இளங்குமரனார்/8/887 தமிழ்வளம் 38 1. திருமுருகாற்றுப் படை 2. கந்தர் கலிவெண்பா 3. திருவருணைக் கலம்பகம் 4. மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை 5. மீனாட்சியம்மை குறம் - இரட்டை மணிமாலை ஆசிரியர் : இரா.இளங்குமரனார் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 38 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 280 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 280/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக் காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப் பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் 1. திருமுருகாற்றுப் படை 1-32 2. கந்தர் கலிவெண்பா 33-59 3. திருவருணைக் கலம்பகம் 62-166 4. மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை 167-228 5. மீனாட்சியம்மை குறம் - இரட்டை மணிமாலை 233-274 திருமுருகாற்றுப் படை உரைநடையும் குறிப்பும் க. திருப்பரங்குன்றம் (உரை நடை) உயிர்கள் மகிழ்வுற வேண்டும்; உலகம் ஒளி பெறவேண்டும்; இவற்றுக்காகக் கதிரோன் தோன்றுகின்றது; வலமாக அழகுடன் சுழல்கின்றது; அதனைக் கண்டவர்கள் அனைவரும் புகழ்ந்து பாராட்டுகின்றனர்; நீலக் கடல்மேல் சிவந்த ஞாயிறு விளங்குவதுபோல், நீலமயில்மேல் செவ்வேள் ஆகிய முருகன் விளங்குகிறான். முருகன், நீங்காத ஒளியினன்; எட்டாத் தொலைவிடத் திற்கும் விளக்கம் செய்யும் பேரொளி வடிவினன்; தன்னை அடைந்த அடியவர்களைத் தாங்குவதும், அவர்கள் ஆணவத்தை அழிப்பதுமாகிய திருவடிகளையுடையவன்; தன்னைப் பகைத்து வந்தோர் ஆற்றலை அழித்த இடியேறு போன்ற நெடிய கைகளை யுடையவன்; களங்கமில்லாத கற்பையும், ஒளிமிக்க நெற்றியையும் உடைய தேவயானையின் கணவன். (1-6) உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள் 5. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் (குறிப்புரை) 1. வலன் ஏர்பு - வலமாக அழகுற; திரிதரு - சுழலுகின்ற; 2. ஞாயிறு - கதிரோன்; கண்டாஅங்கு - கண்டாற் போல. 3. ஓவுஅற - ஒழிவற, நீங்காது; இமைக்கும் - ஒளிவிடும்; சேண் - தொலைவு; அவிர்ஒளி - விளங்கும் ஒளி; 4. உறுநர் - அடைந்தவர்; மதன் உடை - மதத்தை உடைக்கும்; நோன்தாள் - வலிய அடி; 5. செறுநர் - பகைவர்; செல்உறழ் - மேகம்போன்ற (இடிபோன்ற); தடக்கை - நெடியகை; 6. மறு - களங்கம்; வாள் நுதல் - ஒளிமிக்க நெற்றியையுடைய தேவயானை. (உ - டை) மேகம் கடல் நீரை அள்ளிக்கொண்டு மேலே எழுகிறது; அது கருநிறங்கொண்டு வானில் பரவுகிறது; வாளை வீசினாற் போல மின்னுகிறது; வளமாக மழைத்துளிகளைச் சொரிகிறது; அது கார்காலத்தில் பெய்யும் முதன் மழையாகும். ஆதலால், காடுகளில் குளிர்ச்சியும் நறுமணமும் பரவுகின்றன. அக்காட்டில் பருத்த அடிகளையுடைய செங்கடம்பு மரங்கள் நெருங்கியிருக்கின்றன; ஆதலால்,காடுமுழுவதும் காரிருள் கப்பிக்கொண்டுள்ளது. அக்கடம்பில் வட்டவடிவமான அழகிய பூக்கள் நிரம்பப் பூக்கின்றன. அப்பூக்களை எடுத்து மாலையாகத் தொடுக்கின்றனர்; முருகனுக்குச் சூட்டுகின்றனர்; முருகன் குளிர்ந்த கடம்புமாலை புரளும் மார்பினனாகக் காட்சி வழங்குகிறான். (7 - 11) கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து 10. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் (கு - ரை) 7. கார்கோள் - மேகத்தால் அள்ளிக்கொள்ளப் பெறும் கடல்; கமம் சூல் - நிறைந்த கருக்கொண்ட; 8. போழ் - பிளத்தல்; வள்உறை - வளமான மழைத்துளி; 9. தலைப்பெயல் - முதன்மழை; தலைஇய - பொழிந்த; 10. பொதுளிய - மூடிக் கொண்ட; பராரை - (பரு + அரை) பருத்த அடி; மராம் - கடம்பு; 11. உருள்பூ - வட்ட வடிவமான பூ; (உ - டை) பெரிய மூங்கில்கள் உயர வளர்ந்து தோன்றும் மிக உயர்ந்த மலையில் கண்டாரை அச்சுறுத்தும் தெய்வப் பெண்கள் உளர்; அவர்கள், கிண்கிணி என்னும் சதங்கையைச் சூழக்கட்டிய ஒளி பொருந்திய சிவந்த சிறிய அடியினர்; திரண்ட காலினர்; வளைந்த இடுப்பினர்; பருத்ததோளினர்; இந்திர கோபம் (தம்பலப் பூச்சி) போன்றதும், சாயம் தோய்க்கப் பெறாததும் பூ வேலைப்பாடுடையதும் ஆகிய உடையினர்; பலவகை மணிகளை ஒழுங்காகக் கோத்த சில வடங்களை அணிந்த அரையினர்; கையால் புனைந்து செய்யப்படாத இயற்கை அழகினர்; நாவல் என்னும் பெயருடைய சாம்பூநதம் என்னும் பொன்னால் செய்யப்பட்ட ஒளியுடைய அணிகலன் களை அணிந்தவர்; நெடுந்தொலை கடந்தும் புகழ்விளங்கும் குற்றமற்ற உடலினர்; தோழியரால் ஆராயப்பெற்ற தலையழகுடன் கூடிய குளிர்ந்த கூந்தலினர்; (12 - 20) மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள் 15. கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் 20. துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் (கு - ரை) 12. மால்வரை - பெரியமூங்கில்; நிவந்த - உயர்ந்த; வெற்பு - மலை; 13. கவைஇய - சூழ்ந்த; ஒண்செம் சிறுஅடி - ஒளி பொருந்திய சிவந்த சிறியஅடி; கணைக்கால் - திரண்டகால்; 14. வாங்கிய - வளைந்த; நுசுப்பு - இடை; பணை - பருத்த மூங்கில்; 15. கோபம் - இந்திரகோபம் (தம்பலப் பூச்சி) தோயா - சாயம் தோய்க்கப் படாத; துகில் - ஆடை; 16. காசு - மணி. சில்காழ் - சிலவடம்; அல்குல் - அரை; 17. கவின்பெறுவனப்பு - இயற்கை வனப்பு; 18. நாவல் - சாம்பூநதம் என்னும் ஒருவகைப்பொன்; அவிர்இழை - ஒளியுடைய அணிகலம்; 19. சேண் இகந்து - தொலைகடந்து; செயிர் - குற்றம்; 20. துணையோர் - தோழியர்; இணை - கலையுடன் பொருந்திய; ஈர் - ஈரம்; ஓதி - கூந்தல். (உ - டை) அத்தோழியர், சிவந்த அடியையுடைய வெட்சி மலரின் சிறிய இதழ்களின் இடையே, பசுமையான தண்டை யுடைய குவளையின் தூய இதழைக்கிள்ளிக் கூந்தலில் இட்டனர்; தெய்வவுத்தி எனப்படும் சீதேவி என்னும் அணியையும், சங்கு வடிவாக அமைந்த வலம்புரி என்னும் அணியையும் அவற்றை வைத்தற்குரிய இடங்களில் தலைக்கோலமாக வைத்தனர்; திலகம் வைக்கப்பட்ட மணம் பரவுகின்ற அழகிய நெற்றியில், சுறாமீனின் பெரிய வாயின் வடிவாக அமைந்த அணியைப் படியுமாறு அணிவித்தனர்; செய்யும் ஒப்பனையை நிறைவாக முடித்த குற்றமற்ற கொண்டையில், பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகினர்; கருந்தகடு போன்ற புறத்தையும் பஞ்சுபோன்ற அகத்தையும் உடைய மருதின், ஒளி பொருந்திய பூங்கொத்தை அச்சண்பகப் பூவின்மேல் இட்டனர்; ஆழமான நீரிலிருந்து பல கிளைகளுடன் அழகாக மேலெழுந்து விளங்கும் சிவந்த அரும்புகளைச் சேர்த்துக்கட்டிய மாலையை, கொண்டையைச் சுற்றிக்கட்டினர்; இணையாக அமைந்த வளமான காதுகளில், நிறைந்த அசோகின் அழகிய தளிர்களை, நுண்ணிய வேலைப் பாடமைந்த அணிகலங்கள் விளங்கும் மார்பில் புரளுமாறு அணிந்தனர்; வலிய வயிரமுள்ள மணமிக்க சந்தனக் கட்டையை அரைத்து உண்டாக்கிய அழகிய நிறத்தையுடைய சந்தனக் குழம்பை, மணம்கமழும் மருதப்பூங்கொத்தை அப்பினாற்போலக் கோங்கின் அரும்புபோலக் குவிந்த இளமையான தனங்களின் மேல் அப்பினர்; வேங்கையின் விரிந்தமலரில் இருந்து எடுத்த மகரந்தப்பொடியை அச்சந்தனக் குழம்பின்மேல் அப்பி மேலும் அழகுபெறச் செய்தனர். (21 - 36) செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் 25. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு 30 இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் 35. குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தா தப்பிக் காண்வர (கு - ரை) 21. செங்கால் - சிவந்த அடி; சீறிதழ் - சிறுஇதழ்; இடைஇடுபு - இடை இடையே இட்டு; 23. தெய்வஉத்தி - சீதேவி என்னும் தலையணி; வலம்புரி - சங்குவடிவில்செய்த தலையணி; வயின் - இடம்; 24. தைஇய - வைக்கப்பெற்ற; தேம் - இனிய மணம், 25. மகரம்- சுறாமீன்; பகுவாய் - பிளந்தவாய்; மண்ணுறுத்தி - அணிவித்து; துவர - முடிய; துகள் - குற்றம்; முச்சி - உச்சி; 28. உளை - வெண்ணிறத் துய்; ஒள் இணர் - ஒளிபொருந்திய கொத்து; 29. கீழ்நீர் - ஆழமானநீர்; 30. இணைப்புறுபிணையல் - இரண்டுமாலைகளைச் சேர்த்துக் கட்டிய பிணையல் மாலை; தணைத்தக - ஒன்றற்குஒன்று ஒப்பாக; 31. பிண்டி - அசோகு; 32. ஆகம் - மார்பு; காழ் - வயிரம்; 33. குறடு - கட்டை; கேழ் - நிறம்; தேய்வை - சந்தனம்; 34. இணர் - பூங்கொத்து; கடுப்ப - போல; 36. தாது - மகரந்தப்பொடி; காண்வர - காட்சியின்பம் பெற. (உ - டை) இவ்வாறு ஒப்பனை செய்யப்பட்ட தெய்வ மகளிர் விளாவின் இளந்தளிரைக் கிள்ளி ஒருவர்மேல் ஒருவர் எறிந்து விளையாடினர்; பகையை வென்று அழிக்கும் வீரமிக்க உயர்ந்த கோழிக்கொடி நெடிது வாழ்க என வாழ்த்தினர்; அவர்கள் கூடிச் சேர்ந்து சிறப்புமிக்க மலை எதிரொலி செய்யுமாறு உரக்கப்பாடினர்; ஆடினர்; அவர்கள் ஆடிய சோலையைச் சார்ந்தது, பக்க மலைகளையுடையதொரு பெருமலை. அது, குரங்கும் ஏறி அறிய மாட்டாத நெடிதுயர்ந்த மரங்களை நிறையக் கொண்டிருந்தது. அதில் மலர்ந்து வண்டு மொய்யாத தாய், நெருப்புப் போன்ற நிறத்தை உடையதாய் அமைந்த காந்தள் பூவினால் தொடுத்த மிகக்குளிர்ந்த மாலையைச் சூடிய திருமுடியுடையவன் திருமுருகன்; அவன் நிலத்துக்கு முற்பட்ட தாகிய குளிர்ந்த கடல் கலங்குமாறு உள்ளேபுகுந்து சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளியுடைய இலைவடிவ நெடிய வேலையுடையவன்; வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் 40. சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூர்அர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் 45. பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் (கு - ரை) 37. வெள்ளில் - விளா; குறுமுறி - இளந்தளிர்; 38. விறல் - வலிமை; 40. சிலம்பகம் - மலையிடம்; சிலம்ப - ஒலிக்க; சூர் அரமகளிர் - அச்சுறுத்தும் தெய்வப்பெண்கள்; 42. மரம்பயில் - மரம்செறிந்த; அடுக்கம் - மலைப்பக்கம்; 43. சுரும்பு - வண்டு; மூசா - மொய்யாத; 44. கண்ணி - தலையில் அணியும்மாலை; சென்னி - தலை; பார்முதிர் - நிலத்துக்குமுந்திய; 45. பனி - குளிர்ந்த; 46. சூர்முதல் - அசுரர் தலைவனாகிய சூரபன்மன்; தடிந்த - கொன்ற; இலை - இலைவடிவம். (உ - டை) அவ்வேலால் அவன், சூரபன்மாவைப் பேய்மகள் கூத்தாடுமாறு அழித்தவன். அப்பேய்மகள், காய்ந்த தலையினள்; வரிசை பொருந்தாத பல்லினள்; பெரிய வாயினள்; சுழலும் விழியினள்; பசுமையான கண்ணினள்; அச்சுறுத்தும் பார்வையள்; வெளியே பிதுங்கிய கண்ணையுடைய கூகையும், கொடிய பாம்பும் தூங்குவதும், பெரிய மார்புகளை வருத்துவது மாகிய காதினள்; பருத்த வயிற்றினள்; விரைந்த நடையால் அஞ்சச் செய்பவள்; அவள் இரத்தம் தோய்ந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலால் கண்ணைத் தோண்டி உண்ட மிகுந்த நாற்றமுடைய பருத்த தலையை, ஒளிபொருந்திய வளையல் அணிந்த பெரிய கையில் ஏந்தியவள்; பகைவர்அஞ்சுமாறு வெற்றிகொண்ட சிறந்த போர்க்களத்தைப் பாடித் தோளை அசைத்து ஆட்டிக்கொண்டு, தசையைத் தின்னும்வாயினள்; அவள் இருகைகளையும் முடக்கி அடித்து ஆடும் துணங்கை என்னும் கூத்தைக் களிப்பால் ஆடினள். (47 - 56) உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கிற் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் 50. பெருமுலை அலைக்கும் காதில் பிணர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித்தடக்கையின்ஏந்தி வெருவர 55. வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா நிணந்தின் வாயள் துணங்கை தூங்க (கு - ரை) 47. உலறிய - காய்ந்த; கதுப்பு - கூந்தல்; பிறழ்பல் - வரிசை பொருந்தாதபல். பேழ்வாய் - பெரியவாய்; 48. சூர்த்த - அச்சுறுத்த; 50. பிணர்மோட்டு - பெரியவயிற்று; 51. உருகெழு - ஒளிபொருந்திய, அச்சுறுத்தும்; 52. கூர்உகிர் - கூர்மையான நகம்; கொடுவிரல் - வளைந்தவிரல்; 53. தொட்டு - தோண்டி; கழிமுடை - பெருநாற்றம்; கருந்தலை - பெரியதலை; 54. தொடி - வளையல்; தடக்கை - பெரியகை; வெருவர - அஞ்ச; 56. நிணம் - தசை; துணங்கை - ஒருவகைக் கூத்து, அஃது இருகைகளையும் முடக்கி அடித்து ஆடுவது. (உ - டை) இவ்வாறு, பேய்மகள் துணங்கைக் கூத்து ஆட இரண்டு பெரிய உருவத்தைக் கொண்ட ஒருபெரிய சூரபன்மாவின் உடல், பல்வேறு கூறுபட அறுந்து போகுமாறு அவன் அஞ்ச நெருங்கினான் முருகன்; அசுரர்களின் நல்ல வீரத்திறங்களெல்லாம் ஒருங்கே அழியுமாறு கீழ்நோக்கிய பூங்கொத்துகளையுடைய மாமர வடிவாகிய சூரபன்மனை அழித்தான்; குற்றமில்லாத வெற்றி பெற்றான்; என்றும் குறையாப் பெரும்புகழ் பெற்றான்; சிவந்த வேற்படையுடைய செவ்வேளாகிய முருகன். (57 - 61) இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் 60. மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் (கு - ரை) 57. இருபேர் உருவு - இரண்டு பெரிய உருவம். அவை, சூரன், பதுமன் என்னும் இருவர்க்குரியன, குதிரை முகமும் மக்கள் உடலும் ஆயது. 58. அறுவேறுவகை - பலவாக அறுபட்டுப் போகுமாறு; மண்டி - நெருங்கி; 59. அவுணர் - அசுரர்; வலம் - வலிமை; 60. மாமுதல் - மாமரம்; அவ்வடிவினன் சூரபன்மா; தடிந்த - அழித்த; எய்யா - குறையாத; இசை - புகழ்; சேஎய் - செய்யோன் ஆகிய முருகன். (உ - டை) இனிய புலவனே, செவ்வேள் முருகனின் சிவந்த திருவடிகளை வணங்கும் எழுச்சிமிக்க உள்ளத்துடன் நல்லறங் களை விரும்பிச் செய்யும் கொள்கையால், அப்பெருமான் விரும்பி உறையும் இடங்களுக்குச் செல்லுதலை நீ விரும்புவை யானால், நின் நெஞ்சத்திலுள்ள இனிய விருப்பம் நிறைவேறு வதுடன், நீ எண்ணிய நல்வினைப்பயனையும் இப்பொழுதே பெறுவாய். (62 -66) சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன் 65. நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே. (கு - ரை) 62. சேவடி - செம்மை + அடி; படரும் - வழிபடும்; செம்மல் உள்ளம் - எழுச்சி வாய்ந்த உள்ளம்; 63. புலம் புரிந்து உறையும் - விரும்பி உறையும்இடம்; 65. இன்னசை - இனிய விருப்பம்; 66. முன்னிய - எண்ணிய; வினை - நல்வினை. (உ - டை) இனிய புலவனே, நீ சென்று செவ்வேளை வழிபடத்தக்க இடங்களை இயம்புவேன் கேட்பாயாக: போர் செய்தற்குப் பகைவர்களை அழைக்கு முகத்தால் கட்டப்பெற்ற மிக உயர்ந்த புகழ்மிக்க கொடியை அடுத்து, நூலால் வரிந்து கட்டப்பட்ட பந்துடன் பாவையும் தொங்கும்; அப்பாவையும் பந்தும் பகைவர் ஆண்மையை இகழும் வகையால் தூக்கப் பெற்றனவாகும். அவற்றை அவர்கள் அறுத்தெறிந்து போர் புரிதற்குத் துணிந்து வாராமையால், போர் அற்றுப்போன வாயிலை உடையது; திருமகள் வீற்றிருப்பதும், குற்றமற்றதும் ஆகிய கடைத்தெருக்கள் மிகுந்தது; மாடங்கள் நிறைந்த தெருக் களையுடையது; இத்தகைய கூடல்மா நகராகிய மதுரையின் மேற்குத்திசையில் மிகுந்த சேறுகளையுடைய அகன்ற வயல்கள் உள்ளன. அவ்வயல்களில் விரிந்து மலர்ந்ததும், முள்ளைத் தண்டில் உடையதுமாகிய தாமரைகள் நிரம்பியுள்ளன. அத்தாமரை மலருள் அழகிய சிறகுகளையுடைய வண்டினது அழகிய கூட்டங்கள் இரவுப் பொழுதில் உறங்கும்; விடியற் பொழுதில், தேன்ஒழுகும் நெய்தல் பூவில் பொருந்தித் தேன் கொள்ளும்; கதிரோன் வெளிப்பட்ட பொழுதில், கண்ணைப் போல் மலர்ந்த அழகிய சுனைப் பூக்களில் ஆரவாரிக்கும். இத்தகைய மருதவளம் வாய்ந்தது திருப்பரங்குன்றம். ஆங்குத் திருமுருகன் திருவுள்ளம் பொருந்தித் தங்குதல் உரியன. (67 - 77) செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் 70. திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் 75. கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந் துறைதலும் உரியன்; அதாஅன்று (கு - ரை) 67. செருப்புகன்று - போர்க்கு அறைகூவி; 68. வரிப்புனைபந்து - வரிந்து கட்டப்பெற்றபந்து; பாவை - பெண் வடிவாகிய பதுமை; பொருநர் - போர் செய்வார்; 69. போர் அருவாயில் - போர் அரிதாகிய (இல்லையாகிய) வாயில்; 70. திருவீற்றிருந்த - அழகு கொழிக்கும்; திருமகள் தங்கிய; நியமம் - கடைத்தெரு; 71. மலி - மிகுந்த; மறுகு - தெரு; குடவயின் - மேற்கில்; 72. வாய் அவிழ்ந்து - மலர்ந்து; 73. தாள் - அடி; துஞ்சி - உறங்கி; 74. கள் - தேன்; நெய்தல் - குவளை; எற்பட - கதிரோன் எழ; 75. காமர் - அழகிய; 76. அம்சிறை - அழகியசிறகு, உள்ளொடுங்கிய சிறகு (அகம் சிறகு); அரிக்கணம் - அழகிய கூட்டம்; அதுவன்றியும் கேட்பாயாக: உ. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) (உ - டை) கூர்மையான நுனி அமைந்த தோட்டி (அங்குசம்) அழுத்துதலால் ஆழமான தழும்பு தோன்றுவதும், புள்ளிகள் நிரம்பிய நெற்றிப்பள்ளத்தில் அணிந்த பட்டத்துடன் வாடாத பொன்மாலை கிடந்து அசைவதும், பெரியமணிகள் இருபுறங் களிலும் தொங்கிப் பேரொலி செய்வதும், கடிய நடையுடைய கூற்றுவனே போன்றதாய் எவராலும் விலக்குதற்கு அரிய வலிமையுடையதும், காற்றுக் கிளர்ந்து எழுந்தாற்போன்ற செலவுடையதும் ஆகிய யானையின் மேலே திருமுருகன் அமர்ந்துள்ளான். ஐந்து வேறுவகைச் செயல் திறமையால் முடிக்கப்பெற்ற அவன் திருமுடியின்மீது, ஒன்றை ஒன்று விஞ்சுவதாய்ப் பன்னிற ஒளிசெய்யும்அழகிய மணிகள் மின்னல் போன்ற ஒளியால் தலைக்குப் பொலிவு தருகின்றன. ஒளிதங்கி அசையும் வேலைப்பாடமைந்த பொன்னால் செய்யப்பட்ட மகர குண்டலங்கள், மிகத் தொலைவிடத்தே விளங்கும் இயல்புடைய ஒளிமிக்க முழுமதியைச் சூழ்ந்து அகலாது விளங்கும் விண்மீன்கள் போல ஒளியுடையனவாய்த் திகழ்கின்றன. குற்றமற்ற உயர்ந்த கொள்கைகளை யுடையவர்களாய்த் தம் தவத்தொழிலை முடிக்கும் பெரியவர்கள் உள்ளத்தில் அழகுறத் தோன்றுகின்ற ஒளிமிக்க ஆறு திருமுகங்களை யுடையவன் அவன். (78 - 90) வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் 80. படுமணி இரட்டும் மருங்கில் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவில் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85. மின்னுறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90. மனனேர் பெழுதரு வாள்நிற முகனே (கு - ரை) 77. அதாஅன்று - அதுவன்றி; 78. வைநுதி - கூர்மையான நுனி; பொருத - அழுத்திய; வடு ஆழ் - தழும்பு ஆழ்ந்த; நுதல் - நெற்றி; 79. ஓடை - நெற்றிப்பள்ளம்; துயல்வர - அசைய; 80. ஐவேறு...Ko’ - தாமம், மகுடம், பதுமம். கிம்புரி, கேடகம் என்னும் ஐந்துவகை வினைத்திறம்; 84. முரண் - ஒன்றை ஒன்று விஞ்சிய; 85. பொற்ப - பொலிவுதர; 86. நகை - ஒளி; துயல் மதி - முழுமதி; கவைஇ - சூழ்ந்து; 88. அவிர்வன இமைப்ப - விளங்கி ஒளிவிட; 89. தாவுஇல் - அழிவில்லாத; 90. ஏர்பு எழுதரு - அழகாக எழும்; வாள் - ஒளி; (உ - டை) அத்திருமுகங்களுள் ஒருமுகம், காரிருள் கப்பிக் கொண்ட உலகம் குற்றமின்றி விளங்குமாறு ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலிய பலகதிர்களை விரிக்கும்; ஒருமுகம் தன்மேல் விருப்புடைய அடியார் வாழ்த்த விரும்பி அமைந்து இனிதுற நடந்து அவர்கள் வேண்டும் வரங்களை அன்பால் வழங்கும். ஒருமுகம், மந்திரம் கூறும் மறைநூல்களின் விதிமுறை தவறாத ஒழுக்கமுடைய அந்தணர்கள் செய்யும் வேள்விகளுக்குத் தீமை வாராதபடி பார்க்கும்; ஒருமுகம், நூலறிவால் காணமுடியாத நுண் பொருள்களை இன்புற ஆராய்ந்து ஒளிநிரம்பிய முழுமதிபோல எல்லாத் திசைகளையும் விளக்கும். ஒருமுகம், இயல்பாகச் செல்லும் நடுவு நிலைமையைக் கெடுத்து இவர்களைக் கொல்லவேண்டும் என்று சினங்கொண்ட உள்ளத்தோடு அழித்தற்குரிய பகையை அழித்துப் போர்க்கள வேள்வி செய்யும். ஒருமுகம், மலைவாணர்தம் இனியமகளும் கொடிபோன்ற இடையுடையவளும் ஆகிய மெல்லியல் வள்ளியொடு மகிழ்வு கூரும். (90 - 102) மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே; ஒருமுகம், 95. மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே; ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே; ஒருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100. கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே; ஒருமுகம், குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே; (கு - ரை) 91. மாயிருள் - பேரிருள்; ஞாலம் - உலகம்; 92. ஆர்வலர் - அன்பர்; அமர்ந்து - விரும்பி; 95. வழாஅ - தவறாது; 96. ஓர்க்கும் - ஆய்ந்து பார்க்கும்; 97. ஏமுற - இன்புற; நாடி - ஆராய்ந்து; 99. செல்சமம் - செல்லும் நடுவுநிலை; 100. கறுவு - சினம்; 101. நுசுப்பு - இடை; 102. மடவரல் - பெண்; நகை - மகிழ்வு; (உ - டை) அவ்ஆறுமுகங்களும் அம்முறையில் தம்தம் தொழில்களைத் தொடர்ந்து செம்மையாகச் செய்யும். அம் முகங்களுக்கு ஏற்றவாறு செம்பொன்மாலை அணிந்த அழகிய பெரிய மார்பிலே உயர்ந்த இலக்கணமுடைய சிவந்த மூன்று வரிகள் பொருந்திய தோள்கள் அமைந்துள்ளன; அவை, சுடர் மிக்கன; தம் வலிமையினால் புகழ்வாய்ந்தன; படைக்கலங்களை ஏவிப் பகைவர் மார்புகளைப் பிளந்து மீண்டும் அவற்றை வாங்கி நிமிர்வன; அக்கைகளுள் ஒருகை, வானில் செல்லும் முறைமையுடைய முனிவர்க்குப் பாதுகாவலாக அமையும்; அதற்கு இணையான ஒருகை, இடுப்பில் இருக்கும்; ஒருகை, நன்மையமைந்த செந்நிற உடையுடுத்த துடையின் மேல் வைக்கப்பெற்றிருக்கும்; அதற்கு இணையான ஒருகை, தோட்டி என்னும் அங்குசத்தை எடுத்து யானையைச் செலுத்தும்; இரண்டுகைகள், அழகிய பெரிய கேடயத்துடன், வேற்படையை வலமாகச் சுழற்றும்; ஒருகை, மார்பின்மேல் பொருந்தியிருந்து மெய்ப்பொருள் உணர்த்தும்; அதற்கு இணையான ஒருகை மார்பில் புரளும் மாலையைப் பற்றியிருக்கும்; ஒருகை, கிழித்து எடுக்கப்பெற்ற விரும்பத்தக்க வளைய லோடு சுழலும்; அதற்கு இணையான ஒருகை இனிமையாக ஒலிக்கும் பெரிய மணியை அறையும்; ஒருகை நீலநிறவானில் நிறைந்த மழையைப் பொழியச் செய்யும்; அதற்கு இணையான ஒருகை, வானுலகிலுள்ள தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்டும்; இவ்வாறு அப்பன்னிரு கைகளும் தம்தம் முகங்களுக்குத் தக்க தொழில்களைச் செய்யும். (103 - 118) ஆங்கம், மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105. செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை; உக்கம் சேர்த்திய தொருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை, 110. அங்குசம் கடாவ ஒருகை; இருகை ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப; ஒருகை, மார்பொடு விளங்க; ஒருகை, தாரொடு பொலிய; ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை, 115. பாடின் படுமணி இரட்ட ஒருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒருகை, வானர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்கப், பன்னிரு கையும் பாற்பட இயற்றி. (கு - ரை) 103. நவின்றுஒழுகல் - தொடர்ந்துசெய்தல்; 104. ஆரம் - மாலை; பகட்டு மார்பு - பெரிய (அகன்ற) மார்பு; 105. பொறி - வரி; வாங்கிய - வளைந்த ; சுடர்விடுபு - சுடர்விட்டு; 106. வசிந்து வாங்கு - ஏவி வாங்கும்; 107. ஐயர் - முனிவர், தேவருமாம்; 108. உக்கம் - இடுப்பு; 109. கலிங்கம் - உடை; குறங்கு - தொடை, அசைஇய - தங்கிய; 110. ஐஇரு - அழகிய பெரிய; 111. வட்டம் - கேடயம்; எஃகு - வேல்; 114. கொட்ப - சுழல; 115. பாடின் பருமணி - இனிதாக ஒலிக்கும் பெரியமணி; இரட்ட - ஒலிப்பிக்க, 116. நீனிறம் - நீல நிறம்; 117. வதுவை - மணமாலை; 118. பாற்பட - தம் பகுதிக்குத்தக. (உ - டை) இவ்வாறு பன்னிரு கைகளும் தம்தம் தொழில் களைச் செய்யவும், வானத்தில் பல இசைக் கருவிகளும் ஒலிக்கவும், வலிய வயிரம்கொண்ட ஊது கொம்புகள் ஓங்கி ஒலிக்கவும், வெண்சங்கங்கள் முழங்கவும், வலிமைவாய்ந்த இடிபோன்ற முரசங்கள் ஆர்க்கவும், வண்ணத் தோகைகளையுடைய மயில் வெற்றிக்கொடி மேல் இருந்து கூவவும், வானமே வழியாக விரைந்து செல்லுதலைக்கருதி உயர்ந்தோரால் புகழப்பட்ட மிகவும் சிறந்த பெருமை வாய்ந்த திருச்செந்தில் மாநகரில் எழுந்தருளு தலும் திருமுருகனின் நிலைத்த தன்மையே யாம். (119 - 125) அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் 120. வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பா றாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் 125. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; (கு - ரை) 116. பல்லியம் - பலஇசைக் கருவிகள்; கறங்க - ஒலிக்க; காழ் - வயிரம்; 120. வயிர் - ஊதுகொம்பு; வால்வளை ஞரல - வெண்சங்கம் ஒலிக்க; 122. பொறி - புள்ளி, தோகை; மஞ்ஞை - மயில்; 123. ஆறுஆக - வழியாக; முன்னி - நினைத்து; 124. விழுச்சீர் - சிறந்த பெருமை; 125. அலைவாய் - திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர்; சேறல் - செல்லுதல்; நிலைஇய - நிலைத்த. அதுவன்றியும் கேட்பாயாக: 3. திருவாவிநன்குடி (உ - டை) மரவுரியைச் சேர்த்துத் தைத்த உடையினர்; அழகொடுவலம்புரிச் சங்கு போன்ற தூய நரைமுடியினர்; மாசின்றி விளங்கும் வடிவினர்; மான்தோல் போர்வையினர்; தசைமெலிந்து மேலே எலும்பு எழுப்பி உலாவும் உடலினர்; நல்ல பல பகற் பொழுதுகளை விலக்கி, அரிதாக உண்பவர்; மாறுபாட்டுடன் சினமும் நீங்கிய மனத்தினர்; கற்கவேண்டும் நூல்களையெல்லாம் கற்றவராலும் அறியப்பெறாத அறிவினர்; கற்றவர்களுக்குத் தாமே எல்லையாக அமைந்த தலைமையினர்; ஆசையும் கடுங்கோபமும் அகற்றிய நல்லறிவினர்; துன்பம் என்பது சிறிதும் அறியாத தன்மையர்; எவரொடும் பொருந்திய வெறுப்பில்லாத மெய்யுணர்வினர்; இத்தகைய முனிவர்கள் விரும்பி முன்னே செல்லுவர். (126 - 137) அதா அன்று, சீரை தைஇய உடுக்கையர்; சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர்; மாசற இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் 130. என்பெழுந் தியங்கும் யாக்கையர்; நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்; இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்; காமமொடு 135. கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர் முன்புகப் (கு - ரை) 126. சீரை தைஇய - மரவுரி உடுத்த; 127. வலம்புரி புரையும் - சங்குபோன்ற; வால்நரை - தூபநரை; 128. இமைக்கும் - விளங்கும்; உரிவை - தோல்; 129. ஊன்கெடு - தசைமெலிந்த; 130. என்பு - எலும்பு; யாக்கையர் - உடலினர்; 131. இகல் - மாறுபாடு; 132. செற்றம் - கோபம்; 134. வரம்பு - எல்லை; 135. காட்சியர் - அறிவினர்; 136. மேவர - பொருந்த; 137. துனி - வெறுப்பு; (உ - டை) புகையை அள்ளிக் கொண்டாற்போன்ற அழுக்கில்லாத தூயஉடையும், மொக்கு விரிந்த மலரால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மார்பும், செவியால் அளவிட்டு அமைத்துச் செம்மையான அளவில் கட்டிய வார்க்கட்டுடைய நல்ல யாழில் பயின்ற நல்ல நெஞ்சும், மெல்லிய மொழியையே மொழியும் இயல்பும் படைத்த கந்தருவர் இனிய யாழ் நரம்பை மீட்டுவர்; நோயில்லாத நல்ல உடலினரும், மாவின் விளங்கும் தளிர் போன்ற நிறத்தினரும், விளங்கும் பொழுதெல்லாம் பொன் உரைத்தால் போல விளங்கும் தேமலினரும், இனிய ஒளியமைந்த பதினெண் கோவையாகிய மேகலையை அணிந்து உயர்ந்து தாழ்ந்த அரையினரும் ஆகிய குற்றமில்லாத கந்தருவமகளிர் அக் கந்தருவருடன் பொலிவாக விளங்குவர். (138 - 147) புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் 140. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் 145. பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் (கு - ரை) 139. முகை - மொட்டு; வாய் அவிழ்ந்த - மலர்ந்த; தகை - மாலை; ஆகம் - மார்பு; 140. செவிநேர்பு - செவியால் அளந்து; திவவு - வார்க்கட்டு; 142. மேவலர் - விருப்பினர்; இன் நரம்பு உளர - இனிய யாழை இசைக்க; 144 புரையும் - போன்ற; அவிர்தொறும் - விளங்கும் பொழுதுதொறும்; 145. பொன்னுரை கடுக்கும் - பொன்னைத் தேய்த்தது போன்ற; திதலை - தேமல்; 146. பருமம் - மேகலை; பணிந்து ஏந்து - தாழ்ந்து உயர்ந்து; (உ - டை) மேலும், நஞ்சுடன் தங்கிய துளையுடைய வெண்ணிறப் பல்லையும், தீயெனப் பெருமூச்சுவிட்டுக் கண்டார்க்கு அச்சம் உண்டாக்கத்தக்க கடுங்கோபத்தையும் உடைய பாம்பு அழிந்துபடுமாறு அடிக்கும், பல வரிகளையும், வளைந்த சிறகுகளையும் உடைய கருடனை அழகிய நெடிய கொடியாகக் கொண்ட திருமால், வெண்ணிறக் காளையை வெற்றிக்களத்தில் உயர்த்திப் பிடித்த, பலரும் புகழும் வலிய தோளையும், உமையம்மை விரும்பி விளங்கும் பக்கத்தையும், இமைத்தல் இல்லாத மூன்று கண்களையும் உடைய, பகைவர் மும்மதில்களையும் அழித்த வலிமை வாய்ந்த சிவபெருமான், ஆயிரம் கண்களையும், நூறாகிய பல வேள்விகளைச் செய்து முடித்த வெற்றியால் கொண்ட பெருமையையும் உடையவனாய், உயர்ந்த நான்கு தந்தங்களைக் கொண்டதும், அழகிய நடையினதும், நிலந்தொடத் தாழ்ந்து வளைந்த நெடுங்கையை உடையதுமாகிய வெள்ளையானையின் பிடரில் ஏறி இருந்து அழகுடன் உலா வருபவனாகிய இந்திரன், (ஆகிய மூவரும் ஆய்ந்தனர்.) பின்னர், நான்முகன், திருமால், உருத்திரன், இந்திரன் என்னும் நான்கு பெருந்தெய்வங்களின் பொறுப்பிலுள்ள நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள உலகத்தைக் காத்தல் தொழில் ஒன்றையே விரும்பும் கொள்கையுடைய பலராலும் புகழப்படும் நான்முகனை ஒழிந்த மற்றை மூவரும், தம் தம் தொழில்களை முன்னே போல இயற்றித் தலைவராதலை விரும்பினர்; பாதுகாப்பான இவ்வுலகில் வந்து தோன்றினர்; திருமாலின் திருவுந்தித் தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய நான்முகனாகிய ஒருவனைப் பழைய நிலையிலே படைப்புத் தொழிலில் நிறுத்தக் கருதினர். (148 - 165) கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் 150. பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும்; வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்; 155. நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்; 160. நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி 165. நான்முக ஒருவற் சுட்டிக் (கு - ரை) 148. கடு - நஞ்சு; ஒடுங்கிய - மறைந்த; தூம்பு - உட்டுளை; வாலெயிறு - வெண்ணிறப் பல்; 150. புடைக்கும் - அடிக்கும்; கொடுஞ்சிறை - வளைந்த சிறகு; 152. வயின் - இடம்; 154. எயில் - மதில்; அவை, தங்கம் வெள்ளி இரும்பு என்பன; முரண் - வலிமை; 155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டம் - ஆயிரம் கண்; 156. கொற்றம் - வெற்றிப் பெருமை; 157. மருப்பு - தந்தம்; 159. எருத்தம் - பிடர்; 160. நாற்பெரும் தெய்வம் - நான்முகன், திருமால், உருத்திரன், இந்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வம்; 161. ஒன்றுபுரி கொள்கை - காக்கவேண்டும் என்னும் ஒன்றை விரும்பிய நோக்கம்; 162. மூவர் - நான்முகன் ஒழிந்த மூவர்; 163. ஏமுறு ஞாலம் - பாதுகாப்புடைய உலகம்; 164. தாமரை பயந்த - திருமாலின் உந்தித் தாமரை பெற்ற; தாஇல் - அழிவில்லாத; 165. சுட்டி - குறித்து. அவர்களும், அழகுண்டாகப் பகுத்துக் காணுங்கால் வேறுபடத் தோன்றியும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர் என்னும் நான்காகிய இயல்பினையுடைய வேறுபட்ட முப்பத்து மூவரும், பதினெண் வகைத் தேவகணத்தினரும், விண்மீன் போன்ற தோற்றம் உடைய வர்களாகவும், கடலில் இருந்து கிளம்பும் காற்றுப் போன்றே விரைந்த செலவினராகவும், காற்றொடு கூடி எழுந்த தீப்போன்ற வலியினராகவும், தீ உண்டாகும்படி இடி இடித்தாற் போன்ற குரலினை உடையவராகவும் தங்களுக்குள்ள குறைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டித் தம்மைக் குறையிரத்தற்காக விண் வழியாகச் சூழ்ந்து வந்து உடனே காணுமாறு, குற்றமற்ற கற்புடைய தேவயானையுடன் சிலநாள் திருவாவிநன்குடியில் தங்குதலும் உரியன். (166 - 176) ..... ...... ...... காண்வரப் பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர்; மீன்சேர்பு 170. வளிகிளர்ந் தன்ன செலவினர்; வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர்; தீப்பட உருமிடித் தன்ன குரலினர்; விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் 175. தாவில் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி நன்குடி அசைதலும் உரியன். (கு - ரை) 166. பகலில் - பகுத்துக் காணுதலில்; இகல் இல் - மாறுபாடு இல்லாத; 167. பதினொரு மூவர் - முப்பத்து மூவர்; 168. ஒன்பதிற்று இரட்டி - பதினெண்மர்; 169. தோன்றலர் - தோற்றத்தினர்; 170. வளி - காற்று; 171. திறல் - வலிமை; 172. உரும் - இடி; விழுமிய - துயரமாயுள்ள; 174. கொட்பு - சுழற்சி, சூழ்ந்து; 175. தாஇல் - குற்றமில்லாத; 176. ஆவிநன்குடி - திருவாவிநன்குடி; அசைதல் - தங்குதல். அதுவன்றியும் கேட்பாயாக: 4. திருவேரகம் (உ - டை) ஆறு வகையாக வகுக்கப்பட்ட கடமை முறைகளில் சிறிதும் தவறாதவர்; தாய் தந்தையர் என்னும் இருவர் வழிமுறைகளும் மதிக்கப் பெற்றவர்; பல்வேறு பழைமையான குடிகளில் பிறந்தவர்; நாற்பத்து எட்டு ஆண்டு எனப்பெறும் நல்ல இளமைக் காலத்தையெல்லாம் கல்வியறிவு ஒழுக்கங்களிலே செலவிட்டவர்; அறநெறியில் பயின்ற கொள்கையர்; நாற்கோணம் முக்கோணம் வில் என மூன்று வகைப்படுத்தப்பட்ட வேள்விக்குண்டங்களில் வளர்க்கும் காட்டுத்தீ, வீட்டுத்தீ, ஞானத்தீ என்னும் மூவகைத் தீ வழிபாடு செய்யும் சிறப்பினர்; உடற் பிறப்பு, அறிவுப் பிறப்பு என்னும் இருபிறப்புமுடைய அந்தணர்; இத்தகையவர், ஓதத்தக்க பொழு தறிந்து மறைகளை ஓதுவர். அவர்கள், ஒன்பது இழைகொண்ட மூன்று நுண்ணிய பூணூலையுடையவர்; நீரில் மூழ்கி ஈர ஆடை உடலில் கிடந்து உலருமாறு உடுத்தவர்; தலைமேல் கூப்பிய கையினர்; இறைவனைப் புகழ்ந்து சரவணபவ என்னும் ஆறு எழுத்துகளைக் கொண்ட அருமறை மொழியை ஆசிரியரிடம் கேட்டவாறே நாக்குப் புடைபெயர்ந் தொலிக்கும் அளவும் சிறக்கப்பாடுபவர்; மணமிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடுபவர்; இத்தகையவர்க்காகப் பெரிதும் மகிழ்ந்து திருஏரகத்தில் தங்குதலும் உரியன். (177 - 189) அதாஅன்று, இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு 180. ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ 185. உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத் துறைதலும் உரியன்; (கு - ரை) 177. இருமூன்றெய்திய இயல்பு - ஆறுவகையாக வகுக்கப்பட்ட முறைமை; அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன; 178. இருவர் - தாய் தந்தையர்; 179. அறுநான்கு இரட்டி - நாற்பத்தெட்டு; 180. ஆறு - ஒழுங்குமுறை; கழிப்பிய - கழித்த; 182. இருபிறப்பாளர் - அந்தணர் நுவல - கூற; 183. மூன்று புரி நுண்ஞாண் - மூன்று புரிகளைக்கொண்ட நுண்ணிய நூல்வட்டம்; 184. காழகம் - உடை; உடீஇ - உடுத்தி; 185. தன் - முருகன்; ஆறெழுத்து - சரவணபவ; 187. நாஇயல் மருங்கில் - நாக்குப் பெயர்ந் தொலிக்கும் அளவில்; 188. விரை - மணம்; 189. ஏரகம் - திருவேரகம். அதுவன்றியும் கேட்பாயாக: 5. குன்றுதோறாடல் (உ - டை) வெறியாடுபவன், பச்சிலைக் கொடியால் நறுமணமுள்ள சாதிக்காயை இடையே இட்டுத் தொடுத்து, அழகிய தக்கோலக் காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்டாளியையும் இணைத்துக் கட்டிய கண்ணியை உடையவன்; அவன், நறுமணச் சந்தனம் பூசிய அழகிய மார்பினையுடைய வரும், வளைதலைக் கொண்ட வலிய வில்லால் கொலை புரிதலைச் செய்பவரும் ஆகிய வேடர், நெடிய மூங்கிலில் இருந்து முதிர்ந்த தேனாற் செய்த கள்ளின் தெளிவை மலைநாட்டுச் சிற்றூரில் உள்ள தம் உறவினருடன் உண்டு மகிழ்ந்து மலை நிலத்துக்குரிய தொண்டகப் பறையின் தாளத்துக்குத் தக்கவாறு குரவைக்கூத்து ஆடுமிடத்துக் கலந்திருப்பான். (190 - 197) அதாஅன்று 190. பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் 195. நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர (கு - ரை) 190. நறைக்காய் - சாதிக்காய்; 191. அம்பொதிப் புட்டில் - அழகினையுடைய தக்கோலக்காய்; அது புட்டில் போன்றது. ஆதலின் அப்பெயர் பெற்றது; குளவி - காட்டு மல்லியை; 192. வெண்கூதாளம் - வெண்டாளி; 193. சாந்து - சந்தனம்; கேழ்கிளர் - நிறம் விளங்கும்; 194. கொடுந்தொழில - வளைதல்; கொலைஇய - கொலைபுரியும்; 195. நீடு அமை - நெடிய மூங்கில்; தேக்கள் தேறல் - இனியகள் தெளிவு; 197. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை; குரவை அயர - குரவைக் கூத்துஆட. (உ - டை) விரல் படுதலால் மலர்ந்த, வேறுபட்ட நறு மணத்தையுடைய ஆழ்ந்த சுனையில் பூத்த மலரால் புனையப் பட்டதும் வண்டுகள் விரும்புவதும் ஆகிய கண்ணியையும், இணைத்துக் கட்டப்பட்ட பிணையல் மாலையையும், சேர்த்துக் கட்டப்பட்ட கூந்தலையும் உடையவர் மலைநாட்டு மகளிர். அவர்கள் இலையை உச்சியில் அணிந்த கஞ்சங்குல்லையையும், இலையொடு கூடிய நறும்பூங்கொத்துகளையும், சிவந்த அடியைக் கொண்ட கடம்பின் வெண்ணிறப் பூங்கொத்துகளையும் இடை இடை இட்டு வைத்து வண்டு தேனுண்ணுமாறு தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையுடைய வேலைப்பாடுடைய மணிக்கோவைகளை அணிந்த அரையில் அசையும்படி உடுத்துவர்; மயிலைக் கண்டாற் போன்ற மெல்லிய நடையினராக விளங்குவர்; இத்தகைய மகளிரோடும் இணைந்து விளங்குவன் முருகன். அவன், ஆங்கெல்லாம் சிவந்த மேனியனாகவும், சிவந்த உடையினனாகவும், சிவந்த அடியைக் கொண்ட அசோகின் குளிர்ந்த தளிர் அசையும் செவிகளை உடையவனாகவும், கச்சை கட்டியவனாகவும், வீரக்கழல் அணிந்தவனாகவும், வெட்சி மாலை சூடியவனாகவும், குழலூதுபவனாகவும், கொம்பு ஊது பவனாகவும், சிறிய பல இசைக்கருவிகளை இசைப்பவனாகவும், கிடாய் ஊர்தியினனாகவும், நெடியனாகவும், வளையணிந்த தோளினனாகவும், யாழ் இசைத்தாற் போன்ற இனிய மொழிபேசும் மகளிர்கூட்டத்தொடு, சிறிய அரைக்கச்சை மேற்கொண்ட நறுமையான குளிர்ந்த அழகிய இடுப்பில், கட்டி நிலந்தொட அமைந்த ஆடையினனாகவும், முழவு போன்ற பெருமையுடைய கைகளால் பொருந்தத் தாங்கி மெல்லிய தோளையுடைய பெண்மான் போலும் மகளிர் பலரைத் தழுவிக் கொண்டு அவர்களுக்குத் தக்க இருக்கை தந்து மலைகள்தோறும் சென்றுவிளையாடுவன். இஃது அவன் இயல்பாகும். (198 - 217) விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி 200 இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ 205. மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் 210. தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன் 215. முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே; (கு - ரை) 198. உளர்ப்பு - அசைப்பு; கான் - மணம்; 199. குண்டு சுனை - ஆழ்ந்த சுனை; 200. கோதை - மாலை; அணைத்த - சேர்த்துக் கட்டிய; 201. குல்லை - கஞ்சங் குல்லைப்புல்; 202. மராஅம் - கடம்பு; வால் இணர் - வெண்ணிறப் பூங்கொத்து; 203. சுரும்பு - வண்டு; 204. காழ் - வடம்; 206. அரை - அடிமரம்; 207. செயலை - அசோகு; 208. செச்சை - வெட்சி; 209. கோட்டன் - ஊது கொம்பினையுடையவன்; பல் இயத்தன் - பல இசைக் கருவிகளை இசைப்பவன்; 210. தகர் - கிடாய்; மஞ்ஞை - மயில்; புகரில் - குற்றமில்லாத; 212 நரம்பு - யாழ்; ஆர்த்தன்ன - இசைத்தாற்போன்ற; 213. குறும்பொறி - அரைக்கச்சை (உதரபந்தனம்); 214. மருங்கு - இடுப்பு; 215. முழவு உறழ் - மத்தளம் போன்ற; 216. பிணை - பெண்மான் போலும் மகளிர்; தலைத்தந்து - இருக்கை தந்து. அதுவன்றியும் கேட்பாயாக: 6. பழமுதிர் சோலை (உ - டை) சிறிய தினை அரிசியைப் பூக்களொடு கலந்து வைத்து, ஆட்டுக்குட்டியைப் பலியிட்டுக் கோழிக் கொடியைப் பக்கமாக நிறுத்தி ஊர்தோறும் ஊர்தோறும் எடுக்கப்பட்ட சிறப்புடைய விழாக்களிலும் முருகன் எழுந்தருள்வான்; அன்றியும் அன்புடையார் கூடி வாழ்த்தும் விரும்பத்தக்க இடங்களிலும் தோன்றுவான்; மேலும், வெறியாடுபவன் நடத்தும் வெறியாடும் களங்களிலும், காட்டிலும், சோலையிலும், அழகிய ஆற்றின் நடுவே அமைந்த திட்டுகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் வேறுபல அமைந்த இடங்களிலும், நாற்சந்திகளிலும், முச்சந்தி முதலிய சந்திகளிலும், புதிய பூக்களையுடைய கடம்பமர நிழலிலும், ஊர்ப் பொதுமன்றங்களிலும் அம்பலங்களிலும், தூண் வடிவாக வழிபாட்டுக்கு நிறுத்தப்பட்ட இடங்களிலும் திருமுருகன் எழுந்தருள்வான். (218 - 226) அதாஅன்று, சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 220. ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறியயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் 225. சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் (கு - ரை) 218. விரைஇ - கலந்து; மறி - ஆட்டுக்குட்டி; 219. வாரணம் - கோழி; வயின் - பக்கம்; நிறீஇ - நிறுத்தி; 221. ஆர்வலர் - அன்பர்; மேவருநிலை - விரும்பத்தக்க இடம்; 222. தைஇய - அமைத்த; வெறியயர்களன் - வெறியாட்டு நடத்தும் இடம். 223. கா - சோலை; துருத்தி - ஆற்றிடைக்குறை; 224. வைப்பு - இடம். 225. சதுக்கம் - நாற்சந்தி; சந்தி - முச்சந்தி முதலியன; 226. பொதியில் - பொது மன்றம்; கந்து - கட்டுத்தறி, தூண். (உ - டை) இன்னும், பெருமைமிக்க தலைமையமைந்த கோழிக் கொடி எடுத்து அமைவுறச் செய்து, நெய்யும் வெண் சிறுகடுகும் நெற்றியில் அப்பி, ஓதும் மந்திரத்தை மெல்லென ஓதி வழிபட்டு அழகிய மலர்களை அடியார் தூவுவர். அவர்கள் வெவ்வேறான நிறமுடைய இரண்டு உடைகளை உடுத்துக்கொண்டு, சிவந்தநூலால் கையில் காப்புக் கட்டி, வெண்பொரி சிதறி, மிகுந்த வலிமை வாய்ந்த பெரிய காலை யுடைய கொழுத்த ஆட்டுக்கிடாவின் இரத்தத்துடன் பிசைந்த தூய வெள்ளை அரிசியைச் சிறுபலியாக இட்டுப் பலவகைப் படையல்களையும் படைப்பர். சிறிய பச்சை மஞ்சளுடன் நறுமணம் வாய்ந்த சந்தனக் குழம்பைத் தெளிப்பர்; பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலை யினையும் மற்றும் குளிர்ந்த நறுமணமாலைகளையும் இணை இணையாக அறுத்துத் தாழ அசையுமாறு தொங்கவிடுவர்; செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்கள். (பசியும் பிணியும் பகையும் நீங்கி) வாழ்க என்று வாழ்த்துவர்; நறுமணப் புகை எடுப்பர்; குறிஞ்சிப்பண் - பாடுவர். (227 - 239) மாண்தலைக் கொடியொடும் மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 230. முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் 235. சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையுற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி (கு - ரை) 227. அமைவர மண்ணி - அமைவுறச் செய்து; 228. ஐயவி - சிறுகடுகு; ஐது உரைத்து - மெல்லெனச் சொல்லி; 229. குடந்தம் - வழிபாடு; 230. முரண்கொள் உரு - மாறுபட்ட நிறம்; 232. மதவலி - மிகுந்த வலிமை; மாத்தாள் - பெரிய கால்; கொழுவிடை - கொழுத்த கிடாய்; 234. சில்பலி - சிறுபலி; பல்பிரப்பு இரீஇ - பலவகைப் படையல்களை வைத்து; இதனை, மரக்காலில் அரிசியை இட்டுப் பரப்பி வைத்தல் என்பர்; 235. நறுவிரை - நறிய சந்தனக் குழம்பு. 236. கண வீரம் - செவ்வலரி; 237. துணையுற அறுத்து - இணை இணையாக அளந்து அறுத்து; நாற்றி - தொங்கவிட்டு; 238. நளிமலை - குளிர்ந்த மலை; சிலம்பு -மலை; 239. நறும்புகை - மணப்புகை; (உ - டை) மேலும், முழங்கும் அருவி ஒலியுடன், இனிய இசைக்கருவிகளும் இணைந்து ஒலிக்கும்; சிவந்த மலர்களைத் தூவுவர்; கண்டார்க்கு அச்சம் உண்டாகக் குருதி கலந்த சிவந்த தினையைப் பரப்புவர்; குறக்குடிப் பிறந்த பெண்மகள் முருகன் விரும்பும் இன்னிசைக் கருவிகளை ஒலிக்கச் செய்வள்; இறைவன் உண்மையை மறுப்பாரும் அஞ்சுமாறு முருகன் வெளிப்பட்டுத் தோன்ற வழிப்படுத்துவர்; இத்தகைய அச்சம் பொருந்திய பெரிய நகரில் வெறியெடுக்கும் களங்களின் ஆரவாரம் பெருகும்; அதற்கு ஏற்பப் பாடியும், ஊது கொம்புகள் பலவற்றை நன்றாக ஊதியும் வளைந்த மணியை அசைத்தும் புறங்காட்டாத வலிமை மிக்கதும் பிணிமுகம் என்னும் பெயருடையதும் ஆகிய யானையை வாழ்த்தியும் வேண்டுவார் வேண்டுவனவற்றை எல்லாம் விரும்பிப் பெறுமாறு வழிபடுவர்; மேற்கூறிய அவ்வவ் விடங்களிலெல்லாம் முருகன் தங்குதல் உரியன என்பது யான் அறிந்த வழியேயாம். (240 - 249) 240. இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் 245. ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த ஆறே. (கு - ரை) 240. இமிழ் இசை - முழங்கும் ஒலி; இன்னியம் கறங்க - இனிய இசைக்கருவி ஒலிக்க; 241. உருவம் - நிறம்; தூஉய் - தூவி; வெருவர - அச்சமுண்டாக; 243. முருகியம் - முருகன் விரும்பும் இசைக்கருவி; முரணினர் - மாறுபட்டோர்; உட்க - அஞ்ச; 244. முருகாற்றுப்படுத்த - முருகனை வெளிப்படுத்திய; வியனகர் - பெரிய நகர்; 245. சிலம்ப - ஒலியெழ; 246. கோடு - கொம்பு; கொடுமணி - வளைந்த மணி; 247. ஓடாப்பூட்கை - புறங்காட்டாத வலிமை; பிணிமுகம் - பெயர்; 249. ஆண்டாண்டு - அங்கங்கு; ஆறு - வழி. (உ - டை) யான் முன்னே சொல்லிய இடங்களில் ஆயினும் ஆக மற்றை இடங்களில் ஆயினும் ஆக; காணும் தகுதியுடன் நீ அப்பெருமானைக் கண்முன் காணும்போது முகத்தால் விரும்பி நோக்குக; வாயால் வாழ்த்துக; கையைத் தலைமேல் வைத்துக் கூப்பிப் புகழ்க; அவன் திருவடிகளில் நின் தலைபடியுமாறு வீழ்ந்து வணங்குக. நெடிய பெரிய இமயமலையின் உச்சியில் பளிக்குப் போன்ற நீர் நிறைந்த வளமான பொய்கையில் வான், வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய தீ தன் கைகளிலே தாங்கக் கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே. கல்லாலின் கீழ் அமர்ந்த கடவுளின் புதல்வனே, பெரிய மூங்கிலையுடைய இமவான் மகளாகிய உமையம்மையின் மகனே, பகைவர்க்குக் கூற்றுவனே, போரில் பெறும் வெற்றியையுடைய கொற்றவையாகிய போர்த் தெய்வத்தின் மகனே? அணிகலம் அணிந்த சிறப்புடைய காளியின் குழந்தையே, தேவர்கள் வணங்கும் விற்படைத் தலைவனே, கடம்புமாலை அணிந்த மார்பனே, எல்லா நூல்களையும் அறிந்த புலவனே, போர்த் தொழிலில் ஒப்பற்றவனே, போர் செய்யும் வெற்றிப்பேறுடைய இளைஞனே, அந்தணர்களுக்குச் செல்வ மாக அமைந்தவனே, அறிவாளர் புகழ்ந்து சொல்லும் புகழ் மலையாகத் திகழ்பவனே, தெய்வயானைக்கும் வள்ளியம்மைக்கும் கணவனே, ஆடவருள் அரியேறு போன்றவனே, வேலைத் தாங்கிய பெருமையுடைய நிறை பெருஞ் செல்வனே, குருகு (கிரௌஞ்சம்) என்னும் பெயருடைய மலையைப் பிளந்து அழித்த குறையாத வெற்றியை யுடைய வானளாவும் நெடிய மலைகளுக்கு உரிமையாளனே, பலரும் புகழ்ந்து கூறும் நன்மொழித் திறம்வாய்ந்த புலவர் தலைவனே, அரிதிற் பெறும் முறைமையுடைய பெருமை வாய்ந்த முருகனே, விரும்பியவர்க்கு அவர் விரும்பியதை அளிக்கும் பெரும் புகழாளனே, இன்னலுற்று வந்தவர்க்கு அருள் செய்யும் அழகிய அணிகலம் அணிந்த சேயோனே, நெருங்கிய போரில் வெற்றிபெற்று விளங்கும் ஒளி மிக்க மார்பால், பரிசு வேண்டி வந்தாரைத் தழுவி வேண்டுவன அருளும் ஒளியமைந்த உயர்ந்த வண்மையாளனே, மேம்பட்டா ரெல்லாம் வாழ்த்தும் புகழ்வாய்ந்த பெயரையுடைய இறைவனே, சூரபன்மனைச் சார்ந்தோரையெல்லாம் அழித்த வலிமைய மைந்த பெரு வல்லாளனே, போர்த்தொழில் வல்ல வீரனே, தலைவனே, என்று பலவற்றையும் யான் அறிந்த அளவில் புகழ்ந்து முடியாமல் நின் தன்மைகளையெல்லாம் முற்ற அளந்தறிதல் நிலைபெற்ற உயிர்களுக்கு இயலாதது. ஆதலால் நின் திருவடியைப் பெற நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பானவர் இல்லாத அறிவாளனே என்று நீ கருதிவந்ததை வேண்டிக் கொள்ளுமுன்னரே, பல்வேறு வடிவுடைய குறுகிய பல பணியாளர் விழாக்கொள்ளும் இடத்தில் பொலிவாகத் தோன்றி, இம் முதிய இரவலன் இரங்கத் தக்கவன்; நின் வளமான புகழை விரும்பி வந்துள்ளான்; கேட்டோர்க்கு இன்பமும் உறுதியும் தரக் கூடியவையாகிய பலவற்றையும் வாழ்த்தி என்று கூறுவர். (250 - 286) 250 ஆண்டாண் டாயினும் ஆகக் காண்டக முத்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 255 அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 260 வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே 265 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக 270 நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 275 சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு 280. புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் 285 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந் தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் (கு -ரை) 250. காண்தக - காணுமாறு; 251. கண்டுழி - காணும்போது; அமர்ந்து - மலர்ந்து; ஏத்தி - வாழ்த்தி; 252. பரவி- புகழ்ந்து; 253. சிமையம் - உச்சி; 254. ஐவர் - ஐம்பூதங்கள்; ஒருவன்: தீ; அங்கை - உள்ளங்கை; 255. அறுவர் - கார்த்திகைப் பெண்கள் அறுவர்; அருந்ததி ஒழிந்த அறுவர் எனவும் கூறுவர்; பயந்த - பெற்ற; ஆறுஅமர் - ஆறு உருவாக அமைந்த; 256. ஆல்கெழு - கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்த; மால்வரை - பெரிய மலை (இமயமலை). 257. மலைமகள் - உமையம்மை; மாற்றார் - பகைவர்; 258. கொற்றவை - வெற்றித் தெய்வம்; 259. இழை - அணிகலம்; பழையோள் - காளி; 260. தானை - படை; 262. செரு - போர்; ஒருவ - ஒப்பற்றவனே; மள்ள - இளைய; 263. வெறுக்கை - செல்வம்; சொல்மலை - புகழ்மலை; 264. மங்கையர் - தெய்வ யானையும், வள்ளியும்; ஏறு - சிங்கம்; 266. குன்றம் - குருகு என்னும் பெயருடைய கிரௌஞ்சம்; குன்றா - குறையாத; 267. மரபு - முறைமை; 270. நசையுநர் - விரும்பியவர்; ஆர்த்தும் - நுகர்தற்கு அருளும்; 271. அலந்தோர்- துன்புற்றோர்; பொலம் பூண் - பொன்னணிகலம்; 272. மண்டமர் - நெருங்கிய போர்; அகலம் - மார்பு; 274. இயவுள் - கடவுள்; 275. சூர் - சூரபன்மன்; மதவலி - பெருவலி, பெயருமாம்; 276. குருசில் - தலைவன்; 277. ஆனாது - முடியாது; 278. மன்உயிர் - நிலைபெற்ற உயிர், மக்களுயிர்; 279. உள்ளி - நினைத்து; 280. புரையுநர் - ஒப்பானவர்; 282. கூளியர் - பூத கணங்களாகிய பணியாளர்; 283. சாறுஅயர் - விழாக் கொள்ளும்; வீறுபெற - பொலிவுபெற; 284. அளியன் - இரங்கத்தக்கவன்; முதுவாய் - முதுமையும் வாய்மையும் 285. நயந்து - விரும்பி; (உ - டை) அவ்வளவில், தெய்வத்தன்மை வாய்ந்த வலிமையான வடிவத்தையும், வானத்தைத் தொடும் வளர்த்தி யினையும் உடைய முருகன் உனக்கு முன்னர்த்தோன்றி, வருத்துதல் அமைந்த தன் தெய்வ ஒளியை அடக்கிக்கொண்டு, பழமையான தனது மணங்கமழ்கின்ற தெய்வநலங்கனிந்த இளமையான திருவடிவைக் காட்டுவான்; அஞ்சாது கொள்க நீ; வீடுபேற்றை நினைத்துவந்த நின் நினைவை நான் அறிவேன் என்று அன்பால் நன்மொழிகளைக் கலந்துரைப்பன். கருநிறமுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நீ கேடு இல்லாமல் ஒப்பற்ற ஒருவனாகத் தோன்றுமாறு சிறந்த பெறுதற்கரிய பரிசை வழங்குவன். (287 - 295) தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 290 மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவன்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய 295. பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (கு - ரை) 287. சான்ற - அமைந்த, வாய்ந்த; திறல் - வலிமை; 288. நிவப்பு - வளர்த்தி, உயரம்; 289. அணங்கு சால் உயர்நிலை - வருத்துதல் அமைந்த உயர்ந்த ஒளிநிலை; தரீஇ - அடக்கி அமைத்து; 290. இளநலம் - இளமையான நல்ல வடிவம்; 291. அஞ்சல் ஓம்பு மதி - அஞ்சாதே கொள்க; 292. அளைஇ - கலந்து; விளிவு இன்று - கேடு இல்லாமல்; 293. இருள் நிறம் - கருநிறம்; முந்நீர் - கடல்; 295. பெறலரும் - பெறுதற்கு அரிய; நல்குமதி - நல்கும்; அவன் யாவன் எனிற் கூறுவன். (உ - டை) வேறுபட்ட பல துகிற் கொடிகளைப்போல அசைந்து அகிற்கட்டைகளைச் சுமந்து சந்தனமரத்தை உருட்டி சிறுமூங்கிலின் பூவுடைய அசையும் கிளைமுரிய வேரைப் பிளந்து, விண்ணைத்தொடும் பெரிய மலையில் ஞாயிற்றைப் போலத் தொடுத்து வைக்கப்பட்ட தேன்கூட்டைச் சிதைத்து, நல்ல பல ஈரப்பலாவின் முற்றிய சுளை தன்னொடு கலக்கப் பண்ணி மலைமேல் உள்ள சுரபுன்னையின் நறுமலரை உதிர்த்து, கருங்குரங்குடன் கரிய முகத்தையுடைய ஆண்முசுக்குரங்கை நடுங்கச்செய்து, புள்ளிகளையுடைய முகத்தைக்கொண்ட பெரிய பெண்யானை குளிரும்படி வீசி, பெரிய யானையின் முத்துடைய வெண்கொம்புகளை அள்ளி, தாவி விழுந்து நல்லபொன்னும் மணியும் மேலும் நிறம் விளங்குமாறு செய்து, பொன்னைத் தெள்ளிக் கொழித்து, வாழையின் அடி முரியவும், தென்னையின் இளநீர்க்குலை உதிரவும் மோதித் தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துகளைச் சாய்த்து, தோகைகளையுடைய புறத்தையும் மெல்லிய நடையையும் உடைய மயில்கள் பலவற்றுடன் பெட்டைக் கோழிகள் அஞ்சி அழிந்தோடச் செய்து, ஆண் பன்றியுடன், உள்ளே சோறுடைய கரிய பனையின் புல்லிய செறும்புபோன்ற நிறமுடைய கருமயிரைக் கொண்ட உடலையும், வளைந்த அடியையும் உடைய கரடி பெரிய கற்பாறை வெடிப் பாகிய குகையுள் ஒடுங்க, கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் காளை முழக்கம் செய்ய, மலையின் உச்சியில் இருந்து இழும் என்னும் ஒலியெழ ஒழுகும் அருவியையுடைய பழம் முதிர்ந்த சோலைகளையுடைய மலைக்கு உரிமையாளனாகிய முருகப்பெருமான். (296 - 317) வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 300. தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 305 முத்துடை வான்கோடு தரீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 310. மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கடல் விடரளைச் செறியக் கருங்கோட்டு 315 ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. (கு - ரை) 296. துகில் - ஆடை, இவண் கொடியைக் குறித்தது; நுடங்கி - அசைந்து; 297. ஆரம் - சந்தனம்; முழுமுதல் - அடிமரம்; வேரல் - மூங்கில்; 298. அலங்குசினை - அசையும் கிளை; புலம்ப - தனிமையாக; கீண்டு - கிழித்து; 299. பரிதி - கதிரோன்; 300. அலர் இறால் - விரிந்த தேன்கூடு; 301. ஆசினி - ஈரப்பலா; கலாவ - கலக்க; மீமிசை - உச்சி; 302. நாகம் - சுரபுன்னை; ஊகம் - கருங்குரங்கு; 303. மாமுக முசுக்கலை - கரிய முகத்தையுடைய முசுக்குரங்கு; பனிப்ப - நடுங்க; நுதல் - நெற்றி; 304. இரும்பிடி - கரிய பெண்யானை; 305. வான்கோடு - வெண்தந்தம்; 306. கொழியா - கொழித்து, வீசி; 307. துமிய - துணிய; தாழை - தென்னை; 308. விழுக்குலை - சிறந்த குலை; 309. கறிக்கொடி, மிளகுக்கொடி; கருந்துணர் - கருநிறப்பூங்கொத்து; பொறி - புள்ளி - தோகை 310. மஞ்ஞை - மயில்; வெரீஇ - அஞ்சி; 311. வயப்பெடை - வலிய பெட்டை; இரிய - அகன்றுஓட; கேழல் - காட்டுப் பன்றி; 312. இரும்பனை - கரியபனை; வெளிறு - சோறு; புன்சாய் - புல்லிய செதும்பு; 313. குரூஉ - நிறம்; குடாவடி - வளைந்த அடி; உளியம் - கரடி; 314. விடர் அளை - வெடிப்பில் அமைந்த குகை; 315. ஆமா - காட்டுப்பசு; ஏறு - ஆண்; சிலைப்ப - ஒலிக்க; 317. பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை; பழமுதிர் சோலை; மலைகிழவோன் - மலைக்கு உரிமையாளன்; முருகன். முடிபு (உ - டை) கணவன் மார்பினன் சென்னியனாகிய சேஎயின் சேவடி படரும் உள்ளமொடு செல்லும் செலவை நீ நயந்தனையாயின, நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி நீ முன்னிய வினை; அவன் குன்றமர்ந்துறைதலும் உரியன்; அதாஅன்று, அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு; அதாஅன்று, குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பு; அதா அன்று, விழவின் கண்ணும் நிலையின் கண்ணும் கந்துடை நிலையினும் களன் காடு முதலியவற்றினும் உறைதலும் உரியன்; இது யான் அறிந்தபடியே கூறினேன்; யான் கூறிய இடங் களினாதல் வேறிடங்களினாதல் அவனை முந்து நீ கண்டுழி ஏத்திப் பரவி வணங்கி யானறி அளவையின் ஏத்தி நின்னடி உள்ளி வந்தேன் என்று நீ குறித்தது மொழியா அளவை, கூளியர் தோன்றிப் பெரும அளியன் இரவலன் ஏத்தி வந்தோன் எனக்கூற அவனும் தானே வந்தெய்தி தழீஇக் காட்டி அஞ்சலோம்பென்று நன்மொழி அளைஇ ஒருநீயாகித் தோன்றும்படி பரிசில் நல்கும்; அவன்யாவன் எனில் பழமுதிர்சோலை மலைகிழவோன் வேலும் மயிலும் துணை. கந்தர் கலிவெண்பா உ திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா உரைநடையும் குறிப்பும் (உரை நடை) செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், தெளிந்து அறிய முடியாத பாடல்களால் அமைந்த பழமையான மறைகளும், இனிமையமைந்த நாத தத்துவமும், அந்த நாத தத்துவத்தின் முடிவும், குற்றமற்ற உயிர் அறிவும் கண்டறிய முடியாத பேரறிவினது இறை. அது, முதல் நடு இறுதி கடந்தது; நிலைத்த இன்ப அறிவானது; கட்டற்ற பேரொளி யானது; தோன்றிய பெயரும், குணமும், ஒப்பற்ற வடிவும் அற்றது; எங்கும் நிறைந்த பரம்பொருளாயது; உயிர்களின் அறிவுக்கு எட்டாத தொன்மையது; படைப்பு காப்பு, அழிப்பு, அளிப்பு, மறைப்பு என்னும் ஐந்தொழில்களுக்கும் அப்பாலாயது; பழ நாளிலேயே மனம் அறிவு ஆணவம் என்பவற்றுக்கு எட்டாத திருவடிவுடையது. (1-5) 1. பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 2. நாதமும்நா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதிநடு 3. அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த 4. குறியும் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்(கு) 5. அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் - (குறிப்புரை) 1. பூமேவு செங்கமல செங்கமலப்பூ மேவு எனப் பொருத்துக. புத்தேள் - கடவுள்; தேற அரிய - தெளிதற்கு அரிய; தே மேவு - இனிமையமைந்த 2. நாதம் - ஒலி; (நாத தத்துவம்) நாதாந்தம் - நாத தத்துவத்தின் முடிவு; நவைதீர்ந்த - குற்றமற்ற; போதம் - அறிவு; போதம், முன்னது உயிர் அறிவு (பசு அறிவு) பின்னது இறை அறிவு (பதி அறிவு) 3. அந்தம் - இறுதி; பந்தம் - கட்டு, தளை; தணந்த - அற்ற; பரஞ்சுடர் - பேரொளி, தெய்வ தொன்மை; மனாதி (மனம் ஆதி) மனம் முதலியன; தனாதருளின் - தனது அருளின்; (உ-டை) இறை, தன் அருளால் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்துருவங் கொண்ட பேரின்பமானது; எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாக நிற்கும் ஒப்பற்ற பொருளானது; குறைவிலா நிறைவாயது; நிலைபேறுடையது; இறப்பு, பிறப்பு, தொடர்பு, காரணம் ஆகியவை இல்லாத நிலைமையது; உலகில் கண்கட்டு வித்தை காட்டுபவன் அவ் வித்தையைக் காண்பாரை மயக்கித், தான் மயங்காது செயல்புரிவதுபோல், முற்பட்ட மூலமின்றித்தானே மூலமாக நிலைத்தது; அருளுருவத்தை அல்லாமல் மருளுருவம் தனக்கு இல்லாதது; மனம் மொழி மெய் என்னும் முக்கருவிகள் வழியாக வரும் விருப்பம் அறிவு செயல்களால், ஒன்றுதலும் நுகர்தலும் விரிதலும் ஆகிய பொருளாகியது; (6-10) - தனாதருளின் 6. பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 7. பூரணமாய் நித்தமாய்ப் போக்குவர வும்புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில் 8. இந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்திற் சாராது சார்வதுபோல் - முந்தும் 9. கருவின்றி நின்ற கருவாய்அருளே உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 10. ஆகவரும் இச்சை அறிவியற்ற லாலிலய போகவதி காரப் பொருளாகி (கு-ரை) 6. பஞ்சவிதம் - ஐந்துவிதம்; பரசுகம் - பேரின்பம்; தஞ்சம் - அடைக்கலம்; தனி - ஒப்பற்ற; எஞ்சாத - குறையாத; 7. பூரணமாய் - நிறைவாய்; நித்தம் - நிலைபேறு; புணர்வு - தொடர்பு; கதி - நிலைமை; தாரணி - உலகம். 8. இந்திரசாலம் - கண்டுகட்டுவித்தை, செப்படிவித்தை; தந்திரம் - சூழ்ச்சி; 9. அருளே உருவின்றி நின்ற உரு - அருளே உருவாக நின்று, வேறு உரு இல்லாதது; வேறுஉரு மருள்உரு; திரிகரணம் - மனம் மொழி மெய் என்னும் முக்கருவி; 10. இச்சை - விருப்பம்; இயற்றல் - செயல்; இலயம் - ஒன்றுதல்; போகம் - நுகர்தல்; அதிகாரம் - விரிவுறுதல்; ஏகம் - ஒன்று. (உ-டை) ஒன்றாகிய இறை, உருவமும் அருவமும் அருவுரு வமும் ஆகியது; பின்னே அடியார் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப வடிவம் பலவாயது; அஃது, அறியாமைக்குக் காரணமாகிய ஆணவமலத்தால் பாசம் கொண்ட பல உயிர்களுக்கும் வீடுபேறு அளித்தற்காக அந்தப் பாசம் நீங்குதற்குத் திருவருள் வைப்பது; உயிர்கள் உடல் எடுத்தற்கு, உருவமும் உருவம் இல்லாததும் ஆகிய தூயமாயை (சுத்தமாயை) அழுக்கு மாயை (அசுத்தமாயை) மூலப்பகுதி (பிரகிருதிமாயை) கட்டு என்பவற்றைச்சேர்ப்பிப்பது; அவ்வுயிர்கள் இயங்குதற்குரிய மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு வழிகளையும் (அத்து வாக்களையும்) உலகத்தமைந்த மற்றை வழிகளையும் பொருந்தத் தக்க பிணைப்பில் கூட்டுவிப்பது; மாறி மாறி வருகின்றதாகிய முட்டையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது, வேர்வையில் தோன்றுவது, வித்து கிழங்கு ஆகியவற்றில் தோன்றுவது என்னும் நான்கு வகைத் தோற்றத்தையும், தாவரம், ஊரி, நீரி, விலங்கு, பறவை, மனிதர், தேவர் என்னும் ஏழுவகைப் பிறப்புக் களையும், எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) பிறவி (யோனி) வேறுபாடுகளையும் நுகராமல் தீர்க்கமுடியாத வினைக்குத் தக்கவகையில், காற்றாடியும் வண்டிச்சக்கரமும் போல் பிறந்து உழலுமாறு மறைப்பிப்பது; கொடிய நரகம் தெய்வவுலகம் முதலியவற்றில் நுகரவேண்டியவற்றை நுகர்விப்பது; அறிவறி தலால் பிறவியொழிக்கும் நல்வினை பெறச்செய்து, ஒன்றை யொன்று எதிரிட்டு உரைக்கும் வேற்றுமைச் சமயங்களின் பழமையான நூல்களைத் தாம்கொண்ட நூல்களே நல்ல நூல்கள் எனத் தோன்றுமாறு செய்விப்பது; (11-18) - ஏகத்(து) 11. உருவும் அருவும் உருவருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் 12. மோகமுறும் பல்லுயிர்க்கு மூத்தியளித் தற்குமல பாகமுற வேகடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 13. தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் 14. ஆறத்து வாவும்அண்டத் தார்ந்தவத்து வாக்களும்முற் கூறத் தகும்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும் 15. ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய 16. கன்மத்துக் கீடாய்க் கறங்கும் சகடமும்போல் சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய 17. சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்கா ரணம்சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 18. தொன்னூற் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து (கு-ரை) 11. உரு - வடிவு; அரு - வடிவற்றது; பருவ வடிவம் - அடியார் பக்குவநிலைக்கு ஏற்ற வடிவம்; இருள்மலம் -அறியாமையை உண்டாக்கும் ஆணவமலம். மலம் - மாசு, அழுக்கு. 12. மோகம் - பற்று, பாசம்; மலபாகம் - மலம் நீங்கும் பக்குவநிலை; கடைக்கண் பாலித்தல் - அருள் செய்தல்; தேகம் - உடல். 13. விந்து - சுத்தமாயை; மோகினி -அசுத்தமாயை; மான் - மூலப்பகுதி; மூலம் - பிரகிருதி மாயை; பெந்தம் (பந்தம்) - கட்டு; மந்த்ரம் - மந்திரம். 14. அத்துவா - வழி; அண்டத்து ஆர்ந்த - உலகில் அமைந்த; சிமிழ்ப்பு - பிணைப்பு. 15. ஈரிரண்டு தோற்றம் - நான்குவகையில் தோன்றும் தோற்றம்; யோனி - பிறவி; எண்பான் - எண்பது; தீர்வு அரிய - தீர்க்க முடியாத, 16. கன்மத்துக்கு ஈடாய் - வினைக்கு இணையாய்; கறங்கு - காற்றாடி; சகடம் - வண்டி உருளை; சென்மித்து - பிறந்து. திரோதித்து - மறைப்பித்து; வெந்நிரயம் - கொடிய நரகம், 17. துய்ப்பித்து - நுகரச்செய்து; நண்ணுதல் - கூடுதல்; 18. பரசமயம் - மற்ற சமயம். (உ-டை) முன்னைய மெய்ப்பொருள் நூல்களில் கூறியபடி நோன்பு முதலாய பல தவநெறிகளைக் கடைப்பிடியாகக் கொண்டு நின்ற பின்னே, மெய்யான தொண்டு (சரியை) பூசை (கிரியை) ஓகம் (யோகம்) ஆகிய நெறிகளில் சாரும்படி செய்வது, திருவருள் பெருக்கத்திற்குக் காரணமாகிய இறையோடு ஓருலகத் திருத்தல் (சாலோகம்) இறையொடு அடுத்திருத்தல் (சாமீபம்) இறைவடிவாக இருத்தல் (சாரூபம்) ஆகிய பதவிகளை அருள்வது; மெய்ப்பொருள் அறிவை விரிவுபடுத்துவது; நான்கு வகைப் பட்டதாகிய மிகமந்தம், மந்தம், விரைவு, மிகவிரைவு என்னும் அருள் வீழ்ச்சிகளைத் தருவதற்கு நல்வினை தீவினை என்னும் இருவினைகளிலும் ஒத்த வெறுப்புண்டாகும் காலம் உளவாக்குவது; பெரிதாம் மலங்கள் நீங்கும் பக்குவமான காலம் வரும்போது உயிர்கள் நெடுங்காலம் துன்புற்றுத் திரிதலைக் கண்டு அருள்புரிவது; நீங்காத அறிவுக்கு அறிவாகியும், அந்த அறிவுக்கும் எட்டாத வகையில் அமைந்திருந்த நிலைமை நீங்கி நீங்காத பேரருள் பொழியும் திரு வடிவாக உலகில் தோன்றிக் குருபரன் என்னும் அழகிய பெயரைக் கொண்டு விளங்குவது; (19-24) - முன்னூல் 19. விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித் - தருள்பெருகு 20. சாலோக சாமீப சாரூப மும்புசிப்பித்(து) ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 21. சத்திநி பாதம் தருதற் கிருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 22. மலபரி பாகம் வருமளவிற் பன்னாள் அலமருதல் கண்ணுற் றருளி - உலவா (து) 23. அறிவுக் கறிவாகி அவ்வறிவுக் கெட்டா நெறியிற் செறிந்தநிலை நீங்கிப் பிறியாக் 24. கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு - (கு-ரை) 19. சார்வித்து - சாரச்செய்து 20. புசிப்பித்து -அனுபவிக்க (நுகர)ச் செய்து; ஆலோகம் - தெளிந்த அறிவு; அகற்று வித்து - விரியச்செய்து. 21. சத்திநிபாதம் - அருள் பதிவுநிலை; இருவினை ஒத்தல் - நல்வினை தீவினை என்னும் இருவினைகளிலும் வெறுப்பு ஒப்பாதல். பெத்த - பெரிய, பெத்தம் - கட்டுமாம்; 22. மலபரிபாகம் - மலம் அகலும் காலம். பன்னாள் - பலநாள்; அலமருதல் - துன்புறுதல்; உலவா - ஒழியாத; 23. பிறியா - பிரியா; எதுகை நோக்கி இடையினம் வல்லினம் ஆயது. 24.காசினி - உலகம்; காசினிக்கு - உலகில்; உருபு மயக்கம். (உ-டை) திருவருட்பார்வையால் முன்னை வினையை ஒழித்துவிடுவது; உயிர்களின் புறவுடற்கருவிகள் அறுபதையும், அகவுடற்கருவிகள்எட்டையும், மூலம், கொப்பூழ, நெஞ்சு, கழுத்து, நெற்றி, நடு, தலை, வெளி என்னும் ஏழு நிலைகளையும், மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம், கலை என்னும் (அத்துவாக்கள்) நெறிகள் ஆறையும் பாழாகச் செய்வது; ஆணவ மலம் என்னும் மறைப்புப் படலத்தைக் கிழித்து அறிவினால் காணற்கு அரிதாய மெய்ஞ்ஞானக் கண்ணை அருளுவது; கொண்ட இறைவன் திருவடிப்பேற்றை அறியும் மெய்யறிவால் தன்னையும் உயிரையும் காட்டுவது; பின்னர்க் காவலமைந்த உலகம் முழுவதையும் உண்மையறியக் காட்டுவது; எல்லை காணமாட்டாமல் தேக்கிய பேரின்பம் ஆகிய தெளிந்த அமுதாகி எல்லா இடங்களிலும் இடைவெளியறத் தான்நின்ற நிலை காட்டுவது; இறப்பு, பிறப்பு, நினைப்பு, மறப்பு, பகல், இரவு என்பவற்றைக்கடந்து விளங்கும் நீங்காத இன்பத்தைப் பொருந்தச் செய்வது; (25-29) - திருநோக்கால் 25. ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக 26. ஆணவ மான படலம் கிழித்தறிவிற் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 27. அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 28. தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகியெங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 29. வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்துலவா இன்பம் - மருவுவித்துக் (கு-ரை) 25. நிலம் - இடம்; அவை ஆறாதாரமும் வானமும், 26. ஆணவம் - மும்மலங்களுள் ஒன்று; படலம் - மறைப்பு; அறிவு - உயிர்களின் அறிவு; 27. அடிஞானம் - இறைவன் அடியை அடையும் அறிவு. கடிஆர் - காவல் அமைந்த; புவனம் - உலகம்; முடியாது - அழியாது. 28. உலவா இன்பம் - நீங்காத இன்பம். 29. மருவு வித்து - பொருந்தச்செய்து. (உ-டை). ஆணவத்துடன் வினைப்பாகம் உடையவர்க்கு, மலர் போன்ற கண் மூன்றும், நீண்டு தொங்கும் சடையும், வலிய மழுப்படையும், மானும்உடையவனாய் வெண்ணிறக் காளையின் மேல் மின்னலை இடமாகக்கொண்ட பவழமலை யொன்று வெள்ளிமலை மேல் தோன்றியதுபோல் அம்மையப்பராம் தெய்வவடிவோடு திகழுவது. அவர்க்கு முன்னை வினைக்கட்டை அறுத்து ஞானம் அருளுவது; ஆணவமலம் மட்டுமே உடையவர்க்கு, அவர்கள் உள்ளத்தே நின்று இன்பத்தை வழங்குவது; மேலும் மேலும் வரும் உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கியநிலை என்னும் முன்று துயர்களையும் (அவத்தைகளையும்), அகற்றுவது; மும் மலங்களும் நீங்கிய மூத்தருடன் இருக்கச் செய்வது; உயர்ந்த மேம்பட்டமுத்திநிலையையும் அடையச் செய்வது; (30-33) 30. கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் ... மின்னிடத்துப் 31. பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 32. கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்று ஒருமலர்த்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு 33. மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருட னேயிருத்தி ஆன்ற பரமுத்தி அடைவித்து - (கு-ரை) 30. வன்மழு - வலிய மழுவாயுதம்; மால் விடை - வெண்ணிறக்காளை; திருமால் ஆகிய காளை. மின் - மின்னல் போன்ற உமையம்மை. 31. பொருப்பு - மலை; பவளப் பொருப்பு - சிவந்த மலைபோன்ற சிவபெருமான்; வெற்பு - மலை; வெள்ளி வெற்பு - கயிலாயம்; 32. கண் - ஞானம்; உள்நின்று - புறத்தே புலப்படாமல் உள்ளே நின்று; ஒரு மலத்தார் -ஆணவமலம் ஒன்றுமே உடையார். 33. அவத்தை - துயர்; முத்தர் - முத்தி பெற்றவர், ஆன்ற - அகன்ற. (உ-டை) இத்தகைய இறைமை அமைந்து, பிறவிக்குக் காரணமாக வரும் யான் என்னும் செருக்கும் (அகங்காரம்) எனது என்னும் ஆசையும் (மமகாரம்) ஒழிந்த இடமே திருவடியாகவும், மோனத்தால் பெறும் மேலான இன்பமே திருமுடியாகவும், கடவுள் (பதி) ஞானமே திருவுருவாகவும், இச்சை செயல் அறிவு (இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி) என்பவை மூன்று கண்களாகவும், திருவருளே மலர்போன்ற சிவந்த கைகளாகவும், இப் பேருலகமே திருமுன்னிலையாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற சுடரே, எவ்வுயிர்களிலும் கலந்து வேறுபாடற நிற்கும் பெருமானே; (34-36) - தோன்றவரும் 34. யானெனதென் றற்ற இடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம் 35. திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே 36. சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; - எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே! (கு-ரை) 34. மோனம் - மௌனம்; பரஆனந்தம் - மேலான இன்பம்; 35. செங்கை அலர் - சிவந்த கைம்மலர்; இருநிலம் - பெரிய நிலம்; 36. சந்நிதி - திருமுன்; பின்னம்அற - வேறுபாடு நீங்க. (உ-டை). மின்னலென ஒளிவிடும் வடிவம் கொண்ட ஒன்பான் மணிகள் ஒளிசெய்யுமாறு பசும்பொன்னால் செய்யப் பெற்ற பேரொளி வாய்ந்த அழகிய திருமுடியும், கலைகள் குறைந்த பிறைத்துண்டங்கள் ஆறை, முறையே பதித்து வைத்தாற் போன்ற திருநீற்றுக் கீற்றுகள் இடப்பெற்ற அழகிய நெற்றிகளில், பூப்பூத்தாற்போல விளங்கும் பொட்டுகளின் அழகும், உரிய பொழுதில் மலர்ந்த செந்தாமரை மலர்கள் பன்னிரண்டு ஒருங்கே மலர்ந்தாற்போல விளங்கி அருள்பொழியும் திருவிழி மலர்கள் பன்னிரண்டும், ஞாயிறு பலதோன்றி ஒளிசெய்தாற்போலப் புன்முறுவல் பூத்து விளங்கும் செவ்வல்லி மலர் போன்ற சிவந்த திருவாய்களும், பிறவியாகிய வெப்பைத் தீர்க்கும் குளிர் நிழலாம் திருமொழியும் உடையாய்! (37-41) - மின்னுருவம் 37. தோய்ந்தநவ ரத்நச் சுடர்மணியாற் செய்தபைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 38. துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் - விண்ட 39. பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு) அருள்பொழியும் கண்மலரீ ராறும் - பருதி 40. பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 41. புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - (கு-ரை) 37. மின் உருவம் - மின்னல் போன்ற உருவம்; கிரணம் - கதிரொளி. தேய்ந்த பிறை - எட்டாம்பிறை (நெற்றிக்கு), மூன்றாம் பிறை (திருநீற்றுக்கு) 38. நிரை - வரிசை; புண்டரம் - திருநீறு; நுதல் - நெற்றி விண்ட - மலர்ந்த, 39. புண்டரிகம் - தாமரை; கண்மலர் - கண்களாகிய மலர்; பருதி - கதிரோன், 40. பாலித்தல் - வழங்குதல்; குலவும் - விளங்கும், அசையும்; மகரக் குழை - சுறாமீன் வடிவில் செய்யப் பெற்ற காதணி, குண்டலம்; 41. பூங்குமுதம் - அழகிய செவ்வல்லி; செவ்வாய் - சிவந்த வாய்; சென்மவிடாய் - பிறவியாகிய வெப்பு; மலி - மிகுந்த. (உ-டை). ஒளி பொருந்திய தோளையுடைய அசுரர்கள் போற்றிப் புகழும் கொடிய சூரபன்மனை அழித்துப் பகைவர் உயிரைப் போக்கும் சிவந்த மலர்முகம் ஒன்றும், எல்லா உயிர்களுக்கும் அமைந்த பழவினையை ஒழித்து என்றும் அழியாத பேரின்ப வாழ்வை அருளும் சிவந்த தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும், அன்பால் நெருங்கும் அடியார்கள் ஆக்கும் பழைய மறை நூல்களையும், ஆகம நூல்களையும் நலமாக முடித்து வைக்கும் தாமரை மலர்போன்ற முகம் ஒன்றும், உயிர்களை விலகி அறியாத பாசம் என்னும் இருளை அகற்றிப் பல கதிர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒளி செய்வதுபோல விளங்கும் மணமிக்க தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும், விருப்புடன் கூடி இன்புறும் வள்ளியம்மைக்கும், தேவர் கோன் மகளாகிய பூங்கொடி போன்ற தேவயானைக்கும் காதலை வழங்கும் முழுமதி போன்ற முகம் ஒன்றும், பெருவேட்கையுடன் வந்து தன் அடியை அடைந்த அடியார் அகமகிழுமாறு வரங்கள் பலவற்றை வழங்கியருளும் தெய்வத் தன்மை வாய்ந்த தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும் (ஆக ஆறு திருமுகங்களை யுடையாய்) (42-47) - வின்மலிதோள் 42. வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் 43. ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 44. வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் 45. பாச இருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாசமலர்வதன மண்டலமும் - நேசமுடன் 46. போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன் 47. வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் (கு-ரை) 42. வெவ் அசுரர் - கொடிய அசுரர்; போற்றி சைக்கும் - போற்றிக் கூறும்; வெஞ்சூரன் - கொடிய அசுரன்; தடிந்து - அழித்து; தெவ்வர் - பகைவர். 43. உலவாத பேரின்பம் - அழியாத பெரிய இன்பம்; சூழ்வோர் - சூழ்ந்திருக்கும் அடியார். 44. வடிக்கும் - இயற்றும்; கமலம் - தாமரை. 45. துரத்து - அகற்றி; வதனம் - முகம்; மண்டலம் - வட்டம்; 40. போகம் - இன்ப நுகர்ச்சி; புத்தேளிர் - தேவர்; பூங்கொடி - பூங்கொடி போன்ற தேவயானை; மோகம் - காதல். (உ-டை.) கொத்து மலர்ந்த தேனெழுகும் கடம்பு மாலையும், மணமிக்க குராமலரும் மலர்ந்து விரிந்த பெரிய தோள்களாகிய மலைகள் பன்னிரண்டும் (உடையாய், நின் பன்னிரு திருக்கை களுள்), ஒரு திருக்கை தேவர்களுக்கு அரிய அமுதத்தை வழங்கும்; மெல்லிய ஒரு திருக்கை, தெய்வமகளிர் விரும்புதலால் அவர்களை அன்போடு அணைக்கும்; மலர் போன்ற ஒரு திருக்கை ஒழிவின்றி மழை பொழியும்; ஒரு திருக்கை, அழகிய மாலையைத் தழுவி அமையும்; ஒரு திருக்கை மார்பின்மேல் வைக்கப்பெற்றிருக்கும்; ஒரு திருக்கை, இடுப்பின் இடப்பாகத்தில் அமையும்; ஒரு திருக்கை, செறிந்த சிறிய வீர வளைகளைக் கொண்டிருக்கும்; பெருமைக்குரிய ஒரு திருக்கை, மணியை உடையதாக இருக்கும்; ஒரு திருக்கை, சினங்கொண்டு செய்யும் போரில் அங்குசப் படையை எடுத்திருக்கும்; ஓர் அழகிய திருக்கை, அழிக்கும் போரில் பகைவரை அதிரச் செய்யும் கேடகத்தைச் சுழற்றும்; ஒரு திருக்கை, ஒளிசெய்யும் வாள் வீசும்; (இவ்வாறு நின் பன்னிரு திருக்கைகளும் கடமை புரியும்.) (48-53) - கொந்தவிழ்ந்த 48. வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 49. தேவர்க் குதவும் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 50. மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 51. வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 52. சிறுதொடிசேர்கையுமணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர் 53. அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - (கு-ரை) 48. கொந்து அவிழ்ந்த- கொத்துக்கள் மலர்ந்த; வேரி - தேன்; விரை - மணம்; குரவு-குராமரம்; பாரப்புயசயிலம் - பெரிய தோளாகிய மலை; ஆர் - அரிய. 49. சூர்மகளிர் - அச்சமூட்டும் தெய்வமகளிர்; ஓவாது - ஒழியாது. 50. மாரி - மழை; தொடையல் - மாலை; 51. கரதலம் - கை. வாமமருங்கு -அழகிய இடுப்பு; குறங்கு - துடை; மொய்த்த - நெருங்கிய. 52. தொடி - வளையல்; கறுவுசமர் - சினங்கொண்டெழுந்த போர்;. தெறுபோர் - அழிக்கும் போர். 53. அம்கை -அழகிய கை; விதிர்க்கும் -சுழற்றும், வீசும். (உ-டை.) இளமையான, குடம்போன்ற மார்புகளையும், சிவந்த வாயையும், கொடிபோலும் இடையையும் உடைய மகளிர் விரும்பித் தழுவிய அழகிய அணிகலங்களை அணிந்து அகன்ற மார்பும், பசும்பொன்னால் அமைந்த பூணூலும், உருத்தி ராக்க மணிமாலையும், பூவேலைப்பாடமைந்த பட்டுடையும் அரைஞாணும் அரைக்கச்சையும் அணிந்த அழகிய அரையும், இனிய ஒலியெழுப்பும் வீரக்கழலும் பொலிவுடைய மணிகள் கோத்த பொற் கிண்கிணியும் சிலம்பும் அணிந்த திருவடிகளும், ஒளிமிக்க இளஞாயிறு நூறாயிரங் கோடி ஒன்றாகி ஒளிசெய்தாற் போன்ற வளமான தெய்வப் பொலிவுடைய திருவடிவமும் (உடையாய்) (54-57) - முதிராத 54. கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற் 55. புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 56. நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும் பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி 57. இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தருதெய் வீக வடிவும் (கு-ரை) 54. கும்பம் - குடம்; வேட்டு - விரும்பி; 55. புரி நூல் - பூணூல்; கண்டிகை - உருத்திராக்கம்; திருஅரை -அழகிய இடுப்பு. 56. நாதம் - ஒலி; கழல் - காலில் கட்டப்படும் வீரக்கழல்; நகுமணி - ஒளிவீசும் மாணிக்கம்; பரிபுரம் - சிலம்பு. பருதி - கதிரோன். (உ-டை.) நின் திருவடியை உள்ளத்தில் கண்டு விருப் புடையவராகிய அன்பர்க்கு, அரிய உயிராக அவர்தம் அன்பான உள்ளத் தாமரைமேல் அமர்ந்திருக்கும் தெய்வ விளக்கொளி யாகத் திகழ்பவனே, புகழ்ந்து கொல்லப்பட்ட அகாரம், உகாரம், மகாரம், நாதம், விந்து என்னும் ஐந்தும் கூடிய ஓங்காரத்தின் உள்ளொளிக்கும் உள்ளொளியாய் அமைந்த வனே, படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்னும் ஐந்தொழிலும் நீங்காத நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐந்து பேருருவமாக நின்றவனே, தாங்குதற்கு அரிய ஆற்றல் அமைந்த மந்திரமே குருதியாகவும், சிறந்த சொற்களே திருமுடியாகவும், சொல்லுக்குத் தொடர்புடைய எழுத்துக்களே தோலாகவும், பாசத்தால் ஒப்புடைய உலகத்தின் உருவமே உரோமமாகவும், தத்துவங்களே இரதம், செந்நீர், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழு தாதுக்களாகவும் கலைகளே உறுப்புக்களாகவும் கூறப்பட்ட ஆறு அத்துவாவின் நிலையே வடிவமாகவும் நின்றவனே, (58-62) - உளந்தனிற்கண்(டு) 58. ஆதரிப்போர்க் காருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந்(து) 59. ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 60. மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 61. ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த 62. கலையே அவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் (கு-ரை). 58. ஆதரிப்போர் - அன்பராவோர்; அகத்தாமரை - உள்ளத்தாமரை. 60. சோரி - இரத்தம்; வான்பதம் - சிறந்த சொல்; தொந்தம் - தொடர்பு; வன்னம் - எழுத்து; தொக்கு - தோல்; பந்தனை - அமைப்பு, கட்டு. 61. புவனம் - உலகம்; சத்ததாது - எழுவகைத் தாதுக்கள்; 62. அத்துவா - வழி; வடிவமா - வடிவமாக; ஆ - ஆக என்பதன் தொகுத்தல். (உ-டை) பலகோடி அண்டங்களும் தன் வடிவங்களாகவும், அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் உறுப்புக் களாகவும், இச்சை அறிவு செயல் என்னும் மூன்று சக்திகளும் உட்கருவி (அந்தக்காரணங்)களாகவும் அமைந்து, அடிமை கொண்ட உயிரின் அறிவுக்கு இறையறிவு அளிக்குமாறு ஐந்து தொழில்களை ஏவி, ஒப்பற்ற வகையில் நடத்தி வைக்கும் எங்கள் தலைவனே, தான் பொருந்தியதால் வருகின்ற நிலம் நீர் தீ வளி வான் ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எட்டுத் திருமேனிகளுடன் வாழ்பவனே, மெய்யறிவைத் தருகின்ற இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்னும் எண் வகை யோகங்களால் பெறவல்ல தவவடிவே, (63-65) - பலகோடி 63. அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசத்திமூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 64. ஆவிப் புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 65. வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே. (கு-ரை) 63. அண்டம் - உலகம்; அங்கம் - உறுப்பு; சரம் -அசையும் பொருள்; அசரம் - அசையாப் பொருள். உட்கரணம் - உட்கருவி; தொண்டு - அடிமை. 64. ஆவிப்புலன் - உயிர் அறிவு; கோ - தலைவன்; மேவ - பொருந்த. 65. அட்டமூர்த்தம் - எட்டு வடிவம்; அட்டயோகம் - எட்டுவகைத் தவநிலை. (உ-டை) பக்குவநிலை வரும்போது நீங்காத பேரன் புடையோரின் உள்ளத்துள் புகுந்து விளங்குதலாகிய இன்ப மலையும், நலமும் அழகும் வாய்ந்த பேரின்ப வெள்ளப் பெருக்குடைய ஆறும், மேலிடமாகிய பரவெளியை ஆராய்தலால் இன்பம் தருவதாகிய அழகிய நாடும், உலகிய இன்பம் எல்லாவற்றையும் கடந்த பேரின்பப் பெருநிலத்துள் பிறப்பு இறப்பு இல்லாது உயர்ந்ததாகிய அழகிய நகரும், பழைமையான உலகில் முடிவும் முதலும் இன்றி எங்கும் நிறைந்த ஐந்தெழுத்து மந்திரம் கூறி நடாத்தும் குதிரையும், மிக்க மதத்தில் (சமயத்தில்) தோய்ந்து மகிழ்ந்தோர் துதிக்கையால் (வணங்குதலால்) ஆணவம், கன்மம், மாயை, மறைப்பு, மாயா உலகம் என்னும் ஐந்து மலங்களையும் அழித்த சிவஞானம் என்னும் யானையும், நிறைவினுள் நிறைவாகிய சிறந்த அறிவு என்னும் புது மலரை அன்பு என்னும் நார்கொண்டு அடியார்கள் உள்ளத்தில் கட்டப்பெறும் நறுமண மாலையும், ஐந்தொழில்களும் நிகழ்தற்குக் காரணத்தை நீங்காமல் அளித்து உயர்த்தப் பெற்ற பெருமைமிக்க கொடியும், புதுமையான நாதத்தை (ஒலியை) எழுப்பும் (நாததத்துவம் என்னும்) அழகிய முரசும், எக்காலமும் நீங்காமல் கண்ணாடியில் ஒரு பொருளைக் காட்டி அதன் நிழலை அசையச் செய்பவன்போல உலகத்தை எல்லாம் படைத்து இயங்கச் செய்வதாகிய திருவருள் ஆணையும் - என்னும் பத்தினையும் இனிமையால் பெருகும் நூல் வல்ல புலவர்கள் தனித்தனியே புகழ்ந்து கூறித் தசாங்கங்களை உடையவன் என்று புகழப்பெற்ற பேரரசே; (66-74) - பருவத்(து) 66. அகலாத பேரன் படைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 67. பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் தேரின்பம் நல்கும் திருநாடும் - பாரின்பம் 68. எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லா துயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 69. ஈறும் முதலுமகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 70. தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ 71. பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 72. ஐந்தொழிலும் ஓவா தளித்துயர்ந்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் 73. நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போற்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 74. வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசரங்கமெனப் பெற்றோனே (கு-ரை) 66. பொருப்பு - மலை; சுகலளிதம் - இனிய அழகு; 67. மீதானம் - மேலிடம்; நல்கும் - கொடுக்கும்; பார் இன்பம் - உலகியல் இன்பம். 68. இருநிலம் - பெருநிலம்; தொல் - பழமை 69. குரகதம் - குதிரை. 70. பஞ்சமலம் - ஐவகை மலங்கள்; கடாக் களிறு - மதயானை; 71. பூரணம் - நிறைவு; போதம் - அறிவு; நார் - அன்பு, தொடுக்கும் நார்; தொடை - மாலை. 72. வான்கொடி - உயர்ந்த கொடி; நவநாதம் - புதுமையான நாத தத்துவம்; சந்ததம் - என்றும்; 73. ஆடி - கண்ணாடி; புவனம் -உலகம்; ஆணை - திருவருட் சக்தி; தே - இனிமை; 74. பனுவல் - நூல்; விபுதர் - புலவர்; தசாங்கம் - அரசர்க்குரிய பத்து உறுப்புக்கள்; தேசு - ஒளி. (உ-டை) ஒளி விளங்கும் திருக்கயிலை மலையில், மலர் புனைந்த கூந்தலையுடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு உறையும் முக்கண் பேரொளிப் பிழம்பாகிய சிவ பெருமான் முன்னொரு காலத்தில் கொடிய அசுரர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கினான். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் தன் ஐந்து திருமுகங்களுடன் அதோ முகம் என்னும் ஒரு திருமுகமும் கொண்டான்; சிவந்த நெருப்புப் போன்ற அவ் ஆறு திருமுகங்களில் இருந்தும் ஒரு முகமாக ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன; அப் பொறிகள் விரிந்த உலகம் முழுவதும் பரவின; ஆதலால் தேவர்கள் அஞ்சினர்; கனன்றெழும் அத் தீப்பொறிகளை அழகிய தன் திருக்கையில் எடுத்தான் சிவ பெருமான். காற்றுக் கடவுளை நோக்கி நீ இவற்றை எடுத்துச் செல்க என ஏவினான். காற்றுக் கடவுள் அந் நெருப்புப் பொறிகளை மெதுவாக எடுத்துக் கொண்டு போனான்; தனக்கு அடுத்தவனான தீக் கடவுளிடம், இவற்றைக் கொண்டு போ என ஏவினான். அத் தீக் கடவுள், குளிர்ந்த கங்கைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான். அக் கங்கை ஒரு சிறுபொழுதும் அப்பொறிகளைத் தாங்க இயலாமல் சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அப்பொழுது அந் நெருப்புப் பொறிகள் ஆறும், ஆறு திருவுருவங்கள் ஆயின. (75-81) - தேசுதிகழ் 75. பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையு முக்கட் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 76. வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோ டதோமுகமும் - தந்து 77. திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் - ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப - விரிபுவனம் 78. எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும் பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் 79. எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதி யென்றெம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 80. பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்(று) 81. அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய் (கு-ரை) 75. பூங்கோதை - உமையம்மை; கோதை - கூந்தல்; பாங்கு - பக்கம்; 76. வெம் தகுவர் - கொடிய அசுரர்; முறை - முறையீடு; அதோமுகம் - கீழ்நோக்கிய முகம். 77. ஆறு - வழி; உய்ப்ப - செலுத்த; 78. அங்கண் - அங்கு, அவ்விடத்து. 79. ஏகுதி - செல்க; எம்மான் - எம் தலைவன், சிவபெருமான்; கொடுபோய் - கொண்டு போய்; 80. அடுத்ததொரு பூதம் - காற்றை அடுத்த பூதமாகிய தீ; விண், வளி, தீ, நீர், நிலம் என்பன ஐம்பூத வரிசை முறை. போதி -போவாயாக; சீதப்பகீரதி - குளிர்ந்த கங்கை; போது - பொழுது; சற்று - சிறிது; 81. சரவணம் - நாணற்புல் வளர்ந்த குளம்; சென்னி - தலை, உச்சி ; (உ-டை) முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவரிடமும் ஆறுகுழந்தைகளும் பாலுண்டு அழுதும் விளையாடியும் இருந்தனர். அப்பொழுது மணப்பொருந்திய கங்கையைத் திருமுடியில் கொண்ட பெரியோனாம் சிவபெருமான், புன்முறுவல் பூக்கும் உமையம்மையோடும் ஆங்குச் சென்றான். அவளுக்கு, விருப்பமிக்க அவ் ஆறு திருவுருவங்களையும் காட்டினான்; உமையம்மை கண்டு அவ்வாறு திருவுருவங் களையும் தன் இரண்டு கைகளாலும் எடுத்து அணைத்தாள்; கந்தன் எனப் பெயரிட்டாள்; ஆறு திருவுருவங்களும் ஒன்றாகப் பொருந்தச் செய்தாள்; தன் சிவந்த முகத்தில் அணைத்து உச்சி மோந்தாள்; உள்ளார்ந்த அன்பினோடும் பாலூட்டினாள்; உலகத்தைத்திருவடியால் அளந்த திருமாலாகிய வெண்ணிறக் காளையின்மேல் அமரும் இறைவன் திருக்கையில் அளித்தாள். இவ்வாறு இறைவன் உள்ளம் உவப்புற இருந்த பெரியோனே, (82-86) - முன்னர் 82. அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் -குறுமுறுவற் 83. கன்னியொடும் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண் டவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு 84. கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய 85. முகத்தில் அணைத்துச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத் தளித்துச் - சகத்தளந்த 86. வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே (கு-ரை). 82. அறுமீன் - ஆறுகார்த்திகைப் பெண்களாகிய விண் மீன்கள்; நறுநீர் - கங்கை; குறுமுறுவல் - புன்முறுவல். 83. கன்னி - உமையம்மை. 84. கந்தன் - சேர்க்கப்பட்டவன்; மெய் - உடல்; மேவுவித்து - பொருந்தச் செய்து; செய்ய - சிவந்த; 85. அகத்துள் - உள்ளத்துள்; மகிழ்பூத்து - மகிழ்ச்சிபெருகி; சகம் - உலகம்; 86. விடை - காளை; விமலன் - சிவபெருமான்; கிள்ளை - கிளி. (உ-டை) கிளிபோல் பேசும் உமையம்மையின் திருவடிச் சிலம்பின் மணிகள் ஒன்பதில் தோன்றிய ஒன்பான் சக்திகள் மாணிக்கவல்லி, மௌத்திகவல்லி, புட்பராகவல்லி, கோமேதக வல்லி, வைடூரியவல்லி, வைரவல்லி, மரகதவல்லி, பவளவல்லி, இந்திரநீலவல்லி என்பார். அவர்தம் கருப்பத்துன்பம் தீர்ந்து விருப்பாய்த் தந்த ஒன்பான் வீரர் வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தார், வீரராட்சகர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்போர். இவருள் மூத்தவராகிய மணம் பரவும் மாலையணிந்த வீரவாகுதேவர் நாரதரின் வேள்வித்தீயில் தோன்றி அழகிய இடமகன்ற உலகத்தை எல்லாம் அழித்துத் திரிந்த சிவந்த கண்ணையுடைய ஆட்டுக் கிடாயைப் பற்றி வந்தார். எம் கோமானே இதனைச் செலுத்தியருள்க என்று வேண்டினார். அவ்வாறே அக் கிடாயின் மீதேறி அமர்ந்து எண் திசைகளிலும் நடத்தி விளையாடிய நாதனே. (87-90) - கிள்ளைமொழி 87. மங்கை சிலம்பின் மணியொன் பதில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 88. விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்(து) 89. அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந் - தெங்கோன் 90. விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந்தெண் திக்கும் நடத்தி விளையாடும் நாதா (கு-ரை) 87. துங்க மடவார் - சிறந்த மகளிர் (நவசக்திகள்); 88. நவவீரர் - ஒன்பது வீரர்; முன்னோன் - முதல்வன்; மருப் பாயும் - மணம் பரவும். தார் - மாலை, 89. அம் கண் புவனம் - அழகிய இடமகன்ற உலகம்; செம் கண் கிடாய் - சிவந்த கண்ணையுடைய ஆட்டுக் கிடாய்; கொணர்ந்து - கொண்டு வந்து, 90. விடுக்குதி - செலுத்துவாயாக; இவர்ந்து - ஏறி; எண் திக்கும், எட்டுத் திசையும்; நாதன் - தலைவன். படைப்போன் - நான்முகன். (உ-டை). படைத்தல் தொழில்புரியும் நான்முகன் தான் படைப்புத் தொழில்புரிவதால் செருக்கிக் கொண்டு உரைக்க அவனிடம் திருமறையின் முதல் எழுத்தாகிய விரும்பத்தக்க பிரணவ எழுத்தின் உண்மையை வினாவ, அவன் விடை சொல்லாமையால் பிரணவப்பொருள் அறியாமல் நீ படைப்புத் தொழில் செய்வது எவ்வாறு? என்று முன்னாளில் அவன் தலையில் குட்டிச் சிறையிலிட்ட தலைவனே, தேன் ஒழுகும் பொன்போன்ற கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் குருவாகப் போற்றி வேண்டிக் கொள்ளுதலால் அவனுக்கு முதற்கண் பிரணவ மந்திரப் பொருளை மொழிந்தவனே, (91-93) - படைப்போன் 91. அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 92. சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 93. பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரம மொழிந்தோனே - (கு-ரை) 91. அகந்தை - செருக்கு; ஆதி எழுத்து - முதல் எழுத்து, உகந்த - விரும்பிய; புகன்றிலையால் - கூறவில்லை ஆதலால், 92. சிட்டி - சிருட்டி (படைப்பு); எங்ஙன் - எவ்வாறு; முனம் - முன்னம்; கோமான் - தலைவன்; மட்டு அவிழும் - தேன் ஒழுகும். 93. பொன் அம் கடுக்கை - பொன் போன்ற நிறமுடைய அழகிய கொன்றை; புரி சடை - கற்றைச் சடை; பிரமம் - பிரணவமந்திரம்; கொன் - அச்சம். (உ-டை) அஞ்சத்தக்க நெடிய வேலையுடைய தாரகாசுரன் இறக்கவும் பெரிய கிரௌஞ்சமலை பொடியாகவும் வீரமிக்க கூர்மையான வேற்படையை விடுத்தவனே, அலைகள் தெள்ளிக் கொழிக்கும் அழகிய திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் போய் அருள்வெள்ளம் பெருகியது போல் இருக்கையில் அமர்ந்திருந்து, வெள்ளை யானையை யுடைய இந்திரனுக்கு, அஞ்சாதே என்று அடைக்கலம் தந்து, கடலின் இடையே இருந்த சூரபன்மனுக்கரிய வீரமகேந்திர புரத்துள் புகுந்து, தேவர்கள் வாழுமாறு தேவர்களை வெற்றி கொண்டவனாம் சூரபன்மன் உள்ளக்கருத்தை ஆய்ந்து வருக என்று வலிய தோளையுடைய வீரவாகுவைத் தூதாக விடுத்தவனே, அச் சூரபன்மன், தேவர்களைச் சிறையில் இருந்து விடுவித்துத் தன்னை வணங்காமையால், கொடுமையான அவ்வசுரனுடைய யானை குதிரை தேர் காலாள் என்னும் நாற்படைகளையும் அழித்தும், பானுகோபன் அக்கினிமுகன் இரணியன் வச்சிரபாகு என்னும் மக்களையும், அவன் தம்பியாகிய சிங்க முகனையும் வென்றும் வெற்றி மாலை புனைந்தவனே, நிலவுலகைச் சூழ்ந்த கடலுள் புதியதொரு மாமரமாய் நின்ற நெடிய சூரபன்மன் உடலைக்கிழித்த ஒளிமிக்க வேற்படையாளியே, சூழ்ச்சிப்போர் வல்ல அச்சூரன் உடல் இரண்டாகப் பிளந்து வலிய மயிலும் சேவலுமாக மாறிச் செருக்குக் கொண்டு ஆரவாரித்து எழுந்து விளங்கவும் அவற்றுள் சீறவல்ல பாம்பைப் போரிட்டு வெல்லும் அழகு மயிலை ஊர்தியாகக் கொண்டு மேலே ஏறிச் செலுத்தும் இளையபெருமானே, மாற்றுருக் கொண்டுவந்த பகையாகிய சேவல், வலிமைய மைந்த கொடியாக அமைய ஒப்பற்ற வகையில் உயர்த்திப் பிடித்த உயர்ந்தோனே, மும்மூர்த்திகளின் இடர்களையும் தீர்த்துத் தேவர்களைச் சிறையில் இருந்து விடுவித்து விண்ணில் குடியேற்றி அவர்களை ஆட்கொண்டருளிய தேவனே, (94-104) - கொன்னெடுவேல் 94. தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீர வடிவேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 95. தெள்ளு திரைகொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ள மெனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 96. கயேந்திரனுக் கஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச்-சயேந்திரனாம் 97. சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 98. வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு 99. பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 100. வாரிதனிற் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர்வேலோய் - போரவுணன் 101. அங்கமிரு கூறாய் அடல்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடனார்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 102. சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு 103. சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர் 104. குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே (கு-ரை) 94. தாரகன் - ஓரசுரன்; மாய-இறக்க; தடம்-பெரிய; சீர் அலைவாய் - சிறந்த அலை மோதும் இடம். 95. தெள்ளுதிரை - மேலெழுந்த அலை; கொழிக்கும் - கரையில் மோதும்; தெள்ளு தலும் கொழித்தலும் புடைத்தல் தொழில்கள். இங்கு அலைக்கு வந்தது; தவிசு - இருக்கை; 96. கயேந்திரன் - யானை (கயம்+ இந்திரன் யானையரசு; அஞ்சல்- அஞ்சாதே; மயேந்திரம் ஊர்ப்பெயர்; புக்கு - புகுந்தது; சயேந்திரன் - வெற்றி கொண்டவன்; சூரன் - சூரபன்மன்; 97. சோதித்து - தூது விடுத்து ஆராய்ந்து; தடந் தோள் - அகன்ற தோள்; விசயவீரன் - வீரவாகு; காரவுணன் - உடலும் உள்ளமுங் கறுத்த அசுரன்; 98. விட்டு - சிறையில் இருந்து விடுவித்து; தானவர் - அசுரர், சங்கரித்து - அழித்து, 99. பானு பகைவன் - பானுகோபன்; பாலர் - மக்கள், வாகை - வெற்றி; சகம் உடுத்த - உலகைச் சூழ்ந்த, 100. வாரி - கடல்; மா - மாமரம்; சூர் உடலம் - சூரபன்மன் உடல்; கீண்ட - கிழித்த; அவுணன் - அசுரன். 101. அங்கம் - உடல்; அடல் - வலிமை துங்கம் - சிறப்பு. 192. அரவு - பாம்பு; சித்ரமயில் - அழகிய மயில். 103. திறல் - வலிமை; பதாகை - கொடி; மேவ - அமைய, மூவர் - முக்கடவுளர்; 104. குறை - மனக்குறை; விண்ணம் - விண்ணகம் (தொகுத்தல்) (உ-டை) வேதத்தின் முடிந்த முடிவைத் தெரிவிக்கும் சைவக்கொழுந்தே, தவத்தின் கடலே, தேவர்கோன் தந்த திருமகளாம் தெய்வயானையைத் திருமணம் கொண்ட பெருமானே, பொய்யொடு தொடரும் காமம் முதலிய குற்றங்களை வெறுத்த கலைவல்ல சிவமுனிவன் திருவருள் பார்வைமால் அழகிய பெண் மான் வயிற்றில் தோன்றி, பூமணம் பொருந்திய கானக்குறவர்கள் மகிழுமாறு அழகிய குயில்போல் இசைத்துத் தினைப்புனம் காத்து இன்பமாக இருந்து, மேனிலை பெறுமாறு, தெள்ளிப் பாகமாகச் செய்து தினைமாவும் தேனும் அன்போடு அளித்த வள்ளியம்மையை மணங்கொண்டவனே, மனமகிழ்ந்து திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவிநன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு திருப்பதிகளையும் (படை வீடுகளையும்) கண்டு நினக்குரிய சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை அன்புடன் கூறும் அடியார்கள் உள்ளம் கோயில் கொண்டவனே,. மலர் மணம் பரப்பும் கமுகஞ்சோலை மேலே எழும்பிய கருமுகிலைத் தொட்டு அசைக்கும் திருச்சீரலைவாய்க் கரையமைந்த திருச்செந்தில் மாநகர் காக்கும் செவ்வேள் பெருமானே, (105-110). - மறை முடிவாம் 105. சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றைமணம் செய்தோனே - பொய்விரவு 106. காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு 107. கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத் தினிதிருந்து - மேன்மைபெறத் 108. தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளமுவந்து 109. ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தைகுடி கொண்டானே - நாறுமலர்க் 110. கந்திப் பொதும்பரெழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வனே (கு-ரை) 105. வான் - வானம் (தேவர்கோன்). தெய்வக்களிறு - தேவயானை; விரவு - கலந்த. 106. முனிந்த - வெறுத்த; கலை முனிவன் - கலைத் தேர்ச்சியுடைய சிவமுனிவன்; வாம மடமான் அழகிய பெண் மான்; பூ மருவு - பூக்கள் நிரம்பிய. 107. பூங்குயில் - அழகிய குயில்; ஏனற்புனம் - தினைக்கொல்லை; 108. பரிந்து- விரும்பி; 109 ஆறு திருப்பதி - அறுபடை வீடுகள்; ஆறெழுத்து - சரவணபவ; 110. கந்தி - கமுகு; பொதும்பர் - சோலை; கார் - மேகம்; செந்திப்பதி - செந்தில் மாநகர்; புரக்கும் - காக்கும். சந்ததமும் என்றும் (உ-டை.) என்றும் பலவாகப் பெருகும் பிறவிப்பகையும், குறைகாலச் சாக்காடும், பலவாகிய இடையூறுகளும், பலவாகிய நோய்களும் பலவாகிய பாவங்களும், தீயசெய்வினைச் செயல் களும், பாம்பும், பேயும், வலியபூதமும், தீயும், நீரும், தாக்கும் படைக் கருவிகளும், தீமை நீங்காத கொடிய நஞ்சும், கொடிய விலங்கு முதலாகியவையும் எந்த இடத்தில் எவ்வகையில் வந்து எவ்வாறு எம்மை எதிரிட்டாலும் அவ்விடத்தில் அப்பொழுதில் நின் நீலமயில் ஊர்தியும், திண்ணிய பன்னிரு தோள்களும், அச்சத்தை ஒழிக்கும் கூர்மையான வேலும், கச்சையணிந்த அழகிய இடுப்பும், சிறிய திருவடிகளும், சிவந்த திருக்கைகளும், அருள்மழை பொழியும் பன்னிரு திருவிழிகளும், பெருமைமிக்க திருமுகங்கள் ஆறும், பேரொளி பொழியுமாறு அணியப்பெற்ற திருமுடிகள் ஆறும், எப்பக்கங்களிலும் முன்வந்து தோன்றி ஏற்பட்ட துன்பங்கள் எல்லாவற்றையும் பொடியாக்கி வேண்டும் வரங்கள் எல்லாவற்றையும் தந்து, உள்ளத்தே புகுந்து, பெருமிதத் தோடு இருந்து, பலவகைப்பட்ட ஆசு, மதுரம், சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைப் பாக்களும் பாடும் திறமையும், எண் வகை நினைவுக்கலைத்திறமும், சிறப்பாகப் பேசப்படும் பெருமை வாய்ந்த பலவகைக் காப்பிய நூல்களும் ஒலி இலக்கணமும், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்து இலக்கணமும் பொருந்தி முதிர்ந்த தமிழ்ப்புலமை அருளி, நல்லொழுக்கம் தந்து, இப் பிறப்பில் வரும் அகப்பற்று புறப்பற்று என்னும் இருவகைத் துன்பங்களை நீக்கி, ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் ஒழித்து, தம் நலத்தை விடுத்து ஆராயும் பழைமையான திருவடியால் கூட்டத்துள் கூட்டி என்றும் ஒன்றியிருக்கும் பேரின்பப் பெரும்போகம் நுகரச் செய்து நின் சிவந்த மணமுடைய செந்தாமரை போன்ற திருவடிகளைக் காட்டி ஆட்கொண்டு அடியேனுக்கு முன்னின்று அருள் செய்வாயாக. (111-122) - சந்ததமும் 111. பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 112. பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடற் பூதமும்தீ நீரும் பொருபடையும் - தீதகலா 113. வெவ்விடமும் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம்வந் தெம்மை எதிர்ந்தாலும் -அவ்விடத்திற் 114. பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் 115. திருவரையும் சீறடியும் செங்கையும் ஈரா(று) அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் 116. சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் 117. எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந் துல்லாச மாக உளத்திருந்து - பல்விதமாம் 118. ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப் பேசுமியல் பல்காப் பியத்தோகையும் - ஓசை 119. எழுத்துமுத லாமைந் திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) - ஒழுக்கமுடன் 120. இம்மைப் பிறப்பில் இருவா தனையகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்(து) 121. ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 122. கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்(டு) அடியேற்கு முன்னின் றருள். (கு-ரை) 111. சன்மப்பகை - பிறவியாகிய பகை; அவமிருந்து - இடைக்காலச் சாவு; விக்கினம் - இடையூறு; பிணி நோய். 112. அடல் - வலிய; பொருபடை - அழிக்கும்படை; தீது அகலா - தீமை நீங்காத. 113. வெவ்விடம் - கொடிய நச்சுயிர்கள்; 114. அயில்வேல் - கூர்மையான வேல்; 115. சீறடி - சிறிய அடி; மாமுகங்கள் - சிறந்த முகங்கள்; கிரணம் - ஒளி; 116. இடுக்கண் - துன்பம். 118. ஆசு - உடனே பாடுதல்; மதுரம் - இனிமையாகப் பாடுதல்; சித்திரம் - சித்திரத்தில் அடையுமாறு பாடுதல்; வித்தாரம் - விரிந்த காவியம் பாடுதல் அட்டாவதானம் - ஒரே பொழுதில் எட்டு வேலைகளைத் தடுமாற்றமில்லாமல் செய்தல். 119. பாலித்து - தந்தருளி; 120. இருவாதனை - பெருந்துன்பம்; அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகைத் துன்பமுமாம் மோசித்து - நீக்கி. தம்மை - தம் நலத்தை. 121. ஆயும் - ஆராயும்; தோயும் - பொருந்தும்; பரபோகம் - பேரின்ப நுகர்வு, துய்த்தல் - நுகர்தல்; சேய - சிவந்த. 122. கடி ஏற்கும் - மணம் கொண்ட; பூங்கமலம் - அழகிய தாமரை; கமலப்பூ என இயைப்பினும் ஆம்; அருள் - அருள் புரிவாயாக. கந்தர் கலிவெண்பா உரைநடையும் குறிப்பும் முற்றிற்று. திருவருணைக் கலம்பகம் திருவருணைக் கலம்பகம் காப்பு (எடுத்துக்கொண்ட நூல் இனிது முடியுமாறு இறைவனை வேண்டுதல்.) கைக்கோட்டு வாரணமே காப்பு நேரிசை வெண்பா அன்னவயல் சூழருணை அண்ணா மலையார்மேல் மன்னும் கலம்பகப்பா மாலைக்குத் - துன்னியசீர் மெய்க்கோட்டு மேருவெனும் வெள்ளேட்டின் மீதெழுதும் கைக்கோட்டு வாரணமே காப்பு. (பொழிப்புரை) அன்னங்கள் வாழும் வயல்களால் சூழப்பெற்ற திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் அண்ணா மலையாரின் மேல், யான் பாடும் நிலைபெற்ற இக் கலம்பகம் ஆகிய நூல் மாலைக்கு, நிறைந்த சிறப்புகள் வாய்ந்த என்றும் உள்ளதாம் முகடுகளைக் கொண்ட மேருமலை என்னும் வெற்று ஏட்டின்மேல் எழுதிய கையில் கொம்புடைய மூத்த பிள்ளையாரே காவலர். (விளக்கவுரை) கலம்பகப் பாமாலை, பல்வேறு மலர் களால் தொடுக்கப் பெற்ற மாலைபோலப், பல்வேறு உறுப்பு களால் தொடுக்கப் பெற்றது கலம்பகம் என்பதைச் சொன் முறையால் விளக்கினார். யானைமுகக் கடவுள் வியாசமுனிவர் கூறிய பாரதக் கதையைக், கயமுகாசுரனைக் கொல்வதற்காக ஒடித்துத் தம் கையில் வைத்திருந்த கொம்பை எழுத்தாணியாகவும் மேரு மலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பது துன்னியசீர்... வாரணம் என்பதில் அடங்கியுள்ள கதையாகும். இதனை, நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்ன நாள் ஏடாக மாமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணிதன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ என்பார் வில்லிபுத்தூரார். கோடு - கொம்பும், மலைமுகடும். வாரணம் - யானை; யானைமுகக் கடவுளாம் மூத்தபிள்ளையாரைக் குறித்தது. நால்வர் துணை கட்டளைக் கலித்துறை சைவத்தின் மேற்சம யம்வே றிலை, அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல்தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய் மைவைத்த சீர்திருத் தேவார முந்திரு வாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாளெம் உயிர்த்துணையே. (பொ-ரை) சைவ சமயத்தினும் மேம்பட்ட சமயம் பிறிதொன்று இல்லை; அச் சைவசமயம் சார்ந்த சிவம் ஆகிய தெய்வத்தினும் மேம்பட்ட தெய்வம் வேறொன்று இல்லை என்று கூறும் நான்மறைகளின் செவ்விய பொருளைத் தம் மெய்ப்பொருளாகக் கொண்ட சிறந்த தெய்வத்தன்மை வாய்ந்த தேவாரத்தையும் திருவாசகத்தையும் உயிர்கள் கடைத்தேறும் வண்ணம் அருளிய சமயப் பெரியார் நால்வருடைய அழகிய திருவடிகள் எம் உயிர்க்கு உற்ற துணையாகும். (வி-ரை) தேவார திருவாசகங்கள் நான்மறைப் பொருளைத் தம்மகத்துக் கொண்டவை என்பதை நான்மறைச் ... திருவாசகமும் என்றார். நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்; முன்னவர் மூவரும் பாடியவை தேவாரத் திருப்பாடல்கள்; மாணிக்கவாசகர் அருளியது திருவாசகம். சைவ எல்லப்பா நாவலர் என்னும் ஆசிரியர் திருப்பெயரில் அமைந்துள்ள சைவ என்னும் அடைச்சிறப்பிற்குச் சான்றாக அமைந்தது இப்பாடல். ஆசிரியர் அடியார்க்கு அடிமை பூண்ட திறமும் இதனால் விளங்கும். நூல் 1. இடர்க்கடல் புகுதாது எடுத்தருள் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் மாதவனும் அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே ஏனத்தின் வடிவாகி எகினத்தின் வடிவாகி அடிதேடி அறிவலென அவனியெலாம் முழுதிடந்தும் முடிதேடி வருவலென மூதண்ட மிசைப்பறந்தும் காணரிய ஒருபெருளாய்க் களங்கமற விளங்குபெருஞ் சோணகிரி எனநிறைந்த சுடரோளியாய் நின்றருள்வோய்! இஃது எட்டடித் தரவு. மலைமிசையில் இருப்பதற்கோ மலைசிலையா எடுப்பதற்கோ மலையரையன் மகிழ்வதற்கோ மலையுருவம் எடுத்தனையே. இத்தலத்தில் ஐந்தொழிலும் இருபிறப்போர் அறுதொழிலும் தத்துவமும் திருமேனி தரித்திலையேல் இயலாவே. இருக்காதி சதுர்வேதம் இசைப்பதுநின் பலபேதம் ஒருக்காலும் ஒன்றுரைத்த தொன்றுரைக்க அறியாதே. கருமுடிவைத் தருகால கற்பமெலாம் கடக்கவுநின் திருமுடியிற் பிறைசிறிதும் தேயாது வளராதே. தானவரைக் கடிந்துமலர்ச் சதுமுகனை ஒழித்துமற்றை வானவரை அழித்துநின்கை மழுப்படைவாய் மழுங்காதே. அண்டருக்கும் முனிவருக்கும் அழலான கொடுவிடத்தைக் கண்டமட்டு நுகர்ந்திடவும் கண்டமட்டிற் கடவாதே. மூவாமை தனக்குநின்றன் முதல்நடுஈ றிலாதமைக்கும் சாவாமை பிறவாமை தமக்குமிவை சான்றன்றே. இவை ஏழும் ஈரடித் தாழிசை. தடவரை நடைகெழு தரமென வருமொரு கடகரி உரிவிரி கலையென மருவினை; படமுடை அரவொடு பகைபடு முடுபதி தடையற வுடனுறை சடைநெடு முடியினை. இவை இரண்டும், நாற்சீர் ஓரடி இரண்டு கொண்ட அராகம். சிலையென மலையை வளைத்தனை; திரிபுரம் எரிய நகைத்தனை; கலைமறை இவுளி படைத்தனை கதிரவன் எயிறு புடைத்தனை; இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போ தரங்கம். விதிசி ரத்தினை; அகழ்க ரத்தினை; விடைந டத்தினை; பொதுந டத்தினை; நதித ரித்தனை; மதிப ரித்தனை; நாள்க ளாயினை; கோள்க ளாயினை. இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போ தரங்கம். பண்ணுநீ சுவையுநீ பரிதியுநீ பனிக்கதிர்நீ பெண்ணுநீ ஆணுநீ பேதமுநீ அபேதமுநீ. செங்காலிற் கருங்காலன் சிரமுருள வுதைத்தனையே சங்காழி முகுந்தனுக்குச் சங்காழி கொடுத்தனையே. ஆராலும் அளவிடுதற் கரியவுனை ஒருகரத்து நீராலும் மலராலும் நெஞ்சுருகப் பணலாமே. இவை மூன்றும் பெயர்த்தும் ஈரடித்தாழிசை. என வாங்கு, இது தனிச் சொல். வேற்று மருந்தால் விடாதவெம் பிறவியை மாற்று மருந்தா மலைமேல் மருந்தா அழகிய நாயகி அருளுடை நாயகி புழுகணி நாயகி பொருந்திய புனிதா காசியில் இறந்தும் கமலையில் பிறந்தும் தேசமர் தில்லையுள் திருநடம் கண்டும் அரிதினிற் பெறும்பே றனைத்தையும் ஒருகாற் கருதினர்க் கவிக்கும் கருணையை விரும்பி அடைக்கலம் புகுந்தனன் அடியேன் இடர்க்கடல் புகுதா தெடுத்தருள் எனவே. இது பத்தடி நேரிசை ஆசிரியச் சுரிதகம். மணிகொண்ட.... நின்றருள்வோய் (பொ-ரை) மணிகளைத் தன்னிடத்தே கொண்ட நீண்ட கடலில் அறிதுயில் கொள்ளும் திருமாலும், அழகமைந்த தாமரை மலரில் இருந்து நீங்காத நான்முகனும், அறிவாகிய கண்ணைக் கொண்டு அறியும் முறையை அறியாமல், முறையே பன்றியின் வடிவாகியும், அன்னத்தின் வடிவாகியும், திருவடியைத் தேடிக் காண்பேன் என்று உலகம் எல்லாம் கொம்புகளால் தோண்டிச் சென்றும், திருமுடியைத் தேடிக் காண்பேன் என்று பெருவானின் மேற் பறந்து சென்றும் காண்டற்கரிய ஒப்பற்ற பொருளாகத் தூய்மையாய் விளங்கும் பெரிய சோணகிரி என்னும் வடிவாய் நிறைந்த பேரொளியாக நின்று அருள் செய்பவனே! (யான் சொல்வதைக் கேட்டருள்வாயாக). (வி-ரை) மாதவன் ஏனத்தின் வடிவாகி இடந்தும், சதுமுகன் எகினத்தின் வடிவாகிப் பறந்தும் என இயைத்துக் கொள்க. இது நிரல் நிறை அணியாகும். ஏனம் - பன்றி; எகினம் - அன்னம். அண்ணாமலை - நெருங்குதற்கு அரிய மலை, என்னும் காரணத்தை விளக்கும் கதை இது. இக் கதை அருணாசல புராணம் திருமலைச் சருக்கத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. (பொ-ரை) மலைமிசையில் கயிலாய மலையின்மேல் இருப்பதற்கோ, மேருமலையை வில்லாக எடுப்பதற்கோ, மலையரசனாம் இமவான் மகிழ் வடைதற்கோ நீ மலை வடிவம் எடுத்தாய்? இத்தலத்தில் இவ்வுலகில் ஐந்தொழில்களும், அந்தணர்களின் ஆறு தொழில்களும் தத்துவங்களை உணர்தலும் நீ ஒளிவடிவு கொள்ளாவிடில் நடைபெறா. இருக்காதி இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் இயம்புவது உன்னுடைய பல்வேறு வடிவங்களே. ஆனாலும் அவற்றுள் ஒன்று உரைத்த வடிவை மற்றொன்று உரைக்க அறியாது. கருமுடிவை உலக முடிவைத் தருகின்ற ஊழிகள் எல்லாம் சென்றாலும் உன்னுடைய திருமுடியில் உள்ள பிறை சிறிதும் தேயாது; வளரவும் செய்யாது! தானவரை அசுரரை அழித்தும், தாமரை மலரில் உறையும் நான்முகன் தலையைக் கிள்ளியும், மற்றைய தேவர்களைக் கொன்றும், உன் கையிலுள்ள மழுப்படையின் கூர்மழுங்காது. அண்டருக்கும் தேவருக்கும் முனிவருக்கும் அழிவு செய்யும் தீப்போன்ற கொடிய நஞ்சை நீ அளவின்றி உண்டும் அஃது உன் கழுத்தளவில் நின்றும் நீங்காது. மூவாமை உன்னுடைய மூப்பு இல்லாமைக்கும், முதல் நடு இறுதி இல்லாமைக்கும், இறவாமை பிறவாமை ஆகியவற்றுக்கும் மேலே கூறிய இவை சான்று ஆகும். (வி-ரை.) மேரு மலையை வில்லாக எடுத்தது முப்புரங்களை அழித்தற்கு; இமவான் மகிழ்தல், தன் மகளாம் பார்வதியை மணந்தவன் சிவபெருமான் ஆகலின், இறைவன் ஐந்தொழில்கள்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. அந்தணர் அறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்பர். மழு - எரி; இரும்புப்படை; மழுங்குதல் - கூர்; அற்றுப்போதல் கண்டமட்டில் என்பதற்குப் பார்த்த அளவில் என்றுமாம். தடவரை பெரிய மலையானது நடையிட்டு வருகின்ற தன்மைபோல வந்த வலிய மதயானையினது தோலை விரிந்த போர்வையைப் போலப் போர்த்தாய். படமுடை அகன்ற படத்தையுடைய பாம்புடன் அதற்குப் பகையாக அமைந்த பிறைநிலா பகையற்று ஒருங்கு வாழ்கின்ற நெடிய சடைமுடியினை யுடையாய். இறைவன் கரியுரி போர்த்தமை (வி-ரை) கயமுகாசூரன் விண்ணவரைத் துன்புறுத்துதலை அறிந்த சிவபெருமான், அவனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார் என்பது. உரி - தோல்; உரித்து எடுக்கப் பெற்றது என்னும் காரணப்பொருட்டு, உடுபதி - விண்மீன்களுக்குத் தலைவன்; என்றது திங்களை. சிலையென (பொ-ரை) வில் என்னுமாறு மேருமலையை வளைத்தாய். முப்புரங்களும் எரியுமாறு நகைத்தாய். கலைமலிந்த திருமறைகளைக் குதிரைகளாகக் கொண்டாய். கதிரோனின் பற்களை உடைத்தாய். (வி-ரை) முன்னே மூன்றும் முப் புரங்களை அழித்த காலத்தும், இறுதி ஒன்றும் தக்கன் வேள்விக் காலத்தும் நிகழ்ந்தனவாம். விதி சிரத்தினை (பொ-ரை) நான்முகன் தலையைக் கிள்ளிய கையினை யுடையாய்; காளை ஊர்தியைச் செலுத்தினாய்; மன்றங்களில் நடஞ் செய்தாய்; கங்கையாற்றைச் சடையில் வைத்தாய்; பிறை மதியையும் சடையில் வைத்தாய்; நாள்கள் ஆயினாய். கோள்களும் ஆயினாய். (வி-ரை) பொது - அம்பலங்கள் அவை பொன், வெள்ளி, தாமிரம், சித்திரம், மணி என்பன முறையே சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம், திருவாலங்காடு என்பற்றிலுள்ள மன்றங்கள். நாள்கள் - விண்மீன்கள்; கோள்கள் - ஞாயிறு முதலிய ஒன்பது கோளங்கள். பண்ணுநீ (பொ-ரை) இசையும் நீ; அறுசுவையும் நீ; ஞாயிறும் நீ; குளிர்ந்த கதிரையுடைய திங்களும் நீ; பெண்ணாய் விளங்கு வோனும் நீ; ஆணாகத் திகழ்வோனும் நீ; வேற்றுமைப் பொருளும் நீ; ஒற்றுமைப் பொருளும் நீ. செங்காலிற் சிவந்த நின் காலால், கரிய இயமனது தலை உருளுமாறு உதைத்தாய்; சங்குகள் நிரம்பிய கடலில் கண்வளரும் திருமாலுக்குப் படைக்கலமாகிய ஆழிப்படையைக் கொடுத்தாய். ஆராலும் எவராலும் அளவிட்டு உரைத்தற்கு அரிய உன்னை ஒருகையில் ஏந்திய நீராலும் மலராலும் நெஞ்சம் உருகுமாறு செய்து விடலாம். (வி-ரை) கருங்காலன் சிரம் உருள உதைத்தது; மார்க் கண்டேயனுக்காக, கருங்காலன்- வலிய காலனுமாம். செங்காலில் கருங்காலன் என்பதில் முரண்தொடையும், சங்காழி முகுந் தனுக்குச் சங்காழி என்பதில் மடக்கும் அமைந்துள. ஆராலும்... பணலாமே என்பதில் இறைவன் அருமையும், அடியார் அவனைக் காண்டற்கு எளிமையும் குறிக்கப் பெற்றது. என வாங்கு என்று சொல்லும் படி, வேற்று மருந்தால் (பொ-ரை) வேறு எம் மருந்தாலும் தீராத கொடிய பிறவி நோயைத் தீர்க்கும் மருந்தாக மலைமேல் மருந்தாய் உள்ளவனே, அழகிய தலைவியாகவும், திருவருளுடைய தலைவியாகவும், புனுகு பூசிய தலைவியாகவும் விளங்கும் அம்மையை இடப் பாகத்தில் கொண்ட தூயனே, காசியில் உயிர் துறந்தும், திருவாரூரில் பிறந்தும், புகழமைந்த திருத் தில்லையில் திருநடம் கண்டும் அரிதாகப் பெறும் பேறுகள் எல்லாவற்றையும் ஒருமுறை நினைத்தவர்க்கு உடனே அருள்கின்ற திருவருளை விரும்பி அடியேன் துன்பக் கடலில் மூழ்கிவிடாமல் எடுத்தருள்வாயாக என்று உன்னை அடைக்கலம் அடைந்தேன். (வி-ரை) ஒருகால் கருதினர்க்கு அளிக்கும் கருணைமிக்க அருணைச் சிறப்பை, துவக்கற அறிந்து பிறக்குமா ரூரும் துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும் உவப்புடன் நிலைத்து மரிக்குமோர் பதியும் ஒக்குமோ நினைக்குநின் னகரைப் பவக்கடல் கடந்து முத்தியங் கரையில் படர்பவர் திகைப்பற நோக்கித் தவக்கலம் நடத்த உயர்ந்தெழும் சோண சைலனே கைலைநா யகனே என்னும் சோணசைலமாலைச் செய்யுளானும் (2) அறிக. மருந்தா என்பவற்றுள் முன்னது மருந்தாக என்பதன் தொகுத்தல்; பின்னது விளி. மருந்தா! புனித! அடியேன் இடர்க்கடல் புகுதாது எடுத்தருள் என இயைக்க. தரவு என்பது பாடலின் முகவுரை போன்றது. அது பாடல் தரும் பொருளை முதற்கண் தந்து நிறுத்துவது என்னும் காரணப் பொருட்டது. தாழிசை என்பது தாழம் பட்ட ஓசையுடையது. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதல் தாழிசையின் பொதுத்தன்மை. இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகலின் முதற்கண் ஏழுதாழிசையும் பின்னே மூன்று தாழிசையும் ஆகத் தாழிசை பத்தாக வந்தது. அராகம் என்பது முடுகுநடையுடையது. ஒற்றிடைப்படாத நிரையசைகளாலே நடையிடுவது அராகத்தியல் பாகும். அம்போதரங்கம் என்பது கரைசாரச் சாரச் சுருங்கிவரும் நீர்த்திரை போன்ற அடிவரவுடையது. நாற்சீரடி, முச்சீரடி, இருசீரடி என அடியளவு சுருங்கி வந்தமை அறிக. சுரிதகம் என்பது முடிநிலை, கலிப்பாவின் சுரிதகம் ஆசிரியச் சுரிதகத்தாலேனும் வெண்சுரிதகத் தாலேனும் வரும். இஃது ஆசிரியச் சுரிதகம் ஆகும். (1) 2. எண்ணுங்கால் எல்லாம் இவர் நேரிசை வெண்பா வேதநுவல் சோணகிரி லித்தகர்க்கார் வேறாவார் சோதியிய மானனிவர் சோமனிவர் - ஆதவனும் மண்ணும்கா லும்புனலும் வானுமழல் தானுமிவர் எண்ணுங்கால் எல்லாம் இவர். (பொ-ரை) மறைநூல்களால் கூறப்படுகின்ற அண்ணா மலை வித்தகர்க்கு வேறாவார் யார்? எவரும் இவர்; ஒளிமிக்க ஆன்மாவும் இவர்; திங்களும் இவர்; ஞாயிறும், மண்ணும், காற்றும், நீரும், வானும், தீயும் ஆகிய இவைதாமும் இவரே; ஆதலால் ஆராய்ந்து பார்க்கும் பொழுது எல்லாமும் இவரேயாம். (வி-ரை) இறைவன் எண்வகை வடிவினை இதன்கண் உரைத்தார். எண்வகை வடிவு அட்டமூர்த்தம்; வித்தகம் - திறம். ஆர் வேறாவார் என்பதை வேறாவார் ஆர் என இயைக்க. இயமானன் - இயக்கமானவன்; அஃதாவது உயிர். அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற்றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய்ஞான மயனாகி நின்றானும் வந்து என்பார் காரைக்கால் அம்மையார் (அற்புதத் திருவந்தாதி. 21)(2) 3. இவர் அசைவின் அல்லாது அணுவும் அசையாது கட்டளைக் கலித்துறை எல்லா உயிர்க்கும் உயிர்அரு ணேசர்; இவரசைவின் அல்லா தணுவும் அசையாத தென்ப தறிந்தனமே; வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம் விளைத்தவந்நாள் புல்லா திருந்தன எல்லா உயிரும்தம் போகத்தையே (பொ-ரை) கரும்பு வில்லால் வெற்றிகொள்ளும் காமன் எரிந்து படாமல் உயிருடன் இருக்கவும், சிவபெருமான் தவம் செய்த அந்நாளில் உயிர்கள் எல்லாமும் தம் நுகர்ச்சிகளைப் பொருந்தாமல் இருந்தன; இதனால் எல்லா உயிர்களுக்கும் உயிராயவர் அருணேசர் என்பதையும், இவர் அசைவினால் அல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பதையும் தெளிவாக அறிந்தோம். (வி-ரை) இறைவன் சனகர் முதலிய முனிவர்களுக்குத் தவ நெறியை உணர்த்துதற்காகக் கல்லால மரத்தின் கீழ் ஒரு தனி யோகத்தின் அமர்ந்தார். அப்பொழுது உயிர்கள் எல்லாம் போகத்தைத் துறந்து யோகத்தை மேற்கொண்டன என்பதைக் கூறுதலால் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை விளக்கினார். வில் ஆடல் மாரன் வில்லால் வெல்லும் மன்மதன், அவன்வில் கரும்புவில் என்க. (3) 4. கோகனகத் தாள் நினைத்துக் குழைவீர் கலித்துறை போகம் விடுத்தே தாகம் எடுத்தே புவிமீதே யோகம் விளைத்தே ஆகம் இளைத்தே உழல்வீர்கள்! ஆகம வித்தார் மோகம வித்தார் அருணேசர் கோக னகத்தாள் ஆகம் நினைத்தே குழைவீரே. (பொ-ரை) இவ்வுலகிலேயே, உலகியல் இன்பங்களை எல்லாம் விட்டு, வீடுபேற்றை அடைதலில் பேரார்வம் கொண்டு தவம் செய்து உடல் மெலிந்து துன்புறுபவர்களே, சிவாகமப் பொருளின் வித்தாக இருப்பவரும், பற்று என்பது அறவே இல்லாதவரும் ஆகிய அண்ணாமலையாரின் தாமரை போன்ற திருவடிகளை மனத்தில் நினைத்து உருகுவீராக. (வி-ரை) உடலை வருத்தும் துறவினால் பெறமுடியாத இறைவன் அருளையும் அவனை நினைந்து உருகும் உருக்கத்தால் எளிதில் கொள்ளலாம் என்றவாறு. ஆகம் - உடல்; ஆகம் நினைத்தே என்பதில் அகம் என்பது ஆகம் என நீண்டது, வித்தார் - மூலமானவர்; கோகனகம் - தாமரை. (4) 5. மாலை இரக்கம் பிறப்பியாதோ? அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் குழையடுத்த விழியிடத்தர் மழுவலத்தர் அருணையத்தர் குளிர்வெற் பூடே மழையெடுத்த துளிநனைக்க மடிசுருக்கி மயிர்பொடித்து வருந்தும் சேதா தழையடுத்த இடையர்பற்று குழலிசைக்கு மனமுருக்கித் தளரும் மாலை பிழையடுத்த மொழியுரைத்த தலைவருக்கு மிகஇரக்கம் பிறப்பி யாதே? இது, கார்காலம் வருமுன் வருவேன் என்று பிரிந்த தலைவன் கார்காலம் கண்டும் வாராமை கண்ட தலைவி, மாலைப் பொழுதில் அவனை நினைந்து இரங்கி உரைத்தது. (பொ-ரை) காதளவோடிய விழியையுடைய உமையம் மையை இடப்பாகமாகக் கொண்டவரும், மழுப்படையை வலக்கையில் கொண்டவரும் ஆகிய திருவருணைப் பெருமானின் குளிர்ந்த மலையினிடத்தே, மழை பொழிதலால் உண்டாகிய நீர்த்துளி நனைத்தலால் பால்மடி சுருங்கி, மயிர்க்கூச் செறிந்து, வருந்துகின்ற இளங்கன்றையுடைய பசு, தளிர் மாலையணிந்த ஆயர்கொண்ட குழலின் இசைக்குத் தன் மனத்தை உருக்கிக் கன்றினை நினைந்து இரங்கும் இந்த மாலைப் பொழுது, பொய்ம்மொழி யுரைத்துப் போகிய தலைவருக்கு மிகுந்த இரக்கத்தை உண்டாக்குதல் இல்லையோ? (வி-ரை) விழி - விழியுடைய உமையம்மையைக் குறித்தது. மழையெடுத்த துளி நனைக்க மடிசுருக்கி மயிர்பொடித்து வருந்தும் சேதா என்பதில் தன்மை நவிற்சியணி அமைந்துள்ளது. தழை - தளிர்; தளிர் மாலையணிதல் ஆயர்க்கு இயல்பு. பிழை என்றது முன்னுரைத்த உரை தவறிய பிழை; ஆகலின் பொய்யுரை எனப் பெற்றது. (5) 6. அருணை வித்தகர் மூவரில் ஒருத்தரோ? எழுசீர்ச் சந்த விருத்தம் யாதவர் குலத்துநெடு மாதவன்ம ருப்புடைய ஏனமி ருகத்து ருவமாய் வேதமொழி பெற்றஅயன் ஓதிமம்எ னப்பறவை வேடமும் எடுத்த திலையோ? ஓதருணை வித்தகரை மூவரில்ஒ ருத்தரென ஓதியிடும் அற்ப மதியீர்! சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிது தேடுதல்நி னைத்த பரமே. (பொ-ரை) அடியவர் ஏத்தும் அருணைப் பெருமானை, மூன்று கடவுளருள் ஒருவர் என்று கூறும் குறைந்த அறிவீர், குளிர்மதியணிந்த திருமுடியையும், திருவடித் தாமரையையும் எளிதில் தேடுதல் நினைத்து எதிர்எதிராக, ஆயர்குலத்துப் பிறந்த நெடுமால் கொம்புடைய பன்றி வடிவும், வேதம் ஓதுதலைக் கொண்ட நான்முகன் அன்னப்பறவை வடிவும் எடுத்துத் தேடித் தோல்வியுற்றது இல்லையோ? (ஆகலின் அவன் மூவருள் ஒருவன் அல்லன்; மூவர் தலைவன் என்று கொள்ளுங்கள் என்றவாறு.) (வி-ரை) நான்முகனும் திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் சிவன் முடியும் அடியும் தேடிய செய்தி முன்னரும் உரைத்தார். (1). யாதவர் குலத்து மாதவன் என்பது கண்ணன் தோற்றரவு பற்றிக் கூறியது. ஏனம் - பன்றி; ஓதிமம் - அன்னம்; அபரம் - எதிர்; பிணக்கு. (6) 7. வெற்ற ராயினும் முத்தர் ஆவர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பரவை யாடினும் நதிகள் ஆடினும் படியெ லாம்நடந் தடிகள் தேயினும் குரவர் ஆயினும் கனலில் நின்றதன் கொதிபொ றுக்கினும் கதிகி டைக்குமோ? அரவம் ஆடுசெஞ் சடிலர் அங்கணார் அமுதர் தாள்நினைத் தடியர் தம்மொடு விரவி நீறணிந் தருணை சேர்வரேல் வெற்றர் ஆயினும் முத்தர் ஆவரே. (பொ-ரை) கடல்நீரில் ஆடினாலும், ஆற்று நீரில் ஆடினாலும், உலகெல்லாம் நடந்து கால்கள் தேய்ந்தாலும், குருவாக விளங்கினாலும், தீயில் நின்று அதன் வெப்பத்தைப் பொறுத்தாலும் வீடுபேறு கிடைக்குமோ? கிட்டாது. பாம்பு ஆடும் சிவந்த சடையுடையவர், அழகிய நெற்றிக்கண்ணர், அமுதர் ஆகிய சிவபெருமான் திருவடிகளை நினைந்து அடியார் களுடன் கூடி, திருநீறணிந்து கொண்டு திருவருணைப்பதியை அடைவார்களாயின், அவர்கள் எத்தகைய பேறும் இலராயினும் வீடுபேறு எய்தியவர் ஆவர். (வி-ரை) தாள் நினைந்து... சேர்வரேல் என்பதில் அடியார் வழிபடு முறையை விளக்கினார். வெற்றர் - ஒன்றும் இல்லாதவர். பரவை - கடல்; படி - உலகம்; குரவர் - குரு; கதி - வீடுபேறு; சடிலர் - சடையுடையவர்; அம்கணார் (அங்கணார்) - அழகிய நெற்றிக் கண்ணர்; விரவி - கூடி, கலந்து. (7) 8. நாராய்! எப்படி நம்புவது? பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முத்தமிழ் முறைமுறை அன்பொடும் அப்பர் கவுணியர்சொல் சுந்தரர் முப்பொ ழுதுமெதிர் புகழ்ந்திடு முதுநூலார் அத்தர் அருணையில் நெடுந்திரை தத்து திருநதியின் மென்பெடை அச்ச மறவுடன் அணைந்துறை மடநாராய்! ஒத்த மனதோடு புணர்ந்தவர் சற்றும் அகல்வதிலை என்றவர் உற்ற துணையென இருந்தவர் உளம்வேறாய் எத்தனை கபடம் நினைந்தவர் கைப்பொருள் கருதி நடந்தனர் எப்படி இறைவரை நம்புவ தினநாமே. இது, பொருள்வயின் பிரிந்த தலைவனைப் பற்றித் தலைவி நாரையை முன்னிலையாக்கிக் கூறியது. (பொ-ரை) முத்தமிழ் முறையும் திருமுறையும் ஒன்றிய அன்பும் கூடிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், புகழ்வாய்ந்த சுந்தரர் ஆகிய மூவரும் காலை நண்பகல் மாலை ஆகிய முப் பொழுதுகளிலும் நேரே நின்று புகழ்ந்துபாடும் பழைமையான தேவாரத் திருமுறைகளையுடையவராகி சிவபெருமான் கோயில் கொண்ட திருவருணையில், பெரிய அலைகள் தாவி எழுகின்ற திருநதி எனப்படும் வளமான ஆற்றில் இளமையான பெட்டை யுடன் அச்சமின்றிக் கலந்துறையும் அழகிய நாரையே! ஒருப்பட்ட மனத்துடன் கூடியிருந்தவரும், சிறிதும் பிரிவது இல்லை என்ற வரும், உயிரொடும் ஒன்றிய துணையென இருந்தவரும் ஆகிய தலைவர் மனம் வேறுபட்டவராய் எவ்வளவு வஞ்சத்தை உட்கொண்டு எளிய பொருள் தேடுவதைக் கருதிப் பிரிந்து சென்றார். இவ்வாறாக அவரை இனி நாம் எப்படி நம்புவது? அறியேம். (வி-ரை) நாம் என்ற தன்மைப்பன்மை நாரையையும் உட்கொண்டது. நெடுந்திரையின் அலைக்கழிப்பு உண்டாயினும், அச்சமற்று அணைந்து உறையும் நாரையின் பேறு பெரிது; அப்பேறு தனக்கு இன்று என்பாளாய்க் கூறினாள். தலைவர் சொல்லும் செயலும் நினைந்து நினைந்து பன்னுவாளாய், ஒத்த மனதொடு... நடந்தனர் என்றாள். கை, சிறுமையடையுமாகலின் தன் வெறுப்புப் புலப்படக் கூறினாள். என்னால் வெறுக்கத்தக்க பொருள் என்னும் பொருட்டுமாம். நினைந்தவர் என்பதை நினைந்து, அவர் எனப் பிரித்துக் கைப்பொருளுடன் இயைத்துக் கொள்க. மடநாராய்! இனம் நாம் இறைவரை எப்படி நம்புவது என்று தொடராக்குக. கவுணியர் குடிப்பெயர்; எதிர் புகழ்ந்திடுதல் - நேரே நின்று பண்ணோடு பாடுதல். புகழ்ந்தவை வாளா ஒழியாமல் முது நூலாயமை சுட்டினார்; திருமுறை என்பதற்குக் காரணம் சுட்டினார். முத்தமிழ் முறைமுறை என்பதில். முதல் மூன்று திருமுறைகளும் திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறை களும் திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறை சுந்தரரும் அருளியவையாம். (8) 9. அருணகிரி அடிகளின் அடிகள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இனமகலும் அருகர்மட மிசையிலிடு கனல்மதுரை இறைவனுடல் புகமொழிவரே; கனகமுக படகவள கரடதட விகடமத கரியின்மதம் அறநினைவரே; வனமருவும் அருமுதலை ஒருமதலை தரவினிய மதுரகவி மொழிமுதல்வரே; அனகரபி நயரதுலர் அமலரெம தருணகிரி அடிகள்தம தடியவர்களே. (பொ-ரை) பாவமற்றவரும், கூத்தாடுபவரும், ஒப்பற்ற வரும், மலமில்லாதவரும் ஆகிய எம் அருணாசலக் கடவுளின் அடியவர்கள், திரண்ட கூட்டத்தாராகிய சமணர், தாம் தங்கியிருந்த மடத்தில் வைத்த தீயை மதுரை வேந்தன் உடலில் புக ஏவுவர்; பொன் முகபடாம் அணிந்ததும், கவளம் கொள்வதும், மதம்பொழிவதும் ஆகிய மிகப்பெரிய மதயானையின் செருக்கு ஒழியும9று நினைவர்; நீரில் வாழும் வலிய முதலை தான் உண்ட ஒருகுழந்தையை மீண்டும் தருமாறு இனிய கவிபாடும் முதன்மை யானவரும் ஆவர். (வி-ரை) மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் அழைப்பினால் மதுரைக்குச் சென்ற திருஞான சம்பந்தர் திருமடத்தில் தங்கினாராகச் சமணர்கள் கூடி அம் மடத்தில் தீ வைத்தனர். அத் தீயை மக்கள் செய்யும் பழிக்கு மன்னவனே பொறுப்பு ஆகலின், பையவே சென்று பாண்டியர்க்கு ஆக என்று ஏவினார். இப் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி எனவும் கூன்பாண்டியன் எனவும் சுந்தரபாண்டியன் எனவும் வழங்கப் பெறுவான். இவ் வரலாறு முதலடியில் கூறப்பெற்றது. சமண சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறிய திருநாவுக்கரசரின் மேல் வெறுப்புக் கொண்ட பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் ஏவிய கொலை யானையை நிலைமாற்றி அனுப்பிய செய்தி இரண்டாம் அடியில் குறிக்கப் பெற்றது. அவிநாசித் திருக்குளத்தில் இருந்த முதலையால் கொள்ளப் பெற்ற குழந்தையைப் பாவிசைப் பதிகம் பாடி மீட்டுத் தந்த சுந்தரர் செய்கை மூன்றாம் அடியில் சுட்டப் பெற்றது. அனகர் - பாவம் இல்லாதவர்; அபிநயர் - கூத்தர்; அதுலர் - ஒப்பற்றவர்; கரடம் - மதம் பாய் சுவடு; விகடம் - அழகு; வனம் - நீர். மூவர் முதலிகளின் திருவருட் செயல்களில் ஒவ்வொன்றை எடுத்தோதினார். (கூ) 10. ஒருவசனம் சொல ஒண்ணாதோ? எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அடியவர் சிந்தையில் இனிதுறை சங்கரர் அருணைவ ளம்பதி அன்னாரே படியினெ டுங்கரி அனையம தங்கொடு பதறிந டந்திடு மின்னாரே ஒடியும ருங்கென உணர்கிலிர் நின்றினி ஒருவச னஞ்சொல ஒண்ணாதோ? கடியச ரங்களின் இளைஞரு டன்பல கலகவி தம்பயில் கண்ணாரே! இது பொதுமகளைக் கண்ட காமூகன் ஒருவன் புலம்புரையாம். (பொ-ரை) அடியவர் உளத்தில் இனிது வாழும் சிவ பெருமானது அருணை என்னும் வளமிக்க ஊரை ஒத்தவர்களே, நிலத்தில் பெரிய யானை போன்ற மதத்துடன் பதறி நடையிடும் ஒளிமிக்க பெண்களே, கொடுமையாக ஊடுருவித்தாக்கும் கணையைப் போல இளைஞர்களுடன் பலவகையான இன்பப் போர்புரிதலைப் பழகிய கண்ணையுடையவர்களே, உங்கள் இடை ஒடியும் என்பதை உணரீர்! நீங்கள் சற்றே நின்று ஒரே ஒரு சொல் சொல்லமாட்டீரோ? (வி-ரை) வளமையான ஊரை நலந்திகழ் நங்கையர்க்கு உவமையாக்குதல் மரபு. ஆகலின் அருணை வளம்பதி அன்னார் என்றார்; யானையை மகளுக்கு உவமை கூறியமையால் அது பெண் யானை என்க. பெண் யானைக்கும் மதமுண்மை பெருங்கதையால் அறியலாம். பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய இருங்கை இளம்பிடி கடச்செருக் கெய்தி என்பது அது (1.40 : 30-31). அன்னாரே மின்னாரே என்பவையும், ஒண்ணாதோ கண்ணாரே என்பவையும் இயைபுத் தொடையாம். இறுதி இயைதல் இயைபு என்பது இயைபின் இலக்கணம். (10) 11. அன்னமறியார் எடுப்பது ஐயமோ? அம்மானை கலித்தாழிசை நாரா யணனறியா நாதரரு ணேசருக்கு வாரார் சிலைகலைமெய் மாதங்கம் அம்மானை! வாரார் சிலைகலைமெய் மாதங்கம் ஆமாயின் ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை! அன்னம்அறி யார்எடுப்ப தையமோ அம்மானை? (பொ-ரை) திருமாலால் அறியப்பெறாத இறைவராம் அண்ணாமலையார்க்குக் கட்டமைந்த வில்லும் போர்வையும் உடலும் முறையே மேருமலையும், யானை உரியும், மாதொரு பாதியும் ஆகும் அம்மானை; கட்டமைந்த வில்லும் போர்வையும் உடலும் மாதங்கம் ஆனால், ஆராயும்போது அவர் எடுப்பது பிச்சையன்றோ அம்மானை; அன்னம் கண்டறியாதவர் ஆகிய அவர் எடுப்பதற்கு ஐயப்பாடோ அம்மானை. (வி-ரை) அம்மனை என்பது மகளிர் விளையாடும் ஒருவகை ஆடல். கழற்சிக் காயை அம்மனைக் காயாகக் கொண்டு பாடிக் கொண்டே விளையாடுவர்; மூன்று பேராக ஆடும் இவ் விளையாட்டில் முதலாமவள் ஒரு செய்தியை உரைப்பாள்; இரண்டாமவள் ஓர் ஐயத்தைக் கிளத்துவாள்; மூன்றாமவள் ஒரு முடிப்புக் கூறுவாள்; அவர் கூற்றுக்கு ஏற்ப இரண்டாமடி ஈறும், நான்காமடி ஈறும், ஐந்தாமடி ஈறும் அம்மானை என்னும் முடிப்புப் பெற்றிருக்கும். மாதங்கம் என்னும் சொல் சிலை என்பதற்கு ஏற்பப் பெரிய தங்கம் (மேருமலை; பொன்மலை என்பதும் அது) என்றும், கலை என்பதற்கு ஏற்ப யானை என்றும் (யானைத் தோல் போர்த்தவர்), மெய் என்பதற்கு ஏற்ப மாது அங்கம் (உமை ஒரு பாகன்) என்றும் பொருள் தந்தது. ஐயம் என்பதில் முன்னையது பிச்சை என்பதையும், பின்னையது ஐயப்பாடு என்பதையும் குறித்தது. அவ்வாறே அன்னம் என்பது அன்னப் பறவையையும் சோற்றையும் குறித்தது. அன்னப் பறவை என்றது நான்முகனால் அறியப் பெறாமை சுட்டியது. (11) 12. வேந்தர் கருத்து என்ன? தோழி ஐயுற்று வினாதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மானென்பார் கலையென் பார்கைம்மலை யென்பார் வழியே தென்பார் ஏனென்பார் இலையென் பார்யான் ஏந்துமாந் தழைநன் றென்பார் ஊனென்பார் நிறையுந் தாரார் உறையுந்தென் அருணை மானே! கானென்பார் சூழலை வேந்தர் கருத்தென்னோ கருதுங் காலே? (பொ- ரை) தசையொடு கூடிய எலும்பும் ஆத்தியும் நிறைந்த மாலையை யணிந்த சிவபெருமான் கோயில்கொண்ட அழகிய அண்ணாமலையில் வாழும் மான் போன்றவளே. தலைமைவாய்ந்த இவர் மான் என்பார்; கலைமான் என்பார்; யானை என்பார்; செல்லும் வழி ஏது என்பார்; ஏன் என்றும் கேட்டு மறுமொழி தருவார் இல்லை என்பார் யான் கைக் கொண்டிக்கும் மாந்தழை சிறந்தது என்பார்; நின் கூந்தலை மணம் வாய்ந்தது என்பார்; ஆராய்ந்து பார்ப்பின் இவர் எண்ணம் யாதாகும்? உரைப்பாயாக. (வி-ரை.) இது தலைவியும் தோழியும் உடனிருந்தபோது தலைவன் தழை கொண்டு வந்து நின்று, மான் முதலியன வந்தனவோ என்று வினாவுதல் அறிந்த தோழி. இவர் எண்ணம் யாதோ? என்று தலைவியை வினாவியது. கைமலை - கையையுடைய மலை. அஃதாவது யானை; தழை - தழையால் செய்த உடை; கான் - சோலை. (12) 13. அருணைப் பெருமாள் புயங்கள் புயவகுப்பு ஆசிரிய வண்ண விருத்தம் கருணைமுக மண்டலத் தொளிர்மகர குண்டலக் கலன்மலிக வின்குழைக்(கு) உறவாய் இசைந்தன; களபமகில் குங்குமத் தளறுகுடி கொண்டுதட் டியபுழுக ணைந்துமெய்ப் பனிநீர் துளைந்தன; கலைமதிம ழுங்கிநத் தினம்இருள டைந்துமுத் தொளிகருக வெண்சுதைத் திருநீ றணிந்தன; கனலிகைய ரிந்துகட் பரிதியை முடினந்துதக் கனைமுடித டிந்துமைத் தலையே வழங்கின; இரணியனு ரங்கிழித் தளவறும தங்கொழித் தெழுநரம டங்கலைத் தடமார் பிடந்தன; இமயமட மங்கைபொற் புளகலிரு கொங்கையின் சுவடுபட இன்பமுற் றதிலே குழைந்தன; இரவிகிர ணங்கொழித் ததிசயமு டன்கிளைத் தெழுபவழ வன்பொருப் பெனவே வளர்ந்தன; இதழியர விந்தமுற் பலமகிழ்செ ருந்திகட் குரவலரி சண்பகத் தொடையான் நிறைந்தன; தரியலர்பு ரங்கெடச் சுரர்நார்ப் யங்கெடத் தமனியநெ டுஞ்சிலைச் சிலைலநாண் எறிந்தன; தனுவலத நஞ்செயற் கமர்பொருச ரந்தரச் சரகமென வந்துமற் பொருபோர் புரிந்தன; சலசமலர் மண்டபச் சதுமுகஅ யன்திருத் தலையுடன்இ லங்குமுத் தலைவேல் உவந்தன; தடவிகட கும்பமத் தகதவள தந்தநற் றறுகண்மத குஞ்சாத்துரி போர்வை கொண்டன; அருணகிர ணங்களில் பலமணிநெ ருங்கிநச் சரவமிளிர் கங்கணப் பணியால் மலிந்தன; அனவரதம் அம்மலத் தினின்நடமி டுந்தொழிற்கு அபிநயவி தங்கள்பெற் றழகொ டிருந்தன; அருமறைதெ ரிந்தசொற் புகலியிறை செந்தமிழ்க் கரசினொடு சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன; அரிபிரமர் தங்களுக் கரியதே பங்கயத் தருணையதி ருங்கழற் பெருமாள் புயங்களே! (பொ-ரை.) திருமால் நான்முகன் ஆகிய இரு கடவுளர் களுக்கும் காணுதற்கு அரிய திருவடித் தாமரைகளையுடைய, திருவருணைப்பதியில் கோயில் கொண்ட அதிருங் கழற் பெருமாள் ஆகிய அண்ணாமலையாரின் திருத்தோள்கள், (1) அருள் தங்கிய முகத்தில் விளங்குகின்ற சுறாமீன் வடிவில் செய்யப்பெற்ற குண்டலமாகிய அணிகலன் மிகுந்த அழகு செய்கின்ற காதுக்குப் பொருந்தியதாய் அமைந்தன; (2) கலவைச் சாந்தையும், அகிற் குழம்பையும், குங்குமக் குழம்பையும் அணிந்து அதன்மேல் பதன்படுத்தப்பெற்ற புனுகையும் அணிந்து தனது வடிவம் பனிநீரில் முழுகப் பெற்றன; (3) கலைகளையுடைய திங்கள் ஒளி குறைந்து, சங்கினம் கருநிறம் அடைந்து, முத்தின் ஒளி குறை வெண்பொடியாகி திருநீற்றை அணிந்தன; (4) தீக்கடவுளின் கையை வெட்டி, கண்ணாகிய கதிரோனைச் சினந்து, தக்கனது தலையைவெட்டி அவனுக்கு ஆட்டின் தலையை வழங்கின; (5) இரணியனது மார்பைக் கிழித்து, அளவற்ற செருக்கினால் மிகுந்து எழுந்த திருமாலாகிய நரசிங்கத்தின் பெரிய மார்பைப் பிளந்தன. (6) இமவான் மகளாகிய இனிய உமையம்மையின் அழகிய பருத்த இரு மார்பகங்களின் சுவடு உண்டாகும்படி இன்புற்ற தினால் நெகிழ்ச்சி பெற்றன; (7) கதிரோனைப் போல ஒளிவீசி வியக்கத் தக்கவாறு கவடுபட்டு எழுந்த வலிய பவழமாலை என்னுமாறு வளர்ந்தன; (8) கொன்றை, தாமரை, குவளை, மகிழ், செருந்தி, குரா அலரி, சண்பகம் ஆகியவற்றின் தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலையால் நிறைந்தன; (9) பகைவர்களின் முப்புரங்களும் அழியவும், தேவர் மனிதர்களின் அச்சம் அகலவும், பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு நாணொலி செய்தன; (10) விற்கலையில் தேர்ந்த அருச்சுனனுக்குப் பகைவர் அழிந்து படப் போர்புரியும் பாசுபதம் என்னும் அம்பினைத் தருதற்கு, மெய்யாக வந்து மோதுகின்ற மற்போர் செய்தன; (11) தாமரை மலராகிய மண்டபத்தில் வீற்றிருக்கும் நான்முகனின் அழகிய தலையோடு விளங்குகின்ற மூன்று குடுமிகளையுடைய வேலை விரும்பின; (12) பெரிய அழகிய குடம் போன்ற மத்தகத்தையும் வெண்மையான நல்ல தந்தத்தையும் அஞ்சாமையும் மதத்தினையும் உடைய கயமுகாசுரனின் தோலாகிய போர்வையைக் கொண்டன; (13) செந்நிற ஒளியினையுடைய, மிகுந்த மணிகள் நெருங்கி விளங்குகின்ற நச்சுப்பாம்புகளின் கங்கணம் ஆகிய அணிகலங் களால் நிறைந்தன; (14) எப்பொழுதும் திருமன்றில் நடனமாடும் தொழிலுக்கு அவிநயம் பிடித்து அழகோடு இருந்தன; (15) அரிய திருமறைகளை அறிந்த புகழ்வாய்ந்த சீர்காழி ஞானசம்பந்தர், செந்தமிழ் வல்ல திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவர் முதலிகளால் புகழப்பெற்றன. (வி-ரை) பாடு புகழ்பெறும் தலைவனின் தோள்களின் சிறப்புகளைப் பாடுவது புயவகுப்பு என்னும் உறுப்பு ஆகும். தோளின் பெருமைகளையெல்லாம் தொகுத்துக் கூறுவதா கலின், அப் பொருளுக்கு ஏற்ப இவ் வண்ண விருத்தம் அடிக்கு முப்பத் திருசீர்களைக் கொண்டு வந்தது. இவ்வாறே பிற கலம்பகங்களிலும் சீர்மிக்கு வருதல் காண்க. அதிருங் கழற் பெருமாள் புயங்கள், குழைக்கு உறவாய் இசைந்தன; பனிநீர் துளைந்தன; திருநீறணிந்தன; தலையே வழங்கின; தடமார்பு இடந்தன; அதிலே குழைந்தன; பொருப் பெனவே வளர்ந்தன; தொடையான் நிறைந்தன; சிலைநாண் எறிந்தன; பொருபோர் புரிந்தன; முத்தலைவேல் உவந்தன; உரிபோர்வை கொண்டன; பணியால் மலிந்தன; அழகோடிருந்தன; புகலி இறை, அரசு, சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன என இயைக்க. தீக்கடவுளின் கைவெட்டுதல் முதலியவை தக்கன் வேள்வி யின் போது நிகழ்ந்தன. மேருவை வில்லாக வளைத்தது, முப்புர அழிப்புக்கு நிகழ்த்தியது ஆகும். தாரகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி என்னும் அசுரர் மூவர் நகரங்களும் முப்புரங்கள் என்பன; அவை முறையே தங்கம் வெள்ளி இரும்பு மதில்களையுடையன என்பர். பாசுபதம் அருச்சுனனுக்கு வழங்கியமை பாரதத்துக் கண்டது. கொங்கையின் சுவடுபடக் குழைந்தது காஞ்சிப் புராணத்துத் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது. மூவர்முதலிகளின்மேல்எல்லப்பநாவலர்கொண்டமுதிர்ந்த ஈடுபாட்டை,அருமறை.....òfœªjdஎன்பதhல்அறிலா«. இவ்வாறேமூவ®அன்gமுன்னு«புலப்படுத்தினார். பின்னும் கூறுவார். (13) 14. அயர்ந்திவள் வாடத் தகுமோ? தலைவனை வேண்டல் எண்சீர் விருத்தம் புயந்தழுவும் கண்ணியும்செவ் விதழி யேமால்; பூண்டகயற் கண்ணியும்செவ் விதழி யேமால்; வியந்துசொலின் அன்னதும்பொன் நிறமே; எங்கள் மின்னிறமும் பொன்னிறமே; புயம்பெறாமல் அயர்ந்திவள்வா டத்தகுமோ? அருட்கண் பாரீர், அருணகிரிப் பெரியீரே! mky nu!நல் வயந்தவிழா அழகரே! நினைக்க முத்தி tரந்தருவாnர!மலைமேல் மழுந்த னாரே. (பொ-ரை.) அண்ணாமலைப் பெருமானே, குறையற்ற வரே, நல்ல வசந்த விழாக் கொள்ளும் அழகரே, நினைத்த முத்திப்பேறு அருள்பவரே, மலைமேல் உறையும் மருந்து போன்றவரே, நும் திருத்தோளைத் தழுவிக் கிடக்கும் மாலையும் செவ்விய கொன்றையேயாம்; நும்பால் அன்பு பூண்ட கயல் போன்ற கண்ணையுடையாளும் செவ்விய இதழை உடைய வளேயாம்; வியப்புறக் கூறினால் அம் மாலையும் பொன்னிற மேயாம்; எங்கள் மின்னற்கொடி போன்ற இவள் நிறமும் பொன்னிறமேயாம்; நும் தோளைத் தழுவும் பேறு பெறாமல் - நும் கொன்றைமாலை பெற்ற பேற்றைப் பெறாமல் - வாடுதல் தகுமோ? நீவிர் திருக்கண் பார்த்து அருள் செய்வீராக. (வி-ரை.) இப்பாடல் தோழி, தலைவன் வேண்டல் என்னும் துறையமைதியுடையது. தலைவன் - அண்ணாமலை யார். அண்ணாமலையாரைக் கண்டு மையல் கொண்ட தலைமகள் அவரால் தழுவப்பெறும் பேறு பெறாமல் பசலையுற்றாளாகத் தலைவி குறையிரந்து அருள வேண்டியது இஃதாம். கொன்றை மாலையைச் சுட்டியது அதனை உவந்து ஏற்றுக் கொண்ட பெருமான், அத் தன்மை யமைந்த தலைவியை ஏற்றிலனே என்ற குறிப்பாலாம். பொன்நிறம் என்றது தலைவியின் பசலை நோயை, செவ்விதழி என்றது செவ்விய கொன்றையையும், செவ்விய இதழையுடைய தலைவியையும்; மால் - மயக்கமும், பெருமையும். (14) 15. மொழி சூள் மறந்த பிழை இரங்கல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மலைமேல் மருந்தர் அருணேசர் அன்று வலைவீ சிநின்ற அலையே அலைமேல் நிறைந்து வருமீன் அருந்தி அருகே இடங்கொள் குருகே முலைமேல் முயங்கு தலைநா ளிலன்பர் மொழிசூள் மறந்த பிழையோ தலைமேல் வரைந்த படியோ இருந்து தமியேன் வருந்து தகவே. (பொ-ரை.) மலைமேல் உள்ள மருந்து போன்றவராகிய அண்ணாமலையார், அந்நாளில் வலைவீசி நின்ற கடலே! அலைகளின்மேல் நிறைந்து வரும் மீன்களையுண்டு கடலின் அருகே வாழ்கின்ற பறவைகளே! யான் எத்துணையுமின்றித் தனியே இருந்து வருந்தும் முறைமை. என் மார்பகங்களைத் தழுவக் கூடிய முதல் நாளில் தலைவர் கூறிய உறுதிமொழியை மறந்துபோன பிழையோ, அன்றி என் தலைமேல் எழுதிய வண்ணமோ அறியேன். (வி-ரை.) இரங்கல் - வருந்துதல்; தலைவனைப் பிரிந்து தனித்த தலைவி கடலையும், கடல்வாழ் பறவையையும் விளித்து இரங்கிக் கூறியதாகும். இரங்கல் நெய்தற்றிணைக்குரியதாகலின் அந் நிலத்தையும், அந் நிலத்துப் பறவையையும் சுட்டினார். சொல்லாதனவும் சொல்வன போலவும், கேளாதனவும் கேட்குந போலவும் கூறுதல் தொன்னெறியாம் (தொல். செய். 201.) அருணேசர் வலைவீசி நின்றது, திருவிளையாடற் புராணத்து வலைவீசிய படலத்தில் கண்டது. அச் செய்தி வருமாறு : முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமையம்மைக்குத் திருமறையை ஓதினார். அதனை அம்மை கருத்தின்றிக் கேட்டார்; ஆதலால் சினங்கொண்ட பெருமான் நீ வலைஞர் மகளாக எனச் சாபமிட்டார். அதனை அறிந்த மூத்த பிள்ளையாரும், முருகவேளும் வெகுண்டு மறைகளை வாரிக் கடலில் எறிந்தனர். அவ்விருவரையும் காலம் அறியாமல் உள்ளே வரவிட்ட நந்தியை மீனாக என்றும், முருகவேளை மூங்கையாக என்றும் சாப மிட்டார். பின்னர்த் தாம் வலைவேடராகி நந்தியாம் மீனை வலைவீசிப் பிடித்து, உமையை மணஞ் செய்து கொண்டார். (15) 16. அமரரும் நரரும் கலக மிடுவர் தலைவியைப் புகழ்தல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் தகன முறுவலின் மதனை முனிபவர் சடையில் அணிபல தலையினார் அகனல் அடியரொ டுறையும் இறையவர் அருணை வளநகர் அரிவையார் நிகரில் தனதட அமுதம் நிறைகுடம் நிலவு முகபடம் விலகினால் ககன அமரரும் நரரும் இகல்கொடு கலகம் இடுவரிவ் வுலகிலே. (பொ-ரை.) எரிக்கும் சிரிப்பால் மன்மதனைக் காய்ந்த வரும் சடையில் அணிந்த பல தலைகளை உடையவரும் நல்லுளம் வாய்ந்த அடியவர்களுடன் உறையும் கடவுளரும் ஆகிய சிவபெருமான் கோயில் கொண்ட வளமிக்க அருணைநகர் தலைவியரது ஒப்பற்ற மார்புகளாகிய பெரிய அமுதம் நிறைந்த குடங்களின்மேல் விளங்குகின்ற ஆடை சிறிது விலகினால் விண்ணகத்துத் தேவரும், மண்ணகத்து மாந்தரும் பகைமேற் கொண்டு இவ்வுலகில் சண்டை செய்வர். (வி-ரை.) மதனை முனிதல் என்பதில் காமனைக்காய்ந்த வரலாறு சுட்டப்பெற்றது. தனதடம் அமுதம் நிறைகுடம் ஆதலால், அமரர் அமிழ்தம் எம்மதே என்று போரிடவும், மண்ணகத்து மகளாதலால் நரர் எம்மவளே என்று போரிட வும் ஆயினர் என்க. நிலவும் - அமைந்து விளங்கும்; முகபடாம் என்றது மூடிய ஆடைத்துகிலை; ககனம் - விண் அகனல் என்பதை அகம் நல் எனப் பிரித்து நல்அகம் என் மாற்றுக. தலைவன், தலைவியின் உறுப்பு நலம் புகழ்ந்துரைத்தது இது. (16) 17. மொழியும் விழியும் மாசுகமே இதுவும், தலையைப் புகழ்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் உலககண் டகனாய் வருசலந் தானார் உடல்தடிந் திடுவார், கடல்விடங் கொளுவார் குலவுசங் கரனார் அருணையங் கிரிசூழ் குளிர்புனந் தனிலே கிளிகடிந் திடுவார், மலர்முகம் சசியே; வடிவமும் சசியே; மகரமென் குழையே; வருணமென் குழையே; முலையுமந் தரமே; இடையுமந் தரமே; மொழியுமா சுகமே; விழியுமா சுகமே! (பொ-ரை.) உலகோரைத் துயர் செய்பவனாக வரும் சலந்தரா சுரனது உடலைப் பிளந்தவரும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டவரும் ஆகிய சங்கரனார் விளங்கும் அண்ணா மலை சூழ்ந்த குளிர்ந்த தினைப்புனத்திலே கிளி ஓட்டுமவர் மலர்போன்ற முகம் நிலவேயாம்; வடிவமும் இந்திராணி யேயாம்; சுறாமீன் வடிவில் அமைந்த குண்டலங்களும், அழகிய மெல்லிய தளிரேயாம்; மார்பும் மந்தர மலையேயாம்; இடையும் விண்வெளியேயாம்; இனிய மொழிகளும் கிளிமொழியேயாம்; கண் விழிகளும் அம்பேயாம். (வி-ரை.) சலந்தரனார் உடல் தடிந்ததும், கடல் விடங் கொண்டதும் சங்கரனார் செயல்கள் கிளிகடிந்திடுவார் என்றது தலைவியை, சசி என்பதற்கு நிலவும், இந்திராணியும் பொருள். முதற்குழை காதணியையும் மற்றது தளிரையும் குறித்தது. மந்தரம் என்பது மந்தரமலையையும், அந்தரம் என நின்று விண்வெளியையும் குறித்தது. இடை உண்டோ இல்லை யோ என்பது நூன்முறையாகலின், உண்டு எனத் தோன்றி இல்லாமல் இருக்கும் விண்ணை இடைக்கு ஒப்பிட்டார். மாசுகம் என்பது கிளியையும், ஆசுகம் எனப் பிரிந்து அம்மையையும் குறித்தது. சலந்தரனார் உடல் தடிந்த வரலாறு காஞ்சிப் புராணம் சலந்தரீசப் படலத்துக் கண்டது. அது வருமாறு : சலந்தரன் அனைவரையும் வென்று கயிலாயம் நோக்கி சென்றான். சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வடிவுடன் முன்வந்து நிலத்தில் ஒரு சக்கரம் வரைந்து எடுக்கச் சொன்னார். சலந்தரன் நிலத்தைப் பிளந்து சக்கரத்தை எடுக்க அஃது தலையைப் பிளந்தது. (17) 18. சுகமே! சுகமே இரும் இரங்கல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் சுகமே! சுகமே இரும்,வந் துபுனஞ் சூழ்கின் றவுமை தினமித் தினையுள் புகமே யலிடா துகடிந் திடுமெம் பொல்லா மையமின் றுபொறுத் திடுமின்; மகமே ருநெடுஞ் சிலையாள் அரணா மலையார் அருணா புரிமால் வரைமேல் அகமே செலுமா றுதுணிந் திதண்விட் டகல்துன் பமுமன் பர்வரிற் சொலுமே. (பொ-ரை.) கிளிகளே, நலமாக இருங்கள்; கூட்டமாக வந்து தினைக்காட்டைச் சூழ்கின்ற உங்களை நாள்தோறும் இத் தினைக்காட்டுள் புகுந்து மேய்தற்கு விடாமல் வெருட்டும் எம் தீமையையும் இன்னொரு நாள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்; தலைவர் வரின் மாமேரு மலையை நெடிய வில்லாகக் கொண்ட அண்ணாமலையாரின் அருணைநகரி லுள்ள பெரிய மலைபோல் உள்ள வீட்டிற்குச் செல்லுமாறு உறுதி கொண்டு பரணைவிட்டு நீங்கிய துயரை அவர்க்குக் கூறுங்கள். (வி-ரை.) இரங்கல் - வருந்துதல். தினைப்புனத்தில் கிளி கடிந்து வந்த தலைவி, தினை அறுக்கப்பெற்றமையால் வீட்டுக்குச் செல்வாள், கிளிகளை நோக்கித் தலைவனுக்குக் கூறியது. சுகம் என்பதில் முன்னது கிளியை விளித்தது. பின்னது நலதே என்னும் பொருட்டது; சுகமே! சுகமே இரும்; பொல்லாமை பொறுத்திடும்; அன்பர் வரின் இதண் விட்டு அகல் துன்பம் சொலும் என இயைக்க, இதண் - பரண். (18) 19. பகன்றார் எங்கே அகன்றார்? இரங்கல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் சொல்லா ரணத்திற் கறிவரியார்! சோணா சலத்திற் சுகங்கள்தமைக் கல்லால் எறிந்த பகைக்குவழி காட்டா தொழிதல் கண்டாயே; கொல்லா அம்பும் சமர்க்களத்தில் குனியா வில்லும் கொண்டுநிற்கும் புல்லா டவனே! எமக்குறுதி புகன்றார் எங்கே அகன்றாரே? (பொ-ரை.) துன்புறுத்தாத அம்மையும், போர்க்களத்தில் வளைக்கப்பெறாத வில்லையும் கொண்டு நிற்கும் புல்லால் செய்யப்பெற்ற ஆடவனே, புகழ்வாய்ந்த மறைகளாலும் அறிதற்கு அரியவராகிய அண்ணாமலையாரின் அண்ணாமலையில் கிளிகளைக் கல்லால் எறிந்து ஓட்டிய பகையைக் கருதித் தலைவர் சென்றவழியைக் காட்டாமல் இருந்தாய்! எமக்கு உறுதிமொழி கூறிய தலைவர் எங்கே சென்றார்? அதனைக் கூறுவாயாக. (வி-ரை.) இது தலைவி இரங்கிக் கூறியது; தலைவன் இரங்கியதாகவும் கூறுவர். புல் ஆடவன் என்றது தினைக் கொல்லையில் ஆடவன் உருவில் செய்து வைக்கப் பெற்ற (வைக்கோல், புல் கழிகளை வைத்துத் துணிபோர்த்து வைக்கப் பெற்ற) பதுமையை, புல்லாடவன் கையில் வில்லும் அம்பும் வைத்தல் உண்மையால், அதனைக், கொல்லா அம்பு என்றும், சமர்க்களத்தில் குனியாவில் என்றும் கூறினார். சமர்க்களம் - போர்க்களம்; குனிதல் - வளைதல்; உறுதி என்றது, பிரியேன்; பிரியின் உயிர் தரியேன் என்று கூறியதை. (19) 20. அருந்தமிழ் செப்பிடும் நீர்மை பிரிவு விலக்கல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் ஆரும்வி ரும்பிய கல்விமேல் ஆசையு மக்குள தாயிடிற் பாருற என்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே நீரும்அ ருந்தமிழ் செப்பிடும் நீர்மைய றிந்திவண் ஏகுவீர்; மேருநெ டுஞ்சிலை அத்தனார், வீறரு ணாபுரி வெற்பரே! (பொ-ரை.) மேருமலையை நெடிய வில்லாகக் கொண்டு சிவபெருமனார் விளங்கும் அருணை நகரிலுள்ள மலை மன்னரே, நுமக்கு எவரும் விரும்பும் கல்விமேல் விருப்பம் உண்டாயின், மேலும் உலகில் வாழ்ந்திருக்குமாறு எலும்பை ஒரு பெண்ணாகப் பாடிய தமிழ் ஞானசம்பந்தரைப் போல நீவிரும் அரிய தமிழ்ப் பண்பாடும் தன்மையறிந்து இவண் மீள்வீராக. (வி-ரை.) பிரிவு விலக்கல் என்றது தலைவன் பிரிவைக் குறிப்பால் அறிந்த தலைவி பிரிவினால் ஆகும் துன்பத்தைக் குறிப்பால் உரைத்துப் பிரிந்து செல்லாமல் விலக்குதலாம். கல்விமேல் ஆசை என்றமையால் ஓதற் பிரிவு என்க. என்பு ஒரு பாவையாகப் பாடிய பாவலர் திருஞான சம்பந்தர்; பாவை - பூம்பாவை என்பாள். நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை அறிந்திவண் ஏகுவீர் என்றமையால், யானும் இறந்துபடுவேன்; என் என்பினைப் பாவையாக எழுப்பவல்லீரோ! அக் கலை வல்லீராயின் செல்க என்றுரைத்துப் பிரிவு விலக்கினாள். என்பு பெண்ணுருவாக்கிய செய்தி, திருத்தொண்டர் புராணத்திற் கண்டது. திருமயிலையைச் சார்ந்தவர் சிவநேசர் என்பார். அவர் திருமகளார் பூம்பாவையார். ஞானசம்பந்தருக்கு அவரைத் தர உறுதி கொண்டார் சிவநேசர். இந் நிலையில் பாவையாரைப் பாம்பு தீண்ட இறந்தார்; அவர் உடலை எரித்து என்பை எடுத்துக் குடத்தில் இட்டு வைத்து ஞானசம்பந்தத் திருமயிலைக்கு வந்த காலையில் நிகழ்ந்தன உரைத்து எலும்பு இருந்த பொற்குடத்தை ஏந்தி நின்றார் சிவநேசர். பிள்ளையார் பாவிசைப் பதிகம் பாடிப் பாவையை எழுப்பினார். (20) 21. இளவேனிற் கால இயல்பு இரங்கல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் வெற்றிமதன் போர்க்காய வம்பிறைக்கும் காலம் வெங்கனலே போற்காய வம்பிறைக்கும் காலம் சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம் தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம் கற்றைநெடுஞ் சடைமுடியார் அடியார்மேல் முழுதும் கருணைநாட் டம்புரியும் அருணைநாட் டுறையும் பெற்றவிளந் தென்றல்மறு கிடத்தியங்கும் காலம் பேதையேன் சிந்தைமறு கிடத்தியங்கும் காலம். (பொ-ரை.) வெற்றிகொள்ளும் மன்மதன் போர்க்கு ஏற்ற அம்புகளை ஏவும்காலம்; வெவ்விய தீயேபோல வெதுப்ப அழகிய நிலா ஒளிவீசும் காலம்; இருகைகளும் ஏனோ சிறிதும் வளையல் பூணாத காலம்; தலைவர் தாம் கூடும் இடம்மறந்து என் அன்பைக் கருதாத காலம்; திரண்டு நீண்ட சடை முடியுடைய சிவனார் தம் அடியார்களின்மேல் பேரருள் நோக்கம் செய்யும் அண்ணாமலை நாட்டில் தங்கிய இளந்தென்றல் காற்று வீதியில் உலாக்கொள்ளும் காலம்; இம் மாலைக் காலம், சூழ்ச்சித்திறம் அறியாத யான் மனம் மயங்கிக் கலங்கும் காலமுமாம். (வி-ரை.) இப் பாடலில் மடக்கணி அமைந்துள்ளது. அம்பிறைக்கும் காலம் என்பதை அம்பு இறைக்கும் காலம் என்றும், அம்பிறைக்கும் காலம் என்றும், என்னே சங்கணியாக் காலம் என்பதை என்னே சங்கு அணியாக்காலம் என்றும் என் நேசம் கணியாக் காலம் என்றும், மறுகிடத்தியங்கும் என்பதை மறுகு இடத்து இயங்கும் என்றும் மறுகிடத் தியங்கும் என்றும் பிரித்துப் பொருள் காண்க. பிறை - நிலா; நேசம் - அன்பு; கணித்தல் - கருதுதல், அளவிடுதல்; மறுகு - பெருந்தெரு. மறுகுதல் - மயங்குதல்; தியங்குதல் - கலங்குதல்; பேதை - அறியாத்தன்மை. (21) 22. சூலமும் மழுவும் சுமந்ததேன்? அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் காலில் துலங்கும் நகத்தாலும் கையிற் பொலிகூர் நகத்தாலும் சீலத் தரக்கன் உரங்கொண்டீர் திசைமா முகனைச் சிரங்கொண்டீர் மேலைப் புரத்தை நகைத்தெரித்தீர் வில்வேள் புரத்தை விழித்தெரித்தீர் சூலப் படையேன் மழுப்படையேன் சுமந்தீர் அருணை அமர்ந்தீரே. (பொ-ரை.) அருணைப்பதியை விரும்பிய பெருமானே, காலில் விளங்கும் நகத்தாலும், கையில் விளங்கும் கூரிய நகத்தாலும் முறையே பத்தி ஒழுக்கம் அமைந்த இராவணன் வலிமையையும், பெருமைமிக்க நான்முகன் தலையையும் கொண்டீர்; மேம்பட்ட முப்புரங்களை நகையால் எரித்தீர்; வில்வேள் ஆகிய மன்மதனது உடலை விழியால் எரித்தீர்; இவ்வாறாக, நுமக்குச் சூலப்படை எதற்காகவோ? மழுப்படைதான் எதற்காகவோ? இவற்றைக் கைக்கொண்டிருப்பது ஏன்? (வி-ரை.) அமர்தல் - விரும்புதல். காலில் துலங்கு நகத்தால் அரக்கன் உரத்தையும், கையில் பொலி நகத்தால் திசைமுகன் சிரத்தையும் கொண்டீர் என இயைக்க. இது நிரல்நிறை அணியாகும். வேள் என்பது முருகனையும் குறிக்கும் ஆகலின் அவனை நீக்கற்கு வில்வேள் என்றார். புரம் - உடல்; நகத்தாலும், நகைப்பாலும், விழிப்பாலும் அழித்தல் வல்ல நீவிர் படை சுமந்தது ஏன் என வினாவினார். இராவணன் கைலைமலையைப் பெயர்த்தானாக இறைவன் காலையூன்றி இராவணன் வலிமையைக் கெடுத்தார் என்பது அரக்கன் உரங் கொண்ட வரலாறு. நான்முகன் நானே முதற்கடவுள் என்று செருக்குக் கொண்டானாகச் சிவபெருமான் வயிரவரை ஏவி ஐந்து தலைகளுள் ஒருதலையைக் கொண்டார் என்பது திசை மாமுகனைச் சிரங்கொண்ட வரலாறு. (22) 23. தோளணி மாலை கொடுப்பீர் மாலை இரத்தல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் அமர்ந்தரு ணைப்பதி வாழ்வீரே! அன்பர்கள் அன்பினில் ஆழ்வீரே; சுமந்தொளிர் சூலம்எ டுப்பீரே; தோளணி மாலைகொ டுப்பீரேல்; இமந்தரு வெண்மதி காயாதே; இருகண்நெ டும்புனல் பாயாதே; கமழ்ந்தகு ழற்கொடி வாடாதே; கங்குலும் இப்படி நீடாதே. (பொ-ரை.) அருணை நகரை விரும்பி வாழ்பவரே, அடியார்கள் அன்புக் கடலில் மூழ்குபவரே, கனத்து விளங்கும் சூலத்தைப் பிடித்தவரே, நீவிர் நும் தோளில் அணிந்த மாலையைக் கொடுப்பீரே ஆனால், தண்மை தரும் வெண்மதி வெதுப்பாது; இரு கண்களில் இருந்தும் மிகுந்த நீர் பெருகி வழியாது; மணம் அமைந்த கூந்தலையுடைய கொடி போன்ற தலைவி வாட்டமுறாள்; இரவுப் பொழுதும் இவ்வாறு முடிவின்றி நீண்டு செல்லாது. (வி-ரை.) தலைவன் அணிந்த மாலையைத் தலைவிக்குத் தருமாறு தோழி வேண்டுதல் மாலை இரத்தலாகும். மாலை கொடுப்பதால் உண்டாம் பயனைப் பின்னிரண்டடிகளில் விரித்துரைத்தார். இப்பாடலில் அடிதோறும் மடக்கு என்னும் சொல்லணி அமைந்துள்ளது. (23) 24. நீறாய காலத்து நிகழ்ச்சி ஒன்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் நீடாழி ஞாலம் வானொடு தீகாலு லாவுமி யாவையும் நீறாய காலமாய் விடுநாள் கோடாழி மால்பி தாமகன் நூறான கோடி வீழ்தலை கோடீர பாரமீ துறவே சூடாத மாலை சூடுவர் தோளோடு தோளை வீசுவர் சோணாச லேசர்சோ பனமா ஆடாத ஆடல் ஆடுவர் பாடாத பாடல் பாடுவர் ஆராத ஓகைகூ ருவரே. (பொ-ரை.) அண்ணாமலையார், பெரிய கடலும், நிலமும், விண்ணும், தீயும், காற்றும் - இவற்றுள் அமைந்தவை எல்லாமும் சாம்பலாகிவிடும் ஊழிநாளில், சங்கும் சக்கரமும் உடைய திருமால், நான்முகன் ஆகியவர்களின் இறந்த எண்ணற்ற தலைகளைத் தம் சடைத் தலைமேல் பிறர் சூடாத மாலையாகச் சூடுவர்; தோளோடு தோளை வீசிக் களிப்பர்; மங்கலமாக ஆடாத ஆடல்களையெல்லாம் ஆடுவர்; பாடாத பாடல்களை யெல்லாம் பாடுவர்; அளவிறந்த உவகை அடைவர். (வி-ரை.) உலகை விரித்த இறைவன், அதனை ஒடுங்கிய நிலையைக் கூறியது ஊழி நிகழ்ச்சியாம். கோடு - சங்கு; ஆழி - சக்கரம்; மால் - திருமால்; பிதாமகன் - நான்முகன்; இவர்கள் எண்ணற்றவராய் அழிந்தமை, நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே என்னும் நாவுக்கரசர் வாக்கால் புலப்படும். நூறான கோடி என்றது எண்ணற்ற என்னும் பொருட்டது. சூடாத மாலை என்றது தலை மாலையை; ஆடாத ஆட்டம் என்றது பாண்டரங்கம், கொட்டி என்னும் ஆட்டங்களை; பாடாத பாடல் என்றது சாமகானம் என்பர்; ஆராத ஓகை என்றது ஊழிக்காலக் கெக்கலியை. (24) 25. புன்னையே! உன்னையும் நீத்தார் உளரோ? புன்னாகம் கண்டு இரங்கல் கலித்துறை கூத்தாடும் அருணேசர் வரையன்பர் பொருளன்பு கொண்டுன்னையும் நீத்தார்கொல்; நிழராரும் இலையாகி நின்றாய்;நெ டுங்காலமே; பார்த்தாலு மயலேகி ளைத்தாய்ச லித்தாய்ப சுந்தென்றலால் பூத்தாய்பொன் னிறமாக என்னாக மேயன்ன புன்னாகமே. (பொ-ரை.) என் உடலே போன்ற புன்னாகமே, கூத்தாடும் அண்ணாமலையாரின் மலையின்கண் உள்ள தலைவர், பொருள் மேல் பற்றுக் கொண்டு என்னைப் பிரித்தாற் போலவே உன்னையும் பிரிந்தாரோ? துணையாரும் இல்லாமல் நிற்கும் என்னைப் போலவே நீயும் நிழல்தரும் நெருங்கிய இலையுடை யையாய் நின்றாய்; நெடுநாள் பார்த்தாலும் மையல் உடைய என்னைப் போலவே நீயும் பக்கமெல்லாம் கிளைத்துத் தழைத்தாய்; யான் சலித்தது (இளைத்தது) போலவே நீயும் சலித்தாய்; (அசைந்தாய்); யான் பொன்னிறப் பசலை பூத்தது போலவே நீயும் இளந்தென்றல் காற்றால் பொன்னிறமாகப் பூத்தாய். (வி-ரை.) இது பொருள்வயிற் பிரிந்த தலைவன் வாராமை கண்டு தலைவி தன்னைப்போன்ற தன்மை படைத்த கடற்கரைப் புன்னை மரத்தைக் கண்டு புலம்பிக் கூறியது. நிழலாரும்.... பொன்னிறமாக என்பதுவரை, புன்னாகத்திற்கும் தலைவி உடலுக்கும் இரட்டுறல் (சிலேடை). புன்னாகம் - புன்னைமரம். (25) 26. மன்னவர் எண்ணம் விளங்காவே இரங்கல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் நாகமெ டுத்தவர் அம்பானார் நாலும றைக்குவ ரம்பானார் தோகையி டத்தவர் சேணாராய் சோணகி ரிப்பதி வாணாராய்! மாகம டுத்தஇ ளங்கோவே! மன்னவர் எண்ணம்வி ளங்காவே! கோகன கத்திமி ருந்தேனே! கொண்கரை விட்டுமி ருந்தேன். (பொ-ரை.) கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்த வரை அம்பாகக் கொண்டவரும், நான்கு மறைகளுக்கும் எல்லையானவரும், உமையம்மையை இடமாகக் கொண்டவரும் ஆகிய சிவனாரைத் தேவர்கள் கூடி ஆராயும் அண்ணாமலைப் பதியில் வாழும் நாரையே, வானளாவ வளர்ந்த வளமிக்க சோலையே, என் தலைவர் எண்ணம் யாதொன்றும் விளங்க வில்லை; தாமரைமலரில் ஒலிக்கும் வண்டே, என் கணவரை பிரிந்துவிட்டும், இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேனே! (வி-ரை.) இதுவும் தலைவி நாரையையும், சோலையையும், வண்டையும் நோக்கி இரங்கிக் கூறியதேயாம். நாகம் - மலை; கோவர்த்தனமலை; அடைமழையைத் தடுத்து ஆவினத்தையும் கோவலரையும் காப்பதற்காகக் குன்றைக் குடையாகப் பிடித்த கதையை உட்கொண்ட செய்தி இது. தோகை - மயில் போன்ற உமையம்மை; சேண் - விண்; இவண் விண்ணவரைக் குறித்தது. வாணாராய் என்றது வாழ் நாராய் எனப் பிரிந்து நாரையை விளித்தது, மாகம் - வானம்; கோகனத்து இமிரும் தேன் - தாமரையில் ஒலிக்கும் தேனீ; பொதுவாக வண்டுமாம். இப் பாடல் மடக்கு என்னும் சொல்லணிப்பாற்பட்டதாம். (26) 27. ஆடீர் ஊசல் ஊசல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் இருசரணச் சிலம்பாட ஆடீர் ஊசல்; இளமுளைப்பொற் சிலம்பாட ஆடீர் ஊசல்; மருவுகலை மருங்கசைய ஆடீர் ஊசல்; வரிவளைக்கை மருங்கசைய ஆடீர் ஊசல்; அருமறைகள் அளவிடுதற் கரிதாம் ஐயர் அருணகிரிப் பரமர்புகழ் அடைவே பாடிப் பொருமிருகட் கயலுலவ ஆடீர் ஊசல்; புயமதனன் கயலுலவ ஆடீர் ஊசர். (பொ-ரை.) இருகால்களிலும் அணிந்துள்ள சிலம்புகள் அசையுமாறு ஊசல் ஆடுவீராக; இளமார்பாகிய அழகிய மலைகள் அசைய ஊசல் ஆடுவீராக; ஆடையணிந்த இடை அசையுமாறு ஊசல் ஆடுவீராக; வரிகளையுடைய வளையல் அணிந்த கைகள் பக்கங்களில் அசையுமாறு ஊசல் ஆடுவீராக; அரிய திருமறைகளாலும் அளவிட்டு உரைத்தற்கு அரியராம் தலைவர் அண்ணாமலையார் புகழை முறைமையாகப் பாடி, போர்புரியும் இருகண்களாகிய மீன்கள் உலாவ ஊசல் ஆடுவீராக; அழகிய தோளையுடைய மன்மதன் நன்றாகப் பக்கத்தே உலாவ ஊசல் ஆடுவீராக. (வி-ரை.) தலைவி ஊசலில் இருக்க அவ்வூசல் ஆட்டும் மகளிர் பாடுவதாக அமைந்தது இப்பாடல். ஊசல் ஆசிரிய விருத்தத்தாலாவது, கலித்தாழிசையாலாவது பாடப்பெறும். ஆடுக ஊசல், ஆடாமோ ஊசல் என்னும் முடிப்புடனும் இது வரும். சிலப்பாட மருங்கசைய கயலுலவ என்பவை மடக்காக வந்தன. சிலம்பு என்பது காலணியையும் மலையையும் குறித்தது. மருங்கு என்பது இடையையும் பக்கத்தையும் குறித்தது. கயலுலவ என்பது மீன் உலவுதலையும், அயல் உலவுதலையும் குறித்தது. புயமதனன் கயலுலவ என்பதைப் புய மதன் நன்கு அயல் உலவ எனப் பிரித்துக் கொள்க. (27) 28. மாலை விளைத்தவர் யாவர்? பாங்கி கழறல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் ஊசலு கைத்திடுவார்; குன்றெதிர் கூவிடுவார்; ஒண்தர ளங்கொளுவார்; தண்டலை கொய்திடுவார்; ஆசில்பு னல்குடைவார்; அம்மனை பந்துகழங் காடிம கிழ்ந்திடுவார்; கோடிம டந்தையரே, ஈசர்வி டைக்கொடியார் பூசைசெ யற்கெளியார் ஏரரு ணைப்பதிசூழ் மேருவினிற் கவணே வீசுதி னைப்புனமே யாவரெ னத்தெளியேம் வேலர்ம னத்திடையே மாலைவி ளைத்தவரே. (பொ-ரை.) இறைவரும், இடபக்கொடியுடைவரும், வழிபடுதற்கு எளியவரும் ஆய சிவபெருமானது அழகிய அருணைநகர் சூழ்ந்த மலையில், கவண் வீசுகின்ற தினைப் புனத்தில் ஊஞ்சல் ஆட்டுவார்; குன்று ஒலி செய்யக் கூவுவார்; ஒளி பொருந்திய முத்துகளைக் கொள்வார்; சோலையில் உள்ள பூக்களையும் தளிர்களையும் கொய்வார்; குற்றமற்ற நீரில் ஆடுவார்; அம்மனை, பந்து, கழங்கு ஆகியவற்றை ஆடிமகிழ்வார்; இத்தகையர் எண்ணற்ற மகளிர் உளர்; அவருள் வேற்கையராகிய நும் மனத்தில் மயக்கம் உண்டாக்கியவர் எவர் என்பதை யாம் தெளியேம். (இவர் என்று தெளியக் கூறுவீராக). (வி-ரை.) இப் புனத்துள்ள மகளிர் பலர்; இவருள் நும்மைக் கவர்ந்தவள் யாவள் எனத் தோழி. தலைவனை வினாவியது இது. கழறல் - கூறல். உகைத்தல் - செலுத்தல்; தண்டலை - சோலை; ஆசு - குற்றம்; விடை - இடபம் (காளை). வேலர் - வேலையுடைய தலைவரே; விளி. (28) 29. அருணாசலத்தார் கலிவிருத்தம் மாலையென்பாங் கலத்தாரும் மறைநாறுங் கலத்தாரும் கோலமன்ன கலத்தாரும் குறைவில்பரி கலத்தாரும் மாலைவில்வேள் சலத்தாரும் மதர்த்தமதா சலத்தாரும் மேலகலாச் சலத்தாரும் விளங்கருணா சலத்தாரே. (பொ-ரை.) எலும்பு மாலையாகி அணிகலத்தினரும், திருமறை மணக்கும் நான்முகன் தலையாம் கலத்தினரும், பன்றிக் கொம்பு நிலைபெற்ற மார்பினரும், குறைவில்லாத பூதப்படை யினரும், மாலைப் பொழுதில் அம்புதொடுக்கும் மன்மதனைச் சினந்து அழித்தவரும், களிப்புடைய அயிராவணம் என்னும் யானையை உடையவரும், உச்சியின்மேல் வற்றாத கங்கையை உடையவரும் விளக்கமிக்க அருணாசலத்து அண்ணலே ஆவார். (வி-ரை.) மாலை என்பாங் கலத்தாரும் என்பதை என்பு மாலை ஆம் கலத்தாரும் என மாற்றி இயைத்துப் பொருள் கொள்க. மறை மொழியும் நாவினன் நான்முகன் ஆகலின் அவன் தலையை மறை நாறும் கலம் என்றார். சலம் - கோபம்; மதாசலம் - மதமலை; அஃது அயிராவணம்; பக்கத்திற்கு ஆயிரம் கொம்பு களை உடையது என்பர். சலம் - நீர்; கங்கையைக் குறித்தது. அருணாசலத்தார் என்னும் பெயரமைதிகொண்டு சொல்லழகு அமைய இப் பாடல் நடையிடுகிறது; இது மடக்கணியின் பாற்படும். (29) 30. அருணை மடந்தை அழகு தலைவியைப் புகழ்தல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் அருணனொளி தனிலுமொளிர் அருமலைம ருந்தாய அமலரதி ருங்கழலினார் மருமலர்வி ரிந்துநதி பெருகருணை யம்பதியின் மருவியம டந்தையிடையாம் ஒருகொடியில் ஒன்றுகமு கொருபவளம் ஒன்றுகுமிழ் ஒருமதியம் ஒன்றுபிறைதான் இருசிலையி ரண்டுகணை இருபணைஇ ரண்டுகுழை இருமுலைஇ ரண்டுமலையே (பொ-ரை.) ஞாயிற்றின் ஒளியிலும் மிகுந்து ஒளிரும் அரிய மலைமேல் மருந்து ஆகியவரும், களங்கமற்றவரும், அதிருங் கழலினார் என்னும் திருப்பெயர் உடையவரும், மணம் பரவும் மலர்கள் விரியும் வண்ணம் நதி பெருகிவரும் அருணைப்பதியில் வாழும் மங்கையின் இடை எனப்பெறும் ஒரு கொடியில் ஒரு கமுகும், ஒரு பவளமும், ஒரு வில்லும், இரண்டு கணைகளும், இரண்டு மூங்கில்களும், இரண்டு இலைகளும், இரு முல்லைச் சரங்களும், இரண்டு மலைகளும் அழகாக அமைந்துள்ளன. (வி-ரை.) நின்னைக் கவர்ந்தாள் யாவள் என வினாவிய தோழிக்குத் தலைவன் தலைவியின் எழில் நலம் முழுதுறப் புனைந்துரைத்தது இது. மங்கையின் இடையைக் கொடி என்று கூறி, அக் கொடியில் உள்ளவை இவை என அடுக்கினான். கமுகு கழுத்தையும், பவழம் இதழையும், குமிழ் மூக்கையும், மதி முகத்தையும், பிறை நெற்றியையும், சிலை புருவத்தையும், கணை கண்ணையும், மூங்கில் தோளையும், இலை காதையும், முல்லை பல்லையும், மலை மார்பகத்தையும் உவமையால் குறித்தன. சிலை - வில்; இலை - வள்ளை இலை; காதிற்கு வள்ளை உவமை ஆதலான். முலை என்றது இடைக்குறை. அஃதாவது முல்லை; இரு பல்வரிசைகளையும் சுட்டலால் முல்லை முல்லைச்சரம் எனப் பெற்றது. இதழ் இரண்டாகலின் ஒரு பவளம் என்பதை ஒப்பற்ற பவளம் எனக் கொள்க. இருமுலை இரண்டு மலையே என்பதை முல்லையெனக் கொள்ளாமல் முலை என்றே கொண்டுரைப்பாரும் உளர். ஆயின், பிறவெல்லாம் உறுப்பைச் சுட்டாமல் உரைக்கப் பெற்றமையால் ஆசிரியர் நோக்கு அஃதன்று என்க. ஒரு இரு என்னும் சொல்லும் பொருளும் பன்முறை தொடர்தலால் இது சொற்பொருள் பின்வரு நிலையணியாம். அதிருங்கழலினார் என்னும் பெயருண்மை அதிருங் கழற்பெருமாள் என முன்னே (13) உரைத்தமையாலும் புலனாம். மலைமேல் மருந்தர் என்பதும் பெயர். (30) 31. இனி எழுதேன் இருப்பு மனம் தலைவன், தலைவியின் உறுப்பருமை கூறி எளிதில் ஓவியம் வரைவேன் எனல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மலையாச னத்தர்மலை மயிலாச னத்தர்எழு மலையானி லத்து வருவார் அலையாச னத்தரொடும் அமிர்தாச னத்தர்தொழும் அருணாச லத்தர் வரையீர்! முலையானை கட்டிஇடை வெளிதேர்நி றுத்திமதி முகமாய்அ மைத்த ருகுலாம் இலைவேல்ப ரப்பிஇனி தெழுதோள மைப்பனினி எழுதேன்இ ருப்பு மனமே (பொ-ரை.) கயிலைமலையை இருப்பாக உடையவரும், மலைமகளின் மகிழ்நகை விரும்புபவரும், மெல்லென எழும் தென்றற் காற்றொடு வருபவரும், பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலும், அமுதத்தை உண்ணும் தேவர்களும் வழிபடுபவரும் ஆகிய அண்ணாமலையாரின் மலையில் உள்ளீர், கொங்கை களாகிய யானைகளைக் கட்டி, இடையாகிய வெளியில் அல்குலாகிய தேரை நிறுத்தி, மதியாகிய முகத்தை அமைத்து, அருகே உலாவுவதாகிய இலைவடிவில் அமைந்த வேல்களைப் பரப்பி, இனிதாய் எழும் தோளை அமைப்பேன்; இனி இரும்பு போன்ற மனத்தை எழுதேன். (வி-ரை.) வரையீர் என்றது வரையிடத்துள்ள மகளிரை. தலைவியின் உறுப்பு எழுதும் அருமை கூறினாராக, அதனைத் தான் எளிதில் எழுதவல்லனாதல் தலைவன் உரைத்தான். மலைமயில் - உமை; ஆசம் நத்தர் - நகைப்பை நத்துபவர்; மலை யானிலம் - தென்றல் காற்று; தென்றல் - இளவேனில் காலத்திற்கு உரியது. அக்காலத்தில் அண்ணாமலையார் அழகுற உலாக் கொள்வார்; ஆதலால் மலையானிலத்து வருவார் என்றார். இதனை வயந்த விழா அழகர் என்று முன்னே (14) குறித்தார். வசந்தராயர் வசந்தவிநோதன் என்றும் கூறுவார். அமிர்தா சனத்தர் - அமிர்தம் அசனத்தர்; அசனத்தர் - உண்பவர். இலை வேல் - இலைவடிவில் செய்யப்பெற்ற வேல். உறுப்பெல்லாம் எழுதுவேன்; மனமும் எழுதுவேன்; ஆனால் இளக்கமற்று இரும்பாக இருத்தலால் அதனை மட்டும் எழுதேன் என்றானாம். (31) 32. அண்ணாமலையார் வன்கண்ணர் இரங்கல் கட்டளைக் கலித்துறை மேலாடை தோற்றணி சங்காழி கைவிட்டு மென்சிலம்பின் காலால் வருந்தி நிலங்கீறும் கோலத்தைக் கண்டிருந்தும் ஆலாலம் உண்டவர் அண்ணா மலையர்தம் அன்பர்க்கன்றி மாலான வர்க்கிரங் காரிங்ங னேயொரு வன்கண்ணரே. இச்செய்யுள் தலைவிக்கும் திருமாலுக்கும் இரட்டுற மொழிதல். தலைவிக்கு : காதல் மிகுதியால் மேல் அணிந்த ஆடை இழந்து, அணிந்த சங்கு வளையலையும், மோதிரத்தையும் நழுவவிட்டு மெல்லிய சிலம்பு அணிந்த கால் விரலால் வருந்தி நிலம் கிளைக்கும் தன்மையை அறிந்திருந்தும், ஆலால விடத்தை உண்டவராகிய அண்ணாமலையார் தம் அடியார்க்கு அல்லாமல் மயக்க முற்றவர்க்கு இரக்கம் காட்டார் போலும். இவ்வாறு இரக்க மிலாராய் ஒருவரும் உண்டோ? திருமாலுக்கு : மேலே அணிந்த ஆடையை இழந்து, அழகிய சங்கு சக்கரங் களையும் கைவிட்டு அண்ணாமலையின் அடியைக் காணும் முயற்சியால் வருந்தி மெல்லென நிலம் தோண்டும் பன்றியுருவைக் கண்டிருந்தும், ஆலால விடத்தை உண்டவராகிய அண்ணா மலையார் தம் அடியார்க்கு அல்லாமல் திருமாலானவர்க்கு இரக்கம் காட்டார் போலும். இவ்வாறு இரக்கமிலாராய் ஒருவரும் உண்டோ? (வி-ரை.) கோலம் - தன்மை, பன்றி. மாலானர் - மையலுற்ற மகளிர், திருமால். இங்ஙனம் என்பது இங்ஙன் எனத் தொகுத்து வந்தது; வன்கண்ணர் - இரக்கமில்லார். அமரர் அழிந்து படாவண்ணம் ஆலாலம் உண்டவர் மாலானவர்க்கு வன்கண்ணராயிருத்தல் என் என முரண் நயம்படக் கூறினார். (32) 33. திண்ணருக்கு நன்றாய்த் தெரிந்தது நேரிசை வெண்பா கண்ணருக்கும் போதருக்கும் காண்பரிதாய்க் கண்பறித்த திண்ணருக்கு நன்றாய்த் தெரிந்ததே - விண்ணருக்குப் போற்றுவார் அண்ணார் புரமெரித்தார் என்பிறவி மாற்றுவார் அண்ணா மலை. (பொ-ரை.) வானோரால் மனம் நெகிழ்ந்து போற்றப்படு பவரும், பகைவர் முப்புரங்களை எரித்தவரும், என் பிறவியை இல்லாது ஒழிப்பவரும் ஆகிய அண்ணாமலையார் திருவுருவம், திருமாலுக்கும் நான்முகனுக்கும் காணுதற்கு அரிதாய்த் தம் கண்ணைப் பறித்தெடுத்த திண்ணனார்க்கு நன்றாகத் தெரிந்தது. (வி-ரை.) விண்ணருக்கு (விண்ணர் உக்கு) விண்ணவர் மனம் நெகிழ்ந்து. அண்ணார் - நெருங்கார் (பகைவர்). கண்ணர் - கரியர் ஆகிய திருமால்; போதர் - திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றியவராகிய நான்முகன்; கண்பறித்த திண்ணர் - கண்ணப்பர்; அவர்தம் பிள்ளைப் பெயர் திண்ணனார் ஆகலின் அதனைச் சுட்டினார். கண்ணன் என்னும் பெயருடையார் திருமால்; எட்டுக் கண்ணுடையார் நான்முகன்; ஒற்றைக் கண்ணை அகழ்ந்து மற்றைக் கண்ணை அகழ்ந்தெடுக்க அம்பை ஊன்றியவர் திண்ணனார்; அவர் கண்ட காட்சியைக் கண்ணுடையார் கண்டிலர். இதனால் அண்ணாமலையார் அன்பர்க்கு அருளும் மாட்சி புலப்படுத்தார். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டு உருகினார் ஆசிரியர். (33) 34. கண் கடலத்தனை நீர் கலுழும் இரங்கல் கலிவிருத்தம் அண்ணா மலையத் தரடற் கிரிமேல் எண்ணா மலையத் தவரெய் திலரால் கண்ணா மலையத் தனைநீர் கலுழும் விண்ணா மலையத் தரும்வெண்மதியே. (பொ-ரை.) அண்ணாமலை இறைவரின் வலிய மலையின் மேல் எம்மை நினையாமல் எம் இனிய தலைவர் வந்திலர்; கண்கள் கடலாம் அவ்வளவு நீரைச் சொரியும்; நாம் வருந்துமாறு வானம் வெண்மதியைத் தோன்றச் செய்யும். (வி-ரை.) அடற்கிரி - வலிய மலை; அழற்கிரி என்பதும் பாடம்; எண்ணாமலையத்தவர் - எண்ணாத மலைநாடர். கண்ணாமலையத்தனை நீர் - கண் அலை ஆம் அத்தனை நீர்; அலை - கடல்; விண்ணாமலையத் தரும் - நாம் மலைய (வருந்த) விண் தரும்; நாம் அலைய எனினும் ஆம். தலைவன் வாராமையால் மதியங் கண்டு அழுங்கிய தலைவி கூற்று இது. இதனைக் காமமிக்க கழிபடர் கிளவி என்பர். (34) 35. முதலே மொழிந்தபடி தோழன் தலைவியைக் கண்டு உரைத்தது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மதுவால்நி றைந்தகுழல் மடவார்நெ ருங்கருணை மலைமேல்ம ருந்தர் வரையின் முதுநீரில் வந்தவவர் அடையாளம் என்றிறைவர் முதலேமொ ழிந்த படியே; இதுநாக மன்றுமுலை; இதுபூக மன்றுகளம்; இதுமேக மன்ற ளகமே; அதுநீல மன்றுவிழி; அதுசாப மன்றுநுதல்; அதுகோப மன்ற தரமே. (பொ-ரை.) தேனொழுகும் மலரால் நிறைந்த கூந்தலை யுடைய பெண்ணார் புகழ்வாய்ந்த அருணைப் பதியில் உள்ள மலைமேல் மருந்தர் என்னும் பெயருடைய அண்ணாமலை யாரின் மலையில், திருப்பாற் கடலில் வந்த திருமகளன்னது அவரின் அடையாளம் என்று தலைவர் முன்னே கூறிய படியேயாம். இவ்வுறுப்பு மலையன்று, கொங்கை; இவ்வுறுப்பு கமுகன்று, கழுத்து; இவ்வுறுப்பு மேகமன்று, கூந்தல்; அவ்வுறுப்பு நீலமலர் அன்று, விழி; அது வில் அன்று, புருவம்; அஃது இந்திரகோபம் அன்று, இதழ். (வி-ரை.) முதுநீர் - கடல்; இவண் பாற்கடவைக் குறித்தது; திருமகள் ஆங்குத் தோன்றினாள் என்பது கதை ஆதலின். நாகம் - மலை; பூகம் - கமுகு; அளகம் - கூந்தல்; சாபம் - வில்; கோபம் - இந்திர கோபப் பூச்சி; தம்பலப்புச்சி என்பதும் அது. இது நாகமன்று முலை என்பது முதல் உவமையை மறுத்துரைக்கப்பட்டன. இவ்வாறு கூறுவதை உண்மை உவமை என்பார் தண்டியார். அவர் கூறும் எடுத்துக் காட்டு : தாமரை அன்று முகமேஈ தீங்கிவையும் காமருவண் டல்ல கருநெடுங்கண் - தேமருவு வல்லியின் அல்லன் இவளென் மனங்கவரும் அல்லி மலர்க்கோதை யாள். (31:5) (35) 36. இருகண் நித்திரை இலை நாரை விடு தூது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் அருணை வெற்பினர் அயனி ருக்கவும் அரிபி ழைக்கவூம் ஆகவே திருமி டற்றொரு கருமை வைத்தவர் திருந திக்கயல் தேடியே கருது நெட்டுடல் அசைவ றத்துயில் கபட நித்திரை நாரைகாள்! இருகண் நித்திரை இலையெ னச்சொல இறைவர் பக்கலில் ஏகுமே. (பொ-ரை.) நான்முகன் உயிர்வாழவும், திருமால் பிழைத்துக் கொள்ளவுமாகவே அழகிய கண்டத்தில் நஞ்சின் கருமையைக் கொண்டவராகிய அண்ணாமலையாரின் திரு நதியில் வாழும் கயல்மீனைத் தேடி, ஆராயும் நீண்ட உடல் அசைவின்றிப் பொய்யுறக்கம் உறங்கும் நாரைகளே, எனக்கு இருகண்களும் உறக்கம் இல்லை என்பதைக் கூறுதற்குத் தலைவர் பக்கத்தில் செல்லும். (வி-ரை.) விண்ணோரை உய்யக்கொண்டதுநீலகண்டம்ஆகலின்அயன்இருக்கவும்........it¤jt®” என்றார். திருநதி என்பது ஆற்றின் பெயர். அஃது அண்ணாமலைக்கு வடபால் ஓடுவது; பொய்யுறக்கம் கொள்ளும் நீ, மெய்யாகவே உறங்காத என் நிலைமையைத் தலைவற்குக் கூறு எனத் தூதுரைத் தாளாம். நாரை நெய்தற் கருப்பொருள் ஆகலின் இரங்கல் உரிப்பொருளுக்கு உரிமையாயிற்று. (36) 37. போகாத ஊர்க்கு வழிதேடுவார் தோழி தலைவிக்கு cரைத்தல் fட்டளைக்fȤJiw ஏகார் புனத்துத் ‘தழையாற்fரிபட்டbதன்பரென்றும்nghfhj ஊர்க்கு வழிதேடு வார்புலிக் கான்முனியும் நாகா திபரும் தொழும்அரு ணாசல நாட்டிலிளம் தோகாய்! mz§fid ahŒ!அவர்க் கேது சொலத்தக்கதே. (பொ-ரை.) வியாக்கிர பாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலியார் என்னும் நாகாதிபரும் தொழும் அண்ணாமலை நாட்டில் இளமயில் போன்றவளே, தெய்வமகள் போன்றவளே, தினைப்புனத்தை விடுத்துச் செல்லார், தம் கையில் கொண்ட தழையால் யானை வீழ்த்தப்பட்டது என்பார்; அன்றியும் தாம் என்றும் போகாத ஊருக்கு வழி கேட்டு ஆராய்வார்; இத் தன்மையுடைய அவர்க்கு யான் சொல்லத் தக்கது யாது? சொல்வாயாக. (வி-ரை.) தழையுடன் வந்து புனம்விட்டு அகலாத தலைவன் நிலையைத் தோழி, தலைவிக்கு எடுத்துரைத்து அவள் வாய்மொழி கேட்க விழைந்தது இது. இறைவன் திருநடங்கண்டு அகலா தவர்கள் புலிக்கால் முனிவரும் நாகாதிபரும் ஆவர். அவர்கள் முறையே வியாக்கிரபாதர், பதஞ்சலியார் என அழைக்கப் பெறுவர். நாகாதிபர் என்றது ஆதிசேடனை; அவனே பதஞ்சலியாராக வந்தான் என்பது கதை. தலைவன் புனத்தில் உலாவுவதும், உரைப்பதும், வினாவுவதும் ஒன்றற்கொன்று தொடர்பற்றன ஆகலின் அவள் நோக்கம் வேறாகும்; அதனைக் கூறுக என்றாளாம். (37) 38. இனியளிக்கும் பதவிதனக்கு என் செய்வீர்? எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் சொர்க்கமெனும் ஒருபதவி இருக்க மாலைத் துளவணியும் அரிபதவி இருக்க மேலை நற்கயிலை மலையிருக்க நினைத்தோர்க் கெல்லாம் நயந்தமுத்தி நகரமொன்றே நல்கா நிற்பீர்; பொற்கையினால் உமைவணங்கிப் பரிந்து பூசை புரிந்துதவம் தெரிந்துதினம் புகழ்வோர்க் கெல்லாம் எற்குலவு புகழருணை ஈச னாரே இனியளிக்கும் பதவிதனக் கென்செய் வீரே? (பொ-ரை.) ஒளிவிளங்கும் புகழ்வாய்ந்த அண்ணா மலையாரே, சொர்க்கம் எனப்பெறும் ஒப்பற்ற பதவி இருக்கவும், துளவமாலை அணியும் திருமால் பதவி என ஒன்று இருக்கவும், மேம்பட்ட கயிலைமலை என ஒன்று இருக்கவும் நினைத்த வர்க்கெல்லாம் விரும்பிய முத்தியாகி நகரம் ஒன்றையே வழங்குவீர்; அழகிய கையால் உம்மை வணங்கி விருப்புடன் வழிபாடுசெய்து, தவநெறி பேணி, புகழ்ந்து பாடுபவர்களுக்கு இனிமேல் வழங்கக் கூடிய பதவிக்கு என்ன செய்வீர்? (வி-ரை.) நினைத்த அளவுக்கே முத்தி தரும் நீவிர், நினைந்து கையால் வணங்கி, வழிபாடு ஆற்றி, தவம் பேணி, புகழ்பாடி இருப்பவர்க்கு எப்பதவி தருவீர் என்று வினாவு முகத்தான் நினைக்க முத்தியருளும் அருணைப் பெருமை யுரைத்தாராம். அரிபதவி - வைகுண்ட பதவி; கயிலைமலை - கயிலாயபதவி. எற்குலவு - (எல் குலவு) ஒளி விளங்கும். அருணை, நினைத்தோர்க் கெல்லாம் முத்தி வழங்குதலை, அரிதினில் பெறும்பேறனைத்தும் ஒருகால் கருதினர்க் களிக்கும் என நூல் தொடக்கத்தே கூறினார். (38) 39. அருணைச் சித்தர் அருஞ்செயல் சித்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் வீரத்தை அணிமழுவார் உமைபங் காளர் விளங்கருணைச் சித்தர்யாம் விளம்பக் கேள்;ஆ காரத்தை எமக்கிடுகஞ் சத்தை யேகோ கனகமெனக் காட்டிடுவோம் கரியோ ருக்குத் தாரத்தைப் பொன்னாக அமைத்தோம் தம்பீ தாம்பரமும் பொன்னாகச் சமைத்தோம்; இந்தப் பாரத்தை யாரவிவார் அயனா கத்தைப் பசும்பொனிற மாகவுமே பாலித் தோமே. சித்துக்கும் இயல்புக்கும் இரட்டுறலாக அமைந்தது இச் செய்யுள். (பொ-ரை.) வீரம் விளங்கும் மழுப்படை உடையவரும் உமை ஒரு பாகருமாகிய சிவபெருமானார் விளங்கும் திருவருணைப்பதியில் உள்ள சித்தராகிய யாம் கூறுவதைக் கேட்பாயாக; சித்து : ஆ! படிக்காரத்தை எமக்குத் தா; வெண்கலத்தையே வியப்பான பொன்னாக்கிக் காட்டுவோம்; திருமாலுக்குத் தராவைப் பொன்னாகச் செய்தோம். தம்பீ! தாம்பரத்தையும் பொன்னாகச் செய்தோம்; இருப்பையும் நாகத்தையும் பசும்பொன் நிறமாகச் செய்தோம்; இத்தகைய பெருஞ்செயலை எவரே அறிவார்? இயல்பு : ஆகாரத்தை எமக்கு இடு; கஞ்சம் எனப்பெறும் தாமரையைக் கோகனம் எனச் செய்வோம். திருமாலுக்கு மனைவியைப் பொன்மகள் ஆக்கினோம்; அத் திருமாலின் பீதாம்பரத்தையும் பொன்னாடை ஆக்கினோம்; நான்முகன் உடலைப் பசும் பொன்னிறமாகப் படைத்தோம்; இப் பெருஞ்செயலை எவரே அறிவார்? (வி-ரை.) கோகனம் - தாமரை; பொன்மகள் - திருமகள்; பீதாம்பரம் - பொன்னாடை. பெயர் வேறாயினும் பொருள் மாறாமை அறிக. கஞ்சம் - வெண்கலம், தாமரை; ஆகாரத்தை என்பது ஆகாரம் என நின்றும் ஆ, காரம் எனப் பிரித்தும் பொருள் தந்தது. தம்பீ தாம்பரம் என்பது தம்பீ தாம்பரம் என நின்றும் தம் பீதாம்பரம் எனப் பிரிந்தும் பொருள் தந்தது. அயனாகம் என்பது அயன் (இரும்பு) நாகம் (துத்தநாகம்) என்றும் அயன் ஆகம் (நான்முகன் உடல்) என்றும் பிரிந்து பொருள் தந்தது. (39) 40. அருணைச் சித்தர் அருஞ்செயல் சித்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பாதமெமக் களித்தவரு ணேச னார்க்கின் பச்சிலைபொன் செய்திமையோர் பசிநோய் தீர ஓதுகடை மருந்தளித்த சித்த ரேம்யாம் ஒருபிடிசோ றல்லதுகூ ழுண்டோ அப்பா மாதவர்தம் திருவாணை கரிகள் எல்லாம் மாதங்கம் ஆக்குகிற்போம் மருந்தில் லாதே ஏதமற நாகமொளித் தரவாச் செய்வோம் இரும்பையும்பொன் னாகவுரைத் திசைவிப் போமே. இதுவும் சித்துக்கும் இயல்புக்கும் இரட்டுறலாக அமைந்ததாகும். சித்து : (பொ-ரை.) திருவடிப்பேறு எமக்கு அளித்த அண்ணா மலையார்க்கு இனிய கல்லைப் பொன்னாகச் செய்து, தேவர்களின் பசித்துயர் நீங்குமாறு உயர்ந்த கடை மருந்தினை அளித்த சித்தர்களாகிய யாங்கள், அப்பா, ஒருபிடி சோறே அல்லாமல் எனக்கு வேறு உணவு உண்டோ? சித்து வல்ல பெரியோர்கள் மேல் ஆணை! கரிகள் எல்லாவற்றையும் சிறந்த பொன்னாக்கு வோம்; மருந்து இல்லாமலே குறை நீங்கத் துத்த நாகத்தை ஒளியுடைய தராவாகச் செய்வோம்; இரும்பையும் பொன்னாக உரைகல்லில் தேய்த்துப் பொருந்தச் செய்வோம். இயல்பு ; திருவடிப்பேறு எமக்கு அருளிய அண்ணாமலையார்க்கு இனிய வில்லாகப் பொன்மலையாம் மேருமலையைச் செய்து, தேவர்களின் பசிநோய் தீர உயர்வாகக் கூறும் கடைந்து எடுத்த அமுதளித்த சித்தர்களாகிய நாங்கள் ஒருபிடி சோறு அல்லது வேறுணவு உண்டது இல்லை. அப்பா, அரிய தவத்தைச் செய்தவர்கள் மேல் ஆணை; கரிகளாகிய யானைகளை யெல்லாம் மாதங்கம் என்னும் பெயருடையதாக்குவோம்; மருந்து இல்லாமலே குற்றம் நீங்கப் பாம்பை ஒளியுடைய அரவு என்னும் பெயருடையாதாகச் செய்வோம்; இரும்பையும் கரும் பொன் என்னும் பெயரால் உரைத்துப் பொருந்தச் செய்வோம். (வி-ரை.) இன்பச்சிலை என்பதை இன் பச்சிலை எனப் பிரித்து இனிய பச்சிலை எனப் பொருள் கொள்ளினும் ஆம். மாதங்கம் என்பது யானையையும், அரவு பாம்பையும், கரும்பொன் இரும்பைக் குறிக்கும் வேறு பெயர்கள். அப் பெயர்களைக் குறிக்கு முகத்தான் சித்து விளையாடினார். சோறு என்பதும் கூழ் என்பதும் உணவேயாம். அப்பா என விளிப்பது சித்தர்நெறி. முன் பாடலிலும் இவ்வாறு வந்தமை அறிக. ஒளித் தரவா என்பதை ஒளி தரவு ஆ எனவும் ஒளித்து அரவு ஆ எனவும் பிரித்து இருபொருள் காண்க. தரா-ஓர் உலோகம். முன்னும் தாரத்தைப் பொன்னாக அமைத்தோம் என்றார். (40) 41. வசந்தன் படை எழுந்தது தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது எழுசீர் ஆசிரியவிருத்தம் இதழி யந்தொடையர் அருணை யங்கிரியில் இரத முந்திவிடு வலவனே! பதிய டைந்தமறு கினில்வ சந்தனதி படையெ ழுந்ததது பகருவேன் புதிய கொம்புசிலை வளையி ரண்டருகு பொழியும் வெம்பகழி போரறா உதய தந்தமத களிறு டன்கதலி உபய தண்டுவரு கின்றதே. (பொ-ரை.) அழகிய கொன்றை மாலை அணிந்த அண்ணாமலையாரது எழில் வாய்ந்த மலையின்கண் தேரை விரைந்து செலுத்துகின்ற வலவனே, ஊரைச் சேர்ந்தவீதியில் மன்மதன் படை எழுந்ததைச் சொல்வேன். கேட்பாயாக; புதுமையான ஊதுகொம்பும், வில்லும், சங்கும் இருபக்கத்தும் சொரிகின்ற கொடிய அம்புகளும், போர்த் தொழில் நீங்காத ஒளிவாய்ந்த தந்தத்தையுடைய யானையொடு, இருகதலித் தண்டுகளும் வருகின்றது. (வி-ரை.) தலைமகளின் உருவெளித் தோற்றம் கண்ட தலைவன் தன் தேர்ப்பாகனுக்கு அவள் உறுப்புகளை உரைத்தது இது. இதழி - கொன்றை; வசந்தன் - மன்மதன்; இளவேனில் காலத்திற்கு உரியவன் ஆகலின் இப்பெயர்பெற்றான். வசந்தன் படை - மகளிர்; கொம்பு இடையையும், வில் புருவத்தையும், சங்கு கழுத்தையும், அம்பு கண்ணையும், யானை கொங்கையையும், கதலித் தண்டு தொடையையும் குறித்தன. இவ்வனைத்தும் படைக் கலங்கள் ஆகலின் மகளிரை வசந்தன் படையெனக் கூறினார். படை என்னும் ஒருமைக்கு ஏற்ப வருகின்றது என வினை முடிவு கொண்டார். (41) 42. மாயன்போல இனியார் யார்? ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம் வரைக்கனக சாப, சோண கிரிப்புனித, கால கால, மதிக்குநெடு மாயர் போலவே தரைக்குளினி யாரி யாவர்? அவர்க்கு முனிலாமல் நீடு தழற்சிகரி யாகல் நீதியோ? விரைக்கமல ஓடை யாவர்; புரத்தைமுனி பாண மாவர்; விரித்தகொடி யாவர்; ஈதலால் இரக்குமனை தோறும் ஏறி நடத்துமெரு தாவர்; மேவி இடத்திலுறை தேவி யாவரே. (பொ-ரை). பொன்னிமலையை வில்லாக வுடையவரே, அண்ணாமலைத் தூயரே, காலனுக்கும் காலனானவரே, உம்மை மதிக்கின்ற நெடிய திருமாலைப் போல நிலத்தில் இனியவர் எவர் இருக்கின்றார்? அவர் மணம் பொருந்திய தாமரை ஓடையாக விளங்குவார்; முப்புரத்தை எரிக்கும் அம்பு ஆவார்; விரித்த இடபக் கொடியாவார்; இவையே அல்லாமல் இரந்து திரியும் மனைதோறும் ஏறி நடத்துகின்ற காளையும் ஆவார்; இடப் பாகத்து உறையும் உமையம்மையும் ஆவார். இத்தகைய இனிய அன்பராம் அவர்க்கு முன்னே காட்சி வழங்காமல் நெடிய நெருப்பு மலையாகி நின்றது நீதியாகுமோ? (வி-ரை) வரைக் கனகம் என்பதைக் கனகவரை என முன்பின் மாற்றுக. கனகவரை பொன்மலையாம் மேருமலை; சாபம் - வில்; மாயர் - கருநிறமானவர்; முனிலாமல் - முன் நில்லாமல்; தழற்சிகரி - நெருப்பு மலை; விரை - மணம். கமல ஓடை என்றது தாமரைக்காடு பூத்த தன்மையர் திருமால் என்பது கருதிக் கூறியது. புரம் - முப்புரம். சிவபெருமான் கொடியும் ஊர்தியும் இடபமே. ஊர்திவால்வெள் ஏறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ் ஏறென்ப என்பது பெருந்தேவனார் வாக்கு. (புறம், கடவுள்) அரியலால் தேவி இல்லை என்னும் ஆளுடைய பிள்ளையார் வாக்கால் அரி தேவியாதல் புலப்படும். (42) 43. ஊனிட உண்ட கடவுள் கட்டளைக் கலித்துறை ஆனிட பக்கொடிச் சோணா சலனென்றும் அன்பர்மலர் தானிட முத்தி தருபெரு மானென்றும் சம்புவென்றும் கானிட வேடன்முன் ஊனிட உண்டது கண்டுமொரு மானிட மானவ னைத்தேவர் செய்வதென் வந்தனையே? (பொ-ரை) ஆன் ஆகிய இடபக் கொடியுடைய அண்ணாமலையார் என்றும், அடியார் மலரிட்டு வணங்க முத்தியருளும் பெருமான் என்றும், நலம் தரும் நாதன் என்றும், காட்டில் வாழும் வேடனாகிய கண்ணப்பன் முன்னாளில் ஒரு மானிடனாகியவனைத் தேவர்கள் வழிபாடு செய்வது என்னையோ? (வி-ரை) மானிட மானவன் எனப் பழிப்பதுபோல் கூறினும், அடியார்க்கு அருளும் பேற்றை உள்ளடக்கிக் கூறியமை யால் வஞ்சப் புகழ்ச்சியாம். மானிடமானவன் என்பது மானை இடக்கையில் கொண்டவர் என்றும், மான் போன்ற உமையம் மையை இடப்பாகமாகக் கொண்டவர் என்றும் பொருள் தருதல் அறிக. ஆன் இடபம் என்பன ஒரு பொருட் பன்மொழி. கண்ணப்பன் அன்பில் கனிந்த நாவலர் முன்னும், கண்பறித்த திண்ணர் புகழ் உரைத்தார் (33). (43) 44. மதுவாம் தெய்வ ஆழி களி எண்சீர் ஆசிரியவிருத்தம் தனையிருக்கு மறைதுதிக்கும் அருணை நாதன் சரணமலர் புகழ்களியேம்; சக்ர பூசை வினையிருக்கு மவர்க் கெளிதோ? அரிதான் ஐயோ விதிவசத்தால் விவரமற்ற விதஞ்சொல் வேனே; பனையிருக்க, நெடியகஞ்சா இருக்க, வீணே பச்சையால் இலைதுயின்றான்; பனையன் தேளி அனையிருக்கப் பணிதுயின்றான்; மதுவாம் தெய்வ ஆழிவிட்டுப் பாற்கடல்மீ தழுந்தி னானே! (பொ-ரை) தன்னை இருக்கு முதலிய மறைகள் வாழ்த்து கின்ற அருணை இறைவன் திருவடி மலர்களைப் புகழும் கட்குடியர்கள்யாம்; சக்தி வழிபாடு என்பது தீவினையாளர்க்கு எளிதாகுமோ? ஐயோ! திருமால் ஊழ்வினையால் மடம்பட்ட வகையைச் சொல்வேன்; பனை மரம் இருக்கவும் புகழ்வாய்ந்த கஞ்சாச் செடி இருக்கவும் அவற்றை விடுத்து வீணாகப் பசுமை யான ஆல இலையில் கண்வளர்ந்தான்; பனையன், தேளி, அனை என்னும் மீன்வகைகள் இருக்கவும் அவற்றை விடுத்துப் பாம்பின் மேல் படுத்தான்; மது எனப்பெறும் தெய்வக்கடல் இருக்கவும் அதனை விடுத்துப் பாற்கடல் மீது படுத்தான். (அவன் அறியாமை தான் இருந்தவாறு என்னே!) (வி-ரை) கள் குடிப்பவர் அக்கள் முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது களி என்பதாகும். இதில் கள், கஞ்சா, மதுக்கடல், மீன்புலவு ஆகியவற்றை வியந்தும், ஆலிலை, பாம்பு, பாற்கடல் ஆகியவற்றைப் பழித்தும் உரைத்தான். ஐயோ என்பது இரக்கக் குறிப்பு. விவரம் - அறிவு. (44) 45. வானாடர் ஏனோ மதியற்றார் இதுவும் களி நேரிசை வெண்பா ஆனார் கொடியார் அருணா புரிக்களியேம் வானாடர் ஏனோ மதியற்றார் - மேனாளில் சும்மாகஞ் சாவிலையே தூளிகடித்துத் தின்றாலும் தம்மாகஞ் சாவிலையே தான். (பொ-ரை) இடபம் பொருந்திய கொடியினராகிய அண்ணாமலையாரின் அருணைநகர்க் கட்குடியம் யாம்; தனியே கஞ்சா இலையையே தூளாக இடித்துத் தின்றாலும் தம் உடற்குண்டாம் சாவு இல்லையாகவும் முன்னாளில் தேவர்கள் எதற்காகவோ (அமுதம் கடைந்து எடுத்து) அறிவற்றார்கள். (வி-ரை) கஞ்சாத்தூள் இருக்க அதனை விடுத்து அரும்பாடு பட்டு அமுதம் உண்டது தேவர்களின் அறியாமையே என்று இகழ்ந்தானாம் களியன். ஆகம்-உடல். கஞ்சாவும் மயக்கமூட்டும் இலையாகலின் களிப்பொருள் ஆயிற்று. (45) 46. திருப்பெயரை வெளியாக்கித் திரிகின்றார் பிச்சியார் எண்சீர் ஆசிரியவிருத்தம் தாமணிவர் திரிசூலம் எதிர்கண் டார்மேல் சக்கரத்தை விடுவர்,சிவ சமயத் தாவர், காமுகரை ஆண்டுகொளார், சிவநூல் கேட்பர், கருத்தின்மால் தெரிசனமே காட்டா நிற்பர், ஆமையர வணிதொடையார் விடையார் வாழும் அருணகிரி வளநாட்டில் அகங்கள் தோறும் சேமநிதி எனவுலவும் பிச்சி யார்தம் திருப்பெயரை வெளியாக்கித்திரிகின் றாரே. (பொ-ரை) ஆமை ஓட்டையும் பாம்பையும் அணியும் மாலையாக உடையவராகிய இடபஊர்தியை யுடைய இறைவர். வாழ்கின்ற வளமான அண்ணாமலை நாட்டில், வீடுகள்தோறும் பாதுகாப்பாக வைக்கப் பெற்ற செல்வம்போல் உலாவுகின்ற பிச்சைப் பெண்டிர், தாங்கள் முத்தலைவேலைத் தரித்துக் கொள்வர்; தமக்கு நேரே கண்டவர் மேல் கண்ணாம் அரத்தைச் செலுத்துவர்; காமமிக்காரை ஆட்கொள்ளார்; சிவநெறி நூல்களைக் கேட்பர்; மனத்தில் மயக்கமுண்மையைக் காட்டுவர்; இத் தன்மையால் தம் அழகிய பெயராகிய பிச்சியார் என்பதை வெளிப்படுத்தித் திரிகின்றார். (வி-ரை) முத்தலைவேல் முதலாய சிவ அடையாளங்களை அணிந்து வீடுதோறும் சென்று பிச்சை ஏற்கும் மகளிரைக் காமுகன் ஒருவன் பார்த்துக் கூறுவதாகப் பாடப் பெறுவது பிச்சியார் என்பதாம். பிச்சியார் என்னும் பெயரை வெளிப் படுத்துதல் என்பது பித்தர் (கிறுக்கர்) எனத் தோன்றுதலாம். சக்கரம் = சக்கு+அரம், கண்ணாகிய அரம்; சிவபெருமான் ஆமையோட்டை அணிந்தமை; திருமால் ஆமை வடிவு கொண்டு ஆணவம் மிக்கு அலைந்த காலை ஆணவத்தை அடக்கி அதன் ஓட்டை அணிந்தனர் என்பது. முற்றலாமை... பூண்டு என்றார் ஆளுடைய பிள்ளையார். (46) 47. மொய்த்த வார்குழல் மோகனப் பிச்சியார் இதுவும் பிச்சியார் கட்டளைக் கலிப்பா தில்லை மன்றுள்ந டம்புரி பாதனார் தேவ ராயர் திருவரு ணைக்குளே, முல்லை மல்லிகை சண்பகம் பிச்சியார் மொய்த்த வார்குழல் மோகனப் பிச்சியார் நல்ல மேனியும் பொற்றிரு வேடமே; நாடி யிட்டதும் பொற்றிரு வேடமே; இல்லை ஆயினும் இவ்விடை ஐயமே; ஏற்க வந்ததும் இவ்விடை ஐயமே! (பொ-ரை) தில்லைச் சிற்றம்பலத்துள் கூத்தியற்றும் திருவடியினரும், தேவராயர் என்னும் பெயரினரும் ஆகிய சிவனார் விளங்கும் திருவண்ணாமலையில், முல்லை, மல்லிகை, சண்பகம், பிச்சி, ஆத்தி ஆகிய மலர்கள் நிரம்பிய நீண்ட கூந்தலையுடைய மயக்கத் தக்க பிச்சைப் பெண்டிர் தம் நல்ல வடிவமும் திருமகளின் அழகிய வேடமேயாம்; அவர்கள் விரும்பி அணிந்து கொண்டதும் பொன்னால் செய்யப்பட்ட அழகிய சீதேவி என்னும் அணிகலமேயாம்; இடை இல்லை என்றே கூறினும் பிற உறுப்புகளை நோக்குங்கால் அவ்வாறு கூறியது ஐயமேயாம்; இவர்கள் இவ்விடத்து எடுக்க வந்ததும் ஐயமாகிய பிச்சையேயாம். (வி-ரை) பாதனார் - திருவடியுடையார்; ஆர் - ஆத்தி; மோகனம் - மயக்கம்; பொன் திருவேடம் இரட்டுறலாக பொன் மகளாம் திருமகள் வேடத்தையும், பொன்னால் செய்யப்பெற்ற சீதேவி என்னும் அணிகலத்தையும் குறித்தது. சீதேவி என்பது தலையணி; இதனைத் தெய்வ உத்தி என்பர் (சிலப். கடலாடு. 106). ஐயம் என்பதில் முன்னது ஐயுறவு என்பதையும், பின்னது பிச்சை என்பதையும் குறித்தது. கட்டளைக் கலிப்பா என்பது எழுத்தெண்ணிப் பாடப் பெறுவது. அடிக்கு எண்சீர் கொண்ட இப் பா. நேர் முதலாய அரையடிக்கு ஒற்று நீக்கிப் பதினோரெழுத்துப் பெற்று வந்தமை எண்ணிக் காண்க. நிரை முதலாயது எனின் பன்னீரெழுத்துப் பெறும் என்க. (47) 48. பயங்காட்டினால் அஞ்சும் பைங்கொடி கார்கண்ட தலைவன் பாகனொடு பகரல் கட்டளைக் கலித்துறை அயங்காட் டியமறை யார்விடை யாளர் அருணைவெற்பிற் òa§fh£ oak¤ nj®ty th!முன்பு போனகொண்டல் சயங்காட்டிக் கோபமும் சாபமும் காட்டித் தடித்திடித்துப் பயங்காட்டி னாலஞ்சு மேதனி யேநின்ற பைங்கொடியே. (பொ-ரை) குதிரைகளாகக் காட்டிய மறையினையுடை யவரும், இடபக் கொடியுடையவரும் ஆகிய இறைவரின் அண்ணாமலை போன்ற தோள்வலி காட்டிய அழகிய தேர்ப்பாகனே, முன்னே போன மழை மேகம் திரண்டு காட்டி இந்திர கோபப் பூச்சியையும் திருவில்லையும் உண்டாக்கி வன்மையாய் இடித்து அச்சமூட்டினால் தனியே நின்ற பசுமையான பூங்கொடி போன்ற தலைவி அஞ்சுவள் (ஆகலின் தேரை விரைந்து செலுத்துக). (வி-ரை) கொண்டலின் செயலைக் கூறுமுகத்தால் தலைவி அஞ்சுதற்கு அடியான அச்சக்குறிப்புச் சொற்களைப் பெய்துள்ளமை அறிக. சயம் என்பது கூட்டம், கொடுமை என்னும் இரு பொருளையும், கோபம் என்பது இந்திரகோபம், சினம் என்னும் இருபொருளையும், சாபம் என்பது வில், சபித்தல் என்னும் இருபொருளையும், தடித்திடித்து என்பது மின்னி இடித்தல், வன்மையாய் இடித்தல் என்னும் இரு பொருளையும் தந்து நிற்றல் அறிக. (48) 49. அருணைச் சரபம் நேரிசை வெண்பா பைங்கண் புலிக்குப் பரிபவத்தைக் காட்டிநர சிங்கத் தினையடர்த்துச் சீறியே - வெங்கைப் புழைக்குஞ் சரமுரித்துப் போர்த்த தருணைக்கே தழைக்குஞ் சரபமொன்று தான். (பொ-ரை) திருவருணைப் பதியில் சிறந்து விளங்கும் எண்கால் புள் ஒன்றுதான். பசுமையான கண்ணையுடைய புலிக்குத் துன்ப முண்டாக்கி நரசிங்கத்தினை வருத்தி, மிகச் சீற்றத்துடன் கொடிய துளைக்கை யானைத் தோலை உரித்துப் போர்த்தது. (வி-ரை) அருணை இறைவராகிய சிவபெருமானார் செயல்களைச் சரபப்புள் செயலொடும் இணைத்துக் கூறினார், சரபமாக வந்தவரும் அவரே ஆகலின். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை இடையில் உடுத்துக் கொண்டமையால் புலிக்கும் பரிபவத்தை உண்டாக்கி என்றார். இரணியனைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் செருக்குற்றமையால் அவரைச் சிவனார் அழித்தமையை நரசிங்கத்தினை அடர்த்து என்றார். சரபம் என்பது எட்டுக் காலும் இரண்டு தலையும் உடைய புள் என்பர். (49) 50. நீறு கொண்டு நெற்றியில் எழுதும் குறம் பதினான்குசீர் ஆசிரியவிருத்தம் ஒன்றும் மூன்றும் நாமு ரைக்க வந்து கேளும் அரிவைமீர்! உதய மான சுளகு நெல்லும் ஒற்றை பட்ட தாதலால், கன்று மானும் மழுவு மாக ஒருவர் வந்து தோன்றினார்; கண்ட மட்டி லேக றுப்பர், கைக்க பாலர், அவரையும் சென்று நாடில் அருணை மீது காண லாகும்; நாமமும் தேவ ராயர்; அவர லாது தெய்வம் வேறு கண்டிலேம்; நின்று வாடும் இவள்தன் ஆசை இடர்த விர்ப்ப ராதலான், நீறு கொண்டு மூன்றி ரேகை நெற்றி மீதில் எழுதுமே. (பொ-ரை) பெண்களே, நாம் குறி கூறுவதை வந்து கேட்பீர்களாக! எடுத்துக்கொண்டு வந்த சுளகில் உள்ள நெல்லும், ஒன்றாகவும் மூன்றாகவும் எண்ணும்போது ஒற்றைபட இருந்தது. ஆதலால், மான்கன்றும் மழுப்படையுமாக ஒருவர் வந்து தோன்றினார். அவர் கழுத்தளவில் கறுப்பு உடையவர்; கையில் தலையோடு உடையவர்; அவரை அமடய விரும்பினால் திருவருணைப்பதியில் போய்ப் பார்க்கலாம்; அவர் பெயரும் தேவராயர் என்பதாம்; அவரை அல்லாமல் வேறு தெய்வத்தைக் காணேம்; நின்று வாட்டமுறுகின்ற இவள் தன் ஆசைத்துயரை அகற்றுவர்; ஆதலால் இவள் நெற்றியின் மேல் திருநீற்றினால் மூன்று கோடு அணியுங்கள். (வி-ரை). தலைவி தலைவனைக் கண்டு மையலுற்று மயங்கினாளாக ஆங்கு வந்த குறத்தியைக் குறிவினவ அவள் குறிதேர்ந்து கூறுவதாகச் செய்யுள் செய்வது குறம் ஆகும். அவள் சுளகில் நெல்லையிட்டு அதனை மூன்று கூறாக்கி ஒரு கூற்றை எண்ணுவள். அஃது ஒற்றைப்படுமாயின் நன்மையும், இரட்டைப்படுமாயின் நன்மை இன்மையும் சுட்டுவாள். சுளகில் இட்ட நெல்லையள்ளிக் கீழிட்டால் கையில் ஒட்டியுள்ள நெல்லை எண்ணி ஒற்றை இரட்டை காண்பதும் உண்டு; கண்ட மட்டில் கறுப்பர் என்பது பார்த்த அளவானே கோபம் கொள்வர் என்னும் குறிப்புப் பொருளும் தந்தது அறிக. (50) 51. எந்த உதவி கொண்டு பகை வெல்லும்? தோழி தலைவனை வேண்டல் பதினான்குசீர் ஆசிரியவிருத்தம் நெற்றி மீது கண்ப டைத்த உம்மை மாரன் எய்வனோ? நீர ணிந்த அரவிருக்க நெடிய தென்றல் முடுகுமோ? வெற்றி யான தாளி ருக்க மதியம் உம்மை நலியுமோ? விரவு கங்குல் உமது கண்ணின் வெயிலின் முன்பு நிற்குமோ? கற்றை யான குழலி எந்த உதவி கொண்டு பகைவெலும் கருணை கூர்தென் அருணை மேவு கலியு கத்து மெய்யரே, செற்ற லார்கள் புரமெ ரித்த புழுக ணிப்ர தாபரே, தேவ ராய ரேசு கந்த தினவ சந்த ராயரே. (பொ-ரை) திருவருட் பெருக்குடைய அழகிய திருவண்ணாமலையில் உறையும் கலிகாலக் கடவுளே, பகைவர் களின் முப்புரங்களை எரித்த புழுகு அணிந்த வீரரே, தேவர் தேவரே, நாளும் நறுமணம் பரப்பும் வசந்தராயரே, நெற்றிக் கண்ணைப் படைத்த உம்மீது மன்மதன் மலர்க்கணை ஏவுவனோ? நீவிர் அணிகலமாகக் கொண்ட பாம்பு இருக்கும்போது நும்மை நெடிய தென்றற்காற்று விரைவாக வந்து துன்புறுத்துமோ? வெற்றிதரும் திருத்தாள்கள் இருக்கும்போது உம்மை நிலவு வாட்டுமோ? இருள் செறிந்த இரவுப்பொழுது நும் கண்ணாகிய கதிரோன் முன்னே நிற்குமோ? நீவிர் இவ்வாறு வலியராகத், திரண்ட கூந்தலையுடைய இத் தலைவி எவ்வுதவி கொண்டு மேற்கூறிய பகைகளை வெற்றிகொள்வாள்? (வி-ரை) மன்மதன், தென்றல், மதி, கங்குல் என்பவை பிரிந்தாரை வருத்தும் தன்மையன. அவை தலைவராகிய நும்மை வருத்தமாட்டா. ஆனால் இவள் யாது செய்வள் என்று தோழி தலைவரை இரந்து நின்றாள். பிரியாதுறைக என்பது அவள் வேண்டுதலாம். கலியுகத்து மெய்யர் புழுகணிப் பிரதாபர் தேவராயர் வசந்தராயர் என்பவை அண்ணமலையாரின் பெயர்கள். இறைவன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்டவன் மாரன்; ஆதலால் எய்யான். வாதாசனன் (காற்றை உண்பது) என்னும் பெயருடையது பாம்பு; அதனை அணிந்தவர் ஆதலால் வாதம் (காற்று) வருத்தாது; இறைவன் தக்கனுடைய வேள்விக்குச் சென்றிருந்த மதியத்தைக் காலால் உதைத்துத் தேய்த்தவன் ஆகலின் அதுவும் வருத்தாது; கதிரோன் முன் காரிருள் நில்லாது ஆகலின் கதிரோனைக் கண்ணாகக் கொண்ட இறைவனை இருள் வருத்தாது எனக் காரணம் காட்டினாள். இவற்றை வெல்லும் ஆற்றல் இல்லாத தலைவியின் நிலைமை யாதாம்? நீர் அருள்வீராக என்றாறாம். (51) 52. சரற் காலமே, காலம் கார் அறுசீர் ஆசிரிய விருத்தம் தினைப்போது தானே நினைத்தாலும் மேலோர் சிறப்பான பேறீகுவோர் வனத்தாடு சோணா சலத்தூடு தீரா மயிற்பேடை காள்! ஓடைகாள்! வினைப்பாவி யானேன் விழிப்பாயு நீரான் மிகுத்தேறு கார்காலமே தனித்தாவி சோர்வார் தமக்கா லமேநீள் சரற்கால மேகாலமே! (பொ-ரை) அண்ணாமலையின் ஊடே அமைந்த காட்டின் கண் களிப்புற ஆடுகின்ற நீங்காத பெண்மயில்களே, நீர்நிலைகளே, அடியார் மிகச் சிறியபொழுதே நினைத்தாலும் சிறந்த பேற்றை அருள்வார்; எனினும் யான் தீவினையாட்டியானேன்; இல்லை யேல், என் விழியினின்று ஒழுகும் நீரால் மிகுந்து எழும்பும் கார்காலமே, தலைவரைப் பிரிந்து தனியே இருந்து, உயிர் சோர்பவர்க்கு நஞ்சென ஆகுமோ? துயர் நீளச் செய்யும் கார்காலமே வாழ்வின் இறுதிக்காலமே போலும்! (வி-ரை) தினைப்போது நினைவார்க்கும் பேறு ஈயும் பெறுமான், நினைந்துருகி நீர்வழிய நிற்கும் எனக்கு அருளாரோ? என இரங்கி உரைத்தாள் தலைவி. கார்காலப் பொலிவைக் களிமயிலும் கானோடையும் காட்டின; அக்காலத்து அவர் வாராமையால் எனக்கு ஆலகாலமும், கடைசி நாளும் ஆயின என்றாள். சரற்காலம் - கார்காலம்; காலம் - இறுதிக்காலம். (52) 53. இன்னமும் வந்திலர் கேள்வர் இளவேனில் நேரிசை ஆசிரியப்பா காலையும் மாலையும் கைமலர் குவித்து மாலும் அயனும் வணங்குதற்(கு) அரியோன் இமைக்குமுன் உலகம் யாவையும் படைத்தோன் தனக்கொரு தாயும் தந்தையும் இல்லோன் பழவினைக் கயிற்றிற் பல்லுயிர்ப் பாவை அழகுற நடிக்கத் திருநடம் புரிவோன் வினைவலை அறுக்கும் மெய்த்தவ வேடன் மனவலைப் பிணிக்கம் மான்மத நாதன் பேறாம் அறுபத் தாறா யிரம்பொன் மாறாத் தியாகன் வசந்த விநோதன் அண்ணா மலையன் அதிருங் கழலன் கண்ணார் அமுதன் கைலைப் பொருப்பின் மறலித் திசையின் மலையா சலமென இருத்திய துருத்திகொண் டிளங்கால் பரப்பிக் காவுலைப் பல்லவக் கனல்நா அசைப்பக் குறைவறு குயில்வாய்க் குறட்டினில் அடக்கிப் பொறிதிகழ் அரிக்கரி யதனிடைச் சொரிந்துள் இசைத்திடு மஞ்சரிப் பசைக்கோல் அசைத்து மதவீ ரனுக்கு வசந்தக் கருமான் பனிமலர்ச் சாயகம் பண்ணி நீட்டினன் இன்னமும் வந்திலர் கேள்வர் புன்னையங் கருங்குழல் அன்னமென் நடையே. (பொ-ரை) புன்னை மலர் அணிந்த அழகிய கரிய கூந்தலையும் அன்னம் போன்ற மெல்லிய நடையையும் உடைய தோழியே, காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் கைகளாகிய மலர்களைக் கூப்பித் திருமாலும் நான்முகனும் வணங்குதற்கு அருமையானவனும், இமைப் பொழுதளவுக்குள்ளே உலகம் எல்லாவற்றையும் படைத்தவனும், தனக்கு ஒரு தாயும் தந்தையும் இல்லாதவனும், பழவினையாகிய கயிற்றால் பல்வேறு உயிர்களாகிய பாவைகள் அழகாக நடிக்குமாறு திருக்கூத்துச் செய்கின்றவனும், வினைகளாகிய வலைகளை அறுக்கின்ற மெய்யான தவவேடத்தை யுடையவனும், மனத் துண்டாம் இடரை அகற்றும் மான்மதநாதன் என்னும் பெயருடையவனும், திருவருட் பேறாகிய அறுபத்தாறு ஆயிரம் பொன்னை மறுக்காமல் வழங்குகிறவனும், வசந்தவிநோதன், அண்ணாமலையன், அதிருங் கழலன், கண்ணார் அமுதன் என்னும் திருப்பெயர்களை யுடைய வனுமாகிய சிவபெருமானது திருக்கைலாயமலையில் காமனாகிய வீரனுக்கு இளவேனில் காலமாகிய கொல்லன் இயமனது தென்திசையில் பொதியமலை என வைக்கப் பெற்ற துருத்தியால் தென்றற்காற்றை ஊதி, சோலையாகிய உலையில் தளிராகிய தீ, கொழுந்துவிட்டு எரிய, குறைவில்லாத குயிலின் வாயாகிய குறட்டினில் அடக்கி, புள்ளிகள் விளங்கும் வண்டுகளாகிய கரிகளை அவ்வுலையிடைச் சொரிந்து, உள்ளே பொருத்தப் பெற்ற பூங்கொத்தாகிய சூட்டுக்கோலால் துளாவி, தண்ணிய மலர்களாகிய அம்புகளைச் செய்து கொடுத்தனன்; இவ்வாறாகவும் தலைவர் இன்னும் வந்திலரே. (வி-ரை) இளவேனில் பருவங் கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது இது. முதற் பத்து அடிகளில் இறைவன் ஐந்தொழில்களையும் இனிதின் அமைத்தார். யாவையும் படைத்தோன் என்பதால் படைப்பும், திருநடம் புரிவோன் என்பதால் காப்பும், வினை வலை அறுக்கும் என்பதால் அழிப்பும், மன அலைப் பிணிக்கும் என்பதால் மறைத்தலும், தியாகன் என்பதால் அளித்தலும் வெளிப்படுத்தார். மறலித்திசையின் என்பது முதல் நீட்டினன் என்பது முடிய உருவகம். பொதியமலை துருத்தியாகவும், சோலை உலைக்களமாகவும், தளிர் தீநாவாகவும், குயில்வாய் குறடாகவும், வண்டு உலைக்கரியாகவும், பூங்கொத்து சூட்டுக்கோலாகவும், வசந்தகாலம் கொல்லனாகவும், மலர் அம்பாகவும் உருவகம் செய்யப்பெற்றன. குறடு - பற்றுக்குறடு; பல்லவம் - தளிர்; பொறி - புள்ளி; அரி - வண்டு; மஞ்சரி - பூங்கொத்து; கருமான் - கொல்லன்; சாயகம் - அம்பு. தியாகன், வசந்தவிநோதன், அண்ணாமலையன், அதிருங்கழலன், கண்ணார் அமுதன் என்பவை இறைவன் பெயர்கள். (53) 54. அருணைப்பதியார் கருணைப்பதியார் எண்சீர் ஆசிரியவிருத்தம் அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரும் அடிமாற நடித்தாரும் முடிமாறன் அடித்தாரும் முன்னுமற மொழிந்தாரும் பின்னுமறம் ஒழிந்தாரும் உகைத்திடுமான் ஏற்றாரும் மிகைத்திடுமான் ஏற்றாரும் என்னகத்தாம் உரியாரும் கொன்னகத்தாம் உரியாரும் எருக்கிதழி மணத்தாரும் முருக்கிதழி மணத்தாரும் வன்னிவடி வனத்தாரும் சென்னிவடி வனத்தாரும் வருகருணைப் பதியாரும் பெருகருணைப் பதியாரே. (பொ-ரை) தம்மை வேறுபடுத்துகின்ற குற்றம் இல்லாத வரும், பின்னப்பெற்ற பெரிய சடையை யுடையவரும், கால்மாறி நடித்தவரும், முடிசூடிய வேந்தன் பாண்டியனால் அடிபட்ட வரும், நினைக்கத்தக்க அறங்களை உரைத்தவரும், பிணக்குச் செய்யும் மறச்செயல்களை நீங்கியவரும், செலுத்தும் இடப ஊர்தியை யுடையவரும், மேலெழுந்து வந்த மானைக் கையில் ஏற்றவரும், என் உள்ளத்தே உறைபவரும், கொல்லும் யானையின் தோலை உடையவரும், எருக்கு, கொன்றை ஆகிய மலர்களின் மணம் உடையவரும், முண்முருக்கு இதழ் போன்ற, இதழை உடைய உமையை மணந்தவரும், நெருப்பு வடிவத்தில் அன்னம் போன்ற உமையைப் பாகம் கொண்டவரும், தலையினின்று வழியும் கங்கை நீரை யுடையவரும், பெருகிவரும் அருளுக்கு இடமாய் இருப்பவரும் புகழ்மிக்க அருணைப்பதியில் இருக்கும் அண்ணாமலையாரே ஆவர். (வி-ரை) அன்னிய மாசடையார் - அன்னிய மாசு அடையார்; அடிமாற நடித்தார் என்றது கால்மாறி ஆடிய திருவிளை யாடலை. அது திருவிளையாடற் புராணத்துக் கண்டது. முடிமாறன் அடித்தது என்றது மாணிக்கவாசகர்க்காக மண்சுமந்து அரிமர்த்தன பாண்டியனால் பிரம்படிபட்டது; அது திருவிளை யாடலில் மண்சுமந்த படலத்தில் கண்டது. முன்னும் - நினைக்கும்; பின்னுமற மொழிந்தார் - பின்னும் மறம் ஒழிந்தார்; பின்னுதல் - பிணைத்தல், துன்புறுத்தல், என் அகத்து ஆம், கொல் நகத்து ஆம் இவற்றுள் ஆம் அசைநிலை. நகம் - யானை. உரி - தோல்; இதழி - கொன்றையும், இதழையுடைய உமையும், வன்னி - தீ; வனம் - நீர். மடக்கு என்னும் சொல்லணி இச்செய்யுளில் அமைந்துள்ளது. (54) 55. செய்யாதன வெல்லாம் செய்வோம் சம்பிரதம் எண்சீர் ஆசிரியவிருத்தம் பரவைபொ ருக்கெழவும் ககனம்வ டுப்படவும் பரிதிவ டக்கெழவும் நிருதிகு ணக்குறவும் இரவுப கற்படவும் பகலிர வொத்திடவும் எளிதின்இ யற்றிடுவோம் இவைசில வித்தைகளோ அரவம ணிப்பணியான் அனலகி ரிப்பெருமான் அருணகி ரிக்கிணையா அவனித லத்திடையே கருதிம னத்திலே சிறிதுநி னைத்தளவே கதியைய ளித்திடுமோர் பதியுமு ணர்த்துவமே. (பொ-ரை) கடல் காய்ந்து பொருக்குத் தோன்றவும், விண்ணில் தழும்பு தோன்றவும், கதிரோன் வடக்குத்திசையில் தோன்றவும், எண்திக்குக் காவலருள் ஒருவனான நிருதி என்பான் கிழக்குத்திசையில் சேரவும், இரவுப்பொழுது பகற் பொழுதாகவும், பகற்பொழுது இரவுப் பொழுதுக்கு ஒப்பாக அமையவும் எளிமையாகச் செய்வோம்; யாம் செய்தற்கு உரிய சில வித்தைகள் இவைதாமோ? பாம்பை அழகிய அணிகலமாக உடையவனும், தீப்பிழம்பாகத் தோன்றிய அண்ணாமலையாரது திருவண்ணா மலைக்கு இணையாகச் சிறிதளவே மனத்தில் எண்ணி நினைத்த பொழுதிலேயே வீடுபேற்றை அளிக்கக்கூடிய ஒரு பகுதியையும் இந் நிலத்தில் தெரிவிப்போம்! (வி-ரை) சம்பிரதம் என்பது மாயவித்தை வல்லவர் தம் செயல் வன்மையைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வதாம். சம்பிரதம் இரட்டுற மொழிதலால் இயல்பான தொரு பொருளையும் தரும். அவ்வாறு பொருள் கொள்ளுங்கால், பரந்த இடமாகிய பாலை நிலத்தில் பொருக்குண்டாகவும், காட்டில் மாவடு உண்டாகவும், கதிரோன் வடதிசைச் செலவு நாளில் வடக்காகவும், அசுரர் மாறுபட்ட இயல்பினராகவும், இரவில் கதிரோன் மறையவும், அந்திமாலையில் பகலும் இரவும் ஒத்திருக்கவும் எனவும், அண்ணாமலைக்கு ஒப்பான ஒரு பதியை உரைக்க முடியாது எனவும் பொருள் தரும். பரவை - கடல், பாலைநிலம்; பொருக்கு - வெப்பத்தால் மண்வெடித்துப் பொருக்குக் கிளம்புதல்; ககனம் - விண்; வடு - தழும்பு, மாவடு; நிருதி - எண்திக்குக் காவலருள் ஒருவன், அசுரன்; குணக்கு - கிழக்கு, மாறுபாடு; அவனிதலம் - உலகம். (55) 56. கருணாசலக் கடல் நேரிசை வெண்பா உள்ளத்தின் ஞானம் உயர்ந்தவிடத் தன்றியிருட் பள்ளத்தில் என்றும் படராதே - வள்ளல் அருணா சலப்பெருமான் அம்பிகையோர் பாகன் கருணா சலமாம் கடல். (பொ-ரை) வள்ளலும், அருணாசலப் பெருமானும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனுமாகிய அருள் வெள்ளப் பெருக்கால் ஆகிய கடல், மனத்தில் மெய்யுணர்வு முதிர்ந்த இடத்தில் அல்லாமல் அறியாமையாகிய பள்ளத்தில் என்றும் சென்று பாயாது. (வி-ரை) கடல் படராது என இயைக்க. கருணாசலம் - கருணை வெள்ளம். ஞானம் - மெய்யுணர்வு; மெய்யுணர்வை உள்ளொளி என்பராகலின் அஃதின்மை மைஇருள் என்றார்; வெள்ளம் பள்ளத்தில் படர்வதோர் இயற்கைத்து எனினும், இவ் வெள்ளம் இருட் பள்ளத்துச் செல்லாது என வேற்றுமை தெரிவித்தார். கடல் என உருவகித்து முரணக் கூறியமையின் இது முரண் உருவகமாம். (56) 57. இசையெனும் இடி பாண் அறுசீர் ஆசிரியவிருத்தம் கங்கை வார்சடைப் பரமர்தென் அருணையிற் கடைதொறும் நீபாட அங்கை யாலிரு செவிபுதைத் தேத்துவோம் அருச்சுனன் திருநாமம்; எங்கை மார்செவி பொறுக்கும்நின் இசையெனும் இடிக்குரல் மகிழ்வாரார்? மங்கை மார்செயல் அறிந்துகொள் பாணனே! மயிலெனப் புகழ் வாயே. (பொ-ரை) பாணனே, மயிலென எங்களைப் புகழ்பவனே, கங்கையை அணிந்த நீண்ட சடையையுடைய இறைவரது அழகிய அண்ணாமலைப் பதியில் உள்ள வீடுகளின் வாயில்கள் தோறும் சென்று நீ பாட உள்ளங்கைகளால் இரண்டு காது களையும் பொத்திக் கொண்டு அருச்சுனன் திருப்பெயரைக் கூறி வாழ்த்துவோம்; நின் இசை என்னும் இடியின் குரலை எம் தங்கைமாராகிய பரத்தையரின் காதுகள் கேட்டுப் பொறுத்துக் கொள்ளும்; அதற்கு எங்களுள் மகிழ்வார் எவரும் இலர்; மகளிர் செயல் இவ்வாறு இருவேறாக இருத்தலை அறிந்து கொள்வாயாக. (வி-ரை) தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தை வழிப் பட்டு மீண்டானாகத் தலைவி கொண்ட ஊடலைத் தணிக்கு மாறு தலைவன் பாணனைத் தூது அனுப்புவான். அப் பாணனைத் தலைவி சினந்துரைத்தல் பாண் என்னும் துறையாகும். வார்சடை - நெடுஞ்சடை; ஒழுகும் சடையுமாம். கடை - வாயில்; பாடல் இடியென இருத்தலால் அருச்சுனன் பேர் ஏத்துவோம் என்றாள். இந்திரன் மகனான அருச்சுனன் பெயரைக் கூறினால் இடியும் விலகிக்கொள்ளும் என்னும் கருத்தால் இந் நாளிலும் இடி இடிக்கும்போது அருச்சுனன் பேர்பத்து என்பர்; இதனால் பாணன் பாடிய பாடல் இடியென உள்ளது எனப் பழித்தாளாம்; எங்கைமார் - தங்கைமார்; என்றது பரத்தையரை; மயில் மழைமேகம் கண்டு மகிழும்; இடியும் விரும்பும்; யாம் விரும்பேம்; தங்கைமார் விரும்புவர்; எம்மை மயிலெனக் கூறாது அவரைக் கூறுக என்றாளாம். (57) 58. இந்திரன் பொருள்கள் தலைவன் தலைவியைப் புகழ்தல் அறுசீர் ஆசிரியவிருத்தல் புடைசெறிந் தளிபாடும் இதழியம் தொடைமார்பர் புலிபதஞ் சலிநாடுவார் மடைஇளம் கயல்தாவும் அருணையங் கிரிமீது மலர்அணங் கெனமேவுவார் நடையுமிந் திரவேழம்; இருகைஇந் திரதாரு; நயனம்இந் திரநீலமே; இடையுமிந் திரசாலம்; நுதலும் இந் திரசாபம்; இதழும்இந் திரகோபமே. (பொ-ரை) பக்கங்களில் மொய்த்து வண்டுகள் பாடும் அழகிய கொன்றை மாலையணிந்த மார்பினரும், புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுபவரும் ஆகிய அண்ணாமலையாரது, நீர் பாய்கின்ற மடைகளில் இளமை பொருந்திய கயல்மீன்கள்தாவும் அழகிய அண்ணாமலையின் மேல் திருமகள் எனத் திகழும் தலைமகள் நடையும் இந்திரன் யானையாம் ஐராவதம் போன்றது; இரண்டு கைகளும் இந்திரன் உலகக் கொடை மரமாகிய கற்பகம் போன்றன; கண்களும் இந்திர நீலக் கற்கள் போன்றன; இடையும், இந்திரசால வித்தை போலப் பொய்யானது; புருவமும் இந்திர வில்லாகிய வானவில் போன்றது; இதழும் இந்திர கோபப் பூச்சி போலச் செவ்வியது ஆகும். (வி-ரை) தலைவியின் எழிலை இந்திரன் தொடர்பான பொருள்களைக் கொண்டே வெளிப்படுத்தினான் தலைவன்; இந்திரன் என்னும் சொல்லும் பொருளும் பல்கால் மீண்டும் வந்தமையால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி யாகும். இதில் ஆகும் என ஒரு சொல் வருவித்து உரைக்கப் பெற்றது. புடை - பக்கம்; அளி - வண்டு; புலி, பதஞ்சலியரை முன்னும் கூறினார். (27) (58) 59. அண்ணாமலையில் தேர் செல்லுமோ? தலைவியின் உருவெளி கண்டு தலைவன் உரைத்தது கலிவிருத்தம் இந்திர கோபமாம் இதழி பாகனார் செந்தமிழ் அருணைநம் தேரும் செல்லுமே! சந்திர ரேகையும் சமர வாளியும் மந்தர மேருவும் வளைந்து கொண்டவே. (பொ-ரை) சந்திர ரேகையும், போர் அம்பும், மந்தரம் மேரு ஆகிய மலைகளும் வளைந்து கொண்டன; ஆதலால் இந்திர கோபப் பூச்சி போன்ற செவ்விய இதழையுடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவ பெருமானது செந்தமிழ் வழங்கும் அருணைப்பதியில் நம் தேரும் செல்லுமோ? செல்லாது. (வி-ரை) வினைமேற் சென்ற தலைவன் கார்காலம் கண்டு தலைவியை நினைந்து வீட்டுக்குத் திரும்பும் போது அவள் உருவெளித் தோற்றம் கண்டு பாகற்கு உரைத்தது இது. சந்திர ரேகை என்றது இடைக் கோடுகளையுடைய பாதிமதியை; அது தலைவியின் நெற்றியைக் குறித்தது. அம்பு கண்களையும், மலைகள் கொங்கைகளையும் குறித்தன. சந்திரனில் கோடு தோன்றல் செயல் நிறைவேறாமைக் குறி என்றும், போர் அம்பு கண்டு வீரன் ஒதுங்கிச் செல்லான் என்றும், மலை, வழிக்குறிக்கீடு என்றும் கொண்டு தேர் செல்லுமோ என்றான் என்க. ஏ - வினாப் பொருள் தந்தது. சமரம் - போர்; வாளி - அம்பு; (59) 60. காணாத காட்சி தலைவன் தலைவியைப் புகழ்தல் எழுசீர் ஆசிரியவிருத்தம் கொண்டலணி கண்டர்நிறை கங்கையணி செஞ்சடையர் கொம்பரொரு பங்கில் உறைவார் அண்டபகி ரண்டமள வங்கியென நின்றஅதி ருங்கழலர் தங்க ருணையீர்! கண்டுளது கொண்டல்மிசை திங்களெழு கின்றதிது கண்டதிலை யுங்கள் முகமாம் மண்டலமெ னும்புதிய திங்கள்மிசை கொந்தளக மஞ்சுகுடி கொண்ட அடைவே. (பொ-ரை) மேகம் போன்ற அழகிய கரிய கண்டத்தை யுடையவர், நீர் நிறைந்த கங்கையாற்றைச் சிவந்த சடையில் அணிந்தவர், பூங்கொடி போன்ற உமையம்மையை இடப்பாகமாக உறையப் பெற்றவர், மண்ணில் இருந்து விண்ணளாவ நெருப் புருவாக நின்ற அதிருங் கழலர் என்னும் பெயருடையவர் தங்கிய அருணைப் பதியுடையவரே, யாம் இதுவரை கண்டுள்ளது மேகத்தின் மேல் திங்கள் எழுகின்ற காட்சியேயாம்; உங்கள் முகமண்டலம் என்னும் புதிய திங்களின் மேல் பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலாகிய மேகம் குடி கொண்டிருக்கும் முறைமை யான இக் காட்சியை எங்கும் கண்டது இல்லை. (வி-ரை) காணாத காட்சியைக் கண்டதாகத் தலைவன் தலைவியைப் புனைந்துரைத்தது இது. கண்டர் - நீலகண்டர்; கண்டத்தை உடையவர்; அங்கி என நின்றவர் - அண்ணா மலையார்; அருணையீர் என்றது தலைமகளை விளித்தது. மஞ்சு - மேகம்; அளகம் - கூந்தல். அடைவு - முறைமை. முகமாம் மண்டலம் - முகவட்டம், முகத்தைத் திங்களாகவும், கூந்தலை மேகமாகவும் கூறினான். தலைவியின் முகத்தில் கூந்தல் படர்ந்து அழகுசெய்த காட்சியில் உள்ளம் பறிகொடுத்து உரைத்தான் என்க. (60) 61. புரமெரித்த பொழுதில் போர்க்கோலம் நேரிசை வெண்பா அடுத்தமதிச் சென்னியின்மேல் அம்பிருக்கும் மற்றோர் இடத்திலே நாரி இருக்கும் - தடக்கையிலே ஏந்துசிலை விட்டிருக்கும் எம்அருணை நாதனார் போந்து புரமெரித்த போது (பொ-ரை) எம் அருணை நாதராம் அண்ணாமலையார் போய் முப்புரங்களை எரித்த பொழுதில், தம்மை வந்தடைந்த மதியணிந்த தலையின் மேல் அம்பு இருக்கும்; வேறோர் இடத்திலே நாண் இருக்கும்; பெரிய கையிலே ஏந்திய வில் முறிந்து இருக்கும். (வி-ரை) அம்பு, நாண், வில் ஆகியவற்றை அண்ணாமலை யார் உடையவராக வெளிப்படக் குறித்தார் புரமெரித்த போது என்றார் ஆகலின். ஆனால், அம்பு நீரையும், நாரி பெண்ணையும், சிலை (தமருகத்தின்) ஒலியையும் குறிக்கும். ஆதலின், குறிப்பால் இயல்பு நிலையும் உரைத்தார். தலையில் கங்கையையும், இடையில் மங்கையையும், கையில் தமருகம் ஒலி எழுப்பி இருத்தலையும் உடையார் என்க. ஓர் இடம் என்றது ஒப்பற்ற இடப்பாகம்; தடக்கை - பெரிய கை. (61) 62. பொன்பூசு கார்காலம் கார் கலித்துறை போதற்கும் அரிதான அருணா சலத்தீசர் பொன் மேருவாய், ஏதப்ப டும்பாவி மனமே! பிரிந்தாரி தெண்ணார் கொலோ? ஓதத்தின் நீரோடு கனலுண்டு புயல்மீள உமிழ்தன்மைபோல் காதற்குள் மடவார்மெய் பொன்பூசு மின்வீசு கார்காலமே. (பொ-ரை) உந்திப் போதில் தோன்றிய நான்முகனும் அறிதற்கு அரியவரான அண்ணாமலையாரின் பொன் போன்ற மேருமலையின்கண், துன்பப்படுகின்ற பாவியான மனமே, நம்மை விட்டுப் பிரிந்த தலைவர், மேகமானது கடலின் நீரொடு ஊழித் தீயையும் உண்டு மீண்டு உமிழ்கின்ற தன்மைபோல் பொழிந்து, காதற்கு உட்பட்ட மகளிர் உடலில் பசலையாகிய பொன்னிறத்தைப் பூசுவது போல் மின்வெட்டும், கார் காலம் இஃது என்பதை எண்ண மாட்டாரோ? (வி-ரை) போது-பூ; இவன் உந்திக் கமலத்தைக் குறித்தது. அதில் தோன்றியவன் நான்முகன் எனப்படுதலால் போதற்கும் என்றார். ஏதம்-துன்பம்; ஓதம்-கடல்; உள்-உட்படுதல், ஆட்படுதல்; மின் வீசுதலைப் பொன் பூசுதல் என்றார்; பொன் பூசுதல் என்றது பசலை நோயைக் குறித்தது. அண்ணாமலையைப் பொன்மேரு என்றார், இறைமையும் உயர்வும் கருதி, தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வாராமையால் வருந்திக் கூறியது இது, (62) 63. நீர் வந்தால் நெருப்பவியும் தலைவன் வேண்டல் கொச்சகக் கலிப்பா கார்வந்தா லன்னகறைக் கண்டனார் செங்கதிரோன் தேர்வந்தா லும்பொழில்சூழ் தென்னருணை நன்னாட்டில், ஆர்வந்தா லும்தணியா தன்னமன்னீர் ஆனாலும் நீர்வந்தால் ஆசை நெருப்பவியும் காணுமே. (பொ-ரை) கருமேகம் வந்தாற் போன்ற திருநீலகண்டரது, சிவந்த கதிர்களையுடைய கதிரோனின் தேர்வர அசையும் சோலை சூழ்ந்த அழகிய அண்ணாமலையாம் நல்ல நாட்டின் கண் உள்ள அன்னம் போன்றவரே, என் ஆசையாம் நெருப்பு எவர் வந்தாலும் அவியாது; ஆனாலும் நீர் வந்தால் அவிந்து போகும். (வி-ரை) தலைவன் தலைவியை அருளவேண்டியது இது. தேர்வந்து ஆலும்; ஆலும் - அசைக்கும். சோலையின் வானளாவிய தன்மை உரைத்தது. தென்-அழகு; நீர் வந்தால் நெருப்பு அவிதல் இயற்கை. அதனைக் கூறுவதுபோல் தலைவி யாகிய நீர் வந்தால் ஆசை நெருப்பவியும் என்றது சொல்லாடல் நயமுடையதாம். (63) 64. நகரூடு சொரியாதோ பனி? தலைவி இரங்கல் கலித்துறை காணம்ப ரந்தோலின் உடையாளர் அருணேசர் கைலாசமேல், தூணங்கள் நிகர்தோளர் உறைகின்ற நகரூடு சொரியாதரோ பூணங்கை வளைசிந்த மடவார் மனத்தேறு புகைபோலவேள் பாணங்கள் உதிர்கின்ற துகள்போல உறைகால் பனிக்காலமே. (பொ-ரை) வியந்து காணத்தக்க திக்கையும் புலித் தோலையும் உடையாக உடைய அண்ணாமலையாரது கைலாய மலையின்மேல் உள்ள தூண்களைப் போன்ற தோள்களை யுடைய தலைவர் வாழ்கின்ற நகரின் இடையே மகளிரது அணியப்பெற்ற அழகிய கையிலுள்ள வளையல் கழல மனத்தில் உண்டாகி எழுகின்ற காமத்தீயின் புகைபோலவும் மன்மதனது கணைமலர்கள் உதிர்க்கின்ற துகள்களைப் போலவும் துளிகளைச் சொரியும் பனிக்காலம் நீர்த்துளிகளைச் சொரியாதோ? (வி-ரை) தோளர் உறைகின்ற நகரூடு ... பனிக்காலம் சொரியாதோ என வினைமுடிவு கொள்க தலைவி பனிக் காலத்தில் தனித்திருந்து துன்புற்றாளாய், இப் பனித்துயர் எம் தலைவர் உறையும் ஊர்க்கு இல்லையோ, இருப்பின் இவண் வந்திருப்பாரே என இரங்கிக் கூறியது இது. புகையும், துகளும் பனிக்குப் பொருந்திய உவமைகள். மகளிர் மனம் வெதும்பலால் உண்டாகும் புகையும், காமவேள் கணைமலர்த்துகளும் உவமை யாக்கப் பெற்றமை பொருள் தொடர்பால் சிறப்புடையவை. அம்பரம் - திசை; திக்கம்பரர் என்பதும் இறைவன் பெயர் ஆகலின் திக்கை அம்பரமாக உடையவர் என்பது புலனாம். அம்பரம் உடை எனின் உடையாளர் என்பது பொருளின்றாம். உறை கால் - துளி சொரியும்; பூணங்கை வளை - அம் கை பூண் வளை என்று இயைப்பினும் ஆம். (64) 65. இமைப்பளவும் காலம் இலை நேரிசை வெண்பா பண்ணிறந்த வாசவரில் பல்கோடி மாண்டாலும் எண்ணிறந்த வேதர் இறந்தாலும் - கண்ணற்(கு) அமைந்தவெலாம் மாண்டாலும் அண்ணா மலையார்க்கு இமைப்பளவும் காலம் இலை. (பொ-ரை) புகழெல்லை கடந்த இந்திரருள் பலகோடிப் பேர் இறந்தாலும், எண்ணற்ற நான்முகர்கள் இறந்தாலும், திருமாலுக்கு அமைந்த கால எல்லையெலாம் முடிந்தாலும் அண்ணாமலையார்க்கு ஓர் இமைப்பளவு காலமும் ஆதல் இல்லை. (வி-ரை) பண் - புகழ்; வாசவர் - இந்திரர்; கண்ணன் - திருமால். இறைவன் அழிவிலாத் தன்மையை நீடாழி ஞாலம் என்னும் செய்யுளிலும் (24) கூறினார். அதன் விளக்கவுரையும் காண்க. கோடிவிதி மாளில் குலாவுகம லக்கண்ணன் ஓடி வடவால் உறங்குமே - நாடுங்கால் அக்கண்ணர் கோடி அழியின் அருணகிரி நக்கனருள் சற்றே நகும் என்னும் அருணகிரி அந்தாதிச் செய்யுளையும் காண்க. விதி - நான்முகன். (65) 66. வசந்தராசரே வாரீர் தோழி தலைவியை அணையும்படி தலைவனை வேண்டல் ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம் இலகொளி பரந்து மாரன் விடுகணை துரந்து நாடி யிடுமிரு நெடுங்கண் மாதரார் விலகரிய கொங்கை மீது பழநழுவி வந்து பாலின் விழுவதென வந்து சேர்கிலர் மலகரி குறிஞ்சி தேசி பைரவி சுரும்பு பாடும் வயலருணை மங்கை பாகரே பலமலர் கதம்ப தூளி மிருகமத சுகந்தம் வீசு பரிமள வசந்த ராசரே. (பொ-ரை) மலகரி, குறிஞ்சி, தேசி, பைரவி ஆகிய பண்களை வண்டுகள் பாடும் வயல் வளமிக்க அருணையம்பதியில் உள்ள மங்கை பாகரே, பலவகை மலர்களும், மணப்பொடி வகைகளும், கத்தூரி மணமும் வீசுகின்ற நறுமண வசந்தராசரே, விளங்கும் ஒளி பரவி மன்மதன் விடுகின்ற மலரம்புகளை அகற்றி உம்மையே விரும்புகின்ற நெடிய இருகண்களையுடைய தலைவியரின் இடைவெளிபடாத தனங்களின்மேல் பழம் நழுவி வந்து பாலில் விழுவதுபோலச் சேர்ந்து அணையாமல் இருக்கின்றீரே! விரைந்து அணைவீராக. (வி-ரை) பழம் நழுவிப் பாலில் விழுதல் என்னும் பழமொழியை நயமுற எடுத்தாண்டார். பால் தலைவியும், பழம் தலைவருமாம். தலைவர் அண்ணாமலையார். மாரன் விடுகணை துரத்தல் தலைவியின் கண் ஒவ்வேம் என்று நாணி அகன் றொழிதல். வண்டு தமிழிசைக்கும் தாமரையேஎன்பதுபோல,மலகரி.....ghL«” என்றார். வசந்தராசர் என்னும் பெயர்ப் பொருளைவிளக்குவார்போல¥பலமலர்... வசந்தராசரே என்றார். மங்கைபாகர் என்றது பொருள்மிக்க அடை, மங்கை பாகர் ஆதலால் பிரிந்து வந்து கூடுதற்கு அரியீர் போலும் என்பது குறிப்பு. மங்கைபாகரே, வசந்தராசரே, பழம் நழுவி வந்து பாலின் விழுவதெனவந்Jசேர்கிலீர்”எdஇயைக்க. (66) 67. திசையானைகளை வென்ற யானை மதங்கு ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம் வசிகரம் வயங்கு நீறும் அபிநய புயங்க ராச வலயமும் அணிந்த தோளினார் அசலகுல மங்கை பாகர் பரிமள வசந்த ராசர் அருணையின் வளங்கள் பாடியே இசைபெற அரங்கின் ஊடு பவுரிகொள் மதங்கி யார்தம் இலகிவளர் கொங்கை யானையே திசைபெற இருந்த யானை ãறகிடKனிந்துnபார்செய் திறலிபம் அனந்த மானவே. (பொ-ரை) கண்டாரைக் கவரும் விளக்கமிக்க வெண்ணீற்றையும், அழகுற ஆடும் பாம்புகளின் தலைவனாம் ஆதிசேடனாகிய தோள் வளையையும், அணிந்த தோளை யுடையவரும் இம்மலைவேந்தன் மகளாம் உமையம்மையைப் பாகமாக உடையவரும் ஆகிய பரிமள வசந்தராசரது அண்ணா மலையின் வளப்பங்களை அவையின் நடுவே இசைபெறப் பாடிப் பவுரிக்கூத்து ஆடுகின்ற மதங்கியாரது விளங்கி வளர்கின்ற தனங்களாகிய யானைகள், எட்டுத் திக்குயானைகளும் புறமுதுகு காட்டவும் சினந்து போர் புரிகின்ற வலிய யானைகள் பலவாயின. (வி-ரை) இருகைகளிலும் வாள்கொண்டு வீசி எழிலுறப் பாடி ஆடும் இளமங்கையைக் கண்டானோர் இளைஞர் காமுற்றுக் கூறுவதாகச் செய்யுள் செய்வது மதங்கியார் என்பதாம். இதனைப் பாடியே ... மதங்கி என்றதனால் அறிக. திக்கு யானைகள் திக்கின் முடிவில் முட்டிக் கொண்டு நிற்பன என்பராகலின் புறமுதுகிட்டனவாகப் புனைந்து கூறினார். அவ் யானைகள் புறமுதுகிட்டதறிந்தும் காளையர் சூழ்ந்து போரிட விழைந்தனராதல் குறிப்பாராய், முனிந்து போர் செய் திறலிபம் அனந்தம் ஆனவே என்றார். அனந்தம் - எண்ணற்றன. பவுரி - கூத்துள் ஒருவகை; அது சுற்றி ஆடுதல் என்பர். திறல் இபம் - வலிய யானை. (67) 68. மதங்கியார், ஆசை தரிக்கு மதங்கியார்? இதுவும், மதங்கியார் கட்டளைக் கலிப்பா நதியைச் சூடதி ருங்கழல் நாதனார் நம்ப னாரரு ணாபுரி வீதிமேல், சதியில் பாடிந டிக்கும தங்கியார், தந்த ஆசைத ரிக்கும் தங்கியார்? வதனத் தாற்சசி மண்டல மாறுமே; வந்தி ருந்தவிம் மண்டல மாறுமே; கதியில் கொண்டது மந்தக் கரணமே, கண்ட பேர்க்கிலை யந்தக் கரணமே. (பொ-ரை) கங்கையாற்றைச் சடையில் கொண்டவரும் அதிருங் கழல்நாதர் என்னும் பெயருடையவரும் ஆகிய சிவபெருமானின் அண்ணாமலைப் பதியின் வீதியில் தாளக் கட்டுடன் பாட ஆடுகின்ற மதங்கியார் அங்குத் தந்த ஆசையாகிய அதனைத் தாங்குபவர் எவர்? முகத்தொளியால் மதியும் மாற்ற முறும்; இவ்வாறாக அங்கு வந்திருந்த மண்ணுலகோர் காமத்தீ ஆறுமோ? மதங்கியார் தம் நடையால் கொண்டதும் அந்தக் கூத்தே ஆகும்; அதனைக் கண்ட ஆடவர்களுக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் இல்லை. (வி-ரை) சதி - தாளக்கட்டு; ஆசைதரிக்கு மதங்கியார் என்பதை ஆசைதரிக்கும் அது அங்கு யார் எனப் பிரித்துப் பொருள் கொள்க. சசிமண்டலம் - மதியம்; மண்டலம் (மண்தலம்) என்பது உலகோரைக் குறித்தது; ஏகாரம் எதிர்மறைப் பொருள் தந்தது. கதி-நடை; கரணம் - கூத்து. மதி மாற்றமுறுதல் தேய்தல். ஆடவர்க்கு அந்தக்கரணம் இல்லை என்றது மதங்கியார் நினைவு ஒன்றையன்றி வேறொன்றை அறியா நிலையடைவர் என்பதாம். (68) 69. குறமும் பாடேன்; கூடையும் தீண்டேன் குறம் எண்சீர் ஆசிரியவிருத்தம் அருணமணி முலைக்கிரிமேல் செங்கை வைத்தால், ஆகையால் அருணகிரி அன்பன் மூதூர்; வருணமுலை கண்ணாரப் பார்த்தாய் உன்றன் மகிழ்நனும்கண் ணாரமுதன் வந்து கேளாய்; தரணியில்உன் றனைச்சேர்வன் முருகன் போலத் தநயரையும் பெறுவையிவை தப்பு மாயின் திருநிறைவண் டார்குழலாய் குறமும் பாடேன் சிறந்தகுறக் கூடையும்யான் தீண்டி லேனே. (பொ-ரை) அழகெல்லாம் ஓர் உருவாய்த் திரண்ட வண்டுகள் ஆரவாரிக்கும் கூந்தலையுடையவளே, நான் குறி கூறுவதை வந்து கேட்பாயாக; செம்மணி யணிந்த மார்பின்மேல் உன் சிவந்த கையை வைத்தாய்; ஆகையால் உன்னை ஆட்கொண்ட அன்பரின் பழைமையான ஊர் அண்ணாமலை யேயாம்; வனப்பு மிக்க நின் மார்புகளைக் கண்களிக்கப் பார்த்தாய்; ஆகையால் உன் கணவன் பெயர் கண்ணார் அமூதன் என்பதாகும்; அவன் இவ்வுலகில் உன்னைச் சேர்வான்; முருகனைப் போன்ற மக்களையும் பெறுவாய்; யான் கூறிய இக் குறிகள் தவறுமாயின் இனிக் குறப்பாட்டுப் பாடேன்; சிறப்புமிக்க குறக் கூடையையும் யான் தொடேன். (வி-ரை) குறம் என்பதன் இலக்கணத்தை 50ஆம் செய்யுள் விளக்கவுரையில் காண்க. ஆங்குக் கூறிய குறம், சுளகில் நெல் பரப்பி அதனை எண்ணிக் கணித்தலை யுடையது. இங்குக் கூறும் குறம் இயலும் செயலும் நோக்கி இயம்புவதாகும். நட்டகுறி, தொடுகுறி என இந்நாள் வழங்குவன இத்தகையனவே. செந்தழலே அண்ணாமலை ஆகியது என்பது கதை ஆதலின் செம்மணி மார்பின்மேல் கை வைத்தது கொண்டு அன்பன் ஊர் அண்ணாமலை என்றாள். கண்ணாரப் பார்த்த காட்சியைக் கொண்டு காதலன் பேர் கண்ணார் அமுதன் என்றாள்; நன்மகப் பேற்றை அடைவாள் என்பதற்குக் காரணம் காட்டிற்றிலர். ஆனால், மதலை என்னும் பெயர் தூணுக்கும் மகவுக்கும் இருத்தலால் அவள் தூணில் சாய்ந்திருத்தலை நோக்கி முருகன்போல் மக்களைப் பெறுவான் என்று கூறினாள் என்பார் உரையாசிரியர் திரு. நகராமலை நா. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இவை தப்புமாயின்... தீண்டிலேனே என்றது சூள்மொழி; குறி தப்பாது என்பது தெளிவிக்க வந்தது. அருணம் - சிவப்பு; வருணம் - வனப்பு; மகிழ்நன் - கணவன்; தநயர் - மக்கள்; குறக்கூடை - குறம்பாடிப் பெற்ற தவசம் முதலியன வைத்துக் கோடற்குரிய கூடை. (69) 70. நடுமரங்கள் மறம் எண்சீர் ஆசிரியவிருத்தம் தீண்டரிய மடற்பனையின் சருகை வாரிச் சிற்றிரும்பால் சுற்றிவரச் *செதுக்கிக் கூட்டி நீண்டதுவும் இருண்டதுமா வரைந்து சுற்றி நிருபமெனக் கொடுத்தெதிரே நிற்கும் தூதா! தாண்டவமா டும்பரனார் அருணை நாட்டில் தருமறப்பெண் தனைவேண்டிச் சமரில் போந்து மாண்டவரே றியகோணல் வளைகள் நாங்கள் வருங்கல்வழி வாயில்நடு மரங்க ளாமே. (பொ-ரை) தொடுதற்கு அரிய மடல்களையுடைய பனையின் ஓலையை எடுத்துச் சிறிய இரும்பாம் எழுத்தாணி யால் நாற்புறமும் செதுக்கி ஒழுங்கு செய்து, நீண்டதாகவும் கறையுடையதாகவும் எழுதிக் கயிற்றால் சுற்றிக் கடிதம் என்று கொடுத்து, எம் எதிரில் நிற்கும் தூதனே, தாண்டவம் புரியும் பெருமானின் திருவருணை நாட்டில் இன்பம் தரும் மறக்குடிப் பெண்ணை விரும்பி வந்து போரில் மாண்டு போனோர் எண்ணற்றவர்; அவர்கள் ஏறி வந்த சிவிகையின் வளைந்த மூங்கில்களே நாங்கள் வரும் கற்கள் நிரம்பிய காட்டு வழியின் வாயிலில் நட்டிய வளைவு மரங்களாகும். (வி-ரை) மறக்குடிப் பிறந்த மகளை மணம் பேசி வருமாறு மன்னவர் தூது அனுப்ப, அத் தூதனைப் பார்த்து மறவன் மகண் மறுத்து உரைப்பதாகச் செய்யுள் செய்வது மறம் என்பதாகும். இதனை மகண் மறுத்துரைத்தல் என்றும் கூறுவர். வெம்மூரணான் மகள் வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத் தன்று என்பது இதன் இலக்கணம், (புறப்பொருள் வெண்பா மாலை 94) சருகு - ஓலை; சருகு, சிற்றிரும்பு, நீண்டதும் இருண்டதுமா வரைந்து என்பவை எள்ளல். கோணல்வளை என்றது சிவிகையின் மேல் வளைகளை. வளைக்க வளைகின்ற வேய் மன்னர் மாமுடியின் மேலாம் என்பதால் மூங்கில்வளை அஃதென்க. வாயில் நடுமரம் என்றது வளைவுகளை; சமர் - போர். (70) 71. அறத்தவள் அம் பதியார் கொச்சகக் கலிப்பா மறைக்கவனப் பரியாரும் வரைக்கவனப் பரியாரும் எறித்தவிரும் பிறையாரும் எவரும்விரும் பிறையாரும் பொறுத்தசின விடையாரும் பொருந்துசின விடையாரும் அறத்தவளம் பதியாரும் அருணைவளம் பதியாரே. (பொ-ரை) திருமறைகளாகிய நடையிற் சிறந்த குதிரை களையுடையவரும், அறுதியிட்டுக் கூற ஒண்ணாத அழகுடைய வரும் ஒளி விட்டு விளங்கும் பெருமைமிக்க பிறையை அணிந்த வரும், எவராலும் விரும்பப்பெறும் தலைமைத் தன்மையினரும், தம்மைத் தாங்கிய சினங் கொண்ட காளையூர்தியினரும், தம்மொடு பொருந்திய சிறிய இடையினையுடைய உமையம் மையைப் பாகமாக உடையவரும், அறம் வளர்க்கும் அம்மையாம் உமையின் மணவாளரும், அண்ணாமலை என்னும் வளமையான பதியில் உள்ள இறைவரே ஆவர். (வி-ரை) இப் பாடலில் மடக்கு என்னும் சொல்லணி அமைந்துள்ளது. மறைக் கவனப் பரியார் வரைக்க வனப்பு அரியார் என முதலடியையும், எறித்த இரும்பிறையார், எவரும் விரும்பு இறையார் என இரண்டாம் அடியையும், பொறுத்த சின விடையார் பொருந்து சி(ன்)ன இடையார் என மூன்றாம் அடியையும். அறத்தவள் அம் பதியார் அருணை வளம்பதியார் என ஈற்றடியையும் பிரித்துப் பொருள் கொள்க. கவனம் - நடை; வரைக்க - வரையறுக்க; இரும் - பெரிய; பொறுத்த - தாங்கிய; பதியார் - தலைவர்; பதியினையுடையவர். அறத்தவள் என்று உமையைக் குறித்தது அறம் வளர்த்த நாயகி அவன் ஆகலின்; அவள் அறம் வளர்த்தமை காஞ்சிப் புராணத்தில் கண்டது. (71) 72. நஞ்சம் தரித்ததன் நன்மை கலித்துறை ஆரணி துங்கன் நாரணி பங்கன் அருணேசன் தாரணி அஞ்சும் காரண நஞ்சம் தரியானேல் வாரணர் எங்கே சாரணர் எங்கே மலர்மேவும் பூரணர் எங்கே நாரணர் எங்கே போவாரே? (பொ-ரை) ஆத்திமாலை அணிந்த பெரியோனும், உமையம்மையைப் பாகமாக உடையவனுமாகிய அண்ணாமலை இறைவன், உலகோர் அஞ்சுதற்குக் காரணமான நஞ்சினை யுண்டு கழுத்தில் தாங்கிக் கொள்ளாவிடின், இந்திரர் எங்கே? சாரணர் எங்கே? மலரில் தங்கிய நான்முகன் எங்கே? திருமால் தான் எங்கே? இவர்கள் எல்லாரும் ஒருங்கே அழிந்திருக்க மாட்டாரோ? (வி-ரை) ஆர் - ஆத்தி; நாரணி - நாராயணியம் உமையம்மை; வாரணம் - யானை; இவண் வாரணர் என்றது வெள்ளை யானையையுடைய இந்திரனைக் குறித்தது. சாரணர் - பதினெண் கணங்களுள் ஒருவர்; இவண் பதினெண் கணங்களும் குறிக்கப் பெற்றனர்; மேவும் - தங்கும்; போவாரே - இறந்து போவாரே. மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர் அண்டமெங்கே அவ்வவ் அரும்பொருளெங் கேநினது கண்டமங்கே நீலமுறாக் கால் என்னும் வள்ளலார் வாக்கு இவண் கருதத்தக்கது. (72) 73. பார்த்தபோது பசந்து மலர்ந்தது தழை கட்டளைக் கலிப்பா போந்த போதக நல்லுரி ஆடையார் போர்வை யாளர் புகழரு ணைக்குளே ஈந்த சூதந றுந்தழை ஐயனே! எங்கள் மாதரெ டுத்தும கிழ்ச்சியாய் மோந்த போதுது வண்டது; மெய்யிலே மொய்த்த போதுபு லர்ந்தது; கண்ணினீர் பாய்ந்த போதுந னைந்தது; மீளவும் பார்த்த போதுப சந்தும லர்ந்ததே. (பொ-ரை) மாறுபட்டு வந்த யானையின் நல்ல தோலாடையைப் பொருந்திய மேலாடையாகக் கொண்ட சிவனாரின் புகழ் வாய்ந்த அண்ணாமலைப் பதியில், தலைவரே நீவிர் தந்த மாவின் நறிய தழையை எங்கள் தலைவியார் எடுத்து மகிழ்வாக முகர்ந்த பொழுதில் அது வாடியது; உடலோடு தழுவப் பெற்றபோது உலர்ந்தது; கண்ணீர் அதில் பாய்ந்த போது நனைந்தது; திரும்பவும் பார்த்த பொழுதில் பசுமை யடைந்து பூ வெடுத்தது. (வி-ரை) தழை என்பது தழையும் மலரும் கொண்டு செய்யப் பெற்ற ஒரு வகை உடை. தலைவன் தந்த தழையுடையைத் தோழி தலைவிக்குத் தந்தாளாக அத் தழையுடையைப் பெற்றுக் கொண்ட தலைவியின் இயலும் செயலும் இவ்வாறாக இருந்தன என்பதைத் தோழி தலைவனுக்கு உரைத்தல் தழை எனப்பெறும். போதகம் - யானை; உரி - தோல்; சூதம் - மா; தழையைக் கொண்ட தலைவியின் தன்மையை உள்ளவாறு கூறுதலில் தன்மை நவிற்சியும், தழை பெற்ற மாற்றங்களைக் கூறுதலில் உயர்வு நவிற்சியும் அமைந்துள. முகர்ச்சியின் வெதுப்பு துவளச் செய்தது; உடலின் வெதுப்பு உலரச் செய்தது. கண்ணீரால் நனைதல் ஆயிற்று; மகளிர் பார்வையால் மாமரம் தளிர்க்கும் என்பராகலின் பசந்து மலர்ந்தது என்றார். (73) 74. இனிய பனித்திரையே! இனிஇலை நித்திரையே இரங்கல் எண்சீர் ஆசிரியவிருத்தம் மலரிதழித் *தொடைபால் மதியணி வித்தகனார் மலைமகள் அற்புதனார் வயலரு ணைப்பதிசூழ் குலவுமி டக்கழியே பலவுமி டக்கழியே குறவையி னக்கயலே யுறவுமெ னக்கயலே சலமிகு முற்பலமே தளவர்வது முற்பலமே சருவும னத்திடரே தழுவும னத்திடரே இலைநெரி சற்பனையே இவருரை சற்பனையே இனியப னித்திரையே இனியிலை நித்திரையே (பொ-ரை) கொன்றை மலர் மாலையையும், பால் வெண்மதியையும் அணியும் சிறந்தவரும், மலைமகளின் இனிய மணவாளரும் ஆகிய அண்ணாமலையாரின் அருணைப் பதியைச் சூழ விளங்கும் இடத்திலுள்ள உப்பங்கழிகளே, எனக்கு நேர்வன எல்லாம் துன்பத்தாற் கலங்குதலேயாம்; குறவை மீனின் இனத்தைச் சேர்ந்த கயல்மீன்களே, எனக்கு உறவினரும் அயலார் போல ஆயினர்; நீரில் செழித்து விளங்கும் நீலோற்பல மலர்களே, யான் தளர்ச்சியுறுவதும் முன் செய்த வினையின் பயனே; விரும்பிச் சேரும் அன்னங்கள் உலாவும் மணல் திடர்களே, என் மனத்தில் துன்பமே தழுவிக் கிடக்கும்; ஓலைகள் நெருங்கிக் கிடக்கும் பனைமரமே, என் தலைவராகிய இவர் உரை வஞ்சனையே யாம்; இன்பந்தரும் தண்மையான அலையே, இனி எனக்கு உறக்கம் என்பது இல்லையேயாம். (வி-ரை) தலைவனைப் பிரிந்த தலைவி கழி, கயல், நீலோற்பலம், மணல்திடர், பனை, திரை ஆகியவற்றை விளித்துத் தன் இரங்குதல் உரைத்தது இது. இப்பாடலின் இரண்டாம் அடியை, குலவும் இடம் கழியே, பலவும் இடக்கு அழியே குறவை இனக் கயலே, உறவும் எனக்கு அயலே எனவும், மூன்றாம் அடியை, சலம் மிகும் உற்பலமே, தளர்வது முற் பலமேட சருவும் அனத் திடரே, தழுவும் மனத்து இடரே எனவும், ஈற்றடியை, இலை நெரிசல் பனையே, இவர் உரை சற்பனையே இனிய பனித் திரையே, இனி இலை நித்திரையே எனவும் பிரித்துப் பொருள் கொள்க. கழி - உப்பங்கழி; இடக்கு - துன்பம்; அழி - கலக்கம்; சலம் - நீர்; உற்பலம் - நீலோற்பலம் (குவளை); முற்பலம் - முன்வினைப் பயன்; சருவும் - சேரும்; அனம் - அன்னம்; இலை - ஓலை; சற்பனை - வஞ்சம்; இலை - இல்லை. முதலடி ஒழிந்த மூன்றடிகளிலும் மடக்கணி அமைந்துள்ளது. (74) 75. வஞ்சி நின்ற இடம் இவ்விடம் சுவடுகண் டறிதல் எழுசீர் ஆசிரியவிருத்தம் நித்தன் நம்பனரு ணாசலத் திருவை நின்று தேடியுழல் நெஞ்சமே இத்த டஞ்சுரம டங்கவே யிதல தில்லை வேறுமர மிதனிடை அத்தி நின்றவிட மவ்விடம்; சிலைகொள் அரசு நின்றவிடம் உவ்விடம்; எய்த்துள் அஞ்சியிள வஞ்சிநின் றவிடம் இவ்வி டஞ்சுவடு மேவுமே. (பொ-ரை) நிலை பெற்ற சிவபெருமானது அண்ணாமலைப் பதியில் உள்ள திருமகள் போன்றவனைத் தேடி நின்று வருந்து கின்ற மனமே, இப் பெரிய பாலைநிலம் முழுவதும் இம் மரம் அல்லது வேறு மரம் இல்லை; இம் மரத்தின் இடத்தில் யானை நின்ற இடம் அந்த இடமாகும்; வில்லேந்திய தலைவன் நின்ற இடம் இடைப்பட்ட உவ்விடமாகும்; இளைத்து உள்ளம் நடுங்கி, இளைய வஞ்சிக்கொடி போன்ற தலைவி நின்ற இடம் இவ்விட மாகும்; அங்கும் உங்கும் இங்கும் சுவடுகள் பொருந்திக் கிடக்கின்றன. (வி-ரை) தடஞ்சுரம் - பெரிய பாலை; அடங்கவே - முழுமையாக; அத்தி - யானை; அரசு - அரசனைப் போன்ற தலைவன்; உவ்விடம் என்றது இவ்விடமும் அவ்விடமுமல்லாத நடுப்பட்ட இடம். தலைவியின் சுவடுபட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு செவிலி உரைத்தாள் ஆகலின் அதனை இவ்விடம் என்றாள். சுவடு - கால் தடம். தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிச்சென்ற செவிலி பாலை வழியில் அவர்கள் சென்றதும் நின்றதுமாகிய கால்தடங்களைக் கண்டு அறிந்துகொள்ளுதலைப் பற்றிக் கூறுதல் சுவடு கண்டறிதல் என்னும் துறையாகும். தலைவியைத் தலைவன் யானைமேற் கொண்டு சென்றமை இச் செய்யுளால் புலனாம். அத்தி, அரசு, வஞ்சி ஆகிய மரவினப்பெயர்களை எடுத் தாண்ட நயம் கருதத்தக்கது. (75) 76. பெண்ணையே கூடுவார் பெண்ணையே வெட்டுவாரோ? மடல் விலக்கு கலி விருத்தம் ஏறுடை அண்ணலார் ஏழை பாகனார் ஆறணி சென்னியார் அருணை வெற்பரே, கூறொரு பெண்ணையே கூட வேண்டுவார் வேறொரு பெண்ணையே வெட்டு வார்கொலோ! (பொ-ரை) காளையூர்தியினரும், உமை ஒரு பாகத்தினரும், ஆறு அணிந்த தலையினரும் ஆகிய சிவபெருமானது அண்ணாமலையில் உள்ள தலைவரே, ஒரு பெண்ணைச் சேர விரும்புவர் வேறொரு பெண்ணை - பனையை - வெட்டத் துணிவாரோ? கூறுவீராக. (வி-ரை) ஏறு - காளை; ஏழை - பெண்; பெண்ணை என்பதில் முன்னது மகளை என்னும் பொருளையும், பின்னது பனை என்னும் பொருளையும் தந்தது; மடலேறுதலை விலக்குதல் மடல் விலக்கு என்னும் துறையாகும். மடலேறுதல் என்பது ஒரு தலைவிமேல் காதல் கொண்ட தலைவன் அவளை அடையப் பெறாமல் வருந்தி அவளை அடைதற்கு வாயிலாக நீறுபூசி, எருக்குமாலை அணிந்து, தலைவியின் உருவத்தைப் படமாக எழுதிக் கையில் பிடித்துக் கொண்டு பனைமட்டையால் செய்த குதிரை மேல் ஏறுதல் ஆகும். அவ்வாறு ஏறாமல் விலக்குதல் மடல்விலக்கு எனப்படும். மடல் ஏறுதலைக் கண்ட சான்றோர் தலைவியின் குடும்பத்தாரை உடன்படுத்திக் கருதிய தலைவியைத் தருதல் வழக்கமாகும். பெண்ணைக்கூட வேண்டுவார், பெண்ணை வெட்டுவார் கொலோ என்பதில் உள்ள சொல்நயம் உணர்ந்து இன்புறுக. (76) 77. வலங்கொண்டார் இடங்கொண்டாரே தவம் எண்சீர் ஆசிரியவிருத்தம் வாய்ந்தநல மருந்தருந்தி அரிய யோக வகைபுரிந்து வாயுவுள்ளே அடக்கி னாலும், காய்ந்தவிருப் பூசியிலே தவம்செய் தாலும், காயம்வருந் திடுவதல்லால் கதிவே றுண்டோ? ஆய்ந்ததிரு நீறணிந்தைந் தெழுத்தை ஓதி அகமகிழ்ந்து சிவாகமத்தின் அடைவை ஓர்ந்தே ஏய்ந்தருணா சலத்தைவலங் கொண்டார் அன்றோ இமைக்கு முன்னே கைலைமலை இடங்கொண் டாரே. (பொ-ரை) நன்மையால் சிறந்த மருந்துகளை உண்டு, செய்தற்கு அரிய யோக நெறிகளை மேற்கொண்டு காற்றை வெளியே செல்ல விடாமல் உள்ளே அடக்கினாலும், தீயில் காய்ந்த இரும்பு ஊசிமேல் நின்று தவம் செய்தாலும் உடல் வருந்துவதே அல்லாமல் அடையும் நற்பேறு ஒன்று உண்டோ? உயர்ந்தோரால் ஆராயப் பெற்ற திருவெண்ணீற்றை அணிந்து, நமசிவய என்னும் திருவைந்தெழுத்தை ஓதி, மனம் மகிழ்ந்து சைவ ஆகமத் திருமுறைகளை உணர்ந்து, அண்ணாமலையை அடைந்து வலம் வந்தவர் அல்லரோ இமைப்பொழுதுக்குள்ளே கைலைமலையைத் தமக்குரிய இடமாகக் கொண்டவர். (வி-ரை) முன்னிரண்டு அடிகளில் தவத்தால் பயனின் மையை விளக்கிப் பின்னிரண்டு அடிகளில் பயன் பெறும் வகையை விளக்கினார். தவம் செய்வாரை நோக்கிக் கூறியது இஃது என்பர். அடைவு - அடைவு செய்யப் பெற்ற நூல்கள்; திருமுறைகளும், சாத்திரங்களும்; வலங்கொண்டார் அன்றோ இடங்கொண்டார் என்பதில் முரண்நயம் அமைந்து பொலிவூட்டுகின்றது. (77) 78. தண்மதியை வெங்கதிர் என்பாள் மாலை இரத்தல் அறுசீர் ஆசிரியவிருத்தம் இலங்கிய திங்கள் எழுந்தால் எங்கள்மின் வெங்கதிர் என்பாள் கலங்கனிள் ஆயினும் அன்னாள் கட்கம லங்குவி யாவோ? துலங்கிய வெங்கதிர் தானேய் சோணகி ரிப்பெரு மானே! அலங்கலை என்றுகொ டுப்பாய் அன்றது வெண்மதி யாமே. (பொ-ரை) விளங்கிய கதிரோனுக்கு ஒப்பான அண்ணாமலைப் பெருமானே, எங்கள் மின்னற்கொடி போன்ற தலைவி, விண்ணில் விளங்கும் திங்கள் தோன்றினால் அதனை வெம்மையைத் தரும் கதிரோன் என்பாள்; மனக்கலக்கம் உடையவள் ஆயினும், அது திங்களாயிருந்தால் அவளது கண்ணாகிய தாமரை குவிந்து போகாதோ? நீ மாலையை எப்பொழுது கொடுப்பாயோ அப்பொழுதே அது வெண்மதியாக அவளுக்குத் தோன்றும். (வி-ரை) தோழி, தலைவிக்கு மாலை அருளவேண்டித் தலைவனிடம் உரைத்தது இது. கட்கமலம் என்பது கண்ணாகிய கமலம் என்பதையும், கள்ளையுடைய (தேனையுடைய) கமலம் என்பதையும் தரும். கட்கமலம் குவியாவோ என்றது கண்ணுறக்கம் கொள்ளாமை குறித்தது. மின் - மின்னல் போன்ற தலைவி. அலங்கல் - மாலை. தலைவி திங்களை வெங்கதிர் என்கிறாள், அஃதுண்மையே! இல்லையேல் அவள் கண்ணாகிய தாமரை குவிந்திருக்குமே எனத் தோழி தலைவி துயில் கொள்ளாமையை நயமுறக் கூறினாள். (78) 79. அரைக் கண்ணரும் கால் கண்ணரும் நேரிசை வெண்பா ஆற்றுங்கால் கஞ்சத் தவர்தா மரைக்கண்ணர் சாற்றுங்கால் கண்ணரவர் தந்தையார் - கீற்றுமதி சூடும் பெருமானைச் சோணகிரி வித்தகனைத் தேடுவதிங் கெப்படியோ சேர்ந்து. (பொ-ரை) பெற்றபொழுதில் நான்முகர் அரைக்கண்ண ராக இருந்தார்; அவர் தந்தையாராகிய திருமால் புகழ்ந்து கூறப்பெறும் கால்கண்ணராக இருந்தார்; இத்தகையவர் பிறைமதி அணிந்த பெருமானும் அருணைமலை அண்ணலுமாகிய சிவபெருமானைச் சேர்ந்து இங்குத் தேடிக் காண்பது எப்படிக் கூடுமோ? (வி-ரை) கஞ்சத்தவர் - உந்தித் தாமரையில் இருப்பவர்; திருமாலின் அரைக் கண் தோன்றியவர் ஆகலின் அரைக் கண்ணர் என்றார்; கண் - இடம்; பாதிக் கண்ணர் என்னும் பொருளும் தந்தது; கால் கண்ணர் என்றது திருமால் சிவபெருமானை வழிபட்ட காலையில் ஆயிரம் பூக்களுக்கு ஒன்று குறைந்ததாகத் தம் கண்ணில் ஒன்றைப் பறித்துக் காலில் மலராகப் பெய்தார். ஆதலால் காலில் கண் வைத்தவர் என்னும் பொருளில் கால் கண்ணர் எனப் பெற்றார். கால் என்பது பாதியில் பாதியைக் குறிக்கும் எண்ணுப் பெயராகவும் அமைந்து நயமூட்டியது. கால் கண்ணரும், அரைக் கண்ணரும் கூடி, முக் கண்ணரைத் தேடிக் காண்பரோ? காணார் என அடி முடி தேடி அறிய முடியாமையைத் திறமாகக் கூறினார். திருமால் கண்மலர் சாத்தியமையை, பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர்பூக் குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலும் (79) என்பார் மாணிக்கவாசகர். 80. செல்வர்க்கே செய்வர் சிறப்பு கட்டளைக் கலித்துறை சேணார் திருவுடைச் செல்வரைக் காணில் சிறப்புச்செய்து பேணா தவருமுண் டோபுவி மீதில் பெருத்தெழுந்து சோணா சலவடி வாய்வெளி யாய்நின்ற சோதிதனைக் காணாத கண்ணனைச் சொல்வர்செந் தாமரைக் கண்ணனென்றே. (பொ-ரை) மிகுந்த சிறப்பினையுடைய செல்வரைக் கண்டால் இவ்வுலகில் அவர்க்கு மேலும் சிறப்புச் செய்து பேணிக் கொள்ளாத வரும் உண்டோ? இல்லை; ஆதலால் உயர்ந்து தோன்றி அண்ணாமலை வடிவாகவும் பெருவெளியாகவும் நின்ற பேரொளியைக் காணமாட்டாத கண்ணையுடைய திருமாலை உலகோர் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்வர். (வி-ரை) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு என்னும் திருக்குறளை ஊடகமாகக் கொண்டது இச் செய்யுள். திருமால் திருமகளை உடையவர் ஆதலாலும், பொன்னாடை யும் மணியணியும் உடையவர் ஆதலாலும் அச் செல்வச் சிறப்பு நோக்கி, காண மாட்டாக் கண்ணுடையாரைச் செந்தாமரைக் கண்ணர் என்பார் என நயமாகக் கூறினார். திருவுடைச் ... உண்டோ என்னும் பொதுப் பொருளை வலியுறுத்தச் சோதிதனை ... என்றே என்னும் சிறப்புப் பொருளை வைத்தமையால் இச் செய்யுள் வேற்றுப் பொருள் வைப்பணி அமைந்ததாம். (80) 81. நெஞ்சமே என்சொல்வாய்? நேரிசை வெண்பா என்றுமதிக் கண்ணார் இறைவரரு ணாபுரியில் நின்று தவம்புரியாய் நெஞ்சமே! - பொன்திரளான் மாதரையான் ஆயிழைசூழ் மாதரையான் நீதுவண்டு மாதரையா னாமையென்சொல் வாய்? (பொ-ரை) மனமே, நீ ஞாயிறு திங்களைக் கண்ணாக வுடைய சிவபெருமானது அருணைப்பதியில் நிலைத்துத் தவம் செய்யாய்; பொற்குவியலானும், விரிந்த நிலத்தானும், தேர்ந் தெடுத்த அணிகலங்களை அணிந்த மகளிரின் அழகானும் வாட்டமுற்று ஆவலை விடாமைக்கு என்ன காரணம் சொல்வாய்? (வி-ரை) என்று - கதிரோன்; மதி - திங்கள்; மாதரையான் என்பதில் முன்னது மா தரையான் எனப் பிரிந்து விரிந்த நிலத்தால் எனவும், பின்னது, மாதர் ஐ ஆன் எனப் பிரிந்து மாதர் அழகால் எனவும் பொருள் தந்தது. ஈற்றடியிலுள்ள மாதரை யானாமை என்பது மாதரை ஆனாமை என நின்று ஆசையை விடாமையைக் குறித்தது; மாதர் - ஆசை. இதில்பொன், மண், பெண் ஆகிய மூவாசைகளைக் குறித்தார். பின்னிரண்டடி களும் மடக்கு. (81) 82. இரண்டும் உரையாமல் ஏகுவது ஏன்? இடைச்சியார் எண்சீர் ஆசிரியவிருத்தம் சொல்லாடின் உமக்கிரண்டு பசுவே உண்டு; சுமந்திடுபொற் கலசமுமத் துணையாம்; ஈதும் அல்லாமல் இடையின்மிக இளைத்துப் போனீ ராயிருந்தும் இடைமதியோ அகந்தை தானோ புல்லாரென் பணிதொடையார் அருணை நாட்டிற் பொதுவர்குல மங்கையரே புலிமேற் கண்டோர் எல்லாரும் தனித்தனியே டெடுத்தக் காலும் இரண்டுமுரை யாமலகன் றேகு வீரே. நேர்ப்பொருள் ஒன்றும் குறிப்புப் பொருள் ஒன்றும் அமையப் பெற்றது இச்செய்யுள். (பொ-ரை) அறுகம்புல், ஆத்திப்பூ, எலும்பு ஆகியவற்றை அழகிய மாலையாக அணிந்த சிவபெருமானது அண்ணா மலையில் உள்ள ஆயர்குலப் பெண்களே, சொல்வதாயின் உங்களுக்கு இரண்டு பசுக்களே உண்டு. (இரண்டு பசுமையான மூங்கில்போன்ற தோள்கள் உண்டு) நீங்கள் சுமக்கக் கூடிய பாற் கலயங்களும் அவ்விரண்டேயாம். (தனங்களும் இரண்டேயாம்) இதுவும் அல்லாமல் இடைக்காலத்தில் மிகவும் மெலிந்து போய்விட்டீர் (இடை மிகத் தேய்ந்துள்ளீர்.) இவ்வாறாக இருந்தும் பின்புத்தியோ (இடையரினப் புத்தியோ) செருக்கோ, நிலத்தில் பார்த்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக நீங்கள் கொண்டு வந்த தயிரில் ஆடையை எடுத்துக்கொண்டு போன போதும் (தலையில் வைத்துள்ள பூக்களை எடுத்துக் கொண்டு போனபோதும்) உடன்பட்டுக் கூறுதல், மறுத்துக் கூறுதல் என்னும் இரண்டுள் ஒன்றும் கூறாமல் செல்வீர். (இத் தன்மை இருந்தவாறு என்னே!) (வி-ரை) தெருவில் பால் தயிர் விற்கும் ஆயர்குல நங்கை மேல் ஆசைகொண்டானொருவன் தன் ஆசை வெளிப்படக் கூறுவதாகச் செய்யுள் செய்வது இடைச்சியார் என்பதாகும். புல்லாரென்பணி தொடையர் என்பதை புல் ஆர் என்பு அணி தொடையர் எனப் பிரித்துப் பொருள் காண்க. புல்லார் என்பு பகைவரின் எலும்பு எனக் கொள்வாரும் உளர். பொதுவர் - ஆயர்; இடையர்; குறிஞ்சி மருதம் இரண்டற்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தவர் ஆகலின் இடையர் என்றும், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் பொதுவானவர் ஆகலின் பொதுவர் என்றும், ஆக்களை மேய்த்துண்டு ஆப் பயன்கொள்வார் ஆகலின் ஆயர் என்றும் பெயர் பெற்றனர் என்க. பசுவேயுண்டு என்பது பசுவே உண்டு எனவும், பசு வேய் உண்டு எனவும் பிரித்துப் பொருள் கொள்ளப் பெற்றன. வேய் - மூங்கில். ஏடு - பாலாடையும், பூவிதழும். கலசம் இடை என்பன இருபொருள் தருதல் வெளிப்படை. (82) 83. மூவினம் இதுவும் இடைச்சியார் கட்டளைக் கலித்துறை வீரனை நல்கி மகமூறு செய்த விடைக்கொடியார் காரணி கண்டர் அருணா சலத்திற் கலசங்கொண்டு மோரது கூறும் இடையின மானுக்கு முண்டகம்போல் ஈரடி மெல்லினம் வல்லின மாகும் இருதனமே. (பொ-ரை) வீரபத்திரனைப் படைத்துத் தக்கன் செய்த வேள்வியை அழித்த இடபக் கொடியினரும், கரிய அழகிய கண்டத்தினருமாகிய சிவபெருமானது அண்ணாமலையில் மோர்க்குடம் கொண்டு விலை கூறும் இடைக்குலப் பெண்ணுக்குத் தாமரை மலர் போன்ற இரண்டு அடிகளும் மெல்லிய தன்மை யினவாம்; இரு தனங்களும் சூதுக் காய்களின் தன்மையினவாம். (வி-ரை) தக்கன் செருக்குற்றுச் செய்த வேள்வியைஅழிப்பதற்காகவீரபத்திரனைத்தோற்றுவித்தார்இறைவராகலின்வீரனை...bfhoah®” என்றார்; இடையினமான் என்பது இடைப்பெண் என்பதையும், மெல்லினம் என்பது மெல்லிய தன்மையையும் வல்லினம் என்பது வல்லுக் காய்களின் தன்மையையும் குறித்தன ஆயினும், இலக்கணத்தில் பயிலும் வல்லின, மெல்லின, இடையினங்களை நயமுற எடுத்தாண்டு உவகையூட்டினார். (83) 84. தனம் இல்லாரிடம் கடன் கேட்பதா? தோழி தலைவனுக்குத் தலைவியின் இளமை யுணர்த்தல் அறுசீர் ஆசிரியவிருத்தம் தடனாக மணிவெயிலும் பிறையுமிழும் நிலவுமெதிர் சடில நாதன் அடனாக நெடுஞ்சிலையான அசுரர்புரம் எரித்தபிரான் mருணைeட்டில்âldhf« mனையவரேjனம்சிறிதும்fணாத சிறியார் தம்மைக் கடனாக நீர்வினவிப் பிணைதேடி முறிதனையேன் கைக்கொண் டீரே. (பொ-ரை) பெரிய பாம்பின் மாணிக்க ஒளியும், பிறைத் திங்கள் தரும் நிலவொளியும், எதிரிட்டு விளங்கும் சடையப்பரும், வலிய மேருமலையாம் நீண்ட வில்லால் அசுரர்களின் முப்புரங் களை எரித்தவருமாகிய சிவபெருமானது அருணை நாட்டில் வலிய யானையைப் போன்ற தலைவரே, நீவிர் மார்பு சற்றும் தோன்றாத இளைய மகளிரைத் தழுவத்தக்க கடன்மை முறையினராகக் கேட்டு மான் வந்ததோ என வினவித் தேடித் தழையை ஏன் கையில் கொண்டீர்? (É-iu) தலைவியின் இளமைத் தன்மையை இயம்பித் தலைவின் விழைவின் பயனின்மையைத் தோழி உரைத்தது இது. தனம் இல்லாரைத் தேடிக் கடன் வினவுதலும், பிணை தேடுதலும் முறி எழுதுதலும் வழக்கில் இன்மையைக் குறிப்பால் கொண்டு நயமாகக் கூறினார். இப் பகுதி இரட்டுற மொழிதலாம். இதன் பொருள் : கைப்பொருள் சிறிதும் இல்லாத வறியரிடம் தந்த கடனைக் கேட்டுச் சான்று தேடி முறி எழுதிக் கையில் கொண்டது ஏன்? என்பதாம். தடநாகம் - பெரிய பாம்பு; அடல் நாகம் - வலிய மலை; திடநாகம் - வலிய யானை; தனம் - கொங்கை, செல்வம்; பிணை - மான், சாட்சி; முறி - தழை, ஓலைமுறி. (84) 85. அன்றுதான் அருணேசர் வருவாரோ? அறுசீர் ஆசிரியவிருத்தம் கையடைந்த மழுமானும் செழுமானும் உழைமானும் கயலும் மானும் மையடைந்த விழிமானும் உடனாக அருணேசர் வருகு வாரே; மெய்யடைந்த நிறம்கருகி விழிகளும்பஞ் சடைந்துவர மிடற்றின் ஊடே ஐயடைந்து படர்ந்துவர யமனடர்ந்து தொடர்ந்துவரும் அன்று தானே. (பொ-ரை) உடலில் அமைந்த நிறம் கருமையடைந்து கண்களும் ஒளி இழந்துவர, கழுத்தில் கோழைசேர்ந்து பெருகிவர, கூற்றுவன் நெருங்கித் தொடர்ந்துவரும் இறுதிப் பொழுதில் கையில் பொருந்திய மழுவும் மானும், செழுமையான காளையும், உழைமானையும் கயல் மீனையும் ஒப்பான மைதீட்டப்பெற்ற கண்களைக் கொண்ட உமையம்மையும் தம்முடன் வர அண்ணாமலையார் வருவாரோ? வாரார். (வி-ரை) நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் என்பதுபோல இறைநாட்டமும் இளமை தொட்டே வேண்டும் என வலியுறுத்தினார். சாகும்போது சங்கரா சங்கரா என்பதால் பயனென்ன என்னும் பழமொழிக் கருத்தை விளக்குவது இப் பாட்டு. மழுமான் என்பது மழுவும் மானும் என உம்மைத் தொகை; செழுமான் செழும் ஆன் எனப் பிரிக்கப் பெற்றுப் பண்புத் தொகையாம்; உழைமான் உழையாகிய மான் என இருபெயரொட்டுப் பண்புத்தொகை; விழிமான் என்றது உமையம்மையை இது வேற்றுமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. மான் என்னும் சொல்லை முன்னிரண்டடி களில் நயமுற எடுத்தாண்டார். பின்னிரண்டடிகளில் பிணி மூப்புச் சாக்காட்டு நிலையைத் தெள்ளிதின் விளக்குகின்றார். இது தன்மைநவிற்சியணியாம். ஐ - கோழை; மிடறு - கழுத்து. அன்று தானே வருகுவாரே என இயைக்க. (85) 86. கண்ணாலமும் மணக்கோலமும் நேரிசை வெண்பா அண்ணா மலையார் அருணையனை யீரும்மைக் கண்ணாலம் செய்தான் கமலத்தோன் - எண்ணா திணைக்கோலம் செய்தமுலை ஏந்திழையீர்! என்னை மணக்கோலஞ் செய்தான் மதன். (பொ-ரை) அண்ணாமலை இறைவரது அருணைப்பதி போன்றவரே, விளைவதை எண்ணிப் பார்க்காமல் இரண்டு கொங்கைகளையும் தொய்யில் முதலியவற்றால் அழகு செய்த தலைவியரே, உம்மை நான்முகன் திருமணம் செய்து கொண்டான்; மன்மதன் என்னை மணக்கோலம் கொள்ளச் செய்தான். (வி-ரை) தலைவியின் எழில்நலம் கண்ட தலைவன் கூற்று இது. இரண்டாம் நான்காம் அடிகளில் சிலேடை நயம் அமைந் துள்ளது. கமலத்தோன் கண்ணாலம் செய்தான் என்பதில் கண்ணாலம் என்பது திருமணம் என்னும் பொருளையும், கண் ஆலம் செய்தான் எனப் பிரிந்து கண்ணை நஞ்சாகப் படைத்தான் என்னும் பொருளையும் தரும். மதன் மணக்கோலஞ் செய்தான் என்பதில் மணக்கோலஞ் செய்தான் என்பது திருமணக்கோலம் செய்தான் என்னும் பொருளையும், மணக்கோல் அஞ்சு எய்தான் எனப் பிரிந்து மணமிக்க மலரம்புகள் ஐந்து எய்தான் என்னும் பொருளையும் தரும். (86) 87. குழலிருந்தால் எப்படி வாட்டுவீரோ? கொற்றியார் அறுசீர் ஆசிரியவிருத்தம் மழலைமொழி இசையாலும் கொடும்பார்வை அதனாலும் மயக்க மாகிச் சுழலும்விடர் அரவமெலாம் படமெடுத்து முன்னாடத் தோன்றி னீரே, அழலுருவம் அணிகரத்தர் அருணகிரி வளநாட்டில் அளிவந் தூதும் குழலொருசற் றுண்டாயின் எப்படியோ வாட்டிடுவீர் கொற்றி யாரே! (பொ-ரை) தீயின் வடிவாகிய மழுப்படையைக் கொண்ட கையினராகிய அண்ணாமலையாரின் வளமையான நாட்டில் வாழும் கொற்றியாரே, உம் மழலைச் சொல்லின் இனிமை யாலும், மயக்கமூட்டும் கொடிய பார்வையாலும் வெடிப்பில் உறையும் பாம்பெல்லாம் சுழன்று படமெடுத்து முன்னே ஆடத்தோன்றினீர்; உமக்கு வண்டுகள் வந்து இசை பாடத்தக்க கூந்தலும் ஒரு சிறிது உண்டானால் எவ்வாறு வாட்டுவீரோ? அறியேம். (வி-ரை) தலைமுண்டித்து, வைணவக் கோலம் கொண்டு, சூலம் முதலியன ஏந்தி வீதியிற் பிச்சைக்கு வருகின்ற மகளிரைக் கண்டு காமுகன் ஒருவன் கூறுவதாகச் செய்யுள் செய்வது கொற்றியார் என்பதாம். இதன் இரண்டாம் அடியில் இரட்டுறல் அமைந்துள்ளது. சுற்றித்திரியும் காமுகர் உம் சிலம்பு முதல் எல்லாவற்றையும் படமாக எழுதி உம் முன்னே மடலேறிவரத் தோன்றினீரே என்பது அதன் பொருளாம். விடர் - வெடிப்பு, காமுகர்; அரவம் - பாம்பு, சிலம்பு; படம் - பாம்பின் படம், ஓவியம்; முன்னாட என்பது முன் ஆட, முன் நாட எனப் பிரிந்து முன்னே ஆடவும், முன்னே வரவும் எனப் பொருள் தரும், அளி - வண்டு. கொற்றியார் தலைமுண்டிதம் உடையவர் என்பது அளி வந்தூதும் குழலொரு சற்றுண்டாயின் என்பதால் விளங்கும். அவர்கள் பாம்பினை ஆட்டுவதும் உண்டு என்பது, சுழலும் விடர் அரவமெலாம் படமெடுத்து முன்னாட என்பதால் புலப்படும். (87) 88. பிறைநிலவால் பேரிருள் மறைந்தது இதுவும் கொற்றியார் கொச்சகக் கலிப்பா ஆரிதழி சூடும் அருணேசர் நன்னாட்டில் வாரிறுகு கொங்கை மலைசுமக்கும் கொற்றீரே! பேரிருள்போல் நாமப் பிறைநிலவு கண்டொளிக்கக் கூரியகண் ணில்லார் குழல்குறைந்தார் என்பாரே. (பொ-ரை) ஆத்தி மலரும் கொன்றை மலரும் சூடும் அண்ணாமலையாரின் நல்ல நாட்டில், கச்சினால் இறுக்கிக் கட்டப்பெற்ற மார்புகளாகிய மலைகளைச் சுமந்து திரியும் கொற்றியீரே, கப்பிக்கொண்ட இருளைப்போன்ற நும் கூந்தல் நாமம் இடப்பெற்ற பிறை போன்ற நெற்றியின் ஒளிகண்டு மறைந்து போகவும், கூரிய பார்வை இல்லாதவர் நும்மைக் கூந்தல் இல்லாதவர் என்று கூறுகின்றார். (வி-ரை) ஒளியால் இருள் மறைதல் உண்மையால், நெற்றிப் பிறை ஒளியால் கூந்தல் இருள் மறைந்தது என்றார். இவ்வாறாகவும் கூந்தல் இல்லார் என்று கூறுவார் பார்வை இருந்தவாறு என்னே என்று காமுகன் உரைத்தானாம். கொற்றியார் நாமம் தரித் திருத்தலும் தலைமுண்டி தம் செய்திருத்தலும் இப் பாட்டாலும் புலப்படும். வார் - கச்சு; கொற்றீர் - விளி. (88) 89. சோணாசலரைப் பேணுக வஞ்சித்துறை பாணார் மொழிநிறை சோணா சலரடி பேணா தவனுறும் மாணா நரகமே (பொ-ரை) இசைநலங் கனிந்த மறைகளில் நிறைந்துள்ள வராகிய அண்ணாமலையாரின் திருவடிகளைப் பேணி வழிபாடு செய்யாதவர் கீழான நரகத்தையே அடைவர். (வி-ரை) பாண் - இசைப்பாடல்; மொழி - திருமறை; மாணா - சிறப்பு இல்லாத; கீழான. அண்ணாமலையாரின் அடியடைந்தார் பேறு உரைத்தது இது. (89) 90. அருணையார் அன்பர் அடையும் நலம் வஞ்சி விருத்தம் நரக வாதையில் வன்பிறார் தரணி மீதொரு கொன்பெறார் சுரர்உ லோகமும் இன்புறார் அருணை நாயகர் அன்பறார். (பொ-ரை) அண்ணாமலை இறைவரிடம் அன்பு நீங்காதவர், இவ்வுலக வாழ்வில் எந்த ஓர் அச்சமும் அடையார்; நரகத்துயரில் பட்டுத் தம் வலிமை இழவார்; தேவர் உலகத்தை யடைந்து இன்பமும் எய்தார்; (வீடுபேறு அடைவர்) (வி-ரை) அன்பு அறார் - அன்பு அகலாதவர்; கொன் - அச்சம்; வன்பு இறார் - வலிமை இழவார்; சுரர் உலகு - தேவருலகு. தேவருலகும் அடையாரோ எனின் அடைந்தார் மீண்டும் பிறப்பராகலின் அந்நிலை நடந்து வீடுபேறு எய்துவார் இவர் என்றவாறு. வீடுபேறு பெற்றார் மீண்டும் பிறவித்துயர் அடையார் ஆகலின். உலகம் உலோகம் என யாப்புறவு நோக்கி நின்றது. (90) 91. தாள் பூ பெறலாம் வேற்றொலி வேண்டுறை அருணைஅதி ருங்கழலர் ஆறணிசெஞ் சடையாளர் அரிவை பாகர் கருணைநெடும் கடலான பெருமானார் தாள்தொழுதார் கதியை நாடின் மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே பொருள்நிறையும் நான்மறையோர் புகலுமத்தாள் பூவே. (பொ-ரை) திருவண்ணாமலையில் உறையும் அதிருங் கழலர் என்னும் பெயருடையவரும் கங்கையாற்றை அணிந்த சிவந்த சடையினரும் உமை ஒரு பாகரும் பேரருள் பெருங் கடலாக விளங்கும் பெருமானாரும் ஆகிய சிவபெருமானின் திருவடியைத் தொழுதவர் அடையும் பேற்றை ஆராய்ந்தால், அஃது இறப்பில்லாத தேவர்களின் விண்ணுலகம் அன்றாம்; பொருள் நிறைந்த நான்மறைகளையும் தேர்ந்து தெளிந்தவர் கூறும் அந்தத் திருவடித் தாமரைப் பூவே யாகும். (வி-ரை) தாள்தொழுதார் தாள் பூ அடைவர் என முடிக்க; மேலைப் பாடலில் கூறிய செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். திருவடிப் பேறு அடைதலே, அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் பிறந்திறவாப் பெற்றிமையும் ஒருங்கே சேர்க்கும் ஆதலால். தாள்பூ - உருவகம். பாடலின் முன்னிரண்டு அடிகளும் பின்னிரண்டு அடிகளும் வேறுவேறு அமைப்பில் வந்துள்ளமை அறிக. இது வேற்றொலி வெண் துறையாம். வெண்பாவினம் சார்ந்தது. (91) 92. உண்டு! உண்டு! இரங்கல் விருத்தக் கலித்துறை பூவுண்ட விடையாளர் அருணாச லத்தீசர் பொன்மேருவாய்ப் பாவுண்ட புகழாளர், பிரியேன் எனச்சொன்ன பருவத்திலே, காவுண்டு குயிலுண்டு மயிலுண்டு கிளியுண்டு கனிதூவுதே மாவுண்டு குருகுண்டு திருகுண்ட மனனுண்டு மறவாமலே. (பொ-ரை) மண்ணையுண்ட திருமாலை இடபமாக உடையவரும், அண்ணாமலை இறைவரும் ஆகிய சிவபெருமானின் அழகிய மேருமலை போன்ற அருணையில் பரவிய புகழுடைய வராகிய தலைவர் நின்னைப் பிரியேன் என்று சொன்ன பொழுதில் சான்றாகச் சோலையுண்டு; குயில் உண்டு; மயில் உண்டு; கிளியுண்டு; கனிகளைச் சொரியும் தேமா மரமுண்டு; அன்ன முண்டு; மறக்காமல் என்னோடு மாறுபட்ட மனமுமுண்டு. (வி-ரை) திருமாலே விடையாயினார் என்பாராகலின். பூவுண்ட விடையாளர் என்றார். அவர் பூவுண்டது கண்ணன் தோற்றரவில் என்க. பாவுண்ட - பரவிய; கா - சோலை; குருகு - அன்னம்; திருகுண்ட - மாறுபட்ட; மேருவாய்ப் பாவுண்ட - மேருமலை போலப் பரவிய (புகழாளர்) என்றுமாம். (92) 93. கையேட்டை வாங்கி மையழித்தல் தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது கலிவிருத்தம் வாங்குவில் ஏர்நுதல் வயங்கு மாதரீர் ஈங்கிவள் ஒருவர்கை யேட்டை வாங்கினளால் ஆங்கடு அணிந்தவர் அருணை நாட்டிலே நீங்கள்மை யழிப்பது நீதி யல்லவே. (பொ-ரை) தீமை பயப்பதாம் நஞ்சினைக் கழுத்தில் அணிந்து கொண்டவராகிய அண்ணமலையாரின் திருநாட்டிலே, வளைந்த வில் போன்ற அழகிய புருவம் விளங்கும் பெண்களே, இங்கே இவள் ஒருவர் கையில் இருந்து மலரை வாங்கியதற்காக நீங்கள் ஆட்டை வெட்டிப் பலியிடுவது அறமன்றே! (வி-ரை) தலைவன் பிரிவால் தலைவி மெலிவடைய, மெலிவின் காரணம் அறியாத செவிலித்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்பாள். அவள், முருகன் உட்புகுந்த செய்தி யல்லது வேறு இல்லை என்று கூறி வேலன் வெறியாட்டு நடத்த ஏற்பாடு செய்வாள். அப்பொழுது உண்மையுணர்ந்த தோழி அவர்கள் உணருமாறு தலைவன் தொடர்பைக் குறிப்பாகக் கூறுவான். இதனைப் பற்றிக் கூறுவது அறத்தொடு நிற்றல் எனப்படும். செவிலி எடுத்த வெறியாட்டை விலக்குதலால் வெறிவிலக்கு என்பது துறைப்பெயர் ஆயிற்று. வெறியாட்டின் போது ஆட்டைப் பலியிடுதல் உண்டென்பது இச் செய்யுளால் புலப்படும். இவள் ஒருவர் கையேட்டை வாங்கினால் நீங்கள் மையழிப்பது நீதியல்லவே என்றது, இவள் ஒருவர் கையில் இருந்த ஓலைச் சுவடியை வாங்கினால் நீங்கள் அச் சுவடியில் உள்ளமையை அழிப்பது முறையன்று என்று பிறிதொரு பொருள் தருதலும் அறிக. ஏர் - அழகு; கடு - நஞ்சு; மை - ஆடு. (93) 94. கடைப்பட்டவை தலைவன், தலைவியைப் புகழ்தல் கட்டளைக் கலித்துறை அள்ளற் கடல்விடம் நீங்கா தகண்டர் அருணைவெற்பிற் பிள்ளைப் பிறையும் சிலையுமொப் பாம்நுதல் பேதைநல்லாள் வள்ளைக் குழைபொரு கண்ணுக்குத் தோற்றம்பும் வாரிதியும் கள்ளக் கயலும் இராசியின் மீனும் கடைப்பட்டதே. (பொ-ரை) அள்ளி அருந்தத்தக்க பாற்கடலில் தோன்றிய நஞ்சம் நீங்காத கழுத்தையுடைய சிவனாரது திருவண்ணா மலையில், இளம்பிறையையும் வில்லையும் போன்ற நெற்றியை யுடைய இளமையான நல்ல தலைவியின் வள்ளை இலை போன்ற காதினைத் தொடுகின்ற கண்களுக்குத் தோல்வி யடைந்து அம்பும், கடலும், கரிய கயல்மீனும், இராசியின் மீனும் கடைப்பட்டது. (வி-ரை) கடைப்பட்டது என்பதை அம்பும் கடைப்பட்டது; வாரிதியும் கடைப்பட்டது; கள்ளக் கயலும் கடைப்பட்டது; இராசியின் மீனும் கடைப்பட்டது எனத் தனித்தனி கூட்டி இயைக்க, கண்களுக்கு அம்பு, கடல், கயல், மீன் ஆகியவற்றை உவமை கூறுவது மரபு ஆகலின், அவ்வுவமைகள் கடைப்பட்ட வகையை நயமாக உரைத்தார். அம்பு, கொல்லரால் கடையப் பட்டது; கடல் தேவராலும் அசுரராலும் கடையப்பட்டது; கயல் விலை கூறுவதற்காகக் கடைக்குக் கொண்டுவரப்பட்டது; இராசி மீன், இராசி வரிசையில் கடைசிப்பட்டது; ஆதலால் இந்நான்கும் பேதை நல்லாளின் கண்ணுக்குத் தோற்றுக் கடைப் பட்டன என்றார். அள்ளி அருந்தத் தகாத கடலும் உண்டாகலின் பாற்கடலை அள்ளல் கடல் என்றார்; சேறு என்பதினும் இது சிறக்கும்; கள்ளம் - கருமை; கயலுள் கருங்கயலைக் கண்ணுக்கு உவமை கூறுவராகலின் கள்ளக் கயல் என்றது கருங்கயலை என்க. வஞ்சமான கயல் என்பதினும் இப்பொருள் தகவாம் என்க. கடைப்பட்டது என்னும் ஈற்றுச் சொல் பல சொற் களொடும் இயைந்து பொருள் தந்ததாகலின் இது விளக்கணியாம்; கடைவிளக்கு. இஃது என்க. (94) 95. மயல்கூரக் கயல் கூறுவார் வலைச்சியார் அறுசீர் ஆசிரியவிருத்தம் தேவியிடம் அகலாத அருணகிரி வளநாட்டில் தெருக்கள் தோறும் மாவிரத முனிவரெலாம் மயல்கூரக் கயல்கூறும் வலைச்சி யாரே! காவிதிகழ் வாவியிலே மீன்பிடித்து வருவோரைக் கண்டோம்; கண்டோர் ஆவியெலாம் பிடித்திழுக்கும் உமைப்போல ஒருவரைக்கண் டறிந்தி லோமே. (பொ-ரை) உமையம்மை இடப்பாகத்திலிருந்து விலகாத அண்ணாமலையாரின் வளமான நாட்டில், தெருக்கள் தோறும் சீரிய தவமுனிவர் எல்லாரும் மையல் எய்துமாறு கயல்மீன் விலைகூறும் வலைச்சிப் பெண்டிரே, குவளைமலர் விளங்கும் குளத்திலே மீன் பிடித்து வருகின்றவரைக் கண்டுள்ளோம். ஆனால் காண்பவர் உயிரையெல்லாம் பிடித்து இழுக்கும் உங்களைப் போன்ற ஒருவரை இதுவரை யாம் கண்டறியோம். (வி-ரை) மாவிரதியரே மயல்கூர என்றமையால் மற்றை யோர் மயலைச் சொல்லவேண்டியதில்லை என்பதாம். காவி - குவளை; வாவி - குளம்; மீனைப் பிடித்திழுப்பார் உளர்; உம்மைப்போல் கண்டோர் உயிரைப் பிடித்திழுப்பாரைக் கண்டிலோம் என்றான். ஆவியைக் கவிர்தல் என்னாமல் ஆவி பிடித்திழுத்தல் என்றது தொழில் நயம் கருதிக் கூறியது. வலைச்சியார் என்பது மீன் விற்கும் வலையர் மகளைக் கண்டு காமுற்றான் ஒருவன், அம் மகளை முன்னிலைப்படுத்தி உரைப்பதாகச் செய்யுள் செய்தல். தேவி இடம் அகலாமை : மிருங்கி முனிவர் இறைவனை அன்றி இறைவியை வழிபடாக் கொள்கை யழுத்தமிக்கவர். அதனால் இறைவி, இறைவனை வேண்டி அவனுடலுடன் ஒரு கூறாக அமைந்தாள். முனிவர் வழிபாடும் ஏற்றாள். ஆதலால் இறைவன் உமையொரு பாகன் ஆனான். (95) 96. ஒருவராலும் இருவராலும் வலைச்சியார் நேரிசை வெண்பா மேலா றணிசடையார் வீறருணை வீதியிலே மாலாக வந்த வலைச்சியரே - காலாம் இருவரா லும்காட்டும் யான்பிடிக்கக்; காதல் ஒருவரா லும்தீரு மோ? (பொ-ரை) வானகங்கையைச் சடையில் அணிந்த சிவனாரின் பெருமைமிக்க அருணைவீதியில் கண்டோர் மயக்கமுற வந்த வலையப் பெண்டிரே, என் ஆசை ஒரு வரால் மீனாலும் தீர்ந்துவிடுமோ? கால்வாயிலுள்ளதாம் இரண்டு வரால்களையும் யான் பிடிக்குமாறு காட்டும். (வி-ரை) மால் - மயக்கம், ஒருவராலும் என்பது ஒரு வராலும் என்னும் பொருளும், உம்மையன்றி வேறு ஒருவராலும் என்னும் பொருளும் தந்தது. கால் என்பது கால்வாயையும், காலையும் காட்டியது. காதல் ஒருவராலும் தீராது; கால்கள் என்னும் இரண்டு வரால்களையும் யான் பிடிக்குமாறு காட்டும் என்று உரைத்தானாம். (96) 97. உயிரின் ஆன ஒரு கேள்வன் செவிலி நற்றாயைத் தேற்றல் எண்சீர் ஆசிரியவிருத்தம் ஒருவ ராலுமணு காத நாளிலே உயிரி னானவொரு கேள்வன் ஆசையால் மருவி னாலுமென தாகும்; நாளையே வழிகள் தோறுமினி நாடி மீளலே கருணை நீதிமனை வேணு மாதுடன் கடல்கள் ஏழுமலை ஏழும் ஏழுமா அருணர் சூழுமுல கேழும் ஏழுமா அருணை நாதர்சர பாவ தாரமே. (பொ-ரை) ஒருவராலும் அணுகிச் செல்லமுடியாத நள்ளிரவுப் பொழுதிலே தன் உயிர்போன்ற ஒப்பற்ற தலைவன் ஆசையால் கூடிச் சென்றாலும், நாளைக்கே மணம்பூண்டு அருளும் அறமும் விளங்கும் மனையறம் பேணுவாள்; அன்றியும் ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு குதிரைகளையுடைய கதிரோன் சூழ்ந்துவரும் பதினான்கு உலகங்களுமாகிய அண்ணாமலையாரின், சரபத் தோற்றரவு போல இருவரும் இணைந்து வாழ்வர். ஆதலால் வழிகள் தோறும் இனித் தேடிச் சென்று திரும்புவதால் ஆகும் பயன் என்ன? (வி-ரை) உடன்போக்குக் கொண்ட தலைவியை நினைந்து வருந்திய நற்றாயைச் செவிலி தேற்றுதலாக அமைந்தது இச் செய்யுள். தலைவி இனிய இல்லறம் நடத்துவள்; ஈருடல் ஓருயிராக வாழ்வள் எனத் தெளிவித்தாள். சரபம் என்பது இருதலை களையும் எண்கால்களையும் கொண்டதொரு பறவை. இரு தலைக்கு ஓருடல் அமைந்த சரபம் போலத் தலைவனும் தலைவியும் வாழ்வர் என்பதை அருணைநாதர் சரபாவதாரம் கூறுமுகத்தால் விளக்கினார். அருணைநாதர் எல்லாமும் ஆனவர் என்பதைக் கடல்கள் ஏழும் ... அருணைநாதர் என்பதால் தெளிவித்தார். கேள்வன் - தலைவன்; மருவுதல் - கூடுதல்; ஏழு மா அருணர் - ஏழு குதிரைகளையுடைய கதிரோன். சரபம் பற்றி முன்னரும் குறித்தார் (49). தோற்றரவு - அவதாரம். (97) 98. சோறு இருக்கக் கூழை விரும்புதல் வண்டோச்சி மருங்கணைதல் அறுசீர் ஆசிரியவிருத்தம் தாரிலங்கு மறைமுடிவில் நடித்தருளும் அருணேசர் தமது நாட்டில் நாரியர்மேல் மனமகிழும் அளியினங்காள் ஒருவார்த்தை நவிலக் கேளீர்! ஏரிருக்கும் கைதையெலாம் சோறிருக்க நீரிருக்கும் இடங்கள் தோறும் வேரிமலர்த் தேனிருக்க இவர்கூழை விரும்பிவந்தேன் விழுகின் றீரே! (பொ-ரை) தொடர்ச்சியாக விளங்கும் மறையின் முடிவில் நடித்தருளுகின்ற அண்ணாமலையாரின் நாட்டில், நங்கை யரிடத்து மனம் மகிழ்கின்ற வண்டினங்களே, யான் ஒரு சொல் சொல்லக் கேட்பீராக; நீங்கள் இருக்கும் இடங்கள்தோறும், அழகமைந்த தாழைகளில் எல்லாம் சோறு இருக்கவும், மணம் பொருந்திய மலர்களில் தேன் இருக்கவும் அவற்றை விரும்பி யுண்ணாமல், இத் தலைவியின் கூழையாகிய கூந்தலை விரும்பி வந்து மொய்க்கின்றீரே (நும் அறியாமை இருந்தவாறு என்னே!) (வி-ரை) தலைவன் தலைவியைத் தொடுதற்குரிய வழி பார்த்துக் கொண்டிருக்க, அவன் கூந்தல் மலரில் தேன் அருந்த வந்த வண்டை ஓட்டுவான்போல அவள் மெய்யைத் தொடுதல் வண்டோச்சி மருங்கு அணைதல் என்பதாம். ‘bkŒbjh£L¥ gÆwš’ v‹gJ« ïJ, ‘nrhW« njD« ïU¡f mt‰iw ÉL¤J¡ TiH ÉU«òtJ V‹? என்ற உண்டிக் குறிப்பு நயஞ்செய்தல் அறிக. சோறு - கற்றாழையில் உள்ள சோறு ஆகும்; அது மடலில் உள்ள தசைப்பற்று; கூழை என்றது கூந்தலை; கூழ் என்னும் எளிய உணவை இரட்டுறலால் குறித்தது. வேரி - மணம்; ஏர் - அழகு; அளி - வண்டு. (98) 99. புதுமையினும் அருமை தோழி, தலைமகள் உறுப்பெழுத ஒண்ணாமை உரைத்தல் அறுசீர் ஆசிரியவிருத்தம் ஏமநெடுஞ் சிலைவளைத்த பெருமானார் அருணகிரி இறைவர் நாட்டில், தாமரைமண் டபத்துறையும் மடந்தையிடை எழுதவென்றால் தலைவ னாரே, மாமுயற்கொம் பினிலேறி விசும்பலரைப் பறித்துமுனம் வடிவி லாதோன் ஆமைமயிர்க் கயிறுகொடு தொடுத்தணிந்த புதுமையினும் அருமை யாமே. (பொ-ரை) தலைவரே, பொன்மலையை நெடிய வில்லாக வளைத்த பெருமானும், அண்ணாமலையாரும் ஆகிய இறைவரது நாட்டிலே, தாமரைமலர்க் கோயிலில் வாழும் திருமகள் போன்ற தலைமகளின் இடையை ஓவியமாக எழுதவேண்டும் என்றால், பெரிய முயற்கொம்பில் ஏறி, விண்ணகத்து மலரைப் பறித்து முன்னே தன் வடிவம் ஒழிந்துபோன மன்மதன், ஆமை மயிரால் திரிக்கப்பெற்ற கயிறுகொண்டு மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்ட புதுமையைப் பார்க்கிலும் அரிதான புதுமையாகும். (வி-ரை) முயற்கொம்பு, விண்மலர், ஆமைமயிர்க் கயிறு இவை இல்லாதவை. இவ் வில்லாதவற்றைக் கொண்டு உருவம் இல்லாதவன் மாலை தொடுத்து அணிதல் அவற்றினும் இல்லாதது. இவை ஒரு கால் நிகழினும் நீவிர் தலைவி இடையை எழுதுதல் அரிது எனக் கூறித் தலைவியின் உறுப்புகளை எழுத ஒண்ணாமை உரைத்தாள். இடையைச் சுட்டியது இல்லாத இடையை எழுதுவது எப்படி என்னும் கருத்தாலாம். ஏமம் - பொன்; விசும்பு - வான். (99) 100. ஒருமணி மும்மணியானது தலைவி கையுறை ஏற்றதைத் தோழி தலைவனுக்குக் கூறல் கட்டளைக் கலிப்பா ஆர்வ லர்க்கழி யாவரம் நல்குவார் அத்த னார்அரு ணாபுரி வெற்பரே, பார்வி யப்புற நீர்தரு மாமணி பட்ட பாடுப கர்ந்திட லாகுமோ? சார்கு ழற்கு முடிமணி யாய்இரு கண்கள் மீதுறு கண்மணி யாய்முலை சேர்த லுற்ற பொழுதிரு குன்றிலும் சென்று லாவும் தினமணி ஆனதே. (பொ-ரை) அன்புடையவர்க்கு என்றும் நிலைத்த வரத்தை வழங்கும் சிவனாரின் அருணையம்பதித் தலைவரே, உலகோர் வியப்புறும் வண்ணம் நீவிர் தந்த சிறந்த மணி தலைவியிடம் பட்டபாட்டைக் கூற முடியுமோ? அந்த மணி நெடிய கூந்தலுக்குத் தலைமணியாகவும், இருகண்களின் மேலும் அமைந்த கண்மணியாகவும், மார்பைச் சேர்ந்த பொழுதில் இரண்டு மலைகள் மேலும் சென்று உலாவும் தினமணியாம் கதிரோனாகவும் விளங்கியது. (வி-ரை) மாமணி, முடிமணியாகவும், கண்மணியாகவும், தினமணியாகவும் விளங்கியது என்க. சார்குழல் - நெடுங்கூந்தல், இருகுன்று என்றது, கதிரோன் தோன்றும் மலையையும், மறையும் மலையையும். உதயகிரி, அத்தகிரி என்பனவும் அவை. தலைவன் தலைவிக்குக் கையுறையாகச் சிறந்த மணியொன்றைத் தந்தான். அதனைத் தலைவி, தலைமேலும், கண்களின் மேலும், மார்புகளின் மேலும் வைத்துத் தழுவி இன்புற்றாள். இச் செய்கையைத் தலைவனுக்குத் தோழி உரைத்து, அவள் தலைவன்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்தாள். தினமணி - ஞாயிறு. மணிகொண்ட எனத் தொடங்கிய இத் திருவருணைக் கலம்பகம் தினமணி ஆனதே என நிறைந்து அந்தாதி அழகில் ஒளி செய்தது. (100) சைவ எல்லப்ப நாவலர் அருளிய திருவருணைக் கலம்பகத்திற்கு, புலவர் இராமு. இளங்குமரன் வரைந்த பொழிப்புரையும் விளக்கவுரையும் முடிந்தன. தருணத் தியைபல் வருணச் சிறுவருக் கருணைக் கலம்பகம் கருணைக் கடலகம் பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அடியவர் சிந்தையில் 20 அடுத்தமதிச் சென்னி 70 அண்ணா மலையத் 45 அண்ணாமலையார் 93 அமர்ந்தரு ணைப்பதி 35 அயங்காட்டியமறை 58 அருணமணி முலைக்கிரி 77 அருணனொளி தனிலு 41 அருணை அதி ருங்கழலர் 96 அருணை வெற்பினர் 47 அள்ளற் கடல்விடம் 98 அன்னவயல் சூழரு (கா) 5 அன்னியமா சடையா 64 ஆரணி துங்கன் 80 ஆரிதழி சூடும் 94 ஆரும்வி ரும்பிய 32 ஆர்வ லர்க்கழி 104 ஆற்றுங்கால் கஞ்சத் 86 ஆனார் கொடியார் 55 ஆனிட பக்கொடிச் 54 இதழியந்தொடையர் 52 இந்திர கோபமாம் 69 இருசரணச் சிலம்பாட 39 இலகொளி பரந்து 74 இலங்கிய திங்கள் 86 இனமகலும் அருகர் 19 உலககண்டகனாய் 29 உள்ளத்தின் ஞானம் 66 ஊசலு கைத்திடுவார் 40 எல்லா உயிர்க்கும் 14 என்றுமதிக் கண்ணார் 88 ஏகார் புனத்துத் 47 ஏமநெடுஞ் சிலைவளைத்த 103 ஏறுடை அண்ணலார் 84 ஒருவ ராலுமணு 101 ஒன்றும் மூன்றும் 59 கங்கை வார்சடைப் 67 கண்ணருக்கும் போத 44 கருணைமுக மண்டலத் 23 காணம்ப ரந்தோலின் 72 கார்வந்தா லன்ன 72 காலில் துலங்கும் 34 காலையும் மாலையும் 62 குழையடுத்த விழி 15 கூத்தாடும் அருணேசர் 37 கையடைந்த மழுமானும் 92 கொண்டலணி கண்டர் 69 சுகமே! சுகமே 31 சேணார் திருவுடைச் 87 சைவத்தின் மேற் (கா) 6 சொர்க்கமெனும் ஒரு 48 சொல்லாடின் உமக்கிரண்டு 89 சொல்லா ரணத்திற் 31 தகன முறுவலின் 29 தடனாக மணிவெயிலும் 91 தனையிருக்கு மறை 54 தாமணிவர் திரிசூலம் 56 தாரிலங்கு மறைமுடிவில் 102 தில்லை மன்றுள்ந 57 தினைப்போது தானே 61 தீண்டரிய மடற்பனை 78 தேவியிடம் அகலாத 99 நதியைச் சூடதி 76 நரக வாதையில் 95 நாகமெடுத்தவர் 38 நாராயணனறியா 21 நித்தன் நம்பனரு 83 நீடாழி ஞாலம் 36 நெற்றி மீது 60 பண்ணிறந்த வாசவ 73 பரவைபொ ருக்கெழவும் 65 பாணார் மொழிநிறை 95 பாதமெமக் களித்த 50 பாவை யாடினும் 17 புடைசெறிந் தளிபாடும் 68 புயந்தழுவும் கண்ணி 26 பூவுண்ட விடையாளர் 97 பைங்கண் புலிக்குப் 58 போகம் விடுத்தே 15 போதற்கும் அரிதான 71 போந்த போதக 80 மணிகொண்ட நெடுங் 7 மதுவால்நி றைந்த 46 மலரிதழித் தொடைபால் 81 மலைமேல் மருந்தர் 27 மலையாச னத்தர்மலை 42 மழலைமொழி இசையாலும் 93 மறைக்கவனப் பரியாரும் 79 மாலையென்பாங் கலத் 40 மானென்பார் கலை 22 முத்தமிழ் முறைமுறை 18 மேலாடை தோற்றணி 43 மேலா றணிசடை 100 யாதவர் குலத்துநெடு 16 வசிகரம் வயங்கு 75 வரைக்கனக சாப 53 வாங்குவில் ஏர்நுதல் 97 வாய்ந்தநல மருந்த 85 வீரத்தை அணிமழுவார் 49 வீரனை நல்கி 90 வெற்றிமதன் போர்க் 33 வேதநுவல் சோண 14 அருஞ்சொற்பொருள் அகரவரிசை (எண் : பாட்டெண்) அகலாச்சலம் - கங்கை 29 அதுலர் - ஒப்பற்றவர் 9 அம்பு இறைக்கும் - மலர் அம்புகளை இறைக்கின்ற 21 அயம் - குதிரை 48 அரக்கன் - இராவணன் 22 அலையாசனத்தர் - பாற்கடலை இடமாகக் கொண்ட திருமால் 31 அலையே - கடலே 15 அளறு - சேறு 13 அளியினம் - வண்டுக் கூட்டம் 98 அள்ளல் - அள்ளிக்கொள்வதற் கேற்ற 94 அனகர் - பாவம் இல்லாதவர் 9 அனை - ஒருவகை மீன் 44 ஆகம வித்தார் - சிவாகமப் பொரு ளின் வித்தாக இருப்பவர் 4 ஆகம் - மனம் 4 ஆசுகம் - அம்பு 17 ஆர்வலர் - அன்பர் 100 இதண் - பரண் 18 இமம் - பனி; குளிர் 23 இயமானன் - ஆன்மா 2 இரவி - கதிரவன் 13 இருக்காதி - இருக்குமுதலான 1 இருபிறப்போர் - அந்தணர் 1 உரம் - மார்பு 13 உற்பலம் - (நீலோற்பலம்) நீல மலர் 13 ஊன் என்பு ஆர் - இறைச்சியோடு கூடிய எலும்பு பொருந்திய 12 எகினம் - அன்னப் பறவை 1 என்பு - எலும்பு 20 ஏகநெடுஞ்சிலை - பொன்மலை யாகிய வில் 99 ஏனம் - பன்றி 1 ஐயம் - பிச்சை 11 ககனம் - விண்ணுலகம் 16 கஞ்சம் - தாமரை 39 கண்டகன் - துட்டன் 17 கண்டமட்டும் - அளவின்றி; கழுத்து அளவில் 1 கண்பறித்ததிண்ணர் - கண்ணப்ப நாயனார் 33 கலம் - ஆபரணம்; பாத்திரம் 29 கலை - ஆடை 11 கவனப்பரி - வேகமுடைய குதிரை 71 கனலி - அக்கிநிதேவர் 13 கால கற்பம் - ஊழிகள் 1 குரவு - குராமலர் 13 குழை - காதணி; தளிர் 17 குழையடுத்த விழி - குழையென் னும் காதணியைத் தொடும் கண்களையுடைய உமாதேவி 5 கைதை - தாழை 98 கொன் - அச்சம் 90 கோகனகம்- ஒளியுள்ள பொன்; தாமரை 39 கோகனகம் தாள் - தாமரைமலர் போன்றதாள் 4 கோடீரம் - சடை 24 கோடு - முகடு; கொம்பு (க-வா) சசி - சந்திரன்; இந்திராணி 17 சடிலர் - சடையையுடைய சிவன் 7 சரங்கள் - அம்புகள் 10 சரபம் - ஒருவகைப் பறவை; சிவன் சரபவடிவங்கொண்டார் 49 சலம் - கோபம் 29 சற்பனை - நல்ல பனை; வஞ்சனை 74 சாரணர் - வான்வழிச் செல்வோர்; பதினெண் கணத்தருள் ஒரு வகையார் 72 சிலை - வில் 1 சுகம் - கிளி 17 சூடாதமாலை - யாரும் சூடாத என்புமாலை 24 செவ்விதழி - சிவந்த உதடுகளை யுடையவள் (தலைவி) 14 செழுமான் - செழித்த காளை 85 சேணார் ஆய் - வானுலகத்தவர் ஆராய்கின்ற 26 சேதா - இளங்கன்றையுடைய பசு 5 சோறு - தாழை மலரிலுள்ள மகரந்தம் 98 தண்டலை - சோலை 28 தநஞ்செயன் - (தநஞ்சயன்) அருச்சுனன் 13 தரியலர் - பகைவர் 13 தவளதந்தம் - வெண்மையான தந்தம் 13 தவர் - தவத்தையுடைய தலைவர் 34 தாரம் - மனைவி, தாரா (வெண் கலம்) என்னும் உலோகம் 39 தானவர் - அசுரர் 1 நத்தர் - விரும்புபவர் 31 நத்து - சங்கு 13 நரமடங்கல் - நரசிங்கம் 13 நரகம் அனையவர் - யானை போன்ற தலைவர் 84 நாகம் எடுத்தவர் - நாகத்தால் தாங்கப் பெற்ற திருமால் 26 நாரணி - நாராயணி; உமாதேவி 72 நேசம் கணியா - அன்பைக் கருதாத 21 படம் - ஆடை 16 பணை - மூங்கில் 30 புண்டரிகம் - தாமரை மலர் 1 புயங்கம் - பாம்பு 67 புரம் - முப்புரம்; உடம்பு 22 புல் ஆடவன் - புல்லினாற் செய்யப் பட்ட ஆடவன் வடிவம் 19 புல் ஆர் என்பு - அறுகம்புல்லும் ஆத்திமலரும் எலும்பும் 82 பூகம் - பாக்குமரம் 35 பெண்ணை - பனை 76 மணக்கோல் அஞ்சு - மணம் வீசும் ஐந்து மலரம்புகள் 86 மதாசலம் - யானை 29 மலைமயில் ஆசம்நத்தர் - மலைமக ளாகிய உமாதேவியின் சிரிப்பை விரும்புவோர் 31 மலைய + சனத்தர் - செய்யாத போருக்கு ஆயத்தமாய் இருப் பவர் 31 மாகம் - ஆகாயம் 26 மாதங்கம் = மா+தங்கம்-தங்கம்- பொன்மலை; மாது+அங்கம் - உமை இடப்பாகம்; மாதங்கம் - யானை 11 மாதரை - ஆசையை 81 மாதரையால் - பெரிய மண்ணுல கத்தால் 81 மாதர் ஐயால் - மாதருடைய அழகால் 81 மால் ஆனவர் - திருமால்; மயக்கங் கொண்ட பெண்கள் 32 மால்பூண்ட மயக்கம் கொண்ட 14 முதுமை + அண்டம் = மூதண்டம்; பழைய விண்ணுலகம் 1 மை + தலை = மைத்தலை - ஆட்டுத் தலை மை - ஆடு 13 மொழிசூள் - மொழிந்த உறுதி மொழி 15 மோகம் அவித்தார் - பற்று அற்ற வர் 4 வில் - சூதாடுகருவி 83 வன்புஇறார் - வலிமை கெடார் வாரணம் - யானை; யானை; முகப் பிள்ளையார் (க வா) விடர் - மலைப் பிளப்பு 87 விரித்த கொடி - சிவன் கொடியி லிருக்கும் காளையாகிய திருமால் 42 வில்வேள் - மன்மதன் 29 மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை ஆராய்ச்சி முன்னுரை திருவிளையாடல் அறுபத்து நான்கு என்பது அனைவரும் அறிந்ததே. அத்திருவிளையாடலை மையப் பொருளாகக் கொண்டு அம்மானைப் பாடலாகப் பாடப் பெற்றதொரு நூல், திருவிளையாடல் அம்மானை யாகும். அம்மானை என்பது, மகளிர் விளையாடல்களுள் ஒன்று. அஃது இசைத்துப் பாடி விளையாடப் பெறுவது என்பது. அடியார்க்கு நல்லார் அதனைப் பல்வரிக் கூத்தினுள் அடக்கிக் கூறுவதால் விளங்கும். (சிலப். 3. 13) அம்மானை விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பெறும் காய் அம்மனை எனப் பெற்றது. அதனை மகளிர் தம் கையில் கொண்டு தம் மனையகத்து விளையாடினர் என்றும், பாவை நீராட்டுப் போலவே, நல்ல கணவன் தமக்கு வாய்க்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மகளிரால் ஆடப் பெறுவது அஃது என்றும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். அம்மனை தம்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடும் தகையேலோர் அம்மானை தம்மனையிற் பாடும் தகையெலாம் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே அம்மானை என்பது அது (சிலப். 29: 19). அம்மனைக்காய் முத்து, பவழம், மாணிக்கம் முதலிய வற்றால் செய்யப்படுவதுண்டென்றும், அக்காய் வண்டு பறந் தெழுவது போல மேலே எழுந்து கீழே இறங்குமென்றும், ஒரு வேளையிலே பல அம்மனைக் காய்கள் பறந்து கொண்டிருக்கும் வண்ணம் ஆட வல்ல தேர்ச்சியாளர் இருந்தனர் என்றும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இப்பாலும் அப்பாலும் ஓடிக்கொண்டும் கலைமணம் கமழக் கைவண்ணங் காட்டி ஆடுவர் என்றும், மாலை தொடுத்து நாற்றியது போலவும் வானவில் போலவும் அம்மனைக்காய் விளங்க நிரலே ஏவும் நேரிழையார் விளங்கினர் என்றும் பிற்காலப்பிள்ளைத் தமிழ் நூல்களில் வரும் அம்மானைப் பருவப் பாடல்களால் அறிய முடிகின்றது. பந்தடித்தல், கழங்காடல், ஊசலாடல், என்பன போலவே அம்மானை யாடலும் பண்டுதொட்டே பயில வழங்கி வந்தது என்பதைச் சிலப்பதிகார அம்மானை வரியால் உணரலாம். அம்மானைப் பாடல்பாடி விளையாடுவார் மகளிர் மூவர் என்பதை, அதன் அமைப்பு முறையே நன்கு வெளிப்படுத்தும். ஒருத்தி ஒரு செய்தியைத் தொடங்கி இரண்டடிகளால் ஒரு வினாவை எழுப்புவாள். மற்றொருத்தி, அவ்வினாவுக்குத் தக்க விடையை அடுத்த ஈரடிகளில் தருவாள்; இன்னொருத்தி, இவ் விருவர் கூறிய செய்திகளுக்கும் இயைய ஒரு முடிப்புரையை இறுதி ஓர் அடியில் வைப்பாள்; ஒவ்வொருவரும் தத்தம் உரையின் முடிவில் அம்மானை என முடிப்பொலி வைப்பர். ஆக, நான்கடிமேல் ஓரடிவைப்பாக அமைவது, அம்மானைப் பாடல் யாப்பாகும். வெண்தளையே தன் தளையாய்க் கொண்டு வருதலை இயல்பாகக் கொண்டது அம்மானை என்க. சிலப்பதிகாரத்தில் ஏனை வரிப்பாடல்கள் போலவே ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி அம்மானை வந்துள்ளது. ஆனால், மாணிக்கவாசகர் பாடிய திருவம்மானை, ஆறடித் தரவாகிக், குழுவாகப் பாடும் பாடலாக அமைந்துள்ளது. ஒரு பொருள்மேல் மூன்றடுக்குதலை விடுத்து, இருபது பாடலாக அது வளர்ந்தது. ஒரு பாடலில் மூன்று இடங்களில் அம்மானை என்பதற்குப் பதில், பாடல் முடிவிடத்து மட்டும் அம்மானை என்றமைந்தது. எனினும், வெண்டளை பிழையா நிலையைப் போற்றியது அது. அம்மானை பிற்காலத்தில் கலம்பக உறுப்புகளில் ஒன்றாக அமைந்தது. அது சிலப்பதிகார அம்மானை யாப்பையே கொண்டாலும், சில புதிய மரபுகளைக் கண்டு வளமுற்றது. தடை விடைகளாகவும், இரட்டுறல் (சிலேடை) முதலிய அணிநயம் பெற்றதாகவும், சொல்லின்பம் மிக்கதாகவும் உருக்கொண்டது. வெண்டளையில் சற்றே விலக்குப் பெற்று வருதலையும் மேற்கொண்டது. பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகையில், பெண் பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் பத்தினுள் அம்மானைப் பருவம் ஒரு பருவமாகப் பாடப்பெற்றது. அவ் வம்மானைப் பாடல்கள் மற்றைப் பருவப் பாடல்கள் போன்ற ஆசிரிய விருத்த யாப்பைக் கொண்டு அமைந்ததே அன்றிப், பழைய மரபைப் போற்றவில்லை. ஆனால் அம்மானை ஆட்டத்திற்கு அழகும் பொலிவும் தந்து வளமான இலக்கிய வாழ்வை அளித்தது பிள்ளைத்தமிழ் எனலாம். இவ்வாறு வளர்ந்து வந்த அம்மானைப் பாடல், பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டளவில் நூலுருக் கொண்டு வளர்வதாயிற்று. அவ்வகையில் அமைந்த ஒன்றே இத் திருவிளையாடல் அம்மானை என்க. இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்றும், நூற் செய்யுள் அறுபத்து நான்குமாக அறுபத்தைந்து செய்யுள்களைக் கொண்டது. திருவிளையாடல் புராணத்துச் சொல்லப்பெறும் முறைவைப்புப் படியே, ஒரு திருவிளையாடலுக்கு ஒரு பாடல் என்னும் வரன் முறையில் அமைக்கப்பெற்றுள்ளது. சொற் சுவையும் பொருட் சுவையும் பொதிந்து, கற்போர் உளத்தை வயப்படுத்தும் ஆற்றல் மிக்கதாக இலங்குகின்றது. இந்நூலில் இரட்டுறலணி (சிலேடை) இடம்பெறாத பாடலொன்றும் இல்லை. இரு பொருளன்றி முப்பொருள் நாற்பொருள் தரும் சிலேடைகளும் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிலேடைகளும் உண்டு; சொல்லாக, சொற்றொடராக, அடியாக வரும் சிலேடை வகைகள் உண்டு; செம்மொழிச்சிலேடை, பிரிமொழிச் சிலேடை என்னும் இருதிறச் சிலேடைகளும் இயல்பாகக் காணும் நிலையில் ஓடிய ஓட்டத்தில் பாடிய நயங்களும் உண்டு. அவற்றைத் தொட்ட தொட்ட பக்கத்தில் கண்டு களிப்புறலாம். கூன் பாண்டியனுக்கு உற்ற சுரநோயை ஞானசம்பந்தர் நீக்கினார். இறைவன் அவனைக் கூனிலா வமிசத்தனாச் செய்தார் என்றார். இதில் அவன் கூனை நீக்கியதால் கூன் இலா வமிசம் என்றும், கூன் (வளைந்த) நிலா வமிசம் என்றும் இரு பொருள் தர அமைத்தார். இதில், பிற சமயம் சார்ந்தார் என்பதொரு தலைக்குனிவு இல்லாத வமிசமாக மாற்றினார் என்னும் குறிப்புண்மையும் உணரலாம். (62) தீவினை என்பதற்குத் தீவை என்றும், தீயவினை என்றும்; தலைவிதி என்பதற்குத் தலைமையான வில் என்றும், வினை என்றும்; செய்யடிமை என்பதற்குச் செய்யும் அடிமை என்றும், நிலத்தில் பணி செய்யும் கூலியாள் என்றும்; அறக் கொடியார் என்பதற்கு அறம் வளர்க்கும் கொடி போன்றவர் என்றும், மிகக் கொடியவர் என்றும்; பூப்பாணன் என்பதற்குப் பூ வேலைப்பாடு செய்யும் பாணன் என்றும், மலரம்பைத் தொடுக்கும் மன்மதன் என்றும்; முன்னமனை என்பதற்கு முன்னம் மனை என்றும், முன் நமனை (எமனை) என்றும்; இருந்தவர் என்பதற்கு இருக்கும் தொழிலுடையவர் என்றும் பெருந்தவம் செய்தவர் என்றும் - இன்னவாறு நூற்றுக்குமேல் இவர் சொல்லாட்சி புரிந்து சுவையூட்டுகின்றார். அடிக்கு வருந்தினர் மேலன்பரெலாம் (இறைவன் பட்ட அடிக்கு; இறைவன் அடியை அடைவதற்கு) அறிவுமயக் கந்தனைப் பெற்றவர் அறிவு மயக்கந்தனைப் பெற்றவர். ஆகுமேல் அப் பொருட்கும் அப்பன் ஆகுமானால்; பெருச்சாளியின் மேல் (ஆகு - பெருச்சாளி) ஆர்கலியும் மாற்று முகில் (ஆர்கலி - கடல்) ஆர் கலியும் மாற்றும் முகில் (யார் வறுமையையும்) ஒளியாரைக் காணாததோர் விதியோ (ஒளியார் - ஒளி வடிவினர்; ஒளியாதவர்) விதி - தலைவிதி; நான்முகன். காணார் யார் தங்குருவாக் காதலரை (காதலர் - மக்கள்) காணார் யார் தங்கு உருவாக் காதலரை. கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது. (கிள்ளி - சோழன்; கிள்ளுதல்) சாரங்கக் கையன் (சாரங்கம் - மான்) சாரம் கக்கு ஐயன் (சாரமானவற்றைக் கூறும் தலைவன்) சாராதோ சத்தியந் தப்பாக நின்றால் சாராதோ சத்தி அந்தப் பாகம் நின்றால். தலைவிதிக்கு மாறு மருந்து ஆர் முடித்தார் (ஆர் - ஆத்தி) தலைவிதிக்கு மாறு மருந்து யார் முடித்தார். பித்தன் என்பார் ஐயரென்றும் பேசுவார் பித்தன் என்பு ஆர் ஐயர் என்றும் பேசுவார் (என்பு ஆர் - எலும்பு அணிந்த) பெற்றவர் தீர்ப்பது வாய்பேசுவதன்று (வாய்பேசாது; ஊமை) பொன்னவையில் நட்டம் பொருந்தியவர் பொன்வில்லார். (பொன்னவை - பொன் வணிகர் அவை, பொற்சபை; நட்டம் - இழப்பு, நடனம்; பொன் வில்லார் - பொன் விற்க மாட்டார், பொன் மலையாம் வில்லுடையார்.) மதிக்கும் சரக்கு ளய் உள்ளார். மாயத்தான் யாவும் வகுத்தனர். (மாயத்தினால், இறக்கத்தான்) மாவினைத் தீமேல் ஆக்கும் வந்தி தன்னால் மா வினைத்தீ மேலாக்கும் வந்தி தன்னால் - இத்தகைய தொடர்களை ஒவ்வொரு செய்யுளின் ஈறாகவும் அமைத்து இன்புறுத்தும் இவர் வல்லாண்மையும் சொல்லாண் மையும் கழிபேருவகை பயப்பனவாம். அழைப்பதெவன் வானடைந்த அம்மானை அம்மானை அம்மானைக் கையில்வைத்த அண்ணலன்றோ அம்மானை என்றும், வேலையின்மேல் வேலைவிடும் வேலைசொல்வார் அம்மானை என்றும், இவர் கூறுவன போன்றவை சொற்பின் வருநிலையணிச் சான்றுகளாம். அரிய வித்தை கற்றவனுக்கு அன்னமரிது என்பதும், பொன்னவையில் நட்டம் பொருந்தியவர் பொன் வில்லார் என்பதும், பச்சை மதலை பெற்றார்க்குப் பால் வாராதோ என்பதும் இவர்தம் உலகியலறிவுத் திறத்தை விளக்கும். சில சொற்களை முன் பின்னாக மாற்றியியைத்து இவர் விளையாட்டு சொல் விளையாட்டு மிக இன்பமானது. அன்னமலை ஆக்கியவள் மலையன்னம் என்றும் கக்குவதேன் சாரம் சாரங்கக் கையன் அன்றோ என்றும், கையிற் பல் சங்க முண்டோ சங்கப் பலகை யுண்டு என்றும் இவர் ஆங்காங்குக் கூறுவது காண்க. சில இடங்களில் முரணின்பம் பயக்கச் சொற்களை ஆள்கிறார். கூடாதா கூடலெனக் கூறு நகர்க்கு; மலையானே மலைவில்லன் என்பன அத்தகையவாம். மேலும், வானோர் இறை பழியை மாற்றியவன், தார் வேளைக் காயுமோ? என்றும், அன்னக் குழியும் வையையும் அழைத்தவன் நஞ்சுண்டது கொடியதே என்றும், வேல் வளை செண்டு கொடுத்தவன் விசயனொடு மோதத் தலைவிதியோ என்றும், வல்லசித்தர் தாமானான் கங்கையைச் சுமப்பதேன் என்றும் உலவாக் கிழிப்பொன் உதவினோன் தலையால் இரந் துண்ணலாமோ என்றும், தலையால் இரந்துண்டானுக்குத் தனமேது என்றும், உயிர்க் குயிராய் நிற்பவன் கிள்ளிதனைக் கீழ்மடுவில் வீழ்த்துமோ? என்றும், வணிகக் குழந்தைக்கு மாமனாக வந்து வழக்குரைத்தவன் சிறுத் தொண்டன் குழந்தைக் கறியுண்ண வந்ததேன் என்றும், பாணனைப் பலகையில் வைத்தவன் பூப்பாணனை ஏன் வையான் என்றும், ஆண்பாலில் முலைப்பால் வந்ததென்ன? என்றும், நாரைக்கு வீடு தந்தவன் நமனைக் கையான் முடித்ததேன் என்றும் கீரனைக் கரை யேற்றியவன் தக்கனுக்கு ஆட்டுத்தலை வைத்ததேன் என்றும், போத உபதேசம் செய்தவன் காதலனைத் தங்குருவாக் கொண்டதேன் என்றும், வன்னியும் கிணறும் லிங்கமும் வருவித்தவர் பரவையார்க்குத் தூது சென்றதேன் என்றும் முரணின்பம் காண அடுக்கடுக்காக வைத்துச் செல்லும் அழகு சுட்டிக் காட்டத் தக்கதாம். திருவிளையாடல் கதைகள் அனைத்தும் பாடு பொருளாகக் கொண்ட இவர், மேலும் பல கதைகளை ஆங்காங்குச் சுட்டு கின்றார். முரணாகக் காட்டியவற்றுள் அக் கதைகள் சிலவற்றைக் காணலாம். அரியயன் காண மாட்டாமை, மேருவை வளைத்தது, மன்மதனைக் காய்ந்தது, கூற்றுவனை உதைத்தது ஆகியவற்றைப் பயில எடுத்துக்காட்டுகிறார். கல்லாடர் சொல்லினிமை கண்டதை வியந்து பாராட்டுகிறார். கோவென்று சேர்ந்தாரைக் கொல்லியன்றோ என்று வஞ்சப் புகழ்ச்சியை ஓரிடத்துக் கையாள்கின்றார். தன்னை அடைந்த அடியார்க்குத் திருவடி நிழல் உதவித் தன்னோடு இணைத்துக் கொள்பவன் இறைவன் ஆதலின் அப்பொருள் குறிப்பால் விளங்கச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார். சேர்ந்தாரைக் கொல்லி என்பது நஞ்சும், சினமும், தீயும் என்பன. இவ்வெல்லாம் பொருந்தக் கையாண்டுள்ளார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும் என்னும் வள்ளுவர் வாக்கையும் நினைவூட்ட இத்தொடரை அமைத்துள்ளார். இத்தகைய சுவைமிக்க நூலை இயற்றியவர் நாகலிங்கப் பிள்ளை என்பார் என்றும், திருநெல்வேலியைச் சார்ந்தவர் என்றும் அறியும் அளவே இயல்கின்றது. இவர் தம் வரலாற்றைப் பற்றி யாதொரு விவரமும் தெரியவில்லை என இதன் முன்னைப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு ஆகியவற்றிலும் இவர்தம் வரலாற்றை அறியக் கூடவில்லை. அறிய நேரின் மறுபதிப்பில் சேர்க்கப்பெறும். இனி, இத் திருவிளையாடலம்மானை மூலம் 1838 ஆம் ஆண்டில் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் அவர்களால் முதன் முதலாக வெளிப்படுத்தப் பெற்றது. மூலம் மட்டும் அமைந்த பதிப்பு அது. பின்னர்ச் சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்கள் பெரு முயற்சியால் இதன் மூலம் மட்டும் இரண்டாம் பதிப்பாக யாழ்ப்பாணத்துக் கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திர சாலையின் வழி 1922 ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதற்குப் பின்னர், யாழ்ப்பாணத்துப் பழை - தண்டிகைக் கனகசபைப் பிள்ளை அவர்கள் எழுதிய அரும்பதக் குறிப்புரை யுடன் 1959 இல் மேற்படி சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களால் மூன்றாம் பதிப்பு வெளிவந்தது. 1959 ஆம் ஆண்டுப் பதிப்பும் கிடைத்தல் அரிதாகவும், அதில் அருங்குறிப்புகளும் மிகக் குறைந்தனவாகவும், சிலேடை முதலிய நயங்கள் முழுமையும் தழுவிச் சொல்லப்படாதன வாகவும் இருந்தமையால் பொழிப்புரை, விளக்கவுரை, திருவிளையாடல் கதைக்குறிப்பு ஆராய்ச்சி முன்னுரை ஆகியன இணைந்த இப்புதிய பதிப்பு வெளிவருகின்றது. மதுரைத் திருக்கோயில் பற்றிய அனைத்து நூல்களையும் ஆய்ந்து தக்க நூல்களை வெளியிட வேண்டும் என்னும் ஆர்வத்தால், எல்லா நூல்களையும் தொகுத்துத் தந்து என்னை ஆராய்ச்சி இன்பத்தில் மூழ்கச் செய்யும் தமிழ்ப் பெரியார், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர். கரும்பு தின்னக் கூலி தருவார் போல அவர்கள் செய்துவரும் இனிய செயலுக்கு நன்றி கூறி, இந் நூலுக்கும், மேலும் மேலும் வரவிருக்கும் சொற்சுவை பொருட்சுவை மிக்க நூல்களுக்கும் தமிழன்பர் அரவணைப்பு மிக வேண்டுமென வேண்டி அமைகின்றேன். அருளகம் தமிழ்த் தொண்டன், 21-4-78 இரா. இளங்குமரன் காப்பு காக்குமருட் சித்திக் கணபதியை வெள்ளிமன்றில் தூக்கினிறை யோர்பொருளாச் சொல்வர்காண் அம்மானை; தூக்கினிறை யோர்பொருளாச் சொல்வரே யாமாகில் மாக்கணிறை யன்றி மதிப்பரோ அம்மானை; மதிக்குஞ் சரக்கன்று மாவுயர்ச்சி யம்மானை. (பொழிப்புரை) உலகினைக் காக்கும் அருள்வடிவினராகிய மூத்தபிள்ளையாரை வெற்றியம்பலத்தில் நடிக்கும் இனிய இறைவனுக்கு ஒப்பான பொருளாகச் சொல்வர் காண் அம்மானை; நடிக்கும் இனிய இறைவனுக்கு ஒப்பான பொருளாகச் சொல்வரே ஆனால் அவர்களை நிறையிட்டுக் கண்டாலன்றி மக்கள் மதிப்புக் கொள்வரோ அம்மானை; அவ்வாறு மதிக்கக்கூடிய பொருளன்று, மிக உயர்ந்த பொருளாம் அம்மானை. (விளக்கவுரை) வெள்ளிமன்று - வெள்ளியம்பலம்; தூக்கினிறை - தூக்கு இன் இறை - நடனமிடும் இனிய இறைவர்; தூக்கின்நிறை - தூக்கிக்கண்ட அளவு; ஓர்பொருள் - ஒப்பற்ற பொருள்; ஒருபொருள் மதிப்பர் - மதிப்புக் கொள்வர்; மதிப்பிடுவர்; மதிக்குஞ் சரக்கன்று - மதிக்கக்கூடிய பொருள் அன்று; மதிக் குஞ்சரக் கன்று - ஞானப் பொருளாம் யானைக் கன்றாகிய மூத்தபிள்ளையார். மாவுயர்ச்சி - மிகுந்த உயர்ச்சி; யானையுள் உயர்ந்த யானை ( மா - பெரிய; யானை). மாக்கணிறை யன்றி மதிப்பரோ - மாக்கள் நிறையன்றி மதிப்பரோ; மாக்கள் இறையன்றி மதிப்பரோ. தடித்த எழுத்தில் உள்ளவை எல்லாம் இரட்டுறல் (சிலேடை) இவ்வாறே மேல் வருவனவும் கொள்க. 1. இந்திரன் பழி தீர்த்தது (துருவாச முனிவரின் வசைக்கு ஆட்பட்ட இந்திரனின் பழியை இறைவன் நீக்கியது) தேனார் கடம்பவனத் தேசுதிகழ் சொக்கலிங்கம் வானோர் இறைபழியை மாற்றியதே அம்மானை; வானோர் இறைபழியை மாற்றியதே ஆமாகில் கானாறும் தார்வேளைக் காயாதே அம்மானை; காயாதோ பூச்சொரியக் கண்டதரு அம்மானை. (பொ - ரை) தேன் நிரம்பிய கடம்பவனத்தில் ஒளிவிளங்கக் கோயில் கொண்ட சொக்கலிங்கம் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பழியை விலக்கியது அம்மானை; தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பழியை விலக்கியதே ஆயினால், நறுமணம் கமழும் மாலையணிந்த காமவேளாம் மன்மதனைக் காயாதே (சினந்து எரியாதே) அம்மானை; பூச்சொரியக் கண்ட மரம் காயாமல் இருக்குமோ அம்மானை; (வி - ரை) தேசு - ஒளி; கான் - மணம்; தார் - மாலை. இப் பாடலில், காய்தல், பூச்சொரிதல், தரு என்பன இரட்டுறல் (சிலேடை) காய்தல் - காய் காய்த்தல், சினங்கொண்டு எரித்தல். பூச்சொரிதல் - பூவுதிர்த்தல், பூவம்புகளை ஏவுதல்; தரு - மரம், வேண்டிய வேண்டியவாறு தரும் இறைவன்; மலரிட்டு வணங்கிய இந்திரனின் கொலைப்பாவம் போக்கிய சொக்கலிங்கம், மலரம்பு தொடுத்த மன்மதனை எரித்தது ஏன் என்பதை நயமாகக் கூறினார். பூத்தமரம் காய்க்கும். இது நியதி; இதுபோல் பூச்சொரியக் கண்டமையால் காய்ந்தார் என்றார். 2. வெள்ளையானையின் சாபம் தீர்ந்தது (துருவாச முனிவரின் வசைக்கு ஆளாகி நூறாண்டு காட்டு யானையாக இருந்த வெள்ளையானையின் சாபத்தை நீக்கியது) பெரும்பணிபூண் டென்பணிமேற் பெற்றசொக்கர் அன்பர்குழாம் அரும்பணிசெய் விந்தைகடம் பாடவியில் அம்மானை; அரும்பணிசெய் விந்தைகடம் பாடவியில் ஆமாகில் இரும்பணிக்கங் குண்டோநல் வெள்ளிதங்கம் அம்மானை; வெள்ளிமா தங்கமுற்று மேலான தம்மானை. (பொ - ரை) பெரிய பாம்பினை அணிகலமாகக் கொண்டு, அதன்மேலும் எலும்பு மாலையும் அணிந்துகொண்ட சொக்க நாதரின் அடியார் கூட்டம் கடம்பவனமாம் மதுரையில் வியப்பான அரிய பணி செய்யும் அம்மானை; கடம்பவனத்தில் வியப்பான அரிய பணி செய்யுமேயானால் சிறந்த பணி செய்வதற்கு வேண்டிய நல்ல வெள்ளி தங்கம் உண்டோ அம்மானை; வெள்ளி மாதங்கமாம் வெள்ளையானை கடம்பவனம் அடைந்து, இழந்துபோன தன் மேலான நிலையை மீண்டும் அடைந்தது அம்மானை. (வி- ரை) பணி - அணிகலம், பாம்பு, தொண்டு; என்பு - எலும்பு; மாதங்கம் - யானை; வெள்ளிமாதங்கம் - வெள்ளையானை; மேலானது - மேனிலை யடைந்தது. இரும்பணி - சிறந்த அணிகலம் செய்யும் பணிக்கு; வெள்ளியும் தங்கமும் உண்டோ என்றதற்கு வெள்ளி மாதங்கம் உண்டு என்கிறார். இனி, வெள்ளி மாது (வெள்ளிப் பனிமலை மகளாகிய உமை) உற்று அங்கம் மேலானது என்னும் பொருளும் இறைவற்குக் கொள்க. 3. திருநகரங் கண்டது (மணவூரில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் குலசேகரன் இறைவன் கட்டளைப்படி கடம்பவனத்தை அழித்து மதுரைத் திருநகரங் கண்டது) தொண்டர்பணி சொக்கேசர் சொல்லரிய மாதவர்சூழ் வண்டமர்க டம்பவன வாசிகாண் அம்மானை; வண்டமர்க டம்பவன வாசியே ஆமாகில் கண்டறியா ரோமடவார் காமநலம் அம்மானை; காமதுரை யென்றூர்முன் கண்டவர்காண் அம்மானை. (பொ - ரை) அடியார்களால் பணிந்து வணங்கப்பெறும் சொக்கநாதர், சொல்லுதற்கு அரிய பெருந்தவத்தோர் சூழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமாகிய கடம்பவனத்தே வாழ்பவராம் அம்மானை; வண்டுகள் மொய்க்கும் கடம்பவனத்தே வாழ்பவரே ஆயினால், மகளிர்தம் காமநல இன்பத்தை அவர் கண்டறி யாரோ அம்மானை; அவர் முன்னம் சோலைகள் நிரம்பிய (கா) மதுரை என்னும் பெயரால் ஓர் ஊர் கண்டவர்காண் அம்மானை. (வி - ரை) காமதுரை: கா + மதுரை - காக்கள் (சோலைகள்) நிரம்பிய மதுரை. காம + துரை - காமம் நுகர்தலில் பெரியவர் வனவாசி - காட்டில் வாழ்பவர், காட்டாள் என்னும் வழக்கு மொழியும், கடம்பவனவாசி என்பதால் மதுரைப் பெருமான் என்பதையும் குறித்தார். வண்டு - ஈ; வளையல்; ஆகுபெயரால் வளையல் அணிந்த மகளிரைக் குறிக்கும். வண்டமர் கடம்ப வனம் - மகளிர் நிரம்பிய மதுரை. 4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் (பாண்டியன் மலயத்துவசனுக்கும் காஞ்சனமாலைக்கும் திருமகளாக மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டி என்னும் பெயருடன் பிறந்தது) திகழுமது ரைக்கரசு தென்னன்மல யத்துவசன் மகளெனவே அங்கயற்கண் வந்துதித்தாள் அம்மானை; மகளெனவே அங்கயற்கண் வந்துதித்தாள் ஆமாகில் பகையுடை வேந்தர்க்குப் பயமுண்டோ அம்மானை; பயந்தரித்தப் பாலிருப்பார் பத்தாவே அம்மானை. (பொ - ரை) விளங்கும் மதுரைக்கு அரசனாகிய பாண்டியன் மலயத்துவசனின் திருமகளாகத் தடாதகைப் பிராட்டி என்னும் பெயருடன் அங்கயற்கண்ணம்மை பிறந்தாள் அம்மானை; திருமகளெனவே அங்கயற்கண்ணம்மை பிறந்தாளாயின் பாண்டியர்க்குப் பகையாகிய வேந்தர்களுக்குப் பயமுண்டோ அம்மானை; பயத்தைத் தரித்து அப்பால் இருப்பார் அவள் கணவரே அம்மானை; (வி - ரை) பயமுண்டோ என்னும் வினாவுக்கு, ஆம், அவள் கணவரே பயம் தரித்து அப்பால் இருப்பார்; ஆதலால் அஞ்சாள் என்னும் மறுமொழி யுரைத்தார்! இரட்டுற மொழிதலால் உண்மையையும் உரைத்தார்: பயம் (கங்கைநீர்) தரித்து அ பால் ( அழகிய இடப்பால்) இருப்பார் பத்தாவே, இனிப் பகை வேந்தர்க்குப் பயப்படுவாளோ அம்மை எனின், கங்கையைத் தரித்தவர் கணவராதலால் கங்கையைத் துணையாக வுடைய மங்கைக்குப் பயமேது? என்பதுமாம். பயம் - அச்சம், நீர். அப்பால் - அவ்விடம் (அயலிடம்) அ + பால் - அழகிய இடப்பாகம். 5. திருமணம் (இறைவன் பாண்டியனாக வந்து தடாதகையைத் திருமணம் புரிந்தது.) திக்கெலாம் வென்றுதனச் சீர்பெறவெள் ளிக்கிரிசென் றிக்கயற்கண் மாதிறை கொண் டிங்குவந்தாள் அம்மானை; இக்கயற்கண் மாதிறை கொண் டிங்குவந்தாள் ஆமாகில் மைக்குழற்கு வந்தான் மதிகுலனோ அம்மானை; மதிமேற் குலவான்கோ மான்மதுரைக்(கு) அம்மானை. (பொ - ரை) எல்லாத் திசைகளையும் வெற்றி கொண்டு செல்வச் சிறப்புப் பெற வெள்ளி மலைக்குச் சென்று, இந்தக் கயற்கண் அம்மை பெருஞ்செல்வங் கொண்டு இங்கு வந்தாள் அம்மானை; கயற்கண் அம்மை பெருஞ்செல்வங் கொண்டு இங்கு வந்தாளாயினால், மேகம் போன்ற தன் கூந்தலுக்கு உரிமையாளனாக வந்தவன் மதிகுலமாகிய பாண்டியர் குலமோ அம்மானை; மதிக்கும் மேற்குலவானாகிய அவன் மதுரைக்குக் கோமானும் ஆவான் அம்மானை. (வி - ரை) தனச்சீர்பெற - செல்வச் சிறப்புப் பெற; தனமாகிய (மார்புகளாகிய) சிறப்பைப் பெற, தன் மணவாளனைக் காணுங்கால் தனக்குள்ள மூன்று மார்பகங்களில் ஒன்று மறையும் என்னும் சிறப்பைப்பெற; இறைவனைத் திக்குவிசயத்தில் கண்டதும் ஒரு மார்புகுறையப் பெற்றாள் என்பதைக் குறிப்பது. மாதிறை - மா திறை (மிகுந்த கப்பப்பணம்) கயற்கண் மாது இறை. (இறை - வரி, கப்பம்) குழற்கு வந்தான், குழற்கு உவந்தான்; மதி குலன் - பாண்டியர் குலம்; மதிக்கத்தக்க உயர்குலம். 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது (பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் வேண்டுகோள் படி தில்லையில் ஆடிய திருக்கூத்தை இறைவன் மதுரை வெள்ளி மன்றில் ஆடியது) சிதம்பரம்போல் வெள்ளிமன்றில் தென்மதுரைச் சுந்தரனைப் பதஞ்சலிவேங் கைப்பாதர் பார்த்துநின்றார் அம்மானை; பதஞ்சலிவேங் கைப்பாதர் பார்த்துநின்றார் ஆமாகில் கதம்பவனத் தண்ணல் செயும் காரணமே தம்மானை காரணத்தைக் கேட்கில் கனக்கூத்தே அம்மானை. (பொ - ரை) அழகிய மதுரைச் சொக்கரைப் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் திருச்சிற்றம்பலத்தில் போல மதுரை வெள்ளி மன்றிலும் திருக்கூத்தாடப் பார்த்து நின்றார் அம்மானை; பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் பார்த்து நின்றார்களானால், அக்கூத்தைக் கடம்பவனமாம் மதுரையில் இறைவர் செய்த காரணம் என்ன அம்மானை; காரணத்தைக் கேட்டால் கூத்தின் பெருமையேயாம் அம்மானை. (வி - ரை) வேங்கைப் பாதர் - புலிக்கால் முனிவர்; பாதர் - பாதத்தை உடையவர். பொன்னம்பலக் கூத்துக் கண்டபின்னரே உண்ணும் வழக்கம் கொண்ட அவர்கள், தன் திருமணத்தில் உண்ணுதற்காக இறைவன் மதுரை வெள்ளிமன்றில் திருக் கூத்தாடினான் என்க. கதம்பவனம் - கடம்பவனம். எதுகை நோக்கி ட கரம் த கரம் ஆகியது. கனக்கூத்து - சிறந்த கூத்து: கனமும் கூத்தும்; கனம்; இசை வகையுள் ஒன்று. கனம் கிருஷ்ணையர் என்பார் பெயரிலுள்ள கனம் இசைவகைச் சிறப்புப் பெயராம். 7. குண்டோதரனுக்கு அன்னமிட்டது (தடாதகைப் பிராட்டியார் திருமணத்தின்போது மிகுதியாகக் கிடந்த சோற்றை உண்பதற்குக் குண்டோதரனை இறைவன் ஏவி உண்பித்தது) (குண்டம் - குழி, பெரும்பானை; உதரம் - வயிறு) தென்மதுரை யார்மணத்தில் தேவி அமுதுதரத் தன்னிகரில் குண்டோ தரனுண்டான் அம்மானை; தன்னிகரில் குண்டோ தரனுண்டான் ஆமாகில் அன்னமலை என்னமிகுந் தாக்குமோ அம்மானை; ஆக்கவல்லார் ஆக்குமலை அன்னமவள் அம்மானை. (பொ - ரை) அழகிய மதுரைச் சோமசுந்தரர் தம் திருமணத்தில் தேவி அமுது படைக்க, உண்ணுதலில் தனக்கு ஒப்பாரில்லாக் குண்டோதரன் உண்டான் அம்மானை; ஒப்பில்லாக் குண்டோதரன் உண்டானே ஆயினால் அவனுக்குத் தக்கவாறு சோற்றை மலைபோல மிகுதியாக ஆக்கினரோ அம்மானை; ஆம்; அவ்வாறு ஆக்க வல்லாரை ஆக்கும் மலையன்னம் (பார்வதி) அவள் அம்மானை. (வி - ரை) அன்னமலை - சோற்றுமலை; அத்தொடரையே முன் பின் மாற்றி மலையன்னம் என்றார் உமையம்மையைக் குறித்தற்கு. அவள் மலையரசன் மகளாகலின். அன்னம் - அன்னம் போன்றவள், சோறு. ஆக்கவல்லார் ஆக்குமலை அன்னம்: எல்லாவற்றையும் ஆக்க வல்லவரையும் ஆக்கும் மலையன்னம் ஆதலின், அவள் ஆக்குதல் குறைந்த அளவாமோ எனக் காண்க; இறைவி வேண்டுதற்படி இறைவர் அன்னக்குழி முதலியவற்றை வருவித்தலால் அவர் சோறு ஆக்குவாரும், அவரை அவ்வாறு ஆக்குவார் அம்மையுமாகப் பொருளும் கொள்க. 8. அன்னக் குழியையும் வையையையும் அழைத்தது (குண்டோதரனுக்காகச் சோற்றுக்குழியையும், வையை ஆற்றையும் வருவித்து உண்ணச் செய்தது.) அன்னக் குழாமதுரை யாதிபர்குண் டோதரற்கா அன்னக் குழிவையை யாறழைத்தார் அம்மானை; அன்னக் குழிவையை யாறழைத்தார் ஆமாகில் அன்னவர் நஞ்(சு) உண்ட(து) அறக் கொடிதே அம்மானை; அறக்கொடியார் வாழ்வார்க்(கு) அமுதுவிடம் அம்மானை. (பொ - ரை) சோற்றுக்காக வருந்துதல் இல்லாத மதுரைக்கு இறைவர், குண்டோதரனுக்காக அன்னக் குழியையும், வையை யாற்றையும் வருவித்தார் அம்மானை; அன்னக்குழியையும் வையையாற்றையும் வருவித்தார் ஆயினால், அத்தகைய இறைவர் நஞ்சினை உண்டது மிகக் கொடுமையானதாம் அம்மானை; அறக்கொடியாகிய உமையம்மையார் ஒரு பாகமாக வாழ்பவர்க்கு உணவு, விடமாம் அம்மானை. (வி - ரை) சோற்றுக்கு + உழா; உழா - உழத்தல் இல்லாத, வருந்துதல் இல்லாத; தாம் உண்ணுதற்கென்று உழுதொழில் புரிதல் இல்லாத, பிறருக்கு உதவுதற்காகவே உழுதொழில் செய்யும்; அறக் கொடிது - மிகக் கொடிது; அறக் கொடியார் - அறக்கொடி போன்றவராகிய உமையம்மையார். மிகக் கொடிய வராக வாழ்பவர்க்கு அமுதமே கிடைப்பினும் அது விடமேயாம் என்றும், நனிநாகரிகர்க்கு நஞ்சும் அமுதேயாம் என்றும் கூறுமுண்மையும் குறிப்பால் கொள்க. கொடியார் - கொடியவர்; கொடி போன்றவர். அன்னக்குழி அழைத்தவர். அன்னக்கு உழா மதுரையார் அவர் நஞ்சுண்டார் என்ற நயம் அறிக. 9. ஏழுகடல் அழைத்தது (தடாதகையின் அன்னை காஞ்சன மாலை கடலாடும் விருப்புடையவராக, அவர் ஆடுதற்காக ஏழு கடல்களை மதுரைக்கு இறைவர் அழைத்தது) வண்டுறைதார்ச் சுந்தரனார் மாமிபுன லாடமங்கை விண்டுகடல் ஏழழைத்தார் மெய்மதுரைக்(கு) அம்மானை; விண்டுகடல் ஏழழைத்தார் மெய்மதுரைக்(கு) ஆமாகில் தெண்டிரையேழ் சுற்றுமன்றோ தீவினைச்சென்(று) அம்மானை; தீவினையேன் சுற்றுமெங்கோன் சிந்திக்கில் அம்மானை. (பொ - ரை) வண்டுகள் தங்கும் கொன்றை மாலை யணிந்த சுந்தரனார் தம் மாமியாம் அரசியார் கடல் நீராட விரும்புதலை உமையம்மை உரைத்தாராகக் கடல்கள் ஏழையும் வாய்மை வளரும் மதுரைக்கு வருவித்தார் அம்மானை; உமையம்மை வேண்டக் கடல்கள் ஏழையும் மதுரைக்கு அழைத்தாரே ஆயினால், தெளிந்த அலைகளையுடைய கடல்கள் ஏழும் சென்று தீவினைச் சுற்றிக்கொள்ளும் அன்றோ அம்மானை; எம் இறைவன் எண்ணும் போது தீவினை எப்படிச் சுற்றும் அம்மானை. (வி - ரை) விண்டு - உரைத்து; திரை - அலை; கடல்; கடல் சுற்றி நிற்கும் இடம் தீவு ஆதலால், தெண்டிரை ஏழ் சுற்று மன்றோ தீவினைச் சென்று என்றார். தீவினை - தீவை; தீயவினை. எங்கோன் சிந்திக்கில் தீவினை ஏன் சுற்றும் - இறைவன் அருளுண்டாயின் தீவினை சூழுமோ? இறைவன் அருளால் தீவினையறும் என்னும் கருத்தை இரட்டுறலால் குறித்தார். 10. மலயத்துவசனை அழைத்தது (விண்ணுலகு சென்ற மலயத்துவசனைக் காஞ்சனையுடன் கடலாடுதற்காகத் தடாதகை வேண்டியவாறு அழைத்தது.) மழைக்கடலிற் சென்றாடு மாமிக்காச் சுந்தரன்சீர் தழைக்குமல யத்துவசனைத் தானழைத்தான் அம்மானை; தழைக்குமல யத்துவசனைத் தானழைத்தான் ஆமாகில் அழைப்பதெவன் வானடைந்த அம்மானை அம்மானை; அம்மானைக் கையில்வைத்த அண்ணலன்றோ அம்மானை. (பொ - ரை) பெய்யும் மழையால், பெருகிய ஏழு கடலில் போய் நீராடும் தன் மாமிக்காகச் சுந்தரன் புகழ் பெருகும் தன் மாமன் மலயத்துவசனை மதுரைக்கு வரச்செய்தான் அம்மானை; புகழ் பெருகும் மலயத்துவசனை அழைத்தானே ஆயினால், வானடைந்த அம்மானாம் அவனை அழைத்த தெப்படி அம்மானை; அம்மானை (அழகிய மானை)க் கையில் வைத்த பெரியவன் அவனன்றோ அம்மானை. (வி - ரை) மழைக்கடல் - மழை பெய்தலால் உண்டாகிய கடல்; (என்றது, ஏழு கடலை) மாமி - காஞ்சனமாலை. தன் கணவனையோ, தன் மகனையோ, பசுமாட்டின் வாலையோ பற்றிக்கொண்டு கடலாட வேண்டுமென்பது விதி எனச் சொல்லப் பெற்றமையால், கணவன் இறந்து போனதாலும், மகன் இன்மையாலும், பசுமாட்டைப் பற்றிக் கொண்டு நீராடத் திகைத்தமையாலும், தடாதகையார் விருப்பப்படி இறைவன், விண்ணுலகடைந்த தன் மாமன் மலயத்துவசனை மதுரைக்கு வரச் செய்தான் என்பது செய்தி. அம்மான் - அழகியமான், மாமன். ‘m«khid¡ ifÆš it¤jt‹ m«khid miH¥gJ mÇnjh? என நயம் காண்க. 11. உக்கிரபாண்டியர் திருவவதாரம் (பாண்டியனாக வந்த இறைவன், தனக்குப் பின் ஆட்சி புரிதற்கு உரியவர் வேண்டுமே என வேண்டிய தடாதகைக்காக உக்கிர பாண்டியரைப் பிறக்கச் செய்தது.) மக்கள்புகழ் சுந்தரப்பேர் மாமுடிதங் கத்தணிந்த சொக்கனருள்உக்ர சுதன்வளர்ந்தான் அம்மானை; சொக்கனருள் உக்ர சுதன்வளர்ந்தான் ஆமாகில் உக்கிரற்குத் தாயார் உயர்ந்தவரோ அம்மானை; உயர்ந்த மலைப் பெண்ணென் றோதுவார் அம்மானை. (பொ - ரை) மக்களால் புகழப்பெறும் சுந்தரம் என்னும் பெயருடைய சிறந்த முடி வழி வழியே தங்குமாறு மன்னனாக வந்த சொக்கன் அருளிய உக்கிரபாண்டியன் என்னும் மகன் வளர்ந்தான் அம்மானை; சொக்கன் அருளிய மகன் வளர்ந்தான் ஆயினால், அந்த உக்கிரபாண்டியனுக்குத் தாயாராம் தடாதகை உயர்ந்தவரோ அம்மானை; ஆம், அவன் தாயார் உயர்ந்த மலைமகள் என்று அறிஞர் கூறுவர் அம்மானை. (வி - ரை) மாமுடி தங்கத்து அணிந்த - தங்கத்தால் அமைந்த சிறந்த முடியை அணிந்த; (அவன் பாம்பையே அணிகலமாகக் கொண்டவன், நாகாபரணன், பாம்பலங்காரன் என்னும் பெயரினன் என்பதறிக.) மாமுடி தங்கத் தணிந்தவன் - சிறந்த அரசு நிலைபெற விண்ணினின்று மண்ணுலகு வந்தவன். சுதன் - மகன். உயர்ந்தவர் - வளர்ந்தவர், உயர்வுடையவர். உயர்ந்தமலைப் பெண் - உயர்ந்த மலையரசன் மகள்; உயர்ந்த அமலையாகிய பெண்; அமலை - குற்றமற்ற உமையம்மை. 12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்தது (பாண்டியருக்குப் பகையாக இருந்த கடலை அழிப்பதற்கு வேலும், இந்திரனைத் தகர்ப்பதற்கு வளையும், மேருவின் செருக்கை அடக்குவதற்குச் செண்டும் உக்கிரபாண்டியனுக்கு இறைவன் கொடுத்தது.) ஓர்மதுரைச் சுந்தரனார் உக்கிரனுக் கீந்தரசு வீரமுறத் தாமளித்தார் வேல்வளைசெண் டம்மானை; வீரமுறத் தாமளித்தார் வேல்வளைசெண் டாமாகில் சார்விசயன் மோதத் தலைவிதியோ அம்மானை; தலைவிதிக்கு மாறுமருந் தார்முடித்தார் அம்மானை. (பொ - ரை) ஒப்பற்ற மதுரைச் சுந்தரனார் உக்கிர குமாரனுக்கு அரசு தந்து, அவ்வரசு வீரத்தால் விளங்குமாறு வேலும் வளையும் செண்டும் வழங்கினார் அம்மானை; வீரத்தால் விளங்குமாறு வேலும் வளையும் செண்டும் வழங்கினாரானால் அவரை நெருங்கி அருச்சுனன் மோதித் தக்கத் தலைவிதி யுண்டோ அம்மானை; தலைவிதிக்கு மாற்று மருந்து எவரே முடித்துக் கொண்டார் அம்மானை. (வி - ரை) செண்டு - ஒரு கருவி. செண்டு கொண்டு கரிகாலன் மேரு திரித்த செய்தியை அறிக. செண்டலங்காரர் என்பது சிவன் பெயர்களுள் ஒன்று. பாசுபதம் பெற அருச்சுனன் தவம் செய்தபோது அவன் தவத்தை அழிக்க வந்த பன்றியைப் போரிட்ட நிமித்தமாகச் சிவனுக்கும் அருச்சுனனுக்கும் மோது போர் உண்டாகி அருச்சுனன் வில்லால் சிவன் அடியுண்ட செய்தி பாரதத்துக் கண்டது. தலைவிதி - தலையில் நான்முக னால் எழுதிய எழுத்து; தலைமையான வில் (விதி - சாபம் - வில்) விதிக்குமாறு - விதியை மாற்றுதற்கு. விதியை மாற்ற மருந்து எவர் முடித்தார் என்னும் உலகியல்பும், விதிக்கு மருந்தாக ஆர் (ஆத்தியை) முடியில் சூடியவர் என இறையியல்பும் கூறினார். 13. கடல் சுவற வேல் விட்டது (இந்திரன் ஏவலால் மதுரையை அழிக்க வந்தது கடல். அதன் மேல் வேல் ஏவுமாறு இறைவன் உக்கிரபாண்டியனுக்குக் கட்டளையிட்டு வற்றச் செய்தது.) பையரவம் பூண்ட பதிமதுரைச் சொக்கேசர் செய்யடிமை கொண்டார்மெய்ச் செல்வர்தமை அம்மானை; செய்யடிமை கொண்டார்மெய்ச் செல்வர்தமை ஆமாகில் மெய்யர்செய்யத் தக்கமிக்க வேலையுண்டோ அம்மானை; வேலையின்மேல் வேலைவிடும் வேலைசொல்வார் அம்மானை. (பொ - ரை) படத்தையுடைய பாம்பை அணிந்த இறைவராம் மதுரைச் சொக்கநாதர் மெய்யான அருட் செல்வர்களைத் தமக்குப் பணிசெய்யும் அடியாராகக் கொண்டார் அம்மானை; அருட்செல்வர்களைத் தமக்குப் பணி செய்யும் அடியாராகக் கொண்டாரென்றால், மெய்ப்பொருளாம் அவ்விறைவர் செய்யத் தக்க வேலை மிகவுண்டோ அம்மானை; அவர் கடலின்மேல் வேலை ஏவக் கட்டளையிடுவார் அம்மானை. (வி - ரை) கடல் சுவற - கடல் வற்ற. பை - படம். அரவம் - பாம்பு; செய்யடிமை - வேலை செய்யும் அடிமை, செய் - நிலம்; செய்யடிமை - கூலியாள், வேலை - கடல். வேலினை: வேலையை; வேலைமேல் வேலையாக வேலை சொல்பவர் என்னும் நயத்தால் மிகுந்த வேலைக்காரர் அவர் எனத் தெளிவித்து, அவ்வேலை மிகுதியால் மெய்ச்செல்வர் தமைச் செய்யடிமை கொண்டார் என இணைத்து நயம் காண்க. இது சொற்பின் வரு நிலையணியாம். 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது (உக்கிரபாண்டியனுடன் போருக்கு வந்தான் இந்திரன். அவ் இந்திரன் முடியைத் தகர்க்குமாறு உக்கிரபாண்டியன் வளையை ஏவுமாறு இறைவன் கட்டளையிட்டு, அவன் முடியைத் தகர்க்கச் செய்தது.) படிபுரந்த சொக்கர்வளை பாண்டியன்கை யால்விடுத்து முடிதகர்த்தார் இந்திரனை முன்னாளில் அம்மானை; முடிதகர்த்தார் இந்திரனை முன்னாளில் ஆமாகில் கொடிதவரைச் சேர்ந்துவிண்ணோர் கோவென்ற தம்மானை; கோவென்று சேர்ந்தாரைக் கொல்லியன்றோ அம்மானை. (பொ - ரை) பாண்டிநாடு ஆண்ட சொக்கர் வளை தந்து பண்டியன் கையால் ஏவச்செய்து இந்திரன் முடியை முன்னாளில் அழித்தார் அம்மானை; இந்திரன் முடியை முன்னாளில் அழித்தார் ஆயினால், பாண்டியரைச் சேர்ந்து இந்திரனை வெற்றி கொண்டது கொடியதாம் அம்மானை; தலைவன் என்று தன்னையடைந்த அடியவரைக் கொன்று தன்னோடு இணைத்துக் கொள்பவன் அல்லனோ அம்மானை. (வி - ரை) படி - நிலம்; புரந்த - காத்த; கோவென்று - தலைவன் என்று; கோவென்று கதறி; சேர்ந்தாரைக் கொல்லி - சேர்ந்தவரை ஆட்கொள்பவன்; சேர்ந்தவர்களை அழிப்பவன். அடியார்களைத் தன் இணையடிகளில் இணைத்துக் கொள்பவன் இறைவனாகலின் இவ்வாறு கூறினார். சேர்ந்தாரைக் கொல்லி நெருப்பு ஆகலின், நெருப்பு வடி வினனாகிய இறைவன் என்றுமாம்; சேர்ந்தாரைக் கொல்வன நஞ்சும் சினமும் எனின் அவன் நீலகண்டனும், உருத்திரனும் ஆகலின் தகும். 15. மேருவைச் செண்டால் அடித்தது (மேருமலைக் குகையில் பெரும் பொருள் கிடந்தது. அதனை எடுப்பதற்காக உக்கிரபாண்டியன் சென்றான். இறைவன் கட்டளைப்படி மேருவைச் செண்டால் அறைந்து தகர்த்து வேண்டும் பொருள்களைக் கொண்டு வந்தான்.) நம்பன் மதுரேசன் நாடாளும் மன்னவனாற் செம்பொன்மக மேருவைச்செண் டாலடித்தான் அம்மானை; செம்பொன்மக மேருவைச்செண் டாலடித்தான் ஆமாகில் அம்புவியில் யாரார் அடிபடார் அம்மானை; அடிக்கு வருந்தினர்மேல் அன்பரெலாம் அம்மானை. (பொ - ரை) நம் இறைவனாம் சொக்கப்பெருமான் பாண்டி நாடாளும் வேந்தன் உக்கிரபாண்டியனைக் கொண்டு செம்பொன் மலையாகிய பெரியமேருவைச் செண்டு என்னும் கருவியால் அடித்தான் அம்மானை; மேருவைச் செண்டால் அடித்தானென்றால், அழகிய இந்த உலகில் எவரெவர் அடிபடாதிருந்தார் அம்மானை; சிறந்த அன்பரெலாம் அவன் அடிக்காக வருந்தினர் அல்லரோ அம்மானை. (வி - ரை) புவி - பூமி; மேல் அன்பர் - மேலான அடியார். அடிக்கு வருந்தினர் - அடிபட்டு வருந்தினர்; இறைவன் அடியை அடைவதற்காக அரும்பாடுபட்டு வருந்தினர். அடியார் அடிக்கு வருந்தினர் எனக்கண்டு நயமுணர்க. மேல் - மேன்மையான; மேனாளில்; உடல். அடிக்கு மேல் வருந்தினர் என மாற்றிக் கூட்டுக. 16. வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்தது (அரபத்தர் என்னும் முனிவர் கட்டளையை ஏற்றுக் கொண்டு மதுரைக்கு வந்த கண்ணுவர் முதலிய முனிவர்க்கு இறைவன் வேதப்பொருள் அருளியது.) நான்கா ரணப்பொருளாய் நற்றவர்முன் உற்றகுரு நான்கா ரணப்பொருளா நம்புசொக்கன் அம்மானை; நான்கா ரணப்பொருளா நம்புசொக்கன் ஆமாகில் தான்குருவாய்க் கக்குவதேன் சாரமெலாம் அம்மானை; சாரங்கக் கையனன்றோ தன்னாமம் அம்மானை. (பொ - ரை) நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை ஆராயும் நல்ல தவத்தோர் முன்வரும் குருவானவர், நான்கு வேதங்களின் உண்மைப்பொருள் இவனே என்று நம்பப் படுபவன் சொக்கனேயாம் அம்மானை; நான்கு வேதப்பொருளாக நம்பப்படுபவன் சொக்கனே ஆயினால் அவனே குருவாக வந்து வேதத்தின் சாரத்தையெல்லாம் கண்ணுவர் முதலிய முனிவர்க்கு மொழிந்தது ஏன் அம்மானை. அவன் பெயர் சாரங்கக் கையன் என்பதன்றோ அம்மானை. (வி - ரை) வேதப்பொருளாக இருக்கும் தானே வேதப் பொருள் உரைத்தது என்ன எனின், அவன் வேதத்தின் சாரத்தையும், அதன் அங்கத்தையும் (வேதம், வேதாங்கம்) கைக் கொண்டவன். ஆதலால், சாரங்கக்கையன்: சாரங்கம் கையன் - எனப் பிரித்துச், சாரங்கம் - மான்; கையன் - கையில் கொண்டவன் என்னும் பொருளும் காண்க. சாரம் கக்கு ஐயன் ஆதலால் கக்கினான் எனவும் கொள்க. கக்குதல் என்பது இலக்கணையாய்க் கூறுதலைக் குறித்தது. 17. மாணிக்கம் விற்றது (வீரபாண்டியன் மகனுக்கு முடிசெய்வதற்காக, இறைவன் மாணிக்க வணிகராக வந்து மாணிக்கம் விற்றது.) காணிக் கடவுள்சொக்கர் காவலன் காதலற்கா மாணிக்கம் விற்றார் மதுரையிலே அம்மானை; மாணிக்கம் விற்றார் மதுரையிலே ஆமாகில் பூணப் பணியுடையார் பொன்வில்லார் அம்மானை; பொன்னவையில் நட்டம் பொருந்தினரே அம்மானை. (பொ - ரை) மதுரையை உரிமையாகக் கொண்ட சொக்க நாதர் இறைவன் மகனுக்குத் திருமுடி செய்வதற்காக மதுரையிலே மாணிக்கம் விற்றார் அம்மானை; அவர் மதுரையிலே மாணிக்கம் விற்றார் என்றால் அணிதற்குப் பாம்பை உடைய அவர் பொன்மலையை வில்லாக உடையவர் அம்மானை; அவர் பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவர் அம்மானை. (வி - ரை) காணி - உரிமையாட்சி; பணி - பாம்பு, அணிகலம். பொன்வில்லார் - மேருமலையாகிய வில்லையுடையவர்; பொன்னை விற்கமாட்டார். பொன்னவை - பொற்சபை; பொன் மதிப்பீட்டாளர் குழு. நட்டம் - கூத்து; இழப்பு. பொன்வில்லார் என்றதற்கு, பொன்னவையில் நட்டம் பொருந்தியவர் ஆதலால் பொன்விற்றார் என்றார். (பொன் என்றது மணியை) 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது (மதுரையை அழிப்பதற்காக வருணன் கடலை ஏவினான். இறைவன், மேகங்களை ஏவி அதனைப் பருகி வற்றச் செய்தான்.) தொண்டர்சன னக்கடலைத் தூர்க்குமது ரேசரருள் கண்டறியா தேவுங் கடல்வருணன் அம்மானை; கண்டறியா தேவுங் கடல்வருணன் ஆமாகில் அண்டிவற்று மோமுகிலால் ஆர்கலியும் அம்மானை; ஆர்கலியு மாற்றுமுகி லன்றோசொக் கம்மானை. (பொ - ரை) அடியார்களின் பிறவிக்கடலை மூடும் சொக்கரின் அருட்பெருக்கைக் கண்டறியாமல் வருணன் கடலை மதுரை மேல் ஏவினான் அம்மானை; அறியாமல் கடலை மதுரைமேல் ஏவினான் எனின், மேகத்தால் நெருங்கப் பெற்றுக் கடலும் வற்றி விடுமோ அம்மானை; கடலையும் மாற்றவல்ல அருள்முகில் அல்லரோ சொக்கர் அம்மானை. (வி - ரை) சனனக்கடல் - பிறவிக்கடல்; பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவர். தூர்த்தல் - மேடாக்குதல்; வற்றச்செய்தல். அண்டி - நெருங்கி. ஆர்கலி - கடல். ஆர்கலியும் முகிலால் வற்றுமோ என இணைக்க. (சொக்கு) ஆர்கலியும் மாற்றும் முகில் -கடலையும் மாற்றக் கூடிய முகில். (ஏழுகடலை அழைத்த கதையை உணர்க.) ஆர்கலியும் மாற்றும் முகில் - எவர் வறுமையையும் நீக்கும் அருள் முகில். சொக்கு - சொக்கலிங்கம்; பொன்; சொக்கு; (பொன்) ஆர்கலியும் மாற்றும் என்னும் உலகியல் பொருளும் உணர்க. 19. நான்மாடக் கூடலானது (வருணன் ஏவலால் ஏழுமேகங்களும் மதுரையை அழிக்க வந்தன; இறைவன் தன் சடையில் இருந்த நான்கு மேகங்களையும் நான்கு மாடங்களாக அமைத்து மதுரையைக் காக்க ஏவினான். அதனால் மதுரை நான்மாடக் கூடலானது.) கான்மாலைச் சொக்கர்கொடுங் கார்விலக்கி ஊர்புரந்து நான்மாடக் கூடலென்று நாட்டினர்பேர் அம்மானை; நான்மாடக் கூடலென்று நாட்டினர்பேர் ஆமாகில்; வான்மாரி கண்டு மலைக்குமோ அம்மானை; மலைக்குமா ரிக்கு மயங்கியவர் அம்மானை. (பொ - ரை) மணம் பரவும் மாலையை அணிந்த சொக்கர் கொடுமையாகப் பொழியவந்த மேகத்தை விலக்கி மதுரையைக் காத்து அதனை நான்மாடக்கூடல் என்று பெயர் விளங்க நிலை நாட்டினர் அம்மானை; நான்மாடக் கூடலென்று பெயர் விளங்க நிலைநாட்டினர் என்றால், அவர் வான் பொழிந்த மழைகண்டு மலைப்படைந்தாரோ அம்மானை; அவர் மலைக் குமாரியாம் உமைக்கு மயங்கியவர் ஆதலால் மலையார் அம்மானை. (வி - ரை) கான்மாலை - மணம் நிரம்பிய மாலை; கார் - மேகம்; நாட்டினர்பேர் - பேர்நாட்டினர்; மலைக்குமோ - மலைப்பாரோ? மலைக் குமாரிக்கு - மலைக்கு மாரிக்கு - மலைமகளுக்கு, மயங்கியவர் - மையல் கொண்டு மணந்தவர். மலைக்குமாரியை மணந்தவர் ஆதலால் அவர் மலையார் ஆவர். அவர் வருணன் ஏவிய மழைத் தாக்குதலுக்கு மலையார் என நயம் காண்க. மலைக்கும் ஆரிக்கு மயங்கியவர்; ஆரி - பார்வதி, துர்க்கை; மலைக்கும் மாரிக்கும் மயங்கியவர் - தன்னோடு மோதுபோர், கூத்துப்போர் ஆகியவற்றில் ஈடுபட்ட மாரிக்கு (உமைக்கு) மயங்கியவர் என்றுமாம். கால் தூக்கியாடும் கூத்தால் இறைவியை வென்ற கதையையும், தடாதகை திக்கு வெற்றி கொண்டு வந்த கதையையும் கருதுக. 20. எல்லாம் வல்ல சித்தரானது (இறைவன் மதுரைத் திருநகரில் சித்தராக வந்து மலையை ஓடிவரச் செய்தும், முதியவனை இளைஞனாக்கியும், இரவைப் பகலாக்கியும் சித்து விளையாடியது.) திகைத்தவரைக் காக்கும் திருமதுரைச் சொக்கலிங்கர் சகத்திலெல்லாம் வல்லசித்தர் தாமானார் அம்மானை; சகத்திலெல்லாம் வல்லசித்தர் தாமானார் ஆமாகில் மகத்துவமோ கங்கையைவைத் தேசுமப்ப தம்மானை; வைப்பார் களிச்சுமைக்கும் வல்லவரென் றம்மானை. (பொ - ரை) திக்கற்றவரைக் காக்கும் அழகிய மதுரைச் சொக்கலிங்கர் உலகிலுள்ள சித்தர்களிலெல்லாம் வல்லமை வாய்ந்த சித்தரானார் அம்மானை; உலகிலுள்ள சித்தர்களி லெல்லாம் வலிய சித்தராக ஆயினார் என்றால், அவர் கங்கையைத் தம் திருமுடியில் வைத்துச் சுமப்பது பெருமையாமோ அம்மானை; கங்கையை மட்டுமோ, மகிழ்வுடன் உமையையும் வைத்துக் கொள்ளுதலில் வல்லவர் அம்மானை. (வி - ரை) திகைப்பு - திக்கற்றுப்போதல்; அஞ்சி நடுங்குதல்; சகம் - உலகம்; மகத்துவம் - பெருமை. கங்கையை வைத்தே சுமப்பது மகத்துவமோ என்றார்க்கு, உமைக்கும் களிச்சு வைப்பார் வல்லவர் என்றார் என்க. களிச்சு - களித்து, மகிழ்ந்து. வைப்பார் களிச் சுமைக்கும் வல்லவர் - அடியராகியவர் வைக்கும் மகிழ்ச்சியாகிய சுமையைச் சுமக்கவும் வல்லவர் என இறைவன் அருளியல் மாண்பை விளக்குவதுவும் கொள்க. மகத்துவம் - பெருமை; மக + அத்துவம் - பெருமைக்குரிய ஒன்றாம் தன்மை. இறைவன் இறைவியொடு கலந்து நின்று ஒன்றாம் தன்மை; அவன் கங்கையை அன்றி உமையம்மையையும், அடியார் திரளையும் இணைத்து ஏகனாகவும் அனேகனாகவும் நிற்கவல்ல சித்தனாகலான், அவன் சித்தனாக வந்ததிலே என்ன வியப்பு என்றார் என்க. 21. கல்லானைக்குக் கரும்பு அருத்தியது (இறைவன் சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தான். பாண்டியன் ஒரு கல்லானையைக் காட்டித் தன் கையில் இருந்த கரும்பைத் தின்னச் செய்யுமாறு வேண்டினான். அவ்வாறே கல்லானை, அக்கரும்பைத் தின்னுமாறு இறைவன் செய்வித்தான். கல்லாடர் சொல்லினிமை கண்ட சொக்கர் பாண்டியன்முன் கல்லானை தின்னக் கரும்புதந்தார் அம்மானை; கல்லானை தின்னக் கரும்புதந்தார் ஆமாகில் கல்லார்தோள் வேம்பன் கரும்பாமே அம்மானை; கரும்பொடுவேம் போர்வேளைக் காக்குமவர் அம்மானை. (பொ - ரை) கல்லாடர் அருளிய கல்லாட நூலின் சொல்லினிமை உணர்ந்த சொக்கர், பாண்டியன் முன்னே கல்லானை நடந்துவந்து அவன் கையில் இருந்த, கரும்பைத் தின்னுமாறு தந்தார் அம்மானை; கல்லானை தின்னுமாறு கரும்பு தந்தாராயினால், அது கல் போன்ற வலிய தோளை யுடைய பாண்டியன் கரும்பன்றோ அம்மானை; கரும்புடன் (கரும்பு வில்லுடன்) வெந்த மன்மதனைக் காப்பவராம் அவர் அம்மானை. (வி - ரை) கல்லாடர் நூறு பாடலும் கேட்டு நூறு முறை இறைவர் தலையசைத்தார் என்பது வரலாறாகலின், கல்லாடர் சொல்லினிமை கண்ட சொக்கர் என்றார். வேம்பன் - வேம்புமாலை யணிந்த பாண்டியன், இவன், அபிடேக பாண்டியன். கரும்பொடுவேம் - கரும்பு வில்லுடன் வேகும். போர்வேள் - காமப்போர் புரிதலில் வல்ல மன்மதன். அவனைக் காத்தது, அவன் நெற்றிக்கண் நெருப்பால் எரிய, அவன் மனைவி இரதி வேண்டுதற்கு இரங்கி அவளுக்கு அவன் உருவுடன் விளங்கச் செய்தது. வேம்பன் கரும்பு என்றதை மாற்றி, கரும்பொடு வேம்போர்வேள் எனச் சொல்லின்பம் படச் செய்தார். கரும்பு வேம்பு என்று அமைந்தது முரண்சுவை. 22. யானை எய்தது (சோழனால் அனுப்பப் பெற்று மதுரையையும் பாண்டியனையும் அழிக்க வந்த கொடிய யானையை, இறைவன் வேடன் உருக்கொண்டு நரசிங்கக்கணை ஏவி அழித்தது.) நின்றமது ரேசனுமை நேசன் பசுபாசன் அன்றமணர் விட்டவலி யானை யெய்தான் அம்மானை; அன்றமணர் விட்டவலி யானையெய் தான் ஆமாகில் என்றவற்கேன் தொண்டருக்கு ளேவெளிமை அம்மானை; ஏகவெளி யானின் றிருப்பதுமுண் டம்மானை. (பொ - ரை) நிலை பெற்ற மதுரைக்கு இறைவனும், உமையம்மைக்கு அன்பனும், உயிர்களுக்கு அருளாளனுமாகிய சொக்கநாதன், சோழன் விருப்பப்படி சமணர்களால் விடப்பெற்ற வலிய யானையை அம்பால் எய்தான் அம்மானை; சமணர் களால் விடப்பெற்ற வலிய யானையை அம்பால் எய்தானே ஆனால், அப்படிப்பட்ட வலியவனுக்குத் தொண்டருக்குள்ளே எளிமையாகும் தன்மை ஏன் அம்மானை; (அவன் எளியன் மட்டுமல்லன்;) ஏக வெளியாக நின்று இருக்கவும் செய்வான் அம்மானை,. (வி - ரை) நேசன் - அன்பன், பசு - உயிர்; பாசன் - பாசத்தையுடையவன்; அமணர் - சமணர்; வெளிமை - எளிமை; வெளியாக இருக்கும் தன்மை. ஏக வெளியா நின்று இருப்பது முண்டு என்றது ஏகாந்தன் என்பதை. தில்லையம்பலத்தில் வான் வெளியை இறைவன் இருப்பாகச் சுட்டுவது கருதத்தக்கது. சிதம்பர ரகசியம் என்பது இதனையே. ஏக எளியான் - ஏகுதற்கு எளியான்; ஏகவெளி யானவன். (வெட்ட வெளியானவன்) வெளியா - வெளியாக (தொகுத்தல்) ஏகவெளியான் ஆகிய அவன் உருவமாய் நிற்கும் கோலமும், இருக்கும் கோலமும் கொண்டது உண்டு என்னும் பொருளும் கொள்க. ஏக வெளியான் நின்று இருப்பதும் உண்டு என்று கூறினாராகலின். 23. விருத்த குமார பாலரானது (கௌரி என்னும் சைவ சமயச் செல்விக்காக இறைவன் முதியனாகவும், வாலிபனாகவும், குழந்தையாகவும் வந்து அவள் பத்திப் பெருமையை வெளிப்படுத்தியது.) ஏர்மதுரை யார்விருத்தர் இன்குமரர் பாலரெனப் பேர்கவுரி கண்டுநின்ற பேரொளியார் அம்மானை; பேர்கவுரி கண்டுநின்ற பேரொளியார் ஆமாகில் ஓர்விதியேன் காணான் ஒளியார் அம்மானை; ஒளியாரைக் காணாத தோர்விதியே அம்மானை. (பொ - ரை) அழகிய மதுரைச் சொக்கர் முதியர், இனிய குமரர், பாலர் எனப் பேர்பெற்ற கவுரி என்பாள் கண்டு நின்ற பேரொளி வடிவினர் அம்மானை; கவுரி கண்டு நின்ற பேரொளி வடிவினர் ஆயினால், அவ்வொளி வடிவினரை ஒப்பற்ற நான்முகன் காணாதது ஏன் அம்மானை; ஒளி வடிவினராம் இறைவனைக் காணாததும் ஓர் விதியினாலே அம்மானை. (வி - ரை) ஏர் - அழகு; விருத்தர், குமரர், பாலராகிய இறைவர் இறுதியில் ஒளி வடிவினராய்க் கௌரிக்குக் காட்சி வழங்கினாராகலின் பேரொளியார் என்றார். அவளுக்குக் காட்சி வழங்கியவர் விதிக்கு (நான்முகனுக்கு)க் காண முடியாமல் ஏன் ஒளிந்து கொள்ளார் என்பதுமாம். ஒளியாரைக் காணாததும் (ஒளியாத வரை - நேரில் நிற்பவரை)க் காணமுடியாமல் போனதும், ஒளி வடிவினரைக் காணமுடியாமல் போனதும். ஓர் விதியே - நான்முகன் பெற்ற ஒரு விதியேயாம். ஒரு படைப்புக் கடவுள் ஆவனோ. என்னும் எள்ளலுமாம். விதியே என்பதிலுள்ள ஏகாரத்தை ஓகாரப் பொருளாக்கிக் கொள்க. 24. மாறியாடினது (கூத்தில் வல்ல பாண்டியன் இராசசேகரன், தனக்குக் கால் வலி காண்பது போல, இறைவனுக்கும் கால் வலி காணுமே என வருந்தி ஊன்றிய திருவடியைத் தூக்கியாடுமாறும், தூக்கிய திருவடிவை ஊன்றி நிற்குமாறும் வேண்டியதற்கு ஏற்ப இறைவன் கால் மாறியாடினது.) பாடுபெறு மூன்று பதந்தூக்கி மேற்றூக்கி ஆடுபத மூன்றுவெள்ளி அம்பலவன் அம்மானை; ஆபேத மூன்றுவெள்ளி அம்பலவன் ஆமாகில் காடாங் கடம்புடையான் காலாறோ அம்மானை; காலாறென் றேவழுதி கண்டனன் முன் அம்மானை. (பொ - ரை) அலுத்துப் போக ஊன்றிய திருவடியைத் தூக்கி, அதனை மேலெடுப்பாக வீசி, ஆடிநிற்கும் திருவடியைப் பாண்டியனுக்காக ஊன்றி நிற்பான் வெள்ளியம்பலத் தாடும் இறைவன் அம்மானை; மேலே எடுத்தாடும் திருவடியை ஊன்றுவான் வெள்ளியம்பலவன் என்றால், கடம்பவனமுடைய அவன் கால்கள் (பதமூன்று, பதமூன்று என இருமுறை வருதலால்) ஆறோ அம்மானை; இறைவ நீ காலாறு என்று பாண்டியன் வேண்டிக்கொண்டு, அவ்வாறே நேரில் கண்டு களித்தான் அம்மானை. (வி - ரை) பாடு - அல்லல், சுமை. பாடுபெறு மூன்றுபதம் - பாடுபெறும் ஊன்று பதம் ஆடுபத மூன்று ஆடு பதம் ஊன்று. ஊன்று என்பது புணர்ச்சியால் மூன்று என இருமுறை வந்ததை எண்ணிக் காலாறு என்றார். பாண்டியன் காலாறு என்றது காலின் களைப்பை ஆற்றிக் கொள்க என்பதாம். ஆடு பதம் ஊன்றும் என்பதற்கு நயம் தோன்றக் காடாம் கடம்பு என்றார். ஆடு பதம் ஊன்றி மரக்குழை தின்னுதல் உலக வழக்கு. காலுக்கும் ஆறுக்கும் உள்ள தொடர்பும் நினைக. 25. பழியஞ்சியது (பழநாளில் செருகிக் கிடந்த அம்பு தைக்க ஒரு பார்ப்பனி இறந்தாள். ஆனால் அருகில் நின்ற வேடனே கொன்றான் எனப் பார்ப்பனன் பாண்டியனிடம் முறையிட்டான்; வேடன் உண்மையை உரைத்துத் தான் குற்றமற்றவனெனச் சாதித்தான். இறைவன் ஆணையால் ஒரு திருமண வீட்டுக்குச் சென்று எமதூதர் பேசும் உரைகேட்டு உண்மையுணர்ந்தனர். பாண்டியன் மகிழ்ந்து பழியஞ்சிச் சொக்கரை வாழ்த்தினான்.) வழிக்கொண்ட வேதனில்லாள் மாண்டவகை பாண்டியற்குப் பழிக்கஞ்சிச் சொக்கருண்மை பண்டுரைத்தார் அம்மானை; பழிக்கஞ்சிச் சொக்கருண்மை பண்டுரைத்தார் ஆமாகில் அழிக்குந் தொழிலவர்க்கே தச்சமையம் அம்மானை; அச்சமைய மன்றி அழித்தறியார் அம்மானை. (பொ - ரை) வழி நடந்த பார்ப்பனன் மனையாள் இறந்த வகையைப் பாண்டியனுக்குச் சொக்கர் பழிக்கு அஞ்சியவராய் முன்னாளில் அறிவித்தார் அம்மானை; பழிக்கு அஞ்சிச் சொக்கர் உண்மையை முன்னாளில் உரைத்தாராயினால், அழிக்கும் தொழிலினராகிய அச்சொக்கர்க்கு ஏது அக்கொள்கை அம்மானை; அழிக்கும் பொழுதேயன்றி மற்றைப்பொழுதில் அழித்தறியார் அம்மானை. (வி - ரை) பழிக்கஞ்சிச் சொக்கர் - பெயர். அழிக்குந் தொழிலவர்க்கு ஏது அச்சமையம் - அச்சமையம் - அக்கொள் கை, அந்தப் பொழுது. அச்சம் ஐயம் - அச்சமும் ஐயப்பாடும். அச்சமையம் அன்றி அழித்து அறியார் - அச்சு (உடல்) அமையம் அன்றி அழித்து அறியார். அமையம் - சமையம். அழிப்புக் கடவுள் அவரே எனினும் காலமன்றி அழியார் என்றார். 26. மாபாதகம் தீர்த்தது (தாய்க்குப் பழியுண்டாக்கித் தந்தையைக் கொன்று கொடுமைக்கோர் உருவமாக வந்த பார்ப்பனன் ஒருவனை இறைவன் வேடர் உருக்கொண்டு வந்து அவன் பாவத்தைப் போக்கியது.) ஆபாவி அன்னையைத்தோய்ந் தப்பனைக்கொன் றோன்கொடிய மாபா தகந்தீர்த்த வள்ளல்சொக்கர் அம்மானை; மாபா தகந்தீர்த்த வள்ளல்சொக்கர் ஆமாகில் சாபமலை யாயவர்பாற் சார்ந்ததே அம்மானை; சாராதோ சத்தியந்தப் பாகநின்றால் அம்மானை. (பொ - ரை) மிகக் கொடிய பாவியாகிய அவன் தன் தாயைக்கூடி, அப்பனையும் கொன்றான்; அவனது கொடும் பாவத்தையும் தீர்த்த வள்ளல் பெருமான் சொக்கர் அம்மானை; கொடும்பாவத்தைத் தீர்த்த வள்ளல் சொக்கரே ஆயினால் அவரிடம் சாபம் மலைபோல் சார்ந்து விட்டதே அம்மானை; சத்தியம் தப்பாக நடந்து கொண்டால் சாபம் சார்ந்து விடாதோ அம்மானை. (வி - ரை) ஆ - இரக்கக் குறிப்பு. வள்ளல் - கூறவொண்ணாக் கொடுமை செய்த கயவனுக்கும் அருளிய பேரருள் பெருக் குணர்ந்து வள்ளல் என்றார். சாபமலையாயவர் பால்: சாபம் மலையாய் அவர்பால்; சாபம் - பழி; மலையாய் - மலைபோல். அடியார் பாவங்களை யெல்லாம் தாம் தாங்குதலால் சாப மலையாயவர்; சாபம் (வில்) மலையாயவர் - மேருமலையை வில்லாக உடையவர். சத்தியந்தப்பாக நின்றால் - சத்தியம் தப்பாக நின்றால்; சத்தி அந்தப் பாகம் நின்றால். திருவருட்சத்தியை உடனாகக் கொண்டவராகலின் அப்பாவம் சாராதோ என்றார். சத்தியுடனாகி நிற்றலால் இரக்கமிக்கவராய் அருள்புரிந்தார் என்க. 27. அங்கம் வெட்டியது (வாளாசிரியன் ஒருவனிடம் சித்தன் என்பான் பயின்றான். அவன், ஆசிரியன் மனையாள்மேல் ஆசைகொண்டான். இறைவன் அவ்வாசிரியன் உருவில்வந்து சித்தன் கண், மார்பு, நா ஆகிய வற்றை வெட்டிப் பிளந்தான்.) கொத்தலங்கற் சொக்கர் குருமனைவிக் காசைவைத்த சித்தனங்கம் வெட்டிச் செயித்தனர்காண் அம்மானை; சித்தனங்கம் வெட்டிச் செயித்தனரே ஆமாகில் உத்தமமா னார்கைக் குயர்வாளே தம்மானை; உயர்வாள் ஒருபாகம் உண்டழகா அம்மானை. (பொ - ரை) பூங்கொத்தாலாகிய மாலையை அணிந்த சொக்கர், வாளாசிரியன் மனைவிமேல் ஆசைவைத்த சித்தன் என்பானின் உடலை வெட்டி வெற்றி கொண்டனர்காண் அம்மானை; சித்தன் உடலை வெட்டி வெற்றி கொண்டாரே ஆனால், உயர்ந்த மானைக் கையில் தரித்த அவர்க்கு உயர்வாள் ஏது அம்மானை; உயிர்வாளாகிய உமை, ஒரு பாகத்தில் அவருக்கு அழகாக உண்டு அம்மானை. (வி - ரை) அலங்கல் - மாலை; உத்தமமானார் கைக்கு - உயர்ந்தவர் கைக்கு, உத்தம மான் ஆர் கைக்கு - உயர்ந்த மான் இருக்கும் கைக்கு. உயர்வாள் - உயர்ந்தவாள்; உயர்ந்தவளாம் உமையம்மை. - ஒரு பாகம் - ஒரு பக்கம்; ஒரு பாக நீளம். அழகா - அழகாக. 28. நாகம் எய்தது (கொடிய அரக்கன் ஒருவன் பாம்பின் வடிவம் கொண்டு மதுரை நோக்கி வந்தான். இறைவன் அருளால் அனந்த குணபாண்டியன் அப்பாம்பை அம்பால் அடித்துக் கொன்றான். அப்பாம்பின் நஞ்சு கொடுமையாய்ப் பரவ இறைவன், அமுத கதிர் பொழிந்து நஞ்சைக் கெடுத்தான்.) வென்றிமரு வாரசனி வெள்ளிமன்று ளானமணர் பொன்றவிடும் பாம்பு தனையெய்தான் அம்மானை; பொன்றலிடும் பாம்பு தனையெய்தான் ஆமாகில் சென்றுசெவ்வாய் எய்தவன்கண் டிங்களோ அம்மானை; திங்களுமெய் தான்கனலுஞ் செங்கதிரோ டம்மானை. (பொ - ரை) வெற்றியாளனும் பகைவர்க்கு இடி போன்றவனும் வெள்ளியம்பலத்து ஆடுபவனும் ஆகிய இறைவன் பாண்டியனை ஏவி மதுரையார்அழிந்து படுமாறு சமணர் விடுத்த பாம்பை அம்பால் எய்து அழித்தான் அம்மானை; அழிக்கவிடப்பெற்ற பாம்பை எய்து அழித்தான் என்றால், செவ்வையாய்ச் சென்று படுமாறு எய்தவன் ஏவிய கணை திங்களோ அம்மானை; திங்கள் கண்ணாதல் மெய்தான்; அதனுடன் தீயும் செங்கதிரும் கண்களாம் அம்மானை. (வி - ரை) மருவார் - பகைவர்; அசனி - இடி; அமணர் - சமணர்; செவ்வாய் - செவ்வையாய்; திங்கள் என்றதற்கு ஏற்பக் கிழமைப் பெயர் நயம் பொருந்தச் செவ்வாய் என்றார். திங்களின் அமுதைப் பொழிந்து நஞ்சை அழித்தமையால் திங்களைக் கணை என்றார். கண் என்பது கணைக்கு உவமையாகு பெயர். பாம்புப் பகை திங்கள் என்பது வழக்கு. இறைவன் முக்கண்ணன் ஆதலின் அக்கண்கள் திங்கள், ஞாயிறு, தீ என மூன்றையும் கூறினார். திங்களுமெய்தான்: திங்களும் எய்தான் - திங்கள் பிறைபோன்ற கணையால் எய்தான் திங்களும் மெய்தான் - திங்கள் என்பதும் மெய்தான் பிறைமுகக் கணையை ஏவிப் பாண்டியன் கொன்றமையால் இவ்வாறு கூறினார். 29. மாயப் பசுவை வதைத்தது (சமணர்கள் ஏவிய மாயப்பசுவை, இறைவன் நந்தி தேவனை அனுப்பி அழித்தது. அப்பசு மாய்ந்து மலையாயதே பசுமலை என்பது கதை) தாயைப்போல் வான்மதுரை தன்னை அழிக்கவந்த மாயப் பசுவை வதைசெய்தான் அம்மானை; மாயப் பசுவை வதைசெய்தான் ஆமாகில் வேயொப்பார் தோளிபங்கன் மெய்க்கோவே அம்மானை; மெய்க்கோவும் பொய்க்கோவை வெல்லாதோ அம்மானை. (பொ - ரை) தாயைப் போன்றவனாகிய இறைவன் மதுரையை அழிக்கவந்த பொய்ப்பசுவைக் கொன்றான் அம்மானை; பொய்ப்பசுவைக் கொன்றானே ஆயினால், மூங்கிலுக்கு ஒப்பாக அமைந்த தோளையுடைய உமையொரு பாகன் மெய்யான பசுவேயாம் அம்மானை; மெய்யாய பசுவாகியது, பொய்யாப் பசுவாகியதை வெற்றிகொள்ளாதோ அம்மானை. (வி - ரை) வேய் ஒப்பு ஆர் - மூங்கிலுக்கு ஒப்பாக அமைந்த; தோளி - தோளையுடையவள்; பங்கன் - கணவன். மெய்க்கோ - மெய்யான பசு; மெய்யான தலைவன்; பொய்க்கோ - பொய்யான பசு; பொய்த் தலைவன். கோ இறைவனுக்கும் பசுவுக்கும் இரட்டுறல். rk© rka¤jh® Vtiy bt‰¿ bfh©l åW neh¡» ‘bkŒ¡nfhî« bghŒ¡nfhit btšyhnjh? என்றார். 30. மெய்க்காட்டிட்டது (குலபூடண பாண்டியன் தளபதி சவுந்தர சாமந்தன். அவன் படையைப் பெருக்கத் தந்த பணத்தைத் திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டான். பின்னர் படைகள் எங்கே என்று நெருக்க இறைவன் படைகளைத் திரட்டி வந்து மெய்ப்பித்தது.) வாழுமது ரேசரன்பு மந்திரிக்கா மன்னவன்முன் ஏழுலகோர் போற்றமெய்க்காட் டிட்டனர்காண் அம்மானை; ஏழுலகோர் போற்றமெய்க்காட் டிட்டனரே யாமாகில் சூழ்பகையாய் அன்றுவந்தான் தோற்றானோ அம்மானை; தோற்றானை விட்டாரோ சுற்றினார் அம்மானை. (பொ - ரை) நிலைபெற்ற வாழ்வினராகிய சொக்கர் தம் அடியராகிய மந்திரத் தலைவனுக்காகப் பாண்டிய வேந்தனின் முன் ஏழுலகினரும் போற்றுமாறு படையுடன் வந்து மெய்ச் சான்று காட்டினார் அம்மானை; ஏழுலகோரும் போற்றுமாறு மெய்ச்சான்று காட்டினாராயினால், சூழ்ச்சிமிக்க பகைவனாக அன்று வந்தவன் தோற்றுப் போனானோ அம்மானை; ஆம் தோற்றுப் போனவனையும் விட்டாரோ? அவனைச் சுழற்றி யறைந்து கொல்வித்தார் அம்மானை. (வி - ரை) மெய்க்காட்டு - மெய்ச்சான்று. தோற்றானே- தோல்வி கண்டானோ, தோன்றமாட்டானோ. பகையாய் வந்தவன் - சேதிராயன் என்னும் வேடர் தலைவன், பகைவனாகப் பாண்டியன்மேல் படைகொண்டு வந்தான். அவன் இறைவன் ஏவலால் புலியால் தாக்கப்பட்டு இறக்கப், படை ஓடிப்போயது. தோற்றானை விட்டு - போரில் தோன்றாத அவனை விட்டு; ஆரோ சுற்றினார் - எவரோ அழித்தார்? அவன் வினையே அவனைக் கொன்ற தென்க. 31. உலவாக்கிழி அருளியது (வேதம் வேள்வி முதலியவற்றை நிறைவேற்றுதற்காக இறைவன் குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொன்முடிப்பு அளித்தது.) அலரா யிரந்தார் அணிமதுரைச் சொக்கர்தென்னற் குலவாக் கிழிப்பொன் உதவினார் அம்மானை; உலவாக் கிழிப்பொன் உதவினரே யாமாகில் தலையால்இரந் தார்க்குத் தனமேதோ அம்மானை; தனமொருபக் கத்துவந்து சார்ந்தமுதல் அம்மானை. (பொ - ரை) மலர்மிக்க மாலையணிந்த மதுரைச் சொக்கநாதர், பாண்டியனுக்கு என்றும் எடுக்கக் குறையாத பொன் முடிப்பு உதவினார் அம்மானை; குறையாப் பொன் முடிப்பு உதவினாரேயானால், தலையோட்டால் இரந்துண்ணும் அவர்க்குச் செல்வம் எதுவோ அம்மானை; அவர்க்குச் செல்வம் அவர்க்கு ஒரு பாகமாக வந்தமர்ந்த முதல்வியே அம்மானை. (வி - ரை) அலர் - மலர்; தார் - மாலை; உலவா - குறையாத; கிழி - முடிப்பு; தலையால் இரந்தார் என்றது, நான்முகன் தலையோட்டால் இரந்தது. இரக்கும் வறியவர்க்குக் குறையாப் பொன் ஏது என்றார். தனம் - செல்வம், மார்பு. உமையொரு பாகனாம் நிலையில் இறைவியின் பகுதியில் ஒருதனம் இருத்தலால் தனம் ஒருபக்கத்து என்றார். முதல் - போடுமுதல், முதல்வி. ஒரு பக்கத்து வந்து சார்ந்த முதல்; ஒரு பக்கத்து உவந்து சார்ந்த முதல். 32. வளையல் விற்றது (முனிவர் எழுவர் மனைவியரும் பெற்ற சாபத்தை நீக்கு வதற்காக, இறைவர் வளையல் வணிகராக வந்து வளைபோடு முகத்தால் தொட அவர்கள் சாபம் நீங்கியது) நீடுகயற் கண்ணியங்கி நின்றசொக்க ரன்புவைத்துத் தேடு மவரவர்தம் சிந்தையுற்றார் அம்மானை; தேடு மவரவர்தம் சிந்தையுற்றார் ஆமாகில் கூடுவிட்டுக் கூடுசென்று கொள்வாரோ அம்மானை; கொள்ளவளை விற்றுமறு கூடுசென்றார் அம்மானை. (பொ - ரை) நெடிய கயற்கண்ணியுடன் அங்கிமுன் நின்று மணங்கொண்ட சொக்கர் தம்மேல் அன்புகொண்டு தேடுபவர் உள்ளங்களிலெல்லாம் புகுந்தார் அம்மானை; தேடுபவர் உள்ளங்களிலெல்லாம் புகுந்தாராயினால், அவர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கொள்ள வல்லவரோ அம்மானை; அவர் அவ்வாறு கொள்ள வளையல் வணிகராகி மறுகூடுசென்று (தெருவூடு சென்று) விற்றார் அம்மானை. (வி - ரை) அங்கிநின்ற - நெருப்பின்முன் நின்ற; திருமணக் கோலத்தில் நின்ற. அங்கயற்கண்ணியை மணந்தவர் அன்பர் கூட்டுள் புகுந்தார் எனப் பழிப்பதுபோல் புகழ்ந்தார். உடல், கூடு ஆகலின் பிறருள்ளத்துப் புகுதலைக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்றார். அச்சொல் நயம் விளங்க மறுகூடு (தெருவூடு) சென்றார் என்றார். மறுகூடு - மற்றவர் கூடு, தெருவூடு, (மறுகு + ஊடு). கொள்ளவளை - கொள்ளுமாறு வளையல்; நிரம்ப வளையல். 33. அட்டமாசித்தி உபதேசித்தது (அட்டமாசித்தியின் பொருளாவார் உமையம்மை என்பதை மறந்த கார்த்திகை மகளிர் அறுவரும் சாபம் பெற்றுப் பாறையாகிப் பட்டமங்கலம் என்னும் ஊரில் கிடந்தனர். அவர்க்கு இறைவர் சாபம் கெடுத்து அட்டமாசித்தி அருளியது) திருத்துமது ரைக்கடவுள் செவ்வேட்கு மென்முலைப்பால் அருத்துமட வார்க்களித்தார் அட்டசித்தி அம்மானை; அருத்துமட வார்க்களித்தார் அட்டசித்தி ஆமாகில் கருத்திலரென் றேன்செய்தார் கற்சாபம் அம்மானை; கற்சாபங் கைமேலாம் கர்த்தர்காண் அம்மானை. (பொ - ரை) அடியார் குறையைக் களையும் மதுரைச் சொக்கர் திருமுருகனுக்குப் பாலூட்டிய கார்த்திகைப் பெண் களுக்கு அட்டமாசித்தி அருளினார் அம்மானை; பாலூட்டிய அவர்களுக்கு அட்டமாசித்தி அருளினாரென்றால், அவர்கள் உமையம்மையே அட்டமாசித்தியின் பொருள் என்பதைக் கருதினாரல்லர் என்று ஏன் அவர்களைக் கல்லாகச் சாபமிட்டார் அம்மானை; அவர் கற்சாபமாம் மலைவில்லைக் கையில் கொண்ட தலைவர் என்பதை அறிக அம்மானை. (வி - ரை) செவ்வேள் - முருகன்; அட்டமாசித்தி - அட்டசித்தி; அவை, அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. கருத்திலர் - மெய்ப்பொருள், அறிகிலர்; கற்சாபம் - கல்லாகப் போகும் சாபம்; கல்லாகிய (மலையாகிய) சாபம் (வில்) மேருமலையாகிய வில். கர்த்தர் - தலைவர். கற்சாபம் உடையவர் ஆதலின் உடையதை வழங்குதல் இயல்பாகலின் கற்சாபம் வழங்கினார் என்றார். 34. விடையிலச்சினை யிட்டது (காஞ்சியை ஆட்சி புரிந்த காடு வெட்டிய சோழன் மதுரைக் கோயிலில் வழிபட விரும்பினான். இரவில் வடக்கு வாயிலைத் திறக்கச் செய்து அதன் வழியே அழைத்து வந்து வழிபடச் செய்தான் இறைவன். பின், அவ்வடக்கு வாயிலில் இருந்த மீன் முத்திரைக்குப் பதிலாக இடபமுத்திரை பொறித்தான். இஃதிறைவன் செயலென அறிந்த பாண்டியன் வியந்தான்.) புவிபுகழ்ச்சொக் கேசரெதிர் போயழைத்துச் செம்பியனை நவமதிலுள் ஆக்கியருள் நல்கிவிட்டார் அம்மானை; நவமதிலுள் ஆக்கியருள் நல்கிவிட்டார் ஆமாகில் கவினிடப முத்திரையேன் காப்பினிட்டார் அம்மானை; காப்பவரு மீனமுறக் காண்பரோ அம்மானை. (பொ - ரை) உலகு புகழும் சொக்கர் சோழனை எதிர் கொண்டு வரவேற்றுப் புதுமையான கோயில் மதிலுள் சேர்த்துத் திருவருள் நல்கினார் அம்மானை; மதிலுள் சேர்த்துத் திருவருள் நல்கினார் எனின், அவர் மதிற்கதவில் வைக்கப் பட்டிருந்த மீன் முத்திரையை நீக்கி அழகிய இடப முத்திரையைக் காவலாக இட்டது ஏன் அம்மானை; காவலாளர்கள் இழிவேதும் படுதலைக் காண விரும்புவரோ இறைவர் அம்மானை. (வி - ரை) புவி - உலகம்; செம்பியன் - சோழன்; கவின் - அழகு; இடபம் - காளை. காப்பவரு மீனமுற - காப்பவரும் ஈனம் உற - முத்திரை வைக்காவிடின் காப்பவருக்குத் தண்டனை வருமன்றோ; அதனால், அவ்விழிவு வாராதிருக்க; காப்பவரும் மீனம் உற - காப்பவராகிய இறைவரும் தம் இடபக்குறி இருக்க மீனக்குறியிட; காண்பரோ - காணார். முத்திரை அழிபாடுறின் காவலர்க்குத் தண்டனை வரும்; மீனக் குறியே இடுவிப்பின் தம் திருவிளையாடலை வேந்தன் அறிய வாய்ப்பு இல்லை; ஆகலின் இடபக் குறியிட்டு வினையால் வினையாக்கிக் கொண்டார் இறைவர் என்க. 35. தண்ணீர்ப் பந்தல் வைத்தது (காடு வெட்டிய சோழன் பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். இறைவன் அருளியபடி இராசேந்திர பாண்டியன் சோழனை எதிர்த்துப் போரிடப் போனான்; இறைவன் தண்ணீர்ப்பந்தல் வைத்துப் பாண்டியப் படைக்கு நீர் வழங்கினான். அந்நீரைப் பருகிய வீரர் ஊக்கமிக்கவராகப் போரிட்டுத் தம் வேந்தனுக்கு வெற்றி தந்தனர்; சோழனுக்கு மன்னிப்புத் தந்து விடுத்தான் பாண்டியன்.) சொன்னமதில் சூழ்மதுரைச் சொக்கர்தண்ணீர்ப் பந்தர்வைத்துத் தென்னவன்சே னைத்தாகந் தீர்த்தனர்காண் அம்மானை; தென்னவன்சே னைத்தாகந் தீர்த்தனரே ஆமாகில் பொன்னருளேன் செய்யார் புலிக்கொடியாற் கம்மானை; புலியாங் கொடியவனைப் போற்றுவார் அம்மானை. (பொ - ரை) பொன்மதில் சூழ்ந்த மதுரைச் சொக்கர் தண்ணீர்ப்பந்தல் வைத்துப் பாண்டியன் படைஞரின் நீர் வேட்கையைத் தவிர்த்தார் அம்மானை; பாண்டியன் படைஞர் நீர்வேட்கையைத் தவிர்த்தாரே ஆயினால் புலிக் கொடியினனான சோழனுக்குச் சிறந்த அருளை ஏன் செய்திலர் அம்மானை; (அவனையும் அழித்தார் அல்லர்) அவனை மன்னித்துப் போகவிட்டுக் காத்தார் அம்மானை. (வி - ரை) சொன்னம் - சொர்ணம் (பொன்); தென்னவன் - பாண்டியன்; பொன் - அழகு, சிறப்பு; புலிக்கொடியான் - சோழன். புலிக்கொடியான் - புலியைக் கொடியில் கொண்டவன்; புலிபோன்ற கொடியவன். பாண்டியனுக்கு உதவியாக நின்றாலும் சோழனையும் இறைவர் அழித்திலர் என்பாராய்ப் போற்றுவார் என்றார். கொடி - ஒழுங்கு; புலியாம் கொடியவன் - புலிப் பெயரமைந்த தவவொழுக்கமுடைய முனிவன். புலிக்கால் முனிவன்; புலிக்கால் முனிவன் போற்றும் இறைவர் ஆகலின், புலியாங் கொடிய வனைப் போற்றுதல் இயல்பு என்றார் என்றும் கொள்க. 36. இரசவாதம் செய்தது (திருப்பூவணத்தைச் சார்ந்த பொன்னனையாள் சிவபெருமான் உருவைப் பொன்னால் செய்விக்க விரும்பினாள். அதற்காக அவள் வீட்டில் இருந்த வெண்கலம் பித்தளைப் பாத்திரங்களைப் பொன்னாக்கி அருள் செய்தார் இறைவர்.) ஈசர்சொக்கர் பூவணத்தி லேயிருந்த பொன்னனையார் மாசிலர்க்கன் போடுங்காண் வாதத்தார் அம்மானை; மாசிலர்க்கன் போடுங்காண் வாதத்தார் ஆமாகில் பேசுவதென் ஐயமறப் பித்தரென்றே அம்மானை; பித்தரென்பா ரையரென்றும் பேசுவார் அம்மானை. (பொ - ரை) சொக்கநாதர் திருப்பூவணத்தில் இருந்த பொன்னனையார் என்னும் குற்றமற்றவர்க்கு அன்போடு இரசவாதம் செய்தார் அம்மானை; குற்றமற்ற பொன்னனை யார்க்கு அன்போடு இரசவாதம் செய்தாரானால், அவரை ஐயமின்றிப் பித்தர் என்று உலகோர் கூறுவதென்ன அம்மானை; அவரைப் பித்தர் என்று சொல்வாரும் சொல்ல, ஐயர் என்று சொல்வாரும் சொல்வர் அம்மானை. (வி - ரை) பொன்னனையார் - பெயர். (மாசிலர்) - மாசு + இலர். குற்றம் இல்லாதவர்; பொன் இல்லாதவர் (மாசு - பொன்) குற்றம் என்னும் பொருள்தரும் காசு என்பதும் பொன் என்னும் பொருள் தரும். மாசு என்பதும் மாசை, மாடை எனப் பொன் பொருள் தரும் சொற்களாயின. வாதத்தார் - இரசவாதத்தார்; வாதக்காலாம் தமக்கு என்பராகலின் தூக்கிய காலுடையவர் என்பதுமாம். ஐயமற - ஐயமின்றி. ஐயர் - தலைவர், பெரியவர். பித்தர் எவ்வாறு இரசவாதம் செய்யவல்லார் என்றார்க்கு, ஐயரென்றும் பேசுவர் என்றார். ஐயமறப் பித்தர் - ஐயம் அறபித்தர் (என்பார்). ஐயமறப் பித்தர் என்பார் மறம் - பாவம்; பித்தரென்பாரையர் - பித்தர் என்பார் ஐயர். பித்தர் என்பு ஆர் ஐயர் - பித்தராகிய அவர் எலும்பு மாலையணிந்த தலைவர். 37. சோழனைமடுவில் வீட்டியது (சுந்தரேச பாதசேகர பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நிகழ்ந்தது. சோழன் படைக்கு ஆற்றாமல் பாண்டியன் அஞ்சி ஓடினான். சோழனும் ஓடித் தாக்கினான்; இறைவன் அருளால் ஊடே ஒரு மடு உண்டாகியது; சோழன் அதில் வீழ்ந்து இறந்தான்.) ஊழ்வினைதீர்த் தன்பர் உயிர்க்குயிராய் நின்றோங்கி வாழ்கடவு ளார்தென் மதுரேசர் அம்மானை; வாழ்கடவு ளார்தென் மதுரேசர் ஆமாகில் கீழ்மடுவில் கூழ்த்ததென்ன கிள்ளிதனை அம்மானை கிள்ளிவலி கண்டுபொறுக் கின்றதரி தம்மானை. (பொ - ரை) அழகிய மதுரைச் சொக்கர், அடியார் வினைகளைத் தீர்த்து அவர் உயிருக்கு உயிராக நின்று உயர்ந்து வாழும் கடவுளாவர் அம்மானை; உயர்ந்து வாழும் கடவுளார் அவரானால், சோழனை ஆழ்ந்த மடுவில் (பள்ளத்தில்) வீழ்த்தி அழித்ததென்ன அம்மானை; அச்சோழனின் வலிமை கண்டு பாண்டியன் அழிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமையால் அம்மானை. (வி - ரை) உயிர்க்குயிராய் வாழ்பவர் கிள்ளியை அழிக் கலாமோ என்றார்க்குக் கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது எனக் காரணம் காட்டினார். அவன் வலிமை பாண்டியனை அழிப்பதற்குத் துணையானதால் அன்பர் உயிர்க்குயிராக நிற்கும் இறைவன் கிள்ளியை அழித்தான் என்க. மடு - சேறும் நீரும் நிரம்பிய பள்ளம்; கிள்ளி - சோழன். கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது என்பதற்குக் கிள்ளியதால் உண்டாகும் வலியை நேரில் அறிந்தும் அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் அருளாளர்க்கு அரிது; ஆதலால் இறைவன் கிள்ளியை (கிள்ளியவனை) மடுவில் வீழ்த்தினார் என உலகியற் பொருளும் காண்க. ஓங்கி வாழ்வார் கீழ் வீழ்த்தது என்பதில் முரண்சுவை யறிக. 38. உலவாக்கோட்டை அருளியது (அடியார்க்கு நல்லான் என்பான் சிவனடியார்க்குக் குறைவின்றி உணவளிப்பதற்காக இறைவன் அள்ள அள்ளக் குறையாத நெற்கோட்டை வழங்கியது.) அன்னமளி யென்றுநல்லார்க் கன்றுலவாக் கோட்டைநெல்லைத் துன்னுபயி ரிட்டார்போற் சொக்கர்தந்தார் அம்மானை; துன்னுபயி ரிட்டார்போற் சொக்கர்தந்தார் ஆமாகில் செந்நெலிட்டால் வேண்டாமோ செய்யாளும் அம்மானை; செய்யாளே வல்லவர்தாம் தேடவல்லார் அம்மானை. (பொ - ரை) நிரம்பப் பயிரிட்டவர் போலச் சொக்கநாதர் அடியார்க்கு நல்லான் என்பானுக்கு, அடியார்க்கும் வேண்டும் உணவு அளிக்க என்று உலவாக்கோட்டை நெல்லை உதவினார் அம்மானை; பயிரிட்டார் போல் சொக்கர் உதவினாரானால், செந்நெல் பயிரிட அவருக்கு வயல்வேலை செய்வதற்கு ஆள் வேண்டாமோ அம்மானை; செய்யில் வேலை செய்யும் ஆள் என்ன, செய்யாளாம் திருமகளையே ஏவ வல்லவர் ஆகிய திருமாலும் தேடவல்லவர் அம்மானை. (வி - ரை) நல்லார் - அடியார்க்கு நல்லார் என்பார். துன்னு பயிரிட்டார் - பல்கால் பயிரிட்டார். செய்யாள் - இலக்குமி; செய் ஆள் - (நன்செய் புன்செய் ஆகிய) செய்யில் வேலை செய்யும் ஆள். செய்யாள் ஏ(வ) வல்லவர் தாம் தேடவல்லார் - செய்யாள் ஆகிய இலக்குமியையும் ஏவல் கொள்ள வல்லவராம் திருமாலாலும் தேடிக் காண வல்லவர்க்கு அரிதன்று என்பதாம். வேலை யானை ஏவ வல்லமை பெற்றவரே நிரம்பத் தேடவல்லவர் என்னும் உலகியற் பொருளை அறியுமாறும் ஈற்றடியை அமைத்தார். 39. மாமனாக வந்து வழக்குரைத்தது (தனபதி என்பான் தன் தங்கை மகனுக்குத் தன் சொத்தை யெல்லாம் வைத்து வீட்டை விட்டுச் சென்றான். அவன் உறவினர் அச்சொத்தைக் கவர்ந்து கொண்டனர். இறைவன் தனபதி வடிவில் வந்து வழக்காடி உரிய சொத்தை வழங்கினான்.) சோமனணி வோர்மதுரைச் சொக்கர்வணி கக்குழந்தை மாமனென வந்து வழக்குரைத்தார் அம்மானை; மாமனென வந்து வழக்குரைத்தார் ஆமாகில் ஆமகவை யேன்கறிகொண் டாரறிவோ டம்மானை; அறிவுமயக் கந்தனைப்பெற் றார்செய்யார் அம்மானை. (பொ - ரை) திங்களைச் சூடுவோராகிய மதுரைச் சொக்கர் வணிகக் குழந்தைக்கு மாமனாக வந்து வழக்காடினார் அம்மானை; மாமனாக வந்து வழக்காடினார் என்றால் அந்தோ, சிறுத்தொண்டர் செல்வன் சீராளனை ஏன் கறியாக்கியுண்டார் நல்லறிவோடு அம்மானை; அறிவுமயமாம் திருமுருகனைப் பெற்ற சிவனார் அவ்வாறு செய்யார் அம்மானை. (வி - ரை) சோமன் - திங்கள்: வணிகன் - தளபதி; அவனுக்கு மகப்பேறு இன்மையால் தங்கை மகனுக்குச் சொத்தைத் தந்தான். ஆ - அந்தோ! அறிவோடு மகக்கறி உண்பாரோ என்றார்க்கு அறிவுமயமான கந்தனைப் பெற்ற தந்தை மற்றொரு மகவை அறிவோடு தின்பாரா எனப்பதில் மொழிந்தார். அவனைச் சீராளா என்று அழைப்பித்து வரச்செய்தார் ஆகலின் கொன்றாரும் தின்றாரும் அல்லர் என்றார் என்க. இனி, உலகியன் முறைப்படி, அறிவு மயக்கந்தனைப் பெற்று ஆர் செய்யார் அறிவு மயக்கத்தைப் பெற்ற எவரே இவ்வாறு செய்யார்? செய்வர்! என்று மொழிந்த நயம் உணர்க. 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டியது (வரகுண பாண்டியன் சிறந்த சிவனடியான். அவனுக்குச் சிவலோகம் சென்று சிவபெருமான் திருவோலக்கம் காண வேண்டுமென்ற பேராவல் உண்டாயிற்று. இறைவன் நந்தி தேவனைக் கொண்டு வரகுணனுக்குச் சிவலோகத்தைக் காட்டச் செய்தார்.) அரியமரர் சூழ்மதுரை அங்கே வரகுணனுக்(கு) அரியசிவ லோகங்காட் டண்ணல்சொக்கன் அம்மானை; அரியசிவ லோகங்காட் டண்ணல்சொக்கன் ஆமாகில் அரியயன்மே லானபொரு ளாகுமே அம்மானை; ஆகுமேல் அப்பொருட்கும் அப்பன்காண் அம்மானை. (பொ - ரை) திருமாலும் தேவரும் வழிபடுதற்குச் சூழ்ந்து வரும் மதுரையில் வரகுண பாண்டியனுக்குக் காணுதற்கு அரிய சிவலோகம் காண்பித்தான் சொக்கநாதன் அம்மானை; அரிய சிவலோகம் காண்பித்தவன் சொக்கநாதனாயினால் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அவன் மேலான பொருளாவனே அம்மானை; ஆகும்; அன்றியும் அப் பொருளுக்கும் அப்பனாவான் அவனே காண் அம்மானை. (வி - ரை) அரி அமரர் - திருமாலும் தேவரும்; அரி அயன் மேலான - அரிக்கும் அயனுக்கும் (நான்முகனுக்கும்) மேலான. அரன், அரி, அயன் என்னும் மூவர்க்கும் முதல்வனாவான் அவனே என்பாராய் அப்பொருட்கும் அப்பன் என்றார். இனி, ஆகு மேல் அப்பொருட்கும் - பெருச்சாளியின் மேல் அமரும் மூத்த பிள்ளையார்க்கும் அப்பன் காண் என இரட்டுறல் பொருள் காண்க. ஆகுகன் ஆகுவாகனன் என்பன பிள்ளையார் பெயர்கள். 41. விறகு விற்றது (ஏமநாதன் என்பான் இசை வல்லான்; அவனோடு பாணபத்திரன் என்பான் இசைப்போர் புரிய நேர்ந்தது. இறைவன் பாணபத்திரன்மேல் கொண்ட அன்பால் விறகுத் தலையனாகி வந்து இசைபாடினான்; தான் பாணபத்திரனால் தகுதியற்றவன் என விலக்கப்பெற்ற மாணவன் என்றான். அதனைக் கேட்டஞ்சிய ஏமநாதன் இரவோடே ஊரை விட்டோடினான்.) திசையோர் பணிந்தேத்தும் தென்மதுரைச் சொக்கலிங்கர் விசையாய் நடந்து விறகுவிற்றார் அம்மானை; விசையாய் நடந்து விறகுவிற்றார் ஆமாகில் இசையார் விறகுவிலைக் கேலுமோ அம்மானை; ஏலு மதனை எரிக்கவென்றால் அம்மானை. (பொ - ரை) எத்திசையினரும் வணங்கி வாழ்த்தும் அழகிய மதுரைச் சொக்கலிங்கர் விரைவாக நடந்து விறகு விற்றார் அம்மானை; விரைவாக நடந்து விறகு விற்றார் என்றால், இசையில் வல்லவர் விறகு விலை கூறுதற்குத் தகுமோ அம்மானை; தகும்; அதனை எரிப்பதற்கு ஆகும் என்றால் அம்மானை. (வி - ரை) விசை - விரைவு; இசையார் - பாடுபவர்; ஒப்பாதவர்; இவர் மாணவராக இருத்தற்குத் தகாதவர் எனப் பாணபத்திரனால் அகற்றப்பட்டவர் எனக் கூறினார் ஆகலின் இசைக்கு இசையாதவர் என்னும் கருத்து விளங்கக் கூறினார். ஏலுமோ - ஏற்குமோ? ஏலு மதனை எரிக்கவென்றால் - ஏலும் அதனை எரிக்க என்றால் - (ஏற்கும் அவ்விறகை எரிக்கவென்றால்), ஏலும் மதனை எரிக்க என்றால் (ஏற்கும் செருக்கை அழிக்க என்றால்): மன்மதனை எரிக்க வென்றால் ஏற்கும்; மதன் - செருக்கு, மன்மதன், இசையார் விறகு விற்றது செருக்கை எரிப்பதற்கு ஏலும் எனக் கொள்க. இவண், செருக்கு (மதன்) ஏமநாதன் கொண்டது. 42. திருமுகங் கொடுத்தது (பாணபத்திரனுக்குப் பரிசில் பல வழங்குமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு இறைவன் திருமுகம் (கடிதம், ஓலை) கொடுத்தது.) வாரணத்தை ஈன்ற மதுரேசர் பாணனுக்காச் சேரலன்பால் ஈந்தார் திருமுகமொன் றம்மானை; சேரலன்பால் ஈந்தார் திருமுகமொன் றாமாகில் ஆரணஞ்சொல் லைமுகமே லாறுண்டோ அம்மானை; ஆறுமுகம் பெற்றவரென் றாரறியார் அம்மானை. (பொ - ரை) மூத்த பிள்ளையாரைப் பெற்ற சொக்கநாதர் பாணபத்திரனுக்காகச் சேரமானிடம் திருமுகமொன்று தந்தார் அம்மானை; சேரமானிடம் திருமுகமொன்று தந்தாரே ஆயினால், வேதங்கள் சொல்லும் ஐந்து முகங்களின் மேல் ஆறு முகமும் உண்டோ அம்மானை; ஆம்; அவர் ஆறுமுகம் பெற்றவர் என்பதை எவரே அறியார் அம்மானை. (வி - ரை) வாரணம் - யானை; என்றது பிள்ளையாரை. திருமுகம் - கடிதம், அழகிய முகம். ஆரணம் - வேதம்; ஐமுகம் - நான்கு திக்குகளிலும் ஒவ்வொரு முகமும் அதோ முகம் என்பதொன்றும் ஆக ஐந்து முகம்; ஆறு உண்டோ - ஆறுமுகம் உண்டோ; ஆறு (கங்கை) உண்டோ; ஆறுமுகம் பெற்றவர் - ஆறு முகத்தைப் பெற்றவர்; அமைதியான முகத்தைப் பெற்றவர். பெற்றவர் - பெற்றோர்; பெற்றவர்; ஆரறியார் - எவரே அறியார். சேரலன் பால் - சேரனிடத்து; சேரல் + அன்பால் - சேரும் அன்பினால். 43. பலகை யிட்டது (அடை மழையின் போது பாணபத்திரன் ஈரத்தில் நின்று பள்ளியறையில் பாடினான்; இறைவன் பொற்பலகை வழங்கி, அதன்மேல் நின்று பாட ஏவினான்.) சொக்கன் மதுரேசன் சொல்லிசைவாய்ப் பாணரைமுன் வைக்கும் பலகைமிசை வண்மையாய் அம்மானை; வைக்கும் வலகைமிசை வண்மையாய் ஆமாகில் தைக்கும்பூப் பாணனையேன் றான்வையான் அம்மானை; தான்வைத்தான் பின்புசித்தன் தையலைக்கண் டம்மானை. (பொ - ரை) மதுரைக்கு இறைவனாம் சொக்கன், இசைத் தேர்ச்சி மிக்க பாணபத்திரனைக் கொடை வளத்தால் பொற் பலகை மேல் வைத்தான் அம்மானை; பொற்பலகை மேல் வைத்தான் என்றால், அத்தகைய கொடை வண்மையாளனாம் இறைவன் தைக்கும் பூப்பாணனாம் மன்மதனை ஏன் உருவத் தோடும் வைத்திலன் அம்மானை; பின்னே மன்மதன் தையலாம் இரதி வேண்டிக் கொண்டதை ஏற்றுத்தான், அவனை அவளுக்காக உருவத்தோடு வைத்தான் அம்மானை. (வி - ரை) சொல் இசை - புகழ் வாய்ந்த இசை; பாணன் - பாணபத்திரன்; மிசை - மேல்; தைக்கும் - தையல் செய்யும், அம்பு ஏவும்; பூப்பாணன் - பூ வேலைப்பாடு செய்யும் பாணன்; பூவாகிய பாணத்தை ஏவும் மன்மதன்; பலகையில் வைத்தான் ஒரு பாணனை; ஒரு பாணனை உயிரோடும் வையான் ஏன் என முரண் இன்பம் காண்க. வைத்தான் - உயிரோடும் விட்டுவைத்தான்; சித்தன் - மன்மதன்; அவன் தையல் இரதி; இரதி வேண்டிக் கொண்டவாறு வைத்தான் என்க. தையல் என்பது பாணனுக்கு ஏற்ற தகுதிச் சொல்லாகலின் அதனை வைத்தார். 44. இசைவாது வென்றது (பாணபத்திரன் மனைவி இசைவல்லாள்; அவளொடு இசை வாதுசெய்ய ஈழத்தில் இருந்து ஒருத்தி வந்தாள்; உண்மைக்கு மாறாக ஈழத்தாள் இசையே சிறந்ததெனப் பாண்டியன் கூறினான்; இறைவன் கட்டளைப்படி இசைவாது திருக்கோயிலில் நிகழ்ந்தது. அங்கு அரசன் உண்மையை மறைக்க முடியாமல் பாணபத்திரன் மனைவியின் வெற்றியை ஏற்றுக் கொண்டான்.) ஆற்றமது ரேசரிசை யாழ்ப்பாணர் தேவிக்காச் சாற்றுமிசை வாதெளிதாத் தாம்வென்றார் அம்மானை; சாற்றுமிசை வாதெளிதாத் தாம்வென்றார் ஆமாகில் மாற்றரிதோ வன்பர் மறவாதம் அம்மானை; மறவாத வன்பருடன் வாதவற்கே தம்மானை. (பொ - ரை) செயற்கரிய செய்யும் மதுரைச் சொக்கர் இசை வல்ல பாணபத்திரன் மனைவிக்காகப் புகழ் வாய்ந்த இசைவாது அமைத்து எளிமையாகத் தாம் வெற்றி கொளச் செய்தார் அம்மானை; எளிதாக இசைவாதில் வெற்றி கொளச் செய்தார் என்றால், வன்தொண்டராம் சுந்தரரின் வலிய வாதத்தை மாற்றுவது அவர்க்கு அரிதோ அம்மானை; என்றும் தம்மை மறவாத அன்பராம் அவருடன் தமக்கு வாது ஏது அம்மானை. (வி - ரை) மாற்றரிதோ வன்பர் - மாற்ற அரிதோ வன்பர்; மாற்ற அரிதோ அன்பர்; மறவாத வன்பர் - மற வாத வன்பர்; மறவாத அன்பர்; வாது அவற்கு ஏது இல்லை; அவ்வாது தம்மை என்றும் அவர் மறவாதிருக்கத் தாமே தொடுத்தவாதன்றி அவர் வாதன்று என்பதாம். சுந்தரருடன் இறைவர் செய்த வாதினைப் பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணத்துக் காண்க. 45. பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்தது (பெற்றோரை இழந்து போன பன்றிக்குட்டிகள் பன்னிரண்டு; அவை, கொண்ட துயரை ஆற்ற இறைவனே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டினான். வியாழன் சாபத்திற்கு ஆளாகியிருந்த அக்குட்டிகள் இறைவன் அருளால் கடைத்தேற்ற முற்றன.) நின்றெனையா ளுங்கயற்கண் நேயர்சொக்கர் தாயெனப்போய்ப் பன்றிமக்கள் உண்ணமுலைப் பால்கொடுத்தார் அம்மானை; பன்றிமக்கள் உண்ணமுலைப் பால்கொடுத்தார் ஆமாகில் மன்றமுலைப் பாலாண்பால் வந்ததென்னோ அம்மானை; வாராதோ பச்சை மதலைபெற்றார்க் கம்மானை. (பொ - ரை) நிலைபெற்று என்னை ஆட்கொண்டு வரும் அங்கயற்கண்ணிக்கு அன்பராம் சொக்கர் தாமே தாயாகப் போய்ப் பன்றிக்குட்டிகளுக்குப் பால் பருக மடியைக் கொடுத்தார் அம்மானை; பன்றிக்குட்டிகளுக்குப் பால் பருக மடியைக் கொடுத்தாரானால் மிகுதியாக மடிப்பால் ஆண்பாலாகிய அவரிடமிருந்து வந்தது எதனாலோ அம்மானை; பச்சை மதலையாம் குழந்தையைப் பெற்றவருக்குப் பால் சுரக்காதோ அம்மானை. (வி - ரை) நின்று - நிலைபெற்று; நேயர் - அன்பர்; குட்டியை மக்கள் என்றார், வியாழ முனிவன் சாபத்தால் வேளாண் மக்கள் பன்னிருவர் பன்றியாம் சாபம் பெற்றமையால்; மன்ற - மிகுதியாக; முலைப்பால், ஆண்பால் வந்தது என்னோ என்றதில் பால்நயம் அமைந்துள்ளது. தாயாக மாறி எப்பொழுது வந்தாரோ அப்பொழுதே மடியில் பால் சுரக்கத்தானே செய்யும் என்றார். பச்சை மதலை பெற்றார் - பச்சை மது அலை பெற்றார் - புதிய மது அலை பெற்ற மதிசூடியவர்; புதிய மதுவை (அமுதை) அலையில் பெற்ற அவர்; அவர்க்குப் பால் தருதல் அரிதோ என்க. 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கியது (சாபம் நீங்கப் பெற்ற பன்றிக்குட்டிகளாகிய மக்களைப் பாண்டியன் அமைச்சர்களாக்கி வைத்து, அப்பாண்டியனுக்கு முன்னே அமைச்சர்களாக இருந்தவர் மகளிரை மணமுடித்து வைத்தது.) துன்னியசீர்த் தென்மதுரைச் சொக்கேசர் பன்றிகளைத் தென்னவற்கு மந்திரியாய்ச் செய்தனர்காண் அம்மானை; தென்னவற்கு மந்திரியாய்ச் செய்தனரே யாமாகில் பன்னுமவர்க் கேதுபட்சம் பன்றிமேல் அம்மானை; பன்றியறி யாதவர்க்குப் பட்சமன்றோ அம்மானை. (பொ - ரை) நிறைபுகழ் வாய்ந்த அழகிய மதுரைச் சொக்க நாதர் பன்றிகளைப் பாண்டியனுக்கு அமைச்சராகச் செய்தார் அம்மானை; பாண்டியனுக்கு அமைச்சராகச் செய்தார் என்றால், சொல்லப்பட்ட அச்சொக்கர்க்குப் பன்றிமேல் வந்த அன்பின் காரணம் என்ன அம்மானை; பன்றியுருக் கொண்ட திருமாலால் அறியப் பெறாதவர்க்கு அவ்விரக்கத்தால் அன்பு உண்டாகு மன்றோ அம்மானை. (வி - ரை) துன்னியசீர் - நிறைந்த பெருமை; பன்னும் - கூறப்பெறும்; பட்சம் - அன்பு; பன்றியால் அறியப் பெறாதவர் ஆகலின் தாமே தேடிவந்து பரிவு கூர்ந்தார் என்று நயமாகச் சுட்டினார். போரில் ஆண்மை காட்டுதலும், போரில் தோற்றுத் துயருறுவார்க்கு ஓடிப்போய் உதவுதலும் உயர் வீரம் ஆகலின் அவ்வாறு இறைவர் பன்றிக்குட்டி மேல் பரிவுகாட்டினார் என்றார். அன்பே சிவமாக அமர்ந்தாராகலின் அவருக்கு அன்பு இயற்கையாம் எனினும் ஆம். 47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது (பாவத்தால் கரிக்குருவியாகப் பிறந்த ஒருவன், இறைவனைத் தவறாது வழிபட்டான். அவனுக்கு இறைவன் மந்திரப் பொருள் உரைத்தான். அக்கரிக்குருவி தான்மட்டுமே அனறித் தன் இனத்திற்கும் வலிமை வேண்டுமென இறைவனிடம் வேண்டிப் பெற்றது. அதன்பின் வலியன், வல்லூறு, வல்லான் எனப் பெயர் பெற்று விளங்கலாயது) உண்மை கரிக்குருவிக் கோதியெளி யார்வலியார்க்(கு) எண்மடங்காக் கினர்மதுரை ஈசனார் அம்மானை; எண்மடங்காக் கினர்மதுரை ஈசனார் ஆமாகில் அண்ணலெளி யார்க்கெளியா ராவதேன் அம்மானை; ஆவதுபோல் தானலைந்தார் ஆரூரில் அம்மானை. (பொ - ரை) மெய்ப்பொருளைக் கரிக்குருவிக்கு ஓதி எளிய தாம் அதனை வலியவர்க்கு எட்டுமடங்கு வலியதாக ஆக்கினார் மதுரைச் சொக்கர் அம்மானை; எண்மடங்கு வலியதாக ஆக்கினார் என்றால் பெருமைக்குரியவராம் அவர்மட்டும் எளியவர்க்கும் எளியவராக ஆவது ஏன் அம்மானை; ஆ! அவ்வாறு எளியவர்க்கு எளியவர் போலவேதான் திருவாரூரில் அலைந்தார் அம்மானை. (வி - ரை) உண்மை - மெய்ப்பொருள்; எளியாரை வலியார் ஆக்கியவர் தாம் ஏன் எளியராக ஆரூரில் அலைந்தார் என்றார்க்கு, அது போல்தான் அலைந்தார். ஏனெனில் எளியவர்க்கு எளியனாம் தன்மையன் ஆகலின். ஆரூரில் அலைந்தது சுந்தரர்க்காக. ஆரூரில் பரவையார் இல்லத்திற்குத் தூதுரைத்தற் காக; ஆவதுபோல் - ஆ! அதுபோல்; ஆவது போல்; பசுவைப் போல்; கன்றையிழந்த பசு ஆரூரில் எவ்வாறு அலைந்ததோ - உருகி உருகித் திரிந்ததோ - அதுபோல் என வுவமைப் பொருளும் கொள்க. ஏனலைந்தார் என்பது பாடம்; ஏற்குமேல் கொள்க. 48. நாரைக்கு முத்தி கொடுத்தது (இறையன்பில் முதிர்ந்த நாரையொன்று பொற்றாமரைக் குளத்தில் தொடர்ந்து நீராடி வழிபாடு செய்துவந்தது. அதன் செயலுக்கு மகிழ்ந்த இறைவர் முத்தியருளினார். அந்நாரை விருப்பப்படிப் பொற்றாமரைக் குளத்தில் மீன் இல்லாமல் செய்தார்.) மின்னார் மணிகயற்கண் மேவுசுந்த ரேசர்வந்து நன்னாரைக் கோர்வீடு நல்கினார் அம்மானை; நன்னாரைக் கோர்வீடு நல்கினார் ஆமாகில் முன்னமனைக் கையான் முடிப்பரோ அம்மானை; முடிக்கவல்லார் காலாலே முன்னமனை அம்மானை. (பொ - ரை) மங்கையர் மணியாகிய கயற்கண்ணிக்கு அன்பராம் சொக்கநாதர் நேரில் காட்சி வழங்கி நல்லதாம் ஒரு நாரைக்கு ஒப்பற்ற வீடுபேறு நல்கினார் அம்மானை; நாரைக்கு ஒப்பற்ற வீடுபேறு நல்கினாரென்றால், அத்தகையவர் முன்னமே வீட்டைக் கையால் கட்டிமுடிப்பரோ அம்மானை; முன்னே நமனின் செருக்கைக் காலாலே ஒழிக்க வல்லவர் அவர் அம்மானை. (வி - ரை) மின்னார் - மின்னற் கொடிபோன்ற மகளிர்; மேவு - அடையும்; வீடு - வீடுபேறு; வீடுபேறு நல்கினார் என்றமையால், கையால் வீடு கட்டிவைத்தாரோ என வினவினார். முன்னமனை - முன்னம் மனை; முன் நமனை (எமனை); எமனைக் காலாலே உதைத்தாராகலின் காலாலே முன்னமனை முடிக்க வல்லார் என்றார். கூற்றத்தின் செருக்கை ஒழிக்க வல்லவர் வீடுதருதற்கு ஐயமென்ன என நிறுவினார். பிறப்பு இறப்பிலா நிலையே வீடுபேறு ஆகலின். இனி முன்னம் அனைக்கையால் எனப் பிரித்து முதற்கண் தாயன்பு சுரக்கும் கையால் எனப் பொருள் கொள்ளலுமாம். 49. திருவாலவாயானது (ஊழியால் மதுரை அழிந்ததாக வங்கிய சேகர பாண்டியன் வேண்டுகோட்கு இணங்கி இறைவன் ஒரு பாம்பை விடுத்து நகர எல்லை காட்டச் செய்தது. அதனால் திருவாலவாய் (ஆலவாய் - பாம்பின் வாய்) என்னும் பெயர் பெற்றது என்பது கதை) பண்டோர்சொக் கேசர் பணியாற்பல் கோடியண்டம் கண்டோர் மதுரையெல்லை காட்டினார் அம்மானை; கண்டோர் மதுரையெல்லை காட்டினார் ஆமாகில் கொண்டால வாயெனப்பேர் கூடுவதே அம்மானை; கூடாதா கூடலெனக் கூறுநகர்க் கம்மானை. (பொ - ரை) பலகோடி உலகங்களையும் படைத்தவராகிய ஒப்பற்ற சொக்கநாதர் பழநாளில் ஒரு பாம்பினால் மதுரையின் எல்லையைக் காட்டினார் அம்மானை; மதுரையின் எல்லையைக் காட்டினார் என்றால், அதனைக் கொண்டு அந்நகர்க்கு ஆலவாய் என்று பெயர் இடுதல் பொருந்துவதாம் அம்மானை; கூடலெனப் பெயர் கூறப்படும் நகர்க்கு இது கூடுவதேயாம் அம்மானை. (வி - ரை) பணியால் - செயலால், பாம்பால்; அண்டம் - உருண்டை, உலகம்; கொண்டு - அக் காரணம் கொண்டு; ஆலவாய் எனப் பெயர் கூடுவதே என்றார்க்கு, கூடல் ஆதலின் அதன் பெயர் பலவாகக் கூடுவது இயல்பேயாம் என்றார். கூடல் - மதுரை; கூடுதல்; கூடாதா - கூறக் கூடாதோ, எண்ணிக்கை கூடாதோ. 50. சுந்தரப்பேர் அம்பெய்தது (வங்கிய சேகர பாண்டியனுக்கும் விக்கிரம சோழனுக்கும் போர் உண்டாயிற்று. இறைவன் ஒரு வேடுவனாகி ஓர் அம்பால் பல்லாயிவரைக் கொன்றான். அவ்வம்பில் சுந்தரம் என்னும் பெயர் இருக்கக் கண்ட சோழன் தோற்றோடினான்) மந்திர வேதத்தின் மதுரேசன் பாண்டியர்க்காச் சுந்தரப்பே ரம்பெய்தான் சோழன்மேல் அம்மானை; சுந்தரப்பே ரம்பெய்தான் சோழன்மேல் ஆமாகில் வந்தெதிர்த்த போரின் மலையானோ அம்மானை; மலைவில்லன் என்றொருபேர் வாய்த்தவற் கம்மானை. (பொ - ரை) மந்திரத்திற்கும் மறைக்கும் தலைவனாம் சொக்கநாதன் பாண்டியனுக்காகச் சுந்தரம் என்னும் பெயர் பொறிக்கப் பெற்ற அம்பைச் சோழன்மேல் எய்தான் அம்மானை; சுந்தரப் பெயர் அம்பைச் சோழன்மேல் எய்தான் எனின், வந்து நேர்ந்த போரில் அவன் மலைக்கமாட்டானோ அம்மானை; அவன் மலைக்கமாட்டான்; ஏனெனின் அவனுக்கு மலைவில்லன் என்றொரு பேருண்டு அம்மானை. (வி - ரை) மலையானோ - மலைக்கமாட்டானோ, போரிடமாட்டானோ; மலை வில்லன் - மலைவு இல்லாதவன்; மலை வில்லன் - மேருமலையாகிய வில்லையுடையவன். இப் பெயர் வாய்த்த அவன் போரில் மலைப்பனோ? மாட்டான் என்றவாறு. 51. சங்கப்பலகை தந்தது (சங்கப் புலவர்கள் வேண்டுதலுக்கு ஏற்பப் புலவர்களின் புலமைத் திறத்தை அளந்து அவர்க்கு இடந்தரும் சங்கப் பலகையை இறைவன் தந்தது) கருணைநிறை கூடற் கயற்கண்மகிழ் சொக்கேசர் ஒருகையிற்சங் கேந்திக் குயர்ந்தவர்காண் அம்மானை; ஒருகையிற்சங் கேந்திக் குயர்ந்தவரே யாமாகில் தருமவர்தங் கையினிற்பல் சங்கமுண்டோ அம்மானை; சங்கப் பலகையறத் தாமளித்தார் அம்மானை. (பொ - ரை) அருள் நிறைந்த மதுரை அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்து மகிழும் சொக்கநாதர் ஒருகையில் சங்கேந்திய திருமாலுக்கு உயர்ந்தவராம் அம்மானை; ஒரு கையில் சங்கேந்திய திருமாலுக்கு உயர்ந்தவரானால், கொடையாளராகிய அவர்தம் கையில் பல சங்கம் உண்டோ அம்மானை; சங்கப்பலகை வேண்டுமளவு அவர் அளித்தவர் அல்லரோ அம்மானை. (வி - ரை) சங்கேந்தி - திருமால்; ஒரு கையிற் சங்கேந்திக்கு உயர்ந்தவர் ஆயினால் கையினில் பல சங்கமுண்டோ என்றார். கை, பல சங்கம் என்றும் சொற்களையே ஏற்றவாறு இயைத்துச் சங்கப்பலகை அருளியவர் என்றார். அற - அறுதியிட; புலவர் ஒவ்வொருவருக்கும் வேண்டுமிடம் அளவிட்டுத்தர; தங்கையில் சங்கேந்தி அவன்; புலவர், தங்கையில் சங்கப்பலகை தந்தவன் இவன்; இதனால் உயர்வு அறிக என்றும் அறிவித்தார். வைத்திருப்பவனினும், கொடையாளன் உயர்ந்தோன் என்பது குறிப்பு. 52. தருமிக்குப் பொற்கிழி யளித்தது (சண்பகமாறனுக்கு அரசியின் கூந்தலில் உள்ள மணம் இயற்கையா? செயற்கையா? என ஐயம் உண்டாயிற்று. அவ்வையம் நீங்கக் கவிபாடுவார் பெறுமாறு பொற்கிழி (பொன் முடிப்பு) வைத்தான். தருமி என்பான் அப்பரிசைப் பெறுதற்கு, இறைவன் ஒரு பாடல் அருளியதுடன் புலவனாக வந்து வாதிட்டுத் தருமிக்குப் பொற்கிழி தந்தது) நல்கவெனப் பொற்கிழியை நற்றருமிக் கென்றுகவி சொல்லிவிட்டார் தென்மதுரைச் சுந்தரனார் அம்மானை; சொல்லிவிட்டார் தென்மதுரைச் சுந்தரனார் ஆமாகில் வல்லகவிக் கேன்கீரன் மாசோதும் அம்மானை; மாசோதி யாரடியார் வாயுள்ளார் அம்மானை. (பொ - ரை) அழகிய மதுரைச் சொக்கர் அடியவனாம் நல்ல தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவென்று கவி எழுதித் தந்தார் அம்மானை; கவி எழுதித் தந்தார் சொக்கரென்றால், அவர்இயற்றிய வளமிக்க கவிதைக்கு நக்கீரன் ஏன் குற்றம் சொன்னான் அம்மானை; அவ்வாறு சொன்னதால் தான் பேரொளிப் பிழம்பாம் இறைவர் அடியாருள் நக்கீரர் சிறந்தாராயுள்ளார் அம்மானை. (வி - ரை) கடவுள் கவிக்குக் கீரன் மாசோதியது மாசோதியார் அடியாருள் சேர்தற்காம் என்று காரணம் காட்டினார். கிழி - துணி; துணியால் கட்டப் பெற்ற முடிப்பு; மாசோதியார் அடியார் - பேரொளியாளராகிய இறைவர் அடியார். மாசோதியார் அடியார் வாயுள்ளார் - மாசு ஓதிய வராகிய அவர் அடியார் கூட்டத்தில் உள்ளார். மாசு ஓதி யார் அடியார்வாய் உள்ளார் - எவரே குற்றம் கூறி அடியார் கூட்டத்துள்ளார்? நக்கீரரே என அவர் பெற்ற பேறு உரைக்க. 53. கீரனைக் கரை யேற்றியது (நெற்றிக்கண் வெம்மை தாங்காத நக்கீரன் பொற்றாமரைக் குளத்துள் வீழ்ந்தான். சங்கப் புலவர்கள் இறைவனிடம் மன்னித்துதவ வேண்டினர். இறைவன் அருட்கண் செலுத்திக் கீரனைக் கரையேற்றினான்.) சொக்கேசன் சங்கம் துதித்திடப்பொற் றாமரைவீழ் அக்கீர னைக்கரையேற் றன்புவைத்தான் அம்மானை; அக்கீர னைக்கரையேற் றன்புவைத்தான் ஆமாகில் தக்கனுக்காட் டுத்தலையேன் தான்வைத்தான் அம்மானை; தானுமன் றாட்டிற் றலைவைத்தான் அம்மானை. (பொ - ரை) சொக்கநாதன் சங்கப் புலவர்கள் நக்கீரனைக் கரையேற்ற வேண்டித் துதிக்கவும், பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கிடந்த நக்கீரனைக் கரையேற்றுமாறு அன்பு செலுத்தினான் அம்மானை; கீரனைக் கரையேற்ற அன்பு வைத்தான் என்றால், அவ்விறைவன் தக்கனுக்கு ஆட்டுத்தலை வைத்தது ஏன் அம்மானை; அவனும் மன்றங்களில் ஆடுதலைத் தலைமையாகக் கொண்டவன் ஆதலால் வைத்தான் அம்மானை. (வி - ரை) சங்கம் - சங்கப் புலவர்: தக்கன் செய்த வேள்விக்குச் சிவனை அழையாமலும், பழித்தும் இழிவு செய்தமையால் வீரபத்திரரால் தலை கிள்ளப் பெற்றுப் பின்னே ஆட்டுத்தலை வைக்கப்பெற்றான். தக்கயாகப் பரணிச் செய்தி இது. கீரனைக் கரையேற்றியவர் தக்கன் தலையைக் கிள்ளியதேன் என்றார்; இறைவன் ஆட்டுத்தலை வைத்தல் (அம்பலங்களில் ஆடுதலை முதன்மையாகக் கொள்ளுதல்) இயல்பானவன் ஆதலால் செய்தான் என்றார். தானும் மன்று (அம்பலம்) ஆட்டு தலை; மன்றாடுதலைத் தலையாக மதிப்பவனே அன்றிச் செருக்கை மதியான்; நக்கீரன் மன்றாடினான்; கரையேறினான்; தக்கன் செருக்கினான்; ஆட்டுத் தலையனானான் என்ற பொருளும் கொள்ள வைத்தார். 54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தது (கரையேற்றப் பெற்ற கீரனுக்கு அகத்தியரைக் கொண்டு இறைவன் இலக்கணம் கற்பித்தது.) தலத்துறைநக் கீரனுக்குத் தாமுரைத்தி டாதுசொக்கர் இலக்கணம் போதித்தார் இருந்தவரால் அம்மானை; இலக்கணம் போதித்தார் இருந்தவரால் ஆமாகில் மலைத்தமிழ்அ றிந்துரைக்க மாட்டாரோ அம்மானை; மாட்டார் அறிவரியார் மற்றறிவார் அம்மானை. (பொ - ரை) மதுரை நகரிலே வாழும் புலவன் நக்கீரனுக்குத் தாமே இலக்கணம் உரையாது சிறந்த தவத்தினராம் அகத்தியரைக் கொண்டு உரைத்தார் சொக்கர் அம்மானை; அகத்தியரைக் கொண்டு இலக்கணம் உரைத்தார் என்றால், மலையிலே பிறந்த தமிழ் இலக்கணத்தைச் சொக்கர் அறிந்து உரைக்க மாட்டாரோ அம்மானை; அன்பால் நெகிழ்ந்துருக மாட்டாரால் அறிதற்கு அரியவராகிய அவர், மற்று எல்லாவற்றையும் முழுதறிய வல்லவராம் அம்மானை. (வி - ரை) தலம் - இடம்; மதுரை: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது பெயர்; இருந்தவர் - அரிய தவத்தினர்; தமக்கு இணையாகப் பொதியத்து இருந்தவராகிய அகத்தியர் வடக்குத் தாழத் தெற்கு உயர இறைவன் ஏவலால் பொதியத்திற்கு வந்து நிலம் நிலைப்படுத்தினார் என்னும் கதைக் குறிப்புணர்க. மலைத்தமிழ் - மலையிற் பிறந்த தமிழ். பொருப்பிலே பிறந்து என்பார். மலைபோன்ற உயர்ந்த தமிழுமாம்; மாட்டார் - திருமால்; அவரால் அறிவரியார்; அனைத்தும் அறிவார் எனினும் ஆம். 55. சங்கத்தார் கலகம் தீர்த்தது (சங்கப் புலவர்கள் தாம் தாம் கண்ட நூலே சிறந்ததென மாறுபட்டனராக, இறைவன் அருளால் உருத்திர சன்மன் என்பானோர் ஊமன் தன் மெய்ப்பாட்டால் கபில, பரண, நக்கீரர், உயர்வை எடுத்துக்காட்டி மாறுபாடு அகற்றியது.) ஆசையமு தங்கயற்கண் அன்பர்சொக்கர் வந்துதவ நேசர்வினை தீர்ப்பது நிகழ்த்துமுல கம்மானை; நேசர்வினை தீர்ப்பது நிகழ்த்துமுல காமாகில் பேசுசங்கத் தார்கலகம் பெற்றதேன் அம்மானை; பெற்றவர் தீர்ப்பதுவாய் பேசுவதன் றம்மானை. (பொ - ரை) ஆர்வ மிக்க அமுதம் போன்றவராகிய அங்கயற் கண்ணியின் அன்பராம் சொக்கநாதர், நேரில் வந்து தவத்தால் சிறந்த அடியார் தீவினையைத் தீர்ப்பதை உயர்ந்தோர் கூறுவர் அம்மானை; அடியார் தீவினையைத் தீர்ப்பதை உயர்ந்தோர் கூறுவராயின், புகழ் மிக்க சங்கப் புலவர்கள் கலகமிட்டு இருந்ததேன் அம்மானை; பெற்றவர்கள் தம் மக்கள் துயரைத் தீர்ப்பதை வாயால் கூறுவது இல்லை அம்மானை. (வி - ரை) உலகோர் பேசுவது பிறர்க்கு உதவுவதையே; தம் பிள்ளைகளுக்குச் செய்யும் நலங்களைப் பெற்றோர் பேசுவது இல்லை என்றார். பெற்றோர் பெருந்தன்மை இன்னதெனப் பேசினார். நிகழ்த்தும் - கூறும்; உலகம் - உயர்ந்தோர்; பெற்றவர் தீர்ப்பது - கலகம் பெற்ற சங்கத்தவரைத் தீர்ப்பது; வாய் பேசுவது அன்று - வாய்பேசக் கூடியது அன்று; ஊமை; தீர்ப்பது - விலக்குவது; தீர்ப்புக் கூறுவது. முருகனே தனபதி என்பான் மகனாக உருத்திர சன்மப் பெயரோடு வந்தான் என்பது கதை. 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது (இடைக்காடன் பெரும் புலவன்; அவன் பாடலைப் பாண்டியன் குலசேகரன் மதித்தானல்லன்; வெறுப்புக் கொண்ட இடைக்காடன் இறைவனை வழிபட்டு வையைக்கு வடக்கே சென்றான்; இறைவனும் அவனைத் தொடர்ந்தான்; பாண்டியன் தன் குற்றம் உணர்ந்து வருந்தினான்; இறைவன் இடைக் காடனுடன் மீண்டான்.) நின்றசொக்கன் ஆலயத்தின் நீங்கிவட வாலவாய்ச் சென்றிடைக்கா டன்பிணக்குத் தீர்த்துவந்தான் அம்மானை; சென்றிடைக்கா டன்பிணக்குத் தீர்த்துவந்தான் ஆமாகில் தன்றிருத்தாள் வாடத் தருமமோ அம்மானை; தருமனையந் நாளுதைத்த தாளன்றோ அம்மானை. (பொ - ரை) நிலைபெற்ற சொக்கநாதன் தன் திருவாலவாய்க் கோயிலை நீங்கி வட திருவாலவாய்க்குச் சென்று இடைக்காடனுக்கு உண்டாகிய மாறுபாட்டை நீக்கி வந்தான் அம்மானை; சென்று இடைக்காடன் மாறுபாட்டை நீக்கி வந்தான் என்றால், தன் திருவடி நடையால் வருந்துதல் தருமமாகுமோ அம்மானை; அத்திருவடி முன்னாளில் எம தருமனையே உதைத்த தன்றோ; ஆதலால், நடையால் வருந்தும் எண்மையானதன்று அம்மானை. (வி - ரை) பிணக்கு - மாறுபாடு; பாண்டியன் இடைக் காடன் பாடலை மதியாமை; தீர்த்து வந்தான்; தீர்த்து உவந்தான்; இருவர் பிணக்குத் தீருங்கால் இடை நின்று தீர்த்தாருக்கு உவப்பு உண்டாமன்றோ! அவ்வுவகை இறைவற்கு உண்டாயிற்றாம். வாடுதல் - வருந்துதல்; இறைவன் தாள் மலரடியன்றே; அதன் மென்மைக்கு இரங்கி வாட என்றார். வாடுதல் மலரின் தன்மை. தருமன் - எமதருமன்; உதைத்ததாள் ஆகலின் வாடாது; உரமிக்கது என்றார். 57. வலைவீசியது (உமையம்மை ஒரு சாபத்தால் பரதவ (மீனவப் பெண்ணாகப் பிறந்தாள்; அவளை மணந்து சாபநீக்கம் தர இறைவன் வந்தான். அவன், கடலில் இருந்த சுறா மீனைப் பிடிக்க வலை வீசினான்) வானோர் தொழுமதுரை வள்ளல் பரவனெனத் தானே வலைவீசும் தண்கடல்வாய் அம்மானை; தானே வலைவீசும் தண்கடல்வாய் ஆமாகில் மேனாள் விருப்பமுண்டோ மீனிலவற் கம்மானை; மீனேகண் ணாள்மனைவி மீனவன்றான் அம்மானை. (பொ - ரை) விண்ணோர் வணங்கும் மதுரைக்கு இறைவனாம் சொக்கநாதன் பரதவன்போலத் தானே குளிர்ந்த கடலில் வலை வீசினான் அம்மானை; தானே குளிர்ந்த கடலில் வலைவீசினான் என்றால், முன்னாளிலேயே மீனில் அவனுக்கு விருப்பமுண்டோ அம்மானை; அவன் மனைவி மீனையே கண்ணாக உடையவள்; அவனோ மீனவனாக வந்தவன்; ஆதலால் அவனுக்கு மீனில் விருப்பமுண்டு அம்மானை. (வி - ரை) பரவன் - பரதவன் (மீன்வலைஞன்); தண்கடல் வாய் - குளிர்ந்த கடலில்; மேல் நாள் - மேனாள்; மீனில் + அவற்கு - மீனிலவற்கு; மீனில் அவற்கு விருப்பம் இருந்தமையாலே தான் மீனாட்சியை மணந்தான் தானும் மீனவனாக (பாண்டியனாக) வந்தான். மேனாள் என்றமையால் பரதவனாக வந்ததற்கு முன்னே நிகழ்ந்ததைக் குறித்தல் வேண்டுமாகலின், பாண்டியனாக வந்தது குறிக்கப்பெற்றது. மீன் நிலவற்கு எனக்கொண்டு பாண்டியனாக வந்த சிவனுக்கு எனப் பொருள் கொள்ளவுமாம். 58. வாதவூரடிகளுக்கு உபதேசித்தது (பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் குதிரை வாங்குவதற்குச் சென்றார். செல்லும் வழியில் திருப் பெருந்துறையில் இறைவன் குருவடிவில் காட்சி வழங்கி அருளுரை வழங்கினான்; வாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டார். வாதவூ ரற்கு மதுரேசர் பெருந்துறையிற் போதவுப தேசம் புகன்றனர்காண் அம்மானை; போதவுப தேசம் புகன்றனரே ஆமாகில் காதலரைத் தங்குருவாக் காண்பரோ அம்மானை; காணார்யார்; தங்குருவாக் காதலரை அம்மானை. (பொ - ரை) திருவாதவூரடிகளாம் மாணிக்கவாசகருக்கு இறைவர் திருப்பெருந்துறையில் ஞானஉபதேசம் செய்தார்காண் அம்மானை; ஞானஉபதேசம் செய்தனரேயானால், தம் மைந்தராம் முருகனைத் தம் குருவாகக் கொள்வாரோ அம்மானை; தம் அறிவறிந்த மக்களைத் தம் குருவாகக் கொள்ளாத பெற்றோர் தாம் எவரோ அம்மானை. (வி - ரை) போத உபதேசம் - ஞானமொழி, அருளுரை; காதலர் - மக்கள்; இதனை விளக்கமாகக் காதற் புதல்வர் என்றும், காதலஞ்செல்வர் என்றும் கூறுவர். சிற்பி தான் செதுக்கிய சிலையைத் தானே வழிபடுவது போலத் தவத்தானும் அறிவானும் முதிர்ந்த மக்களைப் பெற்றோர் மதித்து வழிபடலும் அருளுரை கேட்டலும் கண்கூடாகலின் இவ்வாறு கூறினார். இனிக் காதலரை யார் தங்கு உருவாக் காணார் எனப் பிரித்து, எவரும் தம் காதலரைத் திருவுள்ளத்து அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகக் கொள்ளுதலையும் கொள்ளுக. 59. நரி பரியாக்கியது (இறைவன் திருப்பணியில் பொருளைச் செலவிட்ட மாணிக்கவாசகரை அரசன் நெருக்கினான்; சிறையிட்டான்; குதிரை ஆவணி மூலத்தன்று வருமென மணிவாசகர் அரசனுக்கு உரைத்தார். அவ்வாறே இறைவன் காட்டு நரிகளைச் சீரிய பரிகளாக்கிக் கொணர்ந்து காட்டினான்.) பெரியமது ராபுரியிற் பேரானோன் பாண்டியன்முன் நரியைப் பரியாக்கு நற்றொழிலோன் அம்மானை; நரியைப் பரியாக்கு நற்றொழிலோன் ஆமாகில் அரியவித்தை கற்றவனுக் கன்னமரி தம்மானை; அன்னமொரு பக்கத் தமருமவற் கம்மானை. (பொ - ரை) பெருமைமிக்க மதுரையில் பேர்பெற்ற சொக்கநாதன் பாண்டியவேந்தன் முன் நரிகளைப் பரிகளாக்கும் நல்ல வித்தைக் காரனானான் அம்மானை; நரிகளைப் பரிகளாக்கும் நல்ல வித்தைக்காரனானால், அத்தகைய அரிய வித்தை கற்றவனுக்கு அன்னம் கிடைப்பதே அரிதாகுமே அம்மானை; ஆமாம்; ஆனால் அவனுக்கு அந்நிலைமையின்று; அன்னம் போன்ற உமையே அவன் ஒரு பக்கத்து அமர்ந்திருக்கும்போது அன்னம் அரிதன்றாம் அம்மானை. (வி - ரை) அரியவித்தை கற்றவனுக்கு அன்னம் அரிது என்பது ஒரு பழமொழி. நீங்காத தரித்திரம் உடையவர் அவரெனத் தனிப்பாடல் கூறும். ஆனால் அறம் வளர்க்கும் அன்னமாம் உமையோடிருப்பவனுக்கு அன்னம் அரிதோ என்றார். அன்னம் அரிது - அன்னம் காணல் அரிது; அன்னமாகப் பறந்த நான்முகனால் காணல் அரிது; அன்னம் - சோறு; அன்னம் போல்வாள். 60. பரி நரியாக்கியது (இறைவனால் பரியான நரிகள் அன்றை இரவில், மீட்டும் காட்டு நரிகளாகச் சென்றதைக் கூறுவது) விரித்தபுகழ் ஆலவாய் மேவுசுந்த ரேசர்பெரும் பரித்திரளைத் தாநரியாப் பண்டுசெய்தார் அம்மானை; பரித்திரளைத் தாநரியாப் பண்டுசெய்தார் ஆமாகில் மரித்தலிலா வாசியையேன் மாய்வித்தார் அம்மானை; மாயத்தான் யாவும் வகுத்தனர்காண் அம்மானை. (பொ - ரை) பரவிய புகழுடைய திருவாலவாயில் கோயில் கொண்ட சொக்கர், குதிரைக் கூட்டத்தைத் தாவும் நரிகளாக முன்னாளில் செய்தார் அம்மானை; குதிரைக் கூட்டத்தைத் தாவும் நரிகளாகச் செய்தாரெனில், சாதல் இல்லாத மற்றைக் குதிரைகளையும் ஏன் சாகச்செய்தார் அம்மானை; அவர் சாகச்செய்தனரோ, அல்லர்; அவற்றை எல்லாம் இறந்தனவாக மாயமாகச் செய்து காட்டினார் அம்மானை. (வி - ரை) தாநரி - தாவும் நரி; தாம்நரி; தாநரி; இறைவர் தாம் நரியாகச் செய்தார் என்றுமாம். மரித்தலிலா வாசி (குதிரை) - பாண்டியன் குதிரைக் கொட்டடியில் இருந்த மற்றைக் குதிரைகள். மாயத்தான் யாவும் வகுத்தனர். மாயத்தினாலே எல்லாம் செய்து காட்டினார்; மாயத் தான் யாவும் வகுத்தனர் - இறப்பதற்காகவே எல்லாவற்றையும் படைத்தனர்; வகுத்தான் வகுத்த வகை அது; பிறந்தனயாவும் இறக்கும் ஆதலின் இவ்வாறு கூறினார். 61. மண் சுமந்தது (மாணிக்கவாசகரை வையையாற்றில் சுடுமணலில் கிடத்தி வருத்த, இறைவன் வயையைப் பெருகுவித்தான்; மதுரையில் இருந்த வந்தி என்பாளுக்கு ஆளில்லையாக இறைவனே பிட்டுக்குக் கூலியாளாக வந்து மண் சுமந்தான்.) தண்சுமந்த வையைதனில் சார்ந்துமது ரேசனன்னீர்ப் பெண்சுமந்தோன் மண்சுமந்தான் பிட்டுக்காய் அம்மானை; பெண்சுமந்தோன் மண்சுமந்தான் பிட்டுக்காய் ஆமாகில் மண்சுமந்து மாற்றடியேன் வாய்ந்தனன்காண் அம்மானை மாவினைத்தீ மேலாக்கு வந்திதனால் அம்மானை. (பொ - ரை) கங்கையாகிய நல்ல பெண்ணைத் தலையில் சுமந்த சொக்கநாதன் தண்மையைச் சுமந்துவரும் வையை யாற்றில் பிட்டுக்காக மண் சுமந்தான் அம்மானை; பிட்டுக்காக மண் சுமந்தான் என்றால், அவன் மண்ணைச் சுமந்து பாண்டியனால் பிரம்படியேன் பட்டான் அம்மானை; மாவைத் தீ மேல் வைத்து ஆக்கிப் பிட்டு வாணிகம் செய்யும் வந்தியினால் அம்மானை. (வி - ரை) நன்னீர்ப் பெண் - கங்கையாம் பெண்; பெண்ணைச் சுமந்தவன் மண்ணையும் சுமக்க வந்தான் என நயம் காண்க. சுமக்க வந்த வையையும் தண்சுமந்த வையை எனல் அறிக. மாறு - மிலாறு; வளார்; பிரம்பு. மாவினைத் தீமேல் ஆக்கும் வந்தி தன்னால் - மாவைத் தீமேல் வைத்துப்பிட்டு ஆக்கும் வந்தியினால். மா வினைத் தீ மேலாக்கும் வந்தி - பெரிய வினையாகிய தீயை அழித்து வீட்டின்பத்தை ஆக்கிக் கொள்ளும் வந்தி. மா வினைத் தீ மேலாக்கும் வந்து இதனால் - இறைவன் மண் சுமக்கும் இதனால் பெரிய தீவினையை நீக்கி வந்திக்கு வீடுபேறு தரும்; வந்தி - மலடி; மகப்பேறற்றாள். 62. பாண்டியன் சுரம் தீர்த்தது (திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்தில் சமணர்களால் தீ வைக்கப் பெற்றது. அத்தீயைப் பாண்டியனுக்கு ஆகுமாறு சம்பந்தர் ஏவினார். பாண்டியன் சுரம் கண்டான்; இறைவன் அருளால் சம்பந்தர் பாண்டியன் சுரம் நீக்கினார்.) தேசுமது ரேசன்கூன் தென்னவனுக் கன்றுதவப் பூசுரனா லேசுரநோய் போக்கினான் அம்மானை; பூசுரனா லேசுரநோய் போக்கினான் ஆமாகில் மாசுரநோய் தீர்த்தவன்கூன் மாற்றானோ அம்மானை; மாற்றினான் கூனிலா வமிசமென் றம்மானை. (பொ - ரை) ஒளி வடிவாம் சொக்கநாதன் பாண்டியனுக்கு வந்த சுரநோயை அந்நாளில் தவப்பேற்றால் வந்த திருஞான சம்பந்தரால் போக்கினான் அம்மானை; திருஞானசம்பந்தரால் சுரநோய் போக்கினான் என்றால், கொடிய அச்சுரநோயைப் போக்கிய அவன் பாண்டியன் கூனையும் மாற்றானோ அம்மானை; கூனிலா வமிசம் என்று மாற்றினான் அம்மானை. (வி - ரை) தவப்பூசுரன்; பூசுரன் - அந்தணன்; திருஞான சம்பந்தர்; கூன் - பாண்டியனுக்கு இருந்த கூனல்; கூன் பாண்டியன் என்பது அவன் பெயராயிற்று. கூன் மாறியபின் மாறவர்மன் அரிகேசரி, அழகிய பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பெயர்களைப் பெற்றான். கூனிலா வமிசம் - கூன் இலா வமிசம்; கூனல் இல்லாத வமிசம்; கூன் நிலா வமிசம் - வளைத்த நிலாவை முதலாகக் கொண்ட வழிமுறை; சந்திர வமிசம்; பாண்டியர் சந்திர குலம் எனல் அறிக. பிறசமயம் புகுந்தான் என்னும் தலைக்குனிவு இல்லாத எனக் குறிப்பதுமாம். 63. சமணரைக் கழுவேற்றியது (திருஞானசம்பந்தர் இறைவன் அருளால் பாண்டியன் சுரம் தீர்த்தார்; சமணர்கள் தோற்றுப் போயினர்; பின்னர் அனல் வாதமும் புனல் வாதமும் நிகழ்ந்தன; அவற்றிலும் தோல்வி கண்டனர் சமணர்; ஆகலின், ஒப்பந்தப்படி அவர்கள் கழுவேற்றப் பெற்றனர்.) அன்றுசொக்கர் மெய்யருள்கண் டஞ்சிக் கழுவேறிப் பொன்றினரெண் ணாயிரம்பேர் பொய்யமணர் அம்மானை; பொன்றினரெண் ணாயிரம்பேர் பொய்யமணர் ஆமாகில் நின்ற அமணருட னீறாமே அம்மானை; நீறானார் நஞ்சுண்டார் நிச்சயத்தில் அம்மானை; (பொ - ரை) மெய்ந்நெறி விடுத்துப் பொய்ந்நெறி போற்றியவராகிய எண்ணாயிரம் சமணரும் அந்நாளில் சொக்கரின் மெய்யருள் வெளிப்பாடு கண்டு அஞ்சிக் கழுவில் ஏறி இறந்தனர் அம்மானை; எண்ணாயிரம் சமணரும் இறந்தன ரென்றால், அவர் போக எஞ்சியிருந்த சமணர் உடல் திருநீறு தாங்கியிருக்குமே அம்மானை; நஞ்சு உண்டவராகிய சிவனாரே முழு முதல்வர் என்னும் உறுதிப் பாடறிந்ததனால் திருநீற்றுக் கோலம் கொண்டனராம் அம்மானை. (வி - ரை) நின்ற - கழுவில் நின்ற; இறவாமல் இருந்த; பொன்றினர் - இறந்தனர்; நீறாமே - நீறு ஆமே; சாம்பல் ஆகுமே; திருநீறு அணிந்த கோலம் ஆகுமே; நிச்சயம் - உறுதி; சிவமே மெய்ப்பொருள் என்னும் உறுதி. அமணர் - சமணர்; அம்மணர் என்னும் சொல்லின் தொகுத்தல். மதுரைக்கு மேல் பாலுள்ள மலையொன்றன் பெயர் அமணர் மலை என வழங்குவதறிக. அனல் வாதம் - தீயில் ஏடு எரியா திருத்தல்; புனல் வாதம் - நீரில் ஏடு எதிர்த்துச் செல்லுதல். 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்தது (திருப்புறம்பயத்தில் ஒரு திருமணத்தை நிகழ்த்தி வைத்தார் திருஞானசம்பந்தர். அப்பெண்ணைக் கண்டதும், மூத்தாள் அவள் திருமணம் முடியாமல் வந்து சேர்ந்தவள் என வசை புகன்றாள். இறைவன் அருளால், திருமணம் நடந்த திருப்புறம் பயக்கோயிலில் இருந்த வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவை முன்னே வந்து நின்று திருமணச் சான்று கூறின.) சொன்னவணி கக்கொடிக்காச் சொக்கேசர் அங்கழைத்தார் வன்னி கிணறிலிங்கம் மாமதுரைக் கம்மானை; வன்னி கிணறிலிங்கம் மாமதுரைக் காமாகில் பன்னினர்தூ தேனோ பரவைமுன்சென் றம்மானை; பரவையே ழோடிவரப் பார்த்ததுமுண் டம்மானை. (பொ - ரை) பெற்றோரால் உறுதி சொல்லப்பட்ட வணிகப் பெண்ணுக்காகச் சொக்கநாதர் திருமணச் சான்றாகத் திருப்புறம் பயத்தில் இருந்த வன்னி கிணறு இலிங்கம் ஆகிய வற்றை மதுரைக்கு அழைத்தார் அம்மானை; அவற்றை மதுரைக்கு அழைத்தாரானால், அத்தகைய செயல்வல்ல அவர் சுந்தரருக் காகப் பரவையாரிடத்துத் தாமே நடந்து சென்று தூது ஏன் கூறினார் அம்மானை; ஒரு பரவை என்ன அவர் கட்டளை யிட ஏழு பரவையுமே (கடலுமே) ஓடிவரக் கண்டது உண்டு அம்மானை. (வி - ரை) பன்னினர் தூது - (தூது பன்னினர்) தூது உரைத்தனர்; பரவை - பரவையார், கடல்; இக்கதை ஏழு கடலழைத்த திருவிளையாடலில் கண்டது. பரவையாரிடம் தூது சென்றதை முன்னும் கூறினார். (47) சொன்னம் - பொன்; சொன்ன வணிகர் - பொன் வணிகருமாம். திருநெல்வேலி நாகலிங்கப் பிள்ளை இயற்றிய மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானையும், புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய பொழிப்புரை விளக்கவுரைகளும் முடிந்தன. செய்யுள் முதற்குறிப்பு (எண்: செய்யுளெண்) அரியமரர் 40 துன்னியசீர் 46 அலராயிரந்தார் 31 தென்மதுரை 7 அன்று சொக்கர் 63 தேசு மதுரேசன் 62 அன்னக்குழா 8 தேனார்கடம்ப 1 அன்னமளி 38 தொண்டர் சனனக் 18 ஆசையமு 55 தொண்டர்பணி 3 ஆபாவி 26 நம்பன்மது 15 ஆற்றுமது 44 நல்கவென 52 ஈசர் சொக்கர் 36 நான்காரணப் 16 உண்மைகரிக் 47 நின்ற சொக்கன் 56 ஊழ்வளை 37 நின்ற மதுரேச 15 ஏழுமதுரை 23 நின்றெனையாளும் 45 ஓர் மதுரை 12 நீடுகயற் 32 கருணைநிறை 51 படிபுரந்த 14 கல்லாடர் 21 பண்டோர்சொக் 49 காக்குமருட் (காப்பு) பாடுபெறு 24 காணிக்கடவுள் 17 புவிபுகழ் 34 கான்மாலைச் 19 பெரிய மதுரா 59 கொத்தலங்கல் 27 பெரும்பணி 2 சிதம்பரம்போல் 6 பையரவம் 13 சொக்கன் 43 மக்கள் புகழ் 11 சொக்கேசன் 53 மந்திரவேதத் 50 சொன்னமதில் 35 மழைக்கடலிற் 10 சொன்னவணிகக் 64 மின்னார் மணி 48 சோமனணி 39 வண்டுறைதார் 9 தண்கலந்த 61 வழிக்கொண்ட 25 தலத்துறை 54 வாதவூரற்கு 58 தாயைப்போல் 29 வாரணத்தை 42 திக்கெலாம்5 வாழுமதுரேசர் 30 திகழுமதுரை 4 வானோர் 57 திகைத்தவரை 20 விரித்தபுகழ் 60 திசையோர் 41 வென்றிமருவார் 28 திருத்தமது 33 மீனாட்சியம்மை குறம் - இரட்டை மணிமாலை குமரகுருபரர் வரலாறு திருநெல்வேலி மாவட்டத்தில் திருவைகுந்தத்தை அடுத்துக் கைலாசபுரம் என வழங்கப்பெறும் சிற்றூரில் சைவவேளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரும் சிவகாம சுந்தரி அம்மையாரும் ஆற்றிய நற்றவப் பயனால் குமரகுருபரர் அவர்கட்கு மைந்தராய்த் தோன்றினார். அவர் பிறந்த நாள்முதல் ஐந்து அகவை வரையில் வாய்பேசாது ஊமையாய் இருந்தார். அது கண்ட பெற்றோர் மனம் வருந்தித் தமக்கு உறுதுணையாகிய திருச்செந்தூர் முருகப்பெருமான் திருமுன் சென்று வழிபட்டுத் தம் குறையைத் தெரிவித்து அருள்புரிய வேண்டினர். முருகப்பெருமான் அருளால் அக் குழந்தை அப்பொழுதே வாய் திறந்து அங்கிருந்தோர் வியப்புறும் வண்ணம் முருகனைப் போற்றிப் பாடியது. அதுவே கந்தர் கலிவெண்பா ஆகும். பெற்றோர் மகிழ்ந்து பெருமானை வழிபட்டனர். பின்னர்க் குமரகுருபரர் வளர்ந்து இளைஞரான பின் தம் பெற்றோரிடம் விடைபெற்றுப் பல திருப்பதிகட்குச் சென்று வழிபட்டார். இவர்தம் கல்வி அறிவும் கவிபாடும் திறமும் கண்டு இவரை மக்கள் வரவேற்றுச் சிறப்புச் செய்தனர். மதுரை மன்னர் திருமலை நாயக்கரும் சிறப்புச் செய்து பல பரிசுகளை வழங்கினார். அதன்பின் அடிகள் தருமபுரத்துத் தலைவராக விளங்கிய மாசிலாமணி தேசிகரை வழிபட்டு அவருக்கு மாணாக்கரானார். பின்னர்க் காசிமாநகர் சென்று அங்கு ஆட்சிபுரிந்த முகமதிய மன்னரைத் தம் வயப்படுத்தி அவர் அளித்த இடத்தில், இப்போது குமாரசாமி மடம் என வழங்கும் ஒரு மடத்தினை நிறுவினார். சைவ சமயத் தொண்டு செய்து பல ஆண்டுகள் வாழ்ந்து, காசிமா நகரில் வீடுபேறுற்றார். இவர்காலம் ஏறத்தாழ முந்நூறு ஆண்டு கட்கு முற்பட்டதாகும். இவர் இயற்றிய நூல்கள் சொற்சுவையும் பொருட் சுவையும் பெற்று விளங்குவதோடு, திருவருட் செல்வத்தை வழங்கும் சிறப்பும் உடையனவாகும். இவர் இயற்றிய நீதிவெறிவிளக்கம், சகல கலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல்கள் புலவர்களாற் பெரிதும் பாராட்டப்படுகின்றன. தமிழ்மொழியிற் சிறந்த பயிற்சியும் புலமையும் பெற விரும்புவோர் குமரகுருபர அடிகளின் நூல்களை விரும்பிப் படிப்பது இன்றிமையாததாகும். காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூர வல்லிமணங் கமழும் தெய்வத் தார்கொண்ட கருங்குழல்அங் கயற்கண்நா யகிகுறம்செந் தமிழால் பாட வார்கொண்ட புகர்முகத்தைங் கரத்தொருகோட்(டு) இருசெவிமும் மதத்து நால்வாய்ப் போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநா யகன்துணைத்தாள் போற்று வாமே. (தெளிவுரை) மேகம் தவழும் சோலைகளையுடைய மதுரையில் எழுந்தருளிய கர்ப்பூரக் கொடி போன்றவளும், மணம் கமழும் தெய்வத் தன்மை வாய்ந்த மாலையை அணிந்த கரிய கூந்தலையுடையவளும், அங்கயற்கண்ணி என்னும் பெயருடையவளும் ஆகிய ஒப்பற்ற தலைவியின் பெயரால் குறம் என்னும் நூலைச் செவ்விய தமிழால் யாம் பாடுதற்கு நெடுமை யமைந்த, புள்ளிகளையுடை முகத்தையும் ஐந்து கைகளையும் ஒரு கொம்பையும் இரண்டு செவிகளையும் மூன்று மதங்களையும் தொங்கும் வாயையும் பொந்துபோல் அமைந்த கன்னத்தையும் சிறிய கண்களையும் உடைய சித்தி விநாயப் பெருமானின் இரண்டு திருவடிகளையும் போற்றுவேம். (அருஞ்சொற் பொருள்) கார் - மேகம்; பொழில் - சோலை; தார் - மாலை; குழல் - கூந்தல்; வார் - நீண்ட; புகர் - புள்ளி; கோடு - கொம்பு; நால்வாய் - தொங்கும் வாய்; போர் - பொந்து; கவுள் - கன்னம்; துணை - இரண்டு. அங்கயற்கண் நாயகி: அன்னையின் பெயர். சித்திவிநாயகன்: மதுரைத் திருக்கோயில் விநாயகர் பெயர். சிந்து 1. பூமருவிய பொழில்திகழ் மதுரா புரிமருவிய அங்கயற்கண் அம்மை மேதருவிய மதிதவழ் குடுமித் தென்பொதியக் குறத்திநான் அம்மே. (தெ - ரை.) அம்மே நான், பூக்கள் பொருந்திக் கிடக்கும் சோலைகள் விளங்கும் மதுரைத் திருநகரில் கோயில் கொண்ட அங்கயற்கண் அம்மையின், தெய்வத் தன்மை வாய்ந்ததும் மதியம் தவழும் முகடுகளையுடையதும் ஆகிய தென்பொதிய மலைக் குறத்தியாவேன். அம்மை பொதியம் என இயைக்க, குறி சொல்பவள் குறி கேட்கும் தலைவியிடம் தன் இருப்பிடம் கூறியது இது. மேல் வருவனவும் (2, 3) இதுவே. (அ - ள்.) மருவிய - பொருந்திய; குடுமி - சிகரம், முகடு; தென் - அழகு; தெற்குமாம். 2. செந்நெல் முத்தும் கன்னல்முத் தும்ஒளி திகழ்மதுரை அங்கயற்கண் அம்மை பொன்னுமுத்தும் சொரியும்வெள் அருவிப் பொதியமலைக் குறத்திநான் அம்மே. (தெ - ரை.) அம்மே நான், செந்நெல் தந்த முத்தினாலும் கரும்பு தந்த முத்தினாலும் ஒளிவிளங்கும் மதுரை அங்கயற்கண் அம்மையின், பொன்னும் முத்தும் அள்ளிவீசும் தூய அருவி களையுடைய பொதியமலைக் குறத்தி யாவேன். (அ - ள்.) கன்னல் - கரும்பு; நெல்லிலும் கரும்பிலும் முத்துப் பிறக்கும் என்பது இலக்கிய வழக்கு. நெல், கரும்பு முதலிய வற்றின் முத்துகளைக் கூறியமையாலே சங்கு தந்த முத்துக்கள் கிடத்தல் கூறாமலே அறியப் பெறும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 3. செண்டிருக்கும் வடவரையில் சேவிருக்கும் அரசிருக்கும் தென்னர் ஈன்ற கண்டிருக்கும் மதுரமொழிக் கனியிருக்கும் துவரிதழ்அங் கயற்கண் பாவை வண்டிருக்கும் நறைக்கமல மலரிருக்கும் பரிபுரத்தாள் மனத்துள் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்முனிவன் குடியிருக்கும் பொதியமலைக் குறத்தி நானே. (தெ - ரை.) அம்மே, கரிகால் சோழனால் அறையப்பட்ட செண்டின் அடையாளம் இருக்கும் இமயமலையில் மீன் அடையாளம் பொறித்து வைத்து ஆட்சிபுரியும் பாண்டியர் பெற்ற கற்கண்டு போன்ற இனிய மொழியையும், கொவ்வைக் கனி குடியிருந்தாற் போன்ற செவ்விதழையும் உடையவளும் அங்கயற்கண்ணி என்னும் திருப்பெயருடையவளும் ஆகிய அம்மையின் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்போன்ற சிலம்பணிந்த திருவடிகளைத் தன்மனத்துள் வைத்திருக்கும் அகத்திய முனிவன் குடியிருக்கும் பொதியமலைக் குறத்தி நான். (அ - ள்.) செண்டு - ஒரு கருவி; கோடரி போன்றது; சேல் - மீன்; தென்னர் - பாண்டியன்; கண்டு - கற்கண்டு; மதுரம் - இனிமை; துவர் - செம்மை. பவழம்; நறை - மணம், தேன்; கமலமலர் - தாமரை மலர்; பரிபுரம் - சிலம்பு; தாள் - திருவடி; தமிழ் முனிவன் - அகத்திய முனிவன். பாவை பரிபுரத் தாள் மனத்துக் கொண்டிருக்கும் முனிவன் மலைக்குறத்தி நான் என இயைக்க. சிந்து 4. மங்கை குங்குமக் கொங்கை பங்கயச் செங்கை அங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள் பங்க னைக்கழல் அங்க னைச்சொக்க லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே. (தெ - ரை.) கொல்லிப் பாவை போன்றவளே, நீ மங்கையும் செஞ்சாந்து அணிந்த மார்பினளும் செந்தாமரை மலர் போன்ற கையினளும் கயல்மீன் போன்ற கண்ணினளும் மறைநூல்களால் பாடப்படுபவளும் ஆகிய மீனாட்சியம்மையை இடப்பாகமாகக் கொண்ட கழலும் எலும்புமாலை அணிந்த சொக்கலிங்கப் பெருமானைக் கூடி இன்புறுவாய். இது குறத்தி தலைவிக்குக் கூறிய குறியாகும். மேல் வருவதும் இது. (அ - ள்.) குங்குமம் - செஞ்சாந்து; பங்கயம் - தாமரை; மறை - வேதம்; பண் - இசை; பங்கன் - கணவன்; அங்கன் - எலும்பு மாலை அணிந்தவன். அமரர் உடலினின்று கழன்ற எலும்பு மாலையை இறைவன் அணிந்தான் என்பது கதை. சொக்கலிங்கன், மதுரையில் கோயில் கொண்ட இறைவன் திருப்பெயர். மேவுதல் - அடைதல், பொருந்துதல். கொல்லிப் பாவை - கொல்லிப் பாவை போன்ற தலைவி. சிந்து (வேறு) 5. வஞ்சி யேஅப ரஞ்சி யேமட மயிலே வரிக்குயிலே கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவார் இனியம்மே. (தெ - ரை.) அம்மே, வஞ்சிக் கொடி போன்றவளே, உருக்கிவிட்ட பொன் போன்றவளே, மெல்லிய மயில் போன்ற வளே, இசைபாடும் இனிய குயில் போன்றவளே இனிச் சொக்க நாதர் உனைக் கொஞ்சிக் கூடுவார். (அ - ள்.) வஞ்சி - வஞ்சிக்கொடி; அபரஞ்சி - உருக்கிவிட்ட பொன்; மடம் - மென்மை; வரி - இசைப்பாட்டு; அழகுமாம்; பழியஞ்சியார் : பெயர், சொக்கநாதர். அம்மே பழியஞ்சியார் உனைக் கொஞ்சியே கூடுவார் என இயைக்க. சிந்து (வேறு) 6. புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை பொற்கோலம் இட்டுநிறை நாழி வையாய். (தெ - ரை.) அம்மே, புழுகி (புனுகி)னால் தரையை மெழுகு; பிள்ளையார் பிடித்துவை; அழகிய கோலம் இட்டு; நிறைநாழியும் வைப்பாயாக. (அ - ள்.) பொன் - அழகு; நிறைநாழி - நெல் நிறைத்து வைக்கப் பெற்ற நாழி. நாழி - முகத்தலளவைக் கருவிகளுள் ஒன்று. இது குறிகூறும் களம் அமைக்கக் கூறியது. சிந்து (வேறு) 7. ஆழிகைதா அழகாரும் அங்கயற்கண் அம்மைபங்கர் அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி அம்மே. (தெ - ரை.) அம்மே, மோதிரம் அணிந்த கையைத் தா; அழகமைந்த அங்கயற்கண் அம்மையை இடப்பாகங் கொண்ட அழகிய சொக்கநாதர் உன்னிடம் வந்து அருள் செய்வார். (அ - ள்.) ஆழி - கணையாழி, மோதிரம்; கை தா என்றது குறிபார்த்துக் கூறுதற்குக் கையைக் காட்டுதல் வேண்டி; அழகு ஆரும் - அழகு அமைந்த; உன்பால் மருவி - உன்னிடம் வந்து, அம்மே, சொக்கர் உன்பால் மருவி அருள்புரிவர் என இயைக்க, ஆழிக்கை என்பது ஆழிகை என நின்றது. இதுவும் குறி கூறியது. சிந்து (வேறு) 8. பேசும் என்குறி மோசம் என்றிடில் ஆர்சொ லும்பரி யாசமே வாச மென்குழலாய் சவுந்தர மாறர் வந்தணை வாரமே. (தெ - ரை.) அம்மே, கூறும் என் குறி பொய்யாம் எனில் எவர் சொல்லும் நகைப்புக் குரியதேயாம். மணமிக்க மெல்லிய கூந்தலையுடையவளே! சுந்தர பாண்டியராம் சிவபெருமான் உன்னை வந்து கூடுதல் உறுதியாம். (அ - ள்.) ஆர் சொலும் - எவர் சொல்லும் சொல்லும். சவுந்தரமாறர் - சுந்தர பாண்டியர், சௌந்தர பாண்டியர். சிவபெருமான் சுந்தர பாண்டியராகத் திருவவதாரம் செய்தது குறித்தது. அமே - அம்மே. சிந்து (வேறு) 9. நங்கை நீகரு துங்கறி சொல்லவுன் செங்கை தனைக்கொடு வாஎங்கள் அங்க யற்கண்ணி பங்கர் அருட்சொக்க லிங்கர் இனிஅணை வார்அம்மே. (தெ - ரை.) பெண்டிருள் சிறந்தவளே, நீ எண்ணும் குறியை யான் சொல்லுமாறு உன் சிவந்த கையைக் கொண்டுவந்து காட்டு; எங்கள் அங்கயற் கண்ணியின் கணவராய அருளாளர் சொக்கலிங்கப் பெருமான் விரைவில் உன்னைக் கூடுவார் அம்மா. (அ - ள்.) கொடுவா - கொண்டுவா. அணைவார் - கூடுவார். சிந்து (வேறு) 10. தூசும்ஒரு காசும்வைஉள் நேசம்வர வேசொல்லநான் ஈசர்கயி லாசர்மது ரேசர்உனைச் சேர்வாரம்மே. (தெ - ரை.) அம்மா, உள்ளன்பு பெருக ஓர் ஆடையும் ஒரு காசும் நான் குறி சொல்வதற்குக் காணிக்கையாக வை; இறைவரும் கயிலாயத் துறைபவரும் ஆகிய சொக்கநாதர் உன்னைச் சேர்வார். (அ - ள்.) தூசு - ஆடை; உள்நேசம் வரத் தூசும் காசும் நான் (குறி) சொல்ல வை; மதுரேசர் உனைச் சேர்வர் என இயைக்க. இது குறிபார்க்கக் காணிக்கை வேண்டியது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 11. கைக்குறியின் முகக்குறிநன்(று); இடத்தெழுந்த கவுளிநன்று; கன்னி மார்வந்(து) இக்குறிநன் றென்கின்றார்; இடக்கண்ணும் துடிக்கின்றது; இதன்மேல் உண்டோ? பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடிநீ அங்கயற்கண் பூவை மாதின் மெய்க்குறியும் வளைக்குறியும் முலைக்குறியும் அணிந்தவர்தோள் மேவு வாயே. (தெ - ரை.) இல்லையோ என்னுமாறு அமைந்த மிகச் சிறிய இடையையுடைய பூங்கொடி போன்றவளே, உன் கைக் குறியினும் முகக்குறி நலமுடையது; இடப் புறத்தே எழுந்த பல்லி சொல்லும் நலமுடையது; அன்றியும் தேவ கன்னியர் எழுவரும் வந்து இக்குறிகள் நல்லவை என்று கூறுகின்றார்; இடக் கண்ணும் துடிக்கின்றது; இவற்றின் மேலும் நற்குறிகள் உளவோ? இல்லை. நீ அங்கயற் கண்ணியாகிய பசுங்கிளியின் உடற்குறியும் வளையற் குறியும் மார்புக்குறியும் அணிந்தவராகிய சொக்கநாதரின் திருத்தோளைச் சேர்தல் உறுதியேயாம். (அ - ள்.) கவுளி - பல்லி; கன்னிமார் - சப்த(ஏழு) கன்னியர்; பொய்க்குறிய சிறு மருங்குல் - இல்லை என்று சொல்லுமாறு அமைந்த குறுகிய இடை; பூவை - கிளி; அம்மையைப், பசுங்குதலை மழலைக் கிளியே என அழைக்கும் மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ் (63). இறைவர், அம்மையின் மெய்க்குறி வளைக்குறி முதலியவை பெற்றமை. சீகாளத்திப் புராணம் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது. கொச்சகக் கலிப்பா 12. கடமலைக்கும் வெம்மலையாம் கைம்மலையும் ஆயிரவாய்ப் படமலைக்கும் அரவரசும் பரித்தருளும் பார்மடந்தை குடமலைக்கும் தடமுலையாம் குலமலைகள் இரண்டெனவும் வடமலைக்கும் தென்பொதியும் மலயமலை என்மலையே. (தெ - ரை.) (அம்மே) மதத்தால் அலைக்கப்படும் கொடிய மலை போன்ற திசை யானைகள் எட்டையும், ஆயிரம் என்னும் எண்ணிக்கையுடைய பெரிய படங்களை எடுத்தாடும் ஆதிசேடன் என்னும் பாம்பையும் தாங்கிக் காக்கும் நில மகளின் குடத்தை வருத்தும் பெரிய மார்புகளாம் சிறந்த மலைகள் இரண்டெனக் கூறத்தக்க இமயமலைக்கும் அழகு குடிகொண்ட பொதியமலை என் மலையாகும். (அ - ள்.) கடம் - மதம்; கைம்மலை - யானை; அரவரசு - ஆதிசேடன்; பரிந்து - தாங்கி; தென் - அழகு. இதுவும் குறி கூறுவாள் தன் மலைச் சிறப்புக் கூறியதாம். மேல் வருவனவும் (13 - 16) இது. கொச்சகக் கலிப்பா 13. திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே. (தெ - ரை.) அம்மே, திங்களைத் தன் முகட்டில் முடிபோலச் சூடிக் கொள்ளும் மலை; தென்றற் காற்று இனிது தவழும் மலை; நீர் கொண்ட மேகம் சூழ்ந்து கிடக்கும் மலை; தமிழ் வளர்த்த முனிவனாம் அகத்தியன் வாழும் மலை; அங்கயற்கண் அம்மையின் திருவருட் பெருக்கே பெருகி வழிவதுபோலக் கரைதாவி எழுந்து அருவி பொழியும் மலை பொதிய மலையாகும். அப் பொதிய மலையே என் மலையாகும். (அ - ள்.) புயல் - மேகம்; பொங்கு அருவி - நீர் பொங்கி மேலெழும் அருவி; அருவி தூங்குதல் - அருவி இடையீடின்றிப் பொழிதல். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 14. கன்ன மதம்பெய்)து) உறங்குகொலைக் களிறு கிடந்து பிளிறுமலை; தென்னந் தமிழும் பசுங்குழவித் தென்றல் கொழுந்தும் திளைக்குமலை; அன்னம் பயிலும் பொழியற்கூடல் அறலங் கூந்தல் பிடியாண்ட பொன்னங் குடுமித் தடஞ்சாரல் பொதிய மலையென் மலையம்மே. (தெ - ரை.) அம்மே, காதுகளில் இருந்து மதம் பொழிய உறங்கும் பகையைத் தொலைக்கவல்ல ஆண் யானை படுத்துக் கிடந்து பிளிறுமலை; அழகும் இனிமையும் அமைந்த தமிழ் மொழியும், மிக மெல்லிய இனிய தென்றலாகிய குழந்தையும் தவழும் மலை; அன்னங்கள் நெருங்கி உலாவும் சோலைகளை யுடைய மதுரையில் கோயில் கொண்ட கருமணல் போன்ற அழகிய கூந்தலையுடைய பெண்யானை போன்ற மீனாட்சி யம்மை ஆட்சி செலுத்திய அழகிய பொன் போன்ற முகடுகளை யும் அகன்ற சாரல்களையும் உடைய பொதியமலை என் மலையாகும். (அ - ள்.) கன்னம் - காது; தென்னந் தமிழ் (தென் அம் தமிழ்) தென் - அழகு, இனிமை; பயிலும் - நெருங்கும்; அறல் - மணல்; பிடி - பெண்யானை (மீனாட்சியம்மை); தடம் சாரல் - அகன்ற சரிவு. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 15. மந்தமா ருதம்வளரும் மலைஎங்கள் மலையே; வடகலைதென் கலைபயிலும் மலைஎங்கள் மலையே; கந்தவேள் விளையாடும் மலைஎங்கள் மலையே; கனகநவ மணிவிளையும் மலைஎங்கள் மலையே; ......................... .......................... ............................ ........................... ......................... .......................... ............................ ........................... இந்தமா நிலம்புரக்கும் அங்கயற்கண் அம்மை இன்பமுறும் தென்பொதிய மலைஎங்கள் மலையே. (தெ - ரை.) அம்மே, மெல்லிய தென்றல் காற்று உலாவும்மலைஎங்கள்மலையாகும்;வடமொழியும்தென்மொழியும்இணைந்துவிளங்கும்மலைஎங்கள்மலையாகும்;முருகப்பெருமான்(மயிலேறி)Éளையாடிkகிழும்kலைvங்கள்kலையாகும்;bபான்Kதலாயxன்பான்kÂவகைகளும்விiளயும்மiலஎ§கள்மiலயாகும்..............இ› வுலகைப் பேரருளால் காக்கும் அங்கயற்கண் அம்மை, திருநோக்குக் கொண்டு மகிழும் அழகிய பொதியமலை எங்கள் மலையாகும். (அ - ள்.) மந்த மாருதம் - இளந்தென்றல் காற்று; வளரும் - பெருகும்; கலை - மொழி; கந்தவேள் - முருகன்; கனகம் - பொன்; நவமணி - ஒன்பான் மணிகள்; புரக்கும் - காக்கும்; தென் - அழகு. இப் பாடலின் மூன்றாம் அடி கிடைத்திலது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 16. சிங்கமும் வெங் களிறுமுடன் விளையாடும் ஒருபால்; சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும்அங் கொருபால்; வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்; விடஅரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்; அங்கணமர் நிலம்கவிக்கும் *வெண்கவிகை நிழற்கீழ் அம்பொன்முடி சூடும்எங்கள் அபிடேக வல்லி செங்கமலப் பதம்பரவும் கும்பமுனி பயிலும் தென்பொதிய மலைகாண்மற் றெங்கள்மலை அம்மே. (தெ - ரை.) அம்மே, அழகிய இடமகன்ற நிலத்தை எல்லாம் தன் நிழலால் போர்த்துக் கொண்டிருக்கும் வெண் கொற்றக் குடையின் நிழற்கீழே அழகிய பொன்முடி சூடி ஆட்சி புரியும் எங்கள் மீனாட்சியம்மையின் செந்தாமரை போன்ற திருவடிகளை வணங்கும் அகத்திய முனிவர் தங்கும் அழகிய பொதியமலை எங்கள் மலையாகும்; அப் பொதிய மலையில் சிங்கமும் கொடிய யானையும் இணைந்து ஒரு பக்கத்தே விளையாடும்; சினமிக்க புலியும் மெல்லிய பெண்மானும் கூடி ஒரு பக்கத்தே மகிழும்; கொடிய கரடி மரை என்னும் மானுடன் சேர்ந்து ஒரு பக்கத்தே விளையாடும்; நஞ்சுடைய பாம்பும் அதற்குப் பகையாம் மெல்லிய மயிலும் விரும்பி ஒரு பக்கத்தே விருந்து கொண்டாடும். (அ - ள்.) வெங்களிறு - கொடிய களிறு; ஒருபால் - ஒரு பக்கம்; படம் - மென்மை; இளமையுமாம். மரை - மானின் ஒருவகை; அம் கண்அமர் - அழகிய இடம் அமைந்த; அபிடேக வல்லி - மீனாட்சியம்மை; கும்பமுனி - அகத்தியன்; பதம் - திருவடி; பரவும் - வணங்கும்; காண் - அறிவாயாக. கும்பமுனி பயில்தலும் அன்னை அருள்தலும் மாறுபட்டவையும் கூடி மகிழக் காரணமாயினவாம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 17. கச்சைப் பொருது மதர்த்தெழுந்து கதிர்த்துப் பணைத்த மணிக்கொங்கைப் பச்சைப் பசுங்கொம்(பு) அங்கயற்கண் பாவை பயந்த ஆறிருதோள் செச்சைப் படலை நறுங்குஞ்சிச் சிறுவன் தனக்குப் பெருந்தடங்கண் கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த குறவர் குலம்எம் குலம்அம்மே. (தெ - ரை.) அம்மே, மார்புக் கட்டினைத் தாக்கி அடங்காது எழுந்து நிமிர்ந்து பருத்த அழகிய மார்புகளையுடைய பச்சைப் பசுங்கொடியாகிய அங்கயற்கண் அம்மை பெற்ற பன்னிரு தோளையும் வெட்சி மாலை சூடிய மணமிக்க குடுமியையும் உடைய இளைய முருகனுக்குப் பெரிய அகன்ற கண்ணை யுடைய மழலைச் சிறுமியாம் வள்ளி நாச்சியை மணம் செய்து கொடுத்த குறவர் குலம் எங்கள் குலமாகும். (அ - ள்.) கச்சு - மார்புக்கட்டு; பொருது - போரிட்டு; பணைத்த; பருத்த; மணி - அழகு; பயந்த - பெற்ற; செச்சை - வெட்சிமாலை. குஞ்சி - குடுமி; தடங்கண் - அகன்ற கண்; கொச்சைச் சிறுமி - இளமழலை மொழிபேசும் சிறுமியாகிய வள்ளியம்மை; இது குறி கூறுபவள் தன் குலப்பெருமை கூறியது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 18. கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழும்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலின்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த இயல்பிதுகாண் அம்மே. (தெ - ரை.) அம்மே, வளமான கொடியின் ஆழத்தில் இருக்கும் வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுப்போம்; குறிஞ்சிப் பூவைத் தேர்ந்தெடுத்து முல்லைக் கொடியை நாராகக் கொண்டு தொடுப்போம்; இனிய பழம் பிழிந்த வளமான சாற்றையும் தேனையும் பருகுவோம்; பசுந்தழையால் செய்யப்பட்ட ஆடை யையும் மரப்பட்டையால் ஆகிய ஆடையையும் விருப்பமுடன் உடுத்துவோம்; செம்மையாக விளைந்த தினைமாவுடன் இனிய தேனைக் கலந்து விருந்தினர் உண்ணுமாறு கொடுப்போம்; சினத்தால் தாக்கும் வேங்கைப் புலியின் தோல் ஆகிய படுக்கை யில் படுப்போம்; காலையில் எழுந்து அங்கயற்கண் அம்மையின் காலில் விழுந்து நாங்கள் செய்த பாவத்தை ஒழிப்போம்; இவை எங்கள் குறக்குடிக்குப் பொருந்திய இயல்புகளாம். (அ - ள்.) கல்லி - தோண்டி; தெரிந்து - ஆராய்ந்து; தேறல் - தேன்; வாய்மடுப்போம் - பருகுவோம்; விருந்து - விருந்தினர்; கணி - கண்ணி; வினை - தீவினை, பாவம்; அடுத்த - பொருந்திய. இது குறி கூறுபவள் தன் குடியியல்பு கூறியது. இப் பாடலில் உள்ள இறுதி இயைபு நயம் இன்பூட்டும். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 19. புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை இணங்கும் புதுத்தினைகல் லுரற்பாறை முன்றில்தொறும் உணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோ(டு) உறங்கும் கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந்(து) இறங்கும் சில்வலையும் பல்வாரும் முன்இறப்பில் தூங்கும் சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறும்நின் றேங்கும் கொல்லையின்மான் பிணையும்இளம் பிடியும்விளை யாடும் குறிச்சிஎங்கள் குறச்சாதி குடியிருப்ப(து) அம்மே (தெ - ரை.) புல்லாய் என்னும் மானின் பார்வையை விரும்பத்தக்க புலியின் பார்வை இணங்கச் செய்யும்; புதிதாக விளைந்த தினை, இடித்தற்கு ஆகும் கல்லுரல் அமைந்த பாறையின் முகப்புகள் தோறும் காயும்; கற்குகைகளில் வரிகள் அமைந்த வேங்கைப் புலி காட்டுமானோடு சேர்ந்து உறங்கும்; கரிய மலையில் இருந்து வெண்ணிற அருவி ஒலியோடு ஒழுகி வீழும்; வலைகள் சிலவும், வார்கள் பலவும் குடிசையின் முன் வளையில் தூங்கும்; சிறிய துடிப்பறையும் பெரிய முரசும் திசை தோறும் தொடர்ந்து ஒலிக்கும்; குடிசையின் பின்புறத்தில் பெண்மானும் இளைய பெண் யானையும் கூடி விளையாடும்; இத்தகைய குறிச்சி எங்கள் குறவரினத்தார் குடியிருப்பிடமாகும். (அ - ள்.) புல்வாய் - மானின் ஒருவகை; மூன்றில் - முற்றம்; உணங்கும் - காயும்; விடர் - குகை; வரி - கோடு; கடமான் - காட்டு மான்; கறங்கி - ஒலித்து; சில் - சில; வார் - தோல்வார்; இறப்பு - வளை; ஏங்கும் - ஒலிக்கும்; கொல்லை - வீட்டின் பின்புறம்; பிணை - பெட்டை; பிடி - பெண்யானை; குறிச்சி - குறவர் குடியிருக்கும் ஊர். இது குறிசொல்பவள் தங்கள் குடியிருப்புப்பற்றிக் கூறியது. இதிலமைந்த முரண், நயம் செறிந்தது; இயைபும் இனிது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 20. வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவன்எங்கள் வீட்டில் கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி சீதனமா வழங்கி னாரால் பிள்ளைதனக் கெண்ணெயிலை அரைக்குமொரு துணியிலைஎன் பிறகே வந்த கள்ளிதனைக் கொண்டஅன்றே குறவனுக்கும் எனக்கும்இலை கஞ்சி தானே. (தெ - ரை.) வெள்ளிப் பனிமலையாகிய கயிலாயமலைத் தலைவன் சிவபெருமான் மகனாகிய பழனிமலைக்குரிய முருகன், எங்கள் குடும்பத்தில் மணம் செய்துகொண்ட வள்ளியம்மைக் காகக் குறவர்கள் மலையாட்சியைச் சீதனப் பொருளாக வழங்கினார்கள். அத்தகைய வளமான குறக்குடியில் பிறந்த என் பிள்ளைக்குத் தேய்க்க எண்ணெய் இல்லை; இடுப்பில் கட்டுதற்கு ஒரு துணியும் இல்லை; எனக்குப் பின்னே வந்த இளையவளான வஞ்சகியைக் கொண்டது முதலே என் கணவனாகிய குறவனுக்கும் எனக்கும் குடிக்கக் கஞ்சி தானும் இல்லை. (அ - ள்.) வெள்ளிமலை - கயிலாயம்; வெள்ளிமலைக் குறவன் - சிவன்; பழனிமலைக் குறவன் முருகன், குறவன் என்றது குறிஞ்சி(மலை) நில ஆட்சியுடைமை கருதியது. முருகன் குறவர் மகளை மணஞ்செய்து கொண்ட உரிமை கருதிச் சொல்லப் பட்டதுமாம். சீதனம் - பெண்ணுக்கு அவள் பிறந்த வீட்டார் தரும் பொருள். என் பிறகு வந்தவள் என்றது இளையவளை. இலை - இல்லை. இது தன் குடிப்பெருமையும் தன் குடும்ப நிலையுமாகக் குறத்தி கூறியது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 21. கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று குற்றாலம் ஆப்பனூர் பூவணம்நெல் வேலி ஏடகம்ஆ டானைதிருக் கானப்பேர் சுழியல் இராமேசம் திருப்புத்தூர் இவைமுதலாம் தலங்கள் நாடியெங்கள் அங்கயற்கண் ஆண்டதமிழ்ப் பாண்டி நன்னாடும் பிறநாடும் என்நாட தாகக் காடுமலை யும்திரிந்து குறிசொல்லிக் காலம் கழித்தேன்என் குறவனுக்கும் கஞ்சிவாரா தம்மே. (தெ - ரை.) அம்மே, என் தலைவனாகிய குறவனுக்குக் கஞ்சி காய்ச்சித் தருதலை விடுத்து மதுரை, திருப்புனவாயில், திருக்கொடுங்குன்றம், திருப்பரங்குன்றம், திருக்குற்றாலம், திருஆப்பனூர், திருப்பூவணம், திருநெல்வேலி, திருவேடகம், திருவாடானை, திருக்கானப்பேர், திருச்சுழியல், இராமேச்சுரம், திருப்புத்தூர் ஆகியவை முதலாகிய திருக்கோயில்களை விரும்பி எ;ஙகள் மீனாட்சியம்மை ஆட்சி புரிந்த இனிய பாண்டி நாட்டையும் சேரநாடு, சோழநாடு, தொண்டைநாடு முதலிய நாடுகளையும் என் நாடாக எண்ணிக் காடும் மலையும் அலைந்து குறிசொல்லிப் பொழுது போக்கினேன். (அ - ள்.) பாடு புகழ்பெற்ற பாண்டி நாட்டு பதினான்கு திருக்கோயில்களும் இதில் குறிக்கப்படுகின்றன. கொடுங்குன்று - பிரான்மலை; தான் கணவனுக்குச் செய்யவேண்டிய கடமையை விடுத்து அலைந்ததாகத் தன் குறிசொல்லும் நாட்டத்தை வெளியிட்டாள். நாடி - விரும்பி யடைந்து; பாண்டி நன்னாடும் பிறநாடும் என் நாடதாக என்பதில் யாதானும் நாடாமால் ஊராமால் என்னும் குறள்கருத்து எளிமையாக ஆளப் பட்டுள்ளது. கஞ்சி வாராது - கஞ்சி ஊற்றாமல். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 22. பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடிஎன் பாட்டி பூமகள்மா யவன்மார்பில் பொலிவளென்று சொன்னாள்; மற்றவள்பெண் களில்எங்கள் பெரியதாய் கலைமான் மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள்; பெற்றஎங்கள் நற்றாயும் சுந்தரிஇந் திரன்தோள் பெறும்என்றாள்; பின்எங்கள் சிறியதாய் அம்மே சொற்றகுறிக்(கு) அளவிலைஎம் கன்னிமார் அறியச் சொன்னேன்பொய் அலநாங்கள் சொன்னதுசொன் னதுவே. (தெ - ரை.) அம்மே, பொன்வளையல் பூண்ட வள்ளிக்கு இளையவளாய்ப் பூங்கொடி போன்றவளாகிய என் பாட்டி, திருமகள் திருமால் மார்பில் விளங்குவாள் என்று குறி சொன்னாள்; பின் அப் பாட்டியின் பெண்களில் ஒருத்தியாகிய எங்கள் பெரியதாய் கலைமகள் தாமரைமலரில் வீற்றிருக்கும் நான்முகனார் திருநாவில் வாழ்வாள் என்று சொன்னாள்; எங்களைப் பெற்ற நல்ல தாயும், இந்திராணி இந்திரன் தோளைச் சேர்வாள் என்று சொன்னாள்; அதற்குப் பின்னர் எங்கள் சிறிய தாய் சொன்ன குறிக்கு அளவே இல்லை; இச் செய்திகளை நாங்கள் வழிபடும் தெய்வகன்னியர் அறிய மெய்யாகச் சொன்னேன்; பொய் கூறவில்லை; நாங்கள் சொல்லுவன எல்லாம் மெய்யானவையே. (அ -ள்.) தொடி - வளையல்; பூமகள் - திருமகள்; மாயவன் - திருமால்; கலைமான் - கலைமகள்; மலர் அயன் - நான்முகன்; சுந்தரி - இந்திராணி; சொற்ற - சொன்ன; சொன்னது சொன்னதுவே - சொல்லியவை மெய்யானவையே. குறத்தி தன் முன்னோர் கூறிய குறி பொய்யாமையை எடுத்துரைத்தது இது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 23. முன்னொருநாள் அம்மைதடா தகைபிறந்த நாளின் முகக்குறிகண்(டு) இவளுலகம் முழுநாளும் என்றேன்; பின்னொருறாள் கைக்குறிபார்த்(து) அம்மையுனக்(கு) எங்கள் பிஞ்ஞகர்தாம் மணவாளப் பிள்ளையென்று சொன்னேன்; அன்னையவள் மெய்க்குறிகள் அனைத்தையும்பார்த்(து) உரைத்தேன் ஆண்பிள்ளை உண்டுபிறந்(து) அரசாளும் என்றேன் சொன்னகுறி எல்லாம்என் சொற்படியே பலிக்கும் தொகுத்துநீ நினைத்தகுறி இனிச்சொலக்கேள் அம்மே. (தெ - ரை.) அம்மா, தடாதகைப் பிராட்டி பிறந்த பழைய நாளில் அவள் முகக்குறி கண்டு இவள் உலகம் முழுவதையும் ஆட்சி புரிவாள் என்று குறி கூறினேன்.. அதற்குப் பின்னே ஒரு நாளில் அவள் கைக் குறிகளைக்கண்டு, அம்மையே உனக்கு எங்கள் சிவபெருமானே மணவாளர் என்று கூறினேன். அதற்குப் பின்னர் ஒருநாள், அவள் உடற்குறிகள் எல்லாவற்றையும் கண்டு, அம்மா, உனக்கு ஆண் பிள்ளை பிறக்கும்; அப் பிள்ளை ஆட்சி செய்யும் என்றேன். இவ்வாறு நான் சொன்ன குறிகள் எல்லாம் என் சொற்படியே பலித்தன. ஆதலால் உனக்குக் கூறும் குறியும் பலித்தல் உண்மை. நீ நினைத்த குறிகள் எல்லாவற்றையும் மொத்தமாக நான் கூறக் கேட்பாயாக. (அ -ள்.) தடாதகை - இறைவி, மலயத்துவச பாண்டியன் மகளாகப் பிறந்து பெற்ற பெயர். பிஞ்ஞகர் - சிவபெருமான்; அவர் சௌந்தர பாண்டியனாக வந்து தடாதகையை மணங் கொண்டார்; அவர் பிள்ளை உக்கிர குமார பாண்டியன். இது குறத்தி தன் குறித்திறம் கூறியது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 24. ஒருகாலம் கஞ்சியும்என் குஞ்சுதலைக்(கு) எண்ணெயும்ஓர் உடுப்பும் ஈந்தால் பொருகால வேல்கண்ணாய் மனத்துநீ நினைத்தஎலாம் புகல்வன் கண்டாய் வருகாலம் நிகழ்காலம் கழிகாலம் மூன்றும்ஒக்க வகுத்துப் பார்த்துத் தருங்காலம் தெரிந்துரைப்ப(து) எளிதரிதன்(று) எங்கள்குறச் சாதிக்(கு) அம்மே. (தெ - ரை.) அம்மே, தாக்குதற்கு வரும் காலன் போன்ற வேல் வடிவக் கண்ணுடையாய், ஒரு வேளைக்குக் கஞ்சியும் என் குழந்தை தலைக்கு எண்ணெயும் ஓர் உடையும் தந்தால் நீ மனத்தில் நினைத்தவற்றையெல்லாம் கூறுவேன்; எதிர்காலம் நிகழ்காலம் கடந்தகாலம் ஆகிய முக்காலங்களையும் செவ்வையாக ஆராய்ந்து பார்த்து நன்மைதருங் காலம் தேர்ந்து உரைப்பது எங்கள் குறச்சாதிக்கு எளிது; அரியது அன்று. (அ - ள்.) ஒருகாலம் கஞ்சி - ஒரு வேளைக்கு ஆகும் கஞ்சி; குஞ்சு - குழந்தை; குழந்தையைக் குஞ்சு, குட்டி என்பன வழக்கு. பொரு - போரிடும். எலாம் - எல்லாம்; குறத்தி, முக்காலமும் அறிந்து குறி கூறும் முறைமை குறவர்க்கு எளிது அரிதன்று என்பதால் தங்களினப் பெருமை யுரைத்தாள். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 25. குங்குமம்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையும் காட்டிச் செங்கனக நவமணிகள் திசைநான்கும் பரப்பித் தென்மேலை மூலைதனில் பிள்ளையார் வைத்துப் பொங்குநறு மலர்அறுகோ(டு) ஐங்கரர்க்குச் சாத்திப் புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து மங்கையருக்(கு) அரசிஎங்கள் அங்கயற்கண் அமுதை மனத்துள்வைத்து நினைத்தகுறி இனிச்சொலக்கேள் அம்மே. (தெ - ரை.) அம்மே, செஞ்சாந்தைச் சந்தனக் குழம்புடன் குழைத்துத் தரையை மெழுகிக் கோலமிட்டுக் குங்குலியப் பொடியைக் கனலில் இட்டு நறும்புகை காட்டிச் சிறந்த பொன் முதலான ஒன்பான் மணிகளை நான்கு திசைகளிலும் பரப்பித் தென்மேற்கு மூலையில் பிள்ளையார் வைத்து மணமிக்க நல்ல மலர்களை அறுகம்புல்லுடன் அப் பிள்ளையார்க்குச் சாத்தி, புனுகும் நெய்யும் கலந்து விடப்பெற்ற விளக்கேற்றி, நிறைநாழி வைத்து மங்கையருக்கு அரசியாகிய எங்கள் மீனாட்சியம்மையை மனத்துக்கொண்டு நீ நினைத்த குறியை நான் இனிச் சொல்லக் கேட்பாயாக. (அ -ள்.) கனகம் - பொன்; ஐங்கரர் - பிள்ளையார்; குறிக்களம் அமைப்பும் குறிகேட்பார் அமைதியும் கூறியது இது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 26. முந்நாழி முச்சிறங்கை நெல்அளந்து கொடுவா; முறத்தில்ஒரு படிநெல்லை முன்னேவை அம்மே; இந்நாழி நெல்லையும்முக் கூறுசெய்தோர் கூற்றை இரட்டைபட எண்ணினபோ(து) ஒற்றைபட்ட தம்மே; உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந்(து) உதித்தார்; உனக்கினியெண் ணினகருமம் இமைப்பினில் கைகூடும்; என்னாணை எங்கள்குலக் கன்னிமார் அறிய எக்குறிதப் பினும்தப்பா(து) இக்குறிகாண் அம்மே. (தெ - ரை.) அம்மே, மூன்றுநாழி மூன்றுகை நெல்லை அளந்து கொண்டுவா; சுளகில் ஒரு நாழி நெல்லைக் கொண்டு வந்து முன்னே வை; இந்த ஒரு நாழி நெல்லையும் மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு நெல்லை இரண்டு இரண்டாக எண்ணு. அவ்வாறு எண்ணியபோது ஒற்றைப்பட வந்தது. நினைக்கு முன்னர், வேள்விமலைப் பிள்ளையார் வந்து தோன்றினார். ஆதலால் உனக்கு இப்பொழுதே நீ நினைத்த செயல் நெடிப் பொழுதில் நிறைவேறும். என் தலைமேல் ஆணை; எங்கள் குலத்தார் வணங்கும் கன்னியர் அறிய எந்தக் குறி தவறினாலும் இந்தக் குறி தவறாது; அறிவாயாக. (அ - ள்.) நாழி - ஒரு முகத்தலளவை; சிறங்கை (சிறு அங்கை) சிறிய உள்ளங்கை அளவு; கொடு - கொண்டு; கூறு - பங்கு; உன்னாமுன் - நினையாத முன்னே; இமைப்பு - இமைப் பொழுது; காண் - அறிக. இதனால் குறிபார்க்கும் முறைமை அறியலாம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 27. நெல்லளந் திட்ட போது நிமித்தநன்(று) இடத்தெ ழுந்த பல்லியும் வரத்தே சொல்லும்; பத்தினிப் பெண்கள் வாயால் சொல்லிய வாய்ச்சொல் அன்றித் தும்மலும் நல்ல தேகாண்; அல்லது கிளைகூட் டும்புற்(று) ஆந்தைவீச்(சு) அழகி(து) அம்மே. (தெ - ரை.) அம்மா, நெல்லை அளந்து படைத்தபோது சொகினம் (சகுனம்) நன்று; இடப்பக்கத்தே எழுந்த பல்லி ஒலியும் நன்மை வருவதையே உரைக்கும்; பத்தினிப் பெண்கள் தங்கள் வாயால் சொல்லிய உரையே அன்றி அவர்கள் தும்மிய தும்மலும் நன்மைக்கு அறிகுறியேயாம்; இவற்றை அன்றித் தன் இனத்தை அழைக்கும் புற்றின்மேல் உள்ள ஆந்தையின் ஒலியும் நன்மையானதேயாம். (அ - ள்.) நிமித்தம் - சொகினம்; இதனைச் சகுனம் என்பர். வாயால் சொல்லுதலை விரிச்சி என்பர்; அசரீரி என்பதும் அது. உடல் தோன்றாமல் ஒலிமட்டும் வெளிப்படுவது (அ + சரீரி). வீச்சு - ஒலி. நல்ல குறிகள் இவையென நவில்கின்றது இது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 28. கொண்டுவா அம்மேகை கொண்டுவா அம்மே; கொழுங்கனக நவமணிகள் அளைந்திடும்உன் கையே; வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடும்உன் கையே; வருந்தினர்க்கு நவநிதியும் சொரிந்திடும்உன் கையே; புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடும்உன் கையே; புழுகுறுநெய்ச் சொக்கர்புயம் தழுவிடும்உன் கையே; அண்டர்தம்நா யகிஎங்கள் மதுரைநா யகியை அங்கயற்கண் நாயகியைக் கும்பிடும்உன் கையே. (தெ - ரை.) அம்மே, உன் கையைக் கொண்டு வருவாயாக; சிறந்த பொன் முதலிய ஒன்பான் மணிகளும் அள்ளிமகிழும் உன்கை; வண்டுகள் மொய்த்துச் சுழலும் மலர் பறிக்கவும் வருந்தும் மென்மையினது உன்கை; வருந்தி வந்தவர்க்கு ஒன்பான் மணிகளும் அள்ளி மகழும் உன்கை; தாமரைபோல் மலர்ந்து அழகு விளங்கும் உன்கை; நறுமண நெய்யின் மணம் கமழும் சொக்கநாதர் தோளைத் தழுவி இன்புறும் உன்கை; தேவர்களுக்குத் தலைவியாகிய எங்கள் மதுரைத் தலைவியாம் மீனாட்சியம்மையைக் கும்பிடும் உன்கை.. (அ - ள்.) அளைதல் - அள்ளி எடுத்தல்; என்றது செல்வப் பெருக்கை உரைத்தது; வண்டு சுலா மலர் - வண்டு சுழலும் (மொய்க்கும்) மலர்; வருந்தினர் - இல்லாமையால் வருந்தியவர்; புண்டரிகம் - தாமரை; புழுகு உறுநெய் - செஞ்சாந்து கலந்த நெய்; அண்டர் - தேவர். இது தலைவியின் கையருமை கூறியது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 29. அம்மேநின் செங்கையைநின் கொங்கையில் வைத்ததுதான் அபிடேகக் சொக்கருனை அணைவரென்ற குறிகாண்; இம்மேலைத் திகையினிற்கை எடுத்ததுவும் அவர்தாம் இன்றந்திப் பொழுதினில்வந்(து) எய்துவரென் றதுகாண்; கைம்மேல்கை கட்டியதும் தப்பாமல் உனக்குக் கைகூடும் நீநினைத்த காரியம்என் றதுகாண்; செம்மேனி மணிவயிற்றில் கைவைத்த(து) இனிநீ சிறுவர்பதி னறுவரையும் பெறுவையென்ற தம்மே. (தெ - ரை.) அம்மே, உன் சிவந்த கையை உன் மார்பில் வைத்தாய்; இது வழிபாட்டுக்குரிய சொக்கநாதர் உன்னை வந்து கூடுவார் என்பதை அறிவிக்கும் அடையாளம் என்பதை அறிவாயாக; இந்த மேற்குத் திசையில் நீ கையை எடுத்தாய் (தூக்கினாய்); இஃது அச் சொக்கநாதர் இன்று மாலைப் பொழுதில் உன்னிடம் வந்து சேர்வார் என்பதற்கு அடையாளம் என்பதை அறிவாயாக; உன் கையின்மேல் கையைக் கட்டிக் கொண்டது நீ நினைத்தது தப்பாமல் நிறைவேறும் என்பதற்குரிய அடையாளம் என்பதை அறிவாயாக; நின் சிவந்த திருவுடலின் அழகிய வயிற்றில் நீ கையை வைத்தது இனிச் சிறுவர் பதினாறுபேர் பெறுவாய் என்பதற்குரிய அடையாளமென அறிவாயாக. (அ - ள்.) கொங்கை - மார்பு; அபிடேகம் - வழிபாடு; திகை - திசை; அந்தி - மாலை; மணி - அழகு; சிறுவர் பதினறுவர் என்பது பதினாறுபேறு என்பது மக்கள் பதினாறு பேரையும் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்று. இது தலைவியின் கைக்குறி கண்டு கூறிய குறி. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 30. அங்கைத் தலத்துத் தனரேகை அளவில் செல்வம் தரும்உனது செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற் புயத்தில் சேர்க்குமால்; இங்கிப் படிபுத் திரரேகை எவர்க்கும் இலைஇப் படிதோளில் தங்கும் மறுஅங் கயற்கணம்மை தன்னோ டிருக்கத் தரும்அம்மே. (தெ - ரை.) அம்மே, உன் அழகிய கையிடத்து அமைந்த செல்வரேகை அளவற்ற செல்வம் உண்டு என்பதைக் குறிக்கும். உனது சிவந்த கையின் துடிப்பு, அழகிய சொக்கநாதரின் சிவந்த பொன் போன்ற திருத் தோளில் சேர்வாய் என்பதைக் காட்டும்; உனக்கு இக் கையில் இருப்பது போலப் புதல்வரைக் காட்டும் வரிகள் எவர்க்கும் வாய்த்தன இல்லை; இவ்வாறு அழகாகத் தோளில் விளங்கும் மறு (மச்சம்) மீனாட்சியம்மையுடன் இருக்கும் பேற்றைத் தரும். (அ - ள்.) அங்கை (அம்+கை) - அழகிய கை; அங்கை (அகம்+கை) உள்ளங்கை; தலம் - இடம்; தனரேகை, புத்திரரேகை என்பன ரேகை வகைகள்; துடி - துடிப்பு; இலை - இல்லை; அம்மை தன்னோடு இருத்தல், இறைவரால் விரும்பப் படுதல் குறித்தது. இது ரேகையும் துடிப்பும் மறுவும் கொண்டு கூறிய குறி. சிந்து 31. பொன்பொதியும் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும் தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) பொன்னை மூடிவைத்த வெண்பட்டாடை என்னுமாறு வெண்ணிற மேகத்துடன் தண்ணிய பனிமூடிக் கிடக்கும் அழகிய பொதிய மலையாளும் பெருமகளின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ - ள்.) பொன் - (இவண்) வெண்பொன்னாம் வெள்ளி; வெண்புயல் என்பதை நோக்குக. துகில் - மெல்லிய ஆடை; நான்பாட, பேரைச் சொல்லாய் என இயைக்க. இது முதல் நூன்மூடிய மீனாட்சியம்மையின் புகழ் கூறுவது. 32. பலநதிகள் புணர்ந்தநதி பதியைஅணை யாதவைகைக் குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) பல ஆறுகளும் கூடும் கடலை அடையாத வையையாம் ஆற்றையும், குளிர்ந்த நீர்த்துறைகளையும் உடைய செல்வியைப் பாடுதற்குப் பேரைச் சொல்வாயாக. (அ - ள்.) புணர்ந்த - கூடிய; நதிபதி - கடல்; அணையாத - அடையாத; குலநதி - சிறந்தநதி. 33. அன்பாண்டு கல்வலிதென்(று) அவ்வாபா டியஎங்கள் தென்பாண்டி நாட்டாள்தன் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) அன்புமிகக் கொண்டு கல்வலிது என்று ஔவைப் பெருமாட்டியார் பாடிய பாடலைக் கொண்ட எங்கள் அழகிய பாண்டி நாட்டு அரசியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ - ள்.) அன்பாண்டு (அன்பு ஆண்டு) - அன்பு கொண்டு; வஞ்சி வெளிய என்னும் தனிப் பாடலில், பஞ்சவன்தன் நான்மாடக் கூடலில் கல்வலிது என்று பாடப் பெற்றுள்ளது. தென் - அழகு; இனிமையுமாம். 34. பொன்மாடம் சூழ்ந்தகரும் புயல்அமலன் போர்வைநிகர் பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) பொன் மாடங்களைச் சூழ்ந்த கருமேகம், இறைவன் போர்த்திய யானையுரியாம் போர்வை போல விளங்கும் பன்மாடக் கூடலாம் மதுரை இறைவியின் பெயரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ - ள்.) புயல் - மேகம்; அமலன் - இறைவன்; நிகர் - ஒப்பு; பன்மாடக் கூடல் - மதுரைக்கு ஒரு பெயர். 35. எண்திசைக்கும் வேம்பாய்எம் இறையவர்க்குக் கரும்பாகும் வண்டிசைக்கும் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) எட்டுத் திசைகளிலும் உள்ளவர்க்கும் வேம்பாக இருந்து எம் இறைவராம் சிவபெருமானுக்குக் கரும்பாக இருக்கும், வண்டுகள் பாடும் மாலையணிந்த மீனாட்சியம்மையின் பேரைச் சொல்வாய் நான் பாடுதற்கு. (அ - ள்.) வேம்பு - கசப்பு; கரும்பு - இனிப்பு; சுவைப் பொருள் சுவைத் தன்மையைக் குறித்து நின்றது. தார் - மாலை. வேம்பு கரும்பு என்பன முரண்சுவை தருவன. 36. தினவட்டம் இடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும் கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) நாள்தோறும் வட்டமிடும் கதிரோனின் வலிய குதிரைகளை மண் குதிரைகள் என்னும்படி தூசி பரக்க விரைந்து செல்லும் கனவட்டம் என்னும் தாவும் குதிரையை உடைய பாண்டி மாதேவியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ -ள்.) பருதி - கதிரோன்; பரி - குதிரை; கனவட்டம் - பாண்டியன் குதிரையின் பெயர். மண் தூசி படுதலால் மண் பரிகள் என்னும் படியாயின பகுதிப் பரிகள் என்க. இஃது உயர்வு நவிற்சியணி. 37. திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டும் திறைகொண்ட கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) திசை யானைகள் புறங்கொடுத்து ஓடுமாறு எட்டுத் திசைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கப்பங்கொண்ட வலிய கையையுடைய யானையை மேலேறிச் செலுத்துபவள் ஆகிய மீனாட்சியின் பெயரைச் சொல்லாய் நான் பாடுதற்கு. (அ - ள்.) திக்கு+கயங்கள் - திக்கயங்கள்; திசை யானைகள்; கைக்கயம் - கையையுடைய யானை. 38. ஆன்ஏற்றுங் கொடியானை ஐங்கணையான் வென்றிடஅம் மீன்ஏற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) காளையைத் தன்னிடத்துக் கொண்ட கொடியினனாகிய சிவபெருமானை ஐந்து கணையுடைய மன்மதன் வெற்றி கொள்ள, அந்த மகரமீன் கொடியை உயர்த்தியவளாகிய மீனாட்சியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ - ள்.) ஆன் - இடபம் (காளை.) ஐங்கணையான் - மன்மதன். அவன் கணைகள்; தாமரை, மா, அசோகு, முல்லை, குவளை என்பன. மீன்ஏறு - மகரமீன். 39. இனிஆணை இலைஅரசர்க்(கு) என்றுதிசை எட்டுமொரு தனிஆணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். (தெ - ரை.) இனி மற்றை அரசர்க்கு ஆணையிடும் திறம் இல்லை என்று எட்டுத் திக்கிலும் ஒப்பற்ற தனி ஆணை செலுத்தியவளாகிய மீனாட்சியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு. (அ -ள்.) ஆணை -கட்டளை; ஒரு தனி ஆணை - ஒப்பற்ற ஆணை. ஒரு தனி; ஒரு பொருட் பன்மொழி 40. கருமலையச் செருமலையும் கைம்மலைய மன்னர்தொழ வருமலையத் துவசன்அருள் மடக்கொடியைப் பாடுவனே. (தெ - ரை.) கருக்கலங்குமாறு போர் புரியும் யானைகளை யுடைய அரசர் வணங்குமாறு வரும் மலயத்துவச பாண்டியன் அருளிய மென்கொடி போன்றவளாகிய மீனாட்சியை யான் பாடுவேன். (அ - ள்.) கருமலைய - கருக்கலங்க; செரு மலையும் - போர் புரியும்; கைம்மலை - யானை; மலையத்துவசன் - பாண்டிய வேந்தன். மடக்கொடி - மெல்லிய கொடி. 41. விண்புரக்கும் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ் மண்புரக்கும் அபிடேக வல்லியைநான் பாடுவனே. (தெ - ரை.) விண்ணை அளவும் ஒளியுடைய திருமுடியைச் சூடி வெண்கொற்றக் குடைக்கீழ் இருந்து மண்ணுலகை ஆட்சி புரியும் மீனாட்சியம்மையை நான் பாடுவேன். (அ - ள்.) புரக்கும் - காக்கும்; மௌலி - முடி; மௌலிமுடி என்றது ஒரு பொருள் பன்மொழி. அபிடேகம் - திருமுழுக்கு; ஈண்டும் பட்டாபிடேகம் கொண்ட அரசி என்பதைச் சுட்டியது. 42. வெம்புருவச் சிலைகுனிந்து விழிக்கணைகள் இரண்டெந்தை மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே. (தெ - ரை.) விரும்பத் தக்க புருவமாகிய வில்லை வளைத்து விழியாகிய கணைகள் இரண்டை எம் தந்தையாம் சிவபெருமான் தோளை உருவிச் செல்லுமாறு தொடுத்து எய்த திரண்ட கூந்தலுடைய அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) வெம் - விருப்பம்; சிலை - வில்; எந்தை - எம் தந்தை; மொய்ம்பு - தோள்; மொய்குழல் - திரண்ட குழல்; வண்டுகள் மொய்க்கும் குழல் என்றுமாம். குழல் - கூந்தல். 43. ஊன்கொண்ட முடைத்தலையில் பலிகொண்டார்க்(கு) உலகேழும் தான்கொண்ட அரசாட்சி தந்தாளைப் பாடுவனே. (தெ - ரை.) ஊன் ஒழுகும் நாற்றமுடைய தலை ஓட்டில் பிச்சை கொண்ட பெருமானாம் சிவபெருமானுக்கு, ஏழுலகும் தான் கொண்ட ஆட்சியைத் தந்த அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) முடை - நாற்றம்; பலி - பிச்சை. 44. வானவர்கோன் முடிசிதறி வடவரையில் கயல்எழுது மீனவர்கோன் தனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே. (தெ - ரை.) தேவர் கோமானின் (இந்திரனின்) முடியைச் சிதறச் செய்து இமயமலையில் மீன் பொறியைப் பொறிக்கும் பாண்டியனாம் உக்கிர குமாரனைப் பெற்றெடுத்த தடாதகையாம் அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) வானவர்கோன் - இந்திரன்; வடவரை - வடக்கே உள்ள மலை; கயல் - மீன்; மீனவர் - பாண்டியர்; பயந்த - பெற்ற. 45. கான்மணக்கும் சடைக்காட்டில் கவின்மணக்கும் கடிக்கொன்றைத் தேன்மணக்கும் பிறைநாறும் சீறடியைப் பாடுவனே. (தெ - ரை.) நறுமணம் கமழும் சடைத் தொகுதியில் அழகு விளங்கும் நறுமணக் கொன்றை மலரின் தேன் பரவும் திங்கள் பிறையின் மணம் விளங்கும் சிறிய அடியையுடைய பெருமாட்டி யைப் பாடுவேன். (அ - ள்.) கான் - மணம்; காடு - தொகுதி; கவின் - அழகு; கடி - மணம்; சீறடி - சிறுஅடி. இஃது உமைகொண்ட ஊடலைத் தணிக்க இறைவர் வீழ்ந்து வணங்கியமையால் அவர் திருமுடி அம்மை திருவடியில் பட்டமை குறித்து மொழிந்தது. 46. எவ்விடத்தும் தாமாகி இருந்தவருக்(கு) அருந்தவரும் வெவ்விடத்தை அமுதாக்கும் விரைக்கொடியைப் பாடுவனே. (தெ - ரை.) எங்கும் தாமாக இருந்தவராம் சிவபெரு மானுக்கு அருந்துவதற்காக வந்த கொடிய நஞ்சை அமுதாக்கித் தந்த மணமிக்க பூங்கொடி போன்றவளாம் அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) வெவ்விடம் - கொடிய நஞ்சு; விரை - மணம்; இறைவன் நஞ்சுண்ட போது அது கண்டத்தளவில் நிற்க நிறுத்தியவள் அம்மை என்பது கொண்டு கூறியது. நஞ்சை அமுதாக்கும் என்றது நயம். 47. வைத்தபகி ரண்டமெனும் மணற்சிற்றில் இழைத்திழைத்தோர் பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. (தெ - ரை.) அடுக்கப்பட்ட அண்டங்களாகிய மணற்சிறு வீடுகளைக் கட்டிக் கட்டிப் பெருமானுடன் விளையாடும் பலவாகப் பெய்த வளையல் அணிந்த அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) பகிரண்டம் - பேரண்டம்; சிற்றில் - சிறுவீடு; இழைத்து - கட்டி; பித்தன் - சிவபெருமான். அண்டமும் பகிரண்டமும் படைத்தல் இறைவன் இறைவியர்க்குச் சிறுவீடு கட்டும் சிறுவிளையாட்டு என்றது இது. 48. இலைக்குறியும் குணமுநமக்(கு) என்பார்க்கு வளைக்குறியும் முலைக்குறியும் அணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. (தெ - ரை.) வடிவும் குணமும் நமக்கு இல்லை என்பவராகிய இறைவர்க்கு வளையல் குறியும் மார்புக் குறியும் பதித்த திரண்ட கூந்தல் உடையவளைப் பாடுவேன். (அ - ள்.) இலை என்பதைக், குறி குணம் இரண்டற்கும் கூட்டுக. குறி - பெயருமாம். ஓருருவம் ஒருநாமம் ஒன்றுமில்லார் என்றது கருதுக. பதினொன்றாம் பாடலைப் பார்க்க. 49. ஒன்றாகி அனைத்துயிர்க்கும் உயிராகி எப்பொருளும் அன்றாகி அவையனைத்தும் ஆனாளைப் பாடுவனே. (தெ - ரை.) ஒரு பொருளாகியும், எல்லா உயிர்களுக்கும் உயிராகியும் எப்பொருளும் இல்லாததாகியும், எல்லாப் பொருளும் தானாகியும் நிற்கும் இறைவியைப் பாடுவேன். (அ - ள்.) அனைத்தும் - எல்லாம். அனைத்தும் ஆனாள் - எல்லாமாகியவள்; இறைமை இயல் உரைத்தது இது. 50. பரசிருக்கும் தமிழ்க்கூடல் பழியஞ்சிச் சொக்கருடன் அரசிருக்கும் அங்கயற்கண் ஆரமுதைப் பாடுவனே. (தெ - ரை.) புகழ் குடிகொண்ட தமிழ் மதுரையில் பழியஞ்சி என்னும் பெயர்கொண்ட சொக்கநாதருடன் இருந்து அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியாம் அரிய அமுதைப் பாடுவேன். (அ - ள்.) பரசு - புகழ்; கூடல் - மதுரை; பழியஞ்சி என்றது இறைவர் பெயருள் ஒன்று. முன்னும் (5) கூறினார். வாழ்த்து கொச்சகக் கலிப்பா நீர்வாழி தென்மதுரை நின்மலனார் அருள்வாழி கார்வாழி அங்கயற்கண் கன்னிதிரு அருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி அவன்செல்வம் பெரிதூழி வாழியவே. (தெ - ரை.) நீர் வாழ்க; அழகிய மதுரையில் கோயில் கொண்ட குறையிலா இறைவர் திருவருள் வாழ்க; மழை வாழ்க; அங்கயற்கண் அம்மையின் திருவருள் வாழ்க; சிறந்தவை எல்லாம் வாழ்க; காஞ்சி மாநகர் ஆட்சி புரியும் திருமலை பூபதி என்பான் வாழ்க; அவன் புகழ் வாழ்க; அவன் செல்வம் காலமெல்லாம் வாழ்வதாக. (அ - ள்.) நின்மலர் - களங்கமில்லாத இறைவர்; கார் - மேகம், மழை; சீர் - சிறப்பு; கச்சி - காஞ்சி; திருமலை பூபதி - வள்ளல் பெயர்; பேர் - பெருமை; ஊழி - நெடியதொரு கால எல்லை. செய்யுள் முதற் குறிப்பு (எண் : செய்யுளெண்) அங்கைக் தலத்து 30 அம்மேநின் 29 அன்பாண்டு 33 ஆழிகைதா 7 ஆனேற்றுங் 38 இலைக்குறியும் 48 இனியானை 39 ஊன்கொண்ட 43 எண்திசைக்கும் 35 எவ்விடத்தும் 46 ஒருகாலம் கஞ்சி 24 ஒன்றாகி 49 கச்சைப் பொருது 17 கடமலைக்கும் 12 கருமலையச் 40 கன்னமதம் 14 கார்கொண்ட (காப்பு) கான்மணக்கும் 45 குங்குமம் சந்தனக் 25 கூடல் புனவாயில் 21 கைக்குறியின் 11 கொண்டுவா அம்மே 28 கொழுங்கொடியின் 18 சிங்கமும் வெங் 16 செண்டிருக்கும் 3 செந்நெல் 2 திக்கயங்கள் 37 திங்கள்முடி 13 தினவட்டம் 36 தூசுமொரு 10 நங்கைநீ 9 நீர்வாழி (வாழ்த்து) நெல்லளந்து 27 பரசிருக்கும் 50 பலநதிகள் 32 புல்வாயின் 19 புழுகாலே 6 பூ மருவிய 1 பேசும்எண் 8 பொற்றொடி வள்ளி 22 பொன்பொதியும் 31 பொன்மாடம் 34 மங்கைக் குங்குமக் 4 மந்தமாருதம் 15 முந்நாழி 26 முன்னொருநாள் 23 வஞ்சியே 5 வானவர்கோன் 44 விண்புரக்கும் 41 வெம்புருவச் 42 வெள்ளிமலைக் 20 வைத்தபகிரண்ட 47 மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை நேரிசை வெண்பா 1. கார்பூத்த கண்டத்தெம் கண்ணுதலார்க்(கு) ஈரேழு பார்பூத்த பச்சைப் பசுங்கொம்பே - சீர்கொள் கடம்பவனர் தாயேநின் கண்ணருள்பெற் றாரே இடம்பவனத் தாயே இரார். (தெளிவுரை.) கரு நிறம் அமைந்த கழுத்தையுடைய எம்பெருமானும் சிவனார்க்குப் பதினான்கு உலகங்களையும் படைத்துத் தந்த பச்சைப் பசுங்கொடி போன்றவளே, சிறப்பமைந்த கடம்பு மரம் நிறைந்த மதுரையில் எழுந்தருளிய அன்னையே, நின் திருவருள் பார்வை பெற்ற எவரே தம் இடம் விண்ணுலகமாக இரார். நின் திருவருள் நோக்கம் பெற்ற எவரும் விண்ணுலக இன்பம் பெறுவர் என்பதாம். (அருஞ்சொற்பொருள்.) கார் - எருமை, கறை; கார்பூத்த கண்டம் - நீலகண்டம்; நுதல் -நெற்றி; பார் - உலகம்; கடம்பவனம் - மதுரை; இடம்பவனத் தாயே இரார் - இடம் பவனத்து ஆய் ஏ இரார் எனப் பிரித்துப் பொருள் கொள்க. பவனம் - விண்ணுலகம். இறைவன் திருவருட் சக்தியால் உலகைப் படைத்தான் ஆகலின் அச் சக்தியைப் பார்பூத்த பச்சைப் பசுங்கொம்பு என்றார். கட்டளைக் கலித்துறை 2. இராநின் றதும்சொக்கர் எண்தோள் குழைய இருகுவட்டால் பொராநின் றதும்சில பூசலிட் டோடிப் புலவிநலம் தராநின் றதுமம்மை அம்,மண வாளர் தயவுக்குள்ளாய் வராநின் றதுமென்று வாய்க்கும்என் நெஞ்ச மணவறையே. (தெ - ரை.) என் நெஞ்சாகிய மணவறைக்குள், அம்மை இறைவர் கண் பொத்துதலால் உலகெலாம் இருள் உண்டாகி நிலைபெற்றதும் பின்னர் இறைவரின் எட்டுத் தோள்களும் நெகிழுமாறு இருமலைகள் போன்ற மார்புகளால் தழுவி நின்றதும், ஊடல் கொண்டு அகன்றோடி இன்பம் தந்ததும், இறைவர் பேரருளுக்கு உள்ளாகி அமைந்து நின்றதும், நிலை பெறக் கண்டுகொண்டே களிப்புற எப்பொழுது வாய்க்கும்? (அ - ள்.) இரா நின்றது முதலிய இன்ப விளையாடல்கள் சீகாளத்தி புராணம் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது. இரா - இரவு (இருள்) குவடு - மலை; பொர - போரிட, தழுவ; சில பூசல் - சிறுபூசல் (ஊடல்) சில என்பது சிறுமைப் பொருள் தந்தது. புலவி நலம் - ஊடல் இன்பம். ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின் என்பது திருக்குறள். மணவாளர் - கணவர்; என் நெஞ்ச மணவறை என்று வாய்க்கும் என இயைக்க. நேரிசை வெண்பா 3. மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கள் அடியார்க்(கு) உடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க்(கு) இவைகொல் குணம். (தெ - ரை.) மதம் பெருகிய மூன்று கண்களையுடைய இளமையான யானையாம் மூத்த பிள்ளையாரைப் பெற்று மாடமதுரையிலே இருந்த உள்ளம் கவரும் கள்வியாகிய மீனாட்சியம்மை, பாணபத்திரர் என்னும் இசைவாணருக்கு அடியாராகிய சிவபெருமானுக்கு உடம்பை இரு கூறுபட ஆக்கினாள்; இதனை ஆராய்ந்து பார்த்தால் கொடிபோன்ற அம்மைக்கு (மகளிர்க்கு) அருட்குணம் இல்லை போலும். (அ - ள்.) மழ களிறு - இளைய யானை; மழவும் குழவும் இளமைப் பொருள் என்பது தொல்காப்பியம். கதம்பவனம் - கடம்பவனம். எதுகை நோக்கி ட த வாகத் திரிந்தது. கடம்ப மரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்து இருந்தமையால் மதுரைக்கு அஃதொரு பெயர். மதங்கன் - பாடுவான்; அவன் பாணபத்திரன்; பாணபத்திரனுக்கு அடியாராக வந்து இறைவன் அருளியது, திருவிளையாடற்புராணம் விறகு விற்ற படலச் செய்தியாகும். பண்தரு விபஞ்சி பாண பத்திரன் அடிமை என்றான் என்பது இறைவன் அடியாராகியதைச் சுட்டும். (24) படிமிசை நடந்து பாடிப் பாணன்தன் விறகாள் ஆகி அடிமையென் றடிமை கொண்ட அருள்திறம் என்பது விறகு விற்ற படலத் தொடக்கம். அம்மையின் காதல்திறம் கூறுவார் வஞ்சப்புகழ்ச்சியாய் கொடியார்க் கிலைகொல் குணம் என்றார். இது இரட்டுறலால் கொடிபோன்றவர் என்றும் கொடியவர் என்றும் பொருள் தந்தது. கொடிக்கும் இலைக்கும் உள்ள தொடர்பு, சொல்நயம், இனிக் கொடியார்க்கு இலை கொல் குணம் என உண்மை யுரைத்தமை உயர்நயம் உடையதாம். கொடியார்க்குக் கொல்லும் குணம் இல்லை என்பதாம். கட்டளைக் கலித்துறை 4. குணங்கொண்டு நின்னைக் குறையிரந்(து) ஆகம் குழையப்புல்லி மணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர் பணங்கொண் டிருப்ப தறிந்துகொள் ளாயம்மை பைந்தொடியார் கணங்கொண் டிறைஞ்சும் நினக்குமுண் டாற்பொற் கனதனமே. (தெ - ரை.) அம்மையே. காதற்பெருக்குக் கொண்டு நின்னைப் பணிந்து வேண்டி நின் உடல் தளிர்க்குமாறு தழுவி இன்புற்ற இறைவரது ஒரு பாகத்தைப் பற்றிக் கொண்டாய்; அவ் இறைவர் பணத்தைக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளாய்; பசுமையான வளையல் அணிந்த தெய்வமகளிர் கூட்டம் வணங்கி வழிபடத் தக்க நினக்கும் பொன் முதலிய பெருமைக்குரிய செல்வங்கள் உண்டாம். (அ - ள்.) நின்னிடம் கனதனம் இருப்பதால் இறைவன் பணங் கொண்டிருப்பது அறிந்து கொள்ளாய், என உலகியல் பொருள் வெளிப்படக் கூறினார். ஆனால் இறைவர் பணம் (பாம்பு) அணிந்திருப்பதும், அம்மை கனதனம் (கனத்த மார்பு) கொண்டிருப்பதும் உட்பொருள்களாம். ஆகம் - உடல், மார்பு; புல்லி - தழுவி; மணங்கொண்டவர் - இறைவர்; வாமம் - பாகம்; பணம் - பாம்பு, செல்வம்; தொடி - வளையல்; கணம் - கூட்டம்; கனதனம் - கனத்த மார்பு, பெருஞ்செல்வம். நேரிசை வெண்பா 5. கனமிருக்கும் கந்தரர்க்குன் கன்னிநா(டு) ஈந்தென்? தினமிரப்ப தோவொழியார் தேனே-பனவனுக்காப் பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தால் தாமாறி யாடுவரோ தான். (தெ - ரை.) தேன் போன்ற இனிய அன்னையே, கறை யிருக்கும் கழுத்துடைய பெருமானுக்கு உன் பாண்டி நாட்டு உரிமையை ஈந்ததால் ஆயதென்ன? அவர் நாள்தோறும் பிச்சை யேற்றுத் திரிதலை விடார்; ஓர் அந்தணனுக்காகத் தம் பாடலை விற்றவராகிய இறைவருக்கு உன்னைப் போல் பெருஞ்செல்வம் (பெரிய கொங்கை) இருந்தால் கால்மாறி யாடியிருப்பாரோ? இரார். அவரிடம் பாரத்தனம் இல்லாமையால்தான் கால்மாறி ஆடிக் கொண்டு - கூத்தாடிக் கொண்டு இருக்கிறார் என்பதாம். (அ - ள்.) கனம் - மேகம்; இவண் கறை என்பதைக் குறித்தது. கன்னிநாடு - பாண்டி நாடு. தினம் இரத்தல் - இறைவர் பலியேற்றுத் திரிதல். பனவன் - அந்தணன்; அவனாவான் தருமி; இதனைத் தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் விரியக் கூறும். இறைவன் மாறி யாடியதைக் கால்மாறியாடிய திருவிளையாடலால் அறியலாம். பாரத்தனம் - பெருஞ் செல்வம், பெரிய மார்பு. செல்வம் இல்லாதார் ஆடிப்பிழைப்பர் என்பது குறிப்பு. கட்டளைக் கலித்துறை 6. தானின் றுலகம் தழையத் தழைந்த தமிழ்மதுரைக் கானின்ற பூங்குழல் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய வானின்ற தோர்வெள்ளி மன்றாடும் ஆனந்த மாக்கடலே. (தெ-ரை.) தான் நிலைபெறுதலால் உலகம் செழிக்குமாறு செழித்த தமிழ் மதுரையின், மணம் நிலைத்த அழகிய கூந்தலை யுடைய மீனாட்சியம்மை என்னும் கரிய கண்ணையுடைய செய்ய மீன் நிலையாக உலாவி விளையாடுவது, வானகங்கை அலையுமாறு தெய்வத் தன்மை நிலைத்த வெள்ளியம்பலத்துத் திருக்கூத்தாடும் ஆனந்தப் பெருங்கடலிலேயாம். (அ - ள்.) தான் - மதுரை; தமிழுமாம்; உலகம் தழையத் தழைத்தமை தமிழுக்கும் மதுரைக்கும் தனித்தனி இயைப்பினும் ஆம். கான் - மணம்; பூ - அழகு, மென்மை, பூ; செய்ய மீன் - செம்மையான மீன்; மீனாட்சி. மீன் உலாவி விளையாடுவது வெள்ளி மன்றாடும் ஆனந்த மாக்கடல். விண்ணாறு - வானகங்கை. வெள்ளிமன்று - வெள்ளியம்பலம்; மதுரைத் திருக்கோயிலில் உள்ளது வெள்ளியம்பலம்; இஃது ஐந்து மன்றங்களில் ஒன்று. இப் பாடல் உருவகம். நேரிசை வெண்பா 7. கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி மடந்தை அபிடேக வல்லி - நெடுந்தகையை ஆட்டுவிப்பாள் ஆடலிவட்(கு) ஆடல்வே றில்லையெமைப் பாட்டுவிப்ப தும்கேட் பதும். (தெ - ரை.) கடம்பவனக் கொடியும், வளமான கர்ப்பூரக் கொடியும் மங்கை நல்லாளும், திருமுழுக் காட்டப் பெறும் கொடியும் ஆகிய மீனாட்சியம்மை உயர்வற உயர்ந்த குணங் களால் அமைந்தவராகிய சிவபெருமானை ஆடல் ஆடுமாறு செய்வாள்; அன்றியும் எம்மைப் பாடச் செய்வதும் அதனைக் கேட்பதும் அல்லாமல் வேறு ஆடல்களைத் தானும் செய்யாள். (அ - ள்.) கடம்பவனம் - மதுரை; வல்லி - கொடி; அபிடேகம் - திருமுழுக்கு; நெடுந்தகை - சிவபெருமான்; வல்லி நெடுந்தகையை ஆடல் ஆட்டுவிப்பாள்; எமை பாட்டுவிப்பதும் கேட்பதும் ஆடல்வேறு இவட்கு இல்லை என இயைக்க. கட்டளைக் கலித்துறை 8. பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம மதுமத் தொடும்தம் முடிவைத்த வாமது ரேசரவர் இதுமத்தப் பித்துமன்(று) ஏழைமை முன்னர் இமையவர்கைப் புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே. (தெ - ரை.) தாமரைக் கொடி போன்றவளே, கர்ப்பூரக் கொடி போன்றவளே, நின் திருவடிகளாகிய தாமரை மலர்களை ஊமத்தையுடன் மதுரைப் பெருமான் தம் முடியில் சூடிக் கொண்டவாறு என்ன? இது மதிமயக்கம் கொண்டமையால் உண்டாகிய பித்தும் அன்று; முன்னாளில் தேவர்கள் கொண்டி ருந்த மலையாகி மத்தினை அழகிய வில்லாக எடுத்து முப்புரங் களை அழித்தவராகிய சிவனார்க்கு இஃது அறியாமையேயாம். (அ - ள்.) பதுமம் - தாமரை; வல்லி - கொடி; பாதபத்மம் - திருவடித் தாமரை;வைத்தவா -வைத்தவாறு;மத்தம் -ஊமத்தை;மத்தப்பித்து -மதிமயக்கப்பித்து;ஏழைமை -அறியாமை;சிலை -வில்;மேருமலையைவில்லாகக்கொண்டுமுப்புரங்களைஅழிக்கச்சென்றவர்சிவபெருமான்என்னும் கதையைஉட்கொண்டதுமத்தினைப்.......òuhªjf®¡nfஎன்பJ. புரம் - முப்புரம்; அந்தகர் -அழித்தவர். நேரிசை வெண்பா 9. தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றில் அகமேஎன் நெஞ்சகமே தானால்-மகிழ்நரொடும் வாழாநின் றாயிம் மனைஇருள்மூ டிக்கிடப்ப(து) ஏழாய் விளக்கிட் டிரு. (தெ - ரை.) மீனாட்சியம்மையே, கணவரொடும் ஒன்றி உறைபவளே, நின் தகுதியுடைய சிறிய மனையேஎ‹மனமாகிaஇடமானால்,இ«மdஇருள்மூடி¡கிடக்கின்றது;அம்மையே,இதிšவிளக்கேற்¿வைத்JஇனிJகுடியிருப்பாயாக. (அ - ள்.) கடம்பவனம் - மதுரை சிற்றில் - சிறிய வீடு; அகம் - மனம். அகமே தகும் இல் என இயைக்க. மகிழ்நர் - கணவர்;வாழாநின்றாய்- வாழ்கின்றாய்;ஏழாய்-bபண்ணே,ïtண்மீdட்சியம்மையேஎdவிË.விs¡F - மெய்யறிவாகிய - cள்ளொளியாகியÉsக்கு.cŸbshË És§கப்பெ‰றஉடyமேதெŒவத்திரு¡கோயில் என்f.ஊDட«ò ஆலயம், உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்னும் rன்றோர்âருமொழிfருதத்jக்கன.f£lis¡ fலித்துறை10. இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ் வரைக்கு மலைதென் மலயம தேசொக்கர் வஞ்சநெஞ்சைக் கரைக்கும் கனகள்வி *கர்ப்பூர வல்லிக்குக் கற்பகத்தால் நிரைக்கும்பொற் கோயில் திருவால வாயுமென் நெஞ்சமுமே. (தெ - ரை.) உள்ளங் கவர் கள்வராம் சொக்கரின் காதல் நெஞ்சை உருக்கும் பெரும் கள்வியும் கர்ப்பூரவல்லியும் ஆகிய மீனாட்சியம்மைக்கு முழங்கிச் செல்லும் நதி வையை; விருப்பமிக்க பொய்கை, பொற்றாமரைக் குளம்; மிகக் குளிர்ந்த தமிழை வரையறுத்துக் காட்டும் கலை அழகிய பொதியமலை; பர ஊழிகளில் கலை நலங்களெல்லாம் ஒழுங்காகப் பொருந்த அமைக்கப் பெற்ற அழகிய கோயில் திருவாலவாயும் என் நெஞ்சமுமேயாம். (அ - ள்.) இரைக்கும் - முழங்கும்; ஈர்ந்தண் தமிழ் - மிகக் குளிர்ந்த தமிழ்; வரை - எல்லை; கனம் - பெரிய; நிரைக்கும் - ஒழுங்குறச் செய்யப் பெறும்; கற்பகத்தார் என்பது பாடமாயின் தேவர்கள் என்பது பொருள். திருவாலவாய் - மதுரைக் கோயிலின் பெயர். பாம்பின் வாயால் எல்லை காணப் பெற்ற இடம் என்னும் காரணப் பொருட்டால் இப் பெயர் பெற்றது என்பது திருவிளையாடற் புராணம் திருவாலவாயான படலத்துக் கண்ட செய்தி. நதி, மலை முதலிய பத்துறுப்புகளுள் (தசாங்கங்களுள்) சில கூறியது இது. நேரிசை வெண்பா 11. நெஞ்சே திருக்கோயில் நீலுண் டிருண்டகுழல் மஞ்சேந்(து) அபிடேக வல்லிக்கு - விஞ்சி வருமந் தகாஎன் வழிவருதி யாலிக் கருமந் தகாஎன் கருத்து. (தெ - ரை.) நிலம் (கருமை) என்னும் நிறத்தை உண்டு இருளையே கவர்ந்து கொண்ட கூந்தலாகிய கருமேகத்தை ஏந்திய மீனாட்சி யம்மைக்கு, என் நெஞ்சமே திருக்கோயிலாகும்; அவ்வாறாகவும் எல்லை கடந்து வரும் கூற்றுவனே என் வழியின் படியே நீயும் வருவாயாக; நீ செய்யும் வன்மச் செயல் தகாது; உன் எண்ணம் தான் எதுவோ? கூறுவாயாக. (அ - ள்.) நெஞ்சம் திருக்கோயிலாதலை முன்னரும் (9, 10) கூறினார். மேலும் (15, 17, 20) கூறுவார். நீல் - நீலம் என்பதன் தொகுத்தல்; மஞ்சு - மேகம்; விஞ்சி - (எல்லை) கடந்து; அந்தகன் - இயமன்; இக் கருமம் - நீ எல்லை கடந்து வரும் செயல்; தகா - பொருந்தா; என் - என்ன; அந்தகன் மார்க்கண்டன் மேல் வந்து இறைவன் சீற்றத்திற்கு ஆளாகி அல்லலுற்ற கதையைக் கருதுக. இஃதவன்மேல் கொண்ட அருளால் உரைத்ததென்க. கட்டளைக் கலித்துறை 12. கருவால வாய்நொந்(து) அறமெலிந் தேற்கிரு *கால்மலரைந் தருவால வாய்நின்ற(து) ஒன்றுத வாய்வன் தடக்கைக்குநேர் பொருவால வாய்எட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்ட திருவால வாய்மருந் தேதென்னர் கோன்பெற்ற தெள்ளமுதே. (தெ - ரை.) கரிய பெரிய கையிற்கு ஒப்பாகப் பின்னே தொங்கும் வாலையுடையனவாகிய எட்டு வலிய யானைகளால் தாங்கப் பெறும் அழகிய இந்திர விமானத்தைக் கொண்ட திருவாலவாய்த் திருக்கோயிலில் உறையும் அரிய மருந்தே, பாண்டியன் பெற்ற தெளிந்த அமிழ்தமே, அளவிலா ஆசைகளுக்கு ஆட்படுதலால் பல்வேறு பிறவிகளுக்கு ஆளாகி நொந்து மிக வருந்தும் எனக்குத் திருவடிகளாகிய இரு மலர்களையுடைய ஐந்தருவாகி ஆலமரத்தினிடத்தே நின்ற ஒப்பற்ற பொருளாகிய சிவத்தை அடைந்து இன்புற உதவுவாயாக. (அ - ள்.) கருவாலவாய் - அவாய் கருவால் என மாறி இயைக்க. அற - மிக. மெலிந்தேற்கு - மெலிந்த எனக்கு; மெலிவு - துன்பம்; ஐந்தரு வாலவாய் - ஐந்தரு ஆலவாய்; தடக்கை - பெரிய கை; நேர்பொரு - ஒப்பாகிய; வாலவாய் - வாலையுடையனவாய்; எட்டுப்போர்க் களிறு ஏந்து பொற்கோயில் என்றது இந்திர விமானத்தை; அவ்விமானம் எண் திக்கு யானைகள் ஏந்தி நிற்குமாப் போன்ற அமைப்புடைமை குறித்தது. தென்னர் கோன் - பாண்டியன்; தெள் அமுது - தெளிந்த அமுது. (மீனாட்சி) தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்பது திருவிளை யாடல் புராணம். நேரிசை வெண்பா 13. தென்மலையும் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப் பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா முலைக்குவடு பாய்சுவடு முன்காய மால்அம் மலைக்குவடு அன்றே மணம். (தெ - ரை.) வெள்ளிப் பனிமலைமேல் வீற்றிருக்கும் பொன்மலை போன்றவராகிய சிவபெருமானுக்குப் பொதிய மலையையும், பாண்டித் திருநாட்டையும் உரிமையாய் வழங்கிய பொற்பூங்கொடி போன்ற அம்மையே, நின் பெரிய மார்புகளாகிய மலைகள் அழுந்தலால் பெருமான் மார்பில் காயம் உண்டாயிற்று. ஆனால் அழகிய நின் மார்பாகிய மலைக்குத் தழும்பு உண்டாக வில்லை; திருமணமே கைக்கூடிற்றாம். (அ - ள்.) தென்மலை - பொதியமலை; கன்னித் திருநாடு - பாண்டி நாடு; வெள்ளிமலை - கயிலாயம்; பொன்மலை - (செம்பொன் நிறமுடையவராகிய சிவபெருமான்); பொலம் - அழகு, பொன்; குவடு - மலை; சுவடு - தடம்; வடு - தழும்பு. முலைக்குவடுபாய்சுவடு.....kz«” என்பது காஞ்சிப் புராணம் குழைந்த படலத்தில் விரித்துக்கூறப்பெறு«செய்தியாகும். இதனை முன்னரும் (2) குறித்தார். கட்டளைக் கலித்துறை 14. மணியே ஒருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப் பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும் துணியேன் துணிந்ததைஎன்னுரை¡கேன்மJரைத்திருநா£ டணிaஅனைத்துயிர்¡கும்அdநீஎ‹றறிந்துகொண்டே. (தெ - ரை.) மதுரைத் திருநாட்டின் அணிகலமாக அமைந்தவளே, எல்லா உயிர்களுக்கும் அன்னையாவாய் நீயே என்பதை யான் அறிந்திருந்தும், உன்னைக் கருமணியே என்றும் ஒப்பற்ற பசுமையான மாணிக்கமே என்றும் அரிய அமிழ்தமே vன்றும்ghoப்பணிnaன்;நின்dப்பணிகி‹றபழவoயார்திருக்Tட்டத்தும்செல்nலன்;அவ்விlத்துச்செல்Yதற்கும்நினைîகொŸளேன்;யான் நினை¤ததீயவ‰றைஎல்லhம்எவ்வhறுசொšலவல்லேன். (அ- ள்.) மணி - கண்மணி, கருமணி; மருந்து - அமிழ்து; பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவளுமாம்; என் உரைக்கேன் - என்ன சொல்வேன்; அனை - அன்னை; அனை நீ என்று அறிந்து கொண்டும் பணியேன்; செல்லேன்; துணியேன்; என்னுரைக் கேள் - என முடிக்க. நேரிசை வெண்பா 15. கொண்டைச் செருக்கும் குருநகையும் நெட்டயிற்கண் கெண்டைப் பிறக்கமும் வாய்க்கிஞ்சுகமும் - கொண்டம்மை கற்பூர வல்லி கருத்திற் புகப் புகுந்தாள் நற்பூர வல்லியுமென் நா. (தெ - ரை.) திருக்கூந்தல் பெருமிதமும், ஒளிமிக்க புன்முறுவலும், நெடிய வேல் போன்றதும் கெண்டைமீன் போன்றதுமாகிய கண்ணின் ஒளியும், வாயாகிய முள் முருங்கை மலரும் கொண்டவளாகிய மீனாட்சியம்மை என் உள்ளத்தில் புகுந்த அளவில், நலமிக்க பூரவல்லி என்னும் பெயருடைய கலைமகளும் என் நாவில் புகுந்தாள். (அ - ள்.) செருக்கு - பெருமிதம்; குருநகை - ஒளியுடைய பல்; இவண், நகை புன்முறுவலிப்பைக் குறித்தது; அயில் - வேல்; பிறக்கம் - ஒளி; கிஞ்சுகம் - முள்முருங்கை; அம்மைபுக, பூரவல்லி யும் என்நா புகுந்தாள் என இயைக்க. இறைவியின் திருவருளால் கல்வியும் நிரம்பும் என்பது கருத்தாம்; கொண்ட அம்மை என்பது கொண்டம்மை எனத் தொக்கு நின்றது. கட்டளைக் கலித்துறை 16. நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமழ் உண்டு நயந்தசில பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர் தேவுண் டுவக்கும் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாள் பூவுண்டு நாரொன் றிலையாம் தொடுத்துப் புனைவதற்கே. (தெ - ரை.) எமக்கு நாவுண்டு; நல்ல நெஞ்சும் உண்டு; நயமிக்க தமிழும் உண்டு; விருப்பமிக்க சில பாவகைகளும் உண்டு; பாவினங்கள் பலவும் உண்டு; தன் உடலில் பங்கு தந்து இருக்கும் தெய்வத்துடன் மகிழ்ந்திருக்கும் கடம்பவனத்து வளமிக்க தேனாகிய மீனாட்சியம்மையின் தண்மையான திருவடிகளாகிய தாமரைப் பூக்களும் உண்டு; ஆனால், அம் மலர்களைத் தொடுத்துச் சூடுதற்குரியதாம் அன்பு எனப்பெறும் நார் ஒன்று மட்டும் எம்மிடம் இல்லையாம். (அ - ள்.) பா - பாட்டு; அவை வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. இனி, இசைத்தமிழ்ப் பாக்களுமாம். இனங்கள் - பா வினங்கள்; அவை தாழிசை, துறை, விருத்தம் என்பனவும் கண்ணிகளும், சிந்துகளும் பிறவுமாம். பங்கிற் கொண்டு இருந்ததே - உமை ஒரு பாகராம் சிவபெருமான்; கடம்பாடவி - கடம்பவனம்; பசுந்தேன் - மீனாட்சியம்மை; நார் - அன்புக்கும் தொடுக்கும் நாருக்கும் இரட்டுறல். புனைய நார் இலையாம் என இயைக்க. நேரிசை வெண்பா 17. புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை வனைந்தாளெம் வாயும் மனமும் - தினம்தினமும் பொற்பதமே நாறுமவள்* பூம்பதமன் றேநமது சொற்பதமே நாறும் சுவை. (தெ - ரை.) கடம்பவனத் துறையும் அம்மை, யாம் பாடிய சிலவகைப் பாக்களைப் பரிவுடன் ஏற்றுப் புனைந்தருளினாள்; எம் வாயையும் மனத்தையும் இடமாகக் கொண்டு அழகு செய்தாள்; நாள்தோறும் அவள் திருவடித் தாமரைகள் பொன்னுலக இன்ப மணத்தையே பரப்புவனவாம்; அவளைப் பாடி மகிழும் நம் சொல்லாகிய பதங்களே நறுஞ்சுவை பரப்புவனவாம். (அ - ள்.) புனைந்தாள் - சூடினாள்; பூவை - பெண்; நாகணவாய்ப் பறவை போன்றவளுமாம்; வனைந்தாள் -அழகு செய்தாள்; தினம் தினம் - நாள்தோறும்; பொற்பதம் - பொன்னுலக இன்பம்; நாறும் - மணக்கும்; பூம்பதம் - பூப்போன்ற திருவடி; அன்று, ஏ; அசைநிலைகள்; சொற்பதம் - சொல்லாகிய பதம்; இஃது ஒரு பொருள் பன்மொழி. பூவையைப் பாடுதலால் தம் பாவை மணமிக்கதாகக் குறித்தார். கட்டளைக் கலித்துறை 18. சுவையுண் டெனக்கொண்டு சூடுதி யால்மற்றென் சொற்றமிழ்க்கோர் நவையுண் டெனவற நாணுதி போலு நகைத் தெயின்மூன்(று) அவையுண் டவடொரருட்கூடல் வைகுமம் மேசொற் பொருட்கு எவையுண்டு குற்ற மவையுண்டு நீவிர் இருவிர்க்குமே. (தெ - ரை.) நகைத்தலால் முப்புரங்களை எரித்து அழித்த வராகிய முக்கட் பெருமானின் ஒப்பற்ற திருவருள் வாய்ந்த மதுரை மாநகரில் கோயில் கொண்டுள்ள அம்மையே, யான் பாடும் தமிழ்ப்பாவில் ஒரு குற்றமுண்டெனக் கொண்டு ஏற்பதற்கு நாணுகின்றனை போலும்; சொல்லுக்கும் பொருளுக்கும் குற்றங்கள் எவை உண்டு; உண்டாயின், அச் சொல்லும் பொருளும் வடிவாக இருக்கும் உங்கள் இருவரையும் சேர்ந்த குற்றங்களாம் அல்லவோ? ஆதலால் என் பாடலைச் சுவை உண்டெனக் கொண்டு ஏற்றுக் கொள்வாயாக. (அ - ள்.) சூடுதியால் (ஆல்) - அசைநிலை. நவை - குற்றம்; அற - மிக; எயில் - மதில்; எயில் மூன்று - முப்புரம். உண்டவர் - அழித்தவர் (சிவனார்) வைகும் அம்மே நீவிர் இருவிர் என்றது உமையையும் சிவனாரையும். உமையம்மையும் சிவபெருமானும் முறையே சொல்லின் வடிவாகவும், பொருளின் வடிவாகவும் இருத்தலின் குற்றமவை யுண்டு நீவிர் இருவிர்க்குமே என்றார். அம்மையப்பர் சொற்பொருள் வடிவாக இருத்தல் திருவிளை யாடல் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தால் அறியப்பெறும் செய்தியாம். நேரிசை வெண்பா 19. விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும் கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமால் - தொண்டரண்டர் தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம் பூங்காவில் வீற்றிருந்த பொன். (தெ - ரை.) அடியார்கள் தேவர்களின் இனிய பூங்காவில் அமர்ந்து நீங்கா இன்பத்தில் நிலைத்திருக்க, அழகிய மதுரைக் கண் அமர்ந்த கடப்பஞ் சோலையில் திருக்கோயில் கொண்டி ருக்கும் பொன்னாகிய மீனாட்சியம்மை, மலர்ந்து விரிந்த அழகிய செந்தாமரைப் பூவின்மேல் வீற்றிருக்கும் பொன் ஆகிய திருமகளையும் சிற்றேவல் கொண்டு விளங்குவாள். (அ - ள்.) விண்டு - மலர்ந்து; பொற்கமலம் - அழகிய தாமரை; இது செந்தாமரை; பொன் - இலக்குமியாம் திருமகள்; குற்றேவல் - சிறுசிறு வேலைகள்; தேங் கா - இனிய சோலை; தென்மதுரைப் பொன், பொற்கமலப் பொன்னையும் குற்றேவல் கொள்ளும் என இயைக்க. பொற்கமலப் பொன்னினையும் குற்றேவல் கொள்ளும் என்றமையால் மற்றை மாதரைக் குற்றேவல் கொள்ளுதல் சொல்லாமலே அமைந்தது. கட்டளைக் கலித்துறை 20. பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும் வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் ஐயனொடும் கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. (தெ - ரை.) கற்பூரவல்லியாம் மீனாட்சியம்மை புகுந்த இடம் அடியார் உள்ளமாகிய தாமரையே யாம்; மலையரசன் பெற்ற மகளாகிய அவள் பிறந்த இடமும், மலைச்சுனைக்கண் அமைந்த ஒரு தாமரையேயாம்; அன்புப் பெருக்குடைய கொடியாகிய அவ்வன்னை என் வலிய நெஞ்சத் தாமரையின் கண் எம்பெருமானுடன் மீண்டும் குடிபுகுந்திருக்கும் காரணம் தான் என்னையோ? இவள் வெண்டாமரையில் விளங்கும் அழகிய கலைமகளே போலும்; அன்றிச் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளே போலும்! (அ - ள்.) பொன் - அழகு; பூரவல்லி - கலைமகள்; கமலத்தள் - திருமகள்; கொல் என்பதைப் பூரவல்லி, கமலத்தள் என்னும் ஈரிடத்தும் கூட்டுக; புகுந்த அகம் - புகுந்த மனை; வெற்பு ஊர் அ வல்லி - மலையில் பிறந்த அந்தக் கொடிபோன்றவள்; அது - அத் தாமரை; அற்பு - அன்பு; கஞ்சம் - தாமரை, ஐயன் - இறைவனாம் சிவன்; மீட்டும் குடிபுகுந்தே நின்ற காரணம் என்னே என இயைக்க. முதலீறு (அந்தாதி)த் தொடையால் அமைந்த இந் நூல் கார் எனத் தொடங்கி காரணமே என மண்டலித்து (சுழற்சி யுற்று) முடிந்தது. பாட்டு முதற்குறிப்பு (எண் : gh£bl©)gh£L முதற்குறிப்பு (எண் : பாட்டெண்) இராநின்றதும் 2 இரைக்குநதி 10 கடம்பவன 7 கருவாலவாய் 12 கனமிருக்கும் 5 கார்பூத்த 1 குணங்கொண்டு 4 கொண்டைச் செருக்கும் 15 சுவையுண்டெனக் 18 தகுமே கடம்ப 9 தானின்றுலகு 6 தென்மலை 13 நாவுண்டு 16 செஞ்சே திருக் 11 பதுமத் திருவல்லி 8 புனைந்தாள் 17 பொற்பூரவல்லி 20 மணியே ஒரு 14 மதம்பரவு 3 விண்டிருந்த 19 நூல் விவர பட்டியல் 1 தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி 2 தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி 3 தொகுதி - 3 1. சொற் பொருள் நுண்மை விளக்கம் 4 தொகுதி - 4 1, இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற்று கதைகள் 5 தொகுதி - 5 1.. புறநானூற்றுக் கதை 1 2. புறநானூற்றுக் கதை 2 3. புறநானூற்றுக் கதை 3 4. புறநானூற்றுக் கதை 4 5. புறநானூற்றுக் கதை 5 6. புறநானூற்றுக் கதை 6 7. புறநானூற்றுக் கதை 7 8. புறநானூற்றுக் கதை 8 9. புறநானூற்றுக் கதை 9 10. புறநானூற்றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைட் தமிழ் மன் றங்கள் 13. பெரும்புலவர் மூவர் 6 தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற்றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறத்தராக 8.வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் நல்ல ஊழ் 10. வள்ளுவர் வழியில் குறளாயட் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல ஆட்சியாராக 7 தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 15. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 16. வள்ளுவர் வழியில் நல்ல சான்றோராக 17. வள்ளுவர் வழியில் வினை 18. வள்ளுவர் வழியில் பிறப்பு 19. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 20. வள்ளுவர் வழியில் தவம் 21. மங்கல மனையறம் 22. ஒரு குறள் ஒரு நூல் 1 23. ஒரு குறள் ஒரு நூல் 2 24. ஒரு குறள் ஒரு நூல் 3 25. ஒரு குறள் ஒரு நூல் 4 26. நினைக்கும் நெஞ்சம் 8 தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 9 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் 10 தொகுதி - 10 1. காக்கைப் பாடினியம் 11 தொகுதி - 11 1. களவியற் காரிகை 12 தொகுதி - 12 1. தகடூர் யாத்திரை 13 தொகுதி - 13 1. யாப்பருங்கலம் (பழைய விருட்தியுடன் ) 14 தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களஞ்சியம் 15 தொகுதி - 15 1. தமிழ் வளம் சொல் 16 தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் 17 தொகுதி - 17 1. புறட்திரட்டு 18 தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் 19 தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் 20 தொகுதி - 20 1.கல்விச் செல்வம் 2.இருசொல் அழகு 3.தனிப்பாடல் கனிச்சுவை 4.பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி