திரு.வி.க. தமிழ்க்கொடை 16 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 16 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24+304=328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாளர் கோ. இளவழகன் நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை தெற்கில் இருந்து தவழ்ந்து வந்த காற்றை நினைத்த தமிழன் அதற்கு அத்திசைப் பெயர் விளங்கத் தென்றல் எனப் பெயரிட் டான். தென்திசையில் தோன்றிய மொழியைத் தென் மொழி என்றான். அத்தென்மொழிப் பரப்பை ஆட்சி செய்தவனைத் தென்னவன் என்றான். அவன் ஆட்சிபுரிந்த நாட்டைத் தென்னாடு என்றான். தென்திசைப் பெயராக மட்டும் அவனுக்குத் தோன்ற வில்லை. தேனாகச் சுவைத்தது. தென் தேன் = இனிமை எனக் கண்டான். தென்றல் காற்றின் ஊற்றின்பத்தில் தோய்ந்த தென்னகப் பாவலர் குமரகுருபரர், தமிழொடு பிறந்ததாகக் கண்டார். அது, தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் எனப் பாடுபுகழ் பெற்றது. இறைவன் திருநடம் தெற்கு நோக்கி இருப்பதாகக் கண்ட சிவனியப் பெருமக்கள், தென்னாடுடைய பெருமான் தென்றல் தவழும் இன்பம் கருதியே தென்றிசை நோக்கினான் என்றனர். தென்மொழி வடமொழி ஆகிய இருமொழிக் கூட்டில் அமைந்த மணிப் பவழ நடையைப் பெரிதும் உவந்து வரைந்த நாலாயிரப் பனுவல் உரைவல்லாரும் தெற்கை மதித்த மதிப்பு மிகப் பெரிதாம். திருவரங்கப் பெருமான் குடதிசைத் தலையை வைத்துக் குணதிசைப் பாதம் நீட்டித் தென்றிசை நோக்கிக் கிடக்கும் கோலத்தை விளக்கும்போது, ஆழ்வார் பெருமக்கள் ஈரத்தமிழ் வழங்கும் நிலம் தென்னகம் ஆதலால் அப்பக்கம் முகப்பக்கம் வைத்தான் என்றும், ஆழ்வார்களின் ஈரத் தமிழ் வழங்காமையாலும், முரட்டு சமற்கிருதம் வழங்குதலாலும் வடக்கைப் புறப்பக்கமாகக் கொண்டான் என்றும் கூறினர். இத்தகு சிறப்புடையது தென்புலம்! இத்தென்புலக் காற்றாம் தென்றல், தமிழ்ப் பரப்பில் மற்றொன்றும் உண்டு என்று இருபதாம் நூற்றாண்டில் கண்டது தமிழ் உலகம். அது திரு.வி.க. என்னும் தமிழ்த் தென்றல் என்பது. திரு.வி.க. வாழ்வே தமிழ்வாழ்வு! தமிழ்வாழ்வாவது அவர் வாழ்வே எனச் சால்பு உலகம் போற்றியது. அவர், உலாச் சென்று உரையமிழ்து வழங்காத ஓரவையம் இல்லை என்னும் புகழ்க்கு நிலைக்களமாகத் திகழ்ந்தார். அவர் தலைமை தாங்கி நடாத்திய அவையங்களில் ஆற்றிய தமிழ்ப் பொழிவுகளுள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலவற்றை அவரே தொகுத்து, தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப் பொழிவு எனப் பெயர் சூட்டினார். தமிழ்உலகம், தமிழ்த்தென்றல் என, அவரையோ அவர்தம் தமிழ்நடையையோ குறித்ததாக அவர் எதனைத் தமிழ்த் தென்றல் எனக் கொண்டார்? தமிழ்த் தென்றல் என்னும் பெயர், எனது தமிழ் நடையைக் குறிக்கொண்டு நிற்பதன்று என்பதை மீண்டும் வலியுறுத்து கிறேன். தமிழ்த் தென்றலுக்கு நிலைக் களனாய் இலங்கும் நமது நாட்டின் பண்டை வளம், கல்வி, அறம், அரசு, வழக்க ஒழுக்கம் முதலியவற்றை மக்கட்கு நினைவூட்டி, இப்பொழுது இன்றியமை யாது வேண்டற்பாலதாய உரிமை வேட்கையை அவர்களிடை எழுப்ப வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்கு அடிப்படை தாய்மொழி என்பது எனது உட்கிடக்கை. அன்பர்கள் நெஞ்சில் தாய்மொழி நினைவு நிலை பெறுதல் வேண்டும் என்னும் கருத்துடன் தமிழ்த்தென்றல் என்னும் முடியை இந்நூலுக்கு அணிந்தேன். தமிழ்த் தென்றலுக்கு உரிய நாட்டின் உரிமை குறிக்கும் ஒரு நூலென இதைக் கொள்க. ஈண்டுத் தென்றல் ஆகு பெயர் எனத் தமிழ்த் தென்றலை விளக்குகிறார் தமிழ்த் தென்றல் (அணிந்துரை). மாநாட்டுத் தலைமையுரை - அரசியல் மாநாட்டுத் தலைமை யுரை - கால இட சூழல் நிலைகளால் நிறைபேறாவன இல்லையே! அவை இக்கால நிலையில் பயில்வார்க்குப் பயன்பொருளாக இருக்குமோ எனின், திரு.வி.க. விடைபகர் கிறார். எனது தலைமையுரைகளில் அவ்வப்போதைய அரசியல் நிகழ்ச்சிகளை மட்டும் யான் குறிப்பிடுவதில்லை. அவைகளுடன் வாழ்விற்கு உரிய வேறுபல பொருள்களையும் பொறிப்பதுண்டு. இந்நூற்கண் அத்தகைப் பொருள் பல செறிதல் காணலாம் என்பது அது. இக்கட்டுரைகளைப், பார்வை இட்டுப் பொருந்திய முறையில் ஒழுங்குபடுத்திச் செப்பஞ் செய்திருக்கிறேன் என்று தாம் செய்த தொகுப்பு நிலையைத் திரு.வி.க. வே கூறுதலால், கால அடைவோ, வேறுவகைப் பொருள் அடைவோ செய்தல் நூலாசிரியர் கருத்துக்கு முரணாம் என அவை மேற்கொள்ளப் பெறவில்லை. அவர் வைப்பு, அவர் வைப்பாகவே அமைந்து வெளியாகின்றது. இதன் முதற்பதிப்பு ஆசிரியரால் 1928 இல் வெளிப்பட்டது. இதில் 17 பொழிவுகள் இடம்பெற்றுள. பிற்பதிப்புகளும் அம் முறையே முறையாய் வெளிப்பட்டன. மேலைநாட்டார் சிலர் தமிழ் பயின்றனர். அவர், பீடும் மிடுக்கும் வீறும் செறியத் தமிழில் எழுதுதல் கூடுமா? பேசுதல் கூடுமா? என்று என்னைக் கேட்பர். அவர் முன்னிலையில் அவை மலிய எழுதியுங் காட்டுவேன். கூட்டங்களில் பேசியும் காட்டு வேன் என்றும், தமிழ்த் தென்றலிலும், இளமை விருந்தி லும் ஒல்லும் வகை தமிழர் வீரத்தைப் பிழிந்து வார்த்திருக்கிறேன். அந்நூல் களைப் படிப்போர்க்கு உரிமைக்குருதி பொங்கும் என்பது என் நம்பிக்கை என்றும் சுட்டுகிறார். (வாழ்க்கைக் குறிப்புக்கள்) உரிமைக் குருதி பொங்கி நாடு விடுதலை கொள்ள உதவியது திரு.வி.க.வின் வீறு மிக்க தமிழ். நாம் பெற்ற விடுதலை மொழிவிடுதலையாகவோ, இன விடுதலையாகவோ இதுகாறும் எழுச்சி கொள்ளவில்லை. பின்னும் தாழ்நிலையிலேயே சென்று கொண்டிருத்தல் கண்கூடு. இந்நிலையில் மொழி இன விடுதலை வீறுக்குத் திரு.வி.க. நூல்கள் அனைத்தும் மீள்பதிப்பாகித் தமிழர் கைகளில் தவழவேண்டும். எழுச்சியாய்ப் பொங்கி எழவேண்டும். அதற்குப் பெருந்துணையாவது திரு.வி.க. தமிழ்க்கொடை என்னும் இவ்வரிசை. நம் மக்கள் வாழ்வே தமிழ்வாழ்வு. அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தம் கொண்ட நாடு இந்நாடு. ஆ! ஆ! இது நினைவிலுறும் போது உறும் இன்பத்தை என் னென்பேன்! என்னென்பேன்! அவ்வின்பம் நுகர்ந்த இக்காலத் தமிழ்ப் பாவலர் பெருமானாகிய நம்பாரதியார் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று கூறியிருத்தல் காண்க. இன்பத் தமிழ்நாட்டில் பிறந்த நாம், இது போழ்து தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே! காரணம் என்ன? உரிமை இழந்தோம்; தமிழை மறந்தோம். மீண்டும் உரிமை யுணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும்? தமிழ்த் தாயிடம் செல்வோமாக. அவள் சேவையால் உரிமை உணர்வு பெறலாம். தமிழ் மக்களே! சேவைக்கு எழுங்கள்! எழுங்கள்! என்று திரு.வி.க 1925இல் காஞ்சி மாநகரில் நிகழ்ந்த தமிழ் மாகாண காங்கரசு 31ஆம் தமிழர் மகாநாட்டுப் பொழிவில் நிகழ்த்திய தலைமையுரையின் நிலைமை, இன்று மாற்றம் பெறத்தக்கதாக நாட்டுநிலை அமைந்து விட்டதா? தமிழ் உரிமை, ஆட்சி மொழியில் - முறைமன்ற மொழியில் - கோயில் மொழியில் - இசைமொழியில் - பயிற்று மொழியில் - நிலைநாட்டப்பெற்று நிமிர்ந்து நடையிடப் பெறுகின்றதா? தமிழ்மக்களே, உரிமை இழந்தோம்! சேவைக்கு எழுங்கள்! எழுங்கள் என அறை கூவ வேண்டிய நிலையில் தானே நம்மொழி உரிமை உள்ளது! ஆதலால் நம் மொழி இன உரிமை மீட்டெடுப்புக்கு இம்மீள் பதிப்பு அரும் பெருங்கருவியாவதாக! தமிழ்மண் பதிப்பகத் தொண்டு சிறப்பதாக. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரைகள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். அணிந்துரை அரசும் குடிகளும் மக்கள் வாழ்வு நலனுக்குரிய துறைகள் பல. அவைகளுள் ஒன்று அரசியல். அவ்வொன்றோ உயிரனையது. என்னை? உலகிலுள்ள மற்ற வாழ்வுத் துறைகளின் ஆக்கமும் கேடும் அரசியலைப் பொறுத்து நிற்றலின் என்க. அரசன் எவ்வழி அவ் வழி குடிகள் என்பது பழமொழி. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் - மோசிகீரனார் (புறநானூறு) வையம் மன்னுயி ராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு - கம்பர் பண்டை மன்னன் நிலை உயிரனைய அரசியல், பண்டைநாளில் உண்மைநெறி என்னும் கடவுள் நெறி நின்று இயங்கிற்று. அந்நாளில் உண்மை என்னும் கடவுள் கூறாய் அல்லது பிரதிநிதியாயிருந்து கட னாற்றுவான் எவனோ, அவனையே மன்னன் என்று உலகம் கொண்டது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண் டேனே என்னும் என வரூஉம் ஆழ்வார் திருவாய் மொழியை நோக்குக. பின்னை அரசியல் பின்னே அரசியல், உண்மை நெறியினின்றும் பிறழ்ந்து வீழ்ந்தது. அது பிறழ்ந்த அன்றுதொட்டு உலகிடைப் பலதிற ஆட்சி முறைகள் முகிழ்த்தன. உண்மை நெறி என்னும் கடவுள் நெறிக்கும், அரசியலுக்கும் இருந்த தொடர்பு அறுந்தது. அறவோரிடம் வளர்ந்த அரசியலை மறவோர் பற்றிக்கொண்ட னர். வாழ்வில் கழிவுபட்டோர் நண்ணத்தக்க துறை அரசியல் அல்லது தேசபக்தி என்று நல்லோர் கருதும் நிலையை அர சியல் உலகம் எய்திற்று. அரசியலுக்கும் தேசபக்திக்கும் இருந்த வேற்றுமையும் மறைந்தது. அரசியல் ஆபாசம் பின்னைய அரசியல் நிலையை - அதைக்கொண்ட தேச பக்தியை - அறிஞர் சிலர் வெறுத்தும் கூறியிருக்கிறார். தேச பக்தி என்பது பொல்லா மாக்கட்கு (பித்தலாட்டக்காரர்க்கு) இறுதிப் புகலிடமாயிருப்பது என்று அறிஞர் ஜான்ஸன் அறைந்துள்ளார். சுவாமி விவேகானந்தர் அரசியலைப் புரட்டு ஏமாற்றம் (ஹம்பக்) - என்று சொல்வது வழக்கம். யான் அரசியல்வாதி யல்லன் என்று பன்முறை காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதியிருக்கிறார். இப் பெரியோர்கள் இழித்துக் கூறும் அரசியல், பிற்றைஞான்று செந்நெறியினின்றும் பிறழ்ந்து வீழ்ந்த ஒன்றை என்க. உண்மை நெறிக்கு உரியதாயமைந்த அரசியல், இழிநிலை யுற்றமைக்குக் காரணம் என்னை? ஒவ்வொரு துறை பற்றி ஒவ் வொரு காரணங் கூறலாம். அவை அனைத்தையும் தன்பால் கொண்டுள்ள ஒரு நற்காரணத்தை ஈண்டுக் குறிப்பிடுவது பொருத்தம். அவ்வொன்றை நோக்குவோம். விலங்கு நீர்மை வெளியீடு தற்போதைய மருள் உலகினின்றும், அருள் உலகம் உருக் கொள்ளப்போதல் ஒருதலை. கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) என்னும் இயற்கையறம் அம்மாறுதலுக்குத் துணை புரிந்து வருகிறது. அவ்வுலகம் தோற்றமுறுதற்கு முன்னர் மன் பதைக்கணுள்ள மருண்மை அல்லது பேய்மை நீங்குதல் வேண் டும். நீக்கம், அரசியல் கிளர்ச்சி வாயிலாக உற்று வருகிறது. இக்கால அரசியல் கிளர்ச்சி வாயிலாக வெளிவரூஉம் போர், பொய், பொறாமை முதலிய இழிவுகள் மனிதன்பாலுள்ள விலங்கு நீர்மைகளன்றி வேறென்னை? புதிய ஒன்று தோன்றும்போது, இயற்கையின்மாட்டு, இருவித நிகழ்ச்சியுறுதல் இயல்பு. ஒன்று அழிவு; மற்றொன்று ஆக்கம். அழிவு கெய்ஸர் போன்றவராலும், ஆக்கம் மகாத்மா காந்தி போன்றவராலும் நிகழ்ந்துவரல் கண்கூடு. பேயும் கடவுளும் இவ்விரண்டும் நமது நாட்டிலும் நுட்பமாக இதுபோழ்து நிகழ்ந்து வருகின்றன. அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வகுப்புப் பூசல் - சமயப்போர் முதலிய எரிகளை உமிழும் மறக்கிளர்ச்சி அழிவின் பாற்பட்டது. கதரியக்கம் - உண்மை - முதலிய அமிழ்தங்களைச் சொரியும் அறக்கிளர்ச்சி ஆக்கத்தின்பாற்பட்டது. அழிவில் பேய் நீர்மைகளின் உதிர்வும், ஆக்கத்தில் கடவுள் இயல்புகளின் பதிவும் உறும். ஆகவே, அரசியல் இழிநிலை யுற்றதற்குச் சொல்லப்படும் காரணங் கள் பலவற்றுள்ளும் சிறந்த ஒன்றாயிருப்பது, மருளுலக வீழ்ச்சிக்கும் அருளுலக எழுச்சிக்கும் இடையே நடைபெறும் போராட்டமேயாகும். இப் போராட்டக் கலப்பு ஒவ்வொரு முறையில் ஒவ்வோர் அணுவிற்கும் உண்டு. இவ்வுலகில் சிறியேனும் ஓர் அணு. இப்போராட்டத்தில் வெளிப்படையாகக் கலந்துகொள்ளும் பேறு, இவ்வணுவிற்கு 1917ஆம் ஆண்டு வாய்த்தது. அன்று தொட்டு என்னால் இயன்றவரை சுயராஜ்ய சேவை செய்து வருகிறேன். இருவிதப் பேச்சு சுயராஜ்ய சேவையினூடே, தமிழ் நாட்டார் பற்பல மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பணியையும் அடியேனுக்கு வழங்கியதுண்டு. மகாநாடுகளில் தலைமை வகிப்போர், தமது முதலுரையைச் சமயத்துக்கேற்றவாறு, சில இடங்களில் பேசி விடுவது வழக்கம். சில இடங்களில் எழுதிப் படிப்பது வழக்கம். இவை முறையே இக்கால வழக்கில் வாய்ப் பேச்சு, எழுத்துப் பேச்சு (Written Speech) என்னப்படும். இவ்விரு வழியிலும் அடியேன் கடனாற்றி இருக்கிறேன். தமிழ்ச் சுருக்கெழுத்து நமது நாட்டில் தாய்மொழி வாயிலாக நிகழ்த்தப்பெறும் வாய்ப் பேச்சுக்கு உள்ள அல்லல் வேறு எதற்கும் இல்லை என்று கூறலாம். அல்லலுக்குக் காரணம், தமிழ் மொழியில் சுருக் கெழுத்துப் பயிற்சி இன்னும் முற்றும் வளம் பெறாமையே யாகும். தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயில்வதில் கவலை செலுத்துகிறார்களில்லை. அப்பயிற்சி பெரி தும் இப்பொழுது போலீசார்க்கு உரிமைப்பொருளாயிருந்து வருகிறது. போலீசார் அல்லாத இரண்டொருவர் தமிழ்ச் சுருக்கெழுத்தில் பயிற்சி பெற்றிருத்தல் எனக்குத் தெரியும். அவர்க்குப் போதிய தமிழ்ப்புலமை இன்மையால், அவர் இடர்ப்படுவதையும் யான் கண்டிருக்கிறேன். தமிழ்ப் புலமை யுடன் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயின்றோர் வேறு சிலர் இருக்கி றாரோ என்னவோ யான் அறியேன். தமிழ்ப் புலமையுடையார் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயின்று தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்வது நலம். தமிழில் நிகழ்த்தப்பெறும் தாய்மொழிப் பேச்சுக்கள், அவ்வண்ணமே புதினத் தாள்களில் வருவதில்லை. அவை கட்கு நடக்குங் கொலைகட்கோர் அளவும் உண்டோ? அந்தோ! mªnjh! என்று அலமந்து அழவேண்டுவதே. பத்திரிகைத் திருவிளையாடல் பேசுவோன் கருத்தை நிருபர் தம் மொழியில் வடிக்கிறார். இதனால் பேசுவோன் கருத்து அவன் மொழி எனும் உடையை இழக்கிறது. சிலபோழ்து பொருளே மாறுபடுதலும் உண்டு; வலிந்து மாற்றப்படுதலும் உண்டு. கட்சிப் பத்திரிகைகளின் திருவிளையாடல்களை ஈண்டு விரிப்பின் அவை பெருகும். தாய்மொழியில் நிகழ்த்தப்பெறும் வாய்ப்பேச்சு, நிகழ்ந்தவாறே பத்திரிகைகளில் காட்சியளித்தல் அரிது என்று சுருங்கச் சொல்லலாம். எழுத்துப் பேச்சின் அவசியம் பத்திரிகையில் வெளிவரும் தாய்மொழி - வாய்மொழி கொண்டு, பேசுவோன் உள்ளக்கிடக்கையை நேரிய முறையில் அளந்து காண இயலாத நிலையைத் தமிழ்நாடு உற்றிருக்கிறது. யான் இன்று மேடையில் ஒன்று பேசுவேன். மறுநாள் அது பத்திரிகையில் வேற்றுருவில் திரிந்து வரும். என் செய்வது! ஆகவே, பொதுவாக மகாநாடுகளில் - சிறப்பாகக் கட்சிக் கிளர்ச்சிகள் கனன்றெரியும் அரசியல் மகாநாடுகளில் - தலைமை வகிப்போர் எழுத்துப் பேச்சுமுறை கொண்டு பலதிற அல்லல்களைத் தொலைப்பது சிறப்பு. எழுத்துப் பேச்சில் வேறு சில நலன்களும் உண்டு. மகாநாடுகளில் அடியேனால் நிகழ்த்தப்பெற்ற தலைமை யுரைகளில் வாய்மொழி யுரைகள் போக, எஞ்சியுள்ள எழுத் துரைகளிற் சில, அன்பர் பலர் விரும்பியவாறு, இந்நூல் வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்நூற்குத் தமிழ்த் தென்றல் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. என்னுரையில் தமிழ்த் தென்றல் வீசுவதாக எவருங் கொள்ள வேண்டுவதில்லை. தமிழ்த் தென்றல் எங்கே? ஏழை யேன் எங்கே? ஆனால், தமிழ்த் தென்றலில் மூழ்கும் வேட்கை மட்டும் எனக்கு உண்டு. காலநிலை அவ்வேட்கை மேலீட்டான், மகாநாட்டுத் தலைமை யுரைகளில், சிற்சில இடங்களில், தமிழ்த் தென்றலை நினை வூட்டிக் கொள்வதுண்டு. அவ்வுரைகளில், அரசியற் பொருள் குறுக்கிடுமிடங்களில், வருத்தத்துடன், அதை (தென்றலை) நெகிழவிடுவதுமுண்டு. காரணம் காலநிலையெனக் கூறாது வேறென் கூறவல்லேன்? தென்றல் நுட்பம் தமிழ்த் தென்றல் என்னும் பெயர், எனது தமிழ் நடையைக் குறிக்கொண்டு நிற்பதன்று என்பதை மீண்டும் வலி யுறுத்துகிறேன். தமிழ்த் தென்றலுக்கு நிலைக்களனா யிலங்கும் நமது நாட்டின் பண்டைவளம், கல்வி, அறம், அரசு, வழக்க வொழுக்கம் முதலியவற்றை மக்கட்கு நினைவூட்டி, இப் பொழுது இன்றியமையாது வேண்டற்பாலதாய உரிமை வேட்கையை அவர்களிடை எழுப்பவேண்டும் என்பது எனது நோக்கம். அதற்கு அடிப்படை தாய்மொழி என்பது எனது உட் கிடக்கை. அன்பர்கள் நெஞ்சில் தாய்மொழி நினைவு நிலை பெறுதல் வேண்டுமென்னுங் கருத்துடன் தமிழ்த் தென்றல் என்னும் முடியை இந்நூலுக்கு அணிந்தேன். தமிழ்த் தென்ற லுக்கு உரிய நாட்டின் உரிமை குறிக்கும் ஒரு நூலென இதைக் கொள்க. ஈண்டுத் தென்றல் ஆகுபெயர். ஒன்றியகருத்து இராமை தமிழ்த் தென்றல் என்னும் இத் தொகுப்பு நூல், ஒரு நூல் முறைபற்றி ஆக்கப்பட்டதன்று. இந்நூலின் உள்ளுறை, மகா நாட்டுத் தலைமையுரைகளே யாகும். மகாநாடுகள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் கூடியவை; சில மகா நாடுகள், ஒத்துழைப்புக் காலத்தில் கூடின; சில ஒத்துழையாக் காலத்தில் கூடின. இக்கால அரசியலோ சதுரங்க ஆட்டம் போன்றது. அஃது அவ்வப்போது மாறுந் தன்மையது. இந் நிலையிற் கூடும் மகாநாடுகளில் ஒன்றிய கருத்தை எங்ஙனம் தெரிப்பது? ஒன்றிய கருத்துக்களும், அவைகளுடன் வேறுபட்ட கருத்துக்களும் காலம் இடங்களுக்கு ஏற்றவண்ணம் விரவியே நிற்கும். எனது தலைமையுரைகளில், அவ்வப்போதைய அரசியல் நிகழ்ச்சிகளை மட்டும், யான் குறிப்பிடுவதில்லை; அவைகளுடன் வாழ்விற்கு உரிய வேறுபல பொருள்களையும் பொறிப்பதுண்டு. இந்நூற்கண் அத்தகைப் பொருள் பல செறிதல் காணலாம். முறைவைப்பு பல இடங்களில் நிகழ்த்தப்பெற்ற தலைமை யுரைகளை ஒன்று சேர்த்து, பதிப்புக்கு நூல்களை ஒருமுறை பார்வையிடுவது போல, அவைகளைப் பார்வையிட்டு பொருந்திய முறையில் ஒழுங்குபடுத்திச் செப்பஞ் செய்திருக்கிறேன். இந்நூல், பெரிதும் அரசியல் மகாநாட்டுத் தலைமையுரைகளையும், வேறு சில மகாநாட்டுத் தலைமையுரைகளையுங் கொண்டது. அரசியல் மகாநாடுகள் மாகாணம், ஜில்லா, தாலுக்கா என்னும் முறைபற்றி அவ்வுரைகள் கோவை செய்யப்பட்டுள்ளன. உள்ளுறை தமிழ்நாட்டுப் பண்டைப் பெருமை, தாய்மொழிப் பற்று, பிறப்புரிமை, உரிமை வேட்கை, தேசபக்தி, சுயராஜ்யப்பேறு, ஒற்றுமை, சகோதர நேயம், ஊக்கம், காந்தியடிகள் அறம், அவ்வறத்தால் நாட்டுக்குள்ள நலன், பெண்ணுரிமை, தீண் டாமை விலக்கு முதலிய பொருள்கள் இந்நூற்கண் ஆங்காங்கே மிளிர்தல் காணலாம். வாழ்வுக்குரிய பல பொருள் தலைமை யுரைகளினூடே கலந்துள்ளமையால், அவை தமிழ்நாட்டில் ஒரு திரண்ட நூல் வடிவில் நிலவின், தமிழ்மக்கட்குப் பயன் தரும் என்று கொண்ட ஒரு நோக்கே, இந்நூல் வெளியீட்டுக்குக் காரணம் என்று தமிழ் நாட்டார்க்குத் தெரிவித்துக்கொள் கிறேன். சென்னை 05.03.1928. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் இரண்டாம் பதிப்பு தமிழ்த் தென்றல் முதல்பதிப்பு 1928-ம் ஆண்டு வெளிவந்தது. அப்பதிப்பு வெளிவந்த பின்னரும் எனது தலைமை யில் சில மகாநாடுகள் கூடின. அம்மகாநாடுகளுள் சில இளைஞர்க்கு உரியன. இளைஞர்க்குரிய தலைமை உரைகளிற் சில, சீர்திருத்தம் அல்லது இளமை லிருந்து என்னும் தலைப்புக் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்த் தென்றலில் சேர்க்கத்தக்க வேறு சில தலைமை யுரைகளும் உண்டு. அவைகளுள் அறந்தாங்கி மகாநாட்டுத் தலைமையுரை மட்டும் இந்நூலில் (தாலுக்கா வரிசையில்) சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை 20.02.1934. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் மூன்றாம் பதிப்பு தமிழ்த் தென்றல் முதற்பதிப்பு 1928-ம் ஆண்டு வெளி யாயிற்று; இரண்டாம் பதிப்பு 1934-ம் ஆண்டில் வெளி வந்தது இம் மூன்றாம் பதிப்பில் சேர்க்கத்தக்க தலைமையுரைகள் இன்னுஞ் சில உண்டு. சில காரணம்பற்றி அவை வெளியிடப் படவில்லை. காலதேச வர்த்தமானம் இடந்தருங்கால் அவை வெளியிடப்படும். இப்பதிப்பில் இயற்கை வைத்திய மகா நாட்டுத் தலைமையுரை மட்டும் சேர்க்கப்பட்டது. முதற் பதிப்பில் அபுத்திபூர்வமாகச் சில இடங்களில் ஆங்காங்கே சில சொற்றொடர்களும், சில வாக்கியங்களும் விடப்பட்டன. அவை இப்பதிப்பில் செப்பஞ் செய்யப்பெற்றன; வேறு சில பிழைகளுங் களையப்பெற்றன. சென்னை 07.10.1941. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் நான்காம் பதிப்பு தமிழ்த் தென்றல் மூன்றாம் பதிப்பு 1941-ம் ஆண்டில் வெளியாயிற்று. இப்பதிப்பு விரைவில் செலவாயிற்று; உடனே நான்காம் பதிப்பை வெளியிடல் இயலாமற் போயிற்று. காரணம் காகிதத்துக்கு நேர்ந் கட்டும் நெருக்குமாகும். இந்நான்காம் பதிப்பில் தமிழ்த் தென்றல் (தலைமை உரைகள்) என்ற தலைப்பு, தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு என்று மாற்றப்பட்டது. இம்மாற்றம் விளக்கத்தின் பொருட்டுச் செய்யப்பட்டதென்க. தமிழிசை மகாநாட்டுத் திறப்பு மொழியும், ஆக்கூர் பாரதி சங்கப் பத்தாம் ஆண்டு விழாத் தலைமையுரையும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டன. சென்னை 10.03.1947. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் பாரத நாடு வந்தே மாதரம் மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரதநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவிய பொன் னாடு கண்ணன் விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங்கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்தரவதி சாவித்திரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர் சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை யின்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதிஎழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகபோ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடு. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளர்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே! 8 வந்தே மாதரம் திரு. வி. க பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix அணிந்துரை xiii பாரதநாடு xx நூல் சன்மார்க்கம் 3 இயற்கை வைத்திய மகாநாடு 23 31-வது தமிழர் மகாநாடு 29 வடஆர்க்காடு 74 தென்னார்க்காடு 99 திருநெல்வேலி 128 திரிசிராப்பள்ளி 162 அருப்புக்கோட்டை 187 சாத்தூர் 201 ஸ்ரீ வில்லிபுத்தூர் 215 உடுமலைப்பேட்டை 222 தாராபுரம் 232 அறந்தாங்கி 242 திருப்பத்தூர் 252 தொழிலாளர் முதல் மகாநாடு 267 3-வது தமிழிசை மகாநாடு 281 ஆக்கூர் பாரதி சங்கம் பத்தாம் ஆண்டு விழா 293 தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு தமிழ்த் தென்றல் (திரு. வி. கலியாணசுந்தரனார் தலைமை உரைகள்) சமரச சன்மார்க்க மகாநாடு (மாயவரமென வழங்குந் திருமயிலாடுதுறையில் கூடியது) - 1927ஆம் வருடம்மேமாதம் 7ஆம் நாள் - சகோதரிகளே! சகோதரர்களே! இச்சமரச மகாநாடு ஈண்டுக் கூடுமாறு முயன்று உழைத்த கெழுதகை நண்பர்கட்கும், உழுவலன்பர்கட்கும் எனது நன்றி யறிதலைச் செலுத்துகிறேன். இம்மகாநாட்டில் தலைமை ஏற்றுக் கடனாற்றும் பேற்றைச் சிறியேற்கு நல்கிய உங்கட்கும் எனது வணக்கம் உரியதாக. இவ்வூழி, மகாநாட்டு ஊழி என்று கூறல் மிகையாகாது. இந்நாளில் உலகில் பலதிற மகாநாடுகள் கூடுகின்றன. அவற்றி னிடையே ஒரு பாங்கர் இச்சிறு மகாநாடுங் குழுமியிருக்கிறது. இக்கூட்டம் பயனற்றது என்று கருதுவோருமுளர்; இது பித்தர் ஈட்டம் என்று எள்ளி நகையாடுவோருமுளர்; இன்னும் வேறு வேறு வழியில் இதைக் குறைகூறுவோருமுளர். இவர் அனைவர்க்கும் இம் மகாநாட்டின் இன்றியமையாமை நாளடைவில் புலனாதல் ஒருதலை. பல்லாற்றானும் உலகை அலைத்துவரும் மறத்துறைகளை வீழ்த்தி, அறத்துறைகளை நிலைபெறுத்த வல்லது சமரச சன்மார்க்கம் ஒன்றே என்று உலகம் உணருநாள் சேய்மையில் இல்லை. சமரச சன்மார்க்கத்துக்குரிய ஒரு சில நோக்கங்களைக் குறிக்கொண்டு, ஈண்டியுள்ள இம் மகாநாட்டில், சமரச சன்மார்க்கத்தின் பெற்றியை விரித்துரைத்தல் அநாவசியம். ஆயினும், அது குறித்துச் சில உரை பகர்ந்து மேலே செல்கிறேன். சமரச சன்மார்க்கம் சமரசம் யாண்டுளதோ ஆண்டுச் சன்மார்க்கமும் உண்டு; சன்மார்க்கம் யாண்டுளதோ ஆண்டுச் சமரசமும் உண்டு. ஆகவே சமரசத்தைச் சன்மார்க்க மென்றும், சன்மார்க்கத்தைச் சமரசமென்றுங் கொள்ளலாம். உலகிலுள்ள பன்மார்க்கங்கள் சமரசங் கூட்டாமை யானும், சன்மார்க்கம் ஒன்றே சமரசங் கூட்டுதலானும், உலகம் சன்மார்க்கத்தைச் சமரச சன்மார்க்கம் என்று வழங்கி வரு கிறது. சன்மார்க்கத்தில் சமரசம் பொலிதலால், அதனைச் சமரசம் என்னும் அடையின்றிச் சன்மார்க்கம் என்று கொள்வது சாலும்; சமரச சன்மார்க்கம் என்று விளக்கமாகக் கோடலும் பொருந்தும். பன்மையில் ஒருமை உலகம் பலவிதம் என்பது பழமொழி. பலதிறப்பட்ட உலகில் சமரசம் எங்ஙனம் நிலவும் என்று சிலர் கருதலாம். உலகம் பலவிதம் என்பது எவரும் அறிந்ததொன்று. ஆனால், அப்பன்மை, ஒருமைச் சமரசத்தைக் கூட்டாது என்று கோடல் தவறு. உலகையும் உலகிலுள்ள பல பொருள்களையும் உற்று நோக்குழிப் பன்மைவழி, ஒருமை நிலவலையே, அவை அறி வுறுத்தல் காணலாம். நமது யாக்கையை எடுத்துக்கொள்வோம். பல உறுப்புகள் சேர்ந்த ஒன்றே யாக்கை என்பது. பன்மை உறுப்புக்களிடை ஒருமை யாக்கை ஒளிர்தல் கருதற்பாலது. பல செடி கொடி மரம் முதலியவற்றால் ஆக்கப்பட்ட ஒன்று, காடு என்று வழங்கப்படுகிறது. எனவே, பன்மையில் ஒருமை மிளிர் தலே நியதி என்க. அவ்வொருமை தேறாது, பன்மையில் மட்டும் பார்வை செலுத்தல் இடர் விளைக்கும். ஆதலால், பன்மையில் ஒருமை காண்டலே அறிவுடைமை. உலகை உற்று நோக்குவோம். உலகம், நாடு, மொழி, இனம் முதலியவற்றால் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். நாடு, மொழி, இனம் முதலிய பன்மைகளில் மட்டும் கருத்தைப் பதித்து, அதனதன் அளவில் சமரசங்கொண்டு, மக்கள் வாழ்வு நடாத்தப் புகுங்கால், பொறாமையும் போரும் பிணக்கும் நிகழ்கின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகள் இல்லா தொழியுமோ? ஒருபோதும் அவை யில்லா தொழியா. அவை யாவும் இயற்கையில் அமைந்திருப்பன. அவை எங்ஙனம் ஒழியும்? வேற்றுமையுள்ள மட்டும் பொறாமை, போர், பிணக்கு நிகழல் இயல்பு என்று சிலர் முடிவுகாண்கிறார். அம்முடிவு பொருந்திய தொன்றன்று. யாக்கையில் உறுப்பு வேற்றுமைகள் இருக்கின்றன. இவ்வேற்றுமை கொண்டு, உறுப்புக்கள் ஒன்றோ டொன்று பிணங்கின், யாக்கை நிலை என்னாம்? யாக்கையின் நலனுக்கு உறுப்புக்கள் யாவும் ஒன்றி உழைக்கின்றன. ஒன்றிய உழைப்பால் உறுப்புக்களும் நலனுறுகின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகொண்டு, மக்கள் ஒருவரோடொருவர் பிணங்கிப் போரிடுவரேல், உலகில் அமைதி நிலவாது. அமைதியின்மை, பிணங்கிப் போரிடும் மக்கட்கும் இன்பமூட்டாது. மக்கள் பிணங்கிப் போரிடாது ஒன்றி வாழ்வரேல், அவர்களிடை இசைந்த இன்பம் செறியும். மக்கள் வாழ்வின் நோக்கம் என்னை? இன்பம் நுகர்வ தன்றோ? வீண் போராலும் பிணக்காலும் எற்றுக்கோ பெறற் கரிய இன்பத்தை அருமை மக்கள் இழத்தல் வேண்டும்? வேற்றுமைகளினிடையே ஒற்றுமை காணின் இன்பம் நுகரலாம். ஒற்றுமையுணர்வு, வேறுபாடுகளால் போரையும் பிணக்கையும் உண்டுபண்ணாது; அவைகளினிடை அன்பும் ஆர்வமும் உண்டு பண்ணும். ஆதலால், வேற்றுமையில் ஒற்றுமை காணவே மக்கள் முயலல் வேண்டும். சத் மார்க்கம் ஒற்றுமையுணர்வை உலகிற் கூட்டவே பல பெரியோர் ஆங்காங்கே தோன்றிச் சன்மார்க்க போதனை செய்தனர். சன்மார்க்கம் என்பது, சத்தெனுஞ் செம்பொருளை யுணர்த்தும் மார்க்கமாகும். சத் - உண்மை அல்லது கடவுள்; மார்க்கம் - நெறி. உண்மைநெறி அல்லது கடவுள்நெறியே சன்மார்க்கமென்பது. இச் சன்மார்க்கமே உலகில் சமயம் என்னும் பெயரால் வழங்கப் பட்டு வருகிறது. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளில் நிலைபேறாக நின்று, வேற்றுமையுணர்வில் பழுத்த மக்கள், சன்மார்க்கமெனுஞ் சமயத்தையும் கூறிட்டு, வேறுபடுத்திப் போர்களைக் கிளப்பினார்கள். ஒரே கடவுள் உலகிலுள்ள சமயங்கள் யாவும் சத்தெனுஞ் செம்பொருள் ஒன்றையே குறிக்கொண்டு நிற்கின்றன. அவ்வந்நாட்டார், தத்தம் மொழியில் கடவுளைப் பலபெயரால் போற்றுகிறார். அப்போற்றலில் மொழி வேற்றுமையன்றிப் பொருள் வேற்றுமை யில்லை. ஆங்காங்குத் தோன்றிய அருளாளர் அறிவுறுத்திய சத் மார்க்கம், பின்னை நாளில் அவரவர் பெயரால் பலப்பல சமயங் களாக வழங்கப்பட்டது. அப் பெயர் வேற்றுமைகள் உலகில் சமயப் போர்களாக முடிந்திருக்கின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளுள் சமயமும் ஒன்றாகக் கொள்ளப் பட்டது. மக்கள் அறியாமையால், பல சமயங்களைக் கற்பித்துக் கொண்டாலும், அச்சமயங்களின் உள்ளக்கிடக்கை ஒரு பொருளையே பற்றி நிற்றல் வெள்ளிடைமலை. இதுகுறித்து மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலின் இறுதியில் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. 1போதிய ஓய்வு கிடைப்பின் சன்மார்க்கத்தைப்பற்றி விரிந்த தனி நூலும் ஒன்று எழுத எண்ணி யிருக்கிறேன். எந்நாட்டாரும், எம்மொழியினரும், எவ்வினத்தாரும், எல்லாரும் சத்தெனுஞ் செம்பொருளாம் ஒரு கடவுளையே பல்வேறு பெயரால் போற்றுகிறார். நாடு, மொழி, இனம் முதலியவாற்றான் வேறுபட்டார்போல வாழும் மக்களை, ஒற்றுமைப்படுத்த வல்லது, சத்துக்குரிய மார்க்கம் ஒன்றே என்று அறுதியிட்டுக் கூறலாம். ஆதலால், நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு, இன்பம் நுகர்தற்கு மக்கள் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுகல் வேண்டும். அவ்வொழுக்கத்தான் ஒருமை இன்பம் நுகரலாம். சத்தும் மார்க்கமும் சத் விளக்கம் சத்தெனுஞ் செம்பொருள் தோற்றக் கேடுகளின்றி என்றும் ஒருபெற்றியா யிருப்பது; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அதற்கு உடலில்லை; உறுப்பில்லை. அது மாற்ற மனங்கடந்து நிற்பது; சொலற்கரிய சூழலுடையது; எல்லாமாய் அல்லவுமாய் விளங்குவது; எல்லாவற்றையும் இயக்குவது. அஃதின்றி ஓரணுவும் அசையாது. அத்தகைய ஒன்றன் உண்மையை எங்ஙனம் உணர்வது? சத்தும் இயற்கையும் கண்ணுக்குப் புலனாகும் இயற்கை வடிவங்களின் வாயி லாகவே பரம்பொருளின் இருப்பை உணரல்வேண்டும். இயற் கையை ஆராய ஆராயச் சத்தெனுஞ் செம்பொருளின் உண்மை புலனாகும். ஊர் பேர் ஒன்றுமில்லா ஒன்றன் இருப்பை உணர்த் துங் கருவி, இயற்கை என்று சுருங்கச் சொல்லலாம். இயற்கை யின் வாயிலாகவே சத்தெனுஞ் செம்பொருள் தன் அருட் டொண்டை நிகழ்த்தி வருகிறது. ஆகவே, சத்தை உணர்த்தும் மார்க்கம், இயற்கை இயற்கை என்பது கருதற்பாலது. சத் தெனுஞ் செம்பொருட்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை என்னென்று கூறுவது? அதை எழுத்தால் எழுதல் முடியுங் கொல்! சத்தெனுஞ் செம்பொருளாகிய இறைவனை என் அப்பன் என்றும், இயற்கையை என் அன்னை என்றும் யான் கொள்கிறேன். செயற்கைச் சேறு இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்தல் இறை நெறி நிற்பதாகும். இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்தாது செயற்கைச் சேற்றில் வீழ்வது, இறை நெறி நிற்பதாகாது. இயற்கையோ டியைந்து நிற்குமாறு படைக்கப்பட்ட மகன், நெறியல்லா நெறியாகிய செயற்கையில் வீழ்ந்து கிடத்தலால், அவன், தான் பிறந்த நாடு, தான் பேசும் மொழி, தனக்குரிய இனம் முதலிய கட்டுப்பட்ட சிலவற்றைக் கடவுளாக்கொண்டு, மற்ற நாடு மொழி இனம் முதலியவற்றோடு பிணங்கி, இடரிழைத்து வருகிறான். ஒருவன், தான் பிறந்த நாடு மொழி இனம் முதலியவற்றில் சத்தெனும் செம்பொருளிருப்பதுபோல, மற்ற நாடு மொழி இனம் முதலியவற்றிலும் அப் பொருளிருத்தலை உணராமையால், அவன் வேற்றுமை உணர்வால் இடர்ப் படுகிறான். யாண்டுஞ் செம்பொருளுண்மையை உணர்வனேல், அவன் இடர்ப்படாது இன்பம் நுகர்வன். இறையின் ஒருமையும் இயற்கையின் பன்மைக் கோலமும் சத்தெனுஞ் செம்பொருள் என்றும் ஒருபெற்றியாய்த் திரிபு முதலிய மாறுபாடின்றியிருப்பினும், அதனை யுணர்த்துங் கருவியாயுள்ள இயற்கை பல்வேறு வடிவாகப் பரிணமித்துக் காட்சியளிக்கிறது. பல நாடுகள், பல மொழிகள், பல வழக்க ஒழுக்கங்கள் முதலிய யாவும் இயற்கை அன்னையின் திரு விளையாடல்கள். பன்னாடு பன்மொழி முதலியன இயற்கை அமைப்புக்கள். இயற்கையோ டியைந்த வாழ்வு செலுத்து வோர்க்குப் பன்மை வடிவங்களின் பெருமை புலனாகும். பன்மையின் மாண்பு இயற்கை அன்னை பன்மை வடிவங்களாக ஏன் காட்சி யளிக்கிறாள்? mjdhy‹nwh cy»š nghU« ãz¡F« vG»‹wd? என்று சிலர் ஐயுறலாம். பன்மை இல்லையேல் உலகம் நடைபெறாது; மனிதன் கைகால் உறுப்புக்களின்றித் திண்மையாக ஒரே பிண்டமாகப் பிறப்பனேல், அவனால் என் செய்தல் இயலும்? இங்ஙனே பிறவும். மனிதனது ஒவ்வோர் உறுப்பும் தன் தன் கடனாற்றித் தனக்கும், தன்னையுடைய முதலுக்கும் இன்பூட்டுவதுபோல, அவ்வந்நாட்டினரும், மொழி யினரும், பிறரும் தத்தங் கடனாற்றித் தமக்கும் உலகிற்கும் இன்பூட்டல் வேண்டும். இதற்கு ஒருமையுணர்வு வேண்டற் பாலது என்று மீண்டும் நினைவூட்டுகிறேன். இயற்கைவழி நிற்றல் எவரெவரை இயற்கை எங்கெங்கே பிறப்பிக்கிறதோ, அவரவர் ஆங்காங்கே உள்ள வழக்க ஒழுக்கங்கட்கு இயைந்த வாழ்வு நடாத்துவது இயற்கை அன்னையை வழிபடுவதாகும். ஆங்காங்குள்ள தட்ப வெட்ப நிலைக்கேற்றவண்ணம், இயற்கை அன்னை, மொழி, நாடு, பொருள் முதலியவற்றை வழங்கி இருக்கிறாள். அவ்வளவில் உள்ள நிறை கொண்டு வாழ்வது இயற்கை வாழ்வாகும். நிறைகொள்ளாது பேராசையால் மற்ற நாடுகளையும் பொருள்களையும் பற்றி வாழ விரும்புவது செயற்கை வாழ்வாகும். இதனால் இயற்கைக்கு மாறுபட்ட வினைகள் நிகழ்கின்றன. அவ்வினைகளால் ஏற்றத் தாழ்வும், அடக்குமுறையும், பிற கொடுமைகளும் உலகிடை நுழைந்து துன்புறுத்துகின்றன; உலகில் இன்ப நுகர்ச்சியும் இல்லா தொழிகிறது. இப்பொழுது உலகம் எந்நிலையிலிருக்கிறது? செயற்கை வெம்மையில் வீழ்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. இது நிற்க. வாழ்வு உடலும் உயிரும் வெறும் இயற்கை வாழ்வு என்றால் ஒழுங்குமுறை இல்லாததா என்று சிலர் கடாவுவர். வாழ்வை அளித்த இயற்கை அன்னை, ஒழுங்கு முறைகளை வகுக்காதொழிவளோ? இயற்கை யில் உலக நடைமுறைக்கெனச் சில வாழ்வு முறைகள் கோலப் பட்டிருக்கின்றன. வாழ்வு என்பது இரு திறத்தது. ஒன்று உடல் வாழ்வு; மற்றொன்று உயிர்வாழ்வு. உடல்வாழ்வு உலகியலைப் பற்றி நிற்பது; உயிர்வாழ்வு கடவுளைப் பற்றி நிற்பது. இவ் விரண்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. உயிர் வாழ் விற்கென்றே உடல் வாழ்வு ஏற்பட்டது. உடல் வாழ்வின்றி உயிர் வாழ்வு நலம்பெறல் அரிது. எனவே, கடவுள் நெறிக்கு உலகியல் இன்றியமையாததென்க. நான்கு துறைகள் உலகியல் நடைமுறைக்கென நான்கு துறைகளும் கடவுள் நெறிக்கென நான்கு துறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந் நான்கில் எல்லாத் துறைகளும் அடங்கலால், பிறவற்றை விரித்துக் கூற வேண்டுவதில்லை. உலகியல் செவ்வனே நடை பெறற் பொருட்டு, மக்கள், தொழிலாளர் என்றும், வாணிபர் என்றும், அரசினர் என்றும், பார்ப்பனர் என்றும் பிரிந்து கட னாற்றி வரலானார்கள். இப்பிரிவு இயற்கையின்பாற்பட்டது. மக்கள் அனைவரும் ஒரே கடனாற்றப் புகுவரேல், உலகம் நடைபெறாது. ஆதலால், பிரிவு இன்றியமையாதது. இம் முறை வழி உலகம் இயங்கி வருகிறது. எங்குத் தொழிலாளரில்லை? எங்கு வாணிபரில்லை? எங்கு அரசினரில்லை? எங்கு ஆசிரிய ரென்னும் பார்ப்பனரில்லை? அவ்வத் தொழிலாளர் யாண்டும் உளர். இஃது உலகியல் முறை. உயிர் வாழ்விற்கும் நான்கு துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை: உலகு உயிர் கடவுள் முதலியவற்றை அறிவுறுத்துங் கல்வி ஒன்று; கற்றதை நிகழ்ச்சியில் கூட்டவல்ல இல்வாழ்வு மற் றொன்று; இல்வாழ்வால் பெறும் அன்பால் மனைவியுடன் உயிர்களுக்குதவும் அறம் வளர்ப்பது இன்னொன்று; அதன் வழிஅழுக்காறு அவா வெகுளி முதலிய மாசுகளினின்றும் விடுதலையடைந்து, எவ்வுயிரிலும் சத்தெனும் செம்பொருள் பொலிவது கண்டு, உயிர்கட்குச் செந்தண்மை பூண்டொழுகும் முடிந்தநிலை எய்துவது வேறொன்று. இந் நான்கும் மக்கட்கு வேண்டற்பாலன. இவை யாவும் உலகில் இயங்கிவருகின் றன. எந்நாட்டில் மாணாக்கரில்லை? எந்நாட்டில் இல்வாழ் வோரில்லை? எந்நாட்டில் அறவோரில்லை? எந்நாட்டில் துறவோரில்லை? இவ்விரு முறைகளின் வழி, வாழ்வு நடாத்துவது இயற் கையோ டியைந்த வாழ்வு நடாத்துவதாகும்; அதாவது சன்மார்க்கத்தில் நிற்பதாகும். நமது நாடு பண்டை இந்தியா நமது நாட்டில் உலகியற்றுறைகளும், உயிரியற்றுறைகளும் செம்மை நெறியில் இயங்கு முறையில் மக்கள் இயற்கை வாழ்வு நடாத்தி வந்தார்கள். வந்த நாளில், நாடு செழுமையுற்றிருந்தது. அந்நாளில் தோன்றிய கலைகளின் பெருக்கை என்னென்பேன்! வீரர்களின் பெருக்கை என்னென்பேன்! அறப்பெருக்கை என் னென்பேன்! அப்பொழுது, நமது பாரத அன்னை முடியணிந்து, கலையணிந்து, செங்கோலோச்சி, அரியாசனத்தில் வீற்றிருந் தாள்; அரசியல் குடியியல் அழகோடியங்கின; அன்பும் அருளும் ஆறாக ஓடின; எங்கணும் இன்ப வாழ்வு! எங்கணும் இயற்கையறம்! எங்கணும் சன்மார்க்கம்! பின்னை, நாளடைவில், பாரதமாதாவின் முடியும் கலை யும் செழுமையும் கொழுமையும் வளனும் நலனும் பிறவும் மெல்ல மெல்ல நெகிழ்ந்து நெகிழ்ந்து சுருங்கிச் சுருங்கி இறுகலாயின. இந்நாளில் பாரதத்தாய் அடிமைக் குழியில் வீழ்ந்து கிடக்கிறாள். இச்சிறுமைக்குக் காரணம் என்னை? இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் வாழ்விற்கென ஏற்பட்ட தொழின் முறைகளை நடாத்தி வந்த மக்களுக்குள், பிறப்பில் ஏற்றத் தாழ்வு புகுந்தமையே சிறுமைக்குச் சிறந்த காரணமாகும். தொழிற் பிரிவுகள் பிறப்புப் பிரிவுகளாக மாறின. பிறப்புவழி ஏற்பட்ட பிரிவுகள், இயற் கைக்கு மாறுபட்டனவாகலான், அந்நாள்தொட்டு, மக்கள் சன்மார்க்கமெனும் இயற்கை வாழ்வினின்றும் பிறழ்ந்து, துன் மார்க்கமெனுஞ் செயற்கை வாழ்வில் வீழலானார்கள். இப் பிறழ்ச்சியால், பார்ப்பனன் பிள்ளை பார்ப்பனனாகவும், அரசன் பிள்ளை அரசனாகவும், வாணிபன் பிள்ளை வாணிபனாகவும், தொழிலாளன் பிள்ளை தொழிலாளனாகவும் கருதப்பட்டனர். பௌத்தமும் பார்ப்பனமும் ஆசிரியத் தொழில் பூண்டிருந்தோர், அரசர்களைத் தம்வயப்படுத்தித் தம்வழி உலகம் இயங்கவேண்டுமென்னும் எண்ணங்கொண்டு முயன்று வந்த வேளையில், இடபதேவர், மஹாவீரர், புத்தர் முதலிய அருளாளர் கிளம்பி, பிறப்பால் வகுப்பு வேற்றுமை கூடாது என்று எதிர்த்து வந்தனர். அம் முயற்சியில் புத்தர்பெருமான் வெற்றியும் பெற்றார். மீண்டும் நாடு சன்மார்க்கமெனும் இயற்கை அறநெறியில் இயங்க லாயிற்று. அவ்வியக்கத்தை ஓங்கவிடாது, பார்ப்பனர் சிறு முயற்சியால் தகைந்து வந்தனர். நாளுக்குநாள் புத்தர் பெருமான் அறவுரை ஆக்கம் பெற்று வருவது கண்ட பார்ப்பனத் தலைவர் சிலர், பௌத்த சமயம் புகுந்து, பௌத்த சமய ஆக்கத்தையே மாய்த்தனர். அன்று மீண்டும் எழுந்த பார்ப்பனர், பின்னை நாளில் தமக்கு எத்தகைய இடையூறும் நேராதவாறு, எவ்வெக் கோட்டைகள் கட்ட வேண்டுமோ, அவ்வக் கோட்டைகள் கட்டிக்கொண்டனர். பௌத்த மதக் கிளர்ச்சி தோன்றாதிருக்கு மேல், பார்ப்பனர் தமது நலன் கருதி, இத்துணை அரண்கள் கோலி இருக்கமாட்டார். அச்ச மேலீட்டான், அவர் இயற் கைக்கு மாறுபட்ட பல துறைகள் வகுத்தனர் பாவம்! பெண் மக்களும் கல்வியும் முதல் முதல் பெண்மக்களும், தொழிலாளரும் கல்வி கற்றலாகாது என்னும் சட்டம் பார்ப்பனரால் செய்யப்பட்டது. கல்வி இல்லா மக்கள் விலங்காதல் இயல்பன்றோ? பெண் மக்கள் அருள் பூத்த நெஞ்சினராகலான் தங் (பார்ப்பனர்) கொடுமை கண்டு பொறாது அறக்கிளர்ச்சிக்குத் துணை நிற்பரெனக் கருதி, அவர்கட்கு (பெண் மக்கட்கு)க் கல்வி மறுக்கப்பட்டது. வேத காலத்தில் பெண்மக்கள் பலர் பெரும் பண்டிதைமாராக இருந்தனர். மிருதியில் பெண்கல்வி மறுப்புக் காணப்படுகிறது. மிருதிகள் புத்தர் காலத்திற்குப் பின்னரே எழுதப்பட்டன. இதனால் வேண்டு மென்றே பெண் கல்வி மறுக்கப்பட்டது நோக்கத்தக்கது. தொழிலாளரும் கல்வியும் தொழிலாளர், தொகையில் பெரும்பான்மையோராக இருத்தலான், அவர் கற்றவராயிருப்பின், புத்தர் அறக்கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சி எழுமேல், அதற்கு அவர் துணைபுரிவ ரென்றஞ்சி, அவர் கல்வி கற்றலாகாது என்னும் விதி செய்யப் பட்டது. பின்னும் நாளடைவில் மேல்வகுப்பார் தம்மைக் கடவுளர் என்று மற்றவகுப்பார் கருதித் தமக்கு ஏவல் செய்யு மாறு பல விதிகள் நிறுவினர். உயர்வகுப்பார் பிறப்புரிமை, பழைய நூல்களினிடையே செருகப்பட்டது. பிறப்புரிமை காப்புக்கெனக் கோயில்கள் மடங்கள் கட்டப்பட்டன. உயர் வகுப்பார்க்குள்ள உரிமைகளையும், மற்றவர்க்குள்ள சிறுமை களையும் மிருதிகளில் இன்னுங் காணலாம். இக் கொடுஞ் சட்டங்கள் நந் தமிழ்நாட்டில் தலைகாட்டிய போது, அப்பொழுது தமிழ்நாட்டில் வதிந்த திருவள்ளுவர் முதலியோர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா-செய்தொழில் வேற்றுமை யான் என்று பிறப்புரிமைக் கொடு மையைக் கடிந்தனர். எவர் கடிந்தும், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் முறை யாண்டும் பரவலாயிற்று. நாட்டில் பெரும் பான்மையோர், கல்வி பெறாமையால் அம்முறைக்கு அடிமை யாயினர். என் செய்வது? இயற்கை நெறிக்கு மாறுபட்டுப் பிறப்பில் உயர்வு தாழ்வு கொண்ட செயற்கை வாழ்வு நாட்டில் நடந்து வந்தது. சன் மார்க்கம் ஒழிந்து, சாதிமார்க்கம் எழுந்தது. செயற்கை முறை யால் விளைந்ததென்னை? நாடு எல்லா நலன்களையும் இழந்து, அடிமைக் குழியில் வீழ்ந்ததொன்றே விளைந்த பயன். சாதி நான்குவிதத் தொழில்கட்கும் நான்குவிதத் சாதியிருத்தல் வேண்டுமென்றும், இல்லையேல் உலகம் நடைபெறாதென்றும் சிலர் வாதமிடுகிறார். மக்கள் பிரிந்து, நான்குவிதத் தொழிலை யும் நிகழ்த்தவேண்டுமென்பதை யான் மறுக்கின்றேனில்லை. அப்பிரிவு, பிறப்புவழியில் இருத்தல் இயற்கைக்கு மாறுபாடு என்பது எனது உள்ளக்கிடக்கை. உலகில் எங்கணும் நான்குவித முறைகளிருக்கின்றன. ஆனால் யாண்டாதல் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதப்படுதலுண்டோ? சிறப்பில் உயர்வு தாழ்வு உறல் இயல்பு. இவ்விந்திய நாட்டில், ஹிந்துக்களிடைமட்டும், பிறப்பில் சாதி கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள் ளாத நாடுகள் அழிந்து பட்டனவோ? படுகின்றனவோ? அவை யாவும் உரிமை இன்பத்தைச் செவ்வனே நுகர்ந்து வருகின் றன. பிறப்பால் சாதிகொண்டு, உயர்வு தாழ்வு கணிக்கும் இந்தியாவோ அடிமைக் குழியில் வீழ்ந்து தவிக்கிறது. நாளடைவில் நால்வகைச் சாதி, நாலுலட்சம் சாதிகளாய் விட்டன. சாதிக்குள் சாதியாகவும், கிளைக்குள் கிளையாகவும் சாதிக் குப்பைகள் பெருகிவிட்டன. திண்ணைக்கொரு சாதி, நடைக்கொரு சாதி, கூடத்துக்கொரு சாதி, மாடத்துக்கொரு சாதி, அறைக்கொரு சாதி, அடுப்புக்கொரு சாதி, கொல்லைக் கொரு சாதி, வீட்டுக்கொரு சாதி, தெருக்கொரு சாதி, கோவிலுக்கொரு சாதி, மடத்துக்கொரு சாதி, கடவுளுக்கொரு சாதி - எத்துணை எத்துணைச் சாதிகள்! நாடெங்கும் சாதி நாற்றமே வீசுகிறது. மூன்று பாவங்கள் நம் நாட்டார் பெண்ணுரிமை கடிந்த தீவினையும், பிறப் பால் சாதி வகுத்த தீவினையும், மக்களுள் தீண்டாமை கொண்ட தீவினையும் இப்பொழுது மூண்டெரிந்து நாட்டை அரிக்கின் றன; எரிக்கின்றன. இயற்கைக்கு மாறுபட்டு நின்றதன் பயனை இப்பொழுது நாடு அனுபவித்து வருகிறது. கொடுமைகளைக் கண்டு இயற்கை அன்னை வாளா கிடப்பளோ? அவள் இப் பொழுது நாட்டை ஒறுத்து வருகிறாள். அன்பர்களே! நமது நாட்டுக்குள்ள சிறுமையைப் போல வேறு எந்நாட்டுக்கேனும் உண்டோ? நமது நாட்டு மக்கள் வயி றாரச் சோறு உண்கிறார்களா? அவர்கட்கு நல்லுடை உண்டா? நல்லுறக்கம் உண்டா? நமது நாட்டுக் கலைகள் எங்கே? தொழில் கள் எங்கே? எல்லாம் போயின. ஒரு சாண் வயிற்றுக்கு நம்மவர் கடல் கடந்து ஓடி மானம் இழக்கின்றனர். இவ்வளவிற்குங் கார ணமா உள்ள தீவினைகளுக்குக் கழுவாய் தேடிக் குறைபாடு களைக் களையவேண்டுவது நமது கடமையன்றோ? நமது கடமை கழுவாய் முதலாவது நம் முன்னோர் செய்த தவறுதலுக்கு நாம் கழுவாய் தேடல் வேண்டும். கழுவாய் பிராமணர் மட்டும் தேடல் வேண்டும் என்னும் நியதி இல்லை. பிராமணரல்லாத மற்றவரும் கழுவாய் தேடக் கடமைப்படல் வேண்டும். பிராம ணர் மற்றவரைச் சிறுமைப்படுத்துவதுபோல, மற்றச் சாதியாரும் ஒடுக்கப்பட்டவரைச் சிறுமைப்படுத்துகிறார். எல்லாரும் பெண்மக்களை வருத்துகிறார். ஆதலால், அனைவரும் தத்தங் குற்றமுணர்ந்து கழுவாய் தேடுவாராக. ஹிந்துக்களென்று இந்நாளில் தங்களைக் கருதிக் கொள் வோர் அனைவரும், நாடோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் ஆண்டவனை நோக்கி, வழிவழி நிகழ்ந்து வரூஉம் குற்றங்களை மன்னிக்குமாறு கேட்பாராக; கேட்குமள வோடு நில்லாது, திங்கட்கொருமுறை நோன்பும் இருப்பாராக; இவ்வாறு உள்ளத்தைத் தூய்மைப்படுத்திப் படிப்படியாகச் சில திட்டங்களைக் கோலி, அவற்றைச் செயலில் நிகழ்த்த முயல் வாராக. திட்டங்களை முறைமுறையாக ஈண்டுத் தொகுத்துக் கூறவேண்டுவதில்லை. சில குறிப்புக்களை மட்டும் நினைவூட்டு கிறேன். பெண்ணுலகு :- பெண் ஒரு பாதி; ஆண் மற்றொரு பாதி. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. அங்ஙனமாக, வாழ்வின் ஒரு பாதி உரிமை கடிவது எத்தகை அறியாமை? உடலில் ஒரு பாதி குருதியோட்டம் குன்றினால் உடல்நிலை என்னாகும்? பாரதமாதாவின் ஒரு பாதியாகிய பெண்ணுலகின் உரிமை கெட்டமையால், அவள் பக்கவாயுவால் பீடிக்கப்பட்டுக் கிடக்கிறாள். அந்நோய் நீங்கினாலன்றி அவளுக்கு உய்வில்லை. ஒத்த பண்பும் ஒத்தநலனும்ஒத்தஅன்பும்ஒத்தசெல்வமும்ஒத்தகல்வியுமுடையஒருவனும்ஒருத்தியும்...v‹wh® நக்கீரனார். பெண்மகள் பண்டை நாளில் எல்லா வழியிலும் ஒத்து வாழும் உரிமை பெற்றிருந்தாள். அவ்வுரிமை இன்பத்தை மீண்டும் அவள் நுகருமாறு ஆண்மக்கள் நடந்து கொள்ளல் வேண்டும். பெண்ணுலகக் கேட்டால் ஆணுலகுக் கும், பின்னை நாட்டுக்குமே ஊறு விளைந்துள்ளதை அன்பர்கள் கருதுவார்களாக. தாய்மைக்குரிய பெண்ணின் சிறுமை, நாட் டின் சிறுமையாதல் இயல்பு. ஆதலால், பெண்ணலன் நாட வேண்டுவது நம் பெருங்கடமை. பண்டை நாளில் ஆண்மகனோடு ஒத்த கல்வி பெற்றிருந்த பெண், இந்நாளில் அக்கல்வி ஏன் பெறுதல் கூடாது? நீண்ட நாளாக, நாட்டின் தாயாகிய பெண், கல்வி இழந்தமையால் நாட்டுக்கு விளைந்த கேடுகள் எண்ணில; எண்ணில. ஆண்மகன் இரண்டு மூன்று பெண்களை மணஞ்செய்து கொள்வதும், பெண்மகள் உற்ற வயது அடையா முன்னர் அவளைத் திருமணஞ் செய்துகொடுப்பதும், பெண்மகள் இளமையில் கைம்மை எய்தினால் வேறு களைகணின்றி, நர கிடை வீழ்ந்து வருந்துவதும், இன்னோரன்ன பிற நிகழ்ச்சிகளும் எத்தகைக் கொடுமைகள்! அன்பர்களே! உன்னுங்கள். வழுக்கி வீழ்ந்த சகோதரிகள் (Fallen Sisters) நிலையை நினைக்கும்போது கண்ணீர் பெருகுகிறது. எல்லாத் துறை கட்கும் சாதி ஏற்பட்டதுபோல, விபசாரத்துக்கெனவும் ஒரு சாதி நாட்டில் ஏற்பட்டிருக்கிறது! என்ன இழிவு! என்ன இழிவு! ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழும் முறை ஏற்படல் வேண்டும். (2) பிறப்பால் சாதி :- பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டல் தொலைதல் வேண்டும். சிறப்பால் உயர்வு தாழ்வு தோன்றல் இயல்பு. உயர்குலத்தில் பிறந்தவன், எத்தகைக் கயமைத்துறை யில் இழிந்து விளையாடினும், அவனை உயர்ந்தவனாகக் கருதவேண்டுமென்னும் நியதி இயற்கைக்கு அரண் செய்வ தன்று. ஒருவனுக்கு உயர்வளிப்பது ஒழுக்கமன்றிப் பிறப்பன்று. தொழின்முறை பற்றி எழுந்த பிரிவு, பிறப்பைப்பற்றி எழ லாயிற்று. அதைக் குலைத்தல் வேண்டும். இப்பொழுது அஃது இயல்பில் குலைந்தே வருகிறது. இன்னும் விரைந்து அதைக் குலைக்க முயலல்வேண்டும். அதற்கெனச் சில முறைகளைக் கடைப்பிடித்தல் நலம். (அ) பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவதைத் தொலைத்தல் வேண்டும். (ஆ) பிறப்பு வழி உயர்வு கருதி, எவரையும் ஆசிரியராகக் கோடலாகாது. கல்வி அறிவு ஒழுக்கம் உடைய ஒருவன், எவனாயினும், அவனை ஆசிரியனாகக் கொள்ளும் பயிற்சி முதிரல் வேண்டும். (இ) பிறப்புரிமை வழி நிகழும் வினைகள், வழிபாடுகள் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும். (ஈ) பிறப்பால் உயர்வு கருதி, எவர்க்கும் வந்தனை வழிபாடுகள் நிகழ்த்தலே கூடாது. ( உ ) தீண்டாமை விலக்கல் :- மக்களுக்குள் தீண்டாமை வகுத்ததினுங் கொடுமை பிறிதொன்றில்லை. அஃதொரு பெருநோயாய்ப் பாரதமாதாவைப் பிணித்திருக்கிறது. சிலர், தமது நலங் கருதி ஒருபோழ்து கொண்ட முறைகள் இப்பொழுது நாட்டையே அரிக்கின்றன. தீண்டாமையால் நாட்டுக்கு நேர்ந்துள்ள இடுக்கண்களை உணர்ந்தும், இன்னும் நம்மவர் அந்நோயைப் போக்கிக்கொள்ள மனங்கொள்கிறாரில்லை. தீண்டாமைக் குற்றம் பிராமணரிடத்தில் மட்டும் இல்லை; பிராமணரல்லாதார்பாலும் அக்குற்றம் உண்டு. தீண்டாமையில் பிராமணரினும் பிடிவாதமாகச் சில பிராமணரல்லாதாரிருத்தல் எனக்குத் தெரியும். பிராமணரல்லாதார் இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கம் என்று ஒன்று தோன்றி யிருக்கிறது. அதன் நோக்கம் என்னை? பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாது, பிராமணரும் தாமும் எல்லா வழியிலும் ஒத்து வாழல் வேண்டுமென்பது. அது காரணமாகப் பலதிறப் பிணக்குகளும் நிகழ்ந்து வருகின்றன. பிராமணரல்லாதார், பிராமணருடன் சமத்துவம் பெறமுயல்வது போற்றற்குரியதே. ஆனால், பிராமணருடன் போராடி, அவருடன் ஒத்து வாழ எண்ணும் பிராமணரல்லாதாருள் எத்துனைபேர் தீண்டாமை விலக்கை ஏற்றுக்கொள்பவர்? அதற்கு உழைப்போர் எத்துணை பேர்? ஒரு சிலர் இருக்கிறார். பெரும்பான்மையோர்க்குத் தீண்டாமை விலக்கில் கவலையுண்டா என்பதே எனது கேள்வி. பறையர், பறையர், தீண்டல் கூடாது என்று ஒதுங்கிப் பார்ப்பனருடன் மட்டும் சமத்துவத்துக்குப் பார்ப்பனரல்லாதார் போராடினால், அப் போராட்டத்துக்கு இயற்கை அன்னை அருள் செய்வளோ? பிராமணரல்லாதார், பிராமணருடன் கலக்க முயல்வது போலத் தம்முடன் தீண்டாதார் என்று சொல்லப்படும் மக்கள் கலக்கப் பிராமணரல்லாதார் இடந்தரல் வேண்டும். அந் நல்லெண்ணம் பிராமணரல்லாதாரிடத்தில் வேரூன்றினால், அவர்தம் முயற்சிக்கு ஆண்டவன் துணை கிடைக்கும். தீண் டாமையைப் போக்கப் பிராமணரும், மற்றவரும், எல்லாரும் முயல்வாராக. போலிச் செயல்கள் தீண்டாமை போக்க முன்னை நாளில் சில அன்பர் முயன்றனர்; இந்நாளில் காந்தியடிகள் முயன்று வருகிறார். இப்பெரியோர்கள் சொல்வழி நின்று கடனாற்றச் சாதிக் கூட்டத்தார் ஒருப்படுகிறாரில்லை. ஆனால் அவர்களுடைய திருவுருவப் படங்களைப் பூசிக்கவும், அவைகட்குத் திருவிழாச் செய்யவும் ஒருப்படுகிறார். தீண்டாமையை விட்டொழிக்க நம்மவர் நடுக்குறுகிறார். கோயில், குளம், தெரு முதலிய பொது இடங்களிலாதல் ஏழைமக்கட்கு உரிமையுண்டா? இல்லையே! தீண்டாமையுள்ள மட்டும் நாட்டுக்கு உய்வில்லை என்பது ஒருதலை. வாய்ச் சீர்திருத்தம், வாய் வேதாந்தம் முதலியவாற்றால் பயன் விளை யாது. தீண்டாமை உன்னும் மனோநிலை மாறுதல் வேண்டும். சாதியுடையார், சாதியில்லாத ஆதிதிராவிடர் முதலியோரிடம் நன்றாகப் பழகல்வேண்டும். அப்பழக்கத்தால் வேற்றுமை யொழியும். சாதியில்லாத ஆதிதிராவிடர்களிற் கல்வி அறிவு ஒழுக்கமுடையாரைக்கொண்டு, சில தெய்வ வினைகளும் நிகழ்வித்தல் வேண்டும். கோயில்கள் :- சத்தெனுஞ் செம்பொருளை உன்னுதற்கும், போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்து கொண்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றொரு கூட்டத் தார்அங்கும், இன்னொரு கூட்டத்தார் உங்கும் நின்று கடவுளை வழிபடல் வேண்டுமாம்! கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு! கடவுளை மரம் செடி கொடி பாம்பு சிலந்தி யானை முதலியன பூசித்தன என்று புராணங்கள் புகல்கின்றன. கடவுள் உருவங்கள் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின் றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமை யிருக்கும்போது, ஆறறிவுடைய மக்களுக்கா அவ்வுரிமையில்லை? சாதியார் கொடுமை என்னே! என்னே! கோயில்களை எப்படித் திருத்துவது? இரண்டு வழி குறிக்கலாம். ஒன்று, சாதிக்கோயில்களுக்குப் போகாமலிருப்பது; மற்றொன்று சத்தியாக்கிரகத்தால் மக்களுரிமையை நிலை நாட்டுவது. மடங்கள் :- பௌத்த சமயத்துக்குப் பின்னரே மடங்கள் பெரிதும் ஏற்பட்டன. சமய ஞானத்தை வளர்ப்பது மடங்களின் நோக்கம். ஒரு பற்றுமில்லாத சந்நியாசிகளே மடாதிபதிகளாக அமர்கிறார்கள். அச் சந்நியாசிகளைத் தலைமைகொண்ட மடங்களிலும் சாதிப்பேய் புகுந்திருக்கிறது! மடங்களையும், மடாதிபதிகளையும் குறை கூற வேண் டும் என்பது எனது நோக்கமன்று. நீண்டநாள் பழக்க ஒழுக்கத் துக்கு மடங்களும் மடாதிபதிகளும் அடிமைப்பட நேர்ந்திருப்ப தொன்றையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன். யாண்டாயினுமுள்ள ஒரு மடாதிபதி நாட்டுநிலை சமயநிலை முதலியவற்றை எண்ணிச் சமரசத்தை வளர்க்கப் புறப்படுவரேல், அவரைத் தெய்வம் போல் போற்றுவேன். காலதேச வர்த்தமானத்துக் கேற்றவாறு முறைகளை மாற்றுவதால் தீங்கு நேரிடாது; நலனே உறும். மடங்களையும், மடாதிபதிகளையும் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பொதுமக்கட்கு உண்டு. சத்தியாக்கிரகம் சிறந்த கருவி என்று சொல்ல வேண்டுவதில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் இப்பொழுது தென்னாட்டில் பிராமணர் - பிராமணரல் லாதார் பிணக்கு யாண்டும் இருத்தல் உண்மை. இப் பிணக்கு, தொடக்கத்தில் அரசியலை ஒட்டி எழுந்தது. இப்பொழுது அது சமூகத்தில் குடியேறிவிட்டது. அதனால் விளைந்துவரும் பயன் என்னை? பிராமணருக்குள் மிக உரமான ஒற்றுமை நிலவி வருகிறது. பிராமணர் மகாநாடுகள் ஆங்காங்கே கூடிவருகின் றன. சாதி வரம்பு கடந்து வாழ்வு நடாத்திய சில பிராமணரும் பழைய இருட்டில் புகலாயினர். சாதி மகாநாடுகள் பிராமணரல்லாதாருள் என்ன நிகழ்ந்து வருகிறது? பிராமணரல்லாதாருள் ஒவ்வொரு சாதியாரும் சாதி மகாநாடு கூட்டி வருகிறார். சாதி அழிவிற்காக இம்மகாநாடுகள் கூட்டப் படுகின்றன என்று சிலர் சொல்கிறார். அந்நுட்பம் எனக்கு விளங்கவில்லை! பழையபடி சாதிகள் உரம்படுமென்று எனது சிற்றறிவிற்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு சாதியாரும் சட்ட சபை இருக்கைகளில் இடம்பெறத் தீர்மானஞ் செய்வது என்ன காட்டுகிறது? ஆகவே, பிராமணர் பிராமணரல்லாதார் பிணக் கால் நாட்டில் ஒற்றுமை விளையாது, வேற்றுமை விளைந்து வரல் கண்கூடு. இஃது அரசியல் மகாநாடன்றாதலின், ஈண்டு அரசியல் துறை பற்றிப் பலபடக் கூற யான் விரும்புகிறேனில்லை. எடுத்த பொருளுக்கேற்ப இரண்டோர் உரைபகர விழைகிறேன். நாட்டுக்குரிய தொண்டு நமது நாட்டில் இருவினை நிகழல்வேண்டும். ஒன்று நாட்டு விடுதலை; மற்றொன்று நாட்டிலுள்ள குறைபாடு களைக் களைந்து சமரசப்படுத்துவது. அதற்கோர் அமைப்பு வேண்டும்; இதற்கோர் அமைப்பு வேண்டும். முன்னதற்குப் புதியதோர் அமைப்பு காணவேண்டுவதில்லை. காங்கர என்னும் பழைய அமைப்பு ஒன்றிருக்கிறது. அரசியல் விடுதலைப் போருக்கு அதைக் கருவியாகக் கொள்ளலாம். மற்ற அமைப்புக் களில் அரசியலைப் புகுத்தாது, சமூக சீர்திருத்தத்துக்கென, அவற்றைப் பயன்படுத்தலாம். இவ்விண்ணப்பத்தை ஜடி கட்சி (பிராமணரல்லாத)த் தலைவரை நோக்கிச் செய்து கொள்கிறேன். ஜடி கட்சியார், காங்கரஸில் சேர்ந்து, தேசத் தொண்டு செய்யுமாறும், அன்னார் தமது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைச் சமூக சீர்திருத்தத்துக்கெனப் பயன் படுத்துமாறும் வேண்டுகிறேன். விதிமுறை அமைப்பு விரும்புவோர் அந்நெறி பற்றிச் செல்வாராக. அவ்வமைப்பை விரும்பாதார் யான் குறிப்பிடுஞ் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உழைப்பாராக. அது மக்களாகப் பிறந்த அனைவர்க்கும் உரியது. சன்மார்க்க சங்கம் சன்மார்க்க சங்கத்தைப்பற்றி முன்னர் ஒருமுறை நவசக்தி பத்திரிகையில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். சங்கம் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுக ஒரு கூட்டம் வேண்டற்பாலது. அதுவே சன்மார்க்க சங்கம் என்பது. (1) சங்க நோக்கம் என்னை? (2) சங்க அங்கத்தவர் யாவர்? (3) நிர்வாக அங்கத்தவர் யாவர்? (4) அமைச்சர் எவர்? (5) தலைவர் எவர்? (6) சந்தா எவ்வளவு? இவ்வினாக்கட்கு யான் இறுக்கப்புகும் விடை சிலர்க்கு வியப்பூட்டும். (1) சங்க நோக்கத்தையும், அந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க முறைகளையும் ஈண்டு விரிக்கில் அவை பெருகும். அவை தொன்றுதொட்டு நிலவி வருவன. ஆனால் காலநிலைக் கேற்றவாறு அவை ஓரளவில் நடைமுறைப் பொருட்டுக் கணிக்கப்படல் வேண்டும். ஈண்டு அவற்றைப் பற்றிப் பொதுப்படச் சுருங்கச் சொல்கிறேன். உயிர்த் தொண்டு கடவுள் தொண்டாம் சத்தாகிய கடவுள், யாண்டும் வீற்றிருத்தலால், எவ்வுயிர்க் கும் மனமொழி மெய்களால் தீங்கு நிகழ்த்தாது, தன்னுயிரைத் தான் பரிந்து ஓம்புமாறு போல், மன்னுயிரையும் ஓம்பி, அவ்வுயிர் நலன் கருதித் தொண்டு செய்தல் சங்கத்தின் தலையாய நோக்கம். இப் பெருநோக்கத்தை நிறைவேற்ற அகமுகத்திலும் புறமுகத் திலும் பணி செய்தல் வேண்டும். அகமுகப் பணிகளாவன:- அகத்திலுள்ள மெய்ப் பொருளைக் காணவேண்டி, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீநீர்மைகளைக் களைதல், கொலை களவு கள் காமம் பொய்யெனும் ஐம்பெரும் பாவம் நிகழாதவாறு தன்னைக் காத்தல் முதலியன. புறப் பணிகளாவன:- தேசத்தொண்டு, அத்தொண்டிற்கு இடையூறாக உள்ள குறைகளைக் களைதல் முதலியன. தேசத் தொண்டும் காலநிலையைப் பொறுத்து நிற்பது. இப்பொழுது நமது நாட்டிலுள்ள குறைபாடுகளில் கவலை செலுத்தி, அவற்றைக் களையப் பாடுபடல் சிறந்த தேசத்தொண்டாகும். சுதேசியம், பெண்ணுரிமை, தீண்டாமை விலக்கல், வகுப்புப் பூசலொழித்தல், கருத்து வேற்றுமைக்கு மதிப்புக் கொடுத்தல், தேசத்திற் பிறந்தாரிடை அன்பு வளர்த்தல், கண்மூடி வழக்க ஒழுக்கங்களை அன்பு வழியில் தொலைத்தல் முதலிய அறத் துறைகளை ஓம்ப முயலுதல் இக்காலத்துக்குரிய சிறந்த தேசத் தொண்டாகும். இதைப்பற்றி இன்னும் விரிக்கிற் பெருகும். (2) உலகிலுள்ள அனைவரும் சன்மார்க்கத்தை விரும்பு கிறார்; ஆனால் சிலரே விரும்பும் வழி நிற்க முயல்கிறார்; அவ்வழி நிற்பவரோ மிகச் சிலர். இம் முத்திறத்தாருஞ் சன் மார்க்க சங்க அங்கத்தவராவர். ஆகவே, இவ்வுலகிலுள்ள கடவுள் பிள்ளைகள் அனைவரும் சன்மார்க்க சங்க அங்கத் தவரென்க. (3) (அவருள்) நிர்வாக சபையார் தம்முயிர்போல், மன்னுயிரையும் கொண்டு ஒழுகும் அருளொழுக்கத்தில் தேர்ச்சி பெற்றவர். (4) அமைச்சர் : நமது கண்முன் காட்சியளிக்கும் இயற்கை அன்னையார். (5) தலைவர் : சத்தெனுஞ் செம்பொருளாகிய அருட் கடவுள். (6) சந்தா : உயிர்களிடத்துச் செலுத்தும் அருள். இவை சங்கத்தின் அமைப்பாகும். சன்மார்க்க சங்கத்தின் அமைப்பின் வகை குறித்துச் சமயம் நேர்ந்துழி இன்னும் விரித்துக் கூறுவேன். இச் சன்மார்க்க சங்கமே என்னால் அடிக்கடி குறிப்பிடப்படுவது. இப்பெருஞ் சங்கத்துக்குக் கிளைகளாகப் பல சங்கங்கள் ஆங்காங்கே அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் கிளைச்சங்கம் அமைக்கலாம். வீட்டுத் தலைவனும் தலைவியும் முறையே சங்கத்தின் தலைவராகவும் அமைச்சராகவும் இருக்கலாம். வீட்டிலுள்ள மற்றவர் சங்கத்தின் அங்கத்தவராக லாம். இவர் சங்க நோக்கத்தை நிறைவேற்ற முயலல் வேண்டும். சன்மார்க்க போதனைக்கென ஒரு சங்கம் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்துக் கொள்ள லாம். சங்கத்துக்கெனப் பெருங் கட்டிடங்கள் எழுப்பவேண்டுவ தில்லை. ஓர் அழகிய சிறு நிலையம் சாலும். சங்கத்துக்கெனத் தலைவர் அமைச்சர் முதலியோரைத் தெரிந்தெடுத்தல், சந்தா சேர்த்து வரவு செலவு கணக்குப் படித்தல் முதலியன வேண்டா; வேண்டா. தேர்தலும், பொருளீட்டமும் மக்களைச் சன் மார்க்கத்தில் செலுத்தா. அவை முனைப்பை எழுப்பிப் போர் மூட்டும். சங்கத்தின் எவ்வினைக்காதல் பொருள் வேண்டி யிருப்பின், அவ் வினைக்கெனப் பொருள் சேர்த்து, அவ்வினை யாற்றல் வேண்டும். பின்னை அப்பொருளில் மிகுதி நின்றால், அதை உடனே ஏழை மக்கட்குப் பங்கிட்டுக் கொடுத்தல் வேண்டும். பெரும் பொருள் செலவாகும் வினை ஒன்றும் சங்கத்தில் நடைபெறுதல் கூடாது. சங்கத்துக்கெனத் தனிநிதி கூடவே கூடாது. பெருநிதியால் இக்கால மடங்களும் கோவில்களும் பேயுறையும் இருட் குகைகளாக மாறியதொன்றே நமக்கு எடுத்துக்காட்டு. ஆதலால், விலங்குணர்வும் பேயுணர்வும் தோன்றாத முறையில் சங்கத்தை நடாத்தல் வேண்டும். சங்கத்தில் அருளொழுக்கத்தில் முதிர்ச்சி பெற்றோரைக் கொண்டு சன்மார்க்க போதனை செய்விக்கலாம். சங்க நோக்கத்தை ஒட்டிப் பலதிறத் தொண்டுகள் செய்யலாம். சன்மார்க்கம் இன்னது என்றும், சன்மார்க்கத்துக்கு இடையூறாகவுள்ள கொடுமைகள் இன்ன இன்ன என்றும் மிகத் தெளிவாக இராமலிங்க சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவ்வறிவுறுத்தல்களிற் சில வருமாறு:- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணம் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வணங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவுறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறஎவ் வுலகும் வாழ்ந்தோங்கக் கருதிஅருள் வழங்கினைஎன் றனக்கே உலைவரும்இப் பொழுதேநற் றருணமென நீயே உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மையுரைத் தவனே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்க ளென்றும் மன்னுகின்ற தேவரென்றும் மற்றவர்கள் வாழும் பதமென்றும் பதமடைந்த பத்தரநு பவிக்கப் பட்டஅனு பவங்களென்றும் பற்பலவா விரிந்த மதமொன்றுந் தெரியாதே மயங்கிய என் றனக்கே வெட்டவெளி யாயறிவித் திட்டஅருள் இறையே சதமொன்றுஞ் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரமன் றெனவே ஆதியிலென் உளத்திருந்தே அறிவித்த படியே அன்பாலின் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் ஓதியுணர்ந் தோர்புகழுஞ் சமரசசன் மார்க்கம் உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்தசிவ நிறைவையுள்ளே பெற்றுமகிழ்ந் தேனே தயையுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே இங்கவர்கள் தம்மோடுங் கூடி நயமுறுநல் லருள்நெறியிற் களித்துவிளை யாடி நண்ணுகஎன் றெனக்கிசைந்து நண்புறுசற் குருவே உயிலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுமணி மன்றில் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச் செழித்திடுக வாழ்கவெனச் செப்பியசற் குருவே பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே போதாந்த முதலாறும் நிறைந்தொளிறும் ஒளியே மருளுடையார் தமக்குமருள் நீங்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும் துங்கமே பெருஞ்சற் சங்கநீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்தனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் மார்க்கமெல்லாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மையிது தூக்கமெல்லாம் நீங்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியநீர் நன்மார்க்கஞ் சேர்வீர்இந் நாள் இச் சன்மார்க்கத்தில் சேருமாறு எல்லாரையும் வேண்டுகின் றேன். வந்தேமாதரம். இயற்கை வைத்திய மகாநாடு (சென்னையில் சொளந்தர்ய மஹாலில் கூடியது) - 1936ஆம் வருடம் மே மாதம்23, 24ஆம் நாள்- தோற்றுவாய் தோழர்களே! இம் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் பேறு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பேற்றை எனக்கு வழங்கிய உங்கட்கு எனது நன்றியறிதல் உரியதாக. யான் இதற்கு அருகனல்லன்; யான் பல துறையில் உழல்பவன்; இயற்கை வைத்திய முறையில் கைபோனவனுமல்லன். அத் துறைவல்ல ஒருவரே இங்கே தலைமை வகித்தற்கு அருகராவர். இந்நாளில் பலவித மகாநாடுகள் கூடுகின்றன. அவை களுள் உயிர்போன்றது இயற்கை வைத்திய மகாநாடு என்று கூறல் மிகையாகாது. இயற்கைவழி மக்கள் வாழ்வு அரும்பி மலர்ந்தால், உலகில் வளம், வீரம், ஞானம், கலை முதலியன ஆக்கமுறும். இம் மகாநாட்டைக் கூட்ட முயன்ற அன்பர்களை வாழ்த்துகிறேன். இயற்கை வாழ்வு உயிர் தாங்கும் பிறவிகள் பல. அவற்றுள் விழுமியது மக்கள் பிறவி. மக்கள் பிறவி விழுமியது என்று சொல்லாத சான்றோரில்லை. மக்கள் பிறவி எப்பொழுது விழுப்பமுடையதாகும்? அப்பிறவியை நல்வழியில் பயன்படுத்தினால் அது விழுப்ப முடையதாகும்; இல்லையேல் அது விழுப்பமுடையதாகாது. மக்கள் பிறவியில், பெறுதற்கரிய இன்பத்தைத் துய்க்கும் வாய்ப்பு உண்டு. இதற்குக் கருவியாக அமைந்துள்ளது உடம்பு. உடம்பால் அறிவுவிளக்கமும் இன்பப் பேறும் உண்டாகும். உடம்பு உயிருடனிருந்து துணைபுரிவதுபோலப் பிரிதொன்று துணைபுரிவதில்லை. உடல் நலன் உயிர் நலனாகும். இத்தகைய உடலை நல்வழியில் ஓம்புதல் அறம். உடம்பை நல்வழியில் ஓம்புதற்குரிய வழி துறைகள் பல உண்டு. அவற்றுள் தலையாயது இயற்கை வாழ்வு. இயற்கை யுடன் இயைந்து வாழ்தலே சிறப்பு. இயற்கை, இறையின் உடல். இறையை உயிரென்றும் இயற்கையை உடலென்றும் உண்மை கண்டோர் கூறியுள்ளார். இறையின் உடலாகிய இயற்கையுடன் இயைந்து வாழ்வது இறையுடன் இயைந்து வாழ்வதாகும். இயற்கையை விடுத்து, இறை, இறை என்று கூவுவது அறி யாமை. இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்றார் வன்தொண்டர். முறைகள் இயற்கையுடன் இயைந்து வாழும் முறைகள் பலதிறத்தன. அவற்றுள் சிலவற்றை ஈண்டுவிரிக்கினும் தலைமையுரை நீளும். ஆதலால், மிகமிகச் சுருங்கிய முறையில், முறைகளைச் சொல்ல முயல்கிறேன். வைகறைத் துயிலெழு என்பது ஔவையார் திருவாக்கு. இப்பழக்கம் மிகச் சிறந்தது. பொழுது புலரும் வேளையில் - பறவைகளின் ஒலி எழும் நேரத்தில் உறங்குவது தவறு. வைகறைத் துயிலெழுந்து நடந்து காலைக்கடன்களை முடித்தல் வேண்டும். பின்னர் உடற்பயிற்சி செய்வது பொருத்தம். பயிற்சியின்போது இள ஞாயிற்றின் உயிர்ப்பொளி படருங் காற்றில் மூழ்குவது இயல்பாகவே நிகழும். உடற்பயிற்சி பலவகை. அவற்றுள் இங்கே குறிக்கத்தக்கன சில. அவை தண்டாலெடுத்தல், பந்தாடல், குதிரையேற்றம், நீந்தல், உலவுதல், ஆசனங்கள் முதலியன. இவற்றுள் ஏதாவ தொன்றைக் கொள்வது ஒழுங்கு. ஆசன முறைகள் சாலச் சிறந்தன. இம் முறைகள் இப்பொழுது மீண்டும் உயிர்பெற்று வருதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிகுறியாகும். ஆசனப் பயிற்சி அழுக்குகளையெல்லாந் தள்ளி உடம்பைப் பொன் போலாக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடற்பயிற்சிக்குப் பின்னர்த் தூய நீராடுதல் வேண்டும். பின்னே பிராணாயாமஞ் செய்யப் புகலாம். பிராணாயாமத் தால் விளையும் நலன்களை என்னென்று கூறுவேன்! அதனால் நரை திரை மூப்பை யொழிக்கலாம்; சாக்காட்டைப் போக்க லாம்; என்றும் இளமையோடிருக்கலாம்; பெறுதற்கரிய பேரின்பத்தை நுகரலாம். பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப் பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராண னடைபேறு பெற்றுண் டீரே ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கு முரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடையோனே என வரூஉந் திருமூலர் திருமொழிகளை நோக்குக. பிராணாயாமத்தைத் தக்கார்மாட்டுப் பயின்று தெளி வடைந்த பின்னர்ச் செய்வது நல்லது. அதைத் தவறாகச் செய்தால் கேடு விளையும். இப்பயிற்சிகளால் நிலைத்த நெஞ்சம் பெறலாம். அந்நெஞ்சால் அன்பாகிய இறைவனை நினைந்து வழிபட்டுப் பொருந்திய உணவு கொள்ளுதல் வேண்டும். பொருந்திய உணவு என்பது கவனிக்கத் தக்கது. நம் முன்னோர் உண்ட உணவு மிகப் பொருந்தியது. அந்நாளில் தீட்டிய அரிசியில்லை; காப்பி, தேநீர், ஓவல்டய்ன், கோக்கோ முதலிய பானங்களில்லை; மேல்நாட்டுக் குடி வகைகளில்லை; ஹோட்டல்களில்லை; மிட்டாய்க் கடைகளில்லை. பிற ஆபாசங்களில்லை; முன்னோர் கொழியல் அரிசிச் சோற்றை உண்டனர்; பசிய காய்கனிகளைத் தின்றனர்; கீரை வகைகளை அருந்தினர்; நீர்மோரையும் இளநீரையும் பருகினர்; நீண்ட காலம் வாழ்ந்தனர்; நல்ல பிள்ளைகளைப் பெற்றனர்; இக்கால நாகரிகத்தில் - நகர வாழ்வில் - ஹோட்டல்களின் மிடைவில் மக்கள் எங்ஙனம் பொருந்திய உணவு கொள்ளுதல் கூடும்? இது நிற்க. பழைய காலத்தில் தொழில் முறைகளும் இயற்கை வாழ்வுக் குரியனவாக அமைந்திருந்தன. இப்பொழுதோ? சொல்லலும் வேண்டுமோ? இக்காலம் இயந்திர காலம்! நாகரிகக் காலம்! இக்காலத் தொழில் முறைகள் மக்களை இயற்கையுடன் வாழவிடுங்கொல்? முன்னாளில் மக்கள் இயற்கையுடன் பல வழியிலும் இயைந்து வாழ்ந்து வந்தமையால், அவர்களிடத்திருந்து பண்ணும், பாட்டும், காவியமும், ஓவியமும், அன்பும், அறமும், பிறவும் பிறந்தன; பெருகின. அவர்கள் இயற்கை இன்பத்தை இவ்வுலகிலேயே நுகர்ந்து வந்தார்கள். இயற்கை இன்பத்தி னின்றும் மக்கள் வாழ்வும், குடும்பமும், கிராமமும், நாடும் பரிணமித்தன. மக்கள் பிணியின்றி நீண்டநாள் வாழ்ந்தார்கள். இயற்கையற்ற செயற்கையில் பிறப்பது கவலை. கவலை நரம்புக் கட்டுகளைக் குலைத்து, அவற்றை அரித்து அரித்துத் தளர்த்தும். மக்களுக்குக் கவலை கூடாது. கவலை வாழ்வு கொடிது; கொடிது. கவலையில்லா வாழ்வின் சிறப்பைக் குறிக்க ஈண்டொரு பழம்பாட்டை எடுத்துக் காட்டுகிறேன். யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன் றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே - புறநானூறு இப்பாட்டை உற்று நோக்குக. இயற்கை வைத்தியம் இயற்கையோடு இயைந்து வாழ்வோர்க்கு எவ்விதப் பிணியும் வாராது. அவர்க்கு எத்தகைய வைத்தியமும் வேண்டுவ தில்லை. இயற்கையினின்றும் வழுக்கி வீழ்ந்தோரை நோய் அடர்க்கும். அவர்க்கு வைத்தியம் வேண்டற்பாலது. வைத்தியத் துள் இயற்கை வைத்தியம் பொருந்தியது. இயற்கை வைத்தியம் இயற்கை வாழ்வை மீண்டுங் கூட்டும். இம் மகாநாட்டில் இயற்கை வைத்தியத்தைப் பற்றிப் பேசப் பல பேரறிஞர் முன்வந்துள்ளனர். அவர் முன்னிலையில் இயற்கை வைத்தியத்தைப்பற்றி யான் விரித்துக் கூறுவது அநா வசியம். இயற்கை வைத்தியத்தில் யான் வல்லவனுமல்லன். யான் நூலாராய்ச்சியோடு நிற்பவன். இயற்கை வைத்தியத்தைப் பற்றி இரண்டோருரை பகர்ந்து எனது தலைமை உரையை முடித்துக்கொள்கிறேன். இக்கால நாகரிக முறைப்படி அமைந்துள்ள நகரங்களும், அவற்றைப் பார்த்து நடிக்கும் கிராமங்களும் இயற்கை வாழ்வை விடுத்து வருதல் கண்கூடு. நகரமாந்தர் போதிய ஒளியுங் காற்றும் படர்ந்து படியாத மாட மாளிகைகளில் இருக்கிறார். பசுஞ் சோலைகளை அவர் காண்டலரிது. தீட்டிய அரிசியும், பசை யற்ற காய் கனி கீரைகளுமே அவர்க்குக் கிடைக்கின்றன. நினைந்தபோதெல்லாம் காப்பிக் கடைகளில் நுழைந்து, பொருந்தா உணவுகளை அவர் உண்கிறார். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் உடற்பயிற்சி செய்வதில்லை. அவர் காண் பன கேட்பன படிப்பனவெல்லாம் பரபரப்பூட்டுவன. இம்மக்கள் எங்ஙனம் இயற்கையோடியைந்து வாழ்தல் கூடும்? பரிதாபம்! இயற்கையினின்றும் வழுக்கி வீழ்ந்து செயற்கையில் நெளிவோர் நோய்வாய்ப்படுதல் இயல்பு. நோய், பிணியால் உண்டாவது, நோய் என்பது துன்பம், பிணி என்பது கட்டு. போதிய அளவு ஒளி காற்றின்மையும், ஊற்று நீரின்மையும், பொருந்தா உணவும், மிகையுணவும், அளவு கடந்த உழைப்பும், இன்ன பிறவும் உறக்கத்தைக் கெடுத்து மலத்தைப் பிணிக்கின்றன. மலப்பிணிப்பே, மலக்கட்டு அல்லது மலச்சிக்கல் என்பது. நல்லுடலுக்கு அறிகுறி மலச்சிக்கலின்மை. மலம், சிக்கிச் சிக்கிக் கரிந்து கரிந்து நஞ்சாகிப் பல உறுப்புக்களிடை நுழைந்து நின்று நோயை உண்டுபண்ணுகிறது. நஞ்சு படிந்து நிற்குமிடத்தில் நோயுண்டாகும். நோய்க்கு மருத்துவர் ஒவ்வொருவிதப் பெயர் சூட்டியுள்ளனர். எல்லா நோய்கட்கும் அடிப்படை மலச்சிக்கல் என்பதை மட்டும் மறத்தலாகாது. மலப்பிணியால் நோயுறுவோர் மருத்துவரை நண்ணு கிறார். மருத்துவர் மருந்துகொடுக்கிறார். மருந்து - சிகிச்சை, நெருப்பில் நெய்விடுவது போன்றது. மருந்தால் நோய் போகிறது என்று எண்ணுவது பாவனையே யாகும். மருந்தால், உற்றநோய் தீர்வதில்லை; நோய் ஒடுங்குவதுபோல் தோன்றும்; பின்னே வேறு பல புது நோய்கள் வீறிட்டெழும். நோயாளர் என் செய்தல் வேண்டும்? நோயாளர் மூலகாரணத்தைத் துருவிப் பார்ப்பாராக. பார்த்தால், இயற்கை வாழ்வினின்றும் வழுவியதே மூலகாரணம் என்பது நன்கு புலனாகும். இயற்கையை விடுத்த பாவத்துக்குக் கழுவாயாக மருந்துண்ணல் பொருந்தியதாகாது. மருந்தை விடுத்து, இயற்கை அன்னையை நாடி, அவளை மறந்த குற்றத்தை யுணர்ந்து, கசிந்து கசிந்துருகி, அவள் வழி நிற்க உறுதிகொள்ளல் வேண்டும். இதுவே கழுவாய் தேடுவதாகும். இயற்கைவழி நிற்பதே இயற்கை வைத்தியம் என்று சொல்லப்படுகிறது. இயற்கை வைத்தியமாவது இயற்கையோடு இயைந்து வாழ்வது. ஒளியாரும், காற்றாரும், நீராரும், மண்ணாரும், கனியாரும், கீரையாரும் இயற்கை வைத்தியராவர். மலச் சிக்கலுக்கு நோன்பாருஞ் சிறந்த வைத்தியர். நோன்பினால் போகாத நோயில்லை. இயற்கை வைத்தியத்துக்கெனப் பல சங்கங்கள் மேல் நாட்டில் காணப்பட்டிருக்கின்றன. அவற்றின் சார்பில் பல சஞ்சி கைகள் வெளிவருகின்றன; வேறு பல முயற்சிகளுஞ் செய்யப்படு கின்றன. நமது நாட்டிலும் சங்கங்களும் சஞ்சிகைகளும் பிறவும் பெருகுதல் வேண்டும். அம்முயற்சியில் தலைப்படுமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இயற்கை வாழ்வே உரிமை வாழ்வு; இன்ப வாழ்வு. குற்றங் குறைகளை மன்னிக்க. வந்தேமாதரம். 31-வது தமிழர் மகாநாடு (தமிழ் மாகாண காங்கர) காஞ்சியில் கூடியது - 1925ஆம் வருடம் நவம்பர் மாதம் 21, 22ஆம் நாள்- எழுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! நாட்டின் விடுதலைக் குரியதா யெழுந்த ஒரு பெரும் இயக்கம் விழுந்துள்ள இக்காலத்தில், அவ்வியக்கத்திற் புகுந்து, எவ்வேற்றுமையுங் கருதாது உழைத்துச் சிறைக்கோட்டம் நண்ணிய தலைவர்களுக்குள்ளும் பிணக்கு நிகழ்ந்துவரும் இந்நேரத்தில், அப்பிணக்கான் எம்மூலையினும் வகுப்பு வேற்றுமையும் காழ்ப்பும் கனன்றெரியும் இவ்வேளையில், தமிழ் நாட்டின் முப்பத்தோராவது அரசியற் பெருங்கழகம், உல கன்னையார் முப்பானிரண்டறம் வளர்த்த இக் காஞ்சியம் பதிக்கண் இன்று கூடி இருக்கிறது. இக்கூட்டத்துக்குச் சிறி யேனைத் தலைவனாக நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். இத்தெரிவுக்கு உளங்கொண்ட உங்கள் உழுவலன்பிற்கு எனது நன்றியறிதலான வணக்கஞ் செலுத்துகிறேன். நீங்கள் அடி யேற்குப் பணித்துள்ள தொண்டாற்றப் போதிய ஆற்றல் என் பால் இல்லை என்பதை யான் அறிவேன். ஆயினும், உங்கள் அன்பினின்றும் பிறந்த ஆணைவழி நின்று, உங்கள் துணை கொண்டு, ஒல்லும்வகை எனது கடனாற்ற முயல்கிறேன். குற்றங் குறைகள் நிகழுமேல், அவற்றைப் பொறுத்து மன்னிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். பிரிவாற்றாமை இக்காஞ்சியில் நுழைந்ததும் - இப்பெருங் கூட்டத்தைக் கண்டதும் - எனதுள்ளத்துற்ற வருத்தத்துக்கோர் அளவில்லை. இம் மகாநாட்டை ஈண்டுக் கூட்டச் சென்ற ஆண்டு, திரு வண்ணாமலையில், கூவியழைத்த - இளஞ்சிங்கம் - அந்தண வீரம் - திராவிடரத்நம் - கிருஷ்ணசாமி சர்மா எங்கே எங்கே என்று எனது நெஞ்சம் அலைகிறது. அந்தோ! எத்துணைத் தேசபக்தரைச் சென்ற ஆண்டு விழுங்கிற்று! தமிழ்நாட்டின் தொன்மையை மீண்டுங் காண முயன்று முயன்றுழைத்த அன்பர் வ. வெ. சுப்பிரமணிய ஐயர் நம்மை விட்டுப் பிரிந்தார். உயிர் போம்வரை பாரதமாதாவின் விடுதலை விடுதலை என்று முழுங்கிக்கொண்டிருந்த சிங்கஏறு சுப்ரமணிய சிவனார் நம்மினின்றும் பிரிந்தார். அரிமா நோக்கும் - பீடுநடையும் - அஞ்சா நெஞ்சும் - பெற்று, நாற்ப தாண்டு இடையீடின்றி, நகரசேவை செய்த நமதருமைத் தியாகராய செட்டியார் இவ் வுலக வாழ்வு நீத்தார். நாகை நாயகம் - தொழிலாளர் தோழர் - பக்கிரிசாமி பிள்ளையும் இத்தரை நீத்தார். தேசபக்தி - சமயபக்தி - என்னுங் கவட்டைகளுடன், கல்வி - அறிவு - அன்பு - வீரம் முதலியவற்றை, அரும்பு-மலர்-காய்-கனியாக்கொண்டு-வீசி வீசி, அமெரிக்கா வரை, தன் புயலைக் கிளப்பிய நமது மணி மரத்தின் சாய்வும், தமது தியாகத்தால் - செயலால் - அதிகார வர்க்கத்தைப் பல வழியிலும் நடுக்குறச் செய்து, நமது தேச பந்துவாய் விளங்கிய சித்த ரஞ்சன தாஸர் வீழ்ச்சியும், அவரைத் தொடர்ந்து, முடிசூடா மன்னரும், வங்கச் சிங்கமும், கோடை யிடியும், இதுபோழ்து நாட்டில் தோன்றியுள்ள உரிமை வேட் கைக்கு மூலகாரணருள் ஒருவருமாய் ஒளிசெய்த சுரேந்திரநாதர் சென்றதும் நாட்டின் தவக் குறைவேயாகும். இவர்தம் பரு வுடல்கள் மறைந்தாலும், நுண்ணுடல்கள் நமக்குள் ஊக்க மூட்டி வருகின்றன. இவர் காட்டிய வழி நின்று சேவை செய் வதே இவர்க்கு நாம் அமைக்கும் நினைவுக்குறியாகும். காஞ்சிமாநகரம் நாம் இன்று கூடியுள்ள இக் காஞ்சிமா நகரம் மிகத் தொன்மையது; சரித்திரத்தில் பேர்பெற்றது. பழந் தமிழ்நாட்டுத் தலைநகரங்களுள் இக் காஞ்சியும் ஒன்று. பாரதநாட்டிற் சிறந்து விளங்கும் ஏழு நகரங்களுள் இந்நகரமும் ஒன்று. ஐம்பெரும் பூதத்திலும் ஆண்டவன் அவ்வப் பூதமாக இருப்பவன் என்னும் உண்மையை அறிவுறுத்தும் ஐந்து தலங்களுள் இத்தலமும் ஒன்று. இதுபோழ்தும், காஞ்சியின் அமைப்பை நோக்குழிப் பழைய நகர ஒழுங்குகள் காணலாம். பலசமயபீடம் அருகர், பல்கலைக் கழகம் அமைத்து, வடமொழி தென்மொழி வளர்த்த இடம் இக் காஞ்சிமா நகரம். இக் கச்சியம்பதி, ஒரு காலத்தில் பௌத்த சமயப் பஞ்சசீலப் பெருக்கிற்கே நிலைக்களனாக நின்றது. சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணாதிபத்யம் முதலிய சமயங்கட்கும் இடந் தந்திருப்பது இத்திருப்பதி. இன்னும், அவ்வச் சமயக் கோயில்களும் மடங்களும் நமக்குக் காட்சி யளித்தல் கண்கூடு. முலிம்களையும் கிறிதவர்களையும் விலக்காது ஏற்று நிற்பது இப்பழம்பதி. இதன்கண், பலப்பல தீர்த்தங்களுண்டு. மக்கள் வளஞ் சுருங்கியுள்ள இந் நாளிலும் கலைவாணர், இசைவாணர், பலதிறத் தொழிலாளர் இந்நகரில் வதிகிறார். எல்லாக் கொள்கைகட்கும் இடமளித்த இக் காமாட்சி பீடத்தில், எல்லாக் கட்சியும் இடம் பெறுமாறு இம்மகாநாடு கூடியிருக்கிறது. தமிழ்நாடு நாம் அனைவரும் தமிழ்நாட்டின் பெயரால் ஈண்டுக் குழுமியிருக்கிறோம். அத் தமிழ்நாட்டின் தொன்மையும், தன்மையும், பிறவும் நமக்குள் ஊக்கமெழுப்பி ஒற்றுமை கூட்டுவனவாகலான், அவை குறித்து, இவண் சில உரையாதல் பகரல் வேண்டும் என்று எனது உள்ளத்தெழும் அவா என்னைப் பிடர்பிடித்து உந்துகிறது. காலத்துக்குக் காலம் எல்லை :- இதுபோழ்து நாம் வதியும் தமிழ் நாட்டின் எல்லை, பன்னிரண்டு ஜில்லாக்கள் அளவில் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரோ தமிழ் நாடு, சேரநாட்டையும் தெலுங்கு நாட்டின் ஒரு பாங்கரையும் உடன் பெற்றிருந்தது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொல் காப்பியத்துக்குப் பாயிரங் கூறப்புகுந்த ஆசிரியர் பனம்பாரனார், வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்று தமிழ் நாட்டின் வரம்பு குறித்துப் போந்தார். அவர் காலத்துக்கு முன்னர், தமிழ்நாட்டின் வடகோடு, விந்தியம் வரை முட்டியிருந்ததென்றும், அவ் வரைகடந்தும் நின்றதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. தென்கோடாகக் குறிக்கப்பெற்ற குமரி என்பது, இக்காலத்தில் ஒரு முனைக்கு வழங்கப்படினும், பழந் தமிழ் நூல்களில் அஃதோர் ஆற்றிற்கு வழங்கப்பட்டு வந்தது. அவ்வாற்றிற்குத் தெற்கே பஃறுளி என்னும் மற்றுமோர் ஆறு ஓடியதாகவும் நூல்கள் அறிவிக்கின்றன. இவ்வாறுகளின் இருப்பு, தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும், நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே என வரூஉம் புறநானூற்றானும், அழிவு, பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் - குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள எனவரூஉஞ் சிலப்பதிகாரத்தானும் அறியக் கிடக்கின்றன. குமரி நாடு இவ்வாறுகள், வளம் செய்த செழிய நிலப்பரப்பே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கடலால் கொள்ளப்பட்டது. இப் பொழுதுள்ள இந்துமகாசமுத்திரம் என்னும் பெருநீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்ததென்றும், ஆண்டே மக்கள் தோற்றம் முதல்முதல் உற்றதென்றும், அந்நிலம் பின்னைக் கடலால் விழுங்கப்பட்ட தென்றும் ஆசிரியர் எர்னட் ஹெக்கல், காட் எலியட் உள்ளிட்ட அறிஞர் பலர் தமது ஆராய்ச்சியிற் கண்ட உண்மையை உலகுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இதனை இவ்வறிஞர் எழுதிய ஹிடோரி ஆப் கிரியேஷன் (History of Creation - படைப்பு வரலாறு), லாட் லெமூரியா (Lost Lemuria - மறைந்த லெமூரியா) முதலிய நூல்களிற் காண்க. லெமூரியா என்னும் நிலப்பரப்பே தமிழ் நூல்கள் கூறுங் குமரிநாடு. இத் தொன்னிலப் பரப்பின் அழிவு போக, எஞ்சி நிற்பதே இதுபோழ்து நாம் வாழுந் தமிழ்த்தாயகம். இத் தமிழகத்தின் தொன்மையை எக்கால அளவு கொண்டு கூறுவது? அது சரித்திர காலத்தையுங் கடந்து நிற்பது. இத்தொன்மை வாய்ந்த நாட்டிற் பிறந்தவர் நாம் என்று சொல்லும்போது, என்னை அறியாது என்பால் இறுமாப்பெழுகிறது. நாட்டின் இயல் இந்நில மக்களின் வழக்க ஒழுக்கங்கள், மொழி, கல்வி, அரசு, வீரம் முதலியன கொண்ட ஒன்றே நமது தமிழ்நாடு. நாடு என்பது, வெறும் மண்ணை மட்டுங் குறிப்ப தன்றென்பதும், அம்மண்ணில் வாழ் மாந்தரது வழக்க ஒழுக்கம் முதலியன கொண்ட ஒன்றென்பதும் கருத்தில் இருத்தத் தக்கன. இயற்கை :- தமிழ்நாடு, வெப்பமும் தட்பமும் ஒப்ப வாய்க்கப்பெற்றுண்மையான், அதன் இயற்கை வளன், உடல் நலத்துக்கும் உயிர்நலத்துக்கும் உறுதுணை செய்யும் நிலையில் அமைந்து கிடக்கிறது. குளிர் மிகுந்த நாடு, மக்கள் உடல்நலம் பேணத் துணைநின்று, உயிர்க்குரிய குணநலம் அரிதே வழங்கும். வெம்மை செறி நாடோ, உடல்நலத்துக்கும் ஊறு செய்வதாகும். இரண்டும் ஒப்ப வாய்ந்த இடமே மக்கள் வாழ்விற்குரியதாகும். இப்பேற்றை நந்தமிழகம் பெற்றிருக்கிறது. இவ்வியற்கை நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பாகு படுத்தி, அதனதன் இயல்புக்கேற்ப வாழ்வு நடாத்தி, இயற்கை இன்பந் துய்த்தவர் நம் பண்டைத் தமிழ் மக்கள். இயற்கை இன்ப வாழ்வே இதுபோழ்து வேண்டற்பாலது. இயற்கை வாழ்வை உலகிடை நிறுத்த மகாத்மா காந்தி முயன்று வருதல் எவரும் அறிந்ததொன்று. மலைச் சிறப்பு தமிழ்நாட்டின் மலைகளின் நிலையும், காடுகளின் செறி வும், ஆறுகளின் ஒழுக்கும், வயல்களின் செழுமையும், கடலின் ஓதையும் எழுத்தோவியர்க்குப் பெருவிருந்தாவன. வேங்கடத் தெழுங் கடவுள் மணமும் பொதிகையிலெழுந் தென்றற்காலும் ஒன்றி விராவி நீலம் முதற்கோடுகளில் தாக்குற்றுத் தேங்குமாறு கீழும் மேலும் இடையீடின்றித் தொடர்ந்தும் அடர்ந்தும் அரண்செய்யும் மலைக்கோவையின் கோலமும், அங்ஙனந் தேங்கும் இயற்கை அமிழ்தைச் சேமித்து உயிர்கட்கு ஊட்ட நீட்டுமாபோல் அம் மலைக்கோவையினின்றுங் கவடுங் கோடும் அரும்பினாலெனச் சுருள் சுருளாகவும் திரள் திரளாகவும் இவர்ந்தும் இழிந்தும் விட்டும் தொட்டும் கருவூலங்களை யொத்து நிற்கும் வரைக் குலங்களின் அமைவும், அவற்றின் துணைபெறு சிற்றில்களென ஆங்காங்கே சிதறிச் சிதறித் திகழுங் குன்றச் சூழல்களின் பொலிவும் கண்ணையும் மனத்தையும் கவர்வனவாம். இயற்கையோடியைந்த இன்ப வாழ்வளிக்கும் இயற்கை நிலையங்களாய திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி, பழனி, சென்னிமலை, திருச்செங்கோடு, கொல்லிமலை, பச்சை மலை, திருவண்ணாமலை, கோடைக்கானல், நீலகிரி, சேர்வ ராயன் முதலிய மலைகள் உயிர்களை ஓம்பி வருகின்றன. காடு - ஆறு - வயல் - கடல் வாழ்வுக் கியைந்த காடுகளும் தமிழ்நாட்டில் அமைந் திருக்கின்றன. மலைகளொடு மிடைந்தும் தனியே சிறந்தும் செறியுங் காடுகள் - வெயில் தகைந்து அளிக்கும் காரிருள் நீழலும், வண்டு துவைப்பத் தேன் பிலிற்றும் பூங்காவனங்களினின்றும் கமழும் நறுநாற்றமும், வான்பரந்த பொழில்களின் நிறையும், கான்பரந்த தூறுகளின் துதைவும், பசுஞ்செடிகளின் ஈட்டமும், கொழுங் கொடிகளின் பின்னலும் - உள்ளத்தைக் குளிர்விப்பன வல்லவோ? வான்முகடுகளினின்றும் முடுகி, இடியென எழுந்து வீழுஞ்சாரல்களின் விரைவும், பரலையும் அறலையும் அரித் தரித்துப் பளிங்குருகிப் பாயுமாபோல் இழிதரும் அருவிகளின் முழவும், பாட்டெனப் பரந்து செல்லும் ஆறுகளின் அணியும், வேறு பல நீர்நிலைகளின் பரவலும், உரைகடந்த அகச்செவிக்கு இன்பூட்டுவனவல்லவோ? பாலியும், பெண்ணையும், காவிரியும், கொள்ளிடமும், வைகையும், பொருநையும், அகில்தாங்கி, மணிகொழித்து, அதிர்ந்தோடும் அழகை எழுத்தால் எழுதல் முடியுமோ? இவ்வாறுகள் பாய்ந்து, வளஞ் செய்யும் வயல்களின் செழுமையைச் செப்பலும் வேண்டுமோ? வயல்களின் பரந்த பசுமை, பசுங்கடல் நினைவையன்றோ ஊட்டுகிறது? மருதத் துக்கே உறையுளாய், நன்னிலங்கொண்ட தஞ்சையை நெற் களஞ்சியமாக வாய்க்கப் பெற்ற பெருமை நந்தமிழ் நாட்டுக்கு உண்டு. இத்தமிழ் நாட்டின் வரம்பில், மணியுந்தித் தரங்கம் பாடும் பாட்டுக்கு என்றாதல் ஓய்வும் உண்டோ? தமிழ் இனிமை இசைமயமான இயற்கை நிலத்தில் வாழ்வு நடாத்தி, இயற்கைத் தமிழைச் சுவைத்தவர் நம் முன்னோர். தமிழ் என்பதற்கு, இனிமை என்பது பொருள். தமிழ் தழீஇய சாய லவர் என்றும், தமிழ்சேர் காஞ்சி என்றும், புலவர் இனிமை என்னும் பொருள்படத் தமிழ்என்னுஞ் சொல்லை ஆண்டிருத் தல் காண்க. பழமை மக்கள் இயற்கையிலூருந் தமிழையே, பின்னைத் தாங்கள் அவ்வியற்கைப் பொருளுக்கிட்ட சொன் மொழிக்கும் வழங்கினர் போலும்! இயற்கை இனிமையோடு - தமிழோடு - அம்மக்கள் கொண்ட வாழ்விலெழும் இன்பக் கிளர்ச்சியால், தாங்கள் மாந்த இனிமை - தமிழ் - உறையுளாம் இயற்கையைச் சொல்லோவியமாக எழுதுவது அவர்களது பெருவிளையாட்டு. அச் சொல்லோவியங்களைக் கொண்ட இன்பப் பெட்டகங்கள் பல மறைந்தன. இப்பொழுதுள்ளன சில. அவை கலித்தொகை, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலிய நூல்கள். தமிழும் - உரிமையும் நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தங்கொண்ட நாடு இந்நாடு. ஆ! ஆ! இது நினைவிலுறும்போது உறும் இன்பத்தை என் னென்பேன்! என்னென்பேன்! அவ்வின்பம் நுகர்ந்த இக்காலத் தமிழ்ப்பாவலர் பெருமானாகிய நம் பாரதியார் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று கூறியிருத்தல் காண்க. இன்பத் தமிழ்நாட்டிற் பிறந்த நாம், இதுபோழ்து தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே? காரணமென்னை? உரிமை யிழந்தோம்; தமிழை மறந்தோம். மீண்டும் உரிமையுணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும்? தமிழ்த் தாயிடஞ் செல்வோமாக. அவள் சேவையால் உரிமையுணர்வு பெறலாம். தமிழ் மக்களே! சேவைக்கு எழுங்கள்! எழுங்கள்! அகம் - புறம் வாழ்வு :- பழந்தமிழ் மக்கள் தங்கள் வாழ்வை இரு கூறாகப் பிரித்து வாழ்ந்தார்கள். அவை அகவாழ்வு, புறவாழ்வு என்பன. அகவாழ்வாவது ஒத்த நலன், ஒத்த குணன், ஒத்தகல்வி முதலியனவுடைய ஒருத்தியும் ஒருவனும் கூடிநடாத்தும் இல்வாழ்வு. இல்வாழ்வு, இன்ப வாழ்வாக இயங்க வேண்டுமேல், அதற்குப் பொருள் இன்றியமையாது வேண்டற்பாலது. பொருளில்லார்க்கு இவ்வுலக மில் என்றார் பொய்யாமொழி யாரும். பொருள் எவ்வாறு கிடைக்கும்? அரசு பொருட் பேற்றிற்குக் கல்வியும், தொழிலும் தேவை. கல்விப் பயிற்சியும், தொழிற்பயிற்சியும் பெறுதற்குச் சிறந்த அமைப்புக்கள் இன்றியமையாதன. அமைப்புக்கள் செவ்வனே இடையூறின்றி இயங்க, நாட்டில் அமைதி நிலவல்வேண்டும். மாற்றார் பகை கடிந்து, அமைதி காக்க நல்லரசு வேண்டும். நல்லரசில்லையேல் நாடு காடாகும். ஒழுங்குபட்ட அரசிருந்தா லன்றி, அகவாழ்வெனும் இல்வாழ்வு ஒழுங்குபட நடைபெறல் அரிது. அரசு, கல்வி, பொருள் முதலியவற்றைக் கொண்டதே புறவாழ்வென்பது. இதனால் அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் உள்ள தொடர்பு நோக்கற்பாலது. அவை இரண்டும் உடல் உயிர் போன்றன. அகவாழ்வு, அவ்வந்நாட்டு இயல்புக்கேற்ற வாறு அமைந்து கிடப்பது. அவ்வாழ்விற்கு அரணாமாறு அவ்வந்நாட்டு இயல்புக்கேற்றவண்ணம் புறவாழ்வும் அமை தல்வேண்டும். அகமும் புறமும் ஒன்றுபட்ட வாழ்வே இயற்கை வாழ்வாகும். பழந் தமிழ்மக்கள் கோலிய முறைவழி, எங்கணும் வாழ்வு நடைபெற்றுவரின், உலகில் போர் ஏது? அடக்குமுறை ஏது? ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரை ஆள்வது ஏது? இப்பொழுது அகம் நம்முடையதாகவும், புறம் மற்றவருடைய தாகவும் இருத்தலால் நாட்டில் இன்பம் இல்லை. இன்ப உரிமை பெறும் வழி யாது என்று ஆராயவன்றோ நாமனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்? பழந் தமிழ் நூல்கள் வழிகாட்டுகின்றன. அவ்வழியைப் புதுக்கண்கொண்டு நோக்குவோமாக. சாதி :- பண்டைத் தமிழ் நாட்டில் பிறப்பிலே சாதிப் பாகுபாடு இருந்ததா? இல்லை என்றே கூறலாம். நிலப் பாகு பாடு ஒன்றே தமிழ்நாட்டில் நிலவியிருந்தது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றார் நந் தமிழ்ப் பெரியாரும். இடைக்காலத்தில் முளைத்த பிறப்புயர்வு தாழ்வும், தீண்டாமைக் கொடுமையும் நாட்டை அடிமைக் குழியில் வீழ்த்திவிட்டன. கொடுமை யினின்றும் நாட்டை விடுவிக்க இதுபோழ்து அன்பர் பலர் முயன்று வருகின்றனர். அம் முயற்சிக்குப் பழந் தமிழ் நூலா ராய்ச்சி பெருந்துணை செய்யும் என்பதை யான் விரித்துக் கூறவேண்டுவதில்லை. கல்வியும் மணமும் பெண்மக்கள் :- பழந் தமிழ்நாட்டில் பெண்மக்கள் நிலை எவ்வாறிருந்தது என்பதும் ஆராயற்பாலதே. அது குறித்து எனது உள்ளத்தெழும் அவாவினைக் காலத்தின் அருமை நோக்கி, அடக்கி, இரண்டோர் உரை கூறப்புகுகிறேன். தலை வனுந் தலைவியும் ஒத்த கல்வியுடையவரா யிருந்தனர் என்னுங் குறிப்பும், பெண்மகள் தனக்கினிய ஒருவனைத் தனக்குரிய தலைவனாகத் தானே தெரிந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தாள் என்னுங் குறிப்பும், இன்ன பிறவும் பழந் தமிழ்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் புலப்படுத்தும். விரிவு களவியலிற் பார்க்க. இன்பம் பெண்ணை வெறுத்தல் பேரின்பம் என்னும் பாழுங் கொள்கை இடைக்காலத்தில் தோன்றியதாகும். பெண்ணழகில் அன்புக் கடவுளுண்மை யுணரும் பெருமை வாழ்வு பெற்றிருந் தார்கள் நம் பண்டைத் தமிழ்மக்கள். இறந்துபடாது இன்றும் உள்ள பழந் தமிழ்நூல்கள், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றையே அறிவுறுத்தல் காணலாம். ஆண்மகன், தன்னை யொத்த பெண்மகளைக் காமப் பொருளாக, என்று கருதி னானோ, அன்றே, இன்பம், சிற்றின்பம் பேரின்பமெனப் பிரியலாயிற்று. இப்பிரிவு தோன்றிய நாள்தொட்டு உலகும் கூடா ஒழுக்கத்துக்கு இரையாகித் தேய்கிறது. பிரிந்த பேரின்பத்தை வீடெனக்கொண்ட வழக்குப் பின்னையதாகும். தமிழரும் கடவுளும் ï§nf, ‘gHª jÄH®fŸ flîS©ikÆš cWâ ïšyhj kh¡fsh? என்று சிலர் கடாவலாம். அவர்கள் கடவுள் உண்மையில் உறுதியுடையவர்களே. ஆனால், அவர்கள் கொண்ட கடவுள் எது? அவர்கள் கடவுளைக் கந்தழி என்னும் பெயரால் வழுத்தினார்கள். கட்டற்ற ஒன்று கந்தழி என்பது. அழுக்காறு, அவா, வெகுளி முதலிய கட்டுகள் கடந்து விளங்கும் இன்ப அன்பே கந்தழி என்னுங் கடவுள். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே என்று பின்வந்த தமிழ்நாட் டன்பர் - மணிவாசகனார் - அருளியிருத் தலை நோக்குக. அவர், கடவுளை இன்பமே என்றும், அன்பே என்றும் விளித்திருத்தலை ஓர்க. அன்புக் கடவுள் யாண்டில்லை? இயற்கையெல்லாம் அன்புக் கடவுள் வடிவல்லவோ? இயற்கை யினின்றும் திரண்டெழுந்த அன்புக் கொழுந்தன்றோ நம் பெண்ணமிழ்தம்? இப் பெண்ணமிழ்தமா காமப் பொருள்? கொடுமை! கொடுமை!! மாசு படர்ந்த மனத்துக்கன்றோ பெண் ணெனும் பெருமை காமப் பொருள்? மாசிலா மனத்தார்க்குப் பெண்ணெனும் பெருமை காதற் கடவுளல்லவோ? பெண் ணோடு கூடி வாழும் வாழ்வன்றோ இயற்கை வடிவான இறையன்பைக் கூட்டும் வாழ்வாகும்? இயற்கையை விடுத்து, இறைவனை எவ்வாறு காண்டல் முடியும்? இதுபோழ்து உலகம் போற்றும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரது கொள்கை, பெரிதும் பழந் தமிழர் கொள்கைக்கு அரண் செய்வதெனச் சுருங்கச் சொல்கிறேன். பெண்ணுக்கு உரிமை நல்கிய என்னருமைத் தமிழ்நாடே! இது போழ்து யாண்டுளாய் யாண்டுளாய் என்று அலமரு கிறேன். அவ்வுரிமை நாட்டை மீண்டுங் காண எவர் முயலல் வேண்டும்? தமிழகத்தில் பிறந்த நாமல்லவோ முயலல் வேண்டும்? என்னுடன் பிறந்த அருமைத் தமிழ் மக்களே! அந்நாட்டைக் காண வீறு கொண்டு எழுங்கள்! எழுங்கள்! உரிமையும் இலக்கிய வளர்ச்சியும் கலை:- இனித் தமிழ்நாட்டின் கல்வி, இசை, ஓவியம், மருத்துவம், வானாராய்ச்சி, தொழில், வாணிபம், அரசியல், வீரம் முதலியவற்றின் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். தமிழ், இயல் இசை நாடகம் என்னும் மூன்று வழியிலும் வளர்ந்து வந்தது. தமிழ்க் கல்வித் திறனையுணர்த்தப் பழைய சங்க மருவிய நூல்களும், பெரியபுராணம், கம்பராமாயணம், தேவார திரு வாசகம், நாலாயிரப்பிரபந்தம் முதலிய நூல்களும் கருவிகளாகத் துணை புரிகின்றன. பன்னூறு ஆண்டுகளாக நாடு உரிமை இழந்தமையானும், மக்கள் நாட்டுக் கல்வியல்லாத கல்வியை வயிற்றுப் பிழைப்பு நாடிப் பயின்று வருதலானும், நாட்டில் நல்லிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றவில்லை. இசையும் மருத்துவமும் தமிழ்நாட்டுக்கெனச் சிறப்பாக இசையுண்டு. இதனை வலியுறுத்தச் சிலப்பதிகார அரங்கேற்று காதை ஒன்றே சாலும். தமிழ்நாட்டின் இசைச் சிறப்பைக் காலஞ் சென்ற தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்த சாகரம் என்னும் விரிந்த நூலில் பரக்கக் காணலாம். தமிழ்நாட்டின் மருத்துவ மாண்பைச் சித்த நூல்கள் தெரிவிக்கின்றன. நாடி பார்த்து நோய் இயல்பு உணர்தலும், பாடாணங்களால் மருந்து செய் தலும் தமிழ் மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும். வான நூல் தமிழ் மக்கள் வான ஆராய்ச்சியில் வல்லுநராயிருந்தார் கள் என்பதற்கு, செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரி தரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே*** எனவரூஉம் ஒரு புறப்பாட்டை எடுத்துக் காட்டுவதோடு நின்று விடுகிறேன். இது குறித்து அணித்தே இவ்வுலகு நீத்த அறிஞர் சாமிகண்ணுப் பிள்ளை செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து பெருக்க வேண்டுவது நந் தமிழறிஞர் கடமை. ஓவியம் தமிழ் மக்களின் ஓவியப் பெற்றியை விரித்துக் கூற வேண்டுவதில்லை. பழைய சோழர் கட்டிடங்களும், பழைய கோயில்களும், அமராவதி மாவலிபுரம் முதலிய இடங்களி லுள்ள சிற்ப நுட்பங்களும், பழந் தமிழ்மக்களின் அணிகலன் களும், அவர்களது பாட்டுக்களும் தமிழ் ஓவியத்தின் உயர்விற்கு நிலைக்களன்களா யிருக்கின்றன. தாகூர் முதலிய கவிவாணரும் தமிழர் ஓவியத்தைப் போற்றி யிருத்தல் கருதத்தக்கது. நெடு நிலை மாடத் திடைநிலத் திருந்துழி என்றும், நிரைநிலை மாடத் தரமிய மேறி என்றும், வேயா மாடமும் என்றும், மான்கண் கால்அதர் மாளிகை இடங்களும் என்றும் இளங்கோ அடிகள் தமிழ் மக்களின் கட்டிடங்களைச் சிறப்பித்திருக்கிறார்கள். தொழில்:- தமிழ்மக்களது தொழின்முறைகள் சிலப்பதி காரம் - இந்திர விழவூரெடுத்த காதையிலும், மணிமேகலை - கச்சிமாநகர் புக்க காதையிலும் கடல் மடை திறந்தாலெனப் பொழியப்பட்டிருக்கின்றன. பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும், கட்டு நுண் வினை கண்டவர்கள் நந் தமிழ் மக்கள்; கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கியவர்கள் நந் தமிழ் மக்கள்; பாலாவி யன்ன மிக மெல்லிய ஆடை நெய்த வர்கள் நந் தமிழ் மக்கள். இயற்கை இன்ப வாழ்விற்கு இன்றி யமையாத தொழில் பல தமிழ்நாட்டில் இருந்தன. தமிழர் வாணிபம் தமிழ் நாட்டார் பண்டை நாளில் பிற நாட்டாரோடு செய்து வந்த வாணிபப் பெருக்கை நோக்குழித் தமிழ் நாட்டின் வளனும், தொழின் முறைகளும் நன்கு புலனாகும். அந்நாளில் தமிழ் மக்கள், காலிற் பிரிவதோடு, கலத்திற் பிரிந்துங் கடல் கடந்து வாணிபஞ் செய்தார்கள். காலிற் பிரிதல், கலத்திற் பிரி தல் என வரூஉம் பழந் தமிழ் நூல்களின் வழக்கும், திரைகடல் ஓடியுந் திரவியந் தேடு என்னும் பழமொழியும் தமிழ் மக்கள் கடல் கடந்து செய்த வாணிபப் பெருக்கைக் குறித்தல் காண்க. பண்டைத் தமிழ் நாடு, கிறிது பிறப்பதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பாபிலோன், எகிப்து, ரோம், கிரீ, சிரியா முதலிய நாடுகளோடு வாணிபஞ் செய்ததை இக்காலச் சரித்திரக்காரர் நன்கு ஆராய்ந்து பல நூல்கள் எழுதியுள்ளனர். அந்நாடுகளுக்குத் தேக்கு, சந்தனம், தந்தம், தோகை, மிளகு, ஏலம் முதலியன தமிழ்நாட்டினின்றும் அனுப்பப்பட்டன என்பதற்குப் பல அகச்சான்றுகளிருக்கின்றன. யவனர் கலப்பு யவனர்க்கும் தமிழ் மன்னர்க்கும் இருந்த உறவும், அங்கும் இங்கும் ஒற்றரும் மெய்காப்பாளரும் நடமாடியதும் தமிழ் நூல்களில் வெள்ளிடைமலைபோல் அறியக் கிடக்கின்றன. யவனர் முதலிய சொற்கள் தமிழ் நூல்களில் நுழைந்ததும் தோகை முதலிய தமிழ்ச் சொற்கள், துகி முதலிய சொற்களாக மருவி ஹீப்ரு முதலிய மொழிகளில் நுழைந்ததும் ஆராயத் தக்கன. இவ்வுண்மைகளைத் திரட்டிச் சரித்திர வடிவாக உலகுக்கீந்த கனகசபைப் பிள்ளை, சவரிராய பிள்ளை, நல்லசாமி பிள்ளை, சூரியநாராயண சாதிரியார், சீநிவாச பிள்ளை முதலிய தமிழ் மக்களது நன்றி என்றும் மறக்கற்பாலதன்று. ஆட்சி முறைகள் அரசியல்:- இவ்வுலகியற்றுறைகள் யாவும் நேர்பட இயங்குதற்கு அந்நாளில் நிலைக்களனாக நின்றது அரசியலே யாகும். நல்லரசியல் இல்லா நாட்டில் அமைப்பேது? வாழ் வேது? அற ஒழுக்கமேது? ஒரு நாட்டின் நாகரிகமோ அநா கரிகமோ அந்நாட்டின் அரசியலை யன்றோ பொறுத்து நிற்கும்? அரசியல் என்பது, உலகிடை மறவினை மலியாது, அறவினை மலியுமாறு செய்தற்கு ஏற்பட்ட ஓர் அமைப்பு. அது குடி யாட்சியோ கோனாட்சியோ குடிக்கோனாட்சியோ எவ் வாட்சியோ பற்றி இயங்கினும் இயங்க. அதனால் குடிமக்கட்குக் கேடு விளைதலாகாது என்பதொன்றே கவனிக்கற்பாற்று. பெயருக்குக் குடியாட்சி என்று ஓர் ஆட்சி வகுத்துச், செல் வாக்குடைய சில்லோர் ஒன்றுகூடி, நாட்டை வருத்துவதால் என்ன பயன் விளையும்? எவ்வாட்சியாயினும், அதன் அடியில் அறமும், அன்பும், அருளும் கால் கொண்டு நிற்றல்வேண்டும். இவையில்லா அரசியல் அரசியலாமோ? பழந்தமிழரசு பழந் தமிழ்நாட்டில் வளர்ந்த அரசியல், பெரிதும் அறத்தை யும், அன்பையும், அருளையும் அடிப்படையாகக் கொண்டு நிலவியது என்பதற்குச் சான்றுகள் பலவுள. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் என்று புறநானூறு, உலகத்துக்கு உயிர், அரசு என்பதைத் தெரித்தல் காண்க. உயிரனைய அரசு, கோல்கோடி, மறவினை பெருக்கின், நாட்டு நிலை என்னாம்? அந்நாட்டினுங் கடும்புலி வாழுங் காடே நன்று. ஒரு நாட்டார் தமது நிறை காக்கவேண்டு மேல், முதலாவது அவர் நல்லரசு கோலிக்கொள்ளுதல் வேண்டும். தமிழ் மக்கள், அரசின் பெற்றியுணர்ந்த முதியவர் களாகலான் அவர்கள் அரசை உயிரெனக் கொண்டார்கள். அம்மக்கள் நிலைமைக்கேற்ற முறையில், அரசு அந்நாள் அமைந்திருந்தது. பழந்தமிழ் அரசின் நடுநிலையையும், அருட் டன்மையையும் ஈண்டு விரிக்கிற் பெருகும். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல்கோ டாது பிறரெனக் குணங்கொல் லாது ஞாயி றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி *** என்றும், சோறு படுக்குந் தீயொடு செஞ்ஞா யிற்றுத் தெறல் அல்லது பிறிதுதெறல் அறியார்நின் னிழல்வாழ் வோரே திருவில் அல்லது கொலைவில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார் என்றும் வரும் புறப்பாக்களை யோர்க. கண்ணகி வீரம் கண்ணகியின் வீரச்செயலால், அவளது கொழுநனாகிய கோவலனைக் கொன்றது தவறு என்று பாண்டி மன்னன் உணர்ந்ததும், யானோ அரசன் யானே கள்வன் என்று மண்ணில் வீழ்ந்து உயிர் துறந்த ஒன்று தமிழரசின் பண்புரைக்கு மன்றோ? பழந்தமிழரசின் அமைப்பு முறைகளை விரித்தற்கு அஞ்சு கிறேன். படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் - உடை யான் அரசருள் ஏறு என்னுந் திருக்குறளான் அரச அங்கமும், குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் - அடிதழீஇ நிற்கும் உலகு என்னுந் திருக்குறளான் அரசியல்பும் விளங்கப் பெறுகிறோம். ஐம்பெருங்குழு வொடு எண்பேராயமுங் கொண்டது நந் தமிழரசு என்று சுருங்கச் சொல்கிறேன். தமிழ் அரசின் போர் முறைகளைத் தொல்காப்பியம் முதலிய விரிந்த நூல்களிற் பார்க்க. அக்காலக் கடற்போர் முதலியவற்றைப் பதிற்றுப்பத்து முதலிய நூல்களிற் காண்க. ஐரோப்பியர் போர் இருபதாம் நூற்றாண்டு, நாகரிகத்தில் முதிர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந் நாகரிக நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடைபெற்ற பெரும்போரில், ஜெர்மானியர், பெல்ஜியத்தில் நிகழ்த்திய கொடுமைக்கோர் அளவும் உண்டோ? நிலத்தி லிருப்போர் இன்னாரெனவுங் கருதாது, ஆகாயவிமானத்தி னின்று குண்டெறிதலும், நச்சுக்காற்று விடுதலும் என்ன நாகரிகம்! இதுபோழ்து பிரஞ்சுக்காரர், சிரியாவில், குழந்தை - பெண் - நோயாளி என்றும் உன்னாது, ஆயிரக்கணக்கான மக்களை வதைத்தனர்! இருபதாவது நூற்றாண்டின் நாகரிகம் என்னே! என்னே! கிருதவ நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னரே, நந் தமிழ்மக்கள் போர் முறைகளை ஒழுங்குபடக் கோலியிருந் தார்கள். அம் முறைகள் தமிழ்மக்களின் நாகரிகத்தைப் புலப் படுத்துகின்றன. தமிழர் போர் மாற்றார் மீது அறப்போர் துவங்குதற்கு முன், தமிழ் வீரர்கள், ஆன், ஆன் அனைய அந்தணர், குழந்தை, பெண் முதலியோரைப் போர்நிலத்தினின்றும் விலகுமாறு அறி வுறுத்தி, அன்னார் அவணிருந்து விலகிய பின்னர், அம்பு சொரிவார்கள். இதனை, ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை *** எனவரூஉம் புறப்பாட்டான் உணர்க. போரிலும் அறநெறி காத்த அருள்நாடு நந் தமிழ்நாடு. பெண்மக்கள் வீரம் வீரம் :- பழந்தமிழ்மக்கள் வீரம் அளந்துரைக்கற்பால தன்று. விரிவு புறநூல்களிற் காண்க. முதியோள் ஒருத்தி, தன் மகன் செருக்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்டதும், அஃதுண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அரிந்தெறிவேன் என்று வாள் தாங்கிப் போர்க்களம் புக்குப் பார்த்தபோது, அவன் விழுப்புண்பட்டு இறந்துபட்டிருப்பது கண்டு, அவனை ஈன்ற பொழுதினும் பெரிது உவந்த வரலாறும், மற்றொரு வீரத்தாய், தன் தலைவன் போர்க்களத்தில் உயிர் துறந்த அடுத்த நாள், செருப்பறை கேட்டுத் தன்னொரு புதல்வனை அகமலர்ச்சியோடு, போர்க்கனுப்பிய வரலாறும் இத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தன. நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்று பலர்கூற மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டஎன் முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேனாள் உற்றசெரு விற்கிவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே எனவரூஉம் புறப்பாக்களில் அவ்வரலாறுகளைக் காண்க. ஒரு முதியவள் வீரமும், கொழுநனை இழந்த ஒருத்தியின் வீரமும் இத்தகையனவெனில், அந்நாள் இளைஞர் வீரம் எத்தகைத்தா யிலங்கி யிருக்க வேண்டுமென்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். வீரம் தாய்க்கருவினின்றும் அரும்புதல் வேண்டும். வீரக் குழந்தைகளைப் பெறுந் தாய், கல்வி யறிவில் சிறந்தவளாய், உரிமையுணர்வு உடையவளா யிருத்தல்வேண்டும். முன்னாளில் பெண்மக்கள் இவைகளைப் பெற்று வீரஞ்செறிந்த தாய்மார்களாக வாழ்ந்தமையான், அவர்கள் வயிற்றில் வீரப் பிள்ளைகள் பிறந்தார்கள். இந்நாளிலோ? வெட்கம்! வெட்கம்!! கவலை இன்மையும் வாழ்வும் பழந் தமிழ் நாட்டு நிலையை விளக்க ஈண்டு வேறொன்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன். xUt® xU »Htid neh¡», ‘M©L gythÆD« eiuÆšyhkÈU¥g bj‹id? என்று வினவினர். அதற்கு அம்முதியோன் இறுத்த விடை வருமாறு :- யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டஎம் மனையொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே இப்பாவான் பண்டைக்கால மனைவி மக்கள் நிலை, ஆட்கள் நிலை, அரசு நிலை, ஊரார் நிலை முதலியன விளங்கு கின்றன. நீண்ட நாள் வாழ்விற்கு, அல்லவை செய்யா அரசு வேண்டற்பாலது என்பதற்கு விரிவுரை வேண்டுங்கொல்! பழந்தமிழரசு அறத்தை - அன்பை - அருளை அடிப்படை யாகக்கொண்டு நிலவியதென்பதற்குத் தாலீபுலாக நியாயம் பற்றி ஈண்டெடுத்துக்காட்டிய சில காட்டுகளே சாலும். இன்னும் விரிக்கிற் பெருகும். விருந்தோம்பல் : - முன்னை நாளில் இசைபட வாழ்ந்த தமிழ் மக்களின் குணநலன்கள் பலப்பல. அவற்றுள் ஒன்றைச் சிறப்பாக ஈண்டுக் குறிக்கிறேன். அதாவது விருந்தோம்பல். விருந்தோம்பலில் தமிழ் மக்கள் பேர்பெற்றவர்கள் என்பது எவரும் அறிந்ததொன்று. வாழ்க்கையே விருந்தோம்பலுக் கென்று திருவள்ளுவனார் கூறியுள்ளார். இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. என வரூஉந் திருக்குறளை நோக்குக. பாரதப் போருக்கு அழைக்கப் பட்ட தமிழ் மன்னன், போரிற் கலவாது போரில் தலைப்பட்ட வர்க்குச் சோறூட்டும் அறத்தொண்டேற்றது ஈங்கு நினைவிற்கு வருகிறது. அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் எனவரூஉம் முடிநாகராயர் பாட்டைப் பார்க்க. விருந்தோம்பலில் தற்கால நிலை இவ் விருந்தோம்பும் நீர்மை இக்காலத் தமிழ் நாட்டில் அருகி வருதலைக் காணக் கண்ணீர் பெருகுகிறது. காரணம் என்னை? வறுமையா? அன்று; அன்று. இக்கால நாகரிகக் கல்வி யால் ஏற்பட்டுள்ள ஆன்ம நேய ஒருமைப்பாட்டழிவே யாகும். மீண்டும் அந்நேயம் பெற நாம் பழந்தமிழ் நாட்டைப் புது முறையில் காண்டல்வேண்டும். அதன் பொருட்டே தமிழ் நாட்டின் பெயரால் நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம். இத்துணைச் சிறப்பு வாய்ந்த நமது அருமைத் தமிழ் நாடெங்கே? தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கமெங்கே? அன் பெங்கே? அரசெங்கே? வீரத் தாய்மாரெங்கே? தமிழ்த் தாயெங்கே? தமிழர்களே! உங்கள் தொன்மை என்ன? உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை என்ன? உங்களுக்குள் இது போழ்து எத்துணைப் பிளவு! எத்துணைப் பிரிவு! நந் தமிழ்த் தாய், கால்வேறு - கைவேறு - தலைவேறு - வேறாகக் கூறுபட்டுக் கிடப்பதைக் காண உங்கட்குக் கண்ணில்லையா? நினைக்க மனமில்லையா? மீண்டும் நீங்கள் பண்டைநிலை எய்த வேண் டாமா? வேண்டுமேல் பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து, உண்மைத் தமிழ்நாட்டைக் காண எழுங்கள்! எழுங்கள்!! தமிழால் ஒருமைப்பாடு இத் தமிழ்நாட்டவராகிய நாம், பலப்பல சாதியினராய் பலப்பல சமயத்தவராய்ப் பிரிந்து பிளவுபட்டுக் கிடக்கின் றோமே; ஒருமைப்பாட்டுக்கு வழியும் உண்டோ என்று சிலர் வினவலாம்; சிலர் கருதலாம். சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நின்று நம்மனைவரையும் ஒருமைப்படுத்தி நிற்பது ஒன்றுளது. அதன்மீது நாம் கவலை செலுத்துவமேல், அது வேறுபாடுகளை வீழ்த்தி, ஒருமைப்பாட்டை உண்டுபண்ணும். அஃது எது? அதுவே நமது அருமைத் தமிழ். தமிழர் தமிழ்நாட்டிற் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ் நாட்டைத் தாய்நாடாகக் கொண்ட எல்லாரும் பெரிதுந் தமிழே பேசுகின்றனர். பிற நாட்டினின்றுந் தமிழ்நாட்டிற் குடிபுகுந் தோர் சிலரே. அவருந் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டிருத் தல் கண்கூடு. அச் சிலரது வழக்க ஒழுக்கங்களையும், வழிபாடு முதலியவைகளையுங் கொண்ட பலருந் தமிழரே யாவர். பழமையில் பற்றுடைய மற்றவர் தமிழரென்பதை விளக்க வேண்டுவதில்லை. இவ்வனைவரும் தமிழ் என்னும் அமிழ்தை நாடோறும் வாழ்வில் பருகுஞ் சகோதரரேயாவர். இவர் தமக்குள் ஒருமை காட்டுந் தமிழ்மொழியிற் பற்றுக்கொண்டு உழைப்பாராயின் தமிழ்நாட்டில் ஒருமைப்பாடு நிகழும் என்பது திண்ணம். சமயவேற்றுமை, கடைச்சங்கப் புலவர் காலத்திலேயே தலைகாட்டிற்று. அன்னார் சமய வழிபாட்டில் பன்மைப்பட்டு நின்றும், தமிழை வளர்ப்பதில் ஒருமைப் பட்டு நின்றமையான், இவ்வொருமை அப்பன்மையை விழுங்கி, நாட்டை ஓம்பியதை ஆராய்ந்து, உண்மை கண்டு ஒருமைப்படுவோமாக. ஆதலால் நம்மை ஒருமைப்படுத்தவல்ல தமிழை வளர்க்க முயல்வோமாக. பிரிட்டிஷ் ஆட்சி பரதகண்டம் இத் தமிழ்நாட்டைப்போன்ற பல பெரும் நாடுகளைக் கொண்டது நமது பரதகண்டம். பாரத பூமிக்குக் கண்டம் என் னும் பெயர் பண்டை நாளில் நம்மவராலேயே நிறுவப்பட்டது. பலதிற வழக்க ஒழுக்கம், மொழி முதலியவற்றைக் கொண்ட பல நாடுகளை உறுப்பாகப் பெற்ற பெருநிலம், கண்டம் என்பது எவரும் அறிந்ததொன்று. நாடுகளின் பன்மையால் பரதகண்டம் ஆக்கப்பட்டாலும், அப் பன்மையில் ஒருமையை அது வழங்காமலில்லை. பழங்குடி மக்கள் - ஆரியர் - முலிம்கள் பரதகண்டம் வடமொழியைப் பொதுமொழியாகவும், வேதாந்தத்தைப் பொதுக் கொள்கையாகவுங் கொண்டிருந்த காலமுண்டு. இன்னும் ஹிந்துக்களுக்குள் அவ்வொற்றுமை காணலாம். அவ்வொற்றுமைக்குக் கால் கொண்டவர்கள் பாரதநாட்டின் பழங்குடி மக்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பரதகண்டத்திற் குடிபுகுந்த ஆரிய மக்களுமாவார்கள். இவ்விருவருங் கலந்த ஓரினமே ஹிந்து சமூகம் என்பது. இவர் கள் ஆட்சியில் இந்தியாவின் பொருள் இந்திய மக்கட்கே பயன்பட்டு வந்தது. அப் பொருட்பேற்றால், அந்நாளில் இந்தியாவில் வளர்ந்த கலைஞானத்திற்கோர் அளவுமுண்டோ? வடமொழியில் கடல்போலக் கிடக்கும் நூல்களெல்லாம் அக் காலத்தில் எழுதப்பட்டனவே. பின்னைப் போந்த முலிம் களும், இந்தியாவைத் தாய் நாடாகவே கொண்டு, ஆட்சி புரிந்தமையால், இந்தியாவின் வளஞ் சுருங்காதிருந்தது. இந் நாளில் நடைபெறும் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா உற்றுள்ள நிலையை விரித்துரைக்க வேண்டுவதில்லை. ஆட்சியும் தாய்நாடும் பிரிட்டிஷார் இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டவ ரல்லர். ஒரு நாட்டைத் தாய்நாடாகக் கொண்ட ஓரினத்தவரால், அவரது வழக்க ஒழுக்கங்களினின்றும் முற்றும் மாறுபட்ட மற்றொரு நாட்டார் ஆளப்படுதல் இயற்கைக்கு மாறுபட்ட செயலாகும். தொழிலின் பொருட்டோ, வாணிபத்தின் பொருட்டோ, எதன் பொருட்டோ, சில ஆண்டு தங்கி, மீண்டும் தாயகம் புகுவோர், சார்பு நாட்டின் நலம் நாடுதல் அரிதே. (இது மக்கள் இயல்பு). இந்தியாவின் நிலை இவ்வாறிருக்கிறது! முப்பது கோடி மக்களைக்கொண்ட இந்தியாவின் தலை எழுத்து நாலுகோடி மக்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் எழுதப்படுகிறது. இம்முறை யுள்ள மட்டும், இந்தியா இந்தியருடையதாகுமோ? இந்தியா இங்கிலாந்தின் நலத்துக்காகவா படைக்கப்பட்டது? நாட்டின் உயிர் தொழில் பிரிட்டிஷ் ஆட்சி, முதல் முதல் இந்தியாவில் வாணிபஞ் செய்யப் போந்த ஒரு கூட்டத்தவரால் தொடங்கப்பட்டது. இந்தியா அவ்வாணிபக் கூட்டத்தார் வயப்பட்டிருந்தபோது, அதன் உயிர்நாடியை அவர் குலைத்துவிட்டனர். ஒரு நாட்டின் உயிர்நாடி எது? அந்நாட்டின் தொழின்முறை யன்றோ? கிழக் கிந்திய வாணிபக் கூட்டத்தார் பொதுவாக நமது நாட்டுத் தொழின்முறைகட்கும், சிறப்பாக நமது நாட்டு நெய்தற் றொழில்முறைக்குஞ் சூழ்ந்த கேடுகளைச் சரித்திரத்திற் காணலாம். வறுமை கண்டறியா நமது வள நாடு வறுமையை யும், பஞ்சங் கண்டறியா நமது பாரத நாடு பஞ்சத்தையும், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்திலேயே கண்டது. அந் நாளில், நம் மக்கள் உற்ற துன்பத்தை ஆண்டவனே அறிவன். சரித்திரங்களில் அத் துன்பப் பகுதியைப் படிக்கும்போது மனங்குழைந்து குழைந்துருகுகிறது. வறுமையையும் பஞ்சத்தை யும் கேட்டுமறியா மக்கள், திடீரென வறுமையிலும் பஞ்சத் திலும் வீழ நேர்ந்தால், எவ்வகை இடர்ப்பட்டிருப்பார்கள் என்பதைச் சொல்லலும் வேண்டுமோ? நாளடைவில் வறுமை யும் பஞ்சமும் நாட்டில் நிலைபெற்றமையால், துன்பம் பொறுத்தல் நம் மக்கட்கு இயல்பாகி விட்டது. அந்நாளில், துன்பம் பொறாது ஆங்காங்கே மக்கள் கலாம் விளைத்தார்கள். கலகமும் குழப்பமும் கொள்ளையும் எங்கணுந் தாண்டவம் புரிந்தன. நாடோறும் தொழில் புரிந்து வாழ்வுநடாத்திய மக்களின் தொழில்கள் வீழ்த்தப்பட்டால், அவர்கள் என் செய்வார்கள்? வயிற்றின் கொடுமை, அவர்களைக் கொள்ளைக் காரராகவும் கொலைஞராகவும் மாற்றுதல் இயல்பே. விக்டோரியா மகாராணியார் ஒரு பெரும் நாட்டை இந்நிலைக்குக் கொணர்ந்த கிழக் கிந்திய வாணிபக் கூட்டத்தார்க்குப் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் என்ன தண்டனை விதித்தது? அவர் வயப்பட்டுக் கிடந்த இந்தியா, இங்கிலாந்து அரசியாராக அந்நாளிருந்த விக்டோரியா மகாராணியாரது நேர்பார்வைக்கு மாற்றப் பட்டது. இஃது அறவினையாகத் தோன்றவில்லை. பின்னைப் பாராளுமன்றம் என் செய்திருத்தல் வேண்டும்? வாணிபக் கூட்டத்தாரை இந்தியாவினின்றும் இங்கிலாந்துக் கழைப் பித்து, இந்தியாவை இந்தியர் வயம் ஒப்புவித்திருத்தல் வேண் டும். வாணிபக் கூட்டத்தார் ஆட்சியில் இடுக்கணுற்றுக் காய்ந்து வாடி வதங்கிக்கொண்டிருந்த இந்தியாவிற்கு, மகாராணியார் அதுபோழ்து பிறப்பித்த அறிக்கை விண்ணின்று பொழிந்த மழை போலிருந்தது. மகாராணியார் ஆட்சியை இந்தியா மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டது. சுயராஜ்ய வகை அவ்வாட்சியில் பின்னை ஏற்பட்ட கல்லூரிகளில் ஆங்கிலம் பயின்ற நம்மவர்களிற் சிலர், ஒருங்கு கூடி, நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்து, சுயராஜ்யம் பெற்றுக் கொள்ளலாமெனக் கனவு கண்டு, காங்கர மகாசபையைக் கண்டனர். அம்முதியோர் அந்நாளில் விரும்பிய சுயராஜ்யம் பரராஜ்யமே. நாட்டுக் கலைகளைக் கொலை செய்து, அந்நியக் கலைகட்கு ஆக்கந் தேடுவதாலும், நாட்டு உடைகளை நீக்கி, அந்நிய உடைகளை அணிவதாலும், நாட்டுத் தொழில்களை விடுத்து, அந்நிய ஆட்சி முறையில் பதவி பெறுவதாலும், சுயராஜ்யம் பெறலாம் என்று அவர் கண்ட கனவு, நாளடைவில் நினைவாய் - வினையாய் - நாட்டை இந்நிலைக்குக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது. அப்பெரியோர் மீது குற்றஞ் சுமத்த யான் அருகனல்லன். அவர்க்கு அந்நாளில் சுயராஜ்யப்பொருள் அவ்வாறு தோன்றிற்று! என் செய்வது! அந்நியம் என்னும் மதுவுண்ட வெறியால், எல்லாவற்றையும் இந்திய மயமாக்க வேண்டுமென்று, கல்லூரிகளில் பயின்று, நீதி மன்றங்களையும், உத்தியோக சாலைகளையும், சட்டசபைகளையும் நிரப்பி, அதிகாரவர்க்க ஆட்சிக்கு நம்மவரே ஆக்கந் தேடினர். நம்மவர் துணையால், இதுபோழ்து அதிகாரவர்க்கம், இந்திய நிலத்தில் வீழ்த்து முற்றிய வேர்கொண்டு காழ்த்த மரமாய்க் கவடு கோடு விடுத்து, இலையும் தளிரும் செழித்துக் கொழித்து, அரும்பு மலர் காய் கனி பொதுள நிழல் தந்து நிற்கிறது. அந்நிழலில் பாரத மக்கள் என்னும் பைங்கூழ், உரிமை என்னும் ஞாயிற்றொளி பெறாது வாட்டமுற்றுக்கிடக்கிறது. பிரிட்டிஷார், இந்தியர் விரும்புமாறு, சில பெரும் பதவிகளை ஆங்காங்கே வழங்கத் தயங்குவதில்லை. ‘fU«ò â‹d¡ TÈ nt©Lnkh! காங்கர மிதவாத வழி நின்று செய்த கிளர்ச்சியின் பயன் இதுவே. உரிமை நம்பால் 1906ஆம் ஆண்டு, காங்கரஸில் ஓருணர்வு பிறந்தது. பிறர் காலில் வீழ்ந்து விண்ணப்பஞ் செய்வதாலும் சிற்சில பதவி களை இந்தியர் பெறுவதாலும் நாடு விடுதலை யடையாது. உரிமை என்பது நமது முயற்சியில் - நமது உழைப்பில் - இருப்பது என்னும் உணர்வு, பாலகங்காதர திலகர் பெருமான், அரவிந்த கோஷ் முதலிய சில்லோர்பால் அரும்பிற்று. இவ்வுணர்வு காங்கரஸுக்குள் பிளவை உண்டுபண்ணிற்று. இவ்வுணர்வினின்றும் மலர்ந்த இயக்கமே சுதேசிய இயக்க மென்று சொல்லப்படுவது. அவ்வியக்கம், சுதேசிய உணர்விற்கு விதை விதைத்தாலும், அதில் தலைப்பட்ட இளைஞர்கள் நாட்டின் இயல்புக்கும் அறத்துக்கும் மாறுபட்ட ஒரு முறையைக் கைக்கொண்டமையால் அது வீழ்ந்துபடலாயிற்று. அம்முறை போற்றத் தக்கதன்றாயினும், நாட்டின் உரிமை வேட்கையை அஃதுணர்த்தாமற் போகவில்லை. உரிமை வேட்கையைத் தணிக்கப் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்குச் சுயராஜ்யம் வழங்கியிருத்தல் வேண்டும். அதற்குப் பதிலாகக் கிளர்ச்சியில் தலைப்பட்ட பெரியோர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அதிகாரவர்க்க ஆட்சிக்குத் துணைபோன மிதவாதிகளுக்கு ஒரு சிறு சீர்திருத்தம் வழங்கப்பட்டது. ஐரோப்பாப் போரும், இந்தியாவும் 1914ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பெரும்போர் எழும்பிற்று. அந்நேரத்தில் பிரிட்டன் இராஜதந்திரிகள், சிறு நாடுகளின் உரிமை காக்கும் பொருட்டுப் போரில் தலையிடுகிறோம் என்று பாடிய பாட்டுக்கள் இன்னுஞ் செவியில் ஒலித்துக் கொண்டிருக் கின்றன. பிரிட்டன் பல வழியிலும் இந்தியாவின் துணை வேண்டி நின்றது. இந்தியா அதுபோழ்து என்ன செய்தது? வன்மஞ் சாதித்ததா? உதவி மறுத்ததா? இல்லையே! பொருளை யும் ஆட்களையும் வாரி வாரி இந்தியா இறைத்தது. கொல்லா மையையே தமக்குரிய நோன்பாகக் கொண்ட குணமலை - மகாத்மா காந்தி - போருக்குச் சேனை திரட்டினாரெனில், இந்தியா மனமார்ந்து செய்த உதவியைப் பேருரைகளால் பகரவேண்டுவதில்லை. அது போழ்து இந்தியா உதவி செய்ய மறுத்திருக்குமாயின், போரின் வெற்றி தோல்வி நிலை மாறுபட்டிருக்கும். இந்திய வீரர்கள் போர்க்களத்தில் சிந்திய இரத்தமே, பிரிட்டனுக்கு வெற்றி கூட்டிற்று. இவ்வுண்மையை எவரும் மறுத்துக் கூறார். இரட்டை ஆட்சி போரின்போது அன்னைபெஸண்ட் அம்மையாரால் சுய ஆட்சிக் கிளர்ச்சி தோற்றுவிக்கப்பட்டது. அக் கிளர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டது என்பதை உலகறியும். அவ்வாறாக, அக் கிளர்ச்சித் தலைவர்கள் ஏன் காப்பில் வைக்கப்படல் வேண்டும்? அவ்வேளையில் - 1917ஆம் ஆண்டில் - இந்தியாவிற்கு ஐனப் பொறுப்பாட்சி நல்கப்படும் என்னும் உறுதிமொழி இந்தியா மந்திரியினிடமிருந்து பிறந்தது. அவ்வுறுதிமொழியின் பயனாக, இந்தியாவில் இரட்டை ஆட்சி முளைத்தது. நூற்றைம்பது ஆண்டுகளாக உரிமையிழந்து வருந்தியும், பெரும்போரில் மனமாரத் துணைபுரிந்த இந்தியாவிற்கு ஏன் முழுப் பொறுப் பாட்சி வழங்கலாகாது? இந்திய மக்களுக்குள் பிரிவை உண்டு பண்ணும் ஓர் ஆட்சிமுறையையா வழங்குவது? இரட்டை ஆட்சியின் விளைவு இரட்டை ஆட்சியிலுள்ள குறைகள் இன்ன இன்ன என்று சொல்லிச் சொல்லி நாவும் தழும்பேறி விட்டது! எழுதி எழுதிக் கையும் மரத்துவிட்டது! அவ்வாட்சி நடாத்திய மந்திரிமார், மட்டிமான் குழு முன்னர்க் கூறிய சான்றுகளே சாலும். மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தினும், இச் சீர்திருத்தம் பிரதிநிதித் தொகையைப் பெருக்கியிருப்பினும், இயல்பில், அதனிலும் இது சிறுமையுடையதேயாகும். மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தில், ஜனப்பிரதிநிதிகளெல்லோரும் ஒரு சார் பாக நின்று அரசாங்கத்தை எதிர்த்து வந்தனர். இரட்டை யாட்சியில் பிரதிநிதிகளுக்குள் மந்திரிக்கட்சியென ஒரு கட்சியும், அதை எதிர்க்கும் கட்சி என மற்றொரு கட்சியும் பிரி தலால், அவர்களுக்குள் ஒற்றுமை குலைந்துவிடுகிறது. அரசி யல் ஞானப் பெருக்கால் தலை வீங்கப்பெற்றிருக்குஞ் சிலர், இது பார்லிமெண்ட் முறைதானே என்று சொல்வர். பார்லிமெண்ட் முறை என்பதை மறுப்பாரில்லை. பிரிட்டிஷ் பார்லிமெண்டில் வீற்றிருப்பவர் உரிமைமணங் கமழும் நாட்டுப் பிரதிநிதிகள் என்பதையும், நம்மவர் உரிமை பெறாத நாட்டுப் பிரதிநிதிகள் என்பதையும் அரசியல் ஞானிகள் சிறிதுநேரங் கூர்ந்து நோக்குவார்களாக. உரிமை பெறாத நாட்டில் மந்திரிக் கட்சி என்றும், மற்றக் கட்சி என்றும் பிரிக்கும் சீர்திருத்தம் ஆள்வோர்க்கு நலந் தந்து, ஆளப்படுவோர்க்குள் பிணக்கை விளைப்பதாகும். ஒத்துழையாமை இரட்டையாட்சி மீதுள்ள உள்ளக் கோட்டமும், பாஞ் சாலப் படுகொலையும், கிலாபத்துக்கு நியாயம் பிறவாமையும் ஆக மூன்றும் ஒன்றுபட்டு, அஹிம்சா தர்ம ஒத்துழையா இயக்கத் தோற்றத்துக்குக் கருவிகளாக நின்றன. இவ்வியக்கம் ஆள்வோர் - ஆளப்படுவோர் என்னும் இருசாராரையுந் தூய்மைப்படுத்த வல்லது. இவ்வியக்கத்துக்குத் தலைமை பூண்டு நடாத்திய பெரியார், புத்தர் கிறிது போன்றவர். இவ்வற இயக்கத்தை ஒடுக்க அடக்குமுறை ஏன் எழல் வேண்டும்? இவ்வரிய இயக்கத்தில் கொடுமையுண்டா? கொலையுண்டா? அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்றன்றோ ஒத்துழையா இயக்கம்? இத்தகைய இயக்கத்தையும் வீழ்த்த முயன்ற அரசாங்கத்தின் மனப்பான்மையை என்னென்று கூறுவது? சிறைவாசம் ஒத்துழையா இயக்கம் நாட்டில் செல்வாக்குப் பெறாது வீழ்ந்துபட்டது என்று சில இடங்களிற் சொல்லப்படுகிறது. இது முழுப் பூசினிக்காயைச் சோற்றோடு மறைப்பதை ஒக்கும். ஒத்துழையா இயக்கத்துக்கு நாட்டில் ஏற்பட்ட செல்வாக்கைப் போல, வேறு எவ்வியக்கத்துக்கும் ஏற்படவில்லை. இவ் வியக்கமே ஆள்வோர்மீது நாட்டார்க்குள்ள மனக்குறையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கச் செய்தது. பழிக்குப் பழி நினையாது, வன்மங் கொள்ளாது, பிறர் உறுத்துந் துன்பத் தையும் அன்போடேற்றுப் பொறுத்து, உவப்புடன் சிறை புகல் எளிதோ? எளிதோ? அன்பர்களே! சிந்தித்துப் பாருங்கள். இச் செயற்கருந் தொண்டாற்றக் கல்வியால் - செல்வத்தால் - ஒழுக்கத்தால் - சிறந்த பல்லாயிரவர் புறப்பட்டதை எவரே அறியார்? ஆறுமாத காலத்துக்குள் சத்தியாக்கிரக முறை g.ற்றி, இருபத்தையாயிரவர் சிறைபுக ஒருப்பட்டதொன்றே ஒத்துழை யாமைக்கு நாட்டில் ஏற்பட்ட செல்வாக்கை இனிது புலப் படுத்தும். இவ் வறப்போரில் தலைப்பட்டுச் சிறை புகுந்த இருபத்தையாயிரம் பேர் உறுதிக்கு, கொலைப் போரில் தலைப் பட்டு உயிர் துறக்கும் இருபத்தைந்து கோடிப் பேர் உறுதியும் ஈடாகாது. ஒத்துழையாக் காலத்தில், பல்லாயிரம்பேர் நாட்டின் பொருட்டு, உடல் பொருள் ஆவி மூன்றையுந் தியாகஞ் செய்து, நாட்டின் உரிமை வேட்கையை விளங்கச் செய்தமை கண்டும், பிரிட்டிஷ் அரசு என்ன செய்துவிட்டது? சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமையில் தலைப்பட்ட பலரும் அரசியல் கிளர்ச்சிக்காரரென்றும், ஆவேசத்தால் வேறு சிலரும் அக் கிளர்ச்சியில் சேர்ந்தனரென்றும், நாட்டின் ஆதரவு அதற் கில்லையென்றுஞ் சில இடங்களில் சொல்லப்பட்டன. ஒத் துழையாமைக்கு நாட்டின் ஆதரவு உண்டு என்பதை, அவ் வொத்துழையாமையினின்றும் பிறந்த சுயராஜ்யக் கட்சி வலியுறுத்திக் காட்டிற்று. சுயராஜ்யக் கட்சி தோன்றிய அவ்வாண்டே, முதன்முறையிலேயே, தேர்தலில் அக் கட்சியினர் வெற்றி பெற்று, இரண்டு மாகாணங்களில் இரட்டை யாட்சியைக் கொன்று, இந்தியச் சட்டசபையிலும் பலமுறை அரசாங்கத்தைத் தோல்வியுறச் செய்ததை உலகறியும். ஆங் காங்கே நடைபெற்றுவரும் நகரசபை முதலிய அமைப்புக்களின் தேர்தலிலும், வெற்றி அக் கட்சியினர்க்கு விளைந்து வருவதும், பல நகரசபைகள் அக் கட்சியினர் வயப்பட்டுக் கிடப்பதுங் கண்கூடாம். எதன் பொருட்டு நாடு அக்கட்சிக்குத் துணை நிற் கிறது? ஒத்துழையாமையை அக்கட்சி தன் மூலக் கொள்கை யாகக் கொண்டுள்ளமையா லன்றோ? அக்கொள்கையை இன்று சுயராஜ்யக் கட்சி நெகிழவிடுமேல், நாளை அது நாட்டின் ஆதரவை இழந்துவிடுமென்பது திண்ணம். அக்கட்சியின் முறைகளைப் பற்றிய வேற்றுமைகளில் என் கருத்தை இங்கே செலுத்துகின்றேனில்லை. ஒத்துழையாமைக்கு நாட்டில் செல்வாக்கு உண்டு என்ப தொன்றையே ஈண்டு வலியுறுத்தப் புகுந்தேன். நாட்டவர் மனம், ஒத்துழையாமையில் படிந்து கிடப்பதைச் சுயராஜ்யக் கட்சியார் வாயிலாகப் பிரிட்டிஷ் அரசு அறியாமலில்லை. அறிந்தும் என்ன செய்கிறது? ஒத்துழைப்பு இவ்வேளையிலும், பிரிட்டிஷ் அரசின் சார்பாக, இந்தியா மந்திரியாரும், முதன்மந்திரியாரும் என்ன சொல்கிறார்? முட்டுக்கட்டையை எடுத்து ஒத்துழையுங்கள்; பார்ப்போம் என்றே சொல்கிறார். அவ்வுரையே இந்திய அரசாங்கத்திலும் எதிரொலி செய்கிறது. மட்டிமான் குழுவின் அறிக்கையை ஒட்டிய அரசாங்கத் தீர்மானத்தை இந்தியச் சட்டசபையில் சாய்த்துப் பண்டித நேரு கிடத்திய திட்டம் மேல் வீடெனும் இராஜாங்க சபையில் காற்றிற் பறந்து போயிற்று. ஒத்துழை யாமை யுள்ளமட்டும், அரசாங்கத்தார் ஒத்துழைப்புப் பாட்டுப் பாடிக்கொண்டேயிருப்பர்; ஒத்துழையாமை ஒடுங்கினால், சுய ஆட்சிக்கு நாடு இன்னுந் தகுதி பெறவில்லை என்னும் பாட்டுப் பாடுவர். ஒத்துழைத்த காலத்தில் மாத்திரம் நாம் என்ன பெற்றுவிட்டோம்? நாம் ஒத்துழைத்தது ஓராண்டா? ஈராண்டா? பற்பல ஆண்டு ஒத்துழைத்தோம். ஒத்துழைத்து விரும்பியதைப் பெற்றோமா? இல்லை. இன்னுமா ஒத்துழைப்பு? ஒத்துழைப்பு நமக்குப் பழம் பாடமாகியது. அப்பாடம் இனி நமக்கு வேண்டா. இந்தியா மந்திரி சொல்கிறார்; அவர் சொல்கிறார்; இவர் சொல்கிறார்; மீண்டும் ஒத்துழைத்துப் பார்க்கலாமே என்று இனி ஒத்துழைக்கப் புகுதல் வகுப்புப் பிணக்கை வளர்ப்பதாக முடியும். லார்டு பர்க் கென் ஹெட் கூறும் ஒத்துழைக்க வாருங்கள் என்பதற்கு, வகுப்புப் பிணக்கை வளருங்கள் என்று நான் பொருள் கூறுவேன். தலைவர்களுக்கு இதுபோது ஒரு சோதனைக்காலம் நேர்ந்திருக்கிறது. சோத னைக்குள் அகப்படாச் சோதியங் கடவுளே! தலைவர்களுக்கு நல்லறிவு நல்குவாயாக. பரித்பூரில் தேசபந்து தாஸர் குறிப் பிட்டுள்ள திட்டத்துக்காதல், அரசாங்கத்தார் இணங்கி வருமட்டும் ஒத்துழைப்பைக் கனவிலும் கருதலாகாது. சீர்திருத்தத்துண்டு நாட்டின் உரிமை குறித்தெழும் அறக்கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதில் கண்ணுங் கருத்துமாயும், கிளர்ச்சிகளின் குறிப்பறிந்து வேண்டுவ செய்ய உளங்கொள்ளாமலும், அவ் வப்போது சில போலிச் சீர்திருத்தமெனுந் துண்டெறிந்தும், ஆட்சி புரிந்து வரும் அரசாங்கத்தின் போக்கைப் பலப்பல ஆண்டுகளாக அநுபவத்திற் கண்டும், தெரிந்தும், இன்னும் அதன்மாட்டு நம்பிக்கை கொள்வதும், இங்கிலாந்து சென்று காலில் விழுவதும், இன்ன பிற ஆற்றப் புகுவதும் காலத்தை வீண்வழியில் கழிப்பதாகும். தொழிற்கட்சி தொழிற்கட்சிப் பித்து நம்மவருட் சிலருக்கு உண்டு. இங்கிலாந்தின் நலத்துக்காக ஆங்கு ஏற்பட்டுள்ள கட்சிகளுள் அக்கட்சியும் ஒன்று. அக்கட்சித் துணையால் இந்தியா, பேரின்பம் பெற்றுவிடுமென எவருங் கருத வேண்டுவதில்லை. அங்ஙனங் கருதுவது கனவாகவே முடியும். தொழிற்கட்சி ஆட்சியிலிருந்தபோது, இந்தியாவிற்கு என்ன வழங்கி விட்டது? அதன் ஆட்சியில், இந்தியா மந்திரியாயிருந்த லார்ட் ஒலிவியர் பேச்சுக்கும், அவ்வாட்சிக்கு முன்னிருந்த ஆட்சியில் இந்தியா மந்திரியாயிருந்த லார்ட் பீல் பேச்சுக்கும், இப்பொழுது இந்தியா மந்திரியாயுள்ள லார்ட் பர்க்கென் ஹெட் பேச்சுக்கும் பொரு ளில் ஏதாவது வேற்றுமையுண்டோ? ஒரே பொருளைப் பல திறச் சொற்களால் அவரவர் வெளியிடுகிறார். லாயிட் ஜார்ஜ், முதல் அமைச்சரா யிருந்தபோது, பார்லிமெண்டில், எஃகுச் சட்ட விழா நடாத்திய வேளையில், இந்தியாவைப் பற்றி, எக்கட்சியும் (தொழிற்கட்சி உட்பட) ஒரே கருத்தையே கொண்டிருக்கிறது என்னும் பொருள்படப் பேசியதைக் கருத்தி லிருத்தி, நமது கடனை நாம் ஆற்றல் வேண்டும். இன்று இந்தியா சுயராஜ்யம் பெற்றுவிடின், நாளை எத்தனையோ கோடி கோடிப் பொருள் இங்கிலாந்து செல்லாது, இந்தியாவிலேயே நின்றுவிடும். இந்நிலையை இங்கிலாந்துக்கு உண்டுபண்ணத் தொழிற்கட்சி உடன்படுமோ? எவரேனும் தாம் சாக மருந்து உண்பரோ? தன்னலக் கூட்டம் காலத்தின் கோலத்திற் கேற்பப் பதவி பட்டம் முதலிய வற்றைக் குறிக்கொண்டு, ஒத்துழைத்து ஒத்துழைத்துத் தமது நலத்தை எவ்வழியிலாதல் முற்றுவித்துக் கொள்ளும் முயற்சிக்கென ஒரு கூட்டம் நாட்டில் திரண்டிருக்கிறது. அக் கூட்டத்திற் சேர்ந்தவர் எல்லா வகுப்பிலும் எம்மூலையிலும் இருக்கின்றனர். அவர் எப்படியாதல் தேசத்தைப் பழைய ஒத் துழைப்புச் சேற்றில் தள்ள முயன்று வருகின்றனர். அவர்தம் முயற்சிக்கு எக்காரணம் பற்றியும் தேசபக்தர் துணை போதலாகாதென எச்சரிக்கை செய்கிறேன். வழி என்ன? பயன் கருதாமை நியாய வரம்புக் கிளர்ச்சி செய்து பார்த்தோம்; வெறுக்கத் தக்க மூர்க்க நெறியையுங் கடைபிடித்துப் பார்த்தோம்; அஹிம்சா தர்ம வழி நின்றும் போராடிப் பார்த்தோம்; சட்ட சபைகளைக் குலைத்தும் பார்த்தோம். ஒன்றானும் நமது நோக்கம் நிறைவேறவில்லை. Û©L« x¤JiH¤jY§ TlhbjÅš, ntW tÊ v‹d? என்று வினவுவோர் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. உரிமையில்லா நாட்டில் வாழும் நாம், வெற்றி தோல்வி குறித்து எவ்வியக்கத்திலுந் தலைப்படலாகாது. நேர்மையாகக் கடனாற்றுவதிலேயே நாம் கருத்தைச் செலுத்தல் வேண்டும். பயன் கருதாது வினையாற் றல் வேண்டும் என்பது கீதையின் உள்ளக்கிடக்கை. ‘ïJ fhW« eh£oš vGªj ïa¡f§fSŸ v›Éa¡f¤jhš eh£oš cÇik íz®î mU«ã‰W? என்பதை ஓர்ந்து, உண்மை தேறி, அவ்வியக்கம் முற்றும் தோல்வியுற்று, அறவே மாய்ந்திருப்பினும், அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயலவேண்டு வது அறிஞர் கடமை. ஐந்து பிரிவு நம்மவர் உள்ளத்தில் தோன்றி உருக்கொண்டெழுந்த கருத்துக்களும் கொள்கைகளும் பலப்பல. அவை எல்லாவற்றை யும் திரட்டிக் கூறிட்டுப் பார்த்தால், அவற்றை ஐந்து பகுதி களாகப் பிரிக்கலாம். நியாயவரம்புக் கிளர்ச்சியொன்று; கருவி தாங்கிப் போர் புரிதல் மற்றொன்று; இன்னொன்று சட்ட சபைகளில் நுழைந்து அரசினர் தம் நல்வினைக்கு இணங்கியும், மற்றதற்குப் பிணங்கியும் நிற்றல்; வேறொன்று ஆட்சிக்குரிய சட்டசபை முதலிய எல்லா அமைப்புக்களையும் பற்றி, அரசாங்க இயக்கத்தையே குலைத்தல்; பிறிதொன்று அரசாங்கம் ஒன் றிருப்பதாகவும் நினையாமல், அரசாங்கத் தொடர்புள்ள எதன்மாட்டும் அணுகாது, நமது முயற்சியால் நாட்டுக்கணுள்ள குறைகளைக் களைந்து, நாட்டு முறைகளைப் புதுக்க வேண்டு மென்பது. இவற்றினின்றும் பிரியும் கிளைகளை ஈண்டு விரிக்கில் அவை பெருகும். நியாய வரம்பு (அ) முதலாவது நியாய வரம்புக் கிளர்ச்சியை எடுத்துக் கொள்வோம். இக்கிளர்ச்சியால் எந்நாடாதல் உரிமை பெற்ற துண்டா? எச்சரித்திரமாதல் அங்ஙனம் அறைகிறதா? நாம் பல ஆண்டு அக்கிளர்ச்சியில் தலைப்பட்டு உழைத்து உழைத்து ஒய்ந்துவிட்டோம். அதனால், அதிகாரவர்க்கத்துக்கு நலனும், நமக்குக் கேடும் நிகழ்ந்து வருதலை அநுபவத்திற் கண்டும் இருக்கிறோம். அக்கிளர்ச்சியால் நாட்டிலுள்ள ஒரு சிலர் பதவி பெறக்கூடுமே யன்றி, நாடு உரிமை பெறாதென்பது திண்ணம். மேலும் அதற்கு நாட்டில் போதிய ஆதரவில்லை என்பதும் வெள்ளிடைமலை. நியாயவரம்புக் கிளர்ச்சி, உரிமைபெற்ற நாட்டார் தமக்குள்ள சிற்சில குறைகளைக் களைய வேண்டித் தமது நாட்டிடை நிகழ்த்துதற்கு உரியதன்றி, அஃது உரிமை யிழந்த நாட்டார், உரிமை குறித்து நிகழ்த்தும் உரிமைப் போருக்கு உரிய கருவியன்று. அத்தகைக் கிளர்ச்சியைப் பற்றி நாம் நினைப்பதும் ஆராய்வதும் வீண் முயற்சியாகும். கருவிப்போர் (ஆ) கருவி தாங்கிப் போர் புரிதல் நாட்டுக்கு உரிமை அளிக்கவல்ல முறையே யாகும். இதுகாறும் உலகிடை நாட்டப் பட்ட உரிமைகள் யாவும் கத்திமுனையில் நாட்டப்பட்டனவே. சரித்திரங்களில் இப் போரைப் பெரிதுங் காணலாம். கருவி தாங்கிப் போர்புரிதல், நமது நாட்டுக்கு இனி உரியதாகுமா? அஃது ஓர் உருப்பட்ட இயக்கமாக நாட்டில் கால்கொள்ளுமா? முயன்று முயன்று அதைக் கால்கொள்ளுமாறு செய்யினும், அதனால் பிரிட்டிஷாரை வெல்ல முடியுமா? நேயர்களே! நமது நிலையைக் கூர்ந்து கூர்ந்து ஆராயுங்கள். கொலைப்போர் வாயிலாக உரிமை பெறும் நிலையை இந்தியா கடந்துவிட்டது. அவ்வியக்கத்தைப்பற்றிச் சிலர் மூலை முடுக்குகளில் பேசி இன்புறலாமேயன்றிச் செயலிற் கொணரல் இயலாது. இய லாமை ஒருபால் கிடக்க. அஃது அறக்கிளர்ச்சி யன்றாகலான், அதை நினைத்தலும் பாவம். இந்திய மக்களாகிய நாம், கொல்லாமையை ஓம்பப் பிறந்தோமே யன்றிக் கொலையை ஓம்பப் பிறந்தோமில்லை. (இ) சட்டசபைகளைப்பற்றி நலத்திற் கலந்தும், கேட்டில் விலகியுமிருத்தல் என்பது ஆட்சிமுறையைக் குலைப்பதாகாது. ஐனப்பிரதிநிதிகளின் தீர்மானத்துக்கு மாறுபட்டு வினை யாற்றும் உரிமை, இராஜப் பிரதிநிதியிடம் உள்ளவரை நலத்திற் கலந்தாலென்ன? கேட்டில் விலகினாலென்ன? நியாய வரம்பு வழிநிற்கும் மிதவாதிகளும், தங்களுக்கு நலமெனத் தோன்று தற்குத் துணை நின்றும், பிறவற்றிற்குத் துணை நில்லாமலும் தங்கள் கடனாற்றி வருகிறார்கள். நம் சீனிவாச சாதிரியார் எத்துணையோ அரசாங்கத் தீர்மானங்களையும் மசோதாக் களையும் எதிர்த்துமிருக்கிறார்; மாறுபட்டு வாக்கும் அளித் திருக்கிறார். சட்டசபை நுழையும் நியாய வரம்பினர் அனைவ ராலுஞ் செய்யப்படும் ஒன்று, எவ்வாறு தனிக் கிளர்ச்சியாகும்? இப்பொழுதியங்குவது இரட்டையாட்சியாகலான், மந்திரி பதவிகளை ஏற்று, மாற்றப்பட்ட இலாக்காக்களை இயக்கியும், மற்ற இலாக்காக்கள் இயங்காதவாறு அவற்றைத் தடுத்தும் வரும் முறை கொள்வதும் நலத்துக் கிணங்கிக் கேட்டுக்கு விலக்கலின் பாற்பட்ட தெனச் சொல்வோருமுளர். பண உரிமை பெறாத இரட்டையாட்சியில் இப் போலிப் போரெல்லாம் என் செய்யும்? சட்டசபையில் ஒத்துழையாமை (ஈ) சட்டசபைகளையும் பிறவற்றையும் பற்றி நலந்தீங்கு எல்லாவற்றையும் எதிர்த்து, ஆட்சிமுறையைக் குலைக்க வேண்டுமென்னுங் கொள்கை மேற்போந்த எல்லாவற்றினுஞ் சீரியதே. இவ்வியக்கம், வங்காளம் மத்திய மாகாணம் என்னும் இரண்டிடங்களில் வெற்றியும் அளித்திருக்கிறது. வெற்றி யால் ஆட்சிமுறை இயங்காமல் ஒழிந்ததோ? இல்லையே! நமது செயலால் நமது மனோநிலையைப் புலப்படுத்தலாமேயன்றி, இப்பொழுதுள்ள நிலையில் ஆட்சிமுறையை எவ்வழியிலும் குலைத்தல் அரிது என்று நண்பர்கள் நவில்கிறார்கள். நமது மனோநிலை ஆள்வோருக்கு விளங்காமலா இருக்கிறது? இரண்டு மாகாண சபைகள் குலைக்கப்பட்டமை கண்டும், பிரிட்டிஷ் அரசாங்கம் என்ன செய்ய முற்பட்டது? சட்ட சபைகளும் பிற அமைப்புக்களுமின்றியும் பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் நடைபெறும் நிலையிலிருத்தலால், சட்டசபை முதலியவற்றில் நுழைந்து, தடை கிளத்துவதாலும் நமது நோக்கம் நிறைவேறாது. அழிவும் ஆக்கமும் (உ) முடிவாக நிற்பது ஒன்றே. அஃது எது? அஃது, அரசாங்க அமைப்புக்களில் எவ்விதத் தொடர்புங் கொள்ளாது, நாட்டின் குறைகளைக் களைந்து நாட்டுக்கல்வி தொழில் முதலியவற்றை வளர்ப்பதில் கருத்துச் செலுத்துவது. நமது துணையின்றிப் பிரிட்டிஷ் ஆட்சி இங்கு நடைபெறல் அரிது. துணையைச் சிறிது சிறிதாக மறுத்துக்கொண்டே வரின், ஆட்சிநிலை என்னாம் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. துணை மறுப்பால் ஒருபால் அழிவு வேலையும், மற்றொருபால் ஆக்க வேலையும் நிகழ்ந்துவரும். அதனால் நாட்டின் உரிமை நாட்டினின்றும் அரும்புவதாகும். அழிவும் ஆக்கமும் ஒருங்கே குறைவற நடைபெற்றுவரின், பின்னை அவை, சட்டமீறல், வரி கொடாமை என்னுஞ் சத்தியாக்கிரகப் போருக்குந் துணை புரிவனவாகும். இவ் வறப்போருக்கு வேண்டப்படுங் கருவிகள், உள்ள நிறை, உண்மை, பொறுமை, அஹிம்சை, தியாகம் முதலியன. இவை தாங்க ஒருப்படாத நாட்டில் அறப்போர் கேட்டையே விளைத்துச் செல்லும். ஒத்துழையாமையின் விளைவு மகாத்மா காந்தி நமது நிலை, ஆள்வோர் நிலை முதலிய வற்றைக் கூர்ந்து கூர்ந்து, உன்னி உன்னி, ஆய்ந்தாய்ந்தே, ஒத்துழையா இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வியக்கம் நாட்டிற்கு எத்தகைப் புத்துயிர் அளித்தது என்பதை நாம் அறிவோம். இவ்வியக்கம் நாட்டார் நாட்டத்தை நாட்டின் மீது திருப்பிற்று; அதிகார வர்க்க அமைப்புக்களைப் புல்லென மதிக்குமாறு செய்தது; நாட்டிலுள்ள குறைகளையெல்லாம் கல்லிக் கல்லிக் களைந்து வந்தது. உரிமைக்குரிய இயக்கம் இஃதே என நாடுங்கொண்டது. நாட்டின் மனத்தைக் கவர்ந்த நல்லியக்கமுஞ் சாய்வுற்றது! காரணம் பலபடக் கூறலாம். நமது நாட்டில் நாம் பெண்மணிகளையும் ஏழைமக்களையும் பன்னெடு நாளாக வருத்திவந்த பழவினைகள் திரண்டு, சௌரி சௌரா வில் கொலையாயெழுந்து, பார்தோலியில் நுழையவிருந்த சத்தியாக்கிரகப் போருக்குத் தடை நிகழ்த்திய ஒன்றையே சிறந்த காரணமாகக் குறிப்பிடலாம். சத்தியாக்கிரக இயக்கம், ஓரிடத்தில் உருக்கொண்டு முதிர்ந்தெழும் போது, ஏதாயினும் இடையூறு அதற்கு நிகழுமாயின் மீண்டும் அஃது அங்கெழ நீண்ட காலமாகும். இஃது அவ்வியக்கத்தின் இயல்பு. பார் தோலியில் நேர்ந்த முட்டினால் ஒத்துழையாமை ஒடுங்கி விட்டது. மீண்டும் பழையபடி அவ்வியக்கத்தை உயிர்ப்பிக்க நாடு இப்போதுள்ள நிலையில் இடந்தாராது. ஆனால், அவ்வியக் கத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, முறைகளைக் காலநிலைக் கேற்றவாறு மாற்றிக்கொண்டே போகலாம். காந்தியடிகள் காட்டிய அஹிம்சா தர்ம ஒத்துழையா வழியே, நமது நாட்டு உரிமைக்கு உரியது என்பதை மட்டும் நாம் மறத்தலாகாது. ஒரே கட்சி வேண்டும் காந்தி - தா - நேரு - ஒப்பந்தம் காந்தியடிகள் கோலிய சத்தியாக்கிரக முறைப்படி ஒத்துழையாமை இயங்காது ஒடுங்கினும், வேறுமுறை பற்றி யேனும், அதை உணர்வளவிலாதல் காத்துவர நாட்டார் உறுதிகொள்ளல் வேண்டும். மாறுதல் வேண்டாதாரும், சுயராஜ்யக் கட்சியாரும் பிணக்கின்றித் தத்தங் கடனாற்றி வருவரேல், மிக விரைவில் அணித்தே பழைய ஒத்துழை யாமையைக் காணுதல்கூடும். ஒத்துழையாமையில் இரண்டு திட்டங்களிருந்தன. ஒன்று அழிவுத் திட்டம்; மற்றொன்று ஆக்கத்திட்டம். அழிவுத் திட்டம் ஒத்துழையாமையோடு ஒடுங்கினும், அது வேறு வழியில் புதுமுறையில் நாட்டில் நிலவிவருகிறது. பள்ளி விலக்கு, நீதிமன்ற விலக்கு, சட்டசபை விலக்கு என்னும் மூன்றனுள் முதலிரண்டும் அறவே மாய்ந்தன. மூன்றாவதாகிய சட்டசபையை வெளியே இருந்து விலக்கு தற்குப் பதிலாக, அதனுள் நுழைந்து, அதைத் தகர்க்கும் முறை கையாளப்பட்டு வருகிறது. இம்முறை அழிவுத் திட்டத்தின் ஒரு கூறாகும். இம்முறையில் கருத்து வேற்றுமை உண்டு என்பதை நான் மறக்கவில்லை. அழிவு வேலை, அறவே இறந்துபட வில்லை என்பதொன்றே ஈண்டுக் கருதற்பாற்று. ஆக்க வேலையைப்பற்றிக் கருத்துவேற்றுமை யில்லை. அஃது எல்லார்க்கும் உரியது. சட்டசபை நுழைவில் விருப்பமில்லாத மாறுதல் வேண்டாதார், அச்சபை நுழைவோர் முயற்சிக்கு எவ்வழியிலும் இடையூறு நிகழ்த்தாது, ஆக்கத் திட்டத்தில் கவலை செலுத்திவரலாம். சட்டசபை நேயர்களும் அவ் வேலைக்குத் துணைபுரிந்து வரலாம். இவ்வாறு இருவர்க் குள்ளும் ஒத்துழைப்பு நேருமேல், பிணக்கு யாண்டிருந்து முளைக்கும்? இவ்வொற்றுமை நேயம், வங்காளத்தில், காந்தி - தா - நேரு ஒப்பந்த அறிக்கையில் முகிழ்த்தது; சமீபத்தில் பாடலிபுரத்தில் கூடிய அகில இந்தியக் காங்கிர கூட்டத்தில் நன்கு அரும்பிற்று. கான்பூரில் அது மலர்ந்து மணம் வீசுமாறு நாட்டவர் முயலல் வேண்டும். கான்பூருக்குப் பாடலிபுரம் வழி காட்டியிருக்கிறது. ஆனால், அவ்வழியில் சில கரடுமுரடான கோணல்களிருக் கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தினால், அப்பாதை எல்லாரும் நடக்கும் ராஜபாதையாக விரிந்து நிற்கும். அவ்வொழுங்கு முறைகளில் சில குறிக்க விரும்புகிறேன். காங்கரஸும் சுயராஜ்யக் கட்சியும் (அ) முதலாவது காங்கரஸுக்குள் சுயராஜ்யக் கட்சி யென்றும், மற்றக் கட்சிகளென்றும் இருத்தல் கூடாது; காங்கர கட்சியென்னும் ஒரே கட்சி யிருத்தல் வேண்டும். கடவுளிடத்திருந்து பிரியும் உலகுயிர் போலக் காங்கரஸி னின்றும் பிரிந்த சுயராஜ்யக் கட்சி, இனித்தனித்து நில்லாது காங்கரஸோடு ஒன்றுதல் வேண்டும். பழைய ஒத்துழையாமை யில் உறுதி கொண்டுள்ள மாறுதல் வேண்டாதார், இராட்டைச் சங்கத்தில் சேர்ந்து தொண்டு செய்து வரலாம். இராட்டைச் சங்கத்துக்குக் காந்தியடிகள் விரும்பும் எல்லா வழிகளிலும் காங்கர துணைபுரிதல் பொருத்தம். உரிமையில்லா நாடும் கட்சிகளும் (ஆ) நாட்டிலுள்ள மற்ற அரசியல் கட்சியினரும் காங்கரஸில் சேர மனங் கொள்ளல் சிறப்பு. சேர்ந்தபின் அவ ரவர் தத்தம் திட்டங்களை வலியுறுத்திக் காங்கரஸில் கலாம் விளைவியாதிருத்தல் நாட்டின் நலன் நாடுவதாகும். நாடு முழுஉரிமை பெறும் வரை, நாட்டில் பல கட்சிகள் நிலவல் நாட்டின் ஆக்கத்தைக் குலைப்பதென்பதை எவ்வறிஞரும் ஒப்புவர். உரிமை பெற்ற பின்னர்ப் புற்றீசல் போலப் பல கட்சிகள் புறப்படலாம். கட்சிப் பிணக்கிற்கு இடமளிப்பன சட்டசபை நுழைவு முதலியன. பிணக்கெழா முறையில் திட்டம் கோலப்படல் வேண்டும். சுயராஜ்யக் கட்சியினிடம் ஐயம் (இ) சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் ஒத்துழையாக் குறி உண்மையான், அதை முதலாக் கொண்டு, அதன்கண் பிணக்குக்கு மூலமாகவுள்ள சில முறைகளை மாற்றல் நல்லது. சுயராஜ்யக் கட்சியார் சட்ட சபையில் நுழைந்து, உறுதிமொழி கூறிப் பீடத்தில் அமர்தலால், அவர் மாட்டுப் பலதிற ஐயங்கள் மற்றக் கட்சியார்க்கு நிகழ்கின்றன. மற்றக் கட்சியார் ஐயம் ஒருபால் கிடக்க. சுயராஜ்யக் கட்சியில் சில வேடதாரிகள் சேர அக்கட்சி இடந் தருவதாகிறது. உத்தியோகம் ஏற்கலாமா? V‰whby‹d? என்னும் பேய்ச் சோதனை சிலரையாதல் அலைக்கும். ஆதலால், சட்டசபை பற்றலைப்பற்றிய விதியில் சில மாறுதல் செய்தல் வேண்டும். கயையில் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச ஐயங்கார் கொணர்ந்த தீர்மானத்தையொட்டி விதி செய்வது நலம். சட்டசபையை வெட்ட வெளியாக்கி, நாட்டிற் போந்து, ஆக்கவேலைக்குத் துணை நின்று, அயல்நாட்டுப் பொருள் மறியல், கள்ளுக்கடை மறியல் முதலிய தடைவேலைகள் செய்து, சட்ட மீறலுக்கும் வரி கொடாமைக்கும் நாட்டைப் பண் படுத்தலாம். இவ்வாறு செய்யாது, சட்டசபைக்குள் நுழைந்து போராடுவது, வீண் பொழுதுபோக்குவதாகும். அவ்வழியிலும் இரண்டாண்டு கழித்துப் பார்த்தோம். மீண்டும் அந்நெறி புகுந்து உழலாது, ஒருபடியேறிச் சட்டசபையை வெட்ட வெளியாக்கும் முறை பற்றுவது நாட்டுக்குப் புத்துயிர் அளிப்ப தாகும். மற்றக் கட்சியாரும் இதற்கு உடன்படுவது நலம். இப்போரில் தலைப்பட விருப்பமில்லாதார், எதிர்கட்சிகளை உண்டுபண்ணாமல் ஒதுங்கி நிற்றல் ஒழுங்கு. கதர் (ஈ) காங்கரஸில் சேரும் ஒவ்வொருவரும் என்றும் எவ்வேளையிலும் கதர் தரித்தே தீரல் வேண்டும் என்னும் விதியிருத்தல் விழுப்பந்தரும். குறிப்பிட்ட சிலபோழ்து கதர் தரித்தல் என்னும் விதி நீக்கப்படல் தகுதி. பட்டம் பதவி (உ) சட்டசபைத் தலைவர் பதவி வகித்தல், அரசாங்கத் தொடர்புடைய கூட்டங்களில் கலத்தல், பட்டமேற்றல், இன்னோரன்ன பிற விலக்கப்படல் வேண்டும். இப் பதவிக ளேற்றுள்ள அன்பர்கள், உடனே அவைகளினின்றும் விலகி விடல் வேண்டும். (ஊ) தேர்தல் காலங்களில் நாட்டுக்குரிய அறநெறி கடைப்பிடித் தொழுகல் வேண்டும். இத்திட்டங்கொண்ட ஒரே கட்சி, காங்கரஸினின்றுங் கிளம்பினால், நாட்டில் எழுச்சியும், அதிகாரவர்க்கத்துக்கு அச்சமும் நிகழும். சுயராஜ்யக்கட்சியார் ஒருபடி முன்னேற வேண்டுமே யொழிய, ஒருபடியுங் கீழிறங்கலாகாது. முன்னேற்ற முறை நாட ஒருப்படாது, இப்பொழுதுள்ள வண்ணமோ, அல்லது கீழிறங்கவோ சுயராஜ்யக் கட்சி உளங்கொள்ளுமாயின், அதுவும் மற்றக் கட்சிகளுள் ஒன்றாகக் கருதப்படும். எம்முறை யிலோ ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொள்ளும் ஓரியக்கத்துக்கே நாடு துணைசெய்யும். வருந் திங்கள் முடிவில் கான்பூரில் கூடப்போகுங் காங்கரஸில், எல்லாக் கட்சிகளும் ஒன்றி, அவை யாவும் காங்கர கட்சியெனும் ஒரே கட்சியாகப் பரிணமிக்கவேண்டுமென்று எல்லாம் வல்ல ஆண்டவனை வழுத்துகிறேன். வகுப்புப் பிணக்கு நாடும் வகுப்பும் ‘všyhU§ fh§fuÌš xU f£áÆduhf x‹¿É£ lhš tF¥ò ey¤ij v›thW fh¥gJ? என்று வகுப்பு நலன் நாடுவோர் கேளாதிரார். முதன்மை, வகுப்புக்களித்தல் வேண் டுமா? அல்லது நாட்டுக்களித்தல் வேண்டுமா? என்பதைச் சகோதரர்கள் சிந்திப்பார்களாக. நாடு இல்லையேல் வகுப் பேது? பிற ஏது? சுவரை வைத்தன்றோ சித்திரம் எழுதல் வேண் டும்? வகுப்பு வகுப்பு என்று, எத்துணைநாள் அந்நிய ஆட்சி நிழலில் நின்றுகொண்டிருப்பது? வகுப்புநலன் நாடாது, நாட்டு நலன் ஒன்றே நாடி உழைப்பது போற்றற்குரியது. நாட்டு நலனோடு வகுப்பு நலனையும் நாடிப் பிணக்கின்றி உழைத்தலுங் கூடும். அதிகாரவர்க்கத்தோடு போர் புரிவதில் எக்காரணம் பற்றியும் எவ்வகுப்பாரும் பிணங்காது, போர் முனையில் இணங்கி நிற்றல்வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமோ எதுவோ எல்லாப் பிணக்குகளையுங் காங்கரஸுக்குள்ளே முட்டி மோதிக்கொள்ளச் செய்யவேண்டுமேயன்றிக் காங்கரஸை விடுத்து, அப்பிணக்குகளைப் போக்க, மற்ற இடம் நண்ணல், வினையை விலைக்கு வாங்குவதாக முடியும். நாம் அனைவரும் ஒருமுகமாக நின்று அறப்போர் புரிவமேல் உரிமை பெறல் உறுதி; உறுதி. நாட்டில் உரிமை மணங் கமழும்போது வகுப்புப் பிணக்குத் தணியும் என்பது எனது உள்ளக்கிடக்கை. ஹிந்து - முலிம் :- ஹிந்து - முலிம் ஒற்றுமை, உரிமைப் போருக்கு எவ்வளவு இன்றியமையாத தென்பதை அறியா தாரில்லை. ஒத்துழையா இயக்கத்தின் போது, அவ்வொற்றுமை, நாட்டில் எவ்வாறு நிலைபெற்றிருந்தது என்பதும் நாட்டார்க்குத் தெரியும். அது போழ்து, ஹிந்துக்களும் முலிம்களும் இந்திய ரெனும் உணர்வோடு சிறைக்கோட்டம் நண்ணியது சரித் திரத்தில் பதியத் தக்கதாகும். அத்தகைய ஒற்றுமைக்கும் இதுபோழ்து குலைவு நேர்ந்திருக்கிறது. வட நாட்டில் ஹிந்து - முலிம் குழப்பம் இல்லாத இடம் இல்லை என்றே சொல்ல லாம். அந்நாட்டில் இரு வகுப்பாருள்ளும் மூண்டெழும் அனல், காந்தியடிகள் அன்புப் புனலாலுந் தணியவில்லை எனில், அதன் கொதிப்பின் வேகத்தைக் கூறவும் வேண்டுமோ? அக்கொதிப்பு அடங்கவேண்டுமேல், ஒத்துழையாமை போன்ற ஓர் இயக்கம் நாட்டில் தோன்றுதல் வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்து - முலிம் பிணக்கெனும் அனல் மூளாதிருப்பது குறித்து ஆண்டவனை வாழ்த்துகிறேன். பிராமணர் - பிராமணரல்லாதார் : ஆனால் தமிழ் நாட் டில் பிராமணர் - பிராமணரல்லாதார்க் குள்ளெழும் அனல் கொழுந்துவிட்டெரிகிறது. அவ்வெரியை எப்படித் தணிப்பது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதைத் தணிக்கும் என்று சொல்லப்படுகிறது. இஃது ஒரோ வழியில் (ஏகதேசத்தில்) அவ்வெரியைத் தணிக்க வல்லதே யன்றி, முற்றும் அதைத் தணிப்பதாகாது. வயிற்றுக்கென ஆங்கிலம் பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்குக்கு முதற் காரணம் எது என்பது கவனிக்கப்படல் வேண்டும். வயிற்றுக் கென ஆங்கிலம் பயில்வதே முதற்காரணம். அக்கல்வி பயின்றார் தொகைக்கேற்ப உத்தியோக பீடங்கள் இல்லை. உத்தியோகம் பெறாத வருத்தம், வகுப்புப் பூசலை உண்டுபண்ணுகிறது; வகுப்புப் பிரதிநிதித்துவப் போராட்டத்தை எழுப்புகிறது. இப்பூசல் பொன்ற வேண்டுமானால் வயிற்றுப் படிப்பு நாட்டம் நாட்டுத் தொழின்முறைகள்மீது திரும்பல் வேண்டும். பூசல் முதல் முதல் ஆங்கிலம் பயின்றவரிடத்திருந்து எழுகிறதா மற்றவரிடத்திருந்து எழுகிறதா என்பதை ஆராய்ந்தால் உண்மை காணல்கூடும். இன்னும் வயிற்றுப் படிப்புப் பெருகப் பெருக நமது நாடு சுடுகாடாகுமென்பது திண்ணம். உத்தியோக அளவில் - அரசியல் கட்சியளவில் - கட்டுப் பட்டுக் கிடந்த பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்கு, இதுபோழ்து எல்லாத் துறைகளிலும் நண்ணி நண்ணித் திருவிளையாடல் புரிந்து வருகிறது. இப் பிணக்கு, ஆரியர் திராவிடர் கிளர்ச்சி, வடமொழி தென்மொழிக் கிளர்ச்சி முதலிய கிளர்ச்சிகளையும் எழுப்பி வருகிறது. அஃது இவ்வள வோடு நின்றிருக்கிறதா? இல்லையே. அது பெரியோர் வழி பாட்டிலுங் குறுக்கிட்டு நிற்கிறது. ஆரியர் - திராவிடர் ஆரியர் - திராவிடர் கிளர்ச்சியைச் சிறிது நோக்குவோம். இக்கிளர்ச்சி பொருளுடையதா என்பது ஆராயற்பாலது. தென்னாட்டிலுள்ள மக்களுள் ஆரியர் இன்னார் திராவிடர் இன்னார் எனப் பகுத்துக் கூறல் எவரால் இயலும்? ஆரியர் தென்னாடு போந்த காலம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்கடந்து நிற்பதென்று சரித்திரஞ் சொல்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளாக ஈங்கு நிலைத்து வாழ்ந்துவரும் மக்களாகிய ஆரியர்க்கும், இந்நாட்டுப் பழங் குடிகளாகிய திராவிடர்க்கும் கலப்பு நிகழாதிருக்க முடியுங்கொல்! சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நமது நாடு போந்த ஐரோப்பியர்க்கும், நம் நாட் டார்க்கும் கலப்பு நேர்ந்து, அதன் பயனாக ஒரு தனிவகுப்பும் நமது நாட்டில் தோன்றியிருக்கிறதெனில், பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் நிலைத்து, வழக்க ஒழுக்கங்களிலும், கடவுள் வழிபாட்டிலும், பிறவற்றிலும் ஒன்றுபட்டு வாழும் ஆரியர் - திராவிடருள் கலப்பு ஏற்பட்டிராது என்று எவரால் கூறுதல் கூடும்? இப்பொழுது தம்மைத் தூய ஆரியரெனக் கருதுவோர் உடலில் திராவிடக் குருதியும், அவ்வாறே தம்மைச் சுத்த திராவிடரென எண்ணியிருப்போர் உடலில் ஆரிய இரத்தமும் பாய்ந்துகொண்டிருப்பதை ஊன்றிப் பார்க்க அன்பர்கட்கு நேரம் இல்லைபோலும்! வடநாட்டிலிருந்து தென்னாடு போந்த ஆரியர் ஒரு சிலரே. அன்னார் வழக்க ஒழுக்கங்களை மேற்கொண்டு ஆரியரான திராவிடரே பலர். ஆரியரும் திராவிடருங் கலந்து ஓரினமாகி யும், பின்னை வந்த பற்பல இனத்தவரோடுங் கூடிக் கலந்தும் வாழ்ந்து வருகின்றனர். இக்கலப்புடையார் பல சாதியினராய்ப் பல சமயத்தவராய் வதிகிறார். சரித்திர ஆராய்ச்சி இக்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைவரையுந் தமிழரெனச் சொல்வதே சிறப்பு. இந்நாளில் பிராமணரை ஆரியரென்றும், பிராமணரல்லாதாரைத் திராவிடரென்றும் உரைத்தல் புனைந்துரையேயாகும். இவ்வாறு கூறுவோர், இன்னுஞ் சின்னாள் கடந்தால், இப்பொழுது ஹிந்து மதம் விடுத்துக் கிறிதுவ மதம் புகுந்துள்ள அன்பர்கள் எருசலேமி லிருந்து போந்தவர்களெனப் புகன்று பிணக்குறுவர்போலும்! தமக்கு அவ்வப்போது கிடைக்கும் அகச்சான்று புறச்சான்று களைத் தழுவிச் சரித்திரக்காரர் எழுதும் நூல்களை ஆராய்ச்சிக் குரியனவாகக் கொள்ளவேண்டுமே யன்றி அவற்றை மறை மொழியாகக் கொள்ளலாகாது. இன்று காணப்படும் உண்மை, நாளை மறுக்கப்படுவதைக் கண்டுங் கேட்டும் வருகிறோம். ஆரியர் பிற நாட்டிலிருந்து போந்தவரா, திராவிடர் இந் நாட்டிலேயே தோன்றினவரா என்னும் ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. முற்றுப்பெறாத ஒன்றை ஆராய்ச்சி அளவில் வைத்துக்கொள்ளுதலே அறிவுடைமை. அவரவர் தத்தம் ஆராய்ச்சியிற்கண்ட சில உண்மைகளைப் போருக்குக் கருவிகளாகக் கொள்ளுதல் அறியாமை. பண்டைநாளில் ஆரியர்க்கும் திராவிடர்க்கும் பெரும் பூசல் நடந்துமிருக்கலாம். அதை இந்நாளில் ஏன் பாராட்டி இடர்ப்படல் வேண்டும்? ஒரு நாட்டு மக்களாய், அந்நாட்டின் நலன் தீங்கிற்குரியராய் வாழ்வோர் தமக்குள் சில போலிக் காரணங்களால் பிணங்குவது நாட்டைச் சிறுமைப்படுத்துவதாகும். அன்பிற் சிறந்த அறிஞர் கள் இத்தகைப் பிணக்குகள் எழாதவாறு காத்துவரல் வேண்டும். வடமொழி தென்மொழி ஆரியர் - திராவிடர் பிணக்கை யொட்டி நமது தென்னாட் டில் வடமொழி தென்மொழிப் போரும் புகைந்தெழுகிறது. வடமொழி நமது பரத கண்டத்துக்குரிய மொழி யென்றும், தென்மொழி இத் தென்னாட்டுக்குரிய மொழியென்றும் மேலே கூறி யிருக்கிறேன். வடமொழி பிராமணர் மொழியென்றும் தமிழ் மற்றவர் மொழியென்றுஞ் சொல்லப்படுவதை நான் மிக உரமாக மறுக்கிறேன். வடமொழி பிராமணர்க்கும் மற்றவர்க் கும் உரிய மொழியாகவே வளர்ந்து வருகிறது. வடமொழியி லுள்ள பல நூல்கள் பிராமணரல்லாதாரால் யாக்கப்பட்டிருத் தலை உணர்வோர், அம்மொழி ஒரு கூட்டத்தார்க்குரியதெனக் கூறார். அருகர் வடமொழியில் எழுதியுள்ள நூல்கள் பலப்பல. வடமொழி பரதகண்டத்துக்குரிய மொழியே யன்றி, ஒரு கூட்டத்தார்க்குரிய மொழியன்று. தென்மொழியும் அவ்வாறே தென்னாட்டுக்குரிய மொழியேயன்றிக் குறிப்பிட்ட ஒரு வகுப்பார்க் குரியதன்று. முன்னைநாளில் புலவர்கள் இரு மொழியையும் இரு கண்ணெனப் போற்றி வந்தார்கள். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய மறையோரது தமிழ்ப் புலமையையும், சிவஞான முனிவர் முதலியோரது வடமொழிப் புலமையையுங் கண்ட தமிழ் நாட்டில் மொழிச் சண்டையும் ஒருபால் மூண்டு நிற்கிறது! இச்சண்டை அயல்நாட்டு மொழி வளர்ச்சிக்குத் துணை நில்லாது வேறென் செய்யும்? தமிழ் நாட்டிற் பிறந்த ஒருவன், முதலில் தனது தாய்மொழியாகிய தமிழ் பயின்று புலமைபெற்றுப் பின்னை எம்மொழியும் பயிலலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதான், தன்னைத் தமிழ் நாட்டான் என்று எங்ஙனங் கூறிக் கொள்வான்? சில இடங்களில் பெரியோர் வழிபாட்டிலும் வகுப்புக் காழ்ப்புத் தலைகாட்டுகிறது. ஆண்டவன் அருள் பெற்ற சில பெரியோரைச் சூத்திரரெனச் சில பிராமணர் வந்தனை வழிபாடு செய்ய மறுக்கிறார். அதைக் காணும் பிராமணரல்லாதார் வருந்துகிறார். சில பிராமணரல்லாதார் வன்மங் கொண்டு மறையோர் குலத்திற் பிறந்த சில அடியவரை வழுத்தா தொழி கிறார். இஃதென்ன? காலத்தின் கோலமா? கலியின் கொடு மையா? அந்தோ! பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்கு இதுபோழ்து சமய உலகையும் முற்றுகை செய்திருக்கிறது. இதை யாரிடத்தில் முறையிடுவது? எல்லாம் வல்ல ஆண்டவனே! உன்னையே நோக்கி முறையிடுகிறேன்; வேறு வழி காண்கிலேன். இப் பிணக்கு அணித்தே அடங்குமென்று எனக்குத் தோன்ற வில்லை. இருவகுப்பிலுமுள்ள நன்மக்கள் ஒன்று சேர்ந்து பிணக்கை ஒழிக்க முயல்வார்களாக. தீண்டாமை : - தீண்டாமை என்பது ஹிந்து மதத்திலுள்ள ஒரு பெரும் நோய். தீண்டாமை ஹிந்து மதத்திலுள்ள ஒரு கறை என்று மகாத்மா காந்தி அடிக்கடி அறைந்துவருவது அன்பர் கட்குத் தெரியும். இதைப்பற்றி யான் பன்முறை எழுதியிருக் கிறேன்; பேசியிருக்கிறேன். ஹிந்துமதச் சிறை; வேதமும் தீண்டாமையும் கடவுள் படைப்புக்கு உட்பட்ட மக்களுள் ஒரு கூட்டத் தாரைத் தீண்டாதாரென விலக்கி வருத்துவதினுங் கொடுமை வேறொன்றுண்டோ? இக்கொடுமை, மக்கள் கூட்டத்துக்கே உய்யுநெறி காட்டும் உயர்கொள்கையுடைய ஹிந்து மதத்தைப் பரவாதவாறு தகைந்து சிறைப்படுத்தி யிருக்கிறது. ஹிந்து மதத்திலுள்ள இக் கொடுமை, அம்மதத்தை மாத்திரமா சிறைப்படுத்தியிருக்கிறது? அந்தோ! என்னருமைப் பாரத நாட்டையே அது சிறைப்படுத்தி யிருக்கிறது. ஹிந்துமதத் திலுள்ள இக்குறை மற்ற இந்தியரையும் வருத்தி நிற்கிறது. இவ்வேளையில் தீண்டாமை இருந்தே தீரல் வேண்டும் என்று சில நூல்களைக் காட்டிப் போரிடுவோர் இல்லாமலில்லை. தீண்டாமை வேண்டும் என்னும் நோக்கோடு எழுதப்பட்ட நூல்களில் தீண்டாமை திகழா திருக்குமோ? உரிமை வடிவான ஆண்டவன் அருள்பெற்ற மெய்யடியார்கள் அருளிய நூல்களில் தீண்டாமை என்னும் நாற்றம் வீசவே வீசாது. ஹிந்து வேதத்தில் தீண்டாமை உண்டா இல்லையா என்று சிலர் வினவுகின்றனர். வேதம் தீண்டாமை உண்டு என்றால் தீண்டாமை கோடலும், இல்லையென்று கூறினால் அதை விடலும் செவ்விய அறமாகத் தோன்றவில்லை. வேதத்தில் தீண்டாமை சொல்லப்பட்டில்லை என்று, வேதத்தில் வல்ல தயானந்தர், சிரத்தானந்தர், காவ்ய கண்ட கணபதி சாதிரியார் முதலியோர் கூறியிருக்கிறார். வேதம் தீண்டாமை வேண்டும் என்று விளம்பினாலும், யான் அத் தீண்டாமையைத் தொலைக்கவே முயல்வேன். பண்டை நாளில் வைதிகர் சில கருமங்களில் உயிர்ப்பலியிட்டுக் கொண் டிருந்தனர். இப்பொழுது ஏன் அவ்வழக்கம் விடப்பட்டது? ஜைனமும் பௌத்தமும் உயிர்ப்பலியிடல் தவறு என்று அறிவுறுத்திற்று. வைதிகரும் அந்நலத்தைக் கொண்டனர். வேதம் வேதம் என்று ஒரு கொடிய வழக்கத்தைப் போற்றிக் காத்துவரல் வேண்டுமோ? தீண்டாமை எவரிடம்? மக்களுள் தீண்டாமை பாராட்டுவோன், அம் மக்கள் உள்ளத்தில் ஒளிரும் இறைவனை எப்பொழுது காணவல்லான்? தீண்டாமை என்னுங் குற்றம் யாரிடத்திலிருக்கிறது? ஏழை மக்களிடத்திலா? இல்லை! இல்லை! தீண்டாதாரெனப் பிறரைக் கொண்டு, உயர்ந்த வகுப்பார் எனத் தம்மைக் கருதுவோர் உள்ளத்திலேயே அம் மாசு படிந்திருக்கிறது. அம் மாசுடைய மனம் மாறினால் தீண்டாமை, நூலிலிராது; மதத்திலிராது; நாட்டிலிராது. அம் மனமாற்றமுறாது பேசுவதால், எழுதுவ தால், தேர்தல் காலங்களில் ஏழைமக்கள் துணை பெறவேண்டி உடனுண்ணலால் தீண்டாமை ஒழியாது. தீண்டாதார் எனச் சொல்லப்படுவோர் தொகையில் ஏறக்குறைய ஏழு கோடிப் பேர் இருக்கிறார். இத்தொகை, நம்மை ஆள்வோர் தொகையினும் பெரிது. அவ்வேழு கோடி மக்கள், தங்களைத் தங்கள் நாட்டிற் பிறந்த மற்றவர்கள் தீண்டா தார்களெனக் கழித்தலால், அதிகாரவர்க்கத்தினர்பால் அடைக் கலம் புகுந்து நிற்கிறார்கள். நாட்டிற் பிறந்த ஒரு கூட்டத்தார், நாட்டிலெழும் உரிமைப் போரில் கலவாது, மற்றவர் பக்கல் நிற்குமாறு செய்துள்ள தீண்டாமையை, உடனே களைய முற்படுவதன்றோ உரிமை வேட்கைக்கு அறிகுறியாகும்? தீண்டாமையை ஒழிக்க முன்னே சிலர் முயன்றனர். அன்னார் முயற்சி ஓர் இயக்கமாக உருக்கொள்ளாதொழிந்தது. காந்தியடிகள் முயற்சியால் அவ்வியக்கம் ஓர் உருக்கொண்டு நாட்டில் நிற்கிறது. அவ்வியக்கந்தோன்றி நான்கு ஆண்டுகளா கியும், இன்னும் அது வெற்றியளிக்கவில்லை. நம்மால் நிகழ்த்த வல்ல ஒன்றை நிகழ்த்த இயலாது, உரிமை, உரிமை என்று கூச்சலிட்டால் உரிமை முளைத்துவிடுமோ? தேசபக்தர்களது முதல் கடமை, தீண்டாமை என்னும் பேயை நாட்டினின்றும் ஓட்ட முயல்வதே யாகும். தீண்டாமையைப் பற்றி எழுந்த பேச் சும் எழுத்தும் சாலும்; சாலும். இனி வேண்டற்பாலது செயலே. தீண்டாமை போக்கச் சக்தியாக்கிரகப் போரன்றி வேறு வழியில்லை. வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போர் பயனளித்தது; கல்பாதி அப்போரை இப்பொழுது வேண்டி அழைக்கிறது. மனித உடல் தாங்கிய உயிர்கள், தெருவில் கூடவா உலவுதல் கூடாது? கொடுமை! கொடுமை!! பாரத மாதாவின் பக்கவாதம் பெண்மக்கள் : மற்றும் ஒரு கொடுமை நமது நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. அஃதென்ன? அது பெண்மக்களை அடிமைக் குழியில் வீழ்த்தி யிருப்பது. பாரத மாதாவின் முகங் கள் முப்பது கோடி என்றும், கைகள் அறுபதுகோடி என்றுஞ் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒரு பாதி பக்கவாதம் உற்றுக் குருதியோட்டங் குன்றிச் செயல் அற்றுக் கிடத்தலைக் காண் கிறோம். நமது நாட்டுப் பெண்மக்கள் எந்நிலையுற்றிருக் கிறார்கள்? நம் பெண்மக்கட்குப் போதிய கல்வியுண்டோ? உரிமையுண்டோ? வீரமுண்டோ? இவர்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகள் எத்தன்மையினராயிருப்பார்கள்? பெண்மக்களை அடிமைப்படுத்திய ஆண்மக்களும் அடிமைப்படுதல் இயல் பன்றோ? ஒரு சீதைக்காக ஸ்ரீராமபிரானும், ஒரு பாஞ்சாலிக் காகப் பாண்டவரும் எவ்வளவு பாடுபட்டனர்? அத்தகைய ஆண்மக்களை ஈன்ற இந்நாட்டில் இதுபோழ்து எத்துணைச் சீதைகள் எத்துணைத் திரௌபதிகள் கண்ணீர் உகுக்கிறார்கள்? அவர்கள் உருக்குங் கண்ணீர் வீண்போமோ? அது கூரிய வாளாய் உரிமையை வெட்டிச் சாய்த்திருக்கிறது. ஆதலால் பெண்மக்கட்கு உரிமை நல்கி, உரிமைப் போராட்டத்தில் அவர்களையுந் தலைப்படுமாறு செய்ய வேண்டுவது நம்மனோர் கடன்களுள் ஒன்று. தொழிலாளர் இருவகை முயற்சி : - இவ் வகுப்பினர்க்கும் முதலாளி கட்கும் உற்றுள்ள பிணக்கு உலகப் பிணக்காகும். ஐரோப்பாப் பெரும் போருக்குப் பின்னர் மேல்நாட்டுத் தொழிலாளர், முதலாளி இயக்கம் உலகில் உள்ளவரை உலகம் போருக்கும் புன்மைக்கும் இரையாகுமென்றும், ஆதலால் உலகிலே முதலாளி வகுப்பே இருத்தல் கூடாதென்றும் நல்லுணர்வு பெற்று, உலக உரிமையைக் குறிக்கொண்டு போராடி வருகின்றனர். இப் போராட்டம் இரண்டு வழியில் இதுபோழ்து மேல்நாட்டில் இயங்கி வருகிறது. ஒன்று கருவி தாங்கிப் போர் புரிந்து முதலாளிக் கூட்டத்தை அழித்தல் வேண்டுமென்பது; இன்னொன்று நியாயவழியில் அரசாங்க அமைப்புகளைப் பற்றி ஆட்சிகளை வயப்படுத்தல் வேண்டுமென்பது. இவ்விரு கூட்டத்தாரும் முறைகளில் வேறு பட்டாலும் நோக்கத்தில் வேறுபடுவதில்லை. எம்முறையோ ஒருமுறை தொழிலாளர் நோக்கத்தை நிறைவேற்றும் என்பது ஒருதலை. இந்தியத் தொழிலாளர் இந்நிலையில் இந்தியத் தொழிலாளர் என் செயல் வேண்டும்? இந்தியா மூன்றாவது மனிதரால் ஆளப்படும் நாடா யிருப்பதால், அதன்கண் வாழுந் தொழிலாளர் மனம், பெரிதும் இந்திய முதலாளிகள்மீது செல்வதில்லை. காங்கரஸில் சேர்ந்த இந்திய முதலாளிகள் வெற்றிபெற இந்தியத் தொழி லாளர் துணைசெய்து வருகின்றனர். இந்தியத் தொழிலாளர், முதலாவது நமது நாடு அந்நிய ஆட்சியினின்றும் விடுதலை யடைந்தால் போதும் என்று எண்ணியே, இந்திய முதலாளி களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். இந்தியாவில், மேல்நாட்டு முறைப்படி ஏற்பட்ட தொழிலாளர் இயக்கம் இன்னும் பண் படவில்லை; தொழிலாளர் சங்க அமைப்புக்கெனத் தனிச் சட்டம் இன்னும் உண்டாகவில்லை. நாடும் தொழிலாளரும் இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யுந் தொழிலாளர் ஒருசிலரே. வயல்களில் வேலை செய்யுந் தொழி லாளரே பலர். இவர்க்குள்ள துன்பம் அளவிடற்பாலதன்று. இச் சகோதரர்கள் துன்பத்தின் இயல்பு இத்தகைத்து என்றறியும் உணர்வையும் இழந்து கிடக்கிறார்கள். நமது நாடு என்னுஞ் சொல் பெரும்பான்மைத் தொழிலாளரையே குறிப்பதாகும். ஏழை மக்கள் நிலையை ஈண்டு விரிக்கில் அது பெருகும். உழவுத் தொழிலாளருள்ளிட்ட எல்லாருஞ் சேர்ந்து, உலகத் தொழிலாளர் இயக்கத்துக்கு அரணாமாறு ஓர் இயக்கம் நமது நாட்டிலும் தோற்றுவித்தல் வேண்டும். அப் புனித இயக்கந் தோன்றுமாறு காங்கர தலைவர்கள் முயன்றால் விரைவில் நாடும் உலகமும் உய்யும். காங்கர தலைவர்கள் தொழிலாளர் நலன் நாடாது, தங்கள் நலத்துக்கு அவரைப் பயன்படுத்தல் பாவம். வகுப்புப் பிணக்கு வகுப்புப் பிணக்கைப்பற்றி இன்னும் விரித்துக் கூற வேண்டுவதில்லை. பலதிற வகுப்புப் பிணக்குகள் நாட்டில் உலவு மட்டும் சுயராஜ்யக் கிளர்ச்சியால் பயன் விளையாது. ஒரு புறம் வகுப்புப்பிணக்கு நீக்கத்துக்கும், மற்றொரு பக்கம் உரிமை யுணர்வுக்கும் தேபக்தர்கள் உழைத்தல் வேண்டும். சுயராஜ்ய சேவை சுயராஜ்ய சேவையில் தலைப்படுவோர் சுயராஜ்யம், ஒருவர் அளிக்க மற்றொருவர் பெறுவதன்று. சுயராஜ்யம் என்பது, பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் அவரவர்பால் மருவி விளங்குவது. பாரதமாதா வயிற்றில் பிறந்த நாம் தொகையில் முப்பது கோடி இருக்கிறோம். முப்பது கோடி பேரும் ஒரு தனி மனிதனைப்போல் வினையாற்றின், அவ் வினையினின்றும் சுயராஜ்யம் அரும்பும். முப்பது கோடி மக்களுள் எத்துணைப் பேர் சுயராஜ்யப் போரில் தலைப்படு கின்றனர்? முப்பது கோடியில் ஒரு பாதி பெண்மக்கள் தொகை. இக்கூட்டம்போக, எஞ்சி நிற்கும் ஆடவர் தொகை பதினைந்து கோடி. இப் பதினைந்து கோடி ஆடவருள் ஏறக்குறைய நான்கு கோடிப் பேர் தீண்டாதாரென ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இவ்விரு கூட்டத்தாரைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். மிகுதியுள்ளவர் பதினொரு கோடி பேர். இவருள் பூபாரமாக வுள்ள சந்நியாசிக் கூட்டம், அரசாங்க ஊழியர், நோயாளிகள், குழந்தைகள், நாட்டைப்பற்றிக் கவலையில்லாதார் போக, மிகுதியாக நிற்போர் இலட்சக் கணக்கில் அடங்கிவிடுவர். இவர்களிற் பலரை ஹிந்து - முலிம் பிணக்கு, பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்கு முதலிய நோய்கள் பீடித்துவிடு கின்றன. இந் நோயினின்றும் பிழைத்துத் தேச சேவையில் இறங்குவோர் தொகை ஆயிரத்தில் சுருங்கி நிற்கிறது. ஒத் துழையாக் காலத்தில் எவ்வேற்றுமையுங் கருதாது சிறை புகுந்த இருபத்தையாயிரவரை உரிமைப் போர்வீரர் என்று ஒருவாறு தொகுத்துக் கூறலாம். அவரனையார் சில ஆயிரவர் இருக்க லாம். இதுபோழ்து அவரிலும் பலரை அரசியல் கட்சி அரவந் தீண்டி இருக்கிறது. அதனால் மயக்குண்டோர் போக, மிகுதி யுள்ளவர் நூற்றுவராகவே இருப்பர். தொகையில் முப்பது கோடி, செயலில் முந்நூறாகச் சுருங்குகிறது என்று சொல்வது மிகை யாகாது. இத்தகை இந்தியாவை, ஒற்றுமையும் ஒழுங்குமுடைய ஒரு லட்சம் போர்வீரரைக் கொண்டே ஒரு சிற்றரசும் எளிதில் ஆளலாமன்றோ? ஆதலால், முப்பது கோடி மக்களும் இந்தியர் என்று கொள்ளும் ஒன்றிய உணர்வில் அரும்புவது நமக்குரிய சுயராஜ்யமாகும். தேசியமும் அந்நிய மொழியும் அவ்வுணர்வை ஒத்துழையா இயக்கம் அளித்தது; வளர்த் தது. அவ்வியக்கம் ஒடுங்கினும், அதன் முறைகள் பல கிராமங் களில் பரவி வேரூன்றல் வேண்டும். அந்நிய நடைக் கலப்பால் சுயராஜ்ய முயற்சி, நகரங்களில் செய்யப்படுவது விழலுக் கிரைத்த நீராகும். நகரவாசிகள் நாள்தோறும் ஆங்கிலமொழி யில் வெளிவரும் பத்திரிகைகளைப் படித்து, ஓய்ந்த வேளைகளில் ஆங்கில மொழியில் பெயர்த்தெழுதப்பட்ட நமது நூல்களிற் சில பயின்று, அந்நிய மொழியிலேயே எல்லாச் செயல்களையும் நிகழ்த்தி, தேசியம் என்று கதறுந் தேசபக்தர்களாக இருக்கி றார்கள். அவர்களால் வளர்க்கப்படுந் தேசியம் சுதேசிய மாகாது. அஃது அந்நியங் கலந்த தேசியமாகும். தாய்மொழி ஆட்சியிலிருக்கத் தக்க இடங்களிலும் அந்நிய மொழியை ஆள விடுவது அந்நிய ஆட்சியை நிலைபெறுத்தும் முயற்சி என்று கூறாது வேறென் கூறுவது? ஆதலால், நகரத்தினின்று எழுங் கிளர்ச்சி, நாட்டுக்கு உரியதாதல் அருமை. கிராமத்தினின்று எழுங் கிளர்ச்சியே நாட்டுக்கு உரிமை நல்குவதாகும். ஆகவே, தேசபக்தர்கள் தங்கள் உழைப்பைக் கிராமத்தில் திருப்புதலே நலம். பயிர்த் தொழிலும் நெய்தற்றொழிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காங்கர சபை அமைப்புத் தேவை. அக் காங்கர வாயிலாகப் பலதிறத் தொண்டாற்றி வரலாம். பயிர்த் தொழிலும் நெய்தற்றொழிலும் நமது நாட்டின் வல இட நுரை ஈரல்களாக இலங்குகின்றன. அவற்றில் ஒன்று முற்றும் ஊறுபட்டுக் காச நோயைக் கிளப்பி இருக்கிறது. அந்நோய் போக்கும் வைத்தியநாதராக மகாத்மா காந்தி தோன்றியிருக்கிறார். அவர்வழி நின்று கிராமந்தோறும் ராட்டைச் சங்கம் அமைத்து, நூற்றற்றொழிலைப் பெருக்கிவரல் நல்லது. இந்தியாவில் விளையும் பருத்தி, இந்தியாவிலேயே நூற்கப்பட்டால் இந்தியத் தாயின் ஈரல்நோய் இரிந்தோடும். பயிர்த்தொழிலில் பெருங்கவலை செலுத்தல் வேண்டும். அதைப் பெருக்கப் புதுப்புது முறைகள் காணப்படல் வேண்டும். ஓர் அரிசியிலிருந்து நூற்றுக்கணக்கான அரிசிகள் கண்டவர் நம் முன்னோர். அம் முயற்சி அவ்வளவிலேயே நின்றுவிட்டது. விவசாயத்தில் பேர்பெற்ற இந்தியா, அத்துறையில் கைபோய ஒருவரை மேல்நாட்டினின்றும் எதிர்நோக்கும் நிலையை அடைந்திருக்கிறது. இந்தியாவில் எவ்வளவோ நிலங்கள் பசும் புற்றரையாய்க் கிடக்கின்றன. அவற்றை யெல்லாம் பண்படுத்தி விளைநிலமாக்க முயல்வது சிறப்பு. விவசாய வளர்ச்சிக்குப் புது முறையில் முயற்சி செய்யப்படின் நாட்டு மக்கள் வெளிநாடு களுக்குக் கூலிகளாகப் போய்வருந்துவார்களோ? விவசாய வளர்ச்சி நாடி உழைக்க வேண்டுவது நம் பெருங் கடமை. கிராமக் கல்வி பழைய காலங்களில் கிராமந்தோறும் திண்ணைப் பள்ளிக் கூடங்களிருந்தன. அவற்றில் குழந்தைகட்கு ஔவை நூல்கள், சதகங்கள், எண்சுவடி முதலியன போதிக்கப்பட்டு வந்தன. அக்கல்வி இதுபோழ்து கிராமங்களில் மாய்ந்துவிட்டது. அரசாங்க உதவி என்னும் பொருள் நசையும், நகரசபை அமைப்பும், பிறவும் நமது நாட்டுக் கல்விமுறையைக் குலைத்து விட்டன. நாட்டுக் கல்வி நாட்டுக் கல்வி என்று, பெருங் கல்லூரி கள் அமைத்து அதிகார வர்க்கத்தைத் தாங்க, தொண்டர்களை அனுப்பி வருவது, நாட்டுக் கல்வியாகாது. இப்போது பழை முறைப்படி திண்ணைப் பள்ளிக்கூடங்களைப் புதுக்கி வருதலே போதும். கிராமங்களிலுள்ள தொழிலாளர், நகரங்களிலுள்ள தொழிற்சாலைகளை நாடி ஓடாதவாறு இன்சொல்லால் அவரைத் தடுத்து, அவரவர் தத்தம் தொழில்முறையைப் புதுக்குமாறு ஊக்கமுட்டல் வேண்டும். அவரால் செய்யப்படும் பொருளை வாங்குமாறு கிராமத்தாரைக் குறையிரந்து கேட்டல் வேண்டும். நாட்டு மருத்துவம் முதலிய எல்லாத் துறைகளையும் புதுக்க முயலல் வேண்டுமென்று சுருங்கச் சொல்கிறேன். கிராம சேவை எக்காரணம் பற்றியும் நகரங்களிலுள்ள நீதி மன்றங்களில் நுழையாதவாறு கிராமத்தாரைக் கேட்டுக்கொள்ளல் புனிதம். வழக்குகளைப் பஞ்சாயத்து வாயிலாகத் தீர்த்துக்கொள்ளும் பழைய முறையை அவர்க்கு நினைவூட்டல் விழுப்பந்தரும். மாலைக் காலங்களில் கிராமத்தார்க்குச் சுகாதாரம் சமய ஞானம் முதலியன போதனை செய்யலாம்; நீதி ஒழுக்க நாடகங்கள் நடாத்திக் காட்டலாம்; இன்னோரன்ன அறத்தொண்டுகள் பல ஆற்றலாம். காங்கர தொண்டர்கள் நகரங்களில் தேர்தல் களில் உழல்வதைப் பார்க்கிலும், கிராமம் போந்து, ஒவ்வொரு கிராமத்துக்கு ஒவ்வொரு சிற்றரசர்போல வீற்றிருந்து அறத் தொண்டாற்றலாம். இவையே சுயராஜ்ய சேவை. இன்னும் பேசிப் பேசி உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொள்ள விரும்புகிறேனில்லை. இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! இதுகாறும் எனது புன்மொழியைப் பொறுமையோடு செவிமடுத்த உங்கள் பெருந் தகைமைக்கு எனது அன்பார்ந்த வணக்கஞ் செலுத்துகிறேன். நமது நாட்டின் தொன்மையை நினையுங்கள்; பிரிட்டிஷ் ஆட்சியின் நிலையை ஆராயுங்கள்; எவ்வியக்கத்தால் உரிமை மணம் கமழும் என்பதை ஓருங்கள்; பாரத நாட்டின் நிலையை உன்னி உன்னி, உரிமை வேட்கை கொள்ளுங்கள்; உலகிலுள்ள மற்ற நாடுகளை நோக்குங்கள்; உங்கள் நாட்டையும் நோக்குங்கள். மற்ற நாட்டவரெல்லாம், காடுகளில் திரிந்து மரங்களிற் சுழன்று குரக்கு வாழ்வு நடாத்தியபோது, நாம் நாடு கண்டு, அரசியல் உணர்ந்து, செங்கோல் ஓச்சினோம்; இலக்கியங்கள் எழுதினோம்; இலக்கணங்கள் எழுதினோம்; வாழ்விற்குரிய எல்லாத்துறை களையும் பெற்றிருந்தோம். அப்பேறு பெற்றிருந்த நாம், இதுபோழ்து எந் நிலையிலிருக்கிறோம்? நமது அரசெங்கே? கலைகளெங்கே? வாழ்வெங்கே? அந்தோ! நஞ் செல்வங்களெல் லாம் போயின; போயின! வறுமையால் வருந்துகிறோம்; பிணியால் மெலிகிறோம்; இவ்வுலகில் பிறந்தும் பிறவாதவரா யிருக்கிறோம்; பிறந்த நாட்டிற் பிழைக்க வழியின்றிப் பிறநாடு போந்து கூலிகளாய் அடிபடுகிறோம்; உதைபடுகிறோம்; அங்கே நம் பெண்தெய்வங்கள் கற்பிழந்து சாவதையும் கண்ணாரக் காண்கிறோம். இமயத்தை முடியாகக்கொண்டு, சிந்து கங்கை நருமதை கோதாவரி காவேரி முதலிய ஆறுகளை ஆரமாக அணிந்து, விழைந்த பொருளெல்லாம் அளிக்கும் காமதேனுவாம் இப்பாரதத் தாய் வயிற்றிற் பிறந்த நாமா இப்பாடுபடுவது? மானம் அழிந்து வாழும் வாழ்வு ஒரு வாழ்வா? இவ்வாழ்வுற்றுள்ள நமக்குள் சாதிச்சண்டையா? சமயச்சண் டையா? தலைமைப் போரா? பதவி வேட்கையா? வெட்கம்! வெட்கம்! பாரத மக்களே! உட்பொறாமை பூசல் பிணக்கு முத லியவற்றை உதறி, உரிமை வேட்கை கொண்டெழுங்கள்! உரிமையை நினைந்து, உரிமையைப் பேசி, உரிமைக்குப் போராடி உயிர்துறக்க எழுங்கள்! அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை என்று அஞ்சா நெஞ்சங் கொண்டு, நாமார்க் குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தில் இடர்ப் படோம், என்றும் நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கெதிராவார் யாருமில்லை என்னும் வீரமொழியை முழக்கி எழுங்கள்! இவ்வெழுச்சி முன்னே உங்கள் சாதிச் சண்டையும் சமயச் சண்டையும் நில்லாதோடும். தலைவர்களே! உங்கள் பொறுப்பை உணருங்கள். நீங்கள் உரிமையில்லா நாட்டுத் தலைவர்கள் என்பதை மறவாதேயுங்கள்; உரிமை பெறும்வரை ஒத்துழையாப் போர்முனையில் நின்றே தீரல்வேண்டும் என்னும் உறுதியினின்றும் பிறழாதேயுங்கள். உங்கள் உறையுள் பொறுமையாகவும், பொருள் அருளாகவும், போர்வை தியாகமாகவும், போர்க்கருவிகள் உண்மை அஞ் சாமையாகவும், பகை தன்னலம் தற்பெருமையாகவும் ஒளிரல் வேண்டும். ஒத்துழைப்பு நாட்டங் கொள்வீரேல், அஃது இவ்வியல்புகளை மாற்றிக் கட்சிப் பிணக்குகளை எழுப்பும். ஆதலால், பொறுப்புணர்ந்து வினையாற்றுங்கள். இல்லையேல், முப்பது கோடி மக்கள் சாபம் உங்களைச் சூழும். நல்லுளங் கொண்டு, உரிமைப் போர் புரிந்து, பாரத நாடிழந்த ஆண்மையை யும் பெண்மையையும் அழகையும் மீண்டும் பெறுமாறு செய்யுங்கள். வந்தேமாதரம். வடஆர்க்காடு ஜில்லா 14-வது மகாநாடு வேலூரில் கூடியது; - 1920ஆம் வருடம் மே மாதம்2, 3 ஆகிய நாட்கள் - சகோதரிகளே! சகோதரர்களே!! வடஆர்க்காடு ஜில்லா பதினான்காவது மகாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு என்னைத் தெரிந்தெடுத்த வரவேற்புக் கூட்டத்தார்க்கும், ஈண்டுக் குழுமியுள்ள ஏனைய பிரதிநிதி களுக்கும், சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன். நீங்கள் எனக்குப் பணித்த தொண்டை என்னால் ஒல்லும்வகை செய்யப் புகுகிறேன்; குற்றங் குறைகள் நேருமேல் மன்னிக்க வேண்டுகிறேன். தாய்மொழி தாய்மொழியில் பற்றுடைய என்னைச் சிறப்பித்தது, தாய்மொழியைச் சிறப்பித்ததாகும். ஜில்லா மகாநாடுகளும், மாகாண மகாநாடுகளும், காங்கரஸும், சட்டசபைகளும் தாய் மொழியிலேயே நடைபெறல் வேண்டுமென்பது எனது நீண்டநாள் கோரிக்கை. இப்பொழுது அக்கோரிக்கை நிறை வேறுங் காலம் தோன்றி நிற்பதைக் கண்டு மகிழ்வெய்துகிறேன். வடஇந்தியா தாய்மொழியில் பற்றில்லாதாரிடத்து நாட்டுப் பற்று நிகழ்தல் அருமை.. நாட்டுணர்ச்சி எங்கணும் விரைந்து பரவிவரும் இந்நாளில், பொதுவினைகள் யாவும் நாட்டு மொழியிலேயே நடைபெறுதல் வேண்டும். சென்ற ஆண்டு அமிர்தசரஸில் கூடிய காங்கரஸுக்கு வரவேற்புக் கூட்டத் தலைமை பூண்ட சுவாமி சிரத்தாநந்தர் தாய் மொழியிலன்றோ பேசினார்? வடஇந்தியர் தாய்மொழியின் மாட்டுத் தணியாக் காதல் கொண்டுள்ளது போலத் தென்னிந்தியரும் தம் மொழியின் மாட்டுத் தணியாக் காதல்கொள்ளல் வேண்டு மென்பது எனது வேட்கை. நாட்டுமொழியில் பற்றுடைய என்னை இம்மகா நாட்டிற்குத் தலைவனாகத் தெரிந்தெடுத்ததற்கு மீண்டும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன். ஆர்க்காடு - ஆறுகாடு ஊர்ப்பெயர்கள் இப்பொழுது வடஆறுகாடு தென்னாறுகாடு என்று வழங்கப்பட்டுவரும் நிலப்பகுதி, பண்டைக் காலத்தில் ஆர்க்காடு என்றும், இடைக்காலத்தில் ஆறுகாடு என்றும் வழங்கப்பட்டு வந்தது. முன்னையது பழந்தமிழ் நூல் வழக்கு; பின்னையது புராண வழக்கு. இவ்விரு வழக்கும் இற்றை ஞான்று வீழ்ந்து பட்டன. இதுகாலை ஆற்காடென்றே பல்லோர் எழுதுகின்றனர். நம் ஊர்ப் பெயர்கள் இந்நாளில் மருவிப் பொருளின்றிப் பொலிவதை நோக்குழி எனது மனம் வருந்தா நிற்கிறது. நம் ஊர்ப் பெயர்களை நமது மொழியின் இயல்புக்கேற்றவாறு உச்சரிக்கும் வழக்கில் நம்மவர் தலைப்படுவராக. வேலூர் இந்த ஜில்லா, ஹிந்துக்கள் காலத்திலும் மகமதியர் காலத்திலும் மிகப் பேர்பெற்று விளங்கிற்று. அக்காலத்து நிலையை இவ்வேலூரிலுள்ள கோட்டையும், அதன்கணுள்ள கோயில்களும், பிறவும் அறிவுறுத்தும். பிரிட்டிஷ் அரசாட்சிக்கு அடிகோலப்பெற்ற இடம் வட ஆர்க்காடு என்று கூறுவது மிகையாகாது. இந்திய சரித்திரத்தில் நிலைக்களம் பெற்றுள்ள வடஆர்க்காட்டின் பதினான்காவது மகாநாடு இன்று இவ்வூரில் கூடியுள்ளது. இந்தியா இந்திய மக்கள் வாழ்க்கை இந்தியா என்னும் நினைவு தோன்றுங் காலத்திலேயே எனது உடல் நடுங்குகிறது; உள்ளங் குழைகிறது; கண்ணீர் பெருகுகிறது. இந்தியாவின் தொன்மை என்ன? இந்தியாவின் வளமை என்ன? இந்திய மக்களின் ஞானமென்ன? இந்தியாவின் தொன்மை சரித காலத்தையுங் கடந்து நிற்கிறது. இந்தியாவில் நவமணிகள் விளைகின்றன. இந்திய மக்கள், உலகத்திலுள்ள எல்லாரும் சகோதரர் என்னும் உண்மையைக் கண்டவர்கள். நமது இந்தியாவில் பிறந்த முனிவர்கள், காலை முதல் மாலை வரை உலக நலத்தையே நாடி வாழ்ந்து உவந்தார்கள். மன்னர் களோ, குடிதழீஇக் கோலோச்சினார்கள். எங்கணும் தரும வியாபாரமே நடைபெற்றது. எல்லாத் தொழின்முறைகளும் செழுமை பெற்றிருந்தன. புலவர்கள் இயற்கை இன்பத்தைச் செவ்வனே நுகர்ந்தார்கள். பெண்மக்கள் தங்கட்குரிய உரிமை பெற்றுக் கற்புக்கரசிகளாகவும், வீரத் தாய்மார்களாகவும் உறைந்தார்கள். ஒழுக்கத்தை நம் முன்னோர் கடவுளாகப் போற்றி வந்தனர். இத்துணைச் சிறப்பு வாய்ந்த மக்களை ஈன்ற நாடு நமது பாரதநாடு. இந்நாடு இதுகாலை எல்லா நலங்களை யும் இழந்து, உருமாறி இருப்பதை ஈண்டு வருணிக்க நாவெழ வில்லை. இந்நாட்டைப் பண்டை நிலைக்குக் கொண்டுவர வேண்டுவது எவர் கடமை? மகா யுத்தம் உரிமைப்போர் நமது இந்தியா சுதந்திரமிழந்து, அதிகாரவர்க்க ஆட்சி முறையால் கட்டுப்பட்டிருப்பதை ஒழிக்க, நம்மவர் நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்தனர். அக்கிளர்ச்சியால் பெரும்பயன் விளையவில்லை. அநாகரிகச் சட்டங்களும், அடக்கு முறைகளுமே இந்தியாவை ஆளலாயின. உண்மைத் தேச பக்தர் உறைவிடம் சிறையாகவே இருந்தது. காங்கிர மகாசபையும், முலிம் லீக்கும் தம்மால் ஒல்லும்வகை நாட்டு நலத்தை நாடி உழைத்து வந்தன. எவருழைப்பாலும் இந்தியா வின் கட்டு முற்றும் ஒழியவில்லை. இந்நிலையில் ஆண்டவன் அருளால் ஐரோப்பாவில் மகாயுத்தம் தோன்றிற்று. அந்தப் போர், மக்கள் உரிமைக்காகக் கடவுளால் உண்டாக்கப்பட்டது. அக் கொடும்போர் நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது. யுத்த காலத்தில் மனித உரிமையும், சுயநிர்ணயமும் பேசப்பட்டன. லாயிட் ஜார்ஜ் உள்ளிட்ட பிரிட்டிஷ் மேதாவிகளும், பிரஸி டெண்ட் வில்சன் உள்ளிட்ட அமெரிக்க மேதாவிகளும் பேசிய பேச்சுக்களும், முனிவர் பேச்சுகள் போலிருந்தன. அப்பேச்சுக் களைக் கொண்டு உலகத்தில் எப்பாகத்திலும் தளையே இராதென்று பலர் எண்ணினர். இந்தியர் வீரம் இங்கிலாந்து, மகாயுத்தத்தில் தலைப்பட்டுக் கிடந்த காலத்து, அஃது இந்தியாவின் உதவியை நாடிற்று. இங்கிலாந்து, இந்தியாவின்மீது கருணைமாரி பொழிவது போல் சொன் மாரி பொழிந்தது. இந்தியா சுதந்திரத்தின் பொருட்டுப் பணத்தையும் உயிரையும் வாரி வாரிக் கொடுத்தது. இந்தியாவின் பணமும் இந்தியாவின் உயிர்களுமே இங்கிலாந்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தன. இதை மறுத்தல் எவராலும் இயலாது. பிரான்சில் ஜெர்மானியரின் படை எழுச்சியைத் தடுத்தவரும், மெசபெட்டோமியாவில் பகைவரைப் புறமுதுகிடச் செய்த வரும் எவர் என்பதை உன்னிப் பார்க்க லாயிட் ஜார்ஜுக்கு நேரம் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை. யுத்தம் முடிவடைந் தது. சமாதான மகாநாடுங் கூடிற்று. ஆனால் யுத்த நோக்கம் நிறைவேறினதோ? உலகக் குழப்பம் பிரஸிடெண்ட் வில்சன், சண்டையில் தலைப்பட்ட போது பேசிய மொழிகள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் விரும்பும் ஒவ்வொருவருக்கும் இன்ப மூட்டின. பிரிஸிடெண்ட் பேசியவாறு, சமாதான மகாநாடு நடைபெற்றிருப்பின், உலகத்தின் எப்பகுதியிலும் அமைதி யின்மை ஏற்பட்டிராது. பொதுவாக உலகத்திலும், சிறப்பாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலும் அமைதி நிலவாதிருப்பது உலகறிந்ததொன்று. ருஷ்யாவின் குழப்பமும், ஜெர்மனியின் கலக்கமும் இன்னும் அடங்கவில்லை. ஜப்பானில் இரண்டு பார்லிமெண்ட் சபைகளும் கலைந்துவிட்டன. அயர்லாந்தில் அராஜகச் செயல்கள் முதிர்ந்து வருகின்றன. எகிப்திலும் அமைதியில்லை. ரௌலட் சட்ட நிறைவேற்றமும், பஞ்சாப் படுகொலையும் இந்தியாவின் நிலையை எடுத்துக் கூறும். அமெரிக்காவில் சில பத்திரிகாசிரியர் நாடு கடத்தப்பட்டதையும் ஈண்டு நினைவூட்டுகிறேன். இத்துணைக் கலகத்துக்குக் காரணம் யாது? சிந்திக்க. பிரஸிடெண்ட் வில்சனின் பதினான்கு சுதந்திர மொழி கள், சமாதான மகாநாட்டைக் கண்ணுற்று நடுங்கிச் சாய்ந்து விட்டன போலும்! பிரஸிடெண்ட் வில்சன் அமெரிக்காவி னின்றும் புறப்பட்ட காலை, அவர் ஏறிவந்த உரிமைக் கப்பல், எந்தப் பாறையில் மோதுண்டோ உருக்குலைந்துவிட்டது! சண்டைக் காலத்தில் பேசப்பட்ட சுய நிர்ணயப்படி சமாதான மகாநாடு நடைபெறவில்லை. இந்தியாவின் உரிமை - உலக உரிமை நமது இந்தியா ஒரு பெரிய நாடு; முப்பது கோடி மக்களைத் தாங்கும் நாடு. இந்நாட்டுக்குப் பிரதிநிதியாகக் காங்கர தெரிந்தெடுத்த திலகர் பெருமானைச் சமாதானக் கூட்டத்தார் கருதவேயில்லை. இஃதொன்றே சமாதான மகாநாட்டின் தாராள முறையைக் காட்டும்! காங்கர தெரிந்தெடுத்த பிரதிநிதியை யுத்த சமாதான மகாநாடு பொருட்படுத்தா தொழியினும், அதிகார வர்க்கத்தார் தெரிந்தெடுத்து அனுப்பிய இரண்டு இந்தியரை யுத்த சமாதான மகாநாடு தனது அங்கமாகக்கொண்டு விளங்கலாயிற்று. இந்தியர்க்கு இடந்தந்த சமாதான மகாநாடு, சுய நிர்ணயப்படி இந்தியாவிற்கு உரிமை வழங்க மறந்துவிட்டது போலும்! ஒரு பெரிய நாடு பிறப்புரிமை இழந்து நிற்குமட்டும் உலகத்தில் சமாதானம் நிலைபெறுதல் அருமை என்பது அரசியல் ஞானிகள் கொள்கை. அடிமை நாட்டின்மீது எல்லாச் சுதந்திர நாடுகளும் தங்கள் கருத்தைச் செலுத்திக்கொண்டேயிருக்கும். அந்நாடும் சுதந்திரம்பெற முயன்றுகொண்டே யிருக்கும். ஆதலால், ஓரினத்தார் வேறோர் இனத்தாரை ஆள்வது இயற்கைக்கே மாறுபாடென்க. போருக்கு முன்னர் ஓரினத்தார் வேறோர் இனத்தாரை ஆண்டுவந்த முறைமை, அதற்குப் பின்னர்ச் சுய நிர்ணயப்படி மாறும் என்று நாம் எதிர்நோக்கி யிருந்தோம். நமது எதிர்நோக்கு நிறைவேறவில்லை. சர்வதேச சங்கம் சமாதான மகாநாட்டில் சர்வதேச சங்கம் (League of Nations) என்னும் ஒரு சங்கம் காணப்பட்டது. அச்சங்கம் ஒழுங்குற நடைபெறுமேல், உலகத்தில் அடிமை வாழ்க்கையே ஒழிந்து விடும். ஒரு நாட்டாரை வேறு ஒரு நாட்டார் அடக்கச் சேனை களையும், பிற கருவிகளையும் எவருந் தாங்கலாகா தென்பதும், உள்நாட்டுக் குழப்பம், கள்ளர் பயம் முதலியவற்றைத் தடுக்கச் சிறு சேனைகள் அவ்வந் நாட்டில் இருக்கவேண்டுமென்பதும், இன்ன பிறவும் அச்சங்கத்தின் சீரிய நோக்கங்களாகும். இந் நோக்கங்கள் இந்தியா முழு உரிமை பெறும்வரை நிறைவேற மாட்டா. இந்தியா பூரண சுயராஜ்யம் பெறாத நாடாதலால், அதனை ஆளும் பிரிட்டிஷார், அதன்மீது பலதிற ஐயங் கொண்டு, காப்புக்காகச் சேனைகளை வைத்துக் கொண்டே யிருப்பர். பிரிட்டிஷார் எவ்வளவு சேனை வைத்துக்கொண் டிருப்பரோ, அவ்வளவு சேனை மற்ற நாட்டாரும் வைத்துக் கொள்ள விரும்புவர். சேனைகள் உள்ளமட்டும் போர்கள் நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆதலால் இந்தி யாவை இந்தியரிடம் ஒப்புவிக்கச் சர்வதேச சங்கம் முதலில் முயற்சி செய்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில் அமைதி நிலவாது. சர்வதேச சங்கத்தில் இந்தியாவும் அங்கம் பெற் றுள்ளமையால், நமது நோக்கத்தை நாளடைவில் நிறைவேற்றிக் கொள்ளலாம். மகாயுத்தமும் இந்தியாவும் கடவுள் ஆணையால் ஏற்பட்ட உரிமைப்போர், உலகத்தில் உரிமை வேட்கையை எழுப்பாமற் போகவில்லை. இப்பொழுது உரிமை வேட்கை கொள்ளாத மக்கள் இல்லை. ஒவ்வொருவரும் அடிமை வாழ்க்கையை வெறுக்கின்றனர். யுத்தத்துக்குப் பின்னர் நமது நாட்டில் தோன்றிய ரௌலட் சட்டமும், பஞ்சாப் இரா ணுவச் சட்டமும் இந்தியராகிய நமக்கு விடுதலை வேட்கையை முன்னிலும் பன்மடங்கு அதிகமாக எழுப்பியிருக்கின்றன. அவ்வேட்கையைத் தணிக்கச் சத்தியாக்கிரக இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன. மகாயுத்தம், நேராக இந்தியாவிற்கு நன்மை செய்யா தொழியினும், வேறு வழியாக இந்தியாவிற்கு நன்மை செய்திருக் கிறது. ஆண்டவன் அருளால் தோன்றிய பெரும்போரை யொட்டிக் கூட்டப்பெற்ற சமாதான மகாநாடு, மனிதர் மாய வலையிற் சிக்குறினும், ஆண்டவன் நோக்கம் நிறைவேறாமற் போகாது. சீர்திருத்தம் சுயநிர்ணயம் ஐரோப்பாப் பெரும்போரில் நம் பிரிட்டிஷாருந் தலை யிட்டனர். பிரிட்டிஷார் போரில் தலைப்பட்டபோது, சிறிய நாடுகளின் உரிமையைப் பாதுகாக்கவே நாங்கள் போரில் தலையிடுகிறோம் என்னும் சீரிய மொழியை வெளியிட்டே போர்த்துறையில் இறங்கினர். இதைக் கண்ட நாமும், நமது பிறப்புரிமை பெறக் கிளர்ச்சிசெய்து நமது கோரிக்கையை வெளியிட்டோம். அதுவே காங்கர - லீக் கோரிக்கை என்பது. காங்கர - லீக் கோரிக்கையை இந்தியாவின் அக்காலத்திய சுய நிர்ணயம் என்று கூறலாம். அது சிறந்த அரசியல் ஞானிகளால் செப்பஞ் செய்யப்பட்டது. அது வெளிவந்த பின்னர், மாண்டேகு - செம்பர்ட் அறிக்கை வெளிவந்தது. இவ்வறிக் கையைஆதாரமாகக்கொண்டு சிற்சில மாறுதலோடு ஒழுங்கு செய்யப்பட்ட சீர்திருத்தமே சட்டமாகி அரசர்பெருமான் இலச்சினையும் பெற்றுவிட்டது. அச்சீர்திருத்தப்படி 1921-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆட்சிமுறை நடைபெறும். இந்தியர் விரும்பியவாறு சீர்திருத்தம் நல்கப்படவில்லை. பார்லிமெண்ட் விருப்பப்படியே சீர்திருத்தம் நல்கப்பட்டிருக் கிறது. இது சுய நிர்ணயமாகுமோ? மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தத்துக்கு வரவேற்பு மாண்டேகு - செம்பர்ட் அறிக்கை வெளிவந்த உடனே நமது நாட்டில் பலதிறக் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. அவ்வறிக்கை நமது நாட்டுக்கு முதல் முதல் செய்த நன்மை யாவது ஒன்றுபட்டிருந்த காங்கர கூட்டத்தைப் பிளவு படுத்தியதாகும்! சில கூட்டத்தார் அறிக்கையைப் பொன்னே போல் போற்றி ஏற்றனர்; சில கூட்டத்தார் சில குறைகளைக் குறிப்பிட்டு அறிக்கைக்கு நல்வரவு கூறினர்; சிலர் அதைத் தள்ளவேண்டுமென்றனர். நாளேற நாளேறத் தள்ளவேண்டும் என்னுங் கருத்து மாறுபட்டு விட்டது. கிடைப்பதை ஏற்று மேலும் மேலும் கிளர்ச்சி செய்தல் வேண்டும் என்னுங் கருத் தையே பலர் கொண்டனர். காங்கரஸும் அவ்வாறே தீர்மானித் தது. சென்ற அமிர்தசர காங்கர, சட்டமாகிய சீர்திருத் தத்தைப் பற்றிக் குறைவுள்ளது; ஏமாற்றுவது; அதிருப்தி கொடுப்பது என்று கூறியிருக்கிறது. வழங்கப்பெற்றுள்ள சீர்திருத்தங் குறைவுடையதென்பதை ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிக்காரரும் ஒத்துக்கொள்கின்றனர். சீர்திருத் தத்தைத் தள்ளிவிடவேண்டும் என்று கூறுவோரை இப் பொழுது காணோம். எல்லாரும் இப்பொழுது சீர்திருத்தத்தை நல்வழியில் பயன்படுத்தவேண்டும் என்றே முயல்கின்றனர். ஜனப்பொறுப்பு நாம் கிடத்திய காங்கர - லீக் கோரிக்கையில் ஜனப் பொறுப்பாட்சி தோற்றுதற்குரிய குறியுண்டு. அதன் கண் சட்டசபைக்கு நிருவாகப் பொறுப்புக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்னும் விதி உண்டு. இப்பொழுது சட்டமாகியுள்ள சீர்திருத்தத்தில் ஜனப் பொறுப்பாட்சிச் சாயல் உண்டு என்று சொல்வதற்கும் எனது நாவெழவில்லை. சட்டசபைப் பெருக்க மும், மந்திரிகள் அமைப்பும், இரட்டை ஆட்சியும் ஜனப் பொறுப் பாட்சிக்கு வழி கோலுவன என்று சில அறிஞர் கூறுகின்றனர். மாற்றப்பட்ட இலாக்காக்களை, பணப் பொறுப்பில் முழு உரிமைபெறாத மந்திரிமார் தமது விருப்பப்படி நடாத்த இயலாது இடர்ப்படுவர் என்பது உறுதி. பணப் பொறுப்பை வழங்காது, மந்திரிமாரை ஏற்றவும் இறக்கவும் ஆட்டவும் அடக்கவும் சட்டசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைதலாகாது. அறிவிற் சிறந்த மந்திரிமார் வாய்க்கப் பெறலாம்; அவர்வழிச் சட்டசபையும் நடைபெறலாம். அவர் தமது பார்வையில் விடப்பட்டுள்ள பகுதிகளுக்கும் நலஞ் செய்யலாம். ஆனால், மந்திரிமார் விருப்பத்தைக் கவர்னர் மறுத்தல்கூடும். இக் குறைபாட்டை, வழங்கப்பட்டுள்ள சீர்திருத்தத்தில் ஜனப் பொறுப்பாட்சிக் குறிப்பு உண்டு என்று கூறும் சகோதரர்கள் உற்று நோக்குவார்களாக. குறைபாட்டைக் கண்டே, டெல்லி காங்கர மாகாண முழுஜனப் பொறுப் பாட்சி வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. மாண் டேகு - செம்பர்ட் அறிக்கையைப் பார்க்கிலும், ஜாயிண்ட் கமிட்டி அறிக்கையில் சில நலங்களிருப்பதை மறுப்பார் இல்லை. எவ்வறிக்கையும் ஜனப் பொறுப்பாட்சிக்கு வழி தேடவில்லை என்பது எனது உட்கிடக்கை. சுருங்கக் கூறின், மாகாணத் தலைவர் (கவர்னர்) அதிகாரமும், இராஜப்பிரதிநிதி அதிகாரமும் குறைவுபடவில்லை என்று கூறலாம். அவர்கள் விரும்பினால் கொடுஞ் சட்டங்களையும் உண்டு பண்ணலாம். கவர்னர் நிலை அரசியல் ஞானத்திற் சிறந்த சில முதியோர் ஜனப் பொறுப்பாட்சித் தோற்றம் சீர்திருத்தத்தில் உண்டு என்று போர் தொடுக்கிறார். மந்திரிமார் இந்தியரா இருப்பதாலும், நிருவாக சபையிலும் இந்தியர் இருப்பதாலும், இவர்தம் தொகை பெரிதாக இருப்பதாலும், இவரை அடக்கிக் கவர்னர் ஆளமாட்டார் என்பது முதியோரது வாதம். கவர்னர், ஜனநோக்கவழி நடப்பவரா யிருப்பின், அவர் மந்திரிமார் வழிநின்று ஆட்சிபுரிவர். சர் மைக்கல் ஓட்வியர் போன்ற கொடி யர் ஒருவர் கவர்னர் பதவியில் வீற்றிருப்பின், சட்டசபையின் சிறப்பும் மந்திரிமார் மாண்பும் என்னாகும் என்று அம் முதி யோரைக் கேட்கிறேன். ஜனப்பிரதிநிதிகள் அடங்கிய சட்ட சபைக்குக் கவர்னர் அடங்கவேண்டு மென்னுஞ் சட்ட மிருக்கு மாயின், கவர்னர் பதவியில், புலி, கரடி, சிங்கம் வரினும் நாட்டுக்குத் தீமை விளையாது. வழங்கப்பெற்றுள்ள சீர்திருத் தத்தில் ஜனப் பொறுப்பாட்சிக்குறி யில்லாவிடினும், அது ஜனப்பொறுப்பாட்சி விருப்பத்தையாதல் எழுப்பக்கூடியதா யிருத்தலானும், உள்ள அரசாங்கத்தைக் கொண்டே ஜனப் பொறுப்பாட்சி பெறவேண்டுமாதலானும், அதை (சீர்திருத் தத்தை)ப் பயன்படுத்த வேண்டுவது நமது கடமை. மாற்றப்பட்ட ஆட்சி கல்வி, மருத்துவம், கைத்தொழில், சுகாதாரம் முதலிய சில இலாக்காக்கள் மாற்றப்பட்ட ஆட்சியில் சேர்க்கப்பட்டிருக் கின்றன. நமது நாட்டுக்கு மூலாதாரக் கட்டாயக் கல்வி இன்றி யமையாது வேண்டற் பாலது என்று காலஞ் சென்ற கோகலே தம் வாழ்நாள் முழுவதும் முயன்றனர். அவர் காலத்தில் அது கூடாமற் போயிற்று. பல்கலைக் கழகத்தை நமது நாட்டு வழியாகத் திருப்பவேண்டுமென்பது நம்மவர் கோரிக்கை. உருக்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கும் நாட்டுக் கல்வித் துறை களை மீண்டும் உயிர்ப்பிக்க நம்மவர் கிளர்ச்சி செய்தனர். இப்பொழுது கல்வி இலாகா மாற்றப்பட்ட ஆட்சிக் குட்படு தலால், நம் எண்ணங்களை நாளடைவில் நிறைவேற்றிக் கொள்ளலாம். நாட்டு மருத்துவம் நமது இயற்கைக்கு மாறுபட்ட மேல்நாட்டு மருத்துவம், நமது நாட்டு மருத்துவத்தைப் பாதலத்தில் அழுத்திவிட்டது. அதை மீண்டும் பூதலத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்று பெரியோர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆங்கில வயித்தியர் கைவிடும் எத்துணையோ நோயாளிகள் நமது நாட்டு வயித்திய ரால் இன்ப வாழ்வு பெற்றிருக்கிறார்கள். நமது நாட்டு மருத்து வத்தை ஆதரிப்போர் இல்லாமையால், அது சீரழிந்து கிடக் கிறது. நாட்டு மருத்துவருள் இன்னார் உண்மை மருத்து வர், இன்னார் போலி மருத்துவர் என்னும் பாகுபாடு செய்தல் முடியவில்லை. நம்மவர் ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை வைத்துவிட்டனர். என் செய்வது? நமது நாட்டு மருத்துவத்தை உயிர்ப்பிக்க நாமே முயல வேண்டும். மருத்துவப் பகுதி நம் வசம் விடப்பட்டிருத்தலால், கூடியவரை நாட்டு முறையை ஆதரிக்க லாம். லார்ட் வில்லிங்டன் கவர்ன்மெண்டார் ஆயுர்வேத யூனானி வயித்தியத்தைப் பற்றி ஆராய்ந்து அறிவிக்க ஒரு கூட்டம் நியமித்திருப்பது நமக்குத் துணை புரிவதாகும். விவசாயம் நமது நாடு விவசாய நாடு. நூற்றுக்குத் தொண்ணூறு பேர் விவசாயிகளாகவே இருக்கின்றனர். அங்ஙன மிருந்தும், விவ சாயத்தைச் செழுமைப்படுத்த நம் அரசாங்கத்தார் பெருமுயற்சி செய்யவில்லை. அரசாங்கத்தார் செய்துவரும் சிறு முயற்சி யாலும் பெரும்பயன் விளையவில்லை. பண்டைக் காலத்தில் நம்மவர் மேற்கொண்டிருந்த முறைகளே இன்னுங் கொள்ளப் பட்டு வருகின்றன. விவசாயத் துறை செழுமையுறுமாயின், நமது நாடுஞ் செழுமையதாகிவிடும் என்பதில் ஐயமில்லை. விவசாயமும் மாற்றப்பட்ட ஆட்சியில் அடங்கியிருப்பது நலந் தருவதாகும். கைத்தொழில் நமது நாட்டுத் தொழில்களை ஈண்டு விரிக்கிற் பெருகும். மனித வாழ்க்கைக்கு வேண்டப்படுந் தொழின் முறைக ளெல்லாம் நமது நாட்டிலிருந்தன. அவை, கிழக்கிந்திய வியா பாரக் கூட்டத்தாரால் அழிக்கப்பெற்ற வரலாறுகளைத் தத்தர் எழுதிய இந்துதேச சரித்திரம் முதலியவற்றிற் காண்க. பண்டித மதன்மோகன் மாளவியர் எல்லாவற்றையுந் திரட்டித் தொழில் விசாரணை அறிக்கையில் தனிக் குறிப்பாக எழுதியுள்ளனர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 1918-ம் ஆண்டுப் பட்ட விழாவில் ஸர் தாம ஹாலண்டும், கல்கத்தா சர்வகலாசாலைப் பட்டவிழாவில் லார்ட் செம்பர்டும் இந்தியக் கைத்தொழில் முறைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கின்றனர். அரசாங்கத்தார் கைத்தொழில் வளர்ச்சியில் கவலை செலுத்தி வருகின்றனரென்று தெரியவருகிறது. கைத்தொழிலும் மாற்றப் பட்ட ஆட்சிக் குட்பட்டிருத்தலால், அதையும் நாம் செப்பஞ் செய்துகொள்ளலாம். நமது நாட்டில் கைத்தொழில் வளம் பெறுமாயின், ஏராளமான செல்வம் மேல்நாட்டுக்குப் போகாது. மற்றுஞ் சுகாதாரம் முதலிய இலாக்காக்கள் நம் வழியே நடைபெறுவது போற்றத்தக்கதே. மேற்போந்த மாற்றப்பட்ட இலாக்காக்களையும், பிற வற்றையும் கூடிய அளவு செவ்வனே நடாத்திக் காட்டவேண்டு வது நமது கடமை. அவற்றைத் திறம்பட நடாத்தத் தவறி விடுவோமாயின், நாம் முழு ஆட்சிக்குத் தகுதியுடையவரல்லர் என்னும் பெயரை ஏற்பவராவோம். நாம் சுய ஆட்சிக்குத் தகுதியுடையோம் என்று காட்டிக் கொள்ள வேண்டுமாயின், சட்டசபையில் சிறந்த அரசியல் ஞானிகளை அனுப்பி, வினை களை ஒழுங்குபெற நடப்பித்தல் வேண்டும். இவ்வாறு சீர் திருத்தத்தைப் பயன்படுத்தி, அடுத்தபடியாக முழு ஆட்சிபெற மேலும் மேலும் கிளர்ச்சி செய்து கொண்டிருப்போமாக. வாக்காளரும் தேர்தலும் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தக்கூடிய வேலைகள் இப் பொழுதே தொடங்கப்படல் வேண்டும். முதலாவது வாக் காளர்க்கு வாக்குரிமை இன்னதென்று அறிவுறுத்தல் வேண்டும். வாக்குரிமை யுணராது, நம்மவர் திண்ணர்களைத் தெரிந் தெடுத்துச் சட்டசபைக்கு அனுப்பினால், சீர்திருத்தத்தினால் ஒரு நலனும் விளையாது. சட்டசபைக்கு அரசியல் ஞானத்திலும் தேசபக்தியிலும் முதிர்ந்த அறிஞரைத் தெரிந்தெடுத்தனுப் புமாறு வாக்காளர்க்குப் போதிப்பது நலம். குடிமக்கள் அரசியல் ஞானம்பெற்று, தக்கார் தகவிலர் என்னும் வேற்றுமை கண்டு, பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் அறிவு விளங்கப்பெறுதல் சிறப்பு. சாதி அபிமானம், சமய அபிமானம், தயை தாட்சண்யம் இவற்றுக்குக் கட்டுப்பட்டு வாக்கை விற்பவர் தொகை அருகு மாறு தேச பக்தர்கள் வேலை செய்தல் சால்பு. சீர்திருத்தத்தால் நலத்தை விளைவித்துக்கொள்ளும் பொறுப்பும், தீமையை விளைவித்துக்கொள்ளும் பொறுப்பும் குடிமக்களையே பற்றிக் கிடக்கின்றன. சட்டசபைக்குக் குப்பை - கூளங்களை அனுப்பி னால் அதிகாரவர்க்கத்தார் ஆக்கம் பெருகும். ஆதலால், சட்டசபையில் தேசபக்தர்களையே நிரப்ப முயலல் வேண்டும். கிராம சேவை ஒருவர் இருவர் சென்னையிலிருந்து புறப்பட்டு ஊர்வலம் வருவதால் பயன் விளையாது; குடிகளுக்கும் அரசியல் ஞானம் உண்டாகாது. ஒருவர் சென்ற நகரத்துக்கே மற்றவர் சென்று திரும்புவதால் கிராமவாசிகளுக்கு என்ன நலம் விளையும்? கிராமவாசிகளுக்குச் சீர்திருத்தத்தைப்பற்றியும், சட்டசபை அமைப்பைப் பற்றியும், எத்தகையினர்க்கு வாக்களித்தல் வேண்டுமென்பதைப் பற்றியும், வாக்குரிமையைப் பற்றியும் போதித்தல் வேண்டும். கிராமவாசிகளின் அரசியல் அறிவைப் பயன்படுத்தாது, நகரங்களில் ஆரவாரஞ் செய்வதனால் விளையும் பயன் என்னவோ தெரியவில்லை. ஒவ்வொரு ஜில்லாவிலுமுள்ள காங்கர கூட்டத்தார் இப்பொழுதே பிரசார வேலையைத் துவங்குவாராக; ஒவ்வொரு தாலுக்காவிலும் கிளைச் சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகக் கிராமவாசிகளுக்கு அரசியல் ஞானமூட்டுவாராக. கிராமவாசிகளின் அரசியல் ஞானத்தளவாகச் சட்டசபை நிலைமை அமைவுறுமாதலால், கிராமவாசிகளைப் பண்படுத்த முயல்வது அறம். பிறப்புரிமை உரிமையும் மனிதனும் மகா யுத்தத்தின் பின்னரும் உலகத்தில் பிறப்புரிமை முற்றும் பாதுகாக்கப்படவில்லை. இந்தியாவிற்கு வழங்கப் பெற்றுள்ள சீர்திருத்தத்தாலும் நாம் பிறப்புரிமையை முற்றும் பெறவில்லை. நாம் நமது பிறப்புரிமையை இழந்து வருந்து கிறோம். ஒருவன் தன் பொன்னை இழக்கலாம்; பொருளை இழக்கலாம்; தணியாக் காதலுடைய மனைவியையும் இழக்க லாம். ஆனால், அவன் தன் பிறப்புரிமையை இழத்தலாகாது. பிறப்புரிமையை இழந்து வாழ்கிறவன் மனிதனாகான். அவன் மனிதன் என்றும் பிறரால் கருதப்படமாட்டான். உலகத்தி லுள்ள எல்லா உரிமைகளினுஞ் சிறந்தது பிறப்புரிமை ஒன்றே. அவ்வுரிமையுள்ள இடத்தில் எல்லா உரிமைகளும் ஒளிரும். அஃதொன்றில்லாத இடத்துப் பிற உரிமைகளும் மாழ்கும். உரிமை இன்பம் பிறப்புரிமையின் பெற்றியை என்னென்று வருணிப்பது? பிறப்புரிமை இன்பத்துக்கு எவ்வின்பத்தை உவமையாகக் கூறுவது? பிறப்புரிமை இன்பத்துக்கு மனைவியின்பம் ஈடா குமோ? மக்களின்பம் ஈடாகுமோ? அரச இன்பம் ஈடாகுமோ? உலகத்திலுள்ள எவ்வின்பந்தான் அதற்கு ஈடாகும்? சகோதரி களே! சகோதரர்களே! அவ்வின்பத்தை நான் ஆண்டவன் இன்பமாகக் கொள்கிறேன்; அதைத் தொழுகிறேன்; அதைப் பெற முயல்கிறேன். பெரியோர் தோற்றமும் பிறவும் ஸ்ரீ ராமர், கிருஷ்ணமூர்த்தி எதற்காக மனிதக்கோலந் தாங்கினர்? புத்தர், கிறிது, முகமது எதற்காகத் தோன்றினர்? உலகந் தோன்றிய நாள் முதல் மகா யுத்தங்கள் எதற்காக நடை பெறுகின்றன? நூல்கள் எதற்காக எழுதப்படுகின்றன? எல்லாம் பிறப்புரிமை ஒன்றன் பொருட்டே எழுந்தன. பிறப்புரிமைக்காக உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை வழங்கலாம்; சமயம் நேருங் கால் உயிரையும் வழங்கலாம். காரிபால்டி, மாஸனி முதலிய பெரியோர் தம் வாழ்நாள் முழுமையும் பிறப்புரிமைக்கே பாடுபட்டனர். அமெரிக்கா பெருமுயற்சி செய்தன்றோ பிறப் புரிமையைக் காத்துக் கொண்டது? எவ்வகை முயற்சி செய் தாவது பிறப்புரிமையைக் காக்கவேண்டுவது மக்கள் கடமை. மக்களின் உயிர்க் கணியாயிலங்கும் பிறப்புரிமைக்கு எவரும் கேடு சூழ்தலாகாது. ஒருவர் பிறப்புரிமையை மற் றொருவர் கவர்வது இயற்கைக்கே மாறுபாடாகும். கடவுளால் வழங்கப்பட்ட பிறப்புரிமை மனிதர்களால் கவரப்படலாமோ? கடவுள்நெறி உணராத மாபாவிகளே பிறப்புரிமைக்குக் கேடு சூழ்வார்கள். ஒரு நாட்டின் பிறப்புரிமைக்குக் கேடு சூழும் பாவத்தினுஞ் சிறந்த பாவம் வேறொன்றில்லை. நம் முன்னோர் நம் முன்னோர் பிறப்புரிமையின் பெற்றியை நன்கு உணர்ந்தவர். அதனாலன்றோ அவர் பிற நாடுகளைக் கவரா மலும், பிறரைக் கொலை செய்யக் கருவிகள் செய்யாமலும், உயரிய ஞான நூல்களையே எழுதிக் காலங் கழித்தனர்? அவர் நாளில் ஆன்மஞான ஒளியன்றோ இந்தியாவில் வீசியது? அந்தோ! அத்தகைய நாடு இப்பொழுது எந்நிலையிலிருக் கிறது? பிறப்புரிமை இழந்து தவிக்கிறதே! என்னருமைச் சகோதரிகளே! சகோதரர்களே! பிறப் புரிமையைக் கருதுங்கள். நாம் எந்நிலையிலிருந்தோம்? இப் பொழுது எந்நிலையை அடைந்திருக்கிறோம்? நாமார்க்குங் குடியல்லோம் என்னும் ஞானியின் வழிவழி வந்தவர் நாமல்லவா? அத்திருவாக்கிலுள்ள வாழ்வை இப்பொழுது நாம் பெற்றிருக்கிறோமா? நமது உரிமையின் நிலை திடீரெனக் கொடியவிலங்குகள் நமது வீட்டருகே வந்துவிடுமாயின், அவற்றின் வாயினின்றும் பிழைக்க நமது விருப்பப்படி ஆயுதந் தாங்கும் உரிமை இப்பொழுது நமக் குண்டோ? கள்ளர் கூட்டம் நம்மை எதிர்க்குமாயின், அதைத் துரத்த நமது விருப்பப்படி கருவி தாங்கும் இயற்கை உரிமையை நாம் பெற்றிருக்கிறோமா? ஆயுதச் சட்டம் நம்மைக் கட்டிக் கொண்டிருக்கிறதே! என் செய்வது? நமது விருப்பப்படி பேசும் உரிமை நமக்குண்டோ? நமது விருப்பப்படி பத்திரிகைகளில் எழுதும் உரிமை நமக்குண்டோ? இல்லையே! இந்தியப் பாதுகாப்புச் சட்டம், ஆள்தூக்கிச் சட்டம், அச்சுச் சட்டம் முதலிய சட்டங்கள் நமது வாயையுங் கையையுங் கட்டிக் கொண்டிருக்கின்றனவே! என் செய்வோம்! அடக்குமுறை யுத்தத்துக்குப் பின்னராவது நாம் பிறப்புரிமை பெற் றோமா? அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிந்தனவோ? யுத்தத் துக்குப் பின்னரன்றோ ரௌலட்சட்டம் முளைத்தது? ரௌலட் சட்டம்போன்ற சட்டங்கள் நமது நாட்டில் தலை காட்ட லாமோ? கொடிய அராஜகர் வாழும் நாட்டிலன்றோ அத்தகைச் சட்டங்கள் பிறத்தல்வேண்டும்? பஞ்சாப் படுகொலையைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? காங்கர விசாரணை அறிக்கையைப் பாருங்கள். நமது நிலை தெரியவரும். சட்டசபையில் ஜனப்பிரதிநிதிகள் விருப்பம் நிறைவேறு கிறதோ? அஃதும் அருமை. குடியேற்ற நாடுகளில் நம்மருமைப் பாரதமணிகள் படுந் துயரத்துக்கு ஓர் அளவும் உண்டோ? கொடுமைகள் பிறப்புரிமை இழந்த நாட்டில் நிகழ்வது இயல்பே. ஆதலால், சகோதரிகளே! சகோதரர்களே! கிடைத்த சீர்திருத் தங்களைப் பயன்படுத்தி, நாம் இழந்துள்ள பிறப்புரிமையை மீண்டும் பெறப் பெருங் கிளர்ச்சி செய்வோமாக. சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகமும் இராஜபக்தியும் பிறப்புரிமை கருதிச் செய்யப்படும் கிளர்ச்சிகள் பல திறப்படும். அவற்றுள் நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சியே போற்றத்தக்கது. அக்கிளர்ச்சி பயன்பெறாத காலத்தில், சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் தலைப்படல் வேண்டும். பிற அராஜகக் கிளர்ச்சிகளில் தலைப்படுவது அறியாமை. அக் கிளர்ச்சிகளால் தீமையே விளையும். இராஜபக்திக்கு எவ் விதத்தினுங் கேடு நேர்தலாகாது. இராஜபக்தி கொண்டே கிளர்ச்சி செய்யவேண்டும் என்பது நமது நாட்டின் அறம். இராஜபக்திக்கு முரண்படாத கிளர்ச்சித் துறையில் இறங்குவதே சால்பு. சத்தியாக்கிரகக் கிளர்ச்சி இராஜபக்தியை வளர்ப்பது. சத்தியாக்கிரகக் கிளர்ச்சி, கடவுள் இயற்கைச் சட்டங்கள் உள்ளவிடத்தில் எழாது. மனிதர், இறுமாப்பால் பிறரை அடக்கல் வேண்டும் என்னும் எண்ணங்கொண்டு, விலங் குணர்ச்சியால் செய்யுஞ் சட்டங்கள் நடமாடும் இடங்களிலேயே சத்தியாக்கிரக இயக்கந் தலைகாட்டும். சத்தியாக்கிரக இயக்கம் சட்டங்களுக்கு மாறுபட்டதன்று. அவ்வியக்கம் நியாயச் சட்டங்களை உலகத்தில் நிறுத்துவது; அநியாயச் சட்டங்களை அகற்றுவது. நீதியும் பிரிட்டிஷ் இராஜ்யமும் பிரிட்டிஷ் ராஜ்யம் நீதியை அடிப்படையாகக் கொண்டு நிலவுவது. பிரிட்டிஷ் குடிமக்கள் நீதியை முன்னிட்டு எல்லாக் கிளர்ச்சிகளையுஞ் செய்யலாம். பிரிட்டிஷ் ராஜ்யத்தில் நீதி என்னுந்தெய்வம் என்றுஞ் சாந்நித்தியங் கொண்டிருக்கும். அதுபற்றியே நாம் பிரிட்டிஷ் ஆட்சியை விரும்புகிறோம். நாம் கேட்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சுய ஆட்சியே யாகும். அதிகாரவர்க்க ஆட்சிமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாறுபட்டு நிற்றலால், அவ்வாட்சிமுறையை மாற்றவே நாம் கிளர்ச்சி செய்கிறோம். பிரிட்டிஷ் நீதிக்கு மாறாக அதிகாரவர்க்க ஆட்சிமுறையில் கொடுமைகள் நேருமாயின், அவற்றை ஒடுக்கச் சத்தியாக்கிரக விரதம் பூணலாம். அவ்விரதத்தின் நோக்கம் பிரிட்டிஷ் நீதிவழி நாட்டை நடாத்தவேண்டுமென்பதே யாகும். பம்பாய் நீதிமன்றத்தார் சத்தியாக்கிரக விரத அறிக்கையில் கைச்சாத்திட்ட வக்கீல்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவர் களை எச்சரித்தது - இது பிரிட்டிஷ் நீதிக்கு மாறுபட்ட செய லாகும். பிரிட்டிஷார் சத்தியாக்கிரகத்தை வெறுக்கமாட்டார்; வெறுப்பாராயின், பிரிட்டிஷ் சுதந்திரம், பிரிட்டிஷ் நீதி இவற் றுக்குப் பழுது செய்தவராவர். ஆதலால், பிரிட்டிஷ் ராஜ்யம், சத்தியாக்கிரக இயக்கத்துக்குத் தடையாக நில்லாது. ரௌலட் சட்டமும் காந்தியடிகளும் அதிகாரவர்க்கத்தார், தேசபக்தர்களின் எதிர்ப்பையும், பத்திரிகைகளின் மறுப்பையும், சட்டசபையிலுள்ள ஜனப்பிரதி நிதிகளின் நியாய வாதங்களையும் பொருட் படுத்தாது, விடாப் பிடியாக ரௌலட் சட்டத்தை நிறைவேற்றினர். நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சியால் பயன் விளையாமை கண்டு, காந்தியடிகள், சத்தியாக்கிரக விரதந் தாங்கி வெளிக் கிளம்பினர். அந்நாள் தொட்டு நமது நாட்டில் சத்தியாக்கிரக இயக்கம் வலுத்துக் கொண்டே வருகிறது. அடக்குமுறைச் சட்டங்கள் யாவும் சத்தியாக்கிரக இயக்கத்தினாலேயே அழிவுறல் வேண்டும். ஆகவே, நமது நாட்டிலுள்ள பெண்மக்களும் ஆண்மக்களும் சத்தியாக்கிரக நெறியில் பயிற்சி பெறுவது நல்லது. எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாமலும், செய்யாமலும், தாமே துன்பங்களை ஏற்று, எண்ணியதொன்றைச் சாதிக்குஞ் சத்தியாக்கிரகிகளால் முடியாத செயல் ஒன்றுமில்லை. இத் துணைச் சிறப்பு வாய்ந்த சத்தியாக்கிரகமொன்றே பிறப் புரிமையை நல்குவது என்னும் எண்ணம் நம்மவர் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிவதாக. சத்தியாக்கிரகம் செல்வரிடத் திலும், செயற்கை நரகத் தழுந்து வோரிடத்திலும் நின்று பயன் தாராது என்பது ஒருதலை. சத்தியாக்கிரகம் ஏழைத் தொழி லாளரிடைச் செவ்வனே பூத்துக் காலத்தில் கனிதரும் என்னும் உறுதி எனக்கு உண்டு. சுதேசியம் வாய்ப்பேச்சு வேண்டாம் சத்தியாக்கிரக முயற்சியோடு சுதேசிய முயற்சியும் உடன் தொடரல் வேண்டும். சுதேசியம் இராஜத் துரோகமன்று. சுதேசியத்தைக் கடைப்பிடிக்க எவரும் அஞ்ச வேண்டுவ தில்லை. சுதேசியத்தை எல்லாருங் கொள்ளலாம். ஓர் ஆண் டிற்கு இவ்வளவு பொருள்கள் நமது நாட்டினின்றும் மேல் நாட்டுக்குச் செல்கின்றன என்னும் கணக்கை மட்டும் எடுத்து எழுதியும் பேசியும் - பரதேச உடைகளை அணிவதனால் சுதேசியம் வலுத்துவிடாது. கணக்கும், எழுத்தும், பேச்சும் நமக்கு வேண்டா; இனி நமக்குச் செய்கையே வேண்டும். பிறப்புரிமையின் பொருட்டு, மகாத்மா காந்தி, ஒரு கையில் சத்தியாக்கிரகத்தையும், மற்றொரு கையில் சுதேசியத்தையும் தாங்கி நிற்பதை நம்மவர் கருதுவாராக. வங்காளப் பிரிவினை காலத்தில் சுதேசியம் சிறிது தலை காட்டிற்று; பின்னர் ஒடுங்கிவிட்டது. மீண்டும் காந்தியடிகள் முயற்சியால் சுதேசிய இயக்கம் மெதுவாக வளர்ந்து வருகிறது. சுதேசிய வகைகள் சுதேசியம் கடல் போன்றது. அதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூறுவது, உங்கள் காலத்தையும் பொறுமையையும் யான் கவர்ந்துவிடுவதாகும். பிறந்த நாட்டின்பால் பற்று வைத்தல், நாட்டு மொழியில் காதல் கொள்ளல், நாட்டு மக்களைச் சகோதரர்களாகக் கருதல், நாட்டு உடை உணவு ஒழுக்கம் முதலியவற்றில் அன்பு கொண்டு அவற்றைப் பயன்படுத்தல் ஆகிய ஒரு சிலவற்றையே யான் ஈண்டுக் குறிப்பிடப்போகிறேன். நாட்டு மக்களை உடன்பிறந்தவர்களாகக் கருதி, அவர் களுக்குள்ள துன்பங்களை (தம் துன்பங்களாகக் கருதி அவற்றை) ஒழிக்க முயல்வது சுதேசியத்துக்கு அடிகோலுவதாகும். நாட்டு மொழியினிடத்துப் பற்றின்றி நாட்டுக்குச் சேவைசெய்வது விழலுக்கு நீர்பாய்ச்சுவதுபோலாகும். இதைச் சிறப்பாகத் தமிழ்நாட்டார் கவனிப்பாராக. வங்காள நாட்டார் தந் தாய் மொழியில் பெரும் பற்றுக் கொண்டுள்ளார். அன்னார் தொழில் முறைகளிலன்றி, வேறிடங்களில் தாய்மொழியிலேயே பேசுகின்றனர். கவிச் சக்கரவர்த்தியாகிய ரவீந்திரநாத் தாகூர் முதலில் தாய்மொழியிலேயே பாக்களை யாத்துப் பின்னர் அவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்தெழுதுகிறார். நமது தமிழ் நாட்டிலுள்ள பட்டதாரிகள், கருத்துக்களை ஆங்கிலத்தில் நினைந்து, அவற்றைத் தமிழ் எழுத்துக்களில் இறக்குகிறார்கள். இப்பொழுது ஆங்கிலத் தமிழே நம்மிடை நடமாடுகிறது. தமிழ் தெரிந்த நம்மவரில் இரண்டுபேர், வீட்டுக் காரியங்களை ஆங்கிலத்தில் பேசிச் செல்வதை யான் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். நந் தலைவர்களில் சிலர், எனக்குத் தமிழ் தெரியாது; ஆங்கிலத்தில் பேசுதல் கூடும் என்று சொல்கிறார். போனதுபோக. இனியாவது நாட்டுமொழியில் பற்று வைத்து நாட்டுப்பணி ஆற்றுமாறு தலைவர்களைக் கேட்டுக் கொள் கிறேன். அமிர்தசர காங்கர, நாட்டு மொழிக்கு வழி காட்டியதை நேயர் மறத்தலாகாது. நாட்டு உடையும் வகைகளும் நாட்டு உடைகளையே அணிதல் வேண்டும் என்னும் நோன்பை ஒவ்வொருவரும் ஏற்றல் வேண்டும். நமது நாட்டில் நூற்கப்பட்ட நூற்களைக்கொண்டு நம்மால் நெய்யப்படும் ஆடைகளை உடுப்பது தலையாய சுதேசியம்; மேல்நாட்டில் நூற்கப்பட்ட நூல்களைக் கொண்டு நமது நாட்டில் நம்மவரால் நெய்யப்படும் துணிகளைத் தரிப்பது இடையாய சுதேசியம்; பரதேச நூல்களைக் கொண்டு, நமது நாட்டில் பரதேசிகளால் நெய்யப்படும் உடைகளை அணிவது கடையாய சுதேசியம். இம்மூன்றனுள் அவரவர் ஆற்றலுக்குத் தக்கவாறு ஒன்றை ஏற்கலாம். மேல்நாட்டு முறைப்படி உடை அணிவது நமது நாட்டு இயற்கைக்கு முரண்பாடு என்பதை ஈண்டு நினைவூட்டு கிறேன். இயற்கை வழி நிற்றல் நாடுகளின் இயற்கைக் கேற்றவாறு பொருள்களை ஆங்காங்கே கடவுள் படைத்திருக்கிறார். அவ்வந்நாட்டார் அவ் வந்நாட்டுப் பொருள்களையே கொள்வது நலன். மாறுபட்டு நடப்பது இயற்கையை மறந்து நடப்பதாகும். நமது நாட்டில் மரணத் தொகை பெருகுதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள் ஒன்று நம்மவரிற் சிலர் நாட்டின் இயல்புக்குரிய உணவு கொள்ளாமை. காபியும் டீயும் நமது நாட்டைக் கொலை செய்கின்றன. அவற்றால் நமது நாட்டில் நீரிழிவும் காசமும் பெருகி வருவது கண்கூடு. கேழ்வரகு அவ்விரண்டு நோயையும் அழிக்கும் பொருள் என்பதை நகர வாசிகளிற் சிலர் இப்பொழுது உணர்ந்து வருகின்றனர். நாட்டு வழக்க ஒழுக்கம் பாழ்பட்டு வருவதைப் பற்றி என்னென்று கூறுவேன்? காலமின்மை கருதி இவ்வளவோடு நிறுத்துகிறேன். சுதேசியத்தை முறையாகக் கொண்டொழுகுவ மேல், சுதேச அரசு தானே மலர்ந்துவிடும். அதனால் இழந்த பிறப்புரிமையை மீண்டும் பெறலாம். தொழிலாளர் இயக்கம் உலகத்தில் பலதிற இயக்கங்கள் தோன்றின; தோன்று கின்றன. அவ்வியக்கங்களால் உலகத்திலுள்ள கொடுமைகள் முற்றும் ஒழியவில்லை. உலகம் செல்வச் செருக்கினுக்கும், சேனைப் பெருக்கினுக்கும், கொடுங்கோன்மைக்கும் இரையாகி வருகிறது. எவ்வெவ்விடங்களில் தொழிலாளர் இயக்கம் வலுத்து நிற்கிறதோ, அவ்வவ்விடங்களில் செல்வர் கொட்டங் குறைந்திருக்கும்; ஜனப் பொறுப்பாட்சி நிலவும். சத்தியாக்கிரக விதைக்குரிய நிலம் உலகம் கொடுங்கோன்மைக்கு இரையானது போதும்! போதும்! இனி எங்கணும் ஜனநாயகமே தாண்டவம் புரிதல் வேண்டும். ஜனநாயக ஆட்சிக்குக் கருவியாயிருப்பது தொழி லாளர் இயக்கமேயாகும். ஜனநாயக ஆட்சியை விரும்பும் ஒவ் வொருவரும் தொழிலாளர் இயக்கத்தை வளர்க்க முற்படல் வேண்டும். எனது வாழ்க்கை முழுவதும் தொழிலாளர் இயக்க வளர்ச்சிக்கே பயன்பட வேண்டுமென்று யான் கடவுளை வழுத்தியவண்ண மிருக்கிறேன். நமது நாட்டில் தொழிலாளர் இயக்கந் தோன்றி இரண்டே ஆண்டுகள் ஆகின்றன. இவ் விரண்டாண்டிற்குள் தொழிலாளர் இயக்கம் வலுத்து எங் கணும் பரவிவிட்டது. தொழிலாளரை மேல்நாட்டு அநாகரிக அரவம் இன்னுந் தீண்டவில்லை. அவர்தம் உள்ளம் பழைய இந்தியாவாகவே இருக்கிறது. அவர்தம் உள்ளமே சத்தியாக் கிரக விதைக்குரிய நிலம். அந்நிலத்தில் சத்தியாக்கிரகப் பயிர் செழுமையாக வளரும் என்பதை யான் அநுபவத்தில் கண்டிருக் கிறேன். ஆதலால், சகோதரிகளே! சகோதரர்களே!! தொழி லாளர் சங்கங்களை ஆங்காங்கே கண்டு, அவற்றின் வாயிலாகப் பிறப்புரிமையைப் பெற முயல்வீர்களாக. தேசபக்த சமாஜம் ஈசுர பக்தியும் தேச பக்தியும் நமது நாட்டிலுள்ள குறைகள் எண்ணிறந்தன. அவை யாவும் சுயஆட்சி என்னும் ஒரு மருந்தால் ஒழிந்துபோகும். சுய ஆட்சி பெறவேண்டும் என்னுங் குறிக்கொண்டே காங்கர மகாசபை வேலை செய்து வருகிறது; அரசியலுணர்ச்சியை வளர்த்து வருகிறது. அதற்குத் துணையாகத் தேச பக்தியை வளர்க்க மற்றும் ஒரு சங்கம் தேவை. அச்சங்கம் பொது மக்களுக்குப் பெரிதும் பயன்படுவதா யிருத்தல் வேண்டும். நம் முன்னோர் ஈசுர பக்தியை வளர்க்க எவ்வெம் முறைகளைக் கொண்டனரோ, அவ்வம் முறைகளைத் தேசபக்தியை வளர்க்க நாமுங் கொள்ளல் வேண்டும். நமது நாட்டு மக்கள் நிலைமைக் கேற்றவாறு தேசபக்தியை வளர்க்க நாம் முற்படுவோமாக. மேல்நாட்டு நூலாராய்ச்சியில் தோன்றும் அரசியல் ஞானம், நம் நாட்டு மக்களுக்கு முதிர்ந்த தேசபக்தியை உண்டாக்காது. நம் மக்களுக்கு நாட்டின்மீது இடையறாத அன்பை உண்டு பண்ணுதல் வேண்டும். அரசியல் ஞானத்தால் மட்டும் நாம் இழந்த பிறப்புரிமையைப் பெறுதல் முடியாது. அதனோடு தேசபக்தியும் வேண்டற்பாலது. ஆதலால், தேசபக்தியை வளர்க்கும் பொருட்டுத் தேசபக்த சமாஜம் என்றோர் அமைப்புக் காணப்படல் வேண்டும். இதுகுறித்துப் பன்முறை நான் தேசபக்தனில் எழுதியிருக்கிறேன். அதைக் கண்ட சிலர் முயற்சியால் சிலவிடங்களில் தேசபக்த சமாஜம் காணப்பட்டிருக் கிறது. அச் சமாஜத்தின் நோக்கம், ஆலயங்கள் வாயிலாகவும், திருவிழா வாயிலாகவும், காலட்சேப வாயிலாகவும், நாடக வாயிலாகவும், பிற வாயில்களாகவும் நாட்டுமக்களுக்கு நாட்டுப்பற்றை யூட்டுவது. பாரததேவி ஆலயம், தேசபக்தர் கோயில், பாரததேவி திருவிழா, தேசபக்தர் திருவிழா முதலியவற்றால் நம் மக்களுக்கு நாட்டுப்பற்றை உண்டாக்க லாம். பாரததேவியின் முற்காலநிலை, தற்காலநிலை, தேச பக்தர் வரலாறு முதலியவற்றைக் காலட்சேப வாயிலாகவும் நாடக வாயிலாகவும் மக்களுக்கு அறிவுறுத்தலாம். பாரததேவி மீது புலவர்கள் பாடியுள்ள பாக்களை இன்னிசைக் கருவி களுடன் பாராயணஞ் செய்யலாம். சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீசுர வர்மா அவர்களின் பாடல் களும் மக்கட்குத் தேசபக்தி யூட்டுவதுபோலக் கற்றைக் கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்கு களும் அப்பக்தியை ஊட்டா. நாட்டு நினைவு உண்டாகுங் காலத்து, என்னருமை நாடே! c‹Åiy ï›thwh» É£lnjh? என்று உள்ளங் கசிந்துருகல் வேண்டும். தேசபக்தி எழுப்பக் கூடிய முறைகளை இனி நம்மவர் கடைப்பிடிக்க முந்துவாராக. நமது நாட்டில் அரசியல் ஞானிகள் பலர் இருக்கலாம். ஆனால் தேசபக்தர் பலரில்லை என்பது எனது உட்கிடக்கை. ஒரு திலகர், ஒரு காந்தி, ஒரு லஜபதி, ஒரு ஷாக்குத் அலி, ஒரு மகமத் அலி போதுமோ? பல திலகர், பல காந்தி, பல லஜபதி, பல ஷாக்குத் அலி, பல மகமத் அலி நமக்குத் தேவை. ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்காகத் தியாகஞ் செய்ய வேண்டியவர் இருத்தல் வேண்டும். இவ்வேண்டுதலைத் தேசபக்த சமாஜம் நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை. தேசபக்த சமாஜம் ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படல் வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் செய்வானாக. கிலாபத் இப்போது நமது நாடு கிலாபத்தையே பெரிதும் நினைந்து வருகிறது. பாரதப் புதல்வர்களாகிய ஹிந்துக்களும், முலிம் களும் கிலாபத்தின் மீதே கவலை செலுத்தியிருக்கிறார்கள். கிலாபத்துக்காக இந்தியா இரண்டு முறை நோன்பு பூண் டிருக்கிறது. கிலாபத்துக்கு ஒருவேளை பழுது நேருமாயின், இந்தியாவில் பெருஞ் சத்தியாக்கிரக எழுச்சி உண்டாகும். இது திண்ணம். இந்தியாவிலுள்ள முலிம்கள் நியாயநெறி பிறழ்ந்து கிளர்ச்சி செய்யவில்லை. நியாயநெறி நின்றே அவர்கள் பிரிட்டிஷாரிடம் வாதஞ் செய்கிறார்கள். யுத்தம் தொடங்கிய காலத்தில், கிலாபத்துக்கும், முலிம் புண்ணிய ஷேத்திரங் களுக்கும் பழுது நேராத வண்ணம் நாங்கள் காப்போம் என்று பிரிட்டிஷ் மந்திரியார் உறுதிமொழி கூறினார். இராஜப் பிரதிநிதியாயிருந்த லார்ட் ஹார்டிஞ்சும் இந்திய முலிம் களுக்கு அவ்வுறுதி மொழி தந்தார். அவ்வுறுதிமொழி காக்கப் பட்டதோ? மெசபெட்டோமியா, பாலதீனம் முதலிய முலிம் க்ஷேத்திரங்கள் இப்பொழுது எவர் வசத்திலிருக் கின்றன? கிலாபத் பீடத்துக்கும் கேடு விளைவிக்கும் முயற்சிகள் இப்போது செய்யப்படுகின்றனவல்லவோ? துருக்கியைப்பற்றிப் பிரஸிடெண்ட் வில்சன் வெளியிட்ட கருத்துக்கள் மறுக்கத் தக்கன. சென்னையில் சென்ற மாதம் 17, 18 தேதிகளில் கூடிய கிலாபத் மகாநாடு செய்த தீர்மானங்கள் அரசாங்கத்தார் பார்வைக்குச் சென்றிருக்குமென்று நம்புகிறேன். அவற்றை அரசாங்கத்தார் மதித்து நடத்தல் வேண்டும். சீர்திருத்தத்தால் ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நெருங்கிய உறவு ஏற்படவேண்டுமென்பது இருபாலாரது வேட்கை. முலிம்கள் உள்ளம் புண்பட நேருமாயின், அவ்வேட்கை எங்ஙனம் நிறை வேறும்? இதையும் அரசாங்கத்தார் ஊன்றி நோக்கல் வேண்டும். நாட்டிடை அமைதி நிலவவேண்டுமேல், முலிம் சகோதரர் கோரிக்கையை அரசாங்கத்தார் நிறைவேற்றுங் கடமையை ஏற்றுக் கொள்வது சிறப்பு. இந்திய முலிம்களின் கிளர்ச்சியை முன்னிறுத்தி, லாயிட் ஜார்ஜ் மற்ற நேச தேசத்தாரோடு வாதம் புரிந்து கிலாபத்தைக் காக்கலாம். பிரிட்டிஷார் உறுதியாக நின்றால், கிலாபத்துக்குப் பழுது நேராதென்பது ஒருதலை. பிரிட்டிஷார், இந்தியருள்ளம் புண்படாதவாறு நடப்பாராக. ஹிந்து - முலீம் இப்பொழுது ஏற்பட்டுள்ள ஹிந்து - முலிம் ஒற்றுமை, நீடூழி இலங்குமாறு ஆண்டவன் அருள்செய்வானாக. முலிம் கள், ஹிந்துக்கள் பொருட்டுப் பசுக்கொலையை ஒழிக்கத் தீர்மானஞ் செய்திருப்பது உங்கட்குத் தெரியும். ஹிந்துக்களும் மசூதி எதிரில் மேளமடித்தல் முதலிய சந்தடிகள் நிகழாதவாறு காக்க வேண்டுமென்று தீர்மானஞ் செய்திருக்கிறார்கள். இன்னும் பலவழிகளிலும் ஹிந்து - முலிம் ஒற்றுமை ஓங்கி வளரல் வேண்டுமென்று யான் எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறேன்; சுயராஜ்யத்துக்கு, ஹிந்து - முலிம் ஒற்றுமை இன்றியமையாதது என்பதை ஈண்டு நேயர்களுக்கு நினைவூட்டு கிறேன். ஜில்லாக்கள் அரச அங்கம் நமது மாகாணத்துள்ள ஜில்லாக்களில் பெரும்பான்மை யன மலைவளம், கான்வளம், நீர்வளம், நிலவளம் முதலிய வளங்களை உடையன. இவ்வியற்கை வளங்கள் மக்கள் வாழ்க் கைக்குத் துணை புரிய வேண்டுமென்னும் நன்னோக்கத்துடனே கடவுளால் படைக்கப்பட்டன. வளங்களைப் பண்படுத்தி மக்க ளுக்கு உதவ ஓர் அமைப்பு வேண்டற் பாலதே. அவ்வமைப்பே அரசாங்கமென்பது. அரசனது அங்கம் ஜனப் பிரதிநிதிகளால் அமைவுறல் வேண்டும். ஜனப் பிரதிநிதிகள் அடங்கிய அங்கத் துணைகொண்டு, ஆங்காங்குள்ள இயற்கை வளங்களை, மக்கள் துய்க்குமாறு செய்விக்க வேண்டுவது அரசனது கடமை. நம்பழந் தமிழ்மன்னர்கள் எடுத்த நீர்நிலைகளும் வாய்க்கால்களும் அல்லவோ, நம்மை இன்னும் ஓம்பி வருகின்றன! தற்போதைய அரசாங்கத்தார் அவற்றைப் பழுது பார்ப்பதிலேயே கண்ணுங் கருத்துமா யிருக்கின்றனர். ஒரு கிராமத்தில் பத்துக் கிணறுகள் எடுக்கவேண்டுமானால், இப்பொழுது எவ்வளவோ கஷ்டம் நேர்கிறது. இந்நாளில் வெயில்காலத்தில் கிராமங்களில் ஏழை மக்கள் படும் துன்பத்துக்கு ஓரளவும் உண்டோ? பண்டைக் காலத்தில் மலைபடுபொருளும், கான்படு பொருளும், கடல்படுபொருளும் நாட்டிற் போந்து மக்களை வளர்த்து வந்தன. அந்நாளில் கடவுளால் படைக்கப்பட்ட இயற்கை வளங்களை மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நுகர்ந்து வந்தார்கள். இப்பொழுது ஒரு ஜில்லா, ஒரு கலெக்டர் ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. கலெக்டர்களிற் பெரும்பான்மை யோர் மேல்நாட்டார். அவருள் சிலரே இந்தியாவின் உப்பைத் தின்கிறோம் என்னும் உணர்வு பெற்று இந்தியாவை நேசிப்பவர். பெரும்பான்மையோர் தமது கடமையைச் செலுத்தி ஓடு பவரேயாவர். அவர் விருப்பப்படி ஜில்லா ஆளப்படுமேல், அந்த ஜில்லா வாசிகள் முழுநலந் துய்க்கமாட்டார்கள். ஆதலால், கலெக்டருக்கு ஜனப் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் ஆலோசனை சபை இருப்பது அவசியம். ஜில்லாபோர்ட் உரிமை இப்போதுள்ள ஜில்லாபோர்டுகள் ஜனப் பிரதிநிதிகள் சொல்வழி நடப்பனவல்ல; அவை முழு உரிமைபெறவில்லை. ஜில்லாபோர்ட் விருப்பத்துக்குக் கலெக்டர் கட்டுப்பட்டு நடப்பாராயின், ஜில்லாவிலுள்ள பல குறைகள் ஒழிந்துபோகும். ஜில்லா வாசிகள் விருப்பப்படி ஜில்லா ஆட்சி நடைபெறல் வேண்டும். ரெயில்வேக்கள் ஜில்லாக்களில் பல பாகங்களில் ரெயில்வேக்கள் இல்லை. மேல்நாட்டு வியாபாரிகள் நடமாடும் இடங்களிலேயே ரெயில் வேக்கள் போடப்படுகின்றன. நமது நாட்டில் மேல்நாட்டுக் கம்பெனியாருடைய ரெயில்வண்டிகள் ஏன் ஓடுதல் வேண்டும்? அவற்றை ஜில்லா போர்டாரே ஏற்று ஏன் நடத்தல் கூடாது? சுருங்கக் கூறின், ஜனப் பிரதிநிதிகள் வழியே ஜில்லா நடை பெறல் வேண்டும் என்று கூறலாம். ஜில்லாவிலுள்ள குறைகளை நீங்கள் தீர்மான வாயிலாக வெளியிடப்போவதால், நான் அவற்றைப் பற்றி விரித்துரைக்க வேண்டுவதில்லை. காடு நாடும் காடும் நமது தேசத்தில் நாடு காடு என்னும் இரு பகுதியுண்டு. இவ்விரண்டனுள் நாட்டுக்காகவே காடு அணித்தாகப் படைக்கப் பட்டிருக்கிறது. காடில்லாத நாடு நாடாகாது. நாட்டை வளர்க்குந் தாய் என்று காட்டைக் கூறலாம். காட்டின் விளை பொருளெல்லாம் நாட்டிற்கு வேண்டுவனவாம். காட்டில் விளையும் கட்டையே, நாட்டில் வீடாகவும், பெட்டியாகவும், நாற்காலியாகவும், வண்டியாகவும் மக்களுக்குப் பயன்படுகிறது. அடுப்புக்கு விறகாக உபயோகப்படுத்துவதுங் காட்டுக் கட்டையே. பலவிதப் பழங்களையும் காடு நாட்டுக்கு அளிக் கிறது. மற்றுங் காட்டிலுள்ள தழைகள், இலைகள், பூக்கள், கொடிகள் முதலியன நாட்டில் வாழ்வோருக்கு இன்றியமையா தனவாம். கால்நடைகளுக்குக் காடு அவசியம் தேவை. காட்டிலுள்ள கால்நடை எருவும், தழை எருவும் வயல்களின் கொழுமைக்கு வேண்டற்பாலன. நீண்ட மரங்களடர்ந்த காடுகளில் மேகந் தவழும். அதனால் காலத்தில் மழை பொழி யும். இன்னோரன்ன பயன்கள் பல, காட்டினால் நாட்டிற்கு உண்டு. இத்தகைய நாட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாத காடுகள் கேடுறாதவாறு பாதுகாக்கப்படல் வேண்டும். நம் அரசாங்கத்தார் ஒரு காலத்தில் காடுகளை அழித்து வந்தாரேனும், இது காலை அவற்றைப் பாதுகாத்து வருவது போற்றத்தக்கதே. ஆனால் நாட்டு மக்களும், கால்நடைகளும் காட்டுப் பொருள்களை நேரே அனுபவியாதவாறு சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாடு களைச் சிறிது சிறிதாக ஒழிக்க நம் தலைவர்கள் முயன்று வருகிறார்கள். இந்த ஜில்லாவில் 795, 404 ஏகர் நிலப்பரப்பு காடாக இருக்கிறது. இந்த ஜில்லாவின் காட்டுப் பரப்பு நமது மாகாணத்துள் ஐந்தாவதாக நிற்கிறது. இவ்வளவு பரந்த காடு, இந்த ஜில்லாவிலுள்ள உங்களுக்கு நேரிய முறையில் பயன்படுகிறதா என்பது உங்களால் கருதப்படல் வேண்டும். கால்நடைகளின் மேய்ச்சலுக்கும், தழைகளுக்கும், பிறவற்றிற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன். அதனால், பல இடுக்கண்கள் உங்களுக்கு நேர்ந்திருக்கலாம். நமது நாட்டிலுள்ள எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கவல்லது ஒன்றே. அவ்வொன்றே சுயராஜ்யமென்பது. அதைப் பெற முயற்சி செய்வது நமது தலையாய கடமை. இறுவாய் தேசபக்தியும் அரசியலும் சகோதரிகளே! சகோதரர்களே!! இவ்வளவு நேரம் என் சிற்றுரைகளைப் பொறுமையோடு செவிமடுத்துக்கொண்டிருந்ததற்கு யான் எனது அன்பார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன். எனது பேச்சு முழுவதும் பிறப்புரிமை ஒன்றையே பெரிதும் குறிக்கொண்டு நிற்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பிறப்புரிமையைப் பற்றியும், அதற்கு அரண் செய்யக்கூடிய வேறு பொருள்களைப் பற்றியும் நான் பேசியதன் நோக்கம் உங்களுக்குப் புலனாயிருக்கலாம். இது காலை, நாடு முழுவதும் ஒருவகைப் புது எழுச்சி உண்டாதல் வேண்டுமென்பது எனது வேணவா. அவ்வெழுச்சியால் இடையறாத தேசபக்தி உண்டாகும். வெறும் அரசியலுணர்ச்சி யால் உறுதியான தேசபக்தி பரிணமியாது. தேசபக்தி முறுகி எழுமாயின், பலர் தியாகத்துக்கு முற்படுவர். அரசியல் நூல்ஞானம் வாசா கைங்கரியமாக முடிவதை நான் கண் டிருக்கிறேன். தேசபக்தி யுடையோர் தியாகத்துக்கு அஞ்சார். தியாகத்தை அன்னார் இன்பமாக ஏற்றுக்கொள்வர். திலகர் பெருமான் மும்முறை சிறை புகுந்ததும், காந்தியடிகள் தென் னாப்பிரிக்காவில் துன்பம் ஏற்றதும், லஜபதிராய் எல்லா நலங்களையும் விடுத்துப் பரதேசங்களில் வனவாசஞ் செய்ததும், அரவிந்த கோஷ் உலக இன்பத்தை வெறுத்துத் தவமுனியாய் விளங்குவதும், ஷாக்குத் அலியும் மகமத் அலியும் நீண்ட நாள் கட்டிலிருந்ததும் நீங்கள் அறிந்தனவேயாம். இப்பெரியோர்கள் சொலற்கருந் துன்பங்கட்கு உட்பட்டும் நாட்டுப் பணியில் வெறுப்புக் கொள்கிறார்களோ? வெறுப்புக் கொள்ளாமைக்குக் காரணம் யாது? அவர்களிடத்துள்ள முதிர்ந்த தேசபக்தியே யாகும். கனிந்த தேசபக்தியுடையார் நாட்டின்பொருட்டு எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொள்வர் என்பதில் ஐயமில்லை. முன்னைநாளில் கடவுளிடத்துக் கொண்ட அன்பு மேலீட்டான், நம் முன்னோர் தமது கண்ணைப் பிடுங்கியும், கழுத்தை அறுத்தும், வயிற்றைக் கீறியும் இன்பமடைந்த கதைகள் உங்கட்குத் தெரியும். தேசபக்தி மேலிடுமாயின், தேசபக்தர்கள் நம் முன்னோரைப் போலவே எவ்வகைத் தியாகத்தையும் ஏற்றுக் கொள்வார்கள். பிறர்க்குத் தீங்கு செய்யாமல் துன்பங்களைத் தாமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதன்றோ சத்தியாக் கிரகத்தின் நோக்கம்? அந்நோக்கத்தை நிறைவேற்ற வல்லது தேசபக்தியொன்றே. தேசபக்தியில் மூழ்கியிருப்பவர், தம் நாட்டின் பொருட்டுத் துன்பங்களைத் தாமே ஏற்றுக் கொள்வர். அப்பக்தி யில்லாதார் பிறர்க்குத் தீங்கிழைக்க முந்துவர். நமது நாட்டின் பொருட்டு நாம் மேற்கொள்ளுந் தியாகம், இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய உறவை உண்டு பண்ணுவதாகும். மறந்தும் பிறர்க்குக் கேடு சூழாது பிறப்புரிமை பெற வேண்டு மென்பதே எனது கொள்கை. ஆதலின், பிறப் புரிமையைப் பற்றியே யான் பெரிதும் பேசியிருக்கிறேன். சகோதரிகளே! சகோதரர்களே!! பிறப்புரிமையை நினையுங்கள்; நமது நாட்டின் பழைய நிலையை எண்ணுங்கள்; தற்போதைய நிலையைக் கருதுங்கள்; பிறப்புரிமை பாழ்பட்டதை உன்னுங்கள். அவ்வுரிமையைப் பெற என்ன செய்யப்போகி றீர்கள்? தேச நேசம் பாரத நாட்டை வழிபடுங்கள்; வேறு வழிபாடுகள் வேண் டாம்; பாரத நாட்டிற் பிறந்த அனைவரையும் சகோதரராகக் கொள்ளுங்கள்; பாரத நாட்டிற் பிறந்த புலி கரடி சிங்கங்களையும் நேசியுங்கள்; சாதி வேற்றுமையைக் கருதாதேயுங்கள்; சமய வேற்றுமையைக் கருதாதேயுங்கள்; நாட்டை நோக்குங்கள்; நாட்டிற்கென்று ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தினின்றும் ஒவ்வொரு பிள்ளையை அர்ப்பணஞ் செய்யுங் காலம் வரும். அக்காலத்தில் உங்கள் கடமையைச் செய்ய வழுவாதேயுங்கள். தேசபக்தர்களே! ஒற்றுமை நாடி உழையுங்கள்; தனித்தனி மனிதரைக் கருதாதேயுங்கள்; நாட்டைக் கருதுங்கள். தமிழ் நாட்டில் போலிக் கட்சிகள், சாதிச் சண்டைகள், சமய வாதங்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றை உங்கள் பொறுமையால், புனித மொழியால், தியாகத்தால் ஒழிக்க முந்துங்கள். உங்களையே நான் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும், ஞானிகளாகவும் கொண்டிருக்கிறேன். குணமென்னுங் குன்றேறி நின்று நாட்டின் சிறுமைகளை ஒழிக்க வாருங்கள். நீங்கள் புனிதத் தொண்டை ஏற்று நிற்கிறீர்கள். உங்களுக்குள் பகைமை வேண்டாம்; பொறாமை வேண்டாம்; பொறுமை வேண்டும்; உண்மை வேண்டும்; தியாகம் வேண்டும். என் முன் எழுந்தருளியுள்ள சகோதரிகளே! சகோதரர் களே!! உங்கள் பொலிவு நமது நாட்டில் இப்பொழுது தோன்றி யுள்ள நவசக்தி வடிவாகத் தாண்டவம் புரிகிறது. அந்தச் சக்திக்கு எனது வணக்கத்தைச் செலுத்தி என் புன்மொழியை இவ்வள வோடு நிறுத்துகிறேன். வந்தே மாதரம் தென்னார்க்காடு ஜில்லா 3 - வது அரசியல் மகாநாடு திருப்பாதிரிப்புலியூரில் கூடியது - 1921ஆம் வருடம் அக்கேடாபர் மாதம் 15, 16ஆம் நாட்கள் - எழுவாய் சகோதரிகளே! சகோதரர்களே!! அறக்கிளர்ச்சி ஒருபாலும் மறக்கிளர்ச்சி மற்றொரு பாலும் நிமிர்ந்து இயங்குறும் இந்நாளில், நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்னும் வீரமொழி பிறந்த இந்நாட்டில், கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் - நற்றுணை யாவது நமச்சி வாயவே என்னுங் காப்புரை கண்ட இக் கடலிடத்தில், மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் - விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே - திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க் - கண்பாவு நெற்றிக் கடவுள் சுடரான் கழலிணையே என்னும் உறுதி வாக்கு எழுந்த இவ்வூரில், இன்று இவண் குழுமியுள்ள இம்மகாநாட்டிற்கு என்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்த வரவேற்புக் கூட்டத்தார்க்கும், ஏனைய பிரதிநிதிகட்கும், மற்றச் சகோதரர்கட்கும் எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். காலநிலை கலங்கி நிற்கும் இவ்வேளையில், யான் ஏற்றுக் கொண்ட பணியை, உங்கள் துணைகொண்டு, ஒல்லும்வகை நிறைவேற்ற முயல்கிறேன்; அறியாமை காரண மாகக் குற்றங் குறைகள் நிகழுமேல், அவற்றை மன்னிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். ஊன அரசியல் - ஞான அரசியல் இத்துணை நாளாகக் கூடிவந்த அரசியல் மகாநாடு களுக்கும் இப்பொழுது கூடிவரும் அரசியல் மகாநாடுகளுக்கும் உள்ள வேற்றுமைகளை நான் விரித்துக் கூறவேண்டுவதில்லை. முன்னையவை ஒத்துழைக்குங் காலத்தில் கூடியவை; பின்னை யன ஒத்துழையா நாளில் கூடுவன. அவற்றில் பெரிதும் இக்கால நாகரிக அரசியல் துறைகள் ஆராயப்பட்டன; இவற்றில் சமய ஞானம் விரவிய அரசியல் முறைகள் ஆராயப்படுகின்றன. அரசியல் மிகுதிப்பாட்டால் உலகம், ஆத்ம ஞானத்தை இழந்து, இடுக்கணுறும் இதுகாலைக் கூடும் மகாநாடுகள், ஊன அர சியலை மறந்து, ஞான அரசியலை வளர்க்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டு நடைபெறல் வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இக்கருத்தைக் காந்தியடிகளும், அலி சகோதரர்களும் யாண்டும் அறிவுறுத்தி வருவதும் உங்கட்குத் தெரியும். முன்னோர் கண்டதும் கொண்டதும் ஞான அரசியலே யாகும். ஆதலால், ஞான அரசியல் துறைபற்றி என் புல்லறிவிற்கெட்டியவாறு எனது கருத்தை வெளியிடுகிறேன். தென்னார்க்காடு ஆர்க்காட்டுப் பெயர் ஆர்க்காடு என்பது முத்திற வழக்குடையது. ஒன்று ஆர்க்காடென்பது; மற்றொன்று ஆறுகாடு என்பது; இன் னொன்று ஆற்காடு என்பது. இம்மூன்றனுள் முன்னையது சங்க கால வழக்கு; நடுவணது புராணகால வழக்கு; இறுதியது இக் கால வழக்கு. ஆர்க்காடு ஆறுகாடு என்பன காரணப் பெயர்கள். ஆற்காடு என்பது ஆர்க்காடு ஆறுகாடு என்னும் வழக்கு களினின்றும் மருவி இக்காலத்தில் வழங்கப்படுவது. ஆர்க்காடு - (ஆர் - ஆத்தி) ஆத்தி மரம் நிறைந்த காடு. ஆர்க்காட்டின் வரலாற்றைப் புராணங்களிலும், வேறு பல கதைகளிலும் காணலாம். நாடு நகரப் பெயர்களின் சிதைவு நமது நாட்டில் வழங்கப்படும் ஊர்ப் பெயர்கள் பெரிதும் காரணப் பெயர்களே யாகும். இக்காலத்தில் ஆங்கில உச்சரிப்பு முறைபற்றி நம் நாட்டுப் பெயர்களும் நகரப் பெயர்களும் உச்சரிக்கப்படுகின்றமையான், காரணம் புலனாதல் அருமையாய் விடுகிறது. சுயராஜ்ய காலத்தில் நாட்டுப் பெயர்களும், நகரப் பெயர்களும் காரணப்பொருள் புலனாகுமாறு வழங்கப்படும். ஜில்லா மாண்பு தொன்மையிற் சிறந்த இத் தென்னார்க்காட்டில் இறைவன்அருளும், இயற்கை இன்பமும் என்றும் நிலவிக் கொண்டிருக்கின்றன. கோயில் என்னுங் கோயிலும், வேறு பல கோயில்களும் இறை அருளையும் - பெண்ணையின் பெருக்கும், கெடிலத்தின் ஓட்டமும், பிற அருவிகளின் வீழ்ச்சியும், மலைகளின் வரிசையும், வனங்களின் ஒழுங்கும் இயற்கை இன்பத்தையும் - இவ்வார்க்காட்டிற்கு நல்கிக் கொண்டிருக் கின்றன. இந்நிலத்துப் பல பகுதிகளின் இயற்கை, மனத்தைக் கவர்வதாகும். இவ்வியற்கை, அறிஞர்க்கும் அன்பர்க்கும் உறை விடமாய் உதவி வந்திருக்கிறது. இந்த ஜில்லாவில் தமிழ் நாட்டுச் சத்தியாக்கிரகிகள் பலர் வதிந்திருக்கின்றனர். தேசிங் கின் வீரத்தைப் புலப்படுத்தும் செஞ்சிக் கோட்டையும், ஆங்கிலேயர் சென்னையில் அடிகோலுவதற்கு முன்னர் அவர்க்கு இருக்கை தந்த அரணும் இம்மண்ணில் நின்று சரித்திரக்காரர் சிந்தையை மகிழச் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பல சரித்திரக் குறிப்புக்களும் இந்த ஜில்லாவிலுண்டு. நமது மாகாணம் ஆங்கில ஆட்சிமுறையில் சென்னை மாகாணமென எல்லை கோலப்பட்ட நிலப்பரப்பு, காங்கர முறையில் மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை ஆந்திரநாடு, தமிழ்நாடு, சேரநாடு என்பன. ஆந்திர நாட்டில் அரசியல் கிளர்ச்சியின் பெருக்கும், அதிகாரவர்க்க அடக்குமுறைச் சிறப்பும் ஒன்றோடொன்று முனைந்து நிற்கின்றன. இந்தியாவில் இப்போது ஒத்துழையாமை தலைசிறந்து ஓங்கும் நாடு, ஆந்திர நாடு என்று சொல்லலாம். ஆண்டுள்ள பாரத மக்களின் ஊக்கம், ஏனைய பகுதிகளிலும் எழுதல் வேண்டுமென இறைவனைப் போற்றுகிறேன். சேரநாடு, பித்துக் கொண்ட மாப்பிள்ளைமார் குழப்பத் தால் துன்புற்று வருகிறது. அதைப்பற்றிப் பேசவும் நாவெழ வில்லை. அங்கே வருந்தும் நஞ் சகோதரர்களுக்கு உதவி புரியு மாறு உங்களை வேண்டுகிறேன். தேசபக்தன் தமிழ்நாட்டில் தேசீயக் கவிகளைப் பாடி, நாட்டுக்கு வீரமூட்டி வந்த இயற்கைப் புலவராகிய ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை விடுத்து, வேறுலக வாழ்வைப் பெற்றதை ஈண்டு மிகத் துயரத்தோடு குறிப்பிடுகிறேன். அவரது பிரிவு, தமிழ் நாட்டுக்குப் பெரும் நட்டமென்றே நவிலலாம். தேசபக்தன் ஆசிரிய பீடத்தினின்றும் அடியேன் விலகிய பின்னர், அப்பீடத்தில் அமர்ந்து, தேசபக்தன் வாயிலாகத் தேசத் தொண்டு செய்து வந்த தேசபக்தர் வ. வெ. சுப்பிரமணிய ஐயர் ஒத்துழையா வழிநின்று சிறை புகுந்தமையும், வேறு பல தேசபக்தர் சிறை சென்றதையும் தமிழ்நாடு கண்டு வீரநகை புரிந்து சத்தியாக்கிரக நெறியில் உறுமிக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிற்குப் புத்துயிர் அளித்து, அதைத் தட்டி எழுப்பிய தேசபக்தன் என்னும் இளம்பரிதி, சில நாளாக உதயமாகாம லிருப்பது தமிழ்நாட்டுக்குப் பெருவருத்தம் அளித்துக் கொண் டிருக்கிறது. தேசபக்தி நிரம்பிய எந்தச் செல்வர் உள்ளத்தைத் தேசபக்தன் மீது ஆண்டவன் திருப்புவானோ அறிகிலேன். சென்னையில் மில் தொழிலாளர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் யான் இவண் போந்து, சமய அரசியல் சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண் டிருந்தபோது, கர்நாட்டிக் மில்லின் ஒரு பகுதியில் தொழில் புரிவோர் வேலை நிறுத்தஞ் செய்த காரணமாக அம்மில்லில் கதவடைப்பும், பக்கிங்காம் மில்லில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்தன. அப் பஞ்சாலைகளில் வேலை செய்யுந் தொழிலாள ரும், வேறு சில தொழிலாளருஞ் சேர்ந்த சங்கமே சென்னைத் தொழிலாளர் சங்கமென்பது. அதுவே முதல் முதல் இந்தியா வில் தோன்றிய தொழிலாளர் சங்கம். அச் சங்கத்தை உடைத் தெறிய வேண்டுமென்று பேராற்றல் வாய்ந்தவர் முயன்று வருகின்றனர். சங்க அங்கத்தவராகிய தொழிலாளர் சுமார் ஐந்து திங்களாகத் தாங் கொண்ட உறுதியினின்றும் பிறழாதிருக் கின்றனர். தொழிலாளர் ஒற்றுமையைக் கெடுக்க ஒருசிலர் சங்கத்தினின்றும் பிரிக்கப்பட்டனர். அக்காரணமாக இப் பொழுது சென்னையில் நிகழும் குழப்பம் வருணிக்கற்பாலதன்று. பொது மக்களில் எண்மரும், போலீஸாருள் இருவரும் மாண்டனர். அரசாங்கத்தார் உளங்கொண்டால் ஒரு நொடியில் தொழிலாளர்க்கு நியாயம் பிறப்பிக்கலாம். இதற்குப் பதிலாகச் சங்கத் தலைவனாகிய என்னையும், எனக்குத் துணை புரிந்து வரும் நண்பர்களையும் அச்சுறுத்துவதில் அரசாங்கத்தார் கண்ணுங் கருத்துமா யிருக்கின்றனர். ஸ்ரீமான்களாகிய A. கதூரிரங்க ஐயங்காரும், எ. ஸ்ரீநிவாச ஐயங்காரும் கடற் கரையில் எடுத்துக் கூறிய அறவுரைகளும், ஸர். பி. தியாகராய செட்டியார் உள்ளிட்ட அறுவர் அனுப்பிய அறிக்கையும், பிற மொழிகளும் லார்ட் வில்லிங்டன் செவியில் நுழையவில்லை. கீழ்ப்பட்ட உத்தியோகதர் சொற்களையே லார்ட் வில்லிங்டன் நம்பி இடர்ப்படுகிறார். லார்ட் வில்லிங்டனுக்குச் சென்னைக் குழப்பத்தை அடக்கும் ஆற்றலிருக்கலாம்; ஆனால் அதை ஒடுக்கும் அறிவில்லை என்பது எனது எண்ணம். சுதேசத் தொழிற்சாலை தொழிலாளர்க்கும் முதலாளிக்கும் இடையில் அரசாங்கத் தார் தலையிடாமலிருந்தால், எப்பொழுதோ சமாதானம் பிறந்திருக்கும். அரசாங்கத்தார் தலையீடே தொழிலாளர்க்கும் முதலாளிக்கும் நேர்ந்த பிணக்கை வளர்த்து வருகிறது. சென்னைக் குழப்பம் வகுப்புப் பூசலாக முடிந்திருக்கிறது. வேலை நிறுத்தஞ் செய்துள்ள தொழிலாளர்களிற் பலர் சுதேசத் தொழிற்சாலைகளிற் சேர விரும்புகின்றனர். அவர்க்கொரு தொழிற்சாலை அமைத்துக் கொடுக்கவேண்டுவது நாட்டவர் கடமை. பண்டை ஆட்சி ஞான - ஊன அரசியல் பண்டைக் காலத்தில் நமது நாட்டில், ஒழுங்குபட்டதும், மக்கள் அகவாழ்க்கையைப் பண்படுத்துவதும், அறநெறியை நிறுத்தி மறநெறியைக் களைவதும், ஒழுக்க முறைகளை வளர்ப்பதும் ஆகிய ஒருவித ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. அவ்வாட்சி முறையின் நோக்கம் மக்களை அறநெறியில் நடாத்தி, அவர்கள் வாழ்க்கையில் அமைதி விளைத்து, அவர்களை இன்பத்துறையில் நிறுத்துவதாகும். அத்தகைய ஆட்சியின் அரசியலே ஞான அரசியல் எனப்படும். அக இன்பத்தை நல்காத ஆட்சியின் அரசியல் ஊன அரசியலாகும். இக்கால ஆட்சியில் அமைதி விளைகிறதோ? அமைதி அற்ற இடத்தில் அறமேது? இன்பமேது? இங்கே அமைதிக்குரிய ஞான அரசியலின் பாற்பட்ட ஆட்சியின் போக்கைச் சிறிது ஆராய்வோம். நால்வகைப் பேறு மக்கள் அடையவேண்டிய பேறு நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன. முதல் மூன்றும் கைவரப்பெறு வோர் எளிதில் நான்காவதாகிய வீட்டை அடைவராகலானும், வீடு - மாற்ற மனங்கடந்து நிகழ்ச்சியில் விளைவதொன்றாக லானும், அதைவிடுத்து, ஏனைய மூன்றையும் பொருள் நூலார் கொண்டனர். அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் அகம் புறம் என்னும் இரண்டில் அடங்கும். அகம் புறம் என்பன தனித் தனியாக நிலவும் பொருளல்ல. உலகம், அகம் புறம் என்னும் இரண்டானும் ஆக்கப்பட்டிருக்கிறது. அகமின்றிப் புறமில்லை; புறமின்றி அகமில்லை. இவையிரண்டும் வேறு வேறு பிரியாது, என்றும் இயைபுடையனவாய் இயங்குவனவாம். புறம் வளம்பெறின், அகமும் வளம்பெறும். ஒன்றற்குக் கேடு நேரின் மற்றொன்றற்கும் கேடு நேரும். ஆதலால், ஒன்றை ஓம்புவது மற்றொன்றையும் ஓம்புவதாகும். இவ்வுண்மை கண்டே நமது நாட்டுப் பொருள் நூலார், அறத்தையும் பொருளையும் புறப்பொருளாகவும், இன்பத்தை அகப்பொருளாகவும் வகுத்து நூல்கள் எழுதினர். புறமும் அரசியலும் இன்பக் கூறாகிய அகப்பொருள் நலத்துக்குப் புறப் பொருள் இன்றியமையாததென்பதைத் தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களிற் பரக்கக் காணலாம். அறத்துக்கும் பொருளுக்கும் உறைவிடமான புறப்பொருளின்பாற்பட்டது அரசியல். அரசு கோடின், பொருள் வளங் குன்றும்; அறநெறி பிறழும். அதனால் அக இன்பம் ஒழியும். புறப்பொருளின்பாற் பட்ட அரசியலே எல்லா நலங்கட்கும் தாயகம் என்பது நோக்கற்பாலது. அரசியல் நலன்கள் அரசியல் ஒழுங்கு பெறாத நாடு காடேயாகும். அந் நாட்டில் களவும், கொள்ளையும், கொலையும் ஆட்சி புரியும். ஆதலின், அமைதியை நிறுத்தவல்லது அரசியல் ஒன்றே. அரசியலால் ஒழுங்கும் அமைப்பும், இவற்றால் அமைதியும், அமைதியால் கல்வித் துறையும் பிற தொழில்முறைகளும் செழுமையுற்றுப் பயன்படுதலும், பொருட்காப்பும், அறவளர்ச்சி யும், இவற்றால் அகஇன்பமும் விளையும். புறப்பொருளில் போர் இயல்புகளும், பகைவர்க் கடிதலும், பிறவும் ஓதப்பட்டிருத்தல் ஈண்டுக் கருதத்தக்கது. திருக்குறள் பொருட்பாலில் அரசு, அமைச்சு, இவற்றுக்கு வேண்டிய உறுப்புக்கள் பலவும் கூறப்பட்டிருப்பது நேயர்கட்குத் தெரியும். பண்டைக்கால அரசியல், பொருளில் பொருந்தி, அறத்தில் அமர்ந்து, இவை வாயிலாக அகஇன்பத்தை ஊட்டி, இறுதியில் வீடுபேற்றை அளிக்குந் தன்மையதாயிருந்தது. எனவே, அக்கால அரசியல், உயிரின்பத்துக்கு உறுகருவியா யிருந்ததென்று கூறலாம். இக்காரணம்பற்றியே, நம் முன்னோர் கொண்ட அரசியலை ஞான அரசியலென்று மேலே குறிப்பிட்டேன். பண்டைக்கால மன்னர், தம் பொறுப்பையுணர்ந்து, கடவுளுக்கு அஞ்சி, கோல் கோடாது, குடிதழீஇக் கோலோச்சிக் குடிகளுக்கு இன்பத்தை ஊட்டி வந்தனர். அறநெறி வழாது நமது நாட்டு மன்னர்கள் அரசாண்ட வரலாறுகள் பலபடக் கிடக்கின்றன. அவற்றை நந் தொன்னூல்களில் இன்னுங் காணலாம். நீதியின்மாண்பு மதுரைமாநகரில் கோவலன் அநியாயமாகக் கொல்லப் பட்டான் என்னும் உண்மையைப் பாண்டியன், கண்ணகி வாயிலாக அறிந்து, தன் தவறுதலையுணர்ந்ததும், யானோ அரசன் யானே கள்வன்...... என்று கூறிக்கொண்டே அரியாசனத்தினின்றுங் கீழே விழுந்து உயிர்துறந்தான். நேயர்களே! மனச்சான்றை ஓருங்கள். ஓர் அநியாயக் கொலைக்கு உள்ளமுடைந்து, உயிர்துறந்த மன்னரை நமது நாடு பெற் றிருந்தது!! இச்செய்தியைச் சீத்தலைச் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்குத் தெரிவித்த போது, அச்சேரன், எம்மோ ரன்ன வேந்தர்க் கிற்றெனச் செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்ந்தமை யுறுக வீங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் J‹g kšyJ bjhGjf Éšbyd! என்று இரங்கிக் கூறியதாக இளங்கோ அடிகள் அருளிச் செய்திருக்கிறார். இவ்வுரைகளால், பண்டை மன்னரின் பான்மை நன்கு புலனாகும். அஃறிணைப் பொருள்களுக்கும் இடையூறு நேராதவாறு நாட்டைப் புரந்த வேளிர் அரசர் மாண்பை ஈண்டு விரிவஞ்சி விடுக்கிறேன். பண்டை மன்னர் ஆட்சியில் குடிகள் செம்மை பெற்றிருந்த சீர்மையை, இருமுந்நீர்க் குட்டமும் * * * * * * * * * சோறு படுக்குந் தீயொடு செஞ்ஞா யிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார் நின்னிழல் வாழ்வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரோடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு * * * * * * * * * * * * * என வரூஉம் புறநானூற்றுச் செய்யுளிற் காண்க. கிராம மொழி முன்னை நாளில் ஆட்சிமுறை அறநெறி வழாது நடை பெற்றதற்குக் காரணம், ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு குடியாட்சி வழியே நடைபெற்றமையாகும். விரிந்து பரந்த பல நாடுகளை ஒன்றுபடுத்தி ஆளும் முறையில் உண்மையும் அறனும் அருகி ஒழியும். ஒவ்வொரு கிராமத்தின் ஆட்சி அவ்வக் கிராமத்தவர் வயமே நடைபெறும் ஆட்சிமுறையில் எவ்விதத் தீயொழுக்கமும் ஓங்குதற்கு இடமிராது. பழையநாளில் இத்தகைய ஆட்சிமுறை நமது நாட்டில் நடைபெற்றதென்று தெரிகிறது. கிராமப் பஞ்சாயத்துத் தோன்றிய இடம் நமதுநாடு என்று நாம் பெருமிதமாகச் சொல்லிக்கொள்ளலாம். ஒவ்வொரு கிராமமும் பஞ்சாயத்தின் வழி நடைபெற்றது. அவ்வக் கிராமத்தார் தெரிந்தெடுத்தனுப்பும் மூப்பர்கள் ஒன்றுகூடி நிறைவேற்றும் முறைப்படி நாடு நகரங்கள் நடந்தேறின. இவர்கள் விருப்பவழி அரசன், தன்னால், தன் பரிசனத்தால், பகைவரால், கள்வரால், கொடிய விலங்குயிர் களால் விளையும் எவ்வித அச்சமும் குடிகளுக்கு நேராதவாறு நாட்டைப் புரந்து, குறிக்கப்பெற்ற திறைப்பொருள் பெற்று ஆட்சி புரிந்தான். இக்காரணம் பற்றியே திருவள்ளுவனாரும். குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கு முலகு என்று கூறிப் போந்தார். உழவுத் தொழிலாளன் மன்னற்கு முடிசூட்டி, ஆட்சியை அவனுக்கு நல்கி வந்த வழக்கொன்றே நாட்டின் ஜனநாயக முறையை நன்கு புலப்படுத்தும். பண்டை ஆட்சியும் மக்களின் நலன்களும் பண்டைக் கால ஆட்சிமுறை குடிக்கோனாட்சி முறையா யிருந்தமையால், நாட்டில் சாதிச் சண்டை, உட்குழப்பம் முதலியன நிகழாமல் அமைதி நிலை பெற்றிருந்தது. பொருட் பாற் பட்ட அரசியல், வளமுடையதா யிருந்தமையான், நாட்டில் அறநெறியும் இன்பத் துறையும் செழுமையுற்றிருந்தன. மக்கள் உடலின்பத்துக்கும் உயிரின்பத்துக்கும் வேண்டப்படும் துறைகள் யாவும் சீர்பெற்றிருந்தன. ஞான ஆராய்ச்சியும், வாணிபமும், தொழின் முறைகளும் இடையூறின்றி ஓங்கி வளர்ந்து வந்தன. மக்கள், வறுமையால் பீடிக்கப்படாமலும், அகால மரணத்துக்கு ஆளாகாமலும், பிற துன்பங்களால் வருந்தாமலும், வயிற்றுக்கு நாடுநாடாக அலைந்து திரியாமலும், இருந்த விடத்திருந்து நல்லுணவும் நல்லுடையும் பெற்று, உடலோம்புங் கவலை யொழித்து, உயிரோம்புந் துறைகளில் கவலை செலுத்தி, பல உண்மைகளைக் கண்டு, அவ்வுண்மைகளைப் பல வழியிலும் உலகத்துக்கு வழங்கி வந்தார்கள்; உண்மை நூல்களின் ஆராய்ச்சியால் அறிவு விளக்கம் பண்பட்டு, அவ்வறிவால் அன்பும் அருளுமே வாழ்வில் பெறவேண்டிய செல்வம் என்னும் முடிவைப் பெற்றார்கள். அன்பையும் அருளையும் அடிப்படை யாகக் கொண்டே கல்வியும், வாணிபமும், தொழிலும் நடை பெற்றன. இவற்றை இடையூறு படுத்தாத அரசியல்வழி நமது நாட்டு ஆட்சி நடைபெற்று வந்தது. எனவே, நமது பண்டைக் கால ஆட்சி, தெய்விக வழியில் இயங்கியதென்று கூறுவது மிகையாகாது. இடைக்கால ஆட்சி மகமதிய ஆட்சி இடைக்கால ஆட்சியும் தெய்விக வழியில் நடைபெற்ற தென்றே கூறலாம். இடைக்கால ஆட்சி மகமதியருடையது. மகமதிய சகோதரர்கள் இந்தியாவைப் பற்றி, அதன் செல் வத்தைத் தங்கள் தாய் நாட்டுக்குக் கொண்டுபோக வேண்டு மென்னும் நோக்கத்தோடு, நமது நாட்டை அவர்கள் ஆள வில்லை. அவர்கள் இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகவே கொண்டு, அதை ஆண்டு வந்தார்கள். மகமதிய சக்கரவர்த்திகள் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்து, இந்தியாவிலேயே இறந்தார்கள். அவர்கள் காலத்தில் இந்தியா வின் பொருள் இந்தியாவிற்கே பயன்பட்டது. மகமதியர் நலம் இந்தியாவின் நலமாகவும், இந்தியாவின் நலம் அவர் நலமாகவும் கருதப்பட்டு வந்ததை எந்தச் சரித்திரக்காரராலும் மறுத்தல் முடியாது. மகமதியர் ஆட்சியில் பிராமணர் - பிராமணரல்லா தார் பிணக்கு, திராவிடர் - ஆதிதிராவிடர் சண்டை, முதலாளி - தொழிலாளி போர் நிகழ்ந்தனவா? சரித்திரத்தை நோக்குங்கள். வகுப்பு வேற்றுமை, சாதிப்பூசல் முதலியன அக்காலத்தில் புகையவில்லை. அக்பர் தம் ஆட்சியில் ஹிந்து - முலிம் வேற்றுமை பாராட்டாது, செங்கோல் செலுத்திய வரலாற்றை உலகறியும். சில போலிச் சரித்திரக்காரர் எழுதிவைத்த பொய் யுரைகளை நம்பி இடர்ப்படுதல் அறியாமையாகும். சிற்சில இடங்களில் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பினும், அவை மதக் குழப்பமாக இயங்கியிருக்குமேயன்றி, பொருள் குழப்பமாக இயங்கியிரா. மகமதியர் ஆட்சி ஆண்டவன் ஆணைவழி நின்ற சமய ஞான ஆட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். பல நவாப்புகள் ஹிந்து தேவாலயங்களுக்கு நிலபுலங்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவால் கட்டப்பட்ட ஹிந்து கோயில்களும் உண்டு. நாட்டில் வழங்கும் கர்ண பரம்பரைக் கதைகளால் நவாப்புகள் ஹிந்து ஆலயங்களைப் பரிபாலித்து வந்தமை தெரிய வருகிறது. மகமதியர் ஆட்சியில் இந்தியாவின் செல்வம், இந்தியா விற்கே பயன்பட்டு வந்தமையால், இந்தியா அப்பொழுது வறுமையென்னுஞ் சிறுமையில் வீழ்ந்து இடர்ப்படவில்லை. ஆகவே, மகமதிய ஆட்சியும் தெய்விக வழியில் நடைபெற்றது என்று உறுதியாகக் கூறலாம். இக்கால ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சி இக்கால ஆட்சி எவர் ஆட்சி என்பதை உங்களுக்கு விளங்கக் கூறவும் வேண்டுமோ? கடற்படையில் பேர்பெற்று விளங்கும் பிரிட்டிஷார் ஆட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரிட்டிஷ் மக்களையாதல், அவர்தம் ஆட்சியையாதல் இந்தியா குறைகூறிக்கொண்டிருந்ததோ? இருக்கிறதோ? இல்லை; இல்லை. மகாராணியார் விடுத்த அரச அறிக்கையை அன்போடு ஏற்று, அதன்படியே இந்தியர் பிரிட்டிஷ் குடிமக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் நடைபெறும் ஆட்சிமுறை யில் இந்தியருக்கு உளக்குறையுண்டு. அவ்வாட்சி முறைக் கணுள்ள குறைகளைப் போக்கி, இந்தியர் விருப்பவழி நடைபெறும் ஒரு நல்லாட்சிமுறை நல்கப்படுமாயின், இந்தி யர் உள்ளநிறை கொள்வர். ஆட்சிமுறையில் தோன்றிய வெறுப்பைப் பிரிட்டிஷ் மந்திரிமார் உணர்ந்து வேண்டுவ செய்ய முந்தாமையால், இந்தியாவின் கிளர்ச்சி படிப்படியாக வளர்ந்து, இப்பொழுது ஒத்துழையாமையாகி, முறுகி எழுந்து, கொழுமை பெற்றியங்குகிறது. இந்தியாவின் தலை எழுத்து எழுதப்படும் இடம் இந்தியாவின் ஆட்சிமுறைக்குக் கோலப்படுஞ் சட்டம் பிறக்கும் இடம் எங்கே? அதைச் செப்பஞ் செய்வோர் யாவர்? அதை நிறைவேற்றுவோர் எவர்? இவ்வினாக்களுக்கு விடை யிறுக்கவும் வேண்டுமோ? இந்தியாவின் ஆட்சிமுறைச் சட்டம் இந்தியாவில் பிறக்கின்றதோ? அதைச் செப்பஞ் செய்வோர் இந்தியப் பிரதிநிதிகளோ? அதைச் சட்டமாக நிறைவேற்று வோர் இந்தியச் சட்டசபை அங்கத்தவரோ? அந்தோ! இந்தியா எங்கே இருக்கிறது! இங்கிலாந்து எங்கே இருக்கிறது! இங்கிலாந்தின் பிரதிநிதிகள் கூட்டத்தினின்றும் தெரிந்தெடுக்கப் படுபவரல்லரோ இந்தியா மந்திரியார்! இங்கிலாந்து தேசப் பிரதிநிதிகள் கூடியுள்ள பார்லிமெண்டன்றோ இந்தியாவின் தலைவிதியை எழுதும் பேறு பெற்றிருக்கிறது! இந்தியச் சட்ட சபையிலுள்ள பிரதிநிதிகளில் ஒருவர், இந்தியா மந்திரியாக அமரும் பேறு பெறலாகாதா? இந்தியச் சட்டசபை தன் விருப்பப்படி இந்திய ஆட்சி முறைச் சட்டம் செப்பஞ் செய்யும் உரிமை ஏற்கலாகாதா? இங்கிலாந்து மன்னர், இந்தியாவின் சக்கரவர்த்தியாக வீற்றிருக்கின்றமையால், இடையில் இங்கிலாந்து பார்லிமெண்ட் ஒன்று ஏன் நின்றுகொண்டிருத்தல் வேண்டும்? அதன் உரிமையை ஏன் நமது இந்தியச் சட்டசபை பெறலாகாது? இந்தியாவின் இயல்பை நேரிற் கண்டறியாத மந்திரிமார் பொறுப்பில், ஒரு பெரிய கண்டம் போன்ற நாடு விடப்பட்டிருக்கின்றமையால், அது பலவழியிலும் இடர்ப்பட்டு, தன் கட்டையுணர்ந்து, அதை அவிழ்த்துக்கொள்ள முயலா திருக்குமோ? சிலநாள் இந்தியாவில் தங்கித் தமக்குக் கொடுக்கப் படும் ஊழியத்தைச் செய்யுங் கூட்டத்தார் வழி ஆட்சிமுறை நடைபெறுமட்டும், இந்தியா, பிரிட்டிஷ் குடிமக்களுக்குள்ள உரிமை பெறாதென்பது திண்ணம். இத்தகைய அதிகாரவர்க்க ஆட்சிமுறை இந்தியாவில் நடமாடும்வரை இந்தியாவின் செல்வம் இந்தியாவிற்குப் பயன்படாதென்பது நிச்சயம். கல்விச் செல்வம் இக்காலத்தில் இந்தியாவின் பொருட்செல்வம் பிற நாடுகளுக்குச் செல்வதோடு, நமது நாட்டுக் கல்விச் செல்வமும் நாளடைவில் அருகிக் கொண்டு வருகிறது. கலித்தொகை, நெடுநல்வாடை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, பெரியபுராணம் போன்ற நூல்களும், நக்கீரர், இளங்கோ அடிகள், கம்பர், சிவஞான முனிவர் போன்ற புலவர்களும் இப்பொழுது தமிழ்நாட்டில் தோன்றாமைக்குக் காரணம் யாது? நமது நாட்டு மருத்துவம், சோதிடம், சங்கீதம் முதலியன அழிந்து வருவதன் காரணம் என்னை? நேயர்களே! உன்னுங்கள். அடிமைக் கல்வி நமது நாட்டுக் கல்வியின் வளங் குன்றினமையால், நாட்டில் ஞானம், வீரம், புகழ், மானம், ஒழுக்கம் முதலியனவும் குன்றி வருகின்றன. கல்லூரிகளில் அடிமை இயல்பையும், அடிமைத் தொழிலையும் வளர்க்கக் கூடிய கல்வி போதிக்கப்படுகிறது. மாணாக்கரில் பெரும்பான்மையோர் வயிற்றை வளர்க்குந் தொழின்முறைகளைக் குறிக்கொண்டே பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார். பல்கலைக் கழகங்கள், ஆண்டுதோறும் அதிகாரவர்க்க மென்னும் இயந்திரத்தை இயக்குஞ் சில கருவிகளை உதவி வருகின்றன. பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற பெரும்பான்மையோரை, மேல்நாட்டுப் புலவர் சொற்றதைச் சொல்லுங் கிளிப்பிள்ளைகள் என்று கூறலாம். மேல்நாட்டுக் கல்விப் பயிற்சி நாட்டுப் பற்றை ஒழிக்கிறது; மேல்நாட்டு உடையில் உணவில் ஒழுக்கத்தில் வேட்கை எழுப்புகிறது; சிற்சில வேளைகளில் தேசத் துரோகஞ் செய்யவுந் தூண்டுகிறது. அந்தோ! நம் மாணாக்கர் பயின்று வருங்கல்வியே கல்வி! இக்காலத்தில் அரிச்சந்திரன், ஸ்ரீராமபிரான், கண்ணன், புத்தர், திருவள்ளுவர் போன்ற உண்மையாளரை - அந்தணரை - அறவோரைக் காண்டல் அரிதாகிவிட்டது; பொய்யர் - அரக் கர் - மறவோர் - தொகை பெருகுகிறது; கொலையுங் கள்ளும் பெருகுகின்றன. புத்தர் பிறந்த நாடு இப் பழிபாவங்களுக்கு இரையாகிறது! தொழிலாளர் நிலை இவ்வாட்சி முறையில் தொழிலாளர் பெரிதும் இடர்ப் படுகின்றனர். இதைப்பற்றி விரித்தோத வேண்டுவதில்லை. சென்னையில் நெசவுத் தொழிலாளருள் ஏறக்குறைய பதி னாயிரம் பேர், சுமார் ஐந்து மாதகாலமாக நியாயம் பெறாது வருந்தி வருவதை அறியாதாரில்லை. எந்தக் காலத்திலாவது தொழிலாளர் இவ்வாறு வருந்தினதுண்டோ? மன்னர்க்கு முடிசூட்டும் பேறு பெற்ற தொழிலாளரை இந்நாளில் பட்டினி வருத்துகிறது; பசி துன்புறுத்துகிறது; பிணி அலைக்கிறது; போலீ குண்டு அச்சுறுத்துகிறது. தொழிலாளர் துன்பம் அம்மம்ம, கொடிது! கொடிது!! விவசாயத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் புரிந்து வாழ்ந்து வந்த தொழிலாளர், இயந்திரங்களுக்கு அடிமைகளாகித் தொழிற்சாலைகளில் படுந்துயரை வருணிக்கவும் மனமெழவில்லை. தொழிலாளர்க் கெனத் தனிச்சட்டம் இன்னும் பிறக்கவில்லை. இவ்வாட்சி முறையில் நாட்டுச் செல்வத்துக்குரிய தொழிலாளர் பெருந் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரட்டை ஆட்சி ஐரோப்பா கண்ட யுத்தத்துக்குப் பின்னர், உலக முழு வதும் விடுதலைபெறும் என்னும் பேச்சு எங்கணும் பேசப் பட்டது; சுயநிர்ணயம் முழங்கப்பட்டது. இந்தியா சுயாட்சி பெறும் என்று பலர் எதிர்நோக்கினர். ஐரோப்பா யுத்தத்துக்குப் பின்னர் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட சீர்திருத்தத்திலுள்ள ஆபாசம் இப்பொழுது எல்லாக் கட்சியினர்க்கும் புலனாகி வருகிறது. இரட்டை ஆட்சி முறையால் விளைந்துவரும் பயன் யாது? இவ்வாட்சி முறையில் ஜனநாயகக் குறிப்பு யாண்டா யினும் உளதோ? மந்திரிமார் என்ன உரிமை பெற்றிருக்கின்றனர்? பண உரிமை எவர்பாலிருக்கிறது? மந்திரிமார் அவ்வுரிமை பெற்றிருக்கின்றனரோ? இல்லையே! புதுச் சீர்திருத்தம் என்ன மாறுதல் செய்து விட்டது? சட்டசபையில் ஜனநாயகம் தாண்டவம் புரிகிறதோ? சட்டசபை நிறைவேற்றுந் தீர்மானங் கள் எல்லாவற்றையும் கவர்னர் ஏற்கவேண்டுமென்னும் நியதி புதிய சீர்திருத்தத்திலுண்டோ? கவர்னருக்குச் சர்வாதிகார மன்றோ வழங்கப்பட்டிருக்கிறது? இதற்கு இலக்கியம் தேட வேறு மாகாணத்துக்குச் செல்ல வேண்டுவதில்லை. நம் லார்ட் வெல்லிங்டன் செயலே சாலும்! ஒத்துழையாக் கூட்டத்தில் இதைப்பற்றி விரித்துக் கூறவேண்டுவதில்லை. புதுச் சீர்திருத்தம், நான்கு பேர் பார்த்து வந்த வேலைகளை ஏழு பேருக்கு வழங்கி யிருக்கிறது! இதுவே புதுச் சீர்திருத்தம் வழங்கிய புதுமை! புதுச் சீர்திருத்தப்படி நடைபெறும் ஆட்சி முறையில் அடக்குமுறை வேகம் எப்படி இருக்கிறதென்பது பத்திரிகைகள் படிப்போர்க்கு நன்கு தெரியும். பத்திரிகைகளில் அடக்குமுறையும், தேசபக்தர் சிறைபுகுதலுமே நிரம்பி இருக்கின்றன. பத்திரிகைகள் அல்லற்படுகின்றன. பேச்சுக்கும் எழுத்துக்கும் எவ்வளவு உரிமை, புதுச் சீர்திருத்தம் வழங்கியிருக்கிறது? அதை ஸ்ரீ பெசண்ட் அம்மையாரும், ஸ்ரீ நிவாச சாதிரியாருமே கூறல்வேண்டும். வெட்கம்! வெட்கம்!! சுயஆட்சி மிதவாதிகள் நமது நாட்டில் இப்போது நடைபெறும் ஆட்சி முறை, சுயஆட்சிக்கு அடிப்படை என்று கூறுவது, அழுகின்ற பிள் ளைக்கு வாழைப்பழங் காட்டுவது போலாம். சுயஆட்சி நாற்றமே இப்போதைய ஆட்சி முறையில் வீசவில்லை என்று உறுதியாகக் கூறலாம். இந்திய மக்களை இந்தியாவில் பிறந்த சில துரோகிகளே ஏமாற்றி வருகிறார்கள். இந்தியாவில் மிதவாதம் பேசும் ஒரு தேசத்துரோகக் கூட்டம் இருக்கிறது. இக்கூட்டத் தின் துணைகொண்டு அதிகாரவர்க்கத்தார் தம் ஆட்சிமுறையை நடாத்தி வருகிறார். இக்கூட்டத்தில் நாட்டினிடத்து உண்மைப் பற்றுடையார் சேர்வதில்லை. பட்டம், புகழ், பதவி முதலிய சிறுமைகளை விரும்புவோரே இக்கூட்டத்தில் சேர்ந்து வித்தகம் பேசிவருகிறார். இச் சிறுமைக் கூட்டத்தார், புதிய சீர்திருத் தத்தில் சுயஆட்சி இருக்கிறது என்று கூறுவது கானலில் நீர் இருக்கிறது என்று ஏமாற்றுவது போலாம். சுயஆட்சி சுயமுயற்சியில் சீர்திருத்தத்திலும், சட்டசபையிலும், உத்தியோகதர் பேச்சிலும், தீர்மானத்திலும் கவலை செலுத்தலாகாது. அவற் றில் கவலை செலுத்துவது காலத்தையும் வாழ் நாளையும் வீணே கழிப்பதாகும். நமது அரிய காலத்தைச் சுய ஆட்சி பெறும் முயற்சியில் செலவழித்தல் வேண்டும். கட்டுக்கட்டாக அரசியல் நூல்களை வாசிப்பதனாலும், பிறர் உரைகளை எடுத்துக் காட்டுவதனாலும், பேச்சாலும், எழுத்தாலும், கூட்டத்தாலும், இப்போதுள்ள ஆட்சியைக் குறைகூறுவதாலும் சுயஆட்சி வந்துவிடாது. சுயஆட்சி தன் முயற்சியில் அடங்கியிருக்கிறது. அம் முயற்சியால் எவர்க்குந் தீமை விளைதலாகாது. எவ் வுயிர்க்குந் தீங்கு செய்யா அறவழி நின்று செய்யப்படும் நன் முயற்சியில் சுயஆட்சி அரும்பும். இந்தியர் கடன் நமது நாட்டின் செல்வமெல்லாம் குன்றி நாசமாகும் இவ்வேளையில், நாட்டின் அறம் பாழ்படும் இச்சமயத்தில், நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் சுயஆட்சி முயற்சியில் தலைப்படல் வேண்டும். எண்ணமும் பேச்சும் செயலும் சுய ஆட்சியைப் பற்றியே நிற்றல் வேண்டும். ஒவ்வோர் இந்தியரும் சுயஆட்சிக்கு முயற்சி செய்யவே நாம் படைக்கப்பட்டோம் என்னும் எண்ணங்கொண்டு உலகத்தில் வாழ்தல் வேண்டும். சுயஆட்சி ஒன்றால் நாம் இழந்த கல்வி தொழில் முதலிய செல்வங்களையும் மற்ற நலன்களையும் பெறலாம். எவரெவர் எவ்வெக் குறைகளால் இடர்ப்படுகிறாரோ, அவ்வக் குறைக ளெல்லாம் சுயஆட்சியால் ஒழிந்துவிடும். ஆதலால், சுயஆட்சி முயற்சியில் தலைப்படுவதே நமது தலையாய கடமை. ஒத்துழையாமை சுயஆட்சி அடைவது எப்படி? சுயஆட்சி இருவிதமாகப் பெறலாம். ஒருவிதம் சீர்திருத்த முறையால் பெறுவது; மற்றொருவிதம் இரத்தஞ் சிந்தும் போர்த் தொழிலால் பெறுவது. இவ்விரண்டிலும் எனக்கு நம்பிக்கை யில்லை. சீர்திருத்த முறையால் சுயஆட்சி பெறுவது இந்த யுகத்தில் முடிவதன்று. இரத்தஞ் சிந்தும் போர்த்தொழில் நமது அறத்துக்கு ஏற்றதன்று. இதுகாறும் விடுதலைக்காகப் பல நாடுகள் குருதி சொரியும் போர்த்தொழிலே செய்திருக்கின்றன. அதனால் உலகத்தில் அமைதி ஏற்பட்டதோ? நாளுக்கு நாள் வன்மமும், விலங்கு நீர்மையுமே வளர்ந்து வருகின்றன. இரத்தஞ் சிந்தும் மூர்க்கச் செயல் உலகத்தினின்று ஒழியுமாறு அறிஞர் முயலல் வேண்டும். ஆதலால், சீர்திருத்த முறையிலும், குருதி யொழிக்கும் முறையிலும் சுயஆட்சி பெறுவது ஞான அரசியல் வளர்ச்சியை நாடுவதாகாது. இரண்டும் அல்லாத முறை ஒன்றுளது. அஃது யாது? அதுவே ஒத்துழையாமை. அன்பியக்கம் ஒத்துழையாமை பொறாமை காரணமாக எழுவதன்று; அன்பு காரணமாக நிகழ்வது. ஒத்துழையா இயக்கம், அறத் துக்கும் அன்புக்கும் அருளுக்கும் மாறுபட்டதன்று. இவ்வியக்கத் தால் விரைவில் சுயராஜ்யம் பெறலாம். சுயராஜ்யத்தால் நாட்டில் அமைதி, சகோதரத்துவம் ஓங்கும். இத்தகை ஒத் துழையா இயக்கம் அறிஞர் எவராலும் போற்றத்தக்கதே. காந்தியடிகள், நமது நாட்டுநிலை, இப்போது இந்தியாவில் நடைபெறும் ஆட்சிநிலை ஆகிய இவற்றைத் தமது கூர்த்த மதியால் அளந்து, இந்நிலையில் ஒத்துழையா இயக்கத்தைத் தோற்றுவிப்பதே நியாயம் என்று கருதி அவ்வியக்கங் கண்டனர். கிலாபத்துக்கு நியாயம் பிறவாமையை முன்னிட்டும், பஞ்சாப் படுகொலைக்கு நியாயம் பிறவாமையை முன்னிட்டும் ஒத்துழையா இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்கத்தா லேயே சுயராஜ்யம் வருதல்வேண்டும். ஆதலால், ஒத்துழையா மையை ஒவ்வோர் இந்தியரும் தம் தம் மதமாகக் கொள்வாராக. முறைகள் இதுகாறும் முழு ஒத்துழையாமை அரும்பவில்லை. சில கூறுகளே தலைகாட்டுகின்றன. முதல் முதல் சட்ட சபை விலக்கு (பகிஷ்காரம்), பிரிட்டிஷ் நீதிமன்ற விலக்கு, அரசாங்க உதவிபெறும் பள்ளி விலக்கு ஆகிய மூன்றும் செயலுக்குக் கொணர விடப்பட்டன. மற்றைய மாகாணங்கள் ஒல்லும்வகை மூன்றையும் செயலில் கொணர்கின்றன. நமது தமிழ்நாடோ மூன்றையும் செவ்வனே இன்னும் நடையில் கொண்டு வரவில்லை. சட்டசபை விலக்கு சட்டசபையில் நம்மவர் கொண்டுள்ள பற்றுக்கு அளவே யில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் செய்து கொள்ளும் பாழான சண்டை ஒத்துழையா வளர்ச்சிக்குப் பெரிய இடை யூறாக நிற்கிறது. இச்சண்டையைத் தொலைக்க நாமே முயலல் வேண்டும். தற்போதைய சட்டசபையில் செல்வாக்குப் பெற் றுள்ள கட்சியின் தலைவருள்ளிட்ட ஒரு சிலர், சென்னையில், இப்பொழுது நிகழ்ந்து வருங் குழப்பத்தின் காரணத்தை முன்னிட்டு அரசாங்கத்தார்க்கு அனுப்பிய விண்ணப்பத்துக்கு அரசாங்கத்தார் எத்தகைச் சிறப்புச் செய்தனர்? அவ்விண்ணப் பத்தை அவமதித்தே விட்டனர். செல்வாக்குப் பெற்ற கட்சித் தலைவர் சொல்லை அவமதித்த அரசாங்கத்தோடு அவர் ஏன் ஒத்துழைத்தல் வேண்டும்? அவ்வரசாங்கம் அளித்த பட்டத்தை ஏன் அவர் சூட்டிக் கொண்டிருத்தல் வேண்டும்? அவர் எவ்வழி ஏகினும் ஏக. அவர் கட்சியிற் சேர்ந்த இளைஞர்களிற் பலர் காந்தியடிகள் வழி பற்றி நிற்பதை யான் அறிவேன். ஒத்துழைக் கும் வேறு சிலரும் விரைவில் ஒத்துழையா இயக்கத்தில் சேர்வர். நாளடைவில் அறிவுடைய பிரதிநிதிகளுக்குச் சட்டசபையில் வெறுப்புத் தோன்றும் என்பதில் ஐயமில்லை. சட்டசபையில் விருப்புடைய கூட்டத்தாரே அதை விலக்க முயலுங்காலத்தை விரைவிற் காணலாம். வக்கீல்கள் சுயநலம் எவர் எதை விலக்கினாலும் வக்கீல்களிற் பெரும்பான்மை யோர் நியாய மன்றங்கட்குப் போதலை விலக்கமாட்டார். அறிவிற் சிறந்த அவர் மனமார நாட்டின் பொருட்டுத் தியாகத்துக்குட்பட்டால் சுயராஜ்ய இன்பத்தை விரைவில் நுகரலாம். மாணாக்கர் நிலை மாணாக்கர் நாட்டின் பொருட்டுக் கல்லூரிகளை விடுத்து நிற்க விரும்புகிறாரில்லை. வங்காளத்தில் சென்ற ஆண்டு நூற்றுக்கு இருபத்திரண்டு பேர் பள்ளிகளை விலக்கினர். நமது மாகாணத்தில் எத்துணைப் பேர்? எங்கே சுயராஜ்யம்! எப் பொழுது சுயராஜ்யம்!! நாட்டு விடுதலை மாணாக்கர் கையில் இருக்கிறது. அவர் நாளுக்கு நாள் அடிமைக் கல்வி பயின்று வருவாராயின், அவர்க்குச் சுயராஜ்ய உணர்வு எவ்வாறு தோன்றும்? அடிமைக் கல்வியூட்டும் பள்ளிகளுக்குப் பிள்ளை களை அனுப்பும் பெற்றோர்கள், நாட்டின்மீது சிறிது கருணை செலுத்துவார்களாக. சாக்கூரில் கூடிய மாணாக்கர் மகாநாட்டில் புலவர் வஸுவானி செய்த சொற்பொழிவினின்றும் சில கட்டுரைகளை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். தமிழ்நாட்டு மாணாக்கர் உலகம் அதை நோக்குவதாக. மாணாக்கர்களே! இந்நாளில் நீங்கள் மாணாக்கர் உலகில் வாழ நேர்ந்தது உங்கள் தலையெழுத்து. ஒத்துழையா இயக்கம் தோன்றியுள்ள இந்நாளைய மாணாக்கர்களாகிய உங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நோக்குழி உங்கள் கர்மம் என்று கூறாது, வேறென் கூறுவது? நீங்கள் இப்பொழுது நாட்டுக்குப் போதிய உதவி புரிவீர்களாயின், இந்தக் கருமம் உங்களுக்கு உரிமை அளிப்பதாக முடியும்*** இப்பொழுது அரசாங்க ஆதரவு பெற்றுவரும் பள்ளிகள், நாட்டு உணர்ச்சி ஊட்டக்கூடிய கல்வியைப் போதிப்பதே யில்லை; இப்பொழுதுள்ள உங்கள் பள்ளிகளும், கல்லூரிகளும் சிறைக் கூடங்களே யாகும். *** உங்கள் கல்வி இந்திய வாழ்க்கைக் குரியதாகாது. gŸË¡Tl§fŸ c§fS¡F¤ jhT® ïy¡»aK«, õhy£o¥ gh¡fS«, nghÌ‹ m¿î üY«, j¤Jt¤âš ϪJ jÇrdK«, âyf® - fhªâ muáaY« m¿îW¤J»‹wdnth?** இத்தாலியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்நாடு ஆதிரி யாவின் கட்டுக்கு உட்பட்டிருந்த சரிதம் உங்களில் சிலருக்குத் தெரியும். அப்பொழுது இத்தாலியின் விடுதலை உணர்ச்சி பூத்த உள்ளத்தோடு மாஸனி கிளம்பினார். மாஸனி தமக்குத் தோன்றிய உரிமை உணர்ச்சியை மாணாக்கர்க்கும் இளைஞர்க்கும் அறிவுறுத்தினார்; ஓர் இத்தாலி இளைஞர் கழகத்தையுங் கண்டார். மாஸனி மாணாக்க ரிடையே தமது வேலையைச் செய்து வந்தார். ஜெர்மெனியைப் பாருங்கள். மெட்டர்னிச் காலத்தில் ஜெர்மெனி துன்பக்கடலில் அமிழ்ந்துகிடந்தது. ஜெர்மெனி மாணாக்கர்களே அதைத் தட்டி எழுப்பினார்கள். அவர்களிற் சிலர் ஜெர்மெனியின் சுதந்திர கர்த்தராயினர். அவர்களுள் ஒருவர் மார்க் என்பவர். மாணாக்கராயிருந்து ஜெர்மெனியின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் பலருளர். அவர் தக்க வயதில் ஜெர்மெனியின் நலத்துக்குப் பல துறைகளிலும் உழைத்து வந்தனர். அவர் எங்கல், ஹேகல், வாஸலி முதலியவர். எகிப்து நாட்டை நோக்குங்கள். எல்ஹிஜார் தேசீயக் கலா சாலை, உலகிலுள்ள பெரிய கலாசாலைகளுள் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் பதினாயிரத்துக்கு மேற்பட்ட மாணாக்கர் அக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். அம் மாணாக்கர் எகிப்துக்குச் செய்த உதவியே அங்கே நாட்டு உணர்ச்சியை வளர்த்தது. அவர் ஊர்வலங்களாலும், பொதுக் கூட்டங்களாலும், மகாநாடுகளாலும் தம் செயலைப் புலப்படுத்தினர். அவர் உழைப்பினாலேயே மில்னர் விசாரணை விலக்கப்பட்டது. ஜப்பான் அதன் மாணாக்கர்களாலேயே முன்னேற்ற மடைந்தது. ஜப்பானிய மாணாக்கருள் ஒருவராகிய டோக்கோ என்பவர் பெருங் காரியங்களைச் செய்ய விரும்பினார். பூதபௌதிக தத்துவ சாதிரங்களை ஆராய்ச்சி செய்ய அவர் ஐரோப்பா சென்றார்; நாட்டுப் பணியாற்ற மீண்டும் ஜப்பானுக்குத் திரும்பினார். ஜப்பானை உலகத்துள்ள இனங்களுள் ஒரு சிறந்த இனமாக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். UZah - #¥gh‹ í¤j¤âš UZahit¤ njhšÉíw¢ brŒÉ¤jtU« mtnu.*** சீனம் ஜப்பானுக்கு இடங்கொடுத்து மதி மயங்குங் காலத்தில் சீனத்தின் மாணாக்கரே அதற்குப் புத்துயிர் அளித்தனர். சீனத்து மாணாக்கர், தம் நாட்டு உத்தியோகதர் பொன்னுக்காக நாட்டை விற்றுவரும் வழக்கம் ஒழிய வேண்டுமென்றும், சீனம் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட லாகாதென்றும், அதற்கு நியாயம் பிறக்கு மட்டும் ஜப்பான் சாமான்கள் விலக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானஞ் செய்தனர். சீன மாணாக்கர் ஆசிரியன்மாரால் அரசியலில் தலைப்படலாகாது என்று தடுக்கப்பட்டனர். செல்வரும், செல்வாக்குடையவரும் அவர்மீது அநுதாபங் காட்டாதொழிந்தனர். மாணாக்கருட் சிலர் போலீஸாரால் சுடப்பட்டனர்; சிலர் கைது செய்யப்பட்டுச் சிறைக்கனுப்பப்பட்டனர். இவ்வளவு துன்பங் களுக்கும் சீன மாணாக்கர் உட்பட்டும் அவர் சலிப்புறவேயில்லை. அடக்குமுறை அவர்க்குப் புத்துயிரையே அளித்து வந்தது. மாணாக்கர் (ஆண்பாலரும், பெண் பாலரும்) மகாநாடு கூட்டினர். அவர்தம் முயற்சியால் கடைகள் மூடப்பட்டன. அவர் ஜப்பான் பொருள்களைத் தவிர்ப்பதில் இடையறா ஊக்கம் செலுத்தி வந்தனர். இவற்றால் அவர் என்ன பயன் பெற்றனர் என்று நீங்கள் கேட்கக் கூடும். மத்திராலோசனை சபையார் விலகுமாறு வலியுறுத்தப்பட்டார். சீனம் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. வாணிபரை ஜப்பான் பொருள்கள் வாங்காதிருக்குமாறு இளைஞர் ஏற்பாடு செய்தனர்; மார்க், பிளேடோ முதலியோர் போதனையைப் பல்லாயிரக்கணக்கான கிராமத்து மக்களிடைப் பரப்பினர். அவரால் பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. பரோபகார சங்கங்கள் அவரால் காணப்பட்டன. அவர் சீனநாட்டு மக்களிடை ஒரு புது மாறுதலை உண்டாக்கினர். அவர்தம் இயக்கம் (சீன நாட்டு மாணாக்கர் இயக்கம்) எல்லா அடக்குமுறைகளையும் தோல்வியுறச் செய்தது. அவ்வியக்கம் அழிவுறவில்லை. சட்டசபை விலக்கும், பள்ளி விலக்கும், நியாய மன்ற விலக்கும் நாட்டில் முழு வெற்றி அடையாமற் போனமை நமது தவக்குறைவே யாகும். தலைவர்களின் கோணல் பின்னைக் காங்கர ஒரு கோடி ரூபா - ஒரு கோடி அங்கத்தவர் - இருபது லட்சம் சர்க்கா - சேர்க்குமாறு பணித்தது. இம்முயற்சியில் சிறிது வெற்றியே நேர்ந்தது. அதனால் ஒழுங்கு முறைகளில் சில தவறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இம் முயற்சியிலும் நமது தமிழ் நாடு முந்தவில்லை என்பதை மிக வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் மீது எவ்விதக் குற்றமும் சுமத்த எனக்கு மனமெழவில்லை. தமிழ் நாட்டு மக்கள் வீரத்திலும், உறுதியிலும், அறிவு விளக்கத்திலும், பிற ஆற்றல்களிலும் வடநாட்டவர்க்குப் பின்னிட்டவர்களல்ல. தலைவர்களிடத்திலுள்ள சோம்பல், பொறாமை, தான் என்னும் முனைப்பு, ஒற்றுமையின்மை, புறங்கூறல் முதலிய இழிவுகள் நமது நாட்டின் பெருமையையும் எழுச்சியையும் கெடுக்கின்றன. தலைவர்கள் திருந்தினால் நாடும் திருந்தும். தங்களை மறந்து வேலை செய்யுந் தலைவர்கள் தேவை. மேலும், காங்கர இப்பொழுது வேறு மூன்றையும் பணித்துள்ளது. அவை அயல்நாட்டு ஆடைவிலக்கு, குடி நிறுத்தம், தீண்டாமை ஒழித்தல் என்பன. இவை மூன்றும் சுயராஜ்யத்துக்கு ஆணி போன்றவை. சுதேசியம் சுயராஜ்யம் முதலாவதாகவுள்ள அயல்நாட்டு ஆடை விலக்கை இந்தியாவிலுள்ள எல்லா வகுப்பாரும், எல்லாக் கட்சியாரும், அரசாங்க உத்தியோகதரும், உத்தியோகதரல்லாதாரும் மேற்கொள்ளலாம். பரதேச உடையின் அழிவு, சுதேசிய ஆக்கத்தைப் பொறுத்து நிற்பது. உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தாவது சுதேசியத்தை வளர்த்தல் வேண்டும். இரத்தஞ் சிந்துதல் இல்லாமல் சுயராஜ்யத்தை அளிக்கவல்லது சுதேசியம் என்று கூறலாம். சுதேசிய வளர்ச்சியை நாடுவதில் எவ்விதக் கட்சி வேற்றுமையும் நிகழாது. எல்லாக் கட்சியாரும் ஒன்றுபட்டுச் சுதேசியத்தை வளர்க்கலாம். சுதேசியம் கடல்போன்றது. அதில் தலையாயது நூல் நூற்று நெய்தலாகும். இத்தொழில் பண்டை நாளில் நாடு முழுவதும் பரவியிருந்தது. எலி மயிரால் ஆடை செய்த நாடு நமது நாடு. பட்டிலும் பருத்தியிலும் பலதிற உடைகள் நெய்த நாடு நமது நாடு. (டக்கா) மலீன் நமது நாட்டிலன்றோ நெய்யப்பட்டது? நம் முன்னோர் நெய்த உடைகள் மேல்நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. அவ்வுடைகளை இயந்திரங்கள் நெய்தனவோ? எல்லாம் கைத்தறிகளால் நெய்யப்பட்டனவே. அத் தொழின் முறையின் வீழ்ச்சியே நமது நாட்டின் செல்வக் குறைவுக்குக் காரணமாக நின்றது. ஆதலால், அத்தொழிலைப் புதுக்குவது நாட்டின் செழுமைக்குப் பாடுபடுவதாகும். தொழில் நிலை நமது நாட்டில் விளையும் பருத்தி, மேல்நாட்டுக்குச் சென்று நூலாகித் துணியாகி நமது நாட்டுக்குத் திரும்புகிறது. அது தவறு. நமது நாட்டுப் பருத்தி முழுவதும் நமது நாட்டிலேயே தொழிற்படல் வேண்டும். நமது நாட்டுக் கைத்தொழில்கள் மேல்நாட்டு முதலாளிகளால் அழிக்கப் பட்டன. தொழிலாளர் நகரங்களிற் போந்து, மேல்நாட்டு முதலாளிகள் தொழிற்சாலைகளில் நுழைந்து, இயந்திரங் களுக்கு அடிமைகளாகிச் சோம்பராயினர். அயலார் தொழிற் சாலைகள், நமது நாட்டுத் தொழிலாளர் உழைப்பையும், நமது நாட்டுச் செல்வத்தையும் உறிந்து கொண்டிருக்கின்றன. உழவுத் தொழிலாளிகளும், தொழிற்சாலைகளிற் போந்து நாட்டுச் செல்வத்துக்குக் கேடு சூழ்ந்தார்கள். இப்பொழுது தொழி லாளர் கண் விழித்துள்ளனர். சுதேசிய இயக்கமும், தொழி லாளர் விழிப்பும் ஒன்றுபட்டுள்ள இவ்வேளையில் தேச பக்தர்களும் செல்வர்களும் நமது நாட்டுத் தொழில்களை மிக எளிதாக வளர்க்கலாம். கைராட்டினமும் கைத்தறியும் நாட்டில் பெருகப் பெருகத் தொழிலாளர், அயலவர் தொழிற்சாலைகளை விடுத்துச் சுதந்திரமூர்த்திகள் ஆவர். நாட்டுத் தொழிற்பெருக்கால் அயல்நாட்டு ஆடை விலக்கம் வலுக்கும்; சுதேசிய இயக்கம் வளமுறும். நாட்டுத்துணி இந்நாளில் நாட்டு மக்கள் நாட்டு உடையையே அணிய உறுதிகொள்ளல் வேண்டும். அயல்நாட்டுப் பட்டாடைகளை அணிவதைப் பார்க்கிலும், நமது நாட்டுக் கந்தையைச் சுற்றிக் கொள்வது சிறப்பு என்பதை ஒவ்வோர் இந்தியரும் உணர்தல் வேண்டும். நாட்டுத் துணி போதிய அளவு கிடையாவிடினும், ஒற்றைத் துணியையாவது, கோவணத்தையாவது அணிந்து கொள்ளுமாறு காந்தியடிகள் நாட்டவர்க்குக் கட்டளை யிடுகிறார். கவியரசியாகிய சரோஜனி தேவியார் மரத்தழை களையாவது கட்டிக் காலங் கழிக்குமாறு நாட்டாரைக் கேட்டுக் கொள்கிறார். மரவுரி அணிந்து, ஞான நிஷ்டை செய்து கொண்டிருந்த முனிவர்கள் வழிவழித் தோன்றிய நாம், நாட்டின் பொருட்டு, விடுதலையின் பொருட்டுக், கதர்த்துணி அணித லாகாதோ? கோவணங்கட்டி உலவுதலாகாதோ? தழையைச் சுற்றலாகாதோ? இவற்றைக் கட்டுவதால் மானம் அழியுமோ? அடிமை வாழ்க்கையால் மானம் அழிவதை அறியாத மடவோரே கதர்த்துணியைக் குறை கூறுவர். சுதேசிய விரதம் நாம் சுயராஜ்யம் பெறவேண்டுமானால், நாமும் மற்றவர் போல் வாழ வேண்டுமானால், நாமும் மக்களாக மற்றவரால் மதிக்கப்பட வேண்டுமானால், நாட்டில் இயந்திர உதவியின்றிக் கையால் நெய்யப்படும் ஆடையை அணிய நாம் நோன்பு பூணல் வேண்டும். இந்நோன்பு நோற்றலா நம்மால் இயலாது? நம் முன்னோர் இதனிலுஞ் சிறந்த அரிய நோன்புகளை யெல்லாம் ஏற்று ஒழுகியது உங்களுக்குத் தெரியுமன்றோ? தியாகத்தின் விளைவு உரிமை இன்பம் எளிதில் கிடைத்துவிடாது. அதற்காக அரும்பெருந் தியாகத்துக்கு உட்பட்டே தீரல்வேண்டும். அரிச்சந்திரன் நாடிழந்து, நகரிழந்து; மனையிழந்து, மைந்தனை யிழந்தன்றோ தான் கொண்ட சத்திய விரதத்தில் வெற்றி பெற்றான்? ஸ்ரீ ராமபிரான் கையில் கிட்டிய அரசை வெறுத்து, நாட்டை விடுத்து, மரவுரி சுற்றி, காய் கனி தின்று, இரவு பகல் காடு காடாகத் திரிந்தன்றோ இராவணனை வெல்லும் பேறு பெற்றார்? பஞ்ச பாண்டவர் பல்வித வடிவந் தாங்கி வனவாசஞ் செய்த பின்னரே துரியோதனாதியரை வென்றனர். புத்தர் பெருமான் பல வளங்களையுந் துறந்த பின்னரே அறக்கடவு ளாயினர். கிறிதுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னரே அவர் பெருமை உலகத்தில் விளங்கிற்று. மகமது தம் வாழ் நாளில்பட்ட துன்பங்களை வருணிக்கவும் வேண்டுமோ? இவைகளால் விளங்குவதென்னை? எடுத்த ஒன்று கைகூட வேண்டுமானால் - அதற்குத் தேவையான அறிவு, ஆற்றல், உறுதி, பொறுமை, அஞ்சாமை முதலியன பெறவேண்டுமானால் - அதற்கு உறுகருவியா யிருப்பது தியாகம் என்பது நனிவிளங்குதல் காண்க. காந்தியடிகள் தியாகம் காந்தியடிகள் இப்பொழுது உலகம் போற்றும் ஒரு குருவாக விளங்குகிறார். அப் பதவியில் அவரை நிறுத்தியது எது? அவரது தியாகமே யாகும். காந்தியடிகள் என் செய்தார்? தொழிலை விடுத்தார்; செல்வத்தை மறந்தார்; பட்டத்தை ஒழித்தார்; கொழுமை உணவுகளை வெறுத்தார்; வேறு பல போகங்களையும் நீத்தார்; இப்பொழுது ஒற்றைத் துணியணிந்து திரிகிறார். அவர் நாட்டின் பொருட்டு இவ்வளவு தியாகம் செய் திருக்கிறார். இத் தியாகமன்றோ அவருக்கு ஆத்ம சக்தி அளித்திருக்கிறது? சகோதரர்களே! தியாகத்திலுள்ள அறிவு விளக்கமும், ஆற்றல் செறிவும், உறுதி நிலையும் வேறொன்றிலு மில்லை. இப்பொழுது அயல்நாட்டு உடையை வெறுத்துத் தள்ளும் ஒரு தியாகத்துக்கு நாட்டை உட்படுமாறு தேச மகாசபை ஆணையிட்டிருக்கிறது. அவ்வாணைக்குச் செவி சாய்க்குமாறு தமிழ்நாட்டவரைப் பணிவோடு கேட்கிறேன். கதர் விரதம் கதரையே அணியப் பொதுமக்களும், அதையே விற்க வாணிபர்களும் விரதம் பூணுதல் வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்குக் கதர்த் துணி அணிந்து அழகு செய்தல் வேண்டும். கதரை அணிந்த மாணாக்கருக்கே ஆசிரியர் எதையும் அறிவுறுத்தல் வேண்டும். கதர்த்துணி அணிந்த தலைவனுக்கே தலைவி இணங்கல் வேண்டும். கதரைக் கருதாத நாயகியை நாயகன் கருதலாகாது. கதர்த்துணி அணியாதார் எவராயினும் அவரோடு உறவு கொள்ளுதலாகாது. இன்னோரன்ன முறைகளை நமது தமிழ்நாடு கடைப்பிடித்து ஒழுகுவதாக. குடியின் கொடுமை குடியினால் விளையுங் கேடுகளைப்பற்றி நம் நூல்கள் விரிவாகக் கூறியிருக்கின்றன. இக்கால அறிவு நூல்களும் குடியின் கொடுமையை விளங்க உரைக்கின்றன. குடியின் கொடுமைகள், படங்கள் வாயிலாகவும் விளக்கப்படுகின்றன. அதன்கணுள்ள தீமைளைக் கண்டே நம்மவர் ஐம்பெரும் பாவங்களுள் ஒன்றாக அதைத் தொகுத்திருக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர்க் குடிப்பவர்தொகை மிகச் சுருங்கி யிருந்தது. நாளேற நாளேறக் குடிப்பவர் தொகை பெருகி விட்டது. கற்றவரும் மேல்நாட்டுச் சாராய வகைகளைக் குடித்து வருகின்றனர். பழைய காலத்தில் மேல்நாட்டு வாணிபர் தமது நாட்டு மதுபானங்களைக் கொணர்ந்து கொடுத்து, நமது நாட்டு ஏலம் மிளகு முதலிய பொருள்களைப் பண்ட மாற்றாகப் பெற்றுச் சென்றனர். மேல்நாட்டுக் கூட்டுறவால் நமது நாட்டில் குடி பெருக்கெடுத்தது என்றே கூறலாம். குடியாத வகுப்பின ருள்ளும் சிலர் குடிக்கும் பயிற்சிபெற்று வருகின்றனர். குடியிலுள்ள கொடுமைகளைக் கண்ட சில மேல்நாட்டு அறிஞர், இப்பொழுது அதை ஒழிக்கப் பெருமுயற்சி செய்கின்றனர். அமெரிக்கா இம்முயற்சியில் தலைசிறந்து விளங்குகிறது. இந்நாளில் குடி விலக்குப் பிரசாரம் இந்தியா விலும் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்குத் தற்போதைய அரசாங்கத்தாருந் துணைபுரிதல் சிறப்பு. மதுவில் எவ்வளவு வரிப்பணம் வரினும், அதை அரசாங்கத்தார் ஏற்றல் கூடாது. அதற்குப் பதிலாக வேறு வழிகளிற் பொருள் பெறலாம். மதுபானப் பிரசாரத்திலும் அரசாங்கத்தார் ஐயங்கொள்ளுதல் முற்றிலும் மறுக்கத்தக்கது. குடி நிறுத்தம் சுயராஜ்யத்துக்கு அடிகோலுவதாகும். ஆதலால், கள் கொடுப்போர், கள்ளெடுப் போர், கள் விற்போர், கள் உண்போர் ஆகிய இவர்கள் காங்கர கட்டளைவழி நின்று நாட்டைக் காப்பார்களாக. தீண்டாமை தீண்டாமையை ஒழிப்பது நமது இன்றியமையாக் கடன்களுள் ஒன்றாகும். இவ்வியக்கத்தில் பலதிறக்கருத்து வேற்றுமைகள் உண்டு. பழைய காலத்தில் எக்காரணம் பற்றியோ தீண்டாமை ஏற்பட்டது. மக்களுள் தீண்டுபவர் தீண்டாதவர் என்பது பிறப்பால் தோன்றும் வேற்றுமையன்று. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவனார். பிறப்பில் தோன்றாத வேற்றுமை எவ்வாறோ நீண்ட காலமாக நமது நாட்டில் தோன்றி நிலைத் திருக்கிறது. அதை ஒழிக்க முயல வேண்டுவது ஒவ்வொருவர் கடமையாகும். சென்னைப் பூசல் தொழிலாளர் வேலை நிறுத்தங் காரணமாகச் சென்னை யில் இப்பொழுது வகுப்புப் பூசல் கொழுந்து விட்டெரிகிறது. அதனால் சென்னை நகரமே நடுக்குறுகிறது. ஆண்மக்கள் அலறுகிறார்கள். பெண்மக்கள் அலமருகிறார்கள். குழந்தைகள் கதறுகின்றன. திடீர் திடீரென வெடி முழக்கங்கள் எழுகின்றன. கத்திகள் வீசப்படுகின்றன. தடிகள் சுழற்றப்படுகின்றன. அவை நடுவில் நாள்தோறும் செல்லும் பேற்றை ஆண்டவன் இப்பொழுது எனக்கு அளித்திருக்கிறான். அவ்வநுபவத்தையே ஈண்டு வெளியிடுகிறேன். சென்னையில் கிளம்பியுள்ள பூசல், நாடு முழுவதும் பரவி வருவதை நான் அறிவேன். உட்பிணக்கு தீண்டாமை ஒழிந்தால் எல்லாரும் ஒன்றுபட்டு விடுவரே என்னுங் கெட்ட எண்ணங்கொண்ட சில உத்தியோகதர் தூண்டுதலுக்குச் சில சகோதரர் எளியராகி ஒற்றுமை குலைக்கக் காப்புக் கட்டி விட்டனர். முதலில் முகமதியர் - ஹிந்துக்கள் பிரிக்கப்பட்டார்கள். பின்னைப் பிராமணர் - பிராமணரல்லா தார் பிரிக்கப்பட்டனர். இப்பொழுது திராவிடர் - ஆதி திராவிடர் என்று பிரிக்கப்பட்டனர். இன்னும் எவர் எவர் பிரிக்கப்படுவரோ தெரியவில்லை. பாரதமாதாவின் வயிற்றில் பிறந்த நாம், பிறர் சோதனைக்கு உட்பட்டு, நமக்குள் பிரிவுகளைக் கற்பித்துப் போர்புரிவது அறிவுடைமை யாகுமோ? இவ்வளவு இடுக்கணில் நாம் தீண்டாமை ஒழிக்குந் தொண்டு செய்ய வேண்டியவரா யிருக்கிறோம். தீண்டாமையை ஒழிப்பதற்குச் சிறந்த நெறி சமய நெறியே யாகும். அவ்வழியில் நின்று தீண்டாமையை ஒழிப்பதற்குரிய வேலைகள் செய்யலாம். எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் என்னும் உண்மை, தீண்டுபவர் - தீண்டாதவர் என்னும் இருபாலார் உள்ளத்திலும் நன்கு பதியத்தக்க கல்வியும், ஒழுக்க முறைகளும் அறிவுறுத்தப்படல் வேண்டும். இன்னோரன்ன முறைகளால் தீண்டாமை என்னுங் கொடுமை நமது நாட்டினின்றும் ஒழியும். தொழிலாளர் ராஜ்யம் காங்கரகாரர் இப்பொழுது சுயராஜ்யம் சுய ராஜ்யம் என்று பேசுகிறார்; எழுதுகிறார். ஆனால் எவ்வித சுயராஜ்யம் என்று இதுகாறும் அவர் விளங்க உரைத்தாரில்லை. அதுபற்றி ஈண்டு எனது கருத்தைச் சிறிது வெளியிடுகிறேன். முதலாளி ஆக்கம் இப்பொழுது, உலகம் பெரிதும் முதலாளிகள் வசம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. இராஜ்யம் முதலாளிகள் வசமிருக் கிறது. சபைகள் அவர்கள் வசமிருக்கின்றன. பத்திரிகைகள் அவ்வகுப்பாரிட மிருக்கின்றன. தொழிற்சாலைகளும் அக் கூட்டத்தாரிட மிருக்கின்றன. உலகத்தில் குடியாட்சி, கோனாட்சி, குடிக்கோனாட்சி முதலிய பல ஆட்சிகள் உள்ளன. இவ்வெல்லா ஆட்சிகளும் முதலாளிகள் வயப்பட்டு ஆடுகின்றன. முதலாளி கள் ஆட்சியால் சண்டை, கலகம், குழப்பம் முதலிய கொடுமை களுக்கு உலகம் இரையாகி வருகிறது. முதலாளிகள் தங்கள் நலங் கருதிப், பொருளாசை கொண்டு, பெரும் போர்களை அடிக்கடி கிளப்பிவிடுகிறார்கள். இதன் பொருட்டே முதலாளி கள் பத்திரிகைகளையும் நடத்துகிறார்கள். முதலாளிகள் வழி, உலக ஆட்சி நடைபெறும் வரை, உலகத்தில் அமைதி நிலவாது. முதலாளிகள் இலாபங் கருதி அடிக்கடி சண்டைகளைக் கிளப்பிக்கொண்டிருந்தால் அமைதி எவ்வாறு நிலவும்? பொருளாசை யுள்ளமட்டும் பொறாமை ஒழியாது. பொறாமை யுள்ள மட்டும் போர்கள் நடந்து கொண்டே யிருக்கும். தொழிலாளர் உழைப்பு முதலாளிகள் கூட்டம் சீவித்திருக்கும்வரை செல்வம் ஒருவர்பால் பெருகியும், மற்றொருவர்பால் அருகியும் நிற்கும். குறைந்த செல்வமோ நாடோ எதுவோ உடையவன், தன் செல்வத்தையோ நாட்டையோ எதையோ பெருக்கிக்கொள்ள முயல்கிறான். இதனால் போர்கள் நிகழ்கின்றன. முதலாளிகள் தூண்டுதல் காரணமாக நிகழும் போர்களில் போர்புரிவோர் யாவர்? போர்க் கருவிகள் செய்வோர் யாவர்? முதலாளிகளின் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் யாவர்? எல்லாம் தொழிலாளரே. தொழிலாளர் துணையைக் கொண்டு - தொழி லாளர் இரத்தத்தைச் சிந்தி - தொழிலாளர் உழைப்பால் முத லாளி கொழுத்த செல்வம் பெறுகிறான்; நாடு பெறுகிறான்; தொழிற்சாலை பெறுகிறான். இஃதென்ன கொடுமை? உழைப்பு ஒருவருடையது; பயன் மற்றவருடையது. முதலாளிகள் நலத்தால் உலகில் அமைதி நிலவவில்லை. முதலாளிகள் ஆக்கத்துக்கே காரணர்களாயுள்ள தொழிலாளர்வழி, இராஜ்யம் அரும்பின், உலகத்தில் அமைதி நிலவும். பொதுமை முதலாளி வகுப்பென்று ஒன்று இருத்தலால், தொழிலாளி என்று வேறொரு வகுப்புப் பிரிந்து நிற்கிறது. இப்பிரிவை உண்டாக்குவது பொருட் செல்வம். பொருட் செல்வம் எல் லார்க்கும் பொதுவாக வகுக்கப்படின், முதலாளி தொழிலாளி என்னும் வேற்றுமையே ஒழிந்து போகும். உலகத்திலுள்ள அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாம் மனிதருக்குப் பொதுவாகப் பகிர்ந்து விடப்படல் வேண்டும். கடவுள் படைப்புக்குட்பட்ட பொருளெல்லாம் மக்களுக்குப் பொதுவாகப் பயன்படல்வேண்டும். சமத்துவத் தால் சண்டையாவது, நீதிதல வழக்காவது நடைபெறாது; தீயொழுக்கங்களுக்கே இடமிராது. ஒவ்வொரு கிராமமும் அவ்வக்கிராமத்தார்வழி நடைபெறும். கிராமத்துக்குத் தேவை யான சிறப்புக்களை அக் கிராமவாசிகளே தேடிக் கொள் வார்கள். பத்தெட்டுக் கிராமத் தலைவர்கள் சேர்ந்து, மனித சாதிக்கு வேண்டிய பொதுமுறைகளைக் கண்டு, அறிவு வளர்ச்சிக்குரிய பலதிற வழிகளைக் கோலிக் கொள்வார்கள். கிராமம், கிராமத்தார்வழி நடப்பதால் மனித வகுப்பே தூய்மையுறும் என்று உறுதி கூறுகிறேன். எல்லாரும் ஒருவகை இன்பத்தையோ துன்பத்தையோ பொதுப்பட அனுபவிப்பர். இம்முறை உலகத்தில் நிலவுமாயின் உலகத்திலுள்ள அனைவரும் தொழிலாளராகி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பர். உண்மைச் சுயராஜ்யம் காங்கர, எல்லா மக்களுக்கும் ஒரேவித இன்பத்தை அளிக்கவல்ல தொழிலாளர் சுயராஜ்யத்தை நாடி உழைக்கு மென்று நம்புகிறேன். ஒருவேளை காங்கர முதலாளி சுய ராஜ்யம் பெறினும், அந்த இராஜ்யம் மீண்டும் தொழிலாளர் வசம் விரைவில் வந்துவிடும். உலகத்திலுள்ள எல்லாச் சொத்துக்களும் மக்கள் அனைவர்க்கும் பொதுவாகப் பயன் படும் காலமே சுயராஜ்ய காலமாகும். தொழிலாளர் இராஜ்யத் தில் தேசத்தோடு தேசம் சண்டை செய்யும் கொடுமையே ஒழிந்துவிடும். யானை, சேனை, போர்க்கப்பல், பீரங்கி, குண்டு முதலியன எல்லாம் ஒழியும். உலகத்தில் ஆத்மஞானம் ஓங்கும். சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் எல்லாரிடத்திலும் பொலியும் தொழிலாளர் இராஜ்யமே சுயராஜ்யம்; சுகராஜ்யம். அது கருதியே யான் காங்கர கட்சியில் சேர்ந்து தொழிலாளர் களுக்காக உழைத்து வருகிறேன். இத்தகைய சுயராஜ்ய நெறியே ஞான அரசியல் நெறி என்பது. ஆதலால், நம் முன்னோர் கண்ட பொருட் பாற்பட்ட அரசியல், தொழிலாளர் இராஜ்யத்தில் பரிணமிக்கும். இக் காரணம் பற்றிக் காங்கர கூட்டத்தார் தொழிலாளர்க்கு நலம் விளையும் முறைகளை ஒழுங்கு படுத்துந் துறைகளில் இறங்கி உழைப்பாராக. அடக்குமுறை ஜனநாயகம் எங்கே? நூற்றைம்பது ஆண்டுகளாகப் பிரிட்டிஷார் ஆட்சிக்கு இந்தியா உட்பட்டிருக்கிறது. இத்துணை நாளாக இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் நம்பிக்கையும் அன்பும் வைத்து வந்ததை மறுத்தல் எவராலும் இயலாது. அந்நம்பிக்கையும் அன்பும் நாளடைவில் குலைந்து வருவதற்குக் காரணம் யாது? அதிகார வர்க்க ஆட்சிமுறை வழி இந்தியா நடைபெறுவதும், காங்கரஸை அரசாங்கத்தார் அங்கீகரியாதிருப்பதுமேயாகும். சர்வதேச சங்கம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மகாநாடு முதலியவற்றிற்கு அனுப்பப்படும் இந்தியப் பிரதிநிதிகள் எவரால் தெரிந்தெடுக்கப் படுகிறார்கள்? அதிகாரவர்க்கத்தார் தமக்கு விருப்பமுள்ள சிலரையே தெரிந்தெடுக்கின்றனர். காங்கரஸுக்கு அவ்வுரிமை வழங்கப்படவில்லை. இன்னோரன்ன காரணங்களால் அதி காரவர்க்க ஆட்சி முறையில் இந்தியர்க்கு நாளடைவில் வெறுப்புத் தோன்றி விட்டது. வெறுப்பை ஒழிக்கும் முறை அடக்கு முறையோ என்று கேட்கிறேன். வெறுப்பு நிரம்பியுள்ள ஒரு நாட்டில் அடக்குமுறையைக் கையாள்வது அறிவுடைமை யாகாது. நாள்தோறும் இந்தியப் பத்திரிகைகளில் அடக்கு முறைச் செய்திகள் நிரம்பி இருப்பதைக் காண்கிறோம். நந் தலைவர்களாகிய அலி சகோதரர்களும் பிடிக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் பிடிபட்டதற்குக் காரணமாகவுள்ள கராச்சி - கிலாபத் தீர்மானத்தைப் பல மகாநாடுகளும், காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார் கள். தீர்மானம் நிறைவேறிய காலத்தில் அத்தீர்மானத்தையும், அதனை ஒட்டிய பேச்சுக்களையும் பலர் கருதியிருக்கமாட்டார். இப்பொழுது அலி சகோதரர்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கால், அத் தீர்மானமும் அதனை ஒட்டிய பிறவும் நாட்டவர் உள்ளத்தைக் கோயில் கொண்டிருக்கின்றன. அமைதியும் அன்பும் அடக்குமுறை நாட்டில் ஒரு நாளும் அமைதியை உண்டு பண்ணாது. அமைதியை நிறுத்தவல்லது அன்புமுறை ஒன்றே. நூற்றைம்பது ஆண்டுகளாக நம்மோடு பழகி, நமது செல்வத்தாலும் உதவியாலும் பேறு பெற்றுவரும் பிரிட்டிஷார், தந்தொடர்பை இந்தியாவில் என்றும் நிறுத்த விரும்புவா ராயின், அன்னார், இப்பொழுது இந்தியாவில் உழன்று வரும் அதிகாரவர்க்க ஆட்சிமுறை இயந்திரத்தை மாற்றி, அடக்கு முறையை நிறுத்தித் தலைவர்கள் விருப்பத்தை நிறைவேற்று வாராக. இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! உங்கள் அரிய காலத்தை என் சிற்றுரைகளைப் பொறுமையாகச் செவிமடுப்பதில் செலவழித்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி கூறுகிறேன். இக் காலஞ் செய்கையில் செலவழிக்கவேண்டிய காலம். பேச்சுச் சுருங்கிச் செயல் பெருகவேண்டிய நேரத்தை வேறு துறைகளில் செலவழித்தல் கூடாது. மனமொழி மெய் மூன்றுஞ் சுயராஜ்யத்தைப் பற்றியே நிற்றல் வேண்டும். சுயராஜ்யமின்றி நாம் பட்டுவருந் துன்பத்தை அளந்துரைத்தலும் முடியாதன்றோ? பொறாமை - பொறுமை சுயராஜ்யத்தை அளிக்கவல்லன போர்க்கருவிகளல்ல; போர்களல்ல; கடற்படைகளல்ல. மக்களிடத்திலுள்ள ரஜோ குணத்தின் பரிணாமமே கருவிகள்; போர்கள்; கடற்படைகள். சாத்வீகக் குணத்தினின்றும் பரிணமிக்கும் அன்பும் அருளுமே உண்மையான சுயராஜ்யத்தை அளிக்கவல்லன. இப்பொழுது இந்தியாவில் நடைபெறும் போர் நுண்மையதாகும். பொறா மைக்கும் பொறுமைக்கும் போர் நடக்கிறது. காந்தியம் எது? கொல்லாமையால் கொலை ஒழிதல்வேண்டும்; கள் ளாமையால் களவு அழிதல் வேண்டும்; கள்ளுண்ணாமையால் குடி தொலைதல் வேண்டும்; ஆசையறுத்தலால் ஆசை அகலல்வேண்டும்; பொய்யாமையால் பொய் போதல் வேண்டும்; ஐம்பெரும் பாவங்களால் அடிமை வாழ்க்கை வளரும். அவைகளை ஒழித்தலால் உரிமை வாழ்க்கை ஓங்கும். உலகம் முழுவதும் அடிமை இருளில் முழுகிக் கிடக்கிறது. இவ்விருளை ஒழிக்கவே புத்தர் பெருமான் மீண்டும் ஓருருக் கொண்டு தோன்றினாலென நமது நாட்டில் காந்தியடிகள் தோன்றியிருக்கிறார். அவரைப் போற்றுங்கள்; அவர்தம் அற வழியைக் கடைப்பிடித்தொழுகுங்கள். கதர்த்துணிப் போர்வை யால், அவரோடு திரிவதால், அவரைப்போல நடிப்பதால் மட்டும் எவரும் காந்தியடிகளின் அறவழி நிற்பவ ராகமாட்டார். காந்தியடிகளைப் போற்றுவதாவது, அவர்வழி நிற்பதாவது, ஐம்பெரும் பாவங்களைச் செய்யாதிருப்பதே. ஐந்து பாவம் அற்ற ஒன்றையே காந்தி என்று உலகம் போற்றி வருகிறது. தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு திருவள்ளுவர் பிறந்த நாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்தி பூர்வமாகவோ அபுத்திபூர்வ மாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாத வாறு காத்துக் கொள்ளும் கிராம ஆட்சியை - பழைய கிராமப் பஞ்சாயத்தை - தொழிலாளர் ஆட்சியை - பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து, வீடுபேற்றை அளிக்க வல்ல ஞான அரசியலை - பெற முயலுங்கள். இதன் பொருட்டு உங்கள் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தஞ் செய்யவும் சித்தமாயிருங்கள். உங்கள் முயற்சியால் எல்லா நலனும் ஆண்டவனருளால் விளையும். வந்தேமாதரம் நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் - குறள். திருநெல்வேலி ஜில்லா 4-வது மகாநாடு தென்காசியில் கூடியது - 1922ஆம் வருடம் ஜூலை மாதம் 5, 6ஆம் நாட்கள் - தோற்றுவாய் சகோதரிகளே! சகோதரர்களே!! உலகம், உண்மையாளர் என்று போற்றும் ஒரு பெரியார் நமது நாட்டிடைச் சிறையில் உறையும் இவ்வேளையில் - நாட்டின் பொருட்டுச் சுமார் இருபத்தையாயிரம் தேசபக்தர்கள், மனைவி மக்களை விடுத்து, தாய் தந்தையரை நீத்து, அரசு விழையுஞ் செல்வங்களைத் துறந்து, உடல் பொருள் ஆவி மூன்றையும் மதியாது, முனிவர்களாய், தியாக மூர்த்திகளாய், நாட்டுத் தொண்டர்களாய்ச் சிறைக்கோட்டம் நண்ணியுள்ள இந்நாளில் - சுதந்திர வேட்கையால் மங்கையர்க்கரசிகள் தங்கள் இளங்குமரர்களையும், உயிர் நாயகன்மார்களையும் அகமலர்ச்சி யோடு சிறைக்கனுப்புவதுடன், தாங்களும் அவ்விடங் குறிக்கொண்டு ஓடும் இந்நேரத்தில் - திருநெல்வேலி ஜில்லாவின் நான்காவது அரசியல் மகாநாடு, வடகாசி நினைவூட்டும் இத் தென்காசியில் இன்று கூடியிருக்கிறது. இம்மகாநாட்டிற்குத் தலைமை ஏற்குமாறு - சில காலமாக உடல் மெலிவால் ஒதுங்கி நின்று, நவசக்தி என்னும் பத்திரிகை வாயிலாக மட்டும் இயன்ற அளவு தொண்டு செய்துவரும்-சிறியேனை நீங்கள் தெரிந்தெடுத் திருக்கிறீர்கள். உங்கள் பணியைக் கடவுள் பணியாக் கொண்டு, உங்கள் துணையால் ஒல்லும் வகை எனது தொண்டு புரிய ஈண்டுப் போந்துள்ளேன். இவ்வரசியல் கழகத்துக்கு என்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்த வரவேற்புக் கூட்டத்தார்க்கும், பிரதிநிதிகட்கும், பாரதமாதாவின் திருவடிகளில் வாழும் இந்த ஜில்லா வாசிகள் அனைவர்க்கும் எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்தி, எனது பணியில் இறங்குகிறேன். குற்றங் குறைகளை மன்னிக்குமாறு உங்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். திருநெல்வேலி நெல்வேலிப் பெயர் திருநெல்வேலி என்பது தலைநகரின் பெயர். இப்பெயரே ஜில்லாவிற்கும் வழங்கி வருகிறது. அந்நகரத்துள்ள நெல்லையப் பர் திருக்கோயிலைச் சுற்றிலும் நெல்வேலி சூழ்ந்திருப்பதாலும், அதன்கண் நெல்வேலிகள் மிகுந்து நெருங்கிக் கிடத்தலாலும், அது நெல்வேலி என்னும் பெயர் பெற்றது என்று சிலர் கூறுப. காடுகளிற் போந்து நெல் கொணர்ந்து இறைவனுக்கு அளித்து வந்த ஓர் அன்பர், பஞ்சகாலத் தொருநாள் மிக வருந்தி, நெல் சேர்த்து, அதை ஆற்றங்கரை மீது வைத்துத் தாம் நீராடிய வேளையில், திடீரெனக் காற்றும் மழையும் கலந்து வருவதைக் கண்ணுற்றுக் கரை நோக்கி ஓடி வந்தபோது, நெல்லுக்குக் கேடு நிகழா வண்ணம் அதைச் சுற்றிலும் வேலி கோலப்பட்டிருப்பது கண்டு வியப்புற்றா ரென்றும், அக்காரணத்தால் நெல்வேலி என்னும் பெயர் வழங்கப்பட்ட தென்றும் புராணம் கூறுகிறது. திருநெல்வேலி இப்பொழுது திந்நிவெலி என்று மருவி விட்டது. இம் மருவுப் பெயரே அரசாங்கமேறி உலவி வருகிறது. முதல் முதல் ஈங்குப் போந்த மேல் நாட்டார் திருநெல்வேலி என்று சொல்ல இயலாது, வருந்தி வருந்திப் பெரு முயற்சியால் திந்நிவெலி (Tinnevelly) என்று சொல்லியிருப்பர். அவ்வெண் துரைகள் அடிச்சுவட்டை நங் கருந்துரைகளும் பற்றித் திந்நி வெலி என்று கூறி மிடுக்காகப் பீடுகொண்டு நடக்கிறார்கள்! உச்சரிப்பிலும் நம்மவர் அடிமைத் தன்மையை விரும்புகின்றனர்! அந்தோ! காலமே! இயற்கைவளம் திருநெல்வேலி ஜில்லாவின் இயற்கைவளம் இன்பமூட்டத் தக்கது. மலைவளமும், நீர்வளமும் பிற வளங்களும் மக்கள் இயல்பை வளம்படுத்துவனவாம். சுருள் சுருளாகவும், அடுக்கடுக் காகவும் ஒன்றோடொன்று பின்னி, நிமிர்ந்தும் வளைந்தும் நிற்கும் மலைகளின் தொடர்ச்சியும் - நாட்டுக்கு உயிரென இலங்குங் காடுகளின் செறிவும் - பிணிகளை உடைக்கும் நீர் வீழ்ச்சிகளின் பெருக்கும் - மலைகளினின்றும் காடுகளினின்றும் பொருள்களைக் கவர்ந்து நாட்டுக்கீயும் ஆறுகளின் ஓட்டமும் - பச்சைப்படாம் விரித்தாலெனப் பொலியும் வயல்களின் வரிசை யும் - வெளி படர்ந்த நிலங்களின் பரப்பும் - மக்கள் மலியும் பட்டணங்களின் அமைப்பும் - கடலையும் நாட்டையும் பிணித்துத் தொடர்புபடுத்தும் பட்டினங்களின் பொலிவும் - எந்தப் புலவருடைய மனத்தைக் கவராது விடும்! இன்னோரன்ன இயற்கை வளமும், தெய்வமணங் கமழுந் திருக்கோயில்களும் நிரம்பியுள்ள இந்த ஜில்லா வாசிகளாகிய உங்களுக்கு, யான் பொதிகையின் மாண்பைப் புகலவும் வேண்டுமோ? பொருனை (தாமிரபரணி)யின் சிறப்பைப் புகழவும் வேண்டுமோ? குற்றால நீர்வீழ்ச்சியைக் குறிக்கவும் வேண்டுமோ? உங்கட்கு நான் பனை யின் நலத்தையும் பருத்தியின் விளைவையும் பகரவேண்டுவ தில்லை; தென்கடல் முத்தைப்பற்றிச் செப்பவேண்டுவதில்லை; செந்திலைக் குறித்துச் சிறப்பிக்க வேண்டுவதில்லை. இம்முறை யில் வேறு பலவற்றைப்பற்றி விரித்துக் கூறாது, இவ்வியற்கை இன்பத்தையும் இறை இன்பத்தையும் நுகரும் பேற்றை இந்நாளில் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று உங்களை நோக்கி வினவி, உங்கள் ஜில்லாவின் சரிதக் குறிப்புக்கள் மீது கருத்தைச் சிறிது செலுத்துகிறேன். பாண்டி நாடு திருநெல்வேலி ஜில்லா பாண்டி நாட்டின் ஒரு பகுதி. திருநெல்வேலி ஜில்லாவும், மதுரை ஜில்லாவும் சேர்ந்ததே பாண்டி நாடென்பது. பாண்டி நாட்டின் பெரும்பகுதி, கடலால் விழுங்கப்பட்ட தென்று சில ஆராய்ச்சிக்காரர் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பல சான்றுகள் உள. பாண்டியன் நாகரிகம் பாண்டிநாடு மிகத் தொன்மையது. சரித காலத்துக்கு முன்னரே பாண்டிநாடு கல்வியிலும் தொழில் முறைகளிலும், வேறு பல நாகரிகத் துறைகளிலும் பண்பட்டிருந்தது. பாண்டி நாட்டின் பெருமை இராமாயணத்தில் ஓதப்பட்டிருக்கிறது. சுக்கிரீவன் தன் குரங்குக் கூட்டத்தை நோக்கிப் பேசியபோது, பொதிகையைப் பற்றியும், பொருனையைப் பற்றியும், பாண்டியன் தலைநகரத்தைப்பற்றியும் குறித்திருக்கிறான். அர்ச்சுனன் பாண்டி நாடு போந்த வரலாற்றைப் பாரதம் கூறுகிறது. புத்தர் பெருமான் நிருவாணநிலை அடைந்த நாளில், ஈழநாட்டின்மேற் சென்ற விஜயன் என்பான், பாண்டியன் மகளை மனைவியாகக் கொண்டான் என்று மகாவமிசம் உரைக்கிறது. அசோகன் காலத்தில் சோழ பாண்டிய நாடுகள் புத்த தருமத்தை ஏற்றுக் கொண்டன என்று அவன் (அசோகன்) காலத்திய சாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அசோகனது வெற்றித் தூண் பொருனைக் கரையில் நாட்டப்பட்டது என்றுஞ் சொல்லப் படுகிறது. பாண்டிநாடு, ரோம்-கிரீ முதலிய நாடுகளோடு வாணிபம் செய்திருக்கிறது. அத்தேச சரிதங்களில் பாண்டி நாட்டைப்பற்றிய குறிப்புக்கள் பலவுண்டு. மெகதினெ என்பார் பாண்டி நாட்டைப்பற்றிப் பேசியிருக்கிறார். கொற்கை என்னும் பழம் பதியைப்பற்றிக் கிரேக்க சரித்திரக்காரர் எழுதி யுள்ளது கருதற்பாலது. கொற்கையின் சிறப்பை ஐங்குறுநூறு முதலிய பழந்தமிழ் நூல்களும் புகழ்ந்துள்ளன. பாண்டி நாட்டின் மாண்பை விரித்துக் கூறும் பண்டைத் தமிழ் நூல்கள் பல. பாண்டியர் வீழ்ச்சி இராமாயண பாரத காலந்தொட்டு, ஆறாம் நூற்றாண்டு வரை, எவர் தலையீடுமின்றிப் பாண்டியர் தெய்விகச் செங் கோலோச்சி வந்தனர். ஆறாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை, பாண்டியர் ஆட்சி பல வழியில் இடுக்க ணுற்று, அடிக்கடி பழுதுபட்டு நிலவிக் கொண்டிருந்தது. இக் கால எல்லையில் பாண்டி நாட்டில் பல்லவர், சாளுக்கியர், சோழர், மகமதியர் (அல்லாவுடீன் காலம் 1310), தெலுங்கர் (நாயக்கன்மார்), போர்த்துக்கேசியர், டச்சுக்காரர் முதலியோர் நுழைந்தனர். இவருள் நாயக்கன்மார் ஆட்சிக்குப் பாண்டி நாடு ஏறக்குறைய இருநூறாண்டு உட்பட்டிருந்தது. இவருள் சிறந்தார் திருமலை நாயக்கர் என்பார். நாயக்கர் வழித்தோன்றல்களாகிய மங்கம்மாள், மீனாட்சி என்னும் இரண்டு மாதரசிகள் நாட்டைப் புரந்தது உன்னத்தக்கது. பாண்டியரது ஆதிக்கம் பதினேழாம் நூற்றாண்டில் அறவே தொலைந்தது எனலாம். மீண்டும் முகமதியர் பாண்டி நாட்டைப் பற்றினர். முடிவாக உங்கள் ஜில்லா 1801-ம் ஆண்டு எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் பிரிட்டி ஷார் வயப்பட்டது. பாஞ்சாலன் குறிச்சிப் போர் பதினெட்டாம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஜில்லாவில் அடிக்கடி நடைபெற்ற பாஞ்சாலன் குறிச்சிக் குழப்பத்தில் பிரிட்டிஷ் போர் வீரரே தன்னந் தனியராய் நின்று பொருதனர் என்று எச் சரித்திரக்காரனுங் கூறத் துணியான். இந்தியப் போர்வீரர் துணை பெற்றே பிரிட்டிஷ் படைத்தலைவர்கள் வாகைமாலை சூட்டிக் கொண்டார்கள். பாஞ்சாலன் குறிச்சிப் போரில் மட்டுமன்று, நமது நாட்டில் நிகழ்ந்த போர்களி லெல்லாம் பிரிட்டிஷார் இந்தியப் போர்வீரர் துணை கொண்டே வெற்றிபெற்றார். பிரிட்டிஷ் அரசாட்சியை நிலை பெறுத்திய ஆர்க்காடு முற்றுகையிலும், பிளாஸி யுத்தத்திலும் இந்தியர் உதவி செய்யா தொழிந்தனரோ? இப்பொழுது நடந்தேறிய ஐரோப்பாப் பெரும்போரிலும் இந்தியா உதவியைப் பிரிட்டிஷார் பெறவில்லையோ? பிரிட்டிஷார்க்கு உற்றவேளை களில் உதவி செய்துவந்துள்ள இந்தியர் உரிமை இழந்து பிஜியில் வருந்துகிறார்; நெட்டாலில் தவிக்கிறார்; கென்யாவில் துன் புறுகிறார். மற்றும் பல குடியேற்ற நாடுகளில் அன்னார் வாழ் விழந்து அலமருகிறார். பிறந்த தாய் நாட்டிலேயே இருபத்தை யாயிரம் தேசபக்தர் உரிமையின் பொருட்டுச் சிறையில் வதி கிறார். அந்தோ! பிரிட்டிஷ் மந்திரிமார் இந்தியர் மீது காட்டுங் கருணை என்னே! என்னே!! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை - செய்ந்நன்றி கொன்ற மகற்கு என் னும் பொய்யா மொழியைப் பிரிட்டிஷ் அமைச்சர்கட்கு நினை வூட்டுகிறேன். இயற்கை அமைப்பிலும், தொன்மையிலும், சரிதத்திலும் பேர்பெற்றுச் சிறந்து விளங்கும் திருநெல்வேலி ஜில்லாவின் காங்கர பிரதிநிதிகளாகிய உங்களால், ஜில்லாவுக்குரிய தேவைகள் இன்ன இன்ன என்று சிறப்பாகத் தீர்மான வடிவாக நிறைவேற்றப்படுமாகலானும், ஒத்துழையா இயக்கம் வலுத்து வரும் இந்நாளில் நீங்களும் நாட்டவருடன் ஒத்துழைக்கவேண்டு மாகலானும், நாட்டு நலம் உங்கள் நலமாகலானும், நான் நாட்டுக்குரியனவற்றுள் சிலவற்றைமட்டுங் குறித்து என் சிற்றறி விற் கெட்டியவாறு பொதுவாகப் பேசப் போகிறேன். சுயராஜ்யம் பிறப்புரிமை சுயராஜ்யம் என்பது உயிர்களின் பிறப்புரிமை. அவ்வுரிமை உயிர்கள்பால் இயல்பாகவே அமைந்து கிடக்கிறது. அதை இழக்க எவரும் ஒருப்படார். ஆனால் வலியார் தமக்குள்ள ஆற்ற லால் எளியார் உரிமையைப் பாழ்படுத்துகிறார். இச்செயல் கடவுள் திருவருட் குறிப்புக்கு மாறுபட்டது. ஒருவர்க்கு ஒருவர் அடிமையா யிருக்க வேண்டுமென்பது ஆண்டவன் படைப் பினது நோக்கமன்று. இறைவன் படைப்பு நோக்கத்தை நுண் ணறிவால் ஆராய்வோர்க்கு ஒருவர் பிறப்புரிமையை மற்றவர் பாழ்படுத்தலாகாது என்பது புலனாகும். கடவுள் திருவருள் குறிப்புக்கு மாறாக ஒருவர் பிறப்புரிமையை மற்றொருவர் ஊறுபடுத்தினால், அவ்வூறுபாட்டால் பிறப்புரிமையை இழந்த வன், மீண்டும் அதைப் பெற முயலல் வேண்டும். முயலாது வாளா கிடப்பானாயின், அன்னான் ஆண்டவன் திருவருளுக்கு உரியனாகான். திலகரும் உரிமையும் ஒருவர் பிறப்புரிமை இழந்தால், அதைப் பெற அவர் முயல்வதுபோல, ஒரு நாட்டார் தமது பிறப்புரிமை இழப்பரேல், அன்னார் அதைப் பெற ஊக்கங்கொண் டுழைத்தல் வேண்டும். பிறப்புரிமை இழந்த நாட்டில் வாழும் அறிஞர் பிறப்புரிமை நாடாது வாளா கிடத்தல் பெரும் பாவம். சுயஆட்சி எனது பிறப்புரிமை; ஆதலால், அஃது எனக்கு வேண்டும் என்றார் நம் பாலகங்காதர திலகர். இப்பெரியார் தாஞ் சொற்றதைச் செய் கையில் நாட்டி உழைத்தார். திலகர் பெருமான் பிறப்புரிமையின் பொருட்டு ஒருமுறைக்கு மும்முறை சிறை புகுந்து, இந்திய மக்களுக்கு அவ்வுரிமையின் பெற்றியை அறிவுறுத்தினார். அச்சிங்கத்தின் சுதந்திர கர்ஜனையன்றோ நம்மை எழுப்பிற்று? அவரது உழைப்பன்றோ நமக்கு உணர்வளித்தது? அவரது தியாகமன்றோ நமக்கு வீரமூட்டிற்று? திலகரது தியாகம் திலகர் பெருமான் இக்கால நாகரிகக் கல்வியில் உயர்தரப் பட்டம் பெற்றும், உத்தியோகச் சேற்றில் வீழ்ந்து நெளிந்தாரோ? பொருளாசை கொண்டு நியாயமன்றங்களிலேறி வாதம் புரிந்தாரோ? உரிமையைக் கொலை செய்யும் பட்டங்களை வேட்டாரோ? இல்லையே. பிறப்புரிமை ஒன்றையே குறிக் கொண்டு காலமெல்லாம் உழைத்துச் சிறையையன்றோ நம் பெருமான் விரும்பினார்? அவர்க்குப் பிறப்புரிமையினுஞ் சிறப்பாக உயர்தரக் கல்வி தோன்றவில்லை; உத்தியோகம் தோன்றவில்லை; பட்டங்கள் தோன்றவில்லை. மக்கட்கு விழுப்பந் தருவது பிறப்புரிமையே என்னும் உண்மையைத் திலகர் பெருமான் கண்டார். சுயராஜ்யம் உயிர்களின் பிறப்புரிமை என்பதை வலியுறுத்தத் திலகர் பெருமான் திருவாக்கினின்றும் பிறந்த சுயஆட்சி எனது பிறப்புரிமை என்னுந் திருமொழியே சாலும். பிற்போக்காளர் பிறப்புரிமை குறித்துச் சுயராஜ்யம் பெறவேண்டி இப் பொழுது நாம் கிளர்ச்சி செய்து வருகிறோம். இவ்வேளையில் நம்மவர்களிற் சிலர், பிரிட்டிஷ் ஆட்சியே சிறந்த நல்லாட்சி; சுய ஆட்சியால் கலகமும் குழப்பமும் சாதிச் சண்டையும் சமயச் சண்டையும் நிகழும். பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர் இருந்த அரசாட்சிகளில் அமைதியே நிலவவில்லை. அக்காலத்தில் நம்மவர் கிளர்ச்சி செய்தாரில்லை. அவ்வரசாட்சிகளிலுஞ் சிறந்தது பிரிட்டிஷ் அரசாட்சி. ï¡fhy¤âš »s®¢á v‰W¡F? என்று கேட்கிறார். இவ்வாறு கூறுவோர், பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த நஞ் சகோதரராதலால், அவரை நம்மவர்களிற் சிலர் என்று மேலே குறிப்பிட்டேன். வேண்டுவது முறைமாற்றம் பிரிட்டிஷ் ஆட்சியை எவரும் இதுகாறுங் குறை கூற வில்லை. பிரிட்டிஷ் மக்களையாதல், அவர்தம் ஆட்சியையாதல் வெறுத்துத் தள்ளுவதாக எவரும் நினைக்கவேண்டுவதில்லை. இந்தியாவில் நடைபெறும் அதிகாரவர்க்க ஆட்சி முறை மாறிச் சுய ஆட்சிமுறை வரவேண்டும் என்பதே நமது கோரிக்கை. பிரிட்டிஷ் தொடர்பை அறுத்துக் கொள்ள வேண்டுமென்று இதுவரை காங்கர தீர்மானஞ் செய்யவில்லை. இதைப்பற்றி மகாத்மா காந்தி, சென்ற ஆண்டு ஆமதாபாத்தில் கூடிய காங்கரஸிலும், இவ்வாண்டு பம்பாயில் கூடிய எல்லா அரசியற் கட்சியினர் கூட்டத்திலும் பேசிய பேச்சுக்களைச் சகோதரர்கள் நோக்குவார்களாக. சுயஆட்சி என்ற உடனே, பிரிட்டிஷ் தொடர்பு அறுந்துவிட்டது என்ற வீண் அச்சங்கொள்ளுஞ் சகோதரர்கள் காங்கர உள்ளக் கிடக்கையை உணராதவர் களே யாவர். அமைதியும் கலை வளர்ச்சியும் பண்டை நாளில் நமது நாட்டில் பெருங் குழப்பங்கள் நிகழ்ந்தன என்று சொல்லுவதற்குப் போதிய சான்றுகளில்லை. அந்நாளில் அமைதி நிலவியிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. ஞான அலை வீசும் உபநிடதங்களும், அறம் மலியும் திருக்குறள் முதலிய நன்னூல்களும், எவரும் வியந்து போற்றும் சிற்பத் தொழில்கள் நிரம்பியுள்ள கோபுரங்களும் மண்டபங்களும், வேறு பல கைத்தொழிற்றுறைகளும், கல்லை யும் கனிவிக்கும் இசையும், மருத்துவம் முதலியனவும் எக்காலத் தில் தோன்றி வளம்பெற்றன? பஞ்சத்தின் மத்தியில் - குழப்பத்தின் இடையில் - கலகத்தின் நடுவில் - இத்தகை அருங் கல்வித் துறைகளும் தொழின் முறைகளும் தோன்றுமா? இப்பொழுது அத்தகைய கல்வியாளர் - தொழிலாளர் - எத் துணை பேருளர்? உள்ள கல்விகளும் தொழில்களும் இறந்து பட்டு வருவது, சுயஆட்சி வேண்டாம் என்று கூறும் சகோதரர் கள் கொழுமதிக்குப் புலனாவதில்லை போலும்! இடைக்காலத்தில் சில ஹிந்து அரசர் ஆட்சியிலும், மகமதிய மன்னர் ஆட்சியிலும் நமது நாட்டின் சில பகுதிகளில் நிகழ்ந்த குழப்பங்களால் அமைதி குலைந்தது உண்மையே. அக் குழப்பங்கள் மதத்தைப் பற்றி எழுந்தனவேயன்றி வயிற்றைப் பற்றி எழுந்தனவல்ல. திப்பு சுல்தான் முதலியோர் அரசாட்சிக் காலத் தில் குழப்பம் பெருகியிருந்தாலும், அதனால் விவசாயம் குலைந்து, வேறு பல கைத்தொழில்கள் இறந்துபட்டுத் தொழி லாளர் வருந்தினர் என்று எந்தச் சரிதக்காரரும் கூறவில்லை. மொகலாய மன்னராகிய ஜிஹாங்கீர் காலத்தில் வில்லியம் ஹாக்கின் என்னும் ஆங்கிலேயர் ஒருவர், 1608-ம் ஆண்டு முதல் 1613ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் தங்கி, வலம்வந்து, தாம் கண்டனவற்றைக் குறிப்பேட்டில் பதித்துக் கொண்டார். அவர் ஜிஹாங்கீர்க்குரிய ஐந்து கோட்டைகளுள் ஒன்றாகிய ஆக்ரா கோட்டையில் மட்டுங் கண்ட செல்வப் பெருக்கைக் குறிப்பிடுகிறார். அது வருமாறு:- ஜிஹாங்கீரின் செல்வம் ஏராளமா யிருக்கிறது. அவ ருடைய சொந்த நிலத்தின் வருஷ வரும்படி ஐம்பது கோடி ரூபாயாகும். அவருடைய பொக்கிஷத்தில் பத்து ரூபா மதிப் புள்ள அறுபது லக்ஷம் தங்க மோஹராக்களும், ஆயிரம் ரூபா மதிப்புள்ள இருபதினாயிரம் தங்க மோஹராக்களும், இருபது தோலா எடைகொண்ட முப்பதினாயிரம் தங்க மோஹராக்களும், பத்து தோலா எடை கொண்ட இருபதினாயிரம் தங்க மோஹராக்களும், ஐந்து தோலா எடைகொண்ட ஐம்பதினாயிரம் தங்க மோஹராக்களும் இருக்கின்றன. வெள்ளியில் ஸலீம்ஷாவின் உருவம் அமைந்ததும் நூறுதோலா எடையுள்ளதுமான ஐம்பதினாயிரம் நாணயங்களும், ஐம்பது தோலா எடையுள்ள ஒரு லக்ஷம் நாணயங்களும், முப்பது தோலா எடையுள்ள நாற்பதினாயிரம் நாணயங்களும், இருபது தோலா எடையுள்ள முப்பதினாயிரம் நாணயங்களும், பத்து தோலா எடையுள்ள இருபதினாயிரம் நாணயங்களும், ஐந்து தோலா எடையுள்ள இருபத்தையாயிரம் நாணயங்களும், சவாய் என்னும் இரண்டு லக்ஷம் நாணயங்களும் இருக்கின்றன. இவை தவிர, பதின்மூன்று கோடி ரூபாய்கள் வேறே இருக்கின்றன. ***வைரங்கள் ஒன்றரை மணங்கும், ***இரத்தினங்கள் சுமார் இரண்டாயிரமும், பவழத்தில் பன்னிரண்டு மணங்கும், சிவப்பு ***மரகதக் கற்களில் சுமார் ஐந்து மணங்கும், சீனத்திலிருந்து வரும் எஷைம் என்ற கற்கள் சுமார் ஒரு மணங்கும், யாமனி என்ற சிவப்புக் கற்களில் சுமார் ஐயாயிரமும் இருக்கின்றன. இவை தவிர வேறு பலவித இரத்தினங்கள் கணக்கிலடங்காமல் இருக்கின்றன. ***ஜிஹாங்கீரின் சொந்தச் செலவு தினமொன்றுக்கு ஐம்பதி னாயிரம் ரூபா ஆகின்றது. அவருடைய அன்புக்குரிய பிராணி களுக்கும், அவர் ஏறும் யானைகளுக்கும் ஏற்படும் தீனிச் செலவும், மற்றச் சில்லரைச் செலவுகளும் இதில் அடங்கும். அந்தப்புரத்திலுள்ள மாதரசிகளின் தினசரிச் செலவு முப்பதினாயிரம் ரூபாயாகும். ஹாக்கின் இன்னும் பல பொருட்களின் தொகையைக் குறித்துக் கொண்டு போகிறார். ஒரு கோட்டையின் செல்வம் இவ்வளவாயின், ஏனைய கோட்டைகளில் எவ்வளவு செல்வம் மலிந்திருக்கும்? நாட்டில் எவ்வளவு செல்வம் செறிந்திருக்கும்? அச்செல்வம் இப்பொழுது எங்கே போயிற்று? இமயம் உறைந்துவிட்டதா? கங்கை வறண்டுவிட்டதா? நாட்டுச் செல்வம் ஹிந்து - மகமதிய அரசர்கள் பரத கண்டத்தையே தங்கள் தாய் நாடாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அக்காலத்தில் நாட்டின் செல்வம் நாட்டிலேயே தங்கி நாட்டவர்க்குப் பயன்பட்டு வந்தது. இதனால் கிளர்ச்சி தோன்றவில்லை. நாட்டின் செல்வம் பிற நாடுகளுக்குச் செல்லத் துணை புரிந்து, மிடியால் நாட்டை இடியுண்ணச் செ(ய்)விக்கும் ஆட்சிமுறையை மாற்றி, நமது நாட்டின் செல்வத்தை நமது நாட்டிலேயே நிறுத்திப் பஞ்சத்தைப் போக்கி, ஏழை மக்கள் வறுமையை ஒழிக்கத் தொழில் முறைகளைப் பழையபடி ஒழுங்குபடுத்தும் உரிமை நல்கவல்ல சுயராஜ்யம் பெறவே நாம் கிளர்ச்சி செய்கிறோம். இதற்கு மாறுபட்டு ஒருசிலராவது ஏன் ஒதுங்கி நிற்றல் வேண்டும்? சீர்திருத்தமும் நமது அனுபவமும் சீர்திருத்தத்தால் படிப்படியாகச் சுயஆட்சி பெற முயல்வதே நலம். இப்பொழுது பூரண சுயஆட்சி கேட்பது அறிவுடைமையாகாது என்று மிதவாதிகள் பிதற்றுகிறார்கள். மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தையும் நாம் கண்டோம்; இப்பொழுது மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தத்தையும் கண்டு வருகிறோம்; இவ்வாட்சி முறையில் இருபத்தையாயிரம் தேசபக்தர் சிறையில் வதிவதைக் காண்கிறோம்; மந்திரிமாரை ஏந்தித் திரியும் இச் சீர்திருத்தத்தில் வரவுக்குமேல் செலவைப் பார்க்கிறோம். சீர்திருத்தத்தால் ஆங்கிலங் கற்ற ஒரு சிலர் ஆயிரம் ஐயாயிரம் வாங்கலாம்; ஸ்ரீநிவாச சாதிரியார் போன்ற நாவலர்கள் நாடு நாடாகத் திரிந்து வரலாம். ஆங்கிலம் கற்ற ஒரு சிலர் பெறும் நலம், நாட்டு நலமாகாது. அவ்வொரு சிலர் தந்நலங் கருதிச் சீர்திருத்தம் சீர்திருத்தம் என்று கூவிக் கொண்டு, அதிகாரவர்க்கத்தார் அடிவருடிக்கிடப்பர். ஆதலால், சீர்திருத்தத்தைப் பற்றிப் பேச வேண்டுவதில்லை. அது பழம் பாடமாகிவிட்டது. ஒடுக்கப்பட்டோர் உள்ளம் சுயராஜ்யம் இப்பொழுது வேண்டாம் என்று ஆதிதிரா விட- திராவிடக் கூட்டத்தார் உள்ளிட்ட ஒரு சிலர் கூறுகிறார். இவர் அதிகாரவர்க்க ஆட்சிமுறையில் பற்றுக் கொண்டு காங்கர கொள்கைக்கு மாறுபட்டு நிற்கிறாரில்லை; உயர்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோர், நீண்ட காலமாகத் தம்மைத் தீண்டாமலும், கோயில்களில் விடாமலும் அடக்கி ஒடுக்கிச் சிறுமைப்படுத்தி வருவதை நினைந்து, உருகி உருகித் தம்முளத்து மூண்டெழு சினத்தால், இப்பொழுது சுய ஆட்சி வேண்டாம் என்கிறார். இக்கூட்டத்தார் விரும்புவது ஒன்றே. அது, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாதென்பது. இவ்வுண்மையை மகாத்மா காந்தி உணர்ந்து, தீண்டாமையை ஒழிக்கப் பெருமுயற்சி செய்துவருகிறார். காங்கர திட்டங் களுள் தீண்டாமை ஒழித்தலும் ஒன்றாக இருக்கிறது. அதற் கெனப் பெருந்தொகையும் (ஐந்து லட்சம்) ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது. இனித் தீண்டாமை விரைவில் ஒழியும் என்று நம்புகிறேன். தீண்டாமை ஒழிந்தால், கோயில் நுழைவு முதலிய உரிமைகள் இயல்பாக அரும்பும். காங்கர தீண்டாமையை ஒழிக்க எழுச்சி கொண்டு உழைக்க முன் வந்துள்ள இவ்வேளை யில், தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோர், காங்கர ஸோடு பிணங்கி நில்லாது, அதனோடு இணங்கி நின்று உழைப் பாராயின், தம் விருப்பமெல்லாவற்றையும் அன்னார் விரை வில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோரும், காலநிலை நாட்டுநிலை முதலியவற்றை உன்னி, காங்கர ஆணை வழி நடந்து, தீண்டாமையை ஒழிக்க முயல்வாராக. ஆதிதிராவிடர் - திராவிடர் முதலியோர் நாட்டின் செல்வ நிலைக் குலைவால், வறுமை மேலீட்டால், தாம்படும் பாட்டைப் பொறுமையாக ஆராய்வாராயின் அவர் கருத்துச் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் பதியும் என்பதில் ஐயமில்லை. முன்னை நாளில் - சாதிவேற்றுமை பெரிதும் பாராட்டப்பட்ட அந்நாளில், ஆதி திராவிடர் - திராவிடர் - ஏனையோர் - வறியராய் வாழ்ந்து பட்டினி கிடந்தாரில்லை. அவர்க்கு வீடு வாசல் காணி பூமி மாடு கன்றுகளிருந்தன. அவர் கையார உழைத்து, வயிறார உண்டு இன்பம் நுகர்ந்து வந்தனர். அவ்வின்பத்தை இப்பொழுது அவ்வகுப்பார் நுகர்கிறாரா? உயர்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுவோர்மீது கொண்ட சீற்றத்தால் அவர்க்குத் தம் பண்டை நிலை விளங்குவதில்லை போலும்! பஞ்சாயத்தின் அவசியம் இக்கால ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள நியாய மன்றங் களில் வாதம் புரியும் வக்கீல்கள், நாள்தோறும் நூறு-ஆயிரம்-பதினாயிரம் சம்பாதிக்கிறார்கள். ஞாயிற்றின் ஒளி எரிக்க, நெற்றி வியர்வை நிலத்தில் வீழ, நின்ற வண்ணமாய், குனிந்த வண்ணமாய், நடந்த வண்ணமாய்த் தொழில்புரியும் உழவுத் தொழிலாளிகள் நாள்தோறும் எவ்வளவு பெறுகிறார்கள். அவர்கள் பெறுவது அவர்கள் வயிற்றுக்கே போதாது. மன்றாடி கள் (வக்கீல்கள்) பெறும் செல்வம் யாருடையது? பெரிதும் விவசாயிகளுடைய பணமே அவர்களுக்குச் செல்கிறது. பிரிட்டிஷ் மன்றங்கள் இல்லாமல், பழையபடி பஞ்சாயத்து முறைகள் இருந்தால், விவசாயிகள் செல்வம் வக்கீல் கூட்டத்தவரிடஞ் சென்று குவியுமோ? விவசாய வளர்ச்சிக்குள்ள தடைகள் பண்டை நாளில் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப் படுவோர், பெரிதும் விவசாயத்தில் தம் வாழ்க்கையை நடாத்தி வந்தனர். இவர்க்கு வாழ்வை நல்கவல்ல விவசாயத்துக்கெனச் சிறப்பாக என்னென்ன முயற்சிகள் இப்பொழுது செய்யப்படு கின்றன? தொழில் இலாகாவாலும், விவசாய இலாகாவாலும், விவசாயக் கல்லூரிகளாலும் விவசாயம் வளம் பெற்று விடுமோ? அவைகளால் ஏழை மக்கள் குறைகள் நீங்கிவிடுமோ? விவசாயத்துக்கு இன்றியமையாதன காடுகளும், கால் நடை களும், பிறவுமாம். காடுகளுக்குள்ள கட்டுப்பாட்டை நான் விரித்துக் கூறவேண்டுவதில்லை. காடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்துவிட்டால், அவை நாடுகளுக்கு - விவசாயிகளுக்கு - எவ்வாறு பயன்படும்? காடுகளுக்குக் கட்டுப்பாடில்லாவிடின் எத்துணையோ ஏழைகள் வருத்தமின்றி வாழ்வார்கள். காடு களின் கட்டுப்பாட்டால் கால்நடைகளும் வருந்துகின்றன. மேலும் அவை பலர் வயிற்றுக்கும் கால்களுக்கும் பயன்படும் ஊழை இந்நாளில் பெற்றிருக்கின்றன. இயல்பாகக் காடுகள் வளரவேண்டிய சில இடங்களில் காப்பியும் டீயும் பயிரிடப் படுகின்றன. தீர்வை ஒரு பக்கம் விவசாயிகளை வருத்துகிறது. நாளெல்லாம் உழுது ஏழைகள் பெறும் சிறு ஊதியத்தையும் பறிக்கக் கள்ளுக்கடைக ளிருக்கின்றன. உழவுத் தொழிலாளர் வாழும் வீடுகள், அவர் உண்ணும் உணவு, அவர் உடுக்கும் உடை முதலியவற்றை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் கண்ணீர் பெருகுகிறது. விவசாயத் தொழிலாளர் நிலையை வளம்படுத்த ஏதாயினுஞ் சட்டம் உண்டா? விவசாய வளஞ் சுருங்கினதால் அத்தொழிலாளர்க்குத் துன்பம் பெருகலாயிற்று. இந்நிலையில் ஏழைகள் நிலையைச் செழுமைப்படுத்த ஜனப் பொறுப்பாட்சி வேண்டுமா வேண்டாமா? ஆதிதிராவிடரே! திராவிடரே! ஏனையோரே! ஓர்மின்! ஓர்மின்! நெசவுத் தொழில் நிலை நெய்தற்றொழிலை எடுத்துக் கொள்ளுவோம். இத்தொழி லால், இப்பொழுது தாழ்ந்த வகுப்பாரென்று தம்மை நினைந்து கொள்ளும் சகோதரர் பலர் செம்மையாக வாழ்ந்து வந்தனர். அச்செல்வத் தொழில் இப்பொழுது எங்கே? அஃது இருந்த விடந் தெரியாமல் எந்தவிடத்துக்குப் பறந்துபோயிற்று? ரோமா புரிக்குப் பட்டாடைகளை உதவிவந்த இந்தியா - எகிப்துக்கு மலின்களை அனுப்பி வந்த இந்தியா - இங்கிலாந்துக்குத் துணிகளைக் கொடுத்து வந்த இந்தியா - பொதுவாக உலகத் துக்கே உடை வழங்கிவந்த இந்தியா - இப்பொழுது தன் உடைக்கும் அயல்நாட்டை நோக்குகிறது! கிழக்கிந்திய வியா பாரக் கூட்டத்தார் முதல் முதல் நமது நாட்டு நெய்தற்றொழிலை நசுக்க, இந்தியாவின் துணி இங்கிலாந்தில் விலையாகாத வாறும் இங்கிலாந்தின் துணி இந்தியாவில் விலையாகுமாறும், அவர் செய்த சூழ்ச்சிகளை டக்கர், டிக்பி, வில்ஸன், காட்டன் முதலியோர் எழுதியுள்ளனவற்றைத் திரட்டிப் பண்டித மதன் மோகன் மாளவியரும் தத்தரும் எழுதியுள்ளனர். மலின் மாட்சி நமது நாட்டின் மலின் துணியைப்பற்றிப் பல சரித்திரக் காரர் புகழ்ந்துரைக்கிறார். 1602ஆம் ஆண்டில் காப்டன் லங்காடர் இருபது கெஜம் மலின் துணியை இராணி எலிஸபெத்துக்கு அனுப்பினாராம். அதை மடித்தபோது அஃது ஒரு கைக்குட்டை அளவாக மடிந்ததாம். ஆ! ஆ! எவ்வளவு மெல்லிய மலின்! இத்தகைய மலின் நெய்யப்பட்ட ஓரிடத்தின் கதி என்ன ஆயிற்று? டாக்காவில் இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்தார்களென்றும், 1787ஆம் ஆண்டில் முப்பது லட்சம் ரூபா பெறுமான சல்லாத்துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதென்றும், 1817ஆம் ஆண்டில் அவ்வேற்றுமதி அறவே நின்றுவிட்ட தென்றும், வாழ்விற்கு ஆதாரமாயிருந்த நூற்றலும் நெய்தலும் நசித்தமையால் ஜனத்தொகை எழுபத்தொன்பதாயிரமாக அருகிற்றென்றும் ஸர் ஹென்றி காப்டன் எழுதியிருக்கிறார். தொழிலாளர் நிலை காசி, காமீரம் முதலிய இடங்களிலும் பாம்புத் தோல் போன்ற மெல்லிய துணிகள் நெய்யப்பட்ட நமது தமிழ்நாட்டி லும், நாட்டின் மற்றப் பகுதிகளிலும் நூல் நூற்குந் தொழில் மாய்ந்தது. அத் தொழில் வீழ்ச்சியால் அத் தொழிலாளர் நிலை என்னவாயிற்று? சில இடங்களில் அவருட் சிலர் கொள்ளைக் காரராகவும் மாறினர் என்று சொல்லப்படுகிறது. சிலர் குடியேற்ற நாடுகளுக்கு ஓடினர். சிலர் மேல்நாட்டு முதலாளி களிடம் வேலைக்கமர்ந்தனர். சர்க்கா எழுச்சி கிழக்கிந்திய வியாபாரக் கூட்டத்தாரால் அழிக்கப்பட்ட செல்வத் தொழிலை மீண்டும் உயிர்ப்பித்தால் நாடு பழைய நிலை அடையும் என்னுங் கருத்துக் கொண்டே மகாத்மா காந்தி, சர்க்கா தாங்கி ஒத்துழையாப் போரில் இறங்கினார். அப்போரில் இறங்கப் பெரிதும் ஏழைமக்கள் கடமைப்படுதல் வேண்டும். அவர்களைச் செல்வ நிலையில் வைத்துக் கொண்டிருந்தது நெய்தற் றொழிலாதலால், அவர்களை மீண்டும் அத்தொழிலே பழைய செல்வநிலையில் நிறுத்தும். சர்க்காக் கிளர்ச்சி ஏழை மக்கள் பொருட்டே எழுந்தது. அதைப் பரப்ப முன்வந்துள்ள காங்கரஸோடு ஒத்துழைக்கச் செல்வத்தால் தாழ்வுற்றுள்ள கூட்டத்தார் ஏன் ஒருப்படலாகாது? பாரதத் தாயின் நிலை மேல்நாட்டுப் பொருள்கள் நமது நாட்டில் பரவுதலால், நமது நாட்டிலுள்ள பல தொழிலாளர் வறுமையால் பீடிக்கப் பட்டு வருந்துகின்றனர். நம்மவர் உண்ணும் உண்கலம் யாருடை யது? உடுக்கும் உடை யாருடையது? உறங்கும் படுக்கை யாருடையது? எழுதும் கருவி எந்நாட்டினது? எழுதும் காகிதம் எந்நாட்டினது? எரியும் விளக்கு எந்நாட்டினது? குழந்தைப் பால் நம்முடையதாக இல்லையே! குடிக்கும் பாத்திரம் நம்முடைய தாக இல்லையே! ஏறும் வண்டி நம்முடையதாக இல்லையே! நீர்க்குழாய் நமக்குண்டோ? சாக்கடைக் குழாய் நமக்குண்டோ? சர்க்கரை நமக்குண்டோ? மேலுங் கீழும் சுற்றும் முற்றும் உற்று நோக்கினால் நம் தாயைக் காணோம்! அயல்நாட்டு மாதர்களே தோன்றுகிறார்கள். தாயின் அழுகை மட்டும் கேட்கிறது. இக் காலத்தில் அதிகாரவர்க்க ஆட்சிமுறையில், செல்வத்தால் - கல்வியால் - தாழ்ந்த வகுப்பாராகியுள்ள என்னருமைச் சகோதரர்களே! நீங்களும் பாரதமாதாவின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளல்லவா? அவள் அழுகை உங்கட்குக் கேட்க வில்லையா? உங்கள் தொழில்களெல்லாம் எங்கே ஓடின? அவைகளோடு உங்கள் செல்வங்களும் ஓடின. இமயத்தை முடியாக்கொண்ட நம் தாயை - கங்கை, சிந்துவை ஆரமாக் கொண்ட நம் அன்னையை - முப்பத்து முக்கோடி மக்களை ஈன்ற நம் அம்மையை - ஜெர்மனி ஒரு பக்கம், ஆதிரியா ஒரு பக்கம், அமெரிக்கா ஒரு பக்கம், இங்கிலாந்து ஒரு பக்கம், ஜப்பான் ஒரு பக்கம் பிடித்து, அவள் செழுங் குருதியை உறிந்து உறிந்து ஏப்பமிடுகின்றன. இன்னும் எத்துணை நாள் நம் தாயின் இரத்த ஊற்றுப் பெருகிக் கொண்டிருக்கும்? அத் தாய் யார்? தாழ்ந்த வகுப்புச் சகோதரர்களாகிய நீங்களே! உங்கள் இரத்தம்தான் உறிஞ்சப்படுகிறது! உமது உடலில் செந்நீர் இல்லை; உமது தோல் வற்றியிருக்கிறது; நரம்புகள் தளர்ந்திருக்கின்றன; எலும்புகள் தெரிகின்றன. இக்காட்சியை - உங்கள் நிலையை - சகியாதன்றோ காந்தியடிகள் சிறைபுகுந்தார்? பிரிட்டிஷ் நியாய மன்றத்தின் முன்னிலையில் மகாத்மா காந்தி வாசித்த அறிக்கை யில் உங்கள் நிலையை மிக இரக்கமாக அவர் எடுத்துக்காட்டி யிருக்கிறார். அப் பெரியாரோடு ஒத்துழைத்துச் சுயராஜ்யம் பெற இதுவே சமயம். ஒடுக்கப்பட்டவரும் கல்வியும் உயர்ந்த வகுப்பார் உயர் தரக்கல்வியில் தேர்ந்திருக்கிறார். நாங்களும் அவரைப்போல் கல்வியில் தேர்ச்சி அடைந்தபின் சுயஆட்சிக் கிளர்ச்சியில் சேர்வோம் என்று ஆதிதிராவிட - திராவிடர் உள்ளிட்ட சகோதரர்களுள் சிலர் சொல்கிறார். இப்பொழுது வழங்கப்படுங் கல்வி விடுதலைக்குரிய தன்று. அஃது அதிகாரவர்க்க இயந்திரத்தைச் சுழற்றுவது. இக் கல்வி பயில்வோருள் பெரும்பான்மையோர் அடிமை வாழ்வை விரும்புவோர். விவசாயச் செழுமையால் - கைத்தொழில் வளர்ச்சியால் - ஒரு நாட்டிடைச் செல்வம் நிரம்புமா அல்லது அடிமைக் கல்வியால் செல்வம் நிரம்புமா என்பது உன்னற் பாலது. விவசாய வளங் குன்றக் குன்ற, கைத்தொழில்கள் மாள மாள, நம்மவர் அடிமைக்கல்வி பெற வாயிளித்து ஓட ஓட, நாட்டின் செல்வம் அருகி அருகி வருகிறது. கல்வியாளர் உத்தியோகஞ் செய்து பெறும் ஊதியத்தை அயல்நாட்டுச் சாமான்கள் விழுங்குகின்றன. உழைத்துப் பெறும் பொருளை மற்றநாட்டிற்கு அழுங் கல்வியாளராக விரும்புவதினும், நாட்டுத் தொழிலை வளர்க்க முயல்வது அறிவுடைமை. அடிமைக் கல்வியின் இழிவு இக்கால நாகரிகக் கல்வி பயிலாதார் ஒல்லும்வகை சுதந்திரத் தொழில் புரிய முயல்கிறார். பாழான அடிமைக் கல்வி பயில்வோர் எவர் காலில் விழுந்தாவது ஓர் உத்தியோகத்தைப் பெற முயல்கிறார். இக்கல்வி யுடையாரும் இப்பொழுது பெருகி விட்டனர். அடிமை வேலையுங் கிடைக்கப் பெறாது வருந்து வோர் பலர். செலவைச் சுருக்கவேண்டி, அரசாங்கத்தார் சில இடங்களில் சில உத்தியோகதரை வீட்டுக்கு அனுப்புகிறார். இவர்க்குப் புல் செதுக்கவும் தெரியாது. இவர் வாழ்வினும், குதிரை தேய்ப்பவன் வாழ்வு சிறந்தது என்று யான் கூறுவேன். ஆதலால், அடிமைக் கல்வியால் இந்திரலோக பதவி கிடைக்குமென்று தாழ்ந்த வகுப்புச் சகோதரர்கள் கருதலாகாது. இவர்கள் அறிவு விளக்கத்துக்காக நாட்டுக் கல்வி பயின்று, விவசாய - கைத் தொழில்களை வளர்க்க முயல்வார்களாக. இவற்றால் சுயராஜ்யம் பெறலாம். தாழ்ந்த வகுப்பார் யார்? இனி, இந்தியாவில் பிறந்த ஒரு கூட்டத்தார் தம்மைத் தாழ்ந்தவர் என்று பிறர் கொள்வதாகத் தாங் கருதலாகாது. இந்தியர் அனைவருமே தாழ்ந்த வகுப்பார் என்பது எனது கொள்கை. உலகத்தில் தாழ்ந்த வகுப்பார் என்போர் இந்தியரே என்று யான் கருதி இருக்கிறேன். உலகத்தில் பறையர் என்போர் இந்தியர் என்றே யான் கொண்டிருக்கிறேன். உலகத்தில் தீண்டாதவர் என்போர் இந்தியர் என்றே யான் எண்ணி இருக் கிறேன். பொதுவாக எங்கும், சிறப்பாகக் குடியேற்ற நாடுகளிலும் இந்தியர் நடத்தப்படும் முறைகளைக் கண்டும் கேட்டுமே இம்முடிவிற்கு யான் வந்தேன். உரிமை இழந்த நாட்டவருள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று சொல்லிக் கொள்வது அறி வுடைமையாகாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் சகோ தரரேயாவர். எல்லார்க்கும் சுயராஜ்யம் தேவை. ஒரு சாதி யார்க்கு மட்டும் சுயராஜ்யம் கேட்கப்படவில்லை. எல்லாரும் ஒன்றுபட்டுச் சுயராஜ்ய இயக்கத்தில் சேர்ந்து உழைப்போமாக. ஒத்துழையாமை இருவித சக்தி உலகத்தில் ஒத்துழையாமையும் உண்டு; ஒத்துழைப்பும் உண்டு. இவை இரண்டும் என்றும் இயல்பாக நிலவுவன. ஊடல் - கூடல், பிணக்கம் - இணக்கம், புலவி - கலவி முதலிய வழக்குகள் நமது நாட்டில் தொன்றுதொட்டு ஆட்சியில் இருந்து வருவன. ஊடலின் இயல்புணர்ந்தார்க்கு ஒத்துழையாமை புதுமையாகத் தோன்றாது. ஒத்துழையாமை, அஃறிணை - உயர்திணை ஆகிய எல்லாப் பொருள்களிடத்தும் நிகழ்வது. இயற்கையில் இருவித சக்திகள் இருக்கின்றன. ஒன்று பிரிக்குஞ் சக்தி; மற்றொன்று கூட்டுஞ் சக்தி. இவ்விரண்டு சக்திகள் இயற்கையில் உண்மையால், உலகத்தில் ஊடல் - கூடல் இருப்புப் பெற்றுள்ளன. பிரிக்குஞ் சக்தியின் கிளர்ச்சியால் பொருள் களின் கட்டவிழும்; உயிர்கள் ஊடல்கொள்ளும். கூட்டுஞ் சக்தியின் செயலால் பொருள்கள் கட்டப்படும்; உயிர்கள் கூடலுறும். பிரிக்குஞ் சக்தி எழும்போது கூடலும், கூட்டுஞ் சக்தி இயங்கும்போது ஊடலும் இயற்கையோடு முரணி நிற்பதாகும். இயற்கை நிகழ்ச்சிக்கு முரணிநிற்பின், இன்ப ஊற்றுப் பட்டுப்போகும். உலகத்தில் உடன் பிறந்தவர்க்குள் ஒத்துழையாமை, ஒத்துழைப்பு நிகழ்வதைக் காண்கிறோம். மருகி மாமியோடு கலந்து வாழ்தலையும் வாழாமையையும் பார்க்கிறோம். தலைவி தலைவனோடு ஊடலும் கூடலும் நமக்குத் தெரியும். தொழி லாளி முதலாளியோடு பிணங்கி வேலைநிறுத்தஞ் செய்வதை யும், மீண்டும் இணங்கி வேலை துவங்குவதையும் நாம் அறி வோம். இவ்வாறே இரு நிகழ்ச்சியும், குடும்பங்களில், கிராமங் களில், நாடுகளில் உறுதல் இயல்பு. இவ்வுண்மை தேறுவோர் அரசாங்கத்தோடு குடிகள் ஒத்துழைக்க ஒருப்படாததைக் குறித்து வியப்படையார். பெரியோரும் ஒத்துழையாமையும் ஒத்துழையாமை - ஒத்துழைப்பு என்பன ஞானிகளையும் அன்பர்களையும் விட்டகல்வதில்லை. ஞானிகளும் அன்பர் களும் அறத்தில் ஒத்துழைப்பும், மறத்தில் ஒத்துழையாமையும் கொள்கிறார்கள். புத்தர் அதருமத்தோடு ஒத்துழைத்தனரோ? கிறிது சாத்தானோடு கூடி வாழ்ந்தனரோ? மகம்மது அஞ்ஞானக் கலப்பை விரும்பினரோ? இல்லையே. இயற்கை யில் அமைந்துள்ள இரண்டும், என்றும், எங்கும், எப்பொரு ளிடத்தும், எவ்வுயிரிடத்தும் நிலவிக்கொண்டே யிருக்கும். ஒத்துழைப்பொன்றே அல்லது ஒத்துழையாமை யொன்றே உலகத்தில் நிலவுமேல், உலகம் இன்பவழியில் நடைபெறா தென்பது எனது கொள்கை. அன்பை அடிப்படையாகக் கொண்ட ஊடலால் பின்னைச் சொலற்கரிய பேரின்ப விளைவு உண்டு. பொறாமைப் போர் இவ்வுலகம் எத்துணையோ கடும் போர்களைக் கண்டிருக் கிறது. இப்போர்கள் யாவும் ஒத்துழையா உணர்வாலல்லவோ நடைபெற்றன? ஒத்துழைப்பொன்றே மக்கள் இயல்பாயின், போர்கள் தோன்றுவானேன்? ஐரோப்பாவில் நடைபெற்ற பெரும் போருக்குக் காரணம் யாது? இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் நேர்ந்த ஒத்துழையாமை யன்றோ? ஆனால் ஈண்டு ஒன்று நோக்கற் பாற்று. இதுகாறும் நடைபெற்ற பெரும் போர்களெல்லாம், பொறாமையை அடிப்படையாகக் கொண்டு, கருவிகளால் உயிர்க் கொலை நிகழ்த்தினமையால், உலகில் மக்கட்டன்மை பண்படாது, இயற்கை இன்பம் நிகழாதொழிந்தது. இதை அறிஞர் நோக்குவாராக. பொறுமைப் போர் இப்பொழுது நம் ஐயன் - எதற்கும் அஞ்சாத மெய்யன் - மகாத்மா காந்தி - முயற்சியால் எழுந்த ஒத்துழையாமை, பொறுமையை அடிப்படையாகக் கொண்டது; கொலையை அறவே தொலைப்பது; மக்கள் இயல்பைப் பண்படுத்துவது; எவர்க்கும் இன்பம் நல்குவது. நம்மை ஆளவந்த காந்தியடிகளின் ஒததுழையாப் போர் உலகத்து மக்களிடைப் பதிந்துள்ள மாசுகளை எல்லாம் கழுவ எழுந்த அருட்போர். இப்போர் எந்நாட்டார் மீதாதல், எவ்வகுப்பார் மீதாதல், எவ்வுயிரின் மீதாதல் வெறுப்புக் கொண் டெழுந்ததன்று. இப்போருக்குப் பொறுமை என்னும் பூமியே களம்; உண்மையும் அஞ்சாமையும் கருவிகள்; கொலை களவு கள் காமம் பொய் என்பன ஒன்னலார். இத்தகைப் போர் கிரீஸில் ஒருகாலத்தில் நிகழ்ந்தது; பின்னைப் பாலதீனத்தில் நடந்தது. முன்னைப் போர்த் தலைவரை அரசாங்கம் நஞ்சூட்டிக் கொன்றது; பின்னைப் போர்த் தலைவரை அரசாங்கம் சிலுவையில் அறைந்து கொன்றது. முன்னை ஸாக்கரிட்டிஸும், பின்னைக் கிறிதுவும் மீண்டும் ஓர் உருக்கொண்டு வந்தாலெனக் காந்தியடிகள் இவண் போந்து, இஞ்ஞான்று அப்போரைத் தொடங்கினார். ஈங்குள்ள அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்திருக்கிறது. முகத்திற் கண்கொண்டு பார்க்கும் மூடருக்குக் காந்தியடிகள் சிறை, சிறையாகத் தோன்றும். அகத்தில் கண்கொண்டு நோக்கும் அறிஞருக்கு அவரது சிறை, இன்ப நிறைவாகத் தோன்றும். சத்தியாக்கிரகிகள், எவர்க்கும் எக்காரணம் பற்றியும் கேடு சூழாது, வருத்தந் தாராது, எல்லாக் கேட்டையும் வருத்தத்தை யும் தாங்களே ஏற்றுக் கொள்வார்கள். இங்கேயே மனித வாழ்வின் நுட்பம் இருக்கிறது. எங்கே துன்பம் உண்டோ அங்கே பேரின்ப வீடிருக்கிறது என்று ஆகார் ஒயில்ட் என்னும் அறிஞர் சிறையிலிருந்து கூறினார். உண்மையில் உறுதிகொண்டுள்ள காந்தியடிகள் ஒத்தழையாமையில் திடீரென இறங்கினாரில்லை. அவர் நீண்டகாலம் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து ஒத்துழைத்துப் பயன் விளையாமை கண்டு ஒத்துழையா நெறி பற்றினார். முலிம் தலைவர்களும் ஒத்துழையாமைக்கு உடன்பட்டார்கள். காங்கரஸும், முலீம் லீக்கும், கிலாபத் கூட்டமும் ஒத்துழையா மையை ஆதரித்தன. தேச மகாசபைகள் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து ஒத்துழைத்துச் சலிப்புற்று, முடிவில் பஞ்சாப் படுகொலைக்கும், கிலாபத்துக்கும் நியாயம் பிறவாமை கண்டு காந்தியடிகளோடு கலந்து உழைக்க ஒருப்பட்டன. காந்தியடி களும், தேசபக்த சிங்கங்களாகிய அலி சகோதரரும் ஒத்துழை யாமையைப் பற்றிப் பேசியவிடங்களில் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்காகத் திரள் திரளாகக் கூடினமையும், இருபத் தையாயிரம் தேசபக்தர்கள் சிறை புகுந்துள்ளமையும் ஒத்துழை யாமையின்மாட்டு நாட்டார்க்குள்ள ஆர்வத்தைப் புலப்படுத்து கின்றன. ஒத்துழையாத் திட்டங்கள் காங்கர வேளைக்கு வேளை கொல்லாமையை அடிப் படையாகக் கொண்ட ஒத்துழையா இயக்கத்தை வளர்க்கத் திறம்படப் படிகளை வகுத்து வந்தது பெரிதும் போற்றத்தக்கது. காங்கர முதல் முதல் சட்டசபை விலக்கு, பிரிட்டிஷ் நீதிமன்ற விலக்கு, அரசாங்க உதவி பெறும் பள்ளி விலக்கு ஆகிய மூன்று திட்டங்களை விதித்தது; பின்னை ஒருகோடி ரூபா, ஒருகோடி அங்கத்தவர், இருபது லட்சம் சர்க்கா சேர்க்குமாறு பணித்தது; இப்பொழுது கதர் உடை அணிதல், கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழித்தல் என்னும் மூன்றை வகுத்திருக்கிறது. இவற்றை முறையே நாட்டார் முற்றும் செய்கையில் நிறைவேற்றி இருப்பாராயின், சுயராஜ்யம் 1921ஆம் ஆண்டு ஆகட் மாதம் மலர்ந்து உரிமை மணம் வீசிக் கொண்டிருக்கும். வயித்தியன் மருந்து கொடுப்பான். பத்தியம் இருக்க வேண்டிய கடமை யாருடையது? மூர்க்க சக்தி கேடே பார்தோலி என்னும் பதி, ஒத்துழையாத் திட்டங்களை அவ்வவ்வேளையில், காங்கர பணிக்குமாறு, செய்கையில் நிறைவேற்றி வந்தமையான், அது கூட்டச் சட்ட மறுப்புக்குப் பண்பட்டிருந்தது. அப்பதியின் ஊக்கத்தைச் சௌரி சௌரா கொலை அடக்கிவிட்டது. இளவரசர், பம்பாயிலும் சென்னை யிலும் போந்தபோது, அவ்விடங்களில் எழுந்த மூர்க்க சக்தி, காந்தியடிகள் மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்த வேளையில், நெருப்பில் நெய் சொரிந்தாற்போலச் சௌரி சௌரா கொலை நிகழ்ந்தது. காந்தியடிகள் இன்னும் நாட்டில் வெகுளி அலை சீறி எழுந்து வீசிக் கொண்டிருக்கிறது என்று கருதிச் சட்டமறுப்பையே நிறுத்தினார். ஒத்துழையா இயக்கம் கூட்டங் கூட்டமாகச் சட்டமறுக்கும் உச்சி ஏறி, நாட்டின் பொறுமையை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறது. இவ்வேளை யில் நாட்டின் நிலை நோக்கிக் காந்தியடிகளுஞ் சிறைபுகுந்தார். காந்தியடிகள் சிறைக்குக் காரணம் நாட்டில் அயல்நாட்டு உடைகள் நடமாடுதலும், சிற்சில இடங்களில் பொறுமை இழத்தலும், தீண்டாமையும் காந்தியடி களுக்குச் சிறைவாழ்வை நல்கின. நாட்டிலுள்ள அனைவரும் பொறுமைக்கு அறிகுறியான கதராடை அணிந்தால், யாவரும் தீண்டாமையை ஒழித்தால், காந்தியடிகள் சிறை - அதாவது நாட்டின் சிறை ஒழியும். நம் பொருட்டாக உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்து, பிணி மூப்பு தளர்ச்சி முதலியவற்றையும் கருதாது, இடையறாது நமது நலனையே நினைந்து நினைந்து உழைத்த ஒரு பெரியார் சொல்வழி நில்லாது, அவரைச் சிறைக்கனுப்ப நாமே காரணராக நின்றால், நம்மினுங் கொடியர் - நன்றியில்லாதவர் - இரக்கமில்லாதவர் - பிறர் இருப்பரோ? காந்திக்கு ஜே என்று கூவி, அயல்நாட்டு உடையை அணிவதால் என்ன பயன் விளையும்? அவ்வாறு செய் வது காந்தியடிகளை அவமானப்படுத்துவதாகும். உண்மை யாகக் காந்தியடிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டுமானால், அவ்வன்பைக் கதருடையால் காட்டல் வேண்டும். கதர் காந்தியடிகள் சிறை புகுந்தபோது கதர் என்ற ஒருமொழி அருளினார். அம்மொழியிலுள்ள பொருளைக் கூறவும் வேண்டுமோ? கதரே நமது செல்வம்! கதரே நமது வாழ்வு; கதரே நமது உயிர்; நமக்குச் சுதந்திரத்தை - உரிமையை - சுயராஜ்யத்தை - கொடுக்கவல்லது அதுவே. அதுவே நமது நாட்டுச் சின்னம்; சமயச் சின்னம்; அதை ஏன் அணிதலாகாது? காந்தியடிகள் சுயராஜ்யத்துக்காகப் பொன் கேட்க வில்லை; பொருள் கேட்கவில்லை; உயிர் கேட்கவில்லை; கதர் அணியுமாறு கேட்கிறார். நாட்டுக்காக இச்சிறுதொண்டு செய்தலாகாதா? இரத்தஞ் சிந்தல் இல்லாமல் உயிர்ப்பலி இல்லாமல், பொருட் சேதம் இல்லாமல், கதர் என்னும் ஒன்றால் சுயராஜ்யப் பேற்றை உதவ இனி எவரே வரப்போகி றார்? காந்தியடிகளைப் போன்ற பெரியார் அடிக்கடி தோன்று வரோ? ஒத்துழையாமையின் விளைவுகள் ஒத்துழையா இயக்கத்தால் என்ன விளைந்துவிட்டது! இருபத்தையாயிரம் பேர் சிறை புகுந்தமையே காணப்பட்டது என்று சில சகோதரர் பேசுகின்றனர். ஒத்துழையா இயக்கம் தோன்றி இன்னும் ஈராண்டாகவில்லை. இதற்குள் மக்கள் அடைந்துவரும் நலங்கள் பல. ஒழுத்துழையாமை என்னும் நினைவு தோன்றும் போதே, மக்களுக்கு உண்மைமீது நெஞ்சம் பதிகிறது; சாந்தத்தின்மிது சிந்தை செல்கிறது; அஹிம்சைமீது எண்ணம் ஓடுகிறது. காந்தியடிகள் 1919-ம் ஆண்டு பாஞ்சாலம் செல்லப் புறப்பட்ட போது, டெல்லியில் அவர் தடுக்கப்பட்ட செய்தி ஆங்கு எட்டினதும், அவண் பெருங் கலகம் உண்டா யிற்று. இப்பொழுது காந்தியடிகள் பெற்றுள்ள செல்வாக்கு, அப்பொழுது பெற்றிருந்தார் என்று சொல்லுதல் முடியாது. நாடு முழுவதும் காந்தி மயமாக உள்ள இவ்வேளையில் காந்தியடிகள் சிறை புகுந்தார். எம்மூலையிலாவது சிறு குழப்பமேனும் நிகழ்ந்ததோ? அப்பேச்சையே காணோம். இஃது என்ன குறிக்கிறது? இது நாட்டின் உண்மை, பொறுமை, கொல்லாமை இவற்றைக் குறிக்கிறது. இன்னும் இக்குணங்களை வளர்க்கக் காந்தியடிகள் சிறை புகுந்திருக்கிறார். ஒத்துழை யாமையால் தியாக உணர்வு பரவுகிறது; செல்வ வாழ்வில் வெறுப்புண்டாகிறது; நாட்டு உணர்ச்சி பெருகுகிறது. செல்வத் தில் பிறந்து, செல்வத்தில் வளர்ந்து, செல்வத்தில் புரண்டு வந்த மோதிலால் நேரு, அவர் போன்றார் தமக்குள்ள செல்வத்தை உதறிக் கதருடுத்திச் சிறை புகுந்தனர். அன்னார், தம்மைப் போலவே தங் குடும்பங்களையுங் திருப்பி வருகிறார். மேல்நாட்டுப் பேய் நாகரிகத்தில் அழுந்திக் கிடந்த பலர் பழைய நாகரிகத்தில் பற்றுக் கொள்கிறார். ஒத்துழையாமையால் ஹிந்து - முலிம் என்னும் பசுவும் சிங்கமும் ஒரு துறையில் நீர் பருகுகின்றன; தீண்டாமை அருகுகிறது; குடிகுறைந்து வரு கிறது. சுருங்கக் கூறின், உலகமே இக்கால நாகரிகக் கேட்டை உணர்ந்து வருகிறது என்னலாம். இன்னோரன்ன பயன்கள் ஒத்துழையாமையால் விளைந்து வருகின்றன. ஒத்துழையாமைக்குரிய கருவிகள் ஒத்துழையாமை ஒடுங்கிவிட்ட தென்றும், ஒத்துழையா தார் தோல்வி யடைந்தன ரென்றும் பேசுகிறார். இப்பேச்சுக்குப் பொருளில்லை. ஒத்துழையாப் போர் யாண்டும் எவரும் தொடங்கவில்லை. இதற்குள் வெற்றி தோல்வி கணிப்பது அறிவுடைமையாகாது. பார்தோலியில் ஒத்துழையாப் போர் தொடங்க உறுதி செய்யப்பட்டது. போதிய கருவிகள் (பொறுமை, அஹிம்சை முதலியன) இன்மையால், அவற்றைச் செப்பஞ் செய்யவேண்டிப் போர் நிறுத்தப்பட்டது. இப் பொழுது நாட்டின் நிலையை அளந்துரைக்குமாறு மோதிலால் நேரு, சரோஜினி தேவி முதலியோரை அகில இந்தியக் காங்கர கூட்டம் நியமித்திருக்கிறது. காங்கர திட்டங்களைப் போதிய அளவு இன்னும் நாடு செயலில் நிகழ்த்தவில்லை. ஆதலால், ஒத்துழையாப் போரை இப்பொழுது தொடங்குதலால் நற்பயன் விளையாது. ஹிந்து - முலிம் ஒற்றுமை ஒத்துழையா இயக்கத்துக்கு இன்றியமையாதது ஹிந்து - முலிம் ஒற்றுமை. ஒத்துழையா இயக்கம் ஹிந்து - முலிம் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டே எழுந்தது. நாட்டின் பொருட்டு ஹிந்துக்களும் சிறை புகுகிறார்கள்; முலிம்களும் சிறை புகுகிறார்கள். நாடெனில், ஒத்துழையா இயக்கமெனில், சுயராஜ்யமெனில், ஹிந்து - முலிம் ஒற்றுமை என்று நான் கொண்டிருக்கிறேன். கொரானும் வலியுறுத்தலும் முன்னை நாளில் ஹிந்துக்களுக்கும் முலிம்களுக்கும் அடிக்கடி மதப்போர் நடந்து வந்ததென்று சொல்லப்படுகிறது. அதை அடிக்கடி நினைவூட்டி, இப்பொழுது ஏற்பட்டுள்ள ஹிந்து - முலிம் ஒற்றுமையைக் கெடுக்க ஒத்துழைக்குஞ் சார்பாருட் சிலர் முயல்கிறார். அன்னார் மலையாளத்தில் நடைபெற்ற குழப்பத்தை எடுத்துக் காட்டுகிறார்; சிலர் ஹிந்துக்கள் இலாம் மதத்தில் புகுமாறு வலியுறுத்தப்பட்டதை எடுத்துக் காட்டுகிறார். வலியுறுத்தி இலாம் மதத்தில் பிறரை இழுக்குமாறு கொரான் அறிவுறுத்தவில்லை என்று அலி சகோதரர் உள்ளிட்ட முலிம் தலைவர்கள் நன்கு விளக்கி ஒற்றுமை காத்து வருகிறார்கள். ஒத்துழைக்குங் கட்சியார், ஹிந்து - முலிம் ஒற்றுமையைக் கெடுக்க என்ன சூழ்ச்சி செய்தாலும், அதற்கு ஹிந்துக்களாதல் முலிம்களாதல் எளியராதல் கூடாது. கிலாபத்தென்னும் தெய்விக இயக்கத் தால் ஏற்பட்ட ஒற்றுமையை எக்காரணம் பற்றியும் எவரும் உடைத்துக் கொள்ளலாகாது. காந்தியடிகள், முலிம்களைத் தம் உயிர்போல நேசிக்கிறார்; அலி சகோதரர் அவ்வாறே ஹிந்துக்களை நேசிக்கிறார். காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தில் சேர்ந்ததும், அலி சகோதரர் கோ மாமிசம் புசிப்பதில்லை என்னும் நோன்பைத் தாங்கினார்கள். இஃதன்றோ அன்பு? இஃதன்றோ ஒற்றுமை? இன்னும் ஹிந்து - முலிம் ஒற்றுமையை வளர்க்க எவ்வெம் முயற்சிகள் செய்யப்படவேண்டுமோ, அவ்வம் முயற்சிகள் செய்யப்படல் வேண்டும். முலிம்களும் கதரும் கிலாபத்துக்கு நியாயம் பிறக்கவில்லையே என்னுங் கவலை முலிம்களுக்கு வேண்டுவதில்லை. அதற்கென எழுந்த ஒத்துழையா இயக்கத்தில் அவர்கள் தங்கள் மனத்தை நிறுத்தி அலி சகோதரரைப்போல உழைப்பாராக. அலி சகோதரரை ஈன்ற வீரத் தாயார் - நம் அம்மையார் - முரட்டுக் கதரை அணியுங்கள் என்று சொல்கிறார். முலிம் சகோதரர்களே! கதரணியுங்கள். கிலாபத்துக்கு நியாயம் பிறக்கவேண்டுமானால், உங்கள் புண்ணிய க்ஷேத்திரங்கள் உங்கள் பால் நிலைத்திருக்க வேண்டுமானால், உங்கள் மதம் ஓங்கி வளர வேண்டுமானால் நீங்கள் கதர் அணிதல் வேண்டும். கதர்க்கிளர்ச்சி, கிலாபத் கிளர்ச்சி என்பதை உணர்ந்து, கதரால் கிலாபத்துக்கு நியாயம் பிறக்குமென்பதை அறிந்து கதருடையை அணிந்து, ஆண்ட வனைத் தொழுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மதத்துக்காக உயிரையும் இழக்கச் சித்தமாயுள்ள முலிம் வீரர்களே! மதத்துக்காகக் கதரை யுடுத்தல் உங்களால் இயலாதா? இக்கால நிலை காந்தியடிகள் பெருமை காந்தியடிகள் சிறைபுகுந்த நாள்தொட்டு, உலகம் இந்தியா மீது கருத்தைச் செலுத்திவருகிறது. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள அறிஞர் காந்தியடிகள் ஆத்ம சக்தியை வியந்து வியந்து பாராட்டுகிறார். ஹோம், வால்ஷ், வெல்லாக் முதலியோர் காந்தியடிகளைப் புத்தர் கிறிது போன்ற பெரியார் என்று போற்றுகிறார். காந்தியடிகள் ஆத்மசக்தி மிக நுட்பமாக உல கில் தனது அருட்டொண்டைச் செய்துவருகிறது. நியாயத்திற் சிறந்த லார்ட் ரெடிங் அடக்குமுறைக்கச்சை இன்னும் அவிழ்க்க வில்லை. 144, 107, 108, 110, 124 முதலிய சட்டங்கள் தேசபக்தர்களை விழுங்கிய வண்ணம் இருக்கின்றன. தேசபக்தர்கள் சிறை புகுந்து கொண்டே யிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அமைதி நிலவி இருத்தல் தெரியவில்லை. அயர்லாந்து, எகிப்து ஆகிய இவ்விடங்களில் இன்னும் மகிழ்ச்சி பொங்கவில்லை. காத்லந்தும் தன்னுரிமை பெற மூச்சு விடுகிறது. குடியேற்ற நாடுகளில் நிற வேற்றுமைப் போராட்டம் பெருகுகிறது. நமது இந்தியாவில் லார்ட் ரெடிங்கின் அடக்குமுறையும், காந்தியடிகளின் அன்புமுறையும் உலவுகின்றன. இந்தியாவும் அமைதியும் நியாய வடிவான லார்ட் ரெடிங்கின் அடக்குமுறையால் காந்தியடிகளின் அன்பு முறை கொழுமை பெற்று வருகிறது. லார்ட் செம்பர்ட் ஒத்துழையா இயக்கத்தை மருட்டி ஒழிக்கப்பார்த்தார். லார்ட் ரெடிங் அடக்குமுறை வீச்சால் அதன் வேரைக் கல்லப் பார்க்கிறார். இளவரசர் இந்தியா போந்த போது, லார்ட் ரெடிங் அடக்கு முறையை மிகக் கடுமை யாகக் கையாண்டார். அவ்வேளையிலேயே ஒத்துழையா இயக்கம் உரம்பெற்றது. சிறந்த தேசபக்தர் சிறை புகாவிடின், ஒத்துழையாமை ஒடுங்கி யிருக்கும். தேசபக்தர் சிறையே ஒத்துழையாமைக்கு உயிரளித்துக் கொண்டிருக்கிறது. அடக்கு முறையால் யாண்டும் அமைதி நிலவாது. அமைதிக்கு அடிப் படை அன்பு முறை. இந்தியா ஒரு பெரிய நாடு; ஒரு கண்டம் போன்றது; அன்பிலும் அறிவிலும் அடக்கத்திலும் பேர்பெற் றது; கொல்லாமையில் விருப்பும் கொலையில் வெறுப்பும் உடையது. இத்தகையநாடு ஏதோ ஊழ்வலியால் உரிமை இழந்தது. இந்திய நாட்டால் மேல்நாடே கொழுத்து விட்டது என்னலாம். இப்பொழுது இந்தியா உரிமை வேட்கையால் கொல்லாமையை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழையாமை என்னும் இரத்தஞ் சிந்தாத ஆத்ம சக்திப் போர் செய்கிறது. எந்நாட்டில் இத்தகைய அருட்போர் புரிந்து தாங்களே வலிந்து தேச பக்தர்கள் சிறை புகுந்தார்கள்? புகுகிறார்கள்? இந்தியாவில்அதிகாரவர்க்கத்தார் அடக்குமுறைச் செயல் ஒருபால் கிடக்க. இந்தியாவின் நலத்துக்கென உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அன்னிபெசன்ட் அம்மையார் கூட்டம், ஸ்ரீநிவாச சாதிரியார் சங்கம், வேறு பல மிதவாதக் குழாம், ஜடி கட்சி முதலிய ஒத்துழைக்கும் இனங்களின் நிலை எவ்வாறிருக்கிறது? அன்னி பெசண்ட் அம்மையார் அன்னிபெசண்ட் அம்மையார் எழுதிவருவதையும் பேசி வருவதையும் ஆராய்ந்து பார்த்தால், அம்மையாரை மேல் நாட்டியல்பு இன்னும் விட்டகலவில்லை என்பதும், காந்தியடி களின் உள்ளக்கிடக்கையை அறியும் அற்றல் அவர்க்கில்லை என்பதும், புலனாகின்றன. அம்மையார் எக் கட்சியில் சேரினும் சேர்க; என்ன எழுதினும் எழுதுக; என்ன பேசினும் பேசுக. அவற்றைப் பற்றி யான் வருந்தவில்லை. அம்மையாருடைய அடக்கு முறையால் டாக்டர் சுப்பிரமணிய ஐயருடைய அறிவும், என் நண்பர் வாடியாவின் வீரமும், வேறு சில அன்பர்களது ஆத்ம சக்தியும் நாட்டுக்கு இதுபோழ்து பயன்படாமலிருப் பதைக் குறித்து யான் வருந்துகிறேன். ஸ்ரீ நிவாச சாதிரியாரும் இருவித பாவமும் ஸ்ரீ நிவாச சாதிரியார் சிறந்த கலைவாணர்; மேல்நாட்டு அரசியல் ஞானி; நாவன்மையுடையார்; ஆனால் தாம் பிறந்த நாட்டினிடத்தில் பற்றில்லாதவர். பெருங்காற்றிடைப்பட்ட நாவாயென நாடு இடர்க்கடலில் வீழ்ந்து தவிக்கும் இவ்வேளை யில், அதிகாரவர்க்கத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாய் மேல் நாட்டு உடைகளை உடுத்திச் சுவைபொருந்திய விருந்து களைப் புசித்து, கை காட்டி, நா நீட்டி, இந்தியா இன்பம் நுகர்கிறது என்று கூறி, நாடு நாடாகத் திரிந்துவருஞ் சாதிரி யாரைத் தேசபக்தர் என்று கூற எனது நா எழவில்லை. சாதிரி யார் நாடு நாடாகத் திரிந்து வருவதால், அவர் சிறப்பாக இருவிதப் பாவத்துக் குள்ளாகிறார். அவருடைய பேச்சால் இந்தியாவின் உண்மை நிலை உலகத்தார்க்கு விளங்கா தொழி கிறது. இஃதொரு பாவம். ஆங்காங்கே இவர்க்கு நடக்குஞ் சிறப்புக்களைப் பத்திரிகைகளில் வாசிக்கும் (ஆங்கிலத்தில்) நாவன்மையுடையார், நாமும் அதிகார வர்க்கத்துக்குத் துணை புரிந்தால் சாதிரிபோலப் பல நாடுகளைப் பார்க்கலாமே, பேசலாமே, சிறப்புக்கள் பெறலாமே என்று எண்ணித் தேசத் துரோகத்தில் மனத்தைச் செலுத்துவர். இது மற்றொரு பாவம். சாதிரியார் செயலால் நலம் விளையாதொழியினும், கேடு விளையாதிருந்தால் போதும். அவர் செயலால் கேடு விளை கிறது. ஸர் சங்கரன் நாயர் சில மிதவாதிகள் மந்திரி பதவிகளை ஏற்றும், பட்டங்களில் புரண்டுங் கிடக்கிறார்கள். சிலர் அதிகார வர்க்க ஆட்சிமுறை அழியாதிருக்கும் முறைகளைக் கோலிக்கொண்டிருக்கின்றனர். அவருள் ஒருவர் ஸர் சங்கரன் நாயர். இக்கூற்றை அவர் எழுதிய காந்தியும் அராஜகமும் என்னும் நூல் வலியுறுத்தும். பண்டித மாளவியர் மிதவாதிகளுள் உண்மையாளர் உண்மை வழி கடைப் பிடிக்க முயல்கிறார். பண்டித மதன்மோகன் மாளவியர் எவ் வளவு பிடிவாதமாக ஒத்துழையா இயக்கத்தை வெறுத்தார்? காந்தியடிகள் காசிக்குச் சென்று பள்ளி விலக்கைப்பற்றிப் பேசியபோது, மாளவியர் அவரை எதிர்த்தார்; இளவரசரை வரவேற்றார்; சமாதானத்துக்காகப் பலமுறை தூது நடந்தார்; முடிவில் ஒத்துழையாக் கட்சியில் நியாயமிருப்பது கண்டார். ஜடி கட்சி ஜடி கட்சி இப்பொழுது அதிகாரவர்க்க வண்டிக்குச் சக்கரமாக இருந்து வருகிறது. அக்கட்சியினரையும் விரைவில் காந்தியடிகளது ஆத்ம சக்தி ஆட்கொள்ளும். இப்பொழுதே சில இளைஞரை மகாத்மாவின் ஆத்ம சக்தி இழுத்திருக்கிறது. ஜடி கட்சித் தலைவர்களும் சுதந்திரக் கிளர்ச்சியில் சேர்வார்கள். ஆனால் அவர்களை உத்தியோக மென்னுஞ் சிறை யில் பட்டமென்னும் பாசம் பிணித்திருக்கிறது. அக் கட்சியார், சட்டசபையில் பிராமணர் நிரம்பிவிடுவர்; உத்தியோகங்களில் பிராமணர் நிரம்பிவிடுவர். பிராமணரல்லாதாரே! எச்சரிக்கை; எச்சரிக்கை என்று பிரசார வேலை செய்கிறார். பிராமணரிடத் தில் அவர்க்கு அவ்வளவு அச்சம் பிறந்திருப்பதற்குக் காரணந் தெரியவில்லை. பிராமணர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டே அதிகாரவர்க்கத்தைத் தாம் தாங்கி நடப்பதனால் நாட்டுக்கு விளையுந் துன்பத்தை அக்கட்சித் தலைவர் கருதுவதில்லை. பிராமணர் கடமை பிராமணர் தந் தியாகத்தால் ஜடி கட்சியை நசுக்கலாம். ஸ்ரீ மான்களாகிய ஸி. இராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், ஆரணி சுப்பிரமணிய சாதிரியார் முதலிய அந்தண ருடைய தியாகம் எத்துணையோ ஜடி கட்சி இளைஞரை ஒத்துழையாமையில் ஈர்த்திருக்கிறது. பிராமண சகோதரர்கள் ஸி. இராஜகோபாலாச்சாரியாரைப் பின்பற்றித் தியாகத்தில் கருத்தைச் செலுத்துவார்களாக. ஜடி கட்சியாரோடு உத்தியோகத்துக்கும், பட்டம் முதலியவற்றிற்கும் போட்டி போடும் பிராமணரால் அக்கட்சி வலுக்குமென்று எனது அநுபவம் எனக்கு அறிவுறுத்துகிறது. ஒத்துழைக்குங் கூட்டத்தார் நிலை இவ்வாறாக, ஒத் துழையாக் கட்சியில் சேர்ந்த சிலரையும் சட்டசபை மாயை சிறிது மயக்குகிறதென்று தெரிகிறது. அம்மாயைக்குச் சிறிது இடந்தந்தால், அது பின்னால் ஒத்துழையாமையையே மயக்கி விழுங்கிவிடும். காங்கர, சட்டசபை விலக்கைக் கடைப் பிடித்தே நிற்றல் வேண்டும். ஒத்துழைக்கும் உலகின் இக்கால நிலையை நாம் மேலும் மேலும் ஆராயவேண்டுவது அநா வசியம். காங்கர திட்டம் உண்மைச் சுயராஜ்யம் எது? இப்பொழுது காங்கர வகுத்துள்ள திட்டங்கள் மூன்று. அவை : கதருடை, கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழித்தல் என்பன. இம் மூன்றும் உலக சுயராஜ்யத்துக்கு அடிப்படை யாகும். கதராவது கையால் நூற்கப்படும் நூலால் நெய்யப்படும் துணி. உலகத்துள்ள அனைவரும் இத்துணி உடுத்தினால், மனித வாழ்வைக் கெடுத்துவரும் இயந்திரங்கள் ஒழியும்; இயந்திரங்கள் ஒழிந்தால் முதலாளி கூட்டமே அருகும்; முதலாளி கூட்டம் அருகினால், முதலாளி அரசுகள் மாறும்; முதலாளி அரசுகள் மாறினால், ஒவ்வோருயிருஞ் சுயராஜ்யம் பெறும். முதலாளிகள் அரசு நடைபெறும் எவ்விடத்திலும் உண்மைச் சுயராஜ்யம் அரும்பாது. இப்பொழுது செல்வம் ஒரு கூட்டத்தாரிடத்தில் பெருகி வருகிறது; மற்றொரு கூட்டத்தாரிடத்தில் சுருங்கி வருகிறது. கடவுள் படைப்புக்கு உட்பட்ட பொருள்கள் எல் லார்க்கும் பொதுவாகப் பயன்பெறல் வேண்டும். உலகத்தில் முதலாளி - தொழிலாளி என்றபிரிவே ஒழிதல் வேண்டும். அப்பிரிவு ஒழிய, முதலாளிகள் சங்கங்கள், அவர்களுடைய அரசுகள், அவர்களுடைய பத்திரிகைகள் முதலியன எளிதில் விடுமோ? உலகத்திலுள்ள முதலாளிகளுக்குச் செழுமை நல்கி வரும் இயந்திரங்களை அழிக்கும் ஆற்றல் கதருக்கு உண்டு. எனவே, கதர், உலகத்திலுள்ள மக்கள் துன்பத்தைப் போக்கி, ஒவ்வோர் உயிர்க்கும் இன்பத்தை அளிக்கவல்ல தென்பது பெறப்படுகிறது. குடி கட்குடியால் மக்கள் மாக்களாகிறார்கள். கட்குடி ஒழிவு ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாதது. கட்குடி ஒழிவும் உலகத்துக்குப் பொதுவானது. செல்வப்பொருள், தொழிலாளி யினிடம் திரளாதவாறு, முதலாளி இயந்திரங்களால் அதைத் தகைவதோடு நில்லாமல், கள்ளுக்கடையால் தொழிலாளியின் ஊதியத்தைப் பிடுங்கி, அவன் அறிவு, ஆராய்ச்சியில் நுழை யாதவாறு மயக்கிவிடுகிறான். ஆதலால், கட்குடி ஒழிவால் தொழிலாளி பொருள் சேர்த்துக் கொள்வதோடு, அறிவு மயங்காது ஆராய்ச்சியில் தலைப்படுவான். அப்பொழுது தொழிலாளி, தன் உழைப்பால் முதலாளி கொழுத்து, அவ னுக்குத் துணை செய்யவேண்டி அவன் தன்னினத்தைக் கொண்டு அரசு முதலியவற்றை வகுத்து, தனக்குரிய பொருளை அவன் கவருவதை நன்கு உணர்ந்து சுதந்திரம்பெற எழுவான். ஆதலால், கள்ளுக்கடை மறியல் உலக சுயராஜ்யத்துக்கு இன்றியமையாததே. தீண்டாமை தீண்டாமை, பிறப்பாலோ நிறத்தாலோ செல்வத்தாலோ கல்வியாலோ மற்றெதனாலோ உண்டாகிய உயர்வு தாழ்வு காரணமாக ஏற்பட்டது. தீண்டாமை இந்தியாவில் மிகக் கொடுமையாக ஆளப்படுகிறது. மற்ற இடங்களில் அஃது அவ்வளவு கொடுமையாக இயங்காவிடினும் மிக நுட்பமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தீண்டாமை நீக்கம், எவ்வெத னாலோ ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வை அகற்றிச் சமத்துவத் தையும் சகோதரத்துவத்தையும் உண்டுபண்ணி, முடிவில் சுதந்திரத்தையும் நல்கவல்லது. தீண்டாமை ஒழிவும் உலக சுயராஜ்யத்துக்கு உறுகருவியாம். இம்மூன்று திட்டங்களில் மிதவாதம் இருக்கிறதா? அமிதவாதம் இருக்கிறதா? பிராமணர் கட்சி இருக்கிறதா? பிராமணரல்லாதார் கட்சி இருக்கிறதா? இவை மூன்றும் சமம், சகோதரம், சுதந்திரம் என்னும் மூன்றையும் விரும்பும் ஒவ் வொருவராலுங் கொள்ளப்படலாம். நமது வேலை தான் பொது காங்கர திட்டங்களைப் பற்றிப் பேசலாம்; எழுதலாம். ஆனால் அவற்றைச் செய்கையில் கொணர்வது அருமை. காங்கர கூட்டத்தார் தமக்குள் ஒழுங்குபட்ட அமைப்பை முதலாவது செப்பஞ் செய்துகொள்ளல் வேண்டும். அமைப்பு முறை இந்தியரிடங் குறைவு என்று சொல்லப்படுகிறது. நம்மவர் இப் பேர் வாங்குவதற்குள்ள காரணம் ஒன்றுண்டு. அது, நம்மவர் பொதுவினையை வேறாகவும் தன்னை வேறாகவும் பெரிதுங் கொள்ளாமை என்க. தன்னைப் பொதுவினைகளில் நுழைப்பதனால், அமைப்பும் ஒழுங்கும் இடர்ப்பட்டு, உழைப்புங் கெடுகிறது. தன் பெருமை சிறுமை நாட்டத்தால் பொதுவினை களை வளர்ப்பதும் தேய்ப்பதும் அறிவுடைமையாகா. நாட்டு நலன் ஒன்றே நாடிக் காங்கரஸில் சேர்தல் சிறப்பு. காங்கர கிளைகள் கொழுமை பெற்றால், காங்கர மரம் ஓங்கி வளரும். ஆதலால், அமைப்பும் ஒழுங்கும், தாலுக்கா காங்கர கூட்டம், ஜில்லா காங்கர கூட்டம் இவற்றினின்றும் கிளம்புதல் நல்லது. ஒழுங்குபட்ட அரசாங்கம் போலக் காங்கர நடைபெறல் விழுப்பம். காங்கர கிளைச் சபைகளின் அமைப்பும் ஒழுங்கும் செம்மையாயிருப்பின், போலிக்கதர்கள் நடமாடுமோ? போலிக் கதர்கள் நடமாட்டம், காங்கர கிளைச்சபைகளின் அமைப்புக் குறைவையும், ஒழுங்கின்மையையும், கவலையீனத்தையுங் காட்டுகிறது. ஒத்துழையாமைக்கு அடிப்படையான அஹிம்சை மறுப்பும், சிற்சில இடங்களில் நிகழ்ந்ததற்குக் காரணம், காங்கர கூட்டங்களின் அமைப்புக் குறைவேயாகும். காங்கர கூட்டங்களின் அமைப்புக் குறைவால் தெரிந்தோ தெரியாமலோ உண்மைக்கு மாறுபட்ட நடைமுறைகள் நிகழலாம். ஆதலால், நமது வேலை ஒழுங்காக நடைபெற வேண்டுமாயின், அதனால் உறுதிப்பயன் உண்மையாக விளைய வேண்டுமாயின், அமைப்பும் ஒழுங்கும் பாதுகாக்கப்படல் வேண்டும். தாய்மொழிப் பற்று நாட்டுக்குரிய கல்வி, தொழில், வழக்க ஒழுக்கம் முதலிய வற்றில் பற்றுடையார் நாட்டுக்குத் தொண்டு செய்ய முற்படுவது நலம். இன்னுந் தமிழ்நாட்டுக் காங்கரகாரரை ஆங்கிலப் பித்து விடவில்லை. தாய்மொழியில் வங்காளிகளுக்குள்ள பற்று, தமிழருக்கில்லை என்று மிக வருத்தத்தோடு கூறுகிறேன். கவியரசராகிய ரவீந்திரநாத் தாகூர், பெரிதும் முதலில் வங்காள மொழியில் பாக்களை யாத்துப் பின்னர் அவற்றை அழகுபெற ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். ஜெகதீச சந்திர போ முதலிய மேதாவிகளும் தாய்மொழியில் பற்றுடையவர்களாய் வாழ்கிறார்கள். நமது தமிழ் நாட்டில் தாய் மொழியில் பற்றுடைய பெரியோர் ஒரு சிலரே என்னலாம். நாட்டு மொழியில் பற்றின்றிச் செய்யப்படும் நாட்டுப் பணிகள் நற் பயனை விளைத்தல் அரிது. நமது நாட்டை இந்நிலைக்குக் கொணர்ந்தது ஆங்கிலக் கல்வி என்று யான் கூறுவேன். அதிகார வர்க்கத்துக்குத் துணை புரிவோர் எம்மொழி பயின்றோர்? பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் பற்றுக் கொண்டு அவற்றை விடுத்து விலக மனங்கொள்ளாதவர் எம்மொழி பயின்றோர்? நாட்டுணர்ச்சி பெரிதுமின்றித் திரிவோர் எம்மொழி பயின்றோர்? ஆங்கில மொழியில் எனக்கு வெறுப் பில்லை. அறிவு வளர்ச்சிக்கு அம்மொழி பயில்வதால் தீமை விளையாது. அறிவு வளர்ச்சிக்கு ஆங்கிலம் படித்தாலென்ன? ஜெர்மன் படித்தாலென்ன? இப்பொழுது அடிமை உணர்ச் சியை வளர்த்துவரும் ஆங்கிலம், இந்தியாவிற்குப் பொது மொழியா யிருப்பதால், அம் மொழிக்குப் பதிலாக ஹிந்தியைப் பொதுமொழி யாக்கவேண்டுமென்று மகாத்மா காந்தி முயன்று வருகிறார். மாகாண காங்கர கூட்டங்களின் நிகழ்ச்சி முறை கள் தாய்மொழியிலேயே நடத்தப்படலாம். தமிழ்நாட்டுக் காங்கர, அடிமை உணர்ச்சியை வளர்க்கும் ஆங்கில மொழி யில் அறிவைச் செலுத்தாது, நமது அழகிய தமிழ்மொழியில் அறிவைச் செலுத்துவதாக. தமிழுக்கு உறையுளாகிய இத் திருநெல்வேலி ஜில்லா வாசிகளாகிய உங்களுக்குத் தமிழ்ப் பற்றை வளர்க்கும் முறைகளை நான் ஓத வேண்டுவதில்லை. காங்கர தொண்டு செய்ய வருவோர் தாய்மொழியில் அள விறந்த பற்றுடையவரா யிருத்தல் வேண்டும். பஞ்சாயத்து காங்கர தொண்டர்கள், காங்கர சபைகளை அமைப்ப திலும், பஞ்சாயத்துக்களை ஏற்படுத்துவதிலும், நாட்டுக் கல்லூரி களைக் காண்பதிலும் மிக ஊக்கங் கொண்டு உழைப்பார்களாக. பஞ்சாயத்தின் வாயிலாக எல்லாஞ் செய்யலாம். பண்டை நாளில் நமது நாட்டை ஆண்டு வந்தது பஞ்சாயத்தே என்று கூறலாம். அமைதியை நிலைபெறுத்தி, நீதியை வழங்கி வந்தது பஞ்சாயத்தே. கோயில் குளங்கள் சத்திரஞ் சாவடிகள் முதலிய வற்றைப் பாதுகாத்து வந்தது பஞ்சாயத்தே. பஞ்சாயத்தால் பண்டை நாளில் விளைந்த நலன்கள் பலப்பல. அப் பஞ் சாயத்தைக் காங்கரகாரர் கிராமங்களில் ஏன் இப்பொழுது ஏறபடுத்தலாகாது? பஞ்சாயத்து அமைப்பு முறை உதாரணமாக இத் தென்காசி தாலுக்காவை எடுத்துக் கொள்வோம். இத் தாலுக்காவில் ஏறக்குறைய நூறு கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏறக்குறைய இரண்டேகால் லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுள் ஐயாயிரம் பேருக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கலாம். இரண்டு கிராமங்களுக்கு ஒரு பஞ்சாயத்து அமைக்கலாம். பஞ்சாயத்தால் அமைதி காக்க லாம்; நீதி வழங்கலாம்; கல்வி அறிவை வளர்க்கலாம்; கைத் தொழில்களைப் பெருக்கலாம்; விவசாயம் முதலியவற்றைப் பண்படுத்தலாம். பஞ்சாயத்துச் செலவுக்கு மக்களிடத்திலிருந்து சிறு தொகை பெறலாம். ஐயாயிரம் பேருக்கு ஒரு பஞ்சாயத் திருப்பதால் அதன் நடைமுறை கிராமவாசிகளுக்கு நன்கு தெரியும். ஊழல்கள் பெரிதும் நிகழா. நிகழின், தேர்தலில் கிராமவாசிகள் நன்மக்களைத் தெரிந்தெடுத்துப் பஞ்சாயத்தைத் தூய்மைப் படுத்துவார்கள். ஐம்பது பஞ்சாயத்துக்களுக்கு ஒரு தலைமைக் கூட்டமிருத்தல் வேண்டும். அக்கூட்டம் பஞ்சாயத்தி னின்றுந் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆக்கப்படல் வேண்டும். இம் முறை வழி - கிராமங்களிலிருந்து தாலுக்கா, தாலுக்காவிலிருந்து ஜில்லா, ஜில்லாவினின்றும் மாகாணம், மாகாணத்தினின்றும் தேசம் - நடைபெறல்வேண்டும். இம் முறையைக் குறிக்கொண்டு காங்கர நிற்றலால், காங்கர தொண்டர்கள் பஞ்சாயத்து அமைக்க முயல்வார்களாக. நாட்டுக் கல்வி இப்பொழுது நாட்டுக் கல்லூரிகள் அமைக்க வேண்டுவது நமது கடமைகளுள் ஒன்று. அக் கல்விக்குக் காங்கரஸைப் பொருளுதவுமாறு சில சகோதரர்கள் விண்ணப்பஞ் செய் கிறார்கள். காங்கர பல துறைகளில் இறங்கி உழைத்து வருதலால் இவ்வேளையில் நாட்டுக் கல்விக்குப் போதிய பொருளுதவிசெய்ய இயலாத நிலையில் அஃது இருக்கிறது. காங்கர ஊழியர் ஆங்காங்கேயுள்ள செல்வரைக் கொண்டு நாட்டுக் கல்லூரிகளை நடத்த முயல்வது சிறப்பு. பாழுக்குப் பதினாயிரம் செலவழிப்போர் பாரத நாட்டுக் கல்விக்கு ஆயிரம் உதவமாட்டாரா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இப்பொழுது - இக்கால நிலையில் - தெருப் பள்ளிக் கூடங்களை - திண்ணைப் பள்ளிக்கூடங்களை - கிராமங்களில் அமைக்க முயல்வது நலம். அதற்குப் பெரும்பொருள் வேண்டுவ தில்லை. பழங்கிழவர்களைத் தூண்டி, அவர்கள் வாயிலாகத் தெருப் பள்ளிக்கூடங்களை அமைத்துக் கொண்டே போகலாம். கிராமத்தாரே அப்பள்ளிக்கூடங்களைப் பாதுகாத்துக் கொள் வர். திண்ணைப் பள்ளிக்கூடங்களால் நமது நாடு அடைந்து வந்த நன்மைகளை ஈண்டு விரிக்கில் அவை பெருகும். கதர்த்தொண்டு கைத்தொழில்களை வளர்க்க வேண்டுவது காங்கரஸின் தலையாய கடமை. இப்பொழுது நெய்தற் றொழிலில் காங்கர தன் கருத்தைச் செலுத்தியிருக்கிறது. இதைப்பற்றி மேலேயும் குறிப்பிட்டுள்ளேன். இந்தியர் நெய்தற்றொழிலை வளர்த்து நாட்டைக் கதர்க் களஞ்சியமாக்கல் வேண்டும். கதரின் அருமையைப் பன்னிப் பன்னி அடிக்கடி பேச வேண்டுவதில்லை. கதர் நமது நாட்டுத் திரு. காந்தியடிகள் சிறைபுகுந்தபோது கதர் என்று திருவாய் மலர்ந்தருளியதை மீண்டும் ஒருமுறை உங்க ளுக்கு நினைவூட்டுகிறேன். காங்கர ஊழியரென வருவோர், கதர் கதர் என்று நினைந்து, கதர் கதர் என்று பேசி, கதர் கதர் என்று இராட்டினஞ் சுழற்றிக் கதரைப் பரப்புவாராக. நாடு கதர் மயமாய்ப் பொலியுநாள் எந்நாளோ, அந்நாளே நாட்டின் சிறைமீட்சி நாள்; அந்நாளே சுயராஜ்யம் அரும்பும் நாள் என்பதை நாட்டார் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியுமாறு காங்கர ஊழியர் பிரசாரஞ் செய்வாராக. பெண்மக்களும் ராட்டையும் பண்டைக் காலத்தில் பெண்மக்கள் நூல் நூற்றுவந்தார் கள். பெண்மக்கள் கைகள் ராட்டைகளைச் சுழற்றிய காலத்தில் நாட்டில் சீதேவி பொலிந்த முகத்தோடு வீற்றிருந்தருளினாள். பெண்மக்கள் ராட்டினத்தைத் தொடுவதை நிறுத்தின நாள் தொட்டு நாட்டில் மூதேவி மூச்சு விடுகிறாள். பழைய நூல்களில் போந்துள்ள பருத்திப் பெண்டிர் முதலிய ஆட்சிகளை நோக்குழி, அந்நாளில் பெண்மக்கள் பெரிதும பருத்திநூல் தொழில் செய்து வந்தார்கள் என்பது விளங்கப்பெறுகிறது. பண்டைநாளில் நந் தாய்மார் ராட்டையோடு தோழமை பூண்டிருந்தமையான், அந்நாளில் அன்னவர், திருவுடையராய் - நிறைவுடையராய் - அழகுடையராய் - வாழ்ந்தனர். பின்னை நாளில் சர்க்காவோடு எல்லாம் ஓடின. பெண்மக்கள் ஆக்கத் துக்கு உறுகருவி, கதர் என்பதை அவர்கள் உணருமாறு காங்கர ஊழியர் உழைப்பாராக. கதருள் போலி(க் கதர்) நடமாடலால் கதரைப் பிற இடங்களிலிருந்து வரவழைத்து விற்பதைப் பார்க்கிலும், ஆங்காங்குக் கதரை உற்பத்தி செய்து விற்பது சிறப்பு. திருநெல்வேலி ஜில்லா இவ்வேலையில் முதன்மை பெறல் வேண்டும். இந்த ஜில்லாவில் பருத்தி விளைகிறது; நெய்தற் றொழிலாளரும் ஏராளமாக இருக்கின்றனர். இந்த ஜில்லாக் காங்கரகாரர், தக்க அமைப்புக்களை ஒழுங்குபடுத்திக், கதரைப் பிற இடங்களினின்றும் வரவழையாது, இங்கேயே கதரை நெய்து, இங்குள்ளவர்க்குப் பயன்படுத்துவது அறம். கள்ளுக்கடை மறியல் அஹிம்சா தருமவழி மிக ஒழுங்காக நிகழ்ந்து வந்தது. அதனால் நற்பயனே விளைந்தது. பயன் விளைந்த இவ்வேளையில் எக்காரணம் பற்றியும் நாம் சோர்வு காட்டலாகாது. தீண்டாமையும் சுயராஜ்யமும் தீண்டாமையைப்பற்றி நாம் கவலையீனமாக இருத்தல் தவறு. தீண்டாமையை ஒழிக்க நாம் பெருமுயற்சி செய்தல் வேண்டும். தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லிக் கொள்வோர், காங்கரகாரர் சொல்லளவில் - எழுத்தளவில் - தீண்டா மையை ஒழிக்க முயல்கின்றாரன்றிச் செய்கையில் மனமார அதை ஒழிக்க முயல்கின்றாரில்லை என்று கூறுகின்றனர். இக்கூற்றை விளையாட்டாகக் காங்கர ஊழியர் கருதலாகாது. இப்பொழுது சுயராஜ்யத்துக்குத் தடையாயிருப்பது தீண் டாமை என்பதைக் காங்கர ஊழியர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு செய்யுமாறு அவரைக் கேட்டுக் கொள் கிறேன். தீண்டாமை என்பது ஒரு நோய். இந்நோயால் பாரதமாதா நீண்ட காலமாக வருந்திக் கொண்டிருக்கிறாள். இந் நோயுள்ள மட்டும் பாரதமாதா இன்பம் நுகர்தல் அரிது. மக்களுள் தீண்டாதார் என்று ஒரு கூட்டத்தாரை வகுத்துக் கொண்டு, சுயராஜ்யம் பெற முயல்வது, அதிகாரவர்க்கத்துக்கு ஆக்கந் தேடுவதாகும். இதைப்பற்றி மேலே சில உரைகள் பகர்ந்துள் ளேன். தீண்டாமை எக்காரணத்தாலோ நமது நாட்டில் ஏற்பட்டுவிட்டது. அக்காரணத்தை ஆராய்வதனாலும், அதை வகுத்தோரை வைவதினாலும் ஒரு பயனும் விளையாது. எப்படியோ தீண்டாமை நோய் தோன்றி விட்டது. அதை ஒழிக்கவே நாம் முயலல் வேண்டும். அதைப் பேச்சால் ஒழித்தல் இயலாது. காங்கர ஊழியருட் சிலர், ஆதிதிராவிடர் முதலியோர் வாழும் இடங்களுக்குச் சென்று, அங்கே தாம் குடியிருந்து, சகோதரர்களோடு உறவுகொண்டு பழகி, அவர்கட்குக் கல்வி கற்பித்தல் வேண்டும்; அவர்களை ஒழுக்கத்தில் உயர்த்த முயலல் வேண்டும்; வேறு பல தொண்டுகள் செய்வதோடு ஓய்ந்த நேரங்களில் அவர்கள் தெருக்களிலுள்ள குப்பைகளைத் தாமே கூட்டல் முதலிய பணிகளைச் செய்ய மனவெழுச்சி கொள்ளல் வேண்டும். இன்னோரன்ன தொண்டுகளை நாம் செய்யின், ஆதிதிராவிடர் முதலியோர், எவர் தடுப்பினும் நம்மோடு கலந்துழைப்பர் என்பதில் ஐயமில்லை. இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே!! உங்கள் அரிய காலத்தை நான் வீணே கொள்ளை கொண்டேன். இது காறும் பொறுமையோடு என் புன்மொழி களைச் செவிமடுத்த உங்கள் பெருந்தகைமைக்கு நன்றி கூறு கிறேன். நமது நாட்டின் நிலையை உற்று நோக்குங்கள்; குடி யேற்ற நாடுகளில் நம்மவர் படும் பாட்டைக் கருதுங்கள்; சாமான் வண்டியில் நம் சகோதரர்கள் காற்றின்றி ஒளியின்றி வருந்தி வருந்தி உயிர் துறந்ததை நினையுங்கள். அந்தோ! எத்துணைத் தாய்மாரை விடுத்து எத்துணைப் புதல்வர்கள் சிறை புகுந் திருக்கிறார்கள்! எத்தனை அன்பு நாயகிமாரைப் பிரிந்து எத்தனை நாயகன்மார் சிறை சென்றிருக்கிறார்! எவ்வளவு அருமைச் சகோதரிகளை நீத்து எவ்வளவு சகோதரர்கள் சிறை நுழைந்திருக்கிறார்கள்! ஆண்டவனே! நீ எங்கே இருக்கிறாய்? மனங் குழைகிறதே! கண்ணீர் பெருகுகிறதே! அறத்தின் பொருட்டு, உரிமையின் பொருட்டு, நாட்டின் பொருட்டு இருபத்தையாயிரம் பேர் சிறையிலிருப்பதை நாம் மறந்து, பட்டாடை உடுத்தி, இனிய உணவு கொண்டு, மாடியில் உலாவி, மஞ்சத்தில் உறங்கிப் போகங்களைத் துய்க்கலாமோ! இவ் வேளையிலா சட்டசபை! பிரிட்டிஷ் நீதிமன்றம்! பாடசாலை! கொடுமை! கொடுமை! வெட்கம்! வெட்கம்! தமிழர்களே! எழுங்கள்; எழுங்கள்; வீறுகொண்டெழுங்கள்; கதருடுத்துங்கள்; உண்மை அஞ்சாமை என்னுங் கருவிகளைத் தாங்குங்கள்; ஹிந்து முலிம் என்னுஞ் சகடங்கொண்ட ஒற்றுமைத் தேரேறுங்கள்; அணிவகுத்துப் பொறுமைப் போர்க்களத்துக்குச் செல்லுங்கள். உங்கட்கு முன்னே சென்ற இருபத்தையாயிரம் பேர் வாகை மாலை சூடிச் சுதந்திரக் கோயிலில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டுத் தாய்மார்களே! தெய்வங்களே! தெய்வங்க ளென்றே உங்களைத் தொழுகிறேன். உங்கள் அருளால் சுயராஜ்யம் வரல்வேண்டும். தன் புதல்வன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்டதும், அவனுக்குப் பாலூட்டிய உறுப்பை அரிவேன் என்றெழுந்து வாள் தாங்கி, அமர்க்களம் அணுகி, ஆங்கே, தன் குமரன் மார்பில் காயந்தாங்கி மாண்டு கிடப்பதைக் கண்டு, ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த வீரத்தாய் மரபில் தோன்றினவர்கள் நீங்களல்லவா? தன் நாயகனைக் கள்வன் என்று அநியாயமாகப் பாண்டியன் கொலை செய்வித்ததைக் கண்டு, நடுங்கி ஒடுங்கி நில்லாது, அரச அவை புகுந்து, தன் நாயகன் கள்வன் அல்லன் என்று உறுதிப்படுத்தி, பாண்டி நாட்டைக் கலக்கிய கண்ணகி வழிவந்த கற்புக் கடவுளர்கள் நீங்களல்லவா? அறம் வளர்த்த அம்மை - மணி மேகலையை - ஈன்ற இத் தமிழ்நாட்டில் நீங்கள் பிறக்க வில்லையா? மாதவச் செல்வி - பாண்டிமாதேவி - மங்கையர்க் கரசியாரும், அன்பிற் சிறந்த ஆண்டாளும் பிறந்த நாட்டில் நீங்கள் தோன்றவில்லையா? அவ்வீரமும் தவமும் அன்பும் இப்பொழுது எங்கே? உங்கள் நாடு உரிமையிழந்து கிடக்க, நீங்கள், அயல்நாட்டுப் பொருள்களோடு ஒத்துழைப்பதால், உங்கள் வீரம் தவம் அன்பு எல்லாம் ஒடுங்கின. நீங்கள், அயல்நாட்டுப் பொருள்களை வாங்குவதில்லை; தொடுவ தில்லை என்னும் நோன்பு பூண்டால், உங்கள் ஆடவர் என் செய்யவல்லார்? இவ்வதிகாரவர்க்கந்தான் என் செய்யும்? நீங்கள் மேல்நாட்டு உடைகளைப் போர்த்து உலவுமட்டும் காந்தியடி கள் சிறையில் இருப்பார்; நாடுஞ் சிறையில் இருக்கும். காந்தியடி கள் சிறை யொழிக்க, நாட்டுச் சிறை போக்க நீங்கள் கதராடை கட்டலாகாதா? நீங்கள் மனங்கொண்டால் எல்லாஞ் செய்ய லாம். தாய்மார்களே! கண்விழித் தெழுங்கள்; நாட்டை நோக் குங்கள். நாடு உங்களைக் கதருடை அணியுமாறு கேட்கிறது. அதற்குச் செவிசாய்த்துக் கதருடுத்துங்கள். சுயராஜ்யம் மலரும். பண்டைத் தமிழ்மணம் வீசும் வந்தேமாதரம் எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே - தாயுமான சுவாமிகள் திரிசிராப்பள்ளி ஜில்லா 8-வது அரசியல் மாநாடு (குளித்தலையென வழங்குங் குளிர்தண்டலையில் கூடியது) - 1924ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 5, 6ம் நாட்கள்- தோற்றுவாய் தமிழ்ச் சகோதரிகளே! சகோதரர்களே!! மகாத்மா காந்தி, சிறிய சிறைக்கோட்டம் விடுத்துப் பெரிய சிறைக்கோட்டம் நண்ணியுள்ள இவ்வேளையில், அப்பெரியார் கண்ட அறக்கிளர்ச்சிக்கு மாறுபட்ட மறக்கிளர்ச்சி எழுந்தாடும் இந்நேரத்தில், இலாம் உலகில் ஒருவிதக் கலக்கம் நேர்ந் துள்ள இச்சமயத்தில் தொன்மையிற் சிறந்த திரிசிராப்பள்ளி ஜில்லாவின் ஆறாவது அரசியல் மகாநாடு, இறையருளும், இயற்கைவளனும், செயற்கைத் தொழிலும் என்றுங் கொழித்துக் கொண்டுள்ள இக் குளிர்தண்டலையில் (குளித்தலையில்) கூடி யிருக்கிறது. இவ்வரசியல் பெருங் கழகத்துக்குத் தலைமை ஏற்குமாறு சிறியேனை நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். இப்பேற்றிற்கு அடியேன் அருகனோ என்னும் எண்ணம் உறும்போது எனது நெஞ்சம் அலமருகிறது. தாய் நாட்டின் விடுதலை யொன்றே குறித்துச் செல்வந்துறந்து, கல்வி துறந்து, துறத்தற்கரிய இளமை துறந்து, சிறை புகுந்து, தளை யணிந்து, கல்லுடைத்தும், கயிறு திரித்தும், வேறு பல இழிதொழில் புரிந்தும் அரும்பாடுபட்ட தியாகமூர்த்திகள் வதியும் இந்த ஜில்லா மகாநாட்டிற்கு, எத்தகைத் தியாகமும் இல்லாத ஏழையேன் தலைமை வகிக்க அருகனாவனோ? இப்பதவிக்குத் தியாகத்திற் சிறந்த ஒருவரல்லரோ உரியவராவர்? ஆனால், உங்கள் அன்பினின்றும் பிறந்த ஆணைக்கு இணங்கவேண்டுவது எனது கடனென உணர்ந்து, அக்கடனாற்ற ஒருப்பட்டு, உங்கள் தொண்டனாக இவண் நின்று, உங்களை வணங்குகிறேன். எனது சிறுமையால் நிகழும் பிழைகளை உங்கள் பெருமையால் மன்னிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். திரிசிராப்பள்ளி ஜில்லா திரிசிராப்பள்ளி என்னுந் தலைநகர்ப் பெயரே ஜில்லா விற்குஞ் சூட்டப்பட்டது. திரிசிராப்பள்ளிக்குத் திரிசிரபுரம் என்னும் மற்றொரு பெயருமுண்டு. இரண்டிற்கும் பொருள் ஒன்றே. திரிசிராப்பள்ளி என்பது, இதுபோழ்து திருச்சினாப் பள்ளி என வழங்கி வருகிறது. திரிசிராப்பள்ளி என்னும் பெயருக்குக் காரணம் பல பகரப்படுகின்றன. மூன்று சிரமுடைய ஓர் அரக்கன், ஆண்டவனை வழிபட்ட காரணத்தால், அந்நகர், திரிசிராப்பள்ளி என்னும் பெயர்பெற்றதென்று புராணம் புகல்கிறது. அவ்வூர்க்கண் ஒரு பெருங்கற்பாறை வானுறவோங்கி நிற்குங் காட்சி முதலில் புலனாதல் கொண்டு, அவ்வூர், திரு - சிலா - பள்ளி, அல்லது திரு-சைல-பள்ளி என்று அழைக்கப் பெற்றிருக்கலாமென்றும், பின்னை அப்பெயர் திரிசிராப் பள்ளி எனவும், திருச்சினாப்பள்ளி எனவும் மருவப்பெற் றிருக்கலாமென்றும் ஆராய்ச்சிக்காரருள் ஒரு சிலர் உரைக் கின்றனர்; வேறுசிலர் சிறிய ஊர் என்னும் பொருள்பற்றித் திரு-சின்ன-பள்ளி என்னும் பெயர் பெற்றிருக்கலாமென்றும், பின்னை அப்பெயர், திருச்சிராப்பள்ளி என்றோ திருச்சினாப் பள்ளி என்றோ திரிந்திருக்கலாமென்றுஞ் சொல்கின்றனர். மற்றும் பல காரணங் கூறுவோருமுளர். தொன்றுதொட்டு நூலாட்சி பெற்று வருவது திரிசிராப்பள்ளி என்னுஞ் சீரிய பெயரே. திரிசிராப் பள்ளியின் இயற்கை வளம் திரிசிராப்பள்ளியின் இயற்கை வளத்தைச் சிறிது உற்று நோக்கின், சில இடங்களில் வெண்கல் அடுக்குகளும், செங்கற் சூழல்களும், கருங்கற் குன்றுகளும் முறையே வெண்பொன்னும், செம்பொன்னும், கரும்பொன்னும் உருகிப்படர்ந்து இடை யுடைந்து மிடைந்தாலெனத் திகழ்வது காணலாம்; சில இடங்களில் செஞ்ஞாயிற் றொளியுண்டு வெயிலுமிழுங் கூர் முகக் குன்றுகளும், வட்டப் பாறைகளும், பட்டைச் சிலைகளும் மலிவது காணலாம்; சில இடங்களில் அறலின் செறிவும், தொழிற் கற்களின் திரளும், இருப்பின் இருப்பும் மல்குவது காணலாம். இந்த ஜில்லாவின் எல்லைப்புறத்தின் ஒரு பாங்கர் பசுங்கொண்டல் படுத்துறங்குவதுபோல, கான்பரந்த பச்சை மலை பள்ளிகொண்டிருக்கும் காட்சியும், மற்றப் பாங்கரில் குறிச்சிகளும் சாரல்களும் அடர்ந்தும் தொடர்ந்தும் உள்ள தோற்றமும், ஆங்காங்கே நாடு நோக்குங் காடுகளின் இடையீடும் புலன்களைக் கவர்வனவாம். இந்நிலத்தெழும் அனலைத் தணிக்க இயற்கையன்னை தண்புனல் சொரிந்தாலொப்ப இந்த ஜில்லாவைக் கிழித்தோடுங் காவிரிப் பெருக்கை என்னென்று வருணிப்பது! அக்காவிரி தன்னிரு கைவிரித்து நீலமேனி யனையும், செம்மேனியனையும் தழுவித் தொழுமுறை காட்டு வது போல், தானொருபுறமும், தன்பாற் பிறந்து பிரியுங் கொள்ளிடம் மற்றொரு புறமும் பாட்டெனப் பரந்தோடும் அழகை எழுத்தால் எழுதல் முடியுமோ! அமராவதி முதலிய ஆறுகள் போந்து தெய்வக் காவிரியில் உறவு கொள்ளும் ஒழுங்கை எழுதும் எழுத்தோவியர் இந்நாள் உளரோ? இவ்வாறுகளினின்றும் பிரிந்தோடுங் கால்வாய்களின் கோல மும், இவைகளின் நீருண்ணும் செய்களின் செழுமையும், இவைகளை விட்டுந் தொட்டுஞ் சூழ்ந்துள்ள பொழில்களின் செழுமையும் திரிசிராப்பள்ளியை அழகு செய்கின்றன. இறைமணம் இந்த ஜில்லா இயற்கைமணங் கமழப் பெற்றிருப்பதோடு, இறைமணமுங் கமழப் பெற்றிருக்கிறது. பெரிய கோயில் என்னும் ஸ்ரீரங்கத்தையும் அப்புத் தலமாம் திருவானைக்காவை யும் இந்த ஜில்லா தன்னகத்தே தாங்கும் பேறு பெற்றிருக்கிற தெனில், இதன் தெய்வத் தன்மையைச் சொல்லலும் வேண் டுமோ! இந்த ஜில்லாவில் பல இடங்களில் பாடல் பெற்ற சைவ வைணவ ஆலயங்களும், பண்டை அருகர் அறக்கோட்டக் குலைவுகளும், பேர்பெற்ற மகமதியப் பள்ளிவாசல்களும், கிறிதுவக் கோயில்களுந் தெய்வமணங் கமழச் செய்கின்றன. தெய்வ நினைவிற்குத் திரிசிராப்பள்ளி ஜில்லாவை ஒரு வைப்பு என்று கூறுவது மிகையாகாது. சோழ நாட்டின் மாண்பு திரிசிராப்பள்ளி ஜில்லாவின் தொன்மை பெரிதுங் கருதற்பாற்று. திரிசிராப்பள்ளி மிகத் தொன்மையது. இப் போதைய திரிசிராப்பள்ளி ஜில்லாவின் பெரும்பகுதி பண்டைச் சோழநாட்டின் ஒரு கூறு. இதிகாசங்களிலும், பண்டைத் தமிழ் நூல்களிலும், அசோகன் காலத்திய சிலாசாசனங்களிலும் சோழநாடு பதிவுபெற்றிருக்கிறது. சரித்திரக் காலத்துக்கு முன்னரே சோழநாடு நாகரிகத்தில் சிறந்து விளங்கியது. சோழ மன்னர், கண்பொர விளங்குநின் விண்பெரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ என்று புலவர் போற்றக் குடிதழீஇக் கோலோச்சி வந்தனர். சோழர் அருளாட்சியை அறிவுறுத்த மனுநீதிச் சோழன் வரலாறொன்றே சாலும். அவர் காலத்துக் கல்விநிலை பண்டைத் தமிழ் நூல்களால் அறியக் கிடக்கிறது. சோழநாட்டு வினைஞர் கூட்டத்தையும், பொருளீட்டத்தையும், வாணிப முறையையும் பட்டினப் பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிற் காணலாம். சோழ வேந்தர் வீரம் இந் நாட்டில் மட்டுமன்றி மற்ற இடங்களிலும் செறிந்து நின்றது. அவர் தம் புலிக்கொடி ஒரு காலத்தில் இமயத்தில் பறந்தது; கங்கைக் கரையில் பறந்தது; பர்மா இலங்கை முதலிய இடங்களிலும் பறந்தது. அம் மன்னர் ஆட்சிக் காலத்தில் நாட் டில் நிலவிய பல்வேறு நாகரிகத் துறைகளை நூல்கள் வாயிலானும், கல்வெட்டுக்கள் வாயிலானும் இன்றும் அறியலாம். சோழரது பெரும்புகழ் விளக்கும் பதிகள் பல இந்த ஜில்லாவில் இருக்கின்றன. அவற்றுள், சோழ மன்னர் தலைநகரா யிலங்கிய உறையூரும், போர் மிகுந்த கருவூரும், வெற்றி விளங்குங் கங்கை கொண்டபுரமும், சிற்பஞ் சிறந்து நினைவுக் குறிகள் பல தாங்கி நிற்கும் சீநிவாச நல்லூரும் சிறப்பாகக் குறிக்கத்தக்கன. அவற்றின் நிலை உள்ளத்துறும்போது கண்ணீர் கலங்குகிறது. சோழநாட்டின் வளம் என்னே! என்னே! சோழ நாடு சோறுடைத்து என்னும் பழமொழியன்றோ இப்புனல் நாடு பெற்றிருந்தது? அச்சோற்றுக்கன்றோ இது போழ்து நம்மவர் வருந்துகின்றனர்? வெளி நாடுகளுக்கு ஓடுகின்றனர்? அங்கே மனித உரிமை யிழந்து தவிக்கின்றனர்? அன்று சோறளித்த சோழநாடு இன்று எங்கே? யாண்டு உற்றது? கரிகாலன் தமிழ் நாட்டைக் காணோம்; இராஜராஜன் திருநாட்டைக் காணோம்; இராஜேந்திரன் பெருநாட்டைக் காணோம்; அவர் புரந்த நாட்டைக் காணோம். ஆனால், அவர் வெட்டிய கால்வாய்கள் நமக்குப் புனல் அளிக்கின்றன; அவர் கட்டிய கோயில்களும் அறச்சாலைகளும் அன்பையும் அறத்தையும் வளர்க்கின்றன; அவர் நூல்கள் அறிவை விளக்குகின்றன. பலர் ஆட்சி அறமும் அன்பும் வளமும் நலமும் கொழித்த திருநாடா கிய இந் நாட்டைச் சோழர் ஏழாம் நூற்றாண்டுவரை எவ்வித இடுக்கணுமின்றி ஆண்டு வந்தனர். பின்னர் அறுநூறாண்டு, சோழ மன்னர் ஆட்சி வீழ்ந்தும் எழுந்தும் இடர்ப்பட்டுக் கொண்டிருந்தது; பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சோழர் ஆட்சி அறவே மறைவுற்றது. சோழருக்குப் பின்னர் இந் நாட்டில் பலர் புகுந்தனர். அவருள் சிறப்பாகப் பல்லவரையும் நாயக்கரையும் குறிப்பிடலாம். நாயக்கர் ஆட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் இடையில் முற்றும் ஒடுங்கிற்று. அவர்க்குப் பின்னை இந்நாடு மகமதியர் வயப்பட்டது. (இவர் காலத்தில்) சந்தா சாஹிப் என்பவர்க்கும், மகமத் அலி என்பவர்க்கும் நேர்ந்த பிணக்கே மகமதியர் ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக நின்றது. சந்தா சாஹிப் பக்கம் பிரஞ்சுக்காரரும், மகமத் அலி பக்கம் இங்கிலீஷ்காரரும் நின்று போர்புரிந்த வரலாற்றை ஈண்டு விரித்துரைக்க வேண்டுவதில்லை. அக்காலத்தில் இந்த ஜில்லா பெருஞ் செருக்களமாய் விளங்கிற்று. முடிவில் பிரிட்டிஷார் ஆள்வோராய்விட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த ஜில்லா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் அரசாட்சியை இந்தியாவில் நிலைபெறுத்திய இடங்கள் மூன்றனுள் இத் திரிசிராப்பள்ளியும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சி ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளாக நமது நாட்டில் நடைபெற்று வருகிறது. விக்டோரியா மகாராணியார், பிரிட்டிஷ் மக்கள் உரிமை இந்திய மக்கட்கும் உண்டு என்ற அறிக்கை பிறப்பித்து அறுபத்தாறு ஆண்டுகளா கின்றன. யுத்த காலத்தில் (1917ஆம் ஆண்டில்) இந்தியாவிற்குப் பொறுப்பாட்சி வழங்கப்படும் என்னும் உறுதிமொழி வழங்கப்பட்டது. இந்திய மக்கள், விக்டோரியா மகாராணியார் குறிப்பிட்ட உரிமை பெற நியாயக் கிளர்ச்சி செய்துவந்தார்கள். அக்கிளர்ச்சியின் பயனாக இந்தியா பெற்றதென்னை? மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தம் இப்பொழுது இந்தியா, 1919ஆம் ஆண்டுப் பிறந்த மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தப்படி ஆளப்படுகிறது. அச் சீர்திருத்தம், பொறுப்பாட்சிக்கு ஒருபடி போன்றது என்று சொல்லப்படுகிறது. அதன்கண் பொறுப்பாட்சிக் குறி யாண் டுளதோ? விளங்கவில்லை! மாற்றப்பட்ட இலாக்காக் குறிப்பும், மந்திரியார் அமைப்பும் அச்சீர்திருத்தத்தில் நிலவுவது உண்மையே. அந்நிலவு பொறுப்பாட்சியைக் கால்கிறதோ? மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தைவிட, இரட்டையாட்சியைக் கொண்டுள்ள மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தம் எவ் வழியில் இந்தியாவிற்கு நலஞ் செய்கிறதோ தெரியவில்லை. இரட்டை ஆட்சி முறையால் செலவு சுருங்கினதோ? வரிச்சுமை குறைந்ததோ? இவ்வாட்சி முறையில் இந்தியாவின் பொருள் வெளிநாடுகளுக்குச் செல்லாதவாறு காக்கப்படும் உரிமை யுண்டோ? வெளிநாடுகளில் இந்திய மக்கள் மற்ற மக்களைப் போலக் கருதப்பட வேண்டுமென வலியுறுத்தும் அதிகாரம் உண்டோ? மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தத்தில் ஜனப் பிரதிநிதிகள் விரும்புமாறு ஆட்சி முறை நடைபெறல் வேண்டு மென்னும் நியதி இருக்கிறதோ? அடக்குமுறை வெம்மையேனுந் தணிந்திருக்கிறதோ? ஜனப் பொறுப்பு நிழலுமில்லாத ஒரு சீர்திருத்தத்தால், இந்தியர் படும் வருத்தம், பிரிட்டிஷ் அரசியல் மணிகளுக்குப் புலனாகாதிருப்பது வியப்பையே ஊட்டுகிறது. ‘kh©nlF - br«Þg®£ Ó®âU¤j tÊ, ï‹DŠ áy M©LfŸ ïªâah Ms¥bgWnkš ïªâahÉ‹ Ãiy v‹dhFnkh? என்று எண்ணும் போது உள்ளம் நடுங்குகிறது. மிதவாதிகளும் இவ்வுண்மை கண்டு, மாண்டேகு செம்பர்ட் சீர்திருத்தம் வேண்டா. உடனே ஒரு விசாரணைக் கூட்டம் அனுப்பப்படல் வேண்டும் என்று தீர்மானித்து, அதன் பொருட்டு முயன்று வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியாரும் இந்தியச் சட்டசபையில், இந்தியாவின் பின்னை ஆட்சியை எவ்வழியில் செப்பஞ் செய்யலாமென ஆராய ஒரு சர்வ கட்சி மகாநாடு கூட்டல் வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றினர். எந்தத் தீர்மானமும் பிரிட்டிஷ் அமைச்சர்களை அசைக்கவில்லை. இங்கிலாந்தில் தொழிலாளர் ஆட்சி நடைபெறும் இந்நாளில், இந்திய அமைச்சராகிய லார்ட் ஒலிவியர், அவ்வாட்சிச் சார்பாக மிதவாதிகள் விருப்பத்துக் காதல், சுயராஜ்யக் கட்சியார் விருப்பத்துக்காதல் இணங்காது, பழம் பாட்டையே பாடிவிட்டனர். கூட்டுக் குழுவின் (Joint Committee) ஏற்பாட்டின்படி இன்னும் ஆறு ஆண்டு கடந்த பின்னரே ஒரு விசாரணைக் கூட்டம் அனுப்புதல் வேண்டும் என்னுங் கருத்துடையவர்களாகவே பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் இருக்கிறார்கள். என் செய்வது? வேறு வழி என்னை? வழி யில்லாமற் போகவில்லை; வழியுண்டு. வழி எது என்பதைச் சிறிது ஆராய்வோம். எவ்வழி? கொலைப்போரின் புன்மை உரிமை இழந்த ஒரு நாடு, மீண்டும் அவ்வுரிமை பெற வேண்டுமானால் என் செய்தல் வேண்டும்? இதற்குச் சிலர், போர் செய்தல் வேண்டும் என்று உடனே விடை இறுப்பர். எப்போரெனில், கொலைப்போர் என்பர். உலக வரலாறும் இவ்வாறே கூறும். இது காறும் உரிமையின் பொருட்டு, உலகில் கொலைப் போரே நிகழ்ந்திருப்பது உண்மை. கொலைப்போரி லும், செந்நீர்ப் பெருக்கிலுமே உரிமை அடங்கியிருக்கிற தென்பது பலர் நம்பிக்கை. அந்நம்பிக்கை இனி அறவே ஒழிதல்வேண்டும். கொலை செய்கிறவன் கொலை செய்யப் படுவான் என்பது ஒருதலை. எவன் எதை விதைக்கிறானோ அவன் அதையே அறுப்பான். நெல் கமுகாக நீளுமோ? ஹிம்சை கொலைத்தொழில் மேற்கொண்டு ஒருநாடு விடுதலை அடைந்தால், அந்நாடு மீண்டும் கொலைவாய்ப்பட்டு அடிமைக் குழியில் வீழும். கொலை முறையை உலகம் கொண்டமையால், இன்னும் உலகம் விடுதலைபெறாது வருந்துகிறது. ஒவ்வொரு நாடும் தேகாத்ம வாதத்தில் உறுதிகொண்டு, ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொள்ளவே முந்துகிறது இதனால் கொலைப் போர் உலகில் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது. ஆதலால் கொலை யால் (ஹிம்சையால்) நாம் உரிமைபெற முயல்வது பெருந் துயரைத் தேடுவதாகும். கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஒங்க எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை பராபரமே என்னுஞ் சான்றோர் உரைப்படி, கொல்லாமையை வளர்க்குங் கடப்பாட்டை ஏற்கவேண்டிய நாம், கொலையை எண்ணுவதும் பாவம். கொல்லாமை எத்தனைக் குணக்கோட்டை நீக்கும் எனவரூஉந் திருமொழியும் ஈண்டுப் பெரிதும் உன்னற்பாலது. கொலையால்தான் நாட்டுக்கு விடுதலை உண்டாகும் என்ற உறுதிகொண்டுள்ள நண்பர்கள் கொள்கை, நமது அருள் நெறிக்கு மாறுபடுவதோடு, உலகியல் முறைக்கும் மாறுபடுவது என்பது எனது உள்ளக்கிடக்கை. அஹிம்சையும் சுயராஜ்யம்மும் உலகியல்வழி நின்று நோக்கினாலும், கொலையால் ஒன்றும் விளையாதென்பதே தோன்றுகிறது. பதினைந்தாண்டு களுக்கு முன்னர், வங்காளத்தில் எழுந்த மூர்க்க சக்தியின் முடிவு என்னவாயிற்று? முடியாத ஒன்றைக் குறித்துப் பேசுவது அறிவுடைமையாகாது. இந்திய மக்களில் இப்போது கொலை யில் உறுதியுடையார் இருப்பரேல், நாட்டின் பொருட்டு அக்கொள்கையை விட்டொழிக்குமாறு அவரை வேண்டு கிறேன். கொலையால் நாடு படாத பாடுபடும் என்று யான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இப்போதுள்ள ஆட்சிமுறை வலுக்கும்; சுயராஜ்யம் சேய்மையில் ஓடும். ஆகவே, நாட்டின் விடுதலை, கொல்லாமையில் - அதாவது அஹிம்சா தர்மத்தில் - அடங்கியிருக்கிற தென்பதைப் பன்முறை வலியுறுத்துகிறேன். சீர்திருத்தமும் சுயராஜ்யமும் இன்னொரு கூட்டத்தார், நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்து, விண்ணப்ப வாயிலாக வணக்கம் புரிந்து, படிப்படியாகச் சீர்திருத்தம் பெற்றுக் கொண்டே பொறுப் பாட்சி அடைதல் வேண்டும் என்று கூறுகிறார். இக் கூற்றுக் கண் பொருண்மை இல்லை. சீர்திருத்தத்தால் சுயராஜ்யம் பெற்ற நாடு ஒன்று உண்டோ? சீர்திருத்தத்தால் சுயராஜ்யம் வரும் என்று கருதுவது, வானத்தில் தாமரைபூத்தால் அதைப் பறித்து அணியக் காத்திருந்தவள் கதையாக முடியும். சீர் திருத்தத்தால் சுயஆட்சி வரும் என்று கூறுவோர், நாட்டின் உரிமை வேட்கை யுடையவராயிரார். பட்டத்திலும் பதவியிலும் பொருளிலும் வேட்கையுடையவரே அவ்வாறு கூறுவர். சீர்திருத்தத்தால் விடுதலைப் பேறுண்டாகும் என்று எவருங் கனவு காணவேண்டுவதில்லை. இக்கூட்டத்தார் கூறும் முறையில் கொலையில்லை என்பதொன்று குறித்து மகிழ்ச்சி யடையலாம். சுயராஜ்யக் கட்சி இப்பொழுது சுயராஜ்யக் கட்சியார் என்றொரு கூட்டத் தார் கிளம்பியுள்ளார். இக்கட்சியார் தம்மை ஒத்துழையாதார் என்றே சொல்லிக் கொள்கிறார். இவர், சட்டசபையை விடுத்து விலகிநின்று ஒத்துழையாமை நிகழ்த்துவதால் அரசாங்க இயக்கத்துக்கு முட்டு நேராதென்றும், சட்டசபையைப் பற்றி அதனுள் நுழைந்து ஒத்துழையாமையை நிகழ்த்தினால் அரசாங்க இயக்கம் தடைபடுமென்றும் நாட்டார்க்கு அறிவுறுத்திச் சட்டசபைகளைப் பற்றி ஆரவாரஞ் செய்கிறார். சுயராஜ்யக் கட்சியார் இந்தியச் சட்டசபையிலும், சில மாகாணச் சட்டசபைகளிலும் தம் விருப்பத்தை நிறைவேற்றி வருவது உண்மையே. ஆனால், அவர் செயலால் விளைவ தென்னை என்பது மட்டும் இன்னும் புலனாகவில்லை. முட்டுக் கட்டை முயற்சி இந்தியச் சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியார் தமக்கு ஆக்கந் தேடவேண்டி, மற்றுஞ் சிலரைச் சேர்த்துக் கொண்டு தாமும் அவருஞ் சேர்ந்த கட்சிக்குத் தேசீயக் கட்சி என்றொரு பெயர் நிறுவி, முதலில் பொறுப்பாட்சியைப் பற்றி ஆராய்ந்து முடிவு காணச் சர்வகட்சி மகாநாடு கூட்டுதல் வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்துக்கு அரசாங்கத் தார் கட்டுப்பட மறுத்ததைக் காரணமாக் கொண்டு, வரவு செலவு மசோதா நிறைவேற ஒண்ணாதவாறு தேசீயக் கட்சியினர் தடுத்தனர். தேசீயக் கட்சியார் தடை வேலையில் மிக ஊக்கங் கொண்டு உழைத்து வருகிறார். அவர் உழைப்பால் விளைவதென்னோ? அரசாங்கத்தார் கொணரும் எல்லாத் தீர்மானங்களையும் மசோதாக்களையும் தேசீயக் கட்சியார் மறித்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் அரசாங்கம் நடைபெறா தொழியுமா என்பதை ஆராய்தல் வேண்டும். சட்டசபை உதவியின்றியே அரசாங்கத்தை இராஜப்பிரதிநிதி நடாத்துவர். அரசாங்கத்துக்குப் போதிய உதவி புரிய இராஜ்ய சபை (Council of State) ஒன்றுள்ளது. இச்சபை கைவிட்டாலும் அரசாங்க இயக்கம் ஒடுங்காதென்பது திண்ணம். இராஜப்பிரதிநிதியும், மாகாண கவர்னர்களும் நிருவாக அங்கத்தவர் துணைகொண்டு, சட்டசபையின்றி அரசாங்கத்தை நடாத்துவர். இம்முறை, மத்திய மாகாணத்தில் தொடங்கப் பட்டிருக்கிறது. தேசீயக் கட்சியாரது முட்டுக்கட்டை எவ்வழியில் அரசாங்க இயக் கத்தை நிறுத்துமென்பது இன்னும் விளங்கவில்லை! பிரிட்டிஷார் திறம் சட்டசபையின்றி அரசாங்கம் நடைபெறுமேல், பிரிட்டி ஷார் இந்தியாவில் சட்டசபையின்றி ஆட்சி புரிகிறார் என்று உலகம் பழிக்கும் என்று சுயராஜ்யக் கட்சியார் கூறுகிறார். உலகப் பழிப்புக்குப் பிரிட்டிஷார் ஒருபோதும் இடந்தாரார் என்பது திண்ணம். உலகத்துக்குப் பிரிட்டிஷார், ஜனப் பொறுப் பாட்சிக்குப் படியாக நாங்கள் இந்தியாவுக்குச் சீர்திருத்த மளித்தோம்; இந்தியர் அச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தித் தம்மைப் பொறுப்பாட்சிக்குப் பண்படுத்திக் கொள்ளாது சட்டசபை நடைமுறைகளை மறிக்கின்றனர்; அவர்க்குப் போதிய திறமையில்லை; திறமை பெறவும் எம்மோடு கலந்துழைக் கின்றாரில்லை என்று கூறித் தம்மைக் காத்துக் கொள்வர். ஸர் மால்கம் ஹெய்லி இக்கருத்துப் படவே பேசியதும் நோக்கத் தக்கது. பிரிட்டிஷ் மக்களும், இந்திய சீர்திருத்தத்தைப் பயன் படுத்தித் தம்மைப் பொறுப்பாட்சிக்குப் பண்படுத்தாது வீண் கலகஞ் செய்கிறார் என்னுங் கருத்தே கொண்டு சினமுறுவார் கள். சில நன்மக்கள் அன்பும் அற்றுப் போகும். சுயராஜ்யக் கட்சியின் விளைவு சுயராஜ்யக் கட்சியார் முயற்சியால் நாட்டிலாதல் ஒருவித எழுச்சி உண்டாயிற்றோ? சட்டசபைமீது அன்னார் நாட்டம் வைத்த நாள்தொட்டு, நாட்டில் அழிவு முறைகள் அறவே தொலைந்தன. ஆக்க முறைகள்மீது மக்களுக்கிருந்த ஊக்கமுங் குன்றிற்று. நாடு சட்டசபை நடவடிக்கைகள்மீது கருத்தைச் செலுத்தலாயிற்று. சட்டசபையில் மறியல் நடாத்தி, அரசாங்கத்தார் கொணரும் ஒவ்வொரு மசோதாவையும் தடுத்தபின்னர் சுயராஜ்யக் கட்சியார் என் செய்வார்? நாட்டிடைப் போந்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவர் போலும்! அவர் வரிகொடா இயக்கந் தொடங்கல் வேண்டும், அல்லது வீட்டில் நுழைந்து உறங்கல்வேண்டும். சட்டசபை நடைமுறையை மறித்துச் சுயராஜ்யக் கட்சியார் வாளா கிடத்தலாகாது. அவர் வாளா கிடந்தால் சட்டசபையில் தாம் கிடத்திய தடைக்குப் பொருளில்லாமற் போய்விடும். அதிகார வர்க்கம், முன்னினுங் கொழுமையாக ஆக்கம்பெறும். ஆதலால் சுயராஜ்யக் கட்சியார் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கக் கடமைப்பட்டே தீரல்வேண்டும். சுயராஜ்யக் கட்சியார் வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவரேல், சட்டசபையில் அவர்க்குத் துணை புரிந்து வரும் தேசீயக் கட்சியார் அவ்வியக்கத்துக்குத் துணை நிற்பரோ? சுயராஜ்யக் கட்சியோடு சேர்ந்துள்ள தனிக்கட்சியார் ஒத்துழையாதாரு மல்லர்; சுயராஜ்யக் கட்சியாரு மல்லர். பண்டித மதன்மோகன் மாளவியரை எடுத்துக் கொள்வோம். அவர் தலைவராக நின்று எதிர்த்தே வரவு செலவு மசோதாவைத் தோல்வியுறச் செய்தார். அவர் ஒத்துழையாதாராக நின்றாதல் அல்லது சுயராஜ்யக் கட்சியாராக நின்றாதல் அம் மசோதாவை எதிர்த்தாரில்லை. தேசீயக் கட்சியார் என்ற முறையில், ஒத்துழைப்பாளராக நின்றே அவர் அதைத் தடுத்தனர். இதை நாடு நோக்குதல் வேண்டும். ஒருவேளை சுயராஜ்யக் கட்சியார் வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவாரானால், அவர்க்குத் தனிக்கட்சியார் துணை நில்லாது ஒதுங்கி நிற்பர். வரி கொடாமை ஒத்துழையாமையின்பாற் பட்டதாகலின் அவர் அவ்வியக்கத்தில் ஒருபோதுஞ் சேரார். அதன்கண் அவர்க்குப் பற்றிருக்குமேல், அவரேன் சுயராஜ்யக் கட்சியில் சேராது தனிக்கட்சியார் என்று ஒதுங்கி நிற்றல் வேண்டும்? தனிக் கட்சியார் சுயராஜ்யக் கட்சியாருக்குத் துணை நிற்பது ஒத்துழை யாமையை முற்றும் ஒழிக்கவே என்று நான் ஊகிக்கிறேன். சுயராஜ்யக் கட்சியார் பின்னிலை ஓராது சட்டசபையில் இறங்கியது தவறு. ஒருவேளை இருபாலாருஞ் சேர்ந்து வரி மறுப்பைத் துவங்கினாலும், நாடு அதற்குச் சித்தமா யிருக்குமா என்பது ஆராயற்பாற்று. வரிகொடா இயக்கத்துக்கு உயிராயிருப்பன ஆக்க முறைகள். அவை, சுயராஜ்யக் கட்சியார் பேச்சாலும் எழுத்தாலும் சட்டசபை நுழைவாலும் அலைக்கப்பட்டன. ஆக்க முறைகளுக்கு ஆக்கந் தேடுவன அழிவு முறைகள். அழிவு முறைகளோ சுயராஜ்யக் கட்சியினரால் கொலை செய்யப் பட்டன. ஆக்க முறைகளை அலைத்தும், அழிவு முறைகளைக் கொன்றும் வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவது முளையைக் கிள்ளி விதைக்கு வெந்நீர் வார்த்தவன் கதையாக முடியும். சட்ட சபையில் நுழைந்து வரிகொடா இயக்கந் தொடங்குவதற்குப் பொருளில்லை. இக்காரணம் பற்றியே சட்டசபை விலக்கம் வேண்டும் என்று மகாத்மா காந்தியால் வலியுறுத்தப்பட்டு வந்தது. சட்டசபையில் நுழைந்து, அதன் இயக்கத்தை மறித்து, நாட்டில் வரிமறுப்புத் தொடங்கும் முறையில் அஹிம்சா தர்மமெனுங் கொல்லாமை நிலவவில்லை என்பதும் கருதற்பாலது. சுருங்கக் கூறின், சுயராஜ்யக் கட்சியார் செயலால் அதிகார வர்க்கம் கொழுமையுறு மென்றும், ஒத்துழையாமை ஒடுங்குமென்றுங் கூறலாம். நாட்டின் சோர்வு பின்னை விடுதலைக்கு வழி எது? அஹிம்சா தர்மமெனும் அருள்நெறிக்கு உட்பட்ட ஒத்துழையாமை ஒன்றே. ஒத்துழைப் பால் ஒருபோதும் நாடு விடுதலையடையாது என்று கருதியே, காந்தியடிகள் ஒத்துழையா இயக்கத்தைத் தோற்றுவித்தார்; அதன் அடிப்படையில் அஹிம்சையை அல்லது அன்பைக் கிடத்தினார்; ஆக்க அழிவு முறைகளைக் கோலினார்; இவை இரண்டும் நாட்டிடை நிலைபெறுமாறு, கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, எதிர்வாதஞ் செய்யாது சிறை புகுதல் முதலிய வற்றை வகுத்தார். ஒத்துழைத்து ஒத்துழைத்துச் சலிப்புற்ற நாட்டுக்குக் காந்தியடிகள் தோற்றுவித்த இயக்கமும், தொகுத்த திட்டமும் புத்துயிரளித்தன. ஆக்க அழிவு முறைகள் ஒருவாறு நாட்டில் வேரூன்றின. பல்லாயிரம்பேர் சிறை புகுந்தனர். அடக்குமுறையுந் தலைகாட்டிற்று. நாடு ஒருவாறு வரிகொடா மைக்குப் பண்பட்டு வந்தது. ஆக்க அழிவு வேலைகளிலும், சிறைபுகுதலிலும் பிறவற்றிலும் ஒருசிலர் தலைப்பட்டு உழைத்து வந்தனர். அவ் வொருசிலரைப் பலராக்க வேண்டுவது தலை வர்கள் கடமை. ஆனால் தலைவர்களிற் சிலர் பொறுமை யிழந்து, மகாத்மா வெளியில் இல்லா வேளையில், சட்டசபைப் பற்றைக் கொணர்ந்து காங்கரஸில் நுழைத்துப் பிளவு உண்டு பண்ணினர். பிளவுக்குக் காரணம் பலர் பலவாறு கூறுவர். அவற்றை ஈண்டு விரித்துரைத்து உங்கள் அரிய காலத்தைப் போக்க விரும்புகின்றேனில்லை. சட்டசபை முயற்சி, நாட்டில் எழுந்த ஊக்கத்தைக் குலைத்தது என்பது எனது நம்பிக்கை. அதனின்றும் தலைவர்களுக்குள் பொறாமை, பிணக்கு, வாதம், புறங்கூறல் முதலியன கிளம்பி நாட்டைச் சோர்வுறச் செய்தன. ஒத்துழையாமையின் நலன் சுயராஜ்யக் கட்சியார், வெளியிலிருந்து ஒத்துழையாமை செய்வதைப் பார்க்கிலும், உள்ளே நுழைந்து ஒத்துழையாமை செய்தால், அரசாங்கம் விரைவில் பணிந்துவிடும் என்று சொன்னமையால், சிலர் சுயராஜ்யக் கட்சியை ஆதரித்தனர். வெளியே இருந்து ஒத்துழையாமை நிகழ்த்துவதால் நாளடை வில் நாட்டில் ஒற்றுமை உண்டாகும். தொடக்கத்தில் ஒத்துழை யாதார் ஒத்துழைப்பாளர் என்னும் இரண்டு பிரிவே நாட்டில் நிலவும்; பல கட்சிகள் நிலவா. நாடு இயல்பாக ஒத்துழை யாமையையே ஆதரிக்கும். அவ்வாதரவு கொண்டு, ஆக்க வேலைகளைச் செய்து, நாட்டில் உள்ள குறைகளைப் போக்கிச் சட்டமறுப்புக்கு நாட்டை ஒன்றுபடுத்தல் கூடும். ஒத்துழைப் பாளர் மனமும் நாளடைவில் திரும்பும். ‘eh« njr¤J¥ ãuâÃâfsh? என்னும் எண்ணம் அவர்கள் நெஞ்சைச் சுட்டு எரித்துக் கொண்டே யிருக்கும்; நாட்டிற் பிறந்த பல்லோர் சிறைபுகுந்து வருந்துவது, (ஒருநாள் ஒருவாரம் ஒரு மாதம் ஓராண்டில் இல்லாவிட்டாலும்) சில ஆண்டு கடந்தாவது அவர்கள் (ஒத்துழைப்போர்) மனத்தை உருகச் செய்யாமற் போகாது. நமது ஒற்றுமை, தியாகம், உறுதி, உண்மை, கொல்லாமை முதலியன ஆள்வோர் மனத்தையும் தொடாமற் போகா. அவரும் நம்மீது கருத்தைச் செலுத்துவர். அவர் கருத்துச் செலுத்தாதொழியினும் உலகம் அவரைப் பழிக்கும். நாடு ஒத்துழையாமையில் தலைப்பட்டுள்ள வேளையில், எத்துணைநாள் போலிப் பிரதிநிதிகளை வைத்து அரசாங் கத்தார் கடனாற்றி வருதல்கூடும்? சட்டசபையில் நுழைந்து, ஒத்துழையாமை செய்வதால், இந்தியர் அருகரல்லர் என்னும் ஒரு வாக்கியத்தால் அரசாங்கத்தார் உலகப் பழியைப் போக்கிக் கொள்வர். இதைப் பற்றி மேலே கூறியுள்ளேன். சட்டசபையில் நுழைந்து ஆங்கே தடை வேலை செய்து, அரசாங்கத்தைப் பணியச் செய்தல் வேண்டும் என்னும் எண்ணமுடையோர் பலர் சுயராஜ்யம் விரும்புவோரல்லர். இப்போது அரசாங்கத்துக்குச் சிறிது இடுக்கண் விளைத்து, இன்னுஞ் சில சீர்திருத்தம் பெற்றுப் பதவிகள் பெறலாம் என்னும் எண்ணமுடையோரும் சுயராஜ்யக் கட்சியிலும் தனிக்கட்சியிலும் சேர்ந்திருக்கிறார். ஸ்ரீமான் ஜின்னா ஒருமுறை இதை வெளிப்படையாகச் சொற்றனர். ஆக்க அழிவுமுறை களைக் குறைகூறுவோருள் பெரும்பான்மையோர் சீர்திருத் தத்தை விரும்புவோர் என்பதைச் செவ்வனே யான் அறிவேன். அச் சகோதரர்கள் வெளிப்படையாக மிதவாதிகளோடு சேர்ந்து கொள்வது நலம். அவர்கள், ஒத்துழையாதார் என்றும், சுயராஜ்யக் கட்சியார் என்றும் ஏன் நடித்தல் வேண்டும்? ஒத்துழைப்புக்கும் ஒத்துழையாமைக்கும் இடையில் சுயராஜ்யக் கட்சி போன்றதொரு களை முளைக்க வேண்டுவது இயல்பே. அக்களை முளைத்துவிட்டது. அஃதொரு நிலை. அந்நிலை கடக்கும் நேரமும் நேர்ந்திருக்கிறது. போனது போக. மீண்டும் அனைவரும் ஒன்று பட்டு நமது கடனை நாட்டுக்கு ஆற்றுவோமாக. மகாத்மா காந்தி முன்னை நாளில் அறத்துக்கும் அன்புக்கும் நிலைகளனா யிலங்கிய இப் பரதகண்டம், வறுமையாஞ் சிறுமைக் குழியில் வீழ்ந்து இடர்ப்படுவது கண்டு, அதைப் பண்டை நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்னும் அருள்மேலீட்டான், நாட் டின் விடுதலை யொன்றே குறிக்கொண்டு, ஒத்துழையா இயக் கத்தை - நமது தவப் பயன் - மகாத்மா காந்தி - தோற்றுவித்தார். அவ்வியக்கத்தை வளர்க்க, அவர் மெல்லிய உடலோடு ஒற்றைக் கலை யணிந்து, ஊண் உறக்கமின்றி, இரவு பகல் ஓயாது, இந்தியா வின் நானா பக்கமும் ஓடி ஓடி உழைத்தார். அவ்வுழைப்பின் பயனாக நாடு விழித்துக் காந்தியடிகள் சொல்வழி நின்றது. முற்றத் துறந்த முனிவரும், மற்றவர்க் குழைக்கும் மன்னருமாகிய நம் குருநாதன் - மகாத்மா காந்தி - உண்மை அஞ்சாமை என்னும் கால்கொண்டு, கொல்லாமை என்னும் கல் பரப்பி, அழிவு ஆக்கம் என்னுஞ் சுவரெழுப்பி, ஹிந்து - முலிம் ஒற்றுமை என்னும் கூரை வேய்ந்து, சத்தியாக்கிரக நிலையம் கோலினார். கோலினதும் நம் பெருமான் சிறைக்கோட்டம் புகல் நேர்ந்தது. அவரில்லா வேளையில் நாம் என்ன செய்தோம்? காந்தியடிகள் ஆணைவழி நின்று உழைத்து, அவர் கோலிய சத்தியாக்கிரக நிலையத்தில் அரியாசனம் அமைத்து, பாரத மாதாவிற்கு முடிசூட்ட நாம் அவரை அழைத்தோமா? ஆ! ஆ! நாம் என்ன செய்தோம்! அடிகள் கோலிய நிலையத்துக்கே ஊறு செய்தோம். ஆண்டவன் அருளால் தோன்றிய வயிற்றுநோய் காரணமாகக் கொல்லாவிரதங் கொண்ட நம் நல்லார் வெளி வந்தார். வந்ததும், அவர் தாங் கோலிய நிலையத்தைக் கண்டா ரில்லை. பின்னை எதைக் கண்டார்? சுவர் வீழ்ந்திருப்பதையும் கூரை முறிந்திருப்பதையுங் கண்டார். அந்நிலையங் கோல எவ்வளவு ஊக்கம்? எவ்வளவு உழைப்பு? தமது நிலையங் குலைந்திருப்பதை நம் பெருமான் கண்டார். கண்டு சின முற்றாரோ? செற்றஞ் செகுத்த செம்மல், மீண்டும் நிலை யத்தைப் புதுக்க வேண்டுவது எனது கடன் என்னுங் குறிப்புத் தோன்ற, இடனில்லா அப்பருவத்துங் கடனறி காட்சியினராய் நாட்டார்க்கு ஓர் அறிக்கை வழங்கினார்; அவ்வறிக்கையில் பார்தோலித் திட்டத்தில் தமக்கு இன்னும் உறுதியிருப்பதைக் குறிப்பிட்டார். பார்தோலி விட்டுப் பிரிந்த நம் பெருமான் மீண்டும் பார்தோலியில் வந்து நிற்கிறார். அவரது உடலோ நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது; ஆத்ம சக்தியோ பார்தோலி என்று வீறு கொண்டெழுகிறது. கொழுத்த உடல் தங்கியுள்ள எத்துணைப்பேர் பார்தோலியை எள்ளினர்? இருளில் வாழ்வோர்க்கு அருளொளி புலனாகுமோ? நம் பெரியார் பார்தோலியில் கொண்டுள்ள உறுதி ஏனையோருங் கொள்ளு தல் வேண்டும். எவர் என்ன பேசினும் எழுதினும் எக்கட்சி வகுப்பினும், அவர் சுற்றுமுற்றுந் திரிந்து முடிவில் தவ முதல்வராங் காந்தியடிகள் கோலிய ஒத்துழையா வட்டத்தில் நுழைந்தே தீரல்வேண்டும். அதைவிட நாட்டின் விடுதலைக்கு வேறொரு வழி யிருக்கிறதென்று தெரியவில்லை. பார்தோலித் திட்டம் பார்தோலித் திட்டத்தை இழித்துக் கூறுவோர் பலருளர். சர்க்காவையும் தீண்டாமையையும் கள்ளுக் கடையையுந் தானே கட்டியழல் வேண்டும்? இவற்றால் நாட்டில் எழுச்சி யுண்டாகுமோ? சோம்பேறி வேலை வேண்டா என்று எத் துணைப் பேர் பார்தோலித் திட்டத்தை எள்ளி நகையாடினர்! பேச்சாலும் எழுத்தாலும் ஆவேசம் விரும்புவோர்க்குப் பார்தோலித் திட்டம் சோம்பர் வேலையாகவே தோன்றும். கதருக்குப் பதிலாகச் சீமைத்துணி அணிந்து, தீண்டாமையை ஒழியாது அதை இருத்திக் கொண்டு, கள்ளருந்துவோர் அருந்துக என்று, ஒன்றுங் கருதாது வாயால் சுயராஜ்யத்தைப் பற்றி வீராவேசமாகப் பேசுவதால் மட்டுஞ் சுயராஜ்யம் வருமோ? சுயராஜ்யம் உழைப்பாலன்றோ வரும்? உழைப்புக்கு அஞ்சும் நண்பர்கள் பார்தோலித் திட்டத்தைச் சோம்பர் திட்டமென்று கூறாது வேறென் கூறுவார்கள்? பார்தோலித் திட்டத்தைக் குறைகூறிய காலம் போயிற்று. பார்தோலி வீரர் இப்பொழுது புறப்பட்டு விட்டார். இனிப் பார்தோலித் திட்டம் செயலில் யாண்டும் பரவல்வேண்டும். பார்தோலித் திட்டத்தை எல்லாக் கட்சியாரும் ஏற்றுக் கொண்டால், கட்சி வேற்றுமையின்றியே அத் திட்டத்தை நிறைவேற்றுதல் கூடும். வேண்டுவது நாட்டுப் பற்றொன்றே. பார்தோலித் திட்டத்தை நிறைவேற்ற நாட்டுக்குத் திறனில்லை யெனில், சுயராஜ்யம் பெறுதற்கும், பெற்றாலும் தன்னை ஆள்வதற்கும் அதற்குத் திறனில்லை என்றே கருதல் நேரும். சுயராஜ்யத்துக்கு நாம் அருகர் என்ற உண்மையை உலகத் துக்குப் புலப்படுத்த வேண்டுமானால், நாம் பார்தோலித் திட்டத்தை நிறைவேற்றித் தீரல்வேண்டும். பார்தோலித் திட்டம் நமது நாட்டிலுள்ள குறைகளைப் போக்கவல்லது. குறைகள் நீங்கினால் சுயராஜ்யம் தானே அரும்பும். சட்டசபை புகுந்து போர் புரிவதினும், வெளிநாடு போந்து பிரசாரவேலை செய்வதினும், வேறுபல ஆரவாரம் நிகழ்த்துவதினும் நாட்டிலுள்ள குறைகளைப் போக்க முயல்வது போற்றத்தக்கது. நாட்டிலுள்ள குறைகளைப் பார்தோலித் திட்டம் போக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அத்திட்டத் தின்மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். முதலாவது கதரை எடுத்துக் கொள்வோம். கதர் கதரின் இன்றியமையாமையை நான் இங்கே விரித்துக் கூறவேண்டுவதில்லை. மகாத்மா காந்தி இரவு பகல் கதர் கதர் என்று கதறுகிறார். அவர் சிறை புகுந்த போதும் கதர் கதர் என்ற உபதேசமே செய்தார்; சிறைக்களத்திலும் நூல் நூற்ற வண்ண மிருந்தார்; இப்பொழுதும் கதர் கதர் என்று மொழிந்த வண்ணம் இருக்கிறார். காந்தியடிகள் தம்மைக் காண வரு வோர்க்கு விடுத்துள்ள நற்செய்தியில், அவர், வழிச்செலவுப் பணத்தைக் கதர் உற்பத்திக்கும், பிரசாரத்துக்கும் பயன் படுத்துமாறு தமக்கு அனுப்புவது நலமென்றும், குறிப்பிட் டுள்ளார். ஸ்ரீமான் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் கதரின் இன்றியமையாமை குறித்து ஓயாது பிரசாரஞ் செய்கிறார். கதருக்கென ஒரு தனி அமைப்பும் ஏற்பட்டிருக்கிறது. கதரின் இன்றியமையாமை சுமார் ஐந்தாண்டுகளாகப் பலரால் அறிவுறுத்தப்பெற்றும், இன்னும் நாட்டில் கதர் செவ்வனே பரவவில்லை. நாட்டின் துன்ப நீக்கம், கதரிலிருப்பதை நாட்டார் உணராமலில்லை. துணியில் மட்டும் அறுபது கோடி ரூபா இந்தியாவினின்றும் மேல்நாடு செல்வதை அறியாதாருளரோ? அறிந்துங் கதரணியாது மேல்நாட்டு மல் அணிந்து திரியப் பாழான மனம் ஒருப்படுகிறது! அதன் வன்மை என்னே! என்னே! ஆண்டொன்றிற்கு அறுபது கோடி ரூபா நாட்டார்க்குப் பயன்பட்டால் எவ்வளவு மிடி தீரும்? கதரணிந்தால் அறுபது கோடி ரூபா நாட்டில் தங்கும் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்க உணர்ந்தும், கதரணிய மனங்கொள்ளாத நாட்டார், சுயராஜ்யத்துக்கு அருகராவரோ? கதர் அணிந்து அறுபது கோடி ரூபாவை நாட்டில் நிறுத்த முடியாத நாட்டார் சுயராஜ்யத்துக்கு வேறென்ன முயற்சி செய்ய வல்லார்? கதர் கதர் என்று பல தேசபக்தர் கூக்குரலிட்டும், சிறைபுகுந்தும், பெருந் தியாகத்துக்கு உட்பட்டும் இன்னும் நாட்டில் நூற்றுக்கு இருபதுபேர் கதர் உடுத்தாமல் இருப்பதை அரசாங்கத்தார் உற்று நோக்கிச் சுயராஜ்ய வேட்கையை அளந்திருப்பர். கதர் என்று தலைவர் ஆணை தந்ததும் எல்லாருங் கதரணிதல் வேண்டும். அவ்வொற்றுமைக் காட்சி, அரசாங்கத்தைச் சுய ராஜ்யம் வழங்க இயல்பாகத் தூண்டாது போமோ? கதர் கட்டல் கூடாது என்று ஏதாயினுங் கடவுள் கட்டளையுண்டா? அரசாங்கக் கட்டளையுண்டா? ஒன்று மில்லையே. எவ்விதக் கட்டுப்பாடு மில்லாதபோது நம் நாட்டார் ஏன் கதர் அணியாமலிருக்கிறார்? நமது கவலை ஈனமே நம்மை அடிமைக் குழியில் வீழ்த்தியிருக்கிறது. கதரி லுள்ள பல நலன்களைப்பற்றி நீங்கள் பன்முறை கேட்டிருப் பீர்கள். அவற்றை மீண்டும் மீண்டும் ஈண்டு வலியுறுத்திக் கூற வேண்டுவது அநாவசியம். கதரே நமது செல்வம்; கதரே நமது உயிர்; கதரே நாம் அடையும்பேறு. கதரை விலைக்கு வாங்கி அணிவதைப் பார்க்கிலும், அவரவர் அதை உண்டுபண்ணி உடுப்பது போற்றத்தக்கது. நமது விட்டுத் தாய்மார் சோறாக்க நாடோறும் இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றனர். அவர், நூல் நூற்க ஏன் அரைமணி நேரம் செலவழித்த லாகாது? அவ்வரைமணி நேரம், வீட்டைவிட்டு வெளியே போகுஞ் செல்வத்தை வீட்டிலேயே நிறுத்துமன்றோ? நமது செல்வத்தை நாமே வெளியிடத்துக்கு அனுப்பிவிட்டு, வறுமை வறுமை என்று ஓலமிடுவது அறியாமையோ? அறிவுடைமையோ? இனித் தீண்டாமைமீது சிறிது கருத்தைச் செலுத்துவோம். தீண்டாமை மகாத்மா காந்தி, தீண்டாமை ஒழிந்தாலன்றி நாடு விடுதலை பெறாது என்று பலமுறை பகர்ந்துள்ளார். அவர் பகர்கிறார்; ஆனால், அவர் உரை நாட்டுச் செவியில் நுழை கிறதோ? மகாத்மா காந்தி நல்லவர்; அவர் சொல்வனவெல் லாம் போற்றற் குரியனவே. ஆனால் தீண்டாமை விலக்க வேண்டுமென்று சொல்கிறாரே, அது மட்டும் பிடிக்கவில்லை என்று பலர் பேச யான் கேட்டிருக்கிறேன். தீண்டாமை, நாட் டின் விடுதலைக்குப் பெருந் தடையாக நிற்பதை அந்நண்பர்கள் உணர்கின்றார்களில்லை. பாரதப் புதல்வருள் ஒரு கூட்டத் தாரை தீண்டாதார் என விலக்குவது எனக்குச் சுயராஜ்யம் வேண்டாம் என்று அதை விலக்குவதாகும். அவ்வாறு தீண்டா தாரை விலக்குவது கடவுளை - கடவுள் படைப்பை - பழிப்பதாக முடியும். கடவுளால் படைக்கப்பட்ட மக்களுள் ஒரு கூட்டத் தாரைத் தீண்டாதார் எனப் பிரித்து, அவரைத் தெருக்களில் நடமாடாதவாறு துரத்துவதும், நீர் நிலைகளில் நீர் முகவாத வாறு மறிப்பதும், ஆண்டவன் கோயிலுள் நுழையாதவாறு தடுப்பதும் அறச் செயல்களோ? மறச்செயல்களோ? சகோதரி களே! சகோதரர்களே! உன்னுங்கள். கோயில் காற்றும், நீரும், கோயிலும் சில வகுப்பார்க்கு மட்டும் உரியனவோ? ஆண்டவனுள் தீண்டும் ஆண்டவன், தீண்டாத ஆண்டவன் என்ற இரு வேற்றுமை உண்டோ? ஆண்டவன் தீண்டாதவன் உள்ளத்தில் இல்லையோ? கோயில்களில் எலி பூனை பாம்புகுக்குத் தடை உண்டோ? மனித உடல் தாங்கியுள்ள ஒருவனுக்குத் தானா தடை? என்ன கொடுமை! என்ன கொடுமை! இரக்கமின்மை இந்த ஜில்லாவிலுள்ள திருக்கோயில்கள் பலவற்றில் சிலந்தி, யானை முதலிய அஃறிணை உயிர்கள், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றன என்று தமிழ் மறை முழங்குகிறது. அக் கோயில்களில் ஆறறிவுடைய மனிதன் ஏன் போந்து ஆண்ட வனை வழிபடலாகாது? தீண்டாத சாதியார் என்று உயர்ந்த சாதியாரால் ஒதுக்கப்பட்டுள்ள என்னருமைச் சகோதரர்கள் பாரதப் புதல்வர்களல்லவோ? அவர்கள் உழைப்பன்றோ நாம் உண்ணும் உணவு? நாம் உடுக்கும் உடை? நாம் வாழும் வீடு வாசல் முதலிய யாவும்? அவர்கள் காலைமுதல் மாலை வரை நெற்றிநீர் நிலத்தில் விழ வயல்களில் உழைக்கிறார்கள். அவர்கள் உழைப்பால் தானியங்கள் மலை மலையாக நம்மில்லங்களில் குவிகின்றன. உழைக்கும் அவர்கட்கோ போதிய உணவில்லை. அவர்கள் உழைப்பை உண்ணும் நாம் பட்டாடை உடுத்து கிறோம்; மாடியில் உறங்குகிறோம்; அவர்களோ வெயிலால் உலர்ந்து, மழையால் நனைந்து, மரத்தடியில் உறங்குகிறார்கள். காடுகளிலும் மலைகளிலும் திரிந்து நமது ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள் அவர்கள். பாலையும் தயிரையும் நெய்யையும் உண்பவர்கள் நாம். அவர்கட்கோ கிணற்று நீரும் குளத்து நீருமே அருமை. அவர்கள் உழைப்பையுந்தின்று, அவர்களைத் தெருக்களிலும், கிணறுகளிலும், கோயில்களிலும் நெருங்க ஒண்ணாதவாறு அடித்துத் துரத்துவது நியாயமா? தருமமா? அன்பர்களே! ஓருங்கள். தீண்டாமை ஒழிவே சுயராஜ்யம் நம்முடன் பிறந்த மக்களை நாம் தீண்டாதார் என ஒதுக்கி வருத்திவந்த ஊழ்வலியன்றோ நம் அனைவரையும் உலகில் தீண்டாதாராக்கி யிருக்கிறது? அடிமை இருளில் தள்ளி இருக்கிறது? இன்னுமா ஊழைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்? தீண்டாமை இன்று ஒழிந்தால், நாளை சுயராஜ்யம் வரும் என்பதை நாம் மறத்தலாகாது. சுயராஜ்யம் என்பதற்குத் தீண்டாமை ஒழிவு என்றும் பொருள் கூறலாம். தீண் டாமையை வைத்துக்கொண்டு என்ன முயற்சி செய்தாலும், அது நமது முயற்சிக்குக் குறுக்கே நின்று, இடர் விளைத்துக் கொண்டே யிருக்கும். இலட்சம் சத்தியாக்கிரகிகள் சிறை புகுந்தாலும், தீண்டாமை உள்ளமட்டும் சுயராஜ்யம் வாராது. இவ்வுண்மை உணர்ந்தே மகாத்மா காந்தி, தீண்டாமை விலக்கை ஆக்க முறையில் நடுமணியாகப் புகுத்தியுள்ளார். தீண்டாமையை ஒழிக்க நாம் என்ன செய்கிறோம்? சீர்திருத்தம் பெற மிதவாதிகள் எவ்வளவு முயற்சி செய்கிறார் கள்? சட்டசபையில் நுழையச் சுயராஜ்யக் கட்சியார் எவ்வளவு உழைத்தார்? அவ்வளவு முயற்சி - அவ்வளவு உழைப்பு - தீண்டா மைக்கு உண்டோ? தீண்டாமையை ஒழித்தே சுயராஜ்யக் கிளர்ச்சியில் தலைப்படல் வேண்டும் என்று ஒவ்வொரு தலைவ ரும் விரதங் கொண்டுழைத்தால் தீண்டாமை ஒழியாதோ? தீண்டாமையைப்பற்றி நாம் பேசியது போதும்; எழுதியது போதும்; தீர்மானங்கள் நிறைவேற்றியதுபோதும்; திருநாளைப் போவார், திருப்பாணாழ்வார் வரலாறுகளைக் கூறி, ஏழைகளை ஏமாற்றியது போதும். இனிச் செயலில் தீண்டாமையை ஒழிக்க முயலல் வேண்டும். தீண்டாத வகுப்பார்க்குள் சிலர் சேர்ந்து, ஒரு கழகங் கண்டு, மகாத்மா அறிவுறுத்தி வரும் அஹிம்சா தர்ம வழியில் நின்று, சத்தியாக்கிரக முறையில் கோயிலுக்குள் நுழைந்தால், அவரைத் தடுக்கச் சிலர் வருவாரானால், அப்பொழுது சுய ராஜ்யத்துக்கு நாம் அருகரா அல்லரா என்பது புலனாகிவிடும். அக்காலம் வாராமல் போகாது. திருவாங்கூரில் அந் நற்காலம் பிறந்துவிட்டது; மற்ற இடங்களிலும் இனிப் பிறக்கும். சகோதரர்களே வலிந்து சத்தியாக்கிரகப் போர் தொடங்குதற்கு முன்னர், நாமே அவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயல்வோமாக. வேறு பல பொதுவிடங்களிலும் அவர்கள் வரவுக்கும் செலவுக்கும் இடந்தரல் வேண்டும். தீண்டாமை விலக்கத்துக்கென ஒரு தனி அமைப்பு (கதருக்கிருப்பதுபோல) ஏற்படுத்தி உழைப்பது நலம். மதுவிலக்கு கள், மனிதன் உடல் வளத்தையும் உயிர் நலத்தையுங் கெடுப்பது. தென்னை, பனை முதலியன கள்ளுக்காக ஏற் பட்டனவல்ல. மனித வாழ்வுக்கு வேண்டப்படும் பொருள் பல அவற்றில் இருக்கின்றன. மனிதன், தன் முயற்சியால், கள்ளை அவற்றினின்றும் உண்டு பண்ணுகிறான். கள், இயற்கையாகப் படைப்பில் விளைவதன்று. இயற்கைப் படைப்பிலில்லாத ஒன்றைக் குடிப்பது வாழ்வைக்குலைக்கு மென்பதில் ஐயமில்லை. பண்டைக்காலத்தில் கள்ளருந்துவோர் தொகை மிகச் சுருக்கம்; இப்பொழுது பெருக்கம். இழிதொழில் செய்வோரும், உயர்தொழில் செய்வோரும் இதுகாலை மது உண்கிறார். மேல்நாட்டு மதுவினங்களும் நமது நாட்டில் வந்து இறங்கு கின்றன. அவற்றைப் பெரிதுங் குடிப்போர் கற்ற வகுப்பாரே யாவர். மதுவால் அரசாங்கத்தாருக்கு வருவாய் ஏராளமாகக் கிடைக்கிறது. இவ் வருவாயைக் குறைத்து அரசாங்க இயக் கத்தை இடர்ப்படுத்தவே நிர்மாணத் திட்டத்தில் மதுவிலக்கு ஒரு முறையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று கருதுவோர் கருதுக. கட்குடியால் நாட்டுக்குப் பல கேடுகள் உண்டு. நாட்டு மக்கள் என்று சொல்லப்படும் தொழிலாளர், கள்ளருந்துவ தால் செல்வப்பே றிழப்பதுடன், உடலின்பப்பேறு, புதல்வர்ப் பேறு முதலிய பேறுகளையும் அவர் இழக்கிறார். மது உண்போர்பால் தேசபக்தி நிகழ்தல் அரிது. சில வேளை தேசபக்தி நிகழுமேல், அது மின்னல்போலத் தோன்றி மறையும். அவர் தம் உள்ளத்தில் எழும் எழுச்சி நீர்க்குமிழிபோல் தோன்றி நின்று அழிவதாகும். எழுச்சிவேளையில் அன்னார் ஏதாயினுங் கொடுஞ்செயல் ஆற்றினும் ஆற்றுவர். நூற்றல் நிர்மாணத் திட்டமெனும் ஆக்க வேலைகளுள் ஒன்றாக வுள்ள நூல் நூற்றல், மதுவிலக்குக்கு உற்ற துணை செய்வ தாகும். இயந்திரங்கள் நிரம்பிய தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் செவியில் எந்நேரமும் (இயந்திர) ஒலி கேட்பதாலும், உழைப்பின் அலுப்பாலும் அவர்க்குக் கரணச் சோர்வு நிகழ் கிறது. அதைப் போக்கத் தொழிலாளர் குடிக்கின்றனர். சர்க்கா வால் அத்தகைச் சோர்வு நிகழாது. குடியர் சர்க்கா சுழற்றி வருவாரானால், நாளடைவில் அவர் கள்ளை வெறுப்பவராவர். கள்ளுக்கு மரம் விடுவோரும், கள்ளிறக்குவோரும், கள் விற்போரும் மதுவிலக்கத்தில் தலைப்பட்டால் நாடு தூய்மை யுறும். மதுவிலக்கும் ஏனைய இரண்டு முறைகளைப்போல இன்றியமையாதது. அதை விலக்க எல்லாரும் முயலல் வேண் டும். பெரிதும் கள்ளுக்கு மரம் விடுவோர் நாட்டின் மீது கருணை செலுத்தல் வேண்டும். எல்லாருஞ் சேரலாம் பார்தோலித் திட்டத்தில் சிறந்து விளங்கும் இம்மூன்றும் எக் கட்சிப்பிணக்கையும் உண்டு பண்ணுவனவல்ல. எல்லாக் கட்சியாரும் ஒன்றுபட்டுப் பார்தோலித் திட்டத்தை நிறை வேற்றலாம். பார்தோலித் திட்டம் நிறைவேறினால், அது நாட்டிலுள்ள குறைகளைப் போக்கும். குறைகளை நிரப்பி வைத்துக் கொண்டு வெறும் கிளர்ச்சி செய்வது பாழுக் குழைப்பதாகும். மகாத்மா காந்தி ஆக்க வேலையை - சிறப்பாகக் கதர்த் தொண்டை - தொடங்கிவிட்டனர். நாடு அவர்வழி நிற்பதாக. மாணாக்கர் ஆக்க வேலையில் பெரிதுங் கலந்து உழைக்க வேண்டுமென்பது எனது கோரிக்கை. அவர் தமக்குள்ளாக ஒரு தொண்டர் படை அமைத்துக் கொண்டு, வாரத்துக்கு இரண்டு மணி நேரம் நிர்மாணத்திட்டப் பிரசாரஞ் செய்தால், ஓராண் டில் ஒருவர் ஒரு சிறு ஊரைக் கதர் மயமாகச் செய்யலாம். ஹிந்து - முலிம் ஒற்றுமை ஹிந்து - முலிம் ஒற்றுமையை மகாத்மா காந்தி, அலி சகோதரரோடு கலந்து நாட்டில் உண்டாக்கினார். சிற்சில இடங்களில் அவ்வொற்றுமைக்குக் கேடு நிகழ்ந்தது. அலி சகோதரர் வெளிவந்த நாள்தொட்டு, யாண்டும் எவ்விதக் குழப்பமும் உண்டாகவில்லை. ஹிந்து - முலிம் ஒற்றுமை நன்றாக வளர்ந்துவரும் இவ்வேளையில், அதைப்பற்றி ஒன்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை. கிலாபத்தைப்பற்றி முலிம் உலகம் கலக்கமெய்தி யிருக்கிறது. அதைப்பற்றி ஓர் உலக முலிம் மகா நாடு கூடி, ஒரு முடிவு செய்வதற்குள், அதைக் குறித்து என்போன்றார் ஒன்றும் பேசவேண்டுவதில்லை. முலிம் உலகத்துக்கு ஏற் பட்டுள்ள கலக்கம் விரைவில் ஒழிய வேண்டுமென்று ஆண்ட வனைத் தொழுகிறேன். மிராசுதாரர்களுக்கு ஒரு விண்ணப்பம் இப்பொழுது தஞ்சை ஜில்லாவிலும், இந்த ஜில்லாவிலும் வாழும் நிலக்கிழார்கள் (மிராசுதாரர்கள்) மறுபைசல் சம்பந்தமாகச் சில ஏற்பாடுகள் செய்து வருவது உங்கட்குத் தெரியும். நிலக்கிழார்களுக்குத் துன்பம் விளையும்போது நிலக்கிழார்களும், தொழிலாளர்களுக்குத் துயரம் நேரும் போது தொழிலாளர்களும், கிராம அதிகாரிகளுக்குக் குறை நிகழும்போது கிராம அதிகாரிகளும், அவ்வாறே தங்களுக்கு வருத்தம் உண்டாகும்போது மற்றவர்களும் கிளர்ச்சி செய்ய முற்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் காங்கரஸில் சேர்ந்து, ஒருமுகமாகச் சுயராஜ்யக் கிளர்ச்சி செய்தால், பயன் விளையு மென்பது திண்ணம். தன்னந் தனியராய் அவரவர்க்கு இடுக்கண் உறும்போது, அவரவர் கிளர்ச்சி செய்ய முற்படுவதால் எப் பயனும் விளைவதில்லை. அதனால், நாட்டின் பலக் குறைவே வெளிப்படுகிறது. எல்லாருடைய குறையும் சுயராஜ்யம் ஒன் றால் ஒழியும். ஆதலால், நிலக்கிழார்கள் தன்னந் தனியராய்க் கிளர்ச்சி செய்யாது, காங்கரஸில் சேர்ந்து ஆக்க வேலையில் தங்கள் கருத்தைச் செலுத்துவது நலம். ஆக்க வேலைக்குத் தஞ்சை முப்பது லட்சமும், திரிச்சி இருபது லட்சமும் ஈட்டலாம். எதிர்கால நிலை தீண்டாமையும் சத்தியாக்கிரகமும் இப்பொழுது நாட்டைப் பலதிறக் கிளர்ச்சிகளும், பலதிறக் கட்சிகளும், பலதிறக் கருத்து வேற்றுமைகளும் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் ஒன்றுபட்டு விரை வில் சுயராஜ்யக் கிளர்ச்சியாக மாறிவிடும். அப்பொழுது பார்தோலித் திட்ட உழைப்பே நாட்டுத் தொண்டாகவும் மாறும்; நாட்டிலுள்ள கட்சிப் பிணக்குகளெல்லாம் ஒழியும்; தன்னிடத்திலுள்ள குறைகளைக் களைவதில் நாடுங் கருத்தைச் செலுத்தும்; தாழ்ந்த வகுப்பார் தமது பிறப்புரிமைக்காகச் சத்தியாக்கிரகப் போர் நாடு முழுவதும் புரிந்த வண்ணமிருப்பர்; மகாத்மா காந்தி தலைமை தாங்கி அப்போரை நடாத்துவர். அப்போர் நாபாவில் நடைபெற்று வருகிறது; திருவாங்கூரில் தோன்றியிருக்கிறது; இனி எங்கணுங் கிளம்பும். அப்போரால் நாடு, தன் குறைகளை நீக்கிக் கொண்ட பின்னரே, தான், அரசாங்கத்தோடு சத்தியாக்கிரகப்போர் தொடுக்கும் ஆற் றலைப் பெறுதல் கூடும் என்பதைச் செவ்வனே உணரும். எவ்வெக்குறைகள் நம்மை அடிமைக் குழியில் வீழ்த்தினவோ, அவ்வக் குறைகள் ஒழியுங் காலம் நெருங்கி யிருக்கிறது. இப் பொழுதே, ஒவ்வொரு குறையைக் குறித்துக் கிளர்ச்சி செய்யும் முறையை விடுத்துச், சுயராஜ்யக்கிளர்ச்சி ஒன்றிலேயே மனத்தைப் பதிய வைத்து, அதைப் பெற ஒற்றுமையும் உறுதியும் நல்கவல்ல ஆக்க வேலைகள்மீது நாம் ஊக்கங் கொள்வோமாக. தலைவர்களுக்கொரு வேண்டுகோள் தலைவர்கள் முனைப்பு சுயராஜ்யத்தை அணித்தே கொணர்ந்து நிறுத்திய ஒத்துழையா இயக்கம், ஊறுபட்ட காரணத்தை முன்னிட்டு, தலைவர்களுக்கொரு விண்ணப்பஞ் செய்து கொள்ள வேண்டு வது எனது கடனென உணர்கிறேன். ஒத்துழையா இயக்கத்தை நாட்டில் உறங்க வைத்தவர்கள் தலைவர்கள் என்பது எனது உள்ளக்கிடக்கை. தலைவர்களுக்குள் கிளம்பும் முனைப்பு நாட்டின் எழுச்சிக்குக் கேடு சூழ்கிறது. ஆண்டவன் எல்லாவற்றையும் பார்ப்பவன் ஒருவர் தாம் தலைவராகும் முறை குறித்து உழைக்கும் இழிவுகளெல்லாம் நாட்டை விடுத்து அறவே தொலைதல் வேண்டும். அடிமை நாட்டில் தலைமைப்பேறு குறித்து ஒருவரை ஒருவர் நிந்தித்துக் கலாம் விளைப்பது இழிவு! இழிவு! ஒரு தலைவரை ஒழிக்க, மற்றொருவர், அவர்மீது பொல்லாப் பழிகளைச் சுமத்திப் பிரசாரவேலை செய்வது தமிழ் நாட்டில் இயல்பா யிருக்கிறது. சென்னையில் வதியுஞ் சிறியேன் இவ் வுண்மையைச் செவ்வனே அறிவேன். கருத்து வேற்றுமை குறித்துப் பலதிற வாதம் நிகழ்த்தலாம். அதைக் காரண மாக்கொண்டு ஒருவரை ஒருவர் குறைகூறுவதும், புறங்கூறுவதும் விரும்பத்தக்கனவல்ல. புறஉலகப் புகழ் குறித்துக் கபட நாடகங்கள் புரிந்து, அகத்தூய்மையைக் கெடுத்துக் கொள்வது, பின் வாழ்விற்கு இடர் தேடிக் கொள்வதாகும். ஒழுக்கத்திற் சிறந்த நன்மக்களை இழித்துக்கூறி, அவர்கள் புகழ் கெடுமாறு முயல்வதினும் இழிவு வேறுண்டோ? அவர்கள் மீது இல்லாப் பொல்லாப் பழிகளைத் தமது இருண்ட மனத்தால் படைப் போர்க்குத் தமது அகத்தும் புறத்துமுள்ள ஆண்டவன் நினைவு தோன்றுவதில்லை போலும்! இவர் கண்ணுக்கு ஆண்டவன் தோன்றாவிடினும், ஆண்டவன் கண்ணுக்கு இவர் மனம் தோன் றாமலில்லை. ஆண்டவன் ஒவ்வொருவர் எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். உலகத்தை ஏமாற்றலாம்; எங்குமுள்ள ஆண்டவனை ஏமாற்றல் முடியுமோ? ஆண்டவன் நெறியாகிய உண்மையினின்றும் எவரும் பிறழ்தலாகாது. முனைப்பால் அது பிறழ நேர்ந்தாலும் மனங் கசிந்து கசிந்துருகி மீண்டும் அதை ஒழுங்குபடுத்திக் கொள்ள முயலல் வேண்டும். வாழ்வைத் தூய்மைப் படுத்த முயல்வதே பெரிய சுயராஜ்ய முயற்சி. பொய்ம்மையும் சிறுமையும் சுய ராஜ்யத்தை அழிக்குங் கருவிகள். அவை தலைவர்கள் வழி வளர்ந்தால் நாடு எந்நிலை அடையும்? அடிமை நாட்டில் வறுமை காரணத்தாலும், வேறு பல காரணங்களாலும் பொய் பொறாமை முதலிய தீமைகள் நிரம்பிக் கிடப்பது இயல்பு. ஆனால் அந்நாட்டின் உரிமை குறித்து உழைக்க வருந் தலைவர்கள்பால் எத்தகைத் தீக் குணங்களுந் தலைகாட்டலாகாது. அவர்கள் நல்லொழுக்கமே நாட்டை ஒழுங்குபடுத்தவல்லது. கேவலம் தலைமைப்பேறு கருதி, எத்தகை இழி துறைகளிலும் நம்மவர் இறங்குகின்றனர். போனது போக. இனித் தலைவர்கள், பொறாமைக்கு இடந் தரக்கூடிய முறைகளில் மனத்தைச் செலுத்தாது, பெருந் தலைவராகவுள்ள மகாத்மா காந்தி ஆணைவழி நின்று, நாட்டிலுள்ள குறைகளைப் போக்க முயல்வார்களாக. காந்தி ஒளி தலைவர்களே! பயோன்கரை நினையாதேயுங்கள்; லாயிட் ஜார்ஜை நினையாதேயுங்கள்; அரசியல் கடந்த அன்புப் பொருளாம் காந்தியடிகளை நினையுங்கள். பாரதநாட்டின் வாழ்விற்கோர் இலக்கியமாய் நம் பெருமான் விளங்குகிறார். நெப்போலியன் போரும், கெய்சர் அவாவும் நமக்கு எற்றுக்கு? அரிச்சந்திரன் உண்மையும், புத்தர் அறமுமே நமக்குத் தேவை. மேல்நாட்டு அரசியல் நமக்கு வேண்டாம். கீழ்நாட்டு அன்பே நமக்கு வேண்டும். கீழ்நாட்டு உண்மையும், அன்பும், அறமும் ஓருருக்கொண்டு காந்தியாய் நம்மெதிரில் விளங்குகின்றன. அவ்வொளி வழி காட்டுகிறது. தலைவர்களே! அவ்வழி நடக்க வாருங்கள்; பயன் கருதா (நிஷ்காமிய) உளங்கொண்டு எழுங்கள்; எழுங்கள். என்புதோல் போர்த்த உடலை மறந்துவிடுங்கள்; உயிர் நிலையாகிய அன்பு புலனாகும். அங்கே பொறாமை ஏது? பொய்மை ஏது? புகழ் ஏது? அன்பே அன்பே அன்பே புலனாகும். அன்பினால் ஆவியோடாக்கை கசிந்து கசிந்துருகி ஆனந்தத் தொண்டு செய்யலாம். தலைவர்களே! வாருங்கள். நமக்குள் பிணக்கா? சண்டையா? பொறாமையா? அப்பேய்களை உதறித் தள்ளி, முப்பது கோடி முகமுடைய நமது அன்னையைத் தொழ, அவட்குத் தொண்டு செய்ய எழுங்கள்; எழுங்கள்; வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழக்கஞ் செய்து எழுங்கள். இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! இதுகாறும் உங்கள் அரிய காலத்தை வீணே போக்கி விட்டேன். உங்கள் முன்னிலையில் ஒத்துழையாமை, ஆக்கத் திட்டம் முதலியவற்றையே பெரிதும் பேசினேன். எனது மனம் இப்போது வேறொன்றிலும் செல்லவில்லை. பார்தோலித் திட்டமே நமது நாட்டை உய்விக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் நம்புவதைப் புன்மொழிகளால் உங்களுக்குப் புகன்றேன். குற்றங் குறைகளிருந்தால் மன்னிக்க. பாரதப் புதல்வர்களே! இங்கே ஹிந்துக்களிருக்கிறீர் கள்; முலிம்களிருக்கிறீர்கள்; கிறிதுவர்களிருக்கிறீர்கள்; மற்றவர்களுமிருக்கிறீர்கள். g‹ik¥g£l c§fis¥ ‘ghuj¥ òjšt®fns! என்று ஒருமைப்படுத்தி விளிக்கிறேன். உங் களைப் பன்மைப்படுத்தி விளிப்பதினும், ஒருமைப்படுத்தி விளிக்கவே என்னுள்ளம் ஒருப்படுகிறது. உங்கட்கும் ஒருமை கேட்கவே உவகை பூக்கும். பன்மையில் ஒருமை காண்டலே இன்பப் பேறென்று நமது நாட்டு நூல்கள் கூறுகின்றன. ஈண்டொருமை கண்டே யான் இன்புறுகிறேன். நாம் அனை வரும் பாரதப் புதல்வர்களல்லாது வேறெவர் புதல்வர்? நாமனைவரும் பாரதப் புதல்வர் என்ற ஒன்றிய உணர்வும் செயலுமே சுயராஜ்யமாகும். அவ்வுணர்வை மகாத்மா காந்தி, அஹிம்சா தர்மத்தால், சத்தியாக்கிரகத்தால், ஹிந்து பாஷை யால், கதராடையால், ஹிந்து - முலிம் ஒற்றுமையால், தீண்டாமை விலக்கால் வளர்த்து வருகிறார். அவர் ஆணைவழி நிற்க வேண்டுவது நமது கடமையன்றோ? அவர் ஆணை என்னை? ஆக்க வேலையே. அவ்வேலையை நாம் செய்யலா காதா? அதைச் செய்யச் சகோதரிகளே! சகோதரர்களே! எழுங்கள்; எழுங்கள். உங்கள் தாய்முகம் நோக்குங்கள். அவள் முகத்தில் மலர்ச்சியில்லை. அவள் அகத்தை மகிழ்விக்க வேண்டுவது எவர் கடமை? பிரிட்டிஷ் தொழிலாளர் கட மையா? எண்ணுங்கள். எவர் காலிலும் விழவேண்டாம்; காலில் விழும் வழியை நம் குருநாதன் நமக்குக் காட்டவில்லை. அவர் கதர் கதர் என்கிறார். கதர் அணிந்தெழுங்கள்; தீண்டாமையை ஒழியுங்கள்; சத்தியாக்கிரகப் போருக்குச் சித்தமா யிருங்கள்; சித்தமா யிருங்கள்; நாட்டின் பொருட்டு உயிரைவிடவும் சித்தமா யிருங்கள். இருப்பீர்களா? இருப்பீர்களா? அச்சித்தம் எல்லாம் வல்ல ஆண்டவனருளால் நமக்கு உண்டாக; உண்டாக. வந்தேமாதரம். காந்தியடிகள் வாழ்க. அருப்புக்கோட்டை தாலுக்கா 2 - வது மகாநாடு (அருப்புக்கோட்டையில் கூடியது) - 1923ஆம் வருடம் அக்டோபர் மாதம்9ஆம் நாள் - தோற்றுவாய் அன்பு கெழுமிய சகோதரிகளே! சகோதரர்களே! நங் காந்தியடிகள், சிறைக்கோட்டத்தினின்றும் நம்மிடை நண்ணப் போகிறார் என்ற வதந்தி எங்கணும் பரவிவரும் இக்காலத்தில், அவர் சிறைபுகுந்த பின்னர் நாட்டைத் திறம்பட நடாத்தும் தலைவர் இன்றி நாடு அல்லலுறும் இந்நாளில், நாயக சபையாகிய காங்கர மகாசபையின் நிலை கலங்கியுள்ள இவ் வேளையில், தெய்வ மணமும் செந்தமிழ் மணமும் என்றும் கமழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஜில்லாவின் ஒரு பாங்கர் இலங்கும் இவ்வருப்புக் கோட்டைத் தாலுக்கா இரண்டாவது அரசியல் மகாநாடு இன்று இவண் கூடியிருக்கிறது. இம் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்குமாறு அடியேனை நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். அது குறித்து உங்களுக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். ஆனால், நீங்கள் எனக்குப் பணித்துள்ள தொண்டை இனிதாற்ற யான் அருகனல்லேன் என்பதை உங்களுக்கு அறிவித்துக் கொள் கிறேன். உங்கள் துணை கொண்டே ஒல்லும் வகை இம் மகா நாட்டை நடாத்த முயல்கிறேன். நடைமுறையில் குற்றங் குறை கள் நிகழுமேல் மன்னிக்குமாறு வேண்டுகிறேன். ஜனநாயகம் முன்னே நமது நாட்டில் ஆண்டுக் கொருமுறை காங் கரஸும், சில மாகாண மகாநாடுகளும் கூடிக் கலைந்து கொண் டிருந்தன. அவை பெரிதும் ஆங்கிலம் கற்ற அறிஞரால் நடத்தப்பட்டு வந்தன. குக்கிராமங்களில் இருப்பவர்க்கு அவற்றைப்பற்றி ஒன்றுமே தெரியாமலிருந்தது. இப்பொழுது ஜில்லா மகாநாடுகளும், தாலுக்கா மகாநாடுகளும் பல இடங்களில் கூடுகின்றன. கிராமங்களின் உறக்கம் ஒழிந்து வருகிறது. பெரியர் - சிறியர், செல்வர் - வறியர் முதலிய பலருங் காங்கரஸைப் பற்றிப் பேசுகின்றனர். இந்த ஜனநாயக உணர்வைக் கிளப்பினவர் யாவர்? மகாத்மா காந்தி என்று மண்ணுஞ் சொல்லும்; மரமுஞ் சொல்லும். அப்பெரியாரால் எழுப்பப்பெற்ற ஜனநாயகத்தை வளர்க்க வேண்டுவது எவர் கடமை? நேரு கடமையோ? தா கட மையோ? அஜ்மல்கான் கடமையோ? கிராம வாசிகளாகிய உங்கள் கடமை என்று நான் பறை அறைவேன். உங்கள் கடமையை நீங்கள் செவ்வனே ஆற்றுகிறீர்களா? கிராமப் பெரியோர்களே! உங்கள்பால் ஜனநாயகம் தாண்டவம் புரிகிறது. உங்கள் பிரதிநிதிக் கூட்டங்களிலோ அதிகாரவர்க்கம் தலைவிரித்தாடுகிறது. காரணம் என்னை? ஜனநாயக உணர் வுடைய பிரதிநிதிகளை நீங்கள் தெரிந்தெடுத்தனுப்பாமை யன்றோ? மக்களும் பிரதிநிதிகளும் தற்போதைய அகில இந்திய காங்கர கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். அக்கூட்டத்தின் திருவிளையாடல் களை நீங்கள் ஓராண்டாகக் கவனித்து வந்திருக்கலாம். அக்கூட்டம் ஓராண்டாக என்ன வேலை செய்தது? கிராம வாசிகளாகிய உங்கள் விருப்பம் தெற்கே கன்னியாகுமரியைப் பார்க்கிறது; உங்களால் தெரிந்தெடுத்தனுப்பப்படும் அகில இந்திய காங்கர கூட்ட அங்கத்தவர் விருப்பம் வடக்கே இமய மலையை நோக்குகிறது. அவ்வங்கத்தவர்கள் தங்களை உங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இஃதென்ன வேடிக்கை! கிராமத்தார்க்கு எச்சரிக்கை நமது தமிழ்நாட்டினின்றும் அனுப்பப்பட்டுள்ள அகில இந்திய காங்கர கூட்டத்தின் அங்கத்தவருள் பெரும்பான்மை யோர், தமிழ்நாட்டு மக்கள் கருத்துக்கு மாறுபாடாக நடந்து வருவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். தமிழ்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தமிழ்நாட்டுக்கே மாறாக நடப்பது என்ன அநியாயம்! அகில இந்திய காங்கர கூட்டத் துக்குப் பெரிதும் நகரவாசிகளை - பட்டணவாசிகளை - பட்ட தாரிகளை - வக்கீல்களை - தற்கால நாகரிக வேடக்காரரை - நீங்கள் தெரிந்தெடுத்து அனுப்பிக் கொண்டிருக்கு மட்டும் இவ்வநியாயம் நடந்து கொண்டே யிருக்கும். சென்னை ஒரு சிறிய நகரம். ஆங்கே காங்கர வேலை மிகக் குறைவு; ஆனால் ஆரவாரம் அதிகம். அந்நகரத்தினின்றும் எத்துணைப் பேர் அகில இந்திய காங்கர கூட்டத்துக்குத் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்பது பற்றியும் உங்கள் ஜில்லாவினின்றும் எத்துணைப் பேர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்தும் நீங்கள் எப்பொழுதாவது எண்ணியதுண்டா? அகில இந்திய காங்கர தேசத்தின் பிரதிநிதிக் கூட்டம். அஃது உங்கள் (கிராமவாசிகள்) பெயரால் வினையாற்றுகிறது. அதற்கு, உங்கள் கருத்துக்கு மாறுபடுவோரைத் தெரிந்தெடுத்தனுப்பலாமா? போனது போக. இனியாவது எச்சரிக்கையா யிருக்குமாறு உங்களை மிக வணக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன். விசேஷ காங்கர காந்தியடிகள் சிறைபுகுந்த பின்னர், காங்கர கயையில் கூடிற்று. ஆங்கே சட்டசபை விலக்கைப் பற்றியும், நுழைவைப் பற்றியும் வாதம் நடந்து, முடிவில் விலக்கே நிறைவேறிற்று. அதற்கு ஸ்ரீ தாஸரும், அவர்தங் கூட்டத்தாரும் உடன்படாது, சுயராஜ்யக் கட்சி என்றொரு கட்சியைக் காங்கரசுக்குள் ளாகவே அமைத்து, சட்டசபை நுழைவை வலியுறுத்தி, பிரசார வேலை செய்து நாட்டைக் கலக்கி விட்டனர். பழம்பெருச் சாளிகள் ஸ்ரீதாஸருக்குத் துணைபுரியக் கிளம்பிவிட்டன. அகில இந்திய காங்கர கூட்டம், கயை காங்கர தீர்மானங்களை நிறைவேற்றுவதை விடுத்துத் தலைவர்கள் பிணக்கை ஒழிப்பதில் கவலை செலுத்தி வந்தது. முடிவாகப் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கர கூட்டம் சமாதான வழி என்று ஒரு வழியல்லா வழியைக் கோலிற்று. அம்முடிவுக்குப் பின்னர் காங்கரஸில் மூன்று கட்சிகள் முளைத்தன. இக்கட்சிகளால் நாட்டின் நிலை கலங்கியது கண்டே, விசேஷ காங்கர, தில்லியில் கூடியது. அக்காங்கர, சட்ட சபை விலக்கை ஆதரிக்கிறதென்றும், ஆனால் சட்டசபை நாடிச் செல்வோரை எதிர்த்துப் பிரசார வேலை செய்வதில்லை யென்றும் தீர்மானித்திருக்கிறது. இத் தீர்மானத்தில் விலக்குச் சொல்லும் நுழைவுப் பொருளும் அடங்கியிருத்தல் காண்க. இருதலைக் கொள்ளி காங்கர சட்டசபை விலக்கை ஆதரிக்கிறதா? EiHit MjÇ¡»wjh? என்று பிறக்குங் கேள்விக்குக் காங்கர என்ன பதிலிறுக்குமோ தெரியவில்லை. காங்கர விலக்கை ஆதரிப்ப தாகவும் சொல்லுதல் முடியாது; நுழைவை ஆதரிப்பதாகவும் சொல்லுதல் முடியாது. கூர்ந்து ஆராய்ந்தால் நுழைவையே காங்கர ஆதரிக்கிறது என்று கூறலாம். நுழைவுக்கு எதிர்ப் பிரசாரஞ் செய்தல் கூடாது என்று காங்கர தீர்மானித் திருப்பதால், அது நுழைவை ஆதரிப்பதாகவே கோடல்வேண் டும். சட்டசபைக்குச் செல்வோர் உரிமையைப் பாதுகாக்க வந்த காங்கர, பகிஷ்காரப் பிரசாரஞ்செய்வோர் உரிமையை ஏன் கட்டித் தளையிடல் வேண்டும்? காங்கர பகிஷ்காரத்தைக் கைவிடவில்லையே! g»Zfhu« Ô®khd¤â ÈU¡»wnj! என்று சிலர் நயம்பட உரைப்பர். அவ்வுரை வெற்றுரையே யாகும். எதிர்ப் பிரசாரஞ் செய்தலாகாது என்று காங்கர தீர்மானித்திருப்பதால், அது விலக்கை நழுவ விட்டதென்றே அறிஞர் கொள்வர். இப்பொழுது நாட்டு மக்கள் பொதுப்பட என்ன சொல் கிறார்கள்? காங்கர சட்டசபைக்குச் செல்ல ஆணை தந்துவிட்டது என்றே சொல்கிறார்கள். காங்கர உள்ளக் கிடக்கை நாட்டு மக்களுக்கு விளங்காமற் போகவில்லை. கோணல் கோணலாகத் தீர்மானம் நிறைவேற்றியதைவிட நேர்மையாகச் சட்டசபை புகுதலையே காங்கர நிறைவேற்றி யிருக்கலாம். அதனால் சுயராஜ்யக் கட்சியார் நோக்கம் ஒரு வேளை நிறைவேறினும் நிறைவேறலாம். விசேஷ காங்கர தீர்மானத்தைச் சிறிது மனச் சான் றோடு இயைபுபடுத்திப் பார்க்கலாம். விசேஷ காங்கர சட்டசபை விலக்கை ஆதரிக்கிறது என்று ஸ்ரீமதி சரோஜினி முதலியோர் கூறுகிறார். ஏன் ஆதரிக்கிறது என்றால், சட்டசபை மாயா மண்டபமாதலின் என்று அவர் சொல்லுகிறார்! சட்டசபை மாயா மண்டபம் என்று உணரும் இவ்வறிஞர், அதில் விழப்போவோரைத் தடுக்கவேண்டாம் என்று கூறு கிறார். ஒரு பண்டத்தில் நஞ்சு உண்டு என்று உணர்ந்த ஒருவன், அதை உண்ண மற்றொருவன் செல்லப் போம்போது, அவன் இவனைத் தடுக்காமல் நிற்கலாமோ? விசேஷ காங்கர தீர்மானத்தின் ஒழுங்கே ஒழுங்கு! விசேஷ காங்கரஸால் பிணக்கு இன்னும் அத்தீர்மானத்தால் நாட்டுக்கொரு நாசம் உண்டு. முன்னே காங்கர முழு விலக்கையே ஆதரித்தமையால், சட்டசபையை நாடியிருந்த சகோதரர்களுள் சிலருக்காதல் காங்கரஸில் அநுதாபம் ஏற்பட்டு, நம் நாட்டுச் சகோதரர்கள், நாம் அமர்ந்துள்ள சட்டசபையை விலக்கிச் சிறை நோக்கு கிறார்கள். eh« ï§nf k»œ¢ánahL mk®ªâU¤jš Ãahankh? என்று அவர் மனச்சான்று அவரை வருத்திக் கொண்டே யிருக்கும். அதனால் அவரும் திடீரெனப் பகிஷ் காரத்தில் இறங்க நேரினும் நேரலாம். இவ்வாறே நாட்டு மக்களுக்கு அநுதாபம் தோன்றத் தோன்ற ஒத்துழையாமை உரம்பெறும். விசேஷ காங்கர தீர்மானம் பழைய சட்டசபைப் பிரவேசக்காரர் அநுதாபத்தை இழக்குமாறு செய்திருக்கிறது. அவர் இனிக் காங்கரகாரரைப் பகைவராகப் பாவிப்பர். சாதிச் சண்டைகள், வகுப்புச் சண்டைகள், சமயச் சண்டைகள் இன்னும் வலுக்கும். சில நண்பர்கள், சட்டசபையைக் காங்கர பகிஷ் கரித்தமையால், தேசபக்தி இல்லாத சிலர் சட்டசபையில் நுழைந்து அதிகாரவர்க்கத்துக்கு ஆக்கந்தேடுகிறார். ஆதலால் காங்கர, பிரவேசக்காரருக்கு ஆணை தந்தது நியாயமே என்று சொல்கிறார்கள். சட்டசபையில், ஸ்ரீ தாஸரல்ல - நேருவல்ல - எவர் நுழைந்தாலும் ஆங்கே ஒன்றுஞ் செய்தல் முடியாது. சட்டசபையின்றியே வினையாற்ற அரசாங்கத்தார் வழிதேடிக் கொள்வர். சட்டசபையில் நுழைந்து, அதிகார வர்க்க முறையைச் செயலறச் செய்வதென்பது வீண் முயற்சியும், வீண் காலச் செலவுமே யாகும். விசேஷ காங்கர தீர்மானம், காங்கரஸுக்குள்ளே கலக்கம் விளைத்துள்ளதோடு, நாட்டில் ஊக்கத்தைக் குறைத்து, ஆக்க வேலைகளைக் குலைத்து, முடிவில் ஒத்துழையா இயக்கத்தையே அழிக்குமென்ற அச்சம் பலர்பால் தோன்றி யிருக்கிறது. இவ்வச்சம் எனக்கும் உண்டு. விசேஷ காங்கர சட்டசபையைப்பற்றி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இணங்கி நடப்பதா? ãz§» el¥gjh? என்று உங்களிற் சிலர் வினவலாம். காங்கர தீர்மானம் எத் தகையதாயினும், அதனோடு பிணங்கி நடக்கவேண்டுமென்று காங்கரகாரனாக நின்று நான் கூறமாட்டேன். ஆனால் என்னைப் பொறுத்த அளவில், நான் தேர்தலில் கலந்து வாக்களிக்குமிடம் போந்து எவர்க்கும் வாக்களியேன் என்பதை உங்கள் முன்னிலையில் அறிவித்துக் கொள்கிறேன். காங்கரஸி லுள்ள பகிஷ்காரக்காரர் ஒவ்வொருவரும் இவ்வாறே உறுதி கொண்டிருப்பதை யான் அறிவேன். காங்கர இன்னுஞ் சில ஒத்துழையா முறைகளை நாளடைவில் ஒழிக்க முயலும் என்று சிலர் நம்புகிறார். ஆதலால், காங்கரஸிலுள்ள காந்தி தாசர்கள் இப்பொழுதே காந்தி தர்மத்தை வளர்க்க ஒரு தனிச்சங்கம் காண முயலுமாறு வேண்டுகிறேன். காந்தியம் மேல் நாட்டு அரசியல் முறை மேல்நாட்டு மக்கள் அரசியலை வேறாகவும், சமயத்தை (கடவுள் நெறியை) வேறாகவும் கொண்டு வாழ்வை நடாத்து கிறார்கள். கீழ்நாட்டு வாசிகளாகிய நாம், அரசியலை வேறா கவும், கடவுள் நெறியை வேறாகவும் கொள்வதில்லை. நமது நாட்டுக் கல்வி அருகிப் பிற நாட்டுக் கல்வி பெருகி வருதலால், நம்மவர்களிற் சிலர் மேல்நாட்டாரைப் போலவே அரசியலைச் சமயத்தினின்றும் வேறு பிரித்துத் தேசத்தொண்டு செய்ய லாயினர். காலஞ்சென்ற மேத்தா, கோகலே முதலியோர் மேல்நாட்டு அரசியல் வழிநின்றே தேசத் தொண்டு செய்து வந்தனர். திலகர் பெருமானும், காந்தியடிகளும் சமய தரும மெனும் செந்நெறி நின்று தேசத் தொண்டாற்றி வந்தனர். செந்நெறியை அடிப்படையாகக் கொண்ட அரசியலே நமது நாட்டுக்கு உரியது. காந்தியடிகள் அஹிம்சையை அடிப்படை யாகக் கிடத்திச் சத்தியாக்கிரக நெறி வகுத்து, இப்பொழுது நாட்டுரிமை நாடி, ஒத்துழையாமையைப் புதுக்கி, அதை வளர்த்து உரிமைபெற ஆக்க அழிவு முறைகளைக் கோலினர். அவர் கொள்கையை இனி நாம் ஒரு சமயமாகக் கொள்ளல் வேண்டும். அச் சமயத்துக்குக் காந்தீயம் என்னும் பெயர் நிறுவலாம். தனிக் கழகம் அஹிம்சா தருமமும், சத்தியாக்கிரகமும் உலகில் உள்ள எல்லா மக்கள் வாழ்விற்கும் உரியன. கொலைக்கும் பொய் மைக்கும் உலகம் இரையாகி வரும் இக்காலத்தில், காந்தியடி கள் அறிவுறுத்தல் எவ்வளவு இன்றியமையாதது என்பதை நான் விரித்துக் கூறவேண்டுவதில்லை. அவர் அருளுரை உலகில் பரவினால், எல்லா அரசுகளும் தூய்மையுற்று உலகமுந் திருந்தும். ஆதலால், அவர் கொள்கையைப் பரப்பத் தனிக் கழகங்கள் காணல் வேண்டும். காங்கர சில வேளைகளில் காந்தியடிகள் போதனையைக் கொள்ளும்; சில வேளைகளில் தள்ளும். காங்கர, காந்தியத்தைத் தள்ளும் வேளையில், அதைத் தனிக் கழகங்கள் வாயிலாக வளர்த்து வரலாகும். அக்கழகங்களில் சேர்வோர் காங்கரசை விடுத்து நீங்கலாகாது. காங்கரஸிலிருந்து கொண்டே சமயம் நேரும் போதெல்லாம் காந்தியடிகள் அறத்தைக் காங்கரஸில் நுழைக்க முயலல் வேண்டும். காந்தியடிகளால் சுதந்திர உணர்ச்சி இருள் இது, ஒளி இது என்று தெரியாமல் கிடந்த நம்மை, உலகோர் மதிக்கத் தக்க நெறியில் நிறுத்தி ஆண்ட எம் பெருமான் வகுத்த முறைகளை, சில காங்கர தலைவர்கள் கை விட்டால், நாமும் அவைகளைக் கை விடுவதோ? ஒத்துழையா இயக்கந் தோன்றுவதற்குமுன், நந் தலைவர்கள் எவ்வழியில் உழன்றுகொண்டிருந்தார்கள்? ஆங்கிலம் பயின்று, உத்தியோகங் களில் அமர்ந்து சட்டசபையை நிரப்பி, அதிகாரவர்க்க ஆக்கத் துக்குத் துணை செய்து கொண்டிருந்தார்கள். காந்தியடிகள் ஒத்துழையா இயக்கந் தோற்றுவித்த பின்னரன்றோ தலைவர் கள் நல்லறிவுபெற்றுத் தங்கள் செயலே தங்களை அடிமைக் குழியில் வீழ்த்தியது என்னும் உண்மை கண்டார்கள்? நமக்கு அடிமைத் தன்மையை நல்கும் பள்ளிக்கூடங்களை - நீதிமன்றங் களை - சட்டசபைகளை - விலக்குமாறு எந்தத் தலைவர் புகன் றார்? நமது அடிமைத் தன்மையைப் போக்கும் கதரை அணியு மாறும் - குடியை விலக்குமாறும் - தீண்டாமையை ஒழிக்கு மாறும் - எந்தத் தலைவர் அறிவுறுத்தினார்? பகிஷ்கார முறையும் நிர்மாண முறையும் - நாட்டில் உரம்பெற்று நிலவத் தேசபக்தர் எதிர்வாதஞ் செய்யாது சிறை புகுமாறு எந்தத் தலைவர் உரைத்தார்? சகோதரிகளே! சகோதரர்களே! சற்று உன்னுங்கள். நமது மானத்தைக் காக்க வந்த பெரியார் - நமக்கு ஒளியாய் இலங்கும் குருநாதன் - மகாத்மா காந்தியையா மறப் பது? இவர் செந்நெறியையா தூர்ப்பது? காந்தியத்தின் முடிவு காந்தியடிகள் முயற்சியால் எழுந்த ஒத்துழையா இயக்கம் என்ன கெடுதி நாட்டுக்குச் செய்துவிட்டது? ஈராண்டில் நாடு எவ்வளவு தூரம் ஏற்றமுற்றது என்று ஆய்ந்து ஓய்ந்து பாராத மக்களே அடிகளைக் குறை கூறுவார்கள். சட்டசபையைச் சிலராவது ஒழிக்கவில்லையா? நீதிமன்றத்தைச் சிலராவது நீக்கவில்லையா? கல்லூரியைச் சில மாணாக்கராவது கழிக்க வில்லையா? இன்று சிலராயிருப்பவர் நாளை பலராகாரோ? பலராகுங் குறி தோன்றவில்லையா? தோன்றிற்று. குறுக்கே சுயராஜ்யக் கட்சி முளைத்து அதை மறித்தது. ஆக்கவேலைகள் காட்டுத்தீப்போல் நாட்டிற் பரவின. எங்கணுஞ் சர்க்கா சுழன்றது; எங்கணுங் கதராடை; எங்கணுங் குடி விலக்கு; எங்கணுந் தீண்டாமைப் பேச்சு. இவ்வரிய வேலையை இது காறும் எவரே செய்தார்? அரிய வேலை செய்த பெரியாரையா நாம் மறப்பது? இவர் போதனையையா நெகிழவிடுவது? காந்தியடிகள் சொல்வழி நின்று இருபத்தையாயிரம் தொண்டர் சிறை புகுந்ததை உலகமே போற்றுகிறது. அடிகளின் ஆத்மசக்தி அகாலியர் தொடுத்த சாத்துவிகப் போரை எவ்வாறு நடாத்திற்று? அது, நாகபுரி சத்தியாக்கிரகப் போரை எவ்வாறு நடாத்திற்று? உலகத்தில் இந்நாளில் இத்தகைய ஆத்மசத்தி யுடைய பெரியார் யாண்டுள்ளார்? நமது நாட்டிலுள்ளார். இவரையா நாம் மறப்பது? இவரது அறிவுறுத்தலையா கை விடுவது? தமிழ்நாடும் சத்தியாக்கிரகமும் முதல் முதல் நமது தமிழ்நாட்டில் காந்தியத்தை வளர்க்கக் கழகங் காணலாம். ஒத்துழைப்புக் காலத்தில் தமிழ்நாடு ஊக்க மின்றி எல்லா வழியிலும் பின்னிட்டுக் கொண்டே யிருந்தது. ஒத்துழையா இயக்கம் தோன்றிய நாள்முதல், தமிழ் நாடு எழுச்சி கொண்டே நிற்கிறது. நாகபுரி சத்தியாக்கிரகப் போரில் தமிழ் நாடு தன் கடனாற்றச் சிறிதுந் தயங்கவில்லை. தமிழ்நாட்டை இன்னும் திறம்படத் தலைவர்கள் நடாத்தினால் அது சத்தியாக் கிரகத்தில் தலைசிறந்து விளங்குமென்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர், திருநாவுக்கரசர் முதலிய சத்தியாக்கிரகிகள் பிறந்த நமது தமிழ்நாடு, சத்தியாக்கிரகத்தில் தலைப்பட முந்துவது வியப்பன்று. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் புரிந்த சத்தியாக்கிரகப் போருக்கும் பெருந்துணை செய்தவர் தமிழ் நாட்டவரே யாவர். அவரே இந்நாளிலும் காந்தியடிகள் அறத்தை இந்தியாவில் வளர்க்க வீறுகொண்டு நிற்கிறார். தலைவர்கள் தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த முந்துவார்களாக. தமிழ்நாடு தமிழும் உரிமையும் தமிழ்நாட்டின் தொன்மையையும், அதன் நாகரிகத்தையும் இம்முகவுரையில் விரித்துக் கூறி, உங்கள் அரிய காலத்தைப் போக்க எனக்கு விருப்பமில்லை. உலகிலுள்ள நாடுகளில் தமிழ்நாடு மிகத்தொன்மையது என்பதையும், அதனிடத்திருந்து மனித வாழ்வும், நாகரிகமும் பிறநாடுகளுக்குச் சென்றன என்பதையும் மட்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முத லாவது தமிழ் நாட்டில் உள்ள மக்களனைவரும் தமிழ்மக்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்தவர் - பிராமணராயினுமாக - பிராமணரல்லாதாராயினு மாக - முலிம்களாயினுமாக - கிறிதுவராயினுமாக - எவராயினுமாக - இவர் அனைவருந் தமிழ்த் தாயின் புதல்வர் என்பதை எவரும் மறுக்கமாட்டார். தமிழ்நாடு ஒற்றுமைப்பட வேண்டுமானால், தமிழ்மொழி பேசுவோர் அனைவரும் சகோதரர் என்பதைத் தமிழ்மக்கள் உணர்தல் வேண்டும். தமிழ்மொழியைத் தமிழ்நாட்டவர் தமது உயிரினுஞ் சிறந்த தாகக் கொண்டு ஓம்புநாள் தமிழ்நாட்டின் உரிமைநாளாகும். தாய்மொழியில் பற்றில்லா நாடு என்றும் அடிமை நாடாகவே இருக்கும். இப்போது காந்தியடிகள் முயற்சியால், மொழி முறைப்படி, நாடுகளைக் காங்கர பிரித்திருப்பதன் நோக்க மென்னை? அவ்வந் நாட்டுக்குரிய மொழியை - வழக்க ஒழுக்கங் களை - அவ்வந்நாட்டார் வளர்க்க வேண்டுமென்ப தன்றோ? மொழிப்பற்றில் நாம் பின்னே நிற்பது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். தமிழ்மொழி வளர்ப்பதில் தமிழ்நாட்டுக் காங்கர கவலை செலுத்துவதில்லை. கிராமவாசிகளாகிய நீங்கள் கவலை செலுத்தினால் பின்னர் மற்றவர் செலுத்துவர். காந்தியத்தை நீங்கள் வளர்க்க முந்தினால் மொழிப்பற்றுத் தானே நிகழும். ஆதலால், காந்தியத்தை வளர்க்க முந்துங்கள்; முந்துங்கள். கெனியா - நாபா இத் தாலுக்கா மகாநாட்டில் வேறு பல பொருள்களை விரித்துச் சொல்வது அநாவசியம். ஆனால், கெனியாவும் நாபாவும் என் முன்னே நிற்கின்றன. கெனியாவில் வாழும் நம் சகோதரர்கள், கடவுள் அளித்த மக்கள் உரிமை இன்பத்தை நுகரும் பேறிழந்து வருந்துகிறார்கள். அவர்கள் பிறந்த தாய் நாடாகிய பாரதபூமி, உரிமை நாடாயிருப்பின், அவர்கள் உரிமைக்கு ஆங்கே கேடு நிகழாது. கெனியாவிலும், மற்ற இடங்களிலும் உள்ள நம் சகோதரர்கள் உரிமை இன்பத்தை நுகர வேண்டுமானால், முதலாவது தாய்நாடு உரிமை பெறல் வேண்டும். ஸ்ரீ நிவாச சாதிரியார் கெனியாவிலுள்ள நம் சகோதரர்களின் உரிமைக்காக ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாதிரியார் உள்ளிட்ட சிலர் பெருமுயற்சி செய்தனர். அவர்தம் முயற்சிகளெல்லாம் பாறைமேல் சொரியப் பெற்ற விதைகள் போலாயின. தம்முயற்சி பயன்படாமை கண்ட ஸ்ரீமான் சாதிரியார், சினமுற்று, ஏகாதிபத்திய பொருட் காட்சியையும் மகாநாட்டையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும், டாக்டர் சப்ரு ஏகாதிபத்திய மகாநாட்டு நடைமுறை யில் கலவாது திரும்பவேண்டும் என்றும் சில ஒத்துழையா உரைகள் வழங்கினர். அவர் வழங்கிய உரைகள் என் மனத்தைக் கவரவேயில்லை. ஸ்ரீமான் சாதிரியார் சிறிய குழந்தையல்லர்; சிறந்த இராஜதந்திரி; அரசியல் ஞானி; பிரிட்டிஷ் மந்திரிகளின் மனப்பான்மையைச் செவ்வனே உணரும் ஆற்றலுடையவர். இந்தியாவில் ஒத்துழையா இயக்கம் தோன்றிய காரணம் அவருக்கு நன்கு தெரியும். தெரிந்திருந்தும் அவ்வியக்கத்தில் அவர் சேராது, மேல்நாட்டு யாத்திரையை மகிழ்ச்சியோடு செய்து, சமயம் நேர்ந்தபோதெல்லாம் ஒத்துழையா இயக் கத்தைக் குறைகூறி, மந்திரிமாரோடு கைகுலுக்கிக் களிகூர்ந்தார். கெனியா இந்தியர் கோரிக்கை நிறைவேறும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீமான் சாதிரியார்க்கும் அவ்வுண்மை தெரியும். தெரிந்தும் அவர் ஓடிப் பாடி முயன்றார். இறுதியில் ஒன்றும் பலிக்கவில்லை. இப்பொழுது அவர் ஒத்துழையா உரை பகர்கிறார். அதையுஞ் சொல்கிறாரேயன்றிச் செயலில் கொணரவேண்டிய வழி கோலுகின்றாரில்லை. ஸ்ரீமான் சாதிரியார், ரௌலட் சட்டம் நிறைவேறியபோது இந்தியச் சட்டசபையில் பேர் ஆரவாரஞ் செய்தார். பின்னால் அதைப் பற்றி ஒன்றுமே செய்யவில்லை. அந்தச் சட்ட நிறைவேற்றலைக் கண்டன்றோ நமது ஆண்டகைச் சிங்கம் வீறு கொண்டெழுந்து, சத்தியாக்கிரக இயக்கத்தையும், பின்னை ஒத்துழையா இயக் கத்தையும் தோற்றுவித்து, நாட்டுக்கு உணர்வளித்து உரிமை வேட்கையை எழுப்பிற்று! ஆண்டகை ஸ்ரீநிவாச சாதிரியார் என்ன செய்தார்? சட்டசபைப் பேச்சோடு நின்றுவிடுவார்! அவ்வாறே இவ்வேளையும் பேச்சோடு அவர் நின்றுவிட்டார். ஸ்ரீநிவாச சாதிரியார் ரைட் ஹானரபில் என்னும் பட்டம் பெற்றவர்; அரசர் பெருமானாரோடு பேசும் பேறு பெற்றவர்; அத்தகைப் பெருமை வாய்ந்த அவர், இந்தியா மந்திரியாரைக் கண்டு பேசவேண்டியதற்கு இந்தியா மந்திரியார் இணங்க வில்லை. வெட்கம்! வெட்கம்! இந்தியருக்கே அவமானம்! இன்னும் ஸ்ரீநிவாச சாதிரியார் ரைட் ஹானரபிலாகவே விளங்கி, ஏகாதிபத்திய மகாநாட்டோடு ஒத்துழையாப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறார்! ஸ்ரீமான் சாதிரியார் போன்ற வரால் கெனியா இந்தியருக்கு என்ன செய்தல் முடியும்? பெரியோர்களே! முதலாவது தாய்நாட்டுக்கு உரிமை தேடுங்கள். அவ்வுரிமை உலகிலுள்ள எல்லா இந்தியர்க்கும் உயர்வளிக்கும். நமது கடனாற்ற நாடு கடந்து, கடல் தாண்ட வேண்டுவதில்லை. நமது கடமையை நாம் நமது நாட்டிலேயே செய்வோமாக நாபாவைப்பற்றி விரிவாக ஒன்றுங் கூறவேண்டுவதில்லை. நம்மவர் ஆங்கே செய்துவரும் முயற்சியால் வெற்றி விளைய வேண்டுமென்று ஆண்டவனை வழுத்துகிறேன். கிராம வேலைகள் நாட்டின் உரிமைக்குக் கால்கொள்ள வேண்டிய இடங்கள் கிராமங்களே யாகும். காந்தியடிகள் குறிப்பிட்ட ஆக்கவேலை கள், கிராமங்களில் வேரூன்றிவிடின், நாட்டில் உரிமை உணர்வு இயல்பாகவே எழும். காந்தியடிகள் சிறைபுகுந்த வேளையில், ஆக்கவேலைகளைப் பெரிதும் வலியுறுத்திச் சென்றார். அவைகளை ஆதாரமாகக் கொண்டு, கிராமவாசிகள் நாட் டுக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் பலவாக முன்னிற் கின்றன. அவைகளுள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். பஞ்சாயத்தைப் புதுக்கல் கிராமத்தார் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்குத் தொடுப்பதை நிறுத்தல் வேண்டும். நெற்றிநீர் நிலத்தில் விழ உழுது பயிரிட்டுச் சேர்க்கும் பொருளை வக்கீல்களுக்குக் கொட்டிக் கொடுக்க உங்களுக்கு மனம் எவ்வாறெழுகிறதோ தெரியவில்லை. நீதிமன்றங்கள் ஏற்படா முன்னர் - வக்கீல் கூட்டம் பெருகா முன்னர் - உங்களுக்குள் பிணக்குகள் - வழக்கு கள் - அடிக்கடி தோன்றியிரா என்றே நினைக்கிறேன். ஒன் றிரண்டு நிகழினும் அவை பஞ்சாயத்தால் முடிவு செய்யப்படும். பஞ்சாயத்து நிகழ்ச்சிக்குச் செலவுண்டோ? பண்டை நாளில் கிராமப் பஞ்சாயத்துக்களும், அற முறைகளும் கிராமங்களில் அமைதியை நிலைபெறுத்தி வந்தன. இக்காலத்தில் நீதிமன்றங் களும், வக்கீல் கூட்டங்களும் வழக்குத் தொடருமாறு உங்களைச் சோதனைக்குட்படுத்துகின்றன. அச்சோதனைக்கு இடந்தர லாகாது. பஞ்சாயத்து வாயிலாகக் கிராம வினைகளை நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பஞ்சாயத்துக்குக் கட்டுப்படாது, ஆயிரக்கணக்கான பொருளைக் கொட்டிக் கொடுத்து, மானமிழந்து, வக்கீல்கள் வீட்டுவாயிலில் காத்து நிற்க, மனமென்னும் பேய் உங்களை ஆட்டும்போது, அதை அடக்கும் ஆற்றல் உங்கள்பால் இல்லாவிடின், உங்களுக்குச் சுயராஜ்யம் எற்றுக்கு? ஆதலால் பஞ்சாயத்து வகுத்து, அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் நெஞ்சுறுதியையும் தேடிக் கொள்ளுங்கள். தெருப் பள்ளிக் கூடங்களைப் புதுக்கல் முன்னாளில் கிராமந்தோறும் தெருப்பள்ளிக் கூடங் களிருந்தன. அப் பள்ளிக்கூடங்கள் இப்பொழுது அருகி வரு கின்றன. அரசாங்கத்தார் உதவிபெறும் மூலாதாரப் பள்ளிக் கூடங்கள் குக்கிராமங்களிலும் பெருகுகின்றன. அதனால் நமது நாட்டுக்கல்வி அழிந்து வருகிறது. நமது நாட்டுக்குப் பொருத்த மில்லாத கதைகள், பாட்டுகள், கணக்குகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. அரசாங்கம் ஊதியம் பெறும் பள்ளிகளில் உண்மைத் தேசபக்தி எழக்கூடிய முறைகள் இல்லை. தேசபக்தி பொங்கித் ததும்பும் பாரதியார் பாடல்கள் சென்னை அமைச்சரால் தடுக்கப்பட்டதை எண்ணுங்கள்; தேசபக்தி ஊட்டக்கூடிய நூல்களைப் பயிலத்தக்க நாட்டுப் பள்ளிகளை ஏற்படுத்துங்கள்; பழந்தெருப் பள்ளிக்கூடங்களைப் புதுக்குவது போதும். சர்க்கா கிராமவாசிகள் கிராமங்களில் நாட்டுத் தொழில்களை வளர்க்க முயலல்வேண்டும். அயல்நாட்டுப் பொருள்களை இயன்றவரை விலக்கல்வேண்டும். அயல்நாட்டுத் துணியை அறவே அகற்றல்வேண்டும். காந்தி அடிகள் நமக்குக் கதரை அளித்துள்ளார். சர்க்காவும் கதரும் நமக்குப் புதியனவல்ல. ஒவ்வொரு வீட்டிலும் சர்க்கா சுழன்ற வண்ண மிருத்தல் வேண்டும். இத்தொழிலை வளர்க்குமாறு தாய்மாரைச் சிறப் பாக வேண்டுகிறேன். தாய்மார் சர்க்கா சுழற்றினால், நம் துன்பங்களெல்லாம் ஞாயிறு முற்பட்ட பனிப்படலம்போல் ஒழியும். கிராமத்தார் ஒவ்வொருவரும் கதருடை அணிதல் வேண்டும் என்று விரதந் தாங்கினால் நாளைக்கே சுயராஜ்ய மலர் அரும்பும். கிராமவாசிகளே! சுயராஜ்ய மென்பது வானத் தினின்றும் புறாப்போல் பறந்து வருவதன்று. அஃது உங்க ளிடத்தில் ஒடுங்கியிருப்பது. நீங்கள் சர்க்கா சுழற்றினால், கதருடுத்தினால், உங்களிடத்து மலராது மொட்டாகக் கிடக்கும் சுயராஜ்யம் அரும்பும். கிராமங்களில் சகோதரத்துவம் ஓங்கி வளரல் வேண்டும். கிராமங்களில் பல சமயத்தார் பல சாதியார் இருக்கலாம். எல்லாரும் தேசத் தொண்டில் சகோதரராக உழைத்தல் வேண்டும். ஹிந்து - முலிம் ஒற்றுமைக்கு எவ்வழியிலும் கேடு விளைத்தலாகாது. ஹிந்து - முலிம் ஒற்றுமையைக் கெடுக்கக்கூடிய பத்திரிகைகளைப் படிக்க வேண்டாமென்றே உங்களுக்குச் சொல்லுவேன். ஹிந்துக்கள் யார்? முலிம் கள் யார்? எல்லாரும் இந்தியரல்லவா? பாரத மாதாவின் புதல்வரல்லவா? வேற்றுமைக் குறிகள் புலனாகும்போது நாம் யார்? இந்தியர்; ஒரு தாயின் புதல்வர் என்ற நினைவு தோன்று மாறு மனத்தைத் திருப்பல்வேண்டும். அப்பொழுது சகோதர உணர்வு தோன்றும். இறுவாய் இதுகாறும் எனது சொற்பொழிவைப் பொறுமையோடு செவிமடுத்த உங்கள் பெருந்தகைமைக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன். இன்னும் பேசி உங்கள் அரிய காலத்தை வீணே செலவழிக்க விருப்பமில்லை. சகோதரிகளே! சகோதரர் களே! நாட்டை மறவாதேயுங்கள்; காந்தியடிகளை மறவாதே யுங்கள்; அவர் அறிவுறுத்திய ஆக்க அழிவு முறைகளை - ஹிந்து முலிம் ஒற்றுமையை - மறவாதேயுங்கள். ஹிந்து சகோதரர்களே! தீண்டாமையை நினையுங்கள். என்ன கொடுமை! கொடுமை! நம்முடன் பிறந்த சகோதரர் களையா நாம் வருத்துவது? ஒதுக்குவது? ஆண்டவனை வழிபடவிடாமல் தடுப்பது? இம் மறச் செயல்களல்லவா நமது உரிமையை அழித்தன? இப் பாண்டி நாட்டில் மற்றுமொரு கொடுமை உலவு கிறது; அதாவது நாடார் சகோதரரைத் தேவாலயங்களில் நுழையாதவாறு தடை செய்வது. ஆண்டவன் வழிபாட்டில் கட்டுப்பாடு செய்வது அறச்செயலென்று தோன்றவில்லை. கட்டுப்பாடுகள் உண்டானதற்குக் காரணங்களை ஆராய வேண்டுவதில்லை; நூல்களை ஆராயவேண்டுவதில்லை; உங்கள் மனத்தை ஆராய விரும்புகிறேன்; உங்கள் அன்பு நிலையை ஆராய விரும்புகிறேன். நாம் எந்நிலையிலிருக் கிறோம்? நமது நாடு எந்நிலையி லிருக்கிறது? நம்மை ஈன்ற தாய் - பாரத மாதா - எந்நிலையிலிருக்கிறாள்? அவள் ஈன்ற மைந்தர், உண்மையில் அரிச்சந்திரன் - இரக்கத்தில் புத்தர் - பொறுமையில் கிறிது - நம் மகாத்மா - உலகம் போற்றும் ஒருவர் - எங்கே இருக்கிறார்? நமக்குள் சகோதர நேயமிருந்தால் நாம் இந்நிலையிலிருப்போமா? மகாத்மா சிறையில் வதிவாரா? சகோதரர்களே! கிராமவாசிகளாகிய நீங்கள் மனங்கொள்ளல் வேண்டும். தீர்மானஞ் செய்வதால் மட்டும் பயன் விளையாது. அதைச் செய்கையில் நாட்ட முந்துங்கள்; நாடார் சகோதரர் விருப்பத்தை நிறைவேற்றி, அவரையுங் காங்கரகாரராக்கிச் சாத்துவிகப் போர்முனையில் நிறுத்துங்கள். இவ்வினைகளை நீங்கள் ஆற்றினால், முதலில், கிராமங்களின் சிறை ஒழியும்; பின்னை நாடு உரிமை பெறும். மீண்டும் எனது நன்றியறிதலான வணக்கம். வந்தே மாதரம் சாத்தூர் தாலுக்கா 2-வது மகாநாடு (சாத்தூரில் கூடியது) - 1923ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12ஆம் நாள் - எழுவாய் அன்பார்ந்த சகோதரிகளே! சகோதரர்களே! அறத்துக்கு உறைவிடமா யிலங்கும் நமது பரதகண்டத்து மக்களிற் பெரும்பான்மையோர் வழிபடும் புண்ணிய க்ஷேத்திரங் களுள் சிறந்து விளங்கும் இரண்டனுள் ஒன்றைத் தன்னகத்தே தாங்கும் பேறுபெற்றுள்ள இந்த ஜில்லாவில், தேசபக்திக்கும் அடக்குமுறைக்கும் நிலைக்களமாயுள்ள இவ்விடத்தில், இன்று கூடியிருக்கும் இவ்வரசியல் மகாநாட்டுக்குச் சிறியேனைத் தலைவனாகத் தெரிந்தெடுத்ததற்குப் பெரிதும் நன்றியறி தலுடையேன். தேசபக்தர் நிரம்பியுள்ள இம் மகாநாட்டை, இனிது நடாத்தும் திறனும் ஆற்றலும் என்பால் இல்லை என்பதை யான் செவ்வனே உணர்வேன். ஆயினும், உங்கள் அன்புக்கிணங்கி, நீங்கள் இட்ட பணியை ஒல்லும்வகை ஆற்ற முயல்கிறேன். குற்றங்குறைகள் நிகழுமேல் மன்னிக்க. சாத்தூரும் சுப்பிரமணிய நாயனாரும் சாத்தூர் நினைவு எனக்குத் தோன்றும்போதெல்லாம் திருவாளர் - சுப்பிரமணிய நாயனார் நினைவும் உடன் தோன்று வது வழக்கம். இவ்வூரில் அவர் உழைத்த உழைப்பின் மாண்பு, அடிக்கடி இங்கே நூற்று நாற்பத்து நான்கு உருண்டதனால் புலப்பட்டது. மைந்தரோடு தந்தை சிறை புகுந்த பெருமை வடநாட்டிற்கே உண்டு என்று எவரும் பேச ஒண்ணாதவாறு, அப்பெருமை தமிழ்நாட்டிற்கும் உண்டு என்பதை இவ்வூர் செயலிற்காட்டியதை நீங்கள் அறிவீர்கள். அப்பெருமைக்கு நிலைக்களமா யிலங்கும் உழுவலன்பரும், கெழுதகை நண்பரு மாகிய திருவாளர் சுப்பிரமணிய நாயனாருக்கு எனது வணக் கத்தை இக்கழகத்திற் செலுத்துகிறேன். யான் தேசபக்தன் ஆசிரியனா யிருந்தபோது, என்னை இவ்வூருக்குப் பன்முறை, தேசபக்தர் - சுப்பிரமணிய நாயனார் அழைத்ததுண்டு. அவ் வேளைகளில் யான் வரமுயன்றும் பல தடைகள் எனது வரவைத் தகைந்தன. நோயால் உடல் மெலிந்துள்ள இவ் வமையத்தில் - பேசும் வன்மை குறைந்துள்ள இவ்வேளையில் - ஈண்டுப் போந்து உங்களைக் கண்டு இன்புறும் பேற்றைத் திருவருள் கூட்டிற்று. காங்கரஸும் - காந்தியடிகளும் விசேஷ காங்கரஸின் விளைவு இப்பொழுது நாட்டில் எங்கணும் தில்லியில் கூடிய விசேஷ காங்கர பேச்சே பேசப்படுகிறது. அதைப் பற்றிப் பலதிறக் கருத்துக்கள் வெளிவருகின்றன. சில இடங்களில் விசேஷ காங்கர நடைமுறை போற்றப்படுகிறது; சில இடங் களில் தூற்றப்படுகிறது. விசேஷ காங்கர நாட்டில் ஒற்றுமை விளைத்துவிட்டது என்று சில இடங்களில் சொல்லப்படுகிறது. அக்காங்கர ஒருவேளை தலைவர்களுக்குள் ஒற்றுமை விளைத்திருக்கலாம். ஆனால், அது தலைவர்களை வேறாகவும், நாட்டு மக்களை வேறாகவும் பிரித்து வேற்றுமைப்படுத்தி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. தலைவர்கள்மீது நாடு வைத்திருந்த நம்பிக்கையை, விசேஷ காங்கர இழக்கு மாறு செய்திருப்பது பெரிதுங் கருதற்பாலது. நாட்டின் நாட்டப்படி அக்காங்கர, தீர்மானங்களை நிறைவேற்ற வில்லை என்பது எனது கருத்து. ஒத்துழைப்பு காங்கர நிலை, ஒத்துழையா இயக்கந் தோன்றுதற்கு முன்னர் எவ்வாறிருந்தது? ஒத்துழையாமை தோன்றிய காலத்தில் எவ்வாறிருந்தது? ï¥bghGJ v›th¿U¡»wJ? என்பதை ஒவ்வோர் இந்தியரும் ஆராய்தல் வேண்டும். ஒத்துழையா இயக்கத்துக்கு முன்னே, காங்கர, ஒத்துழைப்பு அமைப்பாக இருந்தது. அரசாங்கத்தோடு ஒத்துழைத்து ஒத்துழைத்துச் சுயராஜ்யம் பெற வேண்டும் என்பது அக் காலத்திய காங்கர நோக்கம். அந்நோக்கத்தோடு தலைவர் கள், ஆங்கிலக் கல்வியைப் பெருக்க வேண்டு மென்றும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று உயரிய உத்தியோகங்கள் பெறவேண்டு மென்றும், இவ்வழியில் ஆட்சிமுறை முற்றும் இந்தியர் வயப்படல் வேண்டுமென்றும் உழைத்து வந்தார்கள். அவ்வுழைப்பால் நமது நாட்டுக் கல்வி, தொழில் முதலியன மாண்டன; நாட்டுப்பற்றுக் குறைந்தது; உத்தியோகப்பற்று மிகுந்தது. சுருங்கக்கூறின், அடிமை உணர்வு வளர்ந்தது என்று கூறலாம். அந்நாள் காங்கரசுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லாமலே இருந்தது. அக்காலத்திய காங்கர நிலை இது. காந்தியடிகள் நாளுக்கு நாள் அடிமை உணர்வு வளர்ந்துவருவது குறித்துப் பாரத மாதா துயருற்றுக் கொண்டிருந்தாள். அத் துயரம் பாரத மாதாவின் ஒரு பெருங் குழந்தையின் உள்ளத்தை வருத்திக் கொண்டே யிருந்தது. m¡FHªij, mo¡fo, ‘v‹nd e«kt® M§»y« gÆštâY«, c¤ânahf« bgW tâY«, g£lª jh§FtâY« nt£if bfh©L âÇ»wh®; eh£L¥ bghUŸ eh£L bkhÊ KjÈat‰iw¡ fdÉY« fUJ»whÇšiy; ït® v¥bghGJ cÇik bgw¥ngh» wh®? என்று நினைப்பதுண்டு. அந்நினைவு கடவுளால் உண் டாக்கப்பட்ட தொன்றாதலால், அது பஞ்சாப் படுகொலை வாயிலாகவும், கிலாபத் வாயிலாகவும் செயலில் பரிணமித்தல் நேர்ந்தது. பாரத மாதாவின் இனிய குழந்தையும், நம் குருமூர்த்தியுமாகிய மகாத்மா காந்தி, தமது கொள்கையைக் காங்கர வாயிலாக நாட்டில் பரப்ப முயன்றார். மகாத்மா காந்தி இரண்டு முறைகளைக் காங்கரஸில் நுழைத்தார். ஒன்று அழிவு (பகிஷ்கார) முறை; மற்றொன்று ஆக்க (நிர்மாண) முறை. இரண்டு முறைகள் கொண்டதற்குக் காரணமும் ஆராயப்படல் வேண்டும். கொள்ளல் - தள்ளல் நம்மால் அடிமை உணர்வு வளர்வதற்குச் சிலவற்றைக் கொண்டோம்; சிலவற்றைத் தள்ளினோம். கொண்டனவற்றை விலக்குதற்கு அழிவு முறையும், தள்ளினவற்றைக் கொள்வதற்கு ஆக்க முறையும் மகாத்மாவால் வகுக்கப்பட்டன. நாம் கொண் டன பல. அவற்றுள் முக்கியமானவை சட்டசபை, பிரிட்டிஷ் நீதி மன்றம், ஆங்கிலக் கல்லூரி. இம் மூன்றையும் விலக்குமாறு காங்கர பணித்தது. நாம் தள்ளியவை பல. அவற்றுள் சிறந்தன நாட்டு உடை, கல்வி, வழக்க ஒழுக்கம், உயிர்களிடத்தன்பு முதலியன. இவற்றைக் கொள்ளுமாறு காங்கர பணித்தது. இவ்விரண்டு முறையும் நாட்டில் வளர வளரச் சுயராஜ்யம் இயல்பாகவே அரும்புமென்பது காந்தியடிகள் உள்ளக்கிடக்கை. இதைப்பற்றிப் பலமுறை பலர் எழுதியும் பேசியுமிருத்தலால் ஈண்டு மீண்டும் இதைக் குறித்து விரித்துரைக்க வேண்டுவ தில்லை. காந்தியடிகள் காங்கர வாயிலாகக் கொணர்ந்த இரண்டு முறைகளும் நாட்டை எவ்வாறு தட்டி எழுப்பின என்பதையும் நான் விளக்கிச் சொல்லவேண்டுவதில்லை. சுயராஜ்ய மணம் ஆக்கம் - அழிவு என்னும் இரண்டு முறைகளும் நாட்டில் ஓங்கி வளரக் காந்தியடிகள், சட்டமீறல், எதிர்வாதஞ் செய்யாது சிறைபுகல் முதலிய தத்துவமுறைகளை அறிவுறுத்தினார். சட்டமீறலும், சிறைபுகலும் பெருகப் பெருக இயல்பாகவே ஆக்கமும் அழிவும் நாட்டில் வேரூன்றுமல்லவா? காந்தியடிகள் கட்டளைப்படியே சுமார் இருபத்தையாயிரம் தேசபக்தர் சிறை புகுந்தனர். அவ்வேளையில் பாரத நாட்டில் சுயராஜ்ய மணமே கமழ்ந்தது என்னலாம். ஒத்துழையாமை வலுத்து நின்ற வேளை யில், காங்கர மக்கள் மனமென்னும் அரியாசனம் ஏறிற்று. ஏழை மக்களும் காங்கர காங்கர என்று பேசிக் காங்கரஸில் சேரலானார்கள். ஒத்துழையா உணர்வு, ஒத்துழைப்பவர் உள்ளத்திலும் ஊர்ந்து கொண்டிருந்ததைச் சிறப்பாக ஈண்டுக் குறிப்பிடுகிறேன். ஒத்துழையாக் காலத்தில் காங்கர உற்ற நிலை வருணிக்கற்பாலதன்று. அடிமை நாற்றம் தேசபக்தர்கள், காந்தியடிகள் கோலிய முறைகளை மாற்றாமல் அவற்றை வளர்ப்பதிலேயே கண்ணுங் கருத்துங் கொண்டு உழைத்திருப்பார்களானால், சுயராஜ்யம் அரும்பியே இருக்கும். நந் தலைவர்களுள் சிலர் முரணிநின்று, காந்தியடிகள் கோலிய முறைகளைக் குலைக்கப் புகுந்தனர். அதனால் காங்கரஸில் மீண்டும் பழைய அடிமை நாற்றம் வீசத் தொடங்கி யிருக்கிறது. சுயராஜ்ய உணர்வில் வீழ்ச்சி ஸ்ரீ சித்தரஞ்சன தாஸர், சிறையினின்றும் வெளி வந்த நாள்தொட்டுக் கதரைக் குறைகூறத் தொடங்கினர். கதரால் சுயராஜ்யம் வருமோ? r®¡fhthš Rauh{a« tUnkh? என்று ஸ்ரீதாஸரும், அவருள்ளிட்ட சிலரும் பேசவும் எழுதவும் புறப்பட்டனர். காந்தியடிகள் சிறை புகுந்தபோது, கதர் என்று சொல்லிப் போந்தார். பின்னைக் கதரைச் சில தலைவர்கள் குறை கூறினார்கள். இத் தலைவர்கள் ஆக்க வேலைக்கு உயிராகவுள்ள கதரைப் பழித்ததோடு நில்லாமல், அழிவு முறைக்கு உயிராக வுள்ள சட்டசபை விலக்கை நீக்கி, நுழைவையும் வலியுறுத்த லானார்கள். இவர்கள் முயற்சியால் நாட்டில் எழுந்த உணர்ச்சி, மீண்டும் பழங்கிணற்றில் வீழ்ந்து விட்டது. தனிக் கழகம் தில்லியில் கூடிய விசேஷ காங்கர, விருப்பமுள்ளோர் சட்டசபைக்குச் செல்லலாமென்றும், மற்றவர் எதிர்ப்பிரசாரஞ் செய்யலாகா தென்றும் தீர்மானித்துவிட்டது. இக் காங்கர, ஒருவருக்கு உரிமையும், மற்றவர்க்கு வாய்ப்பூட்டும் வழங்கியது. விசேஷ காங்கர, சொல்லால் ஒத்துழையாமையையும், பொருளால் ஒத்துழைப்பையும் ஏற்றிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் நாளடைவில், காங்கர, காந்தி யடிகள் திட்டத்தையே மாற்றிவிடுமென்று நான் ஊகிக்கிறேன். ஆதலால், காந்தியடிகள் காட்டிய வழியே நாட்டுக்கு உய்வு தருமென்று உறுதியாக நம்புவோர், ஒரு தனிக் கழகங்காண்பது நலம். சட்டசபை நுழைவு மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தைவிட, மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தம் நமது நாட்டை மிக நன்றாக மயக்குகிறது! வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் என்று கூறிய பெரியார் வழித் தோன்றிய நம்மவர், நாட்டின் உரிமைக்காகச் சட்டசபை அவாவை அறுக்க முடியாதிருப்பது காலத்தின் கோலமேயாகும். அரசியல் ஞானத்திற் சிறந்து விளங்கிய கோகலே, மேத்தா முதலியோர் சட்டசபையிலே என்ன செய்துவிட்டனர்? அச்சுச் சட்டம் முதலிய சட்டங்களைப் பிறப்பித்தது அவர் காலத்திய சட்ட சபையன்றோ? அவர்பின் ஸ்ரீநிவாச சாதிரியார், சுரேந்திரநாத் பானர்ஜி முதலியோர் சட்டசபையில் என்ன சாய்த்துவிட்டனர்? ரௌலட் சட்டம் அவர் காலத்தில் பிறக்கவில்லையோ? ஒத் துழையா இயக்கம் தோன்றிய காலத்தில், சட்டசபையில், உப்பு வரியும், பிறவும் முளைக்கவில்லையோ? உப்பு வரியைப்பற்றி இந்தியச் சட்டசபை உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவர் செய்த உருட்டு மருட்டலுக்கு லார்ட் ரெடிங் அஞ்சி வரியை ஒழித்தனரா? மாகாணச் சட்ட சபைகளில் மந்திரிமார் வீற் றிருப்பதால் நாட்டுக்கு ஏதாயினும் நலம் விளைந்ததா? வீண் செலவன்றோ பெருகிற்று! மாண்டேகு - செம்பர்ட் சீர் திருத்தம் ஜனப் பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரம் அளித் திருக்கிறதா? இல்லையே. முழு அதிகாரம், கவர்னர்களுக்கும், இராஜப் பிரதிநிதிக்குமல்லவோ அது வழங்கி இருக்கிறது! சட்டசபையில் புகுந்து, நாட்டுக்கு நலஞ்செய்வதைப் பார்க் கிலும், சட்டசபையில் புகாது, ஒத்துழையாமை கொண்டு, நாட்டுக்கு எவ்வளவோ நலஞ்செய்யலாம். கவர்னர்களும், இராஜப்பிரதிநிதியும் சட்டசபை தீர்மானிக்கும் வழி நின்று வினைகளை நிகழ்த்தும் ஆட்சிமுறை, நாட்டில் மலருங் காலத்தில், சட்டசபையால் நாட்டுக்கு நலமுண்டு. அவ்வாட்சி முறை, சட்டசபை நுழைவால் கிடைக்குமா? நுழையாமையால் கிடைக்குமா என்பது ஆராயற்பாலது. பல கட்சிகளால் தொல்லை சட்டசபையில் நுழைவதால், இப்பொழுதுள்ள ஆட்சி முறைக்குத் துணை புரியுங் கடமையே ஏற்படும். நுழைந்து, ஆங்கே ஒத்துழையாமைபூண்டு, சட்டசபை நிகழ்ச்சி முறையைத் தடுத்துத் தடுத்துத் தற்போதைய ஆட்சிமுறையைச் செயலறச் செய்து ஜனப் பொறுப்பாட்சிக்கு வழிதேடலாமென்று நண்பர் சிலர் கருதலாம். இது முடியாததொன்று. நமது நாட்டில் பல கட்சிகளிருக்கின்றன. அக் கட்சிகளுள் தன்னலக் கட்சியின் ஆக்கமே சட்டசபையில் தலைசிறந்து விளங்கும். அக்கட்சியின் செயல், சட்டசபையைத் தகர்க்குங் கட்சிக்கு மாறுபட்டு நிற்கும். தன்னலக் கட்சியின் துணையால் சட்டசபை ஒழுங்காக நடை பெறும். இப்பொழுது சுயராஜ்யக் கட்சியார் சட்டசபை வெறிகொண்டு உழைத்து வருகிறார். இக்கட்சி வேடந்தாங்கி நடிப்போருள் எத்துனைப்பேர் ஸ்ரீ தாஸர்வழிநடக்கப்போகிறார் என்பதைப் பற்றி இப்பொழுது ஒன்றும் பேச வேண்டுவ தில்லை. ஸ்ரீ தாஸர் ஏமாற்றமடையப் போகிறார். அவர் நிலை இரங்கத் தக்கதாக முடியப்போகிறது. சட்டசபையில் நுழைந்து, எல்லாரும் ஒன்றுபட்டு ஒத்துழையாமை செய்ய நினைப்பது பேய்த்தேரை (கானற்சலத்தை) நம்பியோடினவன் கதையாக முடியும். நாட்டு நிலை ஓர்ந்தும், உண்மைநெறி நின்றும் சட்டசபை நினைவே உறாதவாறு, அதை அறவே ஒழிக்க வேண்டுமென்று காந்தியடிகள் நமக்கு அறிவுறுத்தினார். அதிதீவிர ஒத்துழை யாமை நாட்டில் சில பகுதிகளிலாதல் உரம்பெற்று ஓங்கி வளருமானால், நாளடைவில் ஒத்துழைப்புக் குன்றி, முடிவில் அஃது ஒழியுமென்பது காந்தியடிகள் கருத்து. காந்தி முறையும் தாஸர் முறையும் நாட்டில், தொடக்கத்தில், ஒத்துழைப்பு ஒத்துழை யாமை என்ற இரண்டும் நிலவியே தீரும். ஒத்துழையாதாரது உண்மை, உறுதி, உழைப்பு, தியாகம், மனைவி மக்கள் வீடு வாசல் முதலியவற்றைத் துறந்து சிறைபுகல் முதலிய அருட்செயல்கள், ஒத்துழைப்போர் நெஞ்சை இளகச் செய்யாமற் போகுமோ? ஒத்துழைப்போர் உள்ளம் உருகாதொழியினும், அவரைத் தேர்ந்தெடுத்துச் சட்டசபைக் கனுப்பும் வாக்காளர் மனங் குழைந்தே தீரும். அப்பொழுது நாடே இயல்பாக ஒத்துழையா வழியில் திரும்பும். இவ்வாறு செய்யாது, ஒத்துழைப்பாளரை எதிர்த்து, அவர் நெஞ்சைப் புண்படுத்தி, அவர் அமர்ந்துள்ள சட்டசபை இருக்கைகளைப் பிடுங்குவதால், ஒத்துழைப்போர் ஒத்துழைப்பில் உறுதிகொண்டு, ஒத்துழையாதாரோடு போர் புரிந்து, ஒத்துழையா இயக்கத்தின் வேரையே கல்ல முயல்வர். ஒத்துழையாதார் சட்டசபை நண்ணுவதால், நாட்டில் பகைமை யும், பொறாமையும் மலியுமே யன்றி, நாட்டில் தேசபக்தியும், ஒற்றுமையும் வளரா. ஆகவே, காந்தியடிகள் கொண்ட சட்ட சபை விலக்கு, நாட்டில் அன்பை, அருளை, அஹிம்சையை வளர்க்கும்; ஸ்ரீதாஸர் கொள்ளும் சட்டசபை நுழைவு, நாட்டில் பகைமை, பொறாமை, வெறுப்பு, ஹிம்சை முதலிய கொடுந் தீமைகளைப் பெருக்கும். பட்டப் பதவிப் பேய்கள் நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். நமது தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்கிருப் பதை நீங்கள் அறிவீர்கள். அப்பிணக்குத் தொலைதல் வேண் டுமா? அல்லது அது நாட்டில் உரம்பெறுதல் வேண்டுமா? அஃது உரம் பெறுதல் வேண்டுமென்று எவருங் கூறார்; தொலைதல் வேண்டுமென்றே எவருஞ் சொல்வர். பிராமண ரல்லாதாருள் ஒரு கூட்டத்தார் - ஜடி கட்சியார் - ஒத் துழைப்பையே உறுதியாகப் பிடித்து நிற்கிறார். (அவருடன் கலவாத பிராமணரல்லாதார் பலர் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்து நிற்கிறார்.) ஒத்துழைப்பைக் கடைப்பிடித் தொழுகும் ஜடி கட்சிக்குள் பல பிணக்குகள் நிகழ்ந் திருப்பது உங்கட்குத் தெரியும். ஒத்துழைப்பை நாட்டிய ஒரு கட்சியிலேயே பிணக்குகள் நேர்ந்திருக்கிற தென்றால், இனி ஒத்துழைப்பை நாடும் பல கட்சிகளில் எவ்வளவு பிணக்குகள் நிகழுமென்பதை நான் விளக்கவேண்டுவதில்லை. பட்ட வேட்கையும், அமைச்சுப் பேறும், பிறநசைகளும் கட்சிகளை உடைக்கும்; ஒற்றுமையைக் குலைக்கும்; நட்பைத் தொலைக்கும். அப்பேய்கள் என்னதான் செய்யா? கட்சிப் பிணக்குகள் ஒத்துழைப்பால் உடைந்துவரும் ஜடி கட்சிக்கு விசேஷ காங்கர ஆக்கம் தேடிவிட்டது. இப்பொழுது சுயராஜ்யக் கட்சிச் சார்பாகச் சில பிராமணரும், சில பிராமணரல்லா தாரும் தேர்தலில் நிற்கின்றனர். இவர் நிற்றலால் ஜடி கட்சிக்குள் ஒற்றுமை நிகழும். அக்கட்சிக்குள் இப்பொழுது ஒற் றுமை நிகழா தொழியினும். ஒருவேளை அக்கட்சி தோல்வி யுற்றாலும் - பின்னை அஃது உயிர்பெற்று எழுந்து மிகச் செழுமையாக வளர்வதாகும். தேர்தலில் பிராமணர் வெற்றி பெற்றால் பிராமணரல்லாதார் உளங் கெடும். பிராமண ரல்லாதார் வெற்றி பெற்றால் பிராமணர் நெஞ்சம் இரியும். இது மனிதர் இயல்பு. ஒத்துழையாமையில் உறுதிகொண்டுள்ள பிராமணர்நிலையும் மற்றவர் நிலையும் கலங்கி, இருவரும் பகைமையால் ஒத்துழைப்பவராகி அதிகாரவர்க்கத்தைக் கொழுக்கவைப்பர். விசேஷ காங்கர தீர்மானத்தால் நமது தமிழ்நாட்டுக்கு இவ்வளவு கேடுகள் உண்டு. மற்றைய மாகா ணங்களுக்கும் அவ்வம் மாகாணத்திற்கேற்ற வேறுவிதத் தீமைகள் நிகழலாம். தாட்சண்யமும் மனச்சான்றும் விசேஷ காங்கர தீர்மானம் நாட்டுக்கு நலஞ்செய்தது என்று எவ்வாற்றானுஞ் சொல்லுதல் முடியாது. ஸ்ரீதாஸரும் ஸ்ரீநேருவும் ஒத்துழையாமையை ஒடுக்கச் செய்த கிளர்ச்சியை, விசேஷ காங்கர தீர்மானம், ஒருவாறு தணித்தது என்று சொல்லலாம். மௌலானா மகமத் அலி மனமின்றியே தீர் மானத்தை ஆதரித்தார். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார், மௌலானா மகமத் அலிமீது பழிசுமத்தித் தாம் ஒதுங்கி நின்றார். விசேஷ காங்கர, தாட்சண்யத்தில் கட்டுப்பட்டே நடந்தது. அது, மனச்சான்று - நாட்டுநிலை - இவற்றை மறந்தே வினை ஆற்றியுள்ளது. இன்னும் நாளேற நாளேற அழிவுத் திட்டத்தையே மறுக்கக் காங்கர முன் வரலாம். ஒத்துழையா இயக்கத்தை ஒடுக்க நந்தலைவர்கள் முன் வரலாம். நாட்டுக்கு உரிமை வழங்க எழுந்த ஒத்துழையாமையை ஒடுங்க விடலாமா? உயிரை விட்டாலும் விடலாம்; நாடு உரிமை பெறுமட்டும் நாம் ஒத்துழையாமையை ஒடுங்க விடலாகாது. தனிக் கழகம் ஒத்துழையாமையை இனிக் காங்கர வளர்க்கினும் வளர்க்க; தேய்க்கினுந் தேய்க்க. நாட்டார் அவ்வியக்கத்தை வளர்க்க முன்வரல்வேண்டும். ஒரு தனிக் கழகங்கண்டு, அதன் வாயிலாகக் காந்தியடிகள் அறத்தை ஏன் வளர்த்தலாகாது? பெரும்பான்மையோர் அக்கழக நோக்கத்துக்கு இணங்கி நடப்பாராயின், அக்கழகமே காங்கரஸாக மாறும். சுயராஜ்யக் கட்சி காங்கரஸினின்றும் முன்னே எத்தனையோ சிறுபான்மைக் கட்சிகள் விலகி ஓடின. இப்பொழுது சிறுபான்மைக் கட்சி யாகிய சுயராஜ்யக் கட்சி காங்கரஸுக்குள் இருந்து கொண்டே பெரும்பான்மைக் கட்சியை ஒடுக்கிவிட்டது. இஃதென்ன வியப்பு! ஸ்ரீ தாஸர் ஏமாற்றப்படின்... சுயராஜ்யக் கட்சியிலும் எத்துணையோ பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவினர் சட்டசபை நுழைந்ததும் ஒவ் வொரு வழி ஓடுவர். ஸ்ரீ தாஸர் தலைமை ஆகாயத்தில் பறக்கும். அப்பொழுது ஸ்ரீ தாஸரும், அவர் போன்ற வேறு சிலரும் சட்டசபை விடுத்து வருவரோ? அல்லது நாங்கள் ஏமாற்றப் பட்டோம்! eh§fŸ r£lrigÆÅ‹W« ÉyFtij¥ gh®¡»Y« r£lrigÆnyna 剿Uªjhš áy e‹ik brŒjš TL«; Äjthâfis¥ gh®¡»Y« eh§fŸ ešy ntiy brŒakh£nlhkh? என்று ஒத்துழைப்பு வீணை வாசிப்பரோ? எவ்வழியிலுந் தற்போது சட்டசபையைப் பற்றுதல் நாட்டுக்கு நலஞ் செய்யாதென்பது திண்ணம். சட்டசபை நுழைவுக்கு எதிர்ப்பிரசாரம் செய்யலாகா தென்று விசேஷ காங்கர ஆணை தந்துள்ளமையால், காங்கரஸிலுள்ள ஒத்துழையாதார் வாய்பொத்திக் கிடத்தல் வேண்டும்! இவ்வாறு காங்கர ஆட்சி நாட்டை ஒறுத்திருக்கிறது! அவ்வொறுத்தலை ஏற்றுக்கொள்ள வேண்டுவது நமது கடமை! அந்தோ! சட்ட மறுப்பு ஏன்? தில்லியில் கூடிய விசேஷ காங்கர மற்றுமொரு பிழை நிகழ்த்தி யிருக்கிறது. அது, சுயராஜ்யக் கட்சியாரை மகிழ்விக்கச் சட்டசபை நுழைவிற்கு ஆதரவளித்தது; மற்றவரை உவப்பிக்கச் சட்டமறுப்புக் குறித்துச் சிறு கூட்டமொன்று அமைத் திருக்கிறது. ஒரு பக்கம் சட்டசபை நுழைவு! மற்றொரு பக்கம் சட்டமறுப்பு! இதற்குப் பொருளுண்டோ? காந்தியடிகள் தொண்டு சட்டமறுப் பென்பது விளையாட்டன்று. நமது நாட்டில் சட்டமறுப்பு நடைபெறுவது எவ்வளவு அருமை என்பதை நேயர்கள் அறிவார்கள். காங்கர தலைவர்களுக்குள்ளாகவே ஒருமைப்பாடு காண்டல் அருமையா யிருக்கிறது. பல சாதி - பல சமயம் - பலமொழி - நிலவும் நாட்டை ஒற்றுமைப்படுத்துவது எவ்வளவு அருமை? அவ் வருந்தொண்டில் மகாத்மா காந்தி தலைப்பட்டார். அவர், நாட்டைக் கதருடையால், ஹிந்தி மொழி யால், அஹிம்சா தர்மத்தால், தீண்டாமையை ஒழிப்பதால், தியாகத்தால், சுயராஜ்ய வேட்கையால் ஒற்றுமைப்படுத்த முயன்றார். அவர், தமது முயற்சியை அழிவுமுறை யென்றும், ஆக்கமுறை யென்றும் இரு கூறிட்டு நாட்டார்க்கு அறி வுறுத்தினார். இவ்விரண்டையும் நாடு கடைப்பிடித்தால், அது சட்டமறுப்புக்குத் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதாகும். இப்பொழுது நாடு அழிவு முறையையாதல், ஆக்க முறையை யாதல் குறைவற நிகழ்த்தி வருகிறதோ? காந்தியடிகள் சிறை புகுந்த நாள்தொட்டு, அவ்விரண்டும் அவரோடு சிறை புகுந்தனபோல் ஒடுங்கிவிட்டன. அவற்றை ஒடுக்கினவர் யார்? சுயராஜ்யக் கட்சியார், இரண்டு முறைகளையும் எள்ளி நகையாடி நகையாடி, நாட்டின் நாட்டத்தை வேறு வழியில் திருப்ப முயன்றார். அவரால் என்ன விளைந்து விடுமோ என்று காங்கர நடுக்குற்று, ஆக்க அழிவு முறைகள் மீது கருத்தைச் செலுத்தாது, அவரைச் சமாதானப் படுத்துவதிலேயே தன் கருத்தைச் செலுத்திற்று. காங்கர, தன் கருத்தை வேறிடத் திற் செலுத்தவே, நாட்டின் ஊக்கங் குன்றிவிட்டது. சிற்சில இடங்களில் சுரந்து கொண்டிருந்த ஊக்கமும், விசேஷ காங்கர சட்டசபையைப் பற்ற நிறைவேற்றிய தீர்மானத்தால் வீழ்ந்துபட்டது. நாட்டில் ஊக்கமில்லா வேளையில் சட்ட மறுப்பு முயற்சி எற்றுக்கு? அழிவு ஆக்கத்தின் சாய்வு சட்டமறுப்பென்பது இறுதியாகப் பற்ற வேண்டிய ஒரு முறை. அதற்கு அடிப்படையா யிருப்பன ஆக்க அழிவு முறைகள். அவ்விரண்டின் இடுப்புகள் நன்றாக உடையுமாறு புடைத்த சுயராஜ்யக் கட்சியார்க்குத் துணை நின்ற விசேஷ காங்கர சட்டமறுப்பின் மீது நாட்டத்தைச் செலுத்துவதன் நோக்கம் புலனாகவில்லை. சட்டமறுப்புக்குப் பொதுவாக நாட்டின் துணையும், சிறப்பாகத் தொண்டர்களின் துணையும் இன்றி யமையாதன. நாட்டின் ஊக்கத்தையும், தொண்டர்களின் மன எழுச்சியையும் - விசேஷ காங்கர சட்டசபைத் தீர்மானமும், சுயராஜ்யக் கட்சியார் ஆக்க அழிவு முறைகளை எள்ளி நகை யாடினதும், தலைவர்கள் ஒற்றுமையின்மையும், பிறவும் - குலைத்திருப்பது உண்மை. ஸ்ரீ தாசர் பதட்டம் சுயராஜ்யக் கட்சித் தலைவர் ஸ்ரீ சித்தரஞ்சனதாசர் - ஆறுமாதம் சிறைவாசஞ் செய்த தேசபந்து - நாகபுரி சத்தியாக் கிரகப் போரில் தமக்கு அநுதாபமில்லை யென்றும், வயிற்றுக்கு வழியில்லாதாரே சிறைபுகுகிறாரென்றும் வாய் கூசாமற் பேசியதை நாடு மறவாது. பாரத மாதா வயிற்றுக்கு வழியில்லாம லிருப்பது குறித்தே நாட்டில் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. வயிற்றுக்கு வழியுள்ள தாசர் எவருக்காகத் தேச சேவை செய் கிறார் என்பது புலப்படவில்லை. சிறுமையுரை வழங்கிய தாசரைக் காங்கர தண்டியாது விடுத்தது குறித்து வருந்து கிறேன். சிறுமை உரைகள் வழங்கி வழங்கி, நாட்டின் வளர்ச் சியைக் குலைத்த தலைவர்கள் வழி நின்று, சட்டசபை புகுத லுக்குத் துணைசெய்த விசேஷ காங்கர, சட்ட மறுப்பை ஏன் விழைதல் வேண்டும்? காங்கர மீண்டும் ஆக்க அழிவு முறை களை ஏற்று, அவற்றைச் செயலில் நடாத்திக் காட்டும்வரை, நாட்டில் சட்ட மறுப்புக்கு நல்லாதரவு ஏற்படாது. ஆதலால் இப்பொழுது சட்டமறுப்புப் பேச்சே வேண்டுவதில்லை என்பது எனது உள்ளக்கிடக்கை. அடிமையும் கட்சிகளும் சட்ட மறுப்புக்கு நாட்டின் ஒற்றுமை அவசியம் என்று மேலே குறிப்பிட்டேன். அதைப் பார்க்கிலும் தலைவர்கள் ஒற்றுமை மிக அவசியம் என்று இங்கே வலியுறுத்துகிறேன். தலைவர்கள் தங்களுக்குள் அடிக்கடி - முனைப்பால், தன்னலத் தால், தலைமைப்பேறு போராட்டத்தால் - பிணங்கிப் பிணங்கிப் பல கட்சிகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாட்டின் முன் னேற்றத்துக்குக் கட்சிகள் வேண்டற்பாலனவே. ஆனால் அடிமை நாட்டில் பல கட்சிகள் எழுவது அடிமைத் தன்மையைப் போக்குதற்கு அறிகுறியாகாது. சுயராஜ்யம் பெற்றுள்ள நாட்டுக்குக் கட்சிப் பெருக்கால் நலமே உண்டு. அடிமை நாட்டில் கட்சிகளைப் பெருக்குவோரைத் தேசபக்தரென யான் கூறேன். இனித் தலைவர்களைப் பொதுமக்களாகிய நீங்கள் தெரிந்தெடுக்கும் முறை கொள்ளப்படல் வேண்டும். அம்முறை செயலின்மையால் தான்தோன்றித் தம்பிரான்களெல்லாம் தலைவர்களெனக் கிளம்பித் தங்கள் நலத்துக்காக நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள். தலைவர்களைப் பொது மக்கள் தெரிந்தெடுக்கும் முறை, நடையில் வரும் வரை - காந்தியடிகள் போன்ற உண்மையாளர் பெருகும் வரை - சட்டமறுப்பே வேண்டாம்; வேண்டாம். கடமை காங்கர நிதியும் கதரும் இத்தாலுக்கா வாசிகளாகிய உங்கள் கடமையை இரு கூறாகப் பிரிக்கிறேன். ஒன்று உங்கள் தமிழ் நாட்டுக்கும், உங்கள் பாரத தேசத்துக்குஞ் செய்ய வேண்டுவது; மற்றொன்று உங்கள் தாலுக்காவிற்குச் செய்ய வேண்டுவது. தமிழ் நாட்டுக் காங்கர கூட்டத்தை அமைப்பதில் நீங்கள் உங்கள் கடமையைச் செவ்வனே நிறைவேற்றுக; அக்கூட்டத்தில் பிரதிநிதித்துவம், ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஏற்படுமாறு கவலை செலுத்துக. தமிழ்நாடு காங்கர பணத்தைச் செலவு செய்யாது காத்து வருகிறது. அத்தொகை நல்வழியில் செலவாதல் வேண்டும். ஒத்துழைப்பாளர் கூட்டம், தமிழ்நாட்டுக் காங்கரஸில் பெருகு மானால் காங்கர நிதி எவ்வெவ்வழியில் செலவாகுமென் பதை யான் கூறவேண்டுவதில்லை. இப்பொழுதுள்ள தொகை முழுவதும் கதருக்கே செலவழிந்தால் யான் கழிபேருவகை எய்துவேன். தமிழ்நாட்டுக் காங்கர கூட்டம் அமைப்பதில் நீங்கள் பெரிதும் கவலை செலுத்தல் வேண்டுமென்று மீண்டுமொருமுறை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அகில இந்திய காங்கர கூட்ட அமைப்பிலும் நீங்கள் கருத்தைச் செலுத்துதல் நலம்; ஒவ்வொரு ஜில்லாவிலும் பிரதிநிதித்துவம் வருமாறு முயல்வது சிறப்பு; ஓரூரிலேயே பலரைத் தெரிந்தெடுக்கும் முறையை அறவே ஒழிக்க. கிராமத்தொண்டு உங்கள் தாலுக்காவுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் பல உள. அவற்றை அடியேன் விரித்துரைக்க அருகனல்லேன். கிராம அனுபவம், என்னிலும் உங்களுக்கு அதிகம் உண்டு. நீங்கள் இத்தாலுக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு கிராமத்திலும் காங்கர சபை அமைக்க முயலல் வேண்டும்; காங்கர நோக்கம் இது - கொள்கை இது - என்பதைக் கிராமவாசிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் வேண்டும்; தமிழிலுள்ள அரசியல் நூல்களை வாசிக்குமாறு மக்களைத் தூண்டுவது நல்லது; கிராமங்களில் நாட்டுப் பாடசாலை கள் அமைத்தல் அறிவையும் அன்பையும் வளர்ப்பதாகும். பஞ்சாயத்தால் விளையும் நலன்களைக் கிராமவாசிகளுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் நீதிமன்றங்களுக்குப் போகாமலே, பஞ்சாயத்தில் தங்கள் வழக்குகளை நடாத்துமாறு பயிற்றி செய்வித்தல் அறம். நூற்றல் கிராமவாசிகள் கதராடையில் உறுதிகொள்ளுமாறு நீங்கள் உழைத்தல் வேண்டும். கிராமவாசிகள் ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய உடையைத் தாமே நெய்து கொள்ளலாம். பெண்மக்கள், வீட்டு வேலைகளில் ஒன்றாக நூல் நூற்றலையுங் கருதி, நூற்கத் தொடங்கினால் நாட்டுக்கு உரிமை வாரா தொழியுமோ? பழைய காலத்தில் நூற்றல் தொழில் வீட்டு வேலைகளுள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. பாழான இயந்திர நூல் நுழைந்து பெண்மக்களுக்குச் சோம்பலை எழுப்பி விட்டது. நாட்டின் உரிமை கதரிலிருக்கிறது. அக் கதர் பெண் மக்கள் முயற்சியில் விளைவது. தீண்டாமை தீண்டாமை தேயவேண்டிய இடங்கள் கிராமங்களே யாகும். தீண்டாமை, பாரத மாதாவுக்கொரு நோயாக நின்று அவளைத் துன்புறுத்துகிறது. தீண்டாமை நமது நாட்டி னின்றும் அறவே ஒழிதல் வேண்டும். கிராம வாசிகளே! ஏழை மக்களிடத்தில் அன்பா யிருங்கள். அவர்கள் உரிமையின்றி நீங்கள் உரிமைபெற முடியாது. நாடார் உங்கள் நாட்டில் வாழும் நாடார் சகோதரர் துயரைப் போக்க நீங்கள் முயலல்வேண்டும். அவர் கோயிலுள் நுழைந்து ஆண்டவனைத் தொழ விரும்புகின்றனர். மற்ற நாட்டில் அச் சகோதரர் கோயிலுக்குள் போகின்றனர்; வருகின்றனர். இந்நாட்டில் மட்டும் அவர் அவ்வுரிமை இழந்து வருந்து கின்றனர். வழக்கம் பழக்கம் என்ற பழம்பாட்டுப் பாடல் வேண்டா. நீங்கள் காங்கரகாரர்கள்; சுயராஜ்ய வேட்கை யுடையவர்கள். காங்கரஸில் நாடார் சகோதரர்க்கு உரிமை இல்லையோ? சுயராஜ்யத்தில் அவருக்கு உரிமை இல்லையோ? உரிமையுண்டு என்றே நீங்கள் கூறுவீர்கள். உண்டு என்று வாயால் கூறினால் போதுமோ? அவர்தம் குறையைக் களைவ தன்றோ அவரது விருப்பத்தைத் தணிப்பதாகும்? கொடுமை நீண்டகாலமாக நாட்டில் உலவி வருகிறது. கொடுமையை ஒழிக்கத் தமிழ்நாட்டுக் காங்கர உடனே எழுவதாக. இந் நாட்டில், நாடார் சகோதரர் உதவியைக் காங்கர இழந்து நிற்கிறது. இந்நாட்டில் காங்கர வேலை நன்கு நடைபெற வேண்டுமானால், நாடார் குறைகளைப் போக்கத் தேசபக்தர் கள் முயலல் வேண்டும். வெறுந்தீர்மானம் அவரை ஏமாற்றுவ தாக முடியும். எதையுஞ் செயலில் காட்ட முந்துங்கள். இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! உங்கள் அரிய காலத்தை வீணே கழிக்க எனக்கு விருப்பமில்லை. சுயராஜ்ய வேட்கை கிராமங்களிலிருந்தே எழுதல் வேண்டும். சுயராஜ்ய விதைக்குக் கிராமங்களே சிறந்த நிலம். நிலத்தைப் பண்படுத்த முயலுங்கள்; காந்தியடிகளை மறவாதேயுங்கள்; கதரை மறவாதேயுங்கள்; நாடார்களை மறவாதேயுங்கள்; வணக்கம்; வணக்கம். வந்தே மாதரம். ஸ்ரீ வில்லிபுத்தூர் தாலுக்கா 2-வது மாநாடு (ஸ்ரீ வில்லிபுத்தூரில் கூடியது) - 1923ஆம் வருடம்அக்டோபர் மாதம் 15ஆம் நாள் - எழுவாய் அன்புகெழுமிய சகோதரிகளே! சகோதரர்களே! தேசத்தை நல்வழியில் நடாத்தும் ஆற்றலுடைய ஒரு பெரியார் சிறைக்கோட்டத்தைத் தவக்கோட்டமாக்கியுள்ள இக் காலத்தில் - தேச மகா சபையாகிய காங்கர நிலை, தலைவர்கள் பிணக்கால் கலங்கியுள்ள இவ் வேளையில் - ஸ்ரீராமன் நினை வூட்டும் இந்த ஜில்லாவில் - அன்பு வடிவாய் ஆண்டாள் அருள் மணங் கமழும் இவ்வூரில் - இன்று, இம்மகாநாடு கூடியிருக்கிறது. இம் மகாநாட்டுக்குத் தலைவனாகச் சிறியேனை நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். அதற்கு யான் என்றும் உங்கள் பால் நன்றியறிதலுடையேன். ஆனால் இம் மகாநாட்டைத் திறம்பட இனிது நடாத்தும் ஆற்றல் என்பால் சிறிதுமில்லை என்பதை உங்கள் முன்னிலையில் வணக்கமாக அறிவித்துக் கொள்கிறேன். உங்கள் துணை கொண்டு ஒல்லும்வகை என் கடனாற்ற முயல்கிறேன். குற்றங் குறைகள் நிகழுமேல் மன்னிக்க. காங்கர விசேஷ காங்கர இம் மகாநாட்டில் குழுமியுள்ள உங்கள் மனம் தில்லியில் கூடிய விசேஷ காங்கர நிறைவேற்றிய சட்டசபைத் தீர் மானத்தின்மீது பதிந்து கிடக்குமென்பதில் ஐயமில்லை. அத் தீர்மானத்தைப்பற்றிப் பலர் பலவாறு பேசுகிறார்; எழுதுகிறார். தில்லியில் கூடிய விசேஷ காங்கர தீர்மானம் சரித்திரத்தில் பதியுமென்று நான் நம்புகிறேன். அத் தீர்மானத்தால் நலனும் தீமையும் விளைந்திருக்கின்றன என்பது எனது கருத்து. நலன் என்னை? தீமை என்னை? என்று நீங்கள் வினவலாம். அதிகார வர்க்கத்துக்கு நலனும், பரதகண்டத்துக்குத் தீமையும் விளைந் திருக்கின்றன என்று எனது மனச்சான்று பகர்கிறது. அதிகார வர்க்கம் விழைவது ஒத்துழைப்பு; பாரததேசம் விழைவது ஒத்துழையாமை. விசேஷ காங்கர நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் ஒத்துழைப்பைக் குறிக்கொண்டு நிற்றலால், அஃது அதிகாரவர்க்கத்தின் வேட்கையை ஒருவாறு தணிவித்ததாகும். ஒத்துழையாமை அழிவு ‘Énrõ fh§fuÞ Ô®khd¤âš x¤JiH¥ò¡ F¿ ah©LsJ? என்று காங்கர சமாதானக் கட்சியார் கேட்க லாம். சட்டசபைக்குச் செல்வோர் செல்க. எவரும் எதிர்ப் பிரசாரம் செய்யலாகாது என்று விசேஷ காங்கர நிறை வேற்றிய தீர்மானத்தின் உள்ளுறையை - அன்பர்களே! உற்று நோக்குங்கள். சட்டசபைக்குச் செல்வோர் செல்க என்ற ஆணை, எப்பொழுது காங்கரஸில் பிறந்ததோ, அப்பொழுதே அதன்கண் ஒத்துழைப்புப்பேய் புகுந்தது. எதிர்ப் பிரசாரம் எவருஞ் செய்தலாகாது என்ற ஆணை எதைக் குறிக்கிறது? ஒத்துழைப்பையா? ஒத்துழையாமையையா? நேயர்களே! ஆராயுங்கள். எதிர்ப்பிரசாரத் தகைவு ஒத்துழைப்பை உறுதிப் படுத்தவில்லையா? விசேஷ காங்கர சட்டசபையைப் பற்றி நிறைவேற்றிய தீர்மானம், காந்தியடிகள் பெரிதும் முயன்று நிறுவிய ஒத்துழையா நிலையத்தைக் குலைத்தது என்று கூறுவது மிகையாகாது. சுயராஜ்யக் கட்சியால் தேசபக்தி வீழ்ச்சி காங்கர தனக்குட்பட்ட சுயராஜ்யக் கட்சியையே சட்டசபையில் நுழையுமாறு பணித்திருக்கிறதன்றி, மற்றக் கட்சிகளுக்கு அப்பணியை அதுதரவில்லை. சுயராஜ்யக் கட்சி யார் ஒத்துழையா வரம்பில் நின்றே சட்டசபையில் வேட்டை யாடப் போகிறார் என்று சிலர் கருதலாம். சுயராஜ்யக் கட்சி நிலை, நாட்டில் செவ்வனே விளங்கவில்லை போலும்! சுய ராஜ்யக்கட்சி ஒத்துழைப்புக் கட்சியா? ஒத்துழையாக் கட்சியா? என்பது புலனாகவில்லை. சுயராஜ்யக் கட்சித் தலைவருள் சிலர் தம்மை ஒத்துழையாதாரென்றும், தாம் சட்டசபையில் நுழைந்து ஒத்துழையா விரதங் கொள்ளப்போவதாகவுஞ் சொல்கிறார். சுயராஜ்யக்கட்சி அவ்வாறு சொல்கிறதா என்று யான் அக் கட்சித் தலைவரை நோக்கிக் கேட்கிறேன். விசேஷ காங்கர, ஒத்துழையாதார் வாயைப் பூட்டியதும், தெருவில் உலவும் ஒத்துழைப்பாளரெல்லாரும் தம்மைச் சுயராஜ்யக் கட்சியா ரென்று வாய்ப்பறை யறைந்து சட்டசபை நோக்கி நிற்கிறார்; தெய்விகக் கதரைக் கனவிலும் கருதாத நண்பர் சிலர் தம்மைக் காங்கரகாரரென்றும் சுயராஜ்யக் கட்சியாரென்றும் சொல்லிக் கொண்டு சட்டசபையில் நுழைய முயல்கிறார். இவர் சட்டசபையில் நுழைந்ததும் சுயராஜ்யக் கட்சியை மனத்திலும் நினைக்கமாட்டார். இவரா சட்டசபையில் ஒத்துழையாமை பூண்டு, அதிகாரவர்க்க ஆழியை அசைவறச் செய்யப்போகிறார்? சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்த அனைவரும், சட்டசபையில் ஒத்துழையாமை பூண்டு, அதைச் செயலறச் செய்வதாகக் காங்கர சபைகள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கி யுள்ளனரா? ஸ்ரீ தாஸர் ஒருவர் நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன் என்று கூக்குரலிடுவதால் என்ன பயன் விளையும்? விசேஷ காங்கரஸின் தவறு விசேஷ காங்கர, தா - நேரு என்னும் இரு பெயர் களுக்கு அஞ்சி, இன்று ஒத்துழையாமையைச் சிறிது ஒடுக்க முன்வந்தது; நாளை ஸ்ரீமதி பெஸண்ட் அம்மையார்க்குப் பயந்து, ஒத்துழையாமையை முற்றும் ஒடுக்க முயலும் போலும்! ஸ்ரீமதி அன்னிபெஸண்ட் அம்மையார் விசேஷ காங்கரஸுக்கு எவ்விதத் தந்திச் செய்தி அனுப்பினார்? காங்கரஸில் இன்னும் மூவித விலக்குமுறைத் தோற்ற மிருக்கிறது. அத்தோற்றம் உள்ளவரை நான் காங்கர வாயில் நண்ணேன் என்னுங் கருத்தடங்கிய தந்திச் செய்தியை அம்மையார் அனுப்பினார். இவ்வம்மையாரை மகிழ்விக்க வேண்டிக் காங்கர முத்திற விலக்கைத் தொலைக்க முயலினும் முயலும் என்று சிலராவது நினைந்தே தீர்வர். மற்றும் பல கட்சியினரையுங் களிப்பிக்க வேண்டிக் காங்கர பழைய விண்ணப்ப வணக்கத் தீர்மானங் களை மீண்டும் புதுக்கிப் பழைய வழியில் நடக்குமோ என்று நாடு ஐயுறுகிறது. நாடும் காங்கிரஸும் காங்கரமீது முழு நம்பிக்கை கொண்டிருந்த நாடு இப்பொழுது அதன்மீது ஐயங்கொள்கிறது. நாட்டுக்கும் காங்கரஸுக்கும் பெரிதும் தொடர்பிருத்தல் வேண்டும். இரண்டிற்குமுள்ள தொடர்பு அறுந்துவிட்டால் காங்கர ஸுக்குப் பெருமை ஏது? காங்கர நாட்டின்வழி நடவாது, தன் விருப்பப்படி நடந்தால், நாடு அதைத் தன் பிரதிநிதிச் சபை யாகக் கொள்ளாது தள்ளும். இப்பொழுது நாடு அந்நிலை உற்றிருக்கிறது. காங்கர அவ்வுண்மை உணர்ந்து தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளல்வேண்டும். விசேஷ காங்கர தீர்மானம், தலைவர்களை வேறாகவும் நாட்டை வேறாகவும் பிரித்து நிற்கிறது. விசேஷ காங்கர தலைவர்களுக்குள் ளெழுந்த வேற்றுமையை - பிளவை - அழுக்காற்றை - ஒழித் திருக்க முயன்றிருப்பின் நலன் விளைந்திருக்கும். தலைவரும் மக்களும் ஒத்துழையா இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தலைவர்கள் உதவி வேண்டற்பாலதோ? நாட்டு மக்கள் உதவி வேண்டற் பாலதோ? சட்டமறுப்புச் செய்வோர் யாவர்? கதரைக் குறை கூறுந் தலைவர்களை - அழிவு முறைகளைக் குறைகூறுந் தலை வர்களை - இனி நாடு நம்புமோ? விசேஷ காங்கரஸின் ஒரு தலைப் பட்சம் விசேஷ காங்கர, சுயராஜ்யக் கட்சியார்க்குத் துணை நின்றதனால் நாட்டில் ஊக்கங் குறைந்து விட்டது. மீண்டும் அவ்வூக்கத்தை எழுப்பவேண்டுவது எவர் கடமை? தலைவர் கடமையன்று; அது நாட்டார் கடமை. நாட்டார், தங் கடன் உணர்ந்து தொண்டு செய்யுமாறே, மகாத்மா காந்தி ஆங்கிலங் கற்ற தலைவர்கள்பால் சிக்கிக்கொண்டிருந்த காங்கரஸை நாட்டாரிடம் ஒப்புவித்தார். நாட்டார் தங்கடனைச் செவ்வனே ஆற்றாமையால், காங்கர மீண்டும் ஆங்கிலங்கற்ற தலைவர்கள்பால் நண்ணிக்கொண்டிருக்கிறது. காந்தியடிகள் போன்ற தலைவர் கிடைத்தல் அரிது. தமிழ் நாட்டிலே ஒத்துழையா வழிநின்று காந்தியடிகள் அறத்தை ஓம்புவதில் உறுதிகொண் டுழைத்த சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி யாரும், தமது உறுதி நிலையினின்றும் பிறழ்ந்தது, நமது ஊழ் என்றே கூறல் வேண்டும். நம் ஆச்சாரியார், கயை காங்கரஸில் காட்டிய உறுதி, மௌலானா மகமத் அலி முன்னிலையில் குலைந்துவிட்டதன் பொருள் இன்னும் எனக்குப் புலனாக வில்லை. ஸ்ரீ ஆச்சாரியார் உடல் மெலிவு காரணமாகத் தில்லிக்குச் சென்றாரில்லை. அவர் உடல் சேலத்திலிருந்தாலும், அவரது உரை விசேஷ காங்கரஸில் இலங்கிப் பிரதிநிதிகள் மனோ நிலையைக் குலைத்தது. இப்பொழுது மௌலானா மகமத் அலிக்கு இணங்கிய நம் ஆச்சாரியார், அப்பொழுது கயையில் ஸ்ரீ தாசருக்கு ஏன் இணங்காது உறுதி காட்டினர்? நம் ஆச்சாரியார், விசேஷ காங்கரஸுக்குத் தந்திச் செய்தி அனுப்பிய தோடு நில்லாது, ஒத்துழையாமையில் பற்றும் உறுதியுமுள்ள சில தேசபக்தர் செய்துவரும் எதிர்ப் பிரசாரத்தை மறுக்க முன்வந்தது குறித்து யான் பெரிதும் வருந்துகிறேன். எதிர்ப் பிரசாரஞ் செய்யும் அன்பர்கள், காங்கர சார்பாகத் தங்கள் தொண்டைச் செய்து வருகிறார்களில்லை. அவர்கள் தங்கள் மனச் சான்று வழி நடக்கிறார்கள். அவர்கள் தொண்டை மறுக்க ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார் ஏன் கங்கணங் கட்டல் வேண்டும்? சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் நிரம்ப வேண்டும் என்ற எண்ணம், சமாதானக் கட்சியார் உள்ளத்தில் ஊர்ந்து கொண்டிருந்தால், அவர் வெளிப்படையாகத் தங் கருத்தை வெளியிட்டு நாட்டை நடாத்தலாம். காங்கர தளர்ச்சி தலைவர்களுக்குள் நிகழ்ந்த பிணக்காலும் இணக்காலும் காங்கர நிலைகுலைந்துவிட்டது என்று கூறுவது மிகை யாகாது. காங்கர இப்பொழுது நாட்டுக்கு என்ன வழிகாட்டி இருக்கிறது? ஒரு கூட்டத்தாரைச் சட்ட சபையைப் பற்றக் கூறுகிறது; மற்றொரு கூட்டத்தாரை எதிர்ப்பிரசாரஞ் செய் யாமல் பகிஷ்காரத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறது. இவ்விரண்டும் காங்கர உள்ளத்தில் ஊர்ந்தமையால், காங்கர நரம்புகளில் குருதியோட்டங் குறைந்தது. அதனால் காங்கர இப்பொழுது செயலற்றுக் கிடக்கிறது. இப்பொழுது காங்கர உற்றுள்ள நிலை மிக இரங்கத்தக்கதாயிருக்கிறது. காங்கரஸும் தலைவர்களும் தலைவர்கள் முனைப்பால், ஒற்றுமையின்மையால், தலைமைப் பேறெனும் பேய் அவாவால், காங்கர மாண்பு குன்றிவிட்டது. நாட்டார் இனிக் காங்கரஸை நடாத்த முன்வரல் வேண்டும். தலைவர்களை நாட்டார் பண்படுத்தும் நாள் தோன்றி விட்டது. நாட்டாரே, உண்மையும் உறுதியும் உள்ள குணநலமுடையாரைப் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்துக் காங்கரஸைத் தூய்மைப்படுத்தலாம். தலைவர்கள் விருப்பப்படி காங்கரஸைத் திரித்து நடாத்துமுறை முற்றும் அழிக்கப்படல் வேண்டும். இம் முறையை நாட்டார் கடைப்பிடித்தால், காங்கர நடைமுறையில் எவ்வித ஏதமும் நிகழாது. தமிழ்நாடு வகுப்பும் சாதி மகாநாடுகளும் தில்லியில் கூடிய விசேஷ காங்கர தீர்மானத்தால் நமது தமிழ்நாட்டுக்குப் பலதிறக் கேடுகள் விளைந்துள்ளன. நமது நாட்டில் சாதி வேற்றுமைகள் தலை விரித்தாடுவதுபோல், வேறு எந்நாட்டிலும் ஆடவில்லை என்று சொல்லலாம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சட்டசபையில் என்று தலை காட்டிற்றோ, அன்றே நாட்டுக்கு ஏழரைநாட்டுச் சனி பிடித்தது என்று உறுதியாக யான் நம்பினேன். இந்நாளில் தமிழ்நாட்டிலுள்ள எல்லாச் சாதியாரும், சாதி மகாநாடுகள் கூட்டித் தத்தஞ் சாதியினருக்குச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டு மென்று கிளர்ச்சி செய்கிறார். தமிழ் நாட்டில் தொள்ளாயி ரத்துத் தொண்ணூற்றொன்பது வகுப்புக்களிருக்கின்றன! அவைகட்கெல்லாம் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டு மாம்! அந்தோ! கொடுமை! சட்டசபை, நாட்டாரை இந்திய ரென்னும் ஒரு பாசத்தால் கட்ட விரும்புகிறதில்லை. பிராமணர் பிராமணரல்லாதார் பிரிவு தோன்றிய நாளிலேயே அறிஞர் அப்பிரிவுத் தோற்றத்தால் நாட்டில் ஒற்றுமை குன்றும் என்று கருதினர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விழைந்து, கிளர்ச்சி செய்த ஜடி கட்சியின் நிலை இப்பொழுது எவ்வாறுளது? ஆந்திரர், தமிழர் என்ற வேற்றுமை அக்கட்சியில் தோன்றி, அதை நடுக்குறச் செய்துவருகிறது. இனி, முதலியார் - செட்டியார் - நாயுடு - வேற்றுமைகளும் அக்கட்சியில் தோன்றும் என்பதில் ஐயமில்லை. மந்திரி பதவி வேட்கை என்ன செய்யாது? அது வகுப்பு வேற்றுமைகளை வளர்த்துக் கொண்டே போகும். விசேஷ காங்கரஸும் தமிழ்நாடும் வகுப்பு வேற்றுமை என்னுங் கடலிடைப்பட்டு வருந்திக் கொண்டுள்ள தமிழ்நாடு, காந்தியடிகள் இயக்கமென்னும் நாவாய்பற்றி, இன்பக்கரை ஏற முயன்று வந்தது. அம் முயற்சிக்கு விசேஷ காங்கர கேடு சூழ்ந்துவிட்டது. ஜடி கட்சியின் உழைப்பால் விளைந்த பயனைக் கண்டு வருந்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ்நாடு மறுத்துவரும் இவ்வேளை யில், விசேஷ காங்கர சட்டசபைப் பற்றலுக்கு இணங்கின மையால், மறையவிருந்த சட்டசபை வகுப்பு வேற்றுமை, மீண்டும் முளைத்துக்கொண்டது. இதைப்பற்றி ஈண்டு விரித்துக் கூற வேண்டுவதில்லை. மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தப்படி அமைந்துள்ள ஆட்சி முறையைச் செயலறச் செய்ய எழுந்த ஒத்துழையா இயக்கம் விசேஷ காங்கர கோலிய வழியல்லா வழியால், தமிழ்நாட்டில் ஆக்கமுறாது போவது குறித்து எவரே வருந்தாதிருப்பர்? தனிக் கழகம் விசேஷ காங்கரஸால் விளைந்த கேட்டைக் கண்ட சில அறிஞர், காந்தியடிகள் அறத்தை வளர்க்க ஒரு தனிக் கழகங் காண முயல்கிறார். சிலர் அஃது எற்றுக்கு? அநாவசியம்; காங்கரஸே சாலும் என்று கூறுகிறார். காந்தியடிகள் அறத்தை வளர்த்தல் வேண்டும் என்னுங் கட்டுப்பாட்டுக்குக் காங்கர இணங்கல் வேண்டும் என்னும் நியதி இல்லை. விரும்பும்போது அது காந்தியத்தைக் கொள்ளும்; மற்ற வேளையில் காந்தியத்தை அது தள்ளும். காந்தியடிகள் கோலிய முறையால் நாட்டுக்கு உய்வு உண்டு என்று உறுதியாக நம்புவோர், தம் மனச்சான்றைக் காங்கரஸுக்கு விற்க முயல்வரோ? அன்னார், காங்கரஸுக்குக் கேடு சூழாமல், காந்தியடிகள் நல்லறத்தை ஏன் ஓம்பலாகாது? அதன் பொருட்டு ஏன் ஒரு தனிக்கழகங் காண்டலாகாது? சமயம் நேரும்போது, அன்னார் தஞ் சங்க நோக்கத்தைக் காங்கரஸில் நுழைத்துக் காங்கரஸையும் தம்வழி ஏன் திருப்பலாகாது? ஆதலால், காந்தியடிகள் பேரறத்தை ஓம்ப ஒரு தனிக்கழகங் காண்டல் எனக்கு மாறாகத் தோன்றவில்லை. இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! இன்னும் பல தீர்மானங் கள் இன்றே நடைபெறல் வேண்டுமாதலால், உங்கள் அரிய காலத்தை நான் கவர எனது மனம் ஒருப்படவில்லை. தாலுக்கா வாசிகள் ஆற்றவேண்டிய கடன்களிற் சிலவற்றைச் சென்ற வாரம் அருப்புக் கோட்டையிலும், சாத்தூரிலும் கூடிய மகாநாடுகளில் தொகுத்துக் கூறியுள்ளேன். அவற்றை மீண்டும் ஈண்டு விரித் துரைக்க வேண்டுவது அநாவசியம். நீங்கள், காந்தியடிகள் இயக்கத்தால் நாட்டுக்கு நலன் உண்டு என்பதை மறவாதே யுங்கள்; அவர் அறிவுறுத்திய கதரை மறவாதேயுங்கள்; மதுவை விலக்குங்கள்; தீண்டாமையை ஒழியுங்கள்; நாடு உரிமை பெறுமட்டும் ஒத்துழையாமையைக் கைவிடாதேயுங்கள். உங்கள் நாட்டில் ஒரு பெருங் கொடுமை உலவுகிறது. அஃ தென்னை? நாடார் சகோதரர் ஆலயம் நுழைந்து ஆண்டவனை வழிபடாமலிருப்பது. நீங்கள் சுயராஜ்யம் பெற முயல்வது உண்மையானால், அவரது விருப்பத்தைத் தணிக்க முந்துங்கள். வந்தேமாதரம் உடுமலைப்பேட்டை தாலுக்கா மகாநாடு (அம்மாப்பட்டிப் புதூரில் கூடியது) - 1925ஆம் வருடம் மே மாதம் 17ஆம் நாள் - சகோதரிகளே! சகோதரர்களே! இம் மகாநாட்டுக்குத் தலைமை ஏற்குமாறு என்னைத் தெரிந்தெடுத்த உங்கட்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன்; யான் அரசியல் தொண்டில் தலைப்பட்ட நாள்தொட்டுப் பல மகாநாடுகளில் தலைமை வகித்திருக்கிறேன்; பல மகாநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்நாளில் எனது உள்ளத்தில் துளும்பிக் கொண்டிருந்த ஊக்கம், இந்நாளில் யாண்டு ஒடுங்கிக் கிடக்கிறதோ தெரியவில்லை. அப்பொழுது நம்மவர், நாம் அடிமைகள்; நமது நாடு அடிமைக்குழியில் வீழ்ந்து கிடக்கிறது என்ற உணர்வின் பயனாக, மதர்த்தெழும் உரிமை வேட்கை மேலீட்டான், கிளர்ச்சியில் நாட்டஞ் செலுத்தி வந்தனர். இப்பொழுது நம்மவர் எதன்மாட்டு நாட்டஞ் செலுத்தி வருகின்றனர்? அந்தோ! சாதிப்பகைமை என்ன! வகுப்புக் காழ்ப்பென்ன! சமயப்பூசலென்ன! சொல்லவும் நாவெழவில்லை. நம்மவர், நாம் அடிமைகள் என்ற உணர்வு மின்றி, இப்பொழுது உட்கலகக் கிளர்ச்சியில் நாட்டஞ் செலுத்தி வருகின்றனர். இம் மாற்றத்துக்குக் காரணமென்னை? அரசியல் இயக்கத்தையும், கிளர்ச்சியையும் தமது நலத்துக் கெனப் பயன்படுத்த வேண்டித் தலைவர்களென்போரிற் பலர் புரிந்துவருஞ் சூழ்ச்சியே காரணம் என்று கூறாது வேறென் கூறுவது? இக்கால நாகரிகம் பரவியுள்ள இடங்களில் வாழும் நம்மவர், சூழ்ச்சி வினைகளால் நிகழ்த்திவரும் தேசீயத் தற் கொலையைக் கண்டும் கேட்டும் மனம் உடைந்து ஊக்கங் குன்றியுள்ள இனத்திற் சேர்ந்த சிறியேனை நீங்கள் அழைத் திருக்கிறீர்கள். உண்மையும், அன்பும் நிரம்பியுள்ள கிராம வாசிகளாய உங்கள் உள்ளம் விரிந்து பொழியும் ஊக்க வெள்ளத்தில் படிந்து, புது ஊக்கம் பெறலாமெனும் எண்ணத் துடன் ஈண்டுப் போந்தேனேயன்றி, உங்கட்கு ஊக்கமூட்ட வேண்டுமென்னும் எண்ணத்துடன் யான் ஈண்டுப் போந்தே னில்லை. விடுதலை இயக்கம் சுயராஜ்யக் கிளர்ச்சி எது? நமது நாட்டின் விடுதலை குறித்து எழுந்த இயக்கங்கள் பல. அவைகளுள் தலையாயது ஒத்துழையா இயக்கமென்று உறுதியாகக் கூறலாம். அவ்வியக்கம் நாட்டு மக்களுக்கு நல்கிய உணர்ச்சியைப்போல வேறெவ்வியக்கமும் நல்கவில்லை. அவ் வியக்கந் தோன்றுதற்கு முன்னர், நம்மவர் மனத்தில் நாட்டு உணர்ச்சி திறம்படப் பதியவில்லை என்று கூறுவது மிகை யாகாது. அந்நிய உடை அணிந்து, அந்நிய மொழிபேசி, (நாட்டுக்குரியதென) அந்நிய முறையில் கிளர்ச்சி செய்து, உத்தியோக பீடங்களைப் பிடித்து, இந்திய மயமாக்குவதே சுயராஜ்யம் எனக் கருதி, நம்மவர் கிளர்ச்சி செய்து வந்தனர். சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று சுயராஜ்யமல்லாத ஒன்றைக் குறிக்கொண்டு கானலைப் புனலெனக் கருதி ஓடினவர்போல, நம்மவர் ஓடினர். நம்மவர் ஓடி ஓடிச் சலிப்புற்று, ஒன்றையுங் காணாது திரும்பி, உண்மைச் சுயராஜ்ய இன்பம் நுகர, ஒத்துழையாமை என்னும் அறப்போர் தொடுத்தனர். அப் போர், ஈராண்டு செவ்வனே நடைபெற்றது. இவ்வீராண்டில் நம்மவர்பால் குடிகொண்ட அச்சம் இருந்த இடந்தெரியாமல் ஓடிற்று. தியாக உணர்வு யாண்டும் மேலிட்டு நின்றது. எவர் துணையுமின்றி, நமது முயற்சியால் பெறுவதே சுயராஜ்ய மென்னும் உணர்வு நாட்டில் வேரூன்றலாயிற்று. பிற்போக்கு நிகழ்ச்சி சட்டசபை விலக்கு, நியாயமன்ற விலக்கு, பள்ளி விலக்கு ஆக இம்மூன்று அழிவு வேலையும் - ஹிந்து முலிம் ஒற்றுமை, கதராடை, தீண்டாமை விலக்கு ஆக இம்மூன்று ஆக்கவேலை யும் - பாரததேவியின் தளைகளை உடைத்தெறிவன வல்லவோ? இம்முயற்சி, காங்கர அமைப்பையும், பஞ்சாயத்து முறையை யும், நாட்டுக் கல்வியையும் தோற்றுவிப்பதாகாதோ? அழிவு வேலையும் - ஆக்க வேலையும் - இடையீடின்றி நடைபெற்றி ருப்பின், இப்பொழுதுள்ள ஆட்சிமுறை செயலற்று, அவ் விடத்தில் நமது நாட்டுக்குரிய புதிய ஆட்சி முறை அரும்பித் தளிர்த்திருக்கும். ஆனால், நம்மவர் பொறுமை இழந்து, ஒத்துழையாமையில் குறை யிருப்பதாகக் கருதி, அழிவு வேலையைக் குலைக்கத் தொடங்கினர். அதனால் என்ன விளைந்தது? ஆக்கவேலை குலைந்துவிட்டது. ஹிந்து - முலிம் குழப்பம், தீண்டாமை வலியுறுத்தல், வேடமாத்திரையில் கதர் நிலவல் முதலியன நிகழ்ந்து வருகின்றன. சுருங்கக்கூறின், ஒத்துழையாமையால் கிளம்பிய நாட்டுணர்விற்கு வீழ்ச்சியும், அதிகாரவர்க்க ஆட்சி முறைக்கு ஆக்கமும் உற்றன என்னலாம். அழிவு வேலையின் உயிர் போன்றதாகிய சட்டசபை விலக்கைப் பற்றியும் அதன் நுழைவைப் பற்றியும் பேசிய பேச்சும் எழுதிய எழுத்தும் போதும்! போதும்! அப்பழங் குப்பையை ஈண்டுக் கிளறுவதால் விளையும் பயன் ஒன்றுமில்லை. காங்கர, சட்டசபை நுழைவிற்கு இடந்தந்த நாள்தொட்டு, நாட்டில் உற்றுவரும் நிகழ்ச்சிகளே நாட்டின் நிலையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிக்கொண்டிருக்கின்றன. நான் ஏன் அவற்றை விரித்துக் கூறுவதில் உங்கள் அரிய காலத்தைக் கழித்தல் வேண்டும்? ஒத்துழையாமையைப் பெல்காம் காங்கர நிறுத்தி ஒடுக்குமாறு, நாட்டின் நிலை, செய்ததொன்றைக் கருதுவோர்க்கு விளக்க உரை எற்றுக்கு? தற்கால நிலை தாஸர் விழிப்பு ஒத்துழையாமை ஒடுங்கினால், பின்னை எது ஆண்டு இயல்பாகத் தோன்றும்? ஒத்துழைப்பே இயல்பாகத் தோன்றும். இப்பொழுது பழைய ஒத்துழைப்பு இயக்கம், புன்முறுவலோடு அரும்பி இருக்கிறது. ஒத்துழையா உள்ளமுடையோர் சிலர் ஒதுங்கி நிற்கிறார்; சிலர் ஆசிரமங்களில் தவங்கிடக்கிறார்; சிலர் வயிற்றுக்கே வனவாசஞ் செய்கிறார். ஒத்துழையாக் காலத்தில் ஒதுங்கி நின்ற ஒத்துழைப்பாளர், கதர் வேடந் தாங்கி ஆங்காங்கே நடமாடுகிறார். இப்பொழுது நாட்டிலுள்ள அரசியல் கட்சி களெல்லாம் ஒத்துழைப்பு நாட்ட முடையனவாகவே திகழ் கின்றன. சட்ட சபையுள் ஒத்துழையாமை என்று சொல்லிக் கொண்டிருந்த சுயராஜ்யக் கட்சித் தலைவர்களும் இப்பொழுது விழிக்கிறார்கள். தேசபந்து தமது குற்றத்தைத் தாமே உணர்ந்து வருகிறார். பரீத்பூரில் கூடிய வங்காள மாகாண மகாநாட்டில் அவர் தலைமை வகித்து நிகழ்த்திய சொற்பொழிவு, அவரது நிலையை நன்கு புலப்படுத்துகிறது. தேசபந்து தாஸர் ஒத்துழை யாமைக்கு ஊறு நிகழ்த்தியதை உணர்ந்து, நாட்டார் தம்மீது பழி சுமத்துவரென்று அஞ்சி, கௌரவமான சமாதானம் என்று சொல்லிச் சில சீர்திருத்தமாதல் பெற முயன்று வருகிறார். அவரால் இயன்றதை அவர்செய்ய முன்னிற்கிறார். தேசபந்து, காங்கரஸில் பிளவை யுண்டுபண்ணிச் சட்டசபை நுழையக் காங்கர ஆணைபெற்று, அழிவு வேலையின் முளையை வெந்நீர்விட்டுக் கல்லாது, தனித்து நின்று ஒரு கட்சியை உண்டாக்கித் தம் விருப்பப்படி நடந்திருந்தால், அவர் பழிக்கு ஆளாயிரார். நாடு கண்விழித்து, தேசபந்துவே! சட்டசபை நுழைவால் விளைந்ததென்னை? என்று கேட்கும் போது, தேசபந்தர் தாஸர் என்சொல்வரோ தெரியவில்லை! அரசாங்கத் தார் அவசரச் சட்டமாக்கியதும், அவர் சில தேசபக்தர்களை நாடு கடத்தியதும் தேசபந்து தாஸருக்கும், அவரது கட்சிக்கும் உயிரளித்து வருகின்றன. அவை இல்லையேல், சுயராஜ்யக் கட்சி எப்பொழுதோ மாண்டு போயிருக்கும். ஊமைக்கு உளறு வாயன் மேல் சுயராஜ்யக் கட்சியில் எவ்வளவு குறைகளிருப்பினும், இப்பொழுது நாட்டிலுள்ள கட்சிகளுள், அக்கட்சி போற்றுந் தகையதென்று யான் சொல்வேன். ஊமைக்கு உளறுவாயன் மேல் என்னும் பழமொழி நினைவிற்கு வருகிறது. ஒத்துழையா இயக்கம் ஒடுங்கிய பின்னர், அதற்கடுத்தபடியாயுள்ள ஒரு கட்சிக்கு ஆதரவு நல்க நாட்டார் கடமைப்படல் வேண்டும். சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள், அக்கட்சியையாதல், ஒழுங்குபெற நடத்துகிறார்களா எனில், அதுவும் இல்லை. சுயராஜ்யக் கட்சியார், நகர - நாட்டமைப்புக்களைக் கைப்பற்ற முயன்று வருவதை யுணர்ந்த ஊர் பேர் தெரியாதவர் - ஒத்துழை யாமைக்கு ஊறு செய்தவர் - கதரைக் கனவிலுங் கருதாதவர் - இவரனையார் - சுயராஜ்யக் கட்சி அறிக்கையில் கையெழுத் திட்டுத் தம் கருத்தை முற்றுவித்துக் கொள்கிறார். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தை மட்டும் நிறைவேற்றிக் கொள்ள இவர்க்குச் சுயராஜ்யக் கட்சி இடந்தந்து நிற்குமானால், அதுவும் மற்றக் கட்சிகளோடு வைத்துக் கணிக்கப்படும். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கோடு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தோர், சட்டசபைக்கும் நகர பரிபாலன சபைக்கும் செல்லும் போது மட்டும் கதர் அணிகிறாரன்றி, மற்ற வேளைகளில் கதரை அவர் அந்நியமாகக் கொள்கிறார். அவர்தஞ் செயல் சுயராஜ்யக் கட்சி யின் ஆக்கத்தைச் சுருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒத்துழை யாமை ஒடுங்கியுள்ள இவ்வேளையில், சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியையாதல் ஒழுங்குபட நடாத்த முயலல் வேண்டும். இல்லையேல், பொதுமக்கள், கட்சி வேற்றுமைகளில் கவலை செலுத்தாது, நல்லவர்களைத் தெரிந் தெடுப்பதில் கவலை செலுத்துவார்கள். இதையுணர்ந்து சுயராஜ்யக் கட்சியார் நடப்பாராக. சுயராஜ்யக் கட்சியின் சோர்வு, மற்றக் கட்சித் தலையெடுப் புக்குக் காரணமாக நிற்கும். இப்பொழுது டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையாரால் செப்பஞ் செய்யப் பெற்றுள்ள ஒரு மசோதா, நாளுக்கு நாள் நாட்டில் ஆதரவு பெற்று வருகிறது. நாளடைவில் அம்மசோதா, காங்கர ஆதரவு பெறும் நிலையை அடையினும் அடையும். மகாராஷ்டிர மகாநாடு அதற்கு ஆதரவு அளித்திருக்கிறது. ஜனப் பிரதிநிதிகளில் பலர் கருத்தும் அதன்மீது படிந்து நிற்கிறது. முடிவில் எல்லாக் கட்சிகளும் அன்னிபெஸண்ட் அம்மையாரிடம் தஞ்சம் புகுமோ என்னவோ தெரியவில்லை. எவரையாவது ஒருவரைத் தலைவ ராகக் கொண்டு, அவர் சொல்வழி நடந்து ஒன்றுபடுவது நலம். இங்கே ஒன்றுகூற விரும்புகிறேன். அதாவது - காந்தியடிகள் கோலிய முறை, இந்திய நாட்டின் வழக்க ஒழுக்கங்கட்கேற்ற சுயராஜ்யம் அரும்பச் செய்யும் எனலாம். ஏனையோர் முறை சிற்சில சீர்திருத்தங்களைப் பெறுவிப்ப தாகும். ஒருவேளை இம்முறை, சுயராஜ்யம் பெறுவிப்பினும், அஃது இந்தியாவிற்குரிய சுயராஜ்யமா யிராதென்பது ஒரு தலை. இந்தியாவின் வழக்க ஒழுக்கங்களையும், இந்தியாவின் கலைஞானங்களையும், இந்தியாவின் தொழில் முறைகளையும், வேறு பல துறைகளையும் வவ்வத்தக்க சுயராஜ்யம் பெறுவதால் என்ன பயன்? இங்கிலாந்து செலவு இப்பொழுது தலைவர்களிற் சிலர் இங்கிலாந்து சென் றிருக்கிறார்; சிலர் செல்கிறார்; சிலர் செல்ல முயன்று வருகிறார். இவர் எற்றுக்கு ஆண்டுச் செல்கிறார்? இங்கிலாந்தில் செய்யப் படும் பிரசாரத்தால் ஏதாயினும் பயன் விளையுமா? பிரசாரத் தால் பிரிட்டிஷார் ஏமாந்து போவரா? இங்கிலாந்தில் செய்யப் படும் பிரசாரத்தால் பயனில்லை என்ற முடிவு கண்டும், மீண்டும் மீண்டும் அப்பிரசார வேலையைப் புதுக்க முயல்வது என்ன அறியாமை! மகாத்மா காந்தி - ஆக்கத் திட்டத்திலேயே யான் உறைந்து நிற்கிறேன் (அதுவே கதி). என்னை யான் ஆராய்ந்து பார்த்ததில், இங்கிலாந்தின் ஒப்பற்ற இராஜ தந்திரிகளோடு இராஜதந்திரப் பேச்சுத் தொடர்புகொண்டு காலங்கழிப்பதினும். நமக்குள் ளிருக்கும் ஆற்றலை வளர்க்க, ஆக்க (நிர்மாண)த் திட்ட வேலை செய்ய யான் தகுதியுடையவன் என்று தோன்றுகிறது. நம்பால் போதிய வல்லமை யுண்டு என்பதை யுணர்ந்தாலன்றி, யான் அவர்களோடு (இங்கிலாந்து இராஜதந்திரிகளோடு) எவ்விதப் பேச்சுத் தொடர்புங்கொள்ள இயலாதவன் என்பதை உங்கள் முன்னிலையில் அறிக்கை செய்கிறேன்; 1921ஆம் ஆண்டில் நாம் பெற்றிருந்த ஆற்றலையும், நாம் இப்பொழுது இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்; ஆதலால் ஆக்க வேலைகளை நிறைவேற்றுவதில் கருத்தைச் செலுத்துமாறு வேண்டுகிறேன் என்று வங்காளத்தில் பேசியது உன்னத்தக்கது. ஒத்தழையா இயக்கத்தின் அழிவு முறைகளையும் ஆக்க முறைகளையும் ஒழுங்குபெறச் செயலிற் கொணர இயலாத இந்தியர், இங்கே போந்து வாய்ப்பேச்சால் சுயராஜ்யம் பெற முயல்கிறார் என்று பிரிட்டிஷார் நினையாரோ? நாம் ஆற்றவேண்டிய கடமைகளை நமது நாட்டில் ஆற்றினால், வருவது தானேவரும். ஒத் துழையாப்போர் தொடுத்த ஒரு பெரியார் சொல்வழி, நம்மவர் நில்லாது, இங்கிலாந்துக்கு ஓடுவது, இந்தியராகிய எங்கட்கு உரிமையில் வேட்கை யில்லை என்பதைப் புலப்படுத்துவ தாகாதோ? லார்ட் ரெடிங் இங்கிலாந்திலிருக்கும்போது - அவர் லார்ட் பர்க்கன் ஹெட்டோடு பேசும்போது - இங்கிலாந்தில் பிரசாரம் செய்யப்படல் வேண்டும் என்று சொல்லப்படுதற்குப் பொருளே இல்லை. லார்ட் ரெடிங்கும், லார்ட் பர்க்கன் ஹெட்டும் இந்தியாவிற்குப் பெருங்கொடை செய்யப்போவ தில்லை. ஒத்துழையாமையின் ஒடுக்கம், நமது ஆற்றலின் மையைப் பலவழியிலும் வெளிப்படுத்தி யிருக்கிறது. அவ்வியக் கம் தோன்றி மறைந்தமை, இந்தியாவிற்குக் கேட்டையும் இங்கிலாந்துக்கு நலனையும் விளைத்திருக்கிறது. இந்தியாவில் ஒத்துழையா விதையை வெந்நீர் விட்டுக் கல்லி நசுக்கிப் பாழ் படுத்தி, இங்கிலாந்துக்கு ஓடி, இந்தியாவில் கிளர்ச்சி மலிகிறது என்று ஓலமிட்டால், அதைப் பிரிட்டிஷார் நம்பிவிடுவரோ? இராஜதந்திரத்தையே மதமாக் கொண்ட பிரிட்டிஷாரை ஏமாற்றல் இந்திய இராஜ தந்திரிகளால் இயலுமோ? மகா ராஷ்டிர மாகாண மகாநாட்டுக்குப் போந்திருந்த பிரதிநிதிகளை நோக்கி, அன்னிபெஸண்ட் அம்மையார் பேசியபோது - உரிமை வேண்டுமென்னும் ஆவலிலும், அது குறித்துச் செய்யப்படும் போரிலும் உண்மையுடையவராக நீங்கள் இல்லை என்று யான் சில வேளைகளில் நினைப்பதுண்டு. நீங்கள் அரசியலை விளையாட்டாகக் கருதல் வேண்டா. அதற்குப் பதிலாக, இடையீடின்றி உரமான கிளர்ச்சி செய்துவாருங்கள். இங்கிலீஷ்காரர் மூடரல்லர்; குறுகிய நோக்கமுடையவரல்லர். நீங்கள் உங்களுடைய செயலில் உண்மை நிரம்பிய ஊக்க முள்ளவராயிருக்கிறீர்கள் என்று தெரிந்தால், அவர் உங்களை நட்புரிமையோடு ஏற்பர் என்று குறிப்பிட்டதை ஆரவாரக்காரர் நோக்குவாராக. இவ்வுரைக்கு விடையிறுக்க வல்லது காந்தியடிகளின் தெய்விக இயக்கமொன்றே. அதைக் கொன்று இங்கிலாந்துக்கு ஓடு வதினும் இழிவு வேறொன்றுண்டோ? இந்தியாவிலுள்ள குறைகளைக் களையாது, மேல்நாடு செல்வதால் நாட்டுக்கு நலன் விளைதல் அரிது. குறைபாடுகள் பாரத மாதாவின் நோய் இந்தியாவிலுள்ள குறைகளை யெல்லாம் போக்கி, இந்தியாவிற்கு உரிமை வழங்க எழுந்த இயக்கம் ஒத்துழையாமை. அவ்வியக்கம் ஒடுக்கப்பட்டதும் நாட்டிலுள்ள குறைக ளெல்லாம் வீறிட்டெழுகின்றன. இந்தியாவின் குறைகளெல் லாம் வெளிவரவேண்டிய காலம் இதுவே. இது காறும் வெளிப்போந்துள்ள குறைகள் ஒருசில. இன்னுங் கிளம்ப வேண்டிய குறைகள் பல உள. அவையும் விரைவில் தலைகாட்ட வேண்டுமென்பது எனது கோரிக்கை. நாட்டின் குறைகளைக் காணச் சிலர் அஞ்சுவர். அவற்றைப்பற்றி எனக்குச் சிறிதும் அச்ச மில்லை. குறைகளின் தோற்றம் நாட்டை விரைவில் சமன் செய்யும் நீர்மைத்து என்பது எனது கருத்து. இந்தியா ஓரினமாக வேண்டுமானால், அதன்மாட்டுள்ள குறைகள் வெளிக் கிளம்பி வெடித்தே தீரல் வேண்டும். குறைகளெல்லாம் நீரிற் குமிழி போலத் தோன்றி நின்று அடங்குவனவேயாம். குமிழிகள் அழிவின்றி என்றும் ஒரு பெற்றியா யிலங்குவனவல்ல. ஹிந்து - முலிம் வேற்றுமையும், பிராமணர் - பிராமணரல்லாதார் பிணக்கும், வேறு பல உட்கலகங்களும் நாட்டில் நிலைபேறாக நிலவுவனவல்ல. பாரத மாதா சுயராஜ்யக் குழவியை ஈனுதற்கு முன்னர்ச் சிறிது நோய்வாய்ப்பட வேண்டியவளே. என் செய்வது! பாரதமாதாவிற்கு இப்பொழுது தலைக்குத்தல், கண்வலி, கழுத்திறுக்கம், மார்புநோய், வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் தோன்றியிருக்கின்றன. இப்பொழுதுள்ள நிலை அச்சமூட்டக்கூடியதே. இப்பொழுதுதான் அஞ்சாநெஞ்சம் வேண்டற்பாலது; தக்க மருந்துகள் காணல் வேண்டும். சண்டை நீக்கத்துக்கு வழி இப்பொழுது, பொது நோக்குடையோர் அரசியல் கட்சிகளில் தலையிடாமலும், சட்டசபை முதலிய அமைப்பு களில் மனங் கொள்ளாமலும் ஆக்கவேலை செய்யப் புறப் படுவாராக; நாட்டுக் கல்வி, சமய ஞானம், கைத்தொழில் முதலியவற்றைப் பற்றிப் பிரசார வேலை செய்ய எழுவாராக; ஆக்க வேலைக்கென ஆங்காங்கே அமைப்புக்கள் காண்பாராக. நாட்டுக் கல்வியின்மையும், சமயஞானக் குலைவும், கைத் தொழில் அழிவுமே அயலவர் ஆட்சிமுறைக்கு ஆக்கம் நல்கி வருகின்றன. அவ்வாட்சிமுறை, வகுப்புப் பூசலைப் பல முகத் தான் பெருக்கிவருகிறது. அயலவர் கல்வி முறையும், பிறவும் நாட்டுக்கு நஞ்சல்லவோ? ஆழ்வார், நாயன்மார் காலத்தில் - அக்பர் காலத்தில் இல்லாத சாதிகள் இப்பொழுது உண்டோ? அக்காலத்தில் சாதிச் சண்டைகள் எழுந்தனவோ? இல்லையே! காரணம் என்னை? நாட்டுக்குரிய கல்வியும், சமய ஞானமும், கைத்தொழிலும் செவ்விய நிலை பெற்றிருந்தமையே என்று சொல்லலாம். மீண்டும் அவற்றின்மீது கருத்தைச் செலுத்தினால் சண்டைகள் ஒழியும். இந்நாளில் சட்டசபை முதலிய அமைப்புகளின் இருக்கை களும் - உத்தியோக பீடங்களும் - சண்டைகளைக் கிளப்புவதும் கருதற்பாலது. அவற்றில் தலையிட்டுச் செரு விளைப்போர் ஒழிக. ஏனையோர் ஆக்க வேலை செய்து வருவாராக. இதையே மகாத்மா காந்தி எங்கணும் பேசி வருகிறார். காங்கரஸும் ஆக்க வேலை செய்யுமாறு பணித்திருக்கிறது. ஆக்க வேலையில் மாண்பு ஆக்க (நிர்மாண) வேலை ஊக்க மூட்டாதது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வேலை நாட்டிலுள்ள குறை களைப் போக்குவது; அழிவு (பகிஷ்கார) முறைக்கு வேண்டற் பாலதாய ஒற்றுமையை அளிப்பது. அஃது எல்லாக் கட்சி யார்க்கும் பொதுவாக நிற்பது. இத்தகைய ஆக்க வேலையைப் பழிப்பது நாட்டைப் பழிப்பதாகும். ஆக்க வேலையின் பயன் பின்னைச் சட்ட மறுப்பு முதலியவற்றிற்குச் சிறந்த கருவியாகும் என்பதையும் நேயர்கள் உன்னுவார்களாக. ஆக்க வேலையை இடையறாதுசெய்து, நாட்டைச் சட்ட மறுப்புக்கு ஒழுங்கு படுத்த வேண்டுவதன்றோ தேசபக்தர் கடமை? கிராமத் தொண்டு கிராமப் பஞ்சாயத்து ஆக்கவேலைகள் பட்டணங்களில் நடைபெறல் அரிது. அவைகளுக்கேற்ற இடம் கிராமமேயாகும். கிராமங்களில் நூல் நூற்றலைப் பெருக்கலாம்; நாட்டுக் கல்வியைப் பரப்பலாம்; தீண்டாமையை விலக்கலாம்; எல்லாவற்றிற்கும் மேலான சமயஞான அன்பொழுக்கத்தை வளர்க்கலாம்; கிராமப் பஞ்சாயத்துக்களை உயிர்ப்பித்து, அவற்றின் வாயிலாக எத் துணையோ வழக்குகளை நியாயமன்ற மேறாதவாறு தகைய லாம்; பஞ்சாயத்து வாயிலாகக் கிராமங்களை எத்தனையோ வழிகளில் ஒழுங்குபடுத்தலாம்; குடியரசுபோலவும், பல்கலைக் கழகம் போலவும் கிராமப் பஞ்சாயத்து வினைகளாற்றி, மக்கள் வாழ்வைத் தூய்மைப்படுத்தலாம். கிராம வாழ்வு நாட்டு வாழ்வாகத் திரும்பின், சுயராஜ்யத்துக்குப் பெருமுயற்சி செய்ய வேண்டுவதில்லை. கிராமப் பஞ்சாயத்து, அயல்நாட்டுப் பொருள்களை விலக்கவும், குடி முதலியவற்றை நிறுத்தவும் ஒல்லும் வகை முயலலாமன்றோ? கிராமப் பஞ்சாயத்து முறை புதியதன்று; அது பழையதே. காங்கர, ஒருவேளை பழைய மிதவாத வழியைக் கடைப்பிடித்தொழுக நேர்ந்தால், அப்பொழுது ஆக்க (நிர் மாண)த் திட்டத்தை நிறைவேற்றுந் தொண்டைக் கிராமப் பஞ்சாயத்து நிகழ்த்திவருதல் கூடும். எதற்கும் கிராமப் பஞ்சாயத்து தேவை; தேவை. (இப்பொழுது) அப்பஞ்சாயத்தில் கிராமத்திலுள்ள எல்லாத் தொழிற் பிரதிநிதிகளும் அமருமாறு, அஃது அமைக்கப்படல் வேண்டும். நகர இழிவு இனி, கிராமங்கள் கண் விழித்தல் வேண்டும். கிராமங்கள் நகரங்களை எவ்வழியிலும் எதிர்பார்த்தலாகாது. நகரங்களி லிருந்து, பொய்யும், சூதும், வாதும், வஞ்சனையும், பொறாமை யும், பிணக்கும், பிற இழிவுகளும் கிளம்புகின்றன. கிராம வாசிகளே! அவைகட்கு இரையாதல் வேண்டா! எச்சரிக்கை! எச்சரிக்கை! உங்களுக்குரியது ஆக்க வேலையென்றே சொல்வேன்; சிறப்பாகக் கதர்மீதும், தீண்டாமை விலக்கு மீதும் கருத்தைச் செலுத்துங்கள். இவ்விரண்டும் மீண்டும் காந்தியடிகளின் தெய்விக இயக்கத்தை உயிர்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. கதரே அற்றுப் போயிருந்த நமது நாட்டில், அதைப் பல்லாயிர மக்கள் அணிந்தொழுகுமாறு செய்த சத்திய வீரர் நம் பெருந்தலைவர் என்பதை உணருங்கள். மன ஊக்கம் கதரே யின்றிப் பாழாக்கிடந்த நாட்டிடைக் கதரை மலிவித்தது எது? மன எழுச்சியன்றோ? மன எழுச்சி என்ன செய்யாது? ஆக்கவேலையும், அதன்வழியெழும் அழிவு வேலை யும் அம்மனத்திலுண்டு. மனங்கொண்டால் எல்லாஞ் செய்ய லாம். தூய நன்மனம் கிராம வாசிகளாகிய உங்களுக்கு உண்டு. அம்மனத்தினின்றெழும் ஊக்கத்தில் படிந்து, ஊக்கம் பெறவே யானும் ஈண்டுப் போந்தேன். ஊக்கத்துக்கு ஊற்றுக்கண்கள் கிராமங்களே. ஆதலால், ஆக்க வேலைமீது கவலை செலுத்து மாறு உங்களை வேண்டுகிறேன். வந்தே மாதரம் தாராபுரம் தாலுக்கா மகாநாடு (தாராபுரத்தில் கூடியது) - 1925ஆம் வருடம் மே மாதம் 20ஆம் நாள் - சகோதரிகளே! சகோதரர்களே! இம் மகாநாட்டில் தலைவனாக வீற்றிருக்குஞ் சிறப்பை எனக்களிக்க உளங்கொண்ட உங்கள் பெருந்தகைமைக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். இம்மகாநாட்டில் முன்னுரையாக என்ன சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. காங்கர கூட்டங்களிலும், வேறு பல அரசியல் கூட்டங்களிலும், நாட்டி லும் உலவி வரும் சிறுமைச் சண்டைகளைப் பற்றியும், வகுப்புப் பூசல்களைப்பற்றியும் பேச எனது மனம் ஒருப்படவில்லை. உட்கலகங்களைக் குறித்து என்ன பேசுவது? அவை ஒழிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை நோக்கித் தவங் கிடக்க வேண்டுமென்று சொல்லவே எனது நா எழுகிறது. ஆயி னும், ஏற்ற கடனுக்கேற்பச் சில உரை பகர்கிறேன். ஒருமைப்பாடு பொறாமையும் தன்னலமும் பிரிட்டிஷார் ஒருபாலும், இந்தியராகிய நாம் மற்றொரு பாலும் நின்று போர்புரிந்து, அதன் பயனாக நாம் இந்தியாவைப் பிரிட்டிஷார் வயம் ஒப்புவித்தோமில்லை. பிரிட்டிஷாரை இந்தியாவில் நிலைபெறச் செய்த போர்கள் இரண்டு. ஒன்று ஆர்க்காட்டுச் சண்டை; மற்றொன்று பிளாசி யுத்தம். இவ் விரண்டினும் நமது நாட்டில் பிறந்த இந்திய மக்கள், லார்ட் கிளைவ் பக்கல் நின்று துணை புரிந்து, தங்களுடன் பிறந்த நன்மக்களின் செந்நீர் சிந்தி இன்னுயிர் துறக்குமாறு போர் புரிந்தார்கள். அந்நாளில் நம்மவர் பிளவிற்குக் காரணங்களாக நின்றவற்றைப் பலபடக் கூறலாம். அவற்றைத் திரட்டித் தொகுத்து நோக்கினால் இரண்டாகக் காணலாம். ஒன்று பொறாமை; இன்னொன்று தன்னலம். இவ்விரண்டும் நம்மை அடிமைக் குழியில் வீழ்த்தின. நமது நாட்டு மக்கள், தொகையில் முப்பது கோடியாயிருந்தாலென்ன? முந்நூறு கோடியா யிருந்தாலென்ன? நாட்டு மக்களுக்குள் சகோதர உணர்வின்மை யும், பொறாமையும், தன்னலமும் இருக்குமானால், அந்நாடு எத்துணைக் கோடி மக்களை உடைத்தாயிருப்பினும், அமைதி நிலவும் உரிமைபெற்ற நாடாதல் அரிது. அந்நாடு மூன்றாவது மனிதன் ஆட்சியையே விரும்பும். இங்கே, சுவாமி விவேகானந்தர் சென்னையில் நிகழ்த்திய எதிர்கால இந்தியா என்னுஞ் சொற்பொழிவு நினைவிற்கு வருகிறது. அச்சொற்பொழிவில் ஓரிடத்தில் அப்பெரியார் நாட்டாருக்கு அறிவுறுத்தியதன் சாரம் வருமாறு:- ***பல நூற்றாண்டுகளாக நாம் அடிமை வாழ்வை நடாத்தி வருவதால், நாம் பெண்ணினமாகி விட்டோம். இந் நாட்டிலாவது வேறு எந் நாட்டிலாவது, ஐந்து பெண் மக்கள் ஒன்று சேர்வார்களானால், அவர்கள் தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்ணரசி கள் பெருங் கழகங்கள் கண்டு, சொல்ல முடியாத வழியில் அரிய வேலைகள் செய்து, தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துகிறார்கள்; ஆனால், உடனே தங்களுக்குள் சண்டையிடுவார்கள். அங்கே ஓர் ஆண்மகன் போந்து அரசு செலுத்துகிறான். உலக முழு வதும் பெண் மக்கள் இன்னும் ஆண்மக்கள் துணையை நாடி நிற்கிறார்கள். நாம் அவர்களை (பெண்களை)ப் போல இருக்கி றோம். நாம் பெண்மக்கள் போன்றவர்கள். ஒரு பெண்மகள் தலைமை வகித்துப் பெண் மக்களை (நல்வழியில்) நடாத்த வந் தால், உடனே அவளை அவர்கள் மறுக்கப் புகுகிறார்கள்; அவளைப் பறக்க அடிக்கிறார்கள்; அவளை அடங்குமாறு செய்து விடுகிறார்கள். ஓர் ஆண்மகன் போந்து கடிந்து திருகு வானானால், அவன் மாயவித்தையில் பெண்கள் மயங்கி விடு கிறார்கள். உலகம் இவ்வித இந்திர ஜால மயக்கில் அடங்கி யிருக்கிறது. இவ்வண்ணமே நம் நாட்டவருள் ஒருவன் கிளம்பிப் பெரியவனாக முயல்வானாயின், நாம் அவனைக் கீழே தள்ள முயல்கிறோம். ஆனால் ஓர் அயலான் நுழைந்து உதை கொடுத் தால், அப்பொழுது அடக்கம் உண்டாகிறது. நாம் இப் பயிற்சியில் தேர்ந்திருக்கிறோம் அல்லவா? அடிமைகள் ஆள் வோராதல் வேண்டும். ஆதலால், அடிமை எண்ணத்தை அகற்றுங்கள். ஐம்பது ஆண்டுவரை இஃது உங்களுக்கு மூல மந்திரமாக இருத்தல் வேண்டும். அஃது எது? நமது மாட்சிமை தங்கிய பாரத மாதாவைப் போற்றுதலாகும். (ஐம்பது ஆண்டு பாரத மாதாவெனுங் கடவுளை வணங்க வேண்டுமென்றபடி.) நமது மனத்திலுள்ள வெறுந் தெய்வங்களெல்லாம் ஒழிக * * *ஒவ்வொருவரும் யோகியாக முயல்கிறார்; ஒவ்வொருவரும் யோகஞ் செய்ய எண்ணுகிறார். முடியுமா? முடியாது. பகல் முழுவதும் உலகோடு (கர்ம காண்டத்தோடு) போராடிச் சாயங்கால வேளையில் உட்கார்ந்து, மூச்சைப்பிடித்து மூக்கால் ஈர்த்தால் யோகங் கைகூடுமோ? அஃது அவ்வளவு எளியதா? மூக்கின் வழி மும்முறை ஈர்ப்பதால், ரிஷிகள் ஆகாயத்தின் வழியே வரல்வேண்டும் போலும்! இஃதென்ன விளையாட்டு! இம்மடமைகளெல்லாம் ஒழிதல் வேண்டும். வேண்டுவது என்னை? சித்தசுத்தி. முதலாவது நம்மைச் சுற்றிலுமுள்ள தெய்வங்களாகிய மக்களை - உயிர்களை - வழிபடுவோமாக. நாம் வழிபடவேண்டிய முதற்கடவுளர் நமது சொந்த நாட்டவரே யாவர். நாம் செய்யவேண்டிய வழிபாடு இதுவே. ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வது வேண்டா; போரிடுவது வேண்டா. (பொறாமை போர் என்னும்) இக் கொடிய கர்மத்துக்கு ஆளாகி நாம் வருந்துகிறோம். வருந்தியும் நமது கண்கள் திறக்கப்படவில்லை. சகோதரநேயம் நாட்டின் உண்மை நிலையைத் தமது அறிவால் - அடைவால் (அநுபவத்தால்) - அளந்தே இவ்வுரைகளைச் சுவாமி விவேகானந்தர் வழங்கினார். பிரிட்டிஷார் நமது நாட்டைப் பற்றிச் சுமார் நூற்றறுபது ஆண்டுகளாகின்றன. இக்கால எல்லையில் நமது நாட்டின் கைத்தொழில்கள், கலைகள், வழக்க ஒழுக்கங்கள், ஆத்மஞான ஆராய்ச்சி முதலிய பல துறைகளின் வளங்கள் சுருங்கிவிட்டன. செல்வநிலை குறைந்து வருகிறது. நாடோ வறுமைக்கு உறைவிடமாகிவிட்டது. ஏழைமக்கள் துயரோ சொல்லுதல் முடியாது. அடக்குமுறைச் சட்டங்களுக்கோ குறைவில்லை. பஞ்சாப் படுகொலை நினை விற்கு வாராமலில்லை. இவ்வளவு துன்பத்திடை மூழ்கியும், நமக்குள் இந்தியரென்னுஞ் சகோதரவாஞ்சை பிறக்கவில்லை என்றால், நாம் எந்நாளில் அடிமை வாழ்வை ஒழிக்கவல்லவ ராவோம்? காங்கரஸிலும் ஒருமையின்மை நமது அடிமை வாழ்வை ஒழிக்கக் காணப்பட்ட காங்கரஸி லாவது, நம்மவர் இயல்புகளாய பொறாமையும், தன்னலமும் தலைகாட்டாம லிருக்கின்றனவோ? இந்திய மக்களால் காணப்படும் எந்த அமைப்பிலும் இவ்விரண்டையுங் காணலாம். நாட்டு விடுதலைக்கென உழைக்கக் காணப்பட்ட காங்கர அமைப்புக்களிலும் ஒவ்வொருவரும் தலைமைப்பேறு கருதி, மனம் புழுங்கிப் பிறர்மீது பொல்லாப் பழி சுமத்தியும் புறங் கூறியும் தங்கருத்தை முற்றுவித்துக் கொள்கிறார். பொறா மையையும் தன்னலத்தையும் உரிமைப் போராட்டத்தில் கொணர்ந்து நுழைத்தலாகாது என்பதை அறிவுறுத்த மகாத்மா காந்தியைப் போல ஒரு தலைவர் இனி தோன்றப் போகிறாரா? தியாகமே ஓருருக்கொண்டு வந்தாலென இலங்கும் அப் பெரியாரின் அருளுரையை நமது நாட்டுப் பொறாமையும் தன்னலமும் வீழ்த்துகின்றனவெனில், நமது நாட்டின் நிலையை என்னென்று கூறுவது! மேல்நாட்டாரும் நாட்டுப்பற்றும் பொறாமையும் தன்னலமும் எந்நாட்டில் இல்லை? அவை எல்லா இலௌகிக மக்கள்பாலும் இயல்பாக அமைந்திருப்பன. மேல்நாட்டார்பால் இந்நீர்மைகள் இல்லையோ என்று என்னருமைச் சகோதரர்கள் கேட்கலாம். எந்நாட்டாரிடத்தும் இவ்வியல்புகள் இல்லாமலில்லை. ஆனால் மேல்நாட்டார் இவ் வியல்புகளை நாட்டுப் பொதுவினைகளில் கொணர்ந்து நுழைக்கமாட்டார். அன்னார் தமது நாட்டை ஒரு தெய்வமாகக் கொள்கிறார். நாட்டு நினைவு தோன்றும்போது, அவர் கட்சிப்பிணக்கையாதல், வேறு பல மாறுபாடுகளையாதல் பாராட்டுவதில்லை. முதல் நாடு; பிற பின் என்பது அன்னார் அரசியல் அறம். அத்தகை நாட்டுப்பற்று, நம்மவர் மனத்தில் நிலைத்து நின்றால், சாதி வேற்றுமையும், சமய வேற்றுமையும் தலைகாட்டுமோ? முப்பது கோடி மக்களையும் தெய்வமாக வழிபடுமாறு சுவாமி விவேகானந்தர் இன்றைக்குச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கூறிப் போந்தார். அவ் வுரையருளிய ஒரு மகனை ஈன்ற பாரத நாட்டில் வகுப்புச் சண்டைகள் மலிகின்றன! முதல் நாடு, பின் வகுப்பு முதலியன என்ற உணர்வு, உரிமைப் போராட்டத்திடை எழும் பொறாமை யையும் தன்னலத்தையும் கல்லுவதாகும். ஒரு வகுப்பார்க்கு உயர்பதவி அளிக்கப்படும்போது, மற்ற வகுப்பினர் படும் பாட்டைச் சொல்லுதல் முடியுமோ? இப்பொறாமையும் தன்னலமும் உள்ளமட்டும் நமது நாட்டுத் தளை அவிழவே அவிழாது. அறியாமை தன்னலமும் அடிமையும் பிரிட்டிஷார் இந்தியாவில் போந்து, அரசு நடாத்தத் தொடங்கியபோது, நம்மவர் ஏன் ஆங்கிலம் பயின்றனர்? பயின்றவர் ஏன் உத்தியோகங்களை ஏற்றனர்? நாட்டுக் கலைகள் - தொழின் முறைகள் - எக்கேடு கெடினுங் கெடுக. எனக்கு உயர் பதவி கிடைத்தால் போதும் என்றெழுந்த தன்னலமன்றோ நாட்டை அடிமைக் குழியில் வீழ்த்தியது? கற்ற அறிஞர் அறிவு உழைப்பெல்லாம், உத்தியோகத் துறைகட்குப் பயன்பட்டுவரின், நாட்டு நிலை என்னாகும்? அயல் ஆட்சிமுறைக்கு எவ்வெவ் வழியில் துணை நிற்கவேண்டுமோ. அவ்வவ்வழியில் நம்மவர் துணைநின்று வருகின்றனர். அயல்மொழி பயில்வதும், பேசு வதும், எழுதுவதும், அம்மொழியில் பத்திரிகை நடாத்துவதும், பொதுவினைகள் நிகழ்த்துவதும் அயல்ஆட்சிக்கு ஆக்கந் தேடுதலாகும். அறிவு வளர்ச்சிக்கு அயல்மொழி பயில்வதை யான் வெறுக்கின்றேனில்லை. அயல் ஆட்சி முறைக்குத் துணை புரிய, அயல்மொழி பயிலலாகாதென்பது எனது கருத்து. அஹிம்சை உயர் உத்தியோகமும், பதவியும், பட்டமும், இன்னோ ரன்ன பிறவும், பொறாமையையும் தன்னலத்தையும் வளர்க்காது, பின்னை எவைகளை வளர்க்கும்? இக்கொடுங் குணங்களை ஒழிக்கவே ஒத்துழையா இயக்கம் எழுந்தது. அப்புனித இயக்கத் தையும், நம்மவர் பொறாமையும் தன்னலமும் விழுங்கி விட்டன. இனி என் செய்வது? மீண்டும் நந்தலைவர்கள் பழைய ஒத் துழைப்புச் சேற்றில் வீழ்கிறார்கள். யாண்டாயினும் ஒருநாடு, நியாய வரம்புக்குட்பட்ட கிளர்ச்சியால் - ஒத்துழைப்பால் - சுயராஜ்யம் பெற்றுளதோ? இரத்தம் சிந்தும் போர்புரியுமாறு தூண்ட நான் இங்கே வரவில்லை. இரத்தஞ் சிந்தா அஹிம்சா தர்மப் போரே நமது நாட்டுக்கு உரியது; அதுவே நாட்டுக்கு உரிமை யளிப்பது; நாட்டைத் தூய்மைப் படுத்துவது. ஒத்துழையா அறப்போர் அஹிம்ஸையையும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகலான், அது பொறாமையையும் தன்னலத்தையும் அழிக்கவல்லதென்பதைப்பற்றி விரித்துக் கூறவேண்டுவதில்லை. காந்தியடிகளும் நாடும் தற்காலக் கல்வி உரிமைக்குத் தடை ஒத்துழையாமையின் முதல் திட்டமாகிய அழிவுத் திட்டம் நம்மவரைப் பற்றியுள்ள அந்நிய அழுக்கைக் கழுவுவது; இரண்டாவதாகிய ஆக்கத் திட்டம் நம்பாலுள்ள குறைகளை நிறைவு செய்வது. சட்டசபைகளிலும், நீதிமன்றங்களிலும், பள்ளிகளிலும் புரண்டு புரண்டு அந்நிய அழுக்கேறி ஊறப் பெற்ற சகோதரர்கள், அவ்வழுக்கு நீங்கினால், வெந்நோய் வருமென அஞ்சி, மீண்டும் அவ்வழுக்கிற் புரளப் போந்தார்கள். அவர்களைத் திருத்தலும் அரிது. அவர்கள் செல்லும் வழியே செல்லுமாறு அவர்களை விட்டுவிடுவதே நலம். அவர்களோடு கலந்து, அவர்கள் ஆட்டும் பாவைகளாக மற்றவர் இருத்த லாகாது. இப்பொழுது பெரிதும் இக்காலக் கல்வியும், இக்கால நாகரிக உணர்வும் உடையோர் தலைவர்களாக நின்று நாட்டை நடாத்துகிறார். அவர்கள், ஒத்துழைப்பு என்றால், ஆமாம் ஒத்துழைப்பு என்றும், நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி என்றால் ஆமாம், அதுவே நல்லது என்றும் மற்றவர் தலை யசைத்துவிடுகிறார். இனி நாட்டார் அவ்வாறு கண்மூடி களாயிருத்தலாகாது. உயர் பதவிக்கென இக்காலக் கல்வி பயின்று, அதற்கெனக் கிளர்ச்சி செய்யக் காங்கரஸை ஒரு கருவியாகப் பயன்படுத்துவோர் முயற்சியால், உயர் பதவிகள் அளிக்கவல்ல சில சீர்திருத்தங்கள் கிடைக்குமே யன்றிச் சுயராஜ்யம் வாராது. நமது நாட்டில், அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதற்கென்றே ஒரு கூட்டம் திரண்டிருக்கிறது. அக் கூட்டத்தை இனி நம்புவதால் எவ்வித நலனும் விளையாது. நமது நாடு, நமது வழக்க ஒழுக்கம், நமது கலைகள் என்ற உணர்வுடைய தேசபக்தர்கள் ஒன்றுபட்டுத் தொண்டாற்றல் அறிவுடைமை. அத்தொண்டர்கள் காந்தியடிகள் போன்ற உண்மையாளர் காட்டும் வழிபற்றி நடாத்தல் வேண்டும். ஒத்துழைப்பாளர் கொடுமை இப்பொழுதே, காந்தியடிகள் காங்கரஸை விடுத்து விலகல் வேண்டும் என்ற கூக்குரல் மகாராஷ்டிரத்தில் கிளம்பி யிருக்கிறது. ஒத்துழைப்புக் கூட்டம் படிப்படியாகக் காந்தியடி கள் திட்டங்களை ஒடுக்கிக் கொண்டே வந்தது; இப்பொழுது காந்தியடிகளையே காங்கரஸினின்றும் ஓட்டப் புறப்பட் டிருக்கிறது. இப்பொழுது காந்தியடிகள் திட்டத்தில் நூல் சந்தா ஒன்றே காங்கரஸிலிருந்து வருகிறது. அதையுந் தொலைக்கப் பல ஒத்துழைப்பாளர் முயன்று வருகிறார். ஒத்துழைப்புத் தலைவர் கள் மேடைகளிலும், பத்திரிகைகளிலும் செய்யும் ஆரவாரம் காந்தியடிகளுக்கு நாட்டில் செல்வாக்கு இல்லாததுபோலத் தோற்றுவிக்கும். அயலவர் ஆட்சி முறையை விரும்பும் சிறு ஒத் துழைப்புக் கூட்டத்தார் போக, மற்றப் பெரும்பான்மையோர் காந்தியடிகள் வழி நிற்பவர் என்பது உண்மை. கல்வியும், பொருளும், செல்வாக்கும், பத்திரிகையுமுடைய சிறுபான்மை யோர் சூழ்ச்சிகளுக்குச் சில வேளைகளில் பெரும்பான்மையோர் இரையாய்விடுகிறார். இவ்வறியாமை என்று நீங்குமோ, அன்றே நாட்டுக்கு நலம் விளையும். இவ்வறியாமையை நீக்கவே ஒத்துழையா இயக்கம் தோன்றிற்று. அவ்வியக்கத்தில் தலைப் பட்டுழைத்த உண்மையாளர், தங் கொள்கையை நாட்டில் வேரூன்றச் செய்தல் வேண்டும். சட்டமறுப்பையும், அழிவு வேலையையும் தொடங்குமாறு யான் இப்பொழுது அறிவுறுத்த வரவில்லை; அமைதியான ஆக்கவேலை நிகழ்த்துமாறே உங்களை வேண்டுகிறேன். ஆக்கவேலைச் சிறப்பு காந்தியடிகள் அறிவுறுத்தும் ஆக்க வேலையில் நாட்டு நலத்துக்குரிய எல்லாம் உண்டு. ஆக்கத் திட்டம் நாட்டுக்கு எத் தகைய ஆற்றலை - எத்தகைய வாழ்வை - எத்தகைய நலத்தை - அளிக்குமென்று யான் சொல்ல வேண்டுவதில்லை. ஆக்க வேலை பாரதமாதாவின் பசிக்குரிய உணவாகும். அஃது அவள் நோய்க்குரிய மருந்தாகும். இந்து - முலிம் ஒற்றுமையும், தீண்டாமை விலக்கும், கதருமல்லவோ சுயராஜ்யக் கருவிகள்? இக்கருவிகள், இங்கிலாந்து சென்று, சொற்பொழிவு நிகழ்த்துவ தால் - சீர்திருத்தம் பெறுவதால் - நாட்டில் நிலவிவிடுமோ? வருஞ் சீர்திருத்தம் சீர்திருத்தம் இந்திய மக்கள் ஒற்றுமையைக் குலைப்ப தென்று யான் உறுதியாகக் கூறுவேன். மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தைப் பார்க்கிலும், சுயஆட்சிக்கு அடிப்படை என்று சொல்லப்பட்ட மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத்தம் நலந்தருவது என்று எவ்வளவு பேர் எண்ணிக்கொண்டிருந்தனர்! இப்பொழுது, இரட்டையாட்சி கொடியது கொடியது என்று சொல்லப்படுகிறது. இவ்விரட்டையாட்சியினும் கொடிய சீர்திருத்தத்தையே இனி எதிர்பார்க்கலாம். சுயராஜ்யக் கட்சியார், சட்டசபையில் நுழைந்து, சிற்சில இடங்களில் செய்த - பயனற்ற - ஆரவாரமும், பிறவும் பிரிட்டிஷார் உள்ளத்தில் உலவிக் கொண்டிருத்தலால், இனி வழங்கப் போகுஞ் சீர்திருத்தத்தை மிக எச்சரிக்கையோடு அவர் வழங்குவர் என்பது திண்ணம். பிரிட்டனும் இந்தியாவும் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தில் பிரதிநிதிகளுக்குள் கட்சிப் பிளவு தோன்றுதற்கு இடமில்லாதிருந்தது. இரட்டை ஆட்சியில் மந்திரிக்கட்சி யென்றும், அதை எதிர்க்குங் கட்சி யென்றும் பிரிவுகளிருக்கின்றன. இது பிரிட்டன் பார்லிமெண்ட் முறை என்று அரசியல் ஞானத்தால் தலை பருத்துள்ள நமது இந்திய இராஜ தந்திர மணிகளால் சொல்லப்படுகிறது! பிரிட்டன், சுயராஜ்யம் பெற்றுள்ள நாடு என்பதும், நமது இந்தியா சுயராஜ்யம் இழந்து நிற்கும் நாடு என்பதும் அச்சகோதரர்களுக்கு விளங்குவதில்லை போலும்! உரிமை இழந்து கிடக்கும் நாட்டு மக்களுக்குள் பிரிவை உண்டாக்கும் சீர்திருத்தத்தைப் பெறுவது சுயராஜ்ய ஊற்றுக் கண்களைத் தூர்ப்பதாகும். அதினும் பல சாதியார் - பல சமயத்தார் - வாழும் நாடு, முழு உரிமை பெறாது, இரட்டை ஆட்சிச் சீர்திருத்தம் போன்ற தொன்றைப் பெறுவது, வகுப்பு வேற்றுமையை வளர்த்துக் கொள்வதாகும். இப்பொழுது நாட்டில் கிளம்பி யுள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கூச்சல் எனது கூற்றுக்குச் சான்று கூறும். பிரிட்டிஷ் இராஜ தந்திரிகள், சுயராஜ்யம் மலரும் வழியைக் காணும் முறையில் சீர்திருத்தம் அளிப்ப ரென்னும் நம்பிக்கை எனக்கில்லை. தேசபந்து தாஸர் சமாதானம் பேச முனைந்து நிற்பது ஏமாற்றமாகவே முடியும். லார்ட் ரெடிங் இங்கிலாந்து சென்றிருப்பதைப் பற்றிப் பலர் பலவாறு கருதுகிறார். இரட்டையாட்சி முறையில் சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியார் விளைத்த இடுக்கண் களைத் தாங் கண்டவாறு கூறவும், அத்தகைய இடுக்கணுக்கு இடமுறாதவாறு இனிக் காக்கும் வழிகளைச் சொல்லவும், அதிகாரவர்க்க ஆக்கஞ் சிதைவுறா வண்ணங் காக்கும் முறை களை விளக்கவும் லார்ட் ரெடிங் இங்கிலாந்து சென்றிருக்கிறா ரென்று யான் ஊகிக்கிறேன். சுயராஜ்யக் கட்சியின் தோற்ற மும், ஒத்துழையாமையின் தோல்வியும் லார்ட் ரெடிங்கை இங்கிலாந்து போகச் செய்தன. சுயராஜ்யக் கட்சி தோன்றாது ஒத்துழையாமையில் வெற்றி நிகழ்ந்திருக்குமாயின், அவ்வெற்றி இந்தியா மந்திரியை இந்தியாவிற்கு வரவழைத்திருக்கும். நிலைமை மாறிவிட்டது. லார்ட் ரெடிங் முன்னே செல்ல, அவர் பின்னே நம்மவர் செல்லல் நேர்ந்திருக்கிறது. நமது வேலை இந்தியர் வழிபடு முறை நிலையைப் பண்படுத்தி, நாட்டைச் சுயராஜ்யத்துக்கு உரியதாக்க என்செய்தல் வேண்டும்? மசோதாக்களைச் செப்பஞ்செய்து கொண்டிருக்குமாறு உங்களுக்கு யான் சொல்லமாட்டேன். செப்பஞ் செய்தற்கென ஒரு திருக்கூட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வேலையை அக்கூட்டத்துக்கு விட்டு விடலாம். அதனால் நலன் விளையின் விளைக. நாம் செய்ய வேண்டுவது ஆக்க வேலை. அவ்வேலையில் தலைப்படுவது நமக்குள் ஒற்றுமை உண்டாக்க முயல்வதாகும். நமது நாட்டில் இயல்பாக உள்ளதும், சுவாமி விவேகானந்தரால் சிறப்பாகக் குறிக்கப் பெற்றதுமாகிய பொறாமையைக் களையவும், பொறுமையை வளர்க்கவும் முயலல் வேண்டும். புறங்கூறல், தலைமைப்பேறு கருதி முரணல், உட்கலாம் விளைத்தல், நட்பிடைக் குய்யம் வைத்தல் முதலிய துன்புடைமைகளை அணியாது, ஒற்றுமை நேயம், சகோதர உரிமை, பிறர் குற்றம் பாராட்டாமை, குற்றம் பொறுத்தல், மன்னித்தல் முதலிய இன்புடைமைகளை அறிவாலணிந்து, இந்தியாவைப் பெருங் கோயிலாகவும், அதன்கண் வாழும் முப்பதுகோடி மக்களைக் கடவுளாகவும் போற்றி ஒல்லும்வகையாதல் வழிபடும் அறநெறி பற்றி ஒழுகுவோமாக. காந்தியடிகள் கோலியுள்ள ஆக்கத் திட்டத்தில் கருத்தூன்றி, வினையாற்றுவோமாயின், அது நம்மை அறநெறியில் நிறுத்தி, ஒத்துழையாப் போருக்குரிய ஆற்றலை யும் அன்பையும் நமக்கு நல்கு மென்பது திண்ணம். காங்கரகாரர், நகர - நாட்டமைப்புக்களைப் பற்றிக்கொள்ளல் வேண்டும் என்னும் பெருங்கிளர்ச்சி தோன்றி யிருக்கிறது. அதைக்குறித்து, யான் விரிவுரை கூற விரும்பு கிறேனில்லை. காங்கரகாரர் அவ்வமைப்புக்களைப் பற்றி, ஆக்க வேலைகளை நிறைவேற்றுவது போற்றத்தக்கதே. தேர்தலில் வெற்றிபெற வேண்டிக் காங்கரஸில் சேர்வதும், கதர் உடுப்பதும் அறநெறியை வளர்க்குமா என்னும் ஐயம் பிறக்கிறது. தேர்தலில் வெற்றி என்னுங் கருத்தின்றி, ஆக்கவேலையைக் குறிக்கொண்டு செல்வோரால், நலன் விளையும் என்பது ஒருதலை. நல்லோரைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு வாக் காளர் மனோநிலையைப்பற்றி நிற்பது. கிராமக் கடன் கிராமத்தினின்றும் எழுச்சி வாக்காளர்க்கு நாட்டுணர்ச்சி யூட்டவும், வேறு பல நல்வினையாற்றவும் நாட்டு முறையில் கிராமப் பஞ்சாயத்து அமைப்பது நலம். அப்பஞ்சாயத்து வாயிலாக, ஆக்கவேலை செய்து வருவதோடு, வழக்குகள் நியாய மன்ற மேறாதவாறு காத்தல், குடி நிறுத்தல், நாட்டுக்கல்வி பரப்பல் முதலிய அறத் தொண்டுகளும் ஆற்றலாம். கிராமத்தினின்றுமே நாட்டுக்குரிய புனித இயக்கங்கள் இனித் தோன்றுதல் வேண்டும். இக்கால நாகரிகம் நிரம்பியுள்ள இடங்களினின்றும் கிளம்பிய இயக்கங்களால் விளைந்த கொடுமைகள் போதும்! போதும்! கிராம வாசிகளே! உங்களைத் தெய்வமாகத் தொழுகிறேன். பாரததேவி உங்கள் உழைப்பையே எதிர்நோக்குகிறாள். உரிமை வேட்கை உங்கட்கே தோன்றுதல் வேண்டும். சகோதரர்களே! உலகை உற்று நோக்குங்கள்; நமது அருமை இந்தியாவை உற்று நோக்குங்கள். உரிமையின்றி நாம் எத்துணைநாள் துயருறுவது? துன்பந் துடைத்து இன்பம் நுகர எழுங்கள்; எழுங்கள்; நன் மனங்கொண்டு எழுங்கள்; ஆண்டவன் அருள் செய்வான். வந்தே மாதரம். அறந்தாங்கி தாலுக்கா 1-வது மகாநாடு (அறந்தாங்கியில் கூடியது) - 1929ஆம் வருடம் ஜூன் மாதம் 8,9ஆம் நாள் - சகோதரிகளே! சகோதரர்களே! அறந்தாங்கி தாலுக்கா முதல் மகாநாட்டுக்கு என்னை தலைவனாகத் தெரிந்தெடுத்த வரவேற்புக் கூட்டத்தார்க்கும், மற்றவர்க்கும் எனது நன்றியறிதலான வணக்கம். முதன்முறை கூடியுள்ள இம்மகாநாட்டை, இத்துணைப்பேர் போந்து சிறப்பித்ததைக் கண்டு கழிபேருவகை எய்துகிறேன். ne‰W, e©g® gê® mf«kJ«, ahD« <©L¥ nghªJ, ï«kfh eh£o‹ gªjiu¥ gh®¤jnghJ, ‘xU jhY¡fh kfh eh£o‰F ï¤jif¥ bgU«gªj® v‰W¡F! என்று பேசிக் கொண்டோம். இப்பொழுது இப்பந்தர், மக்கள் கூட்டத்தால் நிரம்பி யிருப்பதைக் காண்கிறேன்; இத்தாலுக்காவின் காங்கர பக்தியை யான் வியந்து பாராட்டுகிறேன்; காங்கரமீது உங்களுக்குள்ள அன்பு மேன்மேலும் ஓங்கி வளருமாறு ஆண்டவனை வழுத்துகிறேன். காங்கர காங்கரஸின் பொறுமை இந்தியாவின் விடுதலையை ஏறக்குறைய எல்லா இந்திய ரும் விரும்புகிறார். ஆனால் அவரவர் கொள்ளும் முறைகளில் சிற்சில வேற்றுமைகளுண்டு. இந்தியாவில் பல சாதியினர், பல சமயத்தவர், பல மொழியினர் வாழ்கின்றனர். இவர் அனை வர்க்கும் இடந்தரும் மகாசபை எது? காங்கர மகாசபையின் அமைப்பைச் சிறிது உன்னிப் பாருங்கள். காங்கர ஒரு சாதிச் சபையன்று; ஒரு சமயச் சபையன்று; ஒரு மொழிச் சபையன்று. எல்லாச் சாதியார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா மொழியார்க்கும் காங்கரஸில் இடம் உண்டு. காங்கர இந்தியர் மகாசபையே யாகும். இப்பெருமை வேறு பல சபை களுக்கில்லை. அவை சாதிச் சபைகளாகவும், சமயச் சங்கங் களாகவும், மொழிக் கழகங்களாகவும் கடனாற்றி வருகின்றன. காங்கரஸோ எல்லார்க்கும் உரியதாய்க் கடனாற்றி வருகிறது. காங்கரஸில், இச்சாதியார், இச்சமயத்தார், இம்மொழியார் மட்டும் உறுப்பினராதல் வேண்டும் என்னும் நியதி இல்லை. எல்லாரும் காங்கரஸில் சேர்ந்து தொண்டு செய்யலாம். காங்கரஸும் உலகமும் இந்தியாவில் எத்தனையோ சபைகள் இருக்கின்றன. அவற்றின் இருப்பும் மற்ற நாட்டவர்க்குத் தெரியாது. காங்கர ஒன்றையே இந்தியர் மகாசபை என்று மற்ற நாட்டார் கருது கிறார். காங்கர வெளியிடும் கருத்தே இந்தியாவினுடையது என்று உலகங் கொள்கிறது. என்னும் பொருள்படப் பேசினார். மாண்டேகுவும் - செம்பர்டும், தமது அறிக்கையில், காங்கர - லீக் கோரிக்கைமீது, தமது கருத்தைச் செலுத்தலாயினர். இந்தியா முழுவதும் சுற்றித் திரும்பிய ஸர் ஜான் சைமன் நெஞ்சமும், காங்கரஸின் உள்ளக்கிடக்கையே, இந்தியாவினுடையது என்றும் கூறும். ஸர் ஜான் சைமன், நேரு அறிக்கையை எவ்வளவு வேட்கையுடன் தருவித்துப் படித்தார் என்பது உங்கட்குத் தெரியும். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் முதலிய நாடுகள் காங்கர தீர்மானத்தையே கவனித்து வருகின்றன. காங்கர ஒன்றே, சாதி மத வேற்றுமை பாராட் டாத இந்தியர் மகாசபை என்பதை இன்னும் விரித்துக் கூறவேண்டுவதில்லை. குற்றம் குறைகள் காங்கரஸில் குறைபாடுகள் இல்லையோ, தவறுதல்கள் இல்லையோ என்று சிலர் வினவலாம். காங்கரஸை அவ்வப் போது நடாத்தப்புகும் நிர்வாகிகளால் சில குற்றங் குறைகள் நிகழ்த்தப்படலாம். அவற்றைக் காரணமாகக் கொண்டு அமைப்பைக் குறைகூறுதல், அறிவுடைமையாகாது. சமயத்தவர் நிகழ்த்தும் பிழைபாடுகளைச் சமயத்தின்மீது சுமத்துவது அறிவுடைமையாகுமோ? காங்கரஸும் விடுதலையும் சகோதரிகளே! சகோதரர்களே!! பாரதநாட்டுப் பெருஞ் சபை காங்கரஸே என்று உணருங்கள்; சுயராஜ்யத்தை வழங்கவல்லது காங்கர ஒன்றே என்பதை உணருங்கள். காங்கர கொள்கைக்கு மாறுபட்டு நடத்தல் நாட்டுக்கு மாறுபட்டு நடத்தலாகும். காங்கரஸின் ஆக்கம் பெருகப் பெருக, விடுதலை நெருங்கி நெருங்கி வரும். நாட்டின் விடுதலை, காங்கரஸின் ஆக்கத்தைப் பொறுத்து நிற்றலைக் கருதுங்கள்; கருதிக் கருதிக் காங்கரஸைக் குறை கூறுவதை விடுத்து அதில் சேர்ந்து உழைக்க எழுங்கள்; எழுங்கள்! உங்களுக்குப் பல குறைபாடுகள் உண்டு. அவையெல்லாம் தொலைய வேண்டு மானால், காங்கரஸில் சேர்ந்து தொண்டாற்றுங்கள். ஒத்துழையாமை காங்கரஸில் எத்துணையோ இயக்கங்கள் தோன்றின. அவற்றுள் தலையாயது ஒத்துழையாமையே யாகும். ஒத் துழையாத் திட்டத்தை நாடு நிறைவேற்றியிருப்பின், நமக்கு எப்பொழுதோ சுயராஜ்யம் கிடைத்திருக்கும். காந்தியடிகள் கோலிய ஆக்க அழிவு முறைகளை நேரிய முறையில் நாட்டார் பலர் செயலிற்கொணர முயன்றாரில்லை. அதனால், ஒத்துழை யாமைக்கு நாடு சித்தமாயில்லை என்பது புலனாயிற்று. தீண்டாமையை விலக்க உறுதி கொள்ளாத நாட்டிற்குச் சுய ராஜ்யம் யாண்டிருந்து வரும்? சுயராஜ்யக் கட்சியும் சுயேச்சையும் ஒத்துழையாமையினூடே சுயராஜ்யக் கட்சி என் றொன்று தோன்றிற்று. சட்டசபையின் புறத்தே இருந்து ஒத்துழையாமை நிகழ்த்துவதால், பிற்போக்குக் கூட்டத்தார் அச்சபையில் நுழைந்து, அதிகாரவர்க்கத்திற்குப் பெருந்துணை செய்கிறாரென்றும், அவர் கூட்டுறவால் அதிகாரவர்க்கம் ஆக்கம் பெறுகிறதென்றும், இரட்டை ஆட்சியின் இயக்கத்தைக் குலைக்கச் சட்டசபை நுழைதலே அறிவுடைமை என்றும் அக்கட்சித் தலைவர்கள் பேசி, நாட்டில் ஒத்துழையாமைக் கிருந்த ஆக்கத்தை ஒருவாறு சிதைத்தார்கள். அக்கட்சியினர் சட்டசபையில் கிடத்திய முட்டுக்கட்டையால் ஒன்றும் விளைய வில்லை. ஆனால், அக்கட்சி, உலகிற்கு ஓர் உண்மையை விளங்கச் செய்தது. அஃது என்னை? நாடு, காங்கர சார்பாக நிற்றலையும், பிற்போக்குக் கட்சிகளின் சார்பில் அது நில் லாமையையும் அக்கட்சி உலகிற்குச் செவ்வனே புலப்படுத்திற்று. ஜனவிருப்பம், ஜனப்பொறுப்பு என்பனவற்றின் நுட்பம் உணர்ந்த பிரிட்டிஷார், சுயராஜ்யக் கட்சியார் வாயிலாக இந்தியாவின் நிலையை உணர்ந்தும், பொறுப்பாட்சி நல்க மனங் கொண்டாரில்லை. தேர்தலில் நிகழும் வெற்றி மட்டும் போதா தென்பது அன்னார் கருத்துப் போலும்! சுயராஜ்யக் கட்சியார் வானத்திற் பறந்து என்னென்னவோ செய்து, கல்கத்தா காங்கரஸில் காந்தியடிகளிடம் தஞ்சம் புகுந்தார். காந்தியடிகள் அறிவுறுத்தலின்மீது கல்கத்தா காங் கர பிரிட்டனுக்கு ஒருவித எச்சரிக்கை செய்தது உங்கட்குத் தெரியும். இவ்வாண்டு முடிவிற்குள் நேரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சுயராஜ்யம் வழங்கப் பார்லிமெண்ட் முந்தா தொழியின், வரும் ஆண்டு, முதல் நாளில் சுயேச்சைக் கொடி உயர்த்தி, ஒத்துழையா முரசு முழங்கப்படும் என்பது கல்கத்தா காங்கர தீர்மானத்தின் கருத்து. தற்கால நிலை தொழிற்கட்சியும் இந்தியாவும் கல்கத்தா காங்கர தீர்மானம், சைமன் குழுவின் அறிக் கையை ஒட்டிப் பார்லிமெண்ட் நல்கப் போகும் சீர்திருத்தத்தைக் குறிக்கொண்டு நிற்கிறது. பார்லிமெண்டில் தொழிற்கட்சியார் அதிகாரம் ஏற்று இருத்தலான், ஏதாயினும் வழி பிறக்கலாம் என்று சிலர் நம்புகிறார். அந் நம்பிக்கை வேண்டாம் என்று யான் சொல்கிறேன். தொழிற்கட்சிப் பாடம் புதியதன்று. அதுவும் பழம் பாடமே. முன்னர்த் தொழிற்கட்சி அதிகாரத்திலிருந்த பொழுது இந்தியாவிற்கு அஃது என்ன செய்தது? இங்கிலாந் தின் அரசியல் வாழ்வு நலத்துக்கென்றே ஆண்டு அரசியல் கட்சிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா அக்கட்சிகள் மீது நாட்டஞ் செலுத்துவது நலந்தருவதாகாது. இப்பொழுது நடைபெற்ற தேர்தலில், இந்தியாவைப்பற்றி யாதொன்றும் தேர்தல் முறையீட்டில் குறிப்பிடலாகாது என்று எல்லாக் கட்சியாரும் உடன்படிக்கை செய்துகொண்டு, அவ்வாறு நடந்து காட்டியதை, நீங்கள் ஊன்றிக் கவனித்தல் வேண்டும். கவனித் தால் உண்மை புலனாகும். காங்கரகாரர், சட்டசபை நண்ணாது, காந்தியடிகளின் ஒத்துழையாத் திட்டங்களை வெற்றிபெற நடாத்தி யிருப்பரேல், பிரிட்டன், இந்தியா மீது தன் கருத்தைச் செலுத்தி யிருக்கும்; சுயராஜ்யம் வழங்க விரைந்து நின்றுமிருக்கும். ஆனால் நாட்டார் என் செய்தனர்? ஒத்துழையாமைக்கு வெற்றி தேடி னரா? தோல்வி தேடினரா? சகோதரிகளே! சகோதரர்களே!! உண்மையை உணருங்கள். முன்னே தோன்றிய ஒத்துழையா இயக்கத்தால் நாட்டின் உண்மை நிலை உலகிற்குப் புலனாயிற்று. வெறும் சட்டசபை நுழைவாலும் - முட்டுக்கட்டை போன்ற முறைகளாலும் - ஒன்றுஞ் செய்தல் இயலாதென்பதும், அவற்றைப் பிரிட்டிஷார் பொருட்படுத்தமாட்டா ரென்பதும் இப்பொழுது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கிவிட்டன. முன்னர் ஒத்துழை யாமையை ஒடுக்க முயன்றது தவறு; தவறு; பெருந்தவறு. சதுரங்கம் இப்பொழுது மீண்டும் ஒருவித வாய்ப்பு நேர்ந்திருக் கிறது. அதனை நேரிய வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுவது நமது கடமை. சைமன் குழு, நாட்டைச் சுற்றிப் பார்த்து இங்கிலாந்திற்குப் போய்விட்டது. சைமன் குழுவின் முன்னர், காங்கர, எத்தகைக் கோரிக்கையையும் நேர்முகமாக நின்று வழங்கவில்லை; ஆனால் அது வேறுமுகமாக நின்று, நேரு அறிக்கைக்கு ஆதரவு நல்கிற்று. காங்கர, ஏற்றுக்கொண்ட நேரு அறிக்கையை இந்தியாவின் கோரிக்கை என்று கொண்டு, பிரிட்டிஷ் பார்லிமெண்ட் நடக்கும் என்னும் உறுதி எனக் கில்லை. ஆயினும், காங்கர ஒழுங்குமுறை கடைப்பிடித்துக் காலவரை கோலியது போற்றற்குரியது. சைமன் குழு, இங்கிலாந்தில் தன் வேலையை நிகழ்த்த முயன்று கொண் டிருக்கையில், இந்தியாவில் இராஜப்பிரதிநிதி ஒரு திருவிளை யாடல் புரிந்தார். அது சிறந்த இராஜதந்திரத் திருவிளையாட லாகும். அரசியல் சதுரங்க ஆட்டம் போன்றது என்று அவ்வியல் வல்லார் கூறுவர். இப்பொழுது ஒருபெரும் சதுரங்க ஆட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. இராஜப்பிரதிநிதி, சட்டசபையை உரிய காலத்தில் கலைக்க முன்வாராது, அதன் காலத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். ஏன் அவ்வாறு செய்தனர்? உரிய காலத்தில் தேர்தல் நிகழின், காங்கரகாரர் பெரும்பான்மையோராகச் சட்டசபையை நிரப்பி விடுவர் என்ற அச்சமோ என்னவோ தெரியவில்லை. காங்கரஸும் தேர்தலும் சென்னைக் கவர்னராகிய லார்டு கோஷனும், இராஜப் பிரதிநிதியின் அடிச்சுவட்டைப் பற்றியே நடந்திருக்கிறார். மந்திரிமார் இதற்கேன் இடந்தந்தார்? சென்னை மாகாணத் தில் இப்போது தேர்தல் நடப்பினும், வெற்றி காங்கரபாலது என்று இங்கே அறைகூவிச் சொல்கிறேன். இனி நாட்டில் பிற்போக்குக் கட்சிகட்குச் செல்வாக்கு இல்லை இல்லை என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணர்ந்து நடப்பார்களாக. மீண்டும் தேர்தல் எப்பொழுது - எந்நிலையில் - நடை பெறுமோ நமக்குத் தெரியாது. நாம் எதற்குஞ் சித்தமா யிருத்தல்வேண்டும். தேர்தல் நடைபெறும் நிலைநேரினும் நேர்க; அல்லது ஒத்துழையாமை உருக்கொள்ளினும் கொள்க. இரு போருக்கும் நாம் சித்தமாயிருத்தல் வேண்டும். கல்கத்தா காங்கர தீர்மானத்தின்படி, லாகூர் காங்கர ஒருவித முடிவிற்கு வருதல்வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். கல்கத்தா காங்கர காலநிலை ஒரு விதமாக இருந்தது. இப் பொழுது நிலைமை சிறிது மாறுபட்டிருக்கிறது. இராஜப் பிரதிநிதி, சட்ட சபையைக் கலையாது, நீடிக்கச் செய்வர் என்று அப்பொழுது எவரும் எதிர்பார்க்கவில்லை. இராஜப் பிரதிநிதி திடீரெனச் சட்டசபையின் ஆயுளை நீடிக்கச் செய்துவிட்டார். இனித் தேர்தல் நடைபெறும் காலதேச வர்த்தமான நிலையை உன்னியே காங்கர கடனாற்றல் வேண்டும். தேர்தல், சைமன் குழுவின் அறிக்கை வெளிவந்ததும் நடைபெறுமோ, அல்லது அவ்வறிக்கையைத் தழுவிப் பார்லிமெண்ட் சட்டஞ்செய்த பின்னர் நடைபெறுமோ தெரியவில்லை. இராஜப்பிரதிநிதி, இங்கிலாந்து போந்து ஆண்டுள்ள இராஜ தந்திரிகளோடு கலந்து, ஆலோசனை கூறுவதை ஒட்டியே வினைகள் நிகழு மென்று கூறலாம். காலத்துக்கேற்ற கடமை சைமன் குழுவின் அறிக்கை வெளிவந்ததும், தேர்தல் நடைபெறும் நிலைநேரின், காங்கர அந்நிலை நோக்கி, ஒருவிதமாக நடந்துகொள்ளல் வேண்டும். பார்லிமெண்ட் சட்டம்செய்த பின்னைத் தேர்தல் நிகழநேரின் காங்கர வேறுவிதமாக நடந்துகொள்ளல் வேண்டும். இருள் சூழ்ந்துள்ள இவ்வேளையில், காங்கர தானே வலிந்து எவ்வித முடிவுக்கும் வருதலாகாது. சைமன் குழு அறிக்கை வெளிவந்ததும், தேர்தல் விழா நடைபெறும் நிலைநேரின் அத்தேர்தல் போராட்டத்தில் காங்கர தலைப்பட்டே தீர்தல் வேண்டும். சைமன் குழுவை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் பிரிட்டனுக்கும் உலகத்திற்கும் காட்டவேண்டுவது காங்கர கடமை. அவ் வேளையில், தேர்தலில் கலவாது, காங்கர பிணங்கி நிற்பின், நாட்டில் காங்கரஸிற்குச் செல்வாக்கு இல்லை; சைமனுக்கே செல்வாக்கு உண்டு என்னும் பழி சுமத்தப்படும். ஆதலால், அந்நிலை நேரும்போது, தேர்தல் போர் நிகழ்த்த முன்னிற்றல் வேண்டும். பார்லிமெண்டில் சட்டம் பிறந்த பின்னர்த் தேர்தல் விழா நடைபெறுவதாயின், நமது நிலையை அச்சட்டத்தைப் பொறுத்து ஒழுங்கு படுத்திக்கொள்ளல் வேண்டும். அச்சட்டம், நேரு அறிக்கையிலுள்ள கோரிக்கையை நிறைவேற்றும் பான்மையுடையதாயின், தேர்தலில் கலந்துகொள்வதே அறிவுடைமை. அச் சட்டம், நேரு அறிக்கைக்கு மாறுபட்ட முறையில் பிறப்பின், ஒத்துழையாப் போரைத் துவங்கியே தீர் தல் வேண்டும். ஆகவே, எப்போர் நிகழ நேரினும் நேர்க. நாம் எதற்கும் சித்தமாயிருத்தல் வேண்டும். அததற்குரிய முன்னணி வேலைகளை நிகழ்த்திக்கொண்டே போதல் வேண்டும். காங்கரஸுக்கு வேலையில்லை என்று எவரும் கருதல் வேண்டுவதில்லை. வேலை உண்டு; உண்டு. முன்னணி வேலைகள் மீது கருத்துச் செலுத்தாது, பதவி ஏற்றலா, முட்டுக்கட்டையா, ஒத்துழையாமையா என்னும் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பது காங்கரஸை நல்வழி யில் நடாத்துவதாகாது. கல்கத்தா காங்கர தீர்மானத்தை லாகூரில் எழுத்தளவில் நிறைவேற்றல் வேண்டும் என்னும் பிடிவாதம் எவரும் கொள்ளுதல் கூடாது. மகாத்மா காந்தி, காலதேசவர்த்தமான நிலையை உன்னியே கடனாற்றுவர் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. ‘ã‹id yhTÇš v‹ braš nt©L«? என்று சிலர் வினவலாம். லாகூர், கல்கத் தாவை வலியுறுத்தாதிருத்தல் நல்லது என்பது அடியேன் உள்ளக்கிடக்கை. லாகூர் காங்கர, அவ்வப்போது நேரும் நிலைமைக்கேற்றவாறு கடனாற்றும் பொறுப்பை அகில அந்திய காங்கர கூட்டத்திற்கு வழங்கிவிடுதல் சிறப்பு. ஆதலால், இப்பொழுது பதவியைப் பற்றியோ, பிறவற்றைப் பற்றியோ எப்பேச்சும் வேண்டுவதில்லை. எப்பேச்சும் வேண்டுவதில்லை என்றால், வாளாகிடப்பதா என்று சிலர் சீறலாம். அந்நண்பர் களுக்குக் காங்கர முன்னணி வேலையை யான் நினைவூட்டு கிறேன். உணர்ச்சியும் செயலும் இப்பொழுது காங்கரகாரர் நிகழ்த்தத்தக்க பெருந் தொண்டு ஒன்றிருக்கிறது. அஃது உணர்சியைச் செயலில் காட்டவே பயிலல் வேண்டுமென்பது. வெறும் உணர்ச்சியால் பொங்கி எழுவது, நமது நோக்கத்தை நிறைவேற்றுவதாகாது. காங்கரஸில் குறைந்தது இவ்வளவு பேர் அங்கத்தவராதல் வேண்டும் என்னும் நியதி பிறந்திருக்கிறது. அதனை நிறை வேற்றுவது ஒரு பெரும் நாட்டுத் தொண்டாகும். இதுபோது அத்தொண்டினும் சிறந்தது பிறிதொன்றில்லை. உடனே அத்தொண்டாற்ற எழுங்கள்; எழுங்கள். இத்தாலுக்காவில் 283 பேர் இவ்விடத்திலேயே சேர்ந்துவிடலாம். அவ்வளவில் நில்லாது, அத்தொகையை 2883 ஆகப் பெருக்குதற்கு நீங்கள் ஊக்கங்கொண் டுழைத்தல் வேண்டும். 30 கோடி மக்களும் காங்கரஸில் அங்கம் பெற்றுவிட்டார்கள் என்னும் செய்தி, பிரிட்டனுக்கு எட்டினால் போதும், நாளையே சுயராஜ்யம் மலரும். ஆதலால், காங்கரஸில் அங்கத்தினரைச் சேர்க்கும் தொண்டில் உடனே தலைப்படுங்கள்; தலைப்படுங்கள். கிராமத் தொண்டு அரசியல், காலத்துக்கேற்ற மாறுதல் உற்றுக் கொண்டே போகும். அதில் மட்டும் கருத்துச் செலுத்திக் காலத்தைக் கழித்தல் கூடாது. நமது நாட்டில் ஆக்கவேலைகள் பல நிகழ்தல் வேண்டும். அந்நிகழ்ச்சி கிராமத்தினின்றும் எழுவது சிறப்பு. நாட்டின் உயிர்நிலை கிராமம் என்பதை விளக்க வேண்டுவ தில்லை. கிராமங்களின் ஆக்கவேலை நாட்டை ஓம்புவதாகும். கதர் கிராமங்களில் காங்கர சார்பில், கதர்ப்பெருக்கு, தீண்டாமை விலக்கு, ஹிந்து - முலிம் ஒற்றுமை முதலிய வற்றைப் பற்றிப் பிரசாரஞ் செய்து, அவற்றைச் செயலிற் கொணரத் தேசபக்தர்கள் முயல்வார்களாக. கிராமங்களில் கதர் பரவினால் பாதிப் பஞ்சம் ஒழியும். காங்கரஸில் ஈடுபட்டோர் மட்டும் கதர் அணிவது போதாது; மக்கள் எல்லாரும் கதர் அணிதல் அறம். இயந்திரங்கள், நமது நாட்டுக்குள் நுழையாத காலத்தில், நூற்ற கைகள், இப்போது எங்கே போயின. என்ன செய்கின்றன? கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சர்க்கா சுழன்றால், நமது நாட்டில் மீண்டும் சீதேவி தாண்டவம் புரிவாள். சர்க்கா சீதேவிக்குரிய உறைவிடம் என்று கூறல் மிகை யாகாது. சர்க்காவின் ஒலி குன்றி நீண்டகாலமாகிவிட்டது. அவ்வொலி மீண்டும் எழுதற்குக் காந்தியடிகள் எவ்வளவு முயன்றார்! அவர் முயற்சியால் எங்கும் கதர் உணர்வு பிறந் திருக்கிறது. அதைச் செயலில் கொண்டுவர வேண்டுவது கிராமத்தார் கடமை. தீண்டாமை தீண்டாமை, ஒரு பெரிய நோயாக நமது நாட்டை அரிக்கிறது. அந்நோய் நகரங்களில் ஒருவாறு நீங்கி வருகிறது. கிராமங்களில் அது வளர்ந்து வருகிறதென்றே கூறலாம். நோயின் வளர்ச்சி என்செய்யும் என்று கூறுதல் வேண்டுமோ? அது, நாட்டை ஒருநாளைக்கு வீழ்த்தியே விடும். நீங்கள் இங்கே மகாநாடு கூட்டியிருக்கிறீர்கள். எதன்பொருட்டு அதைக் கூட்டினீர்கள்? சுயராஜ்யத்தின் பொருட்டன்றோ? சுய ராஜ்யத்தை வீழ்த்தியது எது? அதை ஆராயுங்கள்; உற்றுநோக் குங்கள். ஆராய ஆராய, உற்றுநோக்க நோக்கத் தீண்டாமை நோய் என்பது நன்கு புலனாகும். அந்நோயுள்ளவரை சுயராஜ்ய மலர்ச்சிக்கு இடம் ஏது? ஆகவே தீண்டாமை நோய்க்கு நிலைக்களமாக உள்ள கிராமங்களே, அந்நோயைப் போக்க முயலுதல் வேண்டும்; இல்லையேல், மகாநாடு கூட்டல் முதலியன விளையாட்டாகவே முடியும். கிராமப் பெரி யோர்களே! நீண்டகாலப் பழக்கம்; போகப் போகப் பார்க்க லாம் முதலிய பேச்சு மூச்சே வேண்டா. இன்றே - இன்னே - தீண்டாமையைத் தொலைக்க எழுங்கள்; எழுங்கள். ஹிந்து - முலிம் ஒற்றுமை ஹிந்து - முலிம் ஒற்றுமை சுயராஜ்யத்துக்குத் தூண் போன்றது என்று அடிக்கடி காந்தியடிகள் கூறி வருகிறார். ஹிந்துக்களும் முலிம்களுமாக ஒன்றியே நீங்கள் இம் மகாநாட்டைக் கூட்டி இருக்கிறீர்கள். ஹிந்து - முலிம் ஒற்றுமை இங்கே தாண்டவம் புரிகிறது. கொடியேற்றுவிழா நடாத்த என்னுடன் போந்துள்ள நண்பர் ஜனாப் பஷீர் அகமதும் யானும், அவவொற்றுமை கண்டு மகிழ்வெய்தினோம். நாங்கள் இருவரும் உங்கள் விருந்தினராக வந்திருக்கிறோம். எங்கள் நடைமுறையை நீங்கள் கவனிக்க வருகிறீர்கள் என்றே நம்புகிறேன். எங்களுக்குள் பிறப்பு வேற்றுமை தலைகாட்டு கிறதா? உண்ணவும் உறங்கவும் வெவ்வேறிடங்களுக்குச் செல்கிறோமா? நாங்கள் இருவரும் இந்தியர்; ஒரு தாயின் புதல்வர். நாங்கள் ஏன் பிரிந்து நிற்றல்வேண்டும்? இவ்வொற் றுமை வளர்ச்சிக்குக் காரணமாக நிற்பது காங்கரஸே யாகும். அக் காங்கர வாயிலாகவே சகோதர உணர்வு பெருகக் கிராமவாசிகளாகிய நீங்கள் பாடுபட விரைவீர்களாக. நாட்டுக் கலைகள் நாட்டுக் கலைகள் நாளுக்குநாள் அருகிக்கொண்டே போகின்றன. நாட்டுக் கலைகள் கிராமங்களிலே வளர்ந்து வந்தன; இந்நாளில் அவை கிராமங்களில் மறைந்து அருகு கின்றன. கலை நுட்பம் உணர்ந்து வாழ்வோர் தொகை சுருங்கு கிறது. கலைகளைக் கதைகளாகக் கொள்வது அறியாமை. கதை களிலுள்ள கலைகளை உணரவே முயல்வது அறிவுக் கழகாகும். அவ்வாறே, இசை, ஓவியம் முதலியவற்றிலுள்ள கலையை உணர்வதே சிறப்பு. வெறும் பிண்டங்கள் கலைகள் ஆகா. பிண்டங்களைக் கட்டியழுவது பேயைக் கட்டியழுவதாகும். ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு கலைக்கழகமாகிப் பயன்பட நீங்கள் உழைப்பீர்களாக. உடலோம்பல் பிணி, நகரங்களில் அதிகம்; கிராமங்களில் அதிகம் இல்லை என்று சொல்வதுண்டு. இப்பொழுது அவ்வாறு சொல்வதற்கு இல்லை. கிராமங்களிலும் இப்பொழுது பலவிதப் பிணிகள் நடமாடுகின்றன. இதற்குக் காரணர், ஞாயிறொளி படா ஏர் உழும் எளிய மக்களல்ல; அவர்தம் உழைப்பைத் தின்று, ஏப்பமிட்டு, வேலையின்றி, உறங்கிக் களியாட்டங்களில் ஈடுபடும் கிராமச் செல்வரே யாவர். செல்வர் கிராமங்களி லுள்ள காய் - கனி - கீரைகளை மறந்து காப்பி - டீ - கொக்கோ - ஓவல்டைன் - சிகரெட் - பீடி - சாராயம் முதலியவற்றை அருந்து கிறார்; தீட்டிய அரிசி - சர்க்கரை முதலியவற்றை உண்கிறார்; வேறு பல பொருந்தா உணவில் கருத்துச் செலுத்துகிறார்; இவர் நோய்க்குடிலாக இராது, வேறு எப்படி விளங்குவர்? கிராம வாசிகளே! உங்களை ஓம்ப ஞாயிற்றின் ஒளி உண்டு; நறுங் காற்று உண்டு; நன்னீர் உண்டு; கீரை உண்டு. உங்களுக்கு நோய் எங்கிருந்து வரும்? தீட்டிய அரிசியைத் தொடாதேயுங்கள். கொழியல் அரிசி, உங்களுக்கென ஏற்பட்டது. அவ்வரிசியை ஏன் அலட்சியஞ் செய்கிறீர்கள்? புதுமை புதுமை என்று நம்மவர், பலவழியிலும் செயற்கைக்கு அடிமைப்பட்டு, இயற்கை வாழ்வினின்றும் வழுக்கி வீழ்கிறார். கிராமவாசிகளாகிய உங்கட்கு இயற்கை அன்னையின் கருணை நிரம்ப உண்டு. அக்கருணை பெறும் வழியில் நீங்கள் வாழ்வு நடாத்துங்கள். உங்கட்கு எல்லா நலனும் உண்டாகும். வந்தே மாதரம்! திருப்பத்தூர் தாலுக்கா 1-வது தொண்டர் மகாநாடு (திருப்பத்தூரில் கூடியது) - 1924ஆம் வருடம் ஜனவரி மாதம் 19, 20ஆம் நாள் - தோற்றுவாய் அன்புகெழுமிய சகோதரிகளே! சகோதரர்களே! ஆண்டவன் அருட்கும் தண்டமிழ் மொழிக்கும் நிலைக் களனாயிலங்கும் இத்தென்பாண்டி நாட்டில், மறங்கடிந்து அறங்காத்த அண்ணலார் திருப்பெயர் தாங்கி மிளிரும் இந்த ஜில்லாவில், சத்தியாக்கிரகம் அரும்பும் இத் திருப்பத்தூரில், அரசியல் கழகத்துக்கும், கிலாபத் மகாநாட்டுக்கும் இடையே இத் தொண்டர் கூட்டம் குழுமியிருக்கிறது. இப்பெரவைக்குத் தலைமை ஏற்கும் பணியைச் சிறியேனுக்கு நீங்கள் அளித்திருக்கி றீர்கள். தொண்டின் திறன் உணராச் சிறியேன், அப்பணிக்கு அருகனல்லேன் என்பதைச் செவ்வனே உணர்வேன். ஆயினும், தொண்டர் ஆணையை மறுத்தற்கு அஞ்சித் தொண்டர்க்குத் தொண்டனாக ஈண்டுப் போந்தேனேயன்றித் தலைவனாக ஈண்டுப் போந்தேனில்லை. தலைவன் என்ற எண்ணமே என் னுள்ளத் தெழாதிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக. பணி செயலில் தொண்டர்க்குப் பெருகிய சொற்பொழிவு வேண்டுவ தில்லை. அன்னார்க்கு வேண்டுவது செயலே. வித்தகம் பேச வேண்டாம் பணி செய்ய வாருமென்றார் என்னுஞ் சீரிய உரையும் ஈண்டு உணரற்பாலது. வித்தகம் பேசிய காலம் கடந்துவிட்டது. இப்பொழுது பணி செய்யுங் காலம் உற்றிருக் கிறது. பணி செய்யவே நீங்கள் இவண் குழுமியிருக்கிறீர்கள். தொண்டின்மீது கருத்தைப் பதியவைத்துள்ள உங்கள் நடுவண், தொண்டைப்பற்றிப் பேசவும் நா எழவில்லை. ஆயினும் கால வழக்கை ஒட்டிச் சில உரைகள் கழறி எனது கடனாற்றப் புகுகிறேன். குற்றங் குறைகள் நிகழுமேல், பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன். காந்தியடிகள் எனது சொற்பொழிவைத் தொடங்கும் இவ்வேளையில், நம் பொருட்டு மனைவி மக்களின்பந் துறந்து, உடல் வெறுத்து, உயிர் வெறுத்து, நல்லுணவும் ஒழித்து, உடைநீக்கி, ஒற்றைத் துணியணிந்து, கள்ளர், குடியர், கொலைஞர் உறையும் சிறைக்கோட்டம் நண்ணி, இப்பொழுது நோய்வாய்ப்பட்டு, ஒரு மருத்துவசாலையில் சத்திரமிடப் பெற்று, ஒரு படுக்கையில் தன்னந் தனியராய்க் கிடக்கும் எம்பெருமான் - உலகை உய்விக்க வந்த குருமூர்த்தி - மகாத்மா காந்திமீது எனது நெஞ்சம் செல் கிறது. ஈராண்டாக நமதிடை அவர் உலவவில்லை. நாம் இங்கே கூடியிருக்கிறோம். அவர் உடல் ஆங்கே படுக்கையில் கிடக்கிறது. அவர் நலம் பெறுக பெறுக என்று ஆண்டவனை வழுத்தி, அவரது ஆன்மசக்தியுலவும் இவ்விடத்தில், அச்சக்தியின் துணைகொண்டு நமது தொண்டைச் செய்வோமாக. பிரிவாற்றாமை தொண்டர்களே! இரவும் பகலும் இடையறாது நாட்டுத் தொண்டு செய்து, இவ்வுலக வாழ்வை நீத்த பெரியோர் நினைவு இப்பொழுது தோன்றுகிறது. பொறுமைக்கு உறையுளா யிலங்கிப் பொன்றுங்காறும், நாடு, நாடு என்று எண்ணி எண்ணி, பேசிப் பேசி, எழுதி எழுதி நாட்டை வழுத்திய நம் தலைவர் கதூரிரங்க ஐயங்கார் எங்கே? ஆற்றொணா நோய் வாய்ப்பட்டபோதும், அதன் பயனாக ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து - மெய்யும் பொய்யாகும் வேளையிலும், மறந்தும் மன்னிப்புக்கேட்க ஒருப்படாத வீரர் பண்டித வாஜ்பே எங்கே? அடக்கத்தை அணிகலனாப் பூண்டு, இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் - கடனறி காட்சி யவர் என்னுஞ் சான்றோர் உரைக்கு இலக்கியமாய் இவ்வுலகில் வதிந்து, உடலைப் பொருளென மதியாது உழைத்த மௌலானா அப்துல்மஜித் ஷரார் எங்கே? இப்பெரியோரின் உடல் மறைவை உன்னும்போது எவர் உள்ளம் உருகாது? அவர் உடலங்கள் மறைவுற்றாலும், அவர் உண்மையும், உறுதியும் - உழைப்பும் நம்முன் நிலவி நமக்கு ஊக்கமூட்டிக் கொண் டிருக்கின்றன. அவற்றின் வழி நடப்போமாக. தொண்டு தொண்டுசெய்வோர் தொண்டராதலால், தொண்டு எது என்பதை முதலில் ஆராய்தல் வேண்டும். அவ்வாராய்ச்சி நிகழ்த்தி, உங்கள் அரிய காலத்தைக் கொள்ளையிட எனக்கு விருப்பமில்லை. ஆயினும், அது குறித்துச் சில உரைகள் பகரல் வேண்டுவது எனது கடன் என உணர்கிறேன். எல்லாப் பணிகட்குந் தொண்டென்னுஞ் சொல்லை வழங்கலாமோ எனில், வழங்கலாகாதென்று கூறுவேன். உலகில் பணிகள் பலதிறப்பட்டுக் கிடக்கின்றன. அவை யாவும் தொண்டாகுமோ? ஆகா. இருவிதப் பணி பலதிறப்பட்டுக் கிடக்கும் பணிகளை இரு தொகுப்பாகக் கூறிவிடலாம். ஒரு தொகுப்பு, தன்னலங் கருதி ஆற்றப்படும் பணிகள்; இன்னொரு தொகுப்பு, பிறர் நலங்கருதி ஆற்றப்படும் பணிகள். இவ்விரண்டனுள் பிறர் நலங்கருதி ஆற்றப்படும் பணியையே தொண்டெனக் கோடல் வேண்டும். என்னை? பணிவிளக்கம் தன்னலப் பணியில் விருப்புடைய ஒருவன், என்றும் பிறர் நலம் பேணாது, தன் வாழ்வொன்றே நாடிப் பிறரை அடிமைப் படுத்தித் தான் தலைமைப் பேறெய்தவே முயல்வன். அவன் உள்ளத்தை அவா என்னும் பேய் அலைத்துக்கொண்டே யிருக்கும். அப்பேயால் அலைக்கப்படுகிறவன், எக்கொடுமை யுஞ் செய்ய ஒருப்படுவன். அவன் நெஞ்சில் பிறர் பொருள் அவாவும், அதை யொட்டி வெகுளியும், அழுக்காறும், பிறவும் உலவிக்கொண்டே யிருக்கும். இத்தன்னலமுடையான் ஆற்றும் பணியைத் தொண்டு என்று எவ்வாறு கூறுவது? பிறர் நலங்கருதி உழைப்பவன்பால் தன்னல அவா என்னும் பேய்க்கு என்ன வேலையுண்டு? அவன் உள்ளத்தில் என்றும் பிறர் நலமே ஊறிக்கொண்டிருக்கும். அவ்வன்பனை அவா என்செய்யும்? வெகுளி என் செய்யும்? அழுக்காறு என்செய்யும்? இவையற்ற ஆண்டவன் அவன் உள்ளத்தில் கோயில் கொள்வன். ஆண்ட வன் எவ்வாறு கைம்மாறு கருதாது, தன் கடனாற்றுகிறானோ, அவ்வாறே தன்னலங் கருதாத பெரியோனும் தன் கடனாற்று கிறான். இவன் செய்யும் பணியையும் மற்றவன்செய்யும் பணியையும் பொதுப்படத் தொண்டென்று கொள்வதோ? ஆகவே, பிறர் நலப்பணியையே தொண்டு என்று கோடல் வேண்டும். தொண்டு மதம் தன்னலங் கருதாத் தொண்டே யாண்டும் பரவினால் உலகில் கொடுமை ஏது? நடுக்கம் ஏது? கவலை ஏது? உலகில் வாழும் ஒவ்வொருவரும் நாம் பிறர்க்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டோம் என்று நினைத்துத் தங்கடனாற்றினால், உலகம் தெய்வலோகமாகவன்றோ மாறும்? உலகில் தோன்றிய சமயாசாரியர் பலரும் இத்தொண்டையே அறிவுறுத்திச் சென்றனர். எச்சமயத்தை எடுத்து ஆய்ந்தாலும் அதன்கண் தன்னல மறுப்பும், பிறர் நலச் சேவையும் பேசப்படுதல் காணலாம். சமயங்கள் பலவாகக் காணப்பட்டாலும், அவற்றின் ஊடே தொண்டெனும் ஒரு பெருஞ் சமரசம் திகழ்ந்து கொண் டிருக்கிறது. பல மதங்கள் என்று பன்மையாகக் கூறுதற்குப் பதிலாகத் தொண்டு மதமென அவற்றை ஒருமைப் படுத்திக் கூறலாம். அத் தொண்டை மனிதன் மறந்தநாள் தொட்டு, முனைப்பு (சீவபோதம்) பெருக்கெடுத்து உலகை அரித்து வருகிறது. (தொண்டு - வளைவு; சீவபோத வளைவு; முனைப்பு வளைவு; தன்னலமற்றது.) சண்டை மதங்கள் நம் முன்னோர், மக்கள் கூட்ட வளர்ச்சிக்கும், அமைதிக் கும் தொண்டைத் தமக்குரிய மதமாகக் கொண்டனர். தெய் வீகத் தொண்டை அடிப்படையாகக் கிடத்தியே (பிறப்பை யொட்டி அன்று) நம் பண்டை மூதறிஞர் வருணங்களையும் ஆச்சிரமங்களையும் வகுத்தனர். வருணங்களின் நிலையும், ஆச்சிரமங்களின் நிலையும் குலைந்துள்ள இவ்வேளையில், அவற்றின் அடிப்படை தொண்டு என்றால் சிலர் என்னை நோக்கி எள்ளி நகையாடுவர். இந்நாளில் சட்டமும், போர்ப் படையும் - பீரங்கியும் - நிலைபெறுத்திவரும் அமைதியை, அந்நாளில் நம் முன்னோர் கண்ட அறமுறைகள் காத்து வந்தன என்றால், அம்முறைகளின் பெற்றியை விரித்துரைத்தலும் வேண்டுமோ? தொண்டை அடிப்படையாகக் கொண்ட எம் முறையும் அமைதியை நிலைபெறுத்தும் என்பதில் ஐயமில்லை. அமைதிக்கு அடிப்படையான தொண்டுமதம், இப்பொழுது சண்டை மதங்களாக மாறிவிட்டது! என் செய்வது! தொண்டும் தலைமையும் ஒருவருக்கொருவர் தொண்டராகுந் தெய்விகக் கொள்கை மாண்டு, ஒருவருக்கொருவர் தலைவராக வேண்டுமென்னும் முனைப்புக் கொள்கை (சீவபோத மதம்) வளர்ந்துவருகிறது. தொண்டை மறக்கவும், தலைமையை எண்ணவும் தூண்டும் பேய்க் கொள்கை எங்கணும் பரவி வருகிறது. இக்கோள், மேல் நாட்டில் பிறந்து வளர்ந்து, கீழ்நாட்டிலுங் குடிபுகுந்திருக்கிறது. இம்மதத்துக்கு வேதம் பொருளாதார நூல். தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாகரிகத்தை மேல்நாடு கொண்டமையால், அது செருவிளைக்கும் நாடாகவே திகழ் கிறது. இந்நாகரிகத்தால், மக்கள் உலகுக்கே கேடு நிகழ்ந்து வரு கிறது. கொல்லா அறத்தை வளர்க்க வேண்டிய மக்கள் கூட்டம், கொலையைக் குறிக்கொண்டு நிற்கிறது. இவ்வாறு மக்கள் வாழ்வே குலைந்து வரும் இவ்வேளையில், மகாத்மா காந்தி, அருள் இயக்கத்தைத் தோற்றுவித்துத் தொண்டுநெறி ஓம்ப முனைந்து நிற்கிறார். அந்நெறி ஓம்பத் தொண்டர் படை திரட்ட எங்கணும் பெருமுயற்சி நடைபெற்று வருகிறது. தொண்டர் படை ஒழுங்கு ஊராளும் தொண்டர் படையின் இன்றியமையாமையை விரித் துரைக்க வேண்டுவதில்லை. தொண்டர் படையின் இன்றியமை யாமையை நாடு செவ்வனே உணர்ந்திருக்கிறது. இதற்குக் காக்கிநாடாவில் கூடிய அகில இந்திய தொண்டர் மகாநாடே சான்று கூறும். அகில இந்திய தொண்டர் மகாநாட்டுத் தீர் மானங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆங்காங்கே தொண்டர்படை அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் வேண்டும். அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்தும் திறமை நம்மவர்க் கில்லை என்று சொல்லப்படுகிறது. அத்திறமையை நாம் பெற முயலல் வேண்டும். ஒழுங்கு ஊராளும் என்பது நமது நாட்டில் பிறந்த பழமொழியே. ஒழுங்கை நாம் நெகிழ விடுவதால், நம்பால் பலதிறக் குறைகள் நிகழ்கின்றன. நமது நாட்டில் பல இயக்கங்கள் தோன்றித் தோன்றி மறைதற்குக் காரணம், நாம் அமைப் பொழுங்கில் கவலை செலுத்தாமையே யாகும். தொண்டர் படை அமைப்பில் நாம் பெருங் கவலை செலுத்தக் கடமைப் படுவோமாக. தொண்டர் இயல்பு தொண்டர்படையில் சேர விரும்புவோர், தொண்டின் இயல்பு இன்னதென்று உணர்ந்து நடப்பவராயிருத்தல் வேண்டும். தொண்டின் தன்மை இன்னதென்றுணராதாரும், உணர்ந்தும் அதன்படி நடக்க இயலாதாரும் தொண்டர் படையில் சேர்தலாகாது. தன்னல முடையார், தியாகத்தில் விருப்பில்லாதார், நோயஞ்சுவோர் முதலியோர் தொண்டர் படையில் சேர்வதால் நமது நோக்கம் நிறைவேறாது. நாட்டின் விடுதலை தலைவர்களிடமில்லை. அது தொண்டர்களிடமே இருக்கிறது. விடுதலைக்குப் போராட வேண்டிய வீரர்கள், தொண்டர்களாதலால், அவர்கள் குணமென்னும் குன்றேறி நிற்பவர்களா யிருத்தல் வேண்டும். நந் தொண்டர்கள் எப்போருக்குப் பயிற்சிபெற்று வருகிறார்கள்? செந்நீர் சிந்தும் போருக்கா? இல்லை... இல்லை. அப்போருக்காயின் குணநலம் வேண்டா. நமது போர் சத்தியாக்கிரகப்போர். அப்போருக்குக் கொலைக்கருவிகள் தேவையில்லை; குணக்கருவிகளே தேவை. குணமில்லார் சத்தியாக்கிரகப் போருக்கு அருகரல்லர். தொண்டர்படையில் சேர விரும்புவோர், பேராதல், புகழாதல், வேறு பல நலங் கருதியாதல் சேர்தலாகாது. நாட்டுக்காகத் தம்முயிரையும் நீப்ப விரைந்து நிற்பவரே தொண்டராதற்குரியர். குணமிலார்மாட்டு இவ்வுறுதி நிலவுமோ? நிலவாது. ஆதலால், தொண்டர் படையில் சேர விரும்புவோர் குண நலமுடையரா யிருத்தல் வேண்டும் வேண்டும் என்று அறைகூவுகிறேன். தொண்டர் படையைத் திரட்டுமாறு நமக்கு இந்நாளில் அறிவுறுத்தினவர் யாவர்? தொண்டின் தன்மை இன்ன தென்றுணர்ந்த பெருந் தலைவர் மகாத்மா காந்தி. அவர், மேல்நாட்டில் தோன்றி, இப்பொழுது உலகையே எரித்துவரும் நஞ்சனைய இக்கால நாகரிகப் பேயோடு - மூர்க்க சக்தியோடு - ஹிம்சையோடு, நிராசையால் - ஆன்ம சக்தியால் - அஹிம்சை யால் - போராடவே தொண்டர் படை திரட்டக் கட்டளை இட்டார். இத் தெய்விகப் போர் புரியத் தன்னலம் உடை யோர் அருகராவரோ? ஆதலால் பிறர் நலம் பேணும் பெருந் தகையாளரே தொண்டர் படையில் சேர முயல்வாராக. சாதியால் பகைமையின்மை நமது நாட்டைத் தூய்மைப்படுத்தவும் தொண்டர் படை இன்றியமையாது வேண்டற்பாலது. நமது நாட்டில் பிறந்த சகோதரர்கள், தங்களுக்குள் சில வேளைகளில் பிணங்கிக் கலாம் விளைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், சாதி சமய வேற்றுமைகள் என்று சொல்லப்படுகிறது. பண்டைக் காலத்திலும் நமது நாட்டில் - பல சாதியார் - பல சமயத்தார் - வாழ்ந்தனர். அவர்க்குள் பூசல் விளைந்து வந்ததோ? இல்லையே! அக்காலத்து மக்கள் பன்மையை, அன்பென்னும் ஒருமை, பிணித்து நின்றது. அறுபான்மும்மை நாயன்மாருள் எந்தக் குலத்தாரில்லை? ஆழ்வாருள் எந்தச் சாதியாரில்லை? பிறப்பு வேற்றுமை நாயன்மாரையும் ஆழ்வாரையும் என்ன செய்தது? வண்ணானை மன்னர் வணங்கவில்லையோ? வேளாளரை அந்தணர் குருவாகக் கொண்டு போற்றவில் லையோ? முலிம் மன்னர் ஆட்சியில் ஹிந்துக்கள் அமைச்ச ராக வீற்றிருக்க வில்லையோ? சிரியன் கிறிதவரை நாட்டில் தங்க வொட்டாது ஹிந்துக்கள் முடுக்கினார்களோ? தற்கால நாகரிகமும் வகுப்புப் போரும் அக்காலத்தில் அதிகாரவர்க்க ஆட்சிமுறை இல்லை; மேல்நாட்டு நாகரிகம் பரவவில்லை; அதனால் சாதி வேற்றுமை களால் பூசல் விளையவில்லை. இந்நாளில் அதிகார வர்க்க ஆட்சிமுறை இருக்கிறது; மேல்நாட்டு நாகரிகம் பரவுகிறது. இவை இரண்டும் முறையே சாதி வேற்றுமைகளைக் கிளப்பியும், அன்பை வீழ்த்தியும் இடர்ப்படுத்துகின்றன. சட்டசபைகள் பாரதப் புதல்வர்களின் ஆன்ம நேயத்தைக் குலைக்கின்றன. சட்டசபையிலும், வேறு பல அமைப்புக்களிலும் வகுப்புப் போர் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது. இவைகளில் பிரதிநிதி பீடங்கள் ஏற்பட்ட நாள்தொட்டு நாட்டில் சாதி மகாநாடுகள் பெருகி விட்டன. ஒவ்வொரு சாதிமகாநாடும் தன்தன் சாதிக்குப் பிரதிநிதி பீடம் கேட்கிறது. சட்டசபை முதலிய அமைப்புக் களில் வகுப்புணர் இருக்கைகள் உள்ளமட்டும் நாட்டில் சாதிப்போர் கிளம்பிக்கொண்டே இருக்கும். காங்கரஸில் வகுப்புணர்வின்மை நமது பாரத மகா சபையாகிய காங்கரஸில் எல்லாச் சாதியாரும், எல்லாச் சமயத்தாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அனைவரும் காங்கரஸில் இந்தியராகவே தொண்டு புரிகிறார். தில்லி விசேஷ காங்கரஸில் ஒரு முலிம் தலைவராக வீற்றிருந்தார். அணித்தே கூடிய காக்கிநாடா காங்கரஸில் மற்றொரு முலிம் அத்தலைமை ஏற்றார். இம்முறை சேலத் தில் கூடிய நமது நாட்டு மகாநாடு, ஒரு கிறிதவர் தலைமை யில் நடைபெற்றது. இவர்களைத் தலைவர்களாகத் தெரிந் தெடுப்பதில் ஹிந்துக்களுக்கும், முலிம்களுக்கும், மற்றவர் களுக்கும் ஏதாயினும் பூசல் விளைந்ததோ? ஒன்றுமில்லை. அலி சகோதரர்களைத் தலைவர்களாக ஹிந்துக்கள் கொள்ள வில்லையோ? எம்பெருமான் காந்தியடிகளை முலிம்கள் தலைவராகப் போற்றவில்லையோ? இவ்வொற்றுமை சட்ட சபைகளிலும் வேறு பல அமைப்புக்களிலும் ஏன் நிகழ்வதில்லை? அவை, வகுப்புப் பிரிவைக் கொண்டிருத்தலால், அங்கே ஒற்றுமை நிகழா தொழிகிறது. அன்புத் தொண்டால் சகோதரநேயம் நாட்டில் பிறந்த மக்கள் உள்ளத்தில், வகுப்பு வேற்றுமை முதலிய இழிவுகள் எழாதவாறு, அன்புத் தொண்டால் காக்கும் பொறுப்பு, தொண்டர்களிடத்தில் இருக்கிறது. அன்புத் தொண்டுக்கு முன்னர் வகுப்பு வேற்றுமை என் செய்யும்? பிற வேற்றுமைகள் என் செய்யும்? பிறர் நலன் பேணும் தொண்டன் என வெளிவருவோன், ஒரு கூட்டத்தார் நலங் கருதி உழைக்கவே மாட்டான். ஹிந்துக்களும், முலிம்களும், கிறிதுவர் களும், மற்றவர்களும் தொண்டர்படையில் சேர்ந்து, சாதிமத வேற்றுமை பாராட்டாது எவர்க்கும் ஆன்ம நேயஒருமைப் பாட்டால் தொண்டுசெய்து வருவார்களானால், நாட்டில் சகோதர நேயம் தாண்டவம் புரியாதோ? இப்பொழுது நமது நாட்டில் அருகி வருஞ் சகோதர உணர்வை மீண்டும் பெருக்கத் தொண்டர்படை இன்றியமையாததென்பதை நான் வலியுறுத்த வேண்டுவதில்லை. பெண் தொண்டர்கள் தொண்டர் படையில் ஆண்மக்கள் மட்டும் சேரல் வேண்டும்; பெண்மக்கள் சேரலாகாது என்னும் நியதி இல்லை. ஆண்பாலாரும் பெண்பாலாரும் தொண்டர்படையில் சேர லாம். தலைவர் மௌலானா ஷவுக்கத் அலி, காக்கிநாடாவில் கூடிய தொண்டர் மகாநாட்டில் ஐந்து லட்சம் பெண் தொண்ட ரும், பத்து லட்சம் ஆண் தொண்டரும் தேவை என்று பேசினார். பெண் மக்கள் தொண்டின்றிச் சுயராஜ்யம் ஒருபோதும் வாராது. ஒத்துழையாமையிலும் - கொல்லாமையிலும் - ஆடவரினும், மகளிர் மிக உறுதிகொண்டு நிற்பர். காக்கி நாடாவில் முழு ஒத்துழையாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்தவர் பெரிதும் பெண்மணிகளே யாவர். பெண்ணுரிமை ஆமதாபாத் காங்கரஸிலும், காக்கிநாடா காங்கரஸிலும் பெண் தொண்டர் சேவை பெரிதும் பாராட்டப்பட்டது. வட இந்தியாவில் பெண்மக்கள் ஒத்துழையா இயக்கத்தில் ஊக்கங் கொண்டு உழைக்கிறார்கள். நமது நாட்டில் நங்கைமார் சேவை பெருகவில்லை. அவர் என் செய்வர்? நம்பிமார் அடக்குமுறை அவரைத் தொண்டில் ஈடுபடாதவாறு தகைகிறது! நமது நாட்டு ஆண்மக்கள், தங்கள் வீட்டுப் பெண்மணிகளை நாடகத்துக்கும், சினிமாவுக்கும், வேறு பல களியாடல்களுக்கும் மகிழ்ச்சியோடு அனுப்புகிறார்கள்; ஆனால், தேசத் தொண்டர் கூட்டத்துக்கு அவர்களை அனுப்ப ஒருப்படுகிறார்களில்லை. தமிழ்நாட்டில் எழுச்சி குன்றுதற்குக் காரணம் தாய்மார் சேவையின்மையே என்று கூறலாம். தமிழ் நாட்டு ஆண்மக்களே! உங்கள் கொடுமையை - அடக்குமுறையை - ஒடுக்குங்கள்; நாட்டுத் தொண்டு செய்யத் தாய்மாருக்கு உரிமை கொடுங்கள்; இல்லையேல் அவ்வுரிமையை அவரே பெறுவர். தமிழ்த் தொண்டர் படை தமிழ்நாடு, சிறந்த தொண்டர் படையொன்று திரட்டி முன்னணியில் வைத்திருத்தல் வேண்டும். நாட்டில் எம்மூலையி லாவது சத்தியாக்கிரகப் போர் திடீரென எழும். அக்காலத்தில் தமிழ்நாடு தொண்டரை அனுப்பச் சிறிதும் பின்னிடலாகாது. நாகபுரிக் கொடிப் போரில் தமிழ்நாடு தன் கடனைச் செவ்வனே ஆற்றியது. பார்ஸத்தில் சத்தியாக்கிரகம் எழுந்து வெற்றி யுடன் அடங்கிற்று. அகாலியர் தொடுத்துள்ள சத்தியாக்கிரகப் போர் இன்னும் முடியவில்லை. அப்போர் நீண்டு நாட்டுத் தொண்டர் பலரை எதிர்நோக்கும் நிலைமை நேரலாம். அப்பொழுது, தமிழ்நாடு தொண்டரைச் சலியாதனுப்புதற்குத் தொண்டர்படை அமைப்புக்களை ஒழுங்குபடுத்த இப் பொழுதே முயலல் வேண்டும். அம்முயற்சி தாலுக்காக்களில் முதல் முதல் தொடங்கப்படுதல் நலமென்று நான் சொல்ல வேண்டுவதில்லை. தொண்டரும் அரசியலும் மேல்நாட்டு அரசியல் தொண்டர்கள் இக்கால மேல்நாட்டு அரசியல் சேற்றில் வீழ்ந்து நெளிதலாகா தென்பது எனது கொள்கை. தொண்டர் கள் கைம்மாறு கருதாப் பணியிலேயே கருத்தைப் பதியவைப் பது நலம். இக்கால மேல்நாட்டு அரசியல், தலைவர்கள் உடைமையா யிருந்து வருகிறது. அவ்வரசியலை அவர்கள் கட்டி அழுமட்டும் நாட்டிற்கு உரிமை கிடைக்கப் போவதில்லை; நாட்டிற்கு உரிமை வழங்கவல்லது அருள் நெறியின் பாற்பட்ட ஒத்துழையாமை ஒன்றே. ஒத்துழையாமை நமது நாட்டுக்குரிய அறத்தை அடிப்படையாகக் கொண்டிலங்குகிறது. அதுவே நமது நாட்டு ஞான அரசியல். ஞான அரசியல் வாழ்வை நமக்களிக்கவந்த பெரியார், நம்பொருட்டு, மனைவி மக்கள் இன்பந்துறந்து, பொருள் நசை விடுத்து, உடல் நலம் பேணாது, தன்னந் தனியராய்ச் சிறைப்பட்டு, இப்போது மருத்துவ சாலையில் சத்திரம் வைக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறார். அவர் படுக்கையில் கிடக்கத் தலைவர்கள் சட்டசபை இன்பம் நுகர்கிறார்கள்; நீதி மன்றங்களில் போந்து பொருள் திரட்டு கிறார்கள்; மாணாக்கர் பள்ளிகளில் நுழைகிறார்கள். இவர்கள் வன்கண் என்னே! இவர்கள் என்செய்வார்கள் பாவம்! இவர் களைத் தற்கால நாகரிக அரசியல் பேய் பிடித்தாட்டுகிறது! தொண்டர்களே! அப்பேய்க்கு நீங்கள் இரையாகாதீர்கள். உங்களுக்கு மகாத்மா கோலிய அஹிம்சா தர்ம ஒத்துழையாத் தெய்விக அரசியல் இருக்கிறது. அதன்வழி நில்லுங்கள். சட்டசபை அரசியலால் சுயராஜ்யம் கிடைத்தல் அரிது; ஒருவேளை கிடைத்தாலும், அஃதோர் இந்திய அதிகாரவர்க்க இராஜ்யமாக முடியும். காந்தியடிகள் கோலிய வழி நின்று, நீங்கள் உழைத்தால், அவ்வுழைப்பால் தர்ம ஜீவகாருண்ய சுயராஜ்யம் அரும்பும். காந்தியடிகள் தொடுத்த போருக்குத் தக்க சேனைகள் நீங்களே; அதற்குரியார் சட்டசபை புகுந் தலை வர்களுமல்லர்; நீதிமன்றம் நோக்கும் வக்கீல்களுமல்லர். உங்கள் அரசியல், காந்தியடிகள் அறிவுறுத்திய ஞான அரசியல்; நீங்கள் வேறு ஊன அரசியலில் வீழ்ந்து புரளாதேயுங்கள். இக்கால நாகரிகம், காங்கரஸிலும் நுழைந்து, அதிகார பதவி ஆசைகளை எழுப்பித் தலைவர்களை இடர்ப்படுத்துகிறது. அதனால் தலைவர்களுக்குள் ஒற்றுமையும் அன்பையுங் குலைக்கும் ஒரு நெறியில், தொண்டுக்குரிய நீங்கள் ஏன் உழலல் வேண்டும்? அஹிம்சா தர்மத் தொண்டொன்றே உங்கட்குச் சாலும். தொண்டர் வாழ்வு பிறர்பணியை எதிர்பார்ப்பது தொண்டாகாது தொண்டர் படையில் சேர்வோர் உயரிய செல்வ வாழ்வை விரும்பலாகாது. அவ்விருப்பம் தியாக உணர்வை அழிப்பதாகும். தொண்டர்கள், தியாக உணர்வை வளர்க்கவல்ல ஒரு பெரும் வாழ்வை நடாத்தவே முயலல் வேண்டும். அதற்குரிய வழி, தொண்டர் தமது உணவைத் தாமே சமைத்தலும், தமது உடையைத் தாமே நெய்தலும், இன்னோரன்ன பிறவுமாம். இவை வாழ்விற்கு அடிப்படை. இவ்வாழ்வு உலகில் பரவினால், ஆள்வோர், ஆளப்படுவோர் என்ற உயர்வு தாழ்வும், முதலாளி தொழிலாளி என்ற வேற்றுமையும் அறவே ஒழியும். இவை ஒழிந்தால் நாடுகளெல்லாம் இன்பம் நுகரும். இக்காரணம் பற்றியே மகாத்மா ஒவ்வொருவரையும் சர்க்கா சுழற்றுமாறு கேட்கிறார். தொண்டர்படையில் சேரும் ஒவ்வொருவரும், நாடோறும் இராட்டினஞ் சுழற்றி நூல் நூற்றலைத் தமது சமயக் கடனாகக் கொள்ளல் நல்லது. தொண்டர் படையில் சேர்வோர் எக்காரணம் பற்றியும் பிறர் தமக்குப் பணிசெய்தலை விரும்பும் வாழ்வை எதிர்பார்த்த லாகாது என்று ஒரு முறைக்குப் பன்முறை வலியுறுத்துகிறேன். ஒழுக்கம் தொண்டர்கள் ஒழுக்கத்தால் உடலோம்பப் பயிலுதல் சிறப்பு. ஒழுக்கம் உடலுக்கு ஆக்கமளிப்பதுபோல, வேறெதுவும் அளியாதென்பது திண்ணம். தானே சமைத்தலும், தானே நூற்ற லும் ஒருவனது ஒழுக்கத்தைத் தாய் தந்தை போல் வளர்க்கும். தொண்டர்கள் பெரிதும் செயற்கை வாழ்வில் அறிவைச் செலுத்தாது, இயற்கை வாழ்வில் அறிவைச் செலுத்தினால், அவர்கள் வாழ்வு மற்றவர்கட்குப் பயன்படுவதாகும். பொருளாசைப் புன்மை தொண்டர்கள் என்று தொண்டர் படையில் சேர்ந்து, வயிறோம்புவதிலும் பொருளீட்டுவதிலுமே கருத்தைச் செலுத்தி, காந்திக் குல்லாவும் கதர்ப்பட்டையும் புனைந்து, செல்வர் வீடு தோறுஞ் சென்று இரப்பது இழிவு! இழிவு! வயிற்றுக்கில்லா ஏழைமக்களே தொண்டர்படையில் சேர்கி றார்கள் என்று நம்மவர்களிற் சிலரும், மற்றவருள் பலருஞ் சொல்வதை யான் கேட்டிருக்கிறேன். வயிற்றுக்கில்லா ஏழைகள் தொண்டர் படையில் சேரலாம். அவர்களுக்கு உதவிபுரிய நாட்டார் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் தொண் டில் கவலை செலுத்தல் வேண்டுமேயன்றிப் பொருள் திரட்டு வதிலேயே கவலை செலுத்தலாகாது. பொருளாசை, தொண்டர் வாழ்வைக் குலைப்பதாகும். கொல்லாமை அமைப்பு தொண்டர்படையில் சேர்வோர், கொலை - களவு - கள் - காமம் - பொய் - இவ்வைந்து பாவங்களும், தம் மாட்டு நிகழாத வாறு, தம்மைக் காத்து வாழ முயல்வாராக. தொண்டர், கொலையை நெஞ்சிலும் நினைத்தலாகாது. தொண்டர் வேடந் தாங்கிச் சிலர் சௌரி சௌராவில் புரிந்த கொலைத் தொழில், சத்தியாக்கிரக இயக்கத்தையே வீழ்த்திவிட்டது. அவ்வொரு செயலால் நாட்டுக்கு விளைந்த கேடுகள் எண்ணில. பார்தோலியில் சட்ட மறுப்பு நிறுத்தப்பட்டது. காந்தியடிகள் சிறை புகுந்தார். சுயராஜ்யக் கட்சி முளைத்தது. ஆக்க அழிவு வேலைகளுங் குன்றின. ஒத்துழையா இயக்கத்துக்கே சோர்வு ஏற்பட்டது என்று கூறலாம். நமது இயக்கத்துக்குக் கொலை, பெரும்பகை. ஆதலால், தொண்டர்கள், தங்கள் உள்ளத்தில் என்றும் இடையீடின்றிக் கொல்லாமை என்னும் பேரறம் நிலவத்தக்க எண்ணங்களையே எண்ணல் வேண்டும்; பேச்சுஞ் செயலும் அதையொட்டியே நிகழல் வேண்டும். சுருங்கக்கூறின், அவ்வறம் அரும்பக்கூடிய வாழ்வையே தொண்டர்கள் விரும்புதல் வேண்டும் என்னலாம். தொண்டர் பணி ஜனநாயகமும் தொண்டரும் இப்போது தொண்டர்பணி, இருகூறாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு தொண்டர் கூட்டம், சட்ட மறுப்புக்கும், சத்தியாக்கிரகப் போருக்கும் சித்தமாகப் பயின்று நாட்டுப்பணி செய்யவேண்டு மென்பது; மற்றொரு கூட்டம், ஆக்கவேலையை நாட்டில் செய்ய வேண்டுமென்பது. இருவிதப் பணியும் தேவையே. காக்கிநாடாவில் கூடிய அகில இந்திய தொண்டர் மகாநாடு, சட்டமறுப்புக்கும் ஆக்க வேலைக்கும் தொண்டர்கள் பண்படுமாறு, அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டுமென்றும், அதன் பொருட்டுக் காங்கர பொருளுதவி புரிதல் வேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இத்தீர் மானத்தைச் செயலில் கொணரக் காங்கர கடமைப்பட்டிருக் கிறது. தொண்டர் படைக்குக் காங்கர தாயகமா யிருத்தல் வேண்டும். காங்கர என்னும் ஜனநாயகம் பிறப்பிக்குங் கட்டளைகளை நிறைவேற்றத் தொண்டர்கள் எப்பொழுதும் சித்தமாயிருத்தல் வேண்டும். தொண்டர்கள், காங்கர என்னும் ஜனநாயகத்துக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் வேண்டுமேயன்றி மற்றத் தன்னல மக்களின் ஆணைவழி நிற்றல் கூடாது. காங்கர கிளைச்சபைகள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கின்றன. அவைகளுக்கு அணித்தாகத் தொண்டர் கூட்டங்களும் அமைக்கப்படல் வேண்டும். தொண்டர்களுக்குத் தேவையானவற்றை ஆங்காங்குள்ள காங்கர சபைகள் நல்கல் வேண்டும். தொண்டர்களைச் சட்டமறுப்புக்கும் ஆக்க வேலை கட்கும் நல்வழியில் பண்படுத்துவதோடு, வேறு பல ஒப்புரவுக் கும், அவர்களைக் காங்கர பண்படுத்தலாம். தொண்டர் படை, சட்டமறுப்புக்குமட்டும் அமைக்கப்படுவதன்று என்பதும் உன்னத்தக்கது. கிராமத் தொண்டு தொண்டர்கள் பணியைப் பெரிதும் கிராமங்களே எதிர்பார்க்கின்றன. தொண்டர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே கிராமங்களில் ஆற்றினால், மிக விரைவில் நாம் விடுதலைப்பேறு பெறலாம். கிராமத்தார் ஊக்கமும், தொண் டர்கள் உழைப்பும் ஒன்றுபட்டால் சுயராஜ்யம் தானே அரும்பும். காங்கர, தொண்டர்கள் வாயிலாகக் கிராமங்களில் நாட்டுக் கல்வியைப் பரப்பலாம்; பஞ்சாயத்துக்களை வகுக்கலாம்; இராட்டினங்களை மலியச் செய்யலாம்; தீண்டாமை என்னும் நோயைப் போக்கலாம். இவைகளின்வழி, ஒவ்வொரு கிராமத் தையும் சத்தியாக்கிரகப் போருக்குச் சித்தப்படுத்தலாம்; மேலும் தொண்டர்கள் வாயிலாகக் கிராமங்களில் சுகாதார முறைகள், குடியால் விளையுந் தீமைகள் முதலியவற்றை அறிவுறுத்தலாம். தொண்டர்கள் கிராமசேவை தொடங்கி விடுவார் களானால், கிராம மக்கள், தொண்டர்கள் வேண்டுவனவற்றை யெல்லாம் உதவுவார்கள். தொண்டர்கள் தங்கள் வாழ்வைப் பற்றிக் கவலையின்றியே பணி செய்யலாம். புத்தர் காட்டிய வழி புத்தர் பெருமான், பௌத்த தர்மத்தைப் பரப்ப அடிகள் மாரைக் கிராமங்களுக்கு அனுப்பியபோது, அவர் அவர்களுக்கு ஒரு காசுங்கொடுத்தனுப்பவில்லை. அவர் அவர்களுக்குக் கொடுத்தனுப்பியது அறம் ஒன்றே. அதைக்கொண்டே அவ்வற வோர் தங் கடனாற்றி வந்தனர். அவரைக் கிராமத்தாரும் பாதுகாத்து வந்தனர். அவரைப் போலவே தொண்டர்களும், அஹிம்சா தர்மமெனும் அருள்நெறியையும், அதற்குரிய முறைகளையும் பரப்பக் கவலையின்றி - நடுக்கமின்றிக் - கிராமங் களுக்குப் புறப்படுவார்களாக. இறுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! இதுகாறும் உங்கள் அரிய காலத்தை எனது வெற் றுரையைப் பொறுமையோடு செவிமடுப்பதில் செலவழிக்க ஒருப்பட்ட உங்கள் பெருந்தகைமைக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். இன்னும், இம் மகாநாடு சில கடமைகளை ஆற்ற வேண்டுமாதலால், எனது முன்னுரையை இவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேன். தாயின் நிலை என்னுடன் பிறந்த பாரத மக்களே! நம்மை ஈன்ற பாரதத்தாய் எங்கே? எல்லாத் தாய்மார்களும் முடியணிந்து, கோல்தாங்கி, அரியாசனத்தில் வீற்றிருக்கிறார்கள். நம் தாயின் முடி எங்கே? செங்கோல் எங்கே? அரியாசனம் எங்கே? அவள் வயிறார உணவு கொள்கிறாளா? அவள் தன் உடை அணி கிறாளா? நாம் முப்பது கோடி மக்கள். நம்மை ஈன்ற தாய் உடை யின்றிப் போதிய உணவின்றித் துச்சிற் கிடந்து துயருறுகிறாள். அவளுக்கு உடையளித்து முடியணிய ஒரு புதல்வர் சத்தியாக்கிரகப் போர் தொடுத்துள்ளார். அப்போருக்குப் படை தேவை. தாய்மார்களே! உங்கள் பிள்ளைகளை அப்படைக்கு அனுப்புங்கள்; தொண்டர் படை திரட்டுங்கள். தொண்டர்களே! உலகில் தொண்டுநெறி பட்டுவிட்டது. உலகத்தை மூர்க்கசக்தி எரிக்கிறது. மக்கள் கூட்டம் தவிக்கிறது. அஹிம்சா தர்மமெனும் அருள்நெறி பரவினாலன்றி உலகம் உய்யாது. அவ்வறத்தை மகாத்மா காந்தி அறிவுறுத்துகிறார். அதைப் பரப்ப வேண்டியவர் யாவர்? தொண்டர்களாகிய நீங்களே. தொண்டர்களே! எழுங்கள்! தாயின் மணிக்கொடி தாங்கி எழுங்கள்! காந்தி தர்மத்தைப் பரப்ப எழுங்கள்! காந்தியடிகளை நெஞ்சில் இருத்துங்கள். உயிர்க்கு இறுதி நிகழ்த்தவல்ல ஒரு கொடுமையான நோய்வாய்ப் பட்டுச் சத்திரமிடப்படும் நேரத்தில் யான் அரசாங்கத்தோடு தொடுத்த போர் இன்னும் முடியவில்லை என்ற வீரமுழக்கமே நம் சத்தியவீரர் செய்தார். அவ்வீர முழக்கத்தின் பொருள் என்ன? உங்களைச் சத்தியாக்கிரகப் போருக்கு அழைப்பதே. உங்கள் தலைவர் தாந்தொடுத்த போரை இன்னும் விடவில்லை. நீங்கள் விடலாமோ? காந்தியடிகள் ஆன்ம சக்தி நாட்டில் வேரூன்றி இருக்கிறது; அஃது அகாலியரைத் தன்வயப்படுத்தி இருக்கிறது; நாகபுரியில் மூர்க்க சக்தியை ஒடுக்கிற்று; பார்ஸத்தில் வெற்றிபெற்றது. அச்சக்தி உங்களை எழுப்புகிறது. எழுங்கள்! எழுங்கள்! மகாத்மா காந்திக்கு ஜே என்று எழுங்கள்! உங்களுக்கு ஆண்டவன் துணை செய்வான். வந்தே மாதரம் அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே - தாயுமானார் அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ அலரிமண் டலநடுவிலோ அனல்நடுவி லோஅமிர்த மதிநடுவி லோஅன்பர் அகமுருகி மலர்கள் தூவித் தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத் திகந்தத்தி லோவெளியிலோ திகழ்விந்து நாதநிலை தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலைதன்னிலோ கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக் கண்டசூ னியமதனிலோ காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ கருவிகர ணங்களோய்ந்த தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது தொழும்பனேற் குளவுபுகலாய் சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே - தாயுமானார் தொழிலாளர் முதல் மகாநாடு வரவேற்புரை (சென்னையில், லாட் கோவிந்ததா அரண்மனையில், 1920-ம் வருடம் மார்ச்சு மாதம் 21ஆம் நாள் திவான்பகதூர் - குத்தி கேசவப் பிள்ளையவர்கள் தலைமையில் கூடிய மாகாணத் தொழிலாளர் முதல் மகாநாட்டின் வரவேற்புத் தலைமையுரை.) முன்னுரை சகோதரிகளே! சகோதரர்களே! உலகமெங்கும் தோன்றியுள்ள புது எழுச்சி இந்தியாவிலும் இப்பொழுது தோன்றி நிற்கிறது. அவ்வெழுச்சியை நவசக்தி என்று யான் வழுத்துகிறேன். அந் 1நவசக்தியின் தோற்றமே தொழிலாளர் இயக்கமென்பது. எந்நாட்டில் தொழிலாளர் இயக்கம், உரம்பெற்று ஓங்கிச் செழுமையுறுகிறதோ, அந் நாட்டில் வறுமை, பிணி, அகால மரணம் முதலிய துன்பங்கள் தலைகாட்டா. நமது நாடு, வறுமை முதலிய சிறுமைகட்கு இரையாகி வருவதை அறியாதாரில்லை. நமது நாட்டின் வறுமையை அமெரிக்கா முதலிய நாடுகளும் உணர்ந்திருக் கின்றன. செனேட்டர் பிரான் முதலிய அமெரிக்க மேதாவி கள், தங்கள் குடிஆட்சி மன்றத்தில், இந்தியாவின் வறிய நிலையை எடுத்துக்காட்டிப் பேசிய பேச்சுக்கள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன. உலகமே நமது நிலையைக்கண்டு இரக்கமுறுங் காலத்தை நாம் காண்கிறோம். நமது வறிய நிலையைச் செழிய நிலையாக மாற்றுதற்குரிய வழிகளைத் தேடவேண்டுவது நமது இன்றியமையாக் கடமை. அவ்வழிகள் பலபடக் கிடக்கலாம். அவைகளுள் தலையாயது, தொழிலாளர் நலத்தை நாடுவதாகும். நாட்டிலுள்ள தொழிலாளர் நிலைமை செழுமையுறுமாயின், நாட்டின் நிலைமையும் செழுமையுறும். அச்செழுமைக்கு அடிகோல, இன்று நவசக்தி ஈண்டுக் கொலு வீற்றிருப்பதைக் கண்டு நான் கழிபேருவகை எய்து கிறேன். என் முன்னே வீற்றிருக்கின்ற நவசக்தியின் பொலிவு, எனது உள்ளத்துக்கு இன்பையூட்டி, எனது உடலுக்கும் ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நவசக்தி உதயமாகியுள்ள இம்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க எழுந்தருளியுள்ள பெரியாரையும், சகோதரப் பிரதிநிதிகளையும், ஏனைய நண்பர்களையும், வரவேற்குந் தொண்டை ஏற்றுள்ள சிறியேன், சில சிற்றுரைகளை உங்கள் முன் கிடத்தி, என் கடமையை ஒல்லும்வகை செய்கிறேன். எனது தொண்டில் குற்றங் குறைகள் நிகழுமேல், அவற்றைப் பொறுத்தருளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தொழிலாளி எல்லாம் தொழிலாளரே தொழிலாளி என்றவுடனே கைத்தொழில் புரியும் ஒரு கூட்டத்தார்மீது, பெரும்பான்மையோர் கருத்துச் சென்று விடுகிறது. உயர் பதவியிலுள்ள ஒருவன், தன்னைத் தொழி லாளி என்று சொல்லிக்கொள்ள நாணமுறுகிறான். இதற்குக் காரணம் புலனாகவில்லை. கல்வியறிவுடையோர் உலகத்தி லுள்ள அனைவரையும் தொழிலாளர் என்றே கொள்வர். உலகை நோக்குழி, உயர் திணை உலகமும், அஃறிணை உலகமும் தொழில் மயமாக இருப்பதைக் காணலாம். தொழில் புரியாத உயிர்கள் உலகத்தில் இல்லை. இம்மண்ணுலகம் அல்லாத பிற உலகங்களில் உள்ள உயிர்களும், ஒருவகைத் தொழில்செய்து கொண்டே இருக்கின்றன என்பது அறிவு நூல் துணிபு. காரிய உலகமெல்லாம் தொழில் மயமாக இருக்கின்றமையால், அவைகளுக்குக் காரணனாயுள்ள ஆண்டவனையும் தொழி லாளி என்று நமது நாட்டு நூல்கள் கூறுகின்றன. ஆண்டவன் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் இடையீடின்றி நிகழ்த்திக் கொண்டுள்ள மையான், அண்டமெல்லாம் தத்தம் நிலையினின்றும் பிறழாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இல்லையேல், அவையாவும் தத்தம் நிலை குலையப்பெற்றுப் பாழ்பட்டுவிடும். உலக நிகழ்ச்சியின் உண்மைகண்ட ஒருவன், ஆண்டவன் தொழி லாளி என்ற முடிவையே பெறுவன். ஆண்டவன் தொழி லாளியா யிருத்தலால், உலகமும் தொழில் மயமாகவே இருக் கிறது. எல்லாம் வல்ல இறைவன் பயன் கருதாத் தொழிலாளி யாய் - அதாவது நிஷ்காமிய கரும யோகியாய் - இருத்தலால், அவனை அடைய விரும்புவோரும், பயன் கருதாத் தொண்டை (நிஷ்காமிய கருமத்தை)ச் செய்ய வேண்டுமென்று முழங்குஞ் சாத்திரப் பொருளும் ஈண்டுக் கருதற்பாலது. எல்லாப் பொருளையுங் கடந்தும், அவைகளில் கலந்தும் விளங்குகின்ற ஆண்டவனே தொழிலாளியாயின், பின்னை எவன்தான் தொழிலாளியா யிருக்கமாட்டான்? தோட்டியுந் தொழிலாளியே; தொண்டைமானுந் தொழிலாளியே; நியாயாதிபதியுந் தொழிலாளியே; வாயில் காப்போனும் தொழிலாளியே; உலகத்திலுள்ள அனைவருந் தொழிலாளரே யாவர். ஆதலால், செல்வச் செருக்குடையார், தாம் அல்லாத பிறரே தொழிலாளர் என்று நினைப்பது அறியாமை. அவ்வாறு நினைப்போர், கல்வி யறிவில்லாக் கயமைக் கூட்டத்தில் சேர்க்கப்படுவர். இருவகைத் தொழிலாளர் உலகிலுள்ள தொழிலாளரை இரு கூட்டத்தவராகப் பிரிக்கலாம். அறிவுத் தொழிலாளர் எனப்படுவோர் ஒரு கூட்டத்தார்; கைத்தொழிலாளர் எனப்படுவோர் மற்றொரு கூட்டத்தார். இவ்விரு கூட்டத்தவரும் தொழிலாளரே யாவர். இவ்விருவராலும் உலகம் நடைபெறுகிறது. இவ்விரு கூட்டத்தவருள் கைத்தொழில் புரிவோர் துணையின்றி, அறிவுத் தொழிலாளர் உலகம் நடைபெறுதல் அருமை. அறிவுத் தொழிலாளர் உண்பன, உடுப்பன, ஊர்வன, பிறயாவும் கைத் தொழிலாளரால் செய்யப்படுவன. கைத்தொழிலாளர் துணை யின்றி, அறிவுத் தொழிலாளர், உலகில் வாழ்தல் அரிது என்று கூறுவது மிகையாகாது. ஆதலால், கைத்தொழிலாளியின் நலத்தைநாட, அறிவுத் தொழிலாளி கடமைப்படுதல் வேண்டும். கைத்தொழிலாளர் நலத்தை நாடாத அறிவுத் தொழிலாளர் வாழும் நாடு, வறுமை முதலிய கொடுமைகளுக்கு உறைவிட மாவதோடு, கொடுங்கோன்மைக்கும் இரையாகிக் கொண்டே போகும். உரிமை விரும்பும் அறிவுத் தொழிலாளி ஒவ்வொரு வனும், கைத்தொழிலாளியின் நலத்தை நாடி உழைத்தல் அறம். உரிமைப் பேற்றிற்கு அறிவுத் தொழிலாளியும் கைத்தொழி லாளியும் முறையே உயிரும் உடலும் போன்றவராவர். நமது நாடு அடிமை நாடாயிருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அவைகளுள் ஒன்று, அறிவுத் தொழிலாளர், கைத்தொழிலாளர் நலத்தை நாடாதிருந்தமை என்று கூறலாம். தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் ஆக்கம் உலகம் சிலகாலம் குருமார் அடிவருடி நின்றது; சிலகாலம் மன்னர் வாள்வழி நடைபெற்றது; இப்பொழுது வாணிபருக்கு இரையாகி வருகிறது; இனித் தொழிலாளர் வயப்பட்டு நலம் பெறப்போகிறது. தொழிலாளர் இயக்கம், இதுகாலை உலகத்தைச் சூழ்ந்து முற்றுகை செய்திருக்கிறது! இனி அவ் வியக்கம், கொடுமை, அடக்குமுறை என்னும் அரண்களை நீறுபடுத்தி, சமத்துவம் என்னுங் கோட்டையைப்பற்றி, சுதந்திரம் என்னும் அரியாசனமேறி, சகோதரத்துவம் என்னுங் கொடியைப் பறக்கவிடும். இந்நாளில் தொழிலாளர் இயக்கத்தைக் காணாத நாடே இல்லை என்றுங் கூறலாம். சிற்சில இடங்களில் தொழிலாளர் நிலை செழுமை பெற்றே விட்டது. இங்கிலாந்தில் தொழிலாளர் தமக்குள்ள பலதிறக் குறைகளைப் போக்கி, இப்பொழுது ஆட்சியைத் தம் வழிப் படுத்தும் முயற்சியில் தலைப்பட்டிருக்கின்றனர். மகா யுத்தத்தின் வேகம் ஒடுங்கிய நாள் தொட்டு, கொடுங்கோ லாட்சியால் கட்டுப்பட்டு வருந்தி வந்த நாடுகளில் பொதுவாக ஜெர்மெனி முதலிய நாடுகளிலும், சிறப்பாக ருஷ்யாவிலும் தொழிலாளர் ஆக்கம்பெற்று வருகிறார். இங்கிலாந்தும் இந்தியாவும் இங்கிலாந்திலுள்ள தொழிலாளர் எட்டு மணி நேரம் வேலைசெய்து நல்ல சம்பளம் பெறுகிறார். இப்பொழுது இங்கிலாந்திலுள்ள தொழிலாளர், நேரத்துக்கும் கூலிக்கும் போரிடுவதில்லை. அவர் ஆட்சியைத் தம் வயப்படுத்தவே முயல் கிறார். இந்தியாவிலுள்ள தொழிலாளர், நேரத்துக்கும் கூலிக்கும் வாதம் புரியும் அளவில் நிற்கிறார். இந்தியத் தொழி லாளர் வருவாய், மிகக் குறைவுபட்டு நிற்கிறது. மாதம் ஒன் றிற்குப் பத்துரூபா பன்னிரண்டு ரூபா பெற்று, இருபதாண்டு இருபத்தைந்தாண்டு உழைத்துக் கிழப்பருவமடைந்தும், வயிற்றுக் கொடுமையின் பொருட்டுத் தள்ளாடி, தள்ளாடி இன்னும் வேலை செய்துகொண்டிருக்குந் தொழிலாளரையும் யான் காண்கிறேன். இந்தியத் தொழிலாளர் இவ்வளவு குறைந்த சம்பளத்தைப் பெறுகின்றமையாலன்றோ ஓர் இந்தியனது சராசரி வருவாய் நாள் ஒன்றுக்கு ஓரணாவாக இருக்கிறது! இச்சிறு வருவாய் பெறும் நாடாக இந்தியா மாறினமையால், இந்திய மக்களின் சராசரி வயது இருபத்து மூன்றாகக் குறைந்து விட்டது. இங்கிலாந்தில் தொழிலாளர், குறைந்த நேரம் வேலை செய்து, நிறைந்த சம்பளம் பெறுகின்றமையால், அத்தீவின் சராசரி வருவாய் நாளொன்றுக்கு இரண்டு ரூபாவாகவும், சராசரி வயது நாற்பத்தாறாகவும் இருக்கின்றன. இங்கிலாந்தில் தொழிலாளர் நாடோறும் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்ற நியதி ஏற்பட்டுள்ளது. இந்தியத் தொழிற் சாலைச் சட்டம் இந்தியத் தொழிலாளர்க்குப் பன்னிரண்டு மணி நேரம் கணித்துள்ளது. இங்கிலாந்து குளிர்நாடு; இந்தியா வெம்மை நாடு. அந்நாட்டில் தொழிலாளர் எட்டு மணி நேரம் வேலை செய்கின்றனர். இந்நாட்டில் பன்னிரண்டு மணி நேரம் தொழிலாளர் வேலை செய்யவேண்டுமென்னும் விதியுண்டு. குளிர்நாட்டில் வாழ்வோர், நீண்டநேரம் வேலை செய்யினும் களைப்படைய மாட்டார். வெம்மை நாட்டில் வாழ்வோர், நீண்ட நேரம் வேலை செய்யின், சொல்லொணாக் களைப் படைந்து விடுவர். நமது நாடு, தன் இயற்கை முறைக்கே மாறு பட்டு வருந்துவதை எவரும் இதுகாறும் கருதாமலிருந்தது வருந்தத்தக்கது. இங்கிலாந்தின் தொழிலாளர் முன்னேற்றமடைந்திருப்ப தற்குக் காரணம், அவர், ஒற்றுமையாகத் தம் இயக்கத்தை வளர்த்து, அதைச் செழுமையுறச் செய்ததேயாகும். இந்தியாவில் தொழிலியக்கம் நீண்டகாலம் தோன்றாமலிருந்தது. இந்தியாவி லுள்ள அறிவுத்தொழிலாளரும், அரசியல் கூட்டத்தாரும், ஆள்வோரும் தொழிலாளர் மீது கவலை செலுத்தா தொழி யினும், ஆண்டவன் அருளால் தொழிலாளர் இயக்கம், தானே நமது நாட்டில் தோன்றி எழுந்து இப்பொழுது வீறு கொண்டு நிற்கிறது. தோற்றம் இயக்கத் தோற்றம் சென்னைச் சூளையில் வேங்கடேச குணாமிர்த வருஷணி சபா என்றொரு சமயச் சங்கம் இருக்கிறது. அச் சங்கத்தின் அங்கத்தவர் பலர் முயற்சியால் சென்னையில் தொழிலாளர் இயக்கந் தோன்றிற்று என்று கூறலாம். அச்சபை நேயர்களாகிய திரு. ஜி. செல்வபதி செட்டியாரும், திரு. ஜி. இராமாஞ்ஜுலு நாயுடுவும் சூளையில் ஒரு தொழிலாளர் சங்கம் காணப்படல் வேண்டும் என்று எண்ணி, இன்று இம்மகா நாட்டில் தலைமை பூண்டு சிறப்புற வினையாற்றப் போந்துள்ள திவான்பஹதூர் கேசவப்பிள்ளை அவர்களோடு கடிதப் போக்குவரவு செய்து கொண்டும், அடியேனை நேரிற் கண்டும் வேண்டுவ நிகழ்த்தி வந்தனர். திரு. பிள்ளையவர்கள், குத்தியி லிருந்துகொண்டே கடிதவாயிலாக மேற்போந்த இரண்டு ஒப்புரவாளர்க்கும் ஊக்கமூட்டி வந்தார்கள். 1918ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 2-ம் தேதி, சனிக்கிழமை, அடியேன், தொழிலாளர் உள்ள நிலையை அறிதல் வேண்டும் என்ற நோக்கங்கொண்டு, சூளையில் (பட்டாளத்தில்) பல்லாயிரக் கணக்கான தொழிலாளரிடைச் சொற்பொழிவு நிகழ்த்தினேன். அன்று பக்கிங்காம் மில், கர்நாட்டிக்மில், சூளை மில் ஆகிய மூன்று மில் தொழிலாளருள் பெரும்பான்மையோர் குழுமினர். அன்றுதொட்டுச் சில சொற்பொழிவுகள் அங்குச் செய்யப்பட்டன. அவை தொழி லாளருக்கு மன எழுச்சியை உண்டாக்கி, அவர்க்கென ஒரு சங்கங் காணவும் அவரைத் தூண்டின. அந்நாளில் சென்னையி லுள்ள ஜனத் தலைவர்களும், அதிகார வர்க்கத்தாரும், ஆங்கிலோ இந்தியப் பத்திரிகையும் சிறியேனுக்கும், திரு. செல்வபதி செட்டியாருக்கும், திரு. இராமாஞ்ஜுலு நாயுடுவுக் கும், மற்றவர்கட்கும் ஊட்டிய அச்சத்துக்கு அளவேயில்லை. அப்பொழுது அடியேன் உற்ற நிலையை என்னென்று கூறு வேன்! ஒருவன் ஒரு மரத்தின்கீழ் நின்று ஓர் உலர்ந்த கொடியைப் பற்றி நிற்குங் காலத்து, அம்மரத்தின் அடியைச் சூழ்ந்து மூடி யிருக்கும் புதரிலுள்ள பாம்புகள் படம் விரித்தாடித் தன்னைக் கண்டு சீறுவதையும், ஒரு புலி தன்னெதிரே பாய்ந்து வரு வதையும், ஒரு சிங்கம் உற்று நோக்குவதையுங் கண்ணுற்று, தான் பற்றிநின்ற கொடியையே துணைகொண்டு மரமேற நினைந்த நிலையை அடியேன் அதுகாலை உற்ற நிலைக்கு ஒப்பிடலாம். அந்நாளில் திவான்பஹதூர் கேசவப்பிள்ளை குத்தியினின்றும் சென்னை போந்து, நிலையையுணர்ந்து, திரு. வாடியாவைக் கொணர்ந்து, கொழு கொம்பாக எமக்கு உதவினர். அக்கொம்பு பற்றி நாங்கள் மூவரும் மரமேறி, இப்பொழுது கனிபறித்து உண்கிறோம். திரு. வாடியா அஞ்சா நெஞ்சங்கொண்டு சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1918ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ஆம் தேதி, சனிக்கிழமை சென்னைத் தொழிலாளர் சங்கம் எங்களால் காணப்பட்டது. அச்சங்கத் தோற்றத்துக்குப் பின்னர் பல தொழிலாளர் சங்கங்கள் சென்னையிலும் பிற விடங்களிலுந் தோன்றலாயின. இப்பொழுது தோட்டிகள் சங்கம், அம்பட்டர் சங்கம் முதலிய சங்கங்கள் தோன்றிவிட்டன. அரசாங்க உத்தியோகதர் சங்கங்களும் தோன்றி வருகின்றன. இனிப் பல்லாயிரஞ் சங்கங்கள் தோன்றும். தொழிற்சாலையில் சேராத தொழிலாளர் இப்பொழுது பெரிதும் நகரங்களில் தொழிற்சாலைகளில் வேலை செய்யுந் தொழிலாளர்க்கே சங்கங்கள் காணப்படு கின்றன. நமது நாட்டில் தொழிற்சாலைகளில் வேலை செய்யாத தொழிலாளர் இலட்சக் கணக்காக இருக்கின்றனர். அவர், விவசாயத் தொழிலாளர், கடைத் தொழிலாளர், வீட்டுத் தொழிலாளர் முதலிய பலதிறத் தொழிலாள ராவர். அவர் ஏறக்குறைய பகல் முழுவதும் வேலைசெய்கின்றனர். அவர் மிகவுங் குறைந்த சம்பளம் பெற்று வருகின்றனர். அத் தொழிலாளரை முதலாளிகள் மிக இழிவாக நடத்துகிறார்கள். அத் தொழிலாளருக்குள்ள குறைகள் பல. அவரும் மனித உடல் தாங்கினவரே. அவர் தன் மதிப்பும் காக்கப்படல் வேண்டும். ஆதலால், தொழிற்சாலைகளில் சேராத தொழிலாளருக்கும், சங்கங்கள் ஆங்காங்கே காணப்படல் வேண்டும். சங்கங்களின் பயன் அமைதியும் சங்கமும் ‘bjhÊyhs® r§f§fshš Éisí« ga‹ v‹d? என்று பல சகோதரர் என்னைக் கேட்கிறார். அவர், தொழி லாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் ஒன்றற்கே காணப்படு கின்றன என்று கருதுகிறார் போலும்! வேலை நிறுத்தங்களைத் தடுப்பதற்கே தொழிலாளர் சங்கங்கள் காணப்படுகின்றன என்பதை அவர் உணர்வாராக. இப்பஞ்ச காலத்தில் சென்னை யில் தொழிலாளர் சங்கங்கள் ஏற்படாதிருக்குமாயின், நகரத்தில் அமைதியின்மை பல துறையில் நிகழ்ந்திருக்கும். அதனால் குடிமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்துணையோ கலக்கங்கள் நேர்ந்திருக்கும். தொழிலாளர் சங்கங்கள் பல ஏற்பட்டுள்ளமை யால், தொழிலாளர் தனித்தனியாக நின்று, தம் விருப்பப்படி எவ்விதக் குழப்பங்களையும் விளைவியாமல் இருக்கிறார். தொழிலாளர் நியாயமுறை கடைப்பிடித்துச் சங்க வாயிலாகத் தங் குறைகளை முறையிட்டு நலம்பெறவே முயல்கிறார். முதலாளிகளும் தொழிலாளர் நிலையை உணர்ந்து, வேண்டுவ செய்து வருவார்களாயின், யாண்டும் - என்றும் - அமைதி நிலவும் என்பதில் ஐயமில்லை. தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர் தம் விருப்பப்படி வேலை நிறுத்தஞ் செய்வதைத் தடுத்துவிடுகின்றன. சங்கங்களால் தொழிலாளர் வேறு பல நலங்களையும் பெறலாகும். கூட்டுறவுச் சங்கம் தொழிலாளரிற் பெரும்பான்மையோர், மார்வாரிகளிடத் திலும், பிறரிடத்திலும் அநியாய வட்டிக்குக் கடனாகப் பணம் வாங்கி, என்றுங் கலங்கிய நெஞ்சினராய்க் காலங்கழித்து வருகின்றனர். தொழிலாளர் சங்கங்கள் கூட்டுறவுச் சங்கங் களைக் கண்டு, தொழிலாளர் அநியாய வட்டிகொடுத்து இடர்ப் படுவதைத் தடுத்தல்கூடும். தொழிலாளர் சங்கங்கள் கூட்டுறவு நிதியாலும், கூட்டுறவுக் கடைகளாலும் தொழிலாளரைப் பயன்பெறச் செய்விக்கலாம். தொழிற் சங்கக் கடமை தொழிலாளரிற் பெரும்பான்மையோர், தம் வருவாயைப் பெரிதுங் கள்ளுக்கடைக்கு அழுதுவிடுகின்றனர் என்பது உலகமொழி. தொழிலாளர் சங்கங்கள் அடிக்கடி அறிவுறுத்தும் நன்மொழியாலும், குடியினால் விளையுங் கெடுதிகளை விரித்துக் கூறுவதாலும், கூட்டுறவுச் சங்கத்தாலும், தொழி லாளர் குடியை நிறுத்தலாகும். சங்கங்கள், தொழிலாளர்க் கெனத் தொழிற்சாலை, ஆடல்வெளி, தனி உறைவிடம், பிறவசதிகள் செய்யலாம்; இராப் பள்ளிக்கூடம், வைத்திய சாலை, நாடகசாலை முதலியனவும் அமைக்கலாம். அவை புதுப் புதுத் தொழிற்றுறைகளையும் முறைகளையும் காணவும் உதவி புரியலாம். பொதுஜன வாழ்க்கைக்குப் பெரிதும் இன்றியமை யாத உதவிகளையும் தொழிற்சங்கங்கள் புரிந்து வருதல்கூடும். தொழிற்சங்கங்கள், இன்னோரன்ன பெரும் பயன்கள் பல விளைவிக்கும். அரசாங்கத்தார், தொழிலாளர் நிலைமைகளைக் கவனிக்க ஒரு தொழில் கமிஷனரை நியமித்துள்ளமையால், வேலைநிறுத்தஞ் செய்யாமலே, தொழிலாளர் தங்குறைகளைப் போக்கி, நல்ல பயன்களைப் பெற முயல்வாராக. மத்தியச் சங்கம் தொழிலாளர் சங்கங்கள் ஆங்காங்கே நாடோறுந்தோன்றி வருகின்றன. அவைகளை, வழி துறை யில்லாமல் வளர்த்து வருவதனால், பல இடர்கள் இடையில் நேர்ந்துவிடும். ஆதலால், எல்லாத் தொழிற் சங்கங்கட்கும் நடுநாயகமாக ஒரு மத்தியச் சங்கம் இருத்தல் வேண்டும். அதில் எல்லாத் தொழிற் சங்கங் களும் சேர்தல் வேண்டும். மத்தியச் சங்கம் ஒன்றிருப்பது தொழி லாளர் இயக்கத்துக்கு ஆக்கந்தேடுவதாகும். ஒரு மத்தியச் சங்கம் அமைக்கத் திருமதி மிருநாளினி சடோபாத்தியாயா செய்து வரும் முயற்சிக்கு இம்மகாநாடு துணை புரியும் என்று நம்புகிறேன். குடியேற்ற நாடுகள் கிராமத் தொழில் குலைவு : கிழக்கிந்திய வியாபாரக் கூட்டத்தவரால் நமது நாட்டின் தொழின்முறைகள் கொலை செய்யப்பட்ட நாள்தொட்டு, நமது நாட்டின் கைத்தொழில்கள் பாழ்பட்டன. மேல்நாட்டு முத லாளிகள் நமது நாட்டிற் புகுந்து தொழிற்சாலைகளை அமைத்துவிட்டார்கள். நாட்டுப் புறங்களிலிருந்த தொழிலாளர், தமக்குரிய கிராம உரிமையையும் மானியங்களையும் விடுத்து, பண ஆசை மேலீட்டான், நகரங்களிற் போந்து, தொழிற் சாலைகளிற் கூலிக்காரராகித் தன்மதிப்பை இழந்து வருவது நேயர்கட்குத் தெரியும். குடியேற்ற நாடுகளில் இந்தியர் கிராமங்களிலுள்ளவர், மேலும் மேலும் பண ஆசை கொண்டு, தென்னாப்பிரிக்கா - பிஜி - முதலிய குடியேற்ற நாடு களுக்குச் சென்று, மானமிழந்து வருவதை என்னென்று கூறுவது? ஆண்டுள்ள வெள்ளையர், நம் அருமைத் தொழி லாளரை விலங்குகளாகக் கருதுகிறார். குடியேற்ற நாடுகளி லுள்ள இந்தியர், பிறப்புரிமை இழந்து தவிக்கிறார். தென் னாப்பிரிக்காவில் இந்தியர் பிறப்புரிமையை நிலைபெறுத்த மகாத்மா காந்தி செய்த முயற்சி அளவிடற்பாலதன்று. பிஜித் தீவில் நம் பாரதப் புதல்விகளின் கற்பை இழக்குமாறு இராட்சத முதலாளிகள் செய்து வருவதை திரு. ஆண்டுரூ துரைமகனார் கண்டு வருந்தி, நமது நாட்டுக்கு அறிவித்தனர். மகா யுத்தம் முடிவடைந்ததும், சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் - பேசப்பட்டும், யுத்தத்தில் நேசக் கட்சியார் வெற்றியுற இந்தியா பொருளையும் - உயிரையும் வழங்கியும், இந்தியர் நிலை நல முற்றதோ? டிரான்வால் அரசாங்கத்தார், இந்தியர் சொந்த வாணிபம் செய்தல் கூடாதென்றும், அவர் தமக்கெனச் சொந்த இடம் பெறுதல் கூடாதென்றும் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார். இச்செயல்களால், இன்னும் இந்தியர், மக்களாக மற்றவர்களால் மதிக்கப்படவில்லை என்பது நன்கு புலனாகிறது. இலங்கையில் நம் இந்தியத் தொழிலாளர் உற்றுள்ள இழிநிலையை உங்களுக்கு யான் விரித்துக் கூறவேண்டுவதில்லை. குடியேற்ற நாடுகளுக்குச் செல்லும் நம்மவர் மானம் அழிந்து வருந்துவதைத் தடுக்க அரசாங்கத்தார் மூச்சு விடுத்திருப்பதற்கு நன்றி கூறுகிறேன். தொழிலாளர் அமைப்புகளும், குடியேற்ற நாடுகளுக்கு நம்மவர் செல்வதைத் தடுக்க முயலல் வேண்டும். குடியேற்ற நாடுகளிலுள்ள இந்தியரது பிறப்புரிமைக்குக் கேடு நேராதவாறு தொழிற் சங்கங்கள் கிளர்ச்சி செய்தல் வேண்டும். பிரிட்டிஷ் கயானா இப்பொழுது இந்தியத் தொழிலாளரை விழுங்க வாய் திறந்திருக்கிறது. எந்தக் குடியேற்ற நாட்டுக்கும் நம்மவர் செல்வதைத் தொழிலியக்கம் தடுக்க முனைவதாக. சீர்திருத்தப்படி, கைத்தொழில், விவசாயம் முதலிய சில இலாகாக்கள், மாற்றப்பட்ட ஆட்சிக்கு உட்படுதலானும், இனி இந்தியாவில் கைத்தொழில் விவசாயம் முதலியன வளர்ச்சியுறு மாதலானும், அதுகாலைத் தொழிலாளர் ஏராளமாக வேண்டப் படுவராதலானும், இந்தியத் தொழிலாளர் குடியேற்ற நாடு களுக்குச் செல்லாதிருப்பது நலம். அரசியலும் தொழிலாளரும் தொழிலாளரும் சுயராஜ்யமும் அரசியலில் எனக்குத் தணியாக் காதல் உண்டு. அரசியலை யான் என்னுடைய சமயமாகவும் கொண்டிருக்கிறேன். எனது அரசியல் கட்சி, அதிதீவிர தேசியக் கட்சியே யாகும். அடியேன் நமது நாட்டு அரசியல் மகாசபையாகிய காங்கர கொள் கையைத் தழுவித் தொண்டு செய்யும் ஆர்வம் உடையவன்; நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்து மிக விரைவில் சுயராஜ்யம் பெறுதல் வேண்டும் என்னும் நோக்கம் உடையவன்; சுயராஜ்யப் பேற்றிற்குத் தொழிலாளர் இயக்கம் இன்றி யமையாதது என்ற எண்ணத்தோடு தேசத்தொண்டு செய்பவன். தொழிலாளர்க்கு அரசியல் ஞான மூட்டவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உண்டு. ஆனால், இப்பொழுது தொழி லாளர் இயக்கத்தை அரசியல் கட்சிகளில் நுழையவிடாது, அதை நடப்பித்தல் நலம் என்பது எனது எண்ணம். தொழி லாளர் இயக்கம் அரும்பிவரும் இந்நாளில் அவ்வியக்கத் தினிடைக் கட்சிகளையும், பகைமைகளையும் கொணர்ந்து பெய்வது அறிவுடைமை யாகாது. அதனால், அவ்வியக்கம் வெம்பி இடையில் பட்டுப்போகும். அவ்வாறு செய்வது, சுயராஜ்ய நிலைக்கு அடிப்படையாக உள்ள தொழிலாளர் இயக்கத்தை ஓங்கவொண்ணாது மறித்து நாட்டுரிமைக்குக் கேடு சூழ்வதாகும். சுயராஜ்யமென்பது வாய்ப்பேச்சன்று. அதை இந்தியாவுக்கு நல்கவல்லது தொழிலாளர் இயக்கம் என்பது எனது முழு நம்பிக்கை. சுயராஜ்யத்தைக் குறிக்கொண்டு தொழிலாளர் இயக்கத்தை நடாத்த வேண்டும் என்பது எனது உட்கிடக்கை. கருத்து வேற்றுமையால் பகைபடல் கூடாது இப்போது தொழிலாளரது வறிய நிலையைப் போக்கவே முயலல் வேண்டும். தம்முள்ளத்துள்ள நானாவித அரசியல் கொள்கைகளை அரசியல் கட்சியினர், தொழிலாளருக்கு அறிவுறுத்தி, அன்னவரைக் கலகக் கூட்டத்தவராக்க முயல்வது நாட்டு நலத்தை நாடுவதாகாது. பொதுவாக நமது நாட்டில் - சிறப்பாக நமது மாகாணத்தில் - அரசியல் என்பது மனிதரைப் பற்றிக் கிடக்கிறது. மனிதர்மீதுள்ள பகைமையை, அரசியலில் புகுத்தி, நாட்டுத் தொண்டு செய்வோர், நாட்டுப் பற்றின்றியே நாட்டுத் தொண்டு செய்வோராவர். தொண்டு செய்யப் புகு வோரிடத்துப் பகைமை தலைகாட்டலாகாது. நாம் அரசியல் கொள்கைகளில் மாறுபடலாம்; கொள்கைகளை மறுக்கலாம். கொள்கை மாறுபாட்டுக்கும், தனிப்பட்ட மனிதர் போக்குக்கும் வேற்றுமை உண்டு. ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் காழ்ப் பையே - அரசியல் ஞானம் என்றும் - தேசபக்தி என்றும் - தேசத் தொண்டு என்றும் - நினைந்து, கலாம் விளைத்துக் கூட்டங் களையே கலைத்து, நகை யொன்றே நற்பயனாக் கொள்ளும் சகோதரர் சேர்க்கையால், தொழிலாளர் இயக்கத்துக்கே கேடு நேர்ந்துவிடும் என்று யான் எச்சரிக்கை செய்கிறேன். இதனால், தொழிலாளர் இயக்கத்தை அரசியலினின்றும் வேறுபடுத்திப் பிரித்துவிடுவதாக நேயர்கள் கருதலாகாது. தொழிலாளருக்கு அரசியற் கல்வி வேண்டாம் என்று யான் மறுக்கவில்லை. தொழிலாளரை அரசியற் கட்சி வேற்றுமை என்னுஞ் சேற்றில் நெளிய விடலாகா தென்பதே எனது கருத்து. (தொழிற்கட்சி ஏற்படும் வரை) தொழிலாளர் இயக்கத்தில் மிதவாதிகளும், தேசீய வாதிகளும், நடு வாதிகளும், பிற வாதிகளும் தலைப் பட்டு உழைக்கலாம். இவ்வாதிகள், அரசியல் மேடைகளில் காட்டிலுள்ள புலி, கரடி, சிங்கம், பசு முதலிய விலங்கு களைப்போல நடந்து கொள்வார்களாக. தொழிலாளர் மேடையில் அச்சகோதரர்கள், சர்க்க கூட்டத்திலுள்ள புலி, கரடி, சிங்கம், பசு முதலிய விலங்குகளைப்போல நடந்து கொள்வார்களாக. சீர்திருத்தமும் சட்டசபையும் சட்டசபையில் தொழிலாளர் இப்பொழுது நமது முயற்சியால் வழங்கப்பெற்றுள்ள சீர்திருத்தப்படி அமையப் போகுஞ் சட்டசபைகளில், நகரங் களில் வேலைசெய்யுந் தொழிலாளர்க்கென சில இருக்கைகள் விடப்பட வேண்டும் என்ற குறிப்பு, கூட்டுக் குழு அறிக்கையில் இருக்கிறது. திரு. மாண்டேகுவும், லார்ட் செம்பர்டும் இந்தியா முழுவதுஞ் சுற்றி, அறிக்கை செப்பஞ் செய்த போது, தொழிலாளரைப்பற்றி ஒன்றும் பொறிக்கவேயில்லை. சவுத்பரோ கூட்டத்தாரும் தொழிலாளர்மீது கவலை செலுத்த வில்லை. தொழிலாளர் பிரதிநிதியாக இங்கிலாந்து சென்ற திரு. பி. பி. வாடியா கூட்டுக்குழு (ஜாயின்ட் கமிட்டியின்) முன்னர்க் கூறிய சான்று, அக்குழுவினர் கருத்தை, இந்தியத் தொழிலாளர்மீது சிறிது பதிய வைத்தது. அவர், நகரத் தொழிலாளர்க்கெனச் சில இருக்கைகள் அரசாங்க நியமன முறையில் விடப்படவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார். அதை ஆதாரமாகக் கொண்டு, இப்பொழுது இராஜப்பிரதிநிதி பீடத்தில் வீற்றிருக்கும் செம்பர்டு பிரபு சென்ற முறை கூடிய இந்தியச் சட்ட சபையில் தமது முன்னுரையில், பம்பாயிலும் கல்கத்தாவிலும் தொழிலாளர் பிரதிநிதிகளாகச் சிலர் சட்டசபையில் நியமனம் பெறுவர் என்று பேசியிருக்கிறார். அவ்விரண்டு இடங்களிலும், தொழிற்சாலைகளும் - பஞ்சுச் சாலைகளும் - பிறசாலைகளும் - ஏராளமாக இருப்பதைக் காரணமாகவும் செம்பர்டு பிரபு எடுத்துக் காட்டியிருக்கிறார். பம்பாயிலும், வங்காளத்திலும் உள்ள அளவாக, நமது மாகாணத்தில் தொழிற்சாலைகள் இல்லை என்பது எவரும் ஒப்பமுடிந்த உண்மை. ஆனால், நமது மாகாணத்திலும் பலவிடங்களில் தொழிற்சாலைகள் இருப்பதையும், அவைகளில் இலட்சக்கணக்கான தொழிலாளர் உழைப்பதையும் செம்பர்டு பிரபு உணரார் போலும்! நமது மாகாண கவர்னராகிய வெல்லிங்டன் பிரபு, நமது மாகாணத்தின் தொழிலாளர் நிலையை, இராஜப் பிரதிநிதிக்குத் தெரிவித்து, நமது சட்ட சபையிலும், தொழிலாளர் பிரதிநிதிகள் இருக்கை பெறுமாறு முயல்வாரென்று நம்புகிறேன். நியமனம் கூடாது தொழிலாளர் பிரதிநிதிகள், அரசாங்கத்தால் நியமிக்கப் படுவதைப் பார்க்கிலும் அவர்கள் தேர்தல்மூலம் தெரிந் தெடுக்கப்படுதல் நலமென்று யான் கருதுகிறேன். அப்பொழுதே தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படும். நியமனத்தால் பெருநலம் விளையாதென்பது திண்ணம். புதுச் சீர்திருத்தப்படி அமையப்போகும் சட்ட சபையில் தொழிலாளர் பிரதிநிதிகள் இருக்கைகளைப்பற்றிச் சிறப்பாகவும், பிறவற்றைப்பற்றிப் பொதுவாகவும் உன்னி, முடிவுகாணக் கூடியுள்ள இம் மகாநாட்டின் தீர்மானங்களைத் தொழில் உலகம் பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. முடிவுரை சகோதரிகளே! சகோதரர்களே!! இவ்வளவு நேரம் பொறுமையோடு எனது சிற்றுரைக்குச் செவி சாய்த்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். உலக முழுவதும் தாண்டவம் புரிந்து வரும் நவசக்தி நமது நாட்டிலும் உதயமாகி விட்டாள். அவள் தாண்டவம் புரிய மன்றங்களைப் புதுக்குங்கள்; அத்தாண்ட வத்தை அநவரதமாகச் செய்யவேண்டிய பொறுப்பு உங்க ளிடத்திலிருக்கிறது. அவள் சிலம்பொலி இமயத்துக்கு எட்டுதல் வேண்டும்; கன்னியாகுமரிக்கு எட்டுதல் வேண்டும்; அவ்வொலி காங்கரஸிலும் நுழைதல் வேண்டும்; அவளை எல்லாக் கட்சித் தலைவர்களும் வழிபடல் வேண்டும். தலைவர்களே! உங்கள் வாதங்களை அரசியல் மேடை அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; பத்திரிகை அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் வீட்டளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; தொழிலாளர் சங்கங்கட்கு வருங்காலத்து மகாத்மா காந்தியைப்போல் வாருங்கள்; தொழிலாளர் முன்னேற்றம் நாட்டு முன்னேற்றம் என்று கருதி, ஒன்றுபட்டு உழைக்க வாருங்கள்; பல இடங்களில் தொழிலாளர் சங்கங் களைக் காணுங்கள். தொழிலாளர்களே! நீங்கள் ஒற்றுமையாகச் சங்கங்களை வளர்க்கப் பயிலுங்கள்; உங்களுக்குள் எத்தகைக் கட்சி வேற்றுமைகளும் வேண்டா; அரசியலைப் பயிலுங்கள்; அர சியல் கட்சிகளில் இதுபோழ்து தலையிடாதேயுங்கள். நீங்களே பாரததேவியின் கருவிகள். உங்கள் இயக்கமே நவசக்தி உதயம். உலகத்தில் ஏற்பட்டுள்ள பெருமை சிறுமைகளைப் பிடுங்கி எறிய வேண்டியவர்கள் நீங்களே; உயர்வு தாழ்வை ஒழிக்க வேண்டிய வர்கள் நீங்களே; கொடுமையைக் கெடுக்க வேண்டியவர்கள் நீங்களே; சமரசத்தை நிலைபெறுத்த வேண்டியவர்கள் நீங்களே; உலக சமாதானம் உங்கள் கையிலிருக்கிறது; உலகம் உங்கள் வழியே ஆடும்; உண்மையைப் பின்பற்றுங்கள்; அஞ்சாமையைக் கைவிடாதேயுங்கள்; பொறுமையைப் பயிலுங்கள்; தலைவர் களுக்குக் கீழ்ப்படியுங்கள்; வேலை நிறுத்தத்தில் வெறுப்புக் கொள்ளுங்கள்; நியாயத்தை நாடுங்கள்; தெய்வபக்தி தேசபக்தி வழுவாதிருங்கள்; மகாத்மா காந்தியை வழிபடுங்கள்; உங்க ளுக்குக் குணநலமுண்டாகும். இச் சிற்றுரைகளோடு ஈண்டுப் போந்துள்ள தலைவர், பிரதிநிதிகள், மற்ற நண்பர்கள் முதலியோரை அன்புடன் வரவேற்கிறேன். வந்தே மாதரம் 3-வது தமிழிசை மகாநாடு (சென்னையில் செயின்ட் மேரி மண்டபத்தில் கூடியது) - 1945-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் நாள் - திறப்புமொழி தோழர்களே! சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்நிலையத்தில் குழுமியுள்ள இவ் வரங்கத்தைத் திறக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பை எனக்கு வழங்கிய வரவேற்புக் கூட்டத்தார்க்கும், மற்றவர்க்கும் எனது நன்றியறிதல் உரியதாக. யான் இசையில் வல்லவனல்லன்; இசைப்பள்ளியில் பயின்றவனுமல்லன்; இசை இன்பத்தை ஓரளவில் துய்க்கும் பேறுடையேன். ஆதலின், இசைப்புலவோர் என்மீது அருள் சுரப்பாராக. மாண்பு மன்பதை நாட்டம் இக்கால உலகம் எக்காட்சி வழங்குகிறது? இக்கால உலகம் வெவ்விய பரபரப்புக்கும் - தீய கிளர்ச்சிக்கும் - இரத்தப் புரட்சிக் கும் இரையாகிவருதல் கண்கூடு. மன்பதையின் நாட்டம், இக லிலும் - பகையிலும் - போரிலும் - கொலையிலும் - கொலைக் கருவியிலும் - சென்றுழலல் வெள்ளிடைமலை. இந்நிலை மாறு தல் வேண்டுமென்று முழங்காத அறிஞர் இல்லை. இசையும் சீர்திருத்தமும் மாறுதற்குரிய வழி என்னை? வழிகள் பலவாறு கூறப் படுகின்றன. ஈண்டு ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமென்று தோன்றுகிறது. அவ்வொன்று எது? அஃது இசை - இசை. இசைவழி இக்காலக் கோர உலகைச் சீர்செய்தல் கூடும். விடுதலை மனிதன் குரங்கினின்றும் தோன்றியவன். அதனால் அவன் குரங்கியல்பினின்றும் இன்னும் முற்றும் விடுதலையடைந் தானில்லை. விடுதலைக்கென்று மனிதப் பிறவியில் பகுத்தறிவு விளங்கியது. பகுத்தறிவால் மனிதன் தன்னைப் பண்படுத்தித் தெய்வநிலை எய்த உழைத்தல் வேண்டும். உழைப்பால் தெய்வநிலை எய்தியவர் சிலர் உளர். அவர் சான்றோர் எனப்படுவர். அச்சான்றோர் வாயிலாக இயற்கை அன்னை தன் கலைகளை விரித்தனள். இசைக்கலை கலைகள் பலதிறத்தன. அவைகளுள் விழுமியது இசைக் கலை. இக்கலை எல்லாக் கலைகளிலுங் கலந்தும் தனித்தும் இயங்கும் பெற்றி வாய்ந்தது. இதனால் இது விழுமியதாகிறது. இசைக்கலை இயங்குமிடத்தில் பிற கலைகளின் மணம் ஒரோ வழியாதல் கமழாமற் போகாது. இத்தகைய இசைக் கலையை மற்றக் கலைகளின் உயிர்நாடி என்று சொல்வது தவறாகாது. மனிதன்பாலுள்ள குரங்கியல்பைச் செகுத்து, அவ் விடத்தில் தெய்வ இயல்பை அரும்பச் செய்யும் ஆற்றல் கலைகளின் உயிர்நாடியாகிய இசைக்கு உண்டு என்று அறுதி யிட்டுக் கூறலாம். இதற்குக் கண்ணன் குழலிசையும், ஆனாயர் குழலிசையும், பாணர் யாழிசையும் சான்று பகரும். குரங்கும் இசையும் ஓர் அழகிய பூம்பொழில்; அதில் சில குரங்குகள் புகுந்தன. குரங்குச் சேட்டைகள் வாளாகிடக்குமோ? அவை பொழிலைச் சூறையாடத் தொடங்கின. அந்நிலையில் பொழிலின் ஒரு பாங்கர் ஒரு குயில் தனது இனிய குரலெடுத்துப் பாடியது. அப்பாடல் ஆண்டு உலவிய ஒரு மயிலைத் தன் கலாபம் விரித்து ஆடுமாறு உந்தியது. அப்பொழுது அப்பாங்கர் இரண்டு குரங்கு கள் பாய்ந்து ஓடின. அவற்றின் ஓட்டம் திடீரெனத் தடைப் பட்டது. ஓட்டம் நடையாயிற்று; நடை மெலிந்தது. குரங்குகள் நின்றன; அசைவற நின்றன; கால்கள் நீட்டிப்படுத்தன. அவற்றின் புலன்கள் ஒன்றின; சேட்டைகள் ஒடுங்கின. குரங்குகள் ஆடல் பாடலில் திளைத்தன. மற்றக் குரங்குகளும் ஆண்டுப் போந்து அந்நிலை எய்தின. இக்காட்சி, சீத்தலைச் சாத்தனார், திருஞான சம்பந்தர் முதலிய தமிழ்ப் பாவாணர்க்கு விருந்தாயிற்று. அவ் விருந்தமுதம் இன்றும் அவர்தம் தமிழ்ப் பாக்களில் புத்தம் புதியதாய்த் தேங்கி நிற்கிறது. குரங்கின் குறும்புகளைத் தகர்த்து எறியும் ஆற்றல்வாய்ந்த இசைக் கலைக்கு, மனிதக் குரங்கின் குறும்புகளை நீறாக்கும் வல்லமை இராதோ? இசைக்கலை மன்பதையில் இன்னும் நன்முறையில் படிந்து பரவவில்லை. அக்கலை ஒரோவழிப் படிந்து பரவியுள்ளது. அது செவ்வனே படிந்து பரவினால் மனிதனது குரங்கியல்பு மாயும்; அவன்பால் தெய்வச் சாந்த இயல்பு அரும்பும். இம்மாறுதல் நிகழ்த்த இயற்கை அன்னை வீறுகிறாள்; கலைகள் விரை கின்றன; அவ்வீறும் இவ்விரைவும் ஒன்றிச் செயலிற் பரிணமிக்க மக்களின் பகுத்தறிவுத் துணை தேவை. அணிமையில் பகுத்தறிவு கிளர்ந்து மதர்க்கும் நாள் சேய்மையிலில்லை; அணிமையி லிருக்கிறது. இதனை உலக நிகழ்ச்சி கொண்டு ஊகித்துணரலாம். அணுகுண்டும், வெஞ்சுடர்க்கதிரும், இன்ன பிறவும் மனிதனைப் பலவழியிலும் அலைத்து அலைத்து, அவனது பகுத்தறிவை நல்வழியிற் பயன்படுத்துமாறு கடவியே தீரும். அணுகுண்டு முதலியன மனிதனது குரங்கியல்பைக் குலைத்து, அவன்மாட்டுத் தெய்வ இயல்பை அரும்பச் செய்யத் தோன்றின என்று அறைதல் மிகையாகாது. இக்கால உலகைப் பண்படுத்தப் பலதிறமுயற்சிகள் எழுகின்றன. அம்முயற்சிகளுள் இசைக்கலைக்கு ஆக்கந் தேடு வது தலையாயதா யிருத்தல்வேண்டும். இல்லையேல் விளையத் தக்க பயன் விளையாது. இசையும் மொழியும் நாதம் இசையின் முதன்மை எது? நாதம் என்று தத்துவர் கூறுவர். பலவகைத் தத்துவ உலகங்களெல்லாம் தோன்றுதற்கும், மீண்டும் அவை ஒடுங்குதற்கும் நிலைக்களனாயிருப்பது நாதம். நாதத்துக்கு மேல் விளங்குவது தூய அறிவாகிய பரம். அப் பரத்தின்வழி நாதம் இயங்கும். நாதம் பரத்துக்கு அணித்தே திகழ்தலால், அது நாத பிரமமென்றும், சப்த பிரமமென்றும் வழங்கப்படுகிறது. நாதத்தின் வண்ணம் என்னை? இசை. இதனால் இசையின் முதன்மை, நாதம் என்று சான்றோர் அருளிச் சென்றனர். நாதம் இசைமூலம் என்பதை யோக நூல்களிலுங் காணலாம்; முயன் றால் அநுபவத்திலும் உணரலாம். நாதம் மொழியற்றது நாதத்துக்கு மொழியுண்டோ? இல்லை. நாதம் இசை வண்ணமாய் முழங்குகிறது. அம்முழக்கம் மொழி கடந்த ஒன்று. மொழியற்ற நாதம், மனிதனது கருவி கரணங்களை அரணாக் கொண்டு, தடித்துத் தடித்து, நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பலப்பல மொழிகளாகிறது. இதைப்பற்றிய விரிவுரை ஈண்டைக்கு வேண்டுவதில்லை. நாத - இசை மொழியற்றது என்பதொன்றே ஈண்டு உன்னத்தக்கது. நுண்மை - பருமை நுண்மை - பருமை என்றொரு வழக்கு உண்டு. நுண்மை தனது உண்மையைத் தனித்து உணர்த்தும் பான்மையதன்று. அது தனது உண்மையைப் பருமை வழியே வெளிப்படுத்தும் இயல்புடையது. அழகு நுண்மை. இஃது ஒருவர் வாயிலாகவே தனது இருப்பைத் தெரிவிக்கும். இவ்வாறே அறிவு, அன்பு, அறம், நீதி முதலிய நுண்மைகளும் ஒவ்வொரு பருமை மூலம் தன் தன் இருப்பைப் புலப்படுத்தும். நுண்மை - பருமை என்பன உயிர் - உடல் போன்றன. இசையும் மொழியும் இசை நுண்மை; உயிர். இதன் விளக்கத்துக்கு ஒரு பருமை உடல் தேவையன்றோ? அப்பருமை உடலே மொழி என்பது. மொழி எனில் எம்மொழி? அவ்வந்நாட்டில் இயற்கையா யமைந்துள்ள தாய்மொழி என்க. தமிழனுக்கு நாம் தமிழர். நாம் எம்மொழியில் இசையைப் பாடுதல் வேண்டும்? தமிழ் மொழியில் என்று சொல்லலும் வேண்டுமோ? தமிழனுக்குத் தமிழ்ப்பாட்டே சுவைக்கும். மற்ற மற்றவர்க்கு அவ ரவர் மொழிப்பாட்டே சுவைக்கும். இஃது இயற்கை. இசையில் மொழிப்போரை நுழைப்பது அநாகரிகம். பகைமையைப் போக்க எழுந்த ஒரு கலையினிடைப் பகைமையைப் புகுத்துவது அறியாமை. பழந்தமிழர் வாழ்க்கை இயற்கையோடியைந்தது. அவர் தம் வாழ்க்கை, இயற்கைத் தமிழ் - இனிமை - உடையதாயிற்று. இயற்கைத்தமிழ் - இனிமை - அவர்தம் மொழியாயிற்று. தமிழ் என்றால் என்ன? இனிமையன்றோ? தமிழ் இனிமை; இசையும் இனிமை. இரண்டினிமையும் ஒன்றுபட்டால் எத்தகைய இன்பம் சுரக்கும்! தமிழிசையின் மாண்பு என்னே! என்னே! தமிழர் திருவே திரு. இயக்கம் தமிழ் இசை நிலையம் தமிழிசை தொன்மை வாய்ந்தது; மிகத்தொன்மை வாய்ந்தது. அவ்விசை எந்நாளில் தோன்றியது - வளர்ந்தது - முதிர்ந்தது என்று அறுதியிட்டுக் கூறல் இயலவில்லை. அது சரித்திர காலத்தையுங் கடந்து நிற்பது. பலநாட்டவர் இசை நுட்பம் இன்னதென்று தெரியாது திரிந்த காலத்தில், தமிழ் நாட்டவர் இசை நுட்பத்தைச் செவ்வனே தெளிந் திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பலபடக் கிடக்கின்றன. தமிழர் கோயில் களும், மறைகளும், காவியங்களும், ஓவியங்களும், பிறவும் எடுத்துக் காட்டுகளாக இலங்குகின்றன. தமிழ் நாடே ஓர் இசை நிலையம் என்று சுருங்கச் சொல்லலாம். தமிழிசை இயக்கம் தமிழ்நாடு கலைக்கூடமாய்ப் பொலிந்த காலமும் உண்டு. இது பண்டைப் பெருமை. தமிழ்நாடு இந்நாளில் உற்றுள்ள நிலையை விரித்துக் கூற நாவெழவில்லை. பிற்காலத்தில் தமிழ்நாடு பல கலைகளை இழந்தது; இசைக் கலைகளில் பல கூறுகளை இழந்தது; பொல்லா விலங்குகளையும் வயப்படுத்த வல்ல யாழை இழந்தது. பலப்பல இழவுகளை நினைக்க நினைக்க அழுகை பெருகும். இங்கே அழுகை எற்றுக்கு? தமிழ்நாடு தனது பெரும் பெருஞ் செல்வங்களை இழந்துவிட்டது. இது பிற்காலத் தமிழ் மக்களின் கவலை ஈனத்தால் விளைந்தது. இந்நாளில் - இவ்வறிய நாளில் - கலைகளின் உயிர்நாடியாகிய இசைக் கலைக்கு ஆக்கந்தேடத் தமிழிசை இயக்கம் காணப்பட்டது. இது கழிபேருவகை யூட்டுகிறது. தமிழிசை இயக்கங் கண்டு, அதன் ஆக்கத்துக்கென்று ஓயாது உழைத்துவரும் ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார், தென்காசி சிதம்பரநாத முதலியார், ஸர். ஆர். கே. சண்முகஞ் செட்டியார், சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்ட தமிழ்ப் பெருமக்க ளுக்குத் தமிழ்நாடு கடமைப்படுவதாக. தமிழிசை இயக்கம் காலத்துக்கேற்றது. அஃது ஓங்கி வளர்க. தமிழிசை இயக்கம் தோன்றியதும் நாட்டிடைத் தமிழிசை வேட்கை முருகி எழுந்தது. எழுச்சி போற்றற்குரியதே. எழுந்த வேட்கை நேரியமுறையில் உருக்கொண்டு செயற்பட்டால் நலன் விளையும். தொகையும் தொண்டும் தமிழ் நாட்டில் ஆங்காங்கே இசை மன்றங்கள் தோன்றி யுள்ளன. இன்னும் பல மன்றங்கள் தோன்றலாம். தொகைப் பெருக்கம் மட்டும் போதாது; தொண்டுப் பெருக்கமும் வேண் டும். மன்றங்கள் வெறும் விளம்பரக் கூடங்களாதல் கூடாது. அவற்றில் ஆவேசம், வெறி, வகுப்புப் பிணக்கு, மொழிப் பூசல், கட்சிப் போர் முதலிய பேய்கள் நடம்புரிதலாகாது. பேய்க் கூத்தால் இசை ஆக்கம்பெறாது; வசையே ஆக்கம் பெறும். சில மன்றங்கள் திங்கட்கொருமுறை விழித்து இசை விருந்துண்டு தூங்கிவிடுகின்றன; சில ஆண்டுக்கொருமுறை விழித்து விழா நிகழ்த்தி உறங்கிவிடுகின்றன; சில கும்பகர்ண னுக்குத் துணைபோகின்றன. சோம்பல் ஒழிக; சுறு சுறுப்பு எழுக. ஒவ்வொரு மன்றமும் இசைப் பயிற்சிப் பள்ளியாதல் விழுப்பம்; பிரசாரக் கழகமாதல் சிறப்பு; நூல் வெளியீட்டு நிலையமாதல் நல்லது. மன்றச் சார்பில் பந்தாட்டம் முதலியன நடைபெறலாம்; கலை ஆராய்ச்சிகள் நிகழலாம்; புதுமை காணவும் முயலலாம். கோயில் நமது நாட்டிற் கலைகளை வளர்ப்பதற்கென்று காணப் பெற்ற நிலையங்கள் பலப்பல. அவற்றுள் சிறந்தது கோயில். கோயில் வெறுங்கட்டடமன்று. அது பல்கலைக் கூடம்; இசைக் கழகம். மாற்றம் இப்பொழுது கோயில் எப்படிப் பெரிதுங் கொள்ளப்படு கிறது? மக்கள் மனோ நிலை மாறியது. கலைக்கண்ணும் இசைச் செவியும் உலுத்தன. கண்ணையும் செவியையும் புதுக்கல் வேண்டும். அவைகளை மடங்கள் புதுக்குமா? பல்கலைக் கழகங் கள் புதுக்குமா? அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் புதுக்குமா? தமிழிசை இயக்கம் புதுக்குவதாக. கோயில்களில் ஆடல்பாடல் நிகழுமாறு பலமுறைகள் கலைஞானிகளால் கோலப்பட்டன. அம் முறைகளின் கதி என்னவாயிற்று? அந்தோ! ஆடல் அழுகியது; பாடல் பாழாயிற்று. ஆடலும் பாடலும் வெறுங் களியாட்டல்ல. அவை செந்நெறி கூட்டவல்லன. இவ்வுட் கிடக்கையைப் பொதுவாகத் தமிழ்மறைகளிலும், சிறப் பாகத் திருஞானசம்பந்தர் தமிழ் மறையிலுங் காணலாம். திருஞானசம்பந்தரை முத்தமிழ்க் கண்கொண்டு நோக்குதல் வேண்டும்; வேறு கண்கொண்டு நோக்கினால் அவர்தம் உள்ளம் எளிதில் புலனாகாது. முத்தமிழ் திருஞானசம்பந்தர், இறைவனை, இயல் - இசை - நாடக மாக்கித் தமிழில் தந்த பெரியார். அவர் தமிழ்த் தோன்றல் - முத்தமிழ் விரகர். உள்ளத்தில் இறைமையும், வாயில் பண்ணும், கையில் தாளமும், காலில் நடமுங் கொண்ட ஓர் இசைக் கலை திருஞானசம்பந்தம். அக்கலை அறிவுறுத்திய ஆடலும் பாட லுங்கொண்ட இசைநெறி செந்நெறிக்கு மாறுபட்டதென்று சமயவாதிகள் நினைக்குங் காலமுந் தோன்றியுள்ளது! வெட்கம்! வெட்கம்!! திவ்வியப் பிரபந்தம் பண்மயமான தெய்வத் திவ்வியப்பிரபந்தம் கோயில்களில் எம்முறையில் ஓதப்படுகிறது? கொலை - கொலை - இசைக் கொலை கோயில்களில் நடைபெறுகிறது! கலைநாடு கொலை நாடாகியது. இசை நாடு வசை நாடாகியது. கோயில் பழையபடி கலைக் கூடமாக - இசைக் கழகமாக - தமிழிசைச் சங்கத்தார் உழைப்பரென்று நாடு எதிர்பார்க்கிறது. தமிழ்மறை ஓதுவோர் இசை பயில்வது நலம். தமிழிசைச் சங்கத்தார் வலிந்தேனும் அவர்க்கு இசை போதிக்க முந்துவது சிறப்பு. இக்காலச் சங்கீத வித்துவான்களிற் பலர், தமிழ் மறை ஏழிசைக்கு முற்றும் ஒத்துவாராது என்று ஒதுங்குகின்றனர். இவ்வொதுக்கம் இசையை ஒதுக்குவதாகும். தமிழ்மறையும் இசையும் தமிழ்மறை இசைக் களஞ்சியம். இவ்வுண்மை, உழைப்பால் விளங்கும், காலஞ் சென்ற இசைஞாயிறு - காஞ்சி - சுப்பிர மணியம் பிள்ளை (நயினாபிள்ளை) உள்ளிட்ட இசைப்புலவோர் தமிழ் மறைகளை இசைபடப் பாடிக் காட்டியது எனது நினைவி லுறுகிறது. சங்கீத வித்துவான்களைத் தமிழ் மறைமீது கருத்துச் செலுத்துமாறு அன்பால் அவர்களை முடுக்கியேனும் தமிழிசைக் கழகத்தார் தொண்டாற்றுதல் அறம். ஆசிரியன் எல்லாம் இசை இசை யாண்டுங் கலந்தும் தனித்தும் இயங்கும் இயல் புடையது என்று முன்னே குறிப்பிட்டேன். அதை ஈண்டு மீண்டும் நினைப்பூட்டுகிறேன். அரங்கில் பல்லியங்களுடன் - முகடுமுட்ட - வாய் திறந்து வீறிடுவதுமட்டும் இசையாகாது. இசை விரிந்த பொருளுடையது. இசை எங்கணும் பரந்து நிற்பது. இறை இசை; இயற்கை இசை; இயற்கைக்கூறுகள் இசை; காவிய ஓவியங்கள் இசை. எல்லாம் இசை; யாவும் இசை. எங்கணும் இசையின்பத்தைப் பருகுவோனே புலவன்; இசைப் புலவன். அவனே ஞானி; மெய்ஞ்ஞானி. ஓவியம் எங்கணும் இசையைப் பருகும் புலமை பெறுதற்குரிய வழி என்னை? துறை என்ன? பல வழிகளுண்டு; பல துறைகளுண்டு. ஈண்டு ஒன்றைச் சிறப்பாகக் குறிக்க விரும்புகிறேன். அஃது ஓவியம். ஊமை ஓவியமா எங்கணுமுள்ள இசையை உணர்த்தும்? நன்று! e‹W! என்று எள்ளி நகையாடுவோரும் இருப்பர். அவ்வெள்ளலையும் நகையையும் மாற்றவேண்டுவது தமிழிசைச் சங்கத்தின் கடமைகளுள் ஒன்று. ஓவியம் ஊமையா? ஓவியத்தை ஊமை என்று கருதுவோர் கண்ணுள்ள குருடராவர்; காதுள்ள செவிடராவர்; நாவுள்ள ஊமையராவர். ஓவியம் ஊமையன்று. அது பேசாமற் பேசுவது. அப்பேச்சின் பொருளுணர்வோன் கலைஞனாவன்; இசைக் கலைஞனாவன். ஓவியம் ஒரு பெரும் ஆசிரியன். ஓவியப் பள்ளியிற் பயிலப் பயில நமது பேச்சு அடங்கும்; ஓவிய இசை கேட்கும். ஓவியம் நம்மை ஊமையாக்கும். விரிவஞ்சி இவ்வளவில் நின்று மேற் செல்கிறேன். ஓவியமும் இசையும் இசைப் புலமைக்கு ஓவிய உணர்வு இன்றியமையாதது. ஓவிய உணர்வு பெருகப் பெருக இசைப்புலமையும் உடன் உடன் பெருகிக்கொண்டே போகும். நாளடைவில் ஓவியம் இசையைப் பொழிதல் புலனாகும். ஓவிய இசை ஒழுக்கை என்னென்று புகல்வேன்! அருகரின் அருள் ஓவியத்தையும், புத்தரின் அற ஓவியத்தையும், கண்ணனின் குழல் ஓவியத்தையும், கிறிதுவின் சிலுவை ஓவியத்தையும், தட்சணாமூர்த்தியின் மோன ஓவியத்தையும் நோக்குவோம்; உற்று நோக்குவோம்; முன்னு வோம். என்னே இசைப்பொழிவு! இசைப் பெருக்கு! இசை அமுதம்! ஓவிய உணர்வுபெற்ற இசைஞானியர்க்கும், அவ்வுணர்வு பெறாத இசைஞர்க்கும் வேற்றுமை உண்டு. அவ்வேற்றுமையை எப்படி உணர்வது? அடைவால் உணரலாம். முன்னவர் உடை யின்றி நிர்வாணியாய் ஆடினும் பாடினும் மனிதர் உள்ளத்தில் தீய எண்ணம் எழாது; அமைதி இன்பமே நிலவும். பின்னவர் நல்லாடை புனைந்து ஒப்பனை செய்து ஆடினும் பாடினும் தீய எண்ணம் ஆர்க்கும். அமைதி தலைகாட்டவும் அஞ்சும். இசை யின் நோக்கம் மனிதனிடத்தில் தெய்வச் சாந்த சீலத்தை முகிழ்விப்பதா யிருத்தல்வேண்டும். கேடு கீர்த்தனை தமிழ்நாடு விருந்தோம்புவதில் பேர்பெற்றது. எவ்வகைத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது. இதனைத் தமிழிசைச் சங்கம் உணர்ந்திருக்குமென்று நம்புகிறேன். கீர்த்தனை தமிழ்நாட்டில் கால்வைத்ததும், அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப் பட்டன. அந்நாளில் பெரும் பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத் தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெரும் பெருஞ் சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின. இந்நாளில் அரிகளின் தொகை சுருங்கியது; நரிகளின் தொகை பெருகியது. கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப் படுகின்றன. அவ்வணியைத் தாங்கல் அவைகளால் இயல வில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிதுநேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறிவிடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு? இசையின் உள்ளம் இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது? புலன்களின் புறத்தளவில் நின்று பொன்றுதற்கா அஃது அமைந்தது? இல்லை. புலன்களின் வழியே புகுந்து, கோளுக் குரிய புறமனத்தை வீழ்த்தி, குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து, அமைதியின்பத்தை நிலை பெறுத்தற்கென்று இசைப் பாட்டு இயற்கையில் அமைந்தது. இஃது இசைப்பாட்டின் உள்ளக்கிடக்கை. இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது. கலையற்ற சிறுமைக் கீர்த்தனைகளால் இசைக்கே இழுக்கு நேர்ந்தது. இவ்விழுக்கைப் போக்க இசைப்புலவோர் தெய்வக் கலைஞரின் இசைப்பாக்களுடன் உறவு கொள்வாராக. அவர் உறவு கொள்ளத் தமிழிசை இயக்கத்தின் துணையுந் தேவை. இசை வழியே தமிழ்பாக்களைப் போதிப்பது மரபு. இம்மரபு இதுகாலை வீழ்ந்துபட்டு வருகிறது. மரபைக் காக்க வேண்டுவது தமிழ் ஆசிரியன் மார் கடமை. இக்காலத் தமிழ் ஆசிரியன்மார் சிலர் பாக்களைப் பாடி உரை கூற நாணுகின்ற னர்; சிலர் தமக்கு இசைஞானமில்லையே என்று வருந்து கின்றனர். நாணமும் வருத்தமும் மரபை அழிக்குமே! பின்னே கண்ணீர் உகுப்பதால் என்ன பயன்? பிறவியில் இசையற்றதொன்றில்லை என்பது அறிஞர் கொள்கை. அமைப்பில் சில வேற்றுமைகள் உறலாம். நல்லிசைப் புலமை சிலர்க்கு வாய்க்கும்; சிலர்க்கு வாய்ப்பதில்லை. எல் லார்க்கும் நாதசுரம் அமையுமா? சிலர்க்குக் காகசுரமும் அமையும். கழுதைக் குரலிலும் ஒருவித இசையுண்டு என்று புலவர்க்கு விளக்க வேண்டுவதில்லை. ஆகலின், எச்சுரத்தா லாதல் - எக்குரலாலாதல் - பாக்களைப் பாடிப் பொருள் கூறுமாறு தமிழ் ஆசிரியன்மாரை வேண்டுகிறேன். தமிழ்நாடு ஒருமைக்கு இசை தமிழ்நாடு இதுபோழ்து வழங்குங்காட்சி இரங்கத்தக்கதா யிருக்கிறது. ஒருசிறு நிலத்துள் எத்துணை வகுப்பு! எத்துணைப் பிளவு! எத்துணைப் பிணக்கு! தமிழ்நிலம் பழையபடி ஒருமைத் தமிழ் நாடாதல் வேண்டும். ஒருமையைக் கோல வல்லது இசை. இசையை - தமிழ் இசையை - ஓம்ப முனைந் துள்ள தமிழிசை இயக்கம், தமிழ் மக்களின் ஒருமைப் பாட்டுக் கும் உழைப்பதைத் தனக்குரிய முன்னணி வேலைகளுள் ஒன்றாகக் கொண்டிருக்குமென்று நினைக்கிறேன். சென்னைத் தமிழிசைச் சங்கம் மூன்றாண்டுக் குழவி. அதை நன்முறையில் ஓம்பிய அனைவர்க்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன்; அஃது ஓங்கி ஓங்கி வளர ஆண்டவனை வழுத்துகிறேன். மூன்றாண்டில் சென்னைத் தமிழிசைச் சங்கம் தன்னா லியன்ற பணிகளை ஆற்றியுள்ளது; நாட்டை விழிக்கச் செய்தது. இன்னும் பல பணிகளை ஆற்றச் சங்கம் விரைகிறது. பொது மக்கள் கூட்டரவு தேவை. பொதுமக்கள் கூட்டரவால் சங்கஞ் செயற்கருஞ் செயல்களை நிகழ்த்தல் கூடும். பொதுமக்கள் தமிழிசைச் சங்கத்தை வளர்க்க முந்துவார்களாக. தோழர்களே! உங்கள் காலம் அரியது. இன்னும் பல கூற என்மனம் ஒருப்படவில்லை. இவ்வளவில் நிற்க எண்ணுகிறேன். எனது சிறுமையுரையை இதுகாறும் பொறுமையுடன் கேட்ட உங்கட்கும், சங்கத்தார்க்கும், மற்றவர்க்கும் எனது வணக்கம் உரியதாக. இச்சிறு மொழியுடன் ஏழிசையாய் இசைப் பயனாயுள்ள இறைவன் திருவருளை முன்னிறுத்தி இவ் வரங்கத்தைத் திறக்கும் பணியாற்றுகிறேன். பிழை பொறுக்க. தமிழ் வாழ்க! தமிழிசை வெல்க! பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்தாரே சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூ ரம்மான்றன் வேட நெறிநில்லா வேடமும் வேடமே பண்ணியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதி ஈச்சுரம் பாடுநாவே தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிடம்... பண்ணின் மொழிசொல்ல விண்ணுந் தமதாமே பண்ணிய னடத்தொ டிசைபாடு மடியார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பண்புனை பாடல் பயில்வார் பாவமிலாதவர் தாமே பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள் தம் எண்ணமர் சிந்தையினான் நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால் தோளினொடு கைகுளிரவே தொழும வர்க்கருள் செய்சோதி கீதமொடு நீதிபல ஓதிமற வாதுபயில் நாதன்நகர் தான் கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார் மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான் பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின் றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே - முத்தமிழ் விரகன் ஆக்கூர் பாரதி சங்கம் பத்தாம் ஆண்டு விழா (29-9-1946) தோழர்களே! திரு ஆக்கூர் பேர்பெற்ற பழம்பதி; பண்டைச் சரித்திரத் தில் பதிந்து கிடக்கும் ஒரு நல்லூர். இவ்வூர்க்கண், பழமைக்குப் புத்துயிரளித்த சுப்பிரமணிய பாரதியார் பெயரால் ஒரு சங்கம் வளர்ந்து வருவது மகிழ்ச்சியூட்டுகிறது. இச்சங்கத்தின் 10-ஆம் ஆண்டு விழாவிற்கு எனது தலைமையை விழைந்த சங்கத் தார்க்கும், மற்றவர்க்கும், சிறப்பாக உழுவலன்பரும் கெழுதகை நண்பருமாகிய திரு. மகம்மது ஷரீப் அவர்கட்கும் எனது நன்றியறிதல் உரியதாக. இளமை - முதுமை இக்காலம் இளமையை விரும்புவது. யானோ முதுமை யுடையவன். என் பேச்சில் இளமை மணமும் வீறும் கமழ்ந்து மதர்த்துக்கொழிக்குங்கொல்! முதுமை இளமையைக் கண்டது; கடந்தது. இளமை முதுமையில் ஒடுங்கி ஒன்றுவது. ஆகவே, யான் இளைய முதியனாய் நின்று கடனாற்றப் புகுகிறேன். பாட்டுக் கடல் தமிழ்நாடு ஒருபெரும் பாட்டுக்கடல். அதினின்றும் திரண்டெழுந்த அமிழ்தம் நம் பாரதியார். அவர்தம் தமிழ் அமிழ்தம் நாட்டுக்கு உயிர்ப்பு வழங்கிவருதல் கண்கூடு. பாரதியார் குறிக்கோள் பாரதியார் எந் நோக்குக் கென்று வாழ்ந்தார்? அவரது குறிக்கோள் என்னை? பாரதியார் தாய்மொழிக்கென்று - நாட்டுக்கென்று - உலகுக்கென்று - எல்லாவற்றிற்கும் அடிப் படையாய் விழுமியதாய் உள்ள இறைநெறிக்கென்று - வாழ்ந் தார். அவரது குறிக்கோள் விடுதலை. தமிழ்ப் பண்பு உலகில் பலதிற மொழிகள் உள்ளன. அவற்றுள் இனியது எது? நம் தாய்மொழியாகிய தமிழ் என்று உலகங் கூறும். இதற்கு விளக்கம் இங்கே வேண்டுவதில்லை. தன்பால் உறவுகொள்ளும் எவரையும் தன்வயப்படுத்தும் பண்பு தமிழ் இனிமைக்கு உண்டு. தமிழ் - பெகி, போப், கால்டுவெல் முதலியோரைத் தன்வயப் படுத்தியதை ஈண்டுக் குறித்தல் சாலும். தமிழினிமை நுகர்ந்து, தமிழாகிய புலவோர், தமிழ் இரும்பை உருக்கு மென்றும், கல்லைக் கனிவிக்குமென்றும், பாலையைப் பாற்கடலாக்கு மென்றும், புலியைப் பசுவாக்கு மென்றும் முழங்கியது கருதற்பாலது. பாரதியார் பொங்கல் பாரதியார் தமிழர்; தமிழ்த்தேனை மாந்தியவர். இனிமை அவர் உள்ளத்தினின்றும் பொங்கியது. அப்பொங்கல் செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் - தேன்வந்து பாயுது காதினிலே என்றும், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் என்றும், பகைவனுக்கு அருள் நெஞ்சே என்றும் ஆர்த்து ஆர்த்து வழிந்தது. தமிழ் இனிமை பாரதியார் பாடலாகத் தேங்கியது என்று கூறல் மிகையாகாது. வாழ்வுச் செல்வம் வாழ்வுக்கு இனிமை தேவை. இனிமை என்னும் தமிழ் வழங்கும் நாட்டில் நாம் பிறந்தோம். இப்பிறப்புடன் தமிழ்க் கலைச் சிறப்பும் ஒன்றுதல் வேண்டும். ஒன்றினால் மக்கள் மன மொழி மெய்களால் தமிழராதல் கூடும். இத்தமிழர் உள்ளத்தில் தீமை செறியுமோ? அவர் உள்ளம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலிய மாசுகளைக் கடந்து நிற்கும். மன மாசற்றால் அந்தண்மையும் செந்தண்மையும் வாழ்வுச் செல்வ மாதல் ஒருதலை. பாரதியார் முயற்சி இவ்விழுச் செல்வம் ஒருபோது தமிழ்நாட்டில் மலிந்து கிடந்தது. அம்மலிவு, யாதும் ஊரே யாவருங் கேளிர் என்பது போன்ற (பொதுமை) அறமொழிகளாகப் பரிணமித்தது. திருக்குறள் என்னும் தமிழ் நூல் தமிழ்ச் செல்வத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாய் இலங்குகிறது. இத்தகைய தமிழ்நாடு இந்நாளில் எந்நிலையுற்றுள்ளது? கொடுமை! கொடுமை! அந்நிலையைத் தமிழால் விரிக்க என் மனம் எழவில்லை. எங்கணும் எரிபகை - நஞ்சு! இந்நிலைமை யுற்றதற்குக் காரண மென்னை? தமிழ் இயற்கைக்கு மாறுபட்ட வழக்க ஒழுக்கங் களும், ஆட்சி முறையும், இன்ன பிறவும் நாட்டில் நுழைந்தமை என்று சுருங்கச் சொல்லலாம். இச் செயற்கைகளைத் தமிழால் - தமிழ்ப் பாட்டால் - போக்க முயன்றவர் சிலர். அவருள் இங்கே குறிக்கத்தக்கவர் பாரதியார். அவர் வாழ்க; அவர்தம் முயற்சி வெல்க. கிராம நிலை மக்களின் இனிய வாழ்க்கைக்குத் தாயகம் கிராமம். கிராமமே நாட்டின் உயிர்நாடி. உயிர் நாடியாகிய கிராம வாழ்க்கை பின்னாளில் வீழ்ந்துபட்டது. ஏகாதிபத்திய ஆட்சி, சுரண்டல், நகர அமைப்பு, போலி நாகரிக மோகம், இன்னபிற கிராம வாழ்க்கைக்குக் கேடு சூழ்ந்தன. இந்நாளில் கிராமம் சவலையுற்றுக் கிடத்தல் வெள்ளிடைமலை. கிராமச் சவலை நாட்டின் சவலையாயிற்று. மீண்டும் கிராமம் உயிர்த்தெழ முயற்சி செய்ய வேண்டுவது நம் பெருங்கடமை. பொதுமை பழங்காலத்தில் கிராமம் கிராமத்தார் உடைமையா யிருந்தது. இப்பொதுமை மக்களுக்குள் கூட்டுறவையும் சகோதர நேயத்தையும் வளர்த்து வந்தது. பின்னே கிராமப் பொதுமை, தனிமைக்கு இரையாயிற்று. தனிமை, கூட்டுறவையும், சகோதர நேயத்தையும் சாய்த்தது. இச்சாய்வு பிணக்கு, பூசல், பகைமை முதலியவற்றைப் பெருக்கிற்று. ஆகவே, மீண்டும் கிராமத்துள் பொதுமை அறம் கோயில் கொள்ளல்வேண்டும். அதற்குரிய முயற்சி எழுவதாக. கல்வி கல்வி வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அக்கல்வி முறை இப்பொழுது எப்படி இருக்கிறது? வாழ்க்கைக்கும் கல்வி முறைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. வாழ்க்கைக்குப் பயன் தாராத கல்வி போதிக்கப்படுகிறது. இம்முறை மாறி வாழ்க்கைக்கு நலம் விளைக்கத் தக்க கல்வியைப் பரப்ப முயல்வோமாக. கலை முன்னாளில் நமது நாட்டில் பலதிறக் கலைகள் தோன்றின. அவை இயல் இசை நாடகம் என்ற பெயரால் வளர்ந்தன. நமது பழங்கலைகளோடு இக்கால விஞ்ஞானக் கலையும் சேர்ந்து வளர்தல் நல்லது. விஞ்ஞானக் கலையைப் பாரதியார் புத்தம் புதிய கலை என்றார். விஞ்ஞானம் நாட்டின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிச் செல்கிறது. அதற்கேற்றவாறு விளைவு பெருகுகிறதா? இல்லை. இதனால் நாட்டிடைப் பலதிறத் தொல்லைகள் தோன்றி யுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எந்த ஏற்றங் கொண்டு இறைத்தோமோ அதே ஏற்றங்கொண்டு இப்போதும் இறைக்கிறோம்; எந்த ஏர் பற்றி உழுதோமோ அதே ஏர்பற்றி இப்போதும் உழுகிறோம். இந்நிலையில் ஜனத்தொகைக்கேற்ற விளைவு எப்படி உண்டாகும்? ஜனப்பெருக்குக் கேற்ற அளவில் தொழில் முறைகளும் பெருகுதல் வேண்டும். இதற்குத் துணை புரிதற்கென்றே விஞ்ஞானம் ஏற்பட்டது. மழை, அரிசி, பழம் முதலியவற்றை விஞ்ஞானத்தா லுண்டுபண்ணுங் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சிமீது கவலை செலுத்தாதிருப்பது தவறு. கிராமம் விஞ்ஞான மயமாதல் வேண்டும். விஞ்ஞானம் பெருகினால் சண்டையும் கொலையும் பெருகுமே என்று கருதுவோரும் உளர். சாம்ராஜ்யத்தில் விஞ் ஞானம் சண்டைக்கும் கொலைக்கும் பயன்படும்; சமதர்மத்தில் அக்கலை வாழ்க்கை நலத்துக்குப் பயன்படும். இதுபற்றிய விரிவுரை இங்கே தேவையில்லை. இருவகைப் போதனை கிராமத்துக்குப் பலதிறக் கலைப் போதனைகள் இது போழ்து வேண்டற்பாலன. இவைகளுடன் பொதுமைக்கலைப் போதனையும், விஞ்ஞானக் கலைப் போதனையும் சேர்தல் வேண்டும். இவ்விரண்டும் இக்காலத்துக்கு இன்றியமையாதன. இப் போதனைத் தொண்டில் இப்பாரதி சங்கம் ஈடுபடுமென்று நம்புகிறேன். பொதுமையும் விஞ்ஞானமும், இந்நாளில் ஆங் காங்கு மூண்டெரியும் ஜாதிப் பிணக்கு, மதப் பூசல் முதலிய வற்றைத் தணிக்கும் என்பதில் ஐயமில்லை. புது உலகம் கிராமத்தில் பொதுமைத் தெய்வம் கோயில் கொண்டால் நாடு பொதுமை மயமாகும்; உலகமும் அம்மயமாகும். உலகம் ஒரு பெருஞ் சமூகக் காட்சி அளிக்கும். அந்நிலையில் ஜாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் உருக்கொண்டு எழுந்த சிறுசிறு சமூகங்களெல்லாம் உதிர்ந்து உதிர்ந்து உருவெளியாகும்; ஒரே சமூகம் நிலவும். அதுவே புது உலகம் என்பது. ஆக்க வேலை உலகில் இருபெரும் போர்கள் நடைபெற்றன. இப் பொழுது மூன்றாம் போர் கருக்கொண்டுவருகிறது. திடீரென அஃது உருக்கொண்டு வீறும். அப்போருக்குப் பின்னர் உலகம் ஒரு சமூகமாகியே தீரும். இதற்குரிய குறிகள் ஆங்காங்கே தோன்றியிருக்கின்றன. இவ்வேளையில் நாம் என் செய்தல் வேண்டும்? கிராமத்தை ஆக்கவேலையால் பண்படுத்தல் வேண் டும். ஆக்கூர் ஆக்கவேலையைத் தொடங்குவதாக. குருமார் போதனை உலகிடைத் தோன்றிய குருமார் பலர். அவரனைவரும் ஒரு முகமாக உலக சகோதர நேயத்தை அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அவர்தம் அறிவுறுத்தல் மக்கள் வாழ்க்கையில் பெரிதும் இடம்பெறவில்லை. ஏன்? சாம்ராஜ்ய ஆட்சி முறையின் கொடு மையை உன்ன உன்னக் காரணம் புலனாகும். சமதர்ம ஆட்சியில் குருமார் போதனைகள், மக்கள் வாழ்க்கையில் ஒன்றி ஒன்றி உலகை ஒருமைப்படுத்தும் என்னும் உறுதி எனக்குண்டு. வாழ்த்து குருமார் போதனைகள் செயலாகுங்கால் உலகம் விடுதலை எய்தல் ஒருதலை. அவ்விடுதலைக்கு இந்நாளில் தமி ழால் - பாட்டால் - கால்கொண்டவர் பாரதியார். அப்பாரதி யார் பெயரால் வளர்ந்துவரும் இச்சங்கம் அவர்தம் கனவை நினைவாக்கிச் செயலாக்குமென்று எதிர்பார்க்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் செய்வானாக. பாரதி சங்கம் வாழ்க; வாழ்க; நீடு வாழ்க. * * * அறவோர் வாழ்க அறவோர் வாழ்க அறத்தொண் டாற்றி அறநெறி வளர்க்க ஆய்ந்தாய்ந் தறத்தை அல்லற் படாதே தொண்டு செய்யின் துலங்கும் அறமே தொண்டு வண்ணம் தொல்லுல காக தொண்டர் படைகள் சூழ்ந்துசூழ்ந் தெழுக தொண்டாய்த் திகழ்ந்த தூயோர் வாழ்க தொண்டரே அறவோர் துறவோர் நோன்பிகள் தொண்டு வளரச் சோதரம் ஓங்கும் தொண்டில் விளங்குஞ் சுத்தசன் மார்க்கம் வாழ்க மகம்மது வாழ்க இயற்கை வாழ்க ஏசு வாழ்க அருகர் வாழ்க புத்தர் வாழ்க கண்ணன் வாழ்க குமரன் வாழ்க மோனன் வள்ளுவர் வாய்மை தெள்ளிய உலகம் தெள்ளிய உலகில் சிறந்து வாழ்க ஔவை மொழியில் அகிலங் காண்க அகிலங் காண அறஞ்செய விரும்பு யாதும் ஊரே யாவருங் கேளிர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் வாழ்க சமரசம் வாழ்கசன் மார்க்கம் வாழ்க சான்றோர் வாழ்க தாய் மையே - புதுமைவேட்டல்  திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 1883 பிறப்பு (ஆகடு 26) 1891 சென்னை இராயப்பேட்டையில் தொடக்கப் பள்ளியில் சேர்தல் 1894 வெலி பள்ளியில் சேர்தல். நோயால் கல்வி தடைப்படுதல். நான்கு ஆண்டுகள் பள்ளிக் கல்வி இல்லை. 1898 - 1904 மீண்டும் வெலி பள்ளியில் சேர்தல். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால் இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார். 1901-1906 யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயிலுதல் 1907 கதிரைவேலர் மறைவு. 1907-1908 பென்சர் கம்பெனியில் பணி 1908 கதிரைவேலர் வரலாறு (முதல் நூல்) எழுதுதல். 1908-1910 மயிலைப் பெரும்புலவர் தணிகாசல முதலியா ரிடம் தமிழும் சைவ சாத்திரங்களும் பயிலுதல். பெரியபுராணத்தைக் குறிப்புரையுடன் சிற்றிதழ் களாக வெளியிடத் தொடங்குதல். 1908 நீதிபதி சதாசிவ ஐயர் தொடர்பு 1910 அன்னி பெசண்ட் அம்மையாரைச் சந்தித்தல். (அம்மா என்றே திரு.வி.க. இவரைக் குறிப்பது வழக்கம்) 1910 - 1916 வெலி பள்ளியில் ஆசிரியப் பணி 1912(செப் 13) திருமணம் - மனைவியார்: கமலாம்பிகை 1914 சுப்பராய காமத், எ.சீனிவாச ஐயங்கார் தொடர்பு 1915 பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தோற்றம். 1916 - 1917 வெலி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர். 1917 தொ.ச. தலைவர் பி.பி.வாடியா தொடர்பு: இத் தொடர்பே திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடக் காரணமாயிற்று. 1917 கல்லூரிப் பணியை விடுத்தல், திசம்பர் 7-ல் தேசபக்தன் ஆசிரியர் ஆதல். 1918 (ஏப்ரல் 27) இந்தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் (சென்னைத் தொழிலாளர் சங்கம்) தோன்று தல். திரு.வி.க. துணைத் தலைவர். செப்டெம்பர் முதல் நாள் மனைவியார் கமலாம்பிகை மறைவு 1919 (மார்ச் 18) காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தல். (அக் 11) பெரியார் ஈ.வே.ரா.வின் நட்பைப் பெறுதல். (டிச. 17) லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ. சிதம்பர னாருடன் சென்று காணுதல். 1920 மத்தியத் தொழிலாளர் சங்கத் தோற்றம். சூலை இறுதியில் தேசபக்தன் நிலையத்தை விடுத்து நீங்குதல். அக்டோபர் 22இல் நவசக்தி தொடங் குதல். 1921 சூலை மாதம் ஆளுநர் வில்லிங்டன் அழைத்துக் கடுமையாக எச்சரித்தல். நாடு கடத்தப்படுவார் என்ற நிலையில் சர்.தியாகராய செட்டியார் தலையிட்டால் அத்தண்டனை நிறுத்தப்படுதல். 1925 (நவம்பர் 21, 22) தமிழ்நாடு காங்கிர வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சீபுரத்தில். தலைவர் திரு.வி.க. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டிலிருந்து வெளியேறுதல். இதன் விளைவாகத் தமிழக அரசியலில் பெருமாறுதலுக் கான திருப்பம் ஏற்பட்டது. 1939 காங்கிர ஆட்சியிலும் பக்கிங்ஹாம் ஆலை வேலைநிறுத்தம். 1943 அறுபதாண்டு நிறைவு மணிவிழா 1944 திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவருதல் 1947 சூன் 9 முதல் திசம்பர் 7 வரை காங்கிர ஆட்சி யில் திரு.வி.க.வுக்கு வீட்டுச் சிறைவாசம். 1949-50 ஒரு கண் பார்வை முதலில் மறைந்து, பின் இரு கண்களுமே பார்வை இழத்தல். 1953 செப்டெம்பர் 17-ல் மறைவு. நன்றி : சாகித்திய அக்காதெமி காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______