இளங்குமரனார் தமிழ்வளம் 40 1. வள்ளுவமும் வாழ்வியலும் 2. திருக்குறள் நோக்கு 3. திருக்குறளில் ஒப்புரிமை 4. தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஆசிரியர் : இரா.இளங்குமரனார் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 40 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 360 = 376 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 350/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங் களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! ............... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் வள்ளுவமும் வாழ்வியலும் 1. உலகு இயற்றியான் 2 2. பொறியின்மை 5 3. சுடச்சுடரும் 9 4. தம் பொருள் 13 5. முதல் இழப்பு 17 6. வள்ளியப் பெருமிதம் 20 7. ஊக்கம் உடையார் 23 8. இனநலப் பேறு 26 9. அறம் சாரா நல்குரவு 29 10. பகை நட்பு 32 11. வளரும் பயிர் 36 12. பயிர் மேய் வேலி 40 13. எள்ளாதன செய்தல் 43 14. பொருள் போற்றல் 46 15. மக்கட்கு இறை 49 16. இன்பமும் துன்பமும் 52 17. தம் இல் 55 18. அறிதோறறியாமை 58 19. எவன் தொண்டன் 61 20. பயனெதிர் பாராமையும் பயனே 68 21. பற்றறுத்தலும் பற்றே 72 22. பண்பாட்டின் மூலக்கூறும் வளர்ச்சியும் 76 23. ஒரு தீர்மானம் 82 24. எல்லாப் பொருளும் இதன்பால் உள. 85 25. எல்லாரும் இதற்கு உரியர் 89 26. வாளும் கேளும் 92 27. அறிவும் அழிவும் 95 28. கேட்டதும் கிடைத்ததும் 98 29. உய்வு தரும் ஒளிநூல் 103 30. திருக்குறளின் முதல் உரையாசிரியர் 106 31. திருக்குறட்படி படி 110 32. இறை முறை 115 33. ஊழிற் பெருவலி யாவுள? 119 34. ஈகி(தியாகி)யர் தேவை! 123 திருக்குறள் நோக்கு 1. பொது விளக்கம் 134 2. இறை நிலை 137 3. உயிர் தளிர்த்தல் 141 4. அறம் 145 5. உடல் நலம் 148 6. வீடும் உலகும் 152 7. வேள்வி 156 8. தற்காவல் 161 9. துணை நலம் 166 10. எச்சம் 171 11. பிறப்பொப்பு 175 12. தொழிலொப்பு 180 13. பொருட் பயன் 185 14. முயற்சிச் சிறப்பு 190 15. ஊழ் 194 16. வினை 199 17. காலமறிதல் 204 18. மதுவிலக்கு 209 19. சூதொழிப்பு 213 20. குறை நீக்கும் குடிமை 217 21. இருவரும் ஒருவர் 222 22. வாழ்த்துதல் பண்பு 226 23. அறிதோ றறியாமை 231 24. இணைப்பொறுப்பு 237 25. உலக நல வாழ்வு 242 திருக்குறளில் ஒப்புரிமை 1. ஒத்தது அறிதல் 249 2. பிறப்பு ஒப்பு 252 3. சிறப்பு ஒப்பு 256 4. கல்வி ஒப்பு 260 5. கல்விப் பயன் ஒப்பு 264 6. செல்வ ஒப்பு 268 7. ஈகை ஒப்பு 272 8. அச்ச ஒப்பு 277 9. நாண ஒப்பு 280 10. சமய ஒப்பு 284 11. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்! 291 தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் 1. திருக்குறளில் தொழில் தரமும் உறவும் 311 2. திருக்குறளில் தொழில் தரம் 332 3. திருக்குறளில் தொழில் உறவு 342 வரலாறு (வரல் ஆறு) வள்ளுவமும் வாழ்வியலும் என்பதன் பெயரே வள்ளுவத் திற்கும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை இனிது காட்டும். உலகவர் அனைவரும் நலமுற வாழவேண்டும் என்னும் நோக்கிலே அருளப்பட்டது வள்ளுவம் ஆகும். வள்ளுவத்தைத் கற்பார் தமக்கும், அதற்கும் உள்ள வாழ்வியல் தொடர்பை இனிது அறிவர். மேலும், எவ்வாறு வாழ்வியலை அமைத்துக் கொள்ளக் கூடும் என்பதைச் சிந்திக்கவும் தூண்டல் ஏற்படும். நல்ல தூண்டலின் பயன், அரிய துலங்கலேயாம். அவ்வகை யில் வாழ்வொடும், வரலாற்றொடும் கைகோர்த்து நடையிடும் இச்சுவடி 18 கட்டுரைகளையுடைது. சுட்டிக்காட்டும் அளவில் ஏறத்தாழ நாற்பதின்மர்க்கு மேலும் உலகளாவிய பார்வையில் பெருமக்கள் இடம் பெற்றுள்ளனர். மேற்கோள் காட்டப்பட்ட அவர்களும் - மேற்கோளாம் வள்ளுவமும் பலர் வாழ்வில் மேற்கொண்டொழுகச் செய்ய வல்லன என்னும் ஆர்வத்தால் வெளிப்படுவது இச்சுவடி. குறளியத்தில் தொடர்ந்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் நூலுருப் பெற்றுப் பயனாற்ற உதவும் பெருமகனார் தவத்திரு. ஆத்மானந்த அடிகள் ஆவர். கருவூர் இராமகிருட்டிண நிலையத் தலைவரும், அன்னை சாரதா கல்லூரி நிறுவனரும், தாளாளரும் விவேகானந்தர் மாண்மண்டபம் படைத்தவரும் ஆகிய அவர்கள் வள்ளுவம், வாசகம். தாயுமானம் என்பவற்றின்மேல் அளப்பரும் பற்றாளர். திருவள்ளுவர் தவச்சாலைப் புரவலரும், அறங்காவலரும் ஆவர். அவர்தம் கொடைமையே இச்சுவடியாய்த் தமிழ் வளமாகத் திகழ்கின்றது. அடிகளார் அவர்களின் நயனார்ந்த பயன் கொடைக்கு நனிமிகு நன்றியன் இன்பமே சூழ்க வாழிய வையகம்! அன்புடன், இரா.இளங்குமரன் 1. உலகு இயற்றியான் திருக்குறளின் பிழிவு, தமக்கென வாழாமை; பிறர்க்கென வாழ்தல் என்பவை. இத்தன்மைகளை ஒருவர் கொள்வதற்கு முதல் நிலை, அன்பு! முடி நிலை அருள்! அன்பு, இல்லறம்; வாழ்வியற் பயிற்சியின் தொடக்கமும் வளர்ச்சியுமாம் நிலை! அருள், துறவுநிலை; குடி நலன் காத்து, அதன்மேல் குமுகாய நலனாகவும், முழுதுலகு நலனாகவும். உயிரிகள் அனைத்தும் உய்யும் ஒருபெரு நெறியாகவும் உள்ளி நிறை நிலை! உயிர் நின்ற உடம்பு என்பதன் பண்பியல் அடையாளம். அன்பு, ஆகலின், அன்பின் வழியது உயிர்நிலை என்பது திருக்குறள். அன்பு சிறக்கும் உடலமே உயிர்நிலை! அன்புடையார்க்கு அமைந்த அளவு கோல் பிறர் நலம் நாடல்; அன்பிலார்க்கு அமைந்த அளவுகோள் தந்நலத்திலேயே அடங்கல்! அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - என்பது திருக்குறள் அன்பிலார், தமக்கு வாய்த்த எல்லாவற்றையும் தமக் கென்றே கொண்டவர். அன்புடையார், தமக்குத் தம் பெற்றோரால் வாய்த்ததும், உயிர் விளக்கத்திற்கு இடமாக அமைந்ததும், உள்ளொளி எய்துதற்கு உறைவிடமாக அமைந்ததும், பொய்யாக ஒழியும் வாழ்வை மெய்யாக நிலை பெறுத்துவதற்கும் வாய்த்ததும் ஆகிய உடலையும் பிறர்க்கென வழங்குவர்! உடலையே வழங்கும் அவர் மற்றைப் பொருள் களை வழங்கத் தயங்குவரோ? அடுக்கிய கோடி சொத்து உடையாராயினும், உம் உயிர் வேண்டுமா? உடைமை வேண்டுமா? என்னும் ஓர் இடர் நேருங்கால், உடைமையை விடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்ளவே விரும்புதல் கண் கூடு! உயிரைக் காத்தல் என்பது என்ன? உடலைப் போற்றுதல் தானே! உடல்போனால், உயிருக்கு வடிவு ஏது? வடிவு உண்டானால்..... அதன் பெயர் என்ன? என்பு என்பது எலும்பு என்பும் வழங்கும் அன்பர் என்பானேன்? என்பே மாந்தர் நிமிர்ந்து நடக்க - நிமிர்ந்து வாழ - அமைந்த கருவி! குனிந்து நடக்கவும் குறுக்கே இயங்கவும் வேண்டாமல் நிமிர்வைத் தருவது என்பே! அவ்வென்பின் உயரமே உடலின் உயரம் எனின் அன்பின் உயரத்திற்கு அளவு என்ன? வானின் உயர்ந்தது! மண்ணின் விரிந்தது! நிலத்தினும் பெரிது; நீரின் ஆழ்ந்தது - அன்பே! அவ்வன்புப் பொருளைப் பெறுதற்காக - அதனைப் பெற்றதன் பேற்றுக்காக - என்பை விடுவது அருமையன்று என்பது அன்பின் வழியாம்! வள்ளுவர் காலத்தினும் அறிவியல் வளம் இந்நாளில் மிகுதி. அறிதோறு அறியாமை கண்டு அறிவியல் வளர்ந்து வருதல் வெளிப்படை! இந்நிலையில் உள்ளம் விரிந்தோர் உடல், எத்தனை எத்தனை வகைகளில் பயன்படுகின்றது? என்பு மட்டுமோ பயன்படுகின்றது? ஒருவரென்பே ஓரிடத்து ஓருறுப்புக்கு உரியது, வேறிடத்து வேறு உறுப்புக்குப் பயனா கின்றது! பிறர் என்பும் பிறர் பிறர்க்குப் பயனாகின்றது! ஒருவர் கட்பாவை பிறிதொருவர் கட்பாவையாய்க் - கண்பார்வையாய்க் - கனிகின்றது. இறந்த ஒருவரும் தம் கண்ணால், இன்னொருவர் உடல் வழியே உயிர் கொண்டு, ஒளிவளம் கொழிக்க உதவுகின்றது! உயிர் தங்காது என்னும் நிலையில் அரத்தம் இழந்தோர்க்கு அதே இனத்து அரத்தம் உடைய ஒருவர் அதனை வழங்கின், போகும் உயிரை நிறுத்தி வைத்தவர் ஆகின்றார். இறந்தாரை எழுப்பிய இறைநிலை - தாய்நிலை - எய்திய மேலோர் ஆகி விடுகின்றார்! சிறு நீரகக் கோளாறு பெருவரவாக உலகில் பெருகு கின்றது. இலக்கம்கொடுத்து வாங்கவும் உயிர்த் துடிப்போடு உலகம் முந்து நிற்கின்றது. அக்கொடைப் பொருள் உடையவர், கொடுக்க வேண்டுமே! அக்கொடைப் பேரன்பர்களின் வள்ளன்மை தானே பலப்பலரைக் குழிக்குள் போக வைக்காமல் கொலு வீற்றிருக்க வைக்கின்றது? என்பும், பாவையும், அரத்தமும், சிறுநீரகமும் மட்டும் தாமா உடலுறுப்புகளில் பயன்படுகின்றன? அறிஞர்கள் மூளை, ஆய்வுப் பொருளாகப் போற்றிக் காக்கப்பட்டு வருவது இல்லையா? வெட்டி வெட்டி ஆய்தற் கெனவே தம் உடலை ஆய்வுச் சாலைக்கு ஆவணமாக எழுதித் தந்தவர் இலரா? தருபவர் இலரா? வாழும் நாளில் உடல் - பொருள் - உயிர் எல்லாம் உலகுக் கென்றே வாழ்ந்த பெருமக்கள், வாழ்வின் நிறைவிலும் உலகுக் கெனவே தம் உடலைத் தந்துள்ளனரே! ïtnu mšynuh ‘rhth cl«ãd®! கட்டழியா உடலர் (காய கற்பர்), நிலை வாழ்வர் (சிரஞ்சீவியர்) என்பவர்; என்பும் பிறர்க்குரிய அன்பர் என்பதன்றோ, இற்றை மெய்ம்மை நிலை! வள்ளுவர் வாய்மொழி எத்தகு உயிர்ப்புடையது! மாந்தர் வளர வளரத் தன் பொருளால் வளர்ந்தது வளர்ந்து வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழும் வளப்பொருள் அன்றோ வள்ளுவர் வழங்கிய பொருள்! அப்பொருள் எழுத்தில் இல்லை! சொல்லில் இல்லை! வாழ்வில் திகழ வேண்டும்! ஏனெனில் வாழ்ந்த பெருமகனார் வாழ்வார்க்கு வழங்கிய வைப்பு அது. திடும் விளைவால் இறந்தார் உடல் உறுப்புகளைச் சட்டத்தால் அரசுடைமையாக்கி வேண்டுவோர்க்கு வேண்டும் உறுப்பை வழங்குவதை வளர்ந்த நாடுகள் இக்காலத்து மேற் கொண்டுள்ளன. ஆனால், அதனை அன்பின் வழியிலே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிலைப்படக் காட்டுகின்றார் திருவள்ளுவர். அவர்தம் காலங் கடந்த பார்வைத் திறத்தைக் காலங் கடந்த இந்நாளிலேனும் தமிழ் வாழ்வினர் உணர்ந்து கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அஃதன்றோ வள்ளுவர் வழிபாடு! இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் நிரந்து தருக உறுப்புத் தக எனப் புதுப்பாப் பாடிப் பூரிக்க வைக்கிறாரே வள்ளுவர். 2. பொறியின்மை திருக்குறள் பதின்கவனகர் பெ. இராமையனார் அணித்தே இருந்தார். அவர் காணுமிரு கண்ணையும் இழந்தவர். ஆனால் விழியுடையவர்களும் விழித்துத் திகைப்புறும் அளவில் திருக்குறளில் திறம் காட்டினார். குறளைச் சொன்னால், எண்ணைச் சொன்னார்; எண்ணைச் சொன்னால், குறளைச் சொன்னார்; ஒரு சொல்லைச் சொன்னால், அச்செல்வரும் குறள்களையும் அவற்றின் எண்களையும் கூறினார். ஒருவர் இருவர் அல்லர்; பதின்மர் பெயர்கேட்டு, அவர்கள் தாம் தாம் நினைத்த குறளின் தனித்தனி ஒவ்வோர் எழுத்தாகக் கூற, இடையிடையே பிறர் பிறர் வினாவ - அவற்றுக்கு விடைதர, இடையிடை மணியடிக்க, மலர் எறிய - அவற்றைக் கணக்கிட, புதுப்பாப்புனைய, இலாடசங்கிலி போட, பெருங்கக்குகள் நினைவில் போட - எல்லாமும் ஒருங்கே வாங்கி அனைவரும் மகிழ்ந்து பாராட்ட, விடையிறுத்து வல்லாண்மை காட்டினார். விழியொளி இல்லாமை அவர்க்கு ஒரு பழியாகி விட வில்லையே! மாம்பழக் கவிச் சிங்க நாவலர் என்பார் பழனியில் இருந்தார். இரண்டாம் அகவையிலேயே, அம்மை நோயால் பார்வை இழந்தார். எனினும் பாடுதற்கரிய வண்ணப்பாடல்கள் பாடினார்! பொருள் காண்டற்கரிய மடக்குகள் பாடினார்! அவர் பெயரால் ஒரு திரட்டு நூல் வருமளவு பாடினார்! அந்தகக் கவி வீரராகவர் பெயரிலேயே, அவர்தம் பார்வையிலாக் குறை வெளிப்படுகின்றதே! அவர் ஏடு ஆயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப்படித்த விரகன்; இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவி வீரராகவன் என்று தம்மைக் குறிப்பிடுகின்றார். எவரோ கண்டதை, நீவிர் கண்டது இது எனப் பாடுவதைக் கண்டு வியப்பு (கண்டதிசயம்) - பாடுதல் என்பர். அதில், தேர்ச்சி மிக்கவராகத் திகழ்ந்தார். பெரும் புலமைச் செல்வராக விளங்கினார். ஆதலால், காணுமிரு கண்ணிழந்தும் கற்றகவி வீரர்சீர் கோணாத தென்னே குமரேசா என ஒரு வினாவை எழுப்பி, பேணுகின்ற எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என ஒரு பாவை விடையாகத் தந்தார், கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார். இனி, இரட்டையருள் ஒருவர் முடவர்; ஒருவர் குருடர்; அவர்கள் நாடெல்லாம் புலமையுலாக் கொண்ட புகழ்ப் பெருமக்கள்! கலம்பகம் பாடுதலில் இணையில்லார் எனப் பாராட்டப் பெற்றவர்கள். இருநூறுக்கு மேற்பட்ட அரிய நூல்களை இயற்றிய கருப்பக்கிளர் சு.வே. இராமசாமிப் புலவர் காளைப் பருவமுதலே அரைகுறையில்லாமல் முற்றாகச் செவிப்புலன் அற்றவர். தவத்திரு. மறைமலையடிகளாரின் தகவார்ந்த மாணவராகத் திகழ்ந்து அரிய நூல்கள் பலவற்றை ஆக்கிப் படைத்த புலமைச் செல்வர் இளவழகனாரும் நட்டகவை தொட்டு அந்நிலையரே! கழகக் காலத்திலும் ஐயூர் முடவனார், முடத்தாமக் கண்ணியார், முடத்திருமாறனார், முடக்கொற்றனார், உறையூர்த் ஏணிச்சேரி முடமோசியார் எனப் புலமைச் செல்வர்கள் பலர் இருந்தமை தொகை நூல்களால் அறிய வருகின்றதாம். கிரேக்க நாட்டுக் தொல்பெரும் பாவலர் ஓமர் ஆங்கிலப் பெரும் பாவலர் மிதனார் ஆகியோரும் பார்வையிலார் என்றே பகர்வர். கையில்லாத ஒரு செல்வி தன் கால்களாலேயே ஊசி நூல்கொண்டு தைக்கிறாள்! கண்ணாடி பற்றிச் சீப்பு வைத்துத் தலைசீவி முடிக்கிறாள்; பொட்டு வைக்கிறாள்; பூ முடிக்கிறாள். தீப்பெட்டி எடுத்து அடுப்புப் பற்றவைத்துப் பால் சுட வைத்து ஆற்றிப் பருகுகிறாள்! இன்றும் கண்ணேரில் காணும் காட்சிகள் இவை! இவ்வெல்லார் உடற்குறைகளையும் ஒருங்கே கொண்டவர் கெலன் கெல்லர் என்பார். நான் என் ஆறாந்திங்களிலேயே நலமா எனக் கேட்கத் தொடங்கி விட்டேன்; ஒன்றாம் அகவை ஆகும்போதே நடக்கத் தொடங்கிவிட்டேன் என்னும் அவர், பிப்ரவரித் திங்கள் வந்தது; அதனுடன் எனக்கு நோயும் வந்தது; படுத்துவிட்டேன்; என் கண்களையும் காதுகளையும் கெடுத்துவிட்ட நோய் அது. புதிதாகப் பிறந்த குழந்தைபோல் நினைவற்றுக் கிடந்தேன். வயிற்றிலும், மூளையிலும் அடைப்பு உண்டாகிவிட்டது. காய்ச்சல் கடுமையாக வாட்டியது. நான் பிழைக்கவே மாட்டேன் என்ற நிலைமை வந்து விட்டது. ஆனால் ஒரு நாள் எதிர்பாராமல் காய்ச்சல் இறங்கி விட்டது. இதைக் கண்டு என் குடும்பத்தார் மகிழ்ந்தனர். எனக்கு இனிக்கண் திறவாது; காது கேளாது என்று அவர்களில் எவருக்கும் தெரியாது. ஏன்? மருத்துவருக்குக் கூடத் தெரியாது! என்று தம் நிலைமையைக் குறிப்பிடுகிறார் கெலன்கெல்லர் ஒன்றரை அகவையிலேயே கண் குருடாகி, காது செவிடாகி, வாயும் ஊமையாகியவர் அவர். வாழ்வே இருண்டுவிட்டது என்று அவரை அறிந்தவர்கள் முடிவு செய்து விட்டனர்! ஆனால், அவரும் அவர் குடும்பத்தவரும் முயற்சியைக் கைவிட்டனர் அல்லர்! விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றார் கெலன். குமரி சல்லிவனார் ஆசிரியர்; அவரும் விழியிழந்தோரே, உணர்வுடன் கற்பித்தார்; உணர்வுடன் கெலன் கற்றார். நுண்ணிய இசை யையும் கேட்டார்; அரிய கருத்துகளையும் எழுதினார். மார்க்கு டுவெய்ன் ஆசிரியரால், இந்நூற்றாண்டின் (பத்தொன்பதாம் நூற்றாண்டின்) பெரியவர் என்று பாராட்டத் தக்கவர் இருவர். அவர் நெப்போலியனும், கெலன் கெல்லரும் ஆவர் என்று பாராட்டப் பெற்றார் உலக வரலாற்றில் உறுப்புக்குறையர் எத்துணை எத்துணைப் பேர்கள்? அவர்களும் உறுப்புக் குறையிலாரினும் விஞ்சியவராய் வெற்றி வாழ்வினராய் இலங்கிவர்கள் எத்துணையர்? வள்ளுவப் பார்வை வையகப் பார்வை; வளப்பார்வை; வாழ்வாங்கு வாழவைக்கும் பார்வை; நீ நினைத்தால் முனைப்பாக நினைத்தால் - உன் உறுப்புக்குறை ஒரு குறையா? தூள்! தூள்! என்று தட்டிக் கொடுத்து வழிகாட்டும் பார்வை! வள்ளுவர் சொல்லுகிறார். பொறியின்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந்(து) ஆள்வினை இன்மை பழி உறுப்புக்குறை ஒரு பழியாகாது; அதனை வெற்றி கொள்ளும் வழி வகைகளை அறிந்து, தளர்விலா முயற்சி கொண்டு வெற்றி பெறாதிருத்தலே பழி எனத் தெளி வாக்குகிறார். வாழ்வியல் வழியது திருக்குறள் என்பதற்கு இக்குறள் சிறந்த சான்றேயன்றோ. 3. சுடச்சுடரும் எங்கே சூடுண்டு? அங்கே சுடருண்டு! சூடிலா ஒன்றில் சுடரில்லை! ஞாயிற்றின் செங்கதிரா, செந்தீயின் வெங்கதிரா, சூடும் உண்டு! சுடரும் உண்டு! மின்சுடரா? நீர்தந்தது, கரிதந்தது, கதிர்தந்தது, - எனின் என்ன? சூடும் உண்டு - சுடரும் உண்டு! திங்களில் சுடர் உண்டு - சூடு இல்லையே! அது நாள்மீன் அன்று. கோள்மீன்! கதிரவன் நாள்மீன்; தன்னொளி உடையது; திங்கள் செவ்வாய் முதலியன அவ்வொளியைக் கொள்ளும் மீன்கள்; ஆதலின், கோள்மீன். கோள்மீன் கண்ணாடி அன்னவை. மெழுகுதிரியின் ஒளி கண்ணாடியில் படியின் சுடுமா? சொல்லின் வேரறிந்து, பொருளாட்சி செய்பவர் திருவள்ளுவர். ஆதலால், சுடச்சுடரும் பொன் என்றார். அஃது உவமை; அவர் சுட்டவந்தபொருள், துன்பம் சுடச்சுட நோற்பவர், ஒளிவிடுவர் என்பது. துன்பத்துளெல்லாம் தலையாய துன்பம் வறுமை. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கலாம்; ஆனால் ஒருவர் வறுமை நெருப்பினுள் கண்ணை மூடுதலும் முடியாது! நேற்றுக் கொன்று சென்றது வறுமை; அவ்வறுமை இன்றும் வாட்டுவான் வருமோ? என்று ஏங்க வைப்பது. அவ்வறுமையுள்ளும் இளமை வறுமை கொடுமையானது. நாற்றங்காலிலேயே நோய் பற்றிப் போனது போன்ற கொடியது. அதனால், கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். வறுமை மட்டற்ற துயர் என்றால் மற்றைத் துயர்களும் இல்லையோ? நோய்களின் வாட்டுதல்கள் எத்தனை எத்தனை? பெற்றோரையும் உற்றோரையும், ஏங்குதலும் தாங்குதலுமாக இருந்தோரையும் இழக்கும் இழப்பு எத்தகு கொடுந்துயர்? அதிலும் அறிவறியாப் பருவத்திலேயே இழந்து போகும் இன்னலுக்கு ஆட்பட்டவர் எத்தனை பேர்? நேர்மையால் சால்பால் பொதுத் தொண்டால் பிறர்பிறர் உறுத்தலுக்கு ஆட்பட்ட அல்லல்பட்டவர் எத்தனை எத்தனை பேர்கள்? இவர்கள் வறுமையால், இழப்பால், பிறர் வாட்டலால் தம் தகவார்ந்த தன்மை குன்றினரோ? இழந்தனரோ? இல்லை என்பதை வரலாற்றுலகம் காட்டும். யான் எளியன்; குடிசையில் பிறந்தவன்; எங்கள் சிறு குடிசையில் பாம்பும் தேளும் ஊர்ந்து செல்லும் என்று தம் வறுமைக் குடிலைச் சுட்டும் திரு.வி.க.கடைசி மூச்சையேனும் சொந்த வீட்டில் விட நேர்ந்ததோ? அவர்தம் கல்வி, நோயால் இடை இடை தடையுற்றும் பொதுத் தொண்டால் தேர்வுக்குச் செல்லாமல் பள்ளிக் கல்வியே தடையுற்றும், அவர்தம் கல்வித்தரம் குறைந்துபட்டதா? தொண்டு குறைந்ததா? அந்தண வடிவுக்கு ஒருபடம் காட்டுக எனின் திரு.வி.க. படத்தையே காட்ட வாழ்ந்த அவ்வாழ்வு சுடச்சுடரும் பொன்னேயன்றோ! ஆயிரம் ஆயிரமாக வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு, அயலரசுக்கு எதிராகக் கப்பலோட்டும் கடமையை அள்ளிப் போட்டுக் கொண்டு கடனாற்றினாரே வ.உ.சி. அவர், செல்வத்தில் என்றேனுந் திளைத்தாரோ? எந்த அயலவர்க்கு எதிராகக் கப்பல் ஓட்டினாரோ, அந்த அயலவரிடமே தம் கப்பலை விற்ற கொடுமையை அன்றோ கண்கலங்கிக் கண்டார்! கடுஞ்சிறையினும் - கல்லுடைப்பினும் - செக்கிழுப்பினும் கொடுமையாக இருந்தது அஃதன்றோ! அவர்பட்ட துயர் அவரை அசைத்ததா? நாட்டுத் தொண்டு மொழித் தொண்டாகக் திகழ அன்றோ அழியாப் புகழ் பெற்றார். மாசற்ற மணியாக அன்றோ திகழ்ந்தார்! வறுமை அவர் பண்பைக் கெடுத்ததா? கொடுத்த - கையூட்டாகக் கொடுத்த - ஓரிலக்கம் வெண்பொன்னையும் கண்ணால் காணவும் கருதாராய்க் காறி உமிழ அல்லவோ செய்தார்? வறுமைக்கு வறுமை - இடும்பைக்கு இடும்பை - செய்த ஏந்தல் சிதம்பரனார் சுடச்சுடரும் பொன் ஆனார்? இந்த மண்ணிலேயே இன்னும் எத்துணைப் பேர்கள் சுடச்சுடரும் பொன்னாகத் திகழ்ந்தவர்கள்? உலகெல்லாம் ஒருபார்வை பார்த்தால் எத்தனை வரலாறுகள்? வெள்ளைமாளிகையில் கால்வைக்கும் நிலையில் இருந்தவரா ஆபிரகாம்லிங்கனார்? இறந்தோரை இட்டுப் புதைக்கும் பெட்டி செய்த தச்சத் மகனார் - அவருக்குத் துணையாளாய்ப் பணிசெய்த மகனார் அடுப்பு வெளிச்சத்திலே படித்து - மண்வெட்டியிலே கரித்துண்டால் எழுதி - மாற்று டையின்றித் தோலாடையுடுத்து, வழக்கறிஞராய் - அரசியல் தலைவராய் விளங்கிய அவரை வறுமை என்ன செய்தது? தன் கொடிய பற்களெல்லாம் உதிர்ந்துபட அவர் உதைத்த வெற்றியுதைகளை வாங்கிக் கீழே வீழ்ந்து பட்டதை வரலாறு மெய்ப்பிக்கின்றதே! இருபத்தைந்து ஆண்டுகள் ஏறத்தாழ 15 ஆயிரம் நூல்களைப் படித்து மூலதனத்தைப் படைத்தாரே காலல்மார்க்கசு! செல்வத்திலே புரண்ட செழுஞ்செல்வரா அவர்? வெறியாட்சிக்குத் தப்பியோட நேர்ந்ததென்ன - வறுமைக் கடிக்கு வயப்பட்டதென்ன - நோயின் வல்லாண்மைக்கு ஆட்பட்ட தென்ன - உயிரின் உயிராக வாய்த்த வாழ்க்கைத் துணையும் உயிரின் கான்முளையாம் மக்களும் பட்டபாடுகள் என்ன? இவையெல்லாம் மார்க்கசாம் பெருமகனை என்ன செய்தன? அலையடித்து அடித்து மோதினும் நிலைகுலையா மலையோல் நிமிர்ந்து நின்று வெற்றி கண்டாரே அவர், சுடச்சுடரும் பொன் அல்லரோ! காரல்மார்க்கசின் எழுத்தை உந்துகோளாகக் கொண்டு, கொடி பிடித்து மூரிமுழங்கி எழுந்தாரே இலெனினார்! அவர் பாராத வெறியாட்டங்களா? சூறைகளா? அவையெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த வெற்றியன்றோ அவர்தம் புரட்சிவெற்றி! உருசியநாட்டு உழைப்பாளர் ஒவ்வொருவர் மூச்சும், பேச்சும், உணர்வும், உடையும், உறைவும், எல்லாம், எல்லாம் அந்தந் சுடச்சுடர்ந்த பொன்னின் கொடையேயன்றோ! உலகக் கொடையாக மின்னலிட்டுத் திகழ வாய்ப்பதும் அப்பொற் சுடரே யன்றோ! எடுத்துக்காட்டாம் வரலாற்றாளர் இத்துணையர் தாமோ? எண்ண எண்ண எண்ணுவார் எண்ணமென விரிவதை எண்ணி முடிப்பது எப்படி? எழுதி முடிப்பது எப்படி? சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 4. தம் பொருள் நம்மைப் பார்த்து, உங்களுக்குரிய பொருள் யாது? என ஒருவர் வினாவின் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக மறுமொழி கூறுவோம். நிலம் புலம், ஆடு மாடு, வீடு மனை, இருப்பு எடுப்பு, தொழில் துறை என ஆளுக்குத் தக்கவாறும், விருப்புக்குத் தக்கவாறும் மறுமொழி வெளிப்படும். ஆனால் வள்ளுவரிடம் ஒருவர் வினாவின் அவர் தரும் மறுமொழி வேறு; அது தனித் தன்மையினது. தம்பொருள் என்ப தம் மக்கள் என்பது அது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பொருள் என்று சொல்லத் தக்கது மக்கள் என்னும் பொருளே என்கிறார் திருவள்ளுவர். மக்கட் பொருள் அவ்வளவு அரியதா? எனத் திகைப்பு ஏற்படலாம்! வித்தைப் பெருக்குக; விளைவைப் பெருக்குக; உண்டாக் கத்தைப் பெருக்குக; உருவாக்கத்தைப் பெருக்குக; எனத் துறை தோறும் முழக்கமிடும் இந்நாடு, இரண்டுக்குமேல் எப்போதும் வேண்டா என்ற நிலையில் சுருங்கி, ஒன்றே போதும் என்று உரக்கக் கூவும் மக்கட் பொருள், அத்தகு சிறப்பினதோ என்னும் திகைப்பும் உண்டாகலாம்! இற்றை நிலை மட்டு மன்று; இன்னும் பெருக்க மிக்க எற்றை நிலையிலும் தம் பொருள் என்பதம் மக்கள் என்பதே வாய்மொழி, என்பது வையக வரலாற்றை நினைத்துப் பார்த்த அளவானே புலப்படும். வெந்ததைத் தின்று விதிவந்தால் போதல் என்று பிறப் பிலேயே ஒடுங்கிப் போய்விட்ட மக்களையோ, சோற்றுக்கும் சுவைக்குமே பிறந்த பிறவி எனச் புவிச் சுமையாக ஆகிவிட்ட மக்களையோ, கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனப் பொழுது போக்கும் புன்மக்களையோ, தம் பொருள் என்றாராம் வள்ளுவர்? இவ்வகை ஐயம் எவர்க்கும் உண்டாதல் கூடாது என்றே அறிவறிந்த மக்கள் என்றார். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்பது அது. அறிவறிந்த மக்களெல்லாம் மக்கள் தாமா? என வள்ளுவ வழியர் ஐயுறார். அவர் கூறும் அறிவின் இலக்கணம் தனிப் பெருஞ் சிறப்பினது. பிறவுயிர்களுக்கு உண்டாம் துன்பத்தைத் தன் துன்பமெனக் கருதாதவன் அறிவுடையன் அல்லன் என்பதே வள்ளுவத் தெளிவு. ஆதலால், உலக நலத்திற்குப் பயன்படா அறிவு அறிவன்று; அஃது அழிவறிவு என்பதாம். மக்கட் பேற்றில் இதனை வெளிப்படக் குறிக்குமாறே பழி பிறங்காப் பண்புடை மக்கள் என்றார். அறிவறிந்த பழிபிறங்காப் பண்புடை மக்களே தம் பொருளாம் மக்கள் என உறுதிப் படுத்தலாம். அவர்களே சான்றோர் பாராட்டும் சான்றோர் என்பதும் தேர்ந்த முடிவு. இத்தகு நன்மக்களால், அம்மக்களின் தாய் தந்தையர் அடையும் இன்பம் பெரிதே! மிகப் பெரிதே! இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன பேறு பெற்றாளோ என்னும் பேற்றினும் பெற்ற வயிற்றுக்குப் பெருமை சேர்க்கும் பேறு ஒன்று உண்டோ? உண்டோ? இவளைத் தந்தவனே தந்தை என்னும் தகவுக்கு முழுதுறும் உரிமையாளன் என்பதனினும் தந்தைக்குப் பேறு ஒன்று உண்டோ? உண்டோ? ஆனால் மக்களால் பெற்றோர் உடையும் மகிழ்ச்சி மட்டுமா பிறவிப் பேறு? இல்லையே! நன்மகப் பேற்றால் பெற்றோர் அடையும் இன்பத்தினும் பேரின்பம் அடைவது உலகத்து உயிர்கள் எல்லாமுமேயாம் என்கிறார் திருவள்ளுவர். தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்பது அது. நன்மக்களைப் பெறுதலால் அம்மக்களைப் பெற்ற பெற்றோரினும் உலகமா இன்பம் பெறுகின்றது? இதற்குத் திருவள்ளுவரையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாமே! திருவள்ளுவர் பெற்றோர் பெயர் தாமும் அறியோமே! ஆனால் அவர்கள் பொருளாம் திருவள்ளுவரால், எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மண்ணுக்குப் பெருமை வாய்த்துப் பெருகி வருகின்றது; இனம், மொழி, நாடு சமயம் எல்லாம் எல்லாம் கடந்து, எத்தனை எத்தனை பேர்க்கு உள்ளொளியாகத் திகழ்கிறார் வள்ளுவப் பெருந்தகை? அவரைப் பெற்றதால் பெற்றோர் பெற்றது பெரிதா? உலகம் பெற்றது பெரிதா? இப்படி, அறிவாளர், அருளாளர் கலையாளர், சான்றாளர் உலகுக்கு வாய்த்துள்ளோர், ஒருவரா? இருவரா? எடிசனார் என்னும் அறிவறிந்த நன்மகனார் பிறப்பால் இந்த உலகம் அடைந்துள்ள நலப்பாடுகளுக்கு அளவும் உண்டோ? இருநூறுக்கு மேற்பட்ட பொருள்களைக் கண்டு உலகப் பொருளாக வழங்கிய அப்பெருமகனினும் அப்பெற்றோர் பொருள் என ஒன்று சொல்ல உண்டோ? இசைப்பதிவைக் கேட்டால், திரைப்படத்தைக் கண்டால், நீராவியாற்றலை அறிந்தால் அங்கெல்லாம் இருப்பவர் எடிசனார் அல்லரோ! கண்ணைமூடிக் கண்ணைத் திறப்பதற்குள் எத்தனை எத்தனை வண்ண அச்சுத் தாள்கள் குவிக்கின்றன! அச்சுக் கலைக்கு வித்திட்ட கூட்டன்பர்க்கு என்பாரின் பயன் குடும்பப் பயன் அளவிலோ நின்றமைந்தது! மிதிவண்டி - உந்துவண்டி தொடர்வண்டி முதலாம் மண்ணுர்திகள் மற்றும் விண்ணுர்திகள் நீரூர்திகள் ஆகிய வற்றைக் கண்டுபிடித்த அறிவறிந்த நன்மக்கள் குடும்பத்தவர் மட்டுமோ இன்று பயன் கொள்கின்றனர்? உலகை ஓர் இயக்க மாக்கி வரும் இவ்வியக்கங்களைக் கண்டவர் ஒரு நாட்டாரோ? ஓர் இனத்தாரோ? எவராயின் என்ன அவர்கள் கொடை உலகக் கொடை என்பதில் ஐயுறவு உண்டோ? விரிப்பானேன்! இற்றை ஒருநாள் மட்டில் நாம் எத்தனை எத்தனை நன்மக்கள் கொடையைப் பயன்படுத்திக் கொண்டுள் ளோம். எண்ணி முடியுமா? ஒருவர் ஆக்கப் படைப்பே, உலக ஆக்கப் படைப்பாகத் திகழ்வன என்பதை உணரும்போது அவ்வாக்கத்தை ஆக்கியவரினும் ஆக்கப் பொருள் ஒன்றைக்கூற முடியுமா? இந்நாள் உலகம் கணிப்பொறி உலகம் எனப்படுகிறது. இக்கணிப் பொறியின் விந்தைப் பயன்கள் விரிய விரிய விரிவன எனப்படுகிறது! எனினும் என்ன? கணிப்பொறியைக் கண்ட மூலவர் அறிவறிந்த நன்மகனார் ஒருவர்தாமே! அவரினும் அவர் பெற்றோர்க்கமைந்த பொருள் ஒன்று உண்டோ? நொடிப்பொழுதில் உலகைப் பொடியாக்கும் அழிவைத் தந்தவரும் அறிவாளர்தாமே! அவரும் அவரைப் பெற்றோர்க்குப் பொருள்தாமே, எனின் அவர்கள் பழிபிறங்கிய பண்பிலா மக்கள் என வள்ளுவம் எள்ளும்! மக்கள் உருவத்தராகிய அம்மக்களை, மக்களே போல்வர் கயவர், அவர்க்கு ஒப்பார் இல்லை எனச் சுட்டும்! தம்பொருள் என்பதம் மக்கள் என்னும் அரைக் குறளினும் குறுகிய முச்சீர், வாழ்வியலில் எப்படி வளைய வளைய வருகின்றது! எண்ண எண்ண விரிகின்றதன்றோ? 5. முதல் இழப்பு வள்ளுவர் வாழ்ந்த நாளுக்கும் நாம் வாழும் நாளுக்கும் உள்ள நெட்டிடை வெளி பெரிது! நாள் வழி நடைமுறைகளிலும் இடைவெளி மிகவுண்டு. அவர் நாளில் பண்டமாற்றே பெருவழக்கு! நம் நாளில் பணமாற்றே பெருவழக்கு! அவர் நாளில், வாழ்வியல் நடை முறைகளில் பெரு விரைவு இல்லை; இப்பொழுது ஓட்டம்! ஓட்டம்! பேரோட்டம்! காரெனக் கடிது செல்லோட்டம். எனினும், வள்ளுவர் அந்நாளில் சொல்லிய சொல், இந்நாளில் நூற்றுக்கு நூறு ஏற்புடையதாக இருப்பது வியப்பே! வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த வியப்பே! முகவகங்கள் (ஏசன்சி) நாட்டிற் பெருகுகின்றன. கவர்ச்சியாக விளம்பரம் செய்கின்றன. 50 உருபா செலுத்தி 5000, 10000 ஒருபாபெறும் பரிசுப்பொருள் பெறலாம் என ஆர்வத்தை ஊட்டுகின்றன. ஐந்தாறு திங்கள், ஓராண்டு, ஈராண்டு பளிச்சிடு கின்றன. நான் ஐயாயிரம் இழந்தேன்; நான் பத்தாயிரம் இழந்தேன் என்று ஊரும் தெருவும் ஓலமிட ஒருநாள் இரவோடு இரவாக எங்கோ ஓட்டமெடுத்து விடுகின்றன! பிறகு தலையில் அடித்தென்ன? மார்பில் அறைந்தென்ன? எவரும் தராத வட்டி; முதல் போட்ட இரண்டாம் ஆண்டே இருபங்கு வளர்ச்சி! ஐயாயிரம் போட்டால் பத்தாயிரம்! பத்தாயிரம் போட்டால் இருபதாயிரம் - இருபத்து நான்கே மாதங்களில் இரண்டு பங்கு! நீங்கள் இலக்கர்களாக ஆகவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இப்படிச் செய்தித்தாள்களில் விளம்பரம்! பகட்டான திறப்புவிழா! படக்கொட்டகைகளில் எல்லாம் ஆர்வமூட்டும் விளம்பரம்! கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு, ஓடியதை ஒருவர் ஒருவராகப் பேசி நகர் பேசும்! நாடு பேசும்! ஆனால் இலக்கர் என்ன ஆவார்? கலக்கர் ஆவார்! நோயர், இவ்வதிர்வுச் செய்தியால் போயே போய்விடுவார். உள்ளது உரியதை யெல்லாம் விற்று முதலிட்டவர்கள் முக்காடுபோட்டுக் கொண்டு முட்டி அழுவர்! ஆனபின் ஆவதென்ன? இது வெளி நாட்டுச் சரக்கு! போனால் கிடையாது; என் நெருக்கடியால் விற்கிறேன். யாருக்கோ தருவதை உங்களுக்குத் தரலாமே என நல்லெண்ணத்தால் தருகிறேன். ஒரு மாதங்கூட ஆகவில்லை; புத்தம் புதிது. பாதிவிலை கூட இல்லை; எண்ணிப் பாராமல் எண்ணிக் கொடுங்கள் என்று நயமாகப் பேசி, ஏமாந்தவர் தலையில் கட்டிவிட்டுப் போயிருப்பார்! வானொலியோ, தொலைக்காட்சியோ, கடிகாரமோ மிதிவண்டியோ துள்ளுவதோ - ஏதோ இருக்கும். வாங்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, களவு என்றோ, கடத்தல் என்றோ பறிபோகியதுமன்றி மானமும் போகும்! மலிவான விலையில் ஒருவன் தலையில் கட்டுகிறான் என்றால் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஆனபின்னே அரற்றியதால் ஆவதென்ன? நம்பிக்கையான புள்ளி; பக்கத்தில் ஒரு செண்டு பன்னீராயிரம். ஒரு நெருக்கடிக்காக விற்கிறான். நாம் தந்ததை வாங்கிக் கொள்வான். அரைவிலை; ஆறாயிரம்; முடித்து வைக்கிறேன். எனக்கு நீங்கள் தருவதை வாங்கிக் கொள்கிறேன் என்று இனிக்கப்பேசி விலைப்பதிவும் முடிந்து விடும்! எழுதித் தந்தவனுக்கும் அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இராது. அவன் இடம் தானா? பக்கத்து இடத்தான் எவன்? எவரிடம் வாங்கியது? இவற்றையெல்லாம் கூடத் தெரியாமல் வாங்கினால், தெரியாமல் விற்றுத், தெரியாமல் ஓடிவிடமாட்டானா? வேலை வேண்டுமா? உள் நாட்டிலா? வெளிநாட்டிலா? கவலை விடுக; கைம்மேல் வேலை, கையில் கணிசமாகத் தள்ளுக இப்படி எத்தனை வேலைத் தரகர்! அவர்க்கு வேலை ஒன்றைப் - பிழைக்கும் வேலை ஒன்றைப் - பார்த்துக் கொண்டார்! அகப்பட்டவர் நிலை! ஐயோ என்றால் தீருமா? அம்மோ என்றால் முடியுமா? பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, பாத்திரச் சீட்டு, துணிச்சீட்டு, சுற்றுச்சீட்டு, இப்படி எத்தனை சீட்டுகள்! இன்னும் குலுக்குச் சீட்டு வகைகள் எத்தனை! தூண்டில் புழுவை விரும்பித் துடித்துச் சாகும் மீன் போலச் சூதர் அழிவர் என அறவோர் சொல்லியும், அழிவோர் கேட்டாரோ? அரசுகளே பரிசுச்சீட்டும் பந்தயமும் நடத்தும் நாளில் சுருட்டர்களைச் சொல்ல வழியுண்டோ? குறுக்கு வழியிலே - கண்ணைமூடிக் கண்ணைத் திறக்கும் பொழுதுக்குள்ளே - கொழுத்த செல்வர் ஆகவேண்டுமென்று கொள்ளை கொடுத்துக் கொள்ளி முடிந்தவர்களின் எண்ணிக் கைக்கு அளவுண்டா? நாள் தவறினாலும், நான் தாள்களில் இத்தகு செய்திகள் தவறியதுண்டோ? ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்? என்கிறார்வள்ளுவர். மேல்வரும் ஊதியத்தை எண்ணிப், போட்ட முதலையும் இழக்கக்கூடிய முயற்சியை அறிவுடையோர் மேற்கொள்ளார் என்றார். அறிவுடையோர் மேற்கொள்ளாமலா உளர்? இவ்வகையில் ஏமாறுபவர்கள் அனைவரும் கல்வி அறிவிலார் தாமா? கற்றவர்கள், பாடம் பெற்றவர்கள், பதவி யுற்றவர்கள் எத்துணைப் பேர்? வள்ளுவ வாக்கின்படி அறிவுடையர் எனத் தக்கவரா அவர்? ஒரே ஒரு திருக்குறள் எத்தனை பொருள்களை அடக்கி வைத்துள்ளது! எத்தனை பேர்கள் குழிக்குள் விழாமல் இருக்க ஒளிகாட்டுகிறது! வாழ்வியலுக்குத் திருக்குறள் போல வழி காட்டியாகும் பிறிதொன்றைத் தொட்டுக் காட்ட முடியுமா? வள்ளுவம் போலச் சிறந்த வழிகாட்டியும் உண்டோ? 6. வள்ளியப் பெருமிதம் இந்தப் பள்ளிக்கூடம் பாலப்பர் நன்கொடையில் கிடைத்தது. இந்தக் கல்லூரி கண்ணப்பர் நன்கொடையால் வாய்த்தது. இப்பல்கலைக் கழகம் பனிமதியர் பரிவால் கிளர்ந்தது. இம் மருத்துவமனை மாறனார் நாட்டுக்கு மனமுவந் தளித்த கொடை. இச்சோலையும் காவும் சுடர்விழியார் வழங்கிய வளக்கொடை. இப்பந்தரும் நீர்நிலையும் அருளனார் அருளிய அருட் கொடை. இந்நூலகம், படிப்பகம் ஆகியவை நல்லையன் நல்கிய நலக் கொடை. இவ்விலவய உண்டுறை விடுதி வளவனார் வழங்கிய வளர்கொடை. இவ்விளையாட்டரங்கு இனியர் இசைந்தளித்த இன்கொடை. இம் மணிமன்றம் மணிவண்ணர் மாக்கொடை. இக் கலைக்கோயில் கதிரவனார் கவின்கொடை! இவ்வாறு நயத்தகு நிறுவனங்கள், நலத்தகை அமைப்புகள் எங்கெங்கெல்லாமோ காண்கின்றறோமே! நம் கண்முன் அவற்றின் நிறுவனர்கள் இல்லாமலும் புகழுடலுடன் பூத்துக் குலுங்கக் கண்டு பூரிப்பு அடைகின்றோமே! செத்தும் கொடைஞராய்ச் சிறக்கும் புதுப்புதுச் சீதக்காதியராய்த் திகழ்கின்றனரே! இப்பேற்றைச் செல்வமுடை யவர் ஒவ்வொருவரும் பெற்றனரோ? இலரே! கோடி கோடியாகத் தேடிவைத்தவர் எத்துணையர்? பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துக் கேடுகெட்ட மாந்தர் எனப் பழிக்கப்பட்டுப் பாழானவர் எத்துணையர்? தம் பெண்டு, தம் பிள்ளை, தம் குடும்பம் என்றே தட்டழிந்து கெட்டவர்கள் எத்துணையர்? ஏழு வழி முறையர் இருந்து கொண்டு உண்ணலாம் எனத் திரட்டி வைத்துத், தலையை உருட்டி விட்டவர் எத்துணைப் பேர்? இவர்களெல்லாம் புகழுடம்பு பெற்றனரோ? கொடை வாழ்வில் குலுங்கினரோ? இலரே! வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று சொல்லிக் கொண்டு தேடிய தேட்டையெல்லாம் - அறத்திற் கென அயலார் வைத்த தேட்டையெல்லாம் - ஆருக்கும் பயன்படுத்தாமல் அழிந்தொழிவார் துறவொரு துறவோ? தந்நலந்துறந்து பிறர்க்குதவலன்றோ துறவு? வருவாய்க் கணக்கை ஏமாற்றுவதற்கு அறத்தின் பெயரால் குடும்பவளத்தை நிலைப்படுத்துதற்கு அரசு வளத்தைத் தம்வளமாக்கிக் கோடற்கு என் உள்நோக்கு எதுவாக இருந்தாலும் அந்நோக்கின் ஊடே ஒரு சிறு பொது நலமேனும் ஊடாடி இருக்கச் சிலர் சிலர் நாட்டு நலச் செயல் செய்கின்றனர் அல்லரோ! இந்நலச் செயல் செய்தற்கும் எல்லாச் செல்வருக்கும் இயன்றதோ? ஏன் இயலவில்லை. கொள்ளையடித்தலால், கொள்ளை கொள்ளைச் செல்வம் குவித்தவராய், உழைப்பாளர் ஊட்டத்தையெல்லாம் அட்டையென உறிஞ்சிக் கொழுத்தவராய், கொலைக்கு அஞ்சாத கொடு வெறியராய், தக்காரென இருந்தும் தகவின்மை வடிவாகித் தாழ்பவராய் இருப்பார் எத்துணைப்பேரை எண்ணி எண்ணி, கைவிட்டு எண்ணுகிறோம்! இவர்கள் செல்வச் செழுமை புகழ்வாழ்வுக்கு வாலாயிற்றா? இகழ்வுக்கு வழியாயிற்றா? பணம் - செல்வம் - கொடையாளர்க்கு வேண்டத்தக்கதே. ஆனால் அப்பணமோ செல்வமோ கொடையாகி விட்டதா! அஸதொரு வாய்ப்பு! அவ்வளவே! கொடையாவது உள்ளத்தில் ஊற்றெடுத்துச் சுரப்பது! உருக்கத்தின் பெருக்கமாய்த் திகழ்வது! உணர்வு உந்துதலால் உலாக் கொள்வது! அதனால் தான் வாழ்வியல் உண்மை உணர்ந்த வள்ளுவப் பெருந்தகை, உள்ளம் இலாதார் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. என்றார். வள்ளியம் என்னும் பேறு வளத்தில் இல்லை! உளத்திலே தான் உள்ளது. உளமும் வளமும் சேர்ந்திருப்பது பெருநலந்தான். அவ்விரண்டுள் வளம் மட்டும் இருந்து என்ன பயனும் இல்லை! உளம் மட்டும் இருந்தால் கூடப் பயனாம்! உள்ளம் இருந்தால் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ள முடியுமே! 7. ஊக்கம் உடையார் முன்னவர் தேடியிருந்த முழுச் சொத்தும் போய்விட்டது; பின்னவர்கள் மேல் பெருங்கடன் வைத்துச் சென்று விட்டார் தந்தையார். தலை பிதுங்கும் இந்நிலையிலும் நிமிர்ந்து நின்று வெற்றி கண்டவர்கள் இலரா? அவர்கள் எவ்வாறு வெற்றி கண்டனர். தொடங்கிய தொழிலால் இருந்த முதலெல்லாம் ஒழிந்தது. வாங்கி கடன்களும் வட்டியுமே வைப்புப் பொருள்கள்! வருங்காலம் இருள் - மண்டிக் கிடக்கும் கிடப்பு! என்னும் நிலையிலும் அலைவு குலைவு இன்றித் தலை தூக்கி நின்று தழைத்தவர்கள் இலரா? அவர்கள் எவ்வாறு தழைத்தனர்? நம்பிச்சேர்ந்த கூட்டாளி! நடுச்செங்கலைப் பறித்தது போல் பறித்துத் தலை தடவி விட்டான்! உள்ளது உரியது எல்லாம் நொடிப் பொழுதில் கையலக், கையகல வீடும் மனையும் இல்லாது வெளியேறியும் வெம்பிப் போகாமல் வீறு காட்டிய வர்கள் இலரா? எவ்வாறு வீறு காட்டினர்? எல்லாம் முழுகிப் போய்விட்டது! இருப்பதைக் கடன் மேனிக்கு எடுத்துக் கொள்ள, ஏதிலியாய் எழுதித் தந்துவிட்டுத் தலை மறைவானர்களும், தாளூன்றி நின்று தனிச் சிறப்பு அடைந்ததிலரா? எவ்வாறு அடைந்தனர்? ஓ ஓ! என்ன உயர் பதவி! எதற்கும் எடுபிடிகள்! எங்கும் ஊர்திகள்! எண்ணும் வகையெல்லாம் இயலும் அதிகாரம்! பளிச்சிட்ட பேறுகள்! எல்லாமும் நொடியில் பறிபோய் மலை சாய்ந்து நிலை தாழ்ந்ததென்னும் நிலையிலும், நெஞ்சு நிமிர்ந்து நின்றவர்கள் இலரா? எவ்வாறு நிமிர்ந்து நின்றனர்? தேட்டாளன் அவன்; இன்று ஒட்டாளன் என்னுமளவில் கொள்ளை கொடுத்து விட்டான்; கொத்தாகப் பறிக்கப்பட்டது போல் குடும்பத்தையெல்லாம் கொலைக்குக் கொடுத்து விட்டான்! கட்டிய துணியோடும் முட்டிய கண்ணீரோடும் ஊர்விட்டுப் போன அவன் உயரவில்லையா? எவ்வாறு உயர்ந்தான்? பள்ளிக்குப் போகும் காலத்தில் படிக்காமல் பாழாக்கி, தொழிலுக்குச் சென்ற நாளிலெல்லாம் வெட்டியாக ஊர்சுற்றி, உதவாக்கரை என்னும் ஊர்ப்பழிக்கு ஆட்பட்டவர்கள் கூட ஓ ஓ! எனப்புகழ ஒருநாள் வாழவில்லையா? எவ்வாறு வாழ்ந்தனர்? இனி அவ்வளவுதான்! விழுந்தது விழுந்ததுதான்! எழுந்து நடக்க முடியாது! குட்டிச்சுவர் நிமிர்ந்தாலும் நிமிரும்; இவன் நிமிரான் என ஒத்த கருத்க ஊர் தந்த உரிமைப் பட்டயத்தை, ஊரே திருப்பிக் கொள்ளச் செய்துவிட்டுக் கொடி கட்டிப் பறந்தவர் இலரா? எவ்வாறு கொடிகட்டிப் பறந்தனர்? முட்டாள் மூலை இது! அங்கே போய் உட்கார்! முதற்பலகை என்ன உனக்கு! வகுப்புக்கு மூன்றாண்டு என்பது உன் உரிமை! எப்படி உருப்படுவாய் என அறிவுக்கொடைஞரால் அடையாளம் சொல்லப்பட்டவனும் அவர் மூக்கிலே விரலைவைத்து நோக்க, பள்ளி முதன்மையென்ன, மாநில முதன்மையே பெற்றுவிடுவதில்லையா? எப்படிப் பெற்றான்? சப்பாணி, நடையைப்பார்! நீயும் உன் காலும்! உனக்கு ஓட்டப் பந்தயத்திலே வேறு ஆர்வமா? என எள்ளி இகழப்பட்ட அவன் ஆருக்கும் முதல்வனாக வருபவனுக்கு முதல்வனாக வந்து, ஆளாளுக்குப் பாராட்ட வென்றதில்லையா? எப்படி வென்றான்? வாய்த் திக்கல்! வருகிறது மேடைக்கு! ஒரே அறுவை! என்று அவை யோரால் அருவறுப்பாகப் பார்க்கப்பட்டவனும் சொல்லின் செல்வன் நாவீறன் செஞ்சொன்மாமணி எனத் திசைதோறும் இசை பரப்பக் கேட்டதில்லையா? எதனால் இசை பரப்பாளனானான்? உன்னைப் போலும் முழுமகனுக்கு (மூடனுக்கு)ப் பாடம் கற்பிப்பதில்லை என்று கைவிரிக்கப்பட்டவர்களும் கைவிரித் தவர்களாலேயே கட்டித்தழுவிப் பாராட்டுமாறு புலமைப் பேறு எய்தினர் இலரா? எதனால் எய்தினர்? உடன் வந்தவர்களெல்லாம் ஓடி ஒளிந்துவிட இனி அவன் தப்பமாட்டான் என எண்ணப்பட்டவனும் ஒருதானாக நின்று ஒரு படையையே புறங்கண்டு வெற்றிவீரனாக நடைபோட்டு வந்ததில்லையா? எப்படி அவனுக்கு வாய்த்தது? இழக்கக்கூடாதது ஒன்றே ஒன்று. அந்த ஒன்றை இழக்காத வர்கள் வேறு எத்தனை எத்தனை இழப்புகளுக்கு ஆட்பட்டாலும் அவர்கள் இழப்பாளர்கள் ஆவது இல்லை! பொருள் இழப்பைப் பொருளால் மீட்கலாம்; கால இழப்பையும் கருத்தாக எண்ணிச் சரிசெய்து விடலாம்; உறவு இழப்பையும் உரிமை இழப்பையும் புறங்காணலாம். வாய்க்காத ஆற்றலையும் வரப்படுத்திக் காணலாம். ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும். அந்த ஒன்று மட்டும் ஒன்றியிருந்தால் ஒன்றென்ன ஓராயிரமும் ஒருகோடியும் ஒன்றும்! அந்த ஒன்றே உள்ளம்! ஊக்கம்! உரம்! ஊக்கத்தை இழந்து விட்டால் இருக்கும் எதுவும் இருப்பது ஆகாது! ஊக்கம் இருந்தால், இல்லாதவை எவையும் இல்லை! ஊக்கமே எல்லாம்! எல்லாம்! அதனால்தான், உள்ளம் உடைமை உடைமை என்ற திருவள்ளுவர். ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் என்றும் கூறினார். ஊக்கத்தை ஓரரிய கைப்பொருளாகக் கொண்டவர்களுக்கு ஆக்கம் சேரும். அதுவே வந்து, தானாகச் சேரும். வழிகேட்டு வந்தும் சேரும். உடையை வரிந்து கட்டிக் கொண்டும் வந்து சேரும்; ஊக்கமுடையவன், ஆக்கம் இழப்பது என்பது வரலாறு காணா வரலாறு! வள்ளுவம் வாழ்வியல் பிழிவு! ஒவ்வொரு குறளிலும் ஆயிரவர் ஆயிரவர் வாழ்வியல் அடக்கம்! அதனை உணர்ந்தவர் வள்ளுவ வழியர்! வள்ளுவ வாழ்வர்! 8. இனநலப் பேறு என் பிள்ளை நான் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்; இப்பொழுது ஏதாவது சொன்னால் என்னையே நார்நாராகக் கிழிக்கிறான் என் பிள்ளை எவ்வளவு தங்கமான பிள்ளை சேரக் கூடாவனுடன் சேர்ந்தான்; சீர்கெட்டான் வாய் அலுங்கப் பேசிக் கேட்டதில்லை; அந்த வாயா டியோட சேர்ந்தாள்! இப்பொழுது அப்பப்பா! v¥go bašyh« vL¤bj¿ªJ ngR»whŸ! ‘nghd M©ony mt‹jh‹ gŸËÆš Kjšt‹; ïªj M©L mt‹jh‹ Mf¡ filá; mªj mu£ilfŸ jh« cwî; cU¥gLkh? அடுத்த வீட்டில் தண்ணீர் குடிக்கமாட்டான்; கை நனைக்க மாட்டான்; அவனைப் பாரேன்; குடித்துவிட்டுக் கும்பலோடு கும்மாளம் போவதை! எத்தகைய நல்ல தாய்; எத்தகைய நல்ல தந்தை; ஆகாத கூட்டத்தோடு சேர்ந்து கையுங்களவுமாகப் பிடிபட்டிருக்கிறான்; சூதாடிய கை, களவாட வெட்கப்படுமா? சே! சே! கல்லாக இருந்த உடல்! எப்படித்தான் இப்படி இளைத்ததோ? பாவிப்பயல் செய்கிற பாட்டைப் பார்த்து மனந் தாங்காமல் மானந்தாங்காமல் - போயே போய்விட்டார் - இத்தகைய பேச்சுகள் எந்தத் தெருவில் இல்லை! எந்த ஊரில் இல்லை? உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த ஒழுக்கத்தில் வளர்ந்து, உயர்ந்த நடைமுறையிலேயே பழகியவர்களும் கூட சேர்க்கையால் எப்படியெல்லாம் மாறிவிடுகிறார்கள்? மலைமேல் விளக்காக மதிக்கப்பட்டவர்களும் தலைகீழ் மாறி நிலை சாய்ந்துவிடக் காண்கிறோமே! சேர்ந்த இனத்திற்கு எவ்வளவு வலிமை? குழந்தை பருவத் தர்க்கும் - வளரும் பருவத்தர்க்கும் தாம் இந்நிலைமையா? வளர்ந்தவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இல்லையா? அசையாத உள்ளத்தையும் அசைக்க வல்லவர்களையும், ஆடாத உள்ளத்தையும் ஆட்ட வல்லவர்களையும் உலகம் என்ன அறியாதா? அரிதாக வேண்டுமானால் அங்கொருவரும் இங்கொரு வருமாய் அசையா மலையாம் நிலையரைக் காணலாம்! அம் மலைகளைக் கணக்கில் கொண்டு, அசையும் இலையும், ஆடும் கொடியும் உறுதிமிக்கதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாமா? புளிய மரத்தையே வேரோடு பிடுங்கி எறியும் வெங்கொடுஞ் சூறைக் காற்றைக், காயைப் பறித்தாலே கிளையொடியும் முருங்கைதானா முட்டுக் கொடுத்து நிறுத்தும்? சேர்ந்தவர்கள் கூட்டத்தால் குழந்தைகள் சீர்கெட்டன என்பவர்கள், கூடிய கூட்டுறவால் இளையவர்கள் கெட்டனர் என்பவர்கள் - ஆம் முதியவர்கள் - வளர்ந்த பெரியவர்கள் - தாம் சேர்ந்த சேர்க்கையால், சூதராய் - குடியராய் - வஞ்சராய் - நஞ்சராய் - திருடராய் - கொலையராய்த் தட்டழிவதும் கெட்டழிவதும் நாளும் நாளும் நாமறியாதவையா? ஆழமறியாத வெள்ளத்தில் - ஆளை விழுங்கும் சுழியில் - அகப்பட்ட இளமையென்ன, உறுதியற்ற முதுமையென்ன? மீள முடியுமா? மீட்டுவதும்தான் பின்னர் எளிமையா? பழுத்து முதிர்ந்த பட்டறிவுப் பாட்டார் வள்ளுவர், பரிவுடன் உலகோரைப் பார்க்கிறார் - உரைத்தே ஆகவேண்டும் என்று பார்க்கிறார்! தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்ற அவர் தன்னைத்தான் காக்கின் இனங்காக்க என்று சொல்லத் தவிக்கிறார்! தன்னை என்ன தன்னை? சான்றோர் என்று சொல்கிறோமே அவரை விலக்கி விடலாமா? கூடாது; அவரையும் சேர்க்கத்தான் வேண்டும்; அவரும் சேரா இனத்தோடு இரண்டறச் சேர்ந்து விட்டால் தப்பி மீளார்; ஆதலின் அவர் தம்மையும் விடக்கூடாது என முடிவு செய்கிறார். அதனால், மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்(கு) இனநலம் ஏமாப்(பு) உடைத்து என்கிறார். ஏமாப்பாவது பாதுகாப்பு. மனநலச் சான்றோர்க்கே இன நலப் பாதுகாப்பு வேண்டுமென்றால் இளையர்க்கும், வளர்வோர்க்கும் எத்துணை இன நலப் பாதுகாப்பு வேண்டும்? மன நலம் நன்குடைய பெற்றோரும் அரசும் இதனை எண்ணத் தவறினால், பின்னர்க் கலங்கியோ, கண்ணீர் வடித்தோ ஆவதென்ன? அன்றன்றே விளைவைக் காணும் பெற்றோரே அக்கறை காட்டாவிட்டால் ஐந்தாண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் அரசுக்குத்தானா அக்கறை வந்துவிடும். வள்ளுவர் எவ்வளவு பெரியவர்! வளமார்ந்த வானகத்தை வையகத்தில் படைக்க நினைத்த பெரியவர்! இன நலம் வாய்ந்த மனநலச் சான்றோர் பெருகிய உலகு தானே பேரின்ப உலகம்! எத்தகைய இன்ப உலகப்படைப்பாளி வள்ளுவர்! ஆம் அவர் மிகப் பெரியவர்! 9. அறம் சாரா நல்குரவு உலகெல்லாம் ஒன்று என்று எண்ணும் பேருள்ளம் தாயுள்ளம், அவ்வுள்ளம் தெய்வவுள்ளம். தன் பிள்ளை தவறு செய்ததாகக் கேட்டால் கூட, அதனை நம்ப மறுக்கும் அன்புள்ளம் அவ்வுள்ளம். தன்பிள்ளை தவறு செய்வதை நேரில் கண்டால் கூட, அதனைப் பிறர் சேர்க்கையால் நேர்ந்து விட்டதாகப் பரிவு கூறும் பாசவுள்ளம் அவ்வுள்ளம்! தன் பிள்ளை அழகிலியாய் இருந்தால் கூட, உறுப்புக் குறையாளியாய் இருந்தால் கூட, அவற்றையெல்லாம் பொருளாக எண்ணாத பொன்னுள்ளம் அத்தாயுள்ளம்! தீராப் பிணியனாய்ப் பெருஞ்சோம்பனாய்த் தன்பிள்ளை இருப்பினும் கூட, பொருள் முடைப்பொழுதிலும் பொரும லின்றிப் போற்றிப் புரக்குமுள்ளம் அவ்வள்ளல் தாயுள்ளம்! தான்பெற்ற பிள்ளை தன்னை எவ்வெவ்வகையால் புறக் கணித்தாலும், புண்படுத்தினாலும் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, ஊர்மெச்சும் பிள்ளையாக ஒருநாள் காணக்கூடும் என்னும் நம்பிக்கையில் தன்னை மறக்கும் தனியருள் உள்ளம் தாயுள்ளம்! அத் தாயுள்ளமும் ஏற்றுக்கொள்ளாத - வெறுக்கத்தக்க - வறுமை நிலை ஒன்று உண்டு. அதனை வள்ளுவத் தாயுள்ளம் வையக வாழ்வியற் பொருளாக வைக்கின்றது. தன் மகனைத் தன்னுயிராய்த் தன்னுணர்வாய்த் தன் வாழ்வாய்க் கொண்ட தாயுள்ளம், தன்மகனை அயலான் போல் கருதுமாறு ஒருவகை வறுமை செய்துவிடுமாம்! எல்லா வறுமையுமா அப்படிச் செய்யும்? இல்லை! இல்லை! என்கிறது வள்ளுவத் தாயுள்ளம்! தன் மக்களுள்ளும் செல்வம் இருப்பவரிடம் காட்டும் அன்பினும், அஃது இல்லாரிடம் காட்டும் பேரன்பே தாய்க்கு மிக்கிருத்தல் உலகியற்கை! தன் மக்களுள் உடற்குறை இல்லார்மேல் இருக்கும் அன்பினும், அக்குறையாரிடமே பேரன்பு செலுத்துதல் தாயின் தனியியற்கை. அவ்வாறாகவும் தன்மகன் வறுமை கண்டு அயலான் போலத் தாயுள்ளம் - ஈன்ற தாயுள்ளம் கருதுமா எனத் திகைக் கிறோம். ஆனால் ஆழ்ந்து அகன்று நுணுகிப் பார்த்து அல்லவோ திருவள்ளுவர் கூறுகின்றார்! தாய் தன் மக்கள் வறுமை கண்டு வெறுக்கமாட்டாள். உண்மை. ஆனால் அம்மக்கள் வறுமையுற்ற வகை எவ்வகை என்பதை எண்ணிப் பார்த்தே வெறுப்பாள்! வெறாதும் இருப்பாள்! நேரிய ஒருவன் அடையும் வறுமை, அவனை அறிவார் நெஞ்சை எல்லாம் நெகிழச் செய்வது இல்லையா? பிறர்க்கென வாழும் பெருந்தகையாளன் படும் வறுமை பிறர் எல்லாம் தாம்பட்டதென வதங்க வைப்பதில்லையா? ஆனால், முன்னவர் செல்வம் - பின்னவர்க்குரிய செல்வம் என்று பாராமல் சூதிலே அழிப்பானை - குடிகெடுப்பானைத் தாயுள்ளம் பொறுப்பதில்லை. அவன் வறுமையை முறையான வறுமையெனத் தாயுள்ளம் ஏற்பதில்லை! குடி கெடுக்கும் குடியையே கொண்டும் - அது குடியைக் கெடுத்தே தீரும் என்பதை அறிந்துகொண்டும் அதனையே வாழ்வாகக் கொண்டு நடைப்பிணமாய்த் திரிவானைத் தாய் மதிப்பது இல்லை. அவன் வறுமையைப் பொருட்டாக எண்ணு வதில்லை. கொள்ளிவாய்ப் பேய் என ஊரெல்லாம் குலைநடுங்கச் செய்கின்ற வஞ்சனை - நஞ்சனை - கொடியனை - கொள்ளை யனை - கொலையனை - பெற்ற பெரும்பாவத்திற்குத் தன்னைத் தானே நொந்துகொள்வதையன்றி அவனை உயிருடையவனாக எண்ணுவது இல்லை தாயுள்ளம். அவன் வறுமைப்பட்டால் அவ்வறுமைக்காக இரங்குவதுமில்லை. ஏன்? அவன் செயல்கள் அறஞ்சாராச் செயல்கள்! அவன் பட்ட வறுமை அறஞ்சாராச் செய்கைவழிகளால் வந்த வறுமை! அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் என்பது குறள். நல்குரவை (வறுமையை) இருபால் படுத்திப் பார்க்கிறது வள்ளுவர் உள்ளம். அறஞ்சார்ந்த நல்குரவு ஒன்று. மற்றொன்று அறஞ்சாரா நல்குரவு. நல்குரவே (வறுமையே) இல்லை. அது நல்கு உரவே! (கொடுக்கப்பட்ட வலிமைப்பேறே) அறஞ்சாரா நல்குரவாம் மற்றொன்றே பெற்றவளாலும் பகையாய்க் கருதவும், பழியாய்க் கருதவும்படும். பிறரால், பிறர்போல நோக்கப்படுதலில் புதுமையில்லை. பெற்றவளாலும் பிறன்போல நோக்க நேர்கின்ற அறனில்லா வறுமையைத் தேடுகின்றானே பேதை, அவனே பேதையுள் பேதை! தாயின் தூய உள்ளத்திலும் தன்னிருப்பைத் தேடிக் கொள்ளாத கயவனை உலகம் பொருட்டாகக் கொள்ளுமா! இத்தகைய கயமைப் பிறப்பாளர் அவர் இவர் என்று சுட்டிக் கூறலாமா? அவரவர் பக்கத்திலே பார்த்தாலே நன்கு புலப்படுமே! 10. பகை நட்பு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலம் கணித்தல் உலகப் பொது வழக்கு, நட்பியல்பை நுணுகி ஆராயும் வள்ளுவர் வேறொரு வகையில் முக்காலங்களைப் படைத்துக் காட்டுகிறார். அவை நட்பாங்காலம், நட்பு பகையாங்காலம், பகை நட்பாங்காலம் என்பவை. நம் வாழ்வின் ஓட்டத்தை நிகழ்வில் இருந்து பின்னுக்குத் தள்ளி ஓர் ஐங்கணக்கு அல்லது ஐந்தொகைக் கணக்கு போட்டுப் பார்ப்போமானால் வள்ளுவப் பார்வையின் அழகும் நன்கு புலப்படும். நம் உள்ளார்ந்த அன்பின் நண்பர் எவர்? அவருக்கும் நமக்கும் நட்பு எந்நிலையில் உண்டாயிற்று? அந்நட்பு நாளும் பொழுதும் பெருகிப் பெருகி வருகின்றதா? நட்பு இடைத் தடைப்பட்டுவிட்டதா? தடைப்பட்டதை அன்றிப் பழிக்கும், பகைக்கும் கூட இடமாகிவிட்டதா? பழ நட்புப் போயதென்ன? புதுநட்புப் புகுந்ததென்ன? இவை நட்பா? வணிகமா? நடிப்பா? தேவைக்கு வைத்துக் கொண்ட தேர்ச்சியா? தேவை முடிந்ததும் ஓடிய - ஒதுங்கிய - சூழ்ச்சியா? இவற்றையெல்லாம் சொல்வதா? நினைவதா? நினைந்து பார்ப்பது நமக்காகவா? பிறர்க்குச் சொல்வதற்காகவா? பிறர்க்குச் சொல்வதற்கு மட்டும் நினைந்தால், நமக்கு ஆவதென்ன? எத்தனை கோணத்தால் எண்ண வேண்டுமோ? அத்தனை கோணத்தாலும் எண்ணித் தெளிவு செய்ய வேண்டிய செய்தி இது! ஏன்? என்றும் என்றும் தெளிவிலா வாழ்வாகவே ஒழிந்து விடக்கூடாதே! சொற்றுணை காண்கிறோம்! வழித்துணை தேடுகிறோம்! வாழ்க்கைத் துணையும் தேடுகிறோம்! வாழ்க்கைத்துணை, சொற்றுணை இல்லையா? வழித் துணை இல்லையா? இவற்றின் துணையாவதுடன், மனத்துணை யாவதும் வாழ்க்கைத் துணையே! உள்ளத்தை உள்ளபடி உரைத்தாலும், எள்ளல் இல்லாமல், இகழ்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளும் ஒருமைத்துணை - உயிர்த்துணை அவ்வாழ்வுத் துணையே! இன்பத்துணை மட்டுமா அது? துன்பத்து விடாத தூய துணை! அத்துணைக்கு ஒப்பு உண்டா? ஓரளவால் உண்டு! அது உயிர் நட்பாம் துணை. ஒரே ஒரு வேற்றுமை! பால் வேற்றுமையுடையது வாழ்க்கைத் துணை! பால் ஒற்றுமை யுடையது. நட்புத்துணை! பால்-ஒருமை நட்பாகாதோ? நட்பாகலாம்! நட்பாகத் திகழலாம்! ஆனால், பொதுப் பார்வையில் வாழ்க்கைத் துணையாய் - அதன் சார்பாய்ப் பார்ப்பதே வழக்காகி விட்டதால் இவ்வரையறை வேண்டத்தக்க தாயிற்றாம். காதலும் நட்பும் ஒத்த தன்மை என்றால் அந்நட்பின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் அந்நட்பு, நட்புத் தானா? நட்பாக இல்லா நட்பானால், நட்டாற்று வெள்ளத்தில் நடுக்கும் பாறைகளுக்கு இடையே அடித்துச் செல்லப்படுபவன் துடித்துச் சாவ ஆவது போல் ஆகிவிடும் அல்லவா? வள்ளுவர், நட்பை எத்துணையளவில் எண்ணுகிறார்? நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு என ஐந்து அதிகாரங்கள் நட்புக்கு! இம்மட்டோ? சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல்! இவ்வதிகாரங்கள் நீங்கிய அதிகாரங்களிலும் நட்பைப் பற்றி எத்தனை செய்திகள்? ஏன்? ஆக்கமும் அழிவும் நம்பிய நட்பால் ஏற்படுவதால் தான்! நட்பாக இருந்த நாளை - நிலையை - நினைத்துப் பார்த்தல் - அந்நட்பு பகையாக மாறிய நிலையை நினைத்துப் பார்த்தல் - ஒரு கால் அப்பகையாகிய நட்பு, மீளவும் நட்பாக வந்தால் அந்நிலைமையை நினைத்துப் பார்த்தல் ஆகிய முந்நிலைகளை எண்ணுவான், முன்னிலையாக அந்நட்பைக் கொள்ளலாமா? கொண்டால் அவன் எதிர்காலம் என்னாம்? அவனை நம்பி வாழ்வார் நிலைமை என்னாம்? வள்ளுவர் சொல்கிறார்; பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். பகைத்துச் சென்றவன் நண்பனாக வருங்காலம் ஒன்று உண்டானால், அவனிடம் முகத்தால் மட்டும் நட்புச்செய்க; அகத்தால் உள்ளத்தால் - நட்பைக் காட்டாது ஒதுங்கிவிடுக! அவனுக்கு உன் நட்பு இல்லாமையைக் காட்டாதே! அதற்காக உள்ளத்தால் நட்பும் கொள்ளாதே! அந்நிலையில் அவன் பகையை - வெறுப்பை - மேலும் தேடிக்கொள்ளாமல் இருக்க ஒருவழி முகநட்பு! நீ நம்பிக் கெடாமல் இருப்பதற்குரிய மறை வழி - மனவழி - அகநட்புக் காட்டாமை! இரண்டும் போற்று! அவனுக்கும் தீமை இல்லை! உனக்கும் கேடு இல்லை! இது வாழும் வகை என்கிறார்! வள்ளுவரா முகம் வேறாகவும் அகம் வேறாகவும் காட்டச் சொல்கிறார்? பொய்யா மொழியரா புகல்கிறார்? திகைப்பு ஏற்படவே செய்யும்? எங்கே சொல்கிறார்? கூடா நட்பிலே சொல்கிறார்! அக் கூடாநட்பினர் எத்தகையர்? கொல்லர் பட்டடையிலே சம்மட்டி தாக்குகிறதே; அப்படித் தாக்க நினைப்பவர் அவர்; மறைத்து வருகிறார்; ஆனால் நல்லவராகக் காட்டிவருகிறார்! இனம் போல வருகிறார்; ஆனால், இனமில்லாமையை உள்ளே கொண்டு இனமாக வருகிறார்! முகத்தால் நகை காட்டி வருகிறார்; ஆனால், அகத்தே வஞ்சம் வைத்து வருகிறார்! ஒட்டாமையை உள்ளே வைத்து வருகிறார்! ஆனால், எப்படி வருகிறார்? நட்டார் போல் வருகிறார்! கையால் தொழுகின்றார்; ஆனால். கையுள் கொல்லும் கருவி வைத்துள்ளார்! கண்ணீர் விட்டு அழுகின்றார்; ஆனால், அக்கண்ணுள்ளே வஞ்சம் வைத்துள்ளார்! தாமே விரும்பி உதவி செய்வார் போல வருகிறார்! ஆனால், போன பின்னே சொல்லிச் சொல்லி நகைக்கிறார்! இப்படிப்பட்ட நட்பு கூடும் நட்பா? கூடா நட்பா? இக்கூடா நட்பினர்க்கு முகநட்டலைக் கூறுதலே வள்ளுவ வளம் என்பதை அன்றி வேறொன்று சொல்ல முடியாதே! அழிக்கத் திட்டமிட்டு வரும் நட்புக்குச் சுளிப்புக் காட்டாமல் இருப்பதே அரிது! அதனினும் அரிது முகத்தில் நகைப்புக் காட்டுதல்! எத்தகைய வாழ்வியல் தெளிவு இருந்தால், இப்படிக் கூற முடியும்? திருவள்ளுவர்க்கு அமைந்த தனித்திறம், பேறு அது! 11. வளரும் பயிர் மாந்தரின் நாகரிகத்துள் தலையாய ஒன்று உடை. உடுப்பதால் உடுப்பு என்றும் உடை என்றும் பெயர் பெற்றது. உடுத்துதல் என்பது சூழக் கட்டுதலாகும். நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை என்னும் தமிழ் வாழ்த்து இதனைக் தெளிவாக்கும். விண்மீனின் பெயராகிய உடு என்பது சூழ இருத்தலால் அமைந்த பெயரே! உடை மானத்தின் அடையாளமாக விளங்குகின்றது. உயிரை விடுவதை உறுதியாகக் கொண்டவரும், உடை நெகிழ்தலும் கூடாது எனப் போற்றுதலை அவர் கட்டியுள்ள இறுகுடையே தெரிவிக்கும். உடையை விடாமல் காப்பது போலக் காக்கப்படுவது உடைமை. உடைபோல் விடாமல் காக்கப்படுவதால் அமைந்தது உடைமையாகும். இத்தகைய உடைமைகள் பத்து வள்ளுவர் வழங்கும் அதிகாரத் தலைப்பில் உள. அவை அடக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நாணுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பன. இவ்வாறு அதிகாரத் தலைப்பில் வாராமல் உடைமை; எனப்படுவனவும், உடையர் எனப்படுவனவும் பலப்பலவாம். அவற்றுள் ஒன்று உணர்வுடைமை. உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடைமையே உணர்வுடைமையாம். அஃதனைவருக்கும் பொதுவாம் தன்னையன்று. சிறப்பாம். தன்மையாம். அதனால்தான் தொல்காப்பியனார். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்றார். பருகுவன் அன்ன ஆர்வத்தனாக - நீர்வேட்கையுடைவன் அல்லது பசித்துக் கிடப்பவன் நீரையும் சோற்றையும் கொள்ளுதற்கு என்ன தவி தவிப்பானே அத் தவிப்புடையவனாக, இன்னும் நீருள் மூழ்கிய நீந்தத் தெரியாதவன் வெளியே வருவதற்கு என்ன துடிதுடிப்பானோ அத்துடிப்புடையவனாக, எரிகுடிசைக்குள் அகப்பட்டவன் வெளியேறுவதற்கு என்ன வெதுப்புக் கொள்வானே அவ்வெதுப்புடையவனாக, எவன் இருப்பானோ அத்தகையனாக ஒன்றை அறிந்து கொள்ளத் துடிப்பவனே உணர்வாளன்! அவ்வுணர்வாளன் உணரத்தக்க கருத்துக்களைத் தேடிப் போயும் கூட உயர்த்துதலே உணர்வாளர் கடமையாம். அவர்தம் அச்செயலே பல்லாயிரவர்க்கு உணர்த்துதலினும், அவ்வொரு வனுக்கு உணர்த்துதல் உயர்ந்த பயன் செய்வதாய் அமையும். பெரும்பேராசிரியர் தென்மொழிக் கலைஞர் உ.வே.சாமிநாதர் தமிழைக் கற்பதைத் தவமாகக் கொண்டார். அங்கும் இங்கும் தேடிப் போய்க் கற்றார். அந்நாளைப் பெரும்பாவலர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் ஒருவரே அவரை முழுதுணர்த்த வல்லார் என்று கேள்விப்பட்ட அளவால், அவரையே அடைந்து அவர்க்கு அணுக்கராகிக் கற்றார். ஆசிரியர்க்கும் தமக்கும் புகழாக்கிக் கொண்டமை அன்றித் தமிழுக்கும் இணையிலாத் தொண்டு செய்தார்! உணர்வது உடையார்க்கு அன்று உணர்த்தப் பெறவில்லை என்றால் பின்விளைவு என்ன நேர்ந்திருக்கும்? சபாபதி நாவலர் என்பார் மதுரையில் இருந்தார். அவர் புகழ் மதுரை வட்டாரத்தில் பெரிதும் பரவியிருந்தது, மதுரையை அடுத்துளது விளாச்சேரி. அவ்வூரின் புகழுக்கு ஒருவராய் வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞர் தோன்றினார். சபாபதியார், கலைஞர்க்குக் கற்பன கற்பித்தார். மாணவர் களிடம் நுண்ணறிவு வெளிப்பட்ட ஒவ்வொரு வேளையும் கட்டித் தழுவித் தம் அன்பை, வெளிப்படுத்திப் பாராட்டினார். அதன் பயன் தமிழுக்கு எத்துணை நலம் சேர்ந்தது என்பதைத் தமிழ் வரலாற்றுணர்வுடையோர் நன்கு அறிவர். சோழவந்தான் கிண்ணி மங்கலமடம் சிவப்பிரகாச அடிகளிடம் கற்க வந்தவர் கந்தசாமி, வீட்டைப் பகைத்து வெளியேறிய அவர் ஏட்டைப் பயிலத் தீராக் காதலராக இருத்தலை அறிந்தார். சோழவந்தான் சந்திரசேகரர் என்பார். இந்நாள் கன்னியப்பரின் முற்பாட்டனார்! முப்பொழுதும் தம் வீட்டிலே யுண்டு கொண்டு, எப்பொழுதும் கற்க உதவினார்! உணவுக்குக் கையேந்தி நிற்கும் நிலையில் இருந்த அவர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரிய நிலை எய்திற்று. உணர்வாளர் இருந்து கல்வியும் ஊணுடையும் உதவாக் கால் கந்தசாமியார் என ஒருவர் உளராவரோ? சங்க நூல்களையெல்லாம் கடலுக்குள் போட்டு விட்டாலும் கந்தசாமியாரைக் கொண்டு முற்றாக எழுதிக் கொள்ளலாம் என அவரை உணர்ந்த பேராசிரியர் விபுலானந்த அடிகள் கூறக் கூடுமோ? மடத்திலே இருந்த இளைஞன்! அவன் பொலிவு! அவன் கல்வி வேட்கை! இவை வயப்படுத்தத் தம்மோடு கூட்டிச் சென்று பன்னீராண்டுகள் பயிற்றி மடத்தின் பெரும் பொறுப்பிலே வைத்ததுடன், கற்பிக்கவல்ல பெரும் பேராசிரியராகவும், வடமொழிப் பெரும் புலவராகவும், மெய்ப்பொருள் மேதை யாகவும் ஆக்கியவர் புலவர் மயிலேறும் பெருமாள். அப்பேறு பெற்றவர் சாமிநாத தேசிகர் என்னும் ஈசான தேசிகர். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த திருமடம் திருவாவடுதுறை! வினாவ வந்தவர் விவேகானந்தர்; விளக்கங் காட்டியவர் இராமகிருட்டிணர். ஆர்வப்பெருக்காம் விவேகானந்த வெள்ளத் திற்கு அணையாக இராமகிருட்டிணர் இருந்தமையால் எத்தனை அரிய விளைவினை உலகம் கண்டது! கண்டு வருகிறது. அன்று, உணர்வை உணர்வு கண்டு கொள்ளாமல் ஒதுக்கி யிருந்தால் ஒரு தவப் பெரியாரை - அன்று - இரு தவப் பெரியாரை உலகம் கொண்டிருக்குமா? நாற்பது கல் நடந்து போய், ஒரு நூல் கேட்டான். அதற்கென எடுத்துக் கொண்ட முயற்சியை நினைந்துருகிய மூதாட்டி நூலைத் தந்தார். கூரைக் குடிசையில் வைத்துவிட்டு வேலைக்குப் போய்த் திரும்பிய போது மழையால் நனைந்து நூல் சிதைவுற்றது. வருந்திய இளைஞன் நூலொடு சென்று நிகழ்ந்ததுரைத்தான். தோட்டவேலை செய்து கொண்டு எவ்வளவு நூலாயினும் பயிலலாம் உணவுக்கும் இங்கே வாய்ப்பு உண்டு என்றார் மூதாட்டி! ஆர்வப்பிழம்பாகிய அவன் அங்கே கொள்ளை கொள்ளையாய்ப் படித்தான்! அவனே அமெரிக்க நாட்டுத் தலைவன் அண்ணல் ஆபிரகாம்! நூலின் கொடை உலகுக்கோர் அருளாளனைத் தந்த அருட்கொடையாயிற்றே! ஓர் உருபாச் சம்பளத் துணைக் கணக்கன் முத்துசாமி. அம்முத்துசாமி மூளைக்கூர்ப்பு இன்னொரு முத்துசாமிக்குப் புலப்பட்டது. அம் முத்துசாமி வட்ட ஆட்சியர். அவர் இம்முத்து சாமிக்குத் தந்த கல்விக்கொடை என்ன செய்தது. சென்னை உயர்முறை மன்றத்துக்குப் பளிக்குச் சிலையாக அச்சிறு கணக்கனைக் பெரு நிலையில் நிறுத்தியது. அவர் சா.தி.முத்துசாமியார். நான் கற்க விரும்புகிறேன் நான் கற்பிக்கிறேன் எனக்கு இவ்வளவு தொலை நடந்து வந்து (3கல்) கற்க இயலாது. நான் வேலைக்குச் செல்லாவிட்டால் குடும்பம் பட்டுணியாம் நானே உன் ஓய்வு நேரத்திற்கு ஆங்கு வந்து கற்பிக்கிறேன். - வியந்தான் கற்க விரும்பிய ஆர்வலன்! அவன் வியப்பு வெறும் வியப்பாய் இல்லை! சொன்னபடியே நிறைவேறியது. நிறைவேற்றியவர் காந்தியடிகள்! நிகழ்ந்தது ஆப்பிரிக்காவில்! வள்ளுவர் சொல்கிறார்; ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்க்கு அதனை உணர்த்துதல், தானே நன்கு வளரும் பயிருக்கு மழையும் பெய்து வளர்ப்பது போன்றது. என்று. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (1326) என்பது குறள். உணர்வதுடையாரைக் கண்டு கொள்ளல், அவர் உணரத் தக்கதை உணர்த்தல் - உணர்வாளர் கடமை; உலக நலங்கருதிய கடமை! கற்பித்தலுக்கு மட்டுமா இது! சொற்பொழிவுக்கும் பொருந்துவது தானே! இன்று கட்டாயத் தேவை - திசைமாறிச் செல்லும் உணர்வாளரைத் திருத்தத் தேவை, திருக்குறள் நெறி. உணர்த்த வேண்டியவர்கள் உணர்த்துதலை விடுத்து ஓய்ந்து கிடந்துவிட்டு, ஒதுங்கி விட்டு, உலகம் - நாடு - ஊர் -. இவர் உணரவில்லையே என்றால் எவர் குறை? 12. பயிர் மேய் வேலி கையூட் டொழிப்புக் காவற்படை அதிரடி நடவடிக்கை மதுவிலக்குக் காவலர் நான்கு பேர் சிறை கையூட்டுப் பணம் இருபத்தேழாயிரம் பறிமுதல் தஞ்சாவூர் ஏப் - 19 இது ஓர் இதழின் முதற்பக்கச் செய்தி (அதன் தமிழ் நடைவேறு; ஆயின் செய்தி இது.) கையூட்டு வாங்கியவர் எவர்? குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்கும் பணிமேற்கொண்ட மது விலக்குக் காவல் துறையினர். எதற்காகக் கையூட்டு வாங்கினர்? குடியைக் கெடுக்கும் குடியை முழுதுரிமையோடு வழங்கு வதற்கு உதவியாக இருப்பதற்கு வாங்கப்பட்ட கையூட்டு! வாங்கின்ற சம்பளம் மதுவிலக்குக்கு! அச் சம்பளத்தைக் கையெழுத்திட்டுக் கையேந்தி வாங்கியும் அக்கடமை செய்யாமை குற்றம். அதனினும் குற்றம் மதுவிலக்கை விலக்குதற்குக் கையூட்டு பெற்றமை. இது பாடிகாவலுக்கு இருந்தவன் தன் கடமையைச் செய்யாததுடன் பகைவனுக்குக் கூட்டாளியாய், அவன் தானே புகுந்து படைகளை அழிக்கப், பாதுகாப்புத்தந்த குற்றம் போல்வது! இவ்வேலைக்குத் தக்கவன் என்று சான்றிதழ் வழங்கி னாரே? அவர் வழங்குதல் என்ன ஆனது? இவ்வேலைக்குத் தக்கவன் என்று பணிக்குத் தேர்ந்தெடுத் தாரே? அவர் தேர்வு என்ன ஆனது? இவனைப் பணியில் நிரந்தரப் படுத்தலாம் என ஆய்ந்து பரிந்துரை வழங்கினாரே? அவர் ஆய்வு என்ன ஆனது? படிப்படியே பதவியுயர்வு பெறுவதற்குத் தகுதியளித் தனரே, அத்தகுதி என்ன ஆனது? கடமையை ஒழுங்காகச் செய்கின்றானா என்பதை மேலாய்வு செய்தலே கடனாகக் கொண்டிருந்தனரே? அவர் கடமை நிலை என்ன ஆனது? இத்தனை வகைக் கட்டுக்கும் உட்படாமல் கரவான உள்ளத்தைக் கொண்டிருந்து கையூட்டுப் பெற்றதைக் கயமை என்பதா? திறமை என்பதா? கயமை என அறிந்து கொண்டால் எதிர்காலத்திலேனும் இத்தகையர் தோன்றாமைக்கு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். திறமை எனத் தெரிந்து கொண்டால் இப்படிச் செய்யாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணித் தானும் செய்யத் தொடங்கிவிடுவான்! பிறர் செய்யவும் தொடக்கி விடுவான். இதனை இன்று நடவடிக்கையில் இறங்கியவர் அன்றே நடவடிக்கையில் இறங்கியிருந்தால் விளைவு இவ்வளவு கொடுமைக்குப் போயிராதே! தொற்றுநோயெனவும் கொள்ளை நோயெனவும் நாடுதழுவிப் பெருகியிராதே! உழவன் ஒருநாளும் பாராமல் பயிரை விடுவதில்லை! நேற்றுப் பார்த்தோமே என்று நினைத்துப் பாராது இருப்ப தில்லை. பயிர் பாராமல் கெட்டது என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து பார்ப்பவன் உழவன்! அவன் பயிரை மேற்போக்காகப் பார்ப்பவன் அல்லன். உள்வேர்ப் பூச்சி முதல் குருத்துப்பூச்சி வரை ஒன்றும் ஒன்றாமல் என்றும் பார்ப்பான். எப்பொழுது நோய் பற்றும், எப்படிப் பற்றும் என்பதை எவர் கண்டார்? நோய் பற்றாமல் பார்ப்பது மட்டுமா? பயிர் வளங்குன்றாமல் வளர்தற்கு என்ன வேண்டும் என்பதையும் பார்த்துச் செய்வானே! இதனைக் கருத வேண்டாமா? வள்ளுவர் கருதினார். அவர் கருதியதை அரசும் கருதவேண்டுமெனப் பறையறைந்து முழக்கினார்! எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர் (514) என்றார். எத்தனை வழிகயால் ஆராய்ந்தாலும், தெளிந்தாலும் தாம் செய்யும் செயல் வகையால் வேறுபடும் மாந்தர் பலர் என்றார். மாந்தர் உளர் என்றார் அல்லர்; சிலர் என்றார் அல்லர்; பலர் என்றார். மேலும் தலைப்புச் செய்தி தொடர்கிறது; சாராயம் காய்ச்சுவதற்குக் காவல் துறையினர் தலையிடாமல் இருப்பதற் காகக் கையூட்டுத் தரப்பட்டது. இது வாரந்தோறும் முறையாக (மாமூலாக)த் தரப்படுவது. ஒந்வொரு ஞாயிறும் பங்கு போட்டுக் கொள்ளப்படுகிறது, எப்படிப் பங்கு? பதினொன்றரைப்பங்கு! ஒரு பங்கு காவலர்க்கு; ஒன்றரைப் பங்கு தலைமைக் காவலருக்கு; மூன்று பங்கு துணை ஆய்வாளருக்கு; ஆறு பங்கு ஆய்வாளருக்கு! இன்னும் ஒரு சிறப்பு! மொத்தத் தொகையில் முதலாவதாக 1500 உருபா எடுத்துவைக்கப்படும். அது மதுவிலக்குத் துணைக் கண்காணிப்பாளருக்கு! வள்ளுவர் பலர் என்றது புரியவருமே! இலர் என்று என்றாகும்? ஊர்ப்பெயர் எவ்வளவு நல்ல பெயர்! ஊர்ப்பெயர் நன்னிலம், நல்ல மாங்குடி! ஊர்ப்பெயர் என்ன செய்யும்? இக்கையூட்டு நல்லமாங்குடி நன்னிலத்திற்கு மட்டுமே உரியதா? இவ்வூர் கண்டதால் வெளிவந்தது! மற்றை இடங்களும் கண்டால் வெளிவரும்! அவ்வளவே! உளவுத்துறை, தணிக்கைத்துறை, காவல்துறை ஆகிய வற்றின் விழிப்புறுத்தக் குறள் எனை வகையால் என்னும் இது! எனை வகையால் கொள்ளுமோ அரசு? அனைவகையால் நாடு நலம்பெறும்! 13. எள்ளாதன செய்தல் பொய் கூறுவதை நெய்ச் சோறெனக் கொண்டவன் அவன்! என்னைப் பொய்யன் என்கிறான். களவு கிடைக்கவில்லை என்றால் கண்ணுறக்கம் கொள்ளாத அவன், என்னைப் பார்த்துக் களவாளி என்கிறான். இருபத்துநான்கு மணிநேரமும் குடிமயக்கத்தில் இருப்பவன், என்னைப் பார்த்துக் குடிகாரன் என்கிறான். எட்டுக்கை இல்லையே; இரட்டைக் கையாகிவிட்டதே என்று கையூட்டு வாங்குபவன். நான் கையூட்டு வாங்கினேன் என்று என்மேல் பழிபோட்டுவிட்டான். ஊரே காறித்துப்பும் ஒழுக்கக்கேடன், என்னைப் பார்த்து நீ மட்டும் ஒழுங்கனோ? என்று சிரிக்கிறான். வேலைவெட்டி இல்லாத தண்டச்சோறு, என்னைப் பார்த்து வெட்டிப்பயல் என்று பழிக்கிறான். நான் கஞ்சிக்கு இல்லாமல் அலைகிறேனாம்! யார் எது கொடுப்பார் என்று திரிகிறேனாம்! அந்த வெங்கன், என்னை ஊரூருக்கு இப்படிச் சொல்லித் திரிகிறானாம் .... இப்படிப் பலப் பலர் சொல்வது நாம் கேளாததா? நாமே கூடச் சொன்னது இல்லையா? எண்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் உரை யாடல்கள் ஒலி ஒளிக்காட்சிகளாகத் தோன்றும்! இப்பழிப்பில் உண்மை உண்டா? இல்லையா? பழிப்பவர்கள் முழுமுழுப் பொய்யர் - திருடர் - குடியர் எனினும் தம் குற்றம் நோக்காமல் பிறரைப் பழிப்பது ஏன்? முழுப் பொய்யன், ஓரிரு பொய் கூறுபவரைப் பழிப்பது ஏன்? முழுத் திருடன், ஒரு சிறு திருடு செய்தவனையும் பழிப்பது ஏன்? முழுக் குடியன், ஒரு விருந்துக் குடியனைப் பழிப்பது ஏன்? பழிப்பவனினும், பழிமிக்கவனா இவன். பழி இல்லாத அல்லது பழி குறைந்தவனையும் முழுப் பழிகாரன் பழிப்பது ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி இது. பொய், களவு, பொறாமை, வஞ்சம் முதலிய கேடுகள் மாந்தர் தோன்றி வளர்ந்த நாள் முதலே தோன்றி வளர்ந்தனவே. வள்ளுவர் காலத்திலும் இல்லாதன இல்லை. இவை இருத்தலாலே தான் இவற்றை எண்ணிப் பார்த்துத் தம் கருத்துகளை எடுத்துரைத்தார் வள்ளுவர். ஒவ்வொருவரும் செய்யத் தக்கவற்றை எத்தகையதாகச் செய்ய வேண்டும் என்பதை ஒரு குறளின் முச்சீர்களில் அவர் உரைத்தார். எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் என்றார். எள்ளாத - இகழாத. எள்ளுதல் என்பது எள்ளளவு எனச் சிறுமையாக நினைத்துப் பேசுதல். நகைப்பதற்குரிய நிலைக் களங்களுள் முதன்மையானது எள்ளல். எள்ளைப் போல் சிறியதாக நினைத்துப் பேசுதல் - நகைத்தல் - எள்ளி நகையாட லாகும். பிறர் எள்ளி நகையாடாத - இகழாத - செயல் வேண்டும் என்றார் வள்ளுவர். எள்ளுவதற்குரிய நிலைமை எப்படி உண்டாகிறது என்பதை அடுத்த நான்கு சீர்களில் உரைத்தார் வள்ளுவர். தான் பொய்யன், தான் திருடன் என்பவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் தான், தன்னினும் - குறைந்த பொய்யன் திருடன் ஆயவரைப் பழிக்கிறான். தான் அறியவில்லை எனினும் பிறர் இட்டுக்கட்டிக் கூறிய பொய் திருடுகளை ஏற்றுக்கொண்டு எள்ளுகிறான். ஏன்? அவன் எவனை இகழ்கிறானோ அவனை ஓர் எடை போட்டு முன்னரே ஒரு முடிவுக்கு - ஒரு மதிப்பு நிலைக்கு - வந்திருக்கிறான். அவனைப் பற்றிய ஓர் ஓவியத்தை நெஞ்சத் திரையில் வரைந்து வைத்திருக்கிறான். அந்நிலைக்கு மாறாகச் சிறிய குறை தோன்றினாலும், அவன் சிறப்பு நிலையையும் சிறுசெய்கை யையும் எண்ணிப்பார்த்துப் பழிக்கின்றான். தன்னோடு அவனை எண்ணி மதிப்பிடுவது இல்லை. அவனோடு தான் அவனை எண்ணி மதிப்பிடுகிறான். அதனால் தான் கூசாமல் பழிக்கிறான். இதனைத்தான். தம்மோடு, கொள்ளாத கொள்ளா துலகு என்றார் வள்ளுவர். ஒவ்வொருவருக்கும் உரிய தகுதி என உலகம் கொண்டிருப் பது எதுவோ அதில் குறையும்போது உலகம் பழிக்கிறது. பழிப்பவர் தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பழிப்பது இல்லை. பழிக்கப் படுபவரோடு பழியை ஒப்பிட்டுப் பார்த்துப் பழிக் கின்றனர். இதனைத் தெளிவித்துத் தற்சிந்தனைக்கு ஏவுகிறார் வள்ளுவர். பழிப்பவரை எண்ணாதே! உன்னையும் உன் தகுதியையும் உன் செயலையுமே எண்ணிப் பார் என்கிறார். அது, எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளா துலகு என வடிவு கொள்கிறது. 14. பொருள் போற்றல் அறிதல் என்னும் வகையில் அவையறிதல், இடனறிதல், ஒப்புரவறிதல், காலம் அறிதல், குறிப்பறிதல் (2), செய்ந்நன்றி யறிதல், வலியறிதல், என எட்டு அதிகாரங்கள் வள்ளுவர் பாடியுள்ளார். இவற்றுள் வலியறிதலில் ஒரு குறள்! ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) என்பது. பொருளைப் போற்றி அதனை வழங்கும் நெறி யாது? எனின், அதற்கு மறுமொழியாக. ஆற்றின் அளவறிந்து ஈக என்கிறார். அவர் சொல்லும் ஆற்றின் அளவு எது? ஆறு என்பது வழி, ஆற்றின் அளவு என்பது வழியின் அளவு என்னும் பொருளது. எவ்வாற்றின் - எவ்வழியின் அளவு? தன்னிடத்திலுள்ள பொருளின் அளவு அறிந்து வாழ வேண்டும் அவ்வாறு வாழாதான், வாழ்பவன் போன்று தோன்றி அழிந்து விடுவான் என்பது வள்ளுவம் (479). தன்னிடத்திலுள்ள பொருளின் அளவு ஆராய்ந்து பாராமல் கொடுப்பவனது செல்வத்தின் அளவு, விரைவில் அழிந்துவிடும் என்பதும் வள்ளுவமே (480). இவ்விடங்களில் தன்னிடத்திலுள்ள பொருளின் அளவினை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்து கிறார். இத்தகைய தெளிவுடைய திருவள்ளுவர், ஆற்றின் அளவறிந்து ஈக, என்பதற்கு என்ன பொருள் கருதியிருப்பார்? பொருளைப் போற்றி வழங்குபவன் எவனோ, அவனுக்குரிய ஆற்றின் அளவு அறிந்துதானே ஈதல் வேண்டும்! கேட்பவன் அல்லது பொருள் வாங்க வந்திருப்பவன் எவ்வகைக்குச் செலவிடப் போகிறான் என்பதை அளவிட்டு அதற்குத் தக ஈயவேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகுமா? ஆற்றின் அளவறிந்து ஈக என்பது எவ்வலியறிதலில் உள்ளதோ, அவ்வலியறிதலிலேயே ஆற்றின் மயக்கத்தை நீக்கும் ஒரு குறளையும் வழங்கியுள்ளார். ஏழு சீர்க் குறளில் எடுத்த செய்தியை விளக்கிக் கூற இடமில்லை எனின், அதனை வேறொரு குறளில் விளக்கிக் கூறுதல் திருக்குறள் முறை. அம்முறை இங்கே போற்றப்படுகிறது. இங்கே குறிக்கும் பொருளுக்குத் தக நான்கு குறள்கள் தொடர்ந்தமையும் (477-480) தொடர்பு முறையும் எண்ணத் தக்கது. ஆற்றின் விளக்கம் வருமாறு. ஒருவனுக்குச் செல்வம் வரும் வழி, அதனைச் செலவிடும் வழி என இரண்டு வழிகள் உள. இவற்றுள் செல்வம் வரும் வழி ஆகாறு; (ஆகு ஆறு) அதனைச் செலவிடும் வழி போகாறு; (போகு ஆறு). செல்வம் வரும் வழி சிறுத்திருத்தாலும் அதனால் கெடுதல் இல்லை; செல்வம் செலவிடப்படும் வழி பெருத்துச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது, தெளிந்து தீர்மானமாக வள்ளுவர் கூறுவது. ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை (478) என்பது அக்குறள். இட்டிது - சிறிது. ஆற்றின் அளவறிந்து ஈக என்பதில் வரும் ஆறு எவ்வாறு என்பதை இக்குறளில் தெளிவாக்குகிறார். அவ் ஆறு ஆகாறு போகாறு என்பவை. தனக்குள்ள ஆகாற்றையும், தனக்குள்ள போகாற்றையும் (வரவையும் செலவையும்) அறிந்து ஒருவன் ஈவானாக. அத்தகைய ஈகையே, பொருளைத் தான் பேணிப் பிறர்க்கு வழங்கும் நெறியாகும் என்கிறார். தன் வருவாய்க்குமேல் தனக்காகவோ தன் குடும்பத்துக் காகவோ செலவிடக்கூடாது என்று திட்டப்படுத்திய திருவள்ளுவர் பிறர்க்குக் கொடுக்கும் கொடைக்காகவும் தன் திட்டத்தை மீறுதல் கூடாது என்கிறார். தானும் தன் குடும்பமும் கேடின்றி வாழ்ந்தால் தானே பிறர் நலத்திற்குத் தொடர்ந்து உதவியாக வாழ முடியும்? பிறர் நலத்தை நினைத்துத் தன்னை அழித்துக் கொண்டால், அவ் வழிவுடன் பிறர் நலத்திற்கு உதவாமல் தானும் பிறர்க்குச் சுமையாகிவிடும் ஒரு நிலை வருதல் தவிர்க்க முடியாததாகி விடுமே - என எண்ணி இக்கருத்தை வெளியிடுகிறார், வாய்மொழிப் புலவர் வள்ளுவர். பிறரை எதிர்நோக்காமல் வாழும் வாழ்வும், சமுதாயப் பொதுநலங் கருதிய வாழ்வே! ஏனெனில் சமுதாயத்திற்கு அவ்வாழ்வு பாரமாக இல்லையன்றோ! இனி இதற்கு மேல், தன் பொருணிலைக்குத் தகப் பிறர்க்கு உதவும் வாழ்வு போற்றத்தக்க வாழ்வு! அவ்வாழ்வே தன் பொருளையும் போற்றிக் காலம் காலமாகப் பிறர்க்கு உதவும் வாழ்வாகவும் அமையும். தனி மாந்தரால் சமுதாயமும், சமுதாயத்தால் தனி மாந்தரும் நலம் பெறுதற்கும் வழி வழியாக அம்முறை இடரின்றித் தொடர்தற்கும் வள்ளுவப் பேராசிரியன் வகுத்துத் தந்த பொருளியல் புகழ்நெறி ஈதென்க. 15. மக்கட்கு இறை சேக்கிழார் மனுநீதிகண்ட புராணம் பாடினார். அதனை விரித்து உரைநடையாக்கம் ஆக்கிய வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் ஆக்கினார். நீதியினும் முறை தமிழ்வழக்கில் தனிச்சிறப்புடையது. நியதி என்பது நீதியாயிற்று நியதியாவது ஒழுங்குமுறை; ஒழுங்கு ஒழுக்கு ஒழுக்கம் என்பவை, வழிவழியாக வழங்கப் பட்டவை என்னும் பொருளுடையவே. முறைமையே இறைமை என்பது திருக்குறள். முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கட்கிறையென்று வைக்கப் படும் என்பது அது. கோவலனைக் கொன்ற காவலன், இறைமுறை பிழைத் தோனாகவே சிலம்பில், அரண்மனை முகப்பிலேயே சுட்டப் படுகின்றான். அவன் அறிவறை போகியவன்; பொறியறு நெஞ்சன்; இறைமுறை பிழைத்தவன் என்பவை குற்றச்சாட்டின் மூவடுக்கு. முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே என்பது புறப்பாடல் (35) முறை வேண்டிவந்த பொழுது எளிதில் காட்சி தந்து, இனிதில் செவிகொடுத்துக் கேட்டல், மழைவேண்டும் போதில் உடனே மழை பெற்றதற்கு இணை என்பது இது. உறையாவது மழை; உறைவுக்கு நிலைக் களமாக இருப்பது. முறை செய்தலே காவல்; அதனைச் செய்பவனே காவலன்; அவனே அழியா வாழ்வுடைய மன்னன்; அவனே கண்கண்ட இறைவன்; இவை முயன்று உண்டாக்க வேண்டுவன அல்ல; இயற்கையாய் அமைவன. ஆள்பவன் ஆள்கிறவன், ஆள்வான் என்பன நிகழ்கால, எதிர்காலச் சுட்டுகள், இச்சுட்டுகள் இறந்த காலத்தில் என்னாம்? ஆண்டவன் அன்றோ! இறை என்பது என்ன? இறுத்தல் - தங்குதல் - பொருளது. தைத்து முடிப்பும், இணைப்பும் பட்ட பழந்துணியில் பற்றியுள்ள பேன். இறைகூர்ந்த பேன் எனப்படும் (புறம் - 136) இறை கூர்தல், தங்குதல், மன்னவன் உறங்கும் எனினும் அவன் செங்கோல் உறங்காது எங்கும் காவல்புரியும் என்னும் சிறப்புடையது; முறையின் சிறப்பே இறை என்பதிது. முறையிடுதல் என்பதென்ன? இதனைக் கேட்டுத் தருக; இவ்விடரை நீக்குக எனச் சான்றோர் அவையிலோ, முறைமன்றிலோ கேட்டலே முறையிடுதலும் முறையீடுமாம்! முறையீட்டுக்கும் இடம் தராத குறைகேடு, இறைமையாகாது! காது கொடுத்தும் கேட்காதவன், யாது கொடுத்துத் தான் கேட்பானோ? முறையை வழிவழியாக வந்தது; வரவேண்டியது; முறைமையோ? என்னும் வினா வழிமுறை ஒழுங்கோ? எனக் கேட்பதே; முறைக் காய்ச்சல், முறை வாய்க்கால், முறைப்பாய்ச்சல், முறையே, முறை முறையே என்னும் வழக்குகளை இவண் நினைக. முறைகேடன் ஒழுங்குமுறை அற்றவன் என்பது கொடுங் கோன்மை குறித்த குறள். நூல்களை ஒழுங்குறுத்தி வைக்கப்பட்டதை முறை எனல் பெருவழக்கு, எழுத்தொழுங்கு அடங்கல் முறை; நூல் ஒழுங்கு திருமுறை, பன்னிரு திருமுறை - அது ஓதுதற்குரியார் முறை ஓதுவார், இறை நிலம் கிளைக்கு முன் முறையோதுவேன் எனல் முறையன்று என்னும் குறிப்பினது ஓரவையடக்கப் பாடல். இவண் முறை என்பது பெருநூல். தாய் தந்தையரை அம்மா, அப்பா எனல் முறை; உடன் பிறந்தாரை அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை எனல் முறை; கொடுத்தவரை மாமன், மாமி, அம்மான், அத்தை எனல் முறை. இவ்வாறே பிறர் பிறரும் பிறப்பு வகையாலும், கொள்வினை கொடுப்புவினை வகையாலும் முறை சொல்லப்படுதல் முறைமை! அம்முறைமை, தன் குடியன்றி தற்சார் குடியொடும் கூடக் கோணா நடைமுறைக்கு இடமாக விளங்குவது சிற்றூர். எம் முறையாளரிடத்து எம்முறையில் நடந்து கொள்ள வேண்டுமோ, அம்முறையாளரிடத்து அம்முறையில் நடந்து கொள்வதே முறைமை எனப்படும். முறை பேணி நடவார், ஊரவரால் இறையும் (சிறிதளவும்) பொறுத்துக் கொள்ளப்படமாட்டார்! ஒழுகுதல் மட்டும் முறையன்று! ஒழுகுதல் சுட்டும் முறைமையே என்பது விளக்கும் சான்று, நம்மவர் வகுத்தமைத்த முறை! அதில் தவறி நடந்தவன் முறைகெட்டவன் என்பது ஒருவர் பழிப்பன்று! ஊர்ப்பழி! முறைக்கு எதிரிடையாக நடத்தல் - சொல்லல் - முறைப்பு ஆகும். என்ன முறைப்பு முறைக்கிறாய்! அந்த முறைப்பெல்லாம் இங்கே நடவாது என்பது கேட்கும் செய்தியே. இவ்வளவு முறைகளும் என்ன சொல்கின்றன? ஆள் வோருக்கும் ஆளப்படுவோருக்கும் என்ன சொல்கின்றன? முறையாக ஒன்றைக் கூறு! முறையாகச் செய்! முறையாகக் கூறுவதைக் கேள்! கேட்டு நட என்பனவே. மக்கள் முறையும் அது! இறை முறையும் அது! இம்முறையே செம்முறை! நன்முறை! இறைமுறையாம் நிறைமுறை! ஈராயிரம் ஆண்டானால் என்ன? ஆறி அலந்த பழஞ்சோறுபோல ஆகாச் செய்தியா இது! எதிர்வரும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இக்கருத்து ஏற்கத் தகாததாகி விடுமா? மன்னவன் அரசன் தானா? மன்னியவர் எல்லாம் மன்னர் தாமே! அரசு மன் ஆயினென்? மக்கன் மன் ஆயினென்? முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் 16. இன்பமும் துன்பமும் பட்டினி என்பதொரு சொல். இது வழுவுடையது. பட்டுணி என்பதே செவ்விய சொல். ஒரு வேளை விட்டு ஒரு வேளையோ, ஒரு நாள் விட்டு ஒரு நாளோ இடைவிட்டு உண்பதே பட்டுணி. நீரோடி வற்றிய ஆற்று மணலைப் பார்க்க வேண்டும். ஒரு மேடு; அடுத்து ஒரு பள்ளம். அப்படியே ஆற்றோட்டம்! இவண் வயிற்றோட்டமும் ஒரு வேளை உண்டு மேடுபடல்; மற்றொரு வேளை உணவின்றிப் பள்ளமாதல், இதனைப் பொழுது மறுத்துண்ணல் என்பது சங்க நூல் வழக்கு. ஒரு வேளை உண்டு உரு வேளை உண்ணா நிலையே பட்டுணி என்பதை விளக்கும் உவமைக் காட்சி இது! பட்டுணி கொடுமை தான்? வளர் பயிருக்கு வான் மழையின்றி வாடிக் கிடக்கும் நிலைமை போல்வது தான்! ஆனால் அப் பட்டுணியினும் பெருங்கேடு உண்டு? அக்கேடும் மாந்தர்க்கே உண்டு! ஆடு மாடு, பறவை வண்டு இவற்றுக்கு இல்லை மாந்தர்க்கே உண்டு! ஆறறிவுடைய மாந்தர்க்கே உண்டு! தேவைக்கு மேல் ஆடு மாடு முதலியன தின்பதில்லை! பசியின்றி உண்பதில்லை! நோயுற்ற போது உண்பதில்லை! ஆனால் கிடைத்தால், அல்லது கிடைக்கச் செய்தாவது தேவையில்லாமலும், கட்டாயம் உண்ணக்கூடாது என்று நிலையிலும் கூட, குப்பை கொட்டுவதுபோல் கொட்டிக் கொட்டி, அதற்கு மருந்தும் விழுங்கிக் கொண்டு, மருந்துக் கேடும், அருந்து கேடும் ஒருங்கே வாட்ட, நாவடக்கம் இல்லாது வாழ்தல் மாந்தப் பிறப்பின் தனிச் சிறப்பே போலும்! விதிவிலக்கை எண்ணிப் பார்த்து, விதியை மறுப்பது சீராகாதே! பட்டுணியால் சாகின்றவர் ஒருவர் எனின், கொழுத்த மிகை ஊணால் சாவார் ஒரு நூற்றுவர். போராற் சாவாரினும், பொருந்தா உணவாற் சாவாரே எண்ணற்றோர். இவற்றை வள்ளுவர் சொன்னாரா? தாயுமானவர் பட்டினத்தார் போலும் துறவர் சொன்னாரா? அழுகுணியார் குதம்பையார் சிவ வாக்கியர் போலும் சித்தர் சொன்னாரா? பசித்திரு, விழித்திரு, தனித்திரு என்ற வள்ளலார் சொன்னாரா? இல்லை! இல்லை! மேலை நாட்டு மருத்துவர் போவிசு என்பார் நன்னலம் என்னும் (Best of Health) நூலிலே குறித்தார்! ஆம்! கண்டதும் கழியதும் என்பார்களே, அவற்றைத் தின்று கொண்டதும் கொடுத்ததுமாம் தொல்லைகளை ஒவ்வொரு வரும் எண்ணிப் பார்ப்பது அடிப்படைப் பகுத்தறிவில்லையா? ஒருபோதுண்பான் யோகி இருபோதுன்பான் போகி. முப்போதுண்பான் ரோகி - என்று பேரடக்கத்தார் சொல்வதைக் கூட எண்ணவேண்டாம்! உண்ட உணவு அற்று விட்டதா. அடுத்த உணவு கொள் என்னும் வள்ளுவர் பரிந்துரையையாவது கொள்ளக்கூடாதா? இத்தனை வேளை என்றால் பொதுமைக்கு ஒத்துவராது; இவ்வளவு என்றாலும் பொதுமைக்கு ஒவ்வாது; இன்ன இன்ன உணவு என்றாலும் பொதுமைக்கு ஒவ்வாது; தனித்தனி நாடி போலத், தனித்தனி நாடிப்பார்த்து மேற்கொள்ள வேண்டியது உணவு. அதனால் தான் வள்ளுவர் நெடிதுற எண்ணிக் கெடுதலிலாவழியாக ஒன்றே ஒன்றைக் கூறினார். kUªJ v‹D« g¤J¥ gh£ony kUªij¡ T¿dhuh tŸSt® ‘kUªbjd nt©lh; M«; nt©lh! என்று கூறுவதற்காகவா மருந்து அதிகாரம்? முதல் ஏழு பாடல்களிலும் உணவு அடிப்படையே மருந்து என்பதைக் காட்டுகிறார் வள்ளுவர். அற்றால் உண்க; அளவறிந்து உண்க; கடைப் பிடித்து உண்க; மாறல்ல உண்க; துவரப் பசிந்து உண்க; தீயளவு அறிந்து உண்க - இவ்வாறு உண்டால் மருந்தென வேண்டா; ஆம்; வேண்டா! வெந்து கொண்டிருக்கும் சோற்றோடு; விருந்து வந்ததென்று மேலும் அரிசியைப் போட்டு வேக வைப்பதுண்டா? எரிந்து வடித்து இறக்கிய பின்னர்த் தானே, வேறு உலை கூட்டுவர்! இந்த அடிப்படையில் சமையல் கலையைச், சமைத்த உணவு உண்ணுதலில் கொள்ளக் கூடாதா? பட்டுணி கிடக்கவா சொன்னார் திருவள்ளுவர் - பசித்து உண்ணச் சொன்னார்; வேண்டும் அளவு அறிந்து உண்ணச் சொன்னார்; உடலியலைக் கருதிக் கடைப்பிடித்து உண்ணச் சொன்னார்; மாறுபாடு விளைக்காத உணவைத் தெரிந்து உண்ணச் சொன்னார்! அதன் பயனையும் அருமையாகச் சொன்னார்; இப்படி உண்பானுக்கு எய்தாத இன்பம் எதுவும் இல்லை! ï¥go c©zhD¡F vŒjhj J‹g« ïšiy! என்றார் அது: இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய் பணமாக்கிக் கொள்ள முடியாத பண்டமாற்றுக் காலத்திலேயே வள்ளுவர் இவ்வறிவுரை கூறினார் என்றால் பணமாற்றுக் காலமாம் இக்காலத்திற்கு எவ்வளவு கட்டாயத் தேவை உணவுக் கட்டு! உணவுக் கட்டு தானே, உணர்வுக் கட்டு! உணவுக்கும், உணர்வுக்கும் சொல் நெருக்கம் மட்டும்தானா? பொருள் நெருக்கம் எவ்வளவு மிகுதி? 17. தம் இல் அறிவறிந்த தலைவன்; புரிவு தெரிந்த தலைவன்; தன்னை உணர்ந்த தலைவன்; தன் பிறவி நோக்கையும் அறிந்த தலைவன்; தன் பிறவிப்பணி இன்னதெனவும் தெளிந்த தலைவன். அவன் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றாள் ஒரு தலைவி! அவளைப் பன்முறை கண்டான்! அவள் தன் வாழ்க்கைத் துணையாம் தகவுமிக்காள் என்பதையும், தணியாக் காதலால் உணர்ந்தான்! அவளைப் பார்ப்பதில், அவள் சொல்லைக் கேட்பதில், அவளைத் தழுவி இன்புறுதலில், அவள் இயல் செயல் நடைகளில் தோய்தலில் தனிப் பேரின்பம் கொண்டான். உயிர் தளிர்க்க வைக்கும் அமுதம் என்பதே, தனக்காகத் தன்னிடத்தே நடைபயின்று வந்ததாக நினைந்தான்! அந்நினைவில் மேலே மேலே இனிமையில் இனிமையாம் எண்ணவோட்டங்கள் கிளர்ந்தன! இவளை யான் அடைந்து பெறும் இன்பத்திற்கு இணையுண்டா? உண்டு என்றால் அது எது? அல்லது அவை எவை? வாழ்வின் அடிப்படைத் தேவை மனை! மனை இல்லாமல் மனைவி எப்படி ஆவாள்? மனையில் இருப்பவள், மனையில் இருந்து கடமையாற்று பவள், மனை சிறக்க வாழ்பவள், மனையறம் காப்பவள், மனையறத்தால் வழிவழியாக உலகம் இயங்க வைப்பவள்; மனைவி! அதற்குத் தன்மனை என ஒன்று இருக்க வேண்டும் அன்றோ? ஒட்டுக்குடி, ஓரக்குடி ஆகுமா? வந்த வீடும், வாடகை வீடும் தகுமா? தனக்கென இல்லம் - எலிவளை போன்றது எனினும் தனி வளை வேண்டும்! அப்படி இல்லில் தான் தன்னுரிமை உண்டு! கூட்டுக் குடும்பம் வாழ்வுப் பயிற்சிக் களம்; வாழும் களம் தனிக் குடும்பம். தனிக்குடும்பத்திற்கு அடிப்படை தனிமனை! ஆம் தன் இல்லம்! தனி இல்லம்! தனி இல்லில் இருக்கும் இன்பம், இவளைத் தனிமையில் கண்டு மகிழும் இன்பம்! அந்த உரிமை இன்பமும், இந்தத் தனிமை இன்பமும் ஒத்த இன்பம். ஆனால் இன்பம் அவ்வளவு தானா? தனி மனையில் இருந்தால் மட்டும் போதாது! தன் உழைப்பால் பொருள் தேட வேண்டும். எவரோ உழைத்த உழைப்பின் பயனை அட்டையென உறிஞ்சி வாழ்வது வாழ்வாகாது. தான் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையும், துகளும், துளியும் தன் உழைப்பால் வந்த பொருளைக் கொண்டு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்உணவையும் தானும் தன் மனைவியும் உண்டு மகிழ்வதாக இல்லாமல் பசித்து வந்தோர் பசியகற்று மாறு பகுத்துண்ணும் உணவாக இருத்தல் வேண்டும். தம் இல்லில் இருந்து, தாம் தேடிய பொருளால் வந்த உணவை, தக்கார்க்குப் பகுத்துத் தந்து உடன் உண்ணும் போது ஏற்படும் இன்பம் எத்தகைய பெருமிதமான பேறான இன்பம்! அத்தகைய இன்பம் ஒன்றே இவளைத் தழுவுங்கால் ஏற்படும் இன்பம். தலைவியைக் காணலால் அடையும் இன்பம், தனிமனை யில் அதுவும் தன்மனையில் குடியிருக்கும் இன்பம்; அம்மனை யில் தாம் தேடிய பொருளால் வந்த உணவைப் பகுத்துத் தந்து உடனுண்டு மகிழும் இன்பம், தலைவியைத் தழுவி மகிழும் இன்பம்! இச்செய்தியைத் தெரிவிக்கும் இன்பக் குறள்: தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு ஒரு பாலிலே - ஒரு பாவிலே - முப்பால் பொருளா? அறத்தால் பொருள் தேடி, அப் பொருளால் இன்புறுதலைப் பால் பகுப்பால் காட்டிய வள்ளுவர். ஒரு பாடலிலேயே வைத்து விடுகிறாரே அப்பொருள்களையெல்லாம்! தம் இல் இருத்தல் பொருள்; தமது பாத்து (பகுத்து) உண்ணல், அறம்; அரிவை முயக்கு (தலைவியைத் தழுவுதல்) இன்பம்! வள்ளுவர் வகுத்துக்காட்டிய இது. வாழ்வியல் இன்பமா? தாழ்வியல் இன்பமா? அறிந்த பொருளை அறியும் பொருளுக்கு உவமை காட்டல் மரபு. தலைவன் தம்இல் இருத்தல் அறிந்த இன்பம். தமது பாத்துண்டலும் அறிந்த இன்பம். பெற்றோர், அவரைப் பெற்றோர் வழியே உணர்ந்து கொண்ட இன்பங்கள் இவை. இப்பொழுது அவன் அறியும் இன்பம், தலைவியைத் தழுவி பெறும் தனி இன்பம்! இவ்வின்பத்தைத் துய்த்த அளவால், தம்மில் இருந்து தமது பாத்துண்ணும் இன்ப நினைவுகள் முந்துகின்றன. ஓரின்பம் மும்மடங்கு ஆகும் இன்ப வளர்ச்சி இது! இதன் விளைவு என்ன? வரை விடை வைத்துப் பொருள் வயின் பிரிவு என்பது இலக்கணம். திருமணத்தைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைத்து, அக்காலத்திற்குள், தம்இல் இருக்கவும், தமது பாத்துண்ணவும் தக்க பொருளைத் தலைவன் தன் முயற்சியால் தேடிக் கொண்டு வருவான். அவன் பொருளால் அவளை மணந்து அவளொடும் அறம் பேணி இல்லற இன்பம் துய்ப்பான்! இத்துணை வாழ்வியலும் தேங்கிய குறள் இவ் வின்பக்குறள்! 18. அறிதோறறியாமை இனிய தலைவன்; இனிய தலைவி; ஓருயிரை ஈருடலில் பகுத்து வைத்தாற் போன்ற இயல்பர்; அல்லது இருதலை ஒரு புறாப் போன்ற இன்ப அன்பின் நிலைக்களமானவர். அவனுக்காக அவள்; அவளுக்காக அவன் - எனப் பிறந்து, அப்பிறவி நோக்கைப் புரிந்து, அந் நோக்கை நிறைவிப்பான் போன்ற நேயத்தார். கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது இதுவே காண்! என்பார் போல அவனுள் அவளும், அவளுள் அவனும் மாறிப் புகுந்து மாறா அன்பில் விளங்குபவர். அவர்கள் ஒருவரை ஒருவர் காணலில் இன்பம்; சொற் கேட்டலில் இன்பம்; முகர்தலில் இன்பம். தழுவலில் இன்பம்; துய்த்தலில் இன்பம்; இவற்றினும் மேலாக நினைதோறும் உண்டாகும் நிகரிலா இன்பம்! நேற்றுப் படித்த இன்பக் குறளை இன்று படித்தால் புதுப்பொருள் இன்பம் புதுச் சுவை இன்பம். அதற்கு முன் அடைந்திராமல் அப்பொழுது அடையும் இன்பம் - அடுத்த நாள் பயிலுங்கால் அப்படியே புதுப்புது இன்பம். - எனத் தொடரும் தொடராய் வளரும் இன்பம் போல, அவனும் அவளும் தம்முள் காணும் இன்பம் ஒவ்வொருவரும் பாவாகவும், பாவின் சுவையாகவும் மாறி மாறித் தோன்றும் இன்பம்! இவ்வின்பம் இணையற்றதுதான்; இதற்கு இணை காணல் அரிதுதான் எனினும், இணையில்லாமல் போகிவிடவில்லை. பழுத்த அறிவாலும் பயில எண்ணிய உளவியல் தேர்ச்சி யாலும், படைப்பின் நோக்கும் அதனை நிறைவிக்கும் நோக்கும் ஒருங்குணர்ந்த மெய்ப்பொருள் திறத்தாலும், தனிப்பெருஞ் சிறப்புடைய தவப்பெரு மூதறிஞர் வள்ளுவனார், இணையைக் கண்டு இனிதின் இணைத்தார். அதனை அறத்துப்பாலில் வைத்தல் இல்லாமல், இன்பத்துப் பாலில் வைத்தார். பொருட் பாவில் நட்புத் திறத்தால் நூல் நயம் சுட்டிய அவர் இன்பத்துப் பால் புணர்ச்சி மகிழ்தலில் பழுத்த அறிவின் முழுத்த அவ் இலக்கணத்தை வைத்தார். அறியாச் சுவையை, அறியாப் புதுப் புதுச் சுவையைத் துய்த்தல் இன்புதான். அவ்வாறே அறியா அறிவை, அறிய அறிய அறியாமை காணலும் இன்புதான். அது பால் காதலன் நிலை! இது நூல் காதலன் நிலை! அவனும், பால் காதலில் தன்னை மறந்து, அத்துய்ப்பாகவே மாறிவிடுவான். இவனும், நூல் காதலில் தன்னை மறந்து, அவ்வறிவாகவே மாறிவிடுவான். அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு (1110) என்பது முதற் பாவலர் வடித்துத் தந்த இன்பக் குறள் தேனமுது! அறிவு எது? அறிவு வளர்வு எது? அறிவு வளர்வின் அமைவு எது? அவ்வறிவின் பயன் எது? இவற்றுக்கு விடையெல்லாம் இது என்கிறது. இக்குறள். என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்? தன்னை அறிந்திடத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுக்கின்றான் இவை தமிழ்த் திருமந்திரங்கள்; அறிதோறும் அறியாமை கண்டவர் அல்லரோ திருமூலர். எவ்வளவு பேரறிவு உங்களுக்கு; எவ்வளவு பட்டறிவு உங்களுக்கு எவ்வளவு சிந்தனை வளம் உங்களுக்கு; இவ் வெல்லாவற்றினும் மேலாக உங்களுக்கு அமைந்த உள்ளத் தெளிவும் - உரைத்தெளிவும் எவ்வளவு எனச் சாக்கிரடீசரைப் பாராட்டினார் ஒருவர். தம்கையை மெல்லெனத் தூக்கி, அவரை நிறுத்துக என அமைத்து, மறுமொழி சொன்னார் சாக்கிரடீசர். எனக்கு என்னென்னவோ தெரியும் எனக் கூறுகிறீர். எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்! அது எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் என்றார்! - அறிதோறும் அறியாமை கண்டவர் அவர் அல்லரோ! நீங்கள் அறியாத பொருளென ஒன்றில்லை. உங்களைப் போலும் சிந்தனையாளர் ஒருவர் இதுகாறும் பிறந்ததில்லை என்று புத்தர் பெருமானிடம் அவர்தம் மாணவர் ஒருவர் கூறினார். அதனைக் கேட்ட பேரறிவுப் பிழம்பு கையமர்த்தி, எவ்வளவு பெருமிதமான சொற்களைச் சொல்கிறாய்; நீ, எனக்கு முன்னே இருந்த புத்தர்களை அறிவாயா? எனக்குப் பின்னே தோன்றி வரும் புத்தர்களை அறிவாயா? என்னையேனும் முழுமையாக அறிவாயா? இருந்தும், இத்தகைய செருக்குடன் உரைக்கின்றாயே என்றார். அடுத்திருந்த சின்சுபா என்னும் மரத்தில் இருந்து ஓரிலைப் பறித்தார் புத்தர். இதோ பார்! என் கையில் இருப்பது ஒரே ஓர் இலை. ஆனால், இம் மரத்திலுள்ள இலைகள் எத்தனை? உலகில் உள்ள மரங்களில் உள்ள இலைகள் எத்தனை? இந்த ஓர் இலையளவு தான் என்னிடத்துள்ளஅறிவு! உலக அறிவோ அத்தனை மரங்களின் அத்தனை இலைகளின் அளவு விரிந்தது. என்றார். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு என்பது இதன் மற்றொரு வாய்பாடு தானே. அறிதோறும் அறியாமை கண்டு அறியத்துடித்த அறிவர் உரை அது! ஏறத்தாழ 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நேரு பெருமகனார். அவர் சிறையில் இருந்த காலமெல்லாம் படிப்பிலே செலவிட்டார். எழுதுவதிலும் செலவிட்டார். அங்கிருந்த போதுதான் சொன்னார்; நான் இதுவரை எவ்வளவு நூல்களைப் படியாமல் இருந்திருக்கிறேன்; எவ்வளவு செய்தி களைத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்பதைத் தெரிய முடிந்தது என்பது அது. அறிவு வேட்கையில் அலமந்த அவர் அறியாமை உணர்ந்த வகை அது. எவரும், அறிதோறும் அறியாமை கண்ட பயன் என்ன? அறியாமை காணக் காண, அறிந்த இன்பம் பெருகும்! அந்த இன்பம் தன்னை மறந்த இன்பம்! தானே அறிவாய இன்பம்! வீடு பேற்றிலே இருக்கும் விழுமிய இன்பம்! உலகியலில் காணும் இயற்கை இன்பத்தால், துறவோம் அடைகின்ற தூய இன்பத்திற்குப் பாலமிட்ட வள்ளுவ இன்பம் இது! உலகப்பொது இன்பத்தை உலகப் பெருநாவலர் உரைத்தார். உலகோர்க்கு நாம் உரைத்தோமா? உரைப்போமா? 19. எவன் தொண்டன் தொண்டு செய்யப் போகிறேன் என்கிறாயே! வேறு வேலை இல்லாமல் தொண்டு செய்யப்போகிறாயா? அப்படிப்பட்ட வெட்டித் தனம் இல்லை தொண்டு! பொருள் திரட்டத் தொண்டன் ஆகின்றாயா? போ, போ! எத்தனையோ புதுப்புதுத் துறைகள் எல்லாம் உண்டே! புகழ்திரட்டும் வேட்கையில் தொண்டில் புகுகின்றாயா? போலி நீ! போலிகள் பாராட்டுக்கு வருபவன் நீ! பொறிகளை அள்ளிப் போடு, மீன்களைப் போல் மின்னலிடும் கூட்டம்! பிறவி நோக்காய்த் தொண்டுக்கு வருகிறாயா? பேசுவோம் வா! தொண்டைத் தொழிலும் அலுவலும் கடமையும் ஆக்க வருகிறாயா? அவற்றுக்குக் காலமும் உண்டு; இடமும் உண்டு; கணக்கும் உண்டு. தொண்டுக்கு அவையெவையும் இல்லை! தொண்டுக்குப் பயன் நோக்குகிறாயா? தொண்டுக்குப் பயன் நீ பெறுவது இல்லை! பிறர் பெறும் நலமே பயன்! எப்பயனும் எதிர்பாராமல் தொண்டில் இறங்கலாமா? கூடவே கூடாது; பயனிலாப் பணி பதர்ப்பணி; பாழ்ப்பணி! காலக்கேடு! கருத்துக் கேடு! தொண்டால் உடல்நலம் உளநலம் பொருள் நலம் உலக நலம் கண்டால் அன்றித் தொண்டாய் அமையாது அது. தொண்டனின் தகுதி உனக்குண்டா? உண்டெனின் தொண்டு செய்ய வா! தொண்டனாக வருமுன், உன்னை ஆய்ந்து கொண்டாயா? உனக்கு உடல் நலம் உண்டா? உள நலம் உண்டா? பிறர்க்கு உரைக்கும் ஒழுக்க நிலை உண்டா? உன் தொண்டால், உன் குடும்பத்திற்கு நலக்கேடு உண்டா? உன் குடும்பமும் தொண்டுக்கு உதவுமா? உதவ வேண்டா எனினும், ஊறு செய்யா திருக்குமா? உதவி எதிர்பாரா நிலையிலும் ஊறு தாரா நிலையிலும் இருக்கத்தக்க எல்லாமும் செய்த நிறைவு உனக்குண்டா? குடும்பத்தைக் குலையச் செய்து குடிநலம் வெறுக்க ஆக்கிக், கொள்கிறாயா தொண்டு! அத்தொண்டு தொடராதே! துலங்காதே! தொண்டின் மூலதனம் - உள்ளம். உள்ளம் உடைமை உடைமை! பொருள் இல்லாமல் தொண்டுசெய்ய முடியுமா? பொருள் உடையவர் எல்லாரும் தொண்டு செய்தாரா? என்பது வினா! பொருளைப் பொருட்டாக எண்ணாமல் தொண்டைப் பொருட்டாக எண்ணியவரே தொண்டர் என்பது உலக வரலாறு. வள்ளலார் வடலூர்க் கால்கோள் செய்ய வைத்த ஒப்பத் தொகை, உருபா ஒன்று! ஒன்றே ஒன்று! அரசை விடுத்த பின்னர்த்தான் தொண்டரானார் புத்தர் காந்தியார் தொண்டு - கல்வியில் இல்லை! செல்வத்தில் இல்லை! உருக்கத்தில் தோன்றியது. உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றலாது இரண்டில்லை என்னும் உயர்வினர் கொண்டது தொண்டு! நெஞ்சத் தொண்டுக்கு என்ன மூலம் வேண்டும்? நேயத் தொண்டுக்கு என்ன வாய்ப்பு வேண்டும்? சொற்றாண்டுக்கு என்ன சூழல் வேண்டும்? உடல் தொண்டுக்கு என்ன உறுபொருள் வேண்டும்? புன்முறுவல் செய்யவுமா? பொருள் தேவை? தண்ணீர் தரவுமா? தாங்காச் செலவு? முள்ளையும் கல்லையும் எடுத்து எறியவுமா முயற்சி? சாலையோரக் கழிவு செய்யாச் சால்புக்குமா வாய்ப்பு? விழுந்தாரைத் தூக்க உதவாக் கை உயிர்க்கையா? துடிப்பார்க்குத் துடியார் துடிப்பு, உலைத்துருத்திக் துடிப்புத்தானே! செய்யாமல் இருக்க இயலாது என்னும் செம்மையில் எழுவதே தொண்டு! நான் எத்துயரும் படுவேன்; எவரும் துயர்ப்பட விடமாட்டேன். நான் எவ்வறுமையும் உறுவேன்; பிறர் வறுமை தீர்ப்பதே என் நோக்கும் போக்கும். நான் சோர்வு சோம்பல் கொள்ளேன்; பிறரும் அவ்வாறிருக்கச் சொல்வேன். கற்பேன் - பிறர்க்குக் கற்பிக்க! பேசுவேன் - பிறர் நலத்திற்கு! எழுதுவேன் - பிறர் நலம் காக்க! என் நலம் பேணுவேன் - பிறர் நலம் பேணற்கு! நான் இரந்தும் பெறுவேன் - பொதுவறம் புரிதற்கு! நான் போரும் புரிவேன் - புன்மையை அகற்றுதற்கு! நான் கோழையல்லன் - கொள்கையாளன் யான் - என்பவன் தொண்டன். அஞ்சுங் கோழை ஆகான் தொண்டுக்கு! ஆலாய்ப் பறப்பவன் ஆகான் தொண்டுக்கு! அடக்கம் இல்லான் ஆகான் தொண்டுக்கு! ஆறாச் சினத்தன் ஆகான் தொண்டுக்கு! குறையே நோக்குவான் ஆகான் தொண்டுக்கு! குற்றம் புரிவான் ஆகான் தொண்டுக்கு! குற்றம் மறைப்பானும் ஆகான் தொண்டுக்கு! குற்றம் பழிப்பவன் தானும் ஆகான் தொண்டுக்கு! குணமே ஆக்குவான் ஆகான் தொண்டுக்கு! அழுது கொண்டே உழுபவன் ஆகான் உழவன்! அவன் தொழில் ஆக்கமும் ஆகாது. எரிந்து கொண்டே கற்பிப்பன் ஆசான் ஆகான் அவன் தொழில் ஆக்கமும் ஆகாது. இரக்கம் இல்லா மருத்துவன் மருத்துவன் ஆகான்! அவன் தொழில் மருத்துவம் ஆகாது. முனைப்புக் கொள்ளும் அலுவலன் ஆட்சியன் முறைமை செய்யான்! அவன் நிலை ஆக்கம் ஆகாது. பொதுப்பணிப் புரிவில் குடும்பம் சாதிமை கட்சி சமயம் பார்ப்பான் சால்பன் ஆகான். அவன் பணி ஆக்கக் கேடாம். தொண்டே துணையென ஆவோன் தொண்டன்! முதலும் கொண்டே - முழுமையும் தொண்டே! மூச்சும் தொண்டே - பேச்சும் தொண்டே! தொண்டர் களத்தில் துலங்க மாட்டாதவன் தொண்டுக் களத்தை விடுத்துத் தொலைவில் விலகல் அவனுக்கும் நலமாம் தொண்டு தனக்கும் நலமாம் தொண்டால் எய்தும் தொல்லை எல்லாம் கண்டாய் இறைமைக் கொடை யெனக் கருதிக் கருதிக் கடமை புரிந்து தொண்டிற்கே ஈகம் புரிவோன் தொண்டன்! அத்தொண்டன் தொண்டே இறைவழி பாடாம்! புனித நீரில் நீராடல் தீர்த்தம் இல்லை. வடிகால் கழிவை அகற்றலால் தெறிக்கும் நீரே தீர்த்தம். திருக்கோயிலுள் புகுந்து காதைப் பிடித்துத் தோப்புக் கரணம் போடுவதில் சிறந்தது திருக்கோயில் சுற்றில் கிடக்கும் குப்பையைக் கூட்டி அள்ளுவது. கும்பிட்ட கையனாய் நின்று வழிபடலிற் சிறந்தது, உதவி யெனக் கூப்பிட்ட குரலுக்குக் கை கொடுத்து உதவுவது. எட்டுக்குடம் பாலைக் கொட்டிக் குடமுழுக்காட்டுவதிலும் சீரியது சொட்டுப் பாலுக்கு ஏங்கும் குழந்தைக் வழங்குவது. கட்டுக் கட்டாய்ச் சூடனும் பத்தியும் கொளுத்துவதைக் காட்டிலும் நல்லது கல்லாதவர்க்குக் கல்வியறிவு வழங்குவது. இவற்றை நம்பு! நீ நம்பும் மதமா? நம்பா மதமா? எனக்குக் கவலையில்லை! நீ மாந்த நேய நம்பிக்கையாளன் என்பது உறுதி. நீயே இறைமைத் தொண்டன்! இறைமையும் விரும்பும் ஈடிலாத் தொண்டன் 20. பயனெதிர் பாராமையும் பயனே பாராட்டு வகைகளுள் பெரியது ஒன்று உண்டு. அது பயன் எதிர் பாராமல் பணி செய்தல் என்பது. பயன் எதிர் பாராமல் பணி செய்வது தான், பாராட்டும் பணியா? அப்படிச் செய்வார் உளரா? பயனை எதிர்பாராப் பணி, பணியன்று. பதர்ப்பணி! பயன் இல்லாமல் ஒரு விடிகாலை கழிந்தது. அதனைப் பதடி (பதர்) வைகல் என்று பழித்தார் ஒரு புலவர். அவர்க்குப் பதடி வைகலார் எனப் பாராட்டு எடுத்தார், குறுந்தொகை யைத் தொகையாக்கிய பூரிக்கோ என்பார். விழுப்புண்படாத நாளெல்லாம் நாளொடு எண்ணக் கூடாத நாள் என்பது வள்ளுவம். இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாள் என்பது பத்திமையார் பாட்டு. பயன்பாடு வேண்டும்; பயன் கருதாமை பாராட்டுக் உரியது அன்று. ஒருவன் உலாவுவது உடல் நலம் கருதிய பயன்தானே. ஊண் கொள்வது உயிர் நலம் கருதிய பயன்தானே. ஒருவன் உரையாற்றுவது தற்பயனும் கேட்பார் நற்பயனும் கருதியது தானே! பயனிலாச் செயல் பதர்ச் செயல். பயனிலாச் சொல் பதர்ச் சொல். பயனிலா நினைவு பதர் நினைவு. அரிசி இல்லா நெல், நெல் அன்று. அது பதர் நெல். உள்ளீட்டுப் பயன் இல்லாதது பதர் - பதடி - பொக்கு (பொய்க்கு). அதனாலேயே, பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் என்றார் திருவள்ளுவர். பயனில்லாத சொல்லைச் சொல்லுவானை மட்டுமின்றி, அச்சொல்லைப் பாராட்டுபவனையும் பதர் என்பது இக்குறள். பயன் செயல் செய்வாரை உலகமே உவந்து பாராட்டும் என்பது வள்ளுவம். அது, நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு என்பது. பயன் கருதியே சொல்ல வேண்டும்; பெரும் பயன் கருதியே சொல்ல வேண்டும்; பயன் கருதாமல் எதனையும் சொல்லுதல் ஆகாது என்பதனாலேயே பயனில சொல்லாமை என்றோர் அதிகாரத்தை (20) வகுத்தார் வள்ளுவர். பொறாமை, பிறர்பொருள் விரும்பல், புறங்கூறல் தீவினை செய்தல் என்பவற்றுடன் பயனில கூறலையும் விலக்கத்தக்க வரிசையிலேயே வைத்தார். (அதி 17-21) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் (200) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் (198) என்று கூறியவற்றைக் கருதுக. விளையாட்டிலும் விளைவு வேண்டும் என்று சொற்கண்டது இந்த மண். மரத்திலும் பயன்மரம் எனப் பகுத்துக் கண்டது இந்த மண். அறமே இல்வாழ்வுப் பயன் எனத் தெளிந்தது இந்த மண். விளைய வேண்டா என எண்ணிக் கொண்டு எந்த உழவனும் விதை விதைப்பானா? பால் கறக்க வேண்டா என்றா பால் மாடு வாங்குவான்? ஊதியமே வேண்டா என்று எண்ணிக்கொண்டு எந்த வணிகனாவது வாணிகம் செய்வானா? பொழுதில்லை என்று தவிக்கும் வாழ்வில் பொழுது போக்கைக் கருதுவானா ஒருவன். ஒவ்வோர் இயக்கமும் பயன் கருதியதே ஆம். பயன் கருதா இயக்கம் பாழ் இயக்கம். எறும்பு முட்டை தூக்கிச் செல்கிறதே. தேனீ பூத்தேடிப் பறக்கின்றதே. பூனை எலி வேட்டையில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது! புலியைக்கண்டு புள்ளிமான் என்ன ஓட்டம் ஓடுகிறது. இவ்வுயிரிகள் இயக்கமும் பயன் கருதியவைதாமே! ஆனால் இவற்றின் இயக்கம் பிறர் நலப்பயன்- அல்லது பிறிது நலப்பயன் கருதியதா? தற்பயன் தற்சார்புப் பயன் கருதியதே. ஆறாம் அறிவாம் மனஅறிவு அவற்றுக்கு இல்லை. அருள்என்னும் பொருள் ஒன்றை அவை அறியா? ஆகலின் பயன் என்பது அவற்றின் தனி வாழ்வு, சார்பு வாழ்வு அளவிலே கட்டுண்டு நின்று விடுகின்றது. ஐயுணர்வுக்கு மேம்பட்டதாம் மெய்யுணர்வு பெற்ற மக்கட் பிறவியரும் ஓரறிவு முதல் ஐயறிவுப் பிறப்பின போலத் தற்பயன் தற்சார்புப் பயன் கருதியாக இருந்தால், அம்மக்கட் பிறவியும் இழி பிறவியாகிவிடும் தானே! வானில் பறக்கும் வாழ்வாளி, மண்ணில் நெளியும் புழுவாக இருப்பின் அப்பிறப்பும் புழுப்பிறப்புத் தானே! பயன் பார்த்தல் கட்டாயத் தேவை. ஆனால், அப்பயன் தன் நலத்தளவில் தன் சார்பு நலத்தளவில் நில்லாமல் உலகாக உயிர்களாக - விரிதல் வேண்டும். குடும்ப வாழ்வுப் பயன் அறம் என்பார் வள்ளுவர். விருந்தோம்புதலை வேள்விப்பயன் என்பார். வாளா எரியும் நெருப்பில் பயன் பொருளைக் கொட்டிப் பாழாக்காமல், ஆறா எரியாய் எரியும் பசி எரியை ஆற்றுவதற்கு ஊண் வழங்குதலே, விருந்தென்னும் வேள்ளிப் பயன் என்பார். இக்கொள்கையை இயக்கமாக்கி நிலை நாட்டினார். பயனைப், படுபயன் (172, 676), ஆபயன் (560), மாண்பயன் (901), மாண்டற்கு அரிதாம் பயன் (177) என்பார் வள்ளுவர். பயன் ஆய்தலைப் பயன் தெரிதல் (104), பயன் தூக்கல் (103, 912) என்பார். நற்பயனுக்கு மாறாகிய தீப்பயன் தருவனவும் உண்டு என்பதைச் தீச்சொற்பயன் (128). பல்லார் முனியப் பயனில சொல்லல் (191) என்பார். சொல்லப் பயன்படும் சான்றோரையும், கொல்லப் பயன்படும் கீழையும் குறிப்பார். எல்லா நலனும் அமையினும் வேந்தமைவு இல்லாத நாடு பயன்படாது என்பார் (740). ஐயுணர்வு எய்தினும் பயனில்லை மெய்யுணர்வு இல்லாத வர்க்கு என்பார் (354). சொல்லாடாமல் இருக்கும் இன்பப் பயனையும் குறிப்பார் (1100). அவையில் சொல்லாடாச் சிறப்பை யும் சுட்டுவார் (403). கல்லார், விளை நிலம் இல்லாக் களர் நிலம் ஒப்பர் என்று பயனின்மைப் பிறவிக்குப் பயனின்மை நிலத்தை ஒப்பாகக் காட்டுவார் (406). கற்றதனால் ஆகிய பயன் என்ன? என வினாவி, வாலறிவன் நற்றாள் தொழலைக் கவின் விடையாகக் கூறுவார். தாள் தொழல் என்பது அடிபற்றல், வழியில் நடத்தல். தூய அறிவன் வழியில் நடத்தலே கல்விப்பயன் என்பார் (2). அறிவன் எவன்? எனின், மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் என்பார் தொல்காப்பியர். அறிவன் என்பார் சித்தர் எனப் பின்னாளில் பெயர் பெற்றனர். மெய்ச்சித்தராவார், தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகைப் பிறவியர். உள்ளொளி மிக்காராய் வழிகாட்டும் திறவோராய் வாழ்ந்த அவ்வறிவர் வழியில் பிறர்க்கென வாழ்தலே வாழ்வுப்பயன் எனக் கண்டு கொள்க. இவற்றால், பயன் எதிர்பாராமை என்பது, தனக்கெனப் பயனோ, பிறர்க்கெனப் பயனோ எதிர்பாராமை அல்ல! எவர்க்கும், எவ்வுயிர்க்கும் நற்பயன் உண்டாதலும், எவர்க்கும் எவ்வுயிர்க்கும் தீப்பயன் உண்டாகாமையும் ஆகியவற்றைப் போற்றி வாழ்தலே பயன்பட வாழும் வாழ்வு எனக்கண்டு கொள்ளலாம். தற்பயன் கருதா வாழ்வு, பிறர் பயன் கருதா வாழ்வுமாம். தன்னைக் காத்துக் கொள்ளாள் பிறரைக் காத்துக் கொள்ள வல்லான் ஆவனோ? அதனால்தான் தான் என்றும், தற்காத்து என்றும் தன்னைத் தான் காதலன் ஆதல் என்றும் (43, 56, 209) கூறினார். தன்னைத் தான் காக்கின் என்றும் (305). தாம் இன்புறுவது என்றும் (399) குறித்தார். தன்னைப் பேணிக் கொண்டு உலகையும் உலகத்து உயிர் களையும் பேணும் பெருந்தகை வாழ்வே வாழ்வு என்பது வள்ளுவத் திரட்டு. ஆன்ம நேயப் பயனே அரும்பயன் என்பது உலக அருளாளர்களின் ஒட்டு மொத்த முடிபு. 21. பற்றறுத்தலும் பற்றே பல் வழியாகத் தோன்றிய ஒரு சொல், பற்று. பூனையும் நாயும் தத்தம் குட்டிகளை எப்படித் தூக்கிச் செல்கின்றன! நாம் காண்பதுதானே அது. பல்லால் கௌவிக்கொண்டு செல்வதைப் பார்த்த கூரிய பார்வையன் அதனைப் படமாக்கிப் பற்று என்றான். பல் + து = பற்று. பற்று, வரவு - கணக்கில் உண்டு; பற்றுமுறி, பற்றுச்சீட்டு கணக்கு வழியவை. பற்றிப் பிடித்தல் தீக்குச்சியிலும், தீ எரியிலும் பற்றி (பத்தி) யிலும் உண்டு. பற்றிப்பிடித்தல் பற்றுக் கோடு. பற்றிப் பிடிக்கும் கருவி பற்றுக் குறடு. ஈரிரும்புகளை இணைக்கும் பற்றிரும்பு, பற்றாசு, பற்றி நிற்கும் உறவு பற்றாயம். எலிப்பொறி, பற்றுபொறி; பற்றாயமுமாம். பற்றற்ற குருவன் துறவன் - பற்றற்றான். பற்றிக் கொள்ளும் தகைமை பற்றுமை; பற்றாட்டு. கலத்தில் பற்றும் அழுக்கு கரி சோறு என்பவை பற்று. அவற்றைத் தேய்த்தல் பற்றுத் தேய்த்தல். பற்றிக் கொள்ளார் பற்றலார் (பகைவர்) பற்றார். ஒரு பல், பற்றிக் கொண்டு வரும் பற்று வழிச்சொற்கள். இவையும் இவை போல்வனவுமாம். பற்றறுத்தல் என்பது பற்றினைப் பற்றாமல் அகற்றுதல் ஆகும். முற்றாகப் பற்றறுத்தல் உண்டா? புத்தர் வரலாறே சான்று; பற்று அறவே (சிறிதும்) கூடாது என்பது அவர் பற்று. பற்றை விடுதற்கும் பற்றா வேண்டும்? ஆம்! கட்டாயம் வேண்டும். இதனால்தான், பற்றுக என்ற வள்ளுவர், பற்றற்றான் பற்றினை என்றார். ஏன்? என வினவுவார் தெளிவதற்கு. அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்றார். பற்றை விடவும் பற்று வேண்டும் என்பது வியப்பான இயற்கை நெறி. பற்று அறுதற்குப் பற்றற்றாரைப் பற்றிக் கொள்ள வேண்டும் எனின், அதுவும் பற்றுத்தானே! அதில் பற்றறுதல் எங்கே இருக்கிறது? பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு என்னும் குறளால், பற்றற்றாரைத் துயரங்கள் பற்றுவதில்லை என்று கண்ட பின்னரும் பற்றற்றாரைப் பற்ற வேண்டுமா? பற்றற்ற அளவிலேயே அறியாமை அகன்று விடும்; நிலை பேறானது இது. நிலைபேறு அற்றது இது என்பது புலப்படும் என்பதை, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். என்பாரே திருவள்ளுவர். பிறப்பு என்பதன் பொருள் பிறப்பென்னும் பேதைமை என்பதால் அவர் தெளிவிப்பாரே இத்தகைய மேனிலையாம் துறவர்க்கும் மற்றொரு துறவரைப் பற்றிக் கொள்ளல் வேண்டுவதுதானா? அறவே பற்று அற்றவர் மக்கட் பிறவியருள் தலைப் பட்டவர்; மயக்க வலைக்குள் சிக்கிக் கொள்ளாத விடுதலை (வீடுபேற்று) மாண்பர். அவர்க்கும் பற்றற்றார் பற்று வேண்டுமா? ஆள்வோர் இருப்பார்; அவர்க்கும் அறிவர் துணை வேண்டும். அறிவர் எவற்றுக்கும் ஆமாம் ஆமாம் போடும் தந்நலத்தர் அல்லர்; அவர், இடிக்கும் துணையர் ஆவர். இடிக்கும் துணையர் இல்லா வேந்து, கொடுப்பார் இன்றியும் கெட்டுப்போகும் என்பதும் (448) இடிக்கும் துணையையுடைய வேந்தைக் கெடுக்கும் தன்மையர் எவரும் இலர் என்பதும் (447) நேர்முறை, எதிர்மறை வள்ளுவங்கள். இடிக்கும் துணையராம் அவர். வந்ததுயர் நீக்கவும் வர இருக்கும் துயரை முன்னரே விலக்கவும் வல்லார் என்பார் (442) இறையாண்மை காக்கவல்ல நிறையாண்மை ஈதெனின், தனியியல் வாழ்வை நனியியல் வாழ்வார்க்கும் நட்பிலும் இந்நெறி போற்றப்பட வேண்டுதலை இயம்புவார் வள்ளுவர். நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தல் பொருட்டு. (754) என்னும் நட்புக் குறளைக் காண்க. வாழ்வு, அளவியல் உடையது. அளவு அறியாதவை செருக்கு. சினம், அவா அன்னவை. அவற்றைக் கொள்ளும் நட்பை நன்னட்பு ஏற்காது. இடித்துக் கேட்கும்; தட்டிக் கேட்கும்; தடுத்தும் காக்கும். ஆதலால் இடிக்கும் கேளிர் என. நட்பினை இயம்பும் அகப்பொருள் நூல்கள். நட்பாராய்தலில் அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட்பை (795)த் தேடிக்கொள்ள வலியுறுத்துவார் வள்ளுவர். வேந்துக்கும் நட்புக்கும் இடித்துரைப்பார் வேண்டி யிருத்தல் கூடும். ஆனால், பற்றற்ற துறவர்க்கும் வேண்டியிருக்குமோ என்னும் வினா எழும்பலாம். விடையை வள்ளுவமே வரிந்து கூறுகின்றது. நிலையில் மாறாத மலை அன்னவர் எனின் என்ன? குணம் என்னும் குன்றம் ஏறி நின்றவர் எனின் என்ன? பூனைக்கு வரும் சறுக்கல் போல் யானைக்கும் சறுக்கல் ஏற்பட்டு விடுவதில்லையா? தம் தகவோடு பொருந்தாத செயலைச் செய்வாரும் உளர் என்பதால் தானே, தம்மோடு - கொள்ளாத கொள்ளாது உலகு என்று நெறியுரைத்து எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் என வலியுறுத்தினார். அம்மட்டோ? குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ குன்றி அனைய செயின் என்றாரே! குன்றியை ஏன் காட்டினார்? குன்றினும் மிகக் குன்றியது குன்றி என்பதற்கோ? ஆம்! அதற்கும் தான்; அதனொடு குன்றியின் சிவப்பென்ன? அதன் முகப்பில் அமைந்த கறுப்பு என்ன? வெளிப்படத் தெரியும் சிவப்பு மறைந்து கிடக்கும் கறுப்பு எனத் தவம் காட்டி, அவம் புரிவார்க்கு விளக்க மாக நிற்கவில்லையா? மை பொதி விளக்கே என்ன, மனத்தினுள் கறுப்பு வைத்து என்று முத்தநாதனைக் கூறுவாரே சேக்கிழார். போலித்துறவி கூடா ஒழுக்கத்தான் எனின், மனவலிமை - கட்டொழுங்கு - குன்றிய பற்றற்றாரும் இருக்கக்கூடும் தானே! அவர்க்குத் தளர்ச்சிப் போதில் - சறுக்கும் வேளையில் - ஊன்றுகோலாக இருந்து காப்பார் வேண்டுமே! அவர் மிக வலியராக இருப்பின்தானே பாதுகாப்பாக முடியும்! மரத்தைப் பற்றிக்கொள்ளும் கொடி, வலுப்பெற்று விடுகிறதே! பருமரத்தை அண்டிய பல்லியும் பிழைக்கும் என்பது பழமொழி ஆயிற்றே. பெரியாரைத் துணைக்கோடல் என்பது திருக்குறள் விளக்கம் ஆயிற்றே. அலையில் அலைக்கழிவானுக்குக் கட்டுமரம் கைக்கு எட்டுவது எவ்வளவு பேறு! மரத்தில் இருந்து வீழ்வானைத் தாங்கிக் கொள்ளும் வலியாளன் வாய்ப்பது எத்தகைய வாய்ப்பு! அவ்வாறே பற்றற்றான் அப்பற்றற்ற தன்மையை உறுதிப் பற்றாகக் கொண்டிருக்க, அவனினும் வலிய பற்றற்றான் வேண்டும் என்பது தெளிந்து தேர்ந்த கட்டளையாம். மனம் நன்றாக இருத்தல் நன்றே. அதன் மாறா நலத்திற்கு இனம் நன்றாக இருக்கவேண்டும் அல்லவா! சான்றோர்க்கு அவரின் மேம்பட்ட சான்றோரும் பண்பாட்டோர்க்கு அவரின் மேம்பட்ட பண்பாட்டோரும் உறவாய் இருக்கும் உயர்வு போலப் பற்றற்றோர்க்குப் பற்றற்றோர் உறவு வேண்டும் என்பது வாழ்வியல் தெளிவாம். ஆதலால் பற்றறுதல் என்பது, பற்றற்றாரைப் பற்றும் பற்றுமையே என்பது விளக்கமாம். 22. பண்பாட்டின் மூலக்கூறும் வளர்ச்சியும் தமிழர் பண்பாட்டுச் சான்றுகள் எண்ணற்றவை. என் நெஞ்சம் திறப்போர் அங்கு என்னைக் காணார்; உன்னையே காண்பார் என்கிறார் ஆதனுங்கனைப் பார்த்துக் கள்ளில் ஆத்திரையனார் (புறம். 175) யான் வாழும் நாளையும் எடுத்துக்கொண்டு வாழ்க எனச் சிறு குடிகிழான் பண்ணனை முடிமன்னனாகிய கிள்ளி வளவன் கூறுகிறான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய என்பது அவன் வாக்கு. பசிப்பிணி மருத்துவன் என அவனுக்குப் பொருந்தப்பட்டம் வழங்கி, அவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ எனத் தான் ஒரு பாணனாகப் பாடித் திளைக்கிறான். என் தந்தை போன்றவனின் உள்ளடியில் நோவுமாறு முள்ளும் குத்தாதிருக்க என்று பிட்டங்கொற்றனைப் புலவர் காரிக்கண்ணனார் பாடுகிறார். மனைவியைப் பிரிந்து மற்றொருத்தியோடு வாழ்ந்த குமணனைக் கண்டு. பசியும் இல்லோம்; பாரமும் இல்லோம், உன்கொடை வேண்டிவந்திலோம்; உன் மனைவி துயர் தீர உடனே பூட்டுக தேர் என்றனர் கபிலர் பரணர், அரிசில்கிழார், பெருங்குன்னூர்கிழார் (புறம் 143 - 146) என் பெயர் சோழன் என்கிறார் பிசிராந்தையார். என் பெயர் பிசிராந்தை என்கிறான் சோழன். காணாமல் கொண்ட நட்புக்காதலர் இருவரும் எங்கே காண்கின்றனர்? வடக்கிலிருந்து உயிர் துறக்கும் நிலையில் கண்டு ஒன்றாகி நின்றனர். இடம் ஒதுக்கச் சொன்ன வேந்தன் சொல்லும், அவ்விடத்தில் அமர வந்த புலவர் செயலும் கூடி இருந்தவர்களை வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த பெருமையில் சேர்க்கின்றது. யான் விரைந்து செல்ல வேண்டும் தான்; தேரும் ஓடவேண்டும் தான்; அதற்காக அதன் மணி ஒலி கேட்டுக் கீரியும், வண்டும் என்ன ஓட்டம் ஓடுகின்றன பார்த்தாயா? பாகனே! தேரின் மணியின் நாவை ஆடாமல் கட்டிவைத்து ஓட்டு என்று ஆணையிடுகிறான் அகப்பாட்டுத் தலைவன் ஒருவன். இன்ன பண்பாட்டுக்காட்சிகள் நம்பண்டை இலக்கியப் பேழையுள் ஒன்றா இரண்டா? பண்பாட்டு வைப்பகம் பழந் தமிழ்ப் பாடல்கள் அல்லவோ! நாகரிக வளர்ச்சியில் வீடு அமைத்தானே தமிழன்; திண்ணை அமைக்க, அதில் திண்டு அமைக்க, அதில் மாடம் அமைத்து விளக்கிடத் தவறியது உண்டா? ஓரக்குடித்தனம் எனினும் ஒட்டுத்திண்ணை இல்லா வீடு எடுத்தானா அவன்? ஊரை அமைத்தால் அம்பலம் மன்றம் தெற்றி நத்தம் புல்வெளி புறம்போக்கு என்பன இல்லாமல் அமைத்தானா? ஊர் மன்றத்தைப் பொதுமையாக்கிப் பொதியில் என்று பெயரும் சூட்டினானே! சாலை எல்லாம் சோலையும் காவும் துரவும் அமைத்தது பண்பாட்டின் சான்றுகள் அல்லவோ. ஆங்கு நிற்கும் சுமை தாங்கிகளும் துலாக்கிணறுகளும் தண்ணீர்ப் பந்தல்களும் சத்திரம் சாவடிகளும் சாற்றுவன எவை எவை? பண்பாட்டு முழக்கங்கள் தாமே! ஆவுறிஞ்சு குற்றி அமைத்ததும் திருக்கோயிலில் மருத்துவ மனை அமைத்ததும் பண்பாட்டு விளக்கங்கள் அல்லவோ! காதலாகட்டும் கற்பு ஆகட்டும் பொருளியலிலா நின்றன? கணியத்தையா நம்பிக்கிடந்தன? பண்பின் பொருத்தங்கள் தாமே தொல்காப்பியர் காட்டியன; பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே என்பது, பண்பாட்டு வாழ்வே வாழ்வு எனக் காட்டியது இல்லையா? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றது எனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோற்றை நினையாதவள் இலக்கியமாகிறாளே. பொற்கலத்தில் பாலொடு தேன் கலந்து ஊட்டவும் உண்ணாளாய்ச் செல்வச் செழிப்பில் திகழ்ந்தவள், உவலைக் கூரை ஒழுகிய இல்லில் வாழ்ந்து, முரிவாய் ஆன கலத்தில் மான் உண்டெஞ்சிய கலங்கல் நீரை எடுத்து உப்பிலிவெந்ததை உவகையோடு உண்டு, ஒன்றன் கூறாடை உடுத்து வாழ்ந்த கற்பு, பண்பாட்டுக் கொள்கலம் அல்லவோ! கேளிர் போலக் கேளாது புக்கு என்பது எவ்வளவு பெரிய பண்பாட்டு மையம். ஆற்றுப்படை என்னும் அருமை இலக்கியத் தோற்றரவு தான் என்ன? யாம் பெற்ற வளத்தை இவரும் பெற வேண்டும் என்னும் அருட்காதலால், இவ்வழியே சென்று இங்கு இனிதே தங்கி, இன்னாரைக் கண்டு கேட்குமுன் வேண்டுவனவெல்லாம் பெற்று இனிது வாழ்க என்பது தானே அது. பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படை எனின் அதன் அருமை தான் என்ன? வறிய புலவன் தான் பெற்ற வளப்பரிசிலைத் தானே வைத்து வாழ விரும்பாமல், அருமை மனைவியே, உன்னை விரும்பி வாழ்வார்க்கும், நீ விரும்ப வாழ்வார்க்கும், பலராகச் சிறந்த கற்புடைய உன் பெரிய சுற்றத்தினர்க்கும், நம் பெரிய சுற்றம் பசியால் வாடிய போது வாய்த்த போது தருக என உதவியவர்களுக்கும், இன்னவர் என்னாது என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்பதும் இல்லாது நாமே வைத்துக்கொண்டு நெடுங்காலம் நலமாக வாழ்வோம், என நினையாது எவ்வெவர்க்கும் கொடுப்பாயாக. இக்கொடை வளமான முதிரமலைத் தலைவன் குமணன் வழங்கியது ஆகும் என்னும் பெருஞ்சித்திரனார் பெரும் பண்பாட்டுரை பேசிமுடிவதோ? (புறம் 163) ஏன் உமக்கு நெடிய வயதாகியும் நரை தோன்றவில்லை? என்று வினாவிய உறையூர்ப் பெருமக்களுக்குப் பிசிராந்தையார் கூறிய பண்பாட்டு ஓவியம் தீட்டிக்காட்டும் அளவில் அமைவதோ? பண்பால் உயர்ந்தவள் என் மனைவி; மக்களும் அப் பண்பாட்டில் நிறைந்தார்; யான் நினைப்பதை நினைத்தவாறே இயற்றும் உதவியாளர், வேந்தனோ நல்லதை அல்லது செய்யான்; ஊரில் வாழும் சான்றோரை எப்படிப் பாராட்டுவேன். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் அவர். அச்சான் றோரும் ஒருவர் இருவரா? எம் ஊரில் வாழ்வோர் பலர்; ஆதலால், எமக்கு நரை வரவில்லை என்கிறாரே! இவ்வாறு பண்பாட்டுப் பெருமித ஒட்டு மொத்தத்தை இன்று நம்முன் எவரொருவரேனும் நெஞ்சாரக் கூற முடியுமா? ஓரவை, கற்றோர் பேரவை; ஆங்குளார் எத்தகையார்? நற்குடிப் பிறப்பை ஆடையாக உடுத்தவர்; நூற் கல்வியை மாலையாகச் சூடியவர்; ஒழுக்கத்தை அணிகலமாகப் பூண்டவர்; வாய்மையை விரும்பி உண்ணும் உணவாகக் கொண்டவர்; தூய காதல் இன்ப இல்லத்தில் தங்கியவர்; நடுவு நிலை என்னும் பெரிய நகருள் வாழ்பவர்; பொறாமை ஆசை இல்லாமை ஆகிய இருபெருஞ் செல்வங்களையும் ஈட்டிக் கொள்பவர்; சொல்லும் சொல் பிழைபடா மேதக்க வாழ்வினர், எட்டுவகையாகச் சொல்லப்படும் இக்கட்டமை ஒழுக்கத்து மேலோருடன் ஒரே ஒரு நாள் இருக்கும் பேறு வாய்ப்பது இப்பிறவிக்கு மட்டுமில்லை எப்பிறவிக்கும் பேறாகும். என்று அருமையாகக் கூறுகிறது ஆசிரியமாலை என்னும் நூல் (புறத் திரட்டு. 827) தகுதி இல்லார் தம் அவைக்கண் வரின் அவரின் தகுதி யின்மை கருதி இகழாது, அவரையும் தம்மனைய தகுதியாளர் ஆக்குவது சான்றோர் அவையம் என அதன் புகழ் பாராட்டும் மற்றொரு பாட்டு. கன்றுகளும் ஆக்களும் மேய்ந்த நிலத்திலேயே அல்லல் இன்றி உறைகின்றன; கால்நடையாக நடந்து செல்வார் தாம் விரும்பும் இடத்தில் தங்குகின்றனர்; உழவர் களத்தில் விளை பொருட்கள் காவல் இல்லாமல் கிடக்கின்றன; என்று அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியின் நாட்டைப் பாடுகிறார் அரிசில்கிழார் (புறம்.330) இவற்றுள் காண்பவை கற்பனை இல்லை என்பதை இற்றை முதியர் கண்டவை தானே! இவ்வளவு விரைவிலா மக்களாட்சி, மாக்களாட்சி ஆகிவிட வேண்டும்; ஆக்கி விடவும் வேண்டும்! எவரும் எளிதாகக் காண வாய்ப்புத் தருதல் பண்பாடு (991) முகத்துக்கு முகம் மலரப்பார்த்தல் பாண்பாடு (93) உள்ளத்தில் இருந்து உவகை ஊற்றெடுக்கப் பேசுவது பண்பாடு (93) விளையாட்டாகக் கூட இகழ்ந்து பேசாமை பண்பாடு (995) பகைவரிடத்தில் அமைந்த நலமும் பாராட்டல் பண்பாடு (995) நகை முகத்தாராக விளங்குவது பண்பாடு (999) சொல்லும் சொல்லே குடிப்பிறப்பைக் காட்டும் பண்பாடு (959) பெரியவர் முன் காதோடு காது பேசுதல், சேர்ந்து சிரித்தல் பண்பாட்டுக்கேடு (694) மது அருந்துதல் சூது விரும்புதல் பாலுணர்வுக்கேடு என்பவை பண்பாட்டுப் பேரழிவுகள் (920) ஒருமை மகள் போல ஒருமை மகனாகத் திகழல் வான்சிறப்புப் பண்பாடு (974) இவ்வாய்மொழிகள்பண்பாட்டுத் தூவல்கள் இல்லையா? வள்ளுவத்தின் நூறாம் அதிகாரம் பண்புடைமை; 99ஆம் அதிகாரம் சான்றாண்மை. குடிமை மானம் பெருமை (96, 97, 98) என்பவற்றைக் கூறிய வரிசையின் நிறைவு பண்புடைமையாம். (100) தோற்றத்தால் வேற்றுகை இல்லாப்பிறப்பினர் எனினும் என்ன, பண்பாட்டில் ஒத்தவராகத் திகழ்கிறார்களா? பண்பாட்டின் ஒப்பே மாத்தர் ஒப்பு. (993) தன் கூர்மையால் பிற கருவிகளையும் கூர்மையாக்குவது அரம். அதுபோல் தன் அறிவுத்திறத்துடன் பிறரையும் அறிவுத் திறத்தராக மாற்ற வல்லாரும் உளர். அவர்க்கு மக்கட் பண்பாடு இல்லை எனின் அவர்கள் மரமாவரேயன்றி மக்கள் ஆகார் (997) ஒளிமிக்க பகல் பொழுது கூட, மகிழ்ந்து பழகுதல் இல்லாத பண்புக்கேடர்க்கு இருள் கப்பிய இரவுப் பொழுதே யாகும் (999) பண்பாடு இல்லாதவன் செல்வம் கல்வித்திறம் என்பன வெல்லாம் நல்லபாலே எனினும் அதனை வைத்துள்ள கலத்தின் தீமையால் கெட்டுப்போவது போலக் கெட்டுப்போகும் (1000) பண்புகளின் நிறைவு சான்றாண்மை; அதன் வெளிப் பாட்டு நலம் பண்புடைமையாம் பண்பாடு, உள்ளநிறைவில் வாய்பேசும் என்பது வழங்குரை, நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் என்பது பரிமேலழகம் (திருக். 282) சான்றாண்மையின் மேல்வைப்பாய்ப் பண்பாடு அமைதலை விளக்குவன இவை. பண்பாட்டின் முழுதுறல் விளக்கம், உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் ளல்லாம் உளன் என்பது (294) இன்று நமக்குள்ள வறுமை செல்வ வறுமை அன்று; விளைவு வறுமை அன்று; அறிவு வறுமை அன்று; நாகரிக வறுமை அன்று; நமக்குள்ள பெருவறுமை, பண்பாட்டு வறுமை எவ்வளமைகளையும் இல்லாமல் தொலைக்கும் வறுமை பண்பாட்டு வறுமை. அவ்வறுமையைத் தொலைத்து மீட்டெடுப்புச் செய்தல் பண்பாட்டுக் காதலர் கடமையாம். 23. ஒரு தீர்மானம் ஒரு காலத்தில், சப்பான் உருவாக்கமா? தரக் குறைவானது என்னும் எண்ணம் உலகவர் கருத்தில் இருந்தது. தர மேம்பாட்டை இசாசோ, என்பவர் விரும்பினார். அமெரிக்காவில் இருந்து உருவாக்க மூளையர் சிலரைச் சப்பானுக்கு அழைத்து உருவாக்கத்தில் மேம்பாட்டைப் புகுத்தினார். தரக் கட்டுப்பாட்டையும் மேம்பாட்டையும் உலகுக்கு வழங்கிய முதல்வரும் மூலவரும் இசவோ என அவருக்குப் பெயராயிற்று. இப்பொழுது தரக்கட்டுப்பாட்டு ஆய்வில் சப்பான் தலைநிற்கும் நாடாகத் திகழ்கின்றது. அதன் திட்டவழியை இந்தியாவும் பற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளது. தரக் கட்டுப்பாட்டுக் குழுமம் (Quality Control Circle) குவாலிடி கண்ட்ரோல் சர்க்கிள் கெக்கந்திராபாத்தில் இருந்து இயங்கு கின்றது! சிந்திக்க வேண்டும்; ஓர் எளிய. ஆனால் அரிய செய்தி இது! “Éiy ngh£L th§fth Koí« fšÉia? என்றது பாவேந்தர் வினா? ஆனால், விலை தந்து தான் வாங்க முடியும் என்பது நாம் காணும் இன்றை நிலை! விலை தந்து - ஆயிரம், பல்லாயிரம், பலஇலக்கம் என விலை தந்து வாங்கும் பொறியியல், வேளாண்மை இயல், மருத்துவ இயல் கல்விக்கு அரசின் செலவு என்ன? ஒவ்வொரு மாணவர் பெயராலும் பல இலக்கங்கள்! வறிய நாட்டின் பெரிய செலவு. பட்டுணி கிடப்போர், பழங்கஞ்சிக்கும் பழங்கந்தைக்கும் ஓட்டைக் குடிசைக்கும் அலமருவோர் மல்கிய நாட்டில் தொழில் வல்ல மூளையரை உருவாக்கப் பல்லாயிரம் கோடியைக் குவித்தாகும் கட்டாயநிலை! உருவாக்கப்பட்டவர், தன்னை நலித்துக் கொண்டும் வதைத்துக் கொண்டும் உருவாக்கிய நாட்டுக்குத் தம் உருவாக்கத் திறனை மூளைக் கூர்ப்பைப் பயன்படுத்துவது, ஒன்றுக்குப் பத்தாக வழங்குவது அல்லவோ கடமை! ஆனால் நிகழ்வது என்ன? ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (837) என்பது போலத் தம் நாட்டுக்குப் பயன்படாமல் பிறநாட்டுக்கு வளமும் வாய்ப்பும் பாராட்டும் பரிசும் வாய்க்கவே பிறநாடுகளை நோக்குகின்றனரே! பிற நாட்டு நல்லறிஞர் திறங்களை இங்கே கொண்டு வந்து வளர்ப்பதற்கு மாறாக இந்நாட்டு வளத்தையும், வாழ்வையும் வாய்ப்பையும் பிறநாட்டுக்கே உரிமையாக்கி உவக்கின்றனரே! அந்நாட்டைக் கொழுக்க வைக்க ஆங்கேயே குடியுரிமை யராகவும் நினைக்கின்றனரே! இந்த நிலை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெருந்தகைமைத் தாய்நாட்டுக்குச் செய்யும் கைம்மாற்றுக் கடனாமா? போர்க்களத் தலைமையை, உள்ள உறுதியாளர் தாங்குவது போல நாட்டுக்கு மேம்பாட்டைத் தாங்குவதற்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டியவர், சுடர் நோக்கி (சூரியகாந்தி) போல அயல் நாட்டையே நோக்கிக் கொண்டுளர் என்றால் அதற்கு அடிப்படை அவர்கள் தந்நலமே என்று மட்டுமே கூறிவிடுதல் பண்பாகாது! அவர்களுக்கு அவ்வார்வம் கற்கும் பருவத்திலேயே கருவாகக் காரணம் என்ன என்பதையும் எண்ணத்தான் வேண்டும். கற்றுத் தேறிய மூளைக் கூர்மையரும், தொழில் திறத்தரும் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் வெற்றிக் கனிகளைக் கொய்து தருதற்குத் தரும் மேம்பாட்டுத் திட்டங்களையும், ஆய்வுக் களங்களையும், பிறந்தமண் உருவாக்கித் தருகின்றதா? இல்லையே! இந்நிலைமை மாறாத வரை, அயல்நாட்டு மோகம் நீங்க வழியுண்டா? அதற்கும் இல்லையே என்பதா மறுமொழி! அண்மையில் நிகழ்ந்த வளரும் நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முடிவுகளுள் ஒன்று இன்றியமையாதது. அது வளரும் நாட்டு அறிவாளர், தொழில் வல்லார், உருவாக்கத் திறவோர் தம் ஆற்றல் தம் நாட்டுக்குப் பயன்படும் வகையில் கடனாற்றி நாட்டை உயர்த்த வேண்டும் என்பதாகும். ஆதலால் பிறந்த மண்ணுக்குத் தாம் பெற்ற திறங்களை நன்றியுணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் முழுமையாக வழங்குதல் கட்டாயக்கடன் என்பதைக் கற்றுத் தெளிவோர் முற்றும் உணர்ந்து கடனாற்றல் முதற்கடனாம். கற்றுத் தெளிந்தோர் பிறநாடு நோக்கா வகையில் உரிய வாய்ப்புகளை யெல்லாம் உருவாகித் தருதலில் முந்து நிற்க முனைதல் அரசின் கடமையாம்! இவ்விரண்டு கடமைகளும் ஒன்றற்கு ஒன்று தாங்குதலாய் அமைபவை. எடிசனார்க்கு வேண்டும் வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தரவில்லை என்றால் அஃது அரசின் குற்றம்; ஏனெனில் அவர் கண்டுபிடிப்புகள் உலகநலம் செய்வன; அதனை முன்னே உணரவில்லை என்றாலும் பின்னேயாவது நாடும் அரசும் உணர்ந்து கடமை புரிந்தன. ஆனால் நம் கண்காண வாழ்ந்த தமிழகத்து எடிசனார் கோ. துரைசாமியார் (சி.டி. நாயுடு) மூளைக்கூர்ப்பும், உருவாக்கத் திறனும் நாட்டுக்கு முழுதுறு பயனாக்க அரசு முயன்றதா? முனைந்ததா? முயலாத, முனையாத கேடு, அவர்க்குத் தீமையானதா? நாட்டுத் தீமையானதா? புத்தாக்கம் புரிவாரைப் போற்றிப் பயன் கொள்ளாத நாடு, புத்தாக்கிகளை அயல் நாடுகளுக்கு ஓட ஓட வெருட்டியடிக்கும் நாடேயாம்! செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்பது நம் மறை. 24. எல்லாப் பொருளும் இதன்பால் உள எல்லாப் பொருளும் இதன்பாலுள என்பதுடன், இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்று திருவள்ளுவ மாலை திருக்குறளைப் பற்றிக் கூறும். இப்பழம் பாடல் மட்டும் தானா இப்படிக் கூறுகிறது? திருக்குறளில் இல்லாதது இல்லை என்பதுடன் அதில் பொல்லாதது இல்லை என்றும் வெல்லாதது இல்லை என்றும் பாவேந்தர் பாடும் புதுப் பெருமையும் திருக்குறளுக்கு உண்டுதானே! திருக்குறளில் எல்லாப் பொருளும் உண்டு என்றால் எல்லாப் பொருளும் தாம் எவை என்று கேட்கத் தோன்றும். ஆடு மேய்ப்பவன் ஒருவன் தான் ஆட்டை ஓட்டும் டோ டோ என்னும் ஒலி திருக்குறளில் உண்டா? என்று திருக்குறள் வல்ல புலவரிடம் கேட்க அவர் டோ டோ உண்டே என்று கூறி, நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியர் டோடோயா தார் (149) என்னும் பாட்டை எடுத்துக்காட்டினார் என்பார் சொல்லின் செல்வர் இரா.பி. சேது அவர்கள். இப்படியெல்லாம் ஒவ்வொருவர் நினைத்த சொல்லும் பொருளும் செய்தியுமெல்லாம் திருக்குறளில் உண்டா என்று ஆய்ந்து பார்க்கவேண்டியது இல்லை. அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்வியல் பேற்றுக்கு வேண்டுவோர் வேண்டுவ வெல்லாம் வேண்டும் அளவாலும் வேண்டும் வகையாலும் திருக்குறளில் உண்டு என்பதே எல்லாம் உண்டு என்பதாம். புத்தம் புதுத் துறைகள் மெத்த வளரும் இற்றைக் காலநிலைக்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் ஈடு தருமா? ஒத்து வருமா? என்று ஐயுறுவார் உளர். திருக்குறள் மாறி மாறி ஒழியும் புறவியல்புகளைச் சொல்லாமல் என்றும் மாறாச் சிறப்புடைய அகவியல்புகளையே நுணுகி நுணுகிக் கூறும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்பவர்க்கு இவ்வையம் தோன்றவே தோன்றாது. அன்பு, அருள், அடக்கம், பொறுமை, இனியவை கூறல், கல்வி, கேள்வி, அரசு, அமைச்சு, தூது, செயலூக்கம், ஒப்பரவு, ஈகை என்பன வெல்லாம் எந்த உலகுக்கு - எந்தக் காலத்திற்கு - வேண்டாப் பொருள்களாகும்? பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருக்குறளில் பிறப்பு வேற்றுமைக்கு என்ன இடம் உண்டு? மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்னும் அற நூலில் மாசேற்ற என்ன வழியுண்டு? ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்பதனை வரம்பிடும் குறளில் இல்லாத வாழ்வியல் என்ன இருக்க முடியும்? விருந்து - இத்தனை வகை - இன்னவகை - என்பதா? உடை - இவ்வகையது - இவ்வண்ணத்து - என்பதா? உறைவிடம் - வடிவு இது - வனப்பு இது - என்பதா? காவல் என்பது கருவி இது, ஆள் எண்ணிக்கை இப்படி - ஊர்தி இவ்வகை - என்பதா? இவற்றின் அடிப்படைகளையே கூறும் குறளின் பொருள் எப்படி மாற்றம் அடையக்கூடும்? மாறாதவற்றைத்தானே அது கூறவே எடுத்துக் கொண்டு கூறுகின்றது. ஒற்றும் தூதும் இத்தகைய என்பதை அன்றி ஆள் உயரம் - அளவு - உடைக் குறிப்புகளையா அது சொல்கின்றது? ஆதலால் காலம் காலமாக ஞாலம் முழுமைக்கும் வழிகாட்டும் உலக ஒப்புரவு நூலாகத் திகழ்கின்றது திருக்குறளாகும். திருக்குறளில் சட்ட இயல்; திருக்குறளில் சமுதாய இயல் திருக்குறளில் ஆட்சியியல்; திருக்குறளில் பொருளியல் திருக்குறளில் அறிவியல்; திருக்குறளில் மருத்துவ இயல் திருக்குறளில் மேலாண்மை இயல்; திருக்குறளும் கலைச்சொல்லாக்கமும் திருக்குறளும் தரக்கட்டுப்பாடும்; திருக்குறளும் மனவளக் கலையும் திருக்குறளும் மனையியற் கல்வியும்; திருக்குறளில் மெய்யியல் திருக்குறளில் உயிரியல்; திருக்குறளில் பயிரியல் திருக்குறளில் ஒழுக்கவியல்; திருக்குறளில் பண் பாட்டியல் திருக்குறளில் கலைச் செல்வங்கள்; திருக்குறளில் யாப்பியல் இன்னவாறு புத்தம் புதுத் துறைகளுக்கும் திருக்குறள் தனித்தனி நூலாகுமாறு செய்திகளைக் கொண்டுள்ளது என்றால் எல்லாப் பொருளும் இதன் பாலுள என்பது எப்படிக் கற்பனையாகும்? அல்லது இட்டுக் கட்டியதாகும்.? நம் அறிவு வளர்கிறதா? நம் எண்ணம் சிறக்கிறதா? புத்தம் புதுத் துறையில் புகுகிறோமா? திருக்குறள் அவற்றுக்கெல்லாம் ஈடு தருகின்றது. நாம் வளர வளர, நம் பார்வை வளர வளரத் திருக்குறள் பயன்பாடும் வளர்கின்றது. திருக்குறளைக் கற்பார் - தேடுவார் - நோக்கம் என்ன? அந்நோக்கத்திற்குத் தக அது நுண்ணியற் கருத்துகளை வழங்குகின்றது. இவற்றையெல்லாம் ஆழ்ந்து கண்ட அறிவறிந்த அருமையுள்ளமே, (மதுரைத் தமிழ் நாகனார்) எல்லாப் பொருளும் இதன்பாலுள இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று முடிவு செய்ததாம். இந்நோக்கில் நீங்கள் ஊன்றிய துறை என்ன? உழைத்து உழைத்து உயரும் துறை என்ன? அதன் நோக்கில் திருக்குறளை நோக்குங்கள்! உங்கள் நோக்குக்கு நூறு நூறு கருத்துகள் திருக்குறளில் வாய்க்கும்! வைப்பகத் துறை உண்டா? காப்பகத்துறை உண்டா? மாசு-கட்டுப்பாடு உண்டா? மகக்கட்டுப்பாடு உண்டா? k©Âaš MŒî c©lh?; விண்ணியல் ஆய்வு உண்டா? தோய்ந்து தோய்ந்து பாருங்கள்! ஆய்ந்து ஆய்ந்து பாருங்கள்! கையிற் கனியெனக் கருதுவனவற்றைக் கண்டு மகிழ்வீர்கள்! இவ்வுரை படிப்பறிவு உரைமட்டுமன்று. பட்டறிவும் கூட்டிச் சேர்ந்து வழங்கிய பட்டய உரையாம். 25. எல்லாரும் இதற்கு உரியர் எல்லாப் பொருளும் இதன்பால் உள என்னும் பொருளை முன் கண்டோம். மாந்தராவார், எல்லாரும் இதற்கு உரியர் என்பதை ஓரளவில் எண்ணுவோம். திருக்குறளைப் பொதுமறை என்றும். தமிழ்மறை என்றும் முந்தையோர் கொண்டனர். அதனை நம்மறை எனக் கண்டார் குறளாயத் தோன்றலும் குறளிய நிறுவனரும் ஆகிய வேலா அரச மாணிக்கனார். நம்மறை எனின் சுருங்கிய வட்டமாகி விடுமா? படிப்பவர் தமக்கெல்லாம், கேட்பவர் தமக்கெல்லாம், ஆய்பவர் தமக்கெல் லாம் நம்மறையாகும் போது, ஒருவர் ஒருவராய் உலகளாவிய விரிவுடையதாகி விடும் அல்லவோ! ஆதலால், குறளை ஏற்றுக் கொள்ளும் நெஞ்சுடையார் தம்மையெல்லாம் தன்னகத்துக் கொள்ளும் கொள்கை நூல் சுருங்கியது ஆகாதாம். திருக்குறள் நம்மறை எனப் புதுவை வேலாயுதனார் தம் இல்ல முகப்பில் இரும்புக் கதவு வார்ப்படத்தில் அமைக்க விரும்பினார். அவ்வாறே செய்ய ஆணையும் தந்தார். வந்த வார்ப் படத்தைப் பார்த்து அதிர்வுற்றார்! ஏன்? திருக்குறள் நன்மறை என்று வார்ப்படம் ஆகி இருந்தது. நம்மறை என்பது நன்மறை ஆக வார்ப்புப் பெற்றதும் பொருட் குறைவு உடையதாகி விடவில்லையே. திருக்குறள் உலகுக்கு வாய்த்த நன்மறை தானே! பிற எம்மறைக்கும் இல்லாத தனிமறை அல்லவா அது! நம் நூல் என்றும் நம் தமிழ் நூல் என்றும் நம் காதலால் மொழிவதா இது? உலகம் ஏற்றுக் கொண்டு உவக்க உவக்கப் பாராட்டும் இவ்வுண்மையைத் தமிழன் உரைப்பதால் தாழ்வாகி விடுமா? ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலக மக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளை மட்டும் தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார்... என்று அறிஞர் துறு (DREW) கூறும் இது திருக்குறளின் விரிவுச்சிறப்பை விளக்குவது அல்லவா! எந்த ஒரு சமய நூலை எடுத்துக் கொண்டாலும் அச்சமயத் தார் உலகத்தளவில் பெரும் எண்ணிக்கையாக இருப்பினும், அச்சமயத்தவர் அல்லார்க்கு உரிய நூலாகக் கொண்டாடப் படாதே! அப்படிச் சமயப்பார்வை கொண்டு எந்த ஒருவராலும் விலக்கக் கூடிய நூல் அல்லவே திருக்குறள்! அதனால் அல்ல வோ எவ்வெச் சமயத்தாரும் தத்தம் சமயத்தோடு சார்த்திக் கூறும் சால்பு நூலாகத் திருக்குறள் திகழ வாய்க்கின்றதாம்! இதோ சமயச்சார்பு மிக்குடைய கல்லாடர் என்ன சொல்கிறார்? சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவர்! என்று பாராட்டுகிறோரே! சமயத்தால் பிரித்துப் பார்க்க இயலாச் சால்புடைய திருக்குறள், பிறப்பு வேற்றுமையேனும் பார்ப்பதோ? பிறப்பு வேறுபட்டால் உயர்வு தாழ்வு கற்பிப்பதோ? தொழில் வழிப் பிரிப்பால் ஏற்றத் தாழ்வு காண்பதோ? இவையெல்லாம் இல்லாதது என்பதன் ஒட்டு மொத்தச் சான்றாக இலங்குவது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்னும் குறள் அல்லவோ? தமிழர்க்கென மொழியின் பெயரால்கூட, நாட்டின் பெயரால் கூடப் பிரித்துக் காணற்கில்லாப் பெருநிலையை அல்லவா பேணுவது பெருமைக் குறள்! ஆளும் சாதி, அடிமையுற்று வீழும் சாதி எனப் பிரிப்பு உண்டா? தொழப்படும் பிரிவார், தொழும் பிரிவார் எனப் பிரிவு உண்டா? கற்றுச் சிறப்புறும் கூட்டம், சற்றும் அறிவிலார் தொழும்புக் கூட்ட மெனும் பிரிப்பு உண்டா? மக்கள், மாந்தர் என்னும் பொதுப்பார்வை, பார்ப்பதை அன்றிப் பிரித்துக் காணாப் பெருமையது அல்லவோ திருக்குறள். உறுப்புஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க, பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு என்றும் மக்களே போல்வர் கயவர் அவரென்ன ஒப்பாரி யாம்கண்ட தில் என்றும் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழில்லார் கீழல் லவர் என்றும் கூறுவனவற்றை நோக்கவே உலகவர் எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பார்வையது என்று புலப்படுமே! அரசு, வணிகம், தொழில், கல்வி என்பவையெல்லாம் விரிய விரியக் கூறும் திருவள்ளுவர் இதற்குரியார் இவர் என எவரையேனும் குறித்துளாரா? வண்ண வேறுபாட்டை, செல்வ ஏற்றத் தாழ்வை இனப் பாற்படுத்தினாரா? முறை செய்து காப்பான் வாணிகம் செய்வார்க்கு வாணிகம், உழுவார் உலகத்தார்க்கு ஆணி, கண்ணுடையார் என்பவர் கற்றோர் இவற்றில் உரிமையுள்ளார், உரிமையில்லார் என அவரே ஆவார்? ஒப்புரவறிதல் ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் என்கிறதே! ஈகை வறியார்க்கு ஒன்று ஆவதே ஈகை அற்றார் அழிபசி தீர்த்தல் - என்கிறதே! புகழ் வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்கிறதே. திருக்குறள் சொல்லும் எல்லாப் பொருள்களும் உலகவர் எல்லார்க்குமாக இருத்தலைத் தேர்ந்து தெளியும் நாம், திருவள்ளுவ மாலை வெண்பா அடி ஒன்றினைக் கண்டு வியப்புறுகிறோம். அதனைப் பாடிய பாவலர் வெள்ளி வீதியார், அவர் எத்தகு தேர்ச்சி மிக்காராய்த் திருக்குறளின் சீர்மையை, இதற்குரியர் அல்லாதார்இல் என்கிறார். உலகவர் எல்லார்க்கும் உரிய நூல் என்பதை வள்ளுவர் கூறும் வகையால், கோடு கொடு மரத்தின் மேலும், மலைமேலும் ஏறிக் கூறியவர் இவ்வெள்ளிவீதியார் என்னும் பெருமை எய்துகிறார். 26. வாளும் கேளும் திருக்குறளின் ஒளி திக்கெல்லாம் பரவுகிறது! திருக்குறள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இடம் பெறுகிறது! அலுவலகங்கள், போக்குவரத்து ஊர்திகள், இல்லப் பகுதிகள் ஆகியவற்றிலும், அங்கும் இங்கும் பளிச்சிடுகிறது! திருக்குறள் எண்கவனகம், பதின்கவனமாய் - பதினாறு கவனமாய் வளர்ந்தோங்குகின்றது! சதாவதானி (நூற்றுக் கவனகர்) முன்னே இருந்ததுமுண்டு. மூன்று வயதுச் சீரிளமையர் வாய்முதல் தொண்ணுறு முழுதுறக் கொழிக்கின்றன! ஒலியிழை உலகமும், இசை உலகமும் கூடத் திருக்குறளை இனிப்புற இசைக்கின்றன. திருக்குறள் ஆய்வுநூல்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகுகின்றன! எப்படி எப்படியோ எத்தனை எத்தனையோ புதுப்புது உரைகளும் பதிப்புகளும் வெளி வருகின்றன. இவ்வாறு திக்கெல்லாம் பரவும் திருக்குறளின் சீர்மையைத் தாங்கிக் கொள்ள இயலாமல், அவ்வப்போது எரிந்து விழுவாரும், பொரிந்து கக்குவாருமாகச் சிலர் இருப்பதும் இதழ்களால் புலனாகின்றன! வாய்போன போக்கில் சொல்ல, கைபோன போக்கில் எழுத, அவற்றுக்கே காத்திருக்கும் இதழ்கள் பல்லாயிரம் பல இலக்கம் என அச்சிட்டுச் சந்தனத்தைச் சேறாகக் காட்டி மகிழ நிகழ்கின்ற நிகழ்வின் உள்ளீடு, தெள்ளெனப் புரியவே செய்கின்றது! திருக்குறளின் ஒப்பிலாக் கட்டமைதி, எடுத்துச் சொல்லும் எழில், உலகுக்குப் பொதுவாம் உயர்ம்மை, வாழ்வின் எப்பாலுக்கும் எவர்க்கும் எந்நாளுக்கும் பொருந்தும் தனித்தனித் தகைமை, சார்பு எள்ளத்தனையும் இல்லாச்சால்பு, பகுத் தறிவுக்கும் அறிவியல் பார்வைக்கும் தன்னை முற்றாகத் தந்து மேம்பட நிற்கும் மேன்மை, உலகோர் உள்ளம் கொள்ளை கொள்ளும் மாண்பு என்பனவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ளும் தகுதி இல்லாமல், போற்றுவார் போற்றுதலுக்கு மாற்று வழியாகத் தூற்றுதலை மேற்கொண்டவர் செய்கையாம் அது! திருக்குறளில் குறை குற்றம் சுட்டுவார், முதற்கண் தம் மனச் சான்றுக்கு மதிப்புத் தருபவர் தாமா? தருபவர் எனின் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகுமே! அவர், திருக்குறளை முறையாகக் கற்றவர் அல்லர்; அவர், திருக்குறளை முற்றக் கற்றவரும் அல்லர்; அல், திருக்குறளை மூலப் பொருளொடு கற்றவரும் அல்லர்; அவர், திருக்குறட் பொருட்சிக்கலைத் தீர்க்கும் தீர்வு, திருக்குறளிலேயே உண்டு என்று கண்டவரும் அல்லர்! தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகிய தமிழ் நெறிமை களைக் கற்றுணர்ந்தாரும் அல்லர்! தொடுகுறி பார்ப்பதுபோலப் பார்த்தும், வழிப்போக்கர் உரையைக் கேட்பது போலக் கேட்டும் - நுனிப்புல் மேய்வதைத் திருக்குறள் ஆய்வெனப் பூரித்துப் போய்த் தமக்குத் தாமே சொறிந்து மகிழ்பவர்! ஆயிரம் சான்று காட்டினும் என் முடிவே முடிவு என்று முன்னுறவே முடிவு செய்து கொண்டு விட்டவர்! இவர்கள் வண்ணமும் எண்ணமும் வெளிப்படை யானவை! தமிழ்ம்மையோ, தமிழ்ம்மைக் குறளோ ஓங்கி உயர்ந்து உலகப் புகழுக்கு உரியதாகிவிடக் கூடாது என்னும் எரிவின் வெளிப்பாடானவை! ஆதலால், இப்பகை, வள்ளுவர் வாய்மொழி வழியில் வாள் போல் பகையாம்! இப்பகை, அத்துணை அஞ்சக்கத்தக்க பகை அன்றாம்! ஆனால்! அஞ்சத் தக்க பகையாவது கேள் போல் பகை என்பதாம்! வாள் போல் பகையை நம் விழிப்புணர்வாலும் அறிவுத் திறத்தாலும் கட்டொழுங்காலும் செயலறச் செய்துவிடலாம்! ஆனால், கேள்போல் பகை அத்தகைத் தன்றே! உள்ளுள்ளாக இருந்தே உருக்குலைப்ப தாயிற்றே அது! ஆக்கம் செய்வது போன்றே அழிவு செய்வதாயிற்றே! நஞ்சை அமுதெனக் காட்டி நாடியை ஒடுங்கச் செய்வதாயிற்றே. ஆதலால், கேள் போல் பகையாய்ச் செயல்படுவார்க்குச் செவிதாராமை மட்டும் நெறிக்காவலாகாது. புறக்கணித்தல் மட்டும் கூடக்காவலாகாது! கண்டித்தலும் கட்டாயம் வேண்டும்! உண்மை உணர்த்தி ஒழுங்குறுத்தல் என்னும் உயர் நோக்கிலேயே கண்டித்தல் இனிய நூற்காப்பாகும்! கண்டித்தல் புண்படுத்தல் அன்று! பண்படுத்தல் ஆகும்! வருந்தக் கூறுதல் ஆகாது! திருந்தக் கூறுதலாகும்! திருக்குறள் வாழ்வினரும் அதனைச் செய்யாக்கால், எவரே செய்ய முன்வருவார்? 27. அறிவும் அழிவும் அறமாவது எது? மனத்துக்கண் மாசிலன் ஆதல்-அறம், என்பது வள்ளுவம். அறிவாவது எது? அறிவு அற்றம் காக்கும் கருவி அதாவது அழிவு வராமல் காக்கின்ற கருவி என்பது வள்ளுவம். அவ்வாறானால் மாசமைந்த மனம் அறமுடையதாகாது. அழிவுடைய - அழிவாக்குகின்ற அறிவு அறிவாவாகாது என்பது இவற்றால் விளங்கும். அதனால் தான் நன்மகப்பேற்றை நயக்கும் வள்ளுவர், அறிவறிந்த மக்கட்பேறு வேண்டும் என்றும், பழிபிறங்காப் பண்புடை மக்கட்பேறு வேண்டும் என்னும் மக்கட் பேற்றில் கூறுகிறார். அறிவிலாப் பண்போ, ஆக்கம் செய்யாது. பண்பிலா அறிவே, படுகேடு செய்யத் தவறாது. ஆதலால், அறிவும் பண்பும் ஒருங்கமைந்த பேறே பேறு என்றார். கல்வியைப் பின்னே கூறும் போதும், கசடு இல்லாத கல்வி என்றே குறிக்கிறார். கற்றபடி நிற்கவே கற்க வேண்டும் என்றும் அங்கேயே குறிப்பிடுகிறார். அறிவுடைமையிலே, பிற உயிர்கள் உடையும் துயரைத் தம் துயராகக் கொள்ளல் அறிவுடைமைக்குச் சான்று என்பதைக் குறிக்கும் முகத்தால், அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை (315) என்கிறார். ஆனால், அறிவுலகத்தின் மாமணிகள் என்று சொல்லிக் கொள்ளும் நாடுகளின்அறிவுக் கூர்மை எப்படி உள்ளது? எவ்வளவு மிகுதியாக அழிவு செய்ய முடியுமோ? - அவ்வளவும் செய்வதே, அறிவியல் என்னும் செருக்கில் உள்ளன, அறிவியல் ஒங்கிய நாடுகள்! அந்நாடுகள், உலக அமைதி! அமைதி! என்று ஓயாமல் கூச்சலும் போடுகின்றன தாங்கள் கண்ட பேரழிவுக் கருவிகளைப் பிற நாடுகள் கண்டுபிடிக்கக் கருதியும் பார்த்தல் கூடாது என்று தடைவிதிப்பதோடு, தலைப்படாமல் இருக்கிறதா என்பதைக் கரவாக ஆய்ந்து கொண்டும் உள்ளன! அவற்றுக்கு என்ன, உலக அமைதியின் மேல் அவ்வளவு அக்கறையா? அருட்பெருங்காதலா? தாங்களே உலகை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்கக் குத்தகை எடுத்துக் கொண்டாற் போல் கொக்கரிக்கும் அந்நாடுகள்தாம் பிற நாடுகள் ஆக்கவழிக்கு அறிவியலில் தலைப்படுவதையும் தடுக்கத் தலைப்படுகின்றன. அமைதியைக் காக்க விரும்புபவன் எப்படி இருக்க வேண்டும்? அமைதியாளனாக இருக்க வேண்டும் அல்லவோ? நான் மட்டும், அடாவடித்தனமே உருவாகத் திரிவேன்! நீ மட்டும் அதனைக் கண்டு கொள்ளாது அடங்கி அமைத்து கிடக்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட நடுநிலைப் பார்வை? இதோ பாருங்கள் ஒரு செய்தி, உலகுக்கு அமைதி காட்டும் அருமை முன்னோடிகளின் அழகுக் காட்சி! அந்த முன்னோடி களுக்குள்ளேயே கரவுத் திட்டங்கள்! உலகை அழிப்பதில் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரா எனப் போட்டா போட்டி! அணுக்கருவியை ஒடுக்குவோம் என முழங்கும், அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையேயுள்ள போட்டி! நச்சுயிரிக் குண்டுகளைத் தலைவர் எல்சினும் அறியா வகையில் ஆக்கிவைத்துள்ளதாம் உருசியா! கூறுகிறது இலண்டன் இதழ். நச்சுயிரிகளைப் பதப்படுத்திப் பொடியாக்கி, அதனையே குண்டுகளில் நிரப்பி, நடுவானில் வெடிக்கச் செய்தல் ஒருவகை; பொடியாகத் தூவுதல், மற்றொரு வகை, இவ்விருவகைகளாலும் ஏற்படும் அழிவு எவ்வளவாம்? 200 கிலோ பொடியை வானில் தூவினால் தூவப்பட்ட ஒரு நொடியில் ஆம்; ஒரே ஒரு நொடியில் ஐந்து இலட்சம் பேர் இறந்து போவாராம்? எவ்வளவு பேரருள்! உலகை நடுக்கும் அமெரிக்கா, உள் நடுக்கம் கொண்டு இருக்கிறதாம். இப்பொழுது இனி அடுத்து என்ன? ஒரு நொடியில் பத்திலக்கம் பேரைக் கொல்லும் நச்சு ஆவியைக் கண்டு பரப்பத் துணியும் அமெரிக்கா! சும்மா இருக்குமா? சந்தை விலை இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தேயிலையையும், கோதுமையையும் கடலிலே கப்பல் கப்பலாகக் கொட்டிக், கடலை நாறச்செய்து, கடல்வாழ் உயிரிகளைச் சாகடித்து மேலும் நாறச்செய்து, அந்நாற்றம் தாங்காமல் வானில் பறக்கும் பறவைகளும் செத்துச் செத்துச் விழச் செய்த வன்கொடுமை வல்லரசுகள் இவற்றைச் செய்யத் தயங்குமா? பல்கோடி ஆண்டாக இயல்பான வகையால் இயற்கை உருவாக்கித் தந்த உலகை, நொடிப் பொழுதிலே அழித்துத் துடைக்க வல்ல அழிவியலுக்குப் பெயர் அறிவியலா? அழிவாளன் கயமையால் அருமைக்கு அருமையாம் அறிவு அடையும் இழிவு ஈது! அறிவியலோடு அருளியலும் அமைந்த சான்றோர், இவ் வழிவுக் கூட்டத்தை அழிவுக் கருவியைக் கண்டு பிடிக்கும் கூட்டத்தை, அறிவியலை அழிவியலுக்கு ஆக்கும் வெறி விலங்குக் கூட்டத்தைக் கண்டிக்கவும், இடித்துரைத்துத் திருத்தவும் வேண்டும். இல்லாக்கால் அப்பழி அறிவாளர்களையும் சாரவே செய்யும். நாடுதோறும் அறிவாளர் கூட்டம் கிளர்ந்து அழிவியலைத் தடுத்தால் அல்லாமல். அறிவியல் தன் களங்கத்தில் இருந்து விடுதலை பெற இயலவே இயலாது! அறிஞர் உலகம் எண்ணுமாக! உலகைக் காக்குமாக! 28. கேட்டதும் கிடைத்ததும் திருக்குறள் ஆய்வு இக்கால் பெருகி வருகிறது; அவ்வாய் வில் ஆடவர் மகளிர் எனப் பால்வேறுபாடு இல்லாமல் ஈடுபட்டுள்ளமை மகிழ்வாகின்றது. ஆனால், அம்மகிழ்வு வள்ளுவத்தை முழுதுறப் பாராமல் முனைப்பாகவும் தடிப்பாக வும் உள்ளொன்று வைத்து வெளியொன்றாக எழுதப்படும் போதும் பேசப்படும் போதும் வாய்மை நெஞ்சத்தை வாட்டு வதாக அமைந்துவிடுகின்றது. 26.1.91இல் தினமணித் தமிழ்மணியில் வள்ளுவம் காட்டும் ஆண் ஆதிக்கச் சமூகம் என வெளிவந்த கட்டுரை அவ்வகையில் ஒன்று. அதனை மறுத்து வள்ளுவம் பெண்ணுரிமைக்கே வழி காட்டுகிறது என ஒரு கட்டுரை பெப்ருவரித் திங்களில் வெளிவந்தது. வள்ளுவரின் சமநோக்கு என்றோரு கட்டுரை மார்ச்சுத் திங்களில் வெளிவந்தது. 30.8.92 இல் ஒரு கோரிக்கை என்னும் தலைப்பில் மற்றொரு பெண்மணியாரின் கட்டுரை தமிழ்மணியில் வெளிவந்தது. வள்ளுவத்தில் கரும்புள்ளி உண்டு என்றும், பெண்பாலுக்கு ஒப்புரிமை தராப்பகுதி அஃது என்றும் கூறியது அது. அதனை ஒட்டியும் வெட்டியும் எழுதியவை தொடர்ந்து வந்து கொண்டுள. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஒப்பாகப் பெண்ணை மதித்துப் போற்றி ஒப்புரவுச் செப்பப் புலமையர் உலகளாவிய பரப்பில் ஒருவரும் இருந்திலர் என்பது உண்மையாக இருக்கவும் அதனை முழுத்தோதாது நுனிப்புல் மேய்ந்து தம் நுண்ணறிவுத் திறம் ஈதெனத் தம்மைத்தாமே பாராட்டிக் கொள்வார் எழுத்தை மறுத்து மெய்ம்மை நாட்டல் வேண்டத்தக்க ஒன்றாம். திருக்குறள் களஞ்சியமாய், நடமாடும் வள்ளுவமாய்த் திகழ்ந்த பதின்கவனகர் திரு.பெ. இராமையா அவர்கள் பேரொளி காட்டி முன்னின்றார். அவரினும் குறளை ஓதிய ஒருவர் உலகில் உண்டோ? திருக்குறள் பற்றி மாறுகருத்தும் ஒப்புக் கருத்தும் உரைத்தார் இந்தக்கட்டுரை எழுதுவார் ஆகிய எவரும் அவர்முன் நிற்றற்கும் தகுதி உடையவர் ஆவரோ? அப்பெருந்தகை இன்று இல்லை! அன்று அவர் வாழ்ந்த நாளில், பல்லடம் திருக்குறள் மன்றம் சார்ந்த நல்லன்பர், உயர்பண்பர் திரு. மா. ஆறுமுகம் திருக்குறள் வேந்தரே, தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் என்ற குறள்மூலம் வள்ளுவர் பெண்ணடிமைத் தனத்திற்கு உடன் பட்டுள்ளார் என்னும் கருத்து, சில அறிஞர்கள் நடுவில் உள்ளது. தங்கள் முடிவென்ன? என இராமையனாரிடம் வினாவினார். அதற்கு அவர் தந்த மறுமொழி விரிவுடையாது; பலப்பலரும் எழுதியும் பேசியும் வருவனவற்றுக்கு இணையற்ற மறு மொழியாய் அமைவது. ஆதலால் அதனை ஆய்வாளர்முன் எடுத்து வைக்கிறது இவ்வுரை: அறிஞர்கள் நடுவில் அப்படி ஏதும் கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை. வெள்ளாடுபோல் நுனிப்புல் மேயும் சில ஆண்,பெண் எழுத்தாளர்கள் நடுவில்தான் அப்படியொரு பிதற்றல் இருக்கிறது. ஓர் அலி, தன்னை முழுமையுள்ள பெண்ணாகக் காட்ட முயற்சி செய்யும் செயலைப் போன்றதே இவர்களின் ஆராய்ச்சியும் அதன் வெளிப்பாடும். ஏனெனில் இவர்களில் யாரும் திருக்குறளின் உயிர்ப்பை முழுமையாக உணர்ந்தவர்களோ, அதை வாழ்க்கை நூலாய்க் கொண்டு பின்பற்றுபவர்களோ இல்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கோள் காட்டப் படித்தது தவிர, திருக்குறளில் ஆழங்கால்பட்ட அறிவினர் இல்லை. திருக்குறள் போன்ற ஒரு முழுமுதல் நூலை எழுதவோ சரியாக ஆய்வு செய்யவோ வெறும் கல்வி மட்டும் போதாது. பொருட் பிரபஞ்சத்தின் முழுமுதல் தன்மையைப் புரிந்து கொள்ளும் மெய்யறிவும் கருத்துப் பிரபஞ்சத்தின் முழுமுதல் தன்மையை உணர்ந்து கொள்ளும் மெய்யுணர்வும் வேண்டும். (பிரபஞ்சம் - பேரண்டம்) காலம் என்ற நான்காம் பரிமாணத்தை உணர்ந்து வென்றவர்கட்கே இவ்விரண்டும் வாய்க்கும். அவர்கள் சொற்களே காலத்தை வென்று நிற்கும் ஆற்றல் பெறும். பூமிக்கு எப்படி 2000 ஆண்டுகள் என்பது ஒரு நொடிக்குக் கூட ஈடாகாதோ, அப்படியே ஞானிகளின் சொற்களுக்கும் 2000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம் ஆகாது. ஒரு பொதுவுடைமைப் பற்றாளர் என்னிடம் உரையாடும் போது, நிலவுடைமைச் சமுதாயம் தோன்றித் தந்தையைத் தலைமையாகக் கொண்ட தந்தைவழிச் சமுதாயம் தோன்றிய பின்தான் பெண்கள் வீட்டில் முடங்கினர்; சிற்றின்பப் பொருளா யினர்; மெல்லிய உடல்வாகும் குரலும் பிற பண்புகளும் பெற்றனர். பெண்ணுரிமை மறுக்கப் பெற்றது. பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்று வாதிட்டார். அப்படிப் பார்த்தால் இன்றும் தாய்க்கோழியின் பின்னால் தான் அதன் குஞ்சுகள் செல்கின்றன; தாய்ப்பன்றி அல்லது நாயின் பின்னால் தான் அவற்றின் குட்டிகள் செல்கின்றன, அதாவது தாய்வழிச் சமுதாய அமைப்புதான் இன்றும் தொடர்கிறது. நிலவுடைமை அறிவுப் புரட்சி தொழிற்புரட்சி என்று அவற்றுக்கிடையே எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அப்படியிருக்கக் கோழியை விடச், சேவல் ஏன் வலிமையுடனும் கம்பீரத்துடன் போர்க்குணத்துடனும் திரிகிறது? ஆண்சிங்கம் மட்டும் ஏன் பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு முழங்குகிறது? ஆண் யானை ஏன் தன் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றுச் செல்கிறது? ஆண் இனத்திற்கு வலிமை, தலைமை ஏற்கும் மனஎழுச்சி, வாழும் இடத்தில் தன் இறையாண்மையை நிலைப் படுத்தவும் தன்னைச் சார்ந்திருக்கும் இனத்தைப் பாதுகாக்கவும் வேண்டிப் போராடும் போர்க்குணம் ஆகியன இயல்பு. பெண் இனத்திற்கு மென்மை, இனப்பெருக்க ஈர்ப்பு, உடலால் ஆண் இனத்திடம் அடங்கியும், உணர்வால் ஆண் இனத்தை அடக்கியும் இரு வழிப்பிணைப்பை ஏற்படுத்தும் பண்பு ஆகியவை இயல்பு. பகுத்தறிவால் உயிர்களிடையே முதன்மை பெற்றுவிட்ட மாந்த இனத்தைச் சேர்ந்த நம்முன்னோர், இந்த இயற்கை நியதியைத் தம் அறிவால் உணர்ந்து, அதை நெறிப்படுத்தி, வாழ்வை அகம் - புறம் எனப்பிரித்து அகவாழ்விற்குப் பெண்மையைத் தலைமையாகவும் புறவாழ்விற்கு ஆண்மையைத் தலைமையாகவும் கொண்டு சமுதாய அமைப்பை வகுத் துள்ளனர். இதில் உயர்வு தாழ்வு என்ற பேச்சிற்கே இடமில்லை. உடலளவில் பெண்ணிற்கு ஆண் பாதுகாப்பு (புறம்); மனத்தளவில் ஆணிற்குப் பெண் பாதுகாப்பு (அகம்). இயற்கையோடு பொருந்திய இப்பிணைப்பையே இல்லறம் என்ற அமைப்பால் அமைத்தனர். களவியல் என்னும் காதலில் ஆண்மகனின் ஆற்றல் கரை புரண்ட வெள்ளமாய்ப் பொங்கும்; கற்பியல் என்னும் இல்லறத்தில் பெண்மணியின் முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு, கற்பு எனப்படும் ஒழுக்கமாகிய கரைகளுக்குள் அவனது ஆற்றல் ஒடுங்கி ஒழுங்குபட்டுச் சமுதாயத்திற்குப் பயன்படும். எனவே இல்லறத்தில் ஆண்மகனை நெறிப்படுத்தும் பெரும் பொறுப்பு பெண்களுடையதே. தம்மை நெறிப்படுத்தத் தவறியவர்களும் தமக்குள்ளே நிறைவுகாண முடியாதவர்களும் எப்படி மற்றவர்களை நெறிப் படுத்தவோ, மற்றவர்க்கு நிறைவுதரவோ முடியும்? எனவே, ஆண்களை நெறிப்படுத்த வேண்டிப் பெண்கள் கைக்கொள்ள வேண்டிய இரண்டு கருவிகளாகிய ஒழுக்கம், முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு ஆகிய இரண்டையும் விளக்க வேண்டி அடுத்தடுத்து இரண்டு குறட்பாக்களைத் தருகிறார் எம்பெருமான். பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் இக்குறட்பாவில், முதற்கருவியாகக் கற்பென்னும் ஒழுக்கத்தை அறிமுகம் செய்கிறார். முழுதளிக்கும் (அர்ப்பணிக்கும்) அன்பை அடுத்த குறளில் அறிமுகம் செய்யும்போது அவனைத் தன்னுள் நிறைத்து அதன் வழிதான் அவனுள் நிறையும் நுட்பத்தை விளக்க வேண்டி, தெய்வம் தொழாஅள்; விழிப்பின்போது மட்டுமன்று; தூக்கத்திலும் அவனையே நெஞ்சில் நிறைத்துள்ளதால் அவனைத் தொழுது எழுவாள் என்று வருணித்தார். இதை முற்றளிக்கும், முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு என்கிறோம் நாம். அடிமைத் தனம் என்கின்றனர் இந்த எழுத்தாளர்கள். பொதுவாகப் பெண்களில் பத்து விழுக்காட்டினர் தோற்றத்தில் பெண்களாகவும், உடல் மன இயல்புகளில் ஆண்மைக்குரிய தன்மை அதிகம் உள்ளவர்களாகவும் இருப் பதைப் பார்க்கிறோம். அத்தகையோர் தனிப்பட்ட முறையில் தம் உள்ளத்தில் எழும் தன் முனைப்பு எழுச்சியைப் பெண்ணினம் முழுமைக்கும் உரிமையாகக் கருதி, பெண்கள் அனைவரையும் தற்சார்பும் தன்முனைப்பும் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்னும் கண்ணோட்டத்துடன் இப்படி எழுதியும் பேசியும் திரிகிறார்களோ என்று எண்ணவும் இடமுண்டு. சங்க காலத்திலும் சரி, திருவள்ளுவர் காலத்திலும் சரி, பெண்ணை வெறும் சடப் பொருள்களைப்போல் விற்பனை செய்யும் (அரிச்சந்திரன் - சந்திரமதி), வழக்கமோ, பணயப் பொருளாய் வைத்துச் சூதாடும் (பாண்டவர் - பாஞ்சாலி) வழக்கமோ கிடையாது. அது பழந்தமிழரின் பண்பாடும் அன்று. ஒரு கற்புடைய பெண்ணிற்கு அநீதி இழைக்கப்பட்டதால் ஒரு நாட்டின் தலைநகரமே தீக்கிரையான காட்சியைத்தான் (சிலப்பதிகாரம்) இலக்கியத்தில் பார்க்கிறோம். எனவே, வள்ளுவ மாமுனிவன் போன்ற மெய்யுணர் வாளரின் சிந்தனையைத் தன்னளவில் நெறியும் நிறைவும் இல்லாத நுனிப்புல் எழுத்தாளர்கள், தம் புல்லறிவைக் கொண்டு ஆய்ந்து, பெண்ணடிமைத் தனத்திற்கு உடன்பட்டிருக்கிறார் என்று பிதற்றுவதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். - நூல்; கேட்டதும் கிடைத்ததும் பக் : 76 - 80 29. உய்வு தரும் ஒளிநூல் பெறத்தக்க பேறுகளில் எல்லாம் உயர்ந்த பேறாவது மக்கட் பேறே என்றவர் திருவள்ளுவர். ஆனால், அவர் குறித்த மக்கட்பேறு பழிக்கும் பாவத்திற்கும் எடுத்துக்காட்டாம் பிறப்பு அன்று! கற்று கேட்டு அறிவறிந்து, ஆராயாப் பிறப்பும் அன்று! வீட்டுப் பிறப்பாய் ஒடுங்கி விடுவதும் அன்று! அப்பிறப்பு, அறிவறிந்த மக்கட்பேறு எனவும், பழிபிறங்காப் பண்புடை மக்கட்பேறு எனவும் மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிய மக்கட் பேறு எனவும் கூறப்படும். அதனையே, தம்பொருள் என்ப தம் மக்கள் என்னும் சிறப்பிப்பார்! பொருளும் பொன்னும் புவியும் பிறவும் தம் பொருள் அல்ல; நன்மக்கட்பெறே தம் பொருள் என்ற அருமை எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்கதாம். மக்கள், பெற்றோர்க்குப் பெருமை சேர்ப்பவர் மட்டுமல்லர்; அப்பெற்றோர் நீடு வாழ்வதற்கு அமிழ்தமாகவும் இருப்பவர் என்பது வள்ளுவ மெய்ம்மை. அதுவே, மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல்கேளா தவர் என்னும் குறள்களாம். குடிநலம் சிறக்கக் குழந்தை நலம் வேண்டும் என்னும் கருத்திலேயே, இல்வாழ்வு விழாவாம் மங்கல மணவிழாவில் வாழ்த்துப் பண் இசைப்பது போல், மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்றார் திருவள்ளுவர். இனி, மக்கட்பேறு வாய்க்காமையைப் பெற்றோர் குறையாகத் திருவள்ளுவர் கருதினாரோ? எனின் இல்லையாம். மக்கட் பெறாமையை விதிக்குறை என்று மதிக்குறையர் கூறுவதுபோல் கூறினாரும் அல்லர் திருவள்ளுவர். பெண் மக்கள் பல பெற்றாலும் ஆண்மகவு பெறாத பெற்றோர் புத் என்னும் நிரயம் சேர்வார் என்னும் புனை புரட்டுக்கு எள்ளத்தனையளவும் இடம் தந்தார் அல்லர் திருவள்ளுவர். மக்கட்பேறு இல்லார்க்குத் தெய்வமே மகவாகத் தேடி வந்து உதவும் என்பது மண்சுமந்த மதுரைத் திருவிளையாடல் கதையாகும். இக்கதையின் மூலக் குறிப்பு வள்ளுவத்தில் தவழ்கிறது. அது என் குடியை உயர்த்துவேன் என்னும் துணிவோடு பாடுபடுவனுக்குத் தெய்வமே கூலியாளாக கொற்றாளாக வரிந்துக்கட்டிக் கொண்டு வந்து உதவ முந்து நிற்கும் என்று எழில் தவழத் திருவள்ளுவர் உரைப்பது, குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்பது. மடிதற்று என்பது உடையை வரித்து கட்டிக்கொண்டு, என்னும் பொருள் தருவதோடு மடிது அற்று (ச் சுறுசுறுப்பாக) என்னும் பொருள் கொள்ளவும் நிற்கும் இரட்டுறலாகும். இக்குறளால் மக்கட்பேறு இல்லாமையைப் பழியாகத் திருவள்ளுவர் கொண்டார் அல்லர் என்பது குறிப்பாக விளங்கும். இனி, வெளிப்பட விளங்கும் இடமும் உண்டு. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் என்னும் குறளில் மக்களால் காணப்படும் என்று கூறாமை அவ்வெளிப்படைச் சான்றாம். வள்ளுவர் எச்சம் திருக்குறள் அல்லவா! வள்ளலார் எச்சம் சன்மார்க்க (பொது) நெறி அல்லவா! இராமகிருட்டிணர் எச்சம் விவேகானந்தர் அல்லரா? விவேகானந்தர் எச்சம் விழிமின்! vGÄ‹! அல்லவா! அப்பரடிகள் எச்சம் உழவாரப்பணி அல்லவா! பெரியாழ்வார் எச்சம் ஆண்டாளார் அல்லவா! தந்தை பெரியார் எச்சம் தன்மானம் அல்லவா! இப்படி அமைந்த எச்சங்கள் தாமே உலகப் புகழ்ப் பேறாகவும், உலகை உய்விப்பனவாகவும் உள்ளவை. எச்சத்திற்கு மாறாக மக்கள் என்று சொல்லப்பட்டிருந் தால் இப்பொருட் பெருக்கம் உண்டா? இன்னும் வெளிப்படச் சொல்கிறாரே திருவள்ளுவர். ஒவ்வொருவரும் கட்டாயம் பெறவேண்டும் எச்சம் இசை எச்சம் என்பதாம். மற்றை எச்சம் அழியினும் அழியா எச்சம் இசையெச்சமே; அவ்விசை எச்சம் பெறார் வாழ்வில் வாய்ப்பது வசை எச்சமே என்னும் வகையால், வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் என்கிறாரே! ஏனெனில் இசை (புகழ்) தானே, அழியா வாழ்வினது ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் என்று முத்திரை வைக்கிறாரே வள்ளுவர்! இவற்றால் மக்கட்பேறு இன்மையை விதியாக்கி விளை யாட்டுக் காட்டி வேதனைப்படுத்துவதும் நிரயம் உண்டென நெக்கு விடச் செய்வதும் வள்ளுவ வழியான்றாம்! ஆகலின், வாழ்வியல் வள்ளுவம் உயர்வற உயர்ந்த உயர்வுநெறி காட்டுதற்கே அமைந்த ஒளிநூலாகும்! அதனை ஓதி அதன்படி வாழ்வார் உய்வார்! ஒளியுறுவார்! 30. திருக்குறளின் முதல் உரையாசிரியர் திருக்குறளுக்கு முதல் உரையாசிரியர் எவர்? எனின் முன்னெல்லாம் மணக்குடவர் என்னும் பெயரே கூறுவது வழக்கம். ஆனால், இக்கட்டுரை திருக்குறளுக்கு முதல் உரை கண்டாரும் முதன்மை உரை கண்டாரும் திருவள்ளுவரே என்பதை நிறுவுவதாகும். நூலாசிரியரே உரை கூறியுள்ளாரா? அப்படிக் கூறியிருந் தால் அவர் உரையே முதல் உரையும் முதன்மையுரையும் ஆகும் என்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை எவரும் ஒப்பியே யாக வேண்டும். அவர் நூலுக்கு அவரே உரை எழுதின், கால முதன்மை அவர்க்குத் தானே! அவர் நூலுக்கு அவரே உரை எழுதின், அவர் கருதிய கருத்தின் முத்திரை உரை அதுவாகத்தானே இருக்கும்! திருக்குறளில் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) என்பதொரு குறள் வந்து, உரையாசிரியர்களிடம் படாப்பாடு படுகின்றதே! உலகியற்றியானாகிய கடவுள் கெடுக என்று தானே முன்னையோர் உரைவிரித்தனர். பின்னையோர் ஆட்சி புரிவோன் கெடுக என்று உரை கண்டனரே! இவ்வழக்காடு மன்றத்தில் வரிசை தப்பாமல் முறை கூறி முடித்து வைக்கிறாரே வள்ளுவர்! எப்படி? 1. கடவுள் வாழ்த்தில் உலகியற்றியான் என்னும் பெயர் இடம் பெறவில்லை. 2. கடவுள் வாழ்த்தில் இப்பாடலும் இடம் பெறவில்லை. இடம் பெற்றது இரவச்சத்திலேயாம். 3. இயற்றுதல் என்பது விதிஇயற்றுதல், சட்டம் இயற்று தல், என வருமேயன்றி, உலகு இயற்றுதல் எனவராது, உலகு ஆக்கல், உலகு படைத்தல் என்றே வரும். 4. திருவள்ளுவர், இயற்றும் கடமையை அரசின் கடமை யாகக் கூறியுள்ளாரே அன்றி இறையின் கடமையாகக் கூறினார் அல்லர், அது இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு (386) என்பது. இப்பாடல், இறைமாட்சியில் உள்ளது. இறை மாட்சியாவது அரசியற் சிறப்பு. இனி இப்பாடல், வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது 371 என்ற குறளில் வரும் வகுத்தானும் ஆட்சியாளனே என்பதையும் தெளிவிக்கும். ஏனெனில், வகுத்தலும் வல்லது அரசு என்றார் அல்லரோ? தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் வாழ்க்கைத் துணை நலக் குறள், உரையாலும் காலக் கருத்தாலும் பால் நிலையாலும் கெட்டி மேளத்திலும் கொட்டுப்பட்டு வருதல் கண்கூடு. கணவனை வழிபடும் பெண், பெய் என்ற அளவில் மழை பெய்யுமா? அவ்வாறு பெய்யவில்லை என்றால், அவள் கற்பு இல்லாதவளா? என்றவாறும், பிறவாறும் குத்திக் குத்திக் கிழித்தாரும், கிழிப்பாரும் பலப்பலர். கணவனை வழிபடும் பெண், பெய் என்ற அளவில் பெய்யும் மழை போன்றவள் என்று புத்தரை கண்டு பொருத்தம் காட்டினார் பலர். இதனை ஒவ்வாத பலர், வள்ளுவத்தைக் காக்கச் சப்பைக் கட்டுக் கட்டுவது இது என்று பழித்தனர்! புரட்சிப் பார்வை என்றும் ஒதுக்கினர். அவர் வள்ளுவரைக் கேட்டிருந்தால், அவர் வாழ்வார்க்கு வானம் பயந்தாற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி 992 என்று பேரன்புடைய தலைவிக்குப் பேரன்புடைய தலைவன் வாய்த்துக் குடும்பம் நடத்துவது பெய்யென்றும் பெய்யும் மழை போன்றதாம் என்று கூறுவது - உவமை என்பதைத் தெளிவாக்கிப் பின்னவர் உரையே பொருந்தும் என நிலைநாட்டியும் இருக்கும். இனி வாழ்வார் எவர்? என்பார்க்குப் பொருள் இது என வள்ளுவர் கூறுவதை அறிய வேண்டுமா? உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என உழவரையே வாழ்வார் என்று காட்டுதல் தெளிவாகி விடுகின்றது அல்லவா! மண்ணில் போட்ட வித்து, விளைய வேண்டுமே என்று விண்ணை நோக்கி நோக்கி நிற்பவர் அவர்தாமே! அதிலும் ஏரியும் ஆறும் கேணியும் கிணறும் இல்லாமல் வானம் பார்த்த நிலத்திற்கு உரியவர் என்றால் சொல்ல வேண்டுவது இல்லையே! தொழுது எழுவாள் என்பது கோணல் இல்லையா? எழுந்து தொழுவாள் என்றல்லவோ இருக்க வேண்டும் என்று நேர்நடை காட்டப் புகுவார் உளர். அவரை நோக்கித் திருவள்ளுவர், துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து 1218 என்னும் என் விளக்கக் குறளைக் கற்றதில்லையோ என்கிறார். விழிக்கும்போதே விரைந்து நெஞ்சத்தில் இருப்பாரை - நெஞ்சில் உறைஞரை - நினைவால் வழிபடற்கு எழும்புதலும் வேண்டுமோ? கொழுநற் றொழுதல் என்பது கணவனை நினைத்தலுமா; வணங்கலுமாம்! அவன், அவளை வணங்கலால் அவளுக்கு அவன் அடிமையா? அவள், அவனை வணங்கலால் அவனுக்கு அவள் அடிமையா? அன்பும் இன்பும் இரண்டறக் கலக்கும் கூடலும், கூடலை மிகுக்கும் ஊடலும் உயர்வு தாழ்வு அறியா ஈருடல் ஓருயிர் நிலையவாம் என்பதை உணர்வார் இவ்வாறு வினவார். பணிமொழி தானே அவள் ஊடல் உறுதியை அழிக்கின்றது (1258) யாம் இரப்ப நீடுக மன்னோ இரா என்றல்லவோ அவன் மன்றாடிக் கிடக்கிறான் (1329)! இங்கெல்லாம் அவன் பணிதல் புலப்படவில்லையா? உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும் 850 என்னும் குறளுக்கு எவ்வளவோ உரைச்சிக்கல் உண்டே! cyf¤ jh® c©L v‹D« ïiwia, Éidia, ãw¥ig ïšiy v‹gh® vtbutnuh mtiubašyh«‘myif’ahf it¡ f¥gL« v‹»whnu!இது கண்மூடிப்பார்வை இல்லையா? என்பார் புதுமூடிப் பார்வையர்! திருவள்ளுவர் உண்டு என்று உலகத்தார் கூறுவதாக எதனைக் கூறுகிறார்? என்பதைப் பார்ப்பது அல்லவோ முறை? அவர். பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் 996 என்று கூறும் குறள்வழியே பொருள் காண்பதல்லவோ மெய்ப் பொருள். அதுதானே வள்ளுவர் வழங்கும் பொருள் சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை என்று சான்றாண்மையிலும் அதனைத்தானே கூறுகிறார்? வள்ளுவர் வழங்கும் இப்பொருளை விட்டு வாய் வந்தவாறு கூறுவதா உரை? உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் 883 என்னும் குறளில் வரும் மட்பகைக்கு என்ன பொருள் கண்டனர்? மண்பானை வனைவார் அப்பானையைச் சக்கரத்தில் இருந்து அறுத்து எடுக்கப் பயன்படுத்தும் கருவி (ஆரம்பம்) என்றனர். அரம்பம் மட்பகையாகுமா? மட்பகை என்பது மண்ணே பகையாய் உயிர்க்கேடு செய்வது அல்லவோ? பானைக்கும் கருவிக்கும் பகை என்ன வந்தது? அவை உயிருடையவையா? காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு (772) என்பதில் களர்நிலம் உள்வாங்குதலால் வீறுமிக்க களிறும் நரியால் கொல்லப்படுதலைச் சுட்டுகிறாரே! மண்ணே பகையாக உள்வாங்குதல் அல்லவோ உட்பகையைத் தெளிவாக விளக்குவ தாகும். புதை மணல், புதைசேறு என வழங்கப்படும் உள்வாங்கு நிலமே மட்பகையாகும். இவ்வாறு திருக்குறளுக்குத் திருவள்ளுவரே கூறும் உரைதானே தக்கவுரை. அவ்வுரையே முதல் உரையும் முதன்மை உரையும் ஆகும் என்பதில் தடையேதும் இல்லையே! சான்றாக எடுத்துக்காட்டியவை இவை! இன்னும் காட்டத்தக்கவை பலவுள! அவற்றைக் கருதிக் கருதிக் காண்க. இதன் விரிவு தனிச்சுவடியாகவும் வெளிப்படவுள்ளது. 31. திருக்குறட்படி படி 19.9.92, 20.9.92 ஆகிய இரு நாள்களிலும் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) திருக்குறள் மாநாடு நடைபெற்றது. சீரிய வகையில் வள்ளுவர் அடிமை அவர்கள் அவ்விழாவை எடுத்திருந்தார். அவ்விழா மேடைத் தொங்கலில் திருக்குறள் படி என்றிருந்தது. (மேடை ஏறிய யான்) திருக்குறள் நிறைநூல்; தெய்வப் புலமையர் அருளியநூல்; எல்லாப் பொருளும் உள்ளநூல் என்று முழுதுறு நம்பிக்கையுடன் கற்ற நாளில் திருக்குறள் படி என்னும் ஏவல் போதுமானது! ஆனால் அத்திருக்குறளில் கறையுண்டு, குறையுண்டு, நீக்க வேண்டியவை உண்டு என்று, முழுதுறக் கல்லாமலும் முறையுற நில்லாமலும் குறைகூறுவதே நிறை எனக்கொண்டு நுனிப்புல் மேய்வார் தம்பட்டப் பறை முழக்கும் இக்காலநிலையில், திருக்குறட்படி என்றே நாம் முழக்கவேண்டியவர்களாக உள்ளோம் என்றேன். தாசுமாலின் எழிலைக் கண்டு கண்டு களித்தான் ஒருவன்; இதன் ஒரு கல்லைப் பெயர்த்து, பெயர்த்த தடம் தெரியா வகையில் மற்றொரு கல்லைப் பொருத்த இயலாது என்று தேர்ந்தான். பின்னர், அப்படி ஒரு கால் பெயர்த்த கல் தெரியாத வாறு திறமையாளன் ஒருவன் பொருத்தினாலும் பொருத்தி விடலாம்; ஆனால் திருக்குறளில் இருந்து ஒரு சொல்லைப் பெயர்த்துவிட்டுப் பெயர்த்த இடம் தெரியாவகையில் பிறி தொரு சொல்லைப் பொருத்திவிட முடியாது என்றான். ஆனால் அதே திருக்குறளில் அதிகாரம் அதிகாரமாக, பாடல் பாடலாக ஒதுக்க (ஒழிக்க) வேண்டும் என்னும் ஆராய்ச்சியாளரும் (1) இந்நாளில் கிளர்ந்துள்ளனரே! திருக்குறளைப் பள்ளிதோறும் மாணவர் பயிலுதற்கு முதன் முதலாகத் திட்டஞ் செய்த ஒரு பெருந்தகை அவினாசி லிங்கனார்! ஆனால் அவர்க்கு இன்பத்துப்பால், திருக்குறளில் இடம் பெற்றமை நிறைவு தரவில்லை! திருக்குறள் நாட்குறிப்புப் பெற்று அதனை நாள் வழிக்குறிப்புக்கும் பயன்படுத்தினார். அந்நாட்குறிப்பை 1932 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை மணிவிழா அதற்கெனக் கொண்டாடும் வகையில் வெளியிட்டு வருவது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாகும். அந்நாட் குறப்பில் இன்பத்துப்பால் இடம் பெற்ற ஆண்டில் அவினாசியார் வாங்குவதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை என்பதை மேனாள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் கூறினர். திருக்குறள் படி என்றவரே திருக்குறட்படி படிக்கக் கருதிக் கொள்ளவில்லை அல்லவா! தந்தை பெரியார் செய்த பேராய (காங்கிரசு)த் தொண்டுக்கு ஈடு இணை இல்லை என்பதை நாடறியும், கைந்நூலாடை (கதராடை)யைத் தோளில் சுமந்து விற்ற அத்தோன்றல் திருக்குறளை நெஞ்சத்துச் சுமந்தும் தலைமேல் தாங்கியும் ஆற்றிய தொண்டுக்கு நிகர் உண்டோ? அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே எத்தனை திருக்குறள் மாநாட நடத்தினார். எத்தனை நகர்ப்புற நாட்டுப்புறங்களில் திருக்குறள் எண்கவனக - பதின்கவனக நிகழ்ச்சிகள் நடைபெறச் செய்தார்? நாடெல்லாம் நாளெல்லாம் திருக்குறள் படி என்ற அப்பெருந்தகை கூறிய ஒரு கருத்தை, பெண்களே தெய்வம் தொழாள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று சொல்லப்பட்டிருக்கும் நீதியைப் பார்த்தீர்களா? நீங்கள் இப்போது பெய் என்று சொன்னவுடன் மழை பெய்ய வில்லை. இதனால் நீங்கள் எல்லோரும் கற்புடையவர்கள் அல்ல என்றா பொருள்? என்று பெண்களை விழிப்புணர்வுக்குத் தூண்டினார். என்று தம் ஓரப்பார்வைக்கு அப்பெரியாரையும் சார்பாக்கிக் கொண்டு உரைத்தார் இராசம் கிருட்ணன் என்பார் (தினமணி - ஒரு கோரிக்கை 30.8.92). திருக்குறட்படி படித்தால் இக்குறளில் பெண்ணடிமைக்கு இடமே இல்லை என்பது வெளிப்படும். வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி என்னும் குறள் போல் உவமை நடையது இக்குறள் (1192). தெய்வம் என்பார் பற்றற்ற துறவர்; இல்வாழ்வார் யாதனின் யாதனின் நீங்கியான் வழியராதல் - ஆகாமல் (331) கொழுநன் வழியராக இயலலே அறனெனப்பட்ட இல்வாழ்வாம். இவை குறட்பா தெளிவாக்கும் பொருள். குறட்படி உரை காணாக் குற்றத்திற்குக் குறளா பொறுப்பு? அதனால் பேரரறிஞர் அண்ணா குறட்படி உரை காணத் தமிழறிஞர்கள் அன்றே வேண்டினார் என்பது கருதத் தக்கது. பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய்நூலாமோ - பாரில் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி என்பதோரு வெண்பா பரிமேலழகன் உரைச் சிறப்புரைக்கும். அவர் திருக்குறட் படி உரைகண்டிருப்பின், முப்பாலுக்கு உரைப்பாயிரம் கூறுகையில், இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப் பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன என்றோ, அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் என்றோ, (ஒழுக்கம்தான்) வருணந்தோறும் வேறுபாடுடை மையின் என்றோ எழுதியிரார். ஐந்துவித்தான் ஆற்றலைக் கூறுமிடத்து (25), தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல். உணர்த் தினான் ஆகலின் இந்திரனே சாலும் கரி என்றார் என்று எழுதியிரார். அறுபதாம் பாடலில், மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன், நன்கலம் நன்மக்கட் பேறு என்றும், அறுபத்தொன்றாம் பாடலில், பெறுமவற்றுள் யாமறி வதில்லை அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற என்றும் வள்ளுவ அமைதி இருக்கக் கண்டும், மக்கட்பேறு என்னும் அதிகாரத் தலைப்பைப் புதல்வரைப் பெறுதல் என மாற்றியமைத்திரார். மக்கள் என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது என்றும் (61) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதன் விளக்கவுரையில் (69) பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்டதாய் எனவும் கூறினார் என்றெழுத, நடுக்கமின்றி எழுத்தாணியைப் பிடித்திரார். இன்னும் இத்தகையன பலவாம். திருக்குறட்படி உரை எழுதினால், பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்றவைத்தார் பூமியின்கண் கசல பாக்கியமும் அநுபவிப்பார். (3) என்றும், கோளாகிய நவக்கிரகங்களும் (9) என்றும், ஒருவராலும் செயற்கரிய துறவறத்தைச் செய்வார் பெரியர்; சிறியவர் செய்யும் தொழிலாகிய இல்லறமும் செய்ய அறியார் (26) என்றும், திரி சாதி என்றும், பெரும்பாவக் கன்னியராயினும் பெண்பிறப்பு தெய்வப்பிறப்பு. அது எது எனில் பெண்ணிடத்தில் பதிவிரதா பாவகம் உண்டாகில் (54) என்றும், செல்வத்துள் இல்லின் தன்மையானது விருந்து ஓம்பல்; அங்ஙனம் ஓம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு. திரியும் புருஷனும் ஒருமனமாகச் செய்வது விருந்து; அல்லது (89) என்றும், இப்படியெல்லாம் பரிதியார் உரை எழுதுவாரா? வாழ்க்கைக் துணைநலம் எனப் பெயர் இருந்தும், இல் வாழ்க்கை முதல் இரண்டு பாடல்களிலும் இல்வாழ்வான் என்பான் துணை என்றிருந்தும், 1234 ஆம் பாடலில் தலைவி தன் தலைவனைத் துணை எனக் குறித்திருந்தும், பெரியாரைத் தணைக்கோடல் இடிக்குந் துணையார் (447) எனைத்துணையர் ஆயினும் (144) என்பன போல வழக்கிருந்தும், வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ, வாழ்க்கைத் துணைவன் நலம் என்றோ பாற் பகுப்புக் காட்டால் பொதுமைகாட்டி ஒருவர்க்கு ஒருவர் துணை என்று காட்டியிருந்தும் வாழ்க்கைத் துணை என்பதால் பெண்ணைத் தாழ்த்திவிட்டார் என்பார். திருக் குறட்படி படியாமல் அறிவையும், ஆய்வையும், நேர்மையையும் தாழ்த்திக் கொண்டாரே அன்றிப் பெண்மையை வள்ளுவர் தாழ்த்திய சான்று இல்லையாம்! இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) என்னும் குறளில் வரும் உலகியற்றியானை இவ்வுலகத்தைப் படைத்தவன் இவ்வுலகினைப் படைத்தோன் இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் பிரமன் எனப் பழைய உரையாசிரியர்கள் பலரும் உரைத்தமை திருக்குறட்படி உரைத்ததாகுமா? இறைவனுக்குரிய பெயர்களுள் ஒன்றா உலகியற்றி யான்? படைத்தல் உளதாக்கல் என்பவற்றை இயற்றுதலாகச் சொல்லும் மரபு உண்டா? படைத்தல் - காத்தல் - அழித்தல் என்று கூறுவதன்றி இயற்றுதல் எனச் சான்று உண்டோ? முன் கட்டுரையில் விளக்கம் கண்டோம் அல்லவோ? ஆதலால், திருக்குறள் படி என்பதைத் திருக்குறட்படி படி என்று பரப்புதலே குறள்நெறி செழிக்க விரும்புவார் செய்கடமையாம். 32. இறை முறை ஒருவர் மீனுக்காகத் தூண்டில் போட்டார். தூண்டில் இழுக்க முடியாதவாறு எங்கேயோ சிக்கிக் கொண்டது. பெரியமீன் ஒன்று மாட்டிக்கொண்டதாக நினைத்து மகிழ்வுடன் தூண்டிலை வலிமையாக இழுத்தார். தூண்டில் எளிமையாக வரவில்லை. தூண்டில் போடவரும் இழுவையை விட்டு விடவில்லை. தொடர்ந்து வன்மையாக இழுத்தார். தூண்டில் வெளியே வந்தது. ஆனால், அதில் சிக்கியது மீன் இல்லை, ஒரு செப்புக்கலம் சிக்கியது. செப்புக்கலத்தின் அழகும் அமைப்பும் தூண்டில் போட்டவர்க்கு வியப்பளித்தன. மீன் மாட்டவில்லை என்ற கவலை ஒழிந்தது. பெரும் புதையல் சிக்கிக் கொண்டதாகப் பூரித்தார். மேலே இழுத்ததும் அச்செப்பு கெட்டியாக மூடியிருக்கக் கண்டார். முயன்று மூடியைத் திறந்தார். என்ன வியப்பு? பேரொளி யுடனும், பேரொலியுடனும், தூண்டில் போட்டவர் அஞ்சி நடுங்குமாறு செப்புக் குள்ளிருந்து பேருருவம் ஒன்று தோன்றிற்று. தோன்றிய உருவத்தின் ஒளியும், ஒலியும், உயரமும், தோற்றமும் தூண்டில் போட்டவரை நடுங்கி ஒடுங்க வைத்தன. என்னைக் கிளப்பி விட்டுவிட்டாய்; ஒடுங்கிக் கிடந்த என்னை உயரே தூக்கி வெளியேற வைத்துவிட்டாய்! உன்னைப் பழி வாங்குவேன்; பின்னர் யார் யாரைப் பழிவாங்க நினைக்கிறேனோ அவர்களை யெல்லால் பழி வாங்குவேன் என்றது வெளிப்பட்ட பேரு! திகைத்தான் தூண்டிலான். தம் செயல் தமக்கு அழிவாக அமைந்ததை நினைந்தான். அதற்குள் உன்னைக் கொல்லப் போகிறேன் என்றது பேருரு (பூதம்). சாகப்போவது உறுதி; சாகுமுன் எனக்குள்ள ஐயத்தைத் தீர்த்தால் நன்றாகும்; ஐயத்துடன் சாவது என்றும் தீரா ஐயந்தானே என்றான் அவன். கேள் என்றது பேருரு! இவ்வளவு பேருரு உடைய நீ எப்படி இச்சிறிய செப்பினுள் ஒடுங்கிக் கிடந்தாய்! உன்னால் எப்படி இவ்வளவு சிறிய வடிவம் கொள்ள முடிகிறது? என்றான். இதோ பார் எனத் தன் உருவத்தை ஒடுங்கிச் செப்பினுள் புகுந்தது. பேய்ப் பேருரு! மிக விழிப்பாக இருந்து மூடியால் செப்பை இறுக்கி மூடி, மீண்டும் நீருக்குள் தள்ளிவிட்டான் தூண்டில் போட்டுத் தூக்கியவன். இஃது அறிவியல் அழிவியல் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் புனை கதைகளும் ஒன்று. இற்றை வன்முறைக் கேட்டை எண்ணும்போது, அதனை ஒடுக்க நினைப்பார்க்குத் தோன்ற வேண்டும் கதை ஈதாம்! வன்முறை நாட்டில் பெருகிவிட்டது! உண்மை! வன்முறைக் கேடு - நாடு தழுவிய - ஏன் உலகம் தழுவிய - எரிமலைக் குழம்பாக வெடித்து வெளிப்படுகிறது! உண்மை! மிக உண்மை! வன்முறையை வன்முறையால் அழிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது! முடியும் என்றால் தீயைத் தீயால் அணைக்கலாம்! நீரை நீரால் அணையிட்டு நிறுத்தலாம்! மக்களுக்கும் மாக்களுக்கும் ஒரு வேறுபாடு ஒரே ஒரு அறிவு, குறைந்ததுதான். நல்லவை, தீயவைகளைக் கண்டு தீயவற்றை நீக்கித், தூயவற்றைக் கைக்கொள்ளும் இயல்பொன்றே விலங் கினின்று மாந்தனை மேலாக்குகிறது. அவ்வறிவில்லார் உடலமைப் பால் மாந்தராவரேயொழிய உள்ளத்தால் விலங்கேயாவர். விலங்கியல்பு, நினைந்தறிய மாட்டாமையால் உடல் வலிமையைத் திரட்டி திடுமெனத் தீங்கு செய்ய முந்தும். தீங்கிற்கு மாறுதல் தீங்கென்பது விலங்கியல்பாகும். வன்முறையால் வன்முறை இன்றன்று. என்றுமே தடுத்து விட முடியாது! வன்முறையைத் தடுக்க வழியென்ன? வன்முறை ஏன் வெடிக்கிறது? வன்முறையாளர் ஏன் அவ்வன்முறையை மேற்கொண்டனர்? அவர் பிறக்கும் போதே வன்முறையாளராகப் பிறந்தாரா? அவர் எதனால் வன்முறையை மேற்கொண்டார்? வன்முறை அவரே கொண்டதா? வன்முறைக்கு அவர் தள்ளப்பட்டாரா? அவரை வன்முறைக்குத் தள்ளியவர் எவர்? வன்முறையைத் தடுக்க ஆணையிடுபவர். வன்முறையைத் தூண்டாதவரா? வன்முறையை ஒடுக்க நடவடிக்கை எடுப்பவர் வன்முறைக்கு வித்திடாதவரா? வன்முறையைத் தண்டிக்க முந்துபவர், வன்முறையைக் கருதாத அறவோரா? அரசியல் - சமயம் - சாதி, கட்சி - காட்சி - கதை - செல்வம் - செல்வாக்கு - அலுவல் - அதிகாரம் என்பனவெல்லாம் வன்முறையை மெய்யாகவே ஒழிக்கின்றனவா? ஒளிந்து ஒளிந்தோ, மறைந்து மறைந்தோ, தூண்டிவிட்டும் ஏவிவிட்டும், எடுத்துவிட்டும் வன்முறையை வளர்த்துக் கொண்டே, வன்முறையைக் கொடுமையானது என்று கூறி நடிக்கின்றனவா? வாய்மை நெஞ்சம் பேசட்டும்! வன்முறை வன்முறை என்று ஓல மிடுவார் உள்ளத்தையே வஞ்சாக வன்முறை கூடுகட்டி உறையக் காண்பர்! நடவடிக்கை எடுப்பவர் - தண்டிப்பவர் - வன்முறையைத் தூண்டாத, வன்முறையைக் கருதியும் பாராத, அறவோராகத் தங்களை ஆக்கிக் கொள்ளாத நடிப்பாளராக - போலிமை யாராக இருக்கும் வரை வன்முறை எப்படி ஒழியும்? வெளியே போ என்றார் ஆசிரியர் ஒருவர். மாணவர் வகுப்பை விட்டு வெளியே போய்விட்டார். வெளித் தாழ்வாரத்தில் நின்றார் மாணவர். அங்கே போனார் ஆசிரியர்; பள்ளிக்கூட எல்லையை விட்டுப்போ என்றார். உங்கள் வகுப்பை விட்டுப் போகச் சொன்னீர்கள்! நான் கட்டுப்பட்டு வந்தேன். அடுத்த வகுப்புக்கு நான் இருக்க வேண்டும்; அதனால் நிற்கிறேன் என்றார் மாணவர். நீ மாணவனாக நடந்து கொள்ள வில்லை என்றார் ஆசிரியர்! நீங்கள் ஆசிரியராக எப்பொழுது நடந்து கொள்ள வில்லையோ அப்பொழுது நான் மாணவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை எண்ணக்கூடாது என்றார் மாணவர். அம்மாணவர் நிலையிலே பொது மக்கள் இருக்கிறார்கள்! அவ்வாசிரியர் நிலையிலே அதிகாரம், அரசியல், சமயம், தொழில், தலைமை ஆகியவை உள்ளன! வன்முறையை நீங்கள் ஒழியுங்கள்! வன்முறையை நீங்கள் வளர்க்காதீர்கள்! வன்முறைக்கு நீங்கள் வித்திடாதீர்கள்! வன்முறை தானே ஒழியும்? மேலும் ஒழியவில்லையா வன்முறை? நீங்கள் துணிந்து நடவடிக்கை எடுக்கலாம் - தூய நெஞ்சுடன், தூய நெறியுடன்! அப்பொழுது உங்கள் நெஞ்சையும் நெறியையும் கட்டாயம் நாடும் நன்னெஞ்சும் மதிக்கும் - போற்றும் - வணங்கும் - வழிபடும் - வழிப்படவும் ஆகும். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்பது வைக்கப் படும் 388 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் 547 நம்மறை 33. ஊழிற் பெருவலி யாவுள? 1993 அக்டோபர் 2 செய்தித்தாள்! நில நடுக்கம் - இறப்பு 40 ஆயிரம் பேர்! ஒருவரை ஒருவர் கொன்றுவிட்டார் அவரைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கலாம்! நிலநடுக்கச் சாவும் அழிவும் எத்தனை ஆயிரம் ஆனாலும் எதனைக் குற்றக் கூண்டில் நிறுத்தமுடியும்? எதனைத் தண்டிக்க முடியும்? அறிவியல் வளர்ந்து அண்டம் கடந்து அண்டம் போய் ஆராயும் நாளிலே செயற்கைக்கோள் இயற்கைக் கோளை நொடி நொடியும் படம் பிடித்துக் காட்டும் நாளிலே - நில நடுக்கம் வரும் என்பதை அறிந்து அறிவித்தும் காக்க முடியாத அளவிலே நிகழ்ந்துள்ள மராட்டிய நாட்டு நில நடுக்கத்தைப் பார்க்கும் போதுதான், ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் என்னும் குறளின் உறுதிப்பாடு விளங்கும். மராட்டிய நாட்டு இலத்தூர், உசுமானாபாத்து மாவட்டங் களில் 1.10.93 விடிகாலைக்குமுன் 3.56 தொடங்கி 6.48க்குள் ஏழுமுறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது! உறங்குவது போலும் சாக்காடு என்பது போல், உறக்கம் விழியாமலே இறப்புக்கு ஆட்பட்டவர் பல்லாயிரவர்! ஊர் ஊராகப் புதையுண்ட நடுக்கத்தில் யார் யார் இறப்பென எப்படி எண்ணுவது? எரிபொருள் கிட்டாமல் காட்டை வெட்டியழிப்பது போல், குவித்துக் குவித்து எரிமூட்டியும் முடியாமல், பக்க மெல்லாம் நாறும் சவங்களின் கணக்கென்ன? இடிபாட்டின் உட்கிடந்து எடுக்கமுடியாமலே நாறிய பிணங்கள் எத்தனை? நில அதிர்விலே மின் தொடர்பும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு, மீட்புப்பணியும் தடைப்பட்ட பாடென்ன? மீட்புப் பணிக்குப் படைவீரர் 15000 பேர் சென்றனர்! காவல் துறையர் கவிந்து நின்றனர்! தொண்டர் குழுக்களும் தொடர்ந்தன! போர்க்கால அடிப்படையில் பணி முடுக்கமாயிற்று! எனினும் என்ன? தொடர்மழை அடைமழை! எங்கும் பிணம்! எதற்கும் இடர்ப்பாடு! நிலநடுக்கப் போதில் கெட்டி வீட்டுக்காரரே மிக மிகப் பட்டழிந்துள்ளனர். கூரை வீட்டினர் ஓரளவு தப்பியுள்ளனர். கில்லாரி என்பது கெட்டிவீடே மிக்க பகுதியாம்; அப்பகுதியில் மட்டும் 21 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் இறந்தனராம்! 33 பேர் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே ஒருவர் தப்பிப் பிழைத்தாராம்! இவ்விழப்பில் இருந்து அவர், எப்படி மீள்வார்? நாறும் பிணத்தின் நல்ல சுவைகாணும் நாய்கள், இறந்தோர் உறுப்புகளை உதறிக் குதறின! சவந்தின்னிக் கழுகுகளோ, எங்கும் வட்டமிட்டுக் குத்திக் குடைந்து திரிந்தன! இந் நாயும் கழுகும் மாந்தர் உருக்கொண்டது போன்ற கயவர்களோ, அகப்பட்டதைச் சுருட்டும் அழிசெயலை விடாது செய்தனர்! மீட்புப் பணிக்கு நூறுகோடி தேவைப்படுமாம்! மீண்டும் புதுப்பித்து மறுவாழ்வளிக்க ஆயிரம் கோடி தேவைப்படுமாம்! மாநிலம் முந்துகிறது! நாடு கை கொடுக்கிறது! உலகம் ஒலி கொடுக்கிறது! உணவும் மருந்தும் உடையும் குவிகின்றன! கூடாரங்களும் குடிசைகளும் கிளர்கின்றன! ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழிக்கு ஒப்ப மீட்புப் பணிகள் நிகழ்கின்றன! எனினும் ஊழை வென்று விட முடிந்ததா? முடியுமா? இறந்தவரை - சிதைந்தவற்றை - அப்படியே உயிர்ப்பிக்கவும் எழுப்பவும் எவரால் இயலும்? இந்த நில நடுக்கம் அரசுக்கு அறிவிப்பதென்ன? அறிவியல் அறிஞர்க்கு அறைவது என்ன? இருக்கும் மண்ணுள் இயற்கை அறிந்து, அழிவின்றிக் காக்காத உங்கள் அரசும், அறிவும், அண்டம் விட்டு அண்டம் பாய்ந்தும் என்ன? ஆய்ந்தும் என்ன? என்கிறது அல்லவா! ஊழி பெயர்தல் உண்டு என்பதை வள்ளுவர் அன்றே கூறினார். ஊழ், ஊழி என்பன உலகியற்கை என்றும் தெரிவித்தார். செயற்கை அறிந்தால் மட்டும் போதாது; உலகத்து இயற்கை அறிந்து செயாற்ற வேண்டுவது அறிவறிந்த அரசின் கடமை என்றும் கூறினார். செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் என்பது அது. ஊழிப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா? என்றும், ஊழிப்பெயர்ச்சியால் ஏற்படும் கேட்டை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா? என்றும் வினவலாம். நிலநடுக்கம் நேரக்கூடும் என்பதை முன்னரே அறிந்து அறிஞர் அறிவித்தனர். அதனைப் போர்க்கால நடவடிக்கை போல் அரசு போற்றியிருந்தால் உயிரிழப்பை ஓரளவாவது குறைத்திருக்க முடியும்! நிகழ்ந்து முடிந்த பின்னர் அறிஞர்களைத் தூண்டி என்ன பயன்? முன்னுறக் காக்கும் கடமையை மேற் கொண்டிருந்தால், பின்னுற இவ்வளவு பெருங்கேடுகள் நிகழ்ந்திராவே! பொருள் பறிக்கும் கலையாக இந்நாளில் தெருத்தோறும் திண்ணைதோறும் காணப்படும் கணியர் (சோதிடர்) எவரும் ஆங்கு இல்லாமல் கூண்டோடு ஒழிந்து போயினரா? அல்லது, அவர்கள் பொய்க்கணியம் புதைகுழிக்குள் முன்னமே புதைந்து கொண்டதா? நாட்டழிவையும் எச்சரித்துணர்த்தாத கணியம் வீட்டழிவை உணர்த்திவிடும் என்பது எவ்வளவு வேடிக்கைச் செய்தி! புயல், மழை, நிலநடுக்கம், எரிமலைக்கல், நிலச்சரிவு, இடி மின்னல் இன்னவையே ஊழ் என்பது வள்ளுவம். அதனைத் தலைவிதி யாக்கி விட்ட உரைகளே, தலையைச் சுற்றி வட்ட மிடும் போது ஊழை வெல்லும் உரன் (ஊக்கமும், அறிவும்) உண்டாகுமா? உண்டாக வேண்டும் என்பதே உலக வள்ளுவம்! அதனை உலகுக்கு உணர்த்துவதே மராட்டிய மண்ணில் ஏற்பட்ட நிலஅதிர்வு! எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் 34. ஈகி(தியாகி)யர் தேவை! தாமரை மல்லிகை முல்லை போலும் நறுமணமலராம் திருக்குறளை நாம் நடைமுறைப்படுத்தி வாழ்வியலாகக் கொள்ளாமையால், அதனை மணமற்ற இயற்கை வனப்பற்ற தாட்பூ ஆக்கிவிட்டோம். மா, வாழை, பலாப் போலும் நறுஞ் சுவைத் தீங்கனி வகைகளைத் தரும் கனித்தோப்பாம் திருக்குறளை, நம் வாழ்வில் கொள்ளாமையால் அழகுச் செடி (குரோட்டன்சு) வகையுள் ஒன்றாக்கி விட்டோம். பார்வைச் செடியால் பழப்பயன் உண்டோ! வாழ்வியல் திருநூலை மனப்பாடம் செய்தற்கும் ஒப்பித்தற்கும் - கட்டுரை - ஆய்வு மேற்கோள்களுக்கும் - கதைப் புனைவுக்கும், மட்டுமே ஆட்படுத்தி, நம் வளராக் குழந்தைத் தன்மையைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றோம்! பாவலர்கள் தம் பாவிகங்களிலும், பாடல்களிலும் திருக்குறளைப் பலப்பலவாய் எடுத்தாண்டதைப் பாராட்டி மகிழ் கிறோம். ஆனால், அத்திருக்குறளைத் தாம் எடுத்துக் கொண்ட பாவிக (காப்பிய) நாயகர்க்குப் பொலிவுறுத்தும் அணி மணியாக ஆக்கப்பட்டதே அன்றி - அவர்க்குப் புகழ் சேர்த்ததே அன்றி அஃதொரு வாழ்வு நூல் என்பதை நாட்டப், பயன்படுத்தப்பட வில்லை என்பதை எண்ணத் தவறிவிட்டோம். அப்பாவிக நாயகர்க்கே மீப்புகழ் சேர்த்துச் சூடிக் கழித்த மாலையாய்த் திருக்குறளை எறிந்துவிட்டோம் என்பதையும் எண்ணத் தவறி விட்டோம். திருக்குறள் பொது மறை எனப்படுவதால் போற்றப் படாமல் ஒழிந்தது. பிறபிற சமயத்தார், தம் கொள்கை வழிப் பட்டது என்று காட்டினரே அன்றித், தம் மறையாக ஏற்றுப் போற்றினார் அல்லர் என்னும் குறைக்கும் ஆட்பட்டது. ஆதலால் போலிப் பெருமைக்கு ஆயது அன்றிப் போற்றும் பெருமைக்கு உரியதாயிற்று இல்லை. திருக்குறள் தமிழ் மறை எனப்படுவதால் அறங்கூறும் பிற தமிழ் நுல்களுள் இதுவும் ஒன்றென - வேண்டுமானால் அவற்றுள் மேம்பட்டதெனக் - கூறப்பட்டதை அன்றித் தமிழர் கொண்டொழுகத் தக்க மறைநூலலெனப் போற்றப்படவில்லை. அதனால் இதுகால், திருக்குறளை நம் மறைஎனல் இன்றியமையாக் கடப்பாடாக உள்ளது. மறை என்பது மறைத்து வைக்கப்பட்டது அன்று; மறை பொருளாய்க் கூறப்பட்டதும் அன்று; மறுத்துக் கூறுவதற்கென எழுந்த எதிர்ப்பு நூலும் அன்று; அது அல்லன கடிந்து நல்லன கொள்ளச் செய்ய எழுந்த பாதுகாப்பு நூல். திருக்குறள் நம் மறை என்னும் வித்தினை வேலா ஊன்றினார். ஊன்றிய வித்து முளைக்க வேண்டும். அம்முளையும் பலவாய், பல விடத்தும் முளைக்க வேண்டும். வித்தூன்றி வேலாவால் மட்டுமே பலவிடங்களிலும் பல காலத்தும் வித்தூன்ற இயலாது. அதனை ஊன்றவும் முளைக்கச் செய்யவும் ஆங்காங்குப் பலப் பல தொண்டரும், சான்றோரும் ஆன்றோரும், ஈகரும், செல்வரும் முந்துறவேண்டும்; முனைந்து கடனாற்ற வேண்டும். கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ என அழைப்பவர் வேலா. இப்படி ஒருவர் ஓரிடத்திருந்து அழைத்தால் போதாது. பலர் பல விடத்தும் பல காலத்தும் அழைக்க வேண்டும்! பயன்பாடு கொள்ளத் தூண்ட வேண்டும். வளர்ந்து செழித்துள்ள இராமகிருட்டிண விவேகானந்தர் அமைப்புகளை எண்ணுங்கள். உலகளாவிய அளவில் எத்துணை அமைப்புகள்! எத்துணைத் தொண்டர்! தொண்டுகள்! ஒரோ ஓர் இராம கிருட்டிணர்! அவர்க்கு ஒரோ ஒரு விவேகானந்தர்! விவேகானந்தர் தூயர்; தொண்டர்; அறிவர்; நாவலர்; கட்டுரைத் திறத்தர்! அவர் பணி, ஒரு நூற்றுவர்க்கு மேற் பட்ட பரப்புநரை உருவாக்கிற்று! பல்லாயிரம் தொண்டர்களை உருவாக்கிற்று! பல்லாயிரம் அமைப்புகளை உருவாக்கிற்று! விவேகானந்தர் தொண்டின் விரிவாக்கம் எப்படி ஏற்பட்டது? கிறித்தவத் தொண்டர் முன்னின்றனர். அவர்தம் பரப்புதல் கண்முன் காட்சியாயிற்று. மருத்துவம், கல்வி, முதுமை பேணல், வறியர்க்காப்பு, தொழிலகம், தொண்டு நிறுவனம், தொண்டர் பயிற்சி, துறவோர் பயிற்சி இன்ன இன்ன துறைகளை வளர்த்தது அமைப்பு. ஊராரை ஊட்டி வளர்க்க, ஊர், அமைப்பை ஊட்டி வளர்க்கலாயிற்று, கொண்டும், கொடுத்தும் கண்ட ஆக்கப் பேறுகள் இவை. நேற்றுப் பிறந்தது இராமகிருட்டிண விவேகானந்த அமைப்புகள்! ஆனால் ஈராயிர ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியது கிறித்தவம். கிறித்துவின் கருத்தைப் பரப்புநர் ஆக வாய்த்தவர் பன்னிருவர். உறுதிப்பிடியானவர் பதினொருவர். ஒருவன் முரண்பட்டாலும் இறுதியில் தன் முரண்பாட்டை உணர்ந்து தன் மனக்கே முடிவு தேடிக் கொண்டான். அதுவே கிறித்துவின் முதல் வெற்றி! கிருத்துவத்தின் முதல் வெற்றி. மனச்சான்றால் தானே ஒருவன் மாண்டான் என்பதனினும் அறத்தின் வெற்றி வேறொன்று இருக்க முடியாது! அவன் காட்டிக் கொடுத்தலால் வாய்த்த சிலுவை தான் கிறித்துவைத் தெய்வப் பிறப்புக்கு உயர்த்திற்று! புகழ் தந்து, பழிகொண்டவன் யூதாசு! அவன்தான் கிறித்துவாகிய ஒருவர் உரையைப் பரப்பிய முதற் பரப்பாளி. இன்று எத்தனை கோடி மக்கள் கிறித்தவர்! கிறித்தவம் இல்லாத மண்பரப்பு ஒன்று உண்டா? நம்பமுடியும் வளர்ச்சியா இது! எத்தனை மொழிகள் உண்டோ அத்தனை மொழிகளிலும் கிறித்துமொழி உண்டு! சிற்றூர், பேரூர், சிறுநகர் பெருநகர், சிறுநாடு பெருநாடு என்னும் வேற்றுமை இல்லாமல் கிறித்தவக் கோயில் உண்டு! மருத்துவமனை உண்டு! கல்விநிலையம் உண்டு! முதியோர் இல்லம் இளையர் கழகம் இன்னவெல்லாம் தொடர் தொடராக உண்டு! கிறித்துவின் பெயரோ துண்டறிக்கையோ நம் காதில் விழாத, கண்ணில் படாத நாள் ஒன்று உண்டோ? இவை எல்லாம் என்ன கூறுகின்றன! பொருள் நல்ல பொருள் என்றாலும் போதாது. நல்ல பொருள் என நாளும் பொழுதும் விளம்பரப்படுத்தி ஆதல் வேண்டும். விளம்பரம் அறிந்து தேடிவருவார்க்கு வேண்டும் வகையால் வேண்டும் அளவில் அப்பொருள் வழங்குதல் வேண்டும். உள்ளே வரட்டும்; பின்னே உள்பொருள் ஆனால் போதும்! என்னும் உவப்பான வரவேற்பு ஊரையும் உலகையும் திரட்டிற்று! ஊண்கட்டு இல்லை; உடைக்கட்டு இல்லை; வாழ்வியல் உரிமையிலும் தலையீடு இல்லை; தவறென உணர்ந்தால் இறையிடம் - குருவிடம் - மண்டியிட்டு உரைத்தால் கழுவாய் உண்டு! அத்தவறு எத்தனை முறை எனினும் கழுவாய் உண்டு. இவ்வளவு சலுகைகள் இருப்பதால் - நம்பிக்கைகள் ஊட்டு வதால் - சமயம் முன்னேற்ற வாழ்வுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடுவதால் - அதன் பக்கம் சார்கின்றனர். சார்வது எதனால் - சாரத்தக்க, சொல்வாய்ப்பு - உதவி வாய்ப்பு! அந்நிலை பல்லாயிரம் பேர்கள் பல்லாயிரம் ஆண்டு தொடர்ந்து வருவதென் வெளிப்பாடே இற்றைக் கிறித்தவ சமய வெளிப்பாடுகள் - நிறுவனங்கள் - நிலையங்கள்! போற்றுவாரை எண்ணும் வேளையில் தூற்றினாரே துயர் ஊட்டினாரை அவற்றையும் சமயத்திற்கென ஏற்றுப் போற்றினாரை அவர் செய்த ஈக உரத்தை எண்ணாமல் முடியுமா? கிறித்தவத்தின் பின்னணிப் புரவாண்மைப் புலம் அரசு ஆட்சி! ஒரு கிறித்தவ நிலையம் பள்ளி கட்டுகிறது; அதற்கு இடம் ஒரு மலைப் பகுதி; ஆம்! ஒரு மலைப்பரப்பு பள்ளிக்கு அரசால் உதவப்படுகிறது! அப்படி ஒரு மலையா? ஒரு காடா? ஒரு கடற்கரையா? ஒரு வயற்பகுதியா? ஊட்டிவளர்த்தது அரசு! உரமாக வளர்ந்தது சமயம்! நேற்றுத் தோன்றிய பாகித்தான் இசுலாமியக் குடியரசு! அரசே சமயக் காவலாண்மைப் பொறுப்புக் கடன் கொண்டது. வேலைவாய்ப்பா - தொழில் தொடங்கும் உரிமையா எல்லாம் சமயம் ஆகிவிடின் அச்சமயத்தைச் சாராமல் எவர் இருப்பார்? சாராதார் பாடு என்ன? திருக்குறள், தோன்றி நாள் தொட்டு, தமிழ் மூவேந்தர் காலம் தொட்டு அரசு போற்றி - அரசின் ஆட்சி நூலாக இருந்தது இல்லை. பல்வேறு குலப்பிரிவுக்கும் - கயமைகளுக்கும் கொடுமைகளுக்கும் வைப்பகமாக உள்ள மனுநூல் ஆள்வோர் போற்றிய நூலாயிற்று. மனுநீதிப்படி ஆட்சி நடத்தியதாக வரலாறு எழுந்தது. ஆனால், நம்மறை அல்லது எம்மறை திருக்குறள் என அரசு முடிவு செய்ததுண்டா? நாணத்தக்க நூலை மறையெனக் கூற நாணாத அரசுகள் இருந்ததை எண்ணினால், திருக்குறள் நம்மறை என்று கூறுவதனை ஓர் அரசு தன் பெறலரும் பேறாக அல்லவோ கொண்டிருக்க வேண்டும்! அந்நிலை ஏற்படுவதும், ஏற்படுத்துவதும் இந்நாளில் தீராக்கடமை அல்லவோ! நடைபெறும் அரசு முடியரசன்று; வல்லாண்மை அரசும் அன்று; தவறுகள் உண்டு. எனினும் குடியரசே! குடியரசில் ஒன்று ஏற்கப்பட வேண்டுமானால் குடிகள் அன்றே அதனைத் தம் கொள்கையாக எடுத்துரைத்து - வற்புறுத்துரைத்து - போராடி நிலைப்படுத்த வேண்டும்! எண்ணிக்கையால் அரசேற்றவர்க்கு, எண்ணிக்கையால் ஆணையிடின் கட்டாயம் செய்து தானே ஆகவேண்டும். அந்நிலை உருவாக்குதல் எவர் பொறுப்பு. இந்நலம் வேண்டும் என்பவர் அல்லரோ உருவாக்குதல் வேண்டும். வாழ்வியலுக்கு மறை என்பதும் சமயம் என்பதும், வழிபாடு என்பதும் கடைப்பிடி என்பதும், நோன்பு விழா என்பனவும் இன்றியமையாதன. கடவுள் இல்லை என்பாரும், கடவுள் இயற்கையே என்பாரும் அதனைக் கூறியவர் மேலும், அதன் மேலும் கொண்டுள்ள பற்றுமை வெறியாக அல்லவோ உள்ளது! அவர்கள் அக்கொள்கைகளில் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை அந்நம்பிக்கை இல்லார்மேல் கொள்ளும் சீற்றம் இன்னவற்றை நோக்க அவர் அக்கொள்கைகளையும், கொள்கையுடையாரையும் இறைமையாகக் கொண்டுள்ளமை புலப்படும். அவர்கள் முழக்கம், விழா, சுவரொட்டி, பறைசாற்று எல்லாம் கடவுட் கொள்கையாளர் செயலுக்குப் பின்னடைந்தனவா? இவற்றால் விளங்குவது என்ன? ஒவ்வொருவர் உளத்திற்கும் சில கொள்கை கோட்பாடுகள் வேண்டும்; அவற்றை இல்லாமல் வெறுமைப் படுத்தி விடக்கூடாது. அவ்விடம் வெறுமையுற்றால் ஏறக்கூடாதன ஏறிக்கொள்ளும். புகக்கூடாதன புகுந்து கொள்ளும் என்பனவே. திருக்குறள் நம்மறை என்ற அளவில் குறளைக் காட்டி அமைதல் சாலாது. செயல் திட்டங்கள் வழிபாட்டுநெறிகள் - இசைஆடல் - விழாக்கோலம் இன்னவெல்லாம் வேண்டும். இவற்றைக் குறள்வழிஞர் வகுத்தும் - தொகுத்தும் தந்து நடைமுறையாக்கத் தூண்டலாக விளங்க வேண்டும். ஒரு சில இடங்களிலேனும் இவற்றின் செயலாக்கக் கிளைகளை உருப் படுத்துதல் வேண்டும். காலவெள்ளம் ஒரு நொடியளவில் கூட கண்மண் தெரியாமல் அள்ளிக் கொண்டு போய்விட வல்லது. அதற்கு ஆட்பட்டு அழிந்து படாமல் வலிய பாறைமேல் கோட்டை எழுப்பிக் கோயில் எழுப்பிக் காத்தல்போல், உறுதியான அடித்தளத்தில் நம்மறை என்னும் கட்டுமானம் திகழவேண்டும். அதுவும் நாளை நாளை என்னின், நாளை என்பது இல்லதாய் - மறப்பாய் - மறைவாய - கனவாய் - மின்னலாய் ஒழிதல் உண்டாம். உலகொளி பரப்பவந்த எழுஞாயிறு திருக்குறள். நம் அறியாமை அறிவிக்காமைத் திரைகளால் நாம் மறைத்துக் கொண்டிருக்கின்றோம். உலகோர் அறியச் செய்யத் திரைய கற்றும் பணியை மூச்செனக் கொள்ளும் முனைப்புச் செயல் வேண்டும். உள்நாட்டுச் செயலாக்க நடைமுறை, வெளிநாட்டுக்குப் பரப்பாக்க நடைமுறை. இவ்விரண்டும் உடனடியான கொடை முறையாதல் வேண்டும். எண்ணுவோம்; எண்ணியதைத் திண்ணமாய்ச் செய்ய முனைவோம். தொண்டு செய்ய விரும்புவோர்க்குத் துணை வாய்ப்பு இது கால் அரிதில்லை. ஏமாற்று, தன்னலம் ஊடாடாத தொண்டுக்குத் தட்டு இல்லை. தடை இல்லை! மாநில அரசு - நடுவண் அரசு - வெளி நாட்டு அறநிறுவனங்கள் உதவிகளையும் முறையோடு அணுகிப் பெற வாய்ப்பும் உண்டு. அத்தொகை முறையாக முழுவதாகத் தொண்டுக்கே பயன்படுத்தப்படுகிறதா? சுருட்டிச் சொந்தமாக்கப் பயன்படுகிறதா? சுற்றியிருப்பார் பங்கு போட்டுக் கொள்ள உள்ளதா? கெட்டிக்காரன் பொய்யும் எட்டு நாள் என்பது தமிழ்ப் பழமொழி! பட்டுக்குனியவும் பழிப்புக்கு ஆளாகவும் உயிரிரக்கத் தொண்டுதானா உலாவர வேண்டும்! தொண்டன் என்பான் தொண்டுக்குப் பழியுண்டாக்க எண்ணவும் மாட்டான். எவன் தொண்டன் என்பதை மீண்டும் காண்க. இது கால் தொண்டுக்கு முட்டுப்பாடு என்பது ஈகரைத் தேடிக்கண்டு கொள்வதே. கண்டு கொள்ளும் உலாவே குறள் வளர்க்கும் உலாவாம். உள்ளம் உடைமை உடைமை! அவ்வுடைமை உடையார் எவராயின் என்ன? அவர் ஈகர்! ஈகம் செய்வார் ஓரைவர் கூடிச்சேர்ந்தால் கைகூடாது என்றவை எல்லாம் கை விரல்கள் போல் கை கூடிவரும்! அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். என்பது பொய்யாமொழி. திருக்குறள் நோக்கு பயன்பாராட்டல் வழக்குரைஞர் வாணிகத் தோன்றல் திருக்குறள் மாமணி தென்னிலை திருமலி இராம. கோவிந்தனார் தம் பெற்றோர் அமரர் இராமசாமி பெரியம்மை பெயரால் நிறுவியுள்ள சீரார்ந்த அறக் கட்டளைச் செழுங் கொடையால் இந்நூல் வெளியிடப் படுகின்றது. அவர் தவச்சாலை அறக்கட்ளையருள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - 994. நோக்கின் நோக்கு எந்த எளிய செயலைச் செய்வதற்கும் அதற்கென ஒரு நோக்கு உண்டு. ஆனால் அரிய செயலைச் செய்வதற்கோ ஆழத்துள் ஆழமான நோக்கு உண்டு என்பது உலகம் அறிந்த செய்தி. திருவள்ளுவர், திருக்குறளை ஏன் இயற்றினார்? அதனை அவர் இயற்றிய நோக்கு என்ன? என்பவற்றை நாம் வெளிப்பட உணருமாறு அவர் உரைத்தார் அல்லர். ஆனால், அவர் திருக்குறளை இயற்றிய நோக்கை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடவும் இல்லை. ஒருவர் வாழும் கால நடைமுறை வழக்குகள், அவர் காலத்திற்கு முன்வாழ்ந்தவர் வைத்துச் சென்ற வழக்குகள் ஆகியவற்றை அப்படியே போற்றிக் கொள்வதில் ஒருவர் நோக்கு வெளிப்படுதல் இல்லை. தம் காலத்து வழக்குகளிலும் முந்தையர் வழக்குகளிலும் ஏற்கத்தக்கவை அல்லாதவை அல்லது மறுக்கத் தக்கவை இவை என நிலைப்படுத்திக் கூறும் பாங்கிலே, கூறுவார் நோக்குப் புலப்படும். திருவள்ளுவர் காலத்திற்கு முற்படவே பல்வேறு சமயங்கள் உருவாகி விட்டன. பலவகை வழிபாட்டு முறைகள் சடங்குகள் கிளர்ந்து விட்டன. மக்களை மேல் கீழ் எனப் பிரித்துப் பார்க்கும் பார்வையும் உண்டாகி விட்டது. மண்ணின் நலத்தையும் மக்கள் நலத்தையும், உலக நலத்தையும், உயிர்களின் நலத்தையும் காக்கத் தக்க நடைமுறைகள் இவை எனவும் இந்நெறிய எனவும் காட்டவும் நிலை நாட்டவும் வேண்டுமென வள்ளுவர் அறநெஞ்சத்தில் கிளர்ந்தது. அதனால் உலகம் உய்தலைக் கருதி நெட்ட நெடிய உழைப்பால் உலகுக்கு ஈடு இணை இல்லாத ஒருநூலை ஆக்கினார். முட்டுதல் மோதுதல் பகைத்தல் பழிவாங்கல் இல்லாது அனைத்துயிரும் அமைந்து இனிது வாழத் தக்க அருள் நூலை அருளினார். அந்நோக்குகளை அறிந்து நடைப்படுத்துதல், அப்பெரு மகனார் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றிய பெருமையையும், கடைப்பிடித்த பேற்றையும் அருளும். இந்நூலில் சுட்டப்பட்ட நோக்குகளை அன்றி ஆய்வாளர் பார்வையில் வேறு சில நோக்குகளும் தோன்றக்கூடும். அவ்வாறு தோன்றித் துலக்கப்படவும் நடைப்படவும் நோக்கிய நோக்கே திருக்குறள் நோக்கு என்னும் இந்நூல் தோற்றமுற்ற நோக்காம். நோக்கு குறளிய ஆசிரிய உரையாய்த் தொடர்ந்த பெற்றியது. பலப்பலரும் விரும்பிப் போற்றியது. அவற்றை ஒரு சேரப் பார்ப்பது பயன் செய்யும். நூலுக்குத் தகச் சில அமைப்புகள் மாறியுள. திருவள்ளுவர் தவச்சாலை அல்லூர் 620 101 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1. பொது விளக்கம் நோக்கு என்பது ஓர் அரிய பழந்தமிழ்ச் சொல். நோக்கு என்பது செய்யுள் உறுப்புகளுள் ஒன்று என்றார் ஆசிரியர் தொல்காப்பியர். நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே என அதன் இலக்கணமும் வகுத்தார் அவர். நோக்குவ எல்லாம் அவையே போறல் என்பது ஓர் அகத்துறை. நோக்கு விரிவுறும் நிலையில் அம் ஈறு இணைந்து, நோக்கம் ஆகும். ஒப்பு: கூடு + அம்= கூடம். ஒருவர் உள்ளகத்திலிருந்து எழும். உயரிய பதிவே - படிவே - நோக்காக வடிவுறும். அந்நோக்கின் அடிமூலம், உள்ளகம் ஆதலால், அவரை அந்நோக்கில் இருந்து பிரித்தல் அரிது. நோக்கே உயிராகி உணர்வாகி நிற்பவர் அவர். உயிரொடு ஒன்றிய நோக்கினை ஒழித்தலோ, ஒதுக்கலோ எளிதில் இயலா. இத்தகைய நோக்கும் நோக்கமும் செவ்விதின் அமையின், அமைந்தார்க்கும் அவர் தம் செயற்பாடுகளுக்கும் சீர்த்தி பெருகும். அந்நோக்கு பிழை படின், அவர்க்கும் அவரைச் சார்ந்தார்க்கும் கழிபேரழிவாய் இழிவுறும். ஆதலால் நோக்கின் நலமும் பொலமும் அந்நோக்கின் விளைவில் விளங்கும். இப்பொழுது தம் மொழி, தம் வழி, தம் இனம் பற்றிய நோக்கில் பலப் பல நிலையரும், பலப்பல அறிஞரும் ஊன்றி யிருத்தல் உவகையளிப்பதாம். ஆனால், அவர் தம் நோக்கின் அடிமூலமாக இருக்க வேண்டுவது என்ன என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளல் கட்டாயத் தேவையாம். மண்ணில் பிறந்தது மணம் (மண்+அம்) மணத்தல் என்பது மணம் பரப்பல், கூடுதல், கலத்தல், பொருத்தல், நுகர்தல், துய்த்தல் இன்ன பல பொருள்களைத் தரும் விண்ணேறிப் பறந்தாலும் கால் ஊன்ற மண்ணே வேண்டும், ஊன்றும் இடம் நிலம்; நிலமே, நிலை நிலைபேறு நிலையம் நிலைப்பு எல்லாம் ஆகலின் மண்ணை மறந்த ஆய்வு மாற்று ஆய்வு மயக்க ஆய்வு. மண்ணின் மைந்தர் மண்ணின் இயலும், மண்ணின் மொழியும் மண்ணின் மாந்தர் நலமும் ஒருங்கே கருதிச் சிந்திக்க வேண்டும்; செயலாற்றவும் வேண்டும்! இல்லாக்கால் பொல்லாத் தீதாய் முடியும்; பொருந்தாச் செயலாய்ப் போயொழியும்! நம் பண்பாடு நம் நாகரிகம் நம்மொழி நம் அறிவு என்பவற்றை நம் மண்ணின் மணத்தொடும் எண்ணாமல், பிறபிற மண்ணின் மணத்தொடும், மனத்தொடும் எண்ணல் ஒரு பெரும் மாறாத் தீமையாய் இந்நாள் மல்கி வருதல் கண்கூடு. அதுவும் அறிவறிந்தும், பதவி செறிந்தும் உள்ளவரிடம் பெருகி வருதல் பெருங்கேடாய் முடியும். நம் மொழியின் எழுத்து வடிவத்தை, நம் மரபு, நம்நோக்கு, நம் இயல் செயல் இவற்றொடு நோக்கிப் பாராமல், இம்மொழி இவ்வெழுத்து எனப் பிறபிற எடுத்துக் காட்டித் திருத்த நினைத்தல் நோக்களவிலேயே மாறுபாடுடையதாம். திருத்தம் என்பது உள்ளது கெடுத்தல் அன்று. நலப்பாடு ஆக்குவதே திருத்தமாம். நம் மண்ணின் பொருள்கள், நம் உடல், குடல் எண்ணம் என்பவற்றொடு ஒட்டி உறவானவை. ஒத்தும் ஒன்றாகியும் அப்பார்வை இல்லாத அயன்மைப் பார்வை அவற்றின் நல் இயல்பை அழித்து இரண்டும் கெட்ட ஒரு பார்வையாய் அமைந்து விடும். தமிழில் கலைச்சொல் இல்லை, அறிவியல் இல்லை, பொருளியல் இல்லை என இல்லைப் பாட்டு இசைப்பெல்லாம் மொழியியல் அறியாப் பார்வையின் விளைவாம். ஆங்கிலத்திற்கு இத்தகுதிகள் எல்லாம் உண்டு என்று பறையறைகின்றனரே, அவர்கள் நான்கு நூற்றாண்டுகளின் முன்னர் இத்தகுதிகள் ஆங்கிலத்திற்கு இருந்தது என்பதை உறுதி செய்வாரா? ஆங்கில நாட்டு ஆட்சி, கல்வி மொழியே ஆங்கில மாகவா இருந்தது! ஆங்கிலவர் விழித்தனர்! ஆங்கிலம் விழிப்புற்றது! ஆங்கிலம் வீறி எழுந்தது! விரிகதிர் பரப்பியது! தமிழர் விழித்தால் தமிழ் விழிப்புறும், தமிழும் வீறி எழும், விரிசுடர் பரப்பும்! ஆனால் நிலைமை என்ன, மொழிப் பற்றும் இல்லை! மொழி அறிவும் இல்லை! முழக்கம் என்ன முழக்கம்? தமிழில் அறிவியல் இல்லை! கலையில் இல்லை! இல்லை இல்லை என்னும் இல்லாமைப் பாட்டு! உன்னிடம் இல்லை! அதனால் உன்மொழியிடம் இல்லை! உன்னால் முடிந்தால் உன் மொழியாலும் முடியும். உன்னால் முடியவில்லை. அதனால் உன் மொழியால் முடியவில்லை. நீ மொழியறிவு பெற்றிருந்தால், மொழிப்பற்று உற்றிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? உன் மொழியில் சிந்தித்து உன் மொழியில் வரைந்து உன் படைப்பை உலக வைப்பாய் ஆக்கியிருந்தால் உன் மொழி, உலகவர் பார்வையை எட்டும்! நீ என்ன செய்கிறாய்? ஆங்கிலம் கொழுத்த மொழி என்று வானளாவக் கூறி உன் உழைப்பையும் அதற்கே ஆக்கி அதனை மேலும் கொழுக்க வைக்கக் கடமை புரிகிறாய்! அதே பொழுதில் தமிழில் அறிவியல் இல்லை! கலைகள் இல்லை! என எள்ளல் நகைப்பும் இழிந்த கண்ணடிப்பும் செய்து உனக்குள் கிளுகிளுக்கிறாய்! இப்பொழுது வேண்டுவது ஒன்றே ஒன்று - அது மண்ணின் மணத்தொடு சிந்திப்பது! மண்ணின் மணத்தொடு சிந்தனை கிளர்ந்து விட்டதா? கிளர்ந்து விட்டால் அறிவியலும் கலையியலும், கல்லார் நெஞ்சிலும் கல்விப் பொருளாக ஆகிவிடும்! அதற்குக் கல்வி வல்லோர் தம் நலம் கருதாமல் மண்ணின் நலம் கருதும் மன விரிவு கொள்ளல் வேண்டும். வள்ளுவர் மண்ணின் மணத்தொடு சிந்தித்தார். மண்ணின் இயல்பு கெடாமல் கட்டுக் குலையாமல் இருக்கச் சிந்தித்தார். அச்சிந்திப்பு மண்ணின் நலமாவதுடன் உலக நலமும் உயிர்களின் நலமும், பேராப் பெரு நலமும் கொள்ளத்தக்கதாய் அமைந்தது. 2. இறை நிலை திருவள்ளுவர்க்கு முன்னரே தமிழ் மண்ணில் கடவுள் வழிபாடும், வழிபாட்டு முறையும் உண்டாகி விட்டன. கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என நால்வகை வாழ்த்துகளை ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார். அவர் காலத்திலேயே தேவபாணி என்னும் இசைப்பாவை உண்டாகி விட்டது. பரிபாடல் என்பதோ பெரிதும் இறை வழிபாட்டுப் பாடலாகவே அமைந்து விட்டது. சங்கத் தொகை நூல்களில் நீலமணிமிடற்றோன், மால், சேயோன், மாயோன், கண்ணன், பலராமன், வேந்தன், வண்ணன், கொற்றவை இன்ன தெய்வப் பெயர்களும் வழிபாடுகளும் உருக்கொண்டு விட்டன. மெய்யியல் கொள்கைகள் விளக்கமுற அமைந்து விட்டன. நில்லாதவை இவை என்பதும் நிலைபேறு ஆனவை இவை என்பதும் எண்ணப்பட்டன. அவ்வகையில்காஞ்சித் திணை என ஒரு திணையே உருவாக்கம் அடைந்து புறப்பொருளில் இடம்பெற்றது. போர்த் துறையில் பெருங்கடனாற்றிய வீறு மிக்கவன் நடு கல்லாகிப் பீடும் பெயரும் எழுதப் பட்டுப் படையலிட்டு வழிபடப்பட்டான். வேற்படையாகிய கருவி வழிபாடும், வேலன் வெறியாடலும் பெரு வழக்காக ஆயின. இல்லுறை தெய்வம் என முந்தையர் வழிபாடும் கிளர்ந்தது. கோயிலும் கோட்டமும் விளங்கின. பசி இல்லாகுக, பிணி சேண் நீங்குக பால் பல ஊறுக, பகடு பல சிறக்க நீ வாழியர், நின் மக்கள் வாழியர் ஆற்று மணலினும், வான்மீனினும் பெருகி வாழ்க! இன்னவாறெல்லாம் வாழ்த்து வகை உரையும் பாட்டுமாய் உருக்கொண்டு விளக்கமுற்றன. படைத்தோன் கூற்றுவன் கருத்துகளும் எழுந்தன. இவ்வளவு பெருக்கமாக இறைமையுணர்வும், வழிபாடும் உண்டாகிய நிலையிலும் இம்மண்ணின் நலமே நாம் எண்ணத்தக்க ஒன்று; அதில் எம் தனிச்சார்பு, எம் குடிமைச்சார்பு, எம் ஆசான் சார்பு. எம் சூழல் சார்பு என்பற்றுக்கு அடிமைப்பட்டு, வருங்கால நலத்தைப் பாழடித்து விடுதல் ஆகாது என வள்ளுவப் பெருந்தகை உள்ளூற ஆய்ந்தார்! அழுந்தினார்! ஆழ்ந்தார்! எண்ணி எண்ணித் திண்ணியதோர் முடிவினை மேற்கொண்டார். புத்த நெறி இம்மண்ணின் வரவாக அமைந்தது! அருக நெறியும் அவ்வாறே இம் மண்ணுக்கு வரவாயிற்று! வேத நெறியும் வந்து புகுந்தது! வலுவாகப் புகுத்தவும்பட்டது. இந்நெறிகளை அப்படி அப்படியே கொள்வது இம்மண்ணின் மணத்தோடு கூடியவை ஆகா! இம்மண்ணுக்கு ஏற்ற வகையில் - ஏற்றமாக அமையும் வகையில் எம் நூல் இயற்றப்படுதல் வேண்டும் எம் மெய்யுண்ர்வு இதுவே; இதன் பிழிவே, சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்பது எனத் தேர்ந்தார் திருவள்ளுவர். அந் நோக்குப் பிறழாமல் கடவுள் வாழ்த்து முதலாக ஊடலுவகை இறுதியாக நூலை இயற்றி முடித்தார். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்னும் பெயர்கள் கொண்டு எக்கடவுளரேனும் சொல்லப் பட்டுள்ளனரா? அப் பெயரால் வழிபடப்பட்டுள்ளனரா? சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், புத்தனுக்கும் அருகனுக்கும், கிறித்துவுக்கும் வள்ளுவக் கடவுள் வாழ்த்தைப் பொருந்திக் காட்டினார். இட்டுக் கட்டலும், ஒட்டுக் கட்டலும் அன்றி, வள்ளுவர் கூறிய பெயரே அத் தெய்வப்பெயராய் அவர் காலத்திற்கு முற்பட வழங்கப்பட்டதா? அவர் காலத்திற்குப் பிற்பட நிகண்டு நூல் தொகுத்த பெயர்களுள் பத்தொடு பதினொன்றாக இடம் பெற்றதன்றி அப்பெயர்களே பெயர்களாய் அமைந்த இறைமை ஏதேனும் உண்டா? ஏன், வழங்கு பெயரை வழங்கவில்லை? திருவள்ளுவர் வழங்கிய பெயர்களும் ஏன் பண்பியல் - ஒழுக்கவியல் - பெயர்களாகவே அமைந்தன? எந்தெய்வம் தந்தெய்வம் என்று எதிர்வழக்கிட என்றாரே தாயுமானவர். அவ்வழக்காட்டுக்கா தெய்வப் பெயர் இடம் தர வேண்டுமா? ஆதலால் திருவள்ளுவர், இம் மண்ணின் நலம் கருதிப், பிளந்தும் பிரித்தும் பேசிப் பகையும் பிணக்கும் வளர்க்கும் பாழ் நெறியைப் பேசேம்! பாராட்டேம்! போற்றவும் மாட்டேம்; உலக ஒருமை, உயிர் ஒருமை ஆகியவற்றுக்கு ஊற்றுக் கண்ணாம் பண்பாட்டுப் பொதுமையையே இறைமையாகக் காட்டுவேம் என்று தேர்ந்து தெளிந்து முதல் அதிகாரத்தைப் பாடினார். இறைமை என்பது எங்கும் தங்கியிருப்பது! எங்கும் தங்கியிருப்பது என்றால், எதிலும் தங்கியிருப்பது, என்றும் தங்கியிருப்பது என்பனவும் வெளிப்படைதாமே! உலகியற்றியான் எனப்படுபவன் ஆட்சி முறையை ஆக்கியவன் என்பதை உணர்வார், வகுத்தான் வகுத்த வகை என்பதும் அவ்வாட்சி முறையையே என்பதையும் அறிவார். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு (385) என்பதைக் காண்பாராக. இனி, தாமரைக் கண்ணான் என்றும் அடியளந்தான் என்றும் குறிப்பிடுகிறாரே? அவை திருமாலைத் தானே! அப்படி யானால் திருவள்ளுவர் மாலியப் பற்றாளர் எனலாமே என்பார். பெயரளவில் மகிழ்பவர் ஆவர். நெஞ்சம் இனிக்கும் நேயத் தலைவனும், நேயத் தலைவியும் கூடியின்புறும் இன்பம் தாமரைக் கண்ணான் உலகத்தும் (வைகுண்டத்தும்) உண்டோ? இல்லை? என்பது மாலுலகப் பெருமை கூறுவதா? மடியாகிய சோம்பல் இல்லாமல் இயலும் முயற்சியாளனாக ஆட்சியாளன் இருப்பான் எனின், அவனே உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து விடமுடியுமே! அதற்கென்ன காலடியால் ஞாலம் அளந்தான் கதை வேண்டிக் கிடக்கிறது? என்று கூறுவது மாலின் பெருமை கூறலா? அவ்வாறானால் தாமரைக் கண்ணான் உலகையும், அடியளத்தலையும் பழிப்பது திருவள்ளுவரின் நோக்கமா? இல்லை! அவற்றை எவர் கண்டார்? கண்டார் எனினும் கண்டவர் விண்டிலர் என்பதும் விண்டவர் கண்டிலர் என்பதும் விளக்கி விடுமே! தாமரைக் கண்ணான் உலகை நினைத்து, வாழும் உலகைப் பாலையாக்கி விடாதே, என்பதற்கும் அடியளந்தானைப் பாராட்டிக் கொண்டு செய்வகையற்றுச் செயலற்றுச் சோம்பிக் கிடவாதே! குடியை உயர்த்துதற்கு மடிமை ஒழி! நீ அரும் பெருஞ் செயல்களையெல்லாம் செயற்கரிய செயல்களை யெல்லாஞ் செய்த முடிக்கத் தெய்வமே மடிமை நீங்கி உனக்கு துணை நிற்க ஓடிவரும் என்பதற்கே கூறினார். மறுமையை நினைத்து இம்மையை இழக்காதே; இழிவு செய்யாதே! இருக்கும் வீட்டை எழிலாய் - இனிதாய் வைத்துக் கொள்ளத் தெரியாதவன்தானா, எடுக்கப் போவதாக இருக்கும் வீட்டிலே எழிலும், இனிமையும் தவழச் செய்வான்? மாட்டான் என்பதை உறுதிப்படுத்துமாறே கூறினார். வள்ளுவநோக்கு வளநோக்கு; வாழும் வளநோக்கு! வையகமெல்லாம் வாழும் வளநோக்கு! 3. உயிர் தளிர்த்தல் பின்னே வாழப் போவதாகச் சொல்லப்படும் வாழ்வை நினைத்து, முன்னே வாழும் வாழ்வைப் பாழாக்கி விடாதே என்பது மெய்யுணர்வு மிக்க மேலோர் திருவள்ளுவர் திருநோக்கு எனக் குறித்தோம். கண்ணின் பரப்பைக் கடந்து விரிந்தது கடல். அது மேனீர், கீழ்நீர், நிலநீர் என மூவகை நீர்களால் அமைந்தது. ஆதலின் முந்நீர் என்பதும் அதற்குப் பெயர். மேனீர் ஆகிய மழை நீர் மாசற்றது. கீழ் நீர் ஆகிய ஊற்று நீரும், நிலநீர் ஆகிய ஓடு நீரும் நிலத்தின் இயல்பு கொள்ளும். இயலாகவும் செயலாகவும் உண்டாம் மாசு கொண்டு ஓடுவது, இம் முந்நீரையும் கொண்ட கடல்நீரோ வாயில் வைக்கவும் இயலா உப்புடையது. அக்கடலைப் பாற்கடல், தயிர்க்கடல், மோர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், நன்னீர்க் கடல், உவர்க்கடல் என ஏழாகக் கூறின் இறுதிக் கடல் ஒன்றை யன்றிப் பிறவெல்லாம் இட்டுக் கட்டப்பட்ட மாறுபாடுதானே. இம் மாறுபாட்டு நோக்கில் பாற்கடலை உண்டாக்கியதும், மந்தரமத்தையும், வாசுகிக் கயிற்றையும் கொண்டு வானவரும் அசுரரும் கடல் கடைய அமுதம் எழுந்த கதை கட்டியதும், அமரர்க்கு அமர வாழ்வு அளித்ததாகிய புனைவும் ஆகிய வெல்லாம் நெஞ்சறிந்த மெய்யொடு கூடியவைதாமா? வள்ளுவ நோக்கு, வாய்மை நோக்கு ஆயிற்றே! வாழ்வாங்கு வாழும் வாழ்வு நோக்காயிற்றே! அதனால் அமிழ்தம் ஈதெனக் கண்டு காட்டிக் கமழக் கமழ உரைக்கின்றார். அமுது எனப் பாலமுது - நீரமுது - சோற்றமுது - அவிழ்தமுது எனப் பல அமுதுகள் சொல்கின்றோமே இவ்வமுதுகளின் மூல அமுது எது எனின், மழை என்றார் திருவள்ளுவர். மண்ணில் நின்றோ, மண்ணுள் இருந்தோ வரும் நீர் அமுது அன்று! வான் நின்று தூயதாய் விழும் மழை நீரே அமிழ்து என்கிறார். வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று (11) என வான் சிறப்பைத் தேன் சிறப்பு ஆக்குகிறார் அவர். அவ்வானமிழ்தே மண்ணமுதாம், புற்பூண்டு செடி கொடி மரம் இன்னவற்றை வளர்த்து வளமாக்கி உயிரினத்தை யெல்லாம் ஊட்டி வளர்க்கும் தாய் என்பதை விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது (16) என்றார். வான் அமிழ்து என ஒன்றாகக் கூறப்பட்டாலும், அது தானும் அமிழ்தாகி மற்றைக் காய்கனி கிழங்கு கீரை, வேர், வித்து, தவசம் இன்ன அமிழ்துகளையெல்லாம் தரும் அமிழ்துமாகித் திகழ்கின்றது என்பதைத் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (12) என்பதால் தெளிவு செய்கின்றார். வாழ்வுக்கு உதவும் அமுது, உயிர்க் கொடையாய்த் திகழும் அமுது எனினும் அளவோடு பருகுக. அளவோடு அருந்துக. அற்றபின் துய்க்க என்று ஆணையிடுகிறார். அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (943) என்பது அது அமுதமே எனினும் அளவோடு நுகரவே வேண்டும் அதுவே நெடிய வாழ்வுக்கு வழி என்பதைக் காட்டுகிறார். நெடிய வாழ்வுக்கும் - நெஞ்ச நிறைவுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இன்பம் உயிர்தளிக்கச் செய்யும். துன்பம் உயிரை ஒடுக்கிக் கொண்டு வரும். அடித்துப் போடாமலே ஆளைக் கொன் றொழிப்பது நெடிய துயரமேயாம். கொல்லாமல் கொல்லும் தற்கொல்லி தாழாத் துயரமேயாம். ஆதலால் அத்துயர் நீக்கம் வேண்டததக்கவற்றுள் எல்லாம் வேண்டத்தக்கதேயாம். உயிரின் நோக்கம் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயாம். இவ்விரண்டும் ஒருங்கே மெய்யுறப் பெறும் இடம் எது? நோயாகவும், மருந்தாகவும் இருக்கும் ஒன்றே, இன்பிலே துன்பையும் தரும் துன்பிலே இன்பையும் தரும். அவ்வகையில் படும் துன்பம், இரட்டை இன்பம் ஆக்க வழிவகையாம். இத் துன்ப நீக்க இன்பம். இல்வாழ்விலே இயற்கையாக அமைந்து கிடப்பதை அருமையாகச் சுட்டுகிறார் திருவள்ளுவர். வாழ்க்கைத் துணையாகிய இல்லாள், தன் வாழ்க்கைத் துணைவன் ஆகியவனுக்கு உயிர்தளிர்க்கச் செய்யும் அமுதாகத் திகழ்கின்றாள். அவள், அவனுக்கு அமுதமானால், அவன் அவளுக்கு அமுதமாவான் அல்லனோ? அவளைப் போலவே உயிர்தளிர்க்கச் செய்வன் அல்லனோ அதனால் உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். (1106) என்றார். தக்க தலைவனுக்குத் தக்க தலைவி வாய்த்தால் அவர்கள் வாழ்வு, உழுது விதை தெளித்த உழவன், வித்த முளைப்பதற்கு வீழுமா மழை என வானை நோக்கிய அளவில், மழை பொழிந்தாற்போலப் பெருநிறைவுப் பெருவாழ்வாம் என்கிறார். வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (1192) என்பது அது. உலக நலம் உயிர் நலம் கருதியது நல்லறமாம் இல்லறவாழ்வு என்பது இதன் பிழி செய்தி. இனி, இல்லாளும் இல்லாளின் துணைவனும் ஒருவருக்கு ஒருவர் அமுதமாய்க் கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்வோடு மட்டும் அமைவதோ இல்வாழ்வின் இன்பம்? மக்கள் தம் கையில் எடுத்துப் பெற்றோர்க்கு ஊட்டும் உணவு - தங்களை ஊட்டி வளர்க்கும் பெற்றோருக்குப் பிள்ளைகள் ஊட்டும் உணவு - அமிழ்தமாம். இன்ப அளவில் நில்லாமல், உணர்வும் உயிரும் தளிர்க்கச் செய்யும் உவகைப் பெருக்கினால் எவ்வமிழ்துக்கும் மேலாம் அமிழ்தாய்த் திகழும் என்கிறார். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (64) அவர் தம் மழலைச் சொற் கேட்டலும் அவ்வாறே இன்பமாம். இசை அமிழ்தினும் இனிய அமிழ்தமாம் மழலையமிழ்தம் (66) என்பது வள்ளுவர் வாய்மொழி. அம்மட்டோ? தம் மக்கள், தம் உடலைத் தழுவிக் கட்டிக் கொள்ளும் கழி பேரின்பம் இருக்கிறதே, அதுவும் அமிழ்தக் கொள்ளையாம். (65) தென்றலும் மதியும் சேர ஊட்டும் இன்பமும் குழந்தையர் தழுவிக் கொள்ளும் இன்புக்கு இணையாகாது என்பதுஅவர் கருத்து. வீட்டிலே பூரிப்பு வாழ்வாகத் திகழ்கின்ற அம்மக்களைக் கண்டு, அன்னைக்குப் பூரிப்பு. வீட்டிலே வளமாகவும் வாழ் வாகவும் திகழ்கின்ற இம்மக்கள், உலகத்து உயிர்களுக்கெல்லாம் இன்பம் செய்பவராய் அமைய வேண்டும். தாம் பெற்ற இன்பப் பேற்றினும் உலகத்து உயிர்கள் எல்லாம் அவர்களால் பெற வேண்டும் பேறே பெரிது எனப் பேணி வளர்க்கும் பூரிப்பு, பெரும் பெயர்ப்பூரிப்பு (69, 70,68) எனக் குறிப்பிடுகிறார். வீட்டிலே தொடங்கி உலக இன்பமாகத் தவழும் பேறு எதனால் உண்டாயது? அறத்தால் உண்டாயது எவ்வறத்தால் உண்டாயது? இல்லறத்தால் உண்டாயது! அதனால் அறத்தான் வருவதே இன்பம் என்ற திருவள்ளுவர், அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்றார் (39,40) நரை, திரை, மூப்பு, தமக்கு வராமைக்குத் தம் துணைவி யாரும், தம் மக்களும் தன் ஊரவரும், தம் ஆட்சியரும் தக்காராக இருப்பதே என்ற பிசிராந்தையார் உரை வீட்டில் இருந்து நாட்டளவாக விரியும் இன்பத்தைச் சுட்டிக் காட்டுகிறது. நாடு உலகமாக, அனைத்து உயிருமாக விரிவது திருவள்ளுவர். திருநோக்கம் என்பது அறியத்தக்கதாம். உயிர் தளிர்க்க வைக்கும் அமிழ்து குடும்ப வாழ்வில் உண்டாம். குடும்ப இன்ப அன்பின் ஈடு இணியில்லாச் சுரப்பே உலக உயிர் நேய ஊற்றுக்கண் என்பது வள்ளுவத் தெளிவாம். 4. அறம் மன அறமே அறம்! அதுவே எல்லா அறங்களுக்கும் மூல அறம்; முதல் அறம்! என்பது வள்ளுவ நோக்கு. முதல் என்பது என்ன? கைம்முதல், வைப்புமுதல், உரிமை முதல்! இம்முதல், முதல் இலார்க்கு ஊதியம் இல்லை என்பதில் வரும் முதல் (449) முதல் என்பது முதன்மை, அம்முதல் அகரமுதலும் ஆதிமுதலும் போல்வது (1) முதல் என்பது எண்; வளி முதலா எண்ணிய மூன்று என்பதில் வரும் முதல் (941) முதல் என்பது வித்து, கிழக்கு, வேர் என்பன. வள்ளி முதல் அரிந்தற்று என்பதில் வருவது அது (1304) இம் முதல் நாற்பொருள்பட்டு நயன்பெறுதல் முதற் குறள் உவமை விளக்கச் செய்தி (திரு. கு. கோதண்டபாணியார்): மன அறமே எல்லா அறங்களின் மூலமும் முதலுமாம்! அஃது அனைத்து அறன் (34) அந்த மன அறம் இல்லாமல் அமையும் அறங்கள் ஆகுலநீர ஆகுலம் ஆகு+உலம்: ஆகு+ஆறு (477) (ஆகு+ஊழ் (371) போல்வது. உலம் காய்தல், வற்றிப்போதல், வறண்டு போதல், கெட்டுப் போதல் ஆகியவற்றின் அடிச்சொல். ஆகு உலம் = ஆக்கம் போல் தோன்றும்கேடு. அதனை அறிந்தார், ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் (463) ஆகு உலம் என்பதன் பொருள் விளக்கம்,ஆவது போலக் கெடும் (283) உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் (479) ஆக்கம் போன்று இல்லை (135) என்பவையாம். மன அறம் இல்லாமல் சொல்லறமோ, செயலறமோ சீர்மை எய்தா! அடித்தளம் அமையாத முடித்தளம் என்னாம்? ஆட்டங் கொடுத்துக் கால் சாயாதிராதே! சொல்லறத்தையோ, செயலறத்தையோ சுட்டுதற்கு முற்பட மன அறத்தைத் திருவள்ளுவர் சுட்டியமை, அவ்வறம் இல்லாமையால் இவ்வறங்கள் சிறவா என்பதற்கேயாம். மன அறம் சீர்மையடையாமைக்கு அடிப்படை என்னை எனில், ஒரு தடை இல்லை-ஒன்றே ஓராயிரமாய்-ஒரு கோடியாய் கோடி கோடியாய் அமையும் தடை! அது மன மாசு எனப் படுவதாம்! மன மாசுதான் உலகில் காணும் எல்லா மாசுகளுக்கும் அடிப்படையாவது. மாசுக் கட்டுப்பாடு எனத் துறை தோன்றினாலும், நிறை கடமை புரிந்தாலும், தனித்தனி மனமாசு நீக்கம் இல்லாமல் எவ்விளைவையும் ஆக்காது! கரட்டு நிலத்தைக் கார் நெல் விளை நிலமாக்க வேண்டு மானால், முழுதுறு பண்படுத்தம் வேண்டும் அல்லவா! அழுக்குச் சுவரில் அழகோவியம் தீட்ட வேண்டுமானால், அழுக்கை அழித்துத் துடைக்காமல் ஆகுமா? கண்ணிலே மாசு இருந்தால் பெருங்கவலை இல்லை! மாசு இருப்பானுக்கு அன்றிப் பிறர்க்கு அவ்வளவு கவலை இல்லை! ஆனால், கருத்திலே மாசு இருந்தால் கொண்டவனுக்கு மட்டுமா தீமை; கண்ட கண்ட பேர்க்கெல்லாம் தீமை இல்லையா? ஆதலால், உலகிலே பெரும் பெரும் கேடாக இருக்கும் காற்றுமாசு, நீர் மாசு, உணவு மாசு, மருந்து மாசு, உணர்வு மாசு, தன்னல மாசு, பொது நலம் போற்றா மாசு இன்னவை எல்லாம் மனமாசின் வெளிப்பாடுகள் தாமே! மன மாசு நீங்கிவிட்டால், மற்றை மற்றை மாசுகள் நீங்கி விடும் அல்லவோ! மனமாசு இல்லான் வாழைப்பழத் தோலை வழியில் எறியான்; வருவார் வழுக்கி வீழச் செய்யான். வழுக்கி வீழ்தலால் கால் கை ஒடித்து ஊனர் ஆக்கிக் குடும்பஞ் சுமப்பானே குடும்பச் சுமையாகுமாறு செய்யான்! மன மாசு இல்லான் தன்வீட்டுச் சாய்க்கடையோ வடிகாலோ ஆறு, கால்வாய்களில் கலக்கவிடான். மன மாசு இல்லான் வீடு சூழ நீரைக் கட்டுக்கிடையாக்கிச் சேறும் செதும்பும், குப்பையும் கூளமும் செதும்பவிட்டுக் கொசு உண்டாக்கியாய், நோய் பரப்பியாய் ஆகான்! மனமாசு இல்லான், சாலையில் செல்லும் தன் வண்டியில் நச்சுக் கரிப்புகையும் நடுக்கமுறத்தும் ஒலியும் உயிர் பறிக்கும் கடுவிரைவும் உண்டாகவிடான்! மனமாசு இல்லான், அண்டை வீட்டார் அமைதி இழக்க செவிப்பறை வருந்த-ஒலியிழையைப் பாடவிடான்! மனமாசு இல்லான், நடுத்தெருவில் காறி உமிழான்! நடக்க வாய்த்த சாலையை நாறச் செய்யான்! இப்படி இப்படி, எத்தனை எத்தனையோ சொல்லலாம்! மனமாசு நீங்கும் பொழுது, பிறர் பெறும் இன்பமெல்லாம் தான் பெறும் இன்பமாகவும், பிறர் பெறும் துன்பமெல்லாம் தான் பெறும் துன்பமாகவும் கொள்ளும் பெருநிலை உண்டாகி விடுகின்றது. ஆதலால், சூழலைக் கெடுக்கும் கேடு அவனை விட்டு ஒழிகின்றது. இயல் நலத்தைக் காக்கும் இயல்பு பெருக் கெடுக்கின்றது. பிற உயிர் துடிக்கும் துடிப்பும், தான் துடிக்கும் துடிப்பும் ஒன்றே என்ற உயர் நிலையை எய்திவிடுகின்றான் மனமாசில்லான்! அதனால் அவன் கற்கும் கல்வியிலும் கற்பிக்கும் கல்வி யிலும் மாசு இல்லை. அவன் கண்டுபிடிக்கும் கண்டு பிடிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் இல்லை. அவன் கொண்டொழுதும் கொள்கையிலும் குறிக்கோளிலுமாக இல்லை! அவன் மாந்த உருவில் நடமாடும் அறவியங்கடவுள் ஆகின்றான்! அவன் அலந்தோர்க்கு மடிதற்றுச் சென்று உதவும் மாமாந்தன் ஆகின்றான்! அவன் வாய்மொழி நாட்டின் வாய்மை மொழி ஆகிவிடுகின்றது. அவன் வாழ்வு, அறவாழ்வாக உலகம் காக்கின்றது! மன அறமே மாணறம் என, அறமே, அறமுத்திரை பதிக்கும் மாண்பு வாய்த்து விடுகின்றது! ஆதலால் வாழிய மன அறம்! வாழிய உலக நலம் என்பது வள்ளுவ நோக்கு. 5. உடல் நலம் அறத்தில் சிறந்தது மன அறம்: அதுவே மூல அறம் என்பது மேலே விரிவாக்கப்பட்டது. மன அறம் சிறக்கவும் ஒரு மூலம் உண்டு. அம்மூலம் யாது? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் உயிர் அழிந்தால், உளமாவது, உணர்வாவது உண்டா? உடல் கெட்டிருந்தால், உளங்கெட வேறு ஒன்று வேண்டா; அதுவே உளங்கெடுக்கப் போதுமே! உளம் நன்றாக - வளமாக - இருக்க நினைப்பார் எவரோ அவர். உடல் நன்றாக - வளமாக - இருக்கவும் நினைப்பார்! பால் நன்றாக இருக்க வேண்டுமானால், பால் வைத்த கலமும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா! இருக்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால், கடிப்பான்கள் அங்கே இருத்தல் ஆகாவல்லவா! உடல்கெட்டால், உளக்கேடும் உண்டாம் என்பது பொதுமை இயல்! அதனை வென்றாரும் உளர்! அவர் அரியரினும் அரியர்! உடல் நலம் - தன் உடல் நலம் - போற்றல், ஒவ்வொரு மாந்தப் பிறப்புக்கும் தலைக் கடன்! ஏன்? தன்னுடல் கெடுப்பான் - பிறரை வாட்டுவான்; வதைப்பான்; பிறர்க்குச் சுமையாவான்! குடும்பப் பாரத்தைத் தாங்க வேண்டிய அவன் குடும்பப் பாரமாவான். அவன் என்றால், அவள் இல்லையா? அவளுக்கும் அதுதான். இயற்கை இறைமை பேரருட் பெருக்கினது. அதன் விந்தைமிகு ஆக்கங்கள் விரிக்கஇயலா விரிவினது. அதன் மாறுதல் இயற்கை, உலகை அருமையாய்ப் பேணிக் காப்பது! அதன் தேய்மானச் சீராக்கம், பருவ இட ஒத்தியைவு ஆகியவை, நினைப்பார் நெஞ்சை உருக்கி; உருக்கி அதன் உயர்வை வணங்கி வழிபடச் செய்வன. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என விரல் மடக்கி எண்ணுவாரும் எண்ணிக் கொள்ளும் ஏற்றம் மிக்கன. ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக வளர்நிலை வாழ்வை அருள்வது இயற்கை. ஒன்றின்மேல் ஒன்றாய் அறிவு பெருக்கமுற்று உலகியக்கம் இயலச் செய்வது அப்பேரியற்கை இறைமை. அவ்வறிவுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பொறிகள் ஐந்தை அமைந்து கிடக்கச் செய்தது அவ்வியற்கை இறைமை (6). அப்பொறிகள் வழியே கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் (1101) புலத்திறம் ஓங்கச் செய்ததும் அவ்வியற்கை இறைமை. அப்பொறி புலன்கள் அளவில் நின்று விடாமல், மனன் உணர்வாம் உணர்வை உருவாக்கி உலகுய்யச் செயற்படுத்துவதும் அவ்வியற்கை இறைமை! அவ்விறைமை பொறி, புல, மன இயக்கங்களைச் செய்யும் தனித்திறம் நோக்குவார் நோக்களவில் நின்றமையுமோ? அறிதோறு அறியாமை என்னும் அறிவியல் இலக்கணம் (1110), முற்றாக உலகம் உணர்ந்து, என்றென்றும் போற்ற அமைந்த விந்தை இயக்கம், பொறி, புல மன இயக்கங்கள் அல்லவோ! அவற்றின் வகை அறிந்தான் தானே உலகம் (27) அவ்வாறு அறிந்தான் தானே, பூத உடலாலும் நீடு வாழ்ந்து (3,6,1312) புகழ் உடலால் உலகம் உள்ளவரை, உள்ளவனாகத் திகழ்வான்; உலகாகத் திகழ்வான். இல்லையானால், உலகத்தால் ஆவது தான் என்ன? அதனால் அவன் புகழை உலகம் என்றும் விடாது! அவன் புகழே, தன் புகழ்! பனுவல் துணிவு அது (21) நில்லாது இயங்கும் உலகத்தில், தன் புகழ், நிலைபெற நீடு வாழும் வாழ்வே வாழ்வு. அவ்வாழ்வு அடைதலே பிறவி நோக்கு! அப்பிறவி நோக்கை உணர்ந்தார் என்ன செய்தல் வேண்டும்? தன்னைத் தான் காதலிக்க வேண்டும். விரும்பிப் போற்ற வேண்டும்! இல்லையானால் பிறவி நோக்க மறவி ஆவான் அவன்! பிறவி நோக்கம் இயல்பாய் - எளிமையாய் - நிறைவேற எண்ணிய இயற்கை இறைமை, பொறி புலன்களை இந் நோக்கத்திற்குத் தகவே அமைத்துளது. கண்கள் இரண்டு! காதுகள் இரண்டு! கால்கள் இரண்டு! கைகள் இரண்டு! - இவை வெளிப்படையானவை மூக்குத் துளை இரண்டு! நாவுகள் இரண்டு! உண்ணாக்காம், அண்ணாக்கு, நாக்கு வாய்கள் இரண்டு! (மேல் வாய், கீழ் வாய்) உதடுகள் இரண்டு! (மேலுதடு, கீழுதடு) இமைகள் இரண்டு! (மேலிமை, கீழிமை) வெளியேறுற்றுவாய் இரண்டு! (நீர்வாய், மலவாய்) - இவை அகமும் புறமும் ஆனவை மூளை இரண்டு! (பெரு மூளை, சிறு மூளை) தொண்டைக் குழல் இரண்டு! (உணவுக் குழல், காற்றுக் குழல்) நுரையீரல் பகுதி இரண்டு! (வலப் பகுதி, இடப் பகுதி) குடல் இரண்டு! (பெருங்குடல், சிறுகுடல் (அ) மணிக்குடல்) சிறுநீரகம் இரண்டு! (வலப்பால், இடப்பால்) வித்து நிலை இரண்டு! (வலப்பால், இடப்பால்) - இவை அகமாய் அமைந்தவை இவற்றுள் பல உறுப்புகள் - பகுதிகள் - ஒன்றே இருந்தாலும் வாழமுடியும். ஆனாலும், இயற்கை இறைமை தன் பேரருட் பெருக்கால் ஒற்றைக்கு இரட்டையாய் வழங்கியுள்ளது! தன்னை உணர்ந்து, தன் பிறவிப்பேற்றை உணர்ந்து தன் பொறி புலன்களையும் இயல்செயல்களையும் போற்றிக் காத்துக் கொள்க என அருளியுள்ளது. இப்பேதை மாந்தன் - வருமுன்னர்க் காக்கும் அறிவு கொண்டிருந்தும் அவ்வறிவு இல்லாதவிலங்கு பறவை நீர்வாழி, சேற்று வாழியாகிய உயிர்களுக்கும் இழிந்து, தாழ்ந்து - ஒற்றைக்கு இரண்டடையாய் வாய்த்த வளங்களையும், அங்கணத்துள் கொட்டிய அமிழ்தம் (720) போல ஆக்கிக் கெடுகின்றானே தனக்குக் கேடாய்ப் - பிறர்க்குச் சுமையாய்ப் பிறவியைப் பாழாக்கு கின்றானே என்னும் பெரும் பரிவால் திருவள்ளுவப் பெருந்தகை, தன்னைத் தான் காக்கின் சினங்காக்க (305) யாகவா ராயினும் நாகாக்க (127) காக்க பொருளா அடக்கத்தை (122) பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் (132) கள்ளாமை காக்க தன் நெஞ்சு (281) குற்றமே காக்க (434) தற்காக்க (883) என்று காக்க காக்க என்று காக்கச் சொல்லியவர், இச் சொல்வகை போதாதென எண்ணினார் போலும் அதனால், உன்னை நீ காத்தால் போதாது, உன்னை நீ காதலி என்றார்! மாந்தன் நிலை பெற்று, நிலம் நிலை பெயரினும் தான்நிலை பெயரா நிலையுறுவதற்கு வள்ளுவர் காட்டிய வாழ்வியல் பேறு தன்னைத் தான் காதலன் ஆதல் என்பதாம் (209) இவ்வள்ளுவ நோக்கு எத்தகைய அடிமூலத்தில் இருந்து கிளர்ந்ததென எண்ணுக! தன்னைத் தான் காதலால் பேணுக! 6. வீடும் உலகும் தன்னைத்தான் காதலன் ஆதல் என்பதைக் கண்டோம். தன்னைத் தான் காதலன் ஆதல் சிறுநோக்கு அன்றோ! குறுநோக்கு அன்றோ! தன்னலம் கெட்டுப் பிறநலம் பேணல் அறநெறி எனப்படுமே அல்லாமல் தன்னலப் பேணியா அறக் காவலன் ஆவான்? என்னும் ஐயம் கிளைக்கும். தன்னைத்தான் காதலியான் பிறவிக்குப் பாழாய்ப் பிறர்க்குச் சுமையாய் ஆவான் எனின், தன்னைத்தான் காதலித்தல் (பணி கொண்டு நலமாக வாழ்தல்) பிறவிக்குப் பேறாய்ப், பிறர்க்குப் பாரம் இல்லானாய் இருக்க இயலும் அல்லவா! ஒவ்வொருவரும் தன்னை நலமாகப் போற்றிக் கொண்டு, பிறர்க்குப் பாரம் இல்லாராய் வாழ்ந்தால் அவர் வாழ்வு மட்டுமா? வீட்டு வாழ்வும், நாட்டு வாழ்வும் சிறக்குமே! உலகுக்கும் ஒருமித்த நலமாகுமே! ஒவ்வொருவரும் நலப் பாட்டில், தொழில் துறையில், பொருள் துறையில் அறிவியல் நிலையில் நன்றாக இருந்தால் உலக நலம் அது தானே! அதுதானே உலக நலத்தின் ஆணிவேர்! உலக இயக்கத்தின் அச்சாணி! தனித்தனி மாந்தர் நலம் பேணாக்கால் உலகுக்கு எப்படி நலமாம்.? அன்றியும் தன்னைத்தான் காதலனாக இருந்தால், அவனால் உலகம் என்ன பயன் எய்தும் என்பதைக் கூற அல்லவோ, முச்சீரால், அதனைக் கூறி, அடுத்த நாற்சீரால் அப்பயன் பாட்டை விளக்கினார் பெருநாவலர். அது, தன்னைத்தான் காதலன் ஆயின், எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் (209) என்பது. தன் நலத்தை விரும்பிக் காக்கும்போதுதான், பிறரும், தம் நலத்தை விரும்பத்தானே செய்வர் என்றும், அவர்க்குத் தீமை செய்தல் ஆகாது என்றும், எவ்வொரு வகையாலும் அவர்க்குத் தீமையானவற்றை நினைத்தலும் ஆகாது என்றும் தோன்றும். அவன் மனச்சான்று, அவன் தவறிச் செல்லுங்கால் இடித்துக் கூறாது விடாதே! தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ, மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) என்பது மனச்சான்றின் குத்தல் அன்றோ! எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை (317) என்பது உறுதிகொண்ட முடிவாகி விடும் அன்றோ! இன்சொல் ஒருவர் சொன்னால் தமக்கு இன்ப முண்டாகிறது என்பதை அறிந்து கொண்ட ஒருவர், பிறர் செவிக்கு இனிமை தராத சொல்லைச் சொல்வாரா? சொன்னால் மனச்சான்று குத்திக் குடையுமே! குடைய வேண்டுமே! வெளியே இருந்து குத்தும் கத்தியும் கணையும் செய்யும் கொடுமையினும் உள்ளிருத்து ஓயாது குத்தும் மனக்குத்தல் நொடிக்கு நொடித் தற்கொலை அன்றோ! ஆகவே; இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது (99) என்றார். தாம் துயர்ப்படாமல், வன்சொல் கேளாமல் இருக்க வேண்டும் என்று நின்று நினைபவர். பிறர்க்கும் அந்நினைவு உண்டுதானே என்று உணர்வர். அந்நிலைக்கு மாறாகப் பிறர் தம்மிடம் நடத்தலை விரும்பாத அவர், பிறரிடம் தாமும் அந் நிலையில் நடவாதிருக்க நினைவர்; முனைவர். ஒருகால் அந்நிலைக்கு மாறாகத் தாம் இருக்க நேரின் தம் மனச் சான்றால் இடிக்கவும் குற்றவும் பட்டு நொடி நொடியும் நோவர். அந்நோவு, மீண்டும் அந்நிலை ஒன்று தமக்கு வாராவாறு தற்காப்புச் செய்வர். இதனைத் திருவள்ளுவர், எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று (655) என்பார். யான் என்ன செய்துவிட்டேன் என்று தானே வருந்தும் செயலைச் செய்யாதிருப்பாயாக. அவ்வாறு தவற்றை ஒருகால் தன்னை மறந்து செய்துவிட்டதை உணர்ந்தால், மீண்டும் அத்தகு குற்றச் செயலைச் செய்யாதிருத்தலே உனக்கும் - பிறர்க்கும் உலகுக்கும் நலமாம் என்கிறார். வேறு வகையால் உலகோர் தேடிக்கொள்ளும் கழுவாய் எல்லாம் (பாவ நீக்கம் என்பனவெல்லாம்) வழுவாய் (குற்றமானவை) என்பது வள்ளுவர் உள்ளக நோக்காம். மெய்யான கழுவாய் ஈதே என உணர்ந்து விட்டால், வழுவாய் வாராது; வழுவாய்க்காக வருந்துதல் வாராது. எதிரி டையாக வழுவாய் புரியும் நிலையும் வாராது. இவ் வாழமிக்க கருத்தைத் திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று (157) என்றார். செய்யத் தகாத தீமையைத் தனக்குப் பிறர் செய்தார் எனினும், அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்குத் தான் வருந்தியவனாய் அறமல்லாத செயலைச் செய்யாதிருத்தல் இருபாலும் நன்மையாம். தான் தீமை செய்யாமல் இருந்தும் தீமை செய்வானுக்கும் அத் தீமை செய்தலால் அவனுக்குத் தீமையை மாறாகச் செய்யான். அத்தீமை செய்து அவனுக்குத் துயரும். அதனைச் செய்தேனே எனத் தனக்குத் துயரும், உணடாக்கிக் கொள்ளான் என இருபால் நலமும் இயற்கையால் இயைதலை இனிதின் அறிந்ததால் திருவள்ளுவர்க்குப் பின்வந்த சான்றோர் ஒருவர், தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன் எனத் தாம் சார்ந்த சமயச் சார்பு வழியில் வினைக் கொள்கையாக விரித்துக் கொண்டார்! இது நிற்க. திருவள்ளுவர் இதற்கு மேலாம் நிலையில் சென்று, கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் (312) என்றார். தன்னைத் தான் காதலித்தான், தனக்குத் தீமை செய்தானையும் காதலால் தழுவிக்கொண்டு கனிவு கூர்ந்து எடுத்துக்காட்டாக நிற்கும் நிலை இது! இப்படி ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோன் வாழ்வே எடுத்துக் காட்டாகி, உலகாகி அனைத்து உயிருமாகி - உயரும் வாழ்வாம்! அவன் வாழ்வே, அவன் குடும்பத்தை எடுத்துக்காட்டாக்கி, ஊரை எடுத்துக்காட்டாக்கி, நாட்டை எடுத்துக் காட்டாக்கி உலக எடுத்துக்காட்டாக இலங்குவதாம். இதனையே, முதுமையிலும் இளமை வீறு தரும் வாழ்வு என்றும், மனவி மக்களும் வினை செய்வாரும் உற்றார் உறவும் ஒருவருக்காக ஒருவர் வாழும் உவகை வாழ்வு என்றும், இத்தகும் ஊர்களில் வாழும் சான்றோர்களின் சான்றாண்மைச் சீரால் அரசும் அறத்தின் நிலைக்களமாகித் திகழும் என்றும், மண்ணுலகிலேயே விண்ணுலக இன்பம் எய்தும் வாழ்வாகும் என்றும், வீடு பேற்று வாழ்வு என்பது அதுவே என்றும் பிசிராந்தையார் கண்டகாட்சியாக இலங்கிற்றாம். இவற்றால், வித்தில் இருந்து விளைவு காண்பது போல, வீட்டில் ஒரு தனியாளிடமிருந்து விரிந்து விரிந்து உலகமாகிச் சிறக்கும் செம்பொருள் பேராப் பெருநிலை வாழ்வே வள்ளுவ நோக்காகத் திகழ்ந்தது என்பது புலப்படும். புலப்படவே, இலையைக் கண்டு ஆயும் வெளிப்புற ஆய்வாக இல்லாமல் வேரைக் கண்டு ஆயும் அகப்புற அகழ்வு ஆய்வாவது வள்ளுவர் நோக்கு என்பது வெளிப்படு நுண்மையாய் விளங்கும். 7. வேள்வி அறநூல் அருளிய திருவள்ளுவர் தம் அறநூலில் வான்சிறப்பு என்றோர் அதிகாரம், முதல் அதிகாரத்தை அடுத்தே வைத்தது ஏன்? முப்பால் ஒழுக்கத்திற்கு வான்சிறப்புக் கூற வேண்டுவ தென்ன? வான்சிறப்பு, அறப்பொருளா? பொருட் பொருளா? இன்பப்பொருளா? என வினவின், மறுமொழி என்ன? திருவள்ளுவர் திருநோக்கு எவ்வொன்றையும் அடித்தளம் கண்டும் கொண்டும் ஆய்ந்து உறுதிப்படுத்துவதே என்பது தெளிவு. அவ்வகையில் மூலமுதலாக முப்பொருளுக்கு வாய்த்தது வானே (மழையே) என்று தேர்ந்தே வாழ்த்தை ஒட்டிய வாழ்த்தாக - சிறப்பு வாழ்த்தாக வைத்தார். வான் வறண்டால் உலகம் என்னாம்? உயிர்கள் என்னாம்? விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது (16) என்பது திருவள்ளுவம், புல்லே முளையாது - தலைகாட்டாது - எனின், மற்றைப் பூண்டு, செடிகொடி மரம் பயிர் வகைகள் தாமா தலைகாட்டும்? ஓரறிவு உயிர்களே தோன்றித்துலங்கா எனின் ஈரறிவு முதலாம் உயிரிகள் வாழவோ வாய்க்கும்? சுட்டெரிக்கும் எரியூடே எப்பயிர் - எவ்வுயிர் வாழும்? நிலத்திலும் நீரிலும் தோன்றும் உயிரிகள் நெருப்பிலே வாழவும் மாட்டா எனின், நெருப்பில் அவை பிறக்கவோ செய்யும்? புது மழை பொழிந்து பெரு வெள்ள நீர் கடலொடு கலக்காவிடின் கடலின் இயல்பும் கெட்டுவிடுமாமே? வான் நீர் வாராக்கால் கீழ்நீரும் ஓடும் நீரும் சுருங்கித் தானே போகும்? அந்நிலையில் கடல் நீரின் கடுப்பு மிகுந்து ஆங்கு வாழும் உயிர்களுக்கு அக்கடுப்புத் தாங்காமல் அழிவும் கலிப்பு இல்லாமையும் ஆகிவிடுமே! ஆதலால் நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (17) என்றது வள்ளுவம். கடல் நீர் வளம் குன்றிய அளவில் நிற்குமோ? மழையில்லை என்றால் மண்ணின் நீர்மை கெடுதல் உறுதிதானே! மழை இல்லை எனின் உழவேது, விதைப்பு ஏது, விளைவு ஏது? இவையில்லாக்கால், தானமேது, தவமேது? இனி, இவ் வெல்லாமும் இல்லா மண்ணில் பூசையோ விழாவோ நிகழக் கூடுமா? எல்லாமும் இல்லை என்பது தானே பொருள்? பெய்யாமல் கெடுப்பது ஒன்றுதானா, மழையின் கேடு? அது பெய்து கெடுக்குங் கேட்டை எவரே அறியார்? ஆற்றங்கரையை அழிக்கும் ஆறு, ஊரே இருந்த தடம் இல்லாமல் அழிப்பது இல்லையா? ஏன் நாட்டையே விழுங்கி ஏப்பமிடும் நிலையும் இல்லாமலா போகின்றது? மழை பெய்தலை விரும்பிக் கிடக்கும் உழவனும், மழை பெய்யும் போது ஓடிப்போய் ஒதுக்கிடம் காணவே துடிப்பான் அல்லவா! மண்டை வெடிக்க, கால் பொடிக்க வைக்கும் கோடை வெயிலுக்கு ஒடிஒளியாத ஓட்டம், சடசட என்னும் நான்கு மழைத்துளிக்கு உண்டாகி விடுகின்றதே! மழை பெய்தால் ஊரே ஒடுங்குகின்றது! வினையாம் செயலும் முடங்குகின்றது! அடை மழை பெய்தால் கேட்க வேண்டுமா? அழுகை மூஞ்சிக்குத் திருமணமாம்! விடிய விடிய அடைமழையாம் எனப் பழமொழியே உண்டாயிற்று. ஏன்? மழை பெய்தல் சொகின (சகுன)த் தடையாகவும், கண் மூடித்தனத்தால் கற்பிக்கவும் பட்டது. மழையை மங்கல வாழ்த்தாகக் காட்டியது சிலப்பதிகாரம், கடவுள் வாழ்த்தாகக் காட்டிய பேறும் அதற்கு உண்டு. மழை இன்பம் என ஒன்றற்கு மூன்று பாட்டுக் காட்டியது பெருந் தொகை. மழையின் பயனின்பத்தை மழைத்தது என அமிழ்து பாடிய பாவேந்தர் காட்டினார். முகிலின் கருநிறத்தையும், மின்னல் ஒளியையும், கடிய இடி ஒலியையும் கொண்டு காளியைக் கண்டனர். இடி மின்னலின் பின்னே கொட்டிய மழையிலே மாரி யைக் கண்டனர்! காளியும் மாரியும் காப்புக் கடவுள் என்பதை உணர்ந்து போற்றி வழிபாடு செய்தனர்! மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை என்றனர்! மழையின்றி மாநிலத்தார்க்கு என்ன இல்லை? என எண்ணிய வள்ளுவர் உயிர்வகை எவையும் இல்லை என்றார். பயிர் வகை உண்டா? அவையும் உயிர்வகை தாமே! உயிர்வகை எவையும் இல்லை என்றால் எந்தப்பயிர் வகைதான் உண்டு? புல்லா பூண்டா, கிழங்கா கீரையா, செடியா கொடியா, மரமா மட்டையா எவையுண்டு? ஓரறிவு உயிரியாம் பயிர் வகையே இல்லாக்கால். ஈரறிவு முதலாம் உயிரிகளாகிய புழு, பூச்சி, ஈயல், எறும்பு, நண்டு, நத்தை, உடும்பு, ஒந்தி, பாம்பு, பல்லி, பறவை, பார்ப்பு, கன்று, காலி, குரங்கு குட்டி, மாக்கள் மக்கள் உண்டா? இவையெல்லாம் மழையில்லையேல் இல்லை என்பதற் காகவா இன்றியமையாச் சிறப்பினதென வான் சிறப்புப் பாடினார் வள்ளுவர். அறம் பாட வந்தவர்க்கு, மழையைப் பாடுதலா அறம்? அதனை வாழ்த்தின் பயன் என்ன? பழிப்பின் பயன் என்ன? வாழ்த்தினார்க்கு மிகவும், பழித்தார்க்குக் குறையவும் தருமோ அது? மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? என வினாவுமே கபிலரகவல். மழையைப் பாடும் வள்ளுவ நோக்கு அழகியது! ஆழமிக்கது! ஒழுக்கம் என்பது நீர் ஒழுக்கத்தையே முதற்கண் குறித்தது. அவ்வொழுக்கமே நடையொழுக்கத்திற்கு உவமை ஆகியது, நீரில் இருந்து தோன்றிய பண்பே நீர்மை! நீர் செல்லும் வழியும், வழியே! அது செல்லும் ஆறும் வழியே! அது செல்லும் நெறியும் வழியே! நல் வழி, நீதி நெறி, நன்னெறி ஆகிய நூல்கள் அற நூல்கள் அல்லவோ! அறத்தாறு, புறத்தாறு, ஒழுக்காறு, இழுக்காறு,. ஆகரறு, போகரறு ஆகிய ஆறுகள் வழிகள் தாமே! மேனின்று தூயதாய் ஒழுரும் அமிழ்த மழையே ஒழுக்கம்! அவ்வொழுக்கமே மண்ணின் ஒழுக்க மூலம்! ஒழுக்க நீரை மாசு ஆக்காமை தலையாய ஒழுக்கம்! அவ்வொழுக்கமே உலகம் உய்யச் செய்யும் ஒப்புரவு ஒழுக்கம் என்பதை உலகுக்குக் காட்டவே, நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வரனின் றமையா தொழுக்கு (20) என்றார். ஒழுக்கு என்பது வான் ஒழுக்கத்திற்கும், வாழ்வு, ஒழுக்கத்திற்கும் அமைந்த இரட்டுறல் (சிலேடை). இதனை, ஒப்புரவறிதலில் தலைப்பாட்டாகக், கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு (211) என்றார். இயற்கையைப் பேணிக்காத்து ஆளும் நல்லரசு வாய்த்தால் முறைமை சிறக்கும். மழை வளமும் விளைவு வளமும் மல்கும் என்று செங்கோன்மையில் கூறினார், இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு (545) என்பது அது. அன்பொத்த இன்பத்தில் திளைக்கும் இல்வாழ்க்கை வானம் பார்த்து நிற்கும் வளர் பயிர்க்கு மழை பொழிவது போன்றது என்பதை, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (1192) என்றார். ஒழுக்கமாய்த் தோன்றி, ஒழுக்கமாய் நடந்து, ஒழுக்கத்தைக் காத்து, ஒழுக்கத்தை வழிவழியாக வளர்ப்பதற்கு வானொழுக்கச் சிறப்பே அடி மூலம் என்பதால் இறைமையை அடுத்தே வைத்தார். வான் சிறப்பு வாய்த்துச் சிறக்க இயற்கையைப் பேணிக் காக்கும் ஈடிலா அறவேள்வியே வேள்வி என்றும், மற்றை மற்றைப் புலை கொலை வேள்விகள் வேள்விகள் ஆகா என்றும் அவை மழை பெய்விக்கமாட்டா என்றும் குறிப்பாக உணர்தினார். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று (259) என்றும், ஒன்றாக நல்லது கொல்லாமை என்றும், கொலைவினைஞர் ஆகிய மாக்கள் புலைவினைஞர் என்றும் மறுத்துக் கூறிய திருவள்ளுவர், அந்நெறியை அப்பாலுக்கு அப்பாலாய் அகற்றி, இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன். ((87) என்றார். பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் (88) என்றும் அடுத்தே வைத்தார்! விருந்தே வேள்வி - பசித்தீக்கு உணவளிப்பதே வேள்வி என்று புரட்சிப் பார்வை பார்த்தார்! பசித் தீ பற்றி எரிவார்க்கு, உணவருளும் வேள்வியை விடுத்து, வைத்ததை எல்லாம் எரித்தும் வயிற்றுத் தேவை வாழ்வுத் தேவை - அறியாத் தீயில் உண்டியும் நெய்யும் பெய்தும் ஆவதென்ன? எண்ணித் தெளிந்து மன்னுயிர் வாழ மனங் கொள்ளுக என்பது, மாண்புமிகு வள்ளுவ ஒழுக்க வேள்வி நோக்காம். 8. தற்காவல் இல்லறம் துறவறம் என ஈரறங்கள் சொல்லப்படுவதுண்டு. ஆனால், மன அறங்கண்ட வள்ளுவர் மண அறத்தைப் பகுத்தாரா? இல்லை! இல்லறமே அவர்கண்டது! துறவு என்பது ஒரு நிலை! இல்லற மேல்நிலை! இன்பம் என்றால், எப்படியும் இன்பத்தைக் கொள்ளலாமா? எதையும் இன்பம் எனக் கொள்ளலாமா? அறத்தான் வருவதே இன்பம் என்றவர் வள்ளுவர். அறத்திற்கு மாறான - புறம்பான - வழிகளில் அடைவன எல்லாம், பெறுவன எல்லாம் இன்பம் ஆகா என அற இன்பம் உரைத்தார் அவர். அவ்வற இன்பம் என்பதை, அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (49) என்று வெளிப்படுத்தினார். இயல்பினால் அமைந்த இல்வாழ்வே எவ்வறத்தினும் தலையாம் அறம் என்பதை வலியுறுத்தினார். (46, 47, 48) இல்வாழ்வை அறமாகக் கண்ட பொய்யாமொழியார், துறவு என்றோர் அதிகாரம் வைத்தார். அதில் மனையைத் துறக்கக் கூறினாரா? மனைவியைத் துறக்கக் கூறினாரா? மக்களைத் துறக்கக் கூறினாரா? பிற பிற வளங்களை வாய்ப்புகளைத் துறக்கத் கூறினாரா? உள்ளத்தில் ஒளி செய்யும் உயர்துறவை அன்றி, அயலொரு துறவைக் கூறினாரா? எது எது வேண்டா என்று விலக்குகின்றோமோ அதில் அதில் இருந்து நமக்குத் துன்பம் இல்லை என்கிறார். அவ்வாறானால் துன்பம் தருவன எவை எவையோ, அவற்றை ஒழித்தால், அவற்றால் ஆகும் துன்பமில்லை என்கிறார். புகைப்பதை விட்டால், புகைய வேண்டாவே! குடியை விட்டால், குடி கெட வேண்டாவே! மிகை ஊண் விட்டால், பகையூண் இல்லையே! விஞ்சிய செலவை விட்டால், அஞ்சுதலும் கெஞ்சுதலும் வஞ்சித்தலும் வேண்டாவே! தேவையைச் சுருக்கச் சுருக்க இன்பமும், நலமும் தேடித் தேடி வருமே! துறவு நெஞ்சம் எப்பொழுது வரவேண்டும்? எல்லாம் இருக்கும் போதல்லவோ இது இது வேண்டா - இது இது தேவை இல்லை என எண்ணம் உண்டாதல் வேண்டும்! இல்லாமையால் கொள்ளும் துறவு நாட்டம், வலிய நாட்டமா? வாய்த்த நாட்டமா? அப்படி இருந்தும் துறவாரும் உளரே! அவர் நிலையைக் கண்டு வள்ளுவர் நெஞ்சம் நல்குரவில் நலிவொடும் கூறியது. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்பது அது. எல்லா வளமும் வாய்ப்பும், கொட்டியும் குவித்தும் கிடக்கும் போது, தேவையைச் சுருக்கி எளிவந்த இறைமை கொள்ளல் வேண்டும்! அப்படிக் கொண்டால் அத்துறவு செயற்கையாகத் தோன்றாமல், இயற்கையாகவே அமைந்து விடும் (342). செய்குன்று, செய்குன்று தானே! செங்கோடு, செங்கோடு தானே! துறவு செயற்கையாகத் தோன்றாமல், இயற்கையாகத் திகழ வேண்டுமானால், எல்லாமும் உள்ள போதில் தள்ளுவ தள்ள வேண்டும்! புத்தரைத் தூண்டியவர் எவர்? அவர் நெஞ்சம்! இளங்கோவைத் தூண்டியது எது? அவர் நெஞ்சம் இவர்கள் கோமுடிக் குரியவர்கள் அல்லரோ! அவ்வாறு ஏன் பலரால் மேற்கொள்ள இயலவில்லை! பொறி புலன்களை அடக்கிக் காக்கும் உறுதி பலர்பலர்க்கு இல்லை! அவற்றை அடக்கிக் காக்கும் பேருறுதி சிலர் சிலர்க்கே உள்ளது, இது வள்ளுவ வாய்மை. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்; பலர் நோலா தவர் (270) நோன்பு என்பது என்ன? உறுதிப்பாடு, வலிமை! யாகாவார் ஆயினும் ஆக! நாவேனும் காக்க என்றாரே நாவலர்! அதனைக் காவாமல் தானே அதிரவரும் நோய்க்கு ஆட்படல் உண்டு! யாம் இனியர் (இனிப்பு நோயர்) என நோயால் மருந்துக்கும் ஊசிக்கும் வாழ்வார் உண்டு! நா காத்தல் சொல்லுக்கு மட்டுமில்லை; சுவைக்கும் தான் என்று கொண்டிருந்தால் - கண்டிருந்தால்- இத்துயர் இல்லையே! கல்லார்க்கு மட்டுமே வரும் நோயே இதுவா? தெளிவு இல்லார்க்கு என்றே வரும் நோயே இதுவே? அறிவாற்றலும் ஆளுமைத் திறமும் உடைய எத்துணைப் பேர் இனிப்பர் வகையில் உள்ளனர்? ஏன், நாகாக்க இயலவில்லை! விளைவு என்ன? நாளும் நாகாவாமை! நாளும் மருந்தர் நிலை! நடமாடும் மருந்தகமாவதா நம் பிறப்பின் நோக்கு? எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்று எல்லா உயிர்களின் பிறவி நோக்கும், போக்கும் இன்பமே என்று தொல்காப்பியர் ஆணையிட்டும் என்ன! அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு (343) என்று வள்ளுவர் வல்லாங்கு சொல்லியும் என்ன? தெரியாதவர் இல்லை - தெரிந்தவரே - தெளிந்தவரே ஆட்படுதல், சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? என்று சொல்லவே ஆகின்றது. காம்பில மூழை போலக் (கணையில்லா அகப்பை போல) கருதிற்றே முகக்க மாட்டேன் என்று அப்பரடிகள் அறைந்ததே நினைவில் எழுகின்றது. இயல்பான துறவு நாட்டம் எற்பட்டுவிட்டால் இல்லாமையே உடைமையாகி விடும்! எத்துணை அரிய செய்தி இது! இல்லாமையே உடைமை ஆகும் நிலை (344) வேண்டாமையே விழுச்செல்வம் ஆகும் நிலை (363) மனத்துறவால் ஏற்படும் என்றால், அதனினும் பெரியது எது? மணவாத் துறவு மேற்கொண்டும் என்ன? மணந்து துறவு மேற்கொண்டும் என்ன? வீட்டுக்கு வெளியேறியும் என்ன? காட்டுக்குக் குடிபுகுந்தும் என்ன? எத்தனை எத்தனை கோலம் கொண்டும் என்ன? எத்தனை எத்தனை கொள்கை பறைந்தும் என்ன? மனத்துறவு கொள்ளார், கொண்ட பிற துறவுகள் எல்லாம் துறவுகள் அல்ல! அத்துறவு வாய்த்தால், நான் என்பது என்ன? எனது என்பது என்ன? துயர் என்பது என்ன? பிறப்பு என்பது என்ன? விடு என்பது என்ன? உலகியல் என்பது தான் என்ன? அவன் உடம்பும் அவனுக்கு மிகை! உடற்சுமை என்பதே ஒன்று இல்லான், அயற்சுமையென ஒன்று கொள்வானா? பேராப் பெருநிலைக்கு ஆட்பட்டவன் பேரும் நிலைகளில் பேரையோ வைக்க விழைவான்! பற்றற்றான் அவன்! தற்பற்று அற்றான் ஆகிய அவனும், அதனை மேலும் மேலும் வலுவாக்கிக் கொள்ளத் தன்னினும் பற்றற்றானையே பற்றிக் கொள்வான்! (345-50) வள்ளுவம் காட்டும் வளத்துறவு - உளத்துறவு! அவ்வுளத் துறவே, வளத்துறவு! இல்லாமையையே உள்ளதாய் ஆக்கம் உயர்துறவு! 9. துணை நலம் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர் என்னும் பதவிப் பெயர்கள் பெருக வழங்குகின்றன. தலைவர் செயலர்களினும் துணை எனப்படுவார் அடுத்துச் சற்றே குறைந்த பதவியராக எண்ணவும் படுகின்றார். இவ்வெண்ணம் பொது வாழ்வில் பெருக்கமாக நிலவுவதால் துணை என்பதைத் தாழ்வாகக் கருதும் கருத்தாளர் உருவாயினர். துணைக்குத் தாழ்வுப் பொருள் கொள்ள வள்ளுவம் கற்றார் அறியார். துணை, ஒப்புப் பொருளது. இணை என்பது போல, பிணை என்பது போல ஒப்புப் பொருளதே. துணை என்பதற்கு ஒப்புப் பொருள் பாராது, தாழ்வுப் பொருள் பார்க்கும் பார்வையால், திருவள்ளுவர் பெண்ணைத் தாழ்த்தினார் எனப் பெண் பிறவியரும் பேசும் நிலைமை காலக் கேட்டாலும் கருத்துக் கேட்டாலும் உண்டாகியது. கடவுள் துணை, இறைவன் துணை, அன்பே துணை என்னும் போது தாழ்வுப் பார்வை உண்டா? பெரியாரைத் துணைக் கோடல் என்பதில் தாழ்வுப் பார்வைக்கு இடமுண்டா? துணையோடல்லது நெடுவழிபோகேல் என்பது போலவோ நெஞ்சத் துணை என்பது போலவோ வழங்கும் வழக்குகளில் தாழ்வு நிலை உண்டோ? தொண்டலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே என்பதில் துணை தாழுமா? உள்ளத்தில் ஒரு நோக்கு வைத்துக் கொண்டு அதனைக் காணும் காட்சியில் ஓடவிட்டால், அவ்வுள்ள நோக்குத் தானே தலை நீட்டும்! திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றாரே அன்றித் துணைவி நலம் என்றாரா? துணைவன் நலம் என்றாவது சொன்னாரா? துணைவி, துணைவன் என விரித்துக் கூறவில்லை ஏன்? அவளுக்கு அவன் துணை; அவனுக்கு அவள் துணை; துணை களுள் உயர்வு தாழ்வு இல்லை! இணைப் பொருளே உண்டு! என்பதே விளக்கம். துறந்தார் பெருமை துணைக் கூறின் (22) விருந்தின் துணைத் துணை (87) பனைத்துணை, தினைத் துணை (104, 433, 1282) துணையை ஒப்பளவுப் பொருளில் திருவள்ளுவரே வழங்குவன இவை அல்லவா! வாழ்க்கைத் துணை என்று மனைவியைத்தானே திருவள்ளுவர் சொல்கிறார் என்று மறுத்துரைக்க முந்துவார் உண்டே! இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (41) துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை (42) என்றும் கூறினாரே! அவனைத்தானே இவ்விடங்களில் துணையாகக் கூறுகிறார். அது தாழ்வாகி விடுமா? ஒருவருக்கு ஒருவர் (கணவனும் மனைவியும்) துணையாக (உதவியாக) வாழ்வதுதானே வாழ்வு! அவ்வாறு நலமமைந்த வாழ்வுதானே, வாழ்வார்க்கு வானம் பயந்த வாழ்வு (உழுவார்க்கு மழைபொழிந்த வாழ்வு) 1234. உதவி என்பதும் துணையாவதே! மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (70). நன்றியும் ஆவதே! செய்யாமற் செய்த உதவி (101). துணை ஒப்புப் பொருள் ஆவதை அவள் அவனைத் தன் துணை என்று கூறுவதன் வழியாகத் திருவள்ளுவர் புலப் படுத்துகிறார். அது, பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் என்பது (1234). துன்பத்திற்கு யாரே துணையாவார்? என்று தம் நெஞ்சத் துணையும் தம்மொடு நில்லாத நிலையில் விரும்பி நிற்பார்க்குத் தம்மினும் கூடத் தம் துணை உயர்வாகி விடுதல் கண்கூடாம். அது பால் கடந்த மேல் நிலைப் பாற்பட்டதாம்! அவனுக்கு, அவள் மேல்; அவளுக்கு, அவன் மேல்! அம்மேல் நிலை ஒன்றாகி உடனாகி நிற்கும் நிலை! ஈருயிரும் ஓருயிராம் நிலை! தானே அதுவாய், அதுவேதானாம் உயிர்க் காதல் நிலை! மாறிப் புகுதல் உண்டு. அது அன்புயிர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை! மாறிப் புகுந்து மகிழும் நிலை அதுபெறும் இன்பும், துன்பும் தான் பெறும் இன்பு துன்பாய்த் திகழும் தாய்மைத் தெய்வத் தூய்மை நிலை! உறங்கும் நிலையில் இருவராய் இருப்பினும் விழிக்கும் நிலையில் ஒருவருக்கொருவர் நெஞ்சத்தராகிவிடும் நேயப் பெருநிலை. அந்நிலையில் அவன் நினைவாக அவள் எழுதலும், அவள் நினைவாக அவன் எழுதலும் உயர்வு தாழ்வற்ற உயிர்ம்மைக் காட்சி! அவள், அந்நிலையில் அவனுக்குப் பெய்யெனப் பெய்யும் மழையாகிறாள். அவன், அவளுக்குப் பெய்யெனப் பெய்யும் மழையாகிறான். இவ் விரண்டற்ற ஒருமை நிலையே அவர்களை, வீழ்வார்க்கு வீழ்வார் (விரும்புவார்க்கு விரும்புவார்) ஆக்கி வைக்கின்றது. வீழ்வார் என்னும் இரண்டுள்ளும் பால் பொதுமைதானே திகழ்கின்றது! வீழ்வாளுக்கு வீழ்வான் என்றோ, விழ்வானுக்கு வீழ்வாள் என்றோ சொல்லாத திட்பம் நனிநயம் மிக்கதாம்! உடலால் ஆண் தோற்றம் ஆகலாம்; பெண்தோற்றம் ஆகலாம்! உயிரால் ஆண் தோற்றம் பெண் தோற்றம் உண்டா? உயிர்க்குப் பால் வேறுபாடு இல்லை என்றால் உயிரொத்த காதல் வாழ்வில் உயர்வு தாழ்வு உண்டா? உண்டாகலாமா? உண்டானால் உயிர் ஒத்த காதல் எனப்படுமா? முப்பால்களிலும் பெண்ணின் பெருமை பேசியவர் திருவள்ளுவர், (54, 907, 1137) தந்தையை ஓரிடத்தில் கூறியமைந்த திருவள்ளுவர் (67) தாயை நாலிடங்களில் நனி பெருஞ்சிறப்பாக நவின்றார் (69, 656, 923, 1047) மனைவியைப் பொருள் என்கிறாரே திருவள்ளுவர்! அது பெண்ணை இழிவுபடுத்துதல் இல்லையா என்பார்! அவர் ஓரப்பார்வையர். செல்வம், முத்து, மணி, வயிரம், பொன், தங்கம் என்றெல்லாம் பெயரிட்டுப் பெருமையுறப் பாராட்டும் நாவாலேயே பொருள் இழிவு என்கிறாரே! தம்பொருள் என்ப தம் மக்கள் என்பதைப் படியாமல் பேசுகிறாரே! பொருட்டாக எண்ணப்படுதலே பொருள்வழியாக வருவது என்பதைப் புரிந்தும் புரியாமல் புகல்கிறாரே! இன்னும் என்ன? பெருங்கனிவால். பெண்மையைப் பேணிக்காக்கும் காப்பே பிறனில் வழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் என்வவை என அறிதல் வேண்டும். பிறன் கடை நின்றான் அறன்கடை நின்றான் இது பெண்மைப் பழிப்பா? இல்வாழ்விலோ இன்பப் பாலிலோ இடம் பெறாதவை பெண்வழிச் சேறலும் வரைவின் மகளிரும். கள், சூது என்பவற்றின் முன்னுள்ளவை. அவள், மனப் பெண்டும் அல்லள்! மணப்பெண்டும் அல்லள்! ஆண் கயமைப் பிறவியன்ன, பெண்கயமைப் பிறவியர். வரைவு என்பது கட்டு; கட்டுப்பாடு; கட்டொழுங்கு; எல்லை; இவற்றை இல்லாப் பிறவியர் வரைவின் மகளிர் எனப்பட்டார். அவரை எடுத்துக்காட்டாக்கி வாழ்தல் கூடாது என்பாராய், எடுத்துக்காட்டாகக் கொள்ளத் தக்காரை, ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (974) என நல்லுரை நவின்றார் நாவலர். கட்டமைந்து ஒரு முகப்பட்ட பெண்போல நீயும் உன்னைக் காத்துக் கொண்டால், உனக்கும் பெருமை உண்டு என்று பேசிய பெருமை நிலைக்களம் அது. புதுமைப்பெண் என்னும் பாரதியியமும், குறளோவியம் குடும்ப விளக்கு என்னும் பாவேந்தரியமும், பெண்ணின் பெருமை என்னும் திரு.வி.க. இயமும் பெண்மதிமாலை முதலாம் வேதநாயகரியமும் கோதைத் தீவு முதலாம் பெண்ணியப் படைப்புகளும் தந்தை பெரியார் முதலாம் பெருமக்கள் பெண்ணிய உழைப்புகளும் வள்ளுவ ஞாயிற்றின் ஒளிக்கதிர்களாகக் கிளர்ந்தவை என்பதை நோக்குடையார் நோக்குவாராக! 10. எச்சம் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்பது வள்ளலார் வாக்கு. மரபு நிலை திரியா மாட்சி என்பது தொல்காப்பியம். அன்றும் இன்றும் ஏன்? என்றும், பண்புடையவர்களால் தான் உலகம் உய்கிறது என்பது வரலாறு; வாழ்வு. பண்பாடும் சான்றாண்மையுமே உலகங் காக்கும் தெய்வக் குணங்கள். பண்புடையார்ப் பட்டுண் டுலகம் என்பதும், உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பதும் நம் முந்தையர் மொழிகள். வழிவழியாகப் பழிதீர் உலகக் காவலராய் வருவார், எங்கு வருவார்? தவத்தராயின் என், துறவர் ஆயின் என், சித்தர் ஆயின் என், அறிவர் அயின் என், அந்தண்மையர் ஆயின் என், ஈகர் ஆயின் என்? அவரெல்லாம் இல்லறக் கால்முளைகளேயாம்! ஆதலால், மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு (60) என்றார் பொய்யாமொழியார். மக்கட்பேறு என்பது பால் பொதுமையது, ஆண்பாலா பெண்பாலா என்று சுட்டாமல் பொதுமையுரைப்பது அது, பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (61) என்பதில் வரும் மக்கட்பேறு அது. மக்கள் என்பார் நன்மக்கள் என்றவர் அறிவறிந்த மக்கள் என்றும் சுட்டினார். அம்மட்டோ? அம்மக்கள் பழிபிறங்காப் பண்புடை மக்கள் என்றும் குறித்தார். அம்மக்கள், ஒரு பெற்றோர் பெற்ற மக்கள் எனினும், அவர் பேருலக நலனுக்குப் பிறந்தவர் என்பதைத், தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68) என்றார். ஆக, உலக நலங்கருதிய மக்கட்பேறே உயர் மக்கட்பேறு என்பது வள்ளுவம். அம் மக்கள் உலக நலங்கருதியவர் எனின். பெற்றோர் நலமோ, உற்றார் நலமோ, ஊர் நலமோ, நாட்டு நலமோ கருதார் என்பதன்று! வள்ளுவம், தன்னில் இருந்து தோன்றி உலகாக வளரும் வளர்ச்சியே சீரிய செவ்விய நேரிய வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டது. மக்கட் பேற்றின் மாண்பை இவ்வாறு மகிழ்ந்துரைக்கும் வள்ளுவம் மக்கட்பேறு இல்லாமையைப் பழியாகக் கருதாது. மக்கட் பேறு இல்லாமை ஏன்? ஆண் மக்கள் இல்லாமை கீழா நரகத்துச் சேர்க்கும் என்னும் கீழானவுரை உரையாது! அது உடற்கூறு பற்றியது. உறவு நிலை பற்றியது. அறம், பாவம் பற்றிய தன்று! என்பது வள்ளுவ உட்கிடை. மக்கட்பேறு இல்லாமை மாப்பழி என்னும் கருத்து இம்மண்ணில் ஊடாடியது. அதனால், மகப்பேறு பெற்றபின் வடக்கிருக்கும் என்னோடு வந்து இரு என்று வடக்கிருக்க வந்த புலவனை அனுப்பிவிட உறையூர்ச் சோழன் சொல்லிய சொல் புறநானூற்றில் உண்டு. களப்போர் புகுந்தாருள் மகப்பேறு பெறாதாரைக் களம் விட்டுச் செல்லுமாறு பறையறைந்த செய்தியும் புறப் பாடலில் உண்டு. மகப்பேறு இன்றேல் மாண்பு இல்லை என்னும் கருத்தின் ஊடாட்டம் இவை. திருவள்ளுவர் மக்கட் பேற்றை மதித்துப் போற்றியவர் எனினும், அம் மக்கட்பேறே மாண்பாவது எனக் கொண்டார் அல்லர். அவரவர் இயல் செயல் என்பவையே அம் மக்களினும் உயர் எச்சம் எனக் கண்டார். அவையே தனிப் பேரெச்சம் என்றும் கண்டார். இசை அல்லது புகழ் என்னும் எச்சம், என்றும் அழியா எச்சம்! என்றும் உலகில் அழியாத ஒன்றாகிய எச்சம் இசை எச்சமே என்றும் கூறினார். தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும் (114) வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின் (238) இன்னவற்றால் இசை எச்சத்திற்கு இணை எச்சம் இல்லை என்னும் வள்ளுவம் பளிச்சிடத் தோன்றும்! எத்தனை எத்தனை உயர்சான்றோர், உயர்அறிஞர், உயர் வண்மையர், உயர் சிந்தனையர், உயர் படைப்பாளர் உலக வரலாற்றில் இடம் பெற்றுளர் அவர்கள் அனைவரும் மக்கட் பேறு பெற்றதாலா அப்புகழ் பெற்றனர்? அவருள் மக்கட்பேறு பெறாதவர் எத்தனை எத்தனை பேர்கள்? மக்கட்பேறு பெற்றும், அம்மக்கட்பேறு துயருக்கும் - துன்புக்கும் இழிவுக்கும் - பழிவுக்கும் இடமாகியிருந்தும் அவையெல்லாம் இருந்த தடமும் இல்லாமல் மறைந்து மாய, அப்பெருமக்களின் புகழெச்சம் புவியெச்சமாய் வரலாற்றில் திகழக் காண்கிறோமே! இவற்றால் மக்கட்பேறு இல்லாமை குறையன்று என்பதும், பழிநிரயத்திற்கு உட்படுத்துவது அன்று என்பதும் வள்ளுவ நோக்காதல் விளங்கும். பொறாமை, அடங்காமை, பிறன்மனை நயத்தல், ஊன் உண்ணல் இன்னவை எரி பழி சேர்க்குமே அன்றி, மக்கட்பேறு இல்லாமை எரி பழி சேராது என்று கூறிய விரிவு வள்ளுவத்தில் பெரிதாம்! அறிவன், ஆசான், கொடைஞன், மூத்தான், உற்றுழி உதவியோன் இன்னவரெல்லாம் தந்தையென எண்ணிய எண்ணுதல் தமிழ்மரபில் உண்டு. பெற்றால்தான் பிள்ளையா? என்னும் பெருமொழியும் தமிழ் மண்ணில் வழங்கும் ஈன்றாள், வளர்த்தாள்,. பாலூட்டினாள், ஓலாட்டினாள். உதவினாள், மூத்தாள் எனத் தாயரும் எண்ணப்படுதல் வழக்கே! இவற்றை எண்ணினால், எல்லாரும் இன்புற்றிருக்க வாழ்தல், எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடையவராய் உவத்தல் என்னும் எச்சமே வாழ்வின் எச்சமாதல் விளங்கும்! புத்தர் பெருமானுக்கு எச்சம் துணையா? மகனா? புத்தமே அன்றோ! கிறித்து பெருமானின் எச்சம் சிலுவைப்பாட்டின் வழி உண்டாய கிறித்தவமே அன்றோ! வள்ளற் பெருமானார் எச்சம் அருளாட்சியே அன்றோ! வள்ளுவர் வைத்துச் சென்ற எச்சம் மனையா? மக்களா? கட்டடமா? நிலபுலங்களா? நம்மறையாம் வள்ளுவமே அன்றோ! இன்ன பெருந்தகையரின் எச்சங்களை எண்ணுவார் மக்கள் எச்சம் இல்லாமை மாப்பழி எச்சம் என மனங்கொளார் என்பதும், வள்ளுவ நோக்கு வையக வாழ்வியல் பெரு நோக்கினது என்பதும் புலப்படும்! 11. பிறப்பொப்பு ஊன் உடம்பு ஆலயம் என மந்திர மொழி மொழிந்த மண் இம்மண்! ஊன் உடம்பு உடையவை இயங்கு உயிர்கள்! இவையெல்லாம் ஆலயம் என்ற மண்ணில் பிறப்பு வேற்றுமை புகுந்தது! நிலை உயிராம் மரம் செடி கொடியும், தெய்வத் திருக்கோயிலாக் கண்டதும் இம் மண்! ஆம்! நிலைத்திணை யுயிர்களிலும் இறைமை உண்டு எனக் கண்டது அது! அம்மட்டோ? அருவியும் ஆறும், ஏரியும் குளமும், காலும் கடலும் கல்லும் மண்ணும் பொன்னும் பொருளும், இறையுறை யுளாகவும் இறை யாகவும் கண்டதும் இம்மண்! மழை வழிபாடு தானே, மாரி, காளி வழிபாடுகள்! வான் சிறப்பென்னும் தேன்சிறப்பு இறைமைக் காட்சி யல்லவோ! சுடரும் கதிரும், குளிரும் மதியும், ஒளிரும் தீயும் ஒளி வடிவ இறைமைக் காட்சி தானே! உருவிலா அருவாய் உள்ளகம் தளிர்ப்புறுத்தும் வளி யையும், அதன் மேலாம் பாழ் வெளி யையும் இறைமை எனக் கண்ட மண் என்பதன் பிழிசாறுதானே ஊனுடம்பு ஆலயம் என்னும் ஒப்பரிய மொழி. அவ்வூனுடம்பில் அரியதாம் மாந்தப் பிறவியை, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்னும் பாட்டி மொழி பகருமே! அம்மானுடப் பிறப்பையும் பிரித்து, உயர்வு தாழ்வு கற்பித்தும், அத் திருக் கோயிலாம் ஊனுடம்பு, திருக்கோயிலுள் நுழைதல் ஆகாது என விதித்தும், அக்கோயிற் கொடையாக காவாக - ஊனுடம்புகளை அலற அலறத் துடிக்கவும் குருதி ஆறாக வடிக்கவும் பலியூட்டும் பழியூட்டும், இம்மண்ணில் கால் கொண்டதே! பிறப்பிலே உயர்வு தாழ்வு - மேல்கீழ் பகுப்பு - அறத்திற்கோ அறிவுக்கோ அடாச் செயல் என்பது வெளிப்படத் தெரிந்தும், இன்றும் கூட உணராமலும் ஒப்பாமலும் மரத்துப் போயவர் உள்ளனரே! உரைப்பவர் உள்ளனரே! தாளம் போடு பவரும் தறிகெட்டு ஆடுபவரும் காணப்படுகின்றனரே! இக் கொடுமை இன்றா கிளர்ந்தது? புதிய நோயா இது? பழைமையில் பழைமையாய்ப் புகுந்து வாழும் நச்சு நோய் அல்லவோ! அந் நச்சு நோயின் நுண்ணுயிரி பரப்பப்படும் போதே, பரவி வரும் போதே, இளைதாக முள் மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து (879) என எச்சரிக்கை விடுத்திருந்தும், விழிப்புறச் செய்து பழிப்பற வாழ முழங்கியிருந்தும், கண்மூடியாகக் கிடந்து மண்மூடிப் போயொழிந்தனரே! அதன் கேடு, ஆயிரம் ஆயிரம் கேடாய்ச் சாதிமைப் புற்றாய், ஆடு மாட்டுப் பலியூட்டினும் ஏடு கொள்ளா இழி கொலைகளுக்கும், தீயூட்டுகளுக்கும், கொள்ளைகளுக்கும் ஆளாக்கி வருகின்றதே! ஆறாம் அறிவுக்கு ஏறிய பிறவி, எண்ணிப் பார்க்க வேண்டாவா? அவ் வறிவுப் பிறவியை மூளைச் சலவை செய்து முட்டிக்கொள்ள வைத்த முன்னைத் தன்னல மூளைப் பிறவியரையும், இந் நாளைக் கட்சி அரசியல் கயமைப் பிறவிய ரையும் ஒருங்கே காறித் துப்பியும், கழிசடையர் என ஒதுக்கியும் வாழ ஆறாம் அறிவுடையார்க் கேனும் திறனும் தெளிவும் தேர்ச்சியும் இல்லையா? கண்ணாரக் கண்டும் கல்லாய் இரும்பாய்க் கடு நஞ்சாய்க் கற்றவர் நெஞ்சம் இருக்க வேண்டுமா? கல்லேனும் ஒரு காலத்துருகும் என்று கரைந்தாரே தாயுமானவர்! கல்லார் மிக நல்லார் என்பதைக் காட்டுதற்கா கற்றோர் கல்வி பயன்பட வேண்டும்? அழிப்பாரும் ஒழிப்பாரும் கல்லாரும் கற்றாரும் என்றால், தூண்டியும் ஏவியும்விட்டு ஊனுடம்பு ஆலயத்தை உருக்குலைத்து உலையும் வைப்பார், கல்விச் செருக்கரும், கற்றோர் படையைக் கைந் நொடிப்பினும் கண்ணிமைப்பினும் கொண்டிருப்பவரும் தாமே! தொல்காப்பியர் நாளிலேயே, வடமொழியும் வடமொழி வழக்காறும் புகுந்தது. அறிவறிந்த அவர் அரண் வகுத்தார். செந்தமிழ் வழக்குக் காவலே எம் நூல் எனத் தேர்ந்து செய்தார். செந்தமிழ் நூல் வழக்கு மட்டுமன்று; செந்தமிழ் மக்கள் வழக்கும் காப்பதே எம் நோக்கு எனக் கொண்டார். மொழிக்காவலாகத், தமிழ் எழுத்துடன் பிறமொழி எழுத்தைச் சேர்க்காதே என்றார். பிறமொழிச் சொற்களை எழுதநேரின் தமிழ் மரபு கெடாமல் தமிழ் எழுத்திலேயே எழுது என்றார். இந் நெறிகள் பதினேழாம் நூற்றாண்டு வரையிலும் கூடச் செவ்வையாகப் போற்றப்பட்டன. கம்பரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடலாம்! கொண்டாடுகின்றனர்! ஆனால், அவர் செய்த மொழிக் காவலைக் காலில் போட்டு மிதித்துக் களிக்கின்றனரே! இராமன், இலக்குவன் என்றும் பெயர்களைக் கம்பர் ஓரிடத்தாவது இ கரம் இல்லாமல் சொல்லியது உண்டா? லக்ஷ்மண் என்பதை இலட்சுமணன் என்று கூட அவர் கூறவில்லையே! இலக்குமணனையும் இலக்குவன் ஆக்கித் தந்த படைப்பாளி அவர் என்பதை இப்பொழுதேனும் பார்த்து நடையிடக் கூடாதா? ஹிரண்யன் ஹிரண்யாட்சன் - கம்பர் பாடலில் இடம் பெற்ற வகை, பொன்னன், பொற்கண்ணன் என்பவை அல்லவா! கம்பரைப் பழிப்பார், இம் மொழி மரபுக் காவலைப் போற்றிக் கூற வேண்டாவா? குணம் நாடிக் குற்றமும் நாடல் ஆய்வு நெறியல்லவா! தமிழ் மண்ணின் வழக்காறு காக்கும் தொல்காப்பியத்திற்கு உரைகாரர்கள் தம் வடமொழிப் புலமையும், வடவர் வழக்கின் ஆர்வமும் உந்த உரை கண்டால் அவ்வுரை செவ்வுரையாமா? திருக்குறளுக்கு உரைப்பாயிரம் வரைய, ஆணிபிடிக்கும் பரிமேலழகர், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் என்று தொடங்குவதே அவருரை எவ்வழியில் நடையிடப் போகிறது என்பதை நாட்டி விடுகின்றது அல்லவோ! அவ்வாறே தொல்காப்பியர் கூறிய மண்ணியல் நெறியைப் போற்றாமல், அதற்கு மாறாக உரையாளர் உரை வரைந்தார் என்பது அகத்திணை இயல், புறத்திணை இயல், மரபியல் ஆகிவற்றில் வெட்ட வெளியாம்! இடைச் செருகல் மட்டும் இல்லை; தலைச் செருகல், கடைச் செருகல், விடுபாடு, சேர்பாடு என்பனவும் உண்டு! வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் என்னும் புறநானூற்று மொழிக்கு முற்படவே, தொல்காப் பியத்தில் இடம் பெற்றதாய்க் காட்டச் சான்று மரபியலாயிற்றே! தொல்காப்பியத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் பிறப்பு வேற்றுமை பேசப்பட்டு இருப்பினும் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் (972) என்னும் பெருநாவலர் பெரு நெறியைப் போற்றியிருப்பின் வேற்றுமைச் சாதிகளின் வேரும், வேரடி மண்ணும் தோண்டி அகற்றப்பட்டிருக்கும் அல்லவோ! உயர் திணை என்பது உயர் ஒழுக்கம் அஃறிணை என்பது அவ்வுயர்வில்லாத ஒழுக்கம் என இரண்டாகப் பகுக்கப் பட்டதே தமிழ் இலக்கணம்! திண்மையாம் கட்டொழுங்கே திணை எனப்பட்டது! திருவள்ளுவர் தேர்ந்து சொல்கின்றாரே: ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (133) என்று, வள்ளுவர் கண்ட குலமும் குடியும் பிறப்பு வழிப் பட்டனவா? குற்றம் செய்ய அஞ்சுவாரும், நாணுவாரும் உயர்குடியர் (957) நற்குடிப் பிறந்தான் என்பதன் சான்று அவன் சொல்லும் சொல் (959) நல்லவற்றில் பற்றில்லாதவன், பிறந்த குடி பெருமைக் குடி ஆகாது. (958) இகழாது ஈயும் ஈகையன் நற்குடிப் பிறந்தான் (223) குடி, குலம், சுற்றம், இனம் என்னும் சொற்களையன்றிச் சாதிமைச் சொல்லோ, சாதிமைச் சுட்டோ அற்றது வள்ளுவ நோக்கு . செல்வம், பதவி, கல்வி என்பவற்றில் ஒருவன் உயர்ந் திருப்பினும் உயர் ஒழுக்கம் இல்லான் நற்குடியாளன் அல்லன் என்பது வள்ளுவ உறுதிப்பாடு! மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் (973) என்பது காண்க. மேல் கீழ் சாதிப் பகுப்பன்று; ஒழுக்கப் பகுப்பு. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் எனக் கொடையால் உயர்வு தாழ்வு காணலும் காட்டலும் வள்ளுவ நோக்காகாது! கொள்ளையடித்தும் கொடுக்கலாமே! அவன் உயர் குலமாய்க் கொடிகட்டிப் பறக்கலாமே! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் (972) ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் (214) பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (134) உலகம் உய்ய ஒரு வழி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெருநெறி. அது பெரு நாவலர் பெருநோக்கில் கிளர்ந்த பொது நெறி நோக்கு. 12. தொழிலொப்பு பிறப்பு ஒக்கும் என்ற பெருநோக்குக் கண்டோம். அவர் சிறப்பு ஒவ்வா என்றாரே ஏன்? அச் சிறப்பு ஒவ்வாமைக்குக் காரணமும் அவரே காட்டினாரே, செய்தொழில் வேற்றுமை என்று. அவ்வாறானால் புகழ்த் தொழில், பழித் தொழில் எனத் தொழில்களுள் உண்டா? பண்புகளுள், உயர்பண்பு இழிபண்பு என உண்டேயன்றிச் செய் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. அதில் உயர்வு தாழ்வு காணலும் காட்டலும் தெளிவிலாத் தன்மை! செய்தொழில் வேற்றுமை என்பதைத் தெளிவாக்க வேண்டுமா? ‘bjhÊš brŒ nt‰Wik vd kh‰¿¥ gh®¡fyhnk! தவம் செய்வார் எவர்? தம் கருமம் செய்வார் என்பதை வள்ளுவர், தவம் செய்வார் தம்கருமம் செய்வார் என்று கூறவில்லையா? அதனைத் தம் கருமம் செய்வார், தவம் செய்வார் எனின் தெள்ளத் தெளிவாகி விடுகின்றது அல்லவோ! அப்படியே தொழில் செய் வேற்றுமை என்பதும் அமைவுற்றதாம்! மருத்துவப்பணி உயர்பணியே! ஓருயிரின் துடிப்பை மற்றோர் உயிர் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடிப் போய் உதவும் உளப்பாங்கே மருத்துவம்! இத்தகையரை எண்ணி, விரல்விட உடனே முடிகின்றதா? ஒன்று, இரண்டு எனக் கூட எண்ண முடியுமா? ஆனால் அத்தகையர் இல்லவே இல்லை எனச் சான்றோடு சொல்லிவிட முடியுமா? ஆசிரியத் தொழிலின் சிறப்பென்ன? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன் என்பதனினும் ஆசிரியனுக்குச் சிறப்பு உண்டா? பெற்றோரினும் பெருமையும், கடவுளைப் போன்ற சிறப்பும் உடையன் ஆசிரியன் எனின், அனைவரும் அதற்குத் தக்கார் தாமா? ஆடு மாடு மேய்க்கத் தக்கவன்; காவல் துறையில் சேர்ந்திருக்க வேண்டியவன்; பட்டாளத்திற்கு ஏற்ற ஆள்; வாணிகன்; வட்டிக் கடைக்காரன் என்றெல்லாம் ஏசவும் பேசவும் படும் ஆசிரியர்கள் எல்லாம், செய்தொழிலைப் பழிப்புக்கு ஆக்கியவர் இல்லையா? அவர்கள் இழிமை, அவர்கள் செய்தொழில் இழிமையாகி விடவில்லையா? ஆடு மாடு மேய்த்தல் இழிமையா? திருமூலர் செய் தொழில் என நாம் அறிந்ததென்ன? ஆனாயர் என்பார், ஆநேயர் அல்லரோ? கண்ணன் தொழிற் சிறப்பு ஆயன் என்பதல்லவா? கிறித்து பெருமான், மேய்ப்பர் எனப் படுகின்றாரே! நபிகள் நாயகம், வாணிகர் தாமே! வாணிகம் இழிந்ததாகி விடுமா? வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணல் என்றல்லவோ சொல்கிறார் திருவள்ளுவர். அவர்களை நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்கிறாரே கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப் பாலை); வணிகக் குடும்பத்தில் பிறந்து வணிகத்தாலேயே பொருளீட்டி வையகப் புகழ் பெற்ற அறவோர்கள் வரலாறு உலகம் அறியாததா? காந்தியடிகளார் வாணிகக் குடும்பத்தில் தோன்றியவர் தாமே! கயமையும் சூழ்ச்சியும் மிக்கது அரசியல் எனப் பழிக்கப் படும் கட்சி அரசியலில் நின்றும் அறவோராக - இன்னா செய்யாமைக்கு எடுத்துக் காட்டாளராகத் திகழ்ந்தாரே! எத்தொழில் இழிந்தது? எத்தொழில் உயர்ந்தது? தொழில் செய்யும் பாங்கே இழிமையும் புகழும் அன்றித் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லையாம்! கோயில் பூசை செய்வோர் சிலையினைக் கொண்டு விற்கும் கொள்ளையர் எனப்பட்டனரே நாட்டியற் பாவலர் பாரதியாரால். வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு என வேந்தன் பழிக்கப் பட்டானே வள்ளுவரால்! பெருந்தக்க ஓவியன் கை, பிறந்த மேனிப் படங்களை வரைந்து வைத்துக் காசு பறித்தற்கு முனையுமா? முனையின், ஓவியன் குற்றமா? ஓவியக் கலையின் குற்றமா? பூசை செய்தலும் ஆட்சி புரிதலும் கலைக் கூடமாக்கலும் இழிந்தவையா? இழிந்தவன் செயலால், தொழில் இழிவுக்கு ஆட்பட்டது என்பது தானே உண்மை. இதோ! செருப்புத் தைத்தவர் கோடி கோடிப் பேர்களின் பாலை வாழ்வைப் பசுஞ்சோலை ஆக்கியதை வரலாற்றில் காண்கிறோமே! சவப்பெட்டி செய்த தொழிலாளி நிறவேற்றுமை எம் மண்ணில் இருத்தல் கொடுமையினும் கொடுமை! மாற்றியே தீர்வேன் எனத் தம் இனமே முற்றாக எதிர்த்தும் முனைந்து நிறைவேற்றி, அதனாலேயே மூச்சையும் முடித்தாரே? தையலும் தச்சும் இழிந்தவையா? அத் தொழில் செய்தமை இழிவுக்கா ஆட்படுத்திற்று? தொழிலில் உயர்வும் இல்லை! தொழிலில் தாழ்வும் இல்லை! தொழில் தொழில் தான்! தொழத் தக்கது தான்! தொழிலைச் செய்யும் வகையாலேயே சிறப்பும் உண்டு! பழியும் உண்டு! காந்தியடிகட்கு வெள்ளை நிறத்தவர் ஆப்பிரிக்க மண்ணில் செய்த கொடுமையை உணர்ந்த வெள்ளையர் ஒருவர், வெள்ளை இனத்தையே முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கத் தக்க செயலைச் செய்தது என்று மதிப்பிடுகிறாரே! ஆனால், ஆல்பிரட் சுவைட்சரையோ, அன்னை திரேசா அவர்களையோ ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால் சேவையை அல்லது தொண்டை அல்லவோ ஒதுக்குகிறோம்! வணிகம் செய்யவோ, தொழில் தொடங்கவோ என்னிடம் மூலதனம் இல்லை! அதனால் தொண்டனாகி விட்டேன்! தொண்டு நிறுவனம் தொடங்கி விட்டேன்; நான் தொடங்கி நான்கு ஐந்து ஆண்டுகள் தான் ஆகின்றன! என் நிறுவனம் அடையாற்று ஆலமரமென விரிந்து விட்டது! எம் நாட்டு அரசுக் கொடை செல்வர் கொடை .... வெளிநாட்டுக் கொடை எல்லாம் உண்டு என்று அறக் கொள்ளை நடத்தியவர்களா - நடத்துபவர்களா அவர்கள்? அறவிலை வணிகன் ஆய் அலன் என்னும் பொன்மொழி புறநானூறாம் வைரப்பேழையில் உள்ளது. ஆனால் வாழ்வில் காணும் தொண்டு நிலையங்கள் நோக்கும் போக்கும் பார்த்தால் எத்தனை நிலையங்கள் மெய்த்தொண்டு நிலையங்கள் என்னும் வணக்கத்திற் குரியவையாக இருக்கும்? கச்சையில் காசு வைத்துக் கொள்ளாதீர் என்பது கிறித்து பெருமான் தொண்டர்களுக்கு உரைத்த நல்லுரை! ஊரை நம்பு; உன் தேவையை ஊர் நிறைவேற்றும் என்பது இதன் உட்கிடை! காசு இல்லை என்பது மட்டுமில்லை! பேரும் இல்லாமல் துறவி என்னும் பெயரோடு வந்தார் ஒருவர்! சிற்றூர் மடம் ஒன்றைக் கண்டு தங்கினார். பெரியவர்கள் சிலர் மடத்தில் சீட்டாடிக் கொண்டிருந்தனர். சிலர் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் கோலி விளையாடிக் கொண்டி ருந்தனர். மடத்திற்கு முன்னிருந்த கிணற்றில் பெண்கள் சிலர் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர். நீரை இறைப்பவர் நீரும் சேறுமாகக் கிடந்த இடத்தில் நின்று கொண்டு இறைத்தலைக் கண்டார் துறவி. பக்கத்தே நந்தவனம் நீரின்றி வாடிக் கிடப்பதையும் கண்டார். பையன்களிடம் கேட்டு மண்வெட்டி, கூடை, கம்பி ஆகியவை பெற்றார். கிணற்றைச் சுற்றிக் கிடந்த நீர்க்கு வடிகால் அமைத்து நந்தவனத்தில் விடத் திட்டமிட்டார். வெட்டக் குனிந்தார்! பிள்ளைகள் உதவிக்கு நின்றனர். கிணற்றுச்சுற்று நீர் வடிந்தது. வெட்டிய மண்ணால் கிணற்றுச் சுற்று மேடாயது. நந்தவனம் நீர் பெற்று வாட்டம் நீங்கியது. துறவியைப் பிள்ளைகள் விரும்பினர். புதிய விளையாட்டுக் கற்பித்தார். பாட்டுப் பாடினார்; பாடப்புத்தகம் கொண்டு வரச் செய்து கற்பித்தார். மடம் பள்ளிக்கூடம் ஆயது. மருத்துவம் தேர்ந்தவர் அவர். ஊர் மருத்துவர் ஆனார்; ஊருள் ஒருவரானார் அவர்; ஊர் அவராகியது! அவர் கொண்டு வந்ததும் - கொண்டிருந்ததும் - ஒன்றே, ஒன்றே! அது தொண்டே, தொண்டே! தொண்டர் தம் பெருமை சொல்ல ஒண்ணாதே என்பது பாட்டி வாக்கு! எத் தொழிலும் உயர்வோ தாழ்வோ உடைய தில்லை! அத்தொழிலைச் செய்யும் வகையாலேயே உயர்வும் தாழ்வும். காவல்துறை ஆய்வாளர் ஒருவர்! எந்த ஊர்க்குப் போனாலும் வழக்குப் பதிவிராது! வழக்கே வராதா? வரும்! வந்தால் இருதரப் பாரையும் அழைத்து வன்பு துன்பு இல்லாமல் தீர்த்து விடுவார்! அவர்க்குப் பெயர் வேறு! Cut® ï£l bga® ‘ïuhkȧf rhÄ! ஆம்! வள்ளலார் பெயர்தான். வள்ளலார் நெஞ்சம் அவர் நெஞ்சம்! அருட்பா வாய், அவர் வாய்! காவல் துறைப் பவானந்தர் செய்த தமிழ்ப் பதிப்புப் பணி எத்தகையது? மன்னார்குடியில் காக்கி உடையில் காவல்துறையில் தொல்காப்பியரைக் கண்டேன் எனப் பொறிஞர் பா. வே. மாணிக்கரால் கூறப்பட்ட சோமசுந்தரர் சீர்மை என்ன? சிறபபொவ்வா செய் தொழில் வேற்றுமையால் என்னும் வள்ளுவ நோக்கின் வளம் நினைதோறும் விரிவதாம். 13. பொருட் பயன் பொருளின் இயல்பைத் தெளிவுற ஆய்ந்து தேர்ந்து உரைத்தவர் திருவள்ளுவர். பொருட்டாக எண்ணத்தக்கவை இல்லாரையும், பொருட்டாக எண்ண வைப்பது பொருளே என்றார். பொருள் இல்லார்க்கு இவ்வுலகியல் வாழ்வின்பம் இல்லைஎன்றார். செல்வம் இருந்தால் சிறப்பும் சேர்ந்திருக்கும் என்றார் அவர். பொருட்செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே எனப் பிறப்புக் கொள்கைச் சமயங்கள் பேசுவதைக் கேட்டார்; எழுதியதை அறிந்தார். விளக்கம் தந்து மெய்ப்படுத்தல் இன்றியமையாதது என உணர்ந்து கூறினார். முற்பிறப்பு வினையால் செயலால் பொருள் வருவது இல்லை. அதுபோல் முற்பிறப்பு வினையால் பொருள் இல்லாது போவதும் இல்லை என்று உறுதி செய்தார். முயற்சி திருவினை ஆக்கம்: முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (616) என்று இப்பிறப்பில் செய்யும் முயற்சியும் முயற்சி இல்லா மையுமே பொருளாக்கமும், பொருள் நீக்கமும் ஆகின்றன என்பதைக் கட்டளை வகையால் கூறினார். முயற்சியாளன் தான் முயன்று பாடுபட்ட அளவுக்குக் கட்டாயம் பயன் பெற்றே ஆவான் என்பதை, முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும் என்றார். என் குடியைப் பொருள் நிலையால் பொலியச் செய்வேன் என உறுதி கொண்டு ஒருவன் உழைத்தால், அவனுக்குத் தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு முன்வந்து நின்று உதவும் என உறுதி உரைத்தார். அது, குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும (1023) என்பது. இவற்றின் மேலாணையாக ஊக்கப்படுத்திச் செய்க பொருளை என்றார். நாடு கடந்தும் உன் புகழை நாட்டும் அது என்றும் கூறினார். குடி என்னும் குன்றா விளக்கம் மேலும் மேலும் சுடரப், பொருள் என்னும் பொய்யா விளக்கம் உடனாகி - ஒன்றாகித் திகழ வேண்டும் என்றார்! விளக்குத் திரியில் பற்றிய கருக்கே மடிச் சோம்பல்; கருக்குத் திரியில் தீப்பற்றாது; சுடர்விட்டும் எரியாது; அவ்வாறே மடியன் பிறந்த குடியும் பொருட் பொலிவு அல்லது பொருள் ஒளி பெறாது. சோம்பல் கருக்கால் குடி அவனுக்கு முன்னாகவே மடிந்து போகும் என்று உருவகக் காட்சியால் உரைத்தார். முற்பிறப்பொடு பொருளைத் தொடர்புறுத்திப் பேசாமை இச்சான்றுகளால் புலப்படும். முயற்சியொடு சார்த்தி உரைத் தமையும் புலப்படும். அறவோனிடம்தான் செல்வம் உண்டு என்னும் கருத்தை ஏற்காதவர் திருவள்ளுவர். பண்பிலானிடமும் செல்வம் உண்டு என்பதை, பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று (1000) என்று கூறினார். பேதையிடத்தும் பேயனிடத்தும் பெருஞ் செல்வம் உண்டு என்பதை, ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (837) அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து (565) என்பவற்றால் தெளிவித்தார். கருமியின் செல்வத்தை, வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் (1001) என்பதால் உரைத்தார். நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத் தற்று (1008) என்பதால் நஞ்சு நெஞ்சால் நலிப்பவன் என்பதை நாட்டினார். அவன் நிலத்திற்குப் பாரம் என்பதை, ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (1003) என வருந்திக் கூறினார். அல்லோரிடமும் செல்வம் உண்டு என்பதைக் குறிக்கும் சான்றுகளுள் சில இவை. இனி, நல்லோரிடமும் வறுமை உண்டு என்பதையும் குறிக்கிறார். சிறந்த நல்லியல்பு வாய்ந்தார்க்கும் வறுமை உண்டு: அவர் கொண்ட வறுமை உலக நலஞ் செய்யும் மழை வறட்சி யுற்றது போன்றது என்றார். சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (1010) சங்கைச் சுடச்சுட ஒளிமிகுவது போல, நல்லோரை வறுமை வாட்ட வாட்டப் பெருமை மிகும் என்பதையும், அவர் இறப்பும் மறவா இறப்பு என்பதையும், நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது (235) எனத் தெளிவாக்குவார். நல்லோர் தாம் பெற்ற வறுமைக்கு வருந்தார். அவர், துன்பத்தை இன்பமாகக் கருதவும், துன்பம் வரும்போது நகைத்து வெற்றி காணவும் பழகிப் போனவர். அவர்க்கு வறுமையில் உண்டாகும் துயர் ஒன்றே; அது பிறர்க்கு உதவ வாய்க்க வில்லையே என்பதுதான் என்கிறார். நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு (219) என்பது அது. பேரறிவாளன் திரு ஊருணி நீர் நிறைந்தது என்றும் நயனுடையான் திரு, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது என்றும் பெருந்தகையான் திரு, மருந்தாகிப் பயன் செய்யும் மரம் என்றும் உவமைப் படக் காட்டுகிறார். பொருள், அல்லோரிடமும் உண்டு; நல்லோரிடமும் உண்டு என்பதையும் -இவற்றால் உறுதிப்படுத்துகிறார். வறுமையும் வளமையும் பொருளையுடையான் இயல்பால் வருவதும், நிற்பதும், செல்வதும் என்பதையும் தெளிவிக்கிறார். கடுஞ்சொல் கூறுவான், இரக்கம் இல்லான், அழப் படுத்துவான், கள்ளமும் - வஞ்சகமும் புரிவான்; பொறாமைப் படுவான், நடுவுநிலை தவறிப் பொருள் ஈட்டுவான், மயக்கும் கள்ளிலும் - சூதிலும் - மையலிலும் ஈடுபடுவான். இன்னவர், பொருளைப் பெறார்; போற்றார்; இழந்து போவார் என விரியக் கூறுகிறார். செல்வர் சிலராகவும், வறியர் பலராகவும் இருப்பது எதனால் எனின் கடுமுயற்சியாளர் சிலராகவும், முயற்சி யிலாமையர் பலராகவும் இருப்பதேயாம் என்பது கண்டோம். ஆனால் தவ நிறைவில் வரும், இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் (270) என்பதற்கு, உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனின் அது, தவஞ் செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல் என்று பலர் உரை கண்டனர். அவர்கள், ஒரு பிறப்பில் தவம் செய்தவர்களே மறுபிறப்பில் செல்வ முடையவராவர். அப்பிறப்பில் தவம் செய்யாதவரோ மறு பிறப்பில் செல்வமுடையவராகார் என்று விளக்கமும் கூறினர். தவம், என்னும் அதிகாரத்திலுள்ள இக்குறட்கு, தவம் இலர் பலராகத் தவமுடையார் சிலராக இருப்பது, உறுதிப்பாடு உடையார் சிலராகவும், உறுதிப்பாடு இல்லார் பலராகவும் இருப்பதேயாம் என்னும் நேர் பொருள் கண்டிருப்பின் பிறப்பு, முன் வினை பற்றிய கருத்துத் தோன்றியிராவாம். இக் கருத்தின் அழுத்தத்தாலேயே அறன் வலியுறுத்தலில் வரும், அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை? (37) என்னும் குறளுக்கும் அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவை யான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவு (தாங்கு) வானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் என உரை கண்டனர். அறம் செய்தார் அமர்ந்திருக்கப் பாவம் செய்தார் சுமப்பர் என்பது உழைப்பை இழிவு செய்து, உழையாரை உயர்த்துவது ஆகிவிடும் அல்லவா! உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் (1031) உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை (1036) என்றெல்லாம் பாராட்டும் கை செய்தூண் மாலையவரைப் பழிக்கவோ செய்வார்? சிவிகைச் சுமப்பும் அமர்வும் அறப்பயன் அன்று; பொருட்பயன் என்பதே வள்ளுவ நோக்காம், முயற்சியால் தேடும் பொருளை முன்வினைக் காக்கல் முறையன்று என்பது வள்ளுவத் தெளிவாம்! இதற்கு மாறாகக் காண்பது வள்ளுவர் வாயுறையன்றி, அவர் வாயுரைக்கு மாறுரையாக வெளிப்பட்டவையாம்! 14. முயற்சிச் சிறப்பு முயற்சியால் செல்வம் சேர்க்கலாம்: முயற்சி இல்லா மையால் தன்னையே அன்றித் தன்குடியையும் கெடுக்கலாம் என்று திருவள்ளுவர் கூறியதைக் கண்டோம். முயற்சி என்பதற்கு ஓர் அரிய சொல்லாட்சியை வழங்கினார் திருவள்ளுவர். அது, ஆள்வினை என்பது. திருவள்ளுவர் விரும்பும் நன்மக்கட்பேறு அறிவறிந்த மக்கட்பேறு மேலும் அவர் விரும்புவது, பழி பிறங்காப் பண்புடை மக்கட்பேறு இம் மக்கட் பேறு என்னும் மாண்பு அமைந்தும், முயற்சி இல்லார் ஆகித் தன்னையும் தன்குடியையும் கெடுக்கும் வீணனையும் வீணியையும் ஆள் என்னலும் ஆகாது எனக் கருதுகிறார். மாசுப் பிறப்பை மாண்பிறப்பென ஒப்ப அவர் மனம் கொண்டார் இல்லை! கண், காது, வாய் என்னும் பொறிகள் செயலாற்ற வல்லனவாய் அமைந்தும், செயல்படாச் சிறுமைப் பிறப்பை ஆள் என்னும் பெருமைப் பெயரால் அழைத்தலும் ஆகாது என்பாராய், பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்றார். ஆணும் ஆளே; பெண்ணும் ஆளே; பிள்ளையும் ஆளே. ஆளுக்கு ஒன்று கொடு, எத்தனை ஆள் வேலை செய்தார்கள் என்பவை வழங்குமொழிகள். ஆள் அனைவருக்கும் உரிய பொதுவினை, ஆள்வினை; ஆள் அனைவருக்கும் உரியதே ஆளுமை; ஆள் அனைவருக்கும் உரியதே ஆட்சி! - இவற்றை உணர்த்தும் அருமைச் சொல்லே ஆள், என்பதாம். ஆளாகப் பிறந்தும், வளர்ந்தும், வாழ்ந்தும் வினையாற்ற மாட்டாதார், ஆள் அல்லர்! அவர் பழிப் பிறவி! வீட்டுக்கும் நாட்டுக்கும், கேட்டு (தீங்கு)ப் பிறவி! இது வள்ளுவ நோக்கு! எடுத்துக் கொள்ளும் செயல்களில் சில எளிதில் நிறை வேறும்; சில அரிதில் நிறைவேறும்; அரிதில் நிறைவேற்றலும் அரிதாக இருக்கும் செயலும் உண்டு. அதனை நோக்கி இதனை எம்மால் நிலைவேற்றல் அரிது எனச் சோரல் வேண்டா? இதனை எளிதில் நிறைவேற்றினார் - துணிந்தும் முனைந்தும் நிறை வேற்றினார் இலரா? அவர் கொண்ட முயற்சி துணிவு முனைப்பு உனக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்? இடைவிடாது எப்படி முயன்றார்? இடைத் தடைகளை எப்படி வென்றார்? இவர்க்கு முன் வெற்றியடைந்தார் எவ்வழியைப் பற்றிக் கொண்டு முன்னேறினாரோ அவ்வழியை அவர் பற்றிக் கொண்டது போல நீயும் பற்றிக்கொண்டு வெல்லலாமே! வெற்றி என்பது இவர்க்கே எனப் பட்டயம் தீட்டி வைத்த ஒன்றா? துன்பத்திற்குத் துன்பம் செய்ய வல்லாரைத் துன்பம் என்ன செய்யும்? இடுக்கணை இடுக்கண் செய்வார்க்கு இடுக்கண் என்ன செய்துவிட முடியும்? இன்பம் வேண்டும் என்று எச்சில் ஊறிக்கிடப் பவர்க்குத் தானே, துன்பத்தின் வாலாட்டம் உண்டு! துன்பமே எனக்கு இன்பம், எட்டியே எனக்குக் கற்கண்டு. அத்தேர்ச்சி எனக்கு இல்லை, என எனக்குத் தோன்றினால், அத்தேர்ச்சியாளரைக் கொண்டு நிறைவேற்றும் ஆற்றல் எனக்கு உண்டு! என் செயலுக்குக் குறுக்கீடு இருவரால் நிகழ்கின்றதா? அவருள் ஒருவரை நட்பாக்கிக் கொண்டு வெற்றியைக் கைம்மேல் கொள்ளத் தெரியும் எனக்கு! சுற்றத்தார் சுற்றி நிற்கும் பேறு எனக்கு உண்டு! என் உடனாளர் உதவிக்குத் தடையில்லை; ஏன்? அவர்கள் வேறு, நான் வேறு என இரண்டாக இருப்பதில்லை! அவர்களோடு நிரந்து விடுவேன்; இனிது சொல்வேன்; அவர்கள் என்னவர் ஆவர்; நானோ அவர்களுக்கு அன்னவர் ஆவனே! அந்நிலையில் வெற்றி பெறுதல் என்னது மட்டும் இல்லை. அவர்கள் பணிப்பேறே அது என்றும், தோற்றால் அவர்கள் பங்கும் உண்டு என்றும் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆதலால், வெள்ளப் பெருக்குப் போலப் படைபடையாய் வரும் தடைகளும் உடையுடைபட்டு ஒதுங்கி ஒழிந்துபோம்! வெற்றியில் நான் இல்லை! தோல்வியிலும் நான் இல்லை! வெற்றியிலும் நாம்! தோல்வியிலும் நாம்! வினை மேற்கொண்ட எனக்கு, நான் மட்டுமா இல்லை! எனது என்பதும் அற்று விட்டது! எல்லாம் நாம்! எல்லாம் நம்முடையவை. பாரம் எவர்மேல் விழும்? தாங்குவார் மேலேயே விழும்! போர்க்களத்தில் மட்டுமா? ஏர்க்களத்தில் மட்டுமா? சொற் களத்தில் மட்டுமா? இல்லை இற்களத்திலும் அப்படியே! போற்றின் அரியவை போற்றல் செயற்கு அரிய செய்தல் செயற்கு அரிய யாவுள? பொருள் கருவி காலம் வினை இடனோ டைந்தும் இருள் தீர எண்ணிச் செயல் இம் மணிமொழிகளும் இன்னவையும் என் ஊக்கிகள்! உந்துமுனைகள்! செயல் அல்லது வினை அல்லது தொழில் என்னும் ஏறு (காளை) கொம்பு நிமிர்த்தி, திமில் எடுத்து, வால் தூக்கி, கால் பாய்ச்சலிட்டுத் தோற்றத்தாலேயே தொடை நடுங்கி விழுமாறு தாக்க வருகின்றது! இடுக்கண் வருங்கால் நகுக என்னும் நன்மொழி முன்நிற்கிறது! வெற்று நகையா? வெட்டி நகையா? இல்லை; வெற்றி நகை! வீறு நகை! முதுகில் கை வைத்துத் திமிலைப் பற்றி ஏறி, திமிரிய அதன் முதுகில் படுத்துக் கொம்பைத் திருகி நிலத்தில் மண்டியிடச் செய்யவல்ல நகை! அதனை அடுத்து ஊர்வது - அக் காளையேற்றை அடுத்து அதன்மேல் ஏறி ஊர்தியாகக் கொள்வது. அஃது ஒப்பது இல். அவ்வீறு போல வீறு ஒன்று இல்லை என்னும் தூண்டல்! தூண்டலுக்கு விளைவு துலக்கம்! வெற்றி மாலை குவிகின்றது! அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (611) என்பது கனவு இல்லை! நனவாகின்றது! வெற்றி மேல் வெற்றி பெற்றவன் செய்யானா? ஊரோட்டம் - மாவட்ட ஓட்டம் - மாநில ஓட்டம் - உலக ஓட்டம் என உயராவா? உலக ஓட்டமும் வெல்லலாம்! ஒருவன் வெல்லத்தானே செய்கிறான்? அவனால் முடிந்தது உன்னால் முடியாதா? முடியும் என முடிவு செய்! எண்ணியது எண்ணியபடி எய்தலாம்! ‘cŸËa btšyh« clbdŒJ«! இவை வள்ளுவ வாய்மொழி ஊக்கிகள்! 15. ஊழ் முயற்சியின் சிறப்பை முன்னே கண்டோம். முயற்சியைச் செய்வினை கெடுக்குமா? செய்யாவினையே - முயற்சியில் ஈடுபடா மடி என்னும் சோம்பலே முயற்சியின் வெற்றியைக் கெடுக்கும். முயற்சியை அவரவர் செய்யும் ஆக்கவினை கெடுக்காது. அழிவு வினை கெடுக்கத் தவறாது. ஆக்க வினையும் அழிவு வினையும் இப்பிறப்பில் செய்வனவே? முற்பிறப்பையே நாம் உணர முடியாதபோது, நாம் முற் பிறப்பில் செய்த வினையை எப்படி உணர்வது? மனத்தகத்தே இப்படி அப்படி என எண்ணிக் கொள்ளலாமேயன்றி, மெய்ப்பிக்க வாய்ப்பு இல்லையே! வள்ளுவ நோக்கம் உணராராய், அவர் ஊழ் என்றதைப் பின்னவர் ஒட்டி மூட்டி வைத்த ஊழ்வினை எனக்கொண்டு வினைப்பயன், தலைவிதி அன்று எழுதிய எழுத்து எனப் பலர் கூறிய கருதுகோள் மூட்டிய மூட்டுதலே, திருவள்ளுவர் கருதாப் பொருளை ஊழுக்குத் தர வைத்ததாம். தொல்காப்பியம் தொட்டு - பாட்டு - தொகை - திருக்குறள் வரையான இருபது நூல்களில் ஊழ் என்பது 96 இடங்களில் வருகின்றது. அவற்றுள் ஓரிடத்துத் தானும் ஊழ்வினை என்னும் ஆட்சி இல்லை - அதனைத் தமிழ்ப் பரப்பில் முதற்கண் ஒட்டிக் கூறியவர் இளங்கோவடிகளாரே. ஊழ் என்று நிமித்திகன் எதைச் சொன்னானோ, அதனைப் பொய்யாகச் செய்தவர் எவரோ, அவரே ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று கூறிய செய்தி அஃதாம்! வள்ளுவர், மலர்க்கொத்து விரிதலை இணர் ஊழ்த்தல் என்று ஆள்கிறார். எவர் ஆணைக்கும் உட்படாமல் இயலும் காலத்தை ஊழி என்கிறார். ஊழி பெயரினும் தாம் பெயரா உரவோரையும் எடுத்துக் காட்டுகிறார். ஊழ் என்பதன் பொருளை இரண்டு இடங்களில் உலகத்து இயற்கை எனத் தெளிவிக்கிறார், எவ்வெவரும் உலகியற்கை அறிந்து வாழவேண்டும் என்பதுடன் ஆட்சியின் கண்ணாக விளங்கும் அமைச்சர்க்கு அவ்வறிவு மிக இன்றியமையாதது என்பாராய்ச் செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல் (637) என ஏவினார். உலகத்து இயற்கையாவது எது என்பதைத் தெளியின், வள்ளுவர் கொண்ட ஊழ் விளக்கம் தெளிவாம். ஒருவர் ஆணைக்கோ வேண்டுதலுக்கோ உட்படாமல் தன் இயல்பில் நிகழ்கின்ற இயல்பே ஊழ் என்னும் உலகியற்கை யாம். இணரூழ்த்தலை வள்ளுவர் சொல்லிய தறிந்தோம். கனியூழ்த்தல் எனப் பல இடங்களில் வருகின்றன. மேலும் மலர்தல் அலர்தல், முதிர்தல், முற்றல், உதிர்தல், பதன்கெடல், பொருந்துதல் என்னும் பொருள்களில் ஊழ் வருகின்றது. இவை இயற்கையின் இயல்புகள் தாமே. ஒருவர் அரசன் மகனாகப் பிறக்கிறார். அவர்க்குத் தந்தையின் அரசுரிமை இயல்பாக வருகின்றது. அதனை ஊழின் எய்தியதாக இலக்கியம் கூறுகின்றது. ஓர் உரலில் இருவர் மாறி மாறி உலக்கை போடுகின்றனர். அதனை ஊழ் ஊழ் என்னும் இலக்கியம். இவற்றில், ஊழ் என்பது முறைமை என்பதையும், ஊழ் ஊழ் என்பது முறை முறையே என்பதையும் குறிப்பனவாம். இவற்றால் ஊழ் அல்லாதது ஊழல் ஆயது. முறைகேடு என்பது தானே பொருள். ஆகவே மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் ஊழ் என்பதற்கு இயற்கை, இயற்கை முறைமை என்னும் பொருள்களே பண்டு தொட்டு இன்று வரை வழக்கொழியாமல் வழங்குகின்றமை புலப்படும். ஆக்கம் செய்யும் இயற்கை, கேடு செய்யும் இயற்கை என்னும் இரண்டையும் ஆகூழ் என்றும், போகூழ் என்றும் திருவள்ளுவர் வழங்குவார். அதற்கு எடுத்துக்காட்டுக் காட்டுவார் போலக்,. கெடுப்பதூஉம் கெட்டார்க்குக் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (15) என்பார். கண்ணாரக் காணும் காட்சிகள் அல்லவோ இவை, காய்ந்து கெடுப்பது மழை பேய்ந்து கெடுப்பதும் மழை என்னும் மொழி, பெருமொழி ஆயிற்றே! ஊர் ஊராக வாழ வைக்கும் மழை வெள்ளம் தானே, ஊர் ஊராக ஓடவும் வைக்கின்றது. பெய்யுங்கால் பெய்து பெருநலம் செய்வதால் தானே, முறைவேண்டு பொழுதில் (நீதி வேண்டும்போது) அதனைப் பெற்றோர் உறை வேண்டுபொழுதில் (மழை வேண்டும் போது) அதனைப் பெற்றார் என்று புறநானூற்றிலும், வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் (1192) என்று வள்ளுவத்திலும் பேசப்படுகின்றன. ஆறிடும் மேடும் மடுவும் எவர் அறியார்? ஆற்றங் கரை மரம் ஆற்றோடு போவதை எவர் காணார்? முல்லையை ஆறு, மருதம் ஆக்குவதில்லையா? மருதத்தை ஆறு, நெய்தல் ஆக்குவது இல்லையா? கம்பரின் ஆற்றுப்படலம் அருமையாய் விரிக்கின்றதே! புயல் மையம் கொண்டுள்ளது தொடர்ந்து இருபத்து நான்கு மணிநேரமும் அடைமழை மீனவர் கடலுள் செல்லுதல் ஆகாது என்றெல்லாம் தொலைக் காட்சி, வானொலி விழிப் புறுத்தம் செய்வன ஊழ் அறிவிப்புத்தானே! நிலநடுக்கம் எரிமலை கக்கல் என்பவற்றை முன்னரே நாடறியச் செய்யும் அறிவியல் அறிவிப்பு ஊழின் அறை கூவல் தானே! ஊழ் இவ்வளவில் அமைவதாக! நீரின் ஊழியல் என்ன? பள்ளம் நோக்கி ஓடல்? தீயின் ஊழியல் என்ன? மேல் நோக்கி எழுதல்! காற்றின் ஊழியல் என்ன! வட்டமிட்டுப் பரவல்! நீரை மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றுகிறோம் இல்லையா? பறக்கச் சிறகில்லாத நாம் வானத்தில் பறக்கிறோம் இல்லையா? கடலுள் மூழ்கி முத்துக் குளித்தலும், நீர் மூழ்கி வழியே செல்லலும் நிகழ்கின்றனவே! இவை என்ன? ஊழை வெல்லுதல் அல்லவோ! தொட்டியில் ஏற்றப்பட்ட நீர், குழாயைத் திருகி அடைப்பு நீக்கிய அளவில் அல்லது கசிய வாய்ப்போ துளையோ உண்டாய அளவில் ஒழுகிக் கீழே வழிகின்றதே! பறக்கும் வானூர்தியில் ஒரு பறவை மூக்கால் துளையிட்டு விட வீழ்ந்து படுகின்றதே! எத்தனையோ கப்பல்கள் துளைகளில் நீரேறி மூழ்கிப் போகின்றனவே! இவை ஊழ் கொண்ட வெற்றிகள் அல்லவோ! ஊழை நாம் வெல்லலாம்? ஊழ் நம்மையும் வெல்லும்! ஆயிரம் பேரை எழுப்பி, நடையிட விட்ட அருமை மருத்துவரும் ஒரு நாள் ஆராலும் எழுப்ப முடியாதவராய் ஆகிவிடுகிறார். அல்லரோ? ஊழை நாம் வெல்லலாம்! ஒருமுறை இல்லை பன்முறை கூட! ஊழையும் தோற்கக் கண்டு மகிழலாம்! அம் மகிழ்ச்சி நிலையானதன்று. நிலையான இறுதி வெற்றி ஒரு நாள் ஊழுக்கே உண்டு! இந்த இரண்டையும் எப்படிச் சொல்வது? வள்ளுவர் வழிகண்டார்! காட்டினார்! ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் (620) என்று, முயற்சியின் வெற்றியை முழங்கிய அவர் நாவே, ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் (380) என்று ஊழின் வெற்றியை உரத்துக் கூறியது! முயற்சியாளன் ஊழின் வெற்றிப் பாட்டினை எண்ணி உள்ளம் சோர்ந்து விடல் ஆகாது அன்றோ! அவன் சோர்வு உலகச் சோர்வு ஆகிவிடும் அன்றோ! அதனால், தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும் (619) என்றார். தெய்வமாவது ஊழ்! உலகியற்கை! வெள்ளத்தைத் தடுத்துப் பாதுகாத்துப் பயிர்க்குப் பயன் படச் செய்வதும், மின்னாற்றல் எடுப்பதும் ஊழை அடிப்படுத்தி ஆக்கங்கொள்ளும் வழி! பெருங்கட்டடத்தில் இடிதாங்கி பொருத்துவது ஊழை வெல்ல மேற்கொள்ளும் ஏற்பாடு! செருப்புப் போடுதலால் வெப்பினைத் தடுப்பதும், குடை பிடிப்பதால் மழையீரம் தாக்காமல் தடுப்பதும் காலத்துக் கேற்ற உடையணிந்து உடலைக்காப்பதும் ஆகியவெல்லாம் - நாம் ஒவ்வொருவரும் நாளும் நாளும் செய்வன எல்லாம் - ஊழை வெல்லும் முயற்சிகளே! எனினும் நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச் சென்றான் என்பதோ ஊழ் கொண்ட வெற்றியாம்! ஊழை வெல்க! பல்காலும் பன்முறையும் வெல்க! ஊழ் வெல்லுங்காலும், உலகியல்பு அதுவே என அமைக என்பதே, உறங்குவது போலும் சாக்காடு என்பதும், குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே என்பதுமாம்! வள்ளுவரின் ஊழ் நோக்கினை உள்நோக்கி அறிவார், ஓயாது உழைப்பார்! சாயும் பொழுதும் சஞ்சலம் இன்றி மலர் உதிர்வது போலச் சாய்வார்! 16. வினை பழந்தமிழ் நூல்களில் ஊழ் என்னும் சொல்லாட்சி உண்டு என்றும், ஊழ்வினை என்னும் சொல்லாட்சி இல்லை என்றும் கண்டோம். அறத்துப்பால் முடிவில் - பொருட்பால் தொடக்கத்திற்கு முன் ஊழ் வைத்த திருவள்ளுவர், அவ்வதிகாரப் பத்துப் பாடல்களுள் ஒன்றிலேனும் வினை என்னும் சொல்லை வைத்தார் அல்லர் என்பது நோக்கத்தகும். இனி, வினை என்னும் சொல்லமையத் தீவினையச்சம் (21) தெரிந்து வினையாடல் (52) ஆள்வினையுடைமை (62) வினைத் திட்பம் (67) வினைத் தூய்மை (64) வினை செயல் வகை (68) என ஆறு அதிகாரங்களை வகுத்தார். வினை செயல் வகை (68) என்பது போலத் தெரிந்து செயல் வகை (47) குடி செயல் வகை (103) பொருள் செயல் வகை (76) என்றும், வெருவந்த செய்யாமை (57) என்றும் வகுத்தார். இவற்றிலும் பிறவற்றிலுமாக 60 குறள்களில் வினை என்னும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு குறளில் (612) மும்முறையும், ஆறு குறள்களில் (201, 321, 367, 519, 677, 678) இரு முறையும், மற்றைக் குறள்களில் ஒரு முறையும், ஆக அறுபத்தெட்டு முறை, வினை என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இவற்றுள் செயல் என்னும் ஒரு பொருளையன்றி, வேறு பொருளில் இடம் பெறவில்லை என்க தீய செயல் செய்தற்கு அஞ்சல் வேண்டும் என்னும் தீவினை: யச்சத்தில் வரும், தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (201) என்பதற்குப் பழவினை, முன் வினை, தலைவிதி என்ப வற்றொடு தொடர்பு உண்டா? உண்டெனக் கற்பிக்கலாமா? முதல் இழக்கும் செய்வினை (463) ஒளிமாழ்கும் செய்வினை (672) மனத்தூய்மை செய்வினை தூய்மை (455) என்பவற்றில் வரும் செய்வினை செய்யும் செயல்தானே! இவற்றுக்குத் தலை விதியை விதிக்கலாமா? சட்ட நடைமுறையை விதி என்றும், அதற்கு மாறானதை விதி விலக்கு என்றும், இனி ஒரு விதி செய்வோம்; எதையும் எந்த நாளும் காப்போம் என்றும் கண்ட மண்ணிலே, வெந்ததைத் தின்று விதி வந்தால் போவது என்னும் தலைவிதிப் பொருளைக் கேட்டு நொந்துதானே ஆக வேண்டும்? இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு (385) என்பது நடைமுறை அரசு (ஆட்சி) விதிகளைச் சுட்டுதலும், அவற்றை நடைப்படுத்தலும். நடைப்படுத்தாதபோது நாடு கெடும் கேடும், உலகியலில் நாளும் நாளும், நாடும் நாடும் நாமறி செய்திகள் அல்லவா! தீய செயல், அதனைச் செய்வானுக்குக் கட்டாயம் தீமை தந்தே தீரும். அவன் நிழல், அவனை விட்டு விலகுதல் உண்டா? அது போல் அவன் செய்த தீய செயலின் பயனும் அவனைவிட்டு விலகாமல், அவனை அழித்தே தீரும். தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று (208) தனக்கு நன்மை வேண்டும் என்று விரும்புபவன் எந்த பொரு தீச்செயலைச் செய்யவும் நினைத்தல் ஆகாது (209) எந்தப் பகையைத் தேடிக் கொண்டாலும் அந்தப் பகையில் இருந்து தப்பிப் பிழைக்கலாம். ஆனால், தீவினை செய்தல் ஆகிய பகையைத் தேடிக் கொண்டால் தீமையில் இருந்து தப்பவே முடியாது (207), எனக்கு இல்லையே என் செய்வேன் என்று எண்ணித் தீய செயல் செய்ய முயலாதே. முயன்றால், தேடியதும் தொலையும்; முன்னே சிறிதளவாக இருந்த பொருளும் சேர்ந்தே தொலையும் (205) அறிவில் எல்லாம் பெரிய அறிவு, தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாதிருப்பதே. ஏனெனில்; அறிவு என்பது அழிவில் இருந்து காக்கும் கருவியாகும்; தீமை செய்வார்க்கும் உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையும் ஆகும். (203, 421) மறதியால் கூடப் பிறர்க்குத் தீமை செய்தல் ஆகாது. அவ்வாறு செய்தால் அவர்க்கு நன்மையும் தனக்குக் கேடும் ஆகும் (204) தீ எரிக்கும் இயல்பு உடையதே. அவ் வெரிப்பும் வட நன்மையாவதும் உண்டு. சோறாக்குதல் கழிவகற்றல் தீயால் நிகழ்வன அல்லவோ! சுடச் சுடரும் பொருள்கள் உண்டு தானே? மின் சுடுதல் மருத்துவத்தில் ஒன்றாகி விட்டதே! சுடுதல் இல்லாமல் பல தொழில்கள் இயலாவே; சுவைகள்; பக்குவங்கள் அமையாவே! இவற்றால் தீ செய்யும் நன்மைகள் நன்கு விளங்கும். ஆனால், தீய செயலால் தீமையை அன்றி நன்மை எவர்க்கும் இல்லையே! அதனால், தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப் படும் என்று இருக்க வேண்டிய குறள், படியெடுத்தவர் குறையால், தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் (202) என்று அமைந்துவிட்டது என்பார் இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் (தொல்காப்பியம் - சண்முக விருத்தி), தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்னும் கணியன் பூங்குன்றன் மொழியும், தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம் தம் வினையான் வரும் என்னும் பொய்யில் புலவர் மொழியும் எண்ணத் தக்கன. தீவினைக்கு மாறானது நல்வினை; அறவினை என்பதும் அது, அறத்திற்கு மாறான வினை பிறவினை; அஃது அஞ்சும் வினை, அவா வினை, நன்றாகா வினை, நன்றிபயவா வினை, பழிவினை எனப்படும். மடி என்னும் சோம்பல் அவனையும் அவன் குடியையும் அழிக்கும்; ஒழிக்கும். மடியிலான் அடிக்கண்ணே உலகமும் வந்து நிற்கும். மடியிலானைத் தேடித் தெய்வமும் மடியில்லாது, மடியை வரிந்து கட்டிக் கொண்டு வந்து உதவமுன் நிற்கும். குடி என்னும் குன்றா விளக்ம் குன்றின்மேல் விளக்காக மடியிலான் ஆள்வினையால் சுடர்விடும். உலக இயற்கையும் உழைப்பு வல்லானின் ஆணைக்கு இணங்கும். ஆகவே தீவினைக்கு அஞ்சுக (அதி; 21) வெருவந்த செய்யா திருக்க (51) தெரிந்து செயலாற்றுக (47) தெரிந்து வினையை ஆட்சி புரிக (52) ஆளாக இருப்பார் அனைவரும் ஆளுமை வல்லாரே (62) செயல் தூயதாய் அமைக (66) செயலில் உறுதி திகழ்க (67) செயலாற்றும் வகையால் செயலாற்றிப் பொருள் நலம் குடி நலம் காக்க (76, 103) என ஒன்றைப் பத்து முறையால் வலியுறுத்தி வழிகாட்டிய வள்ளல் பெருந்தகை தெய்வப் புலவர் ஆவார். எடுத்த ஒரு செயலால் பல செயல்களை முடித்துக் கொள்க. (678) எடுத்த செயலை அரைகுறையாக விடாது முடிக்க. (674) செயலைச் சிறப்பாக முடிக்கச் செயல் வல்லார் துணையைத் தக்கவாறு கொள்க. (519) செயலின் வெற்றி என்பது ஊக்கத்தின் வெற்றியே. (670) நல்லினத்தொடு சேர்ந்தால் மனந்தூய்மையும், செயல் தூய்மையும் உண்டாம். (455) இன்ன இன்ன வகைகளில் எல்லாம் செயல் சிறக்கும் வழிகளைச் செம்மாந்துரைத்தவர் செந்நாப்போதார். தமிழ் இலக்கணரோ தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, ஏவல் வினை, குறிப்பு வினை, தெரிநிலை வினை, வினை எச்சம், வினை முற்று என வினை நிலையைத் தனி இயலாகவே விரித்துரைத்தனர்! இவ்வாறாகவும், வள்ளுவர் காட்டாத வினை, விதி என்பவற்றை அவர் நூலில் உள்ளதாகக் காட்டுவதில் என்னதான் நலமோ, என்னதான் நிறைவோ? கடந்த வினையைக் காட்டி, நடைபெறும் வாழ்வை நலிப்பது நன்னெறி அன்றாம்! முற்பகல் செய்யும் செயற்பயன் பிற்பகல் விளைந்து விடும் என்பதை, அடுத்த பிறவிக்கு ஆக்குவானேன்! அது வருந்தவோ திருந்தவோ ஆகுமா? (655) இப்பிறப்பில் செய்யும் குற்றத்திற்குத் தண்டனை, அடுத்த பிறப்பில் இயலும் என்பது, ஆளும் இறையியலுக்கும் ஆகுமா? அவ்வாறு ஆகாதது, இறைவன் இயல் என்று கூறலாமா? அப்பன் குற்றம் அவனை விட்டு அவன் மகனுக்கு ஆக, அரசுச் சட்டமும் இல்லையே! அறச்சட்டம் அவ்வண்ணம் ஆகுமா? முற்பகல் வினைக்குப் பிற்பகலே விளைவு உண்டு என்பதை எண்ணிய அறிஞர் ஒருவர், முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி ஒரு நொடி என்றாரே! எத்தகு அருமை அது! வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து (1268) என்னும் திருக்குறள் தலைவி விருந்து வாழ்த்தே, தெய்வப் புலவர் வினை என்னும் வாழ்த்து நோக்காம் என வாழ்த்தி, வினைநல வீறு பெறுவோமாக! 17. காலமறிதல் ஒருவர் பிறந்த நேரத்தைக் கொண்டு பிறப்பியம் (சாதகம்) வரைவதைப் பரிசுச் சீட்டுப் பெரு விருப்பினும் பெருவிருப்பாகப் பலரும் செய்வதைக் காண்கிறோம். குறி என்பது இலக்கணம் என்ற நிலைமாறி, தொடு குறி, எண் குறி, மச்சக்குறி, உறுப்புக் குறி, வரிக் (இரேகை) குறி, நட்ட குறி எனப் பலவாகப் பார்த்தலைக் காண்கிறோம். கிளிச்சீட்டு, பல்லி ஒலி, பறவை ஒலி, பூனைச் செலவு, சொகினம் (சகுனம்) திக்குமாறு (சூலம்) இன்னவும் பெருவரவாக உள்ளன. கணியரைக் கேளாமல் நல்லதாகத் தெரிந்தாலும் அப்பெயரை வைப்பதில்லை. மொழிக்கேடாக - மரபுக்கேடாக - என்ன ஆயினும் கணியர் கூறிய வகையில் அமைத்துக் கொள்வதே அமைப்பெனப் பலரும் கொள்கின்றனர்! பூக்கட்டிப் பார்த்தலும், கயிறிட்டுக் காணலும். உருவிலி (அசரீரி)ச் சொல் கேட்டலும், மருள், ஆவலிப்பு (ஆவேசம்) உரை கேட்டலும், உடுக்கடி, குடுகுடுப்பை, இராப்பாடி சொற்கேட்டலும் நிகழ்ந்து வருதலை அறியவே செய்கிறோம். நம்பிக்கையாம் மூலப்பொருளைக் கொண்டு நடையிடும் இவற்றைப் பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளாரா? அவர் காலத்தில், நாள் மீன் கோள் மீன் பற்றிய தெளிவு நன்றாகவே இருந்தது. வையத்தின் வானம் நணியது உடைத்து. என்று அவரேகூறுகிறார். வானியலை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் இருந்ததைச் சுட்டுகிறார். புறநானூற்றில் வானியல் இயக்கம் பற்றிய செய்திகள் பல உண்டு! வான் வீழ் கொள்ளி வீழ்ச்சியும் விளைவும் சொல்லப்பட்டுள. ஆயினும் பிறப்புக்கும்- இறப்புக்கும் - நலத்துக்கும் - கேட்டுக்கும் - வறுமைக்கும் - வாழ்வுக்கும் திருவள்ளுவர், நாள் கோள்களை எவ்விடத்தேனும் தொடர்பு காட்டியுள்ளாரா? இல்லையே! தோன்றில் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று (236) என்பது பிறப்பியம் பற்றியது ஆகுமா? பிறந்தால் புகழொடு பிறக்க எனப் பேசினாரா பொய்யா மொழியார்? பிறப்பு, இறப்புகளைக் கருநிலையில் பெற்றோர் அறிவரா? பிறப்பார் அறிவரா? நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (124) என்கின்றாரே! வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப் படின் (272) என்கிறாரே! இவை பிறப்பினவா? உட்பகை தோன்றுவதையும் (884, 885) தும்மல் தோன்றுவதையும் (1254) கூறுகிறாரே! தோன்றுக என்பது, ஒரு செயற்பாட்டில், ஒரு பொறுப்பில், ஒரு கடமையில், ஓரவையில் தோன்றின் புகழுண்டாகத் தோன்றுக; முடியாதா ஆங்குத் தோன்றாமல் இகுந்து தோன்றுதற்கு வேண்டும் முயற்சிகளில் முனைக என்னும் பொருளதாதலை முன்னும் கண்டுளோமே! ஊழும், வினையும் தலைவிதிப் பொருளில் திருவள்ளுவர் சொல்லாமை போலவே, கணியர் கூறும் பிறப்பியம் நாள்கோள் ஆளுகை ஆகியவற்றையும் கூறினார் அல்லர்! காலம் அறிதல், இடம் அறிதல்; குறிப்பறிதல் என்றெல்லாம் கூறியுள்ளாரே எனின், இவற்றொடு, அவையறிதல், ஒப்புர வறிதல், செய்ந்நன்றி அறிதல், வலியறிதல் என்பவற்றையும் அறிதல் வகையாகச் சொல்லியுள்ளாரே அல்லவோ! குறிப்பறிதல் என்பது பொதுவாழ்வில் கொள்ள வேண்டுவனவும், குடும்ப வாழ்வில் கொள்ள வேண்டுவனவும் ஆகிய குறிப்புகள் தனித்தனி இருத்தலால் பொருட்பாலில் ஒன்றும், இன்பத்துப் பாலில் ஒன்றுமாக அமைத்தாரே! அம்மட்டோ! இன்பத்துப் பாலில் குறிப்பறிவுறுத்தல் என்றும் அமைத்தாரே! இம்மூன்று அதிகாரங்களிலும் முகக்குறி, கட்குறி, சொற்குறி என்பனவெல்லாம், அகக்குறி அறிகருவியாய் உளவியல் உரைப்பன அல்லவோ! இவை, ஒருவர் உளத்தை ஒருவர் பயின்று செயல்படுதற்கு அமைந்த அறிபொறிகள் அல்லவோ! தாம் வேண்டுவாரின் குறிப்புக் காண்டலை அன்றித், தொழில் முறையால் குறி கூறுவனவா இவை? காலம் அறிதலில் நம் காலம் அது; அல் காலம் இது; ஆம் பொழுது இது; ஆகாப் பொழுது இது; என நாள் கோள் பற்றிய குறிப்புகள் உளவா? தெரிந்து செயல் வகை (47) வலியறிதல் (48) காலம் அறிதல் (49) இடன் அறிதல் (49) தெரிந்து தெளிதல் (51) தெரிந்து விளையாடல் (52) என்னும் அதிகார வைப்பு முறையே, ஒரு செயலைச் செம்மையாகச் செய்து முடிக்கத் தக்க வழிவகைகளைக் கூறுவனவே அவை; கணியம் பற்றியவை அல்ல என்பதைக் காட்டுமே! காலம் அறிதலில் கூகை, காக்கை, தகர் (ஆட்டுக்கடா), கொக்கு என்பவற்றைக் காட்டியல்லவோ பொழுது, செயல் விரைவு, செயல் சோர்வு, உளத்திண்மை, பின்வாங்கி முன்னேறல் என்பவற்றை விளக்கினார். அவை கணியமா? இன்ன மாதம், இன்ன கிழமை, இன்ன நேரம் செயலுக்கு உரியது; உரியது அல்லது என்ற குறிப்பு ஆங்கு உண்டா? இடம் அறிதலில் முதலையின் இடவலிமை காட்டினாரே! நரிக்கு யானையை விழ்த்தும் இடமும் உண்டு என்றாரே! கப்பல் செல்லும் இடம் உரைத்தாரே! தேர் செல்லா இடம் உரைத்தாரே! அவரவர் உறைவிடம், அயலிடம் ஆயவற்றை உரைத்து ஆக்கமும் அழிவும் காட்டினாரே! இத்திசை இந்நாளில் செல்க! இத்திசை இந்நாளில் செல்லற்க! இத்திசையில் இந்நாள் செல்ல இது செய்தல் தடை நீக்கம்! (பரிகாரம்) இத்திசை இவ்விந்நாள்களில் எதிரீடு (சூலம்) என்றெல்லாம் இடனறிதலில் உரைத்தாரா? திருவள்ளுவர் பெயரால் எத்தனை எத்தனை சோதிட நிலையங்கள்! ஞானவெட்டியான் முதலாய நூல்கள்! முப்பால் எழுதிய திருவள்ளுவர் அப்பால் எழுதிய நூல்களா இவை? திருவள்ளுவர் பெயரால் ஊர், தெரு, மன்றம், நூல், அறக்கட்டளை, சிலை, கோட்டம், சாலை என்பவை இருத்தலை நினைத்துப் பூரிப்படைகிறோம்! அவர் அதிகாரக் கணக்கில் 133 அடி உயரச்சிலை நீலத்திரைக் கடல் ஓரத்திலே நிற்க இருப்பதறிந்து மகிழ்கிறோம்! பிஞ்சுக் குழந்தைகள் மழலை வாய்முதல், பெருமூதாளர் பொக்கை வாய் வரை குறளமுதம் வெளிப்படல் கண்டு திளைக்கிறோம். அதே பொழுதில், திருக்குறளா நடைமுறைக்கு ஒத்துவராத நூல் என்று பழிக்கும் உதவாக்கடைகளையும், திருக்குறளா பெண்மையைப் பழிக்கும் நூல் என்னும் ஆய்வுக் குறையர்களையும், திருவள்ளுவர் சிலையா? திறக்க விடோம்! என்னும் சுருக்கப் பார்வையரையும் நினைத்துப் புண் படுகிறோம். இப்புண்பாடு போலவே புண்படுத்தும் ஒன்றும் உண்டு. கணியம் பெரும்பாலும் தன்னம்பிக்கையைப் போக்கி நாள்கோள் நம்பிக்கையை ஆக்கி வைப்பதாகவே உள்ளது. மக்கள் உறுதிப்பாட்டை உலைத்துக், காலக்கழிவை ஆக்கிப் பணப்பறிப்பு வேலையெனவே பெரும்பாலும் நிகழ்கின்றது. பெரிய பெரிய விளம்பரம் செய்து கவர்ச்சி காட்டும் இக்கணியம் திருவள்ளுவர் பெயரால் செய்யப்படுவது அவர் கொள்கைக்கு முற்றும் மாறானதாம்! அவர் கணித நூல் செய்தாரெனக் காட்டுவதோ, அவர் கணியம் செய்தார் என நாட்டுவதோ பொருந்தாச் செயலாம்! வள்ளுவம் என்பது திருக்குறள் நெறியெனக் கற்றோர்க் கெல்லாம் முற்றத் தெளிவான செய்தியாம்! பெருவழக்கில் நிற்கும் நிலையும் பெற்றதாம். ஆகவும், வள்ளுவம் என்பதைக் கணியம் (சோதிடம்) என்றாக்கிப் பரப்புதல் வள்ளுவத்திற்குப் பெருமை சேர்க்காததாம். வள்ளுவர் பெருமைக்கு இணை யில்லாமை, உலகம் தழுவிய நெறிமையே அன்றிப் பிறிது இன்றாம்! அதனைத் தமிழ் ஆய்ந்தோர் தமிழில் தோய்ந்தோர் கணியம் எனச் செய்வது, செய்தக்க அல்ல செயக்கெடும் என்னும் அவர் வாக்குச் சான்றாகி விடுவதாம்! அரிய ஆய்வுகள், என்றும் அரிய ஆய்வுகளே! பரபரப்புத் தலைப்பு ஆய்வார்க்கு உட்கசப்பு ஆக்குவதே! உள்ளம் உடைமை உடைமை உடையர் எனப்படுவது ஊக்கம் உள்ளத் தனையது உயர்வு உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை என்னும் வள்ளுவம் ஒள்ளிய தன்னம்பிக்கை நூல்! ஊக்கமுடையவனுக்கு உதவ, மாறா இயற்கையும் மடிதட்டிக் கொண்டு வந்து முந்து நிற்கும் என்பதும், உலகமெல்லாம் கொள்ள நினைத்தாலும் ஊக்கத்தால் முடியும் என்பதும் அது! அத்தன்னம்பிக்கை நோக்கு, நம் நோக்கு ஆவதாக! அறியாமைச் செயல்கள் அழிந்தொழிக! 18. மதுவிலக்கு கிளித்தட்டு விளையாட்டுப் போலத் தடுப்பும் எடுப்புமாக நாட்டில் நடந்து வரும் கூத்து மதுவிலக்கு என்பது. ஆங்கிலவரை அகற்றுவதற்கு மதுவிலக்கும் கூட ஒரு கருவியாகப் போற்றப்பட்ட காலம் இருந்தமை முதியர் அறிவர். கள்ளுக்கடை மறியல் சாராய ஒழிப்பு மதுவிலக்கு என்றெல்லாம் உணர்வு மூண்டு நின்ற நிலை. குடியைக் கெடுக்கும் குடியை ஒழி என்றவர்களும் ஆட்சிக்கு வந்து அவ்வொழிப்பை மறக்கலாயினர்; தளரலாயினர். மற்றவர் களோ, அத்திட்டத்திற்கு மூடுவிழாச் செய்து விட்டனர். குடி கெட்டாலும் குற்றமில்லை! பொருள் வருவாய் வேண்டும் என்ற முடிவில் நின்று விட்டனர். நேர் வருவாய் அரசுக்கு, மறைமுக வரவாய் மதுவிலக்குத்துறை, காவல்துறை ஆகிய மற்றவற்றுக்கு! கூடிய வெறி வேண்டும் எனின், கள்ள மது வேண்டுமே! காய்ச்சினால் என்ன? காசுதான் கைக்கு வருகிறதே! வீடு கெட்டால் என்ன, நாடு கெட்டால் என்ன? குடியரசு, குடியாட்சி என்பவற்றிற்கு இப்படியொரு பழிப்பெயரும் உண்டாகும் என்று அப்பெயரைச் சூட்டியவர்கள் அறிவரா? திருவள்ளுவர் நாளில் கள்ளும் மதுவும் விருந்துப் பொருளாகவும் வீட்டுப் பொருளாகவும் இருந்தமையைச் சங்க இலக்கியம் வழிய வழியக்காட்டுகின்றது! கபிலர் என்ன, ஔவையார் என்ன குடியில் திளைத்தனர். பாரி என்ன, அதியமான் என்ன பரிவாக ஊட்டியும் உண்டும் திளைத்தனர். பாரியின் பறம்பு மலைக்கல்லை மது உருட்டிக் கொண்டு வருமாம். மதுவை உலையாக ஊற்றி உணவாக்கு வராம்! அதியமான் வெறியேற்றும் அடிமண்டி மதுவை ஔவைக்குக் குடிக்கத்தருவனாம். தான் தெளிவைக் குடிப்பனாம்! காரியாதன் வரும் புலவர்களுக்கெல்லாம் மதுவை வாரி வாரி வழங்குவனாம். நம் வரலாற்றுப் பெட்டகமெனத் திகழும் புறாநனூற்றில் காணும் செய்திகள் இவை. ஊரார் தன் குழந்தையை மெச்சிவிட்டால் தனக்குக் கள்வெறி உண்டாகன்றது என்கிறாள் தாய்! இது பாரதியார் பாட்டு! கஞ்சாக் குடியை மறக்க எத்தனை எத்தனையோ முறை முடிவெடுத்துத் தோற்றதையும் உரைக்கிறார். (சித்தக்கடல்) அவருக்குப் பின் வந்த பாவேந்தரும் மதுமயக்கத்தில் இருந்து விட்டு விலகல் அரிதாயிறு. மதுவும் மங்கையும் இருந்தால்தான் பாடல் ஊற்றெடுக்கும். கலைகமழும் என்ற வெளிநாட்டுப் புலவர்கள் போலவே கோப்பையிலே குடியிருப்பு என்று கொண்ட நம்மவர்களும் இருந்தமை நாடறி செய்தி! மது வொழிப்புப் பற்றி நாடறியப் பரப்பிய நல்லதம்பியும் அதற்குத் தப்பவில்லை. திருக்குறளுக்கு உரைகண்ட ஆய்வுசால் அறிஞர் பெரு மக்களுள் சிலரும் கள்ளும் மதுவும் கடிய உழைப்பாளர்க்கு வேண்டுவதே என்று கூறினார்; அது பொதுவறம் அன்று என்றும் புகன்றனர். மதுவை எப்படித் தடுப்பினும் தடுக்க இயலாது; கள்ள மதுவே காய்ச்சப் பெறும்; அதற்கு மதுவிலக்கை விலக்கி நாட்டுப் பொருள் நிலையைப் பெருக்குவது நலம் என்று அரசுடையார் முடிவெடுத்தனர். அவ்வாறானால் களவை ஒழிக்க முடியவில்லை; கலப் படத்தைத் தடுக்க முடியவில்லை; கடத்துதலை அகற்ற முடிய வில்லை; கொலையை நீக்க முடியவில்லை; கள்ள நாணயம் அடிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றுக்கும் கட்டணம் வைத்து உரிமை வழங்கிப் பொருளைப் பெருக்கலாம் என்பதா? கொலைக் கருவி செய்தல் குண்டு வைத்தல் இவற்றுக்கும் உரிமை வழங்கி விடுவதா? காவல்கடமை என்பது எவ்வெவ்வகைத் தீமைகளில் இருந்தும் காப்பது தானே! அலுவலகங்களில், பொது இடங்களில் புகைத்தலைத் தடுக்கவே முடியாப் பொறுப்பற்ற அமைப்புகளையும் அரசு ஆணைகளையும் நினைத்தால் நகைப்பதன்றி என்ன செய்யலாம்! போதை ஊசி, போதைப் பொடி என்பன எங்கெல்லாம், எவரையெல்லாம் மீளா அடிமைக்கு ஆளாக்கி வருகின்றன! மருத்துவக்கல்லூரி வளாகத்தையே வளைத்துப் பேயாட்டம் போடச் செய்யும் அவை, மற்றைக்கல்வி நிலையங் களை விட்டு வைக்குமா? ஆள்வோரும் அறிவு வல்லாரும் தொண்டு நிறுவனத்தாரும் இப்போதைக் கொடுங்கையில் இருந்து இளைய தலைமுறையைக் காக்கத் தவறினால், எதிர்கால நாடு எப்படி இருக்கும்? அமைதி எங்காவது இருக்குமா? சான்றோர் நொந்தும் வெந்தும் சாவதை அல்லாமல் வாழ முடியுமா? உலகச் சிறுமையைக் கண்டு எங்களால் வாழ முடியவில்லை என்று கணவனும் மனைவியும் கடிதமாய் எழுதிவைத்து அமெரிக்கக் கடற்கரையில் பிணமாகக் கிடந்த செய்தி உலகச் சான்றோர்க்கும் ஆள்வோர்க்கும் அறைந்த அறைகூவல் இல்லையா? மதுவால் தேடும் பொருள் பொருளா? குடிகளைக் கெடுத்துக் கொள்ளைக் காசு தேடக் குத்தகைக்கு விடுதலா அரசின் இறையாண்மை? மதுவிலக்குத் தீவு என இங்கிலாந்து சார்ந்ததொரு தீவை மது வணிகனுக்குப் பிறந்தும் அதன் கேட்டை உணர்ந்த மாண்பு மகன் உருவாக்கியதை உலகம் அறிந்தும் அதனை எடுத்துக் காட்டாகத் திருக்குறள் பிறந்த மண்ணாவது போற்றக்கூடாதா? இவ்வளவு என்ன? இதற்கு மேலே எத்தனை ஆயிரம் எண்ணியிருந்தால் அந்நாளிலேயே கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தைப் படைத்திருப்பார் திருவள்ளுவர்? சான்றோர் புகழும் புகழ்ச்சியைக் கேட்கும் இன்பமே இன்பம் என்னும் ஈன்ற தாய், சான்றோர் பழிக்கு ஆளாக்கும் மதுவினை விரும்புவானை விரும்புவளோ? (923) ‘<‹whns fhz Kf« fÊ¡F« m¥ãw¥ig¢ rh‹nwh® fhzî« ÉU«òtnuh? (922) ‘<‹whns ÉU«gh¡ Foia¡ Fo¤J¡ Foia¡ bfhL¡fnth ï¥ãw¥ò¥ ãwªjJ? குடித்தும் பழகியவன் குடியை விடுகின்றானா? அவள் விடுவதற்கு நினைத்தாலும் அவனை விடுகின்றதா அவன் குடிப்பழக்கம்? கொண்டது விடாக் கொடுமுதலையாக இருக்கும் கடிக்கு உள்ளத்தில் குடியிருக்க இடம் தரலாமா? தெளிந்து தேர்ந்து பெற்ற அறிவை அடியோடு அழிக்கும் குடி என்பதை அறிந்தும். தானே தன் அறிவைக் கொல்லும் தற்கொலையைச் செய்ய முற்படுவதா அறிவுடைமை? பொருளைக் கொடுத்து பொறிபுலன்களைச் செயலறக் கெடுத்துக் கொள்வதற்கா இக்குடிப்பிறவி பிறந்தது? (925) நஞ்சைக் குடித்தால் உடன் சாவு; மதுவைக்குடித்தால் தவணைச் சாவு; நஞ்சை உண்பதற்கும், கள்ளை உண்பதற்கும் என்னதான் வேறுபாடு? இவ்வளவும் கூறிய திருவள்ளுவர், குடியன் திருந்துதற்குக் கடைசி வாய்ப்பாக ஒன்றைக் குறிப்பிடுகிறார். குடித்து மயங்கியவன் தன்னை அறியமாட்டான்; தான் செய்ததை உணரமாட்டான்; பிறர் சொன்னதைக் கேட்கவும் மாட்டான்; பிறர் நகைப்புக்கு நாணவும் மாட்டான்; ஆனால் குடியாத போது, குடித்துவிட்டுக் கிடப்பவன் கிடக்கும் நிலையைக் கண்டாலாவது, நானும் குடித்த நிலையில் இப்படித் தானே கிடப்பேன் என்று எண்ணியாவது திருந்தமாட்டானா? என்று ஏங்குகிறார் வள்ளுவர். அதனால், கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு என்கிறார். (930) அறிவாளர் செய்யும் பிழையானால் என்ன? ஆள்வோர் செய்யும் பிழையானால் என்ன? பிழை பிழையே என்பது அறவர் கடமை; அதனை உணர்ந்த அறவர் திருவள்ளுவர் உண்ணற்க கள்ளை என ஓங்கிக்குரல் கொடுத்தார்! சங்கச் சான்றோர் என்று பாராட்டுகிறோமே! அச் சான்றோர் தம் வாழ்வில் சான்றாகவில்லையே என வருந்தியமையால்தான், திருவள்ளுவர் உள்ளார்ந்த கவலை பெருக்கெடுக்கச் சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை (990) என்றார். மதுவொழிப்புக்கு முதன் முதலாய்த் தமிழ் மண்ணில் குரல் கொடுத்த மாமணி திருவள்ளுவர் ஆவர். உலகம் உய்வதற்கு அவர் நோக்கிய தனிப்பெரு நோக்குகளில் ஒன்று மதுவிலக் காகும். கற்பது தன் கசடு அறுவதற்குக் கற்பதாய் அமைந்தால், அதன்படி நிற்பதற்குத் தடையெதுவுமில்லையே! 19. சூதொழிப்பு தமிழ்நாடு அறுபது காசு அவ்வளவு மலிவாகி விட்டது தமிழ்நாடு! நூறுகாசுப் பரிசுச்சீட்டு அறுபது காசாம்! தமிழ்நாடு மட்டும்தானா? நாகாலாந்து என்ன, உ.பி.என்ன, இமாசலப்பிரதேசம் (பிரதேசம் - பைதிரம்) என்ன எல்லாப் பரிசுச் சீட்டுகளுக்கும் சந்தை தமிழகமே! அவ்வளவு முன்னிலை, அவற்றை அச்சிடுவது முதல்! பரிசுச்சீட்டு பொலிவுமிக்க - கூவிக்கூவி விற்கின்ற சூதாட்டம்! சூது கருவி இருந்தால்தானா சூது! உள்ளத்திலேயே சூது உரவாவதால்தானே சூதும் வாதும் வேதனை செய்யும் என்னும் மொழி உண்டாயது. பரிசச்சீட்டிலே காத்திருக்க வேண்டாமல் உடனடிப்பரிசு, விதை போட்டதும் விளைவு காணும் துடிப்பின் தூண்டல்! சுரண்டல் சீட்டு! வயிற்றுக்கு இல்லாவிட்டாலும் வாங்கத் தவறாத பரிசுச் சீட்டு! நாட்டு வருவாய் கருதி வீட்டைக் கெடுக்கும் வினை! இளக்கமானவர்களை இழுக்கும் பரிசுத் தூண்டில்! பரிசுக்கு ஆசைப்பட்டுக் குடும்பம் குடும்பமாய்ப் பாழாகும் அவலம்! அரசே கெடுத்தால், ஆர் கெடுக்கமாட்டார்! செம்பு பித்தளையைத் தங்கமாக்கும் ஏமாற்றில் கெட்டவர் முன்னே பலர். இப்பொழுது ஒரு பங்குக்கு இரண்டு பங்குப் பணத்தாள்; குலுக்கல் சீட்டு; தவணைக்கடை - பெருவட்டி இப்படி எத்தனை எத்தனையோ ஏமாற்று வரிகள் - ஏமாறும் ஏழை மக்கள்! பொலிவாகப் பொருள் நிறுவனங்களின் துவக்கவிழா! சுருட்டி முடிந்ததும் எவர்க்கும் தெரியாமல் மூடுவிழா! கடையை உடைத்துப் பார்த்து, அவரவர் தலையைப் பிடித்துப் பிய்த்துக் கொள்வதும் பித்துப் பிடிப்பதும் கண்ட பயன்! பின்னே தேடுபடலம்! ஓடுபடலம்! மறைமுக நிகழ்ச்சிகளா இவை? செய்தித்தாளில் மூடுதலும் ஓடுதலும் பக்கம் பக்கமாய் வரத்தானே செய்கின்றன! அவற்றைக் கண்டேனும் விழிக்கக்கூடாதா? குறுக்கு வழியில்கோடி குவிக்க நினைக்கும் பேராசை தானே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக்கொள்ளச் செய்கின்றது. இலக்கம் கோடி எனப் பரிசு விழத்தானே செய்கின்றது! உழைத்து அவ்வளவு தேட முடியுமா? என்பார் உளர். கோடி எவரோ ஒருவர் பெற, இழந்து மொட்டையானவர் எத்தனை கோடிப் பேர்கள்? ஊரையடித்து ஒருவர் வாழ வாழ்வதா வாழ்வு? போலிநம்பிக்கை, உழைப்பின் உயர்ந்த நம்பிக்கையை ஒழிக்கின்றது என்றால், அப்போலி நம்பிக்கையைப் பெருக்குவது முறைதானா? ஊர் எரியும் வெளிச்சத்தில் முள் குத்தாமல் நடக்க முடிகிறது என்றுசொன்னால் மூளைமாறி கூட ஒப்புவானா? கொழுத்த செல்வர் குதிரை ஓட்டத்திலும், சீட்டாட்டத் திலும் செல்வத்தைச் சிறுபொழுது மகிழ்வுக்குச் செலவழிக் கிறார்கள் என்றால், அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலமருவானும் ஆசையால் பற்றிக் கொள்கின்றானே! தூண்டும் கவர்ச்சியைத் தூர விலக்கும் துணிவு இல்லார் விளக்கைச் சுற்றும் விட்டில் எனத் திரிவது கண்டால் அறிவர் அறவர் உள்ளம் நோகவும் வேகவும் தானே செய்யும்! தருமன் கதை கேளாத நாடா இது? அவனினும் அறவன் தமிழ் மண்ணில் பிறந்திருந்தாலும் அவன் பெயரைச் சொல்லாமல், தருமனைத் தானே காட்டினோம்! நளன் கதை கேளாத மண்ணா இது? தருமன் கதை கூறும் பாரதக் கிளைக் கதைதானே அது! சூதால் கெட்டழிந்தானுக்கு, உனக்கு முன்னே கெட்டழிந்தான் உண்டு என்பதைக் காட்டவதற்குக் கூறப்பட்டது தானே நளன் கதை! நாடாண்ட வேந்தர்களும் சூதினால் கெட்டார்கள் என்ற அளவிலா நின்றது? கொண்ட மனைவியை என்ன பாடெல்லாம் படுத்த அடிப்படை ஆயிற்று. அதனால்தானே தமிழ் மறம் பாடலில், மன்னர் குடியினர் மணப்பெண் கேட்டு வருதல் இழிவினும் இழிவு என்று காட்டுவாராய் விற்றதார் கலைபாதி யோடு வனத்திலே அழவிட்டதார் வெஞ்சிறைப் புகவிட்டதார் துகில் உரிய விட்டு விழித்ததார்? என்று வினாவி, உற்றதாரமும் வேண்டுமென்றினி மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ? என்று பாடினார் சிவப்பிரகாச அடிகளார்! இதனை, நாடு பாடமாக எடுத்துக்கொண்டதா? சூதாடல் தீது என்று விட்டதா? அரசேனும் ஒழித்ததா? சூதே அரசியல் ஆகிவிட்ட பின் அரசா சூதை ஒழிக்கும்? சங்கப் புலவருள் ஒருவராய தாமப்பல் கண்ணனார், வட்டு என்னும் சூதாட்டம் ஆடியபோது, சூதிலும் அவர் சூழ்ச்சி யாட்டம் ஆட, அதனைக் கையும் களவுமாய்க் கண்ட சோழன் மைந்தன் வட்டுக் காயையே புலவன் முகத்தில் அறைந்து விட்ட செய்தி புறநானூற்றில் உண்டு! புலவன் சிறு செயல் அது, எனின் இளையன் கெட அவன்தானே வழிகாட்டி! எதிர்கால வேந்தனைப் பாழாக்கிய கயமைக்கு இடமானவன் தாமப் பல்லான் அன்னான்தானே! ஆள்வோன் எனினும் அலுவலன் எனினும் குடிமக்கள் எனினும் குற்றச் செயல் புரிதல் குற்றமே; அதிகாரம் கருதியோ குடிப்பிறப்புக் கருதியோ குற்றத்தைக் குணமாக்கிவிட முடியாது என்பது வள்ளுவரின் தேர்ந்து தெளிந்த முடிவு. ஆகலின் விலக்கி ஒழிக்க வேண்டிய பன்மணம் (பலவுறவு), மதுக்குடி, என்ப வற்றோடு கவறாடல் (சூதாடல்) என்பதையும் சேர்த்தார். செல்வத்தை இழந்தொழிய வேண்டுவார் செய்வன இம்மூன்றும் என்று உறுதிப்படுத்தி, இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு என்றார். (920) தன்வெற்றி கருதியே ஆடுவதும் வட்டமாய் இருந்து ஆடுவதும் வட்டுக்காய் போன்றவற்றை உருட்டி ஆடுவதும் ஆகிய நோக்கிலே அதனைச் சூழ்து (சூது) என்றனர். அச்சூதின் கொடுமை இழிமை ஆகியவற்றை, ஒன்றெய்தி நூறு இழக்கும் சூது என்றார். ஒன்று எய்துவது சூதாடி என்பதொரு பெயர். நூறு இழப்பது குடிப்பிறப்பு, கல்வி, செல்வம், மானம் இன்ன பல அவருக்கு நன்றெய்தி வாழும் வாழ்வே இல்லை என்றார். சூதால் கெட்டொழியும் கேடு, அறத்தொடு கூடாக்கேடு ஆதலால் ஈன்றாளும்கூட அவனைப் பிறனைப்போல் நோக்குவாள். சிறுமை பல செய்து சீரழிப்பது சூது பழகிய செல்வத்தையும் பண்பையும் கெடுப்பது சூது உடை செல்வம் ஊண் புகழ் முதலியவற்றை ஒழிப்பது சூது என்றெல்லாம் கூறினார். சூதின் இயல்பினை ஓர் அரிய உவமையால் கூறினார் திருவள்ளுவர். புழுவைக் கவ்வ வரும் மீன் தூண்டில் முள்ளையும் கவ்வி மாட்டிக் கொண்டு மாள்கின்றது அல்லவா! அப்படியே சூதனும் சிறிய ஆசையால் பெரிய இழப்புக்கு ஆட்படுவான் என்றார். அப்படித் தன் சிற்றார்வத்தால் தான் பேரிழப்புக்கு உட்பட்டு எல்லாம் இழந்தாலும் இழப்பை எண்ணிச் சூதாட்டை விட்டொழிப்பானா எனின், மாட்டான்; அச்சூதினை விட்டொழியான் என்பதை, இழத்தொறும் காதலிக்கும் சூது என்று தெளிந்து கூறினார். இழக்க இழக்க இந்த ஆட்டத்தில் வென்று விடலாம்; இந்த ஆட்டத்தில் வென்று விடலாம் என்று பெருக்கிப் பெருக்கிப் பேராசைப் பேயாட்டம் போடவைக்கும் சூது என்றார்! இவற்றை உணர்ந்து பார்த்தால் அரசு சூதுக்கு எவ்வகையிலும் இடம் தரலாமா? அறிவறி பெருமக்கள் விளையாட்டுக்காக எனினும், பொழுது போக்குக்கெனினும் சூது ஆடலாமா? பழகிப் பாழாகிப் போன தம் கேட்டை, வரும் இளைய பாலுள்ளங்கள் பார்த்துப் பழகிவிட வழிகாட்டலாமா? சூதாடிய தருமன் செயலை எண்ணிய வீமன் அருச்சுனனை நோக்கி, எரிதழல் கொண்டு வாடா தம்பி, அண்ணன் கையை எரித்திடுவோம் என்று கூறுவதாகப் பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதப் பாட்டு அவர் சூதினை வெறுத்த வெறுப்பின் வெளிப்பாடுதானே! வள்ளுவர் உட்கொண்ட வாழ்வியல் வளநோக்கை வையகம் பற்றிக் கொள்ளுமானால் சூதுக்களமாக மாறி வரும் உலகம் மாண்பு உலகமாகத் திகழுமே! 20. குறை நீக்கும் குடிமை நாட்டு நல வாழ்வு எங்கே உள்ளது? நாட்டிலே உள்ளதா? இல்லை. வீட்டிலே உள்ளதா? வீட்டிலேதான் நாட்டு நல வாழ்வு உள்ளது! வீட்டிலே இல்லா நலவாழ்வு, நாட்டில் தோன்றவே தோன்றாது. வீட்டிலே பிறந்த குழந்தை ஊருக்கு ஆகி, உலகுக்கும் ஆவது போல, வீட்டிலே பிறந்த நல வாழ்வே நாட்டுக்கும் நானிலத்துக்கும் ஆகின்றது. அந்த ஒன்றிற்கும் மூலம் உண்டு மூலத்தில் இருந்தே முளை கிளம்பும்; முளையில் இருந்தே விளைவு சிறக்கும். மூலம் என்பது நுண்மம், வேர், வித்து, கிழங்கு என்பன இம்மூலமே ஆதிமூலம்! இம்மூலம் போல உலக மூலம் ஒன்றுண்டு அது வீட்டு மூலத்திற்கும் முற்பட்ட கூட்டு மூலம்! உயிரின் வீடு யாது? உணர்வின் உறையுள் யாது? அது கூடு? அதுவே கூட்டம் சேர்ப்பது! அதுவே கூட்டம் ஒழிப்பது! அக் கூட்டின் சிறப்புப் பெயர் உயிர் நிலை என்பது! உயிர் நிலையில் இருந்தே உயர்நிலை எய்த வேண்டும் - எய்தும் - என்பது வள்ளுவத்தின் ஆழ்ந்த நோக்கு! இன்பத்துப் பால் உள்ளீடு உளவியல்! வளர்ந்து வளர்ந்து முழுமதியாகத் தோன்றும் திங்களைப் போல் வளர்ந்து வளர்ந்து நிறைவின் நிறைவாவது வாழ்வு என்பதைக் காட்டுவது! கலைக்காட்சி காட்டிக் கவர்ந்து கொண்டு போய் நிலைபேறாம் மெய்யியல் இஃதெனக் காட்டுவதே காமத்துப்பால்! படிப்படியாய் நிறையும் பாங்கால் காமம் என்னும் பெயர் பெற்றது. கமம் நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம். காமம் என்பது பெருகி வாழும் வாழ்வு. சில சொற்களுக்குக் காலப் போக்கில் உயர்வும் தாழ்வும் ஏற்பட்டு விடுதல் உண்டு. அவ்வகையில் காமம் என்பது உயர்வு நிலையில் இருந்து சரிந்துவிட்ட சொல்லாயிற்று. இன்பம் - எல்லா உயிர்க்கும் பொதுவானது! காமம் - மாந்தர்க்கே உரிய சிறப்பியல்பு! காமம் என்னும் சொல்லின் பொருள் தாழ்ந்த காலத்தில் காமத்துப் பால் இன்பத்துப் பால் ஆயிற்று. அறம்பொருள் இன்பம் (8) இருபதிற் றைந்தின்பம் (20) இன்பம் பொருள் அறம் (33) இன்பத் திறம் இருபத் தைந்து (37) இன்பு சிறந்தநெய் (47) இன்பின் திறனறிந்தேம் (50) எனத் திருவள்ளுவ மாலையில் இன்பப் பால் குறிப்புகள் ஆறு உண்டு. காமத்தின் பக்கம் (27) காமத் திறம்மூன்று எனக் காமமும் உண்டு. திருக்குறள் மூன்றாம் பாலில் இன்பம் எனவரும் குறள் இரண்டே இரண்டு. அவ்விரண்டு இடங்களிலும் காமம் என்னும் சொல்லும் உண்டு ஆனால் காமம் என்பது தனித்து வரும் இடங்கள் (38) ஏன்? மாந்தர்க்குரிய தனிப் பெருமைக்குரியது காமம்! இன்பமோ எல்லா உயிர்க்கும் உரிய பொதுத் தன்மையது! அம்மட்டோ? மாம்பழம் இனிக்கும்! உப்பும் சுவைக்கும்! புளிக்கூட்டு சொட்டிச் சுவைக்கச் செய்கின்றதே! காட்சி இன்பம், கேள்வி, இன்பம், நாவின்பம், மணவின்பம் தொடுதல் இன்பம் எனக் கொள்கிறோமே? இந்த ஐந்தும் இன்பம் என்றால் இவற்றுக்கு மேற்பட்ட மனவின்பமும் - நினைக்கவே உண்டாகும் இன்பமும் - ஒன்று உண்டே! நினைக்க இனிக்கும் அமுது உண்டா? தேன் உண்டா? பருகு நீர் உண்டா? பழக்கூட்டு உண்டா? ஏன்? கவலைமாற்ற முடியவில்லை! தொடர் தொடர் துயர்; தொலைக்க முடியவில்லை! புண்பட்ட மனத்தைப் புகையைவிட்டு ஆற்றுவேன் எனப் புகைக்கின்றனரே, புகைக்கின்றனரே! புகைக்குடி, பீடி ஆனால் என்ன, வெண் சுருட்டு, கருஞ்சருட்டு, மயக்கு இலை (கஞ்சா) மயக்கு பொடி ஆனால் என்ன நினைத்து மகிழ வாய்ப்பு உண்டா? கண்டு மகிழ வகையுண்டா? இனிய நீரும், இளநீரும், இலாமிச்சை நீரும், நுங்கு நீரும், ஆவின் பாலும், பழச்சாறும் இருந்தாலும் இவையெல்லாம் மனக்கவலை மாற்ற மாட்டா என எத்தனை எத்தனை மது வகைகள்-புதுவகைகள்-குடித்துக் கவலைத் தீர்வு இதுவே என்று வீழ்ந்து கிடக்கின்றனரே! இவர்கள் இவற்றை நினைத்த அளவில் மனமகிழ்வு கொள்கின்றனரா? முன்னை மயக்கினும் வளர்மயக்கு - மேல மயக்கு - பெரு மயக்கு - என வளர்த்து வளர்த்துத் தானே முற்றாகவே மயக்கம் தெளியாமல் ஒழிகின்றனர்! இவற்றை முன்னே கண்டிருக் கிறோமே நோக்கில் (22)! முன்னே பார்த்த நோக்கை ஏன் மீண்டும் நோக்க வேண்டும்? கூறியது கூறல் தேவையில்லையே எனின் வள்ளுவரின் தெள்ளிய உத்தியை - நோக்கச் சிறப்பை - விளக்கவே மீண்டும் கூறப்பட்டதாம்! வள்ளுவர் உள்ளம் எவ்வளவு ஆழமானது! எவ்வளவு கூர்ப்பானது! எவ்வளவு வரம்பு கோலும் வாழ்வினது! இதோ பல சொல்ல வாய்த்தும் ஒன்றைச் சொல்வோம்: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு (1281) என்பது குறள். புணர்ச்சி மகிழ்தல் முதற் குறள். மதுவைப் பழிக்கிறாரா? காமத்தைப் பழிக்கிறாரா? பழிக்க வேண்டிய மதுவை நன்றாகப் பழிக்கிறார்! பாராட்ட வேண்டிய காமத்திற்கும் நன்னெறி காட்டுகிறார். கள்ளிற்கு - மயக்கம் மதுவகைகளுக்கு - நினைத்த அளவில் மகிழ்வூட்டும் தன்மை உண்டா? அன்றியும் அவற்றுக்குத் தம்மை கண்ட அளவில் மகிழ்வுறுத்தும் தன்மை உண்டா? இல்லையே! ஆயினும் அவற்றில் மயங்கித் திரிகிறீர்களே இது மதியுடைமை தானா? என்கிறார். தேனைக் கையிலே வைத்துக் கொண்டு உப்பு நீர் குடிக்க ஓடித் திரிவது முறைதானா? என்கிறார். சங்கப் புலவர் சொல்வார், தேனருந்த மாட்டாமல் மடலர் சிதைய ஏறிநின்று மீனருந்தும் நாரை என்று! அத்நாரையின் இயல்பாக இருக்கலாமா நல்லறிவோர் இயல்? மயக்கும் குடிகளை ஒழிக்க மாந்தனுக்கு வேண்டுவது, மனைவி மேல் காதல், மக்கள்மேல் காதல், பெற்றோர் மேல் காதல், உற்றார் உறவின் மேல் காதல்! இக் காதல் குடிமைக் காதல் - உலக நலக்காதல் - உயிர்நலக்காதல்! இறைநிலைக்காதல்! இக்காதல் எவர் வாழ்வில் இடம் பெறுகின்றதோ, அவர் நடையில் தடம் பிறழார்! நடையில் நின்றுயர் நாயகர் அவர்! எங்கே இருந்து நினைத்தாலும் இன்பச் சுரப்பாம் இம்மாந்த நேயக் காதல் இருக்கவும் - மாந்த நேயத்தைக் கொல்லும் மது வகையை மாந்தல், மாந்தத் தன்மைதானா? நெஞ்சத்தில் கூடுகட்டி வாழும் நேயப் பறவைகளாகிய மனையை - மக்களை - பெற்றோரை - அன்பை - நண்பை நினைத்து நெய்யாக உருகுகின்றதே நேய மனம்! இதனைக் கள் தருமா? மயக்குவன தருமா? உயிர்த்துணையைக் கண்ணை மூடிக்கொண்டு நினைத்த போதும், உயிரோவியமாக உள்ளகத்துத் திகழ்கிறாரே! எத்தனை பிள்ளைகள் ஆயினும், அத்தனை பேர்களும் நெஞ்ச நீர் நிலையில் துள்ளி விளையாடும் தோன்றல்களாக உள்ளார்களே; எவ்வளவு முதுமைக் கோடுகள் பதிந்து விட்டாலும் முன்னைப் பொலிவும் வலிவும் முந்து முந்து நின்று பெற்றோர்கள் வனப்பாக வளையமிடுகின்றனரே! நண்பர்கள் முகம் நம்மை விட்டு நகர்கின்றதா? நகரின் நண்பா? நன்றி செய்தோர் நயத்தகு செயல் மறைத்தலும் மறத்தலும் என்ன? கொலை என்பாரே வள்ளுவத் தோன்றல்! இவ்வாறு புறத்துக் காணும் காட்சியும். அகத்துக் காணும் காட்சியும் அழியா இன்பமாய் இருந்தும் அவற்றை மதியாமல் மது எமது என்பாரை என்ன சொல்வோம்! மதுவொழிப்பு என்பதற்கு நேரிய கூரிய சீரிய ஒரே ஒரு வழியுண்டு. அது குடும்பம் - குடிமைகளின் மேற்கொள்ளும் பெருநலப் பற்றுமை! இன்னும் ஓர் இனிய செய்தி: புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் (785) என நட்புக்கே கரையிட்டுக் காத்த காவலர் திருவள்ளுவர். mt® mfthœth« FL«g thœî¡F« fht‰fl‹ f‰ã¡F« fÅîila MrhdhŒ tÊtÊ eh£L eyK«, å£L eyK«, T£L eyK« xU§nf fh¡F« fhtš bjŒtkhŒ, ‘c‹ ï‹g« v‹d ï‹g«? நினைந்து நினைந்து இன்புறுகிறாயா? கண்டு கண்டு களிக்கிறாயா? நினைந்து மகிழ்வதே நேயம் பெருக்கும்! கண்டு மகிழ்வதே கவின் செய்யும்! காதல் உறவு உடைய மாந்தரீர், கிழவன் சொல்லைக் கேட்டு நடக்கப் பாருங்கள்! கேட்டில் இருந்து விலகி வாழுங்கள்! இதனை விரிப்பின் விரியும்! ஆனால் புரியவே புரியும், புரிந்து எண்ணு வார்க்கு வள்ளுவரின் மூன்றாம் பால் நோக்கு தேன் போலும் சொல்லில் மருந்து செறிந்த இளகியம் (லேகியம்) போன்ற நோக்கு! 21. இருவரும் ஒருவர் நீரோடும் ஓட்டத்தில் மிதவை ஓடும்; புனல் செல்லும் செலவுக்குத் தகப் புல் சாயும். ஆனால், மீன் ஒட்டம் மாறானது, நீரோட்டத்தை எதிர்த்துச் செல்வது மீனோட்டம். அவ்வோட்டம் அமைந்த அறிஞர்களும் அறிவர்களும் கால இடங்களை வென்ற பார்வையர்; கால இடம் கடந்த சாவா வாழ்வினர்; அவ்வகையில் எவர்க்கும் பின்னடையாப் பேரறிவர் திருவள்ளுவர். திருவள்ளுவர்க்கு முன்னவரும் இலக்கணத் தோன்றலு மாகிய தொல்காப்பியனார் வாழ்வியல் இலக்கணமும் வகுத்துக் கூறியவர் அவர் காலத்தில் அவர்கண்ட நடைமுறை வாழ்வைத் தாம் கண்டவாறு கூறினார். திருவள்ளுவர் நோக்கு கண்டதைக் கண்டவாறு கூறுதல் அன்று. தக்கது எதுவோ அதனை ஏற்றுக் கூறுதலும், வாழ்வியல் கேடு எதுவோ அதனை விலக்கிக் கூறுதலும் கடனெனக் கொண்டார். அறிவர் கடன் அஃதேயாம். மனையற வாழ்வில் பிரிதல் என்பது நடைமுறைச் செய்தி அப்பிரிதலில் பரத்தையிற் பிரிவு என ஒன்றனைத் தொல்காப்பியர் சுட்டுகிறார். (1133) ஏனெனில் அது நடைமுறை வாழ்வில் அவரால் காணப்பட்டது. ஆனால், அறிவரும் அறவரும் ஆகிய திருவள்ளுவர் அப்பிரிவின் பெயரைத் தானும் சொன்னார் அல்லர்! அம்மட்டோ? பரத்தை என்பதைப் பெண்பாலுக்கு ஆக்காமல் பரத்தன் என ஆண்பாலுக்கு ஆக்கிக் காட்டினார் (1311) அவன் கட்டற்றுச் சென்றமையால் தானே அவள் அந்நிலைக்கு ஆளானாள் என்னும் மெய்ம்மம் காட்டுவது அது! பரத்தையை அன்றிக் காமக் கிழத்தி மனைவி ஒப்பாக இருத்தலையும், மனைவி அவளை எங்கை (என் தங்கை) என்பதையும் (1097, 1093) தொல்காப்பியர் குறிப்பார். திருவள்ளுவரோ ஒருமை மகளையே காண்பார். நடைமுறை வாழ்வாக எது இருக்க வேண்டுமோ அந் நன்னெறியைச் சுட்டும் வகையாலேயே ஆடவர் உலகம் உணர்ந்து திருந்துவதற்காகப் பொதுவகை சிறப்பு வகை என இருவகையால் அறங் கூறினார். பொதுவறமாக அவர் கூறியது, மகளிர்க்குக் கற்பு என்னும் உளத் திண்மை இருப்பது போல, ஆடவர்க்கும் நிறை என்னும் உள நிலைப்பாடு இருக்கவேண்டும் என்பது. கற்பு என்பதும் நிறை என்பதும் ஒரு பொருள் தருவனவே. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உறுதிப்பாட்டில் கிளர்ந்த சொற்களே அவை. கல்போலும் உறுதித் தன்மை கற்பு; கல்லாவது மலை; நிலையில் மாறாது அடங்கிய தோற்றத்திற்கு எடுத்துக் காட்டாவது அது. குன்றன்னார், குன்றேறி நின்றார் என்பனவெல்லாம் பாற் பொதுமைக்குரியனவே (29, 14, 898) நிறை என்பது நிறையுடைமை என்று சொல்லப்படும் பெருமையது. துலாக் கோல் எனப்படும். நடுவுநிலைச் செம்மைச் சான்று அது. நிலை நிறுத்தம் உடையது அது. நிலை என்பது உறுதிப்பாட்டில் அசையாமல் நிற்பது! தூணும் நிலையும் போல்வது. இவற்றால் வள்ளுவர் நோக்கு கற்பும், நிறையும் இருபாற் பொதுவாதல் வெளிப்படும். நிறைகாக்கும் காப்பு, நிறையுடையேன் (57, 1254) என நிறை பெண்மைக்கும், நிறை நெஞ்சம் இல்லவர் என நிறை ஆண்மைக்கும் (917) ஆகியமை காண்க. மேலும், எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார் (910) என நிறையின் விளக்கத்தையும் தெளிவிப்பார் திருவள்ளுவர். சிறப்பு வகையால், ஆடவர்க்குத் திருவள்ளுவர் கூறுவது,. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பது (974) குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும் மணிவிளக்க மாலையின் நடுவே நிற்கும் பெருமையில் நான்காம் குறள் இது. ஒருப்பட்ட உள்ளம் அமைந்த பெண்மையைப் போல் ஓர் ஆடவன் நடப்பானேயானால், அவளைப்போல் அவனுக்கும் பெருமை உண்டு என அவளையே அவன் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒழுகுமாறு வழிகாட்டுகிறார் வள்ளுவர். எங்கேயோ இருக்கும் ஒருவரை எடுத்துக்காட்டு ஆக்காமல், அங்கேயே அவனோடேயே இருக்கும் எடுத்துக்காட்டைக் காட்டுவது மாறா மனநிலைக்குத் தக்க வழியாம். பெண்மைக்கு அப் பெருமை இருத்தலை அவள் பக்குவமாக நடந்து பக்குவப்படுத்த வல்லாள் என்னும் இயற்கைத் தேர்ச்சியாலே இவ்வாறு கூறினாராம். அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சும் தன்மை, நாணத்தக்கதற்கு நாணும் தன்மையொடு இயற்கையாய் அமைந்த நாணம், தெளிந்து தேர்ந்து கொண்டதை விடாத கடைப்பிடியாம் மடம் என்னும் தன்மை ஆகியவை அவளுக்கு இருத்தலால், அத்தன்மைகள் அவன் கொண்டொழுகத் தக்க குணங்களாகி அவனைப் பெருமைப்படுத்தும். அன்றியும், ஒரு பெண் ஐம்புல நுகர்வும் ஒருங்கே கொண்டு கொடுக்கும் பேறு உடையள் ஆகலின், அவள் கொண்டானைத் தன் வழியில் நிறுத்திக் காக்க வல்லவளாம். அவளின் வயப்படுத்திக் காக்கும் இயல்பைப் பசையினள் என்னும் அருமைச் சொல்லால் சுட்டுவார் திருவள்ளுவர் (1098) பசை ஒட்டுவது போல ஒட்டிக் கொள்ளும் பான்மையள்; நோக்கு ஒக்கும் நோக்கினள் (1100) நினைப்பன எல்லாம் அவனாகவே நினைப்பவள் (1102) நெருங்கும் தோறும் உயிரை ஊட்டி வளர்க்கும் உயர் அமுதாய் அமைந்தவள் (1106) புதிய புதிய இன்பந் தந்து வியப்புறச் செய்பவள் (1110) தங்கள் ஊடாகக் காற்றும் கூடப்புகுதல் ஆகாது என நெருங்கியவள் (1108) கண்ணின் கருமணியாம் பாவையாகத் திகழ்பவள் (1123) தன் நெஞ்சிலே தன் தலைவனை அமரச் செய்யும் தண்ணியள் (1128) அவன், உடலா, உயிரா? இருவரும் உடலுயிர் ஆகிய பிறப்பர் (1123) ஒரு பக்கச் சுமை ஆகாமல் இருபக்கச் சமன் சுமையாய் அமைந்த காவடி போல, இருவரும் குடும்பச் சுமை சுமக்கும் ஒப்பாளர் (1196). அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பாகி, ஒத்த எடுத்துக் காட்டாகி வாழும் வாழ்வே, நிலத்தில் விதை விதைத்து மழை பெய்யாதா என வானத்தை நோக்கிய அளவில் மழை பொழிந்தால் அவ்வுழவன் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்வுச் சுரப்பானவர். (1192). வையகத்தில் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வர் (50). ஆதலால், அவள் பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று பாராட்டத் கிதழ்கிறாள்! அவளைப் போலவே அவனும் புகழத் திகழ்கிறான். அவன் பிறன்மனைநோக்காத பேராண்மைப் பெருமை யனாகத் திகழ்வதால் ஊடலுக்கு, உள்ள குறை காணாமல் அவனிடம் இல்லாக் குறையை இருப்பதாகக் காட்டி ஊடல் உவகை கொள்கிறாள் (1321, 1325). அவனும் இல்லாப் பழி இழிபழியன்றே; இனிப்பே என்று ஊடித் திளைக்கிறான் (1329) இருவரும் ஒருவராய் உவக்கும் ஒப்பிலா நிலை அது (1330). சங்கத் தொகை நூல்களின் மருதப் பாடல்களில் வரும் பரத்தையிற் பிரிவைச் சூறைக் காற்றில் சுழல் பஞ்செனப் பறப்பித்ததோடு, குப்பைக் குழிக்குள் தள்ளி மட்கிப் போகச் செய்யவும் வழி காட்டியவர் திருவள்ளுவர். இந்நாளில் பெரு விளம்பரப் பொருளாகி அலைக்கழிக்கும் எயிட்சு என்னும் கொல்லிக்கு இடமில்லா இனிய வாழ்வு ஒருமை மகளும் ஒருமை மகனும் ஆக வாழ்தல். ஒருவனுக்கு ஒருத்தி என்பதைத் தமிழ் மண்ணில் அவாவிய நோக்கு திருவள்ளுவர் நோக்கு. உலகவர் நோக்கு இந்நோக்கில் ஒன்றுதல் உலக உய்வு நெறி. 22. வாழ்த்துதல் பண்பு தொல்பழங்காலந் தொட்டுத் தமிழர் காத்து வந்ததும் இன்றும் மரபு மாறா நிலையில் போற்றப்படுவதும் ஆகிய பண்பு வாழ்த்துதல் பண்பு. ஒருவரை ஒருவர் காணுங்கால் வாழ்த்துவது தமிழர் பண்பாடு. கண்டு கலந்துரையாடிப் பிரியுங்கால் வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. சின்னஞ்சிறு துயர்வரக் காணினும் அத்துயர் அகல வேண்டுமென வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. தம்மைப் பழித்தாலும் அப்பழிக்கேட்டால் பழித்தவர் எத்தகைய இடையூறும் எய்துதல் ஆகாது என வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. மங்கல விழாக்களிலும் இறைவழிபாட்டிலும் வாழ்த்து இசைத்தலும் தமிழர் பண்பாடு இப்பண்பாட்டைக் கட்டிக்காத்த காவல் கடமையர் திருவள்ளுவர் என்பது திருக்குறளால் தெள்ளிதில் புலப்படும். நம் முந்தை வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் நூல்களுள் ஒன்று பதிற்றுப் பத்து. சேர வேந்தர் பதின்மர் பாடு பொருளாக இடம் பெற்ற நூல் அது. அதில், வாழ்க நின் வளனே நின்னுடை வாழ்க்கை என்பதொரு பாட்டின் (37) தொடக்கம். எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றி,ன் முதற் பத்தின் பத்துப் பாடல்களும், வாழி யாதன் வாழி யவினி என்னும் வாழ்த்துத் தொடக்கமே உடையவை. அப்பத்தில், நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க விளைக வயலே வருக இரவலர் பால்பல ஊறுக பகடுபல சிறக்க பசியில் லாகுக பிணிசேண் நீங்குக அறம் நனி சிறக்க அல்லது கெடுக அரசு முறை செய்க களவில் லாகுக நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக மாரி வாய்க்க வளநனி சிறக்க இன்னவாறு வாழ்த்துகள் இடம் பெற்றுள. புறநானூற்றில் கடவுள் வாழ்த்தை அடுத்த முதற் பாட்டே, பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்று வாழ்க என்று வாழ்த்துகின்றது. தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே என வாழ்த்துவது ஆறாம் பாட்டு. வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே என்னும் வாழ்த்து (171) ஒப்புரவாளன் வாழ, உலகம் வாழும் என்னும் உயர் கருத்தை விளக்குவது. காக்கும் தலைவனையும் அவன் கருவியையும் நாடாள் வேந்தனையும் வாழ்த்துவதொடு, மாறுபட்ட பகையையும், வாழ்த்துவது 172 ஆம் புறப்பாட்டு. வன்புல நாடன் வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலும், அவன் இறை மாவள் ளீகைக் கோதையும், மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே என்பது அது. தன் வாழ்வையும் எடுத்துக் கொண்டு நல்லோன் வாழ வாழ்த்தும் அருமையுடையது. யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய என்னும் புறப்பாட்டு (173) வருந்தும் நிலை உண்டாயினும் வாயாற் பழியார் என்பதை, உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால் புலவேன் வாழியர் என்பது (204) விளக்கும். இச்சங்கச் சால்பு காக்கப்பட வேண்டும் என்பது வள்ளுவ நெறி. முதல் அதிகாரத்திலேயே திருவள்ளுவர், நிலமிசை நீடுவாழ் வார் என்றும், நெறிநின்றார் நீடுவாழ்வார் என்றும் வாழ்த்தினார். வாழ்க என்று அமையாமல், நீடு வாழ்க என்னும் நெஞ்ச நிறை வாழ்த்தாக ஈரிடங்களிலும் அமைந்தன. தும்மல் குறிப்பின்றி (அனிச்சையாய்)த் தோன்றும் தன்மையது. குழந்தையர்க்கு அது தோன்றி ஒலி வெளிப்பட்ட அளவில் அன்னையர், நூறு என்று வாழ்த்துவது இன்றும் கண்டு கேட்பன. அக்குழந்தை இரண்டாம் முறை தொடுத்துத் தும்மினால் 200 என்று சொல்வதும் நடைமுறையாய் உள்ளனவே. தும்மல் போலும் சிறு துயராலும் வாழ்நாள் குன்றுதல் ஆகாது என்று தேர்ந்த பேருள்ள நோக்கே இப்படி வாழ்த்து முறை கண்டதாம். இதனைக் காமத்துப்பாலில் காத்து மொழி கின்றார் வள்ளுவர்: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து (1312) என்பது அது. ஊடலைத் தீர்க்கும் உயர் மருந்தாகத் தும்மல் இருப்பதைக் காட்டும் வள்ளுவர், நம் முந்தையர் பண்பாட்டைக் காட்டு வதுடன் நீடு வாழ்க என்னும் நெறியையும் விடாமல் பேணுகிறார். தும்மல் குறிப்பின்றித் தோன்றுவது போல, வாழ்த்து தலும் குறிப்பின்றி வந்து விடும் இயல்பினது என்பதை, வழுத்தினாள் தும்மினேன் ஆக என்பதனால் காட்டுகிறார். (1317) ஆக்கம் கேடு என்பவை முரண்கள் ஆக்கம் அழிவு என்பவும் முரண்களே. ஆக்கம் அரிதில் வாய்ப்பது. கேடு எளிதில் தேய்ப்பது. ஆக்கம் வாய்த்தால் மேலும் மேலும் ஆக்கப்படுத்தி நெடிது ஆக்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால், மதிப்பு மிக்க செல்வத்தை நெடுஞ்செல்வம் என்பார் (566) திருவள்ளுவர். ஆள்வேன் காட்சிக்கு எளியனாக இருத்தல் வேண்டும்; கடுஞ்சொல் சொல்லாதவனாக இருக்க வேண்டும். என்பது ஆட்சி அடிப்படை வள்ளுவம். (386) அவ்வாள்வோன் கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆம் சூழல் ஏற்படக் கூடும். அப்படி ஏற்படினும் கடுமையாகக் கண்டிப்பவன் போலவும், தண்டிப்பவன் போலவும் காட்டிக் கொள்ளலாம். ஆனால், கண்டிப்பு, தண்டிப்புகளின் ஊடகமாகக் கனிவும் மென்மையும் இருத்தல் வேண்டும். அவ்வாறிருத்தலே அவ்வாள் வோனுக்கும் ஆட்சிக்கும் நலம் பயப்பதாம் என்பார். இதனை, கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம் தீங்காமை வேண்டு பவர் (562) என்பார். இங்கும் நெடிதாக்கம் என்றது காண்க. வாய்த்த ஆக்கத்தை வாழ்வாரும் ஆள்வாரும் நெடிது காத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆக்கங்களுக்கெல்லாம் அடிமூலமான ஆக்கமாம் உடலாக்கத்தை, உயிரினும் உயிராகப் போற்றிக் கொள்ள வேண்டும் அல்லவோ! அக்கடமையைத் தவறினார்ககு ஆயிரவர் ஆயிர வகையாய் அள்ளி அள்ளி வாழ்த்தினாலும் ஆவதென்ன? அதனால், ஆக்கத்தில் ஆக்கமாய் வாய்த்த ஆக்கை நலத்தை நெடிதாக்கிக் கொள்ளல் அறிவறிந்த மாந்தப் பிறப்பின் மாறாக் கடமை என்பதை, அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு என்பார். (943) அற்றால் உண்க! அளவறிந்து உண்க! உடம்பு பெற்றான் உண்க! நெடிது உய்க்குமாறு உண்க. என்று விரித்துக் கொள்க. உடம்பு வாய்த்தது அரிதே! அவ்வுடம்பை அருளினோர் அரியரே! அவ்வரிதும் அவ்வரியரும் உரிய பெருமை அடைதற்கு உரிய செயலைச் செய்ய உரியார் எவர்? உடம்பு பெற்றோர் தாமே! அவர் மகவு பெற்றோர் என்றால், இவர் உடம்பு பெற்றோர் இலரா? இவரே உடலொடு கூடிய வாழ்வை நெடிது காலம் வாழச் செய்யும் வகையுணர்ந்து வாழாக்கால் எவர் என்ன வாழ்த்தியும் என்ன பயன்? நீர் அமிழ்து! சோறு அமிழ்து! சாறு அமிழ்து! இன்பமும் நலமும் சேர்ப்பவை எல்லாம் அமிழ்து! அமிழ்து உண்டும் அமிழ்து பருகியும் அமிழ்து வழங்கியும் திகழும் உடலும் அமிழ்து! அவர் உடலும் உளமும் உணர்வும் அறிவும் கொடையும் எல்லாம் அமிழ்து; இவ்வளவு அமிழ்தங்கள் வாய்த்தும், அங்கணத்துள் கொட்டிய அறிவில்லாச் செயலைச் செய்யலாமா? வாழ்த்துப் பண்பைச் சிலம்பு தொட்ட காப்பியங்கள் காத்தன. மங்கல வாழ்த்திலே நூல் தொடங்கியது சிலம்பு. வாயிற் காவலன் கோயிற் காவலனைக் கண்டு, வாழிஎம் கொற்கை வேந்தே வாழி என்று வாழ்த்தி வணங்கிச் செய்தியுரைப்பதும், வாழ்த்துக் காதை வரந்தரு காதை என நூலை முடிப்பதும் எல்லாம் தமிழர் வாழ்த்தியல் பண்பை நோக்காக உடையவாம். வாழ்க வளமுடன் என்று ஒருவரை ஒருவரை வாழ்த்தி வணங்குவது கொங்கு நாட்டில் பெருவழக்காக இருப்பதும், வாழ்த்துப் பலகைகளாக இல்லங்களில் காட்சி வழங்குவதும் காணுங்கால் பழமரபு போற்றப்படுதல் பூரிப்பு ஆகின்றது! ஆனால், அப்பூரிப்பின் இடையே, வாழ்க வளத்துடன் என்று இருப்பது அல்லவோ மொழி மரபு! வாழ்த்து மரபு போற்றிய பெரு மக்கள், மொழி மரபும் போற்றியிருக்க வேண்டுமே என்பது மரபு பேணுவார்க்குத் தோன்றாமல் போகாது. 23. அறிதோ றறியாமை ஆசிரியப் பயிற்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர். முன்னே பள்ளித் துணை ஆய்வாளராக இருந்தவர். அந்நாளில் அவர் ஒரு பள்ளி ஆய்வுக்காகக் கரிசல் காட்டு வழிவே நடந்து கொண்டிருந்தார். அங்கே களை வெட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். mtÇl«, ‘ïJ v‹d bro? என்று வினாவினார். களை வெட்டியவர் படிப்பறிவு இல்லாதவர். இவரோ இளங்கலைப் பட்டம், ஆசிரியப் பட்டம், முடித்தவர். களை எடுத்தவர் கல்லாதவர் எனினும் கூர்மையான அறிவினர். அதனால், நீங்கள் வேட்டி சட்டை துண்டு எனப் போட்டிருக் கிறீர்களே! அவற்றைத் தந்தது இந்தச் செடி என்றார். ஓ பருத்தியா? இதனைப் படித்திருக்கிறேன்; இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதத் தெரியும். ஆனால், பார்த்த தில்லை என்று சொல்லிக் கொண்டு அக் கல்லா ஆசிரியரிடம் கற்றுக் கொண்டார் கற்ற அறிவாளர். அவர் மா மாந்தர். அதனால் அதனைத் தம் மாணவர்க்கு எடுத்துரைத்தார். வேறொருவராக இருந்தால் தம் அறியாமையை இப்படி வெளிப்படக் கூறியிருக்க மாட்டாரே! கல்வி நான்கு சுவருக்குள் மட்டும் இல்லை. கற்பிப்பார் நாவில் மட்டும் இல்லை. எழுதுவார் நூலில் மட்டும் இல்லை! ஆய்வுக் கூடங்களில் மட்டும் இல்லை! பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்! நோக்கும் இடமெல்லாம் நுண்ணறிவுக் கல்விக்கூடம்! காலமெல்லாம் பேசாமல் பேசிக் காட்டும் கலைச் சுரங்கம்! எது? எது? உலகம்! உலகத்து இயற்கை! மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ என்று அப்பரடிகள் கூவிக்கூவி அழைத்தது போலக் கூவி யழைத்தும் குறித்துக் காட்டியும் குறிப்பில் உணர்த்தியும் நாளும் பொழுதும் நல்லறிவை வளர்த்து வரும் நல்லாசான் இயற்கை. அறிவாளர் எப்படி ஆய்வாளர் ஆனார்! இயற்கை காட்டக் கண்டார்! இயற்கை கற்பிக்கக் கற்பிக்கக் கற்றார்! வண்டு துளையிட்டு வைத்த துளையில் காற்றுப் புகுந்து வந்தது புல்லாங்குழல் ஆயிற்றே! வேட்டைக்கு எடுத்த வில், யாழுக்கும் விணைக்கும் அடியாயிற்றே? ஆடும் மயில் கூத்துக்கு முதல் ஆயிற்றே! ஆட்டத்தைக் காட்டித்தானே ஆடும், ஆடையும் பெயர் பெற்றன! முத்தமிழ்ப் பகுப்பின் மூலம் இயற்கைக் கொடையல்லவா! மாந்தன் நீந்தவும் பறக்கவும் கற்றது எப்படி? மீனும் பறவையும் மீட்டிய இயக்கங்கள்தாமே அவை! கொதிக்கும் உலைமூடித் துள்ளல், நீராவி இயங்கங்களை ஆக்கிற்றே! இப்படி எத்தனை கண்டுபிடிப்புகள். நியூட்டனுக்கு முன்பு புவியீர்ப்பு இல்லாமலா இருந்தது? ஐன்சுடீனுக்கு முன்பு அணுவியம் இல்லாமலா இருந்தது? மறைமலையடிகளுக்கு முன் தனித்தமிழ் இல்லாமலா இருந்தது? பாவாணருக்கு முன் தமிழுக்கு உலக முதன் மொழி நிலை இல்லாமலா இருந்தது? தோன்றத் தோற்றுவித்த தோன்றல்கள் தாமே இவர்கள். முன்னே அறியாததை அறிந்து கொண்டவர் களுக்கு என்ன தோன்றுகிறது? வியப்புத் தோன்றுகிறது. புதிதாக ஒன்றை அறியும்போது நாம் இதுவரை இதனை அறிந்து கொள்ளவில்லையே என்னும் அறியாமை புலப்படுகின்றது! அந்த அறியாமை, அறிவின் வெற்றியாக ஒளி செய்கின்றது. ஒன்றா, இரண்டா? ஓராயிரமா ஈராயிரமா? அறியாமை உண்டாக உண்டாகவே அறிந்தமை வெற்றிக் கொடி நாட்டியமை விளக்கமாகின்றது. அறிந்தமை வெற்றி நடைபோட்ட நொடியே. அறியாமை தலை தாழ்ந்து தோற்றதை ஏற்கின்றது. அறிதோறும் அறியாமை என்னும் மாமணித்தொடர் அறிவியல் இலக்கண மாகத் திகழ்ந்து விடுகின்றது! நேற்று என்ன, போன நொடியில் அறியாததை இந்த நொடியில் அறிந்ததும் அறிவாளிக்கு என்ன தோன்றுகின்றது? போன நொடிவரை இதனை அறியாது இருந்தேனே என்பது தானே! அறிவுக்கு அளவு உண்டா? இல்லை இல்லை! தன் அறியாமையைப் பறைசாற்றத் தானே அறிவே வாய்த்தது! புத்தரிடம் அவர் மாணவர் ஒருவர் நீங்கள் முழுதுணர் மூதறிவர் என்றார்! எனக்கு முன்னே இருந்த புத்தர்களை அறிவாயா! எனக்குப் பின்னே வரும் புத்தர்களை அறிவாயா? என்னையாவது முழுமையாக அறிவாயா? அப்படி இல்லாமல் இருந்தும் எப்படிப் பெருமிதப் பேச்சுப் பேசுகிறாய்? என்று வினாவினார். பின்னர்க் கையை மூடிக் கொண்டு இக்கையினுள் என்ன இருக்கிறது என்பது தெரியுமா? என்றார். தெரியாது என்றான். இதோ பார்! ஓர் இலை! இந்த மரத்தின் இலை! டஇதில், எத்தனை இலைகள்! இப்படி எத்தனை மரங்கள் உலகில்! யான் பெற்ற அறிவு இந்த ஓர் இலையளவு அறிவுதான்! பெறவேண்டியது உலக மரங்களின் இலையளவு! என்றார். அவர் கண்ட அறிவு, அறிதோறும் அறியாமை அறிந்த அறிவு! கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலக அளவு என்ற ஔவையாரும், அறிதோறும் அறியாமை கண்ட அறிவர் தாமே! என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்ற திருமூலர் இவ்வழியர் தாமே! எனக்கு ஒன்றே ஒன்று தெரியும்; அந்த ஒன்றும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான் என்ற சாக்ரடீசர் இந்நெறியர் தாமே! மூவாயிரம் நாள்களுக்கு மேல் இந்திய விடுதலைக்காகச் சிறை வாழ்வு கொண்ட சவகர்லால் நேரு, ஆங்குப் பல்லாயிரம் நூல்களைக் கற்று அதன் பின், நான் எவ்வளவு அறியாதவன் என்பதை இந்நூல்களைக் கற்ற பின்னரே அறிந்து கொண்டேன் என்றது வழிவழிச் சான்று தானே! உங்கள் கண்டுபிடிப்பு எவ்வளவு அரியது; பெரியது என்று பாராட்டியவர்க்கு, கடலுள் ஆழத்துள் கிடக்கும் முத்துகள் எத்தனை எத்தனையோ! யானோ கடற்கரையில் கிடக்கும் சங்கு, சிப்பி போன்ற ஒன்றிரண்டை எடுத்துள்ளேன் என்ற ஐசக்கு நியூட்டன் அறிதோறும் அறியாமை என்னும் அறிவியல் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்த ஏந்தல் தாமே! திருவள்ளுவர், இன்பத் துய்ப்பாளியைப் பார்க்கிறார். உன் பாட்டன் படைத்த இலக்கண இன்பம் அறிவாயா? அறிந்து நட என்கிறார். கொஞ்சம் என்னும் வழக்குச் சொல்லின் வரலாறு என்ன? கொஞ்சுவதற்கு எடுத்துக் கொள்ளும் சின்னஞ்சிறு நேரமே கொஞ்சம் என்பதை உணர்ந்தார், அதற்கு நெடுநேரம் செலவிட மாட்டாரே! குறிஞ்சி என்பது கூடியிருத்தல். முல்லை என்பது எதிர்பார்த்து இருத்தல். மருதம் என்பது ஊடி இருத்தல். நெய்தல் என்பது உருகி இருத்தல். பாலை என்பது பிரிந்து இருத்தல் இவ்வைந்துள் கூடியிருத்தல் என்பது ஒரு பகுதி தானே! அக்கூடியிருத்தலும், குளிர்கால நள்ளிரவு தானே! நலவாழ்வும் நல்வாழ்வும் கருதிய நெறிமுறை இன்ப மல்லவா இது. இத்தகைய இன்பத் துய்ப்புத்தானே பசித்துக் கிடந்தான் உண்டி நலம் போலவும், தவித்துக் கிடந்தான் பருகு நலம் போலவும் குடும்ப நலம் சேர்க்கும். அந்நிலையில் தானே, புதுப்புது இன்பங்களை, உயிர்தளிர்க்கச் செய்யும் இன்பங்களை அடைய முடியும். ஒருவர் இன்பமா? ஈருயிர் இணையும் இன்பம்! ஓருயிராகி, ஓருயிர் படைக்கும் இன்பம்! முன்னினும் முன்னினும் காணா முடிவிலா இன்பம்! அறிதோறும் அறியாமை காணும் - ஆய்வாளி - அறிவியலாளி - கண்டு பிடிப்பாளி - படைப்பாளி இன்பம்! இருவரும் ஒன்றாகிக் கண்ட இன்பத்தின் முன் வாய்ச் சொற்களால் என்ன பயன்? என, அவள் உள்ளத்து உணர் வளவில் அமைகின்றாள். அவன் சொல்லிக் காட்டுகின்றான்: அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு என்பது அது (1110). இன்பத்துப்பால், புணர்ச்சி மகிழ்தல் நிறைவில் இவ்வறிவியல் இலக்கணத்தை இயம்பிய வள்ளுவர் நோக்கு என்ன? பாலின்பம் துய்க்கும் நீங்கள், அறிவின்பம் காணுங்கள்; அறிதோ றறியாமை காணும் இன்பத்தை நாளும் பொழுதும் அடையப்பாருங்கள். இப்பாலின்பம் உங்கள் கூட்டின்பம்; உங்கள் வீட்டின்பம்! ஆனால், உலகின்பம் அறிதோறறிமை காணும் இன்பம்! அவ்வின்பம் பெற - பெருகத்தக்க தூண்டலாக இதனைக் கொள்ளுங்கள்! அறிவில் கடையாம் மரம் செடி கொடிப்பிறப்பு நீங்கள் இல்லை! அவையும் தம் இனம் பெருக்கம். அறிவில் சிறிது வளம் பெற்ற புழு பூச்சி எறும்பு கறையான் பிறப்பு நீங்கள் இல்லை. அவையும் தம் இனம் பெருக்கும். அறிவின் வளம் வளர்ந்த பறவை விலங்குப் பிறப்பும் நீங்கள் இல்லை. அவையும் தம் இனம் பெருக்கும். இனம் பெருக்கவே அவையெல்லாம் எண்ணி, இன்பம் துய்ப்பனவும் அல்ல! அந்த மன அறிவு அவற்றுக்கு இல்லை. தாம் பெறும் இன்ப இயற்கைத் தூண்டலால் நிகழ்வன அவை! ஆனால், மாந்தப் பிறப்புடைய நீங்கள் - மன உணர்வு வளர்ந்த நிங்கள் - அறிதோறறியாமை காணும் நீங்கள் இன்பத்தில் மட்டும் அறிதோறறியாமை கண்டு அமையாதீர்! அறத்தில் காணுங்கள்! பொருளில் காணுங்கள்! மெய்யுணர்வு இன்பத்தில் காணுங்கள்! சேவைச் செம்மையில், தொண்டின் துலக்கத்தில் காணுங்கள்! புதுப்புனைவில், பயன்படைப்பில் நலத்துறையில், கலைச் செழுமையில் காணுங்கள்! நீங்கள் இவற்றில் எல்லாம் அறிதோ றறியாமை காணும் அறிவரானால், உங்கள் வழியாகத் தோன்றும் தோன்றல்கள் உங்களினும் உயர்ந்த உலக நலங்கருதிய - உயிர் நலங்கருதிய பெருவாழ்வினர் ஆவர்! இடுகாட்டில் - இன்னல் பொழுதில் - எரிநெருப்பில் - போர்ப் பிணக்கில் - ஆறாத்துயரில் - பெருகிய சினத்தில்- முறுகிய பொறாமையில் நீங்கள் கொள்ளும் உறுதியினும், உயிர்தளிர்க்கும் உயிரின்பப் பொழுதில் கொள்ளும் உறுதி, மெய்யாகவே சிறப்பானதாம்! சீரிய நலம் செய்வதாம்! ஆதலால், கூடலின்பத்தில் அறிதோ றறியாமை காணும் நீங்கள் உலக நலம் கருதிய எல்லாவற்றையும் செய்து செய்து அறிதோ றறியாமை கண்டு கண்டு பேராப் பெருநிலைப்பேறு அடையுங்கள் - என்று உணர்த்தும் வகையால், காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் நிறைவில் இவ்வறிவியல் இலக்கணப் பாடலை வைத்தார் என்க. 24. இணைப்பொறுப்பு விடு - விடுதல் - விடுதலை. விடு - வீடு. வெளியுலகத் துன்ப துயரங்கள் விடுதலை பெற்ற இன்ப நிலையம் விடு. வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வேறு; வீட்டுக்கு உள்ளே வர வேண்டிய உலகம் வேறு; வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வீட்டுக்குள் வரத் தொடங்கினால், அன்பான மனங்களில் அல்லல் புகுந்து விடும் என்பார் அறிஞர் மு.வ. வெளியே நிற்க வேண்டிய உலகம், சமயம், சாதி, கட்சி, தொழில், அரசியல், நட்பு இன்னவை. உள்ளே வரவேண்டிய உலகம் அன்பு, அருள், அமைதி, பொறுமை, அறம், இன்சொல் இன்னவை. நாம் திருக்கோயிலுள் சென்றால், காலணியைக் கழற்றி விடுகிறோமே. அப்படி வீட்டுக்கு வெளியே கழற்றி விட வேண்டியவற்றை அப்படிக் கழற்றி விடாமல் கொண்டு வருதலால், குடிமை கொண்டுள்ள கேடு மிகப்பெரிதாம்! குடும்ப அமைதியைக் கட்டுக் குலைத்துப் பாழாக்கிய கொடுமை, வரவேண்டாதவற்றை வீட்டுக்குள் வரவிட்டதால் ஏற்பட்டு வருவதாம். பெரும்பாலான வீடுகள் இதுகால் அமைதியை இழந்து விட்டன! இன்ப நிலையமாம் இல்லம், துன்பவிளை நிலம் ஆய்விட்டன. வரவேற்பு அறையிலே களிப்பு: சமையல் அறையிலே கண்ணீர் என்னும் இரட்டைப்போலிமை வாழ்வு, இயற்கையாகி விட்டதே என்னும் அச்சம், எண்ணுவார் உள்ளத்தில் அழுத்தவே செய்கின்றது. இற்றை நாள் நிலை இது! வள்ளுவர் நாள் நிலை, வீட்டில் அமைதி இருந்தது; தேவைச்சுருக்கம், மக்கட் சுருக்கம், பரபரப்பு ஆடம்பரம் இல்லாச் சூழல் இருந்தன; கொண்டு கொடுத்தல் அண்டை அயலாய் இருந்தன. ஊர் விளைவும், ஊரைப் பேணின. போரும் பூசலும் நிகழ்ந்தே வரினும் தொடர்பில்லாதவர் தொல்லை இல்லாமல் இருக்கும் சூழலும் வாய்த்தன. ஆனால், இற்றை ஊர் நிலை-நாட்டு நிலை-தலைகீழ் மாற்றம்! தனி ஒருவர் நலம், வீட்டு நலம் சார்ந்தது; வீட்டு நலம், ஊர் நலம் சார்ந்தது; ஊர் நலம் பேணல், ஒவ்வொருவர் கடமையுமாம் என்பது வள்ளுவ உள்ளம். ஊருணி நீர்த் தூய்மையை, ஊர்தானே காக்க வேண்டும்! உள்ளூர்ப் பழுத்த பயன்மரத்தை ஊர்தானே காக்க வேண்டும்! மருந்துமரத்தை, ஊர் மக்கள் தாமே காக்க வேண்டும்! கைம்மாறு கருதா மழைக் கொடையைக் கற்சிறையிட்டு ஊரவர்தாமே காத்துப் பயன் கொள்ள வேண்டும்! இவை அறத்துப்பால் ஒப்புரவு முழக்கம்! இன்பத்துப்பால் முழக்கம், மனங்கலந்த உறவாக இனம் இருக்க வேண்டும் என்பது. தனிமாந்தர்க்கு மன நலம் வேண்டும். ஊரவர்க்கு இன நலம் வேண்டும். மன நலம் இல்லார் வாழும் இல்லம், பாம்போடு குடியிருக்கும் குடிசை. நெருப்பின் இடையே உறங்கினாலும் வறுமையிடையே கண்மூட இயலாது என்பது வள்ளுவம். வறுமையிடையே கூட வளமாக வாழலாம், மன நலம் மட்டும் வாய்ப்பாக இருந்தால்! ஒரே ஓர் உடை! அதனை இரண்டாகக் கிழித்து உடுத்திக் கொண்ட நிலை! ஆனால், ஒன்றிய உள்ளம், ஒரு நாள் என்ன? அரை நாள் வாழ்வும் போதும் என்னும் நிறைவு! அவள் பிறந்த வீட்டில் தேனொடு பால் கலந்து பருகவும் வெறுத்த செல்வி! ஆனால், ஓடையில் தேங்கிய கலங்கல் நீரை, உடைந்த கலத்தில் எடுத்துப் பருகுகிறாள் விருப்புடன்! ஒரு வேளை விட்டு ஒரு வேளை உண்கிறாள்! உயிர் தளிர்க்க உவப்படைகிறாள். புகுந்த வீட்டில் கொண்ட கொழுநன் குணக் குன்றமாக இருத்தலால்! உள்ளம் ஒன்றிய வாழ்வு தானே வாழ்வு! ஒவ்வொரு வர்க்கும் துணை வேணடும்; கட்டாயம் வேண்டும் அத்துணை சொற்றுணை; பேச்சுத்துணை; நாத்துணை; பேச்சுத்துணை, உசாத்துணையாம். துயர்த்துணை, அசாத்துணையாம்! தலைவியின் தோழியருள் உசாத்துணையும் உண்டு. அசாத்துணையும் உண்டு. தலைவியின் தாய், நற்றாய்; பெற்ற தாய்; ஈன்றாள். அவளைக் கண்டித்தும் காத்தும் வளர்த்தவள் செவிலித்தாய். தலைவன் தோழன், வெறுந்தோழன் அல்லன். இடிக்கும் கேளிர் அவன். தலைவனிடம் கனிவும் கொள்வான்; கண்டிப்பும் கொள்வான். கண்டதும் காதல் இல்லை; இரு பக்கக் காப்பரண் தோழன், தோழியர். காதல் அரும்புதல் முதல் மணத்தல் வரை இல்லை, மக்கட்பேற்றின் பின்னரும் தொடரும் நட்புகள் அவை. அதனால் காதல் அறம் எனப்பட்டது அறத்தான் வருவதே இன்பம் என அறவோரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அறத்தொடு நிலை என இலக்கணரால் சொல்லப்பட்டது. அங்கே உள்ளக் கலப்பை அன்றிப், பொருட்பேச்சு இல்லை. மணம், வாணிகம் ஆக்கப்படவில்லை. காதற்சிக்கல் ஏற்பட்டால் ஊர்ச்சான்றோர் உடன் ஒழுங்குபடுத்தினர்; ஊரை விட்டு ஊர் போனாலும் உறவாக அவர்களைக் கொள்ள ஊரார் இருந்தனர். தமிழ்க் காதலில் இருந்த உறவு முறை இது. இந்நிலை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்று வள்ளுவர் கருதினார். அதனால் உள்ளார்ந்த காதலும், காதலைப் போற்றும் உறவும், அதனை மதிக்கும் ஊரும், அமைந்திருப்பதே வாழ்வியல் அறப்பேறு எனத் துணிந்து வெளியிட்டார். இன்ப உறவாய் - ஒட்டாய்- நட்பாய் - அமைந்தது இனம். அவ்வினத்தான் அமைந்ததே ஊர்; அவ்வாறமையா ஊர் ஊரன்று. அவ்வூரில் வாழ்வதும் வாழ்வன்று! இன்னாது இன்ன இல்ஊர் வாழ்தல் பிள்ளை தின்னும் முதலை வாழும் ஊர் அவ்வூர்; பெரும் பாம்பு திரியும் பேரூர் அவ்வூர்; என்று சங்க இலக்கியம் பேசுவது போன்ற ஊர் எதுவோ அது, இனன் இல் ஊர், இனம் போன்று இனமல்லார் வாழும் ஊர் அன்பிலா உடல், உடலன்று; எலும்பு தோல் போர்த்த கூடு அது. கம்பும் குச்சியும் வைக்கோலும் துணியும் போர்த்த பார்வைப் பொ(ய்)ம்மை போன்ற உயிர்ப் பொ(ய்)ம்மைகள் மலிந்த ஊரில் வாழும் போலி வாழ்வும் ஒரு வாழ்வா? ஊரே இனமாக வேண்டும்; இனமாக்கலும் ஊர்ச் சான்றோர் கடன்! ஒன்றி உறவாக வாழ்தல் ஊரவர் கடன். அப்படி அமையா அமைக்க முடியா ஊரில் வாழ்வது போல் துன்பம் ஒன்று இல்லவே இல்லை! ஊமைப் பிறப்புகளாக ஊர் முழுவதும் இருந்தாலும் உவப்பாக வாழலாம். ஆனால், நெஞ்சம் எரிகுழம்பாய், வாய் நிலைநடுக்கமாய், செயல் இடியாய் இருப்பார் இடையே வாழ்வது வாழ்வா, நொடி நொடிச்சாவா? அத்தகைய ஊரிலும் ஓரன்புத் துணை! உயிர்த்துணை! அந்தத் துணையோடு எரி நெருப்பென்ன, கடுபாலையென்ன, நெடுமலையென்ன, கடும் அலையென்ன எங்கும் செல்லலாம்! அத்துணையும்-உயிர்க்கு உயிராம் அத்துணையும்- இரு வருகிறேன் என்று சொல்லியும் சொல்லாமலும் பிரிந்து போய் விட்டால், அந்தத் தனிமை வாழ்வுக்கு இணை அந்தத் தனிமை வாழ்வு தானே! அதனால், இன்னாது இனனில்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு (1158) என்றாள் அவள். ஊர் கெட்டாலும் உறவு விட்டாலும் விடக்கூடாத உயிர்த் துணை, அவளை விட்டுச் செல்லுதல் ஆகாது. அப்படி அவன் செய்தால்.....? அவள் சொல்கிறாள்....... நீ செல்லாமல் இரு செல்வதாக இருந்தால்........ சென்று திரும்பி வரும்போது நீ எனக்குச் சொல்ல நான் இருக்க மாட்டேன்; உனக்காக இங்கே உயிரோடு இருப்பார்க்குச் சொல்! என் வாழ்வு உன் பிரிவைத் தாங்கி அதனால் ஏற்படும் அல்லலைப் பொறாது. உன் பிரிவைத் தாங்கிக் கொண்டு உயிரோடு இருக்க இயலாது; அப்படி இருப்பார் பலர் ஆகலாம்; அவர்க்கு உன் வரவையும் உன் பொருள் வரவையும் சொல்லியிரு இவை வள்ளுவத் தலைவியர் வாக்கு. வள்ளுவ நோக்கு என்ன? ஒன்றிய உள்ளம்; ஒன்றாகிய உள்ளம்; உடனாகிய வாழ்வு; ஊரொடும் உறவாக வாழ வேண்டும் வாழ்வு; அவ்வாழ்வு பிரிந்து போவது ஏன்? புரிந்து கொண்டு போற்றாமை தானே! ஒரு துக்கச்சுமையா இல்லறம் - குடும்ப வாழ்வு? இல்லையே! இரு பக்கமும் சமமாகத் தாங்கும் கா (காவடி) போன்றது அன்றோ! இருவரும் கூடிய அறவாழ்வில் இருவரும் ஒன்றாகிய இன்ப வாழ்வில், பொருளியல் மட்டும் பிரிவுற வேண்டுமா? அதிலும் ஒன்றாகும் நிலையே உயர்வாகும். அந்நிலை - குடிநலம்- இன நலம்நாட்டு நலம் - உலக நலம் காக்கும் நிலை என்று ஆழமாய்ப் பதித்த கருத்தை நாம் அறியவும் இல்லை; தெரியவுமில்லை! இதனைப் போற்றிக் கொள்ளும் வாழ்வே பொருளியல் புகழ் வாழ்வாம். ஒருதலையான் இன்னாது காமம் காப்போல இருதலை யானும் இனிது (1196) என்பது தனிப்படர் மிகுதித் தமிழறம். 25. உலக நல வாழ்வு இரப்பார் இல்லாத உலகத்தை விரும்பியவர் திருவள்ளுவர். ஆனால், எம் வயிற்றுத் தீயைத் தணிக்க வாய்ப்பு இல்லையே என ஏங்கி நொந்தும் வெந்தும் திரிவாரைக்கண்டு உருகியவர் அத்தகையவர்க்கு உதவ வாய்ப்புத் தம்மிடம் இருந்தும் உதவ உள்ளம் இல்லாமல் இருப்பவரையும் கண்ணேரில் கண்டு கரைந்தவர். இந்நிலவுலகக் கேடாக இரத்தலும், இல்லை எனக் கரத்தலும் (மறைத்தலும்) உள்ளனவே! இவை ஒழியாவா என ஆழமாக எண்ணி அறமுரைத்தவர். தீயில் தசையும் கொழுப்பும் உருகுவது போல் நெஞ்ச வெதுப்பிலே உருகும் நேயத்தைக் காட்டியவர் அவர் (1060). ஒருவர் நேயத்தை உரைத்த அவர். உலகில் பசித்தோர் அனைவர்க்கும் நம் உள்ளத்தில் உண்டாகிய உருக்கத்தை ஒழிவு மறைவு இல்லாமல் இரவு உள்ள உள்ளம் உருகும் என்றார். இரந்து வருவார் எவரைக் கண்டாலும் தம் உள்ளம் உருகுவதை உரையாக்கிக் காட்டுகிறார்! வீடுதோறும் இரந்து வெற்றராய் வருவாரைக் கண்டு, வள்ளலார் உருகிப் பாடவில்லையா? அவர்க்கு முன்னோடியாக உருகி நின்றவர் வள்ளுவர். உருகுதல் நீராதல் தானே! வன்பொருள் வழிந்தோடுவது. ஆவதுதானே! வழிந்தோடும் நீர், மேல்வரும் வெப்பத்தால் என்ன ஆகின்றது! காய்ந்து ஆவியாய் விடுகின்றது அல்லவா! அதுபோல் இரப்பாரைக் கண்டு உருகிய வள்ளுவர் உள்ளம், அவர்க்கு உதவாதவர்களைக் கண்ட அளவில் (உருகிய உருக்கம்) காய்ந்து இல்லாமல் ஒழிந்து போகின்றதாம். இதனை, இரவு உள்ள உள்ளம் உருகும்; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும், (1069) என்கிறார் வள்ளுவர் தம் உள்ளத்தைத் தாமே ஓவியமாக்கிக் காட்டிய ஒண்குறள் வெண்பா இது. இரத்தல், இருத்தல் ஆகாது, இரந்து வருவார் உண்டு என்றால் அவரைக் கண்டு வாய்ப்புளோர் கரத்தல் ஆகாது என்னும் இரண்டு கருத்துகளை வள்ளுவர் கொண்டமை இவ்வொரு குறளால் புலப்படும். புலப்படவே, இரவும் இரவச்சமும் அவர் இரண்டு அதிகாரங்களாகக் கூறிய நுட்பமும் புலப்படும். ஒன்றற்கு ஒன்று முரணாகிய செய்திகளை ஒருவர் ஏற்பது அறமா? என்னும் வினா எவர்க்கும் இயல்பாகத் தோன்றவே செய்யும் எளிமையாக எண்ணித் தெளிய ஒருகுறிப்பு; ஆத்தி சூடியில் ஏற்பது நிகழ்ச்சி என்றவர் ஐயம் இட்டு உண் என்றாரே! இதன் கருத்தென்ன? இரத்தலை ஒழிக்க வேண்டும். இரத்தல் இல்லா வாழ்வை அரசு அமைத்துத்தரவேண்டும். அரசு அமைக்கத் தவறினும் தம்முயற்சியாலாவது அமைத்துக் கொள்ளுதல் மக்களாகப் பிறப்படைந்த ஒவ்வொருவர் கடமையும் ஆகும். ஆனால், அரசின் கடமைகள் எல்லாம் செம்மையாக நிகழ்த்தப் படுகின்றனவா! மக்கள் தம்தம் கடமைகளை எல்லாம் தவறாமல் செய்யும் உறுதி பூண்டு உழைக்கின்றனரா! இவ்விரண்டும் இல்லா நிலையில் பசியால் சாவாரை அச்சாவை ஒழிக்கும் பசிப்பிணி மருந்து தம்மிடம் இருப்பவர் தருமியாகிக் காக்கவாவது வேண்டுமே! சாவாரைச் சாவவிடாமல் உயிர்காக்கும் தெய்வத் தாய்மையராய் அவர் திகழவேண்டும் அல்லவோ என்கிறார். நேற்றுக் கொன்று சென்ற வறுமை இன்றும் வருமோ என ஏங்குவாரை எடுத்துக் காட்டும் வண்மை உருக்கமே சாவாமல் காக்கும் சால்பே ஒன்றாக நல்லது கொல்லாமை என்னும் அருள் அறமே முரண்படுவது போல வள்ளுவரைச் சொல்ல வைத்ததாம். ஆனால், வள்ளுவர் உள்ளம் இன்னொரு குறளில் மேலும் பளிச்சிட்டது. இரத்தலை வெறுக்கும் வள்ளுவர் தாமே இரவலராகிப் பேசுகின்றார். கசிந்து கசிந்து கண்ணீர் ஒழுக அதனைத் துடைத்துக் கொண்டு கரைந்துபாடுகின்றார். இரப்பன், இரப்பாரை எல்லாம். ஆம்! இரப்பாரை எல்லாம் வள்ளுவர் இரந்து வேண்டு கிறார்! என்ன வேண்டுகிறார்? நீங்கள் இரப்பீர்கள் என்றால் அவர்கள் இல்லை என்பார்! அதனால் என்ன சொல்கிறீர்? இரவன்மின் என்று சொல்கிறேன் என்கிறார். இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று 1067 என்பது அக்குறள். இரவலர் இல்லா உலகை, இரந்து வருவார் இருந்தால் இல்லை என்று மறுக்காது ஈவார் உள்ள உலகை வள்ளுவர் விரும்புகிறார். உயிர்காக்கும் அருளாளர் நிலையில் அப்படி விரும்புகிறார். ஆனால், தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (731) என்னும் நாட்டை நனவாக்க விரும்பிய நல்லோர் அவர் ஆதலால், வீடும் நாடும் உலகும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் தாழ்வு உயர்வு அற்ற ஒப்புரவு நிலை ஒன்றனை விரும்பி ஓங்கிய முழக்கமிட்டார் அம்முழக்கங்களுள் தலையாயது அரசுக்குத் தந்தது ஒருமுழக்கம். அது, நாடென்ப நாடா வளத்தன. (739) என்பது தன்னிறைவு நாடாக ஆக்காத எந்நாடும் நன்னாடு இல்லை என்பது. செல்வர்க்கும் ஈகையர்க்கும் தந்த தொரு முழக்கம் அது, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். (225) என்பது பசித்து வந்தோர் பசியை ஆற்றுவது நல்ல ஆற்றலே ஆனால். அதனினும் மேம்பட்ட ஆற்றல், அவர்கள் நாங்கள் பசியுடையோம் என்று கேட்டு வராவகையில் அவர்களே அப்பசியை மாற்றிக் கொள்ளும் வகையில் திறங்களையும், வாய்ப்புகளையும் வழங்குங்கள் என்பது இதன்பொருளாம். தனித்தனி மாந்தர்க் கெல்லாம்; அறிவுப் பிறப்பிக் கெல்லாம் குன்றின் மேல் ஏறிநின்று குறிக்கோள் நெறியாக அறங்கூறும் அண்ணல் உரைத்தது மற்றொரு முழக்கம். இரவார்; இரப்பார்க்கொன்று ஈவர்; கரவாது கை செய்தூண் மாலை யவர் - 1035 என்பது. தாம் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பையும் கரக்க (மறைக்க) மாட்டார்; உழைப்பு உழைப்பு என்று வாழ்வதைத்தம் உயிர்க்கடமையாகவும் தம்வழிவழிக் குடும்பக் கடமையாகவும் கொள்வார்; அவர் எவரிடமும் ஒன்றைக்கேட்டு நில்லார், தம்மிடம் எவரேனும் கேட்டு நின்றால் அவர்க்கு இல்லை எனச் சொல்லவும் மாட்டார் என்பது இதன் பொருள். இம்முழக்கங்கள் செம்முழக்கங்கள்! செவியுளோர், கேட்கும் செல்வராகவும் திகழக் கூறுவதே வள்ளுவம். வாழ்வாங்கு வாழ்தல் என்பது வள்ளுவர் நோக்குப் புரிந்துகொண்டு வாழ்தல்! அப்புரிவு, உலக விரிவு ஆவதாக! திருக்குறளில் ஒப்புரிமை படையல் ஒப்புரவின் உயர்தோன்றல் பெருந்தகைப் பேராளர் அறிவறி செல்வர் எங்கள் அருமைத் தந்தை வெங்கலம் அமரர் பெ. கத்தூரி ஐயா அவர்கள் திருவடி மலர்களில் திருக்குறளில் ஒப்புரிமை என்னும் இச்சுவடியைப் படையலாக்கி மகிழும் மைந்தன் - க. பெரியசாமி தொடர்புக்கு : கண்ணன் பல்பொருள் அங்காடி துறையூர்ச் சாலை பெரம்பலூர் முன்னுரை திருக்குறள் உயிர் ஒப்புரிமை நூல்; உலக ஒப்புரிமை நூல். வள்ளுவம் கூறும் ஒப்புரிமைகள் சிலவற்றை எடுத்துக்காட்டுவது இச்சுவடி. இச்சுவடியைப் பேரன்புத் தோன்றல் படைத்துறை மேலோர் - திருக்குறள் தொண்டர் - சான்றோர் பேரவைச் சால்பர், திருவள்ளுவர் தவச்சாலை (பெரம்பலூர்) நிறுவனருள் ஒருவர் ஆகிய தமிழ்த்திரு. க. பெரியசாமி அவர்கள், தம்தவத் தந்தையார் திருவடி மலர்களுக்குப் படையலாக்கி வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் பெரம்பலூர்த் திருவள்ளூவர் தவச்சாலை, நூல் வெளியீடு என்னும் புத்தாக்கப் பணியையும் தொடர வழிகாட்டுகின்றார். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது தாயுமானம். அன்புடன் இரா. இளங்குமரன் 1. ஒத்தது அறிதல் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்கிறதே வள்ளுவம். ஒத்தது என்பது எது? செல்வர்கள் செல்வர்களைச் சேரும் செல்வ ஒப்பா? வறியவர்கள் வறியவரை நாடும் வறுமை ஒப்பா? இளையர்கள் இளையரையும் முதியர்கள் முதியரையும் நாடும் அகவை ஒப்பா? குடியர்கள் குடியரைக் குலாவும் குடிப்பு ஒப்பா? சூதர் சூதரையும், ஆடுநர் ஆடுநரையும் தேடும் ஆடல் ஒப்பா? அறிவர் அறிவரை அவாவும் அறிவு ஒப்பா? கட்சிமை சாதிமை சமயமைச் சார்பு ஒப்புகளா? உள்ளப்போக்கு உணர்வுப்போக்கு ஆகிய எழுச்சி ஒப்பா? கருத்தொன்றி காட்சி ஒன்றி நிற்கும் காதல் ஒப்பா? அன்றி நாம் தொடர்ந்து காணும் பிறப்பு ஒப்பு, சிறப்பு ஒப்பு, கல்வி ஒப்பு, கல்விப்பயன் ஒப்பு முதலிய ஒப்புகளா? இவ்வொப்புகள் அன்றித் தோற்றத்தால் ஒக்கும் ஒப்பு ஒன்றும் உண்டே! அவரைப் போலவே உள்ளார்! அவரைப் போலவே குரல்! அவரைப் போலவே நடை! இப்படியெல்லாம் சொல்கிறோமே! இவர் கண்ணைப்பார், காதைப்பார், மூக்கைப்பார் அவர் கண்ணை காதை மூக்கைப் போலவே உள்ளனவே என்னும் உறுப்பு ஒப்பா? இல்லை! நிற ஒப்பா? உயர கன ஒப்புகளா? இவையெல்லாம் ஒப்பு எனப்பட்டாலும் வள்ளுவம் சொல்லும் ஒப்பு இவற்றைக் கடந்த ஒன்றாக இருத்தல் பேரொப்பாம்! பேரொப்பு என்பது பெயர் ஒப்பு அன்று! பெரிய ஒப்பு என்னும் பொருளது! பண்பு ஒப்பதாம் ஒப்பு என்று சொல்லப்படும். ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் என்னும் அரைக் குறளுக்கு உரிய விளக்கம், உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு என்னும் பண்புடைமைக் குறள் கூறும் பண்பொப்பே ஒப்பாம். பண்பொத்தல் ஒப்பு நூற்றுக்கு நூறும் ஒத்து வருமா? ஒத்து வருவார் உளரா? தந்தையனையர் மக்கள் தாயைப் போல் பிள்ளை இவற்றில் ஒவ்வாமை காண்கிறோமே! உயிர்க் காதல் என்றவர் விட்டு விலகுதல் மட்டுமா, வெட்டுக் குத்திலே இழிதல் இல்லையா? உயிர் நட்பு என்பது மாறாப் பகையாய் தீராத் துயராய் ஆகிவிடுவது இல்லையா? அப்படியானால் முழுதுறும் ஒப்பு எப்படிக் காண்பது? முழுதுறும் ஒப்புக் காணாமையால் பகையோ மாறா காட்ட வேண்டுமே? பிரிவோ பிளவோ கொள்ள வேண்டுமா? பழியோ இழிவோ பகர வேண்டுமா? அப்படி யானால் எவரொடு எவர்க்கு உறவு உண்டு? கூட்டு உண்டு? இணைப்பும் இசைவும் உண்டு? முற்றிலும் ஒத்துப்போகாமை என்றால் உலகில் ஒருவர்க்கு எவரொருவரும் ஒத்தவராக இருக்கமாட்டார்! இருவர் இணைவுக்கு வழியே இல்லை! வள்ளுவம் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்பதற்குப் பண்பு ஒப்பதாம் ஒப்பு என நாம் கொண்டாலும் பயனாவது இல்லையே! திருவள்ளுவர் நூற்றுக்கு நூறும் பண்பு ஒப்புப் பார்த்து உறவாடுவதைக் குறித்தார் அல்லர்! நம் இயல்புக்கும் அவர் இயல்புக்கும் ஒத்தது யாது எனப்பார்! அவ்வொப்பை மட்டுமே எண்ணிப் பார்த்து அவ்வகையிலே மட்டும் உரிமை உறவு கொண்டாடு! பார்க்கும் போதே ஒத்தது பல இருப்பினும் அவற்றைப் பார்ப்பதை விட்டுவிட்டு ஒவ்வாதவற்றை ஒன்று இரண்டு என்று எண்ணிப் புறக்கணியாதே! அப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வாதவற்றையே எண்ணினார் ஒருவரும் நெருக்கமாக இரார். நெல்லுக்கு உமியுண்டு! நீருக்கு நுரையுண்டு! புல்லிதழ் பூவுக்கும் உண்டு! குறையிலார் ஒருவரும் இரார்! என்பதொரு பாட்டு! கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த நன்று ஒன்று உள்ளக்கெடும் என்பது வள்ளுவம். கொடுமையிலும் கொடுமை செய்தாலும் ஒரு காலத்து ஒரு நன்மை செய்திருப்பின் அதனை எண்ணிப் பார்த்துப் பின்னே செய்த கொடுமையை மறத்தல் வேண்டும் என்னும் வாழ்வியல் தெளிவு செய்யும் திருக்குறளா, நூற்றுக்கு நூறும் ஒப்புப் பார்த்து உறவாடு என்று கூறும்? உனக்கும் அவனுக்கும் ஒத்த இயல்புகள் பல இல்லை எனினும் சிலவேனும் இருக்கும்! அவற்றைப் பார்த்து அவ்வளவில் நெருக்கமாக இரு! உன் நெருக்கம் அவனிடம் மேலும் மேலும் ஒப்புகளை உருவாக்கும்! அப் பண்பு ஒப்பு பின்னே இருபாலும் வளர்ந்து வளர்ந்து பெருகும்! அப்பெருக்கும் நலத்தைப் பெருக்கும்! நட்பைப் பெருக்கும்! நயத்தைப் பெருக்கும்! உயிரொப்பு ஆகிச் சிறக்கும்! அந்நிலையில் சாவா ஒப்பாகி ஓங்கும்! அவ்வெற்றி மற்றையான், செத்தாருள் வைக்கப்படும் என்னும் தாழ் நிலையை மாற்றி என்றும் உயிர் வாழ்வான் என்னும் மேனிலை யில் வைத்து விடும். ஒத்தது என்பது பண்பு ஒத்தது; ஒருவர்க்கும் ஒருவர்க்கும் உள்ள நல்ல பண்புகளில் ஒத்தது; அவற்றையே எண்ணி உறவானால் உயிருள்ளவரை மாறாப் பெருநிலை எய்தும் என்னும் இதனை அறிந்து தெளிந்து சிக்கெனப் பற்றிக் கொண்டால் தனிவாழ்வில் சிக்கல் ஏற்படுமா? குடும்ப வாழ்வில் சிக்கல் ஏற்படுமா? தொழில் வாழ்வில் சிக்கல் ஏற்படுமா? ஏன்? நாடு இன மொழி வாழ்வில் சிக்கல்கள் ஏற்படுமா? எங்கும் இணைவேயன்றிப் பிளவு இல்லை என்னும் பெருநிலை எய்துமே! அதுவே வள்ளுவப் பெருந்தகை கண்டு காட்டும் வாழ்வியல் ஒப்பாகும்! 2. பிறப்பு ஒப்பு இவ்விரண்டு சொற்களும் செந்தமிழ்ச் சொற்கள். செந்நாப் போதார் செப்பிய சொற்கள். ஈராயிரம் ஆண்டுகளின் பின்னரும் பொருள் தெளிவும் திட்பமும் உடையதாய். மயக்கம் இலதாய் வெளிப்பட விளங்கும் சொற்கள். பிறப்பு ஒக்கும் என்று குரல் எழுப்ப நேர்ந்த சூழல் என்ன? பிறப்பு ஒவ்வா என்னும் பேச்சு ஊடுருவல் நேர்ந்தபோது, நெஞ்சங் குழைந்த நேயத்தால், நேரிய கூரிய நோக்குடன் அந்தோ! பிளந்தும் பிரிந்தும் பிணங்கியும் பெரும்பகையாய்ப் பாழாய் மாந்தர் இனம் கெட்டொழியுமே, அதற்குத் தடையிட்டு நிறுத்தியாக வேண்டுமே என்னும் பாதுகாப்புணர்வால் நம்மறை அருளிய வள்ளல் திருவள்ளுவர் உரைத்த அருளறமே இச்சொற்கள்! மேல் வருணம், கீழ் வருணம், தோல் வருணம், தொழில் வருணம், மொழி வருணம், மோது வருணம் எனப் பலவாகப் பகையும் பாழும் ஆட்டங் காட்டுதல் இன்றும் காண வில்லையா? பணவருணமும், கட்சி வருணமும், சாதி வருணமும் போடும் ஆட்டம், இவையெல்லாம் வேண்டா வேண்டா என்ற பகுத்தறி வாளரிடமும் தன்மானத்தவரிடமும் கூடக் கொழுந்துவிட்டுத் தலைவிரி கோலம் காட்டி, உடுக்கடித்தல் இல்லாமலே பேயாட்டம் போடும் கால நிலையில் முந்தைப் பழமையரும் பற்றரும் விட்டு வைப்பரோ? விலங்கின் சாதி நீர் வாழ் சாதி பறவைச் சாதி என்ற அளவில் நின்ற சாதிச் சொல் சாதிப்புச் சொல்லாகி அரசியல் புரியும் கால நிலையில் இச்செந்தமிழ்ச் சொற்கள் இரண்டையும் சொல்லிய வள்ளுவத் திருவாயை வாய்ப்ப வணங்காமல் இருத்தல் கூடுமோ? பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி இல்லமையால், அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும், இசுரேலும், ஈழமும் இன்ன வரிசை நாடுகளும் காட்டியதும் காட்டி வருவதுமாம் கயமைகள் இவ்வளவு அவ்வளவா? வல்லரசு, மதவெறி அரசு, நிறவெறி அரசு எனக் கொக்கரிக்கும் அரசுகள் ஆட்டி வைக்கும் அழிசெயல்களுக்கு அளவுதானும் உண்டோ? பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி மாந்தப் பிறப்பளவில் பொருட்சுருக்கம் கொள்வதோ? எத்துணையும் பேதமுறாமல் எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்ற ஒப்பு அல்லவோ அது? எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியா அருமையிற் கனிந்தது அல்லவோ அது? பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறியில் கனிந்த கனிகள் அல்லவோ வள்ளலாரும், இத்தாயுமானவரும்! பிறவி நோக்கு என்ன? எத்தனை உயிரிகள் ஆயின் என்ன? ஆசிரியர் தொல்காப்பியர் ஓரறிவு உயிரிமுதல் ஆறறிவு உயிரி வரை பகுத்து அருளினாரே! தொட்டறவு முதல் நெஞ்சறிவு வரை நெறியாய் உரைத்தாரே! நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தியதாக உரைத்தாரே! அந்நெஞ்சறிவினர் தாமே பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி பேணி ஒழுகத்தக்கார்! அவரிடம் தந்நலச் சிறுமையும் புன்னிலைக் கயமையும் புகலாமா? புகக் கூடாது என்றே புகன்ற செந்தமிழ் மாமணியுரை பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பதாம்! பிறப்பு ஒப்பு உணரின், பிறவிநோக்கு தானே விளங்குமே! பிறவி நோக்குத்தான் என்ன? துன்ப நீக்கம் என்பது ஒன்று! இன்ப ஆக்கம் என்பது மற்றொன்று! துன்ப நீக்கத்தை விரும்பா உயிரி எதுவும் உண்டோ? இன்ப ஆக்கத்தை விரும்பா உயிரி எதுவும் உண்டோ? இவற்றை உணர்ந்த நெஞ்சறிவு நேய அறிவு உடைய உயிரியாம் மாந்தப் பிறவி, பிற உயிர்க்கு பிறர் உயிரிக்குத் துன்ப ஆக்கமும் இன்ப நீக்கமும் நிகழ்த்துமோ? இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு இன்ன மணிக் குறள்களை மனத்தகத்துக் கொண்ட பிறவி பிற உயிர்க்குத் துன்ப ஆக்கமும் இன்ப நீக்கமும் எண்ணுமோ? ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தருள் வைக்கப் படும். என்ற குறளின் ஒத்தது. பிறப்பு ஒப்புமை உணர்வில் கனிந்த இன்ப ஆக்க துன்ப நீக்க ஒப்பு அல்லவோ! உயிருடையதுதானே. உயிருடையதன் உணர்வை உணர்ந்து போற்ற முடியும்! செத்தது போற்றுமா? உயிர் வாழ்வும், உயிரொடு இருந்தும் சவமாம் நிலை ஒத்த தறியாக் கேட்டின் கொடைதானே! சுவாயம்பு மநு எத்தகையராம்? இதோ மநு தர்மசாத்திரம் புகல்கின்றது. பொறிவாயில் ஐந்தவித்து, விஷய சுகங்களை நாடாமல் மனத்தைத் திருப்பி பரம்பொருளிடத்தே ஊன்ற நிறுத்திய சுவாயம்பு மநு என்கின்றது. அவரிடம் தேவரிஷிகள் சென்று வணங்கி நால்வருணத்தரும் மற்றொரும் கடைப்பிடிக்கத்தக்க அவரவர் செயல்கள் கடமைகளை எமக்கு உணர்த்துவீராக என்கின்றனர். இவை மநுதரும சாத்திர முதலிரு சூத்திரங்கள். இதற்குத் தரும் விளக்கமே மநுதரும சாத்திரம். பகுத்தறிவு மாமணிகளும் மனுதர்ம ஆட்சி செய்வது தானே மனுநீதி நாள்! இன்றும் நடைபெறுகின்ற காட்சி இல்லையா? மனுநீதிச் சோழன் என்றால் அவன் மனுநெறி மாறாமல் ஆட்சி புரிந்தான் என்பதால் பெற்ற பெயர் தானே! எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேலே மிதக்கும் என்பார் பாவாணர்! உண்மை ஒருநாள் முகங்காட்டாமல் ஒழியுமா? நாலாம் வருணத்தோன் அரசானயிருக்கும் நாட்டில் வசிக்கக்கூடாது. தாழ்ந்த சாதியினருடன் மரநிழலில் கூட ஒன்றாக இருக்கக்கூடாது. 4 : 61. 4 : 69 பிராமணரை, அவரால் தொல்லையுற்ற போதும் நிந்தித்தல் கூடாது. பிராமணன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள், யாவும் அவனுடைமையை அவன் பெறுவதாகவும், ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்வோராகவும் இருக்கின்றனர். 1 : 101. பத்தே வயதுடையவனாயினும் பிராமணன் தந்தைக்குச் சமமாயும் நூறுவயதாகிய சத்திரியனைப் பிள்ளையாகவும் மதிக்க வேண்டியது. வேதம் அறியாதவனுக்கு இடுகின்ற தானம் சாம்பலிற் பெய்த ஆகுதி என வீணாகிவிடும். பந்தியில் அமரத்தகாதவன், பிராமணன் புசிப்பதைப் பார்த்தால் அன்னமிட்டவனுக்குப் பலன் வீணாகிவிடும். (மநுதர்ம சாத்திரம் தமிழில் திரிலோக சீதாராம்.) இன்னும் கடுமையும் கொடுமையும் கயமையும் உடையவை மிகப் பல! இந்நெறி தமிழ் மண்ணில் புகநேர்ந்த போதே விழிப்பாக உரைத்து உய்விக்கக் கிளர்ந்த அருளுரை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது. அதனை அன்றே போற்றத் தவறிய தமிழ்மண் இன்று அவலங்களுக் கெல்லாம் உறைவாய்த் தத்தளிக்கின்றது. அதனை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்தவரும், ஒழியவிடோமெனக் கட்டிப் பிடித்தும் காட்சியாக்குகின்றனர்! பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி பேருலக நெறியானால் அன்றி உய்யாது உலகம்! உய்யவே உய்யாது! உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு என்பது திருவள்ளுவப் பண்புடைமைத் திருப்பாட்டு! 3. சிறப்பு ஒப்பு பிறப்பு ஒக்கும். பிறப்பு ஒப்பானதே என்றால், சிறப்பும் எத்தகையதாகும்? அதுவும், ஒப்பானதே ஆகும் என்பது வெளிப்படை. ஒருவன் என்ன தொழில் செய்கின்றானோ, அதற்குத் தகச் சிறப்புண்டு என்னும் தொழிற் சாதிப் பகுப்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே வருணமும் ஆயது! பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவோடு பஞ்சமர் என்னும் ஐந்தாம் பிரிவும் உண்டாக்கி விட்டனர். மாந்தர்க்கு மட்டுமா? பாகன் சொல்வழி நில்லாத யானையைச் சூத்திர யானை என்று பாகன் அடித்த அடியைக் கண்டு பாரதியார் வருந்தி எழுதினார். வருணக் கூத்து இவ்வளவு அவ்வளவா? தமிழ் எழுத்துக்களில் இவை இவை பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர எழுத்துகள் என்று பாட்டியல் நூல்கள் மொழியாக்கப் பெயரால் மொழிக்கேடு புரிந்தன. சூத்திர எழுத்து ழ, ள என்னும் இரண்டேயாம்! பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும் மன்னிய அந்தணர் வருணம் ஆகும். தநபம யர எனச் சாற்றிய ஆறும் மனமகிழ் அரசர் வருணம் ஆகும். லவறன என்னும் நான்கும் புள்ளியும் இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப. ழள எனும் இரண்டும் வளமையர்க் காகும். இவை இலக்கண விளக்க நூற்பாக்கள், வளமையர் என்று நூற்பா கூறினும் உரை சூத்திர வருணம் என்றே கூறுகின்றது. நூலியற்றியவரோ வைத்திய நாத தேசிகர், வெண்பா, அகவல், கலி, வஞ்சி என்னும் பாவகைகளுக்கும் வருணம் பூசினர். அந்தணர் சாதி ஆகிய வெள்ளை காவலர் சாதி ஆகிய அகவல் நெடுநிலைக் கலியே வணிகர் சாதி எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி என்பவை பன்னிரு பாட்டியல். ஆங்கிலேயர் தொடர் வண்டியை அமைத்துத் தந்ததுடன் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு எனப் பெட்டிகளுக்குப் பெயரும் சூட்டினர். இந்நாட்டினர் கண்டு பிடித்து இயக்கியிருந்தால் பிராமண சத்திரிய வைசிய சூத்திர பஞ்சம என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று பாவாணர் தெள்ளிதின் எழுதினார். இந்நிலையில் வள்ளுவப் பார்வை எப்படியுள்ளது. பிறப்பு ஒக்கும்; அவ்வாறே சிறப்பும் ஒக்கும் என்கிறது. ஏன்? இன்ன தொழில் செய்வது சிறப்பு என்றோ இன்ன தொழில் செய்வது இழிவு என்றோ வள்ளுவம் கூறியது இல்லை. எத்தொழிலும் சிறப்புக் குரியதே என்பது அதன் விரி பார்வை. வினைத் தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை என்பவற்றில் இன்ன வினை என்னும் குறிப்பு உண்டோ? இன்ன வினை உயர்வு. இன்ன வினை தாழ்வு என்னும் இரைச்சல் உண்டோ? இல்லையே! அம்மட்டோ? சூத்திரத் தொழிலாக வாய்கிழியப் பேசப்பட்ட - அவர் தந்த ஊணுடை கொண்டே வாழ்ந்தும் பேசப்பட்ட - உழவர் தொழிலை, உழவே தலை உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் உழுவார் உலகத்தார்க்கு ஆணி இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார் என்பவற்றுடன், உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை என்றும் பேசியது வள்ளுவம். இனிப் புகழ் என்பதோர் அதிகாரம் திருக்குறளில் உண்டே! தீவினைக்கு அஞ்சுபவராய், ஒப்புரவு உணர்வு மேம்பட்டவராய் ஈகைக்கு இருப்பிடமானவராய் இருப்பவர் எவரோ, அவரை என்றும் சாவா உடம்பினராக்கி வைப்பது புகழ் என அதிகார முறையில் அறியச் செய்வது வள்ளுவர் வைப்பாகும். புகழை எப்படிச் சொல்கிறது குறள்? உயிர்க்கு ஊதியம் என்கிறது! புகழ் எப்படி வரும் என்கிறது? ஈதலால் வரும் என்கிறது! ஈதல் என்பது என்ன? பசிக்கு வழங்கும் உணவு அளவோ ஈகை? ஏனை ஏனை உதவிகளைச் செய்வதெல்லாம் ஈகையே! குருதிக் கொடை என்ன! கண்கொடை என்ன! சிறுநீரகக் கொடை என்ன! எல்லாம் ஈகையே! ஈகமே! நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது (235) என்னும் வியன் குறள் ஈகையின் விளக்கம் கூறும் புகழ்மணிக் குறளாகும். பிறர் நலம் கருதிய வாழ்வு உயர்வாழ்வு, மேல் வாழ்வு என்பது வள்ளுவப் பிழிவு. தொழிற் சிறப்பு ஒக்கும் என்றால், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்கிறாரே திருவள்ளுவர். இது முரண் அல்லவோ! என்று வினவத் தோன்றும். திருவள்ளுவர் இக்குறளில் தொழிலில், உயர்ந்த தொழில் தாழ்ந்த தொழில் என்று பேசவில்லை. எத்தொழில் ஆனாலும் அத்தொழிலைச் செய்யும் முறையிலேயே பெருமையும் சிறுமையும் உண்டு என்கிறார். திருத்தமாக தெளிவாக நிறைவாக செம்மையாக எத் தொழிலைச் செய்தாலும் அத்தொழில் சிறப்பினதே! அவ்வாறு செய்யப்படாதவை சிறப்பில்லனவே என்கிறார். பிறப்பொக்கும் என்ற திருவள்ளுவர், உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுக்கத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (933) என்றது போல, தொழிற் சிறப்பு ஒக்கும் என்ற அவர் அத்தொழிலைச் செய்யும் முறை, முறைகேடு என்பவற்றால் சிறப்பு ஒவ்வா என்றார். கோயிற் சிலையினைப் பூசை செய்வோர் கொண்டு விற்றல் ஏற்ற தொழிலுக்குச் சிறப்பாகுமா? கற்பித்தல் என்பது கண்ணளித்தல்; புண்ணைக் கண்ணாக்கல், உள்ளொளி பெருக்கல் என்பவை வள்ளுவம். மதிப்புக்குரீய அத்தொழிலைச் செய்தார், கண்ணைக் கெடுத்துள்ளமை நாடறி பொருளாக உள்ளதே! தொழில் செய் வேற்றுமை சிறுமைப்படுத்தி விட்டதன்றோ! ஓருயிரின் துடிப்பை மற்றோர் உயிர் தாங்கிக்கொள்ள மாட்டாமல் ஓடிப்போய்ச் செய்யும் உதவிக்குப் பெயர் மருத்துவம் என்பது உணர்வுடையோர் உரை. ஆனால், ஒரு மருத்துவப் பல்கலைக்கழகப் பெருந்தகையும், மருத்துவப் பேராசிரியர்களும், காவலாளிகளின் வழியே, தாள் பொறுக்கும் சாக்கில், தாள் பொறுக்குவாரை வரச் செய்து குனிந்து பொறுக்கும் போதில் பிடரில் அடித்துப் போட்டுச் சிறு நீரகங்களையும், கட்பாவைகளையும பிறவற்றையும் கவர்ந்துள்ளனர். ஒருவர் இருவர் அல்லர்; முப்பதின்மர்க்கு மேற்பட்டவர், மேலை நாட்டுச் செய்தி இது. தொழில் செய்முறை, தொழிலுக்குச் சிறப்புத் தந்ததா? அலுவலகங்கள் சிவவற்றில் கடைநிலை அலுவலராக இருப்பவருள் சிலர் எத்தகைய தலைநிலையராக உள்ளனர் என்பதையும், தலைநிலை அலுவலராக உள்ளருள் சிலர் எத்தகைய கடை நிலையராக உள்ளனர் என்பதையும் நாம் நடைமுறையில் அறிவது தானே! வையகம் காப்பவ ரேனும் - சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய்யகலத் தொழில் செய்வதே - புவி போற்றிட வாழ்பவர் மேலோர் என்பது பாரதியார் வாக்கு! நாம் ஆய்ந்த குறள்! பெருமை அதிகாரஞ் சார்ந்தது என்று அறிந்து கொள்வதும் இப்பொருளுக்கு வலுவான சான்றாகும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் 505. 4. கல்வி ஒப்பு உயிரி என்பது உயிருடையவை அனைத்துக்கும் ஆகிய பொதுப் பெயர். ஆனால் வாழும் உயிர் என்று சிறப்பித்துச் சொல்வது ஆறறிவு வாய்ந்த மாந்தரையே யாம். வாழும் உயிர்களுக்கெல்லாம் வெளிப்படத் தோன்றும் கண்கள் இரண்டு உள்ளமை போல, அகப்படத் தோன்ற வேண்டும் கல்விக் கண்கள் இரண்டும் உண்டு. அவை, எண்ணும் எழுத்தும் என்பன. வாழும் உயிர்களுக் கெல்லாம் பிறப்போடு கண்கள் உண்டாயமை போல எண் எழுத்துக்களாம் கண்களையும் உண்டாக்கிக் கொள்ளுதல் கட்டாயக் கடமையாம். அக் கண்களை உருவாக்கிக் கொள்வதற்குத் தகவே உடலாக்கங்கள் அமைந்துள. மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் புறப்பொறிகள் ஐந்து மட்டுமா, மனமெனும் அகப்பொறியும் ஆகிய ஆறும் மாந்தர்க்கு அமைந்துளவே! இவற்றின் புலன்களாக ஊறு சுவை ஒளி உயிர்ப்பு கேட்பு சிந்திப்பு என்னும் ஆறும் அமைந்துளவே. இப்புலன்களின் விளைவுதானே புலமை என்பது. புலமை அமைதல் தானே புலப்பாடு! புலன்கள் இருந்தும் புலப்படுதல் இல்லை என்றால் அது பிறவிக்கே இழிவு இல்லையா? படைப்பின் நோக்கத்தைப் பாழாக்குவது இல்லையா? ஆதலாலேயே கல்வியைக் கண்ணாகக் காட்டி, கண்ணுடையவர் என்பவர் கற்றோர் என்றும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றும் வள்ளுவம் பேசிற்று. கல்வியா, கேள்வியா, அறிவுடைமையா எல்லாம் பொதுமைய. இன்னவர்க்கே கல்வி, இன்னவர்க்குக் கற்பித்தலே ஆகாது! இன்ன பாலினர்க்கே கல்வி; இன்ன பாலினர்க்குக் கற்பித்தல் ஆகாது! இன்ன அகவையர்க்கே கல்வி, இன்ன அகவைக்குமேல் கல்வி இல்லை என்னும் கல்விக்குப் புறம்பான கட்டளைகள் தமிழ் மண்ணில் தோன்றியது இல்லை. தமிழர் பண்பாட்டில் அமைந்தது இல்லை. மக்கட்குப் பொதுப் பொருள் கல்வி என்பதே தேர்ந்த முடிவு! கண்ணொடு ஒப்பிட்டுக் கல்வியைக் கூறிய ஒன்றே அதனை மெய்ப்பிக்கும்! பாட்டரங்கேறிய வேந்தர்கள், ஆய்வரங்கில் பங்கேற்ற அரசர்கள், நூல்களைத் தொகுப்பித்த காவலர்கள் பலர். அரசரோடு பாவன்மையமைந்த அரசியாரும் பலர். வணிகப் புலவரென்ன, கொல்லர், கொற்றர், தச்சர், பூண்கொல்லர், குயவர் என்னப் பல்வேறு தொழில் வல்ல புலமையர் எண்ணறோர். மலைவாழ் எயினர் (வேடர்) புலமை நலமும், காவல் பணியர் புலமைத் திறமும் சிறந்து விளங்கினர். உழவர் புலவர்களாம் கிழார்கள், ஆசிரியப் பணிபுரிந்த சான்றோர்கள் அருளாளப் பெருமக்கள், மெய்ப்பொருள் வல்லார் என்பாரெல்லாம் சங்க நூற் கொடையாளராகத் திகழ்ந்துளர். தொழிற் பொதுமை போலவே, பால் பொதுமையும் அப்புலமையர் பட்டியலைப் பார்த்த அளவில் புலப்படும். இளம்பாலாசிரியர், பாலாசிரியர், ஆசிரியர், பேராசிரியர், கணக்காயர் என்னும் பெயரிட்ட புலவர்களை எண்ணிய அளவில் இளம் பாலர் முதல் கற்பித்தார் என்பது புலப்படுமே! சாவுமளவும் கற்றல் கடமை என்று அவர்கள் கொண்டமை, சாந்துணையும் கல்லாதவாறு என்? என்று வள்ளுவம் வினாவு வதாலேயே புலப்படுமே! ஓதுவது ஒழியேல் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா பாடம் ஏறினும் ஏடது கைவிடேல் என்னும் பன்மொழிகளும் பின் மொழிகளாகத் தொடர்ந்த மண்ணில், கல்வி நிலை இரங்கத் தக்கது ஆகியது ஏன்? அடுப்பை ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்று பெண்மையைப் பெரும் பழிக்கு ஆளாக்கி, வழிவழிச் சிறுமையைச் செய்தது ஏன்? கலைமகளை உருவாக்கி வழிபடச் செய்து விட்டுக் கல்விக் கண்ணில் மண்ணை மூடியது ஏன்? தமிழரில் 90 விழுக்காட்டினர்க்கு மேற்பட்டாரும் தற் குறியராகவும் கீறலிடுபவராகவும் போயது ஏன்? வேதத்தைக் கேட்டால் கேட்டான் செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று சொன்னால் நாவை அறு; நினைவில் கொண்டிருந்தால் 12 விரல் சுடுகம்பியைச் செலுத்து என்றமை போலப் பொதுக் கல்விக்கே கேடு சூழ்ந்தமை ஏன்? கற்றவர் தந்நலமும் சூழ்ச்சியும், காவலர் என்னும் பெயரால் பொதுமைக் காவல் கடமையை மறந்து, கற்றறி சூழ்ச்சியர்க்கே காவலும் அரவணைப்பும் செய்பவராக அமைந்த ஆட்சியர் நிலையும் இத்தகைய கீழ்மைக்கு இடந்தந்தன. தமிழுக்கு ஆக்க மிக்க பணி புரிந்த அறிவு வல்லாரும், பொதுமை நலமும் கல்விக் கட்டாயமும் கருதாராய்த், தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே என இன்னவர்க்கே கற்பித்தல் வேண்டும் என விதிவகுத்தனர். (நன்னூல் 37) இவ்வளவில் நில்லாராய், களிமடி மானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் தறுகணன் பாவி படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே என்றும் கூறினர் (39). நோயுடையார்க்குத் தானே மருத்துவர் உதவி வேண்டும்; அவர்க்கு மருத்துவம் புரிதல் ஆகாது என்பது ஒப்புரவுப் பார்வை பாராத கல்விப் பார்வை; உயர் பார்வையாகுமா? தம் மக்களுக்குக் கல்வி அறிவினைத் தராத ஊரினை ஊராகக் கருதாமல், முட்காடாகக் கருதித் தீயிட்டுக் கொளுத்துக என்பாராய்த் தேடு கல்வியிலாததோர் ஊரினைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் என்றார் பாரதியார். அதற்கு மேலேயும் மெய்ம்மையுணர்ந்த பாவேந்தர் ஊரைத் தீயிட்டு ஆவதென்ன? தாம் கற்றிருந்தும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் பிறர்க்கு அக்கல்வியைத் தராத தந்நலத்தாரை அல்லவோ தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கருதியவராய், கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் ஆங்குண்டாம் என்றார். கற்க. கசடறக் கற்க. கற்ற பின் நிற்க. கேடில் விழுச்செல்வம் கல்வி. களரனையர் கல்லாதவர். விலங்கனையர் கல்லாதவர். கற்றில னாயினும் கேட்க எனைத்தானும் நல்லவை கேட்க அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவு அற்றம் காக்கும் கருவி என்றெல்லாம் கூறும் வள்ளுவம் பிறந்த மண்ணில், அந்நெறிகள் போற்றப்பட்டிருந்தால் முதியோர் கல்வி என்றும், இரவுப் பள்ளி என்றும், அறிவொளி இயக்கம் என்றும், பள்ளி சாராக் கல்வி என்றும் இன்ன பல திட்டங்கள் இந்நாளில் மேற்கொள்ள நேர்ந்திருக்குமா? இறை மாட்சி எதனால் உண்டாம்? இறை மாட்சிக்கு மூலம் எது? என்பதைச் சுட்டிக் காட்டுபவராக, இறை மாட்சியை அடுத்தே கல்வியை வைத்த வள்ளுவத்தை, இறைமாட்சியைக் கொண்டோர் எண்ணாத விளைவு இன்று வரை தொடர்தலை அறிவுடையார் இன்றேனும் எண்ணவேண்டுமே! வள்ளுவ வழி ஆட்சியை மேற்கொள்ள வேண்டுமே! பல்கலைக் கழகங்கள் வள்ளுவப் பண்ணைகளாக விளங்க வேண்டுமே! இவற்றை உருவாக்கும் ஒரு தலைவன் உருவாகும் நாளே உலகில் நான்னாளாம்! ஏனெனில் கல்வியைப் போலவே, வையகப் பொது நூல் அல்லவோ வள்ளுவம்! 5. கல்விப் பயன் ஒப்பு கல்வி ஒப்பு முன் கண்டோம். இனிக் கல்விப் பயன் ஒப்புக் காணலாம். ஒரு சொல்லைத் தானும் பயன் இல்லாமல் சொல்வதைத் தாங்காதவர் திருவள்ளுவர். அதற்கெனவே பயனில சொல்லாமை என்றோர் அதிகாரம் வகுத்தவர். பயனிலாச் சொல்லைப் பதர்ச்சொல் என்றும் அச்சொல் சொல்பவனையும், அதனை நன்று என்றும் பாராட்டுபவனையும் பதர்கள் என்றும் கடிந்தவர் திருவள்ளுவர். சொல்லைச் சொல்லும்போதும் சொல்லும் வகையால் சொல்லி ஆழப்பதியச் சொல்ல வேண்டும் என்றும் அப்படிப் பதியச் சொல்லாச் சொல்லைச் சொல்வதும் சொல்லா திருப்பதும் ஒப்பதே என்பாராய்ச் செலச் சொல்லல் என ஒரு முறைக்கு மும்முறை கூறியவர் திருவள்ளுவர். பதர்ச்சொல் படியாமல், செலச் சொல்ல வேண்டும் என்ற செந்தாப்புலவர் தம் நூலை அச்செம்மையில் வழுவிப் படைப்பரோ? முழுமுதனை வாழ்த்தும் முதற்பாட்டை அடுத்தே கல்விப் பயனைக் காட்டி வைத்தார். இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்த சிறப்பை மறவாது நினைத்தல் வேண்டும். கல்லாரும் கற்றறி நூலோர்பால் கேட்டறிதல் வேண்டும் என்பதற்காகக் கேள்வியை வைத்தவர் அவர். எனைத்தானும் நல்லவை கேட்க என்றவரும் அவர் .அக்கல்வி, பயன் செய்யாமல் பயன்படாமல் ஒழிதல் ஆகுமா? பருவம் கண்டு உழுது, பயிரிட்டு, காவல் புரிந்து களத்தின் பயன் கண்டு களஞ்சியத்தில் சேர்த்துக் காலமெல்லாம் பயன் பெறுதற் கல்லவோ முயல்கின்றான் உழவன்! பதரைப் பெறவோ பாடுபடுவான்! அப்படியே, ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் என்னும் பேதையரைப் பெருக்கவோ கற்க வேண்டும்? மனம் மன்னுதற் கருவி! அங்கே மாசு மன்னினால், வாழ்வே மாசில் மன்னும்! அங்கே மாசின்மை மன்னினால், மாசிலாமணியாய்த் திகழும்! மனம்போல் வாழ்வு என்பது அது தானே! இனிக் கல்வியைத்தான் எப்படிக் கற்க எத்தகையதாய்க் கற்க ஏவுகிறார் வள்ளுவர்! ஒரு முகப்பட்டுக் கற்க என்கிறாரே? பன்முகப்பட்டுச் சிதறும் கல்வி, சிந்தையில் ஊன்றும் கல்வியாகுமா? சிதறும் கல்வி, காலமெல்லாம் பாதுகாப்பாம் கல்வி ஆகுமா? அதனால்தான் எழுமையும் ஏமாப்பாம் (பின்வரும் கால மெல்லாம் பாதுகாப்பாம்) கல்வியாக ஒருமுகக் கல்வி விளங்கும் என்றார். கல்வியில் மாசு இருத்தல் ஆகாது; இருந்தால் கற்றவரிடம் மாசு இல்லாமல் ஒழியாதே! அவர் வாழ்வு மாசின் உறையுளாகத் தானே இருக்கும்? இவற்றை எண்ணியே, கற்க என்றவர் கசடறக் கற்க என்றும், நிற்க அதற்குத் தக என்றும் கூறினார். முன்னை இருந்த கசடும் அறக் கற்கும் கல்வி, பின்னவரும் கசடும் வாரா திருக்கக் கற்கம் கல்வி, கசடறக் கற்கும் கல்வியாம்! கால்வைக்கும்போதே கசடு, கற்கும்போதும், கசடு பட்டம் பெறும்போதும் கசடு, பணியில் புகும்போதும் கசடு, பணியுயர் விலும் கசடு எனக் கசடுகளின் கிடங்காக இருப்பார் கல்வி, கல்வி ஆகுமா? கற்றதனால் ஆய பயன் என் கொல்? என்று வினாவுகிறாரே திருவள்ளுவர்! கற்ற தன் பயன் இதுதானா? தூய அறிவன் வழியில் ஒழுகத்தானே கற்றனர்! கற்றவர் அறிவன் வழியைப் பற்றிக் கொண்டனரா? பற்றிக் கொள்ளாதவர் கற்றவர் ஆவரா? அறிவறிந்த மக்கட்பேறு, பழிபிறங்காப் பேறாகவும் இருத்தல் அல்லவோ இலங்கறிவின் பயன்? விளங்கறிவு, இலங்கறிவு, வாலறிவு என்பனவெல்லாம் மக்கட் பேற்றின் மாண்பு அல்லவோ! கற்றும் அவற்றை அடையார் ஏட்டுக்கல்வி, கேட்டுக் கல்வியே அன்றித் தேட்டுக் கல்வி ஆகாதே! அக்கல்வி கற்பித்தலும், அடைதலும், அதனால் வாழ்தலும் ஏமாற்றும், வஞ்சமும் ஆதலன்றிக் கல்விச்சீர் ஆகாதே! வாணிகம் செய்வார் கோல் சீரை எனப்படும்! மன்னவர் கோல் செங்கோல் எனப்படும்! உழவர் கோல் உயர்கோல் எனப்படும்! கற்பிப்பார் கோலும் கற்பார் கோலும் வஞ்ச ஏமாற்றுக் கோல்களாயின் அவர் வஞ்சரும் நஞ்சரும் ஆவரன்றிக் கற்போரும் கற்பிப்போரும் ஆகாரே! அவர்க்கு உறைவாம் கல்வி நிலையங்களும் கசடர் நிலையங்களேயன்றிக் கற்றோர் நிலையங்கள் ஆகாவே! ஏய்த்துப் பிழைக்கவும் - எத்திப் பிழைக்கவும் பயிற்சி பெறுதற்கோ கல்வி நிலையங்களில் கால் வைத்தல் வேண்டும்? கற்றவர் இவர் கல்லாதவர் இவர் என்பது சொல்லால் வேறுபடத் தெரியவில்லை; செயலால் வேறுபடத் தெரியவில்லை; பண்பாட்டு ஒழுக்கத்தால் வேறுபடத் தோன்றவில்லை என்றால் கல்லார்க்கும் - கற்றார்க்கும் உள்ள வேற்றுமைதான் என்ன? காலக் கழிவும், பொருட் கழிவும் ஆனதன்றிக் கண்ட பயனும், கொண்ட பயனும்தான் என்ன? செல்வம் பெற்றும், பிறர் நலம் நாடி அதனைப் பயன்படுத்தார் பூரியர் என்றும், பெற்றதனக்கும் நலமாக்கப் பேதைத் தன்மையர் என்றும் பழிக்கும் திருவள்ளுவர். கேடில் விழுச்செல்வம் கல்வியைப் பெற்றும் கேடராகவும் கேட்டுக்குத் துணை செல்பவராகவும் இருப்பாரை ஏற்பரோ? தாம் பெற்ற கல்வியால் உலகமும் இன்புற வேண்டும் என்று கருதுதலும் கடமை புரிதலுமே கல்விப் பயன் என்னும் திருவள்ளுவர் அக்கல்வியால் துன்பும் - துடிப்பும் துயரும் - செய்வாரைக் கற்றவர் பட்டியலில் வைப்பரோ? எந்நாடும் எம்நாடே! எவ்வூரும் எம்ஊரே என்பதன் வழிப்பட்ட உலக ஒருமை உயிர் ஒருமை பேண வேண்டிய கல்வியைக் காலமெல்லாம் கற்பவர், தம் நலமே, தாமே என்னும் குறுஞ்சிறு வட்டத்துள் அட்டையாய்ச் சுருண்ட வாழ்வினராகக் கிடக்கும் நிலையை அறிவு தாழ்வு உடையவர் என்று பாராட்டுவரோ? இவற்றால், வள்ளுவக் கல்விப் பொதுமை போலவே கல்விப் பயன் பொதுமையும் வள்ளுவர் கண்ட கல்விச் சிறப்பாம்! அதனாலே, நூலை எடுத்த எடுப்பிலே, கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் எனக் கல்விப்பயனை காட்டினார். மேலும், அறிவுடைமையை அடுத்தே குற்றங் கடிதலையும் பெரியாரைத் துணைக்கோடலையும், சிற்றினஞ் சேராமை யையும் தொடர்ந்து வைத்த சிறப்பையும் எண்ணி வள்ளுவர் வழிக் கல்வி கற்றார்தம் பொதுமைப் பயன் புலப்படும். 6. செல்வ ஒப்பு செல்வ ஒப்பினைச் சிந்தித்தாரா வள்ளுவர்? குமுகாய ஒப்பந்தங் கண்டார் உரூசோ! பொதுவுடைமை கண்டவர் காரல்மார்க்கசு! அவர்களுக்கு முன்னைய பொருளியல் சிந்தனையாளர் சிலரும் இருந்துளர்! ஆனால் திருவள்ளுவர் அச்சிந்தனையில் ஊன்றியவரா? அறமுரைத்த திறவராம் திருவள்ளுவர் அவ்வற வழியிலே பொருள் தேடிப் பகுத்துண்டு பாங்குற வாழும் பான்மையைப் படைத்த அருமை பாராட்டும் தன்மையதாம்! கல்வி செல்வம். கேள்வியும் செல்வமே. எனப் பல்லான்ற செல்வங்களைக் கண்ட திருவள்ளுவர், பொருட் செல்வத்தின் சீர்மையையும், செம்மையையும், செழுமையையும் சொல்லாமல் விடவில்லை! அருளென்னும் அன்பு ஈன்ற குழந்தை பொருளென்னும் செல்வச் செவிலியால் வளர்க்கப்படும் என்றவர் அவர். பொருட்டாக எண்ணக்கூடாதவரையும் பொருட்டாக எண்ணவைக்கும் பொருளே பொருள் என்றவரும் அவர். பொருள் என்பது பொய்யாவிளக்கு என்று புகன்றவரும் அவர். அப்பொருள் அவர் இருக்கும் இடத்தையன்றி அவர் எண்ணிய இடத்திலும் நாட்டிலும் சென்று புகழ் ஒளி பரப்பும் என்றவரும் அவர், பொருள், முயற்சியால் ஈட்டப்படுவது என்றும், அவர்கள் தலைவிதியால் அடையப் பெறுவது இல்லை என்றும் வரையறுக்கும் அவர், பொருட்செல்வம் பூரியரிடத்தும் உண்டு என்றும் கூறுகிறார். பொருட்செல்வம் இல்லாமல், நல்லோரும் உழைப் போரும் நலியும் நிலை உண்டானால் அதனை மாற்ற முயலாத சட்டம் செய்யாத அரசு அழியட்டும் எனச் சாவிக்கிறார். தீர்வு இல்லையே என்று தெரிந்தும் நொந்தும் நல்லோர் கண்ணீர் வடிக்கும் நிலைமையுண்டாயின் அக்கண்ணீரே படைக்கருவியாக இருந்து அவ்வரசை அழிக்கும் என்றும் ஆணையிடுகிறார். இல்லையே என்று இரவாமையை உரமாகக் கொண்டு உழைத்து வாழும் உயர்வைப் பாராட்டுகிறார். அப்படிப்பட்ட நிலையிலும் பிறர் உதவி தேவைப்படும் வறியர்க்கும் தக்கோர்க்கும் உதவாதார் செல்வம் பாழ்ச் செல்வம் எனப் பழிக்கிறார். அத்தகையரைக் கரும்பை ஆட்டிச் சாறு எடுப்பது போல் எடுக்க வேண்டும் என்கிறார். அரசு வருவாய்க்குரிய வழிகளைக் கண்டு அதனால் பொருள் சேர்த்து, தக்க வழிகளில் செலவிடத் தூண்டுகிறார். அதற்கு மாறாக மக்களை வருத்தியும் வாட்டியும், அரசு பொருள் கொள்வது வழிப்பறிக் கொள்ளையர்க்கு ஒப்பு என்று பழிக்கிறார். விருந்தோம்பல் என்னும் வேளாண்மை வீடுதோறும் வேண்டும் என விரும்பும் வள்ளுவர், பெருஞ்செல்வர்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தேவை என்பதை வலியுறுத்து கிறார். இவ்வாறு மேடு பள்ளம், குண்டு குழி என்னும் நிலப்பாங்கு போல் பொருட்பாங்கு இருப்பதைப் பண்படுத்திப் பயனாக்கு தலை வேளாண்மைச் செயலுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். நிலத்தில் பயிரிடுவோர் முதற்கண் பண்படுத்துவர். பண்படுத்துதலில் முதன்மையானது நிலத்தை ஒப்புரவு செய்தல். மலைப்பாங்கு, மலைச்சரிவு, மேட்டு நிலம், வள நிலம் எதுவாயினும் நிலம் ஒப்புரவாக்கப்பட்டு அவ்வொப்புரவுக்கு வரம்பமைத்து வைத்தால் தான் பயிரிட உதவும். நிலம் மேடும் பள்ளமுமாக இருப்பின் மேட்டில் ஊன்றிய வித்தும் நாற்றும் அழுகிப் போய் அழியும். ஒப்புரவு நிலமாக இருந்தால்தான் பயிர்கள் ஒப்ப வளர்ந்து உரிய பயனைத் தரும். இவ்வியல்பைக், காட்டிச் செல்வம் குவியாமலும் குறையாமலும் இருக்க வழிகாட்டும் முகத்தான். ஒப்புரவறிதல் என்பதைக் கூறுகிறார். அறிதல் பெயரால் அவையறிதல், இடன் அறிதல், காலம் அறிதல், குறிப்பறிதல், செய்ந்நன்றி அறிதல், வலியறிதல் என்பவற்றைச் சொல்வதோடு ஒப்புரவறிதல் என ஒன்றையும் கூறுதல் வள்ளுவர் பொருளியல் மாண்பு புலப் படுத்துவதாம். மாரி எவர்க்கும் பொதுவானது தானே! ஒப்புரவாளன் செல்வமும் அத்தகையதே என்று அதிகார முதற்குறளில் சுட்டுகிறார். (211) உயிருடையவன் என்பவன் ஒப்புரவாளனே என்று உறுதிப்படுத்துகிறார் (214) ஒப்புரவாளன் ஊருணி நீர்போலவும், நடுவூர்ப் பழுத்த நன்மரம் போலவும், மருந்தாகப் பயன்படும் மாண்மரம் போலவும், எவரெவர்க்கும் பொதுப் பயன் செய்வானாய் இருப்பான் என்கிறார். (215, 216, 217) ஒப்புரவாளன் தன் வறுமைப் போழ்திலும் ஒப்புரவுக் கடனாற்றத் தவறான் என்றும், தன்னை விற்றுக்கூடப் பிறர்க்கு உதவிபுரிவான் என்றும் அவன் பரிவியலைப் பகர்கிறார். (218, 220). ஒப்புரவாளனுக்கு வறுமை என்பது இல்லை. அவனுக்கு வறுமையானது பிறர்க்கு உதவ முடியவில்லையே என்னும் ஏக்கம் ஒன்றே என்றும் உரைக்கிறார் (219). இவ்வாறு நடுவுநிலை நெஞ்சத்தாலும், பெருந்தகைத் தன்மையாலும் அறிவின் விரிவாலும் எவரும் இனிது வாழ வாழும் வாழ்வே ஒப்புரவு என்கிறார். ஒப்புரவிலே எடுத்துக்காட்டும் மழை, ஊருணி, பழமரம், மருந்து மரம் என்பவை தனி ஒருவர்க்கோ, ஒரு கூட்டத் தார்க்கோ உரியதாகுமோ? அனைவர்க்கும் பொதுப்பயன் செய்பவை அவையல்லவோ! இவற்றாலேயே பொருள் என்பது பொதுநலம் செய்ய வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறார். வன்முறை யில்லாமலே தாம் தாமே விரும்பிப் பலர்க்கும் உதவி வாழும் வாழ்வே வாழ்வு என்கிறார். இவ்வாழ்வின் தொடக்கத்தில் இல்வாழ்வான் தன் தாய், தந்தை, மனைவி என்பவரைப் பேணிக் காத்தலையும், துறந்தார் ஊணற்றிருப்போர் ஊணேற்று வருவார் என்பவரையும், தேர்ந்த அறிவர், பற்றற்றோர், விருந்தினர், சுற்றத்தார் என்பாரையும் தன்னையும் காத்துக் கொள்ளல் வேண்டும் என்கிறார். இவற்றைப் போற்றினால் எவரே பசித்துக் கிடப்பார்; இரந்து திரிவார்? இனி உழு தொழிலில் ஈடுபட்டாரும் அவர்க்கு உதவியாம் கைத்தொழில்களில் ஈடுபட்டாரும் இரந்து வேண்டித் திரிவார் அல்லர்! அவர்கள் தம்மை நாடி வந்தார்க்கு ஈயும் வண்மையர்! ஆம்! இரவார் இரப்பார்க்கொன்றீவர், கரவாது கைசெய்தூண் மாலை யவர் என்று பாராட்டப்பட்டவர்! உழுதுண்டும், உழைத்துண்டும் வாழ்வார்! அவர்க்கு முறை செய்து காப்பாற்ற வாய்த்ததே இறைமைப்பண்பு! இயற்கை செயற்கை விளைவுகளால் உழைப்பார் துயர் உறுவராயின் அத்துயரைத் தான் தாங்கி முறை காப்பதும் இறைமை (ஆட்சி)யர் கடனே! இவ்வகையால் குடிவாழ்வார் தம் கடமையையும் ஆட்சி புரிவார் தம் கடடையையும் உணர்ந்து பாடுபடின் ஒப்புரவு சிறந்து ஓங்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். உழைக்கும் மக்களும் அரசும் தத்தம் கடனுணர்ந்து உலகக் காவற்கடன் மேற்கொண்டாலே ஒப்புரவு வெல்லும் என்பதை உறுதியாணை யாக்குவது உலகக் குறளின் உயர்முடிவாகும். இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (547) என்பது செங்கோன்மைக் குறள். 7. ஈகை ஒப்பு இன்பம் என்ற அளவில் பலர்க்கும் பலப்பல தோற்றும். பொதுவகையில், மனநிறைவும் மகிழ்வும் தருவன வெல்லாம் இன்பம் என்றே குறிக்கப்படும். இன்பம் என்பது தானே நுகரும் இன்பம் என்றும் தானும் பிறரும் துய்க்கும் இன்பம் என்றும், தருவாரும் பெறுவாரும் ஒப்ப உவகையுறும் இன்பம் என்றும் இன்பப் பெயரால் துன்பம் ஆக்கும் இன்பம் என்றும் பலப்பல பாகுபாடுகளைச் செய்யலாம். இவ்வின்பங்களில் அகத்தளவில் அமையும் இன்பம், புறத்தே புகலும் இன்பம் என்ற வகைமையும் உண்டு. திருவள்ளுவரோ இவ்வின்பத்தைத் தனி ஆய்வாகக் கொள்ளும் அளவில் நூல் செய்துள்ளார். இன்ப வரவு எப்படி இருக்க வேண்டும் என்பதை, அறத்தான் வருவதே இன்பம் என்பார். அதன் தருதலும் பெறுதலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஈத்து உவக்கும் இன்பம் என்பார். ஓர் இன்பத்தின் வரவு அறவழியில் வருவதாக இருக்க வேண்டும் என்பதும், தருவார்க்கும் - பெறுவார்க்கும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதும் அவர்தம் உட்கிடையாம். ஈத்து உவக்கும் இன்பம் என்பது விளக்கம் பெற வேண்டிய தொடர். எவர்க்கு ஈத்து உவக்க வேண்டும் என்று காண்பது அவ்விளக்கமாம். தொகுத்துக் கூறும் அவரே விளக்கிக் கூறலும் புரிவார் என்பது குறளை முழுதுற ஓதினார் அறிவதேயாம். அவ்வகையில் வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) என்றும், அற்றார்க்கு ஒன்று ஆற்றல் (1007) என்றும், அற்றார் அழிபசி தீர்த்தல் (226) என்றும், தக்கார்க்கு ஒன்று ஈதல் (1006) என்றும் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் (212) என்றும் கூறுவார். (42) அற்றாரையும் வறியரையும் துவ்வாதார் என்றும் கூறுவார். இவ்வகையில் அற்றார்க்கு என்றும், தக்கார்க்கு என்றும் ஈகைக்கு உரியாரை இனம் காட்டிய ஏந்தல் வள்ளுவராகிறார். அற்றார், தக்கார் என்பவற்றில் இல்லாமையும் தகுதியும் உள்ளனவே ஒழிய இன்ன சமயத்தார், இன்ன சாதியார், இன்ன பிரிவார், இன்ன கொள்கையார் என்னும் வேறுபாடு இல்லாமை அறிந்து கொள்ளத்தகும். ஊருணி நீரும், பழமரமும், மருந்து மரமும் வேண்டுவார்க்கு வழங்கும் ஒப்புரவுப் பொருளாதல் போல் பேரறிவாளர், பெருந்தகையர் செல்வமும் பொதுமை நிலையில் உலகுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்துகிறார். பெற்றோரைப் பேணல், சுற்றம் பேணல் கட்டாயத் தேவை. துறவர், விருந்தர், அறிவர் ஆகியோரைப் போற்றலும் தேவை. இவரும் பொதுப் பார்வையில் போற்றத் தக்கவரே யன்றிப் பிரிவுப் பார்வையில் பார்த்துப் பேணத் தக்கவர் அல்லர் என்பது வள்ளுவம், உறுப்புக் குறையர் உதவி பெறுதற்கு உரியர்; அவர்க்கு உதவுதல் பேறு என்றொரு கருத்து நாட்டில் உலாவியது அது. காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக (13 - 111 - 113) என்று மணிமேகலையார் அமுதுண்ண வருவாரை அழைத்த அழைப்பால் புலப்படும். ஆற்றுநர் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை (11 92 94) என்று அதே மணிமேகலை கூறியதும், அறவிலை வாணிகன் ஆஅய் அலன் என்ற புறநானூறு கூறியதும் நினைவிற் கொள்ளத்தக்கன. உறுப்புக் குறையரும் பிறர்க்கு ஒப்பவும், உயரவும் கல்வி, செல்வம் வினைத்திறம் ஆகியவற்றில் விளங்குதலைக் கண்ட வள்ளுவ உள்ளம் அவர்க்கு உதவுதலைக் குறிக்கோளாக்கிற்று இல்லை. அவருள்அற்றாரும் தக்காரும் உளரேல் அவர் விலக்கற்கு உரியர் அல்லர் என்பதும் பொதுப்பார்வையே. உறுப்புக்குறையரை, முன்னைப் பிறப்புகளில் பாவம் செய்தோர் என்று பழித்தலும் ஒதுக்கியும் வைக்கும் போக்கு தமிழர் நெஞ்சில் நஞ்சாகப் புகுத்தப்பட்டதும் உண்டு. நொண்டி, ஒருகண் பொட்டையன், வேலைக்காரனான தாழ்குலத்தோன், விரல் குறைந்தும் மிகுந்தும் உள்ளவர் - இவர்கள் சிரார்த்த நாளில் வீட்டை விட்டு வெளியேற்றத் தக்கவர், என்கிறது மநு தருமம் (32-4). அந்நிலையில், பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்று வள்ளுவம் முழங்கியது. சங்க நாளிலே, கொடைமடம் என்பதோர் பெருமை பேசப்பட்டது. ஆராயாது கொடுத்தாலே கொடை மடமாம். உடுத்தாது போர்த்தாது ஆயினும் மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். ஆடி அசைந்த முல்லைக்கு ஆடும் மணித் தேரை நல்கினான் பாரி. இவையன்னவை கொடைமடம். இக்கொடை மடத்தையும் வள்ளுவம் போற்றவில்லை! உள்ள அளவை அறிந்து, தேவை அளவை அறிந்து ஈக என்பதே அவருரை! உள்ளவற்றை யெல்லாம் இழந்தும் உதவும் பான்மையர் உளர் அத்தகையர் அரியர். அவரை எண்ணிப் பிறரும் நடையிடுதல் ஆகாது என்பாராய். உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் என்கிறார். இதன் பொருள், உள்ள பொருள் அளவை ஆராயாமல் கொடுக்கும் கொடையால் பொருள் மலைபோல் இருப்பினும் அது விரைவில் இல்லாமல் ஒழியும் என்பதாம். அற்றார்க்கு ஈதல் அவர் வாழ்வுக்கு! தக்கார்க்கு ஈதல் உலகநலத்திற்கு! விடுதலை வேட்கையர் சுப்பிரமணிய சிவா திரு.வி.க.வினிடம் 10 உரூபா கேட்டார். அதனை வழங்கிய திரு.வி.க. நெகிழ்வுற்றார். சிவா போனபின், இந்த பத்து உரூபாவில் 9 3/4 உரூபா நாட்டுத் தொண்டுக்குச் செலவிடுவார். நாலணா இவர் வயிற்றுக்கு. இவரையும் இத்தொகைக்குக் கையேந்த வைத்திருக்கிறதே இந்நாடு! இந்நாட்டுக்கு உய்வு உண்டோ? என்று வெதும்பினார். இது தக்கார்க்கு ஈதல்! இதோ பாருங்கள் இன்னொரு கொடையை! தஞ்சை அரசர் பாபநாசத்திற்குச் சென்றார். அன்று ஏகாதசி என்பதை மறந்து உணவு கொண்டதுடன், இலைபாக்கும் மென்றார். அதன்பின் ஏகாதசி நினைவு வந்தது. அதற்குக் கழுவாய் என்ன என்று கேட்டார். ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும் என்றார்கள். இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம் என்றார் அரசர். 48 வீடுகள் கட்டினார்; இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வெட்டினார். 48 பிராமணர்களை அழைத்து ஒவ்வொரு வீடு வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 12மா நன்செயும், அதற்கு ஏற்ற புன்செயுமாகக் கொடை புரிந்தார். அது உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் உத்தமதானபுரம் என்னும் பெயரால் வழங்கப்பட்டது. இது தென்மொழிக் கலைஞர் உ.வே.சாமிநாதர் தாம் எழுதிய தம் வரலாற்றின் தம்மூர்ப் பெயர் பற்றிய செய்தி! தானத்தில் உத்தம தானம், மகாதானம் என்பனவெல்லாம் எப்படி இடம் பெற்றன! இப்படி எத்தனை ஊர்கள்? நான்கு வேதங்களைக் கற்றோர்க்கென வழங்கப்பட்டவை சதுர்வேதி மங்கலங்கள்! இப்பெயரால் எத்தனை ஊர்கள். அகரம் என்பது என்ன? அக்கிராகரம் என்பது என்ன? எல்லாம் கொடைகள்? அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயினென்? என்று திருமூலர் விலக்கியும் விளக்கியும் பயன்படவில்லை! அவரெல்லாம் தக்கார் எனினும், ஒரு சாதியக் கொடை தானே! முப்பாற் கொடை என எங்கேனும் மூவேந்தர் காலந் தொட்டுக் கேட்டதுண்டா? தேவாரக் கொடை திருவாசகக் கொடை திருவாய் பொழிக் கொடை என்பன போல நிகழ்ந்தனவா? ஈகையினும் சாதிமைக் கொடுமையா? மொழிவகை ஈகையிலும் கண்மூடிக் கொடுமையா? பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணி இருக்கிறேன். அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும் என்று ஒருவர் அரசரை வேண்டினார். அரசர் உதவினார். உதவி பெற்றவர் இரண்டே இரண்டு பேர்க்கே உணவளித்தார். அடுத்த வீட்டுக்காரர் இருவர்க்குத்தானே சோறு போட்டீர் என்று கேட்க அவர் இருவரா பதினோராயிரம் பேர்க்குச் சோறு போட்டேன் என்றார். ஒருவர் எண்ணாயிரத்தார் (அஷ்ட சகரர்) ஒருவர் மூவாயிரத்தார் (தீக்ஷிதர்); ஆகப் பதினோராயிரர் ஆதலால், அரசரிடம் சொல்லியதற்கு மேலே ஆயிரவர்க்கு உணவு வழங்கினேன் என்றாராம். இதனைக் கூறும் சாமிநாதர் இது உண்மையோ பொய்யோ என்கிறார்! பொய்யே ஆக! மெய்யே ஆக! எப்படியெல்லாம் கொடை மடவர் இந்நாட்டில் இருந்தனர் என்றும், பேணத் தக்காரை ஏறிட்டுப் பாராமல் ஒதுக்கினார் என்றும் கூறும் சான்றுகள் அல்லவோ இத்தகையவை! இதே மண்ணில்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புரவு ஈகையை வலியுறுத்தி ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று முழங்கிய முப்பால் வள்ளலும் திகழ்ந்தார் என்று நினைத்து அவர் வழிப்பட வேண்டியதாகின்றது. 8. அச்ச ஒப்பு அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா! என்பது தமிழர் செவிக் கெல்லாம் நிறைந்த பாட்டு. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! உச்சி மீதில் வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்பது பாரதியார் பாட்டு. அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மாக்களைப் பெறுதலின் அக்குடி எச்ச மற்றேமாந் திருக்கை நன்றே என்பது வெற்றிவேற்கை வீரராமன் பாட்டு. இன்னவை எல்லாம் அஞ்சாமையை எடுத்துரைக்கும் பாடல்கள். அச்சம் என்பது மகளிர்க்கு வேண்டிய நற்குணங்களுள் ஒன்று அல்லது இயல்பான குணங்களுள் ஒன்று என்னும் கருத்து பண்டு தொட்டே தமிழ் மண்ணில் ஊன்றியுள்ளது. ஏண்பால் ஓவா நாண்மடம் அச்சம் இவையேதாம் பூண்பா லாகக் கொள்வார் நல்லார் புகழ்பேணி என்பது கம்பர் வாக்கு. நாற்குணமும் நாற்படையா என்பது புகழேந்தியார் புகல்வு. அச்சமும் நாணும் மடனும் முந் துறுத்த நித்தமும் பெண்பாற் குரிய வென்ப என்றார் தொல்காப்பியனார் (களவு.8) ஆடவர் இயல்பெனப் பெருமையும் உரனும் ஆடூஉ மேன என்றார் அதே இடத்தில் தொல்காப்பியர் கூறினார் (களவு. 7) இவற்றை நோக்க அச்சம் ஆடவர்க்கு ஆகாது என்பதும், அச்சம் பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பது என்பதும் ஆகிய இருகருத்துகள் தமிழ் மண்ணில் பரவலாகக் கொள்ளப் பட்டிருந்தன என்பது புலப்படும். அஞ்சாமை என்பது ஆடவர்க்கே உரிமையுற்றது என்பது போலவும் கருத்து இருந்தமையும் புலப்படுகின்றது. ஆனால், திருவள்ளுவர் அச்சத்தை ஆண்பால் பெண்பால் என்னும் பால்வகைப் பொருளாகக் கொண்டார் அல்லர் என்பதும், இருபாலினரும் அஞ்சவேண்டும் நிலையும் வேண்டும்; அஞ்சா நிலையும் வேண்டும்; அவ்விரு நிலைகளும், இருபாற்கும் பொதுவாகவும் விளங்கவேண்டும் என்று தேர்ந்து தெளிந்து தீர்மானிக்கிறார். அவை அஞ்சாமை என்பதோர் அதிகாரம் (73) இரவு அச்சம் என்பதோர் அதிகாரம் (107) தீவினை அச்சம் என்பதோர் அதிகாரம் (21) இவ், அதிகாரங்கள் அஞ்சாமையும் அஞ்சுதலும் பற்றியவை. படைச்செருக்கும் படைமாட்சியும் (78, 77) அஞ்சா நிலையவை. வெருவந்த செய்யாமை (57) என்பது அஞ்சச் செய்யாமை தழுவியது. இவை மாந்த இனத்துப் பொதுமை சுட்டுவனவே அன்றிப் பிரித்துப் பேசுவன அல்லவாம். அஞ்சாமை அல்லால் துணை வேண்டா என்று அதுவே துணை என அறுதியிட்டவர் திருவள்ளுவர் (497). நிலன் ஆள்பவர்க்கு அஞ்சாமை வேண்டும் என்பதை அஞ்சாமை ஈகை துணிவு ஊக்கம் என எண்ணுவார் (382). அச்சத்திற்கு விளக்கம் தருவார் போல் உயிரச்சம் என்றும் கூறுவார் (501). அச்சம் உடையவர்க்கு அரணாவது எதுவும் இல்லை என அறுதியிடுவார் (534). அச்சம் என்பது இழிநிலையர் இயல்வு; அவரை அச்சுறுத்தியே ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உரைப்பார் (1075). உடற்பசியைத் தீர்ப்பதற்காக அஞ்சிக் கிடக்கும் இயல்பு ஆண்மையற்றது. பெருமையற்றது என விரித்துரைப்பார் (அதி. 91) அவையஞ்சல், படையஞ்சுதலினும் இழிவு என்று உரைப்பார். அவைக்கண் அஞ்சாமை வேண்டும் என்று விரிந்துரைப்பார் (அதி. 73). அறத்திற்கு மாறான செயற்பாட்டில் அஞ்சுதல் வேண்டும் எனத் தொகுத்துரைப்பார் (366). படைப்பகையினும் நட்புப் பகையே அஞ்ச வேண்டுவது என்று விழிப்புறுத்துவார் (882). வஞ்சர்க்கு அஞ்சுக என்றும் கூறுவார் (824). இழிவென்னும் ஏதத்திற்கு அஞ்சுக என்றும் கூறுவார் (464). அஞ்ச வேண்டுவது அஞ்ச வேண்டாதது என்பவற்றை இணைத்துக் கூறவும் தவற வில்லை. தீயவை செய்வதற்கு நல்லோர் அஞ்சுவர் என்றும் அல்லோர் அஞ்சார் என்றும் (201) கூறுவார்; அது: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு என்பது. இனி ஒட்டுமொத்தமாக, அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்பார் (428). வள்ளுவர் வழங்கிய இக்கருத்து, பிறர், அஞ்சுவதஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் எனப் புறப்பாடலில் போற்றி உரைக்கப்படும். அஞ்சுவதற்கு அஞ்சலும், உயிரும் கொடுக்கும் அஞ்சாமையும் ஒருங்கிணைந்தது இது (புறநா. 182). இதனை, அறிவ தறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி என்று போற்றும் நாலடி (74). திருவள்ளுவர் கருத்துப் புரட்சிகளுள் ஒன்றாகிய இது, பால் பொதுமைப் பொருளாக விளங்குதலையும், இரு பாலினரும் அஞ்ச வேண்டுவனவும் உண்டு, அஞ்ச வேண்டாதனவும் உண்டு என்றும் தெளிவித்ததை அறிக. 9. நாண ஒப்பு மகளிரின் நான்கு குணங்களுள் ஒன்று நாணம் எனத் தொல்காப்பியனார் தொடங்கிப் புலமையார் பலரும் தொடர்ந்து கூறியுள்ளனர். அச்சமும் நாணமும்... பெண்பாற் குரிய என்று அவர் கூறியுள்ளதை அச்ச ஒப்பில் அறிந்தோம். ஏண்பால் ஓவா நாண் மடம் அச்சம் என்று கம்பர் எண்ணியதையும் சுட்டினோம். அச்சம் போலவே நாணமும் இருபாலுக்கும் பொதுமை யானதே என்பதை வள்ளுவம் வலியுறுத்துகிறது. நாணப் பண்பு என்பது இருபாற் பொது என்பதைக் கூறும் வள்ளுவம் இந்நாணம் அன்றி மகளிர்க்கே உரிய நாணம் என்பதொன்றும் உண்டு என்பதையும் சுட்டுகிறது. அது திருநுதல் நல்லவர் நாணு என்று சொல்லப்படுகிறது (1011) இனிப் பொது நாணும் அக்குறளிலேயே சுட்டவும் படுகிறது. அது கருமத்தால் நாணுதல் நாணு என்பது. யாம், நாணம் என்று இவ்வதிகாரத்தில் - நாணுடைமை சுட்டுவது கருமத்தால் நாணும் நாணுதலேயாம் என்கிறார். கருமத்தால் நாணுதல் என்பது என்ன? கடமையைப் பிழையாகவும் தவறாகவும், இழிவும் பழியும் உண்டாமாறும் செய்தலும், அதனைச் சுட்டிக் காட்டும்போதும் தவற்றை உணர்ந்து தலை தாழாது தலைநிமிர்ந்தும், வாய்தடித்தும், நெஞ்சம் விம்மியும் நிற்கும் ஆணவ நிலையும் கருமத்தால் நாணாமையாம். தவற்றைச் சுட்டிக்காட்டிய உடன் உணர்ந்து தலை தாழ்ந்து நிற்றல் கருமத்தால் நாணுதலாம். நீ சோழன் மகன் அல்ல, என்று ஒரு புலவன் சோழன் மகனைச் சுட்டியவுடன் அவன் தாழ்ந்தான். சுட்டிய புலவன் தாமப்பல் கண்ணன் என்பவன். அவன் தான் தவறு செய்திருந்தும், சோழன் மகன் தவறு செய்யானாக இருக்கவும், சுட்டிய அளவில் பெற்றோர்க்குப் பழியாயிற்றே என்று குற்றம் செய்தான் போல நாணினான் எனக் குறிப்பிடு கின்றான் புலவன். காரியின் மக்களை யானையின் காலின் கீழ்ப்பட்டு மிதிப்புற ஏவும் போது இவர்கள் கொடையாளன் காரியின் மக்கள்; வரும்யானை கொல்லும் என்பதுணராது மணியொலியும் தோற்றமும் கண்டு வியப்புறும் சிறுவர்; கொல்லத்துணிந்த நீயோ செம்பியனாம் (சிபி) சோழன் வழிவந்தவன். நான் கூறுவதைக் கூறினேன்; நீ விரும்பிய வண்ணம் செய் என்ற புலவர் உரை கேட்டதும் சிறுவர்கள் உயிருய்ந்து போக விடுத்தான் சோழன் கிள்ளிவளவன் என்னும் வரலாறு, கருமத்தால் நாணிய நாணத்தின் விளைவாகும்? இன்று ஒருவர் தவற்றைச் சுட்டினால் அந்த நாணுதலைக் காண முடிகிறதா? தலைவர் ஒருவர் தவற்றைச் சுட்டினால், அவர் அத்தவற்றைச் செய்யவில்லையா என எதிர்வினா விடுவாரிடம் நாண நாகரிகத்தைக் காண முடியுமா? வேடிக்கையும் வீணமும் கொண்டார்க்கு இவ்விழுமிய நாணப் பண்பு எப்படி உண்டாம்? உயிர்களுக்கெல்லாம் ஊணும் உடற்காப்பும் பிறவும் பொதுவானவையே. ஆனால் நாணம் என்பது மாந்தர்க்கே உரிய சிறப்புத் தன்மையாம். திருடும் நாயைத் திட்டினாலும் அடித்தாலும் நாணவோ செய்யும்? அந்நிலையில் மாந்தனும் இருந்தால் அவனுக்கும் அதற்கும் என்ன வேறுபாடு? களவுடம் பட்டுக் கவிழ்ந்து நிலங்கிளைத்தலைக் காட்டும் கலித்தொகை. நாணுடைமையே சால்பு; நாணுடைமையே அணிகலம்; நாணமில்லா நடையிடல் மரப் பாய்ச்சி அசைந்தாடல், (1020) என்றெல்லாம் வள்ளுவம் பேசுகின்றது. பிறர் நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம் நாணத் தக்க துடைத்து என்றும் கூறுகிறது. பெற்றோர்க்கும் உற்றார் உறவுக்கும் தொடர்புடை யார்க்கும் நாணத்தக்கது என்று தோன்றுவதைச் செய்த ஒருவன் அதற்கு நாணவில்லை என்றால் அவன் இழிமை நோக்கி அறமே நாணமுறுமாம்! நாண அறத்தைக் கொள்ளா இழிஞனை நோக்கியும், நாணாமையை அறமென அவர் கொண்டதை நோக்கியும் அறமே நாணுகின்ற தாம்! சால்பு என்பது பண்பின் விரிவும் நிறைவுமாய், அச்சால்பு மாளிகை ஐந்து தூண்களைக் கொண்டுளதாம். அத்தூண்கள் அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம், வாய்மை என்பனவாம். உலகந் தாங்கும் உயர் மாளிகையை அல்லவோ படைத்து மொழிகிறார் பொய்யாமொழியார் (983) தீமை செய்தார்க்குத் தக்க தண்டனையாவது அவர் நாணிக்கவிழுமாறு நன்மை செய்வதே என்னும் வள்ளுவம் எத்தகைய ஏற்றமிக்கது? (314) பழிக்கு நாணுதல் இல்லாதவைத் தக்கார் எனத் தேர்ந்து கொள்ளல் ஆகாது எனத் தடுத்தாட் கொள்ளுகிறது வள்ளுவம் (506). பேதை என்பதை வெளிப்படக் காட்டும் எடுத்துக் காட்டாவது நாணம் இல்லாமை என்கிறது வாய்மொழி (833). ஒருவரை உரிமை அன்பால் தெரிந்து தேர்ந்து கொள்ள வேண்டுமானால் குற்றத்திற்காக வருந்தும் நாணமுடையாராக அவர் இருத்தல் வேண்டும் என இயம்புகிறது ஒளிநூல் (502). நடுவுநிலை தவறுதற்கு நாணமுறுவார் பெரும் பொருளை விரும்பிப் பெரும்பழி தேடிக் கொள்ளார் என்கிறது நயன்மை நூல் (172). பழிநாணும் பிறப்புப் பளிச்செனக் காட்டுவது ஒன்றுண்டு; அது சின்னஞ்சிறு பழிக்கும் பென்னம் பெருநாணங் கொள்வது எனப் புகழ்கிறது புகழ்நூல் (483). தேடிப் போயும் நாடியலைந்தும் கோடிதந்தும் கொள்ள வேண்டிய நட்பு, நாணப் பண்பில் தலைநிற்பார் நட்பே என்கிறது நம்மறை (794). கருமத்தால் நாணும் இத்தகு நாணுதல்களை அடுக்கும் வாழ்வியல் நூல் திருநுதல் நல்லார் நாணு தலையும் நவில்கின்றது. முன்னது இருபால் பொதுமை; அவ்வாறே அறத்துப்பால் பொருட்பால் ஆகிய இருபால்களிலும் இயம்பப்படுவது. இன்பத்துப்பாலில் இடம் பெறுவது திருநுதல் நல்லவர் நாணு பிணைஏர் மடநோக்கும் நாணும் உடைமையும் (1089) அவள் நோக்குங்கால் அவள் நிலன் நோக்குதலும் (1094) ஆகிய நாணத்தை முகப்பாகக்கொண்டு இன்பத்துப்பால் நடையிடுகிறது. இருவர்தம் நாணும் நீங்கியமை நாணுத் துறவுரைத்தலாம். அவன் தன் நல்லாண்மையும் நாணும் இழந்தமை நவில்வது நாணுத் துறவுரைத்தல். (அதி. 114) அடுத்தே அலருரைக்கு நாணுதல் உண்டு (1149) தன் துயர்ப் பெருக்கைத் தலைவர்க்கு உரைத்தல் நாணாதல் தொடரும் (162). காமம் விடு அல்லது நாண்விடு என்று கடியும் தலைவி நெஞ்சு (1247). நிறை என்னும் கதவின், தாழ் நாண் என்பது விளக்கமுறும்; நாண் அழிதலும் நவிலப்படும் (1251, 1257) நாணும் மறந்தமை (1297) நாட்டப்படும். இவையெல்லாம் இன்ப இயல் நாண்கள். இவற்றால் நாண் என்பதை இன்ப நாண், துன்ப நாண் என இரண்டாகப் பகுத்தலும் ஆண் பெண் ஆகிய இருபாலார்க்கும் துன்ப நாண் பொதுவாக இருத்தலும், திருநுதலார் நாண் என்பதும் அவர்க்கே அன்றி அவனுக்கும் உண்டு என்பதும் வள்ளுவப் பொதுமையாதல் உணரத்தக்கதாம்! 10. சமய ஒப்பு ஒரு நூல் சமயக் கணக்கர் மதிவழி கூறா(து) உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்! என்கிறது. அதே நூல் மாறுகொண் டறையு மதிநூல் கடல்கிளர் சமயக் கணக்கர் தம்திறம் கடந்து நிற்பது என்றும் கூறுகின்றது. இஃதெண்ணத் தக்கது. இறைமைக் கொள்கை: தலைமையும் இயக்கமும் கடவுள் வாழ்த்து என்னும் பெயர், முதல் அதிகாரப் பெயராக உள்ளமை எவ்வகையாலும், பொருந்தாது. புதல்வரைப் பெறுதல் என்பது பொருந்தாது என எவ்வாறு விலக்கப்பட்டு மக்கட்பேறு என ஆளப்பட்டதோ, அவ்வாறே இறைவணக்கம் என ஆளத்தக்கதாம். ஏன் எனில், இறையும் வணக்கமும் அங்கு உண்மையால் என்க. இறைவன் என ஆளப்பட்டதும் ஒருவகை நூன்முறை வாய்ப்பாட்டாலேயேயாம். செல்வம், வளமை, அழகு, பொலிவு என்பவற்றைத் திரு, செய்யாள் என்றும், மூடிச்சோர்ந்து கிடத்தலை முகடி, தெளவை என்னும் உடலினின்று உயிர் பிரிதலைக் கூற்று என்றும் இன்னவாறு வழங்குவது போல், தலைமை (முதன்மை)த் தன்மையை இறை, இறைவன் என்றார் திருவள்ளுவர். முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்றும், இறைகாக்கும், இறைகடியன், இறைவன் செறினும் என்றும் வருவனவற்றை நோக்க அவற்றுக்குத் தலைமை (முதன்மை)ப் பொருள் இருத்தல் வெளிப்படை. முத்தொழிற் கொள்கை: உலகைப் படைத்துக் காப்பவன் இறைவன் என்னும் கருத்து புறநானூற்றிலே இடம் பெற்றுள்ளது. ஓரில் நெய்தல் கறங்க; ஓரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்! என்பது அது. ஐதேகு அம்மஇவ் வுலகுபடைத் தோனே என்னும் நற்றிணைக் காட்சியும் அதனைச் சுட்டும். உலக நலப்பேற்றை உலகு படைத்தோனுடன் கற்பியாமல், உண்டால் அம்மஇவ் வுலகம்... தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே எனப் பார்த்த புறநானூற்றுப் பார்வையாளரும் பண்டே காணப்படுகின்றார். வள்ளுவர் பார்வையும் இவ்வழிப்பட்டுச் செல்வது என்பதைப், பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் (996) என்னும் குறள் தெளிவிக்கும். படைத்தல் காத்தல் அழித்தலாகிய முத்தொழிற் பாட்டை வள்ளுவநோக்கு இறையோடு இயைத்ததில்லை என்னும், அடிப்படையை நோக்குதல் வேண்டும். இவ்விடத்தே ஓரையம் கிளரும். அவ்வையமும் உரையாசிரியர்கள் செய்த உரை வேற்று மையால் கற்பார்க்கு ஏற்படுவதாம். அது, உலகியற்றியான் எனவரும் சொல்லாட்சி ஆகும். இயற்றுதல் - படைத்தலா? இறைவனைச் சுட்டும் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உலகுஇயற்றியான் என்னும் பெயராட்சி இல்லை என்பது அப் பொருளை விலக்கிவிட உதவுகின்றது. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்ல தரசு என்பது அரசொடும் இயற்றியானை இணைத்துக் கொள்ள உதவுகின்றது. இனிச் சொன்மரபும் பின்னதையே சார்ந்து உறுதி செய்கின்றது. இயற்றுதல் என்பது உலகு படைத்தலைக் குறிக்குமா? இயற்றுதல் படைத்தல் பொருளில் வேறு எங்கே இடம் பெற்றுள்ளது? உளதாக்கல், உண்டாக்கல், படைத்தல் என்பனவே உலகொடும் தொடரும் மரபாட்சிகள். நூல் இயற்றுதல் என்பதே, சட்டம் இயற்றுதல் வினைமரபு ஆகலின், படைத்தான் மேல் ஏற்றப்பட்ட பழியென்க ஆட்சியாளனொடு சார்த்தி அறங் கூறுதலே வள்ளுவ நோக்காம்; கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்பதிலுள்ள குடியோம்பல் இறைமாட்சி நிறைநிலையாதல் தெளிக (390). இவ்விறை, ஆள்பவன் அல்லனோ? என்னிழல் வாழ்நர் சென்னிழர் காணாது கொடியனெம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆக என்னும் வஞ்சினப்பாட்டு ஆள்வோன் ஒருவன் தன் ஆண் கடனாகச் சுட்டிய பாட்டேயன்றோ! இவற்றால் முத்திருமேனிக் கொள்கையும், - முத்தொழிற் கொள்கையும் வள்ளுவம் சாராதவை என்பதும் தெளிவாகும். இனி, வகுத்தான் வகுத்த வகை என்பதும், வேந்தனையே சார்தல் இயற்றலும் என்னும் குறள் வழியே தெளிவாவதாம். இறை நிலைகளுள் குருவன் நிலை: திருக்குறளுக்கு உரைகாணத் தொடங்கும் திரு.வி.க ஏட்டினின்றும் இயற்கையிடமும், அதன் உள்ளுறையான இறையினிடமும் செல்லுதல் வேண்டும். இஃதொருவித ஒழுங்கு முறை என்கிறார். (பக். 10) மனமுடைய மக்கள் - வாக்குடைய மக்கள் - எல்லாவற் றையும் கடந்து நிற்கும் ஒன்றை எப்படி நினைத்தல் கூடும்? எப்படி வாழ்த்தல் கூடும்? என வினாவி, இயற்கையின் இறை நீக்கமறக் கலந்துள்ள நுட்பம் இயற்கை வழி பாட்டாலேயே சிலர்க்கு இயல்பாக விளங்கும். பலர்க்கு அஃது அவ்வழிபாட்டால் விளங்குவதில்லை. இப்பலர்க்குக் குருநாதன் அருள் தேவை. கடவுள் குருநாதன் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு உயிர்கட்கு அருள் செய்தலால் கடவுள் நிலைகளுள் குருநாதன் நிலையும் ஒன்றாகும் என்கிறார். (பக். 24) மேலும், ஆதிபகவன் ஞானகுரு என்னும் பொருளில் நிற்கும் போது, அவனது குருநிலை விளங்குவதாகிறது. இது வழிபாட்டுக்கு எளியது (பக். 41), குருநாதன் வாயிலாகக் கடவுள் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்டகாலம் வாழ்வர் (பக். 60). ஐந்தவித்தான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப. இறைவனுக்கு ஐந்து (புலன்) உண்டா? புலனே இல்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது? ஐந்தவித்தானை எல்லாங்கடந்த இறைவன் என்று சொல்லுதல் பொருந்தாது. ஐந்தில் இருந்து ஐந்தவித்தவன் குருநாதன், குருநாதன் உடலைக் கோயில் கொண்டு கடனாற்றுவதும் கடவுள் நிலைகளுள் ஒன்றாதலான் ஆசிரியர் ஐந்தவித்தானைக் (குருநாதனை) கடவுள் வாழ்த்தில் வைத்து ஓதினார் என்க. குருநாதன் மனிதனா? ஆண்டவன் குருநாதன் மனிதக் கோலம் உடையவன். அவன் முகத்தில் வீற்றிருப்பவன் ஆண்டவன். குருநாதன் தனக்கென ஒன்றில்லாதவன். கடவுளே விளங்கும் உள்ளமுடையவன். கடவுள் இயக்க இயங்குவோன். மனமிலாக் கடவுள் குருநாதன் வழி நினைப்பவனாகிறான்; மொழியில்லாக் கடவுள், குருநாதன் வழிப் பேசுவோனாகிறான்; மெய்யிலாக் கடவுள், குருநாதன் வழிச் செயல் புரிவோனாகிறான். (பக். 64) தமிழ் உலகில் நுழைந்த கதை நூல்கள் பலவும் - போலித் துறவுகள் பலவும் - நாட்டின் அகக் கண்ணைத் தூர்ந்து விட்டன. அதனால் புறக்கண்ணொளியும் மழுங்லாயிற்று. (பக். 133) என்று கூறுவனவற்றை இவண் நோக்குதல் ஆய்வுத் துணையாம். தாள்சேர்தல் - பொருள் இறைவணக்கப் பாடல்கள் பத்தனுள் தாள் சேர்தல், தாள் தொழல், தாளை வணங்கல், அடிசேர்தல் எனத் தாளும் அடியுமாய் ஏழு இடங்களில் ஆள்கிறார். ஆதலால் உருவ வணக்கத்தை உளங்கொண்டு சொல்கிறாரோ என எண்ண வேண்டுவதில்லை. தாள் சேர்தல் முதலியவை தாளை அடைதல், பற்றிக் கிடத்தல், மன்றாடுதல் என்னும் பொருள் படுவன அல்ல என்பாராய்த் திருவள்ளுவரே, பொருள் சேர் புகழ் புரிதல் என்றும், பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல் என்றும் கூறுகிறார். ஒழுகிக் காட்டினார் அல்லது ஒழுகிக் காட்டுவார் ஒருவரைக் கண்டன்றே அவர்தம் ஒழுக்க நெறியைப் பற்றி நிற்றல் கூடும், பொருள் சேர் புகழ் புரிந்து நடாத்தலும் கூடும்! ஆதலால் வழிகாட்டியாய் நிற்கும் குருவன் ஒருவனே இறைவன் என வள்ளுவர் கொள்கிறார் என்பது விளங்கும். இதற்கும் அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடக்கமே சீரிய சான்றாம். முதலதிகாரப் பொருண்மை : அகரமும் எழுத்தே; ஆகாரமும் பிறவும் எழுத்தே; அகர எழுத்திற்கும் மற்றை எழுத்துகளுக்கும் உள்ள வேற்றுமை என்னை எனின், அகரம் தலைமை அல்லது முதன்மை உடையது. மற்றை எழுத்துகளின் இயக்கத்தில் கலந்து நிற்பது என்பனவே. இதுபோல் இங்குக் காட்டப்படும் ஆதி பகவன் உலகுக்கு முதலும் இயக்கமும் ஆபவன் என்பதே. முதல் என்பதற்கு முதன்மை, முதலாகிய பொருள், முதலாம் எண், மூலம், கிழங்கு, வித்து, வேர், அடிப்படை இன்னபொருள் விரிந்துள்ள அமைதி இறையின் விரிநிலை விளக்கம். அடுத்த குறளில் கல்வியறிவால் உண்டாகும் பயன் வாலறிவன் இவனென ஒருவனைக் கண்டு அவன் வழியில் சார்ந்து நிற்றல் என்று குறிப்பிடுகிறார். அவன் நூலறிவன் அல்லன், நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் என்பது போன்ற நுண்ணறிவும் உண்மையறிவும் மட்டும் உடையானும் அல்லன். மனத்துக்கண் மாசு நீங்கிய குருமணியன்! அவனே வாலறிவன். நிலையாமை அறிந்து, நிலைப்புத் துறவறிந்து, பொய்யுணர்வு அகன்ற மெய்யுணர்வாளன்; தவா அப் பிறப்பீனும் அவாவறுத்து, ஊழையும் உப்பக்கம் காணவல்ல உரவோன்! அவனைச் சார்ந்து நின்று அவன் வழியைப் பற்றிக் கொள்ளாக்கால் கற்றவன் கற்றவன் ஆகான். வாலறிவன் வன்பு, துன்பு, சூழ்ச்சி, தாழ்ச்சிக் களங்களில் அமைவான் அல்லன். அவன் மாசற்ற மலரிடத்தான்; ஆம்! அவன் மாசற்றமணமலர் இடத்தான்; அம்மலர்மேல் இருந்து இயக்கவல்லான். அம்மெல்லியல் நல்லோன் இருந்து இயக்கப் படுவோன் நெடிது வாழ்வான். உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியனைப் பேணிக் கொண்டபின்னை மலைவு ஏது? மயக்கம் ஏது? விருப்பு என்பது தன்னல நாட்டம்; வெறுப்பு என்பது தன்னல நாட்டம் நிறைவேறாக் கால் உண்டாகும் வெறுப்பு; இரண்டுமே ஒருவழிப்பட்ட இரட்டை முரண்கள். தன்னல நாட்டமில்லானுக்கு விருப்பு உண்டோ? வெறுப்பு உண்டோ? இல்லை! விருப்பு வெறுப்பு இலாத நெஞ்சம் தூயநெஞ்சம், அந்நெஞ்சில் தீயது இருக்க இடமில்லை! ஒளி புகுந்த அளவில் இருள் அகல்வது போல இருள் சேர் இருவினையும் பொருள் சேர் புகழ்புரிவாரிடத்துத் தாமே அகன்று விடுகின்றன. மயங்குதல் கழன்றுவிட்ட இடத்தில், மயக்குதலுக்கு இடம் இல்லையே! மனமாசின்மை பொறிவாய்கள் ஐந்தையும் கட்டுக்குள் வைக்கிறது. பொறிகள் ஐந்தும் ஒழுங்குற்றுப் பக்குவப்பட்டுப் பழகிப் பழகிக் தழும்பேறி விடுகின்றன. அதனால், பொய்யுணர் வற்று, மெய்யுணர்வுற்றுச் சிறக்கின்றன. செய்யும் செயல்கள் அனைத்தும் செம்பொருட் செயல்களாகி விடுகின்றன. வாழும் போது வழிகாட்டியாகச் சிறந்த வாழ்வு, மறைவின் பின்னரும் நினைவார்க்கு வழிகாட்டியாய் இறவாப்புகழில் நிலைக்கின்றது! விருப்பு வெறுப்பு இல்லை. மயக்கும் இருண்மை இல்லை. பொறிகளின் குறும்புகள் இல்லை; ஒப்பில்லா ஒருநிலை ஒன்றிய நெஞ்சில் மனக் கவலைக்கு இடமேது? அத்தன்மை அடையார்க்கு மனக்கவலையை மாற்றிக் கொள்ள வகைதான் ஏது? மனத்துக்கண் மாசின்மையாம் அறத்தில் நிலைபெற்று அருளாளியாகத் திகழ்பவன் அறவாழி அந்தணன். அவன் நேர்ந்தும் நிறைந்தும் சேர்ந்தும் செறிந்தும் உறையும் இடமாகத் தன்னைத் தந்து விட்டவனுக்குப் பாவக்கடலில் வீழும் நிலை உண்டா? அஃதுண்டானால் அன்றோ அதனை நீந்திக் கடக்க வேண்டும் இடர் உண்டு! பாவக் கடலின் பாங்கரும் செல்லா அறவாழி அந்தண வாழ்வனுக்கு அக்கடலை நீந்திக் கடக்கும் இடர் எப்படி உண்டாகும்? ஓடாப்பொறியால் ஒரு பயன் உண்டா? இயற்கையாம் உடற்பொறியாயின் என்ன! செயற்கையாம் பொறியாயின் என்ன! அவற்றின் முறையான இயக்கமே பயன்பாடாம்! இயங்காமை அழிபாடாம்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (418) குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (705) உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்ல தவர் (406) உளரெனினும் இல்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் (730) ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (214) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (420) கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9) எனச் செயலற்ற பொறிகள் பொறிகளாகா வென்றும், செயலாற்ற வாழ்வு வாழ்வாகாது என்றும் வள்ளுவர் பயில வழங்குதல் நோக்கத் தக்கன. தேர்ந்த குணங்களின் பிழம்பாக அமைந்தான் ஒருவன், அக்குணம் பலர்க்கும் பயன்பட வாழாமல் செயலற நிற்பன் எனின், அக்குணங்களை அவன் கொண்டமைக்கு என்னதான் சான்று? இறைமைச் சிறப்பாய் அமைந்தவன் அவ்வழியில் இயங்காதிரான். இருப்பின் அவன் பொறியின்மையாளனினும் புன்மையாளனாவன். என்னென்னின், பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பது வள்ளுவமாகலின், இனிப் பிறவி என்பது என்ன என வினவி இடருற வேண்டா என்பார்போல் பிறப்பென்னும் பேதைமை என்றார். பேதைமை நீங்கப் பிறப்பறும்; அதுவே அறிதோறும் அறியாமை கண்டு முழுதுணரும் அறிவுப் பிறப்பாகும். அதனைக் குறித்தே சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு என்றார். 11. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்! ஒருமைப்பாடு! எத்தகைய பெருமைப் பாடான செய்தி! வானொலி முழக்காத நாள் உண்டா? தொலைக்காட்சி துலங்காத நாள் உண்டா? தலைவர்கள் பொழியாத நாள் உண்டா? இவை எல்லாம் என்ன ஆயின? ஆகின்றன? கடலில் கரைத்த காயமா? காற்றில் பறத்திய பஞ்சா? வெள்ளிப் பனி மலையின் மீது உலாவுவோம்! அடி, மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்! இனிமைதான்! சிந்து நதியின்மீசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் இனிமைக்கு இனிமைதான்! இமயத்தில் ஒருவனுக்குத் தலைவலித்தால் குமரியில் இருந்து ஒருவன் மருந்து கொண்டு வருவான்! குமரியில் ஒருவன் தடுக்கி விழுந்தால் இமயத்தில் இருந்து ஒருவன் தூக்கி நிறுத்துவான்! நல்ல நல்ல உருக்கங்கள் தாம்! இவற்றை நடைமுறையில் காண்கிறோமா? வானொலி இயக்கங்களிலேயே எத்தனை ஒருமைப் பாட்டுக் கேடுகள்? தொலைக்காட்சி இயக்கங்களிலேயே எத்தனை ஒருமைப்பாட்டுக் கேடுகள்? ஆட்சியின் உச்சி முதல் உள்ளங்கால் நிலைவரை எத்தனை ஒருமைப்பாட்டுக் கேடுகள்? கட்சிகளிலே, உட்கட்சிகளிலே எத்தனை எத்தனை ஒருமைப்பாட்டுக் கேடுகள்? போட்டால் முளைக்கும் புடலையா பூசுணையா ஒருமைப்பாடு ஊன்றினால் வளரும் வெங்காயமா கரும்பா ஒருமைப்பாடு? - இவை முளைக்கவும் வளரவும் கூட எத்தனையோ சூழல்கள் பொருந்த வேண்டுமே! வாந்தி எடுக்கும் வாய்முழக்கத்தால் ஒருமைப்பாடு வரவே வராது! ஏன், வாய்கிழியும் ஒழிய வரவே வராது ஒருமைப்பாடு! ஒருமைப்பாடு உண்மையில் எழுவது! ஒருமைப்பாடு உணர்வில் வளர்வது! ஒருமைப்பாடு உயிரில் பொலிவது! ஒருமைப்பாடு இறைமை வெளிப்பாடு! என் உடல் இயக்கத்தில் ஒருமைப்பாடு இல்லையா, அது நோய்! அதனைக் கருதிக் கருதிக் கருத்தாகத் தீர்க்க வில்லையா? முற்றிய நோய் புற்றுநோய்! அறிவாளன் ஊதுகா மாலையைக் கண்டு, அழகு அழகு எனப் பாராட்டமாட்டான்! அழிவுக்கு அறிகுறி எனக் காண்பான்! போலி முழக்கத்தால் பொலிவு உண்டாகாது! பூச்சு மருந்தால் புரையோடிப் போன உள்நோய் தீர்ந்துவிடாது! கண்கவரும் காட்சிகளால், காலமெல்லாம் ஏமாற்றி விடமுடியாது! மண்ணின் நடுக்கம் (நிலநடுக்கம்) ஒட்டு மொத்த அழிவு செய்யாது! விண்ணின் இடிக்கும் விடிவு உண்டு! ஆழிப்பேரலை அழிவுக்கும் தப்பலாம்! ஆனால், மக்கள் கிளர்ந்தால்? செம்மறியாடெனச் சாயும் மக்களும், விழிப்புற்று வீறிட்ட வரலாறு உண்டு! மக்களாம் வெள்ளம் கிளர்ந்து தலையெங்கே காலெங்கே எனத் தெரியாமல் தடமழிந்த ஆட்சிகளும் உண்டு! அந்நிலை உண்டாக அரசியல் வெறியர்களே கட்சி வெறியர்களே சமய வெறியர்களே மொழி வெறியர்களே மாநில வெறியர்களே - தூண்டி நில்லாதீர்! நீங்கள் தூண்டி விட்ட பேய் உங்களையும் விட்டு வைக்காது! என்ன ஆனது இப்போது? என்கிறீர்களா? இன்னும் என்ன ஆகவேண்டும்? கருநாடகத்தில் திருவள்ளுவர் சிலை பாடும்பாடு என்ன? அதே கருநாடகத்தில் சிவாசி சிலைக்கு நேர்வது என்ன? மராட்டிய நாட்டில் அம்பேத்கர் பல்கலைக் கழகப் பெயர் சூட்டலுக்கு நேர்ந்துள்ளது என்ன? அயோத்தியில் பாபர் பள்ளி வாயிலுக்கு நேர்ந்த நேர்ச்சி என்ன? இவை மட்டுமா? இவற்றோடு நிற்குமா? வெறியர்கள் நிற்க விடுவார்களா? வாருங்கள் தோழர்களே! ஆடிப்பாடுவோம்! எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓரினம்! எல்லாரும் ஓர் நிறை! எல்லாரும் இந்நாட்டு மன்னர்! ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! இந்த முழக்கம் போதாதா? ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் என்பது நம்மறை. நாம் ஒத்தது அறிந்து உயிர்வாழ்பவர் என மெய்ப்பிப்போமா? தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் நூல் வருமுறை தரம் என்பது பலர் விருப்பத்திற்கும் உரிய பொதுப்பொருள். புவியீர்ப்பு என்பது உலகு பொதுப் இருப்பினும், நியூட்டனாரால் எப்படி மெய்ப்பிக்கப்பட்டுப் பின்னே உணரப்பட்டதோ, அப்படியே மாந்தன் நுகர்வு என்று உண்டாயதோ அன்றே அமைந்து கிடந்தது தரம். தக்கதைத் தெரிந்து துய்க்க மாந்தன் மட்டுமல்லன்; அவனிற் குறைந்த அறிவுடைய உயிரிகளும் கண்டு கொண்டுள்ளன. அவை, விரும்பித்துய்ப்பன, கொள்ளாமல் தள்ளுவன- என்பவை, தரங்கண்ட தகுதியால் உண்டாவனவாம். பானை வனையத் தொடங்கிய மாந்தன், தக்க மண்ணைத் தெரிந்தான்; அதனையும் குழைத்தும் மிதித்தும் அடைந்தும் பதனேற்றினான். ஆயினும் சுட்டால் அன்றிக் கெட்டித் தன்மை அமையாது எனக் கண்டான். சுடுதலிலும் ஓரளவீடு வேண்டுமென உணர்ந்தான். குறைவெப்பு கரைவுக்கும், நிறை வெப்பு கிட்டமாகிப் போதற்கும் இடமாமெனப் பட்டறிவால் உணர்ந்து சமன்பாட்டு வெப்பைப் பயன்படுத்தினான். வாழ்நாள் பொருள்களோடு வாழ்வு முடிந்த பின்னரும் பயனாம் முதுமக்கள் தாழிக்கும் அச்சுடுமண் தாழிகளைப் பயன்படுத்தினான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கட்டாழிகளையும் அகழ்வாய்வு கண்டிருத்தல் அத்தொன்மாந்தன் உருவாக்கத்திலேயே தரம் இருந்தது என்பதைப் புலப்படுத்தும். சிற்றன்ன வாயில் ஓவியங்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் தம் வண்ணம் குலையாமல் காட்டுவதைக் காண்போர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவையின் தரமேம் பாட்டை உணராமல் போகார் இன்று வாங்கிய சீலையை நீரில் தோய்க்க, அது ஒன்றுக்கு முக்காலாய்ச் சுருங்கிப் போகவும், துணி கையோடு வரு வண்ணம் நீரோடு போகக் காண்பார் சிற்றன்ன வாயில் சிறப்பை எண்ணித் திளைப்பார். பொருளில் தரம் கண்டு, அதற்கு அடையாளமும் செய்து வைக்கும் அரசு நடைமுறை மிக முற்படவே இருந்தது. அதற்கு ஆணி முத்து, ஆணிப் பொன் என்பவை சான்றாம். தரமிக்கது என்பதற்கு உரையாணி யிட்டு வைக்கப் பட்டவையே அவையாம். தங்கத்திற்கு மாற்றுக் கண்டு விலைமதிக்கப்பட்டமை உரைகல் எனப்படும் கட்டளைக் கல் கொண்டு தெளியலாம். வயிரங்களின் தரம் நன்கு மதிக்கப்பட்டமை நூல்களால் அறிய வருகின்றது. அவற்றை ஆராயவல்லார் நோட்டகர் எனப்பட்டனர். காகபாதம் கிளிச்சிறை என்பன வெல்லாம் வயிரக் குற்றம், பொன்வகை என அறிய வருவதால் தரப்பாடு இருந்தமை அறியவரும். புலிபொறித்துப் புறம் போக்கிய வெளி நாட்டு வணிகச் செய்தியைப் பட்டினப்பாலை பகர்கின்றது: கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப்பல பொதி என்பதும் அறிய வருகின்றது. இவற்றால் அரசு முத்திரை இடப்பட்டதும், அளவிடப் பட்டதுமாம் செய்திகளை உணரலாம். கண்திரள் நோன்காழ் எனப் படைக்கருவிகளின் பிடி கூறப்படுவதால் அதன் தரப்பாடு புலப்படும். இஞ்சி என்பது மதில்; அது செம்புருக்கு நீர் விட்டுச் செய்யப்பட்டதை உரைக்கும் சொல்லாகும். கடுக்காய்ச்சாறு, தான்றிக்காய்ச்சாறு, பனஞ்சாறு முதலியவை கலந்து உறுதியாக்கப்பட்ட அரைவைச் சுண்ணத்தால் எழுப்பப் பட்ட மதில், பகைவரால் அழிக்க முடியாத திண்மையுடன் விளங்கியமையால் கன்னி மதில் எனவும், மதிற்குமரி எனவும் வழங்கப்பட்டமை புறத்திணைச் செய்தி. ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தேர்ச்சியாளன் ஒரவன், ஒரு திங்கள் முயன்று ஒரே ஒரு கால் (சக்கரம்) செய்தால் அஃது எப்படி உறுதியாக இருக்குமோ அப்படிப்பட்ட உறுதி எனப் புறநானூற்றில் வரும் செய்தி தரமேம்பாட்டை இனிதின் உணர்த்தும். பாலாடை அன்ன நூலாடை, இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம், நோக்கு நுழை கல்லா நுண்பூங்கலிங்கம் இன்ன பல ஆட்சிகளால் நெசவுத் தொழில் தரப்பாடு எளிதில் விளக்கமாம். தரமேம்பாடு குறித்த தமிழிலக்கியச் செய்திகளைத் தொகுப்பின் ஒரு பெருநூலாம் தகையதாம். இவண், திருக்குறள் ஒன்றனையே முன் வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டதாம். பண்டிருந்தே கண்டு வரும் தரம் ஓரியக்கமாகத் தரக்குழு எனவும், தரமேம்பாட்டுக்குழு எனவும் (Quality Circle) கண்டு வளர்க்கப்பட்டது. சப்பான் நாட்டிலேயே ஆகும். அதனைக் கண்ட அறிஞர் இசிகாவோ என்பார். ஆண்டு 1962. சப்பான் நாட்டுக்கு மட்டுமே இக் கொள்கை பொருந்தும் என்ற நிலைமை மாறி, உலகப் பொதுக்கொள்கையாம் தகுதியது இது என வளர்ந்த நிலையில், இந்திய அரசு முதன்முதலில் ஐதராபாத்தில் பாரத கனரகத் தொழிற்சாலையில் (BHEL) இந்த ஆய்வுக்குழுவைத் தொடங்கியது. இதன் தலைமை அலுவலகம் செகந்தரா பாத்தில் இயங்கி வருகின்றது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தரமேம்பாட்டுக் குழுமம் 1986இல் தொடங்கியது. அது பலப்பல குழுக்களை உருவாக்கித், தக்க அலுவலர்களைக் கொண்டு பயிற்சி தருகின்றது. உயர்மட்டக் குழுக்களை அமைத்துச் செயற்பாட்டு ஆய்வும் மேற் கொள்கின்றது. பல்வேறு நிறுவனங்களில், இக்குழு செயல்படும் வகையை ஆய்ந்தும் வருகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள, குழுக்களொடும் தொடர்பும் கொண்டு வருகின்றது. (நெய்வேலி - பழுப்பு நிலக்கரி தரமேம்பாட்டுக் குழும்பு வெளியீடுகள்). இதன் தொடக்க நிறுவனரும் இயக்குநரும் திரு. நாராயணர் ஆவர். நெய்வேலி உலகத்தமிழ்க் கழக ஏற்பாட்டில் திருவள்ளுவர் கோட்டத் தொடர் பொழிவுக்குச் செல்லும் வாய்ப்பால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பயிற்சி வளாகத்தில் திருக்குறளும் தரமேம்பாடும் என்னும் தலைப்பில்யான் பொழிவு செய்ய வாய்த்தது. அதனைத் தூண்டியவர் செயற் பொறிஞர் திரு. மு. அறவாழியார்அதனைத் துலங்கச் செய்தவர் பயிற்சி வளாகத் துணைத் தலைமைப் பொறிஞர் திரு.பி. சுப்பிரமணியனார். அப்பொழிவு 4.10.93 இல் நிகழ்ந்தது. அப்பொழிவுச் செய்திகள் அவையோர் உளங்கொள உவப்பாயின. அதனால் திருக்குறளில் தொழில் தரமும் உறவும் செய்தல் வேண்டுமென்னும் வேண்டுகை வெளிப்பட்டது. அப்பொழிவை 25.11.93 இல் (முற்பகல்9.30 - 1.00; பிற்பகல் 2.00 - 5.00) நிகழ்த்துவது எனவும் முடிவாயிற்று. காலம்கடந்த, இடங்கடந்த பொதுமைத் திருக்குறளில் புதையுண்டு கிடக்கும் பொருள்களைத் துறைதோறும் அகழ்ந் தெடுத்துத் தரவல்ல பெருமக்கள், திருக்குறளில் பொருளியல், திருக்குறளில் சட்ட இயல், திருக்குறளில் அறிவியல் என நூல்கள் கண்டு வருகின்றனர். அவ்வகையில் திருக்குறளில் தொழில் தரமும் உறவும் என்னும் புதுப்பார்வையில் காணப்பட்ட நூல் இதுவாகும். இந்நூல் உருவாக்கத் திட்டம் என்னுள் எழுந்தது எதனால்? நெய்வேலி பபப்பு நிலக்கரி நிறுவனத் தரமேம்பாட்டுக் குழுமத்தின் பொழிவு ஏற்பாட்டால்தானே! ஆதலால், இப்புத்தம் புதுத் துறையில்திருக்குறளை நோக்க வைத்த அக்குழுமத்தினர் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றியன். நூல் எழுத்துருவில் கிளர்ந்தாலும் அச்சுருக் கொண்டால் தானே பயன் பழ மரமாய்ப் பலர்க்கும் பயன்படும். அதனை ஆர்வத்தால் செய்து புத்தம் புதுத் துறைப் பார்வையில் புகழ்க் குறளை உலா வர விடுபவர்கள் கழக ஆட்சியாளர் மேதகு இரா. முத்துக்குமாரசாமி அவர்களாவர். அவர்களுக்கும் கழகத்திற்கும் என்றும் போல் இனிய நன்றியன். திருவள்ளுவர் தவச்சாலை அல்லூர் திருச்சி மாவட்டம் தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் தரம்: நமக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கப் போகிறோம். அங்காடியில்உள்ள கடைகளையெல்லாம் கருதி, ஒரு கடைக்குள் புகுகின்றோம். நாம் விரும்பிய பொருளை அங்கேயே வாங்கி விடுவதில்லை. நான்கு கடைகள் பார்க்கிறோம். அக்கடை களிலும், எடுத்துத் தந்த பொருளையும் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடுவதில்லை. தட்டிக் கொட்டி, உருட்டிப் புரட்டி, முழுப்பார்வை பார்த்துப் பின்னர்த் தனித் தனிப் பகுதிப் பார்வை பார்த்து, நம்பொருள் நிலை, கலைநிலை ஆகியவற்றை அளவு கோலாக்கித் தெளிந்து, முடிவு செய்கிறோம். நமக்கு நல்ல நிறைவு தந்தால்தான் வாங்குவோமே அன்றி, ஏதோ ஒன்று என வாங்க மாட்டோம். ஒரே ஒரு வேளை பயன்படுத்தும் பொருளானால் என்ன, காலமெல்லாம் வைத்துப் போற்றும் பொருளானால் என்ன, நாம் தரம் கருதாமல் வாங்கி விடுவதில்லை. ஆதலால், தரம் என்பது ஒவ்வோர் தேவைக்கும் தேடுதற்கும் உரிய பொதுப் பார்வையது என்பது புலப்படும். எவரின் தேடுதற்குரிய தரத்தை, எவர் ஆக்கிச் சந்தைக்குக் கொண்டு வருகிறாரோ, அவர் பொருள்கள் சந்தையில் பெருந்தேவை யுடையவையாய் விலையாகின்றன. தரக்குறைவு உடையவையோ, கட்டுக் கிடை யாய்ச் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன. ஏதோ ஒன்று இந்த நொடியே வாங்கியாக வேண்டும்; அதுவும் இந்தப் பொழுதுக்கு மட்டும் ஆவதுதானே என்னும் பொருளையல்லாமல், நிலைத்த பயன்பாடுடைய எந்தப் பொருளையும் தரம்பாராமல் எவரும் வாங்கிவிடுவது இல்லை. ஆதலால், தரம் நிரந்தரம் என வணிகர் விளம்பரமும், பொது மக்கள் அல்லது நுகர்வோர் தேவையும் ஆயிற்றாம். தர உருவாக்கம்: இனித் தரம், பொருளுக்கு எப்படி வந்தது? எப்படி வரும்? பொருளை உருவாக்குபவர் உள்ளத்தில் தரம் இருந்தால் பொருளிலும் தரம் இருக்கும். ஆதலால், உருவாக்கப்படும் பொருளின் தரம் உருவாக்குபவர் உள்ளத்திலேயே கூடுகட்டி உறைகின்றதாம். இனி, உள்ளத்தில் தர நோக்கு இருந்தால் மட்டும் போதுமா? தர நோக்கு இருத்தலோடு செய்நேர்த்தியும் உருவாக்குபவர்க்கு இருத்தல் வேண்டும். செய்நேர்த்தியோடு கலைநயமும் வேண்டும் என எண்ணத்தை விரிவுபடுத்திக் கொண்டால். பொருளின் தரம் எல்லா நிலைகளிலும் சிறக்குமாம். அவை: 1. உருவாக்கும் பொருளின் தரம் உருவாக்குபவர் உள்ளத்திலேயே உள்ளது. 2. உருவாக்குவார் செய் நேர்த்தி பொருளைத் தரப் படுத்துகிறது. 3. உருவாக்குவார் கலைநயம் கவர்ச்சியைக் காட்டிக் கமழ்கின்றது. இம் மூன்றும் அமைந்த நிலை ஒரு பொருளின் தரமாகின்றது. இம்மூன்றும் அமையாமை ஒரு பொருளின் தரக்குறையும் தரக்கேடு மாகின்றது. உள்ளம் : தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின் பாளையிலே இருந்து வழிவது ஒருவகை நீர்தான். அதனைக் கனிவு உள்ளம் பதனீ ராக்கி நலம்செய்கின்றது. அதனை மற்றோர் காசுள்ளம் கள்ளாக்கிக் குடி கெடுக்கின்றது. (காசு - குற்றம்; பணம்) நல மாக்குவதும் கடி கெடுப்பதும், தென்னை பனை ஈந்துப் பாளைகளில் இல்லை. அவற்றின் பயன் கொள்ளும் உள்ளங்களிலேயே அவை இருந்தன என்பது புலப்படும். அறிவு உள்ளம் அணுவைக் கண்டது; ஆக்கப் பயன் பாட்டைக் கருதியே அதனைக் கண்டது. ஆனால், அழிவு உள்ளம் என்ன செய்கிறது? அழிவுக்குப் பயன்படுத்துகிறது. அணுவில் ஆக்கமோ அழிவோ இல்லை. அதனைப் பயன்படுத்தும் உள்ளத்தில்தான் ஆக்கமும் அழிவும் உள்ளன. ஆதலால், ஒவ்வோர் உருவாக்கமும் உள்ளத்தின் சாயலில் உருவாகின்றது என்பது புலப்படும். செய் நேர்த்தி : ஒரு விருந்து! அந்த விருந்தின் சமையல் சிறப்பு இலையில் புலப்பட்டு விடும். செய்நேர்த்தியமைந்த விருந்தில், இலையில் ஒதுக்கும் பொருள் இல்லையாய் ஒழியும். செய்நேர்த்தி இல்லாச் சமையலில், இலையில் வைத்தது வைத்தபடி கிடந்து குப்பையாய்க் குவியும். வாங்கப்பட்ட பொருளில் குறைவு இல்லை; ஆகிய செலவில் குறைவு இல்லை. செய்நேர்த்தி இல்லாமையால் அவை பாழய்ப் போயின. செய் நேர்த்தியால் எவ்வளவு எளிய பொருளும் தரத்தில் உயர்ந்து விளங்குதலும், செய்நேர்த்தி இல்லாமையால் எவ்வளவு உயர்ந்த பொருளும் தாழ்ந்து போதலும் நாம் காண்பனவே. கலைநயம் : கால் மிதியாகக் கிடந்து தடுக்கிவிடும் கல், ஒரு கலை வல்லான் கண்பட்ட கை பட்ட- அளவில், எப்பேறு பெற்று விடுகின்றது! மிதிக்கப்பட்ட கல்லே அவன் கலைத் திறத்தால் மதிக்கப்பட்ட சிலையாகிச் சிறப்புறுவது நாம் காணாததா! அறிவும் பண்பும் : உள்ளம், செய்நேர்த்தி, கலைநயம் என்னும் மூன்றும் உருவாக்கப் பொருளின் தரத்தைத் தீர்மானிப்பவை என்பதை ஆய்ந்தோம். இம்மூன்றற்கும் அடிப்படையாய் - ஆணிவேராய் - இருக்கும் மாந்தர் நிலைமை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை மக்கட் பேறு கூறும்போதே கூறுகிறார் திருவள்ளுவர். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (61) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (62) என்பன அவை. ஆதலால், 1. அறிவறிந்த மக்கட் பிறப்பாக இருத்தல் 2. பழிபிறங்காப் பண்புடை மக்கட் பிறப்பாக இருத்தல் என்பவை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனியவை என்றார் வள்ளுவர்(68) ஒப்புரவு : ஆன்றோர் சான்றோர் என்பவற்றைப் பொதுமக்களும் அறிவர். புலமையாளரும் அறிவர். ஆன்றோர், அறிவறிந்தோர்; சான்றோர் பழிபிறங்காப் பண்பினர். நல்லறிவும் நற்பண்பும் உடையவரின் நயத்தக்க உருவாக்கம், தர மேம்பாடு மிக்கவையாகவே இருக்கும் என்பதை நம்பலாம். ஏனெனில், நல்லறிவும் நற்பண்பும் தரக்கேட்டை உருவாக்கத் தலைப்படா. தம்மைப் போலவே பிறரையும் கருதிச் செயலாற்றச் செய்வது நல்லறிவு. தம்மைப் போலவே பிறரும் நலம்பெற விழைந்து செயலாற்றுவது நற்பண்பு. இவை பிறர் நலம் தம் நலம் என்னும் இரண்டையும் ஒப்புக் கொள்ளும் ஒப்புரவு கொண்டவை. ஒப்புரவு உள்ளத்தின் உருவாக்கம், ஒரு நாளும் குறைவும் கேடும் உடையதாக மாட்டா அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை பிறர் துயரைத் தம் துயர்போல் கருதாது செயலாற்றும் அறிவு அறிவாகாது என்றே தள்ளப்பட்டது. வள்ளுவப் பெருந்தகையால்! தரமேம்பாடு : இனித், தர மேம்பாட்டுக்கு வள்ளுவர் காட்டும் வழிகள் எவையேனும் உண்டா? என எண்ணலாம். வள்ளுவத்தின் ஒட்டு மொத்த ஊடகமே, பிறர்க்கு மட்டுமன்று; பிறவுயிர்க்குத் தீமை செய்யாமை என்பதேயாம். இந்நோக்கு இல்லாமல் எதனையும் சொல்லாப் பெரு நோன்பர் அவர. ஆதலால், எவ்வுயிர்க்கும் தீமையிலா நல்லாக்கமே வள்ளுவர் வழங்கும் ஆக்கமாம். இனம் : ஓர் உருவாக்கத்தில் ஈடுபடுவார் ஓரினத்தராகத் திகழ வேண்டும் என்பது வள்ளுவர் உள்ளகம். இன் + அம் = இனம். தனக்கு இன்பம் செய்வதாக அமைந்தது எதுவோ அதுவே இனமாம். அவ்வினம், செவ்வினமாக அமைந்து அளவளாவிக் கடமை புரிந்தால் எத்தரமும் உருவாக்கத்தில் அமைதல் உறுதி கரை இல்லாமல் ஏரி குளங்களில் நீரைத் தேக்க இயலாது. அதுபோல் அளவாளவுதல் இல்லாத வாழ்வில் ஒட்டுறவு இராது என்பது திருக்குறள் (523) அளவளாவுதல் என்பதே மனக்கலப்பில் உண்டாவது. மனக்கலப்பு, இருமையை ஒருமையாக்கிவிடும். இரண்டற்ற ஒன்றில் சிக்கல் தலைகாட்ட இயலாதே! அதனால், நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும் என்றார் திருவள்ளுவர். இனிய அளவளாவுதல், இரண்டற நிரந்துவிடுதல் ஆகிய இரண்டும் கூடிய இனத்தொடும் கலந்து பேசி உருவாக்கம் புரிந்தால், அவ்வுருவாக்கத் தரம் மிக உயர்ந்ததாகவே இருக்கும். அதனால், தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (462) என்றார். தரஞ்சிறக்க வழிகள் : செயல் சிறந்து தரஞ் சிறந்து விளங்க வழிவகைகளையும் காட்டுகிறார் திருவள்ளுவர். அவை: 1. எந்தச் செயலில் ஈடுபட்டாயோ, அந்தச் செயலுக்குக் கேடான எதனையும் செய்யாதே (612) 2. எந்தச் செயலைச் செய்ய எடுத்துக் கொண்டாயோ அதனை அரைகுறையாகச் செய்யாதே. (674) 3. செய்யும் செயலில் தேர்ச்சி மிக்கவர் நட்பை விடாதே (519) 4. தேர்ந்தோரினும் தேர்ந்தோர் உறவை மாறாமல் பற்றிக் கொள் (519) 5. செயலின் உட்கூறுகள் அனைத்தும் அறிந்தவன் செயல் திறத்தைப் போற்றிக் கொள். (677) 6. செயலில் ஈடுபட்டவர் அனைவரும் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளத்தக்க தலைமை அமைவதாக (574) 7. திறமிக்கோர் தகுதியை மதித்துத் தலைமை அறியச் செய்து சிறப்புறுத்து (665) 8. மாந்த நேயம் வேறு; தொழில் திறம் வேறு; தொழில் திறத்தை மதிப்பீடு செய்தலில் வரிசை அறிதல் முறையாகும் (528) 9. தக்காரை மதித்துத தகவிலாரைத் தண்டித்தல் முறையான செயலாம் (540) அதற்கென நாளும் பொழுதும், கண்காணிப்புத் தவறாமை வேண்டும் (520, 553, 1039) 10. தலைமைத் தகுதியே நிறுவனத் தகுதியாம் (547, 740, 750, 770) நிறுவனச் சிர்மைக்கு உரியவை இவை என எண்ண வைக்கும் திருவள்ளுவர், இச்சீர்மை இல்லாக் கேட்டுக்கு வழியாவன இவை என்பதைச் சுட்டாமலும் விட்டார் அல்லர். அவற்றுள் சில: 1. செய்யத் தக்கதைச் செய்யாமை, செய்யத் தகாததைச் செய்தல் ஆகியன இருபால் கேடுகள் (466) 2. கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், நெட்டுறக்கம் என்பவை நாற்பெருங் கேடுகள் (605) 3. ஒன்றற்கு ஒன்று மாறான குழுக்கள், பாழ்படுத்தும் உட்பகைவர், இறையாண்மையை அழிக்கும் குறும்பர் ஆகியவர் நிறுவனக் கேடர் (735) 4. உரிய காலத்தில் உரிய வகையில் முயலாத முயற்சி, பின்னே பலர்நின்று முயன்றாலும் முடியாததேயாம் (468, 535) 5. தெளிவின்றி ஒருவனை நம்புதலும், நம்பியவன் மேல் ஐயப்படுதலும் நீங்காக் கேடுகள் (510) 6. கடுஞ்சொல், கடுமுகம், முறைகேடாம் தண்டனை என்பவை தலைமையைத் தகர்க்கும் தன்மைகள் (566, 567) உழைப்பாளர் சிறப்பை உரைப்பதொரு குறளைச் சுட்டி அமைதல் சாலும். அது: இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் (1035) உழவு என்னும்அதிகாரத்தில் உள்ள இக்குறள் கையால் தொழில் புரியும் அனைவரையும் தழுவிக் கொள்ளும் கருத்தினதாம். வினைமேற் சென்ற தலைவன் அதனை இனிதாக முடித்து விரைவில் திரும்பி வருதலை விரும்பிய தலைவி, வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து (1268) என்று வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி அமைவோம். துறைச்செய்தி மேல்வரும் செய்திகளை அறிந்து கொள்ளுதல், இந் நூலைக் கற்றுப் பயன் கொள்வதற்கத் துணையாகும். 1. தரக்கட்டுப்பாட்டுக் குழும்பு என்றால் என்ன? ஒரே இடத்தில் ஒரே வகையான தொழில் புரிபவர் தாமாகவே தம்மிச்சையாக எவர் அதிகாரத்திற்கும் ஆட்படாமல் 4 பேர் முதல் 6 பேர் வரை சேர்ந்து குழுவாக அமைந்து, அக் குழுவின் தலைவரையும் தாங்களே தேர்ந்தெடுத்து மேலாண்மை ஒப்புதலுடன் வேண்டும் போதுகளில் கூடித் தங்கள் தொழிற் பகுதிச் சிக்கல்களைத் தாங்களே தேர்ந்து தெளிந்து தீர்மானித்து மேலாண்மை இசைவுடன் நடைமுறைப்படுததும் தொழில் குழுவாகும். 2. தரம் என்றால் என்ன? ஒரு தொழிலகம் தான் உருவாக்கும் பொருள்களை, நுகர்வோர் எதிர்பார்ப்புக்கும் நிறைவுக்கும் தேவைக்கும் தக்க வகையில் உருவாக்கித் தருவது தரம் ஆகும். நுகர்வோர் விரும்பாவிடின் உருவாக்கத்தால் பயன் உண்டாகாது. ஆதலால் நுகர்வோர் நிறைவே உருவாக்கத்தின் மூலமாகக் கொண்டு செயல்படுவதே தரம் ஆகும். தரம் ஒரு நிலைப்படுதல் இயலாது. நுகர்வோர் இப்படி இருந்தால் இன்னும் நலமாம், பயனாம் என, உருவாக்கத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் எண்ணுவார். அவர் எண்ணத்தைக் கருதித்தக்க வகையில் வேண்டும் விரிவும் மாறுதலும் செய்து வருதலும் தரத்தொடு கூடியதேயாகும். 3. தரக்கட்டுப்பாட்டுக் குழும்பினால் தொழிலாளர்க்கு ஏற்படும் நன்மைகள் எவை? எடுத்த பணியில் முழுமையாக ஈடுபடும் எண்ணத்தைத் தூண்டி வளர்க்கும். தொழிலாளர் அலுவலர் மேலாண்மையர் இணைப்பு இயல்பாக உண்டாகிச் சிறக்கும். எண்ணும் ஆற்றலை ஊக்கிக் கண்டு பிடிப்பாளியாகத் தூண்டும். தனித் தனித்திறங்கள் சுடர்விட வாய்ப்பளிக்கும். தக்க மதிப்புரிமைக்கும் பரிசு பாராட்டுகளுக்கும் இடமாக்கும். வழிகாட்டும் தலைமை உருவாக உதவும். 4. தரக்கட்டுப்பாட்டுக் குழும்பினால் நிறுவனத்திற்கு உண்டாகும் நலங்கள் எவை? நுகர்வோர் விரும்பத்தக்க பொருள்கள் உருவாக்கப் படுதலால் அவை தேக்கமின்றி விலையாகி விடுகின்றன. வாடிக்கையாளரைப் பெருக்கி வருவாயையும் பெருக்கு வதால் தொழிலகத்தை விரிவாக்க உதவுகின்றது. தொழிலக ஆட்சி ஒப்புரவுடனும் நெருங்குதலுடனும் இயல்பும் இனிமையும் உடையதாகி விடுகின்றது. தொழிலகச் சேதமும் சிதைவும் குறைந்தும் இல்லாதும் போகின்றன. பிற தொழிலகங்களின் முன்னேற்றத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது. 5. தரக்கட்டுப்பாட்டுக் குழும்புகள் தீர்க்கும் சிக்கல்கள் எவை? அ) தரம் : தவறான வேலைகளைக் குறைத்தல் கழிவுகளைக் குறைத்தல் நுகர்வோர் குறைகளைக் குறைத்தல் நுகர்வோர்க்கு வேண்டும் சேவையை மிகுத்தல். ஆ) உருவாக்கச் செலவு : மூலப்பொருள் வீணாதலைக் குறைத்தல் தேய்மானச் செலவைக் குறைத்தல் இ) உருவாக்கத்திறன் : மாந்தரும் பொறிகளும் உருவாக்கும் திறனைப் பெருக்குதல். பொறிகளின் பழுதுபார்த்தல் பொழுதைக் குறைத்தல் ஈ) பாதுகாப்பு : பொறிகளைப் பாதுகாப்புடன் இயக்குதல் தீய விளைவுகள் ஆகாமல் தடுத்தல் உ) பணியை எளிமைப்படுத்துதல் : கடினமான வேலையை எளிமையாக்கல் குறித்த காலத்தில் குறித்த அளவில் முடித்தல். ஊ) சேவை : நுகர்வோர் நிறைவுக்காகச் செயல்படுதல் நுகர்வோர் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுதல் எ) மனவளம் : இணைந்து பணிபுரிதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கடனாற்றல், ஒருவர் சிக்கலை ஒருவர் தீர்க்க உதவுதல், பொது நலம் பெருகித் தம் நலம் தேய்தல், தமக்குத் தாமே உண்டாகும் நிறைவு என்பவை. மேற்கோள் நூல் : தரக்குழுக்கள்-தத்துவமும் தொழில் நுட்பமும் பயிற்சிவளாகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நெய்வேலி-3. 1. திருக்குறளில் தொழில் தரமும் உறவும் இந்த ஆய்வு திருக்குறள் வழியது. இது மூன்று பகுதிகளை யுடையது. அவை தொழில்; தொழில் தரம்; தொழில் உறவு என்பனவாம். எடுத்துக் கொண்ட பொருள்களின் மூல வைப்பக மாகவும் ஊடகமாகவும் இருப்பது திருக்குறள். ஒவ்வொரு செய்தியும் குறிப்பும் அதன் வழிப்பட்டதாகவே அமையும். அதனை நிறுவும் சான்றுகள், வேண்டும் அளவில் பிறநூல்களில் இருந்தோ, வரலாறுகளில் இருந்தோ, நடைமுறை எடுத்துக் காட்டுகளில் இருந்தோ தரப்படும். அவை மூலப் பொருளுக்கு உதவியாய் அமைவனவாம். 1. திருக்குறளில் தொழில் : தொழில் என்பதில் தொழு என்பது அடிச் சொல். இல் என்பது சொல் இறுதி நிலை. தொழுதற்கு இடமாக இருப்பது தொழில் ஆகும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது எங்கும் வழங்கும் பழமொழி. செய்தல், செயல் என்பவை செம்மை வழிப்பட்ட சொற்கள் என்பதை அறியின் அதன் சிறப்பு விளங்கும். தொழில்களில் தலைமை கொண்டது உழவு; மற்றைத் தொழில்கள் அதன் வழிப்பட்டவை. அவை, கை செய் தொழில் களாகத் திருக்குறளில் வழங்கும். உழவும் கை செய் தொழிலே; அத்தொழிலைச் செய்வார் எவரும், தாம் புரியப்புகும் தொழிலைக் கைகூப்பி வழிபட்டே தொடங்குதல் நடைமுறை உழுவார் ஆகட்டும், கொல்லர் தச்சர் சிற்பர் எவராகட்டும், அக்கருவி களைக் கைகூப்பி வணங்கியே தொழிலைத் தொடங்குதல் கண்கூடு. தொழுது தொழிலைத் தொடங்கி உலகைக் காக்கும் கையை, உலகம், தொழுதலைத் தன் கடமையாகக் கொண்டது. ஏனெனில், அவர் உழைப்பால் பெற்ற வளத்தால் தானே உலகம் வாழ்கின்றது. அந்நன்றி கருதி உலகம் (உலகோர்) தொழுதது. இதனையே, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்றார் உழவைக் கூறும் கிழவர் திருவள்ளுவர். இது தொழுது தொழிலைத் தொடங்கி, உலகத்தைக் காப்பாரை, உலகமே தொழுகின்ற உயர்வு குறிப்பதாம். ஆதலால், தொழுதற்கும் தொழப்படுதற்கும் இடமாக இருப்பது தொழிலாகும். இனித்தொழுதல் என்பதுதான் என்ன? என்பதையும் திருக்குறள் விளக்குகிறது. கைகூப்பி வணங்கும் கும்பிடுதலே வள்ளுவராலும் குறிக்கப்படுதல் விளங்குகின்றது. எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் (260) தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (828) என்பவற்றில் தொழுகை சுட்டப்படுதல் அறிக. தொழுகை வழிபாட்டுப் பெயராகவும், வழிபாட்டு இடப் பெயராகவும் வளர்ந்தமையும் காண்க. தொழில் பற்றிக் கூறும் வள்ளுவர் பொதுநிலை, சிறப்பு நிலை என்னும் இருவழிகளிலும் கூறுகிறார். பொதுநிலைபற்றிக் கூறுவன, வினைத்தூய்மை (66), வினைத்திட்பம் (67), வினை செயல்வகை (68), ஆள்வினையுடைமை (62), என்பனவாம். பிற அதிகாரங்களிலும் பொது நிலைக் குறிப்புகள் சில உண்டு. உழவு என்பது சிறப்பு அல்லது தனி நிலைத் தொழில் (104) பற்றியது. பிற அதிகாரங்களிலும் சிறப்பு நிலைக் குறிப்புகள் சில உண்டு. வினைத்தூய்மை : ஒரு செயலைச் செய்தற்குத் துணையாக வருவாரின் நல்ல திறமும் நலப்பாடும் மிகுபயன் செய்யும். ஆனால் அவற்றோடு அச்செயலைச் செய்யும் தேர்ச்சியும் நன்றாகத் தனக்கு அமைந் திருந்தால், அவன் விரும்பும் நலங்களையெல்லாம் குறையாமல் தரும் என்கிறார். துணை நலம் வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர், அத்துணை நலத்திற்கும் மேலானது வினைநலம் என்னும் செயல்தேர்ச்சி என்கிறார். துணை நலத்தால் மட்டும் முழுப்பயன் எய்துதல் இயலாது; தன் செயல் தேர்ச்சி இன்றியமையாதது; தன் செயல் தேர்ச்சியே, துணையாக வருவார்க்கும் ஊக்குதலாக இருந்து வெற்றியை உண்டாக்கும் என்பதால், துணை நலத்தினும் வினைநலம் சிறந்தது என்கிறார். தொழில் தேர்ச்சியாளர் ஒருவர் அதற்குத் துணையா வாரை வேலை வாங்குதற்கும், தொழில் தேர்ச்சியும் தொடர்பும் இல்லாத ஒருவர். அத் தொழிற்குத் துணையாவாரை வேலை வாங்குதற்கும் மிகுந்த வேற்றுமை உள்ளமை எவரும் அறிந்ததே. தொழில் தேர்ச்சியாளர், தொழிலாற்றுவார்க்கு உண்டாகும் சிக்கலை உடனுக்குடன் கண்டு, சிக்கலைத் தீர்த்துச், சீராக இயங்க வழிகாட்டுவார். அத் தேர்ச்சி இல்லாதவரோ, துணையாவார் என்ன சொல்வார்களோ அதைக் கேட்டு, என்ன செய்வார்களோ அதைப் பார்த்து அவ்வளவில் அமைவார். தொழிலகங்கள் பல முடங்கிப் போதலும், இயங்காதொழிதலும், மூடப்படலும், வினைநலம் இல்லாத் தலைமையால் நிகழ்வதாம். அதே பொறிகள், அதே துணையர், அதே தொழிலகம் தக்க வினை நலம் உடைய தலைமை வாய்த்தலால் ஓஓ என்று பாராட்ட வெற்றி நடையிடுதலும் நாம் காண்பனவே. துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (651) * * * * * ஒரு செயலைச் செய்வதற்கு விரும்புவார், எச்செயலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதனை விரிவாக விளக்குகிறார். எத்தொழிலைத் தெரிந்து தேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வதற்குத் தெரிந்து தெளிதல் குறிப்பு உதவுகின்றது. அது, குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்பதாம் (504). இதனைச் செய்தலால் உண்டாகும் நலப்பகுதி இது; கெடுதல் பகுதி இது என்பவற்றைத் தெளிவாக ஆராய்ந்து, நலம் மிகுதியாக இருக்குமானால் அதனைச் செய்க என்பதே இதன் செய்தியாம். இதனால் எச்செயலிலும் குணம், குற்றம் என்பவை உண்டு; அவற்றுள் குணம் மிக இருந்தால் கொள்ளுக; குறை மிக இருந்தால் தள்ளுக என்கிறார். இனித் தெரிந்து தேர்ந்த தொழிலைச் செய்யும் வகைக்கும் தெளிவு காட்டுகிறார் திருவள்ளுவர். அது, மருத்துவத் தொழிலுக் கெனச் சொல்லப்பட்டாலும் பொதுப்பயன் உடையதாகும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது அது (948). வெளிப்பட விளங்கும் நோயை அறிந்து, அந்நோய் உண்டாதற்கமைந்த அடிப்படையை ஆய்ந்து, அந்நோயைத் தீர்க்கும் வகையை ஆய்ந்து, ஆய்ந்து கண்ட வழிமுறை தவறாமல் கடமை புரிந்து நோய்த் துயர் அகற்ற வேண்டும் என்கிறார். இதனை விரிந்த வகையால் வினைசெயல் வகையில் விளக்குவதை மேலே காணலாம். எடுத்துக் கொண்டு முடிக்க விரும்பும் செயல், தூய்மை உடையதாக இருக்க வேண்டும். கறை உடையதாகவோ, குறை உடையதாகவோ, பழியும் இழிவும் அழிவும் தருவனவாகவோ இருத்தல் ஆகாது என்பதற்காகவே வினைத் தூய்மை என்பது அதிகாரப் பெயராயிற்றாம். தூய்மையாவது யாது? என்பதையே மேல்வரும் ஒன்பது பாடல்களிலும் தெளியத் தெளிய விளக்குகிறார். செய்யவிரும்பும் தொழில், செய்பவனுக்குப் புகழ் தருவதாக இருக்க வேண்டும்; புகழ்மட்டும் போதாது; அவனுக்கோ, நாட்டுக்கோ தீமை தாராமல், நலம் சேர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட செயலையே தேர்ந்து கொள்ளுதல் வேண்டும்; மற்றைச் செயலைக் கொள்ளாமல் தள்ள வேண்டும். தொழிலில் புகழ்த் தொழில் பழித்தொழில் உண்டோ? என்னும் ஐயம் நிகழலாம். வழிப்பறி செய்தலைத் தொழிலாகக் கொள்வார் இலரா? வட்டும் சூதும் வருவாயாகக் கொள்வார் இலரா? மட்டும் மதுவும் விட்டு மயக்கிப் பறிப்பார் இலரா? பரிசுச்சீட்டு, களியாட்டம், தவணைக்கடை, காசுமாற்றம் என்பனவற்றால் அழிவேலை செய்வார் இலரா? ஒருவன் வாழும் போதும் பெருமையாக வாவேண்டும்; மறைந்த பின்னரும் அப்பெருமை நிலைபெறவேண்டும். உள்ள போது இருக்கும் பெருமை ஒளி என்றும், மறைந்த பின்னரும் மறையாமல் விளங்குவது புகழ் என்றும் சொல்லப்படும் அவ்வொளியையும் புகழையும் ஒருங்கே கெடுக்கும் செயலைச் செய்யவா ஒருவன் கருத வேண்டும்? அவன் வாழ்வுக்குக் கை கொடுக்க எத்தனை எத்தனை புகழ்த் தொழில்கள் காத்துக் கிடக்கின்றன. ஆதலால், என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை (652) ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர் (653) என்கிறார். ஒருவுதல் என்பது நீக்குதல்; ஓஓதல் என்பதும் அது. மாழ்கும் என்பது கெடுதல்; ஆஅதும் என்பது ஆக்கம் பெறுவோம், நலம் பெறுவோம் என்னும் பொருளது. தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போதே அதன் விளைவையும் எண்ணித் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறு கூறுகிறார். மேலும் கூறுவார்: ஒரு செயலைச் செய்யத் தொடங்குவார் உறுதியாக - திண்ணமாக - எண்ணித் தொடங்குதல் வேண்டும். அவர்கள் தெளிந்த எண்ணமும், உறுதிப்பாடுமே அச் செயலை வெற்றியாக நிறைவேற்றும். இடைஇடையே தடைகள் உண்டாகலாம்; சிக்கல்கள் நேரலாம். அந்நிலையில் உறுதிப் பாட்டில் தளர்தல் ஆகாது. வெள்ளத்தில் இறங்கு முன்னரே எண்ணிப் பார்த்து இறங்குதல் வேண்டும். துணிந்து இறங்கி நட்டாற்றில் செல்லும் போது உறுதி குலைந்தால் அக்குலைவே வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக் கொண்டு போகத் துணையாகிவிடும். தன்மனமே தனக்குத் துணையாக-துணிவாக- அமையாத நிலையில் எதுதான் துணையாக - துணிவாக அமையும்? இடுக்கண் ஏற்படலாம்; எவர்க்குத்தான் இடுக்கண் ஏற்படவில்லை? எத்தொழிலில்தான் இடர்ப்பாடு இல்லை? உண்ணும் போது புரையேறுதலால் உயிர்போனவர் இலரா? புகைக்குள் புகுந்து மூச்சுமுட்டி முடிந்தவர் இலரா? அருவி ஒழுக்கில் நின்று ஆவி போனவர் இலரா? மாடியில் இருந்து விழுந்தவர் பிழைத்துக் கொள்ள, மடியில் இருந்து விழுந்த குழந்தை முடிந்து விடுவது இல்லையா? துன்பம் வந்தது என்பதற்காக மனஞ் சஞ்சலமுற்று எதனையும் செய்ய, அறிவாளன் - உறுதியாளன் துணிதல் ஆகாது. இழிவுதாராத செயலையே செய்தல் வேண்டும். இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் (654) காட்சியாவது அறிவு. நடுக்கு - அசைவு; இளிவு - இழிவு. ஒரு செயலைச் செய்யத் தொடங்கியதும் அல்லது செய்யும் போது அல்லது செய்து முடித்தபின், இதனையா செய்தோம்; என்ன தவறு செய்து விட்டோம்; இதனைச் செய்யாமல் இருந்திருக்கலாமே என்ற எண்ணங்கள் செய்தவனுக்கே உண்டாதல் உண்டு. அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால், நிகழ்ந்து முடிந்ததற்கு என்ன செய்வது? அத்தகு வருந்தத்தக்க செயலை மீளவும் மறந்தும்கூடச் செய்தல் ஆகாது. தவறு என்று உணராமல் செய்த குற்றத்தினும் தவறு என்று உணர்ந்தபின் செய்யும் குற்றம் பெருங்குற்றமாம். அதனால், எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்ற என்றார் (655) தன் பெற்றோரைப் பேணல் எவர்க்கும் பெருங்கடமையாம். அவர்கள் தன்னை ஆளாக்கப் பட்டபாடுகளை நினைவான், அவர்களைப் பொன்னினும் மேலாகவும், கண்ணின் மணியினும் மேலாகவும் காத்தல் வேண்டும். அத்தீராக் கடமையைத் தீர்க்க வேண்டிக்கூடத், தீராப்பழிச் செயலைச் செய்தல் ஆகாது என்பது திருவள்ளுவம். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்பது அது (656) தன்னைப் பெற்றவள் ஈன்றாள்; அவ் வீன்றாள் வயிறே தன்னைக் கருவாய் உருவாய்-த்தாங்கி நின்றது. அதுவே பசித்துக் கிடக்கின்றது. அதனை ஆற்றுதல் தன் கடன். அதனை ஆற்றுவதற்கு, அல்ல செயலை ஆற்றுதல் ஆகாது. சான்றோர் புகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்கவே தன்னைப் பெற்ற தாய், அச்சான்றோர் பழிக்கும் செயலைச் செய்து அதனால் வயிறாறும் வழியை ஏற்கவே மாட்டாள். ஆதலால், பழிச் செயல் செய்த பசியாற்றும் கடமைபுரிதல் ஆகாது என்கிறார். ஏனெனில் அப்பழிச் செயல் தாய்மையும் தாங்காப் பழியும், சான்றோர் மதியாப் பழியும், தன்னை மாறா இழிவில் மாட்டும் பழியுமாக இருத்தலால் என்கிறார். இதனையே வலியுறுத்து முகத்தான் இப்படிப் பழிச் செயல் செய்து தேடும் செல்வத்தைப் பார்க்கிலும் தீரா வறுமையிலே கிடந்து அலைக் கழிந்தாலும் குறையாகாது. ஏனெனில், அவர்தம் பெருமைக்குச் சிறிதும் குறைவாகிவிடாதே என்கிறார். பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை (657) நல்குரவு - வறுமை; கழிநல்குரவு - மிகுவறுமை. இது, ஆக்கச் செயல்; இது, அழிவுச் செயல்; இச் செயல் செய்க; இச் செயல் தவிரக் எனச் சான்றோர் தெளிவுறுத்தி யுள்ளனர். அவர்கள் செய்தல் தவிர்க என்றவற்றைச் செய்தல் ஆகாது. அத்தகையவற்றை எடுத்து வெற்றியாக முடித்தாலும் அது நீங்காப் பழியும் கேடுமே யாம். ஆதலால் வேண்டா என்று சான்றோர் விலக்கிய வினையைச் செய்தல் ஆகாது. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் (658) கடிந்த - விலக்கிய ; கடிந்தொரார் - விலக்கி ஒதுக்கார் ; பிழை - துன்பம். பிறர் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுமாறும், அவ்வவலத்தாலேயே அழிந்து போகுமாறும் தேடும்பொருள், தேடிய அவனிடத்தில் இருந்தும் அப்படி அழுது அழியுமாறு போய்விடும்; ஆனால், நற் செயல் செய்தலால் இழப்பாகத் தோன்றும் பொருள் கூட, நன் முயற்சியால் இழப்பாகாமல் ஆகிவிடுவது உண்டு. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை (659) பிறரை ஏமாற்றியோ கெடுத்தோ அவர் பொருளைத் தேடிக் கொள்ளலாம் என்று கருதுதல் ஆகாது. அவ்வாறு கருதின் அப்பொருள் பிறரால் அவ்வாறு கவர்ந்து கொள்வதற்கும் இடமாகும் என்கிறார். இதனை ஓர் உவமையால் விளக்குகிறார். மண்கலங்கள் சுட்டு வலுவேற்றப்படும் சுடப்பட்ட கலத்தில் நீர் ஊற்றி வைக்க முடியும். சுடப்படாத கலத்தில் நீரூற்றினால் அக்கலத்தையே கரைத்து அழித்துவிடும். வஞ்சத்தால் பொருள் தேடி வைத்தால் அப்பொருள் பச்சைமண் கலத்தில் நீர்வைத்தது போல் தானும் அற்று, கலத்தையும் அழிப்பதுபோல் உடையவனையும் அழித்துவிடும் என்கிறார். சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட் கலந்துள்நீர் பெய்திரீஇ அற்று. (660) சலம் - வஞ்சம்; ஏமார்த்தல் - பாதுகாத்தல். இரீஇ - இருக்கச் செய்து. இவையெல்லாம் செய்ய விரும்பும் செயல் தூயதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வினைத்தூய்மைக் குறள்களாகும். வினைத்திட்பம் : திட்பம் என்பது உறுதிப்பாடு. வினைத்திட்பம் என்பது என்ன என்னும் கேள்வியைத் திருவள்ளுவரே கேட்டுக் கொண்டு விடை கூறுகிறார் : வினைத்திட்பம் என்பது ஒரவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற இதனால் மனத்திட்பம் என்பதே வினைத் திட்பம் என்று கூறி விடுகிறார். வேறு வேறு திட்பங்கள் எல்லாம் இருப்பினும் அவையெல்லாம் மனத்திட்பம் போன்றவை ஆகா என்கிறார். செல்வம் இருந்தென்ன? செல்வாக்கு இருந்தென்ன? பதவி இருந்தென்ன? பரிவாரம் இருந்தென்ன? சுற்றம் இருந்தென்ன? சூழல் இருந்தென்ன? தொழில் இருந்தென்ன? கருவி இருந்தென்ன? அஞ்சுபவனைக் குஞ்சும் வெருட்டும் என்பது பழமொழி. மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவனுக்கு எச்சிறு செயலையும் உரியவகையில் செய்து முடிக்க இயலாமலே ஒழியும். மனத் துணிவாளிக்கு எத்தகு இல்லாமை-தடை எதரீடு - நேரினும், அவற்றைத் தகர்த்தெறிந்து எடுத்த செயலை முடித்தே தீர்வான். மனத்திட்பம் இல்லாத மாடு வண்டியில் பூட்டிய அளவில் படுத்துக் கொள்வது இல்லையா? தார்ச் சாலையிலேயே பாரம் இல்லாத வண்டியிலேயே பூட்டிய அளவில் படுக்கும் மாடுகள் எத்தனை? வண்டி நிரம்பிய பாரம், வழியெல்லாம் குண்டு குழி,சேறு சக்தி; ஆயினும் மண்டியிட்டு இழுத்தும் ஏறாமேட்டில் ஏறிவிடும் மாடுகள் இல்லையா? இதனால்தானே, மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624) என்றார். எருமைக்கடா, காளைமாடு போலும் மனத் திண்மையாளன், தன்னை வருத்த வந்த துன்பத்திற்கும் வருத்தம் தருவான் என இடுக்கண் அழியாமைக் குறள் கூறிற்று. ஊக்கமுடைமை என்னும் அதிகாரத் தொடக்கமே, உடையார் எனப்படுவது ஊக்கம்; அஃதில்லார் உடையது உடையரோ மற்று (591) என்கிறது. அடுத்த குறளோ உள்ளம் உடைமை உடைமை என உறுதிப்படுத்துகின்றது (592). ஆதலால் வினைத்திட்பம் என்பது மனத்திட்பப் பயனே என்பது விளக்கமாம். இதனையே இவ்வதிகார இறுதிக் குறளும், எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு என்கிறது. செயற்பாட்டு உறுதியைக் கொள்ளாதவரை உலகம் ஒரு பொருட்டாகக் கொள்ளாது என்கிறார். முதலும் முடிவும் செய்யுங்கால் இடையூறு வரத்தான் செய்யும்; அதனைப் பொருட்டாக எண்ணுதல் ஆகாது; அதற்குச் சற்றும் தளர்தலோ பின் வாங்குதலோ கூடவே கூடாது. இது, வினைத்திட்பத்தைப் பற்றி ஆய்ந்து முடிவு கண்டவர் உறுதியாக உரைக்கும் செய்தியாகும். ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (662) நடைவழியில் ஒரு சாய்க்கடை அதனைத் தாண்ட வேண்டும்; தாண்டத் துணிந்து கடக்க மாட்டாமல் ஊடே விழுந்தால் என்ன ஆகும்? கிணற்றைத் தாண்டுவேன் என்று துணிந்தவன் முக்காற் கிணறு தாண்டின் சுவரில் மோதி மூக்குடை படாமல் முடியாதே! முகடுவரை எழுப்பிய சுவர்மேல் மூடு போடா விட்டால் வீடாகுமா அது? பொறிகளையெல்லாம் வாங்கிப் போட்டுப், பொருந்தா இடத்தில் தொழில் தொடங்கி, முட்டுப்பட்டு நின்றால், கெட்டுப் போக வேறு என்ன வேண்டும்? அதனால், கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் கடைக்கொட்க - நிறைவு கொள்ள ; இடைக்கொட்கின் - இடைப்பட்டு நிற்க; எற்றா விழுமம் - நீங்காத் துன்பம். காலமெல்லாம் கடமையில் ஊன்றியவர்; அயராது பணியாற்றியவர்; பல்வேறு வெற்றிகளைக் குவித்தவர்; அவரால் தொழில் துறையும் அத்தொழிலகமும் தொழில் முனைப் பாளரும் பெற்ற நலங்கள் பலப்பல. எனினும், அவர் ஆள்வோரால் பாராட்டப்படவில்லையே! பரிசு பெறவில்லையே! கண்டு கொள்ளத்தானும் படவில்லையே! என்று எண்ண வேண்டுவது இல்லை! கட்டாயம், அவர்தம் தொழில் தேர்ச்சியும், வெற்றியும் அரசு மதித்துப் பாராட்டும், நிலைமையை ஒருநாள் அடைந்தே தீரும். அவரே அவரை உணர்த்திப் பெறவேண்டும் நிலை இல்லாமல், அவரை உணர்த்தத்தக்க சூழல் உண்டாகவே செய்யும். அப்பொழுது அதுகாறும் பெறாத பேறுகளை யெல்லாம் பெற்றே தீர்வார் என உறுதிமொழிகின்றார் திருவள்ளுவர். வீறெய்தி மாண்டார் வினைத்திட்டம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் என்பது அது (665) இந்தக் குழந்தையை ஒரு புட்டியில் போட்டுவிடலாம். இதற்குத் தொட்டிலோ கட்டிலோ வேண்டியதில்லை என்று மகப்பேறு பார்த்த மருத்துவி எள்ளலாகச் சொல்ல ஒல்லி (ஒல்கி) யாகப் பிறந்தவர் ஐசக்குநியூட்டனார். அவர்தம் அறிவுக் கூர்ப்பு என்ன குறைந்தோ போய்விட்டது. அவ்வாறே வினைத் திட்பத்திலும் வல்லார் உருவத்தில் பரியராக இருக்க வேண்டும் என்பது இல்லை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. இலால்பகதூர் சாத்திரியார் உள்ளத்தில் கிடந்த உறுதிப்பாடு என்ன குறைவானதா? ஒரு பெரிய தேர்: அதற்கு ஏற்ற பெரிய கால் (சக்கரம்) இருந்தால் போதுமா? அச்சு இருந்தால் மட்டும் போதுமா? அச்சு கழன்றோடாமல் இருக்க அச்சாணி வேண்டுமே! அவ்வச்சாணி என்ன தேர்போலவோ, கால்போலவோ, அச்சுப் போலவோ பெரியதா? எவ்வளவு சிறியது. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி ஆயிற்றே. அதனால், உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்கிறது வினைத் திட்பக்குறள் (667) உறுதிப்பாடாக ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தல், அதனைத் துணிவாகச் செய்தல், இடைப் படாதும் காலம் நீட்டாதும் முடித்தல் என்னும் முத்திறமும் வினைத்திட்பத்திற்கு உரியவை என்கிறார் திருவள்ளுவர். அது, கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் என்பது (668). கலங்காமை - உறுதி; துளங்காமை - துணிவு; தூக்கம் - சோர்வு, கால நீட்டிப்பு. கட்டாயம் இன்பமேயன்றித் துன்பமே தராத செயல் ஒன்று; அதனைச் செய்ய முயல்கின்றோம்; முயலும் போது அடுத்தும் தொடுத்தும் சிறுசிறு துயர்கள் உண்டாகின்றன. ஆயினும் என்ன? முடிவுற்றால் இன்பமே அல்லவோ! அம் முடிவையே குறிக்கோளாகக் கொண்டு, ஏற்படும் துன்பங்களை மிதிகல்லாகக் கொண்டு மேடேறிவிடுக என்கிறார். துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை என்பது அது (668) வினை செயல்வகை : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழி முறைகளைப் பற்றிக் கூறுவதே வினைசெயல்வகை என்பதாம். இதில் முதல் எட்டுக் குறள்கள் எத்தொழிலையும் நிறைவேற்றும் பொதுக் கருத்தை உரைப்பவாம். இறுதிய குறள்கள் இரண்டும் ஆட்சியர்க்கு உரியவையாம். ஒரு செயலைச் செய்ய ஆராய்தல், ஆராய்ந்து இதனை இவ்வாறு இவரால் செய்தல் எனமுடிவு எடுத்தல், அம்முடிவே முடிவாய்த் துணிந்து நிறைவேற்றி விடுதல் ஆகியவை வேண்டும். அவ்வாறு அன்றி அம்முடிவைச் சோர விடுதல் நன்மையாகாத துடன் தீமையையும் தரும். சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது சூழ்ச்சி என்பது வஞ்சகப் பொருளில் வருதலே இந்நாள் பெரு வழக்காவது. ஆனால், ஆராய்தல் என்னும் நற்பொருளில் இவண் வருகின்றதாம். சில செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்; சில செயல்களைக் காலந் தாழ்த்திச் செய்தல் வேண்டும். அவற்றை மாற்றி, விரைந்து செய்ய வேண்டுவதைக் காலந்தாழ்த்திச் செய்தலும், காலந்தாழ்த்திச் செய்ய வேண்டியதை விரைந்து செய்தலும் ஆகிய இரண்டுமே தீமையாம். கன்மா (Cement)¡ கொண்டு பணிசெய்கின்றோம். அதனைக் கலந்த கலவை ஈரம் புலருமுன் பயன்படுத்தி விட வேண்டும். அதனைக் காலம் தாழ்த்திக் கெட்டிப்பட விட்டுவிடின் கல்லாகிப் பயன்படாது ஒழியும். ஆனால், சுண்ணாம்பைக் குழைத்து அப்படியே பயன்படுத்துவதினும் அதனை அடைந்து வைத்து, மீளவும் குழைத்து அடைந்து பயன்படுத்தின் கெட்டித்தன்மை மிகும். மழை வரும் போல் உள்ளது! களத்தில் தவசம் கிடக்கின்றது! விரைந்து மூடிவிட அல்லது அள்ளிவிட வேண்டும்! ஆனால் நனைந்து விடின், ஈரம் பதமெல்லாம் அறவேபோக ஆலாற்றல் கட்டாயம் வேண்டும். அரை குறைக் காய்வுடன் களஞ்சியத்தில் சேர்த்துவிட்டால் மடித்துப் பூசுணம் பூத்துக் கெட்டோழியும். கோழி முட்டையை அடையில் வைக்கவும் நாள்களைக் கண்டனர். அதற்கு வேண்டும் வெப்ப அளவைக் கணக்கிட்டு ஒரே நாளில் பொறிக்கச் செய்யும் பொறித்திறமும் வந்து விட்டது. எனினும் அதற்கு வேண்டும் வெப்ப அளவு வேண்டியே உள்ளதாம். கட்டிய கட்டுப் பிரிக்கக் காலமுண்டு; அதனை மருத்துவர் வலியுறுத்துகிறார். கட்டடத்தை ஒட்டியபின் முட்டுப் பிரிக்க இவ்வளவு நாள் வேண்டும் எனக் கட்டடத் தேர்ச்சியர் உரைக்கிறார். இத்தகையவை, தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை (672) என்னும் குறள் விளக்கமாம், தூங்குதல் என்பதற்கு உறங்குதல் என்பது இந்நாள் பொருள். அந்நாள் பொருள் காலந் தாழ்த்துதல் என்பதாம். தூங்காமை விரைவாகச் செய்தலையும், தூங்குதல் மெதுவாகச் செய்தலையும் குறிப்பன. பொருந்திய செயல்களையெல்லாம் பொருந்தும் வகையால் செய்வது நல்லதுதான். ஆனால் பலவற்றைத் தேர்ந்து, ஒன்றையும் சீராக முடிக்கமுடியாமல் தொடங்கி வைத்து ஆவது என்ன? பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான் என்பது போலல்லவோ ஆகும்? இக்கரைக்கு அக்கரை பச்சை என ஓடித்திரியும் ஆட்டுச் செயல்போல அல்லவோ ஆகும். அப்படிச் செயலாற்ற அலைவார் முற்ற முடியாமல், எல்லாம் இழப்பு எங்கும் இழப்பு என்றே திரிவர். ஆதலால், அத்தகையவர் தமக்கு வெற்றியைக் கட்டாயம் தருவது இது என்று துணிந்த ஒரு செயலிலேயே ஊன்றி நின்று உழைத்து வெற்றி காண வேண்டும். ஒருசிலர் ஒன்பது என்ன, தொண்ணூறு தொழில்களைத் தொய்வு இல்லாமல் நடத்துகின்றனரே, எனக்கு மட்டும் முடியாதா? என்று வினாவுவார் உண்டு. இவர்க்கு அத்திறம் இருப்பின் வினாவிக் கொண்டு இரார். இதற்குப் பொழுதே இல்லாவாறு கடிய முயற்சியிலும் திறத்திலும் தலைப் பட்டிருப்பார். ஆதலால், ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் என்கிறது வினை செயல் வகைக் குறள் (673) எடுத்த செயலை அரைகுறை இன்றி முடித்துவிட வேண்டும் என்பதை வினைத்திட்பத்திலேயே (663) உரைத்தார். அதனை ஓர் எடுத்துக் காட்டால் நிறுவிக் காட்டுகிறார், இவ் வினைசெயல் வகைக் குறளிலே. அது, வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் என்பது. அணைத்தும் அணையாத நிலையில் தீக்கங்குடன் சாம்பலை அள்ளிக் குப்பையில் கொட்டிவிடுவார் உண்டு! அடுப்பிலே அணையா நிலையில் கிடக்க விடுவாரும் உண்டு! தீப்பற்றி எரிய அதனை அணைத்த பின்னரும் காற்றில் கனல் கசிந்து வளர்தல் உண்டு! இவையெல்லாம் அணைக்காமல் விடப்பட்ட அரைகுறைத் தீயாய்ப் பின்னே சிறுபொறி பெருந்தீ என்பதுபோல் ஊரையும் நகரையும் அங்காடிகளையும் தொழிலகங்களையும் முற்றாக அழித்து விடுதல் நாளும் நாம் காணக் கூடியவைதாமே! எளிதாக இருக்கும் மின்கசிவு, என்னென்ன விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது! புகைக்குப் பற்ற வைத்த நெருப்பு புகைக் காடாக்கி அழிவு செய்வது இல்லையா? தீயை அரைகுறையாக அணையாமல் விடுவது எவ்வளவு தீமையோ அவ்வளவு தீமையானது எடுத்த செயலை முற்ற முடியாது இடையில் விட்டுவிடுவது என்கிறார். இதனை நன்கு எண்ணிச் செயலாற்றுதல் கட்டாயம் வேண்டும் என்பாராய், நினையுங்கால் என்றும் நெஞ்சறியக் கூறுகிறார் வள்ளுவர். செயலோடு பகையையும் இணைத்துச் சொன்னார். அது அரசுக்கு உரியது என்று ஒதுக்க வேண்டுவது இல்லை! நமக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கதேயாம். நமக்குப் பகையாய் நாமே இருப்பது இல்லையா? நம் எண்ணமே இருப்பது இல்லையா? நம் செயல்கள் பழக்க வழக்கங்கள் இருப்பன இல்லையா? நம் நோக்குகளும் போக்குகளும் அமைவன இல்லையா? இவற்றுள் தகாதவை எவையென நாம் கண்டு கொள்கிறோமோ அவற்றை அக்கண்ட அளவிலேயே அதற்கு மேல் வளர விடாமல் அழித்தும் ஒழித்தும் விட்டால் எவ்வளவு நலப்பாடாம். முட்செடி விளைநிலத்தில் இருந்தால் உழவன் விட்டு வைப்பானா? வெட்டி அழிப்பான் அல்லவா? வேரும் தூரும் இல்லாமல் அல்லவோ அழிப்பான். அப்படி முற்றாக ஒழித்தல் ஆக்கமாம் (879). ஆதலால், வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் நீயெச்சம் போலத் தெறும் என்கிறார் (674) எச்சம் - அரைகுறையாய் எஞ்ச விடுவது; தீ எச்சம் - தீயை முழுதாக அணையாமல் எஞ்ச விடுவது; தெறும் - அழிக்கும். எவ்வினையைச் செய்ய வேண்டுமோ அவ்வினையை எண்ணிச் செய்ய வேண்டும் என்றும், அதனையும் உறுதியாய் எண்ணிச் செய்ய வேண்டும் என்றும் கூறிய திருவள்ளுவர் எவ்வெவற்றை எண்ண வேண்டும் என்றும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அவை பொருள், கருவி, காலம், வினை, இடன் என்றும், முடிவு, இடையூறு, நிறைவில் உண்டாம் பயன் என்றும் எட்டாம். தொழிலுக்கு வேண்டும் பொருள் இருவகையாம். அவை முதலீடு என்னும் பொருள் ஒன்று; மற்றொன்று தொழிலுக்கு வேண்டும் மூலப் பொருள். அரிசி ஆலை, செங்கல் ஆலை, எண்ணெய் ஆலை, பருத்தி ஆலை, நிலக்கரி ஆலை என அமைப்பார் அவற்றுக்கு வேண்டும் முதலீட்டுத் திட்டப் பொருள் இல்லாமல் எப்படிச் செய்வர்? அவ்வத்தொழில் பெருக்க சுருக்கம் பின்விரிவு இவற்றையெல்லாம் எண்ணிய முதலீடுவேண்டுமே! மேலும் தொழிலுக்குரிய மூலப் பொருள்கள் கிடைக்கும் இடத்திலும் கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்பிலும் இருந்தால் தானே காலச் சுருக்கமும், பொருட்செலவுச் சுருக்கமும் வாய்க்கும். தொழிலுக்கு வேண்டும் கருவிகள் உருவாகும் இடம், பெறும் வகை, அவற்றைப் பொருத்தும் வகை, இயக்கவாய்ப்பு, இயக்கத் திறம், இயக்கும் தொழிலாளர் என்பன வெல்லாம் கருதிப்பார்த்துத்தானே தொழில் தொடங்க வேண்டும். எல்லாப் பொருள்களும் எல்லாக் காலத்தும் கிட்டா. பருவத்தால் அன்றிப் பழா என்பத தெரிந்த உண்மை. குறிப்பிட்ட ஒரு காலத்தில் கிடைக்கும் மூலப் பொருளைக் கொண்ட இயக்கப்படும் தொழிற்சாலை, காலமெல்லாம் இயக்குவதற்குத் தக்க வகையில் மூலப் பொருள் சேமிப்புக்கும், உருவாக்கப் பொருள் சேமிப்புக்கும் தக்க வாய்ப்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும் அல்லவோ! உருவாக்கம் முடிந்த அளவில் தொழில் நிறைவேறி விடாதே அதனை விலையாக்க வேண்டும்; அதற்குரிய வழி துறைகளையும் முடிக்க வேண்டுமே; அதற்கும் எத்தனையோ போட்டிகள் குறுக்கீடுகள் இயற்கைத் தடைகள் உண்டே! இவற்றையெல்லாம் வென்று, கண்டுமுதல் காணும் போதல்லவோ தொழிற்பயன் கிட்டும். அக் கண்டு முதலும் கடைசிப் பொழுதில் ஏமாற்றத்திற்கு உட்பட்டதாகவோ காலத்தால் கைக்கு வாராததாகவோ அமைந்துவிட்டால் என்னாவது? வள்ளுவப் பார்வை விரிவுமிக்கதே! பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் (675) முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (676) ஒரே தொழில் ஒத்த வாய்ப்புக் கொண்டிருந்தாலும் அத்தொழிலில் தேர்ச்சியும் நுணுக்கத் திறமும் வாய்ந்தவன் அதனை இயக்குதற்கும், அவற்றை இல்லாதவன் இயக்குதற்கும்; அத்தொழில் நுணுக்கங்கங்களெல்லாம் கரைகண்டவன் தலைவனாக இருந்து நடத்துவதற்கும் எவ்வளவு வேறுபாடு? ஒருவன் வெற்றிக் கனியைக் குவித்துக் கொண்டிருக்க மற்றொருவன் தோல்விக்குமேல் தோல்வியாய் அடிபடுவதென்ன? இதனால், செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் (677) செய்யும் தொழில் தேர்ச்சி, செய்வானை அறிந்த திறம், செய்யும் செயல்முறைத் தெளிவு ஆகியவற்றின் நுணுக்கங்களை யெல்லாம் உட்புகுந்து அறியவல்லான் தேர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு கொண்டால், படைத் தலைவன் திறமையால் படையே சிறப்புப் பெறுவது போல் (768), அத்தொழில் தேர்ச்சியாளனால் அத்தொழிலே பெருமித நடையிடும். வினைசெயல் வகையில் எடுத்த வினையால் அதனை மட்டுமன்றி, அடுத்தடுத்த வினைகளையும் முடித்தலைப் பற்றியும் நினைவூட்டுகிறார். பஞ்சுவணிகம், நூலாலை, துணியாலை, துணி ஏற்றுமதி இறக்குமதி, துணிவிற்பனை நிலையம் எனக் கொண்டதொழில், சார்புத் தொழில்களைக் கொள்ளுதல் வேண்டும் என்கிறார். தென்னந் தோப்பு உடையார், கீற்று உருவாக்கம், கயிற்று வேலை, தேங்காய்க் கடை, எண்ணெய் ஆலை இன்னவற்றை மேற்கொள்ளல் தகும்தானே! நெய்வேலி நிலக்கரித்திட்டம் என்பது நிலக்கரி அகழ்ந் தெடுக்கும் அளவிலேயோ நின்றுவிட்டது? அகழ்தல், கரித்தூய்மை, பொடியாக்கம், கரிக்கட்டியாக்கம், மின்னாக்கம் என எத்தனை எத்தனை விரிவுடையதாய் இயல் கின்றது. இதன் ஒருபகுதிதானே தரமேம்பாட்டுக் குழும்பின் பணி. ஆதலால், வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று என்கிறார் திருவள்ளுவர் (678). பழக்கப்படுத்திய யானையைக் கொண்டு பழக்கப்படாத யானையைப் பற்றிக் கொள்வதுபோல், எடுத்த தொழிலைக் கொண்டே அடுத்தடுத்த தொழிலை நிறைவேற்றலை உவமையால் விளக்குகிறார். ஆள்வினையுடைமை : ஒவ்வோர் ஆளும் செயலாற்றுபவராக இருக்க வேண்டும்; சோம்பராக இருத்தல் ஆகாது என்பதை விளக்கும் சொல் ஆள்வினை என்பதாகும். வினை செய்யா ஆள், ஆள் அல்லர் என்பதே அச்சொல்லைக் கண்டவர் சொல்லிய குறிப்பாகும். அள்வினை என்பதன் பொருள் முயற்சி. முயற்சியுடையவராக இருப்பதே ஆள்வினையுடைமையாகும். எடுத்த எடுப்பிலேயே அழுத்தமாகச் சொல்கிறார். இச்செயல் நாம் செய்தற்கு இயலாதது என்று எண்ணாதே; முயற்சி செய்; பெருமுயற்சி செய்; வெற்றிப் பெருமையை அம்முயற்சி தந்தே ஆகும் என்கிறார். அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (611) என்பது அது. அசாவாமை - சோர்வோ தளர்ச்சியோ அடையாமை. இதனையே வலியுறுத்துவார் போல், முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்றும் கூறுகிறார் (616). ஒருசெயலில் இறங்கியபின் இச்செயலில் துன்பம் வருதலே ஆகாது என்று எண்ணாதே; துன்பம் வரத்தான் செய்யும்; அதனைப் பொருட்டாக எண்ணாமல், எடுத்த செயலை முடித்தலையே உறுதிப் பிடியாகச் செய். அந்நிலையில் துன்பம் தொலைவில் ஓடிவிடும்; இன்பம் ஓடிவந்து சேரும்; தனக்கு வந்த துன்பத்தையன்றித் தன்னைச் சார்ந்தவர் துன்பத்தையும் ஒழிக்கின்ற வலிய தூணைப் போலவே நீ இருப்பாய் என்கிறார். இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் (615) ஒரு செயலை அல்லது தொழிலைத் தொடங்கி அச்செயலை அல்லது தொழிலைக் கெடுக்கத் தக்கதைச் செய்யாதே! எடுத்த செயலை அல்லது தொழிலைக் குறைவில்லாமல் முடித்து வெற்றி நடையிட்டவர்கள் முயற்சியிலேதான் உலகத்தின் வாழ்வும் உயர்வும் தங்கிக் கிடக்கின்றது. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு (612) மாந்தப் பிறப்படைந்த எனக்கு வேண்டும், கண் காது, வாய், கை, கால் முதலிய பொறிகள் (உறுப்புகள்) செவ்வையாக அமையவில்லையே! குறையுடையனவாக உள்ளனவே! என்ன செய்வேன்! இக்குறையை என்குறையாக எண்ணிப் பழிப்பார் கூட உள்ளனரே! என்னால் பிறரைப் போல் முயற்சி மிக்கோனாக எப்படி விளங்க முடியும் என்று எண்ணாதே! உன்னைப் போன்ற உடற்குறையும். அதற்கும் மிக்க உடற்குறையும் உடையவராக எத்தனையோ பேர்கள் இதற்குமுன் உலகில் பிறக்கவில்லையா? இப்பொழுதும் பிறந்து இருக்கவில்லையா- அவர்களுள் எத்தனை எத்தனை பேர்கள், எல்லாப் பொறிகளும் செம்மையாக அமைந்தவர்களும் செய்ய முடியாத செயல் களையும் செய்து, செயற்கரிய செய்த பெருமக்களாக விளங்கி யுள்ளனர் என்பதை எண்ணிப் பார். பொறிக்குறையைப் பொருட்டாக எண்ணாமல் துணிந்து கடனாற்று; வெற்றி உன் கைகளிலே குவியும்; கையில்லையே என் செய்வேன் என்கிறாயா? உன் காலடியிலே குவியும்! காண முடியாதே என்கிறாயா? காது கமழக் கமழக் கேட்க முடியுமே! கண்ணும் காதும் வாயும் ஆகிய முப்பொறியும் கெட்ட கெலன் கெல்லரால் உலகப்புகழ் அடைய வாய்த்த போது, அதனை உன்னாலும் அடைய முடியும் என்று உறுதிகொள். அடைந்தே தீருவாய் என்கிறாய். பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி (618) பொறிக்குறையைக் கூட வென்றுவிடுவேன். ஆனால், என் பணிக்கு மழை பெய்தல், மழைபெய்யாமை, கடுங்காற்று, கடுவெப்பம், கொடும்பனி, இடிமின்னல், நில அதிர்வு, புயல் கடல் கொந்தளிப்பு இப்படியெல்ம் தடைகள் இயற்கையால் நிகழ்கின்றனவே என் செய்வேன் என்று ஏங்குகிறாயா? ஏங்கும் உன்னைக் கண்டு இரங்குதலாக, அன்பா, முன்னெல்லாம் இவ்வியற்கைத் தடைகள் இல்லாமல் இருந்து நீ பிறந்தபின்தான் இவையெல்லாம் ஏற்படுகின்றனவா? இவையெல்லாம் முன்னரும் உள்ளவை தாமே! பின்னரும் இருக்கப் போவவைதாமே! இவற்றையெல்லாமும் கூட முனைந்து நின்று வெற்றி கண்டு எடுத்த செயலை இனிது முடித்தவர் இல்லையா? அவர்கள் ஒட்டு மொத்த வரலாறுகளும், துணிவுகளும், வெற்றிகளும் ஓயாமல் உரைப்பது என்ன? ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620) என்பது தானே! (உப்பக்கம்-புறமுதுகு; உஞற்றுதல்-செய்தல்) என்கிறார். உழவு: இனி உழவு என்பது தனியே அத்தொழிலை எடுத்துக் கூறும் அதிகாரமும். அத்தொழிலைக் கூறுங்கால், பிற தொழில்களுக்கும் வேண்டும் அடிப்படை இயல்புகளையும் அமைத்தே கூறுகிறார். குடி செயல்வகை என்னும் அதிகாரத்தை அடுத்துள்ளது உழவாகும். குடும்பம் நன்னிலை எய்துதற்கு இன்றியமையாது வேண்டுவது தொழிலாக்கம் என்பதைக் குறிக்கும் குறிப்பினது அது. அதனை அடுத்துள்ள அதிகாரம் நல்குரவு என்பது. அத்தொழிலைச் சீராகச் செய்யாது ஒழிந்த குடி வறுமையில் தத்தளிக்க வேண்டியே நேரும் என்பதைக் குறிப்பது அது. உழவை நம்பியே உலகம் உள்ளது. ஆதலால் அவ்வுழு தொழிலில் எவ்வளவு அல்லல் உண்டாயினும் அத்தொழிலே உலகத்தொழில்களுள் தலைமையான தொழிலாகும். (1031) உலகம் எனப்படும் தேர்க்கு அச்சாணி போன்றவர் இவர் என்று சொல்லவேண்டுமானால், அவர் உழவரே யாவர். அவரே உலகத்தவரை எல்லாம் தாங்கு பவராவர். (1032) உழவர்கள் தம் தொழிலைச் செய்யாமல் முடங்கி விட்டால், எங்களுக்குப் பற்றே இல்லை என்னும் துறவியரால் கூட உலகில் வாழ இயலாது (1036) உழவர்தாம் எவரிடமும் போய் எமக்கு இது இல்லை என்று கேட்காதவர். அவரிடம் எவரேனும் வந்து இது இல்லை என்றால் இல்லை என்று சொல்லாமல் ஈபவர். (1035) அரசு குடைபிடிப்பதால் நாட்டில் நிழல் (அமைதி) உண்டாவது இல்லை. உழவர் தொழில் புரிவதால் தான் அமைதி உண்டாகின்றது (1034) என்று உழவின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். நிலம் காயக் காய உழவேண்டும்; ஈரப்பதன் அறவே இல்லாத வகையில்-நூறுகிராம் புழுதி 25 கிராம் எடையாகும் அளவில் உலர்ந்து போகும் வகையில்-உழவேண்டும் (1037) அவ்வுழவினும், எருவிடுதலும் களையெடுத்தலும் நீர்விடுதலும் காவல் காத்தலும் ஒன்றற்குமேல் ஒன்று சிறப்பாகச் செய்தல் வேண்டும் (1038) நன்செய் புன்செய் தோட்டம் தோப்பு ஆகியவற்றை நாளும் பொழுதும் தவறாமல் சென்று கண்காணித்தல் வேண்டும். நேற்றுச் சென்றோமே இன்றென்ன என்றோ, அப்பொழுது சென்றோமே இப்பொழுது என்ன என்றோ, இருந்துவிட்டால் கேடாகும். கணவன் அன்பைப் பெறாத, இருந்துவிட்டால் கேடாகும். கணவன் அன்பைப் பெறாத அன்பு மனைவி முகமும் அகமும் வாடிவிடுவது போல, அந்நிலங்களும் வெறுப்புற்று வாட்டமுறும். (1039) நிலக்கிழவன் ஒருவன் என் பிழைப்புக்கு வகை எதுவும் இல்லையே என்று சோர்ந்து கிடப்பானானால், அந்நிலமே அவனைப் பார்த்து, உனக்கு என்ன என்ன வேண்டுமோ அவ்வளவும் தடையில்லாமல் தருவதற்கு நான் இருந்தும் நீ உழைத்து எடுத்துக் கொள்ள மாட்டாமல் இப்படி ஒடுங்கி முடங்கிக் கிடக்கிறாயே நீ என்ன செயல் திறம் உடையவன் என்று நகைப்பாள் (1040) என்று உழவு அதிகாரத்தை முடிக்கிறார். இவற்றுள் இறுதி இரண்டு குறள்களின் பொருள்களும் உழவுக்கு மட்டுமோ உரியவை. எத் தொழிலுக்கும் உரியவை அல்லவோ! ஒரு தொழிலகத்திற்கு நாளும் பொழுதும் தவறாமல் செல்ல வேண்டும் தானே! கருத்தோடு கண்காணித்தலில் தவறக்கூடாது தானே! வீட்டைமட்டுமன்றி, நாட்டையே காக்கவல்ல தொழிலகம் ஒன்று நமக்கு வாய்த்தும் அதனை நன்றாக முறையாக இயக்காமல் மூடிக்கிடக்கவும், முடங்கிக் கிடக்கவும் விட்டால் அத்தொழிலகமும், அத்தொழிலகப் பொறிகள் எல்லாமும் நகையாவா? கை கொட்டிச் சிரியாவா? உழவின் சிறப்பும் உலகப் பயன்பாடும் இவ்வாறெல்லாம் இருத்தலால்தான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று புகழ்ந்தார் வள்ளுவர் (1033) இவையெல்லாம் தொழில் வாழ்வுபற்றித் திருக்குறள் வழியே அறியப்படும் செய்திகளாம். வேறு சில சிதறல்கள் உண்டெனினும் அவைமேலே வரும் தரம் உறவு ப் பகுதிகளில் இடம்பெறும் ஆதலால் இவ்வளவில் அமைவோம். 2. திருக்குறளில் தொழில் தரம் தொழில் வாழ்வில் தரம் இன்றியமையாதது ஆகும். சரக்கு முறுக்கா சரக்காளர் முறுக்கா என்னும் பழமொழியே தொழில் வாழ்வில் தரம் வேண்டும் என்பதை எளிதில் புலப் படுத்திவிடும். நல்லமாடு உள்ளூரில் விலைபோகும் என்பதொரு பழமொழி. நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டியதில்லை. அப்பொருள் தரமே அதற்கு விளம்பரம் என்பதும் நாடறி செய்தியே. இதனால், விளம்பரம் வேண்டா என்பது கருத்தன்று. என்று விளம்பரம் செய்தாலும், தரமில்லாப் பொருள், தரமுள்ளதாகச் சொல்லிச் சொல்லி ஏமாற்றப் பட்டாலும், எல்லாரும் எந்நாளும் ஏமாற மாட்டார். ஆதலால், தரமே நிரந்தரம் ஆகும் என்பதாம். இனித் தரம் என்பதுதான் என்ன? எனப் பார்ப்போம். எது எந்தத் தகுதியில் இருக்க வேண்டுமோ அது, அந்தத் தகுதியில் இருக்குமாறு செய்யப்படுவதே தரம் ஆகும். தகுதி குறைந்தது தரம் குறைந்ததே! அதனால்தான் தரம், உயர்தரம், மேல்தரம் ஓங்குதரம், மீத்தரம், மேனி, வாசி எனவும், தாழ்தரம், கீழ்த்தரம், குறைதரம் எனவும், தரமேம்பாடு, தர உயர்வு, தரக்கேடு, தரக்குறை எனவும் பலப்பல படி நிலைகளில் மக்கள் வழக்கில் உள்ளனவாம். தரம் என்னும் தகுதி நடுவு நிலைமை என்னும் பொருளது அதற்குச் செப்பம் என்பதொரு பெயரும் உண்டு. நடுவுநிலை எண்ணமும், செப்பச் செயன்முறையும் அமைந்த ஒன்று தரமுடையதாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லையாம். தகுதி இன்னதெனக் கூறும் வள்ளுவர், தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் என்கிறார் (111). தகுதி எனப்படும் ஒன்று எப்பொழுது நல்லதாக இருக்கும் என்றால், அதன் பகுதிகள் அனைத்தும் உரிய உரிய வகையில் அமைந்து போற்றற்குரியதாக விளங்கும் நிலையில் என விளக்குகிறார். ஒன்றன் தரம் அதன் ஒவ்வொரு பகுதிக் கண்ணும் உள்ளது என்பது இதனால் விளங்கும். இச்சிறிய பகுதிதானே குறையுடையது; இருந்தால் இருந்து விட்டுப் போகின்றது; இதனால் கெட்டுப்போவது என்ன; இக்குறையைக் கண்டு கொள்ளவா போகின்றனர்- என்றெல்லாம் எண்ணிப் பொருள்தரம் குறையச் செய்வது தக்கோர் செயலாகாது. செய்நேர்த்தி என்பது ஒருதனித்தன்மை. சமையல் தொழிலிலோ செய்நேர்த்தி எவ்வளவு பாராட்டுக்கும் பயன் பாட்டுக்கும் உரியதாக விருந்துகளில் சிறப்புறுகின்றது! அந்நேர்த்தியில்லாமையால் உணவை வண்டி வண்டியாகக் குப்பையென அள்ளிப் போடுதல் நாம் காணாததா? வாங்கிய பொருட் குறையா அது! வாங்கிய பொருளை ஆக்கும் செய்நேர்த்திக் குறைதானே, முழுக்குறை ஆகிவிட்டது! உருளைக் கிழங்கையும் நாவில் வைக்க இயலாமல் செய்வார் இலரா? கருணைக் கிழங்கையும் வேண்டும் வேண்டும் என்று விரும்பிக் கேட்டு உண்ணச் செய்வார் இலரா? ஆதலால், செய்வார் செய்நேர்த்தியே செய்பொருள் நேர்த்தியாய் வாங்குவார் நெஞ்ச நிறைவாய்ச் சிறப்படை கின்றதாம். தரம் என்பது கவர்ச்சியன்று; அதனால், கவர்ச்சி இல்லாமையும் அன்று. அதற்குரிய அளவால் கவர்ச்சி வேண்டுவதே! போலிக் கவர்ச்சி பொழுதில் மாறும் கவர்ச்சி, ஏமாற்றும் கவர்ச்சி தரமான பொருளுக்கு வேண்டுவது இல்லை. தரமான பொருள் உரம் என்னும் வலுவுடையதாக இருக்க வேண்டும். அதன் விலைத்தரத்திற்கு ஏற்ற உழைப்புத் தரமும் பயன்பாட்டுத் தரமும் உடையதாக இருக்க வேண்டும். இதன் தரம் இத்தகையது என்று சொல்லாமல் அப்பொருளே தான் தரமுடையது என்பதைத்தானே சொல்லவல்ல தகுதியதாய் அமைதல் வேண்டும். தரம் அமைவதோடு அதன் விலையீடும் தக்கதே என்னும் அளவில் இருத்தல் வேண்டும். உருவாக்குவார், தாமே தமக்கு முழுநிறைவுடன் வாங்கிக் கொள்ளத் தக்கதே இவ்வுருவாக்கம் என்னும் நிறைவை உண்டாக்கி விட்டால், அப்பொருளின் தரம் தக்கதே என்பது உறுதியாம். இதனால்தான், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் (120) என நடுவு நிலைமை நிறைவாகக் குறித்தார் வள்ளுவர். தம்பொருள் வேறு பிறர்பொருள் வேறு என்றோ, தாம் கொள்ளும் பொருள்வேறு கொடுக்கும் பொருள் வேறு என்றோ மதிப்பு வேறுபாடு காட்டாமல் ஒப்ப மதித்து வாணிகம் செய்தலே பொருள் வாணிகமாவதுடன் அறவாணிகமும் ஆம் என்பது இதன் பொருளாகும். இதனைக் கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறைபடாது, பல்பண்டம் பகர்ந்து வீசும், தொல்கொண்டித் துவன்றிருக்கை என்று பட்டினப் பாலை பாடும். இவ்வுணர்வு ஒருவர்க்கு வந்துவிட்டால் உருவாக்கத் தரத்திலோ, பொருள் தரத்திலோ குறை நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. கண்ணில் காட்டுவது ஒரு பொருளாகவும், கட்டிவைப்பது ஒரு பொருளாகவும் அங்கு மாறா. அழகுப் பொருளைக் கையில்தந்து அழுகல் பொருளைப் பையில் போடுதல் ஏற்படாது. தரமான பொருளன்றித் தரங்குறைந்த பொருளை ஆங்குத் தாரார் என்னும் உறுதி, வாங்கும் வாடிக்கையாளர்க்கு உண்டாகி விட்டால், எவராலும் அவர் வாடிக்கையைத் தடுத்து விடமுடியாத உறுதியைத் தந்துவிடும். ஒரே ஒரு முறை தரங்குறைந்த பொருளைத் தலையில் கட்டிவிட்டால் போதும், அது அவர் வாடிக்கையைக் கெடுப்பதுடன் நாலுபேர் வாடிக்கை கெடவும் துணையாகும். பொய்யிற்கும் ஏமாற்றுக்கும் என்ன தண்டனை? என்றார் ஒருவர். அவரை எவரும் நம்பார்; அதுவே தண்டனை என்றார் மற்றொருவர். ஆதலால், தரத்தைக் காப்பாற்ற நினைவார் இது முதல் தரம் அன்று, இரண்டாம் தரம் என்று முத்திரை குத்தி அல்லது அடையாளம் செய்து தள்ளுபடி விலையில் விற்கின்றனர். இது முதல் தரம் இது இரண்டாம் தரம் இது மூன்றாந்தரம் என ஒரே பொருளைத் தரம் பிரித்துத் தனித்தனி விலையில் விற்கின்றனர். இதில் தரத்தைப் பற்றிய ஏமாற்று இல்லாமையால் குறையுடையது ஆகாதாம். திருக்குறள் பொருட்பாலில் பொருள் செயல் வகை என்பதோர் அதிகாரம் (76). அது, பொருள்தேடல், பொருள் சேர்த்தல், பொருள் ஈட்டல் என்பதாக இல்லாமல் பொருள் செயல் வகை என்று அமைந்திருப்பது சிந்திக்கத் தக்கதாம். அதே அதிகாரக் குறள் ஒன்று செய்க பொருளை என்றே ஏவுகின்றது (9). இன்னொரு குறள் ஒண்பொருள் காழ்ப்ப இயற்றல் என்கிறது(10). இவற்றால் வள்ளுவர் கொண்ட பொருளாக்கக் கருத்து வெளிப்பட விளங்கும். செய்க பொருளை என்பதன் வழியில் தலைநிற்கும் சப்பானிய நாடு உலக வல்லரசுகளையும் உரசிப் பார்க்கும் உயர்வில் நிற்றலும் உலகறி செய்தியேயாம். பொருளின் சிறப்பினைப் பலபட விரித்துக் கூறுகிறது இவ்வதிகாரம். பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் என்பது தலைநின்ற குறளாகும். பொருளின் தலைமை நிலையை இது வெளிப்படுத்துவதும் ஆகும். பொருள் என்பது அணையா விளக்கு என்றும் அருமை யாகக் கூறுகிறார். ஆனால், இத்தகு அருமையும் பெருமையும் உடையது என்பதற்காக அப் பொருளை எப்படியும் தேடலாமா? கூடாது என்று தெளிவிக்கிறது திருக்குறள். நாய் விற்று வந்த காசு குரைக்குமா? வேப்பங்காய் விற்று வந்த காசு கசக்குமா? என்பவை கேள்விப் பழமொழிகள். காசு குரைக்காது தான்! கசக்காது தான்! ஏமாற்றி வஞ்சஞ் செய்து வயிற்றில் அடித்துத் தேடிய காசு, தன் பொன் என்னும் பொருளை இழந்து, குற்றம் என்னும் பெயருக்கு உரியதேயாகிவிடும். செல்வம் சேர்த்தலை மட்டும் கூறாமல், சேர்க்கும் வழியும் நேர்வழியாக இருத்தல் வேண்டும் என்பது நேர்மைக்குறள் நெறி. ஆதலால், அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்றும், அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் என்றும் இப்பொருள் செயல் வகையிலேயே அறிவுறுத்தினார் (4,5) உழைப்புத்திறன், அறிவுத்திறன், ஆக்கத்திறன், மூலப் பொருள் திறன் ஆகிய பலதிறனும் அறிந்தும், வஞ்சம் கலப்பு ஏமாற்று போலி என்னும் பல தீமைகளுள் எதுவும் இல்லாதும் வந்த பொருளே அறமும் தரும் இன்பமும் தரும் என்பது முதற்பாட்டு. இரண்டாம் பாடல் பொருளாக்கம் என்றே அமைகின்றது. அதுபொருள் உருவாக்கம், பொருள் சேர்த்தல் என்னும் இருவகைக்கும் இயைந்து பொருந்தும் இரட்டுறல் (சிலேடை) அணி நயத்தில் அமைந்ததாகும். ஒரு பொருளாக்கம் அருளொடு கூடியதாகவும் அன்பொடும் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாப் பொருளாக்கத்தைத் தொடுதலும்-மனத்தால் எண்ணலும் கூட ஆகாது; தன்னை அது நெருங்காமல் தள்ளி விடுதல் வேண்டும் என்பது இரண்டாம் பாடற்பொருள். பொருளாக்கம் பொருள்தேடும் கருவியே ஆயினும், எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளியலுக்கு ஒத்ததாகவும் இருத்தல் வேண்டும். தன் உற்றார் உறவு அன்பு நட்பு வாடிக்கை என்னும் அன்பியலுக்குத் தக்கதாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார். இது பொருளியல் கொள்கையே கொள்கை யானவர் கொள்ளும் கொள்கையன்றாம். ஆதலால், வள்ளுவர் வாழ்வியல் அறம் பொருள் சேர்த்தலோடு, அப்பொருளைச் சேர்க்கும். நேரிய முறையில் சேர்க்கவும் வழிகாட்டுவதாம். எந்தக் குமுகாயத்தால் பொருள் ஈட்டப்பட்டதோ அந்தக் குமுகாயத்திற்கு அப்பொருள் ஒப்புரவு வகையால் கிடைக்கச் செய்வதே நற்செல்வம் எனப்படும். அது ஊருணி நீர்போலவும், பழமரம் போலவும், மருந்து மரம் போலவும் பொதநலப் பொருளாக விளங்கும் என்பார். அதற்கு மாறான செல்வம் நன்றியில் செல்வம் என்பார். அப் பெயராலேயே ஓர் அதிகாரமும் வகுத்தார் (101). அவ்வதிகாரக் குறள் ஒன்றில் நல்வழியில் வாராச் செல்வத்தைக் களவில் போய் ஒழியும் என்றே வருந்தியுரைக்கிறார். அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் என்பது அது (1009). அப்பொருள் அன்பற்றுத் தேடியது; உழைப்பவனும் துய்க்காது தன்னை அழித்துக் கொண்டு தேடியது; அறநெறி இது என்று எண்ணாதும் தேடியது; அப்பொருள் தேடியவனுக்கும் ஆகாமல் எவருக்கோ ஆகப்போகிறது என்று இரங்குகிறார். இங்கேயும் அன்பு அறம் ஆகிய வழி கடவாமல் தான் பொருளீட்டல் வேண்டும் என்று குறிப்பிடுவதை அறியலாம். நடுவு நிலை தவறாத உள்ளத்தனாக இருந்து அம்முறை மாறாத வகையிலே ஈட்டியவன் செல்வம் அவனுக்கே அன்றி அவன் வழிவழி வருவார்க்கும் அழியாப் பொருளாக இருந்து எவ்வெவ் வகைக்குப் பயன்பட வேண்டுமோ அவ்வவ் வகைக் கெல்லாம் பயன்படும் என நெறி காட்டுகிறார். செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (112) கெடுவழியால் வரும் பொருள் கூட நன்மை தருவதாக ஒருகால் தோன்றவும் கூடும். அப்படித் தோற்றம் தரினும் அது மெய்த் தோற்றம் ஆகாது. பிற்கேடு நேர்ந்தே தீரும். நன்மை என்று அது காட்டும் பொய்த் தோற்றத்திலே மயங்கி, அவ்வகையில் தேடுவதே வாழ்வாக்கிக் கொண்டால் பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது போல் அகப்பட்டே தீர்வான். அப்பொழுது பழியும் இழிவும் ஆவதுடன் தேடியவை அழியவும் ஆகும். ஆதலால், அத்தகைய பொருளீட்டல் வழியையும், ஈட்டல் பொருளையும் அப்பொழுதே விட்டொழிப்பாயாக என்கிறார். நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (113) வெஃகாமை என்பதோர் அதிகாரம். பிறர் பொருளை எவ்வெவ் வகைகளில் எல்லாம் கவர்ந்து கொள்ளலாம் என்று விரும்புவதே வெஃகுதல் ஆகும். அதில், வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் என்கிறார். நேரிய நெஞ்சத்தை யுடையவர், எப்படியேனும் பொருளைத் தேடிக் கொள்ளலாம் என்று எண்ணிப் பழியுண்டாகும் செயலைச் செய்யமாட்டார்; பின்னே, பலர் முன்னே நாணி நிற்கும் நிலைமை உண்டாகுமே என்று அஞ்சிச் செயல்படுவார் என்கிறார்: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (172) தரங்குறைந்த பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுதல், தரமுள்ள பொருளுக்குப் போலிப் பொருளாக்கம் புரிதல், தரமுள்ள பொருளுடன் தரமிலாப் பொருளைக் கலந்துவிடுதல் என்பன வெல்லாம் என்ன? படுபயன் வெஃகிப்பழிப்படுவ செய்தல் தானே! ஆதலால், அத்தன்மையில்லாரை அறவர் என்றும் அறிவர் என்றும் பாராட்டினார். அது, அறனறிந்து வெஃகா அறிவுடையார் என்பது (179). அவர்தம் அத்தன்மைகளே ஆக்கம் பலவற்றையும் தரும் என்றும் கூறினார். வெஃகாமை அறத்துப்பாலில் உள்ளது. பொருட்பாலில் உள்ள தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்தில், ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (463) என்கிறார். கருதுவது ஆக்கம்; செய்வது முதலையும் இழந்து போகும் செயல்; இதனை அறிவுடையவர் செய்வாரா? என்கிறார். நற்குடி இயல்பு பற்றிக் கூறுவது குடிமை அதில், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் என்றும் (954) சலம்பற்றிச் சால்பில செய்யார் என்றும் (956) அடுத்து வரும் மானத்தில், சீரினும் சீரல்ல செய்யாரே என்றும் (962) கூறுவன எண்ணத்தக்கனவாம். குன்றுவ (குறைந்தவை, குறையுடையவை) செய்யாமை, சால்பில் (தகுதிக் குறையுடையவை) செய்யாமை, சீரினும் சீர் அல்ல (சிறப்பினும் சிறப்பானவற்றைச்) செய்யாமை என்பவை பண்பாட்டு வகைக்கு உரியவையாகச் சொல்லப் படுவன, எனினும், உருவாக்க வகைக்கும் உரியவையேயாம். இவ்வாறே, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் (596) உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798) எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் (470) என்னும் அடிப்படைப் பண்பாட்டியல்குறிப்புகளும், பொருள் உருவாக்கத் தரக் கொள்கைக்குக் கொள்ளத் தக்கனவேயாம். ஆக்குபவை எல்லாம் உயர்தரத்தாக இருக்க ஆக்கல்; ஆக்குவனவற்றில் தரங்குன்றியவற்றை ஆக்கவேண்டும் என்னும் சிறுகிய எண்ணமும் வாராது இருத்தல்; செய்தார்க்கும் செய் பொருளுக்கும், செயற்களத்திற்கும் இழிவுவாரா வகைப்பட்ட உயர்தர உருவாக்கத்தைப் புரிதல் என்பனவெல்லாம் கொள்ள வைக்கும் கொள்கை விளக்கங்கள் இவை எனக் கொள்ளல் புத்தம் புதிய பொலிவுப் பார்வை ஆகும். ஒப்புரவு நெஞ்சும் உயர்நோக்கும் மேம்பட்ட செயற்பாடும் உடைய தக்ககோரை உலகம் ஒருபொழுதும் மறவாது. அவர்களைக் காலம்காலமாகப் பாராட்டுதலைக் கடமையாகக் கொள்ளும் என்னும் முகத்தால், நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு என்று உறுதி கூறுகிறார். (994) இனிப்பொருள்களுக்குத் தரப் பெறும் அடைமொழி களைக் கொண்டேயும் அதன் தரம் அறிய வாய்ப்பு உண்டு. அவ்வகையில் ஆன்ற பொருள், உறுபொருள், எண்பொருள், ஒண்பொருள், செம்பொருள், நற்பொருள், நுண்பொருள், பெரும்பொருள், மெய்ப்பொருள், வான் பொருள் என வருவனவற்றை எண்ணுக. தரம் காண்டலில் அளவு என்பது இன்றியமையாதது. அளவறிந்தார். அளவென்னும் ஆற்றல் புரிந்தார். அளவின்கண் நின்று ஒழுகுவார் என ஓரிடத்திலேயே தொடர்ந்து கூறுவார் (286-88) அளக்குங்கோல், நீட்டியளக்குங்கோல் என்றும் (710, 796) சமன் செய்து சீர்தூக்குங்கோல் (118) என்றும் அளவைகளைக் குறிப்பிடுவார். சமன் செய்து சீர்தூக்கும் கோலை நயன்மை எனப்படும் நடுவு நிலைக்கு எடுத்துக் காட்டாகச் சுட்டியமை இற்றை முறைமன்ற அடையாளத்தொடும் எண்ணிப் பார்த்து மகிழத்தக்கதாம். தங்கத்தின் மாற்றுக் காணற்கு உரைகல் இருத்தலையும், உரையாணி இருத்தலையும் ஆணிப்பொன், ஆணிமுத்து என்னும் வழக்குண்மையையும் அறிவோம். வள்ளுவர் பொன்னை உரை காணற்காம் கட்டளைக் கல்லை உரைக்கிறார். மாற்றுக் குறை நிறைகள் காணப்பட்டமை கட்டளைக் கல் கொண்டு தெளியலாம். ஆணிப்பொன் என்பதும் ஆணிமுத்து என்பதும் தரமிக்கவை என அரசு முத்திரை பெற்றவையாம். கட்டளைக் கல் குறிப்பால் அவற்றையும் நாம் கருதிக் கொள்ள இடமுள்ளதாம். பதடி என்பது பதர். மணியென்னும் உள்ளீடு இல்லாத நெல்லே பதராகும். ஆதலால் தவசத்தை உலர்த்தித் தூற்றித் தரப் படுத்திய செய்தி அறியலாம். கருக்காய் என்பதும் குறைதரம் சுட்டுவதே (1306) காழில் கனி என்பது உயர்தரம் உரைப்பதாம் (1191). அந்நெல்லை வைக்கும் வகையில் வைத்துப் போற்றினர் என்பதுவைப்புழி என்பதால் விளங்கும் (226). பொன்னைப் பொதிந்து வைத்தலும் புகலப்படுகின்றது (155). காப்பு, காவல், காத்தோம்பல், ஏமம், அரண் என்ப வற்றாலும் ஈட்டலும் காத்தலும் என்பவற்றாலும் உருவாக்கமும் விளை வாக்கமும் கெடாவகையில் போற்றிய சீர்மையை அறியலாம். முன்னுறக் காத்தல், வருமுன்னர்க்காத்தல், எதிரதாக் காத்தல், ஆவதறிதல் என்பனவும் காவலே. தூய்மை, மாசின்மை, புரைதீர்ந்தது என்பவை தரமேம்படுகைச் சான்றுகளாம். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி என்பதில் துய்ப்பு, துப்பு, தூய்மை, வலிமை என்பன பலவும் அடங்கிக் கிடக்கும் அருமை வியப்புக்குரியதாம். மழை நீரின் சிறப்பை, வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று என்று அமிழ்தமாகக் கூறும் அருமையை உணர்ந்தால் நீரின் தரம் போற்றப்படும். சிறப்பு மதிக்கப்படும். நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின் என்பதை உணர்ந்தால் மழைவளம் குறைவுறாது இருக்கவும், நிலத்தடி நீர் சுருங்காமல் இருக்கவும் மூலமாம் காடுகளை அழியாமல் காப்போம்! அழித்தவற்றுக்கு ஈடாக நட்டு வளர்ப்போம். அந்நிலையில், வள்ளுவர் கூறுமாறு, மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் எனச் சிறந்து விளங்கும். நீரும் மாசின்றி மணி நீராகத் திகழ, மண்வளம் கொழிக்க, மலைவளம் சிறக்க, அணிநிழற் காட்டால் மழைவளம் சிறக்க நாடு நலங் கொழிக்கும். அந்நிலையில் நாடென்ப நாடா வளத்தன என்னும் நாட்டின் இலக்கணம் அமைந்த நாடே, தரமிக்க நாடாக உலகு பாராட்ட விளங்கும். இனித் தொழில் உறவு பற்றிக் காணலாம். 3. திருக்குறளில் தொழில் உறவு உறுதல் (அடைதல், பொருந்துதல்) என்பதன் வழியாக வந்த சொல் உறவு ஆகும். தொழில் உறவு மிக விரிவுடையதாகும். கல்வி நிலை, தொழிற் பயிற்சி நிலை, தொழில்நிலை, தொழில் மேலாண்மை நிலை, தொழிற் பயிற்று நிலை என்னும் ஐவகையில் தொழில் உறவு அமையும். மேலும் நிறுவன மேலாண்மைநிலை, அலுவல்நிலை, வாடிக்கையாளர் நிலை, வாணிகர் நிலை, பொதுமக்கள் நிலை என ஐவகை உறவாகவும் விரியும். இவ்வுறவுகள் யாவும் இனியவையாய் இயன்றால் அத் தொழிலகம் இன்ப நிலைக்களம் ஆகிவிடும். இவற்றுள் ஓர் ஒன்று குறைபடினும் அவ்வளவால் துன்பமும் சிக்கலும் அமையவும் வளரவும் நேரும். உறவுக்கேடு ஒள்றிரண்டாய் விரியின் தொழில் முற்றாகக் கெடவும் வழியாம். ஆதலால், இப்பகுதிகளுள் எதுவும் விலக்கப் பெறாமல் போற்றப்பட்டு வருதல் தொழிற் சீர்மையாம். அன்பு என்பது ஓர் உயர்பண்பு. உள்ளத்தளவில் அமைந்த அன்பு உலகாக விரியும் பெருமையது. அது சேர்ந்த இடத்தையும் சேர்ந்தவரையும் பிரிவறியாப் பெருநிலைக்கு ஆளாக்குவது. அதனால் அன்பின் வழியது உயிர்நிலை என்றார் திருவள்ளுவர். அவ் அன்பர் இயல்பைஎன்பும் உரியர் பிறர்க்கு என்றும் உரைத்தார். அவ் அன்பே ஆர்வத்தைத் தரும் எனவும் அதுவே அகலா நட்பை-உறவை-ஆக்கும் எனவும் அவர் உரைத்தார். அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்பது அது. அன்பு உடையவர் ஒத்தது அறிவார். ஒத்தது அறிதல் என்பது தமக்கு ஒத்தது எதுவோ அதுவே பிறர்க்கும் ஒத்தது என உணர்ந்தும், சொல்லியும், செய்தும் ஒருவரோடு ஒருவராய் வாழும் நிலை ஆகும். பிறர் சொல்லும் இனிய சொல் நமக்கு உவப்பாக உள்ளது. அவர் சொல்லும் வன்சொல் கேட்கப் பொறுக்காததாகவும், மாறாத வடுவாகவும் உள்ளது. அவ்வாறு இருத்தலை அறிபவன் பிறரிடம் வன்சொல் வறுவது என்ன தன்மையோ என்கிறார் வள்ளுவர். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது (99) இன்னும் இன்னா செய்யாமை அதிகாரத்தில் இதனை நன்கு விளக்கிக் கூறுகிறார். தீமையானது என்று நீ உணர்ந்ததை, நீ பிறனுக்குச் செய்யலாமா? என்றும், தனக்குத் தீமையானது என்பதை அறிபவன் பிறர்க்கு எப்படித் தான் தீமை செய்கின்றானோ என்றும் கூறுகிறார். இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (316) தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) என்பவை அவை. நினைவு, சொல், செயல் என்னும் மூன்றும் ஒத்துச் செல்வான் ஒருவன் உளனாயின் அவன். அவன் வாழும் பரப்பும் சூழலும் கடந்து, உலகோர் உள்ளத்தில் எல்லாம் உறைபவனாகத் திகழ முடியும் என்கிறார். அது, உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பது. அவன் உலகோர் நெஞ்சில் இருப்பவன் மட்டும் அல்லன். அவன் நினைப்பவற்றை எல்லாம் உலகம் ஏற்றுக்கொண்டு அவன் சொல்வழியில் செல்லும் என்றும் கூறுகிறார். விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்பது எது. சொல்வானும் கேட்பானும் ஏற்றத் தாழ்வில்லாமல் நிரந்த நிலையில் இருத்தல், சொல்வான் இனிது சொல்லுதல், சொல்லும் வகையால் சொல்லுதல் என்பவற்றைக் கொண்டால் உலகம் ஏற்று உவப்புடன் அதனை முடிக்கும் என்பது இதன் விளக்கமாம். ஓர் ஆசிரியர் சினத்தால் ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியேறச் சொன்னார். நான் பணம் கட்டிப் படிக்கிறேன்; உங்கள் வகுப்புக்குப் பின்னரும் வகுப்பு உண்டு. அவ்வகுப்பில் நான் படிக்கவேண்டும். உங்கள் வகுப்பை விட்டு வேண்டுமானால் வெளியே போய் விடுகிறேன். பள்ளியை விட்டுப் போக மாட்டேன் என்றான் மாணவன். நீ மாணவன் போல் நடந்து கொள்ளவில்லை என்றார் ஆசிரியர் நீங்கள் எப்பொழுது ஆசிரியர் போல் நடந்து கொள்ள வில்லையோ, அப்பொழுது நான் மாணவன்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றான் மாணவன். அந்நிலையில் இன்னோர் ஆசிரியர் அம்மாணவனிடம். நீ அவர் சொல்லியபடி நட என்றார். அவன், பள்ளியை விட்டுப் போக நடந்தான். அவ்வளவில் சினந்து வெளியேறச் சொன்ன ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு, நான் சொன்ன போது மறுத்தாய்; இவர் சொன்னவுடன் கேட்டுக் கொண்டாயே என்றார். அம் மாணவன் அவர் என் பெற்றோரினும் என்மேல் அக்கறை கொண்ட ஆசிரியர்; அவர் வெளியே போ என்று சொல்லாமல் கிணற்றில் விழு என்றாலும் விழுவேன். ஏனெனில், அதனால் எனக்கு நன்மை கருதியே சொல்கிறார் என்ற நம்பிக்கை உண்டு என்றான். இந்நிகழ்ச்சி மெய்யாக நிகழ்ந்ததே! இதனை உணர்ந்தால் இதனுள்ளாக இழையோடும் உண்மைகள் எளிதில் விளக்கமாகும். அதிகாரத்திறனும் அன்பும், வன் சொல்லினும் இன் சொல்லும், மிகுந்த ஆற்றல் உடையவை என்பது உள்ளங்கைத் தேங்காயாய் வெள்ளென விளங்கும். சுற்றந்தழால் என்பதோர் அதிகாரம். அது சுற்றத்தினரைத் தழுவிக் கொள்ளுதல் என்னும் பொருளதாம். அது, தொழில் சுற்றத்தார்க்கும், அலுவல் சுற்றத்தார்க்கும் பொருந்தியதே ஆகும். ஒருவன், ஒன்றன் தலைமையைப் பெற்றிருந்தால் அவன் அப்பேற்றைப் பெற்ற பயன், அவன் தலைமைக்கு உட்பட்ட சுற்றத்தார் அனைவரும் அவனைச் சுற்றியும் சூழ்ந்தும் இருக்கும் வகையில் வேறுபாடற்ற ஒருநிலையில் விளங்குவதேயாகும் என்கிறார் திருவள்ளுவர். அது, சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்பது. விருப்பம் நீங்காத சுற்றம் அப்படிச் சூழ்ந்திருக்கப் பெற்றால், எவ்வகையாலும் நீங்காத நன்மைகள் எல்லாம் உண்டாம் என்கிறார். சுற்றத்தால் சூழ இருப்பவனுக்கு இன்றியமையாத் தன்மைகள் இரண்டனையும் வகுத்துக் கூறுகிறார் வள்ளுவர். அவை, அவ்வளாவுதல், வரிசை அறிதல் என்பன. தரமேம்பாட்டுக்கு அளவு கட்டாயத் தேவை. அதுபோல் உறவு மேம்பாட்டுக்கு அளவளாவுதல் கட்டாயத் தேவை. அளவளாவிக் கலந்து உரையாடும் வழக்கத்தை ஒருவர் கொண்டால் பெரும்பாலான சிக்கல்கள் தலைகாட்டவே காட்டா. உள்ள இறுக்கமும், தனித்து நிற்கும் ஒதுக்கமும், காரணமின்றித் தோன்றும் சினமும், சிலச்சில கரவுகளுமே உயிரன்ன உரிமை உறவுகளையும் கெடுத்து விடுகின்றன. அளவளாவுதல் மேலையரால் மிக உயர்வாகப் போற்றப் படுகின்றது. அலுவலகத்தில் இருக்கும் போதுதான், அலுவலர்; தொழிலில் இருக்கும் போதுதான், தொழிலர்; மற்றைப் பொழுதுகளில் தோழர், தொண்டர், ஒத்த ஆட்டக்காரர், உழுவலன்பர் என்னும் நிலையர். ஒருவர் அலுவலர் என்றால் எப்பொழுதும் எவரிடமுமா அவ்வலுவலர்? மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் உறவினர் நட்பர் அன்பர் என்பார் முன்னரும் அதே அலுவலர்தாமா? நிலைக்குத் தக மாறி நேயம் செலுத்தவல்லாரே, நிலையில் உயர்ந்து விளங்குபவர் ஆவார். அளவளாவுதலில் ஒத்த நிலையராக இருப்பவர், வரிசையறிதலில் மிகவிழிப்பாக இருத்தல் வேண்டும். சிறந்த மூளையர், கடிய உழைப்பர், காலந்தவறாதவர், கடமையே கண்ணானவர் என்பாரையும்; பொறுப்பிலார், விருப்பிலார், சோம்பர், முரணர் என்பாரையும் ஒத்த இயல்பராக எண்ணியும் நடத்தியும் தகுதியறியாதும் தரமும், திறமும், போற்றாதும் தலைமை இருக்குமானால், இங்கே உழைப் பார்க்கும் - கடன் கழிப்பார்க்கும் வேறுபாடு இல்லை; ஆதலால், நாம் பொறுப்பாக உழைத்து என்னபயன் கண்டோம்? என்று எண்ணி உழைத்தவரும் உழையாமல் ஒழிதற்கே இடமாகிவிடும். ஆதலால், வரிசையறிதலும், பாராட்டலும், பரிசு வழங்குதலும்இன்றியமையாதவையாம். எனவே, பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் என்கிறார். அந்நாள் ஆட்சித் தலைமையர் அளவாளவுதல், வரிசை யறிதல் என்பவற்றைக் கண்ணாகக் கருதினர் என்பது புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றால் நன்கு விளங்குகின்றன. வேந்தர் நிலையில் செம்மமாந்து நின்றாரும் அளவளாவு தலில் தலை நின்றனர் என்பது பெருஞ்சோற்று உடனிலை என்னும் புறந்துறையால் புலப்படும். படைவீரர் ஒவ்வொரு வர்க்கும் தாமே முன்னின்று படைப்பதுடன், தாமே படைத்தும் தழுவி இன்புற்றும் பாராட்டியும் செய்த பெருநிகழ்ச்சியே பெருஞ் சோற்று உடனிலையாகும். அவ்வகையில் பாராட்டுப் பெற்ற படைஞர், தம் வேந்தரின் நன்றிக் கடனாகத் தம் அரிய உயிரையும் படையலிடும் நெறியைக் கொண்டமை ஆங்காங்கு அறியக் கிடக்கின்றன. இதனால் உள்ளொத்த உறவுக்கு அளவளாவுதல் கட்டாயம் வேண்டும் என்பதாலேயே, அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று என்றார் வள்ளுவர். கரை இல்லாக் குளத்திற்கு நீர் வந்து என்ன, வராது போயின் என்ன? நீர்தான் நில்லாதே! அளவளாவுதல் இல்லானிடமும் எவரும் நில்லார் என்பதைக் குறித்தார். சங்கப் புலவர் ஒருவர் வேந்தன் ஒருவனை நோக்கி, வரிசை அறிதலோ அரிதே! அது நன்கு அறிந்தனை என்றால் புலமையாளிகளிடத்தில் பொதுப் பார்வை பார்த்தலை விட்டொழி என்றார். புலமை திறமை என்பவற்றை மதிப்பீடு செய்யுங்கால் அவரவர் நிலைமை மதிப்பிடப்பட்டுச் சிறப்பித்தல் வேண்டுமேயன்றி, அனைவரையும் ஒத்த பொதுப் பார்வையால் பார்த்தல் ஆகாது. அப்படி இருந்தால் தேர்வு எதற்கு? மதிப்பெண் எதற்கு? தேர்ச்சி எதற்கு? போட்டிகள் எதற்கு? விருதுகளும் வெற்றிப்பாடுகளும் எதற்கெனப் போகிவிடும்! பொதுமாந்த நேயம் வேறு; புலமைத் தரமும் திறமும் வேறு எனப் பிரித்து நோக்கும் நோக்கு வேண்டும் என்பதாம். பொது வாழ்வில், கண்ணோட்டம் என்பதொரு தன்மை இல்லாமல் கடனாற்றல் கூடாது. இல்லாமல் கடனாற்றின் எண்ணாத விளைவுகளெல்லாம் உண்டாதல் உண்டு. கைத்தவறு நிகழலாம்; காலத் தாழ்வு நேரலாம்; எதிர் பாராச் சிக்கல் உண்டாகலாம்; குடும்பத் தொல்லை உள்ளே அரிப்பாக இருக்கலாம்; மனங்கலந்து பேசும் இயல்பில்லாத வராய், தம்மொடுக்க முடியவராய், பிறரொருவரால் தூண்டப் பட்டவராய், சிறுசினத்தராய் ஒருவர் இருக்கலாம். உலகம் இத்தகையவர்களை இல்லாமல் இல்லையே. நம்மொடும் இத்தகையவர் இல்லாமல் இல்லையே. நம்மொடும் இத்தகையவர் இல்லாமல் இருப்பர் எனச் சொல்லவும் இயலாதே! இந்நிலையில் அவரவர் நிலைக்கு உருகியும் அமைந்தும் கண்ணோட்டத் தோடு - தாட்சணியத்தோடு - நடந்து கொள்ளல் தலைமைக்குத் தனிச்சிறப்பாகும். அதனால் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை என்று பாராட்டுகிறார். கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலவர் என்று நொந்து கூறுகிறார். கண்ணோடு இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோடு இருந்து நகராத மரத்திற்கு ஒப்பானவர் எனப் பழிக்கிறார். ஆனால், இக் கண்ணோட்டத்தால் தொழிலுக்கோ, துறைக்கோ குறை வருமாறு ஆகி விடக் கூடாது என்றும் எச்சரிக்கிறார். ஆதலால், கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு என்கிறார். கருமம் சிதையாமல் என்றதைக் கருதுக. உறவு, நட்பு, அன்பு, நன்றியறிதல் என்னும் பற்றுமை காரணமாகத் தகுதியில்லாத ஒருவர்க்குத் தகுதியாம் பதவியோ- பொறுப்போ - தலைமையோ - கண்காணிப்போ மேலாண்மையோ தந்துவிடுதல் ஆகாது. அவ்வாறு தந்து விடின், அதுவே அறிவறியாத் தீமைகளுக் கெல்லாம் இடமாகிவிடும் என்றும் திருவள்ளுவர் எச்சரிக்கிறார். இவ்வெச்சரிப்பைப் போற்றாமையால் பற்று, பாசம் எனக் கொண்டு எத்தனை எத்தனை பெரிய நிறுவனங்களும், தொழிலகங்களும், அமைப்புகளும், கட்சிகளும் பாழ்பட்டுள்ளன என்றும் பாழ்பட்டு வருகின்றன என்றும் அறிவார் இதனை எளிமையாகக் கொள்ளமாட்டார். தான் வளர்த்த கள்ளியே எனினும் அழிக்க விரும்பாமையைச் சங்கப் பாடல் தெரிவிக்கும். அவ்வாறாகவும் அரும்பாடுபட்டுக் காலம் காலமாகப் பலரும் வளர்த்த ஒன்றைச் சுருங்கிய பற்று பாசங்களால் கெடுத்தல் இரங்கத் தக்கதாம். காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் (507) காதன்மை - பற்றுதல் தன்மை; கந்து - காரணம். இன்னுமோர் எச்சரிக்கையையும் தருகிறார். அது நம்பக் கூடியவர் தாமா என்று ஆராயாமல் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பத்தக்கவர் இவர் என்று ஆராய்ந்து தெளிந்தவர்மேல் நம்பிக்கை இல்லாமல் ஒழிவதும் ஆகிய இவை இரண்டுமே நீங்காத் தீமை தருவனவாம் என்கிறார். தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்பது அது. பின்னே உண்டாகும் உறவுக்கேட்டை ஒழித்தற்குத் தரப்பட்ட முன்னெச்சரிக்கை ஈதாம். இவை தெரிந்து தெளிதல் சார்ந்த செய்திகள். இனித் தெரிந்து வினையாடல் செய்திகள் சிலவும் உறவு நிலைசிறக்க உதவுவனவாம். இச்செயலை இத்தன்மையால் இவன் நிறைவேற்றுவான் என்றுதெளிவு செய்து அச்செயலை அவன் பொறுப்பில் விடுதல் வேண்டும் என்று கூறுகிறார். ஒருவன் பலரும் அறிந்த புகழாளனாகவும் பாராட்டும் இயல்பினனாகவும் இருக்கலாம். ஆயினும் அவன் அறிவறிந்த செயல் திறமையோ, குறைவற முடிக்கும் உறுதியோ உடையவனாக இருக்கமாட்டான். அவன் புகழ்நிலை கருதிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஆகாது என்றும் கூறுகிறார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (517) அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என் றேவற்பாற் றன்று (515) என்பவை அவை. ஒரு செயலைச் செய்தலில் வல்லான் ஒரவன்; அவனினும் செயல் திறம் மிக்கான் இன்னொருவன்; இத்திறமிக்கார் ஒரு நிறுவத்தின் வைப்பு நிதியம் அனையவர். இவர்கள் நெருக்கமும், அளவளாவலும் அத்திறத்தைக் கல்விக்கு இருவர் என்பது போல் மேலும்மேலும் கவின்பெறச் செய்யும். ஆனால் அவர்கள் தம்முள் வேறுபட்டு நிற்றலோ, தலைமையோடு ஒத்தும் ஒவ்வாதும் நிற்றலோ அந்நிறுவன வளமாகவும், வாய்ப்பாகவும் அமையாமல் ஒழியும். ஆதலால், தலைமை விழிப்பாக இருந்து செயலாற்ற வேண்டும் என்கிறார். வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு (519) என்பது அது. ஒவ்வொரு நாளும் தொழில் செய்வாரைக் கண்காணித்தலும் அவர்கட்கு வேண்டுவனவற்றைத் தாமே கருதிப் பார்த்துச் செய்தலும், எப்பொழுதெனினும் காணுதற்கு எளிய வாய்ப்பும், எதனைக் கூறுதற்கும் திறந்த செவியும் உடையவராகத் தலைமை இருப்பின் அவர்கள் மனங்கோணாது செயலாற்றுவர். அவர்கள் மனக்கோணல் கொண்டால் அக்கோணல், உலகின் கோணலாய் அமையும் என்றும் தெரிந்து வினையாட ஏவுகிறார். நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு (520) இதில் மன்னன் என்பதைத் தலைவன் எனக் கொள்ளலாமே! தலைமைக்குரிய தகவில் எல்லாம் தகவானது தம்குற்றம் இல்லாமல் இருத்தல், இருப்பதை உள்ளகம் அறியின் வெளியகமும் அறியும் என உணர்தல்; தலைமைக் குற்றம், அத்தலைமைப் பதவியோடு எண்ணப்படின், அத்தலைமை உயர்வு மலைபோன்றது எனினும் தலையின் இழிந்த மயிரெனக் கொள்ளப்படுதல்; தலைமையிடம் உள்ளகுறை தொழிலரிடம் இருப்பினும் கூட அவர்களும் அத்தலைமைக்கு அக்குணம் ஆகாது என்று பழித்தல் என்பனவெல்லாம் வள்ளுவரால் எண்ணப்படுகின்றன. அதனால், தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு (436) என்றும், எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு (470) என்றும் குறித்தார். தனிவாழ்வில் சிக்கனம் நன்றே; ஆனால் கருமித்தனம் ஆகவே ஆகாது. அது குடும்பவாழ்விலேயும் வெறுப்பையே தரும்; அது பொது வாழ்வில் இருப்பின், வெளிப்படத் தூற்றவே படும். ஆதலால், அத்தன்மையை அகற்றல் அல்லது இல்லாது இருத்தல் வேண்டும். மானம், போற்றத் தக்கதுதான். ஆனால் குடிமானம் காக்கத் தன்மானத் துறப்பும் கொள்ளல் வேண்டும் என்பது வள்ளுவம். அஃது இல்லாமையால் எத்தனையோ குடிகள் கெட்டுள்ளன, கெட்டு வருகின்றன. அந்த மானத்தைப் போற்றுவார், தாம் போற்றும் மானம் பிறருக்கும் உரியதே; தமக்குமட்டும் உரியது ஆகாது என்று கருதவேண்டும். அவ்வாறு கருதாமல் தமக்கே உரியதாகக் கருதும் மானம் மாண்பு இறந்த மானம் ஆகும்; அதுவும் தலைமைக்குக் கேடாம். மகிழ்வு கொள்ளலிலும் அளவு உண்டு; முறையுண்டு; வகையுண்டு. சிலமகிழ்வுகள் பிறருக்கு அருவறுப்பானவை. அவற்றைத் தலைமை கொண்டிருத்தல் கூடவே கூடாது. மணிபிடித்து முற்றிய கதிர் தலைதாழும்; பதவி உயர்வு வரவரப் பண்புநலமும் சிறக்க வேண்டும்; பணிவிலாப் பண்பு பண்பாகாது; பணிவிலாப் பணியும் பணியாகாது. ஆதலால் தலைமையர் தம்மை வியந்து செருக்குதலும், தருக்குதலும் ஆகா. நேருக்கு நேர் பழிக்கப் படாவிடினும் நாளாவழியில் தலைக்கனம் மண்டைக்கனம் என்னும் பழிப்புக்கே ஆளாக்கும். தனக்குள்ள தனிவிருப்பு வெறுப்புகளைத் தலைமை பிறர் அறியக் காட்டிக் கொள்ளல் ஆகாது. காட்டிக் கொண்டால் அதனாலேயே அழிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனைக் கட்டிக் காத்தால் கெட்டுப்போதல் இல்லை. இன்னவற்றை யெல்லாம் தொழில் தலைமையர்க்கு எடுத்துக் கூறுகிறார் வள்ளுவர்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு (432) வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை (439) காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (440) நல்ல அறிவுக் கூர்ப்பு; செயல் திறமை; கட்டுத்திட்டம்; ஒழுக்க மேம்பாடு இவ்வெல்லாவற்றையும் உடையவராக இருப்பினும் அவர் தாம் தனிமரமாக நிற்றல் ஆகாது. தக்கவர் சிலரைத் தெரிந்து தேர்ந்து ஒட்டுறவாக இருத்தல் வேண்டும். நல்ல கருத்தே எனினும் நான்குபேர் அறிய அவர்கள் கருத்தும் இணைய எடுக்கும் முடிவாகவே இருப்பின் ஆங்குப் பொதுவுறவு திகழும். அவரவர்க்கும் ஒப்பும் கருத்தாகக் கொண்டு ஒன்றுபட்டுச் செயலாற்ற உதவும் அதனால், முதலிவார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை (449) என்றும், தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் (446) என்றும் கூறினார். சார்பும் கொண்டு, தக்காரும் அமைந்து, செயல்படும் வகையையும வள்ளுவர் தெளிவிக்கிறார்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் (461) தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (462) என்பவை அவை. ஆகும் செலவு, வரும் வரவு, தொடர்ந்து வாய்க்கும் ஆக்கம் என்பவற்றையெல்லாம் எண்ணிச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு எண்ணுதலும், அவற்றில் பழுத்த திறமும், பட்டறிவும் வாய்ந்தவர்களோடு எண்ணவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். சிலர் திறமாக எண்ணுவர்; தாமே எண்ணுவதுடன் தக்காரைக் கலந்து அவர்களோடு எண்ணுவர்; எனினும் என்ன! அதன்படி திறமாகச் செய்து முடிக்க மாட்டார். அத்தகையர் தலைமை பெருமை தாராது என்றும் சுட்டுகிறார். முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் (640) என்பது அது. தலைமைக்குக் கண்டிக்கவும் தண்டிக்கவும் நேரும் பொறுப்புகளும் உண்டே. அந்நிலையிலே எப்படி நடந்து கொள்ளுதல் வேண்டும். தக்க வகையில் ஆராய்தல்; ஒருசார்பில்லா நடுவு நிலையில் இருந்து நடவடிக்கை எடுத்தல் ஆகியவை வேண்டும் (561) தண்டிக்க வேண்டும் நிலையிலும் பெரிதாகக் காட்டிச் சிறிதாகத் தண்டனை இருக்குமாறு செய்தல் வேண்டும் (562) பொறுத்துக் கொள்ளும் நிலைமையைப் போற்றினால், பின்விளைவு தீதாம் என்னும் நிலைமை உண்டாகு மானால் தான் தண்டித்தலைக் கொள்ளலாம் (579) கடுஞ்சொல்லோ, அளவுக்கு மிஞ்சிய தண்டனையோ தலைமைப் பெருமையைத் தகர்க்கும் என்றெல்லாம் குறிப்பிடுகிறார். (566) தொழிலாளர் உறவு, தலைமைத் தகுதி, என்பவற்றைக் கண்ட நாம் பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவையும் எண்ணுதல் வேண்டும். பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர் என்பார் நம்மால் மதிக்கப்பட்ட வேண்டியவர். அவர் வாடிக்கையே நம் தொழிலும், உருவாக்கமும், வாணிகமும் ஆம். ஆதலால், அவரை நிறைவு செய்யாமல் நம் தொழில் வாழ்வு நிறைவு வாழ்வோ, வெற்றி வாழ்வோ ஆகாது. அதனால் அவர் உள்ளக் கிடக்கை அறிந்து, அவர் உவப்புறும் வகையில் நம் செயற்பாடுகள் இருத்தல் வேண்டும். அதற்கெனப் போலிமை வேண்டுவதில்லை. வாய்மை விளங்க வேண்டும். கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்வேண்டும் என்பதைத் தனிச் சிறப்பியல் கலையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதனையும் தனி வாழ்வுக் கெனவும் பொதுவாழ்வுக் கெனவும் இரண்டாகப் பகுத்து வைக்கிறார். பொருட்பாலில் உள்ள குறிப்பறிதல் பொதுப் பார்வைக்குரியது. இன்பத்துப் பாலில் உள்ள குறிப்பறிதல் குடும்பப் பார்வைக்குரியது. குறிப்புணர்ந்து கடனாற்றும் வன்மை எவர்க்கு உண்டோ, அவர்க்கு வெற்றியும் புகழும் கட்டாயம் உண்டு. அவர் திறமே தெய்வத்திறம் என்றும் கூறுகிறார் வள்ளுவர். வாடிக்கையாளரைப் பற்றிக் காந்தியடிகள் கூறும் கருத்தைக் கருதலாம். வாடிக்கையாளர் என்பவர் நம் இடத்திற்கு வரும் முதன்மையான ஒருவர். அவர, நம்மை நம்பியில்லை; நாம், அவரே நம்பியுள்ளோம். நம் வேலையில் அவர் குறுக்கிட வில்லை; நம் வேலைக்கு மூலமானவர்; அவர் நம் வணிகத்திற்கு அயலார் அல்லர்; அவர் அதன் உறுப்பு; அவருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்யவில்லை; சேவை செய்ய நமக்கொரு வாய்ப்பை அளித்தன்மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார் என்று கூறுகிறார். வள்ளல் அழகப்பர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். விளையாட்டுப் பொருள்கள் விற்பனையகம் ஒன்றில் புகுந்து, பூப்பந்தாட்ட மட்டை ஒன்றை வாங்கினார். அதனை மறுநாள் ஆட்டத்திற்கு எடுத்தபோது கீறல் இருப்பதைஅறிந்தார். அதனால் அக்கடைக்குச் சென்று அதனை மாற்றித்தரக் கேட்டார். கடை உரிமையாளர் தம் குறையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடினார். அலுவல் ஊழியரை அழைத்துச் சரியாகப் பாராமல் தந்ததால் ஒரு பெருமகனார்க்கு எவ்வளவு வீண் தொல்லையைத் தந்துவிட்டாய் என்று கூறினார். அவர் குறையில்லை; நான் பார்த்து வாங்கத் தவறிவிட்டேன் என்றார் அழகப்பர். இல்லை! இல்லை! நீங்கள் பார்த்து வாங்க வேண்டும் என்ற நிலை எங்கள் நிறுவனத்திற்கு ஆகாது. நாங்கள்தாம் பார்த்து அதை வாங்கியிருக்க வேண்டும்; பார்த்துத் தந்திருக்கவும் வேண்டும்; இல்லாவிட்டால் எங்கள் பொறுப்புப் பொறுப்பாகாது; தங்களைப் போன்ற பெருமக்கள் வாடிக்கையை இழக்கவே நேரும் என்று தங்கள் வணிக நிலையக் குறையாகவே கூறினார். தங்கள் தவற்றுக்குத் தண்டனையாக, ஆங்கு வந்து சென்றதற்காம் வண்டிச் செலவு தருதல் தங்கள் பொறுப்பே என்று முனைந்தார். அவர்கள் வணிகச் சீர்மை அழகப்பரைத் தீராவாடிக்கையர் ஆக்கி விட்டதல்லவா! புதியவராக ஒருவர் வருகிறார் என்றால் அவரை விருந்தர் என்பது நம் பழைய வழக்கம். விருந்தரை வயப்படுத்த வல்ல கருவியாக இருப்பதில் தலையாயது புன்முறுவல். பூ செய்யாத நறுமையையும் புன்முறுவல் செய்துவிடும். முகமலர்ந்து இன்சொல் கூறும் எவரும் தம்மைக் காணவருவாரை வயப்படுத்தி என்றும் தம்மவராக்கிக் கொள்வார்... அது பொதுவாக நலம் சேர்ப்பதினும் வாணிகத்தில் நலம் சேர்க்கும் வகை பெரிதாம். திருவள்ளுவர் முகமலர்ந்து இன்சொல் கூறுவதுஅக மலர்ந்து விருந்தோம்புதலினும் சிறந்ததாகக் கூறுவார். (92) நகுதல் என்னும் நற்பண்பை ஒருவர் கொள்ளா திருந்தால், அவர் பகலிலேயே இருள்மண்டிய இரவில் இருப்பவராவார் என்கிறார். (999) நகுதல் இல்லாமையுடன் சினமும் அவரிடத்திருந்தால் வேறு கேடு வேண்டியதில்லை. நகையும் உவகையும் கொல்லும் பகைசினம் என்பது வள்ளுவர் முடிவு (304) டெட்மார் என்பதோர் வெப்பு ஆடைக் (உல்லன்) கடை அதில் ஒருவர் நுழைந்தார். அவர் அக்கடைக்குப் பதினைந்து தாலர் பாக்கிரதர வேண்டியிருந்தது. அதற்குப் பல கடிதங்கள் எழுதியும் தரவேண்டியதே இல்லை என மறுத்துவிட்டார். பாக்கி தரவேண்டியதில்லை என்றும் வாடிக்கை இனி வைக்கப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறவே வந்தார். அவர் சொல்வது தவறு என்று புரிந்தும், பொறுமையாக இருந்தார் டெட்மார். கூறுவதை எல்லாம் நன்கு கேட்டார். இதனைச் சொல்ல வந்தற்கு நன்றி கூறினார். எங்களுக்கு ஆயிரக்கணக்கானவர் கணக்கு தங்களுக்குத் தங்கள் கணக்கு மட்டுமே. ஆதலால், தாங்கள் சொல்வதே சரியாக இருக்கும் என்றார். நீங்கள் தரமான பொருள்கள் வாங்கத் தக்க கடைகள் இவை எனவும் பரிந்துரைத்தார். வெகுண்டு வந்தவர் இறங்கினார்; குளிர்ந்தார்; அதற்குமுன் தராத அளவுக்குப் பெரிய அளவு ஆணைதந்தார். பின்னர் வீட்டுக்குச் சென்று தற்செயலாகக் கணக்கைப் பார்க்கப் பாக்கி இருப்பு கண்ணிற் பட்டது. அதனை மறையாமல் கூறி நன்றி பாராட்டினார். தாம் பெற்ற பிள்ளைக்கு டெட்மார் என்று பெயரிடும் அளவுக்கு நட்பு விரிந்தது. பின்னே வாடிக்கை பற்றிச் சொல்லவேண்டிய தில்லையே! வாழ்க்கையில் வெற்றி (165-6). நிறைவாக வள்ளுவ வழித் தலைவி வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி மகிழலாம். எடுத்த செயலை இனிதில் முடித்து வெற்றியைத் தருவானாக வேந்தன். அதனால், தலைவன் மனைக்குத் திரும்பி, இன்று மாலைப் பொழுதிலே கூடி யாம் விருந்து கொண்டாடி மகிழ்வோமாக! வினைகலந்து வென்றீக வேந்தன்; மனைகலந்து மாலை அயர்கம் விருந்து (1268) முற்றிற்று நூல் விவர பட்டியல் 1 தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி 2 தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி 3 தொகுதி - 3 1. சொற் பொருள் நுண்மை விளக்கம் 4 தொகுதி - 4 1, இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற்று கதைகள் 5 தொகுதி - 5 1.. புறநானூற்றுக் கதை 1 2. புறநானூற்றுக் கதை 2 3. புறநானூற்றுக் கதை 3 4. புறநானூற்றுக் கதை 4 5. புறநானூற்றுக் கதை 5 6. புறநானூற்றுக் கதை 6 7. புறநானூற்றுக் கதை 7 8. புறநானூற்றுக் கதை 8 9. புறநானூற்றுக் கதை 9 10. புறநானூற்றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைட் தமிழ் மன் றங்கள் 13. பெரும்புலவர் மூவர் 6 தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற்றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறத்தராக 8.வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் நல்ல ஊழ் 10. வள்ளுவர் வழியில் குறளாயட் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல ஆட்சியாராக 7 தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 15. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 16. வள்ளுவர் வழியில் நல்ல சான்றோராக 17. வள்ளுவர் வழியில் வினை 18. வள்ளுவர் வழியில் பிறப்பு 19. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 20. வள்ளுவர் வழியில் தவம் 21. மங்கல மனையறம் 22. ஒரு குறள் ஒரு நூல் 1 23. ஒரு குறள் ஒரு நூல் 2 24. ஒரு குறள் ஒரு நூல் 3 25. ஒரு குறள் ஒரு நூல் 4 26. நினைக்கும் நெஞ்சம் 8 தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 9 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் 10 தொகுதி - 10 1. காக்கைப் பாடினியம் 11 தொகுதி - 11 1. களவியற் காரிகை 12 தொகுதி - 12 1. தகடூர் யாத்திரை 13 தொகுதி - 13 1. யாப்பருங்கலம் (பழைய விருட்தியுடன் ) 14 தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களஞ்சியம் 15 தொகுதி - 15 1. தமிழ் வளம் சொல் 16 தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் 17 தொகுதி - 17 1. புறட்திரட்டு 18 தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் 19 தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் 20 தொகுதி - 20 1.கல்விச் செல்வம் 2.இருசொல் அழகு 3.தனிப்பாடல் கனிச்சுவை 4.பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி