இளங்குமரனார் தமிழ்வளம் 39 1. வாழ்வியல் வழிநடை 2. வையகம் தழுவிய வாழ்வியல் 3. வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 39 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 296 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 295/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் வாழ்வியல் வழிநடை 1. பணப்பை 2 2. ஒரு நாடகம் 5 3. பரிசு 8 4. பட்டாடை 11 5. ஊரும் பேரும் 14 6. முத்தும் முத்தும் 17 7. கல்யானை 20 8. நிறுத்து போரை 24 9. எவர் வாழ்வோர்? 27 10. எப்படி வாழ்வது? 31 11. மெய்மைப் பொய் 34 12. பொய்யா விளக்கு 44 13. தொண்டனாகுக 47 வையகம் தழுவிய வாழ்வியல் 1. பெண்ணிற் பெருந்தக்க யாவுள? 71 2. புகழ் புரிந்த இல் 73 3. காலத்தினால் செய்த நன்றி 75 4. எழுமை எழு பிறப்பும் 79 5. ஏதிலார் குற்றம் போல் 83 6. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் 85 7. உண்ணாமை வேண்டும் புலாஅல் 87 8. வஞ்ச மனத்தான் 90 9. பொய்ம்மையும் வாய்மை இடத்த 92 10. நில்லா தவற்றை 94 11. ஊழிற் பெருவலி யாவுள 96 12. யாதானும் நாடாமல் 100 13. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி 102 14. தினைத்துணையாம் குற்றம் 105 15. தேரான் தெளிவும் 107 16. ஒற்றும் உரை சான்ற நூலும் 109 17. பழுதெண்ணும் மந்திரி 111 18. விரைந்து தொழில் கேட்கும் 113 19. பேராண்மை என்பதறுகண் 116 20. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் 119 21. ஒன்னார் அழுத கண்ணீர் 121 22. ஒருமைச் செயலாற்றும் 123 23. உண்ணற்க கள்ளை 125 24. ஈன்றாள் முகத்தேயும் 128 25. அற்றார்க்கு ஒன்று 131 26. சொல்லப் பயன்படுவர் 134 27. கண்டு கேட்டு 136 வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் 1. தனிவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் 209 2. குடும்பவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் 237 3. பொதுவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் 265 இணைப்பு 293 வாழ்வியல் வழிநடை முன்னுரை வாழ்வியல் வழிநடை என்னும் இந்நூல் பன்னிரு கட்டுரைகளையும், ஓர் உரையாடலையும் கொண்டது. இவற்றுள் தமிழக வரலாற்றுச் செய்தி, இந்திய வரலாற்றுச் செய்தி, உலக வரலாற்றுச் செய்தி ஆகியவை உண்டு. கதையும் உண்டு. உரையாடலும் உண்டு. ஆனால் அனைத்தும் வாழ்வியல் நூலாகிய வள்ளுவத்தை வழிநடையாகக் கொண்டவை. வழிநடையே வாழ்வு நடையாகக் கொண்டது தமிழ் உலகம். அதனால் நல்வழி, நன்னெறி, நீதிநெறி, அறநெறி என்றெல்லாம் நூல்கள் கிளர்ந்தன. நடக்கும் நடை - நடத்தை தானே! நடத்தை ஒழுக்கம் தானே! வாழ்வியல் வழிநடை வையகப் பொதுமை வாய்ந்தது. அதன் மூல நடை வையகப் புலவர் வள்ளுவர் வழியது. பொய்யா விளக்கில் இதன் மெய்ம்மம் காண்க. (கட்டுரை 12). திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர் - 620 101 திருச்சி மாவட்டம் அன்பன், இரா.இளங்குமரன் 1. பணப்பை ஐயா, இங்கே வாருங்கள் என்று ஒளி படைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும் உடைய தமிழ்ப் பெருமகன் ஒருவரை, ஒருவர் அழைத்துச் சென்றார். தன்னந்தனியான ஓரிடத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டுப் பேசினார் அழைத்துச் சென்றவர். ஐயா, இந்த இலக்கம் ரூபாக்களையும் அன்பளிப்பாகத் தருகின்றோம். நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம். இதை வாங்கிக்கொண்டு, நீங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் இயக்கத்தை மட்டும் விட்டு விட்டால் போதும், மேலும் மேலும் உங்களுக்கு எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கின்றோம். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும், ஈட்டி எட்டு மட்டும், பணம் பாதாளம் மட்டும், பணம் பத்தும் செய்யும் என்பனவெல்லாம் வழக்கிடைக் காணும் பழமொழிகள்! ஆனால் பணம் என்றவுடனே தலையசைத்து விட்டாரா? தமிழ்ப் பெருமகன் கூறினார்: இந்த ஓர் இலக்கம் ரூபாக்களும் எனக்குக் கைக்கூலியா? (இலஞ்சமா) உயிரோடு உயிராக ஒன்றுவிட்ட உணர்ச்சியால் தொடங்கிய இயக்கத்தை உன் பிச்சைக் காசு கருதி விட்டுவிட வேண்டுமா? பணத்திற்காக வாயைத் திறக்கும் பண்பில்லாதவன் எவனாவது இருந்தால் அவனிடம் போய்ச் சொல் உன் காரியத்தை சேசே! மானமற்ற பிழைப்பும் ஒரு பிழைப்பா? கண்களில் கனற்பொறி பறக்க கூறி விட்டுக் கடுகடுத்த நடையிலே புறப்பட்டார் திருக்கு மீசைக்காரத் தீந்தமிழர். என்ன இது? இப்படியும் உண்டா? ஓர் இலக்கம் உரூபா வலிய வந்தும், போ-பழிவழிப் பணமே போ என்று எற்றித் தள்ளிவிட்டு ஏறு நடையிட்ட அந்த ஏந்தல் யாவர்? அவரே வ.உ.சிதம்பரனார்.. சொந்த நாட்டினை வந்த நாட்டினர் ஆளவோ? நாம் ஆண் பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ? என்று பறையறைந்து, வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிச் சுதந்திர நாட்டத்தை மூட்டிய வ.உ.சி. கப்பற் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார்! அப்பொழுது தான் இலக்க உரூபா தேடிவந்து, பழியோடு திரும்பியது. எதிர்ப்பின் இடையே-உலகெலாம் பரவி ஒரு கோலோச்சிய ஆங்கில ஆட்சியின் நேரடி எதிர்ப்பின் இடையே - தொடங்கப் பெற்றது சுதேசிக் கப்பல் இயக்கம். கப்பல் வேண்டுமே? பம்பாயிலே, ஒரு கப்பல் வாங்க ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. எல்லாம் சூழ்ச்சிக்காரர்களின் ஏற்பாடுகளால் தான்! கப்பல் கிடைக்கவில்லையே என்று தளர்ந்து விட்டாரா? மலையே புரண்டு வந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர் அல்லவா சிதம்பரனார்! ஊக்கமாகக் கிளம்பினார். கொழும்பிலே போய், கப்பல் ஒன்றை ஒப்பந்தம் செய்தார் வாடகைக்கு! அப்படியாவது கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியிலே, தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மிதக்க விட்டார் கப்பலை! அது வணிகக் கப்பலாகவா காட்சியளித்தது? - விடுதலைக் கப்பலாகக் காட்சியளித்தது. ஆனால் வாடகைக் கப்பல்தானே, சொந்தக் கப்பலாகி விடுமா? மீண்டும் புறப்பட்டார். கப்பல் வாங்க - பணம் திரட்ட. மனைவி நிறை கருப்பமாக இருந்தார்; மகன் உலகநாதன் நோய்ப் படுக்கையிலே கிடந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். ஒரு முறையாவது வந்துவிட்டுச் செல்லுங்கள் என்று நண்பர்கள் முறையிட்டுக் கடிதம் எழுதினர். இறைவன் பெரியவன்: அவன் காப்பாற்றுவான்; நான் கப்பலுடன் திரும்புவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன் என்று கும்பிடு போட்டுக் கடிதம் எழுதிவிட்டுக் கருமமே கண்ணாக இருந்தார். வாராது வந்த மாமணி வ.உ.சி. என்று உணர்ந்தவர்கள் ஓடி ஓடி வந்து ஆயிர ஆயிரமாகக் குவிந்தனர். மீண்டும் பம்பாய் சென்றார் வீரர்-அங்கொரு கப்பல்; பிரான்சிலேயிருந்து ஒரு கப்பல்; ஆக இரண்டு கப்பல்களுடன் தூத்துக்குடி வந்தடைந்தார்! கங்கையும் கடாரமும் கொண்டு வாழ்ந்த சோழன் இராசேந்திரனே புதுப் பிறப்புப் பிறந்து தூத்துக்குடித் துறைமுகம் வந்தடைந்தது போன்று நாட்டுப் பற்றுடையோர் மகிழ்ந்தனர்; நாடாள்வோர் எரிந்து விழுந்தனர்-எழுச்சி வலுத்து விட்டது அன்னிய ஆட்சிக்கும் தலைமுழுக்குத்தான் என்று அறிந்து கொண்டு விட்டார்கள்! எதிரிகள் இயலாதவர்களா? நயவழிகள் பயவழிகள் என்னென்ன உண்டோ அவ்வளவும் செய்து பார்த்தனர். பய வழிகள் வீரர்முன் மண்டியிட்டன; நயவழிகள் பண்புமலை முன் நாடியொடுங்கின! வஞ்ச வழிகளையே, தஞ்சமாகக் கொண்டு ஒடுக்க முன்வந்தனர் அயலார்! சுதேசிக் கப்பலில் ஏறுவதும், சரக்கு ஏற்றுவதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன; கப்பற் கம்பெனிக்குப் பணம் தருவோரும், பணிபுரிவோரும் பழிவாங்கப்பட்டனர்; ஆள்வோர் நினைத்தால் காரணங்களா கிடைக்கா? உறுப்பினர்களுக்கே இவ்வளவு இக்கட்டு என்றால், தலைவருக்கு? அந்தோ! நாட்டுப் பற்றுக் கொண்டு செய்யும் செயல்களுக்குப் பரிசும் பதவியும் தந்து பாராட்ட வேண்டிய அரசு பழிப்பட்டம் சூட்டியது; குற்றக் கூண்டிலே நிறுத்தியது. துரோகி என்று பட்டயம் தீட்டித் தந்து சிறைக்குள் தள்ளியது. உள்ளேயாவது ஓய்ந்திருக்க விட்டதா? கல்லுடைக்க வைத்தது. செக்கிழுக்கச் செய்தது. எல்லாவற்றையும் இன்பமாகக் கருதினார் வ.உ.சி. தாம் படும் துன்பங்கள் அனைத்தும் உரிமைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் அமைந்த மைல்கற்களே என்று மகிழ்ந்தார்! உரிமைக் கொடி சிறிது சிறிது ஆக உயர்த்தப் படுவதாக உவந்தார். அது வீணாகி விட்டதா? இன்று, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பள்ளுப் பாடி விட்டோம்! விடுதலை விடுதலை விடுதலை என்று முழங்கிவிட்டோம். அன்று வ.உ.சி. இலக்க உரூபாக்களைப் பொருட்டாய் எண்ணியிருந்தால் - தூ என்று காறித் துப்பாமல் இருந்தால் - அவர் வாழ் நாளெல்லாம் பொன்னாலும் பொருளாலும் பொலிந்திருப்பார்! ஆனால் என்றென்றும் அழியாப் புகழ், அவரை உரிமையாக்கிக் கொண்டிருக்குமா? நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (நன்மையே தந்தாலும், நடுவு நிலைமை கடந்து உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே ஒழித்து விடுக) என்பது அன்றோ தமிழ் மறை. 2. ஒரு நாடகம் அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் இளைஞர் ஒருவர். அவர் பெயர் கரம் சந்திரர். அரிச்சந்திரன் எத்தனை எத்தனை இன்னல்கள் அடைந்தும் பொய்யே சொல்லாது வாழ்ந்த உயர்வு, இளைஞர் உள்ளத்தைத் தொட்டு நன்றாகப் பதிந்தது. இன்று முதல் நான் பொய் சொல்லவே மாட்டேன் என்று உறுதி செய்துகொண்டார். நாடகம் படக்காட்சி இவற்றைக் கண்டு எத்துணைப் பேர்கள் இப்படி உறுதி செய்து கொண்டு இறுதி வரை காப்பாற்றுவார்கள்? கரம்சந்திரர் சிறுவராக இருக்கும்போது கெட்டவன் ஒருவனது உறவு ஏற்பட்டது. அவன் வலைக்குள் நன்றாக மாட்டிக் கொண்ட கரம்சந்திரர், யாருக்கும் தெரியாமல் மறைவான இடங்களில் புலால் உண்டார். வீட்டுக்குப் போய் வழக்கம்போல் சாப்பிட முடியாது அல்லவா! அதனால் வயிற்றுக்கு நன்றாக இல்லை; பசிக்கவில்லை இப்படியெல்லாம் காரணம்-பொய்க் காரணம் - காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் சொல்லி முடித்தவுடன் மனச்சாட்சி - அரிச்சந்திரன் கதை ஆகிய இரண்டும் கூடிச் சேர்ந்து பெற்று வளர்த்துப் பேரன்புடையராய் இருக்கும் தாயினிடமா பொய் சொல்லுவது? என்று வாட்டும்! எத்தனை நாள்களுக்குத்தான் உன் பொய் வெளிப்படாமல் இருக்கும்? என்று இடித்துக் காட்டும். ஆம்! கரம்சந்திரர் மேலும் உறுதி செய்து கொண்டார்; புலால் உண்பதும் புகை குடிப்பதும் ஆகிய தீய வழக்கங்கள் செலவினை உண்டாக்கிப் பொய்யும் பேசவைக்கின்றன. ஆதலால் இவற்றை இன்று முதல் தொடேன். இளைஞர் கரம்சந்திரர் ஒரு தொடக்கப் பள்ளியிலே படித்து வந்தார். அப்பள்ளியை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரி வந்திருந்தார். அவர் சில ஆங்கிலச் சொற்களைச் சொல்லி மாணவர்களை எழுதச் செய்தார். அவர் சொல்லிய ஆங்கிலச் சொற்களிலே கெட்டில் (kettle) என்பதும் ஒன்று. இச்சொல்லைக் கரம்சந்திரர் சரியாக எழுதவில்லை. அவர் சரியாக எழுதவில்லை என்பதை ஆசிரியர் பார்த்தார். வருந்தினார். அதிகாரி என்ன சொல்லுவாரோ என்பது அவர் கவலையாக இருந்தது. அதனால் கரம்சந்திரரின் காலை மிதித்து, அடுத்த பையனைப் பார்த்து எழுதுமாறு குறிப்பால் கூறினார். ஆனால் தெரியாத ஒன்றைத் தெரியும் என்று பொய்யாக நடிக்க விரும்பவில்லை இளைஞர் கரம்சந்திரர். அதனால் ஆசிரியர் குறிப்புப்படி அடுத்தவனைப் பார்த்து எழுதாமல் நின்றார். ஆசிரியர் மேலும் ஓரிரு தடவைகள் வற்புறுத்தியும் இளைஞர் எழுதாதது கண்டு வருந்திச் சோர்வு கொண்டார். ஆசிரியரே பார்த்து எழுதச் சொல்லும்பொழுது எழுதமாட்டேன் என்னும் வலிய உள்ளம் மாணவருக்கு ஏற்படுவது எல்லோரிடமும் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்ச்சியா? இக்குணம் இளமையிலே வாய்த்துவிட்டபடியால் தான் அஃது உலகப் புகழ் வாங்கித் தந்தது. இந்தக் கரம்சந்திரர் யார்? அவரே நம் காந்தியடிகள்! காந்தியடிகள் தொடக்கத்தில் வழக்கறிஞர் தொழில் புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டவர்கள் பொய் சொல்லாமல் முடியாது என்பார்கள். ஆனால் காந்தியடிகளோ அந்த உரையையே பொய்யுரையாக்கி விட்டார்! அவர் பொய்மை கலவாத வழக்குகளையே தேர்ந்து எடுத்துக் கொண்டார். தாம் எடுத்துக் கொண்ட வழக்கில் பொய்யும் கலந்திருக்கிறது என்று எப்பொழுதாவது உணர்ந்து விடுவாரானால் எதிரியினிடமே உண்மையை உரைத்து வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். ஒரு சமயம் தம் கட்சிக்காரன் ஒருவன் தம்மிடம் பொய் சொல்லியிருப்பதாக வழக்கு விசாரணையின் போது அறிந்தார். உடனே நீதிபதியினிடமே வழக்கினைத் தள்ளி விடுமாறு வேண்டினார். இப்பண்பு வழக்கறிஞர்கள் அனைவரிடமும் வந்து விடுமானால் நாட்டிலே நடைபெறும் வழக்குகளில் நாலில் ஒரு பங்குகூட நடைபெறுமா? ஆனால் வழக்கறிஞர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்களில் ஒரே ஒரு காந்தி தானே தோன்ற முடிந்தது! அடிகளுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் அரசாங்கத் திற்குக் கட்டவேண்டிய வரிப்பணம் கட்டவில்லை. அரசினர் வழக்குத் தொடர்ந்தனர். காந்தியடிகளோ, தம் நண்பருக்காகப் பொய்யாக வழக்காடாது அவர் செய்திருக்கும் தவறான வழக்குகள் அத்துணையையும் வெளிப்படையாகக் கூறினார். அந்த மெய்யுரை ஒன்றாலே - சிறைத் தண்டனை, பொருள் தண்டனை என்னும் அளவில் நின்றது. காந்தியடிகள், பொய்யாமை போலும் புகழில்லை, அறமில்லை, இன்பமில்லை என்பதைத் தெளிந்து அறிந்தவர் அல்லவா! 1919-ஆம் ஆண்டில் ஆங்கில அரசை எதிர்த்து அறப்போர் தொடங்கத் திட்டமிட்டார் அடிகள். திட்டமிட்டபடியே நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. அறப் போராட்டம் என்றால் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுவது ஒன்றே வேண்டுவது அல்லாமல் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படும் வன்முறைகள் கூடா! ஆனால் உணர்ச்சிக்கு ஆட்பட்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறைகளைக் கையாண்டனர். இதனை அறிந்தவுடன் வருந்தினார் அடிகள். அறப்போருக்குரிய பக்குவம் அடையாத மக்களை அறப்போரில் இறங்குமாறு ஏவியது இமயமலை போல்வதான பெருந்தவறு; போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தை நிறுத்தி விடுமாறும் ஆணையிட்டார். தாம் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட்கும் உலகத் தலைவர்கள் எத்தனை பேர்? பொய்யா நோன்பினை வாழ்நாளெல்லாம் போற்றி ஒழுகினார் அடிகள். அதனால் புவியிலுள்ளோர் உள்ளத் தெல்லாம் புகழ் வடிவிலே சுடர்விட்டு விளங்குகின்றார்! உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். (ஒருவன் தன் மனச் சான்றுக்கு ஏற்ப, பொய்யின்றி வாழ்வானாயின் அவன் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைபெற்றவன் ஆவான்.) 3. பரிசு ஒரு சாலை வழியே இரண்டு குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. அக் குதிரைகளின்மீது இரண்டு பேர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த திசைக்கு எதிரேயிருந்து ஒருவன் நடந்து வந்தான். அவன் குதிரையில் வந்தவர்களுள் ஒருவரை இன்னார் என்று தெரிந்து கொண்ட படியால் சட்டென்று ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று தன் தொப்பியை எடுத்துக் கைகளிலே வைத்துக் கொண்டு தலை தாழ்ந்து பணிவோடு வணக்கம் செய்தான். குதிரையில் இருந்த அவர் உடனே பதில் வணக்கம் செலுத்தி விடாது கீழே இறங்கி வந்து, வழிப்போக்கனைப் போலவே பணிவோடு நின்று, தொப்பியைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினார். இவ்வாறு நடக்கும் என்பதைக் குதிரையில் உடன் வந்தவனும் நினைக்கவில்லை; வழிப்போக்கனும் நினைக்கவில்லை. வியப்படைந்தனர். குதிரையில் வந்த இருவரும் மீண்டும் தம் பயணத்தைத் தொடங்கினர். உடன் வந்தவன் போகும் பொழுதே கேட்டான்; அந்த ஏழையை நீங்கள் இவ்வளவு பணிவுடன் வணங்க வேண்டுமா? குதிரையில் இருந்து கொண்டே வணங்கியிருக்கக் கூடாதா? ஏழை செல்வன் என்ற வேற்றுமை பணிவுக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு நாட்டின் தலைவன் பணிவுடை மையிலும் தலைவனாக இருக்க வேண்டுமே அன்றித் தாழ்ந்து விடக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் எந்தவோர் ஏழையும் பணிவில் என்னை வெற்றி கொண்டு விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. என்றார் தாழ்ந்து வணங்கிய பெரியவர். வாயடைத்துப் போனான் உடன் வந்தவன். குதிரையிலிருந்து கீழே இறங்கி வணக்கம் செலுத்தியவர் எளிய பதவியில் இருந்தவரா? அரிதினும் அரிய பதவி - அமெரிக்க நாட்டின் தலைவர் பதவி! அவர் பெயர், ஆபிரகாம் லிங்கன். அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி. ஆனால் நல்லவன் கையில் நாட்டாட்சி இருக்கும் பொழுது நாடெய்தும் நலங்களுக்கு அளவும் உண்டா? பணிவுமிக்க ஆபிரகாம் ஒரு நாள் ஒரு தெருப்பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை வண்டிக்காரன் நின்றான். அவன் லிங்கனைக் கண்டதும் புன்முறுவலுடன் நெருங்கினான்; வணக்க மிட்டான். ஐயா, உங்கள் பொருள் ஒன்று என்னிடம் நெடுநாள்களாகக் காத்திருக்கின்றது. இதுவரை தங்களைக் கண்டுபிடித்து அதனைக் கொடுக்க முடியவில்லை. இன்றுதான் கண்டு பிடித்ததேன்; மகிழ்ச்சி என்றான். இலிங்கனுக்குத் திகைப்பாக இருந்தது. ஏனெனில், இலிங்கன் அந்தக் குதிரை வண்டிக்காரனை இதற்கு முன் கண்டதுமில்லை. எந்தப் பொருளும் கொடுத்திருக்கவும் இல்லை. இலிங்கன் கேட்டார்; என்னுடைய பொருள், உன்னிடம் என்ன இருக்கிறது? இதோ என்று மழுங்கிப் போயிருந்த கத்தி ஒன்றை நீட்டினான் குதிரை வண்டிக்காரன். இலிங்கனது திகைப்பு வியப்பாக மாறியது. என்னுடையதா இது? என்று கேட்டார். ஆம்: உங்கள் பொருள்தான். எப்படி என்றால் நெடுநாள் களுக்கு முன்பு ஒரு பெரியவர் என்னிடம் இந்தக் கத்தியைத் தந்து நீ பார்க்கும் ஆள்களிலே எவர் அழகற்றவராக அவலச்சணமாக இருக்கிறாரோ அவரிடம் இதனை ஒப்படைத்து விடு என்றார். நானும் அப்படிப்பட்ட ஒருவரைத் தேடித்தேடி அலுத்தேன். இன்றுதான், தாங்கள் தான் அந்தப் பொருளுக்குரிய உடைமைக் காரர் என்பதைக் கண்டு பிடித்தேன் என்றான் வண்டிக்காரன். இச் சொற்களை உணர்ச்சிமிக்க ஒருவன் - முன் கோபமுடைய ஒருவன் - கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான்? குதிரை வண்டிக்காரன் தன் பற்களைப் பொறுக்கி எடுக்க வேண்டிய நிலைமை ஆகாது இருக்குமா? ஆனால் ஆபிரகாம் என்ன செய்தார்? நண்பனே! மகிழ்ச்சி! என் பொருளை இதுவரை நீ பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய பொழுதில் ஒப்படைத்தும் விட்டாயல்லவா! என் பொருளைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு மிகவுண்டு. உனக்கு நன்றி என்று கூறினார். ஆபிரகாம் நீர் மனிதரல்லர்; மனித உருவிலே நின்ற தெய்வவுரு என்று நமக்கு வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா! நெடு நெட்டையாகவும், மிக ஒல்லியாகவும், படியாத தலையராகவும் குழிவிழுந்த கன்னத்தராகவும் இருந்த ஆபிரகாம் அழகில்லாதவர் தான். உடல் உடை பற்றியோ, குளிப்பு தலை கோதுதல் பற்றியோ அவ்வளவாக அக்கறை கொள்ளாதவர் தான். காலிலே அணிந்து கொண்ட அடிபுதை அரணங்களை (பூட்சுகளை)யும் கால் உறைகளையும் எத்தனையோ நாள்களுக்கு ஒரு முறை கழற்றித் துடைப்பவர்தான். ஆனால் இந்த உடலழகினும் பல்லாயிரம் பங்கு சிறந்ததான உள்ளத்தழகு ஆபிரகாமினிடம் நிரம்பிக் கிடந்ததே! உள்ளழகு இருக்கும் பொழுது புற அழகு இல்லாவிட்டால் தான் என்ன? உலக அழகுப் போட்டியிலே பங்கு எடுத்துக் கொண்டு முதற் பரிசு பெற்றவன் என்ன உலகத்தார் நெஞ்சத்தை விட்டு அகலாது இடம் பெற்றுவிடுவானா? அன்றி அவனென்ன அழியாத அழகனா? அவனுக்கும் இருபதில் எழுச்சி, முப்பதில் முறுக்கு, நாற்பதில் நழுவல், ஐம்பதில் அசதி, அறுபதில் ஆட்டம், எழுபதில் ஏக்கம், எண்பதில் தூக்கம் என்னும் நிலைகள் ஏற்படாது ஒழியுமா? எச்சிலும் மூக்கும் கோழையும் குன்னலும் நோயும் நொம்பலும் உலக அழகனுக்கு விதிவிலக்காக முடியுமா? அழியா உடலா அவன் உடல்? g©òlš x‹nw mÊahîlš.; அழகுமிக்க உடல்; அதனைப் பெற்றார் இலிங்கன். உலகத்தார் உள்ளத்தே அழியா எழுத்தில் எழுதப் பெற்று விட்டார். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல மற்றுப் பிற (ஒருவனுக்கு அணிகலன் பணிவு உடைமையும், இன்சொல் உரைத்தலும் ஆகும். இவையன்றி வேறு அணி கலங்கள் உண்மையான அணிகலன்கள் ஆகா.) 4. பட்டாடை அம்மா! பைத்தியம்; பைத்தியம்! என்று சொல்லிக் கொண்டே வெளியேயிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தாள் சிறுமி ஒருத்தி. உட்புறத்தில் இருந்த தாய், குழந்தை கூக்குரலைக் கேட்டுத் துடிப்புடன் முன்புறம் வந்தார். மெலிந்த உடலும், கிழிந்த உடையும், தாடி மீசையுமாக இருந்த ஒருவரைக் கண்டார். தம்மை மறந்து போய்த் தம் குழந்தையினிடம் பாப்பா, பாரதி மாமா இல்லையா! அவர்தான்; வணக்கம் செலுத்து என்றார். அம்மையாரும் வணக்கம் செலுத்தி வரவேற்று இருக்கச் செய்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார் பாரதியாரின் அன்பரும், தோழரும், உள்ளுர்க்காரருமான சோமசுந்தர பாரதியார். புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பின் தம் நண்பரைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் வந்த பொழுதிலே சோமசுந்தர பாரதியார் வெளியே சென்றிருந் தார். அவர் மனைவியும் குழந்தையும் வீட்டில் இருந்தனர். குழந்தைதான் பாரதியாரின் தாடி மீசை உடைகளைக் கண்டு பைத்தியம், பைத்தியம் என்று அலறிக் கொண்டு ஓடி வந்தது. சற்று நேரம் கழிந்தது கவிஞர் காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாடலை முழங்கினார். வேறு சில பாடல்களும் பாடினார். ஆ ஆ! அந்த இசை வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி இன்புற்றனர். உடையில் அழுக்கு கிழிசல் உண்டு; உடலில் மெலிவும் களைப்பும் உண்டு. ஆனால் உள்ளத்தில் இருந்த ஊக்கமும் உணர்ச்சியும்? அவை பாரதியாருக்கே உரிமை யானவை. சோமசுந்தர பாரதியார், வீட்டுக்குள் கால்வைக்கு முன்னமே பாரதியார் தம் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார். அவர் என்ன பாரதியாரின் மணிக்குரலை அறியாதவரா? பாரதி என்று சொல்லிக் கொண்டு உணர்ச்சி மிக்கவராகக் கட்டித் தழுவினார். இன்பக் கண்ணீர் சொரிந்தார். பின், பாரதியார் கட்டியிருந்த கந்தலாடையை நோக்கினார். அடுத்த நொடியிலே - அந்தோ! சோமசுந்தரரின் எஃகு போன்ற வலிய உள்ளமும் நெகிழ்ச்சியடைந்தது; கண்ணீர்த் துளியும் வழிந்தது. நாட்டுப் பணிக்காகத் தன்னை ஒப்படைத்து விட்ட இந்த நல்லோன் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? கோடி கோடியாக வெகுமதி பெற வேண்டிய பாடல்களைப் பாடும் இப்பாவலன் ஒரு பஞ்சையாகவா இருக்க வேண்டும்? அன்னைத் தமிழகமே, நீ உன்னை அழகு செய்ய வந்த புலமை மகனை இந்நிலைமையிலா விட வேண்டும்? என்று உருகினார். உடனே, பட்டு வேட்டியும், பட்டுத் துண்டும் கொண்டு வந்து உரிமையாக ஏற்பட்ட உள்ளன்பால் தந்தார். எல்லோரும் பாரதியாருக்கு உடை தந்து விட முடியுமா? உன்னிடம் உடை வேண்டும் என்று எவன் கேட்டான்? இரப்பு வாங்கிக் கட்டும் இந்தப் பட்டாடைக்கு என் கிழிசலாடை கோடி கோடி கோடி தரம் மேல் : சே! இந்தா உன் உடை! என்று முகத்திலேயே வீசி எறிந்து விட்டாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. பாரதியாரின் உணர்ச்சி அத்தகையது. சோமசுந்தரருடன் சற்று நேரம் அளவளாவிப் பேசி விட்டு, பாரதியார் உலாவி வரச் சென்றார். உலாவிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். அவர் தோளிலே கிடந்த சரிகைக் கரைத்துண்டைக் காணவில்லை. என்னை பாரதி! துண்டு எங்கே? என்று கேட்டார் சோமசுந்தர பாரதியார். ஓ, அதுவா! இங்கே வா என்று கையைப் பிடித்து ஒழுத்துக் கொண்டே சாலை வழியே சென்றார். அங்கே படுத்துக் கிடந்த பிச்சைக்காரன் ஒருவன் மேல் தாம் தந்த துண்டு போர்த்தப்பட்டிருக்கக் கண்டார். சோமசுந்தரர் ஒன்றும் சொல்லவில்லை பாரதியை நோக்கினார் : பாரதியார் சொன்னார் : மானத்தை மறைப்பதற்கு வேண்டிய கந்தலாடையும் இன்றி எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் பட்டாடை கட்ட வேண்டுமா? பாரதியாரின் இச் சொல் முழ ஆடை கட்டிய முனிவர் காந்தியாரை நினைவூட்ட வில்லையா? சற்று நேரத்திற்கு முன் பாரதியார் நிலைமை எவ்வாறு இருந்தது? அந்தக் கந்தலாடை தானே அவருக்கும் உரிமை? பேரன்பால் பெற்ற பட்டாடையைப் பேணிக் காத்துக் கொள்ள எண்ணம் இருந்ததா? ஈவும் இரக்கமும் உள்ள உள்ளம் அடுத்த பொழுதைப் பற்றியோ தன்னைப் பற்றியோ எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றது அன்றோ! சோமசுந்தரர் நெக்குருக எண்ணினார். அஃது இதுதான் : பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இப்பாருலகம் முழுமையும் நன்றாக இருந்தாக வேண்டும். எந்த மூலையில் வெந்துயர் இருந்தாலும் பாரதியாரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! துயரற்ற உலகம் வருமா? இடனில் பருவத்தும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் கடனறி காட்சி யவர் பிறர்க்கு உதவுதலைத் தம் கடமை என்று அறியக்கூடிய அறிவினை உடையவர் உதவுவதற்கு முடியாத நிலையிலும் உதவி செய்வதில் தளர்ச்சி யடையார்! 5. ஊரும் பேரும் ஒரு பெருங்காடு. அக்காட்டிலே ஒரு புலவர் நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் சிலர் சென்றனர். வழியோ கரடு முரடான காட்டுப் பகுதி. மலையடிவாரம்; மலையுயச்சி. தொலைவும் மிக அதிகம். நடந்தவர்கள் அனைவரும் களைத்துப் போயினர். உட்கார்ந்து ஓய்வெடுத்தாக வேண்டும் என்று சோர்ந்து விட்டனர். பெரிய பலாமரம் ஒன்றைக் கண்ட புலவர்கள் அதன் தண்ணிய நிழலிலே உட்கார்ந்தனர். வழிநடைக் களைப்பும் வயிற்றுப் பசியும் சோர்வினை உண்டாக்கி அயர்ந்து விடச் செய்தன. உட்கார்ந்து சாய்ந்த வண்ணமே கண்ணுறக்கமும் கொண்டு விட்டனர். வீரன் ஒருவன் ஓடி வந்தான். அவன் வலக்கையிலே வில் இருந்தது; இடக்கையிலே கூரிய அம்பு இருந்தது. தோளிலே அம்புக்கூடு தொங்கியது. காலிலே வீரர்கள் அணியும் கழலும், கையிலே கடகமும், மார்பிலே முத்தாரமும் கிடந்த அழகு செய்தன. அவனது வீரத் திறத்தையும், அஞ்சா உள்ளத்தையும் அவன் கண்களும், தோள்களும், மார்பும், ஏறு நடையும் வெளிக்காட்டின. அயர்ந்திருந்த புலவர்கள் வீரன் வந்த ஒலி கேட்டு அரை குறையான பார்வையுடன் விழித்து நோக்கினர். அந்த வீரனைக் கண்ட பின்னரும் அவர்களால் உட்கார்ந்திருக்க இயலவில்லை. விரைந்து எழுந்திருப்பதற்குக் களைப்பு இடம் தர வில்லை. காலைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழ முயன்றனர். வீரனோ புலவர்கள் களைப்பாக இருப்பதையும், எழுந்திருக்கவும் முடியாத சோர்வுடன் இருப்பதையும் அறிந்து கொண்டு உட்காருங்கள், உட்காருங்கள் என்று கையமர்த்தி விட்டு விரைந்து காட்டுக்குள் சென்றான். வீரன் எங்கே போகிறான் என்று புலவர்களுக்குத் தெரியாது. அவனது எழுச்சி மிக்க நடையினை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த அழகனது உருவம் மறையும் வரை இமை கொட்டாமல் பார்த்து நின்றனர். சென்ற சிறிது நேரத்துள் வீரன் திரும்பினான். வாளா திரும்பினானா? - கையிலே மான் தசை இருந்தது. புலவர்கள் பசியினைப் போக்குவதற்காகக் காட்டிலே புகுந்து வேட்டையாடினான். உடன் வந்த இளைஞர் களைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் தானே வேட்டையாடி, தன் கையாலே தீமூட்டி, ஊனைப் பக்குவமாக வாட்டி, நல்ல ஊனாகத் தேர்ந்து கையிலே எடுத்துக் கொண்டு வந்து புலவர் களுக்கு அளித்தான். அவன் இவ்வாறு காலத்தால் உதவுவான் என்பதை அறியாத புலவர்கள் களிப்பும் வியப்பும் ஒருங்கே யடைந்தனர். பசி மிகுதியால் விரைந்து விரைந்து உண்டனர்; பசி போனது - ஆனால் நீர் வேட்டை உண்டாயிற்று. புலவர்களே, இங்கே வாருங்கள் என்று அழைத்துப் போய் ஒரு நீரூற்றைக் காட்டினான். உவப்புடன் நீரருந்திக் களைப்பு நீங்கினர். புலவர்களின் தலைவர் பெயர் வன்பரணர். அவர் கூறினார்: வீர! நன்றி. நீ காலத்தாற் செய்த இந்த உதவிக்கு என்ன கைமாற்றுச் செய்ய வல்லோம்? ‘Ú ah®? என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை : அதனை அறிவிக்கலாமா? எங்களுக்கு அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. ஐயா, காட்டிலே இருக்கும் யான் தங்களுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும்? இந்த மாலையையும் கடகங்களையும் மறுக்காமல் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான் வீரன். மாலை, கடகங்களைக் கழற்றி, புலவர்களிடம் தந்தான். வியப்புத் தாங்காத புலவர்கள் நாத் தழுதழுக்க நன்றி கூறினர். அவன் பெயரை அறிந்து கொள்ளுதற்குத் துடித்தனர். அன்ப, உன்னைக் காணும் போது ஒரு வேந்தனாகவே தோன்றுகின்றது. உன் நாடு யாது? உன் பேர் யாது? - இது புலவர்களின் ஆவலுரை. புலவர் பெரும, இதோ வருகிறேன் : நீங்கள் செல்ல வேண்டுமல்லவா! நானும் செல்ல வேண்டும். என்னுடன் வந்தவர்கள் தேடிக் கொண்டு வந்தாலும் வந்து விடுவார்கள். தாங்கள் இப்பாதை வழியே செல்லலாம் என்று வழி காட்டி விட்டு வீரன் விரைந்து காட்டுக்குள் சென்றான். அவனுடன் வந்த வீரர்களுள் எவரையாவது கண்டாலும் வீரன் பெயரைக் கேட்டறியலாமே என்று தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அவர்களுள் எவரும் புலவர்களைக் கண்டு பிடித்துப் பேசி விடாதவாறு தந்திரமாக வீரன் அழைத்துக் கொண்டு போய் விட்டானே! பிறகு கண்டு பிடிப்பது எப்படி? பேரையும் ஊரையும் கேட்டும் சொல்லாத அவ்வள்ளலின் அருங்குணம் புலவர்களைக் கவர்ந்தது. எப்படியும் தெரிந்துவிட ஆசை கொண்டனர். நமக்கு மட்டும் அவ்வாசை இல்லையா? நான்கு காசு கொடுத்துவிட்டு அதனை நான்கு இடங்களிலே எழுதி வைக்கும் வள்ளல்கள் மிகுந்த இக்காலத்திலே, பேரும் ஊரும் சொல்லாமல் பெருங் கொடை புரிந்த செயல் வியப்புக் குரியதல்லவா! கேட்டும் கொடுக்காதோர் பலர்; கேட்டுக் கொடுப்போர் சிலர்; கேளாமல் கொடுப்போர் மிகச்சிலர். பேரும் ஊரும் சொல்லாமலும், கேளாமலும் கொடுப்போர் அரியர் - மிக அரியர்! அரிய செயல் செய்த அவ்வள்ளலின் பெயரை அறிய, புலவர் வழிகளிலெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்தனர்; வாயும் அலுத்தனர். ஒருவன் சொன்னான். தோட்டி மலைத் தலைவனான கண்டீரக் கோப் பெருநள்ளி அவன். வள்ளல் நள்ளி! நீ வாழ்க என்று புலவர்கள், வாழ்த்திக் கொண்டு அவன் தந்த பொருளால் இன்பமாக வாழ்ந்தனர். நள்ளியின் கொடை பயன் கருதாக் கொடை! மழை போன்ற கொடை. கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றுங் கொல்லோ உலகு. 6. முத்தும் முத்தும் பன்னிரண்டு வயதுகூட ஆகாத ஓர் இளைஞர் இருந்தார். அவர் ஒரு கணக்கரிடம் எழுத்து வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதச் சம்பளம் - முப்பது நாட்களும் முயன்று எழுதினால் சம்பளம் - ரூபாய் ஒன்று! சம்பளம் குறைவு என்றாலும் இளைஞர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். எதனையும் ஆழ்ந்து கவனித்துச் செய்யும் இளைஞரது வேலைத் திறம் கணக்கரைக் கவர்ந்தது. இளைஞர்மேல் அன்பு கொள்ளுமாறும் செய்தது. ஆனால் வேலைத் திறமோ அன்போ சம்பளத்தை ஒன்றும் கூடி விடவில்லை! இளைஞர் கணக்கரிடம் வேலைபார்த்து வரும்போது, ஒரு தாசில்தாருடைய உறவு ஏற்பட்டது. அவர் திருவாரூரில் இருந்தார். அவரை நம் இளைஞர் அடிக்கடி சென்று கண்டு பேசியும், அவர் மகிழுமாறு பணிகள் செய்தும் வந்தார். அதனால் இளைஞர் தாசில்தாரது அன்பரானார். ஒரு நாள் தாசில்தாரைப் பார்ப்பதற்காகச் செல்வர் ஒருவர் வந்தார். ஐயா, யான் வெளியூருக்குச் சென்று வரவேண்டிய தேவை உள்ளது. வரவும் நாள்கள் பிடிக்கும். நிலத் தீர்வைப் பணம் கட்ட வேண்டியுள்ளது. கணக்கர் ஊரில் இல்லை. தாங்கள் பணத்தை வாங்கிக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றார். தாசில்தார் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! எவ்வளவு பெற்றுக் கொள்வது? தாசில்தாருக்கு இவ்வளவு ரூபா என்று தெரியாது : செல்வருக்கும் தெரியாது. கணக்கர் ஊரில் இல்லை. ஆனால், அக்கணக்கரிடம் வேலை பார்க்கும் இளைஞர் - நம் இளைஞர் - தாசில்தாரின் அருகில் இருந்தார். எவ்வளவு தொகை என்று உனக்குத் தெரியுமா? என்னும் குறிப்புடன் இளைஞரைப் பார்த்தார் தாசில்தார். ஐம்பது அறுபது இடங்களில் நிலம் வைத்திருந்த அச் செல்வரது கணக்கை இளைஞர் எப்படி மனத்தில் வைத்திருக்க முடியும்? என்ற திகைப்பும் தாசில்தாருக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இளைஞர் முகமோ அதனைக் கூற முடியும் என்பது போல் மலர்ந்து விளங்கியது. சிறிதுநேரம் கணக்கினை மனத்துள் கூட்டிச் சேர்த்து இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தைந்து ரூபா, எட்டணா, ஒன்பது காசு என்று கூறினார். செல்வருக்கு வியப்புத் தாழவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னும் ஏறக் குறைய இவ்வளவு கட்டி வந்ததாக அவர் நினைவு! தமக்குரிய வரிப்பணம் இவ்வளவு என்று தாமே அறியக் கூடாத நிலைமையில் இருக்கும்போது ஒரு ரூபாச் சம்பள இளைஞர் தெளிவும் திருத்தமுமாகக் கூறியது வியப்பாக இருக்காதா? தாசில்தார் இளைஞரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். இவ்வளவு நினைவாற்றலும் நுண்ணறிவும் உடைய இச்சிறுவன் எதிர்காலத்தில் முன்னுக்கு வரத் தக்கவனே என்று எண்ணினார். அவர் சிந்தனை கலையுமாறு செல்வர் கூறினார் : ஐயா, கணக்கு ஏறக்குறையச் சரியாகவே இருக்குமென்று கருதுகிறேன். இப்பொழுது இவன் சொல்லிய தொகையைத் தங்களிடம் கட்டி விடுகிறேன். கூடுதல் குறைதல் இருக்குமானால் சரிபார்த்துக் கொள்வோம் என்று பணத்தைக் கட்டிவிட்டுப் புறப்பட்டார். தாசில்தாருக்கு, இளைஞர் முன்னேற்றத்திற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அரும்பியது. இவ்வேளையிலே மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அடுத்திருந்த ஓர் ஊர்க் குளம் உடைந்து பெருஞ்சேதமாகி விட்டது. ஊரார், தாசில்தாரிடம் உதவி வேண்டி ஓடி வந்தனர். சேதம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க வேண்டியதுடன், உடைப்பினை அடைக்க எவ்வளவு செலவு ஆகும் என்றும் கணக்கு எடுக்க வேண்டியது தேவை ஆகிவிட்டது. அதற்காகத் தம் அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி எவரேனும் எழுத்தர் இருந்தால் அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தார். அது காலைப் பொழுதாக இருந்த காரணத்தால் அங்கு எவரும் வந்திருக்கவில்லை. ஆனால் தற்செயலாக ஒரு விளம்பரத்தினைப் படித்துக் கொண்டு அங்கு நின்றார் நம் இளைஞர். அவர், அலுவலகத்திற்கு வந்த ஆள் வழியாகச் செய்தியினை அறிந்து கொண்டு தாசில்தாரிடம் சென்றார். தாம் கணக்கு எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறி, உடைந்த குளத்திற்குச் சென்று கணக்கெடுத்துக் கொண்டு வந்தார். தாசில்தாரின் அனுபவம் இளைஞர் கணக்குச் சரியாக இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தது. இருந்தாலும் தெளிவாக்க விரும்பினார். அலுவலகத் தலைமை எழுத்தர் வந்தவுடன் அவரை அனுப்பிக் கணக்கு எடுத்து வருமாறு பணித்தார். அவர் கணித்து வந்த கணக்கும் இளைஞர் குறித்திருந்த கணக்கும் சரியாக இருந்தமையைக் கண்ட தாசில்தார் காலம் நீடிக்காது இப்பயன் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு கொண்டார். தொடக்கப் படிப்புடன் இருந்த இளைஞர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றார். முதல் மாணவராகவே எல்லா வகுப்புகளும் தேறினார். மாநிலம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்த கட்டுரைப் போட்டி ஒன்றிலே முதன்மையாக வெற்றியடைந்து ஐந்நூறு ரூபா பரிசு பெற்றார். இவர் படித்து வந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மேல் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தனர். இளைஞர் முதலில் மாநிலக் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சென்றார் : விரைவில் கல்வி அதிகாரியானார். பின் வழக்கறிஞர் களுக்கென இருந்த தேர்வில் முதல்வராக வெற்றியடைந்தார். அதனால் மாவட்ட முன்சீப், துணைக் கலெக்டர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்னும் உயர் பதவிகளைச் சிறப்புடன் நடத்தினார். உயர்மன்ற நீதிபதியாக வந்த முதல் இந்தியர் நம் இளைஞரே என்றால் நம் இளைஞரின் சிறப்புத்தான் என்னே! ஒரு ரூபாய் எழுத்து வேலை பார்த்த இளைஞர், இடையறாத முயற்சியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக வருவது எளிய செயலா? எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியதா? கொழுந்து விட்டெரியும் முயற்சி நம் இளைஞரிடம் இருந்தது. அது வறுமை, பிணி, எதிர்ப்பு ஆகிய இருட் படலங்களை இருந்த இடம் தெரியாமல் ஓட்டியது. இல்லையேல் உயர்நீதிமன்றத்தின் முகப்பில் இவ்விளைஞருக்குப் பளிக்குச் சிலை நிறுத்தி வைப்பார்களா? ஓ! ஓ! இளைஞர் பெயரைச் சொல்லவில்லையோ? அவர் தாம் வீட்டிலே விளக்கு வெளிச்சம் இல்லாது தெரு விளக்கிலே படித்து முயற்சியால் முன்னுக்கு வந்த சர். தி. முத்துசாமி ஐயர்! கடல் தந்த முத்தா இளைஞர் முத்து? கடல் தராமுத்து அல்லவா! ஆமாம் : மறந்து விட்டோமோ, முத்துசாமியைக் கடல் தரா முத்து ஆக்கிய தாசில்தார் பெயர் என்ன? நன்றி மறக்கலாமா? அவரும் ஒரு கடல் தரா முத்துதான்! அவர் போல் எத்தனை அதிகாரிகள் உண்டு? அவர் பெயர் முத்துசாமி நாயகர்! வாழ்க கடல் தரா முத்துகள் என்று வாழ்த்தத் தோன்றவில்லையா? முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 7. கல்யானை வான் வறண்டாலும் தான் வறளாத நீர் வளம் உடையது காவிரி. சோலைகளைப் பெருக்கிச் செல்வதால் காவிரி என்றும், தேனொழுகும் சோலைகளை மிகக் கொண்டுள்ள படியால் காவேரி என்றும் (வேரி = தேன்) பெயர் பெற்ற பெருமை காவிரிக்கு உண்டு. ஆற்றுப் பெருக்கால், வரப்பு உயர்வதும், வரப்பு உயர்வதால் நீருயர்வதும் நீருயர்வதால் நெல்லுயர்வதும், நெல்லுயர்வதால் குடி உயர்வதும், குடி உயர்வதால் கோல் உயர்வதும் இயற்கை அல்லவா! சோழ நாட்டின் வளங் கண்டு, அதனை அண்டை நாட்டினரும், அயல் நாட்டினரும் பன்முறை கைப்பற்ற எண்ணியது உண்டு! படை கொண்டு வந்ததும் உண்டு! ஆற்றாமல் தோற்று ஓடியதும் உண்டு : ஆட்சி நிலைக்க விட்டதும் உண்டு! வேற்றவர்களை அல்லாமல் வேந்தர் பரம்பரை யினருள்ளும் யான் ஆள வேண்டும் : அவன் என்ன ஆய்வது? என்னளவு அவனுக்கு உரிமை உண்டா? உரம் உண்டா? உயர்வு உண்டா? என்று கிளர்ந்து எழுயந்தவர்களும் கேடு சூழ்ந்தவர் களும் பலர் பலர். இத்தகைய பிணக்குமிக்க ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த ஆண்மையால் பிறரை அடக்கி வைத்திருந்த வேந்தன் திடுமென இறந்து விட்டான் என்றால், அவன் இறப்பை எப்பொழுது எப்பொழுது என்று உற்றார் உறவினர் எதிர் நோக்கியிருந்து ஆட்சியைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றால், இவ்வேளையிலே பச்சிளம் குழந்தையொன்று பாராளும் உரிமையில் இருக்கிறது என்றால், அதன் நிலைமையாதாகும்? எங்கு நோக்கினும் பகைமை; எங்கு நோக்கினும் எதிர்ப்பு; எங்கு நோக்கினும் தீமை; ஏச்சு - பேச்சு; ஆனாலும் இளைஞன் ஊக்கம் இழந்துவிடவில்லை; ஒரே ஒருவராகத் துணை நின்ற மாமனும் கைவிடவில்லை! இளைஞன் இருக்கின்றான் கோட்டைக்குள்; எதிரிகள் இருக்கின்றனர் கோட்டையின் உள்ளும் புறமும் : கட்டுக்காவல் இவ்வளவென்று இல்லை; அழிவு வேலை எவ்வளவு செய்தாலும் மூளையிலே கிள்ளி எறிகின்றான் சூழ்ச்சித் திறமும் ஊக்கமும் படைத்த மாமன்! சுற்றுப் பகைவர் வஞ்சம் என்னாம்? பகைவர் உள்ளம் வெதும்பியது; மூக்கில் புகை கப்பியது; கண்கள் நெருப்பாயின; இளைஞனை இன்று அழித்தே தீர்வோம்; ஆட்சியைப் பற்றியே ஆவோம்; என்று முனைந்தனர்; எரி நெருப்பு எடுத்தனர்; இளைஞன் இருக்கும் கோட்டைக்குள் மூட்டினர். பற்றிய தீ சுற்றிப் படர்ந்தது; பண்புடையோர் உள்ளம் பதைத்தது; பகைவர் உள்ளம் மகிழ்ந்தது; தாய்மார் உள்ளம் தவித்தது; குழந்தைகள் உள்ளம் திகைத்தது; மாமன் உள்ளம் மருகியது; உற்ற துணைவர் உள்ளம் உருகியது. நம் இளைஞன் உள்ளமோ எழுச்சி கொண்டது. சிந்திக்கப் பொழுது இன்றிச் செயலாற்றத் தொடங்கினான் இளைய வீரன். மீனுக்கு நீத்தும், புலிக்குப் பாய்ச்சலும், சிங்கத்திற்கு முழக்கும், யானைக்குப் பீடு நடையும் பயிற்றுவித்தவர் எவர்? பழக்குவித்தவர் எவர்? இவை இயற்கை என்றால் எனக்கும் கோட்டையைத் தாவுவதும், கேட்டைத் தகர்ப்பதும், நாட்டைக் காப்பதும் இயற்கை! கோட்டை என்ன கோட்டை! எனக்கு எளிய வேட்டையே என நொடிப்போது எண்ணி, மீன்போல் கிளர்ந்து, சிங்கம்போல் செம்மாந்து, புலி போல் பாய்ந்து, யானை போல் நடந்து கோட்டையை விட்டு வெளியேறினான்! இளைஞன் இறந்தான் என இன்புற்று மங்கலப் பறை முழக்கும் பகைவர் இடையே, இளைஞன் வெளியேறி முடிசூடிக் கொண்டுள்ளான் என்ற சொல் சாப்பறை கொட்டியதாயிற்று சாவாமல் சவம் ஆயினார் போல ஆயினர் சுற்றப் பகைவர்கள்! இளைஞனுக்கு ஆற்றல் மிகுதி; அதனினும் மிகுதி அவனுக்கு வாய்த்த அரிய துணை; ஆற்றலும் அரிய துணையும் இருந்தால் போதுமா? பகைவரும் புகழ, வசை கூறுவோரும் வாழ்த்தி வணங்க செயல் திறம் அல்லது வினையாண்மை வேண்டு மல்லவா! நம் இளைஞனிடம் மிகுதியாக அமைந்திருந்தது வினை நலம்! இளைஞன் காளையானான்; ஆற்றல் பேராற்றல் ஆயிற்று; வினைத்திறம் விஞ்சியது; காவிரிக் கரையிலே உலவிய அவனுக்கு, கரை புரண்டு செல்லும் வெள்ளத்தைக் கண்ட அவனுக்கு வாய்க்கால், வரப்பு, வயல் அழிக்கப்பட்டு வெள்ளத்தால் கெடுவதையும் துளிநீரும் இன்றி வறண்டு வானோக்கி ஒருபால் காடு கிடப்பதையும் நோக்கிய அவனுக்கு, நூலொடு நுண்ணறிவும் வாய்த்த அவனுக்கு ஓரெண்ணம் உண்டாயிற்று! காவிரிக்குக் கல்லால் அணைகட்ட வேண்டும் என்பதே அது. சொல்லால் அணை கட்டினான் சோழன்! கல்லால் அணை கட்டினர் தொழிலாளர்; நெல்லால் அணை கட்டினர் உழவர்; அல்லல் பறந்தது; அமைதி நிறைந்தது; சோழநாடு சோழவள நாடு ஆயிற்று; சோழன் வளவன் ஆனான்; காவிரி பொன்யாயிற்று! சோழ வள நாடு சோறுடைத்து என உண்மை உரைக்கவும், யானை வயலுள் புகுந்தால் நெற்பயிர் அதனை மறைக்கும் என உயர்வு உரைக்கவும், ஒரு பெண் யானை படுக்கும் இடம் ஏழு ஆண் யானைகளுக்கு உணவு தந்து காக்கும் எனப் புனைந் துரைக்கவும் ஆயிற்று சோழநாடு. வாழ்க சோழன் என்று வாழ்த்துவோர்களின் ஓங்கிய குரலுக்கு இடையே, ஒழிக என்போர் உதட்டு அசைவும் இல்லையாயிற்று. பற்றியெரிக்கும் பசிபுண்டானால் அன்றோ சுற்றியிருப்போர் தூண்டுதலுக்கு மக்கள் செவிசாய்ப்பர்? பொன் மலையாய் நென்மலை காட்சி தரக்கண்டோர் பொய்ப்பழியோர் மொழிக்கு இசைவாரோ? சோழநாட்டில் ஆணை செலுத்திய வேந்தன் இமயம் வரை தன் கொடி பறக்க விரும்பினான். தீர எண்ணித் தெளிந்த முடிவு கொண்டு, எண்ணிய வண்ணமே செய்து முடிக்கும் திண்மை பெற்றவனுக்கு முடியாத செயலென ஒன்றுண்டா? இமயப் பெருமலையில் சோழன் புலிக்கொடி வீறுடன் பறந்தது; வெற்றிக் களிப்போடு மீண்டான் வேந்தன். குறுநில மன்னரும், பெருநில வேந்தரும் சோழன் அடிக்கீழ்ப் பணிந்து நின்றனர்; அடி பட்டதற்கு அடையாளமாக அரும் பொருள்கள் குவித்தனர்; கலைஞர்கள் ஆடிப்பாடி இன்புறுத் தினர்; கவிஞர்கள் இறவா உடலாம் எழிற்கவிகள் பாடிப் பெருமை செய்தனர்; வடநாட்டு வெற்றியால் பெற்ற உவப்பினும், தன்னாட்டுப் பாராட்டுக்கு மகிழ்ந்தான் சோழன்; பொன்னி நதி போல் பொருள் வழங்கினான். ஒரே ஒரு புலவன் 301 அடிகளைக்கொண்ட பட்டினப்பாலை பாடிய புலவன்-கடியலூர் உருத்திரங் கண்ணன் அந்நூலுக்காகப் பெற்ற பரிசில் பதினாறு நூறாயிரம் பொன்! ஏனையோர் பெற்ற பரிசு? எவர் கண்டார்? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன், மக்கள் வாழ வாழ்ந்த அவன், இன்றும் வாழ்கின்றான் நல்லோர் உளத்தும், காவிரிக் கல்லணையில் நிற்கும் கல்யானை மீதும்! கல்யானை மீதிருக்கும் அக் காவல் யானையாவன்? அவனே கரிகாலன்! வாய்ந்த துணை நலமும், வளர்ந்த வினை நலமும் ஒருங்கெய்திய சோழன் கரிகாலன் புகழ் வாழ்க! துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். 8. நிறுத்து போரை மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க நிற்கின்றார்கள்; யார்? யார்? தந்தையும், மைந்தரும்! ஏன்? தாய் நெஞ்சிற்குக் காரணம் உண்டு; பேய் நெஞ்சிற்குக் காரணம் உண்டோ? தீய பழக்கம், தீயோர் உறவு, தெளிந்த அறிவின்மை, தூண்டுதலைக் கேட்கும் மனம், துடிக்கும் உணர்வு - இவை போதாவா பகைத்து நின்று பழி செய்ய! நல்லவன் தந்தை - வல்லமையும் அவனுக்கு மிகவுண்டு; அறநெறிக்கு அஞ்சுபவன் அவன்; மறப்போருக்கு அஞ்சாமையும் அவனுக்கு இயல்பு; அமைதி வாழ்வை விரும்புபவன் அவன் - அடக்குமுறைக்கோ அழிசெயலுக்கோ உடன்பட்டறியான்; உடன்படுவோரையும் விடான்; கொற்றவன்தான் அவன் - என்றாலும் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்பான் - குறை கண்டானோ கொதிப்படைவான்! இத்தகைய நற்பண்புத் தந்தையும், தீமையே வடிவான மைந்தரும் போர்க்களத்தில் நிற்கின்றனர். யானையும், குதிரையும், தேரும் காலாளும் தத்தம் கடமைகளை ஆற்றுதற்குக் காத்திருக் கின்றன. ஏவிவிட்டோர் இறுமாந்திருக்க ஏனையோர் ஏங்கியிருக்க, ஆணையை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றன இருதிறப் படைகளும். வயலிலே நெல்லைப் பயிரிட வேண்டா; கட்டிக் காவல் புரிய வேண்டா; களை எடுக்கவும் வேண்டா; நீர் பாய்ச்சவும் வேண்டாம்; புல்லைப் பயிரிட வேண்டும்; பொருந்தும் உரம் இட வேண்டும்; பொழுதும் சென்று போற்றிக் காத்தல் வேண்டும் என்று கூறுவது புன்மை யல்லவா! இத்தகு புல்லியர்களும் உள்ளனரே நாட்டில்; அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் இருக்கின்றனரே என்று அறிவுடையோர் வருந்துகின்றனர். மலருள் புகுந்து இசைபாடித் தேனெடுக்கும் ஈயும் உண்டு; மலத்துள் புகுந்து பண்ணிசைத்து உண்ணும் ஈயும் உண்டு; மக்களுக்கு ஊட்டந்தரும் தேன் தருவது முன்னதன் வேலை; இத்தகைய இருவகை ஈக்களையும் போல்பவர்கள் உலகில் உளர் அல்லவா! முதல் வகையைச் சேர்ந்தவன் முன்னவனாம் தந்தை; இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் பின்னவராம் மக்கள்! பன்றியின் முன் மணியைப் போட்டால் பயன்படுமா? என்பது பழமொழி. நல்லுரை கேட்டு நடப்பது நன்னெஞ்சிற்கு இயலும்; ஆயின் புன்னெஞ்சிற்குப் பொருந்துமா? தந்தை நிற்கும் இடம் நாடிச் சென்றார் அருள் மிக்க புலவர் ஒருவர்; புல்லாற்றூரில் பிறந்தவர்; எயிற்றியனார் என்னும் பெயரினர். வேந்தே என்றார் விரைந்து சென்ற புலவர். புலமையாளர் களை வரவேற்றுப் போற்றுதலில் இணையற்ற அவ்வேந்தனாம் தந்தை போர்ச் சின்னத்தை ஒரு பக்கம் போக்கிப் புன்முறுவல் மிகுந்து நல்லுரை கூறி வரவேற்றான். கைவேலைக் கடிதில் எறிந்து மெய் தழுவி இன்புற்றான். புலவர் பேசினார் : அரசே! அன்புகனிய அகம் குழைய நீ எடுத்து மகிழ்ந்த மக்கள் இவர்; ஆசைப் பெருக்கால் உச்சி முகர்ந்து உவகை உரைக்க வளர்ந்தவர் இவர்; கன்னல் பாகோ, கனிச்சாறோ, கவின் தேனோ, களி மதுவோ என்று மயங்க மழலை பொழிந்தவர் இவர்; மலரிலாச் சோலையும், மதியிலா வானமும், நீராடுந் துறையிலாக் குளமும், மணமிலா மாலையும் போன்றது புதல்வரைப் பெறாத வாழ்வு எனத் தேர்ந்த உன்னால் அன்பே! ஆருயிரே! கண்ணே! கண்ணின் மணியே! என்றெல்லாம் போற்றப் பெற்றவர் இவர்! ஆனால் இன்றோ எதிர் எதிர் நின்று போரிட உள்ளீர்! தந்தை உரிமையை அணுவும் நினைத்தாரல்லர் இவர்; நீயும் மக்களென உளங் கொண்டாயில்லை. உன்னை எதிர்த்து நிற்குமாறு அவர்களது பண்பும் உறவும் பட்டறிவும் துணைபோகலாம்; உன் பண்பும் உறவும் பட்டறிவும் அவர்களை எதிர்க்கத் துணைபோகலாமா? சோழர் குடியில் வந்த உங்களுக்கு ஒரொரு கால் பாண்டியரும் சேரரும் பகைவராயிருந்துள்ளர். ஆனால் இன்று நீ போரிட முனைந்து நிற்பது சேரரிடமோ பாண்டியரிடமோ இல்லை; சோழரிடம் - இல்லை - உன் மக்களிடம்? வெற்றியும் தோல்வியும் இப்பொழுதே தெரியுமா? நீ வெற்றி பெறுவாய் என்றே முடிவு கொள்வோம்; வென்று, ஆண்டு பின் யாருக்கு இவ்வாட்சியைக் கொடுப்பார்! பிறந்தவர் யாவரும் நிலையாய் இருந்துவிட முடியாதே! அப்படிச் சமயத்தில் வேறொருவரிடம் நாட்டை ஒப்படைப்பாயா? அது அறம் ஆகுமா? அன்றி உன் குடிக்கு ஏற்ற தகுதிக்குத்தான் பொருந்துமா? உன் மக்களோ, மற்றவர்களோ ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பார்களா? இது நிற்க. நீ ஒரு வேளை இவர்களிடம் தோற்றுவிட்டால் அய்யோ... அவ்விழிவை - பழிநிலையை - என்னால் நினைக்கவும் முடிய வில்லை. தலைகாட்டாது திரியும் பகைவர்களும் நிமிர்ந்து நடப்பார்களே! எள்ளி நகையாடுவார்களே! இகழ்ந்து உரைப்பார்களே! இவற்றை எண்ணினால் உனக்கு என்ன தோன்றுகின்றது? போரை விடுவது அன்றிப் புகழ்வழி யாதேனும் உண்டோ? மண்ணுலகப் புகழும் விண்ணுலகப் புகழும் எய்த ஒரே ஒரு வழி போர் விடுப்பதே! என்றார். சோழன் நல்லதே நினைந்து, நல்லதே செய்பவன் அல்லவா! உணர்ச்சியால் வழிதவறிச் சென்றாலும் உயர்ந்த பெரியோர் உரையை முடிமேற் கொண்டு ஒழுகுபவன். ஆதலால் பெருமையும் நன்மையும் தாராத போரை நிறுத்தினான். இன்றும் புகழுடன் வாழ்கிறான். அச்சோழன் பெயரென்ன? கோப்பெருஞ்சோழன் என்பது அவர் பெயர்! ஆனால் மக்களென அறிகிறோமே அன்றி அவர்கள் பெயரும் அறியோம்! என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை (புகழும் நன்மையும் தராத செயல்களை எக்காலத்தும் நீக்கி விடுதல் வேண்டும்!) 9. எவர் வாழ்வோர்? கோபம் மிக்க தந்தை தன் மகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கிறான்; நையப் புடைக்கிறான்; கண்கள் சிவக்க, நெஞ்சம் கொதிக்க, நாடி துடிக்கத் திட்டுகிறான்; கண்டவர்கள் மைந்தன் நிலைமைக்காகப் பரிவு காட்டுகின்றனர்; தந்தையின் கொடுஞ் செயலுக்காக வருந்துகின்றனர்; வாய்விட்டுப் பேசித் திட்டு கின்றனர்; ஓடிப்போய்ப் பிடிக்கின்றனர்; நிறுத்துகின்றனர்! ஆனால் ஒரு காவல் நிலையத்துள் (போலீசு நிலையம்) இம்மாதிரி ஒரு செயல் நடந்தால் பொதுமக்கள் சென்று தடுக்க முனைவது இல்லை; முனைவதும் குற்றமாகி விடும்! விட்டிலைச் சிறுவர்கள் பிடித்து, சிறகினைப் பிடுங்கி, வாலிலே நூல் கட்டி இழுத்து வதைப்பதைக் கண்டால் இரக்க முடைய எவரும் தம்பி இந்த விளையாட்டு வேண்டாமடா என்று சொல்லத் தவறார்; சிறுவனோடு விளையாடும் ஓர் இளைய சிறுவனும் கூடச் சிறிய அளவில் இரக்கம் படைத் திருப்பின் தடுப்பான்! ஆனால் வேந்தன் ஒருவனைக் காரணம் இருந்தோ இல்லாமலோ - அறியாமல் கூடச் செய்யலாம் அல்லவா! - கழுவேற்றுகிறான்; தூக்கில் போடுகிறான்; கைகால் களை வாங்குகிறான்; தலையை வெட்டுகிறான்; அங்கே போய் அரசே! அமைச்சே! இச்செயல் இழிவுடையது; பழியுடையது; இத்தகு கொடுஞ் செயலை விடுக என்று உரத்தோடு உரக்க முன் வருவோர் அரியர். பாஞ்சாலி சபதம் என்னும் காவிய நூலில் பாரதியார் புலம்புவார் மாந்தர் நிலைமையை நினைத்து! பாஞ்சாலியைத் துச்சாதனன் அரச அவைக்கு, இழுத்துச் செல்கிறான் தெருவழியே! வழி நெடுக மக்கள் திரள்கின்றனர். ஆ! v‹d bfhLik! என்று வாயோடு வாயாக முணு முணுக்கின்றனர். வாய்விட்டு உரத்துப் பேசி, ஒன்று கூடி, கூந்தலைப் பிடித்து நீசன் இழுத்துச் செல்வதைத் தடுத்து, அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி, அவனைத் தரையோடு தரையாக மிதிக்க வலிமையற்ற இவர்கள் கதறி அழுதும், கண்ணீர் சிந்தியும் என்ன பயன்? வீரமிலா நாய்கள்! பேடிப் பதர்கள்! என்று வருந்துகின்றார். அரசவையில் நிறுத்தி இழிவு செய்ய முனைந்த போதும், அரசர், அமைச்சர், அறிவோர், வீரர் எவரெவரோ இருக்கின்றார்; இருந்தும் தீங்கு தடுக்கும் திறமிலேம் என்று தலை தாழ்ந்து இருக்கின்றனர். பாரதியார் பெண்மை வாயார் - பாஞ்சாலி வாயால் - கேட்கின்றார். மங்கியஓர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய் நின்னை எவரும் நிறுத்தடா என்பதிலர் என்செய்கேன் சிறியவர் செய்யும் சிறு பிழைகளைத் தடுக்க ஓடி ஓடி வரும் மக்கள், பெரியவர் செய்யும் தவறுகளைத் தடுக்க முன்வர அஞ்சுகின்றனர் அல்லவா! தவறு செய்தவர் எவராயினும் தட்டிக் கேட்கும் உரிமை, உரம், உறுதி எந் நாட்டில் ஏற்படுகிறதோ அந்நாடுதான் உரிமை நாடு; நாகரிக நாடு; உயர்ந்த நாடு! திருத்தி வாழுதற்கும் வழிவகை செய்யும் நாடு! இத்தகைய சீரிய நாடுகளுள் தலையாய ஒன்றாகத் திகழ்ந்தது தமிழகம், சங்க காலத்தில்! அதற்குச் சான்றுகள் மிகவுள; ஒன்று காண்போம்! ஆடி வரும் மணி; அசைந்து வரும் யானை; கூடி வரும் கூட்டம்; குமைந்து வரும் உள்ளம்; தேடி வரும் சிறுவர்; திகைத்து நிற்கும் நெஞ்சம்; வீர மிகு வேந்தன்; வெற்றி மிகு படைகள்; அழுது நிற்கும் மாதர்; அமைந்து நிற்கும் ஏவலர்! - ஒரு கொலைக் களத்தின் சிலச் சில பக்கங்களில் காணப்பெறும் காட்சிகள்! ஏவு யானையை - அரசன் குரல்! எங்கே - அப்பாவி மக்கள் சிலர் குரல்! ஐயோ - ஐயையோ - பொறுக்க மாட்டா இளமனத்தின் கதறல்! இந்தப் பிள்ளைகளை மிதித்துக் கொல்லவா? - ஏக்கமிக்கோர் உரை! இந்தச் சிறுவர்கள் என்ன கொடுமை செய்தார்கள்; பாவம் ... ஏதும் அறியாதவர்கள் அல்லவா! பெருங்கொடுமை - அழுகையால் நீதி பெற எண்ணினோர் அவல உரை! யாராவது துணிந்து தடுக்க மாட்டார்களா? ï¥go¡ bfhLik el¡f Élyhkh?- தாம் மனிதர் என்பதைத் தாமே நம்பாமல் எவருக்காவது மனிதப் பதவி தர முயல்வோர் இரங்கல் உரை! ஐயையோ! காரியின் மைந்தர் அல்லவா! வள்ளல் காரியின் மக்களுக்கா இக் கதி நேர வேண்டும்? எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் விரிவு இல்லாமல் காரிக்காகத்தான் கண்ணீர் வடிப்பவர் - இரக்கத்தை ஒரு பாதை வழியே போக விட்டவர்கள் - அதிலும் துணிவு இல்லாதவர்கள்; நைவுரை! - களத்தில் எழுந்த ஒலிகள் இவை! இவர்கள் ஒலி வேந்தனுக்குக் கேட்கவில்லை; கேட்க வேண்டுமென்று இவர்கள் கூறவும் இல்லை; கேட்டுவிட்டால் வேந்தன் என்ன நினைப்பானோ என்று ஏங்கிக் கொண்டிருந் தவர்களும் இல்லாமல் இல்லை! மனத்தை அடக்க மாட்டாமல் ஏதோ புலம்பிவிட்டார்கள்; அவ்வளவே! அரசன் துணிந்து தன் செயலை ஆற்றத் தொடங்கினான். பாகனே! யானையைச் செலுத்து; இச் சிறுவர்களை மிதித்துக் கொல்லச் செய் என்று ஆணை பிறப்பித்தான். என்ன காரணம் என்று அறியாமல் திகைத்து நின்ற சிறுவர் இருவரும், யானையின் மணியோசை கேட்டு, அதன் மலை போன்ற நடை கண்டு, தங்களை நோக்கி வரும் நிலை கண்டு, மருண்டு மயங்கினர்! பாகன் யானையை விரைந்து செலுத்து கிறான்; பாராள்வோன் ஏவுகிறான்; கூட்டத்தை ஊடுருவிக் கொண்டு ஒரு புலவர் வந்தார். நிலைமை அவருக்கு வேதனை தந்தது; அதனை நினைத்துப் பார்க்கவே கொடிதாக இருந்தது. அதனால் வேந்தனே நிறுத்து என்று கட்டளையிட்டார்! கட்டளைதான். அது! யான் கூறுவதைக் கேள்! அதன் பின்னும் யானையை ஏவ வேண்டு மாயின்... அதுவே உன் விருப்பு ஆயின் ஏவு! அதுவரை நிறுத்து என்றார். கூட்டத்தினர் பார்வையெலாம் ஒரு முகமாகப் புலவர் மேலும், புவியாள்வோன் மேலும் மாறி மாறிப் பாய்ந்து நின்றன! அமைதி குடி கொண்டது! யானை தன் தலையசைப்பை விடவில்லை! அதன் காற் கீழ்ப்பட இருந்த சிறுவர்களும் மயக்கம் நீங்கினர் இல்லை! அரசே! புறா ஒன்றைக் காப்பதற்காகத் தன்னுடலை அரிந்து தந்த பெருமைக்குரிய செம்பியன் என்னும் சிபி உன் முன்னோன்! அவன் பரம்பரையில் வந்த உன்னை அருளாளன் என்பேன். ஆனால் உன் செயல் உன் பரம்பரைக்கோ, உனக்கோ பொருந்துவதா? பெருமை தருவதா? இல்லவே இல்லை என்பதை நீ அறிவாய்? இவர்கள்தான் கொடியவர்களா? தீமை செய்வதையோ தொழிலாகக் கொண்ட குடி வழி வந்தவர்களா? இரப்பவர்க்கு இல்லை என்று கூறாமல், இருப்பது அனைத்தும் தந்து புலவர் தோழனாய், இரவலர் புரவலனாய், கலைஞர் காவலனாய், பாணர் புதையலாய் விளங்கிய வள்ளல் காரியின் மைந்தர்கள் அல்லரோ! இவர்கள் மேல் உனக்கு உண்டான சினந்தான் என்ன? உன் புலமைக்கும், புகழுக்கும் இது தகும் என்றால் உன் விருப்பம்போல் செய் என்றார்! புலவர் துணிவை மக்கள் பாராட்டினர். மன்னன் மதித்தான்; அறம் உணர்ந்தான்; அருள் கொண்டான்; இளைஞர்களோ உயிர் கொண்டார்; புலவரோ புகழ் கொண்டார்! தமிழகம் தனக்கு நேர இருந்த களங்கம் ஒன்றைத் துடைத்துக் கொண்டது! இலக்கியம் - புறநானூறு - அருமையான பாமணி ஒன்றைப் பெற்றுப் பொலிவு கொண்டது! குறள் வாழ்வு ஓர் இலக்கியம் கொண்டது. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். (மேலும் மேலும் உயர்வோம் என்று விரும்பி முயலு கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடுதல் வேண்டும்.) 10. எப்படி வாழ்வது? 100 கிலோவுக்குக் குறையாமல் 150 கிலோவைத் தொடும் அளவில் உடல்; ஏந்தித் திரியும் கை; இரந்து கூறும் வாய்; இல்லையென்றால் ஏசும் நா; வாங்கிய பின் நன்றி பாராட்டாத நெஞ்சம் - இப்படி எத்தனை எத்தனை பேர்களைத் தெருக்களிலே காண்கிறோம்! அதே பொழுதில்; ஒட்டிய வயிறு; ஒடுங்கிய கன்னம்; இளைத்த உடல்; ஏங்கிய மூச்சு; உலர்ந்த நா; மயங்கிய கண்; தள்ளாடும் கால்; தவித்த நடை; கடிய பாரம்; கொடிய வெயில் - கரடு முரடான பாதை - வயிற்றுத் தீப்பிணியை மானத்தோடு தணிக்க வேண்டி வண்டியிழுத்துத் திரியும் வறிய - ஆனால் மானம் பேணும் - ஒரு கூட்டத்தையும் தெருக்களிலே காண்கிறோம்! இன்னொரு பக்கம்; இடிந்த வீடு மடிந்த உள்ளம்; கால் போகி, நார் கழன்ற கட்டிலாகக் காட்சியளிக்கும் கூரை; பழைய சாக்கு விரிப்பு; கந்தல் தலையணை; மூச்சு விடவும் முணக்கம்; எலும்புருக்கி நோயின் இளைப்பு; இடிந்த அடுப்பு; முரிந்து போன பானை; குப்பைக் கீரை; உப்பில்லா அவியல் - இவ்வளவும் காட்சிப் பொருளாய் இலங்க மானத்தைப் போற்றி - பிச்சைக் காரராகித் தெருவில் நடை பிணமாகத் திரிவதினும் உண்மைப் பிணம் ஆவது மேல் எனக் கருதி கதவு இல்லாக் குடிசைக்குள் கிடக்கும் வெம்பிய உள்ளங்கள்! வாழ வழியிருந்தும் - தோட்டம் துரவு, நன்செய் புன்செய்; ஆடு மாடு; செல்வம் சீர்; பட்டம் பதவி; வாழ்வு வளம்; வெற்றி விருது; ஒட்டு உறவு; சுற்றம் சூழல் எல்லாம் இருந்தும் - உள்ள செல்வத்தைக் கணக்கெடுக்க ஒரு நூறு பேர் சேர்ந்தாலும் ஓராண்டு முயன்றாலும் இவ்வளவென்று தெளிய முடியாத சொத்து - இருந்தாலும் ஊர் ஊராக, நாடு நாடாக இருந்தாலும் மேலும் மேலும் வஞ்சத்தாலும், கள்ள வணிகத்தாலும் கையூட்டாலும் (இலஞ்சம்) பொருளைப் பெருக்கித் திரட்டித் திரியும் நெஞ்சமிலார்! இவற்றை எண்ணிப் பார்க்கும் நெஞ்சத்தே மானம் எது என்பது புலனாகாமல் போகாது. உயிருக்காக மானத்தை விடுவதா? மானத்திற்காக உயிரை விடுவதா? என்னும் இரு வேறு வினாக்களுக்குக் கிடைக்கும் விடையைக் கொண்டதே மானத்தின் வாழ்வும்; தாழ்வும். மானம் அழிந்தபின் வாழாமை இனிது என்பார் மொழியும், மானத்தை விட்டும் உயிர் வாழ நினைவார் நினைவும் எண்ணிப் பார்க்கத் தக்கதேயாம். மானம் என்பது என்ன? தன் நிலைமையில் தாழாமையும், தாழ்வு வந்தால் உயிர் வாழாமையுமே மானம்! இம்மானம் போற்றி ஒழுகப் பெறுகிறதா? போற்றுவோர் என்றும் போற்றித்தான் வாழ்கின்றனர். போற்றாதோர் என்றும் போற்றாதுதான் இழிகின்றனர். பசுவொன்று நீர் வேட்கையால் நடக்க மாட்டாமல் நடக்கின்றது; வழியிலே கிணற்றில் ஒருவர் நீரெடுக்கின்றர்; அவரிடைச் சென்று இப்பசுவிற்கு நீர் வேட்கையுளது; அருள் கூர்ந்து நீர் தருக என்று கேட்டிரந்து நீர் ஏற்றுப் பசுவைக் காப்பதிலும், தன் முயற்சியால் நீர்கோலி, பசுவிற்கு அளிப்பது பெருமையானது; முயற்சிச் சிறப்பைக் காட்டுவது; அன்றி நீர் இரந்து நிற்பது நாவிற்கு இழிவு தருவது. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். என்பது வள்ளுவம். இதனை வாழ்வில் கொள்வோர் எத் துணையர்? நீர் வேட்கை மிகக் கொண்டுள்ளான் வேந்தன். பகைவன் சிறைக் கோட்டத்துள் விலங்கு பூட்டப் பெற்று அடைக்கப் பெற்றுள்ளான்; வற்றா வளம் பெருகு ஆறுகள் அவன் நாட்டில் மிகவுண்டு! ஆனால் பகைவன் சிறையானபின் அவ்வாற்று நீர்ப்பெருக்கு கிட்டுமா? பகைவன் தந்த உணவை வெறுத்தான்; நீரையும் மறுத்தான்; நாள்கள் சில சென்றன; தாங்க முடியா வேட்கை; தன்னை அறியாமலே கேட்டு விட்டான் : ஏவல! தண்ணீர் தா! ஏவலன், சிறைக்குள்ளிருக்கும் காவலன் சிறப்பினை அறிந்தவன் அல்லன். மற்றையோரைப் போலவே, தப்பாகக் கணக்குப் போட்டு விட்டான். பணிவும் இன்சொல்லும் இன்றி, எக்களித்த நடையோடு நீர் கொணர்ந்து தந்தான். ஏவலன் நிலைமையை எண்ணிப் பார்த்த காவலனுக்குத் தாங்க முடியா இழிவாகத் தெரிந்தது. மானங்கெட வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பாகிப் போகியிருக்கும்; சிறிதும் தவறாது வாழ்ந்த அந்த அரசச் செம்மலுக்கு முடியவில்லை. முன்னமே உயிரைப் போக்கிக் கொள்ளாது, நாய் போல விலங்கிடப் பெற்றுப் பகைவன் சிறைக் கோட்டத்துள் இருக்க நேர்ந்த இழிவை நினைத்தான்; இவ்விழிவினையும் தாங்கி நீர் வேண்டும் என்று கேட்ட நீங்காப் பழியை நினைத்தான்; மதிப்பின்றித் தந்த தண்ணீரைப் பெற்ற மாபெருந் தவற்றை நினைத்தான் - ஆ! ஆ! மானம் இழந்தேன்! என மயங்கினான்; மருண்டான்; இனியும் வாழ்வது இழிவு என முடிவு செய்தான்! என்ன செய்தான்? மானம் என்னும் வாள், உயிராம் மரத்தை வெட்ட வீழ்ந்தான்! இப்படி மானம் பேணுபவர் யார்? மானம் போற்றிய மன்னவன் என்று இந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகச் சேரன் கணைக்காலிரும் பொறையைச் சொல்லி வருகின்றோம்.! மானத்தின் சிறப்பையும் அருமையையும் இது காட்டாதா? இடுக்கட் படினும் இனிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். (அசைவிலா அறிவை உடையவர் எத்தனைய துயர்க்கு ஆட்பட்டாலும் இழிவான செயல் செய்யார்). 11. மெய்மைப் பொய் மணிமுத்து! வெள்ளை வாங்கிக் கொண்டு வா. போனேன் வந்தேன் என்று இருக்க வேண்டும்! தெரிந்ததா? என்று புட்டியையும் சில்லறையையும் தந்து அனுப்பினான் மூக்கன். சேவல் சண்டை பார்க்காமல் விட்டுச் செல்ல மணிமுத்துக்கு மனமில்லை. ஆனாலும், அப்பன் சொல்லைக் கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறியாதவன் அல்லன் அவன். வேண்டா வெறுப்புடன் விரைந்து கடைக்குச் சென்றான் மணிமுத்து. மூக்கன் குடும்பம் செல்வமான குடும்பமாகத்தான் இருந்தது. மூக்கன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானோ இல்லையோ - தெருவில் நிற்க வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டான். அவன் பாட்டனார், தந்தையார் அரும்பாடு பட்டுத் தேடி வைத்திருந்த சொத்தையெல்லாம் குடி, சூது ஆகியவற்றிலே தொலைத்தான். பொருளைத் தொலைத்ததுடன் உடலையும் கெடுத்துக் கொண்டான். நோய் நொம்பலம் இல்லாமல் வளர்ந்த மூக்கன், மெலிந்து எலும்புக்கூடாக மாறி விட்டான். உடல் கெட்டபின் உள்ளம் கெடாமல் இருக்குமா? கண்ட கண்ட போக்குகளிலெல்லாம் போய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து கொண்டு வந்தான். வறுமைத் துன்பமும், நோய்த் துயரும் அதிகரிக்க அதிகரிக்க இன்பவழி ஏதாவது கிடைக்காதா என்று தேடித் தேடித் திரிந்தான். இவ்வளவு கெட்டுப் போன உள்ளம் உடையவனுக்கு எது இன்பமாக இருக்கும்? நல்லவர்களைப் பார்ப்பதோ, அவர்களோடு பேசுவதோ இன்பமாக இல்லை. இயற்கை வளம் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதோ இயற்கைக் காட்சிகளைக் காண்பதோ இன்பமாக இல்லை. புத்தகங்களையோ செய்தித் தாள்களையோ படிப்பது இன்பமாக இல்லை. எப்படி இருக்க முடியும்? காக்கைக்கு விருப்பமானது பிணம்தானே! தீயவர்கள் சேர்க்கை, சூது, கள், சாராயக் குடி வகைகள் இவையே அவனுக்கு இன்பமாயின. எப்பொழுது பார்த்தாலும் இவற்றுள் ஒன்றில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியாது. அப்படிப் பழகி விட்டான். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. என்னும் குறள் நெறி அவன் செவியில் விழ வாய்ப்பே இல்லை. அப்படியே விழுந்தாலும் அதனைச் சொல்லியவனைச் சும்மா விடப் போவதுமில்லை. அவன் பரம்பரையையே சந்திக்கு இழுத்து விடுவான். ஒரு நாள் மணிமுத்து ஒருவன் தோட்டத்திற்குப் போய்த் தேங்காய்கள் சில பறித்தான். பறிக்கும்போது தோட்டக்காரன் கண்டு விட்டான். அவனுக்குக் கோபம் மிகுதியாயிற்று. தூரத்தி லிருந்து வரும்போதே கத்தினான். பக்கத்தில் வந்தபோது மணிமுத்தைப் பார்த்ததும் என் திட்டினோம் என்று பதறிப் போனான். மெதுவான குரலில் மணிமுத்து, இறங்கு கீழே! இப்படியா செய்வது? ஆளில்லாத வேளையில் இப்படிக் காயை வெட்டுவது உனக்கே நன்றாக இருக்கிறதா? வா, உன் அப்பா வினிடமே கேட்கலாம் என்று அழைத்துச் சென்றான். தோட்டக்காரன் நடந்து கொண்ட அளவு ஒருவன் பொறுமை யாக நடந்திருக்க முடியாது. இத்தோட்டக்காரனும் மூக்கன் மகன் மணிமுத்து தவிர்த்து இன்னொருவனிடம் இப்படி நடந்திருப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது. மூக்கன் தோட்டக்காரனுக்கு என்ன பரிசு தந்தான்? நீ திருட்டுப் பயல்; உன் அப்பன் திருட்டுப் பயல்; உன் பாட்டன் திருட்டுப் பயல்; உன் பரம்பரையே கொள்ளைக் கூட்டம். ஒரு பயலிடம் யோக்கியதை உண்டா? தோட்டம் வைத்திருக் கிறானாம் தோட்டம். இவன் ஒருவனுக்குத்தான் அதிசயமாகத் தோட்டம் இருப்பது போலே! ஏய், நீ பிச்சைக்காரப் பயல்; இந்தச் சின்னப்பயல் தெரியாமல் தேங்காயைப் பறித்ததற்குக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயே - நீ செய்வதைச் செய்! அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தான் என்றான். கூட்டம் திரண்டு விட்டது. கூடியவர்களும் தோட்டக் காரன் இதனை இவ்வளவு பெரிது பண்ணியிருக்க வேண்டாம் என்று ஒத்த முடிவு கூறினர். தோட்டக்காரன் என்ன செய்வான்? வாயை மூடிக்கொண்டு போனான். இத்தகைய மூக்கனின் இல்லறம் எப்படி நயமாக நடந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து கண்டு கொண்டிருக்கலாம். புலிக் குகையிலே புள்ளிமான் குடியிருந்தது போலக் குடியிருந்தாள் காத்தாயி. புலி, சிங்கங்களுக்குக்கூட, கழுகு, பருந்துகளுக்குக்கூட தன் பெட்டை குட்டி குஞ்சு என்ற பாசம் உண்டு. ஆனாலும் கூட முக்கனைப் பொறுத்த அளவில் அது இல்லை என்றால் அந்த வாழ்வினை எப்படியுரைப்பது? ஏதோ உயிரைப் போக்கிக் கொள்ளாமல் வாழ்ந்தாள். மணிமுத்தையும் பெற்றெடுத்தாள். மூக்கன் என்றோ ஒரு நாள் அயலூர் ஒன்றிலே சேவற் சண்டை நடப்பதைக் கண்டான். அது அவனை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு இரண்டு பேர்கள் எதிரெதிராக இருந்து, சேவல்களைப் போருக்கு அனுப்புவதும், அவற்றின் கால்களிலே கத்தியைக் கட்டி விடுவதும், ஒவ்வொரு முறையும் ஏவி வெறி யூட்டி விட்டுக் குத்துமாறு செய்வதும், தோற்று ஓடினால்கூட விடாது பிடித்து வைத்து மேலும் தாக்க விடுவதும், அது சிந்தக்கூடிய இரத்தத்தைக் காண்பதிலே களிப்புக் கொள்வதும், எதிரியின் சேவலை அடித்து வெற்றி இன்பம் கொள்வதும் மூக்கனைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. இக்காரியத்தைத் தன் ஊரிலேயும் நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்தான். மூக்கன் நினைத்தால் அவன் ஊரில் நடத்த முடியாது போய் விடுமா? எத்தனை மூக்கர்கள் முன் வரமாட்டார்கள்? ஊர்ப்புறத்திருந்த ஆலந்தோப்பிலே சேவற் போர் நடந்தது. எவ்வளவோ நல்ல காரியங்களுக்கெல்லாம் பயன்பட்டு வந்த அந்த ஆலந்தோப்பு கோழிச் சண்டைக்கும் பயன்பட்டது. அது தொடங்கியபின் தோப்பின் களை கெட்டதும் அன்றி, ஊரின் களையும் கெட்டது. ஊரிலுள்ள மக்களின் மனங்களிலும் எத்தனை எத்தனையோ பகைமையும், வேற்றுமையும் பிணக்கும் ஏற்பட்டன. இவ்வளவையும் தலைமை நின்று நடத்தியவன் மூக்கன்தான். சேவற்போர் வெற்றி தராது என்றால் வலுச் சண்டை செய்தாவது வெற்றி தேடி விடுவது அவன் வழக்கம். கைச் சண்டையோ, வாய்ச் சண்டையோ அதனைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. இப்படியே எவ்வளவு நாள்கள்தான் காட்டு ராசாவாக ஆட்சி செய்ய முடியும்? மூக்கனுக்கும் எதிரி முளைத்தான். கடுவன் என்பவன் அவன். கடுவன் மூக்கன் சேவலை அடிக்கக் கூடிய அளவுக்கு வித விதச் சேவல்களைக் கொண்டு வந்தான். இனி மூக்கன் என்ன செய்வது? மூக்கன் கடுவனை வெற்றி கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தான். சேவலை ஊக்கப்படுத்தி ஏவினான். தன்னையும் ஊக்கப்படுத்த விரும்பிச் சீழ்க்கை அடித்தான்; புகை பிடித்தான். ஏதாவது குடித்தால் தான் ஊக்கம் ஏற்படும் போல் அவனுக்கு இருந்தது. அதற்காகத்தான் மணிமுத்தைப் புட்டியுடன் கள்ளுக் கடைக்கு அனுப்பி வைத்தான். மணிமுத்து புட்டியுடன் விரைந்து ஓடி வந்தான். கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? டே ஓடி வா; போனது எந்நேரம்! வருவது எந்நேரம்! வா இங்கே! என்று கத்தினான். இனி என்ன கிடைக்குமோ? என்ற பயத்தில் ஓடிவந்த மணிமுத்து கல் காலை இடற, கள்ளிருந்த புட்டியையும் போட்டு விழுந்தான். புட்டியும் உடைந்தது. கள்ளும் கொட்டித் தொலைந்தது. சேவற்போர்த் தோல்வியல் கடுப்புக் கொண்டிருந்த மூக்கனை இது கிளறி விட்டது. கோபம் கொந்தளித்துக் கிளம்பிற்று. இடுப்பில் இருந்த கத்தியினை எடுத்துக் கொண்டு மணிமுத்தினை நோக்கி ஓடினான். கூட்டமெல்லாம் சேவற்போரை விட்டுத் திகைத்தது. மூக்கனைத் தடுக்க எவருக்குத் துணிவுண்டு? மணிமுத்து மருண்டோடும் மான்போல ஓடினான். வேங்கைப் புலிபோல வெருட்டிச் சென்றான் மூக்கன். ஓடும் விரைவில் எத்தனையோ இடங்களில் இடறியும் எழுந்தும் தாவியும் சென்றான் மணிமுத்து. ஆனால் மூக்கன் ஓரிடத்தில் உருண்டு விட்டான். உருண்டாலும் தொடர்ந்து செல்வதை விட்டானா? மணிமுத்துக்கு என்ன நேருமோ என்று அவனைப் பெற்றெடுத்த காத்தாயியும் ஓடிவந்தாள். ஐயோ ஐயோ! வேண்டாம்; வேண்டாம் என்னும் அவள் குரல் மூக்கன் செவியில் படவா செய்யும்? மணிமுத்து இளைஞன் அல்லவா! சிட்டுப் போலப் பறந்து விட்டான். முடுக்கு, சந்து, பொந்து ஆகிய இடங்களிலெல்லாம் ஓடினான். பயல் தப்பி விடுவான். என்னும் எண்ணம் தாய்க்கு ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து ஓடினாள். மணிமுத்து ஒரு வீட்டில் நுழைந்தான். அவ்வீடு மெய்யப்பனுடையது என்பதைக் காத்தாயி அறிவாள். ஆனால் மணிமுத்து, இன்னார் வீடு என்பதையும், வீட்டுக்காரன் குணம் இன்னது என்பதையும் அறியமாட்டானே! டே பையா! என்னடா ஓட்டம்? இங்கென்ன? என்றான் மெய்யப்பன். நடுக்கத்துடன் நிலைமையைச் சொன்னான் மணிமுத்து. டே, மெய்யப்பன் என்ற என் பெயரை நீ அறிய மாட்டாயா? என்ன ஆனாலும் நான் பொய் சொல்லேன். உன் அப்பன் வந்து கேட்டடால், நீ இங்கே மறைந்து இருக்கும் உண்மையைச் சொல்லி விடுவேன். வேண்டுமானால் நான் அவனைத் தேடிப் போய்ச் சொல்ல மாட்டேன், அவ்வளவுதான் உனக்காக நான் செய்ய முடியும்! அப்பப்பா! உண்மையை மறைக்க என் கால் தடம்பட்டவனுக்கும் மனம் வராது; எப்படியோ உன் விருப்பம்போல் பார்த்துக்கொள் என்றான். மணிமுத்துக்கு, மெய்யப்பன் சொல்லைத் தாங்க முடிய வில்லை. சண்டாளன் துரோகி விளாங்காதவன் என்று திட்டிக் கொண்டே ஓடினான். காத்தாயி, மணிமுத்து மெய்யப்பன் வீட்டிலிருந்து ஓடுவதைக் கண்டாள். இப்படித்தான் நடந்திருக்கும் என்று உணர்ந்து கொண்டாள். மெய்யப்பன் மனிதன்தானா? அவன் மெய்யும் ஒரு மெய்யா? கொலைப்பாதகன் என்று ஏசிக்கொண்டு அவன் வீட்டிற்குப் பின்புறத்தில் நின்றாள். மணிமுத்து அடுத்த வீட்டுக்குள் ஒளிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நல்லவேளை, மணிமுத்து அடுத்த வீட்டில் ஒளிந்ததை மெய்யப்பன் பார்க்கவில்லை. பார்த்துத் தொலைத்தால் அதனையும் சொன்னாலும் சொல்லுவான். அவ்வளவு மெய்மைப் பித்தன் அவன் என்று காத்தாயி இன்பமடைந்தாள். மூக்கன் ஓடி வந்தான். மெய்யப்பனிடம் கேட்டான் : என் பயல் வந்தானா? ஆ ஆ! உன் பயலா? இங்கு வந்து ஒளிந்தான். நான் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்றேன். இந்தப் பக்கமாக ஓடினான். ஒரு வேளை அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் ஒளிந்திருப்பான் என்றான் மெய்யப்பன். அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் இருப்பான் என்னும் ஒலி காத்தாயிக்கும் கேட்டது. அடுத்த வீட்டுக்காரனுக்கும், மணிமுத்துக்கும் கேட்டது. ஐயோ! இந்தச் சனியன் இங்கிருப் பதையும் காட்டிக் கொடுத்துவிடுவான் போல் இருக்கிறதே என்று ஒரே வேளையில் அனைவரும் வருந்தினர், அதற்குள் மூக்கனும் வீட்டுக்குள் புகுந்து விட்டான். என் பயல் இங்கு இருக்கிறானா? என்றான் மூக்கன். ஓர் ஒல்லிப் பயல்; மாநிறம்; கால் சட்டை மட்டும் போட்டவன்; காதில் கடுக்கன் அவன் தானே! என்றான் வீட்டுக்காரன். ஆம்; அவனேதான்! எங்கே இருக்கிறான்? என்று துடிப்புடன் கேட்டான் மூக்கன். இதோ பார் இந்தத் தெரு வழியே ஓடி, அந்தச் சந்திலே திரும்பினான். ஓடு; ஓடு; இப்பொழுதுதான் போனான். விரைந்து போனால் பிடித்து விடலாம் என்றான் வீட்டுக்காரன். மூக்கன் ஓடினான். நெடுநேரம் தேடியலைந்தும் காணாதவனாகச் சோர்ந்து போய் வீட்டைச் சேர்ந்தான். இதற்குள் கோபமும் சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது. கோபம் போனபின் தான் செய்தது என்னவோ போல் இருந்தது. கட்டிலில் குப்புற விழுந்து புரண்டான். உறங்கவா முடியும்? என்னென்னவோ உளறினான். மணிமுத்துவினிடம் நடந்ததை விளக்கமாகக் கேட்டறிந் தான் வீட்டுக்காரன். காலத்தால் உதவியதற்காகப் பெரிதும் மகிழ்ந்தான். நீ இப்பொழுது வீட்டுக்குப் போகவேண்டாம்; இங்கேயே இரு. நானே மாலையில் உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். அதற்குள் உன் அப்பா கோபம் தீர்ந்துவிடும் என்று கவலையை ஆற்றி, பசியையும் மாற்றி வைத்திருந்தான். மணிமுத்து அஞ்சிக் கொண்டு வேறெங்கும் போய்விடக் கூடாதே என்னும் கவலையில் நின்றிருந்த காத்தாயிக்கு வீட்டுக் காரன் சொல் தேன் போல் இருந்தது. இனிக் கவலையில்லை என்று வீட்டுக்குப் போகத் தொடங்கினாள். ஆனால், போகவிடாதவாறு ஒருவன் வந்தான். அவன், ஐயா இருக்கிறாரா? என்று மெய்யப்பன் மகனிடம் கேட்டான். மெய்யப்பன் அவன் வருவதைத் தொலைவிலே கண்டு ஒளிந்து கொண்டான். அப்பா, வெளியில் போயிருக்கிறார் என்று சொல்லிவிடுமாறும் மகனிடம் சொல்லியிருந்தான். அப்படியே அவன் மகனும் சொல்லி விட்டான். மெய்யப்பன் மைந்தன் அல்லவா! அவன் சொல்லில் ஐயம் கொள்ளலாமா? தேடி வந்தவன் புறப்பட்டான். கடன் வாங்கி நெடுநாள் ஆகின்றது; வந்த நேரமும் பார்க்க முடிவதில்லை; அவராகப் பணம் அனுப்புவதும் இல்லை; கடிதம் போட்டாலும் பதில் போடுவது இல்லை. எப்படித்தான் பணத்தை வாங்கப் போகின்றேனோ? முதலாளியிடம் நல்ல பெயர் எடுக்கப் போகின்றேனோ? என்று சொல்லிக் கொண்டு நடந்தான். அவன் சொற்கள் காத்தாயி காதிலும் விழுந்தன. அவளால் தாங்க முடியவில்லை! அரிச்சந்திரன் போல நடிக்கும் அவன் நடிப்பை நினைத்து ஆவேசம் கொண்டாள். அவள் மகனைப் பொய் சொல்ல மாட்டேன் என்று வெருட்டிவிட்டான் அல்லவா! மெய்யப்பா! வெளியே வா; ஊரை ஏமாற்றுவது எத்தனை நாள்களுக்கு? என்னும் வாழ்த்துரையுடன் உள்ளே வந்தாள் காத்தாயி. மெய்யப்பன் துரை, கணக்கப்பிள்ளை இருக்கிறாரா? என்று மெதுவாக மகனிடம் கேட்டான். அவர் போய் விட்டார் என்று சொல்லிய சொல்லை அடக்கிக் கொண்டு கணக்கப் பிள்ளை போய் விட்டார்; ஆனால் காத்தாயி போகவில்லை. வெளியே வா; இதுவும் ஒரு பிழைப்பா? நீ கெட்ட கேட்டுக்கு மெய்யப்பன் எனும் பெயர் ஒரு கேடா ஒருவனை ஒருவன் குத்திக் கொல்ல வரும்போது, உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கூடப் பொய் சொல்ல மாட்டேன் என்ற வாய், கடன்காரனைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டு பொய் சொல்லலாமா? சோறுண்ட வாய்தானா இது? இரு; இந்தச் செய்தியைக் கணக்கப் பிள்ளைக்கும் ஊருக்கும் பரப்புகிறேன் பார். உன் ஒழுங்கு புலப்பட வேண்டாம்? என்று துடிப்புடன் பேசினாள். மெய்யப்பன் வெட்கிப் போய், காத்தாயி இந்த ஒரு வேளைக்கும் காப்பாற்று. நான் மெய்யன் தான். என் போதாக் காலம் இப்படிப் பொருள் முடை ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது! என்றான். பொருள் முடை உனக்குப் போதாக் காலம்! உயிரழிவு எங்கள் போதாக் காலம். எது பெரிது? உனக்காக - உன் கடன் தொல்லைக்காக - நீ பொய் சொல்லலாம். மற்றவர்கள் நன்மைக்காகப் பொய்யே சொல்ல மாட்டாய். இல்லையா? நீ உண்மையான மெய்யப்பன் என்றால் இந்தச் சிறுவனைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லி, கடன் காரனிடம் பொய் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்; நீ தான் தன்னல மெய்யப்பன் ஆயிற்றே! அய்யோ, உன்னிடம் மெய்கிடந்து படும்பாடு உனக்குத்தான் வெளிச்சம் என்றாள். அழாக் குறையுடன் நின்றான் மெய்யப்பன். காத்தாயி வெளியேறினாள். இவனைத் தண்டோராப் போட்டுத் திரியத் தலைவிதியா? போய்த் தொலைகிறான்; என்னைக்காவது ஒரு நாள் உணர்வான் என்று அமைதியாக வீட்டுக்குப் போனாள் காத்தாயி. வழியில் கணக்கனைக் கண்டாள். பேசிக் கொண்டே வீட்டுக்குப் போனாள். மூக்கன் புரண்டு புரண்டு படுத்தான். காத்தாயி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஏதாவது கேட்பாள் என்று பலமுறை நினைத்தான் மூக்கன். காத்தாயிக்குத் தான் நடந்ததெல்லாம் தெரியுமே! அவனாகச் சொல்லட்டுமே என்று வாய் திறக்க வில்லை. நெடுநேரம் கழித்து மூக்கன் பேசினான். காத்தாயி, பயல் இன்னும் வரவில்லையே! எங்கே போனானோ? அறிவில்லாமல் வெருட்டிச் சென்றேன் என்று தலையில் அடித்துக் கொண்டான். இப்படி வெறிபிடித்த தகப்பனுக்குப் பிள்ளை என்று இருப்பதைப் பார்க்கிலும் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து செத்திருந்தாலும் நல்லது தான். அந்தச் சின்னஞ் சிறியது செய்த காரியத்திற்கு வெட்டவும் குத்தவும் போவது தான் பெரியவன் செய்யும் காரியமா? என்ன கேடும் கெடுகிறான் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பேசினாள் காத்தாயி. காத்தாயி, நீதானா இப்படிச் சொல்கிறாய்? நீ வெருட்டிக்கொண்டு போன நேரத்திலே பயல் அகப் பட்டிருந்தால் விட்டு வைத்திருப்பாயா? நீ குத்திக் கொல்வதற்குப் பதில் ஆறோ குளமோ கொன்றிருந்தால் புண்ணியம் அல்லவா? கொஞ்ச நேரம் வரவில்லை என்று இந்தத் துடி துடிக்கிறாயே, அவன் உன் கத்தியால் குத்தப்பட்டு இங்கு சவமாகக் கிடந்தால் எப்படி இருக்கும் உனக்கு? ஒரு காலம் இல்லையானாலும் ஒரு காலமாவது அறிவு வேண்டாமா? என்றாள். மூக்கன் கைகளால் தலையில் இடித்துக் கொண்டு கதறினான். காத்தாயி, இப்பொழுது அறிவு வருகின்றது; வந்து என்ன செய்வது? பயலைக் காணோமே! நீயாவது தேடிப்பார்த்து வாயேன் என்று கசிந்து அழுதான். கோபத்தின் விளைவு எப்படி ஆகும் என்பதை நினைத்து ஏங்கினான். இதற்கு முன் அவன் கோபத்தால் ஏற்பட்ட பொருள் கேடு, சிறை வாழ்வு, சீரழிவு ஆகிய எல்லாமும் கண்முன் நின்றன. தலையைச் சுவரில் மோதிக் கொண்டு விம்மினான். ஏறிச் சென்ற உணர்ச்சி இறங்கும் போது இப்படித்தான் கூத்து நடக்கின்றது! உணர்ச்சி ஏறும் போதுதானே அறிவு வேண்டும்? இறங்கியபின் இருந்தாலென்ன இல்லை யானால் தான் என்ன? இப்பொழுது வரும் நல்லறிவாவது மறக்காமல் இருக்குமா? என்றாள் காத்தாயி. இனி இப்படிக் கெட்டுப் போக மாட்டேன் என்றான் மூக்கன். அந்நேரம் மணிமுத்தைக் கூட்டிக் கொண்டு வந்தான் சென்னிமலை. மணிமுத்து என்று சொல்லி ஓடிப்போய் அணைத்துத் தழுவினான் மூக்கன். அறிவில்லாமல் செய்து விட்டேனடா! புத்தி கெட்டவன் நான். நல்ல வேளை ஓடி ஒளிந்து பிழைத்துக் கொண்டாய் என்றான். இவன் உயிரைத் தந்தவன் சென்னி மலைதான் என்று நடந்ததைக் கூறினாள். காத்தாயி. சென்னி மலையை நன்றியறிதலுடன் நோக்கினான் மூக்கன். குடிகெட வேண்டிய நேரம்; நல்ல வேளை; அப்படியாகி விட வில்லை; இனிமேலாவது இந்த வெறி வேண்டாம் என்றான் சென்னிமலை. காத்தாயி கையெடுத்துக் கும்பிட்டாள். பெற்றவள் அல்லவா! சென்னிமலை! கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை அறிந்து கொண்டேன். இனி ஒருநாளும் கோபப்பட மாட்டேன்; குடிக்க மாட்டேன்; சேவற் சண்டைக்குப் போக மாட்டேன்; சூதாட மாட்டேன் - மூக்கன் உணர்ச்சியுடன் பேசினான். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடிக்கச் சங்கடமாகக் கூட இருக்கும். ஆனால் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் எளிதாகி விடும்; நன்மையும் ஆகி விடும் என்று கூறிப் புறப் பட்டான் சென்னிமலை. ஐயா, பால் குடித்துப் போங்கள் என்று ஒரு குவளையை நீட்டினாள் காத்தாயி. எனக்கா பால் என்றான் சென்னிமலை. ஆம்; நீங்கள் என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இந்தப் பாலையாவது சாப்பிட்டுப் போக வேண்டாமா? என்று காத்தாயி சொல்லும் போது ஆம் ஆம்! குடியுங்கள் என்று வற்புறுத்தினான் மூக்கன். அப்பொழுது மெய்யப்பன் மிக விரைந்து வந்த சேர்ந்தான். காத்தாயி, நீ கணக்கப் பிள்ளையினிடம் சொல்லி ஊரெல்லாம் தூற்றி விடுவாய் என்று கடைக்கு ஓடினேன். அவன் நான் இப்பொழுதுதான் உங்களைத் தேடி வந்தேன். வீட்டில் இல்லை என்று கேள்விப்பட்டுத் திரும்பினேன். வரும் வழியிலே காத்தாயி சொன்னாள். விரைவில் உங்கள் கணக்கை மெய்யப்பன் கொடுத்து விடுவார்; நீங்கள் கவலைப்பட வேண்டாம். இனித் தேடி வர வேண்டியிராது என்றாள். அதற்குள் நீங்கள் பணத்துடன் வந்து விட்டீர்கள்; உங்கள் பையன் நான் வந்ததைச் சொன்னானா? என்று கேட்டான். உன்னை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நீ அவனிடம் சொல்லியது பொய்தான். இருந்தாலும் அப்பொய்யால் கணக்கப் பிள்ளையும் முதலாளியும் எவ்வளவு மதித்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். எனக்குள் இவ்வளவு நேர்மை தோன்றி விட்டது என்பதை எப்படிச் சொல்வது? நல்ல உள்ளத்துடன் பிறர் நன்மை ஒன்றே எண்ணிச் சொல்லும் பொய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை அறிந்து கொண்டேன் என்றான். காத்தாயி புன்முறுவலுடன் சொன்னாள். உங்களைத் தூற்றுவதால் எனக்குக் கிடைப்பது என்ன? தூற்றிவிட்டால் அத்தூற்றுதல் மறைய எவ்வளவு காலம் ஆகும்? ஒருவன் வாழ்வில் எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது. கூடவே கூடாது. சொல்லக் கூடாத பொய்யைக் கூடப் பிறருக்குப் பெருநலம் வாய்க்குமானால் சொல்லலாம். தன் நலம் நாடிச் சொல்வதாக இருந்தால் எச்சிறு பொய்யையும் மன்னிக்கவே கூடாது. ஆம். காத்தாயி சொல்வது பெரிய உண்மை. உயர்ந்த அறமுங்கூட! அறத்தினை அறுதியிட்டு அரிய நூல் செய்த திருவள்ளுவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் : பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமானால் பொய் சொல்லுவதும் மெய்மைக்கு ஒப்பாகும். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்று கூறிய திருவள்ளுவரே இப்படிக் கூறினார் என்றால் காரணத்தோடு தானே இருக்க வேண்டும் என்றான் சென்னிமலை. உண்மை உண்மை! நான் சொல்லிய மெய், பொய்யாயிற்று! நீ சொல்லிய பொய், மெய்யாயிற்று என்றான் மெய்யப்பன். மெய்யப்பா, உன் பேச்சு மெய்யப்பா! என்றான் மூக்கன். வீடு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. 12. பொய்யா விளக்கு நீகிரோ ஒருவனின் உருவச்சிலையை ஓர் இளைஞர் கண்டார். அந்நீகிரோவின் தோற்றம் அவ்விளைஞர் உள்ளத்தை உருக்கியது. கண்ணீர் வடிக்க வைத்தது. இப்படியான தோற்றமும் வறுமையும் உடையவர்களும் உலகில் வாழ்கிறார்களா? அவர்களைக் காக்க எவரும் முன்வர வில்லையா? துயர்க்கும் வறுமைக்கும் எனவே பிறந்தாரும் உலகில் உளரா? எனப்பல நினைத்தார். அந்நினைவே கனவும் நனவும் ஆயின. இளைஞர் பெயர் ஆல்பிரட் சுவைட்சர். அவர் தந்தையார் லூயி சுவைட்சர்; சமய போதகர். ஆல்பிரட்டின் இளகிய உள்ளம் சமய இயல் தத்துவ இயல் ஆகியவற்றை நாடியது. அக்கல்வியில் சிறந்தார். திருக்கோயில் போதகர் பணியும் ஏற்றார். இசைத்துறையில் சிறந்தார். ஒரு விளம்பரத்தைச் சுவைட்சர் ஒருநாள் கண்டார் அதில் ஆபிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைக்கும் அருளாளர்கள் உடனே வேண்டும் என்று வேண்டுதல் இருக்கக் கண்டார். அவர் இளமையில் கண்ட நீகிரோ சிலை தட்டி எழுப்பியது. அத்தொண்டுக்குத் தம்மை ஆட்படுத்த அது தூண்டியது. தொண்டு புரிவதற்காகவே மருத்துவக் கல்வி கற்றார். மருத்துவமனைப் பயிற்சியும் பெற்றார். கெலன் பிரசுகலோ எனும் ஒரு மங்கையை மணந்து அவரை மருத்துவச் செவிலியர் பயிற்சி பெறச் செய்தார். தம் இசைத் திறத்தால் தம் தொண்டுக்கு வேண்டும் தொகையைத் திரட்டினார். ஆபிரிக்கா சென்ற சுவைட்சர், கரடு முரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் குதிரை வண்டி ஒன்றைக் கண்டார். அவ்வண்டி தாங்காத அளவுக்குப் பாதம் இருந்தது. அதனை இழுக்க மாட்டாமல் திணறிய குதிரைகளை நீக்கிரோக்கள் இருவர் வண்டியில் இருந்து கொண்டு கடுமையாக அடித்து ஓட்டப் பாடுபட்டனர். ஆனால் சுவைட்சர், அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னே இருந்து தள்ளினார். வண்டி எளிமையாய்ச் சென்றது. தொண்டு செய்வார்க்கு இது தொண்டு அது தொண்டு என்பது இல்லையே! ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல். என்பது வள்ளுவ வழிநடை என்பதைக் கண்டோமே! அவர் போனதும், மருத்துவமனை உருவாக்க வேண்டும்! அது வரை மருத்துவத்தை நிறுத்த முடியாது! நீகிரோ மக்களோடு உறவாட அவர்கள் மொழியறிவு வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்கு அமைத்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டார். மருத்துவப் பணியைத் தொடங்கி விட்டார். மலேரியா காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையிரல் கோளாறு, வயிற்றுக் கடுப்பு என்பவை அங்கிருந்த மிகுதியான நோய்கள். தம் பொருளையும், பொழுதையும் முழுமையாகச் செலவிட்டு உயிர்ப்பணி புரிந்தார் சுவைட்சர். 1914 இல் உலகப் போர் வந்தது. சுவைட்சர் செருமனி நாட்டவர் ஆபிரிக்கா பிரான்சு நாட்டைச் சேர்ந்தது. அங்கு செருமனியர் மருத்துவப் பணி செய்யவிடக்கூடாதே எனச் சிறைப்படுத்தப்பட்டார். தொண்டுள்ளத் துலக்கம் கொலையுள்ளச் சிறைக்கு ஆட்பட்டது. அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை என்பது மெய்ம்மறை. ஆனால், நோயர்க்கு அல்லல் இல்லாமல் ஒழியுமா? அதற்கு அருளாளர் உள்ளம் உருகாமல் ஒழியுமா? மீண்டும் மருத்துவப் பணிக்கு விடுதலை செய்யப்பட்டார். கொண்டு சென்ற செல்வம் தீர்ந்தது. பிணி தீர்க்கும் பணிக்கு மேலும் செல்வம் தேவைப்பட்டது. ஐரோப்பாவுக்கு வந்து இசையாமலும் பொழிவாலும் செல்வம் திரட்டிக் கொண்டு மீண்டும் ஆபிரிக்காவுக்குச் சென்றார். சுவைட்சர் மருத்துவமனை எழுப்பினார். மருத்துவர்களை உருவாக்கினார். பல்கால் வெளிநாடுகளுக்குச் சென்று பணம் திரட்டி மருத்துவமனை சிறக்க வழிகண்டார். போர் முடிவால் பிரான்சுத் தொடர்பு இல்லாமல் ஆயிற்று. அமெரிக்கத் தொடர்பு வளர்ந்தது. உதவியும் பெருகிற்று. அவர் புகழ் உலகப் புகழாக வளர்ந்தது. பிறர்கென வாழும் பெருந்தகை எனப் பாராட்டப்பட்டார். 1953 இல் அவர் பணிக்காக நோபல் பரிசு கிடைத்தது. உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவர் சுவைட்சர். அவர் நூலறிவு, நுண்ணறிவு, பட்டறிவு ஆகியவற்றால் நூல்கள் பல படைத்தார். பால் அடிகளின் பத்தி நெறி பாக் இசைவல்லார் நாகரிகத்தின் தத்துவம் கன்னிப் பெருங்காட்டின் கங்கில் என்பவை அவற்றுள் சில. நாகரிகத்தின் தத்துவம் என்பது, கிழக்கு, மேற்கு நாடுகளின் மெய்ப்பொருள் கொள்கைகளைப் பற்றியது. அதில் அவர் திருக்குறளைப் பற்றி எழுதியுள்ள கருத்துகள் உலகவர்க்கு உய்வு காட்டுவன. அவற்றுள் சில. உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறி பரவ விட்டுள்ளார். பகவத் கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்னும் குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்னும் கருத்து அந்நூலில் கூறப் படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது. மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் செய்ய வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தினார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தின் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறு எந்நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே உலகம் உண்மை என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டன. வள்ளுவர் வழிநடை வையக வழிநடை என்பதற்கு ஆல்பிரட் சுவைட்சர் ஒளிவிளக்கேற்றி வைக்கிறார். எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. என்பது பொய்யா மொழி! 13. தொண்டனாகுக காட்சி - 1 வடிவேல் - பொன்னப்பன் வடி : அண்ணே! வாங்க வாங்க. பொன் : ஆமாம் தம்பி! என்ன நலந்தானா? வடி : நலமாக இருக்கிறேன் அண்ணே. பொன் : நல்லது; நம் வடக்கு வீட்டுப் பெரியவரைப் பார்க்க வந்தேன்; வரும் வழியில் உங்கள் நினைவு ஏற்பட்டது; பார்த்துப் போகலாமே என வந்தேன். வடி : நிரம்ப மகிழ்ச்சி! பொன் : என்ன தம்பி, உங்களைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாகக் கிடக்கிறது. கின்னென்னவோ செய்கிறீர்களாம்; என்னென்னவோ சொல்கிறீர்களாம்! வடி : அப்படி என்னண்ணே! பொன் : பெரியவர்களெல்லாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல் கிறார்கள்; நீங்கள் சாலையைச் சுத்தமாக வைக்கச் சொல்கிறீர்களாம். வடி : ஓகோ! அதைப் பற்றிச் சொல்கிறீர் களா? வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். பொன் : இப்படிச் சாலை சுத்தம் பற்றிச் சொல்வது எதற்காக தம்பி! வடி : சொல்கிறேன். பொன் : இதென்ன தம்பி கண்ணாடிப் புட்டுக்குள்? வடி : பாருங்கள்.. வாழைப் பழத்தோல். பொன் : ஓகோ, சரிதாங்க! சாலையில் போடக் கூடாதென்று கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைக்க முடியுமா? எல்லாராலும் முடியுமா? வடி : அப்படி இல்லை அண்ணே! நான் கண்ணாடிப் புட்டிக்குள் தோலைப் போட்டு வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. பொன் : என்ன தம்பி, அப்படியானால் நான் சொல்கிறபடி இல்லை. வடி : இல்லை; நான் ஒரு நாள் சாலை வழியே போய்க்கொண்டு இருந்தேன். அவசரமான வேலை; ஓட்டமாகப் போனேன்; மருத்துவரை அழைத்து வர வேண்டிய அவசியம்... பொன் : அப்பா நோயில் இருந்தார்களே... அப்பொழுதா? வடி : ஆமாம் ஆமாம்! அப்பொழுதுன். பொன் : சரி தம்பி, விரைவாக ஓடினீர்கள்... வடி : அந்த நேரத்தில் பாருங்கள். காட்சி - 2 (வடிவேல் ஓடி வந்து வாழைப்பழத் தோலால் வழுக்குண்டு கீழே விழுகிறான்.) வடி : ஆ! ஐயோ! என்ன தொல்லை! சே! சே! இப்படியா வழுக்கும்? ஐயையோ... அவசரம் அல்லவா! கால் வரமாட்டேன் என்கிறதே! அப்பாவுக்கு நோய்... மருந்து வாங்கவும் மருத்துவரை அழைக்கவும் வந்த எனக்கு இப்பாடு... அப்பா!... அப்பா!... ஐயோ!... (எழுந்திருக்க முயல்கிறான்; முடியவில்லை.) தேள் கடிக்கு மருந்து தேடப் போன இடத்திலே பாம்புக் கடிக்கு ஆளானது போல அல்லவா இருக்கிறது. ஐயோ! இடுப்புப் போய் விட்டதா? எந்தப் பாவிப்பயல் எனக்கு என்று இந்த வாழைப்பழத் தோலைப் போட்டானோ? அவன் விளங்குவானா? ஆ! ஐயோ! வலிக்கிறதே! சாலை என்றால் அவன் சொந்த நிலமா? எத்தனை பேர் போவார்கள் வருவார்கள்? சே சே! இந்த நாட்டில் இருக்கிறவர் களுக்குப் பொது நலம் கிடையவே கிடையாது; பொது அறிவுங்கிடையாது. ஐயோ! நான் என்ன செய்வேன். (பலர் கூடி விடுகின்றனர்.) ஒருவன் : டே! டே! இவனைப் பாரடா! இன்னொரு : ஆ! ஆ! என்ன அழகு! வேறொரு : விழு! விழு! விழ வேண்டியதுதான்! இடுப்பு ஒடியவில்லை! மற்றொரு : பாரடா துடிக்கிற துடிப்பை. பிறிதொரு : அதோ பார்! பல்லைக் கடிக்கிற கடிப்பை! இன்னொரு : ஏன் பார்த்து நடந்தால்... வேறொரு : அழமட்டும் தெரிகிறது, அறிவு இல்லை. இரங்கும் ஒருவன் : அய்யோ பாவம்! பலமான அடிபோல் இருக்கிறது. மற்றொருவன் : இரத்தம் மடை பிடுங்கிப் போகிறதைப் பாரு! அப்பாவி ஒருவன் : படவேண்டிய நேரம்; யாரென்ன அற்பஆவி செய்வது; நடக்கிற படிதான் நடக்கும். ஒருவன் : ஓ! அவன் நடக்க வழி செய்ய முடியு மானால் பாரும், வீணாய் ஏன் மூக்கைச் சீந்துகிறீர்! அற்ப ஆவி ஒருவன் : பாருய்யா! பேசத் தெரிந்தவனை... வடிவேல் : அட இரக்கம் கெட்டவர்களே! விழுந்து கிடக்கிறேன்; விலா வெடிக்கச் சிரித்து வேடிக்கை பார்க்கிறார்கள். என்னடா உலகம்? இந்த வாழைப் பழத்தோல் இவர்கள் காலில் பட்டிருந்தால்... அப்பா... அம்மா... பட்டுச் சீரழிய வேண்டிய நேரம் அய்யோ... (சாரணச் சிறுவர் இருவர் வருகின்றனர்.) ஒருவன் : ஏ! ஏ! அந்தச் சாலையில் பார்... இன்னொருவன் : ஐயோ! ஓடு ஓடு... எவனோ விழுந்து விட்டான். ஒருவன் : என்ன கிடந்ததோ... இன்னொருவன் : ஒரு வாப்பா! வா வா! சீக்கிரம்... (இருவரும் வடிவேலைப் பிடிக்கின்றனர்) வடி :ஐயையோ! எழுந்திருக்க முடியாது போலிருக்கிறதே! சாரணர் இருவரும் : ஐயா... இருங்க... எல்லாம் சரியாகிவிடும். ஒருவன் : சரி, மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகலாம். (தூக்கிப் போகின்றனர்.) வடி : தம்பி, உங்களுக்குப் புண்ணியம்! சமயத்தில் காப்பாற்றினீர்கள். வடக்குத் தெரு வைரவன் வீடு எங்கள் வீடு! அங்கு என் அப்பா நோயோடு கிடக்கிறார்! அவரைத் தயை செய்து கவனித்தால் நல்லது; நான் அவருக்கு மருந்து வாங்க வந்தேன். சாரணர் : கவலைப்படாதீர்கள்! உடனே நாங்கள் அவரைக் கவனிக்கிறோம். வடி : நல்லது தம்பி. (சாரணர் வைரவன் வீட்டுக்குச் சென்று திரும்பி வருகின்றனர்.) சாரணர் : அப்பா உடல் நன்றாக இருக்கிறது ஐயா. வடி : நலமாகி விட்டதா! என்னை காப்பாற்றினீர்கள். என் தந்தைக்கும் உதவினீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு என் வணக்கம். சாரணர் :வருகிறோம் அண்ணே! வந்து பார்க்கிறோம். (இருவரும் செல்கின்றனர்.) காட்சி - 3 மருத்துவமனை வடிவேல் - முருகன் வடி : உங்களுக்கு என்னையா? காலில் கட்டு... முரு : அதை ஏன் கேட்கிறீர்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன். இந்த ஊரில் நடுத் தெரு இருக்கிறதே, அது வெளிச்சம் கண்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ! அடேயப்பா! நெருக்கம்... நெருக்கம்! வீட்டு நெருக்கத்திற்கு மேல் ஆட்கள் நெருக்கம்! ஒரே கொடுமை. அந்தத் தெருவில் வைரவன் வீடு என ஒன்று இருக்கிறது. அந்த வீட்டுப் பக்கம் தெரியாமல் போய்விட்டேன்... வீட்டுச் சந்தில் கண்ணாடித் துண்டுகளைக் கண்டபடி கொட்டித் தொலைத் திருக்கிறான், பாவிப்பயல். ஐயையோ காலை வெட்டி வெட்டிப் பாளம் பாளமாகச் செய்து விட்டது. வடி : பாவம்! முரு : அவன் விளங்குவானா? அவன் தலையில் இடி விழ! அவன் காலில் வெட்டித் தவழ்ந்து நடக்க வைத்தால் அல்லவா அவனுக்கு அறிவு வரும். புத்திகெட்ட பயல் போட்டிருக்கிறான் பாருங்கள் பாதையில். குப்பையைக் கொட்டித் தொலைப்பது கூடக் குற்றமில்லை போலிருக்கிறதே! இந்த அழகில் அவன் குடும்பம் படித்த குடும்பமாம்! வடி : ஆமாம் ஆமாம்! படித்தவன் குடும்பந் தான்... இன்னும் சொல்லுங்கள். முரு : புத்த கெட்ட பயலை என்ன சொல்வது! நான் காலைக் கட்டிக் கட்டிலில் கிடந்து தவிக்கிறேன். அவன் எங்கே சுற்றித் திரிகிறானோ? (வடிவேல் சிரிக்கிறான்.) முரு : ஏனையா சிரிக்கிறீர்? வடி : சிரிக்க வேண்டிய இடம் வந்தால் சிரிக்க வேண்டாமா? முரு : நான் வேதனையில் ஏசுவது உமக்கு இனிக்கிறது போல் இருக்கிறது. வடி : அப்படியில்லை.அந்த ஏச்செல்லாம் எனக்குத்தானே? முரு : என்ன! என்ன! என்ன சொன்னீர்கள்? வடி : நான் தான் வைரவன் மகன். முரு : வடிவேலா நீங்கள்... ஐயையோ! வடி : வடிவேல்தான் நான். கவலைப்படா தீர்கள். நீங்கள் திட்டியது காணாது. நான் செய்த கேட்டினால் நீங்கள் தொல்லைப்படுகிறீர்கள். எவனோ போட்ட வாழைப் பழத்தோலை மிதித்து வழுக்கிக் காலை ஒடித்துக் கொண்டேன் நான். அண்ணே பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும் என்று திருக்குறள் உரைப்பது சரியாகத் தான் இருக்கிறது. நீங்கள் வருத்தப்பட்டுக் கொள்ள மாட்டீர்கள்... நீங்கள் தான் வாழைப் பழத் தோலைச் சாலையில் போட்டி ருப்பீர்கள்?... (இருவரும் சிரிக்கின்றனர்.) முரு : நான் சாலையில் தாராளமாக வாழைப் பழத்தோல் போடுவதுண்டு. ஆனால் நான் போட்ட பழத்தோல்தான் உங்களை வழுக்கி விட்டதென்று சொல்ல முடியுமா? வடி : இல்லை! இல்லை! நான் வேடிக் கையாகச் சொன்னேன்! நீங்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லுகிறீர்கள். முரு : ஆமாம் தம்பி! நான் தெரியாமல் உங்களைத் திட்டியதை மனத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள். வடி : ஐயையோ! இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் என்னைத் தெரியாமல் எதிரில் பேசிவிட்டீர்கள். எத்தனையோ பேர்கள் மறைமுகமாகத் திட்டியிருப்பார்கள். இனி மேலாவது நான் புத்தியோடு நடந்து கொள்ள வேண்டுமே தவிரத் திட்டியதற்குக் கவலைப்படலாமா? ஆமாம் அண்ணே, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இனிமேல் நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன் சாலையும் சுத்தமாக இருக்கப் பார்க்க வேண்டும். முரு : ஆமாம் தம்பி. அதைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்களே. வடி : என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள்? முரு : சாலையைச் சுத்தமாக வையுங்கள்; தபால் நிலையத்தைச் சுத்தமாக வையுங்கள் - இப்படியெல்லாம்! வடி : அண்ணே! வைவதிலேயும் சுத்தமாக வையவேண்டுமோ! என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது வைவதில். அது பெரும் தவறு அண்ணே! அஞ்சல் நிலையத்தைச் சுத்தமாக வைக்கவும்; தூய்மையாக வைக்கவும் என்று எழுத வேண்டும்! அதைப் பற்றிக் கவலைப் படாமல் வையுங்கள் திட்டுங்கள் என்றெழுதுகிறார்கள். முரு : சரிதான்! தெருவைத் துப்புரவு செய்வதற்குள் தெருப்பலகைகளையும், விளம்பரங்களையும், சுவர் ஒட்டி களையும் துப்புரவு செய்ய வேண்டும் போல் இருக்கிறதே. வடி : அதனால்தானே பாரதியார், ஒட்டகத் திற்கு ஒரு பக்கமா கோணல்; தமிழகத் திற்கு ஒரு பக்கமா அழிவு என்ற பொருளில் சொன்னார். பெரிய பெரிய காரியங்கள் செய்வதுதான் அறம், நல்வினை என்று சொல்கிறார்கள். அந்தக் காரியத்தை நல்ல எண்ணத் துடன் செய்தாலும் அது அறம் தான்! முரு : நல்ல திட்டம் தம்பி! நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டுமே! வடி : இப்பொழுது வந்தார்களே; சாரணர்கள். எப்படித் தொண்டு செய்கிறார்கள்! நாம் இவர்களுக்கு உதவுவது நல்ல தொண்டு இல்லையா? முரு : சரிதான் தம்பி; பணம்? வடி : பணம் எதற்காக? மனத்தில் தொண்டு எண்ணம் வேண்டும்; கையில் பணம் இல்லாவிட்டாலும் குற்றம் இல்லை. நாட்டில் நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதோ பிறகு பணத்திற்குப் பஞ்சம் இல்லை. முரு : சரி தம்பி, நான் உங்களுடன் ஒத்துழைக் கிறேன். வடி : மிகச் சரி. (மருத்துவ நிலையப் பணியாள் சிங்கப்பன் வருகிறான்.) சிங் : ஐயா நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டிய நாள். உங்களுக்குக் குணமாகி விட்டது. முரு : சிங்கனா! சரி சரி! இன்றுதான் உடல் குணமானதுடன் உள்ளமும் குணமா யிற்று. நல்ல நேரம் பார்த்துப் போகச் சொன்னாய். முரு : வருகிறோம் அப்பா! சிங் : ஐயையோ! மருத்துவ நிலையம் ஐயா! வராமலே இருங்க! இது என்ன விருந்து வீடா? வடி : ஓ ஓ! நல்லவனில்ல சிங்கன்! உன் எண்ணப்படியே ஆகட்டும்! வணக்கம். சிங் : வணக்கம்! காட்சி - 4 (வழியில் ஒருவன் மிதிவண்டியொன்றைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.) முரு : என்னையா? வண்டி... மிதி : என்னவா? எந்தப் பயலோ சாலையிலே முள்ளைப் போட்டிருக்கிறான்! முரு : அடுப்பில் வைக்க... வடி : வைய வேண்டாம் அண்ணே! மிதி : அவசரப்படாதீங்க தம்பி. அடுப்பில் வைக்கக் கொண்டு போனதைச் சாலையில் போட்டிருக்கிறான். எந்தச் சனியன் செய்தானோ; தூக்கிச் சுமக்க வேண்டியது ஆயிற்று; தோளும் புண்ணாகி விட்டது. (போகிறான்.) முரு : தம்பி நீங்கள் சொல்லியதுதான் சரி, நம் எண்ணத்தை எடுத்துப் பொது மக்களுக்குச் சொன்னால் போதும்; வெற்றிதான். வடி : ஆமாம்! அப்படியே செய்வோம். காட்சி - 5 வடிவேல் - பொன்னப்பன் வடி : இந்த மாதிரி முடிவு கட்டினோம். அன்றிலிருந்து ஓயாத உழைப்புதான். என்னவோ ஒரு கவலையும் இல்லாமல் தொண்டு செய்ததுடன், வயிற்றுப் பாட்டுக்கும் தொழில் செய்து கொள்கிறோம். இதைத்தான் ஊரில் பேசிக் கொள்கிறார்கள் போல் இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்தது. பொன் : எவ்வளவு நல்ல காரியம்! நம்மால் முடிந்தது என்று சாதாரணமாகச் சொல்லுகிறீர்கள். தம்பி, இது என்ன அட்டை? எச்சரிக்கையாயிரு; தொண்டனா யிரு என்று எழுதி வைத்திருக்கிறீர்கள். வடி : இது வாழைப்பழத் தோல் தந்த பாடம்! பொன் : அது என்ன தம்பி? ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் திருக்குறளா? வடி : ஆமாம்! வாழ்க்கை தந்த பாடம் அது. நான் எச்சரிக்கையாகப் போயிருந்தால் விழுந்திருக்க மாட்டேன்; அதனால் எச்சரிக்கையாக இருத்தல் தேவை என அறிகிறேன். விழுந்து நான் பட்ட தொல்லை தானே மற்றவர்களும் படுவார்கள் என்ற எண்ணம் தொண்டு புரியத் தூண்டியது. எவ்வாறு தொண்டு புரிவது என்று நினைத்த வேளையிலே இன்ன வழி, இன்ன வகை, இன்ன நேரம் என்று இல்லை. எப்பொழுதும் எவ்வழியிலும் எவருக்கும் நல்வினை செய் என ஏவியது குறள் மணி. அதனால் இவைகளை நினைவாகப் பொறித்து வைத்துள்ளேன். பொன் : நல்ல காரியம் தம்பி! நான் உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். வடி : மிக நன்றி. பொன் : அப்பா வெளியில் போயிருக்கிறார் போல், இருக்கிறது. வடி : ஆமாம்! அவர் தானே பெரிய தொண்டர்! பொன் : சரி சரி! நல்ல குடும்பம்! வருகிறேன் தம்பி. வடி : வணக்கம். வையகம் தழுவிய வாழ்வியல் நூல் வருமுறை திருக்குறள், வையகம் தழுவிய வாழ்வியல் கூறும் நூல் அது தோன்றியது தமிழ் மண்ணில்தான். ஆனால், தோன்றிற் புகழொடு தோன்றுக என்னும் தன் இலக்கணத்திற்குத் தானே இலக்கியமாய் வையகப் பரப்பெல்லாம் வளைத்துக் கொண்டு கிளைத்துத், தண்ணிழல் பரப்பும் நிழலாயிற்று அது. ஆதிபகவன் முதற்றே உலகு என எழுவாயில் முழங்கிய முழக்கம், நூற்பொது முழக்கமாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் உலகம் தழீஇயது ஒட்பம் எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் பண்புடையார்ப் பட்டுண் டுலகம் சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் - இவ்வாறு உலக உலா ஒன்றா? இரண்டா? திருக்குறளில், உலகம், உலகு என வருவன 51 இடங்கள். வியனுலகம் வரும் இடங்கள் 2. ஞாலம் வரும் இடங்கள் 5. வியன்ஞாலம் வரும் இடம் 1. வைப்பு, வையம், வையகம் என வரும் இடங்கள் 19. இவற்றுள், வியனுலகம் வியன்ஞாலம் என்பன பேரண்டம் என்னும் பொருளன. இன்னும், உலகப் பொதுமைக் குறிப்பின எண்ணற்றன திருக்குறளில் உள்ளன. வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி என, உலகச் சான்றையெல்லாம் ஒருங்கு திரட்டிப் பார்த்து, உண்மை காண ஏவுவதும் வான்குறளாகும்! திருக்குறளை மேல்வைப்பாகக் கொண்டு எழுந்த நூல்கள் பல. அதனை, மேற்கோள் காட்டி நடையிட்ட நூல்கள் அன்றித் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு நூல்கள் காணற்கு அரிது. 1330 குறள்களுக்கும் சான்று காட்டிய திருக்குறள் குமரேச வெண்பாவும் பெரும்பாலும் தொன்மக் கதைகளே வைப்பாகக் கொண்டதாயிற்று! இற்றை நடைமுறை வாழ்வுக்கு உலகம் தழுவிய வரலாற்றுச் சான்றுகளையே குறள் நெறிக்குச் சான்றாகக் கொண்டு வெளிப்படுவது வையகம் தழுவிய வாழ்வியல் என்னும் இந்நூலாகும். தமிழ் மண்ணில் தோன்றியது குறள் எனினும், அதன் தனியுயர் பார்வை உலகளாவியதே என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக வருவன இத்தொகுதியில் அமைந்துள்ள வரலாற்றுக் காட்சிகள். இதன் இரண்டாம் தொகுதியும் எழுதி முடிக்கப் பட்டது. மூன்று நான்கு எனத் தொகுதிகள் தொடரவும் ஆகும். குறிக்கோளொடு பார்ப்பின் ஒவ்வொரு குறளுக்கும் உலகியல் நடைச்சான்று உண்டு என்பது மெய்யாகும். இத்தொகுதிகளின் மூலப் பொருட் சான்றுகள் முழுதுலகும் தழுவியவை. இடமும் காலமும் கடந்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெருநெறிப்பட்ட குறளுக்குத் தகவே அமைந்தவை. நிகழ்ச்சி அல்லது காட்சி அல்லது வரலாறு ஒன்றனைக் காட்டி, இத்தகு காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று வியந்து நின்றாரோ? அதனால், இந்தக் குறளைச் சொன்னாரோ? என்னும் கட்டொழுங்கில் அமைவன இச்சான்றுகள். இதன் நடை, உரைநடையா? பாநடையா? உரைப்பா நடையா? எல்லாம் பின்னிப் பிணைந்த உரைவீச்சு நடை எனல் அமையும்! வையகம் தழுவிய வாழ்வியல் என்பது, நெய்வேலி, உலகத் தமிழ்க் கழகச் சார்பில் நிகழும் திருவள்ளுவர் கோட்டத் தொடர் பொழிவுத் தூண்டலாயிற்று. அத்தொடர், தொடர்ந்தே நிகழ்கின்றது நூலாக்கமும் தொடர்ந்தே நிகழ்கின்றது. முதல் இரண்டு தொகுதிகளின் உருவாக்கம் நிறைந்த அளவில், அதனைத் தமிழ்கூறு நல்லுலகப் பொருளாக்கும் வகையில் அச்சீட்டுப் பொறுப்பை அவாவினார் அருமை இசைஞர். அன்புச்செம்மல். தஞ்சைத் திருக்குறள் பேரவைச் செயலர் திருமலி பழநிமாணிக்கனார். இந்நூல் தூண்டலும் துலங்கலுமாக விளங்கும் இப்பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியன். திருக்குறள் நம் வாழ்வியலுக்குத் தகுவதா? என்று அதன் பொருள் திறம் அறிந்தோர் ஐயுறார். தம் இயலாத் தன்மையை அதன் மேல் ஏற்றிச் சொல்வார். உலகளாவிய சான்றோர் சான்றுகள் கண்டேனும் மீள்பார்வை பார்க்கவும், மேன்மைக் குறள் வாழ்வு மேற்கொள்ளத்தக்கதே என முடிவு எடுக்கவும், உலகுக் கென அமைந்த ஒரு நூல் திருக்குறளே எனத் தேர்ச்சி கொள்ளவும் - இத்தொகுதிகள் கட்டாயம் தூண்டுமென நம்புகின்றேன். வாழிய வள்ளுவம்! வாழிய வையகம்! திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்த் தொண்டன், அல்லூர் இரா. இளங்குமரன் திருச்சி மாவட்டம்-620 101. 5-12-93. சிவ சிவ தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே தவத்திரு. குன்றக்குடி - 623 206 குன்றக்குடி அடிகளார் ப.மு.தே மாவட்டம் அணிந்துரை புலவர் இராமு. இளங்குமரனார் சிறந்த அறிஞர். வள்ளுவத்தைப் பலகாலும் பயின்றவர்; அனுபவித்தவர் இளங்குமரனார் அவர்கள் வையகம் தழுவிய வாழ்வியல் என்ற எளிய கதை வடிவில் திருக்குறளுக்கு விளக்கம் எழுதி யுள்ளார். ஒரு திருக்குறள், அதற்கேற்றாற்போல் ஒரு சிறுகதை. நல்ல முயற்சி திருவள்ளுவரின் ஆண்டு கருதிக் கிழவர் ஆக்கி விட்டார். திருவள்ளுவக் கிழவரின் பயணம் தொடர்கிறது. பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்ற திருக்குறளுக்கு, பெல்சிய நாட்டுப் பெண்கள் தமது கணவன்மாரைத் தமது முதுகில் சுமந்து சென்ற வரலாறு எடுத்துக் காட்டப்படுகிறது. மனத்தொடு மனம் பேசின் என்ற சொற்றொடர் உள்ளத்தைத் தொடுகிறது. கற்பு கற்பிக்கப் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளப் படுவது என்ற வரி மகளிர் உலகத்தின் கவனத்திற்கு உரியது. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் என்ற திருக்குறளுக்குச் சீன நாட்டு எரிமலை வெடித்ததைச் சான்றாக வைத்து ஆக்கமும் கேடும் ஆக்கும் இயற்கை என்று எழுதியிருப்பது மிகவும் சிறப்பு. ஊழுக்கு இயற்கை என்று பொருள் கொள்கிறார் போலும், இது ஆய்வுக்குரிய செய்தி. ஐயர் ஏடு தேடி பெற்ற வரலாற்றைச் சுவைபடி எழுதியதுடன். கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்றாற்றும் கொல்லோ உலகு என்ற திருக்குறளுடன் இணைத்துக் கதையை முடித்திருப்பது மிகவும் சிறப்பு. திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புறச் சூழ்நிலைத் தூய்மையை விளக்குகின்றார். இதற்கு நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள திருக்குறள், இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்பது. நாள்தோறும் அடுத்த வீட்டவர் கொட்டிய குப்பையை அள்ளிக் கொட்டிய அற்புதச் செயலை இன்று செய்வார் யார்? இக்கதையில் வன்மை மென்மைக்கு நாணித் தோற்றது என்ற அறிவுரையையும் கூறியுள்ளார். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த சர். ஐசக் நியூட்டன் இளமையிலேயே புவியீர்ப்பு ஆற்றலைக் கண்டுபிடித்த செய்தியை, உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்ற திருக்குறள் வழி விளக்கியிருப்பது மிகவும் அருமை அமெரிக்க நாட்டுத் தலைவன் ஆபிரகாம் அன்பு வழியிலேயே அதிகாரத்தைப் பயன்படுத்தினான் என்பதற்கு எடுத்துக காட்டாக, பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்ற திருக்குறளை எடுத்துக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமானது. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற திருக்குறளை மையமாகக்கொண்டு குருதிக் கொடையை விளக்கி எழுதியிருப்பது அற்புதம் இந்தக் கதையில் மொழி வளம் கொழிக்கிறது உயிர்க்கு உறுதியாம் குருதியை உவந்து வழங்கின! குலமும் இல்லை; குடியும் இல்லை; சாதியும் இல்லை; சமயமும் இல்லை; மொழியும் இல்லை; எதுவும் இல்லை. இருந்ததெல்லாம் ஒரே ஓர் இரக்கம் - உருக்கம்! என்ற வரிகள் கற்போர் நெஞ்சத்தைக் கவரும் தகையன. திருக்குறள் கருத்துக்களை எளிதில் மக்களிடம் பரப்ப, புலவர் இராமு இளங்குமரனார் மேற்கொண்ட முயற்சி நன்முயற்சி. மிகவும் பாராட்டுதலுக்குரியது. பயனுடைய முயற்சி. தமிழ்நாடு, புலவர் இராமு. இளங்குமரனார் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளது. புலவர் இராமு. இளங்குமரனார் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து இது போன்ற பல படைப்புக்களைத் தரவேண்டும் என்பது நமது விருப்பம். இன்ப அன்பு நாள்: 1-2-95 - அடிகளார் அணிந்துரை முனைவர் ஔவை நடராசன் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். நூலாசிரியர் திறம், நூலின் சீர்மை, நூற்பொருளின் மாண்பு என்ற மூன்று தகுதிகளால் ஒரு நூல் சிறப்பெய்தும் என்பர். புலவர் இளங்குமரனார் நுண்மான் நுழைபுலப் பன்மாண் புகழ் சான்றவர். திருக்குறளுக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட திறத்தால் திருக்குறள் வாழ்வகம் அமைத்துத் தமிழ் முனிவராய் ஒளிர்கின்றார். செழுந்தமிழ்ப் புலமைச் சீர்த்தி நிரம்பிய நம் புலவர் பன்னூலாசிரியர். இன்றைய தமிழ் மக்களுக்கு வாய்த்த அருங்கலைச்செல்வர். அருப்பெறல் மரபின் பெரும்பெயர் முருகன் எனலாம். பல்வேறு நிலைகளில் ஆய்வாளர்களுக்கு அரும்பொருள் சுரக்கும் ஊற்றாகத் திருக்குறள் திகழ்கிறது. தமிழ் மாமறையை ஓதி உணரவேண்டுமென்பது தமிழ் மக்களின் இன்றியமையாக் கடமையாகும். வையகம் தழுவிய வாழ்வியல் என்ற பொருண்மையில் உலகச் செய்திகளை ஒருங்கிணைத்து அவற்றுக்குப் பொருந்து மாறு திருக்குறள் அமைவதை ஆசிரியர் அழகுறச் சுட்டிக் காட்டுகிறார். ஒவ்வோராண்டும் சனவரித் திங்கள் பத்தொன் பதாம் நாள் பெல்சிய நாட்டிற்குப் பெண்டிர் விழா எனப்படும் பெருவிழா அமைதல் உலகறி செய்தி. இத்தகு பெண்டிரை வள்ளுவக்கிழவர் கண்டாரோ! என்னே பெருநிலை! என்னே பெருநிலை என்று வியந்து நின்றாரோ? அதனால், பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின் என்றாரோ? இவ்வாறு ஐம்பத்தேழு திருக்குறட்பாக்கள் நிகழ்ச்சி விளக்கம் பெறுகின்றன ஐம்பத்தேழு நாளுக்கும் கிழமைக்கும் இந்நூல் உரியதாதல் வேண்டுமென்று ஆசிரியர் கருதியதாகத் தெரிகிறது. கிழமை தோறும் திருக்குறள் என்னும் நெறியில் அமைந்த இந்நூல் நன்னூல் ஆகும். வரைந்த ஆசிரியர் புலவர் இளங்குமரனாரும் வெளியிடும் தஞ்சைத் திருக்குறள் பேரவையினரும் பாராட்டுககுரியவராவர். வாழ்க தமிழ்! வெல்க திருக்குறள் நெறி! ஔவை நடராசன் தஞ்சாவூர், 10-1-95 பதிப்புரை பேரன்பின் இனியீர், வணக்கம். வையகம் தழுவிய வாழ்வியல், என்னும் இந்நூல் தஞ்சைத் திருக்குறள் பேரவையின் மூன்றாம் வெளியீடாகும். திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை இளைஞர் முதல் பெரியோர் வரையுள்ள எல்லோரும் நன்கு அறிந்து, தம் வாழ்வில் கொண்டு ஒழுக வேண்டும் என்பது என் ஆவல். தமிழகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் தமிழ்த் தொண்டு புரிந்து வரும் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் அவர்களிடம் என் உள்ளக் கருத்தைக் கூறி, பேரவையில் வெளியிட ஒரு நூல் எழுதித்தாருங்கள் என்று வேண்டிக் கொண்டேன். என் உள்ளத்தைத் தெளிவுற உணர்ந்து கொண்ட தமிழ்க்கடல் அவர்கள், உலகத்தின் நடைமுறைச் செய்திகளை எளிமையாக - இனிமையாக நல்ல தமிழில் எடுத்துக்காட்டி, திருக்குறள் கருத்துக்களைப் படிப்போர் உள்ளத்தில் பதிய வைக்கும் திறனோடு வையகம் தழுவிய வாழ்வியல் என்னும் செம்மாந்த நூலை இயற்றி வழங்கினார்கள். அவர்தம் தூய்மையும் துவளாப்பணிகளும், அறிவார்ந்த செயல்களும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் வழங்கிய வையகம் தழுவிய வாழ்வியல் என்னும் நூலை வெளியிடுவதில் திருக்குறள் பேரவை பெருமையும் பெருமிதமும் கொள்கிறது. தமிழ்க்கடல் அவர்கள் அறிவார்ந்த மக்கட் பேறுகளில் நல்லிடம் பெறுகின்றார்கள். நாமும் நாடும் உலகும் நன்றிக்கடன் ஆற்றுவோம். நூல் பேரவையின் வெளியீடாக வருவதற்கு நம் பேரவையின் தலைவர். குறள் நெறிச் செல்வர் சி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் உருபா ஐயாயிரம் வழங்கி உதவி புரிந்தார்கள். அவர்களின் தன்னலங்க கருதா உள்ளத்திற்குத் திருக்குறள் பேரவை என்றும் நன்றியோடு விளங்கும். குறள்நெறிச் செல்வர் சி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், திருவள்ளுவர் தம் திருவடிக்கே பதித்த நெஞ்சும், குறள் நெறிகளைப் பரப்புவதற்கென வழங்கும் கைகளும், தொண்டு செய்வதற்கென துவளாது நடக்கும் கால்களும் கொண்ட பெருமகனார் ஆவார். அவர்தம் கைமாறு கருதாத் தொண்டினைப் போற்றுவோம். திருவள்ளுவர் நெறிகளை நாடுமுழுமையும் வாரி வழங்கி வரும் தம் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஔவை நடராசன் அவர்கள் மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கி நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு நம் பேரவையின் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நூலை அழகிய வடிவில் அச்சிட்டு, காலத்தில் வழங்கி உதவிய மாணிக்கம் அச்சபத்தார்க்கும், காலங் கருதாது வந்து மெய்ப்புத், திருத்தம் செய்து பேருதவி புரிந்த புலவர் ஆ. இராமசாமி அவர்களுக்கும் பேரவையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வையகம் தழுவிய வாழ்வியல். என்னும் இந்நூல் மிக இனிமையான நூல். இளைஞர்களும், பெரியோர்களும் படித்து பயன் பெற வேண்டும். குழந்தைகளின் உள்ளத்தில் பதிந்திட வேண்டும் என்பதற்காகத் திருக்குறள் பேரவை இந்நூலை வெளியிட்டு மகிழ்கிறது. எல்லோரும் படித்துப் பயன் பெறுதல் வேண்டும். தங்கள் அன்புள்ள, 5-2-95 தஞ்சாவூர் செயலர் 1. பெண்ணிற் பெருந்தக்க யாவுள? பெல்சியத்தின் தலைநகர் புரூக்சேல்! அது பகைவர் முற்றுகைக்கு ஆட்பட்டது. வலிய முற்றுகை! வன் கொடுமைத் தாக்குதல்! நகரமே முழுமையாகக் கோட்டை கொத்தளங்களுடன் பற்றிக் கொள்ளப்பட்டது. ஒருவரும் வெளியேறிச் செல்ல இயலா நிலை! முற்றுகைப்பட்டு முற்றாக ஒழிந்து போகும் நிலை. படைத்தலைவன் நினைத்தான். பரிவொடும் நினைத்தான். போரழிவில் போரின் பொருளும் அறியா மழலையரும் இளையரும் இறந்துபடவேண்டுமா? போரில் பங்கிலா மகளிர்தாமும் இறந்துபட வேண்டுமா? வேண்டா! வேண்டா! என்று நினைத்தான். குழந்தையர் இளையர் மகளிர் ஆகியோர் கோட்டையை விட்டு வெளியே செல்லலாம். வேண்டும் இடம் செல்லலாம்; செல்லும்போது அவர்கள் விரும்பும் பொருளைத் தாமே எடுத்துச் செல்லும் அளவு எடுத்தும் செல்லலாம். என்றான். மகளிர் கூடி எண்ணினர்! மாநாடு கூட்டியா பேச முடியும் - உயிருக்கு மன்றாடும் போதில்! மனத்தொடு மனமாய்ப் பேசினர். ஒவ்வொரு பெண்ணும் தலையிலோ முதுகிலோ ஒரு பொருளைச் சுமந்து கொண்டு சென்றாள். சுமைப் பொருள் கண்ட தலைவனும் திகைத்தான். காவல் வீரரும் திகைத்தனர். தந்த ஆணையைத் தடுத்து நிறுத்தல் அறமன்று என்று தன்னைத் தடுத்துக்கொண்டு தான் தந்த சொல்லைக் காத்தான் பகைவன் எனினும் பண்புசால் பெருமை வீரன்! என்ன கொண்டு சென்றனர் பெண்டிர்? அவரவர் கணவன்மாரைச் சுமந்து சென்றனர். அவர்கள் விரும்பும் பொருள்கள் அவர்கள் கணவரினும் உயர் பொருள்களாக இல்லை என்பதை மெய்ப்பித்தனர். மகளிர் துணிவும் அறிவும் மட்டுமோ பாராட்டுக்கு உரியவை! அவர்கள் தம் கணவன்மார்மேல் கொண்ட காதலை அளக்க அளவுகோல் உண்டோ? கற்பித்துத் தந்த கற்பா இஃது? கற்பித்துத் தந்தார்தாம் எவர்? அவரே கற்றுக் கொண்ட கற்பன்றோ ஈது? உலகக் கற்பெலாம் ஓருருவாகிய அப்பெல்சியப் பெண்டிர் பெருமையே பெருமை! அப்பெருமை பகைவரும் பாராட்டிய பெற்றியதென்னின். அந்நாட்டவராலே எப்படிப் பாராட்டப் பெற்றிருக்கும்! நாட்டவர் பாராட்டிய பாராட்டு, அந்நாள் தொட்டு நாளும் நாளும் தொடர்ந்து இன்றும் நாட்டப்பட்டே வருகின்றனது. ஒவ்வோராண்டும் சனவரித் திங்கள் பத்தொன்பதாம் நாள் பெல்சிய நாட்டிற்குப் பெண்டிர் விழா எனப்படும் பெருவிழா ஆதல் உலகறி செய்தி! இத்தகு பெண்டிரை வள்ளுவர்க்கிழவர் கண்டாரோ! என்னே பெருநிலை என்னே பெருநிலை என்று வியந்து நின்றாரோ? அதனால், பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். (54) என்றாரோ? 2. புகழ் புரிந்த இல் அவர்கள் வழி வழி முடியுடைய மன்னர்கள். வேழமுடைத்து மலை நாடு என்னும் பாராட்டுக்குரியவர். வானவர் என்றும் வானவரம்பர் என்றும் புகழப்பட்டவர். முடிமன்னராகிய அவர்களுக்கு இல்லாதவை எவை? இருந்தவை எவை என அறிய வேண்டுமா? பதிற்றுப்பத்து ஒன்றைப் பார்த்தாலே போதும். பாடு புலவர்களுக்கு அவர்கள் வழங்கிய கொடைப் பட்டியல் உள்ளதே! அவர்களின் வளத்தையும் வாழ்வையும் உளத்தையும் உயர்வையும் ஒருங்கே காட்டும்! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இரண்டாம்பத்தின் தலைவன். அவன் அவனைப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத் தெட்டு யாண்டு தன்னாட்டு வருவாயிற் பாகம் கொடுத்தானாம். நான்காம்பத்தின் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். அவனைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்தானாம். ஒன்பதாம்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை. அவன் தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு, மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற் காகா அருங்கல வெறுக்கை யொடு பன்னீராயிரம் பாற்பட வகுத்துக் காப்புப்புறம் விட்டானாம். இவ்வேந்தர் வென்ற களங்கள் எத்தனை? கொண்ட சிறப்புகள் எத்தனை? ஆட்சித் திறங்கள் எத்தனை? அறிவுக்கூர்ப்புகள் எத்தனை? இவ்வள விருப்பினும் பாடு புலவர்கள் அவர்கள் பீடு விளங்கப் பேசிய பெருமை என்ன? இன்னார் கணவ என்பதில் இருந்த ஏற்றம் எதிலும் கண்டிலர் போலும்; அதனால், ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ (14 : 15) திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ (24 : 11) வாள் நுதல் கணவ (38 : 10) நல் நுதல் கணவ (42 : 7) ஆன்றோள் கணவ (55 : 1) நல்லோள் கணவ (61 : 4) சேணாறு நறுநுதற் சேயிழை கணவ (65 : 4) புரையோள் கணவ (70 : 16) சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ (88 : 36) என்றே பாடினர். இப்பதிற்றுப்பத்தின் வேந்தர் அனைவரும், தத்தம் மனைவியர் சீர்மையால் பாடு. சிறப்பொடும் விளங்குதல் பேற்றை வள்ளுவக் கிழவர் கண்டு கண்டு களித்தாரோ? இப்பேறே எப்பேற்றினும் பேறென வியந்து வியந்து நின்றாரோ? அதனால், புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. (59) என்றாரோ? 3. காலத்தினால் செய்த நன்றி தட்டுத தடுமாறி வந்தான்; தள்ளாடிக் கீழே விழுந்தான்; விழுந்த இடமோ சாலையோரச் சாய்க்கடை; விழுந்ததைக் கண்ட ஒருவன் ஓடிப்போகித் தூக்கினான்; நினைவே இல்லை! ஆனால் மூச்சு இருந்தது. அருகில் இருந்த கடையில் ஓடித் தண்ணீர் கொணர்ந்தான். மெல்லெனக் கண்ணைத் திறந்து பார்த்தான். தண்ணீர் தெளித்தவன் ஓடிப்போய்த் தேநீர் கொணர்ந்தான்; தன்னிலையற்றவனின் தலையைத் தூக்கிப்பிடித்துக் குடிக்க வைத்தான். கண்ணைச் சுழற்றிப் பார்த்தான் மயங்கி விழித்தவன். உயர்ந்த கோபுரம் ஒன்று தெரிந்தது. என்ன அங்கே கூட்டம்? என்றான். கோபுரத்தின் மேலே இருக்கும் கடிகையாரம் ஓடவில்லை. அதனைச் சீர்செய அத்தனை பேர்கள்! ஆயினும் ஓடச்செய்ய முடியவில்லை என்றான் தேநீர் தந்தவன். எளிதாக நான் சீர் செய்வேன் என்றான் மயங்கி விழித்தவன். பின்னரே உடையைப் பார்த்தான்; வீழ்ந்த சாய்க்கடை அதனைப் பார்த்தான்! அவனுக்கே கூட அருவறுப்பாக இருந்தது! ஆயினும் என்ன? நடந்தான், ஓடாக் கடிகாரத்தை ஓடவைக்க! உள்ளே விடுவரா? உடையும் ஆளும்! ஒதுங்கிப் போ என்றனர். யார் யாரோ பார்த்தும் ஒன்றும் ஆகவில்லை! நீ தானா செய்யப் போகிறாய் என்று இகழ்ந்து பேசி வெளியே தள்ளினர். கோபுரத்தின் மேலே இருந்தவர் ஒருவர் ஒருவராய் இறங்கிப் போயினர்! இதனைச் சீர் செய்ய எங்களால் ஆகவில்லை என்பதன் வெற்றி மிக்க தோல்வி நடை அது! ஒருவனைத் தாழ்ந்து வேண்டினான்! என்னால் முடியும்; என்னைப் போகத் தடுக்கிறார்கள்; நீங்கள் உதவினால் என்னால் முடியும் என்றான். ஏற இறங்கப் பார்த்தார்! ஏதோ ஓர் இரக்கம்; அழைத்துப் போனார். மேலே போனதும், கையால் தொடக்கூடாது; திறந்து காட்டுவோம்; பார்த்துக்கூறலாம்; உன் கைபட்டால் அந்த அழுக்கை என் செய்வது? என்றனர் ஒத்துக்கொண்டான். ஓரைந்து மணித்துளி! எங்கே தடை என்பதைத் தெளிவாய்க் கண்டான்! இவ்வாறு செய்க என்றான்! என்ன வியப்பு! டக் டக் தொடங்கியது! அவன் நாடித் துடிப்பும் ஒத்துப்பாடியது! பத்தாயிரம் தாலர் பரிசு பழுது நீக்குவார்க்கு; கோபுரத்தின் மேலே இருந்து படியில் இறங்கியா வந்தான்? கொண்ட மகிழ்ச்சியில் கூடியிருந்தோர், தூக்கிக் கொண்டே வந்து விட்டனர்! உடையின் அழுக்கு எங்கே போனது? கையின் சேறு எங்கே சென்றது? மூளைக் கூர்ப்பின் முன் மண்டியிட்டன! தண்ணீர் தெளித்தவன் கண்ணீர் தெளித்தான் களிப்பு மீக் கூர்ந்து! கட்டிப்பிடித்தான்! ஐயோ மயங்கி வீழ்ந்த வேளையில் நானும் இல்லா திருந்தால்! எத்தகைய அறிஞன் - மேதை நீ என்றான். போகலாம் என்று புதிய நண்பனொடு புறப்பட்டான். உன் வீடு? என்றான் நண்பன். உன் வீடு! என்றான் வந்தவன்! பசியின் களைப்புப் போக உண்டனர். பல நாள் பட்டுணி! போன உயிரைப் போகவிடாமல் காத்தவன் செய்கை எளிய செய்கையா? பசியாமல் கிடக்கும் ஒருவனுக்குப் பத்துவகைக் கறியொடு சோறு படைத்தால் என்ன பயன்? தீமை வேண்டுமானால் உண்டு; பெற்றோர் தந்து பிறப்பு முடிந்து போகும் நிலையில், பின்னொரு பிறப்புத் தந்த தாயும் தந்தையும் ஆனவன் தண்ணீர் தெளித்தவன்தானே! அவன் ஒரு குடும்பப் பொருளையோ காத்தான்? உலகப்பொருளை அல்லவோ காத்தான்! அந்த அறிஞன் - அறிஞரில் அறிஞன் எடிசன்! அவன் உலகுக் களித்த கொடை ஒன்றா இரண்டா? உலகம் உள்ளவரை ஒழியுமா அவன் படைப்பின் பயன்பாடு! சாகக்கிடப்பானைப் பிழைக்க வைக்கும் காலத்தினும், சிறந்த காலம் உண்டா? எவ்வளவு அரியது! தண்ணீர் தெளித்ததுதானே, அவனை விழிப்புறச் செய்த உதவி? எவ்வளவு பெரியது! விழிப்பின் விளைவு, உலகுக்கு உதவிய உதவுதல் - இவ்வளவு அவ்வளவா? உலகம் உள்ளளவும் ஒழியா நலப்பேறு ஆகிவிட்டது அல்லவோ அது! இத்தகும் உதவி என்ன, எளிதாய் எண்ணப்படுமோ? நம் வள்ளுவக் கிழவர் இத்தகு காட்சி ஒன்றனைக் கண்டாரோ? உதவினோன் உதவியை வியந்து வியந்து நின்றாரோ? அதனால் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (102) என்றாரோ? 4. எழுமை எழு பிறப்பும் ஒரு சிறிய சிற்றூர்! பெரிய வீடொன்று ஒருவர் கட்டினார். ஒருவருக்கொருவர் உதவும், சிற்றூர் வழக்கப்படி, வண்டியுடையவர் வண்டி தந்தனர்; மாடு இருப்பவர் மாடு தந்தனர்; கூலி வேலையர் ஆளாய் வந்தனர். மரமும் கல்லும் வண்டி வண்டியாய் வேண்டும்! ஏழு கல் தொலைவுக்கு அப்பாலேதான் கல்லும் மரமும் கிடைக்கும்! கல்லுக்கு மலை! மரத்திற்குப் பேரூர். ஒருவர் வண்டி மாட்டொடும் உதவிக்கு வந்தார். பாரம் நல்ல பாரம்! மாடுகள் இரண்டும் ஊக்கமில்லை! ஊருக்கு அருகில் ஓர் ஓடை! மேலே மணல்; கீழே சேறு! பார வண்டி இறங்கிற்று, இறங்கிற்று; கீழே கீழே! மண்டி போட்டு இழுத்தன மாடுகள்! வண்டியின் சக்கரம் ஆழ்ந்து தெப்பக்கட்டை தட்டும் அளவு இறங்கினும் மாடுகள் தெம்பாய் இழுத்தன. கரையை நெருங்கும் நிலைமை! மண்டியிட்டுக், கொம்பை நிமிர்த்திக், காதை விடைத்து, மூக்கை ஊன்றி, இழுத்த இழுவையில் ஒரு மாட்டின் கழுத்துக் கயிறு அறுந்தே போனது! அறுந்த விரைவில் அப்படியே நிலத்தில் மோதி மூக்கு உடைபட மாடு இறந்தே போயிற்று! பாரத்தை இறக்கி வேறு மாட்டைப் பூட்டி வண்டியைக் கொண்டு சென்றனர். வண்டிப் பாரம் இறங்கியது! வந்தவர்க்குப் பாரம், ஏறி அல்லவோ போயிற்று! வீடு கட்டுபவர், உதவிக்கு வந்தவர் வீட்டைத் தேடி போனார். ஐம்பது உருபா மடியில் வைத்து, மாடொன்று பிடித்துக் கொள்ள வேண்டினார். மறுப்பெதும் இன்றித் தொகையைக் கொண்டு தக்க மாட்டைப் பிடித்துக் கொண்டார்! அந்நாள் விலையில் அத்தொகை மிகுதி! மூன்று திங்கள் கழிந்தன. மாடு இறப்புக்குப் பணத்தைப் பெற்றவர் கொடுத்தவர் வீடுதேடி வந்தார். ஆம்! பணத்தைத் தந்தவர் புதிய வீட்டுக்கு! மடியில் இருந்து உருபா ஐம்பத்தைந்து எடுத்தார். உரிய போதில் உதவி செய்தீர்கள்! பருத்தி நன்றாய் வெடித்தது! இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்! என்ன இது? உங்கள் மாட்டுக்கு, ஒரு மாடு வேண்டும் என்று தானே தந்தேன்; தொகையை வாங்க மாட்டேன் என்று மறுத்தார் பணம் தந்தவர். என் வேலைக்குப் போய் இப்படி இறந்து போனால் என்ன செய்வேன்? உங்களிடம் கடன் பணம் வாங்கி மாடு பிடித்தால் தர வேண்டுமா இல்லையா? அன்று என்னிடம் பணம் இல்லை! அதனால் பணத்தை வாங்கி மாடு பிடித்தேன்; பணம் இப்பொழுது தாராளமாக உள்ளது! வேண்டுமானால் ஐந்து உருபா கூடுதல் வைத்துள்ளேன்; அதனை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஐம்பது உருபாவைக் கட்டாயமாய்த் தந்தே போனார்! பணத்தை வாங்கிய பெரியவர் இன்று இல்லை! பணத்தை தந்த பெரியவர் தாமும் இன்று இல்லை! மக்களின் மக்களின் மக்களும், அவர் தம் மக்களும் மக்களும் உள்ளனர்! புரிவு தெரிந்தோர் அனைவருக்கும் இச்செய்தி புதுவது இல்லை! ஏனெனில் குடும்ப வரலாறு! அதன் விளைவென்ன? இந்த நன்றி அந்த இருவர் குடும்பத்தும் இழையோடிக் கொண்டிருத்தல் எவரும் அறிந்தது! வழிவழியாக இவ்வாறு நினைந்து போற்றும் நன்றியின் சிறப்பு ஊரூர்க்கில்லையா? நற்குடி என்னும் எக்குடிக்கிவ்வரலாறு இல்லை! போன பிறப்பு எங்கே பிறந்தேன்; எப்படிப் பிறந்தேன்; எனக்கு எவரெவர் என்னென்ன செய்தார்? எனக்குத் தெரிவதே இல்லை! உங்களுக்காவது எவருக்கேனும் தெரியுமா? உண்மை வேண்டும்! உண்மை உணர்வு வேண்டும்! நெஞ்சே சான்றாய்க் கூறுதல் வேண்டும்! இளந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எத்தனை நினைவில் உள்ளன? ஆறறிவாகிய பிறப்பை அடைந்தும் மூன்று அகவைக் குள்ளே நடந்தவை எத்தனை நமக்கு நினைவில் உள்ளன? வாழ்வியல் பார்வை விடுத்து வறண்ட பார்வை வேண்டா? தீராத் துயரைத் தீர்த்தவர் எனினும், நீங்கா நலத்தைச் சேர்ந்தவர் எனினும், அவர் தம் உதவியைப் பெற்று ஊன்றி நின்ற குடியினர் வழிவழியாகப் போற்றுவர் என்றால் வாழ்வியல் பார்வை! இந்தப் பார்வையால் வள்ளுவக் கிழவர் முந்துறச் சொன்ன காட்சியைக் கண்டாரோ? என்னே நல்லுளம் என்னே நல்லுளம் என்று வியப்புற நின்றாரோ? அதனால், எழுமை எழுபிறப்பும் உள்ளுவம் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு (107) என்றாரோ? * எந்தையார் படிக்கராமர் வீடு கட்டும் போது நிகழ்ந்தது இது; உதவிக்கு வந்த பெரியவர் சக்ணர் என்பார். ஊர்: வாழவந்தாள்புரம் 5. ஏதிலார் குற்றம் போல் மாந்தன் ஒருவன் ஓவியம்! ஓடுபவனையும் நிற்க வைக்கும் ஓவியம்! ஓவியத் தோற்றமும் வண்ணமும், ஒருப்படா உளத்தையும் ஒருப்படச் செய்து தன்னையே நோக்க வைத்துவிடும்! கூடிக் கூடி நின்றனர் கூர்ந்து கூர்ந்து பார்த்தனர். வனப்பு ஓவியத்திற்கு ஒவ்வாத பொருள்கள் இரண்டு. அவை பழஞ் செருப்புகள்! இரண்டு கைகளிலும் இரண்டு செருப்புகள், ஒன்று வலக்கையில்! மற்றொன்று இடக்கையில்! வலக்கையில் இருப்பது இந்தா எடுத்துக்கொள் எனக் கொடுப்பத போன்ற அமைப்பு. முன்னது துணிவின் துடிப்புத் தோற்றம். பின்னது பணிவின் படிப்புத் தோற்றம். முன்னதில் உள்ள எழுத்து; என்னைப் புறஞ்சொன்னால் அவனை நான் அடிக்க பின்னதில் உள்ள எழுத்து; நான் பிறரைப் புறஞ்சொன்னால் அவர் என்னை அடிப்பதற்குக் கொடுக்க கண்டவர் கலைக்கு வியந்தனர்! தத்தம் நிலைக்கு வெதும்பினர்! அவனைப் பற்றியதா அந்தக்காட்சியும் எழுத்தும்! உலகுக்குப் பொதுச் செய்தி அன்றோ அது! அத்தகும் உணர்வில் வள்ளுவக் கிழவர் புறங்கூறாக் காட்சி ஒன்றனைக் கண்டாரோ? இருபால் நிலையும் எண்ணி எண்ணி நின்றாரோ? அதனால், ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (190) என்றாரோ? 6. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் ஒரு நூலகர். ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் அமைக்க வேண்டும் என எண்ணினார். பள்ளிக்கெனக் கட்டடம், குடிநீர் வாய்ப்பு தளவாடம் முதலாய அடிப்படை வாய்ப்பும் இல்லாத பள்ளிகளில் நூலகம் அமைத்தல் இயலுமா? புதியதோர் திட்டம் அவர்க்கு உருவாகியது! பள்ளிச் சீரமைப்புத்திட்டம் என்பது அது. சீரமைப்புக்குத் தம் உதவி; பிறர் வழியே பெறும் உதவி என இருவகை உதவித் திட்டம் கொண்டார். தம் உதவியில் தம் உழைப்பு உதவியும் இருந்தது. அது பிறர் உழைப்பு உதவியையும் தானே தேடித்தந்தது. பத்தில் ஒரு பங்கே தம் ஊதியத்தில் தம் செலவுக்கெனக் கொண்டார். ஒன்பது பங்கும் பள்ளிச்சீரமைப்புக் கெனவே ஒதுக்கினார். பத்தில் ஒரு பங்கு கொண்டு வாழ முடியுமா? இவ்வளவுக்குள்ளேதான் வாழ்வு என உறுதிகொண்டால் இயலாதா? எளிமை எளிமை - உடை - உணவு எல்லாம் எல்லாம்; குடும்பம் பெருகினால் கொள்கை சுருங்குமே! சுருங்காமல் என்றும் பெருகுவதற்காகக் குடும்ப வாழ்வை - திருமணத்தை - யே துறந்தார். இந்த எளிமையும் துறவும் என்ன ஆயின! சீரமைப்புச் செழுமை ஆயின! பள்ளிக்குக் குடிநீர்; மின்விளக்கு; கரும்பலகை; மேசை; நாற்காலி; கடிகாரம்; நூல்கள்; நிலைப்பேழை; விளையாட்டுப் பொருள்கள்; படங்கள் - இப்படி இப்படி ஆயின. இந்தப் பணிகள் ஊரைக் கடந்து வட்டம் மாவட்டமாய் அவையும் கடந்து மாநிலப் பரப்பைத் தழுவவும் ஆயது. ஒரு முறை கிடைத்த ஊதிய உயர்வின் நிலுவைத் தொகை 1,11,000 ஒரு மொத்தமாகக் கிடைத்ததாம் அத்தொகை முழுவதையும் பள்ளிச் சீரமைப்புத் திட்டத்திற்கே உதவினார். குடும்பச் சொத்தில் இருந்து இவர் பங்குக்கு வந்த தொகை மூன்றரை இலக்கம். அதனையும் முழுதுறக் சீரமைப்புக்கே உதவினார். திக்கற்றோர்க்கென ஓரில்லம் நடத்தி வருகின்றார். அதிலுள்ள குழந்தையர் 250 பேர்கள்! குழந்தைப் பூங்கா ஒன்றை அமைக்கும் திட்டமும் கொண்டுளார். ஆசியத் துணைக் கண்டத்திலேயே பெரியதோர் குழந்தையர் நூலகம் அமைக்கவும் முனைந்துளார். அனைத்து நாட்டுக் குழந்தையர் நல்வாழ்வு நிறுவனம் இவர்தம் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் செய்கின்றயன. உள்ளமுடையார் உதவியைத் திரட்டி அவ்வவ்வூர்ப் பணிக்கே ஒப்படைத்து நிற்கும் இவர் தொண்டு ஊரூராய் விரிகின்றது! உவப்புவப்பாகத் திகழ்கின்றது. இப்பெருந் தொண்டர் பா. கலியாணசுந்தரர். இவர்தம் தொண்டின் சிறப்பிடம் திருவைகுண்டம். பிறர் நலம் நாடும் இப்பெருந்தகை போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே இவர்தம் விரிநிலை! என்னே இவர் தொண்டென வியந்து வியந்து நின்றாரோ? அதனால் தாளாற்றித் தந்த பெருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (212) என்றாரோ! செய்தி. செந்தமிழ்ச் செல்வி; ஆசிரிய உரை மே.1992 சிலம்பு 66: 9 7. உண்ணாமை வேண்டும் புலாஅல் புலவு விற்பனையாளர் அவர். புலவு விற்பனை கொலை இன்றி நிகழுமமா? உயிரிகளைத் துள்ளத் துடிக்கக் கொல்வதும், துண்டு துண்டு ஆக்குவதும், தூக்கிலே போட்டுக் களிப்பதும், தூக்கி நிறுத்து விற்பதும், விற்ற காசு கொண்டு கொலைப் பொருள் வாங்கி, விலைப்பொருள்செய்தலும் வாடிக்கையாகிப் போய் விட்ட அவர் தம் நாள் வழிக் கடமை! அதிலே அவர்க்கு வெறுப்பு உண்டானால், விருப்பொடும் ஈடுபடுவாரா? ஆனால் அவர்தம் அன்பு மருமகள்! இளமைப் பைங்கிளி! கூர்த்த மூளைக் கொழுமையள்! உள்ளத்துருக்க உருவம் ஆனவள். தெய்வப் புலவர் திருக்குறள் மேல் பற்றுமை கொண்டாள். திருக்குரான் இருக்கத் திருக்குறள் ஏன் என அப்புலவுக் கடையினர் புகன்றார் அல்லர்! அந்த அளவில் உள்ளம் அமைந்தது பேறு! செல்வி படித்தாள்! குறளை முகந்து முகந்து தேனாகக் குடித்தாள்! பாடம்! பாடம்! மனப்பாடம். அதிகாரம் 26. புலால் மறுத்தல் அன்று தொட்டாள்! தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? (251) சிந்தித்தாள்! சிந்தித்தாள்! சிக்கல் பெரிதாயிற்று! தன்னூள் பெருக்க - தான் பிறிதூன் உண்ணவா? ஊனைப் பெருக்க - ஊனை உண்ணவா? உயிரை வளர்க்க - உயிர்க் கொலையா? திகைத்துத் திகைத்து மேலே சென்றாள். ஏழாம் குறள்: உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்அது உணர்வார்ப் பெறின் (257) ஒன்றன் புண்ணா புலால்! அந்தப் புண்ணைத் தின்னும் புழுவா நான்! புழுத்த உடலை, புண்ணாம் புலால் கொண்டு - உண்டு - வளர்க்கவா? வேண்டேன்! வேண்டேன்! வேண்டுவேன் என் தாயிடம்! வேண்டுவேன் தந்தையிடம்! வேண்டுவேன் மாமனிடம்! கொண்டாள் முடிவு! தீர்மானித்தே விட்டாள்! பெற்றோர் முன்னே வழியும் கண்ணொடு நின்றாள்; மொழியும் குழற விம்மினாள்! அறிவு மணியாம் - பண்பு மணியாம் - அன்பு மணியாம் - தங்கள் கண்ணின் மணியாம் செல்வி, கண்ணீர் வழிய நின்ற காட்சி பெற்றோரைக் கலங்க வைத்தது! கதறக் கதறக் கொல்ல வல்ல புலவுக் கடை மாமனையும் கலக்கியது! என்னே என்னே என்றனர்! கண்ணீர் துடைத்துக் காரணம் கேட்டனர். இன்று தொட்டுப் புலாலைத் தொடேன்; பொறுத்துக் கொள்ள வேண்டும். வெறுஞ்சோற்றைத் தின்றும் வாழ்வேன்; ஊற்றவும் தொடவும் ஒன்றும் வேண்டா! குறளைப் படித்தேன்; கொன்று தின்னல் குற்றம் உணர்ந்தேன்; உயிரைக் கொன்று தின்று வாழ்வதினும் உயிரைவிடலும் நன்றெனக் கொண்டேன் என்றாள். தந்தை உருகினார்; தாயோ கண்ணீர் வடித்தார். நீ சொல்லியதை மீறி எதையேனும் நாங்கள் செய்ததும் உண்டோ? உன் விருப்பம் எதுவோ அதுவே எங்கள் விருப்பும் அழாதே என்று தேற்றினார் மாமனும். இத்தொழில் அன்றி எத்தொழிலும் யான் அறியேன். குடும்பப் பிழைப்பே இதனைக்கொண்டே நடக்கிறது. நீ அறியாத தன்றே இது. வேறு தொழிலை உடனே கொள்ள அறியேன்; அறியின் இதனைத் தொடரேன்; ஆனால் உன்னை ஊன் உண்ண வற்புறுத்த மாட்டோம் உன் விருப்பம் எதுவோ அதுவே செய்க. புலவு சமைக்கும் கலமும் உன்னை அண்டா. நீ விரும்பும் மரக்கறி உணவு எதுவோ அதுவே இனிச் சமைப்போம் என்றார் மாமன்! தாயோ, உன் உணவு வேறு; எம் உணவு வேறா? உன்னினும் பெரிதோ அந்த உணவு! இனி இந்த வீட்டில் இரண்டு உணவு இல்லை! இரண்டு கலங்களும் இல்லை. ஒரே உணவு; மரக்கறி உணவு! தொழிலால் அது நடப்பினும் நடக்க; மாறினும் மாறுக. இனி உணவால் சைவம் என்றார் அன்னையார். கட்டிப்பிடித்துக் காதற் பெருக்கெலாம் அத்தாயின் உரையாய்த் தழுவினாள் செல்வி! இதோ! திருக்குறளைத் தம்மறை என்னப் பிறந்த செல்வியின் உணர்வே உணர்வு! ஒரு சிறு மலரின் நறுமணம் என்ன செய்தது? ஒரு குடும்பத்தைக் குறள்நெறிக் குடும்பமாக்கிவிட்டது! இச் செல்வி போலும் ஒரு செல்வியை அன்றே வள்ளுவர் கிழவர் கண்டாரோ? அவள் உருக்கம் கண்டு என்னே என்னே என உருகி நின்றாரோ? அதனால், உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண் அது; உணர்வார்ப் பெறின் (257) என்றாரோ? உணர்வாரைப் பெற்றால் தானே அது புண்! இல்லையேல் புலால் அன்றோ! சென்னை - முகப்பேரி மேற்கு - குறளாயத் தொடர் வகுப்பு மாணவி செல்வி. சா பாத்திமா; செய்கை இது. கற்பித்த ஆசிரியர்: இசை இறை சேரலாதத் துணையர். தாய் - தந்தையர் : சாகுல் அமீது - காதர் பீவீ. 8. வஞ்ச மனத்தான் ஓர் அருமையான ஓவியக் காட்சி. அக்காட்சியில் எண்ணற்ற ஓவியங்கள். எழுச்சி மிகு எழுத்துகள். உணர்வூட்டி உண்மை தெரிவிக்கும் தூண்டல்கள். அவற்றுள் ஒரு தனிக்காட்சி. கண்டவர்கள் அனைவரையும் உள்நோக்க வைத்தது அது. அப்பகுதியில் கண்ணாடிப் பெட்டிகள் நான்கு. மேலே மட்டும் திறப்பு; கண்ணாடி அமைப்பு. மற்ற பக்கங்கள் எல்லாம் மறைப்பு முதல் பெட்டியில் ஒரு தேனீ! பெரிதாகத் தீட்டப் பட்டிருந்தது. இதற்குத் தலையில் நஞ்சு என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்த பெட்டியில் ஒரு தேளின் ஓவியம்! இதற்குக் கொடுக்கிலே நஞ்சு என்று எழுதப்பட்டிருந்தது. மூன்றாம் பெட்டியில் படமெடுத்தாடும் ஒரு பாம்பின் படம்! இதற்குப் பல்லிலே நஞ்சு என்று எழுதப்பட்டிருந்தது. இறுதிப் பெட்டிதான் அனைவரையும் திகைப்படையச் செய்தது! அப்படம் ஒரு மாந்தனின் படம். அதன் கீழே எழுதியிருந்தது, இவனுக்கு உடல் முழுவதும் நஞ்சு. நஞ்சினும் நஞ்சு உறுப்பு நஞ்சு அன்று! அந்நஞ்சு தற்காப்புக்காக அவை கொண்டது! ஆனால் மாந்தனின் நஞ்சு, நெஞ்ச நஞ்சு! உடலெல்லாம் பரவியுள்ள நஞ்சு! தேடிப் போய்த் தீமை செய்யத் தேர்ந்த தீய நெஞ்சின் நஞ்சு தீராத நஞ்சு! தான் கொண்டது நஞ்சு என அவன் எண்ணு கிறானோ? நஞ்சுடையவை இவை இவை எனத் தெளிந்து கொண்டு ஓடித் தேடி அழிக்கும் மாந்தன் தன் முழு நஞ்சைத் தான் உணர்கின்றானா? அவனை மற்றவர்கள் மட்டுமா நகைக்கின்றனர்? அவனுள் இருக்கும்மண் விண் தீ நீர் காற்று என்னும் ஐம்பூதங்களும் நகைக்கின்றனவாம்! இத்தகும் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் உள்ளுள் கண்டாரோ? என்னே கொடியன்! என்னே கொடியன்! என எண்ணி நின்றாரோ? அதனால், வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் (271) என்றாரோ? 9. பொய்ம்மையும் வாய்மை இடத்த உனக்கு இந்த வீடா, நீ பிறந்த வீடா என்பது இன்றைக்குத் தெரிந்துவிடும். எனக்குக் குறை இருந்தால் தானே ஆமாம் உனக்குக் குறை இருந்தால். அடுத்த முழுத்தத் திலேயே அவனுக்கு வேறொரு தாலி கட்டு தான்! பிள்ளை தவழாமல் இன்னும் காத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது மாமியார் சூடு மருமகளை வாட்டியது. கணவன் தளர்ந்த முகத்தோடு வந்தான். என்னங்க; மருத்துவர் என்ன சொன்னார். அம்மா எங்கே? வெளியே போயுள்ளார்! நல்ல வேளை! அப்பாவாகும் தகுதி எனக்கு நன்றாக இருக்கிறது! அம்மாவாகும் தகுதிதான் உனக்கு இல்லை ஐயையோ! என் நிலை என்ன ஆவது? அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை என் வீட்டுக்கு முடுக்கி விடுவாரே? உன்னை விட்டுப் பிரிந்து என்னால் இருக்க முடியுமா? வேறு திருமணத்திற்கும் இடம் தருவேனா? அம்மாவைத் தடுத்துப் பேசுவீர்களாக்கும் நீங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டத்தானே செய்வீர்கள். உண்மை தான்! எதிர்த்துப் பேச முடியாது தான்! அதற்கு ஒரு வழி வைத்திருக்கிறேன். வழியா? என்ன அது? அம்மாவினிடம் என்னிடம் தான் குறை; அவளிடம் குறை இல்லை என்பேன்; என்னை முடுக்கவா முடியும்! வாயை மூடிக்கொண்டிருப்பாள் எத்தகைய கணவர் இவர் எனப் பூரித்தாள். என் குறையை மறைத்துத் தம் குறையாகச் சொல்லும் அளவுக்கு இவர்க்கு எவ்வளவு பெரிய மனம் என நெகிழ்ந்தாள். தொலைபேசி ஒலித்தது. அவள் மட்டுமே இருந்தாள். எடுத்தாள் அதனை! மருத்துவர் பேசுகிறேன்; உன் கணவரிடம் முடிவு சொல்லி அனுப்பினேனே! சொன்னாரா! ஆமாம்! அப்படி ஒருவர் எனக்குக் கணவராகக் கிடைக்க நான் பேறு பெற்றிருக்க வேண்டும். என்ன சொன்னார்? குறை என்னிடம் தான் என்று தெரிந்தும் என்னைக் காப்பதற்காகத் தமக்குத் தான் குறையென்று அம்மமாவிடம் சொல்லி இருக்கிறார் அப்படியா சொன்னார்! அவரிடம்தான் குறையிருப்பதாக நான் சொன்னேன்; அப்படியே இசைத்தட்டைத் திருப்பிப் போட்டு விட்டாரா? ஐயோ! அப்படியா? பரவாயில்லை! நான் எதிர்பார்த்தபடியேதான் எல்லாம் நடந்திருக்கிறது உண்மையிலேயே உன்னிடம் தான் குறை. அதைச் சொன்னால் உன்னைத் தள்ளிவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்வாரே! அதனால் அவரிடம்தான் குறை என்று பொய் சொல்லி அனுப்பினேன் என்றார் மருத்துவர். இத்தகு நிகழ்ச்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே எனத் திகைப்புற நின்றாரோ? இத்தகு பொய்யும் மெய்யோடும் எண்ணத் தக்கதே; இது செய்யும் நலத்தினால் என்பதால், பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (292) என்றாரோ? செய்தி: குறை ; கதைமலர் ; தினமலர். (16-6-92) 10. நில்லா தவற்றை உங்கள் உண்மை அழகைப் பாருங்கள்! பார்க்க விரும்பின் வாருங்கள்! என்னும் பலகை வா வா எனப் பலரையும் அழைத்தது; அறிவியல் கண்காட்சிச் சாலை அது. பிறந்த குழந்தையும் பெற்ற தாயும்! தாய் மடியில் கிடக்கும் சேய்! தவழும் குழந்தை! எட்டு வைக்கும் பிள்ளை! ஓடி ஆடும் ஆட்டம்! பாடம் படிக்கும் பருவம்! வளர்ந்த காளை! திருமணக் காட்சி! மக்களொடு தோன்றும் மகிழ்வு! பதவிப் பொறுப்பும் வீறும்! மூத்த முதுமை! கட்டிலில் கிடக்கும் நோய்மை! - இவ்வளவு காட்சிகளும் வண்ண வண்ண ஓவியங்கள்; இறுதியில் ஒரு பெட்டி! உங்கள் உண்மை அழகைப் பாருங்கள் என்று எழுதப் பட்ட பெட்டி அது. மேல் பக்கம் மட்டும் கண்ணாடி; முப்பக்கமும் மூடு மறைப்பு. மேலே இருந்து பார்த்தால்! பார்த்தால்! - பார்ப்பவர் முகம் என்ன ஆகின்றது! கண்கள் குத்திட்டு நிற்கின்றனவே! ஏன் திகைக்கிறார்? உள்ளே இருப்பது மண்டை ஓடு! மண்டலம் எல்லாம் ஆட்டிப் படைத்தவனுக்கும் இறுதி நிலை இந்த மண்டை ஓடே! எல்லாம் எரிந்தும் கரிந்தும் போக, எஞ்சி இருக்கும் மண்டை ஓடே! எது மெய்? உன் வாழ்வு உரிய வகையில் வாழ்ந்து உயர்வுக்கு இடமானால், மீப் புகழாம் அது எச்சம்! புகழெச்சம்! இல்லையேல்? இது என்ன எச்சம்? பழியெச்சம்! என்பதைச் சொல்லாமல் சொல்லும் மண்டை ஓடு. இத்தகு அறிவியல் காட்சியை வள்ளுவக் கிழவர் உன்னிப்பாகக் கண்டு கொண்டாரோ? மாந்தன் மாந்தனாக வாழா நிலையை எண்ணி எண்ணி இரங்கி நின்றாரோ? அதனால். நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (331) என்றாரோ? 11. ஊழிற் பெருவலி யாவுள சென்னையில் நேற்று காலையில் சரியாக 11.47 மணி இருக்கும். அப்போது வீடுகளில், பல மாடிக் கட்டங்களில் இருப்பவர்கள் நில அதிர்வை உணர்ந்தனர். மேசை நாற்காலிகள் அசைந்தன. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அச்ச முற்றனர். இது ஏதோ பெரிய அளவில் அழிவு தருமோ என்று பலரும் அஞ்சினர். பாரிமுனை கடற்கரைப் பகுதிகளில் உள்ள பல மாடிக் கட்டங்களில் இருந்தவர்கள் நில அதிர்வைத் தெளிவாக உணர முடிந்தது. அண்ணாசாலை இராயப்பேட்டை முதலிய பகுதி களிலும் பொதுவாக நில அதிர்ச்சியை உணர்ந்தனர். கிண்டி, மணலி முதலிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்த அதிர்ச்சி புலப்பட்டது. வானிலை அலுவலகத்திற்குத் தொலை பேசியில் பேசிக் கேட்டனர். ஓரிரு தளம் உள்ள வீடுகளை விட பலமாடிக் கட்டடங் களில் இருந்தவர்களால் நில அதிர்வை எளிதில் உணர முடிந்தது. மேசையில் இருந்த கோப்புகள் சர் என்று சரிந்து அடுத்த நொடியில் அப்படியே நின்றதைப் பார்த்தனர். மாடிப்படிகளில் நின்றவர்கள் எளிதாகத் தடுக்கி விட்டது போல உணர்ந்தனர். பெரிய பொருள்கள் குலுங்கின. எழுதுகோல் (பேனா) கரிக்கோல் (பென்சில்) முதலிய சிறு பொருள்கள் நழுவி விழுந்ததைப் பார்த்துச் சிலர் அதிர்ந்தனர். மணலி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பலகணி பட்டென அடித்துக் கொண்டதைக் கூறினர். சாலையில் போனவர்களுக்கு இந்த பட்டறிவு கிட்ட வில்லை. விரைந்து போய்க்கொண்டிருந்தால் இவர்களால் நில அதிர்வை உணர முடியவில்லை. மாமல்லை வரை இந்த அதிர்வு காணப்பட்டது. மணலியைத் தாண்டிச் சில பகுதிகளில் அதிர்ச்சியால் மிகச்சிறிய விரிசல் கட்டடங்களில் ஏற்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இது மிக மெல்லிய நில அதிர்ச்சிதான் 5.2 ரிக்டர் அளவு கொண்டது. சென்னைக்குக் கிழக்கு வடகிழக்காக வங்கக் கடலில் 800 கி. மீ. தொலைவில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுதான் சென்னையில் எதிரொலித்தது. சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என வானிலை அறிக்கை கூறுகிறது. (தினமலர் 12-1-92) சிறிய நில நடுக்கம் இது. 1961-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் சிலி நாட்டில் ஒரு நில நடுக்கம் உண்டாயிற்று. அதன் விளைவு கண்டும் கேட்டும் இராத கொடுமையாயிற்று. சிலி நாட்டின் நடுமையத்தில் உள்ள கன்ஸெப்ஷன் என்னும் நகரமும் அதையடுத்த பகுதிகளும் கொடிய பூகம்பத்துக்கு உள்ளாயின. அப்போது அங்குள்ள வீடுகள் கிடுகிடுத்து ஆடி விழுந்தன. பாலங்கள் உடைந்து தகர்ந்து போயின. பல இடங்களில் தீப்பற்றிக் கொண்டது. வானம் கீறியது போல் பெருவெள்ளமாக மழை பொழிந்தது; அந்நகருக்கு 25 மைல் தெற்காக உள் காரனல் என்னும் சுரங்கப்பட்டணத்தில் உன்ன வீடுகளில் பாதி தகர்ந்து விழுந்தன. இன்னும் பல வெடித்துப் போயின. அயலில் உள்ள கிலோ வேக் தீவிலும் லாங்கிவே காடிரோ முதலிய இடங்களிலும் பூகம்பத்தால் மிகுந்த சேதம் உண்டாயிற்று. கன்ஸெப்சன் நகரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருவரும் எதிர்பாரா நிலையில் திடீரென்று இந்தப் பேராபத்து அவர்களைத் தாக்கியது அவர்களில் பலர் துரதிஷ்டம் வாய்ந்த அந்த நகரை விட்டு வெளியேறிக் காடுகளையும் வயல்களையும் அடைந்து அப்பாற் சென்று உயிர் தப்ப முயன்றார்கள். வீடுகளும் கட்டடங்களும் நொறுங்கி விழுந்த போது அவற்றில் பலர் அகப்பட்டுக் கொண்டு மாண்டார்கள். உடைந்து விழும் பாலங்களில் இருந்து ஆற்றில் தள்ளப்பட்டுப் பலர் உயிர் இழந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைகள் பல கீறியும் வெடித்தும் வாய் பிளந்தும் வழி மறித்தன. பூகம்பத்தால் இடிந்து விழும் கட்டடங்களின் பேரோசையும் இங்கும் அங்கும் பற்றி வானை நோக்கி எழும் தீயின் செந்நாவும் அவர்களை அச்சுறுத்தி வெருட்டின. ஆகாயவிமானங்கள் வானில் ஏறிப் பறக்க முடிய வில்லை. அதனாலும் தந்திக் கம்பிகள் டெலிபோன் கம்பிகள் முதலியன அறுந்து போனதாலும் அங்கு நிகழும் செய்திகளை வெளியிடங்களுக்கு உடனே அறிவித்துத் துணை தேட வழியில்லாமல் போய்விட்டது. சுமார் 70,000 சதுர மைல் பரப்புள்ள நிலப்பகுதி இவ்வாறு பெருஞ்சேதத்துக்கு உள்ளாயிற்று. நிலம் கீற வானம் பொழிய தீ சூழ நேர்ந்த சேதங்கள் போதா என்பது போல் கடலில் இருந்து ஆழிப்பேரலைகள் கிளம்பி, நிலத்தின் மீது படையெடுத்து வந்து அதை மோதிப் புடைத்து அழித்தன. கோரல் முதலிய சிற்சில இடங்களில் இந்த அலைகள் 30அடி உயரம் வரை ஓங்கி உயர்ந்தன. லே பூ முதலிய வேறு இடங்களில் 10 அடி உயரமும் வேறு சில இடங்களில் சற்றே குறைந்தும் மிகுந்தும் காணப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஸான்பிரான்சி நகரிலும் மெக்சிகோவில் உள்ள ஸாண்டியாகோ துறைமுகத்திலும் சுமார் 5000 மைலுக்கு அப்பால் உள்ள நியூசிலாந்திலும் இந்த ஆழிப் பேரலைகள் மோதின. அங்குள்ள படகுகளைத் தகர்த்தன கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டடங்கள் பண்டகசாலைகள் முதலியவற்றுக்குப் பெருஞ்சேதம் விளைவித்தன. சிலி நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள ஜப்பான் தீவுகளின் கீழ்க்கரையிலும் இவை மோதிப் புடைத்தன. அங்குச் சிற்சில இடங்களில் இவற்றின் உயரம் சுமார் 20 அடியாக இருந்தது. இந்த அலைகள் வெறி பிடித்தவை போல் மீண்டும் மீண்டும் பின் வாங்கி முன் வந்து தாக்கிப் புடைத்தன. நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் பிற வகைப்படகுகளும் கட்டறுக்கப்பட்டுக் கடலில் இழுத்துச் செல்லப்பட்டும் கரையில் மோதப்பட்டும் சேதமுற்றன. டோக்கியோ நகரத்துக்குச் சுமார் 200 மைல் வடகிழக்காக உள்ள சேந்தை என்னும் பட்டினத்தில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆழிப்பேரலைகள் அந்த ஊரைத் தாக்கின. அவற்றின் தாக்குதலுக்குப் பின் கடல்நீரின் வெள்ளத் தையும் இடிந்த கட்டிடங்களையும் அவற்றில் மிதக்கும் பகுதி களையும் தவிர வேறொன்றும் அங்கு உயரப் பறந்த விமானிகள் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்த ஆழிப்பேரலைகள் சுமார் 20 நிமிடத்துக்கு ஒரு முறையாகப் பலமுறை மோதியதால் ஜப்பான் நாட்டில் கரை ஓரத்தில் உள்ள ஊர்களில் பல, வெள்ள நீரில் மூழ்கிப் பெருஞ்சேதம் அடைந்தன. பல்லாயிரக்கணக்கான குடிசைகளும், வீடுகளும் அழிந்து போயின. நியூஜிலாந்து, ஆதிரேலியா, பார்மோஸா, ஹாவாய் முதலிய தீவுகளின் கிழக்குக் கரைகளிலும் தென்கிழக்குப் பகுதி களிலும் மிகுந்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் உண்டாயின. சிலி நாட்டில் முதலில் தோன்றிய பூகம்பத்தைத் தொடர்ந்து சில நாள்கள் வரை பூமி சிறிதோ பெரிதோ ஆடி வந்தது. அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பிலிப்பீன் தீவுகளில் ஒன்றாகிய மணிலாத்தீவும் தெற்கே உள்ள நியூஜிலாந்து தீவின் சிற்சில பகுதிகளும் ஆடி அசைந்தன. சிலி நாட்டில் உள்ள எரிமலைகள் நெருப்பு, புகை, கரி முதலிய வற்றைக் கக்கத் தொடங்கின. அவற்றுள் ஒன்றாகிய யூயேயேவ என்னும் எரிமலை அவற்றை 7000 மீட்டர் உயரம் வானத்தில் வீசிற்று. அங்குள்ள எரிமலைகள் எல்லாமே விழித்தெழுந்தன, நெருப்பை உமிழ்ந்தன. - இது அறிஞர் பெ. நா. அப்புசாமி அவர்கள் கலைக்கதிர் பொங்கல் மலரில் (1962) எழுதிய ஆழிப் பேரலைச் செய்தி. அறிவியல் வளர்ந்த இந்நாளிலேயே இயற்கையில் சீற்றத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை! ஓடிப்போய் உதவ முடியவில்லை! ஓடித்தப்ப முடியவில்லை! மேலே பறந்தும் பார்க்க முடியவில்லை. 70000 சதுரக்கல் பரப்பு நிலம் பாழாயிற்று! எண்ணத் தொலையா இழப்புகள்! நாடு நாடாக அழிபாடுகள்! இவை, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்ட (சிலம்பு) கொடுமையை உலகறியக் காட்ட வல்லனவாம்! இத்தகும் இயற்கை எழுச்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ! என்னே இயற்கை! என்னே இயற்கை; ஆக்கமும் கேடும் ஆக்கும் இயற்கை என்று நினைத்தாரோ? அதனால், ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் (380) என்றாரோ? 12. யாதானும் நாடாமல் ஒரு புத்தக அங்காடியில் வேலை; நூல் விற்பனையாளர் அவர். வேலைக்கும் ஒரு நாள் ஓய்வு வந்தது. அவருளம் நினைத்தது; வேலை இல்லாப் பொழுது என்ன, வெட்டிப் பொழுது! வாழும் விருப்பினர், வெட்டிப் பொழுதை விரும்பக் கூடுமோ? படித்த படிப்பைப் பட்டப் படிப்பு ஆக்க எண்ணினார்; எண்ணியபடியே எழுச்சியாய்ப் படிப்பில் இறங்கினர். இளங்கலை உயர்நிலை (B.A. ஆனர்சு) படிக்க விரும்பி அஞ்சல் வழியில் தொடர்ந்தார். விரும்பிய பட்டம் விரும்பியவாறே பெற்றார். அப்பொழுது அவர்தம் அகவை 75. அடுத்தும் படிக்கத் தொடுத்தார். அதே அஞ்சல் வழியே வழியாய் மெய்யியல் (எம்.பில்) கற்றார். அப்பொழுது அவர்தம் அகவை 83. பல்லும் போகி, சொல்லும் போகி, முதுகும் கூனி முட்டி தட்டும் பொழுதில், இளமையில் கல் என்பது போலவா படித்தார்? வேலை நோக்கியோ - வருவாய் கருதியோ - பயின்றார். பயின்ற பாட்டியின் பெயர் திருமதி ஆலீவு இரசல். இங்கிலாந்து நாட்டு காரோ என்னும் ஊரினர். கிளாசுக்கோ பல்கலைக் கழக மாணவியர் அவர். ஆயிரம் பிறை கண்டு கடந்த பின்னரும் கல்வியார்வம் குன்றா இவரைப் போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்ன கல்விக் காதல் என்னே கல்விக் காதல் என்று வியந்து நின்றாரோ? அதனால், யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (397) என்றாரோ? ஒருவன் என்றது ஒருத்தியையும் சுட்டுவதுதானே. செய்தி : தினகரன் 20-4-92. 13. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி நண்பர் ஒருவர் அவர் நண்பரைத் தேடி வந்தார். வரவேற்பறையில் அமர்ந்தார். அவரை முன்னரே அறிந்த வேலைக்காரர் உண்ண அழைத்தார். வீட்டுக்குரியவர் ஆய்விலே மூழ்கிக் கிடந்தார். அவரொடும் உண்பதற்காகக் காத்திருக் இயலாது! வீட்டு அறிஞர்க்காகப் படைத்து வைத்த உணவு மேசை மேல் வைத்து மூடப்பட்டிருந்தது. வந்த நண்பர் அழைத்ததும் சென்றார். இருந்த உணவு தமக்கென எண்ணி உண்ணத் தொடங்கினார். வீட்டவர்க்குரிய தட்டெனத் தடுக்க முடியா நிலையில் வேலையாள் திகைத்தார். வந்தவர் உண்டு முடித்து மீளவும் விருந்தினர் அறையில் இருந்தார். நல்ல பசியால் தூண்டப்பட்ட அறிஞர். ஆய்வகத்திலிருந்து உணவு மேசைக்கு வந்தார். நண்பரையும் அழைத்துக் கொண்டு வந்து அமர்ந்தார். தாம் உண்ணும் தட்டு மூடியிருக்கக் கண்டு வழக்கமாய் உள்ள தட்டெனத் திறந்தார். வந்தவர் உண்ட கலத்தை எடுத்து மாற்றாமல் வேலையாள் இருந்ததால் நேர்ந்தது இது. அறிஞரோ உண்கலம் கண்டு பெருகச்சிரித்தார். என்ன என் நினைவு! சாப்பிட்டு விட்டுச் சாப்பிடவில்லை என்று சாப்பிட வந்துள்ளேன் என்றார். இல்லை இல்லை நான் உண்டு வைத்தது அது; நீங்கள் சாப்பிடவே இல்லை என்றார். எனக்குள பசியைப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் என்ன மறதி எனக்கு என்று மேலும் நகைத்தார். தம்மை மறந்து ஊணை மறந்து உறக்கம் மறந்து ஒரு முகப்பட்ட ஆய்வே ஒருமைக்கட்டான் செய்யும் ஆய்வாம். இந்த அறிஞர் ஐசக்கு நியூட்டனார் என்பார். ஒரு குத்து விளக்கு வெளிச்சம்! ஒரு மாணவர் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்க்குக் கற்பிக்கும் ஆசிரியர் உள்ளே போகிறார்; வெளியே போகிறார்; திண்ணையில் நிற்கிறார்; திரும்பி வருகிறார்; விளக்கின் பக்கம் செல்கிறார்; வீடெல்லாம் பார்க்கிறார்; மூக்கைப் பொத்திக் கொண்டே இப்படித் திரிகிறார். கடைசியில் கண்டார்! எண்ணெய்க் குடத்தில் எலி விழுந்து செத்திருக்கிறது அது அழன்று அழுகியும் போனது. அக்குடத்து எண்ணெயை எடுத்து விளக்கு ஏற்றப்பட்டது. அந்நாற்றமே சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றதெனக் கண்டார். ஆனால் மாணவர்க்குத் தெரியவில்லை! அவர் படித்துக் கொண்டிருந்தார். இஃது ஒரு நாள் நிகழ்ச்சி: இன்னொரு நாள் நிகழ்ச்சி: ஆசிரியர் உண்டார் ; உறைப்பு இல்லை; உப்பு இல்லை என்றார். அவர் துணைவியார் அந்த மாணவனைச் சுட்டி இதுவும் சாப்பிடத் தானே செய்தது; உறைப்பு இல்லை; உப்பு இல்லை என்று சொல்லவில்லையே என்றார். அதற்கு ஆசிரியர், அவனுக்கு என்ன வேண்டும்? நன்னூல் வேண்டும்; பிரபுலிங்கலீலை வேண்டும். வேறென்ன வேண்டும்? என்றார். தம் தந்தையார் கற்ற கல்வி நிலையை இப்படிச் சுட்டி எழுதுகிறார். ஆசிரியர் அரசு (செந். செல். 18:505-7) யான் படிக்கும் போது என்னை நான் அறியேன் என்னும் வள்ளலாரின் ஓதாக்கல்வி என்பது ஈதேயாம்! இத்தகு காட்சிகளை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? அருமை! அருமை! என வியந்து நின்றாரோ? அதனால், ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (398) என்றாரோ? செய்தி : தமிழர் தடங்கல் க.ப. அறவாணன். பக்.18. 14. தினைத்துணையாம் குற்றம் வெரியர் எல்லின் என்பார் கிறித்தவத்துறவர் பயிற்சியர். அவர் வட்டம் சமயங் கடந்ததாக விரிந்தது. உலகப் பார்வை அவர் பார்வை யாயிற்று. உயிர் நேயப் பார்வை அவர் பார்வை யாயிற்று. மாந்த இயல் கல்வியில் மாப்பேரறிஞராகவும் விளங்கினார். இங்கிலாந்து மண்ணவர் அவர். இந்திய மண்ணில் தம் பணியை ஊன்றினார். ஊன்றிய அவர்க்கு, உரிமை வேட்கையர் காந்தியடிகளின் தொண்டு உவகையாயிற்று. அத்தொண்டிலேயும் ஆட்படுத்திக் கொண்டர். சமயச் சால்பு - தொண்டின் ஊற்றம் - எழுந்து ஆற்றல் - உலக நேயம் எல்லாம் கூடிய ஓர் உருவராக எல்வின் விளங்கினார். அவர்தம் கல்விக்கால இளந்தைப் பருவத்தில் தாம் அவ்வப்போது செய்த குற்றங்களைப் பங்குத் தந்தை முன்னே ஒளிவு மறைவு இன்றிக் கூறிப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்னும் மன்றாட்டு நிகழ்ச்சியின்போது, நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று: ஒவ்வொரு வாரமும் அவ்வாரப் பிழைகளைக் கூறிப் பொறுத்துதவ வேண்டும் வேண்டுகையில் ஒரு வாரத்தில் அன்று - பல வாரங்களில் எண்ணிப் பார்த்தார். பிழையென ஒன்று செய்ததாகத் தோன்றிற்றில்லை. ஒரு கிழமை மின்வெட்டென ஒரு குறை தோன்றிற்று. அது என்றோ தாம் இலண்டன் வீதியில் செய்த பெரும் பிழைச் செயல் என்னும் ஒன்றேயாம். அவ்வொரு பிழையும் தான் என்னவாம்? தெரு வழியாக நடக்கும்போது அடக்க முடியாமல் எழுந்துவிட்ட மூக்கைத் தெருவில் சிந்தி விட்டதாகுமாம். இந்த மண்ணிலே எவருக்கேனும் தெருவில் மூக்கைச் சிந்திய இது செய்யத்தகாக் குற்றமெனத் தோன்றவும் தோற்றுமோ? தோற்றியதாமே எல்வினுக்கு! தோற்றியதால்தானே அதனைப் பொறுத்துதவத் திருத்தந்தை வழியே தெய்வத் தந்தைக்கு வேண்டுகை விடுத்தார். எல்வின் போலும் சால்பரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே சால்பு! v‹nd rhšò! என வியந்து நின்றாரோ? அதனால், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் (433) என்றாரோ? 15. தேரான் தெளிவும் நாடாளுமன்ற அவைத்தலைவர் உக்கும் சிங். அவர் பதவியேற்ற பின் பணம் சேர்த்து விட்டார் என்று நாளிதழ் ஒன்று குற்றம் சாற்றியது. அது பற்றி வினா எழுந்தது நாடாளுமன்றத்தில். அவைத் தலைவர் என்ன சொன்னார். தட்டிக் கழித்தாரா? குறை கூறியது தவறு என்றாரா? இதழ் காட்டிய குற்றம் பற்றியோ அவையில் எடுத்துக் கூறியது பற்றியோ மனத்தாங்கல் கொண்டார் அல்லர்! மாறாக, குற்றத் தொடர்பான எல்லா விளக்கங்களையும் நாடாளு மன்றத்தின் முன் வைக்கப் போவதாகவும் அவையின் உறுப் பினர்கள் தீர்ப்புக்கு விட்டு விடப் போவதாகவும் தெளிவாக உரைத்தார். குறை மெய்யானது அன்று; அதனை நாங்கள் அறிவோம் என உறுப்பினர்கள் பலர் அப்பொழுதேயே உரைத்தனர். அவைத் தலைவரை மாசு கற்பிப்பது நாட்டுக்கே மாசு கற்பிப்பது மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டியது இல்லை என்று தலைமையமைச்சர் இலால் பகதூர் சாத்திரியார் கூறினார். அவைத் தலைவர் பதவி நாட்டின் தலைவர் பதவிக்கு இணையானது. பொய்க் குற்றச்சாற்றை உதறித் தள்ளுதலே முறை என்றார் இலோகியா. இக்குற்றச் சாற்றுக்குச் சற்றேனும் மதிப்புத் தருதல் ஆகாது. தந்தால் இம்மாதிரிக் குற்றச் சாற்றுகளை வெளியிடவும் பரப்பவும் ஊக்கப்படுத்தியதாகிவிடும் என்றார் பகத்துசா. இவற்றால் எல்லாம் உக்கும் சிங்கை அசைத்துவிட முடிய வில்லை. கொள்கை வீரராக நின்றார். குறை கூறியிருப்பவர் எவர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்; குறை கூறியிருப்பவர் தகவற்றவராக இருந்தால் அவர் கூறிய குறையைப் பொருட்படுத்தாமல் ஒதுக்கி விட வேண்டும். தகவுடையவராகக் குறை கூறியவர் இருப்பின் சீரிய ஆய்வு நடத்தியே தீர வேண்டும்; இப்பொழுது கிளப்பி உள்ள குற்றச் சாற்று பொறுப்பற்ற ஓர் இதழினது. ஆதலால் இதனைத் தள்ளுபடி செய்தலே தக்கது என்று முளவும் தலைமை அமைச்சர் வலியுறுத்தினார். இதற்கும் அசைந்தார் அல்லர் உக்கும் சிங் தம்மிடம் அவை வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். குறை கூறப்பட்ட செய்தி தொடர்பான எல்லா ஆவணங்களையும் அவையில் வைப்பது பற்றிய தம் கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். சரி! பின்னே என்ன ஆனது? அவர் சொல்லிய ஆவணங்களோடு அவைக்கு வந்தார். ஆளும் கட்சியர் முன்னர் ஆவணங்களை வைப்பதினும் எதிர்க்கட்சியர் முன்னர் வைப்பதே சால்பு எனக் கொண்டு அவ்வாறே வைத்தார்! எதிர்க்கட்சி உறுப்பினர் என்ன செய்தனர்? என்னென்னவோ பேசினர். ஆவணங்களைத் தொட்டுப் பார்க்கவே இல்லை! உக்கும் சிங்கின் மெய்ப்பாட்டின் மேம்பாட்டைப் பாராட்டுவதா? அம்மெய்ப்பாட்டில் ஆளுங்கட்சியொடு, எதிர்க்கட்சியினரும் ஒருங்கே கொண்டிருந்த நம்பிக்கையைப் பாராட்டுவதா? இத்தகும் நிகழ்வுகள் ஒன்றோ பலவோ வள்ளுவர் கிழவர் கண்டாரோ? அவற்றை எண்ணி எண்ணி நின்றாரோ? அதனால், தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் (510) என்றாரோ? செய்திகள் : 22-9-64; 3-10-64 16. ஒற்றும் உரை சான்ற நூலும் மனைவி மேல் கசப்பு கொன்றே போட்டார். கொன்றதை மறைக்க வேண்டுமே! மரத்தைக் கூழாக்கும் பொறியிலே மரத்தொடு மரமாய்க் கூழாய் ஆக்கினார். கூழைப் பரந்த வெளியில் தெளித்தார். வேலை முடிந்ததாய் வீடு சென்றார். மனைவியாய் இருந்தவள் வான ஊர்தியில் பணிப்பெண். அவளுக்கொரு தோழி. அவளிடம் சொல்லியிருந்தாள்: என் கணவன் என்னைக் கொன்று போடுவான் வான ஊர்தித் தோழியைக் காணாத் தோழிக்குக், கணவனைளப் பற்றி அவள் சொன்னது நினைவில் வந்தது. துப்புத் துறைக்குச் செய்தி தந்தாள். ஆய்வு தொடர்ந்தது. பனிப்புயல் நாளில் மரக்கூழ்ப் பொறியை ஒருவர் தள்ளிச் சென்றதைப் பனியை அகற்றும் ஒருவன் கண்டதாகக் கூறினான். ஏரியொன்றில் மரக்கூழ்ப் பொறி மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தனர். விரலம் விரலமாக ஒரு நூறு பேர்கள் தேடினர். தசையொடு கலந்த மரத்துகள்கள் சிக்கின. சிக்கிய துண்டுகள் 56. ஒரு பல், கட்டை விரல் நுனி, சில எலும்புகள், தலைமுடி ஆகியவும் சிக்கின. மரக் கூழ்க் கருவியில் ஒட்டிய தசையும், தெளிக்கப்பட்டு மண்ணில் கிடந்த தசையும் ஒன்றாய் இருந்தன. விரல் நகப் பூச்சும் இறந்து போனவள் வீட்டில் இருந்த நகப் பூச்சும் ஒன்றாய் இருந்தன. மண்ணில் கிடைத்த தலைமுடியும் வீட்டில் இருந்த சீப்பில் ஒட்டியிருந்த தலைமுடியும் ஒப்பாய் இருந்தன. மரக் கூழ்ப் பொறியை வாங்கிய சீட்டில், இறந்தவள் கணவன் பெயர் இருந்தது! கணவனே கொலைஞன் என்று மெய்ப்பிக்கப்பட்டது. கொன்றவன் ரிச்சர்டு கிராப்ட். கொல்லப்பட்டவள் கெல்லி. கொலையைக் கண்டுபிடித்தவர் லீ. அமெரிக்கக் கனெக்டிகட்டு மாநிலத் தடயவியல் இயக்குநர். எத்தகைய திட்டமிட்ட கொலை. எத்தகைய திட்டமிட்ட தடய அழிப்பு! இவற்றையும் வெற்றியாகக் கண்டு மெய்ப்பித்தது ஒற்று! இத்தகும் ஒற்றில்லை யானால், மரக் கூழ்ப் பொறியெலாம் மாந்தக்கூழ்ப் பொறியாகி விடுமே! முறைமையைக் காக்க இத்தகைய முழுதுறும் ஒற்று இன்றி முடியுமா? முற்ற முடிந்த மறைப்பையும் காணவல்ல இத்தகும் ஒற்றரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? இவர் திறம் என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். (581) என்றாரோ? செய்தி : தினமணி 12-3-92. 17. பழுதெண்ணும் மந்திரி சப்பானியத் தலைமையமைச்சர் மியாசவாவின். அவருக்கு நண்பர் முன்னாள் அமைச்சர் பியூமியோ அபி. அரசின் கமுக்கத் திட்டம் ஒன்று புதிதாக உருவாக்க இருந்த விரைவு வழித்தடத் திட்டம். அதனைப் பியூமியோ இரும்புக் குழுமம் ஒன்றற்கு மறைமுகமாக வெளியிட்டுதவினார். இரும்புக் குழுமம் இதற்குத் தந்த கையூட்டோ ஆறு இலக்கத்து நாற்பது ஆயிரம் அமெரிக்கத் தாலர். இரும்புக் குழுமத்திற்குப் பலப்பல ஒப்பந்தங்களைக் குறுக்கு வழியில் தந்து விடவும் திட்டம்! பியூமியோ திட்டம் ஊழல் ஆய்வுத் துறைக்குக் காற்றாய் அடித்தது. விளைவு? பியூமியோ சிறைப்படுத்தப்பட்டார். நண்பரும் தலைமையமைச்சருமான மியாச வாவுக்கும் தொடர்பு உண்டோ? என்ற ஐயம் எழுமா இல்லையா? நன்றாய் எழுந்துவிட்டது. சான்றெதுவும் இல்லை எனினும் குற்றம் சார்ந்து கொள்ள நிற்கிறது. அமைச்சு நண்பர் பழுதுத்திட்டம் தலைமைக்குத் தலைக்குனிவு மட்டுமா? தேர்தலில் வீழ்ச்சியும் தழுவ நேருமாம்! இக்கட்டில் பட்டு இனைகிறார் தலைமையமைச்சர்! இத்தகு காட்சியை வள்ளுவர்கிழவர் அந்நாள் நிலையில் கண்டாரோ? என்னே இழிமை என்றே வருந்தி நின்றாரோ? அதனால், பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும் (639) என்றாரோ. செய்தி : தினமணி 6-3-92. 18. விரைந்து தொழில் கேட்கும் ஒரு பெரு விழா அறிவியல் ஆய்வுக் கூடத் திறப்பு விழா! பொதுமக்கள் பெருந்திரள் - மாணவர்கள், ஆசிரியர்கள் ஆயோரைச் சேர்த்தால் ஆயிரவர்க்கு மேல்! மாலையில் நிகழ்ச்சிக்கு முன் விருந்து. எவரோ - முந்தி வந்தவர் - தம் இலையை வாயிலின் முன்னே போட்டார். வழி வழி அப்படியே ஆயிற்று. ஆயிரவர் இலைகளும் வாயிலில் கிடந்தால்? ஓர் ஆசிரியர்க்குப் பளிச்சிட்டது! அவ்வளவுதான் அவர் குனிந்தார் - கிடந்த இலைகளை எடுக்கத் தொடங்கினார். என்ன ஆனது? ஐயா! ஐயா! நாங்கள் எடுக்கிறோம் - என மாணவக் கும்பல் வாரியது! பொது மக்களும் குனிந்தனர்! பின்னே வந்தவர்கள் இலைபோடும் ஒதுக்கிடத்தில் தாமே போட்டனர். தூய்மைக் கேடு எவ்வளவு எளிதில் நேரிட்டது? தூய்மை ஆக்கம் எவ்வளவு எளிதில் ஆயிற்று! உள்ளம் ஒன்றிய உண்மைத் தொண்டு, ஊரை ஆளும்! உலகை ஆளும். இது இலை போட்ட ஒரு காட்சி! இன்னொன்று இலை பறித்த காட்சி! ஒரு மருத்துவமனை. அதன் முற்றத்தில் அருமையாகக் கவிந்து நின்ற நிழல் மரம். கையெட்டும் அளவில் தாழ்ந்த கிளைகள்! தளிர் இலைகள்! வெயிலைத் தான் தாங்கிக் கொண்டு, தண்ணிழல் வழங்கும் வேம்பு. காலமோ பங்குனி கடந்து சித்திரை பிறந்த மறுநாள் ஒரு சிறுமி எக்கி நின்றாள். ஒரு கிளையைப் பற்றித் தழையை ஒடித்தாள். அவளோடு வண்டியில் வந்திறங்கிய குழந்தைகள் அறுவர் எழுவர். உடன் வந்த, பெரியவர்கள் எல்லாம் மருத்துவ மனைக்குள். இவர்கள் ஆட்டம் இங்கே! ஒவ்வொரு குழந்தை கையிலும் வேப்பங்குழை! இரண்டு இரண்டு கைகளிலும் வேப்பங்குழை! ஒரு பெரியவர் கண்டார். முதற்கண் ஒடித்து வழிகாட்டிய சிறுமியை அழைத்தார். நீ ஒடித்தாய் பார் எத்தனை பேர்கள் எவ்வளவு கிளைகளை ஒடித்துளர்? எவ்வளவு அருமையாக ஆடிக்கொண்டிருந்தது! வாடச் செய்து விட்டாயே நீ! எத்தனை பேர்க்கு நிழல் தந்தது இது! அறிவிலா அது தரும் நிழலை அறிவுப் பிறப்பு கெடுக்கலாமா? என்றார். அறிவறிந்த செல்வி தலைநாணினாள்! அவற்றை உணர்ந்த தகவு அது! இது பெரும் குற்றம் இல்லை. விளையாட்டாகச் செய்தாய்! வினையாக முடிந்தது. தப்புக்கு வழி காட்டாதே! தப்புக்கு வழி காட்டின் தொடர் தப்பைத் தோற்றுவித்த குற்றம் நம்மதே என்பதை உணர்ந்தால் போதும்! தப்பு நடப்பதைக் காணும் போது இயன்ற அளவு தடுக்க முற்படுகிறாயா? அது உலக நலத் தொண்டு என்றார். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்த அந்தச் சிறுமி, வேப்பங்கன்று ஒன்றைக் கொண்டு வந்து ஊன்றினாள்! திருந்திய மனம் வருந்திய பரிசு இவ்வேம்பு! எவ்வளவு இனிப்பான நிகழ்ச்சி! இத்தகு நிகழ்ச்சிகள் போலும் நிகழ்ச்சிகள் நிகழக் கண்டு கண்டு களித்தாரோ வள்ளுவக் கிழவர். என்னே அருமை! என்னே அருமை! என்று வியந்து நின்றாரோ? அதனால், விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) என்றாரோ? சொல்லலில் செய்தல் உயர்ந்தது தானே! 19. பேராண்மை என்பதறுகண் இத்தாலியருக்கும் அபிசீனியருக்கும் கடும் போர்! களத்திலே தோல்வி அபிசீனியருக்கு. தப்பியோடும் நிலை அபிசீனியருக்கு விடாமல் வெருட்டித் தாக்கும் வாய்ப்பு இத்தாலியருக்கு. ஓட ஓட வெருட்டல் ஒதுங்க வாய்ப்பான இடம்! அபிசீனியர் மறைதற்குச் சென்றனர், ஆனால் அங்கே ஒரு பெண் நின்றாள். அவள் கூறிவிட்டால்? ஒருவன் சென்றான், நீ எங்களைத் துரத்தி வரும் இத்தாலியருக்கு எங்களைக் காட்டித் தந்து விடாதே. காட்டித் தந்தால் நம் நாட்டுக்கே கேடு தான் என்றான். ஒதுங்கி மறைந்து கொண்டனர். அவளோர் அபிசீனியப் பெண்; நாட்டுக்காகத் தன் பெற்றோர் உற்றோர் உறவெல்லாம் பறி கொடுத்து நின்றவள். வயது பதினெட்டு. அவளை இத்தாலியப் படை கண்டது; வளைத்தது அபிசீனியப் படையைக் கண்டாயா? இல்லவே இல்லை உண்மையைக் கூறு; இல்லையேல் உயிரை இழப்பாய் அபிசீனியப் படை வந்தால் அல்லவா சொல்வதற்கு? வந்திருந்தால் என்ன வந்தது சொல்வதற்கு? வாயால் கேட்டால் சொல்ல மாட்டாய்; கொடுப்பதைக் கொடுத்தால் கூறுவாய்; உயிரோடு இருக்க எண்ணினால் உண்மையைக் கூறு. எவரையும் பார்க்கவில்லை அடித்து வருவிக்க ஏவினான் தலைவன்! அடித்து அடித்துக் கேட்டனர்; துடித்துப் போகவில்லை அவள்! அடித்தவரே துடித்துப் போயினர்! இடுப்பில் இருந்த கத்தியை நறுக்கென எடுத்தாள் அவள்! தன் நாவை நீட்டிக், கத்தியால் நறுக்கென அறுத்துப் போட்டாள். ஏன் அறுத்தாள்? அடியைத் தாங்கா நிலையில் தன்னை மறந்து நாக்கு ஏதாவது உழறி விட்டால்? நாக்கே இல்லை என்றால் நானே நினைப்பினும் சொல்ல முடியாதே! எண்ணியவாறு செயல் பட்டாள் - சுற்றி நின்றவர் எண்ணம் ஒழியச் செயல்பட்டாள். பொறுப்பனா தலைவன்? நாவை அறுத்துக் கொண்டதே, இவள் படையைக் கண்டதை மெய்யாக்கி விட்டது! என்னிடம் செய்தியை வாங்கவா பார்க்கிறாய்? பார் என்று செய்து விட்டாள்! உயிரோடு விடாதீர்கள் என்றான்! அவன் சொல்லை முடிக்கு முன் செய்து முடித்தனர் படைஞர். கோழைப்பயல்கள் வீரத்திற்குத் தலை வணங்க வேண்டிய இடத்திலே, தன்னை அழித்துக் கொண்டும் தன்னாட்டு வீரரையும் நாட்டையும் காக்க வேண்டும் என்னும் நாட்டுப்பற்றைக் கண்ட அளவிலே, அவள் துணிவைக் கண்டு அவளைப் பெருமைப் படுத்தியிருக்க வேண்டும்! அது வீரம்! ஆண்மையில் ஆண்மை! களப்போரிலே வந்த கடும்பகை எனினும் அவன் தன்னால் தாக்குண்டு வீழ்ந்து விட்டால், அவன் மேல் காட்டும் இரக்கம் - அவன் வீரத்தின் மேல் கொண்ட மதிப்பு - மிகுந்து செல்ல வேண்டும். இயலா நிலைக்குப் போன பின்னரும், எதிரியை எதிரியாகக் கருதும் எவனும் வீரன் அல்லன்; கோழை! கோழையிற் கோழை! இத்தகு நிமிர்ந்த வீரச் செயலை மதியாக் கோழையன் ஒருவனை வள்ளுவர்க் கிழவர் கண்டாரோ? என்னே இவன் கோழைமை! என்னே இவன் கோழைமை! எனக் குமைந்து நின்றாரோ? அதளால், பேராண்மை என்ப தறுகண் ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (773) என்றாரோ? செ. செ. 18 : 331 - 3. ஒரு வீரப்பெண் : அரசு. 20. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் மைதானத்துக்கு அருகே உள்ள புல் தரையில் அவர் நடந்து கொண்டிருந்தார். தினந்தோறும் மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள். இன்று பத்து நிமிஷம் தாமதித்து விட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும். என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரைக்கச் சொன்னார். பிரார்தனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும் சில கஜ தூரம்தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும்போது அந்த மர மேடை மேலேயே உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோரும் எழுந்து நின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா மனு இருவருடைய தோள் களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார். அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதரி அவன் தோன்றினான். ஆனால் தங்கள் நேரம் கடந்து விட்டதால் அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றாள். அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒருபுறம் தள்ளினான். அவள் உருட்டி அடித்துக் கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மனிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிடல் ஒன்றால் மூன்று முறை சுட்டான். முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்ததுட் ரத்தம் பீரிட்டு காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது கூப்பிய கைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கண நேரம் ஆபாவின் கழுத்தில் பதிந்திருந்தது. ஹேராமா என்று காந்தி முணுமுணுத்தார். மூன்றாவது குண்டு வெடித்து வெளி வந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைகள் பாதங்களை விட்டு நழுவிக் கழன்றன. ஆபா, மனு இரண்டு பேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்ந்தன. காந்தியின் கண்கள் பாதிமூடியிருந்தன. அவருடைய உடம்பில் இன்னமும் உயிர் இருக்கும் குறிகள் தென்பட்டன. சற்றுமுன்பே மகாத்மாவை விட்டுச் சென்ற ர்தார் படேல் மீண்டும் அவருக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார். காந்தியின் நாடியைப் பிடித்துப்பார்த்தார். நாடி மிகவும் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருப்பதுபோல அவருக்குத் தோன்றியது மருந்துப் பெட்டியில் அட்ரினாலின் இருக்கிறதா என்று யாரோ ஒருவர் தேடிப் பார்த்தார். அதைச் சிறிதும் காணவில்லை. கூட்டத்தில் ஒருவர் சரேல் என்று ஓடி டாக்டர் டி. பி. பார்க்கவாவை அழைத்து வந்தார். துப்பாக்கி சுட்ட பத்து நிமிஷத்துக்கெல்லாம் அவர் வந்து சேர்ந்தார். உலகத்தில் உள்ள எதுவும் இனி அவரைப் பிழைப்பூட்ட முடியாது. அவர் இறந்து பத்து நிமிஷம் ஆகிவிட்டது என்று டாக்டர் அறிவித்தார். இத்தகு கொடுமை ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே கயமை! என்னே கயமை! என்று நைந்தாரோ? அதனால், தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் என்றாரோ? செய்தி : மகாத்மா காந்தி வாழ்க்கை. பக். 2-3. லூயிஃபிஷர் ; தமிழ் தி. ஜ. ர. 21. ஒன்னார் அழுத கண்ணீர் ஒரு பெரிய தொழிற்சாலை. செயற்கை இழை உருவாக்கும் தொழிற்சாலை உருபா 220 கோடித்திட்டம் என்றால் விளக்க வேண்டுமா? அடுத்த ஒரு திங்களில் ஆலை இயக்கமாம். இயக்கத்தின் முன்னே அமைப்பின் சீர்மையை ஆய்ந்து மதிப்பிடும் பணி. இந்திய மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் பொறியில் வல்லார் தேர்ந்த வந்தனர். ஆலைக்குள்ளே பாடியமைத்துத் தங்கியிருந்தனர். இரவுப் பொழுது. சுவர் மேல் ஏறி உள்ளே குதித்தனர் நால்வர். திருடன் திருடன் என்று கூவினர். பாடியில் உறங்கிக் கிடந்தவர் ஒலியைக் கேட்டு ஓடி வந்தனர். கூச்சல் போட்டவர் கொடிய கருவிகளைக் கொண்டு இருந்தனர். கருவியைக் காட்டி வரிசையில் நிற்க வைத்தனர். அந்த மாநிலத்தாரை அப்பாற்படுத்தினர். அயல் நாட்டவரையும் அப்பாற்படுத்தினர். அயன் மாநிலத்தார் பதினைந்து பேர்கள்; அவர்களை வரிசையாய் நிறுத்தித் தாறுமாறாகச் சுட்டுக் கொன்றனர். வந்த வேலை முடிந்ததும் தப்பிச் சென்றனர். கொலை செய்ய வந்தவர். கூச்சல் போட்டனர். கூச்சல் என்ன செய்தது கூடிச் சேர வைத்தது! வஞ்ச நெஞ்சம் வந்தவர் தம்மை வன்கொலை செய்தது. இத்தகு கொடுமையும் நிகழ்வுறும் என்று வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று இரங்கி நின்றாரோ? அதனால் முன்னே கண்ட தொழுத கையுள்ளும் படை யொடுங்கும் என்பதனோடு, ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து (828) என்ன இணைத்தோர் குறளைத் தந்தாரோ? நிகழ்ந்த இடம் : பஞ்சாப் -கட்வன் கோட்டே; செய்தி : தினமணி ; 12-3-92. 22. ஒருமைச் செயலாற்றும் அடுத்தும் அடுத்தும் இரண்டு வீடுகள். நாயைக் கொண்டும் பூனையைக் கொண்டும் நாயும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொள்வர். ஆண்கள் மட்டுமா? பெண்களும் கூடவே. ஒருவர் வீட்டில் கிடந்த நாளிதழ் ஒன்று ஈரமாய் இருந்தது. ஈரம் என்றால் எத்தனையோ வழிகளால் ஏற்பட்டிருக்கக் கூடுமே! எண்ணிப் பார்த்தார் அல்லர். அடுத்த வீட்டு நாய் தான் நீரைப் பெய்து ஈரமாக்கிய தென்று முடிவு செய்தார். அவர்தம் மனைவி அந்தத் தாளை அடுத்த வீட்டார் மகிழ்வுந்துக் குள்ளே வீசி எறிந்தார். அதனை எடுத்து வீசி எறிந்தார் எறிந்தவர் மேலே! மீளவும் எடுத்து எறிந்தவர் மேலே, மேலும் எறிந்தார். மாறி மாறி இப்பணி முடித்து வீட்டுள் புகுந்தார் குற்றம் சாற்றப் பெற்ற நாயின் உரிமையர். மனைவியோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். குற்றம் சாற்றியவர் கையில் துமிக்கியோடு புகுந்தார். மனைவியோடு பேசிக் கொண்டிருந்தவர் மார்பை நோக்கிச் சுட்டார். அந்த நொடியிலேயே அவர் மாண்டார்! சுட்டவர் மைக்கேல். சுடுபட்டு இறந்தவர் மார்ட்டின்! காவல் துறையால் சிறைப்படுத்தப்பட்டார் மைக்கேல். அமெரிக்க நாட்டு சாண்டா கிளாரா என்னும் இடத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாம் இது. (தினமணி சூலை. 22-1992) இத்தகு அறிவிலா மூடம் ஒன்றைக்கூட வள்ளுவர் கிழவர் கண்டாரோ? மூடமே வடிவாம் மூடன் கேட்டுக்கு முடிவில்லை என்று நொந்துபோய் நின்றாரோ? அதனால், ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு (835) என்றாரோ? (அறியாமையாகிய ஒன்றற்கே ஆட்பட்டுச் செயல்புரியும் அறிவிலி, பின்வரும் எக்காலமும் துன்பம் என்னும் புதைசேற்றுள் புகுந்து அழுந்துவான்.) 23. உண்ணற்க கள்ளை பிரடரிக்கு நிக்காலசு சாரிங்டன் என்பார் ஓர் இளைஞர்; தொண்டர்; தொண்டர் சூழலர்; இங்கிலாந்து தேயத்தவர். ஏழை எளியவர் வாழ்பகுதியை அவர் உள்ளம் அடிக்கடி நாடும். அங்குள்ள தூய்மை இன்மையும் வறுமையும் அவரை வாட்டும்! தொண்டுள்ளம் கொண்டார்க்கு அவ்வாட்டுதல் ஒதுங்கச் செய்து விடுவதில்லை; மேலும் மேலும் அவ்விடத்து நாட்டத் தையே உண்டாக்கும் தானே! சாரிங்டன் ஒரு நாள் சென்ற ஒதுக்குப்புற வறுமைப் பகுதி; அடைசலான குடிசைகள்; சாய்க்கடை வழியும் தெரு; அங்கொரு வாய்த் தகராறு. கணவன் திட்டுகிறான்; வைகின்றான்; அடித்தும் தள்ளு கிறான்; யாரை? அவன் கைப்பிடித்த மனைவியை! கெஞ்சுகிறாள்; மன்றாடுகிறாள்; விழுகிறாள்; அழுகிறாள்! தொழுகிறாள்! அவள் உடையைப் பற்றிக் கொண்டு பிள்ளைகள் மூவர் நால்வர் கதறுகின்றனர்; தாயை விடுக்க முடியாமலும், தந்தையைத் தடுக்க முடியாமலும் விம்மியழுகின்றனர்! கதறுகின்றனர். குடித்து விட்டு இக்கொடுமை செய்கிறான் கணவன் என்றும் குடும்ப நிலைக்கு மன்றாடுகிறாள் மனைவி என்றும் உணர்ந்தார் - தடுத்து நின்றார் - சாரிங்டன்! தடுக்கும் அவர் முனைப்பின் ஊடே, கண் ஆங்கிருந்த கடையின் பலகையால் இழுக்கப்பட்டது! தலையைத் தொங்கப் போட்டார், நாணத்தால்! ஏனெனில் தம் தந்தையார் வைத்திருக்கும் மதுக்கடைகளுள் அக்கடையும் ஒன்று என்பதை அப்பலகை காட்டிற்று! தாம் செய்யும் தொண்டுணர்வுக்கும், தம் தந்தையார் வாணிகத்திற்கும் உள்ள இடைவெளி பளிச்சிட்டது! தந்தையாரின் வாணிகத்தில் ஈடுபடவோ, அவர் ஈட்டிய பொருளை வைத்துக் கொள்ளவோ. அவரோடு உடன் இருக்கவோ ஒப்பாராய் - ஒதுங்கினார். செல்வம் சிறிதா? பதினெட்டுக் கோடி உருபா மதிப்பாம் அந்த நாளில்! தந்தை மன்றாடினார்! தம் முடிபு தக்க முடிபு என்றும், அதில் மாறப் போவது இல்லை என்றும் உறுதி கொண்டார் மைந்தர். மதுவிலக்கைப் பற்றியே தம் தொண்டை ஆக்கிக் கொண்டார். பீரைக் குடித்து விட்டு அவன் தன் மனைவியை உதைத்துத் தள்ளியதே, என்னை என் தந்தையார் செல்வத்தில் இருந்தும், தொழிலில் இருந்தும் வீட்டில் இருந்தும் உதைத்துத் தள்ளிய தள்ளலாயிற்று என்று எழுதினார். எளியோர் குடிசைப் பகுதியில் ஒரு குடிசைத் தம் வாழ்விட மாக்கிக் கொண்டு மது விலக்குத் தொண்டில் அழுந்தினார். அகவை செல்லச் செல்லத் தந்தைக்கு, மகனின் செயல் மாண்பு புலப்பட்டது. மகனுக்கு உதவவும் முன் வந்தார். என் செயல் அழிபாட்டுச் செயல்; நின்செயல் அழியாப் பெருஞ்செயல்என ஒத்துக் கொண்டார். அவர் ஒத்துக்கொண்ட கால நிலை. உயிர்ப் போராட்டக் காலநிலை! மைந்தர் போராட்டமோ அரசியல் சட்டத்தி மாற்றிய மைக்கும் போராட்டமாகக் கிளர்ந்தது. மதுவால் வெறியும் மயக்கும் செல்வமும் கொண்டவர்கள் எளிதில் விடுவரா? சாரிங்டனைச் சொல்லால் தாக்கினர்; கல்லால் தாக்கினர்; கழியால் தாக்கி வீழ்த்தினர்; குருதி சொட்டச் சொட்ட வாட்டினர்! எனினும் உறுதி தளர்ந்தார் இலர்! இதழ்கள் பழித்தன; அரசியலாளர் ஒழித்துக் கட்ட முனைந்தனர்; குடியரும் வறியரும் தாமா கைகொடுத்து உதவ முன் வருவர்? எடுத்த உறுதியை முடித்தே தீருவேன் என உறுதி கொண்ட சாரிங்டன், ஓசியா என்னும் ஒரு தீவையே விலைக்கு வாங்கினார்! மதுவால் வந்த காசு மதுவிலக்குக்கு ஆயிற்று அதனை, மது விலக்குத் தீவு எனத் திட்டப்படுத்தினார். இங்கிலாந்து தேயத்திலே முழு மது விலக்குப் பகுதி அத்தீவே என்பதை உறுதி செய்தார். மதுவில் நீந்தியவர்களும் கூட, அதனை முற்றிலும் நீங்கி வாழும் பண்பாட்டு மையமாக ஓசியா விளங்குவதாயிற்று! தன் வயிற்றில் இருந்து பெற்றவளும், கணவனாகப் பெற்றவளும், தந்தை இவனெனப் பெற்றவர்களும் ஆகியவர்களாலும் வெறுக்கப்படும் மதுக்குடியைச், சால்பால் நிறைந்த சாரிங்டன் போல்வாரும் இருப்பரோ? அவர் கொண்ட மது வெறுப்பே ஓசியாத் தீவாக - மதுவிலக்குக் கோட்டையாக உருக்கொண்டது! இத்தகு சான்றோர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே சால்பு! என்னே சால்பு! என வியந்து நின்றாரோ! அதனால் உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார் (922) என்றாரோ? ஓம் சக்தி - தீபாவளி மலர் நவம். 1991. கட்டுரை : இராசாசி 24. ஈன்றாள் முகத்தேயும் குத்துச்சண்டையில் புகழ் வாய்ந்தவர். பரிசு பாராட்டுப் பல பெற்றவர். உலக அளவில் போட்டியிட வல்லவர். ஆனால் போதைக்கு அடிமையர். வீர மகனைக் கண்டு விம்மித முறவில்லை அவரைப் பெற்ற அன்னை! போதைப் பேய்க்கு அடிமைப்பட்டானே இப்பேதை! இதில் இருந்து அவனுக்கு விடுதலை உண்டா? என்று வெதும்பினார். அன்னை உரையை - உணர்வை - மதியா அம்மகனுக்கு ஒரு நாள் வந்தது. போதை மருந்து வைத்திருந்தார் என்னும் குற்றச்சாட்டுக் கிளர்ந்தது! காவல் துறையினர் ஆய்ந்தனர். அஃது இருந்த தடமும் இல்லை! இடமும் இல்லை! ஆனால் போதை மருந்து இருப்பதைத் திறமாய் மறைத்துளார் என்பது தெரிந்தது; மேலும் முயன்றனர். காலுறைக்குள்ளே போதைப் பொடியைத் தாளில் மடித்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர். குற்றம் சாற்றிச் சிறையும் செய்தனர். 26 வயதே ஆன அந்தக் குத்துச்சண்டை வீரர் பெர்ட்டு கூப்பர் என்பார். அமெரிக்க நாட்டினர். சிறைப்பட்ட மகனைக்கண்டு அன்னை வருந்தினார் அல்லர். சிறைப்படுத்திய காவலர்க்கு நன்றியுரைத்தார். காவலரைத் தூண்டித் கண்டுபிடிக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறினார். இச்சிறைப்பாடாவது மகன் திருந்துதற்குத் துணையாம் என நம்பினார். மைந்தன் சிறைப்படவும் வருந்தாத் தாயும் அந்நிலையை வாய்ப்பென வாழ்த்தும் தாயும் உள்ளமை வியப்பே அல்லவோ! குடித்து விட்டு நாளும் வருவான். கும்மாளத்தோடு நில்லான் பெற்ற தாயெனவும் பாராமல் அடிப்பான் மிதிப்பான். மதியை மயக்கும் மதுவில் வீழ்ந்தவனுக்குத் தாய் என்ன? தாரம் என்ன? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் பெற்றவள். ஒரு நாள் அப்பெற்ற மனமும் தாங்காத் தாக்குதல்! முடிவு செய்தே ஆக வேண்டும்; இனி முடியவே முடியாது எனத் தீர்மானித்தாள். வெருட்டி வெருட்டித் தாக்கிய மகனிடம் தப்ப வேண்டிக் கூரைப் பகுதிக் குடிசையுள் நுழைந்தாள். ஆங்கும் புகுந்தான் அடித்துத் துரத்தும் குடிமகன். குடிசைக்குள் வரவும் உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தி, மண்ணெண்ணெயைக் கூரை மேல் தெளித்துத் தீயும் மூட்டினாள். பற்றிய தீயைச் சுற்றிலும் இருந்தோர் கண்டு ஓடி வந்து அணைத்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்த்துளர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்துள நிகழ்ச்சி இது. பெற்ற தாயே, உயிரோடு மகனுக்குத் தீ மூட்ட, நேர்ந்த கொடுமை! தாயாரும் தாங்காப் போதைக்குடியை, எவரே தாங்குவர்! ஆன்றோர் சான்றோர் தாங்கவோ செய்வர்? இத்தகு போதை வெறியர் காட்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே கொடுமை என்னே கொடுமை என்று நைந்து நின்றாரோ? அதனால், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச் சான்றோர் முகத்துக் களி (923) என்றாரோ? செய்திகள் இரண்டும் : தினமலர் - 31-5-92. 25. அற்றார்க்கு ஒன்று அவர்க்கு மக்கள் மூவர். அவர் நல்ல உழைப்பாளர். ஆனால் குடியர் ஆகிவிட்டார். உழைத்த காசெல்லாம் குடிக்கே ஆயது. குடும்பத் தீனுக்கு உதவியது தாயின் உழைப்பு வழியால் வந்த சிறிய தொகை. குடிகாரர் படுத்தும் பாட்டையும் குடும்பச் சுமையையும் எதிர்காலங் கருதித் தாங்கிக் கொண்டார். மக்கள் மூவருள் இருவர் ஆண்கள்; இடையே பிறந்த தொன்றே பெண். மூத்தவன் ஓரளவு படித்தான்; குடும்ப நிலையறிந்து வேலைக்குச் சென்றான். அடுத்தவள் படித்தாள்; ஆசிரியப் பயிற்சி பெற்றாள். அந்த இருவரினும் இளையான் கூர்ப்பன். நன்றாகப் படித்தான். மேனிலை வகுப்பில் உயரிய மதிப்பெண் எய்தினான். மருத்துவப் படிப்புக்கு முயன்றான். தேர்வு எழுதினான்; வெற்றியும் பெற்றான். கல்லூரியில் சேர ஆணையும் எய்திற்று. ஈராயிரம்போல் கட்ட வேண்டும்! வெறுங்கையன் என்ன செய்வான்? அற்றை வேலையால் குடும்பம் ஓட்டும் அன்னைதான் என்ன செய்வார்! பத்து நூறா? ஈராயிரம் ஆயிற்றே! மேலும் திங்கள் தோறும் ஐந்தாண்டளவுக்குத் தொகை வேண்டுமே! தொண்டில் பழுத்த தூயர் ஒருவரை நாடினார் தாயார்! அவரோ ஓய்வு ஊதியத் தொகை முழுவதும் உதவிக்கே செலவளிக்கும் செம்மல்! தொகையும் பற்றுமோ, இரு நூறு பெறும் ஓய்வு ஊதியர்க்கு! தக்கார் ஒருவரை வழக்கமாக நாடுவார், தம் தகுதிக்கு மிஞ்சிய கொடையென்றால்! அப்படி நாடினார். அவரோ சொன்னார்; இலக்கம் இலக்கமாகக் கையூட்டுத் தந்தும் கணக்கில் தந்தும் மருத்துவக் கல்விக்கு இடம் கிடையாமல் எத்தனை எத்தனைபேரோ, தவிக்க, தன் திறத்தாலே தானே பெற்ற இடத்தைத் தக்க வைத்துக கொள்ளவும் தவிப்பா? படிக்க இடம் வாய்த்தும் அதனை ஒருவர் இழப்பாராயின் குடிக்குமட்டுமோ கேடு; நாட்டுக்கேடே யன்றோ! ஈராயிரமும் உடனே தருவேன்; கல்லூரியில் சேர்க; திங்கள் செலவுக்கு வங்கிக் கடனை ஏற்பாடு செய்யலாம் என்றார். தாயோ கண்ணில் காணாத் தெய்வம் கண்ணேர் வந்து கையில் யிடியெனக் கருவூலம் வழங்கிய தென்னக் களித்தார். கூர்த்த மாணவன் காலத்து வாய்த்த கார் மழை போன்ற உதவியால் தளிர்த்தான். அந்தப் பெருந்தகை வள்ளுவர் மன்றத் தலைவர். வள்ளலார் இல்ல நிறுவனர், உழைப்புத் தோன்றல் திருவல்லிப்புத்தூர் வாழ் ம. பொன்னையா! என்ன பேறெலாம் பெற்றேன்; பெறுகிறேன். வறிய யானோ, வளமையனாக உள்ளேன். வறுமைப்பாட்டை அறிந்தவன் அதனைப் போக்கல் கடனெனக் கொண்டேன். வள்ளுவத்தை நான் பற்றினேன் அல்லேன்; வள்ளுவம் என்னைப் பற்றிக் கொண்டது. அதனை அறிமுகம் எனக்குச் செய்தவர் பெரும் புலவர் கூர்மாவதாரர். தொண்டில் திளைக்கத் தோன்றும் துணையாய் துலங்கும் பொருளாய்த் திகழ்பவர் முதுபெருந் தொண்டர் செல்வநாயகர். இவர்களை நினைக்கிறேன்; இவர்களே என்னுள் இருந்து ஊக்கி வருபவர் என்கிறார். அற்றார்க்குதவும் இத்தகைக் கொடைஞர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே பெருந்தகை! என்னே பெருந்தகை! என்று வியந்து நின்றாரோ? அவ்வாறு உதவார் தம்மை அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று (1007) என்றாரோ? 26. சொல்லப் பயன்படுவர் சென்னை கிண்டியை அடுத்த மேலைச்சேரி. ஆங்கொரு கிறித்தவப் பள்ளி. அப்பள்ளியை அடுத்தொரு மகளிர் விடுதி. பள்ளி ஆசிரியை பாக்கியம் என்பார். அவரே விடுதிப் பொறுப்பும் உடையார். விடுதியில் வறிய குழந்தையர்; பெற்றோர் இருக்கும் பேறு அற்றவர்; பெண்டிரும் வறியர்; முதியவர்; கைம்மையர். எளிய விடுதியில் என்ன இருக்கும்? அரிதின் முயன்று அன்றன்று உணவுக்கு வேண்டும் அரிசியும் பருப்பும் காய் கறிகளும் போதும் போதாதென்னும் நிலையில் இருக்கும். இரக்கத் தொண்டால் எளிமையில் இயலும் இந்த விடுதிக்கும் ஓர் இடையூறு. ஊரின் உதவியாலும் உண்மை இரக்கத்தாலும் ஏதோ இயன்று இந்த விடுதியின் பொருள்கள் திருடப்பட்டன. ஒரு நாள் இரு நாள் இல்லை; பல நாள்! அரை வயிறும் குறை வயிறும் உண்டவர்களுக்கும் பசியும், பட்டுணியும் ஆயின. வலிய திருடரைத் தடுக்கும் வலிமை எவருக்கும் உண்டு? இளகிய இரக்கப் பிறப்பாம் ஆசிரியை பாக்கியத்திற்குக் கூடுமா? பல நாள் பார்த்தார்! கண்ணுறங்காமல் திருடர் வரவை நோக்கியிருந்தார். வழக்கம் போலத் திருடர் வந்தனர். பண்டங்களை எடுத்து வெளியே வைத்தனர். அம்மையார் அவர்கள் காதில் விழும்படி கூறினார்; உடன் பிறந்தார்களே, உரைப்பதைக் கேளுங்கள் நானோ கிழவி; இங்கே ஆணென எவரும் இலர். ஏழைக் குழந்தைகளும் பெண்களுமே உளர். எங்களால் உங்களைத் தடுக்க முடியுமோ? நல்லுளம் உடையோர் நன்கொடையாலே நடப்பது இவ்விடுதி. உங்கள் செயலால் பலநாள் பட்டுணி கிடந்துளோம். உங்கள் வறுமையே இப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். எனினும் உங்கள் மேல் வருத்தமில்லை. உங்கள் குழந்தையர் பெண்டிர் பசியைத் தாங்காமல் இப்படிச் செய்கின்றீர்கள். அவர்கள் பட்டுணி தாங்காமல் செய்யும் நீங்கள் இவர்கள் பட்டுணி தாங்காமல் கிடக்கும் நிலையை எண்ணுங்கள்! இவர்களும் உங்கள் குழந்தைகள் உடன் பிறப்புகள் இல்லையா? கடவுள் ஒருவர் எல்லார் செயலையும் பார்த்துக் கொண்டே உள்ளார். இன்மேலேனும் இவ்வேழையர் உணவை எடுத்துச் செல்லாமல் இருக்க மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். இளகிய சொற்கள் திருடர் நெஞ்சக் கல்லையும் கரைத்தன! இனிமேல் திருட மாட்டோம் என்றொரு குரல் எழுந்தது. விடிந்து பார்த்தார் பாக்கியத்தம்மையார். எடுத்து வைத்த பொருள்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன! அதற்குப் பின்னர் அத்திருடர்கள் அவ்விடுதியில் திருடவந்ததே இல்லை! திருடர் ஆயினும் என்ன? திருந்தாப் பிறவியரா அவர்? திருத்தும் திறவோர்இருப்பின் திருந்தார் எவருமே இரார்! எவ்வகையாலும் திருந்தார் உளரேல் அவரே கயமை உருவர்! இத்தகு நிகழ்ச்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? திருந்துவோர் திருந்தார் தம்மை எண்ணி இருபாற்பட நின்றாரோ? அதனால், சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078) என்றாரோ? செய்தி: 1939 (செந். செல்: 17:177 கள்ளனைத் திருத்திய கன்னி; மறை. திருநாவுக்கரசு) 27. கண்டு கேட்டு பாட்டினிமை மிக நன்று. ஆயினும், இவ்வினிமையின் பொருட்டு உணவு இறங் காமையும் இரவு கழியாமையும் நினைந்து நெட்டுயிர்ப்பு விடுதலும் ஆகிய இவை போல்வன நிகழ்வதில்லை. அறுசுவை உணவு நன்று. ஆயினும், அவ்வுணவின் மேல் வந்த விருப்பத்தால் ஒரு மகளுடைய வளைகள் கழலுமோ? அவளது மேனி பசக்குமோ? அவன் தன்னந்தனியளாய்த் தாய் தந்தையரை விட்டு வெய்ய சுரங்கடந்து வேற்றூர் செல்ல உடன்படுவளோ? கண்ணிற்குக் குளிர்ந்த காட்சி ஒன்றை நாடி ஒரு மகன் நள்ளிரவிற் காடு மலையுங் கடந்து, கரடி புலிகளை எதிர்த்துத் தன் உயிரிற்குத் தீங்கிழைத்துக் கொள்ள முன்வருவானோ? இல்லை! இவை ஒவ்வொரு புலனுக்கு நன்மை பயப்பன ஆதலால் அவற்றின் மேலுள்ள விருப்பம் எவ்வளவு வலியுடைத்தாயினும் பொதுவாக மக்களை மயக்கித் தம்மறிவு கெட்டுத் தடுமாறச் செய்வதில்லை. புணர்ச்சியின் மேலுள்ள விருப்பமும் இத்தகைய ஒன்றானால் மக்களதை எளிதில் அடக்கிக் கொள்ளக்கூடும். அவ்வாறாயின் இயற்கையின் அமைப்பாகிய உயிர்வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும். உயிரென்பது ஒன்றினின்றும் மற்றொன்றற்றிற்கு ஊட்டப் படுமேயன்றி ஆக்கப்படாது. ஊட்டப்படுவதற்குக் கூட்டம் வேண்டும். ஆதலின் கூட்டத்தின் மேலுள்ள இவ்விழைவு ஒரு புலனைச் சார்ந்து நில்லாது ஐம்புலன்களிலும் கூடிநின்று ஆற்றின் மேற் புணையென மக்களை வலித்துச் செல்கின்றது. என்றே மகிழ்நனார் ஆய்ந்து மணத்தைப் பற்றி எழுதினார். (செந்தமிழ்ச் செல்வி 5 : 223-4) இத்தகும் ஆய்வின் ஓட்டம் உள்ளிருந்து ஊற்றாய்க் கிளர வள்ளுவக் கிழவர் கண்டாரோ? அதனை என்னே! என்னே! என வியந்து நின்றாரோ? அதனால், கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள (1101) என்றாரோ? வள்ளுவக் கிழவர் கண்டாரோ! 1. கடைக்குச் சென்றான் ஒருவன்; சிறுவன். சென்ற வழியில் சண்டை; இரு பெருங்கும்பல், அடி - தடி - முட்டல்- மோதல் - குத்தல் - கொலை! காவல் படை கடிதில் வந்தது. கண்ணீர்ப்புகை, துமுக்கிச் சூடு (துமுக்கி - துப்பாக்கி) வேடிக்கை போலப் பார்த்தான் சிறுவன்! விளக்கின் ஒளியில் மயங்கிய விட்டில் ஆனான். வாங்கப் போன பொருளை வாங்கு முன். காவலர் துமுக்கிக் குண்டை வாங்கினான்! சீறிப் பாய்ந்து சிதறி வந்து தெறித்த குண்டு சிறுவன் மார்பைத் துளைத்து, நுரையீரற் குழே இறங்கி, வயிற்று மேற் கூட்டை (உதரவிதானம்)க் கிழித்து, முதுகு வழியே வெளியே போனது! குண்டு போனால் என்ன ஆகும்? குருதி எல்லாம் கொட்டு கொட்டெனக் கொட்டிப் போனது! உயிர் தங்க வேண்டும் என்றால், அறுவை செய்ய வேண்டும். அறுவை செய்ய வேண்டும் என்றால், ஆரூயிர்க் குருதி வேண்டும்! அக்குருதிதானும் அவன்றன் இனத்தொடும் இயைய வேண்டும்! சிறுவன் செய்தி அறிந்த சிறிது பொழுதில், உருகும் உளங்கள் ஓடி வந்தன! உயிர்க்கு உறுதியாம் குருதியை உவந்து வழங்கின! குலமும் இல்லை; குடியும் இல்லை; சாதியும் இல்லை; சமயமும் இல்லை; மொழியும் இல்லை; எதுவும் இல்லை - இருந்ததெல்லாம் ஒரோ ஓர் இரக்கம் - உருக்கம்! ஆறு புட்டி ஏற்றப்பட்டது! அறுவை நன்றாய்ச் செய்யவும் பட்டது! போகும் உயிரை நிறுத்தவும் பட்டது! அழிவில் மோதிய கூட்டமும் மாந்தரே! ஆருயிர் தரற்கு மோதிய கூட்டமும் மாந்தரே! இருபாற் கூட்ட இயலும் தனித்தனி விளங்கின! இத்தகு நிலையை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று இரங்கியும் ஏத்தியும் நின்றாரோ? அதனால், அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (72) என்றாரோ? 19-12-91 தினப்புரட்சி நாளிதழ் செய்தியை உட்கொண்டு வெளிப்பட்டது இது. 2. கணவன் இல்லை. கைம்மை வாழ்வு. ஆனால், ஆறு குழந்தைகளுக்குத் தாய்! அவளே, குடும்பத்தின் காவல்! அவளே, குடும்பத்தின் வருவாயும் வாழ்வும்! நொந்தும் வெந்தும் வாழ்ந்த அவளுக்கு, வந்தது சிறுநீரக நோய்! ஒன்றுக்கு இரண்டு - சிறுநீரகமும் செயல்படவில்லை! அடுத்து உதவுவார் ஒருவரும் இல்லை. கொடுத்து வாங்கும் வாய்ப்பும் இல்லை. என்ன செய்வாள் ஏழைத் தாய்? வாழ வாய்ப்போ இல்லை! வாழ வாய்த்தால், குழந்தைகளை வாழ வைக்கலாம்! எவரோ தூண்ட ஏதோ ஓர் இதழில் அறிக்கை விடுத்தனள்; குருதியின் இனம் பி + ; ஆறு குழந்தையர் வாழ்வை எண்ணி, அருளால் சிறுநீரகம் அளிப்பார் உண்டோ? என்றது அறிக்கை. அறிக்கை கிளர்ந்தது தில்லியில் இருந்து. அறிக்கைப் பயன் கிளர்ந்தது பம்பாயில் இருந்து. வேலை தேடும் இளைஞர். வேறு வகையும் இல்லா இளைஞர். அறுவரைக் காக்க, அன்னையைக் காப்பேன்; என்னைப் பெற்றவர் என்றால் என்ன? அவர்களைப் பெற்றவர் என்றால் என்ன? தாய்க்கு உதவுதல் பேறெனத் தாவினார். மருத்துவமனையை நண்ணினார்; உடலாய்வு முடிந்தது; குருதியினமும் பொருந்தி நின்றது கொடை நிலையும் அமைவாகியது! எடுத்தலும் கொடுத்தலும் இயல்பாய் நிகழ்ந்தன. இருபால் உடலமும் இனிதில் தேர்ந்தன. பெறா மகனைப் பெற்ற அன்னை உச்சி குளிர்ந்தாள்! பெறாத் தாயைப் பெற்ற தாயாய்ப் பேண வாய்த்த பேற்றைப் போற்றி வணங்கினார் இளைஞர். அழையா அமுதாய்த் தேடி வந்து ஆருயிர் வழங்கிய அருமை இளைஞரை மருத்துவ உலகம் மனநெகிழ்ந்து பாராட்டியது. மருத்துவக் கழகச் சார்பில் மாண்புறும் இளைஞர்க்கு ஆயிர உருபா அன்பளிப்பாக வழங்கினர். நன்றியுரைத்த இளைஞர், நன்கொடை நோக்கி வந்திலேன்; இந்தத் தொகையைத் தலைமையமைச்சர் நிதியில் சேர்க்க என்றார். மருத்துவ உலகமும் நோயர் உலகமும் ஒன்றில் ஒன்று உச்சமாய் வியந்து நின்றன. இத்தகு காட்சியை வள்ளுவக் கிழவர் கருதிக் கருதிக் கண்டாரோ? என்னே என்னே என்று தம்மை மறந்து நின்றாரோ? அதனால், அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு (80) என்றாரோ? 3. வீடு இல்லார். வாழ்வில் விடிவும் இல்லார். தெருவில் கிடக்கும் குப்பைத் தாள்களைப், பொறுக்கி விற்று வயிறு வளர்க்கும் ஏழ்மைப் பிறவியர்! இங்கே வருக; ஏராளம் தாள் குவியல் என்ற அழைப்பு! இனிய தேனாய் இருக்க உள்ளே ஓடினர்! எளிய இடமா? உயர்ந்த கலைகளின் ஒரு மொத்த விளக்கமாக உயர்ந்து நிற்கும் பல்கலைக் கழகம்! அழைத்தவர் தாமும் தெருப்போக்கியரா? பல்கலைக் கழகக் காவல் கடமையர்! உள்ளே போனவர், குப்பைக்குவியலில் குனிந்து பொறுக்கத் தலைப்பட்ட அளவில், தலையிலே பேரடி! ஒன்றா இரண்டா? ஒருவரா இருவரா? அடிதாளாமல் அடியற்ற மரமாய்ச் செத்தேன் என விழுந்தான் ஒருவன்! செத்தான் என்று போயினர், மற்றவர் தம்மைச் சாக அடிக்க! செத்தவனாக வீழ்ந்தவன், சிறிது பொழுதில் மயக்கம் நீங்கி எழுந்தான்; மறைந்தான்; ஓடினான். காவல்துறையைக் கடிதில் அடைந்து, நடந்த கதையை நடுக்கொடும் உரைத்தான்! மருத்துவக் கல்வி கற்பார் தமக்குக், காட்டும் பொருளாய்ச் செத்தார் தம்மை விலைக்கு வாங்குதல் வழககம்! செத்த பிணத்தால் சேரும் பணமெனக் கண்டபின், சாகவைத்துப் பிணமாய்த் தந்து, பணமாய்ப் பெற்ற, சாவும் பிணங்களின் கதையாம் இதுவே! ஏழை எளியவர் பசியர் பிணியர் தம்மை, ஆவலூட்டி அழைகக! அடித்துக் கொன்று, பிணத்தைத் தந்து, பணத்தைப் பெற்றிட! இதுவே வாடிக்கையாம்! இருபத்திரண்டு பிணங்கள் இப்படி வந்தனவாம்! குழந்தையும் உண்டாம்! பெண்டும் உண்டாம்! கொலம்பியா நாட்டுத் தலைநகரான பொகோடோவில் நிகழ்ந்தது இது! நிகழ்ந்த இடமோ, பல்கலைக்கழக வளாகம் - பாரன் குவில்லாபிரி பல்கலைக்கழகப் பெயரதாம்! காவல்காரன் கயமை மட்டுமா ஈது? பல்கலைக் கழகுத் தலைமைக்குமே தெரியுமாம்; உயிர் காக்கும் மருத்துவ ஆய்வை இப்படிப் பெற்றவர், பின்னே எப்படி இருப்பார்? தேடி வந்த ஏழை நோயரை எல்லாம், உறுப்புறுப்பாக அறுத்தறுத்தெடுத்துச் செல்வர்க்குப் பொருத்திச், சேர்க்க மாட்டாரா செல்வம்? சீ! சீ! இப்படிக் காட்சியும் உலகில் நிகழும் என்று எண்ணி எண்ணி வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே கொடுமை என்னே கொடுமை என்று நொந்து நின்றாரோ? அதனால், அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (241) என்றாரோ? செய்தி : தினமணி. 4-3-92. 4. காலில் கட்டி ஆறாத் தொல்லை. அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. ஊன்றுகோல் உதவியால் நடக்கத் தொடங்கினார். மாடியில் இருந்து தவறி விழுந்து இடக்கை எலும்பு ஒடிந்தது. மூன்று வாரங்கள் கிடக்கையில் கழிந்தன. ஒடிவு தேறி, ஒருவழியாகக் கை கூடிற்று. ஓடின சில வாரங்கள். மீண்டும் வீழ்ந்து கணைக்கால் எலும்பு ஒடிந்து போனது. மரக்கறி உணவே கொள்ளும் அவரை மருத்துவர் கூடிப் பழித்தனர். உயிரியைத் தின்று உயிர் வாழ்வதைவிட உயிரையே விடுவேன் என்றார் அவர். மரக்கறி உண்பார் நெடிது வாழார் என்றனர் மருத்துவர். புலாலுண்பாரில் என் அகவை உள்ளாரை அழைத்து வருக என்றார் அவர். ஒரு நண்பர்க்கு எழுதினார் அஞ்சல்; என்னை ஒரு நாள் அடக்கம் செய்யக் கொண்டு போதல் உண்டேயன்றோ! அற்றை நாளில் அழகு வண்டிகள் எவையும் தொடர்ந்து வருதல் வேண்டா. ஆடும் மாடும் பன்றியும் கோழியும் மந்தை மந்தையாய் வரட்டும். துள்ளித் திரியும் மீன்காட்சிச் சாலை ஒன்றும் தொடர்ந்து வரட்டும். இந்த உயிரிகள் எல்லாம் கறுப்புடை அணியாமல் வெள்ளுடை அணிந்து விரும்பி வரட்டும். எங்களைக் கொன்று தின்று, இன்னுயிர் வாழ்வதைக் காட்டிலும் என்னுயிர் இழக்கவும் துணிவேன் என்று வாழ்ந்தவன் இந்த மாந்தன் என்று பாராட்டிக் கொண்டு வரட்டும் என்று எழுதினார். மாந்தனைக் கொல்லும் கொலையைப் போன்றதே வேட்டைக் கொலையும் என்றார். இன்னும் சொன்னால் வளர்ந்தவன் ஒருவனைக் கொல்வதைக் காட்டிலும் குழந்தையைக் கொல்லல் கொடுமையே அல்லவோ! அக் கொலை போல்வதே வேட்டைக் கொலை என்றும் கூறினார். தமிழக மண்ணில் பிறந்தவர் அல்லர்! உலகப் பரப்பின் ஒரு பெரும் பகுதியைத் தனக்குள் கொண்டு ஆட்சி நடத்திய இங்கிலாந்து மண்ணில் தோன்றியவர். தொண்ணூறுக்கு மேலும் வாழ்ந்தவர். அறிஞர் பெர்னாட்சா அவர். இத்தகு தெய்வ அருள்நெறிச் செல்வர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும்கை கூப்பித் தொழும் என்றாரோ? 5. சொத்துத் தகராறு ஒன்று. எதிரிட்டு இருவர், இல்லாக் கால் தகராறு உண்டோ? ஒருவர் முந்தி வழக்குத் தொடுத்தார்; அதனை மறுத்துத் தம்பால் ஆவணம் உண்மை காட்டினார் ஒருவர். உரிய நிலத்தை நேரில் கண்டு, ஊரார் சான்றைக் கேட்டு, உண்மை அறியத் தீர்ப்புத் தருதற்கு உரிய ஆட்சியர் சென்றார். இடத்தைக் கண்டார். இடத்துக்குரிமை தத்தமக் கென்று நின்றவர் தம்மை உசாவினார். ஊரவர் சான்றுகள் திரட்டினார். ஆவணச் சான்றையும் ஆய்ந்தவர். ஆய்வின் இடையே ஒரு மின்னல். ஆவணம் எழுதியவர் பெயரை அறிந்தார். அவர் தாம் இருக்கும் ஊரையும் அறிந்தார். அள்ளூர் என்பதைக் கேட்டார். வழக்கை மறுநாள் ஆய்வுக்குத் தள்ளி வைத்தார். வந்த குதிரையில் வழக்கம் போல ஏறி அள்ளூர் சென்றார். அள்ளூர் சிற்றூர். அவ்வூர்க் குடிசையுள் ஒன்று. அதன்முன் நின்றது குதிரை. குதிரையில் இருந்து இறங்கினார் ஆட்சி அலுவலர். ஐயா என்றார். ஆரது என்றதும் அந்தக் குரலில் தம்மை இழந்து தாவிச் சென்றார். மின்னெனச் சென்று, முன்னர் எய்தி, நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து வணங்கினார். திகைத்துப் போன முதியவர் திடுமென எழுந்தார். பற்றிப் பிடித்துப், பரிவோடு தூக்கிப், பார்த்ததும் வியப்பொடு, பட்டாபி என்றார். ஆமாம் ஐயா; உங்கள் பிள்ளை பட்டாபியே! அலுவலாய் இங்கே வந்தேன். ஆவண எழுத்தில் தங்களை கண்டேன். காணத் துடித்துக் கடிதில் வந்தேன். தங்கள் தயையின்றானால் எளியேற் கிந்நிலை எய்தி இருக்குமோ? என்றார் பட்டாபி. முதிய கிழவர், முத்துவீர உபாத்தியாயர், முதிர்ச்சி நீங்கி இளைய வீரராய் எழுச்சி கூர்ந்தார். கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கும், குனிந்து சோர்ந்து தொய்ந்த கிழவரை ஏறு நிலையில் எழுச்சியூட்டி நிமிர்த்தின! என்னே பணிவு! என்னே நல்லுளம்! என்று வியந்தார் அந்தக் கிழவர் முத்துவீரிய இலக்கணம் இயற்றிய உறையூர்ப் புலவர் முத்துவீர உபாத்தியாயர்! இத்தகு பணிவுக் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (125) என்றாரோ? தந்தை புலவர் மீனாட்சி சுந்தரர் சொல்ல மைந்தர் பெரும் புலவர் தங்கவேலனார் சொல்லக் கேட்ட செய்தி இது. 6. குதிரையின் மேலே ஏறி வந்தான் ஒருவன். ஓட்டமானால் அப்படி ஓட்டம்! அந்த ஓட்டத்தைத் தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் மற்றொரு குதிரையின் மேலே ஒருவனும் வந்தான்! வழிநடை ஒருவன் குதிரையில் வருபவன் இவனெனக் கண்டான். வழியை விட்டு ஒதுங்கினான். தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி, பணிவாய்க் குனிந்து வணக்கம் செலுத்தினான். விரைந்த குதிரை அழுத்திய பிடியால் நிற்கத் திணறி நின்றது. குதிரையை விட்டுக் கீழே இறங்கினான் குதிரையன். தலைமேல் இருந்த தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு வணங்கினோன் குனிவிலும் குனிந்து வணங்கினான். குதிரை மேலேறிப் பறந்தான்; விரைந்தான். விரையும் போதே வினாவினான் உடனவன்; இப்படி இறங்கித் தொப்பியை எடுத்து இந்த ஏழையைக் குனிந்து வணங்க வேண்டுமா? வணங்கிய நல்லோன் சொன்னான். நாட்டின் தலைவன் நயக்கும் பணிவிலும் தலைவன்; இதனை நாட்டுதல் கடமை பணிவினால் இந்த ஏழை என்னை வெற்றி கொள்ள விட்டிட மாட்டேன் திகைத்துத் திணறித் திக்குமுக்காடினான். வினாவை எழுப்பி வாங்கிக் கொண்டவன். அந்தப் பணிவுச் செல்வன் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்துக் கொண்டிருந்தும் அன்பு வழிக்கே அன்றி அயல் வழிக்குப் பயன் படுத்தா அண்ணல் ஆபிரகாம்! அமெரிக்க நாட்டுத் தலைவன்! இத்தகு காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (978) என்றாரோ? 7. பெட்டியடிப் பையன் அவர் காசுப் பெட்டிப் பக்கத்தில் இருத்தல், ஏவிய பணியை ஏனென்று கேளாமல் செய்தல்; இப்பணி அவருக்கு; கடமை தவறாக் கருத்து மிக்கவன். கடைப்பணி எனினும் தலைப்பணியாக வாய்மைக்கு இடந்தந்தவர். பொய் கூறுபவன் உண்பது, சோறு அன்று வேறு என்பது அவர் வீட்டுப்பாடம்! கடை முதலாளி உள்ளே இருந்தார். அவரைத் தேடி ஒருவர் வந்தார். கடையின் உட்புறம் வீடு. வீட்டுள் சென்று செய்தியுரைத்தார் பையன். வந்தவர் யாரெனக் கேட்டு இல்லை என்று சொல்லச் சொன்னார் கடை யர். உள்ளே இருக்க இல்லை என்று உரைக்க மாட்டேன் என்றார் பையன். கடையர் சீற்றம் தலைக்கு ஏறியது. காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றே அமைத்தார். முறை மன்றத்தில் இருந்து வழக்கொன்றுக்கு முன்னறிவிப்பு வந்தது. அதனைக் கொண்டு வந்தவர் முதலாளி உள்ளாரா என்று கேட்டார். பார்த்துச் சொல்கிறேன் என்று போனார் பையன். இருப்பதும் இல்லாததும் அறியார் ஆதலின் அறியப் போனார். உள்ளே போனதும் உங்களை அமீனா தேடி வந்துளார் என்றார். இல்லை என்று சொல்லிப் போடு என்றார் உள்ளே இருந்தவர்! இருக்கும் போது இல்லை என்று சொல்ல மாட்டேன் என்றார் பையன். இரண்டாம் நிகழ்ச்சி ஆதலால் இரு இரு என்று கறுவிக் கொண்டார். கணக்கரை அழைத்து இல்லை என்று சொல்லச் சொன்னார். வந்த ஆள் போனதும் வந்தது சீற்றம்; பொங்கி எழுந்தார் பெரியவர். பொய் சொல்ல மாட்டாயோ நீ; எங்கும் போய்த் தொலை என்றார். ஊர்க்கே போகிறேன் என்று நாடு கடந்து தம் நாட்டுக் கோட்டைக்கே வந்தார்! பண்டித மணியிடம் பைந்தமிழ் கற்றார். அண்ணாமலையில் புலமை யுற்றார்; அங்கேயே பணியிலும் அமர்ந்தார். காரைக்குடியில் புலமை விரித்தார். முனைவர் பட்டமும் முயன்று பெற்றார். கல்லூரித் தலைமையும் உற்றார். அண்ணாமலையில் துறைத்தலைமை ஏய்ந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தாகவும் வேய்ந்தார்! தமிழ்க்காதல், வள்ளுவம், காப்பியப் பார்வை என்றே என்றே அன்னைக்கு அணிபல பூட்டினார்! தமிழ்வழிக் கல்வி தழைக்கத் தம்மைத் தொண்டிற் படுத்தார். பொய்யா நோன்பைப் பையல் நிலையிலேயே பசையெனச் பற்றிய வசையிலா இசையோர், பெயரை இயம்பவோ வேண்டும்? மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கர் அவரே! அன்னோர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று தம்மை மறந்து நின்றாரோ? யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என்றாரோ? 8. சுமக்கமாட்டாச் சுவடிக் கட்டுடன் எங்கள் அகத்திற் கொருவர் வந்துளார்! சுவடிக் கட்டோடா? சுமக்க மாட்டா அளவிலா? ஆமாம்! அவ்வளவு சுவடியும் அருமையான பழைய சுவடிகள்! அப்படியா! கல்லூரி வேளையாயிற்றே! அவரைப் பார்க்க வேண்டுமே! வேண்டா வேண்டா; நீங்கள் பார்க்கவே வேண்டா; பார்க்க வந்தால் ஓடிப்போவார்; எவர் என்பதைச் சொல்லவும் இல்லை; ஏன் என்றும் சொல்லவும் இல்லை! எவரைப் பார்க்கவும் ஒப்பவும் இல்லை; சுவடியைத் தக்க இடத்தில் சேர்க்க வேண்டும் என்றே உங்களை நாடி வந்துளார்! வறியர் போலும்! தொகைமிகக் கேட்பரோ? தொகையைக் குறித்து வரவே இல்லையாம் உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என்றே வந்தாராம்! கல்லூரி முடியும் வரை இருப்பாரா? எங்கள் அகத்தில் இருக்க வைத்துளேன். சுவடியை எடுத்துச் சேர்த்த பின்னரேபோவார் கல்லூரி முடிந்தது. மாணவர் சுவடிச் சுமையைச் சுமக்கமாட்டா அளவில் கொணர்ந்தார். இன்னும் உள்ளது என்றார். இன்னுமா என்றார் சுவடி கண்டவர். முச்சுமை சுமந்தார் இளைஞர். இச்சுவடி தந்தார்க்கு, எதுவும் விரும்பார்க்கு நன்றியாவது நான் சொல்ல வேண்டுமே என்று நடந்தார் ஆசிரியர். என்ன விந்தை! சுவடிக் குரியவர் இருந்த வீட்டில் இல்லை. பேரும் சொன்னார் அல்லர்; ஊரும் சொன்னார் அல்லர். முகமும் கருதார்; அகமும் கருதார்! கடமையை முடித்தார்; நடையைக் கட்டினார்! சுவடி பெற்றவர் சொல்லிக்கொண்டார்; ஒற்றை யேட்டுக்கு என்னென்ன பாடுபட்டுளேன்; நூற்றுக் கணக்கில் ஏடு; தேடிவந்து நின்றதே வீட்டில்! என்ன உள்ளம்! என்ன பெருமிதம் என்றே என்றே வியந்தார். வியந்தவர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதர்! ஏடு சுமந்து தந்த மாணவர் சாம்பசிவம் என்பார். நிகழ்ந்த இடமோ குடந்தை. நிகழ்ந்த நாளோ 2-5-1900. இல்லம் ஏலம் போடும் நிலைக்கு ஆட்பட்ட உடனே இந்த ஏடும் ஏலம் போய் விடக் கூடாது என்று, ஓடிவந்து உதவிய வள்ளல் பெயரை எவரும் அறியார்! இத்தகு வள்ளலை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று போற்றுதலாகி நின்றாரோ? அதனால், கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு என்றாரோ? நல்லுரைக் கோவை உ.வே. சா. பக். 111 : 119 9. பலகணி ஓரம் குப்பைத் தொட்டி! காற்றெலாம் நாற்றக் காற்று! போதாக் குறைக்குப், பக்கத்து வீட்டார் எட்ட நின்றே குப்பையை வீசுதல்! தொட்டிக்கு உள்ளும் புறம்பும் குப்பைக் காடு! தொட்டிப் பக்கம், குழந்தைகளை வெளியே விடுதல்! நாற்றம் தாங்காமல் நல்ல வகையில் சொல்லிப் பார்த்தார்! நமக்குத் தானே நலக்கேடு என்றார். உம் வீட்டிலா கொட்டினோம்; உம் தொட்டியிலா கொட்டினோம்; எங்கள் பக்கம் எதுவும் செய்வோம்; உம் வேலையைப் பாரும் என்றனர். மூக்கைப் பொத்திய அவர், வாயையும் மூடிக்கொண்டார். குப்பை கொட்டிப் போன பின்னரும், குழந்தைகள் வெளிக்குப் போன பின்னரும், அள்ளியும் துடைத்தும் தொட்டியில் போட்டார்! ஒரு நாள் இரு நாள்கள் அல்ல! பல நாள்கள் பல வேளைகள்! பேசாப் பெருஞ்செயல் பெரிய வேலை செய்தது! கரையா மனத்தைக் கரைத்தது! நல்ல செய்கை நாண வைத்தது! தொட்டிக்குள் குப்பை போனது! குழந்தைகள் வெளி க்குப் போக உள்ளே போயினர்! வன்மை, மென்மைக்கு நாணித் தோற்றது வள்ளுவக் கிழவர் இப்படி ஒருவரைக் கண்டாரோ? என்னே! என்னே! என்று தம்மை மறந்து நின்றாரோ? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (314) என்றாரோ? திரு. பெ. சீனிவாசன் என்பாரின் எனது வாழ்க்கை வரலாறு என்பதில் கண்ட செய்தி. (422 - 423) 10. கால் பழுது பட்டான் அவன். வயிற்றைக் கழுவ இரவல் எடுக்கும் நோக்கன் அல்லன் அவன். வாழத் துடித்தான்; வாழ்வுக்காக உழைக்கத் துடித்தான். அவன் துடிப்பு அரிமாக் கழக அமைப்பு ஒன்றற்கு எட்டியது. அரிமாக் குழும்பு அவனுக்குச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுச் செய்வன செய்து முடித்தது. புதிய ஆள் ஆனான்! போன இழப்பைத் திரும்பப் பெற்ற பூரிப்பில் கிளர்ந்தான். தொழிலில் துலங்கும் போதோர் அறிவிப்பு; ஓர் அரிமா அமைப்பின் அறிவிப்பு: சிறுநீரகம் இழந்தார் ஒருவர்க்குச் சிறுநீரகம் உதவுவார் வேண்டும்; உதவுவார்க்கு உரிய அளவில் தொகையும் வழங்கும் செயற்கைக் காலன் ஓடி வந்தான். சிறுநீரகம் தருவதற்கு இசைந்து நின்றான். பொருந்தியும் இருந்தது; பொருத்தவும் பட்டது. அறுவை தேறி விடைபெறும் பொழுது! எவ்வளவு தொகை வேண்டும்? என்றோர் வினா. நல்லதோர் பெருநகை! அதன் விடை. தொகை வேண்டுவது இல்லை! கிடைத்த வாய்ப்புக்கே நன்றி! கால் உதவியது அரிமாக் குழும்பு! செய்யாமல் செய்த உதவி அது. அதற்கு நான் செய்ததோ. நன்றியறிதல்! வாங்கிய கொடையை மீளக் கொடுக்க வாய்ப்பு வந்ததே; அதற்கு நன்றி என்றான் ஊனமில்லா முழுமையன்! கூப்பியகையொடு கொள்கைத் துடிப்பொடு கிளர்ந்து சென்றான், செல்லும் இடத்திற்கு! இத்தகு மேதகைக் காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு (997) என்றாரோ? செய்தி - தினமலர் 26-1-92 அரிமா ஆளுநர் இரகுநாதர் - மயிலாடுதுறைப் பொழிவு. 11. அவளுக்குக் கைகள் இரண்டுமே இல்லை. ஆம்! தோள் மூட்டுக்குக் கீழே அறவே இல்லை. அவளுக்கு அகவை பதினாறு இருக்கும். கால்களே கைகளாய் ஆகிவிடுமோ? மண்ணெண்ணெய் அடுப்பை எடுத்தாள். மூடியைத் திறந்தாள். புட்டியில் இருந்து எண்ணெய் விட்டாள். மூடியைத் திருகினாள். திரியைத் திருகிக் கருக்கைத் தட்டினான். தீப்பெட்டியை எடுத்தான். ஒற்றைக் காலில் பெட்டி. ஒற்றைக் காலில் குச்சி. குச்சியை உரசித் திரியை மூட்டினாள். எரியும் அடுப்பு மேல், சட்டியை வைத்தாள். குவளையில் இருந்த பாலை எடுத்துச், சட்டியில் ஊற்றினாள். மூடியை எடுத்துச் சட்டியை மூடினாள். சுட்ட பாலை எடுத்து, வட்டையில் விட்டாள். வட்டைக்கும் குவளைக்கும், மாற்றி மாற்றி ஆற்றினாள். ஆறிய பதத்தில் பாலைத் தன் வாயில் ஊற்றினாள்! - வந்த பணியை மறந்தே நின்றேன்! எடுத்தாள் ஊசியை; பெட்டியில் இருந்து எடுத்தாள் நூலை; கண்டில் இருந்து. எடுத்தாள் துணியை; பையில் இருந்து. மூன்றையும் கொண்டு முனைந்தாள் பணியில். காலாம் கையால், நூலை முறுக்கினாள். மற்றொரு காலாம் கையால், ஊசியை எடுத்தாள். நூலை ஊசித் துளையில் நுழைத்தே உருவினாள். வேண்டும் அளவில் நூலை அறுத்தாள். தையல் அளவாய் நூலைக் கொண்டாள். சீலையை எடுத்துப் பிடித்துக் கொண்டாள், ஒருகால் விரல்களின் ஊடே. ஊசியை எடுத்துப் பிடித்துக் கொண்டாள் ஒருகால் விரல்களின் ஊடே. ஒழுங்காய்த் தைத்தாள் தையல்! கைகள் இருந்தும் கண்கள் இருந்தும் ஊசித் துளைக்குள் நூலை நுழைக்க அப்பப்பா! நாலு பக்கம் எழுதி விடலாம்! இவளுக்கு என்ன ஆற்றல்! என்ன தேர்ச்சி! என்னையே மறந்து நின்றேன்! கண்ணாடி எடுத்தாள். சீப்பும் எடுத்தாள். கட்டியிருந்த தலையைப் பிரித்தாள். சீவிச் சீவி வகிடு எடுத்தாள். தழையத் தழையப் பின்னல் முடித்தாள். கொண்டை ஊசியை இங்கும் அங்கும் குத்திக் கொண்டாள். நறுமணப் பொடியை நலுங்கா தள்ளி நயமாய்ப் பூசினாள். கொத்துச் சரத்தை எடுத்துக் கூந்தலில் சூடிக் குலுங்கி நகைத்தாள்! பொட்டுப் புட்டியை எடுத்துக் கொண்டு தொட்டுத் துலங்க நெற்றியில் இட்டாள்! ஒப்பனை முடிந்தது ஓ ஓ! என்ற அளவில் இருந்தனள் இல்லை! காற்கை தூக்கிக் கனிந்த நகையால் கவின்மிகு வணக்கம் செய்தாள்! இப்படி ஒருத்தியை வள்ளுவர்கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ! அதனால், ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள் (662) என்றாரோ? திருப்பரங்குன்றத்தில் கண்ணேரில் கண்ட காட்சி இது. 12. ஆடற் கலைக்கே அருங்கொடையாக வாய்த்தவள் இவள் என அரங்கேற்றம் ஆயது. பரிசுகள் குவிந்தன; பாராட்டுகள் நிறைந்தன. பம்பாயில் இருந்து சென்னைக்கு வந்தனர். சென்னையில் இருந்து திருச்சி, வயலூர் எய்தினர். வயலூர் முருகன் அவர்கள் வழிபடு தெய்வமாம்! வழிபாடு முடித்துச் சமயபுரம் சார்ந்து வடக்கே சாலையில் ஓடியது வண்டி! எதிரே வந்த வண்டி தூக்கி எறிந்தது. விழுந்தாள் ஆடல் செல்வி, முட்டி மோதி! எழுந்தாள் அல்லள், காலோ ஒடிவு! திருச்சி சென்றனர் மருத்துவம் புரிய. முதலுதவி முடித்துச் சென்னை விசயா சேர்ந்தனர். என்ன ஆயினும் என்ன? முட்டிற்குக் கீழே காலை எடுத்தே முடிந்தது! செயற்கைக் காலுக்குச் செயப்பூர் சென்றனர். பொருத்தலும் பொருந்தலும் இயல்பாகிட வேண்டுமே! பிள்ளை தாங்கினாள்! பெற்றோர் ஏங்கினர்! பரிவு காட்டிப் பாழ்படுத்தாதீர் என்றார் மருத்துவர். காலும் கூடியது; முழுதாய் நடந்தாள். நடக்கப் பிறந்த பிறப்பா என் பிறப்பு? ஆடப்பிறந்த பிறப்பு அடங்கிப் போக ஆகவே ஆகாது! ஆடல்! ஆடல்! ஆடியே தீர்வேன்! அயர்ந்தனர் பெற்றோர்! குருதி சொட்டும்; சொட்டச் சொட்டச் சோர்தல் இன்றிப் பயின்றாள்! எந்த அரங்கில் அரங்கேறினளோ, அந்த அரங்கில் மீண்டும் அரங்கேற்றம்; ஆண்டுகள் பதின்மூன்று இடைவெளி! அப்பா! பயிற்சி, பயிற்சி! காலை இழந்தும் கலைமயில் ஆட்டமா? முன்னினும் கூட்டம் மூன்று மடங்கு! அவையே அதிர்ந்தது! தந்தை, தாம் தரு மகளின் காலைத்தொட்டு வணங்கினார்! சிற்பி வடித்த சிலைக்குச் சிற்பியே வணக்கம் செய்தமை ஈது! காலை இழந்தவள் ஒரு கல்லைத் தாண்டுகிறாள் செய்தித்தாள் செய்த சிறப்பு ஈது! நன்கொடைத் தொகையோ ஐந்திலக்கம் எதிர்பாராத ஓர் அறிவிப்பு; ஆடிய அவளே அறிவித்தாள்: இத்தொகை அனைத்தும் வைப்பில் வைக்கப்படும். வட்டித் தொகையால் ஆண்டுதோறும் வாய்த்த அளவில் வாய்ப்பில்லோர்க்கு இலவயமாகக் கால் வழங்கற்கு ஆகும்! வியப்பாய் வியந்தது கூட்டம்! திரைப்படம் தேடி வந்தது. ஆட வேண்டா; ஆடல்போல் காட்டின் போதும் என்றது! இல்லை! இல்லை! பொய்ம்மைக் காட்சி என்ன, பொம்மைக் காட்சி மெய்யாய் ஆடுவேன் என்றாள். மயூரி என்பது அப்படம்! அவ்வாடல் நங்கை சுதா சந்திரன்! இப்படி ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று வியந்து நின்றாரோ? இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர் (623) என்றாரோ? 13. காது கேட்கவில்லையா? கவலை விடுக என்றொரு விளம்பரங் கண்டார். கேளாக் காது கேட்பது போலக் களிப்புற்றார். விளம்பரம் தந்த முகவரி இடத்தை, விளம்பிக் கேட்டு விரைந்தார். கேளாக் காது கேட்கு மென்ற கிளர்ச்சி இவர்க்கு மட்டுமா? கூடியிருந்த கூட்டம் கேட்டுக் கொள் என்று நின்றது. வரிசைப் படியே வருகென அழைத்தனர். கையின் அழைப்புக் கணத்தில் போய்விடும்! வாயின் அழைப்பே நொடியில் வாய்த்துவிடும் என்றும், ஆர்வமுந்த அவ்வவர் வரிசையில் இருந்தனர். அழைக்க அழைக்கச் சென்றனர். முன்னே சொல்லிய முதியரும், முறையில் சென்றார். ஒலி வாங்கி ஓரிடம்! ஒலிபெருக்கி ஓரிடம்! ஒலிபெருக்கி உள்ள இடத்தில் இருந்த இருக்கையில் இருக்கச் செய்தனர். ஒலிபெருக்கிவாயின் பக்கல் காதை வைத்துக் கேட்கச் சொல்லினர். சொல்லிய தொன்றும் கேட்க வில்லை! கத்திய தொன்றும் எட்டவில்லை! கடைசி முயற்சி! ஈரடிவட்ட வெண்கல மணியில் சுத்தியல் கொண்டு, எட்டடி போட்டும் எட்டவிலை! கேட்டதா ஒலி என்றனர், கையைக் காட்டி! இல்லவே இல்லை என்றார் வாயால் காதுகேட்க வில்லையா; கவலை விடுக! கேட்கவே கேட்காது என்று கூறிவிட்டனர். காது கேளாப் பெரியவர் எத்தகு முயற்சியர்! எழுத்துக் கடமையே பழுத்ததவமாய்க் கொண்ட உழைப்பின் முனைவர்! அவர் எழுதிக் குவித்த நூல்கள் ஒருபது இருபதா? இருநூற்றுக்கு மேலே! உரையா, கதையா, வரலாறா, தொகுப்பா, சமயமா எல்லாம் எழுதித் தள்ளினார்! புலவர் வரிசைமட்டும நாற்பதற்கு மேலே! கழகப் புலவர் கருப்பக்கிளர் சு.அ. இராமசாமி என்பார் அவர். கழகத்தால் அவரும், அவரால் கழகமும் மாறி மாறிப் பெற்ற பேறுகள் தமிழ்ப் பேறுகள் ஆயின. இத்தகும் வினைத் திறத் தொருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே உழைப்பு என்னே உழைப்பு இடரை எண்ணா உழைப்பு என்ற வியந்து நின்றாரோ? அதனால் மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (624) என்றாரோ? 14. இரண்டரை அகவைச் சிறுமி அவள். தந்தை பேராசிரியர். தாயும் ஆசிரியர். கதை கதையாக நாளும் கேட்பாள். தடையின்றிப் பெற்றோர் சொல்வர். கேட்டதை மறத்தல் இல்லை; எவ்வளவு நாள்கள் ஆயினும்; எத்தனை செய்திகள் எனினும்! விந்தையும் வியப்பும் பெற்றோர்க்கு. மகளை நினைத்துப் பூரிப்பு. பெருங்கதை ஆகிய இராம காதையைத் தொடக்க முதலே உரைத்தனர். காதை உறுப்பினர் இருநூற்றுவர்க்கும் மேலே. அத்தனை பேரையும் நினைவில் கொண்டாள். ஒருவர்க் கொருவர் உள்ள தொடர்பையும் நினைவில் கொண்டாள். ஒன்று என்ன, இரண்டு என்ன, ஐந்நூற்றுக்கு மேலும் இராமாயண வினாக்களைக் கேட்க, உடனுக்குடன் மறுமொழி உரைத்தாள். ஐந்து அகவை எட்டும்போது பாடலையும் படித்தாள். அவள் வினாவும் வினாவுக்கு விடைதரவே அறிவறி தந்தை கற்றார்; மேலும் மேலும் கற்றார். ஒருமுறை கேட்ட செய்தியை மறவாமை போலவே, ஒருமுறை படித்த பாடலையும் மறவாத் திறமை அமைந்து கிடந்தது. எண்ணிலாப் பாடல்கள் எண்ணக் களஞ்சியம் ஏறின. பாட்டும் பொருளும் பயில விளங்கின. தமிழ்நாடு இந்திய நாடெனும் எல்லை தாண்டி சிங்கை மலேசியா நாடும் அறிய - அவையோர் வியக்க அறுபது நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. உருவும் அகவையும் - உரையும் பாட்டும் வினாவும் விடையும். கண்டோர் கேட்டோர் தமக்குக் கழிபேருகை யாயின! இத்தனை நினைவா இந்த அகவையில்! பெறலரும் நினைவின் பேறுறு குழந்தையைப் பெற்றவர் பெற்ற பேறோ பெரிது! செல்வச்சிறுமி ஆதிரை. அருமைத் தந்தை கண்ணப்பர். அன்பின் அன்னை அபர்ணா. இருப்பிடம் சென்னை. இத்தகு நினைவுச் செல்வியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்றாரோ? தினமலர் : ஞாயிறு மலர் 8-12-91. 15. பள்ளியில் படிக்கும் சிறுவன் தான் அவன். வீட்டில் இல்லை; வெளியில் இல்லை; பள்ளியில் இல்லை; பார்த்துத் தேட எங்கும் இல்லை! ஒரு நாள் - இரு நாள்கள் ஓடி விட்டன. மூன்றாம் நாளும் காணவில்லை. முட்டி மோதினர் பெற்றோர். பிள்ளையைத் தேடி அலைந்தவர் உள்ளத்தில் ஒருபொரி! விறகு போடும் இடத்தைத் தேடாது விட்டு விட்டோமே! இருண்ட அறையுள் மறைந்து இருந்தால்! விளக்கை ஏற்றி அடியடியாக எட்டு வைத்து உள்ளே போயினர் பழைய பொருள்களும் விறகும் பிறவும் போட்டு வைக்கும் அவ்வறைக்குள்ளே, முடங்கிக் கிடந்தான் சிறுவன். ஆள்வரவு கண்டு விழித்தான். எழுந்தான் அல்லன். எழுப்ப வேண்டினர். எழுப்பாதீர்கள்; இன்னும் கொஞ்சம் பொறுங்கள்; குஞ்சு பொரித்து விடுவேன் என்றான். குஞ்சு பொரிக்கவா என்ன உளறுகிறாய் என்று கையைப் பிடித்துத் தூக்கினர். அடிவயிற்றோடு கோழி முட்டையை வைத்துக் காலை அணைத்துக் கிடந்த சிறுவனைக் கையால் அணைத்துத் தூக்கினர். அடையில் கிடக்கும் கோழி, குஞ்சைப் பொரிக்கிறது. அதனைப் போல, அடையில் கிடந்து வெப்பம் தந்தால் குஞ்சு பொரிக்கத்தானே செய்யும் என்றான். நகைப்பாய் நகைத்தனர் எழுப்பினோர். ஆனால் இன்று என் ஆனது? அவன் ஆய்வு வழித்தடம், நகைத்தவர் தம்மை மட்டுமா? நானிலம் நகைக்க நடைமுறையாகி விட்டது! குஞ்சு பொரிக்கும் வெப்பப் பொறிகள், ஒரு நாளைக் குள்ளே முட்டையைக் குஞ்சாகப் பொரித்துத் தருதலை நாமறி கின்றோமே! இந்த இளைஞன் இருநூற்றுக்கு மேலும் அறிவியல் கருவிகள் கண்ட விந்தை அறிவினன், தாமசு ஆல்வா எடிசன்! இப்படி முயற்சியன் ஒருவனை வள்ளுவர் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அரிய என்றாகாத தில்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் (537) என்றாரோ! பொச்சாவாமை - மறதி இல்லாமை; கடமையில் சோராமை. 16. எவ்வளவு சின்னஞ்சிறு குழந்தை ஈது. கைச்சாண் அளவு தான் உயரம். கையின் அளவு கனமும் இல்லை. காலும் கையும் தலையும் உடலும், தூக்கி எடுக்கச் சிறிய பொம்மை! இந்தக் குழந்தையைக் கண்ணாடிப் புட்டிக்குள்ளே போட்டு வைக்கலாம்! இப்படிப் பேசப் பிறந்த குழந்தை! மெலிந்த குழந்தைக்கு, மெலிவிலா அறிவு. எதனை எனினும் துருவித் துருவிப் பார்க்கும். எண்ணி எண்ணிப், புதிது புதிதாய்ச் சொல்லும். பள்ளிக் கல்வியில் பளிச்சிடு திறமை - பள்ளி மாணவருள்ளேயே மெலிந்த உருவம்! இந்த உருவத்தினுள் இவ்வளவு புலமையா எனப் பெற்றோர் வியந்தனர்; பிறரும் வியந்தனர். ஒருநாள் கனி மரத்தின் கீழே அமர்ந்திருந்தான்; காம்பு விட்டுக் கனியொன்று வீழ்ந்தது. கனி கீழே வீழ்தல் என்ன உலகம் காணாப் புதுமையா? அன்றுதான் விழுந்ததா? அவன் முன்தான் விழுந்ததா? என்றும் எங்கும் உள்ள நிகழ்ச்சியே எனினும், அன்று அவனுக்கொரு விந்தை ஆயிற்று! வீழ்ந்த கனி மேலே போகவில்லை; பக்கங்களிலும் போகவில்லை, கீழே வீழ்ந்தது ஏன்? என எண்ணினான். கீழே விழாமல் என்ன செய்யும்? கிறுக்குத்தனமிது என்று தோன்றலாம்! அவனோ எண்ணினான்! ஆழமாய் எண்ணினான். புவியின் ஈர்ப்பால், பொருட்கள் மேலேயிருந்து கீழே வீழ்கின்றன என்று கண்டான். கண்டதை மேலும் மேலும் ஆய்ந்தான். புவியீர்ப்பாற்றலை உலகம் அறியச் செய்தான். புவி தோன்றிய நாள் தொட்டே இருக்கும் ஆற்றல் எனினும் புலப்படக் காட்டிக் கொள்கையாய்த் தந்தவன் அவனே! அதன் பயன் என்ன செய்தது? ஈர்ப்பின் ஆற்றல் கடந்த எல்லையும் உண்டு. எல்லை கடந்து போனபொருள மற்றோர் அண்டத்து ஈர்ப்பினால் அதனை அடையும். ஈர்ப்பின் எல்லை கடக்க ஏவின், ஏவுதல் இன்றியே இழுத்துக் கொள்ளும் அண்டம் உண்டு. அண்டமும் அண்டமும் மோதா நிலையில், கோளும் கோளும் முட்டா நிலையில் இருப்பதெல்லாம் ஈர்ப்பின் ஆற்றல் கொடையே! என்பதை யெல்லாம் உலகம் காணச் செய்தான்! உருவச் சிறுமை என்ன ஆனது? ஒள்ளிய அறிவுப் பெருமை என்ன ஆனது? வியத்தகும் இந்த ஒள்ளிய ஒல்லியன் ஐசக்நியூட்டன்! இத்தகும் ஒருவனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே உருவம்? என்னே அறிவு! என்றே வியந்து நின்றாரோ? உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து (667) என்றாரோ? 17. பத்தே மாதக் குழந்தை. பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. பரண் மேல் இருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பரணையில் கிடந்த ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார் வீட்டுக்காரர். பக்கத்து வீட்டுச் சிறுவன் கண்ணில், துப்பாக்கி விந்தையாயது. விளையாட்டாக எடுத்தான். தள்ளு குதிரையில் கைவிரல் பட்டது. என்றோ போட்டு வைத்து, எடுக்காதிருந்த குண்டு, வெளிப்பட்டுச் சீறிச் சென்றது. சென்றது, பொம்மைக் குழந்தையின் பிடரியில் பட்டு மூளையுள் புகுந்தது. எண்ணியா எதுவும் நடந்தது? எண்ணி ஏதாவது செய்யாவிட்டால் என்ன ஆவது? v‹d MFnkh? என்று குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு எய்தினர். படங்கள் படங்கள் அத்தனை படங்கள்! ஆய்வு! ஆய்வு! அத்தனை ஆய்வு! எடுக்காவிட்டால் குழந்தை தப்பாது! எடுக்கும் போதே, குழந்தை தப்பாதே! எதுவும் நடக்கும் எந்தப் பொழுதும்! இருக்கும் வகையிலே காப்பதற் கெண்ணலே நல்லது. மருத்துவர் பலர்! அவர் முடிபுகளும் பல. மூன்று நாளாய் ஒரு முடிபும் இல்லை. முற்றிவிட்டால் முடியாது ஒன்றும் - துணிந்தார் ஒருவர். அறுத்து எடுத்து அகற்றுதலே ஆருயிர் காக்கும் வழி என்றார். பலரும், ஆகும் செயலன்று என்றே இறுதி வரை கூறினர். எண்ணிய படியே இனிதில் முடியும்; துணிந்து செய்தலே என் கடன் என்று உறுதியானார் துணிவர். அறுவை நிகழ்ந்தது. மூளைப்பகுதி சிறிதே சிதையினும், கால்கை இயக்கம் இல்லாமல் ஒழியும்; பேசா நிலையும் ஆகும்; குண்டு எடுத்தல் ஒரு பணி; எடுத்தல் முயற்சியால் பின் விளைவு ஏற்படாது காத்தல் பெரும்பணி பற்பல நெருக்கடி ஒரே பொழுதில். அறிவு - தெளிவு - துணிவு! அறுவை இனிதின் நிகழ்ந்தது. எச்சிறு குறையும் இன்றிக் குழந்தை நிலைமை தேறுதல் ஆயது? நம்பிக்கை இல்லா திருந்த மருத்துவர் தாமா. நம்பிக்கை கொண்டு துணையாய் நின்றவர் தாமும் கையில் கருவி கொண்டு துணிந்து கடமை செய்தவர் தாமும் - அனைவரும் வியப்பக் குழந்தை, நலத்தொடு பழைய படியே மழலைத்தேனில் பெற்றோரை நனைத்த பேறு வியப்பின் கொள்ளையாய் அமைந்தது. அந்த மருத்துவப் பெருந்ததை கசேந்திரனார் என்பார் மதுரை வாழ்வினர். ஊழிற் பெருவலியாவுள என்பது நேர்ந்த நேர்ச்சி. ஊழையும் உப்பக்கம் காண்வர் என்பது மருத்துவர் தேர்ச்சி. இத்தகு காட்சியும் நேர்ச்சியும் வள்ளுவக் கிழவர் கண்டாரோ? ஊழின் வெற்றியும் முயற்சியின் வெற்றியும் மோதி முனவர என்னே என்னே என்று திகைப்புற நின்றாரோ? அதனால், ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தாம்முந் துறும் (380) என்றும், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் (620) என்றும் உரைத்தாரோ? செய்தி : தினமலர் 12 - 1 - 92. 18. எழுந்தார் ஒரு பெண்மணி! உறக்க மயக்கம்! சோம்பல் முறிக்கத் தூக்கினார் கைளை; தூக்கிய கைகளுள் ஒன்று இறங்கவே இல்லை! மூட்டு விலகி, உயர்த்திய நிலையிலே இருந்து இறங்குதல் இன்றி நின்றது! ஓ வென இரைந்தார்! மூட்டைச் சேர்க்க முயன்றார் பெரிதும்! கண்ட வலியன்றிக், கொண்டபயன் இல்லை! கதறிக் கதறிக் கண்ணீர் வடித்தார்! கணவர் கலங்கினார்! உதவ ஓடினார்! கையைத் தொடவே விட்டிலர் அவரை! வாராக் கையின் வலியோ உயர்ந்தது! வழி வழியக் கதறினார்! கலங்கிய கணவர் கடிதில் ஓடி, மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். வந்த மருத்துவர் நிலைமையைக் கண்டார்; நிகழ்ந்தது கேட்டார். அவரையும் தீண்ட விட்டார் அல்லர்! தனியறை ஒன்றில் அவரை நிற்க ஏவினார். அவரின் முன்னர், அவர்தம் கணவரை நாற்காலியிட்டு அமரச் செய்தார். கதவை மூடினார். இயல்பாய் இருந்த கையைப் பற்றி, நாடிபார்த்தார். நாடிபார்த்த கையை, நன்றாய் இறுக்கி நழுவாதிருக்க, வைத்துக் கொண்டார் ஒருகையால்! மற்றொரு கையால், சீலையைப் பற்றிச் சட்டென இழுத்தார்! அம்மவோ! என்னே வியப்பு! இறங்காக் கையும் நொடியில் இறங்கி மின்னற் கீற்றாய் வளைந்து இழுபடு சீலையை இறுகப் பற்றிக் கொண்டது! விலகிய மூட்டும் - விலகும் சீலையை விலக விடாமல் பற்றும் விந்தை என்னையோ என்னை! மானக் கொள்கலம் ஈதென உணர்ந்த மருத்துவ மாமணி விந்தை வினைத்திறம் என்னையோ என்னை! இந்த மருத்துவர் அரங்க (ச்சாரியா)ர் என்பார். வள்ளுவக் கிழவர் இப்படித் திறத்தைக் கருத்துக் காட்சியாய்க் கண்டாரோ? என்னே என்னே என்று துடிப்பொடு நின்றாரோ? அதனால், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788) என்றாரோ? 19. செயல்படவில்லை தந்தையின் சிறுநீரகம்; நீரை மாற்றும் மாற்றில், நீடித்தல் இயலாது; மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால் அன்றிப் பிழைத்தற் கியலாது என்றார் மருத்துவர். நான் தருவேன் பொருந்தும என்றால் என்றான் மைந்தன். நானே தருவேன் பொருந்தும் என்றால் என்றாள் நன்மகள். நானும் தரவா மாட்டேன் பொருந்தும் என்றால் - என்றாள் வந்த மருமகள். தாயார் மட்டும் ஒன்றும் சொல்லா திருந்தாள். தாயார் என்ன கவலையற்றுள்ளார் என்றே மூவரும் எண்ணினர். மருத்துவமனையில் அப்பா உழலுதல் அறிந்துமேன் அசையாதுள்ளார்! கல்லா இரும்பா இவர் மனம் - என்றே தமக்குள் எண்ணினர். மகனும் மகளும் மருகியும் மருத்துவ ஆய்வில் புகுந்தனர். எவர்தம் சிறுநீரகமும் பொருந்திய தில்லை! என்ன செய்வர்? அன்னையை எண்ணினர்! அவரோ வாயைத் திறந்திலர். நடப்பது போல நடக்கட்டும்; நானென்ன சொல்வேன்? என்றார் அன்னை! சே சே! அன்னையா இவள்? கொண்ட கணவனுக்கும் உதவாள் மனைவியா? - உள்ளம் வெதும்பினர் மூவரும். நண்பன் ஒருவன் நண்ணினான்; நானென் சிறுநீரகம் பொருந்தின் தருவேன் என்றான். நன்றியென் றழைத்து மருத்துவ ஆய்வுக்குச் சென்றனர். பொருந்தி நின்றது அது பூரிப் படைந்தனர் அனைவரும். பொருந்திய நாளில் பொருத்தி விட்டனர். அதற்கும் கூட அன்னை வந்திலர்! என்ன கொடுமை; இவர்தம் முகத்து விழித்தலும் இழிவே என்று வெறுத்தனர். செய்தி வந்தது வீட்டுக்கு அருகே வாழ்பவர் வழியே! அம்மா இறந்து போனார் தந்தைக்குச் சொல்லாமல் மக்களும் மருகியும் வீட்டுக கோடினர். என்ன செய்வது? அடக்கம் செய்தனர்! அடக்கம் செய்த பின்னரும் அகத்தே வெப்பம் இருக்கவே செய்தது? இந்த அன்னை இரக்கம் இல்லாதவள்! தந்தைக் கிதனை எப்படி உரைப்து? எத்தனை நாள் தான் மறைப்பது? மருத்துவர் குறித்த பொழுதில், நிகழ்ந்ததைத் தந்தைக்கு உரைத்தனர். உரைத்த அளவொடும் நிறுத்தினர் அல்லர். உளத்தின் கொதிப்பையும் கூடவே உரைத்தனர்! தந்தை விம்மினார்! கண்ணீர் வடித்தார்! தாயைப் பழியீர்! தாயைப் பழியீர்! தவறே அறியாத் தெய்வம் அவளே! பழியேன் பட்ட கடனைத் தீர்க்க வழியற்று நின்றேன். குடற் புண்ணுக்கு அறுவை செய்யும் நெருக்கடி நிலையை, நேர்ந்த நலமாய்ப் பயன்படுத்திக்கொண்டு, அவளே அறியா வகையில் சிறுநீரகத்தை எடுத்து இலக்கமாக்கி, இழிவைத் தீர்த்த இழிஞன் யானே! இதனை வெளிப்படச் சொன்னால், என் பழிச் செயல் பளிச்சிடுமெனக் காத்த கற்பினள் அன்னாள்! மருத்துவ ஆய்வுக்கு அவளிங் கெய்தின் மறைத்தது வெளிப்பாடாமே! மணந்தவன் மானம் அழிந்துபோமே! என்பதால் ஒடுக்கி ஒடுக்கி ஒடுங்கியே போனாள்! என் புகழ் காக்கத் தன்னையே ஒடுக்கிய உயர்ந்தவள் அவளை, ஒரு பழி சொல்லேல் என்றார் உணர்ந்த தந்தை! என்னே எங்கள் சிறுமை; உருகும் தாயைப் பெருகப் பழித்தோமே! என்றே உருகினர். இத்தகு தெய்வத் துணையின் குடிப்புகழ் காக்கும் மாட்சியை வள்ளுவக்கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், தற்காத்துக் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56) என்றாரோ? 2 - 1 - 92 குமுதம் ; அம்மாவா இவள்! சே! எத்தனை பெரிய கல்நெஞ்சக்காரி (சரோசு) என்பதன் கருத்தைக்கொண்டது. 20. ஆற்று மணலில் வண்டி ஓடுமா? கடற்கரை ஓரம் பரவிக் குவிந்த மணல் வெளியிலே மிதிவண்டி ஓட்ட இயலுமா? பாலைவனத்தின் மணற்பெரும் பரப்பில் ஒருவர் இருவர் அல்லர் அறுவர் துள்ளுந்து ஓட்டிக் கடந்து வென்றுளர்! பாலைவனம் என்ன சிறிய பாலைவனமா? உலகப் பெரும் பாலைவனம் - ஆம்! சகாராப் பாலைவனம்? ஒருகல் தொலைவா - இருகல் தொலைவா? 6000 கல் தொலைவு. மொராக்கோ, அல்சீரியா, நைகர், நைசீரியா ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய பகுதியைக் கடக்க வேண்டும். பகலிலே கடுவெயில்! இரவிலே கடுங்குளிர்! ஒன்றற் கொன்று நேர் எதிரிடை! கொள்ளைக் கூட்டம் சூழ்ந்து வளைத்துச் சூறையிட்டதும் உண்டு. செல்லும் வழி தவறிச் சென்ற நிலையும் உண்டு. சொல்லி வழிகாட்டும் ஆளும் இல்லா அயர்வும் உண்டு! மொழியோ பிரெஞ்சு மட்டுமே ஆங்கு வழங்கு மொழி! நல்லவேளை பிரெஞ்சு மொழி அறிந்தார் ஒருவர் இருந்தார். வண்டி பழுதாதலுக்குக் கேட்க வேண்டுமா? அதனைச் சீர் செய்ய வல்லார், ஒருவரும் இடம் பெற்றிருந்தார். 1991 திசம்பர் 19-இல் புறப்பட்ட செலவு 1992 சனவரி 9-இல் நிறைந்தது. கலந்து கொண்டோர் இந்திய வான்படை அலுவலர் கோ கா ராகுல்ராவ்; ரோலண்டு திசவுசா; நெவிலி தருகன் வாலா, சி.கே. சின்னப்பா, திலீப்ராம், பரூக்சைக் என்பார் அவர்கள் அனைவரும் இந்திய நாட்டினர். பனிமலை ஏற்றம் அரும்பெரும் முயற்சி என்றால் பாலைவனச் செலவும் அத்தகு முயற்சியே யன்றோ! அயரா முயற்சியால் அரும்பாலை கடந்து வாகை சூடிய இத்தகு வீரரரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து வாழ்த்தி நின்றாரோ? அதனால், அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (611) என்றாரோ? செய்தி: தினகரன் : 12 - 2- 92 21. காவல் துறையின் உளவுப் பிரிவில் கடமை; கன்னித் தமிழ்த் தொண்டில் ஈடுபாடு; கடமையும் தொண்டும் தொடர்ந்தன; பின்னர்த் தொண்டே கடமையாயிற்று. ஆங்கிலர் இயற்றிய மருத்துவ நூல்களை ஆய்ந்தார். மருத்துவ அகர முதலிகளையும் ஆய்ந்தார். தமிழுக்கும் அவ்வாறு அகர முதலி தொகுக்க முனைந்தார். வேதியியலும் செடிகொடி இயலும் மருத்துவ இயலும் அரிதில் அரிதாய் ஆய்ந்தார். அகர முறையில் சொற்களை அடைவு செய்து தமிழ் ஆங்கில இருமொழி அகரமுதலி அமைத்தார். அ-ஔ ஒரு தொகுதி. க-கௌ-ஒரு தொகுதி. பக்க அளவோ 1752. அச்சிடத் தொகையோ இல்லை. அச்சிடாதிருக்க மனமோ இல்லை. என் செய்வார்? தமக்கென இருந்த நன்செய் இரண்டு வேலி! இரண்டு வேலியும் விற்றார்! அச்த வேலையைத் தொடர்ந்தார். அதுவும் போதாமை என்றால், என்னே செய்வது? சென்னை அரசு உதவ வந்தது. இருந்து பணிசெய்ய இல்லமும் உதவியும் செய்தது. மூன்றாம் தொகுதி மும்முரமாக வேலை நடந்தது. அச்சும் நடந்தது. முடியுமுன்னே முடிந்து போனார்! உதவிய அரசு ஒதுங்கிக் கொள்ளுமா! அச்சிட்ட படிவமெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளிப்பெட்டியில் அடங்கி ஓர் அறையில் கிடந்தன. அரசு மறந்தது; ஆரும் நினைத்திலர்; நினைக்க ஒருவர் வாய்த்தார்; முயன்றார்; கண்டார்; கண்ணீர் வழியக் கரைந்தார். அந்தோ! தூசு தும்பு, ஒட்டடை பாச்சை பூச்சி அப்பிக்கிடந்தன! அரித்தும் அழிந்தும் போனவை மிகப்பல. எஞ்சிய பகுதி திருமுறை கண்ட காட்சி போல் தெரிந்தது. தட்டிக் கொட்டி எடுத்துப்பார்த்திட, மூன்று தொகுதிகள் 2174 பக்கம் ; சில நூல்கள் கிட்டின! அகராதி மணக்கச் சந்தனக் கட்டையாய்த் தம்மை அரைத்துக் கொண்டவர் தி.வி. சாம்பசிவனார் அவரூர் அறியச் சான்றெதும் இல்லை! ஆனால் தி.வி. அண்ணாமலை என்பார் சான்றிதழ் ஒன்று ஆங்குக் கிடைத்தது. தி. வி ஒன்று படல் உரிமை சொன்னது. தஞ்சை, அம்மாப்பேட்டை அவரூர் எனக் காட்டி நின்றது சான்றிதழ்! திருமுறை கண்ட சோழன் போலத் தேடிக்கண்ட திருவினர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ. சுப்பையா! அவர் தம் தேடல்தானே, சாம்பசிவனார் ஒப்புரவாண்மை தமிழுலகு அறியத் தந்தது! சாம்பசிவனார் போல, வாழ்வுத்துணையாய் இருந்த வயலை விற்றும், தாய்த்தமிழ்த் தொண்டுக்குதவிய ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே பெருந்தகை! என்னே பெருந்தகை? என்றே வியந்து நின்றாரோ? அதனால், இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கூடனறி காட்சி யவர் (218) என்றாரோ? 22. சீற்ற மிக்கு வந்தார் ஒருவர் கம்பளி ஆடைக் கடைக்குள் புகுந்தார். கடனெதும் தரவேண்டியில்லை. கடனுளதாகக் கடிதம் வந்தது என்றார். பொறுமையாகக் கேட்டார் உரிமையர். மறுத்துப் பேசத்துடித்தும், அடக்கி யிருந்தார். சொல்வதை எல்லாம் சொல்லித் தீர்த்தார் வந்தவர். தேடிவந்தமை எம்பேறு; சொல்வதில் தங்களுக்குள்ள ஆர்வத்தினும் கேட்கும் ஆர்வம் மிக்குளேன் என்றார். கடன் தரவேண்டும் என்பதைத் திட்டமாக அறிந்தும் அழுத்தினார் அல்லர் எங்களுக்குப் பலர் கணக்கு; தங்களுக்குத் தங்கள் கணக்கே. ஆதலால் தாங்கள் சொல்வதே சரியாய் இருக்கும் என்றார். ஆயினும், உங்கள் கடையில் ஒன்றும் வாங்கேன் என்று பொரிந்தார் வந்தவர். இன்ன இன்ன கடைகளில் தரமாய்ப் பொருள்கள் கிடைக்கும் என்று பட்டியல் தந்தார் கடை உரிமையர். அமைதியானார் வந்தவர். விருந்துணலாமே என்று விரும்பி அழைத்தார் உரிமையர். ஏற்றுக்கொண்டு விருந்தும் உண்டார். திரும்பும் போது எண்ணியதன் மேலும் பெரும் பொருட் கட்டளை தந்தார். மறுநாள் கணக்குக் குறிப்பைப் புரட்டிப் பார்க்கக் கடன் தொகை கணக்கும் இருந்தது. விதிர்விதிர்த்துப் போனார். விடாப்பிடியாகத் தரவேண்டியதில்லை என்று தாம் மறுத்ததையும், அவர் அதனை ஏற்று மதித்துப் போற்றிய உயர்வையும் நினைத்தார் சினத்தர். கடனை உடனே அனுப்பி, நிகழ்ந்ததற்கு இரங்கி எழுதினார். வணிக வாடிக்கை அன்பு நண்பாய்ச் சிறந்தது. தமக்குப் பிறந்த குழந்தைக்குக் கடையின் உரிமையாளர் பெயரைச் சூட்டிப் பெரிது போற்றினார். வாணாள் அளவும் வாடிக்கை விடாத தொடர்பினர் ஆனார். கடையின் உரிமையர் கடுத்தோ கடித்தோ மறுத்தோ மாற்றியோ பேசியிருப்பின் எதிர் எதிர் நின்றார் இணைவுறும் நன்மை எய்தி இருக்குமோ? கடையின் உரிமையர் டெட்மார். கடனை மறுத்தவர் அவர் தாம் வாடிக்கையாளரானாரே! அவர் பெயரை உரிமையாளர் உலகறியச் சொல்லுதல் ஆவரோ? இத்தகு சீறாச் சீர்த்தியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ? அதனால், உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (309) என்றாரோ? வாழ்க்கையில் வெற்றி : பக் 165 - 166. 23. உருக்குத் தொழிலில் இருவர் இருந்தனர். இருவருக்குள்ளும் கடிய போட்டி; ஒருவருக் கொருவர் குறையா அளவில் இழப்பு; போட்டி வணிகம், மூடும் அளவில் ழுட்டுற்று நின்றது. ஒருவர் எண்ணினார். இழப்பை ஒழிக்கவும், முட்டுற்று நிற்பதை முடுக்கிவிடவும் வழிவகை காண்பேன் எதிராய் இருந்தவர். எதிர்பாரா நிலையில் எதிரே நின்றார். நமது போட்டியால் நம்மிருவர்க்குமே இழப்பு! நாமிருபேரும் இணைந்து செய்யின் என்ன? என்றார். இணைந்து செய்யின், அதற்கு எப்பெயர் இடுவது? எப்பெயர் இடுவது என்பது என்ன? தங்கள் குழும்புப் பெயரே பெயர் என்றார். அப்படியானால் பேசலாமே என்றார்! இருவரும்பேசி இணைந்து நடத்தினர். இழப்பு மாறி வருவாய் பெருவாய் ஆயது! கோடி கோடி தாலர் தேடிக் கொள்ளை கொள்ளையாய்க் குவித்தனர். தம்பெருமை கருதாது, தம்பெயர் கருதாது விட்டுக் கொடுத்து வீழ்ச்சியை எழுச்சியாய் ஆக்கியவர். ஆண்டுரூ கார்னீசி! அதற்கு ஒத்துப் போனவர் புல்மென் என்பார்! அமெரிக்க நாட்டின் தொழில் தோன்றல்கள் இவர்கள்! கார்னீசி போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? அரும்பெரும் தகைமை ஈதென வியந்து நின்றாரோ? அதனால், கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (867) என்றாரோ? வாழ்க்கையில் வெற்றி பக். 160 - 61. 24. காட்டு வழியிலோர் வீடு. ஆம், ஒற்றை வீடு! கணவன் மனைவி கைக்குழந்தை என்னும் மூவர் குடும்பம். கணவன் வெளியூர் போனமை அறிந்தான், ஒரு கள்வன். மூவரைத் துணையாய்க் கூட்டி வெவ்வேறிடங்களில் திருடி அங்கே வந்தான். தட்டினான் கதவை. திறந்தாள் ; பார்த்தாள் ; திடுக்கென்றாயது. பசியாய் இருக்கிறது ; ஆக்கு சோறு என்றனர். ஆக்காதிருக்க ஆகுமா? ஒரு பெண்; நான்கு முரடர். ஆக்கினாள் ; படைத்தாள்! தொட்டிலில் குழந்தை! கட்டிலில் திருடர் கருத்து! தொட்டில் குழந்தையின் தொடையில் கிள்ளினாள். வீர் வீர் என்றே இரைந்தது. இரைச்சல் பொறாமல் அமர்த்து குழந்தையை என்றான். அவருளும் இருந்த ஓர் இளகன். மேலும் கிள்ளினாள்! வீர் வீர் வீர் வீர் கத்திக் தொலைக்கிறது ; வெளியே போ என்றனர்! வெளியே வந்தவள், மண்ணெண்ணெய்ப் புட்டியும், தீப்பெட்டியுமாக வந்தாள்! கதவைப் பூட்டினாள்! தெளித்தாள் எண்ணெய்! உரசினாள் குச்சியை! கூரை பற்றி எரிந்தது! ஓட்டம் பிடித்தாள் காட்டு வழியில்! அடுத்துள் ஊரை நெருங்கினாள்; காவல் நிலையம் கடிதில் புகுந்தாள்! நிகழ்ந்ததை உரைத்தாள் காவல் படைஞர் சூழுமுன், சூழ்ந்த எரியில் கரிந்தே போயினர்! பெண்மையின் வீறு ஊரூர்க்கும் பேச்சாய்க் கிடந்தது! தன்னந் தனிமையில் தன்னை இழக்கத் துணியாத் துணிவு என்னே துணிவு! ஒருத்தியின் உள்ள உறுதி, கொள்ளைப் பகையை ஒழித்தே விட்டது! இத்தகு துணிவுக் காட்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்துபோய் நின்றாரோ? உடைய ரெனப்படுவது ஊக்கம் ; அஃதிலார் உடையது உடையரோ மற்று? (591) என்றாரோ! திருவில்லிபுத்தூர்ப்பக்கல் நிகழ்ந்த நிகழ்ச்சி ஈது. 25. மாடு பிடிக்கத் தரகனை நாடிச் சென்றான் ஒருவன். தரகன் வீடு, தனியொடு வீடு. தோட்டத்தின் ஊடே இருந்தது அது. மாடு பிடிக்க வந்தவன் மடியில் பணத்தொடு வந்தான். பெட்டியில் வைக்க நம்பித் தந்தான் முன்னும் பின்னும் மாடு பிடிக்கக் கொடுக்கத் தொடர்பு! தொடர்பு கருதிவந்தான், தொல்லையையா கருதுவான்? வீட்டுக்காரன் உள்ளம் தரசின் அளவில் அமைய வில்லை! தந்த தொகையெலாம் தனக்கே கொள் நினைத்தான். காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பேசினான். விருந்து சிறப்பாய்ச் செய்தான். கட்டில் போட்டுப் படுக்கவும் வைத்தான். வெளியே போவது போலப் போனான். போவது சொல்லாமல் போதலை நினைத்துக் கட்டிலில் கிடந்தவன், கண்ணுறங்கா திருந்தான். சென்ற சிறிது பொழுதில் சிலரொடு வந்தான் தரகன். வாயிலுக்கு முன்னே நின்று, கட்டிலைக் காட்டிக் கடிதில் மறைந்தான். வந்தவர் கையில் மண்வெட்டி - அரிவாள் - கோடரி - கூடை. படுத்துக் கிடந்தவன் பார்வையில் ஆள்கள் மறைந்ததும் மெல்லெனக் கிளர்ந்து வீட்டு முற்றத்து மரத்தின் மேலே ஏறி மறைந்து கொண்டான். ஆழக்குழியாய் ஆள்கள் தோண்டிக் கொண்டிருந்தனர். வீட்டுத் திண்ணையில் வெறுமையாய்க் கிடந்த கட்டிலில், நேரங் கழித்து வந்த ஒருவன் உறக்க அயர்வில் படுத்தான்; உறங்கிப் போனான். குழியைத் தோண்டியவர் வேலையை முடித்துச் சொன்ன படியே கட்டிலில் கிடந்தவன் கழுத்தை ஒடித்துக் குழிக்குள் வைத்து மூடிப்போயினர்! மரத்தின் மேலே ஏறி இருந்தவன் விடியும் பொழுதுக்கு முன்னே இறங்கி, விரைந்தே ஓடினான். காவல் படையை அழைத்துக் கொண்டு வந்தான். வந்த வணிகனைக் கண்டதும் திகைத்தான் தரகன். செத்தவன் எப்படி வந்தான்? படத்திற்குப் போன மகனேன் இன்னும் வந்திலன்? திகைக்கு முன்னே, வீட்டுக் காவல் ஆயது; தோண்டி மூடிய குழியைத் தோண்டி எடுத்தனர்! படத்திற்குப் போனவன், கிடைத்தான் அங்கே? நினைத்தது என்ன? செய்தது என்ன? நிகழ்ந்தது என்ன? இத்தகு கொடுமைக் கொலைஞனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று நொந்தாரோ? பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (319) என்றாரோ? நிகழ்ந்த நிகழ்வு - செவி வழிச் செய்தி. 26. கொண்டவன் மேலே கொண்டனள் சீற்றம் சீற்றம் பெருகிப் பெருகி வளர்ந்தது. சீரிய வேளை பார்த்து நின்றாள். கடிய உழைப்பும் கொடிய பசியும் கலந்து கொள்ளக், களைப்புடன் வந்தான் கணவன். கால் கை கழுவி, வைத்த உணவை, வயிறார உண்டான். உண்ட மயக்கம், உடனே சாய ஏவிற்று. உறக்கம், உறக்கம் குறட்டை உறக்கம்! உரிய பொழுது ஈதென உணர்ந்தாள், உள்ளே எரிந்து கொண்டிருந்த மனைவி; எடுத்தாள் மண்ணெண்ணெய்; எடுத்தாள் தீப்பெட்டி; கணவன் மேலே பன்னீராகப் பரவத் தெளித்தாள்; குச்சியைக் கொழுத்திக் குறட்டைக்கூடே வைத்தாள்; பற்றிய தீ சுற்றி எரித்தது! எரிந்தவன் முழுதாய்க் கரியுமுன்னே, எழுந்து விட்டான்! கரியாதெழுந்த கணவனைக் கண்டு, உள்ளே கரிந்து போனாள் மனைவி! மருத்துவமனையில் சேர்ந்த கணவன் மனையாள் செய்த செய்கையைப் பொறுத்துக்கொண்டு, மறைத்தே போட்டான்! சமையல் செய்தேன்; எழுந்த தீயால் எண்ணெய் எரிந்து என்னையும் எரித்து இந்நிலை செய்தது என்றான். குற்றம் செய்தாள் இவளெனக் குணத்தால் காட்டிக் கொடாத கணவன், குணத்தை நினைத்து உருகினாள்! குற்ற நெஞ்சம் குத்திக் குத்திக் குமைத்தது. வாழவைக்கும் வஞ்சமிலான் வாழ்வை, அழிக்கத் துணிந்த, என் வாழ்வென்ன வாழ்வோ? இருக்கவோ வேண்டும் இன்னும்? இனியனைப் பார்க்கவோ வேண்டும் இன்னும்? நலமுற்று நண்ணுமுன், நாணப்பிறவியாம் நானிவண் இருக்கமாட்டேன்! அவன் வருமுன்னே, ஆவியை விடுவேன், என்றனள்; எண்ணினாள்; எடுத்தாள் மீண்டும் எண்ணெயை! எடுத்தாள் மீண்டும் தீயை! எண்ணெயில் குளித்து எரியில் குளித்துக் கரிந்தே போனாள்! கணவனா எரித்தான்? காவல் துறையா கொன்றது? ஊரவர்தாமோ ஒழித்தனர்? உயிரோடு ஒழியச் செய்தவர் எவரே? உய்யா தொழியச் செய்தது உள்ளமே யன்றோ! இப்படி ஒரு நிகழ்ச்சியை வள்ளுவர் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று இரங்கி நின்றாரோ? செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும் (313) என்றாரோ? - தினமணி 26 - 12 - 91 செய்தி. 27. கையூட் டொழிப்புக் காவற்படை அதிரடி நடவடிக்கை என்பது செய்தி (தஞ்சை 19 - 4 - 91 தினமலர்) கையூட்டொழிப்புக் காவலர் எவர்மேல் நடவடிக்கை எடுத்தனர்? மதுவொழிப்புக் காவலர் மேல், நடவடிக்கை எடுத்தனர். ஒருவர் இருவர் அல்லர்; நால்வர் கூட்டுக் கொள்ளை; அவர்கள் பெற்ற கையூட்டுத்தொகை இருபத்தேழாயிரம். குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்க உறுதிபூண்டு. அவ்வொழிப்புக் கெனவே சம்பளம் பெற்றுவரும் காவல் கடமையர் இக்கயமையில் இறங்கினர் என்றால் இது வேலியே பயிரை மேய்ந்த விளக்கம் தானே? எதற்காகக் கையூட்டுத் தந்தனர்? மதுவொழிப்பை ஒழிக்க வேண்டும் என்பதற்கு! கண்டும் காணாமல் இருக்கவேண்டும்; காட்டிக் கொடுப்பார் இருப்பினும், அதனைக் காணாமல் காவலாக இருக்க வேண்டும்; கடமையை ஒழித்துக் கயமைக்குத் துணைபோய இவர்கள் செய்துள்ள ஒழிப்பு, ஒன்று மட்டுமா? மதுவொழிப்பை ஒழித்த ஒன்றுதானே வெளிப் படுகின்றது! கடமையில் தவறேன் என்று பணியில் சேரத் தந்த உறுதியை ஒழித்தார். தக்கார் இவரெனத் தேர்ந்தவர் நம்பிக்கையை ஒழித்தார். இவர்தம் வேலையை உறுதிப்படுத்தலாம் என்றவர் எழுத்தை ஒழித்தார். சட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை உருவாக்கி நாட்டு வருவாயை ஒழித்தார். அறத்தையும் ஆக்கத்தையும் ஒழுங்கே யழித்தார். பிடிபட்ட பின்னே, மானம் மதிப்பு மனைவி மக்கள் என்னும் எல்லாவற்றையும் அழித்தாரா இல்லையா இவ் வழிவாளர். இத்தகும் அழிகேடர் செயலை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? இப்படிக் கீழ்மையில் இறங்கினரே என்னே என்னே என்று வருந்தி நின்றாரோ? அதனால், கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் (658) என்றாரோ? 28. வீடு இருந்தது; வீட்டின் உரிமையும் அவர்க்கே இருந்தது. துறவு விருப்பராய்த் துறவு மடம் ஒன்றைச் சார்ந்தார். இருந்த வீட்டை நண்பர் ஒருவர் பொறுப்பில் விடுத்துத் தக்க வகையில் வாடகைக்கு விடுதற்கு ஏற்பாடு செய்தார். மாத வாடகை பேசினார்! வாடகை போல இருபது மடங்கு முன்பணம் வாங்கினார். மேலும் அதைப்போல் இரு மடங்கு பெற்றார்; தாமே தமதாய் எழுதியும் தந்தார். வாடகைக்கு விட்டதோ, முன்பணம் பெற்றதோ மேலும் கொண்டதோ துறவுநண்பர்க்கு உரைத்தார் அல்லர்! அவர்தம் துறவர் அல்லரோ? அவர்க்கேன், இத்தகு தொல்லை! வீட்டைக் கருதித் துறவு சென்றவர் வீட்டைப் பற்றிய செய்தியை அறிவதற்கு ஒருநாள் ஆவலுற்றார். மலையடி நீங்கி மாநகர் உற்றார். வீட்டைப் பார்த்தார்! உள்ளம் வெடித்துப்போனார்! வீடே உருவம் மாறி விளம்பரப் பலகையும் விளக்கும் கொண்டு. வா வென நகைத்தன! செல்வர் ஒருவர் கடையிது வென்னும் செழிப்பும் காட்டின! எதுவும் சொல்லாமல் என்ன நடந்தது? தோலிருக்கச் சுளை விழுங்கியதாகிவிட்டதே! நண்பரைக் காணலாம் என்று போனார்! புதியவர் வந்ததும் புண்பட்டுச் சொன்னதும் ஏமாந்து போனோம் நாமும் என்னும் புளியைக் கரைத்து விட்டது வாடகைக்குக் கொண்ட வாணிகர் தமக்கு! துறவரோடு உறவராகித் தேடிச் சென்றார்! காணவா முடியும்? காணவில்லையே என்று விடவும் முடியுமமா? காசு போயிற்றே! கொஞ்சமா நாற்பதாயிரம் அல்லவோ கையை விட்டுப்போய்விட்டது! காவல்துறைக்குச் சென்று வழக்குப் பதிந்தனர்! மேற் செலவு இன்றி எதுவும் நடக்குமா? இழப்புக்கு மேல் இழப்பே ஆயினும் விடவா முடியும்? ஏமாற்றிய நண்பர் சிறையில் உள்ளார்! வழக்கோ முறைமன்றில் உள்ளது! துறவரும் வணிவரும் என்ன ஆமோ என்னும் சிக்கலில் உள்ளனர்! எத்தகைய நட்பு! ஆ! ஆ! இத்தகு வஞ்ச நட்பையும், அந்நட்பின் கேட்டையும் அன்றே வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே கொடுமை என்றே வருந்தி நின்றாரோ? அதனால், நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்டாள் பவர்க்கு (791) என்றாரோ? (வீடில்லை என்பதற்குத் துன்பத்தில் இருந்து விடுதலை என்னும் பொருள்தானா உண்டு? இந்த நட்பால் வீடும் இல்லை என்பதும் தெளிவாகி விட்டது அல்லவோ!) செய்தி : 12 - 1 - 92 தினமலர். 29. மாட்டு வண்டிக்காரன் ஒருவன். அவனுக்குச் சிறிதே நிலமும் ஒருவீடும். வாடகைக்காக மாட்டுவண்டி யோட்டுவான். நாட்டில் மழையில்லை. காட்டில் விளைவில்லை. வீட்டில் புகையில்லை. தின்னும் வறுமை. வாடகை வேலையும் இல்லை. ஒரு நாள் வாடகை வாய்த்தது. வண்டியோடு போனான்; ஆற்றுப் பாலத்தில் மாடுகள் வெருண்டன; வண்டியும் மாடுமாய் ஆற்றுப் பாலத்தில் இருந்து வீழ்ந்தான். மாடுகள் போயின; வண்டியும் போயது; அரைகுறை உயிராய்க், காலும் கையும் ஒடிந்து தப்பினான். புகையா வீட்டில் ஒரு நாள் புகை! எரிந்தே போனது. எல்லாம் போனது. மனைவி ஒருத்தி. எட்டு வயதில் ஒரு மகன். ஒரு வயதில் ஒரு பிள்ளை. நால்வர் குடும்பத்தில் இவ்வளவு முட்டடி! கணியன் ஒருவனைக் கருதிச் சென்றான். தொட்டது துலங்காது; எடுத்தது விளங்காது; ஏழரை யாண்டுச் சனி; இளைய பிள்ளை பிறந்தான்; இத்தனை யாயது; என்று சாவானோ, அன்றே உனக்கு விடிவு; என்றான் கணியன் வேளைபார்த்தான் வேதனைக்காரன். தாயும் மூத்த பிள்ளையும் இல்லா வேளை. இளைய சேயின் கழுத்தை முறித்தான். செத்தது குழந்தை. தந்தைதான் கொன்றான் என்பதற்குச் சான்று தாயும் மூத்த சேயும். நிகழ்ந்த உண்மையை நிகழ்ந்தவாறே கூறினான் தந்தை. செய்த குற்றவாளி வாணாள் தண்டனை பெற்றான் செய்யத் தூண்டிய குற்றவாளி என்ன ஆனான்? அவனுக்கென்ன, இன்னோர் மூடன் முழுவடிவாகப் புழுவாகத் துடித்து வருவான்! பொய்மூட்டையை அவிழ்த்து விடுவான்! பொழுதும் போகும்! பொருளும் ஆகும்! கண்மூடித் தனத்தை வளர்க்கும் கயவன் குற்றக் கூண்டில் ஏற்றப்படா வரைக்கும், குற்றம் எப்படிக் குறையும்? கற்றவர் என்பார் பெருக்கும் கண்மூடித்தனத்துக்குக் கணக்கு வழக்குண்டா? அதற்குள்ள வரவேற்பென்ன? வாழ்த்தும் என்ன? கண்மூடித்தனத்தை வளர்க்கும் கயவன் உரையை மெய்யாய்க் கொண்டு கயமை புரிந்த இன்னவன் போலும் ஒருவனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே இழிமை! என்னே கொடுமை! என ஏங்கி நின்றாரோ? அதனால், ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு (358) என்றாரோ? சான்று! எனது வாழ்க்கை வரலாறு திரு. பெ. சீனிவாசன் பக்க 321 325 30. 19 வயதுப் பெண். செத்துவிட்டாள் என்று உறுதி செய்து மருத்துவ மனையின் பிணக்கிடங்குள்ளே வைக்கப்பட்டாள். பிணத்தைத்தேடி ஓர் உயிர்ப்பிணம் நடையிட்டது! புத்தம் புதிதாய் வந்து சேர்ந்த அந்தச் செத்த பிணத்தைச் சாவாப்பிணம் தேடிக் கண்டது. நாற்றம் இல்லை; நல்ல தோற்றம்; இனிய உடற்கட்டு; இந்த வாய்ப்பை இழக்கலாமா? என எண்ணியது பிணத்தைக் கண்ட உயிர்ப் பிணம்! பிணத்தை வாகாய் வைத்துப் புணர்ந்தது! புணரும் போதில் விந்தை ஒன்று நிகழ்ந்தது. செத்த பிணத்தின் கண்கள் திறந்தன; கதுமென எழுந்து அலறியடித்து ஓட்டமெடுத்தது சாவாப்பிணம்! விழித்துக் கொண்ட செத்தபிணமும் வெளியே சென்று வீட்டை அடைந்தது. செத்தவள் பிழைத்ததை எண்ணிப் பெற்றவரும் பிறரும்- அப்பிணம் பிழைத்துவந்த பெருமையில்-பிழையைப் பற்றி எண்ணவே இல்லை! பிழைக்கச் செய்த அப்பெருமகன் நன்றே வாழ்கெனத் தன்னை மறந்த குடியில் இருந்த தந்தை வாழ்த்தினான். தாயோ, இன்பக் கண்ணீர் கொட்டினாள் இறந்த மகள் பிழைத்து வந்தாள் அல்லளோ! இந்தச் செய்தி (உ)ருமேனிய நாட்டில் புகாரெட்டு நகரில் நிகழ்ந்ததாம்! முன்னும் இப்படி வெறியால் நிகழ்ந்த கொடுமையை வள்ளுவக் கிழவர் கண்டவர் வழியே கேட்டும் இருப்பாரோ? என்னே கயமை! என்னே கயமை என்று அருவறுத்து நின்றும் இருப்பாரோ? அதனால், பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்றையில் ஏதில் பிணம்தழீஇ யற்று என்றுமிருப்பாரோ? (913) செய்தி 2-2-92 தினமலர். வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் என் வாழ்வில் சிக்கல் இல்லவே இல்லை என்பார் எவரும் உளரா? உளர் எனின், அவர் வாழாதவராகவே இருப்பார் அல்லது இன்னும் பிறவாதவராகவே இருப்பார். வாழ்வார் எவர்க்கும் சிக்கல் என்பது பொது வரவு. கூழுக்கு உப்பில்லை என்பதும் சிக்கல்தான்; பாலுக்கு இனிப்பு இல்லை என்பதும் சிக்கல்தான்.! பஞ்சாடை இல்லை கட்டுதற்கு என்பதும் சிக்கல்தான்; பட்டாடை இல்லை என்பதும் சிக்கல்தான். சிக்கல்களில் ஏற்றத் தாழ்வு இருக்கலாமே அல்லாமல், அவரவர் அளவில் அவை சிக்கல்களே! பிள்ளையே இல்லை என்பது ஒரு சிக்கல் என்றால், பெண்ணே பிறக்கிறது என்பதும், பெண்ணே இல்லை என்பது சிக்கல்கள் இல்லையா? ஆணும் பெண்ணும் உண்டு என்றாலும் ஆகாவளியாய் அலவதப்படுத்தும் பிள்ளைகளைக் கண்டு, இவர்களைப் பெறாமலே இருந்திருந்தால் என்று புலம்பும் பெற்றோர் இலரா? பிள்ளையென்றால் பிள்ளை என்று மகிழ வளர்ந்த பிள்ளைக்கு உரிய வாழ்க்கைத் துணை வாயாமல் போக வாய்த்தும் கொடுமையாய்ப் போகக்-காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் குடும்பம் இல்லையா? பெற்றோர்க்குப் பாரமாக இருக்க மாட்டேன், அவர்களுக்கு என் உழைப்பால் தேடி உதவுவேன் எனச் சொல்லிக் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடும் வறுமை பிள்ளை உண்டு என்றால், உள்ளத்தால் ஒத்துவராமல் இடைவெளி யுண்டாகி விட்ட கோடி வாழ்வன் மகன், வீடே ஒப்பாரி வைக்க நாட்டை விட்டே ஓடிப்போவதில்லையா! சிக்கல் இல்லாத தனி வாழ்வில்லை; குடும்ப வாழ்வில்லை; பொது வாழ்வில்லை! முட்காட்டில் நடந்தால் உடையிலும் உடலிலும் முன்படுதல் எப்படி இயல்போ அப்படி இயல்பானது சிக்கல்! நெடும் பாம்பு வழங்கும் தெரு என்பது குறுந்தொகை. இன்னா தினனில்ஊர் வாழ்தல் என்பது குறள். நூல் நூற்றலிலும், கயிறு திரித்தலிலும், பாவு நெய்தலிலும், தலை கோதலிலும் எவ்வளவு கருத்தாக - பொறுமையாக - ஈடுபாடுவார்க்கும் அவற்றில் சிக்கல் ஏற்படாமலா போகின்றது? அச்சிக்கல்களை அவர்கள் விரைந்தோ சஞ்சலித்தோ சினந்தோ நீக்க நினைத்தால், விளைவு என்ன ஆகும்? சிக்கல் பெருஞ்சிக்கலாய் - தீராச் சிக்கலாய் - அழிவுக்கும் இழப்புக்கும் இடமாகியே முடியும்! அப்படியே, வாழ்வியற் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பொறுமையாய்ச் சிந்தித்து, முனைப்பை அகள்றி, மும்முரமாக எண்ணி, ஆற அமர ஆய்ந்து திட்டமாக - தெளிவாகத் தீர்வு காணமுடியும்! நாம் தாமா உலகின் முதற்பிறப்பு? நம் சிக்கல்தானா உலகின் முதற் சிக்கல்? உலகம் எத்தனை எத்தனை கோடிப் பேர்களைக் கொண்டது! எத்தனை எத்தனை கோடிச் சிக்கல் களைக் கண்டது! அவர்களெல்லாம் சிக்கலுள் சிக்கித் சீரழிந்தோ போய் விட்டனர்? சிக்கலை அவிழ்த்துச் சீர்மையாய் வெற்றி கண்டு அச்சிக்கல்களெல்லாம் மண்டியிட்டுக் கிடக்கப், பலப்பலர் சிக்கல்களையும் தாமே தீர்க்க வல்ல திருத் தோன்றல்களாக எத்தனை பேர் விளங்கியுள்ளனர்? அத்தகைய பெருமக்களுள் உலகுக்கு ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணியாம் ஒருவர் திருவள்ளுவப்பெருந்தகை! வாழ நூல் செய்த வள்ளுவர், வாழ்வாங்கு வாழ வழி காட்டியாகவும் வள்ளுவம் செய்தார். வாழ்வாங்கு வாழ்வார்க்கு உண்டாகும் வாழ்வுச் சிக்கல்களையும் வளமாக எண்ணித் தீர்வுகளும் வழங்கியுள்ளார். அவற்றுள், தனிவாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு; குடும்ப வாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு; பொது வாழ்வுச் சிக்கல் தீர்வு உண்டு. பொருளியல், அரசியல் முதலாம் பிறவியல் தீர்வுகளும் உண்டு. இவற்றுள் முன்னவையாம் மூன்று சிக்கல்களையும் முறையே எடுத்துக் கொண்டு கூறும் மூன்று கட்டுரைப் பொழிவு இச்சுவடியாகும். 1. தனிவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் வள்ளுவ மூல அலகு குடும்பமே. அக்குடும்ப விரியே ஊரும், உலகும். அக்குடும்ப உறுப்புகளுள் ஒன்றே தனி நபர் வாழ்வு. ஒவ்வோர் உறுப்பும் செவ்வைப்பட இயன்று செயல் படாக்கால் ஒரு பொறியோ ஊர்தியோ இயக்கமோ சீர்பட இயங்காமை போலவே, தனி வாழ்வு சீர்படாக்கால் மூல அலகாம் குடும்பமும் சீருறாது. அதன் விரியாம் ஊரும் உலகும் உயர்வெய்தா. ஆகலின், தனிவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் முதற்கண் காணல் இன்றியமையாததாம். தனி வாழ்வு என்பது பால்வேறுபாடு அற்றது; அகவை வேறுபாடு அற்றது; தொழில் துறை வேறுபாடு அற்றது செவ் நிலை அறிவு நிலை ஆகிய வேறுபாடுகளும் அற்றது. அதனதன் தனித் தன்மை குன்றாமல் குறையாமல் தக்காங்கு போற்றிக் கொண்டு குடும்பப் பொதுவுக்கு உறுப்பாகி ஊரும் உலகுமாக ஓங்குதலே குறியாகக் கொள்ளப் பெறுவதாம். ஒவ்வொரு தனிவாழ்வின் கூட்டமைப்பே குடும்ப வாழ்வும், பொது வாழ்வும் என்பது வெளிப்படை. அதனால், தனி வாழ்வின் தொகுதியே அவ்வாழ்வுகளாகவும், அவ்வாழ்வுளின் பகுதியே தனிவாழ்வாகவும் கொடுத்தும் கொண்டு விளங்கும் இணைவு கருதத் தக்கதாம். நீடுவாழ்தல் ஒவ்வொரு தனிவாழ்வும் நெடிது வாழ வேண்டும் என்றும், நோய்நொடி இன்றி வாழ வேண்டும் என்றும், வறுமை வாட்டல் இன்றி வாழவேண்டும் என்றும், புகழ் பெற வாழ வேண்டும் என்றும் எண்ணல் இயற்கை. அவற்றுக்கு ஐயமோ, தடையோ, எதிரிடையோ உண்டாயின் பழிப்பும் புலம்பலுமாக வாழ்வார் மிக்குளர். தாம் விரும்புவதற்கு மாறாகத் தம் வாழ்வியல் அமைதற்கு அடிப்படை என்ன, அச்சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று அமைந்து எண்ணி உறுதியாகச் செயல்பட்டால் எண்ணுவ எல்லாம் எண்ணியபடி எய்தி வெற்றி வாழ்வாக்க முடியும். அதற்கு அறிவறிந்து உடனாகி ஒன்றாகி வழிகாட்டும் ஆசிரியராகத் தெய்வப் புலவர் திகழ்ந்து வருகிறார். வாழத் துடிக்கும் அன்பரே நீவிர் நெடிது வாழலாம்; அதற்குத் தடை எதுவும் இல்லை; தடை என்று ஒன்றுண்டானால் அது வெளியே இருந்து வந்ததோ வருவதோ அன்று; உமக்குள்ளாக இருக்கும்; இருந்து வரும் தடையேயாம். அதனைக் கண்டு கொண்டு நெறிப்படி வாழ்வீரேயானால் நீர் விரும்புவதற்கு மேலாகவும் நெடிய இனிய வாழ்வு கொள்ளலாம் என்கிறார். அதற்கு மூலவழி ஒன்றை முதற்கண் வைக்கிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் என்பது அது (6). மெய் வாய் கண் மூக்கு செவி என்பவை ஐம்பொறிகள்; அவற்றின் வழியாகத் தொடுதல், சுவைத்தல், காணல், முகர்தல், கேட்டல் என்பவை உண்டாகின்றன. இவற்றைப் பக்குவப்படுத்தி வாழும் மெய்யுணர்வாளர் வழியில் நடப்பவர் நெடிய வாழ்வுறுவர் என்பது இப்பாடற் பொருளாகும். அவித்தல் என்பது அழித்தல் அன்று; அவித்தல் பக்குவப் படுத்துதல் என்னும் பொருளது. பச்சையாகத் தின்ன ஆகாத காய்கறி கீரை கிழங்கு ஆகியவற்றை அவித்துப் பக்குவப் படுத்திப் பயன் கொள்வது போன்றது இது. இவ்வாறு பக்குவப் படுத்தும் மெய்யுணர்வாளரால் உலக ஒழுக்கமே உள்ளது என்பதை, சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகையறியான் கட்டே உலக (27) என்று வள்ளுவர் கூறுவார். ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலங்கள் உண்டாகின்றன. ஐம்புலங்களின் வழியாக உண்டாகும் அறிவுகள் ஐவகை அறிவுகள். இவ்வகை அறிவையும் மேலாண்மை செய்யும் மன அறிவாம் ஆறாம் அறிவு அல்லது பகுத்தறிவும் மாந்தருக்கு உள்ளது. அப்பகுத்தறிவு உடையவர் தம் பிறப்புச் சிறப்பை உணர்ந்து கொள்வார் என்றால் மாந்த நிலையில் இருந்து கீழிறங்க மாட்டார். இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பதற்கு இலக்கணமாகப் போட்டி போட்டுக் கொண்டு விலங்கு பறவை புழு பூச்சியென இழிந்த பிறவியாக நிற்க மாட்டார். உணவும் நோயும் புலி புல்லைத் தின்பதில்லை; புல்வாய் எனப்படும் மான் புல்லைத் தின்பதில்லை. அவ்விலங்குகள் தாமும் தத்தமக்கு உரியவை எவை என்பதை வழிவழியாக வருமுறைப்படி உண்டே வாழ்கின்றன. ஆடு மாடுகள் சிலவகை இலை தழை புல் பூண்டுகளைத் தின்பதில்லை. தின்னத் தக்கனவற்றின் ஊடே தின்னத் தகாதது ஒன்று இருப்பினும் அதனை விலக்கியே உண்கின்றன. ஒருவேளை ஆகாத ஒன்று வாய்க்கு மற்றவற்றோடு வந்து விட்ட தெனினும், அதனைத் துப்பி விடவே செய்கின்றன. இயல்பான அவற்றின் உணவு முறை மாந்தர் முறையினும் எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது! நோயுற்ற விலங்கு வாயசைவு போடுவதையும் தவிர்க்கிறதே! நீர்க் குடியையும் கூட விலக்கி விடுகிறதே! ஆனால் மாந்தர் இயல்பு எப்படியுள்ளது? சுவைமிக்க உணவு வாய்த்து விட்டால் என்ன, அந்த ஒரு வேளை உணவே வாழ்வுக்குப் போதுமானதாகி விடுமா? ஆண்டளவுக்கும் வேண்டா என்றாகி விடுமா? மறுவேளை உணவை ஒழிக்க வேனும் அந்த அறுசுவை உணவு உதவுமா? உதவாத அதனை, வயிறு கொள்ளாத அளவு உண்டு, வாராத் துயர்களையெல்லாம் வருவித்துக் கொள்ள வேண்டுமா? உங்கள் உடலுக்கு இன்ன இன்ன உணவுகள் ஆகா! என மருத்துவர் கட்டளையிடுகின்றார். நோயர் அனைவரும் ஏற்கின்றனரா? மருத்துவர் சொன்னபடியெல்லாம் கட்டுப் பாடாக இருப்பார் உறுதியானவர், உறுதிப் பற்றாளர். அதனால் பற்றியம், என மருத்துவர் கட்டளைக்குப் பெயர் உண்டாயிற்று. பற்றியம் பத்தியமாக இந்நாள் வழங்குகின்றது! உண்ணா நோன்பு, உரையா நோன்பு என்பனவெல்லாம் நோன்பு எனப்படுவானேன்? நோல், நோன், நோன்பு என்பனவெல்லாம் உறுதிப்பாடு என்னும் பொருளன. தன் துயர் தாங்கும் உறுதிப்பாட்டை உற்ற நோய் நோன்றல் என்று கூறும் வள்ளுவம் (261). உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் (160) என்றும் கூறும். உணவு க்கும் உணர்வு க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லமைதியிலே மட்டுமன்று; அதன் தன்மையிலேயும் தொடர்பு உண்டு; சுவைக் கட்டுப்பாடு உடையவர், பிற கட்டுப் பாடுகளின் மூலங்கண்டவர், முறைகண்டவர், முழுமை கொண்டவர். அதனால், பொறி புலன்களின் அடக்கம் விரும்புவார், சுவைக்கட்டுப்பாட்டாளராக - நாக்கட்டுப் பாட்டாளராக இருக்க வேண்டும். யாகாவா ராயினும் நாகாக்க என்பதைச் சொல்லுக்கு மட்டுமல்லாமல் சுவைக்கும் கொள்ளுதல் வேண்டும் அல்லவா! நல்ல நாவன்மையர்; அறிவுக் கூர்ப்பர்; அவர்க்கு இனிப்பு நோய்; உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவர்; அவர் வாய் மைசூர்பாகுவை மென்று கொண்டிருந்தது. அவர் கை ஊசி மருந்தைத் தொடையில் செலுத்திக் கொண்டிருந்தது. ஊசி எதற்காக? என்றேன். இனிப்பு நோய்க்காக! என்றார். திகைப்பும் வியப்பும் அடைந்த யான், நீங்கள் தின்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? என்றேன். பெருகச் சிரித்த அவர், சிரித்துக் கொண்டே, இனிப் பொன்றைக் கண்டு விட்டால் தின்னாமல் இருக்க என்னால் இயலாது என்றார். அவர் வளர்ந்தவர்தாமா - உள்ளத்தால்? வளராக் குழந்தைக்கும் கண்டதையெல்லாம் கைந்நீட்டி எடுத்துத் தின்னும் குழந்தைக்கும் அவர்க்கும் என்ன வேறுபாடு? அப்படிப் பட்டவர்கள், நோயைத் தாமே வருவித்துக் கொண்டு, வந்த பின்னரும் போகவிடாமல் பற்றிக் கொண்டு இருப்பவர்களும் அல்லரோ! வள்ளுவத்தின் ஒன்பதாம் அதிகாரம் விருந்தோம்பல். அதில், இத்தனை வகை விருந்து, இன்னவகை விருந்து, இன்ன பண்டம், இன்னசுவை, விருந்தாக்கும் வகை என்பனவற்றைச் சுட்டிக்காட்டவும் படவில்லை. விருந்து செய்தற் சிறப்பு, செய்வான் இயல்பு, பெறுவான் தகைமை என்பனவே குறிக்கப்படுகின்றன. முகமலர்தலும், இனியவை கூறலும் படைக்கும் உணவினும் சிறந்தது என்பதைக் காட்டுகிறது அது (84, 90). கொலை வேள்வியை ஒழித்து மாந்தருள் தக்கார்க்குச் செய்யும் விருந்தே வேள்வி என்பதையும் கூறுகிறது அது (88). தொண்ணுற்று ஐந்தாம் அதிகாரமாம் மருந்து என்ன சொல்கின்றது? மருந்தென வேண்டா; ஆம் என்கிறது (942). மருந்ததிகாரத்திலே மருந்து வேண்டா என்பது எத்தகைய சுவையான முரண்? உடல்நிலை, செரிமான நிலை, எரிநிலை என்பவற்றைப் போற்றி உண்டால் மருந்து வேண்டிராது; உண்ணும் உணவே ஊட்டதும் மருந்துமாய் அமையும் என்கிறார். ஒவ்வாமை என்பதொன்றும் உடலுக்கு உண்டு. அதனையும் அறிந்து கொண்டால் ஊறுபாடு உண்டாகாது. (945). உணவே குறியாக எவனொருவன் வாழ்வானோ அவன் கிழபேரிரையான். அவனுக்கு நோய் அகலவே அகலாது என்கிறார் (946). ஏழு பாடல்களில் இவற்றைக் கூறுகிறார். இவற்றுள்ளும் ஐந்து பாடல்களில் அற்றது (செரிமானம்) அறிந்து உண்ணுதலையே வலியுறுத்துகிறார். ஏன்? நோய்களுக்கெல்லாம் மூலம் மலச்சிக்கலே என்னும் இற்றை அறிவியல் அறிஞர் கூற்றை எண்ணுதல் வேண்டும்.. எல்லாக் குற்றங்களுக்கும் அடிப்படை பொய்யே எனக் கண்ட காந்தியடிகளார், அதனை மலச்சிக்கலுக்கு ஒப்பிட்டுக் கூறியதையும் எண்ணுதல் வேண்டும். எண்ணின் வள்ளுவ வாழிவியல் சிறப்பு வெளிப்படும். உடல் ஒரு கூடுதான்; அஃது உயிரின் வீடுதான். இவ்வுயிரின் வீட்டுக்கு, யாக்கை காயம் குரம்பை சதுரம் மெய்மேனி புற்கலம் முதலான பெயர்களும் உண்டுதான். இவற்றினும் மேலாக உயிர் நிலை என்றோர் பெயரை வள்ளுவர் வழங்குகிறாரே (80, 255, 290). உயிர்நிலை என்பதன் அருமையை உணராமல் உண்ணும் உணவாலேயே கேடு புரியலாமா? பலருக்கும் பயன்பாடாக - உதவியாக -காப்பாக - இருக்கும் இவ்வுடலைப் போற்றிக் கொள்ளாமையால், பிறருக்குச் சுமையாக - துயரமாக - எரிவாக - ஆக்கி விடலாமா? ஆதலால், நோயின்றி வாழ்வதற்குரிய நோன்புகள் (கடைப்பிடிகள்) எவ்வெவையோ அவற்றையெல்லாம் சிக்கெனப் பற்றிக்கொண்டு சீரான வாழ்வு வாழ்தல் தனக்கும், குடும்பத்துக்கும் உலகுக்கும் ஆக்கமாம். உடற்குறை நாங்களும் மாந்தப் பிறப்பாகத்தானே பிறந்தோம்; உடற் குறையராகப் பிறக்க வேண்டும் என்பது எங்கள் பெற்றோர் விருப்பமா, எங்கள் விருப்பம் இல்லையே! நீங்கள் முந்தைய பிறப்பில் செய்தவினையே இக்குறைப் பிறப்பாக்கியிருக்கிறது என்றும், பெற்றவர் செய்த பாவம் இப்பிள்ளையாய்ப் பிறந்துளது என்றும் ஏசுகின்றனரே! என் செய்வேம் என்று ஏங்குவார் உளர்! அருளற்றோரும் உணர்வற்றோரும் இவ்வாறு பழிப்பதைத் தாங்கமாட்டாத உடற்குறையர் நொந்து நொந்து போதல் கண்கூடு. தம் கண் ஒளி இழந்த போழ்தில் தம் குடும்பத்தவரே போ குருடா என்று பழித்ததை இறையிடம் மன்றாடிக் கேட்டல் சுந்தரர் தேவாரம் கண்டதெனின், பிறர் உடற்குறை உணர்வற்றோரால் எப்படிப் பழிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படை. விழிப்புற்ற தொண்டர்களாலும் தொண்டு நிறுவனங் களாலும் உடற்குறை பழிப்புக்கு உரியதன்று என்று பரப்பப் படுகின்றது. உடற்குறையர்க்குக் களைகண் இல்லங்களும் உருவாக்கப்படுகின்றன. அவரவர்க்குத் தக்க கல்வியும் தொழிற் பயிற்சியும் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. அவ்வுடற் குறையை பயன்படுத்திக் கொண்டு இரப்பைத் தொழிலாகவே உடையவரும் பெருக்கமாகவே இருக்கவும் செய்கின்றனர். உடற்குறை இல்லாதவரையும் வெற்றி கொள்ளத்தக்க விழுமிய முயற்சியாளரும் கண்கூடாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குரல்கொடுத்து மெய்யுரைத்து மேன்மைப்படுத்தியவர் திருவள்ளுவர். பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி (618) என்பது அது. உறுப்புக் குறை எவர்க்கும் பழியுடையது ஆகாது; உறுப்புகள் செவ்வையாக அமைந்திருந்தாலும் அமையாதிருந்தாலும் அறிய வேண்டுவனவற்றையெல்லாம் அறிந்து செய்யத்தக்க முயற்சி களெல்லாம் செய்யாதிருக்கும் பிறப்பே பழிப்பிறப்பு. குறையிலாப் பிறப்பாவது நிறைமுயற்சிப் பிறப்பு என நம்பிக்கை ஊட்டுகிறார். எத்தனை எத்தனை ஆயிரவர் உள்ளங்களைக் கறையானாய் - அரிவாளாய் அரிக்கும் சிக்கலை எளிமையாய் அறுக்கிறாரே வள்ளுவர்! இரட்டையரையோ, அந்தகக் கவிவீரரையோ, மாம்பழக் கவிச் சிங்கரையோ, ஓமரையோ, மில்தனாரையோ, கெலன் கெல்லரையோ, இராமையனாரையோ, ஐயூர் முடவனாரை யோ, பண்டித மணியையோ, மயூரி சுதாசந்திரனையோ இன்ன முயற்சியாளர் பிறரையோ எண்ணுவார் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதை உணர்வார். மூன்றாண்டுகளில் உறுப்புக்குறையில்லார் பெறும் தொழிற் பயிற்சியை ஒன்றரை ஆண்டுகளில் மூங்கையர்க்கு (ஊமையர்க்கு)த் தந்து பேசுவார் பேச்சை ஒடுக்கினாரே தொழில்வல்ல தோன்றல் கோ. துரைசாமியார் (G.D. Naidu) உடற்குறை பிறவிச்சிக்கல் அன்று; வினைச்சிக்கலும் அன்று என்று விடுவிக்கிறாரே வள்ளுவப் பெருந்தகை! எத்தகைய பெரியர் அவர்! புகழாசையர் சிலருக்குப் புகழ் நாட்டம் இருக்கிறது. புகழைத் தேடித் தேடி அலைகின்றனர். தேடுவார்க்கு அரியது புகழ்; தானே உரியாரைத் தேடி வரும் அது; அப்புகழ், தம்மைத் தேடி வரத்தக்க செயல்களைச் செய்தல் கடமையாகவும் அவற்றைச் செய்யாமல், அது கிட்டுமா எனத் தேடித் தேடித் திரிவார் பழிப்புக்கே இடமாகின்றனர். முன்னே புகழ்வது போல் புகழ்ந்தாலும் அடுத்த நொடியிலேயே பின்னே சென்று இகழப்படுபவராகவே உள்ளனர்! அவருக்குப் புகழ் இருக்கிறதே! இவருக்குப் பெருமை இருக்கிறதே; இன்னாருக்குச் சீரும் சிறப்பும் செய்கின்றனரே! என்னை எண்ணிப்பார்ப்பவர் - மதித்துப் போற்றுபவர் - இலரே என்று வெதுப்புபவர் அவ்வெதுப்பே மன நோயராக்கி விடப் புலம்பியும் திட்டியும் மேலும் மேலும் பழிக்கிடமே ஆகின்றனர்! நாளெல்லாம் அமைதியற்று, பிறப்பு பேற்றை இழந்தே போகின்றனர் இத்தகையாரையும் எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். என்னே! ït® ïu§f¤ j¡f Ãiy? என உருகுகின்றார். ஒருசிறிதளவேனும் செவி சாய்த்துக் கேளாரா இவர்? கேட்டு நன்னிலை எய்தாரா இவர்? என இவர்க்காக, அவர் தவிக்கிறார். அதனால், புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன் (237) என்கிறார். உலகத்தில் அழியாத ஒன்றே ஒன்று புகழ்; அதனை இயலாலும் செயலாலும் அறிவாலும் அடைதற்கு, அடைப் பாரில்லா வழியாய்க் கிடக்கவும், அதனைக் கருதாமல் வாளா புகழ் வருமென எண்ணிக்கிடக்கிறாரே இவர்; பழிச் செயல் களையே செய்து பண்பிலியாக வாழும் இவர், பாராட்டை எதிர்பார்த்துக் கிடக்கிறாரே! தம்மைப் பிறர் புறக்கணித்தற்கும் பழித்தற்கும் தம் இயல் செயல்களே காரணம் என்பதை அறியாராய் இகழ்வாரை நோகின்றாரே இவர்! இந்நிலையை மாற்றிப் புகழ்ப்பேறு இல்லாமைக்குத் தாமே காரணம் என்பதை இப்பொழுதறிந்து கொண்டால் கூட எதிர் காலமேனும் புகழுக்குரியதாக இருக்குமே என்றெல்லாம் கரைகிறார். அவர் சிக்கலைத் தீர்த்தற்குரிய சீரிய வழியைச் செப்புப்பட்டமாய்த் தீட்டியும் வைக்கிறார்! உப்புமலை மேல் இருந்து உண்டாலும், அள்ளிப் போட்டுக் கொண்டால் தான் அதன் சுவை வாய்க்கும்! பழிபரப்பர் இனிப் பிறன் பழி கூறுகின்றானே; அவன் பெறுவதும் தான் என்ன? அவன் புகழா பெறுவான். அவன் செயல் என்ன, புகழுக்குரிய செயலா? சேற்றை வாரி இறைப்பவன் சேறுபடவே செய்வான்! சந்தனக் குழம்பை வாரி இறைப்பவன் அச்சந்தன நறுமணத்தையே பெறுவான்! பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் (186) என்கிறார். ஒருவனை எவன் பழிக்கத் தொடங்குகிறானோ, அவன் தன் பழியைப் பிறர் தேர்ந்து தேர்ந்து கூறுமாறு அப்பொழுதே தூண்டுகிறான் என்பது தெளிந்த செய்தியாம். பழிக்குப் பழி கூடுமா? குறையுமா? திறன் தெரிந்து கூறப்படும். என்கிறாரே! பெரிய பெரிய பழிகளெல்லாம் தெரிந்து தெரிந்து கூறப்படும் என்று எச்சரிக்கிறாரே! இவ் வெச்சரிக்கைஇருபால் சிக்கல் தீர்ப்பாரே அல்லவோ சேர்ந்தாரைக் கொல்லி ஆறுவது சினம் என்றார் ஔவையார். சிறிதளவே உண்டாகும் மனவெப்பே சினம் (சின்+அம்). அதுவும் ஆறுதல் - ஏறுமுகமாகாமல் இறங்கு முகமாதல் - வேண்டும் என்கிறார். ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் என்னும் அருணகிரியர் வேண்டலுக்குத் தலைகளை எண்ணினரே அன்றி, அமைந்த முகத்தை எண்ணிப் பார்த்தனர் அல்லர் அது தணிகை என்னும் இடப் பெயரும் இயல்புப் பெயரும் இணைந்த பெயர் என்பதயும் எண்ணினர் அல்லர். சிலர் எதற்கும் எளிமையாகச் சினம் கொண்டு விடுகின்றனர். மிக எளிய ஒன்றையும் பெரிதாக எடுத்துக் கொண்டு வெட வெடத்தும் படபடத்தும் பேசுகின்றனர். கைந் நீட்டலும் கூடச் செய்து விடுகின்றனர். பின்னர் தேனை எண்ணிப் பார்த்து வருந்தவும் செய்கின்றனர். அச்சினத்தால் தாமும் வாரிக்கட்டிக் கொள்ளவும் செய்கின்றனர். சிலர் முன் சினத்தை, தம் அறியார் தனத்தால் பெருமையாகவும் கருதிக் கொள்வார் போலும்! தம் தவற்றை அறிந்தும் மீளவும் மீளவும் அதனை செய்வர் எனின், அதில் பெருமை காண்கின்றனர் என்று தானே கருதவேண்டும்! சிடு சிடுச் சினம் அடக்கமில்லாமைக்கும், வலிமை இல்லா மைக்கும் சான்று. நரம்புத் தளர்ச்சிக்கும் நாடித் துடிப்புக்கும் சான்று. என்ன சொல்கிறோம்; என்ன செய்கிறோம் என்று அறியாமல் செயல்படும் கொடுமையை ஒருவர் வைத்துக் கொண்டிருந்தால் அவர் எப்படிப் பாராட்டும் தன்மையர் ஆவர். பாராட்டும் தன்மைகள் அவரிடத்து இருப்பினும் அவற்றையும் பாழாக்கி விடுமே இச்சிறு சினம்! கருத்துப் பிழைகளைக் கண்ட போதெல்லாம் சினம் கொண்ட சீத்தலைச் சாத்தனார் தம் தலையில் எழுத்தாணி யாலே குத்திக் கொண்டார் என ஒரு கதை வழங்குகின்றதே! அது தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு என்னும் வள்ளுவமாலை கொண்டு புனைந்த புனைவு. சீத்தலை என்பதோர் ஊர். அவ்வூரினர் சாத்தனார். ஆகலின் சீத்தலை சாத்தனார் ஆனால். அவரைச் சீழ்த்தலையர் ஆக்கிச் சினத்தரும் ஆக்கிய புனைவு இது. கெய்சர் என்பான் ஒரு வேந்தன். அவனுக்குச் சினம் வந்தால் தன் காதைத் தானே திருகிக்கொள்வான் என்பது வரலாறு. என்னால் சினத்தை அடக்க முடியவில்லையே! அடக்கத் தான் நான் நினைக்கிறேன், முடியவில்லை என்பார். அச்சிக் கலைத் தீர்த்துக் கொள்ள வள்ளுவப் பேராசான் நல்வழி காட்டுகிறார். சினத்திற்கு ஒரு பட்டப் பெயர் சூட்டுகிறார் வள்ளுவர். அது சேர்ந்தாரைக் கொல்லி என்பது. சேர்ந்தாரைக் கொல்வது நஞ்சும் தீயுமாம். இவ்விரண்டும் கூட, சேர்ந்தாரை மட்டுமே கொல்லும். சினமாகிய சேர்ந்தாரைக் கொல்லியோ சேர்ந்தாரை மட்டுமின்றி, அவர்க்குப் பாதுகாப்பாக உள்ள இனத்தையும் கொல்லும் என்கிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் (306) என்பது அது. வந்தழிக்கும் பகை உண்டு. ஆனால் தன்னோடு இருந்து கொண்டே தன் நகைப்பையும் உவப்பையும் அழிக்கும் பகை சினமென்னும் பகையாகும் என்றும் கூறுகிறார். நகையும் உவகையும் கொல்லும் சினத்திற் பகையும் உளவொ பிற (304) என்பது அது. மேலும், தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்று மிக எச்சரிப்பூட்டவும் செய்கிறார். இவ்வளவையும் கடந்து சினம் என்னும் எரி குழியில் வீழ்ந்தே தீர்வேன் என்பாரை எவர்தான் காத்துவிடமுடியும்? இது நீர்ச்சுழி; இது உள்வாங்கு அளறு; இது சறுக்குப் பாறை என எச்சரிக்கையும் தடுப்பும் இருப்பினும் வீழ்வேன் என்பாரை எவரே காப்பார்? சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307) என நிலத்தில் அறைந்தும் கல்லில் அறைந்தும் கைதப்ப முடியுமா எனக் கன்னத்தில் அறைவார் போலக் கூறியதை உணர்ந்தால் சினச் சிக்கல் சிறிய சிக்கலாய்த் தீர்வுகாணற் குரியதாகவே அமையும். இன்னாசெயல் சினங்கொண்டார் சொல் இன்சொல்லாகவா இருக்கும்? கடுஞ்சொல்லும் அல்லவோ அவர் உதிர்ப்பவை. அத்தகைய நிலையிலும் அவரை அமைதியுறுத்த ஒரு வழி காண்கிறார் வள்ளுவர். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொ வன்சொல் வழங்கு வது (99) என்கிறார். வன்சொல் கூற வாய்திறக்கும் அன்பனே, நீ இன்சொல் கேட்டது இல்லையா? வன் சொல்லும் கேட்டது இல்லையா? பிறர் சொல்லும் இன்சொல் உன்னை எப்படி இன்பத்தில் ஆழ்த்துகின்றது? பிறர் சொல்லும் வன் சொல் உன்னை எப்படித் துன்பத்தில் ஆழ்த்துகின்றது? இப்படித்தானே நீ சொல்லும் இன்சொல்லும் வன்சொல்லும் பிறர்க்கு இருக்கும். இதனை எண்ணிப் பார்த்தால் வன்சொல் கூற உனக்கு வாய் எழும்புமா? என்கிறார். இன்னாத சொல்லைச் சொல்லும் அளவில் நில்லாமல் இன்னாதவற்றைச் செய்தலுக்கும் முந்துவார் உளரே! அவரை நோக்கி, இதே வாய்பாட்டு முறையில், இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (316) தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (250) என அவன் தன் உள்ளுள் நோக்கி உணரும் வகையில் உரைக்கிறார். மெலியான் ஒருவனைப் பழிக்கவும் அடிக்கவும் ஓடுகின்றாயே நீ, வலியான் ஒருவன் உன்னைப் பழிக்கவும் அடிக்கவும் முந்து நிற்கும் நிலையில் உனக்கு எத்தகைய அச்சமும் நடுக்கமும் அரற்றலும் அல்லலும் தோன்றும்! அந்நிலையை எண்ணிப் பார்த்தால் அதே அடாச் செயலில் நீ இறங்குவாயா என்கிறார். நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்று, நீ எதைச் செய்கிறாயோ அது உனக்கும் வரவே செய்யும் என்றும் கூறுகிறார். நீ ஒழுக்க முடையவன் தானா? அப்படி ஒழுக்க முடையவன் எனின் உன்னால் தீய சொற்களை மறந்தும் கூடச் சொல்ல இயலாதே; நீ சொல்வதை நோக்க ஒழுக்க மில்லாதன் யான் என்று உன்வாயால் பறையறைவது போல் அல்லவோ உள்ளது. நீ ஆயிரம் சொற்களை நயமாகச் சொன்னாலும் தான் என்ன, ஒரோ ஒரு சொல் சொல்லக் கூடாச் சொல்லைச் சொன்னது, அத்தனை நற்சொற்களையும் பாழாக்கி விட்டதே! துளி நஞ்சும் துளி அருவறுப்பும் அனைத்தையும் நஞ்சும் அருவறுப்பும் ஆக்கிவிடுவது இல்லையா? அப்படி அல்லவோ உள்ளது உன் சொல் என உளவியல் தேர்ந்த ஆசிரியப் பெருமகனாராக உரைக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். (139) ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். (128) என்பவை அவை. வாய்மை உள்ளதை உள்ளவாறு கூறலும், நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறலும் வாய்மை எனப்படுகின்றன. இவை வாய்மை தான். ஆனால், இவ்வாறு கூறலால் பிறர்க்குத் தீமை ஏற்படுதாயின் இவை வாய்மை இலக்ணத்தொடு பொருந்தாதன வாம். வாய்மை எனப்படுவது எது என்றால், எந்த ஒரு தீமையும் வாராத சொல்லைச் சொல்வதாம். அவ்விலக்கணத்திற்கு மாறானது வாய்மை ஆகாது. சில வேளைகளில் பிறர் நன்மை குறித்துப் பொய்யுரைக்க வேண்டியும் நேரலாம். அப் பொய்மை தன்னலம் குறியாமல் பிறர் நலம் குறித்துக் கூறப்படுவதெனின் அது வாய்மை எனக் கூடாதது எனினும், வாய்மை இடத்தில் வைக்கத் தக்கதாக அமையும். பிறர் நலம் கருதிய இவ்வாய்மையைப் போலும் நல்லதொன்றை யாம் கண்டடே இல்லை என்கிறார் வள்ளுவர். வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். (291) பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும எனின். (292) யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. என்பவை அவை. உண்மை உயர்ந்ததே எனினும், அதனாலும் பிறர்க்குத் தீமை ஏற்படல் கூடாது என்றும், பொய் தீயதே எனினும் அதனால் நன்மையுண்டாம் இடமும் உண்டு என்றும் இருபாலும் ஏற்படும் உலகியல் சிக்கல்களைத் தீர்க்க வள்ளுவ வாய்மையர் கண்ட வழி ஈதாம். கொலை வெறியனாக வருவான் ஒருவனுக்கு அவன் மகனோ, மனைவியோ மறைந்திருக்கும் இருப்பிடத்தை அறிந்தும் அறியேன் என்றும் அவ்வழிப் போனார் என்றும் வேறு போக்குக் காட்டி, வெறி ஓய்ந்த நிலையில் இடித்துரைத்து அமைதி யுறுத்திச் சேர்பித்தல் குடி நலம் கருதிய தாகலின் அப்பொய்மை பொய்மை ஆகாது; வாய்மை இடத்ததேயாம். எதிர்பாரா விளைவுக்கு ஆட்பட்டான் ஒருவனைப் பற்றிய செய்தியை நோய் வாய்ப்பட்ட அவன் முதியர்க்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்தலும், முதுவராய் நோயராய் இயற்கையுற்றாரை எட்டாத் தொலைவில் கல்வியில் ஈடுபட்டிருப்பானுக்குச் சிறிது காலம் தெரியாமல் மறைத்து வைத்தலும் தன்னலங் கருதியது ஆகாமல் அவர் நலம் கருதிய தாகலின் வாய்மை இடத்ததேயாம். ஓரோ ஒரு மகனை இழந்தாள் ஒருத்தி, உண்ணாது பருகாது பன்னாள் கிடந்து, ஓராற்றான் தேறித் தேறிச் சற்றே உலவித் திரிந்து பின்னர் ஆறிய நிலையில் அவளைக் கண்ட உறவினள் ஒருத்தி, குழந்தையைச் சாகக் கொடுத்தும் குதிர் போல இருக்கிறாள் என்று ஒரு சொல் சொல்ல, அச் சொல்லே கூற்றாய் அவளைப் படுக்கையில் கிடத்தி பாடையிலும் கிடத்தியமை உண்டு. இது வாய்மை எனப்படுமோ? வள்ளுவ வாய்மை, சிக்கல் தீர்வே அன்றிச் சிக்கல் ஆக்குவதன்றாம். அழுக்காறு அழுக்காறு என்பது பொறாமை. அது பொறுமைக்கு எதிரிடைச் சொல் அன்று. பிறர் செய்யும் தீமையையும் தம்மை மீறிய செயல்களையும் பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை. ஆனால் இப்பொறாமையோ பிறர் நலங்கண்டு பொறுத்துக் கொள்ளமாட்டாமல் வெதும்பிக் கொண்டிருக்கும் நிலை யாகும். இங்கே பிறர் தாக்கம் வெதுப்ப வில்லை. பிறர் ஆக்கமே வெதுப்புகின்றதாம். அதனால் அக்கொடுந் தன்மையை அழுக்காறு என ஒரு பாவி. என்கிறார் வள்ளுவர். பிறர் நலங்கண்டு புழுங்கும் அது, தன்னை வெதுப்பி வெதுப்பித் தன்னை அழிக்கும்; தன் ஆக்கத்தை அழிக்கும்; என்றும் நெருப்பிடையில் இருந்தால் போன்ற எரிவை உண்டாக்கிக் கொண்டே இருக்கும் என்கிறார். பொறாமை உடையவனைக் கெடுக்க வேறு பகை எதுவும் வேண்டியது இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அவனை அழிக்கப் போதுமான தாகும் என்றும் கூறுகிறார். அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (168) அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. (165) என்பவை அவை. வள்ளுவரே நீவிர் சொல்வது போலப் பொறாமையாளன் கெட்டுப் போகாமல் செல்வச் செழிப்பனாய் விளங்குகிறானே; நல்லோன் ஒருவன் வறியனாய்த் தொல்லையுறுகின்றானே! ஆங்காங்கு நாங்கள் காணத்தானே செய்கின்றோம் எனின் அவ்வள்ளுவப் பெருந்தகை குறுமுறுவல் காட்டி, அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். (169) என்கிறார். பொறாமையாளன் வளமும், நல்லவன் வறுமையும் மெய்யாக வளமும் வறுமையும் தாமா? நீ நினைத்துப்பார்! உனக்கு உண்மை புலப்படும் என்று தெரிவிக்கிறார். பொறாமையாளன் தான் எவ்வளவு செல்வம் பெற்றிருப் பினும் தான் செல்வன் என நிறைவு கொள்கின்றானா? அவன், தன் செல்வம் போதாது போதாது என்று ஆசைப் பேயாய்த் திரியத்தானே செய்கின்றான்! நல்லவன் தான் கொண்ட வறுமையை வறுமை என்றா கருதுகின்றான்? அவன், தன்னினும் வாய்ப்புக் குறைந்தவர்களை எண்ணி, அவர்களிலும் தான் எவ்வளவோ நலமாக இருப்பதாக அமைதி கொள்கின்றானே! இவற்றை எண்ணினால் பொறாமையாளன் செல்வம் செல்வமா? நல்லவன் வறுமை வறுமையா? எனத் தெளிவு படுத்துகிறார். களவு களவு என்பது காரறிவாண்மை என்கிறார் வள்ளுவர். அறிவுடையவரும் கூடக் களவில் ஈடுபடுதலைக் கண்டு அவர் அறிவு அறிவுதானா எனக் கருதியவராய் அவரறிவு காரறிவு என்கிறார். காரறிவு என்பது வெள்ளுவாவுக்கு எதிரிடையான காருவாப் போலும் அறிவு. பாழறிவு அது. அறிவின் இயல்பு பிறிதிங்ன நோயைத் தன் நோய் போல் போற்றிக் கொள்ளல் ஆகும். ஆனால் இக்காரறிவோ பிறிதொன்றைத் தேடிப் போய் அது தேடி வைத்ததை எல்லாம் திருடிக் கொண்டு வந்து விடுகின்றது. பொருட்பறிமட்டுமன்றி, உறுப்புப் பறி, மானப்பறி, உயிர்ப்பறி ஆகிய எல்லாமும் கூடச் செய்கின்றது. மருத்துவர் கத்தி, கொலையாளன் கைக் கத்தியாகி விட்டது போல் வாலறிவு காரறிவாகி விட்ட நிலை இது என்கிறார். களவு என்னும் இக்காரறிவு எவர்க்கு உண்டு? அளவோடு வாழ்வு நடத்துவோம் என்பது இல்லா தவர்க்கு உண்டு! களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல். (287) என்பது அது. களவு வழியால் வரும் ஆக்கம் ஆக்கமா? ஆக்கம் கெடுப்பதை ஆக்கமெனக் கொள்வது அறிவா? அளவு கடந்து பெருகுவது போலத் தோற்றந்தந்து இல்லாமல் ஒழிவது அல்லவோ திருட்டுப் பொருள்! முறையாக வரும் பொருளே முறைகேடனிடத்து நில்லாது ஒழிய, முறையற்றவனுக்கு முறைகேடாக வந்த பொருள் தானா நின்று பயன் தரும்? தட்டிப் பறித்த பணம் கொட்டித் தெலைக்கும் வழிகளுக்கே போய், பழிமேல் பழியாய் குற்றத்தின் மேல் குற்றமாய்ப் பெருக்க அல்லவோ செய்யும்? ஒரு நாள் ஓரிடத்துக் களவை மறைத்து விடலாம். களவு செய்த கை சும்மா இராதே! களவு கொண்ட மனம் ஓயவிடாதே! அது களவாளன் கையிலும் காலிலும் விலங்கு பூட்டிக் கடுஞ்சிறைக்கும் கொடுந்தண்டத்துக்கும் ஆட்படுத்தாமல் விடாதே! ஆதலால், களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் (283) என்றும், களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் (284) என்றும் கூறினார். சிவப்பு விளக்குப் போட்டு நிறுத்தி, பச்சை விளக்குப் போட்டுப்போ என வழிப்படுத்தும் காவல் கடமையர் போல வள்ளுவத் தோன்றல் களவுக் கயமையைச் சுட்டிக் காட்டி ஒழுங்கு படுத்துதலை உணர்வார் பிறர் பொருளைக் கவர விரும்புவரா? சொல்லப் பயன்படுவர் சான்றோர் என்று கருதி உரைக்கும் உரையைக் கேளாமல், கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078) என ஆவேன் என்பாரை அழிவு ஆட்கொள்வதை அன்றி அறம் ஆட்கொள்ளுமா? கொலை இயற்கையாகத் தோன்றிய உயிர், இயற்கையாக உடலில் இருந்து விடுபடுதலே நேரியமுறை, தன்னைத் தானே அழிப்பா தாயினும், பிறிதுயிரை அழிப்பதாயினும் முறையன்றாம். ஆக்க முடியாத உயிரைப் போக்குதல் முறைமை என எவரும் கொள்வரா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் அவ்வவரின் உயிரும் அவ்வவற்றின் உயிரும் இனியனவே. அவ்வாறாகவும் அவ்வினிய உயிரைப் போக்குதல் கொடுஞ்செயல் அல்லவோ! அதனால், தன் உயிரை இழக்கின்ற ஒரு நெருக்கடியான நிலையில் கூட, பிறவுயிரைக் கொல்லும் செயலை மேற் கொள்ளல் ஆகாது! தன்னுயிரைக் காக்க வேண்டும் என்று பிறிதொன்றின் இனிய உயிரைக் கொல்லலாமா? என்கிறார். தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (327) பிறிதொருவர் தமக்குத் தீங்கு செய்தார் என்று கறுவிக் கொண்டு அவரைக் கொல்லத் திரிவானுக்குச் சொல்கிறார். அப்பா, உனக்கு ஒருவர் கொடுமை செய்தார் என்றும், அவரைக் கொன்றொழித்தல் வேண்டும் என்றும் முனைப்பாக, உள்ளாயே! அவர் உனக்கு எந்த நாளிலேனும் எந்த அளவிலே னும் நன்மை செய்தவர் இலரா? அவர் செய்த தீமையையே நினைக்கும் நீ அவர் செய்த நன்மை உண்டாயின் அதனை எண்ணிப் பார்த்தல் கடமை அல்லவா! அவர் செய்த பல தீமைகளுக்கு இடையேயும் அவர் ஒருகால் செய்த நன்மை காலத்தினால் செய்ததாகவும், பயன் கருதாமல் செய்ததாகவும் இருந்து உன்வாழ்வுக்கும் உயர்வுக்கும் அடிப்படையாகக் கூட இருந்திருக்கலாமே! அவற்றை ஒருநொடிப் பொழுதளவு எண்ணினால் கூட, உன் கொலை எண்ணம் பொடிப் பொடியாக உதிர்ந்து போகுமே! என்கிறார். கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109) வறுமை இனிச் சிலர் தாம் பெற்ற வறுமையை நினைந்து நினைந்து நைகின்றனர். வறுமையை இன்மை, நல்குரவு, நிரப்பு, துப்புர வின்மை என்னும் நான்கு வகைகளில் ஆள்கிறார் (அதிகாரம், நல்குரவு) வள்ளுவர். இவற்றுள் வறுமையும் இன்மையும் ஒரு பொருளன. நல்குரவு என்பது கொடுக்கப்பட்ட வலிமை என்னும் பொருளது. நிரப்பு என்பது நிரம்பிய நலம் செய்வது என்னும் பொருளது. துப்புரவின்மை என்பது உண்ணுதற்கு வகையில்லா நிலை என்றும் வலிமை குன்று நிலை என்று பொருள் தருவன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவில்கூட கொடிய வறுமையில் கூட நலப்பாடாம் பகுதியும் உண்டு என்பது விளங்கும். நெருப்பினுள் உறங்கினாலும் கூட நிரப்பினுள் கண்ணை மூடுதற்கும் இயலாது என்றும் (1049), நேற்றுக் கொன்று விட்டுச் சென்ற நிரப்பு இன்றும் வருமோ என்றும் (1048), வறுமையிற் கொடியது எது என்னின் அவ்வறுமையிற் கொடியது அவ்வறுமையே என்றும் (1041), வறுமைக் கொடுமையை உருகிஉருகிக் கூறுகிறார் வள்ளுவர். வறியவர்க்குக் கொடுக்கும் கொடையே கொடை பிறர்க்குக் கொடுப்பது கைம்மாற்றுப் போல்வதும் உடன் போல்வதும் என்றும் கூறுகிறார் (221). வறியவர் பசித்துயரை அழிபசி என்றும் (226), பசியென்னும் தீப்பிணி என்றும் (227) அவர்க்குத் தருவதே ஈத்துவக்கும் இன்பம் என்றும் (228) கூறுகிறார். பசிக்கொலையால் இறந்துபடாமல் காத்தலை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (332) என மேம்பட்ட கடனாகக் குறிக்கிறார். இக்குறளுக்கு எனவே வாழ்ந்து காட்டிய இலக்கியப் பிறவி வள்ளலார் பெருமான் என்பது நாடறிந்த செய்தி. வறுமைக் கொடுமையை ஒழித்து ஒப்புரவாக்க உரத்த ஒலி எழுப்பும் வள்ளுவர், அவ்வறுமையையும் சுட்டக்காட்டத் தவறவில்லை. வறுமையிலும் நன்மை ஒன்று உண்டு; அஃது யாது எனின்; மெய்யான உறவினர் இவர் என்பதை அளவு செய்து கொள் வதற்கு அவ்வறுமைப் பொழுது உதவுகின்றது என்கிறார். அது கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் (796) என்பதும் செல்வமும் வாய்ப்பும் பதவியும் இருக்கும்போது இருந்து, அவை ஓடும்போது தாமும் ஓடும் இயல்பினரை அப்பொழுரில் தானே கண்டு கொள்ள முடியும்? அந்த வாய்ப்புப் பேறாக வறுமைப் பொழுதினைக் கருதலாமே! என்கிறார். வறுமையிலும் வறுமை உண்டு; அது, செல்வமுடை மையாம். அச் செல்வமுடைமை அறநெறி பே அரசின் கீழ் பெருந்துயர்க்கே இடஞ்செய்வதாய் இருக்கும். இதற்கு வறுமை எவ்வளவோ மேலானது அல்லவா என்கிறார். இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் (558) இன்னும் நல்லவர்கள்பட்ட வறுமையினும் கொடுமை யானது அல்லவர்கள் அடைந்த செல்வம் என்றும் கூறுகிறார். நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கட் பட்ட திரு (408) இன்மையின் இன்மையே இன்னாதது என்றாலும், அதனினும் இன்னதாதும் உண்டு. அஃது என்னவென்றால் அறிவின்மை ஆகும். செல்வம் இல்லாமையை உலகம் இல்லாமையாகக் கொள்ளவும் செய்யாது; வசை கூறவும் செய்யாது. ஆனால் அறிவில்லாமையையே உலகம் வசைகூறும். அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு (841) அறிவின்மைதான் இன்மையே அன்றிப் பிறிதின்மை இன்மை ஆகாது என்ற திருவள்ளுவர், அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430) என்கிறார். ஊக்கமுடைமை அதனினும் ஒருபடி மேலே போய், பொளுடைமை ஆகட்டும், அறிவுடைமை ஆகட்டும் பிறபிற உடைமைகள் ஆகட்டும்; அவையெல்லாம் ஊக்கமுடைமைபோல் ஆகுமா என்கிறார். உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று (591) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (592) ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். (593) என்றெல்லாம் ஊக்கம் என்னும் செல்வத்தை உரைக்கிறார். தேடிய செல்வம் எத்தனை எனினும் இழக்கலாம். தேடிக் கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஊக்கம் என்னும் செல்வம் ஒன்றனை மட்டும் இழந்துவிடுதல் ஆகாது என உரமூட்டுகிறார். யானை எவ்வளவு பெரிய விலங்கு? அவ்வளவு பெரியதா புலி? யானைக்கு இருக்கும் தந்தம் எவ்வளவு வலியது? ஆனால் புலிக்கு அப்படித் தந்தம் உண்டா? பரிய தேக்குத் தடிகளையும் இழுக்கும் வலிமையமைந்த யானை, புலியைப் பார்த்த அளவிலே அஞ்சிப் பின் வாங்குவது ஏன்? ஊக்கத்தைத் தடுத்து நிறுத்த ஒரு தடை உண்டா? இல்லை! என்பதைக் காட்சியாகக் காட்டுகிறார் வள்ளுவர். பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் (599) என்பது அக்காட்சி. இன்பத்தை விரும்பமாட்டான்; துன்பம் வருதல் இயற்கை என்று கொள்வான். இத்தகையனுக்குத் துன்பம் ஒன்றும் உண்டோ? துன்பத்திற்கே துன்பம் ஊட்டவல்ல துணிவினர்க்கு துன்பம் என்பதொன்றும் உண்டோ? அடுக்கடுக்காகத் துன்பம் வந்தால் என்ன, வெள்ளப் பெருக்கே போலத் துன்பம் வந்தால் தான் என்ன, ஊக்கமுடையவனை அவை என்ன செய்ய முடியும்? நீரின் அழம் எவ்வளவு, அவ்வளவு நீளம் உடையது நீர்ப் பூவின் தண்டு. நீரின் அளவுக்கு ஏறி ஏறி உயர்ந்தே நிற்கும் அது. அது போல் ஒருவன் உள்ளத்தின் அளவுக்கே அவன் உயர்வும் அமைந்திருக்கும் என்றெல்லாம் ஊக்கச் சிறப்பைக் கூறும் வள்ளுவர் காளை ஒன்றன் காட்சியைக் காட்டுகிறார். மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624) என்பது அது. வண்டியில் பூட்டப் பட்ட வலிய காளைக்கு மேடென்ன பள்ளமென்ன? மலையடிக் கல்லாஞ்சரளை என்றால் என்ன? தன் காலிலும் வண்டிக் காலிலும் ஏற்றுண்டு துள்ளிச் செல்ல இழுத்துக்கொண்டு போவது இல்லையா? மணலும் சேறும் நீரும் அமைந்த ஓடையிலும் ஆற்றிலும் வண்டிச் சக்கரம் அழுந்தித் தெப்பக் கட்டை அளவுக்கு ஆழ்ந்து சென்றாலும், முன்னங்கால்களை ஊன்றி மண்டியிட்டு, தலையை நிமிர்த்தி, கொம்பை உயர்த்தி, காதை விடைத்து நுகக் கோலை இழுத்து மேடேறும் மாட்டைக் காண்பார்க்கு வாழ்வில் ஏற்படும் தடை எதுவும் தடையாமோ? தடை உண்டு எனின் தடந்தோள் உண்டு என்று வீறு காட்டி வெற்றி கொள்வதன்றோ வாழ்வு? ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடைய நோன்பகடு என்னும், அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டைச் சாகாட்ட டாழ்ச்சி சொல்லிய வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகடு என்றும் வரும் புறநானூற்றுச் செய்திகள் (60; 90) இவண் எண்ணத் தக்கன. இவற்றால் வறுமை முதலாம் தடங்கல்கள் முயற்சியும் ஊக்கமும் உடையவனுக்குத் தடங்கல்கள் ஆகமாட்டா என்றும், அவற்றையெல்லாம் மிதியடியாகக் கொண்டு மேலே ஏறி மலை மேல் சுடரும் கதிரோனாக அவன் திகழ்வான் என்றும் நம்பிக்கையூட்டுகிறார் திருவள்ளுவர். சுடச்சுட ஒளி செய்கிறதே பொன். அச்சுடு அதன் மாசினைப் போக்கி மேலும் ஒளிவிடத்தானே செய்கின்றது. அவ்வாறே ஒருவனை வாட்டும் வறுமை முதலிய துன்பங்கள் எல்லாம் அவனை ஒளிவிடச் செய்வனவே யாம். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (267) பெருமையும் சிறுமையும் பொன்னைத் தேய்த்து மாற்றுக் காண்பதற்கு ஒருகல் உண்டே! அது கட்டளைக் கல் என்பது. அக் கல் தன்னில் தேய்க்கப் பட்ட பொன்னின் மாற்றுகளை உயர்வு தாழ்வு இல்லாமல் உள்ளது உள்ளபடி காட்டும். அதுபோல் ஒருவன் பெருமையும் சிறுமையும் பிறர் சொல்லும் புகழ் பழிகளில் ஆவனவும் நிற்பனவும் அல்ல. அவன் செய்யும் செயல்களா லேயே அமைவன என்று நீயே நின் மதிப்பீட்டாளன் என்கிறார். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (505) பழிப்புரை என்னில் தாழ்ந்தவரும், பண்பு குறைந்தவரும் கூட என்னைக் குறை கூறுகின்றனரே அவர்களுக்கு நான் எவ்வளவு மேம்பட்டவன் என்று குறை சொல்பவரைக் குறைகண்டு வருந்துவார் உளர். அத்தகையவரை நோக்கி, நீ அவன் சொல்லிய குறையையும் அவன் குறையையும் பார்த்துத் தானே இப்படிச் சொல்கிறாய். உன் தகுதி என்ன, உன் செயல் அதற்குத் தக்கது தானா, என்று நீ எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவோ? உன் தகுதிக்கும் செயலுக்கும் உள்ள பொருந்தாமையைக் கண்டு, அவன் உன்னைக் குறை கூறினானே அல்லாமல் உனகும் அவன் மேம்பட்டாளன் என்னும் செருக்கில் கூறினான் அல்லன் என்று கொள்ள வேண்டும் அல்லவோ என்கிறார். எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு (470) கேடு என்னை நன்றாக நோட்ட மிட்டிருக்கிறான்; என் விருப்பு வெறுப்பு சொல் செயல் என்பவற்றையெல்லாம் உள் வைத்து நோக்கியிருக்கிறான்; சரியான வேளை கண்டு என்னை வீழ்த்திவிட்டான்; தலை நிமிரா வகையில் கெடுத்து விட்டான் என்று தன்னிலைக்கு இரங்குவாரைப் பார்த்து காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (440) என ஓர் ஒளி காட்டுகிறார். ஒருவன் தான் விரும்பும் விருப்பத்தைப் பிறர் அறியாமல் துய்த்து நிறைவேற்றிக் கொள்ள வல்லவனாயின் அவனுக்குப் பகையாயவர் வகுக்கும் சூழ்ச்சி எதுவும் வெற்றி பெறாது என்பது இது. இல்லையா? உண்டே! ஊணுக்கும் வழியில்லை உறவுக்கும் வகையில்லை என்று தமக்குள் தாமே நோவாரைக் கண்டு, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு (94) என்று தேற்றுகிறார். எவரிடத்தும் இனிக்க இனிக்க உரையாடுங்கள்; உறவாடுங்கள்; இன்சொல் சொல்லவும் முகம் மலர்ந்து விளங்கவும் என்ன பஞ்சமா? அவற்றைச் செய்தால் உங்களைத் துன்புறுத்தும் பட்டுணி உங்களை அண்டவே அண்டாது என்று வற்றா வளநெறி ஈதென வகுத்துக் காட்டுகிறார். எமக்குத் தாங்குதலாய் இருப்பார் எவரும் இலரே; ஆற்றுவார் தேற்றுவார் இலரே என்று தவிப்பாரை நோக்கி, மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (106) என ஒளி வழி காட்டுகிறார். குற்றமற்ற நல்லவர் நட்பை என்றும் மறவாதீர்; உங்கள் துன்பத்தில் துணையாக நின்றவர்களை என்றும் விட்டு விலகாதீர். இவற்றை நீங்கள் கடைப்பிடியாகக் கொண்டால் அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் மறப்பும் துறப்புமே உங்கள் துயருக்குக் காரணமாக அமைந்தவை எனத் தெளிவுறுத்துகிறார். எவரும் ஏற்பர் எவ்வளவோ சொன்னேன், எப்படி எப்படியெல்லாமோ சொன்னேன்; எவரும் கேட்பாரில்லை என்பவரைப் பார்த்துத் திருவள்ளுவர், தம் பட்டறிவும் பாசமும் கொண்டு கூறுகின்றார்: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) எவரும் கேட்கவில்லை என்கிறாயே! எவரும் என்ன, உலகமே உன் சொல் கேட்கும்; நீ சொல்லும் வகையில் சொல்ல வேண்டும். சொன்னால் கேட்கும் என்றார், சொல்லும் வகை எப்படி? என்பதை அறிந்து கொள்ள விரும்பி ஏறிட்டுப் பார்த்தான் அவன்; வள்ளுவர் கூறினார். சொல்பவன் வேறு கேட்பவன் வேறு என்று இல்லாமல் இருவரும் ஒத்த நிலையராகிய உரிமை கொண்டு விட வேண்டும்; அந்நிலையில் கேட்பதற்கும் இனிமையமைய, இதனைச் சொல்லும் முறை இதுவே எனக் கேட்டவர் வியக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் உடனே சொன்னதை நிறைவேற்றுவார் என்றார். மெய்ப்பொருள் காண் அவனை நம்பினேன்; அவன் சொன்னதையெல்லாம் கேட்டேன்; அதனால் கெட்டேன் என்பான் ஒருவனை நோக்கி, போனது போகட்டும் இப்பொழுதாவது புரிந்து கொண்டாயே; அதுபோதும்; அந்த அளவுக்கு நன்மையே என்று தெளிவித்தார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (433) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (355) என்பவற்றைப் போற்றிக் கொள். வருங்காலத்தேனும் வாயிழந்தும் கையிழந்தும் போக மாட்டாய் என்றார். நல்லதன் தீது நான் காலமெல்லாம் நன்மையே செய்தேன்; எனினும் அதனைப் பொருட்டாக எண்ணாமல் போனது மட்டுமில்லை; எனக்குத் தீமை செய்யவும் என்னைக் குறை கூறவும் வருகின்றானே என்று நைகின்ற ஒருவனை நோக்கி, நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (469) என்றார். நன்மை செய்வதெல்லாம் நன்மையாகி விடாது; அதனை நல்லதெனக் கொள்வார்க்கே நல்லதாம்; பிறர்க்கு அல்லதாம். நீ செய்யும் நன்மைக்கும் தாம் ஒரு கற்பிப்புச் செய்து கொண்டு அது இன்ன உள் நோக்கத்தால் செய்தது என்று இட்டுக் கட்டி இழிவாகப் பேசவும் இடருண்டாக்கவும் முனைவர். ஆதலால் செய்யப்பட்டவர் தன்மையைப் பொறுத்தே நல்லதும் அல்லதும் கொள்ளப்படும் எனத் தெளிந்து தேர்ந்து செய்; இப்பண்பாட்டை இன்னொருகால் அடையமாட்டாய் என்கிறார். காலமும் பயனும் எனக்குப் புரிவு தெரியா நாளில் என் காப்பாளராக அவர் இருந்தார்; எனக்குக் காப்பாளராக இருந்தது போலவே என் உடைமைக்கும் அவரே காப்பாளராக இருந்தார். அக்கால நிலையில் ஓரளவு படிக்கவும் வைத்தார். பின்னே என் கடிய உழைப்பாலும் முயற்சியாலும் வளர்ந்த நிலையில் என் உயர்வெல்லாம் அவராலேயே என்றும், அவர் காலத்தால் செய்த உதவியாலே ஆம் என்றும் கூறி, காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது (102) என்னும் உம் குறளையே எடுத்துக் காட்டுகிறார். என் சிக்கலைத் தீர்க்க என்ன வழி? காலமெல்லாம் அவர் காலத்தால் செய்த நன்றிக்குக் கடன் பட்டவனாகவே வாழ வேண்டுமா? என்று வினாவினான் ஒருவன். வள்ளுவக் கிழவர் மெல்லென நகைத்து, நன்றாக என்னை மடக்குகிறாய்; ஒரு குறளை அவர் எடுத்துக் காட்டினார் என்றால், அவர் காலத்தால் செய்தது உன் நலம் கருதியா? எதிர்காலத் தந்நலம் கருதியா என்று நீ எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவோ! என்றார் வள்ளுவர். ஆம்! அது சரிதான்! ஆனால், உம் குறளைக் காட்டிக் குத்திக் கூறுவதற்கு என் வாக்கால் மறுமொழி சொல்வது என் தீர்வாக இருக்குமேயன்றி நீவிர் தந்த தீர்வாக இராதே! அவரும் ஏற்க, நானும் ஒப்ப, பிறரும் கொள்ள உம் உரையாக இருக்க வேண்டுமே என்றதும், கலகல வெனச் சிரித்தார் வள்ளுவப் பெருமான். அப்பா எட்டப் போகாதே! அடுத்த பக்கம் கூடப் போகாதே! அடுத்த பாட்டிலேயே அச்சிக்கல் தீர்வு இருப்பதைக் காண்பாய் என்றார். ஆம்; அடுத்த குறள், பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது (103) என்றிருந்தது. தமக்கு உண்டாகும் பயனை எண்ணிப் பாராமல் காலத்தால் செய்த உதவியே சாலச் சிறந்தது என உணர்ந்து கொண்டால் சிக்கல் தீர்ந்து போகின்றதே! பகை நட்பு எனக்குப் பகையாக இருந்த ஒருவன், தன் பகையை மாற்றிக் கொண்டு என்னை நெருங்குகிறான். நான் என்ன செய்ய வேண்டும் என்றான் ஒருவன். பூவைச் சுடும் தீயைப் போல உன் மனமலரைச் சுட்ட ஒருவனாக இருந்தால் கூட அவன் அதனை மறந்து மெய்யாகவே நல்லவனாகி உன்னோடு மாசறக் கூடுவானானால் நீ அந்நிலை யில் பழங்குற்றத்தை மறந்து போற்றிக் கொள்ளுதலே அவனைத் திருத்த வாய்த்த நெறியாகும். இல்லாக்கால் அவன் என்றும் தீயனாகவே இருந்து கேடனாகவே ஒழிவான்; அதனால், இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று (308) என்பதைக் கொண்டு நட என்றார். எனினும் தம் சொல்லால் அவன் கெட்டுப் போய்விடவும் கூடாதே என்ற அருள் நோக் கால், அப்பா, அத்தகையவனையும் உடனே நம்பி உயிரன் பனாகக் கொண்டு விடாமல் கொஞ்ச நாள் ஆய்வு நிலையில் வைத்துப் பார்த்தல் நல்லது என்றார். அவன் திகைத்தான். ஆம்! உன் திகைப்பு எனக்குத் தெரிகிறது. அறம் சொல்லும் கிழவர் இப்படியும் சொல்வாரா என்று திகைக்கிறாய்! என் சொல்லைக் கேளாதவனைக் கருதி, என் சொல்லைக் கேட்டு நடக்கும் அவனுக்கு என் சொல்லால் அழிவு நேர்ந்து விடக்கூடாது அல்லவா அதனால், பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் (830) என்பதைப் போற்றிக் கொள்வாயாக என்றார். பருந்து பறந்து வந்து குஞ்சைத் தாக்க வரும் போது கோழி தன் சிறகுகளை அரணாக்கிக் காப்பது போல் காக்கும் வள்ளுவப் பெருமகனார் வாழ்வியல் பார்வையை மெச்சினான். உச்சி குளிர்ந்து உவகை ஊற்றெடுக்கப் பாராட்டினான். உளவரை ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (231) என்பதைச் சிக்கெனக் கொண்டு உள்ளவற்றையெல்லாம் வாரி வழங்கி விட்டேன்; இப்பொழுது எனக்கே பொருட்சிக்கலாகி விட்டது என்றான் ஒருவனை நோக்கி. உன் நிலையறிந்து கொடாமல் உள்ளவையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று நீ கருதியதனால், இப்படி வருந்திக் கூறினை. நீ வருந்திக் கூறுவதை நோக்க நீ செய்தது தவறு என எண்ணிக் கொண்டு சொல்வது புரிகின்றது! அந்த மேதகு நிலை அடைந்தவர், சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (330) என்னும் நிலையை அடைந்தவர்கள். அவர்கள் ஈத்துவக்கும் இன்பமே இன்பமெனக் கொண்டவர்கள். உன்னைப் போன்ற வர்க்கு நான் சொல்ல வேண்டியதைச் சொல்லத் தவறவில்லை. வலியறிதல் என்பதை எடுத்துப்பார்! ஒருமுறை மட்டுமா மும்முறை அடித்துச் சொல்லியுள்ளேன். ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் (479) உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் (480) என்பவற்றில் உள்ள உளவரை அளவறிந்து என்பவற்றைப் பார் என்றார். வழுவாய்க்குக் கழுவாய் செய்யக் கூடாத ஒன்றைச் செய்து விட்டேன்; அது தவறென உணர்கின்றேன்; அதற்குக் கழுவாய் என்ன என்று ஒருவன் கேட்கிறான். சமயத்தார் கூறும் கழுவாய்களைக் கண்டும் கேட்டும் அவ்வழித் தீர்வை நாடினை என்பதை அறிகிறேன். அறிவறி அன்ப, அத்தவற்றை மீண்டும் செய்யாதிருத்தலே அறமுறைக் கழுவாயாகும்; பிறமுறைக் கழுவாயைத் தேடித் திரியாதே என்றார். அது, எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்பது. இல்லையா இல்லை அது இல்லை இது இல்லை என்பது எனக்குத் துயராக உள்ளது. அதனைத் தீர்த்துக் கொள்வது எப்படி என்று தவிக்கிறான் ஒருவன். வள்ளுவரோ அமைந்த முகத்துடன் தேவையைக் பெருக்கிக் கொண்டு அது இல்லை இது இல்லை என இல்லாமைக்கு வருந்துகிறாய். ஆனால் எனக்கு இது கட்டாயம் வேண்டியது இல்லை; இது தேவையே இல்லை என்று ஒவ்வொன்றாக விலக்கிப்பார் அவற்றால் உனக்குத் துன்பம் உண்டாகாது; வேண்டியவற்றுக்கும் வேண்டிய அளவு வாய்ப்புக் கிட்டும் என்கிறார். அது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (341) என்பது. நிறைவு இவ்வாறு தனி வாழ்வில் ஏற்படும் பலப்பல சிக்கல் களுக்கும் அருமருந்தனைய தீர்வுகளை வழங்கிச் செல்கிறார் வள்ளுவர். சுட்டிக் காட்டியவை சிலவே. காட்ட வேண்டிய வையோ பலவாகலாம்! நோக்குவார் நோக்குக்கெல்லாம் இடந்தந்து ஆக்கமாம் வகையில் உதவுவது வள்ளுவம் என்பது இக் குறிப்புகளால் புலப்படும். 2. குடும்பவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் சிற்றூர்களில் தலைக் கட்டு வரி என்றும் குடும்பவரி என்றும் வழங்கும் வழக்குகள் இன்றும் உள்ளன. பொங்கல் விழா, கோயில் விழா, ஊர்ப் பொதுக் கடமை ஆகியவற்றுக்குத் தலைக் கட்டு வரி அல்லது குடும்ப வரி என்று அளவிட்டு வாங்குவர். அத்தலைக் கட்டு அல்லது குடும்ப அளவு, கணவன் மனைவி மக்கள் என்னும் முத்திறத்தர் அமைந்த அளவே ஆகும். மக்கள் இல்லை எனினும் கணவன் மனைவியர் கொண்ட குடும்பமும் ஒரு தலைக் கட்டேயாம். ஆதலால் ஒரு பெருங்கூட்டுக் குடும்பத்தில் மிகப் பலர் இருப்பினும் அவரெல்லாம் ஒரு குடும்பம் எனக் கொள்ளக் பட்டிலர். குடும்பத் தொகுதியே அக் கூட்டுக் குடும்பமாகும். கூட்டுக் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பது அண்மைக் காலம் வரை தமிழகத்தில் நடைமுறைப்பட்டதாகவே இருந்தது. இந்நாளிலும் முற்றாக அவை ஒழிந்து விடவில்லை. இன்றும் முதியோர் தம் குடும்பத் பிரிந்து போதலை விரும்பாதவராக இருத்தலும் காணக் கூடிய செய்தியே. நூற்றுக் கணக்கானோர் உள்ள ஒரு பெருங்குடும்பத்தை அறிவேன். அக்குடும்பத்தவர் சொத்துப் பிரிவினை செய்வது இல்லை. தனியே போக வேண்டும் எனக் கருதினால் போய் விடலாம்; ஆனால் சொத்தில் எப்பங்கும் கொண்டாட முடியாது. மீண்டும் பொதுக் குடும்பத்திற்கு வரவேண்டும் எனினும் தடையின்றி வந்து விடலாம். சமையல் பொதுவாக நடைபெறும். அவரவர்க்கு வேண்டுமளவு சோறு கறி வகைகளை எடுத்துக் கொண்டு போய் அவரவர்க்குள்ள தனி வீட்டில் வைத்து உண்ணலாம். அங்கேயே தங்கிக் கொள்ளலாம். எல்லா வேலைகளும் பொது; எல்லா வருமானங்களும் பொது; எல்லாச் செலவுகளும் பொது; குடும்பத்தில் மூத்தோர் எவரோ அவர் தலைமையில் குடுமபம் நடைபெறும். இத்தகு குடும்பம் கடும்பு என வழங்கப்பட்டது எனச் சங்க இலக்கியங்களின் வழியே அறிய வாய்க்கின்றது. வள்ளுவர் குடும்பம், குடி என்னும் சொற்களை வழங்கியுள்ளார். குடும்பம் என்பது ஒரோ ஓர் இடத்தே தான் ஆளப்பட்டுளது. அது, இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. என்பது. குடும்பத்திற்குக் குற்றம் வராமல் அகற்றுதற்கு முயல்பவன் உடல் துன்பம் என்னும் பொருளுக்கே கொள்கலமாக (இருப்பிடமாக) அமைவதோ? (இல்லை) என்கிறது அது. குடி என்பது குடும்பம் என்னும் பொருளில் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள. அவ்விடங்களுள் ஆன்ற குடி (அகன்ற குடி) என்னும் ஆட்சி மூவிடங்களில் உண்டு. அவை கடும்பு என்பது போலும் கூட்டுக் குடும்பக் குறிப்பு ஆகலாம் (681, 992, 1022). உட்பகை குடும்ப நலங்காத்தலை அழுத்தமாகக் கூற விரும்பும் வள்ளுவர் உட்பகை என்னும் அதிகாரத்தில் அதனை மிக வலியுறுத்துகிறார். நாடு நலம்பெற உட்பகை ஆகாமையே போல, வீடு விளங் கவும் உட்பகை ஆகாது என்பதைப் பல்கால் வற்புறுத்துகிறார். உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும் (885) நெருங்கிய உறவு முறையினால் ஒருவனுக்கு உட்பகை தோன்றினால் அஃது அவனுக்கு இறக்கும் முறையால் துன்பம் பலவற்றைத் தரும். ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது (886) நெருங்கியவர்களிடத்து நெருங்காத உட்பகை உண்டாயின் அழியாதிருத்தல் அமைதல் எப்பொழுதும் இல்லை. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (887) செப்புச் சிமிழும் மூடியும் கூடி ஒன்றே போல் பொருந்தி யிருந்தாலும் ஒன்றாகாது! அது போல் உட்பகை கொண்ட குடியும் ஒன்று போல் பொருந்தியிருந்தாலும் ஒன்றாகாது. அரம் பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி (888) உட்பகை உண்டான குடி அரத்தினால் அராவப்பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும். எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் உட்பகை உள்ளதாம் கேடு (889) எள்ளின் பிளவினை ஒத்த சிறிதளவே பிளவு உடையது எனினும் உட்பகை (ஒரு குடியை) அழித்துவிடும் கேடு உடைதாகும். உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்பொடு உடனுறைந் தற்று (890) உள்ளத்தால் ஒன்றுபடாதவர் ஓரிடத்துக் கூடி வாழும் வாழ்கை, ஒரு சிறு குடிசையில் பாம்புடன் கூடி வாழ்வது போன்றது. முன்னைந்து பாடல்களின் கருத்தின் முடிந்த முதிர்நிலை போல இறுதிப் பாடல் இருத்தல் உடம்பாடு இலாதவர் குடும்ப வாழ்வு இத்தகைத்து எனக் குறித்துக் காட்டுவதாகும். உட்பகைத் தீர்வு உறவு முறைக்குள்ளாக உட்பகை தோன்றின் முழுதழிவே என்றும்; ஒரு குடிப்பிறந்து ஒன்றுபட நிற்கத்தக்கார் ஒன்று படாமல் இருப்பின் பேரழிவை ஏன்றும். வெளிப்பார்வைக்கு ஒன்றே போலத் தெரியும் செப்பும் மூடியும் போலச் செறிவாகத் தோன்றினாலும் பிரிவு பிரிவே என்றும், வலிய இரும்பும் அரத்தால் சிறிது சிறிதாக அராவப்பட்டுத் தேய்த்து இற்று ஒடிந்து போவது போல உட்பகை உள்ள குடியும் அழியும் என்றும். எள்ளின் பிளவே போலச் சிறிய பிளவு உண்டாயினும் குடி அழிந்துபடும் என்றும் உட்பகைக் கேட்டைக் பல்கால் வற்புறுத்திக் கூறிய குடிப்பாங்கு அறிந்தார், உடம்பாடு இலாக் தன்மை கொள்ளார். அப்படிக் கொண்டார் வாழ்வு, எப்பொழுது தீண்டுவார், நச்சைக் கக்குவார் என்பதைத் தெரியாமல் அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வினராகவே வாழ்வர். இவ்வாழ்வர் குடிக்கு நலம் தரும் செயலையோ தொழிலையோ முழுமையாக ஈடுபட்டுச் செய்வாரா? தற்காப்புக்கே காலம் எல்லாம் செலவிடும் வாழ்வர், பிறர் காப்புக்கும் பிறர் நலத்துக்கும் பொதுக் குடும்ப வளர்ச்சிக்கும் பாடுபடுவரா? ஒருவர் நாடித் துடிப்புப் போல் மற்றொருவர் நாடித் துடிப்பும் உள்ளதா? அதிலே விரைவுத் துடிப்பும் மெல்லத் துடிப்பும் இல்லையா? பொறியால் இயங்கும் கடிகாரம் ஒன்றைப் போல் ஒன்று, காலம் காட்டவோ செய்கின்றது? அதில் விரைவோட்டமும் மெதுவொட்டமும் இல்லையா? ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த குடிப்பிறப்பு, சூழ்நிலை, கல்விநிலை, தொழில் நிலை ஆகியவற்றால் ஏற்ற மாற்றங்கள் அமைத்தானே செய்யும்? ஒரு தோட்டத்துக் காய்கறிச் செடிகளோ, ஒரு தோப்புக் கனி மரங்களோ, ஒரு விளை நிலத்துப் பயிர்களோ ஒத்த வளர்ச்சியும் ஒத்த பயனும் தரவோ செய்கின்றன? இவற்றைக் கண்ணேரில் காண்பார், என் எண்ணம் போலவே அவரும் எண்ண வேண்டும் என்றும், என் செயல் போலவே அவரும் செய்ய வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டு செயல்படலாமா? ஒரு தாய் வயிற்றின் இரட்டைப் பிறப்பிகளுள் கூட இயல் செயல் உணர்வு அறிவுகளில் வேறுபாடு இல்லையா? முதிர் பேரறிவு இரட்டையராக விளங்கிய ஆர்க்காடு இராமசாமி, இலக்குமணசாமி என்பார் ஒரு துறைப்பற்று மையிலோ இயங்கினர். உலகின் வியப்பு இரட்டையராகிய சயாமிய இரட்டையர் உடல் ஒட்டியே பிறந்தனர்; அவ்வுடல் ஒட்டை அகற்றின், உயிர்க்கு கேடாம் என அப்படியே வளர்ந்தனர் மணமும் கொண்டனர். ஆயினும் அவர்கள் உணர்வுகளிலே எத்தனையோ மாற்றங்கள் உண்டென்பதை வரலாற்றுலகம் சுட்டுகின்றதே. இவற்றையெல்லாம் எண்ணுவார் குடிநலம் கருதிப் பிறர் உணர்வை மதித்துப் போற்றுதல் வேண்டும். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டு ஒத்துப் போகக் கற்றுக் கொண்ண வேண்டும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (504) என்பதனை ஆய்வுக்கும் நடுவுநிலை முறைமைக்கும் நட்புக்கும் கொள்ளல் தகும். குடிநலம் காக்க வேண்டுவார் குணம்நாடி அதனை ஊக்கி அவ்வழியைப் பற்றிக் கொள்ளலும், குற்றத்தை நாடி அதனை களைந்து பரிவோடு அணைத்துக் கொண்டு குண வழியில் சிறக்கப் படிப்படியே வழி செய்தலும் வேண்டும். இவ்வகையில் சோர்வோ வெறுப்போ கொள்ளல் ஆகாது; பிறரிடத்துப் பார்க்க வேண்டிய மானத்தைக் கூடக் குடிநலம் கருதுவோர் தம் குடியளவில் கருதுதலும் ஆகாது. குடும்பத்து உண்டாகும் குறையை, உழவடை நிலத்தில் உண்டாகும் முட்செடியை உழவன் முளையிலேயே கிள்ளி எறிவது போலக் கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாக்கால் மண்வெட்டி, கம்பி, கோடரி, வாள் எனப் பலப்பல கருவிகளைக் கொண்டு கை நோவப் பணி செய்து அகற்ற வேண்டிவரும். அகற்றினும் அதன் படர்ந்து சென்ற வேரை அகழ்ந்து சென்று அகற்றுதலும் வேண்டும். வெட்டாமல் விட்டு வைப்பின் அதன் நிழற்பரப்பும் வேர்ப்பரப்பும் கூடிய நிலப்பரப்பும் பயன் தராததாய்க் கெடும். இதனை, இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து என்பார் திருவள்ளுவர். முள் மரம் கொல்லல் என்பது தீய பண்புகளை அழித்தல் தீமையை அழித்தல் என்பது, தீயவரை அழித்தல் ஆகாமை அடிப்படை அறம். மடியும் மானமும் குடிநலம் பேணுவார் மடி என்னும் சோம்பலுக்கு அடிமை ஆதல் ஆகாது என்பது குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் (601) என்பதால் விளங்கும். குடியென்று சொல்லப்படும் அணையாத ஒளி விளக்கு சோம்பல் என்று சொல்லப்படும் திரிக்கருக்கு உண்டாகிப் பரவுதலால் அழிந்து விடும் என்கிறார். அழிவு செய்யும் சோம்பலைத் தன்னிடத்துக் கொண்டு செயலற்றுக் கிடக்கும் அறிவிலி பிறந்த குடி, அவன் அழியும் முன்னரே அழிந்து விடும் என்றும் (603) சோம்பல் ஒருவன் குடும்பத்தில் நிலை பெறத் தங்கினால், அது அவன் குடும்பத்தோடு பகைவர்க்கு அடிமைப்படுமாறு செய்து விடும்! என்றும் (608) குடியை ஆளுந்தன்மையில் உண்டாகிய குற்றம் அக்குடி யில் பிறந்த ஒருவன் சோம்பலின்றி உழைத்தலால் நீங்கும் என்றும் (609) எச்சரிக்கையும் நம்பிக்கையும் உரைக்கிறார். குடும்ப ஆக்கம் கருதுவார் அடுத்த வேளை அடுத்த நாள் என்று கூடத் தள்ளிப் போடாமலும் சோம்பல் இல்லாமலும் மானம் கருதாமலும் கூட ஈடுபட்டு வீறும் வெற்றியும் காட்ட வேண்டும் என்பதை, குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும் (1028) என்கிறார். குடும்ப நலத்திற்குச் சோம்பல் எப்படி ஆகாக் குணமோ, அப்படியே குடும்பத்துள் பார்க்கும் மானமும் ஆகாக் குணமாகும். பெற்றோர் உடன்பிறந்தோர் துணை மக்கள் என்பாருள் ஓரொருகால் பெருமைக்குக் குறையாம் சொற்களோ செயல் களோ உண்டாகி விடக் கூடும். அவற்றை மானக் கேடாகக் கருதி எதிரியிட்டு நிற்றலாலும், செயல்படலாலும் குடும்ப அழிவை உண்டாக்கலும், குடும்ப மானம் போக்கலும் கூடாதனவாம். குடும்ப மானம் காத்தற்காகத் தன் மானம் பேணாது கடமை புரிதலும் வேண்டும் என்பது வள்ளுவம். இதனைக் கருதின் குடும்பநலச் சிக்கல்கள் பலவும் இல்லையாய் ஒழியும். இன்னும், குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்னும் வள்ளுவ வாய்மை பெரும் ஊக்குதல் உடையதாம். தளர்ந்துள்ள - தாழ்ந்துள்ள - வீழ்ந்துள்ள - என் குடி உயரும் வகையில் யான் கடமை புரிவேன் என்னும் துணிவுடன் ஒருவன் கிளர்ந்தால் அவன் முயற்சியைக் கண்டு மகிழும் ஆன்றோரும் சான்றோரும் பண்பரும் அறிவரும் பயன் செல்வரும் நயன் உணர்ந்தாரும் கை கொடுத்து உதவுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்பராம். மடிதற்று முந்துறும் என்பது தொங்கக் கட்டிய உடையை (தாரை) மடித்துக் கட்டிக் கொண்டு ஓடி வந்து முன் நிற்பர் என்பதுடன், மடியென்னும் சோம்பல் அற்று முன் வந்து நிற்பர் என்பதுமாம். குடும்பத் மடியாமல் காக்க மடியின்றி முயல் வானுக்கு உதவ மேலோர் தாமும் மடியின்றி முந்து நின்று காக்க வருவர் என்னும் நயமும் நயனும் எண்ணத்தக்கன. அமரகமும் தமரகமும் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பலதலைக் கட்டுகள் இருப்பினும் குடும்பப் பொறுப்பை அனைவரும் தாங்குவார் அல்லர், கட்டற்ற இயல்பில் காலம் தள்ளுவாரும் அல்லர். உணவிலும் உறைவிலும் உழைப்பிலும் அவரவர் நிலைக்குத் தகத் தனிநலம் போற்றப் படினும், பொதுக் குடும்ப நலம் ஒரு தலைமைக்குக் கட்டுப் பட்டே ஆதல் வேண்டும். அத்தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர் வழியில் நிற்றல்தான் குடியோம்புவார் கடமை? இல்லாக்கால் என்னாம்? படைவீரர் பலர்க்கு ஒரு தலைமை இருத்தல் போன்றது. குடும்பத் தலைமையாக ஒருவர் இருப்பது, நிலைக்குத் தகவும் நெருக்கடிக்குத் தகவும் படைத் தலைமை எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டு படைவீரர் செயலாற்றுதல் அவர்தம் கட்டாயக் கடமை ஆதல் போல் குடும்பத் தலைமைக்கும் நலம் பேணலில் படைத்தலைமை போல் உறுதியுடனும் எதிர்கால நோக்குடனும் ஈடுபடுதல் வேண்டும். இத்தனைபேர் இருக்கவும் எனக்கொன்ன வந்தது என எண்ணும் படைத்தலைமை ஒன்று உண்டாயின் படைவீரர் உறுதியும் வலிமையும் சூழ்ச்சித் திறனும் கூடப் பயன்படுமோ? அதனால், அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை (1027) என்னும் குடி செயல் வகைக் குறளொடு, நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் (770) என்னும் படை மாட்சிக் குறளும் ஒப்பிட்டுக் காணத் தக்கனவாம். முன்னது, போர்களத்தில் போர்தாங்கும் பொறுப்பு வலியவன்மேல் அமைவது போல் குடும்பக் களத்திலும் அப்பொறுப்பைத் தாங்குவார் மேலேயே பொறுப்பு அமையும் என்னும் பொருளும், பின்னது, போரில் நிலைபெற நிற்கும் பழமையான வீரர் பலரையுடையதாக இருப்பினும், தகுதிவாய்ந்த தலைமக்கள் இல்லாத படை தகுதியில்லாத படையேயாம் என்னும் பொருளும் உடையவையாம். தமரகம் என்பது தம்மவர் வாழும் அகம் அல்லது வீடு என்னும் பொருளதாதல் அறிந்து கொள்க. வீழும் குடியை வாழும் குடியாய் அமைக்கப் போர்க்கால நடவடிக்கை எடுப்பார் போல எடுத்தல் வேண்டும் என்பது இவற்றின் பிழிவாம். தனிக் குடும்பம் இனி வள்ளுவர் காணும் தனிக் குடும்பத் கணவன் மனைவி மக்கள் என்பரைக் கொண்டது. அவர்களைப் பற்றியவை இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட் பேறு என்னும் மூன்றதிகார வைப்பாக உள்ளவை. அக்குடும்ப மூலவராம் தாய் தந்தையர்க்கு, நின்றதுணையாக இருக்கும் இல்வாழ்க்கை அது சிக்கலுக்கு ஆட்பட வேண்டுதல் இல்லாச் சிறு குடும்பத் அது. இல்வாழ்க்கையின் முதற் குறளே இந் நாளில் முதியர்க் குள்ள சிக்கல் தீர்வாக அமைந்துள்ளது. முதியவர்களுக்கும் வளரும் இளையவர்க்கும் ஒட்டுற வில்லாத இடைவெளி பெருகிக் கொண்டு வருகின்றது. பெற்றவர்கள் தாம் எவ்வளவோ செய்திருந்தும் அச்செய்ந் நன்றியை உணராமல் மக்கள் தம்மைப் புறக்கணிப்பதாகப் புழுங்குகின்றனர். தாம் எவ்வளவோ முயன்று முயன்று பணிசெய்தும் உதவியும் கூடப் பெரியவர்கள் ஒத்து போக முடியாத பிடிவாதக்காரராக இருந்து பெரும்பாடுபடுத்துகின்றனர் என மக்கள் ஏங்குகின்றனர். முதியவர் இல்லத்திலோ ஏதிலியர் இல்லத்திலோ தாம் சேர்ந்து விடுவதே தக்க தீர் வென முடிவெடுக்கின்றனர் முதுவர். எங்களை விட்டு எங்கள் பெற்றோர் வேறிடம் போய் விட்டனர் என்றால் எங்கள் மானம் மதிப்பு என்ன ஆகும்? ஊர் உலகம் எங்களை எப்படியெல்லாம் பேசும்? என்று தாங்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். இயல்புடைய மூவர் இவற்றுக்கெல்லாம் தீர்வு வழங்குவது போல் இல்வாழ்க்கை முதற் குறளை அமைத்துளார் வள்ளுவர். அது, இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்பது. இப்பாடலில் உள்ள இயல்புடைய மூவர் என்பவர் தாய் தந்தை மனைவி என்பார். அவர்க்கு நிலைபெற்ற துணையாக இருக்க வேண்டியவன் இல்வாழ்வான் ஆகிய கணவன். பொறுப்புடன் இருந்து போற்றிக் காத்த தன் பெற்றோர் களையும், தன்னோடு உடனாகிக் குடும்பத் தலைவியாய் வாய்த்த துணையையும் போற்றிக் காத்தல் கடனாகக் கொண்டால் மேற்கண்ட சிக்கல் எழும்புதற்கு வாய்ப்பே இல்லையே! தம்பொருள் என்ப தம்மக்கள் எனத் தம்மைப் போற்றிய வர்கள் தம் பெற்றோர். அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கையளாவிய உணவு என உவப்புற்றவர் அப் பெற்றோர். குழலினும் யாழினும் இனியது தம்மக்கள் மழலைச் சொல் என மகிழ்ந்தவர் அப் பெற்றோர். மக்கள் கையும் மெய்யும் பட்டுத் தழுவலில் கழிபேருவகை யுற்றவரும் அப் பெற்றோர். சான்றோர் அவையில் முந்தியிருக்கத் தக்க கல்வியும் சால்பும் தந்த பெருங் கொடையரும் அப்பெற்றோர். தம்மைப் பற்றிய நற்சொல் ஒன்று சொல்லப்படுமானால் தம்மினும் மேலாக மகிழ்ந்த பெருந்தக்காரும் அப்பெற்றோர். அவர் இல்லாக் கால், அவர் அரவணைப்பு அமையாக்கால் தாம் பெற்றிருக்கும் இற்றை நிலைகளை யெல்லாம் எய்தியிருக்க இயலுமா? காலத்தால் அவர்கள் செய்த உதவிகளை ஞாலத்தின் மாணப் பெரியனவே அல்லவோ! தினைத்துணையும் நன்றியையும், பனைத்துணையாக் கொள்ளுதல் நன்றியுணர்ந்தோர் கடனாக இருக்கவும், பெற்றோர் செய்த மலைத் துணை நன்றியை மறத்தல் மாண்பிறப்பி என்பதன் சான்றாகுமா? இவற்றை யெல்லாம் நினைந்து பெற்றோரைப் பேணும் வாழ்வு பெற்றோர் உள்ளம் தளிர்க்கவே செய்யும். வளரும் மக்களுக்கும் பேரச் செல்வங்களுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்கு களாகவும் காவல் தெய்வங்களாகவுமே பெற்றோர் இருக்கவும் இது செய்யும். இற்றை நாள் முதியர் இளையர் இடை வெளிச் சிக்கல் தீர இவ்வள்ளுவமே வாய்த்த தீர்வாகும். துணை யொப்பு இனிக் கணவனுக்கு மனைவி துணை என்றும், மனைவி கணவனுக்கு அடங்கிச் செல்லவேண்டியவள் என்றும் ஒத்த உரிமை பெண்ணுக்கு ஆணுலகம் தரவில்லை என்றும் சொல்லும் பழிகளுக்கெல்லாம் வள்ளுவம் எவ்வகையானும் இடந்தருவது இல்லை. அதன் பார்வை பால் வேறுபாடு கருதாத ஒப்புரிமை உடையதாம். பிறப்பு ஒக்கும் எனக் கண்ட ஒரு நூல், பால் வேறுபாடு சுட்டுகிறது எனல், பார்வைக் குறையால் எழுந்ததே. கல்வி, கேள்வி, அறிவுடைமை, ஊக்கமுடைமை, வினை செயல் வகை இன்னவெல்லாம் மாந்தப் பொதுவெனக் கண்ட வள்ளுவம் பாலொப்புக் கண்ட பான்மைய தென்பது வெளிப்படை. வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத் தலைப்பில் உள்ள துணை, துணைவனுக்கும் துணைவிக்கும் பொதுச்சொல். அத்துணைநலம் பெண்ணைப் பற்றிக் கூறுதலால் துணை என்பது துணைவிக்கே உரியது எனக் கொண்டு விட்டனர். அவர் வாழ்க்கைத் துணை நலத்திற்கு முற்பட்டதாம் இல்வாழ்க்கையில் இல்வாழ்வான் என்பான் துணை என முதலிரு பாடல்களிலும் சொல்லப் பட்டிருப்பதை எண்ணிப் பாராதது என்ன? பின்னே, பணைநீங்கிப் பைந்தோடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் (1234) புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை (1222) என்பவற்றில் அவளே அவனைத் துணை என்று கூறியதை எண்ணிப் பாராததும் என்ன? துணையும் இணையும் பிணையும் ஒப்புப் பொருளனவே. துணையடி, இணையடி என்பவற்றையும் பிணைப்பு என்பதை யும் எண்ணிப் பார்ப்பவர் இவற்றில் உயர்வு தாழ்வு கருதார். துணைநலம் பெரியாரைத் துணைக்கோடல் என்பவற்றில் வரும் துணைக்குத் தாழ்வும் உண்டோ? தலைவர், துணைத் தலைவர்; செயலர், துணைச் செயலர்; ஆட்சியர், துணை ஆட்சியர்; விதி, துணை விதி - என இந்ள் வழங்கும் வழக்குச் சொற்களைக் கொண்டு அந்நாள் ஒப்புரிமைச் சொல்லை ஏற்றி இறக்கிக் காணல் ஆய்வியல் ஆகாதாம். தலைவன் தலைவி, துணைவன் துணைவி, ஒருவன் ஒருத்தி என்பனவெல்லாம் ஒப்புடைமைச் சொற்களே எனக் கொள்ளும் தெளிவினர் கணவன் உயர்வென்றும் மனைவி தாழ்வென்றும் கொள்ளார். வேண்டுமானால் பெண்ணே பெருமை யுடைத்து என்று கொள்ளுதற்கும், ஒருமை மகளிரே போலப் பெருமை யும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்று தூண்டு தற்கும் வள்ளுவம் உந்துமே அல்லாமல் தாழ்த்த இடந்தராது. வரைவின் மகளிரை உரைத்தாரே என்று கருதுவார், பிறனில் விழையாமையை வைத்ததை எண்ணாதது ஏன்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வாறு இருபாற் பொதுமையை உரைத்த ஒருவர் உலகில் எவரேனும் உளரோ? அதனைக் கண்டு வாய் திறப்பாராக. குடும்ப வாழ்வில் ஒருவர்க்கு ஒருவர் துணையாக - ஒப்பாக - உதவியாக இருக்கும் நிலை உண்டாயின் ஆடவர் பெண்டிர், அடக்கல் அடங்கல், உயர்வு தாழ்வு ஆண்டான் அடிமை என்பன உண்டோ? அவன் பணிகின்றான் அவளை; அவள் பணிகின்றாள் அவனை; அப்பணிவும் இருபாற் பொதுமையே! பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் (1121) என்பது அவள் பணிமொழியள் ஆதல். பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (1258) என்பது அவன் பணிமொழியன் ஆதல். இருவருக்கும் ஒத்த காதல் வீழும் இருவர் (1108; 1191 - 3.) என்பதாலும், இருவருக்கும் ஒத்த கற்பு நிறை திண்மை என இருவர்க்கும் சொல்லும் சொற்களாலும் இனிது விளங்கும் (57, 864, 988, 1254) களவிலே அரும்பிக் கற்பிலே மலர்ந்த வாழ்வு வள்ளுவ வாழ்வு, ஆதலால் அவனை அவளும், அவளை அவனும் புரிந்து கொண்டு வாழ இயல்பாக வாய்ப்பு ஏற்படுகின்றது. அதில் வழுவுண்டாயினும் அதற்குத் தம் பெற்றோர் பொறுப்பாகார் தாமே அதற்குப் பொறுப்பினர் என்னும் தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டுத் தாமே சிந்திக்கவும் சீர் செய்யவும் வாய்க்கும். சாதிச் சிக்கல். சமயச் சிக்கல் என்பனவும் இங்கே தலைகாட்ட இடமில்லை. ஆதலால் அவர் வாழ்வுக்கு அவரே பொறுப்பு என்னும் உறுதி உண்டாகிச் சிந்தித்துச் செயலாற்ற வாய்க்கின்றது. பெற்றோர் - மக்கள் - இடைவெளிச் சிக்கல் இந்நாளில் பெற்றோர்க்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி பெருகுதல் கண்கூடு. ஒட்டி உறவாடி விட்டு நீங்கா நிலைமையில் இருந்தோர்க்கு இடைவெளியும் பிரிவும் விழுவானேன். அதிலும் திருமணத்திற்குப்பின் மிகுதியும் உண்டாவானேன்? காலமாறுதல் கருத்து மாறுதல் ஆகியவற்றைப் பெற்றோர் உணராராய்த் தம் காலத்தையே எண்ணிக் கொண்டும், தாம் கொண்ட கருத்தையே எண்ணிக் கொண்டும் கெடுபிடியாக இருப்பது வளரும் பருவத்தார்க்கு ஒத்துச் செல்வதில்லை. அதனால் இடைவெளிபட்டுப் பிளவும் பிரிவும் நேர்ந்து விடுகின்றன. தாம் விரும்பும் துணையைத் தேர்ந்து கொள்ள உரிமை இல்லாமை, தாம் கருதியபடி தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் இல்லாமை, தம் பெற்றோரொடு தான் ஒத்துப் போனாலும் தன் முணை ஒத்துப் போகாமை, தன்னைத் தன் பெற்றோர் ஒத்துப் போகும் அளவு தன் துணையொடும் ஒத்துப் போகாமை என்பனவெல்லாம் இவ்விடைவெளி உண்டாகவும் வளரவும், கூடியிருக்க இயலாமல் பிரிந்து செல்லவும் செய்து விடுகின்றன. இந்நிலை வள்ளுவம் கருதிக் கூறுவது போல், தம் பொருள் என்பதம் மக்கள் என எண்ணும் பெற்றோராய், மக்களை, அவையத்து முந்தியிருக்கச் செய்யும் பெற்றோராய், மக்களைச் சான்றோர் எனப் பிறர் புகழக்கேட்கு மாறுள்ள பெற்றோராய், பழிக்கு அஞ்சிப் பகுத்துண்ணும் வழிகாட்டிப் பெற்றோராய் அமைந்து விடின், இவர் பெற்றோர் இவரைப் பெற என்ன பேறு பெற்றனரோ எனப் போற்றும் அறிவறிந்த மக்களால் அன்பும் அறனும் விளங்கும் இல்வாழ்க்கை அமைந்து, இழுக்குறாத வாழவாய்ச் சிறக்கும். குழந்தையர் சூழ்நிலைச் சிக்கல் குழந்தையின் மழலை மொழியில் மகிழ்ந்த பெற்றோர் அவையத்து முந்தியிருக்கச் செய்யும் கடனை மேற்கொள்வது வேண்டுவதேன்? அதுவே, அவனை அல்லது அவளைச் சான்றாண்மையுடையராகச் செய்யும் செயல் என்பதைக் கொண்டே வலியுறுத்தினார் வள்ளுவர். மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து என்னும் அருமைக் குறளை எண்ணுவார் தம் மக்கள் வளர்ந்து வாழவேண்டும் சூழலை எண்ணிச் செயல்படுவார். அச்செயற் பாடு இல்லாமையும் தளர்வும் ஏனோ தானோ போக்கும், இற்றை இளையோர் உலகைக் கெடுத்து வரும் கொடுமைக்கு எல்லை இல்லையாய்ச் செய்கின்றன. கல்லா இளையரினும் கற்கும் இளையரையும் கற்ற இளையரையும் கெடுக்கும் சூழல் கேடு இவ்வளவு அவ்வளவா? மனநலம் நன்கமைந்த சான்றோர்க்கும் அம்மனநலச் சான்றோர் கூட்டுறவும் தொடர்பும் துணையும் இன்றியமையா தன என்னும் வள்ளுவப் பார்வை எங்கே? சேராத இடந்தனிலே சேர விட்டு, கூடாத வழிகளிலே கூட விட்டு, ஆடாத ஆட்ட மெல்லாம் ஆடவிட்டு இறுதியில் அம்மோ என்று என்ன ஆகும்? ஐயோ என்று என்ன ஆகும்? பெருக்கெடுக்கும் வெள்ளத்திற்கு அணையைக் கட்டி, காலை ஆக்கி, வாய்க்காலை ஆக்கி, ஏரி குளங்கள் மடை கலிங்கல் (மதகு) என்பவை அமைத்து வளம் காணுவது உழவப் பண்பாடு; ஆனால், அது பெருக்கெடுக்கும் இளமை உள்ளத்திற்கு அணையும் காலும் வாய்க்காலும் பிறவும் அமைக்காது வாளா விட்டு விடுதல் பெருங்கேடு என்பதை உணர வேண்டும் அல்லவோ? பருவம் அறிந்து உழுது பொடியாக்கி பாத்திகட்டி விதைத்து நட்டு நீர்ப்பாய்ச்சிகளை வெட்டி காவல் காத்து நோய் நொடி நீக்கி விளைவு காணும் விழுமியது உழவப் பயிர்க் காவல் பாங்கு; ஆனால், அது வாழும் உயிர்க்காவல் பாங்கை பற்றிக் கவலைப்படாமல் விட்ட குறை காலமெல்லாம் கவலைப்பட ஆக்கியமை அல்லவோ கண்கூடு! பயிர்பாராமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது என்னும் பழமொழியைப் பயில வழங்கும் மண், வளப் பயிராம் இளையரைப் பாராமலும் கேளாமலும் விட்ட குறை என்ன ஆயிற்று? ஒத்த பருவத்தைத் தேடி ஓட வைத்தது; பொருந்தா இயல்புடைய ஒத்த பருவத்தை ஒட்டித், திருந்தா இயல்புக்கு இரையானது! கொஞ்சிக் குலவிய குழந்தை விட்டுப் பிரியாமல் கட்டிலில் கிடந்த குழந்தை சிறிதே வளர்ந்த நிலையில் பெற்றோரை விட்டு வெளியே ஓடுவானேன்? குழந்தைக்குத் தக்க குழந்தையாக மாறி இருந்த பெற்றோர் இளையருக்குத் தக்க இளையராக மாறி இருக்கவில்லை. அவர்கள் பெரியராக - மதிப்புப் பெறவும் ஆணை இடவும் உரியவராக, வளர்ந்த நிலையில் இருந்து கொண்டு இளையரை நோக்கினர். இடைவெளி விழுந்தது. என் பையன் என்முன் தலைநிமிர்ந்து பேசவும் மாட்டான்; வீட்டில் நானிருப்பது தெரிந்தால் ஊமையாகி விடுவான்; அடக்க ஒடுக்க மென்றால் அப்படி அடக்க ஒடுக்கம் எனப் பாராட்டிக் கொண்டோம். அவன் இக்கட்டுப் பாடான இக்கட்டுக்கு ஈடு செய்ய வெளி யாட்டம் போட நேர்ந்து விட்டது. இந்நேர்ச்சிக்கு வித்தானவர் பெற்றோர்களே! பிள்ளைகளே என அக்கறை மிக்க பெற்றோர் வழக்காடவும் கூடும். பொறுப்பு பிள்ளைகளைச் சேர்ந்ததா? பெற்றோர்களைச் சேர்ந்ததா? எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்; எண்ணி அலமருவார் பெற்றோரா பிள்ளைகளா என்பதைத் தெரியவே புரியுமே! பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஒழுங்காகச் செல்லாமை. சென்றாலும் முறையாகக் கல்லாமை, கற்றாலும் ஒழுக்கத்தில் நில்லாமை என்பன வெல்லாம் தக்கார் இனத்தொடு சேராமையின் விளைவேயாம். எத்தகைய பண்பாடுடைய குடிப்பிறப்புப் பேறுடைய கல்விச் சீருடைய குடும்பத்து இளையரும், பொற் பொடி, மயக்கு ஊசி, குடியாட்டு, களியாட்டு, தீயபாலுறவு என்பனவற்றில் தலைப்பட்டும் நிலைப்பட்டும் மீளா அடிமையராய் இருக்க அடிப்படை, தக்கார் இனத்தொடு சேராக் குறையின் பயனேயாம். தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் (446) என்கிறார் வள்ளுவர். தக்கார் இனத்தொடு வாழ்ந்தானா? அவனை எத்தகு கேடனும் கெடுத்து விட முடியாது. ஏன்? தக்கார் என்னும் பாதுகாப்பு அரணை அவன் பெற்றிருக்கிறான் அல்லனோ என்கிறார் வள்ளுவர். அதன் எதிரிடை என்ன? தக்கார் இனத்தொடு வாழானுக்குக் கேடு செய்வார் எவரும் வேண்டுமோ? கேடு செய்வார் இன்றியே அவன் சேர்ந்த தகாத இனச் சார்பிலேயே கெட்டொழிவான் என்பதை நினைவூட்டுகிறார். நேரிடை வாய்ப்பாகவும் எதிரிடை எச்சரிக்கையாகவும் இவற்றைக் கூறுவது தானே பெரியாரைத் துணைக் கோடலும் சிற்றினம் சேராமையும்! சூழ்நிலைச் சிக்கல் தீர்வு அறனறிந்து மூத்த அறிவுடையவர் உறவைக் கொள்க. (441) உற்ற துயர் நீக்கி உறாமல் காக்க வல்லாரைச் சேர்க. (442) இடித்துக் கூறும் பெரியவர் துணை இல்லான் கெடுப்பார் இன்றியும் தானே கெட்டுப் போவான். (448) நல்லவர் தொடர்பு இல்லாமை பல்லபலா பகையினும் கேடு (450) தம்மில் பெரியவர் துணை வன்மையுள் வன்மையாம் (444) என்றெல்லாம் பெரியாரைத் துணைக் கோடலில் வவியுறுத்துகிறார் வள்ளுவர். மனநலம் நன்கு அமைந்தவர்க்கும் இனநலம் வேண்டும் (458) இனநலம் எல்லாப் புகழும் தரும் (457) மனம் தூய்மையும் செயல் தூய்மையும் இனந்தூய்மை தருதலால் உண்டாகும் (455) இத்தகையன் அவன் என்பதை அவன் சேர்ந்த இனமே காட்டும் (453) நிலத்தின் தன்மைபோல் நீரும் மாறும்; அதுபோல் இனத்தின் தன்மை போல் இயல்பும் ஆகும் (452) நல்லினத்தினைப் பார்க்கிலும் நன்மையாவதும் இல்லை; தீய இனத்தினைப் பார்க்கிலும் அல்லல் ஆக்குவதும் இல்லை (460) என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் வலியுறுத்துகிறார் வள்ளுவர். சிற்றினம் சேர்ந்ததால் கெட்டுப் போகும் சிறார் உண்டு என்றால், அபப்டிச் சேராமலேயே கெடுவாரும் அலரா எனவே வினவத் தோன்றும். பெற்றோரே குடியராக இருந்தால், வீட்டுப் பாடமும் அதுவே ஆகி விடாமல் என்ன செய்யும்? பெற்றோரே பொய்யரும் புரட்டரும் வஞ்சரும் சூதருமாக இருப்பின் அவையெல்லம் மக்களுக்குக் கற்காமல் கற்கும் குடும்பப் பாடம் ஆகிவிடுதற்கு ஐயமுண்டா? வெள்ளையில் எந்த வண்ணமும் தெளிவாகப் பதியும். பிள்ளையின் உள்ளத்திலும் எச்செயலும் எக்காட்சியும் எச்சொல்லும் பதியும். ஆதலால் வீட்டிலேயும் நல்ல சூழல் அமையப் பெற்றோர் பார்த்துக் கொள்ளல் வேண்டும். இதனை வள்ளுவர் குறிக்கிறாரா? ஆம்! தெள்ளத் தெளிவாகக் குறிக்கிறார். எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் என்பதில் குறிக்கிறார் (62). பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற முடியுமா? பிறக்கப் போகும் மகவின் பண்பை முன்னரே தீர்மானிப்பது எப்படி? பழி பிறங்காப் பெற்றோராக இருந்து பண்புடைப் பெற்றோராக இருந்து அவர் வழியே பிறக்கும் குழந்தையும் அப்பழி பிறங்காமலும் பண்பு கெடாமலும் இருக்க வேண்டின் என்ன வேண்டும். அப்பெற்றோரின் இயலும் செயலும் எடுத்துக் காட்டாய்க் கண்முன் நடைமுறையில் விளங்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் அத்தன்மைகள் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் விளங்கும். தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்னம் கொடை வளம் ஈதேயாம். மேலும் குடிநலம் கருதும் இவ்வியல்பே குடிமையாம். குடிமை சார்ந்தே மானம். பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்பன வைக்கப்பட்டிருத்தல் எண்ணத் தக்கதாம். நடுவு நிலைமையும் நாணமும் குடிப்பிறந்தார்க்கே உண்டு (951). ஒழுக்கமும் வாய்மையும் போற்றுவாரும் அவரே (952). முகமலர்ச்சி கொடை இனியவை கூறல் இகழாமை என்பவை குடிப்பிறப்புச் சிறப்பு (953). என்ன கிடைப்பினும் இழிந்தவை செய்யாமையும் (954), என்ன இழப்பினும் பண்பில் குன்றாமையும் (955), வஞ்சங் கொண்டு தகுதியற்றவை செய்யாமையும் (956) ஆகியவை நற்குடிப் பிறப்பின் நயன்பாடுகள். இச்சூழல், வளரும் பருவத்தர்க்கு வாய்த்து வருமாயின், அவர் ஏன் சிற்றினம் சேர்ந்து சிறுமைக்கு இடமாகின்றார்? இவற்றை எண்ணிச் செயலாற்றின் இளையோர் சிக்கல் எளிதில் தீர்த்து விடும் என்க. எளிமையும் அழகும் துணிமணி என்பதோர் இணைச் சொல், ஆடை அணிகலம் என்னம் பொருளது இச் சொல். பட்டிலும் பலவகை அணிகளிலும் நம்மவர் கொண்டுள்ள பற்றுமையும் பகட்டும் எல்லை யற்றவை. தலையில் களிமண் இருந்தாலும், கழுத்தில் தங்கம் இருந்தால் போதும் என்னும் போலிமையும் பொதுப் பொருளாகிவிட்டது. விலை யுயர்ந்த பொருள்களை விரும்புவதன் கேடு உறுப்புக் குறையும், உயிரழிவும் ஆதல் அறிந்தும் அவற்றை விட்டொழிக்கும் வீறு, கற்றுச் சிறந்த மகளிர்க்கும் உண்டாகவில்லை! ஆடை அணிகலப் பகட்டில் இருந்து அடையும் விடுதலையே உண்மை விடுதலை என்பதை மாதர் நல மன்றங்கள் வெட்ட வெளிச்சமாய்ச் சுட்டிக் காட்டி வலியுறுத்த வேண்டும். வள்ளுவப் பெருமகனார் அன்றே குறிப்பாகவும் வெளிப்படவும் இக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார். அதனை மாதர் உலகம் கண்டு கொள்ளவில்லை; மற்றையோரும் தெரிந்து கொள்ளவில்லை. அவர், பணிவுடைமையும் இனியவை கூறலும் அணிகலன்கள் என்றார் (95). மங்கலமனையறத்திற்கு மக்களே நன்கலம் (நல்லணிகலம்) என்றார் (60). காலந்தாழ்த்தல் மறத்தல் சோம்பல் நெட்டுறக்கம் என்பவை கெட்டுப்போகின்றவர் அணியும் அணிகலங்கள் என்றார் (605). எவரும் அணிகலம் அணியாத உறுப்பாம் கண்ணுக்கு ஓர் அணிகலம் அணிதல் வேண்டும்; அது கண்ணோட்டம் (அருள்) என்னும் அணிகலம் என்றார். (575) தலைவியின் அணிகலங்களைக் காணும் தலைவன், பெண்மானின் அழகிய மெல்லிய நோக்கும், நாணமும் இயற்கை அணிகலங்களாகக் கொண்ட இவளுக்கு, மற்றும் அயலான செயற்கை அணிகலங்களை அணிந்து விட்டது எதற்காகவோ? எனக் கேட்கும் முறையால் வள்ளுவர் பகட்டைச் சுட்டுவதுடன் அதன் வேண்டாமையையும் குறிப்பிடுகிறார். அது, பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து என்பது (1089). இனி, இயற்கை இயல் செயல்களே அணிகலங்கள் என்பதையும் குறிக்கத் தவறினார் அல்லர். அவன் பார்க்கிறான்; அவளும் அன்பால் நோக்கி மெல்ல நகைக்கிறாள்; அதனைக் கண்ட அவன் அசையும் கொடி போலும் இம்மெல்லியலபளின் உள்ளத்தில் ஓர் அழகிய குறிப்புளது என் அறிகின்றான். அசையியற்கு உண்டு ஆண்டோர் ஏஎர்யான் நோக்கப் பிசையினள் பைய நகும் (1098) அழகிய மணியின் ஊடே விளங்கித் தோன்றும் நூலைப் போல, என் துணைவியின் அழகுக்குள்ளே விளங்குவதாகி குறிப்பொன்றுளது என் நினைக்கிறான். மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு (1273) திரண்டு மலர உள்ள மொக்கினுள்ளே இருக்கும் நறுமணத்தைப்போல் எண் துணைவியின் புன்முறுவலுக் குள்ளே மற்து கிடக்கும் நல்ல குறிப்பொன்று உண்டு என்று நினைக்கிறான். முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு (1274) இவ்வாறு நினைத்த தலைவன், கண்ணில் நிரம்பித் தோன்றும் பேரழகு அமைந்த மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடையவளுக்குள்ள பெண்மைக்குணம் பெரிதே யாம் எனப் பாராட்டுகிறான். கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (1272) இவ்வாறு கண்டும் பாராட்டியும் களித்த தலைவன் இவள் பெண்மைச் சீர்மை பகட்டாம் ஆடை அணிகளால் இல்லை; இயல்பாக அமைந்த பெண்மைத் தன்மையே பெருமைத் தன்மையாய் உடையது என்கிறான். பெண்ணினால் பெண்மை உடைத்து (1280) என்பது அது. வேறோர் அணிகலம் வேண்டா இயற்கை அழகே பெண்மை என்றும், அவ்வியற்கைப் பெண்மைப் பண்பே பெருந்தக்க பெண்மைப் பிறப்புச் சான்றாக இலங்குவது என்றும் அறிந்து கொள்வார். கொள்ளை அணிகலத்தில் கொள்ளைப் பற்றுக் கொள்ளார். கேடுகளுக்கும் போட்டி பொறாமை களுக்கும் வறுமை வன்கண்மைகளுக்கும் ஆட்படார். விருந்தோம்பல் விருந்தோம்பல் உயர்பண்பாடு என்றும், அதனைச் செய்வதற்காகவே இல்லற வாழ்வு உண்டு என்றும் செல்வம் இருப்பினும் விருந்தோம்பாதார் செல்வம் வறுமைப்பட்டதே என்றும் அதனைச் செய்யாதவர் மடவர் என்றும், விருந்தோம் புவான் வாழ்வு எவ்வகையாலும் கேடுறாது என்றும் வள்ளுவர் கூறுகிறாரே! எம் வறிய நிலையில் - எம் வாழ்வையே நடாத்த இடராம் நிலையில் - எவரை விருந்தோம்ப இயலும் என மறுப்பாரும், அந்நாள் பண்டமாற்றுக் காலம் கையிருப்புப் பொருளைக் காசாக்க இயலாது அதனால் விருந்தோம்பல் சரி, மேலும் இந்நாளில் எங்கெங்கும் தங்கல் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள; அவ்வாறாகவும் விருந்தோம்பல் வேண்டும் என்பது பொருளியல் அறியாப் போக்காகும் என்பரும் உளர். விருந்து என்பது தொடர்பு இலராய்ப் புதியராக வந்த வர்க்குச் செய்யும் உதவியாகும். அவர் துறவோரோ, ஊணிலா ரோ, அறிந்த அறிவரோ அல்லர். அவர் அயலூர் வழிப்போக்கர். செல்வாரும் வருவாரும் ஆவரே அன்றித் தங்குவார் அல்லர். அவருள் நாம் விரும்பித்தேடினும் அகப்படாத ஆன்றோரும் சான்றோரும் கூட இருப்பர். அத்தகையர் குடும்பத்துக்கு வருதலால் செலவு இல்லை; வரவேயாம்; அவர்தம் மேதக்க அறிவும் பண்பும் அருள் நெறியும் வாழ்வுக் கொடையாய் வாய்ப்பதாகும். அதனாலேயே கணவன் மனைவியர் பிணக்கங் கொண்டிருந்த போதிலும் விருந்தோம்புதல் மேற்கொண்டு தன் பிணக்குத் தீர்த்து இணக்கங் கொண்டனர். அதனைக் கொண்டே வாழ்வியல் இலக்கணம் வகுத்த முந்தையோர். விருந்துகண் டொளித்த ஊடல் என்றனர். அவ்விருந்தினரும் வருந்தி அழைத்தால் அன்றி வாராதார் ஆவர். போட்டால் போதும் என்ற அளவில் கொள்ளாமல், மாறிப் பார்க்கும் பார்வை யெனக் குறிப்பால் அறியினும் கைந்நனையாத பான்மையர் குடும்ப நிலை அறியாமல் உண்பதே குறியாக இருப்பாரும் அல்லர். ஆதலால் அவ்விருந்தாளி எந்த எளிய குடும்பத்துக்கும் சுமையாக இரார். இனி, விருந்தோம்பல் என்பது பல்சுவைய பல்வகைய உணவுகளைப் படைப்பது அன்று. அவற்றைப் படைப்பதினும், முகமலர்ந்து வரவேற்றலும் இனியவை கூறலும் பெருவிருந்தா வன என்பதை அடுத்து வரும் இனியவை கூறலில் தெளிவாக்கி வழி காட்டவும் செய்கிறார் வள்ளுவர். அது, அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் (92) என்பது அதனை மேலும் வலியுறுத்தி, அதுவே அறமென்றும் கூறுகிறார். அது, முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் என்பது. ஆதலால் இடுக்கண் அழியாமையில், அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாத வர் என்றார். பொருள்தேடி வைத்துள்ளோம். இதனைப்போக விடாமல் காத்துக் கொள்வோம் என்பதைப் பற்றிக் கவலைப் படாதவர் அப்பொருள் இல்லேம் என்று அல்லல்படுவரோ? என்பது இதன் பொருள். பத்துவகைக் கறியொடு பாலமுதொடு படைப்பதுதான் விருந்தென எவர் கூறினார்? பொங்கிப் பொறித்துக் கெட்டுப் போகுமாறு எவர் கூறினார்? இன்ன உணவு, இத்தனை வகை உணவு என வள்ளுவர் கூறினாரா? அளவறியாமல் ஆராருக்கோ ஆக்கிப்படைத்து ஆக்கம் கெட வள்ளுவம் கூறவில்லை என்பதை உணர்வார் விருந்தைக் சிக்கலெனக் கொள்ளார்; விருந்தின் பெயரால் அவரே சிக்கலை ஆக்கிக் கொண்டு சிதையின் எவரே அவிழ்த்து விடுவார் அவரை? இனிப் பொருள் நிலையில் எங்களால் மேடேற முடிய வில்லை; தாக்குப் பிடிக்கவும் கூட முடியவில்லை. கடன் உடன் வாங்கவும் வட்டிவாசி கட்டவுமே பாடாய்ப் படகிறோம் என்று தம் பொருளியல் சிக்கலைக் கூறுவார் உளர். தனிவாழ்வு சிக்கலாகக் கூறப்பட்டவற்றுள், உள்ள அளவை ஆராய்ந்து பாராமல் உதவும் உதவியைப் பற்றி எச்சரித்த எச்சரிப்பை எண்ணிக் கொள்ளல் வேண்டும். மேலும் எண்ண வேண்டுவனவும் உண்டு. வேளாண்மை என்பது உழவுத் தொழிலைக் குறிக்கும். அத்தொழிலே உலக வாழ்வின் அடிப்படைத் தொழில் ஆதலால் அதற்கு உதவி என்னும் பொருளும் உண்டாயிற்று. அவ்வேளாண்மைத் தொழிலுக்குக் கால்வாய் வாய்க்கால் கண்வாய் என்பன கட்டாயத் தேவையானவை. குறித்த முச்சொற்களிலும் வாய் உண்டு. வாய் என்பதற்கு இடம் என்னும் பொதுப்பொருளும், உறுப்புச் சிறப்புப் பொருளும் உள்ளமை எவரும் அறிந்தது. போக்குவரவுக்கு உதவுவது வாய். உணவு நீர் முதலிய போக்கு வரவுக்கு உதவுவது உறுப்பு வாய்; புகுதல் வருதலுக்கு வழியாக இருப்பது இவ்வாய் என்னும் வாயில். அது நிலத்துப் பாய்ச்சலுக்கு உதவும் கண் வாய்க்கு நீர் வரும் வாய் கால்வாய்; கண் வாயிலிருந்து வயலுக்கு நீர் செல்லும் வாய், வாய்க்கால். நீர் வெளியேறுவதற்கு மடையில் புலிக்கண், யானைக் கண், மான் கண் எனக் கண்ணின் வடிவில் துளைகள் அமைத் தலால் அதனைக் கண்வாய் என்றனர். அக் கண்வாய்க்குக் கால்வாய் வழியே நீர் வரவு ஓரிரு நாள்கள் வரினும், அது வாய்க்கால் வழியே நாலைந்து திங்கள் அளவு சென்று ஒரு பயிர் விளைவு முழுதுறக் காண உதவும். இவ்வுழவடை அமைப்பை எடுத்துக் காட்டி வரவு செலவுத் திட்டம் இருக்க வேண்டும் வகையைத் தெளிவிக்கிறார். திருவள்ளுவர், ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை (478) என்பது அது. வலியறிதலில் வரும் இக்குறளும் இன்னும் மூன்று குறள்களும் (477-80) பொருள் அளவு வலிமையை அறிந்து கடமை புரிதல் பற்றியதே யாகும். இதில் ஆகாறு என்பது வரவு; போகாறு என்பது செலவு. வரவு சிறிது எனினும் அதனால் குறைவு இல்லை; செலவு மட்டும் வரவுக்கும் மேல் ஆகாமல் இருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டுகிறார். வீட்டுக்கு விளக்காகிய துணையின் செயற்பாட்டைக் கூறும் இடத்திலும் தற்கொண்டான் வளத்தக்காள் என்றதும், இல்லதென் இல்லவள் மாண் பானால் என்றதும் இவண் எண்ணத் தக்கனவாம். ஒருவர் தேடும் வாழ்வு எனினும் இருவர் தேடும் வாழ்வு எனினும் பலர் தேடும் வாழ்வு எனினும் முந்தையர் வைத்த தேட்டு வாழ்வு எனினும் வரவில் செலவு மிகாமை வேண்டும் என்பது பொது விதியேயாம். இவ்வாகாறுக்குக் கால்வாயையும், போகாறுக்கு வாய்க்காலையும் எடுத்துக்காட்டாகக் கொண்டால் குடும்ப வேளாண்டை இனிதின் இயலும் என்பது வெளிப்படையாம். உள்ள பொருள் இழந்து போதலை உள்வீழ்தல் என அருமையாக வழங்குவார் வள்ளுவர். கடனுக்கு ஆற்றாமல் தலைமறைவாகி ஓடிப் போவதும், உள்ளவற்றை முறை மன்ற ஒப்படை வழியே இத்தனை விழுக்காட்டு மேனி எனப் பகுத்து வழங்குவதும் சிலச் சிலர் வாழ்வில் நிகழ்வனவே. அதனை, மஞ்சள் கடிதம் பெறல் என்பர். திவாலா ஆதல், ஜ.பி.தரல் எனப் பிற சொற்களாலும் வழங்குவர். இதற்கு உள் வீழ்தல் என்னும் கலைச் சொல்லை வழங்கும் வள்ளுவர், உள் வீழும் நிலையில் இருப்பினும் பழயைன பண்பட்ட குடியினர் தம் இயல்பில் குறைய மாட்டார் என்கிறார். அவர் பழகிப் பழகிப் போன பண்பியல் ஈதென்றாரேயன்றி, அவர் உள்ளவை வீழ்ந்து பாழாதல் பண்பாடு என்று பகர்ந்தார் அல்லர் என்பதை எண்ணின் தன்னிறைவுக் குடும்பமே வள்ளுவர் எண்ணமாதல் புலப்படும். குடும்ப அரசு நாட்டரசின் மூல வித்து வீட்டரசு. வீட்டரசுச் செம்மையே நாட்டரசுச் செம்மை! வீட்டரசு பாழ்படின் நாட்டரசும் பாழ்படல் உறுதி. அரச பொதுச்சிக்கல் ஆகலின் அப்பகுதியில் காண்டல் முறை எனினும் இவண் சுட்டல் வேண்டத்தக்கதாம். முடியாட்சிக் கால நிலையிலும் குடியாட்சிக் கால நிலை வீட்டரசொடு நாட்டரசு மிக்க நெருக்கமுடையதாகி விடுதல் கண்கூடு குடும்பத்தவர் தெரிவுதானே ஆளுரிமை வாக்காகி நிற்கின்றது! இந்நாள் குடியரசில் குறைகள் பல நிகழ்வானேன்? குடிகள் தக்க குடிகளாக இல்லாக்கால் குடியரசும் சீர் பெறாதாம்! தனிவாழ்வும் குடும்பவாழ்வும் செம்மையுறப் போற்றப்படும் நிலையிலேயே பொது வாழ்வும் சிறக்கும் என்பது சொல்ல வேண்டுவதில்லையே! மக்கள் என்று வாளா கூறாமல் அறிவறிந்த மக்கள் என்றும் (61) பழிபிறங்காப் பண்புடை மக்கள் என்றும் (62) மக்கட் பேற்றின் முதலிரு பாடல்களிலேயே குறித்தார் வள்ளுவர். அறிவறிந்த மக்களாகவும் பழிவழிச் செல்லாப் பண்புடைய மக்களாகவும் இருந்துவிடின் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் தகுதி பெற்றோர் தகவிலாச் செயல் செய்வரா? அப்படி ஓரொரு கால் செய்யினும் மக்கள் இடித்துரைத்து முறை காட்டாது இருப்பரா? இடித்துரைத்தல் என்பதுதானே ஆள்வோர் முறையாக நடந்து கொள்ள வாய்த்த அழிவிலாப் பாதுகாப்பு! அதனைக் கொள்ளா ஆட்சி கெடுப்பார் இன்றியும் கெட்டுப்போம் என்று வருமுன் காக்க வகுத்துரைக்கிறாரே வள்ளுவர். ஆதலால் குடிநலம் காக்கவல்ல மக்களே அரசு நலம் காக்கும் மக்களாம் என் அடிப்படை காட்டி அமைவோம். இந்நாளில் பெரு நோயாய் - தொற்று நோயாய் - புற்று நோயாய் - கேடு செய்யும் மாப்பிள்ளைக் கொடையாம் வரதட்சணைச் சிக்கல் தீர்க்க வள்ளுவம் கூறும் வகை என்ன என வினவத் தோன்றலாம். இச்சிக்கல் எவரிடமிருந்து அரும்பி முகிழ்த்து மலர்ந்துள்ளது என எண்ணின் உண்மை புலப்படும்! தம்மை மேல் குடியினராகவும் மேட்டுக் குடியினராகவும் எவர் கொண்டிருந்தாரோ அவர் வித்திய வித்தின் விளைவு இது! இந்த அறுவடையைத் தந்நலப் பெருக்குடைய கற்றோரும் வணிகரும் பிறர் பிறரும் பற்றிக் கொண்டனர். பற்றிக் கொண்ட அளவில் நில்லாமல், பற்றி எரிந்து பெண்ணினம் மடியவும் வெறிச் செயல் ஆற்றத் துணிந்து விட்டனர்! தாம் விலை மாடாகி விட்டமை உணராமல் விலை தந்த கொடையாளியையே கொம்பால் குத்திக் குலைக்கும் வெறிமாடும் ஆகிவிட்டனர்! இதற்குப் பெற்றோள் பெற்றோன் பிறந்தோன் என வேற்றுமை இல்லாமல் பங்கு பற்றிக் கொண்டு முளர்! பண்பிலாத் தனத்திற்குப் பண்பாட்டுச் சாயம் வேறு பூசிப் பாதுகாக்கின்ற னர். அறிவறிந்தோர் எண்ணின் இது அயல்நெறியாளர் தந்த அழிவு என்பது வெளிப்படப் புலப்படும்! அதனைப் பேயாய்க் கட்டியழும் பேதையர் இழிமையும் புலப்படும் (தொல்.களவு 1..) பெண்டிர்க்குக் கையுறை வழங்குதலும், பரிசம் வழங்கு தலும் மணம் புரிந்து கொள்ளலுமே தமிழர் நெறி. அதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களின் தொன்னெறி யாகிய காதல்வழிக் கற்பு நெறியேயாம். அந்நெறிவிளக்கமே இன்பத்துப் பாலாம் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் ஐந்திற்கும் முறையே ஐந்தைந்தாக இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டது இன்பத்துப்பால். அந்நெறி போற்றாமல் அயல் நெறிபோற்றிய அவலமே மாப்பிள்ளைக் கொடையாய்ப் பெண்ணினத்தைச் சிதைப்ப தோடு ஆணினத்துக்கும் அழியாக் கறையாக உள்ளதாம். குடும்பத் தளிர்ப்புக்கு இன்றியமையாதவை அன்பும் அறனும். அவையே, குடும்பவாழ்வின் பண்பு அன்பு என்றும், பயன் அறன் என்றும் வள்ளுவரால் வகுக்கப்பட்டன. அவ்வன் பில் தளிர்த்தல் இருபாலுக்கும் உரியவை. ஆதலால் சிறை காக்கும் காவல் இருவர்கக்கும் ஆகாது; நிறைகாக்கும் காவலே நேரிய காவலாம். சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்று மகளிர்க்குத்தானே சொல்லியுளார் வள்ளுவர் என வள்ளுவத்தை முழுதுற ஓதினார் வினவார். மகளிர்க்கு ஓதி நிறை காவல் ஆடவர்க்கும் வேண்டும் என்பதை பலகால் வலியுறுத்துகிறார் வள்ளுவர். அஃதிருபாற் பொது என்பது 154, 917, 1138, 1251, 1254 ஆகிய குறள்களால் வெளிப்படும். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத் தான் கொண்டொழுகின் உண்டு என்னும் குறளோ ஆடவர் நிறையை வெளிப்படக் காட்டி விடும். இருபாற்கட்டு இல்லாமை இக்கட்டுகளுக்கு எல்லாம் மூலமாம். அதன் விளைவே, பிறர்மனை நயப்பும். வரைவின் மகண்மையுமாம். பிறர்மனை நயப்பு ஆண்மைக் குற்றம். வரைவின் மகண்மை பெண்மைக் குற்றம், இவ்விரண்டும் உண்மை, வாழ்வுச் சிக்கல். இச்சிக்கல் தீர்வுக்குவழி ஒத்த உயிர்நேயம் உடைமையாம். விரும்புதல் வீழ்தல் எனப்படும் ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பாமை பிரிவுக்கும் பிணக்குக்கும் இடமாகிப் பிளவுக்கும் வழியாக்கிவிடும். ஆனால் விரும்புவார்க்குத் தக்க விரும்புவார் இணையின் மழைபெய் என்றவுடன் பெய்யும் மழையொப்ப நிறைநலம் பயக்கும். இதுவே, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி என்பதால் (1192). விருப்பமிக்க துணைவிக்கு விருப்பமிக்க துணைவன் செய்யும் அன்பு, உழவர்க்கு வேண்டும் பொழுதில் பெய்யும் மழையைப் போன்றது என்கிறார். மேலும் வீழும் இருவர்க்கு இனிதே (1108) வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு (1193) என இருவரும் ஒத்து இணைந்த இனிய வாழ்வே பெருமித வாழ்வு என்பார். இத்தகைய வாழ்வே பெய்யெனப் பெய்யும் மழை, யெனவும் பேசுவார். இத்தகைய வாழ்வு வாயாமை, வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் என வருந்தியுரைப்பார். உயிர் தளிர்க்கச் செய்யும் உரிமை வாழ்வை உதறிச் செல்லும் நிலையே, கூடா ஒழுக்கமூலமாகவும், சிவப்பு விளக்கு நிரயமாக வாழ்வுச் சிக்கலாகி விடுகின்றன. கூடுதல் சிறக்க வேண்டும் எனின் ஊடுதல் வேண்டும். ஏனெனில் ஊடுதல் காமத்திற்கு இன்பமாம். அக்குறைக்கு இடமில்லா நிறைவனாக வள்ளுவக் காதல் தலைவன் உள்ளான். ஊடுதல் இல்லாமல் உவகையை உப்புச் சப்பு இல்லாமல் செய்துவிட விரும்பாத தலைவி, தலைவனுக்கு இல்லாத குறைகளைப் புனைந்தும் இட்டுக்கட்டியும் கூறி விடுகிறாள். இதனைக் கூறும் வள்ளுவம் இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து என்னும் (1321, 1325) இரண்டறக் கலக்கும் கலப்பே இல்லறச் சிக்கலைத் தீர்க்கும் மாமருந்து என்பதை நிலத்தோடு நீரியைந் தன்னார் என்பார் வள்ளுவர்; விண்ணுலக இன்பினும் இவ்வின்பமே உயரியது என்றும் கூறுவார் (1323; 1303) இதனையே, உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு என உடலுயிர் உறவாகக் கூறுவார். கருமணியிற் பாவாய் நீ போதாய் யாம் வீழும் திருநுதற் கில்லை இடம் (1123) எனத் தன் கண்ணின் பாவையாய்க் கருதும் தலைவனும், கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து (1127) எனத் தன் கண்ணுள் உறையுநராகக் கருதும் தலைவியும் ஒன்றிய வாழ்வில் ஒன்றாதது உண்டா? ஊடுதலும் அளவுக்கு நீடுதல் ஆகாது. அதற்கும் ஓர் அளவுண்டு. ஊடிய வரை உணர்ந்து கூடுதல் இன்றியமையாத் திறம். அதற்கு மாறாதல், ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று என்பதாய் முடியும் (1304). இவ்வூடலியல்பே இவ்வாறு போற்றப் படத்தக்கதெனின் பிறவிடங்களில் கொள்ளும் சினம், சீற்றம், வெகுளி, பொறாமை, வஞ்சம், நஞ்சம், போர், பிணக்கு என்பன துணையோரிடம் கூடுமே? இவையெல்லாம் ஈருடல் ஓருயிர் இணைந்து வாழ்வில் இணையக் கூடாதவையாம். இவை இல்லாவாழ்வே, மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார் என்னும் வெற்றி வாழ்வாகும் (1289). இல்வாழ்வுப் பயன் அறம் என்பதை எண்ணின், அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்பது விளக்கமாகும் (49); அவ்வில் வாழ்வே, மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் வழங்கும் நன்மகப்பேற்றை அருள்கின்றது. அதுவே, துறந்தார், துவ்வாதார், இறந்தார், தென்புலத்தார் தெய்வம் என்பார்க்கெல்லாம் காப்பிடமே இருந்து உய்விக்கின்றது. பயன் கருதா அக்கொடைத் திறமே மண்ணுலகிலேயே விண்ணுலகப் பேற்றை அருள்கின்றது. இரட்டைக் கிளவி போல் பிரியா வாழ்வினர் என்று இணையிலா உவமை சொல்லிய பாவேந்தர் படைத்த குடும்ப விளக்கின் முகப்புத் தொடர், குறளோவியம் குடும்ப விளக்கு என்பதை உணரின் சிக்கலிருள் அகன்றோடும். 3. பொதுவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் பொது என்பது தனிவாழ்வும், குடும்ப வாழ்வும் கடந்து விரிவுற்ற குமுகாய-நாட்டின-உலகின-உயிரின முழுதுறு வாழ்வாகும். பொது நோக்கான் வேந்தன் வரிசையாக நோக்கின். ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல் எனப் தனிப்பார்வை கடந்ததாக வள்ளுவத்தில் பொது இடம் பெறும். இந்நாளில் வழங்கும் ஊர், நகர், நாடு, கட்சி, சாதி, சமயம் ஆகிய இன்னவெல்லாம் அடக்கியது இப்பொதுவாகும். பொதுக் கூட்டம், பொது நன்மை, பொதுமை என்பனவற்றில் இடம் பெறும் பொதுமை விரிவினது இது. ஊர் மன்றம் பொது என்றும், பொதியில் என்றும் வழங்கிய வழக்கு அறியத்தக்கது. கல்வி எல்லார்க்கும் கட்டாயத் தேவையானது கல்வி. இக்கல்வி பொதுக் கல்வி என்றே வழங்கப்படும். எழுத்தறிவின் இன்றியமையாமையே, இந்நாளில் கிளர்ந் துள்ள எழுத்தறிவு இயக்கமாகும். நாகரிக மிக்க காலமாகச் சொல்லப்படும் இக்காலத்திலும், கல்வியறிவில்லார் மிகப் பலர்; கற்றாருள்ளும் கையெழுத்துப் போடும் அளவில் அமைந்தாரும் உளர்; மக்களாட்சி இங்குத் தோன்றிய போது, தேர்தல் விண்ணப்பத்தில் ஒப்பமிடுவதற்காகவே கையெழுத்துப் போட மட்டும் அறிந்தாரும் உண்டு எனின், பிறர் கல்வி பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. கல்வி என்பது ஒரு சில மேட்டுக் குடியினர்க்கே உண்டு என்று இடைக்காலத்தில் ஏற்பட்ட தன்னலக் கொள்ளையே அதன் மூலம் ஆகும். கலைமகள் வழிபாடு செய்து கொண்டு, கல்வியைக் கெடுத்த நாடு இது எனின், நாணத் தக்கதாம். சங்க இலக்கியத்தை மேலோட்டமாகப் பார்ப்பவருக்கும் எத்தொழிலரும் எந்நிலையரும் பால்வேறுபாடு இல்லாமல் கற்றிருந்தனர் என்பது நன்கு விளங்கும். அக்கால நிலையில்தான், எண்ணும் எழுத்து மாகிய இரண்டு கண்கள் என்னும் கொள்கை உறுதியாக இருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் என்னும் குறள் மணிகளைக் காண்க. அக்கல்வி பதவிக் கல்வி அன்று; வேலைக் கல்வி அன்று; அக்கல்வி மாசறு கல்வி; நிற்கக் கற்ற கல்வி; ஊரெல்லாம் உலகெல்லாம் உறவாகக் கொள்ளச் செய்யும் பண்பாட்டுக் கல்வி; அக்கல்வியும் குறித்த காலத்தளவில் கற்றொழியும் காலக் கல்வி அன்று; சாமளவும் கற்கும் சாவாக் கல்வி. கல்வி வெளியே இருந்து புகுத்தப்படுவது அன்று; உள்ளிருக்கும் சுரப்பை வெளிக் கொண்டு வருவது. இதுவே, தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்பது. உரையாடுதல் உறவாடுதல் ஒழுகுதல் என்பன கொண்டே, இவர் கற்றவர் இவர் கல்லார் என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கிய கல்வி அது. தாம் அடையும் இன்பத்தை உலகமும் அடைய வேண்டும் என்னும் விருப்பத்தால் ஒவ்வொருவரும் பிறர்க்குக் கற்பித்தலை மேற்கொண்ட கல்வி அது. கற்றவன் எவனோ அவனே கற்பிப்பவனும் ஆகலானும், கற்றுக் கொண்டே கற்பிப்பவனும் ஆகலானும், மாணவன் என்னும் சொல்லாட் சியோ ஆசிரியன் என்னும் சொல்லாட்சியோ குறளில் இல்லையாம். கல்விப் பயனை உணர்ந்தமையால்,அக்கல்வியை ஒருமுகப் பட்டுக் கற்ற அருமை ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எனப் பட்டது. ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வியே அக்கல்வி! அதனையும் நீர் வேட்கையன் பருகு. நீர்க்கு அலாவுவது போலவும், பசி மிக்கோன் உணவுக்கு அலாவுவது போலவும் ஏக்கமுற்றும் செருக்கு அற்றும் கற்ற சிறப்புக் கொண்டது. செல்வம் இருக்கும் போது கல்வி எதற்கு என்னும் எண்ணம் இல்லாராய்க் கற்றனர் என்பது, கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்பதால் புலப்படும். மேற்குடிப் பிறப்பினும் கல்லாதான் கீழ்ப் குடிப்பிறப்பனே என்றும், கல்லார் விலங்கு என்றும் குறிக்கப் படுதல் கொண்டே ஆறறிவுப் பிறப்பியின் அடையாளம் கல்வியே என்பது விளக்கமாகும். கல்லான் விளைநில மல்லன்; களர்நிலம். கல்லான் அழகு, உயிரிலாப் பொய்ம்மை அழகு. கல்லான் செல்வம், பொல்லாக் கேடு தருவது. என்றெல்லாம் வள்ளுவக் கல்லாமை சுட்டுதல், எத்தகு தெளிவுடையது. அப்படியே, அடிப்படைக் கல்வியைப் பெற இயலாதாரும் அக்குறையை நீக்கிக் கொள்ளுதற்குக் கற்றோர் கூறும் நல்லுரையைக் கேட்டுப் பயன் கொள்ளல் வேண்டும் என்பாராய்க் கேள்வி என்பதோர் அதிகாரம் வகுத்தமை பாராட்டுக்குரியதாம். கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை என்னும் குறளைக் காண்க. கல்வி ஆற்றுப் பெருக்கு அன்னது என்றால் கேள்வி ஊற்றுச் சுரப்பு அன்னது என்று அறிவுறுத்தும் சிறப்பினதாம். செவிக்கு உணவாம் கேள்விக்கு வாய்ப்பில்லாத போது தான், வயிற்றுக்கு உணவைக் கருதுதல் வேண்டும் என்னும் வள்ளுவர், பெருந்தீனியர் எப்படி எங்கெங்கெல்லாம் எவ்வெவ்வுணவு சுவையாகக் கிட்டுமெனத் தேடித் திரிவரோ, அது போல் கேள்வித் திறங்களைப் பல்லபல இடங்களிலும் தேடிக் கொள்ளச் செவிச் செல்வர் அலைவர் என்றும் கூறுகிறார். இதனைக் குறிக்கும் குறளாகிய, செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து என்பதற்கு வேறு பொருள் கண்டு மயக்கி விட்டனர். நற்செய்தி கேட்பவரே பணிவினர் என்றும், அவரே கூர்ஞ் செவியர் என்றும், அவரே வாழத்தக்கார் என்றும் கூறும் வள்ளுவர், எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் என்கிறார். வள்ளுவர் காட்டும் அறிவுடைமை நனி சிறப்புடைய தாகும். மெய்ப் பொருள் காண்பதே அறிவு என்று கூறும் அழுத்தம் எத்தனை அறிஞர் பெருமக்களுக்கு மூலவைப்பு. புத்தரும், சாக்கிரடீசரும், இங்கல்சாலரும், பெரியாரும் முழங்கியவை தாமே, எப்பொருள் யார்யார்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதும், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதுமாம். அறிவுடையார் எல்லாம் உடையார் என்றும் அறிவுடை யார் ஆவதறிவார் என்றும் எதிரதாக் காக்கும் அறிவுடையாக்கு அதிர வருவதோர் நோய் இல்லை என்றும், அறிவு அற்றம் காக்கும் கருவி என்றும், சென்ற இடத்தால் செல்ல விடாது தீமையில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதே அறிவு என்றும் அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு என்றும், அறிவினால் ஆகுவதுண் டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை என்றும் கூறும் அறிவிலக்கணம் இவ்வறிவியல் உலகமும் தலைமேல் கொள்ளத் தக்கவை அல்லவோ? கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் நான்கு அதிகாரத் தொடர்களையும் வள்ளுவம் எங்கே வைத்துளது? பொருட்பாலைத் தொடங்கி இறைமாட்சியை இசைத்த இசைப்பினைத் தொடர்ந்தே வைக்கப்பட்ட வைப்புப் பொருள்கள் தாமே இவை! இறைமாட்சிக்கு இன்றியமையாதது கல்வி அறிவு என்பது தானே இவற்றின் வைப்பு முறை விளக்கம். கல்வி அறிவில்லா வேந்து எப்படி அமையும்? கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனின் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுககில் லானே (238) கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே (317) என்னும் திருமூலங்களைக் காணின் தெளிவாம். நாட்டில் வள்ளுவர் வகுத்த கல்வி, வாய்க்கவில்லை. அடிமையாய் இருக்க வேண்டும் என்றே அமைத்த கல்வி, விடுதலை நாட்டிலும் விலகாமல் நிலைபெற்றது. வாழும் கல்வியாக இல்லாமல் அழிவுக் கல்வியாகவும் நிலைபெறத் தங்கிவிட்டது. இதன் விளைவென்ன? பயன் பாடு மிக்க விளை நலப் பயிராம் மாணவர்கள். களைச்செடியும் முட்புதரும் நச்சுமரமும் ஆகிப் போலித் தலைமுறையாயும், மதிமயக்கத் தலை முறையாயும், முடம் பட்டும் கிடம்பட்டும் போன தலைமுறையாயும் வளர்கின்றனர். இச்சிக்கலைத் தீர்க்க உடனடியாக வள்ளுவ வழிக் கல்வி கட்டாயம் வேண்டும். இதோ ஓர் ஒலியைக் கேளுங்கள்: 14-3-1948 இல் மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் ஒலித்த ஒலி அது : ஒலித்தவர் தந்தை பெரியார்: 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதை விட 3 அணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலகம் ஞானம் ஏற்பட; அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப் படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்இன்பெக்டர், இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றேபோதும் தமது வேலையைச் சரியாகச் செய்ய, அவர்களை உத்தியோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பரீபசை வைக்கும்போது கூடத் திருக்குறளிலிருந்து தான் கேள்வி கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். திருக்குறளும் பெரியாரும் : 33-34 அரசியலுக்கும் ஆட்சிக்கும் திருக்குறள் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை இதனினும் மேலாக எப்படி விளக்க முடியும். ஆட்சி ஆட்சி என்பது இறைமை; அதனைச் செய்பவன் இறை எனப்பட்டான். அவன் நடுவு நிலையாளனாக அமைந்து குடிநலங்காக்கும் கடமையாளன் ஆதலால், அவனே இறையாகவும் கொள்ளப்பட்டான். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் என்பது வள்ளுவம்; இதனையே, ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய் வஃதே முறை என்றும் கூறுகின்றது. மேலும், தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு என்று இடித்தும் கூறுகின்றது. காட்சிக்கு எளிமை, கடுஞ் சொல் இன்மை, செவிகைப்பச் சொற் பொறுத்தல், வெருவந்த செய்யாமை என்பவை எல்லாம் ஆட்சியாளனுக்கு வேண்டும் என வலியுறுத்துகிறார் வள்ளுவர். கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர் என்று கூறி, அவ்வாட்சியாளனே கொலையிற் கொடியன் எனின், கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற் கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து எனப் பழிக்கிறார். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் என்னும் உழவுரிமையாளன் போல, நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் என்று கூறுகிறார். இவ்வாள்வோன் இலக்கணம் அனைத்தும் மக்களாட்சியில் முதல்வர்களுக்கும், தலைமையமைச்சர்க்கும் உரியனவே அல்லவோ? இவ் ஒவ்வொரு குறளையும் முன்வைத்து ஒவ்வொரு நாள் நாட்டுச் செய்தியையும் ஒப்பிட்டால் முதல்வர்கள் நிலை என்ன? தலைமை அமைச்சர் நிலையென்ன? பழுதெண்ணும் மந்திரியுள் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும் என்ற நிலைமை மாறிப், பழுதெண்ணும் மந்திரியராகவே சூழப் பெற்ற அரசுக்கு நாடே பகையாகி விடுவதல்லது என் செய்யும்? அல்லல்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்று மெல்லியர் கண்ணீர் வடிக்கவும், அதனால் அரசினை மாற்றியமைக்க இயலாச் சூழல் உண்டாகுமானால், சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் என்னும் வன்கண்மை நாட்டில் உருக் கொள்ளல் தீரா நிலையாய் ஆகிவிடும் அல்லவோ? இற்றை நாட்டின் வன்முறைப் போக்குகளை யெல்லாம் தூண்டி விட்டுத் துலக்கிக் கொண்டிருப்பவர் பெரிதும் ஆட்சிக் கட்டிலரும் அவர் அரவணைப்பும் பாதுகாப்பும் உடையவருமே யாம் என்பதை உணர்வோர் இச்சிக்கலைத் தீர்க்க வள்ளுவத்தை மேற்கொண்டால் அன்றித் தீர்வு இல்லையாம். நாடு நாட்டின் இலக்கணம் கூறவரும் வள்ளுவர். நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு என்றார். அதே நாடு, பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு என்றும் கூறினார். தன்னிலையில் சிறத்தலும் தாழ்வுற்று வருவாரைத் தாங்கலும் ஆகிய இறைமை மல்குவதே நாடு எனின், நாம் பட்டுவரும் உலகக் கடன்களை எண்ணிப் பார்க்கவே வள்ளுவர் வகுத்த நாட்டின் இலக்கணத்தொடு சிறிதும் ஒட்டாமல் செல்லுதல் விளக்கமாம். அதன் அடிப்படை என்ன? இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்பதை யுணர்ந்து திட்டமிட்டுக் கொள்ளாமையும், செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்னும் ஈரறங்களையும் போற்றிக் கடைப்பிடியாகக் கொள்ளமையுமேயாம். இன்றியமையாப் பொருள்களை ஏற்றுமதியாக்கிக் கெடுத்தலும் தேவையற்றதும் போலிக்கும் புன்மைக்கும் மயக்குக்கும் இடமாவதாம் பொருள்களை இறக்குமதியாக்கிக் கெடுத்தலும் ஆகிய இவற்றைவிட்டாலே நாடு நாடாமே. வறுமை இல்லாமை இல்லாமையாய்ச் செய்தல் வேண்டும் என எண்ணி எண்ணி இரங்கித் திட்டமிட்ட உள்ளம், வள்ளுவர் உள்ளம். இரவு உள்ள உள்ளம் உருகும் என்று கருதியது அவர் உள்ளம். அவ்விரவினை முற்றாய் ஒழிக்கத் திட்டமிடாத அரசை ஒழிந்து போகுமாறு வெம்பி உரைத்ததும் அந்த உள்ளம். அவ்விருப்பை ஒழிப்பதற்காக இல்லறத்தாரும் தம்பங்கைச் செலுத்துதல் வேண்டும் என்னும் கருத்தால், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும், சுற்றத்தார்க்கும் உதவுதலை வலியுறுத்தியது அவ்வள்ளிய உள்ளம். துவ்வாதவர் என்பார், துய்ப்புக்கு வழிவகை அற்று ஒடுங்கிப் போய் இரத்தற்காக வெளிப்படாதவர். இறந்தார் என்பார், அத்துய்ப்புக்கு வழிவகை அற்ற நிலையில் வீட்டை விட்டு வெளியேறி வந்தவர். சுற்றத்தார் என்பார், உரிமைச் சுற்றமும், உறவுச் சுற்றமும், தொழிற் சுற்றமும், ஆகிய பலருமாம். இவர்களைப் பேணல் சுற்றந்தழாஅல் என்றோர் அதிகாரப் பொருளாக அமைகின்றது. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் என்பதில் அதில் ஒன்று. இனி, ஈகை என்பதோர் அதிகாரம், வறியார்க் கொன் றீவதே ஈகை எனப் பொருளின்மையே, இன்மையாக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது அது. காணார் கேளார் கால்முடி மாயோர் முதலோர்க்கு உதவுதல் தவிர்த்து, வறுமையரே உதவுவதற்கு உரியர் என்பது அவர் கொள்கை. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பதே வள்ளுவம் ஆகலின், பொறியின்மை உதவி பெறுதற் குரியது ஆகாது என்பது தெளிவாகும். மேலும் பசியாற்றும் கடப்பாட்டிலும் அப்பசியை மாற்றும் கடப்பாடே நலமிக்கது என்பதை, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என வலியுறுத்துகிறார். உணவு உடை உறையுள் என உதவி புரிதலினும் அவற்றைத் தாமே தேடிக்கொள்வதற்காம் வழிவகை களைச் செய்வதே நிலைத்தக்க தீர்வாம் எனத் தொழிலீகையைத் தோற்றுவிக்கிறார் வள்ளுவர். அதனாலேயே, இரவார் இரப்பார்க்கொன றீவார் கரவாது கைசெய்தூண்மாலை யவர் என வடிவிலே அவர்தம் பெருமித வாழ்வைப் பகர்கிறார். அற்றைப் போக்கிகளை நிறைவு செய்தாலே ஆட்சித் திறமும் வாக்குக் கொள்ளைப் பேற்றுக்கு வாய்ப்புமாம் என்று மானக்கேட்டை வாழ்வாக்கி மதிப்புறும் ஆட்சியர் சூழ்ச்சியை வள்ளுவப் பரப்பாளர்கள் பரப்பிப் பரப்பியே அகற்றுதல் வேண்டும். ஏனெனில், ஏந்தி வாழ்தல் இழிவன்று; எம்முரிமை என்றும்; ஏந்துவார்க்கு ஈந்தாலே போதும் எம் ஆட்சி தட்டின்றி நடக்கும் என்றும் ஆளப்படுவோரும் ஆள்வோரும் உறுதிப்பட்டு விட்ட நிலையில் இது தீராக் கடமையாகும். ஒப்புரவு இனி ஒப்புரவு என்பதோ, உயர்ந்தாரும் ஒத்தாரும் தாழ்ந்தாரும் ஒரு நிலையராய் வாழ்தலைக் குறித்தது. மழை எப்படிப் பொதுப் பொருளோ அப்படிச் செல்வமும் பொதும் பொருளாதல் வேண்டும் என்ற தொடக்க முடையது ஒப்புரவு. ஊருணி நீர் எப்படி ஊரவர்க்கெல்லாம் பொதுமைப் பட்டதோ அப்படிப் பொதுமைப் பட்டது பொருட் செல்வம் என்றும், ஊர் நடுவே பழுத்த பழமரப் பயன்பாடு எப்படி ஊரவர்க் கெல்லாம் பொதுவோ அப்படிப் பொதுவினது செல்வம் என்றும், மருந்துமரம் எப்படி நோயர்க்கெல்லாம் இன்றியமையாப் பொதுத் தேவையதோ அப்படிப் பொதுத் தேவையது பொருள் என்றும், ஊரறிந்த உவமைகளால் விளக்குவது ஒப்புரவு. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்னும் குறள், ஒப்புரவின் மேல் வள்ளுவர்க்கிருந்த ஒப்பிலாப் பற்றுமையை வெளிப்படுத்தி விடும். ஒப்புரவு ஆக்குவது எப்படி? உழவுத் தொழிலில் செய்யப்படும் ஒப்புரவுப் பணியை அறியின் அதன் செய்வகையும் பயனும் விளக்கமாகும். மேடும் பள்ளமும் ஆகிய நிலத்தில் அப்படியே பயிரிட்டால் என்ன ஆகும்? மேட்டுக்கு நீர் ஏறாமல் பயிர் காய்ந்து கெடும்; படும். பள்ளத்தில் நீர் கிடையாய்க் கிடந்து அழுகும்; அழியும். அம்மேடு பள்ளம் ஒரு சீராய்ச் சமன் படுத்தப்படின் நிலப்பரப்பெல்லாம் விளைநிலமாய்ச் சிறக்கும். இவ்வொப் புரவே செல்வக்குடி, வறுமைக்குடி என்பவற்றை அகற்றி ஒத்தகுடி என்று ஆக்கும். மண்ணை ஒருமைப்படுத்தல் முயற்சியால் கூடும். உணர்வும் தன்னலமும் அமைந்த உயிர்ப் பிறப்பிகளை ஒரு நிலைப்படுத்தல் எளிதோ-இயல்வதோ-என உறுதிப்பாட்டாளர் ஐயுறார். எந்த ஒரு புதுமையும் உலகம் உடனே ஏற்றுக் கொண்டதா? கோயில் நுழைவைப் பொதுவாக்க உலகம் உடனே ஏற்றதா? பலியை நிறுத்த - உடன்கட்டை ஏற்றத்தைத் தடுக்க உலகம் ஒருப்பட்டதா? இது கால் இயல்பாகி விடவில்லையா? உன் குடிப்பிறப்பு என்ன என்று வினவிக் கல்வி நிலையங் களின் உண்டுறை விடுதிகளிலும் பிரித்து வைத்தமை இல்லையா? இவையெல்லாம் இன்று நாணற்குரிய செயல்களாகத் தோன்றவில்லையா? நாம் இயலுமா என்று வினாவும் நடைத்திட்டத்தைக் காரல்மார்க்கசு கொள்கை வழி வந்த இலெனினார் உருசிய நாட்டில் உறுதிப்படுத்தி விடவில்லையா? அக் கொள்கையை ஏற்றுக் கொண்ட சீனம் முதலிய நாடுகள் உலகில் இல்லையா? உருசிய நாடு அக்கொள்கையில் இருந்து வழுவிற்றே எனின், அது நடைப்படுத்துவார் தோல்வியே யன்றிக் கொள்கைத் தோல்வி ஆகாதாம். அவ்வாறு கணிப்பின், சமயங்கண்டோர் உரைகள் எல்லாம் சால்புடன் போற்றப்பட்டுக் கொண்டா உள்ளன? கூட்டமும் குரலும் இருந்தால் போதும், கொள்கை பற்றிக் கவலை இல்லை புறக்கோலம் மட்டும் போதும் என்ற நிலையைப் பார்ப்பின், கொள்கையை நடைமுறைப் படுத்துவார் தோல்வி, கொள்கைத் தோல்வி ஆகாது என்பது வெளிப்படும். சரியாகச் செயல்பட்டிருந்தால்-நில உச்ச வரம்பு, நிலக் கொடை இயக்கம் ஆகியவையும் அரசுடைமைத் திட்டங்களும் நன்கு செயல்பட்டிருந்தால்-ஒப்புரவுக்கு வாய்ப்புக் கிட்டி யிருக்கும். நிலத்துக்கு உச்ச வரம்புப் பெயரிட்டு அதற்கு எதிரிடையான செயல்கள் விதிவிலக்குகள் எத்தனை நடந்தன? பணப் பயிர்க்கு விதிவிலக்குத் தந்து பணக்காரர் பக்கம் சார்ந்து நின்ற பழி என்ன? விளை நிலத்துக்கு உச்ச வரம்பு போலத் தொழிலக வருவாய் மாதச் சம்பள வருவாய் ஆகியவற்றுக்கு உச்ச வரம்பு ஏற்பட்டதா? அவற்றைச் செய்தால், ஒப்புரவு அமைப்பு உண்டாதல் அரிதன்றே! அவ்வொப்புரவு செய்தலால் தன்னை இழப்பினும், தன் ஆட்சியை இழப்பினும் பேறே என எண்ணுவார் வேண்டும் என்றன்றோ வள்ளுவம் பேசுகின்றது! அதுதானே, ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து என்பது. பொருள் பொருட்பால் அளவே வள்ளுவப் பொருளியல் வளம் காட்ட வல்லது. எழுபது அதிகாரம்; எழுநூறு பாடல். அறத்தின் அளவும் இன்பத்தின் அளவும் கொண்டு அதனினும் விஞ்சிய பெருக்க அளவு அது அவ்விரிவில் பொருள் செயல் வகை என்பதோர் அதிகாரமே அப்பெயரை நேராகத் தழுவிய மைந்தது. ஆனால் பொருள் என்னும் சொல்லோ அறுபத்து இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. அப்பொருள் சுட்டும் வேறு பல சொற்களும் இடம் பெற்றுள. பொருள் தேடுக; பொருள் சேர்க்க; பொருள் குவிக்க என்று வள்ளுவம் கூறுவதில்லை. செய்க பொருளை என்று ஏவும் வள்ளுவம் செய்க பொருளை என்பதைக் கடைப் பிடியாகக் கொண்டு திகழும் நாடுகளில் தலையாய நாடு எது? சப்பான் நாடு என்பதை, அதனை அணுவால் அழித்த அமெரிக்க நாடும் அறியும் அப்பேரழிவுக்கு ஆட்பட்ட நாடு அவ்வணுவை ஏவிய நாடும் நிமிர்ந்து நோக்க வானுயர்ந்த தோற்றம் செய்வது எதனால்? செய்க பொருளை என்னும் வள்ளுவச் சீர்கள் இரண்டற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது தானே! நம் நாட்டுக்கு உய்யும் நெறி அது என்பதன்று; நானிலம் உய்யும் நெறியே செய்க பொருளை என்பதில் உள்ளது! பொருள் புண்ணியத்தால் முன் வினைப் பயனால் வந்தது என்பதன்று வள்ளுவம் உலையா முயற்சியால் ஊழையும் வெல்லும் ஆற்றலால் வருவது என்பது வள்ளுவம். பொருள் நல்லோர் அல்லோர் இருபாலாரிடத்தும் இருத்தல் உண்டு. பூரியர் கண்ணும் உள என்பார் பொருட் செல்வத்தை! வைத்தான் வாய்சான்ற பெரும் பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்ததில் என்றும், அற்றார்க்கு ஒன்று ஆற்றா தான் செல்வம் மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று என்று பழிப்புக்ழு இடனாதல் உண்டு; ஊருணியாய்ப் பழமரமாய் மருந்து மரமாய் மழை வளமாய் மாண்புறுவதும் உண்டு என்றும் கூறுவார். பொருள் செயல் வகையில், பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் எனப் புகழ்வார். இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என இரங்குவார். பொருள் என்னும் பொய்யா விளக்கம் எனப் பூரிப்பார். அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்றும், அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் என்று பொருள் வரும் வழியும் தீமையற்றதாய், அருளும் அன்பும் உற்றதாய் இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். அருளேயும் பொருளாலேயே காக்கப்படும் என்றும் தெளிவிப்பார். பொருள் பகைவர் செருக்கு அறுக்கும் என்றும், அறமும் இன்பமும் வழங்கும் என்றும் கூறுவார். வாணிகத்தால் பொருள் தேடுவார், அப்பொருளாலேயே அறமும் தேடிக் கொள்ளலாம் என்பதை, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின். என்பார். பொருள் செயல் வகையை அன்றி, நன்றியின் செல்வம் என்னும் அதிகாரத்திலும் பொருளியல் விரிப்பார். அதில் பயன்படாப் பொருளுக்கு இழிவு என்பது பயன்படுத்தான் இழிவு என்பதைத் தெளிவிப்பார். நல்லோன் வறுமையில் செய்யும் நலப்பாட்டையும், அல்லோன் வளமையிலும் செய்யான் என்றும், அவன் வளம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தது ஒப்பது என்றும் கூறுவார். அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒய்பொருள் கொள்வார் பிறர் அப்பாழோன் செல்வத்திற்குப் பரிந்தும் இரங்குவார். அவ்வள்ளுவப் பொருளியல் நெறி பொருளியல் வல்லாரால் போற்றப்பட்டு ஆள்வார் ஒப்புகையுடன் நடைமுறைப்படின் பொரும்பாலான சிக்கல்கள் ஒழியவே செய்யும். தென் புலத்தார் நாட்டின் தலையாய செல்வங்களுள் ஒன்று அறிவாளர் ஆகிய செல்வம். கூர்த்த அறிவாளரே உலகை இற்றை நிலைக்கு ஆக்கியவர் ஆவர். ஊண், உடை, உறைவிட வளர்ச்சிகளா உழைப்புத் தொல்லையைக் குறைத்தலா, ஏந்துகளை ஆக்குதலா, கருவிகள் கண்டு பிடிப்பா, போக்கு வரவு ஆலை தொழிலகம் கண்ட ஆக்ககங்களா, வீண் செலவா எல்லாம் எல்லாம் அறிவாளராம் செல்வம் வழங்கிய செல்வங்களே! அச்செல்வங்களின் நிலை இந்நாட்டில் எவ்வாறுள்ளது? இந்நாட்டின் செல்வத்தால் வளர்ந்து வாழ்ந்து, இந்நாட்டு மூளைத் திறத்தால் பயின்று ஓங்கி உயர்ந்து, பிற நாட்டுக்குப் பாடுபடுபவராய், தம்மைத் தாங்கிய நாட்டுக்குத் தம் கடன் செய்யாதவராய் ஆக்குவது எது? மூளையர் பெரும்பாலரும் அயல்நாட்டுக்கு உரமும் ஊற்றமும் உயர்வுமாகி விடுகின்ற இந்நிலைமையை அறிவர் எண்ணுகின்றனரா? சான்றோர் உரைக்கின்றனரா? அரசு சிந்திக்கின்றதா? முடத் தெங்கு என்பது வளைந்த தென்னை, நிற்கும் நிலத்தின் நீரும் உரமும் கொண்டு, பிறர் நிலத்துச் சென்று ஆங்குள்ளார்க்குப் பயன்படும் தென்னையே முடத்தெங்காகும். இந்நாட்டு மூளையரும் உழைப்பரும் முடத்தெங்காகி விடல் ஏன்? அவர்க்கு வேண்டும் ஆய்வகம், தொழிலகம், வேலை வாய்ப்பு இன்னன செய்து தாரா அரசின் குற்றம் தானே! இன்னின்ன செய்து தர நாங்கள் காத்திருக்கும் அவற்றை உதறிவிட்டு நீங்கள் முடத் தெங்காகி விடலாமா? என்று மூளையரையும் உழைப்பரையும் கேட்க இந்நாட்டுக்குத் துணிவு உண்டா? முறைமை உண்டா? வள்ளுவர் அன்றே எண்ணினார். ஒவ்வொரு குடும்பத் தலைவனும் அறிவாளரைப் போற்றுதல் வேண்டும் என்னு முகத்தால் நாடாள்வோர்க்குத் தீராக் கடடையாவது அது என்பதைக் கூறினார். அது தென்புலத்தார் ஓம்பல் தலை என்பதாம். தென் புலத்தார் என்பதற்குத் தெளிந்து தேர்ந்த புலமையாளர் என்னும் பொருளை விடுத்து, இறந்தார்க்குச் செய்யும் கடமையாக்கி விட்ட கேட்டினும் கேடு, அறிவாள ரையெல்லாம் அயல்நாடு தேட விடும் நிலைமை ஆகும். மூளைச் செல்வம் மூலப்பொருள் ஒன்றன் மதிப்பை மும்மடங்கு நான் மடங்கா? மூவாயிரம் நாலாயிரம் மடங்கு உயர்த்துவதை உருக்குக் கம்பி, ஒலிப்பெருக்கி ஆக்கப்படுவதால் உண்டாகும் விலைமானத்தாலேயே கண்டு கொள்ள முடியுமே! பிறப்பொப்பு இனி மக்கட் பிறப்பிலே என்ன வேற்றுமை? சமயம், சாதி, தொழில், நிறம், பணம், பதவி, கல்வி என்பவற்றால் உயர்வு, தாழ்வு கொள்ளல் என்ன முறை? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவம் நடையிடின் வேறுபாடுகளைச் சுக்கல் சுக்கலாகத் தகர்க்கத்தானே வேண்டும்? சிறுபான்மையினர் என்பதற்காகக் கட்டற்ற உரிமைகள் சலுகைகள் உண்டாம் தரவும் வேண்டுமாம். அரசும் முறை கடந்து வழங்குமாம். அவர்கள் என்ன மாந்தப் பிறப்பல்லாத் தனிப் பிறப்புக்களா? எச்சமயம் எனினும் மாந்தப் பொது நிலைக்கு உரியதே. அதற்கு நாட்டியல் ஒருமைக்குக் கேட்டியல் செய்யும் உரிமை இல்லை! அப்படிப்பட்ட தனி உரிமைகளை வாக்குகளை நோக்கியே வைத்துக் கொண்டிருக்கும் மக்களாட்சி மாக்களாட்சியன்றி அறநெறி ஆட்கியாகுமா? ஒரு நாட்டு மொழிகளுள் ஏற்றத் தாழ்வு காட்டல், மொழிக்கு மொழி வல்லாண்மை கொண்டு அடிமைப்படுத்தல். இவ்வெல்லாம் நாட்டியல் ஒருமைப்பாட்டை ஒழித்துக் கட்டுவன என்பது வெளிப்படை. இவற்றுக் கெல்லாம் ஒத்த ஒரோ ஒரு தீர்வு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெருநெறி போற்றலாகும். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறுப்பும் இல்லது நாடு என்பது வள்ளுவம். ஆனால் இவற்றைச் சமயத்தின் பேராலும் சாதியின் பேராலும் அரசியல் கட்சியின் பேராலும், தற்சார்பு என்பதன் பேராலும் ஆட்சிக் கட்டிலில் இருப்பாரும், அறிவாளர், சமயத் தோன்றல், துறவர், தலைவர் என்னும் போர்வைக்குள் அல்லவை உள் வைத்துப் புறத்தே நல்லவை காட்டி அமைவாரும், ஊட்டி வளர்த்து நாட்டை உருக்குலைத்து வருதல் கண்கூடு, இல்லாக்கால் நால் வருணம் தக்கதே என்றும், உடன் கட்டை ஏறல் தக்கதே என்றும், பெண்ணுக்கு ஒத்த உரிமை கூடாது என்றும், எத்தனை மகளையும் மணக்கலாம் என்றும், சமயச் சின்னமாகப் படைக்கலம் ஏந்தலாம் என்றும், சிறுபான் மைப் பெயரால், பெரும்பான்மையர்க்கு இல்லாப் பேறெல்லாம் பெறலாம் என்றும் நாட்டு நடைமுறை இருக்கமாட்டா. ஏமாற்று, அடிமை, வஞ்சம், நஞ்சம், கொள்ளை, கொலை என்பவை எவர் செய்தால் என்ன? அவர் கொண்ட சாதி சமயங்களாலோ, குடிப்பிறப்பாலோ தக்கவை என்று ஆகிவிடுமா? மாந்தப் பொது நோக்கில் குற்றம் குற்றமே என்னும் நடுமை நெறியே போற்றப்பட்டால் அல்லாமல் நரித்தனம் மலியவே செய்யும். தின்பது, இறப்பதற்காகக் கண்ணீர் வடிக்கவே வடியாது. தலைவிதி என்று தப்பித்துக் கொள்வது. தகவு காணவே காணாது, இவ்வெல்லாத் தீர்வுகளுக்கும் ஒரே ஒரு செங்கோல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் ஒருமைப் பார்வையே யாம். சூது பொருள் அழிவுக்கும் புகழ் அழிவுக்கும் ஒருங்கே இடமாக இருப்பது சூதாகும். அது முகடி எனப்படும். மூடிவிடுவது முகடி மூடியாகும். அதன் செயலை, அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியால் மூடப்பட்டார். என்னும் வள்ளுவம். அது, சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது இழத் தொறூஉம் காதலிக்கும் சூது ஒன்றெய்தி நூறிழக்ம் சூது பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் (சூது) பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது உடை செல்வம் ஊண் ஒளி கல்வி (விலக்கும் சூது) என்றெல்லாம் சொல்லி வேண்டற்க வென்றிடினும் சூதினை என்று வேண்டிக் கொள்ளப்பட்டது. அச்சூதினைச் சூதர் மட்டுமோ கொள்கின்றனர். அரசே சூது நிறுவனமாகி விட்டது. பரிசுச் சீட்டு சூது இல்லையா? எந்த மாநிலம் பரிசுச் சீட்டு நடத்தவில்லை. தனித்தனி ஆள் போட்டி போட்டு நடத்தும் சூதுகள் எத்தனை? குலுக்கல் சீட்டு, ஏலச்சீட்டு சலுகை விலை, மலிவு விலை என்பனவெல்லாம் சோரும் உள்ளங்களை மயக்கிச் சொத்துச் சேர்க்கும் திட்டங்கள் தாமே. குதிரைப் பந்தயம் என்பது என்ன - சூதுர் கழகம்தானே! இவற்றின் விளம்பரங்களாகத் தாமே தொலைக்காட்சியும், வானொலியும் திரைப்படங்களும் திகழ்கின்றன. எத்தனை கோடி குடிகளைக் குடிக்கக் கஞ்சிக்கு இல்லாமல் ஆக்கி ஓரிரு குடிகளை மேட்டுக் குடியாக்குவதுபோல் காட்டுகின்றன. அப்புதுமேட்டுக்குடி, அதற்குமுன் இழந்த இழப்புக் கணக்கை எண்ணியதுண்டா? பலரைத் தாய்ச் சீலையர் ஆக்கி ஒருவருக்குப் பட்டுக் கட்டுவது போல் காட்டும் சூழ்ச்சிப் பரிசுத் திட்டங்களை முனைப்பாக இருந்து ஒழித்துக்கட்ட வேண்டியதிருக்கவும், அதுவே முனைப்பாக இருந்து வளர்க்குமானால் அஃது ஆட்சித்தனமா? வேட்டைத்தனமா? மது இனிச் சூதுபோல் விலக்கத்தக்க ஒன்று மது மதியை மயக்கி மக்களை மாக்களாக்கும் மதுவை வழங்குதல் அரசுக் கடமை யாகுமா? குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக்கொண்டே மது ஆலை உருவாக்கல் - மது விற்பனையகம் திறத்தல் - குடிக்க வாய்ப்புச் செய்து தருதல் - குடியரைத் திருத்தவும் மருத்துவம் செய்தல் - இவையெல்லாம் என்ன? நச்சுயிரிகளைப் பரப்பித் தொற்று நோய்களைப் பெருக்கும் கொலைஞன் ஒருவனே, உயிரிரக்கம் உடையான் போல் தொற்று நோய் மருத்துவனாகப் பொய்ம்முகம் காட்டும் போலித்தனம் தானே அது. கேடு தருவன எவை எனினும் உருவாக்கம் இல்லாமலே தடுக்க வேண்டும்! கரவிலே உருவாக்கம் செய்யப்பட்டிருப் பினும், ஊருக்கும் நடமாட்டம் கொண்ட அளவிலேயே கண்டு கையும் களவுமாகப் பற்றி உரிய தண்டனை வழங்கித் தடுத்திருக்வேண்டுமே! அவற்றைச் செய்யத் திறமில்லாமல் குடி குடியைக் கெடுக்கும் எனப் படம் எடுத்தால் அதற்கும் பாம்பு படமெடுப்பதற்கம் என்ன வேற்றுமை? ஈன்றாள் முகத்தேயும் இன்னாது நஞ்சுண்பார் கள்ளுண்பார் உட்கப்படாஅர்; ஒளி இழப்பர் உள்றொற்றி உள்ளூர் நகப்படுவர் என்றெல்லாம் மதுத்தீமையை வள்ளுவம் எடுத்துக்காட்டுகிறதே! நீ மது உண்டபோது எப்படி இருப்பாய் என்பதை நீ அறிய வேண்டுமா? நீ தெளிவோடு இருக்கும்போது மதுவுண்டவன் மயங்கிக் கிடக்குட்ம் நிலையையும், செய்யும் செயலையும் கண்டாலே புலப்படும் என்று தெளிவு காட்டிக் கூறியும், அதனைத் தெளிவாக அறிந்து கொண்டவர்களும் குடிக்கும் உரிமை வழங்குவது குடிகெடுப்பதல்லாமல் என்ன ஆகும்? குடி கெடுக்கவோ இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். மதுக்குடி தனிவாழ்வுக் கேடு; குடும்ப வாழ்வுக்கேடு; பொது வாழ்வுக் கேடு! முக்கேடுகளைச் செய்வதன்றி எக்கேட்டுக்கும் தலைமை தாங்குவதும் அது. மகவைக் கொல்லுதல்; மாதை அழித்தல்; மதுவைக் குடித்தல் என்னும் முக்குற்றங்களுள் எக்குற்றமேனும் ஒன்றை நீ செய்யலாம் என்று ஒருவனிடம் கூறப்பட்டது. அவன், மகவைக் கொல்லுதல் கொடுமை; மாதைக் கெடுத்தல் கயமை; மதுவைக் குடித்தலால் என்னளவில் தானே தீமை என அதனைக் குடித்தான். அக்குடி வெறி, மாதைக் கெடுத்தது; மகவைக் கொன்றது; முக்குற்றங்களுக்கும் முழுக்குற்றம் மதுக்குற்றம் என்னும் நிலையைப் பெற்றது என்பதொரு செய்தி. இது புனைவே எனினும் குடியர் செய்யும் செயல்களைக் காணின் இப் புனைவின் உள்ளியல் புலப்படவே செய்யும். வள்ளுவ வழியரசு கள்ளினை மதுவகைகளை நடமாட விடவே விடாது என்க. மதுவிலக்கால் நாட்டு வருவாய் குன்றுமே! குடியை இல்லாமல் ஒழிக்க இயவில்லையே; கள்ளச் சரக்குகளால் பெருந்தீமைகள் உண்டாகின்றனவே என்றெல்லாம் காரணம் கூறுதல் கடமையைத் தட்டிக்கழித்து கயமைக்கு உடன்போவதே யாம்! அவ்வப்போது ஆளும்கட்சி சார்ந்தவர்களே மிகுதியும் மதுவிற்பனை உரிமையாளராகத் திகழ்தலும், காவல் துறையும் மதுவிலக்குத் துறையும் கைகட்டி நின்றும், கைநீட்டி நின்றும் இருவகையாலும் ஏவல் பணியராக இயல்வதும் ஆட்சியாளர் தன்னலமே மதுவிலக்கை விலக்கல் என்பதாம். திருட்டு, தீ வைப்பு, கொள்ளை, கொலை, கையூட்டு, வஞ்சம், நஞ்சம் என்பவற்றை எவ்வளவு முயன்றும் காலம் காலமாகக் கருதி முயன்றும் கட்டுப்படுத்த இயலவில்லை; ஆதலால் இவற்றைச் செய்ய உரிமை வழங்குவோம் என்று ஆள்வோர் சொல்லவும் துணிவரோ? தனியாளால் செய்யமுடியாததைச் செய்வதற்காகத் தானே தனியாளர் வழங்கிய வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது? அதனைச் செம்மையாகச் செய்ய முடியாமல் சோரம் போகும் அரசு, ஆட்சிக் கட்டிலில் இருக்கும் உரிமை உடையது ஆகுமா? அஞ்சு நிலை அஞ்சுதற்கு அஞ்சவேண்டும்; அஞ்ச வேண்டாதவற்றுக்கு அஞ்சதல் ஆகாது என்பது வள்ளுவம். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். என்பது அது. அஞ்சுவதோரும் அறனே அஞ்சாமை ஈகை அறிவூக்கம் என்பவற்றைச் சுட்டும் வள்ளுவத்தால், அஞ்சுவது அஞ்சாமைக் குரியதும் வெளிப்படும். அச்சமே கீழ்களது ஆசாரம் என்னும் வள்ளுவம் பேசும். இற்றை நிலையில் எந்த நல்லவரேனும் அஞ்ச நிலையராக நாட்டில் நடமாட முடிகின்றதா? எத்தனை எத்தனை அச்சங்கள்? அச்சம் உடையார்க்கு அரணில்லை என்னும் இற்றை நிலைமைதானே அச்சத்தின் மூலம்! அஞ்சி அஞ்சிச் சாக அவலம் சூழும் நிலைமை நாட்டை அலைக் கழிப்பதை நாள் தவறாமல் செய்தித்தாள்கள் படம்பிடித்துக் காட்டவில்லையா? வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் என்றாரே வள்ளுவர். வெரு வந்து வேகாத நல்லோர் ஒருவர் இற்றை நிலையில் இருப்பரா? அமைதியர்க்கு அறவர்க்கு தொண்டர்க்கு அருளர்க்கு - பாதுகாப்பு உண்டா? வெளியே வந்தவர் வீட்டுக்குத் திரும்புவார் என்பதற்கு உறுதி ஏதாவது உண்டா? சட்டமன்றம் நாடாளுமன்றம் என்னும் அரணுக்குள் உள்ளாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றால் ஏனோ தானோ என வாழும் ஏழை எளியவர்க்குத் தாதா பாதுகாப்பு? இனி, நாட்டில் வன்முறைகள் தலைதூக்கி விட்டன; அலை கொலைகள் பெருகி விட்டன; குண்டு நாகரிகம் உண்டாகி விட்டது என்பார் உளர் எனின், அவர் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிறக்கும் போதே வன்முறையாளராய் - போராடிய ராம் - தற்கொலைப் படைஞராய் பிறந்து விட்டனரா? அவர்க்கு என்ன நெஞ்சம் என்பது இல்லவே இல்லையா? அவர்களுக்கும் பெற்றோர் மனைவி மக்கள் சுற்றம் என்பன இல்லவே இல்லையா? வாழவே விரும்பாமலா போய் விட்டனர். நல்வாழ்வு வாழவே - அனைவரும் ஒருமித்த நல்வாழ்வு வாழவே விரும்பியவர் அவர் என்னும் உண்மையை உணர வேண்டுமே! அவ்வாழ்வுக்குத் தடையும் இடைக்கேடும் தாங்காத் துயரும் உண்டாய தால்தானே வலிய பாறையாய் இறுகிப் போயினர்? வாழ்வா சாவா என்னும் நிலையிலேதானே வாழ்வதற்காகச் சாவை மேற்கொள்ளலாயினர். அது தன்னலமா, பொதுநலம் போற்றிக் கொள்ள முடியாத இக்கட்டால் மேற்கொண்ட முடிவா? இவற்றைச் சுட்டிக் காட்டினால், வன்முறையாளர் போராடிகள் எனப்படுவார், ஆளும் கொடுமையாளர்களாலும் வஞ்சத் தலைமையர்களாலும் அதிகார வல்லூறுகளாலும் அந்நிலை தவிர வேறு வழியில்லை என்னும் கொடு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களேயாம்! ஒரு பெண்மணி, பூலான்தேவி; கொள்ளைக்காரி - கொலைகாரி என்பார். அவளை அந்நிலைக்கு ஆக்கியவரைக் கொள்ளைக்காரர் கொலைகாரர் கயவர் என்று குற்றம் சாட்டாமல் பணக்காரர் பதவியர் மேட்டுகுடியர் என்பதால் சட்டப் பாதுகாப்பும் சால்புப் பாதுகாப்பும் தந்தமையால்தான் என்பதை நினைக்க வேண்டும் அல்லவோ? தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து என்னும் வெருவந்த செய்யாமைத் தலைக் குறளைத் தலைமேல் தாங்கிய அரசும் தலைமையும் அதிகாரமும் உண்டாயின் மெய்யாக நாட்டில் வன்முறை தலைதூக்கியிருக்கவே மாட்டா. ஆனால் இவ்வுண்மை மரத்துப்போன மனத்திற்குப் புகுமா? தோட்கப் படாச் செவிக்கு ஏறுமா? ஒரு புலவுக் கடையிலே உள்ள கறித்துண்டு ஒன்றைக் தெரு நாய் என்று கவ்விக் கொண்டு ஓடுகின்றது. இன்னொரு துண்டைப் பருந்து ஒன்று பற்றிக் கொண்டு பறக்கின்றது. பறக்கின்ற பருத்தைக் கன்னந்தட்டிப் பார்த்து விட்டு, ஓடுகின்ற நாயைக் கட்டைத்தடி கொண்டு வெருட்டி வெருட்டியாடிக்கிறான் புலவுக் கடைக்காரன். பருந்தும் நாயும் செய்தவை ஒரே பிழை. ஆனால் தண்டனை ஒன்றற்கு; மற்றொன்றுக்கு மேனோக்கு பார்வை. மேட்டுக் குடியினர்க்கும் பள்ளத்து வீழ்ந்து கிடப்பார்க்கும் கிடைக்கின்ற நடைமுறை வேறுபாடு இத்தகைத்து. இந்நிலையில் பள்ளத்து வீழ்ந்தார் மேட்டுக் குடியர் மேல் என்ன எண்ணம் கொள்வார்? அவர்க்கு அரணமாக - பாதுகாப்பாக இருப்பாரைப் பற்றி என்ன நினைப்பார்? அதனால் அத்தகைய ஆட்சியையும் நிலையையும் ஒழித்தால் அல்லாமல் உலகத் துயர் தீராது என்பதால், கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (870) என்றார். அதற்கு ஒரு தாண்டி கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை என்று தீர்வும் கூறினார். நாணுடைமை இனி நாணுடைமை என்பதோர் அரிய பண்பு. அதனை மகளிர்க்கே உரிமையாக்கிக் கூறுவார் கூற, வள்ளுவரோ ஆடவர்க்கும் மகளிர்க்கும் அப்பண்பு பொதுமையது என்பதை உறுதியுறக் கூறினார். கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல் நல்லவர் நாணுப் பிற என்பது அது. அவ்வொரு குறளோ உரைத்தார்? நாண்மிக்க நங்கை தன் நாண் துறப்பை இன்பத்துப் பாலிலே மொழியும் நம்மறைத் தோன்றல் வள்ளுவர், பொருட் பாலிலேயும் நாணுடைமை என்றோர் அதிகாரமே வைக்கிறார், நாணுடைமை மாந்தர் சிறப்பு நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு நாண் அணி நாணுக்கு உறைபதி என்றெல்லாம் சிறப்பிக்கிறார். நாண் அகத்தில் இயக்கம் நாணால் (கயிற்றால்) இயங்கும் மரப்பாவை இயக்கம் என்கிறார். பிறர்நாணத் தக்கதுதான் நாணான் ஆயின் அறம்நாணத் தக்க துடைத்து என்று அறம் நாணிக் கவிழ்தலைச் சுட்டு நாணுக் கொள்கிறார். ஆனால் பொதுநிலை இற்றை நிலையில் எவ்வாறுள்ளது? தீமையும், கொடுமையும், வஞ்சமும், நஞ்சமும், பொய்மை யும், கரவும், கயமையும் செய்வார், நன்றி மறப்பார் அறம் துறப்பார், கையூட்டுப் பெற்றார் ஊரறிய நேர்ந்த போதும் நாணுதல் உண்டோ? உண்டோ? நாளிதழ், கிழமை இதழ், திங்கள் இதழ் இன்னன படத்துடன் வெளியிடினும் நாணுதல் உண்டோ? உண்டோ? இது செய்தான்; இழிஞன் இவன் என்றால் ‘ïJ brŒah‹ vt‹? எனத் தலை நிமிர்ந்து வினாவுவான், அவனுக்குப் பாராட்டு எடுப்பான். அவன் காலில் வீழ்ந்து வணங்கித் தெய்வமாக்குவான் நாண் பிறவிதானா? நாண்வேலி அழிக்கப்பட்டபின் நல்விளைவு உண்டா? வள்ளுவ நாணுடைமை நாட்டுலாக் கொள்ளும் நாளே நல்லவை உலாக் கொள்ளும் நாள். நட்பு நட்பு என்பது நெருக்கப் பொருளது நள் + பு. நட்பு, காதல் நெருக்கம் ஒப்பது நட்பு நெருக்கம். அக் காதல் நெருக்கத்திலும் சிக்கல்கள் பல உண்டு. தன்னை முற்றாக இழந்து கரைந்து போகும் காதலிலும் சிக்கல் உண்டெனின் நட்பைப் பற்றி நவில வேண்டுவதில்லை. நட்புப் பற்றி வள்ளுவம் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு கூடாநட்பு என ஐந்ததிகாரங்களை ஒரே தொடராக வகுக்கும் (79-83). இவை அன்றியும் சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பனவும் இவ்வழிப் பட்டனவேயாம். நட்பை இத்துணை விரிவாகக் கூறுவானேன்? பொதுச் சிக்கல் பலவும் நட்பு வகையால் தோன்றி அலைக்கழிப்பதாகவும், அச்சிக்கலை அகன்று ஒழிவதாகவும் இருப்பதாலேயே அத்தகைய விரிவும் விளக்கமும் வேண்டிய தாயிற்றாம். நகுதற் பொருட்டன்று நட்டல் முகநக நட்பது நட்பன்று என்று நட்பியல் கூறும் வள்ளுவம். நிறைநீர நீரவர் கேண்மை அகநக நட்பது நட்பு என்று மெய்ந்நட்புத் தன்மை கூறும். தகவில்லாத் தனத்தில் சொல்லுங்கால் இடித்துக் கூறித் திருத்துவது நட்பிலக்கணம் என்றும் கூறும். உண்மை நட்பு இது என்பதை அளந்து காட்டும் அளவுகோல் வறுமையும் துன்பமும் ஆகும் கெடு பொழுதே என்றும் கூறும். அத்தகைய வேளை கேட்டிலும் வாய்த்த நற்பொழுது என்றும் இயம்பும். நட்பிற் பிழை பொறுக்கும் பழைமை, கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமையது, எனப் பாராட்டுப் பெறும். வினைவேறு சொல்வேறுபட்டார் நட்பைக் கனவில் காணிலும் துன்பமேயாம் என்று விளக்கும். முகத்தால் இனியராய், அகத்தால் வஞ்சராய் இருப்பார் நட்பு அஞ்சப்படும் என்னும் வள்ளுவம், பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் என வழிகாட்டும். மனம் மொழி செயல் ஆகிய மும்மையும் ஒருமையாகத் திகழவேண்டும் என் வலியுறுத்தும் வள்ளுவமே, முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ என்பது பெருந்தற்காப்பும், இருபாலும் நலம் சேர்ப்பதுமாம். இது, தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அமுதகண் ணீரும் அனைத்து என்பதால் விளக்கமாம். சான்றாண்மை குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும் தொடர் (96-100) சான்றாண்மைச் சார்பினை. சால்பு-நிறைவு. சான்றாண்மை அறிவு, பண்பு ஆகியவற்றின் நிவு நலங்கள் ஆகும் தன்மையாகும். ஊராளும், நகராளும், நாடாளும், உலகாளும் திறவன் என்பான் சால்பாளும் திறவனாக இருப்பின் அவை அவை நலம் பெற்றோங்கும். குறைவிலா நிறைவுச் சான்றாண்மை எங்கெங்குண்டோ அங்கங்கெல்லாம் சிக்கல் தீரும்; குறை நீங்கும்; நிறை மல்கும். ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் எனந் சான்றாண்மையாளர் உறுதிப்பாட்டை உரைப்பார் வள்ளுவர். இச்சான்றாண்மைப் பயன் என்ன? அப்பயன் செய்யாக்கால் விளையும் விளைவு என்ன? இவற்றைக், கடனென்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை என்பார். சான்றவர் சான்றாண்மை குன்றிப் போனால் உலகம் உய்யாது என்கிறாரே; இதே போல், பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்றும் கூறுகிறாரே! இவற்றின் நோக்கம் என்ன? சான்றோர் பண்புடையோர் என்பார் உலகக் காவலர்; நெறிமுறைக் காவலர்; பண்பாட்டுக் காவலர்-என்பதேயாம். அவர் எவ்விடத்துக் கண்டிக்க வேண்டுமோ, திருத்த வேண்டுமோ, இடித்துரைக்க வேண்டுமோ, வழிகாட்ட வேண்டுமோ அவற்றை அவ்விடத்துச் செய்தல் வேண்டும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர் என்னும் வள்ளுவங்கள் சொல்லும் சான்றாண்மைக் கடமை களைச் சான்றோர் விட்டனர். சான்றவர்தம் சான்றாண்மைப் பண்மைப் பறி கொடுத்தனர். பிறரைப் போலவே தந்நலத்தாராய் அவ்வப்போது கிட்டும் சிறு நலங்களைச் சிந்தித்து வாழத் தொடங்கினர். நாடு அழிவுக்கு வழி கொண்டது! தலைமைகள் செருக்குத் தலையாட்டம் கொண்டன! அவர் வழிஞர்கள் இழிஞர்களாகச் சூழ்ந்து நாடு வீழ்ந்து கெடும் வழிக்கு வித்தும் விளையும் ஆயினர். வள்ளுவர் வழிச் சான்றோர் வையகக் காவல் பொறுப்பைக் கடனாகக் கொள்ளல் கட்டாயத் தேவையாகும். குடிபடை பொருட்பாலின் முதல்பாடல் படை குடி என எண்ணும். இப் படைகுடி என்பவை ழுடி படை என்னும் பொருள் சிறந்து நிற்கும். நாட்டுப் பணிக்கென வீட்டுக்கு ஓராள் என்று முரச றைந்து கூட்டம் கூட்டிய காலநிலைச் சான்று குடிபடை என்பது. குடிகள் அனைவரும் படைகள்; படைகள் அனைவரும் குடிகள் என்னும் விளக்கமே குடிபடை என்பதாம். பல்வேறு நாடுகளில் இன்ன அகவையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் படைப் பயிற்சியும் படைக்கடமையும் உண்டு என்றிருத்தல் கண்கூடு. குடிகள் தத்தம் கடமை புரிந்து கொண்டிருப்பர். நாட்டுத் தேவையுண்டாயின் அதற்கு முந்து நிற்பர். அந்நிலையைக் கருதி உருவாக்குதல் வேண்டும். படைக்குரிய போர்க்காலம் ஒழிந்த காலத்தில் ஆக்கப் பணிக்கு அப்படையைப் பயன்படுத்துதல் ஆக்கச் செயலாம். யானையைக் கட்டிப்போட்டுப் பயன் என்ன? மலைத் தேக்கை மலையாது இழுத்து வரும் அவ்வானையைத் தளையிட்டுக் கவளம் போட்டு வாளா வைத்திருப்பின் பயன் என்ன? அதற்கும் கேடு. பொது நலத்துக்கும் கேடு. ஆதலால் படை ஓர் கங்கை காவிரித் திட்டம்; அணைத் திட்டம்; சாலை அமைப்புத் திட்டம் என்னும் ஆக்கத் திட்டங்களில் ஈடுபடுத்தப் படவேண்டும். குடிபடை படைகுடி என்பவற்றின் பொருள் உணர்ந்து போற்றவே வீணடிப்புச் சிக்கல் நீங்கி விழுமிய நலத்திட்டங்கள் வெற்றியுற வாய்க்கும். இன்னும் எண்ணிலாச் சிக்கல் தீர்வு எண்ணிப் பார்ப்பார்க்கு வள்ளுவத்தில் இழையோடிக் கிடத்தல் அறியவரும் இவை எடுத்துக் காட்டாகக் கூறப்பட்ட சிலவேயாம். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் இறை நலம் இறையுணர்வு நலம் பயக்கும் கருவி. ஆனால் அதன் சமயப் பிரிவுகள் இந்நாளில் நேருக்கு நேர் மோதலும் முட்டலு மாய்க் காட்சி தருகின்றன. இது பண்டும் உண்டு எனினும் இந்நாளில் வாலுருவு புலியாய் வாயுருமிக் கிளர்ந்துள்ளன. இதன் கேடு அகல்தற்கு உலகம் தழுவிய அளவில் வாய்த்த ஒரோ ஓர் அமிழ்த மருந்து திருக்குறளேயாம். அது எச்சமய வாணர்க்கும் ஏற்புடைய பொது நூலாக விளங்குதல் கண்கூடு. அஃது ஏன்? சமயங் கடந்த பொது நூல் என்பதாலேயே யாம். திருக்குறள் கூறும் இறைமை, பகுத்தளிப்பு, தூய அறிவு, மலரினும் மென்மை, விருப்பு வெறுப்பு இன்மை, மயக்கம் இன்மை, பொறிவாயில், ஐந்துவித்தால், உவமை இன்மை, அறப்பெருக்கம், உயர் குணப்பேறு, ஈடேற்றல் என்பன வெல்லாம் எச்சமயத்திற்கு ஆகாதவை? இப்பண்புகள் எங்கெங்கெல்லாம் திகழ்கின்றனவே அங்கங்கெல்லாம் இறைமை உண்டெனின் முட்டலும் மோதலும் உண்டோ? பிணக்கும் உண்டோ? இல்லை, ஆதலால் விரிந்து உலகப் பொதுமை உயிர்ப்பொதுமை வழிப்பட்ட திருவள்ளுவ இறைமையே எந்நாறும் உலகை உய்விக்கும் என்பதை உலகம் உணர வேண்டும். குறள் கற்றார் உலகுக்கு உணர்த்தவும் வேண்டும். உலகம் உணர்ந்து திருக்குறள் இறைமை வழியில் திருக்குறள் அறநெறியில் இயலத் தொடங்குமெனில் சிறுமை நீங்கும், போர்மை விலகும்; அருண்மை சுரக்கும்; அமைதி ஊன்றும்; திருக்குறள் பிறந்த மண்ணிலேயே அத்தன்மை ஊன்ற வில்லையே என்பார் உளர் எனின், திருக்குறள் இறைமை நூலாய்-சட்ட நூலாய்-வாழ்வு நூலாய் ஆக்கப்படாமல் புகழ் நூலாக மட்டுமே கொள்ளப்பட்டு வருவதால் அதன் தன்னேரில்லாக் கொடையைத் தமிழகம் கொள்ள வில்லையாம். அதனைத் தேசிய நூல் என்று ஏற்கவும் முடியாத அரசாண்மையில் அதன் பயன்பாடு மதிக்கவோபடும். உலகத் தமைப்பாகிய உலக ஒன்றிய அமைப்பு தன் ஆட்சி நூலாகக் கொள்ளும் நாள், உலகப் பெருமக்களாலேயே உண்டாகும். அந்நாளில், குறுகிய சமயச் சார்பு ஒழிந்து, சமயங் கடந்த சால்வு நூலாகிய திருக்குறளாட்சி உலகாட்சியாகும்பேறு எய்தும். அப்பொழுது உலகம் போரும் பூசலும் பிணக்கும் பிளவுமற்று உய்யும்! இணைப்பு திருக்குறள் வழி ஒப்புரவமைந்த நாட்டின் பேறு 1) உழைப்பு இல்லாமல் பொருள் சேர்க்கும் வழிகளை அகற்றல் வேண்டும். 2) உழைப்பவர்க்கு உணவு இல்லை என்னும் நிலை இருக்கவே கூடாது. 3) ஒருவன் தனி வாழ்வுக்காக இரத்தலும், அவனுக்கு ஈதலும் சட்டப்படியான குற்றமாக்கப் படவேண்டும். 4) பொது நலப்பணிக்குப் பொருள் திரட்டலும், கொடுத்தலும் போற்றிப் பாராட்டப்பட வேண்டும். 5) கண்மூடி வழக்கத்தைத் தூண்டும் காட்சியும் பொழிவும் கட்டாயம் தடுக்கப்படவேண்டும். 6) மாந்தனை மாந்தன் தாழ்த்தி அடிமைப்படுத்தும் எவ்வழக்கத்தையும் அடியோடு அகற்ற வேண்டும். 7) பிறப்பால் உயர்வு தாழ்வு எண்ணப்படாத நிலையும், செய்யும் தொழிலால் உயர்வு தாழ்வு கருதப்படாத நிலையும் இருத்தல் வேண்டும். 8) கல்வி என்பது பண்பாட்டுக்கும் தொழில திறத்துக்கும் உதவும் கருவியாக இருக்கவேண்டுமேயன்றி, அலுவல் தேடும் கருவியாக இருத்தல் கூடாது. 9) தனிக் குடும்பம் எனினும் கூட்டுக் குடும்பம் எனினும் எல்லை இல்லாமல் நிலம்புலம் சொத்து வைப்பு எனப் பொருள் குவிப்பகமாக இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட அளவினதாக இருத்தல் வேண்டும். 10) மயக்கும் குடிவகைகள், பொருள் பறிக்கும் களியாட்டங்கள், பரிசுச் சீட்டுகள் ஆகியவை முற்றாகத் தடுக்கப்படவேண்டும். 11) படைத்துறை, காவல் கடனோடு, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் தொழிலியக்கமாகவும் விளங்குதல் வேண்டும். 12) ஏற்றுக் கொண்ட திட்டத்தை முற்றாக நிறைவேற்றும் ஆளுமை அரசே அரசெனத் தொடரும் வகையில் மக்கள் விழிப்புடையவராக விளங்க வேண்டும். நூல் விவர பட்டியல் 1 தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி 2 தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி 3 தொகுதி - 3 1. சொற் பொருள் நுண்மை விளக்கம் 4 தொகுதி - 4 1, இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற்று கதைகள் 5 தொகுதி - 5 1.. புறநானூற்றுக் கதை 1 2. புறநானூற்றுக் கதை 2 3. புறநானூற்றுக் கதை 3 4. புறநானூற்றுக் கதை 4 5. புறநானூற்றுக் கதை 5 6. புறநானூற்றுக் கதை 6 7. புறநானூற்றுக் கதை 7 8. புறநானூற்றுக் கதை 8 9. புறநானூற்றுக் கதை 9 10. புறநானூற்றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைட் தமிழ் மன் றங்கள் 13. பெரும்புலவர் மூவர் 6 தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற்றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறத்தராக 8.வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் நல்ல ஊழ் 10. வள்ளுவர் வழியில் குறளாயட் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல ஆட்சியாராக 7 தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 15. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 16. வள்ளுவர் வழியில் நல்ல சான்றோராக 17. வள்ளுவர் வழியில் வினை 18. வள்ளுவர் வழியில் பிறப்பு 19. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 20. வள்ளுவர் வழியில் தவம் 21. மங்கல மனையறம் 22. ஒரு குறள் ஒரு நூல் 1 23. ஒரு குறள் ஒரு நூல் 2 24. ஒரு குறள் ஒரு நூல் 3 25. ஒரு குறள் ஒரு நூல் 4 26. நினைக்கும் நெஞ்சம் 8 தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 9 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் 10 தொகுதி - 10 1. காக்கைப் பாடினியம் 11 தொகுதி - 11 1. களவியற் காரிகை 12 தொகுதி - 12 1. தகடூர் யாத்திரை 13 தொகுதி - 13 1. யாப்பருங்கலம் (பழைய விருட்தியுடன் ) 14 தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களஞ்சியம் 15 தொகுதி - 15 1. தமிழ் வளம் சொல் 16 தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் 17 தொகுதி - 17 1. புறட்திரட்டு 18 தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் 19 தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் 20 தொகுதி - 20 1.கல்விச் செல்வம் 2.இருசொல் அழகு 3.தனிப்பாடல் கனிச்சுவை 4.பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி