இளங்குமரனார் தமிழ்வளம் 35 1. பரிபாடலில் திருமுருகன் 2. பெரும் பொருள் விளக்கம் (உரை நூல்) ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 35 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 192 = 208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 200/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் பரிபாடலில் திருமுருகன் பொழிவாளன் புகல்வு 1 1. பரிபாடல் 4 2. செவ்வேள் (முருகன்) 8 3. செவ்வேள் பிறப்பு 11 4. செவ்வேள் உருவும் திருவும் 16 5. செவ்வேளின் வீறு 19 6. செவ்வேள் மணவாளன் 23 7. செவ்வேள் வழிபாடு 32 8. செவ்வேளிடம் வேண்டுதல் 36 9. செவ்வேள் பாடல்களில் குன்றமும் கூடலும் 41 10. செவ்வேள் பாடல்களில் கலை வளம் 48 11. செவ்வேள் பாடல்களில் இயற்கை வளம்! 54 12. செவ்வேள் பாடல்களில் இறைமை மாட்சி 57 13. செவ்வேள் பாடல்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் 60 14. செவ்வேள் பாடல்களில் சொல்லாட்சி! 68 இணைப்பு செவ்வேள் பற்றிய பரிபாடல்கள் 72 பெரும் பொருள் விளக்கம் (உரைநூல்) 1. முகவாய் 93 2. பாநயம் 104 3. நூலும் உரைவிளக்கமும் 126 இணைப்புப் பாடல்கள் 174 பரிபாடலில் திருமுருகன் பொழிவாளன் புகல்வு பரிபாடல் சங்கத் தொகை நூல்களுள் ஒன்று; பரிபாடல் என்னும் பாவால் அமைந்தது. 70 பாடல்களைக் கொண்டிருந்த அந்நூலில் 24 முழுப் பாடல்களும் சில உதிரிப் பகுதிகளுமே கிடைத்துள்ளன. பரிபாடலில் வையை, திருமால், செவ்வேள் (முருகன்) பற்றிய பாடல்களே மிக்கிருந்தன. கிடைத்துள்ள பாடல்களில் செவ்வேள் பற்றிய பாடல்கள் 8. அவற்றைப் பற்றிய ஆய்வே இந்நூல். பரிபாடல் இசைப்பாடல். இதனைப் பண் வகுத்துப் பாடினர் என்றும், பண்வகையாலேயே நூலை அடைவு செய்தனர் என்றும், அறிய முடிகின்றது. தேவாரத்திற்குப் பண்ணடைவு முறை உண்டு. அம்முறைக்கு முன்னோடி இப்பரிபாடலாகும். தொகை நூல்கள் எட்டனுள் பதிற்றுப்பத்தும் பரிபாடலும் செறிவு மிக்க சொல்லாட்சியுடையவை. பொருள் காண்டற்கு அருமை வாய்ந்தவை. எனினும், இரண்டற்கும் பழமையான குறிப்புரைகள் கிடைத்துள்ளமை நலஞ்செய்கின்றன. அவற்றைத் தழுவி உரைகளும் வெளிவந்துள்ளன. பரிபாடலின் போக்கு ஒரு நெறிப்பட்டதன்று; அடிக்கு அடி, யாப்பியல் மாறிச் செல்வதும் அதன் இசைமுறை. எல்லாத் தளைகளும், எல்லாப் பாவமைதிகளும் இடம் பெற்றவை. அடியளவால் குறளடி முதல் கழிநெடிலடிவரை குறைந்தும் நிறைந்தும் செல்வதுடன், அடியின் எண்ணிக்கையாலும் சுருங்கியும் நீண்டும் செல்வது. ஆனால், பதிற்றுப் பத்தோ அடியளவால், ஒழுங்குடையது. அடி எண்ணிக்கை அளவால் கூட மிகச் சுருங்காதும் மிகப் பெருகாதும் இடைநிலைப் பட்டதாய் இயல்வது. பதிற்றுப்பத்து, அரசர் ஒருவர்க்குப் பத்துப்பாடலென வரம்புடையது. பரிபாடல், அவ்வரம்பற்றுப் பாடுபொருள் பற்றிய வரன்முறை விடுத்துப் பண்முறையிலேயே செல்லும் கட்டொழுங்குடையது. புறநானூற்றைப் பயின்று திறம் பெற்றவர்க்கு அதன் மேல் நூலாகப் பதிற்றுப்பத்துப் பொருள் விளக்கமும், துறை விளக்கமும் கொண்டு தெளிவுற வாய்ப்பு உண்டு. ஆனால், பரிபாடல் அத்தகைய வாய்ப்புடையதன்று. கலித்தொகைப் பாடல்கள் காதல் காட்சிகளாலும் பாலியல் அமைதியாலும் உரையாடல் தடை விடைப்போக்கு களாலும் பரிபாடலை ஒருசார் தழுவிச் செல்வதெனினும் சொல்லாட்சிகளும் செறிவு நிலையும் ஒப்பிட்டுக் காணும். ஒரு நிலையுடையதன்று. கலித்தொகையின் பளிக்குநீர் ஓட்டம், பரிபாடலோட்டத்தில் காண்டற்கு இல்லை. நின்றும் சுற்றியும் வளைந்தும் மயங்கியும் தயங்கியும் தாழ்ந்தும் எழுந்தும் ஓடும்ஓட்டம் பரிபாடல் ஓட்டம். ஆடு தாண்டும் காவிரி ஓரிடம்! அகல் நெடும் ஐயாற்றுக் காவிரி ஓரிடம்! இது பரிபாடல் நிலை! பரிபாடல் சொல்லாட்சியும் செறிவும் என்பதினெட்டாம் அகவையிலேயே ஈர்த்து ஊன்ற வைத்தன. அதன் வையைப் பாடல்கள் வையை வளம் என்னும் நூலுக்கு மூலவைப்பு ஆயின. இற்றை வாழ்வியலில் பரிபாடல் என்னும் பொழிவு இராசபாளையம், திருவள்ளுவர் மன்றச் சார்பில் செய்ய நேர்ந்தமை, முற்றான ஆய்வுக்கு முதலாயிற்று. இடை இடையே சொல்லாய்வுக்கும் ஒப்பீட்டுக்கும் உதவி நின்றது, பரிபாடல். அதன் செவ்வேள் பற்றிய பாடல்களைச் செவ்விதில் நோக்கி ஆய்வு நூல் ஆக்க மதுரைத் திருக்கோயில்சார் திருப்புகழ் சபை ஏந்தாயிற்று. பேரன்பரும் பண்பில் தலைப்பட்டாரும் வள்ளலார் வழியே வாழ்வியலெனக் கொண்டவருமாகிய பெருந்தக்க வழக்கறிஞர் திருநகர் அ. கிருட்டிணசாமி அவர்களின் கெழுதகைமை நண்பின் வழியே கிடைத்த பெருமகனார் அரிமா பாலசுப்பிரமணியனார், அவர் இனிய முகத்தர்; கனிவின் அகத்தர்; பண்பின் கொள்கலர்; பணிவின் வடிவர்; முருகு வழிபாட்டில் முழுதுறு தோய்வர்! தொழிலொடு தொண்டும் துலங்க விரும்பும் தூயர். அவர்தம் பேரன்பு, அரிமா அன்பர்கள் நடுவத்தில் ஒரு பொழிவுக்கு ஈர்த்தது. அவ்வீர்ப்புப் பெரிதும் வளர்ந்து மதுரைத் திருக்கோயில்சார் திருப்புகழ் மாமன்றத்தில் பரிபாடலில் முருகன் என்பது பற்றி யான் பேருரையாற்றத் தூண்டிற்று. அதற்கு முன்னின்றவரும் அப் பாலசுப்பிரமணியரே. பரிபாடலில் முருகன் (செவ்வேள்) என்னும் இந்நூற் கைப் படியை ஆர்வத்தால் பார்த்து அளவளாவி ஊக்கிய பெரியவர் தமிழியற்புல ஆய்வாளர் திரு. வே. அண்ணாமலையார்! அச்சீட்டுக்கு முன்னரே ஓர் அறிஞர் பார்த்துக் கருத்துரைப்பது எத்துணை நலப்பாடு என்பதை, ஆய்வாளர் உலகம் கடைப் பிடியாகக் கொள்ளல் சிறக்குமெனப் பரிந்துரைத்துப் பாராட்டு கிறேன்! இனி இப்பரிபாடல் பதினான்கு தலைப்புகளில் பகுத்து ஆயப்பெற்றுள்ளது. பரிபாடல் இலக்கணமும் செவ்வேள் பெயரமைதியும், செவ்வேளின் பிறப்புப் பற்றிய தொன்மக் குறிப்புகளும், செவ்வேள் திருவுருவம் ஊர்தி முதலியன, வெற்றிப் பாடுகள், மணவாள நிலை ஆயனவும், செவ்வேளை வழிபடுவார் செலவு, வழிபடு நிலை, வேண்டுகை ஆயனவும், செவ்வேளைப் பற்றிய பாடல்களால் அறியவரும் கூடல், குன்றம் பற்றிய செய்திகள், கலை வளம், இயற்கை வளம், இறைமை மாட்சி, அந்நாளை மக்கள் பழக்க வழக்கம், நம்பிக்கை ஆகியனவும், செவ்வேளைப் பற்றிய பாடல்களில் அமைந்துள்ள சொல்லாட்சிகள் எதுகை வளம் கலைச் சொல்லாக்கம் என்பனவும் இதன்கண் ஆயப்பெற்றுள. இதன் வரிசையாகப் பரிபாடலில் திருமால், பரிபாடலில் வையை என்பனவும் தொடருமெனக் குறிக் கொள்கின்றேன். பொழிவுகள் பொழுதுபோக்கு அன்று என்னும் கருத்து பொழிவார்களுக்கு ஊன்றுதல் வேண்டும். அவ்வூன்றுதலின் வடிவாகத் திகழ்ந்தவர்கள் திரு. É.f.; மறைமலையடிகள் ஆகியோர். அவர்கள் வழி, ஆக்க வழி என்பதை அமைப்புகளும் அறிஞர்களும் உணர்ந்து போற்றுதல் வாழ்வியல் நலமாகும். பொழிந்தது வழிந்து ஓடாமல் காப்பது அச்சீடேயன்றோ! கூற்றையும் ஆடல் கொள்வது இந்நாள் அச்சே! அச்சேற்றிய அருமையர் கழக ஆட்சியர் திருமலி இரா.முத்துக்குமாரசாமி அவர்களுக்குப் பெருநன்றியன். பாவாணர் ஆராய்ச்சி நூலகம், திருநகர், மதுரை-6. தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன் 1. பரிபாடல் பரிபாடல் என்பது சங்கப் புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. அதன் சிறப்பைப் புலப்படுத்தும் வகையால் ஓங்கு பரிபாடல் என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. பரிபாடல் என்பது நூற்பெயராக விளங்கினாலும், அந்நூல் பரிபாடல் என்னும் பாவகையால் அமைந்தமையால் அப்பெயர் பெற்றது. இசைத் தமிழ் நூல்கள் : முதுற்சங்கப் புலவர்கள் நாளிலேயே அவர்களால் எத் துணையோ பரிபாடல்கள் பாடப்பட்டமையை இறையனார் களவியல் உரை கூறுகின்றது. பேரிசை, சிற்றிசை, வியாழ மாலை, களரியாவிரை, இசைநுணுக்கம் முதலான இசை நூல்களும் அக்காலத்தில் விளங்கியதை அவ்வுரை மேலும் கூறுகின்றது. ஆதலால், இயலிசை நாடகம் எனப்படும் முத்தமிழும் கைகோத்து உலாக் கொண்டகாலம் அஃதெனலாம். பரிபாடல், இசைப்பா; அது நாடக வழக்கும் உலகியல் வழக்கும் தழுவி வருவது; இலக்கிய நயம் அமைந்தது. ஆதலால், முத்தமிழுக்கும் இருப்பாகப் பரிபாடல் விளங்கியது என்பது தெளிவான செய்தியே. முன்னைப் பரிபாடல்கள் கால வெள்ளத் தால் கழிந்து போயினும், பின்னை நாளில் கிட்டியுள்ள இப் பரிபாடல்களாலும் இக்கருத்து வலியுறவே செய்கின்றது, இதனை மேலே காணலாம். பரிபாடல் : ஆசிரியர் தொல்காப்பியனார் பரிபாடல் இலக்கணத்தை வேண்டுமளவு தெளிவாகக் கூறுகிறார். அவர் காலத்திற்கு முன்னரே பரிபாடல் பெரிதும் புலவர்கள் வழக்கில் வழங்கியமை யால் அவற்றைக் கொண்டு அதன் இலக்கணத்தை வகுத்தார். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது நூன்முறை. பரிபாடல், வெண்பா யாப்பில் வரும் என்றும், அது, வெண்பா வகையுள் அடங்காமல் பலவுறுப்புகளைக் கொண்டு பொதுப்பட வருதலும் உண்டு என்றும், கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகளைக் கொண்டு நடக்கும் என்றும், பரிபாடலின் சிற்றெல்லை இருபத்தைந்தடியாய், பேரெல்லை நானூறடியாய் அமையும் என்றும் தொல்காப்பியர் கூறினார். இவற்றையன்றி அகப்பொருள் பற்றியே பரிபாடல் வரும் என்னும் குறிப்பையும் தந்தார். நாம் அறியும் பரிபாடல்களில் வெண்டளை, அகவல் தளை, கலித்தளை, வஞ்சித்தளை ஆகியவை வந்துள! வெண்டளையும் அகவல்தளையும் அடிவகையால் பெருகியும் வருகின்றன. கலித்துள்ளலும் வஞ்சித்தூங்கலும் முடுகியலில் பெரிதும் பயன்படுகின்றன. பல்வேறு பாவகை அடிகளும் பாக்களும் பகுத்து எடுக்கும் வண்ணம் நெடும் பாடலாய் - பலவுறுப்புகளுக்கு இடமாய் - உரையாடல் தடைவிடை யுடையதாய் அமைந்துள்ளமை நன்கு அறிய வருகின்றது. ஆதலால், வெண்பா முதலிய பாக்கள் பெருக வழங்கத் தொடங்கு முன்னரே பரிபாடல் அரும்பி வளர்ந்த நிலையில் திகழ்ந்து பல்வேறு பாவகைகளையும் தன்னில் இருந்து பகுத்துக் கொள்ளத் தந்து பின்னைக் காலத்தில் தன்னை ஒடுக்கிக் கொண்ட தாய்ப்பா அஃதென எண்ணத் தோன்றுகிறது. 70 பரிபாடல் என நூல்களால் நாம் அறியப் பெற்றாலும் நூல் வகையால் கிட்டியவை இருபத்திரண்டே. உரைவழியாகக் கிடைத்த பாடல்கள் இரண்டும், உறுப்புகளாக உதிரிநிலையில் கிடைத்தவை ஒன்பதுமேயாம். பரிபாடல் பொருள் : தொல்காப்பியர் கூறியவாறு, அகப்பொருளே பொருளாகப் பரிபாடல் வரும் என்னும் கருத்து, அம்மட்டில் நிற்கவில்லை. கடவுள் வாழ்த்துப் பெற்று வருதலும் பெருக்கமாகக் காணப்படு கின்றது. பிற்கால ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்களுக்கு முன்னோடி போல அமைந்து விளங்குகின்றது பரிபாடல். கலித்தொகையில் வரும் காதல் காட்சி உரையாடல் ஆகியவை போலவே, கடவுள் மணம் கமழும் பரிபாடலிலும் அவற்றைக் காண நேர்கின்றது. இவற்றையும் தொல்காப்பியர் கூறும் பரிபாடல் பற்றிய பிற இலக்கணக் குறிகளையும் கொண்டு நோக்க இப்பரிபாடல் தொல்காப்பியர் காலத்திற்கு மிகப் பிற்பட்டதென்றும், பண்டைப் பரிபாடல் நமக்குக் கிட்டாமையால், கிட்டிய இப்பரிபாடலையே எடுத்துக் காட்டாக உரையாசிரியர் களால் காட்ட நேர்ந்தது என்றும் கொள்ள வேண்டியுள்ளது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்களின் கீழெல்லை 32 அடிகளாகவும், மேலெல்லை 140 அடிகளாகவும் அமைந்துள்ளன. இனிப் பரிபாடல் என்னும் பெயரைக் கருதுவோம். பரி : பரிதல் என்பது ஓடுதல், விரைந்தோடுதல் என்னும் பொருளுடையது. குதிரையோட்டம், நீரோட்டம், காற்றோட்டம் என்பவை, இடம் காலம் சூழல் ஆகிய இவற்றுக்குத் தக்கவாறு, நெட்டோட்டம் சுழிப்போட்டம் வளையோட்டம் நிமிர் வோட்டம் தாழ்வோட்டம் அசைநிலை முதலியவற்றைக் கொள்ளல்போல அடிவகையாலும் இசை வகையாலும் அமைந்து செல்லும் பாவகை பரிபாடல் என்பது தெளிவாகின்றது. ஓடிப் பரிதல் ஓடிப் பரிந்து விட்டான் என்னும் பொதுமக்கள் வழக்குகளும் இப்பொருளுக்குத் துணையாகின்றன. இனி, அருவி கல்லெனக் கரைந்து வீழும் வீழ்ச்சியும், ஒல்லெனத் தவழும் தவழ்ச்சியும், மெல்லெனச் செல்லும் செலவும், அகன்று விரியும் அகற்சியும், குறுகி ஒடுங்கி விரையும் விரைச்சியும்அறிவார் பரிபாடல் நடையைப் புரிவார். பரி என்பதற்குப் புலம்புதல், விரைதல், வளைதல் சுழலுதல், உருகுதல், இரங்குதல் முதலிய பொருள்கள் வழங்குதலைத் தெளிவாக்கியும் கொள்வார். பாடல் - பாவலர் : எழுபது பரிபாடல்களில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, காளிக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4 எனப் பாடல்தொகை இருந்தமையைப் பழம்பாடல் ஒன்று குறிக்கின்றது. முப்பத்தொரு பாடல்கள் செவ்வேளுக்கு இருந்தனவாக நாம் அறிந்தாலும், கிடைத்துள்ள பாடல்களில் செவ்வேளுக்கு வாய்த்தவை எட்டே எட்டுப் பாடல்கள். அவை : 5, 8, 9, 14, 17, 18, 19, 21 என்னும் எண்ணுடையன. இவ்வெட்டுப் பாடல்களையும் பாடிய புலவர்கள் எழுவர். குன்றம் பூதனார் என்பார் மட்டும் இரண்டு பாடல் (9, 18) பாடியுள்ளார். பிறரெல்லாம் செவ்வேளைப் பற்றி ஒரு பாடல் பாடியவர்களே. அவர்கள் கடுவன் இளவெயினனார் (5) நல்லந்துவனார் (8) கேசவனார் (14) நல்லழுசியார் (17) நப்பண்ணனார் (19) நல்லச்சுதனார் (21) என்பார். இவ்வெட்டுப் பாடல்களுக்கும் பண்வகுத்தோர் நால்வர். கண்ணாகனார் (5, 21) மருத்துவன் நல்லச்சுதனார் (8,9,19) கேசவனார் (14) நல்லச்சுதனார் (17, 18) என்பார். இப்பாடல்கள் மூவகைப் பண்களில் இயல்கின்றன. அவை பாலையாழ் (5, 8, 9) நோதிரம் (14, 17) காந்தாரம் (18, 19, 21) என்பன. கேசவனார், தாம் பாடிய பாடலுக்குத் தாமே இசையும் வகுத்துள்ளார். நல்லச்சுதனார் தாம் பாடல் பாடியதுடன், நல்லழுசியார் பாட்டுக்கு இசையும் வகுத்துள்ளார். மருத்துவன் நல்லச்சுதனார் மருத்துவத் திறத்துடன் இசைத்திறமும் வாய்ந்த வராகத் திகழ்கின்றார். புலவர்களுள் நால்வர் நல் அடையுடன் சுட்டப்பெறுவது கருதத் தக்கது. இவருள் சிலர் திருமாலையும் பாடி உள்ளனர் என்பதை எண்ணின் இவர்கள் சமயச் சால்பு விளங்கும். 2. செவ்வேள் (முருகன்) பரிபாடலில், முருகன் செவ்வேள், என்று ஆட்சி பெறுகிறான். அவனுக்கு முருகன் சேய் முதலான பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. சேய் என்பது மிகமிகத் தொல் பெயராகும். தொல்காப்பியத்தில் சேயோன் என மலை நிலக் கடவுள் குறிக்கப் பெறுகின்றான். சேய் செம்மை : சேயோன் மேய மைவரை யுலகம் என்றும், அம், மைவரை யுலகம். குறிஞ்சி, என்றும் தொல்காப்பியம் சுட்டுகின்றது. மாய் சேய் என்பவை ஓன் ஈறுபெற்று மாயோன் சேயோன் என வழங்கப்பெறுதல் வெளிப்படை. மா, மாய் என்பவை கருமை நிறத்தையும், சே, சேய் என்பவை செம்மை நிறத்தையும் குறிப்பன. ஆதலால், மாயோன் கருநிறத்தவனாம் திருமாலையும், சேயோன் செந்நிறத்தவனாம் முருகனையும் குறித்தல் விளங்கும். சிவந்த அடி சேவடி என ஆகும். முருகன் திருவடியைக் குறிக்கும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து தாமரை புரையும் காமர்சேவடி என்பது எண்ணத்தக்கது. தாமரை இவண் செந்தாமரையாம். செங்கதிர் : முருகன் தோற்றப் பொலிவைச் செங்கதிருடன் ஒப்பிடுவது பெருவழக்கு. காலைக் கதிரவன் நீலக்கடல் மேல் செவ் வண்ணத் துடன் தோன்றும் தோற்றம், மயில்மேல் அமர்ந்த மாணிக்கமாக - முருகனாகத்- தோற்றமளித்தது நக்கீரர்க்கு; அதனால், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு என உவமைப் படுத்தி உவந்துரைத்தார். திருமுருகாற்றுப் படையின் தொடக்க அடிகளே இவை என்பது குறிப்பிடத் தக்கது. எல்லாம் சிவப்பு : திருமுருகன் உடல் வண்ணம் மட்டும் செஞ்ஞாயிற்று வண்ணம் அன்று. அவன் உடுப்பதும் எடுப்பதும் செவ் வண்ணமே என்பதைத் தெளிவாகக் காட்டுவது முன்னே சுட்டிய குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து. தாமரைபோலும் சிவந்த அடி; பவழம் போலும் மேனி; கதிரொளிபோலும் ஒளி; குன்றிமணி போலும் உடல்; செஞ்சுடர் போலும் வேல்; செங்கொண்டைச் சேவல், கொடி; இவற்றைக் குறிக்கிறது. அப்பாட்டு. சிவப்பாக அமைந்த ஒவ்வொன்றன் வண்ணத்திற்கும் சிவப்பாக அமைந்த சீரிய பொருள்களையே தேர்ந்து தேர்ந்து அமைத்த திறம் எண்ணி மகிழ்வதற்குரியது. அடுத்ததாக வரும் குறுந்தொகை முதற் பாடல் செங்களம் படக் கொன்ற சீர்த்தியையும், செங்கடம்பு சூடிய நேர்த்தியையும் விளக்கும் இதனைப் பரிபாடல் பல இடங்களில் அருமையாகப் பாடுகின்றது. சேய் என்றும் செவ்வேள் என்றும் முருகனைக் குறிக்கும் முதற்பாடலிலேயே (பரி.5) ஞாயிற்று ஏர்நிறத்தகை என்பதும் இடம் பெறுகின்றது. முருகாற்றுப்படை நக்கீரனாரின் காட்சி, பரிபாடல் இளவெயினனாரின் காட்சியாகவும் திகழ்தலை உணர்ந்து மகிழ வாய்க்கின்றது. அன்றியும் பதினெட்டாம் பரிபாடல், வெண்சுடர் வேல்வேள் விரை மயின்மேல் ஞாயிறு என்று பாராட்டுகின்றது. வெண்ணிற ஒளியுடைய வேல் ஏந்திய செவ்வேளே! விரைந்த செலவினையுடைய மயில்மேல் ஏறிவரும் செஞ்ஞாயிறே! என்பது இத்தொடரின் பொருளாதல் அறிக. மேலும் பத்தொன்பதாம் பரிபாடல், செவ்வேளின் உடை, மாலை, படை, உருவம், முகம் இன்னவும் செவ் வண்ணமாகத் திகழ்தலை விளக்குகின்றது. உடையும் ஒலியலும் செய்யை; மற் றாங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்; உருவும் உருவத்தீ ஒத்தி; முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி என்பது அது. பெருமானே நீ உடையாலும் மாலையாலும் சிவந்த நிறமுடையை; ஆங்கே வேற்படையும் அந்நிறத்திற்கு ஏற்பப் பவழக் கொடிபோலும் நிறம் கொள்ளும்; திருமேனி நிறத்தாலும், சுடர்விட்டு எரியும் செந்தீ வண்ணத்தை ஒப்பாக உடையை; திருமுகமும் காலையில் தோன்றும் இளங்கதிரின் ஒளி ஒத்தது எனச் செவ்வேளின் செவ்வியல் காட்சிகளை உளமுறக் கூறுகின்றது இப்பகுதி. இனி, இருபத்தொன்றாம் பரிபாடல் செவ்வேள் ஏறிய யானையின் நெற்றிப் பட்டம், செந்தீக்கனன்றெரிவது போன்ற தென்றும், அவன் திருவடியில் பூண்ட அடையல் (செருப்பு) அவன் செந்தாமரை அன்ன அடிக்கு ஒத்த வண்ணத்ததாகத் துவர்ப்பதனிட்டுப் பவழவண்ண மூட்டப் பட்டது என்றும் கூறுதல் அழகுக்கு அழகாவதுடன் ஒத்தியல் நோக்கில் எப்படி யெல்லாம் பண்டைப் புலவர்கள் ஒன்றியுள்ளனர் என்னும் வியப்பும் மிகுகின்றது. சேய் என்பது சேஎய் என அளபெடை பெற்று வருதல் உண்டு. சேய் என்னும் ஓரசைச் சொல்லை அளபெடையால் ஈரசை இயற்சீராக்கல் புலவர் நெறி. ஆய் என்பான் ஆஅய் எனப் புறப்பாடல்கள் பலவற்றில் சுட்டப்பெறுதல் இதற்கு எடுத்துக்காட்டாம். தொல்காப்பியர் சேயோன் என ஒன் ஈறு இயைத்துக் கொண்டமையால் அளபெடையாக்கும் தேவையைத் தவிர்த்துக் கொண்டார் என்க. சேய் - மகவு : இனிச் சேய் என்பதற்கு மகவு என்னும் பொருளுண்மை எவரும் அறிந்தது, தாய் சேய் நலவிடுதி என்னும் இக்காலப் பெயரீட்டில் சேய் பயன்படுத்தப்பட்டுள்ளமை பரிபாடலால் அறியவருகின்றது, அது, கால்அய் கடவுள்சேஎய், செவ்வேள் என்பதாம் (5:13) உலகத்தை அழிக்கும் தொழிலைக் கொண்ட சிவபெருமானின் திருமகனே, செவ்வேளே என்னும் பொருள மைந்த இத்தொடரால் சேய் என்பதன் மகன்மைப் பொருள் தெளிவாம். இதனை ஊன்றி நோக்கினால் செங்கதிரோனைச் சிவனாகவும், அக்கதிரின் செவ்வொளியைச் செவ்வேளாகவும் பண்டையோர் கருதினர் என்றும், செஞ்சுடர் தந்த ஒளி, செவ்வொளி ஆதலால் அச் செஞ்சடரின் மகனாகச் செவ்வேளைக் குறித்தனர் என்னும் இயற்கையொடு பொருத்தி இயைவுகாண வாய்க்கின்றதாம். 3. செவ்வேள் பிறப்பு செவ்வேள் முதல்வன் எனப்படுவான் (8:17) இறைவன் என்றும் இயம்பப்படுவான் (17:49). முதல்வனென்றும், இறைவன் என்றும் சுட்டப் பெறுபவன் தனக்கொரு முதல் இல்லாதவனும் என்றும் இருப்பவனும் ஆவன். ஆதலால், அவன் பிறப்பு இறப்பு இல்லான்; தான் முதலாதல் அன்றித், தனக்கொரு முதல் இல்லான்; அவனுக்குப் பிறப்புப் பேச்சு உண்டோ? என்னும் ஐயம் எவர்க்கும் எழும் அதற்குரிய மறுமொழி பரிபாடலில் கிட்டுகின்றது. தொன்மம் (புராணம்) இறையன்பர்கள், அடியார்கள், இறையடியார் என்பார் சூழலில் பலப்பல தொன்மைகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. அவை கதைகதையாகச் சொல்லியும் கேட்டும் வரப் பெற்றிருக் கின்றன. அச்செய்திகள் அந்நாளைப் புலவர்கள் புலமையிலும் முத்திரையிட்டிருக்கின்றன. அக்கால மக்கள், பழக்கவழக்கங்கள் வாழ்வியல் கூறுகள் இன்னவற்றுடன் அவர்கள் கூறிய பழங் கதைகளும் புலவர்களின் படைப்புகளில் இடம்பெற்று வாழ்வு பெற்று வந்துள்ளன என்பதே மறுமொழியாம். உலக முழுவதும் வழங்கப்பெறும் தொன்மச் செய்திகளே தொல்பழங்காவியங்களாக உருக் கொண்டிருக்கின்றன என்னும் வரலாற்றையுணர்வார் இதனை உணர்வார். முருகன் பிறப்புச் செய்தி : முருகன் பிறப்புக் கூறும் செய்தி, செவ்வேள் பற்றிய முதற்பாடலிலே - முதற் பகுதியிலேயே (1-15) இடம் பெற்றுள்ளது. பின்னரும் பிறப்புப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பலப்பல புலவர்களும் கூறும் இக்குறிப்புகள், அக்காலத்தில் நாடு தழுவிய அளவில் பேசப்பட்ட கருதப்பட்ட செய்திகளை வாங்கி, வடிவு கொடுத்து நிலைப்படுத்திய செயலாகவே அமைகின்றது. வேலன் : சேய் என்னும் செவ்வேளுக்கு வேலன் என்பதொரு பெயர். அதுவும் முருகனைப் பற்றிக் கூறும் நூல்களிலெல்லாம் பெரிதும் விளங்கும் பெயரே. படைவீடு என்று பின்னாளில் வழங்கிய பெயரும் வேல் வைத்து வழிபட்டதால் ஏற்பட்டதே. படை என்பது கருவி என்னும் பெயராதலும், படைவைத்த இடம் படைவீடு, படைக்கலக் கொட்டில் எனப்பட்டதும் பழமையான வழக்குகள். வேல் : சேய் என்னும் செவ்வேளுக்கு வேலன் என்பதொரு பெயர். அதுவும் முருகனைப் பற்றிக் கூறும் நூல்களிலெல்லாம் பெரிதும் விளங்கும் பெயரே. படைவீடு என்று பின்னாளில் வழங்கிய பெயரும் வேல் வைத்து வழிபட்டதால் ஏற்பட்டதே. படை என்பது கருவி என்னும் பெயராதலும், படைவைத்த இடம் படைவீடு, படைக்கலக் கொட்டில் எனப்பட்டதும் பழமையான வழக்குகள். வேல் : போர்க்கருவிகளுள் பழங்காலத்தில் சிறப்பு மிக்கதாக விளங்கியது வேலேயாம். வேல், யானைப்போர்க்கு உரியது. கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் என்பது திருக்குறள். வேலாண் முகத்த களிறு என்றும் வரும். கானமுயலெய்து வெற்றிதந்த அம்பினும், களிற்றின்மேல் ஏவப்பட்டு வெற்றிதராத வேலே எனினும் அதுவே பெருமைக் குரியது என்றும் திருக்குறள் கூறும். வேலடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடமை என்றும், களிறு எறிந்து வீழ்த்துதல் காளையர்க்குக் கடமை என்றும் புறப்பாடல் தெளிவிக்கும். இவற்றை நோக்க வேலின் சிறப்பு வெள்ளென விளங்கும். முல்லை, மருதம், நெய்தல் நிலங்களினும் குறிஞ்சி நிலமே யானை வளம் இயற்கையாக உடையது. விலங்கின் அச்சமும் மிக்கது. ஆங்குத்தான் வளப்பெருக்கும் இயற்கையாக வாய்ப்பது; ஆங்கேதான் ஆதி மாந்தனின் வாழ்வும் தோற்றமுற்றது. ஆகலின், ஆங்கு வாழ்ந்தவன் வேலைக் கொண்டிருப்பதும் வேற்போர் புரிவதும், வேல்வழிபாடு செய்வதும் இயற்கையோடு பொருந்தி யவை. அவ்வாறு வேலைக் கொண்டு ஆடிப்பாடி விழா எடுத்தவன் வெறியாடியவன் - வேலன் எனப்பட்டான். வேலன் வெறியாட்டு என்பது குறிஞ்சி நில வழக்காறு. முருகன் பிறப்பு முருகன் பிறப்புப் பற்றிய செய்தியை வெறியாடும் வேலன் கூறுகிறான் (5.15). பிறரும் கூறுகின்றனர்; அவர்கள் கூற்றை உட் கொண்டு, அல்லது அவர்கள் கூறுவதாகப் படைத்துக்கொண்டு முருகன் பிறப்புச் செய்தியைக் கடுவன் இளவெயினனார் பாடுகின்றார்; பிறரும் பாடுகின்றனர். முப்புரங்களை அழித்த இறைவன் இறைவியோடு கூடி இன்புறும்போது உண்டாகிய கருவைச் சிதைக்குமாறு இந்திரன் வேண்டிக் கொண்டான். அப்படியே பல துண்டங்களாக்கினான் இறைவன். அத்துண்டங்களைப் பெற்றுக் கொண்ட இந்திரன், முனிவர் எழுவரிடத்து வழங்கினான். அவர்கள் தம் முழுதறிவால் இவன் தேவர் படையின் தலைவனாவான் என்பதை அறிந்து வேள்வித் தீ வளர்த்து அதில் பெய்தனர். அத்தீக் கொண்டது போக எஞ்சியதை அருந்ததி ஒழியக் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் உண்டு சூற் கொண்டு சரவணப் பொய்கையில் தாமரை மலர்ப்படுக்கையில் ஈன்றனர். இந்திரன் மீளவந்து வச்சிரப் படையால் முருகனை ஆறுகூறாகச் சிதைத்தும் ஓருருவாகத் திகழ்ந்தனன். தன் வறுங்கை கொண்டே அக்குழந்தைப் பருவத்திலேயே இந்திரனை வெற்றி கொண்டனன். அதனால் இவனே நம்படைக்குத் தலைவன் என்று மகிழ்ந்து தேவர்கள் மறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, மழு, கனலி, மாலை, மணி ஆகியவற்றைப் பரிசாக வழங்கினர். அவற்றைத் தன் பன்னிரு கைகளிலும் கொண்டான். இச்செய்தி, நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை என்றும் (8:16) மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ என்றும் சுருங்கிய அளவாலும் (9:7) உரைக்கப்படுகிறது. ஆரல் என்பது கார்த்திகை. இவண் கார்த்திகைப் பெண்டிர் அறுவரைக் குறித்தது. முருகன் பிறப்பைப் பற்றிய இச்செய்தியைத் திரட்டி யுரைக்கும் பரிபாடல் பழைய உரையாசிரியர் பரிமேலழகர் பௌராணிகர் சொல்லுவர் என்கிறார். பௌராணிகராவார் பௌராணிகர். இனிக் கார்த்திகை மகளிரைச் சுட்டாமல் உமையம்மை தந்ததாகவும் பரிபாடலில் குறிப்புளது. அது, மறுமிடற்று அண்ணற்கு மாசு இலோள் தந்த ... கடம்பர் செல்வன் என்பது அது. மாசு இலோள் என ஒருமையில் வந்தது அறிக. (8:126-7). இவ்வாறு புராணக் கதையைப் பற்றி எழும் சிக்கலைப் பரிபாடல் சொற்பொழிவு நூலில் பேரா ந. சேதுரகுநாதனார் குறிக்கிறார், அக்குறிப்பு இவண் எண்ணத்தக்கது: வீட்டில் பின்பக்கத்துத் தோட்டத்திலே வளர்ந்திருக் கின்ற முருங்கை, அதன் மேல் ஏறி ஊஞ்சலாடுவதற்காக நிற்கின்றது என்று கருதி ஒருவன் ஏறி ஊஞ்சலாடி விழுந்து முருங்கையைக் குற்றம் கூறினான் என்றால், அது முருங்கையின் குற்றமாகாது. முருங்கையின் இலைகளையும் காய்களையும் கொண்டு பயன் துய்ப்பதே முறையாகும். முருங்கையின் அடிமரத்திலே அப்பிக் கிடக்கும் கம்பளிப்பூச்சியை மார்புடன் அணைத்துக்கொண்டு உடம்பின் பசபசப்புத் தாங்காமல் அலறும் ஒருவனைப் போன்று பரிபாடலினுள் விரவிக் கிடக்கும் புராணக் கதைகளை அலசிப் பார்த்து ஆராய்ந்து அலறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. கதைகளினால் குறிப்பிட்டு உணர்த்தக்கருதிய குறிக்கோள் எதுவென்று கருதி அன்பு செய்தலே செய்தற்குரிய செயலாகும். ஆராய்ச்சிக்காகக் கையாண்ட கதைகள் அல்ல அவை என்பது அது (பரிபாடற்சொற்பொழிவுகள் பக்.9). தொன்மக் குறிப்புகள் : செவ்வேள் பிறப்புப் பற்றிய இவ்விடத்திலேயே அறியத் தக்க சில தொன்ம (புராணச்) செய்திகளும் உள. அவற்றுள் ஒன்று : முப்புரம் எரித்தது. மறையைக் குதிரையாகவும், புவியைத் தேராகவும் நான்முகனைத் தேர்வலவனாகவும், பனிமலையை வில்லாகவும், வாசுகிப் பாம்பை அம்பாகவும் கொண்டு வெள்ளி பொன் இரும்பு என்னும் முப்புரங்களை அழித்தான் இறைவன் என்பது அக்கதை. இதனை ஆதி அந்தணன் அறிந்துபரி கொளுவ, வேத மாம்பூண் வையத்தேர் ஊர்ந்து, நாகம் நாணா, மலைவில் லாக மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து என்கிறது பரிபாடல் (5:22-26) இறைவன் நீலகண்டன் - மணிமிடற்றன் - என்னும் கதையும் பரிபாடல்வழி அறிய வருகின்றது. மறுமிடற்று அண்ணல் )8:127) மணிமிடற்று அண்ணல் (9:7) என்பவை காண்க. மறுவும் மணியும் கறை அல்லது கறுப்பு என்னும் பொருள் தருவன. நீல மணிமிடற்று ஒருவன் என்பது இதனை விளக்கிச் சொல்லும் புறப்பாட்டு. 4. செவ்வேள் உருவும் திருவும் செவ்வேள் சேய் சேஎய் என்பவற்றை முன்னர்க் கண்டுள்ளோம். அப் பெயர்க்குத் தகச் செவ்வண்ண மேனியும் செவ்வண்ண உடை முதலிய இயைவும் கண்டோம். இவண் செவ்வேள் திருமுகம் முதலிய உருவும், ஊர்தி கலம் முதலிய திருவும் பற்றிப் பரிபாடல் வழியே அறியப் பெறுவனவற்றைக் காண்போம். தலை - கை : ஆறுமுகம் (சண்முகம்), பன்னிருகைப்பெருமாள் என மக்களுக்குப் பெயர்கள் வழங்குகின்றன. இவை முருகன் தலை, கை பற்றிய மக்கள் கருத்தை வெளிப்படுத்துகின்றன. பரிபாடல், அறுமுகத் தாறிரு தோள் என்றும் (14:21) ஆறிரு தோளவை ஆறுமுகம் விரித்தவை என்றும் (21:67) கூறுகின்றது. மேலும், மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் என்றும் (5:11) ஆறிரு கைக்கொண்டு என்றும் (5:68) கூறுகின்றது. கயந்தலை என்பது, மெல்லிய தலை; இளமையாம் தலையைக் கயந்தலை என்பர். கன்று கயந்தலை என்பது உலகியல் வழக்கில் உள்ள இணைமொழி. முகனும், விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி என்று (19:100) முருகவேள்முகம் இளவள ஞாயிற்று வண்ணமும் வனப்புமொத்து விளங்குதலைத் தெரிவிக்கின்றது பரிபாட்டு. முருகவேளின் பன்னிரு கைகளிலும் வெள்ளையாட்டு மறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, கணிச்சம், மழு, மாலை, மணி என்பவை உள்ளன என்றும், அவற்றுள் அனலன் சேவலையும் இந்திரன் மயிலையும், கூற்றுவன் வெள்ளையாட்டு மறியையும் கொடுத்தனர் என்றும், பிறபிற தேவர்கள் பிறபிறவற்றை வழங்கினர் என்றும் பரிபாடல் கூறுகின்றது. (5:57 - 69) திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா ஆகியவற்றில் இச்செய்தி வேறுவகையாகக் கூறப்படுவதை ஆங்குக் கண்டு கொள்க. ஊர்திகள் முருகன் யானை ஊர்தியை உடையவன் என்றும் அவ்யானை பிணிமுகம் என்னும் பெயரது என்றும் பரிபாடல் பலபடக் கூறுகின்றது. சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி (5:2) பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ (17:49) என்பவற்றைக் கருதுக. மேலும் முருகனை வழிபடுவோர் வழங்கிய பொருள்களுள் பிணிமுகமும் இருந்தமை, பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி என்பதால் (8:101) விளங்கும். நேர்த்திக் கடனாக இறைவனுக்குப் படையல் செய்வது இன்றுமுள்ள வழக்குத்தானே. அவ்வழக்கில் பண்டே பிணிமுகம் (யானை) இடம் பெற்றுள்ளது. பிணிமுகம் என்னும் பெயர் சுட்டாமல், ஊர்ந்ததை வேழம் என்று சுட்டிய இடமும் (21:1-2) உண்டு, மயிலூர்தி முருகனுக்கு அக்காலத்துச் சொல்லப்பட்டிலதோ எனின், முருகன் வெண்சுடர் வேல்வெள் விரைமயின் மேல் ஞாயிறு என்று பாராட்டப்பட்டுள்ளமையால் (18:26) அவ்வூர்தியும் உண்மை புலனாம். அதன் அடுத்த அடியிலேயே அவன் ஒண்சுடர் ஓடைக் களிறு என யானை யூர்தியும் சொல்லப்பட்டுள்ளமை யால் ஈரூர்திகளும் உடைமை இனிதின் விளங்கும். கொடி திருமுருகன் கொடி புட்கொடி என்கிறது பரிபாடல் (17:48) புட்கொடி, கோழிக்கொடி என்பது பரிமேலழகர் உரை. இவண் கோழி என்றது சேவற் கோழி. சேவலங் கொடியோன் என்பது முன்னருங் கண்டது. அக்கொடி, ஊர்தியாகிய யானையின் மேல் பிடிக்கப்பட்டிருந்தது என்பதும் பரிபாடலால் விளங்குகின்றது (19:91) மாலை : முருகன் அணிந்த மாலை கடம்பு என்பது பரிபாடலால் விளங்குகின்றது. உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5:81). உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ்தார் (21:10) என்பவை அவை. ஒலிதார், தழைத்து நீண்ட மாலை. அதன் வடிவும் வனப்பும் விளங்க உருள் இணர் என்றார். உருட்சியும் திரட்சியும் உருள் இணர் என்பதால் விளங்கும். தேர் உருள் போல்வதென உவமைப் படுத்தலும் உண்டு (முருகு 11 நச்). ஒலிதார் என்பது ஒலியல் எனவும் ஆட்சி பெறும் (பரி. 19:97) ஒலியல் என்பதற்குக் கடப்பமாலை என்பது உரை. கடப்பந்தாரைச் சூடிய முருகன், திருப்பரங்குன்றில் அமர்ந்ததும் கடம்பே என்பதும் பரிபாடல் செய்தி. குருகு பெயர்க் குன்றத்தை (கிரௌஞ்சத்தை) உடைத்த முருகனை நீ இக்குன்றத்தில் கடம்பின்கண் அமர்ந்த அழகு நிலையைப் பாராட்டுகிறோம் என்கிறது. அது (19:104). மேலும் பரிபாடல், உருளிணர்க் கடம்பின் நெடுவேள் என்றும் (21:50), கடம்பமர் செல்வன் என்றும் (8:126) சிறப்பிக்கின்றது. படை : செவ்வேளின் பன்னிரு கைகளிலும் படையும் கொடியும் பிறவும் இருப்பினும் வேலுக்குத் தனிச் சிறப்புண்மை அறியத் தக்கது. குன்றங்கொன்ற குன்றா ஆண்மைச் சான்றாக அது விளங்குவது அதன் காரணமாம். படை என்பதே வேற்படையைக் குறிப்பதாயிற்று. அதன்நிறம் ஒள்ளொளிய தெனினும் பவழக் கொடியின் நிறமென உவமை காட்டப்படுகின்றது. படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும் என்றார் பரிபாடலார். பகையழிப்பில் பவழ வண்ணவேல் எனப்படும் அது, அடியார் திறத்து அருள் பாலிக்குங்கால் அச்ச மூட்டும் அந்நிறத்தைக் கொண்டிராது என்பதை உணர்த்து வார்போலப் பழைய உரையாசிரியர் நின்வேலும் அவ்வாறே பவழக்கொடி நிறத்தைக் கொள்ளும் என முற்சுட்டிய அடிக்கு உரைவரைந்து அதன் விளக்கமாக, குருதி தோய்ந்துழியல்லது அந்நிறம் இயல்பன்மையிற் கொள்ளும் என்றார் என எழுதினார். கையதை, கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுதல் தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்படை திறந்த வேல் என்று வரும் செய்தி (21:9-10) பன்னிருகைகளும் ஏந்திய கருவி களை விலக்கி, ஒருகைவேலை உயர்த்திய பெருமை காட்டுவதாம். வேலன் திருப்பெயர் வேல் வழிவந்ததுதானே. 5. செவ்வேளின் வீறு கருவிலே திரு என்பது பழமொழி. கருவிலே திறம் என்பதை மெய்ப்பிப்பது செவ்வேளின் வீறு. பிறந்த நாள் வெற்றி : பிறந்த ஞான்றே நின்னை உட்கிச் சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே என்கிறது பரிபாடல் (14:25-26) தாமரைப் படுக்கையில் பிறந்த அந்நாளிலேயே வச்சிரப் படை கொண்டுவந்த இந்திரன் முதலியோர் அச்சமுறுதற்குக் காரணமான சிறப்புடையவனே என்பது அவன் பிறந்த நாள் வீறு விளக்குவதே! வறுங்கை வெற்றி : இதனினும் அவ்வீறு இருந்த வகையை விளக்கிக் காட்டுவது போல் அமைந்தது, அவன் வறுங்கை கொண்டே தன் பகையை ஓடச்செய்த பெருவீறு ஆகும். ஓங்கு விறற் சேஎய், ஆரா உடம்பினீ அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய என்கிறது பரிபாடல் (5:54-56). ஆரா உடம்பு என்பது நிரம்பாத - வளராத - உடம்பு பிறந்த நிலையில் இருந்த உடம்பு. அமர்தல் - விரும்புதல்; விளையாடிய போர் - விளையாட்டுப் போலச் செய்த போர்: வறுங்கை - படைக் கலம் ஏந்தாத வெறுங்கை. புரந்தரன் - இந்திரன். உடைதல் - தோற்றோடுதல். பிறந்த அப்பொழுதே விரும்பி விளையாட்டாகச் செய்த நின் வறுங்கைப் போர்க்கு ஆற்றாமல் இந்திரன் தோற்றோடுமாறு செய்த உயரிய வலிமை வாய்ந்த செவ்வேளே என்று விளித்துப் பெருமிதம் கொள்கிறார் புலவர். பிறந்தபொழுதே செய்த போர் - விளையாட்டாகச் செய்த போர் - படையொடு வந்த வலியவனை வறுங்கை கொண்டே தோற்றோடச் செய்த போர் - என மூன்றுமடி வீறு காட்டி விளக்கிய புலவர், அதன்மேலும் பேராண்மை ஒன்று காட்டுகிறார். பகைவரும் பாராட்டும் வெற்றி : பகைத்து நின்றோனும், அவனைச் சார்ந்து வந்தோரும் பகைவன் என்றும் பாராமல், முருகன் வெற்றிச் சிறப்புக்குப் பெரிதும் மகிழ்ந்து, எமக்குத் தலைமை தாங்கவல்ல காவற் பெருமகன் இவனே! இவனைத் தலைவனாகக் கொண்டால் எமக்கு அல்லல் அறவே இல்லை எனத் துணிந்து வழிபட்டுப் பரிசு வழங்கிப் பாராட்டியதாகும் அது. எதிரிட்டு நின்றவரே ஏத்துமாறும் தலைவனாக ஏற்குமாறும் அமைந்த வீறு அருமை மிக்கதேயன்றோ! இந்திரனை வென்ற செய்தி இவ்வாறமையச், சூரனை வென்ற நிகழ்ச்சியைப் பரிபாடல் வழியே அறிவோம், சூர்மா தடிதல் : சூரன், சூரபன்மா என்பான். அவனை மா என்பதும் புலவர் நெறி. பரிபாடற் பாவலர்கள் மா என்பதையே பெருக வழங்கியுள்ளனர். சூர்மா என இணைப்பதும் சூர் எனச் சுருக்குவதும் அவர்கள் வழக்கே. நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து (5:4) கடுஞ்சூர் மாமுதல் தடிந்து (9:70) சூர்மருங் கறுத்த சுடர்ப்படை (14:18) சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய் (18:4) எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து (19:101) கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து (21:8) மாதடிந் திட்டோய் (21: 28) சூரபதுமன் என்பவன் மாமர வடிவில் நின்றான் என்பது தொன்மச் செய்தி. ஆகலின், சூர்மா மா என வழங்கினர், சூரபதுமன் ஆகிய மாமரத்தை வேரொடும் சாய்த்து என்பதே மாமுதல் தடிந்து என்பதன் பொருள். முதல் என்பது வேர். வேரை வெட்டினால் அடி சாய்ந்து மரம் அழிவது உறுதிதானே! மாதபுத்த என்பதும் இப்பொருளதே. தபுத்தல், அழித்தல். சூர்மா துன்புறுத்திய கொடுமை விளங்குமாறு. நோயுடை நுடங்குசூர் கடுஞ்சூர் எவ்வத்து ஒவ்வாமா கொள்ளாத் தெவ்வர் கொள்மா என்றெல்லாம் அடைமொழி தந்து புலவர்கள் தம் கருத்தை விளக்கினர். வேலால் தடிந்தான் என்பதை வேலோய் சுடர்ப்படை என்பவற்றால் கூறினர். வரையுடைத்தல் : சூர்மா தடிந்ததுபோலச் செவ்வேள் வீறுபற்றிக் கூறும் மற்றொரு செய்தி வரையுடைத்தல் என்பது. மலையின் பெயர் கிரௌஞ்சம் என்பது. கிரௌஞ்சம் தமிழில் குருகு என்று சொல்லப்படும். இது பறவையின் பெயராயினும் மலையைக் குறிப்பதால் குருகு பெயர்க் குன்றம் என்று தெளிவுறுத்தப் படுகின்றது. குருகொடு பெயர் பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப்படுத்த என்கிறது ஐந்தாம் பரிபாடல் (9-10). குருகு, பறவை என்றோம். புள் எனினும் பறவையே. அதனால், புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்தவேல் என்கிறது இருபத்தொன்றாம் பரிபாடல் (9) குருகெறி வேலோய் என்கிறது பத்தொன்பதாம் பாடல் (36). இனிப் பெயர் குறியாமல் குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் என்று சொல்லவும் படுகின்றது (8:29). வேலால் வேலன் தகர்த்த குன்றம் இன்னதெனப் பலரும் அறியுமளவில் கதை வழக்கு வழங்கியது என்பது இதனால் தெளிவாகின்றது. குன்றுபக எறிந்த அஞ்சடர் நெடுவேல் என்பது பெருந்தேவனார் பாட்டு (குறுந்.) குன்றத்தை உடைப்பானேன்? அல்லது துளைப்பானேன்? இதற்குப் பரிபாடல் விளக்கம் தருகின்றது. அது. மலையாற்றுப் படுத்தல் என்பது. வரையைத் துளைத்து அதனை வழிப்படுத்தின என்பது பழையவுரை (பரிமேலழகர் உரை). மலையினைக் குடைந்து அம் மலையின் ஊடே வழியுண்டாக்கின என்பது புதியவுரை (பொ. வே. சோமசுந்தரனார் உரை) மலையை உடைத்தும் குடைந்து ம் பழியுண்டாக்குதல் இற்றைப்போக்கு வரவுக்கு உலகெல்லாம் காணும் காட்சிதானே! இக்காட்சி பரிபாடலில் விளங்குகின்றது. தம் வருகையைத் தடுத்து நின்ற விந்திய மலையின் முதுகில் அடிவைத்து அதனைத் தாழச் செய்து அகத்தியர் தென்னாட்டுக்கு வந்தார் எனப்படும் தொன்மக்கதையும் இவண் எண்ணத் தக்கது. குருகுமலை, வானத்தொடும் ஒன்றி அதனோடு ஒப்பநின்ற தென்றும், அம்மலையாக இருந்தவன் கரிமுகன் எனப்படும் யானைமுக அசுரன் என்றும். அதனை வேலால் துளைத்து அவ்வசுரனை அழித்தான் என்றும், ஒலியும் ஒளியும் திகழ வண்ணத்தில் வனப்பாக்குவார் அருணகிரியார்; ஒன்றென் றென்றும் துன்றும் குன்றும் துளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடிமென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை - அடுவோனே என்பது அது. இம்மலை வெற்றி, மலையா வெற்றியே! குன்றகு உடைய அவன், குன்றம் அழித்தது என் என்பதை விளக்குவார்போல, அக்குன்றம் தெவ்வுக்குன்றம் என்றாம் பரிபாடலார். தேவக்குன்றம் அன்று; தெவ்வுக்குன்றம் (பகைக் குன்றம்) ஆதலால், குன்றம் அழித்தான் குன்றுதோறாட வல்ல குமரன் என்க. இதனை, எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை உடைத்தோய் நீ இவ்வரை மருங்கில் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் என்கிறது பரிபாடல் (19:101-4) 6. செவ்வேள் மணவாளன் குழந்தை வேலன், குமரவேள் எனப்படும் முருகன் மணவாளனாக விளங்கும் நிலையையும் பரிபாடல் பகர்கின்றது. தேவசேனையை மணந்ததும், வள்ளியை மணந்ததும்; அவர் களுக்குள் ஊடல் உற்றதும், திருமுருகன் அவர்கள் ஊடல் தீர்த்துக் கூடியதுமாகிய செய்திகளும் பரிபாடலால் அறியக் கிடக்கின்றன. பொருளிலக்கணம் : பொருளிலக்கணம் தமிழுக்குத் தனிப்பெருஞ்சிறப்பான வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்வதும், பிறமொழிகளுக்கு இல்லாததுமாம் இயல்பினது. ஆதலால், அப்பொருளிலக்கண வளத்தைச் செவ்வேளொடு சேர்த்துப் பார்ப்பதில் பரிபாடற் புலவர்கள் பேரார்வம் காட்டியிருக்கின்றனர். அதற்கு மிக வாய்ப்பாக அமைந்தது, வள்ளியம்மையின் களவுக் காதல் திருமணமாகும். இச்செய்தியைக் கூறவரும் குன்றம்பூதனார். நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் எனக் கூவியழைத்துக் கூறுகிறார். இதனை எண்ணும் போது, ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு என்னும் தொடரும், குறிஞ்சிப் பொருளும் நினைவில் முந்துறும். நான்கு மறைகளை விரித்துச் சொல்லவல்ல புலமையும் வாய்மொழித் திறமும் அமைந்த புலவர்கள் நீவீர் எனினும் குறையாத தமிழின் பொருளிலக்கணத்தை அறியீர்; நீவிர் அறிதல் வேண்டும்; ஆகலின் கேட்க என்று தமிழ்ப் பொருளிலக்கணச் சிறப்பை வெளிப் படுத்துகின்றார் அவர். காமத்திலே சிறந்தது காதலையுடைய காமமேயாகும். ஏனெனில், முன்பு தொடர்பு அறியா இருவர் தம்முள் ஒத்த அன்பினராய்த் தம்முள் ஒன்றுபட்டுக் கூடிப்புணரும் புணர்ச்சி அஃது. களவு சிறப்புடையது எனின், கற்புச் சிறவாதோ என்று வினாவில், கற்புச் சிறப்பது ஊடலாலேயே ஆகும்; அவ்வூடலும் தலைவன் வாயில் வேண்டலும், தலைவி வாயில் நேர்தலும் ஆகிய இத்தகைய ஒழுக்கங்கள் அமைந்து, தலைவன் பரத்தமையால் வருவதாகும். தலைவன் பரத்தை இல்லில் இருக்கத் தலைவி தோழியைச் செவ்வணியணிந்து விடுப்ப அவன் தலைவியிடம் வந்து ஊடிக்கூடும் இயல்பினால் அக்கற்பில் இன்பம் உண்டான தாகும். இவ்வாறிருத்தலால் களவுப் புணர்ச்சியுடைய மகளிர் தம் தலைவரொடு மாறுபாடு கொண்டு ஊடும் குறையினர் அல்லர். ஆதலால், களவுப் புணர்ச்சியே கற்பிற் புணர்ச்சியிற் சிறந்தது என்று பாராட்டும் பொருளிலக்கணத்தை ஆராயாதவர் குறிஞ்சிக் களவொழுக்கப் பயனை அடையார் என்கிறார். தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்றுப் பயன் (9:25-6) என்பதில் பொருளிலக்கணச் சிறப்பும், அதனைக் கொண்ட தமிழின் சிறப்பும், அத்தமிழ்ப் பொருளை ஆய்ந்தார் இன்பச் சிறப்பும் தொகுத்துரைக்கப்படுதல் காண்க. சூளிடல் : தலைவியரானே தூதுவிடப்பட்ட வண்டு, தலைவரோடு மீண்டது. அதன் ஒலிப்பெருக்கம் தலைவியர் காதற் பெருக்கத்தை மதுரை மூதூரார் அறிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது. வண்டுத் தூதால் வந்த தலைவன் ஒருவன், தன் தலைவியை நோக்கி, இத்திருப்பரங்குன்றம், மாவடுக் கண்ணையும், மாந்தளிர் நிறத்தையும் மூங்கில் தோளையும், வளைக் கையையும் உடைய மகளிரின் நுகர்ந்து முடியாத களவிற்புணர்ச்சியையும், மணம் செய்து கொண்டு தம் கணவர் அன்பில் உறையும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியை ஒத்த அகலாத கற்பிற்புணர்ச்சியையும் மறவாமல் வழங்கும் சிறப்புடையது என்றான். இதனைக் கேட்ட தலைவி, நீ இப்பொழுது அயல் மகளிர் மணத்தையுடையை; ஆங்குக் குளிர் மலர் போலும் கண்ணை யுடைய மகளிரொடு கூடி ஆடுவதற்காகவே, காலையில் போய் மாலையில் திரும்பி ஒவ்வொரு நாளும் வருகின்றாய்! இவ்வாறுடையை நீ பிரியேன்; பிரியின் உயிர் தரியேன் என்று முன்சொன்ன மொழியை மீளவும் சொல்லாதே என்றாள். மலர்போலும் கண்ணையுடையாய், இனிய மணற் பரப்பமைந்த வையைக்கண் உள்ள பொழிலின் மேல் ஆணை; திருப்பரங்குன்றத்துச் சாரலின்மேல் ஆணை; பார்ப்பார் மேல் ஆணை; நீ சொல்லியசொல் என்னொடு பொருந்தியது அன்று; இவ்வாறு கூறி வருத்தாதே; என்மேல் உண்டாகிய மணம் கனிகளிலும் மலர்களிலும் பட்டுவந்த காற்று என் மேல் பட்டமையால் ஆயது. ஆதலால் வருந்தாதே என்றான் தலைவன். அத்தலைவனை நோக்கிய தலைவி, இவ்வாறு பொய் கூறுதலை நிறுத்து என்றாள். இவ்வாறு தலைவன் தலைவியர் உரையாடுதலைக் கேட்ட தோழி தலைவனை நோக்கித், தக்கோர் பெற்ற தகவிலா மகனே! யான் கூறுவதைக் கேட்குமளவும் நில்; இவள், இவளைப் பெற்றவளுக்கு ஒரே மகள்; இதனை அறிந்துகொள் என்றாள். இவள் இவளைப் பெற்றவளுக்கு ஒரு மகள் என்பதையும், இவள் எத்தகு அருமையள் என்பதையும் இதுவரை அறிந்திலேன்; இதோ வையையின் மணலைத் தொட்டுச் சொல்கிறேன்; களவின்பம் கற்பின்பம் ஆகிய இரண்டையும் தரும் செவ்வேளின் குன்றத்தைத் தொட்டுச் சொல்கிறேன் என்றான். அதனைக் கேட்ட அவள், இனிய நம் உறவாக விளங்கும் வையை மணல்மேல் நீ கொண்ட அன்பும் இத்தகைய பொய்ம்மை யுடையது தானோ? செவ்வேள் பெருமானின் குன்றத்தின்மேல் நீ கொண்ட அன்பும் இத்தகைய பொய்ம்மையுடையது தானோ? இரங்கத்தக்கது இது! நீ இவ்வாறு மேலும் மேலும் பொய்ச் சூள் சொல்வை யாயின் உன்னை, மெய்யில்லானை வருத்தும் தெய்வங்களுடன், செவ்வேளின் வேற்படையும் சேர்ந்து வருத்தும் அறத்தவர் மேல் சூள் கூறினும் கூறுக; செவ்வேளின் மயிலையும் வேலையும் சூள் கூறாதே; வள்ளியின் மேலும் சூள் கூறுகின்றனை; அதனையும் கூறாதே; அவ்வாறே குன்றத்தின் மேலும் வையை மணல் மேலும் சூள் கூறாதே என்றாள். அதனைக் கேட்ட தலைவன், எங்களுள் யார் பிரிவது? யார் வருவது? யார் வினாவுவது? யார் விடை சொல்வது? நாங்கள் இருதலையுடைய பறவையின் ஓருயிர் போன்றவர்; ஆதலால் எங்களுள் இவை எவ்வாறு நிகழும்? நீ அதனை எண்ணாமல் நான் கூறுவதைப் பொய்ச்சூள் என்றாய், தலைவி என்மேல் ஏற்றிக் கூறிய குறை மெய்யாக நிகழ்ந்த நிகழ்ச்சியும் அன்று; நகைப்புக்கு இடமான கனவு நிகழ்ச்சியும் அன்று; பொய்யேயாம்; யான் குற்றமில்லாதவனாகவும் என்மேல் கூறிய பொய்க்காரணத்தை என் ஒழுக்கமாகக் கருதிப் பொய்ச்சூள் சொன்னதாக இறைவன் தண்டிப்பினும் தண்டிக்கும். அவ்வாறு தண்டிக்கு முன்னரே நீ அவ்விறைவன் திருமுன்பை யடைந்து அடிபணிந்து அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக என்றான். தலைவன் இளையர்க்கு இவ்வாறு கட்டளையிடுங்கால் அதனைக் கேட்டு நின்ற தோழி. எல்லா (ஏலா, ஏடா) நீ என்னை நோக்கிச் செவ்வேளை ஆற்றுவிக்க நீயே செல் என்று கூறுகின்றாய்; அவ்வாறு கூறியதனாலேயே நின் பொய்ச் சூள் உண்மை அறிந்து உன்னை வருத்தும் என்பதை அறிந்து கொண்டோம். செவ்வேள் நின்னை வருத்துவதற்கு முன்னரே, தலைவியே ஆங்குச் சென்று தன்கையால் திருக்கோயில் மணியை அடித்துத் தன் தலையாலே திருவடிகளை வணங்கி நின் பொய்ச்சூளால் உனக்குத் துன்பம் நேராவாறு செவ்வேள் சினத்தை ஆற்றும் காட்சியை, வழக்கமாகப் பன்முறையும் பரங்குன்று செல்லும் நீ காண்பாய் என்றாள். இவ்வாறு தலைவன் தலைவி தோழி ஆகிய மூவர் உரையாடலாகிய ஊடல் நாடகத்தைப் புனைந்து பொருளிலக் கணக் கூறுகளை விளக்குகிறார் பரிபாடல் ஆசிரியர் நல்லந்து வனார். தலைவன் பரத்தமை, தலைவி அருமை, காதல்திறம், சூள்கூறல், சூளால் நேரும் துயர், இறைவழிபாடு, தலைவனுக்காகத் தலைவி வாழும் வாழ்வு, தலைவியைத் தோழி தன் உயிராகக் கொண்டிருக்கும் உழுவலன்பு, ஊடல், கூடல் என்பன வெல்லாம் உரையாடும் பொருளால் ஆசிரியர் உணரச் செய்தல் தனிப் பெரும் உத்தியாகும். இச்செய்தி எட்டாம் பரிபாடலில் அமைந்தது (36-89). ஊடற் காட்சி : மற்றுமோர் ஊடற் காட்சியைக் குன்றம் பூதனார் பாடுகின்றார். இக்குன்றம் பூதனார் திருப்பரங்குன்றத்தவராகவே இருத்தல் கூடும். பெயரமைதி அதனைக் காட்டுகின்றது; குன்றத்தைப்பாடும் அவர்பாட்டும் அதனைக் காட்டுகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் மதுரையார் என்பதும் எண்ணத் தக்கது. ஒரு தலைவன் ஒரு மயில் ஆடுவதைக் கண்டான்; அதன் புள்ளித் தோகையும் அதன் வனப்பும் அதன் அழகார்ந்த ஆட்டமும் அவனைக் கவர மிகக் களிப்புற்றுத் தன்னை மறந்து காட்சியில் தோய்ந்து நின்றான். அவன் நிலை கண்ட தலைவி நீ இப்பொழுது என்ன நினைத்துக் கொண்டு பார்க்கிறாய் என்பதை அறிந்தேன். இம்மயில் என்னினும் அழகிற் சிறந்தது என்று நீ நினைத்து மெய்ம் மறந்து காணலால் என்னை இகழ்ந்தாய்! என்னை இகழ்வதை மறைத்துக் கொண்டு நீ பார்த்தாலும் நான் உண்மையறிந்தேன்: உண்மையைச் சொல் என்று ஊடினாள். அதனைக் கேட்ட தலைவன் அன்புடையாய், உன் அழகைக் கவர்ந்துகொள்ள முயன்று அது முடியாமல், தன் களிப்புறும் ஆட்டத்தாலே கவர்ந்து கொள்ள நினைத்தும் அதுவும் கூடாமல் நினக்குத் தோற்றுப்போகும் இம்மயிலின் இரங்கத்தக்க நிலையையே யான் எண்ணினேன்; நீயோ யான் நின்னை இகழ்ந்ததாகக் கருதுகின்றனனை என்று நயந்து கூறி அவள் ஊடலை அப்பொழுதிலேயே தீர்த்தான். இது செவ்வேள் குன்றத்தின் சிறப்பாகும். இஃதொரு காட்சி, இப்பாடலிலேயே மற்றொரு காட்சி. பாணன் : தலைவன் பரத்தை வழிப்பட்டு நின்று பின்னர் தலைவியை நாடினான். தலைவி அவன்மேற் சினந்து வாயில் மறுத்தாள். தலைவன் பாணனைத் தலைவியிடம் தன் தூதாக விடுத்தான். அப்பாணனை நோக்கித் தலைவி இடித்துரைத்து, அவன் பொய்ம்மையை வெளிப்படுத்தியது அக்காட்சி : பொன்னணி பூண்டு உடற்பொலிவோடு விளங்கும் பாணனே, சிறந்த வளங்களையுடைய அழகிய பரங்குன்றின் மேல் உள்ள சுனையில் புத்த, நீலமலர் போலும் வளப்பமிக்க அழகிய தண்ணிய கண்ணையுடைய பரத்தையரைத் தலைவன் இறுக்கமிகத் தழுவலால் அவர் உண்டாக்கிய வளமான வடுவமைந்த கைந்நகம் உண்மை யாமறியவும் நீயறியாயோ? நட்டபாடை என்னும் பண்ணைத் தரும் நின்யாழ் நரம்பிற்குப் பொருந்திய தாளத்தையுடைய சிறந்த பாட்டு, தலைவன் பரத்தமை உடையன் அல்லன் என்னும் பொருளொடு பொருந்தி வருதலால். பொய்ம்மையுடைய தாயிற்று! என்று இகழ்ந்தாள். செவ்வேள் பரங்குன்று சார்ந்தார் பொருளியல் வாழ்வு இவ்வாறாகச், செவ்வேள் வாழ்வொடும் பின்னிய பொருளியற் செய்தியும் பரிபாடலில் மிகச்சுவையாகப் புனையப் பட்டுள்ளது. வள்ளி தேவயானை ஊடல் : கார்த்திகை மகளிர் பெற்றபெருமானே, நீ மையுண்ட கண்ணையுடைய மான் மறியாம் வள்ளியை மணங்கொண்ட போது, ஆயிரங்கண்ணனாம் இந்திரன் மகளாம் தேவசேனையின் மலரன்ன கண், முதுவேனிற் காலம் கார்காலத் தன்மை பெறும்படி கருமுகில்கள் கூடிப் பரங்குன்றில் பொழிந்தாற் போல் கண்ணீர் மழை பொழிந்தது என்று ஊடலியலை உரைக்கத் தொடங்கினார் (9:7-11). கரைமேல் நின்ற சந்தன மரத்தை முரித்து வையைநீர் கொண்டுவந்த சந்தனக் கட்டையில்புகைசூழ்ந்ததும் மாலை யணிந்ததுமாகிய மார்பில், முத்துமாலை அழகு செய்யவள்ளி யினிடமிருந்து தன்னிடத்து வருகின்ற செவ்வேளைத் தேவசேனை வணங்கி, எம்போலும் பொலிவற்றவரும் நின்மயலிலே அகப்பட்ட வருமாகிய மகளிர் தன்மை, இனி எப்பொழுது மழை பெய்யுமென ஏங்கிநிற்கும் சோலை போல்வதாம். விரும்பியவர்க்கு இன்பந்தராத மாயத்தையுடையவனே நீ வாழ்க! நீ செய்யும் இச்செயல் நின் தவறிலை; நின்னியல்பு அறியாமல் நின் மயலில் பட்டவர் தவறேயாம். ஆதலால் நின்நலத்தைத் துய்க்கப்பேறுபெற்றவர் அல்லேம் என்று வெதும்பிய பார்வையால் தன்னைக் குறித்துச் சொல்லி வள்ளி காரணமாக ஊடிநின்றாள் தேவசேனை. அதுகண்ட செவ்வேள், அவ்வாறு ஊடும் தேவசேனையைத் தொடுத்துச் சென்று, அவளடியின்மேல் தலை மாலைபடும்படி வணங்கிக் கப்பம் செலுத்துவான்போல் பணிந்தான். அச்செவ் வேளை வருந்தாதே பெறுக என்று கூறி ஊடல் தீர்த்துத் தன்னைத் தந்தாள் தேவசேனை. அதனைக் கண்ட வள்ளி இறுக்கமாகக் கட்டிய மாலையாலே செவ்வேள் கைகளைக் கட்டி, மாலையையே கோலாகக் கொண்டு. நீ அவளிடத்துச் செல்லாதே செல்லாதே என அடித்தாள். அப்பொழுது வள்ளி தேவசேனை ஆகியவர்களின் மயில்கள் ஒன்றை ஒன்று மோதின; கிளிகள் தம் மழலைச் சொற்களால் ஒன்றை ஒன்று வைதன; வள்ளியின் குன்றத்து வண்டு தேவசேனையின் கூந்தல் வண்டின் மேற்சென்று தாக்கியது. தேவசேனையின் தோழியர் ஊது காற்றும் தாங்காது வளையும் மெல்லிடையராயிருந்தும் சினந்து மாறுபட்டு வள்ளியின் தோழியர் மலைகளொடு எதிரிட்டுத் தம் மாலைகளை வீசினர்; பூப்பந்துகளை எடுத்துப் படைக்கருவியென எறிந்தனர்; தம் மார்பில் கட்டிய கச்சுகளையே சம்மட்டியாகக் கொண்டு அடித்தனர்; இவ்வாறு ஊடல் போர் புரிந்தனர். தேவசேனையின் தோழிமார் செயல்களைக் கண்ட வள்ளியின் தோழிமார், மதங்கொண்ட யானையின் தன்மை யராகவும், வட்டமிட்டுச் சாரி வரும் திரையின் இயல்பினராகவும், தேர்வரிசை வருவது போல வடிகயிறு கொண்டு வருபவராகவும், அம்புகோத்து வளைக்கப்பட்ட வில்லினை உடையவராகவும், வாட்படையைக் கொண்ட போர்வீரர் போன்றவராகவும், வளையல்களையே சக்கரப் படையெனக் கொண்டு சுழற்று பவராகவும் எதிரிட்டு நின்றனர். வள்ளியின் தோழிமார் செயல்களைக் கண்ட தேவ சேனையின் தோழிமார் மலைபோலும் மார்பினையுடைய செவ்வேளைச் சுற்றி வளைத்துக் கொண்டு மணமிக்க சுனையில் பாய்ந்து நீராடினர்; அச்சுனையில் தேனுண்ணும் வண்டுகளாய் இசை எழுப்பினர்: தோகை விரித்தாடும் மயில்களாய் ஆடினர்; குயில்களாய்க் கூவினர்; பின்னர்ச் செயல் ஒன்றும் கூடாமல் வருந்தியும் நின்றனர். குறிஞ்சி நிலத்துக் குறவர் கொடியாகிய வள்ளியின் தோழியர், கலைமலிந்த பல்வகைப் போர்களைத் தொடுத்துச் செய்து தேவசேனையின் தோழியரை வெற்றி கொண்டனர். அதனால் குன்றம் செவ்வேளுக்கு உரிமை யுடையதாயிற்று (9:27-69) ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்பது முப்பால் முடிவு, இப்வூடிக்கூடும் இன்ப இலக்கணத் திற்குச் செவ்வேள் காதலும் கற்பும் இலக்காகப் படைக்கப்பட்ட படைப்பு இப்பரிபாட்டாதல் அறிக. ஊடலில் தோற்பது தோல்வி அன்று; அதுவே வெற்றி; கூடலின் போது அவ்வெற்றி புலப்படும். இதனை, ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும் என்கிறது குறள் (1327). மாபெரும் வீரனும் குடும்ப வாழ்வில் அல்லது காதற் பொருளியல் வாழ்வில் தோற்றும் பணிந்தும் நின்று துய்த்துத் துவர நீக்கிச் சிறந்தது பயிற்றலே சீர்மையது என்பதே இதன் விளக்கமாம். வாழ்வியலுடன் சார்த்தி அறிவார் இதன் வளம் கண்டு நலம் பெறுவார் என்க. வள்ளிமணம் களவு வழிவந்தது. தேவயானை மணம் கற்பு வழிவந்தது. களவு வழிவந்த உறவு, கற்பாக நிலை பெறுதலே பொருளியல் கொள்கை. களவியல் கற்பியல் என்னும் இலக்கணக் குறிகளும் இவற்றின் துறை விளக்கங்களும் இவ்வகைப்பட்டனவே. அதனால் திருவள்ளுவர் போலும் சான்றோரும் அவ்விலக்கண வழிகொண்டே நூல் யாத்தனர். களவு மணம் ஒருவர்க்கும் கற்பு மணம் ஒருவர்க்கும் எனப்பகுப்பின்றிக் களவின் வழித்தே கற்பு என்பது முறைமை ஆயின், வள்ளியின் களவு மணத்தையும் தேவயானையின் கற்பு மணத்தையும் உட்கொண்ட நப்பண்ணனார் அவற்றை ஓர் அரிய வகையால் அமைத்துச் சுவையூட்டுகிறார் என்க. இருவகைமணம் : விண்ணவர்கள் பெறும் இன்பத்தை மண்ணவரும் பெற வேண்டும் எனச் செவ்வேள் திருவுளம் கொண்டானாம். அதனால், விண்ணவர் புகழும் அவ்வண்ணல், மண்ணவர் மகிழுமாறு பரங்குன்றிலே அமர்ந்து மயில்போலும் வள்ளியை மணங் கொண்டானாம்! விண்ணவர்க்கு அவன் எத்துணை அணுக்கனோ அத்துணை அணுக்கன்மண்ணவர்க்கும் என்று கூறுமுகத்தான், அவன் ஒப்புரவாண்மை குறித்தாராம் புலவர் என்க. பரங்குன்றில் தேவயானையை மணங்கொண்டான் என்னும் செய்தியே, தொன்ம வழி வழங்குகின்றது. அத்தொன்மத்திற்கு முன்னைத் தொன்மமாம் பரிபாடற் குறிப்பு, வள்ளி மண வாளனாகவே பரங்குன்றச் செவ்வேளைக் காட்டுகின்றது. இஃது அறியத் தக்கது. மான்மறி தோண் மணந்த ஞான்று (9:8) வள்ளிப் பூ நயந்தோய் (14:22) மயிற்கொடி வதுவை (19:6) குறப்பிணாக் கொடியைக் கூடியோய் (19:95) என்பவை பரிபாடல் தொடர்கள். இனிச் செவ்வேள் விரும்புவன எவை எவை என்பதையும் சுட்டுகிறார் கேசவனார்: கார் காலத்து வெண்மேகம் எழுந்தது போல எழும் மணப்புகையை விரும்புதல். பிறரை வெல்லும் எழில் வாய்ந்த வள்ளியின் நலத்தை விரும்புதல் பிரிந்து வாடினோர், மீண்டும் பிரியாமை வேண்டி யாழிசை எழுப்பிப் பாடுதல் விரும்புதல், இருபிறப்பும் ஈர நெஞ்சும் உடைய அந்தணர் தம் அறப்பண்பை விரும்புதல் என்பன அவை. இவற்றைக், கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையில் நறும்புகை நனியமர்ந் தோயே; அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே; கெழீஇக் கேளிர் சுற்றம் நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே; பிறந்த ஞான்றே ன்னை உட்கிச் சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெயர் ஈர நெஞ்சத் தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே என்கிறார் (14:19-28) வேண்டுதல் வேண்டாமை இலனாம் இறைவன் வேண்டு தலாக உரைத்தது, நல்லவை நானிலத்து நிகழல் வேண்டும் என்னும் பெருவேட்கையாலேயாம் என்று கொள்க. பாவலர் வேட்கையின் பரந்தியல் நிலையைப் பகர்வது இவ்வேண்டுகை என்று தெளிக. 7. செவ்வேள் வழிபாடு செவ்வேள் ஆகிய சேயோன் வழிபாடு மிகப் பழமை யானது. கதிர்வரக் கண்டு காரிருள் அகன்று போகக்கனிமாந்தர் களிப்புற்ற காலந்தொட்டு உண்டாகிய வழிபாடு அது. அவ்வழிபாடு, கோயில் எடுத்துக் கூட்டங்கூடிப் பல பலபடியாக வளர்ந்துவிட்ட நிலையில் எப்படி நடந்தது என்பதைப் பரிபாடல் காட்டுகின்றது. விழா எழுச்சி : செவ்வேளின் சிறந்த அடியவர்கள் விழாக் கொண்டு எழுந்தனர். வெவ்வேறு வகையான சாந்துகளுக்கு மணத்தால் சிறக்கின்ற புகைவகைகளும், காற்று ஆதலால் அணையாத வகையில் அமைந்த விளக்குகளும், எழுப்புதற்குரிய முழவு வகைகளும்,மணி, கயிறு, கோடரி, பிணிமுகம் (யானை) இன்னவாகச் செவ்வேள் விரும்பும் பொருள்களும் கையில் ஏந்திக்கொண்டு திருப்பதி குன்றஞ் சேர்ந்தனர் என்கிறது எட்டாம் பரிபாடல் (96-102) சீறடியவர் சாறுகொள எழுந்த வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும், ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும், நாறுகமழ் வீயும், கூறுமிசை முழவமும், மணியும், கயிறும், மயிலும், குடாரியும், பிணிமுகம் உளப்படப் பிறவும், ஏந்தி அருவரை சேரா என்பது அது. அடியவர்கள் என்றோ எப்பொழுதோ வழிபடுதல் அன்றி, அடுத்துச் சென்று ஆர்வப் பெருக்கால் வழிபட்டனர் என்பது, அதமர்ந்தியாம் நின்னைத் துன்னி துன்னி வழிபடுவது வரும் பதினான்காம் பரிபாடலால் விளங்கும் (29.30). வழிபாட்டுச் சிறப்பு : பதினேழாம் பாடலும் வழிபாட்டுச் சிறப்பை வனப்புறப் பாடுகின்றது. அவ்வழிபாட்டு இன்பத்திற்காக - அதனை இடையீடு இன்றிப் பெறுவதற்காக - விண்ணுலக இன்பத்தையும் விரும்பாராய் மண்ணுலகிலேயே வாழவேண்டும் என்னும் பேரார்வப்பெருங்காதலராய்த் திகழ்ந்தமையையும் அப்பாடல் சுட்டுகின்றது. தேம்படு மலர், குழை, பூந்துகில், வடிமணி, ஏந்திலை சுமந்து, சாந்தம் விரைஇ, விடையரை அசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய இசையினர், விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி, கொளை, நறை, புகை, கொடி ஒருங்கெழ மாலை மாலை அடியுறை இயைநர் மேலோர் உரைறயுளும் வேண்டுநர் யாஅர்? (17:1-8) இனிய மலர், இளந்தளிர், பூவேலைப்பாடுடைய பட்டு வேலைப்பாடு மிக்க மணி, உயர்ந்த இலைவடிவில் செய்யப்பட்ட வேல் ஆகிய வழிபாட்டுக் குரியவற்றைச் சுமந்து கொண்டு வந்தனர். சந்தனம் தெளித்து ஆட்டுக்கடாவினைக் கட்டிய கடம்புமரத்தினை உரையால் வ்ழ்த்தினர்; இசையெழுப்பிப் பாடினர்; மலர்ந்த பூவின் தேனால் நனையும் மரங்கள் மிக்க வளமான குன்றத்தில் தீப்பந்தம், இசைக் கருவிகள், நறுமணப் பொருள்கள், அகிற்புகை, கொடி ஆகிய இவற்றை ஒரு மொத்த மாகக் கொண்டு ஒவ்வொரு நாள் மாலையிலும் தங்குவதைப் பெருவாழ்வாகக் கொண்டனர். இத்தகைய வழிபாட்டின்பம் வழிவழி வேண்டுமென விரும்புதலையன்றி விண்ணுலகத்து உறைந்து பெறும் வீட்டின்பத்தையும் விரும்புவார் இலர்! வீடும் வேண்டா விறலின் விளங்கினார் எனத் திருத்தொண்டர் எண்ணலைத் திருத்தொண்டர் புராணத்தில் தொண்டர்சீர் பரவுவார் ஆகிய சேக்கிழார் பாடினார். அவர்க்கு முன்னேயே இப்பரிபாடல், மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்? என வினாவுகின்றது. வழிபாடு, வழிபாட்டுக்கே அன்றி, வேறு பயனுக்கு அன்று என்றும் முதிர்நிலை இது. ஆனால், பொதுநிலை இஃதன்று என்பது அடுத்துவரும் செவ்வேளிடம் வேண்டுதல் என்னும் பகுதியால் விளங்கும். வழிபாட்டு நோக்கம் : வழிபாட்டு இன்பமொன்றே கருதுபவர்களும், செவ்வேள் அடியுறைவாழ்வே வேண்டுமென்று ஆர்வம் மிக்கிருந்தவர் களும், குடும்பமாய்க் கூட்டமாய்ச் சுற்றமாய்த் திகழ்ந்தனர் என்பது பதினெட்டாம் பரிபாடலால் அறியவருகின்றது. வெற்றி மிக்க வேல, நின் வழிபாட்டில், யாழிசையும் இசைப்புலவர் பாடிய பாடலும் பொருந்தவும், மறையொலி, மலர், விளக்குகள் திகழவும் அகிற்புகை சந்தனப்புகை கமழவும், எம் சுற்றத்தாருடன் எம் ஊரின் கண் தங்குவது போல் நின் திருவடிக்கண் தங்குவதைப் பிரிவில்லாமல் யாம் பெற நீ அருள்வாயாக என வேண்டுகின்றனர். புரிபுறு நரம்பும் இயலும் புணர்ந்து சுருதியும் பூவும் சுடரும் கூடி எரியுரு ககிலோ டாரமும் கமழும் செருவேற் றானைச் செல்வநின் அடியுறை உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கஎம் சுற்றமோ டுடனே (18:51-56) இப்பகுதி வழிபாட்டு வேண்டுதலாக இருப்பினும் இவ் வேண்டுதல் வேறொன்றும் இன்றி முருகன் அடியுறையையே விரும்புதலின் வழிபாட்டுப் பயன் குறித்ததேயாம். நயத்தலிற் சிறந்தஎம் அடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே (9:84-5) இவ்வாறே, குன்றத் தடியுறையியைகெனப் பரவுதும். வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது என்றும் (21:16-7) நன்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும் என்றும் (21:68-9) கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் உடங்கமர் ஆயமோ டேத்தினந் தொழுதே என்றும் (19:104-5) வருவன இவ்வாறு பிறிதொரு பொருள்நோக்காது அடியுறை விரும்பியதேயாம். விளிநிலை : வழிபாட்டாளரும் பாட்டாளரும் செவ்வேளைப் பல்வகையாக விளித்து மகிழ்கின்றனர். செவ்வேள் என்பது அவனைப் பற்றிய பாடல்களின் தலைப்புகளாக இடம் பெற்றுள்ளது. அப்பெயர் ஐந்தாம் பரிபாடலில் காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் என இடம் பெறுகின்றது 113) அதே பரிபாடலில் ஒருவனை வாழி, ஓங்குவிறற் சேஎய் என்று (54), இருபத்தொன்றாம் பாடலில் பசும்பூட்சே எய் (53) என்றும் விளிக்கப் பெற்றுள. மேலும் இறைவ (17:49) சால்வ (5:14) தலைவ 5:14) நெடியோய் (19:28) பெரும் பெயர் முருக (5-50), முதல்வ (8:17) வேலோய் (8:29) என்றும் விளிக்கப்பெற்றுள. இவ்விளிகள் செவ்வேளின் இறைமை, பொலிவு, தோற்றம், பெயர், படை ஆகியவை பற்றியவை என்பது வெளிப்படை. 8. செவ்வேளிடம் வேண்டுதல் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்என்பது நாவுக்கரசர் நல்லுரை. வேண்டுதல் வேண்டாமை இலா னாகிய அவன் வேண்டுவார் வேண்டுவதை ஈவான் என்பதை அடியார்கள் உணர்ந்தனர். உணர்ந்ததை உரைத்துப் பரப்பினர்; அவ்வாறு பிறரும் வேண்டிப் பெறுமாறு வழிகாட்டினர். அவ்வகையில் அமைந்த பாடல்கள் மிகப்பல. அவ்வேண்டுதல் பெரும்பாடலுள் ஒன்றே திருமுருகாற்றுப்படை. வேண்டுதல் : வீடும் வேண்டா நிலையில் வழிபட ஓர் உயர்நிலை வேண்டும்: அந்நிலை அனைவர்க்கும் வாய்ப்பது அன்று. பயன் நோக்கிச் செய்யும் செய்கைகளே பாருலகப் பொதுமை. அப்பொதுமையில், பொதுநலப் பான்மையே திகழ வேண்டிய வர்களும் உளர்; வள்ளலார் அவ்வகையில் கண்காண வாழ்ந்து கனிந்து கனிந்து வேண்டி நின்றவர். அதன் அரும்புதல் நிலை சங்கத்தார் காலத்திலேயே தோன்றிவிட்டது. அதற்குச் சீரிய சான்றுகளாக விளங்குவன பரி பாடலில் வரும் வேண்டுதல்கள். யாம் இரப்பவை : செவ்வேட் பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்களில் முந்து நிற்பது கடுவன் இளவெயினார் பாட்டு )5), கடப்ப மாலை அணிந்த செவ்வேளே யாம் நின்னிடத்து இரந்து வேண்டுபவை துய்க்கும் பொருளோ, அத்துய்ப்புக்கு உதவும் பொன்னோ அன்றித் துய்ப்போ அல்ல; எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளும் அதற்கு மூலமாம் அன்பும், அவ்வன்பிற்கு நிலைக்களமாம் அறமும் ஆகிய மூன்றுமேயாம் என்கிறார். பொருளன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அருள். பொன்னன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அன்பு போகம் அன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அறம். பொருள் பூரியார் கண்ணும் உண்டு; ஆயின் அருள் நேரியரன்றிப் பிறரை அணுகாதது. பொன் பொன்றுதற்கும் வழிகாட்டும்; பொலிவுச் செருக்குக்கும் வழிகாட்டும். அன்பு உயிர் நிலையாக விளங்கும்; அருளாகி அருளாளனைச் சார வழி காட்டும். போகம் தான் துய்த்து இன்புறும் அளவில் உதவும்; அறம் ஈத்துவக்கும் இன்பக் களமாய் இருபாலும் இன்பம் சேர்க்கும். ஆதலால் பொருளும் பொன்னும் போகமும் வேண்டா; அருளும் அன்பும் அறமும் தனித்தனியன்று; மூன்றும் ஒருங்கே எய்த அருள்க! என்பாராய் வேண்டுகிறார். யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே (5:79-81) என்பது அது. கனவிற் கண்ட எம் காதலர் நனவில் அடையுமாறு வையை புதுநீர் வரவு கொள்வதாக என்று வரம் வேண்டுபவரும், எம் வயிறு கருவுறுவதாக; அவ்வாறு உற்றால் நினக்கு இன்ன இன்ன பொருள்களைத் தருவோம் என நேர்ந்து கொள்பவரும் எம் தலைவர் பொருள் தேடுவதற்காகப் பிரிந்த பிரிவு, பொருள் வளம் சேர்ப்பதாக எனச் செவ்வேள் செவியில் சேர்த்துபவரும், போர்மேற் சென்ற வேந்தன் பகைவென்று மீள்வானாக என வழிபாடு செய்பவரும், செவ்வேளை வாழ்த்திப் பாடுபவரும், பாடுவார் பாட்டிற்கு ஏற்பத் தாளத்தோடு ஆடுவோருமாகப் பரங்குன்றில் இறையன்பர்கள் விளங்கும் காட்சியை எட்டாம் பரிபாடல் கூறுகின்றது. இதில் தம் காதலரைப் பெறும் அளவில் வேண்டுகை நிற்கவில்லை என்பதை அறிக. அவ்வாழ்வின் பயனாகவும் வழி வழியாக உலகநலம் உண்டாதல் வேண்டிக் கருவுறுக என வேண்டுவதும், பின்னர்க் குடிநலம் காக்க உதவும் பொருள் வளத்தின் இன்றியமையாமை உணர்ந்து அது பெருமை வேண்டுவதும் ஆயிவைஒன்றின் மேல் ஒன்று சிறந்த வேண்டுகைகளே பெருநல நாட்டம் இனி நாட்டுநலம் கருதுவாராய் வேந்தன் வெல்க என்றது மிகப் பாராட்டுக்குரியதாம். இதன் மேலும் சிறப்பினதாகச் செவ்வேளை வாழ்த்தும் அளவே வேண்டுகையாக நின்றது சுட்டத் தக்கதாம், கனவில் தொட்டது கைபிழை யாகாது நனவிற் சேஎப்ப நின் நளிபுனல் வையை வருபுனல்அணிகென வரங்கொள் வோரும்; கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்; செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும் ஐயமர் அடுகென அருச்சிப் போரும்; பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் (8:102-9) என்பது காண்க. இதே பரிபாடலில் நிறைவில் நெறிநீர் அருவி அசும்புறு செல்வ; மண்பரிய வானம் வறப்பினும் மன்னு கமா தண்பரங் குன்றம் நினக்கு என்று ஓர் அரிய வேண்டுகையும் வருகின்றது. மண்ணுலகத் துயிரெல்லாம் வருந்தும் வண்ணம் வானம் பொய்ப்பதேயாயினும் நின் தண்ணிய பரங்குன்றத்து அருவி இடையறாது ஒழுகுவதாகிய செல்வம் என்றும் நிலைபெறுவதாக என வேண்டுகிறார். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று சங்கச் சான்றோர் பாடியது போல் வான் பொய்ப்பினும் பரங்குன்ற அருவி பொய்க்காமை வேண்டிய வேண்டுதல் ஈதாம். இவ்விடத்தே ஒரு செய்தி: இற்றைப் பரங் குன்றெனக் காண்பார் அருவி, சோலை எனச் சொல்வதெல்லாம் வறும்புனைவே என்று எண்ணுதல் கூடும். ஒரு முப்பது ஆண்டுகளின் முன்னே ஆண்டுக்கு மூன்று நான்கு திங்கள் அளவு பரங்குன்றத்தில் தென்கீழ்ப் பகுதியில் அருவியாய் ஒழுகிக் குளம் நிரப்பிக் கால்வழி பரந்தது கண்கூடு. ஆண்டு முழுவதும் தென்பகுதியில் சுனைகள் பல ஊற்றெடுத்துச் சென்றதும் கண்கண்ட சான்று. வளமான மேல்மலைத் தொடரே கரிக்காடாகிக் கரிந்து பட்டதை அறிவார் இயற்கையை அழித்த மாந்தர் செய்வினையைக் கருதி இரங்குதல் அன்றி, இயற்கையை ஐயுறுதலில் முறையில்லையாம்! சேவலங் கொடியோனாம் செவ்வேள் காத்தலால் உலகம் பாதுகாப்பு மிக்க நாளைப் பெற்றது என்பது பெருந்தேவனார் கூறும் செய்தி (குறுந். கடவுள் வாழ்த்து). பரிபாடலார் பாடுகின்றார். அவர் பெயர் நல்லழிசியார். இறைவ, பணியொரீஇ நின்புகழ் ஏத்தி அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் அவை, யாமும்எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயாம் எனவே (17;50-53) என்பது அது. பணியொரீஇ நின்புகழ் ஏத்தி என்பதற்கு மக்கண் மாட்டுப் பணிமொழியை ஒழிந்து நின் புகழையேத்தி எனப் பொருள் வரைகிறார் பழைய உரைகாரர் பரிமேலழகர். இதற்குப் பெருவிளக்கம் வரைகிறார் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார். பணி - பணிவுடைமையைக் காட்டும் முகமன் மொழி அவை மிடுக்கிலா தானை வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்றும் கொடுக்கிலா தானைப் பாரியே என்றும் கூறும் புன்மொழிகள். அங்ஙனம் தம்மையே ஒத்த சின்னாட் பல்பிணிச் சிற்றறி வினராகிய மனிதரைப் பொய்யே புகழ்ந்த விடத்தும் அவர் கொடுத்ததும் இல்லை. ஒரோவழிக் கொடுப்பினும் அப்பொருள் போதப்பயன் தருதலும் இல்லை. ஆதலின் இப்பேதமைத் தொழிலை இனி அறவே ஒழித்து இம்மை இன்பமும் மறுமை இன்பமும் அந்தமில் இன்பத்து வீட்டின்பமும் தரவல்ல நின்னையே ஏத்தித் தொழுவோம். அவற்றுள்ளும் நிலையாதல் இல்லாத இம்மை மறுமை இன்பங்களைப் பெறுதல் எம் கருத்தன்று; என்றென்றும் நினலத்த நின் திருவடியின்பமே யாங்கள் பெறக்கருதி இறைஞ்சுகின்றோம் என்றவாறு என்பது அது. முரணாகுமா? புலவர்ப்பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான வூர்தியும் பெறுவர் என்றும், ஓங்கிய சிறப்பின் மாங்குடி மருதன், முதல்வனாகப் புலவர் பாடாதொழிக என் நிலவரை என வேந்தன் வஞ்சின மொழியில் வைத்துப் பாடிய புகழ் மிக்கோர் புலவர் என்றும், வள்ளல்களை நாடிப் புள்ளெனச் சென்று வளம் பெற்ற பாடல் களின் வரியே புறப் பாடல்கள் என்றும் அறிவார் வள்ளல்களைப் பாடிப் போற்றிய சங்கத்தார் கால நிலையை அறிந்து கொள்வர். அவர்க்கு, இப் பரிபாடல் செய்தி, முரணாகத் தெரிதல் கூடும். ஆனால், உலகியல் பொது நிலை நீங்கிய புலவர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள், இறைவனிடம் கூட பொருளும் பொன்னும் போகமும் வேண்டினர் அல்லர் என்றும் அவர்கள் வேண்டியவை அருளும் அன்பும் அறமும் என்றும், அவற்றின் மேல் இறைவன் அடியுறையையே அவாவினர் என்றும், இறைவன் உறைவிடம் வளங்குன்றா திருத்தலையே வேண்டிக் கிடந்தனர் என்றும்நாம் முன்னே அறிந்துள்ள செய்திகளை நோக்கின் இம்முரண் எழுதற்கு இடமில்லை. இனி இந்நல்லழிசியார் இப்பாடலை அன்றி வேறுபாடல் பாடினாரும் அல்லர். பரிபாடற் புலவர்களுள் நல்லந்துவனார் ஒருவரையன்றிப் பிறர் பாடிய பாடல்கள் பாட்டு தொகைகளில் இல்லை என்பதும் அறியத்தக்கன. தொகைநூல்களில் இடம் பெற்ற இளவெயினனார், பூதனார் என்பாரும் இப்பரிபாடலில் இடம் பெற்றகடுவன் இளவெயினனார், குன்றம் பூதனார் என்பாரும் அடைமொழிகளாலேயே வேறு வேறானவர் என்பது விளங்கும். ஆகவே இறைவனைப் பாடுதல் அன்றி மாந்தரைப் பாடாத கொள்கையுடைய புலவர்களும் பண்டே இருந்தனர் என்பதும் அவர்கள் வழி பிற்காலத்தே பெருகவும் ஆயிற்று என்பதும் அறிந்து கொள்ளலாம். 9. செவ்வேள் பாடல்களில் குன்றமும் கூடலும் செவ்வேளைப் பற்றிய எட்டுப் பரிபாடல்களிலும் குன்றம் பற்றியும் கூடல் பற்றியும் பல செய்திகள் வந்துள. குன்றம் என்பது பரங்குன்றம்: திருப்பரங்குன்றம். கூடல் நான்மாடக் கூடல்: மதுரை. குன்றப் பெருமை : பரங்குன்றத்தை இமயக்குன்றத்திற்கு இணையாகச் சொல்கிறது பரிபாட்டு: பரங்குன்றிமயக் குன்றம் நிகர்க்கும் (8:-11) என்றும், நின் சீர்நிரந் தேந்திய குன்றொடு நேர் நிரந் தேறுமா றேற்றமிக்குன்று (18:4-6) என்றும் வருகின்றன. இவ்வொப்புமை எதனால் ஏற்பட்டது என்பதை விளக்கியும் காட்டுகின்றன அப்பாடல்கள். முன்னையது பெருக்கம்: பின்னையது சுருக்கம். முன்னைப் பெருக்கம்:திருமாலும் சிவனும் நான்முகனும் கதிரவர் பன்னிருவரும் மருத்துவர் இருவரும் வசுக்கள் எண்மரும் உருத்திரர் பதினொருவரும் திக்குக்காவலர் எண்மரும் பிறபிற தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் முருகனைக் காண்டற்காக மண்ணகம் வந்து உறைதற்கு இடமாகக் குன்றம் இருத்தலால் இமயக்குன்றம் ஒக்கும் என்கிறது (8:1-11). பின்னைச்சுருக்கம் : முருகனைப் பெற்றதனால் உண்டாகிய புகழைப் பெருகக் கொண்டது இமயம். அவன் வீற்றிருத்தலால் அதனொடு நேருக்கு நேர் நின்று சிறக்கும் சீர்மையது பரங்குன்றம் என்கிறது (18:4-6). சுனைப் பெருமை: இனிக் குன்றின் சுனையைத் திருமுருகன் பிறந்த இமயப் பொய்கைக்கு (சரவணத்திற்கு) ஒப்பிடுகிறது மேற்சுட்டிய எட்டாம்பாட்டு. நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கிணர் ஊழா ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை என்பது அது (13-16) செவ்வேளே! நின்னைப் பெற்ற செறிந்த ஒளிமிக்க தாமரை விளங்கும் ஒப்பற்ற (சரவணப்) பொய்கையொடு ஒப்பாகும், நின் பரங்குன்றின் அருவி ஒழுக்கு நீங்காதசுனை என்பது இதன் பொருள். ஒலிவளம்: செவ்வேள் ஊர்தியாகிய யானையின் முழக்கம், இடிக்குரல் ஒக்கும். அவ்வியானையின் முழக்கம் கேட்ட சேவற் கோழி அஞ்சிக் குன்றம் அதிருமாறு ஒலிக்கும். அச்சேவற் கோழியின் அதிர்குரல் கேட்டு யானை முழங்கவும், யானை முழக்கம் கேட்டுச் சேவற்கோழி அதிரவும், பரங்குன்றக் குகையில் எழுகின்ற எதிரொலி அவற்றுக்கு மறுதலையாக அமைந்தது. பரங்குன்ற ஒலிவளம். இவை. முதல்வநின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல், குரல்கேட்ட கோழி குன்றதிரக்கூவ மதநனி வாரணம் மாறுமா றதர்ப்ப எதிர்குதிர் ஆகின் றதர்ப்பு மலைமுழை (8.17-21) கொடிகள் : பரங்குன்றச் சுனையின் பக்கம் வெற்றிக் கொடிகள் பல நிற்றலைக் குறிக்கிறது ஒரு பரிபாடல (9) ஆடலில் வல்லோர், ஆடலில் வல்லோரை வென்றனர் பாடலில் வல்லோர், பாடலில்வல்லோரை வென்றனர் சூதில் வல்லோர், சூதில் வல்லோரை வென்றனர்: பிறபிற கலைகளில் வல்லோர், அவ்வக் கலைவல்லோரை வென்றனர்: அவ்வெற்றிக்கு அறிகுறியாகச்சுனையின்பக்கத்தே கொடி நாட்டினர்: ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், வல்லாரை வல்லார் செறுப்பவும், அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற தண்சுவைப்பாங்கர்ப், படாகை நின்றன்று மேஎ வெஃகினவை வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை (9;7-80) கூடலும் குன்றும் : குன்றத்தில் இருந்து கூடலுக்குச் செல்லும் வழியையும் கூடல் முரசு முழக்கையும் நயம் பெறக் கூறுகிறது பரிபாடல் : திருப்பரங்குன்றத்தில் இருந்து கூடலுக்குச் செல்லும் வழியில் ஏழ்துளைக் குழல் ஒலிப்பது போல் தும்பியும், ஐந்து துளைக் குழல் ஒலிப்பது போல் வண்டும், யாழ் இசைப்பது போல் ஞிமிறும் பாடுகின்றன. சுனைகள் பூத்து விளங்குகின்றன. கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை முதலிய கொடிகள் மலர்ந்து நறுமணம் பரப்புகின்றன. காந்தட் பூக்கள் இடமெல்லாம் மணம் விரிக்கின்றன. பிறபிற மலர்களும் மலர்ந்து தேன் துளிக்கின்றன; தென்றற் காற்று அவ்வழியில் அசை நடையிட்டு வருகின்றது. கூடலில் அழகிய மங்கல முரசும் முழங்கியது. அம் முரசொலி காற்றால் மோதுண்ட கடல் போலவும், கடல் நீரைப் பருகும் முகில் போலவும், வானம் இடிக்கும் இடி போலவும் முழங்கும் பொழுதுகளிலெல்லாம் பரங்குன்றின் முழக்கம் மாறுமாறாக எதிரொலிக்கும் (8:22-35) பழம் புலவர்களால் பாடு புகழ் பெற்றவை கூடலும் குன்றமும். இக் கூடற்கும் குன்றத்திற்கும் இடையே அமைந்த தொலைவு மிகமிகச் சிறிதே. என்றாலும் ஆடவரும் மகளிரும் நெருங்கி விளையாடுதலால், வழி மிகத் தொலைவு உடைய தாயிற்று. மகளிர் பந்தலில் இருந்தும் மைந்தர் குடுமியில் இருந்தும் வீழ்ந்த மலர் மாலைகளால் தடுக்கப்பட்டு அவ்விடத்தே செல்லுதற்குரிய வழி இல்லாததாயிற்று. புகழ் வாய்ந்த பரங்குன்றில் பலவிடங்களிலும் செய்கின்ற பூசையினால் எழுந்த நறுமணப் புகை, அவ்விடங்களிலிருந்து மேலே மேலே போய் இமையாக் கண்ணராம் இமையோரும் இமைத்து அகலுமாறாகின்றது. கதிரோனைக் காணுதற்குக் கூடாவாறும் ஆகின்றது. பரங்குன்றச் சுனைகளில் மகளிரும் அவர் தம் தலைவரும் பிற ஆடவர்களும் மகிழ்வுமிக்கு ஒரு சேரப் பாய்ந்து நீராடுதலால் தேனுன்ணும் இயல்புடைய வண்டுகளும் அச்சுனையுள் புகுந்து தேனுண்ணா. அத்தகைய வனப்புடையது திருப்பரங்குன்றம் (17:22-39). வழிச் செலவு : கூடலின் சிறப்பையும் ஆங்கிருந்து குன்றத்திற்கு மக்கள் செல்லும் செலவையும் விரிவாகக் கூறுகின்றது பத்தொன்பதாம் பரிபாட்டு. கூடலின் வாழ்வார் அறிவுப் போராலும் வெற்றியுடையார்; வீரப்போராலும் வெற்றியுடையார். இரவெல்லாம் இன்பத் துயில் கொண்ட அவர்கள், விடியற் போதின் கண் அறம் பெரிது செய்த பயனால் விண்ணுலக இன்பம் கொள்வதற்குச் செல்வார் போல், தத்தமக்குரிய ஆடை அணிகளைப் பூண்டு குதிரை தேர் முதலியவற்றின் மேல் ஏறி ஊர்ந்தனர். கூடலில் இருந்து குன்றம் வரை நெருங்கி மாலையணிந்த தலைகளே தோன்ற இடைவெளி என்பது இல்லையாகச் சென்றனர். அச்செலவு தக்க மலர்களைத் தேர்ந்து தகவாகக் கட்டி நிலமகளுக்குச் சூட்டிய மாலை போல விளங்கியது. கூடலாளும் வேந்தன் பாண்டியன், தன் பரிவாரங் களொடும் மலைக்குச் சென்று திருக்கோயிலை வலம் வந்தான். அக்காட்சி விண்மீன்கள் சூழத் திங்கள் மேரு மலையை வலம் வருவது போல் அமைந்தது. வேந்தனொடு வந்தோருள் யானைப்பாகர், யானைகளை வழியில் இருந்து விலக்கி மரங்களில் கட்டினார். அவற்றுக்குக் கரும்புகளை ஊட்டினர். குதிரைப் பாகன் குதிரைகளை வழியில் இருந்து விலக்கி நிறுத்தினர். அவ்வாறே, தேர்ப்பாகர் தேர்களை ஒதுக்கி நிறுத்தினர். இவ்வாறு நிறுத்தப் பெற்ற காட்சி பாண்டியன் பாசறை போல விளங்கிற்று. எழுத்து நிலை மண்டபம் : இனிக் கூட்டத்தில் வந்தோருள் சிலர் குரங்குகளுக்குப் பண்டம் வழங்கினர்; சிலர் கருமுக மந்திக்குக் கரும்பு தந்தனர்; சிலர் யாழிசைத்தனர். சிலர் குழலிசைத்தனர்; சிலர் முரசு முழக்கினர்; சிலர் திருப்பரங்குன்றத்தில் இருந்த எழுத்து நிலை மண்டபம் என்னும் பெயரையுடைய ஓவியச் சாலைக்குச் சென்றனர். எழுத்து நிலை மண்டபத்தில் ஞாயிறு முதலிய கோள்கள் தீட்டப்பட்டிருந்தன. காமன், இரதி, உருவங்கள் தீட்டப் பட்டிருந்தன. கௌதம முனிவன் சினந்து நின்றதும், அகலிகை கல்லுருக் கொண்டதும், இந்திரன் பூனை வடிவுற்றதும் ஆகிய ஓவியங்கள் இருந்தன. அவற்றை அறிந்தோர் இன்னது இன்னது எனப் பிறர் அறியுமாறு காட்டிச் சென்றனர், இத்தகைய பெருமையுடையது பரங்குன்றம். தப்பிப்போன சிறுமி : ஒரு சிறுமி தன் உறவினரைப் பிரிந்து விட்டாள். அவர்களைத் தேடி மலைப் பகுதியெல்லாம் அலைந்தாள். வந்த வழியையும் மறந்துவிட்டாள். அம்மா அப்பா என்று கூவிக் கூவி அலைந் தாள். அவ்வொலி குன்றிற்பட்டு எதிரொலியாய் எழும்பப், பெற்றோர்கள் தன்னை அழைப்பதாக எண்ணி எண்ணி ஓடித் தேடிக் காணாமல் மீண்டும் மீண்டும் கூவினாள். அத்தகைய மக்கள் திரளும் திகைப்பும் தருவதாக இருந்தது திருப்பரங்குன்றம். மகளிர் : விளையாடும் மகளிர் சுனையருகே தலைசாய்த்து நின்ற மரத்தின் பூங்கொத்துகளையும் தளிர்களையும் சுனைநீரில் உதிர்த்தனர். அவை சுனையில் இருந்த பூக்களையும் அரும்பு களையும் பொருந்தி அவற்றின் மேல் நீண்டு கிடந்தன. அவற்றுள் ஒன்று ஐந்து தலையுடைய பாம்பு போல் தெரிந்தது. அதன் அருகே கிடந்த பெரியதும் சிறியதுமாகிய அரும்புகள் இரண்டை, அப்பாம்பின் தலைப்பிள்ளையும் இளம் பிள்ளையும் ஆகும் என மயங்கினர். மாலைகள் : சுனைப் பகுதியிலும் பிற இடங்களிலும் பச்சிலைத் தளிரும், செவ்வல்லியும் செங்காந்தளும் பஞ்சாய்க் கோரை மலர்களும், வேங்கை தோன்றி நறவம் கோங்கம் இலவம் ஆகிய மலர்களும் நிறைந்து, நெருங்கிக் கட்டிய தெற்று மாலை போலவும், பல வண்ணப் பூக்களையுடைய கோத்த மாலை போலவும், இடைவெளிப்படத் தொடுத்த மாலை போலவும், பருமையாகக் கட்டப்பட்ட தூக்கு மாலை போலவும் தோன்றுதலால், வைகறையில் பன்னிற முகில்கள் கலந்து விளங்கும் வானம் போலத் தோன்றும். கூடல் பாண்டியனுக்குரியது. பாண்டியனுக்கு ஒரு பெயர் சேய் என்பது. அதனால் கூடல் பரிபாடற் புலவர் ஒருவரால் சேய்மாடக்கூடல் எனப்பட்டது. குன்றம் பாண்டியன் ஆட்சிக்கு உரியதே. எனினும் செவ்வேள் ஆகிய சேயின் இறை ஆட்சியே தனிச் சிறப்பினது என அப்புலவர்க்குத் தோன்றியது. பாண்டியன் தன் பரிவாரம் சூழச் சென்று வழிபடும் சிறப்பினது அன்றோ பரங்குன்றம்! அதனால், செவ்வேள் பரங்குன்று என்றார் அவர், வாழ்வார் : கூடலும் குன்றுமாகிய இவ்வீரிடங்களின் மேலே, மட்டற்ற காதல் கொண்டவர் போலும் அப்புலவர். அன்றியும் அவற்றுள் ஒன்றைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருந்தவரும் ஆகலாம். அதனால், அங்கு வாழ்வாரே தனிப்பேறமைந்த வாழ்வுடையார் என்றும், அவரே தெய்வ வாழ்வுறுதற்குரியார் என்றும் அப்புலவர் கூறினார். அவ்வளவுடன் நில்லாராய்ப் பிறரெவர் புத்தேளிர் உலகமாம் தேவருலகம் செல்வார்? எனவும் வினவுகிறார். அப்பாடற்பகுதி: ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார் போவாரார் புத்தேள் உலகு! என்பது அது. ஏற்பார், ஈவாரைக் கொண்டாடுகின்றனர்; ஈவார், ஏற்பாரைப் பார்த்துவக்கின்றனர். இருபாலும் இன்பம் எய்துகின்றனர். ஈத்துவக்கும் இன்பம் எய்தும் இவ்வாழ்வு இடையறவு படாமல் நிகழ்கின்றது! இன்பமுறுதல் தானே வீடுபேறு. இவ்வுலக வீட்டிலேயே இப்படி இன்புறுவார், அவ்வுலகத்து வீடுபேறு உண்டாயின் இன்பம் அடையத் தவறுவரோ என்னும் உறுதியால் பாடுகின்றார் புலவர். இப்பாடற்பகுதி செவ்வேள் பாடலைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். பிறபொருள் பற்றிய பாடலைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இப்பகுதியும் இவ்வாறே மேலும் ஐந்து உறுப்புப் பகுதிகளும் புறத்திரட்டில் கண்டு பரிபாடல் முதற் பதிப்பாசிரியர் உ.வே. சாமிநாதர் அவர்களால் பரிபாடல் திரட்டு எனத் தொகுத்துவைக்கப்பெற்றன. இவை குன்றமும் கூடலும் என்னும் தலைப்புக்குப் பொருந்துவனவாக அமைதலால் இணைத்துக் கொள்ளப்பட்டன. கூடற் சிறப்பு : தென்னவன் கூடலை ஒரு தட்டிலும், உலகை ஒரு தட்டிலும் வைத்து, புலவர்கள் தம் புலமை என்னும் துலாக் கோல் கொண்டு நிறுத்தால், உலகத்தின் பெருமை குன்றிப் போகவும் கூடல் பெருமை உயர்ந்து நிற்கும் என்பதொரு பாடற்பகுதியின் பொருள். மற்றொரு பகுதி மதுரை நகரமைப்பை அருமையாகச் சொல்கின்றது : தாமரைப் பூவைப் போல்வது மதுரைமாநகர்; பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன; இதழ்களின் ஊடே அமைந்துள்ள பொகுட்டுப் போல்வது பாண்டிய வேந்தன் அரண்மனை; அப்பொகுட்டில் அமைந்த பூம்பொடியைப் போன்றவர் தண்ணந்தமிழ் பேசும் மக்கள் அத்தாமரையின் தேனை அருந்தவரும் வண்டுகளைப் போன்றவர்கள் பரிசில் பெற வரும் மக்கள். புவியைப் படைத்த நான்முகன் நாவிற் பிறந்த நான்மறை ஒலித்தல் கேட்டு இனிய துயில் நீங்குவதை அல்லாமல் சேரனின் வஞ்சிமாநகர் போலவும், சோழனின் உறையூர் போலவும் கோழி கூவுதலால் எழுதல் இல்லாத பெருமையுடையது இப்பாண்டியன் கூடல் நகர் என்கிறது அப்பாட்டு. தமிழ் வழங்கும் நிலப்பரப்பெல்லாம் தன் எல்லையாகக் கொண்ட பாண்டியனின் மதுரை மாநகரின் பெருமை என்றும் குன்றுதல் இல்லாதது; சேய்வாழும் குன்றத்தின் பெருமை யுண்டாயிருக்கும் அளவும், புகழ் பெருகிக் கொண்டேயிருக்கும் இக்கூடல் மாநகரமும் என்பதொரு பாடற் பகுதியின் செய்தி. இன்னொரு பாடற் பகுதி திருமகளின் திலகம் எனத் திகழ்வது கூடல் என்கின்றது. இன்னொரு பகுதி கார்த்திகை மகளிர் செவிக்கண் விளங்கும் குழையென்னும் காதணி விளங்குவது போல் விளங்குவது மதுரை என்கிறது. பாவலர் உள்ளங்களைக் குன்றமும் கூடலும் கவர்ந்திருந்த திறம் இப்பகுதிகளால் இனிது விளங்கும், 10. செவ்வேள் பாடல்களில் கலை வளம் தமிழ், முத்தமிழ் என்னும் பகுப்பும் சிறப்பும் உடையது. அதன் மூன்று கூறும் பரிபாடலில் உண்டு என்பதை வேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். முத்தமிழ் : இலக்கியச் செறிவு பரிபாடலில் காணக்கூடியது. இசை வகுத்துப் பாடப்பெற்றது அப்பாட்டு. அதனமைதி பல இடங்களில் கூத்தும் உரையாட்டுமாய் அமைவது. எவரும் எளிதில் அறிய வாய்ப்பது. இம்மூவகைத் தமிழ்ச் சிறப்பொடு ஓவியக் கலைச் செய்திகள் பரிபாடலில் குறிக்கத் தக்க வகையில் அமைந்துள. பல்வகைப் புலமையிலும் போர்க்கலைத் திறமைகளிலும் மதுரையார் சிறந்து விளங்கியமையைப், புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல் என்று கூறும் பரிபாடலால் (19:8) அறிய வாய்த்தலால், அக்காலக் கலைக் களஞ்சியமாகப் பரிபாடல் அமைந்தது என்று சுருங்கக் கூறலாம். இயலும் இசையும் இசைந்து இயலுதலை ஒரே அடியில் புரியிறு நரம்பும் இயலும் புணர்ந்து என்கிறார் பரிபாடலார் (18:51) அதுபோல் இசையும் கூத்தும் இணைந்து இயலுதலைப் பாடுவார் பாணிச்சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் என்கிறார் (8:109). புலமை வெற்றி என்பதில் பல்வேறு புலமை திறங்களின் பரப்பை அறிவோம் எனினும், இயற்றமிழ்ப் புலமைக் கொடையே அவை என்பது விளங்கும், இனி இசைத்தமிழ் பற்றிய செய்தி களாகச் செவ்வேள் பாடல்களில் உள்ளவற்றைத் திரட்டினும் அவை மதிப்புக்குரியவே. இசை : பகை அழித்தவன் செவ்வேள். அதனால் அவன் மா அட்டான். அவன் குன்றில் மாறு மாறு ஒலிகள் கேட்கின்றனவோ என வியப்பும் விம்மிதமும் கிளர்ந்தெழப் பாடுகிறார் நல்லழிசியார் : ஒரு பக்கத்தே, பாணர் இசைக்கும் யாழொலி எழுகின்றது. ஒரு பக்கத்தே, தேனுண்ணும் வண்டுகளின் இசை ஒலி எழுகின்றது. ஒரு பக்கத்தே, குழலின் இசை எழுகின்றது. ஒரு பக்கத்தே, இசைத்திறம் வல்ல தும்பிகளின் ஓசை எழுகின்றது. ஒரு பக்கத்தே, முழவின் முழக்கம் எழுகின்றது. ஒரு பக்கத்தே, மலையில் இருந்து அருவி முழக்கம் எழுகின்றது. ஒரு பக்கத்தே, ஆடல் மகளிர் அசைந்து ஆடுகின்றனர். ஒரு பக்கத்தே, காற்று அசைத்தலால் பூங்கொடிகள் ஆடி அசைகிந்னறன. ஒரு பக்கத்தே, ஆடலும் பாடலும் வல்ல பாணர் மகளிர் ஆடிக்கொண்டே பாடுகின்றனர். ஒரு பக்கத்தே, ஆடல்வல்ல மயில் இசைநயங் கனியக் கூவுகின்றன. இவ்வாறு பக்கம் பக்கமாக ஆனால் எதிர் எதிராக விளங்கும் சிறப்புடையது குன்றம் (17:9-21). இசையும் கூத்தும் இயல்பாக இயல்கின்ற அருமைக் காட்சி இது. இதன் நடையழகும் கொஞ்சி விளையாடுகின்றது; ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ, ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ; ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபு எழ, ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத: ஒருதிறம், மண்ணார் முழவின் இசை எழ, ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப; ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க, ஒருதிறம், வாடை யுளர்வயின் பூங்கொடி நுடங்க, ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறைதோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்றம் உடைத்து. எதிர் எதிராக எழும் ஒலியைக் குறித்தாலும் வாளா குறித்தாரோ பாவலர்! யாழிசைக்கு வண்டிசையையும், குழலி சைக்குத் தும்பிசையையும், முழவு முழக்கத்திற்கு அருவி முழக்கத் தையும், விறலியர் ஆடலுக்குப் பூங்கொடி ஆடலையும், பாடினி இசைக்கு மயிலகவுதலையும் உவமை யாக்கிய அருமை - ஒரு மாலை போலத் தொடுத்துக் கூறும் பேரருமை எண்ணுதோறும் இன்பம் ஊற்றெடுப்பதாம். நல்லழிசியார் கொண்டிருந்த கலைநயம் இக்காட்சிப் படமாக விளங்குதல் கண்கூடு. ஒலி நயத்தையே ஓவியக் காட்சியாக்க உணர்வுடையார்க்கு இயலும் அருமையே அருமை! கூத்து : முகில் முழக்கமிடுகின்றது; ஆலவட்டம் வீசுவது போலத் தோகை விரித்து ஆடுகின்றது மயில்: அம்மயிலும் ஒன்றா இரண்டா? கூட்டம் கூட்டமாக ஆடும் காட்சி! ஆடும் மயிற் காட்சிக்குப் பின்னணி இசைகள் வேண்டு மல்லவோ! குழலிசை போலத் தும்பிகள் இசைக்கின்றன; வண்டினங்கள் யாழிசைக்கின்றன; அருவி நீர் மத்தளம் முழக்கு கின்றது! ஒரு மேடையில் தோன்றி ஒலிப்பவை போலப் பரங்குன்றில் திகழ்கின்றன (21;30-38), இக்காட்சி நம்மை மட்டுமா கவர்கின்றது. எத்தனை எத்தனையோ புலமையாளர்களைக் கவர்ந்துள்ளது! குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் எனச் சாத்தனாரிடம்விளையாடுகின்றதே! தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரைஎழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ எனக் கம்பரிடம் முழுதுறும் இசையரங்காகவே திகழ்கின்றதே! இப்படி எத்துணைப் பாவலர்களையெல்லாம் காந்தமெனக் கவர்ந்துள்ளது இக்காட்சி. இசையும் கூத்தும் இவ்வளவோ? இன்னொரு காட்சியில் இசை கூத்துக் கலைகளின் உணர்வோட்டம் விஞ்சித் திகழ்கின்றது. துடி கொட்டுகிறான் கணவன்; இசைக்கு ஏற்ப ஆடுகிறாள் மனைவி! தோளசைவு - கண்ணசைவு - துணியசைவு - அணியசைவு - மாலையசைவு - அம்மகளசைவு - அவள் இடையசைவு ஆகிய எல்லா அசைவுகளும், காண்போரை அசைக்காமல் விடுமோ! முகிலின் இடையே எழுந்த மின்னற் கொடியென - இடையிடை வெளிப்பட அமைந்த - பொன்னாற் செய்த தலைக்கோல் மாலைகள் கூந்தலோடு அசைகின்றன; தேனும் கள்ளும் உண்டமையால் உண்டாகிய களிப்பு நிறைகின்றது; அசைவு எழில் கூட்டுதற்கென உடுத்த மேற்றுகிலாடை அசைந் தெழில் கூட்டுகின்றது; கண்களில் சிவப்பு ஊர்கின்றது: ஆடும் பூங்கொடி யென ஆடுகிறாள் ஆடல் மகள். அவள் தகுதிக்கு ஒத்த தகவாளனாம் கணவன் துடிப்பறையை இயக்குகிறான். அத்தாளத்திற்குப் பொருந்துமாறு அவள்தன் மார்பில் அணிந்த முத்துமாலை அசையவும், காற்றால் அசைக்கப் பட்ட மெல்லிய ஆடைதானும் அசையவும், அணிகலங்கள் அசையவும் பூங்கொடி ஆடுவது போல் ஆடுகிறாள்! துடியின் தாளத்திற்குத் தகத் தோளை அசைக்கிறாள். அத்தோள் நோக்கிக் கண்கள் புரள்கின்றன; அக்கண்களின் புரளுதல் அம்புகள் புரளுதல் போல் விளங்குகின்றன (21:254-65) இக் காட்சிகளைப் புலவரின் அழகு நடையில் காண்க: கண்ணொளிர் திகழடல் இடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற இடையிடை யிழைத்துயர்த்த செண்ணகைக் கோதை கதுப்போ டியல மணிமருள் தேன்மகிழ் தட்ப ஒல்கிப் பிணி நெகிழப் பைந்துகில் நோக்கம் சிவப்பூரப் பூங்கொடி போலநுடங்குவாள் ஆங்குத்தன் சீர்த்தகு கேள்வன் உருட்டுந் துடிச்சீரால் கோடணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவளேர் ஆடை அசைய அணியசையத் தானசையும் வாடையுளர் கொம்பர் போன்ம், வாளி புரள்பவை போலும் குடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவள் கண். தோணோக்கம் : தோணோக்கம், என்பது மணிவாசகர் பாடிய இசைப் பாவகையுள் ஒன்று. அஃது எத்தகைய ஆடலைக் குறிப்பது என்பதை விளக்குகிறது இப்பரிபாடலில் வரும், துடிச் சீர்க்குத் தோள் ஊழ் பெயர்ப்பவள்கண் என்பது, துடி ஒலிக்குத் தகத்தோளை அசைக்கிறாள்: தோளை மட்டுமோ அசைக்கிறாள்! கண்ணையும்அசைத்து இப்பாலும் அப்பாலும் நோக்கிக் காட்சியைக் கவினுறுத்துகிறாள். தோள சைவை நோக்கி யசைத்து ஆடும் ஆட்டத்தைத் தோணோக்கம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது. பரிபாடலார் காலத்தில் பயில வழங்கிய இவ்வாடல் மணிவாசகர் காலம் வரை விளங்கியமை தெளிவாகின்றது. மறைந்து போன ஆடற்கலைச் செல்வங்களுள் ஒன்றாக அமைந்துவிட்டது; இது கால், தோணோக்கம். ஓவியக் கூடம் : பரங்குன்றில் கோயிலின் ஒருபால் இருந்த ஓவியக் கூடம் எழுதெழில் அம்பலம் என்பது. அவ்வம்பலம் காம வேளின் அம்புத் தொழில் பயில்கின்ற சாலை போன்றது. அக்கலைக் கூடம், காதலர்க்குக் கழிமகிழ்வூட்டி வருதலை நோக்கக் காமவேளின் படைக்கலம் பயில் சாலையாக எண்ணப்பட்ட தென்க. அதில் இருந்த ஓவியங்கள் அத்தகைய கொள்கை வனப்புடையன என்பதாம். அன்றியும் அழகுக்கு அளவுகோ லெனச் சொல்லப்படும் காமன் உருவும் அவன் தேவி உருவும் ஆங்கிருந்த ஓவியங்களுள் இருந்தன என்பதும் எண்ணத் தக்கது. எழுதெழில் அம்பலம் எனப்பட்ட இது, எழுத்து நிலை மண்டபம் எனவும் பட்டது (19:53). அக்காட்சிகளையும் அக்காட்சிகளின் வரலாற்றையும் முன்னரே அறிந்தோர் புதிதாகக் காண்போர்க்குச் சுட்டிச்சுட்டிக் காட்டிய செய்தி முன்னரே கண்டுளோம். இவ்வெழுத்து நிலை மண்டபம் ஒன்றன்று; பலபல என்பது, பலபல எழுத்து நிலை மண்டபம் என்பதால் அறியவரும். எழுத்தாவது, ஓவியம். பலபல ஓவியங் களையுடைய மண்டபம் என்றும், பலபல ஓவியங்களையுடைய பலபல மண்டபங்கள் என்றும் பொருள்படுதல் கண்டு கொள்க. ஓவியக் கூடம் இவ்வாறமைய ஓவியக் காட்சியை உவமைப் படுத்திக் காட்டும் காட்சியும் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது. முத்துப் பரலிட்ட பொற்சிலம்பு ஒலிக்க, துடிப்பறையுன் ஒலிக்கு ஏற்றவாறு அடிபெயர்த்து வைத்துத் தோளசைத்துக் களிப்புடன் ஆடும் விறலியின் அழகிலே தன்னை மறந்து நின்றான் ஒரு தலைவன். அவனை வயப்படுத்தித் தன்பால் திருப்ப விரும்பினாள் தலைவி, விறலியின் கண் வலையில் படுதலைக் கலைக்க விரும்பிய அவள், ஊடல் கொண்டாள்! கண் சிவப்பச் சினந்தாள். இவ்வூடலும் சினமும் பயன் தாரா என்பதை உணர்ந்தாள்போல் அவ்விறலியினும் தன்னை அழகுறுத்தி வெற்றி பெற எண்ணினாள். அதனால் கண்ணாடியை எடுத்து நோக்கித் தன் அணிகளைத் திருத்தினாள். மார்பில் இருந்த பழஞ் சந்தனத்தை உதிர்த்துப் புது நறுஞ் சந்தனத்தைப் பல்கால் அப்பி மணங்கமழச் செய்தாள். இவ்வாறு பன்முறையாக அவள் செய்த செய்கைகள் காண்பார் கண்ணில், ஓவியக்கலை வல்லான் ஒருவன் வனப்புறத் தீட்டிய ஓவியம் என்னத் தோன்றின. இவை இவை நினைப்பின் வல்லோன் ஓவத்தெழுதெழில் போலும். (21:27-8) என்கிறார் பாவலர். அவர் நல்லச்சுதனார் என்பார். வானியல் : வானியற் கலையிலும் முந்தையோர் சிறந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றது ஓவியக் காட்சிகளுள் ஒன்று. என்றூழ் உறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை என்பது அது. கதிரோனும் திங்கள் முதலிய கோள்களும் விண்மீன்களும் விளங்கும் சுடர்நிலை வட்டம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்ததாம். கதிரோன் செலவு, அதன் சுழற்சி அதன் கோள் வட்டம், காற்றின் இயக்கம் இன்னவெல்லாம் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்தவர்போலக் கூறுவாரும் உளர் என்னும் புறநானூற்றுச் செய்திக்கு அரண் சேர்ப்பதாக அமைவது இப்பரிபாடல் காட்டும் ஓவியக் காட்சியாகும். இவ்வாறு கலைமணம் கமழ்கின்றது பரிபாடல். 11. செவ்வேள் பாடல்களில் இயற்கை வளம்! செவ்வேள், குறிஞ்சி நிலக்கடவுள். மலைகிழவோன் என்னும் பெயரினன்! குன்றுதோறாடும் குமரவேள் எனவும் படுபவன். அவன் உறைதலால் பரங்குன்றம் செவ்வேள் பரங் குன்றம் என்றும் சொல்லப்படுவதாயிற்று, எனக் கண்டுளோம். பரிபாடலில் குன்றம் பற்றிய பாடல்களில் இயற்கை வளம் அழகுறச் சொல்லப்படுகின்றது. கார்த்தன்மை : குன்றில் மழை வளமாகப் பெய்தது! அதனால் சுணைகளில் நீர்மிகப் பெருகியது. அப்பெருக்கால் மலர்க்காடே எனப் பூக்கள் மலர்ந்தன. குளிர்ந்ததும் நறுமணமுடையதுமாம் கடம்ப மரங்களின் மலர்களில் புகுந்து வண்டுகள் இசைக்கும் இசை, பண்ணிசை போன்றது. குன்றச் சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்கள், திருக்கோயிலில் திறம்பட ஆடும் மகளிர் தோள் போன்றன. வாகை மலர் போலும் கொண்டையையுடைய மயில்களின் அகவுதல், பிரிந்து சென்ற தலைவரைக் காலம் தாழ்த்தாமல் வருக என்று அழைப்பவர் குரல் போன்றது. கொன்றை மலர்கள் பொன் மாலையென மலர்ந்தன. வேங்கையின் மலர்கள் பாறைகளில் வீழ்ந்து அழுகின்ற குழந்தை களுக்குத் தாய்மார் புலிபுலி என்று அச்சம் காட்டுமாறு பரவிக் கிடந்தன. நீர்நிலைகளின் பக்கங்களில் காந்தளின் கொத்துகள் மலர்ந்து வரிசையாய் விளங்க, மெல்லிய தோன்றியின் செந்நிறப் பூக்கள் அவற்றில் தாவிக் கிடந்தன. இவ்வாறு செவ்வேளுக்குரிய குன்றத்தில் கார்காலத் தன்மை சிறந்து விளங்கிற்று (14:1-17). இக்கார்காலம் சிறந்து விளங்குதலைப் பதினெட்டாம் பரிபாடலும் விரித்துரைக்கின்றது: முன்பனிக் காலநிலையும் சொல்கின்றது. அச்சமுண்டாம் வகையில் காடு செறிந்துள்ளது. மழை வளமாகப் பொழீவதால் சுனைகளில் நீர் ததும்பி வழிகின்றது. மலர்கள் பெருகிக் கிடத்தல் காமவேளின் மலர்க்கணைப் புட்டில் போன்றது. கார் காலத்தில்மலரும் காந்தள் பூக்கள், போரில் தோற்றவர்களின் கட்டப்பட்ட கைகள் போன்றன. வண்டுகளால் திறக்கப்பட்ட அழகிய காந்தள் அரும்புகள், யாழின் நரம்பினை அவிழ்ப்பவர் கைகளைப் போன்றன. முன்பனிக் காலத்தில் முகில் முழங்கி இந்திரவில்லை உண்டாக்கியது. மலை மேலுள்ள மரங்கள், அவ்விந்திர வில்லுக்கு அம்பு உண்டானால் சொரிவது போல் மலர்களைச் சொரிந்தன; போர் முழக்கம் போல் கோயிலில் இசைக் கருவிகள் முழங்கின: அம்முழக்கத்தொடு முகில் முழக்கமும் கூடி முழங்கியது. மலையில் இருந்து ஒழுகும் அருவி, அம்மலை முத்து மாலை அணிந்ததென விளங்கியது. தினைப் பயிர்கள் குருவிகள் வந்து கொள்ளையிடுமாறு விளைந்து நின்றன. சுனையின் கரையில் நின்று நீரில் சாய்ந்த கொறுக்காந் தட்டையில், சுனையில் மலர்ந்த பல வண்ணப் பூக்கள் முட்டிக் கொண்டு நிற்றல் வளைந்த வானவில்லை ஒப்பக் காட்டின (18;20-50) இவ்வியற்கை வளத்தின் இறுதிப்பகுதி ஒவ்வோர் அடியால் அழகுறப் புனையப்பட்டுள்ள அருமை, சுவை மிக்கதாம். கருவியார்ப்பக் கருவிநின்றன குன்றம்: அருவியார்ப்பமுத் தணிந்தன வரை: குருவியார்ப்பக் குரல் குவிந்தன தினை, எருவை கோப்ப எழிலணி திருவில்: வானில் அணித்த வரியூதும் பன்மலரால் கூனி வளைத்த சுனை, என்பது அது (18:45-50). காற்றுவகை : அருவி ஒழுகும் பரங்குன்றத்தில் ஆடவர் தம் அகன்ற மார்பில் பூசிய சந்தனத்தின் நறுமணத்தை ஏற்றுவரும் காற்றும், கயலை ஒத்த கண்களையுடைய மகளிர்தம் நறிய கூந்தலில் புகுந்து வெளிப்பட்ட காற்றும், செவ்வேளுக்கு எடுத்த பூசையில் எடுக்கப்பட்ட நறுமணப் புகையொடு கலந்து வந்த காற்றும், பக்கமெல்லாம் பரவுதலை விளக்குகிறது ஒரு பரிபாடல் (21:43-53), இவற்றையன்றிக் கலைவளம் என்னும் பகுதியிலும் இயற்கை வளம் காட்டப்பட்டமை காண்க. வான் சிறப்பு : இறைவனைப் பாடும் பாடலில் இவ்வியற்கை வளங்களை இசைப்பதும், வழி பாட்டாளர் வாழ்வியல் வளங்களை விரிப்பதும் என்ன பயன் கருதியதெனில், சுவையூட்டல் என்னும் அளவில் நிற்பன அல்லவாம். இறை வாழ்த்தை அடுத்து வான் சிறப்பை வள்ளுவர் வைத்த வரன்முறையைக் காண்பார் இதன் பொருளை எளிதில் அறிவர். அவ்வான் சிறப்பில் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு என்று கூறிய அருமை எண்ணி எண்ணி மகிழத்தக்கது. வானம் பொய்த்தால் முதற்கண் சிறப்பு எனப்படும் திருவிழாக்கள் நிகழா; அவ்வானம் மேலும் பொய்த்தால் வழக்கமாக நாள் தோறும் நிகழ்த்தப்பெறும் பூசையும் நிகழா. ஆகலின் ஊரும் நகரும் கூடி விழாக்கோலம் கொண்டமை இயற்கை வளத்தின் வழிவந்ததேயாம். அஃதிலாக்கால் அச் சிறப்புகள் இல்லை என்பதாம். வயிற்றுப் போராட்டம் மிக்க வாழ்வில் கலைவளம் சிறப்பது இல்லை. வளமைப் பெருக்கு அல்லது செல்வக் கொழிப்பு விளங்கும் இடத்தேதான் கலைப் பெருக்கும் உண்டாகும். இஃது உலகியல் தழுவிய உண்மை. ஆதலால் இறை நலம் கமழும் பாடல்களில் இயற்கை வளமும் கலை வளமும் செறிந்தமை கின்றன என்க. 12. செவ்வேள் பாடல்களில் இறைமை மாட்சி இருவகைப் பாடல்கள் : இறைவனைப் புகழ்ந்து பாடுதல் வழிபாட்டுப் பாடல்களாம். பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா, நாலாயிரப்பிரபந்தம் இன்னவை போல்வன வெல்லாம் வழிபாட்டுப் பாடல்கள் அல்லது புகழ்ப் பாடல்கள். இவற்றைத் தோத்திரப் பாக்கள் என்பர் வட மொழியாளர். இவற்றுள் ஆங்காங்கு இறைமைக் கோட்பாடுகளும் இடம் பெற்றிருத்தல் உண்மை எனினும், மிகுதி பற்றி வழிபாட்டுப் பாடல்கள் என்ற பகுப்பிலேயே அடங்குவன. இன்னொரு வகைப் பாடல்கள் உள. அவை இறைமைத் தன்மையை மட்டுமே விளக்குவன. சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், திருமந்திரம் இன்னவை போல்வன. இவை மெய்ப் பொருட்பாடல்கள் அல்லது பொருட் பாடல்கள். இவற்றைச் சாத்திரப்பாக்கள் என்பர் வடமொழியாளர். பரிபாடலில் வரும் செவ்வேளைப் பற்றிய பாடல்கள் கடவுள் வாழ்த்து என்னும் பகுப்பில் வருதலின் புகழ்ப் பாடல்களே. இருப்பினும் பொருட்கருத்துகள் ஆங்காங்குப் பொதுளியுள்ளன. இவ்வெட்டுப் பரிபாடல்களிலும் ஐந்தாம் பாடல் ஒன்றில் சீரிய இறைமைக் கருத்துக்கள் உள. இறைவன் : வெறியாடும் வேலன், அவ்வாடற் களத்தில் இறைவனாம் வேலன் உறைவதாகக் கருதி வாழ்த்துகின்றான். அவ்வாழ்த்து வாய்மையோ பொய்மையோ எனின், வாய்மையும் அன்று; பொய்மையும் அன்று என்கிறார் புலவர். முழுதுறு உலகும் உறைபவன் இறைவன்; அவன் அவ்வெறிக் களத்திலே உறைவதாகக் கூறினால், அவ்விறைவன் பெருநிலைக்குப் பொருந்துவதன்றாம், ஆகலின், அதனை வாய்மை எனல் அமையாது. இனி, அவ்வெறிக் களத்திலே உறைவதாக வெறியாடுவோன் கருதுவான் எனின், அதுவும் தக்கதே, என்னெனின் எங்கும் உறையும் இறைவன் அங்கில்லை எனல் ஆகாதே! ஆகலின் பொய்மை எனலும் பொருந்தாது என்கிறார். சிறப்பு : இனி இறைவன் உருவும் பிறப்பும் நிறமும் குணமும் ஆகிய பாடு பொருள்களில் ஒன்றுடையன் அல்லன். அவ்வாறு உடையன் எனின், அவன் முழுமுதல் சிறப்புக்குச் சிறப்பிலதாய் முடியும். பிறர்பிறர் பெருநிலை அடைதலுக்கும் தாழ்தலுக்கும் ஆணையாக விளங்கும் இறைமை, அத்தன்மைகளுக்கு உட்பட்டது எனின் பொருந்துவது இல்லை! அவ்விறைமை தனக்கொரு முதலும் ஆணையும் இல்லது எனப் பொருளியல்களைக் கூறுகின்றது அப்பாடலின் ஒரு பகுதி (5:16-21). சால்வ தலைவஎனப் பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே அவை, வாயும் அல்ல; பொய்யும் அல்ல; நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய்; சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பாகலும் பிறப்பினுள் இழிபாகலும் ஏனோர்நின் வலத்தினதே என்பது அது. அப்பாடலின் முடிநிலையை அடுத்தும் பொருளியல் புகல்கின்றார் ஆசிரியர். சேர்வார் சேரார் : திருவருளை விரும்பி ஏற்பவரும் அறநெறி நிற்பவரும் சிறந்த சால்புடையரும் பெருந்தவத்தரும் வணங்கத்தக்க மேலவரும் இறைவன் திருவடி அடைவர்; கொல்லும் குணத்தொடு கொடுஞ்சினம் உடையவரும், அறநெறியில் செல்லாத இழிஞரும், அழிதவ வழிக்கு ஆட்பட்டவரும். மறுபிறப்பு இல்லை என்று கூறும் மடவரும் இறைவன் திருவடியை அடையார் என்கிறார்: நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை, மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும் சேரா அறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத் தயரியோரும் மறுபிறப் பில்லெனும் மடவோரும் சேரார்; நின்னிழல் அன்னோர் அல்லது, இன்னோர் சேர்வர் (5:71-78) அறப்பயன் : அறம் என்பதைத் தனக்குரிய பெயர்களுள் ஒன்றாகக் கொண்ட திருக்குறளில் அறன் வலியுறுத்தல் என்பதோர் அதிகாரம். அதில் அறத்தான் வருவதே இன்பம் செயற்பால தோரும் அறனே அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை, என்றெல்லாம் அறத்தின் நலப்பாட்டை வலியுறுத்துவார் வள்ளுவர். அறம் செய்வார் வீடு பேறடைவர் என்பதொரு கருத்தும் பழமைதொட்டு அமைந்ததே, அக்கருத்து பத்தொன்பதாம் பரிபாடலில் உவமைவகையால் சுட்டப்பட்டுள்ளது. கூடலில் இருந்து குன்றத்திற்குப் போகின்றோர் செலவினைக் கூறவரும் ஆசிரியர் அறத்தை மிகுதியாகச் செய்து அதன் பயனாம் இன்பத்தைக் கொள்வதற்கு விண்ணவர் உலகத் திற்குப் போகின்றவர் போலக் கூடலில் இருந்து குன்றத்திற்குச் செல்கின்றனர் என்கிறார். அறம் பெரிதாற்றி அதன்பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல என்பது அது (19:10-11) இவ்வாறு மெய்ப்பொருட் செய்திகள் சிலவற்றைச் செவ்வேள் பற்றிய பரிபாடல்களின் வழியே அறிந்து கொள்ள வாய்க்கின்றது. 13. செவ்வேள் பாடல்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படும். அவ் விலக்கியம் என்று தோன்றியதோ அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வியற் கூறுகளைக் கொண்டு விளங்கும். எந்தக் குமுகாயத்தில் இருந்து கொண்டு ஒருவன் பாடுகின்றானோ அந்தக் குமுகாய வியல் தடங்கள் பதிதல் தானே இயற்கை. ஆனால் அவ்வளவில் நில்லாமல் அக்குமுகாயம் எவ்வகை யால் எல்லாம் சிறப்புற வேண்டுமென அப்புலவன் அல்லது படைப்பாளன் எண்ணு கிறானோ அவ்வகைகளை நேரிடையாகவும் குறிப்பாகவும் காட்டிச் செல்வான். அஃதவன் வரலாற்றுப் படைப்பாளனில் இருந்து உயர்ந்து செல்லும் இடமாகும். இவ்வகையில் செவ்வேளைப் பற்றிவரும் பரிபாடல்களில் அமைந்துள்ள அந்நாள் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவை சிலவற்றை அறிந்து கொள்ள வாய்க்கின்றன. உறைபதி : தம் ஊரின் மேல் ஒவ்வொருவர்க்கும் பெரும்பற்று இருந்தமை சில பாடல்களால் அறிய வருகின்றது. பதியெழுவறியாமை (தாம் பிறந்த ஊரைவிட்டுப் பிழைப்பு நாடி வேறூர்க்குச் செல்லாமை) ஒரு பாடுபுகழாகச் சங்கநாளில் இருந்தது, தமக்குரிய ஊரின்கண் உறையுமாறு போலச் செவ்வேள் அடியுறை வாழ்வை விரும்பி வேண்டியுள்ள வேண்டுகையினால் இக்கருத்து வெளிப்படுகின்றது: செருவேற் றானைச் செல்வநின் அடியுறை உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெம் சுற்றமோ டுடனே (18:54-6) என்பது அது. சுற்றம் : கூட்டுவழிபாடு என்பது புதுவழக்கன்று; பழமையானது என்பது பரிபாடலால் விளங்கும். உடங்கமர் ஆயமோ டேத்தினம் தொழுதே (19:105) யாமும் எம் சுற்றமும் பரவுதும் (17:52) நன்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்று போல் இயைகெனப் பரவுதும் (21:68-9) என வருவனவற்றால் இதனை அறியலாம். நேர்தல் : கோயிலுக்கு நேர்த்திக்கடன் இடுதல் பழவழக்காகும் இதனை, மணியும் கயிறும் மயிலும் குடாரியும் பிணிமுக முளப்படப் பிறவும் ஏந்திச் சென்ற மாந்தர் காட்சியால் (8:100-1) அறியலாம். சூள் : உண்மை சொல்லல் (சத்தியம் செய்தல்) என்பது பண்டு சூள் எனப்பட்டது, தாம் உண்மை சொல்வதை வாயால் சொல்லும் சொல்லளவில் நில்லாமல், தாம் மதிக்கும் பொருளைத் தொட்டுக் கூறுதல் வழக்கு. இன்றும், ஆணையிட்டுக் கூறுவார் பிள்ளையைத் தாண்டுதல், துணியைத் தாண்டுதல், தலையில் தொடுதல், நூல்களைத் தொடுதல், தெய்வப் பெயர் கூறுதல் எனப் பல வகையாக இடந்தொறும் வழங்குதல் கண்கூடு, வையை மணல் தொட்டுச் சூள்கூறல், குன்றத்து அடி தொட்டுச் சூள்கூறல் என்பனவும், செவ்வேள், மயில்,வேல் வள்ளி, அறவோர் ஆகியோரைச் சூளிட்டுக் கூறல் என்பனவும் எட்டாம் பரிபாடலில் இடம் பெற்றுள. பொய்ச் சூள் வேலன் மேல் கூறினால் அவ்வேலன் பொறுத்துக் கொண்டாலும், வேல் பொறுக்காமல் அழிக்கும் என்பதை, முருகுசூள் சூளின், நின்னை அருளி அணங்கான்மெய் வேல் தின்னும் என்கிறது (8.65-66) பரிபாடல். ஞமன் : (எமன்) கூற்றுவன் தன் செங்கோன்மையில் தவறாதவன் என்னும் கருத்தால் திருந்து கோல் ஞமன் எனப்பட்டமை அறிய வருகின்றது (5:61) ஞமன்கோல் என்பதும் சமன் கோல் என்பதும் நடுவுநிலைக்குச் சான்றாக விளங்கும் தராசுக், கோல் என்க. முன்பு துலாக்கோல் எனவும் வழங்கப்பட்டது. இஞ்ஞமன், எருமையை ஊர்தியாக உடையவன் என்னும் குறிப்புப் பரிபாடலார் நாளிலேயே எழுந்துள்ளது. எருமை இருந்தோட்டி எனக் கூற்றுவன் ஆணையைக் குறிப்பிடுகிறார் அவர் (8.86). திருவில் : வானவில்லைத் திருவில் என்று கூறுதல் பழ வழக்கு அவ்வழக்கினைச் சுட்டும் பரிபாடல் (18.48) வச்சிரத்தான் வானவில்லு என்றும் கூறுகிறது. (18.39) இந்நாளில் இந்திரவில் என்னும் வழக்குக்கு, மூலச் செய்தி ஈதாகலாம். வல்லும் வட்டும் : முருகன் வல்லுப்போர் வல்லாய் என்றும் வட்டுருட்டு வல்லாய் என்றும் விளிக்கப் பெறுகிறான். இதனால் அக்காலத்தில் இத்திறம் பெரிதும் போற்றப்பட்டது என்பது வெளிப்படுகின்றது. (18:41-2). மன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்பது வெளிப்படுகின்றது (18:41-2). மன்னர்களால் பெரிதும் விரும்பப் பட்ட இச் சூதுவகைகளில் செவ்வேளையும் வல்லாளனாகக் கூறுதல் வியப்பான செய்தியே. கவழ மிச்சில் : செவ்வேள் திருக்கோயிலை வலம் வந்து, கோயில் யானை உண்டு எஞ்சிய கவழத்தை உண்ட மகளிர், தம்மை மணந்து கொண்ட காதலரின் பேரன்பைப் பெறுவர் என்றும், மணமாகாத மகளிர் குற்றமற்ற நன்மணவாளனைப் பெறுவர் என்றும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தமை ஒரு பாடலால் விளங்குகின்றது. இது வியப்பானதொரு நம்பிக்கையாம். பன்மண மன்னும் பின்னிருங் கூந்தலர் கன்னிமை கணிந்த காலத்தார்நின் கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார் முறுவற் றலையளி எய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால் (19:89-94) என்பது அது. யானையுண்டு எஞ்சிய உணவைத் தெய்வத் தன்மையுடையதாகக் கருதியமையால் சிறப்புணா என்றார் என்பது அறியத் தக்கது. பண்ணியம் : கோயிலுக்குச் செல்வார் பல வகைப் பண்டங்களைக் கொண்டு செல்லலும், ஆங்கும் பலவகைப் பண்டக் கடைகள் இருத்தலும் இன்றும் நடைமுறை. குரங்குகள் தின்னுமாறு பண்டங்கள் வழங்குவதையும், கருமுகமந்தி தின்னுமாறு கரும்பு கொடுப்பதையும் பரிபாடல் குறிக்கின்றது (19:38-9). எதிரொலி : பெருந்திரளான திருவிழாக் கூட்டத்தில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிந்து போதலும், அவை அழுது அரற்றலும், பெற்றோர்கள் அவலித்தலும் இக்காலக்காட்சி. முன்னும் அந்நிலை இருந்ததைப் பரிபாடலால் அறிகிறோம். பெற்றோரைப் பிரிந்த ஒரு குழந்தை குன்றத்தில் அங்கும் இங்கும் ஓடி ஓடி அம்மா அம்மா என்று ஒலிக்க, மலை அவ்வொலியை எதிரொலிக்கப், பெற்றோர் ஒலியென எண்ணிய குழந்தை மேலும் மேலும் ஒலிக்க நிகழும் காட்சியை விரிக்கிறது பரிபாடல் (19:58-66). புலிபுலி : குழந்தைகளின் அழுகையை நிறுத்த அச்சங்காட்டுதல் இன்றும் வழக்காக உள்ளது. பரங்குன்றத்தில் உள்ள வேங்கை மரங்கள் பூத்துப் பாறைமேல் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. வரிவரியாகக் கிடக்கும் அப்பூக்கள், புலியெனத் தோன்று கின்றன. அதனைக் காட்டிப் புலிபுலி என்று அச்சுறுத்திக் குழந்தையின் அழுகையை நிறுத்துகின்றனர். இதனை, அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப என்பது பரிபாடல் (14:12) ஆடல்கள் : மரங்களை அசைத்துப் பூவுதிர்த்தல், அழகழகான வண்ணங்களில் பந்து செய்து விளையாடல், பூநீர் பெய்த வட்டுக்கொண்டு எறிந்து விளையாடல், மலையை நோக்கி எதிரொலி உண்டாகக் கூவுதல் என்பன குழந்தைகளும் மகளிர் களும் விளையாடிய விளையாடல்களால் அறிய வருகின்றன. வளர்ந்த பெரியவர்களாகிய ஆடவர்கள் துடிகொட்டுதலும், அத்துடிக்கு ஏற்றவாறு விறலியர்கள் தோள்நோக்கம் ஆடுதலும் ஆகிய பிறபிற கலைவளச் செய்திகளும் முன்னரே கண்டவை. பெண்மை: பெண்ணுக்குப் பெருமை இருந்ததைப் பரிபாடல் குறிக் கின்றது. அதிலும் பெற்றவளுக்கு ஒரே பெண்ணாக இருந்தவள் பெற்றோரால் மிக மதித்துப் போற்றப் பட்டாள் என்றும், அவளை விரும்பி மணந்தோனும் அவ்வாறே மதித்துப் போற்றினான் என்றும் அறிய முடிகின்றது (8:58). தந்தை : தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதொரு பழமொழி. சான்றோன் தந்த மைந்தன், சான்றோனாக விளங்குவதை விரும்பினான் என்றும், அந்நிலைக்கு மாறு சொல்ல நேருங்கால் அவனுக்குப் பெருநாணுதலுண்டாம் என்றும், பெற்றோரைச் சுட்டிக் குறை சொல்லுதற்கு மிக வருந்தினர் என்றும் பரிபாடலால் அறிய வாய்க்கின்றது. (8:57). வாய்மை : கொடுப்பதாகச் சொல்லிய ஒன்றை அஃது எத்தகைய அருமையுடையதாயினும், அதனை மாற்றிக் கூறுதல் பெருமை யன்று என்று எண்ணும் சான்றாண்மை போற்றப் பட்டதைத் தான் ஈத்தது அரிதென மாற்றான் வாய்மையன் ஆதலின், என்கிறது பரிபாடல் (5:32-33). தோல்வி : போரில் தோற்றுப் போனவர் கையைப் பின் கட்டாகக் கட்டுதல் வழக்குண்மையைப் பரிபாடல் காட்டுகிறது. போர்தோற்றுக் கட்டுண்டார்கை என்பது அது. (18:34). புகழ் : புகழை அறிவெல்லையால் அறியப்படாத புகழ் என்கிறது ஒரு பரிபாடல் (19:2). புலவரை அறியாத புகழ் என்பதைப் புலவரை இறந்த புகழ் என்னும் புறநானூறு. புலவரை அறிவின் எல்லை. இதனை மண்டேய்த்த புகழ் என்னும் சிலம்பு. புகழ் பெருகப் புவி சிறுகுமாகலின் மண்டேய்த்த புகழ் எனப்பட்டது என்பது உரை. நிலவரை நீள்புகழ் ஞாலத்தின் மாணப் பெரிது என்பவை குறள் நடை. இவையெல்லாம் சங்ககால ஒத்தியல் பகர்வன; அதன் சார்புகாலச் சார்பு சாற்றுவன. சிறப்புணா : சான்றோர் உரைக்கும் உரை செவியுறை எனவும் செவியறிவுறூஉ எனவும் படும், மெய்யான மருந்து போலும் நலம்செய்யும் வாழ்த்து வாயுறை வாழ்த்து எனப்படும். கேள்வியைச் செவிக்குணவு என்பது வள்ளுவம். பரிபாடலால் இவற்றை ஒப்பத் தழுவும் ஒரு நடை காட்டுகிறார். அது, வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி என்பது (19:95-6). எம் வாழ்த்தினை நின் செவிக்குச் சிறப்பு உணாவாகக் கேட்டல் வேண்டும் என்பது இதன் பொருள். அமைச்சர் : அமைச்சரை அரசர் கண்ணெனல் பழமரபு. ஒற்றரும் நூலறிவு மிக்க அமைச்சரும் அரசர்தம் கண்ணெனக் கூறும் குறள் (581). பரிபாடல், அமைச்சரைக் கடனறி காரியக் கண்ணவர் என்கிறது (19:22) அமைச்சர் இயலும் செயலும் விளக்க வல்ல தொடர் இஃதாதல் அறிக. செண்ணிகை : புனைவகைக் கோலச் சிறப்பும், புனைகலம் ஆக்கத் திறச் சிறப்பும் ஒருங்கு காட்ட வல்லதாய்ச் செண்ணிகை என்பதோர் தலையணி பரிபாடலில் சுட்டப்படுகின்றது. அது, கண்ணொளிர் திகழடர் இடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற யிடையிடை யிழைத்தியாத்த செண்ணிகைக் கோதை எனப்படுகின்றது (21:54-56). படர்ந்த முகிலின் இடையே தோன்றி ஒளி செய்யும் மின்னல் போல், கண்கவரும் ஒளியுடையதாகச் செண்ணிகை விளங்குகின்றது. அது பொற்றகட்டால் இடைவெளிபடப் பட வரிகளாய் அமைந்து கூந்தலில் மாட்டப்படுவதாம் சிறப்பினது, கூந்தல் கருமுகிலென, செண்ணிகை மின்னென விளங்குதலை விளக்குகின்றது இத்தொடர். அடையல் : அடையல் (செருப்பு) அழகும், அதன் செய் நேர்த்தியும், இந்நாளிலும் வியப்புறும் வண்ணம் அமைந்துள்ளது ஒரு பரிபாடலில்: தைப்பமை சருமத்தில் தாளியை தாமரை துப்பமை துவர்நீர்த் துறைமறை அழுத்திய வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த வரிமலி அரவுரி வள்புகண் டன்ன புரிமென பீலிப் போழ்புனை அடையல் என்பது அது (21:3-7). செவ்வேள் திருவடி செந்நிறத்தது. அதற்கேற்ற வண்ணம் பொருந்தி அமைய அடையல் வேண்டுமென அவாவுகின்றார் புலவர், அந்நாளில் அவர் கண்ட அடையல் தொழில் மாண்பை நாமறிந்து கொள்ள வண்ண ஓவியமாகத் தீட்டுகிறார், தாமரை இதழ் போலும் திருவடி நிறத்திற்கு ஏற்ற வகையில், பவளம் போலும் நிறமுடைய துவர் நீர்த் துறையில் முழுவதும் மறையு மாறு அழுத்திப் பதனிடப் பட்ட தோலால் செய்யப்பட்டது அடையல். அதன் முதுகாக அமைந்த மேல் வார் வரிகள் மலிந்த பாம்பின் தோலை ஒப்பதாகவும் மயிர் செறிந்ததாகவும் மயிற் பீலியின் பிளவுகளைக் கொண்டு செய்யப்பட்ட செய்ந் நேர்த்தி யுடையதாகவும் இருந்தது. அடையல் செய்தல், பயன் கலை; அதன் செய்திறமோ கவின் கலை, கலையும் தொழிலும் கைகோத்துச் செல்லும் இந்நிலை எத்தகு நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைந் திருத்தல் பாராட்டுக்கும் பயன்படுத்துதற்கும் உரியதாகும். மாலை : மாலைவகைகளைக் குறிக்கிறது ஒரு பரிபாடல் தொடர் - அது. நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை என்பது (19:80-1) இதனை விளக்கும் பழைய உரையாசிரியர்: தெற்றின மாலைகள் போல மலர் நிறைந்தும், கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும், தொடுத்த மாலைகள் போல இடையிட்டும், தூக்கிக் கட்டினமாலைகள் போல நெருங்கியும் என்கிறது. தெற்றுதல், கோத்தல், தொடுத்தல், தூக்கிக் கட்டுதல் என நால்வகையில் வேலைப் பாடுடையவை அம்மாலைகள் என்பதைப் பகுத்துக் காட்டுகிறது அப்பாட்டு. தெற்றுதலாவது திண்டுபடச் செய்தது அல்லது திரட்டு மாலையாக அமைந்தது. கோத்தலாவது ஊசிவைத்து ஒழுங்குறத் தைத்தது. தொடுத்தலாவது இணை இணைக் கண்ணிகளாக இயைத்தது, தூக்கிக் கட்டியது மேலும் கீழும் தொங்கல் அமைய வேலைத் திறம் சான்றது. இவ்வாறெல்லாம் மலர் மணத்தொடு கலை மணமும் இயைந்து இருந்தமை பரிபாடல் வழியே அறிய முடிகின்றது. 14. செவ்வேள் பாடல்களில் சொல்லாட்சி! சொல்லாட்சி முறை பாட்டு, தொகை நூல்களில் பரிபாடல் ஒரு தனித் தன்மை யுடையது. இசை வகுத்துப் பாடப்பட்டதாலும் பரிபாடல் என்னும் பாவகையால் அமைந்ததாலும் மட்டும் ஏற்பட்ட தன்று அது. மக்கள் வாழ்வொடு இறைமை கலந்துள்ள இயலை விரிப்பது. அதனால் பிறதொகை நூல்களில் காணவியலாத தொன்மக் குறிப்புகளும் பிற சொல்லாட்சிகளும் இடம் பெற்றுள. இந்நோக்கத்தைக் கருதாமல் ஆய்ந்தார், பரிபாடலை மிகப் பிற்பட்ட காலத்திற்குத் தள்ளினர். எந்நூல்களிலும் காணுதற்கு அரியதாம் அரிய பழந்தமிழ்ச் சொல்லாட்சிகளும் பரிபாடலில் மிகவுண்டு. அவற்றைக் கொண்டு எப்பாட்டுத் தொகை நூல் களுக்கும் ஏற்பட்டது என்று பரிபாடலைக் கூறுவது எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறே பிற்பட்டது எனலும் பொருந்தாது. எடுத்துக் கொண்ட பாடு பொருளுக்கு ஏற்பப் பொருளாட்சி களும் சொல்லாட்சிகளும் இடம்பெற்றுள எனல் சாலும். பிறசொல் : கேசவனார் பாடிய பதினான்காம் பரிபாடலிலும், நல்லழிசியார் பாடிய பதினேழாம் பரிபாடலிலும் ஒருசொல் தானும் பிறமொழிச்சொல் இல்லை. குன்றம்பூதனார் பாடியவை ஒன்பதாம் பரிபாடலும் பதினெட்டாம் பரிபாடலும் ஆகியவை. இவற்றுள் பின்னதில் வச்சிரம், சுருதி என்னும் பிறமொழிச் சொற்கள் இரண்டே இடம் பெற்றுள. ஆனால் முன்னதில் சலதாரி, மத்திகை, மார்க்கம். சிகை, கோகுலம், ஆகுலம், வித்தகம், தடாகம், படாகை ஆகிய பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள. முன்னது 85 அடிகளையுடையது பின்னது 56 அடிகளையுடையது. இவற்றை நோக்க ஒரு புலவரே ஒரு பாட்டில் பிற சொற்கள் பெரிதும் கலவாமலும், மற்றொரு பாட்டில் பிறசொற்கள் பல பெய்தும் பாடியமை அறியலாம். சொல்லாக்கம் : இனி அகலிகை, கவுதமன், இந்திரன், இரதி, வச்சிரம், தெய்வப் பிரமம், புரந்தரன் என்பவை பெயர்கள் ஆகலின் அவ்வாறே ஆட்சி செய்ததற்கு நேர்ந்தது. இனிக், கிரௌஞ்சம் என்னும் பெயருடைய மலையைக் குருகொடு பெயர் பெற்ற மால்வரை என்றும் (5:9). குருகு என்னும் (19:36) புள்ளொடு பெரிய பொருப்பு என்றும் (21:9) ஆட்சி செய்த சொல்லாக்க முயற்சியும் அந்நாளில் இருந்தமை அறியத் தக்கதே. இம்முயற்சி கலித்தொகைப் பாடல்களிலும் உண்டு. பின்னே கம்பர் பாடல்களில் இம்முறை பேராட்சி செய்ததை அறியலாம். சமாதி என்னும் வடசொல்லை நொசிப்பு என்கிறார் கடுவன் இளவெயினனார் (5:27). மணத்தினை ஒன்றாக்கி நுண்ணிதாகக் காண்டலாதலின் சமாதி நொசிப்பு எனப்பட்டது என்கிறார் பரிமேலழகர். இம்மொழியாக்க ஆட்சியை ஒரு நெறியாக முந்தையோர் கொண்டனர் என்பது நப்பண்ணனாரும் (19) நல்லச்சுதனாரும் (21) காட்டிய சொல்லாக்கங்களால் கண்டு கொள்ளலாம். அக்கினி என்பதை அனலட் (5.9) என்பதும் இவ்வழிப்பட்டதே. சில ஆட்சிகள் : கோடரி என்பது குடாரி என ஆளப்படுகிறது. (5:34; 66) இதே ஆட்சியைப் பிறரும் மேற்கொள்ளுதலால் (8:10) பரவிய வழக்காக இருந்திருத்தல் வேண்டும். ஒன்றனை அடுத்து நிற்பது அடை எனப்படும். அடியைத் தொட்டு இருத்தலால் தொடுதோல் எனப்படும். செருப்பினைப் பரிபாடலார் அடையல் என்பது பிறர் செய்யாத புத்தாட்சியாம்) (21:7). ஏலல்! என்பதை மாறு ஏற்றல் பொருளில் - எதிரிடுதல் பொருளில் - வழங்குவதும் (9:41) ஏறுமாறு, எதிர்குதிர் என முரண் இணை மொழியாட்சி கொள்வதும, பண் என்பதைப் பண்ணை, எனத் தொகுதிப் பெயர் போல் ஆள்வதும், எல்லா எலாஅ என விளிப் பொருளாட்சி செய்வதும், இதோ என்னும் பொருளில், ஈதா என வழக்கு மொழியில் கூறுவதும் பரிபாடல் சொல்லாட்சிகளில் சிலவகைகளாம், ஓவியத்தை ஓவம் என்கிறார் (21:28). சிவிறி அல்லது விசிறியைச் சாந்தாற்றி என்கிறார் (21:30) நீர்பெய்து எறிந்து விளையாடும் தட்டினைப் பூநீர்பெய்வட்டம், என்றும் (21:42) தலைக்கோலத்தைச் சென்னிகை என்றும் (21:56) நல்லச்சுதனார் வழங்குதல் அவர்தம் சொல்வளச் சீர்மையை விளக்கும். அடையல் என்று வழங்கியவரும் அவரே என்பதும் அறியத் தக்கது. ஒப்பநாடி அத்தகவு ஒறுப்பவன் எனப்படும் கூற்றுவனை ஞமன் எனல் ஞமன்கோல் என்னும் பண்டை ஆட்சி பற்றி எழுந்ததாகலாம் (5:61) ஆனால் அலைதல் பொருளில் ஞமன் எனவருதல் (8:44) பரிபாடல் தரும் புதுச் சொல்லாகும். முருகனுக் குரிய அறுமுகன் என்னும் பெயருக்குரிய அறுமுக ஆட்சி (14:21) பரிபாடலிலே இடம் பெற்றுள்ளது. யாத்திரை அருச்சிப்போர் மார்க்கம் சருமம் சோபனம் முதலிய பிற சொல்லாட்சிகள் பரிபாடலில்தான் முதன் முதல் இடம் பெற்றுப் பின்னைப் பெருவழக்கில் ஊன்றியமை அறிய வாய்க்கின்றன. எதுகை நயம் : பதினெட்டாம் பாடல் ஒன்றில் மட்டும் போரெதிர்ந்து, காரெதிர்ந்து நீர்நிரந்து, சூர்நிரந்து, சீர்நிரந்து எனவும், ஐவளம், மைவளம், கைவளம், மொய்வளம், மெய்வளம், நைவளம் எனவும், ஆர்ததும்பு, சூர்ததும்பு, கார்ததும்பு, போர்ததும்பு, ஏர்ததும்பு எனவும், கருவி, அருவி, குருவி, எருவை எனவும் பிறபிற வாறும் எதுகைகள் அமைந்துள்ளமை பரிபாடல் இசைவளத்திற்கு ஏற்ப இனிது இயலுமாற்றை விளக்குவதாய் அமைகின்றது. நாடகவியல் : சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன், ஈன்றாட்கு ஒரு பெண் இவள் இருண்மையீர், உண்கண் இலங்கிழை ஈன்றாட்கு அரியளோ? ஆவ தறிந்திலேன்......... ஈதா, வருபுனல் வையை மணல்தொட்டேன் தரு மணவேள் தண்பரங் குன்றத் தடிதொட்டேன் என்பாய் கேளிர் மணலின் கெழுவும் இதுவோ ஏழுலகும் ஆளி திருவரைமேல் அன்பளிதோ? என்னை அருளி அருண்முருகு சூள்தளின் நின்னை அருளில் அணங்கான் மெய்வேல் தின்னும் விறல் வெய்யோன் ஊர்மயில்வேல் நிழல்நோக்கி அறவர் அடிதொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளாணை கூறேலோ கூறேல் ஐய சூளின் அடிதொடு குன்றொடு வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல் யார் பிரிய? யார் வர? யார்வினவ? யார் செப்பு? இவை தலைவனும் தோழியும் உரையாடலாக வரும் பரிபாடல் (8:57-72) நாடக இயல்பில் இப்பாடல் நடத்தல் கண்டு கொள்க. பரிபாடலிசை : பிற்காலத் தேவாரப் பன்முறை, வழிவழியாக வரும் ஓதுவார்களாலும், இசைத்தமிழ்வல்ல அறிஞர்களாலும் பண்ணாய்வுத் திறவோர்களாலும் ஓராற்றாற் கண்டு உயிர்த்தெழச் செய்தற்கு வாய்த்துள்ளது. ஆனால், பரிபாடல் பண்ணியல் அறிந்து தெளிவிப்பார் அரியர், ஆயின், அம்முயற்சியில் ஊன்றும் அறிஞர்களுக்கு அறவே தடமழிந்து போகாவண்ணம் பண்ணின் பெயரேனும் கிடைத்திருத்தலான் அத்தடம் பற்றிச் சென்று கண்டு கொள்ளவும் வாய்க்கலாம். கலையொன்று இடையறவு படின் மீள நிலை பெறுத்தலின் அருமைக்கு எடுத்துக் காட்டாக இருப்பவற்றுள் இப்பரிபாடல் இசையும் ஒன்று எனல் தகும். ஊழையும் உப்பக்கம் காணும் உலையா முயற்சியாளரும் உளராகலின் மறைந்துள்ள பரிபாடல் இசை மீளவும் உலாக் கொள்ளும் காலம் வரக்கூடும் என நம்பலாம். அந்நம்பிக்கை வெல்வதாக! இணைப்பு செவ்வேள் பற்றிய பரிபாடல்கள் ஐந்தாம் பரிபாடல் : பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கித் தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை மாய அவுணர் மருங்கறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில்வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மாலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள் வேல னேத்தும் வெறியு முளவே; அவை, வாயுமல்ல; பொய்யு மல்ல; நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய்; சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பாகலும் பிறப்பினுள் இழிபாகலும் ஏனோர்நின் வலத்தினதே; ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து நாக நாணா மலைவில் லாக மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப் பாக முண்ட பைங்கண் பார்ப்பான் உமையோடு புணர்ந்த காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி இமையா நாட்டத் தொருவரங் கொண்டு விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த தரிதென மாற்றான் வாய்மைய னாதலின் எரிகனன் றானாக் கடாரிகொண் டவனுருவு திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக் கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக மாதவர் மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார் தானே தரிக்கென அவரவி யுடன்பெய் தாரே யழல்வேட் டவ்வலித் தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில் வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள் கடவுள் ஒருமீன் சாலினி யொழிய அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர் மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் பெரும் பெயர் முருகநிற் பயந்த ஞான்றே அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன் எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென அறுவேறு துணியும் அறுவ ராகி ஒருவனை வாழி ஓங்குவிறற் சேஎய் ஆரா வுடம்பினீ அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரிவித் திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித் திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன் ஆஅங், கவரும் பிறரும் அமர்ந்துபடை யளித்த மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமு மரனும் வாளும் செறியிலை யிட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும் வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு மறுவில் துறக்கத் தமரர்செல் வன்றன் பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய் நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை, செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும், சேரா வறத்துச் சீரி லோரும், அழிதவப் படிவத் தயரி யோரும் மறுபிறப் பில்லெனும் மடவோருஞ் சேரார் நின்னிழல் அன்னோ ரல்ல தின்னோர் சேர்வா ராதலின் யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனு மூன்றும் உருளிணர்க் கடம்பன் ஒலிதா ரோயே, கடுவ னிளவெயினனார் பாட்டு; கண்ணாகனார் இசை; பண்ணுப் பாலை யாழ். எட்டாம் பாடல் : மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கொடியோனும், புங்கவ மூர்வோனும், மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும் மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும் யாவரும் பிறரு மமரரு மவுணரும் மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்றா கின்றுநின் காரண மாகப் பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும் இமயக் குன்றினிற் சிறந்து நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கிணர் ஊழா ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை; முதல்வநின் யானை முழக்கங் கேட்க கதியிற்றே காரின் குரல்; குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப ஏதிர்குதிர் ஆகின் றதிர்ப்பு மலைமுழை; ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்னவினம் வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுனைமலர்க் கொன்றை கொடியிண ரூழ்ப்பக் கொடிமலர் மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற நன்றவிழ் பன்மலர் நாற நறைபணிப்பத் தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே யம்மநின் குன்றத்தாற் கூடல் வரவு; குன்ற முடைத்தவ் வொளிர்வேலோய் கூடல் மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக் காலொடு மயங்கிய கலிழ்கடலென மால்கடல் குடிக்கு மழைக்குரலென ஏறதிர்க்கு மிந்திர னிருமுருமென மன்ற லதிரதிர மாறுமா றதிர்க்குநின் குன்றங் குமுறிய வுரை: தூதேய வண்டின் றொழுதி முரல்வவர் காதன்மூ தூர்மதில் கம்பலைத் தன்று வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர் ஆராக் காம மார்பொழிற் பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகர்ச்சி முற்றாக் காதல் அடியோர் மைந்த ரகலத் தகலா அலர்ஞெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ்மறப் பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங் குன்று; இனிமன்னு மேதிலர் நாறுதி யாண்டுப் பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர் மாலைக்கு மாலை வரூஉம் வரைசூணில் காலைப்போய் மாலை வரவு; இனிமணல் வையை யிரும்பொழிலுங் குன்றப் பனிமொழிச் சாரலும் பார்ப்பாரும் ............................. துனியன் மலருண்கண் சொல்வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது துனிய னனிநீநின் சூள்; என்பாணி நின்னி லெலாஅபாணி நீநின்சூள் சான்றாள் ரீன்ற தகாஅத் தகாஅமகா அன் ஈன்றாட் கொடுபெண் இவள் இருண்மையீ ருண்க ணிலங்கிழை யீன்றாட் கரியளோ வாவ தறிந்திலே னீதா வருபுனல் வையைமண றொட்டேன் றருமணவேள் தண்பரங் குன்றத் தடிதொட்டேன் என்பாய் கேளிர் மணலின் கெழுவு மிதுவோ ஏழுலகு மாளி திருவரைமே லன்பளிதோ என்னை யருளி யருண்முருகு சூள்சூளின் நின்னை யருளி லணங்கான்மெய் வேறின்னும் விறல்வெய்யோ னூர்மயில் வேனிழ னோக்கி அறவ ரடிதொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளாணை கூறேலா கூறேல் ஐய சூளின் அடிதொடு குன்றொடு வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல் யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய் கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல் முகைமுல்லை வென்றெழின் முத்தேய்க்கும் வெண்பல் நகைசான்ற கனவன்று நனவன்று நவின்றதை இடுதுனி கையாறா வெற்றுயர் கூரச் சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமன் மிக, ஏற்றுதுமல ரூட்டுதுமவி தோற்றதும் பாணி எழுதுங் கிணைமுருகன் தாட்டொழு தண்பரங் குன்று; தெரியிழாய் செல்கென்றாய் எல்லாயாம் பெற்றேம் ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்சூள் வௌவல் பருவத்துப் பன்மாணீ சேறலிற் காண்டை எருமை யிருந்தோட்டி எள்ளீயும் காளை செருவஞ் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி அருள்வயினாற் றூங்கு மணிகையாற் றாக்கி நிரைவளை ஆற்றிருஞ் சூள்; வளைபொரு சேட்சிமை வரையகத்தால் தளிபெருகுந் தண்சினைய பொழில்கொளக் குறையா மலரக் குளிர்பொய்கை யளறுநிறைய மருதநளி மணன்ஞெமர்ந்த நனிமலர்ப் பெருவழிச் சீறடியவர் சாறுகொள வெழுந்து வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும் நாறுகமழ் வீயும் கூறுமிசை முழவமும் மணியுங் கயிறு மயிலுங் குடாரியும் பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் றொட்டது கைபிழை யாகாது நனவிற்சேஎப்பநின் னளிபுனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும் பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும் மஞ்சாடு மலைமுழக்கும் துஞ்சாக் கம்பலைப் பைஞ்சுனைப் பாஅ யெழுபாவையர் ஆயித ழுண்க ணலர்முகமத் தாமரை தாட்டா மரைத்தோட் டமனியக் கயமலர் எங்கைப் பதுமங் கொள்கைக் கயமுகைச் செவ்வா யாம்பல் சென்னீர்த் தாமரை புனற்றா மரையொடு புலம்வேறு பாடுறாக் கூரெயிற்றார் குவிமுலைப் பூணொடு மார னொப்பார் மார்பணி கலவி, அரிவைய ரமிர்தபானம் உரிமை மாக்க ளுவகையமிர்துய்ப்ப மைந்தர் மார்வம் வழிவந்த செந்தளிர் மேனியார் நெல் லறீர்ப்ப என வாங்கு உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக் கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிநீர் அருவி யசும்புறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரங் குன்ற நினக்கு. ஆசிரியன் நல்லுந்துவனார் பாட்டு; மருத்துவன் நல்லச் சுதனார் இசை; பண்ணுப் பாலை யாழ். ஒன்பதாம் பாடல் : இருநிலந் துளங்காமை வடயி னிவந்தோங்கி அருநிலை யுயர்தெய்வத் தணங்குசால்தலைகாக்கும் உருமுச்சூழ் சேட்சிமை உயர்ந்தவர் உடம்பட எரிமலைத் தாமரை இறைவீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர், மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சவதாரி மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண் மணந்தஞான் றையிரு நூற்று மெந்தயனத் தவன்மகண் மலருண்கண் மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத் தணிமழை தலையின்று தண்பரங் குன்று; நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே அதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளீடாய் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே, அதனால் அகறல் அறியா அணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்றுப் பயன் : ஊழாரத் தேய்கரை நூக்கிப் புனல்தந்த காழாரத் தம்புகைசுற்றிய தார்மார்பிற் கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ வாழிய மாயாநின் தவறிலை எம்போலும் கேழிலார் மாணல முண்கோ திருவுடையார் மென்றோண்மே வல்கி நல்கலு மின்று வையயிற் றெய்யா மகளிர் திறமினிப் பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய கரையாவெந் நோக்கத்தாற் கைசுட்டிப் பெண்டின் இகலி இனகந்தாளை யுவ்வேள் தலைக்கண்ணி திருந்தடி தோயத் திறைகொடுப் பானை வருந்தல் எனவவற்கு மார்பளிப் பாளைக் குறுகலென் றொள்ளிழை கோதைகோ லாக இறுசிறுக யாத்துப் புடைப்ப ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோ டேல இருவர் வான்கிளி ஏற்பின் மழலை செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே வெறிகொண்டான் குன்றத்து வண்டு; தார்தார் பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார் மார்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார் கோதை வரிப்பந்து கொண்டறிவார் பேதை மடநோக்கம் பிறிதாக வூத நுடங்கு நொசிநுசுப்பார் நூழில் தலைக்கொள்ளக் கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார் வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார் தேரணி யணிகயிறு தெரிபு வருவார் வரிசிலை வளைய மார்பிற வாங்குவார் வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் தோள்வளை யாழி சுழற்றுவார் மென்சீர் மயிலிய லவர்; வான்மிகு வயமொய்ம்பின் வரையகலத் தவனை வானவன்மகள் மாணெழின் மலருண்கண் மடமொழியவ ருடன்சுற்றிக் கடிசுனையுட் குளித்தாடு நரும் அறையணிந்த அருஞ்சுனையான் நறவுண் வண்டாய் நரம்புளர்நரும் சிகைமயிலாய்த் தோகைவிரித் தாடுநரும் கோகுலமாய்க் கூவுநரும் ஆகுல மாகுநரும் குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர் வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற் கொத்தன்று தண்பரங் குன்று. கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்த வேல் அடும்போ ராளநின் குன்றின்மிசை ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும் பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் வல்லாரை வல்லார் செறுப்பவும் அல்லாரை அல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச் செம்மைப் புதுப்பனல் தடா மேற்ற தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று மேஎ வெஃகினவை வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை கற்பினை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே. குன்றம் பூதனார் பாட்டு: மருத்துவன் நல்லச்சுதனார் இசை: பண்ணுப் பாலை யாழ். பதினான்காம் பாடல் : கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே தண்ணறுங் கடம்பின் கமழ்தாதூ தும் வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே அடியுறை மகளி ராடுந் தோளே நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே வாகை யொண்பூப் புரையு முச்சிய தோகை யார்குரன் மணந்து தணந்தோரை நீடன்மின், வாருமென்பவர் சொற்போன் றனவே நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின அழுகை மகளிர்க் குழுவை செப்ப நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள் வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிறைதொறும் விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப் பவழத் தன்ன செம்பூத் தாஅய்க் கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து சூர்மருங் கறுத்த சடர்ப்படை யோயே கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையி னறும்புகை நனியமர்ந் தோயே அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத் தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே அன்னை யாகலின் அமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னு மின்னுமவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே. கேசவனார் பாட்டு. இசையும் அவர்; பண்நோ திறம். பதினேழாம் பாடல் : தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலை மாலை அடியுறை யியைநர் மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் ஒரு திறம், பாணர் யாழின் தீங்குர லெழ ஒரு திறம், யாணர் வண்டின் இமிரிசையெழ ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத ஒரு திறம், மண்ணார் முழவின் இசையெழ ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்றம் உடைத்து : பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலொடு பரங்குன்றினிடைக் கமழ்நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப நணிநணித் தாயினுஞ் சேஎய்ச் சேய்த்து மகிழ்மிகுதேஎங் கோதையர் கூந்தல் குஞ்சியிற் சோர்ந்தவிழ் இதழின் இயங்குமா நின்று வசைநீங்கிய வாய்மையால் வேள்வியால் திசைநாறிய குன்றமர்ந் தாண்டாண் டாவி யுண்ணும் அகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோய் உம்பர் இமைபிறப்ப தேயா மண்டிலங் காணுமா றின்று வளைமுன்கை வணங்கிறையார் அணைமென்றோள் அசைபொத்தார் தார்மார்பிற் றகையியலார் ஈரமாலை இயலணியார் மனமகிழ் தூங்குநர் பாய்புட னாடச் சுனைமலர்த் தாதூதும் வண்டூத லெய்தா அனையபரங் குன்றின் அணி கீழோர், வயல்பரக்கும் வால்வெள்ளருவி பரந்தானா தரோ மேலோர், இயங்குதலால் வீழ்மணிநீலம் செறுவுழக்கு மரோ தெய்வ விழவுந் திருந்து விருந்தயர்வும் அவ்வெள் ளருவி அணிபரங் குன்றிற்கும் தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும் கொய்யுளை மான்றேர்க் கொடித்தேரான் கூடற்கும் கையூழ் தடுமாற்ற நன்று; என வாங்கு மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ பணியொரீஇ நின்புகழ் ஏத்தி அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயாம் எனவே. நல்லழிசியார் பாட்டு; நல்லச்சுதனார் இசை; பண் நோதிறம் பதினெட்டாம் பாடல் : போரெதிர்ந் தேற்றார் மதுகை மறந்தபக் காரெதிர்ந் தேற்ற கமஞ்சூல் எழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் சீர்நிரந் தேந்திய கன்றொடு நேர்நிரந் தேறுமா றேற்குமிக் குன்று; ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள் திருநுதலும் உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன் காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற இதனைக்கண் டியானோக்க நீயெம்மை ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல் ஆய்தேரான் குன்ற வியல்பு; ஐவளம் பூத்த அணிதிகழ் குன்றின்மேல் மைவளம் பூத்த மலரோர் மழைக்கண்ணார் கைவளம் பூத்த வடுவொடு காணாய்நீ மொய்வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம் மெய்வளம் பூத்த விழைதகு பொன்னி நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம் பூத்தன பாணாநின் பாட்டு; தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ மங்குன் மழைமுழங்கிய விறல்வரையால் கண்பொருபு சுடர்ந்த டர்ந்திடந் திருள்போழுங் கொடிமின்னால் வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேல் ஞாயிறுநின் ஒண்சுடர் ஓடைக் களிறேய்க்கு நின்குன்றத் தெழுதெழில் அம்பலங் காமவே ளம்பின் தொழில்வீற் றிருந்த நகர்; ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி சூர்ததும்பு வரைய காவால் கார்ததும்பு நீர்ததும்புவன சுனை ஏர்ததும்புவன செறிவு போர்தோற்றுக் கண்டுண்டார்கைபோல்வ கார் தோற்றும் காந்தள் செறிந்த கவின்; கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பிகட் டியாழின் புரிநெகிழ்ப்பார் போன்றன கை; அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே வச்சிரத் தான்வான வில்லு; வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம் வூட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச் சீர்ததும்பு மரவமுடன் சிறந்து போர்ததும்பு மரவம் போலக் கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம் அருவி யார்ப்பமுத் தணிந்தனவரை குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை எருவை கோப்ப எழிலணி திருவில் வானி லணித்த வரியூதும் பன்மலராற் கனி வளைத்த சுனை: புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு ககிலோ டாரமுங் கமழும் செருவேற் றானைச் செல்வநின் அடியுறை உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே. குன்றம்பூதனார் பாட்டு; நல்லச்சுதனார் இசை ; பண்காந்தாரம். பத்தொன்பதாம் பாடல் : நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்த தருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற் கலப்போ டியந்த இரவுத்தீர் எல்லை அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல உரிமாண் புனைகலம் ஒண்டுகில் தாங்கிப் புரிமாண் புரவியர் போக்கமை தேரர் தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின் குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல் ஆர்வேலை யாத்திரைசெல் யாறு: சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் புலமாண் வழுதி மடமயி லோரு மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரை யேறிமேற் பாடு வலந்திரி பண்பிற் பழமதிச் சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற் பாடிய நாவிற் பரந்த வுவகையின் நாடு நகரு மடைய அடைந்தனைத்தே படுமணி யானை நெடியோய்நீ மேய கடிநகர் சூழ்நுவலுங் கால்; தும்பி தொடர்கதுப்ப தும்பி தொரடாட்டி லம்பணி பூங்கயிற்று வாங்கி மரனசைப்பார் வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார் திண்டேர் வழியிற் செலநிறுப்பார்க் கண்டக் கரும்பு கவழ மடுப்பார் நிரந்து பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற இடைநிலம் யாமேத்து மாறு; குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் தெய்வப் பிரமஞ் செய்கு வோரும் கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரு மியாழின் இளிகுரல் சமங்கொள் வோரும் வேள்வியின் அழகியல் விளம்பு வோரும் கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப ஊழுற முரசின் ஒலிசெய் வோரும் என்றூ ழுறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும் இரதி காமன் இவளிவன் எனாஅ விரதியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளக லிகையிவன் சென்ற கவுதமன் சினறுறக் கல்லுரூ ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும் இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவுஞ் சுட்டறி வுறுத்தவும் நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச் சோபன நிலையது துணிபரங் குன்றத்து மாஅன் மருகன் மாட மருங்கு; பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை பிறங்கல் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான் வந்த நெறியு மறந்தேன் சிறந்தவர் ஏஎ யோஒ எனவிளி ஏற்பிக்க ஏஎ யோஒவென் றேலா அவ்விளி அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துழிச் செல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே வாழ்த்துவப்பான் குன்றின் வகை; நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறிணர்ச் சினைபோழ் பல்லவந் தீஞ்சுனை யுதிர்ப்ப உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர்முகிழுற அவைகிடப்பத் தெரிமலர் நனையுறுவ ஐந்தலை அவிர்பொறி அரவ மூத்த மைந்தன் அருகொன்று மற்றிளம் பார்ப்பென ஆங்கிள மகளிர் மருளப் பாங்கர் பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல் கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை உருவமிகு தோன்றி ஊழிணர் நறவம் பருவமில் கோங்கம் பகைமல ரிலவம் நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம் நிறைந்தும் உறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் விடியல் வியல்வானம் போலப் பொலியும் நொடியாய்நின் குன்றின்மிசை; நினயானைச் சென்னி நிறங்குங் குமத்தாற் புனையாப்பூ நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள் பன்மண மன்னும் பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத் தார்நின் கொடியேற்று வாரணங் கொன்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார் முறுவற் றலையளி எய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால்; குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி; உடையும் ஒலியலுஞ் செய்யைமற் றாங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவும் உருவத்தீ ஒத்தி முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை யுடைத்தோய்நீ இவ்வரை மருங்கிற் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் உடங்கமர் ஆயமொ டேத்தினந் தொழுதே. நப்பண்ணனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை! பண் காந்தாரம். இருபத்தொன்றாம் பாடல் : ஊர்ந்த தை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப், பொருசமங் கடந்த புகழ்சால் வேழம் தொட்டதை, தைப்பமை சருமத்திற் றாளியை தாமரை, துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த வரிமலி யரவுரி வள்புகண் டன்ன புரிமென் பீலிப் போழ்புனை அடையல் கையதை, கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்படை திறந்தவேல் பூண்டதை, சுருளுடை வள்ளி இடையீடு பிழைத்த உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ்தார் அமர்ந்ததை, புரையோர் நாவிற் புகழ்நல முற்றி நிரையே ழடுக்கிய நீளிலைப் பாலை அரைவரை மேகலை அணிநீர்ச் சூழித் தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம் குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது; சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் றார்ப்பத் துடியின் அடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி அடுநறா மகிழ்தட்ப ஆடுவாள் தகைமையின் நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையணை கேள்வனைத் துனிப்பவ னிலையும் நிழல்காண் மண்டில நோக்கி அழல்புனை அவிரிழை திருத்துவாள் குறிப்பும் பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற ஊட்டுவாள் விருப்பும் பல்லூழ் இவையிவை நினைப்பின் வல்லோன் ஓவத் தெழுதெழில் போல மாதடிந் திட்டோய்நின் குன்றின் மிசை; மிசைபடு சாந்தாற்றி போல எழிலி இசைபடு பக்கம் இருபாலுங் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புட னாட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை அருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லாம் ஒலிக்கும் இரங்கு முரசினான் குன்று; தாழ்நீர் இமிழ்சுனை நாப்பட் குளித்தவண் மீநீர் நிவிந்த விறலிழை கேள்வனை வேய்நீர் அழுந்துதன் கையின் விடுகெனப் பூநீர்பெய் வட்டமெறியப் புணைபெறா தருநிலை நீரின் அவள்துயர்கண்டு கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று; வண்டார் பிறங்கண் மைந்தர் நீவிய j©fkœ சாந்தந் தைஇய வளியும் கயல்புரை கண்ணியர் கமழ்துக ளுதிர்த்த புயல்புரை கதுப்பக முளரிய வளியும் உருளிணர்க் கடம்பின் நெடுவேட் கெடுத்த முருகு கமழ்புகை நுழைந்த வளியும் அசும்பு மருவி அருவிடர்ப் பரந்த பசும்பூண் சேஎய்நின் குன்றநன் குடைத்து; கண்ணொளிர் திகழட ரிடுசடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற இடையிடை யிழைத்தியாத்த செண்ணிகைக் கோதை கதுப்போ டியல மணிமருள் தேன்மகிழ் தட்ப வொல்கிப் பிணிநெகிழப் பைந்துகில், நோக்கஞ் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவாள் ஆங்குத்தன் சீர்த்தகு கேள்வன் உருட்டு துடிச்சீரால் கோடணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவளேர் ஆடை யசைய அணியசையத் தானசையும் வாடையுளர் கொம்பர் போன்ம்; வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவள் கண்; மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை நின்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும் ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே. நல்லச்சுதனார் பாட்டு; கண்ணகனார் இசை; பண் காந்தாரம். பெரும் பொருள் விளக்கம் (உரை நூல்) 1. முகவாய் பெரும் பொருள் விளக்கம் என்பது மறைந்து போன தமிழ்நூல்கள் என்னும் பட்டியலில் அடங்கிய நூல்களுள் ஒன்றாகும். சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம், மருமகன் வலந்தது என்னும் பாடல் விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பெரும் பொருள் என்று குறிப்பிடுகிறார் (187). பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (தொல். களவு 14) என்பதனான் ஒப்பும் பெருந்திணைப் பாற்படுங் கந்தருவமாமாறு பெரும் பொருளான் உணர்க என்பது அது. பெரும் பொருள் என்பதற்குக் குறிப்பு வரையும் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதர், பெரும் பொருள் என்பது, பெரும் பொருள் விளக்கம் என்னும் நூலாக இருத்தல் கூடுமோ வென்று ஊகிக்கப்படுகின்றது என்கிறார். ஊகித்தல் என்பது உறுதி செய்ய முடியாத கருதுகோள் ஆகும். அதனை உறுதிசெய்ய உதவியது புறத்திரட்டு என்னும் அரிய தொகை நூலாகும். உ.வே.சா. அவர்களின் சிந்தாமணிப் பதிப்பு, 1887 இல் வெளிவந்தது. அப்பொழுது அவர்க்குப் புறத் திரட்டுப் படி கிடைக்கவில்லை. பின்னர்த் திருச்சிராப்பள்ளி அண்ணாசாமி என்பாரிடமிருந்து புறத்திரட்டு ஏட்டுப்படி பெற்றுக் கொண்டதை என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார். (921) புறநானூற்றுப் பதிப்புக்குப் புறத்திரட்டிலுள்ள புறநானூற்றுப் பாடல்கள் உதவியதையும் உரைக்கிறார் (என் சரித்திரம் 986), இவையெல்லாம் சிந்தாமணிப் பதிப்பின் பின் நிகழ்ந்தவை. 1938-இல் பேராசிரியர் ச.வையாபுரியாரால் புறத்திரட்டுப் பதிப்பு வெளியிடப்பட்டது. அப்பதிப்பே பெரும் பொருள் விளக்கம் என்பதைத் தெளிவு படுத்திற்று. ஒரு தொகை நூல் எத்தகு கட்டொழுங்குடன் விளங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது புறத்திரட்டு நூலாகும். திருக்குறளைப் போலவே அறம், பொருள் என்னும் பால் முறை வைப்புடையது அது. அதன் அதிகாரப் பகுப்புகளும் பெரும்பாலும் திருக்குறளை அடியொற்றியே செல்கிறது. தொகைப் படுத்தப்படும் நூல்களையும்; அதன் பாவகையையும் ஒரு நெறிப் படக் கொண்டு செல்கிறது. இவ்வகையில் வெண்பாயாப்பினதாம் புறப்பொருள் வெண்பா மாலையை அடுத்து, அதே வெண்பா யாப்பால் அமைந்த பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அடைவு செய்கின்றது. புறத்திரட்டுத் தொகையின் தனிப்பெருஞ்சிறப்பு, தொகுக்கப் பட்ட பாடலைச் சார்ந்து அப் பாடல் அமைந்துள்ள நூலைக் குறிப்பிடுவதாகும். தொல்காப்பியம் புறத்திணையியல் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியர், புறத்திரட்டு வழியாக அறியப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் முப்பத்து ஒன்பதனை எடுத்துக் காட்டியிருந்தும், ஓரிடத்தில் தானும் அவர், பெரும் பொருள் என்றோ, பெரும் பொருள் விளக்கம் என்றோ காட்டினார் அல்லர் என்பது அறியத் தக்கதாம். புறத்திரட்டு என்னும் தொகைநூல் வாய்க்கப் பெற்றதும், அந்நூல் பாடல்கள் இன்ன நூலைச் சார்ந்தன என்பது குறிக்கப் பெற்றதும் ஆகியவையே நாம் பெரும் பொருள் விளக்கம் என்றொரு நூலை அறிந்து கொள்ள வாய்ப்பாயிற்றாம். புறத்திரட்டுப் பதிப்பாசிரியர் வையாபுரியார், அந்நூன் முகத்தில் தொகை நூல் பற்றிய விரிவாக ஆய்கின்றார். புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள நூல்களைப் பற்றியும் ஆய்வு நிகழ்த்துகின்றார். அவர் பெரும் பொருள் விளக்கம் குறித்து வரையும் செய்திகள் வருமாறு: புறத்திரட்டினாலன்றிப் பிறவாறு அறியலாகாத நூல்களும் கடைசியாகக் கூற நிற்பது பெரும் பொருள் விளக்கமாம். இந் நூலினின்றும் 41 செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை யனைத்தும் புறப்பொருள் பற்றியன வாதலின் இந்நூல் புறப் பொருளை உதாரணங்களால் விளக்கும் ஓர் நூலாதல் வேண்டும். நச்சினார்க்கினியர், சிந்தாமணி உரையில் (187) பின்னர் நான்கும் பெருந்திணைபெறுமே என்பதனால் ஒப்பும் பெருந்திணைப்பாற்படும் கந்தருவமாமாறு பெரும் பொருளான் உணர்க என்று கூறியுள்ளார். இவ்வாக்கியத்தை நோக்கிய அளவில், பெரும் பொருள் என்பது ஓர் பொருளிலக்கண நூலாக இருத்தல் கூடுமென ஊகிக்கலாம். இவ்வூகம் பொருத்த முடைத்தாயின், இவ்விலக்கண நூலினை மேற்கோளுடன் விளக்கிய ஒரு நூலாகப் பெரும் பொருள் விளக்கம் இயற்றப்பெற்றதாகலாம். பெரும் பொருள் விளக்கச் செய்யுட்கள் ஒரு சில நச்சினார்க்கினியரால் புறத்திணையுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இது தோன்றி காலம் முதலியன ஒன்றும் இப்போது அறிதற்கில்லை என்பவை அவை. இங்கேயும் ஊகிக்கலாம் என்ற குறிப்பு இருப்பினும், இரண்டு ஊகித்தல்களுக்கும் வேறுபாடு உண்டாம். சாமிநாதர் ஊகிப்பு, பெரும் பொருள் என்பது பெரும் பொருள் விளக்கம் என்னும் நூலாக இருத்தல் கூடும் என்பது. வையாபுரியார் ஊகிப்பு, பெரும் பொருள் என்பது, ஒரு பொருளிலக்கண நூலாக இருத்தல் கூடும் என்பதுடன், அவ்விலக்கண நூலினை மேற்கோளுடன் விளக்கிய ஒரு நூல் பெரும் பொருள் விளக்கமாக இருக்கலாம் என்பதாம். பெரும் பொருளும், பெரும் பொருள் விளக்கமும் ஒரு நூலாகலாம் என்பது முன்னவர் ஊகம். பெரும் பொருள் இலக்கண நூல் என்றும், அதற்கு விளக்கமாக அமைந்த நூல் பெரும் பொருள் விளக்கம் என்றும் இருநூலாகக் கருதியது பின்னவர் ஊகம். ஆனால் புறத்திரட்டின் வழியாலோ, நச்சினார்க்கினியர் வழியாலோ இரண்டு நூல்களும் தனித்தனி நூல்கள் என்றோ, ஒரே நூல் என்றோ உறுதி செய்யும் வாய்ப்பு இல்லை. தமிழ் இலக்கண இலக்கியப் பரப்புகளில் விளக்கப் பெயர் நூல்கள் பலவாதல் எவரும் அறிந்ததே. (நாற்கவிராச நம்பி இயற்றிய) அகப்பொருள் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், இலக்கண விளக்கம் என்பனவும், நீதிநெறி விளக்கம் என்பதும் சான்றுகளாம். அரும்பொருள் விளக்க நிகண்டு என்பதால் நிகண்டு நூல்களும் அப்பெயர் பெற்றமை புலப்படும். இவற்றால் விளக்கமாக அமைந்த நூலும், அதன் உரையும் ஆகியவையோ, இரண்டும் கொண்டவை யோ விளக்கம் என்னும் பெயர் பெறுவதை அறிய வாய்த்தலால், தெளிவாக வேறு சான்று கிட்டும்வரை இவ்வூகங்களைத் தீர்த்துக் கொண்டு உறுதி செய்ய வாய்ப்பு இல்லையாம். பெரும் பொருள் விளக்கம் என எடுத்துக்காட்டும் புறத் திரட்டுப் பாடல்கள் அனைத்தும் வெண்பா வாகவே உள்ளன. புறப்பொருள் வெண்பா மாலை வெண்பாக்களை ஒப்ப நடையிட்டும், ஒத்த பாவமைப்புற்றும் திகழ்வதாலேயே அவ்வெண்பாக்களை அடுத்தே இவ்வெண்பாக்களைக் கொண்டு நடையிடத் தொகை யாளர் அமைத்துள்ளார். எந்தவோர் இலக்கண நூலும் இலக்கணம் கூறும் நூற்பாக்களைக் கொள்ளாமல் எடுத்துக் காட்டை மட்டும் காட்டுவதாக அமைவதில்லை. இப்பெரிய பொது நெறிப்படி எண்ணினால் பெரும் பொருள் என்பது இலக்கண நூலாகவும், அந்நூலுக்கு உரையும், காட்டும் அமைந்த நூல் பெரும் பொருள் விளக்கமாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பாகும். கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் புறத்துறைப் பாடல்கள் ஆதலால், பெரும் பொருள் விளக்கம் புறப்பொருள் நூலாதல் வேண்டும் எனப் பேராசிரியர் வையாபுரியார் கருதுகிறார். புறத்திரட்டுத் தொகுப்பு, புறப்பொருள் பாடல்களின் தொகுப்பே ஆதலால் அப்பாடல்களைக் கொண்டே அந்நூல் அப்பொருள் பற்றியது என உறுதி செய்துவிட முடியாது. புறத் திரட்டில் காமத்துப்பால் பற்றிய செய்யுள் எனக்குக் கிடைத்துள்ள பிரதிகளுள் ஒன்றிலேனும் இல்லை என்கிறார் வையாபுரியார். புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூலின் படிகளில் ஒன்றொழிய மற்றவற்றில் கைக்கிளைப் பாடல்கள் 65 இருந்தன என்றும் அவை யனைத்தும் முத்தொள்ளாயிரம் சார்ந்தன என்றும் சுட்டுகிறார். இனிப் புறத்திரட்டின் இறுதியான 131ஆம் அதிகாரம் வாழ்த்து என்னும் பெயரோடு முடிவதும் எண்ணத்தக்கது. புறத்திரட்டுச் சுருக்கத்தில் உள்ள காமத்துப்பால் பகுதி விரிந்த நூலாகிய புறத்திரட்டின் கண்ணும் உளதாயிருத்தல் வேண்டும். இப்பொழுது காணப்படாத தன் காரணம் ஒருவாற்றானும் புலப் படவில்லை. புறப்பொருட் பகுதி வாழ்த்து என்னும் அதிகாரத்தோடு முடிதல்கண்டு அதனையே நூல் இறுதியென மயங்கிப் பின்னுள்ள பகுதி வேறொரு நூலென எண்ணி நாளடையில் இப்பகுதியை நம் முன்னோர் இழந்து விட்டதாகக் கருதுதலும் கூடும் என்கிறார் வையாபுரியார். தமிழ் என்பதே அகப்பொருள் என்பதைக் குறிஞ்சிப் பாட்டே காட்டும். சங்க நூற்பரப்பில் அகப்பாடற் பரப்பே மிக்கது என்பதும் வெளிப்படை. அவ்வாறாகவும் வாழ்த்தின் பின் காமத்துப்பால் என்பதொரு பால் இடம் பெறவும், அதில் ஒரு நூலில் இருந்த கைக்கிளைப் பாடல்களையே இணைத்தனர் என்பதும் பொருந்தாச் செய்தியாம். புறத்திரட்டுச் சுருக்கத்தார் கைக்கிளையைப் பின்னூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையார் அகப்புறம் என்றதற்கு ஏற்பப் புறத்திரட்டின் சுருக்க நூலில் இணைத்துக் கொண்டார் என்பது தகும். ஒவ்வொரு பகுதி இறுதியிலும் வாழ்த்துப் பாடும் மரபினைத் தொகையாசிரியர் மேற்கொண்டிருந்தார். என்னின் அறத்துப்பால் முடிவிலும் வாழ்த்துக் கூறியிருப்பார். அவர் நோக்கு புறப் பொருள், அகப்பொருள் எனப் பாகுபாடு கொண்டிருப்பின் அவ்விரு பால்களையே பகுப்பாக்கி இருப்பார். பெயர்தானும் புறத்திரட்டு என்று பெயர் சூட்டியிரார். ஆதலால், புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள பெரும் பொருள் விளக்கப்பாடல்களைக் கொண்டு அது புறப்பொருளே கூறும் நூல் என முடிவு செய்ய முடியாது. ஆயினும் நச்சினார்க்கினியர் குறிப்பை நோக்கிய அளவில் பெரும் பொருள் விளக்கம் அகப்பொருளும் உடையதே என்பது வெளிப்படும். அது தொல்காப்பியக் களவியல் நூற்பாவாகிய பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்னும் நூற்பாவுக்கு எடுத்துக் காட்டும் பெரும் பொருளில் உள்ளதாகக் கூறியமையால் அறியவரும். மேலும் புறத்திணையியல் துறைகளுக்குப் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களைச் சான்றாகக் காட்டுவது போலவே, அகத் திணையியல் துறைகளுக்கும் வெண்பாக்களைச் சான்றாகக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர். வழக்கம் போலவே, அவை எந்நூலைச் சேர்ந்தவை எனச் சுட்டிச் சென்றார் அல்லர். அவ் வெண்பாக்கள் பெரும்பொருள் விளக்கம் சார்ந்தவையாக இருத்தலும் கூடும். அவ்வாறாயின், பெரும் பொருள் விளக்கம் அகம், புறம் ஆகிய பொருள் இலக்கணம் இரண்டனையும் உடையதாகக் கொள்ள வாய்க்கும். புறத்திரட்டு, புறநானூறு, புறப் பொருள் வெண்பா என்பன போன்ற பெயரீடு இன்றியும், அகப்பொருள், களவியல் என்பன போன்ற பெயரீடு இன்றியும் தொல்காப்பியம், பொருளதிகாரம் என இருதிணைகளுக்கும் பொதுப்பெயர் கொண்டு வழங்கியமை போல, இரு திணைகளின் விளக்கமும் இருந்தமையால்தான் பெரும் பொருள் விளக்கம் என்னும் பெயரீடு பெற்றிருக்கக் கூடும். ஒரு பொருள் பற்றிக் கூறாமல், இருபொருள் பற்றிக் கூறுதலும், பெருமை என்பது இருமை என்னும் பொருளில் வழங்கப் படுதலும் அறிய இக்கருத்து வலியுறுவதாம். இனிப் பெருங்கதை, பெருந்தொகை, என்பன போலப் பாடல் பெருக்கம் பற்றிப் பெருமை சேர்க்கப்பட்டிருத்தலும் கூடுவதே. என்னெனின், ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பாடலேயன்றிப் பல பாடல்கள் கூறுதலும், புறத்தோன் குடை நாட்கோள், அகத்தோன் குடைநாட்கோள், புறத்தோன் நாட்கோள், அகத்தோன் வாள் நாட்கோள், புறத்தோன் வீழ்ந்த புதுமை, அகத்தோன் வீழ்ந்த புதுமை என்றாற்போலப் பெரும் பொருளில் வருவன நூல் விரிநிலையையும் விளக்கத்தையும் காட்ட வல்லனவாம். மேலும், படையியங்கரவம் என்னும் புறத்திணையியல் நூற்பா (3) விளக்கத்தில் இது முன் ஈரேழாம் என்ற துறை இருவகைப்பட்டு இருபத்தெட்டாம் என்கிறது என்கிறார் நச்சினார்க்கினியர். இதற்கு ஏற்ப, நிரை கோடற்கு எழுந்தோர் இயங்குபடை யரவம் நிரை மீட்டற்கு எழுந்தோர் இயங்குபடை யரவம் நிரை கோட்டற்கு எழுந்தோர் புடைகெடப் போகிய செலவு நிரை மீட்டற்கு எழுந்தோர் புடைகெடப் போகிய செலவு என இருபாற்பட இயலும். எடுத்துக் காட்டுகளை விரித்துச் செல்லுதல் எண்ணத் தக்கதாம். இனியர் காட்டும் இரண்டிரண்டு வெண்பாக்களில் ஒவ்வொன்று புறத்திரட்டினால் பெரும் பொருள் விளக்கத்தைச் சார்ந்ததென அறிய வருதலும் ஏனை ஒன்று இன்ன நூலைச் சார்ந்ததென அறிய வாரா திருத்தலும் அறியின் அவ்வேனை வெண்பாவும் பெரும் பொருள் விளக்கம் சார்ந்ததே என்னும் முடிவு செய்ய வாய்க்கின்றதாம். புறத்திரட்டில் அவ்வொண்பாக்கள் இடம் பெற்றிலவே எனின் தேர்ந்து திரட்டி வைக்கப்படும் திரட்டு நூலிலே நூல் முழுமையும் இடம் பெற்றிருக்கும் என நோக்குதல் கூடாதென்று அமைக. நூல் திரட்டு எனின் நூன் முழுமையும் இடம் பெற்றிருக்கும் என்றும் பாடல் திரட்டு எனின் தொகுப்பார் குறிப்புக்கு ஏற்ப அமைந்த பாடல்களே இடம் பெறும் என்றும் கருதுக. இவ்விடத்தே குறிஞ்சிப் பொருள் கொண்ட பாட்டு குறிஞ்சிப் பாட்டு. அது பெருங்குறிஞ்சி எனப் பரிமேலழகராலும் (பரிபா. 1977) நச்சினார்க்கினியராலும் (தொல். அகத். 19) சுட்டப்படுதல் எண்ணத்தக்கதாம். உரையாசிரியர் இளம்பூரணர் புறத்திணையியல் நூற்பாக் களுக்கு எடுத்துக் காட்டுகளைப் புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்தே காட்டுகிறார். அவர்க்குப் பின்னுரைகாரராகிய நச்சினார்க் கினியர் புறப்பொருள் வெண்பாமாலையை எடுத்துக்காட்டுவதுடன், பெரும் பொருள் விளக்க வெண்பாக்களையும் அதனை அடுத்தே எடுத்துக்காட்டுகிறார். மூன்றாம் நூற்பா ஒன்றில் மட்டும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் பதினொன்றைனை நச்சினார்க்கினியர் காட்டினாராகவும் இளம்பூரணர் அவற்றுள் ஒன்றனைக் கூடக் காட்டாது செல்வதால் அவர் பார்வைக்கு வாராத சுவடியாகவோ, அவர் காலத்திற்குப்பின் தோன்றிய சுவடியாகவோ பெரும்பொருள் விளக்கம் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்ள நேர்கின்றது. இக்குறிப்பு, வேறு எவ்வுரையாசிரியராலும் நூலாசிரிய ராலும் சொல்லப் பெற்ற வாய்ப்பு இல்லாத நிலையில், இது தெளிவுறும் காலம் வரை, நச்சினார்க்கினியர் காலத்திற்கு முற்பட்ட வராகப் பெரும் பொருள் விளக்கம் நூலாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என்றே கூற முடியும். இனிப் புறத்திரட்டைத் தொகுத்த காலம் அறியப் பெறினும் அதற்கு முன்னெல்லைப்படுத்த வாய்த்தல் கூடும். அத்தொகை செய்தார் எவர் என்றோ, அவர்காலம் இன்னதென்றோ அறியக் கூடா நிலையில் புறத்திரட்டில் இடம் பெற்ற நூல்களில் பின்னை நூலுக்குப் பின்னவர் அத்தொகை யாசிரியர் என்னும் பின்னெல்லை ஒன்றே காண முடியுமாம். புறத்திரட்டின் முதற்பதிப்பாசிரியர் வையாபுரியார், புறத்திரட்டிலே வந்துள்ள நூல்களில் காலத்தாற் பிற்பட்டது கம்பராமாயணமாகும். கம்பர் தமது அரும்பெரும் காப்பியத்தை 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றினரென அறுதியிடப்படு கின்றது. எனவே இக்தொகை நூல் 13ஆம் நூற்றாண்டிற்கும் 16ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப் பெற்றிருக்கலாம் எனக் கொள்ளுதல் தகும் என்கிறார் (நூன்முகம் பக். 38) மேருமந்தர புராணப் பாடல் ஒன்று புறத்திரட்டில் இடம் பெற்றுள்ளது. இப்புராணத்தின் காலம் கி.பி. 1388க்கு முன்னாக இருக்கலாம் என்று ஆய்ந்து தெளிகின்றார் அறிஞர் அருணாசலம். மேலும் அவர், 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சிவாலய முனிவர், பொதிகையில் வாழ்ந்த முனிவர் ஒருவரால் 25 பதிகங்களைத் திரட்டி அகத்தியர் தேவாரத் திரட்டு என்னும் பெயரால் வழங்கவிட்டார். அடுத்த 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தத்துவராய சுவாமிகள் பெருந்திரட்டு குறுந்திரட்டு எனச் சாத்திரங்களில் இருந்தும் தேவாரத்தில் இருந்தும் தொகுத்தார். இத்தொகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தொகையாகப் புறத்திரட்டு இருக்கலாம் என்கிறார். (தமிழ் இலக்கிய வரலாறு, 15ஆம் நூற்றாண்டு 85-87) இவை புறத்திரட்டின் தொகைக் காலமாகக் கருதப்பட்டவை, இவற்றைக் கொண்டு பெரும்பொருள் விளக்கக் காலத்தில் அறுதி யிட்டுச் சொல்ல இயலாதாம். அதன் திணை துறை வகுப்புகளையும் வெண்பாக்களின் நடை பொருளியல் என்பவற்றையும் நோக்க, புறப்பொருள் வெண்பாமாலை அடுத்தே தோன்றிய நூலாகலாம் எனக் கொள்ளலாம். வெண்பாமாலையை அடுத்தே புறத்திரட்டில் ஓரொழுங்காய் வைக்கப்பட்டுள்ள வைப்பு முறை அதற்குச் சான்றாகலாம். மேலும் முத்தொள்ளாயிர வெண்பாக்களுக்கு முற்பட அமைக்கப்பட்டமையும் கருதத் தக்கதாம். புறத்திரட்டில் வரும் பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் நாற்பத்து ஒன்றில் முப்பத்துதொன்பது பாடல்களை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதை அறிந்தோம். யானை மறம் பற்றிய பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் மூன்றனுள் ஒன்றை மட்டுமே இனியர் காட்டுதலால் இரண்டு பாடல்கள் அவர்தம் உரையில் இடம் பெறவில்லையாம். நாம் புறத்திரட்டினால் பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்த்தமையாலேயே, நச்சினார்க்கினியர் காட்டியவை அப்பெரும் பொருள் விளக்கம் சார்ந்தவை எனக் காண வாய்த்துள்ள பேற்றை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது. இல்லையேல், இன்னநூல் என அறிய இயலா மேற்கோளாகவே அவை இருந்திருக்கும். பெரும் பொருள் விளக்கம் என நூற் பெயர் மாத்திரையே அறியப் பெற்று, மறைந்து போன நூல்கள் என்னும் பெயர்ப் பட்டியலுள் ஒடுங்கி யிருக்கும் என்பதுண்மையாம். இனிப் புறத்திணை இயலில் பெரும் பொருள் விளக்கம் என அறியப்பட்ட வெண்பாக்களையன்றி, வெண்பா மேற்கோள்கள் மேலும் பல உளவாம். அவை புறத்திரட்டுத் தொகையில் இடம் பெறாத பெரும் பொருள் விளக்க வெண்பாக்களாக இருத்தல் கூடும். புறப்பொருள் வெண்பாமாலை வெண்பா,தகடூர்யாத்திரை வெண்பா, முத்தொள்ளாயிர வெண்பா என வரும் வெண்பாக்களை நீங்கிய வெண்பாக்கள் 82 இடம் பெற்றுள. இவை வேறு எந்நூலைச் சார்ந்தவை என அறியப்படாதவை. பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை மேற்கோள் காட்டிய நச்சினார்க்கினியராலேயே காட்டப்படுபவை. ஆதலின், அவ்வெண்பாக்களும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களாக இருத்தல் கூடும் என எண்ணலாம். பா நடை, பொருள் நிலை, வைப்பு முறை, பிறர் மேற்கோள் காட்டாத் தன்மை என்பவை இம்முடிவுக்கு வரத் தூண்டுவனவாக உள்ளன. இனி, அகத்துறை தொடர்பான வெண்பாக்கள் முப்பத்தொன்று நச்சினார்க்கினியர் வழியே கிட்டுகின்றன. அகப்பொருள் சுட்டும் வெண்பாக்களைக் கிளவித் தெளிவு, கிளவி விளக்கம் என்னும் நூல்கள் கொண்டிருப்பினும், அவ் வெண்பாக்கள் களவியல் காரிகை உரையில் இடம் பெற்றிருப்பினும், அவ்வெண்பாக்களாக இவற்றுள் ஒன்று தானும் இடம் பெறாமையால் இவ் வெண்பாக்கள் பெரும் பொருள் விளக்கம் சார்ந்தனவாக இருந்து ஆசிரியர் நச்சினார்க்கினியரால் காட்டப்பெற்றிருக்கக் கூடும் எனக் கருதலாம். இவ்வாறு ஓர் உரைகாரர் மட்டுமே எடுத்துக் காட்டும் அளவில் ஒரு நூல் இருத்தல் கூடுமோ என ஐயம் உண்டாக வேண்டுவதில்லை. கிளவித் தெளிவு, கிளவி விளக்கம் என்பவை களவியல் காரிகை உரையால் அன்றி வேறுவகையால் அறியுமாறு இல்லையே! அவர் தாமும் பாடல்களைக் காட்டி அப்பாடல் இடம்பெற்ற நூற்பெயரையும் காட்டிச் செல்லும் மரபினைக் கொண்டமையால் தானே அவற்றை அறிய வாய்த்தது. இனிப் பாண்டிக் கோவை என்றொரு நூல் மீட்டுயிர்ப்புப் பெற்றுள்ளது. பெரும்பாலும் முழுதுறு நூலாகவே கிட்டியுள்ளது. எதனால்? ஒரோ ஒரு களவியல் உரையால் தானே 250 பாடல்கள் கிடைத்தன! அதன் பெயர் தானும் களவியற் காரிகை தந்ததுதானே! இவற்றை நோக்கப் பெரும் பொருள் விளக்கம் நச்சினார்க்கினியர் உரையால் கிடைக்கும் கொடையாகக் கொள்ளலாம். குறள் நெறியில் பெரும் பிரிவும் சிறு பிரிவும் அமைத்துக் கொண்ட புறத்திரட்டுத் தொகையாளர், தொல்காப்பியப் புறத்திணை இயலைத் தழுவியும் சில சிறு பிரிவுகளை மேற்கொண்டுள்ளார். அவை நிரைகோடல், நிரைமீட்சி, பகைவயிற் சேறல், பாசறை, எயில்கோடல், எயில்காத்தல், அமர், தானை மறம், யானைமறம், களம், வாழ்த்து என்பனவாம். இப்பிரிவுகளிலேதான் பெரும் பொருள் விளக்கப் பாடல்களை இயைத்துள்ளார். இவற்றுடன் ஈகை, அறிவுடைமை, குடிமரபு என்னும் பிரிவு களிலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புறத்திரட்டார் பெரும் பொருள் விளக்கப் பாடல்களை இத்தலைப்புகளில் வைத்தாராக. இப்பாடல்களை மேற்கோள் காட்டும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியத் துறையை நெறிப் படுத்திக் கூற்றும் குறிப்பும் விளக்கமும் சேர்த்துச் சிறக்கச் செய்கின்றார். சான்றாக எயில் கோடல் என்னும் பகுதியில் (அதி. 119) பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் 6 புறத்திரட்டில் இடம் பெற்றுள. அவை புறத்திணையியல் 12, 13ஆம் நூற்பாக்களின் உரையில் நச்சினார்க்கினியரால் காட்டப்பட்டுள்ள வகை வருமாறு: புறத்திரட்டு- பாடல்- நச்.காட்டும் புறத்துறை 1325 - பகலெறிப்ப தென்கொலோ - இது புறத்தோன் குடைநாட்கோள் 1326 - தொழுது விழாக் குறைக்கு - இது புறத்தோன் வாணாட்கோள் 1327 - இற்றைப்பகலுள் - இது தொல்லெயிற்கு இவர்தல் 1328 - தாய்வாங்கு கின்ற - இது புறத்தோன் மானங் காத்த நொச்சி 1329 - வெஞ்சின வேந்தன் - இது புறத்தோன் வீழ்ந்த புதுமை 1340 - தாக்கற்குப் பேரும் - இஃது தகத்தோன் வீழ்ந்த புதுமை இன்னவாறு துறை கூறுவதுடன், கண்டோர் கூற்று, மறவர் கூற்று (புறத்திணை.3) எனக் கூற்றுவகையும் குறிக்கிறார். இவ்வாறு நச்சினார்க்கினியர் புறப்பொருள் பற்றி மிகுதியாகவும் அகப்பொருள் பற்றி மிகக் குறைந்த அளவாகவும் வெண்பாக்களைக் காட்டியுள்ளார். அவற்றுள் புறப்பொருள் வெண்பாக்களையேனும் தொகையாக்கி வைப்பின் முற்றாக வாய்க்கவில்லை எனினும் ஒரு பாதியாம் பொருள் நூலைப் பெறும் பேறு தமிழுலகுக்கு வாய்க்குமே என்று அரும்பிய எண்ணமே இப்பெரும் பொருள் விளக்க நூலாக்கமாம். இனி, நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டிய அளவடி வெண்பாக்களையே தொகுக்க வேண்டிய தென்னை எனின், பெரும் பொருள் விளக்கமாகப் புறத்திரட்டுக் காட்டியுள்ள பாடல்கள் எல்லாமும் அளவடி வெண்பாக்களேயாகலின், அப்பாடல் வகையே பெரும் பொருள் விளக்கம் மேற்கொண்ட பாடல் வகை என்னும் உறுதிப்பாட்டாலேயே அவை தொகுக்கப்பட்டனவாம். புறப் பொருள் வெண்பா மாலை அதே அளவடி வெண்பாவைத் தானே மேற்கோளாகக் கொண்டது என்பது ஒப்பிடத் தக்கதாம். என்றேனும் எங்கேனும் பெரும் பொருள் விளக்கம் முற்றாகக் கிடைக்க வாய்ப்பினும், அதனாலும் இத்தொகை முயற்சி, ஒரு திரட்டாக அமையுமேயன்றி அதற்கு முரணாக அமையாது எனக் கொள்க. இனிச் சில வெண்பாக்கள் வேறு நூலைச் சேர்ந்தன எனப் பின்னை வாய்ப்பாலும் ஆய்வாலும் அறிய வருமெனினும், அதனாலும் இத்தொகைக்குக் குறைநேர்ந்து விடாது. என்னெனின் மலரை மாலையாக்கி வைத்த கட்டமைதிதானே இது. 3. நூலும் உரைவிளக்கமும் வெட்சித் திணை நிரைகோடல் (பகைவரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளுதல்) 1) வெவ்வாய் மறவர் மிலைச்சிய வெட்சியால் செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்கும் கழலொலி ஆங்கண் படாலியரோ போர்க்கும் துடியொடு புக்கு. - பு.தி. 1246 மேற்கோள் : இது நிரைகோடற்கு எழுந்தோர் படையியங்கு அரவம் கண்டோர் கூற்று (தொல். புறத். 3. நச். மேற்.) பொருள் : கொதிக்கும் வாய்மொழியுடைய மறவர் சூடிய வெட்சிப் பூவால் செவ்வானம் பரவிச் செல்வது போல் செல்கின்றார். போர்விம்ம ஒலிக்கும் துடிப் பறையின் முழக்கத்துடன் சேர்ந்து எவ்விடத்தும் அவர்கள் கட்டிய கழலொலி அவியாதிருப்பதாக. விளக்கம் : வெவ்வாள் என்பதும் பாடம். ஆநிரை கவர்தற்குச் சினந்து செல்கின்றாராகலின் அவர்கள் கொதிப்பை வெளிக்காட்டலே சிறப்பாகலின் வெவ்வாய் என்றல் பொருந்தும். வாய்சினந் துரைத்தல் கூறவே அகச்சினம் உண்மை பெறப்படும். ஆகோள் மறவர் வெட்சிப் பூச்சூடுவராகலின் மிலைச்சிய வெட்சி என்றார். பறையொலியினும் விஞ்சக் கழலொலியே மறவர்க்கு இன்பமும் வீறும் ஊட்டுமாகலின், துடியொடு புக்கு ஆர்க்கும் கழலொலி படாலியரோ என்றார். படாமை - ஒலியவிந்து பாடின்மை. ஆகோளுக்கு எழுங்கால் எழுந்தார் ஊர்க்கண் அறைந்தபறை இஃதாம். வீரரை ஒருக்கணித்துத் திரட்ட அறைந்த பறை என்க. இயைப்பு : மறவர் செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார்; துடியொடு புக்குக் கழல் ஒலி படாலியரோ என இயைக்க (1) நிரைகோடல் (பகைவர் கவர்ந்து கொண்ட பசுக்களைக் மீளக் கொள்ளுதல்) 2) அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் காழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளான் விறல் வெய்யோன் யாதாம்கொல் வாளார் துடியார் வலம் - பு.தி. 1245. மேற்கோள் :இது மீட்டற்கு எழுந்தோர் படையிடங்கு அரவம்.கண்டோர் கூற்று (தொல். புறத். 3 நச்.) பொருள் : அந்தோ! கடிய நடையால் அடி அதிரும் ஆரவார மிக்க கடுங்கண் மறவர், வெட்சியார் கவர்ந்த ஆநிரைகளைப் பெயர்த்தற்குச் சினந்தெழுந்தார். வலிமையால் பகைவரும் விரும்பும் அவர்கள் மடிவளம் பெருகிய ஆநிரைகளை மீட்டாமல் தாம் மீளார்; வாள் நெருங்க நின்று துடிகொட்டுவார் பெறும் வளம் எத்துணைத்தாமோ? யாம் அறியோம். விளக்க : அடியதிர்தல் - நிலம் நடுங்க நடையிடல். வெட்சியார் ஆநிரை கவர்ந்தமை ஊர்க்கு உரைத்து ஒருங்குடன் செல்ல வேண்டிற்றாகலின் துடியொடும் ஆர்ப்பொடும் புறப்பட்டார் என்க. கதழ்தல் - எரியெனச் சினத்தல். ஈன்றணிய ஆக்களை நினைந்து மடிநிரை என்றார். th§Fe® iftUªJ« mšyJ jh‹ Fiwah¤ jifikaJ vd ts¥ bgU¡F¡ fh£LthuhŒ ‘Joa® ts«ahjh«? என்றார். ஆபெயர்த்தோர் துடியர் முதலோர்க்கு எண்ணிப் பாராது ஈதல் வழக்கு ஆதலின். அன்னாய் என்பது அம்மா, ஐயோ, அந்தோ என்பன போல இரங்கற் குறிப்பாம். விளியன்று. ஹியைப்பு : ஆபெயர்த்தற்கு மறவர் கதழ்ந்தார்; பிரைமீளாது மீளார்; துடியர் வளம் யாதாம்? என இயைக்க (2)பாக்கத்து விரிச்சி (ஊர்ப்புறத்துக் கேட்ட நற்சொல்) 3) திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோன் ஏற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வையம் இறையோர்க் களிக்குமால் வல்லையே சென்மின் வழி பு.தி. 1239. மேற்கோள் : சுருக்கேறிய கன்னத்தையும் வெளிறிய வாயையும் கற்றையாய் வீழ்ந்து தொங்கும் மீசையையும் உடைய நரைமூதாளன் இப்பொழுது உரைத்த சொகினம் (சகுனம்), பகைவர் ஆநிரையை அன்றிக் கடல் சூழ்ந்த நிலப்பரப்பை யெல்லாம் வேந்தர்க்குத் தரும்; ஆகலின் விரைந்து ஆகோளுக்குத் தக்க வழியிற் செல்க. விளக்கம் : தாடி-மீசை: இரலை, மருப்பிற் றிரிந்து மிறந்து வீழ்தாடி (கலி. 15) என்பதால் இப்பொருளதாதல் அறிக. நற்சொல்லாவது விரிச்சி. இதனை சொகினம், பறவாப்புள், நல்வாய்ப்புள் எனவும் கூறுவர். செல்வார் செல்லும் வினை செவ்விதின் நிறைவேறச் சொல்லும் சொல்லும் (உருவிலிச் சொல் அல்லது அசரீரி) பறவை முதலியவற்றின் ஒலியும் விரிச்சி என்க. விரிச்சி கண்டும் கேட்டும் கூறுவோன் முதுமை விளங்கத் திரைகவுள்.... முதியோன் என்றார். இன்று என்பது இந்நாள் எனச் சுட்டாமல் இப்பொழுது எனக் குறித்து நின்றது. செல்வது நிரைகோடற்கே எனினும் பின் விளைவையும் எண்ணி நிரையன்றி என்றான். இது முதியோன் உரையைக் கொண்டு கூறியது. நற்சொல்லின் நனிசிறப்பை ஓர்ந்து, எல்லைநீர் வையம் இறையோர்க்களிக்குமால் என்றான். உலகம் பொது என்னும் சொல்லை வேந்தர் பொறார் என்பது வழக்காதலின் இவ்வாறுரைத்தான். வாய்க்குங்கால் வினையை விரைந்தாற்றல் முறைமையாகலின் குத்தொக்க சீர்த்த இடத்து என்பதுபோல் (திருக்.490) வல்லை என்றான். வல்லை-விரைந்து. இயைப்பு : முதியோன் உரைத்த சொல் நிரையன்றி வையம் இறையோர்க்கு அளிக்கும்; வல்லைநீர் சென்மின் என இயைக்க. (3) செலவு (செல்லுதல்) 4) பிறப்புலம் என்னார் தமர்புலம் என்னார் விறல் வெய்யோர் வீங்கிருட்கண் சென்றார் - நிறையும் கடாஅம் செருக்கும் கடுங்களி யானை படாஅ முகம்படுத் தாங்கு. மேற்கோள் : நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டு நின்று மீண்டும் போய்ப்பற்றார் புலத்து ஒற்றர் உணராமல் பிற்றை ஞான்று சேறல் - கண்டோர் கூற்று. தொல்.புறத். 3.நச் பொருள் : வலிய ஆகோள் மறவர் தாம் செல்லுமிடம் பிறர் நாட்டகத்தது என்று எண்ணாராகவும், தம் நாட்டகத்தது என்றும் எண்ணாராகவும் நிறைந்த மதத்தால் செருக்குற்ற களிப்பில் திரியும் பரிய யானைக்கு முகபடாத்தை வைத்தாற் போலக் கப்பிக் கிடக்கும் காரிருள் இடையே சென்றார். விளக்கம் : இருள்கிடக்க வீரர் செல்லுதல் யானையின் முகபடாம் முற்படவும், யானையின் கருநிறம் பிற்படவும் காணும் காட்சியைக் காட்டுவதாம். வீரர் முகபடாமும், இருள் களிறுமாம். பிறர்புலம் எனின் அச்சம் மீதூரலும், தம் புலம் எனின் உரிமை மீதூரலும் ஏற்படும் ஆகலின் அவ் விரண்டும் இலராகச் சென்றார் வீரர் என்றற்குப், பிறர்புலம் என்னார் தம்புலம் என்னார் என்றார். ஆங்கு - உவமை உருபு. ஆயிருட்கண் - ஆ சுட்டு நீண்டது. வீறு தோன்றுமிடத்து வெய்யோராதலேயன்றிப் பிறிதிடத்து விரும்பத் தக்கோராம் என்றற்கு விறல் வெய்யோர் என்றார். யானையை, நிறையும் கடாஅம் செருக்கும் கடுங்களியானை என்றது, அந்நிலையில் தறிகெட்டுப்பாகர் ஆணையையும் கடந்து எங்கும் மதர்த்துத் திரிதலைக் குறிக்கு முகத்தான் எங்கும் காரிருள் கப்பியுள்ளமை காட்டினார். இயைப்பு : விறல் வெய்யோர், யானைப் படாஅம் முகம் படுத்தாங்கு, ஆயிருட்கண் சென்றார் என இயைக்க . (4) செலவு (செல்லுதல்) 5) கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை எங்கும் மறவர் இரைத்தெழுந்தார்-நும் கிளைகள் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிப்பீர் கண்டு பு.தி. 1246. மேற்கோள் : இஃது ஆ பெயர்க்கச் செல்வோர் போகிய செலவு. கண்டோர் கூற்று. (தொல்.புறத். 3.நச்.) பொருள் : கங்கையாறு பரவிச் செல்வது போலக் காட்டில் அமைந்த பெரிய கவர்த்த வழிகளில் எல்லாம் வீரர் நிறைந்து எழுந்தனர். ஆதலால், கன்றுகளே நும் தாயராம் ஆக்கள் நீங்கள் உறையும் தொழுவினைக் காணும் ஆர்வத்தால் மடியில்பால் சுரந்து ஒழுக விரைந்தெய்தும். நீங்கள் மெய்யாகவே அவற்றைக் கண்டு மகிழ்வீர். விளக்கம் : ஆ மீட்டதற்குச் செல்லும் படையின் பெருக்கத்தை யும் அதன் விரைந்த செலவையும் குறிப்பாராய்க் கங்கை பரந்தாங்கு என்றார். இது நச்சினார்க் கினியர் பாடம். கங்கை கவர்ந்தாங்கு என்பது புறத்திரட்டுப் பாடம். வீரர் செலவு குறித்ததாகலின் கவர்ந்து வருதலாம். பின்னிலையினும் பரந்து செல்லுதலாம். முன்னிலையே தகுமெனக் கொள்ளப் பட்டதாம். காட்டை ஊடறுத்துக் கொண்டு செல்லும் யாற்றைப் போல இவரும் காடும் இருளும் ஊடறுத்துச் சென்றார் எனக் கொள்க. கவலை- கவுர்த்த வழி. கன்றுள்ளிக் கனைப்புச் சோர்தல் ஈன்றணிய மாடுகளுக்கு இயல்பாகலின் மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப என்றார். எழுந்த எழுச்சி கண்டே இவர் மெய்குளிப்பீர் கண்டு என்றார், வீரர் மாட்டுக் கொண்ட உறுதிப் பாடும் அவர் காட்டிய எழுச்சிப்பாடும் ஊட்டிய தெளிவு பாட்டால் என்க. இயைப்பு : கன்றுகாள்! மறவர் இரைத் தெழுந்தார்; நும்கிளைகள் தோன்றுவ; மெய் குளிப்பீர் என இயைக்க. (5) ஆகோள் (ஆநிரைகளைக் கவர்தல்) 6) கடல்புக்கு மண்ணெடுத்த காலேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதார் உள்ளத் துரந்து நிரைமீட்ட தோள். பு.தி. 1247. மேற்கோள் : தொடலைக் கரந்தை எனக் கரந்தை சூடினமை கூறினார்; தன்னுறு தொழிலான் நிரைமீட்டலின் இது கண்டோர் கூற்று. (தொல். புறத். 3.நச்.) பொருள் : கரந்தை மாலை சூடிப் பகைவர் கூட்டம் நினையுமாறு வென்று நம் ஆநிரைகளை மீட்டு வந்த தோளாற்றல். கடலின்கண் புகுந்து நிலத்தை மீட்டு வந்த கரிய வராகத்தின் கொம்புகளினும் மிகுந்த வலிமை பெற்றதாகும். விளக்கம் : இரணியாக்கன் என்பான் நிலத்தைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலுள் புகுந்தானாகத் திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பால் நிலத்தை மீட்டு வந்ததாகக் கூறப்படும் தொன்மத்தை (புராணத்தை) உட்கொண்ட உவமை இது. வராகத்தின் கொம்பின் ஆற்றலைக் கரந்தையார் தோளாற்றலுக்கு உவமைப்படுத்தினார். இவர் வெட்சியார் கொண்டு சென்ற ஆக்களை மீட்டுவந்த வலியர் என்பதால். மிடல் - வலிமை. மாதோ - வியப்புப் பொருள் தருவதோர் இடைச்சொல். தொடலை - மாலை, தொடுக்கப்படுவது ஆகலின், இது பூவும் தளிரும் இலையும் கொண்டு தொடுக்கப் படுவது என்ப. கருதார் - பகைவர். கருதாதார் என்பவரும் அவர். கருதார் குழாஅம் என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் கருதாதார் உள்ள என்றது ஈடு இணையிலாப் பீடுறுபெருமிதம் கருதி என்க. துரந்து - துளைத்து. துரப்பணம் என்னும் குடைகருவி யுண்மை அறிக. இனித் துரந்து என்பது எறிந்து (கொன்று) என்னும் பொருட்டதுமாம். இயைப்பு : கரந்தை மறவர் தோள் ஏனக் கோட்டின் மிடல் பெரிது எய்தின என இயைக்க (6) நோயின்றுய்த்தல் (ஆநிரைகளுக்குத் துன்பம் இல்லாமல் பேணிக் கொண்டுவருதல்) 7) கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையும் நிரையென்னோ தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை. பு.தி. 1248. மேற்கோள் : இது கரந்தையார் (ஆநிரையை) நோயின்றுய்த்தது. கண்டோர் கூற்று. (தொல். புறத். 3. நச்.) பொருள் : தெளிவுடையதும் கற்கள் பரவிக் கிடப்பதுமாம் காட்டாற்று இனிய நீரைக் கரந்தைவீரர் பருகுதற் கும் செல்லா வகையில், கரடுகள் அமைந்த சிற்றூர்த் தொழுவங்களைக் காணும் ஆர்வத்தால் ஆநிரைகள் மெல்ல நடவாவாய் விரைந்து வரும்! கன்றின்மேல் ஆநிரை கொண்ட அன்பு எத்தகைத்து! விளக்கம் : மெல்ல நடவா விரையுநிரை - ஒல்லென என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். ஒல் என்பது ஒலிக்குறிப்பு. காட்டாற்று நீர் சலசலத்துச் செல்லுதலைக் குறித்தது. அறல் - தேய்ந்துபட்ட கல்லும் மணலும். தீநீர் - இனிய நீர். மள்ளர் - மறவர். கடை என்றது தொழுவத்தை. ஆங்குக் கன்று நிற்றலால் ஆர்வமுந்த விரைந்தன. ஆநிரை என்க. அவை விரைந்து வருதலைக் கடுவரை நீரில் கடுத்துவர என்பார் வெண்பாமாலை யுடையார் (வெட்சி. 11) ஆநிரைகளோடு மள்ளர் விரைந்து வந்ததையன்றி வேறு வகையில் அவற்றை ஓம்பி இன்புறுத்தியமை இப்பாடலில் இல்லையே எனின், ஆநிரையின் விருப்புணர்ந்து தம் விருப்பை வீரர் ஒடுக்கிக் கொண்டதே அவற்றை ஓம்புதலாம் என்க. அன்றியும், அவற்றை மடக்கி நிறுத்தித் தம் வேட்கையை நிறைவித்துக் கொள்வர் மள்ளர் எனின், அவை துன்புற்று நோயின்று வெதும்ப இடனாக்கினார் அவரென்க ஆகலின்இது உய்த்தல் என்பதற்குப் பொருந்துவதாம். இயைப்பு : மன்னர் நீர் பருகவும் நடவா வகை நிரை விரையும் என இயைக்க. (7) நுவலுழித் தோற்றம் (மீட்டு வந்த ஆநிரை கண்டதாய், அதனை வினவிய சிறப்பு) 8) காட்டகம் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான் மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக் கலுழும் என்னெதிர்ப் பட்டாயோ என்று. பு.தி. 1249. மேற்கோள் : இது கரந்தை நுவலுழித் தோற்றம் : கண்டார் கூற்று (தொல். புறத். 3. நச்.) பொருள் : காட்டிற்குச் சென்று தன் உயிரைப் பொருட்டாக எண்ணாமல் பெரிய மடி ததும்பப் பால் சுரந்து நிற்கும் ஆவினை மீட்டு வந்த மகனைத் தாய் எதுவும் வினவினாள் அல்லள். ஓடிவந்து தன் எதிரே தோன்றி ஈன்றணிய ஆவினைத் தழுவி நீ என்ன துன்பப் பட்டாயோ என்று வினவிக் கண்ணீர் சொரிந்தாள். விளக்கம் : காட்டகம்-காடு: காட்டின் ஊடறுத்துச் சேறலின் காட்டகம் சென்று என்றார். சுரை-மடி; புனிற்று ஆ-ஈன்றணிய ஆ. ஈன்றணிய ஆ ஆகலின் கடுஞ் சுரையது ஆயிற்று. என்னது பட்டாயோ என்றது என்னென்ன துன்பங்களெல்லாம் பட்டாயோ என்று வினாவியது. mtŸj‹ m‹ò Ûö®jiy¡ TWthuhŒ¤ ‘jæï¡ fYG«’ v‹wh® ‘v‹dJa U‰whnah?’ ‘v‹dJ g£lhnah? என்பனவும் பாடங்கள். முன் அடி நோக்கின் என்னெதிர் என்பதன் பொருத்தம் - விளங்கும். மகன் உயிர் போற்றாது சென்ற அருமை நோக்கி அவன் மீண்டதற்கு உவகையுற்றதை வெளிப்படக் காட்டாளாய் ஆவினை அவள் தழுவியது அதன் பிரிவு தாங்காத பேரன்பு வெளிப்படுத்துவது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது உயிர்ப் பொதுவாகக் கண்ட குறிப்பு இது. அன்றியும் தன்மைந்தன் வீரமாண்பை அவள் வெளிப்பட அறிவாள் ஆகலின் அவன் செயலும் மீட்சியும் அவளுக்கு வியப்புத்தந்தில. பிரியாப் பசு தன் கன்றைப் பிரிந்து மீண்ட இன்ப அன்பே பெரிதாயிற்றென்க. வாய்மொழி அறியா அதன் தாயன்பு மாண்மைத் தாயறிந்து போற்றிய தகவு ஈதென்க. மேய்த்தற்கு ஓட்டிச் செல்லும் போழ்தும் தாயும் சேயும் படும் பாட்டை அறிந்தவள் தழுவிக் கலுழ்தல் நிகழாதவை அல்லவாம்! இயைப்பு : வினவுறாள்; கலுழும் என இயைக்க. (8) பாதீடு (பகுத்துத் தருதல்) 9) யாமே பகர்ந்திட வேண்டா இனநிரை தாமே தமரை அறிந்தனகொல் - ஏமுற அன்றீன்ற தம்மை அறிந்துகொள் கன்றேய்ப்பச் சென்றீயும் ஆங்கவர்பாற் சேர்ந்து பு.தி. 1250. மேற்கோள் : இது கரந்தை பாதீடு. இது மறவர் கூற்று. ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலின் பாதீடு ஆயிற்று (தொல். புறத். 3.நச்.) பொருள் : யாம் முன்னின்று அவரவர் ஆ நிரையை அவர் களுக்கு உரிமை சொல்லித் தருதல் வேண்டா. அவ்வாநிரைதாமே தமக்குரியாரை அறிந்து கொண்டன போலும் விருப்பம் முந்துதலால், அன்று ஈன்ற ஆவே எனினும் அதனை அறிந்து கொள்ளும் கன்றினைப் போல ஆநிரை அவரவரைச் சென்றடைவனவாம். விளக்கம் : ஆவை உரியாரைத் தேடித் தரவேண்டும் என்று இருந்தவர்க்கு அவ்வா தானே உரியாரைச் சேர்தலால் யாமே பகர்ந்திட வேண்டா என்றார். யாமே பகுத்திடல் வேண்டா என்பதும் பாடம். ஏம் உற - ஏமுற: விருப்பம் பொருந்த. விருப்ப முடைமை மறவாமைக்கும், அடையாளம் காண்டற்கும் அடிப்படை ஆகலின் ஏமுற என்றார். அன்றீன்ற கன்றும் என்பதில் உள்ள உம்மை ஏனைக் கன்றுகளையுரைக்க வேண்டுவதில்லை என்பது குறித்து நின்றது. தம்மை என்றது தமக்குதவிய தாய்ப்பசுக்களை, இளங்கன்று தாயை நாடுதல், பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடல் என்பதால் (நாலடி. 101) விளங்கும். தாம்தம், கன்றுகுரல் கேட்டன போல, நின்று செவி ஏற்றன சென்றுபடுநிரையே என்பது தகடூர் யாத்திரை. இயைப்பு : இனநிரை தாமே அறிந்தன; யாமே பகர்ந்திட வேண்டா; ஆங்கவர்பால் சென்றீண்டும் என இயைக்க. (9) படைச்செருக்கு (படைஞரின் பெருமிதம்) 10) வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால் தாள்வல் இளையவர் தாம் செல்லின் - நாளைக் கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர். - பு.தி. 1237. மேற்கோள் : இப்பாடலைப் படைச் செருக்கில் காட்டினார் நச். (புறத்.3) நிரைகோடல் என்னும் அதிகாரத்தில் தொகுத்தார் புறத்திரட்டார். இது நிரை கவர்தலைப் பற்றியது ஆதலால் வெட்சித் திணையினதாம். வயவேந்தன் ஏவல் என்பதால் மன்னுறு தொழில் இது கண்டோர் கூற்று. பொருள் : வாட்போரில் தேர்ச்சி மிக்க வலிய வேந்தனின் ஏவலால் முயற்சி நிரம்பிய இளைய வீரர் ஆகோள் கருதிச் சென்றால் நாளைப் பொழுதில், ஆர்வமீதூரக் கனைக்கும் ஆநிரைகள் தம் கன்றுகளை நினைந்த அளவால் பொழியும் பாலல் இவ்வூர் நனையும் போலும். விளக்கம் : வேந்தன் சிறப்பை வாள்வலம் பெற்ற வயவேந்தன் என்பதாலும், வீரர் சிறப்பை, தாள்வல் இளைர் என்பதாலும் குறித்தார். இளையவர் செல்லின் ஊர் பாலால் நனையும் என்றது வீரர்தம் ஆற்றலறிந்த உறுதியாம். இவ்வழிச் சென்றான் திருடு கொடுத்தான் என்பது போலக் கொள்க. கன்றுள்ளக் கறவை பொழிதல் அதன் வளத்தையும் உளத்தையும் உரைப்பதாம். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்னும் கோதையார் வாக்கையும், இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்றுள்ளி மடித்தலம் நின்றிழி பால் அருவி என்னும் குமர குருபரர் வாக்கையும் நோக்குக. இச்செய்தி மேலும் வரும். இஃது உயர்வு நவிற்சியணி. இயைப்பு : இளையவர் செல்லின் ஊர் பாலின் நனைவது போலும் என இயைக்க. (10) தெய்வம் பராயது (தெய்வத்தை வாழ்த்தி வழிபட்டது) 11) வந்த நிரையின் இருப்பு மணியுடன் எந்தலை நின்தலை யான்தருவன் - முந்து நீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு. - பு.தி. 1238. மேற்கோள் : இது தெய்வத்திற்குப் பராயது என்பார் நச். (தொல்.புறத்.3). நிரைகோடலில் தொகுத்தார் புறத்திரட்டார். மறவர், முன்னிலைப் பராவல் பொருளது இது. பொருள் : யாம் கவர்ந்து கொண்டு வந்த ஆநிரையின் இரும்பு மணியுடன் எம் தலைகளையும் நின்னிடத்து யாமே தருதும். ஆகலின், கொற்றவையே, முதற்கண் எம்கொடையைப் பெற்றுக் கொண்டு வீறுமிக்க எம்வேந்தன் செங்கோல் சிறக்கும் வண்ணம் வெற்றி தருவாயாக. விளக்கம் : ஆகோள் மள்ளர், ஆகோள் சான்றாக இருப்பு மணியுடன்தம்தலையும்தருவதாகவந்த....jUJ«’ என்றார். வந்த என்ற காலமயக்கம் உறுதிபற்றியது. நின்றவை எம்தலை தருதும் என்றது தம் தலையைத் தாமே கொய்து கொற்றவைகையிšகொடுத்தலை¡குறித்ததாம். அடிக்கழுத்தினுடன்சிரத்jஅரிவராலேh அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ என்னும் கலிங்கத்துப்பரணி (கோயில். 15)கருத¤தக்கது. தலைதராத முன்னரே முந்து நீ மற்றவை பெற்று என்றது வினைவேறு சொல்வேறு படாத ஆண்ட கையர் ஆகலான் கொடுப்பேம் என்று குறித்ததே கொடுத்தது ஆயிற்றாம் என்க. வேந்தன் போர்வெற்றியினும் அவன் செங்கோல் வெற்றியே மக்கட்கு நலம் பயப்ப தாகலின் கோலோங்கக் கொற்றம் கொடு என்றார். யாம் தருவன ஆநிரை மணியும் எம்தலையும் என இரண்டாக்கிக் கொற்றவையிடம் வேண்டுவது கொற்றம் ஒன்றுமே என்பாராய்க் குறித்தநயம். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது போன்றதாம். இயைப்பு : கொற்றவை, யான்தருவன் கொற்றங்கொடு என இயைக்க (11) வஞ்சித்திணை (இயங்குபடை அரவம்) 12) Éண்ணசைஇச்bசல்கின்றnவலிளையர்Mர்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் உள்ளம் இருபாற் படுவ தெவன். - பு.தி. 1255. மேற்கோள் : இயங்கு படை அரவம் என்பதற்கு எடுத்துக் காட்டு (தொல்.புறத்.8.நச்.) பொருள் : விண்ணுலகு எமக்கு எய்தட்டும் எனப் போரை விரும்பிச் செல்கின்ற வேற்படை வீரர் ஆரவாரிக்க, மாற்றார் மண்ணை விரும்பிச் செல்கின்றான் வாட்படை வேந்தன். வேந்தனும் வீரரும் இவ்வாறு ஒருப்பட்டுச் செல்வதைக் கண்ட பகைவர் தம் உள்ளத்தில் ஒருபாற்படுதல் இலராய் இருபாற் பட்டனர்! ஈ தென்னே! விளக்கம் : ஒருபாற்படர்தர இருபாற்படுவது எவன் என்றது முரண் வழிவந்த நயம். விண்ணசையினர் வேலிளையர்; மண்ணசையினன் வாள்வேந்தன். இருவர் நசையும் ஒருபாற்படுதல் போர்க்களத்தில் ஒருமைச் செயலாற்றுதலாம். ஒன்னார் - ஒன்றார் - பகைவர். அவர்கள் வீரரும் வேந்தரும் ஒருப்பட்டுப் பொருவான் நிற்றலைப் பார்த்த அளவால் உய்வோமோ உய்யோமோ எனத் தோன்றிய ஐயம். இருபாற்பட்டுச் சேறல் கவலை எனப்படும். ஐயம் கிளர்ந்த அளவான் இனி வெல்லார் என்பது தெளிவாம். அவர்தம் ஐயமே அவர்க்கு அழிவாக முந்து நிற்கும் என்க. விண்ணுல காள்வை நோக்கிச் செல்லும் துணிவு மிக்க வீரர் அச்சம் என்னும் பெயர்தானும் அறிவரோ? எண்ணம் ஒருபாற்படர்தல் என்பது ஊக்கம், உரன் என்பவற்றின் விரியாம். உடையர் எனப்படுவது ஊக்கம் உள்ளம் உடைமை உடைமை உரமொருவற் குள்ள வெறுக்கை (ஊக்கமுடைமை) இம்முக்குறள்களின் முச்சீர்களின் முடிபுகளையறிக. ïia¥ò : ‘ïisa® M®¥bgL¥g; ntªj‹ brš»‹wh‹; x‹dh® cŸs« ïUgh‰ gLtJ vt‹? என்றியைக்க. இயங்குபடை அரவம் (படை செல்லும் போதுண்டாம் ஒலி) 13) போர்ப்படை ஆர்ப்பப் பொடியாய் எழுமரோ பார்ப்புர(வு) எண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது. - பு.தி. 1256. மேற்கோள் : இஃது எதிர் செல்வோன் படையரவம் (தொல். புறத்.8.நச்) பொருள் : தன் ஊர்ப்புறத்தின்கண் நிற்றலை விரும்பாத படைகள் நிலம் நெளிந்துபட நெடிய இடங்கடந்து பகைவர்மேற் செல்லும் பொழுதில், போர்வேட்ட படையினர் ஆர்த்தெழும் அவ்வளவாலேயே நிலத்தில் இருந்து பூழ்தி எழும்! வேந்தன் பார்காத்தல் கடனாளன் தான் என்பதைப் போரின்கண் எண்ணான் போலும்! விளக்கம் : காத்தல் கடனுடையானாம் காவலன் அதனைக் கருதான் போலும் என்றது சுவைமிக்கது. தன்னாட்ட வர்க்குத் தண்ணியனாம் காவல் குடையுடைய வேந்தன், பகை நாட்டவர்க்கு வெங்கொடும் கொலைப்படையுடையனாதலைக் குறித்தார். போர்ப்படை ஆர்த்த அளவால் பொடி யாம் என்றது கண்சிவக்க வாள்சிவக்கும் என்பது போன்றது! அவன் படை ஓர் வீறு உரைத்தது. பார்ப்புரவு - புவிகாத்தல். புல்லார்- பொருந்தார்; பகைவர். புல்லுதல் - பொருந்துதல். நிலத்தைப் புல்லிக் கிடக்கும் புல்லின் தன்மையும், புல்லிக் கிடந்தேன் எனவரும் குறளின் சொன்மையும் அறிக. இயைப்பு : புல்லார்மேற் செல்லும் பொழுது ஆர்ப்பப் பொடியாய் எழும் வேந்தன் பார்ப்புரவு எண்ணான் கொல் என இயைக்க. (13) தழிஞ்சி (புண்ணுற்ற வீரரைத் தழுவுதல்) 14) தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சிய சீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் துர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். - பு.தி. 1273. மேற்கோள் : அழிபடை தட்டோர் தழிஞ்சி என்பதற்கு (தொல்.புறத்.8.நச்.) எடுத்துக்காட்டு. வென்றும் தோற்றும் மீண்ட வேந்தர் தம்படையாளர் முன்பு போர் செய்துழிக்கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந் தவர்களைத் தாம் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல். தழிச்சுதல் தழிஞ்சியாயிற்று என விளக்குவார் அவர். பொருள் : பலரும் பாராட்டும் புகழமைந்த போர்வேந்தன், களத்தில் படைக்கலங்கள் தாக்குதலால் புண்ணுற்ற வீரர்தம் வீடுகள் தோறும் சென்று, அவர்கள் திறங்களைப் பாராட்டியும் உரிமையால் பரிந்தும் சொல்லிய சொற்களே மருந்தாக அரும்பிய தாடியுடைய வீரர்கள் வெதும்பிப் பெருமூச்சு விடுதற்கு அமைந்த புண் மேடிட்டு ஆறின. விளக்கம் : பாசறை வேந்தன் என்றது, படைவீரர் பட்ட பாடுகளை உடனாகி இருந்து பொருத காலை அன்றிப் பாசறைக்கண் உடனாகித் தங்கியிருந்த சிறப்புக் குறித்து நின்றது. வாள் என்றது படை என்னும் பொதுமை குறிப்பது. கணையும் வேலும் பிறவும் குறித்தலின். பழிச்சிய சீர் என்றது வேந்தன்பாடு புகழ் சுட்டியது. அவன் சொல்லிய சொல்லின் அருமையும் பெருமையும் குறிப்பாராய், விழுச்சிறப்பிற்..... மருந்தாக என்றார். தூர்தல்-மேடிடுதல். இவண் ஆறுதல். புல்லணல் - புல்லிய தாடி என்றார் புறநானூற்று உரைகாரர். புண்ணின் கடுமை காட்டுவது வெய்துயிர்க்கும் என்பது. அன்பு மீதூர்ந்து சொல்லும் அருமருந்தாம் என்பது உலகறிந்த உண்மைச் செய்தி. மருந்துவத் தினும் சிறந்தது மருத்துவர் சொல்லும் சொல் என்பது கொள்ளத் தக்கது. பரிவிற் சிறந்த மருந்து பாரில் இல்லை என்க. அப்பரிவும் தாம் மதித்துப் போற்றும் தலைவன் வழியே வருவதாயின் ஈடும் இணையும் இல்லது என்பது தெளிவாம். புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா, டிரந்துகோள் தக்க துடைத்து என்னும் குறள் எண்ணத்தக்கது. இயைப்பு : வேந்தன் சொல் மருந்தாகப் புண்தீர்ந்தன என்று இயைக்க. (14) உழிஞைத் திணை கொள்ளார்தேஎம்குறித்த கொற்றம் (பகைவர் நாட்டைக் கொண்ட வெற்றி) 15) மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி அமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்(கு) - ஏற்ற படையொலியில் பாணொலி பல்கின்றால் ஒன்னார் உடையன தாம்பெற் றுவந்து - பு.தி. 1272. மேற்கோள் : கொள்ளார் தேஉங் குறித்த கொற்றம் என்பதற்கு (தொல்.புறத்.12.நச்.) எடுத்துக்காட்டு. தன்னை இகழ்ந்தோரையும் தான் இகழ்ந்தோரையும் கொள்ளார் என்ப என்றும் விளக்குவார் அவர். பொருள் : தமக்கு மாறான மன்னர் நாடுதொறும் தேர்கள் நெருங்க அவர்தம் போர்க்களங்களைக் கொண்ட வலிய பகைநாட்டு வேந்தர் நம் வெற்றி வேந்தர்க்கு எதிரிட்டு நின்றக்கால் எழுந்த படைவீரர்தம் ஆர்ப்பொலியினும் பாடிப் பெறுதற்கு வந்த பாணர் ஒலிமிகுதியாயிற்று; பகைவர்தம் உடைமையாக இருந்தன எல்லாமும் தாம் கொளப்பெற்று மகிழ்ந்து. விளக்கம் : பகைவர் எளியரல்லர்; வலியர் என்றுதெளிவித்தற்குமாற்றுப்....ntªj®’ என்றார். அவரையும் இவர் வென்றார் என்பதைத் தெளிவிக்க வெல்வேந்தர் என்றார். படை செல்லுங்காலும் பொருங்காலும் ஒலி மல்குதல் இயற்கை. அவ்வொலியினும் பாணொலி மிக்க தென்பது பகைவரிடத்துப் பெற்ற வளங்கள் தாம் பெற வாய்க்கும் மகிழ்வால் என்க. சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிஎன்பாdஊ‹பொâபசுங்குடையா®என்பார், ஒன்னார், ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் பூண்கடன் எந்தைநீ இரவலர் புரவே எனப் பாடுதல் அறியத்தக்கது. பகைவர் மதிலைப் பற்று முன்னரே அதனைப் பாணர்க்குக் கொடையாக்கும் சிறப்பை வெளிப்படுத்திக் கூறினார். பகைவர் நாட்டினைத்தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி என்னும் நச்சினார்க்கினியர் உரையும் கருதத் தக்கது. (புறத்.12). இயைப்பு : வெல்வேந்தர்க்கு, உடையன பெற்றுவந்து பாணொலி பல்கின்று என இயைக்க. (15) உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு (நினைத்ததை நிறைவேற்றும் தலைவன் சிறப்பு) 16) மழுவான் மிளைபோய் மதிலான் அகழ்தூர்ந்(து) எழுவாளோன் ஏற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை. - பு.தி. 1339. மேற்கோள் : உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு என்பதற்கு (தொல்.புறத்.12.நச்.) எடுத்துக்காட்டு. குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும், வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தல் என இதனை விளக்குவார் அவர். பொருள் : கட்டவிழ்ந்த மலர்க்கண்ணிசூடிய பகைவேந்தன், சீற்றத்தைப் பெருக்கி நெய்விட்டதைப் போல் பொங்கி எரிய விட்டமையால் தான் மழுவால் காவல்காட்டை அழித்து உள்ளே புகவும், மதிலை இடித்துத் தகர்த்தலால் அகழியை மேடுபடுத்தவும், ஓங்கி எழும்பும் வாட்படையுடைய வேந்தன் ஏற்றுச் செய்யுமாறு செய்ததாம். விளக்கம் : மறவேந்தன் என்பது பகை வேந்தனையும், எழுவாளோன் என்பது பாடு புகழ் வேந்தனையும் குறிப்பன. காடு அழிவுக்கும், மதில் தூர்வுக்கும் தூண்டியவன் பகைவேந்தனே என்பாராய் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை என்றார். விட்ட மிகை என்பது தொல்காப்பியத்துப் பாடம். இழுமென என்றது அருவி முழக்கத்தையும் இசை முழக்கத் தையும் சுட்டுவது. இவண் சினத்தீ பொங்கி எரிதற்கு வந்தது. இழுது - நெய். எரியும் நெருப்பில் எண்ணெயும் வார்த்தாற்போல என்னும் உவமை வழக்கு எண்ணத்தக்கது. மழு - கோடரி; வெட்டு படை. மிளை - காவற்காடு. ஏற்றுண்டது - ஏறிட்டு நின்று அழிவுறுத்தக் கொண்டது. இயைப்பு : மறவேந்தன் தீ எரிய விட்ட வகை, எழுவாளோன் போய், தூர்ந்து, ஏற்றுண்டதெல்லாம் என இயைக்க. (16) தொல் எயிற்கு இவர்தல் (பழமையான மதிலைப் பற்றல்) 17) இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகம் கைக்கொளான் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசித் தீயால் உயிர்பருகி மாறா மறலி வயிறு. - பு.தி. 1327. மேற்கோள் : தொல் எயிற்கு இவர்தல் (தொல்.புறத்.12.நச்.) என்பதற்கு எடுத்துக்காட்டு. இதன் பொருளை ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்தும் என்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தல் என்பார் அவர். பொருள் : இற்றைப் பகற் பொழுதுள் பகைவர் கோட்டையுள் புகுந்தன்றி அழகிய தேரையுடைய வேந்தன் உணவைக் கையால் தொடவும் மாட்டான். ஆதலால், ஆறுதல் இல்லாத கொடிய பசித் தீயினால் உயிர்களை யுண்டு பசியிலாத கூற்றுவனின் வயிறு என்னாமோ? விளக்கம் : பகல் என்பது பொழுது விழுதற்கு முன்னாம் பொழுதைக் குறித்தது. பொற்றாரான் என்பது நச்சினார்க்கினியர் பாடம் போனகம் - உணவு. கைக்கொள்ளான் என்றமையால் உண்ணாமை வெளிப்படை. என்னாங்கொல் என்பது எற்றாங் கொல் என எதுகை நோக்கி வலித்தது. உயிர்பருகு முன் ஆறாத வெம்பசியாக இருந்த வயிறு, பெருக உண்டலின் மாறாத தாயிற்று. மாறாமை உண்டது அறாமை (செரியாமை). மறம் மறல் மறலி. மறலி - கூற்றவன். மறம் - வீரம். அவன் அழிவு செய்யும் மறலி எனினும் ஒருபாற் கோடாத உள்ளத்தனாகலின் அறவோன் எனவும் படுவான். உட்புகுந்தன்றி உண்ணேம் என்பதற்குக் குறியாக அகப்பையும் துடுப்பும் மதிலுள் எறிந்து விடுதலும், பின்னர் மதிலுள் புகுந்து அட்டுண்ணலும் முந்தையோர் வழக்கு. இயைப்பு : தேரான் போனகம் புக்கன்றிக் கொள்ளான்; மறலி வயிறு எற்றாங்கொல் என இயைக்க. (17) அகத்தோன் செல்வம் (மதிலின் அகத்துள்ளான் வளப்பம் கூறல்) 18) பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போல் அஞ்சி - ஒருவரும் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து. - பு.தி. 1338. மேற்கோள் : அகத்தோன் செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டு (தொல்.புறத்.12.நச்.) அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்; அவை படைகுடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப்பொருள் மேம்படு பண்டங்களும் முதலியவாம் என்பது அவர் விளக்கம். பொருள் : போரிட்டு வந்து அப்போர்த் தன்மை மாறாத ஆண்புலி உறையும் கிட்டுதற்கு அரிய மலையைக் கண்டார்போல், பகைவர் எவரும் அச்சத்தால் அணுகுதற்கு இல்லாத மதிலுள்ளே தேர்ப்படைச் சிறப்புவாய்ந்த வேந்தன், தன்னை வேண்டிவந்தார் அனைவருக்கும் அவர் வேண்டுவன எல்லாம் கொடுத்துச் செம்மாந்திருந்தான். விளக்கம் : புலியடித்தது பாதி கிலியடித்தது பாதி என்பது பழமொழி. வேந்தனைப் பொருசின மாறாப் புலிப்போத்துக்கு உவமை கூறினார். பகைவர் நினைக்கவே அஞ்சுவர்; நேரிற் காண நேர்வரோ என்றற்கு. அருவரை - அணுகுதற்கு அரிய மலை; மலைமுழை; வேந்தன் வீற்றிருக்கும் அரண் மனைக்கும், ஓலக்கத்திற்கும் ஆகியது. படையாற்றல் கூறியவர் கொடையாற்றல் கூறுவா ராய் எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து என்றார். ஈட்டிய வெல்லாம் ஈதற்கே என்பதற்கே என்று காட்டுவார் போல ஈந்தார் என்று இவர் கூறியதும் இவண் எண்ணத்தக்கது (35). வீரமும் கொடையும் சேரவே அமைதல் பண்டை வேந்தரியல் என்பதைச் சங்க நூல்கள் பலபடக் கூறுதல் அறிக. இயைப்பு : அஞ்சி ஒருவரும் செல்லா மதிலகத்து எல்லார்க்கும் எல்லாம் கொடுத்துத் தேர்வேந்தன் வீற்றிருந்தான் என்று இயைக்க. (18) குடைநாட்கோள் (கொற்றக்குடையை உரிய பொழுதில் எடுத்துச் செல்லுதல்) 19) பகலெறிப்ப தென்கொலோ பால்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவர் எல்லாம் - அகலிய விண்தஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண். - பு.தி. 1325. மேற்கோள் : குடையும் வாளும் நாள்கோள் என்பதற்கு (தொல்.புறத். 13.நச்.) எடுத்துக்காட்டு. இது புறத்தோன் குடைநாட்கோள் என்பார் அவர். மேலும் நாள் கொளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றிய வழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல் என்பார். பொருள் : பால்போன்ற வெண்மதியும் பகற்கொழுதிலேயே வெதுப்புவது என்னை என்று அச்சமுற்று வலிய மதிலின் அகத்தே உள்ளார் அனைவரும் உள்ளம் நைய, விண்ணளாவ விரிந்த குடைநாட் கோளினைக் கண்டு அஞ்சிக் கண்ணை மூடிமூடி விழித்தனர். விளக்கம் : எறித்தல் - உறைப்பாக வெதுப்புதல். நாடுசுடு கமழ்புகை எறித்தலானே என்பது புறப்பாடல் (6). பால் போலும் நிறமும் தண்மையும் உடையமதி, அது தோன்றுதல் இல்லாத பகற் போதிலே தோன்றி, அது தனக்கியல் பெனக் கொள்ளாத வெதுப்புதலைக் கொண்டிருத்தல் என்னோ என்றார். இது, குடையை மதியாகக் கூறியது. மதிக்குடை என்பார் புகழேந் தியார். இகல்-வலிமை. அரணம்-காவற்கோட்டை. அகலிய - அகன்ற. விண்தஞ்சமென்ன விரிந்த குடை என்றது அதன் அகலமும் தூக்கும் பற்றிய உயர்வு நவிற்சி. தஞ்சமாதல் - தழுவிநிற்றல். சும்பிளித்தல் என்பது அச்ச மெய்ப்பாடுகளுள் ஒன்று. அது கண்ணைப் பொட்டுப் பொட்டடென மூடி விழித்தலாம். போர்ப் பகுதியில் சும்பிளித் தலைச் சுட்டுவார் கம்பர். இயைப்பு : அரணத் துள்ளவர் குடைநாட் கோள் கண்டு கண் சும்பிளித்தார் என்று இயைக்க. (19) குடைநாட்கோள் 20) குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார் விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போல் தோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து. - பு.தி. 1336. மேற்கோள் : அகத்தோன் குடைநாட்கோளுக்கு எடுத்துக் காட்டு இது. (தொல்.புறத்.13. நச்.) பொருள் : மலைமேல் தோன்றும் முழுமதியைப்போல் வேந்தன் கொற்றக் குடை ஒப்பற்ற வகையில் எழுந்து, உயர்ந்த வாயிற் புறத்தே ஓங்கிநிற்கப், பகைவர்தம் விளக்கமிக்க பல குடைகளும் வெள்ளியாம் விண்மீன்போல் தோன்றித் தன் பொலிவெலாம் தொலைந்து நடுக்கம் கொண்டன. விளக்கம் : குன்றின்மேல் உயர்ந்து விளங்கும் திங்கள் என்றமை யால், குடை வாயின்மாடத்தினும் உயர்ந்து நின்றமை குறிக்கப்பட்டதாம். நிவத்தல் - உயர்தல். ஒன்றார் - பகைவர்; கூடார் என்பதும் அது. உள்ளத்தால் ஒன்றுபடாதவர். பகைவர் குடைகளும் விளங்குருவம் உடையனவேனும், வேந்தன் கொற்றக் குடைமுன் தம்மொளி குன்றியதுடன் நடுக்கமும் கொண்டன என்பதை வெண்மீன் போல் என்பதால் குறித்தார். விண்மீன் என்பது நச்சினார்க்கினியர் பாடம். விண்மீனுக்குப் பொதுவான மின்னி ஒளிவிடல் நடுக்கமாயிற்றாம். தோற்றம் தமக்குரியவாம் பெருமைத்தன்மை. இயைப்பு : குடை வாயிற்புற நிவப்ப ஒன்றார் குடைகள் தொலைந்து துளங்கின என இயைக்க. (20) வாணாட் கோள் (வாளை உரிய பொழுதில் புறப்படச் செய்தல்) 21) தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வர் அன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோள் என்று நினைத்து. - பு.தி. 1326. மேற்கோள் : வாள்நாட்கோளுக்கு எடுத்துக்காட்டு (தொல்.புறத். 13.நச்.) இதனைப் புறத்தோன் வாணாட்கோள் என்பார் அவர். பொருள் : தன்னடைந்தார்க்கு முழுமையாக வழங்கும் கொடையாளனாம் வேந்தன் வாள்நாள் கொண்டான் என்பதைக் கேட்ட அளவில் மகளிர் தம்கணவர்தம் நெடிய வாழ்நாளைக் கொள்ளுவான் வந்ததாக நினைந்து, இதுகாறும் அவனையன்றித் தொழுது வணங்காத குற்றத்தை உணர்ந்தவராய்த் தொன்மை யான முழுமுதற் கடவுளை வழிபட்டு அழுதலுடைய வராய் விழாக் கொள்வாராயினர்! அந்தோ! இஃதிருந்தவாறு என்னே! விளக்கம் : முழுதளிப்போன் என்பது முழுதுல காள்வோன் என்பதுமாம். அவன் கொடை நலம் குறித்தது, படைஞர் தம் செய்ந்தன்றியறிதலால் உயிர்க் கொடை தருதற்கும் முந்துவர் என்பதால் என்க. நினதென இலைநீ என்பதால் வேந்தர் தம்மை அடைந்தார்க்கு முழுதுற வழங்குதல் புலனாம் (புறம். 122). இம்முழுதுறு கொடையை அருகாது ஈதல் என்பது முந்தையோர் வழக்கு (புறம். 320). கோள் - கொள்ளுதல். மகிழ்நர் நீள் நாள்கோள் என்றது கணவர் நீண்ட வாழ்நாளைக் கொள்ளுதல். நெடுநாள் இடைப்படுதல் என்பது பொருந்தாதாம். தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் என்பது கொண்டு, தொழுது விழாக் குறை என்றார். நாட்டளவில் விழாக்கோலம் கொள்வ தாகவும் வீட்டளவில் இரங்கல் உண்மையால் அழுது விழாக் கொள்வர் என்றார். இரண்டும் இடையறவு படாமல் நிகழ்தலைச் சொற்புணர்வும் காட்டுமாறு அழுது விழா என்றார். அன்னோ - இரக்கக்குறிப்பு. இயைப்பு : மடந்தையர் நினைந்து, பேணி, விழாக் கொள்வர் என இயைக்க. (21) வாணாட் கோள் 22) முற்றரணம் என்னும் முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - புற்றழிந்த நாகக் குழாம்போல் நடுங்கின என்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து. - பு.தி. 1337. மேற்கோள் : இஃது அகத்தோன் வாள் நாட்கோள் (தொல். புறத். 13. நச்.). பொருள் : பொறிச் சிறப்பாலும் வன்மையாலும் காவற் சிறப்பாலும் முழு முதல் அரணம் என்னும் முகிலில் இடியெழுந்தாற்போல் தோன்றுமாறு வேந்தன் மாறா வெற்றிதரும். வாள்நாட்கோள் கொண்டான். தம் புற்றுகள் அழிபட்ட பாம்புக் கூட்டம் போல் பகைவர் படை நடுக்கங்கொண்டன. விரைந்த செலவுடைய களிற்றுக் கூட்டத்தையுடைய வேந்தன் நிலை இனி என்னாமோ? விளக்கம் : அரணத்தின் சிறப்பறிய முற்றரணம் என்றார். அரணத்தை முகில் என்றார். ஆகலின் வாள்நாட் கோள் முழக்கத்தை இடி என்றார். உருமு - இடி. முகிற்கு உருமு என்பதும் பாடம். தம் புற்று அழிந்து விட்டநாகம் பாதுகாப்பை இழந்துவிட்டமை போல வீரரும் பாதுகாப்பிழந்தனர் என்பதாம். புற்றிழந்த நாகம் என்பதும் பாடம். புற்றிழத்தல், இடிபாடுறலாம். அதனை விட்டுவந்த எனின் பொருள் சிறவாதாம். வேகம் விரைவுடன், சினத்தால் உண்டாம் எழுச்சியையும் குறிக்கும். நாகக் குழாம்போல் நடுங்கின என்பதற்குப் படை என்பது வருவித்துரைக்கப்பட்டது. இயைப்பு : கொற்றவன் நாட்கொண்டான்; வேந்து என்னாங் கொல் என இயைக்க. (22) ஏணிமயக்கம் (ஏணிமேல் ஏறிப் போரிடல்) 23) பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவர் உடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும். - பு.தி. 1330. மேற்கோள் : ஏணிமயக்கம் என்பதற்கு (தொல்.புறத்.18.நச்.) மேற்கோள். அதில் புறத்தோர் ஏணிமயக்கமும் அகத்தோர் ஏணிமயக்கமுமாகிய இரண்டும் ஒருங்கு வருதலுக்கு இது மேற்கோள். ஏணி மயக்கமாவது புறத்தோரும் அகத்தோரும் ஏணிமிசை நின்று போர் செய்தல். பொருள் : ஒன்றொடும் ஒப்பில்லாத உயர்ந்த பழமையான ஊரில் போர் செய்தலை விரும்பி ஒருவருக்கு ஒருவர் பகைத்துப் போரிட எழுந்தனரானால், எதிரிடும் இருவரும் மண்ணில் நிறுத்தி, மதிலில் சார்த்திவைக்கப்பட்ட ஏணி விண்ணுலகுக்குச் செல்லச் சார்த்தி வைக்கப்பட்டதாகி விடும். விளக்கம் : பொருவரு - ஒப்பற்ற. மூதூர் ஊரின் பழமையோடு, குடியினர் பழமையும் ஒருங்கு சுட்டுவதாம். உடலுதல் - எதிரிடுதல், பகைத்தல். விண்ணொடு சார்த்தல் என்பது போரில் உயிர் நீத்தார் விண்ணுலகு புகுவார் என்னும் கொள்கையைக் குறிப்பதாம். மதிலில் சார்த்தப்பட்ட ஏணியில் நின்று பொரும் வீரர் எஞ்சாமல் பொருது வீடுபேறுறு தலைக் குறிப்பதாய் விண்ணொடு சார்த்திவிடும் என்றார். இயைப்பு : உடன்றெழுந்தாராகில், ஏணி விண்ணொடு சார்த்தி விடும் என இயைக்க. (23) நொச்சி 24) தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக் கொல்படை வீட்டும் குறிப்பு. - பு.தி. 1328. மேற்கோள் : இது புறத்தோன் மனங்காத்த நொச்சி என்பார் நச். (தொல்.புறத்.13). நொச்சியாவது காவல். அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலும் என்பார் அவர். பொருள் : வாய்மையைத் தன்னிடத்தே வாங்கிக் கொண்ட வெற்றி கொள்ளும் படையுடைய வேந்தன் பகைவர் ஊரைச் சூழ்ந்து கொல்லும் வலிய பகைப்படையை அழிக்கும் உட்கோள் எத்தகைத்தோ எனின், தாய் தன் கையில் வாங்குகின்ற மகனைத் தனக்கே உரிமையாகப் பேயொன்று வாங்கிக் கொண்டதோர் தகைத்தாகும் என்க. விளக்கம் : வாய் வாங்கு வேந்தன் என்றது, போருக்குப் புறப் படுமுன் வஞ்சினமாக இது செய்வேன் என்று எது கூறினானோ அதனை அப்படியே மெய்ப்பித்துக் கொள்ளுதல். விரும்பாதார் - பகைவர். வீட்டுதல் - அழித்தல். பகைப்படையும் வலியதே என்பார் கொல்படை என்றார். குறிப்பு - குறிக்கொண்டதை நிறைவேற்றும் தன்மை. பெற்றி - தன்மை. தாய்வாங்குகின்றமை அருளிப்பாடு. பேய் வாங்குகின்றமை கொடுமைப்பாடு. தாய் வாங்குகின்றாள் என்று எண்ணிக் கொண்டு தர, அதனைப் பேய் வாங்குகின்றது என்றால் அந்நிலைமை எத்தகைத்து? சாந்தகத்து உண்டென்று செப்பினைத் திறக்கப் பாம்பகத்து உண்டென்று கண்டமை போன்ற எதிரிடைப் பட்டதாம். தாய் கையில் இருந்த மகவை இடாகினிப் பேய் வாங்கித்தன் மடியகத் திட்ட செய்தியைச் சிலம்பு கூறும். அதனை இவ்வுவமையொடு எண்ணத்தகும். தாய் வாங்குகின்ற மகவு என்னாமல் மகன் என்றது போர்க்களங்கருதியென்க. மகளிர் பெயருடையாரையும் போரில் தாக்கக் கூடாது என்பது நச்சினார்க்கினியம். (தொல்.புறத்.10). இயைப்பு : விரும்பாதார் கொல்படை வீட்டும் குறிப்பு, பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்து என்று இயைக்க. (24) புறத்தோன் வீழ்ந்த புதுமை (மதிற் புறத்தோன் மதிலைப் பற்ற விரும்புதல்) 25) வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி ஒதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்தோய் புரிசைப் பொறியும் அடங்கினவால் ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு. - பு.தி. 1329. மேற்கோள் : இது புறத்தோன் வீழ்ந்த புதுமை (தொல். புறத்.13.நச்.). இடைமதிலைக் காக்கின்ற அகத் துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கொண்ட புதுக்கோள் எனப் பொருள் விரிப்பார் அவர். பொருள் : முகில் சூழ்ந்து வானளாவி நிற்கும் மதிலின் பல்வகைப் பொறிகளம் ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் அடக்கம் போல் அங்கே அடங்கின. ஆகலின் கொடிய சினம் கொண்டு வந்த வேந்தன் மதிலைக் கொள்ளுதலை விரும்பும்போது, அஞ்சி அகலாதவர் எவரும் உளரோ? இலர். விளக்கம் : புரிசை - மதில். அதன்கண் பல்வேறுவகைப் பொறிகள் உண்மை சங்க நூல்களால் அறியப் பெறும். வளைவிற்பொறி, கருவிரல் ஊகம், கல்லுமிழ்கவண், பரிவுறுவெந்நெய், பாகடுகுழிசி, காய்பொன்னுலை, கல்லிடு கூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலை அடுப்பு, கவை, கழு, புதை, புழை, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல் என்பன சிலம்பாலும் (15.207 - 216), சதக்கினி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என்பன அடியார்க்கு நல்லார் உரையாலும் அறியப்பெறும் மதிற்பொறிகளாம். புரிசை (கோட்டை) உயரம், மஞ்சுசூழ் வான்தோய் என்பதால் விளங்கும். ஆன்றோர் அடக்கம், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் என்னும் குறளால் விளங்கும். இயைப்பு : ஆன்றோர் அடக்கம் போல் புரிசைப் பொறி அடங்கின; அஞ்சி ஒதுங்காதார் யாவரவர் என இயைக்க. (25) அகத்தோன் வீழ்ந்த புதுமை (அகமதிலோன் புறத்துத் தாக்குவாரை வெல்ல விரும்புதல்) 26) தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்(து) ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண்(டு) இடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார் அடிபுறத் தீடும் அரிது. - பு.தி. 1340. மேற்கோள் : இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை (தொல்.புறத். 13.நச்.). பொருள் : முன்னெறி முட்டுதற்காகப் பின்னே பெயர்ந்து செல்லும் கடாவைப் போல், மதிற்கண் ஊக்கமிக் குடைய வீரர் பின்வாங்கி மறையவும் முகிற்கூட்டம் நெருங்குதலால் இடியெழுந்தாற்போல் எதிர்முட்டி வந்தனர்; ஆதலால் பகைவர்தம் அடியைப் பின்வாங்கித் தப்பிச் செல்லுதலும் இயலாதாம். விளக்கம் : ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து என்னும் குறளாட்சி எண்ணத் தக்கது. தகர் - ஆட்டுக்கடா; அதிலும் செம்மறி யாட்டுக்கடா. கடாப் பின்வாங்குவது போல் பின்வாங்கி முன்னேறக் கருதினார் என்க. கார் - முகில். அவை நெருங்க இடிபுறப்படல் போல் இருவரும் முட்டினார் என்க. மாற்றார் - பகைவர். இவண் அகத்துழிஞையான். அடிபுறத்தீடு - அடியைப் பிறக்கிட்டுச் செல்லும் செலவு; பின் வாங்குதல். அன்றி, அடி பெயர்த்து வைத்தலும் என்றுமாம். அரிது இன்மைப் பொருள் தந்தது. கார்க்கண் என்பது நச்சினார்க்கினியர் பாடம். இயைப்பு : ஒதுங்கியும், எதிரேற்றார்; மாற்றார் அடிபுறத்தீடும் அரிது என இயைக்க. (26) தும்பைத் திணை இருநிலந் தீண்டாவகை (தலை துண்டிக்கப்பட்ட உடல் துள்ளல்) 27) வான்துறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவர் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தம்குறை - மான்தேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட உயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல. - பு.தி. 1349. மேற்கோள் : இது வஞ்சிப் புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை என்பார் நச். (தொல்.புறம்.16). வஞ்சியுள் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பை வஞ்சிப்புறத்தும்பை என மேலும் விளக்குவார் அவர். பொருள் : குதிரை பூட்டப்பட்ட தேர்மேல் வந்த வேந்தன் தலைநடுக்கம் கொள்ளுமாறு வீரர்களின் வெட்டுண்ட உடற்குறை தம் உயிர் விடாமல் மேலே மேலேயே எழுந்து பாய்ந்தன. இவை வாள்வீரர்கள் உயர்ந்த வீட்டின்பத்தை விரும்பிப் போருக்கு வந்தனர் என்பதற்குச் சான்றுரைப்பன போன்றன. விளக்கம் : மான் - குதிரை. பனித்தல் - நடுங்குதல். உயிர்க்கு இயல்பான உயிரிரக்கம் உண்மையால், வெட்டுண்டு வீழ்ந்த உடற்குறைகளின் துள்ளலைக் காண வெட்டியவனுக்கே அல்லது வெட்டப்படுதற் குக் காரணமாக இருந்தவனுக்கே தலையாட்டம் உண்டாயிற்று என்க. தம் குறை - வீரர்கள் உடல் துண்டங்கள். வெட்டுண்ட உடலகத்திருந்த உயிர் உடனே போகாமல் சிறிது பொழுது இருந்து துள்ளுதல் உண்மையால் அதனைக் தற்குறிப்பேற்ற மாக, வான்மறவர் வான்துறக்கம் வேட்டெழுந்தார் என்பதற்குச் சான்றுரைப்பதாகக் குறித்தார். துறக்கம் - வீட்டுலகம். விட்ட உயிர் விடாப் பாய்ந்தன என்பது முரண்நயம். இயைப்பு : குறை, வேந்து, பனிப்ப, மேன்மேல் பாய்ந்தன; மறவர் துறக்கம் வேட்டெழுந்தார் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன என இயைக்க. (27) யானை நிலை (யானையின் வீறு) 28) மாயத்தால் தாக்கும் மலையும் மலையும் போல் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயும் தொலைவறியா ஆடவரும் தோன்றினார் வான்மேல் மலையுறையும் தெய்வம்போல் வந்து. - பு.தி. 1400. மேற்கோள் : இது யானை நிலைக்கு எடுத்துக்காட்டு (தொல். புறத்.17.நச்.). இவ்வியானை நிலையின் துறைப் பகுதியாக அரசர் மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர் மேலும் யானை சேறலும் களிற்றின் மேலும் தேரின் மேலும் குதிரை சேறலும் தன்மேல் இருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவுமாம் என்று கூறி யானை நிலைக்கு இதனைக் காட்டுவார் அவர். பொருள் : கண்டறியாதன காட்டிமயக்கும் காட்சியென மலையும் மலையும் தாக்குவது போல் தங்கண் பட்ட புண்ணுக்குச் சிறிதும் அஞ்சாத யானை யொடும், போயழியும் தோல்வி என்பதை அறியாத வீரரும் வானளாவும் மலைமேல் உறையும் தெய்வம் போல் வந்து தோற்றந் தந்தார். விளக்கம் : மலையும் மலையும் தாக்குதல் போல் யானையும் யானையும் தாக்குதலைக் குறித்தார். இல்பொருள் உவமை. மாயத்தால் தாக்குதல், கண்டவர் வியப்புற்று மயங்குமாறு தாக்குதல். காயம் - உடல், ஊறு - புண்பாடு. இனிக் காயத்தூறு புண்ணின் துயர் என்றுமாம். தொலைவு - அழிவு; போய்ச் சாயும் தொலைவு - புகழ் அழிந்துபடும் தோல்வி. அதனை அறியாமை, வீரர் தனிச் சிறப்பாம். வான்மேல் மலை என்றது மலையின் உயரம் குறித்த உயர்வு நவிற்சி. மனையுறை தெய்வம் போல், மலையுறையும் தெய்வம் என்றார். மலையுறையும் தெய்வம் முருகன் (சேயோன்) என்பது தொல்லோர் வழக்கு. சேயோன் மேய மைவரை உலகம் என்பது தொல்காப்பியம். இயைப்பு : மலையுறையும் தெய்வம்போல் வந்து களிற் றொடும் ஆடவரும் வந்து தோன்றினார் என இயைக்க. (28) யானைமறம் (யானைப்போர்) 29) மம்மர் விசும்பின் மதியும் மதிப்பகையும் தம்மில் தடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற் போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை அன்றடர்த்த கை. - பு.தி. 1398. மேற்கோள் : யானைமறம் என்னும் பகுதியில் வரும் பாட்டு இது. பு.தி. பொருள் : கொடிய போர்க் களத்தின்கண் பொருதல் வல்ல யானைப் படையுடைய மன்னர் உயர்த்தெடுத்த வெண் கொற்றக்குடையைக் கரிய யானையின் கை பற்றிப்பிடித்த அப்பொழுதில், அத்தோற்றம் மயக்க மிக்க வானத்தில் மதியும் மதியைப் பற்றும் பாம்புப் பகையும் தம்முள் கலப்புற்று நிற்பது போன்றதாம். விளக்கம் : வெம்முனை - கொடிய போர்க்களம். புறங்கணித் தல் - புறத்தே உயர்த்திப் பிடித்தல். அடர்த்தல் - பற்றுதல். குடை மதிக்கும், களிற்றின் கை மதியைப் பற்றும் பாம்புக்கும் உவமை; தடுமாற்றம் ஒன்றன் மேல் ஒன்று வீழ்தல். மம்மர் - மயக்கம். மதிப்பகை - கரும்பாம்பு (இராகு). வெண்குடை கார்யானைக் கை என்பன முரண் நயம் உடையன. வண்ணமும் வடிவும் வினையும் ஒத்த உவமை இது. இயைப்பு : யானை குடையை அடர்த்தகை, மதியும் மதிப்பகையும் தடுமாற்றம் போன்றதே என இயைக்க. (29) யானைமறம் 30) வான்தோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும் ஊன்தோய் நரியும் உடன்தொக்க - மூன்றும் கடமா நிலம் நனைக்கும் கார்யானைக் கிட்ட படமாறு நீப்பதனைப் பார்த்து. - பு.தி. 1399. மேற்கோள் : யானைமறம் என்னும் பகுதியில் வரும் பாட்டு இது. பு.தி. பொருள் : அகன்ற நிலத்தை மறைக்குமாறு ஊறும் மதநீரைக் கொண்ட யானைக்கு அணியப்பட்ட முகபடாம், அரத்த ஆற்றில் இழுபட்டுச் செல்வதைப் பார்த்து விண்ணளாவப் பறக்கும் கழுகுக் கூட்டமும், வளமான நகத்தைக் கொண்ட பேய்க் கூட்டமும், ஊனில் பெருவிருப்புடைய நரிக்கூட்டமும் ஆகிய மூன்றும் ஒன்று கூடி உவந்தன. விளக்கம் : மாநிலம் நனைக்கும் கடம் என மாற்றி அமைக்க. நீப்பது - நீந்திச் செல்வது. படம் - முகபடாம். குருதி ஆற்றில் படம் படகென மிதக்கும் என்க. இனம், கணம் என்பவற்றுக் கேற்ப நரியும் கூட்டமாம் எனக் கொள்க. மூன்றும் உடன் தொக்க என இணைக்க, முற்கண் உள்ள தோய் தழுவுதல் பொருளும் பிற்கண் உள்ள வோய் விருப்பு என்னும் பொருளும் தந்தன. தமக்கு வேண்டுமளவு உணவு கிடைத்த தென உவந்து கூடின என்க. படமாறு நீப்பது கொண்டு அழிபாட்டின் பெருக்கத்தை அறிய வைத்தார். இயைப்பு : படமாறு நீப்பதனைப் பார்த்துக் கழுகினமும் பேய்க் கணமும் நரியும் தொக்க என இயைக்க. (30) தார்நிலை (தலைவனைக் காக்கும் தறுகண் வீரன் நிலை) 31) வெய்யோன் எழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோன் ஒளி வழங்கும் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. - பு.தி. 1362. மேற்கோள் : வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை என்பதற்கு இதனை எடுத்துக் காட்டுவார் நச். இதனைத், தன்படை போர் செய்கின்றமை கண்டு தானும் படை யாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர் செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அதுகண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் தானைத் தலைவன் ஆயினும் தனக்குத் துணைவந்த அரசன் ஆயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனொடு பொருகின்றாரை எறிந்த தார்நிலை என்று விளக்குவார். பொருள் : இடமகல விரிந்து வந்த பகைவர் போரைத் தானொருவனாக நின்று எதிரிடும் மன்னன் முன்னே புகழ்விருப்புடையோனாம் வீரன் தான் புகுந்து அப்படையை எதிரிட்டு நின்ற தன்மை, கதிரோன் தோன்றுதற்கு முன்னர்க் கப்பிக் கிடந்த இருள் இடமறச் செல்லுமாறு செந்தண்மையால் ஒளிதரும் எழுஞாயிறு கிளர்ந்த சீர்மை போல்வதாம். விளக்கம் : கை - இடம்; பக்கம். தார் - முற்படச் செல்லும் படை; வெய்யோன் - விருப்புடையன். புகழெனின் உயிரும் கொடுக்குவர் ஆகலின் புகழுக்கு வாய்ப்பாம் போரின் முந்து நின்றான் என்க. தகை - தன்மை. வெய்யோன் - கதிரோன்; செய்யோன் - செந்தண்மை யுடையனாம் எழுஞாயிறு. வெய்யோன் போல், முழுதிருள் அகலச் செய்யாது எனினும் செங்கதிர் எழும்போதே, காரிருள் படிப்படியே அகலுதல் காண்பார்க்கு இவ்வுவமை நன்கு விளக்கமாம். வேந்தன் வெய்யோன்; இப்புகழ் வெய்யோன், செய்யோன் என்க. வேந்தனையும் வீரனையும் தக்கவகையில் உவமைப்படுத்திய உவமை வியப்பு மிக்கது. செய்யோன், வெய்யோன் என்னும் ஆட்சிகள் ஒன்றற்கே இருவேறு பொழுதுகளில் உள்ள பெயர்கள். வேந்தனும் வீரனும் அவ்வாறே ஒத்ததகையர் எனல் உள்ளீடு. இயைப்பு :புக்குத்தாங்கிநின்றநிலை....vHhK‹d«....xËtH§F« செம்மற்றே என இயைக்க. (31) களிறெறிந்த தெதிர்ந்ததோர்பாடு 32) இடியான்,இடிமுகிலு«ஏறுண்ணு«என்னு« படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார்மள்ள®இமையாjகண்க© டறிந்தார்த்தார் வானோரும் ஆங்கு. - பு.தி. 1347. மேற்கோள் : களிறெறிந்தெதிர்ந்தோர் பாடு என்பதற்கு மேற்கோள் (தொல்.புறத்.17.நச்.) மாற்று வேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானும் கடுங் கொண்டடெதிர்ந்தானும் விலக்கியவனையும் அக் களிற்றையும் போர் செய்தோர் பெருமைக் கண்ணும் என இதற்குப் பொருள் விரிப்பார் நச்சினார்க்கினியர். பொருள் : வீரர் கூர்மையான வேலை எறிந்து, தன் இடிபோலும் முழக்கத்தால் இடிக்கின்ற முகிலும் இடிபடும் என்னும்படி களிறு ஒன்றனை மேல்வராமல் திருப்பி ஆரவாரித்தனர்; வானவர்களும் தம் இமைத்த லில்லாத கண்ணால் அதனைக் கண்டு ஆரவாரித்தனர். விளக்கம் : ஏறு-இடி; பகடு-யானை; வடி-கூர்மை; மள்ளர்-வீரர்; மன்னர் என்பது புறத்திரட்டுப்பாடம். இடிமுகிலும் என்பதற்கு இருண் முகிலும் என்றும், கண்கண்டு என்பதற்குக் கண்கொண்டு என்றும் நச்சினார்க்கினியர் பாடம் கொண்டார். யானையின் முழக்கத்தால் இடியும் இடித்து நடுங்கும் என்றது யானையின் வலிமை கூறியது. மீட்டு-மேலே செல்லவிடாமல் திருப்பி. எறிதல்-வீழ்த்துதல். கருவியின்றிக் களிற்றை எதிர்த்து வீழ்த்துதலைக் கையெறிந்தானும் என்றும் கருவி கொண்டு எதிர்த்து வீழ்த்துதலைக் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்குதல் என்றார் நச்சினார்க்கினியர். கடுக் கொண்டு என்பதால் கடுமுள்கருவி கொண்டு விலக்குதல் குறிப்பாகலாம். இயைப்பு : மள்ளர் பகடு மீட்டு, ஆர்த்தார்; வானோரும் ஆர்த்தார் என இயைக்க. (32) வாளோர் ஆடும் அமலை அமரனைத் தூக்கி வாள்வீசி ஆடல் 33) ஆளுங் குரிசில் உவகைக் களவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வரங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து - பு.தி. 1348. மேற்கோள் : களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலை என்பதற்கு மேற்கோள். (தொல்.புறத்.17.நச்.) களிற்றொடுபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து நின்று ஆகும் திரட்சி என்று பொருள் விரிப்பார் அவர். பொருள் : வீழ்ந்து பட்ட வீரனுக்கு உறவினர் எவரும் இலராய், அவனைக் கொன்றவரே அவனுக்கு உறவினராய்ச் சூழ்ந்து மகிழ்விலே வாளெடுத்து வீசி ஆடினர்; ஆர்த்தனர்; அவன் காலடிபட்ட இடத்தின் மண்ணை எடுத்து அணிந்தனர். ஆதலால் என்றும் வெற்றி பெறும் வேந்தன் மகிழ்வுக்கு அளவில்லை. விளக்கம் : போர்க்களத்தில் இரக்கம் காட்டாமல் வீறுகாட்டிப் போரிடுதலும், அக்களத்தில் வீழ்ந்து பட்ட வீரனை மதித்துப் போற்றிக் கொண்டாடித் தம் உறவென்று கொண்டு செய்யும் சிறப்பெல்லாம் செய்தலும் வீரர் இயல்பாகலின், கேளின்றிக் கொன்றாரே கேளாகி என்றார். பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக் கால், ஊராண்மை மற்றதன் எஃகு என்னும் குறள் எண்ணத்தக்கது. காலடி மண்ணை எடுத்துத் தெய்வப் பொருளெனப் பூசிக் கொள்ளலாம். இது மண்வழிபாடாம். வீரர் பிறந்த மண்ணை மதித்துப் போற்றுதல் பண்டு தொட்ட வழக்காகும். உவகைக் களவென்னா கேளன்றி என்பவை நச். பாடம். இயைப்பு : வீழ்ந்தாளைச் சூழ்ந்து கொன்றாரே கேளாகி, ஆடினார், ஆர்த்தார், ஓடினார், குரிசில் உவகைக் களவென்னாம் என இயைக்க. (33) வாகைத்திணை ஏற்றல் (தருகொடை பெறுதல்) 34) நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டும் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவாய் அவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம். - பு.தி. 1160. மேற்கோள் : இஃது ஏற்றல் (தொல்.புறத்.20.) நச். பொருள் : நிலமும் சுமக்க முடியாத செல்வங்கள் பல கொள்வதெனினும் தம்குடிக்குத் தீமை வருவதாம் செயலினை அந்தணர் செய்யார். அவர் தகைமை நலமோங்கி விளங்கும் தீயிடத்து நெய் சொரிதலால் தீமேலும் விளங்குவதுபோல் குறையாப் புகழ்ச் செய்கைகளே சிறந்து விளங்கும் வண்ணம் அமைவதாம். விளக்கம் : நிலம் பொறை யாற்றா நிதி என்றது நிதியின் அளவுப் பெருக்கம் உரைப்பது. மலைபோன்றவற்றையும் தாங்க வல்ல நிலம் தாங்க மாட்டாத செல்வம் என்றது அதன் மிகுதியை உயர்வு நவிற்சி வகையால் கூறியதாகும். காசுக்காகக் கயமை புரியும் குடியினர் அல்லர் அந்தணர் என்றும் அவர் மலையெனப் பொன்னைக் குவிப்பினும் தம்குடிப் பெருமை குன்றும் செயல் புரியார் என்றும் தெளிவாக்கினார். அவர் செய்யும் வேள்வித்தீ நெய் சொரியச் சொரிய உயர்ந்து விளங்குமாறு போல் அவரும் உளியுடன் விளங்குவார் என்றது குடிப்புகழொடு கூடிய உவமையாம். அவி சொரியச் சொரியத் தீ விளங்குமேயன்றி அணையாது. அதுபோல் எத்தகைய பெருநிதியம் எய்தினும் அந்நிதியத்திற்காகத் தம் குடியியல் மாறி விடார் என விளக்கம் காண்க. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் குறள் அந்தணர் தன்மைக்கு அளவு கோலாதல் அறிக. இயைப்பு : தீங்கு அந்தணர் கொள்ளார்; தீவிளங்குமாறுபோல் ஒளிசிறந்தது என இயைக்க. (34) வாணிகரீகை (வாணிகர் கொடைச் சிறப்பு) 35) ஈட்டிய எல்லாம் இதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையும் சங்கும் போல் தந்து - பு.தி. 1161. மேற்கோள் : இது வாணிகர் ஈகை (தொல்.புறத்.20)நச். பொருள் : விரும்பத்தக்க மாலை அணிந்த சோழனது கடல் சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகர், வேண்டுவார் வேண்டும் போதெல்லாம் தாமரை என்றும் சங்கம் என்றும் சொல்லப்படும் பெருஞ் செல்வத்தைத் தந்து, தாம் தேடிய செல்வம் அனைத்தும் இவ்வாறு தருதற்கே என்பதைக் காட்டுவார்போல் தகவான கொடை நலத்தைக் காட்டினார். விளக்கம் : தாமரை சங்கு என்பன சிறப்பாகப் போற்றப்பட்ட நிதியங்கள். இவற்றைச், சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து, தரணியோடு வானாளத் தருவரேனும்; மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லேம் என்பது தேவாரம். பதுமம்-தாமரை. சங்கின் வடிவத்திலும், தாமரையின் வடிவத்திலும் அமைந்தவை என்பதைப் பெயரான் அறியலாம். இவற்றை இந்திரன் நிதியம் எனவும் அளகையோன் (குபேரன்) நிதியம் எனவும் கூறுவர். ஐ.அம்.பல் என்னும் ஈற்று எண் எனல் தொல்காப்பியம். புகார் வணிகர் சிறப்பியல் இதனால் விளங்கு வதுடன் புகார் வணிகச் சிறப்பும் சோழவேந்தன் செழிப்பும் அறநிலையும் புலப்படுப்பது இப்பாடல். சென்னி-சோழன். அவன் சீர்த்தி வாழ்த்தில் காண்க. (41) சமுதாயத்தில் இருந்து ஈட்டப்படும் செல்வம், அச்சமுதாயத்திற்குப் பயன்படுமாறு கொடுத்தலே முறைமை என்பதைத் தெளிவிப்பார் போல், ஈட்டிய வெல்லாம் இதன் பொருட்டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் என்றார். வேட்டொறும்-விரும்பும்தோறும். காமர் - விருப்பம், அழகு. விண்ணகக் கொடையும் மண்ணகத்துக் கிட்டும் என்பதால் வணிகர் குடிச் சிறப்புரைத்தது இது. இயைப்பு : வணிகர் தந்து இதன் பொருட்டென்பது காட்டினார் என இயைக்க. (35) பாசறை முல்லை (பாசறை வேந்தன் பேராண்மைக் காவல்) 36) மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடை மாதர்பாற் பெற்ற வலியுளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற அழிவு. - பு.தி. 1271 மேற்கோள் : கூதிர்வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு என்பதற்கு மேற்கோள் (தொல்.புறத்.21.நச்.) இருத்தற்பொருள் முல்லை என்பதே பற்றிப் பாசறைக் கண் இருத்தலால் பாசறை முல்லை எனப் பெயர் கூறுவாரும் உளர் என்றும் கூறினார் அவர். பொருள் : குளிர்வாட்டும் கூதிர் காலப் பொழுதிலும், பகைவர் மாட்டுச் சிவந்த கண்ணையுடைய வலிய வேந்தன், பாசறையின் கண் இருக்குங்கால், மன்மதவேளின் மலர்க்கணைகள் ஐந்தும் செயலற்று அழிந்தன; தம் பழமையான குடிவரவுடைய இல்லத்தின்கண் உள்ள திண்ணிய கற்பமைந்த, மாதரிடத்துப் பெற்றுக் கொண்டு வந்த வலிமையும் உளதே போலும்! இல்லாக்கால் இத்திண்மை அமையாது என்பதாம். விளக்கம் : மூதில் - வழிவழியாக அமைந்த மறக்குடி; கற்பின் அடையாளப் பூ முல்லை. இல்லிருத்தல் முல்லை என்பது முல்லைத் திணையின் இலக்கணம். ஆதலின் முல்லைசால் கற்பு என்றார். கற்பெனும் திண்மை என்பது திருக்குறள். மனத்துக் கண் நிறுத்துக் காக்கும் நிறையே கற்பாமாகலின் அதனை வலி என்றார். போர் வலிமையுடைய வேந்தனுக்கு இக்கற்பின் வலிமையமைந்தமை தம் மாதரிடத்துக் கொண்ட அன்பு தரப்பெற்ற தாகலின் பெற்ற வலி என்றார். வெங்கண் கொடுமைக் குறியாம் சிவந்தகண். தன் மகவைக் கண்ட அதியமான் போர்க்களத்தி லிருந்து நேரே வந்தவன் ஆகலின் அவன் கண்ணின் சினம் இன்னும் ஆறிற்றில்லை என்றார் ஔவை யார். அத்தகு கண் வெங்கண் என்க. வேனிலான்-மன்மதன். ஐங்கணை-ஐந்து மலரம்புகள். அவை: தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன. அக்கணைகள் செயலற்றுப் போனமையின் தோற்ற அழிவு என்றார். இயைப்பு : பாசறையுள் வேந்தன், வேனிலான் கணை தோற்ற அழிவு, மாதர்பாற் பெற்ற வலி என இயைக்க. (36) பின்தேர்க்குரவை (வெற்றி கொண்ட தேரின்பின் நிகழும் குரவைக் கூத்து) 37) வென்று களங்கொண்ட வேந்தன்தேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்க்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து. - பு.தி. 1429. மேற்கோள் : ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. (தொல்.புறத்.21.நச்.) இதன் பொருளைத், தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச் சுற்றம் ஆடும் குரவை என்று கூறுவார் அவர். பொருள் : பகைவென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேந்தனது தேர்க்களத்தை விட்டுச் சென்றதற்குப் பின்னர், ஆங்குக் கொல்லப்பட்ட பிணமாகிய ஊன் கூழைக் கொற்றவை முன்னின்று அளித்தலால் அதனை ஏற்றுண்ட பேய்கள் உவந்து ஆடின; போர்க்களம் தந்த பரிசிலாகிய அதற்கு மகிழ்ந்து குரவைக் கூத்து ஆடின. விளக்கம் : பகற் போர் முடித்து வேந்தன் செல்லுதலால், வேந்தன் சென்றபின் என்றார்; பேயாட்சி இரவுப் போழ்தாகலின் என்க. நிணம்-ஊனும், குருதியும் பிறவும் கூழ் அடுதலும், கொடுத்தலும் பரணி நூல்களில் விரிவாகக் கூறப்படுவன. ஆங்குக் கண்டு கொள்க. நின்றளிப்ப என்றது நெடும் பொழுது வேண்டுமளவு தருதலைக் குறித்து நின்றது. எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்ம ரேனும் கைகோத்தாடும் கூத்து.... குரவைக் கூத்து (சிலப். 3:24). வாயால் ஒலி எழுப்புதல் குலவை என இந்நாள் வழங்கப்படுதல் அறியத்தக்கது. குரவைகள் பல ஆதல் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்பவற்றால் விளங்கும் (சிலப்.) இயைப்பு : சென்றதற்பின் கொற்றவை கூழ் அளிப்ப, பேய்கண் டுவந்தன, கூத்து கொண்டாடின என இயைக்க. (37) சான்றோர் பக்கம் (சான்றோர் சால்பியல் சாற்றல்) 38) யானை நிரையுடைய தேரோ ரினும்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டோர் உடையோர்க் கரசரோ ஒப்பு. - பு.தி. 1159. மேற்கோள் : பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் (தொல்.புறத். 21.) நச். பொருள் : யானைக் கூட்டத்தையுடைய அரசரினும் சிறந்தவர் ஆநிரைகளைத் தம்மதாகக் கொண்ட வேளாண் குடியினர். யானைப் படையுடைய வேந்தர்க்கும் வெற்றிதரும், காளை பூட்டப்பட்டு இழுக்கும் ஏரையுடைய உழவர்க்கு அவ்வேந்தர் ஒப்பாகார். விளக்கம் : இருவரும் நிரையுடைய (கூட்டமுடைய) ராயினும், ஆநிரையுடைய உழவர்க்கு யானை நிரையுடையவர் ஒப்பாகார் என்றார். ஒப்பாகாமை விளக்குவாராய், யானைப் படைக்கும் ஏர் உடையவர் விளைக்கும் உணவின்றிக் கூடாமையால் ஏர் உடையார்க்கு அரசரோ ஒப்பு என்றார். தேரோர், யானைப் படையோர் அரசர் என்பன அரசர் குடியுரைத்தன. ஏர்வாழ்நர் பகட்டேர் உடையோர் என்பன உழவர் குடியுரைத்தன. பகடு-காளை. உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதாற்றா(து) எழுவாரை எல்லாம் பொறுத்து உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை என்னும் குறள்கள் கருதத்தக்கன. ஏர் எழுபது என்பதும் திருக்கை வழக்கம் என்பதும் இதனை விரித்துரைக்கும் நூல்கள். இயைப்பு : தேரோரினும் ஏர்வாழ்நர் சிறந்தார்; அரசரோ ஒப்பு என இயைக்க. (38) காமம் நீத்தபால் (பாலியல் வேட்கையை ஒடுக்கிய திறம்) 39) இளையர் முதியர் எனவிருபால் பற்றி விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தன்காமம் ஒன்றாது நீத்தான் உளன். - பு.தி. 542 மேற்கோள் : காமம்நீத்தபாலுக்கு(தொல்.புறத்.21.)நச். பொருள் : அறிவுச் சிறப்பு இளமையிலே உண்டாகும் என்றோ முதுமையிலே உண்டாகும் என்றோ இரு வகையாகப் பகுத்துக் கூறவேண்டுவதில்லை. இளம்பருவத் தனாக இருக்கும்போதே, தன் முதிய தந்தை திருமணம் கொண்டு இன்புறுதற்காகத் தான் மணத்தலையும் துறந்து விட்டவனும் ஒருவன் உளன் என்பது உலகறிந்த செய்தி. ஆதலால் இளமையிலும் அறிவு சிறப்பாக வெளிப்படுதலும் கூடும் என்றும், அது முதுமைக்கே சிறப்பாக உரியது என்று கொள்ளற்க என்றும் கூறினார். விளக்கம் : இளையனாக இருக்கும்போதே தன் தந்தை இன்பம் நுகர்தற்காகத் தான் மணத்தலைத் துறந்தவன் வீடுமன். இது பாரதப் பெரு நூலால் அறியவரும் செய்தி. உலகறிந்த செய்தி என உட்கொண்ட மையால் சிறப்புப் பெயரைச் சுட்டாமலே இளையனாய் நீத்தான் உளன் என்றார். தாதை - தந்தை. அவன் சந்தனு என்பான் இளையனாய் இன்பம் நீத்தான். புரூரவா என்பவனுமாம் என்பர் (பெருந்தொகை). அறிவு என்பது அறிந்து கொள்வதை மட்டும் குறிப்பதன்று. பண்ணுடைமை, சான்றாண்மை, ஒப்புரவறிதல், அருளுடைமை முதலாயவற்றையும் குறிக்கும். சென்ற விடத்தால் செலவிடாது Ôதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போல் போற்றாக் கடை என வரும் குறள்களைக் கருதுக. இயைப்பு : நீத்தான் உளன்; இளையர் முதியர் என வேண்டா என இயைக்க. (39) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் (கொடுப்பவரைப் புகழ்ந்து கொடாதவரை இகழ்வது) 40) மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரு மக்களாய் ஒல்லுவ தாங்கே அளிப்பாரு மக்களா மாறு - புறத்திரட்டு 228. மேற்கோள் : கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலுக்கு (தொல்.புறத்.35 நச்.) பொருள் : ஒளிவிடும் தங்கமும் கருநிற இரும்பும் பொன் என்னும் பொதுப் பெயரால் வழங்கப்படும். அது போல் பொருந்தாதது வாய்ப்பிருந்தும் ஒன்றைக் கொடுக்கத் தக்கார்க்கும் கொடுக்காமல் ஒளிப் பவரையும், தம்மால் இயன்றதையெல்லாம் உடனே அளிப்பவரையும் மக்கள் என்னும் பொதுப் பெயரால் வழங்குவது. விளக்கம் : வெண்பொன், செம்பொன், பைம்பொன், கரும்பொன் அல்லது இரும்பொன் என்பவை வெள்ளி, செம்பு, தங்கம், இரும்பு ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றுள் பொன் என்பது பொதுப் பெயர். போலாதே-போன்றது ஆகாதே. கொன்னே - வீணே. ஒல்லுவது-இயன்றது. உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் மக்களே போல்வர் கயவர் என்னும் குறள்களைக் கருதலாம். வெற்றிரும்பு என்பதில் வெறுமை பயனின்மை கருதிய தன்று. ஒளியின்மை குறித்தது. தங்கமும் இரும்பும் பொலிவில் வேறுபடினும் மாறுபடுதல் இல்லை. ஒளிப்பாரும், அளிப்பாரும் எவற்றானும் ஒப்பானவர் அல்லர்; மறுதலையானவர். ஆதலால் போலாதே என்றார். இயைப்பு : பெயர் படைத்தாற் போலதே; மக்களாமாறு. என இயைக்க. (40) புற நிலைவாழ்த்து (தலைவனைத் தெய்வம் காக்க வாழ்த்துதல்) 41) கண்ணுதலோன் காக்கக் கடிநேமி யோன்காக்க எண்ணிருதோள் ஏந்திழையாள் தான்காக்கப்-பண்ணியநூற் சென்னியர்க் களிக்கும் செல்வனீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே. - பு.தி. 1500. மேற்கோள் : புறநிலை வாழ்த்து என்பதற்கு எடுத்துக்காட்டு இது. (தொல்.புறத்.35.நச்.) பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்து என்பது அவர் கூறும் பொருள். பொருள் : நெற்றிக் கண்ணையுடைய இறைவன் காப்பானாக; காவல்கடன் பூண்ட ஆழிப்படையோனாம் திருமால் காப்பானாக; பதினாறு கைகளையடைய கொற்றவை காப்பாளாக; தேடிய புகழைத் தன்குடியாம் சோழர் குடிக்கு அளிக்கும் செல்வனே நீ நாளும் நாளும் இம்மண்ணுலகில் புகழால் நிலைபெறுவாயாக. விளக்கம் : கண்ணுதல், நுதற்கண் என மாற்றியமைக்க. நுதல்-நெற்றி. கடி-காவல்; நேமி-சக்கரம். ஏந்திழை-உயர்ந்த அணிகலம் அணிந்தவள்; இவண் வீரமடந்தையாம் கொற்றவை. நூல்-நூலான் வரும் பாடுபுகழ். சென்னியர்-சோழர். ஒருவன் பெருமை, குடிப்பெருமையாதலால், சென்னியர்க்களிக்கும் செல்வன் என்றார். மண்மிசை-உலகில். செல்வனீ என்பது தெய்வநீ என நச்சினார்க்கினியரால் பாடம் கொள்ளப்படும். இயைப்பு : காக்க, காக்க, காக்க, நீ மன்னுக என இயைக்க, காக்க என்பது காப்ப எனப் பாடமாகக் காட்டும் பெருந்தொகை. (41) பாடல் முதனினைப்பு அடியதிர் 2 ஆளுங்குரிசில் 33 இடியான் 32 இளையர் 39 இற்றைப் 17 ஈட்டிய 35 கங்கைபரந் 5 கடல்புக்கு 6 கண்ணுதலான் 41 கல்கெழு 7 காட்டகம் 8 குன்றுயர் 20 தழிச்சிய 14 தாக்கற்கு 26 தாய்வாங்கு 24 திரைகவுள் 3 தொழுதுவிழா 21 நிலம்பொறை 34 பகலெறிப்ப 19 பிறர்புலம் 4 பொருசின 18 பொருவரு 23 போர்ப்படை 13 மம்மர் 29 மழுவான் 16 மாயத்தால் 28 மாற்றுப் 15 மின்னும் 40 முற்றரணம் 22 மூதில்வாய் 36 யாமோ பகர்ந் 9 யானை நிரை 38 வந்த நிரை 11 வாள் வலம் 10 வான் துறக்கம் 27 வான் தோய் 30 விண்ணசைஇ 12 வெஞ்சின 25 வெய்யோன் 31 வெவ்வாய் 1 வென்றுகளங் 37 4. இணைப்புப் பாடல்கள் 1 - 82 குறிப்பு 1. இப்பாடல்களுள் ஒன்றானும் இளம்பூரணரால் புறத்திணை யியலில் மேற்கோளாக ஆளப்பெற்றில என்பது கொள்ளத் தக்கது. 2. புறத்திரட்டின் 1438ஆம் பாடலாகிய உலகுபொதியுருவம் என்னும் பாடல் பெரும்பொருள் விளக்கம் சார்ந்ததாகப் பொருள். புறத்.நச். உரைப்பதிப்பில் (கழகவெளியீடு 1947) காணப்படினும், புறத்திரட்டில் அக்குறிப்பு இல்லை. ஆதலால் இதனை முற்பகுதியில் சேர்க்காமல், இப்பகுதியில் சேர்க்கப்பட்டது (72) வெட்சித் திணை பாக்கத்து விரிச்சி 1. வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போன் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்புள் - உய்ந்த நிரையளவைத் தன்றியும் நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண் - விரிச்சியை வியந்தது. - தொல்.புறத்திணையியல். 3. நச்சினார்க்கினியர் மேற்கோள். ஒற்றின் ஆகியவேய் 2. ஒருவர் ஒருவர் உணராமற் சென்றாங்கு இருவரும் ஒப்ப இசைந்தார் - வெருவர வீக்கும் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்கும் சரந்தெரிந்து கொண்டு 3. நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் வயவேந்த னென்றும் நினக்குரிய வாக நிரை - புறத். 3 - இவை கண்டோர் கூற்று. புறத்திறை 4. கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தார் - அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர் - புறத். 3 - இது கண்டோர் கூற்று. ஊர் கொலை 5. அரவூர் மதியிற் கரிதூர வீம விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் தொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து. 6. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண்டு இகலிழந்த வல்வில் இளையோர்புண் தீரத் துகளெழுங்கொல் பல்லான் தொழு. - புறத். 3 - இவை கண்டோர் கூற்று. பூசன் மாற்று 7. ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்தம் ஒலியும் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில். - கண்டோர் கூற்று. தந்துநிறை 8. குளிறுகுரல்முரசங் கொட்டின் வெரூஉம் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னின்நிரை நம்மூர்ப் புறங்கானம் எல்லாம் பெறுக இடம். 9. கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமின் - எழுவொழித்தாற் போமே இவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து. - இவை கண்டோர் கூற்று. கொடை 10. கொடைத் தொழி லெல்லாம் குறைவின்றிப் பண்டே முடித்தனன் என்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பிலன் என்றே மருண்டான் நிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு. - கண்டோர் கூற்று. 11. கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டான் அடிபுனை தோலின் அரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. - இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது. வேய் கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் 12. மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே ஏற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வேய் உரைத்தார்க்கு நாம். புறத்.3 துடிநிலை 13. நித்திலம்செய் பட்டமு நெற்றித் திலதமும் ஒத்திலங்க மெய்பூசி ஓர்ந்துடீசித் - தத்தம் துடியரோ டூர்ப்புறஞ் சூழந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. கொற்றவை நிலை 14. அருமைத் தலைத்தரும் ஆநிரையுள் ஐயை எருமைப் பலிகோள் இயைந்தாள் - அரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்று யாந்தன்மேற் சீறாமல் இன்று. உயிர்ப்பலி 15. நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையும் நல்கும்யாம் காணேம்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின் வாய் வீழ்ந்தான் தலை. குருதிப்பலி 16. ஆடினி பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடற் படுத்துவந்தாள் -நாடிய தோளுழலை யாடுவோன் தோளினும் தூக்கமைந்த தாறுழலை யாடுவோன் தான். புறத். 4 - பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. பொதுவியல்திணை வேலன் வெறியாட்டு 17. அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடும் - குமரன்முன் கார்க்காடு நாறும் களனிழைத்துக் காரிகையார் ஏர்க்காடும் காளை இவன். இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று. வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது. போந்தை மலைந்தாடியது 18. ஏழக மேற்கொண் டிளையோன் இகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - ஏழுலகுந் தாந்தயங்கு நாகம் தலைதயங்க ஆடாமோ போந்தையங் கண்ணி புனைந்து. வேம்பு மலைந்தாடியது 19. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுதல் இறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாற்றியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று. ஆர்மலைந்தாடியது 20. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறை கெழு வாரணப்போர் செய்து. இவை (18-20) தன்னுறு தொழில். வாடாவள்ளி 21. மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமகள் நோற்றாள் பெரிது. கழல்நிலை 22. மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந்தாடினாள் - வாளாட்டின் மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற. உன்னநிலை 23. முன்னங் குழையவும் கோடெலாம் மொய்தளிரீன் றுன்னங் குழையொலிதத் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து. - தன்னுறு தொழில் பூவை நிலை 24. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புனனீர் நாட மார்பிற் கிடந்த மறு. - இது சோழனை மாயோனாகக் கூறிற்று. 25. ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண். - இது சேரனை அரனாகக் கூறிற்று. 26. இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த சுந்தரத்தான் என்னிற் பிறையில்லை - அந்தரத்துக் கோழியான் என்னின் முகன்ஒன்றே; கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று. - இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று. நெடுமொழி 27. தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை எறிதல் இளிவரவில் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன். வருதார் தாங்கல் 28. ஏற்றெதிர்ந்தார் தார்தாங்கி வெல்லவருகென் றேவினான் கூற்றினுந்தாயே கொடியளே - போர்க்களிறு காணா இளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்ப்பிழைப்பார் மற்று. வாள்வாய்த்துக் கவிழ்தல் 29. ஆடும் பொழுதின் அறுகயிற்றுப் பாவைபோல் வீடும் சிறுவன்தாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே கேளா அழுதார் கிடந்து. - இவை (28, 29) தன்னுறு தொழில். பிள்ளையாட்டு 30. வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை ஒள்வாட் புதல்வன்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர. - இதனைப் பிள்ளைத் தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியும் என்ப. காட்சி 31. தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை - ஆழிசூழ் மண்டில மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனென் நின்மாட்டோர் கல். - இது கல் ஆராய்கின்றார் காட்சி. 32. கல்லாயும் எற்றெரிந்து காண்டற் கெளிவந்த வல்லாண் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாம் தொட. - இது கடவுளாகிய பின் கண்டது. கால்கோள் 33. வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கும் ஓராற்றாற் செய்வ துடைத்து. நட்டுக் கால் கொண்டது. 34. காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மின் நாளை வரக்கடவ நாள். நீர்ப்படை 35. வாளமர் வீழ்ந்த மறவோன்கல் ஈர்த்தொகுக்கிக் கேளிர் அடையக் கிளர்ந்தெழுந்து - நீர்விசும்பிற் கார்ப்படுத்த வல்வேறு போலக் கழலோன்கல் நீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று. நடுகல் 36. சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர் பொறித்துக் கன்னட்டாற் கல்சூழ் கடத்து. - இது கல் நாட்டியது. 37. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலாய் - நாள்வாய்த் திடைகொளலின்றி எழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டும் மகிழ்ந்து. - இது மறவனை நாட்டியது. பெயர் முதலியன பொறித்தது 38. கைவினை மாக்கள் கலுழக்கண் நோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது. சிறப்புப் படைத்தது 39. அன்றுகொள் ஆபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்று கொள் பல்லான் இனமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ கோட்டம் வகுத்து. கல்வாழ்த்து 40. ஆவாழ் குழக்கன்னுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று. புறத். 5 வஞ்சித் திணை வயங்கல் எய்திய பெருமை 41. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினால் - நாற்கடல்சூழ மண்மகிழும் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோன் கேம்பட்டான் வேந்து. நெடுமொழி 42. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதிப் பட்டத் திவன். - இது பிறர் கூறிய நெடுமொழி. புறத். 8 உழிஞைத் திணை ஏணிமயக்கம் 43 சேணுயர் ஞாயிற் றிணிதோளான் ஏற்றவும் ஏணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு. - இது புறத்தோர் ஏணிமயக்கம். 44. இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோற்கு வாயில் எவனாங் கொல் மற்று. - இஃது அகத்தோர் ஏணிமயக்கம். முற்றிய முதிர்வு 45. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றார் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோல் அரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு. - இஃது புறத்தான் முற்றிய முதிர்வு. 46. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலையில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள் கொட்டி யார்த்து. - இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு. நொச்சி 47. இருகன்றின் ஒன்றிழந்த ஈற்றாப்போற் சீறி ஒருதன் பதிகற் றொழியப் - புரிசையின் வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று. - இஃது அகத்துழிஞையோன் எயில்காத்த நொச்சி. பாசி 48. பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோல் நின்று. - இஃது அகத்தோர் புறத்தோர் இருவர்க்கும் ஒக்கும். பாசிமறம் 49. மறுநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார் - எறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தங்கோமான் ஊர்க்செரு வுற்றாரைக் கண்டு. - இது புறத்தோன் பாசிமறம். 50. தாந்தங் கடைதொறும் சாய்ப்பவும் மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலான் - ஆங்கு மதுக்கமழும் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று. - இஃது அகத்தோன் பாசிமறம். அகமிசைக்கிவர்தல் 51. வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோடல் நினைந்து. - இஃது புறத்தோன் அகமிசைக் கிவர்தல். 52. புற்றுறை பாம்பின் விடநோக்கம் போல்நோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவன் ஆரெயின்மேற் றோன்றினார் அந்தரத்துக் கூடாத போரெயின்மேல் வாழவுணர்போன்று. - இஃது அகத்தோன் அகமிசைக் கிவர்தல். மண்ணுமங்கலம் 53. மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தில் - எழில்முடி குடாச்சீர்க் கொற்றவனுஞ் குடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து. - இது புறத்தோன் மண்ணுமங்கலம். 54. வென்றி பெறவந்த வேந்தை இகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர். - இஃது அகத்தோன் மண்ணுமங்கலம். வாள்மங்கலம் 55. செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு. - இஃது புறத்தோன் வாண்மங்கலம். 56. வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூர் ஈந்தாள் - ஒருவன்வாள் இவ்வுலகிற் பெற்ற இகற்கலையேற் றூர்தியாள் அவ்வுலகிற் போய்ப்பெறுங்கொல் ஆங்கு - இஃது அகத்தோன் வாண்மங்கலம். தொகைநிலை 57. கதிர்சுருக்கி அப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை எதிர்சுருக்கி ஏந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் பெயர்வான் தொகுத்த படைத்துகளாற் பின்னும் உயர்வான் குறித்த துலகு. - இது புறத்தோன் தொகைநிலை. 58. தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தான் உண்டற்ற சோற்றார் ஒழிந்து. - இஃது அகத்தோன் தொகைநிலை. உடன்வீழ்தல் 59. அறத்துறைபோல் ஆரெயில் வேட்ட அரசர் மறத்துறையு மின்னாது மன்னா - நிறைச்சுடர்கள் ஒன்றி வரப்பகல்வாய் ஒத்த ஒளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தார் எதிர்ந்து. புறத். 13 தும்பைத்திணை இருநிலந்தீண்டாவகை 60. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - ஒருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே என்று. புறத். 16 - இஃது உழிஞைப் புறத்துத் தும்பையாம் இருநிலம் தீண்டாவகை. தானை நிலை 61. சென்ற உயிர்போலத் தோன்றா உடல்சிதைந்தோன் நின்ற அடிபெயரா நின்றவை - மன்றல் அரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த மரவடியே போன்றன வந்து. குதிரை நிலை 62. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் தொல்லை உருவிழந்த தோற்றம்போல் - எல்லாம் ஒருகணத்துத் தாக்கி உருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு. எருமை 63. சீற்றங் கனற்றச் சீறக்கணித்துச் செல்லுங்கால் ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்காற் பின்வருவார் யார்? நூழில் 64. அறத்திற் பிறழ அரசெறியுந் தானை மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்கால் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி. - புறத். 17 வாகைத் திணை ஓதல் 65. முறையோதின் அன்றி முளரியேன் அல்லேன் மறையோதி னானிதுவே வாய்மை - அறிமினோ ஈன்றாள் பயிற்றிருந்தே எம்மறையும் ஓதினான் சான்றான் மகனொருவன் தான். ஓதுவித்தல் 66. ஒத்த முயற்சியான் ஒத்து வெளிப்படினும் நித்திய மாக நிரம்பிற்றே - எத்திசையும் தாவாத அந்தணர் தாம்பயிற்றிக் காவிரிநாட டோவாத ஓத்தின் ஒலி. - புறத். 20. வேட்டல் 67. ஒருமழுவோள் வேந்தன் ஒருமூ வெழுகால் அரசடு வென்றி யளவோ - உரைசான்ற ஈட்டமாம் பல்பெருந்தூண் எங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை. ஈதல் 68. போர்வகை வாய்த்த புரவலரின் மேதக்கார் ஏர்வாழ்நர் என்பதற் கேதுவாம் - சீர்சால் உரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்தம் நிரைகாத்துத் தந்த நிதி. - புறத். 21. இது வேளாளர் நிரை காத்தது. காஞ்சித் திணை பேய்ப்பக்கம் 69. புண்ணனந்த ருற்றானைப் போற்றுநர் இன்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - உண்ணும் முளையோரி உட்க உணர்பொடு சா யாத இளையோன் கிடந்த இடத்து. தலையொடு முடிதல் 70. நிலையில் உயிரிழத்தற் கஞ்சிக் கணவன் தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தாள் - தலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றதன் உண்ணின்ற தன்றோ உயிர். கையறுநிலை 71. தேரோன் மகன்பட்ட செங்களத்துள் இவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ அலகற்ற கற்பி னவள். காடு வாழ்த்து 72. உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலைநன் காடு புலவுங்கொல் என்போல் புலவுக் களத்தோ டிலை நெடுவே லோனை இழந்து . புறத். 24 பாடாண்டிணை வெட்சி வாகைப் பாடாண் 73. முனைப்புலத்துக் கஃதுடை முன்னிரைபோல் வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - எனைப்புலத்துச் சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போல் நன்றுமுண் டாக நமக்கு. - புறத். 25 கொடிநிலை வாழ்த்து 74. மேகத்தான் வெற்பான் இமையான் விழுப்பனியான் ஆகத்தான் நீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை யலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு. கந்தழி வாழ்த்து 75. சார்பினால் தோன்றாது தானருவாய் எப்பொருட்கும் சார்பெனநின் றெஞ்ஞான்றும் இன்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர். வள்ளி வாழ்த்து 76. பிறைகாணும் காலைத்தன் பேருருவ மெல்லாம் குறை காணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம். வள்ளிப்பாற்பட்ட பெண்பாற்கடவுள் வாழ்த்து 77. தனிக்கணிற் பாகமும் தானொறா மானம் பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென்று யாமுறையா நிற்கும் இடத்து. . புறத். 33 கடைநிலை 78. வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு மாற்றற்கு வந்தேனெம் வாயிலோய் - வேற்றார் திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில் இறைமகற்கெம் மாற்றம் இசை. வேள்விநிலை 79. பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழான் அந்தணரை யின்புறுப்பச் - சென்னிதன் மாநிலமே வானுலகம் போன்றது வான்துகள்போர்த் தானுலக மண்ணுலகா மன்று. விளக்குநிலை 80. மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச் செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள் வேலியுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக் கோலினும் கோடா கொழுந்து. - புறத். 35 மண்ணுமங்கலம் 81. அளிமுடியாக் கண்குடையான் ஆகுதிநாள் வேய்ந்த ஒளிமுடி பொன்மலையே ஒக்கும் - ஒளிமுடிமேல் மந்திரத்தால் அந்தணர் வாக்கியநீர் அம்மலைமேல் அந்தரத்துக் கங்கை அனைத்து. வாள்மங்கலம் 82. ஆளிமதுகை அடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாம் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம். - புறத். 36 அமரகத்து 17 அரவூர் 5 அருமைத் 14 அளிமுடியா 81 அறத்திற் 64 அறத்துறை 59 அன்றுகொள் 39 ஆடினிபாடி 16 ஆடும்பொழு 29 ஆர்வேய்ந்த 20 ஆவாழ் 40 ஆளிமதுகை 82 இடையெழு 44 இந்திரன் 26 இருகன்றி 47 உலகுபோதி 72 ஊர்சூழ் 46 ஏழகமேற் 18 ஏற்றூர்தி 25 ஏற்றெதிர் 28 ஒத்தமுயற்சி 66 ஒத்தவய 7 ஒருமழு 67 ஒருவர் 2 கடல்பரந்து 45 கடிமனை 11 கதிர்சுருக்கி 57 கரந்தியல் 4 கல்லாயும் 32 கழுவொடு 9 கரப்புநூல் 34 குருந்தமொசித் 24 குளிறுகுரல் 8 குறும்பூழ்ப் 19 கைவினை 38 கொடைத்தொழில 10 கோள்வாய்த்த 37 சார்பினால் 75 சீர்த்த 36 சீற்றங் 63 செற்றவர் 55 சென்றநிரை 6 சேணுயர் 43 தலைவன் 58 தனிக்கணிற் 77 தாந்தங் 50 தாழிகவிப் 31 தானால் 27 தேரோன் 71 நச்சிலை 15 நித்திலம் 13 நிலையில் 70 நெடுநிலை 3 பருதிவேல் 60 பல்லுருவ 62 பிறைகாணும் 76 புண்ணனந்த 69 புற்றுறை 52 பொலஞ்செய் 48 பொன்னிறைந்த 79 போர்க்கடல் 42 போர்வகை 68 மண்டம் 21 மழுவாளான் 53 மறநாட்டு 49 மாற்றரும் 12 மீளாது 22 முறையோதின் 65 முன்னங் 23 முனைப்புல 73 மைமிசை 80 மேகத்தான் 74 மேற்செல்லும் 41 வந்தநீர் 1 வருபெரு 56 வரையறை 33 வன்கண் 30 வாயிற் 51 வாளமர் 35 வென்றி 54 வேற்றுச் 78