உருவமும் உருவ நிலையில், அவ்வுருமூலத்தின் பெயராலும், அவ்வுருவ அழிவில் அதை உருப்படுத்தற்குக் கருவியாக நின்ற ஒன்றன் பெயராலும் அழைக்கப்படுதல் கண்கூடு. இந்நுட்பத்தைத் தெளிவுப்படுத்துவனவே பொன்னை மறைத்தது, மரத்தை மறைத்தது என்னும் இரண்டு திருமந்திரச் செய்யுள்களும். இமயம், கல் முதலிய பொருள்களால் ஆக்கப்பட்ட மலையாகவும் நிற்கிறது; சிவமாகவும் நிற்கிறது. ஆதலால் ஒரு மலையா சிவ உருவம் என்று எவரும் மலைவுற வேண்டுவ தில்லை. உண்மையைக் கூர்ந்து நோக்கின் நுண்மை புலப்படும். இயற்கைப் புலவர்கள், இயற்கை வாயிலாக இறையை யுணர்வார்கள். இத்தன்மையதென நினைந்து சொல்லொணா ஒன்றை - எழுதொணா ஒன்றை - இயற்கை வாயிலாக நினைந்து சொல்வதும், இயற்கைத் துணையால் எழுதுவதும் அப் புலவர்கள் வழக்கம். அவர்கள் சொல்லும் எழுத்தும் இயற்கை. அச்சொல்லின் பொருளும் எழுத்தின் பொருளும் இறை. ஆகவே இயற்கை மலையரசாம் இமயத்தின் வழியே இறையுணர்வு புலவர்கட்குப் பிறந்திருக்கலாம். யோகமும் தத்துவமும் இமயத்தினின்றும் பிறந்த ஓருருவின் நுட்பங்களும், தத்துவங்களும், பிறவும், பின்னே யோகஞான நெறிகளானும் அவைகளைப் பற்றிய கலைகளானும் விளங்கலாயின. சிவ வுருவம் ஒரு யோகியின் உருவம் போன்றது. அமலயோகத்தில் ஈடுபட்ட ஒருவன் அடைய வேண்டிய நிலை சிவவுருவிலிருக் கிறது. அமலயோகி உண்ணும் அமிர்தம், அது தங்குங் கலசம், அஃ தொழுக்குந் தாரை முதலியன, மதி கங்கை, சடை முதலிய வற்றைக் குறிப்பன. விளக்கம் யோக நூல்களிற் காண்க. வேதாந்த சித்தாந்த ஞான நூல்கள் சிவவடிவின் தத்துவ நுட்பங்களைத் தெரிவிக்கின்றன. சிவவுருவைப் பற்றிய ஐயப்பாடுகள் இளமையில் எனக்குப் பன்முகமாகத் தோன்றின. அவைகளிற் சில யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளையவர்களெழுதிய சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் என்னும் நூலால் ஒருவாறு களையப்பட்டன. பின்னே அவைகளைப் பெரிதும் போக்கிய நூல் திருமூலரருளிய திருமந்திரம். இப்பொழுது எனக்குச் சிவவடிவம், பாட்டுக்குரிய அழகாகவும், யோக மூலமாகவும், அகண்ட தற்பரசிவத்தை யுணர்த்தவல்ல இயல்புகளைக் கொண்ட தத்துவங்கட்கு நிலைக்களனாகவும் விளங்குகிறது. இவைகட்கெல்லாம் பருமையுலகில் தோற்றுவாயாக நிற்பது இமயமலை. இமயப் பெரியோர் இமயத்தில் பெரியோர்களிருக்கிறார்களென்று மேலே சொல்லியிருக்கிறேன். அவர்களில் இமயம் போன்றவர் ஒருவ ரிருக்கிறார். அவரைப் பற்றிப் பின்னுங் கூறுவன். அவரே இமயத்தின் உயிர். அவர் தம் உள்ளொளி - சிவசோதி - இமயத்தைத் தன் வயப்படுத்தியிருக்கிறது. அவ்வொளி நாடியே அறிஞர் ஆண்டுப் போதருகின்றனர். அப்பேரொளி தன்னை யுடையவரின் வடிவாக இமயத்தின் வழிப் பண்டை இயற்கைப் புலவர்கட்குப் பொருளாகியு மிருக்கலாம். சிவபிரானுக்கும் இமயத்துக்குமுள்ள தொடர்பு பல பட விரிந்து கிடக்கிறது. அத்தொடர்புகளைப் புராணங்கள் பல கதை களாகப் புகல்கின்றன. நுட்பங்களைக் கதைகளாகச் சொல்வது புராண மரபு. சிவபிரான் மலையரையன் பொற்பாவையை மணந்தார் என்று புராணங் கூறுவதும் ஈண்டு உன்னற்பாலது. பல வழியிலும் மலைத்தொடர்பு காட்டப்படுகிறது. மலையுவமை அன்பர்கள் ஆண்டவனைப் போற்றும்போது, இயற்கைக் கூறுகள் பலவற்றை அவர்கள் உவமை செய்வார்கள். அவை களுள் அன்பர்கள் உள்ளம் பெரிதும் மலையிலேயே ஈடுபடும். அதற்குக் காரணமென்னை? காரணம் பல கூறலாம். கடவு ளுணர்வும் நினைவும் வடிவும் முதல் முதல் மலையினின்றும் பிறந்தமையே சிறந்த காரணமாகும்; அம்மலைமொழிகள் மலைகள் போலப் பெருகி நிற்கின்றன. குன்றே யனையாய் என்றும், ஆனந்த மலையே என்றும் பெரியோர்கள் மலையை நினைந்து கொள்வதைக் கருதிப் பாருங்கள். காற்றருகு மலை போகப் போகக் காற்றருகு மலைக்கா இவ்வளவு சிறப்பு என்று சிலர் கருதலாம். இமயத்தின் மீது இவர்ந்து செல்லச் செல்லக் காற்றருகுதல் உண்மையே. அதனால் இழுக்கொன்று மில்லை. அதன்கணுள்ள நுட்பமே இமயச் சிறப்புகளில் தலையாயது என்றுங் கூறலாம். இமயம் மூன்று கூறுடையது என்றும், அவை பசுங்காடு, கரும் பாறை, வெண்பனி என்பன என்றும் மேலே சொல்லி யிருக்கிறேன். இமயத்தின் உயரம் இருபத்தொன்பதாயிரம் அடி. ஒன்று முதல் ஏறக்குறைய எண்ணாயிரம் அடிவரை பசுங்காடு. இவ்வெண்ணாயிரம் அடிமுதல் ஏறக்குறைய பதினாயிரம் அடிவரை கரும் பாறை; மிகுதி வெண்பனிக்கூடல். இரண்டாம் பகுதிவரை காற்றுக் கடவுளின் திருவருள் பெரிது முண்டு. அங்கிருந்து ஏறக்குறைய நாலாயிரம் அடிவரை அத்திருவருள் அப்படியும் இப்படியும் நிகழும். அதற்கு மேல் காற்றருகல் துவங்குகிறது. அப்பகுதியில் காற்று நிரம்பிய பையினின்றும் காற்றுப் பெற்றுப் போதல் வேண்டும். இவ் விவரங்கள் யாவும், இமய உச்சி காண முயன்று திரும்பிய ஐரோப்பியர்களால் நன்கு விளக்கிச் சொல்லப்படுகின்றன. ஆகாய விமானியின் அநுபவம் வானிற் பறந்து செல்லும் விமானிகளின் அநுபவங்கள் பல கிடைத்திருக்கின்றன. ஓர் ஆகாய விமானியின் அநுபவம் லண்டன் டைம்ஸில் ஒரு போது வெளியிடப்பட்டிருந்தது. பதினாயிரம் அடிவரைக் காற்றுப்பைத் துணை வேண்டுவதில்லை யென்றும், அதற்கு மேல் அத்துணை, படிப்படியாக வேண்டப் படுகிறதென்றும் இல்லையேல் உணர்வழியப் பெறுகிற தென்றும் அவ்விமானி கூறியுள்ளார். அங்கு அவரெதிரிலிருந்த டைப் ரைட்டரில் பொறிக்கப் பெற்றிருந்த எழுத்துக்களைக் கூட்டிப் படித்தால் அவரால் முடியவில்லையாம். மொழிக்குரிய எழுத்துக்கள் என்னும் உணர்வே ஆண்டு அவருக்குத் தோன்ற வில்லையாம். கீழே இறங்க இறங்கப் பழைய நல்லுணர்வு பிறக்கிற தென்றும், அப்பொழுது எழுத்துக்களைக் கூட்டிப் படித்துப் பொருளுணரும் நிலை நேர்கிறதென்றும் அவர் அறிவித் திருக்கிறார். பதினாறாயிரம் அடிக்குமேலுள்ள நிலை அப்படியும் இப்படியுமிருப்பதாகும். அதற்கு மேற் செல்லின் உணர்வழியும் நிலை நேரும் போலும்! காயமே இது பொய்யடா - காற்றடைத்த பையடா என்றார் ஒருவர். இமயத்தின் பசுமை - கருமை கடந்தொளிரும் வெண்மை யிலேயே, காற்று, பருமையில் வேண்டப்படுகிறது. ஆண்டிருந்தே இமயம் காற்றருகு மலை என்னும் பெயர் பெறுகிறது. இயற்கை மாறுமிடம் அதுவே. அம்மாற்றத்தின் நுட்பம் கூர்ந்து உன்னற்பாலதே. அகப்புறக் கயிலாயம் இமயத்தின் காற்றருகு வெண்மைப் பகுதியே வெள்ளி மலையென்றுங் கயிலாயமென்றும் வழங்கப்பெற்று வருகிறது. கயிலாயமென்பது தத்வார்த்தமுடைய ஒன்று. கயிலாயம் புறத்திலிருப்பதுபோல அகத்திலுமிருக்கிறது. கயிலாயம் இமயத்தில் இருப்பது போல நம்மிடத்திலும் இருக்கிறது. அகநோக்கிலிருந்து நம்மை ஆராயின், நாமும் ஓர் இமயமா யிருத்தல் உணரலாம். இமயம் முக்கூறுடைத்தாயிருப்பதை யொப்ப நாமும் முக்கூறுடையவரா யிருக்கிறோம். பசுமை கருமை வெண்மையென்னும் மூன்றும் இமயத்திலு முண்டு; நம்மாட்டு முண்டு. பசுமை மாயையைக்குறிப்பது. கருமை ஆணவத்தைக் குறிப்பது. கர்மம் மாயையினின்றும் ஆணவக் கூட்டுறவால் பிறப்பதொன் றாகலின், அதனைப் பசுங்கருமையிற் சேர்த்து விடலாம். இமயத்தின் பசுமைப் பகுதியாய் காட்டில் என்ன இருக்கும்? பொல்லா விலங்குகளல்லவோ இருக்கும்? நம்பாலுள்ள மாயா அடவியிலும் பொல்லாவிலங்கியல்பு களிருக்கின்றன. இமயத்தின் பசுங்காட்டுப் பகுதியைக் கடந்ததும் கரும் பாறைப் பகுதி தோன்றுகிறது. நாமும் மாயையைக் கடந்தால், ஆணவப் பாறையிருத்தல் அறிவோம். இமயப் பாறையில் கழுகு முதலிய வன்பறவைகளிருக்கின்றன. நம்மிடத்தும் அப்பறவையியல் புகளிருக்கின்றன. இமயத்தின் கரும்பகுதியைக் கடந்து சென்றால் வெண்மையொளி புலனாகிறது. நாமும் ஆணவப் பாறையைக் கடந்து சென்றால் மெய்யறிவொளி விளங்கப் பெறுகிறோம். இமயத்தின் வெள்ளொளி புறக்கயிலாயம். இங்கே மெய்யறிவொளி அகக்கயிலாயம். இதுவே நிர்வாணமென்பது. இதனைச் சத்திநிபாதமென்று சைவ நூல்கள் கூறும். இதற்கு மற்றவர் மற்ற மற்ற குறியீடுகள் புனைந்துள்ளனர். எல்லாம் ஒரு கருத் துடையனவே யாகும். இயேசு பெருமான் மலைமீதிவர்ந்து வெண்மை எய்தியதை இங்கே நினைவூட்டிக் கொள்ளுங்கள். அவரெய்திய வெண்மை எது? மெய்யறிவு விளக்கம் - நிர்வாணம் - சத்திநிபாதம் அல்லது கயிலாயப்பேறு என்பதே. பெரியோர் மலைப்படி ஏறுவதென்பது அக முகத்தில் மாயா காரியங்களாகவுள்ள தத்துவப்படிகளை ஏறுவதென்க. இதனைக் கண்ணப்பர் காளத்திமலை ஏறியவிடத்தில் சேக்கிழார் நன்கு விளக்குகிறார். நாணுனு மன்பு முன்பு நளிர்வரை யேறத் தாமும் பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசேர் பான மேறி ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையையேறி நேர்படச் செல்லும் போதில் இப்பெரிய புராணப் பாட்டின் பொருள் நுட்பத்தை உன்னி உன்னி உண்மையுணர்க. இனி எடுத்த பொருள்மீது செல்வோம். இமயத்தில் இயற்கை மாறுமிடத்தில் கருத்தைச் செலுத்துங்கள். கருமை கடந்து வெண்மை துவங்குமிடத்தில் இயற்கை மாற்றமுறுகிறது; அதாவது காற்று அருகுகிறதென்பது. அகத்திலும் இம்மாற்றம் நிகழ்கிறது. ஆணவம் ஒடுங்கி மெய்யறிவொளி தோன்றும் இடத்திலேயே அசத் இஃதென்பதும், சத் இஃதென்பதும் உணர்விலுறுகின்றன. அசத்தும் சத்தும் பிரியுமிட மிதுவே. இந்நிலையை யாவையுஞ் சூநியஞ் சத்தெதி ராகலின் என்றார் மெய்கண்டார்; முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூநியமாய் என்றார் ஔவையார். இச்சூந்யமே நிர்வாணமென்பது. வெட்ட வெளியில் என்ன இருக்கும்? அகத்தில் சத்தும் அசத்தும் பிரிவுறுமிடமே புறத்தில் இமயத்தில் காற்றுப்பெருக்கும் காற்றுச் சுருக்கும் பிரிவுறுமிட மாகும். அசத்தை மனிதன் சத்தென்று கருதிக்கொண்டிருக்கும் மட்டும் அவனுக்குப்பிரகிருதித் தொடர்பிருக்கும். பிரகிருதி உடலுக்குப் பருமைக் காற்று இன்றியமையாதது. மகன் அசத்தின் தன்மையுணர்ந்து அதனின்றும் நீங்கிச் சத்துணர்வு பெற்றதும், அவன் பிரகிருதியினின்றும் விடுதலையடைகிறான். பிரகிருதி உடலுணர்வு ஒடுங்குமிடத்தில் பிரகிருதியின்பாற்பட்ட பருமைக் காற்று வேண்டுவதில்லை. ஆகவே, இமயத்தின் வெண்மையினிடம் பிரகிருதி மாயா உடலுணர்வினர் ஏகும்போது அவர்க்கின்றியமை யாத காற்றுப் பேறு போதிய அளவின்றி அவர் தயங்குகிறார். இமய உச்சி காண்டல் இமயத்தின் உச்சி காண நம்போன்றவரால் இயலாதோ வெனில், மிக அரிதில், அஃதும் ஒருவாறு இயலுமென்று கூறலாகும். மேல்நாட்டறிஞர் சிலர் இமயத்தின் உச்சிகாண முயன்று வருவதும், அவருள் ஒரு கூட்டத்தார் இருபத்தாறா யிரம் அடிவரை சென்றதும் உங்கட்குத் தெரியும். அவர் காற் றருகியுள்ள இடங்களில் எப்படிச் சென்றனர்? தற்கால முறைப்படி பைகளில் காற்றை நிரப்பி, அவைகளை உடன் கொண்டு சென்றனர். இது செயற்கை முறை; இயற்கை முறையாகாது. ஆயினும் அவர்தம் ஊக்கமும் முயற்சியும் பாராட்டற்பாலனவே. பனிச்செறிவில் செயற்கை முறையில் காற்றை உட் கொண்டு காற்றருகியுள்ள இடத்தில் ஏறிச்செல்லல் எத்துணை அருமை? ஏமாந்தால் உயிர் போய்விடும்! சிலர் இடையிடை உயிரையும் இழந்தனர். உயிரையும் பொருட் படுத்தாது, ஏற்ற கருமத்தில் கண்ணாயிருந்து உழைத்து வருதலைத் தற்கால மேல்நாட்டார் சிறந்த அறமாகக் கொண்டிருத்தல் கவனிக்கத் தக்கது. விடா முயற்சிக்கு எப்பொழுதும் வெற்றியுண்டு. எந்நாட்டிற் பிறந்தவர் எந்நாட்டு மலையுச்சி காண எத்துணை அரிய முயற்சியில் தலைப்படுகிறார்! இமய நாட்டிற் பிறந்த நாம் இமயத்தின் உச்சி காண முயல்கிறோமா? எண்ண மாதல் கொள்கிறோமா? இல்லையே! ஆனால் பண்டைப் பெருமையைப் பாராட்டுமளவில் உள்ளநிறை கொள்கிறோம், பண்டைப் பேச்சில் மேல் நாட்டாரை நாம் எளிதில் வென்று விடுகிறோம்! பண்டை மூதறிஞர் இமயத்தின் பலபாகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாரென்று தெரிகிறது. அவர் எழுதியுள்ள காவியங்கள், யோகநூல்கள், ஓவியங்கள் முதலியன சான்றுகளாக நிற்கின்றன. ஆனால் இமயச் செலவிற்கு அவர் கொண்ட முறை வேறு, அஃது இயற்கை முறை. இப்பொழுது நமக்கு அம்முறையுந் தெரியாது; தற்கால முறையுந் தெரியாது. நம்மினுந் தற்கால மேல் நாட்டார் விழுமியோர் என் பதில் என்ன ஐயம்? இமயத்தின் உச்சி காண்பதில் என்றாதல் மேல் நாட்டறிஞர் வெற்றியுறுதல் ஒருதலை. அவ்வெற்றி நாளே மேல் நாட்டின் விடுதலை நாள்; உலகின் விடுதலை நாள். அந்நாளே மேல்நாட்டில் ரிஷிகள் தோன்றும் நாள். இமயத்தின் உச்சியை இரண்டொருவர் அரிதில் முயன்று கண்டபின்னைப் பலர்க்கு அதைக் காணும் வேட்கை முறுகியெழும். அவ்வேட்கை செயற்கை முறையில் முற்றுறாது. ஏன்? அடிக்கடி பலர் போதல் வேண்டுமன்றோ? அதற்குப் புதியதொரு முறை காணப்பெறும் அவசியம் நேரும். அம்முறையே நம்முன்னோர் கண்ட இயற்கை முறையாக நேரலாம். அவ்வியற்கை முறை மேல்நாட்டுணர்வில் படிதற்கு, அந்நாட்டிற் றோன்றி, நம் நாடு போந்து, இமயத்தில் தங்கி, உள்ளொளி பெற்ற பிளவட்கி அம்மையார் கால் கொண்டனர். இப்பொழுது ஸர் ஓலிவர் லாட்ஜ் உள்ளிட்ட சிலரால் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. ஸர் ஓலிவர் லாட்ஜ் பெரிய பூத பௌதிக சாதிரி. அவர் கண்ட புதுமைகள் பல. பருவுடலுக்கு வேறாக நுண்ணுட லிருத்தலை அவர் கண்டுள்ளார். அவ்வுண்மை உறுதிப்பட்டே வருகிறது. நுண்ணுடல் உண்மையை அநுபவத்தில் கைவரப் பெறுவோர் பிரகிருதி மாயா காரியமாய பருவுடலுடனும் வாழ்வு நடாத்தலாம். அவர்க்குக் காற்றுணவு பருமையில் வேண்டுவதில்லை, அவர் செயற்கைக்காற்றுத் துணையின்றி இமய உச்சி நோக்குதல் கூடும். நம்முன்னோர் கண்ட இயற்கை முறை இதுவே. வெள்ளிமலையென்னுங் கயிலாயமலை, பருமைக் காற் றெல்லையைக் கடந்தொளிர்வ தென்பதையும், இக்காற்றுப் போதிய அளவின்றி நன்கு வாழ இயலாத பருவுணர்வுடையார் அதன்பால் அணுகல் அரிதென்பதையும் நுண்ணுடலுண்மையை அநுபவத்தில் உணர்ந்தவரே அதனிடஞ் செல்லல் இயலு மென்பதையும் மக்களுக் கறிவுறுத்த அறிஞர் எழுதிய கதைகள் பலவுண்டு. அவைகளுள் இராவணனைப் பற்றிய கதைக் குறிப்புப் பெரிதும் வழக்கிலிருக்கிறது. இராவணன் விமானமேறிக் கயிலைவழிச்சென்றானென்றும், அப்போது அவன் மேற்செல்லாதவாறு தகையப்பட்டானென்றும், அவன் அம்மலையை அகழ்ந்தெடுக்க முயன்றானென்றும், சிவ பிரான் கால்விரலாலூன்றத் திணறினா னென்றுஞ் சொல்லப் படுகின்றன. நுட்பங்களைக் கதைகள் வாயிலாகத் தெரிப்பது பண்டைமக்கள்மரபுகளுளொன்று. இக்கதைக்கணுள்ள நுட்ப மென்னை? இராவணன் பிரகிருதி உடலுணர்வில் மூழ்கினவன். அவன் நுண்ணுடல் உண்மையை அநுபவத்தில் உணராதவன். அவனுக்குக் காற்று இன்றியமையாதது. அஃதருகியுள்ள இடத்தில் அவன் புகுந்தமையான், அவன் தகையப் பட்டானென்க. அவன் மலையை அகழ்ந்தெடுக்க முயன்ற வேளையில் போதிய காற்றில்லா இறுக்கத்தால் அவன் நீரினின்றெடுக்கப்பட்ட மீன் போன்றவனாய்த் திணறிப் பருமைக் காற்றுள்ள இடத்துக்குத் திரும்பி ஓடலானான். அந்நாளில் தற்போதைய செயற்கைக் காற்றுப்பை அவனிடமில்லை! அப்பர் சுவாமிகள் பருவுடலுணர்வுடன் கயிலை நோக்கிய வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அவர் தொண்டு தமிழ் நாட்டுக்கு அவ்வேளையில் மேலும் மேலுந் தேவையாயிருந்தமையான், ஆண்டவன் அவருக்கு நுண்ணுடல் உணர்வு நல்காது, அவரைத் திருப்பி, அவர் கொண்ட வேட்கையை மட்டுந் தணிக்கத் திருவை யாற்றில் கயிலைக்காட்சி வழங்கினானென்று சொல்லப் படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வுலகில் தமது கடமைகளை யெல்லாம் நிறைவேற்றி முடித்த பின்னை ஆண்டவனருளால் நுண்ணுடலுணர்வை அனுபவத்தில் பெற்று, அக்கோலத்துடன் கயிலை நோக்கினார். அவர் நுண்ணுடல் பெற்றேகியதற்குச் சரித்திரத்தில் சான்றிருக்கிறது. அவ்வேளையில் இமயச் சாரலி லிருந்து உபமன்யு முனிவர் ஒரு பேரொளியின் வருகையைக் கண்டு எழுந்து தொழுதனரென்றும், அவ்வொளி சுந்திரமூர்த்தி யென்று தம்மைச் சூழநின்ற மற்ற முனிவர்கட்கு அவர் அறிவித்தனரென்றுஞ் சரித்திரஞ் சொல்கிறது. சுந்தமூர்த்தி சுமிகள் வெள்ளை யானை மீதிவர்ந்து சோதி மயமாய்க் கயிலை நோக்கினா ரென்று சொல்லப்படுவது, அவர் நுண்ணுட லுணர்வுடன் நோக்கினாரென்பதை விளக்குவதாகும். காரைக்காலம்மையார் கயிலை சென்று திரும்பியதும் இங்கே நினைவிற்கு வருகிறது. தம்மைத் தெய்வமென்று நாயகன் தொழுத அப்போதே, காரைக்காலம்மையார் உடலை உதறி எற்புடல் தாங்கினாரென்று சரிதஞ் சொல்கிறது. அம்மையார் உதறியது பிரகிருதியை யென்க. பிரகிருதி மாயா உடலையற்ற அம்மையாருக்குப் பருமைக் காற்றுத் துணை எற்றுக்கு? ஆதலால் அவர் கயிலை சென்று திரும்பியதில் வியப்பொன்று மில்லை. அம்மையார் நுண்ணுடல் பெற்றமையால் அவர் பேயாரென்றழைக்கப்பட்டனர். கௌரி சங்கரம் பருமைக்காற்றருகிய கயிலையின் ஒளி இமயத்தின் இருபதி னாயிரம் அடியிலேயே வீசத் துவங்குகிறது. அவ்வொளி பெருகிப் பெருகிப் பேரொளியாய் முடிவில் திகழ்கிறது. அவ்வெள்ளிய அமைதியொளி திகழும் முடியே கௌரி சங்கரமென்பது. இதை எவரெட் (Everest) என்று இக்காலத்தார் கூறுப. இமய முடிகளில் தலையாயது இதுவே. இக்காலப் பிரகிருதி மக்களுள் செயற்கை முறை பற்றி இன்னுங் கௌரி சங்கரத்தை அணுகினோர் எவருமில்லை. அதை நண்ண முயன்றுவரும் ஐரோப்பியருள் ஒரு கூட்டத்தார் இமயத்தின் இருபத்தாறாயிரம் அடிவரை சென்று திரும்பினர். இன்னும் மூவாயிரமடி ஏறிச்செல்லல் வேண்டும். இமய முடியாகிய கௌரிசங்கரத்தை அடைதல் வேண்டுமென்னும் முயற்சி இன்னும் விடப்படவில்லை. சிலர் அம்முயற்சியில் முனைந்தே நிற்கிறார். அவர்தம் முயற்சிகளெல்லாம் செயற்கை முறைபற்றியே செல்கின்றன. செயற்கை வழியிலாதல் கௌரி சங்கரத்தைக் காண்டல் சிறப்பேயாகும். செயற்கை முறைப்பற்றிக் கௌரி சங்கரத்தைக் காண முயல்வோர் தம் முயற்சியில் வெற்றி பெறினும், அவர்க்கு அதன் புறம் புலனாகுமேயன்றி, அதன் அகம் புலனாகாது. இயற்கை முறை பற்றி ஆண்டுப் போதரும் ஒளி வண்ணர்கட்குக் கௌரி சங்கரத்தின் உள்ளுறை புலனாகும். அவ்வுள்ளுறை இமயத்தின் உயிர். அவ்வுயிர் இமயவளவில் நிற்கவில்லை. அது பிரகிருதி புவனங்களை இயக்கும் ஆருயிராக நிற்கிறது. சீகண்டர் அவ்வுயிர் எது? அது பெண் ஆண் குழந்தை யென்னும் முக்கூறுகளுடன் வீற்றிருக்குஞ் சீகண்ட சிவமென்க. இமயத்தில் சீகண்ட சிவம் வீற்றிருப்பது போல, மேருவில் மகேசுர மூர்த்தமும், சிவலோகத்தில் சதாசிவமூர்த்தமும் வீற்றிருக்கின்றன. அவை களும் ஆங்காங்கே பெண் ஆண் குழந்தைவடிவாகவே வீற்றிருக் கின்றன. சீகண்டர் பிரகிருதி மாயா புவனங்களை இயக்குந் தலைவர். மகேசுரர் அசுத்த மாயா புவனங்களை இயக்குந் தலைவர். சதாசிவனார் சுத்த மாயா புவனங்களை இயக்குந் தலைவர். இவர்களை இயக்குவது தற்பர சிவம். தற்பர சிவமே பரம்பொருள். அது நீக்கமற எங்கும் நிற்பது. அதற்கு ஊர் பேர் வடிவம் ஒன்றுமில்லை. ஆராய்ச்சியில்லாதார் தற்பர சிவத்துக்கும் புவனத் தலைவர்கட்கும் வேற்றுமை யுணராது, வாயில் வந்தவாறு பிதற்றுவர். தற்பர சிவத்தின் இயலை, பலகலையா கமவேதம் யாவையின் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான் நிலவும்அரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி நின்மலமாய் ஏகமாய் நித்த மாகி அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் பரசிவமென் பர்தெளிந்து ளோரே என வரூஉஞ் சாத்திரத்தானுணர்க. குருமார்கள் சாத்திரங்களை முறையாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளிவு பெற்றோர்க்குத் தற்பர சிவத்தின் இயலும், அத் தற்பர சிவத்தின் திருவருளால் புவன கர்த்தர்களாய் வீற்றிருந் தருள்வோர்களின் இயலும் நன்கு தெரியும். புவனகர்த்தர்கள் தற்பர சிவத்தை நினைந்து நினைந்து, சிவமாந்தன்மை யெய்தி, கருவி கரணங்க ளெல்லாம் அம்மயமாய்ப் புவனங்களை இயக்குவதோடு, பக்குவமடைந்த உயிர்கட்குத் தாங்களே நேராகவோ அல்லது வேறு வாயிலாகவோ உண்மையை அறிவுறுத்தும் மெய்க்குரவர் களாவுமிருந்து கடனாற்று வோராகிறார்கள். இவர்களைச் சிலர் அன்பு மேலீட்டான் முழு முதற் பொருளேயென்று போற்றுகிறார். குருமாரைத் தெய்வமாகப் போற்றும் ஒரு மரபும் உலகில் நிலவி வருகிறது. இம்மரபினர் முழுமுதற்பொருள் ஊர் பேர் வடிவம் ஒன்றுமில்லா ஒன்றாதலி னாலும், அதன் விளக்கம் குருமாரிடம் மிளிர்தலாலும், அக் குருமாரை தெய்வமாகப் போற்றுதல் முறையென்றும், நினைவுக் கெட்டாத தெய்வத்தை வேறு வழியில் நினைத்தல் இயலா தென்றும், ஆதலின் குருமார் வாயிலாகவே வழிபாடு நிகழ்த்தல் வேண்டுமென்றுங் கூறுகிறார். இவர் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டுச் சிலர், குருமாரைக் குருமாராகவே கோடல் வேண்டு மென்றும், அவரை எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகப் பாவித்துப் போற்றுதல் கூடாதென்றுங் கூறி, உறுதியில் நிற்கிறார். தெய்வமொன்றே உலகம் பலவிதம். எவ்வழியிலாதல் தெய்வ வழிபாடு நிகழ்தல் வேண்டும். தெய்வமென்னும் பெயரால் நிகழ்த்தப்படும் வந்தனை வழிபாடுகள் யாவும் மெய்த் தெய்வமொன்றுக்கே சேரும். தெய்வம் ஒன்றே. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வம் என்றார் திருமூலர் மீண்டும் அவரே, அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே என்று அருளியிருக்கிறார். வேண்டற்பாலது அன்பு வழிபாடு. வழிபாட்டு முறையில் போர் முறை வகுத்தல் அறியாமை. இது நிற்க. புவன கர்த்தர் ஒவ்வொருவரும் பெண் ஆண் குழந்தை கோலமாக வீற்றிருப்பதென்னை என்று சிலர் கருதலாம். இதன் அடிப்படையான காரணத்தை நோக்குதல் வேண்டும். சத் சித் ஆனந்தம் முழுமுதற் பொருள் சத் - சித் - ஆனந்தமாயிருப்பதென்று சொல்லப்படுகிறது. சத் - உண்மை; சித் -அறிவு; ஆனந்தம் - இன்பம். உண்மையுள்ள இடத்தில் அறிவுமுண்டு; இன்பமு முண்டு. அறிவுள்ள இடத்தில் உண்மையுமுண்டு; இன்பமு முண்டு. இன்பமுள்ள இடத்தில் உண்மையுண்டு; அறிவு முண்டு. இவ்வாறே ஒன்றுள்ள இடத்தில் மற்றிரண்டு மிருத்தல் இயல்பு. அகலமும் நீளமும் உயரமும் ஒரே பொருளிலிருத்தல்போல, இம்மூன் றியல்புகளும் ஒரே முழு முதலிடத்திலிருக்கின்றன. மூன்றியல் களையும் மூன்று தனிப் பட்ட பொருளாகக் கோடல் தவறு. சத் ஆணாகவும், சித் பெண்ணாகவும், ஆனந்தம் குழந்தை யாகவும் அவ்வவ்வியல்களின் கூறுகளுக்கேற்ப உருவகிக்கப் பட்டன. இம்மூன்றியல்புகளுடைய பரம்பொருளைப் புவன கர்த்தர்கள் நினைந்து நினைந்து, அதுவாய் விளங்குவோர் களாதலின், அவர்கள்பாலும் அவ்வியல்புகள் முகிழ்த்திருக் கின்றன. ஆகவே, பெண் ஆண் குழந்தையென்பன ஒன்றன் தோற்றமென்றுணர்க. மும் மூர்த்திகள் பெண், ஆண், குழந்தை என்னும் மூன்றும் நம் நாட்டில் மும்மூர்த்திகளென்றும், சில இடங்களில் பிதாகுமாரன் பரிசுத்த ஆவி யென்றும் வழங்கப்படுகின்றன. அவை இன்னும் பலவித மாகவும் வழங்கப்படுகின்றன. அப்பலவற்றுள் சில வருமாறு: - பிர்மா - விஷ்ணு - ருத்ரன்(க்ஷிந்துக்கள்); ஒஸிரி - ஐஸி - ஹோர (எகிப்தியர்); ஒடின் - பிரீயா -தார் (காண்டு நேவியர்); ஆனு-இயா-பேல்(அரியர்); தௌலாக் -பான்- மொல்லாக் (துருயுதர்); அமிர் தாப்பர்-அவலோகீதீசுரர் -மன்ஜூசுரி(வடபுலப் புத்தர்); கேதர் - பினா-சொக்மா(யூதர்); அஹீரமஜதர் - மித்திரர் - அஃரிமான்(பாரசீகர்). ஒருண்மை, உலகில் பலவிதமாக வழங்கப்பட்டு வருகிறது. யான் பிரகிருதி உலகில் வாழ்பவன். எனக்கு இவ்வுலகத் தலைவருங் குருவுமாயுள்ள சீகண்ட சிவத்தின் திருவருள் வேண்டும். அவர் வாயிலாகவே தற்பர சிவத்தை யான் உணர்தல் வேண்டும். மௌன மூர்த்தி சீகண்ட சிவம் தென்முகப் பரமசாரியராக வீற்றிருக்கிறா ரென்பது சைவசமயக் கொள்கை. இவரை பிளவட்கி அம்மையார் மௌன மூர்த்தி (Silent Watcher) என்று சொல்கிறார். பிளவட்கி அம்மையார் தவத்தால் உணர்ந்து உலகுக் குணர்த்திய குரு சந்தானத் தோற்றம், பெரிதும் சைவசமயங் கூறுங் குரு சந்தானத் தோற்றத்துடன் ஒத்திருக்கிறது. குருமார்க் கெல்லாந் தலைவராக வீற்றிருப்பவர் மௌன மூர்த்தி என்றும், அவரெதிரில் நால்வர் வீற்றிருக்கிறாரென்றும், அவருள் ஒருவர் இளம் வடிவினராய்த் தலைமை பெற்றிருக்கிறாரென்றும், அவர்தம் தொடர்பு கொண்ட திருக்கூட்டங்களிருக்கின்றன வென்றும் அவசியம் நேரும் போது அவருள் எவரேனும் உலகுநோக்கி அறம் வளர்த்துச் செல்வரென்றும் அம்மையார் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார். மௌன மூர்த்தியை நாம் தக்ஷிணாமூர்த்தி என்கிறோம். இளமை வடிவினரைக் குமரர் என்கிறோம். மௌன மூர்த்திக்கும் இளமை வடிவினர்க்கும் அம்மையார் கூறியுள்ள இயல்புகள், பெரிதும் சைவ சமயம் தக்ஷிணாமூர்த்திக்கும் குமரருக்குங் கூறும் இயல்புகளுடன் ஒத்திருத்தல் கவனிக்கத் தக்கது. ருஷியாவி னின்றும் போந்த ஓர் அம்மையாருக்குத் தவத்தால் இந்நுட்பங் களெல்லாந் தோன்றலாயின. முழுமுதற் பொருள் ஒன்றே. அதை உணர்தற்கு மோனம் வேண்டும். மோனம் வழங்குவது அழியா இளமை. மோன நிலைக்கும் இளமைப் பேற்றுக்கும் அறிகுறியாக தக்ஷிணா மூர்த்தியுங் குமரரும் வீற்றிருக்கிறார். குமரகுரு வாயிலாக மோன நிலையும், மௌன மூர்த்தி வாயிலாக முழுமுதல் உணர்வும் பெறுதல் கூடும். சொல்லாமற் சொல்லும் தென்முகப் பரமாசிரியர் குறிப் புணர்ந்து இவ்வுலகை நடாத்தும் குமரகுருவின் ஆணைவழி நிற்பவரே மற்ற மற்ற குருமார். குருமார்க்குத் தீர்க்கதரிசிக ளென்றும், தீர்த்தங்கரர்களென்றும், நபிகளென்றும், புத்தர் களென்றும் பலதிறப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. குருமார் சமயம் நேரும் போது உலகில் பல விடங்களிற்றோன்றிக் காலதேச வர்த்த மானத்துக்கேற்ற வண்ணம் அறநெறியோம்பிச் செல்வார். இவர் ஓரிடத்திருந்து போதரலையும், ஓரறத்தை அறிவுறுத்தலையும் உணராத உலகம், பன்முகச் சமய உணர்வு கொண்டு பிணங்கிப் போரிடுகிறது. இப்பிணக்குகளைப் போக்கிச் சமரச சன்மார்க்கத்தை வளர்க்க இந்நாளில் தோன்றிய பெரியோர்கள் பிளவட்கி அம்மையார், இராமகிருஷ்ணர், இராமலிங்க சுவாமிகள் முதலியவர்கள். இவர் களுள் பிளவட்கி அம்மையார் குருபரம் பரையை நன்கு விளக்கித் தெளிவுபடுத்தியுள்ளார். இமயத்தில் வீற்றிருந்தருளுந் தலைமைக் குரவரை நாம் சீகண்ட சிவமென்றும் தென்முகப் பரமாசாரியரென்றுஞ் சொல்கிறோம். சமணர் அவரை விருஷபதேவரென்றும், அருக ரென்றுஞ் சொல்கிறார். பௌத்தர் அவரை ஆதி புத்தரென்று கூறுகிறார். மற்றமற்ற சமயங்களிலும் வழங்கப்படுஞ் சில பெயர்கள் கயிலை மௌன மூர்த்தியைக் குறிக்கின்றன. மொழி வேற்றுமைகள் உலகையும் வேற்றுமைப் படுத்துகின்றன. சமணர் விருஷப தேவரைப் பற்றிக் கூறும் வரலாறும், வடிவும், பிறவும் பெரிதுஞ் சைவர் கூறும் மோனமூர்த்தியின் வரலாற்றுடன், வடிவுடன், பிறவுடன் ஒத்திருக்கின்றன. விருஷப தேவர் மெய்ந்நிலையுற்றதும், கயிலை போந்து மோனத்தில் வீற்றிருக்கலானார் என்று சமண நூல்கள் கூறுகின்றன. விரிவு சமண நூல்களிற் காண்க. ஜப்பானில் நிலவும் பௌத்தம் மஹாயானம் என்பது உங்கட்குத் தெரியும். அப்பௌத்தம் பெரிதும் சைவத்துடன் ஒத்து நிற்பது. அப்பௌத்த ஞானிகளிற் சிலர், அமைதிநிலை பெறுதற்பொருட்டு, இமயம் போந்து, இன்புற்று, எழுதிய குறிப்புக்களில், கயிலாய உச்சியில் மோன நிலையிலுள்ளவர் ஆதி புத்தர் என்று சுட்டிக்காட்டி யிருக்கிறார். உலகிடைப் போந்து அறம் வளர்த்த புத்தர் பலர். புத்த ரென்பது பெருநிலை அடைந்த குருமாரைக் குறிக்கும் ஒரு சொல். கௌதம புத்தர் என்பது, கௌதமர் என்பவர் புத்தர் நிலையடைந்ததைக் குறிப்பதாகும். கௌதமருக்கு முன்னரும் பலர், புத்தர் நிலையடைந்துள்ளனர். விளக்கம் பௌத்த மூல நூல்களிற் பார்க்க. கயிலாய உச்சியிலுள்ள மௌன மூர்த்தியைப் பலர் பல பெயரால் அழைக்கிறாரென்று கொள்வதே பொருத்தம். அக் கயிலைநாதனைச் சுவாமி விவேகாநந்தர், ஏ! இந்தியாவே! நீ தொழுந்தேவன் முனிவர்க்கு முனிவன் என்பதை - எல்லாந் துறந்த சங்கரன் என்பதை - உமைக்கு நாயகன் என்பதை - மறவாதே என்று கூறியதும் ஈண்டு உன்னத்தக்கது. இப்பிரகிருதி உலகின் தலைமைக்குரவர் வீற்றிருக்கும் இடம் இமயவுச்சி - அதாவது கௌரி சங்கரமென்று உணர்க. கௌரி சங்கரன் வீற்றிருக்கும் இடம் கௌரி சங்கரம் என்னும் பெயர் பெற்றது. இமயம் ஒரு பெருங்குரவரைத் தன் முடியில் தாங்கிநிற் கிறது. காலதேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் குருமாரை அஃது உலகுக்கனுப்புகிறது. சமய ஞானத்துக்குத் தாயகமாக இமயம் -இமயக் கயிலை-கௌரி சங்கரம்-பொலிகிறது. ஆகவே, இமயத்தின் உயிர் சீகண்ட சிவமென்றும், அவ்வுயிரின் உடல் இமயமென்றுங் கொள்க. இமயம் பல்லாற்றானுந் தெய்விக மூடையதென்க. தியானம் இமயமலைச் சிறப்புக்கள் இன்னும் பலவுண்டு. அவை களுள் தனிமைச் சிறப்பென்று யான் கருதுமொன்றை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன். அஃது இமயம் தியானத்துக்கு மிகவும் உரிமையுடையதென்பது. தியானம் வாழ்விற்கு இன்றியமையாதது. தியானம் உடலுக்கும் உயிருக்கும் நலஞ் செய்வது. உள்ளொளிப் பெருக்கத் துக்குத் தியானம் வேண்டற்பாலதே. தியான மில்லாத வாழ்வு ஞாயிறொளி படராத இடத்தை ஒப்பது. மனிதனிடத்தில் இயற்கை அறிவொளி இருக்கிறது. அவ் வொளி ஆணவத்தால் மறைபட்டுக் கிடக்கிறது. ஆணவம் நீங்க நீங்க மனிதனிடத்தில் தெய்விக உணர்வு பெருகிக்கொண்டே போகும். ஆணவ நீக்கத்துக்கும் அறவொளி ஆக்கத்துக்குந் தியானம் பெருந்துணை செய்யும். விளங்காத நுட்பங்களெல்லாம் தியானத்தால் விளங்கி விடும். தியானம் அலையும் மனத்தை அமைதியில் நிறுத்தும். உள்ளத்திலும், பொறி புலன்களிலும் மற்றக் கருவி கரணங் களிலும் படிந்துள்ள மாசுகளைத் தியானம் அரித்துத் தள்ளி, அவைகளை(பொறி புலன்களை)த் தூய்மைப்படுத்தும். தியானம், பருவுடல்(தூல சரீரம்) - நுண்ணுடல்(சூக்ஷ்ம சரீரம்) - முதலுடல் (காரண சரீரம்) - நிலைகளைப் புலப்படுத்தி, அகக் கண்ணைத் திறந்து யோகக் காட்சியை வழங்கும். தியானம் சிற்றறிவைப் பேரறிவாக்கி, அதைக் கட்டில்லாத தொன்றாக்கும் அப்பேரொளி முன்னே, ஒரு கோடி ஞாயிறொளி என் செய்யும்? இஃது அதன் முன்னே மின்மினிப் போலத் தோன்றும். தியானம், பிணி மூப்பு சாக்காட்டைப் போக்கும். தியானம், மனிதனைத் தெய்வமாக்குமென்று சுருங்கச் சொல்லலாம். இன்னோரன்ன சிறப்புக்களெல்லாம் தியானத்தில் உண்மையா லல்லவோ யோகங்களிலெல்லாந் தலையாயது தியான யோக மென்று ஆன்றோர் கூறிப்போந்தனர்! மலையும் தியானமும் தியானத்துக்கு முதல் முதல் ஏதாயினுங் குறி வேண்டும். மலை, சிறந்த இயற்கைக் குறி யென்று சொல்ல வேண்டுவ தில்லை. மலையைத் தியானத்துக்குரிய இடமாகவுங் கொள்ள லாம்; தியானிக்கப் படுவதாகவுங் கொள்ளலாம்; தியானத்துக் குரிய பிறவாகவும் கொள்ளலாம். என்னை? மலையை உற்று நோக்குங்கள். அஃது எப்படி நிற்கிறது? மலை, தியானம்போல் நிற்கிறது. தியானம் போலவா தியான மாகவே நிற்கிறது. மலை, தியானத்தை அறிவுறுத்துகிறது. தியானத்துக்கு வேறோர் ஆசிரியர் வேண்டுவதில்லை. மலையே இயற்கைப் பேராசிரியராக நிற்கிறது. பொது மலை நிலை இவ்வாறாயின், சிறப்பு மலையரசாம் இமயத்தின் நிலை எவ்வா றிருக்கும்? இமயமும் தியானமும் இமயத்தை எப்படித்தியானிப்பது; இமயம் எங்கே இருக் கிறது; நாம் எங்கே இருக்கிறோம் என்று சிலர் கருதலாம்; சிலர் வினவலாம்; சிலர் நகைக்கலாம். இமயத்தின் பொருட்டு உங்களை இராவணன் முயற்சியில் தலைப்படுமாறு யான் சொல்லப் போவதில்லை; அல்லது தற்காலச் செயற்கை முறை யிலாதல் தலைப்படுமாறு யான் தூண்டப்போவதில்லை. இச் செயற்கை முறை ஒரு சில ஆராய்ச்சியாளர்க்கே பயன் படுவது. எல்லாராலும் அதைக் கொள்ளல் இயலாது. வேறு வழி என்னை? இமயக்காட்சி இந்நாளில் நேராகவோ வேறு வாயிலாகவோ இமயத்தை உணராதார் அரியர் என்று தொடக்கத்தில் சொல்லியிருக் கிறேன். எவ்வழியிலோ இமயத்தை உணர்ந்த உங்கட்கு இமயத்தைக் காட்டல் எளிது; மிக எளிது. இதோ இமயத்தைக் காட்டுகிறேன்; பாருங்கள். சகோதரிகளே! சகோதரர்களே! இமயத்தை நினையுங்கள், இமயம் வந்துவிட்டது. அதை நோக்குங்கள்; அதன் அகலத்தை எண்ணுங்கள்; அதன் நீளத்தை நினையுங்கள்; அதன் உயரத்தை உன்னுங்கள்; இமயத்தியானத்தில் அமருங்கள். * * * இமயப் பசுங்காடு தோன்றி மறைகிறது - அதாவது மாயை ஒதுங்குகிறது - நம்பாலுள்ள கரடி புலி முதலியன ஓடுகின்றன. கரும்பாறை தோன்றி இரிகிறது. அதாவது ஆணவம் ஒடுங்குகிறது - நம்பா லுள்ள கழுகு கண்டபேரண்டம் முதலியன பறந்தோடுகின்றன. வெண் கயிலை - புண்ணியத்திரட்சி தோன்றுகிறது. அதாவது நிர்வாணம் அல்லது சத்திநிபாதம் அல்லது கிறிதுவின் வெண்மை உறுகிறது. உற்றதும் இமயக் கொடியின் தவக்கோலம் காட்சியளிக்கிறது - அதாவது அமைதிப் பெண்மை கூடுகிறது. உடன் மௌன வடிவம் புலனாகிறது - அதாவது மோனம் எய்துகிறது; அங்கே சொல்லொணா அழகு திரண்ட செவ்விய இளமை வடிவு நிற்கிறது; அதாவது சாவா மூவா இளமைப் பேறு உண்டாகிறது. இவ்விளமைப்பேறே அழியா இன்பம். இஃதொரு நொடிப் பயிற்சி. நாடோறும் இத்தியானத்தைப் பெருக்கப் பெருக்க நினைவிலுங் கனவிலும் இந்நிலைகள் தோன்றா நிற்கும். முடிவில் அது மேலான இன்பத்தில் நிறுத்தும். புற இமயத்துடன் அகத்தைத் தொடர்புப்படுத்தி, உயிர்களை இமயமாக்குவது இமயத் தியானம். இமயத்தியானம் பெரிய தொன்றைக் குறிப்பது. அறிவுப் பெருக்கத்துக்கும் தெய்வ உறவுக்கும் 1இமயத் தியானம் வேண்டற்பாலது. ஒவ்வொருவரும் தியானத்தில் இமயமாதல் வேண்டும். அதற் கென்றே பலதிற வழிபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. வழிபாடுகளின் உள்ளக் கிடக்கை தியானத்தில் இமயமாக வேண்டுமென்பதே. சொல்லொணாப் பெரிய நிலையே இமயமென்க. அதற்கறிகுறி புற இமயம். அப்பேரிமயம் நமது பாரத நாட்டின் முடியாயிருக்கிறது. மலையை - உலகில் உயர்ந்த மலையை. முடியாக் கொண்ட தாயின் வயிற்றில் நாம் பிறந்திருக்கிறோம். இமயப் பாரதப் புதல்வர்களென்னும் பெயரை நாம் தாங்கி நிற்கிறோம். நமது குறிக்கோள் எதுவாயிருத்தல் வேண்டும்? இமய நோக்கம் நமது குறிக்கோளாயிருத்தல் வேண்டும். இப்பொழுது நமது நோக்கம் யாண்டுச் செல்கிறது? வெட்கம்! வெட்கம்! நமது கருத்தை இழிந்த கீழ்நோக்கில் புகுத்தவே நாம் பயின்று வருகிறோம். இமய வாடையில் நாம் நிற்கிறோமா? இல்லையே! தற்போது நாம் பெற்றுவருங் கல்வி இமய வாடையில் நம்மை நிறுத்துகிறதா? அது நம்மை மேலைக்காற்றில் பறக்கச் செய் கிறது. இமய நாட்டில் பிறந்தவருள் இப்பொழுது எத்துணைப் பேர் இமயமாக இருக்கிறார்? அவர்தந் தொகையை விரல் வைத்து எண்ணிவிடலாம். அன்பில் ஒரு காந்தி இமயமாக நிற்கிறார்; கவியில் ஒரு தாகூர் இமயமாக விளங்குகிறார்; இயற்கை ஆராய்ச்சியில் ஒரு போ இமயமாகப் பொலிகிறார். எத்துணைக் காந்திகள் - எத்துணைத் தாகூர்கள் - எத்துணைப் போகள் பிறந்த நாடு - வளர்ந்தநாடு - வாழ்ந்த நாடு - நம் பாரதநாடு. மற்ற நாடுகளில் இந்நாளில் இமயம் போன்றவர் பலரிருக்கிறார். இமயவாடை அங்கே திரும்பியிருக்கிறது போலும்! இந்நாளில் இமய உச்சி காண முயல்வோர் யாவர்? இமயத்தில் பிறந்த நாம் இமயத்தை மறந்தோம்: இமயத் தியானத்தை மறந்தோம்; இமயத் தெய்வத்திருவருளை இழந் தோம்; கல்வி யறிவிலுஞ் செல்வச் சிறப்பிலும் வறியரானோம். அவ்வறுமையைப் போக்க இமயத் தியானத்தைக் கொள் ளுங்கள்; இமயம் போன்ற மேலான எண்ணங்களை எண்ணுங்கள் செயல்களைச் செய்யுங்கள். இமயம் வெறுங்கல்லாக நிற்கவில்லை; மண்ணாக நிற்கவில்லை. அஃது உயிர்கட்குப் பல வழியிலும் பயன்படுகிறது; துணை செய்கிறது. அப்பயனுக்கு - அத்துணைக்கு - அஃது ஏதாயினும் கைம்மாறு கருதுகிறதா? இமயத்தின் கருணை - கங்கையாக - சிந்துவாக - மற்ற நதிகளாகப் பொழிகிறது. பணி செய்தல் மனிதராகப் பிறப்பதால் மட்டும் பயனில்லை. மனிதச் செய லிருத்தல் வேண்டும். மனிதச் செயல் யாது? மற்றவர்க்குப் பயன் கருதாது பணி செய்தல். என் கடன் பணிசெய்து கிடப்பதே. இதற்கு இமயம் எடுத்துக்காட்டாக நிற்கிறது. இமயம்போல மனிதன் மற்றவர்க்குப் பயன்படல் வேண்டும்; துணை செய்தல் வேண்டும். இமயக் கங்கை போல - சிந்துபோல - மற்ற நதிகள் போல - மனிதன் கருணை பொழிதல் வேண்டும். அக் கருணை வெள்ளத்தில் மூழ்கினால் - வெண் கயிலையை - நிர்வாணத்தை - சத்திநிபாதத்தை- கிறிதுவின் வெண்மையைப் - பெறலாம்; அழியா இன்பத்தை நுகரலாம். ஆதலால் அன்பர்களே! இமயத் தியானத்தைப் பெருக் குங்கள்; அதைப் பெருக்குதற்குரிய வழியில் நிற்க முயலுங்கள். இமயத் தியானத்துக்கென நாம் அங்கும் இங்கும் அலைய வேண்டுவதில்லை. கூடுமானால் இமயத்தை நேரே காண முயலுங்கள்; இல்லாவிடில் கவலையுறாதேயுங்கள்; இமயப் படங்களாகிய கலைகள் - காவியங்கள்- ஓவியங்கள் - திருமலைச் சருக்கங்கள் - இமயம் போலிருக்கின்றன. அவைகளுடன் உறவு கொள்ளுங்கள்; அவைகளில் உலவுங்கள்; உங்கள் ஆடல் பாடல்களை அவைகளிற் செலுத்துங்கள். இமய எண்ணம் - இமய நோக்கம் - இமயத்தியானம்- பெறுவீர்கள்; இமயமாவீர்கள். அமைதி கலைகள் - காவியங்கள் ஓவியங்கள் - திருமலைச் சருக்கங்கள் - நமக்கு வழங்குவதென்னை? அமைதி; அமைதி. அமைதி நம்பெருஞ் செல்வம். அதுவே அழியாச் செல்வம்; விழுச் செல்வம்; இமயச் செல்வம். அச்செல்வத்தை நம் முன்னோர் பல பலவழியிலும் நமக்கு வழங்கிச் சென்றனர். அமைதிக்கு இமயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, அங்கே இமயக்கொடி தவங் கிடக்கிறாளென்றும், தென்முகத் தெய்வம் மௌனமாக வீற்றிருக்கிறதென்றும், அத்தவமும், மௌனமுஞ் சேர்ந்து ஈனும் இயற்கையின் உள்ளுறையாம் அழியா அழகுமாறா இளமைக் கோலத்துடன் பொலிகிற தென்றுங் கலைகள் வாயிலாகவும், காவியங்கள் வாயிலாகவும், ஓவியங்கள் வாயிலாகவும், பிற வாயிலாகவும் அமைதிச் செல்வத்தைத் திரட்டித் திரட்டி நமக்கு வழங்கிய பெரியோர்கட்கு என்ன கைம்மாறு செலுத்த வல்லேம்? அவர்கள் நமக்களித்த செல்வத்தைச் சுருங்கிய முறையில் சாந்தம் சிவம் என்று குறிப்பிடலாம். இச் சாந்தச் செல்வத்தை - சிவச் செல்வத்தை - நமக்கு வழங்கிய பெரியோர்களை வணங்குவோம். சாந்தம் சாந்தம் சிவம்- இதுவே இமயம். கால வரம்பைச் சிறிது கடந்து விட்டேன். மன்னித் தருளுங்கள்; குற்றங்குறைகளைப் பொருத்தருளுங்கள். சாந்தம்! சாந்தம்!! சிவம்!!! ஆலமும் அமுதமும் அணிந்துரை ஒருவன் உலக வாழ்க்கையே வேண்டாம் என்று கடவுள் திருப்பெயரைமட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக் கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவ னாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கை வாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று, விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது. இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய் நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போ தெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது. உயிர்களின் நலத்துக்கு உடல் உலகு முதலியன இறைவ னால் அருளப்படுகின்றன என்று சைவ சித்தாந்தம் அறிவுறுத்து கிறது. இவ்வறிவுறுத்தல் இக்கால உலகுக்கு இன்றியமையாத தென்பதற்கு ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. உலகமே வேண்டாம்; கடவுளே வேண்டும் என்னும் கொள்கைக்கும், கடவுளே வேண்டாம்; உலகமே வேண்டும் என்னும் கொள்கைக்கும் இடையில் அரிமா நோக்கென மிளிர்வது சைவ சித்தாந்த விளக்கம். மதுரையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முப்பத் தெட்டாவது ஆண்டு விழாக் கூட்டம்(27,28,29-12-1943)என் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையில் இயற்கை வாழ்க் கையை விடுதலைக்குக் கொழுகொம்பாகக் கொள்ளுதல் வேண்டுமென்று சைவ சித்தாந்தம் சாற்றுவதையும், அத்தகைய வாழ்க்கை யைச் சாம்ராஜ்யங்கள் குலைத்துக் கேடு சூழ்ந்ததை யும், அதனால் பெரும்போர் எழுச்சி ஒருபாலும் புது உலக முழக்கம் இன்னொருபாலும் தோன்றியுள்ளதையும் எடுத்துக் காட்டல் எனது கடனாகியது. மேலும் உலகச் செம்மை நலத்துக்குரிய சில முறைகளும் என்னால் கோலப்பட்டன. அம் முறைகளில் ஆலமும் அமுதமும் பொதுளலாயின. மகா சமாஜம் கூடிய இடம் ஆலவாய் என்றும், மதுரை என்றும் அழைக்கப்படுதல் நாட்டவர்க்குத் தெரியும். அப்புனிதப் பெயர்கள் போராட்டத்தை ஆலம் என்றும், புது உலகை அமுதம் என்றும் சுட்டிக் காட்டுமாறு என்னைக் கடவின. அவ்வாலத்தையும் அமுதத்தையும் உள்ளுறையாகக்கொண்ட தலைமையுரை இந்நூல் வடிவம் பெறலாயிற்று. உள்ளுறைக் கேற்ப இந்நூலுக்கு ஆலமும் அமுதமும் என்னும் தலைப்புச் சூட்டப்பட்டது. ஆலம் எது? அமுதம் எது? ஆலம் மக்கள் நிகழ்த்தும் பாவம். அமுதம் ஆண்டவன் திருவருள். பாவத்தை ஏற்று அருள்பொழியும் ஆண்டவனை நம்முன்னோர் நஞ்சணி கண்டன் என்று போற்றியது ஈண்டு உன்னற்பாலது. ஆண்டவன் நஞ்சணிந்த கதையின் நுட்பம் இந்நூலின் உள்ளக் கிடக்கை என்று சுருங்கச் சொல்கிறேன். இந்நூல் காலத்துக்குரியதென்று நவிலவும் வேண்டுமோ? இராயப்பேட்டை 15. 5. 1944 திருவாரூர். வி. கலியாணசுந்தரன் ஆலமும் அமுதமும் மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே தோழர்களே! சைவ சித்தாந்த மகா சமாஜத் தலைமை எனக்குப் புதியதன்று. சமாஜ வெள்ளி விழாவின் முதல்நாள் கூட்டமும், இருபத்தொன்பதாவது ஆண்டு விழாக் கூட்டமும் என் தலைமையிலே நடைபெற்றன. அத்தலைமைப் பணி மீண்டும் எனக்கு வழங்கப் பட்டிருக் கிறது. அப்பணியை அன்புடன் எனக்கு வழங்கிய வரவேற்புக் கூட்டத் தார்க்கும், சமாஜத்தார்க்கும், மற்ற அன்பர் கட்கும் எனது நன்றி உரியதாக. ஆலமும் அமுதமும் நாம் எவ்விடத்தில் கூடியிருக்கிறோம்? ஆலவாயில் கூடியிருக்கிறோம்; மதுரையில் கூடியிருக்கிறோம். ஒருபால் ஆலம்; மற்றொரு பால் அமுதம். ஆலம் உண்டு, அமுதம் அருளிய அழகன் - அங்கயற்கண்ணி பங்கன் -நம்மைக் காப்பானாக. மதுரை இருள் சூழ்ந்த இந்நாளிலும் மதுரையின் நினைவு தோன்றும் போதே மகிழ்ச்சி பொங்குகிறது; உள்ளத் தாமரையில் இன்பத்தேன் பிலிற்றுகிறது; ஒரு சக்தியும் பிறக்கிறது. மதுரையின் பழம் பெருமை என்னே! என்னே! அப்பெருமையை இத்தலைமை யுரையில் எங்ஙனம் விரித்தல் கூடும்? சுருங்கச் சொல்லலும் இயலாதே. மதுரை சிவலோகம்; தமிழ் நிலம்; பெண்மை நிலையம்; தொன்மை வைப்பு; சரித்திர இல்லம்; நாகரிக ஊற்று. மதுரையம்பதி, வையை என்னும் பொய்யாக் கொடியை மணந்து விழுமிய செல்வம் பெற்றது. அச்செல்வச் சிறப்பை என் னென்று கூறுவேன்! கலையின் கலை என்பேனா! வீரத்தின் வீரம் என்பேனா! அன்பின் அன்பு என்பேனா! வேறு என்ன கூறவல்லேன்! சங்கம் வளர்த்த மாண்பு இக்கூடற்பதிக்கு உண்டு. அன்று சங்கத்தில் வளர்ந்த தமிழ் இன்றும் தமிழ் நாட்டின் தனிமையைக் காத்து வருகிறது. தமிழ் நாடு தனி நாடு என்று தமிழன் வீறுடன் கூறிப் பீடுடன் நடக்கும் ஏக்கழுத்தம் நல்கிய மதுரை -நான் மாடக் கூடல் -வாழ்க; வாழ்க. நாயகன் கவிக்குங் குற்றம் நாட்டிய ஒரு வீரனைத் தந்தது இத் தமிழ்ப் பதி; ஒரு புலவன் பின்னே அந்நாயகனை ஓடச் செய்தது இப்பழம் பதி. அண்டங்களையெல்லாம் அடுக் கடுக்காயீன்றருளிய அன்னை மதலையாய்த் தவழ்ந்தது எங்கே? கண்ணகியின் வீரம் கனன்று எழுந்தது எங்கே? எல்லாம் வல்ல இறைவனை மருகனாய்க் காவலனாய்ப் பெற்ற இடம் எது? அவனை மண் சுமக்கவும் விறகு விற்கவும் ஏவிய இடம் எது? இம்மதுரை -தெய்வ மதுரை -தமிழ் மதுரையன்றோ? சித்தாந்த அறிவுறுத்தல் இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த இத்தமிழ் நகரில், அங்கயற்கண்ணியின் திருவோலக்க முன்னிலையில், சைவ சித்தாந்த மகா சமாஜப் பெயரால் நாம் ஈண்டியிருக்கிறோம். சைவ சித்தாந்தம் என்ன அறிவுறுத்துகிறது? முப்பொரு ளுண்மை, சத்காரிய வாதம், சொரூப தடத இயல், அத்து வித நுட்பம், சரியை கிரியை யோக ஞானம், வீடுபேறு முதலிய வற்றை அறிவுறுத்துகிறது. இவைகளைப் பற்றிச் சைவக் கூட்டங் களிலும் மகாநாடுகளிலும் யான் நிகழ்த்திய சொற்பொழிவு களும் தலைமையுரைகளும் பலப்பல. அவைகளிற் சில, சைவத்தின் சமரசம், சைவத் திறவு, நினைப்பவர் மனம், சித்த மார்க்கம் முதலிய நூல்களாய் வெளிவந்துள்ளன. சமாஜம் வெளியிட்ட சிவஞானபாடியப் பதிப்பின் முகப்பில் யான் எழுதிய சித்தாந்தக் கட்டுரை ஒன்று திகழ்கிறது. அதிலும் சித்தாந்தத்தைச் சுருங்கிய முறையில் விளக்கியுள்ளேன். காலதேச வர்த்தமானம் இங்கே கால தேச வர்த்தமானம் நினைவுக்கு வருகிறது. காலமொடு தேசவர்த்த மானமாதி கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி என்பது தாயுமானார் திருவாக்கு. இத்திருவாக்கால் கடவுளுக்கும் காலதேச வர்த்தமானத்துக்கும் உள்ள இயைபு புலனாகிறது. முன்னே சைவ மகா நாடுகள் கூடிய கால தேச வர்த்தமானங் கட்கும், இக்காலதேச வர்த்தமானத்துக்கும் வேற்றுமை உண்டு என்று சொல்லவும் வேண்டுமோ? இக்கால தேச வர்த்தமானம், சைவ சித்தாந்தத்துக்கும் உலக வாழ்க்கைக்குமுள்ள தொடர்பின் மீது என் கருத்தைச் சிறப்பு முறையில் செலுத்துமாறு என்னைப் பிடர் பிடித்து உந்துகிறது. சித்தாந்தமும் உலகமும் சைவ சித்தாந்தத்துக்கும் உலக வாழ்க்கைக்குந் தொடர்பு உண்டா? இல்லையா? தொடர்பு உண்டு; பெருந்தொடர்பு உண்டு; சைவம் உலகத்தை விடுத்து வானத்தில் பறப்பதன்று. அஃது உலகத்தின் முதலாகவுள்ள மாயையைப் பொருளாக் கொண்டது. மாயையைப் பொருளாக்கொண்ட சைவம். அம்மாயா காரியமாகிய உலகை எப்படி விடுத்து மேலே பறப்பதாகும்? ஆகவே, சைவத்துக்கும் உலகுக்குந் தொடர்புண்டு என்பதற்கு விரிவுரை வேண்டுவதில்லை. உலக வாழ்க்கை இறைவன் முழு அறிவினன் என்றும், உயிர்கள் முழு அறியாமையுடையன என்றும், உயிர்களின் அறியாமையை நீக்கி அவைகளைத் தன்னைப்போலாக்க அவைகட்கு இறைவன் தநுகரணபுவன போகங்களை அளிக்கிறான் என்றும், உயிர்கள் தநுகரணபுவன போகங்களை நல்வழியில் பயன்படுத்தி விடுதலை யடைதல் வேண்டுமென்றுஞ் சைவ சித்தாந்தம் சாற்று கிறது. தநுகரணபுவன போகங்களை, உடல் -உலகு-என்று தொகுத்துக் கூறலாம். இதனால் என்ன தெரிகிறது? சித்தாந் தத்தின் உள்ளத்தில் உலக வாழ்க்கையும் நிலவுகிறதென்று தெரிகிறது. உலக வாழ்க்கையைச் சித்தாந்தம் வெறுக்கவு மில்லை; துறக்கவுமில்லை. உயிர்களின் விடுதலைக்கு உலக வாழ்க்கை இன்றியமையாக் கருவி என்பது சித்தாந்தத்தின் உட்கிடக்கை. மாறுபட்ட கொள்கைகள் இவ்வுட்கிடக்கைக்கு மாறுபட்ட கொள்கைகள் பல உலகில் உலவி வருகின்றன. அவைகளை இருகூறிட்டுக் கொள் கிறேன். ஒன்று, உலக வாழ்க்கையைத் துறந்தாலன்றி வீடு பெறல் இயலாது என்பது; இன்னொன்று, உலகமே பொருள், அதற்கு வேறாகச் சித்தென்னுஞ் செம்பொருளென்று ஒன்றில்லை என்பது. இப்பின்னைய கொள்கையுடையார்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தும் நோக்குடன் அநுபூதிமான்களிடத்திருந்து, உலகம் பொருள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அப்பொருள் என்றும் ஒரு பெற்றியதா யிருப்பதன்று; மாறுந் தன்மையது. சித்தென்னுஞ் செம்பொருளோ என்றும் ஒரு பெற்றியதா யிருப்பது; மாறுதலே அடையாதது; உலகம் அடையும் மாறுதலுக்கு நிலைக்களனாக நின்று துணை புரிவது என்ற கருத்துக்கள் பிறந்தன. இக் கருத்துக்கள் நாளடைவில், உலகம் நிலையுதல் இல்லாதது; விடுதலைக்கு அதை நீத்தல் வேண்டும் என்ற கொள்கையாய்த் திரிந்தன போலும்! கொழு கொம்பு உலக வாழ்க்கையை நீத்தல் வேண்டுமென்னுங் கொள்கை யும், உலகமே பொருளென்னுங் கொள்கையும் மன்பதையின் நலத்துக்கு உரியனவாகா. மன்பதையை முன்னையது ஒரு வழியில் பாழ் படுத்தியது; பின்னையது வேறு வழியில் பாழ்படுத்தியது. அது கீழ் நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது; இது மேல்நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது. சைவம் அதையும் விலக்கி இதையும் விலக்கி, உயிர்களின் விடுதலைக்கென்று ஆண்டவன் அருளிய கொடை உலகம். அவ்வுலகைக் கொழு கொம்பாகக் கொள்வது அறம் என்று உலகை ஏற்கிறது. விடுதலைக்கு உலக வாழ்க்கை தேவை என்பது சித்தாந்தம். மண்ணி னல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃது றுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. இது திருஞானசம்பந்தர் திருவாக்கு. இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு. பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும்எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன். இவை வன்றொண்டர் வாய்மொழிகள். இம் மறைமொழிகட்கு விரிவுரையாய்த் துணை போகும் முறையில் பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில், மலர்தலை யுலகத்துப் பலப்பல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீ இ மனையும் பிறவுந் துறந்து நினைவருங் காடும் மலையும் புக்குக் கோடையிற் கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடை மூழ்கி நெடிது கிடந்துஞ் சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணா துழன்றுங் காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன வருந்தியுங் களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுந் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முத்தி யடைவதற் காகத் தம்மைத் தாமே சாலமும் ஒறுப்பர் ஈங்கிவை செய்யா தியாங்க ளெல்லாம் பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ் செந்தா துதிர்ந்த நந்தன வனத்துந் தென்ற லியங்கு முன்றி லகத்துந் தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் பூவிரி தரங்க வாவிக் கரையிலும் மயிற்பெடை யாலக் குயிற்றிய குன்றிலும் வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட மருப்பி னியன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த ஐவகை யமளி யணைமேற் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் பட்டினுட் பெய்த பத நுண் பஞ்சி னெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயன் மீது பரிபுர மிழற்றச் சாயலன் னத்தின் தளர்நடைப் பயிற்றி * * * * அஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்துஞ் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின் அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும் ஐந்து புலன்களும் ஆர வார்ந்து மைந்தரும் ஒக்கலு மகிழ்வன மகிழ்ந்தும் இவ்வகை யிருந்தோ மாயினும் அவ்வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது சிந்தை நின்வழிச் செலுத்தலின் அந்த முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் நின்னது பெருமை யன்றோ என்று அருளியிருத்தலை உன்னிப் பார்க்க. இக்கால பெருங் கவியாயிலங்கிய ரவீந்திரநாத் தாகூரும் உலவாழ்க்கையைத் துறக்குமாறு அறிவுறுத்தினாரில்லை. கடவுள் நிலை பெறுதற்கு உலக வாழ்க்கையைக் கொழுகொம்பாகக் கோடல் வேண்டுமென்பதே அவர் உலகுக்கு விடுத்துள்ள நற்செய்தி. இக்கால உலகம் உயிர்களின் விடுதலைக்குக் கருவியாக இறைவனால் அருளப் பெற்ற உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது? எக்காட்சி வழங்குகிறது? அந்தோ! பொல்லாக் காட்சி! உலகம் குண்டு - குண்டுமயமா யிருக்கிறது! எங்கே குண்டு இல்லை? குண்டு இல்லாத இடமுண்டோ? நிலத்திலே குண்டு! நீரிலே குண்டு! வானிலே குண்டு! எங்கும் எங்கும் குண்டு! குண்டு மழை! குண்டு வெள்ளம்! உலகம் எரிகிறது! ஆலகாலம் பொங்குகிறது! புது உலகம் இதே சமயத்தில் புது உலகம் புது உலகம் என்று எங்கணும் பேசப்படுகிறது. புது உலகப் பேச்சை என்ன என்று கூறலாம்? அதை அமுதம் என்று கூறலாம். ஆலமும் அமுதமும் ஒரு பக்கம் ஆலம்; இன்னொரு பக்கம் அமுதம். ஆலம் ஒடுங்குதல்வேண்டும்; அமுதம் எழுதல் வேண்டும். எளிதில் அஃது ஒடுங்குமா? இஃது எழுமா? இரண்டையும் நிகழ்த்தும் ஒன்று உள்ளதா? உள்ளது. அதுவே சமயம் என்பது. பாற்கடல் கடைந்தபோது ஆலம் எழுந்தது. அதைக் கண்ட அமரரும் மற்றவரும் என் செய்தனர்? ஆண்டவனிடம் அடைக்கலம் புகுந்தனர்; தங் குறைகளையுந் தவறுதல்களையும் முறையிட்டனர். அருட்கடலாகிய ஆண்டவன் ஆலத்தை யுண்டான். பின்னர் அமுதம் எழுந்தது. இது புராணக் கூற்று இக்கூற்றின் உள்ளுறை என்ன? மனிதர் எவ்வாறோ பாவஞ் செய்வோராகிறார். பாவம் ஆலமாய் அவரை எரிக்கிறது. எளிய மனிதர் மனந்திரும்பித் தங்குறைகளையுந் தவறுதல்களையும் ஆண்டவனை நோக்கி முறையிட்டு அழுகின்றனர். அழுகை -உண்மை அழுகை - ஆண்டவனைப் பாவமாகிய ஆலத்தை ஏற்கச் செய்யும்; அருளமுதத்தைப் பொழியச் செய்யும். ஆல ஒடுக்கத்துக்கும் அமுத எழுச்சிக்கும் மனந் திரும்பலும் முறையீடும் அழுகையுந் தேவை. இவ்வழுகையில் கூர்ந்து விளங்குவது சமய உண்மை. ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே என்பதும், தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை என்பதும் திருவாசகம். யான் உன் அருளாகிய அமுதம் உண்ண என் பாவ மாகிய ஆலத்தை நீ உண்டாய் என்றார் மாணிக்கவாசகர். இதற்கு வழி என்ன? வழியும் வாசகராலேயே காட்டப்படுகிறது. யானும் பொய் என் நெஞ்சம் பொய் என் அன்பும் பொய் -ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே என்று அடிகள் வழிகாட்டுகிறார். அவ்வழி நடப்போமாக. ஆலமுண்ட கதை எப்பொழுதோ நடந்ததென்று புராணங் கூறுகிறது. அக்கதை ஒரு குறிக்கோளாக நிற்பது. வெறுங் கதை மீது மட்டுங் கருத்துச் செலுத்தலாகாது. அந்நிகழ்ச்சி உயிரிடை ஆங்காங்கே நடந்த வண்ணமிருப்பது. இதற்கு மணிவாசகம் சான்றாக நிற்றல் காண்க. காரணம் இந்நாளில் உலகிலேயே ஆலம் பொங்கி வருதற்குக் காரண மென்னை? பலர் பலவாறு கூறுவர். சரித்திரத்தார் ஒன்றுரைப்பர்; அரசியலார் வேறொன்று சொல்வர்; பொருண்மையர் மற்றொன்று பகர்வர்; விஞ்ஞானியர் இன்னொன்று புகல்வர்; அவரவர் ஒவ்வொன்று அறைவர். இக்காரணங்களெல்லாம் ஒரோவழிப் பொருந்தி வருவன என்றே யான் அரற்றுவன். இக்காரணங்களைத் துருவி ஆய்தல் வேண்டும். ஆய்ந்தால் அடிப்படையான ஒன்று புலனாகும். அஃதென்னை? அஃது இக்கால அரசுகள் பெரிதும் மக்களை இயற்கை வாழ்க்கையி னின்றும் வழுக்கி விழச் செய்தமை என்பது புலனாகும். அரசுவழி நிற்பது குடிகளின் இயற்கை. இது பற்றியே, அரசு எவ்வழி அவ்வழி குடிகள் என்னும் பழமொழியும் எழுந்தது. இயற்கை - செயற்கை மன்பதை இயற்கை வாழ்க்கையை விடுத்தது; செயற்கை வாழ்க்கையில் வீழ்ந்தது. விளைவு என்ன? விளைவு கொதிப் பாயிற்று. கொதிப்பு, வாழ்க்கைப் போட்டியாய்ப் போராட்ட மாதல் இயல்பு. போட்டியும் போராட்டமும் வாளா கிடக்குமோ? அவை மனிதர் உணவை மனிதர் பறிக்க முடுக்கின. அம்முடுக்கு, குடும்பப் பிணக்காய், ஊர்ப் பூசலாய், நாட்டுப் போராய், உலக யுத்தமாய், எரியாய், ஆலகாலமாய்ப் பொங்குகிறது. வாளுக்கு வாள் யுத்த ஆலத்தை ஒடுக்கத் துப்பாக்கிக்குத் துப்பாக்கியும், பீரங்கிக்குப் பீரங்கியும், குண்டுக்குக் குண்டும் விடப்படுகின்றன. இவ்விடுகை ஆலத்தை ஒடுக்குங்கொல்? ஒடுக்குதற்குப் பதிலாக அதைப் பெருக்குமென்று அறவோர் கூறுவர். இதோ, இயேசுவோ டிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவிப் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனிடம்: உன் பட்டத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் - மத்தேயு -26:51-53 என வருங் கிறிது பெருமான் அநுபவ மொழி நம் முன்னே நிற்கிறது. மனந் திரும்பல் ஆலம் ஓரிடத்திலோ தேங்குகிறது? அஃது உலக முழுவதும் மண்டிக் கிடக்கிறது. இவ்வேளையில் மக்கள் தங்கள் குறைகளையும் தவறுதல்களையும் உணர்ந்து மனந்திரும்ப முயலல்வேண்டும்; மனந் திரும்பி ஆண்டவனை நினைந்து நினைந்து கசிந்து கசிந்து உருகுதல் வேண்டும்; உருகு உருகி அழுதல் வேண்டும். அழுகை உண்மையுடையதாயின், ஆலம் ஒடுங்கும்; அமுதம் எழும். களைகண் ஆண்டவனே. அவனை அடைவோமாக. நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரனாமம் கேளாய்நங் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே என்று சைவப் படைத் தலைவர் கட்டளையிடுகிறார். அவர் கட்டளைவழி நிற்போமாக. ஆணவ அரசியல் இறைவனை உளங் கொள்ளாமலும் அவனடியில் அடைக் கலம் புகாமலும் ஆணவத்தால் தருக்கிச் செருக்கித் திரியும் சிலர் கூடிப் புது உலகம் அமைக்கப் புகுவது இராவணன் கயிலாய மெடுக்கப் புகுந்த கதையாய் முடியும். ஆணவ எழுச்சியால் உண்மைப் புது உலகம் அமையுமா? அமைதல் அரிது. ஒரு வேளை புது உலகம் என்னும் பெயரால் ஒரு போலி தலை காட்டலாம். அது மீண்டும் ஆலத்தால் எரிவதாகும். ஆணவத்தி னின்றும் ஆணவ உலகமே தோன்றும். அலுப்பு ஆணவ அரசியலார் நாடுகள் ஆண்டது போதும். அவர் கூட்டங்கள் கூடியது போதும்; சட்டங்கள் கோலியது போதும்; திட்டங்கள் வகுத்ததுபோதும். உலகம் அலுத்து விட்டது. இப்பொழுது அலமருகிறது; பட்டினியால் துடிக்கிறது; நோயால் வதைகிறது; மரணக் குவியலைக் காண்கிறது; விடுதலை விடுதலை என்று வீறிடுகிறது. இனி உலகம் பொறாது. ஆணவ அரசியலீர்! இறைவனை மறந்து இயற் கையை நீத்துச் செயற்கை ஆட்சி புரிந்தீர். அதனால் உலகம் துன்பக் கடலில் வீழலாயிற்று. இனி உம்மால் என் செய்தல் கூடும்? உமது கொட்டங் குலைக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் முன்னே உமது ஆணவம் என் செய்யும்? இவ்வேளையில் உலகைப் புரட்சிக்கு - கொலைப் புரட்சிக்கு - இரத்தப் புரட்சிக்கு - இரையாக்காதீர்; விலகுமின்; ஒதுங்குமின்; ஆட்சியைச் சன்மார்க்கரிடம் ஒப்புவித்து ஒதுங்குமின். யுத்த ஆலம் ஒடுங்கும்; புது உலக அமுதம் எழும். சான்றோர் கனவு சன்மார்க்க ஆட்சி தேவை என்று அன்று பிளேட்டோ உள்ளிட்ட சான்றோர் கனவு கண்டனர்; அக்கனவு இன்று நினைவாகிறது. நினைவு செயலாதற்குச் சன்மார்க்க முயற்சி வேண்டும். முயற்சி வழியே ஆண்டவன் அருள் இறங்கும். சமதர்மம் சமதர்மத்தால் புது உலகம் அமையுமே; அதற்கென்றே அது தோன்றியிருக்கிறது. இடையில் சன்மார்க்கம் எற்றுக்கு என்று சிலர் கேட்கலாம். யான் சமதர்மக் கொள்கைக்கு மாறுபட்டவனல்லன்; உடன்பாடுடையவனே. சமதர்மம் இப்பொழுது முளைவிட்டுள்ளது. அது நன்முறையில் வளர்ந்து மரமாகிக் கனிதரல் வேண்டுமென்று தவங்கிடப்பவருள் யானும் ஒருவன். அத்தர்மம் செழுமையாக வளர்தற்குத் தக்க ஒளி வேண்டும். அவ்வொளியே சத் என்னுஞ் செம்பொருள். சன்மார்க்கம் சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; மார்க்கம் -வழி. சன்மார்க்கம் - உண்மை வழி. உண்மை எது? எவ்வித மாறுதலுமின்றி என்றும் ஒரு தன்மையதாயுள்ளது. சத் என்னும் உண்மையைச் சித் - ஆனந்தம் - சிவம்(மங்களம்) - விஷ்ணு (வியாபகம்) முதலிய பல பெயர்களால் உலகம் அழைக்கிறது. பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் எல்லாம் ஒன்றாகவே தோன்றும். ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலா ஒன்றை எப்பெயரிட்டு அழைத்தாலென்ன? உங்கள் பேத மன்றியே உண்மை பேதமில்லையே என்றார் சிவவாக்கியர். சத் சத் என்னும் இறைக்கு இருவித நிலையுண்டு. ஒன்று எல்லா வற்றையுங் கடந்தது; மற்றொன்று எல்லாவற்றிலுங் கலந்தது. கடந்த நிலை வாக்கு மனத்துக்கு எட்டாதது. யான் வாக்கு மனமுடையவன். கடந்த நிலை எனக்கு எற்றுக்கு? கலந்த நிலையே எனக்குத் தேவை. மார்க்கம் இறை, எல்லாவற்றிலுங் கலந்த நிலையே இயற்கையை உடலாகக்கொண்ட ஒன்று. இறை உயிர்; இயற்கை உடல். உடலைக் கொண்டே உயிரின் உண்மையை உணர்தல் வேண்டும். சத் என்னும் இறை உண்மையை உணர்தற்கு மார்க்க மாக நிற்பது இயற்கை. சத் என்னும் இறை, இயற்கையை உடலாக் கொண்டும் அதற்குமேலுங் கடந்தும் நிற்பது என்பதை மறத்த லாகாது. பொதுமை பொதுமை இப்பொழுது எங்கணும் பேசப்படுகிறது. பொதுமைப் பேச்சு எதை உணர்த்துகிறது? இறைவன் உண்மையை மக்கள் தெளிந்து வருவதை உணர்த்துகிறது. பொதுமைக்கு ஊற்றாயிருப்பது சத் என்னும் இறை. சத் எப்படி நிற்கிறது? அஃது ஒரு பக்கம் ஒருவிதமாகவும், மற்றொரு பக்கம் வேறொரு விதமாகவும், இன்னொரு பக்கம் சூந்யமாகவும் நிற்பதன்று. அஃது எங்கணும் பொதுவாய் நீக்கமற நிற்கிறது. இப் பொதுமையை அடிப்படையாகக் கொண்டது சன்மார்க்கம். இறை பொதுமையாய் எங்கும் நீக்கமற நிற்பதை உபநிடதம் முதலாகப் பல ஞான நூல்களுந் தெரிவிக்கின்றன. முன்னோர் கருத்துக்களையெல்லாங் கடைந்தெடுத்து அவைகளின் சாரத்தைச் சன்மார்க்கச் செல்வராகிய இராமலிங்க சுவாமிகள் ஓரிடத்தில் நன்கு தேங்கவைத்துள்ளார். விளக்கத்துக்கு அவ்வொரு தேக்கஞ் சாலும். அது, கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகழும் இசையுமணிந் தருளே என்னுந் தேக்கம். இதில் இறையின் பொதுமை வெள்ளிடை மலையென விளங்குதல் காண்க. எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் சத்தாகிய சிவத்தை உணர் தற்குப் பொது உள்ளம் -பொது நோக்கு -பொது வாழ்க்கை தேவை. இப்பொதுமையை அறிவுறுத்துவது சமதர்மம். சமதர்மம் என்னுஞ் சொற்றொடரிலேயே பொதுமைப் பொருள் மணங் கமழ்தல் காண்க. பொருள் வாழ்க்கைக்குப் பல தேவை. அவைகளுள் தலையாயது பொருள். பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்றும், முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியுமன்றே என்றும் திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் முறையே அருளிய செம்மொழிகளை ஆழ்ந்து சிந்திப்போமாக. பொது உள்ளம் - பொதுநோக்கு-பொது வாழக்கை பெற வேண்டுமானால், அதற்குப் பொருளும் பொதுமையாகவே பயன் படுதல் வேண்டும். இல்லையேல் உலகவாழ்க்கை செம்மை யாக நடைபெறாது. உலகச் செம்மைக்குப் பொருட் பொதுமை தேவையாகிறது. அப்பொழுதே எல்லார்க்கும் பொதுவில் நடமிடும் சிவத்தை உணர்த்தத்தக்க உள்ளமும் நோக்கமும் சீலமும் உண்டாகும். சிவகதிக்குச் சீலம் தேவை; இன்றியமையாதது. மக்கள் வாழ்க்கையில் சீலஞ் சிறக்கத்தக்க அரசுகள் துணை செய்தல் வேண்டும். முன்னாளில் அத்தகை அரசுகளிருந்தன. அசோகன் ஆட்சி ஓர் எடுத்துக்காட்டாக நிற்கிறது. பின்னாளில் அரசுகள் நிலை வேறு விதமாயிற்று. சீலத்தைச் சிதைக்கும் அரசுகளும் உலகில் தோன்றின. இந்நிலையில் சீலத்தை எப்படி வளர்ப்பது. பொருட்பொதுமை முறையன்றி வேறு புலப் படவில்லை. ஆகவே பொருட் பொதுமை சமயத் தொடர்புடையதென்று தெளிக. இந்நோக்குடன் யான் பொருட் பொதுமையைப் போற்றி வருகிறேன். உலகாயதம் சமதர்மம் எற்றுக்கு? எல்லோர்க்கும் பொதுவில் நடமிடுஞ் செம்பொருளை உணர்தற்கு என்று அறுதியிட்டுக் கூறலாம். அவ் வுணர்வுக்குப் பயன்படாத சமதர்மம் உலகாயதமாகும். இதுபற்றியே யான் சமதர்மத்தைச் சன்மார்க்கமுற்ற சமதர்ம மென்றும், சன்மார்க்க மற்ற சமதர்மமென்றுஞ் சொல்வது வழக்கம். சன்மார்க்கமற்ற சமதர்மம் ஓரளவில் புற அமைதியைக் காப்பதாகும். வாழ்க்கைக்குப் புற அமைதிமட்டும் போதாது. அதற்கு அக அமைதியும் வேண்டும். அக அமைதிக்குச் சன்மார்க்க முற்ற சமதர்மம் தேவை. இயற்கையை விடுத்துச் செயற்கையிற் செல்லும் அரசுகளால் சமயத்தின் சொரூபமே குன்றியது. சமயத்தின் பெயரால் பல அட் டூழியங்கள் செறிந்தன. அச்செறிவு பொருட் பொதுமையரையும் வேறு சிலரையும் சமயத்தை வெறுத்து மறுக்கச் செய்தது. பொருட் பொதுமையால் அட்டூழியம் அகன்றதும் சமய சொரூபம் தானே மிளிர்வதாகும். இயற்கை, மனித வாழ்க்கையைப் பொருட் பொதுமையளவில் நிறுத்தி விடாது; சமயத்தை வாழ்க்கையில் புணர்த்தியே தீரும். மனிதனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். அத்தகைய சமயத்தை மனிதனும் விடமாட்டான்; சமயமும் அவனை விடாது. இது நிற்க. சிவம் எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் சிவம் எத்தகையது? அஃது அழுக்காறு அவா வெகுளி பகைமை முதலிய தீக்குணங்கள் இல்லாதது. அவ்வுண்மை கண்ட ஆன்றோர் சிவத்தை அன்பு என்றும், சாந்தம் என்றுங் கூறிச் சென்றனர். அவ்வன்பும் சாந்தமும் ஓவியரிடத்தும் காவியரிடத்தும் படாத பாடு பட்டன; படுகின்றன. அன்புக்கும் சாந்தத்துக்கும் அவரவரெடுத்த வடிவங்கள் எத்தனை? எழுதிய கதைகள் எத்தனை? m‹òŠ rhªjK« gh«ig mÂah¡»d.; பேய்களைக் கணங்களாக்கின; மழுவை ஏந்தின; புலி, சிங்கம், எருது, மயில் , பாம்பு முதலியவற்றின் பகைமையை நீக்கிச் சகோதரமாக்கின. இதை ஞானசம்பந்தர், கருமையி னொளிர்கடல் நஞ்ச முண்ட உரிமையி னுலகுயி ரளித்த நின்றன் பெருமையை நிலத்தவர் பேசி னல்லால் அருமையி லளப்பரி தாய வனே அரவேரிடை யாளொடு மலைகடல் மலிபுகலிப் பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழி லிளமயி லால வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடிப் பாடி அநுபவித்தலை உன்னி உன்னி முன்னுவோ மாக. இத்தகை அன்புருவை-சாந்த வடிவை-பகை நீக்கும் ஓவியத்தை-நினைக்க நினைக்க அன்பும் சாந்தமும் அகத்திலும் புறத்திலும் நிலவும் உள்ளம் பொதுமை உள்ளத்தில் பொலியும் அன்புக்கும் சாந்தத்துக்கும் முன்னே நஞ்சேது? மூர்க்கமேது? பகைமை ஏது? நஞ்சு. மூர்க்கம், பகைமை முதலியன புறத்தில் இருப்பனவல்ல; அகத்தில் இருப்பன. அகம் பொதுமையானால் நஞ்சு மூர்க்கம் பகைமை முதலிய தீமைகள் உருவெளியாகும். இந்நுட்பத்தை யாவையுஞ் சூனியம் சத்தெதிர் ஆதலின் என்று சிவஞான போதம் சிறப்பித்திருத்தலை யோர்க. கோயில் இத்தகைய அன்பு சிவத்துக்கு-சாந்த சிவத்துக்குப் பொன்னாம்! பூணாம்! பொருளாம்! நிலமாம்! புலமாம்! சட்டமாம்! திட்டமாம்! வழக்காம்! வக்கீலாம்! அந்தோ! என்ன கொடுமை! கொடுமை! அன்புக்கும் சாந்தத்துக்கும் எடுக்கப்பட்ட கோயில்கள்பூர்ஷ்வாக்கள் உலவும் அமைப்புக்களாயின. என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெப வீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கி னீர்களே என்று சொன்னார் என்று மார்க்கிலுள்ள (11:17) நன்மொழியை நோக்குக. குறைபாடுகளைச் சன்மார்க்கம் செம்மை செய்யும். சன்மார்க்கத்தின் பொதுமை யான் சன்மார்க்கத்தைப்பற்றிப் பெரிதும் பேசுகிறேன். யான் வேறு வழிச் செல்கிறேனா? சித்தாந்த வழியே செல்கிறேனா? என்று சிலர் நினைத்தல் கூடும். சித்தாந்த வழியே கண்களைத் திறந்துகொண்டு நடக்கிறேன். சித்தாந்தம் என்றால் என்ன? சன்மார்க்கமென்றாலென்ன? இரண்டும் ஒன்றே. பெயரை நீக்கிப் பொருள் நுட்பத்தில் புகுந்து பார்த்தால் உண்மை விளங்கும். சித்தாந்தம் சத்தையும் பொருளாக் கொண்டது; அதன் மார்க்கமாகிய இயற்கை யுலகின் முதலாக உள்ள மாயையும் பொருளாக் கொண்டது. இதனால் சித்தாந்தமும் சன்மார்க்கமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது. சன்மார்க்கத்தைப் பொதுவாகச் சமயம் என்றுங் கூறலாம். அது சைவம் வைஷ்ணவம் ஜைநம் பௌத்தம் கிறிதுவம் இலாம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. சத் பொதுமை; அதன் மார்க்கமாகிய இயற்கையும் பொதுமை. சமயமும் பொதுமையாகவே இருத்தல் வேண்டும். சமயப் பொதுமையைக் குறித்து ஆன்றோர்கள் அருளிய மொழிகள் கடலெனப் பெருகிக் கிடக்கின்றன. விரிவஞ்சிச் சில திவலை களை ஈண்டுத்தெரிக்கிறேன். வணங்கும் துறைகள் பலபலவாக்கி, மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபலவாக்கி, அவையவைதோ றணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய் இணங்குநின் னோரையில்லாய், நின் கண்வேட்கை யெழுவிப்பனே - நம்மாழ்வார் ஏறார்தரும் ஒருவன் பல உருவன்நிலை யானான் நல்லார்கள் . . . . . . . . . எல்லார்க்கும் பரவும் ஈசனை - சம்பந்தர் வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோ தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே - அப்பர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர் கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையின் மறைக ளாலும் இயம்பரும் பொருளீ தென்னத் தொல்லையி னொன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே - கம்பர் சமயபே தத்தவர்க் கணுகொணா மெய்ப்பொருள் உலகெங்கு மேவியதேவாலயந்தொறு - பெருமாளே - அருணகிரியார் எம்மதத் தோரெவ் வகைநிட்டை சொல்லினும் சம்மத மேயெமக் குந்தீபற தற்போத மாய்க்குமே லுந்தீபற - அவிரோதவுந்தியார் வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கில் விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை. - தாயுமானார் பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையென் கணவர்திருப் போர்புகலென் கின்றாய் அருகர் புத்த ராதியென்பேன் அயனென்பேன் நாரா யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவ மென்பன் இவை சித்துவிளை யாட்டே - இராமலிங்க சுவாமிகள் எய்த எளிதாம் இறையருள் இல்லையேல் எய்த அரிதா மியாவர்க்கும் -மெய்தெளிந்தால் எம்மார்க்கத் தோடும் இகலற் றிருக்குமதே சன்மார்க்கம் ஆகுநெறி தான். - அமுதசாரம் ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாதிங்கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்கதின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம் அது சமயம் பொருள் நூல். உலகம் சாதி மதம் மொழி நிறம் நாடு முதலிய வேற்றுமை களையுடையது. இவ்வேற்றுமைகளைக் கடந்து பொதுமையில் நிற்பது சன்மார்க்கம். சன்மார்க்கக்கண் திறக்கப் பெற்றால் அதன் முன்னே வேற்றுமைகளெல்லாம் பாழாகும். உலகம் பொதுமை இன்பத்தை நுகர வேண்டுமானால், அது சன்மார்க்கத்தில் நின்றொழுகுதற்குரிய ஆட்சி முறைகள் அமைதல்வேண்டும். இதுபற்றியே ஆட்சி முறைகளைச் சன்மார்க்கரிடம் ஒப்புவித்து ஒதுங்குமாறு ஆணவ அரசியலாரைக் கேட்கிறேன். காலப்போக்கு ஆட்சியினின்றும் அரசியலார் ஒதுங்கினால் அரசியல் சண்டைகள் ஒடுங்கலாம். அவ்வாட்சியில் சமயத்தார் புகுந்தால் சமயச் சண்டைகள் மூளாவோ? சமய ஆட்சிக்கொடுமையினா லன்றோ அரசியல் ஆட்சி ஆக்கம் பெற்றது? மீண்டும் சமய ஆட்சியா? பழம் பாடங்கள் முன்னிற்கின்றனவே என்று சிலர் ஐயுறலாம். அவர் காலப்போக்கை ஊன்றிக் கவனித்தால் அவர்தம் ஐயப்பாட்டுக்கு இடமிராதென்று நினைக்கிறேன். சமயத்தின் இயற்கை மனிதரிடத்துள்ள விலங்கியல்பை ஓட்டி, அன்பையுஞ் சாந்தத்தையும் நிலை பெறுத்தவல்லது. அத்தகைய சமயம், மக்களிடை வளரவொண்ணாதவாறு சாம்ராஜ்யங் களும், மடங்களும், இன்னபிற அமைப்புகளும் கேடு சூழ்ந்தன. இவ்வமைப்புக்கள் தங்கள் நலங்கருதிச் சமயத்தின் பொதுமையை பரப்பி, அதைப் பன்மைப்படுத்தி, அதில் வெறியூட்டிச் சண்டை களைப் பெருக்கி விட்டன. காலப்போக்கு இனிச் சாம்ராஜ்யங் களும் மடங்களும் பிறவும் தங்கள் ஆட்சியைச் செலுத்த விடுதல் அரிது. காலப்போக்கு மாறிவிட்டது. சாம்ராஜ்யங்களெல்லாம் சமதர்ம ராஜ்யங்களாகுங் காலம் இது. மடங்களும் பிறவும் மாறுதலடையுங் காலம் இது. பலதிறச் சீர்திருத்த இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றித் தோன்றி ஆக்கம் பெற்றுப் பரவி வருங்காலம் இது. சம்பிரதாயங்களும் பிடிவாதங்களும் சாயுங் காலம் இது. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகுங் காலம் இது. புறக்கோலங்களே சமயம் என்று போற்றாத காலம் இது. எல்லோரும் ஓர் உயிர் எல்லாரும் ஓர் குலம் என்னுங் கொள்கை வீறுகொண்டு பெருகி வருங்காலம் இது. எங்கணும் பொதுமையுணர்வு பொங்கி வருங்காலம் இது. இக்காலமா சமயப் பன்மைக்கும் வெறிக்கும் போருக்கும் இடந்தரும்? வருங்காலத்தில் சமயப் போலி யொழிந்து, சமய உண்மை நிலவும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. உள்ளுவ எல்லாம் உயர்வுள்வோமாக. திரிபு சமயம் இந்நாளில் திரிபாகக் கொள்ளப்படுகிறது. அது வாழ்க்கையின் ஒரு கூறாகக் கருதப்படுகிறது. வெறும் புறக்கோலம் சமயம் என்று எண்ணப்படுகிறது. இவ்வாறெல்லாம் சமய நோக்கம் திரிபுண்டமையால், சில இடங்களில் அதன் மூலமே வெறுக்கப்படுகிறது. திரிபுக்கு அடிப்படையான காரணங்கள் பல கூறலாம். முன்னே சில சொன்னேன். இங்கே ஒன்றைக் குறிக்கலாமென்று நினைக்கிறேன். அது மேல்நாட்டு நாகரிகத்தின் எழுச்சியும் கீழ்நாட்டு நாகரிகத்தின் வீழ்ச்சியு மாகும். மேல்நாடு மேல்நாட்டு நாகரிகம் சமயத்தினின்றும் அரசியல், வாணிபம், தொழில் முதலியவற்றை வேறுபடுத்தியது. அந் நாகரிகம் சமயத்தை வாழ்க்கையின் ஒரு கூறாகக்கொண்டது. அது வாழ்க்கையைச் சமயமாகவும் சமயத்தை வாழ்க்கையாகவும் ஏற்கவில்லை. அதனால் விளைந்ததென்ன? வாழ்க்கையில் போராட்டம் வளர்ந்ததே விளைந்த பயன் போராட்டம் அந் நாகரிகத்தை இப்பொழுது அரிக்கிறது; எரிக்கிறது. மேல்நாடு நல்லறிவு பெற்று, சமயமே வாழ்க்கை -வாழ்க்கையே சமயம் என்று வாழுங்காலம் நெருங்கி யிருக்கிறது. மேல்நாட்டு நல் வாழ்க்கை பெற ஆண்டவன் அருள் செய்வானாக. கீழ்நாடு கீழ்நாட்டு நாகரிகம் சமயத்தை வேறாகவும், அரசியல், வாணிபம், தொழில் முதலியவற்றை வேறாகவும் பிரிக்கவில்லை: எல்லாம் சமயத்தில் ஒன்றி நிலவுமாறு செய்தது; வாழ்க்கைக் கூறுக ளெல்லாம் சமயமே என்று கொண்டது. கீழ்நாடு தன் நாகரிகத்தை மேல்நாட்டில் பரப்ப முயலாது. அஃது இதன் நாகரிகத்தை ஏற்று நடிக்க முயன்றது. அதனால் கீழ்நாட்டிலுங் கேடு சூழ்ந்தது. இந்நாளில் கீழ்நாட்டு நாகரிகம் கதம்பமாய்க் கிடத்தல் கண்கூடு. நாடோறுமோ வாரந்தோறுமோ திங்கள் தோறுமோ விரத நாட்களிலோ ஒரு சிறு பொழுதைக் கோயிலுக்கென்று செல வழிப்பது சமயமாகாது. சமயம் புறக் கோலத்தளவில் கட்டுப்பட்டு நிற்பதுமன்று. சமயம் ஓர் இறைப்பொழுதும் வாழ்க்கையை விடுத்து அகன்று நிற்பதில்லை. அத்தகைய ஒன்றை வாழ்க்கைக்கு வேறுபட்டதென்று கருதச் செய்யும் நாகரிகம் விழுப்பமுடைய தாகுமா? தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ என்று அலமருகிறார் அப்பர். உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று நம்மாழ்வார் அருள்கிறார். அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் அதுவு நான்படப் பாலதொன் றானால் பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள் பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நானறி யேன்மறு மாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே என்று வன்றொண்டர் அறிக்கை செய்கிறார். இப்பெரு மொழிகளுக்கு விளக்க உரையாக, இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும் பொருக்கென நடக்கும் போதும் பொருந்திஊண் துய்க்கும் போதும் முருக்கிதழ் கனிவா யாரை முயங்கிநெஞ் சழியும் போதும் திருக்களா உடைய நம்பா சிந்தையுன் பால தாமே எனவரும் அதிவீரராம பாண்டியர் பாடல் திகழ்கிறது. கீழ்நாடு தனது நடிப்பை விடுத்து மனந்திரும்பித் தனது நாகரிகத்தைக் காலதேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் வளர்த்து வாழ்வு பெறுவதாக. கீழைச் சமதர்மம் கீழ்நாட்டின் பழம்பெரும் நாகரிகம், வாழ்க்கையை வேறா கவும் சமயத்தை வேறாகவுங் கொள்ளாமையால், அதன் அடியில் சமதர்மம் நிலவுவதாயிற்று. சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது கீழ்நாட்டு நாகரிகம் என்று உலகம் உணர்வதாக, சமதர்மம் கீழ்நாட்டுக்குப் புதியதன்று. கீழ்நாட்டு நாகரிகம் வளர்ந்து அது சமதர்மமாகப் பரிணமித்தது. பாரத நாட்டுப் பழைய தர்மசாத்திரங்களை ஆய்ந்தால், அவைகளில் கிராமம் கிராமத்தாருடைய தென்பதையும், கேணியும் குளமும் ஏரியும் ஆறும் காடும் மலையும் பிறவும் மக்கட்குப் பொது வுடைமையாய்ப் பயன்பட்டன என்பதையும், அதனால் மக்கள் உழைப்புக்களெல்லாம் சகோதரநேயக் கட்டினின்றும் பிறந்தன என்பதையும், இன்ன பிறவற்றையுங் காணலாம். கிறிது பெருமான், நாளைக்கென்று கவலையுறா தேயுங்கள் என்றும், அன்றாட உணவை அன்றாடம் எங்களுக்குத் தாரும் என்றும் அருளியது சமதர்ம நோக்குடையதன்றோ? இலாம் விதித்துள்ள ஜெக்காத் வரியின் உள்ளக்கிடக்கை என்ன? உன்னுக. சமதர்மம் இன்று தோன்றியதன்று; நேற்று தோன்றிய தன்று. அது நீண்ட காலமாக உலகில் நிலவி வருகிறது. மார்க் ஆங்காங்கே துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்த சமதர்மக் கூறுகளையெல்லாம் ஒருங்குதிரட்டி, ஒன்றுபடுத்தி, அவைகட்கு விஞ்ஞான முறையில் ஓருருவங் கொடுத்தவர் காரல் மார்க். அதனால் அவர் உலக வாழ்த்துக்கு உரியவரானார். மார்க்ஸியம் சட பிரபஞ்ச அளவில் நிற்பது. அதன்கண் பொருட்பொதுமை உண்மையான், அஃது உலகினரால் பொது வாகப் போற்றப்படுகிறது. அதற்கு மேலும் மேலும் ஆக்கந்தேட வேண்டுவது மார்க்ஸியர்களின் கடமை. அதற்கு என் செய்தல் வேண்டும்? மார்க்ஸியத்தைச் சத்துடன் கலப்புப்பெறச் செய்தல் வேண்டும். அப்பொழுதே மார்க்ஸியம் சன்மார்க்கமுற்ற சமதர்ம மாகும். ஒலிவர் லாட்ஜ் ஸர் ஒலிவர் லாட்ஜ் என்பவர் ஏறக்குறைய நாற்பதாண்டு சட தத்துவ ஆராய்ச்சிசெய்த விஞ்ஞான நிபுணர். பின்னே அவர் நீண்ட காலம் வெவ்வேறு ஆராய்ச்சிகளில் தலைப்பட்டனர். அவ் வாராய்ச்சிகளின் பயனாக அவரால் ஓர் உண்மை காணப் பட்டது. அது சடம் மாறுதலடையாத சத்தாகிய சித்தை விடுத்துப் பிரிந்து நிற்பதில்லை என்பது. ஸர் ஒலிவர் கண்ட உண்மை மார்க்ஸியத்தில் விரவினால், மார்க்ஸியம் சத்மார்க்க மாகும். உலக வாழ்க்கைக்குச் சத்மார்க்கம் இன்றியமையாத தென்று யான் வலியுறுத்துகிறேன். சித்தாந்தக் கருத்து சைவ சித்தாந்தம் சடத்துக்கும் உண்மை கூறுகிறது; சத்தாகிய சித்துக்கும் உண்மை கூறுகிறது. சித் சடத்திற் கலந்தும் அதற்கு மேலுங் கடந்தும் நிற்பது என்பதையும் சித்தாந்தம் தெளிவு செய்கிறது. உலகெலாமாகி வேறாய் உடனுமாய் . . . . என்று சைவ சாத்திரங் கூறுதல் காண்க. இதனால் மார்க்ஸிய மும் ஒலிவரிஸமும் சித்தாந்தத்துக்குப் புறம்பாக நிற்பனவல்ல என்பது விளங்குகிறது. எந்நாடு? இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத் துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தண்மை பொழியும் இடம் எது? நாடு எது? தேம் நாடா? தானியூப் நாடா? வால்கா நாடா? மிஸோரி மிஸிஸிபி நாடா? யங்டி கியாங் -ஹோயாங்கோ நாடா? பஸிபிக் நாடா? இவைகட்கே இப்பொழுது தண்மை தேவை. இவைகள் எப்படித் தண்மையைப் பொழிவன வாகும்? பின்னை எந்நாடு? நமது கங்கை நாடு? சாந்தம் சாந்தம் சிவம் கங்கையின் தாயகம் எது? பனி மலை. அம்மலையின் முடி எது? கௌரி சங்கரம். கௌரி சங்கரம் எப்படி நிற்கிறது? சொல்லற்ற சாந்தம் சாந்தம் சிவம்! சாந்த சிவத்தின் கருணை கங்கையாய்ப் பெருகிப் பாய்கிறது. சாந்தச் செல்வம், கௌரி சங்கரம் -இமயம்-கங்கை-பழம்பாரதம்-உபநிஷத். அச்செல்வம் பாரத நாட்டில் ஆங்காங்கே காவியங்களாகியது; ஓவியங்க ளாகியது. காவிய ஓவிய அறிகுறிகள் நாடு முழுவதும் பொலிதரு கின்றன. அவைகளுள் பாரதநாட்டையே உளங்கொண்டவை மூன்று. அம்மூன்றும் பழம்பாரதத்தின் ஒருமைப் பாட்டையும் உணர்த்துவனவாம். அவை கயிலை, காசி, இராமேசம். பாரதக் கொடை பழம்பாரதப் பெரியோர் நமக்குக் குண்டு பீரங்கி முதலிய கொலைக் கருவிகளை உதவினாரில்லை. சாந்தச் செல்வத்தை அருளினர். அது சன்மார்க்கத் தண்மை -அந்தண்மை. இத்தண்மை யில் பாரத நாடு நீண்டகாலம் பண்பட்டது. அதற்கும் இடை நாளில் சில கூட்டுறவால் சிறு அசைவு நேர்ந்தது. இப்பொழுது தோன்றி யுள்ள பெரும் போர் அவ்வசைவைப் போக்கி வருகிறது. பணி பாரத நாட்டின் முன்னே பெரும்பணி நிற்கிறது. அப் பணியில் நமக்கும் பங்கு உண்டு. அப்பணிக்கென்று நாம் இங்கே -ஆலவாயில் கூடியிருக்கிறோம்; மதுரையில் கூடியிருக்கிறோம் என்று யான் நினைக்கிறேன். நம் முன்னே நிற்கும் பணி எது? பாவங்கள் மன்பதை இயற்கையை விடுத்துச் செயற்கையில் வீழ்ந்து பலதிறப் பாவங்களைச் செய்தது. பாவங்கள் மலைகளெனவும் கடல்களெனவும் ஓங்கிப் பெருகிவிட்டன. இப்பொழுது அவைக ளெல்லாந்திரண்டு உருண்டு மகா யுத்தமாய் ஆலமாய் உலகை எரிக்கின்றன. அவ்வெரி புது உலக அமுதவேட்கையை எழுப்பி யிருக்கிறது. ஆலத்தை உண்டு அருளமுதைப் பொழியவல்ல ஆண்டவனை அடைவோமாக. அழுகை ஆண்டவனை அடைவதென்றால் கோயிலுக்குப்போய் அதனை வலம்வருவதா? எங்குங்கண் கொண்டு பார்க்கும் ஆண்ட வனை ஏமாற்றல் இயலாது. அவனுக்கு எல்லாந் தெரியும். ஆணடவனுக்கு உள்ளத்தை ஒப்படைத்தல் வேண்டும். மனந் திரும்பிப் பழைய பாவங்களை நினைந்து நினைந்து உருகி உருகி வருந்தி வருந்தி முறையிடல் வேண்டும் ; அழுகல் வேண்டும். அவ்வழுகையின் உண்மை ஆண்டவன் அருளை எழுப்பும். அவ்வருள் ஆலத்தை ஏற்று அமுதத்தைப் பொழியும். ஆகவே இப்பொழுது இப்பணி தேவை. அழுகை ஆண்டவன் அருளைச் சுரப்பிக்குமா என்று ஐயுறுதல் கூடாது. நமது கடமையை நாம் செய்வோமாக. ஆண்டவன் தன் கடமையைத் தான் செய்வான். தன்கடன்அடி யேனையுந் தாங்குதல் - என்கடன் பணி செய்து கிடப்பதே என்பது அப்பரின் அநுபவ மொழி. ஆண்டவன் கருணையாளன். அவன் நம்மைத் தள்ள மாட்டான். வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே உள்ளத் துறுதுயரொன் றொழியா வண்ணமெல்லாம் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ எனவருந் திருவாசகப் பாடல்கள் ஐயப்பாட்டை அழிக்கவல்லன. ஐயம் வேண்டா. ஆண்டவனடியில் அடைக்கலம் புகுவோம்; மாணிக்கவாசகர் அழுது அழுது, வெறுப்பனவே செய்யும் என்சிறுமையை நின் பெருமையினால் பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய் அடியேன் உன் னடைக்கலமே என்று ஆண்டவன் அருளில் உறுதிகொண்டு அவனடியில் அடைக்கலம் புகுந்தார். நாமும் அவர்தம் அடிச்சுவட்டைப்பற்றி ஆண்டவனடியில் அடைக்கலம் புகுவோமாக. கருணை இறைவன் நமது விடுதலை குறித்துக் கருணை பொழிந்த வண்ணமிருக்கிறான். நம்மை உய்விக்க அவன் படும் பாட்டுக்கோர் அளவில்லை. ஐயன் நமக்கென்று தநுகரண புவன போகங்களைக் கொடுத்தான்; திருக்குரான், பைபில், திரிபிடகம், பரமாகமம், உபநிஷத், நாலாயிரம், தேவார திருவாசகம் முதலிய மறைகளை அடியவர் மூலம் அருளினன்; அவ்வப்போது பெரியோரை அனுப்பினான். அறக்கருணைக்கு உலகம் ஆளாக வில்லை; மனந்திரும்பவில்லை. இப்பொழுது ஆண்டவன் மறக்கருணை, குண்டாய்ப் பொழிகிறது. இவ்வாறு எனக்குத் தோன்றுகிறது. அத் தோற்றம் மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல் அண்ண லுனை மறந்தஉயிர்க் கருளூட்டுங் கருணைமழை நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுகஎன் றெச்சரிக்கை பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ என்னும் பாட்டை என்னைப் பாடுவித்தது. நாம் மனந்திரும்ப -பாவங்களை முறையிட - கசிந்து கசிந்து உருகி உருகி அழ -விரைவோமாக. இப்பணி நம் முன்னே நிற்கிறது. காலத்துக்குரியது சைவசித்தாந்த மகா சமாஜத்தின் முன்னிற்கும் பணிகள் பல உள. அவைகளுள் தலையாயது மனந்திரும்ப முயல்வது. இது காலத்துக்குரியதென்று யான் கருதுகிறேன். மற்றைப் பணிகளை யான் பலமுறை விரித்துள்ளேன். புரட்சி உலகம் எத்தனையோ விதப் புரட்சிகளைக் கண்டது. கொள்ளைப் புரட்சிகளும், கொலைப்புரட்சிகளும் நமக்கு வேண்டா. அவைகள் கொள்ளையையும் கொலையையுமே பெருக்கும். நமது நாட்டில் நிகழ்ந்த அறப் புரட்சிகள் நம்முன்னே நிற்கின்றன. அவைகளைக் குறிக்கொண்டு நடப்போமாக. விருஷப தேவர், புத்தர், சம்பந்தர், சங்கரர் முதலியோர் பெரும் பெரும் புரட்சி வீரர். அவர்கள் அஹிம்ஸையாலும் சீலத்தாலும் பாட்டாலும் அறிவாலும் புரட்சி செய்தார்கள். இப்பொழுது ஒரு பெரும் புரட்சி தேவை. அப்புரட்சியை என்னென்று அழைக்கலாம்? அன்புப் புரட்சியென்று அழைக்கலாம். அதற்கு மனந்திரும்பிப் பாவங்களை முறையிட்டு அழும் பணி வேண்டும். அப்பணி செய்ய விரைவோமாக. ஆலவாய்ப் பெருமானே! மதுரை அரசே! மறிகடல் விட முண்ட வானவா! நாங்கள் உன்னை மறந்தோம்; உன் அருளை மறந்தோம்; பாவங்களில் புரண்டோம். நாங்கள் குறைபாடுடைய வர்கள்; வழுக்கி வீழ்கிறோம்; என் செய்வோம்! எங்கள் பாவங்களெல்லாந் திரண்டு திரண்டு குண்டுமழையாய்ப் பொழிகின்றன; எரிகிறோம்; எரிகிறோம்; உன்னை அடைந்து நிற்கிறோம்; நீ பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தவன்; மாபாத கனுக்கு அருள் செய்தவன்; நாரைக்கும் கரிக்குருவிக்கும் விடுதலை அளித்தவன். உன்னடியில் அடைக்கலம் புகுகிறோம். அடைக்கலம்! அடைக்கலம்! ஆண்டருள்க; பொங்கி வரும் யுத்த ஆலத்தை ஒடுக்கியருள்க; புது உலக அமுதைப் பொழிந்தருள்க. ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே - நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற ஆறுநீ பேசு. (சிதம்பர சுவாமிகள்) தோழர்களே! உங்கள் அரிய காலத்தை இன்னுங் கொள்ளை கொள்ள விரும்புகிறேனில்லை; தலைமையுரையை இவ்வளவில் நிறுத்துகிறேன். அறிஞர் பலர் சொற்பொழிவுகள் நிகழப் போகின்றன. அவைகளைத் தழுவிப் பலதிறக் கருத்துக் களை வெளியிட எண்ணியுள்ளேன். இம்முறை யான் சாத்திரம் பேசவில்லை; தத்துவம் பேச வில்லை; அத்துவிதத்தில் நுழைந்தேனில்லை; வேறு பல ஆராய்ச்சிகளில் நுழைந்தேனில்லை; மனந் திரும்பலைச் சாற்றினேன்; முறையீட்டை முறையிட்டேன்; அழுகையை அழுதேன்; அன்புப் புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்குப் பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும். ஆண்டவன் அருள் நமது அழுகை வாயிலாக வெளிவந்து ஆலத்தை உண்ணும்; அமுதத்தைப் பொழியும். வரும் ஆண்டுக் குள் புது உலகத்தைக் காண எழுங்கள்; எழுங்கள். வித்தகம் பேச வேண்டாம்; பணி செய்ய எழுங்கள் ; எழுங்கள். வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே  திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 1883 பிறப்பு (ஆகடு 26) 1891 சென்னை இராயப்பேட்டையில் தொடக்கப் பள்ளியில் சேர்தல் 1894 வெலி பள்ளியில் சேர்தல். நோயால் கல்வி தடைப்படுதல். நான்கு ஆண்டுகள் பள்ளிக் கல்வி இல்லை. 1898 - 1904 மீண்டும் வெலி பள்ளியில் சேர்தல். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால் இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார். 1901-1906 யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயிலுதல் 1907 கதிரைவேலர் மறைவு. 1907-1908 பென்சர் கம்பெனியில் பணி 1908 கதிரைவேலர் வரலாறு (முதல் நூல்) எழுதுதல். 1908-1910 மயிலைப் பெரும்புலவர் தணிகாசல முதலியா ரிடம் தமிழும் சைவ சாத்திரங்களும் பயிலுதல். பெரியபுராணத்தைக் குறிப்புரையுடன் சிற்றிதழ் களாக வெளியிடத் தொடங்குதல். 1908 நீதிபதி சதாசிவ ஐயர் தொடர்பு 1910 அன்னி பெசண்ட் அம்மையாரைச் சந்தித்தல். (அம்மா என்றே திரு.வி.க. இவரைக் குறிப்பது வழக்கம்) 1910 - 1916 வெலி பள்ளியில் ஆசிரியப் பணி 1912(செப் 13) திருமணம் - மனைவியார்: கமலாம்பிகை 1914 சுப்பராய காமத், எ.சீனிவாச ஐயங்கார் தொடர்பு 1915 பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தோற்றம். 1916 - 1917 வெலி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர். 1917 தொ.ச. தலைவர் பி.பி.வாடியா தொடர்பு: இத் தொடர்பே திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடக் காரணமாயிற்று. 1917 கல்லூரிப் பணியை விடுத்தல், திசம்பர் 7-ல் தேசபக்தன் ஆசிரியர் ஆதல். 1918 (ஏப்ரல் 27) இந்தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் (சென்னைத் தொழிலாளர் சங்கம்) தோன்று தல். திரு.வி.க. துணைத் தலைவர். செப்டெம்பர் முதல் நாள் மனைவியார் கமலாம்பிகை மறைவு 1919 (மார்ச் 18) காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தல். (அக் 11) பெரியார் ஈ.வே.ரா.வின் நட்பைப் பெறுதல். (டிச. 17) லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ. சிதம்பர னாருடன் சென்று காணுதல். 1920 மத்தியத் தொழிலாளர் சங்கத் தோற்றம். சூலை இறுதியில் தேசபக்தன் நிலையத்தை விடுத்து நீங்குதல். அக்டோபர் 22இல் நவசக்தி தொடங் குதல். 1921 சூலை மாதம் ஆளுநர் வில்லிங்டன் அழைத்துக் கடுமையாக எச்சரித்தல். நாடு கடத்தப்படுவார் என்ற நிலையில் சர்.தியாகராய செட்டியார் தலையிட்டால் அத்தண்டனை நிறுத்தப்படுதல். 1925 (நவம்பர் 21, 22) தமிழ்நாடு காங்கிர வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சீபுரத்தில். தலைவர் திரு.வி.க. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டிலிருந்து வெளியேறுதல். இதன் விளைவாகத் தமிழக அரசியலில் பெருமாறுதலுக் கான திருப்பம் ஏற்பட்டது. 1939 காங்கிர ஆட்சியிலும் பக்கிங்ஹாம் ஆலை வேலைநிறுத்தம். 1943 அறுபதாண்டு நிறைவு மணிவிழா 1944 திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவருதல் 1947 சூன் 9 முதல் திசம்பர் 7 வரை காங்கிர ஆட்சி யில் திரு.வி.க.வுக்கு வீட்டுச் சிறைவாசம். 1949-50 ஒரு கண் பார்வை முதலில் மறைந்து, பின் இரு கண்களுமே பார்வை இழத்தல். 1953 செப்டெம்பர் 17-ல் மறைவு. நன்றி : சாகித்திய அக்காதெமி காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______