இளங்குமரனார் தமிழ்வளம் 36 1. சொல்லியன் நெறிமுறை - அகல் 2. செந்தமிழ்ச் சொல்வளம் 3. வேர்ச்சொல் விரிவு 4. பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் 5. தொல்காப்பியர் காலம் ஆசிரியர் : இரா.இளங்குமரனார் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 36 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 264 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 265/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங் களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் சொல்லியன் நெறிமுறை - அகல் 1. அகல் 1 செந்தமிழ்ச் சொல்வளம் 1. உட்கொளல் கருத்துச் சொற்கள் 45 2. ஒருபொருள் பன்மொழி - அழகு 65 வேர்ச்சொல் விரிவு 1. பர்-பர 87 2. பர்-பரி 110 3. பர் - பரு 128 பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் புகுவாயில் 139 பேரகத்தியத் திரட்டு 141 பேரகத்தியத் திரட்டும் முத்துவீரியமும் - நூற்பா ஒப்படைவு 170 புதிய ஐந்திறம் 185 தொல்காப்பியர் காலம் தொல்காப்பியர் காலம் நூற் கொடைஞர் 208 தொல்காப்பியர் காலம் 209 தமிழ் நெறி காத்த தமிழ்க் காவலர் தொல்காப்பியர் 256 சொல்லியன் நெறிமுறை - அகல் 1. அகல் அகல் என்பது பல பொருள் தரும் ஒருசொல்; அதன் பொருள்கள் அனைத்தும் அகலுதல் அடிப்படையில் அமைந்தவையாம். அகல் வயல் (முருகு. 72), அகல்வானம் (மதுரைக். 32) அகல் யாறு (கலி.34), அகன்மலை (அகம். 171) அகன்மார்பு (புறம். 255), அகனகர் (மணி 28. 198) அகனாடு (புறம். 249), அகல் ஞாலம் (கலி. 39) என வருவனவற்றைக் காண்க. அகல் என்பது பெயர்ச் சொல்லாய், அகன்ற சட்டி, அகல் விளக்கு, அகல் என்னும் ஓர் அளவை ஆகியவற்றைக் குறிக்கும். காரகல் கூவியர் பாகொடு பிடித்த (பெரும். 377) ஐயகல் நிறைநெய் சொரிந்து (நெடுநல். 102) என்பவற்றில் சட்டியும், அகல் விளக்கும் சுட்டப்பெற்றுள. அகல் என்னும் அளவைப் பெயர் ஒன்றை உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். (தொல். தொகை. 28) அகல் என்பது 1அகல்வு, அகலம், அகலுகை, அகற்சி, 2அகற்றம் என்று ஆகியும் அகலுதல் பொருளே தரும். அகலம்: அம் என்னும் சாரியை ஏற்று அகல் என்பது அகலம் என்றாகியும் அகன்மைப் பொருளே தரும். அகலம் என்பது அகலக்கவி, அகலவுரை, மார்பு, விரிவு, நிலம், வானம், பெருமை, அகலுதல் என்னும் பொருள்களைத் தருதல் அறிக: அகலக்கவியாவான், நால்வகைக் கவிகளுள் ஒருவன். அவன் பாடும் அகலக்கவி, பெருங்காப்பியம். உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், பரணி என்பவை ஒன்றற்கு ஒன்று பாடுதல் அருமையன என்றும், யாவையும் பாடிக் கோவையும் பாடுக என்றும் கூறுவர். இவற்றைப் பாட வல்லாரே, பாவேந்தர் வேந்தராய்ப் பாராட்டுப் பெற்றனர். சயங்கொண்டாரும், ஒட்டக் கூத்தரும் கவிச்சக்கரவர்த்தி எனப் புகழ் பெற்றதையும் பாரகாப்பியம் பாடிய கம்பர் இப் பட்டம் பெற்றதையும் கருதுக. இனி, உரைகளுள் சிறப்புப் பெற்றது அகலவுரையாம். குறிப்புரை, சொல்லுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை என்பவற்றுள் பேருரையே அகலவுரையாம். பல்வேறு நயங்களும் விரிந்து, கூற்றும் குறிப்பும் மலிந்து, தடையும் விடையும் செறிந்து, நூலாசிரியர் நுழையாவிடத்தும் நுழைந்து, நுண்பொருள் காட்டி எண்சுவை கெழும எழுதப் பெறுவதே அகலவுரையாம். தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர் - தொல். சிறப்புப். நச். மார்பு: ஓதுதலே தொழிலாகக் கொண்டவர் ஓதுவார் எனப் பெறுவது போலவும், ஓயாமல் ஒலிக்கும் கடல் ஓதம் எனப் பெறுவது போலவும் இடையறாப் பயிற்சி மேற்கொண்டவர் பயில்வான் எனப் பெறுவர். பயில்வானாக விளங்குவோர், உடற்கட்டை உற்றுநோக்குவார் மார்புப் படலத்தையும், வயிற்றுச் சுருக்கத்தையும் கண்டு களிப்பர். பயிற்சி மேம்பாட்டினால் அகன்று விளங்கும் மார்பினை அகலம் என்றது எத்துணைப் பொருத்தமானது. கோயில் சிலைகளையும், குறிப்பாகக் காவல் வீரர் சிலைகளையும் காண்பார் மார்பகலத்தை அல்லது அகல் மார்பை வியவாது இரார். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மார்பினை இடைக்குன்றூர் கிழார். வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள் அணங்கருங் கடுந்திறல் என்னை முணங்கு நிமிர்ந்து அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப் பரும் அகலம், புறம் 78. என மூலப்பொருள் விரித்து முறைபெற உரைத்தார். விற்பயிற்சியால் சிறந்த குகன் மார்பினைக், கண்ணகன் தடமார் பெனும் கல்லினான் என்று கம்பர் உரைத்ததையும் கொள்க. விரிவு: அகல உழுவதினும் ஆழ உழுவதே மேல் என்னும் நாட்டுப் பழமொழி இப் பொருள் தெளிவிக்கும். நிலம், வானம்: பெரிது பெரிது புவனம் பெரிது என்பதாலும் பார் என்னும் சொல் நிலத்துக்கு உண்மையாலும் அகலம் என்பது நிலம் என்னும் பொருள் பெற்றது. நிலத் தடங்கலையும் கவித்து விளங்கும் அகற்சித் தோற்றத்தால் வானும் அகலம் ஆயிற்று. பெருமை: பருமை, அகலம், விரிவு என்பன பெருமைக்குரி யனவாகக் கொள்ளப்பெறுதலின் அகலத்திற்குப் பெருமைப் பொருள் நேர்ந்தது. நின் தோற்றமும் அகலமும் நீரின் உள என்னும் பரிபாட்டானும் (4:30) தோற்றம், வெளிப்படுதல்; அகலம், பெருமை என்னும் பரிமேலழகர் உரையானும் இப்பெருமைப் பொருள் அகலத்திற்கு உண்மை அறியப்பெறும். இனி, அகலப் பண்புச் சொற்களை தொகுத்து, அகறல் பாழி ஆய்வு பரப்பு அகலுள் கண்ணறை படர்தல் வியலிடம் ஆன்றல் பயன் நனவு விரிவு மேல்நனி என்றிவை அகலம் என்பர் அறிந்திசி னோரே என்பார் திவாகரர். மேலும், நீள்தலுக்கு எதிராய், அகலுதல் அகலம் எனக் கொள்க. நீள அகலப் பரப்பே பரப்பெனும் கணக்கியல் புதுவது அன்றே. அகல் என்பது உள், கண், இடம், தலை என்னும் இடப் பொருள் சொற்கள் ஏற்று, அகலுள், அகன்கண், அகலிடம், அகன்றலை, என்றாகித் தெரு, ஊர், நகர், உலகம் ஆகியவற்றைக் குறித்தலும், அடைமொழியாகி நிற்றலும் ஆயின. அகலுள் ஆங்கண் (குறிஞ். 4; மலை. 438) அகலுள் மங்கல அணி எழுந்தது (சிலப். 1: 47) அகன்கண் வைப்பு (பதிற்றுப். 29 : 10) அகன்கண் வரைப்பு (கலித். 115 : 18) அகலிடப் பாரம் அகல நீங்கி (சிலப். 30 : 180) அகன்றலை நாடு (புறம். 63, 89) என வருவனவற்றை அறிக. அகல்-ஆல் ஆதல்: அகலுதல் பொருள் தரும் இவ் வகல் என்னும் சொல்லில் இருந்தே, தொல்காப்பியனார்க்கும் தொல் பழமையான நாளிலேயே ஆல் என்னும் சொல் தோன்றியிருந்ததாம். ஆகலின், நம் தென்மொழியின் தொன்மையையும் முன்மையை யும் என்றும் மாறாச் சீரிய பின்மையையும் காட்டுதற்கு ஆல் போல்வரும் சொற்கள் மறுக்க ஒண்ணாச் சான்றுகளாம். பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே என்பது தொல்காப்பிய நூற்பா (376). அகல் என்பது ஆல் என எவ்வாறு மாறியது? ஏன் மாறியது? என அறிதல் வேண்டத்தக்கதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என ஆணையிட்டுரைக்கும் ஆசிரியர், தொல்காப்பியனார், மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா என்றும் விளக்கினார். எதிரே செல்லும் பரிய ஊர்தி ஒன்றையோ, கவர்ச்சிமிக்க காட்சி ஒன்றையோ கூடக், கண்டேன் இல்லையே, அவ்வழியாகத் தானே வந்தேன், எனக்கேதும் தென்படவில்லையே, என்ன ஐயா வியப்பு, அந்த வழியாகத் தானே வந்தேன், எனக்குத் தெரியவில்லையே, ஏதோ அரிச்சலாகப் பார்த்தேன்; தெளிவாகப் புலப்படவில்லை இன்னவாறாக உரைப்பாரைக் கண்டும் கேட்டும் உள்ள நாம் மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா (வெளிப் படம் பார்த்த பார்வையில் தோன்றாது) என்பதை ஏற்றுக் கொள்ளலே சால்பாகும். பாம்பறியும் பாம்பின் கால் என்பது போல் அறியவல்ல, பொருண்மை விளக்கச் சொற்கள் உளவாதல் கண்கூடு. எனினும், வண்டு சென்ற வழியைக் கண்டு கொள்ளல் அரிதாதலும், சான்றுகாட்டி நிலை நாட்டத்தக்க மூலக்கூறு அழிந்து பட்டிருத்தலும் ஆகியவற்றால் எல்லாச் சொற்களும் பொருள் குறித்தலை விழிப்பக் கண்டறிய இயலுமென எவரும் கூறார். அவ்வாறு எல்லாச் சொற்களின் பொருட்பாடும் விழிப்பத் தோன்றாமையால், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன ஆகா என்போர், நுண்மாண் நுழைபுலம் உடையவர் ஆகார் என்பதை அன்றி, எண்மதியுடையரும் ஆகார் என்பதே தகும். இஃது இவ்வாறாக, அகல் ஆல் இயன்முறையை அறிவோம். அகல் என்பதன் முதல் நீண்டு. ககரம், கெட்டு, லகர ஒற்றுடன் கூடி, ஆல் என ஆயிற்றாம். இச் சொல்லாக்கம், ஒலியளவு குறையாமல் பொருள்நிலை மாறாமல் புகுந்த சொல்லியன் நெறிமுறை யாகும். அக என்னும் இணைக் குறில்களின் மாத்திரை அளவும் ஆ என்னும் நெடிலின் மாத்திரையளவும் ஓரளவாக இருத்தல்-இரண்டு மாத்திரை அளவாக இருத்தல்-அறிக. இந்நெறியான் வரும் சொற்கள் எண்ணற்றுப் பல்கியிருத்தலின் சான்றுகாட்டி விளக்க வேண்டுவது இல்லையாம். அன்றியும் இக் கட்டுரை யானும் மேல்வரும் தொடர்கட்டுரைகளானும் அவையெல் லாம் வெளிப்பட விளக்கம் பெறும் என்க. ஆல் என்பதற்கும் அகல் என்பதற்கும் இயல்பால் அமைந்துள்ள தொடர்பு என்னை எனின் காண்போம். ஆல் என்பது ஒரு மரப்பெயர் என்பதும், அம் மரம் ஏனைய மரங்களினும் அகன்று பிரிந்து செல்லும் தன்மையது என்பதும் எவரே அறியார்? ஆலின் அகற்சி அருமை பெருமைகளைப் பாண்டியன் அதிவீரராமன், தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே என்றதும், பாவேந்தர், ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானை போயின மிலார்கள் எங்கும் பொலிந்தன பவழக்காய்கள் காயினை நிழலால் காக்கும் இலையெலாம் உள்ளங் கைகள் ஆயவூர் அடங்கும் நீழல் ஆலிடைக் காண லாகும் என்றதும் கேட்டு ஆம் ஆம் என்று ஏற்பதையன்றி எதிரிட்டு உரைக்கவும் எண்ணுவரோ? ஆலின் அடிமரம் பூச்சியரித்தும் பொந்து வீழ்ந்தும் அற்றுப்போயினும் கூட, அதன் வீழ்துகள் அம் மரத்தை முழுதுறத் தாங்கிப் பழுதற விளங்குவதைக் கண்ணாரக்கண்டு களிப்புற்ற ஒரு நல்லோர், ஈதன்றோ குடிநலம் காக்கும் குணத்தோர் சால்வு எனத் தெளிந்தாராய்ச் சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் எனப் புகன்றுள்ள பொருளுரை ஆல் பெற்ற பேறேயன்றோ! ஆலின் விரிவுக்குச் சான்றும் வேண்டுமோ? அடையாற்றில் அமைந்துள்ள ஆலமரத்தினைக் கண்டால் மூக்கின் உச்சி சுட்டு விரல் சேர்த்து வியந்து நோக்காது ஒழிவரோ? மரங்களுக்கெல்லாம் ஒரு காரே இருக்க ஆலுக்கு மட்டும் எத்தனை எத்தனை கால்கள்? வீழ்துகள் எல்லாம் கால்தாமே! ஆகலான் அன்றோ, ஆலமரத்திற்குக் கால்மரம் என்பதொரு பெயரும் ஆயிற்று. ஆலமரம் நெடுங்காலம் வாழும் இயல்பினது ஆகலின், அச் சிறப்பு வெளிப்பட அதனைத் தொன்மரம் என்றும், முது மரம் என்றும், மூதாலம் என்றும் வழங்கினர். சங்கச் சான்றோர் இதனைத் தொன்மூதாலம் என்றது (குறுந். 15; அகம். 251) மிகத்திட்ப நுட்பம் செறிந்ததாம். அகலமரமே ஆலமரம் என்பதற்குச் சான்று: கல்கத்தா தாவரஇயல் தோட்டத்தில் உள்ள ஆலமரம் 1782இல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்தில் இருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம் கிழக்கு மேற்கில் 300 அடி; தெற்கு வடக்கில் 288 அடி; அடிமரத்தின் சுற்றளவு 51 அடி; முடியின் சுற்றளவு 938 அடி; உயரம் 85 அடி; நிலத்தில் ஊன்றிய விழுதுகள் 464; அது நிற்கும் நிலப்பரப்பு 1 1/2 ஏக்கர். சத்தாரா மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி.மே. 442 அடி; தெ.வ. 595 அடி; முடியின் சுற்றளவு 1587 அடி இருந்தது என்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக் கூடிய ஒருமரம் நருமதை ஆற்றுத்திட்டு ஒன்றில் இருந்தது என்றும், இருபதினாயிரம் மக்களுக்கு நிழல்தரக்கூடிய மரம் ஆந்திராப் பள்ளத்தாக்கில் இருந்தது என்றும் அறியப்படு கின்றன. - கலைக்களஞ்சியம் ஆலமரம் நிழல் கருதி வளர்க்கப் பெறும் மரம். ஆகலின் தனியார் தம் நிலத்து வைத்துப் பெரும்பாலும் வளர்ப்பது இல்லை. அது பொதுமரமாகவே எங்கும் வளர்க்கப் பெறுவ தாயிற்று. அன்றியும் இறையுறை கோயிலாகவும், பொதுமக்கள் கூடும் மன்றமாகவும் விளங்கிற்று. அதன் பெயரால் பண்டு தொட்டு இன்றுவரை விளங்கிவரும் ஊர்கள் எண்ணற்றவை. ஆலங்குடி வங்கனார், ஆலந்தூர் கிழார், ஆலம்பேரி சாத்தனார் என்னும் சங்கச் சான்றோர் ஊர்ப் பெயர்கள் ஆலொடு விளங்குவனவாம். ஆலஞ்சேரி மயிந்தன் என்பான் ஊருண் கேணி நீரே போல உதவியாளனாக இலங்கியதையும், அம்பர் நாடன் ஆலங்குடிக்கோன் என்பான் பேராண்மை சிறக்க விளங்கியதையும் வரலாற்றால் அறிகிறோம். ஆலங்குளம், ஆலடிப்பட்டி இன்னவாறாக ஊர்கள் இந் நாள் விளங்குபவை மிகப்பல. இறைவன், 1. ஆலமர் கடவுள், 2. ஆல்கெழு கடவுள், 3. ஆலமர் செல்வன், எனப் பெறுவதும், ஆலந்தளி ஆலக் கோயில் என்னும் பெயர்கள் உண்மையும் ஆலுக்கும் இறைக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும். ஆலமரத் துறை இறைக்குப் பூப்பலி, புனற்பலி முதலியன இடப்பெறுதலை, நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி என உரைக்கும் நற்றிணை (343). ஆலங்காடு பெற்ற தெய்வப் புகழும், ஆலங்கானம் பெற்ற வீரப் புகழும் நாடறிந்தவை. ஆல், ஊர் மன்றமாக விளங்குவது இன்றும் காணக்கூடியதே. ஆலின்கீழ் இருந்து அறமுரைத்த செய்தி தொன்மங்களில் (புராணங்களில்) கண்டதே. இனி, அகல் என்பதன் வழியாகத் தோன்றிய வேறொரு சொல்லைக் காண்போம். ஆல்-ஆலி-நீர்: தீயின் தன்மை மேல்நோக்கி எரிவது; நீரின் தன்மை கீழ்நோக்கிப் பாய்வது. கீழ்நோக்கிப் பாய்வதுடன், அகலப் பரவுதலும் அதன் தன்மையாம். பாய்தல் என்பதன் பொருள்தான் என்ன? பா, பாய், பாய்தல், பாய்ச்சுதல், பார், பார்வை, பரவுதல், பரவல், பரவை, முதலியன வெல்லாம் அகலுதல் (பரவுதல்) பொருளால் வந்த சொற்களே. நீருக்கு இயற்கையான அகலுதல் தன்மையை நுனித்து அறிந்த முந்தையோர் அதற்கு, அகல் என்றும் அகலி என்றும் பெயரிட்டனர். அப் பெயர்களே பின்னாளில் ஆல் என்றும் ஆலி என்றும் வழங்கலாயின. ஆலின் மேலால் அமர்ந்தான் என்பது ஈடு (திருவாய். 9.10 :1) இது நீர் என்னும் பொருள் தந்தது. ஆல், வெள்ளம் என்னும் பொருள் தருதலை மாறன் அலங்காரம் குறிக்கும் (262). ஆல் என்பதற்கு நீர் என்னும் பொருள் உண்மையை வழக்கின் வழியே காண்போம். நீர்ப்பதனுடைய தவசத்தையோ, தட்டை தாள்களையோ உலர்த்துதற்கு வெயிலில் காயப் போடுதலை ஆலாற்றுதல் என்பர். அப் பொருள்களில் உள்ள நீர்ப்பதத்தை அகற்றுதல் என்பதே ஆலாற்றுதல் என்பதாம். இப் பொருள் காணாமையால், அச் சொல்லை அகரவரிசை நூல்கள் ஆல்வாட்டு-உலர்ச்சி; ஆல்வாட்டுதல்-சிறிது காயச் செய்தல்; ஆல்வாடுதல்-சிறிது காய்தல்; ஆலாட்டு-ஆல்வாட்டு, ஆலவாட்டு-வெயிலில் வாட்டுகை என்று குறிப்பிடுகின்றன. அகற்றுதல் என்பதே ஆற்றுதல் என்று ஆகியது என்பதை மேலே காண்போம். ஆலாய்ப் பறத்தல் என்பதோரு சொலவடை நாட்டில் வழங்கப் பெறுகிறது. ஆலாய்ப் பறத்தல் என்பது என்ன? பேராசைப்பட்டுப் பேயாய் அலைவாரையே ஆலாய்ப் பறக்கிறார் என்கிறோம். பறத்தல் என்பதால் அஃதொரு பறவை என்பது தெளிவாம். அப் பறவையின் பெயர் ஆல் என்பதாம். அப் பறவைபோல் பறப்பதையே உவமையால் கூறப்பெறுகிறது. ஆல் ஆலா என வழங்கப் பெறும் பறவைக்கும் நீருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியின் வியப்பு உண்டாகும். ஆலாப் பறவைகளில் ஒருவகை, கடற்பகுதியில் வாழ்வது; கழுகுபோன்றது; அதன் கழுத்து, தலை, மார்பு, வயிறு, வால் ஆகியவை வெளுப்பும், உடலின் மற்றைப் பகுதிகள் கருஞ்சிவப்புமாக இருக்கும். இது, கடல்மேல் இளைக்காமல் சளைக்காமல் நாளெல்லாம் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கும்; பெருங் கூச்சலிட்டுக் கத்தும், இணைசேரும் காலங்களில் மற்றைக் காலங்களைவிட மிகுதியும் பறந்து அலைந்து கூக்குரலிடும். மற்றொரு பறவையும் ஆலா என்றே வழங்கப்பெறுகிறது. அதற்கு ஆற்றுக் குருவி என்பதொரு பெயரும் உண்டு. தகைவிலான் குருவி (தயிலாங்குருவி) என்பதும் இப்பறவையே. தண்ணீருக்குள் மூழ்கி, முழுமையாய் மறைந்து போய்பின் வெளியே வரும். தண்ணீருக்கு மேல் இங்கும் அங்கும் பறந்து அலகைக் கீழ் நோக்கி வைத்துக்கொண்டு மீன் கூட்டம் வருவதைப் பார்த்துச் சட்டென மூழ்கிப் பிடிக்கும். இது மரத்தில் தங்குவது இல்லை. தண்ணீர்க் கரையிலேயே இருக்கும். நீருக்கும் இதற்கும் உரிய தொடர்பே ஆலா என்னும் பெயரை இதற்குச் சூட்டியதாம். இனி, இப் பறவையின் தகைப்பு இலாப் பறத்தல் சிறப்பு உணர்ந்தே தகைவு இலான் என்னும் பெயரிடப் பெற்றது என்பதும் அறிக. தகைவு-தகைப்பு; தகைப்பாவது இளைப்பு. நீர் மட்டத்தில் ஒழியாமல் அலைந்து திரியும் இப் பறவை 11,000 கல் தொலைவுகூட வலசைபோகும் என்பர். இதன் இயல்பினை முழுதுற அறிந்த நுண்ணறிவால் பெயர் சூட்டியுள்ள பெற்றிமை நினைதோறும் இன்பம் தரும். தமிழ் வளர்த்ததும் புலவர் அவையம் பொலிந்ததும் ஆகிய பழமதுரைக்கு ஆலவாய் என்பதொரு பெயருண்மை அறிவோம். திருவிளையாடற் புராணத்தில் திருஆலவாயான படலம் என்பதொரு படலமும் அதுமுதல் நூன்முடிய அமைந்த பெரும்பகுதியுடைய திருவாலவாய்க் காண்டம் என்பதொரு காண்டமும் உள்ளமை எவரும் அறிந்ததே. பாம்பின் வாயால் எல்லை காணப்பெற்ற நகராகலின் மதுரை ஆலவாய் எனப்பெற்றது என்பதைத் திருவிளையாடல் விரிக்கின்றது. ஆலம் என்பதற்கு நஞ்சு என்னும் பொருள் உண்மையால், அதன் வழியாகப் பாம்புக்கு ஆகிப் பாம்பின் வாய் எனப் பொருள் பெற்று, அவ் வாயால் எல்லை காட்டப் பெற்ற ஊருக்கு ஆயிற்று என்னும் கதை வளர்ந்தது. ஆல் என்பதற்கு நீர் என்னும் பொருளுடைமை அறிந்தோம். வாய் என்பது இடப் பொருட்டு ஆதலைக் கண்வாய், கால்வாய், கயவாய், தத்துவாய், இல்வாய், ஆல்வாய், வாய்த்தலை என்பனவும் தலைவாயில், குடவாயில், குணவாயில் முதலிய ஊர்ப் பெயர்களும் காட்டும். அன்றியும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் என்பதும், அதன் உருபுகளுள் வாய் என்பதும் ஒன்று என்பதும் இவண் அறியத்தக்கதாம். அறியவே, ஆலவாய் என்னும் பெயர் மதுரைக்கு ஆகிய வகை புலப்படும். நளிகடல் முன்னியது போலும் தீநீர் வளிவரல் வையை வரவு; வந்து மதுரை மதில் பொரூஉம் வான்மலர் தாஅய் அந்தண் புனல்வையை ஆறு என்பது பரிபாடல் (12), இதில் வையையாறு பெருக்கெடுத்துக் கடல்போல் வருவதும், வந்து மதுரை மதிலை முட்டிக்கொண்டு செல்வதும் குறிக்கப்பெற்றுள. இக் காரணத்தால் ஆலவாய் எனப் பெயர் பெற்றது உண்மையாகவும், பின்னே புதுக்கதை கண்டு பழவரலாறு புதையுண்டு போயிற்று என்க. ஆலவாய்க்குரிய இப் பொருளில் ஐயுறுவார் உளராயின் 1திருச்சீரலைவாயை நினைவாராக. வான் சிறப்பும் மாமழை போற்றுதலும் கண்டது தமிழகம். மழையை மாரி என்பர். மாரி வழிபாடு மழை வழிபாடே! மாரியின் பெயர்களுள் ஒன்று முத்துமாரி என்பது. இது முத்துப்போன்ற மழைத்துளி என்னும் பொருள் தரும். மழைத் துளியை முத்துக்கு உவமை காட்டுதல் இலக்கியங்களில் பெருவழக்குடையது. முத்துமாரி என்பது போல மாரிக்கு அமைந்த மற்றொரு பெயர் முத்தாலம்மன் என்பது. முத்து ஆலம் அம்மன் என்னும் முச்சொற் கூட்டே இப்பெயர். இங்கு ஆலம் என்பது நீர்க்கட்டியே. முத்தாலம்மன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தும் அதன் பொருள் உணராராய்த் திருத்தம் செய்வார் போல முத்தாரம்மன் ஆக்கிக் கொண்டு வருகின்றனர். அதுவே திருந்திய வடிவம் என்றும் மகிழ்கின்றனர். முத்துமாலை அணிந்தவள் எனக் காரணம் கண்டு முத்துமாலை எனவும் பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இவற்றால் இப் பழஞ் சொற்பொருள் மூடுண்டு போதலை அறிக. ஆலவாலம் என்பது ஒரு சொல். இது வயலையும், பாத்தியையும் குறிக்கும். நீர்வளமிக்க நெடும் பாத்தியே ஆலவாலம் எனப்பெறும். வாலம் நெடுமை என்னும் பொருள் தருதல் இன்றும் வழக்கில் உள்ளதேயாம். வாலமாக நீண்டுள்ள நிலம் வாலி என்று வழங்கப் பெறுகிறது. துணி நீளமாகக் கிழிந்துபட்டால் வாலமாகக் கிழிந்து விட்டது என்பர். ஆலத்தி எடுத்தல் என்பதொரு வழக்கம் உண்டு. அது மங்கல வினையாகக் கருதப் பெறுகிறது. ஆலத்தி எடுத்ததை மரமொடு மரம் எடுத்தார் (ஆலம்-அத்தியும் மரப் பெயர்கள் அன்றோ) என்றார் ஒரு புலவர். நீரைச் சுற்றி அல்லது சுழற்றி எடுப்பதே ஆலத்தி எடுத்தலாம். மஞ்சள், அரிசி, மலர் முதலியன கலந்த மங்கல நீரால் சுற்றுதலே ஆலத்தி எனல் அறிக. அதனை அப்பொருள் விளங்க ஆலாற்றி எடுத்தல் எனப் பெயர் சூட்டினர். பின்னே அச்சொன்மூலம் அறியாராய் ஆலத்தி, ஆலாத்தி என அகர வரிசை நூல்களும், பிற நூல்களும் வழங்கியுள்ளன. ஆற்றுதல் சுழற்றுதல், சுற்றுதல் என்னும் பொருட்டது. இதனை ஆலத்தி வழித்தல் என்கிறது ஈடு (1.8.9) ஆல் நீர் ஆதலால் ஆலில் துயில்பவன் எனப்பெறும் திருமால் ஆலவன் எனப் பெற்றான். திங்கள் தண்ணியது ஆகலின் அத் தன்மை விளங்க அதுவும் ஆலவன் என வழங்கப்பெற்றது. ஆலல் என்பதற்குரிய பொருள்களுள் தூங்குதல் (தொங்குதல்) என்பதும் ஒன்று. ஆதலால் தலை கீழாகத் தொங்கும் தனித்தன்மையுடைய வௌவால் ஆலாலம் எனப் பெற்றது. நீர்வேட்கையைத் தணிப்பதும், நீர்ப்பதன் மிக்கதும், நீர்க்குச் சுவையூட்டுவதும், வறண்ட நிலத்தும் வறண்ட காலத்தும் வளமாக வளம் தருவதும் ஆகிய நெல்லியை ஆலகம் என, ஆய்ந்த அருமையால் பெயரிட்டனர். இவற்றையெல்லாம் வடசொல் மூலங்காட்டி வழக்கம் போல் மகிழ்வார் மகிழ்ந்தனர். ஆலம் - குற்றாலம்: நீர்ப்பொருள் தரும் ஆலம் என்னும் சொல்லுக்கு குறு என்பது அடையாய்க் குற்றாலமாகியது. நெல்லை மாவட்டத்துக் குற்றாலமும், தஞ்சை மாவட்டத்துக் குற்றாலமும் நாடறிந்தவை. இவற்றுள் முன்னது, தன் செஞ்சொற்செவ்வி மாறாமல் குற்றாலமாகவே திகழப், பின்னது குத்தாலமாகியது. அன்றியும் குற்றாலம் என்பது பிழைவழக்கு என்றும், குத்தாலம் என்பதே செவ்விய வழக்கு என்றும் ஆராய்ச்சியாளரும் கூறுவாராயினர். குறுதல் என்பது குற்றுதல்; பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள் என்றார் இளங்கோவடிகளார். குறுதல் அமைந்த நீர்ப் பெருக்குடைய இடம் குற்றாலம் என்க. குற்றுதலாவது, இடித்தல், மோதுதல், சாடுதல், பொங்குதல், வீங்குதல், தாவுதல், சவட்டுதல் முதலிய பொருள்களைத் தரும். நீர், கரையில் மோதுதலால் அதனை இடிகரை என்பர். ஆதலால், நீரின் தன்மை குறுதல் என்பது தெளிக. குற்றாலத்திற்கு வந்த ஆளுடைய பிள்ளையார், குற்றால நாதர்க்கும், அத் திருக்கோயில் மரமான குறும்பலாவுக்கும் தனித் தனிப் பதிகம் பாடினார். குற்றாலம் என்பதைச் சொற்பொருள் விளங்கும் வகையில், போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக் கூதன் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம் என்றார். இதனையும் பொதுமக்களும் புலமை மக்களும் குத்தாலம் ஆக்கிவிடா வண்ணம், நல்ல வேளையாகக் கல்லிலும் பொறித்துள்ளனர்! வாழ்க குற்றாலம்! தஞ்சை நாட்டுக் குற்றாலத்திற்குத் துருத்தி என்பதே பழம் பெயர். அதன் பொருள் உணர்ந்தோர், குற்றாலம் என்னும் ஒரு சொல்லையும் அதற்குப் படைத்துக்கொண்டனர். அக் காரணம் நுனித்து அறியாதவர், அக் கோயில் திருமரமாகிய ஆத்தி என்பது குத்தாலம் ஆகலின் குத்தாலம் என்பதே பொருந்துவது என்றனர். ஆரே தாதகி ஆத்தியாகும் என்று திவாகரமும், தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் என்று சூடாமணியும் ஆத்தியைக் குறிக்கும். இங்கே குத்தாலம் இல்லை! காட்டாத்திக்குக் குத்தாலம் என்னும் பெயருண் மையை மருத்துவ அகரமுதலிகள் சுட்டும். இதனால் இது சுற்றி வளைத்துச் சொல்லிய பொருந்தாப் பொருத்தமாய் அமைந்தது. திருக்குற்றாலத்தைப் பாடிய ஆளுடைய பிள்ளையார், இத் திருக்கோயிலைத் துருத்தி என்றார். இறைவரைத் துருத்தியுடையார் என்றார். மெய்ப்பொருள் விளங்கும் வகையில் அவர் கூறியது, பைம் பொழில் சூழ் வீங்குநீர்த் துருத்தியார் என்பது இதனையே வீங்குநீர்த் துருத்தியுடை யார் என்று கல்வெட்டும் குறிக்கின்றது. துருத்தி குற்றாலம் ஆகியது எவ்வாறு? துருத்தி என்பது ஆற்றிடைக்குறை; அரங்கம், திட்டை, குறை என்பனவும் அதுவே. நீர்ப் பெருக்குச் சூழ்வர இடையே துருத்தி நிற்கும் மண் பகுதியே துருத்தி. நீர்மோதித் தாக்கும் இடம் ஆகலின், வீங்குநீர்த் துருத்தி ஆயிற்று! உந்தும் அருவி புடைசூழ்தலின் குற்றாலம் ஆயிற்று! இவண் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தையும் கருதிப் பொருட் பொருத்தம் கண்டுகொள்க. ஆலி-நீர்க்கட்டி, நீர்: குளிர்ச்சி மிகுதியால் நீர், கட்டிபடுதல், உறைந்து பாறை யாதல் என்பவை கண்கூடு. சில போழ்துகளில் மழைத்துளியுடன் பனிக்கட்டிகளும் வீழ்வதுண்டு. அதனை ஆலங்கட்டி மழை என்பர். நீர் கட்டியாதலை ஆலங்கட்டி என்றது சிறந்த தேர்ச்சியாகும். ஆலங்கட்டியை இலக்கியம் ஆலி என வழங்கும் ஆலி, இருப்பைப்பூ, மராஅம்பூ, ஈங்கைப்பூ, முத்து, கழங்கு ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்பெற்றுள்ளது (அகம் 95, 125, 211, 282, 334). ஆலியின் தன்மை, தண்மழை ஆலி சூர்பனிப்பன்ன தண்வரல் ஆலி ஆலியின் நிலந்தண்ணென்று கானங்குழைப்ப என்று குறிக்கப் பெற்றுள்ளது (அகம் 211, 304, 314). மழை பொழிதலைத், துவலை பெயலை துளியே மாரி, உறைபெயல் ஆலி உதகம் சிதறி, தூவல் சீகரம் தூறல் வருடம் எனத் திவாகரம் கூறும். துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும் மழையும் ஆலி எனவகுத் தனரே எனப் பிங்கலம் கூறும். ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமங்கை மன்னர் ஆட்சி புரிந்த நாடு ஆலி நாடு எனப் பெற்றது. அவர் ஆலி நாடர் எனப்பெற்றார். புனல் நாடு எனப்பெறும் சோணாட்டுப் பகுதியே ஆலி நாடு என்பதும், புனலும் ஆலியும் பொருளால் ஒன்றுபட்டவையே என்பதும் கருதுக. புனலூர், புனல்வேலி என ஊர்ப் பெயர்கள் உண்மையும் எண்ணுக. இனி, ஆலி என்பதோர் ஊர் சீகாழிக்கு அணித்தே உள்ளதும், அதற்குத் திருக்கோயில் சிறப்பு உள்ளதும், சிவனியமும் மாலியமும் போற்றும் அடியார் பெருமக்கள் அவ்வூரில் தோற்றமுற்றதும் கற்றோர் அறிவர். அது திருவாலி என்பதாம். திருவாலி நீர்வளச் சிறப்பால் புனல் ஆலி எனப் பாடுபுகழ் பெற்றது. பாடியவரும் ஆலி நாடாராம் திருமங்கை மன்னரே (திவ். 1211, 1212, 1214, 1217). அன்றியும் அதன் நீர்வளப் பெருக்கால், அந்தண் ஆலி (1329) என்றும், பல்பணையால் மலிந்து எங்கும் ஆடல் ஓசை அறா அணி ஆலி (1192) என்றும் கூறப்பெறுகிறது. திருவாலிக்குத் திருவாலிவயல் என்பதொரு பெயர் (1200), வயலாலி என்றும் அதனைக் கூறுவர் (1204). அவ் வயல் வளம் கெழும, தண்பணை சூழ் வயலாலி (1210) வாவியந் தண்பணை சூழ் வயலாலி (1216) மணிகெழுநீர் மருங்கு அலரும் வயலாலி (1199) அணிநீலம் மடைநின் றலரும் வயலாலி (2027) அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி (2674) அள்ளல் அம்பூங் கழனி அணி ஆலி (1208) என்றெல்லாம் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இத் திருவாலிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த பெருமகனார் திருவாலியமுதனார் என்பார். அவர், திருவிசைப்பாப் பாடிய ஒன்பான் பெருமக்களுள் ஒருவர். அமுதனார் சிறந்தோங்கிய இடம் ஆலி ஆகலின் இப் பெயர் பெற்றார் என்பது தெளிவாவதுடன், ஆலியே அமுதம் என்பதும் இரட்டுறலால் விளங்கும். வானின் றுலகம் வழங்கி வருதலால் தான மிழ்தம் என்றுணரற் பாற்று என்பது பொய்யாமொழி அன்றோ? திருவாலிப் பெருமாள், வயலாலி மணவாளன்; பெருமாட்டி அமிழ்த கடவல்லி; ஆலியும் அமுதும் இணையும் காட்சி ஈது! ஆயின், ஆலம் நஞ்சு ஆகியவகை என்ன? ஆலம்-நஞ்சு: ஆல் என்பது நீர், நீர்க்கட்டி, முகில், மழை, மழைத்துளி எனப் பொருளால் விரிந்தமை அறிந்தோம். நீர்ப்பெருக்காம் பொய்கையும் ஆறும் சுனையும் மடுவும் கடலும் முகிலும் கொண்டலும் வானும் எந்நிறமாகக் காட்சி வழங்குகின்றன எனின், கருநிறமே-கருநீல நிறமே என எவரும் கூறுவர். நீருக்கு நிறமில்லை என அறிவியல் உலகம் மெய்ப்பிப்பினும், அந்நிறத் தோற்றம் உண்மை பொதுவில் அறிந்ததே! நீருக்குப் பொதுவாய் அமைந்த இந் நிறத்தாலேயே நீல், நீள் என்னும் சொற்கள் உண்டாயின. அவ்வாறே நீர்ப்பெயர் சுட்டும் ஆல் என்பதற்கும் ஆலம் என்னும் (கருமை என்னும்) பொருள் உண்டாயிற்றாம். நீல் நீலம் ஆவது போல், ஆலம் ஆகும் என்க. நஞ்சு என்னும் பொருள்தரும் சொற்களை முதல் நிகண்டாசிரியர் திவாகரர், கடுவே, ஆலம், காள கூடம் விடம் காளம் கரளம் காரி நஞ்சே என்றும், ஆலம் காரி கடுவிடம் நஞ்சே என்றும் கூறுவார். இவற்றுள் கடு, காளம், காள கூடம், கரளம், காரி என்பவை கருமைப் பொருள் தருவனவே என்பது கருதுக. இனி இறைவன், ஆலமுண்ட நீல கண்டன் என்றும், நீல மணி மிடற்று ஒருவன் என்றும், காரி யுண்டிக் கடவுள் என்றும் குறிக்கப் பெறும் பெற்றி ஓர்க. நஞ்சின் நிறம் ஆலம் ஆதல் (கரு நிறம் ஆதல்) போல, நஞ்சுண்ட உயிரியின் நிறமும் ஆலம் ஆதல் ஆய்ந்து கொள்க. எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீய்ந்து விரிவுரை குழறி ஆவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான் (அப்பூதி. 27) எனவரும் சேக்கிழாரடிகள் வாக்கால் நஞ்சுண்டான் உடல் உறுப்புகள் கருவண்ணம் கொள்ளல் கண்டுகொள்க. ஆலகோலத்தின் நஞ்சு எனத் தேவாரம் வெளிப்படக் காட்டலும் கொள்க. ஆலகோலம் என்பது கருநிறம். சிவம், சிவல், சிவலை, கரி, கறுப்பு, காவி, துவரை, மஞ்சள், வெள்ளை என்பன வெல்லாம் வண்ணப் பெயரே தம் பெயராய்ப் பொருள் பொதிந்த சொற்களாய் விளங்குமாப் போல, ஆலம் என்பதும் வண்ணப் பெயராய் நஞ்சினைக் குறித்ததாம். இஃது இவ்வாறாக, இதன் மூலமும் இயற்கையும் அறியாராய் வட சொல்லாக்கி மயக்கினர்; மயங்கியோர் தம் மயக்கக் குற்றம் உணராராய், மையல் கொண்டு வேரினும் முந்து நின்று கட்டியங் கூறிக் களிப்பும் கூர்ந்தனர். இதனால், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறல் போல், ஒரு சொல்லுக்குக் கண்ட தவறுபட்ட மூலக்கூறு, பல சொல்லுக்குத் தவறுபட்ட மூலங்காட்ட முந்தும் என்பதை மேலும் காண்க; பிற கட்டுரைகளானும் கண்டுகொள்க. ஆலி-கள்-தேன்: இன்னும், ஆலி என்பதற்குக் கள், தேன், தேனீ, காற்று, பூதம் முதலிய பொருள்களும் உண்டு என்பதை அகரவரிசை நூல்களிலும், நிகண்டு நூல்களிலும் காணலாம். இப்பொருள் களுக்கும் ஆலி என்பதற்கும் உள்ள தொடர்பினைக் காண்டலும் வேண்டுவதே. ஆலி என்பது மழை, மழைத் துளி, நீர்ப் பெருக்கு, முதலியவற்றைக் குறித்தமையால் அவ்வாறே துளித்தும், வழிந்தும், பெருகியும் செல்லும் கள்ளையும் தேனையும் குறித்தலாயிற்றாம். ஆயின், இப் பொருள்கள் பின்னை விரிந்த விரியேயன்றி முன்னை மூலத்தின் அமைந்தது அன்றாம். ஆகலின், இச் சொற்பொருள் ஆட்சி பிற்கால நூல்களிலேயே இடம் பெற்றுளது என்க. மதுவும் தேனும் மழையொடும் ஒப்ப ஒழுகலும் சொரிதலும் உடையவோ? எனின், சற்றே உயர்வு நவிற்சி எனக் கொள்ளினும் இலக்கிய வழக்கில் காணக் கூடியவேயாம். நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் வாரசும்பு ஒழுகும் முன்றில் என்றும், அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே என்றும் பாரியின் பறம்பு மலையில் நறவும் தேனும் ஒழுகுவதும் சொரிவதும் சொல்லப் பெற்றமை கொள்க, (புறம். 114, 109) நுங்கிற் கள்ளின் உகுவார் அருந்தியும், மேற்றுறைக் கொளீஇய கழாஅலில் கீழ்த்துறை உகுவார் அருந்தியும் யாமை செருக்கித் திரிவதை அகப்பாடல்கள் காட்டுவதையும் காண்க. (256, 356). இவை இவ்வாறாக, ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும் மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப வுண்டு மீனெலாம் களிக்கு மாதோ! என்னும் கம்பர் பாட்டில், தேனும் கள்ளும் பெருக்கெடுத்தலும் மீனும் பிறவும் களிப்புறலும் அறிவோர் பின்னை நாளில் ஆலிக்கு இப் பொருள்கள் உண்டாகிய அடிப்படையை உணர்வர். ஆலல்-அசைவு-ஆட்டம்: இனி, ஆலி என்பதற்கு அசைவு, சுழற்சி, விரிவு என்னும் பொருள்கள் உண்டானமையால் காற்று, தேனீ, பூதம் என்பவற்றையும் குறித்தன என்பதை மேலே காண்க. அசைவு, சுழற்சி, ஆட்டம் என்பன வெல்லாம் எப்படி உண்டாகின்றன? கையையும் காலையும் பிற உறுப்புகளையும் அகலச் செய்தலால் இவை பிறக்கின்றன. அகல் என்பதே முன்னை விதிப்படி ஆல், ஆலல், ஆலுதல் என்பனவாய் அசைவு, ஆட்டம் என்பனவற்றைக் குறித்தன. அகலிகையை ஆலிகை என்றார் கம்பர் (நட்புக். 6). ஆடுதல் என்றதும் நம் மனத்துத் தோன்றுவது மயிலின் ஆட்டமேயாகும். உவகை மீக்கூர்ந்த மயில், தன் தோகைகளை அகல விரித்து ஆடும். அகல விரிந்த அதன் தோகைத் தொகுதி ஆலவட்டமெனத் தோன்றும். அகல் வட்டமே ஆலவட்ட மாகிச் சிவிறியை-விசிறியை-க் குறித்தது. இதனை, நீல ஆலவட்டம் விரித்தாற் போலத்தன் கோலக்கலாவம்கொளவிரித்து...X® இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள் எனவரும் களவியல் உரையால் (2) அறியலாம். ஆலவட்டம்: மயில் தோகையைக் கொண்டே ஆலவட்டம் செய்யப் பெற்றது என்றும்,பின்dபிறவற்றாšசெய்யப்பெற்றJஎன்றும்,முதற்க©அமைந்jபெயரே,மயிšதோfமாறி¥பிறவற்றாšஆலவட்ட«அமைந்jபின்னரும்,பெற்றJஎன்று«அறியலாம். பீலியந்தழை பிணித்திட்ட வட்டமும், ஆலியங் கசைப்பன ஆல வட்டமும் (1885) என்றும், நீல ஆலவட்டத்தின் நிறங் கொளக் கோலும் பீலிய (21) என்றும் tரும்Nளாமணியால்kயில்nதாகையால்Mலவட்டம்mமைத்தமைmறியப்பெறும்.mfy Éரிந்தnjகைgன்றவ£டவoவவிáறிக்குMலவட்டம் எ‹னும்இaற்கையொடுgருந்தியgயர்உ©டாகியிருக்கவும்அjனைத்jலபத்திரம் எ‹பதன்சிiதவுஎ‹றும்,jலவிருத்தம் எ‹பதன்சிiதவுஎ‹றும்கூWவர்(Nளா21.உ. வே. சா; பெருங் 1. 34: 218 உ. வே. சா.) சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசைஇச் சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை ஆலவட்டம் நாலொருங் காட என்று பெருங்கதையும் (1: 34; 214 - 8) அணித்தகு பவழம் ஏற்பக் கடைந்துமுத் தழுத்தி அம்பொன் துணித்தடி விளிம்பு சேர்த்தித் தொழுதகச் செய்த வண்கை மணிச்சிரற் சிறகு நாண வகுத்தசாந் தால வட்டம் பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே என்று சிந்தாமணியும் (2478) கூறுவதால் ஆலவட்டத்து அமைப்பு நன்கு விளங்கும். இச் சிந்தாமணிக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், பொற்றகட்டை நறுக்கி விளிம்பிலே சேர்த்து பீலியிட்டுச் சிச்சிலியின் சிறகு நாண வகுத்த சந்தன ஆலவட்டத்தாலே வீசுதல் தொழிலுக்குத் தக்க மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தார் என்க என்று எழுதிப் பீலியிட்டு என்று சுட்டியதையும் கருதுக. பீலியாவது மயில் தோகை. மயில் தோகையால் ஆலவட்டம் செய்யப்பெற்றமையால் ஆலவட்டத் திற்குப் பீலி என்றதொரு பெயரும் உண்டாயிற்று என்பதும் அறிக. (சூடா. நிக. 7:38) தோகையை அகல விரித்து ஆடுதலால் அமைந்த ஆலி ஆலுதல் ஆலுகை ஆகிய சொற்களுக்கு அசைவு, ஆட்டம், என்னும் பொருள்கள் உண்டாயின. ஆலுதலின் பொருள் விரிவு: ஆடுதல் உண்டாக வேண்டுமாயின் உள்ளக்கிளர்ச்சி உண்டு என்பது வெளிப்படை. மழைமேகம் கண்டும், இளவெயிலுடன் கூடிய சாரல் கண்டும் மயிலாடல் இயற்கை. தன் துணை அருகே இருக்க அகமுவந்து ஆடல் கண்கூடு. அப்போழ்தில் ஆடலுடன் கூப்பிடுதலும் (அழைத்தலும்) குரல் எழுப்பி மகிழ்தலும் இயற்கை. ஆகலின் ஆலுதல் என்பதற்குக் கூப்பிடுதல், ஆரவாரித்தல் என்னும் பொருள்கள் உண்டாயின; மகிழ்தல், நிறைதல், செருக்குதல் என்னும் பொருள்களும் அதன்மேல் தோன்றின. ஆலியங் கசைப்பன ஆல வட்டமே என்னும் சூளாமணியும் (1885) கடல், முழங்குதிரை முழவின் பாணியிற் பைபயப் பழம்புண் உறுநரின் பரவை ஆலும் என்னும் நற்றிணையும் (378) ஆலுதலுக்கு அசைதல் பொருள் உண்மையை விளக்கும். இதில் நற்றிணை, பழம் புண்பட்டோன் அந் நோவால் புரள்வதற்கு அலை புரள்வதை ஒப்பிட்டுக் காட்டியது அசைவுக்கு அருமை விளக்கமாம். பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும் (புறம். 116) பழனக்காவில் பசுமயில் ஆலும் (பதிற். 27) பழன மஞ்ஞை மழைசெத் தாலும் (பதிற். 90) என்பவற்றில் ஆலுதல் ஆடற் பொருளில் வந்தன. மடக்கண்ண மயில் ஆல (பொருந. 190) மழைவரல் அறியா மஞ்ஞை ஆலும் (ஐங். 298) என்பவை அழைப்புப் பொருளில் வந்தவை. மஞ்ஞை ஆலும் (பெருந். 435) மயில் ஆலும் (கலி. 36) என்பவை ஆரவாரித்தல் பொருளில் வந்தவை. இனி, மயிலின் அசைவு, ஆட்டம், அழைப்பு, ஆரவாரங்களுக்கு உரிமை பெற்றிருந்த ஆலுதல் பிற பறவைகளுள் சிலவற்றுக்கும், வேறு சிலவற்றுக்கும் அப் பொருள்களைத் தரும் வகையில் விரிந்தது. அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறம். 128) என அன்னமும், மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் (நற். 9) எனக் குயிலும், களிமயில் குஞ்சரக்குரல குருகோடாலும் (அகம். 145) என ஆனையங் குருகும், கம்புள் கோழி பெடையோ டாலும் (ஐங். 85) எனக் கம்புள்கோழியும், சுரும்பு களித்தாலும் (ஐங். 342) எனச் சுரும்பும், களி வண்டு ஆல (சூளா. 758) என வண்டும் ஆலுதல் கொண்டன. இனி, இவ் வாலுதல் இப் பறவைகளை அன்றிக் குதிரைக்கும் உரிமை பூண்டது. குதிரையின் விரைந்த செலவும், தாவி எழும்புதலும், அணிவகுப்பும் பறவைக் கூட்டத்தையும், அலை கடலையும் ஒக்கும். ஆகலின், குதிரையொடும் ஆலுதல் இணைந்தது. ஆடும் பரி என்றும் ஆடல் மா என்றும் குறிப்பது போலவே, ஆலும்புரவி என்றும் (சிலப். 26. 84) ஆலுமா என்றும் (சூளா. 1363) கூறுவர். குதிரையின் நடை ஆடு நடை எனப் பெயர் பெறும். பணைநிலைப் புரவு ஆலும் என்னும் சிலம்பும் (13. 147) காலியற் புரவி ஆலும் என்னும் புறமும் (178) குதிரை ஆலுதலைக் குறிப்பன. குதிரை வளையமிட்டு நிமிர்ந்து தாவுதலை ஆலவட்ட மிடல் என்பதும் கருதத்தக்கது. ஆலுதலுக்குரிய முழக்கப் பொருள் கடலுக்கும் முரசுக்கும், கார் முகிலுக்கும் உண்மையால் அவையும் ஆலுதல் சொல்லை ஏற்றன. பரவையின் ஆலும் (நற். 378) ஆலித்த முரசு (சூளா. 1827) ஆலுமா மழை (சூளா. 21) அஞ்செவி நிறைய ஆலின (முல்லைப். 89) என்பவற்றை அறிக. ஆலி ஆட்டம்: பொய்க்கால் குதிரை என்பதோர் ஆட்டம் பழமையானது. குதிரை வடிவப் பொ(ய்)ம்மையுள் புகுந்து ஆடிய அவ் வாட்டம், பின்னே வெவ்வேறு வகைக் கோலங் கொண்ட மாந்தர், தெய்வப் பொ(ய்)ம்மைகளையும் தூக்கிக் கொண்டு ஆடும் ஆட்டமாக வளர்ந்தது. அதற்கு ஆலி என்னும் பெயர் உண்டு என்பதை எவரும் அறிவர். ஆடற் பொருளில் அப் பெயர் வந்தது தெரிக. ஆடல், அசைதல், சுழலல் என்பவை காற்றுக்கு இயற்கை ஆதலால் ஆலி என்பது காற்றையும் குறிப்பதாயிற்று. அகலுதலால் அமைந்தது அன்றே ஆலி! அகற்சிக்கு அமைந்த பல சொற்களுள் பூ என்பதும் ஒன்று. அவ்வகற்சிப் பொருள் கரணியமாகவே அரும்பு விரிந்தபின் பூ என்றும், அகன்ற புவி பூ என்றும் குறிக்கப்பெற்றனவாம். ஆகவே, பூதம் என்பதும் (மண், விண், தீ, நீர், காற்று) ஒன்றில் இருந்து ஒன்று விரிந்தது ஆகலின் பெற்ற பெயராயிற்று என்க. பூதம் விரிவுறுதலை, கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும், உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் றுண்முறை வெள்ளம் மூழ்கியார் தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் என்றும் (2), ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றின் உணரும் தீயும் நீயே நான்கின் உணரும் நீரும் நீயே ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே என்றும் (13) வரும் பரிபாடல்களானும், காற்றிற் பெருவலி இருவராகி என்னும் திருநாவுக்கரசர் தேவாரம், பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்பது முதலாக வரும் திருவாசகம் என்பவற்றானும், பூத விரிவை அறிந்து கொள்க. கொள்ளவே, ஆலிக்குப் பூதப் பொருள் கூறிய பொருத்தம் விளங்கும். ஆலு: இனி, ஆலு என்னும் சொல் பற்றிக் காண்போம். ஆந்தைக்குப் பெரிய விழிகள் உண்டு. அவற்றில் பரந்த கண்மணிகளும் உண்டு. அதன் பார்வை இருளை ஊடுருவித் துளைத்து நெடுந் தொலைவுக்குச் செல்லவல்லது. வட்ட வடிவான தட்டை முகத்தில் ஆந்தைக் கண்கள் பொருந்தி இருப்பதால், அது, ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால் முகத்தை வளைத்துத் திருப்பியே பார்த்தல் வேண்டும். உடலை அசைக்காமல் தலையை மட்டும் அசைத்துப் பார்க்கத்தக்க அரிய அமைப்புடையது ஆந்தை. அவ்வருமையான சுழல் அமைப்புக் கண்ட அரிய நுண்ணோக்குடைய முந்தை யோர், அச் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆந்தைக்கு ஆலு எனப் பெயர் சூட்டினர். அதன் ஒலிக் கடுமையும் ஆலு என்பதற்குத் துணை போவதாயிற்று. இனி, ஆலு என்பதற்கு, நீர், நீர்க்குடம், நீர்ச்சால், மிதவை என்னும் பொருள்கள் உண்மை நீர் என்பதன் வழியாக வந்தவையாம். ஆலை: ஆல் என்பதில் இருந்து வந்த மற்றொரு சொல் ஆலை ஆகும். ஆலை என்றதும் இப்பொழுது நினைவுக்கு வருவது பஞ்சாலை முதலிய பெரிய தொழிற்சாலைகளேயாம். ஆனால், முன்னாளில் ஆலை என்றால் கரும்பு ஆலையையே குறித்தது. இப்பொழுது சருக்கரை ஆலை என வழங்கப் பெறுகிறது. ஆலைச் சரக்கு என்றால் சுவைமிக்க அருமைச் சரக்கு என்னும் பொருள் உண்டு. ‘mJ v‹d Miy¢ ru¡fh? என வினாவும் வினாவே ஆலைச் சரக்கின் அருமையைப் புலப்படுத்தும். ஆலைப் பொருள் அமைதி அறிவோம். ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூச் சருக்கரை ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போலானேன் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பு போல என்பவை பழமொழிகள். ஆலைகள் வைப்போம் - கல்விச் சாலைகள் வைப்போம் என்று பாரதியாரும், ஆலையின் சங்கே நீ ஊதாயோ? - மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின் என்று பாரதிதாசனாரும் பாடினர். இந்நாளில் எங்கும் ஆலைகள் ஆலைத் தொழிலாளர்கள்! ஆனால், ஆலைச் சொல் மூலம் என்ன? ஔவைக்கு அரிய நெல்லிக்கனி வழங்கி அழியாப் பெருமை கொண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையாரே, அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே என்று கூறுகிறார். இந் நாட்டில் இல்லாத கரும்பை வேற்று நாட்டில் இருந்து கொணர்ந்து அருமை செய்தவனின் வழி வந்தவன் பொகுட் டெழினி என்கிறார். இதனால், அதியமானின் முன்னோரே கரும்பை இந் நாட்டுக்குக் கொணர்ந்து பெருக்கியவர் ஆவர். அவருக்குப் பின்னே நாடெல்லாம் பரவி வளர்வதாயிற்றாம் என அறியலாம். சங்கச் சான்றோர் நாளிலேயே கரும்பு ஆட்டும் எந்திரம் தோன்றிவிட்டது என்பதை, கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும் (புறம். 322) என்றும், கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும் (ஐங்குறு. 55) என்றும், கணஞ்சால் வேழம் கதழ்வுற்றாங்கு, எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை (பெரும்பாண். 259-60) என்றும் வருவனவற்றால் அறியலாம். எந்திரத்திற்கு ஏத்தம் என்னும் பெயருண்டு என்பது, மழைகண் டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழைகண் ணுடைக்கும் கரும்பின் ஏத்தமும் என்னும் மலைபடு கடாத்தால் (340-1) அறியப்பெறும். ஆலை என்பது ஆட்டும் பொறி என்றும், அப் பொறியுள்ள இடத்துக்கு அப்பெயர் ஆயது என்றும் கொள்ளு மாறு ஆலை-ஆகுபெயர் என்றார் நச்சினார்க்கினியர் பெரும்பாண். (200-1). ஆலையில் கரும்பு ஆட்டப்பெற்றதையும், கரும்பின் கண் உடைந்து சாறு ஒழுகியதையும், அதனைக் காய்ச்சுங்கால் புகை சூழ்ந்ததையும், கரும்பாலைப் பக்கம் மணம் கமழ்ந்ததையும் சங்க நூல்கள் சாற்றுகின்றன. ஆலைக்கு அலமரும் தீங்கழைக் கரும்பே (மலை. 119) அடூஉம் புகைசூழ் ஆலை (பெரும். 261) பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து (சிலப். 10-151) கார்க்கரும்பின் கமழாலை (பட். 9) என்பவற்றைக் காண்க. அழி என்பது வைக்கோலைக் குறிக்கும்; உழுத நோன்பகடு அழி தின்றாங்கு என்றும் (125) உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்கு என்றும் (366) புறப்பாடல்கள் அழி வைக்கோல் ஆதலை விளக்கும். அழி கரும்புக்கு ஆதலை, பொங்கழி ஆலை என்னும் சிலப்பதிகாரத் தொடரால் (10. 151) அறியலாம். வைக்கோலைக் குறிக்கும் அழியினின்று கரும்பாகிய இவ் வழியை விலக்குதற்கு, மிக நயமாக அரும்பத உரையாசிரியர் இதனைத் தூற்றாப் பொலி என்றார். அடியார்க்கு நல்லாரும் தூற்றாப் பொலியையே ஏற்று அமைத்தார். தூற்றும் பொலி ஆலி, நெற்களம் என்பதையும், தூற்றாப் பொலி ஆலை, கரும்படு களம் என்பதையும் குறித்தமை கொள்க. அழி என்னும் சொல்லுக்குக் கரும்புப் பொருள் உண்மையை அகரவரிசை நூல்கள் இனிமேல்தான் ஏற்றுப் போற்றுதல் வேண்டும். ஆலைச் செய்தியைக் காணும் நாம், இவ்விடத்தில் சிற்றாலை என்று ஊர்ப்பெயரும், செக்காலை என இடப் பெயர்களும் உண்மை அறிதல் நலமாம். செக்கில் எண்ணெய் எடுத்தலை ஆலைத் தொழிலாகக் குறிக்கப் பெறுதல், ஆட்டுதலால் வந்தது எனக் கொள்க. ஆலையடித்தல், ஆலை ஆட்டுதல், ஆலை ஒட்டுதல், ஆலைக்குழி, ஆலைத் தொட்டி என்பனவெல்லாம் கரும்பாலை தொடர்பாக வளர்ந்த சொற்கள். ஆலை பாய்தல் என்பது மனச் சுழற்சி என்னும் பொருளில் வள்ளலாரால் வழங்கப்பெறுகின்றது. (விண். 406) இனி, யானை கட்டும் கூடத்திற்கு, ஆலை என்னும் பெயருண்டென்று புறப்பாட்டு ஒன்றால் புலப்படுகின்றது. பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதற் பாகன் அதுசேர்ந் தல்கிய அழுங்கல் ஆலை வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்கு என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடிய பாட்டில் அவ் அரிய ஆலைச் சொல் உள்ளமை காண்க. யானை கூடத்திற்கு ஆலை என்னும் பெயர் உண்மை யைப், பெரிய சோற்றை யுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன், அவ் வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கண் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல என இதற்குப் பழைய உரைகாரர் உரை வரைந்தமை கொண்டும் தெளிக. யானைக்குரிய பெயர்களுள் நால்வாய் என்பதும் ஒன்று. தொங்குகின்ற வாயையுடையது என்னும் கரணியத்தான் அமைந்தது அப் பெயர். தூங்கல் என்பது மற்றொரு பெயர். ஓய்வின்றி இப்பாலும் அப்பாலும் தலையை அசைத்துக் கொண்டே இருத்தலால் யானைக்கு வந்த பெயர் இது. வஞ்சிப்பாவின் ஓசை அசை நடையது ஆகலின், தூங்கல் இசையன வஞ்சி என்றார் அமிதசாகரர் (யா. வி. 90). அசை தலையுடைய யானை நிற்கும் இடமாகலின் அப் பொருள் தழுவி யானைக் கூடத்திற்கு ஆலைப் பெயரை அமைத்துக் கொண்டார் பொத்தியார் என்க. ஆலயம்: ஆலை என்னும் சொல் அம் என்னும் சாரியை பெறும்போது யகர உடம்படு மெய்யும் பெற்று ஆலையம் என்று ஆகும். ஐகாரத்திற்கு அகரம் போலி ஆகலின் ஆலையம் ஆலயம் ஆகும். கோயில், கோட்டம் என்பவை ஆலயமாதற்கு நெடு நாள்கள் ஆயின. கோயில் விரிவடைந்தது; மண்தளி, கல்தளியா யாது; யானைகட்டும் மாலும் திருச்சுற்றும் கொண்டு திகழ்ந்தது. இந்நிலையில் ஆலயம் என்னும் அருமைப் பெயர் ஏற்றது. யானைகட்டும் மால் ஆலை எனப்பெறுதல் புறப்பாட லால் அறியப்பெற்றது. ஆலல் என்பதற்குச் சுற்று. சுழற்சிப் பொருள்கள் உண்மையும் அறிந்ததே. ஆகலின், யானை கட்டும் மால் உண்மையாலும், திருச்சுற்று உண்மையாலும் கோயில் ஆலயம் ஆயிற்றாம். பெரிய கோயில்களுக்கு அமைந்த அப் பெயர் பின்னே பொதுப்பெயராய் எல்லாக் கோயில்களுக்கும் வழங்கலாயிற்று. ஆலை வழியே ஆலயம் வந்தது என்பதில் ஐயுறுவார் உளராயின் அவர், சுற்றாலை, திருச்சுற்றாலை என்பவை கோயில் திருச் சுற்றுகளைக் குறிக்கும் என்பதைக் கல்லெழுத்தைக் கண்டு தெளிவாராக. தெளியின் ஆலயம் பொருள் பொதிந்த தண்டமிழ்ச் சொல்லே என்பதைக் கண்டு மகிழ்வர். ஆலோலம்: ஆலோலம் என்னும் சொல்லைக் காண்போம். இச் சொல்லுக்கு அசைதல், அலைதல், நீரொலி, புள்ஓட்டும் ஒலி என்னும் பொருள்களை அகரவரிசை நூல்கள் தருகின்றன. ஓல், ஓலம், ஓலை என்பன ஒலித்தல் கரணியங் கொண்டு வந்த சொற்கள். ஆல் ஓல் என்னும் இரண்டு சொற்கள் இணைந்து அம் என்னும் சாரியை ஏற்று ஒரு சொல்லாய் நின்றன. ஆடியும் பாடியும் தினைப்புனத்துக் கிளியோட்டும் மகளிர் செய்கை ஆலோலம் எனப்பெற்றது. அவர்கள் பாட்டொடும் ஆலோலம் என்னும் முடிநிலையும் இருந்தது. ஆதலால், அம்மானை, கோத்தும்பி, பூவல்லி என்பன போல ஆலோலம் என அது பெயர் பெற்றது என்க. பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம் தூவிமா மஞ்ஞைகாள், சொற்கிளிகாள் ஆலோலம் கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம் சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள் என்பது வள்ளியம்மை ஆலோலப் பாட்டு (கந்த. வள்ளி. 54). இச் சொல்லாட்சி பிற்கால வழக்காகும். அகல் என்பது ஆல் ஆகிப் பெருகிய சொற்களைக் கண்டோம். இனி, அகல் என்பதில் இருந்து கிளைத்த அகறல், அகற்சி முதலிய சொற்களைக் காண்போம். அகறல்: அகறல், அகற்சி என்பவை அகலல், விரிதல், பெருகல், பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் முதலிய பொருள்களைத் தரும். இவை ஒன்றற்கு ஒன்று தொடர்பாகவும், வளர்ச்சியாகவும் அமைந்த பொருள்களே. இவ் வனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை அகலல் தன்மையே. இவற்றுள் அகலல், விரிதல், பெருகல் என்பவை ஒரு தொடர்பெற்றனவும் பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் ஒரு தொடர் பெற்றனவும் ஆகும். முன்னவை அகலிப்பையும், பின்னவை அகலிப்பால் இடையறவுபட்டும் ஒழிந்தும் போதலையும் இடனாகக் கொண்டவை. களிறு சென்று களன் அகற்றவும் (புறம். 26) அறிவகற்றும் ஆகல்ஊழ் (திருக். 372) என்பவற்றில் வரும் அகறல் அகலிப்பை உணர்த்துவன. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே (தொல்) தெவ்வுப் புலம் அகற்றி (சிறுபாண். 246) ஐயறிவு அகற்றும் கையறு படர் (அகம். 71) என்பவற்றில் இடையறவு படலும், ஒழிதலும் பொருளாக அகறல் வந்தன. இவ்வகறல் பண்பு பருப்பொருள் நுண்பொருள் இரண்டற்கும் இயையப் பெருகிவருவனவாம். மென்தோள் அகறல் என்பது (திருக். 1325) பருப்பொருள் அகற்சியாம். தெவ்வுப் புலம் அகற்றி என்றதும் இதுவே. அறிவு, வறுமை, துன்பு, இருள் ஆகியவற்றை ஒழித்தல் நுண் பொருள் அகற்சியாம். ஐயறிவகற்றும் கையறு படர் (அகம். 71) என்பது அறிவு அகற்றல். இலம்பாடு அகற்றல் யாவது (புறம். 381) நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி (புறம் 337) என்பவை வறுமை அகற்றல். இனையல் அகற்ற (புறம். 377) இரும்பே ரொக்கல் பெரும் புலம்பு அகற்ற (புறம். 390) என்பவை துன்பு அகற்றல். குணக் கெழு திங்கள் கனை இருள் அகற்ற (புறம். 376) ஆரிருள் அகற்றிய மின்னொளிர் (அகம். 272) எஃகிருள் அகற்றும் ஏமப்பாசறை (புறம். 397) ஒளிதிகழ் திருந்துமணி நளிஇருள் அகற்றும் (புறம். 172) அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் (புறம். 56) என்பவை பல்வேறு வகைகளில் இருள் அகற்றலாம். அறியாமை, வறுமை, துன்பம் என்பவை உள்ளிருள் அல்லது அக இருள் என்பதும், ஏனை இருள் புறவிருள் என்பதும் காண்க. அவ்வாறே, அறிவு உள்ளொளி என்பதும் ஏனைக் கதிர்களும் பிறவும் புறவொளி என்பதும் அறிக. ஒளி அகல அகல (விரிய விரிய) இருள் அகலும் (ஒடுங்கும், நீங்கும்) என்பதும், அவ் வகற்றுதலே உலகை உய்விக்கும் என்பதும், ஒரு கொம்பில் பழுத்த நல்ல கனியும் நச்சுக்கனியும் போல அகற்சியும் அழிவும் உள என்பதும் இச்சொன் மூலம் கொண்டு தெளிக. அகற்றுதல்-ஆற்றுதல்: அகற்றுதல் என்னும் சொல் ஆற்றுதல் எனத் திரியும். அதன் அகரக் குறில் நெடிலாக நீண்டு ககரம் கெட்டு முற்கூறிய விதிப்படியே ஆற்றுதல் என அமையும். அகற்றுதல் பொருண்மையே, ஆற்றுதல் பொருண்மையாயும் நிலைக்கும். வெந்நீர், காய்ச்சுப்பால், தேநீர் முதலியவற்றை ஆற்றிக் குடிக்கிறோம். இவற்றில் ஆற்றுதல் என்பது என்ன? நீரிலும் பாலிலும் தேநீரிலும் இருந்த வெப்பத்தை வேண்டும் அளவுக்கு அகற்றுதலே - தணித்தலே - ஆற்றுதலாம் என்பது வெளிப்படப் புலப்படும் தெளிவான செய்தி. ஒருவர் நோய்வாய்ப் படுகின்றார். அவர்தம் நோயை நோய்கூறு அறிந்து அகற்றவல்ல மருத்துவர் தக்க மருத்துவத்தால் அகற்றுகிறார். ஆதலால் அதுவும் ஆற்றுதலாகும். இனி, ஒருவர் அல்லல்பட்டு, ஆற்றாராய் அலமருகின்றார். அவர்தம் அல்லலை அவரே தம் தெளிவால் அகற்றிக்கொள்ள மாட்டாராய்த் துன்புறுகிறார். இந்நிலையில் உளவியல் அறிந்து உற்றுழி உதவும் உழுவலன்பரோ மனநோய் மாற்றவல்ல திறம் வாய்ந்த அறிஞரோ அவர்தம் மனத்துயரை அகற்றுகின்றார். அதுவும் ஆற்றுதலேயாகும். இவற்றால் அன்றோ தம் துயரையும் பிறர் துயரையும் தணிக்கும் திறம் இலாரை ஆற்றமாட்டாதவர் என உலகம் பழித்து ஒதுக்கவும் இழித்துரைக்கவும் துணிகிறது. ஆற்ற மாட்டாதவரை, ஆற்றாமாக்கள் என்றும், ஆற்றாதார் என்றும் இலக்கியமும் கூறலாயிற்று. ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி மணி. 17.64; 19.35 ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மணி.11: 92-3 ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் நாலடி. 98. என்பவற்றைக் காண்க. தேற்றுதலால் அமையும் தேறுதல் போல, ஆற்றுதலால் அமைவது ஆறுதலாம். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறுவது சினம் வெந்தாறு பொன்னின் அந்திபூப்ப என்பவை ஆறுதல் காட்சிகளே. இவ் வாறுதல் அனைத்தும் அகற்றுதல் வழியாக வந்தவையே. தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகிறான். அதனைக் குறிப்பால் அறிந்து கொண்ட தலைவி வருந்துகிறான். தலைவன் அவளை ஆற்றிப் (பிரிவுத் துயர் அகற்றிப்) பிரிகிறான். தலைவி தன் பிரிவை அறியின் வருந்துவள்; அதனைத் தாங்குதற்கு அரிது என்று எண்ணித் தலைவன், அவள் அறியாமல் பிரிவதும் உண்டு. அந் நிலையில் அவள் ஆற்றாது துயர் அடைவாள். அவள் தன் ஆருயிர்த் தோழி ஆற்றுவிப்பாள்; ஆறியிருப்பாள் தலைவி. இவ்வாறாக அகப்பொருள் இலக்கண இலக்கியங்களில் வரும் ஆறுதல், ஆற்றுதல் என்பன வெல்லாம் இவ் வகற்றுதல் வழிவந்த சொற்களே. பசித்துக் கிடக்கும் ஒருவனுக்கு, அவன் பசியாற ஒருவன் உணவு படைக்கிறான்; பசியாறி மகிழ்கிறான் பசியுற்றவன்; கடுவெயிலில் நெடுவழி நடந்தவன் காலாறிக் கொள்கிறான். இவ் வாறுதல்கள் அகலுதல் வழிவந்தவையே. முன்னதில் பசி யகலுதல், பின்னதில் வெப்பமும் வலியும் அகலுதல். இறந்தவர் உடலுக்கு எரியூட்டிய மறுநாள் செய்யும் ஒரு சடங்கிற்குத் தீயாற்றுதல் என்பது பெயர். எரிந்து பட்டுக் கிடக்கும் பொடியின்மேல் நீர் தெளித்து வெப்பம் அகற்றிச் செய்யும் கடனே தீயாற்றுதல். இவ்வாறு அகற்றுதலே ஆற்றுதலாக எண்ணற்ற வழக்கங்கள் உள்ளமை அறிக. ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க் குதவுதல் (கலி. 133) பொருமுரண் ஆற்றுதல் (நாலடி. 149) அருநவை ஆற்றுதல் (நாலடி. 295) என்பவற்றை நோக்குக. ஆற்றல்: இனி, அகற்றல் என்பதே ஆற்றல் என ஆகியமை காண்போம். ஆற்றல் பண்பை உலகம் ஆண்மையினிடம் மிக எதிர்பார்க்கிறது. ஆதலால் முழுமுதல் இலக்கண ஆசிரியர் தொல்காப்பியனார், ஆற்றலொடு புணர்ந்த ஆண்பால் (1549) என்றார். போரிலாத உலகைக் காணவேண்டும் எனின் அதற்கும் அறப்போரோ மறப்போரோ செய்தே ஆகவேண்டியுள்ளது. உலக அமைதிக்கென நிறுவப்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் அமைப்பும் உலக அமைதிகாக்கப் படை வைத்திருந்தாலும், போர் செய்தலும் வேண்டியே உள்ளன. ஆகலின், பகை அழித்தல் ஓர் ஆற்றலாக உலகம் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. அரைசுபடக் கடக்கும் ஆற்றல் (பதிற். 34) உறுமுரண் கடந்த ஆற்றல் (புறம். 135) அருஞ்சமங் கடக்கும் ஆற்றல் (புறம். 397) அரும்பகை தாங்கும் ஆற்றல் (தொல். 1022) அருங்குறும்பு எறிந்த ஆற்றல் (அகம். 342) இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றல் (மலை. 73) பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் (புறம். 229) அமர்க்கடந்த நின் ஆற்றல் (புறம். 66, 99) இவை, பகை கடக்கும் ஆற்றல். புறப்பகையை அடக்குதலினும் அகப்பகை அடக்குதலே அருமை என்னும் கருத்துச் சான்றோரிடமே அரும்பியது. புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் எனப் போற்றப்பெற்றது. அத்தகைய அடக்கத்தரைப் பெருவீரர் (மகாவீரர்) எனவும் பாராட்டினர். நோற்றலின் ஆற்றல் என்றார் திருவள்ளுவர் (269). அவரே, ஐந்துவித்தான் ஆற்றல் பற்றியும் உரைத்தார் (25). மாறுபட்டு நிற்பார் மாறுபாட்டை அகற்றுதலும் எளிய செயல் அன்று; அருஞ்செயலே; ஆகலின், அதனைப் புணர்த்தல் ஆற்றல் என்றார் தொல்காப்பியனார் (1075) ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதிய மில்லை உயிர்க்கு என்னும் தெளிவுடையவரே கொடையாளராகத் திகழ்வர். அத்தகையர் அருமையைத் தாதா கோடிக்கு ஒருவர் என்பர். ஆகலின், ஓம்பாது ஈயும் ஆற்றல் புறநானூற்றில் புகழ் பெறுகிறது. (22) இனி, வள்ளுவர் மூன்று தலையாய ஆற்றல்களைக் குறிக்கிறார். அவை, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் (225) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை (891) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் (985) என்பவை. பசியாற்றுதலை, வாடுபசி ஆற்றிய பழிதீர் ஆற்றல் என்று புகழ்ந்து பாடும் புறநானூறு (227). bgUik, m¿î., முயற்சி என்னும் மூன்றையும் ஆற்றல் என்று சூளாமணி சொல்லும்; அதற்கு மேம்பட்ட ஆற்றல் சூழ்ச்சி என்னும் அது. ஆற்றல்மூன் றோதப்பட்ட அரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்ப (250) என்பது அது. தன்னுயிர் கொடுத்தல் அருமையினும் அருமைப்பட்டது. பொன்னைக் கொடுப்பாரும் தன்னைக் கொடுத்தல் அரிதே காண்! அதனைக் கொடுக்கும் ஆற்றலை, ஆற்றலோ டாண்மை தோன்ற ஆருயிர் வழங்கி வீழ்ந்தார் என்கிறது சிந்தாமணி (2267). எடுத்த செயலை இடைத்தடையின்றி இனிது நிறைவேற்றலும் ஆற்றலே! அது தொழிலாற்றல் (பதிற். 28) இவற்றுள் எல்லாம் அகற்றலே ஆற்றலாய் அமைந்துள்ள சீர்மை அறிக. ஆற்றல் என்பதற்கு அகரமுதலி நூல்கள், அறிவு, ஒத்தல், கூட்டம், செய்தல், தணித்தல், தாங்குதல், நிலபெறுதல், நீங்குதல், பெருமை, பொறுத்தல், முயற்சி, வலிமை, வன்மை, வெற்றி இன்னபல பொருள்களைத் தருதலும் கருதுக. அகன்றோர்-ஆன்றோர்: இனி, அகன்ற அகன்று என்பவை, ஆன்ற, ஆன்று என்றும், அகன்றோர் என்பது ஆன்றோர் என்றும் வழங்கும் வகையைக் காண்போம். அறிவு, கேள்வி முதலியவை விரிவும், அமைதியும், நிறையும் உடையன. ஆகலின், அவ்வகற்சிப் பொருள் அடிப்படையில் ஆன்ற அறிவு ஆன்ற கேள்வி எனப் பெற்றன. ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை (பதிற். 57) ஆன்ற அறிவும் (திருக். 1022) என்று அறிவும், ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை (புறம். 26) பல்லான்ற கேள்விப் பயனுடையார் (நால. 106) பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் (நால. 256) என்று கேள்வியும் குறிக்கப்பெறுகின்றன. குடிவரவும், பெருமையும் அகன்ற சீர்மைத்தாகலின், அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் (திருக். 681) ஆன்ற பெருமை (திருக். 416) ஆன்ற பெரியர் (திருக். 694) ஆன்ற மதிப்பும் (நால. 163) எனச் சுட்டப்பெறுகின்றன. இனிக் கற்பு, ஒழுக்கம், முதலியனவும் அகன்ற புகழுக் குரியனவாகலின், ஆன்ற கற்பில் சான்ற பெரியள் (அகம். 198) ஆன்ற ஒழுக்கு (திருக். 148) ஆன்ற துணை (திருக். 862) ஆன்ற பொருளும் (திருக். 909) எனப்பெற்றன. அருவி அணிமையில் இல்லாமல் அகன்ற இடம், அருவி ஆன்ற நீரில் நீளிடை (நற். 137) அருவி ஆன்ற அணியில் மாமலை (மது. 306) அருவி ஆன்ற பைங்கால் தோறும் (அகம். 78) அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் (அகம். 185) எனப்பெற்றுள. இவ்வாறு ஆன்ற அகற்சிப் பொருளிலே வந்தவை பிறவும் கொள்க. இவ்வாறே ஆன்று என்பது. ஆன்றடங்கு அறிஞர் (மது. 481) ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோம் (புறம். 191) அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் (திரு. 635) என்றும், பாடான் றிரங்கும் அருவி (புறம். 124) பாடான் றவிந்த பனிக்கடல் (மது. 629) நிழலான் றவிந்த நீரில் ஆரிடை (குறுந். 356) மாரியான்று மழை மேக்கெழ (புறம். 143) பெயலான் றமைந்த தூங்கிருள் (அகம். 158) மூன்றுலகும் ஆன்றெழ (சூளா. 137) என்றும், வருவன கொண்டு ஆன்று இப் பொருட்டாதல் கண்டுகொள்க. இனி ஆன்றோரைக் காண்போம். உயர்ந்த மாந்தர் என்பதை முன்னவர் அறிவாலும் பண்பாலும் உரையிட்டுக் கண்டு தெளிந்த முடிவாக ஆன்றோர், சான்றோர் எனப் பெயரிட்டு வழங்கினர். இந்நாளில் இவற்றின் உண்மைப் பொருள் விளக்கம் பெறக் காணாராய் வேறுபாடற வழங்குவாராயினர்.வழங்குதலிலும் மூலப்பொருள்காணாமலும் முட்டுப்பாடுறுவாராயினர். இச் சொற்களின் அடிப்பொருள் தெளியின் ஐயம் அகன்று உண்மை விளங்கும். அறிவின் இலக்கணத்தை வள்ளுவனார் நுண்மை, விரிவு, ஆழம் என முக்கூறு படுத்துக் கூறினார். நுண்மாண் நுழைபுலம் என்பது அவர் கூற்று. இவ்வறிவின் இலக்கணத்தையே இறைவன் இலக்கணமென இயைந்த மணிமொழியார், ஆழ்ந்து அகன்ற நுண்ணியன் என்றார். இவ்வறிவு நுணுக்கமும், இறைமைக்கூர்ப்பும் நோக்கியவர்கள் அறிவே கடவுள் என்றனர். இது நிற்க. அறிவின் முக்கூறுகள் நடுவணது அகற்சியாம். அதுவே தலைமையானதுமாம்! நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்பது இவ்வறிவுப் பொருளுக்கும் பொருந்துவதாம். ஆழ்தலும் நுணுக்கமும் அருந்துணையாம் என்றும் எளிதின் நோக்கினும் தெளிவாம். ஆகலின், அகன்று விரிந்த அறிவாளர்களை அகன்றோர் என்றனர். அகன்றோர் பின்னே ஆன்றோர் ஆயினர். அறிவிற்குச் சிறப்பு அகலுதல் போலவே, பண்புக்குச் சிறப்பு நிறைவு ஆகும். மிகுதலும் அதுவே. இதனைக் கருதியே பண்பான் நிறைந்த பெருமக்களைச் சால்பின் அடிப்படையில் சான்றோர் என்றனர். சால்பு - நிறைவு; மிகுதி. சால என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகலின் சால்பின் நிறைந்தோர் சான்றோர் எனப் பெற்றனர் என்க. இவற்றால் ஆன்றோர் சான்றோர் என்னும் சொற்களின் பொருள் நுணுக்கம் புலப்படும். அகன்ற அறிவினராம் சங்கப் புலவர்களைப் பண்டை உரையாசிரியர்கள் சங்கச் சான்றோர் என்றது என்னையோ எனின், அவர்கள், அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோற்போற் போற்றாக் கடை சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு என்பவற்றைப் போற்றி ஒழுகிப் பாண்பாட்டின் கொள் கலங்களாகவும், அறத்தொண்டின் வழிகாட்டிகளாவும் மிகப்பலர் இருந்தமையால் அவர்களைச் சங்கச் சான்றோர் என்றனர் என்க. இவற்றை ஆய்ந்து கொள்க. அறிவினை அகன்ற அறிவு எனக் குறிப்பிடும் வள்ளுவப் பெருந்தகையே, ஆன்ற அறிவு என்றும் வழங்குதல் இச்சொல்லின் மூலங்காட்டிய முறைமை என மகிழத் தக்கதாம். அஃகி அகன்ற அறிவு (திருக். 175) ஆள்வினையும் ஆன்ற அறிவும் (திருக். 1022) என்பவற்றைக் காண்க. ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றோன் (நற். 233) என்றது சான்றாண்மை இல்லானை எள்ளுதற்பட வந்த அங்கதம் ஆகும். ஆன்றோர் சான்றோர் இயல்புகள் தனித்தனித் தன்மைய வெனினும், ஆன்றோர் சான்றோராயும், சான்றோர் ஆன்றோராயும் அமைதலே உலகுய்க்கும் வழியாகும். ஆகலின் அத்தகைமை புலப்படுமாற்றான், ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்று விரிந்து விளக்கினர். (புறம். 191). உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து அன்றோ! எனச் சான்றோர் தன்மையராய் ஆன்றோர் அமைதலையும் விளக்கிக் காட்டினர் (அகம். 123). இனி, அரம்போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் மக்கட்பண் பில்லா தவர் என்று கூறுதலால், அறிவுக் கூர்ப்பும், பண்புக் கூர்ப்பும் உடைமையே பெரிதும் மதிக்கப்படும் ஆகலானும், கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் என்று கூறியவரே, கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென் றுணரப் படும் என இழித்துரைப்பார் ஆகலானும், அறிவு நலனும் பண்பு நலனும் வாய்ந்தாரே வாய்ந்தார் என்னும் கருத்தால் பிற்காலத்தில், ஆன்றோர் சான்றோர் வேறுபாடறக் கூறப்பெற்றனர் என்று தெளிந்துகொள்க. அகன்ற அறிவாளரை ஆன்றோர், ஆன்றார், ஆன்றவர் என வழங்கினர். இச் சொற்களுக்கு, அறிவுடையோர், அமைந்தோர், தேவர், புலவர், நன்னெறியாளர் எனப் பல பொருள்களை அகர முதலிகள் குறிக்கின்றன. இவையெல்லாம் அகற்சி மூலத்துக் கிளைத்த பொருள்களே. அறிவான் அகன்ற பெருமக்கள் ஆன்றோர் எனப் பெற்றனர். ஆனால், தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் பிரிவு, அகற்சி எனப்பெற்றான். நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான் என்பது உலகியற்கை ஆகலின், இறந்து பட்டாரையும் அகன்றார் என்றனர். அவர் உற்றார் வீடு குடி அகன்று செல்பவர் ஆகலின் அப் பெயர்க்கு உரியர் ஆனார். புகையும் ஆவியும் காற்றும் மேலெழக் காண்கும் ஆகலின், இறந்தார் ஆவி மேலுலகு சென்றது என்னும் முடிவால் ஆவி வாழ்வினரை அல்லது தேவருலகு என்னும் விண்ணுலகு வாழ்வினரை அகன்றார் என்றனர். இவ் வகன்றார்கள் எல்லாம் பொருள் வளர்ச்சிப் போக்கில் ஆன்றோர் ஆன்றார் ஆன்றவர் எனப்பெற்றனர் என்க. இவற்றுள் இடம் அகன்று பிரிந்து சென்றார் மட்டும் மாறாமல் அகன்றோர் என்றே வழங்கப் பெற்றனர். ஏனையோர் ஆன்றோர் எனப் பெற்றனர். சேய்நிலைக்கு அகன்றோர் என்றார் தொல்காப்பியனார் (986) அவ்வாறு அகன்றவர் காடு கடந்து சென்றார். ஆகலின், காடிறந்து அகன்றோர் என்றது அகம் (177). அவர்கள் செலவு நோக்கம் வெளிப்பட, ஆள்வினைக்கு அகன்றோர் (நற். 69) செய்பொருட்கு அகன்றோர் (குறுந். 190) என விளக்கினாரும் உளர். பிரிந்த நிலையை, ஏமம் செய்து அகன்றார் (குறுந். 200) காதல் செய்து அகன்றார் (கலி.129) இனிய செய்து அகன்றார் (கலி.129) உள்ளாது அகன்றார் (கார்.27) கம்பலை செய்து அகன்றார் (அகம்.227) என்று விளக்கினாரும் உளர். வளமை பெருகினார் என்னும் பொருளில் வள்ளுவர், அகன்றாரைக் குறிக்கிறார் ஓரிடத்து. அழுக்கற்று அகன்றாரும் இல்லை என்பது அது (170). அல்லிடை ஆக்கொண் டப்பதி யகன்றோன் என மணிமேகலை ஆபுத்திரனைச் சுட்டுகின்றது (13, 38). அறிவான் அகன்ற ஆன்றோர் நெறி, ஆன்றோர் செல்நெறி எனப் பெறுகிறது நற்றிணையில். (233) ஆன்றோர் என்பது போல ஆன்றோள் எனப் பெண்பாற் குறியீடு உண்டு என்பதைப் பதிற்றுப்பத்து குறிக்கிறது. ஆன்றோள் கணவ என்பது அது. (55) பொய்யறியாப் புகழாளர் ஆனறோர் என்பதை அறிகரி பொய்த்தல் ஆனறோர்க் கில்லை எனக் குறுந்தொகை குறிக்கிறது (184) தேவர் உலகை, ஆன்றோர் உலகம் என்று கலித்தொகையும் (139) ஆன்றோர் அரும்பெறல் உலகம் என்று அகநானூறும் (213) கூறுகின்றன. 1. உள்ளகல் வுடைத்தாய். பெருங். 1: 49 : 59. நற் 388. 2. எயிலது அகற்றமும். பெருங். 3.14 : 24. அகல்பு பதிற் 43. 33. கு. 743 தொல். பொ.44. செந்தமிழ்ச் சொல்வளம் பொது நூல்கள் பதிப்பிப்பாரும், படிப்பாரும் பலர்! பலர்! புலமை நூல்களைப் பதிப்பிப்பாரும் படிப்பாரும் மிக அரியர். அவ்வருமைப்பாட்டையே தன் பெருமைப் பாடாகக் கொண்டு தொடக்க நாள் முதல் இடையீடில்லாத் தொண்டு செய்துவருவது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்பது நாடறிந்த செய்தி. அம்முறையே முறையாகச் செந்தமிழ்ச் சொல்வளம் என்னும் இந்நூலும் கழக வழியே வெளி வருகின்றதாம். கழக ஆட்சியாளர் திருமிகு இரா. K¤J¡FkhurhÄ v«.V., பி.லிப்; அவர்கள், செந்தமிழ்ச் சொல்வளத்தைக் கண்டதும் விழைந்தனர்; விரைவில் அச்சிட்டனர்; புது விருந்தெனத் தமிழுலகுக்குப் படைத்தனர். அவர்கள் விருமபிய வண்ணமே இப்பணி, இணைச் சொல் அகராதி (இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு) என்னும் ஆய்வாகத் தொடர்கின்றது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். தமிழ்வளம் நாடுவோர் இத்தகு முயற்சிகளுக்கு ஊக்குதலாக இருத்தல் நல்லபல விளைவுகளை நல்கும் என்பது உறுதியாம்! பாவாணர் ஆராய்ச்சி நூலகம், தமிழ்ச் செல்வம், திருநகர், மதுரை - 6. தமிழ்த்தொண்டன், இரா.இளங்குமரனார் 26-3-84. முன்னுரை உட்கொளல் உயிரிகளின் இயற்கை; உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதது உட்கொளல். பருப்பொருள், கூழ்ப்பொருள், நீர்ப்பொருள், ஆவிப் பொருள் எனப் பல்வகைப்பொருளும் உட்கொளற்குரியவை. காட்சிப்பொருள் கருத்துப்பொருள் என்பனவும் உட்கொளற்குரிமைப்பட்டவை. இவ் வுட்கொளல் கருத்துப்பற்றிய சொற்களை எண்ணுங்கால் தமிழ்ச் சொல்வளம் தெளிவாக விளங்கும். அதே பொழுதில் இங்குச் சுட்டப்பெறாத சிலவும் ஆய்வார்க்குத் தோன்றக்கூடும். அச் சொற்கள் ஆய்வாரை மேலும் வியப்பில் ஆழ்த்தும். அசைத்தல் முதலாக விழுங்குதல் ஈறாக அகர வரிசையில் 102 சொற்கள் இவண் காட்டப் பெற்றுள்ளன. இச் சொற்களின் தழுவுசொற்கள் சிலவும் சுட்டப்பெற்றுள்ளன. இவற்றை விளக்குதற்கென அமைந்த சொற்களும் சில உள. பதம் என்னும் ஒரு சொல்லுக்குமட்டும் இலக்கணச் சான்றன்றி இலக்கியச் சான்று சுட்டப்பெறவில்லை. மற்றவையனைத்தும் இயன்ற அளவில் இருவகை வழக்குகளாலும் விளங்கப்பெற்றன. சில சொற்கள் ஒத்தனபோல் தோன்றினும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுண்மை குறிக்கப் பெற்றுள்ளன. கறித்தல் கடித்தல்; உதப்புதல் குதப்புதல் குதட்டுதல் காண்க. நூலாசிரியர் முன்னுரை செந்தமிழ்ச் சொல்வளம் என்னும் பெயரிய இந்நூல் பழந்தொகுப்பும் புதுத்தொகுப்பும் கூடியது. பழந்தமிழ் இலக்கண இலக்கிய வழக்குகளையும் இந்நாளை உலகியல் வழக்குகளையும் தன்னகத்துக் கொண்டது. நிகண்டுகள், அகராதிகள் ஆகியவற்றின் தொகுப்பில் உள்ளவையும், அகராதி களில் இடம் பெறாதவையும் கொண்டது. வட்டார வழக்காக இருப்பனவும்கூட இடம் பெற்றது! உட்கொளல் என்னும் பொருளில் அமைந்த சொற்களை, உங்கள் நினைவில் இருந்து சொல்லுக என்றால், உண்ணல், சாப்பிடல், தின்னல், குடித்தல், பருகல், அருந்துதல் போன்றவை தாமே என்பர். ஆம்! இவைபோல்வனவே! இன்னும் சில சொல்லுங்கள் என்றால், கடித்தல், விழுங்குதல், கறித்தல், கொறித்தல் என மேலும் சில சொல்வர். ஆனால், உட்கொளல் பொருளில் 102 சொற்கள் உண்டு என்றால், இத்தனையா? ï›tsî brh‰fŸ ïU¡»‹wdth? என வியப்பர்! நூற்று இரண்டு சொற்கள் என்பது மேலெல்லை இல்லை; மேலும் சொற்கள் இருக்கலாம்; இத் தொகுப்புக்கு வாராமல் விடுபட்டிருக்கலாம். அவற்றையும் தொகுப்பின் - பலர்பலர் துணையுடன் தொகுப்பின் - இன்னும் எத்துணையோ சொற்கள் கிட்டும்! இவற்றை அறியாமலும், இணைக்காமலும் விட்டு விட்டோமே என்னும் ஏக்கம் உண்டாகும்! இத்தகு அரிய பெரிய முயற்சிக்கு உரியது, தமிழ்ச்சொல் தொகுப்புப் பணியாகும். மின்னல்போல் சில சொற்கள் நினைவில் பளிச்சிடும்; எவரெவரிடமோ உரையாடும்போதும், எவ்வெந் நூல்களை யோ படிக்கும்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றும்! அறிந்த சொல்லாகவோ புதுச் சொல்லாகவோ இருக்கவும் கூடும். இச் சொல்லைப் பிறகு குறித்துக் கொள்ள லாம் என்று. நம்மேல் உள்ள அழுத்தமான நம்பிக்கை யால் இருப்போம்! ஆனால் அச் சொல்லோ ஏய்ப்புக்காட்டும் குழந்தைபோல மெல்ல நழுவி மறைந்துவிடும்! குறிக்கத் தவறிவிட்டோமே! என்று, இடையிடையே நினைவுக்குக் கொண்டுவர முயலும் முயற்சியூடே, ஒளிந்து மறைந்த குழந்தை தன் ஒளிமுகத்தை மீண்டும் காட்டுவதுபோல அச் சொல் தன்னைக் காட்டவும்கூடும்! அப்பொழுதேனும் மறக்காமல் குறித்துக்கொள்ள வேண்டுமே! மீண்டும் நம்பிக் கைவிடலாமா? பட்டுப்பட்டு அறிவதால் வருவதுதானே பட்டறிவு? அதனைப் பட்டென்று போகவிட்டால் பட்டறிவாகாது. பட்ட அறிவாகத்தானே போய்விடும்? சொற்றொகுப்புப் பணியிலும் சொல்லாக்கப் பணியிலும் ஈடுபடுபவர் எப்பொழுதும் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் வேலை கொடுத்து, விழிப்பாக இருக்கவேண்டும் என்பதுமட்டும் போதாது. கையிற்கும் கட்டாயம் தவறாமல் வேலை கொடுத்தலும் வேண்டும். ஒரு சொல்தானே! இதற்காகத் தாளை எடுத்து, எழுதுகோலைத் திறந்து எழுதவேண்டுமா? நடக்கும்போதோ, வண்டியில் போகும்போதோகூட - எழுதவேண்டுமா? கட்டாயம் எழுதவேண்டும்! ஏன் - உண்டு கொண்டிருக்கும் போது கூட ஒரு புதுச்சொல் கிடைக்குமாயின், அவ் வுணவுச் சுவையிலும் சொற்சுவையைப் பெரிதாக நினைத்து, உடனே இலக்கண இலக்கிய நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றில் இடம் பெற்ற சொற்கள் இவற்றில் உண்டு. சில வழக்குச் சொற்களாகவும் வட்டார வழக்குச் சொற்களாகவும் உண்டு இவற்றுள் அகரமுதலியில் இடம்பெறாதனவும் உண்டு. ஆனால், அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே. பிறமொழிச் சொற்கள் பெருக வழக்குள்ளவை எனினும் அவை தமிழ்சொல்வளம் காட்டாதது மட்டுமன்றித் தமிழ்ச்சொல்வள அழிப்புக்கு இடனாகி வழங்குபவை ஆகலின் அவை விலக்கப் பெற்றனவாம். இவ்வாய்வால் தமிழ்ச் சொல்வளம் அறியலாம். சொற்களின் பொருளும் வரலாறும் அறியலாம். சொற்களின் ஆட்சி பழமை, புதுமை ஆகியனவும் அறியலாம். புத்தாக்கச் சொற்படைப்புக்கும் துணை வாய்க்கும். அகரமுதலிகளில் இணைக்கப்பெற்றுச் சொற்பெருக்கமும் செய்யலாம். ஆய்வாளர் ஆய்வுக்குத்தக்க தூண்டுதல் கிட்டும். இவ்வுட் கொளல் கருத்துப் போல், பற்பல கருத்துகளுக்கும் ஆய்வு வேண்டத்தக்கதே! இது பொது நூல் அன்று! புலநூலாம்! 1. உட்கொளல் கருத்துச் சொற்கள் 1. அசைத்தல் - மேலும் கீழும் அல்லது இடமும் வலமும் அசைத்தல் அசையாகும். ஆடு மாடுகள் அசை போட்டு உண்ணல் அசைபோடல் அசையிடல் எனப்பெறும். அசைபோட்டுத் தின்னும் ஆவைத் தலைமாணாக்கர்க்கு உவமைப்படுத்தும் நன்னூல். புல்கண்ட இடத்துத் தின்று நீர்கண்ட இடத்துக் குடித்து நிழல் கண்ட இடத்துப் படுத்து அசைபோடுவது ஆவின் இயல்பாம். தின்ற உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து மென்று உள்ளே இறக்குதலை அசைமீட்டல் என்பர். மீட்டும் மெல்லுதலை அசைவெட்டல் என்பர். நஞ்சினை அசைவு செய்தவன் என்பது தேவாரம் (581. 3) 2. அடைத்தல் - உடைப்பு பள்ளம் ஆகியவற்றை முறையே அடைப்பதும் மூடுவதும் போல் வயிறுமுட்ட உட்கொள்ளல் அடைத்தலாம். கதவடைத்தல் போலவும், வழியடைத்தல் போலவும் (திருக். 38; புறம். 151) உணவு புகுவாய் முட்ட உண்பது எனினும் ஒப்பதே. புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம் மட்டவிழும் தோசை வடையுடனே - சட்டமுடன் ஓயாமற் சோறுகறி யுண்டையுண்டை யாய்அடைக்கும் என்பதொரு தனிப்பாடல். (தனிப். 4 : 825) 3. அதுக்குதல் - வெதுப்பு மிக்க உணவை வாயின் இரு புறங்களிலும் மாறி மாறி ஒதுக்கித் தின்னல் அதுக்குதலாம். இனிப் பல்லும் பல்லும் பட அமுக்குப் பதம் பார்த்தலும் அதுக்குதலாம். கண்ணப்ப நாயனார் இறைவர்க்குப் படைக்க விரும்பிய ஊனைச் சுவை பார்த்ததைக் கூறும் சேக்கிழார், வாயினில் அதுக்கிப் பார்த்து என்பார். (பெரிய. கண். 118) 4. அதைத்தல் - அதைப்பு என்பது தடிப்பு, வீக்கம் என்னும் பொருள் தரும் சொல். கடைவாய் விம்முமாறு போட்டு ஒதுக்கித் தின்னுதல் அதைத்தல் என்பதாம். (வ) 5. அம்முதல் - குழந்தை தாயின் மார்பில் பாலருந்தல் அம்முதலாம். அம்மம் - மார்பு; அம்மம், குழந்தை யுணவு என்னும் பொருள் தரும் சொல்; குழந்தைக்குத் தாய்ப்பாலே இயற்கையுணவு ஆகலான். அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கஞ்சுகன் அம்மந் தரவே என்பது நாலாயிரப்பனுவல் (பெரியாழ். 3). பாலூட்டும் தாய் அம்மு அம்மு என்று கொஞ்சிக் கொண்டே பாலூட்டுவது கண்கூடு. 6. அமுக்குதல் - இரண்டு இதழ்களையும் திறவாமல் வாயை மூடிக் கொண்டு தின்னல் அமுக்குதல் எனப்படும். சாக்கு அல்லது தாட்டில் பருத்தியைத் திணித்துத் திணித்து வைத்தலை அமுக்குதல் என்பது வழக்கு. எவருக்கும் தெரியாமல் எடுத்து முழுமையாய் விழுங்கிவிடுவதை அமுக்குதல் என்பதும் வழக்கு. ஒரே அமுக்காக அமுக்கிவிட்டாய் என்பதும், பெரிய அமுக்கடிக் காரன் என்பதும் வழக்கு. தெரியாமல் உண்பதைக் குறித்த இவ் வழக்கு, தெரியாமல் மறைக்கும் சூழ்ச்சியத்தை அமுக்கடி எனக் குறிப்பதாயிற்று. 7. அயிலல் - அயிலல், அயிறல் என்பவை உண்ணுதலைக் குறிக்கும் சொற்கள். அயினுதல் என்றும் வழங்கும். பாலும், பால் போலும் நீர்த்த உணவும் கொள்ளுதல் அயிலுதலாம். அயினி என்பது சோற்றையும், அயினி நீர் என்பது சோற்று நீரையும் குறிக்கும். உருபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் என்பது கந்தபுராணம். (சரவண. 33) ஆன பல் கடல்களும் அயிறல் மேயினான் என்பதும் அது (சிங். 27). பால்விட் டயினியும் இன்றயின் றனனே என்பது புறநானூறு (77). 8. அரக்கல் - அரக்குதல் என்பதும் அரக்கலேயாம். அரக்கல் என்பது அரைத்தலையும் முழுதும் உண்ணுதலையும் குறிக்கும் (ம.த.ச.அ). மரங்களில் இலைதழைகளை முழுவதுமாய் ஒட்ட வெட்டுதலை அரக்கல் என்பதும் அரக்க வெட்டுதல் என்பது வழக்கு. அவ்வழியே முழுதும் உண்ணுதலைக் குறித்திருக்கலாம். 9. அரித்தல் - பூச்சி புழுக்கள் தின்னுதல் அரித்தல் எனப்பெறும். கணச்சிதல் அரித்த என்பது சிறுபாணாற்றுப்படை (133). செல்லரித்த ஓலை செல்லுமோ? என்பது திருவரங்கக் கலம்பகம் (53). பூச்சி புழுக்கள் அரித்துத் தின்பது போல நொய்தாக அரித்துத் தின்பது அரித்தலாம். 10. அருந்துதல் - சிறிது சிறிதாகத் தின்னுதல் அல்லது குடித்தல் அருந்துதல் ஆகும். இதனைச் சூடாமணி நிகண்டு அருந்திடல் என்னும் (9.6). நெய்ம்மிதி அருந்திய என்பது புறநானூறு. (299). அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்பது இராமாயணம் (சுந்.) அருந்துதல் தண்ணீர் குடித்தலை ஆதலை, தண்ணீர் அருந்தி எனவரும் தாயுமானவரால் அறியலாம் (அருளி. 11). நுகர்தல் என்னும் பொருளில் வருவதை ஆருயிர்கள் பயனருந்து மமருலகம் என்னும் கோயிற் புராணத்தால் அறியலாம் (வியாக். 6). இனி, இது விழுங்குதல் பொருளிலும் வரும் என்பது அங்கவற்றையும் பற்றி அருந்தினான் எனவரும் கந்த புராணத்தால் விளங்கும் (இரண்டாம் நாள். சூர. 65). 11. அரைத்தல் - அம்மியில் இட்டு அரைப்பது போல ஓயாது ஒழியாது தின்றுகொண்டிருப்பது அரைத்தல் ஆகும். அரைநிலை என்பது அம்மி. அரைத்தற்குரிய பொருள்களுக்குச் செலவிடுவது அரை செலவு ஆகும். அரைசிலை குமிழ்ப்பு வடித்தல் என்பது தைலவகைப்பாயிரம் (12). 12. அளித்தல் - அருள் பெருக உண்ணுமாறு செய்வது அளித்தல் ஆகும். அளியாவது அருள். அளித்து அயில்கின்ற வேந்தன் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 192). இடுதல், ஈதல் போல்வது அளித்தலாம். கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, உணவு உண்பித்தல் என்னும் சிறப்புப் பொருளில் வந்ததாம். 13. அளைதல் - மழலைக் குழந்தை கையால் உணவை அளாவி உண்ணுதல் அளைதலாகும். இன்னடிசில் புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்கள் என்றார் புகழேந்தியார் (நள. கலிதொ. 68). மதுவுண்பது, அளைதல் எனப்பெறும் என்பது, அளைவது காமமடு நறவு என்னும் சிந்தாமணியால் புலப்படும் (கேம. 140). 14. ஆர்தல் - வயிறு நிரம்ப விரும்பி உண்ணுதல் ஆர்தலாகும். ஆர்தல் நிரம்புதலும் விரும்புதலுமாம். வயிறார உண்ணுதல் என்பது வழக்கு. ஆர்பதம் என்பது உணவாகும். ஆர்பதம் நல்கும் என்று கூறும் பதிற்றுப் பத்து (66). ஆர்பதம், ஆர்பதன் என்றும் வரும் (பதிற். 55). ஆர்த்தல் என்பது உண்பித்தல், நுகர்வித்தல் பொருளவாகும். வருநிதி பிறர்க் கார்த்தும் என்பது சிலம்பு (மங்கல. 33). தனப்பால் ஆர்த்தி என்பது கந்தபுராணம் (பார்ப்ப. 27). 15. ஆவுதல் - ஆவென வாயைத் திறத்தல் ஆவுதலாம். ஆவென வாயைத் திறந்து வாங்கி யுண்ணுதலும் ஆவுதல் எனப்பெற்றது. காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவளம் ஆவென்றால் என்று திருவேங்கடமாலை, ஆவெனலை உண்ணுதலாகக் குறிக்கும் (16). ஆவு ஆவு என்றும், அவக்கு அவக்கு என்றும் - தின்னுகிறான் என்பன. பேரார்வத்தால் விழுங்குதலைக் குறிக்கும் வழக்குகளாம். 16. ஆற்றுதல் - அகற்றுதல் என்பது ஆற்றுதல் ஆயிற்றாம், புகட்டுதல் என்பது போட்டுதல் என்று ஆயினாற் போல. பசிமிக்குக் கிடந்தாரின் பசி வெப்பு அகலுமாறு உண்பித்தல் ஆற்றுதலாம். பசியாறல் பசியாற்றல் என்பன வழக்குகள். ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் என்பது நெய்தற்கலி (16). 17. இடுதல் - இட்டார் பெரியர்; இடாதார் இழி குலத்தார் உப்பிலாக் கூழிட்டாலும் என்று வரும் இடங்களில், இடுதல் என்பது ஈதல் பொருளில் வந்தாலும், வயிற்றுக்கும் ஈயப்படும் என்னும் இடத்துப்போல உட்கொளல் பொருளிலும் வரும். மடியகத் திட்டாள் மகவை என்னும் சிலம்பு இதற்குச் சான்றாம் (9 : 22). இடுகுழி இடுகாடு எனவரும் வழக்குகளைக் கருதுக. 18. இரையெடுத்தல் - பறவை பாம்பு முதலியவை உணவு கொள்ளுதல் இரையெடுத்தல் எனப்படும் (ம.த.ச.அ). கோழி தின்னுதலை இரையெடுத்தல் என்பது வழக்கு. அவ்வாறே சிறு தீனிகளைப் பொறுக்கித் தின்பதை இரையெடுத்தல் என்பதும் இரைபோடல் என்பதும் வழக்கு. என்ன, இரை எடுத்தாயிற்றா? இரைபோட்டாயிற்றா? என்று வினவுவாரை. நாட்டுப்புறங்களில் காணலாம். துரை, இரை எடுக்கிறார் என்பது முள்ளால் குத்தியுண்ணும் முறை நோக்கி எழுந்ததாகலாம். இரைக்கே இரவும் பகலும் திரிந்து என்பார் பட்டினத்தார் (திருக்கா. 5) இரைதேர்வண் சிறுகுருகே என விளிக்கும் திருவாய்மொழி. (1. 4. 5). 19. இழுத்தல் - புகை, காற்று போன்றவற்றை உட்கொளல் இழுத்தல் எனப்படும். புகை பிடித்தலைப் புகையிழுத்தல் என்பதுண்டு. மூச்சு இழுத்தல், மூச்சு இரைத்தல் என்பன வழக்கில் உள்ளன. இறக்குந் தருவாயில் மூச்சுவிடவும் திணறுவாரை இழுபறியாகக் கிடக்கிறார் என்பர். இழுத்தல், உறிஞ்சுதல் என்னும் பொருளிலும் வரும். உறிஞ்சி இழுத்தல் என்பதும வழக்கே. 20. இறக்குதல் - மேல் இருந்து கீழ்வரச் செய்தல் இறக்குதலாகும். உமிழ்நீர் உட்கொள்வதை இறக்குதல் என்பர். இறக்கும் தறுவாயில், வாயில் பால்விட்டு இறங்குகிறதா? இறங்கவில்லையா என்று ஆய்வது வழக்கு. உனக்கு இது இறங்காது என்று எள்ளுவதும், மடக்கு என்று இறக்கு என்று மருந்துண்ணக் கட்டளையிடுவதும காணும் நடைமுறைகள். 21. இறைத்தல் - தெளித்தல், பொழிதல், கொட்டுதல் ஆகிய பொருளில் வரும் இறைத்தல் என்னும் சொல், உட்செலுத்துதல் பொருளிலும் வரும். வீணையர் இன்னிசை செவிதொறும் இறைப்ப என்பது அது (உபதேச. சிவபுண். 318). 22. ஈதல் - இரவலனுக்குத் தருவதுபோல் உயிர் வாழ்வு கருதிச் சிறிதளவே உணவு தருதல். ஈ என்பது இழிந்தோன் கூற்று என்னும் தொல்காப்பியம் (938). ஈயன் இரத்தல் இழிந்தன்று என்னும் புறநானூறு (204). சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார் திருவள்ளுவர் (412). 23. உட்கொளல் - உட்கோள் என்பதும் அது. வாயின் உட் பெய்து கொள்ளுதலை உட்கொளல் என்றனர். உள்ளே கொள்ளுதல் என்பது சொற்பொருள். சீலமோ டணிந்து உட்கொண்டு என்பது கந்தபுராணம் (திருக்கல். 83) 24. உட்செலுத்தல் - வயிற்றின் உள்ளே செலுத்துதல், வயிற்றின் உள்ளே தள்ளுதல் என்னும் பொருளில் வருவது இது. செல்லும் செல்லாததற்கு, அவன் இருக்கிறான் என்பது எதையும் கழிக்காமல் உண்பவனைக் குறிப்பது வழக்கு. ஊசி வழியே மருந்தும் ஊட்டமும் செலுத்துவதும், உட்செலுத்து தலாம். உட்செலுத்துதல் பெருமபாலும் கட்டாயத்தால் நிகழ்வதாம். 25. உண்ணுதல் - உணல் என்பதும் அது. சோறும் நீரும் நீர்ப்பொருள்களும் உட்கொள்ளுதல் உண்ணுதலாம். உணலினும் உண்டது அறல் என்னும் திருக்குறளும் (1326) உண்ணாமை கோடி யுறும் என்னும் ஔவையார் தனிப்பாட்டும் சோறுண்ணுதலைக் குறிக்கும். உண்ணுநீர் என்னும் கலித்தொகை நீர் உணவையும், உண்ணற்க கள்ளை என்னும் திருக்குறள் நீர்ம உணவையும் குறிக்கும். உண்டாட்டு என்னும் புறத்துறை, மதுவும் சோறும் கறியும் உண்டு மகிழ்தலைக் குறிப்பதாம். 26. உதப்புதல் - வாயில் இருந்து உணவு வெளியே வரும்படி மிகுதியாக வைத்துச் சவைத்துண்ணல் உதப்புதலாம். ஆடு அசைபோட்டுக் கடைவாய்ப்புறம் உணவைத் தள்ளி இறக்குதலும் உதப்புதல் எனப்படும். 27. உய்த்தல் - கன்றைத் தாயின் இடத்தில் செலுத்திப் பாலுண்ணச் செய்தல் உய்த்தலாகும். உய்த்தல் செலுத்துதல் பொருளில் வருதல் காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எனவரும் திருக்குறளால் விளங்கும் (440). இனிப் புலிப்பால்பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதா பாலூட்டுதல் போல்வனவும் உய்த்தலாம் (புறம். 323). 28. உருங்குதல் - அச்சுறுத்தி அடித்துத் தின்னுதல் உருங்குதல் எனப் பரிபாடலில் ஆளப்பட்டுள்ளது. பருந்து பாம்பைப் பற்றியுண்ணல் உருங்குதல் எனப்படுகின்றது. விடமுடை அரவின் உடலுயிர் உருங்கும் உவணம் என்பது அது (4.42). உவணமாவது பருந்து, கருடன் என்பதும் அது. 29. உருட்டித்தள்ளல் - கவளம்போல் சோற்றை உருண்டை உருண்டையாய் ஆக்கி மெல்லாமல் கொள்ளாமல் உட்கொள்வது அல்லது விழுங்குவது உருட்டித் தள்ளுதலாம். அள்ளிப் பிசைந்து உருட்டி என்பது சைவசமய நெறி (பொது. 186). 30. உறிஞ்சுதல் - இதழ் சுருக்கி நீரை ஊச்சிக் குடித்தல் உறிஞ்சுதலாகும். மூக்கால் பொடியை இழுத்தலை, உறிஞ்சுதல் என்பது வழக்கு. வழியும் மூக்கைத் துடைக்காமல் உள்ளிழுப் பவனை மூக்குறிஞ்சி எனப் பட்டப்பெயர் வைத்தழைக்கும் மூக்குறுஞ்சி மொட்டைக் காளை கைதை என எள்ளல் பாட்டு இசைப்பதும் சிறுவர் வழக்கம். ஒரு துறவி பிறவெல்லாம் துறந்தும் பொடியைத் துறவானாய், மூக்குத் தூளே உன்னை நான் துறக்கமாட்டேன் உறிஞ்சுவேன் உறிஞ்சுவேனே என்றது புதுப்பாட்டு. 31. உறிதல் - உறிஞ்சி அல்லது துளைத்தண்டு வழியே நீரையும் நீர்மப் பொருள்களையும் உறிஞ்சிக் குடித்தல் உறிதல் ஆகும். இந்நாளில் இளநீர், குளிர்நீர்க் குடிவகை ஆகியவற்றை உறிஞ்சியால் உறிஞ்சிக் குடித்தல் பெருகிய வழக்கமாம். 32. ஊச்சுதல் - ஊச்சு ஊச்சென ஒலியெழ உறிஞ்சிக் குடித்தல் ஊச்சுதல் எனப்படும். பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் என்பது ஐந்தினை ஐம்பது (37). 33. ஊட்டுதல் - குழந்தைகட்கும், நோயர்கட்கும் பாலும் சோறும் முதலியன உண்ணச் செய்தல் ஊட்டுதலாம். சோறு கவளமாக உருட்டித் தரப்பெறுதலாலும் ஊட்டுதலாம். மழவிளங்கன்றைத் தாய் மடுவில் உண்பித்தலும் ஊட்டுதலே. ஊட்டி என்று சங்கைக் குறிப்பதும், ஊட்டுப்புரை என அட்டிலைக் குறிப்பதும் அறியத்தக்கன. பண்டைத் தாய்மார் என குறித்த ஐவருள், ஊட்டுத் தாய் என்பாரும் ஒருவர் என்பதும் அறியத்தக்கது. அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட என்பது நாலடி (1). 34. ஊதுதல் - வண்டு தேனீ தும்பி ஆகியவை தம் சுரும்பினால் பூவுள் தேனை உறிஞ்சிக் குடித்தல் ஊதுதல் எனப்படும். தேம்பட ஊதுவண்டு இமிரும் (187) தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு (290) என்பவை நற்றிணை. ஊதுதலைக்குருகு, உள்ளூது ஆவி என்பவை புறச்செலவு பற்றியது என்பதும், வண்டு மலருதல் உட்செலவு பற்றியது என்பதும் இவண் கருதத்தக்கன. 35. ஊப்புதல் - பரும்பொருளும் அதனொடும் அமைந்த நீரும் கலந்து இருக்கப், பருப்பொருள் வாயுள் புகாது நீர்மப் பொருள் மட்டும் புகுமாறு இதழ் நெருக்கி உறிஞ்சிக் குடித்தல் ஊப்புதலாம். இஃது ஊச்சுதல் சூப்புதல் என்பவற்றின் வேறாதலை அவற்றொடு ஒப்பிட்டுக் காண்க. 36. எடுத்தல் - கோழி நீரை எடுத்து மேனோக்கி வாயைத் தூக்கிக் குடிப்பது போலக் குடித்தல், எடுத்தலாம். மூலப் புத்தகத்தில் பக்கம் 12 - 13 இல்லை. 44. குத்துதல் - குத்தி எடுத்துத் தின்னுதல் குத்துதலாம். உரலில் குத்துதல் புறஞ்செலல் ஆயினும், முள் குத்துதல் அகஞ்செலல் ஆதல் அறிக. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து என்பதில் வரும் குத்துதல் குத்தியெடுத்துத் தின்னுதலாதலை அறிக. 45. குதட்டுதல் - கால்நடைகள் அசைபோட்டு வேண்டியதை உட்கொண்டு வேண்டாதவற்றை வெளியே தள்ளுதல் குதட்டுதலாம். கன்று முதலியன பால்குடித்து வாயுதப்பதலைக் குதட்டுதல் என்றும் கூறுவர். (தமிழ்ப் பேரகராதி). 46. குதப்புதல் - எச்சில் தெறிக்கச் சப்புக்கொட்டி மென்று உண்ணல் குதப்புதல் எனப்படும். உதப்புதல் உணவு மிகுதியாக வாயில் இருத்தலால் நிகழ்வது. குதப்புதல் வாய்ச் செய்கை மிகுதியாக நிகழ்வது. இவை, இவற்றின் வேறுபாடு. 47. கொட்டுதல் - மெல்லாமலும் அரைக்காமலும் உணவை அப்படி அப்படியே விழுங்குதலைக் கொட்டுதல் என்பர். இந்தா இதையும் கொட்டிக்கொள் என்று பெருந்தீனியர்க்குத் தருவது வழக்கு. கொட்டில் என்பது களஞ்சியத்தைக் குறிக்கும். களஞ்சியத்துக் கொட்டுவது போலக் கொட்டுவது என்னும் குறிப்புடையது இச் சொல். 48. கொத்துதல் - கொத்தி எடுத்துத் தின்னுதல் கொத்துதலாகும். குத்துதல் கொத்துதல் ஆயிற்று. கொத்தித்திரியும் அந்தக் கோழி என்றார் பாரதியார். இனிக், களை குத்தியும் களை கொத்தியும் வெவ்வேறாதல் போல் குத்துதலும், கொத்துதலும் வேறுபடுவனவுமாம். கொக்கு மீனைக்குத்தி எடுப்பதற்கும், கோழி புழுவைக் கிண்டிக் கிளைத்துக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு அறிக. 49. கொள்ளுதல் - வாங்கிக்கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்போல உட்கொள்ளுதலும் கொள்ளுதல் எனப் பெறுக. உண்டைகொள் மதவேழம் என்றார் கம்பர். (கடிமணப். 28). 50. கொந்துதல் - பனங்காய் முதலியவற்றை அரிவாளால் வெட்டிக் கொந்திக் குதறி (குறுக்கு மறுக்குமாக வெட்டி)த் தின்னுதல் கொந்துதலாகும். அணில் முதலியவை குதறிக் கடித்து உண்ணுதலைக் கொந்துதல் என்றும் கூறுவா. (பேரகராதி) துன்புறுத்துதல் பொருளில் கொந்துதல் என்னும் சொல் வருதலை நான்மணிக் கடிகை குறிக்கும். கொந்தி இரும்பிற் பிணிப்பா கயத்தை என்பது அது (10). 51. கொறித்தல் - மணி, கொட்டை, தவசம், பருப்பு முதலியவற்றை அணில் தின்னல் போல் நுனிப் பல்லால் கடித்துத் தின்னல் கொறித்தலாகும். குளிருக்குக் கொறி என்று பயறு, கடலைகளை வறுத்துத் தருவது இன்றும் சிற்றூர் வழக்கமாம். கடித்தலுக்குக் கடைவாய்ப் பல்லும், கொறித்தலுக்கு முன்வாய்ப் பல்லும் பயன்படல் வேறுபாடாம். 52. கோடல் - கொள்ளுதல், கோடல், கோள் என்பவை உட்கொள்ளுதலையும் குறிக்கும். உணவு வகையை உட்கொள்ளு தலினும் அறிவு வகைகளை உட்கொள்ளுதலைக் குறித்தே கோடல் ஆளப்பெற்றுள்ளது. கற்றலைக் கோடன்மரபு என்றும், கற்பித்தலைக் கொடுத்தல் என்றும் கூறுவது நூல்வழக்கு. (நன். 40, 36) கற்பவனைக் கொல்வேன் என்பதும் நூல் வழக்கே (நன். 36). பறித்துக் கொள்ளுவதற்கும், உண்ணு வதற்கும் உரிய பக்குவநிலையைக் கோட்பதல் என்பது பண்டை வழக்கு (புறம். 120). 53. சப்புதல் - கண்ணமுது தேன் முதலியவற்றைச் சப்புக்கொட்டிச் சுவைத்து உண்ணல் சப்புதலாகும். சப்புச் சப்பெனல் ஒலிக் குறிப்பாகும். சப்பென அறைதல் என்பதில் அவ்வொலிக் குறிப்பறியக் கிடக்கின்றதாம். கன்று தாயின் மடியில் வாய் வைத்துப் பால் இழுத்துக் குடித்தலும் சப்புதலாம், விரலைச் சப்புதல் போல்வதாகலின். 54. சவட்டுதல் - வெற்றிலை பாக்கு போல்வனவற்றையும் சுவைமிக்க மிட்டாய் வகைகளையும் பல்கால் மென்றும் நாவில் புரட்டியும் சாறு கொள்ளுதல் சவட்டுதலாம். களப்போரில் வாட்டுதலைச் சவட்டுதல் என்னும் பதிற்றுப்பத்து (84). கதிர் அடித்து வைக்கோலைச் சவட்டுதல் உழவர் வழக்கு. அவ்வாறே பல்கால் புரட்டிப் புரட்டி மென்று நைத்தலால், சவட்டுதல் ஆயிற்றாம். 55. சவைத்தல் - பல்கால் மென்று சுவை கொள்ளல், சவைத்தலாம். சவைத்தற்கென்றே சவையம் என ஒன்று (சூயிங்கம்) கடைகளில் விற்பது நாம் அறிந்ததே! சவ்வு மிட்டாய், என்பதும் சவைத்தற்கென் றமைந்ததே. 56. சாப்பிடுதல் - சப்புச் சப்பென வாயொலி எழுமாறு உண்ணுதல் சாப்பிடுதல் ஆகும். சப்பிடுதல், சாப்பீடு - சாப்பாடு என வந்தது. நன்றாகச் சாப்பிடுபவனை அல்லது சாப்பாடே குறியாக இருப்பவனைச் சாப்பாட்டு ராமன் என்பது இக்கால வழக்கு. 57. சுவைத்தல் - பக்குவநிலை அல்லது சுவைநிலை அறியுமாறு உண்ணல். வேங்காடு, காரம், உப்பு முதலியவை செவ்விதின் அமைந்துளவா என்பதை அறிவதற்கு வேக்காட்டின்போதே சுவைத்துப் பார்த்தல் வழக்கு. இதன் வழியாக, ஒரு பானை சோற்றுக்கு ஓரவிழ்து பதம் என்னும் பழமொழி எழுந்தது. சுவை பார்த்தல் சுவைத்தல் என்க. இனி, மழவிளங்குழவி தாயின்மார்பில் பாலுண்ணல் சுவைத்தல் என்பதாம். சுவைத்தொ றழூஉம் தன்மகத்து முகம் நோக்கி என்பது புறம் (164). ஏனது சுவைப்பினும் தேனது வாகும் என்னும் தொல்காப்பியம் (பொருள். 144) சுவைதரினும் என்னும் பொருட்டது. விழியாக்குருளை மென்முலை சுவைத்தலை சுட்டுவார் பேராசிரியர் (தொல். மரபு - 8). 58. சூப்புதல் - எலும்பின் உள்ளீட்டை உறிஞ்சிக் குடித்தலும்; சூப்புப் போல்வனவற்றை இதழ் நெருக்கிக் குடித்தலும் சூப்புதல் ஆகும். சூப்பிப் பருகுதல் சூப்புதல் என்க. சூப்புதற்காக அணியப்படுத்தப்படுபவை சூப்பு எனவே வழங்கப் பெறுதலும் அறிக. சூப்புங்கால் சூப்பு சூப்பு என ஒலி உண்டாதல் கருதி இப்பெயர் எய்தி இருக்கலாம். 59. சூன்றல் - நுங்கு போல்வனவற்றை விரலால் குடைந்து அல்லது தோண்டித் தின்னல் சூன்றல் ஆகும். சூன்று என்பதற்கு அகழ்ந்து, குடைந்து என்னும் பொருள்கள் உண்மை. நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை என்னும் அகத்தால் (381) புலப்படும். நுங்கு சூன்றிட்டன்ன என்பது நாலடி (44). 60. செலுத்துதல் - தேய்வை (இரப்பர்)க் குழாய் வழியாகவோ ஊசிவழியாகவோ உணவு மருந்து உயிர்வளி முதலியன உடலின் உட்புகச் செய்தல் செலுத்துதலாம். இறை செலுத்துதல் என்றும் உள்ள வழக்கு. செலுத்து மட்டும் செலுத்திவிட்டால் சிவனே என்று கிடப்பான் என்னும் பழமொழி, வேட்கை மீதூர நிரம்ப உண்பதைக் குறிக்கும். 61. சேர்த்தல் - செலுத்துதல், கொட்டுதல் போன்றது சேர்த்தல். இது எனக்குச் சேராது, இது எனக்கும் சேரும் என்று வழங்கும் வழக்கால், சேர்தல், சேர்த்தல் என்பவை உட்கொளல் பொருளில் வருதல் விளங்கும். சேராமையும் ஒவ்வாமையும் Allergy என்பதாம். 62. தருதல் - ஈதல், கொடுத்தல் போல்வது, தருதல், பசிவெப்பு அடங்கத் தருவது கொண்டு தருதல் என்பது உட்கொளல் பொருள் தருவது ஆயிற்று. தருகை நீண்ட தயரதன் என்னும் இடத்துத் தருதல் கைச் செயல் ஆயினும், உண்ணுதல் பொருளில் வாய்ச் செயல் ஆயிற்றாம். 63. தள்ளுதல் - கொட்டுதல் போல்வது; சுவைபாராமல் மெல்லாமல் கொள்ளாமல் வயிற்றுள் தள்ளுதல். சரக்கு (சாராயம்) நூறு தள்ளு; சரியாகப் போகும் என்பதில் தள்ளுதல் குடித்தலைக் குறித்தது. 64. தாங்குதல் - தாங்கும் அளவுக்கு அல்லது கொள்ளும் அளவுக்கு உட்கொள்ளுதல் தாங்குதல் ஆகும். மேலும் மேலும் வலியுறுத்தி உண்பிக்கப் பெறும் ஒருவர் இனித் தாங்காது என்று மறுப்பது கொண்டு தாங்குதல் என்பது தாங்கும் அளவு உண்ணுதலைக் குறித்தல் அறியப்பெறும். 65. திணித்தல் - உண்ணமாட்டாத குழந்தைக்கு வலுக் கட்டாயமாக உணவைக் கொள்ளாத அளவுக்கு உட்செலுத்து தல் திணித்தல் ஆகும். தலையணைக்குப் பஞ்சு திணித்தல் போலத் திணிக்கப் பெறுவது என்னும் பொருளுடையது. திணிதல் செறிவும் நெருக்கமுமாதல் மண்டிணிந்த நிலனும் என்னும் புறப்பாட்டால் விளங்கும் (2). 66. தின்னுதல் - சிறு தீனி வகைகளை மென்று தின்பது தின்னுதலாம். இது தின்னுகை என்றும் வழங்கும். சிதலை தினப்பட்ட ஆலமரத்தைச் சுட்டும் நாலடியார் (197). தினற் பொருட்டாற் கொல்லாது என்று தொடரும் திருக்குறள் (256). இதனால் ஊன் முதலியன தின்பதையும் தின்னுதல் குறித்தல் புலனாம். ஊன்தின்பவர்க்கு என்பார் வள்ளுவர் (252). 67. திற்றல் - இது, தின்னல் போல்வதே. தேனொடு கடமான்பாலும் திற்றிகள் பிறவு நல்கி என்னும் கந்தபுராணப் பாட்டு (வள்ளி. 76). திற்றிகள் தின்பவைகள் எனக் குறித்து வந்தது. 68. தீட்டுதல் - நன்றாக வயிறு முட்ட உண்ணுதலைத் தீட்டுதல் என்பது நாட்டுப்புற வழக்கு. ஒரு தீட்டுத் தீட்டி விடுவான் என மிக மிக உண்பவனைச் சுட்டிக் கூறுவர். இடித்து உமிபோக்கிய பின் ஒட்டிய தவிடு போக்குதலைத் தீட்டுதல் என்பது வழக்கு. இனித் தீற்றுதல் தீட்டுதலாக வருதலும் கூடும். தீற்றுதல் காண்க. 69. தீற்றுதல் - உண்ணுதல் பொருள் தரும் சொல். நென்மா வல்சி தீற்றி (343) என்னும் பெரும்பாணாற்றுப்படை அடிக்கு, நெல்லையிடித்த மாவாகிய உணவைத் தின்னப் பண்ணி எனவரும் நச்சர் உரையால் இப்பொருள் தெளிவாம். புற்கற்றை தீற்றி (புற்கற்றையைத் தின்னச் செய்து) எனவரும் சிந்தாமணி (3105). 70. துய்த்தல் - உயிர்வாழ்வுக்குக் கட்டாயமாக வேண்டும் அளவு மெல்லிய உணவு வகைகளைக் கொள்ளுதல். இது துத்தல், துற்றல் என்றும் வரும். துய்ப்பு துப்பு ஆகியும் உண்ணுதலைக் குறிக்கும். துராஅய் துற்றிய துருவை என்னும் பொருநராற்றுப் படைக்கு (103) அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாய் என்று வரும் நச்சர் உரை துற்றல் பொருளைத் தெரிவிக்கும். துப்பார்க்கு எனவரும் குறளால் துப்பு உண்ணு தலைக் குறித்தல் விளங்கும். துற்று என்பது சிறிதுணவு என்னும் பொருளில் வருதல் துற்றுணவு இன்றிச் சோர்வல் எனவரும் இரட்சணிய யாத்திரீகத்தால் வெளியாம். துப்பு கெட்டவன் என்னும் வழக்கில் வரும் துப்பு துய்ப்பு இன்மையாம் வறுமையைச் சுட்டிவந்ததாம் துய் - உணவு. நக்கவா துக்கவா என்னும் இணைச்சொல்லில் துக்க என்பது துய்க்க என்பதாம். 71. துவ்வுதல் - துய்த்தல் போல்வது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் எனவரும் குறளால் துவ்வுதல் உண்ணுதல் பொருட்டதாதல் புலப்படும் (42). தான் துவ்வான் என வருவதும் அது (திருக். 1002). 72. துவைத்தல் - வாய் வைத்துச் சப்பி இழுத்துப் பால் குடித்தல்; தாய்ப்பால் மறவாக்குட்டியைத் துவைக்குட்டி என்பதும் துவைக்குப் பால்தா என்பதும் ஆட்டு மந்தையில் கேட்கும் செய்திகள். துவைத்தல் ஒலித்தல் பொருளில் வருதலும் கருதத்தக்கது. 73. தொடுதல் - தலைமை உணவுக்குத் தக்க துணையுணவு கொள்ளுதல் தொடுதல் ஆகும். தொடுகறி என்னும் பெயரும், தொட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்னும் வினாவும் தொடுதல் உண்ணுதல் பொருட் குரிமையை விளக்கும். வட்டிலைச் சூழ அமைந்த தொடுகறிக் கலங்களை நாள்மீன் விராய கோள்மீன்களுக்கு உவமை காட்டும் சிறுபாண் (242 - 5). 74. தொலித்தல் - அவனை விட்டோம் தொலித்துப் போடுவான் என்னும் வழக்கால் எவருக்கும் இல்லாமல் முற்றாக உண்ணுதலைத் தொலித்தல் குறிப்பது விளங்கும். தொலைத்தல் அழித்தலாகலின் அச் சொல் தொலித்தலாக மருவியது எனினும் ஆம். தொலித்தல் உமிபோக்கல் என்னும் பொருளில் வழங்கப் பெறும் சொல். 75. நக்குதல் - தேன், குழம்பு, பாகு முதலியவ்றை நாவால் தொட்டுச் சுவைத்து உட்கொள்வது நக்குதலாம். இது நால்வகையால் உண்ணுதல் என்பதில் ஒருவகையாம். மற்றவை உண்ணல், பருகல், கடித்தல் என்பனவாம். நக்கு நாயினும் கடையென்ப புகலும் நான் மறையே என்பது நாவுக்கரசர் தேவாரம். 76. நுகர்தல் - உண்டி முதலியவற்றால் இன்புறுதலும், நன்னெறிப்படர்ந்து விண்ணுலகு புக்கார் இன்புறுதலும் நுகர்ச்சியாம். இந்நாளில் நுகர்பொருள். நுகர்வோர், நுகர் பொருள் அங்காடி என்பன பெருவழக்கின. தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் (புறம். 214), அம்பிகையோடு நுகர்ந்து களித்தனன் (சிவரக. தேவிமேருகயிலை. 10) என்பவற்றைக் கருதுக. 77. நுங்குதல் - நுங்கு, நொய் நுறுங்கு போல்வனவற்றை நோண்டி அல்லது சுரண்டித் தின்னுதல். நுறுங்குகுற்றுமித்தவிட்டை, நுங்கினான் பசிகள் ஆற என்பது இரட்சணிய யாத்திரீகம். விழுங்குதல் பொருளில் நுங்குதல் வருவதை, பாயும் வெம்புகை நுங்கான் ((சேதுபு. சேதுச, 32) இந்தனஞ்சேர் கானகத்தை நுங்கும் எரிபோல் (பிர. காண். 13; 20) என்பனவற்றைக் காட்டி நிறுவும் தமிழ்ச் சொல்லகராதி. 78. நொறுக்குதல் - நொறுக்கித் தின்னல் நொறுக்கு தலாகும். முறுக்கு சீவல் சேவு முதலியவற்றை நொறுக்கித் தின்பர். இவ்வாறு தின்பதை நொறுக்குத் தீனி என்பது வழக்கு. நொறுங்கத் தின்று நோயகற்று என்னும் பழமொழி நன்றாக மென்று தின்னுதலைக் குறிப்பதாம். 79. பசியாறல் - பசித்துக் கிடந்தவன் தன் பசித்தீ ஆறுமாறு உண்ணுதல். ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றேயுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை (மணி. 11 : 12-14) பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது (மணி. 80 - 81) என்பனவும் பசிப்பிணி மருத்துவன் பண்ணன் என்று பாராட்டப் பெறுவதும் நோக்கத்தக்கன. பசிப்பாழி என்பது உடலுக்கு ஒருபெயர் என்பதும் அறியத்தக்கது. 80. படைத்தல் - நடுகற்கும் இறையவர்க்கும் இல்லுறை தெய்வத்திற்கும் சோறு முதலியன படைத்து அவிப்பொருளாய் உண்பித்தல். சோறு முதலியவற்றைப் பரிகலம் உண்கலம் முதலியவற்றில் இடுதல் படைத்தலாம். பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்னும் வீரநிலைப் பழமொழி பிற்றைக் காலத் தமிழர் வீழ்நிலைப் பழமொழியாய் வழங்குவதாம். படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணல் படைத்தல் வினையை உணர்த்துவது. படைத்தல் உணவு, பல்வகைப்பட்ட பெருஞ்சோற்றுத் திரளை என்பது கருதுக. 81. பதம் - பதம் என்பது சோற்றைக் குறிக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பக்குவமான வெந்த சோற்றைக் குறிக்கும். பதம் உண்டல் பொருளில் வருவதைப் பிங்கல நிகண்டு சுட்டும். சோறு என்னும் பொருளைச் சூடாமணி சுட்டும். இவ்விரண்டையும் தமிழ்ச் சொல்லகராதி சுட்டும். சோற்றின் பெயர் சோறு உட் கொளலுக்கு ஆகிவந்ததாகலாம். 82. பருகுதல் - ஆர்வ மீதூர நீர் குடித்தல் பருகுதல் ஆகும். விருப்பத்துடன் கற்க வேண்டும் என்பதைப், பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி என்று நன்னூல் குறிக்கும். பருகுதல் நால்வகை உண் திறத்தில் ஒன்றாகும். பருகுதல் என்பதற்கு விழுங்குதல் பொருள் உண்மையை நச்சினார்க்கினியர் குறிப்பார் (பொருந. 104). பருகு வன்ன வேட்கை என்று, காட்சிப் பருகுதலைக் காட்டுவார் பெருஞ்சித்திரனார் (புறம். 207). 83. பிடித்தல் - ஆவி, வேது, புகை முதலியவற்றை உட்கொள்வது பிடித்தல் எனப்பெறும். நிரம்ப உண்ணுதலை மூக்கு முட்டப் பிடித்தல் என்பது வழக்கு பிடித்தல் என்பதற்கு உட்கொள்ளுதல், மனத்திற்குப் பிடித்தல் முதலிய பொருள் களைத் தரும் தமிழ்ச் சொல்லகராதி. புகை பிடிக்காதீர் என்று எத்தனை எழுதிப் போட்டாலும், விடாப் பிடியாகப் பிடிப்ப வரைப் பார்க்கிறோம் இல்லையா! 84. புகட்டுதல் - சங்கு கெண்டி முதலியவற்றால் பால் மருந்து முதலியவற்றைப் புகச் செய்தல் புகட்டுதலாம். பாடம் புகட்டுதல் என்பதும் அவ்வாறு உட்செலுத்துதல் வழி வந்ததே. மூங்கில் கொட்டத்தால் மாடுகளுக்கு நீரும் மருந்தும் புகட்டு வதும் உண்டு. தாவந்தி அல்லது தாவரணை பற்றிய மாடுகள் நீரை விரும்பிக் குடியாமையால் இவ்வாறு செய்வர். புகட்டுதல் என்பது போட்டுதலாகத் திரியும். அமுதுதன் வாய் செவிதிறந்து புகட்ட என்பது திருவிளையாடல் (விடையிறு. 4). 85. புகுத்துதல் - ஊசி வழியாக மருந்தும் நீருணவும் செலுத்துதல் புகுத்துதலாகும். புகட்டுதல் சங்கு முதலியவற்றால் என்பதும், புகுத்துதல் ஊசி வழியாய் என்பதும் வேற்றுமை. 86. பொறுக்கப் பிடித்தல் - வயிறு முட்ட உண்ணுதல் பொறுக்கப் பிடித்தல் எனப்படும். சிலர் வயிற்றுக்கு வஞ்சகம் கூடாது என்று பொறுக்கப் பிடிப்பர். பொறுக்கப் பிடிப்பார். பொருமித் துன்புறுவதும் உண்டு. இது பொதுக்கப் பிடித்தல், பொதுமப் பிடித்தல் எனவும் வழங்கும். 87. பொறுக்குதல் - ஒவ்வொன்றாகத் தேர்ந்து பொறுக் கித் தின்னுதல். பொறுக்கு மணி என்பது எண்ணத்தக்கது. விரவல் என்னும் சிற்றுண்டியில் கிடக்கும் கடலைப் பருப்பை விரும்பி முதற்கண் பொறுக்கித் தின்னல் கண்கூடு. புறா, பொறுக்கித் தின்பதை இயல்பாக உடையது. 88. போட்டுதல் - புகட்டுதல் என்பது போட்டுதல் எனத் திரிந்ததாம். பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே என்னும் தாலாட்டுப் பாட்டு, போட்டுதலைக் காட்டும். போட்டும் என்பது போகவிட்டு என்பதன் மரூஉ என்பர். ஒள்ளிகல் அரக்கர் போட்டோடு நாள் என்பதை அவர் எடுத்துக் காட்டுவர். (தமிழ்ச் சொல்லகராதி.) 89. போடுதல் - போகடுதல் என்பது போடுதலாயதாம். வெற்றிலை பாக்குப் போடுதல், ஊசி போடுதல் என்பவை வழக்கில் உள்ளவை. 90. மடுத்தல் - நிறைய உண்ணுதலும், நிறையக் குடித்தலும் மடுத்தலாம். மடுத்தல் உண்ணுதலை அன்றி உண்பித்தலையும் குறிக்கும் என்பதை ஒண்டொடி மகளிர் மடுப்ப என்பதால் புறநானூறு கூறும் (56). மண்டியிட்டுக் குனிந்து கை கூட்டி அள்ளிப் பெருக உண்ணுதல் மடுத்தலாம் என்பதைத் திருவிளையாடல் சுட்டும். (குண். 14). 91. மண்டுதல் - சுவை பாராமல் கண்ணை மூடிக்கொண்டு நிரம்பக் குடித்தல் மண்டுதல் என்பது வழக்கு. மண்டுதல் ஆவலாகப் பருகுதல், மிகக் குடித்தல் என்று சொல்லும் தமிழ்ச் சொல்லகராதி. கண்ணை மூடி மண்டிவிடு என்று குழந்தைகளை வலியுறுத்துதல் இன்றும் வழக்கே. 92. மாந்துதல் - தேக்கெறியுமாறும், புளிப்பு ஏப்பம் வருமாறும் நிரம்ப உண்ணுதல், குடித்தலுமாம் (பிங். 2000). உண்டு செரியாமல் அல்லது தொக்கமாய் இருத்தலை எடுத்தல் மாந்தம் எடுத்தல் எனப்பெறும். மாந்தி மாந்தித் துயின்று தானையெல்லாம் என்பது இராமகாதை (உயுத். 4229). 93. மிசைதல் - விருந்தினரைப் பேணி எஞ்சிய மிச்சிலை உண்ணுதல். மிச்சில் மிசைவான் என்பது திருக்குறள் (85) மிசைவு என்பது உணவு என்னும் பொருட்டது. ஆகலின்,. மிசைதல் உண்ணுதல் ஆயிற்று என்பதாம். கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கலகுமிசை வாகும் என்னும் புறப்பாட்டால் (236) மிசைவு உணவாதல் படும். செங்கால் பலவின் தீம்பழம் மிசையும் என்னும் நற்றிணை (232) உண்ணுதலைக் குறிக்கும். 94. முக்குளித்தல் - மாடு தன் மூக்கைத் தொட்டியில் உள்ள நீர், ஊறல், காடிநீர் இவற்றுள் செலுத்திக் குடித்தல் முக்குளித்தல் எனப்படும். முக்குளிக்கும்போது மூச்சுக் குமிழிட்டு நீருக்கு மேலே வரும்; முக்குளித்தல் ஒலியும் கேட்கும். தொட்டி நிரம்பி நீர் கிடந்தாலும் அடிமட்டத்தில் இருக்கும் கட்டிப் பொருளை முக்குளிக்கும் மாடு தின்றுவிடும். அத்தகையவற்றை முக்குளிப்பான் என்பதுண்டு. நீருள் மூழ்கி மூச்சடக்கி இருத்தலை முக்குளித்தல் என்பதும் கருதுக. முத்துக் குளித்தல் வழியாக வந்ததோ என்பது கருதத்தக்கது. இனி மொக்குள் என்பது நீர்க்குமிழைக் குறித்தலின் மொக்குளித்தல் என்பது திரிந்ததோ எனவும் கருதலாம். 95. முழுங்குதல் - விழுங்குதல் என்பது முழுங்குதலாகத் திரிந்தது எனலாம். இரண்டற்கும் வேற்றுமை முழுங்குதல் என்பது முழுமையாக ஒன்றை விழுங்குவதைச் சுட்டுவதாகலாம். மலைமுழுங்கி மகாதேவன் என்று சிலரை உவமையாகச் சொல்லுவது அறிக முழுமையில் இருந்து முழுத்தம் வந்தது போல, இதுவும் அமைதற்கு இடனுண்டாம். முழுக்காட்டுதல், முழுக்காளி (முத்துக் குளிப்பவன்) என்பவற்றையும் எண்ணலாம். 96. மெல்லுதல் - வெற்றிலை முதலியவற்றைப் பல்லால் கடித்துத் தின்னல் மெல்லுதல் ஆகும். மெல்லல் என்பதும் அது. மெல்லிலை மெல்லிய இலை என்னும் பண்பைப் குறிக்காமல் மெல்லுதற்கு ஏற்ற இலையென வினையைக் குறிக்கும் என்பது சிந்தாமணி (2403). வெற்றிலையை மெல்லல் என்பதே மரபு என்பதை வெற்றிலையை யுண்ண வென்றல் மரபன்மையின் என்றும், பாகு, பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின் என்றும் நச்சினார்க்கினியர் இவண் குறித்தார். குளிருக்கு ஏதாவது மெல்லேன் என்று பயறுகளை வறுத்துக் கொடுத்தல் சிற்றூர் வழக்கு. 97. மேய்தல் - ஆடு மாடு முதலியன புல் முதலியவற்றை மேலாகத் தின்னுதல். நுனிப்புல் மேய்தல் என்னும் தொடர். மேய்தல் பொருளை விளக்கும். விலங்குண்ணுதலைக் குறிக்கும் மேய்தல், தீ எரித்தலையும் சுட்டும் என்பது வீட்டையும்தான் மேய்ந்தான் என்னும் தனிப் பாடலால் புலப்படும். ஆடு மாடுகளை மேயச் செய்வாரை மேய்ப்பர் என்பதும், கிறித்து பெருமான் தம்மை மேய்ப்பர் என்று கூறியதும், மேய்ச்சல் நிலம் என நில ஒதுக்கீடு செய்வகையும் கருதத்தக்கன. முகில் கடலில் நீர் குடித்தலை கலங்கு தெண்டிரை மேய்ந்து என இலக்கணை வகையால் கூறினார் திருத்தக்க தேவர். சிந்தா. 32. 98. மொக்குதல் - வாய் நிரம்ப அள்ளிப்போட்டுத் தின்னல் மொக்குதல் எனப்படும். இது நொக்குதல், மொதுக்குதல் எனவும் வழங்கும். குதிரைக்குக் கொள் கட்டித் தின்ன வைக்கும் பையை மொக்குணி என்பது உண்டென அறிதலின் (திருவாசகம், திருவிளையாடல்) அப் பைபோல உதப்பிய கன்னம் தோன்றுதல் கொண்டு மொக்குதல் என்னும் சொல் ஆகியிருக்கக் கூடும். மொக்குணி என்பது மொக்கை. பரியது என்னும் பொருளில் வழங்குதல் அறியத்தக்கது. முக்கல் என்பதற்கும் உண்ணுதற் பொருள் தரும் பேரகராதி. 99. மொசித்தல் - மொசிதல் என்பது மொய்த்தல் பொருளில் வருவதுடன் (பதிற். 11) தின்னல் பொருளிலும் வரும் என்பது புறநானூற்றால் விளங்குகிறது. மையூன் மொசித்த ஒக்கல் என்பது அது (96) செம்மறியாட்டுத் தசையை தின்ற சுற்றம் என்பது அதன் பழையவுரை. 100. வாங்குதல் - காற்றுவாங்குதல், மூச்சுவாங்குதல், யானை கவளம்வாங்குதல் போல்வன வாங்குதலாம். இழுத்தல், ஏற்றுக்கொள்ளல் பொருள், வாங்குதலுக்கு உண்டு எனச் சூடாமணி நிகண்டு சொல்லும். 101. வாய்க்கிடல் - வாய்க்கிடல் என்பது இறந்தோர் வாய்க்கு அரிசி போடல் என்னும் வழக்கம் பற்றியது. உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து துன்புறுத்தும் தடிமாக்களைப் பெற்ற தாயும் மனநோவால், உனக்கு வாய்க்கரிசி போட வேண்டுமே என்று சொல்வதில் வாய்க்கிடல் உண்ணுதல் பொருட்டதாம். 102. விழுங்குதல் - மெல்லாமலும் பற்படாமலும் மருந்து முதலியவற்றைத் தொண்டைக்குள் போட்டு இறக்குதல் விழுங்குதல்; விழுங்குதல் கீழே விழச் செய்தல் போல்வதாம். விழுதல், விழுது முதலியன கருதுக. 2. ஒருபொருள் பன்மொழி - அழகு அழகை விரும்பார் எவர்? அழகராகத் திகழ விரும்பார் எவர்? அழகுக்கு அழகு செய்ய விரும்பும் உலகம் அழகை விரும்பா திருக்குமோ? அழகின் ஆட்சி எங்கும் உள்ளது! எதிலும் உள்ளது! என்றும் உள்ளது! எவரிடத்தும் உள்ளது! கலையெல்லாம் அழகு! காட்சியெல்லாம் அழகு! கடவுளும் அழகு! எங்கும் அழகு; எதிலும் அழகு என அழகுள்ளம் அழகை நாடித் தேடுகின்றது. Mdhš, ‘mHF v‹gJ v‹d? என வினாவின் அவ்வழகுள்ளம் விடை தருகின்றதோ? விழிக்கின்றது! அழகை எப்படிச் சொல்வது? அழகு அழகானது தான் என்கிறது. அழகு தன்வயப்படுத்த வல்லது என்கிறது. இயற்கை யெலாம் அழகுதான் என்கிறது. செயற்கையில் அழகில்லையா? அதுவும் அழகே என்கிறது. கவர்ச்சி மிக்கவை யெல்லாம் அழகுதான்; காட்சி என்ன! கேள்வியும் அழகில்லையா! சுவை அழகில்லையா! என்கிறது. கடைசியில், அழகை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? சொல்வார் சொல் எல்லாம் அழகின் ஓர் ஓரத்தைச் சொல்லுமே அன்றி முழுதாகச் சொல்ல முடியுமோ என்று கைவிரிக்கின்றது. அழகுக்குத்தான் தனித்தமிழில் எத்துணை சொற்கள்? செங்கதிர் சேயோனையும், கருமுகில் மாயோனையும் ஏந்துபுகழ் வேந்தனையும், கடல் வண்ணனையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் - மழையையும் கதிரையும் திங்களையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் - இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் - அழகைப் பற்றிச் சொல்லியதை அறிய வேண்டுமோ? தமிழர்கண்ட பழமையான பேரிலக்கியத்தின் பெயரோ, வனப்பு; அவர்கள், புதுவதாகப் படைக்கும் இலக்கியத்திற்குத் தந்த பெயரோ, விருந்து; இத்தகையர் அல்லவோ! அவர்கள், அழகியலை-முருகியலைக்-கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கின்றனர். அவ்வார்வக் கொள்ளையில் புதுப் புதுப் பெயர்களைப் புனைந்து, அழகின் அழகைச் சுட்டுகின்றனர். அவர் சுட்டிய, அழகின் இலக்கணம் ஒன்றா? இரண்டா? ஒருபொருட் பன்மொழியாகப் புனைந்துள்ள சொற்கள் எல்லாமும் தனித்தனி இலக்கணமேயாம். அழகுக்கு மட்டும் அவ்விலக்கணம் இல்லாது ஒழியுமோ? உயர்ந்த-பரிய-விரிந்த-கவர்ச்சிமிக்க ஒன்றை எப்படி ஒரே சொல்லால் சொல்வது? ஒரே சொல்லால் முழுதுறச் சொல்ல முடியாததைச் சொல்லாமல் விட்டுவிட வளர்ந்தமனம் விட்டு வைக்குமோ? அதற்கு ஒருவழி கண்டது. அஃது, ஒருபொருட் பன்மொழி என்பதேயாம். அகன்ற கடலையோ, உயர்ந்த மலையையோ, விரிந்த வானையோ ஒரே பார்வையில் பார்த்துவிட முடிகிறதா? இன்னதே ஒருபொருட் பன்மொழி அமைந்தவகை பற்றிய விளக்கம். ஒரு பொருட் பன்மொழி கொண்டு அழகின் இலக்கணங்களாக நாம் அறிவன எவை? அழகு ஒழுங்குறுத்தப்பெற்ற அமைப்புடையது; உள்ளத்திற்கு விருந்தாக நிறைவு தருவது; உணர்வுடைய உள்ளத்தை ஓரொருகால் வருந்தவும் வைப்பது; புதுமை புதுமையாய்ப் பொலிவுறுத்துவது; தாயே போலத் தழைக்கும் இன்பம் தருவது; செறிவும் செப்பமும் கொண்டு விளங்குவது; உள்ளத்தின் எழுச்சிக்கு இடனாக இலங்குவது; புறத்துவனப்பால் உள்ளக்களிப்பும் உள்ளொளியும் விரிய வைப்பது; ஒப்பிட்டு ஒப்பிட்டு உவகை கூரச் செய்வது; புனைந்து இயற்றாப் பொலிவுடையதாய்ப். புனைவனவெல்லாம் வெல்லவல்லதாய் அமைவது; ஒருகால் கண்டாரைப் பல்கால் கவர்ந்து வயப்படுத்தும் வளமுடையது; இளமையும் திரட்சியும் இனிய தோற்றமும் வண்ணமும் வனப்பும் தன்னில் உடையதாய்த் தன்னை விழைந்தார்க்கு ஊட்டுவதாய் அமைந்தது; காலத்தால் அழியாக் கட்டமைவும், வளமை குன்றாச் செழுமையும் சீர்மையும் செறிந்தது; தகைமை, தண்மை, இனிமை, இணைமை, கவர்ச்சி, நன்மை, நிறைவு, உட்கோள், பக்குவம், பொலிவு, பசுமை, மலர்ச்சி, வலிமை, ஒளி, ஒலி, மணம், கொடை இன்னவையெல்லாம் தன்னகத்துடையது. அழகின், இவ்விலக்கணங்களை யெல்லாம் எவரேனும் அடுக்கி உரைத்தனரோ? ஆம்! ஒருபொருள் பன்மொழியாம் வகையால் உரைத்தனர். பல சொற்களையும் திரட்டி, அவற்றின் அமைதியை ஆயத் தலைப்பட்டார். அவ்வொரு பொருளின் கூறுகள் அனைத்தையும் ஒருங்கே கண்டு களிப்பர். முன்னே சுட்டியது போல், கடலை ஒரே பார்வையால் பார்த்து விடுவார் எவர்? மலையை முற்ற ஒரே நோக்கில் கண்டுவிடுவார் எவர்? வான் மீன்களையெல்லாம் வைத்த ஒரு காட்சியால் கணக்கிடுவார் எவர்? அவ்வாறே, எங்கெங்கு காணினும் எதையெதைக் காணினும் அங்கங்கு அதுவதுவாய் அமைந்து கிடக்கும் அழகையெல்லாம் திரட்டி அதன் இலக்கணத்தைப் பன் மொழிகளால் பகர்ந்த அறிவார்ந்த திறம் இன்பம் பயப்பதாம்! மொழி நலமும் பொருள் வளமும் சேர்ப்பதாம். அழகின் சிரிப்பை அள்ளூறி உணர்ந்து திரட்டிய தீம்பாகாய் வழியக் கூவிய புதுவைக் குயில் பாவேந்தர். அவ்வழகின் சிரிப்பை முன்னரே துய்த்து உணர்ந்தோர் படைப்புகள் ஒருபொருள் பன்மொழிகளாம். உண்ணுதலும் சாப்பிடுதலும் ஒன்றன்றோ! பருகுதலும் குடித்தலும் ஒன்றன்றோ! அரும்பும் முகையும் ஒன்றன்றோ! குழந்தையும் பிள்ளையும் ஒன்றன்றோ! பொது நோக்கில் இவை ஒன்றாகத் தோன்றினாலும் நுண்ணிய வேறுபாடு உள்ளவை என்பதை அறிவாளர் அறிவர். அவரே, ஒரு பொருள் பன்மொழி விளக்கமும் அறிவர். இனி, அழகு சுட்டும் சொற்களை அகர முறையில் விளக்கத்துடனும் எடுத்துக் காட்டுடனும் காணலாம்: 1. அணங்கு : வயப்படுத்தி வருத்துவது. தலைவனும் தலைவியுமாய்க் கூடி இருந்த காலை இன்புறுத்திய இயற்கை நலங்கள் எவையோ அவையெல்லாம் அவர்கள் பிரிவுற்ற காலை பெருவருத்தம் செய்வதை அகத்திணைப் பாலைப் பாடல்கள் வழியே அறிக. அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ தீருக். அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே - தொல். 2. அணி: ஒழங்குபட்ட அமைப்புடையது. அணி-வரிசை; அணிவகுப்பு, அணிதேர் என்பவற்றைக் கருதுக. இருபாலும் முளையடித்து முளைகளில் நெடுங்கயிற்றைக் கட்டி வரிசையாக மாடுகளைக் கட்டி நிறுத்தும் வழக்கத்தால் மாட்டுச் சந்தைக்குத் தாம்பணி என்பது பெயர். தாம்பு-கயிறு; சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்று என்னும் முல்லைப்பாட்டில் தாம்பு கயிறாதல் அறிக. தாம்பணி, தாமணியாய், தாமணி தாவணியாய்ச் சிதைவுற்று வழங்குதல் அறிக. 3. அந்தம் - (அகம் (அம்) + தம் = அந்தம்) உள்ளத்திற்கு நிறைவு தருவது அந்தமாம். அந்த மாதன வாழ்வோர் என்பது கம்பரந்தாதி 70. அந்தர் என்பதற்கு உள்ளென்னும் பொருள் உண்மை அறிக. 4. அம் - அமைதியாம் தன்மையால் இன்பம் சேர்ப்பது. அம்மையும் ஐம்மையும், அமைதியும் அழகுமாம். பரமர் அம்பாலிகைச் செம்பவளக் கொடிபங்கர் - மறைசை 3. 5. அம்மை - தாய்மையில் தழைவது அம்மையாம். இனி அமைதியாம் தன்மையும் அம்மையாம். அம்மையஞ் சொல்லார் சிந்தா. முத்தி. 533. 6. அமலம் - அமலுதல் நிறைதல் . நீர்நிறை குளமும், மலர்நிறை சோலையும், வனம்நிறை வயலும், உளம்நிறை வாழ்வும் அழகேயாம். இருக்கு அமலம் மலர திருவானைக். கோச் செங்கட் 3. 7. அலரி - விரிவுடையது அலரியாம். ஞாயிற்றின் கதிரை, அலர்கதிர் என்பர். அரும்பாய் முகையாய் இருந்தவை அலர்வதால் பூவின் பொதுப் பெயர் அலரி ஆயிற்று. மலரை மலர வைப்பது கதிரோன் ஆதலால் கதிரோனும் அலரி எனப்படும். அழகு உறையுள்களுள் மலருக்குத் தனி இடம் உண்டன்றோ! அது, அழகுக்கு அலரிப்பெயர் தந்ததாம் 8. ஆரியம் - (ஆர்+இயம்) கட்டமைந்தது; அருமையானது. இயம் என்னும் ஈறு இலக்கியத்தில் உண்மை, காண்க. 9. எழில்-எழு+இல் = எழில். எழுச்சிக்கு இடனாக அமைந்தது. அழகு உள்ளத்திற்கு எழுச்சியூட்டலின் எழில் ஆயிற்றாம். எழிலி என்னும் முகிற்பெயர் எழுதலானும், எழுச்சி யூட்டலானும் அமைந்ததாம். 10. ஏர்-ஏர் என்பதும் எழுச்சிப் பொருட்டதே. ஏர் என்பது ஏர்பு என்றுமாம். வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு என்றார் நக்கீரர். ஏர் முதன்மைப் பொருளதுமாம். தொழில் களுக்கெல்லாம் முதன்மையான ஏர்த் தொழில், பள்ளிக்கு முற்பட வருபவனை முற்காலத்தில் ஏரான் என்று சொல்லிய வழக்கு ஆகியவற்றைக் கருதி முதன்மைப் பொருள் கொள்ள லாம். ஏர்ப்பின்னது உலகு என்று அதன் முன்மையைத் தெரிவித்தார் அல்லரோ பொய்யா மொழியோர்? 11. ஐ - வியப்புக்கு இடமானது. ஐவியப்பாகும் என்றார் தொல்காப்பியர். ஐது, ஐயோ என்பவை வியப்பின் வழி வரும் சொற்களாம். ஐது அமை நுசுப்பு என்பது அகம். 75. ஐயோ இவன் அழகு என்பது கம்பர். 12. ஒண்மை - ஒளியுடையது.. ஒள் (ஒண்) + மை = ஒண்மை. ஒள்+ஒளி = ஒள்ளொளி; பேரொளி. ஒளியில் அழகுண்மை. இக்காலச் சரமின் விளக்குக் காண்பார் அறிவர். 13. ஒப்பு - ஒன்றைப் போல ஒன்றாக ஒப்பிட்டு அமைக்கப்பெற்றது, ஒப்பத் தோன்றிய உவவனம். காட்சிக்கு ஒப்ப அமைக்கப் பெற்றது ஒவ்வியம்; அஃது ஓவியமானது அறிக. எந்த வேலைப்பாட்டையும் இடப்பாலும் வலப்பாலும் ஒப்ப அமைத்தலும் அறிக. 14. கவின் - கவ்விப்பிடிக்கத் தக்க அழகுடையது கவி, கவின்; உள்ளத்தைக் கவித்து ஈர்த்து நிறுத்த வல்லதாகலின் கவின் எனப் பெற்றதாம். கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு என்பது நக்கீரர் வாக்கு. 15. களை - கள், களி, களை; களிப்புக்கு இடனாக அமைந்தது. களிப்பொடு திரிவார் இயற்கை அழகராகத் திகழ்தல் ஒருதலை. கவலைக்கோடு உடையார், எத்தகு அழகராயினும் பொலிவற்றுத் தோன்றல் கண்கூடு. இனி, அழகு குறைப்பனவற்றைக் களைந்து, அழகுக்கு உரியவற்றைச் செறித்து வைத்தலால் களையுமாம். 16. காந்தி - காத்து, காந்தம், காந்தி என்பவற்றைக் கருதுக. காந்தம் ஒளிப்பொருள் ஆவதுடன், கவர்ச்சித் தன்மையுடையது மாதல் தெளிவு. சூரிய காந்தி என்பது கதிரோன் வயமாகி மலர்முகம் காட்டல் கண்கூடு. 17. காமர் - நிறைந்த விருப்புக்கு இடமானது. கமம் நிறைவு ஆகும். காமம் என்பது, கமம் என்னும் நிறைவு மூலத்தின் வழிவந்த சொல்லே. இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் என வள்ளுவம் வழங்குவதும் அறியத்தக்கது. 18. காரிகை - காரிகை அழகாதல் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை (571) கண்நிறைந்த காரிகை (1272) எனக் காரிகையைப் பொருள் விளங்க விரிப்பார் வள்ளுவர். காரிகைப் பெயர் பெண்ணுக்கு ஆதல் அழகு நலம் பண்பு நலம் கருதியதாம். 19. குழகு - குழகுக்கு இளமை, குழந்தை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. மழவும் குழவும் இளமைப் பொருள் என்பார் தொல்காப்பியர். குளகு இளந்தளிராகும். இளமை அழகுக்குரியது என்பது, கழுதை, குட்டியாக இருக்கும்போது எட்டுப்பங்கு என்னும் பழமொழி காட்டும். குழகன் அழகன் முருகன் என்க. 20. கேழ் - கேழ் என்பது வண்ணமாம். வண்ணத்தில் அழகு பொதுளி நிற்பதாகலின் அழகு கேழ் எனப் பெற்றதாம். 21. கொம்மை - கொம்மையாவது திரட்சி. எங்குக் கொழுமையும் வளமையும் திரண்டிருக்கிறதோ, அங்கு அழகும் உண்டாம். கொம்மை மகளிர் மார்பகத்தைக் குறிப்பது. அவர்தம் அழகு நலச் செறிவு ஆங்குண்டையால், கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் என்றார் திருவள்ளுவர் (திருக். 1087) 22. கோலம் - வரிவனப்பு உடையது. கோல் திரட்சி, வளைவு, வரி என்னும் பொருள்களையுடையது. வீட்டின் வனப்பை முன்றில் கோலம் முன்னுரை போல விளக்குவதாம். அழகிய வளையல் அணிந்தாள் அன்மொழியால் கோல் வளையாதல் இலக்கண முறை. எழுதுவரிக் கோலத்தார் என ஏடும் எழில் மகளும் இரட்டுறலால் இலங்குவர். 23. சந்தம் - நறுமணம் சந்தமாம். சந்தம் அழகாவது, சந்தம் மடிய வடிவான் மருட்டிய தாழ்குழலே எனவரும் காரிகை விளியால் விளக்கமாம். 24. சாயல் - தோற்றப்பொலிவுடையது. மயிலன்ன சாயல் என்பர். சாய்-சாயை-சாயல். வடிவ ஒப்பே சாயலாம். உருவும் நிழலும்போல்வதாகலின் சாயை சாயலாயது என்க. 25. சார், சாரு - இவை அழகு சுட்டும் சொற்களாக நிகண்டாலும் அகரமுதலிகளாலும் அறியப்பெறுகின்றன. உளவியலுள் தனிச் சிறப்பினது சார்ந்ததன் வண்ணமாதல் என்பது அழகுக்கு அத்தன்மை யுண்மை விளக்க வேண்டியது இல்லை. குற்றாலச் சாரலும் கொள்ளையருவிச் சூழலும் சார்ந்தார் ஒருவர் தம்மை மறந்து அவற்றின் வயத்தராதல் கண்கூடு. சார்ந்தார் களைப்பையும் கவலையையும் மாற்றிக் கிளர்ச்சியும் களிப்பும் நல்கும் அழகை சார், சாரு என்றது பொருந்துவதேயாம். 26. சித்திரம் - தீட்டப்பெறும் வண்ணத்திலும் வரியிலும் வனப்புக் கொலுக் கொள்ளலின் அழகு சித்திரம் எனப் பெற்றதாம். சித்திர வேலைப்பாடு உடைய சிலம்பு சித்திரச் சிலம்பு எனப்பெற்றது. சித்திரம் ஆங்கு அழகுப் பொருள் தந்தது. ஓவியம் என்பது சித்திரத்துடன் ஒப்பக் கருதுக. 27. சிறப்பு - சிறப்புடைய பொருளில் அழகும் உண்மையால் அழகு சிறப்பு எனப்பெற்றதாம். அழகையும் புகழையும் தன்னகத்து அகப்படுத்திக்கொள்வது யாவது அஃது சிறைப்பாகிச் சிறப்பும் ஆயதாம். இறைப்பு, இறப்பு நோக்குக. ஏட்டைக்கட்டி இறைப்பிலே (இறப்பிலே) வை என்பது பழமொழி. ஐகாரம் அகரமாதல் மொழியியல். 28. சீர் - செவ்விதின் அல்லது சீர்மையின் அமைந்தது. சீர்மை உடைய ஒருத்தி சீர்த்தி எனப்பெற்றாள். (மணிமே.) சீர்த்தி கீர்த்தியாய் வடமொழி வழக்குப் பெற்றது. சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பியம். மிகு புகழ் உடையது அழகுடையது மாம். காந்தியாரின் அழகு தனிப்பேரழகாயதும். அவர்தம் பொக்கைவாய்ப் புன்முறுவல் எவரையும் வயப்படுத்தியதும் அவர்தம் சீர்த்தியால் வாய்த்ததாம். 29. செவ்வி - செவ்விதாக அல்லது தகவுற அமைந்தது.. அமைப்புச் செம்மை அழகுச் செம்மையாதல் வெளிப்படை. ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைதல் செவ்விது. ஆகலின் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாம். காண்பார்க்கு இன்பமும் நலமும் செய்யும் காலம் செவ்வி எனப்பெறும். செவ்விது தன்மை தருவது, நேர்மையானது எனவும் பொருள் தரும். இவ்வெல்லாம் அழகுக்கும் உண்மை யின், செவ்வி எனப்பெற்றதாம். செம்மை வழிவந்த செவ்வையும் இவண் எண்ணத் தக்கதே. 30. செழுமை - செழுமை குலாவும் ஒன்றில் அழகுண்மை எவரும் அறிந்ததே. செழுமையற்ற ஒன்று செழுமையான ஓவியத்தும் பாவியத்தும் பயிலுங்கால் அழகுற இலங்குவது வெளிப்படை பாலைப்பாக்களில் காணும் சுவை அழகேயன்றோ! 31. சேடு - சே, சேண், சேடு என்பவை உயர்வு என்னும் பொருள் சுட்டுவன. செழுமைப் பொருள் போலவே, உயர்வுப் பொருளும் அழகேயாம். ஆதலால் சேடு எனப்பெற்றது அது. நரை திரை மூப்புக்கு ஆட்பட்ட அன்னையின் ஓவியம், உள்ளத்துச் சுரக்கும் உயரன்பால் தெய்வமாகத் திகழ்வது இல்லையா? 32. சொக்கு - சொக்க வைப்பது யாது? அதன் பெயர் சொக்கு. சோமசுந்தரரைச் சொக்கன் என்றே குறிக்கும் நம்பி திருவிளையாடல். அச் சொக்கன் ஆட்டத்தில் சொக்கியவள் சொக்கியாம் உமையம்மை! கவர்வது, மையலூட்டுவது. தூயது என்னும் பொருள் தரும் சொக்கு என்னும் சொல் அத் தகவால் அழகையும் சுட்டுவதாம். 33. தகை; தகைமை - தகவும், தகவாம் தன்மையும், தகையும் தகைமையுமாம். அன்பு, அருள், ஒழுங்கு, பெருமை அமைந்தது அழகின்றி யமையுமோ? ஆகலின் தகையும், தகைமையும் அழகெனப்பெற்றன. இனித்தகவும் தகுதியும் அழகினவே என்க. 34. தளிமம் - குளிர்ச்சி, திருக்கோயில், மழை, விளக்கு முதலிய பொருள் தரும் தளியின் அடியாகப் பிறந்த தளிமம் அழகுப் பொருளுக்கு உரிமை பூண்டதாம். உளத்திற்கு உவகையும் நிறைவும் தருவனவெல்லாம் அழகின் இருக்கை யாகலின் தளிப்பொருளெல்லாம் அழகின் மூலமேயாம். 35. தென் - தென், தேனாம்; தேனார் இசையாம்; தேனுகர் ஈயாம்; தென்னி வளைந்த தென்னையாம்; தென்னா தெனா என இசை மாலையாம்! தென்னுண் தேனின் செஞ்சொற் கவி என்றார் கம்பர். இனிய தென்னின் இயல்பறிந்தோர் தென் என்பதற்கு அழகுப் பொருள் கண்டனர். அழகாய் அமைத்தனர். 36. தையல் - மாதர் காதல் என்பது தொல்காப்பியம். மாதரும் தையலும் வேறன்றே! ஆகலின் தையல் என்பதும் அழகுச் சொல்லாயிற்று. கோணல் மாணல் மரமாயினும் கல்லாயினும் ஒழுங்குறுத்தி, அறுக்கும் வகை அறுத்து, பொளியும் வகை பொளிந்து, இணைக்கும் வகை இணைத்து வனப்புறுத்தும் கலை தச்சு ஆகும். தச்சு மரத்தச்சு, கற்றச்சு, கொற்றச்சு எனப் பலவகையாம். தச்சுக் கூலியே தசகூலியாம். இத் தச்சுத் திறம் தையல் என்க. இஃதழகுக் கலையெனல் வெளிப்படை. யவனத் தச்சரும் இவணுறைந்தமை கழகச் செய்தி. 37. தோட்டி - தோட்டியாவது செல்லும் போக்கில் செல்லவிடாது பற்றி இழுத்து நிறுத்தி வைப்பது. யானைத் தோட்டியால் புலனாம் இது. இவ்வாறே கண்டாரைத் தன் கண் நிறுத்த வல்ல அழகும் புனைவால் தோட்டி எனப் பெற்றதாம். கண்ணுள் வினைஞர் என்னும் பெயரும் ஓவியர்க்குண்மை கருதத்தக்கது. 38. தோல் - தோல் ஆவது எண்வகை வனப்பினுள் ஒன்று. இழுமென் மொழியான் விழுமியது நுவலல் தோல் வனப்பின் இயல்பாம். அழகு நடையில் அருமையான பொருளைக் கூறக் கேட்போர் வயப்படுவர் என்பது ஒருதலை. வயப்படுத்தும் சொல்லழகும் பொருளழகும் அழகே என்பதும் ஒரு தலை. 39. நலம் - நலமாவது நன்மை, மங்கலம், சீர்மை முதலிய பொருள் தரும் சொல். விருப்பும் கண்ணோட்டமும் இன்பமும் நலமாம். இவையுள்ள இடம் அழகு உறையுள் எனற்கு ஐயமின்றே! ஆகலின் நலனும் அழகெனலாயிற்றாம். 40. நவ்வி - இளமைத் தன்மையும் மானும் நவ்வியாம். இளமையில் அழகுண்மை அறிந்ததே. மானின் அழகோ கலைமான் எனப் பெயரீட்டுரிமைக்கு இடனாயிற்று. நவ்வியம் புதுமைப் பொருள்தரும் சொல். புதுமைக் கவர்ச்சி எவருக்கும் உரியதே. ஆகலின் நவ்வி அழகு குறிக்கும் சொல்லாயிற்றென்க. 41. நன்கு - நன்றாக அமைந்தது நன்கு எனப்பெறும். அமைய வேண்டிய அமைப்பின்படி அமைந்ததே அழகாக விளங்கும் ஆகலின் அழகு நக்கு எனப்பெற்றதாம். நன்மை தருவதாலும் நக்கு என்பதற்கு அழகு உரியதாம், உள்ளக் கிளர்ச்சியால் உவகையைப் பெருக்கி உயிரை வளர்ப்பதாகலின்! 42. நோக்கம்; நோக்கு - நோக்குவார் நோக்கத்தைத் தன்னகத்தை விட்டு அகலா வண்ணம் நிலைபெறுத்துவது அழகு ஆகலின். நோக்கம் நோக்கு என்பவையும் அதன் பெயர் ஆயிற்றாம். மணிமேகலையார் அழகை, ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? எனச் சாத்தனார் வினவுதல்வழி வியந்துரைத்த தறிக. 43. பதம் - பதம் - பக்குவம்; ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் பழமொழியால் பதம் பக்குவமாதல் புலப்படும். பக்குவமாக அமைந்தது பதம் ஆயிற்று. பக்குவமாக அமைந்தது நாச் சுவையூட்டுவதுபோல எல்லாப் புலன்களுக்கும் சுவையூட்டும் எழிலும் பதம் ஆயிற்றாம். 44. பாங்கு - இணக்கம், உரிமை, தகைமை, பக்கம், முறை முதலிய பொருள்தரும் பாங்கு என்னும் சொல், அழகையும் சுட்டும். இடத்துக்கும் இயல்புக்கும் தக இணக்கமாக அமைதல் அழகின் இருப்பாம். வளமான பூங்கா எனினும் அதனிடம் பாங்கு அமையாக்கால் அதன் அழகு வயப்படுவது ஆகாதே! அழகின் அமைதியில் ஒன்றற்கு ஒன்று இணக்கமாதல் வேண்டத்தக்கதாம். 45. பூ - வனப்பின் வைப்பகமாக ஒரு வனம் திகழ்ந்தாலும் அதன் பூவே முதற்கண் கொள்ளை கொள்வதாம். பூவின் அழகும் கவர்ச்சியும் மங்கல மாண்பும் அறிந்தோர் அழகையே பூவெனப் பெயரிட்டுப் போற்றினர் என்க. பொன் வைக்கும் இடத்தில் பூ என்னும் பழமொழி பூவின் சிறப்பை உணர்த்தும். 46. பை - பை என்பது பைம்மை அல்லது பசுமை. பச்சை மணி பரப்பி வைத்தாற்போலத் திகழும் புல்வெளியில் வேறு செடி கொடி மரங்கள் இல்லையாயினும் அழகு நலம் உண்டாகலின் பசுமையும் அழகெனப்பெற்றதாம். பலவண்ணக் கலப்பு அழகு என்றால், ஒரே வண்ணப் பரப்பும் அழகெ எனக் கண்டது பை என்க. 47. பொலம் - பொலம் என்பது பொன். பொலங் கொடி என்பது பொற்கொடி. பொன்னின் அழகும் பொலிவும் மதிப்பும் எவரும் அறிந்தது. ஆகலின் பொலம், பொலிவு, பொற்பு, பொன் அழகைச் சுட்டினவாம். 48. பொலிவு - பொன்னின் அழகு பொலிவு எனப் பெறும். நிறைவும் பொலிவாம். பொலிவான அழகு, அழகு பொலிகின்றது என்னும் தொடர்கள் பொலிவுக்கும் அழகுக்கும் உள்ள இணைப்பை விளக்கும். 49. பொற்பு, பொன் - பொலம் பொலிவு என்பன போல இவையும் பொன் வழியாக அழகைச் சுட்டும் சொற்களே. பொற்பு என்பது அழகேயன்றி அழகுறுத்து தலையும் சுட்டும். புனைதல் என்பதாம் அது. 50. மஞ்சு - மஞ்சு, மைந்து என்பதன் போலி. மஞ்சன் கழல் என்றார் கம்பர். மைந்தாவது வலிமை; ஆடவர்க்கு வினையே உயிர் என்பராகலின் வினையாற்றற்குரிய வலிமை மைந்தர்க்குப் பண்பாகச் சுட்டப்பெறும். வலிமையுடைய இடத்து அழகும் பொதுளுதல் ஒரு தலை. ஆகலின் மஞ்சு அழகு எனப்பெற்றதாம். 51. மணி - மணியானது ஒலியும் ஒளியுமாம். மணி மாணிக்கமும் அணிகலன்களுமாம். இனிய ஒலியும், எழில் வாய்ந்த ஒளியும், மணிக்கலன்களும் அழகின் இருக்கைய வாகலின் மணி அழகுடைமையாயிற்றாம். இனிக் கண்ணின் மணியோ எவற்றிலும் அழகு விஞ்சியதாம். பாவை என்பது அதன் அருமை காட்டும். 52. மதன் - இளமையமைந்ததும், வாளிப்பு உடையதும் மதன் எனப்பெறும். மழலை மதலை எனப்பெறல் அறிக. மதலையாய் வீழூன்றியாங்கு என்பதால் மதலை மக்கட் சுட்டாதல் தெளிவு. மழ, குழ, என்பன போல மத என்பதும் இளமை சுட்டும். மதர்ப்பு என்னும் கொழுமையையும் மதன் காட்டும். ஆகலின் மதன் அழகாயிற்றாம். 53. மா - பெருமை சுட்டும் மா, உரிச்சொல்; மாண்பின் மூலம். அழகுக்குத் தனிப் பெருமையுண்டாகலின் மா எனப்பெற்றது. அவையில், அழகர் சிறப்பு தனிச் சிறப்பாம். ஆடை பாதி ஆள் பாதி என்பது பழமொழி. செல்வ மகள் மாமகள் எனப்பெறுதலும் அறியத்தக்கது. 54. மாண்பு - மா என்னும் உரிச்சொல் வழிவந்த சொல் மாண்பு. அது, மா அழகாதல் போல, அழகு சுட்டும் சொல்லாயிற்று. 55. மாதர் - விருப்புக்கு உரியர் மாதர். மாதர் காதல் என்பது தொல்காப்பியம். மாதர் அழகால் விருப்புக்கும், பண்பால் வழிபாட்டுக்கும் உரிமை பூண்டவர். தாய்மையும் இறைமையும் தங்கிய வடிவு மாதர் ஆகலின் அழகு குறித்த சொல்லாயிற்றாம். 56. மாமை - மாந்தளிர் போலும் நிறம் மாமை. பச்சைப் பசேல் எனத் திகழும் மாமரத்தின் கிளை நுனிதோறும் செம்பசுமை அல்லது பொன்பசுமை திகழும் தளிர்கள் அரும்பி அசையும் காட்சி, மரம் முழுவதையும் விலக்கித் தன் மாட்டே காண்பாரை வயப்படுத்துதல் கண்கூடு. ஆகலின் மாமை அழகு ஆயிற்றாம். 57. மாழை - பொதுவில் உலோகப் பொருள்தரும் மாழை, சிறப்பாகப் பொன்னைச் சுட்டும். இனி மாழை மான்மட நோக்கி எனச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் மாழைக்கு உண்டு. ஆகலின் மாழை அழகே. 58. முருகு - அழகு, இளமை, மணம், தெய்வம் இன்ன பல உயர் பொருளையே சுட்டுவது முருகு. ஆகலின் முருகுறையும் மலையிடத்து இறைவனை முருகனாக மலைவாணர் கண்டு வழிபட்டனர். முருகனை அழகன் எனவும் குழகன் எனவும் கொண்டாடினர். தெய்வ முருகில் அழகு கொஞ்சுவதைச் சொல்ல வேண்டுமோ? 59. யாணர் - யாண், அழகு எனப்படும் யாணர் புது வருவாய் உடையவர் என்னும் பொருளது. மிகு வருவாய் உடைய வணிகர் கலியாணர் எனப் பெறுவர். வளத்தைத் திருவாகக் கண்டவுள்ளம் வருவாயை யாணராக - அழகாகக் கண்டது. 60. வகுப்பு - வகுக்கப்பெற்றது வகுப்பு. வரன்முறையாக வகுத்துக்கொண்டு பாடப்பெறும் ஒருவகை நூல் புய வகுப்பு எனப் பெறுகிறது. காடாகக் காணும் காட்சியிலும், வகுத்துக் காவாகக் காணும் காட்சி அழகுடையதன்றோ? 61. வடிவு - வடிவானது தோற்றம். தோற்றச் சிறப்பு அழகேயாகலின் வடிவு அழகெனப்பெற்றதாம். வடித்து எடுக்கப்பெற்ற சிற்பத்தின் அழகை என்னென்பது! கல்லைக் கனியாக்க வல்ல கலைத்திறம் வடிவேயன்றோ! 62. வண்மை - பல்வகை வண்ணங்களும் கெழுமிய தன்மை வண்மையாம். வண்ணத்தில் வனப்புக் கொஞ்சுவதால் தானே. உடுக்கும் உடைகளில் எண்ணரிய வண்ணங்கள்! வண்ணப் பூக்களைத் தேடி ஈக்களே மொய்க்குமானால் மாந்தரைச் சுட்டுவானேன்? விளம்பர உத்திகள் வண்ண உத்திகளாகப் பளிச்சிடுகின்றன அல்லவோ! இனி வளமைத் தன்மையாம் கொடையும் பாடு புகழால் அழகுறல் புறப்பாடலில் காண்க. 63. வளம் - வளம் செறிந்த இடமும் காட்சியும் உருவும் வளமாகவே சொல்லப்படுகின்றன. வளனற்ற ஒன்றே ஓவியத்தும் காவியத்தும் வளமுடையதானால், உண்மை வளமுடையது எத்தகு அழகு பெறவல்லது! உலகமே, அளப்பரும் வளப்பெருங் காட்சி என்றால் வளமை அழகேயன்றோ! 64. வனப்பு - வன்னிலம் எனப் பெறுவன முல்லையும் குறிஞ்சியுமாம். காடும் மலையும் கவின் கொள்ளைகள்; கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பின்; ஆகலின் வனத்தினின்று வனப்புச் சொல் அழகுக்கு வாய்த்ததாம். குறிஞ்சிக் கபிலனும் முல்லைப் பூதனும் வனப்பில் தோய்ந்து வளமுறப் பாடியவை தனிவனப்பினவாம். 65. வாகு - அழகில் தோய்ந்த வாகு, வாய்த்தது என்னும் பொருள் உடையதாம். கைவாகில் வை என்பர். வாய்க்கில் வாக்கில் வாகில் என வந்ததாம். ஒழுங்கு என்னும் பொருள் வாகுக்குண்மை அகரமுதலிகள் சுட்டும் ஒழுங்குற அமைந்தது அழகெனக் குறித்ததாம். 66. வாமம் - செல்வம், ஒளி, மார்பு முதலிய பொருள் தரும் வாமம் அழகும் சுட்டும். வாமன் வாமி என்பவை தெய்வக் குறிப்புடையவை. தாமரைக் கண்ணன், கண்ணன் எனக் கண்ணழகால் குறிக்கப் பெறுவன். அவனை வாமலோசனன் எனவும் திருமகளை வாமலோசனை எனவும் வடமொழியாக்கிக் காட்டல் இரு பிறப்பியாம். 67. விடங்கம், விடங்கு - ஆண்மையும் ஆற்றலும் கெழுமியதில் அழகும் திகழுமாகலின் இவை அழகெனப் பெற்றனவாம். விடபம், விடை, இடபம் எனப்பெறும் காளையின் அழகும் ஆற்றலும் அறிவோர் அதன் அழகையும் உணரக்கூடும். ஏறுபோல் பீடுநடை என்பதும், அதன் திமில் சிறப்பும் கருதுக. திவாகரம் சுட்டும் அழகின் பெயர்கள் : ஏர்வனப்பு எழில்யாணர் மாமை கேழ் தையல் காரிகை தோட்டி கவினே விடங்கம் வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு காமர் அணிஇவை கட்டழ காகும் என்பதும், நவ்வி அந்தம் பை பூபொலம் அற்புதம் செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே என்பதும் ஆக 29 சொற்களாம். இவற்றுள் அற்புதம் ஒழிந்த எல்லாச் சொற்களும் தமிழே. திவாகரர்க்குப் பின் வந்த பிங்கலர் அழகு என்னும் பொருள் தரும் சொற்கள் ஐம்பத்திரண்டு கூறுகின்றார் : ஏரும் வனப்பும் எழிலும் இராமமும் காரிகையும் மாவும் அம்மையும் கவினும் செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும் அணியும் அணங்கும் யாணரும் பாணியும் மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் வண்ணமும் வளமும் பூவும் பொற்பும் சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும் மதனும் பாங்கும் அம்மும் சொக்கும் சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் அந்தமும் ஒண்மையும் விடங்கமும் அமலமும் குழகும் கோலமும் வாமமும் காந்தியும் அழகின் பெயரலங் காரமும் ஆகும் என்றும் கொம்மையும் மனோகரமும் சாருவுங் கூறுப என்றும் குறிப்பர். சூடாமணி நிகண்டார் 42 சொற்களைச் சொல்வார். அவை : எழில் வண்ணம் யாணர் மாமை இராமமோ நவ்வி நோக்குச் செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் குழகொடு பொற்பு நன்கு கோலமே மணிவ னப்புப் பழிபடா விடங்கம் மாழை பத்திரந் தோட்டி பாங்கு சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்குத்தே சிகமம் பொன்னே சந்தங் காரிகைக வின்பூத் தளிமமே வாமம் காமர் அந்தமே மயமே யொண்மை யாய்ந்தவா றேழுந் தானே வந்திடு மழகின் பேராம் என்பார். இனி நிகண்டு நூல்களால் சுட்டப்பெறாத சொற்களும் உள. வெள்ளிவிழாப் பேரகராதி (ஜுபிலி பேரகராதி) யில் கண்டுள்ள சொற்கள் வருமாறு: அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம், அம்மை, அலரி, ஆரியம், இராமம், இல்லிதம் , இலாவண்யம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு, கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம், சந்தம், சவி, சாயல், சித்திரம், சீர், செவ்வி, செழுமை, சேடு, சொக்கு, சோபம், சௌமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம், தையல், தோட்டி, தோல், நலம், நவ்வி, நன்கு, நோக்கம், நோக்கு, பதம், பத்திரம், பந்தம், பந்துரம், பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு, மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகம், மனோக்கியம், மாண்பு, மாதர், மாமை, மாழை, முருகு, யாணர், யௌவனம், வகுப்பு, படிவு, வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம். அன்றியும் பேரழகின் பெயர் அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம், சிறப்பு, பொலிவு, மா. அழகு வகை - கொம்மை, மனோகரம், சுந்தரம், சித்திரம், சாரு. நிகண்டு நூல்கள், அகரமுதலி நூல்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கும் அழகுபற்றிய சொற்களை ஓராற்றான் திரட்டித் தமிழ்ச்சொற்களைத் தேர்ந்து அவற்றை அகர முறையில் அமைத்துச் சிறிது விளக்கம் தந்தது இத் தொகுப்பாம். ஒவ்வொரு சொல்லின் ஆட்சிக்கும் எடுத்துக் காட்டும் வழக்காறும் காட்டின் விரிவாம் என்று அமைந்தாம். தமிழ்ச் சொல்வளம் காண விழைவார்க்கும், காட்ட விழைவார்க்கும் இத்தகு ஆய்வுகள் துணையாம் என்றும் இத் தமிழ்ச் சொல்வளம் சொல்லாக்கப் படைப்புகளுக்கு ஏந்தாம் என்றும் நூல்வடிவு பெறுகின்றதாம். நெல்லுக்குச் சொல்லென்பது ஒருபெயர்! சொல்லின் பயன்பாடு கருதியது இவ்வாட்சியாம். வேர்ச்சொல் விரிவு பதிப்புரை ஒரு மொழியின் வளத்தை அதில் அடங்கியுள்ள சொற்களே எடுத்துக் காட்டும். சொல் வளத்தைக் கொண்டு மொழி வளரும்; ஒரு மொழியின் நிலையான வளர்ச்சி என்பது அம்மொழியில் முன்னரே உள்ள வேர்ச் சொற்களைக் கொண்டு பொருளுக்கேற்றவாறு விரிவாக்கி உருவாக்கும் சொற்களால் ஏற்படும். அவ்வாறாயின் அம்மொழி வேர்ச்சொற்கள் கூடுதலாக உள்ள மொழியாக இருக்கவேண்டும். அல்லது அம்மொழி யிலுள்ள வேர்ச்சொற்கள் அனைத்தையும் ஆய்ந்து, ஒவ்வொரு வேர்ச் சொல்லும் எவ்வெவ்வாறு ஒட்டுதல் பெற்று வளர்ந் துள்ளன என்பதைக் கண்டு பிடித்தல் வேண்டும். இந்த முயற்சியில், தமிழ்மொழி வேர்ச்சொல் ஆய்வுப் பணியில் மாகறல் கார்த்திகேய முதலியார், சுவாமி ஞானப்பிரகாசர், மறைத்திரு மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோர் ஈடுபட்டுத் தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ளனர். இவ்வழியில் கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு அவ்வப்போது அரிய சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்நூலில் பர் என்ற வேரின் அடிப்படையாகத் தோன்றி பல சொற்களை ஆய்ந்து மிகத் தெளிவாகவும் மிக நுண்மையாகவும் ஆய்வு செய்துள்ளார்கள். தமிழ் மொழி ஆய்வாளர்கட்கு இந்நூல் பெரிதும் பயன்படும். தமிழன்பர்களும் தமிழ் மாணவர்களும் இதனை வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்களாக. நூலின் நுவல்வு தமிழ்மொழி, தொன்மை முன்மை தனிமை இயன்மை முதலிய பதினாறு தன்மைகளைக் கொண்ட முதன்மொழி என்பார் பாவாணர். இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே உருவெடுத்து இயலும் மொழி தமிழ் என்பார் திரு.வி.க. இத்தமிழின் சொல்லமைதியும், இதன் சொல்லமைதி நெறி முறையும் தனிப்பெருஞ் சிறப்பின : தணியா இன்பக் கொள்ளை யாய்த் தளிர்க்கச் செய்வன. இவற்றுக்கு ஒரு சிறு சான்றாக வெளிவருவது வேர்ச்சொல் விரிவு என்னும் இச்சொல்லாய்வு நூலாம். ஒரு சொல்லின் அடிப்பகுதி அல்லது முதனிலைப் பகுதி வழியே கிளைக்கும் சொற்களெல்லாம், எப்படி அவ்வடிப் பொருள் மாறாமல், பலப்பல பொருள்களுக்கும் தகத்தக இடையும் ஈறும் திரிந்தமைகின்றன என்பதை ஈண்டு எடுத்துக் காட்டியுள்ள சொல் வரிசையைக் கண்டாலே புரியவரும். இங்கே காட்டப்பட்ட மும்முதல்களும் (பர-பரி-பரு) பர் என்பதன் வழிவந்தவை என்பது வெளிப்பட விளங்கும். பர் அகரமேற்றுப் பர என ஆதலால், அதன்வழிச் சொற்கள் பரவுதல் பொருளிலும், இகரமேற்றுப் பரி என ஆதலால், அதன்வழிச் சொற்கள் வளைதல் பொருளிலும், உகரமேற்றுப் பரு என ஆதலால், அதன்வழிச் சொற்கள் திரளுதல் பொருளிலும் ஒன்றன் வளர்ச்சியில் இருந்து ஒன்றன் வளர்ச்சியாய்ச் சிறத்தல் செவ்விதின் அறியவரும். இவ்வாறே பிறபிற வேர்வழிச் சொற்களும் ஒரு தெளிவான - திருத்தமான - திட்டமான - அமைப்பிலேயே செல்லுதல் ஆய்வுடையார் கண்டு கொள்ளக் கூடியவேயாம். சொற்களெல்லாம் இடுகுறியே என்பார் உளர். அவர், திரிபில் திரிபு மொழியை ஆய்ந்து அவ்வாய்வை, இயன்மொழிக்கும் சூட்டி மகிழ்பவர்; அவர் மகிழ்வைத் தடுப்பார் எவர்? மெய்ம்மை நிலைநாட்டப் படுங்கால் - கொள்வோர் கொள்வகை அறிந்து அவர் கொள்ளுமாறு தெளிவித்து நிலைநாட்டப் படுங்கால் - அவர் பிறர்க்கெல்லாம் முன்னவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை. எதிர்க்கொள் கண்டு இரைந்தோ - இணைந்தோ - எரிந்தோ நிற்றல், இருபாலும் நலமில்லையே! அத்தகையரும், ஏற்கத்தக்க ஆய்வில் தலைப்பட்டு ஊன்றலே, தமிழ்த் தொண்டில் தலைப்படுவார் தனிப்பெரும் தலைக்கடன். அக்கடன், எள்முனையளவிலேனும் இச் சிறு சுவடியால் செய்யப்படுகின்றது எனின், அதனிற் பெரிய பேறு இல்லையாம். மாகறல் கார்த்தியேனார் மொழி நூல், சொல்லாய்வில் முற்பட்டு. பரிதிமாற் கலைஞரும் மறைமலையடி களாரும் இரண்டு மூன்று கட்டுரை அளவில் தம் ஆய்வை நிறுத்தினர். ஞானப்பிரகாச அடிகளார் சொற்பிறப்பு அகராதியில் ஊன்றி நின்று முச்சிறுமடலங்கள் வெளியிட்டார். பாவாணர் சொற் பிறப்பாய்வில் ஆழமாய் ஓன்றி அருமணிக் கட்டுரைகளும் நூல்களும் யாத்தார். அகரந் தொடங்கி ஆசை மொழி ஈறாக ஓராற்றான் செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகர முதலிப் பணி புரிந்தார். ஆனால், பாவாணர் சொல்லாய்வுக் குறிப்புகளைத் திரட்டி அனைத்தையும் ஓர் ஒழுங்குறுத்தினால் அவ்வகரமுதலியில் உள்ள சொற்களிலும் ஏறத்தாழ ஐந்து மடங்கு சொற்களுக்கு வேரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் கிட்டுகின்றன. ஐம்பான் ஆண்டுகளின் குறிக்கோள் உழைப்பும் அவ்வுழைப்பின் வளர்ச்சித் தெளிவிலையும் அவர்தம் படைப்புகளில் புலப்படுகின்றன. இவ்வாய்வு, ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என அவரால் சொல்லப்படும் ஆழ்வேர் ஆய்வன்று; இன்னும் சொன்னால் வேர் ஆய்வே அன்று; அடிமரந் தொட்டுப் பிரியும் கவடும் கிளையும் கோடும் வளாரும் ஈர்க்கும் என வெட்ட வெளிப்படு சொல்லாய்வேயாம். ஆதலின், கல்லியெடுத்தல் அகழ்ந்தெடுத்தல் இவ்வாய்வில் இல்லை; தெரிந்தெடுத்தல் தேர்ந்தெடுத்தல் திரட்டியெடுத்தல் என்பனவே உண்டு. அவரவர் நிலையால் அவரவர் தெளிவால் ஆக்க இயன்றவை தாமே அவரவர் செயற்பாட்டுக்குரியவை! இந்நிலையில் இதுகால் தலைப்பட்டு உழைத்துவரும் அன்பர்கள் ஆர்வலர்கள் சிலருளர்; அவர்கள் பாராட்டுக்குரியர். அகல் - சொல்லியல் நெறிமுறை என்னும் என் நூல் முன்னே வெளிப்பட்டது. அதனைப் பாவாணர், மறைமலையடி களார் வழித் தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் உவந்து வரவேற்றனர்; பாராட்டி எழுதினர். அவ்வழியில் தொடர்ந்து கட்டுரைகள் வரினும் நூல் வந்திலதே எனப் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். மீண்டும் மீண்டும் தூண்டுதலும் செய்கின்றனர். வரவேற்பும் தூண்டுதலும் கூட ஒரு நூல் உருவாதற்குக் கரணியமாதல் உண்டன்றோ! என் பணியார்வமும் அன்பர்கள் தூண்டுதலும் இணையின், இரட்டைக் காளைகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டியென இயலுதல் வாய்க்குமன்றே! அவ்வகையால் இந்நூல் கிளர்ந்த தென்க. சிங்கபுரச் செல்வர் தனித்தமிழ்ப் பேரார்வலர் வணிக இயற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார் தம் தமிழ் வளர்ச்சிப் பண்ணையின் சார்பிலே அகல் நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுச் செய்வித்தார். அந்நூலே அவரை என்னொடும் இணைத்து வைத்ததுடன், இன்றமிழ்த் தொண்டுப் புரவலராகவும் ஆக்கி வைத்தது என்பதை இந்நூல் முகப்பிலே சுட்டுதல் மகிழ்விக்கின்றது. அகல் நூல் வெளியீட்டின்போது தாமரைச் செல்வர் தனிப் பேரின்புற்றார். தமிழ் வளச் சீர்மையில் தழைத்தார். அவ்வரிசை வருதற்குத் திட்டம் தந்து ஊக்கினார். இந்நாள் அவர்கள் பொறையைத் தாங்கி அவர்கள் வழியிலே கடப்பாடாற்றிச் சிறந்துவரும் மருகர் கழக ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இந் நூலைத் தமிழுலாக் கொள்ளச் செய்கின்றனர். அவர்களுக்கு நன்றி பெரிதுடையேன். பாவாணர் ஆராய்ச்சி நூலகம், தமிழ்ச் செல்வம், திருநகர், மதுரை - 6. தமிழ்த் தொண்டன், இரா.இளங்குமரன். 1. பர்-பர பர் : தமிழ்ச் சொற்களின் வேர்களுள் ஒன்று பர் என்பது. பர் என்பது குறிலொடு கூடிய ஒற்று. அவ்வொற்றும், ரகர ஒற்று. ஆகலின் பர் எனச் சொல் வடிவம் பெறாது. அவ்வாறு வடிவம் பெற்றால், அது வேற்றுமொழிச் சொல் என்றோ - வேற்று மொழியாளர் தம்சொல்லாகத் திரித்துக் கொண்ட சொல் என்றோ - உறுதிப்படுத்தலாம். எ-டு : பர்த்தா - வட சொல். பர்வம் - பருவம் என்னும் தென் சொல்லின் வடமொழித் திரிபு. பருவம் தமிழ்ச் சொல்லாதல் அச்சொல் வரிசையில் காண்க. பர : பர் என்னும் வேர், அகரத்தோடு சேரப் பர என்றாகும். பர என்னும் விரியின் வழியே, விரியும் சொற்கள் பல, அகரமுதலிகளில் அடைவு செய்யப்பட்டவை; செய்யப் படாதவை; இலக்கிய ஆட்சியுடையவை, பொதுமக்கள் வழக்கில் உள்ளவை; பொதுவழக்காக உள்ளவை, வட்டார வழக்காக உள்ளவை - எனப் பலவகைப் பட்டவையாம். அவற்றுள் தொகுத்துக் கூற வாய்த்தவை மட்டும் இவண் சொற்பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. ஆகலின், இது விரிவுக்குரியது என்பது உண்மை. இச்சொல் இல்லையே எனப் பெரிதும் வழக்கிலுள்ள ஒரு சொல், தூண்டலாம். இச்சொல் இடம் பெற்றுள்ளதே என ஒரு சொல், நினைவினை எழுப்பலாம். முன்னது தமிழ்ச் சொல் அன்று என்னும் தெளிவால் இடம் பெற்றிலது என்றும், பின்னது தமிழ்ச் சொல் என்னும் முடிவால் இடம் பெற்றுள்ளது என்றும் கொள்ள வேண்டும் என்பது ஒரு குறிப்பு. இதனால், இத்தொகுப்புக்கு வாயாமல் விடுத்த சொற்களைப் பற்றி முன்னெழுதிய முடிவு, மாற்றத்திற்குரிய தில்லை எனக் கொள்க. தமிழின் சொல்லியல் முறையும் பொருளியல் முறையும் எத்தகைய திட்டமான - ஒழுங்கான - வரம்பமைந்த சீர்மைக்குரியவை என்பதை வெளிப்பட அறிவதற்குச் சான்றுகள் பலவுள. அவற்றுள், பர் என்னும் இவ்வேர்ச் சொல் ஆய்வு அதனை வெள்ளிடை மலையெனத் தெளிவுறக் காட்டும். இப்படியும் ஒரு மொழியமைதி வாய்க்குமா? என்னும் வியப்பும், இவ்வாய்ப்பை, ஆழ்ந்து அகன்ற நுண்மையால் கண்டும், கட்டுமானம் இட்டும், காத்தும், பரப்பியும் வந்த நம்முந்தை நன்மக்கள் பெறலரும் பெருந்திறம் எத்தகை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் காத்தலுக்கும்உரியது என்னும் கடப்பாட்டுணர்வும், உணர்வுடையார்க்கு உண்டாதல் இயற்கை, ஏனெனில், உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்பது தொன்னூலாசிரியர் தேர்ச்சியுரை என்க. மற்றொரு தேர்ச்சியும் அவர், தம் பின்னோர்க்கு வைத்துச் சென்றார். அதனைப் பிறழ உணர்ந்தார் பிறபிற உரைத்து, இலக்கணர் தம் எண்ணம் அறியாராய்த் தம்மெண்ணம் உரைத்து, நல்லது செய்தல் தவிர்ந்ததுடன், அல்லது செய்தலிலும் தலைநின்றனர்! தலைமையாயும் நின்றனர்! எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல்காப்பியம்) என்பது மூலவர் ஆணை! அவ்வாணை, அவருக்கு மூலவருக்கு மூலவர் - வழி வந்த ஆணை! இப்படியோர் ஆணையை உரைப்பது பொருந்துவதன்றாயின், இவர் காலத்தவர் - இவர் புலமைக் காய்ச்சலர் - இதனை ஏற்பரோ? இந்நாள்போல் ஒரு நூல், எக்கருத்திலும் எப்பொருளிலும் எவ்வடிவிலும் வெளிப்படலாம் என்னும் நிலையில், வெளிவந்த நூலா தொல்காப்பியம்? மாப்பெரும் புலவர் அதங்கோட்டாசிரியர் தலைமையில் அரில்தப, அவரும் அவையோரும் ஆய்ந்து, வெளிப்பட்ட நூல் எனத் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர் எனப்படும் பனம்பாரர் பகர்கின்றாரே! நிலந்தரு திருவின் நெடியோன் எனப்படும் வேந்தன் கூட்டிய அவையம் எனின், நாட்டிலிருந்த நல்லறிஞர் எல்லாரும் குழுமியிருந்து ஆய்ந்திருப்பர் - கேட்டிருப்பர் - என்பதில் ஐயமுண்டோ? அதிலும், அதங் கோட்டாசிரியராம் தலைவர், அறங்கரை நாவர் எனின், அவர் முறைப்பட ஆய்ந்த ஆய்வு, செம்முறையாகவன்றி எம்முறையாக இருத்தல்கூடும்? தலைவருக்கு இல்லாத ஆணையா பிறருக்கு? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது பொருந்து வதன்றாயின், அந்நூற் பாவையேனும் எடுத்துவிடக் கூறியிருப் பரே! திரைப்படத் தணிக்கை இன்னவற்றில் பகுதி வெட்டல் இல்லையா? ஆயின், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன என்பது விளங்கவில்லையே; பல சொற்கள் காரணமிலா இடுகுறிச் சொல்போல் உள்ளனவே; அதனால் தானே இடுகுறி காரணப்பெயர் பொதுச் சிறப்பின (62) எனப் பின்னூலாராம் நன்னூலார் கூறினார் என்பார் உளராயின், அதற்குத் தக்க மறுமொழியை ஆசிரியர் தொல்காப்பியர் சொல்லதிகார இறுதியில் தெளிவாக உரைத்தார் : எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பதை, நால்வகைச் சொற்களில் முற்படு சொல்லாம் பெயர்ச்சொல் இலக்கணம் கூறும் இயலின், முதல் நூற்பாவாக வைத்த அவர், சொல்லிலக்கண நிறைவிலே, மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்றா என்பதை வைத்தார். விழிப்ப என்பது பார்க்க என்னும் பொருளது. சொல்லின் பொருள் பார்த்த அளவால் வெளிப்படத் தெரியாது. ஆழ்ந்து சென்று அறிய வேண்டும்; அறிய முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதற்குப் பொருள் உண்டு என்பது மட்டும் திட்டமான செய்தி என்பவை இந்நூற்பா விளக்கமாம். கடற்கரையில் ஓடிவிளையாடும் சிறுவன், சில சிப்பிகளைப் பொறுக்குவது போலச் சில அறிவியல் நுணுக்கங்களைக் கண்டேன்; அவ்வளவே என்றானே ஓர் அறிவியல் அறிஞன்! அந்நிலை மொழியியலுக்கு இல்லையா? ஆழச்சென்று முக்குளிப்பானும் அனைத்து முத்தும் எடுத்துவிடுவதில்லை என்பதை எவரே அறியார்? அவரவர் முயற்சி, ஆர்வப்பெருக்கு, அயராமை இன்னவற்றின் அளவுக்கு ஏற்பக், கண்டு பிடிப்புகள் கையகப்படுகின்றன என்னும் தெளிவுண்டானால், அத்தெளிவு சொல்லாய்வுக்கும் உரிய தெனக் கொள்ளலன்றோ முறைமை! இதனால், மொழி ஞாயிறு பாவாணர், ஐம்பது அறுபது விழுக்காடு சொற்களுக்கு வேரும் விளக்கமும் பொருளும் கண்டாலும் போதும்; பின்னவர் எஞ்சியவற்றைக் கண்டு கொள்வர்; எத்தகை பெருமூளையர் எனினும் அவர் நூற்றுக்கு நூறு சொற்களுக்கும் பொருள் காணமுடியும் எனக் கருத வேண்டியதில்லை என்பார். இக்குறிப்பை நினைந்து, நூற்றுமேனிக்கு ஒரு பத்துச் சொற்களின் பொருள் கண்டாலும், அவ்வளவில் பயன்தானே என்னும் உந்துதலால் எழும் ஆய்வே இஃதென்க. பர் என்னும் அடிச் சொல்லுடன் அகரம் சேரப் பர என்றாம் எனக்குறித்தோம். பர என்பதன் வழியாகவும் விரியாகவும் வரும் சொற்கள் அனைத்தும் பரவுதல்-விரிதல்-அகலுதல்-என்னும் ஒருபொருள் குறித்தே வரக் காணலாம். பர என்னும் சொல்லின்பொருள் பரவுதல் எனின், பல சொற்கள் வேண்டுவதென்னை எனின், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கச் சொல்லின் இடையும் ஈறும் வெவ்வேறு திரிபு வடிவங் களை எய்துதல் வேண்டும் என்பது சொல்லியல் நெறிமுறை என்க. இல்லையேல் பொருண்மயக்கம் எத்துணையாம்? பரிசம், பரிசில், பரிசு என்னும் மூன்றும் பர் என்னும் வேருடன் இகரம் சேர்ந்து வெவ்வேறு வடிவாக நிற்கும் சொற்களாக உள்ளன. ஏன்? இவற்றின் பொருளிலும் நுண்ணிய வேறுபாடு உண்டு என்பதை உணர்த்துதற்கே யாம். பரிசம், தலைவன் தலைவிக்குத் தரும் பொருள்; பரிசில், இகலாமல் பெறும் கொடை; பரிசு, இகலிப் பெறும் பொருள்; - என மூன்றன் வேறுபாட்டையும் சுட்டுவார் பாவாணர். ஆதலால் சொல் திரிதல் பொருள் விளக்கத்திற்காக என அமைக. பரக்கம் : விரிவு என்னும் பொருள் தரும் சொல் பரக்கம் என்பது. பரக்கப் பார்த்தல் என்பது குறித்த இடத்தில் ஊன்றி நோக்காமல், அங்கும் இங்கும் பரந்து படப்பார்த்தல். பரக்கப் பார்த்தல், பராக்குப் பார்த்தல் என்றும் வழங்கும். பராக்குப் பார்த்துக் கொண்டு போய்ப்படியில் விழாதே என்பது எச்சரிப்பு. பரக்கப் பரக்கப் பார்த்தல் என்று அடுக்கி வருவதும் வழக்கில் உள்ளதே. இவை விரிவுப் பொருளன என்பது விளக்கமாம். பரக்கு : பரக்கு என்பது பரவிய புகழைக் குறிக்கும். அதனை அழித்தல் பரக்கழித்தல் எனப்படும்; பரக்கு அழிதல் பரக்கழிதல் ஆகும். பரக்கழி என்பதும் புகழ் அழிநிலை சுட்டும். இவை இலக்கிய ஆட்சியுடையவை : கொந்தள மாக்கிப் பரக்கழித்து (நாச்சியார் திருமொழி 12 : 3) நின்மலனென்றோதிப் பரக்கழிந்தான் (பெரிய திருபெமாழி 4.8 : 5) பரக்கழி இது நீ பூண்டாற் புகழையார் பரிக்கற் பாலார் (கம்ப. வாலி. 79) பரக்கு என்பதற்குப் பரவிய புகழ் எனப்பொருள் கண்டோம். இச்சொல்லும் பொருளும் அகராதியில் இனிமேல்தான் ஏறவேண்டும். ஒளி என்பதொரு சொல்லின் பொருளை விளக்கும் பண்டையுரையாசிரியர்கள், தாம் உளகாலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல் என்பர். (திருக். ப. 653, 971; நால. 9. பது). புகழ் என்பதற்குத் தான் இறந்த காலத்தும் உளதாம் உரை என்பர் (நால. 9 பது.) ஒளியினும் புகழ் விரிந்தது என்பதை, உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் என்று நாலடியார் கூறும். இதனைப் பரிமேலழகரும் தம் உரையில் எடுத்தாள்வார். இதனால், பரக்கம் விரிவு என்னும் பொருள் தருவதுடன் புகழ்ப் பொருளும் தருதல் அறிந்து இன்புறத் தக்கதாம். மண்தேய்த்த புகழ் என்னும் சிலம்புத் தொடருக்கு பூமிசிறுகும்படி வளர்ந்தபுகழ் என அரும்பதவுரைகாரரும், புகழ் வளரப்பூமி சிறுகலான் என அடியார்க்கு நல்லாரும் உரைத்தமை அறியத் தக்கன. பரக்கும் : பரக்கும் என்பது, பரவும் என்னும் பொருள்தரும் சொல். ஆனிற்பரக்கும் யானைய முன்பிற், கானகநாடன், என்பது புறப்பாடல் (5) பரக்கும் என்பது பரவுதல் பொருளது. ஆக்கள் பரவித் திரிவதுபோல் யானைகள் திரிகின்றனவாம் மலை நாட்டில்! இவ்வாறே பரக்க, பரத்தல் என்பனவும் இப்பொருளனவே. பரக்கவென் பகர்வது என்னும் கம்பர் வாக்கு (சடாயு. 11) விரிவாய் எனவும், செம்புற மூதாய் பரத்தலின் என்னும் அகப்பாடல் (134) பரவுதலின் எனவும் பொருள் தருதல் அறிக. ஒரு நிலையில் அமையாமல் விரைவானைப் பரக்கா வெட்டி என்னும் வழக்கம் உண்மையை எடுத்துக் காட்டுகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. அதன் பொருள், அதிகமாய் அவசரப் படுபவன் என்கிறது. பரக்குதல் : பரக்குதல் என்பதும் பரவுதல் பொருளதே. ஓரிடத்தில் நில்லாமல் அலைந்து திரிதல் என்னும் இச்சொல் வழியாகப் பரக்கினார் என்னும் சொல் உண்டாகின்றது. பரக்கினார் படுவெண்தலையில் பலி என ஆள்கிறது தேவாரம். பரக்குறவை : மீன் வகையுள் ஒன்று பரக்குறவை. அது மற்றைக் குறவைகளிலும் நீளவாளம் உடைமையால் பரக்குறவை எனப்படுகிறது. அது பதின்மூன்று விரலம் (அங்குலம்) வளர்வதும் பச்சை நிறமுள்ளதுமான நன்னீர் மீன் வகை என்னும் செ.ப.க. அகராதி, பரகுரவை பரகொரவை என்னும் பெயருடையதும் அது என்று அவ்வகர முதலி கூறும். பரகு : பரபரப்பாகத் திரிதல் பரகு பரகு எனத்திரிதல் எனவும், அகலமாகச் சொறிதல் பரகுபரகு எனச் சொறிதல் எனவும் சொல்லப்படும். பாக்கு வெட்டியின் பயனைச் சொல்லும் ஒரு தனிப்பாடல் பரகு பரகு எனச் சொறிதற்குப் பயன்படுவதைச் சுட்டுகிறது. பரங்கி : பரங்கி என்பதொரு கொடி; அக்கொடி மிக ஓடிப் பரவும் இயல்பினது. அன்றியும் காயும் பருத்தது. கொடியின் பரவுதல் கொண்டே பரங்கி என்றிருக்க வேண்டும். இனி வெண்ணிறத்தது என்பதால் பறங்கியர் நிறக்காய் என்னும் பொருளால் வருதல் பொருந்துதல் இல்லை. பறங்கியர் நிற ஒப்புமை பரங்கிக்காய் நிற ஒப்புமையொடு பொருந்துதல் இவ்வகையாம். காய் பருத்ததைக் கொண்டு வந்ததெனின், பருங்கிக்காயாக வந்திருக்கும் என்க. மெல்லிய சுணைகளைக் கொண்டு இருத்தலால் பூசுணைக்காய் என அதன் ஒருவகைக்குப் பெயரிருத்தல் அறியத் தக்கது. பரசுதல் : பரசுதல் என்பதொரு தொழில். உழவர் களத்தில் பரசுதல் பணியுண்டு. சோளம், கேழ்வரகு, கம்பு முதலிய தவசக்கதிர்கள், உழுந்து, துவரை, மொச்சை முதலிய பயற்று நெற்றுகள் ஆகியவற்றைப் பரசிக் காயவைப்பர். அவற்றைத் தட்டித் தூற்றிய பின்னரும் பரசிக் காயவிடுதல் உண்டு. பரசுதல் படரக்கிளறிக் காயவிடுதலாம். பரசு அடித்தல் தொழிவேலையில் உண்டு. தொழிக் கலக்கிக் குழைமிதித்தபின் நிலத்தை ஒப்புரவாக்குதற்குப் பரசடித்தல் உண்டு. அதனை அடித்தற்குரிய செயல் மரமடித்தல் எனப்படும். பரசு : மிகுதியான தவசம் களத்தில் காய வைக்கவேண்டி இருந்தால் கையால் பரசி விடமுடியாது. அதற்கு வாய்ப்பாகப் பரசு என்னும் ஒரு கருவியுண்டு. கீழ்வாயில் அகன்ற தகடும், அத் தகட்டைப் பொருத்திய பொருத்துவாயில் இருந்து நெடுங்கம்புமாக அமையும். அதற்குப் பரசு என்பது பெயர். அரிசி அரைவை ஆலைகளில் உலரப் போடுவதற்குப் பரசுவாரும், பரசினைப் பயன்படுத்துவர். அக்கருவியும் அவ்வினையும் பரசு, பரசுதல் எனப்படுதல் பரவுதல் பொருளதே. பரசுராமன் என்பான் கையிலுள்ள பரசு, என்னும் கருவி வாய் ஏனைக் கோடரி, கண்டகோடரி என்பவற்றிலுள்ள வாய்களின் அகலத்தினும் அகன்றதாக இருத்தல் அறியத் தக்கது. பரசு என்பதற்கு மூங்கில் என்பதொரு பொருள். ஓரடியில் இருந்து பலப்பல சிம்புகள் வெடித்துப் பண்ணையாகப் பரவுவது மூங்கில். நூறு இருநூறு என மூங்கில்கள் புதராக மண்டிக்கிடத்தல் காணக் கூடியது. கதிரோனைச் சுற்றித் தோன்றும் ஒளிவட்டத்திற்குப் பரசு என்பதொரு பெயர். பரிவேடம் என்பதும் அதன் மற்றொரு பெயர். பரசு என்பதற்கு ஏற்பப்பரவி அகலுதலும், பரி என்பதற்கு ஏற்ப வளைதல் உடையதுமாம் பொருளைத் தரும். பரசு என்பதற்கு ஓடம் என்னும் பொருளும் உண்டு. ஆழ அகலமில்லா ஆறுகளில் பரவினாற்போல அல்லது பரசினாற்போலச் செல்லும் ஓடம் பரசு எனப்படுகிறது. பரசை என்பதும் அதன் பெயர். பரசுதல், பராவுதல் : விரிந்த அளவில் செய்யப்படும் இறைவழிபாடு பராவுதல் எனப்படும். தெய்வம் பராஅ வுதல் என விளக்கமாகவும் வழங்கும். தெய்வம் பராவுதல் எனவும் வழங்கும். அதனைச் செய்வார் பராவுநர் பரசுநர் என வழங்கப்படுவர். தெய்வம் பராய் என்னும் எச்ச நிலையில் நிற்றலும், இலக்கிய வழக்கே. தெய்வம் பராதல் என்பதோர் அகத்துறை. காதல் கொண்ட ஒரு தலைமகள், தலைமகனையே தெய்வமாக வழிபடுதல் அன்றிப் பிறதெய்வம் வழிபடாள் என்னும் கொள்கையால் அவள் காதலை உய்த்துணரச் செய்யும் வகைகளில் ஒன்றாம் அது. இவையெல்லாம் கும்பிடுதல், வணங்குதல் என்பவற்றில் விரிந்த வாழ்த்து ஆதல் அறிந்து கொள்க. பரஞ்சம் : செக்கு உரல் ஊடே இருக்க, அதன் சுற்றுவிரிவு பெரிது. செக்கைச் சுற்றி விரிந்து செல்லும் பரப்பைக் கொண்டு அதற்கு அமைந்த பெயர் பரஞ்சம் என்பது. நீரில் தோன்றி விரியும் நுரைக்கு பரஞ்சம் என்னும் பெயருண்டு. பரட்டை : தலைசீவாமல் எண்ணெய் தேய்க்காமல் இருந்தால் தலைமுடி படியாமல் எழும்பிக் கிடக்கும். அதனைப் பரட்டை என்பர். பரட்டைத்தலை தன் அளவில் பரவி விரிந்து காட்சியளித்தல் வெளிப்படை. அவ்வாறே இலைகுழை கவிந்து இறங்காமல் மேலேயும் பக்கத்தும் விரிந்து தோன்றும் மரம் பரட்டை மரம் எனப்படுதல் வழக்கு. மொட்டைக்கும் பரட்டைக்கும் முரணுதல் நிலை. பரட்டை என்பதற்குச் செடி முதலியன தலை பரந்து நிற்கை என்னும் செ.ப.க.அகராதி. பரட்டயம் : பரட்டயம் என்பதோர் உடை வகையைச் சூளாமணி சுட்டுகிறது; அதற்கு ஒட்டுச் சல்லடம் எனக் குறிப்புரையுளது. ஒட்டிய கலிங்கம் தாள்மேல் திரைத்துடுத் துருவக் கோடிப் பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டயம் நரல வீக்கிக், கட்டிய கழலர் என்பது அப்பாட்டு (842) நரல வீக்கி என்றதால் ஒலிக்குமாறு இறுக்கக் கட்டி என்னும் பொருள்பட வரும். அது, கழலுக்குக் கீழே பரட்டில் ஒலிகிளருமாறு அணியப்படும் ஓரணி எனக் கொள்ளலாமோ என எண்ண வேண்டியுள்ளது. பரட்டைக் கீரை என்பதொரு கீரையைப் பதார்த்தகுண சிந்தாமணி கூறுகிறது (603). அதன் அமைப்பைக் கருதிய பெயராக இருக்கலாம். பரடு : காலின் ஒரு பகுதிக்குப் பரடு என்பது பெயர். அது கரண்டை எனப்படும். கணுக்காலுக்குக் கீழே படர்ந்து விரியும் அடியின் மேல்பகுதியே பரடாம். இதனைப் படம் என்று வழங்கும் வழக்கால் அதன் அகலம் அறியப்படும். படத்தைத் தேய்த்துக் கழுவு; எவ்வளவு அழுக்கு, பார் என்பது குழந்தைகளைக் குளிக்க வைக்கும் தாய்மார் உரை. இடைச் செறி குறங்கு கௌவிக் கிம்புரி இளக மின்னும் புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போ டார்ப்ப என்பது சிந்தாமணி (2445) பரடன் : ஓரிடத்து நிலைத்து வேலை செய்ய வாய்க்காமல் பலப்பலரிடம் பலப்பல இடங்களில் அப்பொழுதைக்கப் பொழுது வேலை செய்யும் கூலியாளன் பரடன் எனப்படுதல் அவன் தொழில் நிலை கருதிய பெயராம். பரண், பரணை : காட்டுக் காவலுக்காகக், கால்கள் ஊன்றிக் கம்புகளைப் பரத்திச் செய்யப்படும் காவல்மேடை பரண் எனப்படும். பரணை என்பதும் அதுவே. கூரை வீடுகளின் சுவர் மட்டத்தில் கம்புகளைப் பரம்பிப் பலகையடைப்புச் செய்து பரண் ஆக்குவதும் உண்டு. அதில் பழம் பொருள்கள், விறகு முதலியவற்றைப் போட்டு வைப்பது வழக்கம். பரண்களை மரத்தின்மேல் அமைக்கும் வழக்கமும் உண்டு. மரக்கிளைகள் இரண்டு மூன்றைக் கழிகளாலும் குச்சிகளாலும் இணைத்துப் படல் பரப்பிவைப்பர். இது பெரும்பாலும் காட்டின் அடிவாரங்களில் அமைக்கப்படும். இவ்வழக்கம் பண்டே உண்டு என்பது, கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த புலியஞ் சிதணம் எனக்குறிஞ்சிப் பாட்டில் (40-41) சொல்லப்படுகிறது. இதணம் என்பது பரண் கலிகெழு மீமிசைச் சேணோன் எனவரும் சிலம்புக்கு (25 : 30) ச், சேணோன் - பரணின் மேலோன் என அரும்பத வுரைகாரர் பொருள் எழுதியமை அறியத்தக்கது. இதண் என இப்பரண் குறிக்கப் பட்டாலும் கம்பர், தொடர் மஞ்சம் போலுள பரண் என ஆள்கிறார் (அயோத். 673). இனிப்பரணம் என்பதும் பரணைக் குறிப்பதேயாம். பரண்டுதல் : களைகுத்துதல், களைகிள்ளுதல், களைஎடுத்தல், களைபறித்தல், களைவெட்டல் இன்னவாக வழங்கும் ஒருவினைப் பல கூறுகளுள், களைபரண்டல் என்பதும் ஒன்று. அதற்கு உரிய கருவி களைபரண்டி. களை சுரண்டியினும் விரிந்த இலையுடையது களைபரண்டி; களைகொத்தி இடப்பரப்பைச் சுருக்கி ஆழ்ந்து செல்லும். களைபரண்டி இடப்பரப்பை விரித்து, மேலால் தடவிச் செல்லும். களைசுரண்டிம் மேலால் நிலத்தை வழித்துச் செல்வதே. எனினும் பரண்டியின் அளவுக்குக் குறைந்தது. எலி துளைத்தல், ஓரிடத்துத் தோண்டுதல், எலி பரண்டல் அகலமாகக் கிளைத்து எறிதல். பரண்டுதலுக்கு விரிதல் பொருள் உடைமை இவற்றால் விளங்கும். பரண்டை : பரடு என்னும் பொருள் தரும் சொல் பரண்டை என்பதாம். பரண்டை என ஒரு பறவை உண்டெனச் சர்வார்த்த சிற்ப சிந்தாமணி என்னும் நூல் கூறுகின்றது. (16) பரண்டை வலத்திற் பாடி வலத்திருந் திடத்திற் போந்து என்பது அது. இருபாலும் சிறகு பிறபறவைகளினும் விரிந்தியலும் தன்மையால் இப்பறவைக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அன்றிப் பரண்டுதல் உடைமையாலும் பெயர் பெற்றிருக்கலாம். சில பறவைகள் காட்டுச் செடிகள் தூறுகள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் பரண்டிக் குழியாக்கி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் உண்டு என்பதை அறியின் இவ்வூகம் கொள்ளத் தக்கதாம். பரணசாலை : பரண், பரணை என்பவற்றை முன்னே அறிவோம். அப்பரண், ஊன்றியகால்களின்மேல் அல்லது மரக்கிளையின் மேல் அமைக்கப்பட்டவை. இப்பரண சாலையோ, கால்களை நேர்கால்களாகவோ, முகடு கூட்டுதலாகவோ ஊன்றி, இலை தழை புல்களால் வேய்ந்து வைக்கப்படுவதால் - குச்சிகளை ஊன்றிச் செய்யப்படுவதால் - குச்சில் எனப்படும். பூப்படைந்தாளுக்கெனத் தனிக்குச்சில் அமைப்பதும், அதில் அவளை இருக்க வைப்பதும் உண்டு என்பதைக் குச்சிலுக்குள் இருக்கிறாள் என்று கூறும் வழக்கம் வெளிப்படுத்தும். பூப்புவிழா முடிந்தபின் குச்சிலை எரித்தல் சில மலைவாணர் வழக்கென்பது அறியத்தக்கது. சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையுள் இருந்தாள் ஐய தவம்செய்த தவமாம் தையல் (சுந். திருவடிதொழுத. 64) எனவரும் கம்பர் வாக்கு பரண சாலையமைப்பை விளக்கும். காடுகாவலரும் ஏரிகாவலரும் களங்காவலரும் குச்சில் அமைத்தலும், மாறி மாறி இரவு பகலாகக் காவல் இருத்தலும் இந்நாளிலும் காணக்கூடிய காட்சிகளே. இனிப் பன்ன சாலை என்பதொரு பெயரும் அதற்குண்டு. பன்னுதல், பின்னுதல், ஓலை இலை தழைகளைக் கொண்டு பன்னுதலால் வந்ததென்க. பன்னக காலை என்பதும் அது. இவன், கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்லவாயவே என்பதொரு பழைய இராமாயணப் பாடல் (புறத். 725). பரணம் : பரணம் என்பதற்குத் தாங்குதல் என்பதொரு பொருள். வறியராய் வந்தாரை வரவேற்று உதவும் பேருளமே இவண் பரணமாதல் அறிக. அடுக்கிய மூவுலகும் கேட்குமே கொடுத்தார் எனப்படுஞ் சொல் என்பது நாலடிப்பாட்டு. புகழ் பரவுதற்கு இடனாக இருக்கும் கொடையைப் பரணம் என்றமை அதன் பரவுதல் தன்மை கருதியதேயாம். இனி, மார்பகம் முழதுறத் தழுவிக் காவற்கடன் செய்யும் மெய்ம்மறை (கவசம்) பரணம் எனப்படும். பரணி என்னும் விண்மீனும் பரணம் எனப்படும் என்று கூறுகின்றன அகராதிகள். அதன் பொருட் பொருத்தம் பரணியிற் காண்க. பாணர் : கழகக் காலப் பெரும் புலவருள் ஒருவர் பரணர் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் இவர் பாடல்கள் உண்டு. கபில பரணர் எனச் சான்றோரால் எடுத்தாளப்படுதல் இவர்தம் புலமைச் சிறப்பையும் கபிலர்க்கும் இவர்க்கும் இருந்த பெருங்கிழமையையும் உரைக்கும். இன்றும் பரணன் பாடினன் மற்கொல் எனவரும் (புறம். 99) ஔவையார் மொழி, பரணர் தம் சிறப்பினை நன்கு பகரும். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியதற்குப் பரிசிலாக, உம்பற்காட்டு வருவாயைப் பரணருக்கு உவந்து தந்ததுடன், தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாக வழங்கினான் எனவரும் செய்தி (பதிற். பதி. 5) பின்னவனை மன்னவன் தகுதி ஆக்குதற்கு வல்லவர் இன்னவரே எனத் தேர்ந்து செய்த சீர்த்திச் செயலாம். இவர் காலத்திற்குப் பின்னரும் இவர் பெயரால் பலர் இருந்து பரவு புகழாளராகத் திகழ்ந்தமை இவர் புகழை மலைமேல் விளக் கெனக் காட்டும். இனி, இவர் பரணி நாளிற் பிறந்தாராதல் வேண்டும். அது கருதி இப்பெயர் பெற்றார் என்பார். ஆயின், பரணியாராக இருப்பாரேயன்றிப் பரணர் எனப் படார் என்பது தெளிவான செய்தி. வரலாற்றுச் செய்திகளைத் தம் பாடல்களில் விரித்தும் சுட்டியும் செல்லும் இப்புலவர் பெருமகனார் நாடளாவிய புகழாளராகத் திகழ்ந்தார் என்பது ஒருதலையாம். அச்சிறப்பே இவரைச் சான்றோர்களால் பரணர் என வழங்குமாறு செய்ததாம் எனலாம். நம் கண்காணப் பெரியார் என ஒருவர் பெயரே அமைந்துவிடவில்லையா! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பெரியாழ்வார் என ஒருவர் பெயர் இருந்ததில்லையா? பரணி : பரணி என்பதொரு விண்மீன்; அடுப்பு-முக்கூட்டுக்கல் - போன்ற அமைப்பு உடைமையால் பரணி என்பது அடுப்பு எனவும் படும்; அடுப்பு என்னும் சொல்லுக்குப் பரணி என்னும் பொருளும் உண்டாயிற்று. பரிய சாடியும், சிலந்திக் கூடும், ஏரி நீர்ப் பெருக்கை வழிய விடும் மதகும், கால் கைகளை அகற்றிச் சுருக்கி ஆடும் கூத்தும் ஆகியவை பரணியின் பொருளன. இவை பரவுதல், அகலுதல், விரிதல் பொருண்மையுடையவை என்பதை அறிக. அடுப்புத் தனித்து ஒன்றாக வைக்கும் வழக்கமில்லை என்பதை அறியின் பிள்ளையடுப்பு அல்லது குட்டியடுப்பு, பக்க அடுப்பு, கொடியடுப்பு என அடுப்புகள் உண்மை விளங்கும். பரணி அடுப்புப் பாழ்போகாது பரணியிலே பிறந்தால் தரணி யாளலாம் என்னும் பழமொழிகளும், தரணி காவலன் சச்சந்தன் என்பவன் பரணி நாட்பிறந் தான்பகை யாவையும் அரணி லான் - 1 : 13 என்னும் சிந்தாமணியும், இன்ன நாட்பிறந்த இன்னான் என்றல் அரசர்க்கு மரபு; பரணி, யானை பிறந்த நாளாதலின் அது போலப் பகையை மதியான் என்றாள் என்னும் நச்சினார்க்கினி யர் விளக்கவுரையும், பரணியான் பாரவன என்னும் மயிலை நாதர் உரையும் (நன். 150) இவண் கருதிக் கொள்ளத்தக்கன. பரணி நூல் : ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி என்பது பரணி நூல் இலக்கணம். களப்போரில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் விரிபுகழ் வீரனுக்குப் பாடப்படுவது பரணி எனின் அதன் விரிவுப் பொருள் வெளிப்படையே. பரணி நாள் பரணிக்குரிய காளி இன்னவும் பரணிச் சொல்லுக்கு உட்பட்டனவே. பரவுதல் பொருளனவே. மார்பளவில் விரிந்த கேடயம் பரணிப் பெயரதாதல் கண்டதே. வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர் செயங் கொண்டான் எனவரும் பாராட்டுப் பாடல் பரணி பாடிய செயங்கொண்டார் சிறப்பை வெளிப்படுத்தும். பரத்தமை : கட்டினின்றிப் பலரின்பம் தேடிவாழும் வாழ்வைப் பரத்தமை வாழ்வென்பது பழமை தொட்டே வரும் வழக்கு. நண்ணேன் பரத்த நின் மார்பு என்பது திருக்குறள் (1311). பரத்தந்து என்பதொரு சொல் பரிபாடலில் வருகின்றது (7, 39) அதற்குப் பரிமேலழகர் பரக்க என உரை எழுதினார். பரத்தர என்னும் சொல்லைக் கலியும் புறமும் (106 : 274) வழங்குகின்றன. பரத்தலைச் செய்யும்படி என்பது இதன் பொருளாம் (கலி. நச்). பரத்தல் பரத்தருதல் போல வந்தவை பரத்தன். பரத்தை, பரத்தர், பரத்தைமை என்னும் சொற்களாம். நகரப் பரத்தர் எனப் பரத்தரை இடஞ்சுட்டியுரைக்கிறார் இளங்கோவடிகளார். (சிலப். 5:200) பரத்தர், கழிகாமுகர் என்றார். இதற்கு உரை விளக்கம் தரும் அடியார்க்கு நல்லார். இனிப் பரத்தர் இயன்மையை விளக்குவார்போல, வம்பப்பரத்தர் என்றார் அடிகளார். (16 : 63) அதற்கு விளக்கம் வரையும் அடியார்க்கு நல்லார், வம்பப் பரத்தர் - புதிய காம நுகர்ச்சியை விரும்புங் காமுகர்; பரத்தையை நுகர்வானும் பரத்தன் என்றார். இத்தன்மை, பண்பில் காதலன் பரத்தமை என மணிமேகலையில் இடம் பெறுகின்றது (7 : 50) போன போக்கிலே பரந்துபோம் வெள்ளத்தையும், கோலக் குறுங்கணும் (சாளரம்) நுழையும் தென்றலையும் முறையே பரிபாடலும், சிலம்பும் உவமை காட்டுவது கொண்டே, உண்மை தானே விளங்கும். பரத்தன் முதலாய இச்சொற்கள் பரவுதல், அப்பால், அப்பாலுக்கு அப்பால் என வரைதுறையிள்றி அகலுதல் என்னும் பொருட்பட அமைந்திருத்தல் அறியத்தக்கனவே. அறிவராயினும், தவத்தராயினும், புதிது புதிதுண்ணும் வண்டுபோலும் காமுகராயினும் கண்வலையால் பற்றிப் பிடிக்கும் கலை வல்ல - எண்ணெண் கலைவல்ல - பரத்தையரைச் சுட்டுகிறார் இளங்கோவடிகளார். அவர்களைத் தளியிலார் என்றும் பதியிலார் என்றும் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைக்கின்றனர். (சிலப். 14 : 160; 167). பராகந்தேடியுண்ணும் வண்டுக்கு உவமை கூறிய ஒன்றால் கண்டு கொள்ளலாமே. பரத்தையிற் பிரிவு : பாலைத்திணை என்பது பிரிதல் ஒழுக்கம் பற்றியது. அப்பிரிவு வகைகளை, ஓதல் பகையே தூதிவை பிரிவே (அகத். 25) பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே (அகத். 33) காவற் பாங்கு பரத்தையின் அகற்சி (அகத். 41) எனப் பலதிறப்பட ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்தாராகப் பின்னுளோர், பரத்தையிற் பிரிவென ஒரு பிரிவாக்கியதுடன், இல்வாழ்க்கையே பரத்தையிற் பிரிவே என முதன்மை தரவும் ஆயினர். சேரிப் பரத்தை, இற்பரத்தை எனப் பிறபிற பெயரிட்டு வழங்கும் வழக்கும், பழநாள் தொட்டே ஆயிற்று. அதனை முதற்கண் கடிந்து கொடிதூக்கி முழக்கமிட்டவர் முதற்பாவலரே என்பது இவண் எண்ணத்தக்கது. பரத்தி : பரத்தி என்பதொரு சொல், பரத்தமை சுட்டாப் பொருளில் வழங்குகின்றது. அது பரவை எனப்படும் கடலாளுகையுடைய பரதவர் குடிப் பெண்மகளைக் குறிப்பது. பரதவர் பரவர் ஆகியபின் அவர்தம் பெண்டிர் பரத்தி எனப்பட்டனர் என்க. பரவர் படவர் எனவும் செம்படவர் எனவும் வழங்குதல் இவண் அறிக. பரத்தை : இனிப் பரத்தை என்றொரு சொல் பரத்தமை குறியாப் பொருளில் வழங்குகின்றது. அது சொல்லின் முழு வடிவற்ற சொல். செம்பரத்தை என்பதன் குறைச்சொல். பரந்தோர் : பரந்தோர் எல்லாம் புகழ என்று புறநானூற்றில் வரும் பரந்தோர் பரவி நின்றோர் என்னும் பொருளதாம் (285). பரந்தோர் அறிவான் விரிந்தோர் என்றும், புகழால் விரிந்தோர் என்றும் பொருள்தர ஆட்சியில் உண்டு. இருங்குன்றென்னும் பெயர்பரந் ததுவே என்னும் பரிபாடல் (15 : 35) பெயர் பரந்தது என விளக்கிக் காட்டுதல் அறிக. பரந்து படு நல்லிசை எய்தி என்னும் புறநானூறும், பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி என்னும் அதன் உரையும் இவண் கருதத்தக்கன (213). பரப்பு : உலகு பரப்பால் பெரியது என்பது உலகறிந்த செய்தி. அதனால் பரப்பகம், பாரகம், அகல்ஞாலம், கண்ணகல் ஞாலம், மாஞாலம் என எண்ணற்ற வகையால் குறிக்கப்படலாயிற்று. இவ்வுலகின் நிலப்பரப்பினும் நீர்ப்பரப்பே மும்மடங்கு விரிந்தது என்பதும் உலகறிந்த செய்தி. அதனை உணர்த்துமாப் போல நீர்ப்பரப்புக்குப் பரவை என்றொரு பெயர் சூட்டினர் நம் முந்தையோர். பரப்பு என்பது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு எனப் பொதுமையுடையதாயினும் பரப்பு கடலைச் சிறப்பாகக் குறிப்பதும் ஆயிற்று. பரந்தகன்ற நீர்ப்பகுதியைப் பரவை என்றதும் பரப்பு என்றதும் தேர்ச்சிமிக்கதாம். ஒரே பார்வையில் பார்க்க முடியாத பரப்பு மிக்கது நீர் என்பதை இச்சொற்கள் சொல்லும் பொருளும் ஒருங்கே குறிப்பது போல், மற்றொரு சொல் குறிப்பாகக் காட்டுகின்றது. அது கடல் என்பது. கட்பார்வையைக் கடந்து விரியும் விரிவுடைய நீர்ப்பரப்பு கடல் என்க. இக்கடலின் விரிவுப்பொருள் இலக்கணக் கடல் இலக்கியக் கடல் அறிவுக்கடல் கடலன்ன செல்வம் நன்மை கடலிற் பெரிது என்றெல்லாம் இருவகை வழக்குகளிலும் ஊன்றலாயின. பரவை என்பது நெய்தல் நிலம். அந்நிலத்திற்குரிய மக்கள்பரதவர், பரவர் எனப்பட்டனர். கடற்பகுதியை ஆட்சி செய்த வேந்தர்கள் பரதவ என்று விளிக்கப் பெற்றனர். கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ என்பது பதிற்றுப்பத்து (48). இவர் பரதர் எனவும் வழங்கப்பட்டனர் என்பது. படர்திரைப் பரதர் எனவரும் கம்பர் வாக்காலும், (கார்காலப். 74) பரத குமரரும் எனவரும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 5 : 158) அறியப்பெறும். பரதவர் வேந்தரும், பரதவர் வினைஞருமாக இரு திறத்தவரும் இருந்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றது. தென்பரதவர் போரே றே எனவரும் மதுரைக் காஞ்சி (144) மன்னரைக் குறிக்கும். மீன்விலைப் பரதவர் எனவரும் சிலம்பு (5 : 25) நிலமக்களாம் வினைமக்களைக் குறிக்கும். கொடுந்திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணுதலைப் பட்டினப்பாலையும் (112) பழம்படுதேறல் பரதவர் பருகுதலைச் சிறுபாணும் (159) பாடுகின்றன. அரசர்களால் எட்டிப் பட்டம் பெற்றவராகவும், கடல் வணிகராகவும் இருந்தமையால் வணிகரும் பின்னாளில் பரதவர் எனப்பட்டனர். பரதவர் கோத்திரத்த மைந்தன் (உபதேச. சிவத். 189) என்பதை அறிக. பரதவர் என்பார் பரதர் என வழங்கப்பெற்ற குறிப்பும் பல்நூல்களின் வழியே அறியப்பெறுகின்றது. பரதர் மலிந்த பல்வேறு தெருவைக் காட்டுகிறது பெரும்பாண் (323). பரதர் தந்த பல்வேறு கூலத்தைக் காட்டுகிறது மதுரைக்காஞ்சி (317). பரப்பு : பரவச் செய்தல், அகல விரித்தல் ஆகிய பொருள் வழியாகப் பரப்புதல் என்னும் தொழிற்பெயர் வரும். பரப்பு என ஏவலாகவும், பெயராகவும் நிற்றல் உண்டு. பரப்பு இடவிரிவு என்னும் பொருளது. மண்ணிடம், வானிடம், கடலிடம் ஆகிய இடவிரிவுகளைப் பொதுவாகச் சுட்டலும், தனித்தனியே சிறப்பாகச் சுட்டலும் உண்டு. நெற்பரப்பு நிலைப்பரப்பு என்றிரு வகையான நில அளவைச் சுட்டுகின்றது செ. ப. க. அகராதி. கதவு நிலையின் மேலுள்ள மண்தாங்கிப் பலகையையும் பரப்பு எனலுண்டு. கணக்கு வகையில் பரப்பளவு காணல் என்பதொன்று பரப்பளவுக்கெனத் துறையே அமைந்துள்ளது. விரைவு, சுருசுருப்பு, தினவெடுத்தல் என்னும் பொருளில் பரபரத்தல், பரபரப்பு என்பவை வழக்கில் உள்ளன. ஒழுங்காக இரு; இல்லையானால் அடிவாங்குவாய் என்னும் பொருளில், உடம்பு என்ன பரபரக்கிறதா? என்று வினாவுதல் கேட்கக்கூடிய வழக்கு. பரப்பாழ், பப்பரப்பாழ் என்பன திறந்தவெளி. வான்வெளி என்பவற்றைப் பொதுமக்கள் இயல்பாகக் குறிக்கும் வழக்குச் சொற்கள். இவையெல்லாம், பரவுதல் விரிதல் பொருளன என்பது வெளிப்படை. பரம் : மேலானது, உயர்ந்தது, அப்பாலானது, அப்பழுக்கு இல்லாதது முதலிய பொருள்களைத் தரும் சொல் பரம் என்பதாம். பரம்பொருள், பரமன், பரதேயி, பரமானது என்பவற்றில் இப்பொருள்கள் முறையே அமைந்திருத்தல் அறிக. கடவுள் என்பதிலுள்ள கடந்த என்னும் பொருள் பரம் என்பதிலும் உண்மையைக் கடல், பரவை என்பவற்றொடும் எண்ணிக் கொள்க. மொழிபெயர் தேயத்தரே இரந்துண்பாராக இருந்த நாளில் எழுந்த சொல்லாட்சி பரதேயி என்பதாம். பரதேசி என வழங்குதல் தேஎம் தேம் தேயம் என்பவை தேசமென வேற்றுச் சொல்லாகக் கொள்ளப்பட்டதன் பின்னை வடிவமாம். பரம் என்பது பாரம் என்னும் பொருளிலும் வரும். பரவிய இடம் பார் எனப்படுதல் போல், பரவிய சுமை பாரம் ஆயிற்று. பாரவண்டி, பாரச்சட்டம், பார், என்பவற்றை எண்ணுக. நிரைப் பரப் பொறைய நரைப்புறக் கழுதை எனக் கழுதையின் முதுகில் இருபாலும் சுமை ஒழுங்குபட அமைத்துச் செல்லும் முறைமை அகப்பாட்டிலே விளங்கு கின்றது (207). கழுதையின் முதுகுப் பரப்பினும் மிக்கு இருபாலும் நிரந்து பரந்து கிடக்கும் சுமை. நிரைப்பரம் என்னும் சொல்லாட்சியால் விளங்குதல் நயமிக்கதாம். கள்ளமில்லாத வெள்ளைத் தன்மையைப் பரம் என்பதும், அத்தகையரைப் பரமானவர் என்பதும், அவர்தம் போக்கினை-செயலினை-ப் பரம் போக்கு என்பதும் வழக்கில் உள்ளமை அறியத் தக்கன. பரமேளம் என்பதும் பரம்போக்கே. அகன்ற வாயையுடைய அகல்வாய்ச் சட்டியைப் பரவச் சட்டி என்பதும், அயலே இருந்து வரும் வாக்கைப் பரவாக்கு என்பதும் நினையலாம். உடலுக்குப் பரம் என்பதொரு சொல்லுண்டு. பரம், பாரம் என்னும் பொருளது. உடலைக் கொண்டே உயிர்வாழ்வு இயல்வது என்றாலும், உடலைக் கொண்டே அருள் தொண்டு இயல்வது என்றாலும், அவ்வுடலைப் பேணிக் கொள்ள வேண்டிய தீராக்கடனும் இருத்தலால், அவர்க்குத் தம்முடம்பு பேணுதலும் சுமையாய் அமைகின்றதாம். அதனாலன்றே, மற்றும் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை என்றார் திருவள்ளுவர் (345). இப்பரந் துடைத்தவர் என்னும் கம்பர் வாக்கு (கடிமணப். 69), பரம் என்பதற்கு உடல் என்னும் பொருளுண்மை காட்டும். பரம்பரம் : பரம்பரம் அப்பாலுக்கு அப்பாலாம் வீடுபேற்றைக் குறிப்பது உண்டு. பத்திசெய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் என்னும் திருவாசகம் (2. 119) இதனைத் தெளிவிக்கும். பரம்பரத்து உய்ப்பவன் பரம்பரன் என்க. (திருவாய். 4. 3 : 9) ஒன்றற்கு மேல் ஒன்றாய் உயர்ந்து விளங்கிவருதல் பரம் பரை எனப்படுகின்றது. சென்று சென்று பரம்பரமாய் எனவரும் திருவாய் மொழி (8. 8 : 5) இதனைக் காட்டும். பரம்பு : கல்லாஞ் சரளை பரவிக்கிடக்கும் வறண்ட நிலம் பரம்பு எனப்படும். பரவிய நிலம் என்னும் பொருளில் பரம்பு ஆளப்படுவதும் உண்டு. பரம்பெலாம் பவளம் என்னும் கம்பர் வாக்கு (நாட்டுப். 2) நிலப்பரப்பை அதிலும் மருத நிலப்பரப்பைக் காட்டுவதே. வரம்பு வரப்பென வலித்தல் அடைவது போலப் பரம்பு பரப்பென ஆகும். பரம்பு அளவு என்பதே பரப்பளவு ஆயது வெளிப்படை. பரப்பு என்பது செண்டு வெளி எனப் பொருள் தருதல் பெருங்கதையில் கண்டது (3. 25 : 10). செண்டுவெளியானது குதிரையோடும் வெளி, முற்றம் என்பன. பரம் படித்தல் : உழவுத் தொழிலில் பரம் படித்தல் என்பதொன்று. அது தொழி உழுது. குழைமிதித்தபின் பரம்புச் சட்டத்தால் சமனிலைப் படுத்தும் பணியாம். அதற்குரிய சட்டம், பரம்புச் சட்டம் எனப்படும். இனிப் பலகையையே பரம்பாகப் பரப்பி அடிப்பதும் அல்லது இழுப்பதும் வழக்கே. அது பரம்புப் பலகை எனப்படும். குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க என்பது ஏர் எழுபது (26). பரர் : பரர் என்பார் அயலார்; அப்பாலார். பரர்க்கடிமை செய்திடோம் என்பதில் அயலார் மட்டுமன்றிப் பகைவர் என்னும் பொருளும் உளதாதல் அறிக. பரர் என்பதற்குப் பகைவர் என்னும் பொருளதாதலைச் சூடாமணி நிகண்டு சொல்லும்: பரரொடு கேளார் ஒல்லார் பகைவர்பேர் எழுமூன்றாமே என்பது அது. (வ : 51) பரல் : பரவிக் கிடக்கும் முரம்பு நிலத்து அல்லது மேட்டு நிலத்துக் கல் பரல் எனப்படும். சுக்கான்கல், பரல் என்பதும், வித்து, பரல் என்பதும், சிலம்பு, கழல் முதலியவற்றின் உள்ளிடு கல் பரல் என்பதும் அதன் வடிவொப்புக் கருதியதாம். பரற்கல் என்பது பருக்கைக் கல் எனவும் ஆளப்படும். பரல் என்பது நிலத்தைக் குறித்து வந்த பெயராயும், பருக்கை என்பது கல்லைக் குறித்து வந்த பெயராயும் அறியக்கிடக்கின்றன. முரம்பு கண்ணுடைந்த பரலவற் போழ்வில் என மலைபடுகடாமும் (198) வெயிலுருப்புற்ற வெம்பரல் எனச் சிறுபாணாற்றுப்படையும் (8) பரலைக் குறிக்கின்றன. சிலம்பில் மணியும் முத்தும் பரலாக இடப்படும் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். பரவிச் சென்று ஒலியுண்டாக்கும் வண்ணம் இடைவெளி படக் கிடத்தலால் அவை பரல் எனப்பட்டன எனக் கொள்ளக் கிடக்கின்றதாம். பரவக்காலி : ஆடி ஓடித் திரியும் ஆடுமாடுகளைப் பரவக்காலி என்பது நாட்டு வழக்கு. அவ்வாறு அலைந்து திரிவானும் பரவக்காலி எனப்படுவான். அவ்வாறு அலைந்து திரியும் தன்மையும் பரவக்காலித்தனம் எனச் சொல்லப்படும். இவை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. பரவயம் : தன்னைப் பற்றிய கவலையில்லாமல் தன்னைச் சார்ந்ததன் அல்லது சார்ந்தவர் வண்ணமாகி மகிழ்வது பரவயம் எனப்படும், பரம்+வயம் = பரவயம்; பரவயமாவது மகிழ்ச்சி. தன்வய மிழக்கையாம். அதனை, மயலெலாம் ஒழிந்து பரவசமாம் காலம் என்றார் சிவப்பிரகாசர். இலைவயமாகத் தந்த கொடைப்பொருள் - வெற்றிலையில் வைத்துத் தந்த பொருள் - இலவசம் என்றானாற்போலப், பரவயம் பரவசம் ஆயிற்றாம். பரவர் என்பார் பரதவர் என்பதைக் கண்டுள்ளோம். பரவுதல், பரவல் என்பவை பரவிச் செல்லுதல் வழிவந்த சொற்களே. பரவலாகப் பேசப்படுதல் என்பது பலராலும் பலவிடத்தும் பேசப்படுதலாம். பரவுதல், வாழ்த்துதல் பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டுள்ளோம். பராவுதல் என்பதும் அப்பொருளதே. ஏனை ஒன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே எனத் தேவர்ப் பராவும் கலிவகையைக் குறிப்பார் தொல்காப்பியர். (செய். 137) பரவுக்கடன் தெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட நேர்வு அல்லது நேர்த்திக்கடன் பரவுக்கடன் எனப்படும். கொற்றவைக்குப் பரவுக்கடன் பூணலைக் குறிக்கிறது தொல்காப்பியம். (பொருள். 58) பரவெளி : பரம் வெளி - பரவெளியாம்; பரவெளி இறையுறையும் வானிடம் எனப்படும் விண்வெளி என்பதும் அது. பரவெளியை வறிது நிலைஇய காயம் (30) என்று புறநானூறு கூறும். ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயம் என்பது இதன் பழையவுரை. காயம் என்னும் தென்சொல் ஆகார முன்னொட்டுக் கொண்டு வடசொல்லாயிற்று. பரவை : கடல் என்னும் பொருள்தரும் பரவையை முன்னர்க் கண்டுள்ளோம். பழம் புண்ணுற்றான் ஒருவன் படுக்கையில் புரள்கிறான்; அவன் புரளல் போல் அலை புரள்கிறது கடலில்; அது, முழவென முழக்கமும் செய்கின்றது என்கிறது நற்றிணை. (394) முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் ணுறுநரின் பரவையின் ஆலும் என்பது அது. இவண் பரவை புரளற் பொருளது; புரளல் பரவல் தானே. பரவை யமுது என்பது உப்பையும், பரவையாழ் என்பது பேரியாழையும் பரவை வழக்கு என்பது உலக வழக்கையும் குறிக்கும். பரவைப் புல்வரி என்பது, பரந்த புல்வெளியில் கால்நடை மேய்தற்காகப் பெறப்பட்ட ஒரு வரிப் பணமாகும். பரவையார் : ஆடல் அழகு கலைநலம் ஆகியவற்றால் பரவிய புகழ் வாய்ந்த ஒருவர் பரவை நாச்சியார்; சுந்தரர் மனையாட்டியருள் ஒருவர். அவர் பெயரைக் குறிக்கும் சேக்கிழார், பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை யணிதிகழும் அணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை எழுபரவை என்கிறார். (பெரிய. தடுத்தாட்கொண்ட. 148) பரன் : அயன்மையான் என்னும் பொருள் தருவதுடன் இறைவன் என்னும் பொருளும் தரும் சொல் பரன். பொறிபுலன்களுக்கு அப்பாலான் என்னும் இறைமைக் கொள்கை வழி வந்த சொல் பரன்; பர்+அன் = பரன்; இனிப் பரம்+அன் = பரமன் என்றும், ஈரொட்டுகள் சேர்ந்தும் இறைவனைக் குறிக்கும். பரமாய பொருள் பரம்பொருள் என முந்து கண்டதையும் நினைக. பரன் சிவன், திருமால், அருகன் முதலாம் பல கடவுளரையும் குறிக்கும் சொல்லாகத் தமிழ் நிகண்டுகளும் அவ்வச் சமய நூல்களும் சுட்டுதல் அறியத்தக்கது. பரா : பரக்கப் பார்த்தல், பராக்குப் பார்த்தலாக வரும் என்பதைக் குறித்துளோம். பர என்பது பரா என்றாகியும் பரவுதல் பொருள் தரும். பராகம் என்பது பூம்பராகம் எனப்படும் பூம்பொடி (மகரந்தப்பொடி). இதன் பொருளினின்று பரவும் தூள், பொடி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் பராகம் அமைந்தது. பராம் எனத் தொகுத்தும் அப்பொருள் தருவதாயிற்று. பரவிக் கிடக்கும் பாலைவனம் பராடம் எனவும், பருத்த அடிமரம் பராரை எனவும், பருத்த மேல் தொடை பராரை எனவும் (பொருந. 104) வழங்குகின்றன. பரவுதல் பராவுதலாக வருதல் அறிந்ததே. 2. பர்-பரி பர்-பரி : பர் என்னும் வேருடன் இகரம் சேர்தலால் பரி என்னும் சொல்வடிவம் பெறுகின்றது. அகரம் சேர்தலால் பர் என்பது பரவுதல் பொருள் தந்ததுபோல், இகரம் சேர்தலால் வளைதல் பொருள் தருகின்றதாம். பரவிய ஒன்று வளைதல் இயற்கை; உலகியல் அத்தகைத்தென உற்று நோக்குவார் தெளிவாக அறிவர். உலகுக்கு அண்டம் என்பதொரு பெயர். அதன் வடிவம் வட்டம் என்பதைக் காட்டும் பெயர் அது. விதை, முட்டை என்பனவும் அண்டம் என்பதன் பொருளவே. அப்பொருள் வடிவம் வட்டத்தின் வழிப்பட்டனவே. திங்கள் ஞாயிறு விண்மீன் இவற்றின் வடிவெல்லாம் வட்டமே. கடல் வலயம் என்பதால் கடல் வட்டம் புரியும். நீராரும் கடல் உடுத்த நிலம், புடவிக்கு அணி துகில் என வளர் அந்தக் கடல் என்பன கடல் வட்டம் குறிப்பன. நீர்நிலையில் ஒரு கல் விழுந்தால் வட்டம் கிளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெரு வட்டமாதல் அறியார் எவர்? நீர்ச்சுழி வட்டமே. மழைத்துளி வடிவம் வட்டமே. அது விழும் வடிவம் வட்டமே. காற்றுக் கிளர்வதும் தீ எழுந்தெரிவதும் வட்டமே. வானின் தோற்றம் வட்டமே. ஆடுமாடு முதலாம் விலங்குகள் படுத்தல் வட்டமே. ஆடையின்றி வாடையில் மெலியும் மாந்தன் படுத்திருக்கும் நிலையும் வட்டமே. பறவைக் கூடுகள் வட்டமே; அவற்றின் உலாவலும், வண்டின் சுழல்வும் வட்டமே. பூவும் வித்தும் கனியும் காயும் தவசமும் வட்டமே! தனித்தனி சொல்வானேன்? குழந்தை கையில் கரியோ சுண்ணமோ எழுதுகோலோ கிடைத்தால் இயல்பாக வரைவது வட்டமே. வளையாமல் வட்டமேது? ஏன்; கோடு என்பதே வளைவு என்னும் பொருளதே. கோட்டம், கோட்டை இவையும் வளைவே. கணை கொடிது யாழ்கோடு செவ்விது என்றாரே வள்ளுவர். கோடு வளைவு அன்றோ! மலைக்குக் கோடும், மரத்திற்குக் கோடும் வந்தமை வளைவால் தானே! ஆகலின் பரவும் ஒன்று வளைதல் அல்லது வட்ட மாதல் இயற்கை நியதி. இது கொண்டு பர் என்பதொடு இகரம் சேர்ந்த, பரி வழிச் சொற்கள் வளைதல் பொருள் தருதல் தமிழியல் என்க. வளைதலால் வந்தபெயர் வளை; வளையல்; வளசல். இவற்றில் வளைவுகளில் ஓரளவும் உண்டு; பேரளவும் உண்டு; முழுதுறும் வளைவும் உண்டு பரி முதற் சொற்கள் வளைதற் பொருளில் வருதலைக்காண்போம். வளைதலின் அடிக்கருத்து எப்படி எப்படி அமையுமென விளக்குகிறார் பாவாணர் : வளைதற் கருத்து இயன் முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துக்களையும்; செயன் முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், உருளுதல் முதலிய வினைக்கருத்துக் களையும் தழுவும். வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும் அப்பண்பையும் வினையையும் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும். கோணல், சாய்தல் என்பன வளைதலின் முந்திய நிலைகளாதலின், அவையும் அதனுள் அடங்கும் (வேர்ச்சொற் கட்டுரைகள் - 155) பரி : அச்சத்தாலோ, ஒரு நோக்கத்தாலோ ஓடும் ஓட்டம் அன்றி மற்றை ஓட்டம் எல்லா உயிரிகளுக்கும் பொதுவாக வட்டமிடல், வளைதலாகவே இயலும். அவ்வகையில் தன் பெயரைப் பெற்ற விலங்கு குதிரை. அது குதித்துக் குதித்து ஓடுதலால் குதிரைப்பெயரும், வளையமிட்டுச் செல்லுதலால் பரிப் பெயரும் பெற்றது. அதன் ஆற்றல் திறமே, அறிவியல் மூளையில் பரியாற்றலாய் (Horse Power) மின்னளவீடாக இயல்கின்றது. வளைதலால் பரிப்பெயர் பெற்றதன் நடையும், ஓட்டமும் பரி எனப்பட்டன. காலே பரிதப்பின என்னும் குறுந்தொகை செலவையும் (4), பரீஇ என்பது குதிரைக்க தியாம் ஓட்டத்தையும் (புறம். 4) குறித்தன. குதிரை ஓட்டத்திற்குரிய வையாளிவீதி புரவிவட்டம் எனப்படுதல் அறியத் தக்கது (சூடாமணி 5 : 46) குதிரை வடிவ விண்மீனாம் அசுவதி பரி எனப்படுவதையும் சூடாமணி சுட்டும். அதற்குச் சகடம் என ஒரு பெயர் உண்மையும் அறியத்தக்கது, சகடம் - சக்கரம். குதிரை ஏற்றம் பரியேற்றம் எனப்படுதல் எவரும் அறிந்தது. குளம், ஏரி, ஆறு முதலியவை நீர்ப்பெருக்கால் உடைப்பெடுத்து விட்டால் அதனை அடைக்கப் புகுவார் வலிய மரத்தூண்களை உடைப்புப் பகுதியில் நிறுத்தி அதன் சார்பில் மரக்கிளை மணல்மூடை முதலியவற்றைச் செறித்து உடைப்பை அடைத்தல் வழக்கம். உடைப்பில் நிறுத்தும் மரத்திற்குப் பரி என்பது பெயர். குதிரை மரம் எனக் கூறுவர். பரிநிறுத்துவார் என்பது திரு விளையாடல் பிட்டுக்கு மண்சுமந்த படலத்துவரும் செய்தி (5). புறப்பாடல்களில் குதிரைமறம் தனிப்புகழ் வாய்ந்தது. பாண்டியர்களின் பெரும் பொருள் குதிரை வாங்குவதற்குச் சென்றதை வெளிநாட்டு உலாவாணர் வியந்துரைத்துளர். பரி என்பது பரிவின்மூலம், பரிவாவது அன்பு; அவ்வன்பும் அவ்வன்பினால் உண்டாம் பாதுகாப்பும் பரி எனப்படும். பாதுகாப்பு என்பது பிறர் பரம் (சுமை) தாங்கும் பான்மை ஆதலால், அச்சுமையும், அச்சுமை தன் சுமையொடும் ஏறும் சுமையாதலின் மிகையும், அம்மிகை பலர் பாராட்டும் பண்பியல் ஆதலால் உயர்வும் பெருமையும் ஆகியவெல்லாம் பொருளாகப் பரி சிறந்தனவாம். பரி வளைதலாதலும் அன்பாதலும் பிறவாதலும் எப்படி? ஆவும் கன்றும், தாயும் சேயும், பறவையும் குஞ்சும், சேவலும் பெடையும் வளையவருதலை அறியோமோ? m‹ãdhš k£Lnkh tisjš? வம்பினால் ஒரு குட்டிக்கோ குஞ்சுக்கோ இடர்சூழ ஓருயிரி முயலுங்கால் அத்தாய் வளைய வளைய வந்து தன்வலுவெல்லாம் கூட்டித் தாக்குதலை எவரே அறியார்? இதனால் அன்றே வள்ளுவப் பேராசிரியர், அறத்திற்கே அன்பு சார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்றார். இவண் சாரச் சாரச்சார்ந்து, தீரத் தீரத் தீரா அன்பு வட்டமாதலைச் சார்புச் சொல்லால் குறித்தமை கொள்ளற் பாலதாம். நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் என்னும் காதலன்பிற்குன்றியதோ அத் தாயன்பு? காதல் முருகி முருகி வளர்ந்து, அருணிலைக் காதலாய்ப் பெருகிய தல்லவோ தாய்மை? பரி என்பதற்கு வருந்துதல் பொருளும் உண்டு. இதன் மிகையைக் காட்டப் பரிபுலம்புதல் என்னும் ஆட்சியும் உண்டு. பக்கம் சேர்ந்து, பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் என்பது சாத்தனார் வாக்கு (மணிமே. 16 : 5 - 58). அன்புப் பொருளாம் பரி, வருந்துதல் - வருத்தம் ஆமோ? அது வருந்தாக்கால் எது வருந்துவது? அருளாளர் வரலாறுகள், தமக்கு வருந்துவதையோ பொருட்டாக்கியுரைக்கின்றன? பிறபிற உயிர்க்கு இரங்கி-பரிந்து இரங்கி - வருந்தும் வருத்தத்தையன்றோ புகல்கின்றன! ஆடு தூக்கிச் சுமந்த புத்தர் வரலாறும், தந்தையே இவரைப்பொறுத் தருளும், என்ற கிறித்து பெருமான் வரலாறும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வரலாறும் அவர்கள் பிறவுயிர்களுக்காகத் துடித்த துடிப்பையல்லவோ கூறுகின்றன. அவர்க்கென வந்த அல்லல் இல்லாமையால் அன்றோ, அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை எனத் திட்டமாக உரைத்தார் திருவள்ளுவர். இதற்கு வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரியாக (சான்றாக) இருத்தலைக் கண்டு தெளிக என வழிகாட்டினாரே! இவற்றை யெல்லாம் எண்ணினால் பரி என்பதற்கு வருத்தப்பொருள் வந்த வகை விளங்கும். பரி என்னும் சொல்லுக்குக் கண்ட குதிரை என்னும் பொருள் வழியாகச் சில சொற்கள் வளர்ந்துள்ளன. அவை பரிக்காரர், பரிக்கோல், பரிமா, பரிமுகம் என்பன. பரிக்காரர் ஆவார் குதிரைக் காரர்; குதிரை நடத்துவோர்; பரிக்கோல்-குத்துக்கோல்; பரிக்கோற்காரர் என்பார் குத்துக் கோற்காரர்; இவர் யானைப்பாகர். மதத்தாற், பரிக்கோல் எல்லையில் நில்லாத களிற்றைக் காட்டுகிறது தொல்காப்பிய உரை (தொல். பொருள். 11) பரிமா என்பது பரியாகிய விலங்கு. கரிமா, அரிமா போல வழங்கும் வழக்கு. பரிமுகம் குதிரைமுக வடிவாக அமைந்த விண்மீன் (அசுவிணி); பரிமுக வடிவில் அமைந்த படகு பரிமுக அம்பி எனப்பட்டது. பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் என்பது சிலம்பு (13: 176). பரிமுக மாக்கள் என்பார் கின்னரர் ஆதலைக் கம்பர் சுட்டுவார் (சித்திரகூடப் படலம். 11) பரிச்சாத்து என்பதொருசொல். சாத்து என்பது வணிகக் கூட்டம். வணிகர் தலைவனாக இருந்தவன் மாசாத்தன் எனப்பட்டான்; அவன் கோவலன் தந்தை. குதிரை வணிகம் பரிச் சாத்து எனப்பட்டு, அவ் வணிகத்தில் ஈடுபட்ட குழுவும் ஆகுபெயரால் பரிச்சாத்து எனப்பட்டது. வந்தது முதுபரிச்சாத்து என்பது திருவிளையாடற் புராணம் (28 : 29) பரிகம் பரிகை : பரிகம் என்னும் சொல்லுக்கு அகழ், மதிலுள் மேடை, வளைதடி ஆகிய பொருள்கள் வழங்குகின்றன. கோட்டை வளைமதில் ஆதலால், அதனைச் சூழ அமைந்த அகழ் வளைந்து கிடப்பது என்பது வெளிப்படை. பரி என்பது சூழ்ந்த மதிலைக் குறிப்பதாகி, அதன் மேல் அமைந்த மேடையைப் பரிகம் என்பது குறிப்பதாயிற்று. அகம் என்பது அம்மெனத் தொகுத்தல் வழக்கம். அதன்படி பரியகம் பரிகம் ஆனதென்க. உ என்பது உயர்வு காட்டும் வேர்; உப்பு, உப்புதல், உவணம் என்பவை உயர்வு காட்டுவன. அவ்வாறே உப்பரிகை, உப்பரிகம் என்பவை மதின்மேல் அல்லது மாடிமேல் மாடியைக் குறிப்பதாய் அமைந்தன. பரிகை என்பது வளையும் தன்மையாகலின் வளைதடியைப் பரிகம் எனல் பொருந்துவதே; இனிப் பரிகை என்பதற்கும் அகழ், மதிலுண்மேடை என்னும் பொருள்களும், பரிவு கூர்தலாம் (அன்புறுதலாம்) தன்மையும் கூறப்படுதல் இணைத்துக் காணத்தக்கன. பரி என்பதற்குப் பரிமரம் என ஒரு பொருள் உள்ளமை முன்னர்க் கண்டோம். அதன் வளர்ச்சிச் சொல்லாகிய பரிகம் என்பது அதன் வளர்ச்சிப் பொருளுக்கும் உரியதாக விளங்குகின்றது. அஃது எழுமரம் என்பதாம். பரிமரம் ஆகிய அது பரிகம் என்பதையன்றிக் கணைய மரம், எழுமரம் எனவும் வழங்கும். எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை என்பது புறம். (90) இவ்வெழுமரம் கோட்டைக் கதவின் உட்புறத்தே குறுக்காகப் போடப்படும் வலியமரம். எழூஉத் தாங்கிய கதவு என்பதொரு புறப்பாட்டு (97) பரிகம் என ஓர் இருப்புப் படைக்கலம் உண்டென உரைக்கும். பரிகலம் என்பது உண்கலமாகப் பயன்படும் வாழையிலை; குருத்தாக அறுத்து அதன் வளைவை விரித்துப் போடுதல் வழக்காக இருந்தமையின் பரிகலம் என வழங்கப்படுவதாயிற்று. பரிகலக் குருத்து என்றார் சேக்கிழார். (பெரிய. அப்பூதி. 27.) பரிச்சந்தம் : சந்தம் என்பது நறுமணம், அமைதி, அழகு, இனிமை முதலிய பொருள்தரும் சொல். இத்தகைய பொலிவெல்லாம், திருவிழாவும் பெருவிழாவுமாம் அரச விழா, தெய்வ விழாக்களில் சூழவருதல் கண்கூடு. ஆதலால் பரிச்சந்தம் என்பது அரச பரிச்சின்னங்களைக் குறிப்பதாயிற்று. வீசுவெண் சாமராதி பரிச்சந்தம் முழுதும் விட்டார் என்பது மேருமந்தர புராணம் (1048) பரிச்சின்னம் : பரிச்சின்னம் என்பது அரச சின்னம். அவை குடையும் கோலும் ஊர்தியும் பிறவுமாய் அரசனைச் சூழ அமைந்தும் வந்தும் பொலிவுறுத்தும் அடையாளங்களாம். மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாகக் காட்டுகிறது பெரியபுராணம் (திருஞான. 1016). பரிவாரம் என்பதையும் காண்க. பரிச்சின்னம் என்பது நினைத்தவை நினைத்தபடி வைக்கப்படுபவையல்ல; இன்னவை இன்ன அளவு, இன்ன வகைத்து என வரம்பு கட்டப்பட்டு வருவது அல்லது அமைவதாம். அதனால் பரிச்சின்னம் என்பது அளவிட்டது அல்லது அளவு பட்டது என்னும் பொருள் பெற்றது. பரிச்சின்ன ஞானம் பரிய என்பது சிவஞான முனிவர் நெஞ்சு விடுதூது (81). பரிச்செண்டு : செண்டு வெளி என்பது குதிரை வட்டமிடும் வெளியைக் குறிக்கும். செண்டித்தல் என்பது துள்ளியோடல் என்னும் பொருளது. இன்றும் செண்டித்தல் அப்பொருளில் நாட்டுப் புறங்களில் வழங்குகின்றது. வளைபந்தைப் போட்டுத் துள்ளித்துள்ளியாடுதல் பரிச்செண்டு எனப்பட்டதாம். அவ்வாட்டம் நின்று கொண்டு ஆடுவதும் சுற்றிவந்து ஆடுவதும் என இருவகைத்தாதல் பெரியபுராணத்தால் அறிய வருகின்றது. நிலைச் செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி என்பது அது (சேரமான். 126). பரிசகம் : வீடு, மனை, மாளிகை என்பவற்றின் வேறுபட்ட அமைப்பில் தனியே விளங்குமாறு கலைக்கூடங்களை அமைத்தல் வழக்கம். அதனை இந்நாள் காட்சிக் கூட அமைப்புகளாக அமைப்பவற்றையும், நிலையாக அமைக்கப் பட்டுள்ளவற்றையும் கொண்டு தீர்மானிக்க முடியும். சுற்றி வருதற்கேற்ற வளைவான வடிவு கலைக்கூட அமைப்புக்கு உரியது என்பதைத் தெளிந்து அதற்குப் பரிசகம் எனப் பெயரிட்டுப் போற்றியமை விளக்கமாகின்றது. விளக்குவது திருக்கோவையார் (78). படிச்சந்த மாக்கும் படமுளவோநும் பரிசகத்தே என்பது அது. இப்பொழுது பரிசகமெனப் புத்தாட்சி ஒன்றும் நடந்து வருகின்றது. எந்தச் சூதை ஒழிக்க வேண்டும் என்றாரோ திருவள்ளுவர் அவர் பெயரையும் அவர் குறளையும் உலாப்போக விட்டு விட்டு அந்தச் சூது வழிப்பட்டதாம் பரிசுச்சீட்டை அரசே நடத்தி வருவது பாழில் பாழாம் செய்கை. அப்பரிசுச்சீட்டு விற்பனையகம் பரிசகம் எனச் சில இடங்களில் பளிச்சிடுகின்றது! பரிசு குலுக்கல், பரிசு வழங்கல் விழாக்களும் பரிய பரிய தலைகள் தலைமையில் நிகழ்கின்றன! இருப்பதையெல்லாம் இழந்தாலும், ஏதோ ஒன்று விழுந்தால் விழுந்தது பரிசுதானே! பரிசு : பரிசம், பரிசில், பரிசு என்பவை கொடைவகையால் ஒன்றாயினும், பெறுவார் நிலை, பெறும் வகை இவற்றால் வேறுபாடு உண்மை கருதி மூவடிவுற்றதாம். இது முன்னரே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்குத் தலைவன் தரும் கையுறை வேறு. அது அவள் கையில் பிறரறியா வண்ணம் சேர்ப்பது; தோழியும் அவளும் உயிரோரன்னர் ஆகலின் அவள் கையில் வழங்கித் தலைவி கையில் சேர்ப்பிப்பதும் கையுறையே. இவற்றின் வேறானது பரிசம் என்பது வெளிப்பட விளங்கும். ஊரவர்க்கும் உரிமையர்க்கும் அறிவித்து அவர்கள் சூழ்ந்துள்ள அவையத்தில் அல்லது மன்றத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு வழங்கும் கொடையே பரிசமாம். அகலத் தாலம் ஒன்றிலே மங்கலப் பொருள்கள் ஊர்வலமாய்ச் சூழ வந்து அவற்றை வழங்குதலும் - அவ்வழங்குதலும் குத்துவிளக்கு வைத்து அதனைச் சூழப் பரப்பிப் பலரும் பார்க்க வைத்தலும் ஆகியவற்றை நோக்குவார் - பரிசையும் அறிவார் வளைவுப் பொருளையும் அறிவார். இனி இகலிப் பெறும் பரிசும், இகலாமல் போட்டி யிடாமல் - பெறும் பரிசிலும் பண்டு நிகழ்ந்த பான்மையை அறியின் இப்பெயர்ப் பொருத்தம் விளங்கும். கலைவல்லாரை யும் புலமையரையும் யானை மேல் வைத்து உலாவரச் செய்தும், அவர்களுக்குரிய கொடைப் பொருள்களையும் உடன் உலாவரச் செய்தும், அவற்றைத் தாலத்திலே வைத்து வழங்கியும் செய்த சீர்மையே பரிசு, பரிசில் என்னும் பெயர்களை வழங்கிற்றாம். பரிசம் போடுதல், பரிசில் வாழ்க்கை, பரிசில் கடாநிலை, பரிசில் விடை, பரிசில் துறை, பரிசில் நிலை, பரிசிலர், பரிசிலாளர் என்னும் சொற்களெல்லாம் மேற்குறித்த முச்சொற்களின் வழி வந்து பொருளிலக்கணப் பொருளாய்ச் சிறக்கின்றன. ஆகலின் அவற்றைத் தனித்தனி விளக்க வேண்டியதில்லையாம். பரிசு கொடைப்பொருள் தருதலானபின், தன்மை அல்லது குணம் என்னும் பொருளும் தருவதாயிற்று. கொடையால் புகழ் வருதலின் புகழ் என்னும் பொருளும் அதற்கு உண்டாயிற்று. பரிசு பெருமைப்படுத்துவதாம் வகையாக அமைந்தமையால் வகை என்னும் பொருளும் தந்தது. பரிசம் என்பது வட்டப் பெருந்தட்டாக அமைந்த ஓடம் ஆகலின் பரிசுக்கும் அப்பொருள் கண்டனர். தக்கனும் எக்கனும் தம்பரிசு அழிய (திருவாசகம் 13 : 15) - இது புகழ். பிள்ளை பரிசு இது என்றால் (பெரிய திருமொழி 33 : 2) - இது தன்மை. நினைந்த அப்பரிசே செய்ய (பெரியபுராணம். மெய்ப். 15) - இது வகை. பரிசு-சிற்றோடம் செ. ப. க. அகராதி. பரிசு, பெருமைப் பொருள் குறித்த பின்னர், பரிசு கெடுதல் என்பது சீரழிவைக் குறிப்பதாயிற்று. பரிசு கெட்டவன்(ள்) பரிசை கெட்டவன்(ள்) என்பவை வழங்கு மொழிகள். பரிசு பெறுவார் ஓர் ஒழுங்கொடும், பணிவொடும் பெறுவராகலின், அப்பரிசுக்கு ஒழுங்கு, வழி என்னும் பொருள்களும் உண்டாயின. பரிசொடும் பரவிப் பணிவார் என்பது தேவாரம் (612 : 3). பரிசை : பரிசு பரிசை என ஐகாரம் பெறும். அது வெண்கொற்றக்குடை முதலாம் வெற்றி விருதுகளைக் குறிக்கும். பரிசை என்பதற்குக் கேடயம் என்னும் பொருளும் உண்டு. நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் என்பது சூடாமணி நிகண்டு. (7 : 18) வலயங்கற் பரிசை என்பது இராமாயணம் (உயுத்த. 1323 பா. வே). பரிசை கேடயம் ஆகலின் அதனைப் பிடிப்பவன் பரிசைக்காரன் எனப்பட்டான். குடை பிடிப்போனும் அவ்வாறே பெயர் பெற்றான். பரிஞ்சு : பரிஞ்சு என்பது இருபொருளுடன் வழங்குகின்றது. பரிந்து என்னும் சொல் பரிஞ்சு எனப் போலி வடிவம் பெறுதல் ஒன்று. பரிதல் அன்பு வழிப்பட்டதாதலின் வளைதற் பொருளாதல் தெளிவு. பரிஞ்சுஇறை யழுங்கு கின்றேன் என்பது இராமாயணம் (உயுத்த. 2481 ; பா. வே). இன்னொரு பொருள் வாளின்பிடி என்பது. வாளின் பிடி வளைவாதல் அறிக. பரித்தல் : பரித்தல் என்பது சூழ்தல், பொறுத்தல், பூணுதல், கட்டுதல் முதலிய பொருள்களைத் தரும். புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் என்னும் அகப்பாடல் (31) புண் சொரி குருதி, தம்மைச் சூழக் கிடந்தோர் என்னும் பொருள்தருதல் காண்க. புகழையார் பரிக்கற் பாலார் என்னும் கம்பர் வாக்கு பொறுத்தல் பூணுதல் ஆகிய பொருளது (கிட். 3 :6). மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் என்னும் புறப்பாட்டும் (75) தாங்குதல் அல்லது பொறுத்தல் பொருளதே. உயிர்ப்பிடை பரிப்ப என்பது கட்டுதல் பொருளது (கம். கிட். 864). பரிதல் : விரும்புதல் சார்தல் வருந்துதல் அஞ்சுதல் பிரிதல் அகலுதல் அழிதல் முதலிய பொருள்களையும் இவற்றின் சார்பான பொருள்களையும் விரிவாகக் கூறுவது பரிதலாகும். பரிதல் அன்பு; அவ்வன்பு விரும்புதலாம்; சார்தலாம்; அவ்வன்புத் தடைக்கு வருந்துதல் நிகழும்; அஞ்சுதலுமாம்; அன்பின் அகற்சி பிரிவாம்; பெருந்துயராம்; அழிவுமாம். எல்லாம் வட்டமிட அமையும் அன்புப் பரிவை விளக்கின் பெருவிரிவாம். பரிதி : பரிதி என்பது வட்ட வடிவு என்கிறது திவாகரம். வலயம் நேமி திகிரி மண்டிலம் பரிதி ஆழி பாண்டில் விருத்தம் கோளகை கடகம் பாலிகை கொம்மை தட்டு வலையம் சக்கரம் சில்லி வட்ட வடிவிற் கொட்டிய பெயரே எனவும் குடிலம் தட்டு வாங்கல் குலாவல் கோட்டம் வணரே வளாவல் வளைதல் எனவும் வட்ட வடிவம் குறிக்கும் சொற்களைத் தொகுத்துரைக்கிறது. ஒளி என்பதைப் பரிதியம் பரிதி ஒத்தான் என்னும் அதே நூல் வேள்வித்தீயைச் சுற்றியிடப்படும் தருப்பைப் புல்லைப் பரிதி என்று குறித்தல், பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்து என்னும் நாச்சியார் திருமொழியால் விளங்கும் (6: 7). பரிதி கதிரோன் ஆதலால் அதன் மண்டலம் பரிதிவட்டம் எனப்படும். வெங்கதிர்ப் பரிதிவட்டம் என்பது பெரிய திருமொழி (4 5 : 10). பரிதி வானவன் எனக்கதிரோனைக் குறித்தார் கம்பர் (பால. 346). பரிதி என்பது வட்டத்தின் சுற்றளவைக் காட்டுதல் கணக்கியல். பரிதி என்பார் ஒருவர் திருக்குறள் உரையாசிரியர். இவற்றையன்றிக் குண்டலம், பருதி, படலிகை, மல்லை, வட்டணை, வல்லை, வட்டு, வட்டகை இன்ன சொற்களும் வட்ட முடிவு குறிப்பனவே. கதிரோன் வடிவு வட்டம். அது பரிதியஞ் செல்வன் எனச்சாத்தனாரால் சொல்லப் படுகிறது (மணி. 4 : 1) தேன் கூட்டைச் சொல்லும் நக்கீரர் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர்இறால் என்கிறார். (திருமுரு. 299-300). தேனடையும் கதிரும் பரிதி வடிவாதல் காட்டும் உவமை இது. தேர் உருளையும், ஆழிப்படையாம் சக்கரப் படையும் பரிதி எனப்படும். அத்தேர்ப்பரிதி என்பது களவழி (4). பரிதியில் தோட்டிய வேலை என்பது கல்லாடம் (80). பரிதி கதிரோனைக் குறித்தலால் அதன்பின் அதன் ஒளியையும், அதனைச் சூழ அமைந்த ஒளிவட்டத்தையும் குறிப்பதாயிற்று. பரிவேடம் என்பதை வளைந்து கொள்ளும் பரிதி என்னும் இரகு வம்சம். பரிப்பு : பரிப்பு என்பது இயக்கப் பொருளது. வட்ட வடிவாம் ஒன்று இயங்குதல் பரிப்பு எனப்படும். வட்ட வடிவாம் உருளைக் கண்டதே (உருள் - சக்கரம்) போக்கு வரவுக் கால்கோள். கட்டை வண்டி முதல் கடிது பறக்கும் வானவூர்திகாறும் காலுருள் வளர்ச்சியே. அஃது இயற்கையின் கொடை. கதிரும் மதியும் பிறவும் வட்ட வடிவாயிருத்தலும் அவை இடையீடிலாது இயங்கலும் தூண்டலாம். அதனை நுண்ணிதின் உணர்ந்தே பரிப்புச் சொல்லை வழங்கினர் நம் முந்தையோர். செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் - பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளிதிரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றிவை, சென்றளந் தறிந்தோர் போல என்றும், இனைத்தென் போரும் உளரே என்னும் புறப்பாடல் (30) அந்நாளைத் தமிழ்வாணர் விண்ணியற்கலைத் தேர்ச்சியை இனிது விளக்கும். செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவர்களைப்போல நாளும் இத்துணை யளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர் எனவரும் இப்பகுதியின் பழையவுரை கருதத் தக்கது. பரிபாடல் : தெய்வமும் காமமும் பொருளாக வருவது பரிபாடல்; பரிபாட்டால் அமைந்த தொகை, பரிபாடல் எனப்பட்டது. அது எட்டுத்தொகையுள் ஐந்தாவது. பரிபாடல் உறுப்புகளுள் சிறந்த ஒன்று அராகம். உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும் என்பார் தொல் காப்பியர் (செய். 230). முடுகிச் செல்லும் உருளென முடுகு நடையிடலால் பரிபாடல் எனப்பட்டதாம். அதனால் உருட்டு வண்ணத்தை அடுத்தே முடுகு வண்ணத்தையும் வைத்த தொல்காப்பியர், முடுகுவண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே என்றார் (செய். 231). உருளல், சுழலல் வளைதல் பொருளதே யன்றோ? பரிபுரம் : பரிபுரம் என்பது சிலம்புப் பொருளது. புரம், புரி என்பனவும் வளைதற் பொருளால் அமைந்த சொற்களே. காற் படத்தொடு வளைந்து கிடந்து ஒலி செய்யும் சிலம்பு பரிபுரம் எனப்பட்டது, வடிவு கருதிய ஆக்கம். சிலம்பு என்னும் பெயர் ஒலித்தற் பொருள் கருதிய ஆக்கம். பரிபுரம் புலம்ப என்கிறார் கம்பர் (பால. 872, 908). பரிமணி : பரிமணி என்பதை மருத்துவ நூல்கள் கரந்தை என்று கூறும். இக்கரந்தை கொட்டைக்கரந்தை என்பது. கொட்டாங்கரந்தை எனவும் அது வழங்கும் (ஐங்குறு. 26. உ.வே.சா. குறிப்பு). கரந்தைப் பூவின் அமைப்பைப் புறப்பாடல் உவமையால் காட்டும். நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை என்பது அது (281). நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப் பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு என்பார் பேராசிரியர் ஔவை (புறம். 261). பரிமாற்று : பரிமாற்று கொடுத்து வாங்குதல் பொருளது. பண்டமாற்று என்பது பரிமாற்றமே. ஒரு பொருள், இதனைக் கொடுத்துப் பிறிதொன்றனிடம் இருந்து இதனைப் பெற்றது எனக்கூறும் ஓர் அணிவகை பரிமாற்றணி எனப்படும். பண்டமாற்று என்பது போல் இப்பரிமாற்றணி அமைவதாம். இது பரிவருத்தனை எனவும் படும். மாறாட்டு என்பதும் அது. இவைகொண் டிவையெனக் கீந்தன ரென்று நவைதீர மொழிவது நவில்பரி மாற்றம் என்பது அதன் இலக்கணம் (வீரசோழியம். 153) பரிமாறுதல் : பரிமாறுதல் இரு வகை வழக்குகளிலும் பெருக வழங்கும் சொல். விருந்து பரிமாறுதல், பரிமாறுபவர், பரிமாறல் என்பவை திருமண விழாத்தோறும் பன்னூறு முறை பழகும் சொல். வளைந்து வளைந்து - வளைய வளைய வந்து வந்து - பரிமாறும் இப்பரிமாறுதலைக் குழல் துளைகளில் குழந்தைக் கண்ணன் சிறுவிரல் தடவிப் பரிமாறுதலாகச் சுவை சொட்டச் சொட்டப் பாடுகிறார் பெரியவர் ஆழ்வார். சிறுவிரல்கள் தடவிப் பரிமாற என்பது அது (3.6:8). இப்பரிமாறுதல் சொல் ஒழுகுதல், உலாவுதல், செலவிடுதல் முதலிய பொருள்களாய் விரிகின்றது. பரிமாறுதல் பணிமாறுதலாகக் காட்டுகிறது ஞான வாசிட்டம். துணைக் கவரி பரிமாற என்பது அது (லீலை 22) பரியகம் : பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியம் காலுக் கமைவுற அணிந்து எனப் பரியகம் காலணியாதலைக் குறித்தார் இளங்கோவடிகளார் (சிலப். 6:84-85). பரியகம், காற்சவடி என்றார் அரும்பத உரையாசிரியர். பரியகமாவது. பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரல் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே. என்னை? அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுரம் மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி கௌவிய ஏனவுங் காலுக் கணிந்தாள் என்றார் எனக் கூறினார் அடியார்க்கு நல்லார். பரிவட்டணை : இசை எழுவும் எண்வகையுள் ஒன்று பரிவட்டணை. பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசை யெழீஇ என்பது சிலம்பு (7, 5-8) பரிவட்டணையின் இலக்கணம் தானே மூவகை நடையின் முடிவிற்றாகி வலக்கை இருவிரல் வனப்புறத் தழீஇ இடக்கை விரலின் இயைவ தாகத் தொடையொடு தோன்றியும் தோன்றா தாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும் என்றார் அரும்பத வுரையாசிரியர். பரிவட்டம் வளைவுப் பொருளதாதல் போலக் கைவிரல் வளைந்தியலும் முடுகலும் பரிவட்டணைப் பெயர்க்கு உரியவை ஆயினவாம். பரி-விரி; வட்டணை-வட்டம்; வட்டணை, சுற்றி வந்து நடஞ்செய்தலைக் குறித்தல் (மணி. 7:43). விரிந்து சுருங்கும் இயல்பால் விரற்பெயர் வந்ததறிக. கோவைகளை மீண்டும் மீண்டும் வட்டமாக இசைப்பது வட்டணையாகும். முதல் நடை அல்லது முந்திய நடையில் கோவைகளை ஏற்று அவற்றை இரட்டிப்பதே அடுத்த நடை. எனவே முதல் நடைக் கோவைகளை ஏற்று மீண்டும் இரட்டித்து ஒலிப்பதே பரிவட்டணை - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் (214) பரிவட்டம் : பரிவட்டம், பரிவேடம் என்பதையும் குறிக்கும். பரிவேடம் காண்க. பரிசுத்தம் என்பது பரிவட்டமாதலை வெள்ளி விழாப் பேரகராதி சுட்டும். திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருந் தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது. இழப்புக் கடனாக மொட்டையடிப்பவர்க்குப் பரிவட்டம் கட்டுதல் பெருவழக்காக இன்றும் உள்ளது. வேட்டி துண்டு கட்டுதல் என்பது அந்நிகழ்வுக்குப் பெயர். உறவினர் (சம்பந்திகள்) செய்வது அது. உற்றார் (பங்காளிகள்) செய்தல் விலக்குடையது. பரிவருத்தம் : பரிபுலம்புதல் போல்வது இது. மீள மீள வரும் மிகு வருத்தத்தைக் குறிப்பதுடன் உலக முடிவு, ஊழி முடிவு என்பதையும் குறிக்கும். ஒரு பொருள் கொடுத்து இன்னொரு பொருள் வாங்குதல் பரிவருத்தம் எனவும் படும். இனிச் சுற்றுதல், வட்டம், ஆமை முதலிய பொருள்களையும் தரும். பரிவாரம் : பரிவாரம் என்பது பரியாளம் எனவும் வழங்கும். பரியாளம் என்பது பரிவார மாகும் என்பது திவாகரமும் (மக்கட்) பிங்கலமும் (845), பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும். பரிசனர் என்றதும் இது. படைஞர் ஏவலர் என்பாரையும் குறிக்கும் (சதுரகராதி). திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு. கோவை, திருச்சி, மதுரை மாவட்டத் தொட்டியக் குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு என்பதைச் செ.ப.க. அகராதி சுட்டும். பரிவாரம், உறை என்னும் பொருளதென்பது யாழ்ப்பாண அகராதி. பரிவு : பரிவு அன்புப் பொருளது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னும் தொடர் கண்ணப்பன் அன்பைக் காட்டும். அவன் வடிவென ஒன்று இல்லையாம்; அன்பே அவன் வடிவாம் பரிவின் தன்மை உருவு கொண்டனையவன் என்கிறது பதினோராம் திருமுறை. பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானைபுக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே எனப் பரிவின் சிறப்பை விளக்கும் புறநானூறு (184). அன்பு கெடக் கொள்ளும் பொருள் என உரைக்கும் பழைய உரையாசிரியர், பரிவுதவ என்றோதி அக்குடிகட்கு வருத்தமிக என்றுரைப்பாரும் உளர் என்கிறார். பரிவேட்டித்து, பரிவேட்பு : பரிவேட்டித்து என்பதற்குச் சுற்றி என்னும் பொருளுண்டு என்பது விவேக சிந்தாமணியால் விளங்கும். பரிவேட்பு என்பதற்கு வட்டப் பொருளுண்மை பதிற்றுப்பத்தால் தெளிவாம். பார்வற் கொக்கின் பரிவேட்பு என்பது அது (21). பரிவேடணம் என்பதற்குச் சூழுதல் பொருளுடை மையைச் சங்கத்தமிழ் அகராதி சொல்லும். பரிவேடபுடம் என்பதற்கு ஆறு ஓரை சேரப் பரிவேடமாம் என மருத்துவ அகராதி உரைக்கும். பரிவேடம் : ஊர்கோள், வட்டம் என்பதுவும் இதன் பெயர். கதிரையும் திங்களையும் சுற்றியமைந்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம். திங்களைச் சுற்றிய வட்டம் கோட்டை எனவும் வழங்கும். எட்டக்கோட்டை யிட்டால் கிட்ட மழை; கிட்டக் கோட்டையிட்டால் எட்ட மழை என்பது பழமொழி. அறிவார்ந்த பெருமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேட்டத்துடன் எண்ணத்தக்க தாம். உள்ளொளி மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க. பரிவேட மிட்டது கொல் பார் என்று கண்ணன் அசுவத்தாமனுக்குக் காட்டலைக் காட்டுகிறது பாரத வெண்பா. பரிவேடிப்பு : பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் பரிவேடிப்பு, பரிவேடித்தல் என்பதும் அது. மின்னணி மதியம் கோள்வாய் விசும்பிடை நடப்பதேபோல் கன்மணி யுமிழும் பூணான் கடைபல கடந்து சென்றான் என்னும் சிந்தாமணியும் (1098) கடைபல கடந்து விசும்பிடையிற் கோள்களிடத்தே, யுறையும் ஒளியணிந்த மதியம் அதனைக் கைவிட்டு நிலத்தே நடப்பதுபோலப் போந்தான் என்க. கோள் - பரிவேடிப்புமாம்; வந்தவர்கள் சூழ நடுவே போவதற்குவமை என்னும் உரையும் காண்க. பரிவை : நந்தியா வட்டம் நந்தியா வட்டை என வழங்கப்படும் பூ பரிவை எனப்படும். ஆங்குள்ள வட்டம், வட்டை என்னும் சொற்பொருளை வெளிப்படக் காட்டுவது பரிவையாதல் அறிக. பரி > பரிவு > பரிவை. வட்டம் வட்டு வட்டை என்பன வள் என்னும் வேரில் இருந்து வருவன போன்றன. 3. பர் - பரு பர் என்பது பரியாதலை அறிந்து அதன் வளைவுப் பொருளையும் கண்டோம். பர் உகரம் சேரப் பரு என ஆதலால் வளைந்த அது திரளுதல் ஆதலை இவண் அறியலாம். பரிதி, பருதி எனவும் வழங்கும், பரியது பருமை ஆகும். பரிதி கதிரோனைக் குறித்தல் போல் பருதியும் கதிரைக் குறிக்கிறது. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை என்னும் குறளில் பரியது பருவுருவமுடையது என்பதைச் சுட்டுகிறது. இத்தகைய சொற்களால், வளைதற் பொருளுக்கும் திரளுதற் பொருளுக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். பரு - பருத்தல் - பருமன் - பருமை என்பவற்றைப் பார்த்த அளவானே, திரளுதல் திரட்சி என்பவை எளிதில் விளங்கும். வெப்பத்தாலோ உள் ஊறுகளாலோ உடலில் ஓரிடம் தடிக்கின்றது; அத்தடிப்புச் செல்லச் செல்லத் திரள்கிறது; பருக்கிறது. அதற்குப் பரு என்று பெயர் சொல்கின்றனர். ஓரிடத்துத் தோன்றும் சிறு கட்டி பரு எனப்பட்டால், உடலே திரளுதல் பருத்தல், பருமன் எனப்படுகின்றது. பருமை என்பது பருப்பு என்னும் பொருளிலே கொங்குவேளிரால் ஆளப்பட்டுள்ளது : பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் இன்றி (பெருங். 2.4 : 196). பளிதம் பெய்த பருப்பிற் றேய்வை (பெருங். 4.16:19) பரு என்பது பருத்த சிலந்திச் சுட்டியைக் குறிப்பதுடன், வியர்க்குரு என்பதையும் குறிப்பதை அகராதிகள் குறிக்கின்றன. பருப்பம், பருப்பதம் என்பவை மலையைக் குறிக்கும். பரு என்பதும் மலையைக் குறிக்கும். பரு கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளி விழாப் பேரகராதி. பருக்கன் : பருத்தவன் பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு. பரும்படியானது. பருவட்டானது, பருவொட்டானது என்பவையும் இத்தகையன. பருத்தவன் தடித்தவன் ஆவன். உடல் தடிப்பும் உள்ளத்தடிப்பும் கூட பருத்ததாகச் சொல்லப்படும். செருக்கைத் தலைக்கனம் என்பதில்லையா; அதுபோல் என்க. மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது, பருமை வன்மை எனக் கொண்ட பொருளின் வழித்தாம். பருக்கை : பருத்தல் என்பது பருக்கை எனவும்படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக்கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன. பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங்கல்லே. எனினும் அது பரியகல் உறுத்தும் துயரினும் பருவரல் (துயர்) மிகவுண்டாக்கும் கல்லாதல் அறியத் தக்கது. பரல் என்பது பருக்கைக்கல். செருப்பிடையே பட்டுக் காலை வருத்தும் கல்லின் கொடுஞ் செயல் பட்டார்க்கே தெரியும். அதனால் பகைவரை வாட்டவல்ல வேந்தன் ஒருவன் செருப்பிடைப் பரல் அன்னன் எனப்பட்டான். செருப்பிடைச் சிறுபரல் அன்னன் என்கிறது புறநானூறு (257). கண்ணுள் குறுஞ்சிறு பரல் புகுந்து தரும் அல்லலைச் சொல்லி முடியாது, கண் வீங்கி இமை வீங்கி முகம் வீங்கிப்படும்பாடு பட்டார் அன்றிப் பிறர் அறியார். அதனால் விளக்கெண்ணெயும் தாய்ப்பாலும் கலந்து கண்ணுள் விட்டு மெல்ல நீவிப் பருக்கை எடுப்பார் இந்நாளில் கூடச் சிற்றூர்களில் உளர். பருக்கை எடுத்தல் என்பது வினை; பருக்கை எடுப்பார் பெயர். அப்பருக்கை எப்பருக்கை? பட்ட இடத்தைப் பன்மடங்கு பருக்க வைக்கும் அதற்குப் பருக்கை என்பது நல்ல பட்டம் தான்! பருக்கைக் கல்லுக்கும் பருக்காங்கல் என்பதொரு வழக்குப் பெயர். அரிசி மணி எனப்படும். மணி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறுமணிப் பயறு என ஒரு பயறும் உண்டு. மணிக்கடல், மணிக்கொச்சம், என்பவை சிறுமை சுட்டும் ஒட்டுச் சொற்கள். அரிசிமணி வேகவைக்கப் பட்டால் அதன் அளவில் பருமன் ஆகிவிடுகின்றது. அதனால் அதற்குப் பருக்கைப் பெயர் வந்து விடுகிறது. என்ன உழைத்தும் சோற்றுப் பருக்கைக்கு வழியில்லை என்று ஏங்குவார்படும் பருக்கைப்பாடு பரும்பாடே! பருக்கையிலாக் கூழுக்குப்போட உப்பு இல்லை என்பதொரு வறுமைப்பாட்டு! இது தனிப்பாட்டு. பருகல் : பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்; பருகுவன் அன்ன ஆர்வம் என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்டைப் பெருக்கத்தை உரைக்கும். பருகுவான் போல் நோக்குதல் எவ்வளவு பருத்த நோக்கு! பருகுவன்ன வேட்கையைப் பகர்கின்றது புறநானூறு (207). பருகுதல் வேட்கையர்க்கு நீர் தருதல் ஓரறம்; பேரறம். அதனால், நீர்தான் கொணர்ந்து பருக்கி இளைப்பை நீக்கீரே என ஆண்டாளார் ஏவுகின்றார் (நாச்சியார் திருமொழி 13:4). பருசம் : பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. விரிசம் பழம் என்பது விருசம் பழம் என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம் ஈராள் பருசம் என்பது நாட்டுப்புற வழக்கம். ஆள் பருசம், ஆள் உயரம்; நீரின் நீளத்தை விடுத்து அகலத்தை அல்லது நிலை உயரத்தைக் குறித்தலால் ஒருவகையால் பருமையாம். ஓராள் மட்டம், ஈராள் மட்டம் என்பவற்றில் வரும் மட்டம் திரளல் பொருளதே. மட்டம், மத்தம்; மத்திப்பு, மட்டிப்பு; மத்து, மட்டு என்பவற்றை அறிக. பருஞ்சு : பருந்து என்பது பருஞ்சு எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது புரிஞ்சு எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் பரு மாறிற்றில்லை. பருஞ்சு இறை என்பது அது (ஆரணிய. 955). பருந்துகளின் தலைவனாம் சடாயு எனப்பொருள் காணின் இப்பிரிப்பாம். பருஞ்சிறை பரிய சிறகுகளையுடைய சடாயு எனின் வேறு பிரிப்பாம். இரு வகையாகவும் கொள்வார் உளர். (வை.மு.கோ; கம்பராமாயண அகராதி). பருத்தி : பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய் விரிந்து காணலும் நோக்கின் பருத்திப் பெயர்ப் பொருத்தம் மிக விளங்கும். பருத்தி தமிழகத்துப் பழம்பொருள். நூற்றலும் நெய்தலும் பண்டே சிறக்க நடந்த தொழில், பெரும்பாலும் அத்தொழிலில் மகளிர் ஈடுபட்டிருந்தனர் என்பது பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன எனவரும் புறப்பாடலால் (125) விளங்கும். அதிலும் கணவனை இழந்த கைம்மை மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டனர் என்பது விளங்குகிறது. ஆளில் பெண்டில் தாளில் செய்த, நுணங்கு நுண் பனுவல் என்கிறது நற்றிணை (353) கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் இடைநிறைந்து எனப் புறநானூறும் (393) பொதிமூடைப்போரேறி ஆடும் நாயும் ஆடும் ஆட்டத்தைப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. பொதிமூடை என்பது பருத்தி மூடையைப் பொதுவகையிலும் பிறவற்றைச் சிறப்பு வகையிலும் சுட்டும். பருத்தி என்பதற்குப் பாரம் என ஒரு பெயர் உண்டு என்பதைக் குறிஞ்சிப் பாட்டுக் கூறும் (92). பருத்திப் பஞ்சைச் செறித்து வைத்த குடுவை பருத்திக் குண்டிகை எனப்படும். பருதி : பெரிது பெரிது புவனம் பெரிது என்பது எவரும் அறிந்தது. அப்பெரிய புவியும் கதிரோனை நோக்கச் சிறிய துண்டம் என்பது அறிவியல் கணிப்பு. பருதியில் இருந்து சிதறி விழுந்த துண்டுகளில் ஒன்றே புவி எனின், இத்துண்டங்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்ததும், இத்துண்டங்களை அகல விட்டும் மிகப் பேரண்டமாகத் திகழும் அப்பருதியாம் கதிரின் பருதியைக் கணித்தல் அரிதே. அதனைப் பருதி என்றது எத்தகை தகவுப் பெயர்! பரிதி, பருதியாம் வடிவால் சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி எனத் தேராளியைக் குறிக்கிறது பதிற்றுப் பத்து (46.8). பருதி ஞாயிறு என்பது பருதிப் பொருள் வெளிப்படத் தெளிவிக்கும் (பெருங்கதை). பருந்து : பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது. பரியது அது என்னும் பொருட்டால் பருந்துக்குப் பாறு என்றொரு பெயரும் ஏற்பட்டது. பருத்த வடிவால் பருந்து என்னும் பெயரும், கருத்த வண்ணத்தால் கருடன், கலுழன் என்னும் பெயர்களும், மிக உயரமாகப் பறத்தலால் உவணம் என்னும் பெயரும் அதற்கு உண்டாயின. பருந்து ஓரிரையைக் கண்டு வீழ்ந்து இறங்கும் தோற்றத்தைக் கண்டோர் பருந்தின் வீழ்வு, - பருந்தின் வீழ்ச்சி, - பருந்தின் வீழ்க்காடு - என நூற்பாவின் பொருணிலை அமைதிக்கு ஒரு வாய்பாடு கண்டனர். பருந்து இரையை எடுக்கும் இழுபறியையும் ஆடும் ஆட்டத்தையும் கண்டவர்கள் குத்திக் குதறிக் கொடுமைப்படுத் துதலைப் பருந்தாட்டம் ஆடுதல் என்றனர். பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டி என்பதொரு தனிப்பாட்டு. பருந்தின் வாயமையப்பைக் கூர்ந்து கண்ட மீனவர் பருந்துவாயன் என ஒரு மீன் வகையைக் கண்டனர். அதனைப் பறாளை விநாயகர் பள்ளு தோகை பருந்துவாயன் மாட்டுமீன் எனப் பயன்படுத்திக் கொண்டது (15). தச்சுப்பணியர் உள்ளத்துப் பருந்தின் வால் பதிந்தது. அதனால் பருந்து வால்போல் வெட்டிப் பலகையின் மூலைப் பொருத்து இணைத்தலைப் பருந்துவால் எனப் பெயரிட்டனர். பரிதல்-வளைதல்; பரிந்து-வளைந்து; இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது. பறக்கும் பருந்துக்கும் வளையலாம் பருந்துக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமே என்று எண்ணிய சங்கச் சான்றோர் பறாஅப் பருந்து என்றனர் (கலி. 147). பருப்பம் : பருப்பு - பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள் ஒட்டு; எ-டு; கூடு+அம்=கூடம். பருத்த உயிரி யானை; அவ்வியானை நடக்கும் மலை எனப்படும். அவ்வியானையின் முகபடாமும், அம்பாரியும் பருமம் எனப்பட்டால், அவற்றைக் கொண்ட யானையும் அவ்வியானையொடு ஒருபுடை ஒப்பாகச் சொல்லப்படும் நடவாமலையும் பருப்பம் எனப்படுவது தகவுதானே. அவ்வகையால் மலைக்குப் பருப்பம் என்னும் பெயரும் பருப்பதம் என்னும் பெயரும் உண்டாயின. பர்வதம் என்பது வடசொல்; பருப்பம் தென்சொல். நீலப்பருப்பம் என்பது பெருங்கதை (5-1:181) பருப்பதமலை என்னுமொரு மலையையும் காட்டும் பெருங்கதை (5.3 : 55). மலையமலை என்பது போல ஒரு பொதுச் சிறப்புப் பெயர் இணையாம். பதம் என்பது திரண்டது, பருமையும் பருவமும் அமைந்தது என்னும் பொருளதாதலும் அறிக. அறியின் பருப்பதம் என்னும் தென்சொல் நிலை தெளிவாம். பதம் திரட்டப்பட்டதாதல் வெண்ணெய்க்கொரு பெயரதா தலால் கண்டு கொள்க. பருப்பு : பருப்பு என்பது பருமைப் பொருளது. பருப்புடைப் பவளம் போல என வரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும் (2273). அயிருருப் புற்ற ஆடமை விசயம் கவலொடு பிடித்த வகையமை மோதகம் என்னும் மதுரைக் காஞ்சிக்கு (625-6) பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடே கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த வகுப்பமைந்த வெம்மை பொருந்தின அப்பம் என உரை வரைகின்றார் நச்சினார்க்கினியர். அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை (195). கும்மாயம் என்பதோர் உணவு. குழையச் சமைத்த பருப்பு என்பார் மணவாள மாமுனிகள் (பெரியாழ்வார் 3, 3:3) பத்து; உ.வே.சா.138. பருமம் : மகளிரின் திரண்ட மார்பகம் பருமம் எனப்படும். கொம்மை, கொழுமை என்பன போல அதனியல் விளக்கும் பெயராம். பெண்டிர் அழகென உறுப்பிலக்கணம் சொல்லும் நூல்கள் மார்பகப்பருமை சுட்டுதலும், கோயிற் சிற்பங்களில் காணப்படும் அணங்குகளின் உடற்கூறும் காண்பார் இப்பெயரமைதி பொருந்து மாற்றை அறிவர். இவ்வமைப்பும் பருவத்திரட்சியொடும் கூடியது என்பதும் சொல்லமைப்பால் கொள்ளத் தக்கதாம். மகளிர், பருத்த தொடைப்புறம் குறிப்பது பருமம் என்பது யாழ்ப்பாண அகராதி. அரைப்பட்டிகையைக் குறிப்பது என்பது முருகாற்றுப் படை. அது பதினெட்டு வடங்கொண்டது என்னும் பருமை சுட்டியது என்பது அறியற்பாலது (146). களிற்றின் கழுத்து மெத்தை என்பது கலித்தொகை (97). குதிரையின் கலணை என்பது நெடுநல்வாடை (179). பருமம் பருமை என்பது உலக வழக்கு, பருமன் என்பது அது. அம்பாரியைப் பருமக்கட்டு என்றும் (உயுத். 3360) பிடரில் தவிசைத் தாங்கிய யானை பருமயானை என்றும் (அயோத். 2) கம்பரால் குறிப்பிடப்படும். பருமல் : பருத்த மரக்கை பருமல் எனப்படும். பருத்தது பருமன் ஆதல் போலப் பருமல் எனப்பட்டதாம். கப்பலுக்குரிய குறுக்கு மரத்தின் கை பருமல் எனப்படும் என்பதைச் சுட்டுகிறது செ.ப.க. அகராதி. பருமிதம் : பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். இப்பெருமிதம் பருமிதம் எனவும்படும். பருமிதம் மகிழ்வையும் குறிக்கும். பருமித்தல் என்பது அழகுறத்தல் பண்ணுறுத்தல் என்பவற்றைக் குறித்தல் பருமம் என்பதன் வழியாக வரும் பொருளாம். முத்தம் பருமித்திடைதேய்த்து (கூர்ம. அந்தகாசு. 53) பருமித்த களிற்றி னானும் (சிந்தா. காந்தரு. 20) என்பவற்றை மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி எடுத்துக் காட்டும். பருமை : பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல், பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவட்டு, பருவுடல் இவ்வாறு பருமை சுட்டிய அடையாக வருவது பெருவழக்கு. பரு பெரு என்றும் ஆகும். பெருந்தீனி, பெரும்பாடு, பெருங்காயம், பெருங்கோழி இவ்வாறு பருமை பெருமையடையாக வருதல், பருமிதம் எனவும் வழங்கும். பருவல் என்பது பருமை என்னும் பொருளில் வழங்குதல் உலக வழக்கு. பருவம் : பருவ மழை என்பதும் பருவத்தே பயிர்செய் என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழை பெய்யும் பருவமாம். காலச் சோளம், காலப் பருத்தி, காலமழை என்பவற்றில் உள்ள காலம் மழைக்கால மாதல் உழு தொழிலோர் நன்கறிந்தது. தற்காலம் என்பது மழைக் காலத்தை முன்னே குறித்ததென்பது தற்பாடிய தளியுணவிற்புள்தேம்ப என வரும் பட்டினப் பாலையால் விளங்கும். காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என அறுவகைப் பருவமும் எண்ணியிருப்பதும், முதற்கண் கார் இடம் பெற்றிருப்பதும் கருதத் தக்கது. கருமுகில் திரண்டு வான்மறைய உருக்கொண்டு பொழிதலைப் பருவக் கொண்மூ என்பர். கொண்டல் என்பதும் நீர் கொண்ட கருமுகிலையே யாம். சூற்கொண்ட மகள் மகப்பேறு உறுவதுபோல் சூற்கொண்ட முகில் மழைப்பேறு வழங்கி உலகத்தை ஓம்புதல் வான்பெருஞ்சிறப்பாம். இப்பருவம், இயற்கை முதிர்ந்து விளங்கித் தோன்றும் விழுப்பமிக்க தாகலின் பருவம் எனப்பெற்றதாம். குமரி ஒருத்தி இயற்கையின் விம்முதலால் இல்வாழ்வு ஏற்கும் பருவத்தை அடைகிறாள் என்பதற்கு அறிகுறி பருவமடைதலாம். உழவடைக் காலம் கற்கும் காலம் ஆகியவற்றின் சீரிய - வாய்த்த - பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம். அது நிகழ்தற்கு அல்லது அது செய்தற்குத் திரண்டு நிற்கும் முழுத்தமே பருவம் எனத் தேர்ந்ததும், முழுமதி நாளாம் முழுத்தத்தில் திருமணம் வைத்ததும் அதற்கு முழுத்தம் எனப் பெயரிட்டதும் முந்தையோர் பருவம் போற்றிய தேர்ச்சிச் சான்றுகளாம். பருவரல் : இடுக்கண், பழங்கண், புன்கண், துன்பம், துயர், இன்னல், அல்லல் என்ன எண்ணற்ற சொற்கள் கவலைக்கு உள்ளன. கவலைப் பெருக்கம் வாழ்வில் உண்மையைக் காட்டுவது போலவே சொற்களும் விரிவாக உள்ளன. அவற்றுள் பருவரல் ஒன்று. எஞ்சிய துயரச் சொற்களினும் விஞ்சிய துயரை விளக்குவது பருவரல் என்பதை அதன் பருமையே காட்டும். பருவருதல் எனினும் பருவரலே. பருவரல் பொறுக்க முடியாத் துயர் என்பதைப் பொறையின்று பெருகிய பருவரல் என்பதால் வெளிப்படுத்துவார் தொல்காப்பியர். பருவரல் தீரக் கடவுமதிபாக என்னும் ஐங்குறுநூற்றுப் பருவரல் பெரும் பிறிதென அறிக. (488). அதனிற் பருந்துயர் இல்லையே! பரூஉ : பரூஉ பருமைப் பொருளதாதலைத் திவாகரமும் (பண்பு) பிங்கலமும் (1928) உரைக்கும். பரூஉச் சுடர், பரூஉச்செவி, பரூஉத்தொடி இன்ன பலவற்றைச் சொல்கிறது பெருங்கதை. பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பருஉக்குடர், பரூஉக்குரல், பரூஉக்கை, பரூஉத்தாள், பரூஉத் திரி, பரூஉப்பகடு, பரூஉப்பணை, பரூஉப்பெயல் இன்ன பலவற்றைப்பயில வழங்குகின்றன பாட்டு, தொகைகள். பரேர் : பருஏர் - பரேர். பருத்ததும் அழகியதுமாம் தன்மை பரேர் எனப்பட்டது. பருமை அழகு இவற்றொடும் வலிமையும் அமைந்தது பரேர் எறுழ் எனப்பட்டது. பரேரெறுழ்க் கழற்கால் - பட். 294. பரேரெறுழ்த் தடக்கை - அகம். 148. பரேரெறுழ்த் திணிதோள் - பெரும்பாண். 90, நெடுநல். 31, பரேரெறுழ் முழவுத்தோள் - பதிற்றுப். 81. என்பவற்றைக் காண்க. புழகு என்பதொரு பூ. பரேரம் புழகு எனப்படுகின்றது. (குறிஞ்சிப் பாட்டு - 96). அதன் பூ செந்நிறம் என்பது அரக்கு விரித்தன்ன என்பதால் புலப்படுகின்றது. பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் புகுவாயில் பேரகத்தியப் பெருந்திரட்டு என்றும் ஐந்திறம் என்றும் 19ஆம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் வெளிப்பட்டுள்ள இரண்டு நூல்களைப்பற்றிய ஆய்வு ஈதாகும். பேரகத்தியம் திரு. ச. பவானந்தரால் பதிப்பிக்கப்பட்டது. அதனை முதற்கண் வெளியிட்டவர் வேதகிரியார் என்பார் ஆவர்; களத்தூர் என்னும் ஊரினர்; நாலடியார், திருக்குறள் பதிப்பாளர்; இலக்கணத் தொகை, நிகண்டு என்பனவும் வெளியிட்டவர். ஐந்திறம் 1981இல் நிகழ்ந்த, ஐந்தாம் உலகத் தமிழ்க் கழகத்தில் வெளியிடப்பட்டது. கருமாரி தாசர் எனப்படும் வீரபத்திரர் என்பவரால் மனத்தகத்துக் கிடந்து, மறைந்து போய்விட்டதாகச் சொல்லப்படும் பழைய ஐந்திற நூல் மக்கட்குப் பயன்பட வேண்டும் என வெளிப்பட்ட நூல் என்னப்படுவது. பேரகத்தியப் பெருந்திரட்டு, உறையூர் முத்துவீர உபாத்தியாயர் இயற்றிய முத்து வீரியம் எனப்படும் ஐந்திலக்கண நூலுக்குப் பிற்பட்டுத் தோன்றிய நூல் என்பதை நிறுவுகிறது இதன் முதற்பகுதி. பேரகத்தியப் பாடல்கள் அனைத்தையும், ஒப்பிட்டுக் கண்டுகொள்வதற்காக முத்துவீரிய நூற்பாக்களையும் இணைத்தே காட்டப்பட்டுள்ளது. முத்துவீரியத்தின் வழியில் பேரகத்தியம் நடையிடுகின்ற வகைகளையெல்லாம் படிமான வளர்ச்சியில் காட்டுவது அது. ஐந்திறம் என்பது வெளிவந்த வுடனே, அது பழம்பெரு நூல் என்று காட்டுமுகத்தான் வெளிப்பட்ட புது நூலே என்று செந்தமிழ்ச் செல்வியில் தொடராக யான் எழுதி வெளிப்பட்ட கட்டுரையே ஐந்திறம் ஆகும். இவ்விரண்டற்கும் உள்ள பொதுத் தன்மை, பழம் போர்வைக்குள் புகுந்துகொண்டு முகங்காட்டுதலாகும். இத்தகு நூல்களின் வரவு, பழநூல்களைப் பாழ்மைப் படுத்தும் ஆய்வாளர்க்குத் தவிடு தந்து, முழு மணி நூல்களின் மதிப்பைக் கெடுக்கத் துணையாவதாகி விடும். ஆதலால், அவற்றின் மூடு திரை கிழித்துப் பொய்ம் முகங்களை வெளிப்படச் செய்தலும் ஆய்வாளர் கடமை யாகிவிடுகின்றதாம். பேரகத்தியமும் ஐந்திறமும் தொல்காப்பியத்திற்கு முந்து நூல்கள் என்று இட்டுக் கட்டப்பட்டுவிடுவதால், அந் நூலாட்சிகளும் சொற்களும் எல்லாம் தொல்காப்பியனார்க்கு முற்படவே தமிழ் வழக்கில் ஊன்றிவிட்டவை என்று சொல்லப்படுவதற்கு இடமாகிவிடும் அல்லவோ! அதற்கு இடம் தாராமையும், உண்மை உணர்வித்தலும் நோக்காக இவ்விரு நூல் ஆய்வும் ஒரு நூலாகத் தரப்பட்டுள்ளதாகும். ஆய்வுநூல் வெளியீடு என்றால், எழுபான் ஆண்டுகளாகத் தொடரும் பெருமையது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஆயிரக்கணக்கில் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களும் தமிழ்ப் பழ நுல்களுள் ஒன்றுதானும் வெளியிடுதல் அறியாத தமிழகத்தில், தான் தோன்றிய 1921ஆம் ஆண்டி லேயே தொல்காப்பியம் வெளியிட்ட சிறப்புடையது கழகமே ஆகும். அக் கழகத்தின் வழியே இந் நூல் வெளிவருகின்றது. இதற்கு உறுதுணையாக அமையும் ஆட்சியாளர் பைந்தமிழ் சீர் பரவுவார் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். பாவாணர் ஆய்வு நூலகம், திருநகர், மதுரை - 6. தமிழ்த் தொண்டன், இரா.இளங்குமரன் பேரகத்தியத் திரட்டு பேரகத்தியத் திரட்டு என்பதொரு நூல்; அது ச.பவானந்தர் அவர்களால் 1912இல் வெளியிடப்பட்டது. அதில், பேரகத்தியம், உரை நூல்களில் கண்ட பேரகத்திய மேற்கோட் சூத்திரங்கள், பேரிசைச் சூத்திரம் என்னும் மூன்று பகுதிகள் மூலமும் உரையுமாய் வெளிப்பட்டுள. முன்னதில் 164 நூற்பாக்களும், நடுவதில் 19 நூற்பாக்களும், பின்னதில் 14 நூற்பாக்களும் ஆக 197 நூற்பாக்கள் இடம் பெற்றுள. அகத்தியம் பேரகத்தியம் சிற்றகத்தியம் என்று இருகூறுபட்டதென்றும் அவை பதினாயிரத்தின் மிக்க நூற்பாக் களையுடையவை என்றும், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணம் அமைந்தவை என்றும், அவை சிதைந்து ஆங்காங்குச் சில வழங்குவனவாயின என்றும் முகவுரைக்கண் குறித்தார். மேலும், அவற்றிற் சில சூத்திரங்களை வித்துவான் களத்தூர் வேதகிரி முதலியார் சுமார் அறுபது யாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர். சில தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கண உரைகளிலும் காணப்படுகின்றன. வேதகிரி முதலியார் தம்மிடத்து மூவாயிரம் சூத்திரங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லி நூற்றறுபத்தைந்து சூத்திரங்களை வெளியிட்டனர். மற்றைச் சூத்திரங்களும் கிடைக்குமென்று பலகாலும் பல்வேறிடங்களிலும் முயன்றும் கிடைத்தில. பின்னும் பதினாறு சூத்திரங்கள் கிடைத்தன. அவற்றையும் கொண்டு தொகுத்து வெளியிடலாயினேன் என்கிறார். பவானந்தர் பதிப்பு 1912இல் வெளிவந்தது. வேதகிரியார் அவர்க்குச் சுமார் அறுபதுயாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர் என்பதால் கி.பி.1850 ஆம் ஆண்டை ஒட்டி வெளிவந்தது எனக் கொள்ளலாம். ஆதலால் வேதகிரியார் காலம் 19ஆம் நூற்றாண்டு என்பது வெளிப்படும். வேதகிரியார்க்கு அகத்தியர் நூற்பாக்கள் 3000 கிடைத்திருந்தால் அவற்றுள் 1635ஐ மட்டும் வெளியிட்டிரார். (முத்தமிழ் இலக்கணத்துள் ஒரு பகுதியாம் இயற்றமிழ் இலக்கணமேனும், அதன் முழுப்பகுதியும் வாய்க்காவிடின் எழுத்துப் பகுதி மட்டுமேனும் முற்றாக வெளிப்படுத்தியிருப்பார். அவ்வாறு வெளிப்படாமை எண்ணத்தக்கது.) பதிப்பிக்கப்பட்ட பேரகத்திய நூற்பா நூற்றறுபத்தைந்தும் (தற்சிறப்புப் பாயிரம்1, நூல் 164) எழுத்திலக்கணக் காண்டத்தில் எழுத்துப் படலம், எழுத்துற்பத்திப் படலம், எழுத்து வரன்முறைப்படலம், பன்மொழியாக்கப் படலம், வட மொழிப் படலம் என்னும் ஐந்து படலங்களுடன் முடிகின்றது. ‘ïªü‰gh¡fŸ mf¤âa® brŒjitjhkh? என்னும் ஐயம் பவானந்தருக்கு ஏற்படாமல் இல்லை. அதனால் கிடைத்த மட்டில் இந்நூலின் சூத்திரங்களின் அமைப்பை உற்று நோக்குழி இது அகத்தியனார் செய்தது என்பதற்கு மேற்கண்ட வேதகிரி முதலியார் கூற்றேயன்றி வேறு ஆதரவு கிடைத்திலது என்கிறார். அகத்தியம் என்னும் நூல் ஒன்று நிலவுகின்றது என்று எண்ணியிருப்பார்க்கு மனஅமைதி யுண்டாகுமாறு அதனை வெளியிடத் துணிந்தேன் எனத் தம் வெளியீட்டுத் துணிவையும் உரைக்கிறார். வேதகிரியார் 1850ஆம் ஆண்டை பேரகத்தியத்தை வெளியிட்டதைப் பவானந்தர் குறித்துள்ளதை முன்னர் அறிந்தோம். வேதகிரியார் பெரும் புலமையாளராகவும் சிறந்த பதிப்பாளராகவும் உரையாளராகவும் அந் நாளில் விளங்கியவர். திருக்குறள் மூலமும் உரையும் (1849) நாலடியார் மூலமும் உரையும் (1855) என்பவற்றையும் வெளியிட்டவர். இவர் களத்தூர் வேதகிரி முதலியார் எனப்படுவார். இவ்வூர் தொண்டை நாட்டைச் சேர்ந்தது. இவர் திருக் குறளுக்குத் தெளிபொருள் விளக்கம் என்னும் உரையும் கருத் துரையும் எழுதினார் (1849). மதுரை புதுவை சென்னை இச் சங்கங்களில் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திய களத்தூர் வேதகிரி முதலியார் என்னும் குறிப்பு 185ல் வெளிவந்த திருக் குறள் பதிப்பில் உள்ளது. இரண்டாம் பதிப்பு அது. இவர்தம் நாலடியார் மூலமும் உரையும் என்னும் பதிப்பில் (1852) வேதகிரி முதலியார் பரிசோதித்த பிரதிக்கிணங்க, சேதனப்பட்டு இராமசாமிக்கவிராயரால் பரிசோதிக்கப்பட்டு, ஆறுகாடு முனியப்ப முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றது. பரிதாபி ஆண்டு பங்குனி மாதம் என்றுள்ளது. இதன் 1863 ஆம் ஆண்டுப் பதிப்பில் (மூன்றாம் பதிப்பு) களத்தூர் வேதகிரி முதலியாரால் பதவுரையும் கருத்துரையும் செய்து பல இலக்கண மேற்கோளும் காட்டி அச்சிற் பதிப்பித்த பிரதிக்கிணங்க பூவிருந்தவல்லி கந்தசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் அதன் இறுதியில் நாலடியாருக்குக் களத்தூர் தமிழ்ப் புலவர் வேதகிரி முதலியா ரால் செய்யப்பட்ட பதவுரையும் கருத்துரையும் முற்றுப் பெற்றது. இஃது முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க எழுத்துப் பிழை மாத்திரம் மேற்படி புலவர் குமாரர் சுப்பராய முதலியாரால் ஒருவாறு பரிசோதித்து நிறைவேறியது என்னும் குறிப்பும் உள்ளது. ஆதலால் 1863ஆம் ஆண்டுக்கு முன்னரே வேதகிரியார் காலம் நிறைவேறியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். அன்றியும் 1860ஆம் ஆண்டு நாலடியார் பதிப்புக் காலத்திலேயே (இரண்டாம் பதிப்பு) அவர் இருந்திலர் என்பது அறிய வருகின்றது. இக் காலக் குறிப்பை நினைவில் கொள்ளல் மேலாய்வுக்கு உதவியாக இருக்கும். 1953 இல் தமிழ்ப் புலவர் அகராதி என்னும் நூல் வெளிவந்தது. அதன் தொகுப்பாசிரியர் ந. சி. கந்தையா அவர்கள். அந் நூலில் வேதகிரி முதலியார் (1795 - 1852) என்னும் காலக் குறிப்புள்ளது. 1962 இல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் என்னும் நூல் வெளிவந்தது. அதனை இயற்றியவர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அந் நூலிலும் இக் காலக் குறிப்பே உள்ளது. வேதகிரியாரைக் குறித்துத் தமிழ்ப் புவவர் அகராதி கூறுமாறு: இவர் தொண்டை மண்டலத்திலுள்ள களத்தூரில் பிறந்தவர். இராமாநுசக் கவிராயரின் மாணவர். இவர் மனுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், சன்மார்க்க சதகம், நீதி சிந்தாமணி என்னும் நூல்கள் செய்தவர். இலக்கணக் களஞ் சியம், இலக்கியக் களஞ்சியம் என்னும் இருதொகுப்பு நூல்களும் இவரால் செய்யப்பட்டன. இலக்கணக் களஞ்சியத்திலே இலக்கணத்திரட்டு, பிரபந்ததீபம், கவிசாகரம், குவலயானந்தம், அரிய விதி, மயேச்சுரம், அவனியம், பஞ்சலட்சணப் பயன் முதலிய இலக்கணங்களிலிருந்து பல சூத்திரங்கள் எடுத்து எழுதியுள்ளார். இலக்கியக் களஞ்சியத்துள் கயாதர நிகண்டு, ஏகபாத நிகண்டு, பொதிய நிகண்டு, அவ்வை நிகண்டு முதலிய நூல்களை எடுத்து எழுதியுள்ளார். அமெரிக்கன் மிசன் 1843 இல் அச்சிட்ட சூடாமணி நிகண்டின் 11வது பகுதியில் இவர் செய்த பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் வேதகிரியாரைப் பற்றியுள்ள குறிப்பு: தொண்டை நாட்டுக் களத்தூர் இவரூர். மகா வித்துவான் இயற்றமிழ் ஆசிரியர் இராமானுச கவிராயரிடம் கல்வி பயின்றார். கவிராயரால் நிறுவப்பட்ட தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் மதுரையில் ஒரு கனவான் நிறுவிய மதுரைக் கல்விச் சங்கத்துக்கு அழைக்கப்பட்டு அங்குச் சென்று ஏழு ஆண்டு தலைமைத் தமிழ்ப் புலமை நடத்தினார். பிறகு, உடல் நலமில்லாத காரணத்தினால் புதுச்சேரிக்கு வந்து அங்குக் கத்தோலிக்கக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து ஓர் அச்சுக் கூடம் வைத்து நடத்தினார். சூடாமணி நிகண்டின் பதினோராவது பகுதிக்கு உரை எழுதி 1843 இல் அச்சிட்டார். திருக்குறளுக்கு உரை எழுதி 1849 இல் அச்சிட்டார். யாப்பருங்கலக் காரிகையை 1851 இல் அச்சிட்டார். பகவத்கீதையை 1852 இலும், நாலடியாரை 1855 இலும் அச்சிட்டார். யாழ்ப்பாணத்து உதய தாரகைப் பத்திரிகையில் இலக்கண இலக்கியங்களைப் பற்றி (1841 முதல் 1843 வரையில்) கட்டுரைகள் எழுதினார். பல இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து தொகுத்து இலக்கியக் களஞ்சியம் இலக்கணக் களஞ்சியம் என்னும் பெயருடன் அச்சிட்டார். மநுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், நீதி சிந்தாமணி (இவை ஒவ்வொன்றும் நூறு செய்யுட்களைக் கொண்டது) சன்மார்க்க சாரம் (110 செய்யுள்) என்னும் நூல்களை இயற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நண்பருக்கு அனுப்பினார். ஆனால், அவை அச்சிடப்படவில்லை. பேரகத்தியத்திரட்டை வெளியிட்ட வேதகிரியார் பன்னூலாசிரியர் என்பதும், பழம்பதிப்பாளர் என்பதும், இலக்கண இலக்கியப் புலமையில் ஓங்கியவர் என்பதும், சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதியில் இவர் பாடல்கள் உண்டு என்பதும், வெளிப்பட வாராத இலக்கண நூல்களின் நூற்பாக்கள் பலவற்றைத் தொகுத்து இலக்கணக் களஞ்சியம் என ஒரு தொகுதியாக்கியவர் என்பதும் இக் குறிப்புகளால் விளங்கும். இதே காலத் தொடர்பொடு முன்பின்னாக விளங்கிய ஒரு புலவரை இவண் எண்ண வேண்டும். அவர், முத்துவீர உபாத்தியாயர் என்பார். திருச்சி உறையூர் சார்ந்தவர். முத்துவீரியம் எனத் தம் பெயரால் ஐந்திலக்கண நூல் ஒன்று இயற்றியவர். பன்மொழிப் புலவர். அமிர்தனார் (1845-1899) சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தரனார் (1846). பெரும்புலவர் பிச்சை இபுராகிம் (1836-1908), முதலியவர்களுக்கு ஆசிரியராக விளங்கியவர். இம் முத்துவீரரை இவண் நினைப் பானேன் என்னும் எண்ணம் எழலாம். முத்து வீரர் இயற்றிய முத்திவீரிய இலக்கணத்தொடு ஒப்ப வைத்து நோக்க வேண்டிய ஒரு நூல் பேரகத்தியத் திரட்டு என்பதால் அவரைப்பற்றிச் சுட்ட வேண்டி நேரிட்டதாம். முத்துவீரியம் பேரகத்தியம் ஆகிய இரண்டையும் ஒப்பு நோக்குமுன்னர் அகத்தியர் என்பார் பற்றியும் அகத்தியம் பற்றியும் அறிதல் வேண்டுமாம். நமக்குக் கிடைத்துள்ள இலக்கண நூல்களுள் பழமையும் முழுமையும் அமைந்தது தொல்காப்பியம். அதன் பாயிரம் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணித் தொல்காப்பியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகின்றது. அதனை இயற்றிய வரும் தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணவராகிய பனம்பாரனார் என்பதும் அறிய வருகின்றது. தொல்காப்பியத்தின் பாயிரத்தில் மட்டுமின்றி நூலிலும் அகத்தியம் பற்றிய குறிப்போ. அகத்தியனார் பற்றிய குறிப்போ ஓரிடத்தும் இல்லை. முந்து நூல் என்பது ஒரு நூல் அன்று; பல நூல்கள்; அவை பலதிறப் பலதுறை நூல்கள்; அவை பல்கிக் கிடந்தமையாலும் அவற்றுள் ஒரு நூலைக் கொண்டோ ஒரு துறையைக் கொண்டோ தொல்காப்பியம் செய்யப்படாமையாலும் இன்ன நூல் எனச் சுட்டினர் அல்லர் என்க. என்ப, என்மனார், என்மனார் புலவர், மொழிப, மொழிமனார் புலவர் என்றும்; நல்லிசைப் புலவர், உயர்மொழிப் புலவர், தொன்மொழிப்புலவர், நூல்நவில் புலவர், நுணங்கு மொழிப் புலவர் என்றும் இன்னவாறாக நானூறு இடங் களுக்கு மேல் முந்து நூலாரைக் குறிக்கும் தொல்காப்பியர் குறிப்பே, அவர்க்கு முந்து நூல் ஒன்று அன்று என்றும், அகத்தியம் என்னும் பெயரியது அன்று என்றும் திட்டமாக உரைக்கும். அவ்வாறாகவும் அகத்தியம் எவ்வாறு இடம் பெற்றது? உரையாசிரியர் எனப்படுபவர் இளம்பூரணர். அவரே தொல்காப்பிய முதல் உரையாசிரியர். அதனாலேயே அப்பெயர் பெற்றார். அவர் முந்து நூல் என்பதற்கு முதல் நூல் என்று பொருளும், முந்து நூல் கண்டு எனவே வழியும் என்று விளக்கமும் வரைந்தார். அவரே, தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் பாயிரத் தொடர்க்குத் தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு; நல்லாசிரியர் அகத்தியனார் முதலாயினோர்; உலகம் என்பது ஆசிரியரை என உரையும் விளக்கமும் வரைந்தார். இதனால் தொல்காப்பியர்க்கு முன்னே இருந்தவர் அகத்தியனார் என்னும் எண்ணம் அவர்க்கு இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆனால், முந்து நூல் அகத்தியம் எனக் குறித்தார் அல்லர் என்பதும் நினைவு கொள்ளத் தக்கது. முந்துநூல் என்பதற்கு முன்னை இலக்கணங்கள் என உரைவரையும் நச்சினார்க்கினியர், உரை விளக்கத்தில், முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூத புராணமும் இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்து சொல் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலும் சோதிடமும் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம் என்கிறார். மூல நூல் ஆசிரியரோ பாயிரம் பாடியவரோ, முதல் உரையாசிரியரோ குறிப்பாகக் கூடச் சுட்டாதவற்றை நச்சினார்க் கினியர் சுட்டுதல் வியப்பும் திகைப்பும் தருவனவாம், அவ்வியப்பு திகைப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டு நடையிடுகின்றது இறையனார் களவியல் உரை. ஏனெனில் நச்சினார்க்கினியர் உரைக்கு முற்பட்ட உரை இறையனார் களவியலுரை ஆயிற்றே. முச்சங்க வரலாற்றை வரையும் அவ்வுரை தலைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியம் என்ப என்றும் இடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமும் என இவை என்றும், கடைச்சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப என்றும் கூறுகின்றது. அவ்வுரை யை அவ்வாறே வழிமொழிவதென அடியார்க்கு நல்லார் உரையும் அமைந்துள்ளது (சிலப்பதிகார உரைப்பாயிரம்). ஆக நச்சினார்க்கினியர் காலத்துக்கு முன்னரே அகத்தியம் முந்து நூல் என்னும் எண்ணம் உண்டாகியுள்ளமை தெளிவாகின்றது. தொல்காப்பியத்தில் மட்டும் அன்றிப் பாட்டு தொகைகளிலும் அகத்தியர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பரிபாடலில் பொதியின் முனிவன் எனவரும் தொடர்க்கு (11:11) அதன் உரையாசிரியர் பரிமேலழகர் அகத்தியன் என்னும் மீன் என உரை வரைந்துள்ளார். அது மூலநூல் ஆட்சி ஆகாது. அமர முனிவன் அகத்தியன் என்பது மணிமேகலையில் வரும் தொடர். தமிழ் இலக்கண இலக்கியப் பரப்பில் அகத்தியனைப்பற்றிய முதல் ஆட்சியே இதுதான். சிலம்பிலும் மூல ஆட்சி இல்லை. பொதியம், தவமுனி, திருமுனி எனவரும் இடங்களில் அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரைகாரரும் அகத்தியன் எனக் கூறுகின்றனர். ஆனால், வடமொழி நூல்களில் அகத்தியன் பெயராட்சி பழமை தொட்டே உள்ளமை அறியவருகின்றது. இதுபற்றித் தமிழ் வரலாறுடையார் கூறுவது வருமாறு: வடமொழி ஆதிகாவியம் எனப்படும் வான்மீகத்தில் அகத்தியர் சுட்டப்படுகிறார். அவரும் விந்த மலை சார்ந்து ஒருவரும் தென்னாட்டில் ஒருவரும் என இருவர் என்பர். அவலோகிதன் என்பானிடம் தமிழ்கேட்ட அகத்தியர் ஒருவரும் சுட்டப்படுவார். ஆகதம் என்னும் சொல்லுக்குத் தெற்கு, தென்னாடு, தென்மொழி என்னும் பொருள்களும் உண்டு என்றும், அப்பொருள் அகத்தியர் தொடர்பால் வந்தது என்றும் கூறுவர். ஆனால், அவ்வாறு அகத்தியரைச் சுட்டும் இடத்தும் அவர் தமிழ் வல்லார் என்றோ இலக்கணம் செய்தார் என்றோ குறிப்பு இல்லை என்றும் கூறுவர். (தமிழ் வரலாறு; முதற்றொகுதி. இரா. இராகவ ஐயங்கார் (பக். 190 - 214). இவரை அமர முனிவன் என்பது முதலாகக் கூறுவன எல்லாம் வட நூலில் வேதம் இதிகாசம் புராணங்களில் கேட்கப்படும் அகத்திய சரிதத்தை நெடுங்காலம் பிந்தியவ ராகிய இவர்க்கு ஏற்றி வழங்கியனவாக நினைப்பது பொருந்தும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத கால வேற்றுமை யில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை இப்பொதியின் முனிவர்க்கு ஏற்றுதல் சிறிதும் பொருந்தாமை காண்க (மேற்படி. பக். 213) முதல் முதல் வடநாட்டினின்று தொன்னாடு புக்க அகத்தியர் வடபால் விந்தியத்தை அடுத்தும் தென்பால் மகேந்திரத்தை அடுத்தும் வதிதல் கூறிய வான்மீகத்தில் அவரைத் தமிழறிவுடையவராகக் கூறாமை ஈண்டைக்கு நினைக்கத் தகும். அநுமானுக்குத் தென்னாட்டு மொழியுணர்ச்சியும் வடமொழிபுணர்ச்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி முனிவர், அகத்தியரைச் சிறிதும் தென்மொழி உணர்ந்தவராகப் புகலாமை பெரிதும் வியப்பைத் தருவதாகும். அவர் தமிழ் நாட்டரசரையும் அவருட் பாண்டியர் தலைநகரையும் கூறுதல் காண்க (மேற்படி. பக். 214) வியாச பாரதம் சபா பருவத்தில் சகதேவன் மலயத்தை வலஞ் செய்து தாமிரபர்ணியைக் கடந்து கடற்கரையைச் சேர்ந்து தங்கினன் என விளக்குதல் காணலாம். அந்நூல் அகத்தியரைத் தமிழறிந்தவராகக் கூறாமை நோக்கிக் கொள்க (மேற்படி. பக். 214) இவ்வாறு தமிழ் வரலாறுடையார் ஆய்ந்து எழுதினும், நச்சியார்க்கினியர் முதலோர் உரைகண்டு தொல்காப்பியர்க்கு மூலவராகவும், முன் இலக்கணம் செய்தவராகவும் கூறுவது விந்தையாக உள்ளது. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி எழுதிய மு. இராகவ ஐயங்காரும் நச்சினார்க் கினியர் உரைக்குச் சான்றுதேடி நிறுவப் படாப்பாடு படுகின்றாரேயன்றி, மூலநூல் குறிப்பைப் பற்றிக் கருதினார் அல்லர். அகத்தியச் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்களால் காட்டுப்பட்டுள்ள நூற்பாக்களின் அமைதி சொல்லாட்சி ஆகியவற்றைத் தெளிந்து கூறவல்ல இவ்வறிஞர்களும் பிறர் பிறரும் புனைவு கொண்டு அகத்தியரை முன்னவராக நிலைநாட்டப் புகுந்த கருத்துடையவராகவே காட்சியளிக் கின்றனர். இனி, அகத்தியர் பற்றிய கருத்து வளர்ச்சி எப்படி வளர்கின்றதெனக் காணலாம். அகத்தியரின் மாணவர் பன்னிருவர் என்பதும் அவருள் தொல்காப்பியர் தலைமையானவர் என்பதும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு மேற்பட்டுக் கிளர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப் பொருள் விளக்கம், தண்டியலங்காரம் முதலான நூல்களால் அறிய வருகின்றன. மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரப் பகுதி பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய இமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகடல் அடக்கி மலையத் திருந்த இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த புலவர்பன் னிருவருள் தலைவன் ஆகிய தொல்காப்பியன் என்பது நம்பியகப்பொருளின் பாயிரப் பகுதி வடதிசை யிருந்து தென்மலைக் கேகி மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த தொல்காப் பியநெறி என்பது தண்டியலங்காரப் பிரதியில் உள்ளதெனப் பெருந் தொகை காட்டும் பாயிரப் பகுதி (1564). யாப்பருங்கலக்காரிகை அவையடக்கப் பாடலும், கானார் மலையத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல் எனக் குறிக்கிறது. கம்பர் காலத்திலும், பரஞ்சோதியார் (திருவிளையாடற் புராணம்) காலத்திலும், தலபுராணங்களைப் பாடிக்குவித்தோர் காலத்திலும் அகத்தியப் புனைவுகள் பெருகிப் பெருகிப் அகத்தியரே தமிழின மூலவர் என்றும் அவர் செய்ததே அகத்தியப் பேரிலக்கணம் என்றும் முனிவர் என்றால் அவரே என்றும், அவர் இன்றும் இருப்பவர் என்றும் புனைந்துரைக்கப்பட்டார். அதனால் நாட்டியற் பாவலரான பாரதியாரும், ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் எனப் பாடினார். ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய எனவரும் பாவின் அடியே, அவ்வகத்தியர்க்கு முன்னரே தமிழ் நூல் உண்மையை உணர்த்தும் எனத் தெளிவிப்பார் தமிழ்க் கா. சு. (தமிழ் இலக்கிய வரலாறு பக். 41). அகத்தியர் பெயரால் வழங்கப்படும் நூல்களாக இலக்கிய அகராதி வழியே அறியப்படுவனவற்றின் எண்ணிக்கை 123. அகத்தியர்-அம்மை சாத்திரம் என்பது தொடங்கி, அகத்தியர்-வைத்தியம் 150 என்பது ஈறாக அவை உள்ளன. அவை வைத்தியம், யோகம், நாடி, சாலம், ஞானம், தீட்சை, மந்திரம், சோதிடம், இரசம் முதலிய பிரிவுகளைச் சார்ந்தவை. புனை சுருட்டு - 18 என்று கூட அவர் பெயரால் ஒரு நூலுண்மை அறியப்படுகின்றது. அகத்தியர் தேவாரத்திரட்டு என்னும் தொகுப்பு நூல் பலரும் அறிந்ததே. இவற்றை நோக்க எவரெவரோ தாம் தாம் விரும்பும் துறைகளில் நூல் செய்து, அகத்தியர் பெயரால் விட்டு விட்டனர் என்பதும், அப் பணியும் ஒரு கால எல்லையில் நிகழாமல் காலம் காலமாக நிகழ்ந்து வந்துள்ளது, நிகழ்ந்தும் வருகின்றது என்பதும் தெளிவாம். அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டுவரும் மருத்துவ நூல்களை இப்பொழுது இவர் (அகத்தியர்) பெயரால் வழங்கும் நூல்கள் போலி நூல்களே எனச் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி மதிப்பீடு செய்து உரைக்கின்றது. அகத்திய வரலாறு பெருகிப் பெருகிப் பேருருக் காட்டுவது போலவே இலக்கண நூற்பாக்களும் வரவரப் பெருகுதலும் அறிய வேண்டும். தொல்காப்பியர் செய்யுளியலில் ஆறடி அராகம் எனவும், தரவே எருத்தம், எனவும், இருவயினொத்து எனவும் வருவனவற்றை அகத்திய நூற்பாக்கள் என்கிறார் இளம்பூரணர். தெய்வச் சிலையாரும் ஓரிரு நூற்பாக்களைக் காட்டுகிறார் (சொல். வேற். 63). நன்னூல் முதல் உரையாசிரியர் மயிலைநாதர் ஓரிரு நூற்பாக்களை எடுத்தாள்கிறார். ஆயினும் இவர்களுக்குப் பிற்பட்ட சங்கர நமச்சிவாயரோ பதின்மூன்று நூற்பாக்களை எடுத்தாள்கிறார். இவற்றால் பிற்பட்ட காலத்தே அகத்தியர் பெயரால் நூற்பாக்கள் உருவாக்கம் செய்யப்பட்டு உலவவிடப்பட்டன என்பது தெளிவாகின்றது. நூற்பாக்களின் நிலையையே இவ்வாறாகப், பேரகத்தியம் என ஒரு நூல் பன்னீராயிரம் நூற்பாக்களால் அமைந் திருந்தது எனின் நம்புதற்கு இயல்வதோ? தமிழ் நூற்பரப் பெல்லாம் கண்ட பெரும்புலமை நச்சினார்க்கினியர்க்கும், தமிழ் நூற்பரப்பு இவ்வளவினதா என வியப்புறும் வண்ணம் உரைவிளக்கம் வரைந்த யாப்பருங்கல விருத்தி யுடையார்க்கும் தட்டுப்படாமல் பேரகத்தியம் என ஒன்று இருந்து 19ஆம் நூற்றாண்டு அளவில் ஒருவர் கைவயப்படக் கிடந்தது எனின் அறவே நம்புதற்கு இயலாச் செய்தியே யாம். உரையாசிரியர்களால் அகத்திய நூற்பாக்கள் என மேற்கோள் காட்டப்பட்டவையும் தாம் எத்தகையவை அவற்றை மதிப்பிட்டு உரைக்கிறார் மயிலை சீனி. வேங்கட சாமியார்: அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கி வந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் அகத்தியச் சூத்திரங்கள் இடந் தருகின்றன என்று கன்னித் தென்கரை என்னும் நூற்பாவை எடுத்துக் காட்டி உரைக்கிறார். மேலும், மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம் துளுவம் குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள் கடைச் சங்க காலத்தில் அதாவது கி.பி. 300க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும் தமிழ்மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ்மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில் கி.பி. 300க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே இந் நிலங்களைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால் இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர் கடைச் சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல் வேண்டும். அல்லது அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த ஒருவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும். மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில் பல்லவம் என்னும் நாடு தமிழ் திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு. அது தொண்டை நாடு என்றும், தொண்டமண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம் பல்லவ நாட்டைத் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராயும்போது இந்த அகத்தியச் சூத்திரம் போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டியிருக்கிறது. என்கிறார். ஆனந்த ஓத்துப் பற்றிய அகத்தியச் சூத்திரத்தைச் சுட்டிக் காட்டும் மயிலையார் பிற்காலத்தில் அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது என்றும் கூறுகிறார். அகத்தியர் பாட்டியல் கொண்டு சிதம்பரப் பாட்டியல் வந்தது என்று அதன் பாயிரம் கூறினால், அகத்தியர் காலத்திற்கும் பாட்டியற் காலத்திற்கும் என்ன தொடர்பு? மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அகத்தியம் குறித்துக் கூறும் ஒரு செய்தியை அறிந்துகொண்டு மேலாய்வைத் தொடர்வோம் : தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கிறது. இது எனக்கு உடன்பாடன்று. தொல்காப்பியத்திற்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை. ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முந்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழ் இலக்கண வரலாற்றைப் புராணமயமாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இவ்வரலாறு தொடங்கப்படுவதே அறிவு முறை என்பது என் கருத்து என்பது அது. (இலக்கண வரலாறு. அணிந்துரை). இனிப் பேரகத்திய நூற்பாக்களையும் அவற்றின் பொருட் போக்கையும் ஆராயலாம். ஆசிரியர் தொல்காப்பியர் நாளிலேயே வடசொல் தமிழில் கலக்கத் தொடங்கியது. செய்யுட் சொல்லுள்ளும் புகலாயிற்று. அதனால் அவ் வடசொல் தமிழில் புகுங்கால் அது தமிழ் இயல்பொடு எழுத்து நிலை பெற்றுப் புக வேண்டும் என விதி வகுத்தார். மொழிக் காவல் கருதியே அவ்விதியை உருவாக்கினார். அதனால் அவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் வடசொற்கள் தமிழில் புகுங்கால் வடஎழுத்தை விலக்கித் தமிழ் மரபுக்குத் தக வடிவமைத்து எழுதும் நடைமுறை சீர்மையாகப் போற்றப்பட்டது. தொல்காப்பியன் தன் ஆணை கடவா நெறியைப் புலமையுலகம் சிக்கெனக் கடைப்பிடித்தது. சங்க நூல்களுக்குப் பின்வந்த சிலம்பு முதலிய நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் இடைக்கால பிற்கால நூல்களிலும் வரவர வடசொற்கள் படிப்படியே பெருக்கமுற்று வந்தன எனினும் எழுத்துக் கலப்பை அவை மேற்கொண்டில. வடசொல் தமிழில் வருங்கால் இவ்வாறு வருமெனச் சில நூற்பாக்கள் அமைத்துக் காட்டினார் நன்னூலார். சொல்லியல் அவரால் பதவியல் எனவும் பட்டது. அவர்க்குப் பின்னே வந்த வீரசோழியம், பிரயோக விவேகம் என்னும் நூல்கள் தமிழுக்கே இலக்கணம் செய்கிறோம் என்னும் அடிப்படை எண்ணமும் இல்லனவாய் வெளிவந்தன. வீரசோழியத்தில் வரும் உபகாரப் படலம், தத்திதப் படலம், தாதுப் படலம், கிரியாபதப்படலம் என்பவற்றையும், பிரயோக விவேகத்தில் வரும் காரகப் படலம், சமாசப் படலம், தத்திதப் படலம், திங்ஙுப் படலம் என்பவற்றையும் அந்நூற் பெயரையும் அறியவே இவற்றின் வடமொழிப் பெருக்கு வெளிப்பட விளங்கும். இவற்றின் விளைவாக, ஐந்தெழுத்தால் ஒரு பாடை என அறையவே நாணுவர் என நாணமின்றி இலக்கணக் கொத்துடைய ஈசானதேசிகர் கூறும் வண்ணம் (இப் பேர கத்தியரும் அதனைக் கூறுகிறார்) தமிழ்மொழி தனி மொழி யன்று என்னும் கொள்கை உருக் கொண்டது. மணிப் பவழ நடை என்னும் ஒரு நடையும் புகுந்து பெருகித் தமிழை அலைக் கழிக்கலாயிற்று. சேனாவரையர் போலும் புலமைச் செல்வரும் மயக்குண்டு, தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும் வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் என்றும் எழுதும் நிலையுண்டாயிற்று (தொல். சொல். 401). இலக்கண நூலர் நிலையே இவ்வாறாகச் சமயச் சார்பினரோ வரைதுறையின்றி வடசொற்களைக் கொத்துக் கொத்தாகவும் குலைகுலையாகவும் புகவிட்டனர். பாவிகப் புலவர்களும் பின்னடைந்தனர் அல்லர். கம்பரினும் வில்லியார் பெருக்கினார். அவரினும் அருணகிரியார் கூட்டினார். தாயு மானவர் வள்ளலார் முதலியவர்களும் இதற்கு விலக்காகி விடவில்லை. இக்காலப் பகுதியில் எழுந்த முத்துவீரியம், வடமொழி இலக்கணத்தை நன்னூலினும் பன்மடங்கு விரியக் கூறுவதாயிற்று. மொழியியல் என்னும் எழுத்ததிகார இரண்டாம் இயல் நூற்பாக்கள் நாற்பத்தைந்துள் முப்பத்தைந்து நூற்பாக்கள் வடமொழியைத் தமிழில் வழங்கும் வகை பற்றியதாகவே அமைந்தன. முத்துவீரியம் இவ்வாறு இயலப் பேரகத்தியம் எவ்வாறு இயல்கின்றது? எழுத்திலக்கணக் காண்டத்து ஐந்தாம் வடமொழிப் படலம் என்றே பெயரீடு பெறுகின்றது. அதி லுள்ள நூற்பாக்களில் முத்துவீரியர் சொல்லாத வடமொழி எதிர்மறை வடிவங்களும், வடமொழித் திரிபுப்புணர்ச்சிகளும் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன. முத்துவீரியத்தினும் விஞ்சிய வடமொழி இலக்கணம் கொண்ட பேரகத்தியம் அம் முத்துவீரியத்திற்குப் பிற்பட்டதாகுமேயன்றி முற்பட்டதாகாதே. தமிழிலக்கண இலக்கிய ஆய்வுத் தெளிவு சிறிதளவு வாய்க்கப் பெற்றாரும் இம்முடிவில் மறுதலை காணார். ஒரு பொருட் பல சொல் ஆய்வும் ஒரு நூலின் கால ஆய்வுக்குத் துணை செய்வதாகும். புள்ளி, மெய், ஒற்று என்பன ஒரு பொருள் தரும் பல சொற்கள். னகர இறுவாய்ப், பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப எனத் தொல்காப்பியர் மெய்யென ஆள்கிறார். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் இலக்கணவிளக்கம் என்பனவும் மெய் என்பதை வழங்குகின்றன. கம்முதல் மூவாறு உடல் எனத் தொன்னூல் விளக்கம் கூறிற்று. மெய் என்பதற்குத் தக உடல் என ஒரு தமிழ்ச் சொல்லை வழங்கியது அது. பிறரும் உடல் என மெய்யைக் குறித்துளர். முத்துவீரியம், ககர முதல் மூவாறும் காத்திர மாகும் என்கிறது. இக்காத்திரம் என்னும் ஆட்சி முத்துவீரியரின் காலப் பிற்பாட்டைக் காட்டுவதாகின்றது. இம் முத்துவீரியத் திலும் ஒருபொருட் பன்மொழி எண்ணிக்கையில் விஞ்சி நிற்பது பேரகத்தியம் என்னின், அதனிற் பிற்காலத்தது என்பதை அன்றி அதனை முன்னுக்குத் தள்ள என்ன வகையும் இல்லையாம். சான்றாகக் காண்க : மு : இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே பே : இரேகை வரிபொறி யிலேகையக் கரப்பெயர் * * * மு : ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே பே : உடல் உடம்பு ஒற்றுமெய் அல் ஊமை வியஞ்சனம் மெய் * * * மு : வன்மை வன்கண் வலிவல் லெழுத்தாகும் பே : வலிவன்மை வன்கணம் பரிசம் வல்லினப் பெயர் * * * மு : முத்துவீரியம்; பே : பேரகத்தியம். இவற்றுள் பின்னதை முன்னதெனக் கூற என்ன முறையுண்டு? * * * ஒரு பொருளுக்கு ஒரு சொல் தொடக்கத்தில் ஏற்பட்டிருக்கும்.. பின்னர் இடந்தோறும் காலந்தோறும் மக்கள் கருத்து வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொற்கள் பல பெருகி வருதல் மொழியியல் முறை. ஆதலால் ஒருபொருட் பன்மொழியின் சொற்பெருக்க-சுருக்க அளவுகள் வழியே ஒரு நூலின் முன்மை பின்மைகளை உறுதி செய்தல் கூடுவதாம். அச் சொற்கள் அம்மொழிச் சொற்களாயினும் வேற்று மொழிச் சொற்களா யினும் கணக்கிற் கொள்ளத் தக்கனவேயாம். நிகண்டு நூல்களையும் அகர வரிசை நூல்களையும் கால வரிசைப்படுத்த இம்முறை உதவும். முன்னே சுட்டிக் கூறிய மூன்று நூற்பாக்களின் ஒப்பீடே இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குதலைக் காண்க. முதலாம் நூற்பாவில், இரேகை, வரி, பொறி என எழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது மு. வீ. இரேகை, வரி, பொறி, இலேகை, அக்கரம் என எழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது பே. அ. இரண்டாம் நூற்பாவில், ஊமை, ஒற்று, உடல், என மெய்யெழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது மு.வீ. உடல் உடம்பு ஒற்று, அல், ஊமை, வியஞ்சனம் என மெய்யெழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது பே.அ. மூன்றாம் நூற்பாவில், வன்மை, வன்கணம், வலி என வல்லெழுத்துப் பெயர் கூறுகிறது மு.வீ. வலி, வன்மை, வன்கணம் பரிசம் என வல்லினம் பெயர் கூறுகிறது பே.அ. முன்னதில் பின்னது பெருகியது அறிக. வினவல் கடாவல் வினா எனப் படுமே என்பது முத்து வீரியம் (30) வினவல் கடாவல் கேள்வி உசாவல் வினா என்பது பேரகத்தியம் (22) கேள்வியும் உசாவும் பெருகிய தறிக. அஃ கேனம் தனிநிலை ஆய்த மாகும் என்பது முத்துவீரியம் (28) அஃ கேனம் தனிநிலை முப்புள்ளி ஆய்தம் என்பது பேரகத்தியம் (24) முப்புள்ளி மிகைதல் அறிக. சங்கம் புணர்ச்சி சையோக மயக்கம் புல்லல் கலத்தலும் பொருளொன் றேயாம் என்பது முத்துவீரியம் (66) மயக்கம் புணர்ச்சி சங்கமம் சையோகம் கூடல் கலத்தல் புல்லலொரு பொருட் சொலே என்பது பேரகத்தியம் (89) கூடல் கூடிய தறிக. * * * முற்பட வழங்கும் இலக்கணத்தைப் பிற்பட விரித்துப் பெருக்குவது இலக்கண மரபு. தொல்காப்பியக் கூற்று வகைகள் கிளவித் தொகைகளாகக் கோவை நூல்களிலும் அகப்பொருள் இலக்கண நூல்களிலும் வளர்ந்தமை சான்று. அவ்வாறே புறத்திணை இயல் என்னும் தொல்காப்பிய ஓரியல் புறப் பொருள் வெண்பாமாலை எனத் தனிநூலாக விரிந்தமையும் சான்று. நூலளவில் பெருகாமல் செய்தியளவில் பெருகுதலும் இவ்வழிப்பட்டதேயாம். எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை எனத் தேற்றேகார மிட்டுக் கூறுகிறது முத்துவீரியம் (59). இதனைப் பேரகத்தியமோ, எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் ஆக நான்கே எழுத்தின் ஓசை (80) என்கிறது. இது நச்சினார்க்கினியர் உரைவழி வளர்ந்ததாகும் (பிறப்பு. 6) * * * முன்னை இலக்கணர் கூறாத இலக்கணத்தைப் பின்னை வழக்குக் கொண்டு பின்னை இலக்கணர் இணைத்துக் கூறல் வழக்கு. இவ்வாறு வந்ததே நன்னூற் பதவிய லாட்சி. எழுத்துகளுக்குப் பால் இலக்கணம் கற்பித்தல் பண்டையோர் வழக் கன்று. குறிலாண் பாலும் நெடில் பெண் பாலுமாம் ஆய்தமும் மெய்யும் அலியெனப் படுமே என்னும் பேரகத்தியம் (51, 52) பின்வரவு உரைக்கும். * * * பிற்காலப் பாட்டியல் நூல்கள் எழுத்துகளை நச்செழுத்து அமுத எழுத்து எனப் பிரித்துக் காட்டிப் பேசுவன. அதனை எழுத்திலக்கணத்திலே காட்டித் தன் பின் வரவை நாட்டுகிறது பேரகத்தியம். ஒவ்வல், குறில் கச தநபமவ அமிர்த எழுத்தே (57) அளபெடை மக்குறள் ஆய்தநஞ் செழுத்தே (58) என்பவை அவை, இவ்விலக்கணங்களை முத்துவீரீயமும் இணைத்துக் கொண்டில. * * * எ ஒவ்வும் ழறனவும் தமிழெழுத் தென்க 54 ஐந்தொழி எழுத்தெல்லாம் வடவெழுத் தாகும் 55 என்னும் நூற்பாக்கள் இப்பேரகத்தியப் பெயரர் இலக்கணக் கொத்து ஈசான தேசிகர்க்கு இளைய தம்பியர் என்பதை விளக்கும். முத்துவீரியத்தில் இல்லாப் புணர்ச்சி இலக்கணங்கள் சில, பேரகத்தியத்தில் இடம் பெற்றுள. எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் உயிர் வரில் அந்நும் ஒற்றுறில் அவ்வுமாம் (160) எ-டு : ந + ஆசாரம் = அநாசாரம் ந + களங்கம் = அகளங்கம் நிர்துர் நி கு வி பொருளின்மை நிகழ்த்தும் (161) எ-டு : நிர்நாமன், துர்ப்பலம், நிமலம், குதர்க்கம், விகுலம் வடமொழி உயிர்முன் வன் கணம் இயல்பாம் (162) எ-டு : ஆதி பகவன். ஏயன் விகுதி எய்தும் பிள்ளைக்கே (163) எ-டு : கிருத்திகையின் மகன் கார்த்திகேயன் ஆ ஐ ஔமுத லாகமம் திரிபாம் (164) எ-டு : வ்யாகரண முணர்ந்தோன் - வையாகரணன் த்வாரங் காப்பவன் - தௌவாரிகன் (இவை ஆகமம்) த் வி + தச - த்வாதசி (இது திரிபு). இவை முத்துவீரியத்தினும் பேரகத்தியம் பின்னூல் என்பதைப் பன்னும் சான்றுகள். முன்னவர் வழிவழியாகக் கொண்ட கொள்கையை மறுத்துரைத்தல் பின்னவர் வழக்காகும். ஒரு செய்தி தோன்றிய பின்னர்த்தானே ஏற்பாரும் மறுப்பாருமாம் இருதிறத்தர் எய்தற்கு இயலும். உந்தி தனிநிலை உற்றங் காந் தெழும் (58) என்பது முத்துவீரியம். தனிநிலையாகிய ஆய்தம் உந்தி இடமாக, வாயைத் திறத்தலால் பிறக்கும் என்கிறது இது. ஆனால் பேரகத்தியம் ஆய்தத்திற்கு இடம் தலையாய் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்கிறது. அது. ஆய்தக் கிடம் சிரம் அங்கா முயற்சியாம் என்பது (77). ஆய்தப் பிறப்பிடத்தில் முத்துவீரியத்தொடு பேரகத்தியம் மாறுபட்டுச் செல்லினும் இளம்பூரணரும், நன்னூலாரும் பேரகத்தியக் கருத்துக்கு முன்னவராக உள்ளனர் என்பது அறியத்தக்கது. ககரமுதல் னகர இறுவாய் 18 எழுத்தும் மெய்யெழுத்து எனல் பண்டை இலக்கணர் காலந் தொட்டே இயல்வது. அவ்வகையில், ககர முதல் மூவாறும் காத்திர மாகும் (காத்திரம் - மெய்) என்கிறது முத்துவீரியம் (12). சார்பெழுத்தைக் கூறும் போதும், சார்பு உயிர்மெய் தனிநிலை இருபாலன என்கிறது அது (22). ஆனால் பேரகத்தியம், தனித்துமெய்த் தன்மையாய்த் தயங்கும் ஆய்தம் (23) ஆய்தம் மெய்போல் உயிர்பெற் றிலதாம் (25) ககரமுதல் மூவாறும் காட்டுமாய் தழுமெய் (26) எனத் தனிநிலை எனப்படுவதாம் ஆய்தத்தை மெய்யொடும் இணைத்தே கூறுகின்றது. இதனை முத்துவீரியரோ, முன்னவர் எவருமோ கூறினர் அல்லர். தனிநிலை என்னும் பெயரீடே மற்றொன்றன் கூட்டொடு கூடாதது என்பதை அறிவிப்பதாக அமைந்து கிடக்கவும் அதனை மெய்யொடு கூட்டிய பான்மை தமிழ்ம்மையொடு கூடாத கூட்டுறவு வெளிப்பாடே என்பதை வெளிப்படுத்த வல்லதாம். இரு சிறகுகளும் அடித்து எழும்பப் பறவையின் உடல் எழுவதுபோல இருபாலும் குறில் இருந்து இயக்க இயங்கும் எழுத்து ஆய்தம் என்னும் இலக்கணர் உவமையையும், ஆய்தம் உள்ளதன் நுணுக்கம் என்னும் தொல்காப்பிய ஆணை மொழியையும் அறிவோர் ஆய்தத்தை மெய்யொடும் உடன்படுத்தார் என்க. * * * முன்னூல்களில் வெளிப்படை எனக் கருதிக் கூறப்படாத விளக்கங்கள் பின்னூல்களில் கூறப்படுதல் வழக்காகும். இலக்கண நூல்கள் மொழி முதலாம் எழுத்துகள் இவை எனத் தெளிந்துரைக்கும். ஆனால் பேரகத்தியம், மொழி முதலாம் எழுத்துகள் இவை என்பதுடன் மொழி முதலாகா எழுத்துகள் இவை என்பதையும் கூறுகின்றது. பன்னீ ருயிரும் மொழிமுத லாகும் (81) உயிர்மெய் யல்லவை மொழிமுத லாகா (82) என்பவை அவை. ஙகரமவ் வேற்றுச் சுட்டு வினாவொடாம் (187) என்பதும் முன்னவர் கூறாத பின்னவர் விளக்கமாம். எ-டு : அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் தொல்காப்பியர் ச, சை, சௌ என்பவை மொழி முதலாகா என்று இலக்கணம் கூறினார். சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஔவெனும் மூன்றலங் கடையே என்பது அது (மொழி மரபு. 29). ஆனால் இந் நூற்பா, சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவை ஔவெனும் ஒன்றலங் கடையே எனப் பாட வேறுபாடு கொண்டிருந்திருக்க வேண்டும் என்று இலக்கணர் ஆய்ந்து கூறுவர். இலக்கண விளக்க நூலார், ஐஔ அலவொடு சகாரமும் (எழுத்து. 27) எனச் சகர முதன்மையை ஏற்றுக்கொண்டு யாத்தார். நன்னூல் மயிலைநாதரும் சகர முதன்மொழிச் சொற்களை அடுக்கிக் காட்டி நிறுவினார். நன்னூலார், பிரயோக விவேக நூலார், முத்துவீரிய நூலார் முதலியோர் சகரவரிசை பன்னிரண்டும் மொழி முதலாகுமெனக் குறித்தனர். பேரகத்திய நூலாரும் அவ்வழியையே தழுவிக்கொண்டுள்ளார். * * * முன்னோர் மொழி பொருளையன்றி மொழியையும் பொன்னேபோல் பின்னவர் போற்றிக்கொள்வர் என்பது வழக்காறு. அவ்வழியில் முத்துவீரியனார் எழுத்திலக்கணப் பகுதியில், உஊ ஒஓ ஔவிதழ் குவிவே அண்பல் அடிநா முடியுறத் தநவரும் அண்ணம் நுனிநா வருட ரழவரும் எனக் கொள்கிறார் (46, 50, 72). இவை நன்னூலில் 23, 25, 28 ஆம் நூற்பாக்களாம். இவ்வாறு பேரகத்தியத்தார் முன்னோர் மொழியை வாங்கிக்கொண்டதாகக் குறித்திலர். குறித்திருப்பின் அதன் பின்முகத்தை நன்முகமாகக் காட்டிக் கொடுத்து விடுமே! ஆனால் அவர் முத்துவீரியர் நூற்பாக்கள் பலவற்றைப் போற்றிப் பொதிந்து கொண்டமை தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது: அஇ உஎ ஒக்குறி லாகும் மு. 8 அஇ உஎ ஒக்குறி லாகும் பே. 12 * * * உயிர்முதன் முப்பதும் ஒன்றற் கொன்றினம் மு. 20 உயிர்முதன் முப்பதும் ஒன்றற் கொன்றினம் பே. 26 * * * உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் மு. 24 உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் பே. 40 * * * மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும் மு. 38 மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும் பே. 49 * * * ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே மு. 93 ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே பே. 109 * * * உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே மு. 98 உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே பே. 117 * * * எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம் மு. 144 எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம் பே. 144 * * * ஆரியச் சிறப்பெழுத் தாற் பொதுச் சிறப்பால் ஆனவீ றெழுத்தால் அமைவது தற்பவம் மு. 146 ஆரியச் சிறப்பெழுத் தாற் பொதுச் சிறப்பால் ஆனவீ றெழுத்தால் அமைவது தற்பவம் பே. 146 இவை ஒருவர் நூற்றனவா? இருவர் நூற்றனவா? * * * அளபும் புலுதமும் அளபெடைப் பெயரே மு. 33 அபும் புலுதமும் அளபெடைப் பெயரே பே. 43 * * * உயிர்மெய் மயக்கிற் கோரள வின்றே மு. 79 உயிர்மெய் மயக்கிற் கோரள வின்றே பே. 106 இவற்றுள் வேறுபாடு என்ன? ஓரசையே. * * * அகரமும் இகரம் ஐகார மாகும் அகரமும் உகரமும் ஔகார மாகும் இவை முத்துவீரியம் (107, 108). அகரம் இகரம் ஐகார மாகும் அகரம் யகரமெய் ஐகார மாகும் அகரம் உகரம் ஔகார மாகும் அகரம் வகரமெய் ஔகார மாகும் இவை பேரகத்தியம் (126, 127). முதலடியில் உம்மை இல்லை. பின்னடி புதுச் சேர்ப்பு. * * * புல்லல் சார்தல் புணர்தல் சார் பெனலே மு. 23 புல்லல் சார்தல் புணர்தல் சார் பின்பெயர் பே. 39 ஒருசீர் மாற்றம் இது. * * * லளவிறு புணர்ச்சியின் ஆய்தம் அஃகும் மு. 39 லளவிறு புணர்ச்சியின் ஆய்தம் குறையும் பே. 50 ஒன்றரைச் சீர் மாற்றம் இது. வினைபல நிகழினும் வினைஎனப் படுமே மு. 121 வினைபல நிகழினும் வினைச்சொல் என்க பே. 135 இதுவும் அப்படியே. * * * அண்ண நுனிநா அழுத்த றனவரும் மு. 57 அணரி நுனிநா அணைய றனவரும் மு. 76 சொன்ன எழுத்தினாற் சொல்வதே சொல்லாம் மு. 115 மொழிந்த எழுத்தினால் மொழிவதே மொழியாம் பே. 129 உயிர்நெடி லேழும் ஓரெழுத் தொருமொழி மு. 116 உயிர்நெட் டெழுத்தேழ் ஓரெழுத் தொருமொழி பே. 130 மொழியே, ஓரெழுத் தாதியொன் பானெழுத் தந்தமாம் மு. 124 மொழியே, ஓரெழுத் தாதியா ஒன்பதெழுத் தந்தமாம் பே. 140 இவை இருசீர் மாற்ற நிலைகள். * * * மெய்யொடு மேவினும் வேறு படாவுயிர் மு. 95 மெய்யொடு மேவினும் உயிர்வேறு படாஅ பே. 111 மட்டள வொடுமிதம் வரைமாத் திரையே மு. 97 வரைமித மளவு மட்டுமாத் திரைப்பெயர் பே. 116 விற்கை புலம்பிசை விளியினு மிகுமே மு. 105 விளியிசை புலம்பல் விற்கையின் மிகுமே பே. 125 மொழியே, தனி இணை துணைபொது தணங்கணங் கலப்புறு மொழியோ ரேழென மொழிநரும் உளரே மு. 123 தனிமொழி இணைமொழி துணை மொழி பொதுமொழி கணமொழி தணமொழி கலப்புறு மொழியேழ் பே. 139 இந் நூற்பாக்களில் சொற்கள் முன்பின் மாற்றமும் இசைப்பும் இயைந்துள. இறுதியில் காட்டப்பட்ட இரு நூற்பாக்களிலும் இசை நலம் சிறப்புறுதல் பிற்செப்ப வழியென அறிக. அதே போல், அதுதான், இயற்கை செயற்கை இன்னிசை மெல்லிசை நெடில் குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு எண்வ கைப்படும் என்மனார் புலவர் என்னும் முத்துவீரியத்தினும். அவையே, இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில் குறில் ஒற்றுயி ரெழுத்துப்பே றளபெண் என்னும் பேரகத்திய நூற்பா (44) சுருங்குதல் காண்க. இச் சுருக்கு மேல்விளைவு வெளிப்பாடாம். * * * நன்னூல் நூற்பாவை முத்துவீரியனார் அப்படியே கொள்ளுமிடத்தும் பேரகத்திய நூலார் சிறுமாற்றம் செய்து தம்மதாக்கிக்கொண்டுள்ளமை அறியலாம், அண்பல் அடிநா முடியுறத் தநவரும் என்பது நன்னூல் (25) இவ்வாறே முத்துவீரியத்தும் இந் நூற்பா இடம் பெற்றது (50) பேரகத்தியத்தில் இது, அண்பல் அடிநா முடியுறத் தநவாம் என வடிவெடுக்கின்றது (169). இவ்வாறே அண்ணம் நுனிநா வருட ர, ழ வரும் என்னும் நன்னூலை (20 அப்படியே மேற் கொள்கிறது முத்துவீரியம் (53). பேரகத்தியமோ, அண்ணம் முடிநா வருட ரழ வரும் என்றாக்கி கொள்கிறது (72). ஆவி இடைமை இடமிட றாகும் மேவும் மென்மை மூக் குரம் பெறும் வன்மை என்னும் நன்னூலை (20) அப்படியே தழுவிக்கொண்டிலர் முத்துவீரியர். பேரகத்தியரோ, ஆவி இடைமை இடமிட றாகும் மேவும் உரம் வலி மெல்லின மூக்காம் என ஒருபால் மாற்றித் தம்மதாக்கிக்கொண்டுளார் (62) இதுகாறும் சொல்லப்பட்ட விளக்கங்களாலும் எடுத்துக் காட்டுகளாலும் பேரகத்தியம் எனப் பெயர் கொண்டு வெளிப் பட்ட நூல் அகத்தியர் பெயரால் எழுந்த போலி நூல் என்பது விளங்கும். இலக்கணம் வல்ல ஒருவர் முத்துவீரியத்தைப் பார்த்து அதனைப் போலச் செய்து, தம் பெயரால் வெளிப் படுத்தாராய் அகத்தியர் பெயரால் அவர் கேள்விப்பட்டிருந்த பேரகத்தியம் இதுவே என நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சியே ஈது என்பது வெளிப்படும் செய்தியாம். இப்படியும் இட்டுக் கட்டும் நூல்கள் உண்டோ எனத் தமிழாய்வுடையார் ஐயுறார். திருவள்ளுவர் பெயராலேயே ஞான வெட்டியான் என்றொரு நூல் உண்டாயிற்று. இன்னிலை என்றொரு நூல் பதினெண்கீழ்க் கணக் கினுள்ளே புகுந்து முக்காடு இட்டு முகம் காட்டவும் தொடங்கிற்று. அந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந் தேவனார் கடவுள் வணக்கம் பாடினாராம். மதுரையாசிரியர் தொகுத் தாராம். பொய்கையார் பாடிய நூலாம் அது கப்பலோட்டிய தமிழரையும் மயக்கி வெளியிடச் செய்த நூல் அது. ஆயினும் கைந்நிலை என்னும் நூல் வெளிப்பட்ட பின்னர் அது போலி நூல் எனப்பட்டது. இல்லாக்கால் அந்நூலே கீழ்க்கணக்கில் ஒன்றென நின்றிருக்கும்! ஆனால் பிரபந்த தீபிகை என்னும் நூல் ஈரொன்பான் கீழ்க்கணக்கென ஒரு பாவில் சிறுகைந்நிலை அறுபதாகும் என உறுதிப்படுத்தியும் விட்டது. இந்த 1986-ஆம் ஆண்டில்தான் என்ன? ஐந்திறம் என்னும் பொய்ந்நூல் பொறிவாணம் விடவில்லையா? மயனார் நூலெனக் கருமாரி வீரபத்திரனார் வெளியிட்டதாயிற்றே! ஆதலால் புகழ்வாய்ந்த பழையவர்கள் பெயரால் புதுநூல் இயற்றி அவர்கள் தலையிலே கட்டிவிட்டுப் பூரிப்பது இம்மண்ணில் புதுமை இல்லை என்பதே வெளிப்படுகின்றது. இவ்வெல்லாரினும் அகத்தியர் தலையில் வாரி வாரிப் பலரும் கொட்டிய குப்பைகளே வண்டிக் கணக்கில் உள்ளவை என்பதில் தனக்கும் பங்கைப் பெற்றுக்கொண்டது பேரகத்தியம் ஆகும். பேரகத்தியம் மெய்ந்நூல் அன்று! பொய்ந்நூல்! எவரோ ஒருவர் பிற்காலத்தில் என்ன, அச்செல்ல+ம் உண்டாகிய 19 ஆம் நூற்றாண்டில் முத்துவீரியத்தைப் பக்கமாக வைத்துக்கொண்டு அதன்மேல் சேர்ப்பன சேர்த்து அரைத்துக் கூட்டிய கூட்டு என்று வெளிப்படுத்துவதால் ஆகும் பயன் என்ன? என்று சிலர் எண்ணலாம். ஆனால், தமிழ் வரலாற்றுச் சிக்கல்களை உணர்வார் அவ்வாறு எண்ணார். தொல்காப்பியத்தில் தமிழ் இலக்கணமும் தமிழர் வாழ்வுமே பேசப்படுகின்றன. ஆயினும் அதனை வேதநெறி வழக்கினதாகவும் வடநூல் வழக்கினதாகவும் வருணப் பகுப்புக்கு உரியதாகவும் ஆக்கிவைத்தவர்கள் பழைய உரைகாரர்கள் மட்டுமல்லர்; ஆய்வாளர்களும் மிகப்பலராயினர். தொல் காப்பியம் தமிழ்நெறிப்பட்ட நூலே என்பதை நிலை நாட்டுதற்கு அவர்கள் செய்து வைத்துள்ள சேர்மானங்களையும் ஒட்டுகளையும் கட்டுகளையும் ஒருங்கே சிதைத்துக் காட்டினால் அன்றி உலகம் கொள்ளா நிலையில் உள்ளது. கறை ஏற்படுத் தப்பட்ட சுவரில் வண்ணம் தீட்ட வேண்டுமெனின், வண்ணந் தீட்டுவதற்கு மேற்பட்ட பாட்டைக் கறையை அழிப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவோ? அந்நிலைதான் உள்ளது. மரபியலிலே இளமைப் பெயர் ஆண்மைப் பெயர் பெண்மைப் பெயர் என்பவற்றைக் கூறிய தொல்காப்பியர், பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என்று கூறி முடித்தபின் நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதலாக வரும் பதினைந்து நூற்பாக்கள் இடைச் செருகலே என்பது வெளிப்பட்ட அறியக்கிடந்தும், அவ்விடைச் செருகலை அமைத்தற்காகவே புறக்காழனவே, தோடே, இலையே, காயே, நிலந்தீ என வரும் நூற்பாக்களை அவை இருக்க வேண்டிய இடத்தினின்று பெயர்த்துப் பின்னுக்குத் தள்ளித் தம் கருத்துக்கு முடி சூட்டு நடத்த வல்லார் பேரகத்தியப் பொய்ந்நூலை மெய்ந்நூலாக்கித் தொல்காப்பியத் திற்கும் முன்னூல் என நாட்டத் துணிவர் அல்லரோ? தொல்காப்பியனார்க்கு ஆசிரியராகப் புனையப்பட்ட அகத்தியர் இயற்றியது இப்பேரகத்தியம் என்னின் அதிலுள்ள வடமொழிப் படலம் ஒன்றைக் காட்டியே பாருங்கள் பாருங்கள்! தொல்காப்பியனார்க்கு முன்னரே தமிழும் வடமொழியும் இரண்டறக் கலந்துவிட்டன; அதன் வழிப்பட்டதே இலக்கணம் இலக்கியம் நெடுங் கணக்கு எல்லாம் எல்லாம் என்று தப்புப் பறையறையத் தனிவாய்ப்புத் தந்ததாகிவிடக்கூடும் அல்லவோ? முத்து வீரியர் இயற்றியது போல, ஏன் பிரயோக விவேக நூலார் போலக் கூடத் தம் பெயரால் நூலாக்கி விட்டால் என்ன கேடு? போற்றப்பட்டால் போற்றப்படட்டும்; தூற்றப்பட்டால் தூற்றப்படட்டும்; அறிவு பெற்றிருந்தும் ஒளிந்து விளையாடும் இழிந்த இந்நிலையை எதற்காகத்தான் கொள்ள வேண்டுமோ? பாண்டியன் என்னும் பழம் பெயரே பாண்டவர் வழிவந்ததென ஓர் ஆய்வாளர்! ஸ்ரீவல்லபன் என்பதே திருவள்ளுவர் ஆயது என்பதோர் ஆய்வு! கழகமா, களமா, தமிழா, அமிழ்தா எல்லாம் வடமொழியே என்பதோர் வாணவேடிக்கை! மந்திரி மட்டுமன்று அமைச்சும் வடமொழியே என ஒரு வரிந்து கட்டல்! திருக்குறள் என்ன பெரிய குறள்; மனுநீதி சாத்திரம், அர்த்த சாத்திரம், கதமசூத்திரம் இவற்றைத் தழுவிய நூல்! திருக்குறளிலேயே நூற்றுக்கு மேல் வட சொல் உண்டு என்று பட்டியல்! இப்படியெல்லாம் முடிவெடுப்பார் முன்னே பேரகத்தியம் வாய்ப்பது வெறு வாய்க்கு உமி கிடைத்தது ஆகிவிடாதா? தொல்காப்பியனார் பெயர் திரண தூமாக்கினி என்பது என்றும், அவர் ய (ஜ) மதக்கினியார் மகனாரும் பரசுராமர் உடன் பிறந்தாரும் ஆவர் என்றும், அவர் நூலை அரங்கேற்றிய பாண்டியன் பெயர் மாகீர்த்தி என்றும், அவன் 24 ஆயிரம் ஆண்டு ஆட்சி செய்தான் என்றும் நச்சினார்க்கினியர் கூறும் புனைவு மொழியையே வாய்மை வரலாறாகக் கொண்டு தொல்காப்பியர் குடி என்பது விருத்த காவ்ய கோத்திரம் சார்ந்தது என்று துணிந்துரைப்பவர்க்குப் பேரகத்தியப் பொய்ந் நூலும் மெய்ந் நூலாகத் தோன்றின் வியப்பாகாதே! ஆதலால் பேரகத்தியம் எனப் பவானந்தர் பதிப்பித்த நூல் முத்து வீரியத்திற்கு வழிநூலாக அமைந்த ஒரு நூலே என்று உறுதிப் படுத்துதல் வேண்டத் தக்கதாம். வேதகிரியார் தம் நூலாகவோ, இயற்றியவர் பிறரொருவரெனின் அவர் நூலாகவோ, அவர் காலம் அறியின் இன்னது என்பதாகவோ வெளியிட்டிருப்பின் நூலொடு அகத்தியரைத் தொடர்வுறுத்தி இடர்ப்படுக்கும் நிலை ஏற்பட்டிராது. தமக்கு மூவாயிரம் நூற்பாக்கள் கிடைத்துள தாகக் குறிக்கும் குறிப்பால் பழமை காட்டவே அவர் கருதினார் என்பது வெளிப்படுகின்றது. இதனால் இப் பேரகத்தியம் அகத்தியர் பெயரால் செய்து உலவ விட்ட பொய்ந்நூலே என்பது வெளிப்படையாம். பேரகத்தியச் சூத்திரம் எனப்பட்டவற்றை முத்துவீரியத் துடன் ஒப்பிட்டுக் காண்டற்கு வாய்ப்பாக அவ்வவ்விடத்தே அந்நூற்பாக்கள் மேலும் கீழும் வைக்கப்பட்டுள. அவற்றின் நூற்பா எண்ணிக்கைகளும் தரப்பட்டுள்ளன. பேரகத்திய நூற்பா முற்பட வைத்து, நூற்பா தரப்பட்டுளது. முத்துவீரிய நூற்பா பிற்பட வைத்து நூற்பா எண் அதன் முடிவில் தரப்பட்டுள்ளது. பேரகத்தியப் பகுதி முடிந்தபின், உரைகளில் கண்ட பேரகத்திய மேற்கோள் நூற்பாக்கள் என்பதும் இணைக்கப் பட்டுளது. பிற்கால உரைகளில் காணும் இவற்றுள் சிலவற்றை யும் இப் பேரகத்தியப் புனைவாளர் இணைத்துக் கொண்டுளார் என்பதையும் அவண் காண்க. பேரகத்தியத் திரட்டு வெளிப்பட்டு எண்பான் ஆண்டுகள் ஆகிவிட்டமையால், அத்திரட்டை இதன் வழியே முழுதுறக் காணற்கு வாய்ப்பாக நூற்பாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. பேரகத்தியம் என்னும் பகுதி நூன் முறையால் அமைந்ததேயாம். அதனை முத்துவீரியத்துடன் ஒப்பிட்டுக் காணவே புலப்பட்டுவிடும். பின்னிணைப்பாம் மற்றவையே திரட்டு ஆகும். பேரகத்தியத் திரட்டும் முத்துவீரியமும் - நூற்பா ஒப்படைவு பேரகத்தியத் திரட்டு முதலாவது எழுத்திலக்கணக் காண்டம் 1. எழுத்துப் படலம் முத்துவீரியம் - எழுத்தியல் முன்னது பேரகத்திய நூற்பா; பின்னது முத்துவீரிய நூற்பா எழுதப் படுதலால் எழுத்தெனப் பெயர் பெறும் எழுதப் படுதலின் எழுத்தா கும்மே 1 எழுத்தொலி வடிவம் வரிவடி வும்பெறும் எழுத்தொலி வடிவரி வடிவையு மேற்கும் 2 அநாதி யொலியெழுத் தாதிவடி வெழுத்தே (இதற்குஒத்த நூற்பா முத்துவீரியத்தில் இல்லை; பிறவும் இவ்வாறே) இரேகை வரிபொறி யிலேகையக் கரப்பெயர் இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே 3 எழுத்து முதல்சார் பிருவகை யென்க அதுமுதல் சார் பென வாமிரு பாலன 4 முதலெழுத் திருவகை யாகியெண் வகையாம் உயிருட லெனமுத லோரிரு வகைய 5 முதலுயிர் மெய்யாய்த முப்பா னொன்றே அடிதலை தாளாதி யாமுத லின்பெயர் அகரமுத லௌகார வந்தமா முயிரே அகர முதலுயி ராறிரண் டாகும் 6 அச்சாவி சுரம்பூத மாமுயி ரின்பெயர் அச்சாலி சுரம்பூத மாமுயி ரென்ப 7 உயிரே குறினெடில் சுட்டு வினாவென நான்காம் அஇ உஎ ஒக்குறி லாகும் 8 குறிலும் குறுமையும் இரச்சுவமுங் குறிற்பெயர் குறுமை இரச்சுவம் குறிலெனப் படுமே 9 ஆஈ ஊஏ ஐஓ ஔநெடி லாகும் ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில் 10 நெடிலு நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர் பே.அ.மே. 2 நெடுமையும் தீர்க்கமும் நெட்டுயி ராகும் 11 அஇ உம் மூன்றும் சுட்டிற் சுட்டே அஇஉச் சுட் டாமென மொழிப 6 சுட்டல் குறித்தல் காட்டல்சுட் டின்பெயர் காட்டல் குறித்தல்சுட் டாங்கரு திடினே 29 அவையே அகம்புறம் அண்மை சேய்மைபொது மைக்கணாம் பே.அ.மே. 3 ஐம்பாற் சுட்டும் வினாவுத் தரமுமாம் ஆஏஓ வீற்றும்எஏ முதலும் வினா எயா வினாவென் றிசைக்கப் படுமே 27 யாவென் லினா வே அஃறிணைப் பன்மை விகுதிபெறுங் காலைம் பாலினும் வினாவாம் பே.அ.மே. 4 வினவல் கடாவல் கேள்வியுசா வல்வினா வினவல் கடாவல் வினா வெனப்படுமே 30 தனித்துமெய்த் தன்மையாய்த் தயங்கு மாய்தம் அஃகேனம் தனிநிலை முப்புள்ளி யாய்தம் அஃகேனந் தனிநிலை யாய்த மாகும் 28 ஆய்தம் மெய்போல் உயிர்பெற் றிலதாம் ககரமுதன் மூவாறுங் காட்டுமாய் தமுமெய் ககரமுதன் மூவாறுங் காத்திர மாகும் உடலுடம் பொற்றல் லூமைவியஞ் சனமெய் ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே 13 தனிநிலையு மெய்யும் தனித்தொலி யாவே மெய்வலி மெலிவிடை விரியுமூ வினமாம் வல்லெழுத் தாவன கசட தபற அவற்றுள் வல்லெழுத் தென்மனார் கசட தபற 14 வலிவன்மை வன்கணம் பரிசம்வல் லினப்பெயர் வன்மை வன்கணம் வலிவல்லெழுத் தாகும் 15 மெல்லெழுத் தாவன ஙஞண நமன மெல்லெழுத் தென்மனார் ஙஞண நமன 16 மெலிமென்மை மென்கணம் மெல்லினப் பெயரே மென்மைமென் கணமெலி மெல்லெழுத் தாகும் 17 இடையெழுத் தாவன யரல வழள இடையெழுத் தென்மனார் யரல வழள 18 இடையிடைமை யிடைக்கண மிடையினப் பெயரே இடைமை இடைக்கண மிடையிடை எழுத்தே 19 உயிர்முதன் முப்பது மொன்றற் கொன்றினம் உயிர்முதன் முப்பது மொன்றற் கொன்றினம் 20 இஉ இரண்டும் ஐஔக் கினமே அவற்றுள் இஉஐ ஔக் கினமென மொழிப 21 உயிர்மெய் அளபெடை இரண்டாய்த மறுகுறுக்கஞ் சார்பாம் சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன 22 புல்லல் சார்தல் புணர்தல்சார் பின்பெயர் புல்லல் சார்தல் புணர்தல் சார்பெனலே 23 உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் 24 உயிர்நெடி லினக்குறில் உற்றள பெடுக்கும் இசைகெடி னெட்டெழுத் தெல்லாம் தமக்கினம் ஆகிய குறிலொடு மளபெழும் எனலே 31 ஙஞண நடமன வயலள வாய்தம் குறிலிணை குறிற் கீ ழிடைகடை யளபெழும் அளபும் புலுதமும் அளபெடைப் பெயர் அளபும் புலுதமும் அளபெடைப் பெயரே 33 அவையே இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில்குறி லொற்றுயி ரெழுத்துப் பேறளபெண் அதுதான் இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில் குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு எண்வ கைப்படும் என்மனார் புலவர் 32 ஆய்தங் குறில்வலிக் காகு மிடையே உத்திரி யிகரமவ்வூ ரிகரங் குறிய யகரம் வரும்வழி இகரம் குறுகும் 34 குறிலல்லன தொடர்வலிக் கூடுகரங் குறிய நெட்டெழுத் திம்பரும் தொடக்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே 36 மூன்றிடத் தையஃகு முதலிடத் தௌவஃகும் மொழிமுத லிடைகடை மூவிடத் தினும்ஐ அஃகு முதலிடத் தௌவு மற்றே 37 மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும் மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும் 38 லளவிறு புணர்ச்சியா மாய்தங் குறையும் லளவிறு புணர்ச்சியி னாய்த மஃகும் 39 குறிலாண் பாலும் நெடில்பெண் பாலுமாம் ஆய்தமு மெய்யும் அரியெனப் படுமே எகர ஒகரமெய் யெய்தும் புள்ளியே மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் இறுதியாகிய பதினெட்டு மெய்களு மேலே 40 எகர ஒகரத் தியற்கையு மற்றே 41 எஒவ்வும் ழறனவும் தமிழெழுத் தென்க ஐந்தொழி யெழுத்தெலாம் வடவெழுத் தாகும் எழுத்தே இடுகுறி காரணம் பொதுச்சிறப் பெய்தும் ஒவ்வல் குறில்கச தநபமவ வமிர்த எழுத்தே அளபெடை மக்குறள் ஆய்தநஞ் செழுத்தே பொதுவெழுத் துத்தமிழ்ப் பொருந்துதல் சிறப்பே உயிர்மெய் உயிரள பலாச்சார்பு தமிழ்க்குரிய 2. எழுத்துற்பத்திப் படலம் ஆதன் அநாதியு முதாநனா தியுமா நாதமுரங் கண்டந் தலையிட முற்றுப் பல்லிதழ் நாமூக் கணமைந் தொழிலால் எல்லா வெழுத்தும் பிறக்கும் என்ப ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு முரம்வலி மெல்லின மூக்காம் உயிரிடை யினமிட றுரம் வலியுச்சி மெவியிட மாமென வேண்டப் படுமே 43 ஆவி யிடைமை இடமிட றாகும் மேவும் மென்மைமூக் குரம்பெறும் வன்மை நன்.20 அவற்றுள் ஆ ஆ இரண்டும் அங்காந் தியலும் அவற்றுள் அ ஆ அங்காப் பொடுவரும் என்ப 44 இஈ எஏ ஐஅங் காப்புடன் அண்பல் முதனா விளிம்புற லுடைய இஈ எஏ ஐயங் காப்பொடு மேல்வாய்ப் பல்லடி நாவிளிம் புறவரும் 45 ஊ ஒஓஔ இதழ்குவிந் தியலும் உஊ ஒஓ ஔவிதழ் குவிவே 46. நன் 23 ககார ஙகார முதனா முதலணம் அடிநா வடியணம் அழுத்தக் கஙவரும் 47 சகார ஞகார மிடைநா விடையணம் இடைநா இடையணம் இறுக்கச் சஞவெழும் 48 டகார ணகார நுனிநா நுனியணம் நுனிநா நுனியணம் நோக்க டணவரும் 49 அண்பல் அடிநா முடியுறத் தநவரும் அண்பல் அடிநா முடியுறத் தநவரும் 50 நன். 25 இரண்டிதழ் பொருந்தப் பகரமக ரம்வரும் இரண்டித ழுறப்பம வெழுமென மொழிப 51 முதனா முதலண முயற்சியின் யவ்வரும் அடிநா வடியண முறவரும் யகாரம் 52 அண்ண முடிநா வருடரழ வருவன அண்ணம் நுனிநா வருட ரழவரும் 53 நன். 28 அண்பன் மடியைநா விளிம்பொற்ற லவ்வரும் லகரமணப் பல்லடி நாவிளிம் புறவரும் 54 அண்பன் முதலைநாத் தடவ ளவ்வரும் ளகரமேல் வாயை நாநுனி தடவப் பிறக்கும் என்மனார் பெரிதுணர்ந் தோரே 55 மேற்பல்லை இதழுற மேவும் வகரமே மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே 56 நன்.30 அணரி நுனிதா அணைய றனவரும் அண்ண நுனிநா வழுத்த றனவரும் 57 ஆய்தக் கிடஞ்சிரம் அங்கா முயற்கியாம் உந்தி தனிநிலை யுற்றங் காந்தெழும் 58 தலைமையக் காரம்போற் சார்பெழுத் துற்பவம் தத்தமிற் றிரிபே சிற்சில வுளமாம் எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்க லாக நான்கே எழுத்தின் ஓசை எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை 59 3. எழுத்து வரன்முறைப் படலம் பன்னீ ருயிரு மொழிமுத லாகும் முன்நான் குயிரும் மொழிமுத லாகும் 60 உயிர்மெய் யல்லவை மொழிமுத லாகா கசதந பமவுயிர் மெய்யெலா முதலாம் பன்னீ ருயிரொடும் கசதந பமவரும் 61 ஞகரம் அ ஆ எஒவ் வோடாம் அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல் 62 நன். 50 யகரம், அஆ உஊ ஒஔ வுடனாம் அ ஆ உ ஊ ஒஔவோடு யகர மொழிமுத லாகு மென்ப 63 வகரம் உ ஊ ஒ ஓ ஒழிந்தன வுடனாம் உ ஊ ஒ ஓ வலவொடு வவ்வரும் 64 ஙகரமவ் வேற்றுச் சுட்டு வினாவொடாம் கசதப வல்லன பிறமெய்ம் மயக்கமாம் வேற்றுநிலை கசதப வல்லன மெய்பதி னான்கும் என்மனார் நற்றமிழ் வல்லோர் 65 மயக்கம் புணர்ச்சி சங்கமஞ் சையோகங் கூடல் கலத்தல் புல்லலொரு பொருட் சொலே சங்கம் புணர்ச்சி சையோக மயக்கம் புல்லல் கலத்தலும் பொருளொன் றேயாம் 66 ஙகர முன்னர்க் ககரவுயிர் மெய்வரும் ஙகாரை முன்னர்க் ககார மயங்கும் 67 ஞகர முன்னர்ச் சயவுயிர் மெய்வரும் வருஞ்சய ஞகாரமுன் மருவி என்ப 68 டகர முன்னர்க் கசபவுயிர் மெய்வரும் கசப டகரமுற் கலந்து மயங்கும் 69 ணகரமுன் கடசஞ பமய வவ்வாம் ணனமுன் னினங் கச ஞப மய வவ்வரும் 70 நன் 69 நகர முன்னந் தய வுயிர் மெய்வரும் யகரமும் தகரமும் நகரமுன் னாகும் 71 மம்முன் பயவ வுயிர்மெய் வருமே மம்முன் பயவ மயங்கு மென்ப 72 நன் 60 யரழமுன் மொழிமுத லுயிர்மெ யெலாம்வரும் யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும் 73 நன் 61 லகர முன்னர்க் கசப வயவரும் லளமுனர்க் கசப வயவரு மென்ப 74 வகர முன்னர் யளரவுயிர் மெய்வரும் வகாரை முன்னர் யகாரை மயங்கும் 75 ழகர முன்னர் மொழிமுத லுயிர்மெயாம் ளகர முன்னர்க் கசப வயவரும் றகர முன்னர்க் கசபவுயிர் மெய்வரும் கசப றகாரைமுற் கலக்கு மென்ப 76 னம்முன் கற சஞ பமய வவ்வாம் ணன முன் னினங் கசஞப மய வவ்வரும் 70 நன் 74 ரகார ழகாரங் குற் றொற் றாகா ரகார ழகாரங் குற் றொற் றொற்றா 77 ரழவல் லனபுணரிற் றன்மெய்ம் மயக்கமாம் ரழ வல்லன வுடனிலையென மொழிப 78 யரழவீ ரொற்றாங் கசதப ஙஞநம உயிர்மெய் மயக்கிற் கோர்வரம் பின்றே உயிர்மெய் மயக்கிற் கோரளவின்றே 79 ஆவி ஞண நமன யரலவ ழளமெய் அந்தமாம் அத்தமாம் ஞண நமன யரலவ ழளவே 89 குற்றுயிர் அளபீறாம் எகரமெய்க் கிலையே அளபிற் குற்றுயிர் அந்த மாகும் 83 எகரம் புள்ளியோ டிணைந்தீ றாகா 84 ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே 92 அவைதாம் ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாம் ஒற்றுமுன் உயிர்பின் னுறுமுயிர் மெய்யே 93 மெய்யொடு மேவினும் உயிர்வேறு படாஅ மெய்யொடு மேவினும் வேறுபடாவுயிர் 94 மெய்யின் இயக்கம் உயிர்கொண்டு மேவும் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் 95 இகரம் யகரமெய் இறுதி விரவும் இகரமும் யகரமும் இறுதியில் விரவும் 106 எழுத்துப் பெயர்சொலின் முதன்மயக்க மேகும் கண்ணிமை கைந்நொடி யளவே மாத்திரை இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை 96 நன் 45 வரைமித மளவு மட்டுமாத் திரைப்பெயர் மட்டள வொடுமிதம் வரைமாத் திரையே 97 உன்னல் காலே யூன்ற லரையே முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றே உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே 98 குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை ஒன்றே குறினெடில் இரண்டள பாகும் 99 மெய்ம்மாத் திரையே யரையென விளம்புப அஃகிய இஉ ஆய்தமெய் யரையே 101 மூவள பொலித்தல் ஓரெழுத் தில்லை ஓரெழுத் தொருமூன் றொலிப்ப தின்றே 103 அளபெடை மூன்றன்மே லாகு மென்ப அளபெடை மூன்றன்மே லாமென மொழிப ஒற்றள பெடைஐஔக் குறுக்கமொன்றாம் ஐஔக் குறுக்கமொற் றளபெடை யொன்றே 100 இஉக் குறுக்க மாய்த மரையாம் அஃகிய இஉ ஆய்தமெய் யரையே 101 குறுகிய மவ்விற்கு மாய்தக்குங் காலே அஃகிய மகரமும் ஆய்தமும் காலே 102 விளியிசை புலம்பல் விற்கையின் மிகுமே விற்கை புலம்பிசை விளியினு மிகுமே 105 அகரம் இகரம் ஐகார மாகும் அகரம் யகரமெய் ஐகார மாகும் அகரமு மிகரமு மைகார மாகும் 107 அகரம் உகரம் ஔகார மாகும் அகரம் வகரமெய் ஔகார மாகும் அகரமும் உகரமும் ஔகார மாகும் மெய்க ளகரமே நெட்டுயிர் காரமே ஐஔக் கானே இருமைக் குறில்கள் இரண்டுடன் கரமே எழுத்துச் சாரியை நெட்டெழுத் தெல்லாங் காரமொடு நிலையும் 109 அவற்றுள் ஐஔக் கானு மடையவும் பெறுமே 110 காரங்கான் கரம் பெறுமிருமைக் குறில் 111 4. பன்மொழியாக்கப் படலம் 2. மொழியியல் - முத்துவீரியம் மொழிந்த எழுத்தான் மொழிவதே மொழியாம் சொன்ன எழுத்தினாற் சொல்வதே சொல்லாம் 115 உயிர்நெட் டெழுத்தே ழோரெழுத் தொருமொழி உயிர்நெடி லேழு மோரெழுத் தொருமொழி 116 குற்றெழுத் தைந்தும் மொழிநிறைந் தியலா குற்றெழுத் தைந்துங் கொளாமொழி என்ப 117 சகதந பமவ வருக்கமவ் வாறாம் உயிர்போற் கசதந பவம என்மொழி ஆகு மென்மனார் அறிந்திசி னோரே 118 மொழியே பெயர் வினை யிடையுரி நான்கென மொழிப மொழி பெயர் வினையென மொழியப் படுமே 119 பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிற்பெயர் பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலொடு வருவது பெயரென வழுத்தப் படுமே 120 வினைபல நிகழினும் வினைச்சொல் என்க வினைபல நிகழினும் வினைஎனப் படுமே 121 பெயர்வினை யிடத்துப் பிறப்ப திடைச்சொலே பெயர்வினைக் குணங்களைப் பெருக்குவ துரிச்சொலே பெயரிரு திணையைம் பான்மூ விடம் பெறும் 122 தனிமொழி இணைமொழி துணைமொழி பொதுமொழி கணமொழி தணமொழி கலப்புறு மொழியேழ் மொழியே தனியிணை துணைபொது தணங்கணங் கலப்புறு மொழியோ ரேழென மொழிநரு முளரே 123 மொழியே ஓரெழுத் தாதியா ஒன்பதெழுத் தந்தமாம் மொழியே ஒரெழுத் தாதியொன் பானெழுத் தந்தமாம் 124 5. வடமொழிப் படலம் சநுக்கிரகஞ் சங்கத மவப்பிரஞ்சநம் பாகதம் மொழிநான் கென்றே மொழியப் படுமே. சங்கதம் பாகதம் சநுக்கிர கம்பவப் பிரஞ்சன நான்கெனப் பேசுங் கிளவி 141 சநுக்கிரகஞ் சங்கதந் தேவர்மொழி என்ப சங்கதஞ் சநுக்கிரகந் தருநிலத் தவருரை 142 அவப்பிரஞ் சநமொழி யசேதனர்க் காகும் அவப்பிரஞ் சனமசே தனர்மொழி யாகும் 143 எல்லா நாட்டினும் இயல்வது பாகதம் எல்லா நாட்டினும் இயல்வது பாகதம் 144 பாகதம், தற்பவம் தற்சமம் தேசிய மெனப்படும் தற்பவம் தேசிகந் தற்சமம் எனப்படும் 145 ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பால் ஆனவீ ரெழுத்தால் அமைவது தற்பவம் ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பால் ஆனவீ ரெழுத்தால் அமைவது தற்பவம் 146 ஆரியந் தமிழ்பொது வாமொழி தற்சமம் ஆரியந் தமிழ்பொது வாமொழி தற்சமம் 148 தேசியந் திசைச்சொல் என்று செப்புக தேசிக மென்பது திசைச்சொல் லாகும் 147 தீர்க்கம் குணம்விருத்தி சந்திமூ வகையாம் சந்தி தீர்க்கங் குணமே விருத்தி எனமூ வகைப்படும் என்மனார் புலவர் 149 அ ஆ முன் அ ஆவரில் இரண்டுங்கெட் டாவாம் அஆ இறுதிமுன் அ ஆ வரினே இருமையுங் கெடவா ஏற்கும் என்ப 150 இஈமுன் இஈவரில் இரண்டுங்கெட் டீயாம் இஈ இறுதிமுன் இஈ வரினே இருமையுங்கெட ஈயேற்கும் என்ப 151 உஊமுன் உ ஊவரில் இரண்டுங்கெட் டூவாம் உஊ இறுதிமுன் உஊ வரினே இருமையுங் கெடஊ ஏற்கு மென்ப 152 அ ஆ முன் இஈவரில் இரண்டுங்கெட் டேயாம் அஆ இறுதிமுன் இஈ வரினே இருமையுங் கெடஏ ஏற்கும் என்ப 153 அ ஆ முன் உஊவரில் இரண்டுங்கெட் டோவாம் அஆ இறுதிமுன் உஊ வரினே இருமையுங் கெடஓ எய்து மென்ப 154 அஆமுன் ஏஐவரில் இரண்டுங்கெட் டையாம் அஆ இறுதிமுன் ஏஐ வரினே இருமையுங் கெடஐ எய்தும் என்ப 155 அஆமுன் ஓஔவரில் இரண்டுங்கெட் டௌவாம் அஆ இறுதிமுன் ஓஔ வரினே இருமையுங் கெடஔ எய்தும் என்ப 156 இகர ஏகார முதற்கை யாகும் இஏ முதற்கை யாமென மொழிப 157 உஊ ஓமுதல் ஔவா கும்மே முதலில் உஊஒ ஔவா கும்மே 158 மொழிமுதல் அகரம் ஆவா கும்மே அகர முதன்மொழி ஆகார மாகும் 159 எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் உயிர்வரில் அந்நும் ஒற்றுறில் அவ்வுமாம் நிர்துர் நிகுவி பொருளின்மை நிகழ்த்தும். வடமொழி உயிர்முன் வன்கணம் இயல்பாம். ஏயென் விகுதி எய்தும் பிள்ளைக்கே. அஐ ஔமுத லாகமந் திரிபாம். உரைகளிற் கண்ட - பேரகத்திய மேற்கோள் நூற்பாக்கள் இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின் றெடுபடும் இலக்கணம் நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர் பே. அ. தி. 15 அவையே, அகம்புறம் அண்மை சேய்மை பொதுமைக்கணாம் பே. அ. தி. 18 யாவென் வினாவே அஃறிணைப் பன்மை விகுதி பெறுங்கால் ஐம்பாலினும் வினாவாம் பே. அ. தி. 21 எழுவாய்ச் சந்தியின் இசைவலி இயல்பே வியங்கோள் விகுதிமுன் வலிஇயல் பாகும் இரண்டன் விபத்தி எஞ்சில்வலி இயல்பே பெயரே அன்றிப் பிறவுரு பேலா அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும் ஆறன் உருபென் றறைதல் வேண்டும் பே. அ. தி. 15 கூறு படுத்தலாற் கூற்றெனப் படுமே இட்டுவிட் டிரண்டும் வினையிடைச் சொல்லே பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் புத்தகம் சேனை அமைந்த கதவ மாலை கம்பல மனைய வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியும் தமக்கவை கருவியும் தாமாம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையான் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் ஆறன் உருபே யதுவா தவ்வும் வேறொன் றுடையதைத் தனக்குரி யதையென விருபாற் கிழமையின் மருவுற வருமே பே. அ. â.9 மற்றுச்சொன் னோக்கா மரபின் அனைத்து முற்றி நிற்பது முற்றியன் மொழியே காலமொடு கருத வரினும் ஆரை மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே காலமும் வினையும் தோன்றிப் பால்தோன் றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே. புதிய ஐந்திறம் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா அழைப்பிதழில் ஐந்திறம் நூல் வெளியிடுதல் என்னும் குறிப்பு இருந்ததை அறிந்த போது ஏற்பட்ட உவகைக்கு அளவில்லை. தொல் காப்பியம் சுட்டும் ஐந்திரம் வாய்ப்பின் வாராது வந்த மாமணி என்பதற்கு ஐயமேதும் உண்டோ? அழைப்பிதழில் ஐந்திரம் என்பது ஐந்திரம் என்பதாகவே இருந்தாலும், அதனை இயற்றியவர் இன்னார் என்னும் பெயர் இல்லாதிருந்தாலும், பழநூலா புதுநூலா என்னும் குறிப்பு அறியவாரா நிலையில் இரந்தாலும், நூலை எப்பொழுது காணபோம் ! எப்பொழுது கற்போம் ! என்னும் ஏக்கமே அலைத்துக் கொண்டிருந்தது. புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப்பர் என்பது கம்பர் தொடராயிற்றே ! ஐந்திறம் தொல்காப்பித்திற்கு முந்து நூலே என்றும், மயன் என்பவரால் அருளப்பட்டது என்றும் நூல் வெளி யீட்டின் போது நுவலப்பட்ட செய்தி தேனாகத் தித்தித்தது. முன்னரே அலைந்து வந்த ஆர்வத்தை அளவிறப்பச் செய்து எட்டா உயரத்திற்கு ஏற்றிவிட்டது. நூல் வெளியீடும் ஆயிற்று. மேடையில் இருந்த ஒரு சிலர் கைக்குள் மட்டும் நூல் புகுந்தது. வேண்டி விலைக்குப் பெற விரும்புவார்க்கும் படியில்லை. வாய்த்தற்கரிய நூல், வாய்க்குங்கால் மேடையிலேயே வாங்க விரும்புவார்க்கும் வாயாமை என்ன மூடு வேலை வேண்டியிருக்கிறது என்று எண்ணத் தோன்றியது. நாள்கள் செலத்தரியாமல் நின்ற நந்தனார் நிலைக்கே நூலார்வம் ஏவியது. பின்னே ஒருவகையாகக் காலங்கடந்தேனும் நூலைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. நூலின் புறத்தோற்றம், அட்டைக்கட்டு, தாள்நேர்த்தி, அச்சீட்டு நலம் ஆயவை ஒன்றின்மேல் ஒன்றாய் உயர்ந்து சென்றன. மேற்பார்வையா லேயே நூலழகு வாய்ப்பதாயிற்று; புற அழகும் போற்றத் தக்க பெருமைக்குரியதே யன்றோ ! மாண்புமிகு கல்வியமைச்சரின் அணிந்துரை, மாமல்ல புரச் சிற்பக் கலைக்கல்லூரி முதல்வர் அறிமுகம் ஆகியவை, போட்டி போட்டுக்கொண்டு நூற்சிறப்பையும் நூல்வரவையும் நுவல்பவற்றைப் படித்த அளவில் நொடிப்பொழுதும் விடாது குடித்தே தீரவேண்டும் தேன் இந்நூல் என்னும் கிளர்ச்சி என்ன, வெறியே உண்டாயிற்று. ஐந்திறம் தோன்றி எண்ணாயிரம் ஆண்டுகள் ஆகின்றன வாமே ! தொல்காப்பியத்திற்கு முந்து நூலாமே ! மயன் என்பார் அருளியதாமே ! அம் மயனார் தந்தையார் பெயர் தாமரையும் தாயார் பெயர் கருங்குழலியுமாமே ! இயற்கையின் ஐந்தியல் இலக்கணத்தை மொழியில் ஏற்றி மூலத்தில் பிறந்திடும் ஐந்தெழுத்தில் தொடங்கி இறுதியில் எழுத்து சொல் பொருள் சுட்டு அணி என்ற ஐந்தியல் மரபை மயன் தோற்றுவித்துக் கொடுத்த ஐந்திறமாமே ! இருபத்தைந்து ஆண்டுகளின் முன்னே நான்கு ஆண்டுகள் தஞ்சை சரபோசி நூலகத்தில் தங்கிப் பத்திலக்கம் பாடல்களை மனப்பாடம் செய்துவிட்ட அரும்புலவர் வீரபத்திரர் மனத் தகத்துக் கொள்வாரின்றித் தேக்கி வைத்திருந்து கொண்டு ஆக்கியதாமே ! தமிழ்த்துறை ஆராய்ச்சிப் பேரறிஞர் ஒருவர் அறிமுகப் படுத்தி மூதறிஞர் பலரிடம் கருத்துக் கேட்க (அவர்களெல் லாரும் பெயர் சுட்டிக் காட்டவும் கூடாத அத்துணைப் பேரறிஞர்கள் போலும்) அவர்கள் பாராட்ட இந்நூல் வெளிவருகின்றதாமே ! அவ்வாறாயின், உடனே குடிக்க வெறி வராதா? என்ன ! பாட்டு தொகைகளில் இடம் பெறாத பெயர் மயன் என்பது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை ஆகிய நூல்களில் தொலைக்காட்சி போலவும் கனவுக் காட்சி போலவும் காட்டப்படும் மயன் செய்த நூலா ஐந்திறம் ! அடியார்க்கு நல்லாரையும் நச்சினார்க்கினியரையும் தப்பியோ இவ்வைந்திறம் இருந்தது? அதிலும் இந் நூற்றாண் டின் இடைக்காலம் தாண்டியுமா இருந்தது? என்னே விந்தை ! விந்தையிலும் விந்தை ! தென்மொழிக் கலைச் செல்வர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதர் கையிற்கும் தட்டுப்படாத விந்தை! சரசுவதிமகால் நூல் நிலையத்தில் இந்நாள் காணப் பெறாமல் கரந்துறை விந்தை ! சரசுவதிமகால் நூற்பதிவு ஆவணங்கள் எதிலுமே இடம் பெறாது வீரபத்திரர்க்கு மட்டுமே தன் போரொளி காட்டிப் பெருமை பெற்றுக்கொள்ள இருந்த விந்தை ! ஐந்திறம் என்ற தலைப்பில் ஒரு தொன்னூலானது தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் குவிந்து கிடந்த சுவடித் தொகுப்பிலே இருக்க அதனை ஒரு புலவர் பெருமகன் தன் மாணவப் பருவத்தில் மனப்பாடம் செய்துள்ள செய்தியினைக் கேட்டு அகமகிழ்ந்து எழுதச் செய்து அந்த நூலைப் பல அறிஞர் பெருமக்களிடமும் ஆய்வாளர்களிடமும் காட்டி ஒப்புதலும் பெற்று இன்று அச்சேறிய நூலாக அது தமிழ்ப் பெருமக்களிடம் பெருமகிழ்ச்சியுடன் வழங்கப்படுகிறது என்கிறது அணிந்துரை. குவிந்து கிடந்த சுவடித் தொகுப்பாம் ! மாணவப் பருவமாம் ! மனப்பாடமாம் ! புலவர் வீரபத்திரனார் சுமார் இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு தஞ்சாவூர் சரபோசி மன்னர் பாதுகாத்து வைத்திருந்த நூல் நிலையத்தில் நான்காண்டு காலம் தங்கி யிருந்து அந்நூல்களையே மனப்பாடம் செய்துவிட்டார். அதுவும் எத்தனை பாடல்கள்? நான்காண்டு காலத்தில் பத்து லட்சம் பாடல்களை மனனம் செய்து வைத்துக்கொண்டார். அவர் தம் நினைவாற்றல் தான் எத்தனை வலுவானது மயன் இயற்றிய ஐந்திற நூலில் மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் ஓவியக்கலை சிற்பக்கலை கட்டடக்கலை இசைக்கலை மற்றும் நாட்டியக்கலை ஆகிய நுண் கலைகளின் இலக்கணங்களும் அவற்றைச் சார்ந்த அறிவியல் நுட்பங்களும் பெருமளவில் வருகின்றன. எனவேதான் தொல்காப்பியர் அவற்றை முழுமையாகக் கொண்டிடாமல் மொழியிலக் கணத்தை மட்டும் பிரித்தெடுத்துத் தம்முடைய இலக்கண நூலை ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியம் என்று சொல்லிக் கொண்டாரோ என நினைக்க வேண்டியிருக்கிறது. முதற்சங்க காலத்தில் பிறந்த சிற்பி மயன் நிலந்தரு திருவிற் பாண்டியனால் ஆதரிக்கப் பெற்றுக் குமரி மாநிலத்தில் கடல் முல்லை என்ற ஊரில் சிற்பக் கலைக்கூடம் நிறுவி, தன்னால் நிறுவப்பட்ட மரபுசார் சிற்பக் கலையினை மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கலைத்தொண்டு செய்து வந்தான். தில்லை மாநகர்தனில் ஒளிநடராசனுக்குக் கோயில் கட்டி அதனைப் பொன்னவையாக ஆக்கி இன்று உலகம் போற்றும் ஐந்து உலோகத்தாலான ஆடவல்லானின் திருவுருவையும் அவனே ஆக்கியமைத்துப் போற்றியும் வந்தான். கபாடபுரமாகிய மதுரை மூதூர் காலத்தால் இடப் பெயர்ச்சியாகி இன்று மதுரையாக விளங்குகிறது. - என்றெல்லாம் ஐந்திற அறிமுகவுரை நீள்கின்றது. மயனே என ஐயுறும் தச்சன் என்னும் சிந்தாமணிக்குத் தொழிலால் மயனே எனத் துணிந்து வடிவால் ஐயமுறும் தச்சன் என்று உரை விரிக்கும் நச்சினார்க்கினியர் (234) உரைபோலவே ஐயமுண்டாகும் விந்தை ! இனி நூல் ஐந்திறம் ஆயிற்றே. ஐம்பகுப்பு எவை என்று பார்த்தால், நூல் ஐந்திறந்தான்; பகுப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது? 285 பக்கங்களில் 892 நூற்பாக்களில் இயலும் இடையீடிலா ஒரு தொடர் ஐந்திறம் ! ஒழுங்கமைந்த ஒரு நூலாக இருந்தால் அல்லவோ வகுப்பும் பகுப்பும் தலைப்பும் செய்தியும்! ஐந்திறம் பழந்தமிழ் இலக்கணம் நூற்பா என்னும் முக்குறிப்புகள் மட்டுமே முதற்குறிப்புகளாய் அமைந்துள்ள நூலில் ஐந்திறத்தை எவர் காண்பார்? எவர் பகுப்பார்? பகுப்பு என ஒன்று இருந்தால் அன்றோ பகுத்துப் பார்க்க முடியும்? என்ன படித்தோம் என்பது ஒரு பக்கத்தில் புலப்பட வேண்டா; நூல் முற்றும் பார்த்த பின்னராவது புலப்பட வேண்டாவா? எதுவுமே புலப்படாமல் சொல்லடுக்கே அமைந்த நூலில் பொருளுக்கு என்ன வேலை? ஐந்திரமோ ஐந்திறமோ - போகட்டும். எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலில் நூற்பா என்னும் சொல்லாட்சி எப்படி வந்தது? நன்னூலுக்குப் பின்னூல்களும் அறியாத நூற்பா என்னும் ஆட்சி தொன்னூலாம் தொல்காப்பியத்திற்கும் முன்னூலாம் ஐந்திறத்தில் முதற்கண் நிற்பானேன்? பாவகைகளைக் கூறும் தொல்காப்பியம் நூலினான உரையினான என்பதைக் கொண்டல்லவோ சூத்திரம் என்பதை இவ்விருபதாம் நூற்றாண்டில் ஆக்கிக் கொண்டது அன்றோ நூற்பா என்பது. பல்திறப் பொருளைப் பாங்குற விளக்கிச் சில்வகை எழுத்திற் றிறநிலை காட்டித் திட்பமும் நுட்பமும் செப்புவ நூற்பா என்பதிலுள்ள நூற்பா என்னும் சொல்லாட்சியே வழுக்கிவிட்டுக் காலைவாரிக் குப்புற தள்ளுகிறதே ! ஈதென்ன? மயளார் நூல்தானா? அன்றிக் கருமாரிதாசர் வீரபத்திரர் மயனாக உருமாறி இயற்றிய நூல்தானா? வீரபத்திரனார் இயற்றிய நூலென்றால் காலம், சொல்லடைவு, பொருள் போக்கு ஆயன பற்றியெல்லாம் நாம் கருதி இடர்ப்பட வேண்டியதில்லை. மயனார் நூல் என்றும் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல் என்றும் சொல்லும் போதல்லவோ வாராச் சிக்கல்கள் எல்லாம் வருகின்றன. தொல்காப்பிய வழியே தமிழுக்கு வாய்த்த அடைமொழி ஒன்றே. அது செம்மை என்பதாம். செந்தமிழ் என்பதையன்றி நாம் இந்நாளில் தமிழுக்கு வழங்கிவரும் அடைமொழி எதனையும் தொல்காப்பியத்தில் காணற்கு இல்லை. ஆனால் அவர் காலத்திற்கு முன்னவராகக் கூறப்படும் மயனார் ஐந்திற நூலில், தென்மொழி, முதன்மொழி வருகின்றன. செந்தமிழோடு தண்டமிழும் வருகின்றது. அம்மட்டோ? ஐந்தியல் தமிழ், ஒளித் தமிழ், கோலத் தமிழ், செழுந் தமிழ், தெள்ளு தமிழ், தெளி தமிழ், முழுத் தமிழ், விண்டமிழ் எனப் பலப்பல அடைகள் மிடைய நடையிடுகின்றதே ஐந்திறம். இது காலப் பழமைச் சான்றா? இந்நாளைப் புதுமைச் சான்றா? தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதை எவரே அறியார்? தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளும் அமைந்த நூல்தானே ! இறையனார் களவியல் உரைகாரர் காலத்தில் அன்றோ யாப்பு என்பது தனியே எண்ணப்பட்டு நான்கு கூறுபட நடந்ததாகிய செய்தி உள்ளது. அதன் பின்னர் அன்றோ அணியென ஒன்றும் எண்ணப்பட்டு இலக்கணம் ஐந்தென நடையிடலாயிற்று. இவ்வாறாக மூலப்பழமை நூலாம் ஐந்திறத்தில் ஐந்திலக்கணக் கூறுபாடு அமைந்துளது எனின் (செய்தி எதுவும் இல்லை; பெயர் மட்டும்) அந்நூல் மூலப்பழ நூலன்று. பிற்படு நூல் என்பதே வெளிப்படையல்லவோ ! முதல் ஐம்பது நூற்பாக்களுள் மட்டும், ஐந்தியல் மொழியாய் (10) ஐந்தியல் தமிழே (33) ஐந்தியல் தமிழிந் நூல் (35) செந்தமிழ் ஐந்தியல் நூலே (38) ஐந்தியல் அறிவரே (39) ஐந்தியல் செந்தமிழ் ஐந்திற நூலே (40) ஐந்தியல்கோலம்......Iªâw நூலே (42) ஐந்திறம் உரைப்பதிந் நூலே (43) ஐந்திறம் ஆய்ந்தோர் (44) ஐந்தியல் வரம்பாய் ஒளிவளர் ஐந்திறம் (45) ஐந்திறத்தியல் நெறி (46) ஐவகை ஆய்தல் பெருங்கலைத் திறனே (50) என இத்தனை முறை என்றால் நூல் முழுவதும் வரும் ஐந்தைத் திரட்டின் ஐம்பது பக்கம் சேர்ந்துவிடும். எழுத்தே சொல்லே பொருள்சுட் டணியென வழுத்து மைந்தியல் முறைநெறி வழக்கே (9) எழுத்தும் சொல்லும் பொருளும் விளக்கி வழுவிலாக் கட்டணி வளமுற வகுத்து செழுமலர் ஐந்திதழ் செம்மலர் என்ன முழுத்தமிழ் ஐந்தியல் நூல்நெறி யன்றோ (36) தெள்ளு தமிழியல் எழுத்தியல் வகுத்து விள்ளும் சொற்பொருள் கட்டணி வகையால் உள்ளும் ஆற்றலை உரைப்பதிந் நூலே (37) இன்னும் எத்தனை முறைதான் ஐந்தியலைக் கூறுவது? ஐம்பகுப்பு என்பதற்கு ஐம்பது நூற்பாவா? நூறு நூற்பாவா? இலக்கணம் bசான்னால்mல்லவோmதற்கெனüற்பாnவண்டும்?இப்படி எண்ணியே நூலாக்க வேண்டும் என்றால் எண்ண வேண்டியது தானே ! கழகம் என்பதொரு பழஞ்சொல். அது வள்ளுவத்திலும் (935, 937) கலியிலும் (136) ஆளப்பட்டுள்ளது. எப் பொருளில் ஆளப்பட்டுள்ளது? சூதாடும் இடமே கழகம் என்பது அக்காலப் பொருள். கழகம் என்பதற்குக் கலைபயில் இடம் என்னும் பொருள் கண்டவர் கம்பர். கந்தனை அனையவர் கலைதெரி கழகம் என்றார் அவர் (பால. 93). கழகம் என்பதற்குத் தமிழ்ச்சங்கம் எனப் பொருள் விரித்தவர் திருவிளையாடற் பரஞ்சோதியார். கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் என்றார் அவர் (திருநாட்டு. 57) கழகம் என்னும் சொல்வரலாறு இவ்வாறாகவும் ஐந்திறம், தீந்தமிழ்க் கழகச் சான்றோர் என்கிறதென்றால் (892) எப்படி அது முந்தை நூலாம்? இருபதாம் நூற்றாண்டில் அயல் நெறிகள் படைபடை யாய்ப் புகக் காண்கிறோம். தொல்காப்பியர்க்கு முந்தைக் காலத்தே அயல் நெறிப் புகவு உண்டா? அயல்நெறி சாராத்தமிழ் (862) என்கிறதே ஐந்திறம் ! ஐந்திறம் நூற்பாவால் இயன்றது என்னும் குறிப்பைக் கண்டோம். நூற்பா எனின் அகவல் நடைத்தேயன்றி அகவலே யன்று. சீரடியுண்டு. அசையடியும் கூனாதல் உண்டு. இருசீர் முச்சீர் அடிகளும் உண்டு. ஆனால் ஐந்திறமோ எங்கும் நாற்சீர் அடியை அன்றி முச்சீர் அடிதானும் கொண்டிலது. ஓரடியானும் ஈரடியானும் வந்தாலும் அகவலடியாகவே அமைந்துளது. மேலும் அகவல் எனின் அதன் முடிநிலை தேமா, புளிமாச் சீர்களில் ஏயென முடிதல் சங்கத்தார் போற்றிய நெறி. பாட்டு தொகைகளில் உள்ள எந்த அகவலை எடுப்பினும் இந்த நெறியில் மாற்றம் இல்லை. ஆனால் ஐந்திறத்தார் அகவலோ பாடலே (71) ஆய்வரே (78) எண்ணறிவாளனே (73) பேரறிவாளனே (74) உச்சியே (771) ஆற்றலே (749) நுட்பமே (884) மெய்ந்நெறி (891) எனக் கூவிளச் சீரிலே முடிந்துள்ளது. உணர்வனே (75), அறிவரே (135, 254), திறமுறும் (190), சிறக்குமே (296), இலங்குமே (231), தெரிவரே (258), நவிலுமே (772) எனக் கருவிளச் சீரிலும் முடிந்துள ! இவை முன் வழக்கன்றாம். பின்வழக்கெனினும், பிழை வழக்காகும். எம்மரபுப் பாவும் உகரம் கெட்டுவருதலை ஒப்புவதில்லை. மயன் நெறி மாநெறி என்னும் ஐந்திறமோ உகரக்கேடு பற்றிக் கருதாமல் அசைச் சீராகித் தளைகெடுதல் பெருவரவுடையது. அன்றியும் உகரம் கெடும் என்னும் எண்ணம் உண்டாகிய இடங்களிலெல்லாம் ஏகாரம் இட்டு இசைத்து நிரப்புதல் அதனினும் பெருவரவுடையது. விருத்தம் என்னும் பாவினம் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ அறியாப் பின்வரவினது. மயனார் அறுசீர் விருத்தம் பாடுகின்றார்: நிலந்தரு திருவின் வேந்தன் நற்றமிழ் அவைக் களத்தே என்னும் தொடக்கம் முதல் மூன்று, அறுசீர் விருத்தங்கள் பாடியுள்ளாராம் ! அவை எந்நூலில்? ஏன்? புரியவில்லை. அறிமுகத்தார்க்கும் ஆசிரியர்க்குமே வெளிச்சம். சிரத்தினால் போற்று கிறேன் சிறியோன் மயனே யன்றோ மயனார்க்கு மறந்தும் கூட இவ்வளவு சிறுமை சேர்த்தல் தகுமா? மயன்தமிழ் ஒளிநெறி மயன் நெறி ஒளித்தமிழ் மயத்தமிழ் மாத்தமிழ் (865) மயன்நெறி மயன் கலை, மயன்தமிழ், மயன் வகு நெறித்தமிழ், (866) மயன் நெறி ஒளிநெறி, வண்டமிழ் மயன்நெறி (868) மயல்நெறி நீங்கல் மயன்நெறி மரபே (884) மயலற நோக்கி மயன்நெறி ஒர்ந்து (884) அயல்நெறி சாராத் தமிழொளியுணர்வால் மயத்தமிழ்ச்சிற்பி (893) இப்படி மாண்புறு மயனார் தம்மையும் தம் நெறியையும் எப்படித்தான் தலைகால் தெரியாமல் புகழ்ந்து கொண்டாரோ? மயனாரை இத்துணைச் சிறுமைக்கு ஆக்கத் திட்டமிட்டாலும் எவர்க்கும் இயலாதாம் ! ஐந்தறைப் பெட்டியைத் தமிழ்மண் நன்றாக அறியும். ஐந்து அறைப் பகுப்பு மட்டுமன்றி, இத்தட்டில் இப்பொருள் என வைப்பு முறையும் அதில் உள்ளமையால் எங்கோ பார்த்துக்கொண்டும் எந்தப் பொருள் வேண்டுமோ அந்தப் பொருளை எடுத்துக்கொள்ளக் காண்கிறோம். பெரிய பலசரக்குக் கடையே எனினும் எடுத்துக் கொடுப்பதற்கும் எடுத்துக் கொடுப்பதைப் பிடித்து ஏற்றற்கும் அமர்த்தப்பட்ட எடுபிடிச் சிற்றாள்களும் எளிமையாக இடம் கண்டு, இனம் கண்டு பொருளை எடுக்கக் காண்கிறோம். இக்காலப் பல்பொருள் அங்காடி என்ன, மருந்து கடை என்ன, துணிக்கடை என்ன எங்கும் வைப்பு முறை போற்றலே வழக்கு. அதன் நலப்பாடோ பெரிதினும் பெரிது. வைப்பு முறை பேணார் ஒரு பொருளை எங்கோ வைத்துவிட்டு அதனைத் தேடி எடுத்தற்குப் படும் பாடும் செலவிடும் பொழுதும் பட்டறிவுடையார்க்குத் திட்டமாகத் தெரிந்தவை. பல இலக்கம் நூல்கள் இருக்கும் ஒரு நூலகம் ஆயின் என்ன, பல்லாயிரம் நூற்பாக்களையுடைய ஒரு நூலினகம் ஆயின் என்ன, வைப்புமுறை செவ்விதின் அமைந்திருப்பின் இடரின்றி வேண்டுவதை எடுத்துக் கொள்ளலாமே ! வைப்புமுறை என ஒன்று இல்லாக்கால் அதனை வைத்திருந்த பேறும் இல்லையாய்ப் போதலன்றோ கண்ட காட்சி. இவை இவ்வாறாகவும், முதல் நூற்பா முதல் இறுதி நூற்பா முடிய எங்கும் வைப்பு முறை பேணாத நூலாக ஐந்திறம் உள்ளது. அன்றியும் கூறியது கூறலாக அமையாத சொல்தானும் இல்லை எனின், நூற்பா ஒன்றனைக் காணவும் கூடுவதோ? கூறியது கூறல் என்று சுட்டுவதும் எண்மையாய் அன்று, கூறியது கூறல் குற்றம் இன்று. வேறொரு பொருளைப் பயக்கு மாயின் என்னும் இலக்கண விதிவிலக்குப் பற்றிய தெளிவொடு பார்ப்பினும் கூறியது கூறலாய் வருவன ஒருமுறை இரு முறையா? இருபது முறை முப்பது முறைகளா? கூறியது கூறலே ஒரு நூலாகும் எனின் அதன் பெயர் இவ்வைந் திறந்தானோ என எவரும் அறிவார் ! தொடக்க ஓம் பார்க்க (1). தொடர்ந்தும் ஓம் பார்க்க. ஓம் கலை; ஓம் நெறி; ஓம்மறை பார்க்க (885) ! இடையே வரும் ஓம் எண்ணின் எத்தனை நூறு ஓம் ! தொல்காப்பியத்திலோ பாட்டுத் தொகைகளிலோ இடம்பெறா ஓமே இவ்வாறு பயில வருமானால் பிறவற்றைச் சொல்வானேன்? மயனார் மாநெறி மாண்பினதே ! நுதலிப் புகுதல் நுவல்வோன் திறனே (373) முறைநெறி வைப்பே முன்னிய கிளக்கும் (378) என்பவை ஐந்திறம். நுவல்வோன் திறனைக் காட்டும் நுதலிப்புகுதலும் முன்னிய கிளக்கும் முறைநெறி வைப்பும் ஐந்திறத்தில் எதிர்பார்த்தால் முழுதுறும் ஏமாற்றமேயாம் ! சட்டத்தை இயற்றுவோரே சட்டத்தை மதித்திலர் என்னின் சட்டம் என்பதன் பொருள்தான் என்ன? இந் நிலையில்தான் நுதலிப் புகுதல், முறைநெறி வைப்பு, தெளிவுடைமை ஆகியவற்றையே ஊடகமாகக் கொண்டு நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனார் எட்டற்கரிய பனிமலைக் கொடுமுடிமேல் நின்று குறுமுறுவல் காட்டுதல் தெளிவாகும். ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் இடை இடையிலும் இன்னது சொல்வேம் என்பதுடன் இன்னது சொன்னோம் என்றும் முறைமுறை நூலைக் கொண்டு சென்று நிலை பெறுத்தும் திறம் பளிச்சிட்டு அவர்தம் அடிப்பொடியையும் முடிக்கணியாகச் சூடிக் கொள்ள ஏவுகின்றதாம். நூல் என்பதே இலக்கணக் குறியீடு. நுவல்தல் வழியாக வந்ததே நூல். சொல்லிச் சொல்லித் தழும்பேறிய பின்னே எழுத்து வடிவு பெற்றது நூல். அதில் தெளிவும் செப்பமும் கட்டாயம் இருக்கும்; இருக்க வேண்டும். அவ்வுட் கிடையாலே தான், நூலுக்கு அழகு கூறும் நூற்பா சுருங்கச் சொல்லல் என்பதை முதற்கண் வைத்து, விளங்க வைத்தல் என்பதை அடுத்தே வைத்தது. அவ்வாறே நூற்குற்றம் இவையெனக் கூறும் நூற்பா குன்றக் கூறலை முதற்கண் வைத்து, அதனை அடுத்தே மிகைபடக் கூறலை வைத்தது. தொடர்ந்து வெற்றெனத் தொடுத்தல் மயங்கவைத்தல் முதலியவற்றையும் விலக்க ஏவியது. நூலழகு நூற்குற்ற நூற்பாக்களை முன்வைத்து இவ் வைந்திறத்தை ஆய்ந்தால் முன்னதற்குக் கைவிரிப்பும், பின்னதற்குக் கைதாங்கா அளவும் எளிதாகக் கிட்டும். முன்னே ஐந்திற நூற்பாக்கள் இரண்டு சுட்டப்பட்டன. இவ்வாறு தெளிவான ஓட்டத்தில் பொருள் காணவரும் நூற்பாக்கள் மிக அரியனவாம். மொழிமுதல் ஓமென் றுரைத்தல் வழக்கே என்பது நான்காம் நூற்பா. ஓம் தொல்லோர் ஆட்சியன்று. மொழி முதலும் ஓம் அன்று. பின்னாளைச் சமயச் சார்பு விரி அது. தமிழ் ஓம் சொல்லீறாம். அது பன்மையீறு; பலரையும் இணைத்து ஒருமையாக்கும் ஈறு; போவோம் வருவோம் கற்போம் நிற்போம் முதலியவற்றில் உள்ள சொல்லீறு காண். ஓம்பு என்பது தமிழ் ஏவல். விருந்தோம்பல், உடலோம்பல், ஊன் ஓம்பல், உயிரோம்பல் என்று ஓம்பல் வரும். பேணல், காத்தல், போற்றிக்கொள்ளல் பொருளது. ஓம்பினேன் கூட்டை வாளா என்ற நாவரசர், ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் என வேண்டிக்கொள்வார் ஒற்றியூர் உடையகோவிடம். மொழிமுதல் ஓம் என்று மயனார் ஐந்திறப் பெயரால் கூறுதல், பழையோர் தலைமேல் புதியோர் வைக்கும் பொருந்தாச் சுமையாகும். கண்ணிமை கைந்நொடி காலமாத் திரையே என்பது பதினான்காம் நூற்பா. இக்கால மாத்திரை நடிக்கும் நடிப்பு கண்கொள்ளாக் காட்சியாம்: கண்ணிமை விண்ணிமை மண்ணிமை எண்ணிமை பண்ணிமை ஐந்தும் காலக் கூறே (13) இமைநொடி யளவே எண்டருங் காலம் (23) விண்ணிமை மண்ணிமை நுண்ணிமை காலம் (24) பண்ணிமை கண்ணிமை எழுத்தியல் கூறே (25) கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிக் காலமும் எண்ணியல் நெறியால் காலம் ஓர்ந்து திண்ணிய உளமும் உழைப்புணர் வுற்றே நண்ணுவார் காலத் தியலறி மாக்கள் (93) காலத் தியலைக் கணக்கறிந் துணர்ந்தே கண்ணிமை கைந்நொடி மாத்திரை அளவாய் சீலத் துன்னி ஒலியிசை நெறியை கோலக் கட்டியல் குறிப்பது மரபே (112) நொடிநொடி மூலம் நெடிதுற நோக்கின் நொடியம் இமையம் காலம் குறிக்கும் (175) இதுவே தொடர்கதை. இறுதியது ஒன்று காண்க (874) : காலமும் விரைவும் கணக்குறுந் திறத்தால் கால நுட்பம் கணித்தினி தாய்ந்தே நொடிநொடி இமைப்பியல் இம்மியும் கருதி கடிதுறும் கால விரைவியல் ஆக்கம் தேர்த்துகள் பொழுதும் ஏர்க்கலை நொடியும் சீர்க்கலை நுண்மை திருநெறி ஆய்ந்தே காலத் தியல்நெறி கணித்துறும் நுட்பம் மூலத் திருநெறி முன்னுறும் ஆற்றல் எண்ணியல் ஐந்நெறி இயல்புற நோக்கி விண்ணிமைக் காலம் வியப்புற் றோர்ந்து பண்ணிமைக் காலம் பாங்குற நோக்கி எண்ணிமைக் காலம் இயல்புற் றாய்ந்து மண்ணிமைக் காலம் மயலறத் தெரிந்தே கண்ணிமைக் காலம் கருதி யுணர்ந்தே காலச் சுழல்நிலை அறுபான் நான்கியல் மூலம் ஐயைந் தியல்நெறி நோக்கி சிற்றவை எண்ணிலை எட்டெட் டியலால் உற்ற மாநெறி ஓங்குறுந் திறநிலை எண்ணென் இயல்தெரி கலையியல் ஆக்கம் விண்கலை நுண்கலை வியனுறத் தெரிந்தே எண்கலை இயலால் எண்முறைத் தெரிந்தே நுண்கலை நுட்பம் நுவலு மாக்கலை காலத் தியல்தெரி கணக்கியல் உன்னி மூலமும் பொருளும் அறிதல்மா நெறியே இக் காலக் கணிப்புகளை எல்லாம் முந்து நூல் கண்டு முறைப்படத் தொகுத்த ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியர் போற்றிக் கொள்ளாதது என்னே ! போற்றிக் கொள்ளாது விடுப்பின் குன்றக் கூறல் குற்றம் அவர்பாற் சேருமே ! இவை வெற்றெனத் தொடுத்ததாய் எண்ணி விடுத்தார் என்னின் இவர் நூற்குப் பழியாகுமே ! முன்னூற் பெயரிட்டு அந் நூற்கும் பின்னூற்கும் செய்யும் பெருமையோ இது. எல்லா நூற்பாக்களும் வேண்டா. இறுதிய நூற்பாவை மீண்டும் பார்க்க. 24 அடிகளையுடைய இந் நூற்பாவின் சொல்லழகு எத்தகைத்து ! எனினும் என்ன? பொருள் காண முடிகின்றதா? எவரேனும் இந் நூற்பா கூறும் செய்தியைத் தெளிவாக்கிக் செல்விக்கு எழுதுக என வேண்டுகோள் விடுத்து ஓரைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நூலாசிரியரும் (பொறுக்க) மனத்தகத்துத் தேக்கி வைத்திருந்து ஒப்பித்த பெருமகனாரும் உள்ளார் ! அவர் நூற்குச் சான்றுரைத்த பெரு மக்களும் உள்ளனர். மாநாடு கூட்டிக் கருத்துரைத்த பேராசிரியர் களும் உள்ளனர். எனினும் ஒருவரும் உரை கூற முன்வாராமை என்ன? இட்டுக்கட்டிய சொற் சிலம்பத்திற்கு என்ன பொருள் கூறுவது? தமிழ்மயச் சிற்பியார் வெறும் கொற்றரோ கற்றச்சரோ அல்லர். மயநெறியர்; மாநெறியர். அவர் மொழியில் கட்டிடம் வரலாமா? கட்டடம் தொழில் பெயர். கட்டுமான வேலையை - சுவரை -க் குறிக்கும். கட்டிடம் - மனை கட்டும் இடத்தைக் குறிக்குமே ! எத்துணை வேறுபாடு? குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே என்பது தொல்காப்பியம் (44). உயிரைங் குறிலே ஓசை நிறை மொழி என்பது இவ் வைந்திறம் ! இக் கருத்தில் எவர் முரணர்? இவ் வைந்திறத்தின் மயக்கோல மாநெறி முற்றிலும் பொய்ம்மை வழிப்பட்டது என்பது நோக்கிய அளவால் எவர்க்கும் புரியும். எனினும் கருமாரியார் வயப்படுத்தும் திறம் பெரிதே ! அவர்தம் கணியப் புலமையும், கருமாரி தாசராம் நிலையும் பலரை மயக்கி அவர் வழியில் ஊன்ற வைத்து உரிமைப்படுத்தியிருக்கக் கூடும். அதன் வரவால் அவர் தனித் தமிழ்ச் சொல்வளப் பெருக்குடையார் என்பது இந் நூலால் வெளிப்படுகின்றது. அவர்தம் தனித்தமிழ்ப் பற்றுமையும் வெளிப்படுகின்றது. அவற்றைக் காண்க. ஐந்திறம் சங்கச் சான்றோர்களை, அழகுறுந் தீந்தமிழ்க் கழகச் சான்றோர் என்றும், ஆன்றவிந் தடங்கும் அருந்தமிழ்ச் சான்றோர் என்றும் வழங்குவதும், அவர்தம் அவையைச் செந் தமிழ்ச் சான்றோர் சீரவை என்று குறிப்பதும், ஆங்கு அரங்கேறி யது, அயல்நெறி சாராத் தமிழ் என்று சுட்டுவதும் (892) நூல் நிறைவில் நெஞ்சு நிறையும் செய்திகளாம் ! தமிழே உலக முதன்மொழி என்றும், அத்தமிழ் தொன்னிலமாம் தென் தமிழ்க்குமரி நிலமே என்றும், அத்தமிழே உலகெலாம் பரவிச் சென்றது என்றும் உள்நாட்டு வெளி நாட்டுப் பேரறிஞர்கள் அறிவியல் முறையால் ஆய்ந்தும் வெளியிட்டும் வருவது இந் நூற்றாண்டுக் கொடையாம். இக் கொடையை அறியும் நாம், பைந்தமிழ் ஒலியே பாரொலி (548) தென்மொழி பன்மொழி மூலம் (810) தென்மொழி முதன் மொழி (223) உயிர்க்குல முதன் மொழி (810) எனவரும் ஐந்திறத் தொடர்களை அறிந்து இறும்பூது எய்துகிறோம் : எம்மொழிக் கலப்பும் இயையாப் பழநாளில் தனித்தமிழ் என்னும் ஆட்சியில்லை. தமிழ் என்பதே தனித்தமிழாக இருந்தமையால் தனிச்சுட்டு வேண்டத் தக்கதில்லையாய் இருந்தது. கலப்பு மிகுந்த பின்னாளில் ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ? என்று நாணுத்தகவின்றி, ஈசான தேசிகர் நகையாண்டி செய்த நகையே தனித்தமிழ்ப் பெயராட்சி யைத் தமிழுலகுக்குத் தந்ததும் தனித்தமிழ் இயக்கம் கால் கொள்ளத் தூண்டலாய் அமைந்ததுமாம்! ஐந்திறம், தனித்தமிழ் தனித்தமிழ் ஐந்தியல் என்னும் ஆட்சிகளைப் பெருக வழங்குவதுடன் தனித்தமிழ் நூலொன்று ஈதோ என எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்தது; அவ்வகையில் அருமைப்பாடு உடையதாம். தமிழைத்தான் ஐந்திறத்தார் எத்துணை வகையாகக் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கிறார். அயல்நெறிசாரத் தமிழ் தமிழ் எண்டமிழ் அருந்தமிழ் அழகுறுந் தீந்தமிழ் இயற்றமிழ் இன்றமிழ் உயிர்க்குல முதன்மொழி ஒலிமொழித்தமிழ் கலைத்தமிழ் தனித்தமிழ் தீந்தமிழ் தூநெறித்தமிழ் தெள்ளு செந்தமிழ் தெளிதமிழ் தென்றமிழ் தென்மொழி ஐந்தமிழ் ஐந்தியல் தமிழ் ஐந்தியற் செந்தமிழ் ஒண்டமிழ் ஒலித்தமிழ் நவையறுஞ் சிற்ப நற்றமிழ் நற்றமிழ் நன்மொழி தனிமொழி கலைமொழித்தமிழ் களித்தமிழ் கோலத்தமிழ் செந்தமிழ் தண்டமிழ் தலைமொழி தலைமொழித்தமிழ் பண்தமிழ் பழகுதமிழ் பூந்தமிழ் பைந்தமிழ் மயத்தமிழ் மயன்தமிழ் மாத்தமிழ் முத்தமிழ் முதன்மொழி முழுத்தமிழ் விண்டமிழ் விண்ணொளித்தமிழ் வெளித்தமிழ் இவ்வாட்சி, வழக்கம்போல் பல்கால் பயின்று வருவனவே என்பதைக் குறிக்க வேண்டுவதில்லையாம் ! அரங்கம் அளக்குங் கோலின் அளவு இருபத்து நால்விரலெனக் கூறுவார் இளங்கோவடிகளார் (சிலம்பு 3 : 100). அதனை விளக்கும் அடியார்க்கு நல்லார், அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரல் எனக் கொள்க என்பார். இச் செய்தி ஐந்திறத்தில், எட்டணு தேர்த்துகள் நெறியென் றாகி எட்டு தேர்த்துகள் இம்மி நிலையாய் எட்டுறும் இம்மி எள்ளென் றாகி எட்டெள் ளொருநெல் அளவை குறித்தே எட்டுறும் நெல்கை விரலெனக் கண்டே அளவை ஆக்கம் அறிதல் கலையாய் என்று வருகின்றது (676). இதில் நெறி, நிலை, ஆகி, அளவை குறித்து, கண்டு என்பவை பொருள் நயம் வாராச் சொற் செறிப்பாக இருப்பினும் சிலம்பை நிலைவுறுத்தும் சீர்மை இன்பம் சேர்ப்பதாம். அமிழொலி என்று முன் வந்தால் இமிழொலி, குமிழொலி, தமிழொலி, உமிழொலி எனத் தொடர்கின்றன (769). ஆழ்மதி என்று எடுத்தால் பாழ்மதி, வாழ்மதி, வீழ்மதி, வளர்மதி, குறுமதி பெறுமதி எனத் தொடர்கின்றன (883). இவ்வாறே எண்வகை, விண்வகை, பண்வகை, பாவகை, கண்வகை, கலைவகை, மண்வகை, புனல்வகை, உள்வகை, வெளிவகை, உளிவகை, ஒளிவகை என வகை தொடர்வதும் (872) வாள்வலி, வில்வலி, வேல்வலி, தோள்வலி, சூள்வலி, நாள்வலி என வலி தொடர்வதும் (882) சீர்நெறி, தேர்நெறி, நேர்நெறி, ஓர்நேறி (870) நன்னெறி, தொன்னெறி, பன்னெறி, புன்னெறி, மன்னெறி (882) என நெறி தொடர்வதும் ஒரு பொருள் பல்பொருள் பெரும்பொருள் நுண்பொருள், பருப்பொருள், கருப்பொருள் விழுப்பொருள் (219) எனப் பொருள் தொடர்வதும் இவைபோல்வன பெருகிப் பெருகிப் படர்வதும் எண்ணத் தொலையா காலம் இடம் பற்றிய அடுக்கோ நீக்கமற நிறைந்தவை. வந்த சொல்லே அடிதோறும் மீண்டு வரும் மடக்கோ அளவிடற்கரிது. ஆடலான் பத்தடிகளில் முன்னிற்பான் (814) பதினான்கடிப்பாவில் பதின்மூன்று ஒளியும் ஒரு தெளியும் வந்த அளவில் நிற்காமல் அடுத்த பாவின் ஆறடிகளையும் ஆட் கொள்ளும் (484, 485) மாநெறி பதினைந்து அடிகளிலும் தூ நெறி பதினாறாம் அடியிலும் இடம் பெற்றது ஒரு பா (842) மாநெறியாவது மயநெறி. மோனைத் தொடையா, எதுகைத் தொடையா, முரண்தொடையா - யாப்பியல் கூறுவன அனைத்துக்கும் எடுத்துக்காட்டு அடுத்த பக்கத்தெல்லாம் காணலாம். அதனால் பொருள்வளம் பொருந்தாத் தொடைவளம் காட்டும் யாப்பியல் நூலாய்க் கோப்புற அமைந்தது இந்திறம் எனிற் பொருந்து வதாம். இந்நாளில் கலைச் சொல்லாக்கம் என்பது எவரும் கருதுபொருள். அதற்குக் கருவும் உருவும் ஐந்திறத்து வகைவுண்டு. அனைத்துச் சான்றும் காட்டுதற்குக் கட்டுரையின் அளவில் இயல்வதன்றே! ஆகலின் இயல் பற்றி வருவன மட்டும் அகரவரிசையில் காட்டப்படுகின்றன. அகத்தியல் அகவியல் அசையியல் அணியியல் அணுக்கூறியல் அணுவணுக்கூறியல் அடியியல் அமைப்பியல் அருளியல் அளவியல் அறிவியல் அறுபான் நான்கியல் ஆடலான் இயல் ஆடலியல் ஆய்வியல் ஆழயியல் இடத்தியல் இமைப்பொழுதியல் இயலியல் இயலுரையியல் ஈர்ப்பியல் உடலியல் உணர்நெறியியல் உணர்வியல் உயிரியல் உரத்தியல் உருவத்தியல் உருவியல் உளத்தியல் உளவியல் உழைப்பியல் உறுப்பியல் ஊணியல் எட்டியல் எண்டருமியல் எண்ணத்தியல் எண்ணியல் எண்ணெண்ணியல் எண்ணெறியியல் எண்மையியல் எழிலியல் எழுத்தியல் ஏட்டினியல் ஐந்திணையியல் ஐந்தியல் ஐந்திறயியல் ஐந்திறந்தியல் ஐந்தைந்தியல் ஒலியியல் ஒள்ளியல் ஒளிக்கீற்றியல் ஒளிநிலையியல் ஒளியியல் ஒன்பானியல் ஓமியல் ஓலியல் ஓலியலியல் கட்டிடக்கலையியல் கட்டியல் கடியியல் கணக்கியல் கதிர்க்கீற்றியல் கதிர்க்கூற்றியல் கதிரியல் கதிரொளியியல் கருத்தியல் கருநிலையியல் கல்லியல் கலைத்திறனியல் கலைதெரியியல் கலைநிலையியல் கலைநூற்றியல் கலைநெறியியல் கலையியல் காட்டியல் காந்தத்தியல் காலத்தியல் காலவியல் காலமாலியல் காற்றியல் குடியியல் குறித்தியல் குறிப்பியல் குறியியல் கூற்றியல் கூறியல் கூறுகூறியல் கொடியியல் கோட்டியல் கோலத்தியல் கோளவியல் சினையியல் சீரியல் சீலத்தியல் செடியியல் செவ்வியல் சொல்லியல் சொல்லொலியியல் ஞாலவியல் தமிழியல் தளையியல் திண்ணிலையியல் திருநெறியியல் திறத்தியல் தீயியல் தொல்மரபியல் தொல்லியல் தொலைநோக்கியல் நடத்தியல் நடுவியல் நடுவொன்றியல் நல்லியல் நாற்புறத்தியல் நிலத்தியல் நிலையியல் நீட்டியல் நுட்பத்தியல் நுண்ணியல் நுணுக்கமாயியல் நெட்டெழுத்தியல் நெடிலியல் நெறியியல் நெறிமுறையியல் நெளிலியல் நேர்க்கோட்டியல் நேரியல் நொடிப்பொழுதியல் நோக்கியல் படைப்பியல் பயிலியல் பாநெறியியல் பார்நிலையியல் பாவியல் பிண்டத்தியல் பிறப்பியல் பிறழ்நிலையியல் புணர்நிலையியல் புணரியல் புல்லியல் புலத்தியல் புலனியல் புள்ளியியல் புறத்தியல் புறப்புறத்தியல் புனலியல் பெருகத்தியல் பேரியல் பொருளியல் பொழுதியல் பொறியியல் மண்ணியல் மரத்தியல் மறையியல் மனையியல் மாடத்தியல் மாவியல் மாத்திரையியல் மாறுமாறியல் முதற்பொருளியல் முழுதியல் முற்றியல் முறையியல் மூலத்தியல் மூலத்தெழுமியல் மெய்ப்பொருளியல் மெய்யியல் மெய்யுணர்வகையியல் மொழியியல் வகுத்தியல் வடிவியல் வண்ணத்தியல் வரிவடிவியல் வரிவியல் வரைவியல் வலியியல் வழக்கியல் வளைகோட்டியல் வளைவியல் வாழ்வியல் வானியல் விண்டுறுமியல் விண்ணியல் விரைவியல் விழியியல் விளித்தியல் வினை நுட்பத்தியல் வினைவியல் வெளியியல் வேறுவேறியல் இயல்பற்றி இத்துணைச் சொல்லாட்சிகள் ஒரு நூலில் இயல்வதா? மயனார்க்கு இயன்றதோ இல்லையோ ! கருமாரி தாசராம் வீரபத்திரர்க்கு இயல்வதே என்பதற்குக் கருமாரியம்மை புராணமே சான்று ! குண்டலீ என்னும் பெயரால் அம்மையை விளிக்கும் 700 பாடல்களே குறித்த சான்று ! 7001 எழுசீர் விருத்தப் பாடல்களில் பத்தில் ஒரு பங்கை அது பற்றிக் கொள்கின்றதே ! இவ்வைந்திற நூல், ஐந் திற நூல் அன்று ! ஐந்திர நூலும் அன்று ! இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில், முத்துவீரியத்திற்கும் பிற்பட்டதாம் ஒரு நூல், பேரகத்தியத்திரட்டெனப் புறப்பட்டதே, அப்படிப் புறப்பட்ட நூல்; ஆயின், தனித்தமிழால் இயன்றதும், சொல்வளச் செறிவு அமைந்ததும் பாராட்டுக்கு உரியவை. முற்றும். தொல்காப்பியர் காலம் ஆய்வு சிறக்க! அமைவு பெறுக! திருவள்ளுவர் காலத்தை அறிஞர்கள் தம் ஆய்வின் வழியே காட்டினர். அரசு, அந்நாளை ஏற்றுப்போற்றி நிலை நாட்டியது. அவ்வாறே, தொல்காப்பியர் காலமும் தீர்மானிக்கப்பட வேண்டிய கட்டாயம் உடையது. அவர் காலத்தைப் பல்வேறு அறிஞர்கள் சுட்டிச் சென்றுளர். இந்நாளிலும் ஆய்கின்றனர். ஒரு முடிபு செய்யப்பட வேண்டும். அதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இஃதாம்! இங்குக் காட்டப்பட்ட சான்றுகளின் மேலும், வலுவாய சான்று காட்டி நிறுவினால், அவ்வாறு நிறுவுவார் கொள்ளும் மகிழ்வினும் நிறை மகிழ்வு எளியேன் கொள்வேன். அம் முயற்சி பெருகி நன் முடிபொன்று வாய்க்குமாக! அதனை அரசு வள்ளுவர் நாளை ஏற்றது போல் ஏற்றுப் போற்றி நிலைப்படுத்துமாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் 26.10.2008 தொல்காப்பியர் காலம் நூற் கொடைஞர் தொல்காப்பியர் காலம் என்னும் இந்நூலை அச்சீடு செய்த பெருமக்களைப் பற்றி பதிப்புரை பகர்கின்றது. நூல் எழுதினாலும் பதிப்பித்தாலும் அதற்கு மூலப் பொருள் பணம் அல்லவோ! பொருள் தானே, முதல் - மூலம் - பொருட்டு - அறம் - எல்லாம் எல்லாம்! அப்பொருள் உதவிய கொடைஞர் இயல்பாகவே தவச்சாலை அறவர், புரவலர், நூற்கொடைஞர்! அவர்களே அன்றி, அவர்கள் குடும்பத்தவரும் இணைந்தே! அவ்வறக் கொடைப் பெருமக்கள் பேரறிஞர் திருமிகு க. சுப்பிரமணியனார், திருவரங்கம் மருத்துவர் திருமிகு க. கோபாலனார், அரும்பாவூர் உடன்பிறந்த இணையர் இவர். இவர் தம் துணைவியர் தாமும் உடன் பிறந்த இணையர் நால்வர் வழி நல்வழி என நன்றியுணர்வுடையேன் இது, தமிழுலகுக்கு வழங்கும் தகவாம் கொடை! இரா. இளங்குமரன் தொல்காப்பியர் காலம் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்பது நெடிய வழக்காக உள்ளது. தென்மலை இருந்த சீர்சான் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் என்பது புறப்பொருள் விளக்கச் சிறப்புப் பாயிரம். அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் என்றும், அவரொடு அகத்தியரிடம் பயின்றவர் பன்னிருவர் என்றும் இப்பாயிரம் சுட்டுகிறது. நம்பியகப் பொருளுக்கு இரண்டு சிறப்புப் பாயிரங்கள்உள. ஒன்றில், தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ் கெழீஇய அகப்பொருள் தழீஇ அகப்பொருள் நூல் இயற்றப்பட்டதாகவும், மற்றொன்றில் மலயத் திருந்த, இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த புலவர்பன் னிருவருள் தலைவன் ஆகிய தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ அகப்பொருள் நூல் இயற்றப்பட்டதாகவும் குறிப்புகள் உள. இவற்றால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனாரும் நம்பியகப் பொருள் இயற்றிய நாற்கவிராச நம்பியாரும் அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் எனக் குறிப்பிடுகின்றனர். அகப்பொருள் பாயிரம் இரண்டுள் பின்னது, பிற்காலத்ததாகவும், தொல்காப்பியரை இணைத்த தாகவும் கருத இடம் உண்டு. மேலும், பன்னிருபடலம், ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்று கூறுகிறது. இறையனார் அகப்பொருள் உரை முச்சங்க வரலாறு கூறுகின்றது. நூலில் பாயிரம் என ஒன்று இடம் பெறவில்லை. எனினும், எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்கற்பாற்று என்று பாயிரம் கூறி, முச்சங்க வரலாறும் கூறுகின்றது. அதில் முதற் சங்கமிருந்தார் அகத்தியனாராகவும், இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் ஆகவும் சுட்டப் படுகின்றனர். முதற் சங்கத்தார்க்கு நூல் அகத்தியம் எனக் கூறும் அது, இடைச்சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் என இவை என்கிறது. கடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் என்கிறது அது. இடைச்சங்கம் இருந்த அகத்திய னாரும், தொல்காப்பியனாரும், கடைச்சங்கத்து இருந்தார் அல்லர். அவர்தம் நூல்கள் இருந்தன என்பதைக் கூறுகின்றது. இவற்றால் முதலிரு சங்கங்களிலும் அகத்தியனாரும், இரண்டாம் சங்கத்தில் அகத்தியனாருடன் தொல்காப்பிய னாரும் நூலாய்ந்தனர் என்றும், முதல் மூன்று சங்கங்களிலும் அகத்தியம் நூலாகவும், அகத்தியத்தொடு தொல்காப்பியமும் பின்னிரு சங்கங்களின் நூல்களாகவும் இருந்தன என்றும் அறிவிக்கிறார். முச்சங்கம் மதுரை, கடல் கொள்ளப்பட்டதால் முதற்சங்க அழிவும், கபாடபுர அழிவால் இரண்டாம் சங்க அழிவும் ஏற்பட்ட பின் மூன்றாம் சங்கம் உத்தர மதுரையில் ஏற்பட்டதாகக் கூறுகிறார். இடைச் சங்கக் கபாடபுர அழிவுக்குப் பின் தொல் காப்பியர் சங்கமிருந்து தமிழாராய்ந்தாராக அவ்வுரை சொல்லாமையால், தொல்காப்பியர் காலம், இடைச் சங்கக் கபாடபுர அழிவுக் காலக் கணக்கொடு தொடர்பு கொள்ளும் அளவில் அமைகின்றது. அதாவது கடைச்சங்கக் காலத்தொடு அவர் நூலை அன்றி, அவரை இணைத்துக்காணல் ஆகாது. அக்காலத்திற்கு முற்பட்டவர் என்பதைத் தெளிவிக்கிறார். அவர் சொல்லும் முச்சங்கக் கால எல்லை, தலைச் சங்கம் இருந்த காலம் 4440 யாண்டு இடைச் சங்கம் இருந்த காலம் 3700 யாண்டு கடைச் சங்கம் இருந்த காலம் 1850 யாண்டு இவற்றைக் கூறும்போது என்ப என்ப என்றே கூறுதலால் அவர்க்கு முன் கூறியவர் கூற்றுக் கொண்டே கூறினார் இவர் என்பது விளங்கும். இனிச் சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இடைச் சங்க வரலாற்றைக் கூறுகின்றார்; இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும்..... என்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் என்பது அது. இந்தக் கருத்தைப் பழைய அகவல் ஒன்று, வடுவறு காட்சி நடுவட் சங்கத் தகத்தியர் தொல்காப் பியத்தமிழ் முனிவர் இருந்தை யூரிற் கருங்கோழி மோசியார் என விரிக்கிறது ஆண்டு 3700 என்றும் கூறுகிறது. அச்சங்கம் இருந்த காலம் அது. தொல்காப்பியர் இவற்றால், இடைச் சங்கத்தும் கடைச்சங்கத்தும் நூல், தொல்காப்பியம் என்பதாயிற்று. ஆனால், தலைச் சங்கத்து அகத்தியனார் மாணவர் தொல்காப்பியர் என்னின், அவ் வகத்தியர் காலத்தவரே தொல்காப்பியர் என்பதை அல்லாமல் பின் தள்ளல் முறையாமா? கற்பித்தார் காலம் எதுவோ அதுவே, கற்றார் காலமும் ஆக வேண்டும் அல்லவோ! அகவை வேறுபாடு ஆகலாமே அன்றி, ஆசிரியர் காலமும் மாணவர் காலமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? இதோ, ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுகிறார்: தென்திசைக்கட் போதுகின்ற அகத்தியர், கங்கையார் உழைச்சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியா ருழைச் சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு வந்தார் என்கிறார். இஃதுண்மை எனின், அகத்தியனாரைப் போலவே தொல்காப்பியனாரும் முதலூழிக் காலத்தவரே எனக் கொள்ளல் வேண்டும். தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியத்தைச் செவ்விதிற் பதிப்பித்த புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் எழுதிய தொல்காப்பியர் வரலாறு, அவர் காலம் பற்றிக் கூறுகிறது. சமதக்கினி புதல்வர் என்றதனாலே பரசுராமர், தொல்காப்பியர் சகோதர ராவார் என்பது(ம்) பெறப்படும். இராமாயணத்துள்ளே பரசுராமர் இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும் அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும் இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப் படை, இடைச் சங்கமிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களாயிருந்தோர் அகத்தியரும் தொல் காப்பியரும் முதலாயினோர் என்று இறையனாரகப் பொருளுரை முதலியவற்றான் அறியப்படுதலினாலும் தொல் காப்பியரும் இராமர் காலத்துக்கு மிகமுந்தியர் என்பதும், தொல்காப்பியரிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் சென்றன என்பதும் அறியத்தக்கன. ஆயினும், இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டு என்றும், இப்படிப் பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர் இராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை யவர்கள், அப்பொருளதிகாரப் பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகட்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை அவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படாது என்கிறார். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12000 ஆண்டுகளுக்கு மிக முற்படும் அன்றிப்பிற்படாது என்பது அது. அடியார்க்கு நல்லார், மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் என்கிறார். நச்சினார்க்கினியர், பாண்டியன் மாகீர்த்தி என்றதுடன் அவன் இருபத்து நாலாயிரம் ஆண்டு வீற்றிருந்தான் என்றும் கூறுகிறார். வீற்றிருத்தல் என்பது ஆட்சி நடத்துதல் ஆகும். முச்சங்கக் காலம் முழுமையும் சேரினும் 9990 ஆண்டுகளேயாம். மாகீர்த்தியின் கால அளவும், சமதக்கினியார் மகனார் திரணதூமாக்கினியார் என்பதும் நச்சினார்க்கினியர் உரையாலேயன்றி வேறு வகையால் அறியவாராதவையாகும். கீர்த்தி அந்நாள் பாண்டியன் பெயராமா? சீர்த்தி மிகுபுகழ் என்பது தொல்காப்பியம். அதன் திரிபுச் சிதைவு கீர்த்தியாம். பரசுராமர் என்பார், இராமர்க்கு முற்றோன்றி இராமரோடு எதிரிட்டவர் என்பது கொண்டு எண்ணின், இராமாயண காலத்திற்குத் தொல்காப்பியரைக் கீழே கொண்டு வர இயலாதே. பொய்யும் புனைவுமே வாழ்வாகிப் போன சில மதவெறியர், இராமர் 17 இலக்கம் ஆண்டுகட்கு முன் இருந்தவர் என்கின்றனர். இப்பொய்யர்க்கு நல்ல மறுமொழி, பேரன் வயதைக் கூட்டிச் சொன்னால் பாட்டன் வயது குறைந்துவிடுமா? அப்பேரன் வயதுக் கூடுதல் போல பாட்டன் வயதும் கூடித்தானே போகும்? என்பது. இராமனைப் பதினேழு இலக்கம் ஆண்டுகட்கு முந்தியவன் என்றால் தொல்காப்பியர் காலமும் அந்த அளவுக்குப் போகத்தானே வேண்டும்? மெய்ம்மத்தை நாடும் ஆய்வே ஆய்வாம். தொன்மம் (புராணம்) பொய்ம்மத்தின் பூச்சே என்பது உலகறி செய்தி. கபாடபுரம் ஸ்ரீவால்மீகி முனிவரும் தென்னாடும் என்னும் கட்டுரையில் அறிஞர் மு.இராகவ ஐயங்கார், ஆந்திரம் புண்டரம் சோளம் கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் கடந்து மலையமலையில் கதிரோனுக்கு ஒப்பாக விளங்கும் அகத்தியரைக் காண்பீர்கள் என்றும், பிறகு பொன் நிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமயமான மணிகளால் அலங்கரிக்கப் பட்டதாயும் பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தையும் பார்க்கக் கடவீர்கள். அதன்பின், சமுத்திரத்தை அடைந்து காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள் என்றும், வான்மீகியார் சீதையைத் தென்றிசைக்கண் தேடிச் செல்வாரை நோக்கிக் கூறியதாகக் கூறுகிறார். மேலும், கபாடபுரம் என்பது பழங்காலத்தே பாண்டிய ராஜதானியாய் இடைச்சங்க மிருந்து தமிழ் ஆராய்ச்சி செய்து வந்த நகரம் என்பதும், இக் கபாடபுரச் சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது என்பதும் பிரசித்தம் என்கிறார். கவாடத்து உண்டாகும் முத்தைப்பற்றி 2200 ஆண்டுகட்கு முற்பட்ட கௌடில்யாரும், தம் அர்த்த சாத்திரத்தில் குறிப்பிடுவதையும் தாம்ரபர்ணிக பாண்ட்ய கவாடக சூர்ணேய என முத்தின் வகைகளைக் குறிப்பதையும் இராகவர் உரைக்கிறார். வால்மீகி முனிவர் காலமுதல் கௌடில்யர் காலம் வரை புகழோடு விளங்கிய கவாட முத்து, கடல்கோளில் பின்னர்க் கொற்கை முத்து என ஆளப்படுதல், கொற்கையம் பெருமுத்து (அகநா. 27) முத்தின் கொற்கை (மதுரைக் - 217) என்பன. இக்கொற்கைமுத்து தாலமி முதலிய யவன ஆசிரியர்களால் சிறப்பிக்கப்படுவதாயிற்று. (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம். பக்கம் 22, 23) வடநாட்டுப் போர்வீரர் தலையில் பூச்சூடுதலைத் தென்னாட்டார் போலத் தலைக்கணியாகப் பூச்சூடுகின்றனர் என்று வால்மீகியார் கூறுவது, தமிழர் தம் அகவொழுக்கம் புறவொழுக்கங்களில் பெரிதும் இடம் பெற்று விளங்கிய பழமை விளக்கமாம். தொல்காப்பியத்தில், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் என்பதும், வெட்சித்திணை முதல் வாகைத்திணை ஈறாகப் புறத்திணையும், குறிஞ்சித்திணை முதல் பாலைத் திணை ஈறாக அகத்திணையும் பூவின் பெயரால் அமைந்தன என்பதும் சுட்டும் நம் பழைய ஆவணம் தொல்காப்பியம் தொட்டு இருத்தலால், வான்மீகியார் காலம், இராமர் காலம், அகத்தியர் காலம், தொல்காப்பியர் காலம் என்பனவெல்லாம் ஒரே காலமே எனக்கொள்ள நேரும். மணலூர் இடைச்சங்கம் இருந்த கவாட அழிவின் பின், பாண்டியன், மணலூர் (மணவூர், மணற்புரம் எனவும் வழங்கும்) என்னும் ஊரில் தலைநகர் அமைத்தான். அக்காலம் பாரத காலம் என்றும், அருச்சுனன் தென்னாடு வந்து பாண்டியன் மகளை மணந்த காலம் அது என்றும் கூறுவர். அக்காலத்து அரசி ஒருத்தி ஆட்சி நடத்தியதைப் பற்றி 2300 ஆண்டுகட்குமுன், மௌரிய சந்திர குப்தனிடம் யவனநாட்டுத் தூதராக வந்த மெகசுதனிசு என்பார் எர்குலசு என்ற பெயரிய வீரனாகிய அரசனொருவன், பாண்டியை என்று சொல்லப்பட்ட ஒரே மகளைப் பெற்றான். அவ்வரசன் கடல்வரையுள்ள தென்பக்கத்து நாட்டு ஆட்சியை அவளுக்கு அளித்தான். அந்நாட்டை 365 ஊர்களாகப் பிரித்துத் தன்கீழ்ப்பட்ட சிற்றரசர்களிடம் அவற்றை ஒப்படைத்து ஒவ்வோர் ஊர்த்தலைவரும் தத்தம் திறைப் பணத்தை நாள்தோறும் அவளுக்குத் தவறாது அளித்துவரும் படி ஒழுங்கு செய்திருந்தான் என்று கூறுகிறார் (மு. இராகவ ஐயங்கார்; ஆராய்ச்சித் தொகுதி - 77). கபாடபுர அழிவின் பின் பாண்டியன் இருந்த கடல்சார் ஊர் மணலூர். மணற்றி, மணற்றிடல் எனவும் வழங்கும். அம்மணற்றி பற்றிய அகக்கோவைப் பாடல்கள் இரண்டு இறையனார் களவியலில் மேற்கோளாக ஆளப்பட்டுள. அவை பாண்டிக் கோவை என்னும் நூல் சார்ந்தவை. மணற்றி வென்றான் கன்னி வார்துறைவாள் (42) என்றும், கடிமா மணற்றி மங்கை அமரட்டகோன் (178) என்றும் சுட்டப்படுகின்றன. அம்மணற்றி என்பது யாழ்ப்பாணம் பழம் பெயரேயாம். கவாடம் போலவே கடலகம் சார் மணற்றியும் தென்னகத் தீவகப் பகுதியேயாம். ஆங்கிருந்து அகநாட்டில் அமைக்கப்பட்ட தலைநகரே மதுரை என்க. செய்திச் சுருக்கம் இது காறும் கண்ட செய்திகளின் படி, தொல்காப்பியர் காலம் பாரத காலத்திற்கு முற்பட்டதாம் இராமாயண காலத்தது என்றும், அகத்தியரும் தொல்காப்பியரும் கற்பித்தாரும் கற்றாரும் ஆவர் எனின் அவர்கள் இருவரும் ஒருகாலத்தவரே என்றும், கூறுதல் வேண்டும். மற்றொரு வகையால், இடையூழிக் காலத்துக் கவாடபுரத்தில் அகத்தியரொடு தொல்காப்பியர் இருந்தார் என்றும், அவர்களின் நூல்கள் அளவை நூல்களாகக் கொள்ளப்பட்டன என்றும், அவ்விடைக் கழகக் கவாட அழிவின்பின் தொல்காப்பியமும் அகத்தியமும் அளவை நூல்களாகக் கொள்ளப்பட்டன ஆயினும், அவ்விருவரும் அவையத்திருந்தார் அல்லர் என்றும் கருதின், கவாட அழிவுக் காலம் கொண்டே தொல்காப்பியர் காலத்தின் இறுதியைக் கணிக்க முடியும் என்றும் கொள்ளல் வேண்டும். காலக்கணிப்பு இனிப் பாரதகாலம், இராமாயணகாலம், கபாடவூழிக் காலம் என்பவை திட்டவட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளவையோ எனின், துல்லியமாகச் சொல்லும் நிலை இல்லை என்பதே முடிவாம். பாரதப் போர்க் காலம் கி.மு. 1400; கிமு. 1500 இராமர் காலம் கி.மு. 2300; கி.மு. 1950 பாரத யுத்த காலம், கலியுக ஆரம்பத்தை ஒட்டி, இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்பு என்பது நூல்களில் வழங்கும் பிரபலமான வழக்காகும். இதனை நம் நாட்டிலும் பிற நாட்டிலுமுள்ள சரித்திர ஆசிரியர் பலரும் நவீன ஆராய்ச்சி முறையில் சோதித்து வருவதில் அம்மகாயுத்தம் நடந்தேறியது இன்றைக்கு 3000 ஆண்டுகட்கு முன் (அஃதாவது கி.மு. 12-ஆம் நூற்றாண்டிடையில் என்று முடிவு கூறுகின்றனர் என்கிறார் மு. இராகவஐயங்கார் (ஆராய்ச்சி தொகுதி. பக். 88) இராமாயண காலத்து வாழ்ந்தவர் வால்மீகியார். இராமர் மக்களோடும் சீதையோடும் ஓரிடத்து உறைந்தவர் எனப்படு பவரும் அவர். ஆயினும், அவரியற்றிய இராமாயணம் கி.மு. 300 என்பதும் உண்டு (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்) புத்தசாதகக் கதைகளிலேயே இராமாயணச் செய்திகள் இருக்கலாம் என்று டாக்டர் லேபர் கருதுகிறார் என்கிறது வாழ்வியல் களஞ்சியம். வால்மீகி இராமாயண காலம் ».K.மூன்wh« நூற்றாண்டு என்கிறது. அதே களஞ்சியம் பாரதம் இயற்றிய வியாசர் காலம் கி.மு.பதினான்காம் நூற்றாண்டு என்பர் என்கிறது. (காலக் குறிப்பு அகராதி) ஓர் உண்மை இவற்றால் நாம் அறிவது ஓர் உண்மை, இராமாயண, பாரத காலத்தை எவரும் ».ã.க்F¡ கொண்டு வரவில்லை. கி.மு.விலேயே நின்றன. ஆனால், இராமாயணப் பழமையர் எனப்பட்ட தொல்காப்பியரை கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை கொண்டு வந்துவிட்டனர், தமிழுக்கு அதிகாரிகள் தாங்கள் எனக் கொண்டுவிட்டவர்கள். கி.பி.யா? கிறித்துவிற்குப் பிற்பட்டுக் கிளர்ந்தது தொல்காப்பியம் என்பவர் பெயர்களும், அவர்கள் கண்ட ஆண்டு அடைவுகளும் வருமாறு. பேரா. பெரிடல் கீற்று கி.பி.400ஆம் ஆண்டு பேரா. ச.வையாபுரிப் பிள்ளை கி.பி.400-500ஆம் ஆண்டு பேரா. நீலகண்ட சாத்திரியார் கி.பி.500ஆம் ஆண்டு கே.என்.சிவராசப்பிள்ளை கி.பி.600ஆம் ஆண்டு இவர்கள் காலக்கணிப்புச் செய்தார்களா, தொடுகுறி முத்துக்குறி போட்டு முடிபு செய்தார்களா? இவர்கள், கால ஆய்வுக்குக் கொண்டது இவர்கள் முடிபு செய்து கொண்ட பின்னுக்குத் தள்ளுதல் கொள்கை ஒன்று. மற்றொன்று, வடசொல்லிலும் தமிழிலும் இருக்கும் சொற்கள் எல்லாமும், ஒலி ஒப்பு, கருத்து ஒப்புச் சொற்கள் எல்லாமும் வடமொழிச் சொல்லே என முடிபு கொண்டுவிடுதல். அரும்பேராசிரியர் சேனாவரையர், தமிழ்ச்சொல் வடசொல்லுள் புகாது என முரட்டடி அடிக்கவில்லையா? ஐந்தெழுத்தால் ஒருபாடை என ஒரு தமிழ்ப்பிறவி (ஈசான தேசிகர் - தொல்காப்பியக்கடல்) - தமிழுக்கே பாடை கட்டவில்லையா? அப்படிப் பிறவிகளின் தொடர்ச்சியாக நாங்கள் உள்ளோம் எனத் தமக்குத் தாமே ஆவணப்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் பெரிய பெரிய தமிழறிஞர்கள் அல்லரா? இல்லை என எவர் சொன்னார்? இவர்கள் ஆய்வுகள் பதிப்புகள் தமிழுக்கு ஆக்கமானவை என்பதைத் தவிர்க்க முடியுமா? தவிர்க்க வேண்டுவதுதான் என்ன? வையாபுரியாரின், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப் பதிப்புகள், புறத்திரட்டுப் பதிப்பு இவற்றுக்கு இணையாம் பதிப்பு இதுவரை உண்டா? இந்நாள் பதிப்புலகில் வையா புரியார் வான்மணி என விளங்குகிறார் எனத் திரு.வி.க.வினால் பாராட்டப்பட்டவர் அல்லரோ அவர்! வடமொழி முக்கால், தென்மொழி கால் எனச் செய்தது சென்னைப் பல்கலைக்கழக அகராதிப்பணி (லெக்சிகன்); அவ்வகர முதலியைப் புறந்தள்ள நினைவாராலும், புறந்தள்ள இயலாப் புகழ் உடையது அல்லவா அது! இவர்கள் நால்வரும் இவ்வாறே சிலச்சில வகைகளில் தேர்ந்தவர்களே! ஆனால் எங்கே எவ்வளவு விழிப்பாக ஆய்ந்து முடிபு செய்யவேண்டுமோ அங்கே கண்ணை மூடிக்கொண்டு காலவிளையாட்டு விளையாடி விட்டார்கள். சிலசார்புகள், கட்டிப் பிடித்துக் கச்சிதமாக ஆடவைக்கும் ஊழிக் கூத்து ஈது! சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் என்பது எத்தகைய மெய்யியல் கோட்பாடு! இஃது அனைவர்க்கும் வாய்ப்பது இல்லையே. தொல் பழமை கலிப்பாவின் இலக்கணம், பரிபாடலின் இலக்கணம் அங்கதம் - முதுமொழி - பிசி - வண்ணம் - இவற்றின் இலக்கணம், தேவர்ப்பராஅய தேவபாணி, முப்பொருள் (முதல், கரு, உரி) ஐந்திணை, அகம் புறம், நேர்பு நிரைபு அசை, முப்பால் வகுப்பு, உரிப்பொருள் ஐந்து கொண்டே திருக்குறள் காமத்துப்பால் அமைத்துக்கொள்ளச் செய்த அருமை, கலிப்பாவைக் கொண்டே தாழிசை, துறை, விருத்தம் பெருக்கிக் கொள்ள வைத்த பெற்றிமை, குழந்தைப்பாட்டு முதலாம் சிற்றிலக்கியக் கொடை, மெய்யியல் வளம், நடுகல் விளக்கம், மரபியல் மாண்பு இன்னவை எல்லாம் கி.பி.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுப் பொருள்களா? தொல்காப்பியமே ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு என்றால், திருக்குறளின் காலம் என்ன? நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல்.பொருள்.400) என்ற தொல்காப்பியச் சூத்திரமும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்ற திருக்குறளும் எதனை எது பின்பற்றியதென வரையறுத்துணர முடியாதபடி நம்மை மயக்குகின்றன என்கிறாரே வையாபுரியார். நல்ல மயக்கம் இல்லையா? பொய்யில் புலவர் நயன்மிக்க ஒரு செயலைச் செய்தார் மணிமேகலைச் சாத்தனார். தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் என்ற மணிமேகலை அடிகள், குறளினையும் (55) அதன் ஆசிரியரையும் தக்கவாறு போற்றிப் பாராட்டுகின்றன என்பதால் மணிமேகலைக்கு முந்தியது திருக்குறள் என ஒப்புக் கொள்ளச் செய்கின்றது. பாடலை அப்படியே ஆட்சிசெய்து, ஆசிரியர் பெயரையும் சுட்டிய திறம் தான் தட்டாமல் ஒப்பச் செய்துள்ளது! ஏன்? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் குறளின் பிழிவாகச், செய்திகொன்றார்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே என நூற்பெயரொடு செய்தியைச் சுட்டியும் அப்புறநானூற்றுப் பாடலுக்கு முற்பட்டது திருக்குறள் என ஒப்பமனம் வரவில்லையே ஆய்வாளர்களுக்கு. ஏன்? நான் பிடித்த முயலுக்கு.....? முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் என்னும் நற்றிணை அடிகளின் வரவு காண்பவர்க்குப் பெயக்கண்டும் நஞ்சுண் டடைமவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்னும் திருக்குறள் நினைவு தோன்றாமல் இராதே! தோன்றாமல் இருந்தால், தோன்றக் கூடாது, தோன்றிவிட மாட்டோம் என்பதுதானே பொருள்? வைசிகன் தொல்காப்பியத்தின் மரபியலில், வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என ஒரு நூற்பா உள்ளது. கட்டமைந்த நூலைக் கட்டுக்குலைக்க முனைந்தோர், ஒட்டிய ஒட்டு என்பதை, அப்பகுதியில் உள்ள நூற்பாக்களே (75-85) தம் பல்லை இளித்துக் காட்டுகின்றன! இது போதாதென்று, வைசிகன் என்னும் சொல்லோ அப்பரடிகள் நகைப்புப்போல், விலா இறச் சிரித்திட்டேனே எனச் செய்கின்றது. வைசிகன் என்னும் சொல் பழந்தமிழ்ச் சொல்லடை விலேயே இடம் பெறாத ஒரு சொல். தொல்காப்பியம், திருக்குறள், பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு, சிலம்பு, மேகலை, முத்தொள்ளாயிரம் என்பவற்றைப் பழந்தமிழ் எனக் கொண்டு செய்யப்பட்ட சொல்லடைவு (பிரெஞ்சு அகாதமி) அது. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி என்னும் குறள் கற்றார், வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று எழுதுவாரே அன்றி, வைசிகனை இப்படி வம்புக்கு இழுப்பாரா? அதுவும் வைசியன் எனவும் தெரியாதான் வைசிகன் என ஒட்டிய பொருந்தா ஒட்டு இஃதல்லவா! எ-டு : தசமுகன் - தயமுகன். தசரதன் - தயரதன் (கம்பர்). வைகை - வையை (பரிபாடல்). வைசிகனைத், தொல்காப்பியரின் நெற்றிப் பொட்டாக்கி ஆய்ந்தால், ஆய்வு முடிபு எப்படி இருக்கும்? முதற்கோணல் முற்றும் கோணலே! தூங்குதல் திருவள்ளுவர் பற்றி இட்டுக் கட்டிய கதையில், பொட்டுக் கட்டிய பாட்டு ஒன்று உண்டு! அடிசிற் கினியாளே அன்புடை யாளே படிசொற் கடவாத பாவாய் - அடிவருடிப் பின்தூங்கி முன்னுணரும் பேதாய் உனைப்பிரிந்தால் என்தூங்கும் என்கண் எனக்கு? என்பது அது, தூங்கும் என்னும் சொல் உறங்கும் என்னும் பொருள் கொண்டது பிற்காலம். அச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் திருவள்ளுவர். ஆதலால், அவர் பிற்காலத்தவர் என்பது ஆய்வாகுமா? திருவள்ளுவர், தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை என்பதை உறங்குதல் பொருளிலா ஆட்சி செய்தார்? அமைந்து செயல், விரைந்து செயல் பற்றியவை அல்லவோ இவை? தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு என்றும் கூறினார். இது, சோர்வில்லாமை - மடியின்மைப் பொருள் தருவது அல்லவோ! சான்றாகாததைச் சான்றாக்கி ஆய்ந்து முடிபு செய்தல் சால்பாகாதே! ஓரை ஓர், ஓரி என்பவை இருவகை வழக்கிலும் இன்றுவரை வழங்குவன. ஓரி-ஒப்பற்ற வீரன், ஒப்பற்ற அவ்வீரன் குதிரை; ஓரி - ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை, ஒற்றை விளையாட்டுக்காய்! ஓரை, ஒன்றுபட்ட நாள் கோள்; ஓரை - ஒத்த பெண்பாலர் கூடியாடும் விளையாட்டு! எ-டு : ஓரையாயம்! தொல்காப்பியர் ஓரையும் நாளும் என வழங்குவது கொண்டு, ஓரை என்பது ஹோரா என்னும் கிரேக்கச் சொல், வடமொழிக்கண் வந்து தமிழில் ஆயது என்பது சொல்லியல் அறிந்தார் சொல்லும் சொல் என எவர் கொள்வார்? ஏன், வேற்றுச் சொல், எனின், தமிழில் பொருளற்ற விரிவாக்க வேரும் விளக்கமும் அற்ற - சொல்லாக அல்லவோ இருக்கும்? ஓர்மனம் என்பது ஒருவர் பெயர்! முதுவாய் ஓரி முழவாக அணிநிற ஓரி பாய்தலின் திணிநெடுங்குன்றம் தேன்சொரியும்மே என்பவை பழந்தமிழ் இலக்கிய ஆட்சிகள். ஓர்மை, ஒருப்பட்ட தன்மை ஒருமை மகளிர் - வள்ளுவம். சங்கம் இறையனார் களவியல் முச்சங்க வரலாறு கூறுகின்றது. அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் நாவுக்கரசரும் (நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி) பிறரும் கூறும் சங்கம் என்னும் ஆட்சி, கி.பி.470 இல் தொடங்கப்பட்ட வச்சிர நந்தியின் திரமிள சங்கமே என்று கூறி, சங்கம் என்பது அக்காலத்துக்குப் பின்னை ஆட்சி என்று வெற்றிப் புன்னகை பூக்கின்றனர்! அவர்களுக்கு, ஒத்த ஒலிச் சொல் கண்டால் வடக்கே தாவும் நிலை இருந்தும், புத்தர் கண்ட மும்மணிகளுள் ஒன்றான சங்கம் சரணம் கச்சாமி ஏன் தோன்றவில்லை? தோன்றினால் புத்தர் காலச் சார்பு தோன்றிவிடுமோ? அது கி.மு. ஆறாம் நூற்றாண்டு அல்லவோ! அவையம் கூடல், புணர், புணர்ப்பு, புணர் கூட்டு, அவையம், துறை, தொகை, மன்று, பொதியில் என்பனவெல்லாம் தமிழாய்ந்த - தமிழரங்கேறிய - அவையங்களின் பெயர் என்பதை அறியாதவர்களா கி.பி. எனப் பின்னுக்குத் தள்ளுவோர். அவையம் பண்டிதர் கூட்டம் என்று பொருள் தருகிறது செ.ப.க. அகராதி! மற்றைச் சொற்களைக் கண்டு கொள்ளவில்லை அது. கூடல் என்பது புலவர்களின் கூட்டம் ஆய்வு அரங்கேற்றம் ஆயவகையால் ஏற்பட்ட பெயர்தானே! முகில்கள் கூடி அழிக்க வந்ததாம் புனைவுவழிப் பெயரா கூடல்? ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறுவது அவன் புரவாண்மைச் சீர்மை அல்லவா! மூவேந்தர் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் என மூவேந்தரைக் குறித்தலால் தொல்காப்பியம் காலத்தால் மிகப் பிற்பட்டது என்கிறார் சிவராசர். இதனைச் சுட்டும் கே.கே.பிள்ளை அவர்கள், இம்முடிபு வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் முரண்பாடானதாகும். காத்தியாயனர் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சோழரைப் பற்றியும் பாண்டியரைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்த மன்னரைப் பற்றிய குறிப்புகள் ஹதீகும்பாக் கல்வெட்டுகளிலும் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி) வருகின்றன. எனவே தொல்காப்பியர் தம் நூலில் அம்மூன்று மன்னரையும் குறிப்பிடுவதில் வியப்பேதுமில்லை என்கிறார் (தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் பக்.99). புறநானூற்றின் கடவுள் வாழ்த்தை அடுத்த முதற்பாட்டே, அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! எனச் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடல். சிவராசர் அறியாமல் இராரே! கொடுத்தோய் என்றும் பொருந என்றும் நடுக்கின்றி நிலீ இயரோ அத்தை என்றும் முன்னிலைப்படுத்திக் கூறுவதை அறியாமல் இராரே! பாரத காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டா? பழங்குடி என்னும் திருக்குறள் ஆட்சிக்கு, தொன்று தொட்டுவருகின்ற குடியின்கட் பிறந்தார் என உரை எழுதி, தொன்று தொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல், எனப் பரிமேலழகர் விளக்கம் எழுதியதை நினைப்பின் புறம்தள்ள இயலாதாம். தொல்பழந் தமிழ்மண்ணில், இம் மூவேந்தர் பெயரை அல்லாமல், எவர் பெயரை, எவர் ஆட்சியைக் கேட்க முடிந்தது? புறநானூற்றில் தலைச்சங்கத்தார் பாட்டும் உண்டு என்பார், மறைமலையடிகளார்! முரஞ்சியூர் முடிநாகர், தலைச்சங்கப் புலவருள் முதற்கண் குறிப்பிடப்படுவார் ஆவர். களவியல் உரை இனி, இறையனார் களவியல் உரையின் நம்பகத் தன்மையை நாம் அறிதல் வேண்டும். பின்னே தள்ளிப் பார்த்தல் எப்படி முறையற்றதோ, அதே முறையற்றதுதானே, விருப்பம் போல் முன்னே தள்ளுவதும்? மதுரை ஆலவாயிற் பெருமான் அடிகளால் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசாமியாற் கேட்கப் பட்டது என்க. இனி, உரை நடந்துவந்தவாறு சொல்லுதும். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார். அவர், தேனூர் கிழார்க்கு உரைத்தார் அவர், படியங் கொற்றனார்க்கு உரைத்தார். அவர், செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார். அவர், மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்த னார்க்கு உரைத்தார். அவர், செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமர னார்க்கு உரைத்தார். அவர், திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார் அவர், மாதளவனார் இளநாகர்க்கு உரைத்தார் அவர், முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார் இங்ஙனம் வருகின்றது உரை என்பது. நக்கீரனார் முதல் நீலகண்டனார் வரை, உரைத்த உரையை எழுதினார் எவர்? இத்தனைபேர்கள் அச்சுவார்ப்படமென ஒப்பித்து வந்து இறுதியில் ஒருவர் எழுதினால் முதலாமவர் உரைத்த உரை, பழமாறாமல் எழுத்துப்படி - இருக்குமா? போர்க்களத்தில் நின்று சங்கம் முரசு ஆயவை முழங்கிய பின்னர்ப் படை எடுக்க மாட்டேன் என நின்ற பார்த்தனைப் பதினெட்டு நாள் போர்க்குக் கிளர்ச்சியுண்டாக்கப், பதினெட்டு மடலம் உரைத்தானாம் கண்ணன்! கீதைப்பேருரை அதுவாம்! கண்ணன் உரைத்தான்; அதனை அவன் எழுதினான் அல்லன்; பார்த்தன் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்; சஞ்சயன் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்; திருதராட்டிரனும் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்; அன்றியும், பார்வையும் இல்லான்! அப்படியானால் எவன் எழுதினான்? எவனோ எழுதினான்! அது, கண்ண பெருமான் சட்டைமாட்டிக் கொண்டது! இதற்கும், களவியல் உரை நடந்துவந்ததற்கும் என்ன வேறுபாடு? எவரோ நூல்செய்து எவர் தலையிலோ கட்டுகிறார் உண்மை இதுவே! இறையனார், களவியலுக்கு வீறுமிக்க நடையில் உரைபெறும் பேறு நமக்கு எய்தினும், அதன் வரவுப் புனைவு ஒப்புமாறு இல்லை! அதனால், அப்படி அப்படியே, சங்கம் இருந்த காலம், புலவர் எண்ணிக்கை, கவியரங்கேறிய காவலர் எண்ணிக்கை என்பன வெல்லாம் கொள்ளத் தக்கனவாக இல்லை. அதன் வழிப்பட்டதே அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் முதலோர் குறிப்பிடும் செய்திகளும். என்ன வியப்பு! நூலாசிரியர் பெயர் இறையனார்! அவரை, இறைவனார் ஆக்கிவிட்டனரே! இறையன் - இறைவன் வேறுபாடுமா தெரியவில்லை? காலம் கண்டறிய வழி இனி, இவற்றைக் கொள்ளாமல் தள்ளினால், தொல்காப்பியர் காலத்தைக் கண்டறிய வழி என்ன? வழிகள் இரண்டு: ஒன்று, நூலில் கிடைக்கும் அகச்சான்று. மற்றொன்று, அகச்சான்றாகக் கொள்ளக் கூடியவற்றுக்கு வாய்க்கும் புறச்சான்று. இவ்விரண்டன் வழியாகவே தீர்மானிக்க வேண்டும். தொல்காப்பியரைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இறக்கிய ஆய்வுகளைத் தள்ளுபடி செய்த நாம், கி.மு. பகுதியில் தொல்காப்பியரை ஏற்றியவர்கள் பெயர்களையும் அவர்கள் கண்டுரைத்த காலத்தையும் அறிவோம்: தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். கிறித்துவுக்கு முற்பட்டது எனலாம். பி.டி. சீனிவாச ஐயங்கார் கி.மு.100 முதல் 200 இரா. இராகவ ஐயங்கார் கி.மு. 145 கே. சி. சங்கர ஐயர் கி.மு. 300 ந.சி. கந்தையா பிள்ளை கி.மு. 350 எம். சீனிவாச ஐயங்கார் கி.மு. 350; 400 கே. கே. பிள்ளை கி.மு. 400 மு. வரதராசனார் கி.மு. 500 வி. ஆர். இராமச்சந்திரதீட்சிதர் கி.மு. 500 ஞா. தேவநேயப் பாவாணர் கி.மு. 700 சி. இலக்குவனார் கி.மு. 700 சா. சோ. பாரதியார் கி.மு. 1000 கா. சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000 மறைமலையடிகள் கி.மு. 3500 க. வெள்ளை வாரணனார் கி.மு. 5320 இவ்வனையர் ஆய்வையும், அவர் கூறுவதைச் சுருக்கி உரைக்கினும் பெருக்கமாம் என்பதால், கீழெல்லை சுட்டியவருள் ஒருவராம் இரா. இராகவ ஐயங்கார் குறிப்பையும், மேலெல்லை சுட்டியவராம் வெள்ளைவாரணர் குறிப்பையும் காணலாம். நச்சினார்க்கினியர், தொல்காப்பியர் நூல் செய்தது ஆதியூழியின் அந்தத்தே என்கிறார். அடியார்க்கு நல்லார், குமரியாறு கடல் கொள்ளப் பட்டதற்கு முன்னே நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்தி இரீஇனான் என்கிறார். பேராசிரியர், சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது என்கிறார். களவியலுரைகாரர், இடைச்சங்க மிருந்தார் அகத்தி யனாரும் தொல்காப்பியனாரும் எனவுரைத்து அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது என்கிறார். இவ்வுரையாளருள் நச்சினார்க்கினியர் நீங்கலாக மற்றை -மூவரும் குமரியாறு கடல் கொண்டதற்கு முன்னரே தொல்காப்பியம் அரங்கேறிற்றென்று உடன்படுகின்றனர். பாண்டி நாட்டைக் கடல்கொண்ட காலம் கி.மு.145 என்பது இலங்கைப் பௌத்த சரித்திரங்களைக் கொண்டு ஆராய்ந்து துணியப்பட்டது. இதனால், தொல்காப்பியர் கி.மு. 145-க்குச் சிறிது முற்பட்டவரேயாவர் என்பது தெளியலாம் என்கிறார் இரா. இராகவ ஐயங்கார். (தமிழ் வரலாறு: பக். 257-258) திருக்குறள், சங்க இலக்கியங்கள், பாரதப்போர், பாணினியம் ஆகிய இவற்றுக் கெல்லாம் முற்பட்டது தொல்காப்பியர் எனப் பல்வேறு சான்றுகளால் விரியக் கூறும் வெள்ளைவாரணர் பாண்டிய மன்னர்கள் கல்வி வளர்ச்சி குறித்து மூன்று முறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு, இறையனார் களவியலுரையினுள்ளே விரித்துக் கூறப் பெற்றது. தென்மதுரை நிறுவப்பெற்ற முதற்சங்கம் 4440 ஆண்டுகளும், கபாடபுரத்தில் நிறுவப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும், இப்பொழுதுள்ள மதுரையாகிய கூடல் நகரத்தில் நிறுவப்பெற்ற கடைச்சங்கம் 1850 ஆண்டுகளும் நிலை பெற்றிருந்தன எனக் களவியலுரை கூறுகின்றது. களவியல் கூறும் இக்கொள்கையினைப் பின்வந்த உரையாசிரியர் எல்லாரும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள் ளார்கள். கடைச்சங்கம் கி.பி. 230-க்குள் முடிந்துவிட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். இக்குறிப்பின்படி நோக்கினால் தலைச் சங்கம் இற்றைக்கு 11716 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது புலப்படும். தொல்காப்பியனார் தலைச்சங்கத் திறுதியிலும் இடைச் சங்கத்துத் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. களவியல் உரைகாரர் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்கினால் இடைச்சங்கம் கி.மு.5320 இல் தொடங்கியதெனக் கொள்ளலாம். எனவே, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தின் மேலெல்லை கி.மு.5320 என்பது தெளிவாதல் காணலாம் என்கிறார். (தமிழிலக்கிய வரலாறு தொல்காப்பியம் பக் : 105). மேலும், தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முற்பட்டவர்; பாரத காலத்துக்கும் முற்பட்டவர்; பாரதகாலம் கி.மு. ஆயிரத்தைந்நூறு நூற்றாண்டுகளுக்கு முன்னது; ஆதலால், கி.மு. 5320 தொல்காப்பிய மேலெல்லை என்றதே சரி என்றும் கூறுகிறார் (மேற்படி பக்.117) மேலாய்வு முச்சங்க வரலாறு கொண்டு முடிவு செய்வது என்றால், அகத்தியரே தொல்காப்பியரை அழைத்துவந்தார்; அவர் மாணவருள் ஒருவராகத் தொல்காப்பியர் பயின்றார்; ஆதியூழியின் அந்தத்தே தொல்காப்பிய நூலை இயற்றினார் என்பனவெல்லாம் எண்ணி அகத்தியர் காலம் - இராமாயண காலம் - தொல்காப்பியர் காலம் எனத் தனித்தனியே கொள்ள வேண்டாமல், எல்லாமும் ஒருகால எல்லைப் பரப்பினவாய் இருக்கும். இந்நிலையில், இராமாயண காலமும் இன்னது எனத் தெளிவு கொள்ள முடியா நிலையிலேயே பன்முகம் காட்டிக் கொண்டுள்ளது! பாரத காலம் முந்தியது; இராமாயண காலம் பிந்தியது என்பாரும் உளர்! தமிழ் இலக்கியப் பெரும்பரப்பாகிய பாட்டு, தொகை களிலோ, அகத்திய வழிநூல் எனப்படும் தொல்காப்பி யத்திலோ அகத்தியரைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை. அவரைப் பற்றி அறிய வாய்ப்பதெல்லாம், மணிமே கலை தொட்டும், அதன் பின்னதான நூல்களிலுமேயாம்! மருத்துவ நூல்கள் எண்ணற்றுச் சொல்லப்படுவன உள எனினும் அவையெல்லாம் மிகப் பிற்பட்டவை. கம்பர் இராமாயணம், திருவிளையாடல், கோயில் பற்றிய தொன்மங் கள் (புராணங்கள்) ஆகியன புனைவு வழிப்பட்டவை! பேரகத்தியத் திரட்டு என்பதோ அகத்தியர் பெயரால், முத்துவீரிய ஆசிரியர்க்குப் பின்னிருந்த ஒருவர், முத்துவீரிய இலக்கணத்தை முன்னேடாக வைத்துக்கொண்டு, வேண்டுமா றெல்லாம் வடசொற்களைப் பெருக்கிவைத்த போலிமை யானது. ஆதலால், நாம் வேறு வகையிலேதான் தொல்காப்பியர் ஆய்வைத் தொடரவேண்டும். அம்முறையும் முன்னை ஆய்வாளர்கள் கொண்டதே அல்லாமல் புதுவது அன்றாம். அம் முறை, வாய்த்தசான்று கொண்டு, அதன் மேலே படிப்படியே கொண்டு செல்லும் நெறியாம். சான்றுகொண்டு மேற்செலல்! சிலப்பதிகாரம் திருக்குறளை அப்படியே ஆள்கிறது. இது, தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழுதகை திண்ணிதால் (23 : வெண்பா) என்றும், முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண் (21:3-4) என்றும் வருவனவற்றாலும் பிறவற்றாலும் புலப்படும். இத்தொடர் கொண்டு, திருவள்ளுவர் பயன்படுத்தி யிருக்கக் கூடுமே என்பாரும் உளர். அதற்கு மணிமேகலை மெய்ச்சான்று காட்டி வள்ளுவம் முற்பட்டது என்பதை நிறுவுகிறது. அது, திருக்குறளை ஆள்வதுடன் நூற்பெயர் சுட்டித் திருவள்ளுவர் பெயரும் சுட்டி விளக்கும் அருமையைக் கண்டுளோம். ஈண்டும் காண்க. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை என்கிறது. அச்சு மாறாவடிவும், பொய்யில் புலவன் என்னும் பெயரும் கிடைத்தற்கரிய சான்றுகள் ஆகின்றன. முன்னரே கண்ட இதனைத் தேவை கருதியே மீளப்பார்க்கிறோம்! கூறியது கூறல் அன்று! மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், சேர அடிகள் இளங்கோவுக்கு உழுவல் அன்பர். சிலப்பதிகாரக் காவியம் இயற்றத் தூண்டியவர்; அவர்க்குச் சிலப்பதிகார மதுரை நிகழ்வுகளைப்பட்டாங்கு உரைத்தவர்; நூல் நிறைவுற்று அரங்கேறிய காலத்தும் இருந்தவர். ஆதலால், மேகலை சிலம்பு ஆகிய காப்பியங்கள் பிரிவறியா ஒருமையில், இரட்டைக் காப்பியங்கள் என ஆட்சிகொண்டன. சிலப்பதிகார நூற்கட்டுரை, மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம் முற்றும் என்றே முடிகின்றது. சிலப்பதிகார நிறைவாகிய வரந்தரு காதையில் இடம் பெறும் வேந்தருள் ஒருவன், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் என்பான் (30-160) அவன் உரைபெறு கட்டுரையில், கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத்தாங்கு, அரந்தை கெடுத்து வரந்தரும் இவளென ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறை எடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று என்று குறிக்கப் படுகிறான். இக்கயவாகுவின் காலம் கி.பி. 174-196 ஆகும். இவ்வேந்தன் இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்து இடம் பெற்றவன் ஆவன். இம்மணிமேகலை, சிலம்புச் செய்திகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் என்பதும், இக்காலத்திற்கு முற்பட்டது திருக்குறள் என்பதும் தெளிவுபடும் செய்திகளாம். ஆதலால், திருக்குறளைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலாகக் கொள்ளல் அன்றிப் பிற்பட்ட நூலாகத் தள்ளல் ஆகாது என உறுதி செய்யலாம். முதற்றமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம். அதற்கு முற்பட்டவை தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்ட தொகை நூற்காலம். பத்துப்பாட்டில் நெடியது மதுரைக் காஞ்சி. 782 அடிகளைக் கொண்டது. எனினும் தனிப்பாடலேயாம். பதிற்றுப் பத்து, பத்தன் தொகுதி எனினும் தனித்தனிப் பாடல்களே! நூறன் தொகுதியாம் ஐங்குறுநூறும், தனித்தனிப் பாடல்களே! இத்தொகைக் காலத்து நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் மணிமேகலை நூல் சுட்டியவாறே ஒரு திருக்குறள், அதன் பெயர்களுள் தலைசிறந்த அறம் என்னும் பெயருடன் இடம் பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடியபாட்டு (34) அது, நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்திகொன்றோர்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே என்பது, இங்கே குறிக்கப்படும் குறள், திருக்குறளைக் கற்றார் எவர்க்கும் பளிச்செனப்படுவதாம்! எந்நன்றி கொன்றார்க்கும் உண்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது அக்குறள் (110) அறம் என்னும் நூற்பெயர், திருக்குறளை அன்றி வேறு எந்நூலையும் சுட்டுவது இல்லை! அறத்துப்பாலால் மட்டும் கொண்ட பெயரன்று அது! பொருள் நெறியாலும் அறம்! போர் நெறியாலும் அறம்! காதல் முதலாம் வாழ்வியல் நெறியாலும் அறம் பேசும்நூல் அஃதாதலின், நூற்பெயரே அறம் ஆயிற்றாம். ஆதலால், திருக்குறள் தொகை நூல்களாலும் மேற்கோளாக ஆளப்பட்ட பழமையுடையதாம். முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் என்னும் நற்றிணை எக்குறளை ஏற்றுப்பாடியது என்பது எவர்க்கும் வெளிப்பட விளங்குவதே. உண்டால் அம்மஇவ் வுலகம் எனத் தொடங்கும் கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதியார் பாடிய புறப்பாடல் (182), எக்குறளின் விரிவாக்கம் என்பதும் இருநூல்களையும் கற்றார்க்கு இனிது விளங்குவதேயாம். இவை, பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறள்கள் என்பதை விளக்கவேண்டுவது இல்லை. இக்குறிப்பால், நாம் அறியவேண்டுவது திருக்குறள் காப்பிய நூல்களுக்கு முற்பட்டது மட்டுமன்றித் தொகைநூல் பாடல்களும் மேற்கோளாகக் கொள்ளும் முன்மை உடையது என்பதாம். புறநானூற்றின் முதற்பாடல் பாடிய முரஞ்சியூர் முடிநாகர். முதற்சங்கத்தவர் எனப்படுவார். அவர், பாரத நிகழ்வில் பங்குகொண்டு இருதிறப் படையர்க்கும் போர்க்காலமெல்லாம் உணவு வழங்கிய பெருமையன் ஆகிய பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடியுள்ளார். அத்தகு பாடல்கள் சில வள்ளுவர்க்கு முறபட்டவை ஆகலாம். தொகைப் பாடல்கள் அனைத்துக்கும் பிற்பட்டதன்று திருக்குறள் என்பதைக் குறிப்பதற்குச் சொல்லப்பட்டது இதுவாம். இனித், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது என்பதற்கு எள்ளத்தனை ஐயமும் இல்லாதிருக்க, ஐயுறும் அறிஞர்கள் இருந்தனர் என்பது. முன்னரே காணப்படது. மந்திரம் என்பதன் இலக்ணம், நிறைமொழி மாந்தர் ஆணியிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப எனத் தமக்கு முந்தையர் கொண்ட தொல்பழமுறையை ஆசிரியர் தொல்காப்பியர் எடுத்துரைத்தார் என்பதை, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்னும் குறள் வழியதே எனக் கூறுவார். எப்படி ஏற்பார்? அறம் முதலாகிய மும்முதற் பொருள் என்று முக்கூறுபட்ட வாழ்வியலைத் தமிழர் நெறிப்படி வகுத்துக்காட்டி ஆணை ஆக்கியவர் தொல்காப்பியர் (செய்.105). வேறொரு வகையாம் இன்பியல் நோக்கிலே ஆய்வார்க்கு. இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் என்றவரும் அவர் (களவியல்-1). இந்நெறியிலே முப்பால் ஆக்கியவர் திருவள்ளுவர். தொல்காப்பியர் குறுவெண்பாட்டு என்று கூறிய குறள்யாப்பையே தம் நூல் யாப்பாகக் கொண்டவர் திருவள்ளுவர். வெண்பா யாப்பின் முதன்மை குறுவெண்பா ஆதலால், அதனை மேற்கொண்டு பாடிய திருவள்ளுவர் முதற்பாவலர் எனப்பட்டதும் எண்ணத்தக்கது. குறுவெண்பாட்டு என்பதன் தொகைச் சொல்லே குறள் என்பது தெளிவானது. நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் மென்மை யும்என் றிவைவிளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப. என்னும் முதுமொழி இலக்கணம் முற்றிலும் முப்பாலுக்கு ஒத்திருத்தலை உணர்ந்த பின்னைப் புலமையர் திருக்குறளை முதுமொழி எனப் பெயரீடு செய்து, குறளை விளக்கும் வகையில் தாம் இயற்றிய நூல்களுக்கு முதுமொழிமேல் வைப்பு, வள்ளுவர் முதுமொழி எனப் பெயரிட்டு வழங்கினர். திருக்குறள், கடவுள் வாழ்த்தில் கடவுள், வாழ்த்து என்னும் சொற்கள் இடம் பெறவில்லை. தொல்காப்பியர் வழங்கிய வழக்கு நோக்கியது அது. கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்று வரன்முறைப்படுத்தித் தொல்காப்பியர் வைத்த முறையையே முறையாய்க் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் எனப் பாயிரமாய் வைத்துப் பாடியவர் திருவள்ளுவர். கொடி = மின்னற்கொடி என்பது சிலப்பதிகாரம். கந்து-கட்டு; அழி-அழிப்பது. கட்டற்றது அல்லது பற்றற்றது. வள்=கொடை. வள்ளியோர்ப்படர்ந்து என்பது புறம். வள்ளியாவது அறப்பயன்; அதனை வலியுறுத்தல். உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு என்பது வள்ளுவம். வள்ளலார் என்னும் பெயரின்பேறு அறிக. இனி, இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் என்பது தொல்காப்பியம். மக்கள் எய்தும் இன்பச் சுரப்பு அதன் வளர்வு விளைவு என்பவை கண்டு இட்டது காமம் என்னும் சொல். அது, கமம் - காமம் ஆயது. கமம் நிறைந்து இயலும் என்பது தொல்காப்பியம். வளர்பிறை படிப்படியே வளர்ந்து முழுமதி ஆவது ஒப்பது காமம் திருக்குறளில் காமம் என்னும் சொல் 39 இடங்களில் உண்டு. ஈரிடங்களில் மட்டும் இன்பம் உண்டு! ஆங்கும் காமமும் உண்டு! காமப் பகுதி கடவுளும் வரையார் காமம் சான்ற கடைக்கோட் காலை என்பன தொல்காப்பியம். தொல்காப்பியர் கூறும் உரிப்பொருள்களைக் கொண்டே காமத்துப்பாலைப் படைக்கின்றார் திருவள்ளுவர். புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பவை தொல்காப்பியர் வைத்த உரிப்பொருள் வைப்பு முறை. அம்முறையே முறையாய் ஒவ்வோர் உரிப்பொருளுக்கும், ஒவ்வோர் ஐந்து அதிகாரமாய், ஐந்து உரிப்பொருள்களுக்கும் 25 அதிகாரங்கள் பாடிக் காமத்துப்பால் படைத்தவர் திருவள்ளுவர். காண்க. அ. 109. தகையணங்குறுத்தல் 110. குறிப்பறிதல் 111. புணர்ச்சி மகிழ்தல் 112. நலம் புனைந்துரைத்தல் 113. காதற் சிறப்புரைத்தல் இவை, புணர்தல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். ஆ. 114. நாணுத்துறவு உரைத்தல் 115. அலர் அறிவுறுத்தல் 116. பிரிவாற்றாமை 117. படர்மெலிந்து இரங்கல் 118. கண்விதுப்பு அழிதல் இவை, பிரிதல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். இ. 119. பசப்புறு பருவரல் 120. தனிப்படர் மிகுதி 121. நினைந்தவர் புலம்பல் 122. கனவு நிலை உரைத்தல் 123. பொழுதுகண்டு இரங்கல் இவை, இருத்தல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். ஈ. 124. உறுப்பு நலன் அழிதல் 125. நெஞ்சொடு கிளத்தல் 126. நிறையழிதல் 127. அவர்வயின் விரும்பல் 128. குறிப்பறிவுறுத்தல் இவை, இரங்கல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். உ. 129. புணர்ச்சி விதும்பல் 130. நெஞ்சொடு புலத்தல் 131. புலவி 132. புலவி நுணுக்கம் 133. ஊடலுவகை இவை, ஊடல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். ஐந்தைந்து அதிகாரங்களுள்ளும் இடையே நிற்கும் அதிகாரம் உரிப்பொருள் பெயரொடும் ஒன்றியே நிற்றல் காண்க. இவ்வாறெல்லாம் தொல்காப்பியர் வழியில் நூல் யாத்தவர் திருவள்ளுவர். தொல்காப்பியர் அகப்பொருளின் உயிர்ப்பாகக் கொண்ட உரிப்பொருளையே தம் யாப்பியலுக்கு ஏற்ப வள்ளுவர் அமைத்துக் கொண்ட திறம் அருமைமிக்கதாம்! முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை என்னும் அகத்திணை நூற்பா உரையில், உரையாளர் முதலிற் கருவும், கருவில் உரியும் ஒன்றின் ஒன்று சிறந்தவை என்றது எண்ணத்தக்கது. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்னும் குறளில் வரும் பெருமையின் பொருளை மெய்யுற அறியத் தொல்காப்பிய அறிவு இல்லாக்கால் மங்கல வழக்கு என்றுதானே கொள்ளவேண்டும்! மாற்றுரும் கூற்றம் சாற்றிய பெருமை அல்லவோ இது! நேற்று எம்மோடு மாந்தனாக இருந்தான் இன்று மாப்பெருவீரனாய், அமரனாம் பெருமையுற்றான்! படையல் இட்டுப் படலைச் சார்த்தி வழிபடும் தெய்வப்பேறு பெற்றான் என்னும் பெருமையை அல்லவோ சுட்டுவது. பீடும் பெயரும் எழுதி அதற்தொறும் நாட்டிய பிறங்குநிலை நடுகல் லாகிய பெருமை அல்லவோ அது! இதுகாறும் சொல்லப்பட்டவற்றால் முப்பாலுக்குத் தொல்காப்பியம் எத்தகுமுன்மையது என்பது விளங்கும். காப்பியக்காலத்திற்கு முற்பட்டது தொகை நூல் காலம். தொகைநூல் காலத்தொடு சேர்ந்தும் முந்தும் தோற்றமுற்றது திருக்குறள். திருக்குறளுக்கு முந்துறத் தோன்றியது தொல்காப்பியம் - என்னும் முறைமையைக் கொண்டு மேலே செல்வோம். தொன்முன்மை திருக்குறள், தொகை நூல்கள் ஆயவற்றுக்கு முன்னரே தொல்காப்பிய வழக்குகள் மறைந்துபோயின. அவரே, தொல்லோர்வழக்கு என்று சொல்லிய வழக்குகள் பின்னவர்க்கு வாய்க்கும் என்பதற்கு இடமில்லையே! இவ்வாறான வழக்குகளைப் பழைய உரையாசிரியர்கள் அவவந் நூற்பா உரைகளிலேயே சுட்டியுளர். பின்னை ஆய்வாளர்களும் கூரிய சீரிய வகையில் கண்டு தொகுத்தும் உள்ளனர், விரிவுமிக்க அவற்றை முழுவதாகச் சுட்டாமல் சிலவற்றைச் சுட்டுவோம். அதுவே பெரிதாம் அளவில் நிற்பது: தொல்காப்பியர் நாளில் பாட்டி என்றொரு சொல் வழங்கியது. இன்று நாம் பாட்டி என்பதற்குக் கொள்ளும் பொருள் தாய் தந்தையரைப் பெற்றவரைப் பாட்டி என்னும் முறைப்பெயராக அழைப்போம். சங்க நாளிலே பாட்டி என்றால் பண்ணிசைத்துப்பாடும் பாணன் மனைவியைக் குறித்தது. தொல்காப்பியர் காலத்திலோ பன்றி, நாய், நரி என்பவற்றைக் குறித்தது அது. பாட்டி என்பது பன்றியும் நாயும் நரியும் அற்றே நாடினர் கொளினே என்பவை மரபியல் நூற்பாக்கள்(35,36) கோழி என்னும் பொதுப் பெயர் சேவற்கோழி, பெட்டைக் கோழி எனப் பால்பிரிவு கொண்டு உரைக்கப்படும். இவற்றில் சேவல் என்பது தொல்காப்பியர் நாளில் பறப்பனவற்றுள் ஆண்பால்களுக்கெல்லாம் பெயராக இருந்துள்ளது. தோகை அமைந்த மயில், ஆண்பால் எனினும் அதனைச் சேவல் எனல் ஆகாது. அதன் பெண்மைச்சாயல், சேவல் பெயரீட்டுக்குத் தடையாகும் என்பது தொல்காப்பியம். சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிரும் தூவி மயில்அலங் கடையே என்பது. இதனைக் கூர்ந்தாராயும் பேராசிரியர், தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயல் ஆகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க. எனவே செவ்வேள் ஊர்ந்து அமர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படும் என்கிறார். தொல்காப்பியர் சாயல் கருதி உரைத்தார். பேராசிரியர் தொன்மம் (புராணம்) சுட்டும் முருகன் ஊர்தி, கொடி என்பவை கொண்டு கூறுகிறார். பறவைச் சேவல் பெயரைக் குதிரை ஆண்பாற்கு இயைத்துக் கொள்ளும் மரபைச் சுட்டுகிறார் தொல்காப்பியர். குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் என்பது அது. பேராசிரியல் இத்தொடர்க்கு, குதிரையைச் சேவல் என்றல் இக்காலத்து அரிதாயிற்று. அதுவும் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பது போலச் சொல்லுதல் அமையும் என்பது கருத்து என்கிறார். எருமை ஆணினைக் கண்டி என்னும் வழக்கு தொல்காப்பியர் நாளில் இருந்தது என்பது எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் என்பதால் புலப்படும். இதனைப் பேராசிரியர் அது காணலாயிற்றில்லை என்கிறார். அவ்வாறே, மூடு, கடமை என்னும் பெயர்களை ஆடுபெறும் என்னும் இடத்தில், இவை இப்பொழுது வழக்கினுள் அரிய என்கிறார் பேராசிரியர். (மர.94) ஆனால், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஆட்டிற்கு மூடு என்னும் வழக்கு உள்ளமை அறியக்கிடக்கிறது. இதில் இருந்து ஒரு செய்தி. ஒரு வழக்கு ஒருகாலத்து ஓரிடத்து இல்லை எனத் தோற்றம் தந்தாலும், எல்லாக்காலத்தும் எல்லா இடத்தும் இல்லாமல் - வழக்கு இல்லாமல் - முற்றாக அழிந்து போவதில்லை. அழிந்தமை பொதுவில் காணக்கிடப்பினும் புதைபொருள் - தொல்லியல் - ஆய்வாளிக்குக் கிடைக்கும் புலனம் (சான்று) போலக் கிட்டுவதும் உண்டு. குடியேற்றப் பாதுகாப்பு என்னும் இயற்கை வழக்கு அரணம்போல இந்நாட்டுமக்கள் எந்நாட்டுட் குடிபுகுந்து வாழ்குவராயினும் ஈங்குக் கொண்டிருந்த வழக்குகளைப் பாட்டி வழங்கிய பழம் பொருள் போலப் பாதுகாப்பது உண்டு எனக் கொள்ளவேண்டும். தவம் என்பதொரு தன்மை; தவம் எனத் திருக்குறளில் ஓர் அதிகாரம் உண்டு. தவம் என்பது தவ என்னும் நிலையில் மிகுதி என்னும் பொருள்தரும் என்பது தொல்காப்பியம் - உரியில். போலித்தவம் பெருகிவிட்ட இந்நாளில் தவ என்பதன் உரிப்பொருள் காணல் அரிது எனின், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில், அது தவப்பிஞ்சு (மிகச் சிறு பிஞ்சு) என்னும் வழக்கு உள்ளது, நரல் என்பது மக்கள் பெருக்கத்தைக் குறிக்கும் நெல்லைப் பகுதிவழக்குச் சொல். முறம் என்பது எங்கும் அறியும் சொல்லாக இருக்க சுளகு என்பது நெல்லை வட்டாரத்தில் மட்டுமே வழங்கும் சொல்லாக உள்ளது. சொல்லாய்வு கொண்டு ஒருவர் காலத்தைத் தீர்மானிக்கும்போது, ஏதோ ஒரு சொல்லைச் சுட்டிக்காட்டி இது இவ்வளவு பிற்காலத்தது என்று கொண்டு தீர்மானித்துவிடல் ஆகாது என்பதற்கே இவை சொல்லப்பட்டன. தொல்காப்பியர் நாளில், அதோளி, இதோளி, உதோளி, எதோளி என்னும் சொற்கள் வழக்கில் இருந்தன என்பதை அறியும் நாம் அச்சொற்கள் சங்க இலக்கியப் பரப்பிலோ திருக்குறளிலோ இடம் பெறாமை கொண்டு தொல்காப்பியத்திற்கும் இவற்றுக்கும் உள்ள நெடிய இடைவெளியை உணரலாம். அதோளி. இதோளி முதலியவை சுட்டு முதலாகிய இகர இறுபெயர், வினா முதலாகிய இகர இறுபெயர் எனவும் வழங்கும். அதோளி அவ்விடம் என்பது போன்ற பொருளவை இச்சொற்கள். இவ்வாறே குயின் என்பதொரு சொல்லும் வழக்கு வீழ்ந்தது. இதுபற்றிப் பேராசிரியர் ஒரு காலத்து வழங்கப்பட்டசொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. அவை அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத்து உளவாகி இக்காலத்து இலவாயின. அவை முற்காலத்து உள என்பதே கொண்டு வீழ்ந்த காலத்தும் செய்யுள் செய்யப்படா. அவை, ஆசிரியர் நூல் செய்த காலத்து உளவாயினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையின் பாட்டினும் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர் அவற்றுக்கு இது மரபிலக்கணம் ஆதலின் என்பது. இனி, பாட்டினும் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப் போயினவும் உள. அவை முற்காலத்துளவென்பதே கொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப் பெறா என்பது என்கிறார் (தொல்.செய்.80) ஆனால் சோழன் நல்லுருத்திரன் என்பார் இயற்றிய முல்லைக்கலியில், ஈதோளிக் கண்டேனால் என்னும் தொடர் இடம் பெற்றுள்ளது (117) இது. இதோளி ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்! அற்றுப்போன ஆட்சி என்பதும், எங்கோ தலை நீட்டுதல் கண்டு, ஆய்வாளர் பார்வை இருத்தல் வேண்டும் என்பதன் சான்று ஈதாம். அழன், புழன் என்னும் சொற்களைப்பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (எழுத்து.193)அழன் புழன் என்பன போல்வன இக்காலத்து இல என்றும், புதியன தோன்றினாற்போலப் பழையன கெடுவனவும் உள. அவை அழன் புழன் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம் எனவும் உரையாசிரியர்கள் வரைகின்றனர். பெண்மகள் என்பது தொல்காப்பியர் காலத்தில் பெண் மகன் எனவும் வழங்கியமையால். பெண்மை அடுத்த மகனென் கிளவியும் என்றார். இதற்கு நச்சினார்க்கினியர், கட்புலனாய தோர் அமைதித் தன்மையடுத்து நாணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தால் பால் திரிந்து பெண் மகன் என்னும் பெயர்ச்சொல் என்று பொருளும், பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று இங்ஙனம் கூறலின் என்று விளக்கமும் வரைந்தார். புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரையும் பெண்மகன் என்று வழங்குப என்று உரையாசிரியரும், மாறோக்கத்தார் அப்பருவத்துப் பெண்பாலாரை இக்காலத்துப் பெண்மகனென வழங்குப என்று சேனாவரையரும் கூறுவர். மாறோகம் என்பது கொற்கை சார்ந்த பகுதி. மாறோக்கத்து நப்பசலையார் சங்கப் புலவர். சேனாவரையர் ஊர் கொற்கை சார்ந்த ஆற்றூர்! பெண்பிள்ளையை வாடா போடா முதலாக ஆண்பால்பட அழைப்பதும், ஆண் உடை உடுத்து அழகு பார்ப்பதும் அன்பின் பெருக்கால் விளைவது. ஒரு பெருமூதாளர்! ஊன்றுகோல் காலாக உதவ ஒரு நீர்நிலைப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். பால்வேறுபாடு அற்ற நிலையில் சிறுவரும் நீராடும் ஆட்டத்தை ஓவியமாக வடிக்கிறார். திணிமணல், செய்வுறு பாவைக்குக் கொய்பூந் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை என்கிறார். உளவியல் கூர்ந்த பாலியல் பகுப்புப் பழமையைத் தொல்காப்பியர் உரைத்தார்; தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் முதுபெரும்புலவர் அதன் மெய்ம்மத்தை நிறுவினார். ஒரு துறைக்கண் மேம்பட்டாரைப் பாராட்டுதல் பண்டு தொட்டே வழங்கி வரும் வழக்கமாம். சிறந்த போர்வீரர்க்கு ஏனாதி; சிறந்த வாணிகர்க்கு எட்டி - என்பவை முதலாகப் பல விருதுகள் வழங்கப்பட்டன. அவை சிறப்புப் பெயர் எனப்பட்டன. குடும்பத்தில் இடப்பட்ட பெயர் இயற்பெயர். ஒருவர்க்கு இயற்பெயரோடு சிறப்புப்பெயரும் சேர்கிறது. அவ்விரு பெயர்களில் எப்பெயர் முன்னாகவும், எப்பெயர் பின்னாகவும் இருத்தல் வேண்டும் என்பதைத் தொல்காப்பியர், சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் என்று இலக்கணம் வகுத்தார். எ-டு: தெய்வப் புலவர் திருவள்ளுவர் கணியன் பூங்குன்றனார் இம்முறை இடைக்காலத்தில் சிலரால் போற்றப்படா மையால், கடிசொல் இல்லை காலத்துப்படினே என்பது கொண்டு ஏற்றுப் போற்றினர் உரையாசிரியர். இம்முறை போற்றும் வகையால், இந்நாளில், நாவலர் ச. சோ. பாரதியார் மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் செந்தமிழ் அரிமா. சி. இலக்குவனார் முனைவர் வ.சுப. மாணிக்கனார் தமிழ்ப் பேரொளி பாரதிதாசனார். மக்கள் என்பது பன்மைப் பெயர். அதனை மக்கள்கள் என எவரும் வழங்கார். பழங்காலத்தில். ஆடுகள், மாடுகள், மலைகள் என அஃறிணையை அன்றி உயர்திணைப் பன்மைக்குக் கள் என்பது சேர்ப்பது இல்லை; சேர்ப்பது பிழை. அவன் அவள் அவர் அது எனும் அவை என்பது மெய்கண்டார் தொடர்; பலர் பாலுக்கே கள் சேர்க்கக் கூடாது என்றிருக்க, ஒருவருக்கே அவர்கள் எனக் கள் சேர்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. அவர்கள் இவர்கள் பெரியவர்கள் என்பவை அவாள் இவாள் பெரியவாள் என்றெல்லாம் ஆகிவிட்டன. காளமேகப் புலவர் இவ்வழக்கை எள்ளுவது போல் பாடியுள்ளார். செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றைவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவாள்அவாள் ஆம்! என்பது அது. உயர்திணைக்கு ஒட்டாத கள் பூரியர்கள் எனத் திருக்குறளில் (919) இடம் பெறுகிறது. மற்றையவர்கள் என்றும் இடம் பெறுகிறது (263) மார் என்பதொரு சொல்லீறு, வினைச் சொல்லிலேயே வருவது தொல்காப்பியர் காலத்து வழக்கு. சென்மார், பாடன்மார் எனவரும், ஆனால் அவ்வீறு தோழிமார் (அகம்.15) என வருவது ஆயிற்று. அவன் பருகுவன்; அவன் படிப்பன் என அன் ஈறு படர்க்கை ஆண்பாலுக்கே வரும். ஆனால், நான் பருகுவன்; நான் படிப்பன் என வழங்குதல் உண்டாயிற்று. இவ்வழக்கு வள்ளுவர் நாளிலேயே, இரப்பன் இரப்பாரை எல்லாம் எனத் தன்மைக்கு அன் ஈறு வந்துவிட்டது. வரவேண்டும் முறை நான் பருகுவென்; நான் படிப்பென் யான் இரப்பென் என்பனவாம். இன்னவை இன்னும் பல. இவ்வேறுபாடு ஏற்பட வேண்டும் எனின் தொல்காப்பியர்க்கும் திருவள்ளுவர்க்கும் சங்கச் சான்றோர்க்கும் நெடிய இடைவெளி இருத்தல் வேண்டும் என்பதேயாம். தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை உகரத்தால் முடியும் சிறப்பின. எட்டு என்பதை அடுத்துத் தொண்டு என்றோர் எண் இருந்து வீழ்ந்துபட்டது. அவ்விடத்திற்கு எண்பதுக்குமேல் இருந்த ஒன்பது இறங்கிவிட்டது. மற்றை எண்களும் (தொண்ணூறு தொள்ளாயிரம்) என்பனவும் இறங்கிவிட்டன. தொல்காப்பியர்நாளில் தொண்டு ஒன்பது என்னும் இரண்டும் ஆட்சியில் இருநதமை அறியமுடிகின்றது. ஒன்பது என்பதற்கு இலக்கணமுடிபு கூறும் அவரே, (குற்.40) தொண்டு தலையிட்ட என ஆள்கிறார் (செய்.100) பரிபாடல் ஆசிரியரும், மலைபடுகடாம் ஆசிரியரும் தொண்டு என்னும் எண்ணைப் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவ்வழக்கு அழிந்தது. இனி யாப்பு வகையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மறைவுகள் மிகப்பலவாம். தொல்காப்பியச் செய்யுள் இயலையும் காக்கை பாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பவற்றையும் மேலோட்டமாக நோக்கினும் எளிதில் புலப்படும். சார்பெழுத்து மூன்று என்பது தொல்காப்பியம். அது பின்னே பத்தாகவும், 369 ஆகவும் பெருக்கிக் கொள்ளப்பட்டன. நேர், நேர்பு, நிரை, நிரைபு எனப்பட்ட அசைகள் நேர் நிரை என்ற அளவில் குறைந்தது. எழுத்தை எண்ணிக் கொள்ளப்பட்ட குறளடி முதலியன சீர் எண்ணிக்கொள்ளும் நிலையை எய்தியது. பா வகையில் கலியும் பரியும் வழக்குக்குன்றித் தாழிசை துறை விருத்தம் என்னும் இனம் மிகப் பெருக்க முற்றது. சிற்றிலக்கியங்கள் பெருக்க முற்றன. தொன்மம், புராணம் என்னும் பெயரால் புனைபொருள் ஆகிவிட்டது. தொன்மை என உரையொடு வழங்கிய பழைய வரலாறு இல்லாது ஆகியது. உவமை என்னும் ஓரணி அணியியல் எனப் பெருகியது. அகம் புறம் ஆகிய பொருள் திணை, துறைப் படுத்துப்பாடும் முறை அருகியது. இன்னவாறு மேலும் பல மாற்றங்கள் ஏற்படுதற்கு நெடிய இடைவெளி யாகியிருக்கும் என்பது எளிதில் அறிவதாம். இடைவெளி நெடிது, மிகுதி என்பதால் காலம் கணிக்கப்பட்டுவிடுமா? எனின், தொல்காப்பியம் தரும் அகச்சான்றுகளையும் அக்கால நிலைக்கு வாய்த்த புறச்சான்றுகளையும் கொண்டே முடிபு செய்தல் வேண்டும். அகச்சான்று தொல்காப்பியர் காலத்தில் மூவேந்தர் ஆட்சி நிகழ்ந்தது. சேர, சோழ, பாண்டிய நாடு எனினும் அது மொழியால் செந்தமிழ் நிலமாக இருந்தது. அந்நாளில் தொண்டை நாடு என ஒரு நாடு தோற்றமாயிற்று இல்லை. அந்நாளில், தமிழகத்தே வடமொழியாளர் வரவால் அவர் மொழியும் வரலாயிற்று. ஆயினும் அவர் வழங்கிய வடசொல்லை வழங்குதல் ஆகாது. அப்படி வழங்க நேர்ந்தாலும் வடமொழி எழுத்தை ஏற்காமல் தள்ளித் தமிழ் மரபுக்குத் தகத் தமிழ் எழுத்தில் வழங்க வேண்டும் என்பவற்றைத் தொல்காப்பியர் கட்டளைப்படுத்துகிறார். ஆதலால், வடவர்தென்னாடு புகுந்த காலத்தைச் சார்ந்து, அவர்தம் மொழியைத் தமிழ் மண்ணில் பரப்பத் தொடங்கிய நாளில், மொழியாற்றுக்கு வகுத்த வலிய கரைபோல இலக்கணம் வகுத்துக் காத்தார். வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்பது அந்நூற்பா (884) தொல் காப்பு இயம் என்னும் பெயரீடு அறிக. பாயிரத்தில் பனம்பாரனார் தமிழ் கூறு நல்லுலக எல்லையாக வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்கிறார். வடக்கே கூறிய எல்லை தென்குமரி; இதுவும் மலையாகவே ஆதல் வேண்டும். அன்றி, ஆறோ, கடலோ ஆயின் அதனைக் குறிப்பிட்டிருப்பார்! ஆதலால், குமரிமலை இருந்த காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்தார் என உறுதி செய்தல் வேண்டும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள என்னும் சிலப்பதிகாரத் தொடர்கொண்டு குமரிக்கோடு கொடிய கடலால் கொள்ளப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தினர் தொல்காப்பியர் என்பதைத் திட்டப்படுதல் வேண்டும். அது, கவாடபுரத்துத் தமிழ்ச் சங்கம் தோன்றுவதற்கு முற்பட்டும், தென்மதுரைத் தமிழ்ச் சங்கம் அழிவுற்ற காலத்திற்குப் பிற்பட்டும்கொள்ள வேண்டும் காலம். அக்காலம் இடைச்சங்கக் காலம். கபாடபுர அழிவின்பின் தொல்காப்பியர் சங்கத் தலைமை இல்லாமையால் கபாடபுர அழிவுக் காலத்தொடு தொல்காப்பியர் இயற்கைக் காலம் எண்ணப்படவேண்டும். பாயிரத்தின் வழியாக அறியப் பெறும் அகச்சான்றுகளுள் தலையாய ஒன்று, தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் என்பது. ஐந்திரம் வடமொழி இலக்கண முதல்நூல். அதன் மறைவுக்குப் பின் தோன்றியதே பாணினியம் என்னும் இலக்கணநூல். இவற்றால் தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முற்பட்டவர் என்பதும் ஐந்திரக் காலத்தவர் என்பதும் விளங்கும். யவனர் யகர வரிசையில் யா என்னும் எழுத்தையன்றி எவ்வெழுத்தும் சொல்லின் முதலாக வாராது என்கிறார் தொல்காப்பியர். ஆதலால், அவர் யவனர், யவனத்தூதர் வருகைக்கு முற்பட்டவர் எனக் கொள்ளல்வேண்டும். சங்கச் சான்றோர், யவனர் தந்த வினைமாண் நன்கலம் யவனத் தச்சர் என வழங்குகின்றமை கொண்டு இதனைத் தெளியலாம். கயவாகு காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று எனச் சிலப்பதிகாரத்தின் வழி அறிவதாலும், அக்காலம் கி.பி.174-196 எனக் குறிக்கப்படுவதாலும், அச்செங்குட்டுவனுக்கு முன்னர்க் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், பல் யானை செல்கெழு குட்டுவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரல் என்பார் ஆட்சி நிகழ்ந்தமைப் பதிற்றுப்பத்தால் அறியப்படுவ தாலும், அக்காலம் ஏறத்தாழ 200 ஆண்டுகளாம் எனப்பதிகத் தால் அறிய வருதலாலும் தொல்காப்பியர் காலம் கி.மு. விற்குப் பிற்பட்டது ஆகாது என்று உறுதிசெய்யலாம். கிரேக்கத்தில் இருந்து (யவனம்) அலெக்சாண்டர் (356-323) படையெடுப்பும், மெகசுதனிசு என்னும் யவனத்தூதர் கி.மு. 320-298 வரை இந்தியாவில் இருந்ததை வரலாறு கூறுவதும், மௌரிய சந்திரகுப்தர் காலம் கி.மு. 320-296 என அறியப்படுவதும் கொண்டு அக்காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியர் எனக் கொள்ளவேண்டும். பாணினியம் இயற்றிய பாணினியின் காலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என்றும் 5 ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுவதாலும். பாணினி தம் இலக்கணத்தில் யவனம் என்னும் சொல்லை வழங்குவதாலும் அவர் காலத்தில் ஐநதிர நூல் வழக்கு ஒழிந்துவிட்டது என அறியப்படுதலாலும். அக்காலத்தில் கொற்கைமுத்து குறிக்கப்படுவதாலும், தொல்காப்பியர் காலம் கி.மு.4 அல்லது 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டமை அறியலாம். ஐந்திரம் ஐந்திர வியாகரணம் இந்திரனால் அருக தேவர்க்கு உரைக்கப்ட்டது என்பது சிலப்பதிகாரத்தால் அறியப் படுதலாலும், அவ்வருகர் காலம் கி.மு.599-527 என அறியப்படுவதாலும், அவ்வைந்திரம் நிறைந்த தொல்காப்பியர் காலம், அக்காலத்திற்கு முற்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் அருக சமயம் பற்றிய குறிப்பு எதும் தொல்காப்பியத்தில் இல்லை என அறிந்துள்ளோம். கபாடபுரம் முதற் கடல்கோளால் தென்மதுரை அழிந்தபின் நிலந்தரு திருவிற் பாண்டியனால் நிறுமிக்கப்பட்டதாம் இடைச்சங்கத்தில் அவன் கூட்டிய அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயதாலும் தொல்காப்பியனார் கபாடபுரக் கழகத்தில் இருந்தாராக அறிதலாலும் கபாடபுர அழிவொடு இரண்டாம் சங்கம் நிறைவுற்றதாலும் தொல்காப்பியர் காலம் கபாடபுர அழிவுக்காலம் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டுவதாம். ஐந்திரமும் வேற்றுமையும் தொல்காப்பியர் ஐந்திரம் கற்றுத்தேர்ந்தவர். தம் இலக்கணத்தில் வேற்றுமை இயலின் தொடக்கத்தில், வேற்றுமை தாமே ஏழென மொழிய என்றவர், விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே என்று எட்டாக்குகிறார். எட்டாம்வேற்றுமை பெயரும், பெயரின் விகாரமும் ஆதலால், ஒன்றெனக் கொண்டவர் ஐந்திரத்தார் என்பதைச் சேனாவரையரும், நன்னூல் முதல் உரையாசிரியர் மயிலைநாதரும் சுட்டுகின்றனர். ஏழியன் முறையது எதிர்முக வேற்றுமை வேறென விளம்பான்; பெயரது விகாரமென்று ஓதிய புலவனும் உளன்; ஒரு வகையால் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்னும் ஐந்திர நூற் கருத்தைச் சுட்டும் நூற்பாவைத் தொல்காப்பிய நூற்பாவொடு ஒப்பிட்டுக் காணுமாறு (மயிலை நாதரும் (நன்னூல்) சேனாவரையரும்) காட்டியுளர். ஆதலால், ஏழுவேற்றுமை எனக்கொண்ட தொல்காப்பியர், அதனொடு சாரத் தனி நூற்பாவால் விளி கொள்வதன்கண் விளியோடு எட்டே என ஏற்றார். இவ்வேற்பு ஐந்திரம் சார்ந்தது எனத் தெளிய வாய்க்கின்றது. தொல்காப்பியரின் ஐந்திரம் நிறைதலுக்குச் சான்றாகின்றது. சொல் பகுநிலை இனி மற்றொரு சான்று, ஐந்திரம் சொல்லின் முதனிலை, இடைநிலை, இறுதிநிலை பற்றிய பகுப்புகள் உடையது இல்லை. ஆனால், பாணினியம் அப்பகுப்புகளை உடையது. பாணினியத்திற்கு முனனவராகத் தொல்காப்பியர் இருந்தமை யாலும் அவர் நிறைந்திருந்த ஐந்திரத்தில் அப்பகுப்பு இல்லாமையாலும் தமிழ் மரபில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்த தனிச்சீர்மை இயற்கை நெறிப்பட அமைந்து கிடந்தமையாலும், அப்பகுப்பு தேவைப்பாடு அற்றதாய் இருந்ததால் வித்து வேர் முளை கிளை என விளங்கிய அளவில் நின்றது; இந்நெறியும் ஐந்திரம் கொண்டிருந்த நெறியாம். தமிழியம் தமிழ் நெறியில் நூல்யாத்த தொல்காப்பியர் ஐந்திரம் கற்றதால் அதனை வழிமொழிந்தார் அல்லர். வழி மொழிந்திருப்பின் பொருளதிகாரம் என மூன்றாம் அதிகாரத் தமிழர் வாழ்வியல் பெட்டகம் நாம் காண வாய்த்திராது; பிறர் பிறரும் பின்னால் பொருள் இலக்கணம் (அகப்பொருள் புறப்பொருள்) வகுத்திரார். அகத்துறையும் புறத்துறையும் பாடுபொருளாகிப் பாட்டு தொகை எனக் கையில் கனியாகத் தவழ்ந்திருக்க நேர்ந்திராதாம். இவ்வைந்திரம் பற்றிச் சிலப்பதிகாரம், விண்ணவர் கோமான் விழுநூல் என்றும், கப்பத் திந்திரன் கட்டியது என்றும் குறிக்கின்றது. ஐந்திர நூல் காலம் ஐந்திர நூலைக் கேட்டவருள் ஒருவர் அருகதேவர் என்றும், அவர்க்கு இந்திரன் ஓதினான் என்றும் அருக நூல்கள் கூறுகின்றன. ஆகலின், அந்நூல் அவர் காலத்திற்கு முன்னரே இயற்றப் பட்டிருக்கவேண்டும். அவர்காலம் கி.மு.599-527 என்பர். அவர்தம் ஐந்திரக் கேள்வி அகவை முப்பதில் என்றால் கி.மு. 569 இல் கேட்டாராதல் வேண்டும். அந்நூல் அக்காலத்திற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இனி, அருக சமயம் புத்தசமயம் பற்றிய செய்திகள் எவையும் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. அன்றியும் தொல்காப்பியர் கூறிய மக்கள் தாமே ஆறறிவுயிரே என்னும் மன அறிவுக்கொள்கை அருக சமயத்தார் ஏற்பது அன்று. நன்னூலார் அருக சமயத்தார் ஆதலால், அவர் ஐயறிவுக் கொள்கை அளவிலே நின்றமைகொண்டு அறியலாம். இவற்றால் அருகர், புத்தர் ஆகிய இருவரும் அறவுரை கூறிப்பரப்பிய காலத்திற்கும் - கி.மு. ஆறாம் நூற்றாண்டு நடுப்பகுதிக்கும் முற்பட்டு இருந்தவர் தொல்காப்பியர் எனக் கொள்ளல் முறையாம். ஒரு காலத்தவர் எனினும் அக்கொள்கை உடன்பாடு இருப்பார் அன்றிப் பிறர் கூறாரே! முற்பட்டவர் என்னின், அம்முற்பாட்டைக் காண வேறு ஏதேனும் சான்று வேண்டும். அச்சான்று கடல்கோள் சான்றாம். இலங்கை வரலாற்றின்படி மூன்று கடலூழிகள் அறிய வருகின்றன. அவை: 1. கி.மு.2387 இல் இலங்கை தென்னிலத்தில் இருந்து பிரிவுபடுமாறு அமைந்த கடல்கோள். 2. கி.மு.504 இல் பாண்டுவாசா என்பார் காலத்தில் ஏற்பட்ட கடல் கோள். 3. கி.மு.306 தேவனாம் பிரியன் நாளில் ஏற்பட்ட கடல்கோள். இவற்றைச் சான்றாகத் தமிழ் நாட்டு வரலாறு கூறுகின்றது. தமிழ் நாட்டு அரசு வெளியீடு: 1975. கி.மு.145-இல் ஒரு கடல்கோள் நிகழ்ந்ததாகச் சான்று காட்டுகிறார் இரா.இராகவர் இவற்றின் பின்னரும் தமிழகப் பரப்பில் ஏற்பட்ட கடல்கோளால் புகார் நகர் முதலிய பகுதிகள் அழிந்துள. கொற்கை, கீழ்கடல் தொண்டி முதலியவும் அழிந்துள. இக்கடல்கோள் சிலப்பதிகார காலத்தை அடுத்து கி.பி. இரண்டாம் நூற்ண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். தென்னகத்தில் இருந்து இலங்கை பிரிந்த காலத்துக் கடல்கோளின் பின்னரே வான்மீகர் வாழ்ந்து தென்னகம் பற்றி உரைத்ததால் கடல் சூழ் இலங்கை என்கிறார். சீத்தலைச்சாத்தர், குரங்குசெய் குமரியம் கடற்றுறை என்கிறார். ஆதலால், இலங்கை தீவமாகப் பிரிந்த பின்னிலை இவர்கள் காலமாம் நிற்க. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருக தேவர் கேட்ட ஐந்திரத்தைத் தொல்காப்பியரும் கற்றார். ஆதலால், அக்கால எல்லை தொல்காப்பியர்க்கும் ஏற்பதேயாம். வழக்கு செய்யுள் கற்று அவர் ஐந்திரப் புலமையும் பெற ஐம்பது அகவையர் ஆகி இருக்கக் கூடும். பின்னர்த் தொல்காப்பியர்க்கும் ஏற்பதேயாம். வழக்கு செய்யுள் கற்று அவர் ஐந்திரப் புலமையும் பெற ஐம்பது அகவையர் ஆகி இருக்கக் கூடும். பின்னர்த் தொல்காப்பியம் இயற்றி அரங்கேற்றமும் நிகழ நெடிய காலம் தேவைப்பட்டிருக்கும். நூல் அரங்கேற்றத்தின் பின்னரும் வாழ்ந்து இரண்டாம் கடலூழிக்கு ஆட்பட்டனர் எனலாம். கி.மு.504-இல் ஏற்பட்ட கடல்கோள் அது எனின் கி.மு.594 தொல்காப்பியர் தோன்றிய மேல் எல்லையாகவும். கி.மு.504 தொல்காப்பியர் வாழ்வு முடிவு எல்லையாகவும் கொள்ளலாம். இதற்கு ஓர் அரிய சான்று உளது. இலங்கை வரலாறு கூறும் முதற்கடல்கோள், தென்னிலமாகிய குமரிக் கண்டத்தில் இருந்து அல்லது இந்திய இணைப்பில் இருந்து இலங்கையைப் பிரித்த காலத்தது. இரண்டாம் கடல்கோள் பாண்டுவாசா என்பார் காலத்தில் (பாண்டிய அரசர்) ஏற்பட்டது. இப்பாண்டுவாசா என்பார் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனக் கொள்ளத்தகும். இடைச்சங்க அழிவு அவனொடும் தொடர்புடையதாக வரலாறுகள் அனைத்தும் கூறுவதாகலின். ஆதலின் அக்காலமே தொல்காப்பியர் காலமும் ஆம் என்பது. உள்ள சான்றுகள் மாறவும் கூடும். மேலும் வலிய சான்றுகள் வாய்க்கவும் கூடும் வேறு வகை முடிபு சீராக வாய்க்குமெனின் இக்கணிப்பைப் புறம்தள்ளித் தக்க முடிவை ஏற்பதும் ஆய்வுச்சால்பாம். எப்படியும் ஒரு மெய்ம்மை கண்டு நிலைப்படுத்த வேண்டும் என்பதே ஆய்வாளன் நோக்காக இருக்கவேண்டும். அந்நோக்கு எமக்கு ஏற்றது மட்டுமன்று, எவர்க்கும் வேண்டுவதாம். இதனைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிலைநாட்டும் சான்றுகிட்டின் அதனைக் கண்டார் கொண்ட மகிழ்வு எமக்கும் உண்டாம். இவ்வகையால் கி.மு.504 இல் பாண்டுவாசா காலத்தில் ஏற்பட்ட கடல்கோள் இடைச்சங்க அழிவாய் அமைந்து தொல்காப்பியர் காலத்தைத் தீர்மானிக்க உதவுகிறது. அக்காலத்தின் மேலெல்லை கி.மு.594 தொட்டுக்கீழெல்லை கி.மு.504 ஆகலாம். இயல்பான தொண்ணூறு வயது என்பது இயலாதது அன்றாம். இனி ஆண்டு வரையறையொடு நாள் வரையறை ஒன்றும் வேண்டுவது கட்டாயமாம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ என்னும் தாயுமானக் கொள்கை உலகம் ஒத்த பழநெறியாம். அதனாலேயே அவ்வக்கால வல்லார் வகுத்துத்தந்த ஆண்டு திங்கள் நாள் செய்தி என்பவற்றை அவ்வக்கால அரசும் ஆர்வலரும் வழிஞரும் ஏற்றுப் போற்றினர். அவையே இக்காலத்து நாம் ஏற்றுப் போற்றும் ஆண்டுமானமும் வரலாற்றுமானமும் ஆம். இவ்வகையில் அறிஞர்களொடு ஆளுபவர்களும் ஒத்திணைந்து முடிபு எடுத்து நாடு ஏற்று நடைப்படுத்த வைத்தல் வழிவழி வழக்கம். வள்ளுவர் நாள் அவ்வழியே வழியாய்த் தமிழ்நாட்டு அரசு, திருவள்ளுவர் ஆண்டினை ஏற்றது; அவர் நாளினைத் தைத்திங்கள் இரண்டாம் நாளாக உறுதி செய்தது. தை முதல் நாளைத் தமிழர் ஆண்டுப் பிறப்பாகச் சட்டம் செய்தது. இம்மரபு உலகொத்த மரபேயன்றி சுருக்க நோக்கினது அன்று. தைச் சிறப்பு தமிழர் வாழ்வின் எதிர்பார்ப்பிலும் ஏற்றத்திலும் இயற்கை இயங்கியல் வழியிலும் தைத்திங்கள் முதல் நாள், ஆண்டுத் தொடக்கம் என்பதற்கு மிகத்தகுவதாம். சித்திரையோ எரி நாள்; எரிமீன் வாட்டலும் கூடிய நாள். அதனினும் தைத் திங்கள் ஆண்டுப் பிறப்பாதல் சீரிதாம். பங்குனி மாதம் பகல்வெளி நடந்த பாவத்தில் போவேனாகவும் எனத் தற்சாவிப்புத் தரும் திங்களை அடுத்த எரி நாளில் தொடங்கும் புத்தாண்டிலும், நிலமகள் பூரித்துக் கலகல என நகைப்பது போல வளங்களை எல்லாம் வழங்கும் தைந் நாள் இயற்கை குலவிக்கொஞ்சுவதாம். அதனால் தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்னும் வாழ்வியல் சுரப்பைத் தமிழுலகம் கண்டது; கொண்டு போற்றியது. உழவன் ஏர்க்காலும் தார்க்கோலும் எடுத்து மாடு ஓட்டத் தொடங்கும்போது ஒலிக்கும் ஒலி தை, தை, தை, ஆடல் கலையின் அடியெடுத்து வைப்பே தை, தை, தை. துண்டானவற்றை இணைக்கும் இணைவு ஆணை தை. தொழில் தையல், தைத்தல் ஓரரிய கலை! கன்னியர் கொள்ளும் கவின் நோன்பு தைந்நீராடல், பாவைப் பாட்டின் நிறைவு தைந்நீராட்டு! அந்நீராட்டின் அருமையை அறிய வேண்டுமா? திருவெம்பாவை திருப்பாவையில் திளைக்க. தைஇத்திங்கள் தண்கயம் என எத்தகு பாராட்டுப் பெறுகிறது. கயம் (ஆழ்நீர் நிலை) மற்றை நாளிலும் திங்களிலும் இல்லாததா அக்கயம்? தைஇத்திங்கள் தண்கயம் என்கின்றன நற்றிணையும் (80); புறநானூறும் (70) தை இத் தண்கயம் என்கிறது ஐங்குறுநூறு (84) பாரியின் பறம்புத் தைஇத்திங்கள் தண்ணிய நீரைக் குறிக்கிறது குறுந்தொகை (196) அது. பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய என்கிறது. தைந்நீர் ஆடுவார் ஒருவரா? இருவரா? ஊரூர் ஊரூர் வாழ்நர் அனைவரும் ஆடுவர். தைஇத்தண்கயம் போலப் பலர்படிந்து என்கிறது ஐங்குறு நூறு (84) தையில் நீராடும் பேறு தவப்பேறு. அப்பேறு வாய்த்தல் அரிது. ஆதலால் தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ? என்கிறது கலித்தொகை (59) தைந் நீராட்டுப் பற்றிய பெரிய பாட்டு பரிபாட்டு ஒன்று (11). அது, இன்ன பண்பின் நின் தைந்நீராடல் என்கிறது. அதற்கு உரைகாரர். இத் தைந்நீராடலை முற்பிறப்பில் செய்த தவத்தாலே இப்பிறப்பிற் பெற்றேம். அதனை யாவரும் நயக்கத்தக்க நின்னீர்நிறைக் கண்ணே மறுபிறப்பினும் பெறுவேமாக என்கிறது. முன்னை வாய்த்த நீரினும் தைந்நீரின் தெளிவு பெரிது தண்ணிதும் தெளிதலும் ஒருங்கே கொண்டது. அதனால், நீ தந்தாய் தைந்நீர் நிறந்தெளிந்தாய் என்கிறது அதே பரிபாடல் (11) இளங்குழந்தையர், இளஞ்செல்வியர், கன்னியர் நீராடல் மகிழ்வில் வரைகடந்தால் பாதுகாப்பு அரணம் வேண்டுமே அவர் எவர்? தாய் அருகா நின்று தவத்தைந் நீராடுதல் என்கிறது மேலைப் பரிபாடல். பராந்தக பாண்டியன் மெய்க்கீர்த்தி தைப்பூசப் பிற்றைஞான்று வந்திருந்தார் எல்லார்க்கும் தியாகமிட அறத்தால் விளங்கிய பாண்டியன் என்கிறது. இயற்கை இயங்கியல் படி தைத்திங்கள் பிறப்புக்குத் தனிச்சிறப்பு உண்டு. அஃது என்னவெனில் இமயத்துப் பனிப் பொழிவு முதல் குமரிப் பனி நடுக்கம் வரை வருத்துவதற்கு மூலம் என்ன? அது கதிரினி தென் செலவு! அது முற்றுப் பெற்றுத் தைம்முதல் நாள் தொட்டு வடதிசைச் செலவு மேற்கொள்கின்றது. வெம்மை வேண்டல் என இன்பந்தரத் தொடங்குகின்ற பெருமையும் பெற்றிமையும் கொள்கின்றது. ஆதலால், குடியும் குடித்தனமும், தொழிலும் வளமும் ஓங்கிச் சிறக்க உதவும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர் ஆண்டுப் பிறப்பெனச் சிறக்கச் செய்தவர் எவ்வெவரும் போற்றுதற்குரியராம். தைந்நாள்! பொங்கல் நாள்! தமிழர் தனிப்பெரு விழா நாள் அது. அந்நாள் ஏறுதழுவுதல் விழா; இன்று வரை தொடரும் சான்று நாள்; உழவர் உழைப்பாளர் பட்ட பாட்டின் பயன் என விளங்கும் கூட்டமுத விழா பொங்கல்விழா! இது பழையதா? புதியதா? பொங்கல் வாழ்த்து விடுத்தல் புதுவது; முக்கால் நூற்றாண்டுப் புதுமையது தொடங்கியவர் கா.நமச்சிவாயர். பொங்கல் விழாவோ உழவன் தொடங்கிய உழவின் தொடக்கம் தொட்டது. வித்தியது விளைந்ததா? களம் வந்தது களஞ்சியம் சேர்ந்ததா? அவன் வாழ்வில் பூரிப்பு ஏற்பட்டது. அப்பூரிப்பின் அடையாளம் பொங்கல் விழா! அறுவடைத் திருவிழா! பொங்கல் என்பதன் உணர்வுப் பொருள், மகிழ்ச்சி பொங்கும் கடலைக் கண்டவன், அருவி பூரித்து விழும் இடத்திற்குப் பொங்கு மாகடல் என்றே பெயரிட்டான். பூத்துக் குலுங்கும் சோலைக்குப் பொங்கர் என்றே பெயரிட்டான். புது மழையைப் பொங்கல் மழை என்றான். அவன் கண்ட பொங்கல் ஒப்புரவுப் பொங்கல். அறுவடை ஆக்கம் அனைவரையும் அடைந்து, ஆடிப்பாடிக் கூடிக் குலவி மகிழவைக்கும் பொங்கல் ஆயிற்று. குழவியர் முதியவர் காளையர் கன்னியர் என அனைவரையும் புத்துடை உடுத்திப் பொலிவோடு விளங்கச் செய்யும் விழா வாயிற்று. ஆடவர்க்கும் மகளிர்க்கும் கலை விழாக் கோலம் ஆயிற்று! தலைவிழாவாம் கோலமும் தமிழர்க்கு ஆக்கிற்று. அந்நாளை ஆண்டுப் பிறப்பெனல் இந்நாளில் அதற்கு வாய்த்த முடிசூட்டு விழா. பொங்கலில் பால், அரிசி, பருப்பு வகை, பழவகை, இனிப்பு, ஏலம், கிராம்பு, சுக்கு, நெய் எனப் பலவும் இணைந்து பொங்கி, தன்தன் சுவையை விடாமல் பொதுவுக்குச் சுவையாக்கி ஒன்றற்கு ஒன்று சுவையாய் ஒப்புரவு ஆக்கும் படையல் விழா. பலப்பலரும் கூட்டுண்டு மகிழும் குடும்ப நல - நாட்டு நல விழா! அன்று எல்லார்க்கும் எல்லாம் என்னும் இனிய சூழலில் கதிரோனுக்கு எடுக்கும் பொதுமை விழா அது. அப்பொங்கல் நாளை அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் நாள். அது நன்றியறிதல் விழா! ஆன்ம நேயம் பெருக்கு நாள். காட்டிலும் மேட்டிலும் உழைத்து, வீட்டிலும் வீதியிலும் வளம் சேர்த்ததும், அரிசியையும் மணிகளையும் பருப்புகளையும் தந்துவிட்டுத் தட்டை நாள், பொட்டு பொடி, தவிடு காடி என உண்டும் பருகியும் உழவனுக்கு உணவும், நிலத்துக்கு உரமும் தந்த காளைக்கும் எருதுக்கும், ஆவுக்கும் கன்றுக்கும் ஓய்வு தந்து பொங்கல் வளம் தந்து ஊர்மகிழ எடுக்கும் தேர்த்திருவிழா. அவ்விழா நாள் - மாட்டுப் பொங்கல் நாள் - உழவு பாடிய தமிழ் உழவர் முதுபெருங்கிழவர் - முப்பால் கண்ட பொய்யா மொழியார் நாளாக ஆக்கப்பட்டது பெருஞ்சால்பினதாம். தொல்காப்பியர் நாள் அதே போல் தமிழ்ப் பொங்கல் படைத்த தொல்லோன் பழந்தமிழ் வளமெலாம் பாரறிய வைக்க ஒப்பிலா நூல் செய்த ஒல்காப்புலமைத் தொல்காப்பியன் விழாவாகத் தைம் முதல் நாளாம் பொங்கல் விழா நாளைத் தொல்காப்பியன் விழா நாளாகவும் உறுதிப்படுத்தி வழிவழி வழக்காக்கல் கடனாம். அது தமிழ் மொழியாம் கதிரோன் வழிபாட்டு நாளாகச் சிறக்க வழி செய்வதாம். ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் தன்னேர் தனியாழிச் செங்கதிரொன் றேனையது தன்னேர் இலாத தமிழ் என்பது தமிழ் மொழிக் கதிர் வாழ்த்தாம். தமிழ் இயற்கையில் பிறந்து இயற்கை ஒலியால் சொல்லாகி இயற்கை வடிவாய் இயங்கித் தொன்று நாள் தொட்டு இன்றுவரை இயங்கிவரும் செவ்வியல் செம்மொழி. செந்தமிழ் என்னும் பெயரீடு தற்கிழமையாய்க் கொண்டது. சான்றோர் நாள் செம்மைவேறு தமிழ் வேறு எனப் பிரிக்கக் கூடாமல் அமைந்தது. செஞ்ஞாயிறு செந்தாமரை போல அச்செவ்வியல் பேறு தொல்காப்பியர் திருவள்ளுவர் என்னும் இருவர் அளவில் அமைந்தது இல்லை. சங்கச் சான்றோர் பிற்காலச் சான்றோர் என எத்தனைபேர்? இச்சான்றோர் நாளாகத் தைத்திங்கள் மூன்றாம் நாளை அமைத்தல் சிறப்பாம். சுறவமாம் தை முதல் நாள் தொல்காப்பியர் நாள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் மூன்றாம் நாள் சான்றோர் நாள் என நிரலே முறைப்படுத்துதல் நேரிய சீரிய முழுமைத் தமிழ் நெறியாம். வாழ்த்து இனித் தைத்திங்கள் முதல் முன்று நாளுக்கும் வாழ்த்து வேண்டுமோ? வேண்டும் எனின், ஐங்குறுநூறு முதல் பத்து நோக்குக. வாழி ஆதன் வாழி அவினி எனவேட் டோளே யாயே என்னும் அப்பத்தின் வாழ்த்துகளுள் சில வருவன : நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க! - 1 விளைக வயலே! வருக இரவலர் - 2 பால்பல ஊறுக! பகடுபல சிறக்க - 3 பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக - 5 அறம் நனி சிறக்க! அல்லது கெடுக - 7 அரசு முறை செய்க! களவு இல்லாகுக - 8 நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக - 9 மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க - 10 என்றும் வேண்டத்தக்க வாழ்த்துகள் இல்லையா இவை? இன்னும் கிடைத்தற்கு அரிய ஒரு வாழ்த்து; தகடூர் யாத்திரை தருவது. நாட்டை வாழ்த்தும் அவ்வாழ்த்து, ஏட்டுக்கும் எழுத்துக்கும் மட்டும் எழிலாய் அமைந்தது இல்லை! நாடே ஒருமித்து நின்று இயற்கையைக் காத்து எஞ்சா வளங்களையெல்லாம் இயல்பாகப் பெற்று எல்லா உயிரும் இனிது வாழ வாழ்த்தும் வாழ்த்துப் பெட்டகமாம்! அகன்று விரிந்த நாடு பெருகிவரும் நீரால் சிறப்பதாக! நிலத்தில் விதைக்கப்பட்ட விதை குறையாமல் முளைப்பதாக! முளைத்த வித்து முட்டுப்பாடு இல்லாமல் வளர மழை பொழிவதாக! பொழிந்த பின்னர்ப் பயிர் பக்கம் விரிந்து கிளைப்பதாக! அக்கிளைகள் எல்லாம் பால்பிடித்துத் தலைசாய்த்துக் கதிர்கள் மணிகள் கொள்வதாக! அக்களத்தில் நெற்குவியல்கள் காவல் இன்றிக் கிடப்பதாக! களப்பணிகளால் உழவர் மகிழ்வொலி என்றும் நிறைவதாக! இவ்வாழ்த்தைக் கூறும் பாடல், பெருநீரால் வாரி சிறக்க; இருநிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக; நாறார முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க; அக்கிளை பால்வார்பு இறைஞ்சிக் கதிர் ஈன; அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம்நிறைக; அக்களத்துப் போர்எலாம் காவாது வைகுக; போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையொடு நாரை இரியும் விளைவயல் யாணர்த் தாகஅவன் அகன்தலை நாடே! (9) என்பது. மாடிக்குஏற ஏணி; மலைக்கு ஏறப் படிக்கட்டு; வாழ்வில் ஏற நூல் ஏணி! நாடு வாழ இயற்கைக் கொடைவளமாம் இவ்வாழ்த்து ஏணி! இவ்ஏணியைத் தந்தவன் எவனோ, தன் பாடலைப் புகழேணியில் வைத்துவிட்டுத்தான் அதனோடு அவனாய் அமைந்து விட்டான். முடிபு இவ்வாய்வின் சுருக்கமும் முடிபும் வருமாறு. ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தை அறுதியிட அதன் பழமை பெருந்துணை. வாய்த்த தமிழ்ப் பரப்பில் உள்ள எவற்றுக்கும் பிற்பட்டதாகாப் பெருமையது என்பதைத் தானே நிலைப்படுத்திக் கொள்ளும் தகவினைக் கொண்டுளது. அதில் வாய்க்கும் அகச்சான்றுகளுள் தலைப்பட்டது பனம்பாரனார் இயற்றிய பாயிரம். அதில் உள்ள நாட்டு எல்லைக்குறிப்பும் ஐந்திரக் குறிப்பும் அருமை வாய்ந்தவை. மற்றைப்புறச் சான்றுகளுள் கயவாகு காலம், கடல்கோள் காலங்கள், யவனர் பற்றிய குறிப்புகள், அருகர் புத்தர் காலங்கள் என்பன சுட்டத்தக்கன. இவற்றைக் கொண்டு, இக்கணிப்புக்கும் கீழெல்லை இருக்க முடியாது என்னும் வகையில், தொல்காப்பியர் காலம் கி.மு.590 தொடங்கி கி.மு.504 முடியக் கொள்ளலாம் என்று செய்யப்பட்ட முடிவாகும். இயல்பாகப் புலவர் அவையம் திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்று முடிபு செய்ததைத் தமிழ்நாட்டு அரசு ஏற்று அந்நாளை ஆவணப்படுத்தியது. தைத்திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகவும் அரசு ஏற்றுப் போற்றியது. அவ்வகையில் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டுப் பிறப்பு நாளாகவும் சட்டம் நிறைவேற்றியது. அப்புத்தாண்டு நாளை - தைத்திங்கள் முதல் நாளைத் - தமிழினப் பொங்கல் கொடையாக வழங்கிய தொல்காப்பியர் நாளாக அரசு ஏற்றுப் போற்றுதல் வேண்டும். தமிழ், செம்மொழி என்னும் சீர்த்தி பெற இயல்பாக வாய்த்த கொடையாளர் சங்கச் சான்றோர் நாளைத் தைத்திங்கள் மூன்றாம் நாளாக்கி மூன்று நாள்களையும் தமிழ்வள நாள்கள் ஆக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் சுருக்கமும் முடிபும் ஆம்! இன்பமே சூழ்க! நலமே மல்குக! வாழிய நலனே! வாழிய நிலனே! தமிழ் நெறி காத்த தமிழ்க் காவலர் தொல்காப்பியர் தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்னும் பதிவு சிலர் நூல்களில் உள்ளது. திருவள்ளுவரையும் சமணர் எனக் கொள்வார் உளர். இவ்விருவருள் முதலாமவர் சமண சமயத்தவர் தாமா என்பதைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையாம். சமயம், மதம் சமயம் என்னும் சொல்லோ மதம் என்னும் சொல்லோ தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. சங்கப்பாட்டு, தொகை, திருக்குறள் என்பவற்றிலும் இடம் பெறவில்லை. இச்சொற்கள் இடம் பெற்றது மணிமேகலை நூல் தொட்டே ஆகும். சமணர் தொல்காப்பிய ஆசிரியர் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதை யாவரும் அறிவர் என்று உறுதிப்படுத்துகிறார். வர்த்தமானன் பதிப்பக நிறுவனர் பேரா. சீர்சந்திரனார் (சைன தத்துவமும் பஞ்ச பரமேட்டிகளும் பக்.4) இக்கருத்துடைய ஆய்வாளர் சிலர்! தொல்காப்பியர் நாளில் வர்த்தமான மகாவீரர் பிறந்தார் அல்லர். ஆயினும் அச்சமயப் பெருமக்கள் இருபத்தொருவர் கூறப்படுகின்றனர். அக்காலத்தே சமணம் தமிழகத்தில் புகவில்லை! வர்த்தமானருக்குப் பின்னரேசமணம் பரப்பப்பட்டது. சமணர்கள் - அமணர்கள் தமிழகத்தில் மதுரைப் பகுதியில் மிகப் பலர் மலைவாணராக வாழ்ந்துளர். சமணர் மலை, நாகமலை, ஆனைமலை என்பவை அவர்கள் வாழ்விடமாக இருந்துள. மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் தோன்றியது. அதன் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு. அதனை நிறுவியவர் வச்சிரநந்தி என்பார். சமணர் தொண்டு ஞானசம்பந்தர், நாவுக்கரசர் வரலாற்றை நோக்கின் சமணர் தமிழ்ச் சமயத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டமை புலப்படும். வேதியமோ வன்மையாகச் சமணத்தை முட்டியது. வேதியத்தைத் தழுவிய சைவமும் சமணத்தை எதிர்த்தது. சமணச் சான்றோர் சிலப்பதிகாரம், சூளாமணி, பெருங்கதை, திருநூல் இன்னவும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் முதலியவும் இயற்றினர். அவர்கள் செய்த தமிழ்த் தொண்டு கி.பி.இரண்டாம் நூற்றாண்டு தொட்டு ஏற்பட்டவையே. ஐந்திரம் இந்நிலையில் ஐந்திரம் உணர்ந்த தொல்காப்பியர் அருகராம் வர்த்தமானர்க்கு முற்பட்டவராம். விண்ணவர் கோமான் விழு நூல் கற்றவர் மகாவீரர் என்பது வரலாறு. ஐந்திரம் கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் வழக்கற்றதாகிப் பாணினியமே பயில வழங்குதல் அறியப்படுகின்றது. பாணினிக்கு முற்பட்டவர் தொல்காப்பியர். ஆதலால் காலக்கணிப்பின்படி அவர் சமணர் அல்லர்; அந்நாள் மகாவீரர் தோன்றினார் அல்லர். அவர்க்கு முன்னவர்களோ பெயர் அளவில் தொடராக அறியப்படுபவர்களேயாம்! அது சமணர் வரலாறே அன்றித் தமிழர் வரலாறு அன்றாம். சமண நூன் மரபு இனிச் சமண சமயத்தார் நூன்மரபு, முக்குடை, பிண்டி, அச்சுதன் என்பன இல்லாமல் இயல்வது இல்லை. இவை தொல்காப்பியத்தில் இல்லை. சமய அழுத்தம் உடைய ஒருவர், இலக்கணமாயினும் சரி, இலக்கியமாயினும் சரி, இயற்றுங்கால் அவர்தம் வழிபாட்டு நெறி, கொள்கைக் குறி இல்லாமல் இருப்பது இல்லை. தூய தமிழ்ப் பெயராக இருப்பதும் இல்லை. இளங்கோ இளவரசப் பெயரேயன்றி சமயப் பெயரன்று. அவர் தமிழ்ச் சமணராக விளங்கியவர். நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் என்பார் பெயர்களோடு எண்ணின் விளக்கமாம். அத்தகையவரே கொங்குவேள் முதலிய சிலர். தமிழ் மரபு பழமையான தமிழ் மரபுகளைக் காக்க நூல் செய்த தொல்காப்பியர் தமிழ் நெறியராகவும், தமிழ் மீக்கூர்ந்த பற்றுமையும், காவல் கடனும் பூண்டவராகவும் இருந்தமையால், அவர் அயல் நெறியர் ஆகார்! அவர் வடவெழுத் தொரீஇ, வடசொற்கிளவியைத் தமிழ் மரபில் எழுத வேண்டும் என்று ஆணையிடுவது கொண்டே, அவர் வேத வழியர் அல்லர் என்பது போல், சமண நெறியர் அல்லர் என்பதும் தெளிவாம். ஏனெனில், வேற்றுச் சொல்லும், வேற்று எழுத்துத் தழுவலும் சைவம், வைணவம் முதலிய பெயர்களாலேயே புலப்படும்! சமணம் பௌத்தம் என்பனவும் விலக்கன்று! தமிழர் சமயமாகிய சிவநெறியும் மால்நெறியும் வடசொல் மாலையை ஏற்று மயங்கிக் கிடந்தமையும் இன்னும் மீளா அடிமை நிலையில் கிடப்பதும் அறிந்தால் சமய வாணர் நிலை புலப்படும். வினைக் கொள்கை வினைக் கொள்கை அருக சமயத்தாரின் முத்திரை போல்வது. ஊழ் எனப்படும் உலகத்து இயற்கையையே ஊழ்வினை எனத் தடமாற்றியது அருக சமயமேயாகும். ஊழ்வினை என்னும் சொல் தொல்காப்பியம், திருக்குறள், பாட்டு, தொகை ஆகிய இருபது நூல்களிலும் ஓரிடத்துத்தானும் இடம் பெறவில்லை. முதற்கண் ஊழ்வினை இடம் பெற்றது சிலப்பதிகாரத்தில் தான். அஃது அடிகளார் மேற்கொண்ட அருக சமயச் சார்பு வழிப்பட்டது. அறிவுக் கொள்கை இனிச் சமண சமய அடிப்படைக் கோட்பாட்டில் ஓரறிவு முதல் ஐயறிவு வரை வரம்புபடுத்தப்பட்டதை அன்றி, ஐந்தன் மேல் ஏறிய மன அறிவாம் ஆறாம் அறிவுக்கு இடமில்லை. ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந் தாகும் என்றும் (நன்.444) வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதிசெவி அறிவோடு ஐயறி வுயிரே என்றும் (நன். 449) சமணப் பவணந்தியார் இயற்றிய நூல் கூறுகிறது. தொல்காப்பியரோ, மக்கள் தாமே ஆறறி வுயிரே என்கிறார். தொல்காப்பியர் - கடவுட் கொள்கை இனித் தொல்காப்பியர், நானிலங்களுக்கும் மாயோன், சேயோன், வேந்தன், வண்ணன் என்னும் தெய்வங்களையும், தெய்வம் உணாவே மாமரம்புள் என்னும் கருப்பொருளையும் வைக்கிறார். கடவுள் வாழ்த்து என்பது குறித்துத் தொல்காப்பியர் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (1034) என்று கூறுகிறார். கடவுட் கோட்பாடு அருகநெறியர் கொள்வது அன்று. இவ்வாறு அடிமூலக் கொள்கையிலேயே அருக நெறிக்கும் தொல்காப்பியத் தமிழ் நெறிக்கும் வேறுபாடு உண்மையை உணர்வார் தொல்காப்பியரை அருகர் எனச் சொல்லார். அவர் சைவர், வைணவர் எனவும் சொல்லார். ஏனெனில், அவர் நாளில் இச்சமயங்கள் தோன்றின அல்ல. சிவனார் வழிபாடும், திருமாலார் வழிபாடும், அம்மை வழிபாடும் தொன்மையன என்பது அறியச் சான்றுகள் பலப்பல உண்டாயினும், அவ்வழிபாடுகள் சமயப் பெயர் பெற்றவை அல்ல! மெய்கண்டார் தோற்றத்தின் பின்னரே சிவனிய மெய்ப்பொருள் நூல் வாய்க்கின்றது. மெய்கண்ட பரம்பரையும் உண்டாகின்றது. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம், இறையருட் செல்வர்கள் படைப்பு ஆயவை கொண்டு வகுக்கப்பட்டதே சைவ சமயம் ஆயிற்றாம், அதன் பொருள் நூல் - முதல் நூல் - சிவஞான போதமேயாம். தமிழர் சமயம் சமணம் தமிழகச் சமயமன்று; தமிழர்களால் ஏற்கப்பட்டும், பங்களிப்புச் செய்யப்பட்டும் இருப்பினும் தமிழகத்துக் கிளர்ந்த தமிழர் சமயமன்று. பாகத மொழி வழியது அது. வடமொழி வரவுக்கு முற்பட்டதேனும், அதற்குக் கொண்டு கொடுத்தும் தழுவிக் கொண்டது. அதன் சமயச் சொற்களே தமிழுக்குரிய தல்லாத அயற்சமய நெறியது என்பதைக் காட்டுவனவாம். தமிழர் சமயங்களும் கூடத் தம் மெய்யியற் சொற்களை அயன்மொழி வழியே ஆக்கியும் ஆக்க இடந்தந்தும் இன்றும் முற்றாக விலக்க முடியா நிலையில் இருப்பதும் வடமொழியே வழிபாட்டு மொழி, தெய்வ மொழி என்பதற்கு ஒரு காரணமாம். வழக்கு தொல்காப்பியம் அயல்வழக்குத் தழுவாத் தமிழ் வழக்குடையது என்பது தொடக்க முதல் இறுவாய் வரை கடைப்பிடியாகக் கொண்டு இயற்றப்பட்டமையால் தான் தொல்காப்பியப் பாயிரம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்ற அளவில் அமையாமல் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தேன் என்றும் அழுத்தமாகக் கூறியது. கரணத்தின் அமைந்து முடிந்த காலை (5) என்னும் கற்பியல் நூற்பாவை வடவர் நெறிக்கு வலிந்து இழுத்துச் சென்று, தமிழ்ப் பரப்பில் அந்நெறிக்குச் சான்று காணாராய்த் தமிழ் நெறிக்கரணத்தையே எடுத்துக் காட்டும் நச்சினார்க்கினியர், காலம் உலகம் உயிரே உடம்பே (58) என்னும் கிளவியாக்க நூற்பாவுக்கு உரையெழுதுங்கால், காலம் உலகம் என்பன வடசொல் அன்று; ஆசிரியர் வட சொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறார் ஆகலின் என, தேர்ந்த தெளிவுரை வழங்குதல் கொண்டு தொல்காப்பியத் தமிழ்ம்மை விளக்கமாம். இன்மைக் கொள்கை வேதங்களையும் அவற்றைத் தழுவியவரையும் எதிர்த்த மதங்களுள் குறிப்பிடத்தக்கவை. சார்வாகம், சைனம், பௌத்தம் என்பன. இம்மதத்தார், ஒரு தனிக்கடவுளையோ அக்கடவுனின் ஏற்றத்தையோ நம்பாதவர்கள். மேலும், வேதங்கள் கூறும் சமயச் சடங்குகள் மக்களை உய்விக்க மாட்டா என்பவர்கள் என்பர். (தமிழகத்தில் ஆசீவகர்கள் பக்.6) அணுக்கொள்கை சார்வாக மதத்தார் ஆசீவகர் எனப்படுவர். ஆசீவகர், சமணர், பௌத்தர் ஆகிய மூவரும் அணுக்கொள்கையர், உலகப் பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பர். அணுக்களுக்கு அழிவு இல்லை; தோற்றமும் இல்லை என்பர். அவ்வணுத்திரளே ஒலி என்பது அவர்கள் கொள்கை. ஆதலால் பவணத்தியராகிய சமணர் இயற்றிய நன்னூலில், மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்தது முதல் சார்பு என இரு வகைத்தே என்கிறார். இவ்வணுக் கொள்கையராகவோ, குருவர் வழிபாட்டுக் கொள்கையராகவோ தொல்காப்பியரைச் சுட்டல் இயலாது. பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகற் றொழுது நன் கியம்புவன் எழுத்தே என்று தொடங்குவது போலவோ, மொழி முதற் காரணம் அணுத் திரள் ஒலி என்றோ கூறினார் அல்லர். நூல் தொடக்கமே, எழுத்தெனப் படுப அகர முதல னகர இறுவாய் முப்ப ஃ தென்ப; சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே என்பதாம். ஆதலால் அணுக் கொள்கைச் சமயத்தார் எனின், அதனைக் கூறியிருப்பார். அன்றியும் தொல்காப்பியத்தில் அணு என்னும் சொல்லே இடம் பெறவில்லை. உலக மூலமாம் ஐம்பூத மயக்கத்தை, நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் என்ற அவர், ஐந்து பூத மூலமாம் அணுவைச் சுட்டினார் அல்லர். சமணர் ஏற்காத கடவுள், தெய்வம் ஆகிய சொற்களையும் கூறுகிறார். ஆதலால், தொல்காப்பியர் சமணர் ஆகார். நிலையாமைக் கொள்கை நிலையாமைக் கொள்கையில் மிக அழுத்தம் உடையவர் சமணர். தமிழ் நெறியாம் காஞ்சித் திணையின் இலக்கணத்தை, பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே என்கிறது. அவர் கூறும் மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை முதல் காடு வாழ்த்து ஈறாக இருபாற்பட வகுத்த இருபது துறைகளும், அமர நிலையே; அஃது அழுகை நிலை அற்ற வீறு மிக்கவையாம்! அகத்திணை அகத்திணை புறத்திணை என்பவை தமிழர் பொருள் நெறி கூறுவன. இப்பொருள்கள் இரண்டனுள் தொல்காப்பியர் அகத்திணைக்கே முன்மை கொடுத்ததுடன் களவியல், கற்பியல், பொருளியல் என மூன்று இயல்களை மேலும் வகுக்கிறார். புறத்திணை அத்தகு விரிவு பெற்றிலது. அவர் யாத்த முறையே முறையாய் பாட்டு தொகை நூல்களில் அகத்திணை மிக்கும் புறத்திணை சுருங்கியுமே உள்ளமை தமிழ் கற்றார் எவரும் அறிந்தது. தமிழ் என்பதே அகப்பொருள் என்றும் களவியல் என்றும் பெருமையொடு கூறல் நூன்மரபு ஆகியது. எழுத்து சொல் பெற்றும், பொருள் பெறாமை மற்றவை பெற்றிலேம் எனப் பாண்டிவேந்தன் கவல வாய்க்கப் பெற்றதாகக் கூறப்படும் பொருள் இறையனார் களவியலேயாம். அது என்ன கூறிற்று எனின் தமிழ் கூறிற்று என்பது மறுமொழி. (விடை) ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிக்கக் கபிலர் பாடிய நூல் குறிஞ்சிப்பாட்டு! குறிஞ்சியாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆம்! இவை மற்றை மொழியரும் சமயத்தரும் காணாத தமிழ் நெறியவையாம். பொருள் இலக்கணம் என்பது தமிழர் வாழ்வியல் இலக்கணம் என்பது தேர்ந்து தெளிந்த முடிபு. புறத்திணை போர் வேண்டாப் பொறுமை நெறி, ஐம்புலன் ஐம்பொறி வெல்லும் வீரமே வீரம் என்பவை சமண நெறி வர்த்தமான மகாவீரர் சிறப்பே புலனைந்தும் வென்ற வெற்றியர் என்பதாம். இனி அகப் பொருளோ சமணர் பாராட்டும் சிறப்புப் பொருளன்று. ஆதலால், தொல்காப்பியர் சமண சமயத்தர் அல்லர் என்பது வெளிப்படை. மகளிர் இனி மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்பது சமணக் கொள்கை. பிற இனத்தரினும் சமணப் பெண்டிர் கற்று வல்லாராய் புலமை மிக்காராய் இருப்பினும் ஆடவர்க்கொப்ப மதிக்கப்படுவது இல்லை. ஆனால் தொல்காப்பியர் சொல்லும் கிழவன் கிழத்தி, தலைவன் தலைவி, இல்லறம், துறவு என்பவை தனிப் பெருஞ்சிறப்பின. துறவு இல்லறத்தை மேற்கொண்டு துய்ப்பன துய்த்து மக்களைப் பெற்று அவர்களைத் தக்கவர்கள் ஆக்கி, சுற்றத்தார் சுற்றப்பட அறநெறியாளராய் வாழ வழிகாட்டி வாழ்வின் நிறைவில் மக்கள் சுற்றம் பாராட்டத் தக்க வகையில், பெற்ற பெருமையர் ஆகிய அவர்கள் நிறை கடன் செய்த நேயமிக்காராய்த் துறவு மேற்கொள்வர். தனித்துறவு பற்றித் தொல்காப்பியர் சொன்னார் அல்லர். ஆதலால் இல்லற மாளிகையின் மேல் எடுக்கப்பட்ட மாடி தமிழர் துறவாம்! காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்பது அந்நூற்பா (கற்பியல். 51) இதனால் ஆடவர் எனினும் மகளிர் எனினும் தவம் புரிதற்கும் வீடு பேறு பெறுவதற்கும் ஒத்த உரிமையரே என்பது தமிழ்த் தொல்காப்பிய நெறி என்பது விளங்கும். காமம் இசையும் நாடகமும் காமத்தை வளர்க்கும்; ஆதலால் அவற்றைக் கடிதல் (விலக்குதல்) சால்பு எனக் கொண்டவர் சமணர் என்றும், அக்கொள்கையால் இசையும் கூத்தும், அவற்றின் நூல்களும் இறந்தொழிந்தன என்றும் கூறுவர். ஆனால், அக்கொள்கை தமிழிலக்கியக் கலை உலகில் ஏற்கக் கூடுவதாகத் தோன்றவில்லை. முதல் காப்பியமாம் சிலம்பு செய்துள்ள கலைமணம் ஒன்றா இரண்டா? இசை, இசைக்கருவி, அரங்கம், ஆடல் திறம், வரிப்பாடல்கள் கொள்கை கொள்ளையாய் இல்லையா? சிந்தாமணிக் காப்பியத்தில் யாழ் முதல் எத்தனை கலைகள்? பெருங்கதையும் தான் என்ன, கலையில் கடல் அல்லவோ? சமணர்கள் தங்கிய குகைகள் சிற்பக் கூடங்களும், ஓவியக் கூடங்களும் அல்லவோ! சமண சமயத்தார் அகப்பொருளாகிய காதல் பற்றிப் பாடும் திறம் இல்லார் எனப் புலமையர் புகலத் திருத்தக்க தேவர் சிந்தாமணியை மணக்காப்பியமாகவே பாடினார் என்பதன் உள்ளீடு கருதத் தக்கது. மேலும் அவர் ஆசிரியர் அச்சணந்தியார், காப்பியம் பாடும் திறம் தம் மாணவர்க்கு உண்டா என அறிந்து கொள்ள, ஓடும் நரியொன்றைக் காட்டி அதைப் பாடிவா என ஏவப் பாடப்பட்ட நரி விருத்தம் முற்றாக நிலையாமையை வலியுறுத்துவதே என்பதை அறிந்து கொள்ளல் தெளிவாம். சமணர் இயற்றிய நூல் எனப்படும் நாலடியாரில் உள்ள இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் அப்பாலா, கழிசடைப்பாலா என்பதே வினாவாக எழும், சூடிக் கழித்த மலரன்ன இழிமைய நிலைகளையுடையவை. பட்டினத்தார் பெயரால் இட்டுக் கட்டி இடையே சேர்க்கப்பட்ட மகளிர் இழிமைக்கு முன் வரவு நாடிக் காமத்துப்பால் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (பொருள் இயல் 29) என்னும் தொல்காப்பியரா சமணர்? கலைக்கொள்கை கலையாட்டத்தால் வந்தது தானே கோவலன் நிலையட்டம்? கலைப்பிரிவின் விளைவு தானே கோவலன் கொலைப் பிரிவு மூலம்? காதற் கணிகையின் கடற்கரைப் பாடல் கனக விசயர் கதிர்த்தலை முடியை நெரித்தது என்று மாடலன் சொல்லியவாறு, அவ்வளவோடா முடிந்தது? எத்தனை சாவுகள்! அழிபாடுகள்! கலை கலைக்காக அன்றிப் பிறரை வெல்லும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டமையே சமண சமயக் கலைக் கொள்கை எனப் புலப்படல் அறியலாம். முத்தமிழ் நோக்கு அன்னது அன்று என்க. தொல்காப்பியர் மாந்தர் உளவியல் கலையியல் இன்பியல் துன்பியல் மேலும் எண்ணும் பல்லபல இயல்களின் உயிர் நாடியாம் மெய்ப்பாட்டியலைக் கற்ற ஒருவர், அவ்வியலைப் படைத்தாரைச் சமணர் என எவ்வகையாலும் கொள்ளார்! சுருக்கல் வேண்டா ஒருவர் - அரிய பெரிய உரையாசிரியர், நச்சினார்க்கினியர், சமதக்கினியார் மகனார் திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என நெடுஞ்சரடு விட்டார்! இல்லாத அகத்தியரின் பொல்லாத மாணவராகவும் காட்டினார்! தொல்காப்பியரை வேத வழியர் ஆக்குவதிலே அவ்வளவு காதல்! அது போல் தொல்காப்பியரைச் சமணர் ஆக்குதல் வேண்டா! தமிழ் நெறி சிதையாமல் காக்கும் வகையில் இலக்கணம் இயற்றிய தமிழ் நெறித் தமிழர் தொல்காப்பியர் என்பதே ஆய்வுக்கும் ஆய்வர்க்கும் சால்பாம்! எச்சமயத்தினும் மேம்பட்டது மொழி இன நெறியாகும்! அந்நெறியைச் சுருக்கி விடல் ஆக்கச் செயலன்று என்க! தமிழ் அறம் இனித் தொல்காப்பியரைத் தன் சமயத்தவர் என்பதால் சமணம் பெறற்குள்ள பெருமை எதுவும் இல்லை. ஏனெனில் அதற்கும் சமணமதக் கோட்பாட்டுக்கும் தொடர்பு இல்லாத - ஏன் - மறுதலையும் பட்ட - நூலால் அது பெறும் பேறுதான் என்னவாக இருக்க முடியும்! தொல்காப்பியர் சமணர் அல்லர் என்பதால் தமிழிலக்கணம் கற்பார்க்குக் குறைவாவதும் எதுவும் இல்லை. தொல்காப்பியர் தொல்காப்பியராகவே இருக்க விடுவதே அருக அறமும் தமிழ் அறமுமாம்.