இளங்குமரனார் தமிழ்வளம் 29 1. கவிஞர் தாகூர் 2. பிணி தீர்க்கும் பெருமான் 3. அறப்போர் 4. இரு கடற்கால்கள் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 29 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 112 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 80/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் கவிஞர் தாகூர் 1. இளமையும் கல்வியும் 1 2. தாகூரின் கலைவளர்ச்சி 4 3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் 7 4. இல் வாழ்க்கை 9 5. தொண்டுகள் 11 6. பெருவாழ்வு 14 7. சாந்தி நிகேதனம் 17 8. உள்ளத்தின் ஒளி 20 பிணி தீர்க்கும் பெருமான் 1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும் கல்வியும் 25 2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி 28 3. பலதுறைப் பணிகள் 31 4. இலாம் பரினிப் பயணம் 34 5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த மருத்துவப்பணி 37 6. நீகிரோவர் வாழ்க்கை முறை 40 7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில் 43 8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர் 46 9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில் 49 10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம் 52 அறப்போர் 1. அருந்தவத்தோன் 57 2. அறப்போர் 59 3. பெற்ற பரிசில் 61 4. சேரமான் புகழ் 63 5. மறப்பது எப்படி? 65 6. கோட்டிடை வைத்த கவளம் 67 7. புலவரின் வள்ளன்மை 69 8. ஏன் புகழ வேண்டும்? 71 இரு கடற்கால்கள் 1. சூயசு - பனாமா - திட்டங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தொகுத்து எழுதுக. 75 2. ஓருலகச் சாதனைகள் என்பது பற்றி எழுதுக. 78 3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக. 81 4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையை எழுதுக. 84 5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல் தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக. 87 6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட நிறைவேற்றம் பற்றி எழுதுக. 90 7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப் பற்றி எழுதுக. 93 8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக. 96 9. எகிப்தின் புதுவாழ்வு 98 10. புத்துலகக் கனவு என்பது பற்றித் தொகுத்தெழுதுக. 101 11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக. 104 12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட வளர்ச்சிப் பணிகளை விவரிக்க. 107 குறிப்புகள் 110 கவிஞர் தாகூர் 1. இளமையும் கல்வியும் முன்னுரை: - ஓர் இடம் உயர்ந்த கட்டங்களாலோ ஓடும் ஆறுகளாலோ, நிமிர்ந்து நிற்கும் மலைகளாலோ, விரிந்து கிடக்கும் கடல்களாலோ மட்டும் பெருமை அடைந்து விடுவதில்லை. ஆங்குப் பிறந்த பெருமக்களாலேயே அழியாப் புகழ் அடை கின்றது; அவ்வகையில் இந்திய நாட்டுக்கு இணையில்லாப் புகழ் தேடித்தந்தவர்களுள் கவிஞர் தாகூரும் ஒருவர் ஆவர். கற்பனைவித்து:- கல்கத்தாவில் சீரோடு திகழ்ந்த தாகூர் குடியில் 1861 ஆம் ஆண்டில் தேவேந்திரநாத தாகூருக்குப் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார் இரவீந்திரர். எளிய வாழ்வை விரும்பிய தேவேந்திரர் இரவீந்திரரையும் அவ்வாறே வளர்த்தார். ஆதலால் எளிய விளையாடுப் பொருள்கைளத் தாமே படைத்துக் கொண்டு வீட்டு முற்றத்திலும் தோட்டத்திலும் விளையாடிப் பொழுது போக்கினார். இவ்வெளிமையும், விளை யாட்டுப் படைப்பும் இரவீந்திரர் கற்பனைக்கு வித்திட்டன. கற்பனைக்கு விருந்து:- சிறுவர் இரவீந்திரரை அண்ணன்மார் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆதலால் வேலைக்காரர்களையோ, அன்னையையோ, அத்தையையோ, கணக்கர்களையோ இரவீந்திரர் நாடிச்செல்ல நேரிட்டது. அப் பொழுதில் அவர்களிடம் சிலச்சில கதைகளைக் கேட்டார்; கதைப் பாட்டுக்களையும் அறிந்தார்; இவை இரவீந்திரரின் கற்பனைக்கு விருந்தாயின. இயற்கைக் கவர்ச்சி:- இரவீந்திரர் தனியே இருக்கம் பொழுது அவர் தம் கற்பனை உலகம் உண்மை உலகமாக மாறியது. பயன்படாமல் அவர்கள் வீட்டில் கிடந்த பல்லக்கில் இரவீந்திரர் ஏறி அமர்வார். அப்பல்லக்கு வானில் பறக்கும்; மலையையும், ஊரையும், ஆற்றையும் கடலையும் தாண்டும் எல்லாம் கற்பனையில் தான்! பச்சைப்புல், பனித்துளி, இளந்தளிர், மென்காற்று, மழை முதலிய இயற்கைப் பொருள்கள் இரவீந்திரரைக் கவர்ந்தது போலவே, மண்ணும் அதிலுள்ள பொருள்களும் கவர்ந்தன. பள்ளிப் படிப்பு:- வீட்டில் அடைபட்டுக் கிடந்த இரவீந்திரர் மற்றைச் சிறுவர்களைப் போலத் தாமும் பள்ளிக்குப்போக ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் சென்றதும், வீட்டைப் பார்க்கிலும் பள்ளிக்கூடமே கொடிய சிறைச்சாலையாக இருப்பதாக உணர்ந்தார்; ஆகவே பள்ளிப் படிப்பை வெறுத்தார். படிப்பில் வெறுப்பு:- இரவீந்திரரின் அண்ணன் மார்களுள் ஏமேந்திரர் என்பவர் ஒருவர். அவர் இரவீந்திரர், வீட்டிலேயே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அந்நாளில் வங்காளம், ஆங்கில மோகத்தில் சிக்கிக் கிடந்தது. ஆயினும் இரவீந்திரர் வங்கமொழியிலேயே பாடங்களைக் கற்றார். உடற்பயிற்சி, ஓவியம், ஆங்கிலம் ஆகியவனவும் அவர் படிப்பில் இடம் பெற்றன. பள்ளிப் பாடத்தைப் போலவே, வீட்டுப் பாடமும் இரவீந்தருக்குச் சுமையா யிற்று. ஆசிரியர்க்கு நோய் உண்டாகி வராமல் இருக்கமாட்டாரோ என்றும் தமக்கு நோய் வந்துவிடக்கூடாதா என்றும் ஏங்கினார். ஏட்டுப் படிப்பில் அவருக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. படிப்பும் பாராட்டும்:- பள்ளியில் படிக்கும் போதே பாட்டு எழுதும் திறம் பெற்றிருந்தார் இரவீந்திரர். அருஞ்சொற்களை அமைத்து எழுதுவதும், துன்பத்தைப் பற்றிப் பாடுவதும், சிறப்பு எனக்கருதிப் பாடினார். தம் மைந்தன் திறமை கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தம் மாணவர் திறமையை அறிந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார். நாடக நாட்டம்:- பிற்காலத்தில் உலகப் பெரு மேடையே இரவீந்திரருக்குக் காத்திருந்தது. எனினும் அவரது பிள்ளைப் பருவத்தில் அவர் அண்ணன்மார், வீட்டில் நடித்த நாடகங்களை தொலைவில் நின்றே காண முடிந்தது; நாடக மேடையை நெருங்கவும் அவர்கள் விட்டது இல்லை. இயற்கைக் கல்வி :- இரவீந்திரர் தம் தந்தை யாருடன் ஒருமுறை போல்பூருக்கும், இமயமலைக்கும் தொடர் வண்டியில் சென்றார் தொடர் வண்டிப் பயணம் அவர்க்கு மிகுந்த இன்பம் வழங்கியது. விடுதலைபெற்ற பறவை போல இன்புற்றார். தேவேந்திரர் போல்பூருக்கு அருகே அமைந்திருந்த சாந்தி நிகேதனம் இரவீந்திரரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இமயமலையின் இயற்கைச் சூழல் இரவீந்திரரின் சிறந்த கல்வி மேம்பாட்டுக்கு உதவியது. அங்கே தான் தேவேந்திரர் இரவீந்திரருக்கு ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்பித்தார்; விண்மீன்களையும், கோள்களையும் வானத்தை நேரில் காட்டி விளக்கினார்; நேராகத் தாவர இயலைக் கற்பித்தார்; இவற்றால் இரவீந்திரர் தாமே உற்றறியவும் எண்ணிப் பார்க்கவும் திறம் பெற்றார். கல்லூரிக் கல்வி :- கல்கத்தாவுக்குத் திரும்பிய இரவீந்திரர் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். கல்வி ஓரளவு கவர்ச்சியாக இருந்தது; கற்பித்த ஆசிரியர்களும் நிறைவளித்தனர். எனினும், இமயமலைக் காட்சி தந்த இன்பத்தை அடைய முடியவில்லை. ஆகவே ஏட்டுக் கல்வி அவ்வளவுடன் நின்றது. இயற்கைக் கல்வியோ பெருகத் தொடங்கியது. முடிவுரை :- உலகப் பெரும் புலவர் தாகூர், அவர் இளமைப் பருவத்திலேயே இயற்கையாகக் கற்பனை வித்துக்கள் ஊன்றப் பெற்றன; கதையும்; பாட்டும் நாடகமும் கற்பனை வரைத்துணை செய்தன; இயற்கைக் காட்சிகள் நெறிப்படுத்தின; விளையும் பயிர் முளையிலே என்பது மெய்யாயிற்று! 2. தாகூரின் கலைவளர்ச்சி முன்னுரை:- கலைத்திறம் அரிதில் அமைவது; ஆனால், எளிதில் எவரையும் கவர வல்லது; கலைத்திறம் பெற்றவர்கள் உலகவர் பாராட்டைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வர். அத்தகைய பேறு பெற்றவர் கவிஞர் தாகூர் ஆவர். குடும்பத்தில் கலை:- தாகூரின் குடும்பமே ஒரு கலைக் கழகம் .மூத்j அண்ணன் மெய்ந்நூற் பயிற்சியும் கணக்கறிவும் மிக்கவர்; ஐந்தாம் அண்ணன் சோதி ரீந்திரர் சீர்திருத்தக்காரர், இசை நாடகங்களில் தேர்ந்தவர். இவர்கள் எப்பொழுதும் கலைஞர் களோடும் அறிஞர்களோடும் அளவளாவுவர். அப்பொழுது உடனிருக்கும் வாய்ப்பு. தாகூருக்குக் கிட்டியது. ஆகவே இக் கலைகளில் தாகூர் திறம்பெற வாய்ந்தது. கதைத் திறம்:- வங்கக் கதையாசிரியர்களுள் தலை சிறந்த ஒருவர் பக்கிம்சந்திரர்; அவர் எழுதிய கதைகள் பங்கதர்சன் என்னும் திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அக்கதை களைத் தாகூர் குடும்பத்தினர் விரும்பிப் படித்தனர். இரவீந்திரர் அக்கதைகளை உரக்கப் படித்துக் காட்டி வீட்டார் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆனார். இந்நிலையில் பாரதி என்னும் பெயரில் தாகூர் குடும்பத்தில் இருந்து ஒரு திங்கள் இதழ் வரத் தொடங்கியது. அதில் இரவீந்திரரின் பாடல்களும், கதைகளும் வெளிவரலாயின. சோதிரீந்திரர் எழுதிய நாடகமும் அவ்விதழில் வந்தது அந்நாடகத்தை வீட்டில் நடித்துக் காட்டுவது வழக்கம். அதில் தாகூரும்சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். ஆங்கிலக் கல்வி:- தாகூர் தம் பதினேழாம் அகவையில் இங்கிலாத்துக்குச் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில்சேர்ந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார்; ஒன்றரை ஆண்டுகள் பயின்றும் ஒரு துறையிலும் பட்டம் பெறாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினர், தாகூர் சட்டப் படிப்பில் தேறவேண்டும் என விரும்பினர். அதனால் மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தம் உடன் வந்த அண்ணன் மகனுக்கு நோய் பற்றிக் கொண்ட மையால் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அவ்வளவில் தாகூரின் சட்டக் கல்வி நின்று விட்டது. மாலைப் பாடல்கள்:- இரவீந்திரர் தமக்குக் கிடைத்த பொழுதைக் கலைத்துறையில் செலவிட்டார். புதிய புதிய இசை நயங்களைக் கண்டார். கங்கையின் அழகையும், பெருக்கையும் கண்டு பலப்பல பாக்கள் இயற்றினார். அவை மாலைப் பாடல்கள் என்னும் பெயரால் வெளியாயின. அதற்குப் பின் வங்காள செல்வி என்னும் புகழ் தாகூருக்கு உண்டாயிற்று. வங்கக் கதை ஆசிரியர் பக்கிம்சந்திரர் ஒரு திருமண வீட்டிற்கு வந்தார். அவரை மணவிழா வீட்டினர் மாலையுடன் வரவேற்றனர். அம்மாலையைத் தம் கழுத்தில் ஏற்காமல் வாங்கி அங்கிருந்த தாகூருக்குச் சூட்டி, இவரே இதற்குத்தக்கவர் என்று பாராட்டினார் இவரின் மாலைப் பாடல்கள் என்ற நூலைப் படித்ததில்லையா? என்று வினாவிப் பெருமைப் படுத்தினார். ஊற்றின் எழுச்சி:- ஒரு நாட் காலையில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கதிரவன் தோற்றத்தைக் கண்ணுற்றார் தாகூர். மரங்களுக்கு இடையே கதிரவனின் ஒளிக் கதிர் பரவிவந்த காட்சி அவர் உள்ளத்தே ஒரு பெரு மாறுதலை உண்டாக்கிற்று. இவ்வகக் காட்சியால் உலகமே ஒரு புதிய அழகுடன் விளங்கியது. எல்லாப் பொருள்களும் முழு அழகுடனும், முழு நிறைவுடனும் கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பாகக் காட்சி வழங்கியது. வெறுப்பு மிக்க ஒருவனும் தாகூர் பார்வையில் விருப்புமிக்கவனாகத் தோற்றம் அளித்தான். அன்று தோன்றிய உணர்ச்சியைப் பாவாக்கி ஊற்றின் எழுச்சி என்று தலைப்புச் சூட்டினார். சந்நியாசி:- ஒரு சமயம் மேல் கடலை ஓட்டிய கார்வாருக்குச் சென்றார் தாகூர். கடற் பரப்பும் அதன் காட்சிகளும் அவர்க்கு விருந்தாயின. அங்கிருந்த நாளில் எழுதியவற்றுள் சந்நியாசி என்னும் நாடகம் குறிப்பிடத்தக்கது. துறவி ஒருவன் நெடுங்காலம் காட்டில் வாழ்ந்து உள்ளத்தை மிக உறுதிப்படுத்திக் கொண்டான். இனி உள்ளத்தில் அசைவு உண்டாகாது. என்னம் எண்ணத்துடன் ஊர்க்குள் போனான். அங்கே வசந்தி என்னும் திக்கற்ற குழந்தையைக் கண்டான். அக்குழந்தை நெருங்கித் தொடவும் பழகவும் இடம் தந்தான். அதனால் அவன் உள்ளத்தில் பாசம் உண்டாகின்றது. பாசம் உண்டாகக் கூடாது என எண்ணி துறவி வசந்தியை விடுத்து ஓடினான். வழியில் ஒரு வறிய பெண் தன் தந்தையைக் கூவிக் கொண்டு ஓடுவதைக்கண்ட துறவியின் மனம் மாறுபாடுற்றது. மீண்டுவந்து வசந்தியைத் தேடினான்; பலரையும் வினவினான். வசந்தி இறந்து விட்டாள் என்பதை அறிந்து வருந்தினான். அன்பு நெறியே வாழ்வு நெறி என்பதைச் சந்நியாசி நாடகத்தால் தெளி வாக்கினார் தாகூர். முடிவுரை:- குடும்பச் சூழல் இளமையிலேயே பலவகைக் கலைகளை அறிதர்க்கும் பெறுதற்கம் வாய்ப்பாக இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு இசையிலும், நாடகத்திலும், பாட்டு எழுதுவதிலும், கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். உலகம் பாராட்டும் பேறு பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? 3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் முன்னுரை : பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே எனப் பாடினார் பாரதியார். தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் ஒவ்வொருவருக்கும் இயல்பானது: இன்றியமையாதது இவ்வகையில் பெரும் புலவர் தாகூர் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். தாகூர் உள்ளம்: தாகூர் பேருள்ளம் உடையவர், சமயத்தின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் பெருக்குவதை வெறுத்தார். அது போலவே ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பகையை வளர்க்கும் நாட்டுப் பற்றையும் வெறுத்தார். நாட்டுக்கு நன்மை தேடுவதில் பிறர்க்கு எவ்வகையிலும் குறையாதவராக விளங்கினார். நாட்டுக்கு கொடுமை உண்டாக்கப்படும் போது வன்மையாகக் கண்டித்தார். நாடும் மொழியும்:- தாகூர் நெஞ்சில் உலகம் குடிகொண்டி ருந்தது. உலகவர் அனைவரும் அவர் அன்புக்குரியவர். ஆயினும் அவருடைய எழுத்துக்களில் வங்க நாடு பொலிவாக விளங்கியது. வங்க நாட்டுக் கருப் பொருள் மிக இடம் பெற்றன. வங்க மொழி முன்னேற்றமும் வங்க நாட்டு முன்னேற்றமும் அவர்க்கு உயிர்ப்பு ஆயின. ஆங்கில மோகம்:- வங்கமக்கட்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த ஆங்கில மோகத்தை அகற்ற அரும்பாடு பட்டார் தாகூர். தாய்மொழி வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டும் என வற்புறத்தினார். பொது மேடைகளில் தாய் மொழியே முழங்க வேண்டும் என்று கூறித் தாமே வழிகாட்டினார். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவுகளையும் வங்க மொழியிலேயே நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் தேர்ந்தவரான அவரது செயல் நாட்டு மக்களை விழிப்படையத் தூண்டியது. சிற்றூர் முன்னேற்றம்:- நாட்டின் முன்னேற்றம் சிற்றூர் களிலே அடங்கிக்கிடப்பதை அறிந்தார் தாகூர் சிற்றூர் மக்கள் செல்வர்களையும் ஆட்சியாளர்களையும் நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்பதை அறிந்தார். அந்நிலையைப் போக்குதற்கு முனைந் தார்; கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். சிற்றூர் முன்னேற்றத்தில் கற்றோர் ஈடுபடத் தூண்டினார். சாந்தி நிகேதனம்:- நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் அடங்கிக்கிடப்பதை நன்கு உணர்ந்தவர் தாகூர். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவது போன்ற பயன்மிக்க செயல் வேறு இல்லை என உணர்ந்தார். தம் இளமைப் பருவத்திலே பள்ளியைச் சிறைச்சாலையாகக் கருதிய நிலையை நினைத்துக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பள்ளிச் சூழ்நிலை யையும் பாடத்திட்டத்தையும் அமைக்க விரும்பினார். குழந்தைகள் ஆடிப்பாடி மகிழவும், இசையும் நாடகமும் கற்கவும், அறிவுப் பசி உண்டாகி ஆர்வத்துடன் கற்கவும் வழிவகை காண விரும்பினார். இத்தகைய எண்ணங்களால் 1901 ஆம் ஆண்டு உருவாகியதே சாந்தி நிகேதனம் என்னும் கலைக்கோவில் ஆகும். முடிவுரை:- வாழ்க ஒழிக என்று முழங்குவதிலே நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இருப்பதாகக் கூறிவிட முடியாது, நாடும் மொழியும் நன்மை பெரும் வகையில் எண்ணிப் பார்த்து ஏற்ற தொண்டுகள் செய்வதிலேதான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அடங்கிக் கிடக்கிறது. அத்தகைய அருந்தொண்டு செய்தவருள் தலைமணியாகத் திகழ்பவர் தாகூர். அவரது அயரா உழைப்பால் வையத்தில் வங்க நாட்டுக்கும் வங்க மொழிக்கும் தனிப்பேர் இடம் உண்டாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை. 4. இல் வாழ்க்கை தனி வாழ்க்கையை உலக வாழ்க்கையாக - தன்னல வாழ்வைப் பொதுநல வாழ்வாக - மாற்றியமைக்க அமைந்த போற்றத்தக்க அமைப்பே இல்வாழ்வாம். ஒருவர் தம் இல்வாழ்வில் பெறும் அமைதியே அவர் தம் சீர் சிறப்புக்கு அடிப்படையாம். இவ்வகையில் சீரிய இல்வாழ்க்கை எய்தி உலகுக்கு எடுத்துக் காட்டாக இலங்கி யவர் கவிஞர் தாகூர். இல்லறம்:- அன்பு நெறியே உலகை உய்ப்பது என்னம் உண்மையைத் தாகூர் கண்கூடாக அறிந்து கொண்ட நாளிலே தான் அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவர் மிருணாளினி தேவியார். அவர்அருங்குணச் செல்வி யராகத் திகழ்ந்தவர். ஆதலால் இல்லறம், அன்புக்கும் அமைதிக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தார். இல்லத்தில் கலைப்பணி:- மிருணாளினி தேவியார் கணவர் தம் உள்ளப்பாங்கை நன்கு உணர்ந்தவர். அவர்தம் கலைமேம் பாட்டை நன்கு அறிந்தவர். ஆகவே தம் கடமையில் தவறாமல் கணவர் கலைத் தொண்டுக்குத் துணையாக வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கலைப்பணி செய்வதற்குத் தாகூர்க்கு வாய்ப்பு ஏற்பட்டது தேவியாரலேயே. எளிமை வாழ்வு:- தாகூர் எளிமையும் தூய்மையும் விரும்புவர். எந்த ஒன்றிலும் அழகு காணத் துடிப்பவர். ஆடம்பரத்தை வெறுப் பவர். செல்வக் குடியில்பிறந்து வளர்ந்த மிருணாளினி தேவியார். கணவர் குறிக்கோளுக்கு ஒரு சிறிதும் மாறாது நடந்தார். மூட்டை யாகக் கொண்டு வந்த நகைகளை மூட்டையாகக் கட்டி வைத்து எளிமை பூண்டார். அணிகலம் ஆடை இவற்றில் மட்டும் தானா எளிமை? இணைந்த எளிமை:- தட்டு முட்டுச் சாமான்களிலும் எளிமை போற்றுவதே தாகூர்க்கு இயல்பு. நிறைய உடைகளை எடுத்துக் கொண்டு வெளியூர்க்குச் செல்ல நேர்ந்தால் இரண்டு உடை போதுமே என்பார். சாந்தி நிகேதனத்தில் பிறரைப் போலவே தமக்கும் குடிசை அமைத்துக்கொண்டு வாழவும், எளிய உணவே உண்டு வாழவும் தாகூர் முனைந்தார். இவற்றுக் கெல்லாம் மிருணாளினி தேவியார் இணைந்து செல்லும் மனைவியாக இலங்கினார். ஒத்த இல்லறம்:- மிருணாளினி தேவியாரின் சீரிய பண்புகள் தாகூரைக் கவர்ந்தன. ஆதலால் பற்பல கடமைகளுக்கும் இடையேயும் சமையல் அறையில் வந்து பொழுது போக்குவார். காய்கறி தின்பண்டம் பற்றியும் உறையாடுவார். மனைவியார் நோயுற்ற காலத்தில் வேறு எவரையும் அவர்க்கு விசிற விடாமல் தாமே விசிறி இன்புற்றார். குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளின் மேல் பேரார்வம் உடையவர் தாகூர். அவர்தம் இல்வாழ்வின் பயனாக ஆண்மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவரும் தோன்றினர். அவர்கட்கு வழிகாட்டுவது மட்மல்லாமல் குளிப்பாட்டுதல், உடுத்தி விடுதல், உறங்கச் செய்தல் ஆகிய கடமைகளிலும் முடிந்த பொழுதுகளில் எல்லாம் பங்கு கொண்டார். பேரிடி:- தாகூரின் இல்வாழ்க்கை அன்பிலே தொடங்கி அமைதியிலே வளர்ந்து அறத்திலே முதிர்ந்து இன்பமே பொருளாகத் துலங்கியது. அந்த இனிய இல்லறம் தாகூரின் முப்பத்தொன்பதாம் அகவையுடன் நிறைவாயது. தாகூர்க்குக் கிட்டிய பேரிடிகளில் தலைமையானது மிருணாளினி தேவியாரின் மறைவேயாம். முடிவுரை:- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் திருவள்ளுவர். அதற்கு ஏற்ப அமைந்தது தாகூரின் இல்வாழ்வு. அந்த வாழ்வே வங்கக் கவிஞரை உலகக் கவிஞர் ஆக்கிற்று என்பதில் ஐயமில்லை. 5. தொண்டுகள் தனக்கென வாழும் வாழ்வு, பறவை, விலங்குகட்கும் உண்டு. ஆனால், பிறவுயிர்க்கென வாழும் வாழ்வு அவற்றுக்கு இல்லை. பிறர்க்கென வாழும் வாழ்வு கொள்ளாதவர்கள் மனித வடிவில் இருப்பினும் - கற்றத் தேறியவராய் இருப்பினும் - மனிதர் ஆகார். அவர் மற்றை உயிர்களைப் போன்றவரே ஆவர். தாகூர் உள்ளம் பேருள்ளம்! நாடு, இன, மொழி கடந்த பேருள்ளம். அவ்வுள்ளம் தொண்டிலே தோய்ந்து நின்ற உள்ளமாம். சாந்தி நிகேதனம்- தாகூரின் தலையாய தொண்டு சாந்தி நிகேதனத்தைத் தோற்றுவித்து வளர்த்ததாம். நைவேத்தியம் என்னும் பெயருடன் தாகூர் இயற்றிய நூற் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தந்தையார் அதற்குப் பரிசாகப் பெரும் பொருள் வழங் கினார். அத் தொகையைக் கொண்டு அச்சிட்டு நைவேத்தியத்தை நூலாக்கினார் தாகூர். அதைக் கொண்டு சென்று, ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடந்தந்துதவுமாறு தந்தையாரை வேண்டினார். அதற்கு இசைந்து வேண்டிய வாய்ப்புக்கள் அனைத்தும் செய்து உதவினார். இவ்வகையில் 1901 இல் சாந்தி நிகேதனம் தோன்றியது. கலைவளர்ச்சி: எளிமையயை செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக்கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியை தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். பள்ளி இசை முழக்கத்துடன் ஒவ்வொருநாளும் தொடங்கும். இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப் பெறும். வாய்த்த பொதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப் பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிப்பிலும் பங்கு கொள்வார் தாகூர். கல்விப்பயிற்சி:- இளையவர்கள் இனிய முறையில் கல்விகற்க ஏற்பாடு செய்தார் தாகூர், விளையாட்டின் வழியாகவே கற்க வேண்டியவற்றை விரும்பிக் கற்க வழிவகை கண்டார். அடக்கு முறை இல்லாமல் சிறைச் சாலை என்னும் எண்ணம் தோன்றாமல் விருப்பத்தோடு மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக இருக்கவும். அவர்களுக்குள் வரும் தவறுகளை அவர்களே ஆராய்ந்து தீர்க்க வல்லவர்களாக இருக்கவும் வாய்ப்புக்கள் செய்தார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்குணரப் பயிற்றுவித்தார். இவ்வகையால் நன்மக்களை உருவாக்கி நாட்டுக்குத் தருதலில் சாந்தி நிகேதனம் பெரும் பங்கு கொண்டது. இடர்ப்பாடுகள்:- சாந்தி நிகேதனத்தை அமைத்து வளர்க்கும் பொறுப்பில் தாகூர்க்குப் பொருள் மிகச் செலவாயிற்று. பொருள் முடை ஏற்பட்டது போதாது என்று மனைவியார், மகள், தந்தை யார், மைந்தன், சிறந்த ஆசிரியர் ஒருவர் ஆகியோர் அடுத்தத்து இறந்தனர். இவ்விழப்புக்கள் தாகூரை வாட்டின. அவர், நாட்டுத் தொழிலும், வாணிகமும் வளரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில அமைப்புக்ளில் போட்டு வைத்திருந்த பணமும் வரப்பெறாமல் போய் விட்டன. இந்நிலையிலும் தளராமல் அரிய பல பணிகள் புரிந்தார். பொதுப்பணிகள்:- 1889இல் கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது தாகூர், நிவேதிகை அம்மையாருடன் ஓய்வின்றி பாடுபட்டு பணம் திரட்டினார். வங்கத்தில் வெள்ளக்கேடும், பஞ்சயத்துயரும் உண்டாக்கிய பொழுதுகளில் எல்லாம் அயராது பாடுபட்டார். பீகாரிலும், குவெட்டாவிலும் நில நடுக்கம் உண்டாக்கிய போது மக்கள் சொல்ல முடியாத் துயரடைந்தனர். அப்பொழுது தாகூர் செயற்கரிய செயல்களை மேற்கொண்டார். அரசியல் ஈடுபாடு:- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க நேர்ந்த போது மக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கட்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தினார் தாகூர். நாடெல்லாம் சென்று மேடைதோறும் முழங்கினார். வீரப் பாடுக்கள் இயற்றிப் பரப்பினார்; ஊர்வலம் நடத்தினார்; நிதி திரட்டி உதவினார். பகை கொள்ளாத ஒத்துழையாமையே அவர் கருத்தாக இருந்தது மாணவர்கள் இயக்த்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறினார். இந்நெறிப்படி அமைப்புச் செல்லாமையைக் கண்டு அரசியலில் இருந்து விலகிச் சாந்தி நிகேதன அமைதிப் பணியை மேற்கொண்டார் இந்து முகமதியர் வேறுபாட்டைத் தடுக்க எவ்வளவோ அவர் முயன்றார். அது கைகூடாமையால், வங்கம் இரண்டாகப் பிரிந்து பட நேர்ந்தது. கலைத்தொண்டு:- அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர் கலைத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்டோர், புகழ் வாய்ந்த கீதாஞ்சலியையும், வேறு சில நாடகங்களையும் இப் பொழுதில் இயற்றினார். மாணவர்களை நடிப்பு முதலாய துறைகளில் நன்கு வளர்க்கப் பாடுபட்டார். அவருடைய தொண்டை நாடு அறியத் தொடங்கியது ஒப்பற்ற உலகக் கவிஞராம் தாகூரைப் பலவகை அமைப்புக்களும் வரவேற்கவும் பாராட்டவும் தொடங்கின. முடிவுரை:- தாகூர் பரந்த பாங்கு படைத்தவர் இளையவர் உள்ளத்தே உண்டாகும் உணர்ச்சிகளே எதிர்கால உலகைக் காக்க வல்லது எனத் தெளிந்து தொண்டாற்றினார். மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவன் உவக்கும் தொண்டு என்பதைச் செயலில் காட்டினார். அவர் தொண்டுள்ளம் வாழ்வதாக. 6. பெருவாழ்வு ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்றார் வள்ளுவர். ஆம் உலகத்தில் நிலை பேறானது புகழ்ஒன்றேயாம். நிலைபெறாத உலகத்தில் பிறந்த மக்கள் தம் செயற்களும் செயலால் ஈட்டிய புகழை நிலைக்கச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும், இந்நோக்கத்தை நன்கு நிலையாட்டியவர் தாகூர் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டுப்பயணம்:- தாகூர் தாம் வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலிப் பாக்களைப் பொழுது போக்குப் போலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1912இல் தாகூர் இலண்டனுக்குச் சென்றபோது அம்மொழி பெயர்ப்பையும் எடுத்துச் சென்றார். ஆங்கிருந்த தம் நண்பர் வில்லியம் என்பார்க்குக் காட்டினார். அவர் பாடலின் அருமையை வியந்து பாராட்டியதுடன் தம் நண்பர்கள் பலர்க்கும் காட்டினார். இவ் வகையில், வெல்சு, பெர்னாட்சா, இரசல், பிரிட்சு, ஆண்ட்ரூசு என்பவர்கள் நண்பர் ஆயினர். இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சில பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். தாகூர் பெருங் கவிஞராகவும் சமயத் தலைவராகவும் பேரறிஞர் உள்ளங்களில் இடம் பெற்றார். உள்நாட்டில் புகழ்:- தாகூர் மேல் நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், அவர் இயற்றிய கீதாஞ்சலிக்கு உலகத்தின் உயர்ந்த பரிசாகிய நோபல் பரிசு கிட்டியது. ஐரோப்பியர் அல்லாத எவரும் அதுவரை அப்பரிசைப் பெற்றது இல்லை தாகூர் அப் பரிசைப் பெற்றது கண்டு, அவரது தாய் நாடான வங்கம் மிகப் பெருமை எய்தியது; தாகூரை அழைத்து விருந்தும் விழாவும் எடுத்தது. பாராட்டுக்கள் நலகியது. பக்கிம் சந்திரர் புகழ்ந்தும் உள்ளவாறு உணரப்பெறாத வங்கம், தங்கள் நாட்டுப் புலவர் மணியை மேல் நாட்டார் பாராட்டிய பின்னரே உணர்ந்து பாராட்டியது இலக்கணம் அறியாப் புலவர் என்று பழித்தவரகளும், பாராட்டத் தொடங்கியது தாகூர்க்கு வியப்பாகவே இருந்தது. கல்லூரிப் பட்டம் பெறாத அவரைக் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அழைத்து டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பட்டமளிப்புப் விழாப் பேருரை நிகழ்த்த வேண்டிக் கொண்டது. தாய்மொழிப்பற்று:- தாகூர் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்; உலகத்தைத் தம் குடும்பமாகக் கருதபவர். அதே பொழுதில் தாய் மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். வங்க நாட்டினர் வங்க மொழியில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், கற்க வேண்டும் என்று அவரைப்போல வற்புறுத்தியவர் எவரும் இலர். அது போல் தமிழ் மக்கள் தம் தாய் மொழியில்தான் பேச வேண்டும், கற்க வேண்டும். என்று வற்புறுத்தினார் தாகூர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது அவரக்குத் தமிழ்ப்புலவர் ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்புத்தர குயில் கிளியைப்போல பாட முயலக் கூடாது. குயில் தன் குரலால்தான் கூவ வேண்டும். நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பாடி இருக்க வேண்டும் என்றார். உலக வழிகாட்டி:- மேல்நாட்டு அறிஞர்களுடன் அளவள வாவும் வாய்ப்புக் கிடைத்தது. குறித்துத் தாகூர் மகிழ்ந்தார். அதே பொழுதில் மேலைநாடுகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சியும் நடுங்கியும் வாழும் நிலைமையைக்கண்டு வருந்தினார். ஒரு நாட்டை அழிக்க மற்றொரு நாடு படைகளைப் பெருக்குவதை அறவே வெறுத்தார். போட்டியும் பொருமையும் நாகரிகம் ஆகாது எனக் கண்டித்தார். உலகுக்கு இவ்வகையில் வழிகாட்ட வேண்டியது. இந்தியாவின் கடமை என உணர்ந்து சாந்தி நிகேதனத்தின் வழியாக உலக அமைதிக்குப் பாடுபட முனைந்தார். காந்தி யடிகளை வரவேற்று உலக அமைதிபற்றி ஆராய்ந்தார். வெளி நாட்டு மாணவர்களையும், பெருந்தலைவர்களையும் சாந்தி நிகேதனத்தில் கலந்து உரையாடினார். பொதுமைவேட்கை:- சாந்தி நிகேதனத்தில் 1918 இல் விசுவபாரதி என்ற உலகக் கலைக் கழகத்தை அமைத்தார். ஆண்ட்ரூசு, பியர்சன் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்தி நிகேதனத்தில் தங்கி இருந்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் அங்கு இடம் பெற்றன. சீனா, ஜப்பான் முதலான கீழை நாட்டுக் கலைகளும், ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும், ஆங்கு இடம் பெற்றன. கிழக்கு மேற்கு என்று பாராமல் நல்லவற்றை யெல்லாம் கொள்ள வேண்டும் என்பதே தாகூர் கொள்கை. உலகவர் அனைவரும் மனிதர் என்னும் பொதுத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே தாகூரின் உள்ளார்ந்த தொண்டின் அடிப்படை ஆயிற்று. அஞ்சாமை:- 1916-17 இல் தாகூர் சப்பானுக்குச் சென்றார். அந்நாட்டு கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டு அளவளாவினார். பல கூட்டங்களில் பேசினார். சப்பானியரின் அழகுணர்ச்சியை மதித்துப் போற்றினார் அதே பொழுதில் அரசியல் பகை, மண்ணாசை ஆகியவற்றைக் கண்டித்தார். எவர் தம்மைப் புறக் கணித்தாலும் தமக்கு நேரிது எனத் தோன்றிய கருத்தை அஞ்சாது வெளியிட்டார் தாகூர். பட்டம் துறப்பு:- டயர் என்னும் வெறியன் சாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் திரண்ட மக்களைத் தக்க முன்னறி விப்பு இல்லாமல் சுட்டுத் தொலைத்த கொடுமையைக் கண்டித்தார். ஆங்கில அரசால் தமக்குத் தரபெற்ற சர் என்னும் பட்டத்தை உதறினார். நாட்டு முன்னேற்றத்திற்குக் கிராம முன்னேற்றமே அடிப்படை என உணர்ந்து தொண்டாற்றினார். கிராமத் தொண்டர்படை அமைத்தார். தேர்வு முறையால் உண்டாகும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தம் கலைக் கழகத்தில் தேர்வு முறையை ஒழித்துக் கட்டினார். இவ்வாறாக உலகுக்குப் பயன்படும் பெருவாழ்வு கொண்டார் தாகூர். முடிவுரை:- பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்றார் வள்ளுவர். அதுபோல் பண்பாளராகத் திகழ்ந்த தாகூரால் உலகம் நல்ல பல வாய்ப்புகளை எய்திற்று. தாகூர் புகழ் வாழ்வதாக: 7. சாந்தி நிகேதனம் தாகூர் பெருங்கலைஞர்; கவிஞர்; இசையிலும் நாடகத்திலும் தேர்ந்தவர்; வங்க மொழியும், ஆங்கிலமும் கொஞ்சி விளையாடும் அளவில் கவிகள் இயற்றியவர்; நாட்டுத்தொண்டிலே ஈடபட்டவர். அவர் தம் எண்ணத்தைச் செயற்படுத்துதற்கு என ஏற்பட்ட அமைப்பே சாந்தி நிகேதனம் ஆகும். நிலையத் தோற்றம்:- தாகூர் நைவேத்தியம் என்னும் தலைப்பில் இனிய தெய்வப் பாடல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த தேவேந்திரநாத் தாகூர். பெருந் தொகையைப் பரிசாக வழங்கினார். அத்தொகையைக் கொண்டு நைவேத்தியத்தை அச்சிட்டுத் தந்தையாரிடத்தில் படைத்தார் தாகூர். அப்பொழுது ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடம் தந்து உதவுமாறு தந்தையிடம் வேண்டினார். அவ்வாறே தந்தையார் இசைந்தார். இவ்வகையால் 1901 இல் எழுந்த நிலையமே சாந்தி நிகேதனக் கலைக்கழகம் ஆகும். கலைத் திட்டங்கள்:- எளிமையில் செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக் கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியைத் தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். இசை முழக்கத்துடன் தொடங்கும் பள்ளி இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப்பெறும். வாய்த்த பொழுதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப்பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிகராகவும் திகழ்ந்தார் தாகூர். கல்வி முறை:- சாந்தி நிகேதனத்தில் ஐவரே மாணவராக இருந்தனர். பின்னர்நூற்றுக்கணக்காகப் பெருகினர். சிறுவர்களே அல்லாமல் சிறுமியரும் இடம் பெற்றனர். விளையாட்டின் வழியாக விரும்பிக் கற்கும் முறையை உருவாக்கினார் தாகூர். பள்ளிக் கூடம் அடக்கிவைக்கும் இடம் என்றோ. சிறைச்சாலை என்றோ மாணவர் மனத்துத் தோன்றாவண்ணம் சூழ்நிலை யையும், பாடத்தையும், கற்பிக்கும் முறையையும் வகுத்தமைத்தார். அதே பொழுதில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாகவும், தமக்குள் உண்டாகும் சிக்கல்களைத் தாமே தீர்த்துக் கொள்ளத் தக்கவர்களாகவும் மாணவர்களை உருவாக்கினார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்கு வளர்த்தார். விசுவ பாரதி:- உலகம் ஒருகுடி என்பதை உணர்ந்தவர் தாகூர். அதனால் 1918 இல் சாந்தி நிகேதனத்தில் விசுவபாரதி என்னும் உலகக் கலைக் கழகத்தை உருவாக்கினார். அங்கு உலகப் பெருமக்கள் பலரும் வருகைதந்து அளவளாவ வாய்ப்புச் செய்தார். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் சாந்தி நிகேதனத்தில் இடம் பெற்றன. சீனா, சப்பான் முதலான கீழை நாட்டுக் கலையும் ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும் ஆங்கு இடம் பெற்றன. சமயம் கடந்த, இனம் கடந்த, நாடு கடந்த பொதுத் தன்மைக்குச் சாந்தி நிகேதனம் இருப்பிடம் ஆயிற்று. திருநிகேதன்:- கிராமங்கள் பெருகியுள்ள இந்திய நாட்டில் கிராமங்கள் வளம் பெறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என கண்டார். அதற்காகத் தம் மைந்தர் இரவீந்திர நாதரை அமெரிக்கா வுக்கு அனுப்பி உழவைப்பற்றி மூன்று ஆண்டுகள் கற்றுவரச் செய்தார் விசுவபாரதியில் கற்பிக்கும் கலைகளில் கிராமத் தொண்டு என்பதையும் ஒன்றாக்கினார். சாந்தி நிகேதனத்திற்கு அருகில் இருந்த சுருள் என்னும் ஊரில் இருந்த தம் விட்டைத் திருநிகேதன் எனப்பெயர் சூட்டிக் கிராமத் தொண்டுக்கு உரிய தலைமை நிலையம் ஆக்கினார். அங்கே நூலகமும் அலுவலகமும் அமைத்தார். தரிசாகக் கிடந்த அப்பகுதி வளமான பயிர்நிலமாக மாறியது. கூட்டுறவுக் கழகம்:- திருநிகேதனில் கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பெற்றது அங்குக் குடியிருந்த அனைவரும் உறுப்பினர் ஆயினர். கூட்டுறவுக் கழகக் கட்டணத்தின் ஒரு பகுதி மருத்துவக் கட்டணம் ஆக்கப் பெற்று மருத்துவர்க்குத் தர ஏற்பாடாயிற்று. ஆதலால் மருத்துவர் நோய் வராமல் பார்த்துக் கொள்வதில் மிக அக்கறை காட்டினார். மக்களுக்கு நோய் வராவிட்டாலும் தமக் குரிய தொகை கிடைக்க வகை இருந்தால் நோய் வராமல் தடுக்க மருத்துவர் முயல்வது இயல்பு அல்லவா! தொண்டர் படை:- கிராமப் பள்ளிக்கூட மாணவர் களுக்குத் தொண்டர்படை அமைக்கப் பெற்றது. கிராமத்து மக்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அந்தத் தொண்டர் படை உதவியது. உடலையும் உள்ளத்தையும் வளர்த்துப் போற்றினர் தொண்டர் தொண்டர்கள் தத்தம் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல் வேண்டும். பொதுத்தோட்டத்திலும் பாடுபட வேண்டும். அதன் பயனால் கிடைத்த தொகையைக் கொண்டு பள்ளிக்கூட நூல்கள் வாங்கப் பெற்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், நாடகங்கள் ஆகியன அவ்வப்போது மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப் பெற்றன. உரிமைக் கல்வி:- பக்கத்துக் கிராமங்களில் பயிலும் மாணவர்கள் திருநிகேதனில் வந்து ஐந்தாறு ஆண்டுகள் பயின்றனர். உலகச் செய்திகளும், வாழ்க்கை வரலாறுகளும், வங்க இலக்கியமும் கற்பிக்கப் பெற்றன. ஆனால் பொதுத் தேர்வு என்பது அங்கு இல்லை. உரிமை உணர்ச்சி இல்லாத கல்வி, கட்டாய உணவு போல் தீமை தரும என்பது கவிஞர் கொள்கை. அதனைத் தம் கழகத்தில் செயல் திட்டமாகக் காட்டினார். முடிவுரை:- தாகூர், மக்கள் அமைதியும் இனிமையுமான வாழ்வு வாழக் கருதினார். அதற்கு ஏற்ற செயல் திட்டங்களைச் சாந்தி நிகேதனில் உருவாக்கி வளர்த்தார். அதன் செயல் மணம் பக்க மெல்லாம் பரவி நலம் செய்வதாயிற்று. 8. உள்ளத்தின் ஒளி உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல் என்றார். திருவள்ளுவர். உள்ளத்தே ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார் பாரதியார். ஊழினை உருக்கி உள்ளொழி பெருக்கி என்றார் மாணிக்க வாசகர். உள்ளொளியைத் தெள்ளிதின் ஆராய்ந்து எழுதினார். திரு.வி.க. உள்ளொளி வாய்ந்த மாந்தர் உலகில் அரியர். தாகூர் அவ் வரியருள் அரியராகத் திகழ்ந்தார். உள்ளொளி:- தாகூர் கவிஞர் கதை ஆசிரியர்; நாடக ஆசிரியர்; இசைக் கலைஞர்; நடிகர்; ஓவியர் இயற்கைச் சுவைஞர். இயற்கை வாழ்வினர்; இறையருட் பேற்றாளர் அவர்தம் படைப்புக்கள் அனைத்தும் உள்ளத்தின் ஒளியை உலகுக்கு அறிவிப்பன. நூலாகவும், இதழாகவும் வெளிவந்து உலகுக்கு ஒளிபரப்பின. படைப்பின் மாண்பு:- தம் வாழ்க்கையில் கண்ட எளிய நிகழ்ச்சிகளையும், கேட்ட எளிய, செய்திகளையும் அரிய படைப் பாக்குதலில் தேர்ந்தவர் தாகூர். அவர் கற்பனை ஒளி பட்டதும் எளிய காட்சிகளும், செய்திகளும் அரிய ஒளி வீசிச் சுடர்ப்பிழம் பாகக் காட்சி வழங்கின. கதையாயினும் பாட்டாயினும் எழுதி முடிக்கப் பெற்றதும் நண்பர்களை அழைத்து உடன் வைத்துக் கொண்டு யாழிசை போன்ற தம் குரலால் படிப்பார்; நாடகம் ஆயின் நடித்துக் காட்டவார். பாடல் தொண்டு பாடல் தொண்டு செய்வதே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தாகூர் என்பதில் தவறு இல்லை. கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர் ஓய்வற்ற பணிகள் மிகுந்தும் பாடல் தொண்டு செய்வதில் அவர் தவறவில்லை. பக்கம் பக்கமாக உரைநடை எழுதிய போதிலும் ஒரு பாட்டு எழுதுவதற்கு ஈடான மகிழ்ச்சி உண்டாவது இல்லை. ஒருவர் தம் கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவைபோல் பாட்டுக்கள் அமைகின்றன. ஆனால் உரைநடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனமாகவும், கையாள முடியாததாகவும்அசைக்க இயலாததாகவும் இருக்கின்றது. நாளுக்கு ஒரு பாட்டு எழுதி முடிக்க இயலுமானால் என் வாழ்வு இன்பமாக நடைபெறும் என்று கூறும் வரிகளில் தாகூரின் கவிதை ஆர்வம் நன்கு புலப்படும். நாடகத் தொண்டு:- இளமையிலேயே வீட்டில் அண்ணன்மார் நடிக்கக்கண்டு களித்தது நாடகக்கலை. மேடையை நெருங்க முடியாதிருந்த நிலைமாறித் தாமே நாடகம் இயற்றவும், இயற்றிய நாடகத்தைப் பயிற்று விக்கவும். தாமே நடிக்கவும் ஆகிய நிலைமைகள் உண்டாயின. சாந்தி நிகேதனப் பாடத் திட்டங்களில் நாடகத்திற்குச் சிறந்த இடம் தரப் பெற்றது. வால்மீகி தீபம் என்னும் நாடகத்தைத் தம் பத்தொன்பதாம் வயதில் எழுதினார். தாமே வால்மீகராக நடித்தார். மிக முதிர்ந்த காலத்திலும் நாடகப் பற்றை விட்டாரல்லர். கற்பனை வளம்:- கற்பவரின் மனக்கண்ணில் அழுத்தமாக நிறுத்தத் தக்க கற்பனைச் சொல்லோவியங்களைப் படைத்தலில் வல்லவர் தாகூர். கடலைக் காண்கிறார் தாகூர். கற்பனை வளம் பொங்குகிறது; வெட்ட வெளியில் கிடக்கம் கடல் அலைந்து புரண்டு நுரை கக்குகிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம் போன்ற தோற்றம் மனதில் எழுகிறது. நிலம் கடலின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை. தாயின் அரியணையைப் பற்றிக் கொண்டது. அது முதல் பெற்ற தாய் பித்துப்பிடித்தவளாய், நுரை நுரையாய்க் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள். தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயரடைகிறாள். குழந்தை நெஞ்சம்:- பெருமக்கள் குழந்தை நெஞ்சம் உடையவர். தாகூர் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமக்குப் புகழ் வருவது கண்டு வருந்தினார் தாகூர். என் ஆடைகளின் கரைகளைத் தொடுவதற்காகவும், அதை முத்தமிடுவதற்காகவும் மக்கள் சூழ்ந்து நெருங்குவது எனக்குக் கவலையை உண்டாக்கிறது. நான் வணங்கத் தக்க மக்கள் அவர்களிடத்தே பலர் இருக்கின்றனர் என்பதை நான் எப்படி உணர்த்துவது என்று ஏங்கினார். குழந்தைகளைப் பற்றி உருக்கும் படியாகப் பாடிய புலவர்களுள் உலகில் முதலிடம் பெறுபவர் தாகூர் என்பர். பிறைமதி என்னும் தொகுப்பில் அவர்தம் குழந்தைப் பாடல்கள் உள. அமைதி வேட்கை:- போரை வெறுத்தவர், கண்டித்து உரைத்தவர் தாகூர். போர் முடிந்தபின்னர் பிரஞ்சு நாட்டிற்கும், செர்மனி நாட்டிற்கும் சென்ற கவிஞர் ஆங்குப் பாழடைந்து கிடந்த கட்டிடங்களைக் கண்டு கலங்கினார். போரில் மடிந்த வீரர்களின் கல்லறைகளைக் கண்டு உருகினார். உலகத்து அறிஞர்கள் செய்த வரும் செயற்கருஞ் செயல்களை யெல்லாம் போர்ப் பேய் விழுங்கி விடுவதைக் கண்டு புண்பட்டார். போரைத் தூண்டி விட்டவர் எங்கோ இருக்க, இன்னதென்று அறியாத மக்கள் படும் அவலங்களை எண்ணி நொந்தார். தம்மால் ஆன தொண்டுகளை அவ்வப்போது செய்தார். சீனா, இரசியா முதலான நாடுகளுக்குச் சென்று அறிஞர்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டார். பெருந்தலைவர்களுடன் இணைந்த அமைதிப் பணி புரிந்தார். அத்தகயருள் காந்தி யடிகள் தலையாயவர் ஆவர். அவருக்கு மகாத்மா பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தவரே தாகூர்தாம். ஒளிமிக்க உள்ளம்:- உயிர்கள் அனைத்தின் மேலும் ஒப்பற்ற அன்பு செலுத்தினார் தாகூர். தனிப் பட்ட மனிதர் மேல் வெறுப்புக் கொள்ளாதவர் தாகூர். கொள்கைகளில் விரும்பத் தக்கவை, வெறுக்கத்தக்கவை இவை எனக் கருதுவதே அல்லாமல் கொள்கை யுடையார் மேல் விருப்பு, வெறுப்புக் காட்டாத பெரும் பாங்கு அவருடையது. உலகப் போர் அல்லலை நினைந்து உருகிய அவர் 1941 இல் தம் என்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் ஒன்றில் நாகரிகத்திற்கு உண்டாகிய நெருக்கடி எனப் பேசினார். அழிவை மூச்சாகக் கொண்ட நாகரிகம் அன்று வாழ் நாளெல்லாம் பறை யறைந்தார். அவர் உள்ளம் அத்தகையது. முடிவுரை:- தாகூர் தண்ணொளி பரப்பும் பேரொளிச் சுடர். அச்சுடரொளியால், வழிபிடித்துக் கொண்டு உலகம் செல்லும் நாளே உய்யும் நாள். அந்நாள் வருவதாக! 1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும் கல்வியும் உலகின் நன்மைக்காகப் பிறந்த பேரருளாளர்கள் பலர்; செயற்கருஞ் செயல் செய்த சீரிய தொண்டர்கள் பலர்; இறையன் பில் இணையற்று விளங்கியவர்கள் பலர்; இத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் சுவைட்சர் 1875ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் ஐரோப்பாவைச் சேர்ந்த கேயர் சுபர்க் என்னும் ஊரில் லூயி சுவைட்சர் - என்பவரின் இரண்டாம் திருமகனாராகப் பிறந்தார். அவர் பிறப்பால், பிறர்க்கென வாழ்ந்த பெருமக்கள் பிறந்த நாள்களுள் சனவரித் திங்கள் பதினான்காம் நாளும் ஒருநாள் ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சரின் தந்தையார் லூயி சுவைட்சர் கிறித்தவ சமய போதகராகப் பணிசெய்தார். ஆர்கன் என்னும் இசைக் கருவியை மீட்டுதலில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர்தம் முன் னோரும் உடன் பிறந்தவர்களும் இசைத் தேர்ச்சியும் இறையன்பும் மிக்கவராக இருந்தனர். ஆகவே இறையன்பும் கவர்ந்து ஆட் கொண்டனர். ஐந்தாம் அகவையிலேயே ஆல்பர்ட்டுக்கு அவர் தம் தந்தையார் பியானோ கற்பித்தார். ஏழாம் அகவையிலேயே தம் இசையாசிரியை பாராட்டும் திறம் பெற்றார். எட்டாம் அகவையில் ஆர்கன் இசைப்பதில் ஈடுபட்டார்! இவ்வாறு இசையால் இசை பெற்றுத் திகழ்ந்தார். லூயி சுவைட்சர் கேயர்சுபர்க்கில் இருந்து கன்சுபர்க் என்னும் இடத்திற்குச் சமய போதகராக மாற்றப் பெற்றார். ஆகவே கன்சுபர்க்கில் தான் சுவைட்சரின் இளமைக் கல்வி தொடங்கியது. எளிய சூழ்நிலையில் அமைந்த கன்சுபர்க் பள்ளிக்குச் சென்ற சுவைட்சர், தாமும் அந்த எளிமையை மிக விரும்பிப் போற்றினார். உடன் பயிலும் உழவப் பிள்ளைகளைப் போலவே உடை உடுத்தார். அவர்களுக்குக் கிடைக்காத எந்த அரிய பொருளையும் பயன் படுத்துவதை வெறுத்தார். ஏழை எளியவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார் இளைஞர் ஆல்பர்ட். ஒரு நண்பனின் வற்புறுத்தலை மறுக்க முடியாதவராக ஒரு நாள், சுவைட்சர் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார். பறவைகள்மேல் வில்லுண்டை படக்கூடாதென எங்கேயோ குறிபார்த்து எப்படியோ வில்லை வளைத்து ஏவினார். தம் நண்பன் எந்தப் பறவையையும் அடித்து வீழ்த்திவிடக் கூடாதே என்ற அருளால் அவற்றை எழுப்பிப் பறந்தோடச் செய்து இன் புற்றார். அத்துணை இளக்கமானது அவர் உள்ளம். இறைவனுக்குச் செய்யும் நாள்வழி பாட்டுரையுடன் இறைவனே எல்லா உயிர் களுக்கும் அருள் சுரந்து நலம் செய்வாயாக! அமைதியாக உறங்குவதற்கு அருள்புரிவாயாக என்னும் வரிகளையும் சேர்த்துக் கொண்டு முறையிட்டார்! இளமையில் முதிர்ந்த பெருமகனார் ஆல்பர்ட் சுவைட்சர் அல்லவா! சுவைட்சரின் தலைமயிர் எளிதில் படியாதது. எத்தனை முறை சீவினாலும் எழும்பி நிற்கக் கூடியது. அதனைக் கண்ட பணிப்பெண், இத்தலை மயிரைப் போலவே இவன் அடங்கா தவனாக இருப்பான் என்று கூறுவாள். இவ்வுரையால் தம்மைத் தாழ்வாகக் கருதிக் கொண்ட சுவைட்சர் ஒரு நாள் ஒரு பொருட் காட்சி சாலையில் புனிதர் யோவான் உருவத்தைக் கண்டார். அவர் தலை தன் தலைபோலவே படியாமல் இருப்பதைக் கண்டு புறத் தோற்றத்துக்கு ஏற்றபடிதான் அகத் தோற்றமும் இருக்கும் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று உறுதி செய்தார். அவர் உள்ளத்தில் அமைதி உண்டாயிற்று. 1884 ஆம் ஆண்டு வரை சுவைட்சர் கன்சுபர்க் பள்ளியில் பயின்றார். பின்னர் ஓராண்டு மன்சிட் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இலத்தீன் மொழியைத் தனியே ஓராசிரியரிடம் கற்றார். முல்காசன் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். முல்காசனில் சுவைட்சரின் தந்தைவழிச் சிறிய பாட்டனாரும் பாட்டியும் இருந்தனர். அவர்கட்குக் குழந்தைகள் இல்லாமையால் ஆல்பர்ட்டை ஏற்றுப் போற்றினர். அங்கு எட்டாண்டுகள் இருந்து மிகத் திறமையாகக் கற்றார். ஆர்கன் இசைப்பதிலும் தேர்ந்தார். தம் பதினெட்டாம் அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு தாய் தந்தையிரிடம் சென்றார். நீகிரோ ஒருவனின் உருவச் சிலையைச் சுவைட்சர் தம் இளமையில் ஒரு நினைவுச் சின்னத்தில் கண்டார். அச்சிலையின் தோற்றம் ஆல்பர்ட் உள்ளத்தில் அளவிறந்த இரக்கத்தைத் தோற்று வித்தது. அச்சிற்பத்தை வாய்த்த போதெல்லாம் அடிக்கடி கண்டு கண்டு உருகினார். பின்னாளில் பிணிதீர்க்கும் பெருமகனாராகத் திகழத் தூண்டியவற்றுள் இச் சிற்பம் தலையாயது ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சர் இளம் பருவத்திலேயே இரக்கமிக்க வராய், எளிமை போற்றுபவராய், இறையன்பு மிக்கவராய் இசைச் தேர்ச்சி பெற்றவராய் இலங்கினார் என்பதைக் கண்டோம். விளையும் பயிர் முளையிலேயே என்பது மெய்யுரை யாயிற்று! 2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி இளமையிலேயே அன்பும், அருளும், இசைத்திறமும் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்; உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தம் பதினெட்டாம் அகவையளவில் முடித்த சுவைட்சர் அதன் பின்னர் மேல்நிலைக் கல்வியில் ஈடுபட்டார். சமய போதகராகிய லூயி சுவைட்சரின் மைந்தர் ஆதலால் ஆல்பர்ட் சுவைட்சருக்குச் சமயப் பற்று மிக்கிருந்தது இயற்கையே. குலவிச்சை கல்லாமல் பாகம் படும்! அதனால் 1893ஆம் ஆண்டில் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் மேல்நிலைக் கல்வி கற்கப் புகுந்த சுவைட்சர் சமய இயல், தத்துவம் ஆகிய இருபாடங்களையும் விரும்பி எடுத்துக்கொண்டார். இப்பாடங்களுக்கு இடையே எபிரேய மொழியை முயன்று கற்று முதிர்ந்த புலமை பெற்றார். கல்வி கற்றுவந்த காலையில் கட்டாய இராணுவப் பயிற்சியில் சேரவேண்டிய கடமைக்கு ஆட்பட்டார். அதே பொழுதில் உதவித் தொகை பெறுவதற்காக ஒருதேர்வு எழுதியாக வேண்டிய இன்றியமையாமையும் உண்டாயிற்று. அத்தேர்வுக்கு மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியவர்கள் அருளிய ஆகமங்களை ஆராயும் கடப்பாட்டை மேற்கொண்டார். இக்கல்வி இவர்தம் சமயத்துறை மேம்பாட்டுக்குப் பெருந்துணையாயிற்று. சுவைட்சர் 1897 ஆம் ஆண்டில் தத்துவத்தேர்வு எழுதுவ தற்காகத் தம்மை பதிவு செய்துகொண்டார். அத்தேர்வுக்குச் செல்பவர் தம் தகுதியை நிலைநாட்டுவதற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் வேண்டும். இயேசு நாதரின் கடைசி உணவு என்பதை ஆராய்ந்து திறம்பட எழுதினார் சுவைட்சர். அவ் ஆய்வுக் கட்டுரையில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியும் ஆசிரியர் பரிந்துரையும் இவரைக் கோல் என்னும் உதவித் தொகை பெறுவதற்கு உரியவர் ஆக்கின. கோல் உதவித்தொகை என்பது, ஆண்டுக்கு ஏறத்தாழ எண்ணூறு ரூபாய் அளவில் ஆறாண்டு கட்குத் தொடர்ந்து கிடைக்கும் தகுதி உடையதாகும். கோல் உதவித் தொகை பெறும் மாணவர் தாம் எடுத்துக் கொண்டபட்டப்படிப்பை ஆறாண்டு கால அளவுக்குள் முடித்தல் வேண்டும். அப்படிப்பை எப் பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். ஆகாவே இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சுவைட்சர் பாரிசு மாநகர் சென்றார். ஆங்கு சார்லசு விடார் என்பவரிடம் பயின்றார். ஆர்கன் வாசிப்பதிலும் பியானோ மீட்டுவதிலும் மேலும் தேர்ச்சி பெற்றார். கான்ட் என்பரின் தத்துவநூற் கொள்கைகளை ஆராய்ந்து தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். ஆய்வுக் கட்டுரையை வழங்கிப் பட்டம் பெறுவதற்கு முன்னர் இருந்த இடைக்காலத்தில் பெர்லின் நகர்க்குச் சென்று இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் தம் திறமையைப் பெருக்கினார். தேர்வுக்கு முன்னரே திருக்கோவில் போதகராக நியமிக்கப் பெற்றார். அங்கிருந்தவர் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆனார். ஆகவே, தேர்வு முடிந்த பின்னர் அவ்விடத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்தார். மாலை வேளையில் இவர் செய்து வந்த சமயச் சொற்பொழிவு சிறிது நேரமாக இருந்ததால் அதனை விரிவாக்குமாறு வேண்டினர்; மேலிடத்திலும் மக்கள் குறை கூறினர். அந்நிலையில் தாம் நெடும் பொழுது உரையாற்ற இயலாக் குறையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொண்டு எடுத்துக் கொண்ட மறைநூல் பகுதியை விரித்துரைக் இயலாமல் முடித்துவிடுகிற ஏழைப் போதகர் என்று தம்மைத் தாமே கூறினார். ஆயினும் தாம் பிறந்த ஆசிரியக் குடும்ப இயல்புக்கு ஏற்பச் சிறந்த ஆசிரியர் விரிவுரை ஆற்று போல் உரையாற்றும் திறத்தை விரைவில் பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? சுவைட்சருக்கு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் ரோமன் ரோலண்டுடன் தொடர்பு உண்டாயிற்று. நாடறிந்த உலகறிந்த பெருமக்கள் பலர் உறவும் தொடர்ந்து உண்டாயிற்று. செருமன் இலக்கியமும் தத்துவமும் என்னும் பொருள்பற்றிப் பாரிசு மாநகரில் தொடர்ந்து விரிவுரையாற்றினார். நாகரிகத்தின் தத்துவம் என்பது பற்றி நூல் எழுதுவதற்குத் திட்டம் வகுத்தார்; குறிப்புக்கள் தொகுத்தார். இந்நிலையில் தாம் கற்ற பல்கலைக் கழகத்திலேயே சமய நூல் பேராசிரியராகும் பேறு பெற்றார். பொழுதைப் பொன்னினும் சிறந்ததாகக் கருதி வாழ்ந்தவர் சுவைட்சர். டிராசுபர்க் பல்கலைக் கழகப் பேராசிரியராகிச் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவைட்சர் ஒரு விடுமுறையில் கன்சுபர்க் சென்றார். அவ்வேளையில் யான் தொல்லையோ துயரோ இல்லாமல் வாழும் பேறுபெற்றேன்; இப்பேற்றைப் பிறரும் பெறப் பாடுபடுவதைக் கடனாகக் கொள்வேன் என்னும் உறுதி பூண்டார். சமயம் தத்துவம் ஆய துறைகளில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் - அதாவது தம் முப்பதாம் அகவை வரை - பாடுபடுவதென்றும், அதன் பின்னர் பொதுநலத் தொண்டில் இறங்குவ தென்றும் உறுதி செய்தார். ஆம்! கற்பன கற்றார்; கற்றவாறு நிற்கத் திட்டமிட்டார்! அவர் திட்டம் வாழ்வதாக!! 3. பலதுறைப் பணிகள் ஒருவர் ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதே அரிது. பல துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக அரிதாகும். பல துறைகளில் தேர்ச்சி பெற்று அவ்வத் துறைகளில் எல்லாம் சிறந்த தொண்டு செய்வது அரிதினும் அரிதாகும். இத்தகைய அரிதினும் அரியதிறம் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். சுவைட்சர் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப் பல்கலைக் கழகச் சமயத் துறைத் தலைமைப் பொறுப்பும் ஏற்றார். இப் பணிக்கு இடையே திருக்கோவில் சமய போதகராகவும் திகழ்ந்தார். சமய இயல், தத்துவம் ஆகியனபற்றி அரும்பெரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தினார். இப் பணிகளுடன் சுவைட்சர் அமைந்தார் அல்லர். பாக் என்னும் இசைக் கலைஞரைப் பற்றிச் சீரியதோர் ஆராய்ச்சி நூல் இயற்றினார். பாரிசு மாநகரில் நிறுவப்பெற்ற பாக் இசைக் கழகத்தின் சிறப்பு விழாக்களில் ஆர்கன் வாசிக்கும் பொறுப்பும் ஏற்றார். இத்துணை வழிகளில் இடைவிடாது உழைத்தாலும் தாம் முன்னர்த் திட்டமிட்டுக் கொண்டுள்ளவாறு தம் முப்பதாம் அகவையில் பொதுப் பணியில் முழுமையாக ஈடுபடுவதையே விரும்பினார். எப்பணியைத் தேர்ந்தெடுப்பது? எங்கே தொடங்குவது? கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தின் விளம்பரத்தாள் ஒன்றைக் கண்டார் சுவைட்சர். அத்தாளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைத்த அருளாளர்கள் உடனே வேண்டும் என்னும் வேண்டுகோளைக் கண்டார். தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். சுவைட்சர் தம் இளமையில் கண்டறிந்த நீகிரோவின் சிலை கண்ணெதிரில் காட்சி வழங்கியது. காங்கோ சென்று அங்கே அல்லல்படும் மக்களுக்குத் தொண்டு செய்வதே தக்கது என்னும் முடிவுசெய்து அதற்குத் திட்டம் தீட்டினார். இவர் திட்டத்தை ஏற்பார் அரியர் ஆயினர். தெளிவற்ற முடிவு என்றும், வேண்டாத விருப்பு என்றும், கிறுக்குத்தனமான செயல் என்றும் பலவாறு கூறினர்; குழப்பினர்; ஆயினும் ஆல்பர்ட் சுவைட்சர் தம் திட்டத்தில் இருந்து சிறிதும் மாறினார் அல்லர். எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா! ஆப்பிரிக்காவுக்குச் சென்று என்ன தொண்டு செய்வது? கிறித்தவ சங்க அறிக்கை வழியாக மருத்துவப் பணி செய்வதே வேண்டும் என்பதை அறிந்தார். சமயம், தத்துவம், இறை வழிபாடு இப்பணிகளிலேயே பொழுதெலாம் செலவிட்ட சுவைட்சர் மருத்துவப் பணியை உடனே ஏற்க எப்படி முடியும்? பல்லாண்டுகள் பயின்று பயிற்சி பெற்றாலல்லவோ அப்பணியை ஏற்க முடியும்? இதனி எண்ணிச் சோர்ந்தாரல்லர் சுவைட்சர். தாம் பேராசிரியராக இருந்த பல்கலைக் கழக மருத்துவத்துறைத் தலைவரிடம் சென்று தம்மை மருத்துவ மாணவராகப் பதிவுசெய்து கொண்டார்! விந்தையான செய்தி. பல்கலைக் கழகத் துறைத்தலைவர், மற்றொரு துறையின் மாணவராகத் தம்மைப் பதிகிறார்! சுவைட்சரின் பொதுப்பணி நாட்டம் அத்தகையது! சுவைட்சர் இயற்கையாக ஏற்றுக் கொண்டிருந்த பலவகைப் பணிகளுக்கு இடையே மருத்துவக் கல்வி கற்பது இயலாததாக இருப்பினும் முயன்று கற்றார். 1911 ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வெழுதி வெற்றி கொண்டார். ஓராண்டுக்காலம் மருத்துவ மனையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் மருத்துவப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தார். இதற்குப் பின்னர், காங்கோவுக்குச் சென்று மருத்துவ பணி செயதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தாம் ஏற்றிருந்த பேராசிரியர் பதவியையும், சமய போதனைப் பணியையும் விட்டு விலகினார். செலன் பிரசுலோ என்னும் பெயருடைய ஒரு நங்கையை மணந்து கொண்டு, அவர்க்குத் தாதியர் பயிற்சி தந்தார். கிடைத்த பொழுதை எல்லாம் மருத்துவம் பற்றி மேலும் கற்கவும், வேண்டிய மருந்துகளைச் சேர்க்கவும் செலவிட்டார். வழக்கற்றுப் போய்க் கொண்டிருந்த ஆர்கன் இசைக்குப் புத்துயிரூட்டினார். அக்கருவி அமைப்பைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதினார். ஆர்கன் இசைக் கருவியில் ஏற்படும் பழுது பார்த்துச் செவ்வை செய்தார். இவ்வாறு பல்வேறு திறம் வாய்ந்த பலபேர்கள் செய்யும் செயற்கரிய செயல்களைத் தம் முப்பதாம் அகவை அளவிலே செய்தார், சுவைட்சர். சுவைட்சர் இணையற்ற முயற்சியாளர்; அயராத தொண்டர்; விலையாக்கிக் கொள்ளும் திறம் வாய்ந்தார்; அவர் எடுத்த பணி எதுவாயினும் நிறைவேறத் தவறியது இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட துறை யாதாயினும் ஒளிவிடாமல் போனது இல்லை. அவர்தம் முயற்சியும் தொண்டும் உலகுக்கு நல்வழி காட்டுமாக! 4. இலாம் பரினிப் பயணம் ஆல்பர்ட் சுவைட்சர் பொது நலத்தொண்டு செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ ஆகும். ஆங்கு வாழ்ந்த நீகிரோக்கள் தீராபிணிகட்கு ஆட்பட்டு அல்ல லுற்றனர். நாகரிகம் அறியாத மக்கட்குத் தொண்டு செய்து நல்வழிப்படுத்துவது தன் கடன் எனக்கொண்டு ஆங்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். அவர்மேற் கொண்ட செலவு பற்றி அறிவோம். சுவைட்சர் ஆர்கன் இசைப்பதன் வழியாக ஒரு தொகை சேர்த்திருந்தார். நூல் வெளியீட்டாலும் ஓரளவு தொகை ஈட்டி யிருந்தார். தம் சம்பளத்திலும் ஒரு பகுதியை மீதப்படுத்தி யிருந்தார். தக்கவர்களிடம் நன்கொடை வழியாலும் ஓரளவு தொகை சேர்த்தார். ஆக எவ்வுதவி இல்லாமலும் ஒரு மருத்துவ மனையை ஓரிரண்டாண்டுகள் தாமே நடத்த இயலும் என்று கணக்கிட்டறிந்தார். அதன் பின்னர்த் தம்மை மருத்துவப் பணிக்கு ஏவிய பாரிசு கிறித்தவ சங்கத்திற்கும் தம் விருப்பத்தை வெளி யிட்டார். கிறித்தவ சங்கத்தால் தம்மைக் கலந்து பேச வருமாறு ஆல்பர்ட்டை, தம் சமயத் சீர்திருத்த நோக்கத்தை விரும்பாத பலர் அக்குழுவில் இருப்பதால் அவர்களை நேரில் காண்பது தம் பயணத்திற்குத் தடையாகலாம் என்று எண்ணி அக்குழுவைக் காண மறுத்தார். எனினும் தனித்தனியே அவர்களைக் கண்டு கலந்து பேச ஒப்பினார். அவ்வாறே அவர்களைக் கண்டு தம் பயணத்திற்கு இசைவு பெற்றார். செருமணி நாட்டுப் பல்கலைக் கழக மருத்துவப் பட்டம் பெற்றவர் சுவைட்சர். அவர் பிரான்சு நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் பணி செய்யப் போகிறார். ஆகவே பிரான்சு நாட்டார் இவர் பெற்ற மருத்துவப் பட்டத்தை ஏற்று இசைவு அளிக்க வேண்டும். அவ் விசைவையும் பெற்றார். அன்றியும் அந்நாட்டவர் பலர் மனமுவந்து நன்கொடையும் வழங்கினர். பிற நாட்டவர்கள் உதவியும் கிட்டின. இவை சுவைட்சர் மேற்கொள்ள இருந்த பணிக்குப் பேருதவியாயின. சுவைட்சர் தம் உற்றார் உறவினர் களிடத்தும், உடன் பணி புரிந்தவர்களிடத்தும் அன்பு நண்பர் களிடத்தும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். சுவைட்சருக்குப் கப்பற் பயணம் புதிது தம் பணிக்கு வேண்டிய பொருள்களை எழுபது பெட்டிகளில் அடைத்துக் கப்பலில் ஏற்றிச் சென்றார். புறப்பட்ட இரண்டாம் நாளே கடலில் புயல் கிளம்பியது. கப்பலை சுழற்றி யடித்தது. பெட்டிகளைக் கட்டிவைக்காமையால் அவை சிதறி ஓடின. மூன்று நாட்கள் தொடர்ந்து புயல் வீசிற்று புயல் ஓய்ந்தபின்பே அமைதி தவழ்ந்தது. அதற்கு முன்னர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்கள் கடற் பயணம் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டின் இயற்கையமைப்பு, வெப்பதட்பம், நீகிரோவர் நிலை ஆயன பற்றியும் பலப்பல செய்திகளை விரித்துரைத்தனர். ஆப்பிரிக்காவின் வெயில் கொடுமை பற்றியும், காலை மாலைப் பொழுதுகளில் அடிக்கும் இள வெயிலால் உண்டாகும் வெயில் வாதம் பற்றியும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர். இச் செய்திகளை அனைத்தும் ஆல்பர்ட் சுவைட்சர் செய்யப்போகும் அரும்பெரும் பணிக்கு உதவுவனவாக இருந்தன. பயணத்தின் இடையே டாக்கர் என்னும் இடத்தில் சுவைட்சர் இறங்கினார். ஆங்கு அவர் கண்ட ஒரு சாட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. கரடுமுரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் ஒரு குதிரை வண்டியைக் கண்டார். வண்டி தாங்க மாட்டாத அளவுக்கு - குதிரைகள் இழுக்க மாட்டாத அளவுக்கு - பாரம் ஏற்றப் பெற்றிருந்தது. ஆயினும் வண்டியில் நீகிரோக்கள் இருவர் அமர்ந்து கொண்டு குதிரைகளை அடித்துத் துன்புறுத்திப் படாப்பாடு படுத்தினர். இதனைக் கண்ட சுவைட்சர் அங்கே சென்று அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னிருந்து தள்ளினார். வண்டி எளிதாகச் சென்றது. ஆப்பிரிக்காவில் செய்ய இருந்த தம் தொண்டைத் தொடங்கி விட்டார் சுவைட்சர். தொண்டு செய்வர்க்கு இவ்விடம் - இக்காலம் - இப்பணி என உண்டா? ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்பது தானே அறநெறி. டாக்காவிம் இருந்து புறப்பட்ட கப்பல் லோபசு என்னும் இடத்தைச் சேர்ந்தது. அங்கிருந்த சுங்கச்சாவடிகள் பொருட்கள் தணிக்கை செய்து வரி விதிக்கப் பெற்றன. அதற்கு மேல் ஓகேவே ஆற்றில் படகு வழியாகப் பயணப் தொடங்கியது. படகுப் பயணம் இலாம்பரினி வரைக்கும் உண்டு. அதற்குப் பின்னர், கிறித்தவ சங்கத்தின் பகுதிக்குத் தோணியில்தான் செல்ல வேண்டும். இலாம் பரினியை அடைந்த சுவைட்சர் பொருள்களைப் படகில் இருந்து தோணிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அந்நிலையில் கிறித்தவ சங்கஞ் சார்ந்த இரண்டு தோணிகள் விரைந்து வந்து, தங்கட்கு உதவ வந்திருக்கும் மருத்துவரையும், அவர் இல்லக் கிழத்தியாரையும் வரவேற்று வாழ்த்தின. பொருள்களை ஒரு தோணியில் ஏற்றி வைத்துத் தாமும் தம் மனைவியாரும் ஒரு தோணியில் அமர்ந்து தாம் சேர வேண்டிய கிறித்தவ சங்கத்தைச் சேர்ந்தனர். எடுத்துக்கொண்ட பணி பெரிது. பணி செய்யப் புகுந்த நாடு தொலைவானது; பழக்கப் படாதது; அந்நாட்டு மொழியோ தாம் அறியாதது. போக்குவரவு முதலாய எந்த வாய்ப்புக்களும் இல்லாதது. எனினும் துணிவே துணை தொண்டே கடவுட் பணி எனக் கொண்ட சுவைட்சர் தாம் செய்யப்போகும் பணிக்குத் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தார். இத்தகையரே அருளாளர் என்பதில் ஐயமில்லை! 5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த மருத்துவப்பணி சுவைட்சர் தம் முப்பதாவது அகவையில் எந்தப் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அந்தப் பொதுத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தினார். அத்தொண்டு அல்லல் மிக்கது. ஆயினும் அயராது பாடுபட்டு அரிய வெற்றி சுவைட்சரின் பேருள்ளத்திற்கும் பெருந்திறத்திற்கும் சான்றாகும். நீகிரோவர்க்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற சுவைட்சருக்கு அவர்கள் மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதற்காக அவரிடம் மருத்துவம் செய்யவந்த யோசேப்பு என்பவனை மொழிபெயர்ப்பாளியாக வைத்துக் கொண்டார். அவன் ஆங்கிலேயர் ஒருவர்க்குச் சமையற்காரனாக இருந்தவன். ஆதலால் அவனுக்கு மொழி பெயர்ப்புப்பணி ஏற்றதாயிருந்தது. இப்பணியில் அவன் நெடுநாள் நிலைத்திருக்கவும் செய்தான். மருத்துவ மனைக்கு வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும். ஆகவே உடனடியாகப் பார்க்க வேண்டிய நோயாளர்கள் மட்டுமே முதற்கண் தம்மிடம் வருமாறு பக்கங்களில் பறையறைந்து அழைக்கச் செய்தார். ஆனால் எல்லா நோயாளர்களுமே கூடிவிட்டனர். வீட்டு வாயிலில் தான் மருத்துவ ஆய்வு நடத்த வேண்டியதாயிற்று. அங்கு வெயில் பட்டாலே வெயில்வாதம் உண்டாகி அல்லல் படுத்தும் வீட்டு நிழலில் மருத்துவ ஆய்வு செய்யவும், மரநிழலில் தங்கவும் முடிந்தது. ஒவ்வொரு நாளும் நோயாளிகள் வந்ததும் அவர்களை உட்காரவைத்து மருத்துவர் மனைக்குப் பக்கத்தில் எச்சில் துப்பக்கூடாது. கூச்சல் போடக்கூடாது. தங்களுக்கு ஒருநாளுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவர வேண்டும். மருத்துவர் இசைவு இல்லாமல் இரவில் எவரும் தங்கக்கூடாது. மருந்துதரும் சீசாக்களும் டப்பாக்களும் திருப்பித்தரப்பெற்ற வேண்டும். மாத நடுவில் கப்பல் வந்து திரும்பும்வரை உடனடி நோயாளர்கள் மட்டுமே பார்க்கப் பெறுவர் என்னும் செய்திகளை உரக்கப் படிப்பர். இச்செய்திகள் அவர்கள் வழியாக மற்றவர்கட்கும் பரவும். ஒவ்வொரு நாளும் காலை எட்டுமணிக்கே மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடும். நண்பகல் பன்னிரண்டரை மணி உணவுவேளை. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணிவரை மீண்டும் மருத்துவம் செய்யப்படும். அன்று பார்க்கப்படாமல் எஞ்சிய நோயாளர் மறுநாள் பார்க்கப்படுவர். நோயாளர் ஒவ்வொருவர்க்கும் வட்டமான ஓரட்டை கொடுக்கப்படும். அவ்வட்டையில் மருத்துவரின் பதிவுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள நோயாளியின் எண் இருக்கும். அதன் துணை யால் அவன் நிலை, மருந்து முதலியவற்றைக் கேட்டுப் பொழுதை வீணாக்காமல் மருந்து கொடுக்க வாய்ப்பாக இருந்தது. அவனிடம் கொடுத்துத்திரும்பப் பெற வேண்டிய சீசா, டப்பா முதலியவையும் அதில் குறிக்கப் பெற்றிருந்தன. ஆதலால் அவற்றைத் திரும்பப் பெற உதவியாக இருந்தது. நாள்தோறும் முப்பது நாற்பது நோயாளர் மருத்துவ மனைக்கு வந்தனர். மலேரியாக் காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையீரல் கோளாறு, வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் அங்கே மிகுதியாக இருந்தன. சொறி சிரங்கும் மிகுதி. குருதி கொட்டும் வரை சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இந்நோய்க்கு உடலைக் குளிப்பாட்டி ஒருவகை மருந்தைப்பூசி விரைவில் குணப்படுத்தினார், சுவைட்சர். நுரையீரல் நோய் பலருக்கு இருந்தது. அந்நோய்க்கு மருத்துவம் செய்வது ஐரோப்பாவைவிட எளிதாகவும், விரைந்து பயன் தருவதாகவும் இருந்தது. கிறுக்கர் எண்ணிக்கை ஆப்பிரிக் காவில் குறைவு. ஐந்தாறு கிறுக்கர்களுக்குச் சுவைட்சர் மருத்துவம் செய்தார். அவர்கட்கு மருத்துவம் செய்வது கடினமாக இருந்தது. நஞ்சு, ஊட்டுவதாலும் சிலரைக் கிறுக்கர்கள் ஆக்கும் கொடுமை ஆப்பிரிக்காவில் இருந்தது. இவ்வகையால் கிறுக்கர் ஆகியவரை எம் மருத்தாலும் சரிப்படுத்த முடிவதில்லை. காங்கோவில் பெருவாரியாக இருந்த நோய்களுள் தூங்கு நோய் என்பதொன்று உகண்டா என்னும் பகுதியில் தூங்கு நோய் பரவிய மூன்றாண்டுகளில், ஆங்கிருந்த மூன்று நூறாயிரம் பேர்களில் இரண்டு நூறாயிரம் பேர்கள் இறந்தனர். காய்ச்சலுடன் தொடங்கும் இந்நோய், தூக்கத்தில் கொண்டு வந்து வைக்கும். பொறுக்க முடியாத தலைவலி யுண்டாகும். மூளைக் கோளாறும் உண்டாகிவிடும். இறுதி நிலையில் வரும் தூக்கத்தால் மயக்கம் உண்டாகும். உடல் மரத்துப்போகும். சாவும் எளிதில் வராது. பிழைக்கவும் முடியாது. இத்தொற்று நோய் மருத்துவத்திற்கு ஒதுங்கலாக ஒருவிடுதி வேண்டியதாயிற்று. ஆகவே சுவைட்சரின் பெரும் பொருளையும் பொழுதையும் இந்நோய் கவர்ந்து கொள்ளத் தவறவில்லை. எதற்கும் அயராதவராயிற்றே சுவைட்சர்! அதனால் வெற்றி கண்டார். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் தொடங்கியது. அதன் விளைவதென்ன? அருட் பணிக்கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்ட சுவைட்சரும் அவர் மனைவியாரும் சிறை செய்யப் பெற்றனர். செருமணி நாட்டைச் சேர்ந்தவர் சுவைட்சர். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்க்குத் தொண்டு செய்யலாமா? இரண்டும் பகை நாடு ஆயிற்றே! என்னே அரசியல்! சுவைட்சரும் அவர் மனைவியாரும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும், மருத்துவப் பணி புரியக்கூடாது என்றும் தடை விதிக்கப் பெற்றனர். இவற்றுள், மருத்துவம் செய்யக் கூடாது என்பதே துயரூட்டியது. ஐரோப்பியர் நீகிரோவர் ஆகிய இருசார்பினருமே இத்தடையை எதிர்த்தனர். இவர் தம் ஆசிரியர் சார்னர்சு விடார் தடையை நீக்க முயன்று வென்றார். மீண்டும் மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். போரின் விளைவால் வெளிநாடுகளில் இருந்து பணவரவும் மருந்து வரவும் நின்றன. உள்நாட்டில் அவ்வப்போது சிறிதளவு வந்த வருவாயும் நின்றது. மனைவியார் உடல்நிலை சீர்கெட்டது. ஒன்றின்மேல் ஒன்றாகத் துயர் மேலிட்டன. நாலறை யாண்டுகள் பணி செய்ததற்குப் பயனாகப் பெற்று ஐரோப்பாவுக்குக் கப்பலேறினர். நஞ்சையூட்டு போதினும் அஞ்சாதவரே தொண்டர் அல்லரோ! ஆப்பிரிக்காவில் சுவைட்சர் செய்த உயிரிரக்கப் பணிகள் சொல்லொண்ணாய் பெருமையுடையன. அவ்வேளையில் அவர் பட்ட அல்லல்களும் சொல்லொண்ணாதவை. ஆனால் அவற்றை அவர் அல்லலாகக் கருதினார் அல்லர். அல்லல் அருளாள்வார்க் கில்லை வெளிவழகு மல்லல்மா ஓலாம் கரி என்பது பொதுமறை. 6. நீகிரோவர் வாழ்க்கை முறை ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகள் ஒன்று ஓகேவே அவ்வாறு எழுநூறு கல் நீளமுடையது. அவ்வாற்றின் பகுதியில் எட்டுக் குழுக்களைச் சேர்ந்த நீகிரோவர் முன்னர் வாழ்ந்தனர். அவர்களுள் கலோவா என்னும் ஒரு குழுவினரே எஞ்சினர். மனிதரைக் கொன்று தின்னும் ஒரு கூட்டத்தாரும் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி உயிர்க் கொலையைக் தொடங்கி யுள்ளனர். நீகிரோவர் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் வாழைப் பழம். மரவள்ளிக் கிழங்கு ஆகியவையே. அங்கே நெல் முதலிய தானியங்கள் விளைவதில்லை. வேறு நாடுகளில் இருந்தே தானியங் களும், பாலும் அரிசியும் பெறுகின்றன. நீகிரோவர்களும் சிலர் முகமதியர் சிலர் கிறித்தவர். எச்சமயம் தழுவினவராக இருந்தாலும் தம் பழைய பழக்கவழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் விடுவதில்லை. நாகரிமற்றவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், காட்டு வாழ்வினராகவும் இருப்பதால் இவர்களை நோய்கள் வளைத்துச் சூறையிடுகின்றன. நோய்கள் வந்தால் சாவது அன்றி வேறு வகையில்லை. நீகிரோக்களில் மந்திரவாதிகள் உண்டு. நோயைத் தீர்க்க வல்லவன் மந்திரவாதியே என்று நம்புகிறார்கள். நோயைத் தீர்ப்பவனால், அதை உண்டாக்கவும் முடியும் என்று கருதி மந்திரவாதிகட்கு மிக அஞ்சுவர். சுவட்சரையும் மந்திரவாதி என்றே கருதினர். நோய்களைத் தீர்த்தால் அல்லவா! மருத்துவர் தரும் அடையாள அட்டையை மந்திரத் தகடாகக் கருதி அதைத் தவறவிடுவது இல்லை. அடிமைக்கு அடையாளமாகத் தந்த அட்டையுடன் இவ்வட்டையையும் சேர்த்துக் கட்டிக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வர். மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை அறியார். எத்தனை முறை கூறினால் புரியார். பல நாட்களுக்குப் பல வேளைகளுக்குத் தந்த மருந்தை ஒரே முறையில் சாப்பிட்டு விடுவதுண்டு. பூச்சு மருந்தை உட்கொண்டு விடுவதும், உட்கொள்ளும் மருந்தைப் பூசிக் கொள்வதும் எளிய காட்சி! தங்களுக்கு வேண்டாதவர்களை எவ்வழி கொண்டும் ஒழித்து விடுவது ஆப்பிரிக்கர் இயல்பு. தேடிப் பிடித்து நஞ்சு வைத்து விடுவர். தங்களை மதிக்காதவர், மறைவாக வைத்திருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியவர் ஆயவரையும் நஞ்சூட்டி விடுவர். தங்களுக்கு நஞ்சுவைத்து விடுவர் என்று ஒவ்வொரு நீகிரோவும் அஞ்சுவதுடன், மந்திரத் தகட்டுக்கு மிக அஞ்சுவர். ஆவதும் அழிவதும் மந்திரத் தகட்டால்தான் நடக்கிறது என்பது அவர் களின் திட்டவட்டமான முடிவு. சரியான மந்திரத்தகடு வைத்திருப்பவன் எவனை அழிக்க விரும்பினாலும் அழித்து விடலாம். என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்பது அவர்களின் அசையாத உறுதிப்பாடு தோட்டத்தைக் காப்பதற்கும் மந்திர சீசாக்களை மரத்தில் கட்டி வைப்பர். மந்திரவாதி அப்பகுதியில் திரிவதாக எவரேனும் பரப்பி விட்டால் எவரும் வெளியேறாமல் வீட்டுள் அடைந்து கிடப்பர். பலநாட்கள் பட்டினியாகவும் வீட்டுள் இருப்பர். ஏனெனில், மந்திரவாதி மண்டைச்சில்லை எடுத்து மந்திரத் தகடு செய்து விடுவானாம். புகையிலைக்கு நீகிரோவர் கொடுக்கும் மதிப்பு அளவிட முடியாதது. இங்கு வரும் அமெரிக்கப் புகையிலை மிகக் காரமானது. புகையிலையைச் சில்லறைப்போலப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது புகையிலை தருவதாகச் சொன்னால் பலவேலைகள் நீகிரோவர் செய்யக் காத்திருப்பர். ஒருவரிடம் இருந்து ஒருவராகச் சுக்கானை வாங்கி மாற்றி மாற்றிப் புகைத்துக் கொண்டிருப்பர். நீகிரோ வேலைக்காரர்களில் மிக நல்லவனைக் கூட நம்ப முடியாது. எதனையும் அவர்கள் கைக்கு அகப்படாதவாறு பூட்டிக் காக்க வேண்டும். அல்லது, வேலை செய்யும் போது உடன் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் பெருமைக் குறைவாக எண்ணுவது இல்லை. யாக இல்லாதவர் பொருளை எடுத்துக் கொள்வது தவறு என்று அவர்கள் எண்ணுவதே இல்லை! பூட்டி வைக்காதது கம்பி நீட்டிவிடும் என்பது அவர்கள் பழமொழி. இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழிலுக்குச் சென்ற போது ஒருவன் இறந்துவிட்டால் இறந்தவனுக்குப் பொறுப்பாளி உடன் இருந்தவனே என்று குற்றஞ் சாட்டுவதும் பழிவாங்குவதும் நீகிரோவர் நீதி. நீதிக்காக எவ்வளவு கடுந்தண்டனையையும் தாங்கிக் கொள்வர். தவறு செய்து தண்டனை கிடைக்கவில்லை என்றால் தங்களால் தவறு செய்யப்பட்டவர்கள் அறிவற்றவர்கள் என்று நினைப்பர். நீகிரோவர் சோம்பேறிகள் அல்லர். ஓய்வு ஒழிவின்றி வேலை செய்வர். இயற்கையின் குழந்தைகளாக அவர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தேவை அளவுக்குகே உழைக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குறைவு. அத் தேவைகள் இயற்கையில் எளிமையாகக் கிடைக்கின்றன. அதனால் கூலிவேலை செய்து பொருள் திரட்ட வேண்டிய இன்றியமையாமை இல்லை. திருமணம் செய்தல், துணி எடுத்தல், புகையிலை வாங்குதல் இவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவுக்குகே கூலிவேலை செய்வர். வேண்டிய அளவு தொகை கிடைத்துவிட்டால் வேலைக்குப் போக மாட்டான். ஆதலால் அவரைச் சோம்பேறி என்று சொல்ல முடீயாது. நீகிரோவர் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறைகள் ஆகியன பற்றி ஆராய்ச்சிகள் செய்து நூலாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் சுவைட்சர். நீகிரோவர் மேல் எக்குற்றத் தையும் ஏற்றமுடியாது. அவர்கள் அறியாமை அத்தகையது! அறிவுடைய கூட்டம் அக்கறை காட்டி வளர்க்காமையே குற்றம் என்பதே உண்மை. 7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில் ஆல்பர்ட் சுவைட்சர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்களுள் ஒன்று கன்னிப் பெருங்காட்டின் கங்கிலே என்பதாம். ஆப்பிரிக்காவுக்குச் சென்று தாம் செய்த பணி குறித்தும், அங்குச் சென்றதால் உண்டாய பட்டறிவு குறித்தும் விரித்தெழுதி யுள்ளார். அவர் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கம் வருமாறு. நாலரை யாண்டுகளாக நான் பெற்ற பட்டறிவு இங்கு வந்து பணிசெய்ய வேண்டு என்று நான் செய்த திட்டம் சரியானது என்பதை மெய்ப்பிக்கிறது. இயற்கை வாழ்வினராகிய நீகிரோக்கர் நம்மைப்போல் கொடிய நோய்களில் நலிவடையார் என்று என் திட்டத்தைத் தடுக்குமாறு கூறிய நண்பர்களின் உரை தவறானது என்பது எனக்குத் தெளிவாயிற்று. மற்றை இடங்களைப் போலவே இங்கும் கொடு நோய்கள் உள்ளன. ஐரோப்பியரே கொண்டு வந்தனர். நாகரிகமுறாது இயற்கையின் மடியில் வாழும் இவர்கள் நம்மைப் போலவே நோய்த்துயர் படுகிறார்கள். மருத்துவ உதவி பத்தாண்டுகளுக்கு அறவே நமக்கு இல்லை என்றால் நம் குடும்ப வரலாறு என்னாகும்? இத்துயர் நீகிரோவர்க்கும் உண்டு. நாகரிகம் படைத்த நாம் நம் உறக்கம் நீங்கி நம் கடமையை உணரவேண்டும். தொலையிடங்களிலுள்ள நோயாளர்க்குப் பாடுபடுவதே என் கடன். இறைவன் பெயரால் அனைவர் உதவியையும் வேண்டு கிறேன். நீகிரோவின் தொல்லைகளை அகற்றுதல் நற்பணி, என்பது மட்டுமன்று! நம் தீராக் கடடையும் ஆகும். இறைவன் வழியை பின்பற்றுவராகத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பியர் இந்நாட்டைக் கண்டு பிடித்தது அழிவு செய்வதற்காகவே? இவர்கள் ஆளும் பொறுப்பு ஏற்ற பின்னரும் பலர் இறந்தனர். இறந்து கொண்டு இருக்கின்றனர்; இருப்பவர் நிலையோ மிகச் சீர்கெட்டு வருகிறது. ஐரோப்பியர் செய்துவரும் கேடுகளாலேயே இவை நிகழ்கின்றன. இவர்களுக்குப் பழக்கிவிட்ட குடிகளும், பரவவிட்ட நோய்களும் சீர்கேட்டுக்கு அடிப்படை. நாம் நீகிரோவர்க்குச் செய்யும் நன்மை நல்லெண்ணத்தால் செய்வதாகக் கொள்ளக் கூடாது. நாம் செய்த கொடுமைகளை ஓரளவு ஈடு செய்வதற்கே ஆகும். ஆளுகின்ற அரசு பல மருத்துவர் களை அனுப்ப வேண்டும். சமூகமும், தனிப்பட்டோரும் ஈடுபட்டாதல் வேண்டும். தாங்கள் செய்யும் நன்மையால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்கட்கு ஒரு பெரிய பரிசாக திகழும். நீகிரோவர் பொருளைப் பெற்று நாம் வாழ்க்கை நடத்தவும், பணி செய்யவும் இயலாது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் வாய்ப்புக் களை உண்டாக்கித் தரவேண்டும். இஃது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நோய்த்துயர் இன்னதென்ன அறிந்த கூட்டத்தாரே முதற்கண் இதற்கு உதவ முன்வரவேண்டும். நோய் படுத்தும் பாட்டையும் அல்லலையும் அவரறிவர். நோயால் உண்டாம் துயர் தீரப்பெற்ற ஒருவன் தன்னைப் போலவே பிறனும் அத்துயரில் இருந்து விடுபடுதற்கு உதவுவானாக. இத்தகைவனே குடியேற்ற நாட்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தக்க பொறுப்புடையவன் ஆவன். இக்கொள்கையை உலகம் ஒரு நாள் ஏற்றே தீரும். ஏனெனில் அறிவுக்கும், உணர்வுக்கும் பொருந்திய மறுக்க முடியாத உண்மை இது. என் உடல் நிலை 1918 முதல் குன்றியது. இரண்டு அறுவை யால் குணம் பெறமுடிந்தது. பல இடங்களுக்குச் சென்று சொற் பொழிவு செய்ததாலும் ஆர்கன் இசைத்ததாலும் போர்க்காலத்தில் பட்ட கடனைத் தீர்த்தாயிற்று. தொல்லையிலும் தொடர்ந்து இம்மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை எனக் கொள்கிறேன். போரின் விளைவால் வேண்டிய பொருள்பெற முடிய வில்லை. மருந்தின் விலையோ மும்மடங்கு ஆயிற்று. இவற்றைக் கருதி, யான் சோர்வடைய வில்லை. நான் அடையும் தொல்லைகள் வலிமையூட்டுகின்றன. மக்கட் கூட்டம் உதவும் என்ற எதிர்கால நம்பிக்கையே மிகுகின்றது. நோயில் இருந்து விடுபட்ட பலர் பிறரும் நோயில் இருந்து விடுபட உதவுவாராக. வேறுபல மருத்து வரும் இப்பணிக்கு வருவாராக! சுவைட்சர் உள்ளம் பெரிது! வானினும் விரிவானது! அவர் தொண்டுள்ளத்தின் முத்திரையாக இலங்குவது கன்னிப் பெருங் காட்டின் கங்கிலே என்னும் நூல். அந்நூல், பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறள்மணிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதாம். 8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர் உலகப் போரின்போது போர்க் கைதியாக்கப் பெற்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு வரப்பெற்ற சுவைட்சர் போர்ட்டோ, கெரேசன், செயிண்ட் ரெமி முதலிய இடங்களில் சிறைவைக்கப் பெற்றார். இவரும் இவர் மனைவியாரும் உடல் நலக்குறைவு உற்றனர். 1918ஆம் ஆண்டு சூலைத் திங்களில் விடுதலை பெற்றார். சூரிச் நகருக்குச் சென்று, டிராசுபர்க்கை அடைந்தார். சுவைட்சர் தந்தையாரைக் காண விரும்பினார். அவர் இருந்த கன்சுபர்க் போர்க்களப் பகுதியாக இருந்ததால் இயன்று இசைவு பெற்றே போய்க் கண்டார். போர் அழிபாட்டையும் பஞ்சக் கொடுமையையும் நேரில் கண்டு உருகினார். தம் சொந்த ஊரில் தங்குவதால் தமக்கிருந்த காய்ச்சலையும், களைப்பையும் போக்கலாம் எனக் கருதினார். ஆனால் உடல்நிலை மிகச் சீர்கெட்டுக்கொண்டே வந்தது. ஆகவே மனைவியாருடன் டிராசுபர்க்குக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார். உடல் நலம் பெற்றதும் பணிசெய்வதை நாடினார் சுவைட்சர். மருத்துவப் பணியும், சமய போதனைப் பணியும் டிராசுபர்க்கில் கிடைத்தன. போர்க் கொடுமையால் செருமனியில் அல்லல் படுபவர்க்கு அவ்வப்போது உணவுப்பொருள் அனுப்பி உதவினார். தம் பணிகளின் இடையே நாகரிகமும் தத்துவமும் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி முடித்தார். 1919இல் பார்சலேனா என்னும் இடத்தில் ஆர்கன் வாசிக்க அழைப்பு வந்தது. சுவீடனைச் சேர்ந்த உப்சலா பல்கலைக் கழகத்தில் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்பு வந்தது. இவ்வழைப்புக்களால் தம்மை உலகம் மறந்து விடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அத்துறைகளில் தொண்டு செய்தற்கு வாய்ப்பு உண்டு என்று மகிழ்ந்தார். பல ஆண்டுகளாகத் தம் மனத்துக் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படுமாறு உலகம் உண்டு என்ற தத்துவக் கொள்கையும் ஒழுக்க நெறியும் என்னும் பொருள்பற்றி உப்சலாச் சொற்பொழிவை நிகழ்த்தினார். போர் மூண்டதற்குப் பின்னர் இலாம்பரினியில் மருத்துவ மனை நடத்துதற்காகப் பட்டிருந்த கடனை எவ்வாறு தீர்ப்பது என ஏங்கிக் கொண்டிருந்தார். சுவீடனில் இருக்கும் போதும் அவருக்கு இவ்வெண்ணம் இருந்தது. இதை அறிந்து இவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த பெருமகனார் ஆர்கன் இசைத்தும் சொற்பொழி வாற்றியும் பணம் திரட்டலாம் என வழி கூறினார். அவ்வுரையை ஏற்றுக்கொண்ட சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அமைந்த மருத்துவமனை குறித்துப் பேசினார்; ஆர்கன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்நாட்டை விட்டுப் புறப்படும்போது தாம் பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும் அளவுக்குச் செல்வம் சேர்ந்து விட்டது. மீண்டும் ஆப்பிரிக்கா சென்று மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளலாம் என்று முடிவு செய்தற்கும் தூண்டியது. ஆக சுவீடன் வாழ்வு பலவகைகளிலும் சுவைட்சருக்கு மகிழ்ச்சியாயிற்று. உப்சலாவில் இருந்த பதிப்பகத்தார் சுவைட்சர் நடத்திய மருத்துவமனை குறித்து ஒரு நூல் இயற்றித் தருமாறு வேண்டினர். அதனால் கன்னிப் பெருங்காட்டின் கங்கில் என்னும் நூலை இயற்றினார். அந்நூல் பல ஐரோப்பிய மொழிகளில் உடனே பெயர்க்கப்பெற்று நல்ல வருவாய் தந்தது. சொற்பொழிவாலும் ஆர்கன் இசையாலும் பணம் தேடமுடியும் என்னும் துணிவால் தாம் ஏற்றிருந்த பணிகளை விடுத்தார். மனைவியையும், தமக்குப் பிறந்திருந்த ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றார். அங்கே போய் நாகரிகமும் தத்துவமும் என்னும் நூலை எழுதத் திட்டமிட்டார். எனினும் சொற்பொழிவு, ஆர்கன் இசை அழைப்புக்கள் மிகுதியாயின. பொருள் ஈட்ட வாய்ப்பு என்று அவற்றில் மிக ஈடுபட்டார். சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல மேடைகளில் இசை மீட்டினார். அதன்பின் டென்மார்க், செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறு அவர் எண்ணிய எண்ணங்கள் இனிது நிறைவேறிக்கொண்டு வந்தன. 1913இல் இலாம்பரினியில் பணியாற்றச் செல்லுங்கால், ஆசிரியத் தொழில், இசை ஈடுபாடு ஆகியவற்றை விட்டுவிட முடிவு கட்டினார். பிறரிடம் பொருளை எதிர்பார்க்கக்கூடாது என்றும் திட்டமிட்டார். இவ்வனைத்தும் பொது நலம் கருதி மீண்டும் மேற்கொள்ளப் பெற்றன. இறைவன் திருவருள் என்றே இவற்றில் மீண்டும் ஈடுபட்டார். இறைவன் வழிகாட்டுதல் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கும் என்னும் குறிக்கோளு டையவர்கள் பெருமக்கள்! அவர்கள் வழி தூயது! துலக்கமானது! உலகுக்கு நலம் பயப்பது! அவர்கள் வழி வாழ்வதாக! 9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில் உயிர் இரக்கத்தால் உந்தப்பட்ட ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் வாழும் நீகிரோவர்க்குத் தொண்டு செய்வதற்காக 1913ஆம் ஆண்டு முறையாகப் போய்ச் சேர்ந்தார். அம்முதற்றடவையில் நாலரையாண்டுகள் பணி செய்தார். அதன்பின் ஏற்பட்ட முதல் உலகப் போரால் போர்க்கைதி யாக்கப் பெற்று ஐரோப்பாவுக்கு வந்தார். ஐரோப்பாவிற்கு வந்தாலும் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று தொண்டு செய்வதையே விரும்பினார். அங்குப் போய்ப் பணி செய்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடிக் கொள்வதற்காகவே உழைத்தார். வேண்டிய அளவு பணத்தை ஈட்டியதும் 1910 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலாம்பரினியில் மருத்துவமனை இருந்தது. ஆல்பர்ட் தோற்றுவித்து வளமுற நடத்திய மருத்துவமனை அது. சில ஆண்டுகள் பேணுவாறற்றமையால் அதன் பெரும்பாலான பகுதிகள் அழிபாடு அடைந்தன. ஓரிரண்டு கட்டடங்களின் அடித்தளங்கள் எஞ்சி நின்றன. சிலவற்றின் கூரைகள் பழதடைந்து கிடந்தன. அவற்றைப் பெருமுயற்சியால் சரிப்படுத்தி மருத்துவப் பணி புரிந்தார். நோயாளர் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டு வந்தமையால், ஐரோப்பாவில் இருந்து இரண்டு மருத்துவர்களையும் இரண்டு தாதியர்களையும் வரவழைத்துக் கொண்டார். இந்நிலையில் கடுமையான உணவுப்பஞ்சம் உண்டாயிற்று. வயிற்றுக் கடுப்பு நோய் பெருகியது. மருத்துவமனை போதாததால் இடத்தை மாற்றி விரிவாகக் கட்டவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஆற்று வெள்ளம், மலையில் இருந்துவரும் நீர்ப்பெருக்கு ஆயன தொல்லை தராத மேடான இடத்தில் கட்டடம் கட்டினார். பக்கங்களில் பயன்மிக்க பழமரங்கள் நட்டினார். இரண்டே ஆண்டுகளில் திரும்ப எண்ணியிருந்த அவர் திட்டம் மூன்றரை யாண்டாக வளர்ந்தது. 1927 சனவரியில் புதிய இடத்திற்கு மருத்து வமனையை மாற்றி அமைத்து மற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஐரோப்பாவுக்குப் பயணப்பட்டார். ஐரோப்பாவுக்கு ஆல்பர்ட் வருவதெல்லாம் ஆபிரிக்கத் தொண்டுக்குப் பணம் திரட்டுவதற்குத் தானே. அதனால், ஐரோப்பாவுக்கு வந்ததும் மீண்டும் சொற்பொழிவாலும், ஆர்கன் இசையாலும் பொருள் தேடினார். புனிதர்பால் அடிகளின் பத்தி நெறி என்னும் நூலை எழுதி முடித்தார். செருமன் கவிஞர் கேதேயின் நினைவுப்பரிசு இவரது மனிதசமூகத் தொண்டு கருதி வழங்கப் பெற்றது. அப்பொருளைக் கொண்டு, கன்சுபர்க்கில் கேதேமனை உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு சுவைட்சர் தாமும் தம் மனைவியும் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்கா சென்றனர். நோயாளர் மிகுதியைக் கண்டு மருத்துவமனைக் கட்டடத்தை மேலும் விரிவாக்கினார். மனைவியார்க்கு உடல்நலம் இல்லமையால் அவர் 1930 இல் ஐரோப்பா திரும்பினார். ஆல்பர்ட் 1932 இல் ஐரோப்பாவுக்கு மீண்டார். மீண்டும் 1933 இல் இலாம்பரினி சேர்ந்தார். 1934 இல் ஐரோப்பா திரும்பினார். ஓராண்டு ஐரோப்பாவில் தங்கினார். 1935 சனவரி 4 இல் தம் அறுபதாம் பிறந்த நாளை டிராசுபர்க்கில் கழித்தார். 1935 பெப்ரவரியில் ஆபிரிக்காவுக்குச் சென்று 1939 சனவரியில் திரும்பினார். இதற்கு இடையே 1938 இல் மருத்துவ மனையின் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நிலைமை தோன்றியது. ஆகவே சுவைட்சர் உடனேயே தாம் வந்த கப்பலிலேயே ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார். போர் முடிவால் பிரான்சுக்கும் இலாம்பிரினுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இங்கிலாந்து அமெரிக்கா இவற்றுடன் தொடர்பு உண்டாயிற்று. அமெரிக்க மக்கள் நிரம்ப பொருளுதவி புரிந்தனர். சுவைட்சரின் திருக்கூட்டத்தார் அமெரிக்காவில் பெருகினர்; போரும் நின்றது. பொருளும் உதவிகளும் பெருகின. உதவியாளர்களும் வந்தனர். இலாம்பரினிக்குச் சென்று அமெரிக்கர் பலர் பார்வையிட்டு, சுவைட்சரைப் பற்றியும், அவர் தொண்டு பற்றியும் நூல்கள் எழுதினர். இனி மருத்துவமனை இனிதாக இயங்கும் என்னும் எண்ணத்தால், 1948-இல் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். 1949இல் மீண்டும் இலாம்பரினிக்குச் சென்று 1952-இல் திரும்பினார். அல்லல் அடைவார் அவலம் போக்குதற்கென்றே ஆண்டவனால் அருளப்பெற்றவர் ஆல்பர்ட். அவர் புகழை நாடவில்லை. ஆனால் புகழ் நிழல்போல் தொடர்ந்தது. 1953இல் அமைதிப் பணிக்காக நோபல் பரிசு கிடைத்தது. 1955இல் பிரிட்டிஷ் அரசியார் பெருந்தகைவுடையர் என்னும் பெருமை தந்து பாராட்டினார். நல்லவர் உள்ளமெல்லாம் கோவில் கொண்டார் சுவைட்சர்! அவர் புகழ் வாழ்வதாக! 10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம் உள்ளத்தால் பொய்யாது ஒழுக்கியவர் ஆல்பர்ட் சுவைட்சர். இவர் நூலறிவு, பட்டறிவு, நுண்ணறிவு ஆயவற்றால் கண்டறிந்தவை நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும், உரைவடிவிலும் வெளிப் பட்டன. உலகுக்கு ஒளிகாட்டின. அவற்றுள், இவர் ஆக்கிய நூல்களில் திகழும் அரிய பொருள்களைப் பற்றிச் சிறிது காண்போம். பால் அடிகளின் பத்திநெறி என்பது சுவைட்சர் எழுதிய நூல்களுள் ஒன்று. இயேசு நாதர் வாழ்வு கட்டுக்கதை அன்று என்றும், அவர் வழங்கிய அருள்மொழிகள் புத்தொளி யுடைவை என்றும், ஓர் உயிர் தன்பாலும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் பாலும் ஈடுபாடு கொள்வதே பக்திநெறி என்றும், மனிதன் தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாது இறைவனுடன் இரண்டறக் கலக்க ஆவலுறுவதே பாலடிகளின் உள்ளம் என்றும் அந்நூலில் விளக்கினார். பாக் என்னும் என்னும் இசைக் கவிஞரைப்பற்றி இவர் எழுதிய நூலில் அப்புலவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இசையை, உணர்வுடன் கையாளும் திறத்தை விளக்கினார். ஆர்கன் கருவியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு நூல் எழுதினார். இசை வல்லார்க்கு இவ்விரு நூல்களும் எளிய விருந்தாயின. நாகரிகத்தின் தத்துவம் என்னும் நூலிலே மேல் நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் உலகம் பற்றி வெளிப்படுத்தப் பெற்ற பல்வேறு கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் வாழ்வுநெறியை இவை எவ்வாறு அமைத்தன என்பதை வரலாற்று முறையில் வெளியிட்டார். காட்டுமிராண்டி தன் குழுவுக்கு உதவி செய்தலே தன் கடமை என உணர்கிறான். பிறர்க்கு உதவி செய்வதைக் கருதாமல் அவன் என் உடன் பிறந்தான் என ஒதுக்குகின்றான். ஒவ்வொரு மனிதனும் நம்முடைய அருளுக்கும் அக்கறைக்கும் உரியவன் என்றால் நிலை நாகரிகம் உடையதெனக் கூறும் சமுதாயத்திலும் காணுதல் அரிதாகின்றது. இனம், சமயம், நாடு என்பன எதிரிடு கின்றன. அண்டையில் வாழ்பவனையும் அயலானாகக் கருதத் செய்கின்றன. இந்நிலை மாற யாவரும் கேளிர் என்னும் அடிப்படை அறம் உண்டாதல் வேண்டும். இதுவே மக்கட் பண்பு. யாவரும் கேளீர் என்னும் பண்பு பின்னர் யாவும் கேளே என்று விரிவடைய வேண்டும். எவ்வுயிர்க்கும் அன்பு காட்டு என்னும் நீதி, ஒழுக்க நெறியின் ஒளியாம். நான் வாழ வேண்டும் என்னும் கொள்கை மற்றோருயிர் நான் வாழ வேண்டும் என்னும் கொள்கைக்கு மாறுபட்டதாக இருத்தல் கூடாது. நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளதும் உயிர் அதுவும் என்னைப்போலவே வாழ விரும்புகிறது என்பதை உணர வேண்டும். இக்கருத்துக்களை விளக்கி உயிர்ப்பத்தி என்னும் நூலை உருவாக்கினார் சுவைட்சர். உலக சமய கோட்பாடுகளை ஆராய்ந்த சுவைட்சர் இந்திய சித்தாந்தங்களை ஆராய்ந்தார். இந்திய சித்தாந்தமும் அதன் வளர்ச்சியும் என்னும் நூலை ஆக்கினார். அதில் வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களையும் கீதை, திருக்குறள் முதலிய நூல்களையும் விரிவாக ஆராய்கிறார். குறளைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சிறப்புடையனவாம். உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறிபரவ விட்டுள்ளார். பகவத்கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்ற கருத்து அந்நூலில் கூறப்படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது. மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தியுள்ளார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தில் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறெந்த நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே உலகம் உண்மை என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப் பெற்றன. மேலும், கன்னிப்பெருங் காட்டின் கங்கில் என் வாழ்க்கையும் கொள்கையும் என் ஆப்பிரிக்கக் குறிப்புக்கள் என்னும் நூல்களையும் சுவைட்சர் இயற்றினார். பொற்சுரங்கம் போன்றவை சுவைட்சரின் நூல்கள்! அவர் நூல்களுக்கு எடுத்துக் காட்டான இலக்கியமாகத் திகழ்வது அவர் வாழ்வு! வாழ்வையே அருள் இலக்கியமாகிய பெருமகன் சுவைட்சர் என்றும் உலகில் வாழ்வாராக. 1. அருந்தவத்தோன் இறைவன் அருளாளன்; அழகே உருவம் ஆனவன்; அவன் அருள் அழகிலே தோய்ந்து தோய்ந்து பாடிய புலவர் பெருமக்கள் பலப்பலர். அவர்களுள் பெருந்தேவனார் என்பார் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர்களுள் ஒன்று பெருந்தேவனார் என்பது. அப்பெயரைத் தம் பெயராகத் தாங்கிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய இனிய பாடல்ஒன்று புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாகத் திகழ்கின்றது. சிவபெருமானது உருவக் காட்சியிலே உள்ளந்தோய்ந்தார் பெருந்தேவனார்; முடிமுதல்அடிவரை கண்டுகண்டு, எண்ணி எண்ணிக்களிப்படைந்தார்; கவியாகப் புனைந்து கற்பவர் நெஞ்சங் களை அக்கடவுட் காட்சியிலே ஊன்றுமாறு செய்தார். கார் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் கொன்றை மலரைத் தன் திருமுடிக் கண்ணியாகக் கொண்டுள்ளான் சிவன். கண்ணியாக மட்டுமோ அக்கொன்றை திகழ்கின்றது? மார்பில் திகழும் தாராகவும் அக்கொன்றையே உள்ளது. சிவனது செவ்வண்ண மார்பிலே மணி பதித்தால் போல அழகு செய்கின்றது அது. வெண்ணீற்றை விரும்பி அணியும் சிவன் தூய வெள்ளேற்றின் மேல் (காளையின் மேல்) ஏறி வருகின்றான்! அம்மட்டோ? அந்த ஏறே அவனுடைய சிறப்புமிக்க கொடியாகவும் விளங்கிப்பட்டொளி வீசுகிறது. செந்தழல் மேனிச் சிவபெருமான் கழுத்திலே கறை என்ன? ஆம்! நீலகண்டன் அல்லனோ அவன்! அது கறையா? இல்லை! இல்லை! செவ்வண்ணத் திருமேனியில் எழுந்த கருமணி! மண்ண வரும் விண்ணவரும் போற்றும் மாமணி. ஏன்? அமுது வேண்டி அமரர் பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் கிடைத்தது நஞ்சு! இறவாத வாழ்வை விரும்பி அமுதுவேண்டி நின்றோர்க்குக் கிடைத்தது. எளிதில் இறப்பளிக்கும் நஞ்சு! சாவவா பாற்கடல் கடைந்தனர்? சாவாமை நாடிய அவர்கள் சங்கரனைச் சார்ந்து நின்று வேண்டினர். நலிவு செய்யும் நஞ்சை அள்ளி உண்டு நீலகண்டன் ஆயினான். அவன் ஆலம் உண்ட நீலகண்டன் ஆனதால் அமரர் உயிர்தப்பினர். உயிர்அருளிய உரவோனை உயர்த்திப் பாடத்தவறவோ செய்வர்! உயர்த்தி உயர்த்தி அமரர் பாடினர்: அந்தணர் பாடினர்; அடியவர் பாடினர். கறையின் பெருமையே பெருமை! இதோ! சிவபெருமான் ஆண் வடிவாகமட்டுமோ தோன்று கின்றான்? மாதிருக்கும்பாதியனாக - அம்மை அப்பனாக - அருட்காட்சி வழங்குகின்றான். தன் ஒரு பாதியைப் பெண்ணுக்குத் தந்தவண்மை பெரிது. அது மட்டும் அல்லவே! அப்பெண்வேறு தான் வேறு என்று இல்லாமல் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்ளவும் செய்கிறானே அவன்! என்னே விந்தை! செஞ்சடையப்பன் திருமுடியிலே விளங்குவது என்ன? பிறை நிலா அது! அப்பிறையின் எழில் என்னே! ஒளி என்னே! நெற்றிக்கு அப்பிறையூட்டும் அழகு என்னே! அவ்வழகிலே நெஞ்சைப் பறிகொடுத்து வாழ்த்துப் பாடுவது ஒரு கூட்டமா? இரண்டு கூட்டமா? அமரர்கணங்கள் பதினெட்டும் அல்லவா அப்பிறையை வாழ்த்துகின்றன. இனி, பிறையைத் தாங்கிய சடையின் சீர்மைதான் என்னே! உலகத்து உயிர்களெல்லாம் காப்பது நீர். அந்நீரை வற்றிப்போகா மல்காப்பது அச்சடை! அச்சடை வாழ்க! அச் சடை அணிந்த அருந்தவத்துப் பெருந்தேவன் வாழ்க! என்று தொடர்ந்து எண்ணினார் பெருந்தேவனார். தம் எண்ணத்திற்குத் தமிழ்க் கவி உருவம் தந்தார். அவ்வுருவம் அவர் உருவமாகப் புறநானூற்றில் நின்று நிலவுகின்றது. வாழ்க பெருந்தேவனார். 2. அறப்போர் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உண்டாகும் சண்டையே போர் எனப்படுகிறது. அப்போர் மறப்போர் அல்லது வீரப்போர் எனப் பெயர் பெறும். அம்மறப்போரையும் அறப்போர் ஆக்கிய பெருமை பழந்தமிழர் உடைமையாம். அதனை இக் கட்டுரைக்கண் காண்போம். காலமும் இடமும் குறித்துக் களப்போரில் இறங்குவது பழந்தமிழர் போர்ப் பண்பாடு. அவர்கள் போரில் இறங்குமுன் பசுக்களும், பசுக்களை ஒத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளர்களும், மக்கட்பேறு இல்லதவர்களும் பாதுகாப்பான இடங்களைச் சேருங்கள், நாங்கள் போர் செய்யப் போகின்றோம் என்று கூறிப் பறை முழக்குவர். இச்செய்தியை அறிய மாட்டாத பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து பாதுகாப்புச் செய்வர். அதன் பின்னரே போர் தொடங்குவர். மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்பதற்கு இச்செய்தி சான்றாம். போர் நிகழும்போதும், மடித்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படை இழுந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் கொல்லாது போக விடுதல் வேண்டும் என்னும் அறமுறை வீரர்களால் மிகப் போற்றப் பெற்றது. இவ்வாறு அறப்போர்நிகழ்த்திய வீரவேந்தர்களுள் ஒருவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்பவன். வழுதி பலப்பலவேள்விகளை விரும்பிச் செய்தவன். மாற்றார்கள் எவ்வளவு முயன்றும் தழுவிக் கொள்ள முடியாத மதிற் சிகரங்களைக் கொண்டவன். ஆகவே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயர் பெற்றான். அப்பெரு மகனைப் பாடிய பெரும்புலவர் நெட்டிமையார் என்பர். அவர் வழுதியை நேரில் கண்டு அவன் செய்யும் அறப்போரை அழகுபெறக் கூறி வாழ்த்துகிறார். நிலந்தந்த புல்லைத் தின்று, நீரைப்பருகிப் பாலைச் சொரியும் வள்ளற் பசுக்களைக் களப்பலியிடலாமா? கூடாது. கூடவே கூடாது. ஆகவே போர் என்றால் என்ன என்பதையே அறியாத பசுக்களை நாட்டை விட்டே கொண்டு சென்றுகாத்தல் வீரர் கடன். அப்பசுக்கள் மட்டுமோ? அப்பசுக்கள் போல் அருள் பேணும் அந்தணர்களையும் நாட்டு நலம் கருதி காத்தல் கடமை. இனி, மெல்லியல் வாய்ந்த நல்லியல் நங்கையரை அழிப்பது தகுமா? பேயும்இரங்க வேண்டிய பெண்மையை நினைத்து இரக்கம் கொள்ளாதவன் பேராண்மையாளன் ஆவானா? ஆகான்! ஆகவே, மகளிரைக் காத்தல் வேண்டும். வாழப்பிறந்த மாந்தன் தன்குடி வாழ்வுக்குரிய மகப்பேறுபெறுதல்இன்றியமையாக் கடமை. அக்கடமையைச் செய்து முடிக்காத மகப்பேறு வாய்க்காத - பெற்றோர்களைக் கொல்லுதல் பெரும் பாவம். இப்படி எல்லாம் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி அறப்போர் புரியும் முதுகுடுமிப் பெருவழுதி நீ வாழ வேண்டும்; நீடு வாழ வேண்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். எத்துணைப் பல்லாண்டுகள்? ஆடுபவர்க்கு நீடிய பரிசுகளை வழங்கியவனும் கடல்விழா எடுத்துக் களிப்புற்றவனும் ஆகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரிய பஃறுளியாற்று மணல்கள் எத்துணை? அளவிடற்கு அரிது! அவ்வாற்று மணல்போல் எண்ணற்கு அரிய காலங்கள் வழுதி இனிது வாழ்வானாக. அறப்போர் பேணும் அண்ணல் ஆற்று மணல்போல் வாழ்வானாக என்று வாழ்த்தினார் நெட்டிமையார். வழுதி, மன்னவன்; நெட்டிமையார், பாடும்புலவர்; புலவர் வழுதியையா இப்பாடலில்பாடி வாழ்த்தினார். இல்லை! அற நெறியை வாழ்த்தினார். வழுதி அறம் பேணுகிறான்; ஆகவே அவன் வாழ்க என்று வாழ்த்தினார், அறத்தின் மேல் அவர்க்கிருந்த காதல் அது! வாழ்க அறப்போர்! வாழ்க அறவோர்! 3. பெற்ற பரிசில் பூவை நாடிச் செல்லும் தேனீ, பழமரம் நாடிச் செல்லும் பறவை. அவற்றைப் போல் இரவலர் ஈவாரைத் தேடிச் செல்வர். அவ்வாறு, இல்லை என்று இரந்து வருவாரை வரவேற்றுப் போற்றிய பெருமக்களுள் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் ஒருவன். கடுங்கோ, சேரநாட்டு வேந்தன். பாலை என்னும் அகத்திணை பாடுவதில் தேர்ந்தவன். அவனைப் பாடும் பேறு பெற்றார் இளவெயினி என்னும் பெயருடைய புலவர் பெருமாட்டி. இளவெயினி எயினி என்பவருக்குத்தங்கையாக இருந்தார். அவள் தாய் பேய்மகள் என்னும் பெயருடையவர். ஆகவே பேய்மகள் இளவெயினி எனப்பட்டார். அவர் பாலைபாடிய பெருங்கடுங் கோவைப் பாடினார்; பரிசில் பெற்றார். சேரனைப் பாடக் கருதிய புலவர் இளவெயினிக்குச் சேர நாட்டின் நினைவு தோன்றியது அந்நாட்டுத் தலைநகராம் வஞ்சி முன்னின்றது. அவ்வஞ்சி மாநகரில் வாழும் வஞ்சிக்கொடி போன்ற மகளிர்நினைவில் வந்தனர்; அன்னார் ஆன்பொருநை ஆற்றிலே விளையாடும் மணல் விளையாட்டு முன்னின்றது. அண்மையில் போருக்குச் சென்று வெற்றியுடன் திரும்பிய வேந்தனது படைத் திறமும் கொடைத்திறமும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன இக்கருத்துக்களை யெல்லாம் தண்டமிழ்ப் பாமாலையாக்கிப் பாலைபாடிய கோவுக்குச் சூட்டினார் இளவெயினி. மெல்லிய மயிரையுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலங்களையும் உடைய இளைய பெண்கள் மணலில்கோடு கிழித்து உண்டாக்கிய பாவைக்குப் பூக்களைச் சூட்டி விளையாடியும் தண்பொருநை ஆற்றிலே வீழ்ந்து நீர் விளையாட்டு நிகழ்த்தியும் களிப்படையும் வளமை வாய்ந்தது வஞ்சி மாநகர். அவ்வஞ்சி மாநகரின் வேந்தன் சேரமான் அவன் பகைவரின் அரண்களைக் கைக்கொண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வல்லாளன். அவர்களைப் பாடிச் சென்ற பாடினி மாற்றுயர்ந்த பொன்னால் ஆகிய அணிகலங்களைப் பெற்றாள். அவள் பாட்டுக்கு ஏற்பத் தாளக்கட்டு விடாமல் யாழிசைத்த பாணர் வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூக்களைப் பெற்றான். அவர்கள் பெற்ற பேறு என்னே! என்று வியந்து பாராடினாள் இளவெயினி. கடுங்கோவின் முன்னர் நின்று இவரிவர் இன்ன இன்ன பெற்றார்! யான் எதுவும் பெற்றிலேன்; இவர் இவர்க்கு இன்ன இன்ன நீ வழங்கினை; எனக்கு எதுவும் நீ வழங்கவில்லை என்று குறிப்பாக அறிவுறுத்தினார். வள்ளலின் கை தாழ்க்குமா? அள்ளி அள்ளி வழங்கியது பாடிய எயினி பரிசிலால் மகிழ்ந்தாள். பாடுதல் எமக்கு எளிது; ஆனால் பாடல் நயமறிந்து பரிசு வழங்குவதே அரிது என்று சங்கப் புலவர் ஒருவர் கூறினார். ஆம்! ஈகை, அரிய பண்பு; கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று குறிக்கப்பெறும் பண்புத், தாதா கோடிக்கொருவர் என்று பாராட்டப் பெறும் பண்பு. அப்பண்பில் தலை நின்ற பாலை பாடிய இளங்கடுங்கோ கற்பவர் உள்ளததெல்லாம் நிற்பான் என்பது உறுதி. 4. சேரமான் புகழ் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை ஓரிடத்தே அமைவது அரிது. அறிவு உடையவர் இடத்துப் பண்பும், பண்பு உடையவர் இடத்து அறிவும், அவ்விரண்டும் உடையவர்இடத்து ஆற்றலும் அமையக் காண்பது அரிது. அவை அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து அமைந்துவிடின் அத்தகையவர் பிறர் உள்ளங்களை எளிதில் ஆட்படுத்தி விடுவர் பாடும் புகழுக்கும்உரியவர் ஆவர். அத்தகையவருள் ஒருவனாக விளங்கினான். சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரஞ் சேரல் சேரர் பரம்பரையில் வந்தவன். இரும் பொறை என்பது அவன் பரம்பரைக்குரிய பட்டப் பெயர். யானையின் சிறிய கண்களைப் போன்ற கண்களை உடையவன். ஆகவே இவற்றையெல்லாம் கூட்டி, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனப்பட்டான். இம்மன்னவனைப் பன்முறையும் கண்டு அன்புறப் பழகினார் ஒரு புலவர் அவர் குறுங்கோழியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்தவர். ஆகவே, குறுங்கோழியூர் கிழார் என்று பிறரால் அழைக்கப்பெற்றார். அப்பெயரே தம் பெயராக அமைந்து விளங்கினார். கிழார் மாந்தரஞ்சேரலின் அறிவுப் பண்பிலே - பல்கலைத் திறத்திலே தம் நெஞ்சைப் பறிகொடுத்தார். விரிக்க விரிக்க விரிந்து செல்லும் பண்பு மேம்பாட்டிலே தோய்ந்து நின்றார். அவன் ஆட்சியிலே அவன் அடிசார்ந்த குடிமக்கள் அடைந்து நிற்கும் இனிய தண்ணிய வாழ்வை எண்ணி இன்புற்றார். ஆற்றல் பெருகிக் கிடந்தும் அறவழிக்கு அன்றிப் பிறவழிக்கு பயன்படுத்தாத பெருந்தகைமையைப் பெரிதும் தெளிந்தார். குறை சொல்லிக் கொண்டு எவரும் முறை வேண்டிவரும் நிலை இல்லை என்பதையும் அவ்வாறு வரினும் அக்காலையில் வேந்தன் செலுத்தும் செங்கோல் மாண்பு இத்தகையது என்பதையும் சிந்தையில் தேக்கினார். இத்தகைய அரிய தன்மைகள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்து ள்ளமையால் மக்கள் உள்ளங்களில் உண்டாக்கி இருக்கும் நல்லெண்ணத்தையும் ஆய்ந்து உணர்ந்தார். தம் கருத்தை எல்லாம் கூட்டி அதற்குப் பாட்டுருத் தந்தார். வேந்தே! விரிந்த கடலின் ஆழம், பெரிய நிலத்தின் அகலம், காற்று வீசும் திசை, உருவம் அற்று நிலைபெற்ற வானம்இவற்றை எல்லாம் அறிவாற்றல் மிக்கோர் அளப்பினும் அளக்கலாம். ஆனால், அவற்றை அளந்து காணும் அறிவினராலும் நின் அன்பு, அருள், அறிவு ஆகியவற்றை அளப்பது அரிது. சோறு சமைக்கும் போது உண்டாகும் தீயின் வெப்பமும், செங்கதிரோன் வெப்பமும் அன்றி நின்குடிகட்கு வேறு வெப்பம் எதுவும் இல்லை வான வில்லைக் கண்டது அன்றி வாட்டும் கொலை வில்லைநின் மக்கள் அறியார். உழுபடை (கலப்பை) அன்றிப் பிற படைகளை அவர்கள் அறிந்தது இல்லைபிறர் மண்ணை நீ பறித்துக் கொண்டதோ இல்லை அவ்வாறே மண்ணாசை கொண்டு நின்னாட்டின் மேல் வந்தாரும இலர். கருக்கொண்ட மகளிர் மண்ணை உண்டதை அன்றிப் பகைத்து வந்து நின் மண்ணைப் பற்றி உண்டார் இலர். நின் மதிலிலே அம்புகள் தங்கிச் செயலற்றுக் கிடக்கின்றன. அறமோ, நின் செங்கோலிலே தங்கிக் கிடக்கிறது. பழம்பறவை போயினும் புதுப்பறவை வரினும் நடுக்கம் இன்றிக் காவற்கடமை புரிகின்றனனை நீ. ஆகவே நின்கீழ்வாழும் உயிர்கள் அனைத்தும் நினக்குச் சீறுதீமையும் வருதல் கூடாதே என அஞ்சி வாழ்கின்றனர் என்று பாராட்டினார் குறுங்கோழியூரார். உள்ளதை உள்ளவாறு பாடுதல் எமக்கு எளிது என்று காட்டினார் கிழார். உள்ளம் உவக்க ஈவது எனக்கு எளிது என்று காட்டினான் சேரமான். ஈத்துவக்கும் இன்பம் ஒருவர்க்கு மட்டும் அல்லவே! இருவருக்கும் உரியது தானே! வாழ்க ஈத்துவக்கும் இன்பம். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு 5. மறப்பது எப்படி? நின்னை எப்பிறப்பிலும் மறவாமை வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டினான் கர்ணன். என் மார்பைப் பிளந்து பார்; அங்கே நின் உருவைக் காண்பாய் என்று சங்கப் புலவர் ஒருவர் தம் பேரன்புக்குரிய வேந்தனை நோக்கிக் கூறினார். நல்லதை மறப்பது என்பது புல்லியர் பண்பு. உப்பிட்டவரை உள்ளவரைநினைப்பது உயர்ந்தோர் தகைமை அத்தகு உயர்ந்தோ ராகத் திகழ்ந்தார் ஆவூர் மூலக்கிழார். ஆவூரைச் சேர்ந்த புலவர் மூலங்கிழார் சோழன் கிள்ளி வளவனது வரிசை அறிந்து வழங்கும் வள்ளன்மையிலே உள்ளம் தோய்ந்தார். வாரிக் கொடுக்கும் வள்ளல் எனினும், பாடும்புலவர் தகுதி அறிந்து - பாடல் தகுதி அறிந்து - கொடுப்பது அரிது. அவ்வரிய திறமை எளிதில் கைவரப் பெற்றவன் கிள்ளி வளவன். கிள்ளிவளவனை அன்புற நெருங்கி வாழ்ந்த புலவர் மூலங்கிழார். நெடுநாட்கள் அவனைக் காண வாராமல் இருந்தார். அரசனுக்கு அவரைக் காணும் ஆவல் பெரிதாயிற்று; ஏக்கமாகவும் மாறிற்று. எவர் எவரையே கேட்டுக் கேட்டுச் சலித்தான். ஒரு நாள் புலவரையே நேரில் கண்டான். தன் ஆவலை எல்லாம் சேர்த்து எம்மை நினைத்தீரோ? எந்த நாடு சென்றிருந்தீர் என்று வினாவு முகத்தால் எம்முள்ளீர்? எந்நாட்டிடீர்? என்றான். அதற்கு விடையாக அவன் சிறப்புக்களையெல்லாம் வடித்தெடித்த சாறாகப் பாட்டொன்று பாடினார். வேந்தர் வேந்தே! மலை போன்றவை நின் இளைய வலிய யானைகள்; அவற்றின் மேலே, வானத்தில் கறை உண்டாயின் துடைப்பது போல ஓங்கி உயர்ந்த வண்ணக் கொடிகள் யானையைத் தொடர்ந்து செல்லும் படைகள் எண்ணற்கு அரியன. மன்னவனே, நீ சினந்து பார்க்கின்றோரின் இடம் அப்பார்வை மட்டிலே தீப்பற்றி எரிகின்றது நீ அன்பால் விரும்பிப் பார்ப்பவர் நாடுகள் பொன்விளையும் கழனிகளாக மாறுகின்றன.. நீ கதிரோன் இடத்தில் இருந்து நிலவொளியைப் பெற விரும்பினால் விரும்பிய வாறே பெறுவாய் அவ்வாறே நிலவில் இருந்து வெயில் உண்டாக்க வேண்டும் என்று உண்ணினாலும் நின் எண்ணம் நிறைவேறத் தவறுவது இல்லை. வேண்டியவற்றை வேண்டியவாறு முடிக்கவல்ல வீரன் நீ. ஆதலால் நின்குடை நிழற்கண் பிறந்து அந்நிழலே தஞ்சமாக வாழும் யான் நின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ? பிறநாட்டில் இருந்து நின்னை நேரில் காணாமல் வேள்வி அளவால் அறிந்தவர்களும் நின்னைப் பாராட்டி மகிழ்கின்றனர். அரசே, மக்கள் தாம் செய்த நல்வினைக்கு ஏற்றபடி வானுலகம் சென்று ஆங்குள்ள இன்பம் நுகர்வர். ஆனால் அவ்வானிலோ ஒன்றை ஈவாரும் இலர்; இல்லை என்றி வந்து இரப்பாரும் இலர். ஆதலால் அவ்வானம் செயல் இகந்து பொலி வற்றது என்றே கூற வேண்டும் எனப் புலவர் கருதுகின்றனர். ஆங்குப் பெறும் இன்பம் அனைத்தும் நின்னாட்டில் ஒருங்குபெறக் கூடும் என்றே கருதுகின்றனர். ஆகவே புலவர்கள் எங்கு இருந்தாலும் - பகைவர் நாட்டில் இருந்தால்கூட நின் சோழ நாட்டையே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நான் மட்டும் நின்னை மறந்து வாழ்வேனோ? மறவேன். மறவேன்! என்றார் புலவர். தழுவிக் கொண்டான் கிள்ளி வளவன். செல்வக் குவியலிலே திளைப்பவன் வளவன்; பாடிப் பரிசில் பெற்று வாழ்பவர் ஆவூர் மூலங்கிழார் செல்வச் செருக்கு - வறுமைத் தாழ்வு - இவை ஆங்குத் தலைகாட்ட வில்லைஏன்? அன்பு தலைகாட்டியமையே காரணம். வாழ்க அன்பு வாழ்வு! அன்புற் றமர்ந்த வழக்கெனப் வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு 6. கோட்டிடை வைத்த கவளம் கோடு என்பது பல பொருள் ஒரு சொல்; அது வளைவு, மலை, கிளை, கொம்பு, தந்தம் முதலிய பல பொருள்களைத் தரும். இங்கே தந்தம் என்னும் பொருளில் வருகின்றது. யானையின் தந்தங்களுக்கு இடையெ தொங்கும் துதிக்கையில் வைக்கப் பெற்ற கவளம் என்னும் பொருளில் இச்சொற்றொடர் வருகின்றது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை அதிகமான் ஆண்டு வந்தான். அவன் உள்ளத்தால் உயர்ந்தோன். ஊருணி நீர் போலவும், உள்ளூர்ப் பழ மரம் போலவும் அனைவருக்கும் பயன்பட்டு வந்தான். அவனது பேரன்புக்கும் பெருநண்புக்கும் உரிமை பூண்டவராகத் திகழ்ந்தார் ஔவையார். ஔவையார், அதிகமான் அரண்மனையில் இருந்த பொழுது களில், எப்பொழுதும் புலவர் வந்தவண்ணமாக இருப்பதைக் கண்டார். நேற்று வந்து பரிசில் பெற்றோமே என்றும் எண்ணாமல் அவர்கள் மறுநாளும் வந்தனர்; அடுத்த நாளும் வந்தனர்; ஒருவர் இருவராக இல்லாமல் பலராகப் பல நாட்கள் தொடர்ந்து வந்தும் பரிசு பெற்றனர். அதிகமான் அவர்களை யெல்லாம் முதல்நாள் போலவே முகமலர்ந்து வரவேற்றுக் கொடுக்கும் வள்ளன்மையைக் கண்டு உள்ளம் உவந்தார் ஔவையார் தம் நெஞ்சார வாழ்த்தினார். அதிகமானிடம் விடைபெற்றுக் கொண்டு வேறு பல இடங் களுக்குச் சென்று மீண்டும் வந்தார் ஔவையார் அப்பொழுதில் அதிகமானை மிகுதியாகக் காணமுடிய வில்லை; அளவளாவிப் பேசமுடிய வில்லை; பரிசு பெற்று விடை பெற்றுக்கொண்டு போகவும் முடியவில்லை. சேர வேந்தன் அதிகமான் மேல்பகை கொண்டிருந்தான். அதிகமானை அழித்து ஒழிக்கவும் திட்டமிட்டிருந்தான். ஆகவே தன் படையைப் பெருக்கிச் சேரனை அழிக்கும் முயற்சியில் முனைந்திருந்தான் அதிகமான். அதனால் ஔவையாரை முன்னைப் போல் அவனால் பேண முடியவில்லை. நாம் வந்தபொழுது சரியில்லை என்று தமக்குள் ஔவையார் எண்ணினார்; நாட்கள் கடந்தன; பரிசில் தருதற்கு விருப்பம் இல்லாதவன் தான் இவ்வாறு நாட்களை நீட்டிக்கிறானோ என்னும் எண்ணம் அவருக்கு ஒரு நொடிப்பொழுது உண்டாயிற்று! மறு நொடியில் பேதை நெஞ்சமே, என்ன நினைத்தாய்? ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் பல நாளும். ஒருவர், இருவர் என்று இல்லாமல் பலரும், முதல் நாள் போல் பரிசு பெற்றுச் செல்ல வழங்கும் வள்ளல் அதிகமானா நமக்குப் பரிசு வழங்கத் தவறுவான்? தவறான், என்று மறு நொடியிலே எண்ணினார். மேலும் அவர் தம் எண்ணம் வளர்ந்தது. அதிகமான் என்ன வறுமைக்கு ஆட்பட்டு விட்டானா? அணிகலம் அணிந்த யானைகள் அவனிடம் குறைந்து விட்டனவா அழகு நடைபோடும் தேர்களும் குதிரைகளும் குறைந்து பேயினவா? அவன் பரிசு கிடைக்கலாம்; அல்லது நாளை கிடைக்கலாம்; அல்லது காலம் நீடித்தும் கிடைக்கலாம். ஆனால் பரிசு கிடைக்கத் தவறாது. யானை தன் கையில் சோற்றுத் திரளையை - கவளத்தை - எடுத்து வைத்துள்ளது. அதனை உடனே தன் வாய்க்குள் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் அல்லது சற்றே பொறுத்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் வாய்க்குள் போதில் தவறுமா? தவறாது. அதுபோலவே அதிகமான் தரும் பரிசிலும் ஒருநாளும் தவறப்போவதில்லை. அவன் தரும் பரிசு நம் கையகத்தே இருக்கிறது. ஆகவே அருந்துதலில் ஏமாற்றம் கொண்ட என் நெஞ்சமே. நீ வருந்த வேண்டா! அவன் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்! அவன் எடுத்துக் கொண்ட இனிய முயற்சி எளிதில் வெற்றி தருவதாக! வாழ்வதாக அவன் முயற்சி, என்று வாழ்த்தித் தம் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். பூமாலை வாடும்; பொழுதுபோனால் மணமும் தேனும் இல்லையாகும். பாமாலையோ என்றும் வாடா மாலை; வற்றாத் தேன் மணமாலை; அம்மாலையைப் பெற்ற அதிகமான் பேறு பெற்றேன். புகழுடலால் அதனை வாழச் செய்வன அப்பாமாலைகள் தாமே! 7. புலவரின் வள்ளன்மை இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவது வள்ளன்மையாம், வள்ளல் தன்மையே, வள்ளன்மை எனப்படும். வள்ளல்களை நாடித்தேடித் திரிந்து பொருள்பெறும் இயல்புடைய புலவரே வள்ளலாகத் திகழ்ந்த பெருமித மிக்க வரலாற்றை இவண் அறிவோம். பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர். பெரிய குடும்பம் உடையவர்; சுற்றமும் சூழலும் மிக்கவர்; அத்தகையவரை வறுமை வாட்டாமல் விடுமா? சித்தனாரின் மனைவியார் சீரிய பண்புகள் வாய்ந்தவர் மனைக்கு விளக்காக அமைந்தவர்; அவர்தம் அருந்திறப் பெருங் குணத்தால் அண்டை அயலார் அனைவரும் அவருக்குத் தக்க வண்ணம் ஆதரவாக இருந்தனர். குறிப்பறிந்து தாமே முன் வந்தும் பல வகையில் உதவினர்; கைம்மாற்றாகவும் வேண்டுவனவற்றை வழங்கினர்; இத்தகு நிலையிலே குடும்பம் என்னும் வண்டி ஒருவாறு உருண்டு கொண்டு இருந்தது. ஆனால், வறுமையின் வாட்டுதலைப் பிறர் எவ்வளவு நாட்கள் தாம் தடை போட்டுவிட முடியும்? சித்திரனார் குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கக்கூடும்; வறுமையுள் ஒருவன் உறங்க இயலாது என்பது பொய்யாமொழி. ஆகவே வள்ளலைத் தேடிச் செல்லும் எண்ணம் சித்திரனார்க்கு எழுந்தது. யாரைக் காண்பது? பல்லைக் காட்டி மானம் இழந்து பாடித் திரிவதற்குச் சித்தரனார் உள்ளம் உடன்பட வில்லை. குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல் யார்? என் எண்ணினார். முதிரமலை வள்ளல் - தலைக் கொடையாளி - குமணணே சித்திரனார் நெஞ்சில் தோன்றினான். புலவர் முதிரமலை நோக்கி நடந்தார். காடும் மலையும் கடந்தார்; கால்கடுக்க நடந்தார்; நெஞ்சில் நின்ற குமணனின் நேரில் நின்றார் சித்தரனார். உள்ளார்ந்த அன்பால் வரவேற்று உவகைக் கூத்தாடினான் குமணன். நெடுநாட்கள் தன்னுடன் தங்குமாறு வலியுறுத்தினான் பொழுதெல்லாம் புதுக் கவிதையிலும், இலக்கிய ஆய்விலும் கழிந்தது புலவரோடு அளவளாவி மகிழும் இன்பம் போல வேறு இன்பம் இல்லை என்னும் கருத்துடைய குமணனன் புலவரை எளிதில்போக விடுவானா? புலவர்க்கும் தம்கவியைச் சொட்ட சொட்ட நுகரும் அன்பனை விட்டுப் பிரிய மனம் வருமா? வராது எனினும் புலவர் தம் வறுமை வாழ்வு அடிக்கடி குறுக்கிட்டு ஊருக்குச் செல்லுமாறு ஏவிக்கொண்டே இருந்தது. குமணனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கினார் புலவர். குமணன் அளவிறந்த பொருள்களைப் பரிசாக வழங்கினான். பீடுமிக்க பெருஞ் செல்வர் போல் வீடு புகுந்து சித்தரனாரை வியப்புடன் வரவேற்றார் மனைவியார். பருவமழை வரக்கண்ட பயிர்போல் உற்றார் உறவினர் உவகை எய்தினர். புலவர், தம் மனைவியாரை நோக்கி, அன்புமிக்க மனைவியே, முதிரமலைத் தலைவன் குமணனன் கொடைவளம் இது. இதனை நின்னை விரும்பி வாழ்ந்து வருபவர்க்குக் கொடு. நீ விரும்பி வாழ்பவர்க்கும் கொடு; கற்பு மேம்பட்ட நின் சுற்றத்தார்க்கும் கொடு. நம் வறுமை தீருமாறு பயனெதிர் பாராது வழங்கியவர்க்கும், கைம்மாற்றாகப் பொருள் தந்தோர்க்கும் கொடு; இன்னார்க்கு என்று இல்லாமல் என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்று இல்லாமல் எல்லார்க்கும் கொடு. நானும் அவ்வாறே கொடுப்போன் என்றார். அவ்வாறே பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து பெருவாழ்வு வாழ்ந்தார் சித்திரனார். நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது வள்ளுவ நெறி அந்நெறியைச் செவ்வையாகப் போற்றி வாழ்ந்தவர் செந்தமிழ்ச் சித்தரனார். ஆகவே தாம் பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து ஈத்துவக்கும் இன்பம் எய்தினார். வாழ்க சித்தரனார்! வாழ்க அறநெஞ்சம்! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 8. ஏன் புகழ வேண்டும்? நில்லா உலகத்தில் நிலை பேறுடையது புகழ் ஒன்றே. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றாது நிற்ப தொன்றில் என்பது வள்ளுவம். அப்புகழை அடைதற்கு உலகம் பெரிதும் ஆவலுற்று நிற்கின்றது. அதிலும் புலவர் பாடும் புகழை அடையார் விண்ணுலக்கின்பமும் எய்தார் என்னும் கருத்து சங்க நாளில் இருந்தது. ஆகவே உயர் பெருமக்கள் புலவர் பாடும் புகழை விரும்பினர். புலவர்களும் தக்கோரைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தகைய புகழ் வாழ்வு ஒன்றை இக்கட்டுரைக் கண் காண்போம். இன்றைய புதுக்கோட்டைச் சீமை முன்னாளில் கோனாடு என்னும் பெயருடன் இலங்கியது. அவ்வூர்க்குப் பெருமைதரும் புலவர் மணியாக குமரனார் என்பார் பிறந்தார். அவர் மதுரையிலே வாழ்ந்தார்; மாடலன் என்பார் வழி முறையில் வந்தார். ஆகவே அவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனப் பெயர் பெற்றார். சோழனது படைத் தலைவனான ஏனாதி திருக்கிள்ளி என்பானைக் குமரனார் கண்டார். அப்பொழுது புலவர்கள் பலரும் அவனைச் சூழ்ந்திருந்தனர் அவனது சீரிய இயல்புகளையும் ஆற்றல்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏனாதியின் பகைவர்களைப் புலவர்கள் பழித்து உரைக்கவும் செய்தனர். திருக்கிள்ளி புலவர்களை நோக்கிப் புலவர் பெருமக்களே, நீங்கள் என்னையே புகழ்கிறீர்கள்; என் பகைவர்களைப் பழிக்கின்றீர்கள்; என்னிடத்தும் பழிக்கத்தக்க தன்மைகள் இருக்கக் கூடும்; என் பகைவர்களிடத்தும் புகழத்தக்க தன்மைகள் இருக்கவும் கூடும். அவற்றை உரைக்காமல் என்னையே புகழ்வது ஏன்? என் பகைவர்களையே பழிப்பதும் ஏன்? என்னைப் பழித்தாலும், என் பகைவர்களைப் புகழ்ந்தாலும் உங்களுக்குப் பரிசு கிட்டாது என்பது உங்கள் எண்ணமா? அவ்வாறு எண்ண வேண்டா. உண்மையை நான் மிக வரவேற்பேன்; மறைக்காமல் பாடுங்கள் என்றான். புலவர்கள் பலரும் அமைதி கொண்டனர், ஆங்கிருந்த குமரனார் வீறுடன் எழுந்தார், வீரச் செம்மலே, தாங்கள் கூறியவாறு உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். தங்களிடம் இன்னாததும் உண்டு; தங்கள் பகைவரிடம் இனியதும் உண்டு; கேளுங்கள்: தாங்கள் அச்சம் என்னும் ஒரு பொருளை அறியாமல் அமர்க்களம் போகிறீர்கள்; ஆங்கும் பகைவர் படைகளுக்கு நேர் முன்னர்ச் சென்று நிற்கிறீர்கள்; வாள் வேல், வில் விளையாடும் வெங்கொடுமைக் களத்திலே புகுந்து வீறுடன் போரிடும் தங்களை அவை வெட்டவும், குத்தவும், துளைக்கவும் செய்கின்றன; அதனால் உடலெங்கும் ஒரே வடுவாகக் காட்சியளிக்கின்றது; ஆதலால் தங்கள் ஆண்மையைப் பிறர் சொல்ல இனிமையாகக் கேட்டவர்கள் நேரில் வந்து தங்கள் உடலைக் காணுங்கால் அது இன்னாததாகத் தோன்றுகின்றது. தங்கள் பகைவர்களோ களத்தில் புறமுதுகிட்டு ஓடி ஒளிவதால் கேள்விக்கு இனிமை இல்லாதவராகத் தோன்று கின்றனர். ஆனால் நேரில் காணும்போது சிறிய வடுவும் இல்லாதவர் களாய்ப் பொலிவு மிக்க உடலுடன் கண்ணுக்கு இனியவராகக் காட்சி வழங்குகின்றனர். தாங்களும் ஒருவகையில் இனியர்; அவர்களும் ஒருவகையில் இனியர்; தாங்களும் ஒரு வகையில் இன்னாதவர்; அவர்களும் அவ்வாறே ஒரு வகையில் இன்னாதவர் எனினும் தங்களை மட்டுமே உலகம் பாராட்டுகின்றது. இஃது ஏன்? எனக்கு உண்மை புலப்படவில்லை. பெருமானே, தாங்கள் அறியக்கூடுமாயின் அறிந்து கூறுக என்றார். திருக்கிள்ளி நுண்ணிய அறிவினன்; புலவர் வஞ்சமாக உரைத்ததிலே உள்ள புகழ்ச்சியை அறிந்தான்; புலவர்களும் வியந்தனர்; குமரனாரின் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் அவையை மகிழ்வித்தன. புலமைச் சீர்மை பெரிது; புகழ்ச்சியால் பழிப்பு உண்டாகவும் செய்யலாம். பழிப்பால் புகழ் உண்டாகவும் பாடலாம் பாடுவோர் திறமையைப் பொறுத்தது. அத்திறத்தில் வல்லவர் மதுரைக் குமரனார் என்பதில் ஐயம் இல்லை. 1. சூயசு - பனாமா - திட்டங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தொகுத்து எழுதுக. மாந்தர் இனத்தின் அயரா முயற்சியால் அமைந்த பெருந் திட்டங்க்ள் பல. அவற்றுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன.இவ்வரும்பெருந் திட்டங் களுக்கும், தொல்பழம் பெருநிலமாம் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். உலக ஒருமைப்பாடு என்பது தமிழர்க்குப் புதுப்பொருள் அன்று. மிகு பழம் பொருளாம். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பழந்தமிழ்ப் பண். உலகம் ஒன்று ஆதலால் அதன் தலைவனான இறைவனும் ஒருவனே என்பது அவர்கள் தெளிவு. காலத்தையும் இடத்தையும் கடந்து தமிழர் கண்ட கனவை, அக்காலத்தையும் இடத்தையும் வென்றே உலகம் காண முடியும். அவ்வாறே கண்டது. விசை ஊர்திகள், நீராவிக் கப்பல்கள், வான்கலங்கள், தொலைபேசி, தொலை அச்சு, கம்பி இல்லாத்தந்தி, தொலைக்காட்சி, சேண்கதிரி முதலாய அறிவியற் புதுமைகள் உலகத்தைச் சுருக்கி நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. இவற்றைப் போலவே சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்களும் உலகத்தைச் சுருக்க உதவியுள்ளன. ஆகவே, உலக நெருக்கம் கருதிய தமிழகக் கனவு, இக்கடற்கால் இணைப்புக்களால் நனவாகியுள்ளதென்பது உண்மையாகும். எகிப்து நாட்டின் கண்ணோட்டம் கீழ்த் திசையில் இருந்தது. கீழ்த்திசை நாடுகளுடன் தொடர்புகொள்ள எகிப்தியர் விரும்பினர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே எகிப்தியர் பண்ட் என்ற கீழ்த்திசை நாட்டுடன் கலை, வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமான ஓபீர் என்ற இடத்தில் இருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அத் தொடர்புடைய நாடே தம் பழந் தாயகம் என்றுகூட எண்ணினர். ஆதலால் எகிப்தியர் கண்ணோட்டம் கீழ்த்திசை நோக்கி இருந்தது இயல் பேயாம். இப் பண்ட் நாடும், ஓபீர் துறையும் எங்கே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அரேபியாவிலும், ஆப்பிரிக்கா விலும் தேடினர். ஆனால் அங்குக் காணவில்லை. பாண்டி நாடே அப் பண்ட் என்றும், அந்நாட்டில் இருந்த உவரி என்னும் துறைமுகமே ஓபீர் என்றும் கால்டுவெல் பெருமகனார் தெளிவு செய்தார். ஆம்! சிந்து வெளி நாள்முதல் தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம், தங்கம் முதலிய பொருள்கள் தமிழகத்தில் இருந்து உலகெங்கும் போயின. பொருள்கள் மட்டுமோ போயின? தமிழ்ப் பெயர்களும் அத் தமிழ்நாட்டுப் பொருள்களுடன் போயின. இந்நாளிலும் உலகெங்கும் அத்தமிழ்ப் பெயர்களே பல வகையாக மருவி வழங்குவது அதற்குத் தக்க சான்றாகும். இத்தகைய வளமிக்க தமிழகத்துடன் வாணிகம் செய்யும் ஆவலில் இருந்தே எகிப்தியரின் சூயசுக் கடற்கால் கனவு உருவாயிற்றாம். மற்றொரு வகையாலும் தமிழகம் சூயசுக் கடற்கால் தோன்றத் துணையாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு வர நன்னம்பிக்கை வழி ஒன்றே இருந்தது. இவ்வழியையும் பிரிட்டீசாரே பயன்படுத்த முடிந்தது. ஆகவே புது வழி ஒன்று காண்பதற்காக மேலை நாட்டார் பெரிதும் முயன்றனர். அம்முயற்சியின் விளைவே சூயசுக் கடற்காலாக உருவாயிற்று. தமிழக வாணிகத் தொடர்புபற்றிய ஆவலே சூயசுத் திட்டத்தை உருவாக்கியது போலவே பனாமாத் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலை உலகம் முயன்ற பொழுதில் உலகம் உருண்டை என்னும் எண்ணம் அரும்பியிருந்தது. ஆதலால் மேற்கே சென்றால் இந்தியாவின் கிழக்குக் கரையை அடையலாம் என்னும் துணிவுடன் கொலம்பசு என்னும் கடலோடி முயன்றார். அவர் இந்தியாவைக் காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவைக் கண்டார். அவரே இந்தியாவுக்கு மேல்திசை வழிகாண முயன்று ஆத்திரேலியாவைக் கண்டார். தென்கிழக்கு ஆசியாவைக் கண்டு அதனையே இந்தியா எனத் தவறாகக் கருதிக் கொண்டார். செவ்விந்தியர். மேற்கிந்தியத் தீவுகள், கிழக்கிந்தியத் தீவுகள் என்பன இவற்றை விளக்கிக் காட்டும் சின்னங்களாம். பனாமாக் கடல் இணைப்புக்கும், அதன் வரலாற்றுக்கும் தாயகமாக இருப்பது அமெரிக்கா. அவ்வமெரிக்காக் கண்டமே தமிழகத்துடன் வாணிகம் செய்ய எழுந்த ஆவலின் பரிசேயாம். ஆதலால், தமிழகக் கனவால் எழுந்த அமெரிக்க நாட்டிலே அத்தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பையும் உருவாக்கிற்று என்பது நினைவுகூரத் தக்கதாம். சூயசு, பனாமாத் திட்டங்கள் உலக வரலாற்றைத் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இவ்விரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழ் ஒளியும் பரவிக் கிடக்கின்றமை நமக்குப் பெருமையளிக்கின்றன. நன்றே நினைமின் நமரங்காள் என்பது நம் முன்னோர் ஒருவர் வாக்கு! 2. ஓருலகச் சாதனைகள் என்பது பற்றி எழுதுக. உலகத்தை ஒரே குடும்பமாக்கி வாழ்வதற்கு உயர்ந்த பெரு மக்கள் எண்ணினர். அரும்பெருஞ் செயல் வீரர்கள் முனைந்து செயலாற்றினர். அத்தகு செயற்பெருஞ் சாதனைகளுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாம். உலகம் பலவகைப் பெருங்காப்பியங்களையும் வீரகாவியங் களையும் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆனால் செயல் என்னும் அரங்கத்திலே தீட்டிக் காட்டப்பெற்ற சீரியவண்ண ஓவியப் பெருங்காவியங்களாகச் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்பான வீரகாவியங்கள் உலகில் இல்லை என்றே துணிந்து கூறலாம். சூயசு, பனாமா என்பன இயல்பாகவே கடல் பகுதிகள் அல்ல. மிக ஆணித்தான காலம்வரை நிலப்பகுதிகளாகவே இருந்தன. மாந்தன் நிலத்தைப் பிளந்தும், மலையை உடைத்தும் கடலோடு கடலைக் கலக்கவிட்டு உலகக்கடல் வழியைப் படைத்துள்ளான். உலகப் பேரளவில் சுருக்கியுள்ளான். சூயசுத் திட்டம் பழைய உலகைச் சார்ந்தது. பனாமாத் திட்டம் புதிய உலகைச் சார்ந்தது. சூயசுத் திட்டத்தில் நாலாயிர ஆண்டு உலக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. பனாமாத் திட்டத்தில் கடந்த நானூறு ஆண்டு நாகரிக உலக வரலாற்றின் தடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் உலக வரலாற்றின் நிலைக்களங்களாக அமைந்துள்ளன. ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் இருந்து நடுக்கடல், செங்கடல் இவற்றால் தனிப்பெரு நிலமாகப் பிரிக்கப் பெற்றிருப்பது ஆப்பிரிக்கா. ஆனால் ஆசியாவில் இருந்து முழுமையும் ஆப்பிரிக்கா பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுக்கமான ஒருநில இடுக்கு அவற்றை இணைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இந்நில இடுக்கே சூயசு நில இணைப்பு. இதனை வெட்டி அகழ்ந்தே கடலிணைப்புத் திட்டத்தை மாந்தர் இனம் நிறைவேற்றியது. இத்திட்டம் 19-ஆம் நூற்றாண்டின் சாதனையாம். அமெரிக்கா தென்வடலாகக் கிடக்கிறது. அதன் இரு பகுதிகள் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா என்பன. ஒரே கண்டம் எனினும் தனித்தனிக் கண்டங்கள் போலப் பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் முற்றிலும் பிரிந்து பட்டுவிடவில்லை. அங்கேயும் நீண்டு ஒடுங்கிய ஒருநில இடுக்கு உள்ளது. அந்நில இணைப்பே பனாமா நிலஇணைப்பு. இதனை அகழ்ந்தே பனாமாக் கடலிணைப்புத் திட்டத்தைப் புத்துலக வீரர்கள் படைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இணையற்ற சாதனை இது. உலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப்பகுதிகள். அவை உயிர்களின் வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள் - பனிப்பாறைகள். பனிப்புயலும், சூறைக்காற்றும் எப்பொழுதும் உண்டு. ஆதலால் வடதென்துருவப் பகுதிகள் போக்கு வரவுக்குத் தக்கவை அல்ல. அவ்வாறே வட, தென் கடல்களும் போக்குவரவுக்குத் தக்கவை அல்ல. ஆகவே உலகமா கடல்கள் ஐந்தனுள் பசிபிப்மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்துமாகடல் ஆகிய மூன்று மாகடல்களிலேயே போக்குவரவு நடத்த முடியும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நிலப்பரப்பு உலகை இருவேறாகப் பிரித்து விடுகின்றது. அதன் வடகோடி வடகலையும், தென்கோடி தென்கடலை ஒட்டியும் கிடக்கின்றன. இந்நிலையில் ஆசியா ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்காவுடன் இணைக்கும் சூயசு நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்புச் செய்தமையால் மேற்கு உலகும் கிழக்கு உலகும் ஓருலகாக வாய்ப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் ஆப்பிரிக்காக் கரை முழுமையும் சுற்றியே மேற்குலகும், கிழக்குலகும் தொடர்பு கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் வடதென் பகுதிகளும் உலகை இரண்டாகப் பிரித்து வடகோடி வடகடலுடனும், தென்கோடி தென்கடலுடனும் பொருந்திக் கிடக்கின்றன. ஆதலால் வடமெரிக்கா தென்னமெரிக் காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்பாக்கியமையால்தான் மேற்கு கிழக்கு உலகங்கள் ஓருலகாக வழி உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் தென்அமெரிக்கக் கரை முழுமையும் சுற்றியே ஆகவேண்டும். சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பலநாட் பயணத்தையும், பெரும் பணச்செலவையும், பெருகிய அல்லல் களையும் குறைத்துவிட்டன. அன்றியும் உலகைப் பிணைத்து, வாணிக வளமும், தொழில் வளமும் பெருகச் செய்துள்ளன. இத்தகைய செயற்கரிய செயல்களே ஓருலகச் சாதனைகள் என்று கூறத்தகும். வாழ்க உலக ஒருமைப்பாடு! 3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக. சூயசுக் கடலிணைப்புத் திட்டத்தின் முன்னோடி நீலாற்றுக் கால்வாய்த் திட்டம் ஆகும். அத்திட்டம் கி.மு. 2500 ஆண்டுக்கு முற்பட்ட திட்டமாகும். அரிட்டாட்டில், டிராபோ, பிளினி என்னும் அறிஞர் பெருமக்களின் புகழ்ச்சிக்கு நிலைக்களமாக இருந்த பேறு நீலாற்றுத் திட்டத்திற்கு உண்டு. நீலாற்றுக் கால்வாய், பரோவாக்களின் கால்வாய் என்றும் வழங்கப்பெற்றது. பண்டை எகிப்திய மன்னர்கள் பரோவாக்கள் எனப்பெற்றனர். அவர்கள் ஆக்கிய கால்வாய் ஆதலால் அப்பெயர் பெற்றது. நீலாற்றுக்கால், நீலாற்றில் இருந்து பிரியும் பெலியூசக் என்னும் ஆற்றின் கிளையான பூபாசிபிசியில் இருந்து புறப்பட்டு துமிலாத்து, கைப்பேரி இவற்றின் வழியாகச் செங்கடலில் முடிவுற்றது. எகிப்தில் உள்ள பாரக் கூம்புகளுக்குத் (பிரமிடு) தமிழகத் தேக்கு மரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இஃது எகிப்து தமிழக வாணிகப் பழமையை உணர்த்தும். இவ்வாணிகம் கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவே தமிழக மேலை உலக வாணிகமாக 19ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்தது. பழந்தமிழக வாணிகம் இருபெரு வழிகளில் நடந்தது. சீனத்தில் இருந்து ஆசிய நடுமேட்டு நிலவழியாக எகிப்து செல்லும் ஒரு வழி. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தமிழகக் கடலைக் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி மற்றொன்று. முன்னை வழி, பருவமாறுதல் கேட்டாலும், கொள்ளைக் கூட்டத்தார் கொடுமையாலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மறைந்து போயிற்று. ஆதலால் தமிழகத்தின் ஊடாகச் சென்ற கடல்வழி ஒன்றே உலகக் கடல் வழியாக அமைந்தது. எகிப்திய மாமன்னர்களாகிய பரோவாக்கள் தமிழக வாணிகத்தில் பங்கு கொள்ளும் ஆவல் கொண்டமையால்தான் நீலாற்றுக் கால் தோண்டினர். தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல்வழியாகத் திறந்த கடல் காலாகவும், மறு பக்கத்தில் ஆற்றுடன் இணைந்த காலாகவும் அமைந்தது. அந்நாளில்தான் பண்ட் என்னும் பெயரால் பாண்டிநாடும், ஓபீர் என்னும் பெயரால் உவரித் துறைமுகமும் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கின. பரோவாக்களின் கால்வாய் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வந்தது. ஆனால் கி.மு. 7ஆம் நூற்றாண் டளவில் பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெக்கோ மன்னன் தன் பாலத்தீனப் பெருவெற்றியில் பிடித்த 1,20,000 போர்க் கைதிகளைக் கால்வாய் வேலையில் ஈடுபடுத்தினான். எனினும், அவன் அமைச்சர்கள் இப்பணியை விரும்பாமையால் திட்டம் கைவிடப்பெற்றது. கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடுவுலக முழுவதும் பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டது. பேரரசர் டேரியசு, கால்வாயைப் புதுப்பிக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டாலும் முற்றுவிக்கப் பெறாமல் நின்றது. பேரரசர் செர்க்கிசு காலத்தில் மீண்டும் கால்வாய் சேலை தொடங்கப்பெற்று நிறை வேறியதுடன், படகுப் போக்குவரவுக்கு ஏற்ற சீரமைப்புக்களும் செய்யப்பெற்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடுவுலக அரசியல், பேரரசர் அலெக்சாண்டர் கைக்குள் சென்றது. இக் கிரேக்க மரபினருள் டாலமி பிலாடெல்பசு என்பவனும் யூர்கெடிசு என்பவனும் கால்வாயை மீண்டும் சீராக்கிச் செங்கடலில் உள்ள ஆர்ச்சனா துறைமுகத்துடன் இணைத்தனர். அவ்விணைப்பை அன்றி நடுநிலக் கடலுடன் இணைக்கவும் அவர்கள் கனவு கண்டனர். ஆனால் அக்கனவு நனவாகாதலே நின்று போனது. செங்கடலின் நீர்மட்டத்திற்கும் நடுநிலக் கடலின் நீர் மட்டத்திற்கும் வேற்றுமை உண்டு; ஆதலால் இணைப்பு ஏற்படுத்தினால் பேரழிவு உண்டாம் என்று அந்நாளைய மக்கள் எண்ணினர். பரப்பியும் வந்தனர். அதனால் பலவிய அச்சமே கடலிணைப்பைத் தடைசெய்ததுடன், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தொழியவும் செய்து விட்டது. குருட்டு நம்பிக்கையின் கேட்டுக்கு வேறு சான்றும் வேண்டுமோ? எகிப்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. உரோமப் பேரரசன் திராசன் நீலாற்றுக் காலை விரிவு செய்தான். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்து அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆராபிய ஆட்சியில் எகிப்துக்குத் தலைவராயிருந்த அம்ரு, கால்வாயை மீண்டும் செப்பனிட்டார். அவர் நடுநிலைக் கடல் வரை கால்வாயைக் கொண்டுசெல்லவும் கருதினார். அவர் முயற்சியும் ஈடேறிற்றில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கலிபா சாபர் அலி இசுலாமியக் கொந்தளிப்பைப் கருதிக் கால்வாயை மூடுமாறு கட்டளை இட்டார். அந்நூற்றாண்டிலேயே இராசித் என்னும் மன்னன் கால்வாயை விரிவு செய்ய முனைந்தான். ஆயினும் அப்பணியும் துருக்கியர் கடற்படை, எகிப்தின் உள் நாட்டுக்குள் வருதற்குத் துணையாகிவிடும் என்னும் அச்சத்தால் நின்றுவிட்டது. கி.பி. 1811இல் கால்வாயை மூடிவிடுமாறு முகமத் அலி என்பார் கட்டளை இட்டார். ஆனால் முழுமையும் மூடப்பெறாமல் சூயசுக் கடற்கால் வேலை தொடங்கும் வரை நீரோடிக் கொண்டும், போக்குவரவுக்குத் துணையாகிக்கொண்டும் நீலாற்றுக் கால் இருந்தது. அந்நீலாற்றுக்காலே சூயசுக் கடலிணைப்பின்போது நன்னீர்க் காலாக அகழப்பெற்றுக் கடற்காலுடன் இரண்டறக் கலந்துவிடும் பேறு பெற்றது. கனவு காண்பது எளிது! அதனை நனவாக்குவது மிக அரிது. நல்ல கனவொன்று நனவாக எத்தனை முட்டுக்கட்டைகள் உண்டாகின்றன என்றும், நல்ல கனவு எவ்வாறு இறுதியில் இணையற்று ஓங்கி நின்று, வெற்றி கொள்ளுகின்றது என்றும் நீலாற்றுக்கால் திட்டம் உலகுக்கு உணர்த்தத் தவறாது. வாழ்க நல்ல கனவுகள்! வாழ்க நற்கனவை நனவாக்குவோர்! 4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையை எழுதுக. எந்தவொரு நினைவு உண்டாதற்கும், செயல் நடைபெறுதற்கும், ஏற்றவொரு தூண்டுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். அவர்கள், தூண்டல் இன்றில் துலங்கல் இல்லை என அறுதியிட்டு உரைப்பர். நாம் இக்கட்டுரையில் சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையைக் காண்போம். இந்தியா முதலிய கீழை நாடுகளின் செழுமையும் வளமும் மேலைநாடுகளை மிகக் கவர்ந்தன. ஆகவே கீழை நாடுகளுடன் வாணிகம் செய்து வளம் திரட்ட மேலைநாடுகள் மிக விரும்பின. அந்நாடுகளுக்கு உரிய போக்குவரவு வழி நன்னம்பிக்கை முனைவழி ஒன்றாகவே இருந்தது. அவ்வழியுங்கூட நாளடையில் பிரிட்டனுக்கு மட்டுமே உரித்தாகப் போய்விட்டது. ஆதலால் புதுவழி காணும் நாட்டம் மேலை நாட்டவருக்கு உண்டாயிற்று. அந்நாட்டத்தால் உருவாகியதே சூயசுக்கடல் இணைப்புத் திட்டமாகும். சூயசும் அதனை உள்ளடக்கிய எகிப்தும் பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியின் மேலாட்சிக்கு உரியனவாய் இருந்தன. துருக்கி மன்னர்க்குச் சூயசுக் கடலிணைப்புக் குறித்து ஒரு தூதுக்குழு எகிப்தில் இருந்து சென்றது. துருக்கிய மன்னர் இசை வளிக்கவில்லை. திட்டம் தொடங்காமலே நின்று போனது. யூட்சு அலி என்பார் துருக்கியின் மன்னராக வந்த காலையில் சூயசுத் திட்டத்திற்கு ஆதரவு நல்கினார். பிரஞ்சு நாட்டு மன்னரும் இதனால் பேருவகை உற்றார். ஆனால் இத்திட்டம் வீண் செலவில் கொண்டு போய் விடும் என்று துருக்கிய நாட்டு அமைச்சர்கள் கருதினார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், கடலோடிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். எனினும் என்ன, அமைச்சர்கள் எண்ணமே நிறைவேறியது. திட்டம் நிறைவேறவில்லை. திட்டத்தை விரும்பிய அனைவரும் தம்பேச்சிலும் எழுத்திலும் நன்றாக வலியுறுத்திக் கொண்டு வந்தனர். நம்பிக்கை முனைவழி ஒன்றே நன்மை பயப்பது என்ற தன் கருத்தை பிரிட்டன் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. சூயசு வழியின் கேடுகள் இவையென எடுத்துக்காட்டித் தடைப்படுத்தியும் வந்தது. பிரான்சு நாட்டினர் சூயசு வழியைக் காண்பதற்கு இறங்கி விடாதவாறும் பிரிட்டன் அக்கறை கொண்டது. ஆனால் கி.பி. 1798-ல் எகிப்தை வெற்றி கொண்ட நெப்போலியன் கடற்கால் இணைப்புக்குரிய திட்டங்கள் தீட்டினான். நில அளவை ஆய்வு செய்தான். இந்தியாவில் திப்பு சுல்தான் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்நிலையில் அவன் முயன்றாலும் கடல் நீர்மட்டம் தொடர்பான பழைய அச்சம் தலைதூக்கி நின்றது. நடுக்கடல் மட்டத்திலும் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவை ஆராய்ச்யிளர் லெப்பேர் முடிவு செய்தார். ஆகவே திட்டம் மீண்டும் கைவிடப்பெற்றது. 19ம் நூற்றாண்டுவரை கீழ்த்திசை அஞ்சல்கள் நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்றுகொண்டிருந்தன. 1835-ல் வாக்கார்ன் என்பார் எகிப்து நாட்டின் வழியாக அஞ்சல் அனுப்பினால் 70 நாட்கள் குறைவாகும் என்று எடுத்துக் காட்டினார். அதன் பயனாகப் புதிய அஞ்சல்வழி உண்டாயிற்று. கடலில் இருந்து மறு கடலுக்கு எகிப்திய நிலவழியில் அஞ்சல் போக்குவரவு இணைப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பே கடற்கால் திட்டத்திற்கு மிகத் துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இந்நிலையில் தூய திரு சைமன் சங்கத்தார் சூயசுத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். 1846-ல் திட்ட வேலையை மேற்கொள்ள அனைத்து நாட்டுக் கழகம் ஒன்று அமைத்தனர். திட்டவேலைக்கென மூவரடங்கிய குழுவொன்றைத் தேர்ந்தெடுத்து வேலையைப் பகுத்துத் தந்து விரைந்து நிறைவேற்றக் கருதினர். பங்குகள் திரட்டினர். அப்பொழுதும் பிரிட்டன் இத்திட் டத்திற்கு ஆதரவு தரவில்லை! கடற்கால் திட்டத்திற்கு எதிர்த் திட்டமாக அலெக்சாண்டிரியா - கெய்ரோ - இருப்புப் பாதைத் திட்டம் ஒன்றை வகுத்து அதனை நிறைவேற்றுவதில் முனைந்து பிரிட்டன் வெற்றி கண்டது. கடற்கால் இணைப்புத் திட்டமோ படுத்துவிட்டது. எனினும் அத்திட்டத்தில் ஒருவகை வளர்ச்சியும் உண்டாகியிருந்தது. சைமன் கழகத்தைச் சார்ந்த அன்பாந்தின் நிறுவிய ஆராய்ச்சிக் கழகம், நீர்மட்ட வேறுபாட்டைத் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது. நீர்மட்ட வேறுபாடு என்பது வெறும் அச்சத்தின் விளைவே அன்றி வேறன்று என்று விளக்கிக் காட்டியது. ஆகவே, திட்ட ஆர்வமுடையவர்களுக்கு இவ்விளக்கம் ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. இத்தகு நிலைமையில் தான், பிரான்சு நாட்டுப் பெருவலியாளர் டிலெசெப்சு கடலிணைப்பு அறிக்கை ஒன்றைத் தற்செயலாகக் காணுகிறார். அத்திட்டத்தை நிறைவேற்றுவதே தம் பணியெனக் கொண்டு முழுமையாக இறங்கி வெற்றியும் காணுகிறார்! நல்ல திட்டங்களுக்கு நாலாயிரம் எதிர்ப்புக்களும், தடை களும் உண்டானால்கூட என்றேனும் ஒருநாள் நிறைவேறியே தீரும் என்பதற்குச் சூயசுக் கடலிணைப்புத் திட்டமே சான்றாம். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருவள்ளுவர் 5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல் தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக. எளிதில் நிறைவேறத்தக்க செயலையே பலரும் எடுத்துக் கொள்வர். ஆனால் சிலரோ, அரிய செயல்களையே தேர்ந்து எடுத்துக் கொள்வர்; வெற்றியும் கண்டு வீறுமிக்க நடைபோடுவர். இத்தகையவரைக் கருதியே கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் எந்தல் இனிது என்றார் வள்ளுவர். சூயசுத் திட்டம் யானைப் போரினும் உயரியது அல்லவா! பெர்டிணாண்டு டிலெசெப்சு என்பவர் பிரான்சு நாட்டினர்; பெருஞ் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் தந்தையார் அரசியல் செல்வாக்கு மிக்கவர். முகமதலி எகிப்து மன்னர் பதவிக்கு வர அவரே காரணமானவர் என்றால் அவர் தம் அரசியல் செல்வாக்கை உரைக்கவேண்டியரில்லை! பெர்டிணாண்டு இச் செல்வாக்கால் இளமையிலேயே எகிப்து மன்னர் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தது. அவ்வாய்ப்பே சூயசுத் திட்டம் நிறைவேறத்தக்க சூழலை உருவாக்கியது எனலாம். டிலெசெப்சு தூதராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்தார். நேர்மையையும் உழைப்பையும் - பொன்னேபோல் போற்றி வாழ்ந்த அவர்க்கு எதிராகப் பொறாமைக்காரர்கள் பலர் கிளம்பினர். பொய்க்குற்றம் பல சாட்டினர்! முடிவில் தம் பதவியைத் துறந்தார். அத்துறவும் உலக நலனுக்கென்றே அமைந்தது போலும்! டிலெசெப்சு பதவியில் இருந்தபொழுது ஒரு கடற் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்; அப்பயணத்தில், பொழுது போக்குக்காகப் பார்த்துக் கொண்டிருந்த நூலில் சூயசுக் கடல் இணைப்புத் திட்ட அறிக்கை ஒன்று காணப்பெற்றது. அஃது அவரை மிகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியே அவரைச் சூயசுத் திட்டத்தை முயன்று முடிக்குமாறு ஏவியது. டிலெசெப்சின் நண்பர் இராட்டர் டாம் என்பவர். எகிப்தில் டச்சுத் தூதரகத் தலைவராக அவர் இருந்தார். அவருக்கு ஒரு முடங்கல் தீட்டி அவர் வழியாக எகிப்திய மன்னர் அப்பாசிடம் தம் திட்டத்தை எடுத்துரைக்க வேண்டினார். அதற்கு வாய்ப்பான பதில் கிட்டவில்லை. அரசர் அப்பாசை அடுத்து வந்த மன்னர் டிலெசெப்சின் இளமைக் கால நண்பர். எனவே உரிமை பாராட்டி உண்மை நிலைமையை அவருக்கு விளக்கி எழுதினார். அவரும் அரசியல் முறையில் அல்லாமல் அன்பு முறையிலே அழைப்பு விடுத்துக் கலந்து பேசினார். திட்டத்தையும் உவகையுடன் ஏற்றுக் கொண்டார். கி.பி. 1856-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் டிலெசெப்சின் ஆவலும், எகிப்து மன்னர் இசைவும் உறுதிப்பத்திர உருவங் கொண்டன. அவ்வுறுதிப் பத்திரத் திட்டங்களே இறுதிவரை எழுத்து எழுத்தாகப் பின்பற்றப்பட்டது என்றோ, சிறிய பெரிய மாற்றங்கள் எவையும் செய்யப்பெறவில்லை என்றோ உறுதி கூறுதற்கு இல்லை. நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்ட திட்டம் நிறைவேற்றப் பெற்றது. எனினும் 1856-ஆம் ஆண்டு உறுதிப் பத்திரமே திட்டத்தின் அடிப்படையாக இருந்தது என்று துணிந்து கூறலாம். சூயசுக் கடற்கால் இணைப்பு பெர்டினாண்டு டிலெசெப்சுக்கும், அவர் தலைமையில் அமையும் ஒரு கூட்டுக் கழகத்திற்கும் உரிமையாக இருந்தது. கூட்டுக்கழகம், சூயசுக் கடற்கால் முழு உலகக் கழகம் என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், தரப்பெறும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளில் இருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அவ்வாண்டு நிறையும் போது, உரிமை வழங்கியவரிடமே உரிமை மீண்டும் வந்து சேரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வுரிமையை வழங்கிய தற்காக எகிப்திய அரசுக்கு இத்திட்டத்தால் பெறும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரியாகத் தர வேண்டும்; அதேபோல் எகிப்திய அரசினர் கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்புச் செய்து உதவுதல் வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்டு உறுதிப்பத்திரம் எழுதினர். ஆயினும் திட்டத்தை உடனடியாகச் செயலில் கொண்டு வர இயலவில்லை. எகிப்தின் மேலுரிமை துருக்கியினிடம் இருந்தது. ஆதலால் அதன் ஒப்புதலும் வேண்டியிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்குப் பிரிட்டன் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. தனி மனிதர் ஒருவர்க்கு இப்பெரிய உரிமையை வழங்கியது பற்றித் துயர் கொண்டது. பிரிட்டன், தன் மனக்குறையை வன்மையாகத் தெரிவித்தது. போதாதென்று, துருக்கி சுல்தான் இத்திட்டத்திற்கு இசையாது இருக்குமாறு தம் செல்வாக்குடைய தூதர் ரெட்கிளிப் என்பவர் வழியாக முயன்றது. டிலெசெப்சு கடற்கால் திட்டத்திற்கு இசைவு பெற வேண்டித் துருக்கிக்குச் சென்றார். சுல்தான் ஆதரவு அவருக்குக் கிட்ட வில்லை. பிரிட்டீசுத் தூதரைக் கண்டுபேச டிலெசெப்சு விழைந்தும் அவருக்கு வாய்ப்புத் தரப்பெறவில்லை. என் செய்வார் டிலெசெப்சு! நேரிடையாகப் பிரிட்டனுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்சனிடம் வாதாடினார். பிரிட்டன் அரசும், செய்தித்தாள் களும் அவருக்கு எதிரிடையாகவே வரிந்து கட்டிக் கொண்டு நின்றன! டிலெசெப்சு விடாப்பிடியாக முயன்றார்! பிரிட்டனின் நிலை மாறவில்லை. அன்றியும் சூயசுத் திட்டம் துருக்கிக்குக் கேடு பயக்கும் என்று கிளப்பி விட்டுத் தடைபடுத்திக் கொண்டிருந்தது. இந்நிலை எகிப்திய மன்னர் சயீதீன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. வெதும்பி வெகுண்டெழுந்தார் அவர். சூயசுக் கடற்கால் இணைப்பு உள்நாட்டுத் திட்டம். ஆதலால் துருக்கியின் இசைவு வேண்டுவதில்லை; திட்டம் தொடங்கலாம் என்று துணிந்து ஆணையிட்டார்! வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா என்பது போல் திட்டம் உறுதியாகி விட்டது. டிலெசெப்சு மகிழ்ந்தார்; உலகமும் மகிழ்ந்தது! ஓருலக உணர்வும் மலர்ந்தது! வாழ்க அயராமுயற்சி! வெல்க வீரர் டிலேசெப்சு! 6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட நிறைவேற்றம் பற்றி எழுதுக. ஊழையும் உப்பக்கங் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு ஏற்பப் பல்லாற்றானும் தடைப்பட்டு வந்த சூயசுக் கடல் இணைப்புத் திட்டம் உலக நலங் கருதிய பெருமகனார் பெர்டினாண்டு டிலெசெப்சு அவர்களின் அயரா முயற்சியால் நிறைவேறிற்று. சூயசுத் திட்டத்தின் தொடக்கவிழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஐந்தாம் நாள் நடைபெற்றது. பல்லாயிரம் தொழிலாளர் களும், பணியாளர்களும், பொறியில் வல்லார்களும் பேராரவாரங் களுக்கு இடையே தம் பணியைத் தொடங்கினார். முதன்முதலாக டிலெசெப்சு ஒரு கூடை மண்ணைத் தம் கையால் வெட்டி வெளியேற்றினார். அதன்பின், தொடர்ந்து வேலை நடைபெற்றது. எகிப்திய அரசின் முயற்சியால், 60000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் எகிப்தியரே அன்றிப் பிற நாட்டவர்களும் ஈடுபட்டிருந்தனர். புற்றில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புக் கூட்டம்போல் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். உலகச் சாதனையில் தமக்குள்ள பங்கை உணர்ந்து உவகை கூர்ந்தனர். கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ நூறுகல் நீளமுடையது. அவ்வளவு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லுமாறு அகல ஆழம் உடைய கால்வாய் வெட்டுதல் வேண்டும். மண், மணலை அன்றிச் சில இடங்களில் பாறையையும் அகற்ற வேண்டியிருந்தது. குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக நன்னீர்க் கால்வாய் ஒன்றும் தனியாக வெட்டிக் கொண்டு வரவேண்டியிருந்தது. தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் குடியிருப்புகள் அமைத்தல் இன்றியமையாததாயிற்று. இத்துணைப்பணிகளும் இணைந்து நடைபெற்றன. உலகம் இதற்குமுன் கண்டிராத உயரிய திட்டம் இது. ஆதலால் செலவு முதற்கண் திட்டமிட்டுக் கொண்ட அளவினை விஞ்சியது. அன்றியும் அரசியல் பிணக்குகளும், எதிர்ப்புக்களும் திட்ட நிறைவேற்றத்திற்கும், பங்குத்தொகைச் சேர்ப்புக்கும் தடை செய்தன. மனித இயன்முறை கடந்து வன்முறையாகத் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகப் பிரிட்டன் பழி கிளப்பியது. அக்கூற்றைத் துருக்கியும் ஆமாம் என்று வரவேற்றது. இதற்குள் டிலெசெப்சின் நண்பர் சயீத் காலமானார். அவருக்குப் பின்வந்த மன்னர் இசுமாயில் பிரிட்டனின் சார்பாளராக இருந்தார். அதனால் வளர்ந்து வந்த திட்டம் தளர்ந்தது. நன்னீர்க் கால்வாய்ப் பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்வேண்டும் என்று கடலிணைப்புக் கழகத்திற்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை அஃதாயினும், தலைமைப்பொறியாளர்கள் ஏற்று வேலையை நிறுத்தினர் அல்லர். இத்தகு சூழலில் டிலெசெப்சு, பிரான்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை உதவுமாறு வேண்டினார். அவர் நடுவராக இருந்து வழங்கும் முடிவை இரு பகுதியாரும் ஏற்பதாக ஒப்பினர். அறிவார்ந்த மன்னன் நெப்போலியன், திட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற பொறுப்பும் தகுதியும் உடைய தீர்ப்பு வழங்கினார். நன்னீர்க் கால்வாய்ப் பகுதியை மன்னவர் விரும்பிய வண்ணமே அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று நெப்போலியன் தீர்ப்பு வழங்கினார். அதற்கு ஈடாகவும், திடுமென வேலைநிறுத்தம் ஆகிய இழப்புக்காகவும் கடற்கால் கழகத்துக்கு மன்னர் 840 இலட்சம் வெள்ளி தரவேண்டும் என்று கூறினார். இத் தீர்ப்பால் கடற்கால் பணி தொடர்ந்து நடந்ததுடன் பொருள் தட்டுப்பாடும் ஓரளவு குறைந்து, திட்டத்திற்கு உதவியாயிற்று. திட்டவேலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. நான்கு வேறு குழுக்களிடம் வேலை பகுதிகள் ஒப்படைக்கப் பெற்றன. முதற் பிரிவினர் நீற்றுக் கட்டிப் பாளங்கள் உருவாக்கினர். அடுத்த பகுதியினர் கடற்காலில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல்தோண்டும் பொறுப்பேற்றனர். வேறொரு பிரிவினர் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு கற்பாறை பிளக்கும் கடமை ஏற்றனர். இறுதிப் பிரிவினர், எஞ்சிய கடற்கால் பகுதியைத் தோண்டும் பணி ஏற்றனர். இவ்வாறாக தனித் தனியே பொறுப்பு வாய்ந்த குழுக்களின் தலைமையில் திட்டம் நடந்து கொண்டிருந்தது. கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளம் இருந்தது. அதில் 77 கல் தொலைவுக்குக் கடற்காலின் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடிப் பகுதியில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் தோண்டப்பட்டது. கற்பாறையுள்ள இடங்களில் மேற் பரப்பு 196 அடி அளவு கொண்டு தோண்டப்பட்டது. கி.பி. 1865-ஆம் ஆண்டில் கடற்கால் வேலையை மதிப்பிடுமாறு பலநாட்டு வணிகக் கழகப் பிரதிநிதிகளையும் பார்வையாளராக வருமாறு டிலெசெப்சு அழைத்தார். அவ்வழைப்பை ஏற்றுப் பல்வேறு நாடுகளில் இருந்தும் 100 பேர்கள் வந்தனர். நிறை வேறியுள்ள வேலையை நேரில் கண்டு மிகப் பாராட்டினர். வேலை மேலும் விரைந்து நடக்க அவர்கள் பாராட்டு ஊக்கமளித்தது. செங்கடலில் இருந்தும், நடுக்கடலில் இருந்தும் வெட்டிக் கொண்டு வரப்பெற்ற கால்வாய்கள் இரண்டும் ஒன்றை ஒன்று இணையும் நிலையை அடைந்தது. இரண்டு கால்வாய்களையும் இணைக்கும் நிகழ்ச்சி பெருவிழாவாகவே நடைபெற்றது. முதற்கண் மண்தோண்டும் விழாவைத் தொடங்கிய டிலெசெப்சே கடற்கால் களை இணைக்கும் கடைசி மண்ணை வெட்டி எடுக்கும் உயர் பொறுப்பை நிறைவேற்றினார். செயற்கரிய செய்த செம்மல் டிலெசெப்சு வாழ்க என்னும் வாழ்த்துதல் ஒலிக்கிடையே, உலக ஒருமைப் பாட்டுத் திட்டம் முழுமை பெற்றது. எத்தகைய அரிய முயற்சி இது? உலகங்காணாத உயரிய முயற்சி இது! அம்முயற்சியால் உலகம் அடைந்துள்ள நன்மை இவ்வளவா, அவ்வளவா? இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த அனைவரும் உலகோர் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருப்பர் என்பது உண்மை! 7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப் பற்றி எழுதுக. காடு கழனிகளில் விதைத்த உழவன், விளைவு கைவரப் பெறும்போது எத்துணை மகிழ்வு எய்துவான்! வறுமைக்கும் வாழ்வுப் போராட்டத்திற்கும் ஆட்பட்டுக் கற்றுத்தேறிய ஒருவன் உயர்நிலைப்பதவி ஒன்று எய்தப் பெருங்கால் எத்தகு மகிழ்வு எய்துவான்! இத்தகு நிலைகளினும் உயர்ந்த உவகை கொண்டனர் ஓருலகச் சாதனையாம் சூயசுத் திட்டம் நிறைவேறிய போழ்து. ஆகவே சூயசுக் கடற்கால் இணைப்பு நிறைவு விழாவை உலக விழாவாகவே கொண்டாடி உலகோர் உவகை பூத்தனர். கி.பி. 1869-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ஒரு நன்னாள்! பலகோடி மக்களின் பன்னூற்றாண்டுக் கனவுகள் நனவாகிய இணையற்ற பொன்னாள். அந்நாளே சூயசுக் கடற்கால் பெருவிழா நாளாகும். எகிப்து மன்னர் இணையில்லா மகிழ்வால் எல்லா நாடு களுக்கும் அழைப்பு விடுத்தார். அன்பர்கள் அரசியல் தலைவர்கள், வாணிகப் பெருமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் உலக விழாவைக் காணச் சூயசுக் கடற்காலின் இருபக்கங்களிலும் முதல் நாள் மாலைப் பொழுதிலேயே நிரம்பி வழிந்தனர்! உள்நாட்டுப் பொதுமக்கள் ஈட்டத்தைக் கூறவேண்டுமா! இருகரைகளிலும் நூறு கல் நீளத்திற்கும் இடமின்றிச் செறிந்து நின்றனர். போர்க் கப்பல்கள், வாணிகக் கலங்கள், வண்ணப் படகுகள் ஆயன அணிவகுத்து நின்றன. இந்நாட்டைச் சேர்ந்த மிதப்பு இது என்பதைப் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள் பளிச் சிட்டுக் காட்டின. 17-ஆம் நாள் காலை 11 மணிக்கும் குண்டுகள் முழங்கக் கொடிகள் பறக்கக் கப்பல்கள் சயீத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன. ஒரு கப்பலா? இருகப்பலா? அணிவகுப்பில் கலந்து கொண்ட நாடுகள் 11. அவற்றுக்குரிய கப்பல்கள் 67. உலகம் கண்டறிதற்கு அரிய கப்பல் அணிவகுப்பு இது! முன்னும் பின்னும் பிற கப்பல்கள் செல்ல நடுநாயகமாகப் பிரான்சு நாட்டுக் கப்பல் சென்றது. அதன்மேல் ஓங்கி உயர்ந்து ஒளியுடன் திகழ்ந்தது கழுகுக் கொடி. பிரான்சு நாட்டின் பெருமை மிகு அரசியார் யூசினும், எகிப்து மன்னர் இசுமாயிலும் அக்கப்பலில் இருந்து மக்களின் கரைகடந்த ஆரவாரத்தையும் களியாட் டத்தையும் கண்டு கண்டு உவகைக் கடலில் நீந்தினர். தங்கள் களிப்பைக் கையாட்டுதலாலும் வணக்க வாழ்த்துக்களாலும் புலப்படுத்தினர். பிரசிய நாட்டு இளவரசரும், கனோய் நாட்டு இளவரசரும் விழாவில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தினர்! கடற்காலின் இரு கரைகளிலும் வண்ணக் கொடிகள் வனப்புற விளங்கின. இரவுப் பொழுதிலோ வண்ண விளக்குகளின் வரிசை எங்கும் ஒளிக்கடல் ஆக்கிக்கொண்டு இருந்தது. இதற்கு இடையே கப்பல்களின் அணிவகுப்புச் சென்ற காட்சியும் மக்கள் ஆரவாரமும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. இவை காணாவென்று ஆடல் பாடல்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. எகிப்துப் பேரரசர் பெரிய நாடு ஒன்றைத் தமதாக்கி வெற்றி பெருவிழாக் கொண்டாடினால் கூட இணைகூற இயலாத அளவு பெருவிழாவாகத் திகழ்ந்தது கடற்கால் இணைப்புப் பெருவிழா. ஒரே நாளில் முடியும் விழாவா இது? தொடர்ந்து நான்கு நாட்கள் விழா நிகழ்ந்தது. முதல் நாள் பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் 40 கல் தொலைவே கப்பல்கள் நகர்ந்து சென்றன. இடையே ஒரு நாள் இசுமாலியாப் பெருநகரில் விழாவுக்குள் விழாப்போல் ஒரு விழா எடுத்தனர். 19ஆம் நாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி அடுத்த நாள் சூயசுத் துறையை அடைந்து செங்கடலில் சேர்ந்து விழாவை நிறைவு செய்தனர். விழா நிறைவுற்ற மறுநாளில் இருந்தே மேலை உலகில் இருந்து கீழை உலகுக்கும் கீழை உலகில் இருந்து மேலை உலகுக்கும் நேரிடைச் செல்லும் கடல்வழித் தொடர்பு உண்டாயிற்று. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் என்னும் மொழிக்குச் சான்றாக இலங்கிய பெரியார் டிலெசெப்சின் மேல் உலக மக்கள் நோக்கம் திரும்பியது! பிரெஞ்சு அரசியார் கோமான் என்றும் உயர்பட்டம் வழங்கினார். அதுவரைக்கும் முட்டுக்கட்டையாக இருந்த இங்கிலாந்தும் புகழ்ந்து பேசியது. விக்டோரியா மகாராணியார், டிலெசெப்சைத் தம் பளிங்கு மாளிகையில் வரவேற்றுப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நம்முடைய வாழ்த்தும், இனிவரும் உலகோர் வாழ்த்தும் வீரர் டிலெசெப்சிற்கு உரித்தாம். வாழ்க உலகுக்குழைத்த உரவோர்! 8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக. வீட்டைக் கட்டிமுடித்த பின்னரும் வேறு சில வேலைகள் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். வண்ணம் பூசுதல், தோட்டம் அமைத்தல், மின்னிணைப்புச் செய்தல், நிலைப் பேழைகள், தளவாடங்கள் வாங்கி ஏற்ற முறையில் அமைத்தல் - இன்னவாறு பல பணிகள் தொடர்ந்து நிகழும். அதுபோல் சூயசுக் கடற்கால் திட்டம் நிறைவேற்றப் பெற்ற பின்னரும் சில வளர்ச்சிச் செயல்கள் நிறைவேற்றப் பெற்றன. வளர்ச்சிக்கு எல்லை இல்லை அல்லவா! அறிவியல் வளரவளரக் கப்பல்களும், உருவிலும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒருபெரு நகரமே ஊர்ந்து செல்வது போலச் செல்லும் பெரும் கப்பல்களும் உண்டாகி விட்டன. அவற்றைக் கடற்கால் வழிச் செலுத்த வேண்டுமானால் அதன் ஆழ அகலங்களை மிகுதிப்படுத்துதல் வேண்டும். தொடக்கத்தில் 8 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் அகலமுமாக இருந்தது கடற்கால். அது 1885-ஆம் ஆண்டில் 8 1/2 மீட்டர் ஆழம் ஆக்கப்பெற்றது. பின்னர் அதுவும் போதாதென்று 9 மீட்டர் அளவுக்கு அகழப் பெற்றது. அகலம், சயீத் துறைமுகத்தில் இருந்து கைப்பேரி வரைக்கும் 65 மீட்டர் ஆகவும், அதற்குத் தெற்கே 75 மீட்டர் ஆகவும் வேறுசில இடங்களில் 80 மீட்டர் ஆகவும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது. 1913-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெருங் கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லுமாறு ஏறத்தாழ 11 மீட்டர் அளவுக்கு ஆழமாக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குக் கப்பல் செல்லும் போது எதிரேவரும் கப்பலுக்கு இடம் தருதல் வேண்டும். அத்தகைய கடவு இடங்களில் மட்டும் ஒருகல் அளவுக்குக் கடற்கால் அகலம் முன்னர் இருந்தது. கடற்கால் விரிவுப்பணி தொடங்கிய பின்னர் பெரும்பாலான இடங்களில் ஒரு கப்பல் நின்று மறுகப்பல் கடக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. முதற்கண் போரொளி விளக்குடைய கலங்கள் மட்டுமே இரவுப்பொழுதில் கடற்காலில் செல்ல அனுமதிக்கப்பெற்றன. பின்பு, காலின் இருகரைகளிலும் ஒளி விளக்குகள் அமைக்கப் பெற்றன. ஆதலால் எந்தக் கப்பலும் இரவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சூயசுக் கடற்கால் பணி நிறைவேறிய நாளினும் இந்நாளில் அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கியுள்ளது. அதற்கேற்பக் கடற்கால் புதிய வளர்ச்சிகளைப் பெற்றது. சயீத் துறைமுகத்தில் கப்பல் தங்கு துறைகள், ஏற்றி இறக்கும் பொறிகள், பழுது பட்ட பொறிகளைச் செப்பம் செய்வதற்குதிய பட்டறைகள் ஆயன நிரம்பிய துறையாக மாறியது. சிறந்த கலங்கரை விளக்கம் ஒன்று அமைக்கப்பெற்றது. 2070 கெசத்தில் ஒன்றும் 2730 கெசத்தில் ஒன்றுமாக இரண்டு அலை தாங்கிகள் சயீத் துறைமுகத்தில் கட்டப்பெற்றன. கடற்காலை அன்றித் துறைமுகத்திலும் பல விரிவுப் பணிகள் செய்யப்பெற்றன. 850 கெச நீளமுள்ள பெரிய அலைதாங்கி அமைத்தது, சூயசில் நடைபெற்றுள்ள விரிவுப் பணிகளில் தலைமையானதாகும். மேலும். எகிப்திய சுல்தான் 413 அடி நீளமும் 95 அடி அகலமும் கொண்ட ஓர் இரேவு அமைத்துத் தந்தார். பி அண்டு ஓ கூட்டகத்தார் 300 அடி நீளமும் 85 அடி அகலமும் உள்ள ஓர் இரேவு அமைத்தனர். இத்தகைய சீர்திருத்தங்களால் விரிந்த அளவில் கடற்பயண வாய்ப்புக்கு வகை உண்டானதுடன், கட்டணக் குறைவும் நாளா வட்டத்தில் உண்டாகிக் கொண்டே வந்துள்ளது. கப்பல் அளவைப் பாரம் ஒன்றுக்கு முதற்கண் 10 வெள்ளியாகக் கட்டணம் இருந்தது. 1885 இல் பாரத்திற்கு 9 1/2 வெள்ளியாகக் குறைந்தது. 1906இல் 7 1/2 வெள்ளி ஆயது. 1928இல் சரக்கு கப்பல்களுக்குக் கட்டணம் 7 வெள்ளி என்றும் பிற கப்பல்களுக்குக் கட்டணம் 4 1/2 வெள்ளி என்றும் குறைக்கப் பெற்றது. வாய்ப்புகள் பெருக வருவாய் பெருகுகிறது; வருவாய் பெருக வாய்ப்பும் பெருகுகிறது! உலகுக்கு நலமாகிறது. ஒரு திட்ட நிறைவேற்றம் என்பது முற்றும் முடிந்து விட்டது ஆகாது. மேலும் மேலும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பெற்ற வண்ணமே இருக்கவேண்டிய இன்றியமையாமை உண்டா கின்றது. அதற்கு அறிவியல் வளர்ச்சியும், மாந்தர் தேவையும் காரணங்கள் ஆகின்றன. இவற்றைச் சூயசுத் திட்ட வளர்ச்சிகள் உலகுக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. 9. எகிப்தின் புதுவாழ்வு எகிப்து மிகத் தொன்மையான நாடு. உலக நாகரிகத்திற்கு வித்திட்ட நாடு. பல்வேறு இனங்களைத் தன்னகத்துக் கொண்டு இரண்டறக் கலந்த பெருமைமிக்க நாடு. மேலை உலகும் கீழை யுலகும் ஓருலகாவதற்கு நுழைவாயில் ஆக இருக்கும் கீர்த்திமிக்க நாடு. இத்தகு நாடு பன்னாட்டவர்களின் படையெடுப்பிற்கும், கெடுபிடித் தாக்குதல்களுக்கும் இடமாக இருந்து துயருற நேரிட்டது. ஆயினும் மங்காப்புகழ் படைத்த அந்நாட்டின் தொல்பழஞ் சிறப்பை மாற்றிவிட முடியாது என்பதைக் காட்டத்தக்க எழுச்சியை அந்நாடு கொண்டிருந்தது. அதைப் பற்றிக் காண்போம். உலகச் செல்வாக்கும் வளமும் பெறுதற்கு எகிப்தைத் தன்னகப் படுத்துவதொன்றே வழி என்று நெப்போலியன் உணர்ந்தான். அதே நுட்பத்தை இட்லரும், முசோலினியும் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் தாக்குதலுக்கு எகிப்து உள்ளாயிற்று! அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் எகிப்தைப் பிரிட்டன் காத்தது. ஏன்? எகிப்தில் பிரிட்டன் தன் காலை வலிமையாக ஊன்றிக் கொள்வதற்கே! தொடக்க நாள் முதல் சூயசுத் திட்டத்தை உருவாகாமல் தடுத்தும் ஒழித்தும் வருவதே தொண்டாகக் கொண்ட பிரிட்டன், சூயசுத் திட்டம் நிறைவேறியதும் கடற்காலின் மிகுதியான பங்கு களை விலைக்கு வாங்கியும், அதன் செயற் கழகத்தில் இடத்தைப் பிடித்தும் கொண்டது. உலகப்பெரு வளத்தைப்பெற எகிப்தைத் தன் கைக்குள் வைத்திருத்தல் ஒன்றேவழி என்று பிரிட்டன் கண்டமை காரணமாம். எகிப்து நாட்டைப் பற்றிக்கொள்ளுவதற்குப் பிற நாடுகள் கொண்டிருந்த ஆவலும், அடாச் செயலும் எகிப்திய மக்களின் தன்மானத்திற்குச் சோதனையாயிற்று. எவர் ஆண்டால் என்ன என்றிருந்த எகிப்திய மக்கள் கொதித்து எழுந்தனர். தன் தேச உடைமையைப் பிற நாட்டார்க்கு ஊதாரித்தனமாக எகிப்து மன்னர் அளித்துவிட்டார் என்னும் சீற்றம் எகிப்து மக்கட்கு உண்டாகியது! கிளர்ச்சி மூண்டு வலுத்தது. ஐரோப்பியர் உடைமைகள் பாழாயின. 50 பேர்கள் உயிர் இழந்தனர். இதனால் பிரிட்டீசுப்படை எகிப்துக்கு விரைந்தது. இசுமாலியா நகரைத் தன்னகப்படுத்திற்று. பிரிட்டீசார் எகிப்தில் தம் காலை வலுவாக ஊன்றிக் கொண்டனர். சூயசுக் கடற்கால் ஆட்சிப் பொறுப்பைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாயிற்று. இந்நிலையில் செருமனி, துருக்கியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தைத் தன் கைக்கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கியது. இது பிரிட்டனுக்கு அச்சத்தை உண்டாக்கியது. எகிப்தில் துருக்கியின் மேலுரிமை முடிந்துவிட்டது என்று பிரிட்டன் ஒரு பேரிடியை வீசியது. இதைக்கேட்ட துருக்கி கொதித்தெழுந்தது. எழுந்த விரைவிலேயே பிரிட்டனால் தடுத்து நிறுத்தவும் பெற்றது. 1941-42 ஆம் ஆண்டு களில் எகிப்தும் சூயசும் இத்தாலியின் பெருந் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டனே முன்னின்று காத்தது. தாக்கிய நாடுகளே தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமை உண்டாயிற்று! 1914இல் துருக்கியின் மேலுரிமையை ஒழித்த பிரிட்டன் அதற்குக் காப்பாட்சி நல்கியது. ஆனால் தேசிய உணர்ச்சி காப்பாட்சி அளவில் அமையவில்லை. தன்னாட்சியை வேண்டியது. 1922இல் எகிப்தில் காப்பாட்சி முடிந்ததாகப் பிரிட்டன் அறிவித்தது. ஆனால் பெயரளவில் இருந்ததே அன்றிச் செயலில் வரவில்லை. ஆகவே 1924இல் எகிப்திய மன்னர் சாக்லூல் எகிப்தில் இருந்து பிரிட்டனும் படைகளும் நிதி நீதித்துறைகளில் ஆலோசகராக இருக்கும் ஐரோப்பியர்களும் அகல வேண்டும் என்றும், எகிப்திய ஆட்சி, வெளிநாட்டுத் தொடர்பு இவற்றில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும், எகிப்தில் வாழும் சிறுபான்மையினர், அயல் நாட்டினர் இவர்களையும் சூயசையும் காக்கும் பொறுப்பு எகிப்தியருக்கே இருக்க வேண்டும் என்றும், பிரிட்டனின் முதல் வரிடம் வலியுறுத்தினர். இது, பிரிட்டன் விட்டுக் கொடுக்கும் உதவிகளைப்பெற எகிப்து விரும்பவில்லை; அதனை வெளி யேற்றவே விரும்பியது என்பதைக் காட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்களுடையனவே! அன்னியர் புகலென்ன நீதி என்னும் உரிமையுணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. 1952-இல் குடியரசுப் புரட்சி நடைபெற்றது. பிரிட்டனின் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுபாடு உண்டானால் உதவிக்கு வரலாம்; ஆனால் அப்பணி முடிந்ததும் அகன்று தீரவேண்டும்; எகிப்துக் கெனப் போர்த் தளவாடங்களும் வானூர்திகளும் வழங்கவேண்டும்; இத்திட்டங்களுக்குப் பிரிட்டன் உதவாவிடில், அதற்கு முன்னைய எந்த ஒப்பந்தமும் நிலைபெறமாட்டா இவ்வாறு எகிப்து வலியுறுத்தியது. புரட்சியின் விளைவாக எகிப்து குடியரசாகியது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர்தம் முதல் நடவடிக்கையே சூயசுக் கடற்காலைத் தேசியமயமாக்கும் திட்டமாக இருந்தது. பிரிட்டன் இதனை விரும்புமா? எகிப்துக்குச் செய்யும் உதவிகளை உடனே நிறுத்தியது. எத்தகைய கட்டுப்பாடும் விதிக்காமல் உருசியா போர்த் தளவாடங்களும், பொருள்வள வாய்ப்பும் செய்தது. எகிப்து அசுவான் அணைக்கட்டுத் திட்டத்திற்கு உலகவங்கியில் 500 கோடி வெள்ளி கடன் கேட்டது. அதற்குப் பிரிட்டனும் அமெரிக்காவும் முட்டுக்கட்டை இட்டன. உடனே எகிப்து தன் பார்வையைச் சூயசுப் பக்கம் திரும்பியது. 1956 சூலை 27-இல் கடற்கால் முழு உலகக் கழகத்தாரிடமிருந்து எகிப்தின் தேசிய உடைமை என்று அறிவித்துவிட்டது. ஆம்! தேசிய உணர்வின் அழுத்தமான முத்திரை இது. சுதந்திரம் எம்பிறப்புரிமை என்னும் ஒலி இந்தியாவில் முகிழ்த்தது. அம்முகிழ்ப்பு அன்னியப்பிடியில் இருந்து இந்தியாவை விடுவித்தது. அத்தகு உரிமை உணர்வே எகிப்தின் தன்மானத்தையும் உரிமை வாழ்வையும் காத்தது. வாழ்க உரிமை உணர்வு! 10. புத்துலகக் கனவு என்பது பற்றித் தொகுத்தெழுதுக. நல்ல கனவுகள் வல்லவர்க்கு வாய்க்குமானால் அது நனவாகி நாடும் உலகும் நலம்பெற உதவும். அவ்வகையால் புத்துலகமாம் அமெரிக்காவில் தோன்றிய பனாமா இணைப்புக் கனவு பரந்த இரண்டு உலகத்தையும் சுருக்கி, ஓருலகாக இணைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அதனைப்பற்றிக் காண்போம். அமெரிக்காவை முதன்முதலாகக் கண்ட கடலோடி கொலம்பசு. ஆனால் முதற்கண் பனாமாப் பகுதியைக் கண்டவர் ரோடரி கோடி என்பவரே. அவர் பனாமாவை 1501ஆம் ஆண்டில் கண்டார். 1502ஆம் ஆண்டில் கொலம்பசு செய்த நான்காம் கடற்பயணத்தின்போதே பனாமாவைக் கண்டார். அவரிடம் மேற்கிந்தியப் பழங்குடி மக்கள் பனாவைக் கடந்து செல்ல ஒரு கடற்கால் இருப்பதாகக் கூறினர். ஆயினும் அக்கடற்காலை கொலம்பசு கண்டார் அல்லர். அவருக்குப் பின் நூனெசு டி பல்போவா என்பவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் முயன்று பார்த்துக் கடற்கால் எதுவும் இல்லை; நிலக்காலே உண்டு என்று தெளிந்தார். அவரே பசிபிக் கடலைக் கண்டு பனாமாத் திட்டத்தையும் கனவு கண்டார். ஆதலால் பசிபிக் மாகடலில் பல்போவா என்னும் ஒரு துறைமுகம் அவர் பெயரால் பின்னாளில் அமைக்கப் பெற்றது. பனாமாத் திட்டத்திற்கு முதற்கண் செயல்முறை நடவடிக்கை எடுத்துக்கொண்டவர் இசுபானிய நாட்டின் அரசரான 5-ம் சார்லசு என்பவரே. அவர் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு 1534ஆம் ஆண்டிலேயே செயல்முறை ஆய்வு செய்யுமாறு கட்டளை இட்டார். அவர் கருதிய வண்ணம் நில ஆய்வு வெற்றி தரவில்லை. வட்டாரத் தலைவரின் அறிக்கை திட்டத்திற்குக் கேடு செய்யும் நிலையில் இருந்தது. வீரன் கென்னாண்டோ பின்னர் இத்திட்ட ஆய்வில் முனைந்தார். நான்கு பாதைகளில் ஆய்வு நடாத்தினார். இவ்வாறே நான்கு நூற்றாண்டுகள் அதாவது 16 முதல் 20-ம் நூற்றாண்டு வரை பலநாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. எழுத்தாற்றல் மிக்க வான்கம்போர்டு, பெஞ்சமின் பிராங்கலின் ஆகியோர் தம் எழுத்து வன்மையால் திட்டம்பற்றி ஆய்வாளர் களைத் தட்டி எழுப்பினர். தூயதிரு சைமன் கழகத்தார் சூயசுத் திட்டத்துடன் பனாமா திட்டத்தையும் இணைத்து விளம்பரப் படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் புத்துலகக் குடியேற்றத்தில் இசுபானிய நாட்டிற்கு இருந்த ஆதிக்கம் தகர்ந்தது. அமெரிக்கா முதலாய மேலை நாடுகள் பனாமா ஆய்வில் தலைப்பட்டன. அமெரிக்க உள் நாட்டமைச்சர் கென்ரிகிளே என்பவரும் காலன் என்பவரும் திட்டவரைவுகள் செய்வதில் முனைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த பாமர்சு என்பவர் கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சாக்சன் ஆய்வு நடத்தினார். கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்யவும் முயன்றார். ஆனால் இவையெல்லாம் அரைகுறை முயற்சிகளாகவே நின்றன. 1849-ஆம் ஆண்டில் காலிபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசின் மேல் கடல் பகுதியான அக்காலிபோர்னியாவில் இருந்து கீழ்கரைப் பகுதிக்குத் தங்கத்தைக் கொண்டு செல்லவும், பிறதொடர்புகள் கொள்ளவும் வேண்டிய தாயிற்று. ஆதலால் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் முனைப்பில் பனாமா இருப்புப் பாதை வழி உருவாயிற்று. இந்நிலவழி பனாமாக்கடல்வழி உண்டாகப் பெருந் தூண்டுதலாக இருந்தது. 1879-ஆம் ஆண்டு லூசியன் வைசு என்பவர் கொலம்பியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கடற்கால் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பன்னாட்டுப் பேரவை ஒன்றுகூடி இத்திட்டம் பற்றி ஆய்ந்தது. வைசு பெற்றிரந்த உரிமையை வாங்க முடிவு செய்தது. முழு உலகக் கழகம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பைச் சூயசுத் திட்ட முதல்வர் டிலெசெப்சே கொள்ள முடிவாகியது. வேலையும் தொடக்கம் ஆகியது. இவ்வாறாகப் புத்துலகம் கண்ட கனவு தன் அடியெடுப்பைத் தொடங்கி வைத்தது. தன் குடும்பம் தன் சுற்றம் தன் ஊர் எனத் திட்டம் தீட்டி வளர்ப்பவர் பலர். ஆனால் உலகநலம் கருதித் திட்டம் தீட்டுவோர் அறியர். அத்தகைய அரிய பெரிய சால்பாளர்களால் தான் உலகம் நல்வாழ்வு வாழ்கிறது. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது உலகப் புலவர் வள்ளுவனார் வாக்கு! 11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக. புதிய உலகத்தையும் பழைய உலகத்தையும் ஓருலகாக்கிக் காட்டும் உயர்ந்த உணர்வால் உருவாகியது பனாமாத் திட்டம். அத்திட்டத்தின் மலர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம். சூயசுக் கடற்கால் திட்ட வீரர் டிலெசெப்சு பனாமாத் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணியாற் றினார். ஆனால் சூயசுத் திட்டத்தைப்போல் வெற்றியாக அவரால் நடத்த முடியவில்லை. அவர் பொறுப்பேற்றிருந்த பிரெஞ்சுக் கழகமே 1889இல் கலைக்கப் பெற்றுப் புதியதோர் பிரெஞ்சுக் கூட்டுக் கழகத்தின் பொறுப்பில் திட்டம் விடப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசும், பனாமாக் குடியரசும் பெரும்பங்கு கொண்டு திட்ட நிறைவேற்றத்திற்கெனப் பாடுபட்டன. 1899இல் அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் மக்கின்லி கொலம்பியக் குடியரசின் ஒப்பந்தத்துடன் கடற்கால் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். அதன்பின் அமெரிக்கக் கூட்டரசே பிரெஞ்சுக் கழகத்தினிடமிருந்து கொலம்பிய ஒப்பந்தப்படி பனாமாத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றுக் கொண்டது. அமெரிக்க அரசுக்குத் தரப்பெற்ற உரிமைகள் 100 ஆண்டுகள் செல்லும் என்றும், பின்னர் நூற்றாண்டுதோறும் உரிமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்யப்பெற்றது. கடற்கால் ஆட்சி உரிமை அமெரிக்கக் கூட்டரசுக்கே என்றும், திட்டப் பகுதியின் நில உடமை கொலம்பியக் குடியரசுக்கே என்றும், உரிமை மதிப்பாக முதற்கண் 1 கோடி அமெரிக்க வெள்ளியும், பின்னர் ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் அளிக்கவேண்டும் என்றும், திட்ட வேலைகளை நான்கு ஆண்டு களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. இத்திட்ட ஒப்பந்தம் பெரும்பாலும் கொலம்பியாவுக்கே நன்மை யாக இருந்தும்கூட அது அதனை மறுப்பதிலேயே முனைந்தது. அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் ரூசுவெல்டு சினங்கொண்டார். இந்நிலைமையில் பனாமா தன்னுரிமைக் கிளர்ச்சியில் இறங்கியது. அதற்கு அமெரிக்க அரசு மிகத்துணை புரிந்தது. ஆதலால் பனாமா விரைந்து தன்னுரிமையும் பெற்றது. உடனே அமெரிக்கக் கூட்டரசு பனாமாக் கூட்டரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது. புதிய ஒப்பந்தத்தால் பனாமாக் கடற்கால் பகுதி முழு உரிமையும் அமெரிக்கக் கூட்டரசுக்கே உடமை ஆயிற்று. அதற்கு ஈடாகப் பனாமாவின் விடுதலையை ஏற்பதுடன், முதற்பொருளாக ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் தர இசைந்தது. கடற்கால் அகழ்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மிக நெருங்கிய நில இடுக்கு ஆகும். பசிபிக் மாகடல் முகத்திலுள்ள பல்போவோத் துறைமுகத்தில் இருந்து அட்லாண்டிக் மாகடல் முகத்திலுள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடியும். அக்கால் 50 கல் நீளம் உடையது. வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடரும் கேதன் ஏரியும் இக்கால் பகுதியில் உள்ளன. கேதன் ஏரிக் கோடியில் கேதன் பூட்டுக்கால் என்னும் அமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கப்பல்களை இறக்கி ஏற்றும் நீரேணியாக இது பயன்படுகிறது. இப்பகுதியைக் கடந்து 7 கல் தொலைவுக்குக் கடல் மட்டத்திலேயே கால் சென்று அட்லாண்டிக் மாகடல் முகப்பில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடிகிறது. கேதன் ஏரி கடந்த பகுதி மிராப்ளோர்சு ஏரி என்னும் நீர்த்தேக்கத்தின் ஊடே கடற்கால் செல்கிறது. இதன் நீளம் 3 கல். இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. எனினும், கடல்மட்டத்தைவிட 54 அடி உயர்ந்தது. கேதன் ஏரிக்கும் மிராப்ளோர்சுக்கும் இடையே உள்ள பெட்ரோ மிகுபெல் என்னும் பூட்டு, ஒரு படி நீரேணியாக இருந்து கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி மட்டத்திற்குக் கொணர்கிறது. இதன்பின் மிராப்ளோர்சு பூட்டுக்கள் என்னும் இரண்டு படிகள் உள்ள நீரேணி அமைப்பு, கப்பல்களை 54 அடி கீழே இறக்கிக் கடல் மட்டத்தில் விடுகிறது. இதன்பின் கடற்கால் 7 கல் தொலைவு சென்று பல்போவோத் துறையில் சேருகிறது. ஊடுநெடுந் தொடர்மலையைப் பிளந்தே கடற்கால் அமைப்புச் செய்தனர். அப்பணியைத் திறமாகச் செய்தவர் கால்லியர்டு. ஆகவே இவர் பெயரால் கால்லியர்டு பிளவு என அது பெயர் பெற்றது. அப்பிளவுக்கு அப்பால் சாக்ரிசு என்னும் ஆறு கடற்காலில் சேர்கிறது. அப்பால் கேதன் அணை உள்ளது. ஆங்குள்ள நீர்ப்பெருக்கால் குன்றுகள் தீவுகளாக மாறின. அத்தீவு களில் பெரியது பாரோ கொலராடோ என்பது. கேதன் அணை அன்றி மாடன்அணை என்பது ஒன்றும் உண்டு. அது கடற்கால் பணிநிறைவேறிப் பதினாறு ஆண்டுகள் கழிந்தபின் அமைக்கப்பெற்றது. இவ்வமைப்பால் கப்பல் போக்கு வரத்து மட்டும் அன்றி, நீர்ப்பெருக்கமும், அதனால் நிலவளப் பெருக்கமும் ஊற்றெடுக்கத் தொடங்கின. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ? என்று தாயுமானவர் வினாவினார். வல்லவர் வகுத்த வாய்க்கால் பொற்சுரங்கமாகப் பொலிவதை இன்று காண்கிறோம். வினையே ஆடவர்க்கு உயிர் 12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட வளர்ச்சிப் பணிகளை விவரிக்க. அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது. மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவி அதனையும் தன் காலடிக்கீழ்க் கொண்டுவரும் அளவில் வளர்கின்றது. இந்நிலைமையில் எந்தத் திட்டமும் முதற்கண் ஏற்பட்ட அளவிலேயே அமையும் என்பதற்கு இல்லை. அவ்வகையில் பனாமாத் திட்ட நிறைவின் பின் உண்டாய வளர்ச்சிகளைக் காண்போம். பனாமாப் பூட்டுக் கால்களும் அவற்றில் அமைக்கப்பெற்ற பொறிகளும், படகுகளும், சிறு கப்பல்களும் போய்விடும் அளவுக்கே பயன்பட்டன. ஆனால், மிகப்பெரிய நீராவிக் கப்பல்களும், போர்க்கப்பல்களும் போய்வரவேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. அத்தேவைக்கு ஏற்றபடி கடற்காலை கேழவும், அகலமாக்கவும் வேண்டியதாயிற்று. அதற்காக நாள்தோறும் பணிகள் தவறாமல் நடைபெற்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. செயலாட்சி, அமைப்பாட்சி, நிலஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி என்னும் பல்வகை ஆட்சிக் குழுக்கள் தனித்தனி - ஆனால் - வளர்ச்சியில் ஒன்றுபட்டு அயராது உழைத்த வண்ணம் இருக்கின்றன. கொள்ளை நோய்க் கொடுமையைப் பனாமாவில் இருந்து மட்டுமென்ன பாருலகம் எங்கும் கூடத் தலைகாட்டாவண்ணம் செய்யத்தனி முயற்சி கொண்டுள்ளனர். பசிபிக் கடலில் உள்ள பல்போவாத் துறைமுகத்திலும், அட்லாண்டிக் கடலில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்திலும் பெரும் பெரும் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் செய்யப்பெற்றன. கப்பல் பணிப் பட்டறைகளும் கப்பல் கட்டுமான நிலையங்களும் அமைக்கப் பெற்றன. பணி செய்வோர் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியன திட்டமிட்டுக் கட்டப்பெற்றன. கடற்காலின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குக் கப்பல் எட்டுமணி நேரத்தில் சென்றுவிடுகின்றது. ஆனால் அக்கப்பல் வருதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே அதனை வரவேற்றகத்தக்க முன்னேற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. கடற்காலின் செயற் சீர்மையை விளக்கும் சீரிய சான்று இது. கடல்கால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அடிக்கடி நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் திட்ட நிறை வேற்றத்தின் பின் 1916ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சறுக்கல் உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பேரிழப்பு உண்டாக்கிற்று. கடற்காலில் சரிந்த மண்ணை வெட்டியெடுத்து வெளியேற்றுதற்குப் பெருமுயற்சி வேண்டியிருந்தது. ஆயினும் அயரா முயற்சியால் திட்டமிட்ட கால எல்லைக்கு முன்னரே பணியை நிறைவேற்றி யதுடன் சிறப்பாகவும் செய்து முடித்தனர். எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர், திண்ணியர் ஆகப் பெறின் என்பது வள்ளுவர் வாய்மொழி அல்லவா! ஒரு கப்பல் கேதன் ஏரியில் இருந்து கடலுக்குச் செல்லும் போது 520 இலட்சம் காலன் நீர் ஏரியில் இருந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஓர் ஆண்டுக்கு 4850 கோடி குழியடி நீர் கடலுக்குச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஏரிப்பரப்பின் நீர், வெப்பத்தால் ஆவியாதலாலும் வற்றுகின்றது. இவற்றை ஈடு செய்தற்கென்று கட்டப்பெற்றதே மாடன் அணைக்கட்டு என்பதாகும். அந்நீர்ப் பெருக்கம் கடற்கால் பூட்டுக்கு மட்டுமன்றி, மின்சாரம் எடுப்பதற்கும் குடிநீர் வாய்ப்புக்கும் உதவியாயிற்று. 1929ஆம் ஆண்டில் கடற்காலில் சென்ற கப்பல்கள் 6289 ஆகவும் அவற்றால் கிட்டிய வருவாய் 2,71,11,000 வெள்ளியாகவும் இருந்தது. 1952 முதல் கப்பல் எண்ணிக்கையிலும், வருவாயிலும் மிகப்பெருகியது. 1956ஆம் ஆண்டுக்குள் 25,00,000 கப்பல்கள் இக்கடற்கால் வழி சென்று உலகத் தொண்டு செய்துள்ளன. பனாமாக் கடற்கால் அமெரிக்காவின் தெற்கு வடக்குப் பகுதிகட்கு இடையே உள்ளது. எனினும் உலகின் உயிர்வழி யாகும் உயர்வு பெற்றுள்ளது. அதனால் காலமும், இடமும், அல்லலும் மிகமிகக் குறைந்துள்ளன என்பதும், வளமும், வாய்ப்பும், நலமும் மிக மிகப் பெருகியுள்ளன என்பதும் மிகப் பேருண் மையாம்! வாழ்க வளர்ச்சித் திட்டங்கள்! முற்றிற்று. பிணி தீர்க்கும் பெருமான் 1. இளமையும் கல்வியும் முன்னுரை: - ஓர் இடம் உயர்ந்த கட்டங்களாலோ ஓடும் ஆறுகளாலோ, நிமிர்ந்து நிற்கும் மலைகளாலோ, விரிந்து கிடக்கும் கடல்களாலோ மட்டும் பெருமை அடைந்து விடுவதில்லை. ஆங்குப் பிறந்த பெருமக்களாலேயே அழியாப் புகழ் அடை கின்றது; அவ்வகையில் இந்திய நாட்டுக்கு இணையில்லாப் புகழ் தேடித்தந்தவர்களுள் கவிஞர் தாகூரும் ஒருவர் ஆவர். கற்பனைவித்து:- கல்கத்தாவில் சீரோடு திகழ்ந்த தாகூர் குடியில் 1861 ஆம் ஆண்டில் தேவேந்திரநாத தாகூருக்குப் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார் இரவீந்திரர். எளிய வாழ்வை விரும்பிய தேவேந்திரர் இரவீந்திரரையும் அவ்வாறே வளர்த்தார். ஆதலால் எளிய விளையாடுப் பொருள்கைளத் தாமே படைத்துக் கொண்டு வீட்டு முற்றத்திலும் தோட்டத்திலும் விளையாடிப் பொழுது போக்கினார். இவ்வெளிமையும், விளை யாட்டுப் படைப்பும் இரவீந்திரர் கற்பனைக்கு வித்திட்டன. கற்பனைக்கு விருந்து:- சிறுவர் இரவீந்திரரை அண்ணன்மார் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆதலால் வேலைக்காரர்களையோ, அன்னையையோ, அத்தையையோ, கணக்கர்களையோ இரவீந்திரர் நாடிச்செல்ல நேரிட்டது. அப் பொழுதில் அவர்களிடம் சிலச்சில கதைகளைக் கேட்டார்; கதைப் பாட்டுக்களையும் அறிந்தார்; இவை இரவீந்திரரின் கற்பனைக்கு விருந்தாயின. இயற்கைக் கவர்ச்சி:- இரவீந்திரர் தனியே இருக்கம் பொழுது அவர் தம் கற்பனை உலகம் உண்மை உலகமாக மாறியது. பயன்படாமல் அவர்கள் வீட்டில் கிடந்த பல்லக்கில் இரவீந்திரர் ஏறி அமர்வார். அப்பல்லக்கு வானில் பறக்கும்; மலையையும், ஊரையும், ஆற்றையும் கடலையும் தாண்டும் எல்லாம் கற்பனையில் தான்! பச்சைப்புல், பனித்துளி, இளந்தளிர், மென்காற்று, மழை முதலிய இயற்கைப் பொருள்கள் இரவீந்திரரைக் கவர்ந்தது போலவே, மண்ணும் அதிலுள்ள பொருள்களும் கவர்ந்தன. பள்ளிப் படிப்பு:- வீட்டில் அடைபட்டுக் கிடந்த இரவீந்திரர் மற்றைச் சிறுவர்களைப் போலத் தாமும் பள்ளிக்குப்போக ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் சென்றதும், வீட்டைப் பார்க்கிலும் பள்ளிக்கூடமே கொடிய சிறைச்சாலையாக இருப்பதாக உணர்ந்தார்; ஆகவே பள்ளிப் படிப்பை வெறுத்தார். படிப்பில் வெறுப்பு:- இரவீந்திரரின் அண்ணன் மார்களுள் ஏமேந்திரர் என்பவர் ஒருவர். அவர் இரவீந்திரர், வீட்டிலேயே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அந்நாளில் வங்காளம், ஆங்கில மோகத்தில் சிக்கிக் கிடந்தது. ஆயினும் இரவீந்திரர் வங்கமொழியிலேயே பாடங்களைக் கற்றார். உடற்பயிற்சி, ஓவியம், ஆங்கிலம் ஆகியவனவும் அவர் படிப்பில் இடம் பெற்றன. பள்ளிப் பாடத்தைப் போலவே, வீட்டுப் பாடமும் இரவீந்தருக்குச் சுமையா யிற்று. ஆசிரியர்க்கு நோய் உண்டாகி வராமல் இருக்கமாட்டாரோ என்றும் தமக்கு நோய் வந்துவிடக்கூடாதா என்றும் ஏங்கினார். ஏட்டுப் படிப்பில் அவருக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. படிப்பும் பாராட்டும்:- பள்ளியில் படிக்கும் போதே பாட்டு எழுதும் திறம் பெற்றிருந்தார் இரவீந்திரர். அருஞ்சொற்களை அமைத்து எழுதுவதும், துன்பத்தைப் பற்றிப் பாடுவதும், சிறப்பு எனக்கருதிப் பாடினார். தம் மைந்தன் திறமை கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தம் மாணவர் திறமையை அறிந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார். நாடக நாட்டம்:- பிற்காலத்தில் உலகப் பெரு மேடையே இரவீந்திரருக்குக் காத்திருந்தது. எனினும் அவரது பிள்ளைப் பருவத்தில் அவர் அண்ணன்மார், வீட்டில் நடித்த நாடகங்களை தொலைவில் நின்றே காண முடிந்தது; நாடக மேடையை நெருங்கவும் அவர்கள் விட்டது இல்லை. இயற்கைக் கல்வி :- இரவீந்திரர் தம் தந்தை யாருடன் ஒருமுறை போல்பூருக்கும், இமயமலைக்கும் தொடர் வண்டியில் சென்றார் தொடர் வண்டிப் பயணம் அவர்க்கு மிகுந்த இன்பம் வழங்கியது. விடுதலைபெற்ற பறவை போல இன்புற்றார். தேவேந்திரர் போல்பூருக்கு அருகே அமைந்திருந்த சாந்தி நிகேதனம் இரவீந்திரரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இமயமலையின் இயற்கைச் சூழல் இரவீந்திரரின் சிறந்த கல்வி மேம்பாட்டுக்கு உதவியது. அங்கே தான் தேவேந்திரர் இரவீந்திரருக்கு ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்பித்தார்; விண்மீன்களையும், கோள்களையும் வானத்தை நேரில் காட்டி விளக்கினார்; நேராகத் தாவர இயலைக் கற்பித்தார்; இவற்றால் இரவீந்திரர் தாமே உற்றறியவும் எண்ணிப் பார்க்கவும் திறம் பெற்றார். கல்லூரிக் கல்வி :- கல்கத்தாவுக்குத் திரும்பிய இரவீந்திரர் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். கல்வி ஓரளவு கவர்ச்சியாக இருந்தது; கற்பித்த ஆசிரியர்களும் நிறைவளித்தனர். எனினும், இமயமலைக் காட்சி தந்த இன்பத்தை அடைய முடியவில்லை. ஆகவே ஏட்டுக் கல்வி அவ்வளவுடன் நின்றது. இயற்கைக் கல்வியோ பெருகத் தொடங்கியது. முடிவுரை :- உலகப் பெரும் புலவர் தாகூர், அவர் இளமைப் பருவத்திலேயே இயற்கையாகக் கற்பனை வித்துக்கள் ஊன்றப் பெற்றன; கதையும்; பாட்டும் நாடகமும் கற்பனை வரைத்துணை செய்தன; இயற்கைக் காட்சிகள் நெறிப்படுத்தின; விளையும் பயிர் முளையிலே என்பது மெய்யாயிற்று! 2. தாகூரின் கலைவளர்ச்சி முன்னுரை:- கலைத்திறம் அரிதில் அமைவது; ஆனால், எளிதில் எவரையும் கவர வல்லது; கலைத்திறம் பெற்றவர்கள் உலகவர் பாராட்டைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வர். அத்தகைய பேறு பெற்றவர் கவிஞர் தாகூர் ஆவர். குடும்பத்தில் கலை:- தாகூரின் குடும்பமே ஒரு கலைக் கழகம் .மூத்j அண்ணன் மெய்ந்நூற் பயிற்சியும் கணக்கறிவும் மிக்கவர்; ஐந்தாம் அண்ணன் சோதி ரீந்திரர் சீர்திருத்தக்காரர், இசை நாடகங்களில் தேர்ந்தவர். இவர்கள் எப்பொழுதும் கலைஞர் களோடும் அறிஞர்களோடும் அளவளாவுவர். அப்பொழுது உடனிருக்கும் வாய்ப்பு. தாகூருக்குக் கிட்டியது. ஆகவே இக் கலைகளில் தாகூர் திறம்பெற வாய்ந்தது. கதைத் திறம்:- வங்கக் கதையாசிரியர்களுள் தலை சிறந்த ஒருவர் பக்கிம்சந்திரர்; அவர் எழுதிய கதைகள் பங்கதர்சன் என்னும் திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அக்கதை களைத் தாகூர் குடும்பத்தினர் விரும்பிப் படித்தனர். இரவீந்திரர் அக்கதைகளை உரக்கப் படித்துக் காட்டி வீட்டார் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆனார். இந்நிலையில் பாரதி என்னும் பெயரில் தாகூர் குடும்பத்தில் இருந்து ஒரு திங்கள் இதழ் வரத் தொடங்கியது. அதில் இரவீந்திரரின் பாடல்களும், கதைகளும் வெளிவரலாயின. சோதிரீந்திரர் எழுதிய நாடகமும் அவ்விதழில் வந்தது அந்நாடகத்தை வீட்டில் நடித்துக் காட்டுவது வழக்கம். அதில் தாகூரும்சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். ஆங்கிலக் கல்வி:- தாகூர் தம் பதினேழாம் அகவையில் இங்கிலாத்துக்குச் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில்சேர்ந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார்; ஒன்றரை ஆண்டுகள் பயின்றும் ஒரு துறையிலும் பட்டம் பெறாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினர், தாகூர் சட்டப் படிப்பில் தேறவேண்டும் என விரும்பினர். அதனால் மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தம் உடன் வந்த அண்ணன் மகனுக்கு நோய் பற்றிக் கொண்ட மையால் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அவ்வளவில் தாகூரின் சட்டக் கல்வி நின்று விட்டது. மாலைப் பாடல்கள்:- இரவீந்திரர் தமக்குக் கிடைத்த பொழுதைக் கலைத்துறையில் செலவிட்டார். புதிய புதிய இசை நயங்களைக் கண்டார். கங்கையின் அழகையும், பெருக்கையும் கண்டு பலப்பல பாக்கள் இயற்றினார். அவை மாலைப் பாடல்கள் என்னும் பெயரால் வெளியாயின. அதற்குப் பின் வங்காள செல்வி என்னும் புகழ் தாகூருக்கு உண்டாயிற்று. வங்கக் கதை ஆசிரியர் பக்கிம்சந்திரர் ஒரு திருமண வீட்டிற்கு வந்தார். அவரை மணவிழா வீட்டினர் மாலையுடன் வரவேற்றனர். அம்மாலையைத் தம் கழுத்தில் ஏற்காமல் வாங்கி அங்கிருந்த தாகூருக்குச் சூட்டி, இவரே இதற்குத்தக்கவர் என்று பாராட்டினார் இவரின் மாலைப் பாடல்கள் என்ற நூலைப் படித்ததில்லையா? என்று வினாவிப் பெருமைப் படுத்தினார். ஊற்றின் எழுச்சி:- ஒரு நாட் காலையில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கதிரவன் தோற்றத்தைக் கண்ணுற்றார் தாகூர். மரங்களுக்கு இடையே கதிரவனின் ஒளிக் கதிர் பரவிவந்த காட்சி அவர் உள்ளத்தே ஒரு பெரு மாறுதலை உண்டாக்கிற்று. இவ்வகக் காட்சியால் உலகமே ஒரு புதிய அழகுடன் விளங்கியது. எல்லாப் பொருள்களும் முழு அழகுடனும், முழு நிறைவுடனும் கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பாகக் காட்சி வழங்கியது. வெறுப்பு மிக்க ஒருவனும் தாகூர் பார்வையில் விருப்புமிக்கவனாகத் தோற்றம் அளித்தான். அன்று தோன்றிய உணர்ச்சியைப் பாவாக்கி ஊற்றின் எழுச்சி என்று தலைப்புச் சூட்டினார். சந்நியாசி:- ஒரு சமயம் மேல் கடலை ஓட்டிய கார்வாருக்குச் சென்றார் தாகூர். கடற் பரப்பும் அதன் காட்சிகளும் அவர்க்கு விருந்தாயின. அங்கிருந்த நாளில் எழுதியவற்றுள் சந்நியாசி என்னும் நாடகம் குறிப்பிடத்தக்கது. துறவி ஒருவன் நெடுங்காலம் காட்டில் வாழ்ந்து உள்ளத்தை மிக உறுதிப்படுத்திக் கொண்டான். இனி உள்ளத்தில் அசைவு உண்டாகாது. என்னம் எண்ணத்துடன் ஊர்க்குள் போனான். அங்கே வசந்தி என்னும் திக்கற்ற குழந்தையைக் கண்டான். அக்குழந்தை நெருங்கித் தொடவும் பழகவும் இடம் தந்தான். அதனால் அவன் உள்ளத்தில் பாசம் உண்டாகின்றது. பாசம் உண்டாகக் கூடாது என எண்ணி துறவி வசந்தியை விடுத்து ஓடினான். வழியில் ஒரு வறிய பெண் தன் தந்தையைக் கூவிக் கொண்டு ஓடுவதைக்கண்ட துறவியின் மனம் மாறுபாடுற்றது. மீண்டுவந்து வசந்தியைத் தேடினான்; பலரையும் வினவினான். வசந்தி இறந்து விட்டாள் என்பதை அறிந்து வருந்தினான். அன்பு நெறியே வாழ்வு நெறி என்பதைச் சந்நியாசி நாடகத்தால் தெளி வாக்கினார் தாகூர். முடிவுரை:- குடும்பச் சூழல் இளமையிலேயே பலவகைக் கலைகளை அறிதர்க்கும் பெறுதற்கம் வாய்ப்பாக இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு இசையிலும், நாடகத்திலும், பாட்டு எழுதுவதிலும், கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். உலகம் பாராட்டும் பேறு பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? 3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் முன்னுரை : பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே எனப் பாடினார் பாரதியார். தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் ஒவ்வொருவருக்கும் இயல்பானது: இன்றியமையாதது இவ்வகையில் பெரும் புலவர் தாகூர் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். தாகூர் உள்ளம்: தாகூர் பேருள்ளம் உடையவர், சமயத்தின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் பெருக்குவதை வெறுத்தார். அது போலவே ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பகையை வளர்க்கும் நாட்டுப் பற்றையும் வெறுத்தார். நாட்டுக்கு நன்மை தேடுவதில் பிறர்க்கு எவ்வகையிலும் குறையாதவராக விளங்கினார். நாட்டுக்கு கொடுமை உண்டாக்கப்படும் போது வன்மையாகக் கண்டித்தார். நாடும் மொழியும்:- தாகூர் நெஞ்சில் உலகம் குடிகொண்டி ருந்தது. உலகவர் அனைவரும் அவர் அன்புக்குரியவர். ஆயினும் அவருடைய எழுத்துக்களில் வங்க நாடு பொலிவாக விளங்கியது. வங்க நாட்டுக் கருப் பொருள் மிக இடம் பெற்றன. வங்க மொழி முன்னேற்றமும் வங்க நாட்டு முன்னேற்றமும் அவர்க்கு உயிர்ப்பு ஆயின. ஆங்கில மோகம்:- வங்கமக்கட்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த ஆங்கில மோகத்தை அகற்ற அரும்பாடு பட்டார் தாகூர். தாய்மொழி வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டும் என வற்புறத்தினார். பொது மேடைகளில் தாய் மொழியே முழங்க வேண்டும் என்று கூறித் தாமே வழிகாட்டினார். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவுகளையும் வங்க மொழியிலேயே நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் தேர்ந்தவரான அவரது செயல் நாட்டு மக்களை விழிப்படையத் தூண்டியது. சிற்றூர் முன்னேற்றம்:- நாட்டின் முன்னேற்றம் சிற்றூர் களிலே அடங்கிக்கிடப்பதை அறிந்தார் தாகூர் சிற்றூர் மக்கள் செல்வர்களையும் ஆட்சியாளர்களையும் நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்பதை அறிந்தார். அந்நிலையைப் போக்குதற்கு முனைந் தார்; கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். சிற்றூர் முன்னேற்றத்தில் கற்றோர் ஈடுபடத் தூண்டினார். சாந்தி நிகேதனம்:- நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் அடங்கிக்கிடப்பதை நன்கு உணர்ந்தவர் தாகூர். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவது போன்ற பயன்மிக்க செயல் வேறு இல்லை என உணர்ந்தார். தம் இளமைப் பருவத்திலே பள்ளியைச் சிறைச்சாலையாகக் கருதிய நிலையை நினைத்துக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பள்ளிச் சூழ்நிலை யையும் பாடத்திட்டத்தையும் அமைக்க விரும்பினார். குழந்தைகள் ஆடிப்பாடி மகிழவும், இசையும் நாடகமும் கற்கவும், அறிவுப் பசி உண்டாகி ஆர்வத்துடன் கற்கவும் வழிவகை காண விரும்பினார். இத்தகைய எண்ணங்களால் 1901 ஆம் ஆண்டு உருவாகியதே சாந்தி நிகேதனம் என்னும் கலைக்கோவில் ஆகும். முடிவுரை:- வாழ்க ஒழிக என்று முழங்குவதிலே நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இருப்பதாகக் கூறிவிட முடியாது, நாடும் மொழியும் நன்மை பெரும் வகையில் எண்ணிப் பார்த்து ஏற்ற தொண்டுகள் செய்வதிலேதான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அடங்கிக் கிடக்கிறது. அத்தகைய அருந்தொண்டு செய்தவருள் தலைமணியாகத் திகழ்பவர் தாகூர். அவரது அயரா உழைப்பால் வையத்தில் வங்க நாட்டுக்கும் வங்க மொழிக்கும் தனிப்பேர் இடம் உண்டாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை. 4. இல் வாழ்க்கை தனி வாழ்க்கையை உலக வாழ்க்கையாக - தன்னல வாழ்வைப் பொதுநல வாழ்வாக - மாற்றியமைக்க அமைந்த போற்றத்தக்க அமைப்பே இல்வாழ்வாம். ஒருவர் தம் இல்வாழ்வில் பெறும் அமைதியே அவர் தம் சீர் சிறப்புக்கு அடிப்படையாம். இவ்வகையில் சீரிய இல்வாழ்க்கை எய்தி உலகுக்கு எடுத்துக் காட்டாக இலங்கி யவர் கவிஞர் தாகூர். இல்லறம்:- அன்பு நெறியே உலகை உய்ப்பது என்னம் உண்மையைத் தாகூர் கண்கூடாக அறிந்து கொண்ட நாளிலே தான் அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவர் மிருணாளினி தேவியார். அவர்அருங்குணச் செல்வி யராகத் திகழ்ந்தவர். ஆதலால் இல்லறம், அன்புக்கும் அமைதிக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தார். இல்லத்தில் கலைப்பணி:- மிருணாளினி தேவியார் கணவர் தம் உள்ளப்பாங்கை நன்கு உணர்ந்தவர். அவர்தம் கலைமேம் பாட்டை நன்கு அறிந்தவர். ஆகவே தம் கடமையில் தவறாமல் கணவர் கலைத் தொண்டுக்குத் துணையாக வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கலைப்பணி செய்வதற்குத் தாகூர்க்கு வாய்ப்பு ஏற்பட்டது தேவியாரலேயே. எளிமை வாழ்வு:- தாகூர் எளிமையும் தூய்மையும் விரும்புவர். எந்த ஒன்றிலும் அழகு காணத் துடிப்பவர். ஆடம்பரத்தை வெறுப் பவர். செல்வக் குடியில்பிறந்து வளர்ந்த மிருணாளினி தேவியார். கணவர் குறிக்கோளுக்கு ஒரு சிறிதும் மாறாது நடந்தார். மூட்டை யாகக் கொண்டு வந்த நகைகளை மூட்டையாகக் கட்டி வைத்து எளிமை பூண்டார். அணிகலம் ஆடை இவற்றில் மட்டும் தானா எளிமை? இணைந்த எளிமை:- தட்டு முட்டுச் சாமான்களிலும் எளிமை போற்றுவதே தாகூர்க்கு இயல்பு. நிறைய உடைகளை எடுத்துக் கொண்டு வெளியூர்க்குச் செல்ல நேர்ந்தால் இரண்டு உடை போதுமே என்பார். சாந்தி நிகேதனத்தில் பிறரைப் போலவே தமக்கும் குடிசை அமைத்துக்கொண்டு வாழவும், எளிய உணவே உண்டு வாழவும் தாகூர் முனைந்தார். இவற்றுக் கெல்லாம் மிருணாளினி தேவியார் இணைந்து செல்லும் மனைவியாக இலங்கினார். ஒத்த இல்லறம்:- மிருணாளினி தேவியாரின் சீரிய பண்புகள் தாகூரைக் கவர்ந்தன. ஆதலால் பற்பல கடமைகளுக்கும் இடையேயும் சமையல் அறையில் வந்து பொழுது போக்குவார். காய்கறி தின்பண்டம் பற்றியும் உறையாடுவார். மனைவியார் நோயுற்ற காலத்தில் வேறு எவரையும் அவர்க்கு விசிற விடாமல் தாமே விசிறி இன்புற்றார். குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளின் மேல் பேரார்வம் உடையவர் தாகூர். அவர்தம் இல்வாழ்வின் பயனாக ஆண்மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவரும் தோன்றினர். அவர்கட்கு வழிகாட்டுவது மட்மல்லாமல் குளிப்பாட்டுதல், உடுத்தி விடுதல், உறங்கச் செய்தல் ஆகிய கடமைகளிலும் முடிந்த பொழுதுகளில் எல்லாம் பங்கு கொண்டார். பேரிடி:- தாகூரின் இல்வாழ்க்கை அன்பிலே தொடங்கி அமைதியிலே வளர்ந்து அறத்திலே முதிர்ந்து இன்பமே பொருளாகத் துலங்கியது. அந்த இனிய இல்லறம் தாகூரின் முப்பத்தொன்பதாம் அகவையுடன் நிறைவாயது. தாகூர்க்குக் கிட்டிய பேரிடிகளில் தலைமையானது மிருணாளினி தேவியாரின் மறைவேயாம். முடிவுரை:- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் திருவள்ளுவர். அதற்கு ஏற்ப அமைந்தது தாகூரின் இல்வாழ்வு. அந்த வாழ்வே வங்கக் கவிஞரை உலகக் கவிஞர் ஆக்கிற்று என்பதில் ஐயமில்லை. 5. தொண்டுகள் தனக்கென வாழும் வாழ்வு, பறவை, விலங்குகட்கும் உண்டு. ஆனால், பிறவுயிர்க்கென வாழும் வாழ்வு அவற்றுக்கு இல்லை. பிறர்க்கென வாழும் வாழ்வு கொள்ளாதவர்கள் மனித வடிவில் இருப்பினும் - கற்றத் தேறியவராய் இருப்பினும் - மனிதர் ஆகார். அவர் மற்றை உயிர்களைப் போன்றவரே ஆவர். தாகூர் உள்ளம் பேருள்ளம்! நாடு, இன, மொழி கடந்த பேருள்ளம். அவ்வுள்ளம் தொண்டிலே தோய்ந்து நின்ற உள்ளமாம். சாந்தி நிகேதனம்- தாகூரின் தலையாய தொண்டு சாந்தி நிகேதனத்தைத் தோற்றுவித்து வளர்த்ததாம். நைவேத்தியம் என்னும் பெயருடன் தாகூர் இயற்றிய நூற் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தந்தையார் அதற்குப் பரிசாகப் பெரும் பொருள் வழங் கினார். அத் தொகையைக் கொண்டு அச்சிட்டு நைவேத்தியத்தை நூலாக்கினார் தாகூர். அதைக் கொண்டு சென்று, ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடந்தந்துதவுமாறு தந்தையாரை வேண்டினார். அதற்கு இசைந்து வேண்டிய வாய்ப்புக்கள் அனைத்தும் செய்து உதவினார். இவ்வகையில் 1901 இல் சாந்தி நிகேதனம் தோன்றியது. கலைவளர்ச்சி: எளிமையயை செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக்கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியை தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். பள்ளி இசை முழக்கத்துடன் ஒவ்வொருநாளும் தொடங்கும். இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப் பெறும். வாய்த்த பொதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப் பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிப்பிலும் பங்கு கொள்வார் தாகூர். கல்விப்பயிற்சி:- இளையவர்கள் இனிய முறையில் கல்விகற்க ஏற்பாடு செய்தார் தாகூர், விளையாட்டின் வழியாகவே கற்க வேண்டியவற்றை விரும்பிக் கற்க வழிவகை கண்டார். அடக்கு முறை இல்லாமல் சிறைச் சாலை என்னும் எண்ணம் தோன்றாமல் விருப்பத்தோடு மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக இருக்கவும். அவர்களுக்குள் வரும் தவறுகளை அவர்களே ஆராய்ந்து தீர்க்க வல்லவர்களாக இருக்கவும் வாய்ப்புக்கள் செய்தார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்குணரப் பயிற்றுவித்தார். இவ்வகையால் நன்மக்களை உருவாக்கி நாட்டுக்குத் தருதலில் சாந்தி நிகேதனம் பெரும் பங்கு கொண்டது. இடர்ப்பாடுகள்:- சாந்தி நிகேதனத்தை அமைத்து வளர்க்கும் பொறுப்பில் தாகூர்க்குப் பொருள் மிகச் செலவாயிற்று. பொருள் முடை ஏற்பட்டது போதாது என்று மனைவியார், மகள், தந்தை யார், மைந்தன், சிறந்த ஆசிரியர் ஒருவர் ஆகியோர் அடுத்தத்து இறந்தனர். இவ்விழப்புக்கள் தாகூரை வாட்டின. அவர், நாட்டுத் தொழிலும், வாணிகமும் வளரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில அமைப்புக்ளில் போட்டு வைத்திருந்த பணமும் வரப்பெறாமல் போய் விட்டன. இந்நிலையிலும் தளராமல் அரிய பல பணிகள் புரிந்தார். பொதுப்பணிகள்:- 1889இல் கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது தாகூர், நிவேதிகை அம்மையாருடன் ஓய்வின்றி பாடுபட்டு பணம் திரட்டினார். வங்கத்தில் வெள்ளக்கேடும், பஞ்சயத்துயரும் உண்டாக்கிய பொழுதுகளில் எல்லாம் அயராது பாடுபட்டார். பீகாரிலும், குவெட்டாவிலும் நில நடுக்கம் உண்டாக்கிய போது மக்கள் சொல்ல முடியாத் துயரடைந்தனர். அப்பொழுது தாகூர் செயற்கரிய செயல்களை மேற்கொண்டார். அரசியல் ஈடுபாடு:- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க நேர்ந்த போது மக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கட்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தினார் தாகூர். நாடெல்லாம் சென்று மேடைதோறும் முழங்கினார். வீரப் பாடுக்கள் இயற்றிப் பரப்பினார்; ஊர்வலம் நடத்தினார்; நிதி திரட்டி உதவினார். பகை கொள்ளாத ஒத்துழையாமையே அவர் கருத்தாக இருந்தது மாணவர்கள் இயக்த்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறினார். இந்நெறிப்படி அமைப்புச் செல்லாமையைக் கண்டு அரசியலில் இருந்து விலகிச் சாந்தி நிகேதன அமைதிப் பணியை மேற்கொண்டார் இந்து முகமதியர் வேறுபாட்டைத் தடுக்க எவ்வளவோ அவர் முயன்றார். அது கைகூடாமையால், வங்கம் இரண்டாகப் பிரிந்து பட நேர்ந்தது. கலைத்தொண்டு:- அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர் கலைத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்டோர், புகழ் வாய்ந்த கீதாஞ்சலியையும், வேறு சில நாடகங்களையும் இப் பொழுதில் இயற்றினார். மாணவர்களை நடிப்பு முதலாய துறைகளில் நன்கு வளர்க்கப் பாடுபட்டார். அவருடைய தொண்டை நாடு அறியத் தொடங்கியது ஒப்பற்ற உலகக் கவிஞராம் தாகூரைப் பலவகை அமைப்புக்களும் வரவேற்கவும் பாராட்டவும் தொடங்கின. முடிவுரை:- தாகூர் பரந்த பாங்கு படைத்தவர் இளையவர் உள்ளத்தே உண்டாகும் உணர்ச்சிகளே எதிர்கால உலகைக் காக்க வல்லது எனத் தெளிந்து தொண்டாற்றினார். மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவன் உவக்கும் தொண்டு என்பதைச் செயலில் காட்டினார். அவர் தொண்டுள்ளம் வாழ்வதாக. 6. பெருவாழ்வு ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்றார் வள்ளுவர். ஆம் உலகத்தில் நிலை பேறானது புகழ்ஒன்றேயாம். நிலைபெறாத உலகத்தில் பிறந்த மக்கள் தம் செயற்களும் செயலால் ஈட்டிய புகழை நிலைக்கச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும், இந்நோக்கத்தை நன்கு நிலையாட்டியவர் தாகூர் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டுப்பயணம்:- தாகூர் தாம் வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலிப் பாக்களைப் பொழுது போக்குப் போலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1912இல் தாகூர் இலண்டனுக்குச் சென்றபோது அம்மொழி பெயர்ப்பையும் எடுத்துச் சென்றார். ஆங்கிருந்த தம் நண்பர் வில்லியம் என்பார்க்குக் காட்டினார். அவர் பாடலின் அருமையை வியந்து பாராட்டியதுடன் தம் நண்பர்கள் பலர்க்கும் காட்டினார். இவ் வகையில், வெல்சு, பெர்னாட்சா, இரசல், பிரிட்சு, ஆண்ட்ரூசு என்பவர்கள் நண்பர் ஆயினர். இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சில பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். தாகூர் பெருங் கவிஞராகவும் சமயத் தலைவராகவும் பேரறிஞர் உள்ளங்களில் இடம் பெற்றார். உள்நாட்டில் புகழ்:- தாகூர் மேல் நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், அவர் இயற்றிய கீதாஞ்சலிக்கு உலகத்தின் உயர்ந்த பரிசாகிய நோபல் பரிசு கிட்டியது. ஐரோப்பியர் அல்லாத எவரும் அதுவரை அப்பரிசைப் பெற்றது இல்லை தாகூர் அப் பரிசைப் பெற்றது கண்டு, அவரது தாய் நாடான வங்கம் மிகப் பெருமை எய்தியது; தாகூரை அழைத்து விருந்தும் விழாவும் எடுத்தது. பாராட்டுக்கள் நலகியது. பக்கிம் சந்திரர் புகழ்ந்தும் உள்ளவாறு உணரப்பெறாத வங்கம், தங்கள் நாட்டுப் புலவர் மணியை மேல் நாட்டார் பாராட்டிய பின்னரே உணர்ந்து பாராட்டியது இலக்கணம் அறியாப் புலவர் என்று பழித்தவரகளும், பாராட்டத் தொடங்கியது தாகூர்க்கு வியப்பாகவே இருந்தது. கல்லூரிப் பட்டம் பெறாத அவரைக் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அழைத்து டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பட்டமளிப்புப் விழாப் பேருரை நிகழ்த்த வேண்டிக் கொண்டது. தாய்மொழிப்பற்று:- தாகூர் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்; உலகத்தைத் தம் குடும்பமாகக் கருதபவர். அதே பொழுதில் தாய் மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். வங்க நாட்டினர் வங்க மொழியில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், கற்க வேண்டும் என்று அவரைப்போல வற்புறுத்தியவர் எவரும் இலர். அது போல் தமிழ் மக்கள் தம் தாய் மொழியில்தான் பேச வேண்டும், கற்க வேண்டும். என்று வற்புறுத்தினார் தாகூர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது அவரக்குத் தமிழ்ப்புலவர் ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்புத்தர குயில் கிளியைப்போல பாட முயலக் கூடாது. குயில் தன் குரலால்தான் கூவ வேண்டும். நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பாடி இருக்க வேண்டும் என்றார். உலக வழிகாட்டி:- மேல்நாட்டு அறிஞர்களுடன் அளவள வாவும் வாய்ப்புக் கிடைத்தது. குறித்துத் தாகூர் மகிழ்ந்தார். அதே பொழுதில் மேலைநாடுகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சியும் நடுங்கியும் வாழும் நிலைமையைக்கண்டு வருந்தினார். ஒரு நாட்டை அழிக்க மற்றொரு நாடு படைகளைப் பெருக்குவதை அறவே வெறுத்தார். போட்டியும் பொருமையும் நாகரிகம் ஆகாது எனக் கண்டித்தார். உலகுக்கு இவ்வகையில் வழிகாட்ட வேண்டியது. இந்தியாவின் கடமை என உணர்ந்து சாந்தி நிகேதனத்தின் வழியாக உலக அமைதிக்குப் பாடுபட முனைந்தார். காந்தி யடிகளை வரவேற்று உலக அமைதிபற்றி ஆராய்ந்தார். வெளி நாட்டு மாணவர்களையும், பெருந்தலைவர்களையும் சாந்தி நிகேதனத்தில் கலந்து உரையாடினார். பொதுமைவேட்கை:- சாந்தி நிகேதனத்தில் 1918 இல் விசுவபாரதி என்ற உலகக் கலைக் கழகத்தை அமைத்தார். ஆண்ட்ரூசு, பியர்சன் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்தி நிகேதனத்தில் தங்கி இருந்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் அங்கு இடம் பெற்றன. சீனா, ஜப்பான் முதலான கீழை நாட்டுக் கலைகளும், ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும், ஆங்கு இடம் பெற்றன. கிழக்கு மேற்கு என்று பாராமல் நல்லவற்றை யெல்லாம் கொள்ள வேண்டும் என்பதே தாகூர் கொள்கை. உலகவர் அனைவரும் மனிதர் என்னும் பொதுத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே தாகூரின் உள்ளார்ந்த தொண்டின் அடிப்படை ஆயிற்று. அஞ்சாமை:- 1916-17 இல் தாகூர் சப்பானுக்குச் சென்றார். அந்நாட்டு கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டு அளவளாவினார். பல கூட்டங்களில் பேசினார். சப்பானியரின் அழகுணர்ச்சியை மதித்துப் போற்றினார் அதே பொழுதில் அரசியல் பகை, மண்ணாசை ஆகியவற்றைக் கண்டித்தார். எவர் தம்மைப் புறக் கணித்தாலும் தமக்கு நேரிது எனத் தோன்றிய கருத்தை அஞ்சாது வெளியிட்டார் தாகூர். பட்டம் துறப்பு:- டயர் என்னும் வெறியன் சாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் திரண்ட மக்களைத் தக்க முன்னறி விப்பு இல்லாமல் சுட்டுத் தொலைத்த கொடுமையைக் கண்டித்தார். ஆங்கில அரசால் தமக்குத் தரபெற்ற சர் என்னும் பட்டத்தை உதறினார். நாட்டு முன்னேற்றத்திற்குக் கிராம முன்னேற்றமே அடிப்படை என உணர்ந்து தொண்டாற்றினார். கிராமத் தொண்டர்படை அமைத்தார். தேர்வு முறையால் உண்டாகும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தம் கலைக் கழகத்தில் தேர்வு முறையை ஒழித்துக் கட்டினார். இவ்வாறாக உலகுக்குப் பயன்படும் பெருவாழ்வு கொண்டார் தாகூர். முடிவுரை:- பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்றார் வள்ளுவர். அதுபோல் பண்பாளராகத் திகழ்ந்த தாகூரால் உலகம் நல்ல பல வாய்ப்புகளை எய்திற்று. தாகூர் புகழ் வாழ்வதாக: 7. சாந்தி நிகேதனம் தாகூர் பெருங்கலைஞர்; கவிஞர்; இசையிலும் நாடகத்திலும் தேர்ந்தவர்; வங்க மொழியும், ஆங்கிலமும் கொஞ்சி விளையாடும் அளவில் கவிகள் இயற்றியவர்; நாட்டுத்தொண்டிலே ஈடபட்டவர். அவர் தம் எண்ணத்தைச் செயற்படுத்துதற்கு என ஏற்பட்ட அமைப்பே சாந்தி நிகேதனம் ஆகும். நிலையத் தோற்றம்:- தாகூர் நைவேத்தியம் என்னும் தலைப்பில் இனிய தெய்வப் பாடல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த தேவேந்திரநாத் தாகூர். பெருந் தொகையைப் பரிசாக வழங்கினார். அத்தொகையைக் கொண்டு நைவேத்தியத்தை அச்சிட்டுத் தந்தையாரிடத்தில் படைத்தார் தாகூர். அப்பொழுது ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடம் தந்து உதவுமாறு தந்தையிடம் வேண்டினார். அவ்வாறே தந்தையார் இசைந்தார். இவ்வகையால் 1901 இல் எழுந்த நிலையமே சாந்தி நிகேதனக் கலைக்கழகம் ஆகும். கலைத் திட்டங்கள்:- எளிமையில் செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக் கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியைத் தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். இசை முழக்கத்துடன் தொடங்கும் பள்ளி இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப்பெறும். வாய்த்த பொழுதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப்பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிகராகவும் திகழ்ந்தார் தாகூர். கல்வி முறை:- சாந்தி நிகேதனத்தில் ஐவரே மாணவராக இருந்தனர். பின்னர்நூற்றுக்கணக்காகப் பெருகினர். சிறுவர்களே அல்லாமல் சிறுமியரும் இடம் பெற்றனர். விளையாட்டின் வழியாக விரும்பிக் கற்கும் முறையை உருவாக்கினார் தாகூர். பள்ளிக் கூடம் அடக்கிவைக்கும் இடம் என்றோ. சிறைச்சாலை என்றோ மாணவர் மனத்துத் தோன்றாவண்ணம் சூழ்நிலை யையும், பாடத்தையும், கற்பிக்கும் முறையையும் வகுத்தமைத்தார். அதே பொழுதில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாகவும், தமக்குள் உண்டாகும் சிக்கல்களைத் தாமே தீர்த்துக் கொள்ளத் தக்கவர்களாகவும் மாணவர்களை உருவாக்கினார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்கு வளர்த்தார். விசுவ பாரதி:- உலகம் ஒருகுடி என்பதை உணர்ந்தவர் தாகூர். அதனால் 1918 இல் சாந்தி நிகேதனத்தில் விசுவபாரதி என்னும் உலகக் கலைக் கழகத்தை உருவாக்கினார். அங்கு உலகப் பெருமக்கள் பலரும் வருகைதந்து அளவளாவ வாய்ப்புச் செய்தார். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் சாந்தி நிகேதனத்தில் இடம் பெற்றன. சீனா, சப்பான் முதலான கீழை நாட்டுக் கலையும் ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும் ஆங்கு இடம் பெற்றன. சமயம் கடந்த, இனம் கடந்த, நாடு கடந்த பொதுத் தன்மைக்குச் சாந்தி நிகேதனம் இருப்பிடம் ஆயிற்று. திருநிகேதன்:- கிராமங்கள் பெருகியுள்ள இந்திய நாட்டில் கிராமங்கள் வளம் பெறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என கண்டார். அதற்காகத் தம் மைந்தர் இரவீந்திர நாதரை அமெரிக்கா வுக்கு அனுப்பி உழவைப்பற்றி மூன்று ஆண்டுகள் கற்றுவரச் செய்தார் விசுவபாரதியில் கற்பிக்கும் கலைகளில் கிராமத் தொண்டு என்பதையும் ஒன்றாக்கினார். சாந்தி நிகேதனத்திற்கு அருகில் இருந்த சுருள் என்னும் ஊரில் இருந்த தம் விட்டைத் திருநிகேதன் எனப்பெயர் சூட்டிக் கிராமத் தொண்டுக்கு உரிய தலைமை நிலையம் ஆக்கினார். அங்கே நூலகமும் அலுவலகமும் அமைத்தார். தரிசாகக் கிடந்த அப்பகுதி வளமான பயிர்நிலமாக மாறியது. கூட்டுறவுக் கழகம்:- திருநிகேதனில் கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பெற்றது அங்குக் குடியிருந்த அனைவரும் உறுப்பினர் ஆயினர். கூட்டுறவுக் கழகக் கட்டணத்தின் ஒரு பகுதி மருத்துவக் கட்டணம் ஆக்கப் பெற்று மருத்துவர்க்குத் தர ஏற்பாடாயிற்று. ஆதலால் மருத்துவர் நோய் வராமல் பார்த்துக் கொள்வதில் மிக அக்கறை காட்டினார். மக்களுக்கு நோய் வராவிட்டாலும் தமக் குரிய தொகை கிடைக்க வகை இருந்தால் நோய் வராமல் தடுக்க மருத்துவர் முயல்வது இயல்பு அல்லவா! தொண்டர் படை:- கிராமப் பள்ளிக்கூட மாணவர் களுக்குத் தொண்டர்படை அமைக்கப் பெற்றது. கிராமத்து மக்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அந்தத் தொண்டர் படை உதவியது. உடலையும் உள்ளத்தையும் வளர்த்துப் போற்றினர் தொண்டர் தொண்டர்கள் தத்தம் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல் வேண்டும். பொதுத்தோட்டத்திலும் பாடுபட வேண்டும். அதன் பயனால் கிடைத்த தொகையைக் கொண்டு பள்ளிக்கூட நூல்கள் வாங்கப் பெற்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், நாடகங்கள் ஆகியன அவ்வப்போது மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப் பெற்றன. உரிமைக் கல்வி:- பக்கத்துக் கிராமங்களில் பயிலும் மாணவர்கள் திருநிகேதனில் வந்து ஐந்தாறு ஆண்டுகள் பயின்றனர். உலகச் செய்திகளும், வாழ்க்கை வரலாறுகளும், வங்க இலக்கியமும் கற்பிக்கப் பெற்றன. ஆனால் பொதுத் தேர்வு என்பது அங்கு இல்லை. உரிமை உணர்ச்சி இல்லாத கல்வி, கட்டாய உணவு போல் தீமை தரும என்பது கவிஞர் கொள்கை. அதனைத் தம் கழகத்தில் செயல் திட்டமாகக் காட்டினார். முடிவுரை:- தாகூர், மக்கள் அமைதியும் இனிமையுமான வாழ்வு வாழக் கருதினார். அதற்கு ஏற்ற செயல் திட்டங்களைச் சாந்தி நிகேதனில் உருவாக்கி வளர்த்தார். அதன் செயல் மணம் பக்க மெல்லாம் பரவி நலம் செய்வதாயிற்று. 8. உள்ளத்தின் ஒளி உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல் என்றார். திருவள்ளுவர். உள்ளத்தே ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார் பாரதியார். ஊழினை உருக்கி உள்ளொழி பெருக்கி என்றார் மாணிக்க வாசகர். உள்ளொளியைத் தெள்ளிதின் ஆராய்ந்து எழுதினார். திரு.வி.க. உள்ளொளி வாய்ந்த மாந்தர் உலகில் அரியர். தாகூர் அவ் வரியருள் அரியராகத் திகழ்ந்தார். உள்ளொளி:- தாகூர் கவிஞர் கதை ஆசிரியர்; நாடக ஆசிரியர்; இசைக் கலைஞர்; நடிகர்; ஓவியர் இயற்கைச் சுவைஞர். இயற்கை வாழ்வினர்; இறையருட் பேற்றாளர் அவர்தம் படைப்புக்கள் அனைத்தும் உள்ளத்தின் ஒளியை உலகுக்கு அறிவிப்பன. நூலாகவும், இதழாகவும் வெளிவந்து உலகுக்கு ஒளிபரப்பின. படைப்பின் மாண்பு:- தம் வாழ்க்கையில் கண்ட எளிய நிகழ்ச்சிகளையும், கேட்ட எளிய, செய்திகளையும் அரிய படைப் பாக்குதலில் தேர்ந்தவர் தாகூர். அவர் கற்பனை ஒளி பட்டதும் எளிய காட்சிகளும், செய்திகளும் அரிய ஒளி வீசிச் சுடர்ப்பிழம் பாகக் காட்சி வழங்கின. கதையாயினும் பாட்டாயினும் எழுதி முடிக்கப் பெற்றதும் நண்பர்களை அழைத்து உடன் வைத்துக் கொண்டு யாழிசை போன்ற தம் குரலால் படிப்பார்; நாடகம் ஆயின் நடித்துக் காட்டவார். பாடல் தொண்டு பாடல் தொண்டு செய்வதே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தாகூர் என்பதில் தவறு இல்லை. கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர் ஓய்வற்ற பணிகள் மிகுந்தும் பாடல் தொண்டு செய்வதில் அவர் தவறவில்லை. பக்கம் பக்கமாக உரைநடை எழுதிய போதிலும் ஒரு பாட்டு எழுதுவதற்கு ஈடான மகிழ்ச்சி உண்டாவது இல்லை. ஒருவர் தம் கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவைபோல் பாட்டுக்கள் அமைகின்றன. ஆனால் உரைநடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனமாகவும், கையாள முடியாததாகவும்அசைக்க இயலாததாகவும் இருக்கின்றது. நாளுக்கு ஒரு பாட்டு எழுதி முடிக்க இயலுமானால் என் வாழ்வு இன்பமாக நடைபெறும் என்று கூறும் வரிகளில் தாகூரின் கவிதை ஆர்வம் நன்கு புலப்படும். நாடகத் தொண்டு:- இளமையிலேயே வீட்டில் அண்ணன்மார் நடிக்கக்கண்டு களித்தது நாடகக்கலை. மேடையை நெருங்க முடியாதிருந்த நிலைமாறித் தாமே நாடகம் இயற்றவும், இயற்றிய நாடகத்தைப் பயிற்று விக்கவும். தாமே நடிக்கவும் ஆகிய நிலைமைகள் உண்டாயின. சாந்தி நிகேதனப் பாடத் திட்டங்களில் நாடகத்திற்குச் சிறந்த இடம் தரப் பெற்றது. வால்மீகி தீபம் என்னும் நாடகத்தைத் தம் பத்தொன்பதாம் வயதில் எழுதினார். தாமே வால்மீகராக நடித்தார். மிக முதிர்ந்த காலத்திலும் நாடகப் பற்றை விட்டாரல்லர். கற்பனை வளம்:- கற்பவரின் மனக்கண்ணில் அழுத்தமாக நிறுத்தத் தக்க கற்பனைச் சொல்லோவியங்களைப் படைத்தலில் வல்லவர் தாகூர். கடலைக் காண்கிறார் தாகூர். கற்பனை வளம் பொங்குகிறது; வெட்ட வெளியில் கிடக்கம் கடல் அலைந்து புரண்டு நுரை கக்குகிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம் போன்ற தோற்றம் மனதில் எழுகிறது. நிலம் கடலின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை. தாயின் அரியணையைப் பற்றிக் கொண்டது. அது முதல் பெற்ற தாய் பித்துப்பிடித்தவளாய், நுரை நுரையாய்க் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள். தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயரடைகிறாள். குழந்தை நெஞ்சம்:- பெருமக்கள் குழந்தை நெஞ்சம் உடையவர். தாகூர் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமக்குப் புகழ் வருவது கண்டு வருந்தினார் தாகூர். என் ஆடைகளின் கரைகளைத் தொடுவதற்காகவும், அதை முத்தமிடுவதற்காகவும் மக்கள் சூழ்ந்து நெருங்குவது எனக்குக் கவலையை உண்டாக்கிறது. நான் வணங்கத் தக்க மக்கள் அவர்களிடத்தே பலர் இருக்கின்றனர் என்பதை நான் எப்படி உணர்த்துவது என்று ஏங்கினார். குழந்தைகளைப் பற்றி உருக்கும் படியாகப் பாடிய புலவர்களுள் உலகில் முதலிடம் பெறுபவர் தாகூர் என்பர். பிறைமதி என்னும் தொகுப்பில் அவர்தம் குழந்தைப் பாடல்கள் உள. அமைதி வேட்கை:- போரை வெறுத்தவர், கண்டித்து உரைத்தவர் தாகூர். போர் முடிந்தபின்னர் பிரஞ்சு நாட்டிற்கும், செர்மனி நாட்டிற்கும் சென்ற கவிஞர் ஆங்குப் பாழடைந்து கிடந்த கட்டிடங்களைக் கண்டு கலங்கினார். போரில் மடிந்த வீரர்களின் கல்லறைகளைக் கண்டு உருகினார். உலகத்து அறிஞர்கள் செய்த வரும் செயற்கருஞ் செயல்களை யெல்லாம் போர்ப் பேய் விழுங்கி விடுவதைக் கண்டு புண்பட்டார். போரைத் தூண்டி விட்டவர் எங்கோ இருக்க, இன்னதென்று அறியாத மக்கள் படும் அவலங்களை எண்ணி நொந்தார். தம்மால் ஆன தொண்டுகளை அவ்வப்போது செய்தார். சீனா, இரசியா முதலான நாடுகளுக்குச் சென்று அறிஞர்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டார். பெருந்தலைவர்களுடன் இணைந்த அமைதிப் பணி புரிந்தார். அத்தகயருள் காந்தி யடிகள் தலையாயவர் ஆவர். அவருக்கு மகாத்மா பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தவரே தாகூர்தாம். ஒளிமிக்க உள்ளம்:- உயிர்கள் அனைத்தின் மேலும் ஒப்பற்ற அன்பு செலுத்தினார் தாகூர். தனிப் பட்ட மனிதர் மேல் வெறுப்புக் கொள்ளாதவர் தாகூர். கொள்கைகளில் விரும்பத் தக்கவை, வெறுக்கத்தக்கவை இவை எனக் கருதுவதே அல்லாமல் கொள்கை யுடையார் மேல் விருப்பு, வெறுப்புக் காட்டாத பெரும் பாங்கு அவருடையது. உலகப் போர் அல்லலை நினைந்து உருகிய அவர் 1941 இல் தம் என்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் ஒன்றில் நாகரிகத்திற்கு உண்டாகிய நெருக்கடி எனப் பேசினார். அழிவை மூச்சாகக் கொண்ட நாகரிகம் அன்று வாழ் நாளெல்லாம் பறை யறைந்தார். அவர் உள்ளம் அத்தகையது. முடிவுரை:- தாகூர் தண்ணொளி பரப்பும் பேரொளிச் சுடர். அச்சுடரொளியால், வழிபிடித்துக் கொண்டு உலகம் செல்லும் நாளே உய்யும் நாள். அந்நாள் வருவதாக! 1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும் கல்வியும் உலகின் நன்மைக்காகப் பிறந்த பேரருளாளர்கள் பலர்; செயற்கருஞ் செயல் செய்த சீரிய தொண்டர்கள் பலர்; இறையன் பில் இணையற்று விளங்கியவர்கள் பலர்; இத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் சுவைட்சர் 1875ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் ஐரோப்பாவைச் சேர்ந்த கேயர் சுபர்க் என்னும் ஊரில் லூயி சுவைட்சர் - என்பவரின் இரண்டாம் திருமகனாராகப் பிறந்தார். அவர் பிறப்பால், பிறர்க்கென வாழ்ந்த பெருமக்கள் பிறந்த நாள்களுள் சனவரித் திங்கள் பதினான்காம் நாளும் ஒருநாள் ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சரின் தந்தையார் லூயி சுவைட்சர் கிறித்தவ சமய போதகராகப் பணிசெய்தார். ஆர்கன் என்னும் இசைக் கருவியை மீட்டுதலில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர்தம் முன் னோரும் உடன் பிறந்தவர்களும் இசைத் தேர்ச்சியும் இறையன்பும் மிக்கவராக இருந்தனர். ஆகவே இறையன்பும் கவர்ந்து ஆட் கொண்டனர். ஐந்தாம் அகவையிலேயே ஆல்பர்ட்டுக்கு அவர் தம் தந்தையார் பியானோ கற்பித்தார். ஏழாம் அகவையிலேயே தம் இசையாசிரியை பாராட்டும் திறம் பெற்றார். எட்டாம் அகவையில் ஆர்கன் இசைப்பதில் ஈடுபட்டார்! இவ்வாறு இசையால் இசை பெற்றுத் திகழ்ந்தார். லூயி சுவைட்சர் கேயர்சுபர்க்கில் இருந்து கன்சுபர்க் என்னும் இடத்திற்குச் சமய போதகராக மாற்றப் பெற்றார். ஆகவே கன்சுபர்க்கில் தான் சுவைட்சரின் இளமைக் கல்வி தொடங்கியது. எளிய சூழ்நிலையில் அமைந்த கன்சுபர்க் பள்ளிக்குச் சென்ற சுவைட்சர், தாமும் அந்த எளிமையை மிக விரும்பிப் போற்றினார். உடன் பயிலும் உழவப் பிள்ளைகளைப் போலவே உடை உடுத்தார். அவர்களுக்குக் கிடைக்காத எந்த அரிய பொருளையும் பயன் படுத்துவதை வெறுத்தார். ஏழை எளியவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார் இளைஞர் ஆல்பர்ட். ஒரு நண்பனின் வற்புறுத்தலை மறுக்க முடியாதவராக ஒரு நாள், சுவைட்சர் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார். பறவைகள்மேல் வில்லுண்டை படக்கூடாதென எங்கேயோ குறிபார்த்து எப்படியோ வில்லை வளைத்து ஏவினார். தம் நண்பன் எந்தப் பறவையையும் அடித்து வீழ்த்திவிடக் கூடாதே என்ற அருளால் அவற்றை எழுப்பிப் பறந்தோடச் செய்து இன் புற்றார். அத்துணை இளக்கமானது அவர் உள்ளம். இறைவனுக்குச் செய்யும் நாள்வழி பாட்டுரையுடன் இறைவனே எல்லா உயிர் களுக்கும் அருள் சுரந்து நலம் செய்வாயாக! அமைதியாக உறங்குவதற்கு அருள்புரிவாயாக என்னும் வரிகளையும் சேர்த்துக் கொண்டு முறையிட்டார்! இளமையில் முதிர்ந்த பெருமகனார் ஆல்பர்ட் சுவைட்சர் அல்லவா! சுவைட்சரின் தலைமயிர் எளிதில் படியாதது. எத்தனை முறை சீவினாலும் எழும்பி நிற்கக் கூடியது. அதனைக் கண்ட பணிப்பெண், இத்தலை மயிரைப் போலவே இவன் அடங்கா தவனாக இருப்பான் என்று கூறுவாள். இவ்வுரையால் தம்மைத் தாழ்வாகக் கருதிக் கொண்ட சுவைட்சர் ஒரு நாள் ஒரு பொருட் காட்சி சாலையில் புனிதர் யோவான் உருவத்தைக் கண்டார். அவர் தலை தன் தலைபோலவே படியாமல் இருப்பதைக் கண்டு புறத் தோற்றத்துக்கு ஏற்றபடிதான் அகத் தோற்றமும் இருக்கும் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று உறுதி செய்தார். அவர் உள்ளத்தில் அமைதி உண்டாயிற்று. 1884 ஆம் ஆண்டு வரை சுவைட்சர் கன்சுபர்க் பள்ளியில் பயின்றார். பின்னர் ஓராண்டு மன்சிட் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இலத்தீன் மொழியைத் தனியே ஓராசிரியரிடம் கற்றார். முல்காசன் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். முல்காசனில் சுவைட்சரின் தந்தைவழிச் சிறிய பாட்டனாரும் பாட்டியும் இருந்தனர். அவர்கட்குக் குழந்தைகள் இல்லாமையால் ஆல்பர்ட்டை ஏற்றுப் போற்றினர். அங்கு எட்டாண்டுகள் இருந்து மிகத் திறமையாகக் கற்றார். ஆர்கன் இசைப்பதிலும் தேர்ந்தார். தம் பதினெட்டாம் அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு தாய் தந்தையிரிடம் சென்றார். நீகிரோ ஒருவனின் உருவச் சிலையைச் சுவைட்சர் தம் இளமையில் ஒரு நினைவுச் சின்னத்தில் கண்டார். அச்சிலையின் தோற்றம் ஆல்பர்ட் உள்ளத்தில் அளவிறந்த இரக்கத்தைத் தோற்று வித்தது. அச்சிற்பத்தை வாய்த்த போதெல்லாம் அடிக்கடி கண்டு கண்டு உருகினார். பின்னாளில் பிணிதீர்க்கும் பெருமகனாராகத் திகழத் தூண்டியவற்றுள் இச் சிற்பம் தலையாயது ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சர் இளம் பருவத்திலேயே இரக்கமிக்க வராய், எளிமை போற்றுபவராய், இறையன்பு மிக்கவராய் இசைச் தேர்ச்சி பெற்றவராய் இலங்கினார் என்பதைக் கண்டோம். விளையும் பயிர் முளையிலேயே என்பது மெய்யுரை யாயிற்று! 2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி இளமையிலேயே அன்பும், அருளும், இசைத்திறமும் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்; உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தம் பதினெட்டாம் அகவையளவில் முடித்த சுவைட்சர் அதன் பின்னர் மேல்நிலைக் கல்வியில் ஈடுபட்டார். சமய போதகராகிய லூயி சுவைட்சரின் மைந்தர் ஆதலால் ஆல்பர்ட் சுவைட்சருக்குச் சமயப் பற்று மிக்கிருந்தது இயற்கையே. குலவிச்சை கல்லாமல் பாகம் படும்! அதனால் 1893ஆம் ஆண்டில் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் மேல்நிலைக் கல்வி கற்கப் புகுந்த சுவைட்சர் சமய இயல், தத்துவம் ஆகிய இருபாடங்களையும் விரும்பி எடுத்துக்கொண்டார். இப்பாடங்களுக்கு இடையே எபிரேய மொழியை முயன்று கற்று முதிர்ந்த புலமை பெற்றார். கல்வி கற்றுவந்த காலையில் கட்டாய இராணுவப் பயிற்சியில் சேரவேண்டிய கடமைக்கு ஆட்பட்டார். அதே பொழுதில் உதவித் தொகை பெறுவதற்காக ஒருதேர்வு எழுதியாக வேண்டிய இன்றியமையாமையும் உண்டாயிற்று. அத்தேர்வுக்கு மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியவர்கள் அருளிய ஆகமங்களை ஆராயும் கடப்பாட்டை மேற்கொண்டார். இக்கல்வி இவர்தம் சமயத்துறை மேம்பாட்டுக்குப் பெருந்துணையாயிற்று. சுவைட்சர் 1897 ஆம் ஆண்டில் தத்துவத்தேர்வு எழுதுவ தற்காகத் தம்மை பதிவு செய்துகொண்டார். அத்தேர்வுக்குச் செல்பவர் தம் தகுதியை நிலைநாட்டுவதற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் வேண்டும். இயேசு நாதரின் கடைசி உணவு என்பதை ஆராய்ந்து திறம்பட எழுதினார் சுவைட்சர். அவ் ஆய்வுக் கட்டுரையில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியும் ஆசிரியர் பரிந்துரையும் இவரைக் கோல் என்னும் உதவித் தொகை பெறுவதற்கு உரியவர் ஆக்கின. கோல் உதவித்தொகை என்பது, ஆண்டுக்கு ஏறத்தாழ எண்ணூறு ரூபாய் அளவில் ஆறாண்டு கட்குத் தொடர்ந்து கிடைக்கும் தகுதி உடையதாகும். கோல் உதவித் தொகை பெறும் மாணவர் தாம் எடுத்துக் கொண்டபட்டப்படிப்பை ஆறாண்டு கால அளவுக்குள் முடித்தல் வேண்டும். அப்படிப்பை எப் பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். ஆகாவே இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சுவைட்சர் பாரிசு மாநகர் சென்றார். ஆங்கு சார்லசு விடார் என்பவரிடம் பயின்றார். ஆர்கன் வாசிப்பதிலும் பியானோ மீட்டுவதிலும் மேலும் தேர்ச்சி பெற்றார். கான்ட் என்பரின் தத்துவநூற் கொள்கைகளை ஆராய்ந்து தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். ஆய்வுக் கட்டுரையை வழங்கிப் பட்டம் பெறுவதற்கு முன்னர் இருந்த இடைக்காலத்தில் பெர்லின் நகர்க்குச் சென்று இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் தம் திறமையைப் பெருக்கினார். தேர்வுக்கு முன்னரே திருக்கோவில் போதகராக நியமிக்கப் பெற்றார். அங்கிருந்தவர் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆனார். ஆகவே, தேர்வு முடிந்த பின்னர் அவ்விடத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்தார். மாலை வேளையில் இவர் செய்து வந்த சமயச் சொற்பொழிவு சிறிது நேரமாக இருந்ததால் அதனை விரிவாக்குமாறு வேண்டினர்; மேலிடத்திலும் மக்கள் குறை கூறினர். அந்நிலையில் தாம் நெடும் பொழுது உரையாற்ற இயலாக் குறையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொண்டு எடுத்துக் கொண்ட மறைநூல் பகுதியை விரித்துரைக் இயலாமல் முடித்துவிடுகிற ஏழைப் போதகர் என்று தம்மைத் தாமே கூறினார். ஆயினும் தாம் பிறந்த ஆசிரியக் குடும்ப இயல்புக்கு ஏற்பச் சிறந்த ஆசிரியர் விரிவுரை ஆற்று போல் உரையாற்றும் திறத்தை விரைவில் பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? சுவைட்சருக்கு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் ரோமன் ரோலண்டுடன் தொடர்பு உண்டாயிற்று. நாடறிந்த உலகறிந்த பெருமக்கள் பலர் உறவும் தொடர்ந்து உண்டாயிற்று. செருமன் இலக்கியமும் தத்துவமும் என்னும் பொருள்பற்றிப் பாரிசு மாநகரில் தொடர்ந்து விரிவுரையாற்றினார். நாகரிகத்தின் தத்துவம் என்பது பற்றி நூல் எழுதுவதற்குத் திட்டம் வகுத்தார்; குறிப்புக்கள் தொகுத்தார். இந்நிலையில் தாம் கற்ற பல்கலைக் கழகத்திலேயே சமய நூல் பேராசிரியராகும் பேறு பெற்றார். பொழுதைப் பொன்னினும் சிறந்ததாகக் கருதி வாழ்ந்தவர் சுவைட்சர். டிராசுபர்க் பல்கலைக் கழகப் பேராசிரியராகிச் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவைட்சர் ஒரு விடுமுறையில் கன்சுபர்க் சென்றார். அவ்வேளையில் யான் தொல்லையோ துயரோ இல்லாமல் வாழும் பேறுபெற்றேன்; இப்பேற்றைப் பிறரும் பெறப் பாடுபடுவதைக் கடனாகக் கொள்வேன் என்னும் உறுதி பூண்டார். சமயம் தத்துவம் ஆய துறைகளில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் - அதாவது தம் முப்பதாம் அகவை வரை - பாடுபடுவதென்றும், அதன் பின்னர் பொதுநலத் தொண்டில் இறங்குவ தென்றும் உறுதி செய்தார். ஆம்! கற்பன கற்றார்; கற்றவாறு நிற்கத் திட்டமிட்டார்! அவர் திட்டம் வாழ்வதாக!! 3. பலதுறைப் பணிகள் ஒருவர் ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதே அரிது. பல துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக அரிதாகும். பல துறைகளில் தேர்ச்சி பெற்று அவ்வத் துறைகளில் எல்லாம் சிறந்த தொண்டு செய்வது அரிதினும் அரிதாகும். இத்தகைய அரிதினும் அரியதிறம் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். சுவைட்சர் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப் பல்கலைக் கழகச் சமயத் துறைத் தலைமைப் பொறுப்பும் ஏற்றார். இப் பணிக்கு இடையே திருக்கோவில் சமய போதகராகவும் திகழ்ந்தார். சமய இயல், தத்துவம் ஆகியனபற்றி அரும்பெரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தினார். இப் பணிகளுடன் சுவைட்சர் அமைந்தார் அல்லர். பாக் என்னும் இசைக் கலைஞரைப் பற்றிச் சீரியதோர் ஆராய்ச்சி நூல் இயற்றினார். பாரிசு மாநகரில் நிறுவப்பெற்ற பாக் இசைக் கழகத்தின் சிறப்பு விழாக்களில் ஆர்கன் வாசிக்கும் பொறுப்பும் ஏற்றார். இத்துணை வழிகளில் இடைவிடாது உழைத்தாலும் தாம் முன்னர்த் திட்டமிட்டுக் கொண்டுள்ளவாறு தம் முப்பதாம் அகவையில் பொதுப் பணியில் முழுமையாக ஈடுபடுவதையே விரும்பினார். எப்பணியைத் தேர்ந்தெடுப்பது? எங்கே தொடங்குவது? கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தின் விளம்பரத்தாள் ஒன்றைக் கண்டார் சுவைட்சர். அத்தாளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைத்த அருளாளர்கள் உடனே வேண்டும் என்னும் வேண்டுகோளைக் கண்டார். தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். சுவைட்சர் தம் இளமையில் கண்டறிந்த நீகிரோவின் சிலை கண்ணெதிரில் காட்சி வழங்கியது. காங்கோ சென்று அங்கே அல்லல்படும் மக்களுக்குத் தொண்டு செய்வதே தக்கது என்னும் முடிவுசெய்து அதற்குத் திட்டம் தீட்டினார். இவர் திட்டத்தை ஏற்பார் அரியர் ஆயினர். தெளிவற்ற முடிவு என்றும், வேண்டாத விருப்பு என்றும், கிறுக்குத்தனமான செயல் என்றும் பலவாறு கூறினர்; குழப்பினர்; ஆயினும் ஆல்பர்ட் சுவைட்சர் தம் திட்டத்தில் இருந்து சிறிதும் மாறினார் அல்லர். எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா! ஆப்பிரிக்காவுக்குச் சென்று என்ன தொண்டு செய்வது? கிறித்தவ சங்க அறிக்கை வழியாக மருத்துவப் பணி செய்வதே வேண்டும் என்பதை அறிந்தார். சமயம், தத்துவம், இறை வழிபாடு இப்பணிகளிலேயே பொழுதெலாம் செலவிட்ட சுவைட்சர் மருத்துவப் பணியை உடனே ஏற்க எப்படி முடியும்? பல்லாண்டுகள் பயின்று பயிற்சி பெற்றாலல்லவோ அப்பணியை ஏற்க முடியும்? இதனி எண்ணிச் சோர்ந்தாரல்லர் சுவைட்சர். தாம் பேராசிரியராக இருந்த பல்கலைக் கழக மருத்துவத்துறைத் தலைவரிடம் சென்று தம்மை மருத்துவ மாணவராகப் பதிவுசெய்து கொண்டார்! விந்தையான செய்தி. பல்கலைக் கழகத் துறைத்தலைவர், மற்றொரு துறையின் மாணவராகத் தம்மைப் பதிகிறார்! சுவைட்சரின் பொதுப்பணி நாட்டம் அத்தகையது! சுவைட்சர் இயற்கையாக ஏற்றுக் கொண்டிருந்த பலவகைப் பணிகளுக்கு இடையே மருத்துவக் கல்வி கற்பது இயலாததாக இருப்பினும் முயன்று கற்றார். 1911 ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வெழுதி வெற்றி கொண்டார். ஓராண்டுக்காலம் மருத்துவ மனையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் மருத்துவப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தார். இதற்குப் பின்னர், காங்கோவுக்குச் சென்று மருத்துவ பணி செயதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தாம் ஏற்றிருந்த பேராசிரியர் பதவியையும், சமய போதனைப் பணியையும் விட்டு விலகினார். செலன் பிரசுலோ என்னும் பெயருடைய ஒரு நங்கையை மணந்து கொண்டு, அவர்க்குத் தாதியர் பயிற்சி தந்தார். கிடைத்த பொழுதை எல்லாம் மருத்துவம் பற்றி மேலும் கற்கவும், வேண்டிய மருந்துகளைச் சேர்க்கவும் செலவிட்டார். வழக்கற்றுப் போய்க் கொண்டிருந்த ஆர்கன் இசைக்குப் புத்துயிரூட்டினார். அக்கருவி அமைப்பைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதினார். ஆர்கன் இசைக் கருவியில் ஏற்படும் பழுது பார்த்துச் செவ்வை செய்தார். இவ்வாறு பல்வேறு திறம் வாய்ந்த பலபேர்கள் செய்யும் செயற்கரிய செயல்களைத் தம் முப்பதாம் அகவை அளவிலே செய்தார், சுவைட்சர். சுவைட்சர் இணையற்ற முயற்சியாளர்; அயராத தொண்டர்; விலையாக்கிக் கொள்ளும் திறம் வாய்ந்தார்; அவர் எடுத்த பணி எதுவாயினும் நிறைவேறத் தவறியது இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட துறை யாதாயினும் ஒளிவிடாமல் போனது இல்லை. அவர்தம் முயற்சியும் தொண்டும் உலகுக்கு நல்வழி காட்டுமாக! 4. இலாம் பரினிப் பயணம் ஆல்பர்ட் சுவைட்சர் பொது நலத்தொண்டு செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ ஆகும். ஆங்கு வாழ்ந்த நீகிரோக்கள் தீராபிணிகட்கு ஆட்பட்டு அல்ல லுற்றனர். நாகரிகம் அறியாத மக்கட்குத் தொண்டு செய்து நல்வழிப்படுத்துவது தன் கடன் எனக்கொண்டு ஆங்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். அவர்மேற் கொண்ட செலவு பற்றி அறிவோம். சுவைட்சர் ஆர்கன் இசைப்பதன் வழியாக ஒரு தொகை சேர்த்திருந்தார். நூல் வெளியீட்டாலும் ஓரளவு தொகை ஈட்டி யிருந்தார். தம் சம்பளத்திலும் ஒரு பகுதியை மீதப்படுத்தி யிருந்தார். தக்கவர்களிடம் நன்கொடை வழியாலும் ஓரளவு தொகை சேர்த்தார். ஆக எவ்வுதவி இல்லாமலும் ஒரு மருத்துவ மனையை ஓரிரண்டாண்டுகள் தாமே நடத்த இயலும் என்று கணக்கிட்டறிந்தார். அதன் பின்னர்த் தம்மை மருத்துவப் பணிக்கு ஏவிய பாரிசு கிறித்தவ சங்கத்திற்கும் தம் விருப்பத்தை வெளி யிட்டார். கிறித்தவ சங்கத்தால் தம்மைக் கலந்து பேச வருமாறு ஆல்பர்ட்டை, தம் சமயத் சீர்திருத்த நோக்கத்தை விரும்பாத பலர் அக்குழுவில் இருப்பதால் அவர்களை நேரில் காண்பது தம் பயணத்திற்குத் தடையாகலாம் என்று எண்ணி அக்குழுவைக் காண மறுத்தார். எனினும் தனித்தனியே அவர்களைக் கண்டு கலந்து பேச ஒப்பினார். அவ்வாறே அவர்களைக் கண்டு தம் பயணத்திற்கு இசைவு பெற்றார். செருமணி நாட்டுப் பல்கலைக் கழக மருத்துவப் பட்டம் பெற்றவர் சுவைட்சர். அவர் பிரான்சு நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் பணி செய்யப் போகிறார். ஆகவே பிரான்சு நாட்டார் இவர் பெற்ற மருத்துவப் பட்டத்தை ஏற்று இசைவு அளிக்க வேண்டும். அவ் விசைவையும் பெற்றார். அன்றியும் அந்நாட்டவர் பலர் மனமுவந்து நன்கொடையும் வழங்கினர். பிற நாட்டவர்கள் உதவியும் கிட்டின. இவை சுவைட்சர் மேற்கொள்ள இருந்த பணிக்குப் பேருதவியாயின. சுவைட்சர் தம் உற்றார் உறவினர் களிடத்தும், உடன் பணி புரிந்தவர்களிடத்தும் அன்பு நண்பர் களிடத்தும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். சுவைட்சருக்குப் கப்பற் பயணம் புதிது தம் பணிக்கு வேண்டிய பொருள்களை எழுபது பெட்டிகளில் அடைத்துக் கப்பலில் ஏற்றிச் சென்றார். புறப்பட்ட இரண்டாம் நாளே கடலில் புயல் கிளம்பியது. கப்பலை சுழற்றி யடித்தது. பெட்டிகளைக் கட்டிவைக்காமையால் அவை சிதறி ஓடின. மூன்று நாட்கள் தொடர்ந்து புயல் வீசிற்று புயல் ஓய்ந்தபின்பே அமைதி தவழ்ந்தது. அதற்கு முன்னர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்கள் கடற் பயணம் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டின் இயற்கையமைப்பு, வெப்பதட்பம், நீகிரோவர் நிலை ஆயன பற்றியும் பலப்பல செய்திகளை விரித்துரைத்தனர். ஆப்பிரிக்காவின் வெயில் கொடுமை பற்றியும், காலை மாலைப் பொழுதுகளில் அடிக்கும் இள வெயிலால் உண்டாகும் வெயில் வாதம் பற்றியும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர். இச் செய்திகளை அனைத்தும் ஆல்பர்ட் சுவைட்சர் செய்யப்போகும் அரும்பெரும் பணிக்கு உதவுவனவாக இருந்தன. பயணத்தின் இடையே டாக்கர் என்னும் இடத்தில் சுவைட்சர் இறங்கினார். ஆங்கு அவர் கண்ட ஒரு சாட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. கரடுமுரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் ஒரு குதிரை வண்டியைக் கண்டார். வண்டி தாங்க மாட்டாத அளவுக்கு - குதிரைகள் இழுக்க மாட்டாத அளவுக்கு - பாரம் ஏற்றப் பெற்றிருந்தது. ஆயினும் வண்டியில் நீகிரோக்கள் இருவர் அமர்ந்து கொண்டு குதிரைகளை அடித்துத் துன்புறுத்திப் படாப்பாடு படுத்தினர். இதனைக் கண்ட சுவைட்சர் அங்கே சென்று அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னிருந்து தள்ளினார். வண்டி எளிதாகச் சென்றது. ஆப்பிரிக்காவில் செய்ய இருந்த தம் தொண்டைத் தொடங்கி விட்டார் சுவைட்சர். தொண்டு செய்வர்க்கு இவ்விடம் - இக்காலம் - இப்பணி என உண்டா? ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்பது தானே அறநெறி. டாக்காவிம் இருந்து புறப்பட்ட கப்பல் லோபசு என்னும் இடத்தைச் சேர்ந்தது. அங்கிருந்த சுங்கச்சாவடிகள் பொருட்கள் தணிக்கை செய்து வரி விதிக்கப் பெற்றன. அதற்கு மேல் ஓகேவே ஆற்றில் படகு வழியாகப் பயணப் தொடங்கியது. படகுப் பயணம் இலாம்பரினி வரைக்கும் உண்டு. அதற்குப் பின்னர், கிறித்தவ சங்கத்தின் பகுதிக்குத் தோணியில்தான் செல்ல வேண்டும். இலாம் பரினியை அடைந்த சுவைட்சர் பொருள்களைப் படகில் இருந்து தோணிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அந்நிலையில் கிறித்தவ சங்கஞ் சார்ந்த இரண்டு தோணிகள் விரைந்து வந்து, தங்கட்கு உதவ வந்திருக்கும் மருத்துவரையும், அவர் இல்லக் கிழத்தியாரையும் வரவேற்று வாழ்த்தின. பொருள்களை ஒரு தோணியில் ஏற்றி வைத்துத் தாமும் தம் மனைவியாரும் ஒரு தோணியில் அமர்ந்து தாம் சேர வேண்டிய கிறித்தவ சங்கத்தைச் சேர்ந்தனர். எடுத்துக்கொண்ட பணி பெரிது. பணி செய்யப் புகுந்த நாடு தொலைவானது; பழக்கப் படாதது; அந்நாட்டு மொழியோ தாம் அறியாதது. போக்குவரவு முதலாய எந்த வாய்ப்புக்களும் இல்லாதது. எனினும் துணிவே துணை தொண்டே கடவுட் பணி எனக் கொண்ட சுவைட்சர் தாம் செய்யப்போகும் பணிக்குத் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தார். இத்தகையரே அருளாளர் என்பதில் ஐயமில்லை! 5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த மருத்துவப்பணி சுவைட்சர் தம் முப்பதாவது அகவையில் எந்தப் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அந்தப் பொதுத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தினார். அத்தொண்டு அல்லல் மிக்கது. ஆயினும் அயராது பாடுபட்டு அரிய வெற்றி சுவைட்சரின் பேருள்ளத்திற்கும் பெருந்திறத்திற்கும் சான்றாகும். நீகிரோவர்க்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற சுவைட்சருக்கு அவர்கள் மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதற்காக அவரிடம் மருத்துவம் செய்யவந்த யோசேப்பு என்பவனை மொழிபெயர்ப்பாளியாக வைத்துக் கொண்டார். அவன் ஆங்கிலேயர் ஒருவர்க்குச் சமையற்காரனாக இருந்தவன். ஆதலால் அவனுக்கு மொழி பெயர்ப்புப்பணி ஏற்றதாயிருந்தது. இப்பணியில் அவன் நெடுநாள் நிலைத்திருக்கவும் செய்தான். மருத்துவ மனைக்கு வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும். ஆகவே உடனடியாகப் பார்க்க வேண்டிய நோயாளர்கள் மட்டுமே முதற்கண் தம்மிடம் வருமாறு பக்கங்களில் பறையறைந்து அழைக்கச் செய்தார். ஆனால் எல்லா நோயாளர்களுமே கூடிவிட்டனர். வீட்டு வாயிலில் தான் மருத்துவ ஆய்வு நடத்த வேண்டியதாயிற்று. அங்கு வெயில் பட்டாலே வெயில்வாதம் உண்டாகி அல்லல் படுத்தும் வீட்டு நிழலில் மருத்துவ ஆய்வு செய்யவும், மரநிழலில் தங்கவும் முடிந்தது. ஒவ்வொரு நாளும் நோயாளிகள் வந்ததும் அவர்களை உட்காரவைத்து மருத்துவர் மனைக்குப் பக்கத்தில் எச்சில் துப்பக்கூடாது. கூச்சல் போடக்கூடாது. தங்களுக்கு ஒருநாளுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவர வேண்டும். மருத்துவர் இசைவு இல்லாமல் இரவில் எவரும் தங்கக்கூடாது. மருந்துதரும் சீசாக்களும் டப்பாக்களும் திருப்பித்தரப்பெற்ற வேண்டும். மாத நடுவில் கப்பல் வந்து திரும்பும்வரை உடனடி நோயாளர்கள் மட்டுமே பார்க்கப் பெறுவர் என்னும் செய்திகளை உரக்கப் படிப்பர். இச்செய்திகள் அவர்கள் வழியாக மற்றவர்கட்கும் பரவும். ஒவ்வொரு நாளும் காலை எட்டுமணிக்கே மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடும். நண்பகல் பன்னிரண்டரை மணி உணவுவேளை. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணிவரை மீண்டும் மருத்துவம் செய்யப்படும். அன்று பார்க்கப்படாமல் எஞ்சிய நோயாளர் மறுநாள் பார்க்கப்படுவர். நோயாளர் ஒவ்வொருவர்க்கும் வட்டமான ஓரட்டை கொடுக்கப்படும். அவ்வட்டையில் மருத்துவரின் பதிவுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள நோயாளியின் எண் இருக்கும். அதன் துணை யால் அவன் நிலை, மருந்து முதலியவற்றைக் கேட்டுப் பொழுதை வீணாக்காமல் மருந்து கொடுக்க வாய்ப்பாக இருந்தது. அவனிடம் கொடுத்துத்திரும்பப் பெற வேண்டிய சீசா, டப்பா முதலியவையும் அதில் குறிக்கப் பெற்றிருந்தன. ஆதலால் அவற்றைத் திரும்பப் பெற உதவியாக இருந்தது. நாள்தோறும் முப்பது நாற்பது நோயாளர் மருத்துவ மனைக்கு வந்தனர். மலேரியாக் காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையீரல் கோளாறு, வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் அங்கே மிகுதியாக இருந்தன. சொறி சிரங்கும் மிகுதி. குருதி கொட்டும் வரை சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இந்நோய்க்கு உடலைக் குளிப்பாட்டி ஒருவகை மருந்தைப்பூசி விரைவில் குணப்படுத்தினார், சுவைட்சர். நுரையீரல் நோய் பலருக்கு இருந்தது. அந்நோய்க்கு மருத்துவம் செய்வது ஐரோப்பாவைவிட எளிதாகவும், விரைந்து பயன் தருவதாகவும் இருந்தது. கிறுக்கர் எண்ணிக்கை ஆப்பிரிக் காவில் குறைவு. ஐந்தாறு கிறுக்கர்களுக்குச் சுவைட்சர் மருத்துவம் செய்தார். அவர்கட்கு மருத்துவம் செய்வது கடினமாக இருந்தது. நஞ்சு, ஊட்டுவதாலும் சிலரைக் கிறுக்கர்கள் ஆக்கும் கொடுமை ஆப்பிரிக்காவில் இருந்தது. இவ்வகையால் கிறுக்கர் ஆகியவரை எம் மருத்தாலும் சரிப்படுத்த முடிவதில்லை. காங்கோவில் பெருவாரியாக இருந்த நோய்களுள் தூங்கு நோய் என்பதொன்று உகண்டா என்னும் பகுதியில் தூங்கு நோய் பரவிய மூன்றாண்டுகளில், ஆங்கிருந்த மூன்று நூறாயிரம் பேர்களில் இரண்டு நூறாயிரம் பேர்கள் இறந்தனர். காய்ச்சலுடன் தொடங்கும் இந்நோய், தூக்கத்தில் கொண்டு வந்து வைக்கும். பொறுக்க முடியாத தலைவலி யுண்டாகும். மூளைக் கோளாறும் உண்டாகிவிடும். இறுதி நிலையில் வரும் தூக்கத்தால் மயக்கம் உண்டாகும். உடல் மரத்துப்போகும். சாவும் எளிதில் வராது. பிழைக்கவும் முடியாது. இத்தொற்று நோய் மருத்துவத்திற்கு ஒதுங்கலாக ஒருவிடுதி வேண்டியதாயிற்று. ஆகவே சுவைட்சரின் பெரும் பொருளையும் பொழுதையும் இந்நோய் கவர்ந்து கொள்ளத் தவறவில்லை. எதற்கும் அயராதவராயிற்றே சுவைட்சர்! அதனால் வெற்றி கண்டார். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் தொடங்கியது. அதன் விளைவதென்ன? அருட் பணிக்கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்ட சுவைட்சரும் அவர் மனைவியாரும் சிறை செய்யப் பெற்றனர். செருமணி நாட்டைச் சேர்ந்தவர் சுவைட்சர். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்க்குத் தொண்டு செய்யலாமா? இரண்டும் பகை நாடு ஆயிற்றே! என்னே அரசியல்! சுவைட்சரும் அவர் மனைவியாரும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும், மருத்துவப் பணி புரியக்கூடாது என்றும் தடை விதிக்கப் பெற்றனர். இவற்றுள், மருத்துவம் செய்யக் கூடாது என்பதே துயரூட்டியது. ஐரோப்பியர் நீகிரோவர் ஆகிய இருசார்பினருமே இத்தடையை எதிர்த்தனர். இவர் தம் ஆசிரியர் சார்னர்சு விடார் தடையை நீக்க முயன்று வென்றார். மீண்டும் மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். போரின் விளைவால் வெளிநாடுகளில் இருந்து பணவரவும் மருந்து வரவும் நின்றன. உள்நாட்டில் அவ்வப்போது சிறிதளவு வந்த வருவாயும் நின்றது. மனைவியார் உடல்நிலை சீர்கெட்டது. ஒன்றின்மேல் ஒன்றாகத் துயர் மேலிட்டன. நாலறை யாண்டுகள் பணி செய்ததற்குப் பயனாகப் பெற்று ஐரோப்பாவுக்குக் கப்பலேறினர். நஞ்சையூட்டு போதினும் அஞ்சாதவரே தொண்டர் அல்லரோ! ஆப்பிரிக்காவில் சுவைட்சர் செய்த உயிரிரக்கப் பணிகள் சொல்லொண்ணாய் பெருமையுடையன. அவ்வேளையில் அவர் பட்ட அல்லல்களும் சொல்லொண்ணாதவை. ஆனால் அவற்றை அவர் அல்லலாகக் கருதினார் அல்லர். அல்லல் அருளாள்வார்க் கில்லை வெளிவழகு மல்லல்மா ஓலாம் கரி என்பது பொதுமறை. 6. நீகிரோவர் வாழ்க்கை முறை ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகள் ஒன்று ஓகேவே அவ்வாறு எழுநூறு கல் நீளமுடையது. அவ்வாற்றின் பகுதியில் எட்டுக் குழுக்களைச் சேர்ந்த நீகிரோவர் முன்னர் வாழ்ந்தனர். அவர்களுள் கலோவா என்னும் ஒரு குழுவினரே எஞ்சினர். மனிதரைக் கொன்று தின்னும் ஒரு கூட்டத்தாரும் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி உயிர்க் கொலையைக் தொடங்கி யுள்ளனர். நீகிரோவர் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் வாழைப் பழம். மரவள்ளிக் கிழங்கு ஆகியவையே. அங்கே நெல் முதலிய தானியங்கள் விளைவதில்லை. வேறு நாடுகளில் இருந்தே தானியங் களும், பாலும் அரிசியும் பெறுகின்றன. நீகிரோவர்களும் சிலர் முகமதியர் சிலர் கிறித்தவர். எச்சமயம் தழுவினவராக இருந்தாலும் தம் பழைய பழக்கவழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் விடுவதில்லை. நாகரிமற்றவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், காட்டு வாழ்வினராகவும் இருப்பதால் இவர்களை நோய்கள் வளைத்துச் சூறையிடுகின்றன. நோய்கள் வந்தால் சாவது அன்றி வேறு வகையில்லை. நீகிரோக்களில் மந்திரவாதிகள் உண்டு. நோயைத் தீர்க்க வல்லவன் மந்திரவாதியே என்று நம்புகிறார்கள். நோயைத் தீர்ப்பவனால், அதை உண்டாக்கவும் முடியும் என்று கருதி மந்திரவாதிகட்கு மிக அஞ்சுவர். சுவட்சரையும் மந்திரவாதி என்றே கருதினர். நோய்களைத் தீர்த்தால் அல்லவா! மருத்துவர் தரும் அடையாள அட்டையை மந்திரத் தகடாகக் கருதி அதைத் தவறவிடுவது இல்லை. அடிமைக்கு அடையாளமாகத் தந்த அட்டையுடன் இவ்வட்டையையும் சேர்த்துக் கட்டிக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வர். மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை அறியார். எத்தனை முறை கூறினால் புரியார். பல நாட்களுக்குப் பல வேளைகளுக்குத் தந்த மருந்தை ஒரே முறையில் சாப்பிட்டு விடுவதுண்டு. பூச்சு மருந்தை உட்கொண்டு விடுவதும், உட்கொள்ளும் மருந்தைப் பூசிக் கொள்வதும் எளிய காட்சி! தங்களுக்கு வேண்டாதவர்களை எவ்வழி கொண்டும் ஒழித்து விடுவது ஆப்பிரிக்கர் இயல்பு. தேடிப் பிடித்து நஞ்சு வைத்து விடுவர். தங்களை மதிக்காதவர், மறைவாக வைத்திருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியவர் ஆயவரையும் நஞ்சூட்டி விடுவர். தங்களுக்கு நஞ்சுவைத்து விடுவர் என்று ஒவ்வொரு நீகிரோவும் அஞ்சுவதுடன், மந்திரத் தகட்டுக்கு மிக அஞ்சுவர். ஆவதும் அழிவதும் மந்திரத் தகட்டால்தான் நடக்கிறது என்பது அவர் களின் திட்டவட்டமான முடிவு. சரியான மந்திரத்தகடு வைத்திருப்பவன் எவனை அழிக்க விரும்பினாலும் அழித்து விடலாம். என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்பது அவர்களின் அசையாத உறுதிப்பாடு தோட்டத்தைக் காப்பதற்கும் மந்திர சீசாக்களை மரத்தில் கட்டி வைப்பர். மந்திரவாதி அப்பகுதியில் திரிவதாக எவரேனும் பரப்பி விட்டால் எவரும் வெளியேறாமல் வீட்டுள் அடைந்து கிடப்பர். பலநாட்கள் பட்டினியாகவும் வீட்டுள் இருப்பர். ஏனெனில், மந்திரவாதி மண்டைச்சில்லை எடுத்து மந்திரத் தகடு செய்து விடுவானாம். புகையிலைக்கு நீகிரோவர் கொடுக்கும் மதிப்பு அளவிட முடியாதது. இங்கு வரும் அமெரிக்கப் புகையிலை மிகக் காரமானது. புகையிலையைச் சில்லறைப்போலப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது புகையிலை தருவதாகச் சொன்னால் பலவேலைகள் நீகிரோவர் செய்யக் காத்திருப்பர். ஒருவரிடம் இருந்து ஒருவராகச் சுக்கானை வாங்கி மாற்றி மாற்றிப் புகைத்துக் கொண்டிருப்பர். நீகிரோ வேலைக்காரர்களில் மிக நல்லவனைக் கூட நம்ப முடியாது. எதனையும் அவர்கள் கைக்கு அகப்படாதவாறு பூட்டிக் காக்க வேண்டும். அல்லது, வேலை செய்யும் போது உடன் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் பெருமைக் குறைவாக எண்ணுவது இல்லை. யாக இல்லாதவர் பொருளை எடுத்துக் கொள்வது தவறு என்று அவர்கள் எண்ணுவதே இல்லை! பூட்டி வைக்காதது கம்பி நீட்டிவிடும் என்பது அவர்கள் பழமொழி. இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழிலுக்குச் சென்ற போது ஒருவன் இறந்துவிட்டால் இறந்தவனுக்குப் பொறுப்பாளி உடன் இருந்தவனே என்று குற்றஞ் சாட்டுவதும் பழிவாங்குவதும் நீகிரோவர் நீதி. நீதிக்காக எவ்வளவு கடுந்தண்டனையையும் தாங்கிக் கொள்வர். தவறு செய்து தண்டனை கிடைக்கவில்லை என்றால் தங்களால் தவறு செய்யப்பட்டவர்கள் அறிவற்றவர்கள் என்று நினைப்பர். நீகிரோவர் சோம்பேறிகள் அல்லர். ஓய்வு ஒழிவின்றி வேலை செய்வர். இயற்கையின் குழந்தைகளாக அவர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தேவை அளவுக்குகே உழைக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குறைவு. அத் தேவைகள் இயற்கையில் எளிமையாகக் கிடைக்கின்றன. அதனால் கூலிவேலை செய்து பொருள் திரட்ட வேண்டிய இன்றியமையாமை இல்லை. திருமணம் செய்தல், துணி எடுத்தல், புகையிலை வாங்குதல் இவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவுக்குகே கூலிவேலை செய்வர். வேண்டிய அளவு தொகை கிடைத்துவிட்டால் வேலைக்குப் போக மாட்டான். ஆதலால் அவரைச் சோம்பேறி என்று சொல்ல முடீயாது. நீகிரோவர் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறைகள் ஆகியன பற்றி ஆராய்ச்சிகள் செய்து நூலாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் சுவைட்சர். நீகிரோவர் மேல் எக்குற்றத் தையும் ஏற்றமுடியாது. அவர்கள் அறியாமை அத்தகையது! அறிவுடைய கூட்டம் அக்கறை காட்டி வளர்க்காமையே குற்றம் என்பதே உண்மை. 7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில் ஆல்பர்ட் சுவைட்சர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்களுள் ஒன்று கன்னிப் பெருங்காட்டின் கங்கிலே என்பதாம். ஆப்பிரிக்காவுக்குச் சென்று தாம் செய்த பணி குறித்தும், அங்குச் சென்றதால் உண்டாய பட்டறிவு குறித்தும் விரித்தெழுதி யுள்ளார். அவர் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கம் வருமாறு. நாலரை யாண்டுகளாக நான் பெற்ற பட்டறிவு இங்கு வந்து பணிசெய்ய வேண்டு என்று நான் செய்த திட்டம் சரியானது என்பதை மெய்ப்பிக்கிறது. இயற்கை வாழ்வினராகிய நீகிரோக்கர் நம்மைப்போல் கொடிய நோய்களில் நலிவடையார் என்று என் திட்டத்தைத் தடுக்குமாறு கூறிய நண்பர்களின் உரை தவறானது என்பது எனக்குத் தெளிவாயிற்று. மற்றை இடங்களைப் போலவே இங்கும் கொடு நோய்கள் உள்ளன. ஐரோப்பியரே கொண்டு வந்தனர். நாகரிகமுறாது இயற்கையின் மடியில் வாழும் இவர்கள் நம்மைப் போலவே நோய்த்துயர் படுகிறார்கள். மருத்துவ உதவி பத்தாண்டுகளுக்கு அறவே நமக்கு இல்லை என்றால் நம் குடும்ப வரலாறு என்னாகும்? இத்துயர் நீகிரோவர்க்கும் உண்டு. நாகரிகம் படைத்த நாம் நம் உறக்கம் நீங்கி நம் கடமையை உணரவேண்டும். தொலையிடங்களிலுள்ள நோயாளர்க்குப் பாடுபடுவதே என் கடன். இறைவன் பெயரால் அனைவர் உதவியையும் வேண்டு கிறேன். நீகிரோவின் தொல்லைகளை அகற்றுதல் நற்பணி, என்பது மட்டுமன்று! நம் தீராக் கடடையும் ஆகும். இறைவன் வழியை பின்பற்றுவராகத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பியர் இந்நாட்டைக் கண்டு பிடித்தது அழிவு செய்வதற்காகவே? இவர்கள் ஆளும் பொறுப்பு ஏற்ற பின்னரும் பலர் இறந்தனர். இறந்து கொண்டு இருக்கின்றனர்; இருப்பவர் நிலையோ மிகச் சீர்கெட்டு வருகிறது. ஐரோப்பியர் செய்துவரும் கேடுகளாலேயே இவை நிகழ்கின்றன. இவர்களுக்குப் பழக்கிவிட்ட குடிகளும், பரவவிட்ட நோய்களும் சீர்கேட்டுக்கு அடிப்படை. நாம் நீகிரோவர்க்குச் செய்யும் நன்மை நல்லெண்ணத்தால் செய்வதாகக் கொள்ளக் கூடாது. நாம் செய்த கொடுமைகளை ஓரளவு ஈடு செய்வதற்கே ஆகும். ஆளுகின்ற அரசு பல மருத்துவர் களை அனுப்ப வேண்டும். சமூகமும், தனிப்பட்டோரும் ஈடுபட்டாதல் வேண்டும். தாங்கள் செய்யும் நன்மையால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்கட்கு ஒரு பெரிய பரிசாக திகழும். நீகிரோவர் பொருளைப் பெற்று நாம் வாழ்க்கை நடத்தவும், பணி செய்யவும் இயலாது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் வாய்ப்புக் களை உண்டாக்கித் தரவேண்டும். இஃது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நோய்த்துயர் இன்னதென்ன அறிந்த கூட்டத்தாரே முதற்கண் இதற்கு உதவ முன்வரவேண்டும். நோய் படுத்தும் பாட்டையும் அல்லலையும் அவரறிவர். நோயால் உண்டாம் துயர் தீரப்பெற்ற ஒருவன் தன்னைப் போலவே பிறனும் அத்துயரில் இருந்து விடுபடுதற்கு உதவுவானாக. இத்தகைவனே குடியேற்ற நாட்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தக்க பொறுப்புடையவன் ஆவன். இக்கொள்கையை உலகம் ஒரு நாள் ஏற்றே தீரும். ஏனெனில் அறிவுக்கும், உணர்வுக்கும் பொருந்திய மறுக்க முடியாத உண்மை இது. என் உடல் நிலை 1918 முதல் குன்றியது. இரண்டு அறுவை யால் குணம் பெறமுடிந்தது. பல இடங்களுக்குச் சென்று சொற் பொழிவு செய்ததாலும் ஆர்கன் இசைத்ததாலும் போர்க்காலத்தில் பட்ட கடனைத் தீர்த்தாயிற்று. தொல்லையிலும் தொடர்ந்து இம்மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை எனக் கொள்கிறேன். போரின் விளைவால் வேண்டிய பொருள்பெற முடிய வில்லை. மருந்தின் விலையோ மும்மடங்கு ஆயிற்று. இவற்றைக் கருதி, யான் சோர்வடைய வில்லை. நான் அடையும் தொல்லைகள் வலிமையூட்டுகின்றன. மக்கட் கூட்டம் உதவும் என்ற எதிர்கால நம்பிக்கையே மிகுகின்றது. நோயில் இருந்து விடுபட்ட பலர் பிறரும் நோயில் இருந்து விடுபட உதவுவாராக. வேறுபல மருத்து வரும் இப்பணிக்கு வருவாராக! சுவைட்சர் உள்ளம் பெரிது! வானினும் விரிவானது! அவர் தொண்டுள்ளத்தின் முத்திரையாக இலங்குவது கன்னிப் பெருங் காட்டின் கங்கிலே என்னும் நூல். அந்நூல், பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறள்மணிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதாம். 8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர் உலகப் போரின்போது போர்க் கைதியாக்கப் பெற்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு வரப்பெற்ற சுவைட்சர் போர்ட்டோ, கெரேசன், செயிண்ட் ரெமி முதலிய இடங்களில் சிறைவைக்கப் பெற்றார். இவரும் இவர் மனைவியாரும் உடல் நலக்குறைவு உற்றனர். 1918ஆம் ஆண்டு சூலைத் திங்களில் விடுதலை பெற்றார். சூரிச் நகருக்குச் சென்று, டிராசுபர்க்கை அடைந்தார். சுவைட்சர் தந்தையாரைக் காண விரும்பினார். அவர் இருந்த கன்சுபர்க் போர்க்களப் பகுதியாக இருந்ததால் இயன்று இசைவு பெற்றே போய்க் கண்டார். போர் அழிபாட்டையும் பஞ்சக் கொடுமையையும் நேரில் கண்டு உருகினார். தம் சொந்த ஊரில் தங்குவதால் தமக்கிருந்த காய்ச்சலையும், களைப்பையும் போக்கலாம் எனக் கருதினார். ஆனால் உடல்நிலை மிகச் சீர்கெட்டுக்கொண்டே வந்தது. ஆகவே மனைவியாருடன் டிராசுபர்க்குக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார். உடல் நலம் பெற்றதும் பணிசெய்வதை நாடினார் சுவைட்சர். மருத்துவப் பணியும், சமய போதனைப் பணியும் டிராசுபர்க்கில் கிடைத்தன. போர்க் கொடுமையால் செருமனியில் அல்லல் படுபவர்க்கு அவ்வப்போது உணவுப்பொருள் அனுப்பி உதவினார். தம் பணிகளின் இடையே நாகரிகமும் தத்துவமும் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி முடித்தார். 1919இல் பார்சலேனா என்னும் இடத்தில் ஆர்கன் வாசிக்க அழைப்பு வந்தது. சுவீடனைச் சேர்ந்த உப்சலா பல்கலைக் கழகத்தில் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்பு வந்தது. இவ்வழைப்புக்களால் தம்மை உலகம் மறந்து விடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அத்துறைகளில் தொண்டு செய்தற்கு வாய்ப்பு உண்டு என்று மகிழ்ந்தார். பல ஆண்டுகளாகத் தம் மனத்துக் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படுமாறு உலகம் உண்டு என்ற தத்துவக் கொள்கையும் ஒழுக்க நெறியும் என்னும் பொருள்பற்றி உப்சலாச் சொற்பொழிவை நிகழ்த்தினார். போர் மூண்டதற்குப் பின்னர் இலாம்பரினியில் மருத்துவ மனை நடத்துதற்காகப் பட்டிருந்த கடனை எவ்வாறு தீர்ப்பது என ஏங்கிக் கொண்டிருந்தார். சுவீடனில் இருக்கும் போதும் அவருக்கு இவ்வெண்ணம் இருந்தது. இதை அறிந்து இவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த பெருமகனார் ஆர்கன் இசைத்தும் சொற்பொழி வாற்றியும் பணம் திரட்டலாம் என வழி கூறினார். அவ்வுரையை ஏற்றுக்கொண்ட சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அமைந்த மருத்துவமனை குறித்துப் பேசினார்; ஆர்கன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்நாட்டை விட்டுப் புறப்படும்போது தாம் பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும் அளவுக்குச் செல்வம் சேர்ந்து விட்டது. மீண்டும் ஆப்பிரிக்கா சென்று மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளலாம் என்று முடிவு செய்தற்கும் தூண்டியது. ஆக சுவீடன் வாழ்வு பலவகைகளிலும் சுவைட்சருக்கு மகிழ்ச்சியாயிற்று. உப்சலாவில் இருந்த பதிப்பகத்தார் சுவைட்சர் நடத்திய மருத்துவமனை குறித்து ஒரு நூல் இயற்றித் தருமாறு வேண்டினர். அதனால் கன்னிப் பெருங்காட்டின் கங்கில் என்னும் நூலை இயற்றினார். அந்நூல் பல ஐரோப்பிய மொழிகளில் உடனே பெயர்க்கப்பெற்று நல்ல வருவாய் தந்தது. சொற்பொழிவாலும் ஆர்கன் இசையாலும் பணம் தேடமுடியும் என்னும் துணிவால் தாம் ஏற்றிருந்த பணிகளை விடுத்தார். மனைவியையும், தமக்குப் பிறந்திருந்த ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றார். அங்கே போய் நாகரிகமும் தத்துவமும் என்னும் நூலை எழுதத் திட்டமிட்டார். எனினும் சொற்பொழிவு, ஆர்கன் இசை அழைப்புக்கள் மிகுதியாயின. பொருள் ஈட்ட வாய்ப்பு என்று அவற்றில் மிக ஈடுபட்டார். சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல மேடைகளில் இசை மீட்டினார். அதன்பின் டென்மார்க், செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறு அவர் எண்ணிய எண்ணங்கள் இனிது நிறைவேறிக்கொண்டு வந்தன. 1913இல் இலாம்பரினியில் பணியாற்றச் செல்லுங்கால், ஆசிரியத் தொழில், இசை ஈடுபாடு ஆகியவற்றை விட்டுவிட முடிவு கட்டினார். பிறரிடம் பொருளை எதிர்பார்க்கக்கூடாது என்றும் திட்டமிட்டார். இவ்வனைத்தும் பொது நலம் கருதி மீண்டும் மேற்கொள்ளப் பெற்றன. இறைவன் திருவருள் என்றே இவற்றில் மீண்டும் ஈடுபட்டார். இறைவன் வழிகாட்டுதல் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கும் என்னும் குறிக்கோளு டையவர்கள் பெருமக்கள்! அவர்கள் வழி தூயது! துலக்கமானது! உலகுக்கு நலம் பயப்பது! அவர்கள் வழி வாழ்வதாக! 9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில் உயிர் இரக்கத்தால் உந்தப்பட்ட ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் வாழும் நீகிரோவர்க்குத் தொண்டு செய்வதற்காக 1913ஆம் ஆண்டு முறையாகப் போய்ச் சேர்ந்தார். அம்முதற்றடவையில் நாலரையாண்டுகள் பணி செய்தார். அதன்பின் ஏற்பட்ட முதல் உலகப் போரால் போர்க்கைதி யாக்கப் பெற்று ஐரோப்பாவுக்கு வந்தார். ஐரோப்பாவிற்கு வந்தாலும் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று தொண்டு செய்வதையே விரும்பினார். அங்குப் போய்ப் பணி செய்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடிக் கொள்வதற்காகவே உழைத்தார். வேண்டிய அளவு பணத்தை ஈட்டியதும் 1910 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலாம்பரினியில் மருத்துவமனை இருந்தது. ஆல்பர்ட் தோற்றுவித்து வளமுற நடத்திய மருத்துவமனை அது. சில ஆண்டுகள் பேணுவாறற்றமையால் அதன் பெரும்பாலான பகுதிகள் அழிபாடு அடைந்தன. ஓரிரண்டு கட்டடங்களின் அடித்தளங்கள் எஞ்சி நின்றன. சிலவற்றின் கூரைகள் பழதடைந்து கிடந்தன. அவற்றைப் பெருமுயற்சியால் சரிப்படுத்தி மருத்துவப் பணி புரிந்தார். நோயாளர் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டு வந்தமையால், ஐரோப்பாவில் இருந்து இரண்டு மருத்துவர்களையும் இரண்டு தாதியர்களையும் வரவழைத்துக் கொண்டார். இந்நிலையில் கடுமையான உணவுப்பஞ்சம் உண்டாயிற்று. வயிற்றுக் கடுப்பு நோய் பெருகியது. மருத்துவமனை போதாததால் இடத்தை மாற்றி விரிவாகக் கட்டவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஆற்று வெள்ளம், மலையில் இருந்துவரும் நீர்ப்பெருக்கு ஆயன தொல்லை தராத மேடான இடத்தில் கட்டடம் கட்டினார். பக்கங்களில் பயன்மிக்க பழமரங்கள் நட்டினார். இரண்டே ஆண்டுகளில் திரும்ப எண்ணியிருந்த அவர் திட்டம் மூன்றரை யாண்டாக வளர்ந்தது. 1927 சனவரியில் புதிய இடத்திற்கு மருத்து வமனையை மாற்றி அமைத்து மற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஐரோப்பாவுக்குப் பயணப்பட்டார். ஐரோப்பாவுக்கு ஆல்பர்ட் வருவதெல்லாம் ஆபிரிக்கத் தொண்டுக்குப் பணம் திரட்டுவதற்குத் தானே. அதனால், ஐரோப்பாவுக்கு வந்ததும் மீண்டும் சொற்பொழிவாலும், ஆர்கன் இசையாலும் பொருள் தேடினார். புனிதர்பால் அடிகளின் பத்தி நெறி என்னும் நூலை எழுதி முடித்தார். செருமன் கவிஞர் கேதேயின் நினைவுப்பரிசு இவரது மனிதசமூகத் தொண்டு கருதி வழங்கப் பெற்றது. அப்பொருளைக் கொண்டு, கன்சுபர்க்கில் கேதேமனை உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு சுவைட்சர் தாமும் தம் மனைவியும் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்கா சென்றனர். நோயாளர் மிகுதியைக் கண்டு மருத்துவமனைக் கட்டடத்தை மேலும் விரிவாக்கினார். மனைவியார்க்கு உடல்நலம் இல்லமையால் அவர் 1930 இல் ஐரோப்பா திரும்பினார். ஆல்பர்ட் 1932 இல் ஐரோப்பாவுக்கு மீண்டார். மீண்டும் 1933 இல் இலாம்பரினி சேர்ந்தார். 1934 இல் ஐரோப்பா திரும்பினார். ஓராண்டு ஐரோப்பாவில் தங்கினார். 1935 சனவரி 4 இல் தம் அறுபதாம் பிறந்த நாளை டிராசுபர்க்கில் கழித்தார். 1935 பெப்ரவரியில் ஆபிரிக்காவுக்குச் சென்று 1939 சனவரியில் திரும்பினார். இதற்கு இடையே 1938 இல் மருத்துவ மனையின் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நிலைமை தோன்றியது. ஆகவே சுவைட்சர் உடனேயே தாம் வந்த கப்பலிலேயே ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார். போர் முடிவால் பிரான்சுக்கும் இலாம்பிரினுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இங்கிலாந்து அமெரிக்கா இவற்றுடன் தொடர்பு உண்டாயிற்று. அமெரிக்க மக்கள் நிரம்ப பொருளுதவி புரிந்தனர். சுவைட்சரின் திருக்கூட்டத்தார் அமெரிக்காவில் பெருகினர்; போரும் நின்றது. பொருளும் உதவிகளும் பெருகின. உதவியாளர்களும் வந்தனர். இலாம்பரினிக்குச் சென்று அமெரிக்கர் பலர் பார்வையிட்டு, சுவைட்சரைப் பற்றியும், அவர் தொண்டு பற்றியும் நூல்கள் எழுதினர். இனி மருத்துவமனை இனிதாக இயங்கும் என்னும் எண்ணத்தால், 1948-இல் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். 1949இல் மீண்டும் இலாம்பரினிக்குச் சென்று 1952-இல் திரும்பினார். அல்லல் அடைவார் அவலம் போக்குதற்கென்றே ஆண்டவனால் அருளப்பெற்றவர் ஆல்பர்ட். அவர் புகழை நாடவில்லை. ஆனால் புகழ் நிழல்போல் தொடர்ந்தது. 1953இல் அமைதிப் பணிக்காக நோபல் பரிசு கிடைத்தது. 1955இல் பிரிட்டிஷ் அரசியார் பெருந்தகைவுடையர் என்னும் பெருமை தந்து பாராட்டினார். நல்லவர் உள்ளமெல்லாம் கோவில் கொண்டார் சுவைட்சர்! அவர் புகழ் வாழ்வதாக! 10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம் உள்ளத்தால் பொய்யாது ஒழுக்கியவர் ஆல்பர்ட் சுவைட்சர். இவர் நூலறிவு, பட்டறிவு, நுண்ணறிவு ஆயவற்றால் கண்டறிந்தவை நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும், உரைவடிவிலும் வெளிப் பட்டன. உலகுக்கு ஒளிகாட்டின. அவற்றுள், இவர் ஆக்கிய நூல்களில் திகழும் அரிய பொருள்களைப் பற்றிச் சிறிது காண்போம். பால் அடிகளின் பத்திநெறி என்பது சுவைட்சர் எழுதிய நூல்களுள் ஒன்று. இயேசு நாதர் வாழ்வு கட்டுக்கதை அன்று என்றும், அவர் வழங்கிய அருள்மொழிகள் புத்தொளி யுடைவை என்றும், ஓர் உயிர் தன்பாலும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் பாலும் ஈடுபாடு கொள்வதே பக்திநெறி என்றும், மனிதன் தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாது இறைவனுடன் இரண்டறக் கலக்க ஆவலுறுவதே பாலடிகளின் உள்ளம் என்றும் அந்நூலில் விளக்கினார். பாக் என்னும் என்னும் இசைக் கவிஞரைப்பற்றி இவர் எழுதிய நூலில் அப்புலவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இசையை, உணர்வுடன் கையாளும் திறத்தை விளக்கினார். ஆர்கன் கருவியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு நூல் எழுதினார். இசை வல்லார்க்கு இவ்விரு நூல்களும் எளிய விருந்தாயின. நாகரிகத்தின் தத்துவம் என்னும் நூலிலே மேல் நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் உலகம் பற்றி வெளிப்படுத்தப் பெற்ற பல்வேறு கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் வாழ்வுநெறியை இவை எவ்வாறு அமைத்தன என்பதை வரலாற்று முறையில் வெளியிட்டார். காட்டுமிராண்டி தன் குழுவுக்கு உதவி செய்தலே தன் கடமை என உணர்கிறான். பிறர்க்கு உதவி செய்வதைக் கருதாமல் அவன் என் உடன் பிறந்தான் என ஒதுக்குகின்றான். ஒவ்வொரு மனிதனும் நம்முடைய அருளுக்கும் அக்கறைக்கும் உரியவன் என்றால் நிலை நாகரிகம் உடையதெனக் கூறும் சமுதாயத்திலும் காணுதல் அரிதாகின்றது. இனம், சமயம், நாடு என்பன எதிரிடு கின்றன. அண்டையில் வாழ்பவனையும் அயலானாகக் கருதத் செய்கின்றன. இந்நிலை மாற யாவரும் கேளிர் என்னும் அடிப்படை அறம் உண்டாதல் வேண்டும். இதுவே மக்கட் பண்பு. யாவரும் கேளீர் என்னும் பண்பு பின்னர் யாவும் கேளே என்று விரிவடைய வேண்டும். எவ்வுயிர்க்கும் அன்பு காட்டு என்னும் நீதி, ஒழுக்க நெறியின் ஒளியாம். நான் வாழ வேண்டும் என்னும் கொள்கை மற்றோருயிர் நான் வாழ வேண்டும் என்னும் கொள்கைக்கு மாறுபட்டதாக இருத்தல் கூடாது. நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளதும் உயிர் அதுவும் என்னைப்போலவே வாழ விரும்புகிறது என்பதை உணர வேண்டும். இக்கருத்துக்களை விளக்கி உயிர்ப்பத்தி என்னும் நூலை உருவாக்கினார் சுவைட்சர். உலக சமய கோட்பாடுகளை ஆராய்ந்த சுவைட்சர் இந்திய சித்தாந்தங்களை ஆராய்ந்தார். இந்திய சித்தாந்தமும் அதன் வளர்ச்சியும் என்னும் நூலை ஆக்கினார். அதில் வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களையும் கீதை, திருக்குறள் முதலிய நூல்களையும் விரிவாக ஆராய்கிறார். குறளைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சிறப்புடையனவாம். உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறிபரவ விட்டுள்ளார். பகவத்கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்ற கருத்து அந்நூலில் கூறப்படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது. மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தியுள்ளார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தில் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறெந்த நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே உலகம் உண்மை என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப் பெற்றன. மேலும், கன்னிப்பெருங் காட்டின் கங்கில் என் வாழ்க்கையும் கொள்கையும் என் ஆப்பிரிக்கக் குறிப்புக்கள் என்னும் நூல்களையும் சுவைட்சர் இயற்றினார். பொற்சுரங்கம் போன்றவை சுவைட்சரின் நூல்கள்! அவர் நூல்களுக்கு எடுத்துக் காட்டான இலக்கியமாகத் திகழ்வது அவர் வாழ்வு! வாழ்வையே அருள் இலக்கியமாகிய பெருமகன் சுவைட்சர் என்றும் உலகில் வாழ்வாராக. 1. அருந்தவத்தோன் இறைவன் அருளாளன்; அழகே உருவம் ஆனவன்; அவன் அருள் அழகிலே தோய்ந்து தோய்ந்து பாடிய புலவர் பெருமக்கள் பலப்பலர். அவர்களுள் பெருந்தேவனார் என்பார் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர்களுள் ஒன்று பெருந்தேவனார் என்பது. அப்பெயரைத் தம் பெயராகத் தாங்கிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய இனிய பாடல்ஒன்று புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாகத் திகழ்கின்றது. சிவபெருமானது உருவக் காட்சியிலே உள்ளந்தோய்ந்தார் பெருந்தேவனார்; முடிமுதல்அடிவரை கண்டுகண்டு, எண்ணி எண்ணிக்களிப்படைந்தார்; கவியாகப் புனைந்து கற்பவர் நெஞ்சங் களை அக்கடவுட் காட்சியிலே ஊன்றுமாறு செய்தார். கார் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் கொன்றை மலரைத் தன் திருமுடிக் கண்ணியாகக் கொண்டுள்ளான் சிவன். கண்ணியாக மட்டுமோ அக்கொன்றை திகழ்கின்றது? மார்பில் திகழும் தாராகவும் அக்கொன்றையே உள்ளது. சிவனது செவ்வண்ண மார்பிலே மணி பதித்தால் போல அழகு செய்கின்றது அது. வெண்ணீற்றை விரும்பி அணியும் சிவன் தூய வெள்ளேற்றின் மேல் (காளையின் மேல்) ஏறி வருகின்றான்! அம்மட்டோ? அந்த ஏறே அவனுடைய சிறப்புமிக்க கொடியாகவும் விளங்கிப்பட்டொளி வீசுகிறது. செந்தழல் மேனிச் சிவபெருமான் கழுத்திலே கறை என்ன? ஆம்! நீலகண்டன் அல்லனோ அவன்! அது கறையா? இல்லை! இல்லை! செவ்வண்ணத் திருமேனியில் எழுந்த கருமணி! மண்ண வரும் விண்ணவரும் போற்றும் மாமணி. ஏன்? அமுது வேண்டி அமரர் பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் கிடைத்தது நஞ்சு! இறவாத வாழ்வை விரும்பி அமுதுவேண்டி நின்றோர்க்குக் கிடைத்தது. எளிதில் இறப்பளிக்கும் நஞ்சு! சாவவா பாற்கடல் கடைந்தனர்? சாவாமை நாடிய அவர்கள் சங்கரனைச் சார்ந்து நின்று வேண்டினர். நலிவு செய்யும் நஞ்சை அள்ளி உண்டு நீலகண்டன் ஆயினான். அவன் ஆலம் உண்ட நீலகண்டன் ஆனதால் அமரர் உயிர்தப்பினர். உயிர்அருளிய உரவோனை உயர்த்திப் பாடத்தவறவோ செய்வர்! உயர்த்தி உயர்த்தி அமரர் பாடினர்: அந்தணர் பாடினர்; அடியவர் பாடினர். கறையின் பெருமையே பெருமை! இதோ! சிவபெருமான் ஆண் வடிவாகமட்டுமோ தோன்று கின்றான்? மாதிருக்கும்பாதியனாக - அம்மை அப்பனாக - அருட்காட்சி வழங்குகின்றான். தன் ஒரு பாதியைப் பெண்ணுக்குத் தந்தவண்மை பெரிது. அது மட்டும் அல்லவே! அப்பெண்வேறு தான் வேறு என்று இல்லாமல் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்ளவும் செய்கிறானே அவன்! என்னே விந்தை! செஞ்சடையப்பன் திருமுடியிலே விளங்குவது என்ன? பிறை நிலா அது! அப்பிறையின் எழில் என்னே! ஒளி என்னே! நெற்றிக்கு அப்பிறையூட்டும் அழகு என்னே! அவ்வழகிலே நெஞ்சைப் பறிகொடுத்து வாழ்த்துப் பாடுவது ஒரு கூட்டமா? இரண்டு கூட்டமா? அமரர்கணங்கள் பதினெட்டும் அல்லவா அப்பிறையை வாழ்த்துகின்றன. இனி, பிறையைத் தாங்கிய சடையின் சீர்மைதான் என்னே! உலகத்து உயிர்களெல்லாம் காப்பது நீர். அந்நீரை வற்றிப்போகா மல்காப்பது அச்சடை! அச்சடை வாழ்க! அச் சடை அணிந்த அருந்தவத்துப் பெருந்தேவன் வாழ்க! என்று தொடர்ந்து எண்ணினார் பெருந்தேவனார். தம் எண்ணத்திற்குத் தமிழ்க் கவி உருவம் தந்தார். அவ்வுருவம் அவர் உருவமாகப் புறநானூற்றில் நின்று நிலவுகின்றது. வாழ்க பெருந்தேவனார். 2. அறப்போர் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உண்டாகும் சண்டையே போர் எனப்படுகிறது. அப்போர் மறப்போர் அல்லது வீரப்போர் எனப் பெயர் பெறும். அம்மறப்போரையும் அறப்போர் ஆக்கிய பெருமை பழந்தமிழர் உடைமையாம். அதனை இக் கட்டுரைக்கண் காண்போம். காலமும் இடமும் குறித்துக் களப்போரில் இறங்குவது பழந்தமிழர் போர்ப் பண்பாடு. அவர்கள் போரில் இறங்குமுன் பசுக்களும், பசுக்களை ஒத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளர்களும், மக்கட்பேறு இல்லதவர்களும் பாதுகாப்பான இடங்களைச் சேருங்கள், நாங்கள் போர் செய்யப் போகின்றோம் என்று கூறிப் பறை முழக்குவர். இச்செய்தியை அறிய மாட்டாத பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து பாதுகாப்புச் செய்வர். அதன் பின்னரே போர் தொடங்குவர். மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்பதற்கு இச்செய்தி சான்றாம். போர் நிகழும்போதும், மடித்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படை இழுந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் கொல்லாது போக விடுதல் வேண்டும் என்னும் அறமுறை வீரர்களால் மிகப் போற்றப் பெற்றது. இவ்வாறு அறப்போர்நிகழ்த்திய வீரவேந்தர்களுள் ஒருவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்பவன். வழுதி பலப்பலவேள்விகளை விரும்பிச் செய்தவன். மாற்றார்கள் எவ்வளவு முயன்றும் தழுவிக் கொள்ள முடியாத மதிற் சிகரங்களைக் கொண்டவன். ஆகவே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயர் பெற்றான். அப்பெரு மகனைப் பாடிய பெரும்புலவர் நெட்டிமையார் என்பர். அவர் வழுதியை நேரில் கண்டு அவன் செய்யும் அறப்போரை அழகுபெறக் கூறி வாழ்த்துகிறார். நிலந்தந்த புல்லைத் தின்று, நீரைப்பருகிப் பாலைச் சொரியும் வள்ளற் பசுக்களைக் களப்பலியிடலாமா? கூடாது. கூடவே கூடாது. ஆகவே போர் என்றால் என்ன என்பதையே அறியாத பசுக்களை நாட்டை விட்டே கொண்டு சென்றுகாத்தல் வீரர் கடன். அப்பசுக்கள் மட்டுமோ? அப்பசுக்கள் போல் அருள் பேணும் அந்தணர்களையும் நாட்டு நலம் கருதி காத்தல் கடமை. இனி, மெல்லியல் வாய்ந்த நல்லியல் நங்கையரை அழிப்பது தகுமா? பேயும்இரங்க வேண்டிய பெண்மையை நினைத்து இரக்கம் கொள்ளாதவன் பேராண்மையாளன் ஆவானா? ஆகான்! ஆகவே, மகளிரைக் காத்தல் வேண்டும். வாழப்பிறந்த மாந்தன் தன்குடி வாழ்வுக்குரிய மகப்பேறுபெறுதல்இன்றியமையாக் கடமை. அக்கடமையைச் செய்து முடிக்காத மகப்பேறு வாய்க்காத - பெற்றோர்களைக் கொல்லுதல் பெரும் பாவம். இப்படி எல்லாம் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி அறப்போர் புரியும் முதுகுடுமிப் பெருவழுதி நீ வாழ வேண்டும்; நீடு வாழ வேண்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். எத்துணைப் பல்லாண்டுகள்? ஆடுபவர்க்கு நீடிய பரிசுகளை வழங்கியவனும் கடல்விழா எடுத்துக் களிப்புற்றவனும் ஆகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரிய பஃறுளியாற்று மணல்கள் எத்துணை? அளவிடற்கு அரிது! அவ்வாற்று மணல்போல் எண்ணற்கு அரிய காலங்கள் வழுதி இனிது வாழ்வானாக. அறப்போர் பேணும் அண்ணல் ஆற்று மணல்போல் வாழ்வானாக என்று வாழ்த்தினார் நெட்டிமையார். வழுதி, மன்னவன்; நெட்டிமையார், பாடும்புலவர்; புலவர் வழுதியையா இப்பாடலில்பாடி வாழ்த்தினார். இல்லை! அற நெறியை வாழ்த்தினார். வழுதி அறம் பேணுகிறான்; ஆகவே அவன் வாழ்க என்று வாழ்த்தினார், அறத்தின் மேல் அவர்க்கிருந்த காதல் அது! வாழ்க அறப்போர்! வாழ்க அறவோர்! 3. பெற்ற பரிசில் பூவை நாடிச் செல்லும் தேனீ, பழமரம் நாடிச் செல்லும் பறவை. அவற்றைப் போல் இரவலர் ஈவாரைத் தேடிச் செல்வர். அவ்வாறு, இல்லை என்று இரந்து வருவாரை வரவேற்றுப் போற்றிய பெருமக்களுள் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் ஒருவன். கடுங்கோ, சேரநாட்டு வேந்தன். பாலை என்னும் அகத்திணை பாடுவதில் தேர்ந்தவன். அவனைப் பாடும் பேறு பெற்றார் இளவெயினி என்னும் பெயருடைய புலவர் பெருமாட்டி. இளவெயினி எயினி என்பவருக்குத்தங்கையாக இருந்தார். அவள் தாய் பேய்மகள் என்னும் பெயருடையவர். ஆகவே பேய்மகள் இளவெயினி எனப்பட்டார். அவர் பாலைபாடிய பெருங்கடுங் கோவைப் பாடினார்; பரிசில் பெற்றார். சேரனைப் பாடக் கருதிய புலவர் இளவெயினிக்குச் சேர நாட்டின் நினைவு தோன்றியது அந்நாட்டுத் தலைநகராம் வஞ்சி முன்னின்றது. அவ்வஞ்சி மாநகரில் வாழும் வஞ்சிக்கொடி போன்ற மகளிர்நினைவில் வந்தனர்; அன்னார் ஆன்பொருநை ஆற்றிலே விளையாடும் மணல் விளையாட்டு முன்னின்றது. அண்மையில் போருக்குச் சென்று வெற்றியுடன் திரும்பிய வேந்தனது படைத் திறமும் கொடைத்திறமும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன இக்கருத்துக்களை யெல்லாம் தண்டமிழ்ப் பாமாலையாக்கிப் பாலைபாடிய கோவுக்குச் சூட்டினார் இளவெயினி. மெல்லிய மயிரையுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலங்களையும் உடைய இளைய பெண்கள் மணலில்கோடு கிழித்து உண்டாக்கிய பாவைக்குப் பூக்களைச் சூட்டி விளையாடியும் தண்பொருநை ஆற்றிலே வீழ்ந்து நீர் விளையாட்டு நிகழ்த்தியும் களிப்படையும் வளமை வாய்ந்தது வஞ்சி மாநகர். அவ்வஞ்சி மாநகரின் வேந்தன் சேரமான் அவன் பகைவரின் அரண்களைக் கைக்கொண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வல்லாளன். அவர்களைப் பாடிச் சென்ற பாடினி மாற்றுயர்ந்த பொன்னால் ஆகிய அணிகலங்களைப் பெற்றாள். அவள் பாட்டுக்கு ஏற்பத் தாளக்கட்டு விடாமல் யாழிசைத்த பாணர் வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூக்களைப் பெற்றான். அவர்கள் பெற்ற பேறு என்னே! என்று வியந்து பாராடினாள் இளவெயினி. கடுங்கோவின் முன்னர் நின்று இவரிவர் இன்ன இன்ன பெற்றார்! யான் எதுவும் பெற்றிலேன்; இவர் இவர்க்கு இன்ன இன்ன நீ வழங்கினை; எனக்கு எதுவும் நீ வழங்கவில்லை என்று குறிப்பாக அறிவுறுத்தினார். வள்ளலின் கை தாழ்க்குமா? அள்ளி அள்ளி வழங்கியது பாடிய எயினி பரிசிலால் மகிழ்ந்தாள். பாடுதல் எமக்கு எளிது; ஆனால் பாடல் நயமறிந்து பரிசு வழங்குவதே அரிது என்று சங்கப் புலவர் ஒருவர் கூறினார். ஆம்! ஈகை, அரிய பண்பு; கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று குறிக்கப்பெறும் பண்புத், தாதா கோடிக்கொருவர் என்று பாராட்டப் பெறும் பண்பு. அப்பண்பில் தலை நின்ற பாலை பாடிய இளங்கடுங்கோ கற்பவர் உள்ளததெல்லாம் நிற்பான் என்பது உறுதி. 4. சேரமான் புகழ் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை ஓரிடத்தே அமைவது அரிது. அறிவு உடையவர் இடத்துப் பண்பும், பண்பு உடையவர் இடத்து அறிவும், அவ்விரண்டும் உடையவர்இடத்து ஆற்றலும் அமையக் காண்பது அரிது. அவை அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து அமைந்துவிடின் அத்தகையவர் பிறர் உள்ளங்களை எளிதில் ஆட்படுத்தி விடுவர் பாடும் புகழுக்கும்உரியவர் ஆவர். அத்தகையவருள் ஒருவனாக விளங்கினான். சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரஞ் சேரல் சேரர் பரம்பரையில் வந்தவன். இரும் பொறை என்பது அவன் பரம்பரைக்குரிய பட்டப் பெயர். யானையின் சிறிய கண்களைப் போன்ற கண்களை உடையவன். ஆகவே இவற்றையெல்லாம் கூட்டி, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனப்பட்டான். இம்மன்னவனைப் பன்முறையும் கண்டு அன்புறப் பழகினார் ஒரு புலவர் அவர் குறுங்கோழியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்தவர். ஆகவே, குறுங்கோழியூர் கிழார் என்று பிறரால் அழைக்கப்பெற்றார். அப்பெயரே தம் பெயராக அமைந்து விளங்கினார். கிழார் மாந்தரஞ்சேரலின் அறிவுப் பண்பிலே - பல்கலைத் திறத்திலே தம் நெஞ்சைப் பறிகொடுத்தார். விரிக்க விரிக்க விரிந்து செல்லும் பண்பு மேம்பாட்டிலே தோய்ந்து நின்றார். அவன் ஆட்சியிலே அவன் அடிசார்ந்த குடிமக்கள் அடைந்து நிற்கும் இனிய தண்ணிய வாழ்வை எண்ணி இன்புற்றார். ஆற்றல் பெருகிக் கிடந்தும் அறவழிக்கு அன்றிப் பிறவழிக்கு பயன்படுத்தாத பெருந்தகைமையைப் பெரிதும் தெளிந்தார். குறை சொல்லிக் கொண்டு எவரும் முறை வேண்டிவரும் நிலை இல்லை என்பதையும் அவ்வாறு வரினும் அக்காலையில் வேந்தன் செலுத்தும் செங்கோல் மாண்பு இத்தகையது என்பதையும் சிந்தையில் தேக்கினார். இத்தகைய அரிய தன்மைகள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்து ள்ளமையால் மக்கள் உள்ளங்களில் உண்டாக்கி இருக்கும் நல்லெண்ணத்தையும் ஆய்ந்து உணர்ந்தார். தம் கருத்தை எல்லாம் கூட்டி அதற்குப் பாட்டுருத் தந்தார். வேந்தே! விரிந்த கடலின் ஆழம், பெரிய நிலத்தின் அகலம், காற்று வீசும் திசை, உருவம் அற்று நிலைபெற்ற வானம்இவற்றை எல்லாம் அறிவாற்றல் மிக்கோர் அளப்பினும் அளக்கலாம். ஆனால், அவற்றை அளந்து காணும் அறிவினராலும் நின் அன்பு, அருள், அறிவு ஆகியவற்றை அளப்பது அரிது. சோறு சமைக்கும் போது உண்டாகும் தீயின் வெப்பமும், செங்கதிரோன் வெப்பமும் அன்றி நின்குடிகட்கு வேறு வெப்பம் எதுவும் இல்லை வான வில்லைக் கண்டது அன்றி வாட்டும் கொலை வில்லைநின் மக்கள் அறியார். உழுபடை (கலப்பை) அன்றிப் பிற படைகளை அவர்கள் அறிந்தது இல்லைபிறர் மண்ணை நீ பறித்துக் கொண்டதோ இல்லை அவ்வாறே மண்ணாசை கொண்டு நின்னாட்டின் மேல் வந்தாரும இலர். கருக்கொண்ட மகளிர் மண்ணை உண்டதை அன்றிப் பகைத்து வந்து நின் மண்ணைப் பற்றி உண்டார் இலர். நின் மதிலிலே அம்புகள் தங்கிச் செயலற்றுக் கிடக்கின்றன. அறமோ, நின் செங்கோலிலே தங்கிக் கிடக்கிறது. பழம்பறவை போயினும் புதுப்பறவை வரினும் நடுக்கம் இன்றிக் காவற்கடமை புரிகின்றனனை நீ. ஆகவே நின்கீழ்வாழும் உயிர்கள் அனைத்தும் நினக்குச் சீறுதீமையும் வருதல் கூடாதே என அஞ்சி வாழ்கின்றனர் என்று பாராட்டினார் குறுங்கோழியூரார். உள்ளதை உள்ளவாறு பாடுதல் எமக்கு எளிது என்று காட்டினார் கிழார். உள்ளம் உவக்க ஈவது எனக்கு எளிது என்று காட்டினான் சேரமான். ஈத்துவக்கும் இன்பம் ஒருவர்க்கு மட்டும் அல்லவே! இருவருக்கும் உரியது தானே! வாழ்க ஈத்துவக்கும் இன்பம். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு 5. மறப்பது எப்படி? நின்னை எப்பிறப்பிலும் மறவாமை வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டினான் கர்ணன். என் மார்பைப் பிளந்து பார்; அங்கே நின் உருவைக் காண்பாய் என்று சங்கப் புலவர் ஒருவர் தம் பேரன்புக்குரிய வேந்தனை நோக்கிக் கூறினார். நல்லதை மறப்பது என்பது புல்லியர் பண்பு. உப்பிட்டவரை உள்ளவரைநினைப்பது உயர்ந்தோர் தகைமை அத்தகு உயர்ந்தோ ராகத் திகழ்ந்தார் ஆவூர் மூலக்கிழார். ஆவூரைச் சேர்ந்த புலவர் மூலங்கிழார் சோழன் கிள்ளி வளவனது வரிசை அறிந்து வழங்கும் வள்ளன்மையிலே உள்ளம் தோய்ந்தார். வாரிக் கொடுக்கும் வள்ளல் எனினும், பாடும்புலவர் தகுதி அறிந்து - பாடல் தகுதி அறிந்து - கொடுப்பது அரிது. அவ்வரிய திறமை எளிதில் கைவரப் பெற்றவன் கிள்ளி வளவன். கிள்ளிவளவனை அன்புற நெருங்கி வாழ்ந்த புலவர் மூலங்கிழார். நெடுநாட்கள் அவனைக் காண வாராமல் இருந்தார். அரசனுக்கு அவரைக் காணும் ஆவல் பெரிதாயிற்று; ஏக்கமாகவும் மாறிற்று. எவர் எவரையே கேட்டுக் கேட்டுச் சலித்தான். ஒரு நாள் புலவரையே நேரில் கண்டான். தன் ஆவலை எல்லாம் சேர்த்து எம்மை நினைத்தீரோ? எந்த நாடு சென்றிருந்தீர் என்று வினாவு முகத்தால் எம்முள்ளீர்? எந்நாட்டிடீர்? என்றான். அதற்கு விடையாக அவன் சிறப்புக்களையெல்லாம் வடித்தெடித்த சாறாகப் பாட்டொன்று பாடினார். வேந்தர் வேந்தே! மலை போன்றவை நின் இளைய வலிய யானைகள்; அவற்றின் மேலே, வானத்தில் கறை உண்டாயின் துடைப்பது போல ஓங்கி உயர்ந்த வண்ணக் கொடிகள் யானையைத் தொடர்ந்து செல்லும் படைகள் எண்ணற்கு அரியன. மன்னவனே, நீ சினந்து பார்க்கின்றோரின் இடம் அப்பார்வை மட்டிலே தீப்பற்றி எரிகின்றது நீ அன்பால் விரும்பிப் பார்ப்பவர் நாடுகள் பொன்விளையும் கழனிகளாக மாறுகின்றன.. நீ கதிரோன் இடத்தில் இருந்து நிலவொளியைப் பெற விரும்பினால் விரும்பிய வாறே பெறுவாய் அவ்வாறே நிலவில் இருந்து வெயில் உண்டாக்க வேண்டும் என்று உண்ணினாலும் நின் எண்ணம் நிறைவேறத் தவறுவது இல்லை. வேண்டியவற்றை வேண்டியவாறு முடிக்கவல்ல வீரன் நீ. ஆதலால் நின்குடை நிழற்கண் பிறந்து அந்நிழலே தஞ்சமாக வாழும் யான் நின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ? பிறநாட்டில் இருந்து நின்னை நேரில் காணாமல் வேள்வி அளவால் அறிந்தவர்களும் நின்னைப் பாராட்டி மகிழ்கின்றனர். அரசே, மக்கள் தாம் செய்த நல்வினைக்கு ஏற்றபடி வானுலகம் சென்று ஆங்குள்ள இன்பம் நுகர்வர். ஆனால் அவ்வானிலோ ஒன்றை ஈவாரும் இலர்; இல்லை என்றி வந்து இரப்பாரும் இலர். ஆதலால் அவ்வானம் செயல் இகந்து பொலி வற்றது என்றே கூற வேண்டும் எனப் புலவர் கருதுகின்றனர். ஆங்குப் பெறும் இன்பம் அனைத்தும் நின்னாட்டில் ஒருங்குபெறக் கூடும் என்றே கருதுகின்றனர். ஆகவே புலவர்கள் எங்கு இருந்தாலும் - பகைவர் நாட்டில் இருந்தால்கூட நின் சோழ நாட்டையே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நான் மட்டும் நின்னை மறந்து வாழ்வேனோ? மறவேன். மறவேன்! என்றார் புலவர். தழுவிக் கொண்டான் கிள்ளி வளவன். செல்வக் குவியலிலே திளைப்பவன் வளவன்; பாடிப் பரிசில் பெற்று வாழ்பவர் ஆவூர் மூலங்கிழார் செல்வச் செருக்கு - வறுமைத் தாழ்வு - இவை ஆங்குத் தலைகாட்ட வில்லைஏன்? அன்பு தலைகாட்டியமையே காரணம். வாழ்க அன்பு வாழ்வு! அன்புற் றமர்ந்த வழக்கெனப் வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு 6. கோட்டிடை வைத்த கவளம் கோடு என்பது பல பொருள் ஒரு சொல்; அது வளைவு, மலை, கிளை, கொம்பு, தந்தம் முதலிய பல பொருள்களைத் தரும். இங்கே தந்தம் என்னும் பொருளில் வருகின்றது. யானையின் தந்தங்களுக்கு இடையெ தொங்கும் துதிக்கையில் வைக்கப் பெற்ற கவளம் என்னும் பொருளில் இச்சொற்றொடர் வருகின்றது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை அதிகமான் ஆண்டு வந்தான். அவன் உள்ளத்தால் உயர்ந்தோன். ஊருணி நீர் போலவும், உள்ளூர்ப் பழ மரம் போலவும் அனைவருக்கும் பயன்பட்டு வந்தான். அவனது பேரன்புக்கும் பெருநண்புக்கும் உரிமை பூண்டவராகத் திகழ்ந்தார் ஔவையார். ஔவையார், அதிகமான் அரண்மனையில் இருந்த பொழுது களில், எப்பொழுதும் புலவர் வந்தவண்ணமாக இருப்பதைக் கண்டார். நேற்று வந்து பரிசில் பெற்றோமே என்றும் எண்ணாமல் அவர்கள் மறுநாளும் வந்தனர்; அடுத்த நாளும் வந்தனர்; ஒருவர் இருவராக இல்லாமல் பலராகப் பல நாட்கள் தொடர்ந்து வந்தும் பரிசு பெற்றனர். அதிகமான் அவர்களை யெல்லாம் முதல்நாள் போலவே முகமலர்ந்து வரவேற்றுக் கொடுக்கும் வள்ளன்மையைக் கண்டு உள்ளம் உவந்தார் ஔவையார் தம் நெஞ்சார வாழ்த்தினார். அதிகமானிடம் விடைபெற்றுக் கொண்டு வேறு பல இடங் களுக்குச் சென்று மீண்டும் வந்தார் ஔவையார் அப்பொழுதில் அதிகமானை மிகுதியாகக் காணமுடிய வில்லை; அளவளாவிப் பேசமுடிய வில்லை; பரிசு பெற்று விடை பெற்றுக்கொண்டு போகவும் முடியவில்லை. சேர வேந்தன் அதிகமான் மேல்பகை கொண்டிருந்தான். அதிகமானை அழித்து ஒழிக்கவும் திட்டமிட்டிருந்தான். ஆகவே தன் படையைப் பெருக்கிச் சேரனை அழிக்கும் முயற்சியில் முனைந்திருந்தான் அதிகமான். அதனால் ஔவையாரை முன்னைப் போல் அவனால் பேண முடியவில்லை. நாம் வந்தபொழுது சரியில்லை என்று தமக்குள் ஔவையார் எண்ணினார்; நாட்கள் கடந்தன; பரிசில் தருதற்கு விருப்பம் இல்லாதவன் தான் இவ்வாறு நாட்களை நீட்டிக்கிறானோ என்னும் எண்ணம் அவருக்கு ஒரு நொடிப்பொழுது உண்டாயிற்று! மறு நொடியில் பேதை நெஞ்சமே, என்ன நினைத்தாய்? ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் பல நாளும். ஒருவர், இருவர் என்று இல்லாமல் பலரும், முதல் நாள் போல் பரிசு பெற்றுச் செல்ல வழங்கும் வள்ளல் அதிகமானா நமக்குப் பரிசு வழங்கத் தவறுவான்? தவறான், என்று மறு நொடியிலே எண்ணினார். மேலும் அவர் தம் எண்ணம் வளர்ந்தது. அதிகமான் என்ன வறுமைக்கு ஆட்பட்டு விட்டானா? அணிகலம் அணிந்த யானைகள் அவனிடம் குறைந்து விட்டனவா அழகு நடைபோடும் தேர்களும் குதிரைகளும் குறைந்து பேயினவா? அவன் பரிசு கிடைக்கலாம்; அல்லது நாளை கிடைக்கலாம்; அல்லது காலம் நீடித்தும் கிடைக்கலாம். ஆனால் பரிசு கிடைக்கத் தவறாது. யானை தன் கையில் சோற்றுத் திரளையை - கவளத்தை - எடுத்து வைத்துள்ளது. அதனை உடனே தன் வாய்க்குள் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் அல்லது சற்றே பொறுத்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் வாய்க்குள் போதில் தவறுமா? தவறாது. அதுபோலவே அதிகமான் தரும் பரிசிலும் ஒருநாளும் தவறப்போவதில்லை. அவன் தரும் பரிசு நம் கையகத்தே இருக்கிறது. ஆகவே அருந்துதலில் ஏமாற்றம் கொண்ட என் நெஞ்சமே. நீ வருந்த வேண்டா! அவன் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்! அவன் எடுத்துக் கொண்ட இனிய முயற்சி எளிதில் வெற்றி தருவதாக! வாழ்வதாக அவன் முயற்சி, என்று வாழ்த்தித் தம் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். பூமாலை வாடும்; பொழுதுபோனால் மணமும் தேனும் இல்லையாகும். பாமாலையோ என்றும் வாடா மாலை; வற்றாத் தேன் மணமாலை; அம்மாலையைப் பெற்ற அதிகமான் பேறு பெற்றேன். புகழுடலால் அதனை வாழச் செய்வன அப்பாமாலைகள் தாமே! 7. புலவரின் வள்ளன்மை இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவது வள்ளன்மையாம், வள்ளல் தன்மையே, வள்ளன்மை எனப்படும். வள்ளல்களை நாடித்தேடித் திரிந்து பொருள்பெறும் இயல்புடைய புலவரே வள்ளலாகத் திகழ்ந்த பெருமித மிக்க வரலாற்றை இவண் அறிவோம். பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர். பெரிய குடும்பம் உடையவர்; சுற்றமும் சூழலும் மிக்கவர்; அத்தகையவரை வறுமை வாட்டாமல் விடுமா? சித்தனாரின் மனைவியார் சீரிய பண்புகள் வாய்ந்தவர் மனைக்கு விளக்காக அமைந்தவர்; அவர்தம் அருந்திறப் பெருங் குணத்தால் அண்டை அயலார் அனைவரும் அவருக்குத் தக்க வண்ணம் ஆதரவாக இருந்தனர். குறிப்பறிந்து தாமே முன் வந்தும் பல வகையில் உதவினர்; கைம்மாற்றாகவும் வேண்டுவனவற்றை வழங்கினர்; இத்தகு நிலையிலே குடும்பம் என்னும் வண்டி ஒருவாறு உருண்டு கொண்டு இருந்தது. ஆனால், வறுமையின் வாட்டுதலைப் பிறர் எவ்வளவு நாட்கள் தாம் தடை போட்டுவிட முடியும்? சித்திரனார் குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கக்கூடும்; வறுமையுள் ஒருவன் உறங்க இயலாது என்பது பொய்யாமொழி. ஆகவே வள்ளலைத் தேடிச் செல்லும் எண்ணம் சித்திரனார்க்கு எழுந்தது. யாரைக் காண்பது? பல்லைக் காட்டி மானம் இழந்து பாடித் திரிவதற்குச் சித்தரனார் உள்ளம் உடன்பட வில்லை. குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல் யார்? என் எண்ணினார். முதிரமலை வள்ளல் - தலைக் கொடையாளி - குமணணே சித்திரனார் நெஞ்சில் தோன்றினான். புலவர் முதிரமலை நோக்கி நடந்தார். காடும் மலையும் கடந்தார்; கால்கடுக்க நடந்தார்; நெஞ்சில் நின்ற குமணனின் நேரில் நின்றார் சித்தரனார். உள்ளார்ந்த அன்பால் வரவேற்று உவகைக் கூத்தாடினான் குமணன். நெடுநாட்கள் தன்னுடன் தங்குமாறு வலியுறுத்தினான் பொழுதெல்லாம் புதுக் கவிதையிலும், இலக்கிய ஆய்விலும் கழிந்தது புலவரோடு அளவளாவி மகிழும் இன்பம் போல வேறு இன்பம் இல்லை என்னும் கருத்துடைய குமணனன் புலவரை எளிதில்போக விடுவானா? புலவர்க்கும் தம்கவியைச் சொட்ட சொட்ட நுகரும் அன்பனை விட்டுப் பிரிய மனம் வருமா? வராது எனினும் புலவர் தம் வறுமை வாழ்வு அடிக்கடி குறுக்கிட்டு ஊருக்குச் செல்லுமாறு ஏவிக்கொண்டே இருந்தது. குமணனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கினார் புலவர். குமணன் அளவிறந்த பொருள்களைப் பரிசாக வழங்கினான். பீடுமிக்க பெருஞ் செல்வர் போல் வீடு புகுந்து சித்தரனாரை வியப்புடன் வரவேற்றார் மனைவியார். பருவமழை வரக்கண்ட பயிர்போல் உற்றார் உறவினர் உவகை எய்தினர். புலவர், தம் மனைவியாரை நோக்கி, அன்புமிக்க மனைவியே, முதிரமலைத் தலைவன் குமணனன் கொடைவளம் இது. இதனை நின்னை விரும்பி வாழ்ந்து வருபவர்க்குக் கொடு. நீ விரும்பி வாழ்பவர்க்கும் கொடு; கற்பு மேம்பட்ட நின் சுற்றத்தார்க்கும் கொடு. நம் வறுமை தீருமாறு பயனெதிர் பாராது வழங்கியவர்க்கும், கைம்மாற்றாகப் பொருள் தந்தோர்க்கும் கொடு; இன்னார்க்கு என்று இல்லாமல் என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்று இல்லாமல் எல்லார்க்கும் கொடு. நானும் அவ்வாறே கொடுப்போன் என்றார். அவ்வாறே பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து பெருவாழ்வு வாழ்ந்தார் சித்திரனார். நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது வள்ளுவ நெறி அந்நெறியைச் செவ்வையாகப் போற்றி வாழ்ந்தவர் செந்தமிழ்ச் சித்தரனார். ஆகவே தாம் பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து ஈத்துவக்கும் இன்பம் எய்தினார். வாழ்க சித்தரனார்! வாழ்க அறநெஞ்சம்! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 8. ஏன் புகழ வேண்டும்? நில்லா உலகத்தில் நிலை பேறுடையது புகழ் ஒன்றே. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றாது நிற்ப தொன்றில் என்பது வள்ளுவம். அப்புகழை அடைதற்கு உலகம் பெரிதும் ஆவலுற்று நிற்கின்றது. அதிலும் புலவர் பாடும் புகழை அடையார் விண்ணுலக்கின்பமும் எய்தார் என்னும் கருத்து சங்க நாளில் இருந்தது. ஆகவே உயர் பெருமக்கள் புலவர் பாடும் புகழை விரும்பினர். புலவர்களும் தக்கோரைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தகைய புகழ் வாழ்வு ஒன்றை இக்கட்டுரைக் கண் காண்போம். இன்றைய புதுக்கோட்டைச் சீமை முன்னாளில் கோனாடு என்னும் பெயருடன் இலங்கியது. அவ்வூர்க்குப் பெருமைதரும் புலவர் மணியாக குமரனார் என்பார் பிறந்தார். அவர் மதுரையிலே வாழ்ந்தார்; மாடலன் என்பார் வழி முறையில் வந்தார். ஆகவே அவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனப் பெயர் பெற்றார். சோழனது படைத் தலைவனான ஏனாதி திருக்கிள்ளி என்பானைக் குமரனார் கண்டார். அப்பொழுது புலவர்கள் பலரும் அவனைச் சூழ்ந்திருந்தனர் அவனது சீரிய இயல்புகளையும் ஆற்றல்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏனாதியின் பகைவர்களைப் புலவர்கள் பழித்து உரைக்கவும் செய்தனர். திருக்கிள்ளி புலவர்களை நோக்கிப் புலவர் பெருமக்களே, நீங்கள் என்னையே புகழ்கிறீர்கள்; என் பகைவர்களைப் பழிக்கின்றீர்கள்; என்னிடத்தும் பழிக்கத்தக்க தன்மைகள் இருக்கக் கூடும்; என் பகைவர்களிடத்தும் புகழத்தக்க தன்மைகள் இருக்கவும் கூடும். அவற்றை உரைக்காமல் என்னையே புகழ்வது ஏன்? என் பகைவர்களையே பழிப்பதும் ஏன்? என்னைப் பழித்தாலும், என் பகைவர்களைப் புகழ்ந்தாலும் உங்களுக்குப் பரிசு கிட்டாது என்பது உங்கள் எண்ணமா? அவ்வாறு எண்ண வேண்டா. உண்மையை நான் மிக வரவேற்பேன்; மறைக்காமல் பாடுங்கள் என்றான். புலவர்கள் பலரும் அமைதி கொண்டனர், ஆங்கிருந்த குமரனார் வீறுடன் எழுந்தார், வீரச் செம்மலே, தாங்கள் கூறியவாறு உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். தங்களிடம் இன்னாததும் உண்டு; தங்கள் பகைவரிடம் இனியதும் உண்டு; கேளுங்கள்: தாங்கள் அச்சம் என்னும் ஒரு பொருளை அறியாமல் அமர்க்களம் போகிறீர்கள்; ஆங்கும் பகைவர் படைகளுக்கு நேர் முன்னர்ச் சென்று நிற்கிறீர்கள்; வாள் வேல், வில் விளையாடும் வெங்கொடுமைக் களத்திலே புகுந்து வீறுடன் போரிடும் தங்களை அவை வெட்டவும், குத்தவும், துளைக்கவும் செய்கின்றன; அதனால் உடலெங்கும் ஒரே வடுவாகக் காட்சியளிக்கின்றது; ஆதலால் தங்கள் ஆண்மையைப் பிறர் சொல்ல இனிமையாகக் கேட்டவர்கள் நேரில் வந்து தங்கள் உடலைக் காணுங்கால் அது இன்னாததாகத் தோன்றுகின்றது. தங்கள் பகைவர்களோ களத்தில் புறமுதுகிட்டு ஓடி ஒளிவதால் கேள்விக்கு இனிமை இல்லாதவராகத் தோன்று கின்றனர். ஆனால் நேரில் காணும்போது சிறிய வடுவும் இல்லாதவர் களாய்ப் பொலிவு மிக்க உடலுடன் கண்ணுக்கு இனியவராகக் காட்சி வழங்குகின்றனர். தாங்களும் ஒருவகையில் இனியர்; அவர்களும் ஒருவகையில் இனியர்; தாங்களும் ஒரு வகையில் இன்னாதவர்; அவர்களும் அவ்வாறே ஒரு வகையில் இன்னாதவர் எனினும் தங்களை மட்டுமே உலகம் பாராட்டுகின்றது. இஃது ஏன்? எனக்கு உண்மை புலப்படவில்லை. பெருமானே, தாங்கள் அறியக்கூடுமாயின் அறிந்து கூறுக என்றார். திருக்கிள்ளி நுண்ணிய அறிவினன்; புலவர் வஞ்சமாக உரைத்ததிலே உள்ள புகழ்ச்சியை அறிந்தான்; புலவர்களும் வியந்தனர்; குமரனாரின் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் அவையை மகிழ்வித்தன. புலமைச் சீர்மை பெரிது; புகழ்ச்சியால் பழிப்பு உண்டாகவும் செய்யலாம். பழிப்பால் புகழ் உண்டாகவும் பாடலாம் பாடுவோர் திறமையைப் பொறுத்தது. அத்திறத்தில் வல்லவர் மதுரைக் குமரனார் என்பதில் ஐயம் இல்லை. 1. சூயசு - பனாமா - திட்டங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தொகுத்து எழுதுக. மாந்தர் இனத்தின் அயரா முயற்சியால் அமைந்த பெருந் திட்டங்க்ள் பல. அவற்றுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன.இவ்வரும்பெருந் திட்டங் களுக்கும், தொல்பழம் பெருநிலமாம் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். உலக ஒருமைப்பாடு என்பது தமிழர்க்குப் புதுப்பொருள் அன்று. மிகு பழம் பொருளாம். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பழந்தமிழ்ப் பண். உலகம் ஒன்று ஆதலால் அதன் தலைவனான இறைவனும் ஒருவனே என்பது அவர்கள் தெளிவு. காலத்தையும் இடத்தையும் கடந்து தமிழர் கண்ட கனவை, அக்காலத்தையும் இடத்தையும் வென்றே உலகம் காண முடியும். அவ்வாறே கண்டது. விசை ஊர்திகள், நீராவிக் கப்பல்கள், வான்கலங்கள், தொலைபேசி, தொலை அச்சு, கம்பி இல்லாத்தந்தி, தொலைக்காட்சி, சேண்கதிரி முதலாய அறிவியற் புதுமைகள் உலகத்தைச் சுருக்கி நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. இவற்றைப் போலவே சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்களும் உலகத்தைச் சுருக்க உதவியுள்ளன. ஆகவே, உலக நெருக்கம் கருதிய தமிழகக் கனவு, இக்கடற்கால் இணைப்புக்களால் நனவாகியுள்ளதென்பது உண்மையாகும். எகிப்து நாட்டின் கண்ணோட்டம் கீழ்த் திசையில் இருந்தது. கீழ்த்திசை நாடுகளுடன் தொடர்புகொள்ள எகிப்தியர் விரும்பினர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே எகிப்தியர் பண்ட் என்ற கீழ்த்திசை நாட்டுடன் கலை, வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமான ஓபீர் என்ற இடத்தில் இருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அத் தொடர்புடைய நாடே தம் பழந் தாயகம் என்றுகூட எண்ணினர். ஆதலால் எகிப்தியர் கண்ணோட்டம் கீழ்த்திசை நோக்கி இருந்தது இயல் பேயாம். இப் பண்ட் நாடும், ஓபீர் துறையும் எங்கே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அரேபியாவிலும், ஆப்பிரிக்கா விலும் தேடினர். ஆனால் அங்குக் காணவில்லை. பாண்டி நாடே அப் பண்ட் என்றும், அந்நாட்டில் இருந்த உவரி என்னும் துறைமுகமே ஓபீர் என்றும் கால்டுவெல் பெருமகனார் தெளிவு செய்தார். ஆம்! சிந்து வெளி நாள்முதல் தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம், தங்கம் முதலிய பொருள்கள் தமிழகத்தில் இருந்து உலகெங்கும் போயின. பொருள்கள் மட்டுமோ போயின? தமிழ்ப் பெயர்களும் அத் தமிழ்நாட்டுப் பொருள்களுடன் போயின. இந்நாளிலும் உலகெங்கும் அத்தமிழ்ப் பெயர்களே பல வகையாக மருவி வழங்குவது அதற்குத் தக்க சான்றாகும். இத்தகைய வளமிக்க தமிழகத்துடன் வாணிகம் செய்யும் ஆவலில் இருந்தே எகிப்தியரின் சூயசுக் கடற்கால் கனவு உருவாயிற்றாம். மற்றொரு வகையாலும் தமிழகம் சூயசுக் கடற்கால் தோன்றத் துணையாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு வர நன்னம்பிக்கை வழி ஒன்றே இருந்தது. இவ்வழியையும் பிரிட்டீசாரே பயன்படுத்த முடிந்தது. ஆகவே புது வழி ஒன்று காண்பதற்காக மேலை நாட்டார் பெரிதும் முயன்றனர். அம்முயற்சியின் விளைவே சூயசுக் கடற்காலாக உருவாயிற்று. தமிழக வாணிகத் தொடர்புபற்றிய ஆவலே சூயசுத் திட்டத்தை உருவாக்கியது போலவே பனாமாத் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலை உலகம் முயன்ற பொழுதில் உலகம் உருண்டை என்னும் எண்ணம் அரும்பியிருந்தது. ஆதலால் மேற்கே சென்றால் இந்தியாவின் கிழக்குக் கரையை அடையலாம் என்னும் துணிவுடன் கொலம்பசு என்னும் கடலோடி முயன்றார். அவர் இந்தியாவைக் காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவைக் கண்டார். அவரே இந்தியாவுக்கு மேல்திசை வழிகாண முயன்று ஆத்திரேலியாவைக் கண்டார். தென்கிழக்கு ஆசியாவைக் கண்டு அதனையே இந்தியா எனத் தவறாகக் கருதிக் கொண்டார். செவ்விந்தியர். மேற்கிந்தியத் தீவுகள், கிழக்கிந்தியத் தீவுகள் என்பன இவற்றை விளக்கிக் காட்டும் சின்னங்களாம். பனாமாக் கடல் இணைப்புக்கும், அதன் வரலாற்றுக்கும் தாயகமாக இருப்பது அமெரிக்கா. அவ்வமெரிக்காக் கண்டமே தமிழகத்துடன் வாணிகம் செய்ய எழுந்த ஆவலின் பரிசேயாம். ஆதலால், தமிழகக் கனவால் எழுந்த அமெரிக்க நாட்டிலே அத்தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பையும் உருவாக்கிற்று என்பது நினைவுகூரத் தக்கதாம். சூயசு, பனாமாத் திட்டங்கள் உலக வரலாற்றைத் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இவ்விரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழ் ஒளியும் பரவிக் கிடக்கின்றமை நமக்குப் பெருமையளிக்கின்றன. நன்றே நினைமின் நமரங்காள் என்பது நம் முன்னோர் ஒருவர் வாக்கு! 2. ஓருலகச் சாதனைகள் என்பது பற்றி எழுதுக. உலகத்தை ஒரே குடும்பமாக்கி வாழ்வதற்கு உயர்ந்த பெரு மக்கள் எண்ணினர். அரும்பெருஞ் செயல் வீரர்கள் முனைந்து செயலாற்றினர். அத்தகு செயற்பெருஞ் சாதனைகளுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாம். உலகம் பலவகைப் பெருங்காப்பியங்களையும் வீரகாவியங் களையும் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆனால் செயல் என்னும் அரங்கத்திலே தீட்டிக் காட்டப்பெற்ற சீரியவண்ண ஓவியப் பெருங்காவியங்களாகச் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்பான வீரகாவியங்கள் உலகில் இல்லை என்றே துணிந்து கூறலாம். சூயசு, பனாமா என்பன இயல்பாகவே கடல் பகுதிகள் அல்ல. மிக ஆணித்தான காலம்வரை நிலப்பகுதிகளாகவே இருந்தன. மாந்தன் நிலத்தைப் பிளந்தும், மலையை உடைத்தும் கடலோடு கடலைக் கலக்கவிட்டு உலகக்கடல் வழியைப் படைத்துள்ளான். உலகப் பேரளவில் சுருக்கியுள்ளான். சூயசுத் திட்டம் பழைய உலகைச் சார்ந்தது. பனாமாத் திட்டம் புதிய உலகைச் சார்ந்தது. சூயசுத் திட்டத்தில் நாலாயிர ஆண்டு உலக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. பனாமாத் திட்டத்தில் கடந்த நானூறு ஆண்டு நாகரிக உலக வரலாற்றின் தடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் உலக வரலாற்றின் நிலைக்களங்களாக அமைந்துள்ளன. ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் இருந்து நடுக்கடல், செங்கடல் இவற்றால் தனிப்பெரு நிலமாகப் பிரிக்கப் பெற்றிருப்பது ஆப்பிரிக்கா. ஆனால் ஆசியாவில் இருந்து முழுமையும் ஆப்பிரிக்கா பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுக்கமான ஒருநில இடுக்கு அவற்றை இணைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இந்நில இடுக்கே சூயசு நில இணைப்பு. இதனை வெட்டி அகழ்ந்தே கடலிணைப்புத் திட்டத்தை மாந்தர் இனம் நிறைவேற்றியது. இத்திட்டம் 19-ஆம் நூற்றாண்டின் சாதனையாம். அமெரிக்கா தென்வடலாகக் கிடக்கிறது. அதன் இரு பகுதிகள் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா என்பன. ஒரே கண்டம் எனினும் தனித்தனிக் கண்டங்கள் போலப் பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் முற்றிலும் பிரிந்து பட்டுவிடவில்லை. அங்கேயும் நீண்டு ஒடுங்கிய ஒருநில இடுக்கு உள்ளது. அந்நில இணைப்பே பனாமா நிலஇணைப்பு. இதனை அகழ்ந்தே பனாமாக் கடலிணைப்புத் திட்டத்தைப் புத்துலக வீரர்கள் படைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இணையற்ற சாதனை இது. உலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப்பகுதிகள். அவை உயிர்களின் வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள் - பனிப்பாறைகள். பனிப்புயலும், சூறைக்காற்றும் எப்பொழுதும் உண்டு. ஆதலால் வடதென்துருவப் பகுதிகள் போக்கு வரவுக்குத் தக்கவை அல்ல. அவ்வாறே வட, தென் கடல்களும் போக்குவரவுக்குத் தக்கவை அல்ல. ஆகவே உலகமா கடல்கள் ஐந்தனுள் பசிபிப்மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்துமாகடல் ஆகிய மூன்று மாகடல்களிலேயே போக்குவரவு நடத்த முடியும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நிலப்பரப்பு உலகை இருவேறாகப் பிரித்து விடுகின்றது. அதன் வடகோடி வடகலையும், தென்கோடி தென்கடலை ஒட்டியும் கிடக்கின்றன. இந்நிலையில் ஆசியா ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்காவுடன் இணைக்கும் சூயசு நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்புச் செய்தமையால் மேற்கு உலகும் கிழக்கு உலகும் ஓருலகாக வாய்ப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் ஆப்பிரிக்காக் கரை முழுமையும் சுற்றியே மேற்குலகும், கிழக்குலகும் தொடர்பு கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் வடதென் பகுதிகளும் உலகை இரண்டாகப் பிரித்து வடகோடி வடகடலுடனும், தென்கோடி தென்கடலுடனும் பொருந்திக் கிடக்கின்றன. ஆதலால் வடமெரிக்கா தென்னமெரிக் காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்பாக்கியமையால்தான் மேற்கு கிழக்கு உலகங்கள் ஓருலகாக வழி உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் தென்அமெரிக்கக் கரை முழுமையும் சுற்றியே ஆகவேண்டும். சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பலநாட் பயணத்தையும், பெரும் பணச்செலவையும், பெருகிய அல்லல் களையும் குறைத்துவிட்டன. அன்றியும் உலகைப் பிணைத்து, வாணிக வளமும், தொழில் வளமும் பெருகச் செய்துள்ளன. இத்தகைய செயற்கரிய செயல்களே ஓருலகச் சாதனைகள் என்று கூறத்தகும். வாழ்க உலக ஒருமைப்பாடு! 3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக. சூயசுக் கடலிணைப்புத் திட்டத்தின் முன்னோடி நீலாற்றுக் கால்வாய்த் திட்டம் ஆகும். அத்திட்டம் கி.மு. 2500 ஆண்டுக்கு முற்பட்ட திட்டமாகும். அரிட்டாட்டில், டிராபோ, பிளினி என்னும் அறிஞர் பெருமக்களின் புகழ்ச்சிக்கு நிலைக்களமாக இருந்த பேறு நீலாற்றுத் திட்டத்திற்கு உண்டு. நீலாற்றுக் கால்வாய், பரோவாக்களின் கால்வாய் என்றும் வழங்கப்பெற்றது. பண்டை எகிப்திய மன்னர்கள் பரோவாக்கள் எனப்பெற்றனர். அவர்கள் ஆக்கிய கால்வாய் ஆதலால் அப்பெயர் பெற்றது. நீலாற்றுக்கால், நீலாற்றில் இருந்து பிரியும் பெலியூசக் என்னும் ஆற்றின் கிளையான பூபாசிபிசியில் இருந்து புறப்பட்டு துமிலாத்து, கைப்பேரி இவற்றின் வழியாகச் செங்கடலில் முடிவுற்றது. எகிப்தில் உள்ள பாரக் கூம்புகளுக்குத் (பிரமிடு) தமிழகத் தேக்கு மரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இஃது எகிப்து தமிழக வாணிகப் பழமையை உணர்த்தும். இவ்வாணிகம் கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவே தமிழக மேலை உலக வாணிகமாக 19ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்தது. பழந்தமிழக வாணிகம் இருபெரு வழிகளில் நடந்தது. சீனத்தில் இருந்து ஆசிய நடுமேட்டு நிலவழியாக எகிப்து செல்லும் ஒரு வழி. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தமிழகக் கடலைக் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி மற்றொன்று. முன்னை வழி, பருவமாறுதல் கேட்டாலும், கொள்ளைக் கூட்டத்தார் கொடுமையாலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மறைந்து போயிற்று. ஆதலால் தமிழகத்தின் ஊடாகச் சென்ற கடல்வழி ஒன்றே உலகக் கடல் வழியாக அமைந்தது. எகிப்திய மாமன்னர்களாகிய பரோவாக்கள் தமிழக வாணிகத்தில் பங்கு கொள்ளும் ஆவல் கொண்டமையால்தான் நீலாற்றுக் கால் தோண்டினர். தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல்வழியாகத் திறந்த கடல் காலாகவும், மறு பக்கத்தில் ஆற்றுடன் இணைந்த காலாகவும் அமைந்தது. அந்நாளில்தான் பண்ட் என்னும் பெயரால் பாண்டிநாடும், ஓபீர் என்னும் பெயரால் உவரித் துறைமுகமும் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கின. பரோவாக்களின் கால்வாய் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வந்தது. ஆனால் கி.மு. 7ஆம் நூற்றாண் டளவில் பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெக்கோ மன்னன் தன் பாலத்தீனப் பெருவெற்றியில் பிடித்த 1,20,000 போர்க் கைதிகளைக் கால்வாய் வேலையில் ஈடுபடுத்தினான். எனினும், அவன் அமைச்சர்கள் இப்பணியை விரும்பாமையால் திட்டம் கைவிடப்பெற்றது. கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடுவுலக முழுவதும் பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டது. பேரரசர் டேரியசு, கால்வாயைப் புதுப்பிக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டாலும் முற்றுவிக்கப் பெறாமல் நின்றது. பேரரசர் செர்க்கிசு காலத்தில் மீண்டும் கால்வாய் சேலை தொடங்கப்பெற்று நிறை வேறியதுடன், படகுப் போக்குவரவுக்கு ஏற்ற சீரமைப்புக்களும் செய்யப்பெற்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடுவுலக அரசியல், பேரரசர் அலெக்சாண்டர் கைக்குள் சென்றது. இக் கிரேக்க மரபினருள் டாலமி பிலாடெல்பசு என்பவனும் யூர்கெடிசு என்பவனும் கால்வாயை மீண்டும் சீராக்கிச் செங்கடலில் உள்ள ஆர்ச்சனா துறைமுகத்துடன் இணைத்தனர். அவ்விணைப்பை அன்றி நடுநிலக் கடலுடன் இணைக்கவும் அவர்கள் கனவு கண்டனர். ஆனால் அக்கனவு நனவாகாதலே நின்று போனது. செங்கடலின் நீர்மட்டத்திற்கும் நடுநிலக் கடலின் நீர் மட்டத்திற்கும் வேற்றுமை உண்டு; ஆதலால் இணைப்பு ஏற்படுத்தினால் பேரழிவு உண்டாம் என்று அந்நாளைய மக்கள் எண்ணினர். பரப்பியும் வந்தனர். அதனால் பலவிய அச்சமே கடலிணைப்பைத் தடைசெய்ததுடன், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தொழியவும் செய்து விட்டது. குருட்டு நம்பிக்கையின் கேட்டுக்கு வேறு சான்றும் வேண்டுமோ? எகிப்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. உரோமப் பேரரசன் திராசன் நீலாற்றுக் காலை விரிவு செய்தான். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்து அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆராபிய ஆட்சியில் எகிப்துக்குத் தலைவராயிருந்த அம்ரு, கால்வாயை மீண்டும் செப்பனிட்டார். அவர் நடுநிலைக் கடல் வரை கால்வாயைக் கொண்டுசெல்லவும் கருதினார். அவர் முயற்சியும் ஈடேறிற்றில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கலிபா சாபர் அலி இசுலாமியக் கொந்தளிப்பைப் கருதிக் கால்வாயை மூடுமாறு கட்டளை இட்டார். அந்நூற்றாண்டிலேயே இராசித் என்னும் மன்னன் கால்வாயை விரிவு செய்ய முனைந்தான். ஆயினும் அப்பணியும் துருக்கியர் கடற்படை, எகிப்தின் உள் நாட்டுக்குள் வருதற்குத் துணையாகிவிடும் என்னும் அச்சத்தால் நின்றுவிட்டது. கி.பி. 1811இல் கால்வாயை மூடிவிடுமாறு முகமத் அலி என்பார் கட்டளை இட்டார். ஆனால் முழுமையும் மூடப்பெறாமல் சூயசுக் கடற்கால் வேலை தொடங்கும் வரை நீரோடிக் கொண்டும், போக்குவரவுக்குத் துணையாகிக்கொண்டும் நீலாற்றுக் கால் இருந்தது. அந்நீலாற்றுக்காலே சூயசுக் கடலிணைப்பின்போது நன்னீர்க் காலாக அகழப்பெற்றுக் கடற்காலுடன் இரண்டறக் கலந்துவிடும் பேறு பெற்றது. கனவு காண்பது எளிது! அதனை நனவாக்குவது மிக அரிது. நல்ல கனவொன்று நனவாக எத்தனை முட்டுக்கட்டைகள் உண்டாகின்றன என்றும், நல்ல கனவு எவ்வாறு இறுதியில் இணையற்று ஓங்கி நின்று, வெற்றி கொள்ளுகின்றது என்றும் நீலாற்றுக்கால் திட்டம் உலகுக்கு உணர்த்தத் தவறாது. வாழ்க நல்ல கனவுகள்! வாழ்க நற்கனவை நனவாக்குவோர்! 4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையை எழுதுக. எந்தவொரு நினைவு உண்டாதற்கும், செயல் நடைபெறுதற்கும், ஏற்றவொரு தூண்டுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். அவர்கள், தூண்டல் இன்றில் துலங்கல் இல்லை என அறுதியிட்டு உரைப்பர். நாம் இக்கட்டுரையில் சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையைக் காண்போம். இந்தியா முதலிய கீழை நாடுகளின் செழுமையும் வளமும் மேலைநாடுகளை மிகக் கவர்ந்தன. ஆகவே கீழை நாடுகளுடன் வாணிகம் செய்து வளம் திரட்ட மேலைநாடுகள் மிக விரும்பின. அந்நாடுகளுக்கு உரிய போக்குவரவு வழி நன்னம்பிக்கை முனைவழி ஒன்றாகவே இருந்தது. அவ்வழியுங்கூட நாளடையில் பிரிட்டனுக்கு மட்டுமே உரித்தாகப் போய்விட்டது. ஆதலால் புதுவழி காணும் நாட்டம் மேலை நாட்டவருக்கு உண்டாயிற்று. அந்நாட்டத்தால் உருவாகியதே சூயசுக்கடல் இணைப்புத் திட்டமாகும். சூயசும் அதனை உள்ளடக்கிய எகிப்தும் பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியின் மேலாட்சிக்கு உரியனவாய் இருந்தன. துருக்கி மன்னர்க்குச் சூயசுக் கடலிணைப்புக் குறித்து ஒரு தூதுக்குழு எகிப்தில் இருந்து சென்றது. துருக்கிய மன்னர் இசை வளிக்கவில்லை. திட்டம் தொடங்காமலே நின்று போனது. யூட்சு அலி என்பார் துருக்கியின் மன்னராக வந்த காலையில் சூயசுத் திட்டத்திற்கு ஆதரவு நல்கினார். பிரஞ்சு நாட்டு மன்னரும் இதனால் பேருவகை உற்றார். ஆனால் இத்திட்டம் வீண் செலவில் கொண்டு போய் விடும் என்று துருக்கிய நாட்டு அமைச்சர்கள் கருதினார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், கடலோடிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். எனினும் என்ன, அமைச்சர்கள் எண்ணமே நிறைவேறியது. திட்டம் நிறைவேறவில்லை. திட்டத்தை விரும்பிய அனைவரும் தம்பேச்சிலும் எழுத்திலும் நன்றாக வலியுறுத்திக் கொண்டு வந்தனர். நம்பிக்கை முனைவழி ஒன்றே நன்மை பயப்பது என்ற தன் கருத்தை பிரிட்டன் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. சூயசு வழியின் கேடுகள் இவையென எடுத்துக்காட்டித் தடைப்படுத்தியும் வந்தது. பிரான்சு நாட்டினர் சூயசு வழியைக் காண்பதற்கு இறங்கி விடாதவாறும் பிரிட்டன் அக்கறை கொண்டது. ஆனால் கி.பி. 1798-ல் எகிப்தை வெற்றி கொண்ட நெப்போலியன் கடற்கால் இணைப்புக்குரிய திட்டங்கள் தீட்டினான். நில அளவை ஆய்வு செய்தான். இந்தியாவில் திப்பு சுல்தான் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்நிலையில் அவன் முயன்றாலும் கடல் நீர்மட்டம் தொடர்பான பழைய அச்சம் தலைதூக்கி நின்றது. நடுக்கடல் மட்டத்திலும் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவை ஆராய்ச்யிளர் லெப்பேர் முடிவு செய்தார். ஆகவே திட்டம் மீண்டும் கைவிடப்பெற்றது. 19ம் நூற்றாண்டுவரை கீழ்த்திசை அஞ்சல்கள் நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்றுகொண்டிருந்தன. 1835-ல் வாக்கார்ன் என்பார் எகிப்து நாட்டின் வழியாக அஞ்சல் அனுப்பினால் 70 நாட்கள் குறைவாகும் என்று எடுத்துக் காட்டினார். அதன் பயனாகப் புதிய அஞ்சல்வழி உண்டாயிற்று. கடலில் இருந்து மறு கடலுக்கு எகிப்திய நிலவழியில் அஞ்சல் போக்குவரவு இணைப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பே கடற்கால் திட்டத்திற்கு மிகத் துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இந்நிலையில் தூய திரு சைமன் சங்கத்தார் சூயசுத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். 1846-ல் திட்ட வேலையை மேற்கொள்ள அனைத்து நாட்டுக் கழகம் ஒன்று அமைத்தனர். திட்டவேலைக்கென மூவரடங்கிய குழுவொன்றைத் தேர்ந்தெடுத்து வேலையைப் பகுத்துத் தந்து விரைந்து நிறைவேற்றக் கருதினர். பங்குகள் திரட்டினர். அப்பொழுதும் பிரிட்டன் இத்திட் டத்திற்கு ஆதரவு தரவில்லை! கடற்கால் திட்டத்திற்கு எதிர்த் திட்டமாக அலெக்சாண்டிரியா - கெய்ரோ - இருப்புப் பாதைத் திட்டம் ஒன்றை வகுத்து அதனை நிறைவேற்றுவதில் முனைந்து பிரிட்டன் வெற்றி கண்டது. கடற்கால் இணைப்புத் திட்டமோ படுத்துவிட்டது. எனினும் அத்திட்டத்தில் ஒருவகை வளர்ச்சியும் உண்டாகியிருந்தது. சைமன் கழகத்தைச் சார்ந்த அன்பாந்தின் நிறுவிய ஆராய்ச்சிக் கழகம், நீர்மட்ட வேறுபாட்டைத் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது. நீர்மட்ட வேறுபாடு என்பது வெறும் அச்சத்தின் விளைவே அன்றி வேறன்று என்று விளக்கிக் காட்டியது. ஆகவே, திட்ட ஆர்வமுடையவர்களுக்கு இவ்விளக்கம் ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. இத்தகு நிலைமையில் தான், பிரான்சு நாட்டுப் பெருவலியாளர் டிலெசெப்சு கடலிணைப்பு அறிக்கை ஒன்றைத் தற்செயலாகக் காணுகிறார். அத்திட்டத்தை நிறைவேற்றுவதே தம் பணியெனக் கொண்டு முழுமையாக இறங்கி வெற்றியும் காணுகிறார்! நல்ல திட்டங்களுக்கு நாலாயிரம் எதிர்ப்புக்களும், தடை களும் உண்டானால்கூட என்றேனும் ஒருநாள் நிறைவேறியே தீரும் என்பதற்குச் சூயசுக் கடலிணைப்புத் திட்டமே சான்றாம். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருவள்ளுவர் 5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல் தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக. எளிதில் நிறைவேறத்தக்க செயலையே பலரும் எடுத்துக் கொள்வர். ஆனால் சிலரோ, அரிய செயல்களையே தேர்ந்து எடுத்துக் கொள்வர்; வெற்றியும் கண்டு வீறுமிக்க நடைபோடுவர். இத்தகையவரைக் கருதியே கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் எந்தல் இனிது என்றார் வள்ளுவர். சூயசுத் திட்டம் யானைப் போரினும் உயரியது அல்லவா! பெர்டிணாண்டு டிலெசெப்சு என்பவர் பிரான்சு நாட்டினர்; பெருஞ் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் தந்தையார் அரசியல் செல்வாக்கு மிக்கவர். முகமதலி எகிப்து மன்னர் பதவிக்கு வர அவரே காரணமானவர் என்றால் அவர் தம் அரசியல் செல்வாக்கை உரைக்கவேண்டியரில்லை! பெர்டிணாண்டு இச் செல்வாக்கால் இளமையிலேயே எகிப்து மன்னர் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தது. அவ்வாய்ப்பே சூயசுத் திட்டம் நிறைவேறத்தக்க சூழலை உருவாக்கியது எனலாம். டிலெசெப்சு தூதராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்தார். நேர்மையையும் உழைப்பையும் - பொன்னேபோல் போற்றி வாழ்ந்த அவர்க்கு எதிராகப் பொறாமைக்காரர்கள் பலர் கிளம்பினர். பொய்க்குற்றம் பல சாட்டினர்! முடிவில் தம் பதவியைத் துறந்தார். அத்துறவும் உலக நலனுக்கென்றே அமைந்தது போலும்! டிலெசெப்சு பதவியில் இருந்தபொழுது ஒரு கடற் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்; அப்பயணத்தில், பொழுது போக்குக்காகப் பார்த்துக் கொண்டிருந்த நூலில் சூயசுக் கடல் இணைப்புத் திட்ட அறிக்கை ஒன்று காணப்பெற்றது. அஃது அவரை மிகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியே அவரைச் சூயசுத் திட்டத்தை முயன்று முடிக்குமாறு ஏவியது. டிலெசெப்சின் நண்பர் இராட்டர் டாம் என்பவர். எகிப்தில் டச்சுத் தூதரகத் தலைவராக அவர் இருந்தார். அவருக்கு ஒரு முடங்கல் தீட்டி அவர் வழியாக எகிப்திய மன்னர் அப்பாசிடம் தம் திட்டத்தை எடுத்துரைக்க வேண்டினார். அதற்கு வாய்ப்பான பதில் கிட்டவில்லை. அரசர் அப்பாசை அடுத்து வந்த மன்னர் டிலெசெப்சின் இளமைக் கால நண்பர். எனவே உரிமை பாராட்டி உண்மை நிலைமையை அவருக்கு விளக்கி எழுதினார். அவரும் அரசியல் முறையில் அல்லாமல் அன்பு முறையிலே அழைப்பு விடுத்துக் கலந்து பேசினார். திட்டத்தையும் உவகையுடன் ஏற்றுக் கொண்டார். கி.பி. 1856-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் டிலெசெப்சின் ஆவலும், எகிப்து மன்னர் இசைவும் உறுதிப்பத்திர உருவங் கொண்டன. அவ்வுறுதிப் பத்திரத் திட்டங்களே இறுதிவரை எழுத்து எழுத்தாகப் பின்பற்றப்பட்டது என்றோ, சிறிய பெரிய மாற்றங்கள் எவையும் செய்யப்பெறவில்லை என்றோ உறுதி கூறுதற்கு இல்லை. நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்ட திட்டம் நிறைவேற்றப் பெற்றது. எனினும் 1856-ஆம் ஆண்டு உறுதிப் பத்திரமே திட்டத்தின் அடிப்படையாக இருந்தது என்று துணிந்து கூறலாம். சூயசுக் கடற்கால் இணைப்பு பெர்டினாண்டு டிலெசெப்சுக்கும், அவர் தலைமையில் அமையும் ஒரு கூட்டுக் கழகத்திற்கும் உரிமையாக இருந்தது. கூட்டுக்கழகம், சூயசுக் கடற்கால் முழு உலகக் கழகம் என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், தரப்பெறும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளில் இருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அவ்வாண்டு நிறையும் போது, உரிமை வழங்கியவரிடமே உரிமை மீண்டும் வந்து சேரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வுரிமையை வழங்கிய தற்காக எகிப்திய அரசுக்கு இத்திட்டத்தால் பெறும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரியாகத் தர வேண்டும்; அதேபோல் எகிப்திய அரசினர் கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்புச் செய்து உதவுதல் வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்டு உறுதிப்பத்திரம் எழுதினர். ஆயினும் திட்டத்தை உடனடியாகச் செயலில் கொண்டு வர இயலவில்லை. எகிப்தின் மேலுரிமை துருக்கியினிடம் இருந்தது. ஆதலால் அதன் ஒப்புதலும் வேண்டியிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்குப் பிரிட்டன் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. தனி மனிதர் ஒருவர்க்கு இப்பெரிய உரிமையை வழங்கியது பற்றித் துயர் கொண்டது. பிரிட்டன், தன் மனக்குறையை வன்மையாகத் தெரிவித்தது. போதாதென்று, துருக்கி சுல்தான் இத்திட்டத்திற்கு இசையாது இருக்குமாறு தம் செல்வாக்குடைய தூதர் ரெட்கிளிப் என்பவர் வழியாக முயன்றது. டிலெசெப்சு கடற்கால் திட்டத்திற்கு இசைவு பெற வேண்டித் துருக்கிக்குச் சென்றார். சுல்தான் ஆதரவு அவருக்குக் கிட்ட வில்லை. பிரிட்டீசுத் தூதரைக் கண்டுபேச டிலெசெப்சு விழைந்தும் அவருக்கு வாய்ப்புத் தரப்பெறவில்லை. என் செய்வார் டிலெசெப்சு! நேரிடையாகப் பிரிட்டனுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்சனிடம் வாதாடினார். பிரிட்டன் அரசும், செய்தித்தாள் களும் அவருக்கு எதிரிடையாகவே வரிந்து கட்டிக் கொண்டு நின்றன! டிலெசெப்சு விடாப்பிடியாக முயன்றார்! பிரிட்டனின் நிலை மாறவில்லை. அன்றியும் சூயசுத் திட்டம் துருக்கிக்குக் கேடு பயக்கும் என்று கிளப்பி விட்டுத் தடைபடுத்திக் கொண்டிருந்தது. இந்நிலை எகிப்திய மன்னர் சயீதீன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. வெதும்பி வெகுண்டெழுந்தார் அவர். சூயசுக் கடற்கால் இணைப்பு உள்நாட்டுத் திட்டம். ஆதலால் துருக்கியின் இசைவு வேண்டுவதில்லை; திட்டம் தொடங்கலாம் என்று துணிந்து ஆணையிட்டார்! வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா என்பது போல் திட்டம் உறுதியாகி விட்டது. டிலெசெப்சு மகிழ்ந்தார்; உலகமும் மகிழ்ந்தது! ஓருலக உணர்வும் மலர்ந்தது! வாழ்க அயராமுயற்சி! வெல்க வீரர் டிலேசெப்சு! 6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட நிறைவேற்றம் பற்றி எழுதுக. ஊழையும் உப்பக்கங் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு ஏற்பப் பல்லாற்றானும் தடைப்பட்டு வந்த சூயசுக் கடல் இணைப்புத் திட்டம் உலக நலங் கருதிய பெருமகனார் பெர்டினாண்டு டிலெசெப்சு அவர்களின் அயரா முயற்சியால் நிறைவேறிற்று. சூயசுத் திட்டத்தின் தொடக்கவிழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஐந்தாம் நாள் நடைபெற்றது. பல்லாயிரம் தொழிலாளர் களும், பணியாளர்களும், பொறியில் வல்லார்களும் பேராரவாரங் களுக்கு இடையே தம் பணியைத் தொடங்கினார். முதன்முதலாக டிலெசெப்சு ஒரு கூடை மண்ணைத் தம் கையால் வெட்டி வெளியேற்றினார். அதன்பின், தொடர்ந்து வேலை நடைபெற்றது. எகிப்திய அரசின் முயற்சியால், 60000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் எகிப்தியரே அன்றிப் பிற நாட்டவர்களும் ஈடுபட்டிருந்தனர். புற்றில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புக் கூட்டம்போல் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். உலகச் சாதனையில் தமக்குள்ள பங்கை உணர்ந்து உவகை கூர்ந்தனர். கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ நூறுகல் நீளமுடையது. அவ்வளவு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லுமாறு அகல ஆழம் உடைய கால்வாய் வெட்டுதல் வேண்டும். மண், மணலை அன்றிச் சில இடங்களில் பாறையையும் அகற்ற வேண்டியிருந்தது. குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக நன்னீர்க் கால்வாய் ஒன்றும் தனியாக வெட்டிக் கொண்டு வரவேண்டியிருந்தது. தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் குடியிருப்புகள் அமைத்தல் இன்றியமையாததாயிற்று. இத்துணைப்பணிகளும் இணைந்து நடைபெற்றன. உலகம் இதற்குமுன் கண்டிராத உயரிய திட்டம் இது. ஆதலால் செலவு முதற்கண் திட்டமிட்டுக் கொண்ட அளவினை விஞ்சியது. அன்றியும் அரசியல் பிணக்குகளும், எதிர்ப்புக்களும் திட்ட நிறைவேற்றத்திற்கும், பங்குத்தொகைச் சேர்ப்புக்கும் தடை செய்தன. மனித இயன்முறை கடந்து வன்முறையாகத் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகப் பிரிட்டன் பழி கிளப்பியது. அக்கூற்றைத் துருக்கியும் ஆமாம் என்று வரவேற்றது. இதற்குள் டிலெசெப்சின் நண்பர் சயீத் காலமானார். அவருக்குப் பின்வந்த மன்னர் இசுமாயில் பிரிட்டனின் சார்பாளராக இருந்தார். அதனால் வளர்ந்து வந்த திட்டம் தளர்ந்தது. நன்னீர்க் கால்வாய்ப் பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்வேண்டும் என்று கடலிணைப்புக் கழகத்திற்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை அஃதாயினும், தலைமைப்பொறியாளர்கள் ஏற்று வேலையை நிறுத்தினர் அல்லர். இத்தகு சூழலில் டிலெசெப்சு, பிரான்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை உதவுமாறு வேண்டினார். அவர் நடுவராக இருந்து வழங்கும் முடிவை இரு பகுதியாரும் ஏற்பதாக ஒப்பினர். அறிவார்ந்த மன்னன் நெப்போலியன், திட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற பொறுப்பும் தகுதியும் உடைய தீர்ப்பு வழங்கினார். நன்னீர்க் கால்வாய்ப் பகுதியை மன்னவர் விரும்பிய வண்ணமே அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று நெப்போலியன் தீர்ப்பு வழங்கினார். அதற்கு ஈடாகவும், திடுமென வேலைநிறுத்தம் ஆகிய இழப்புக்காகவும் கடற்கால் கழகத்துக்கு மன்னர் 840 இலட்சம் வெள்ளி தரவேண்டும் என்று கூறினார். இத் தீர்ப்பால் கடற்கால் பணி தொடர்ந்து நடந்ததுடன் பொருள் தட்டுப்பாடும் ஓரளவு குறைந்து, திட்டத்திற்கு உதவியாயிற்று. திட்டவேலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. நான்கு வேறு குழுக்களிடம் வேலை பகுதிகள் ஒப்படைக்கப் பெற்றன. முதற் பிரிவினர் நீற்றுக் கட்டிப் பாளங்கள் உருவாக்கினர். அடுத்த பகுதியினர் கடற்காலில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல்தோண்டும் பொறுப்பேற்றனர். வேறொரு பிரிவினர் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு கற்பாறை பிளக்கும் கடமை ஏற்றனர். இறுதிப் பிரிவினர், எஞ்சிய கடற்கால் பகுதியைத் தோண்டும் பணி ஏற்றனர். இவ்வாறாக தனித் தனியே பொறுப்பு வாய்ந்த குழுக்களின் தலைமையில் திட்டம் நடந்து கொண்டிருந்தது. கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளம் இருந்தது. அதில் 77 கல் தொலைவுக்குக் கடற்காலின் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடிப் பகுதியில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் தோண்டப்பட்டது. கற்பாறையுள்ள இடங்களில் மேற் பரப்பு 196 அடி அளவு கொண்டு தோண்டப்பட்டது. கி.பி. 1865-ஆம் ஆண்டில் கடற்கால் வேலையை மதிப்பிடுமாறு பலநாட்டு வணிகக் கழகப் பிரதிநிதிகளையும் பார்வையாளராக வருமாறு டிலெசெப்சு அழைத்தார். அவ்வழைப்பை ஏற்றுப் பல்வேறு நாடுகளில் இருந்தும் 100 பேர்கள் வந்தனர். நிறை வேறியுள்ள வேலையை நேரில் கண்டு மிகப் பாராட்டினர். வேலை மேலும் விரைந்து நடக்க அவர்கள் பாராட்டு ஊக்கமளித்தது. செங்கடலில் இருந்தும், நடுக்கடலில் இருந்தும் வெட்டிக் கொண்டு வரப்பெற்ற கால்வாய்கள் இரண்டும் ஒன்றை ஒன்று இணையும் நிலையை அடைந்தது. இரண்டு கால்வாய்களையும் இணைக்கும் நிகழ்ச்சி பெருவிழாவாகவே நடைபெற்றது. முதற்கண் மண்தோண்டும் விழாவைத் தொடங்கிய டிலெசெப்சே கடற்கால் களை இணைக்கும் கடைசி மண்ணை வெட்டி எடுக்கும் உயர் பொறுப்பை நிறைவேற்றினார். செயற்கரிய செய்த செம்மல் டிலெசெப்சு வாழ்க என்னும் வாழ்த்துதல் ஒலிக்கிடையே, உலக ஒருமைப் பாட்டுத் திட்டம் முழுமை பெற்றது. எத்தகைய அரிய முயற்சி இது? உலகங்காணாத உயரிய முயற்சி இது! அம்முயற்சியால் உலகம் அடைந்துள்ள நன்மை இவ்வளவா, அவ்வளவா? இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த அனைவரும் உலகோர் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருப்பர் என்பது உண்மை! 7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப் பற்றி எழுதுக. காடு கழனிகளில் விதைத்த உழவன், விளைவு கைவரப் பெறும்போது எத்துணை மகிழ்வு எய்துவான்! வறுமைக்கும் வாழ்வுப் போராட்டத்திற்கும் ஆட்பட்டுக் கற்றுத்தேறிய ஒருவன் உயர்நிலைப்பதவி ஒன்று எய்தப் பெருங்கால் எத்தகு மகிழ்வு எய்துவான்! இத்தகு நிலைகளினும் உயர்ந்த உவகை கொண்டனர் ஓருலகச் சாதனையாம் சூயசுத் திட்டம் நிறைவேறிய போழ்து. ஆகவே சூயசுக் கடற்கால் இணைப்பு நிறைவு விழாவை உலக விழாவாகவே கொண்டாடி உலகோர் உவகை பூத்தனர். கி.பி. 1869-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ஒரு நன்னாள்! பலகோடி மக்களின் பன்னூற்றாண்டுக் கனவுகள் நனவாகிய இணையற்ற பொன்னாள். அந்நாளே சூயசுக் கடற்கால் பெருவிழா நாளாகும். எகிப்து மன்னர் இணையில்லா மகிழ்வால் எல்லா நாடு களுக்கும் அழைப்பு விடுத்தார். அன்பர்கள் அரசியல் தலைவர்கள், வாணிகப் பெருமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் உலக விழாவைக் காணச் சூயசுக் கடற்காலின் இருபக்கங்களிலும் முதல் நாள் மாலைப் பொழுதிலேயே நிரம்பி வழிந்தனர்! உள்நாட்டுப் பொதுமக்கள் ஈட்டத்தைக் கூறவேண்டுமா! இருகரைகளிலும் நூறு கல் நீளத்திற்கும் இடமின்றிச் செறிந்து நின்றனர். போர்க் கப்பல்கள், வாணிகக் கலங்கள், வண்ணப் படகுகள் ஆயன அணிவகுத்து நின்றன. இந்நாட்டைச் சேர்ந்த மிதப்பு இது என்பதைப் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள் பளிச் சிட்டுக் காட்டின. 17-ஆம் நாள் காலை 11 மணிக்கும் குண்டுகள் முழங்கக் கொடிகள் பறக்கக் கப்பல்கள் சயீத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன. ஒரு கப்பலா? இருகப்பலா? அணிவகுப்பில் கலந்து கொண்ட நாடுகள் 11. அவற்றுக்குரிய கப்பல்கள் 67. உலகம் கண்டறிதற்கு அரிய கப்பல் அணிவகுப்பு இது! முன்னும் பின்னும் பிற கப்பல்கள் செல்ல நடுநாயகமாகப் பிரான்சு நாட்டுக் கப்பல் சென்றது. அதன்மேல் ஓங்கி உயர்ந்து ஒளியுடன் திகழ்ந்தது கழுகுக் கொடி. பிரான்சு நாட்டின் பெருமை மிகு அரசியார் யூசினும், எகிப்து மன்னர் இசுமாயிலும் அக்கப்பலில் இருந்து மக்களின் கரைகடந்த ஆரவாரத்தையும் களியாட் டத்தையும் கண்டு கண்டு உவகைக் கடலில் நீந்தினர். தங்கள் களிப்பைக் கையாட்டுதலாலும் வணக்க வாழ்த்துக்களாலும் புலப்படுத்தினர். பிரசிய நாட்டு இளவரசரும், கனோய் நாட்டு இளவரசரும் விழாவில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தினர்! கடற்காலின் இரு கரைகளிலும் வண்ணக் கொடிகள் வனப்புற விளங்கின. இரவுப் பொழுதிலோ வண்ண விளக்குகளின் வரிசை எங்கும் ஒளிக்கடல் ஆக்கிக்கொண்டு இருந்தது. இதற்கு இடையே கப்பல்களின் அணிவகுப்புச் சென்ற காட்சியும் மக்கள் ஆரவாரமும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. இவை காணாவென்று ஆடல் பாடல்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. எகிப்துப் பேரரசர் பெரிய நாடு ஒன்றைத் தமதாக்கி வெற்றி பெருவிழாக் கொண்டாடினால் கூட இணைகூற இயலாத அளவு பெருவிழாவாகத் திகழ்ந்தது கடற்கால் இணைப்புப் பெருவிழா. ஒரே நாளில் முடியும் விழாவா இது? தொடர்ந்து நான்கு நாட்கள் விழா நிகழ்ந்தது. முதல் நாள் பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் 40 கல் தொலைவே கப்பல்கள் நகர்ந்து சென்றன. இடையே ஒரு நாள் இசுமாலியாப் பெருநகரில் விழாவுக்குள் விழாப்போல் ஒரு விழா எடுத்தனர். 19ஆம் நாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி அடுத்த நாள் சூயசுத் துறையை அடைந்து செங்கடலில் சேர்ந்து விழாவை நிறைவு செய்தனர். விழா நிறைவுற்ற மறுநாளில் இருந்தே மேலை உலகில் இருந்து கீழை உலகுக்கும் கீழை உலகில் இருந்து மேலை உலகுக்கும் நேரிடைச் செல்லும் கடல்வழித் தொடர்பு உண்டாயிற்று. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் என்னும் மொழிக்குச் சான்றாக இலங்கிய பெரியார் டிலெசெப்சின் மேல் உலக மக்கள் நோக்கம் திரும்பியது! பிரெஞ்சு அரசியார் கோமான் என்றும் உயர்பட்டம் வழங்கினார். அதுவரைக்கும் முட்டுக்கட்டையாக இருந்த இங்கிலாந்தும் புகழ்ந்து பேசியது. விக்டோரியா மகாராணியார், டிலெசெப்சைத் தம் பளிங்கு மாளிகையில் வரவேற்றுப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நம்முடைய வாழ்த்தும், இனிவரும் உலகோர் வாழ்த்தும் வீரர் டிலெசெப்சிற்கு உரித்தாம். வாழ்க உலகுக்குழைத்த உரவோர்! 8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக. வீட்டைக் கட்டிமுடித்த பின்னரும் வேறு சில வேலைகள் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். வண்ணம் பூசுதல், தோட்டம் அமைத்தல், மின்னிணைப்புச் செய்தல், நிலைப் பேழைகள், தளவாடங்கள் வாங்கி ஏற்ற முறையில் அமைத்தல் - இன்னவாறு பல பணிகள் தொடர்ந்து நிகழும். அதுபோல் சூயசுக் கடற்கால் திட்டம் நிறைவேற்றப் பெற்ற பின்னரும் சில வளர்ச்சிச் செயல்கள் நிறைவேற்றப் பெற்றன. வளர்ச்சிக்கு எல்லை இல்லை அல்லவா! அறிவியல் வளரவளரக் கப்பல்களும், உருவிலும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒருபெரு நகரமே ஊர்ந்து செல்வது போலச் செல்லும் பெரும் கப்பல்களும் உண்டாகி விட்டன. அவற்றைக் கடற்கால் வழிச் செலுத்த வேண்டுமானால் அதன் ஆழ அகலங்களை மிகுதிப்படுத்துதல் வேண்டும். தொடக்கத்தில் 8 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் அகலமுமாக இருந்தது கடற்கால். அது 1885-ஆம் ஆண்டில் 8 1/2 மீட்டர் ஆழம் ஆக்கப்பெற்றது. பின்னர் அதுவும் போதாதென்று 9 மீட்டர் அளவுக்கு அகழப் பெற்றது. அகலம், சயீத் துறைமுகத்தில் இருந்து கைப்பேரி வரைக்கும் 65 மீட்டர் ஆகவும், அதற்குத் தெற்கே 75 மீட்டர் ஆகவும் வேறுசில இடங்களில் 80 மீட்டர் ஆகவும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது. 1913-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெருங் கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லுமாறு ஏறத்தாழ 11 மீட்டர் அளவுக்கு ஆழமாக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குக் கப்பல் செல்லும் போது எதிரேவரும் கப்பலுக்கு இடம் தருதல் வேண்டும். அத்தகைய கடவு இடங்களில் மட்டும் ஒருகல் அளவுக்குக் கடற்கால் அகலம் முன்னர் இருந்தது. கடற்கால் விரிவுப்பணி தொடங்கிய பின்னர் பெரும்பாலான இடங்களில் ஒரு கப்பல் நின்று மறுகப்பல் கடக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. முதற்கண் போரொளி விளக்குடைய கலங்கள் மட்டுமே இரவுப்பொழுதில் கடற்காலில் செல்ல அனுமதிக்கப்பெற்றன. பின்பு, காலின் இருகரைகளிலும் ஒளி விளக்குகள் அமைக்கப் பெற்றன. ஆதலால் எந்தக் கப்பலும் இரவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சூயசுக் கடற்கால் பணி நிறைவேறிய நாளினும் இந்நாளில் அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கியுள்ளது. அதற்கேற்பக் கடற்கால் புதிய வளர்ச்சிகளைப் பெற்றது. சயீத் துறைமுகத்தில் கப்பல் தங்கு துறைகள், ஏற்றி இறக்கும் பொறிகள், பழுது பட்ட பொறிகளைச் செப்பம் செய்வதற்குதிய பட்டறைகள் ஆயன நிரம்பிய துறையாக மாறியது. சிறந்த கலங்கரை விளக்கம் ஒன்று அமைக்கப்பெற்றது. 2070 கெசத்தில் ஒன்றும் 2730 கெசத்தில் ஒன்றுமாக இரண்டு அலை தாங்கிகள் சயீத் துறைமுகத்தில் கட்டப்பெற்றன. கடற்காலை அன்றித் துறைமுகத்திலும் பல விரிவுப் பணிகள் செய்யப்பெற்றன. 850 கெச நீளமுள்ள பெரிய அலைதாங்கி அமைத்தது, சூயசில் நடைபெற்றுள்ள விரிவுப் பணிகளில் தலைமையானதாகும். மேலும். எகிப்திய சுல்தான் 413 அடி நீளமும் 95 அடி அகலமும் கொண்ட ஓர் இரேவு அமைத்துத் தந்தார். பி அண்டு ஓ கூட்டகத்தார் 300 அடி நீளமும் 85 அடி அகலமும் உள்ள ஓர் இரேவு அமைத்தனர். இத்தகைய சீர்திருத்தங்களால் விரிந்த அளவில் கடற்பயண வாய்ப்புக்கு வகை உண்டானதுடன், கட்டணக் குறைவும் நாளா வட்டத்தில் உண்டாகிக் கொண்டே வந்துள்ளது. கப்பல் அளவைப் பாரம் ஒன்றுக்கு முதற்கண் 10 வெள்ளியாகக் கட்டணம் இருந்தது. 1885 இல் பாரத்திற்கு 9 1/2 வெள்ளியாகக் குறைந்தது. 1906இல் 7 1/2 வெள்ளி ஆயது. 1928இல் சரக்கு கப்பல்களுக்குக் கட்டணம் 7 வெள்ளி என்றும் பிற கப்பல்களுக்குக் கட்டணம் 4 1/2 வெள்ளி என்றும் குறைக்கப் பெற்றது. வாய்ப்புகள் பெருக வருவாய் பெருகுகிறது; வருவாய் பெருக வாய்ப்பும் பெருகுகிறது! உலகுக்கு நலமாகிறது. ஒரு திட்ட நிறைவேற்றம் என்பது முற்றும் முடிந்து விட்டது ஆகாது. மேலும் மேலும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பெற்ற வண்ணமே இருக்கவேண்டிய இன்றியமையாமை உண்டா கின்றது. அதற்கு அறிவியல் வளர்ச்சியும், மாந்தர் தேவையும் காரணங்கள் ஆகின்றன. இவற்றைச் சூயசுத் திட்ட வளர்ச்சிகள் உலகுக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. 9. எகிப்தின் புதுவாழ்வு எகிப்து மிகத் தொன்மையான நாடு. உலக நாகரிகத்திற்கு வித்திட்ட நாடு. பல்வேறு இனங்களைத் தன்னகத்துக் கொண்டு இரண்டறக் கலந்த பெருமைமிக்க நாடு. மேலை உலகும் கீழை யுலகும் ஓருலகாவதற்கு நுழைவாயில் ஆக இருக்கும் கீர்த்திமிக்க நாடு. இத்தகு நாடு பன்னாட்டவர்களின் படையெடுப்பிற்கும், கெடுபிடித் தாக்குதல்களுக்கும் இடமாக இருந்து துயருற நேரிட்டது. ஆயினும் மங்காப்புகழ் படைத்த அந்நாட்டின் தொல்பழஞ் சிறப்பை மாற்றிவிட முடியாது என்பதைக் காட்டத்தக்க எழுச்சியை அந்நாடு கொண்டிருந்தது. அதைப் பற்றிக் காண்போம். உலகச் செல்வாக்கும் வளமும் பெறுதற்கு எகிப்தைத் தன்னகப் படுத்துவதொன்றே வழி என்று நெப்போலியன் உணர்ந்தான். அதே நுட்பத்தை இட்லரும், முசோலினியும் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் தாக்குதலுக்கு எகிப்து உள்ளாயிற்று! அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் எகிப்தைப் பிரிட்டன் காத்தது. ஏன்? எகிப்தில் பிரிட்டன் தன் காலை வலிமையாக ஊன்றிக் கொள்வதற்கே! தொடக்க நாள் முதல் சூயசுத் திட்டத்தை உருவாகாமல் தடுத்தும் ஒழித்தும் வருவதே தொண்டாகக் கொண்ட பிரிட்டன், சூயசுத் திட்டம் நிறைவேறியதும் கடற்காலின் மிகுதியான பங்கு களை விலைக்கு வாங்கியும், அதன் செயற் கழகத்தில் இடத்தைப் பிடித்தும் கொண்டது. உலகப்பெரு வளத்தைப்பெற எகிப்தைத் தன் கைக்குள் வைத்திருத்தல் ஒன்றேவழி என்று பிரிட்டன் கண்டமை காரணமாம். எகிப்து நாட்டைப் பற்றிக்கொள்ளுவதற்குப் பிற நாடுகள் கொண்டிருந்த ஆவலும், அடாச் செயலும் எகிப்திய மக்களின் தன்மானத்திற்குச் சோதனையாயிற்று. எவர் ஆண்டால் என்ன என்றிருந்த எகிப்திய மக்கள் கொதித்து எழுந்தனர். தன் தேச உடைமையைப் பிற நாட்டார்க்கு ஊதாரித்தனமாக எகிப்து மன்னர் அளித்துவிட்டார் என்னும் சீற்றம் எகிப்து மக்கட்கு உண்டாகியது! கிளர்ச்சி மூண்டு வலுத்தது. ஐரோப்பியர் உடைமைகள் பாழாயின. 50 பேர்கள் உயிர் இழந்தனர். இதனால் பிரிட்டீசுப்படை எகிப்துக்கு விரைந்தது. இசுமாலியா நகரைத் தன்னகப்படுத்திற்று. பிரிட்டீசார் எகிப்தில் தம் காலை வலுவாக ஊன்றிக் கொண்டனர். சூயசுக் கடற்கால் ஆட்சிப் பொறுப்பைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாயிற்று. இந்நிலையில் செருமனி, துருக்கியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தைத் தன் கைக்கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கியது. இது பிரிட்டனுக்கு அச்சத்தை உண்டாக்கியது. எகிப்தில் துருக்கியின் மேலுரிமை முடிந்துவிட்டது என்று பிரிட்டன் ஒரு பேரிடியை வீசியது. இதைக்கேட்ட துருக்கி கொதித்தெழுந்தது. எழுந்த விரைவிலேயே பிரிட்டனால் தடுத்து நிறுத்தவும் பெற்றது. 1941-42 ஆம் ஆண்டு களில் எகிப்தும் சூயசும் இத்தாலியின் பெருந் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டனே முன்னின்று காத்தது. தாக்கிய நாடுகளே தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமை உண்டாயிற்று! 1914இல் துருக்கியின் மேலுரிமையை ஒழித்த பிரிட்டன் அதற்குக் காப்பாட்சி நல்கியது. ஆனால் தேசிய உணர்ச்சி காப்பாட்சி அளவில் அமையவில்லை. தன்னாட்சியை வேண்டியது. 1922இல் எகிப்தில் காப்பாட்சி முடிந்ததாகப் பிரிட்டன் அறிவித்தது. ஆனால் பெயரளவில் இருந்ததே அன்றிச் செயலில் வரவில்லை. ஆகவே 1924இல் எகிப்திய மன்னர் சாக்லூல் எகிப்தில் இருந்து பிரிட்டனும் படைகளும் நிதி நீதித்துறைகளில் ஆலோசகராக இருக்கும் ஐரோப்பியர்களும் அகல வேண்டும் என்றும், எகிப்திய ஆட்சி, வெளிநாட்டுத் தொடர்பு இவற்றில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும், எகிப்தில் வாழும் சிறுபான்மையினர், அயல் நாட்டினர் இவர்களையும் சூயசையும் காக்கும் பொறுப்பு எகிப்தியருக்கே இருக்க வேண்டும் என்றும், பிரிட்டனின் முதல் வரிடம் வலியுறுத்தினர். இது, பிரிட்டன் விட்டுக் கொடுக்கும் உதவிகளைப்பெற எகிப்து விரும்பவில்லை; அதனை வெளி யேற்றவே விரும்பியது என்பதைக் காட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்களுடையனவே! அன்னியர் புகலென்ன நீதி என்னும் உரிமையுணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. 1952-இல் குடியரசுப் புரட்சி நடைபெற்றது. பிரிட்டனின் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுபாடு உண்டானால் உதவிக்கு வரலாம்; ஆனால் அப்பணி முடிந்ததும் அகன்று தீரவேண்டும்; எகிப்துக் கெனப் போர்த் தளவாடங்களும் வானூர்திகளும் வழங்கவேண்டும்; இத்திட்டங்களுக்குப் பிரிட்டன் உதவாவிடில், அதற்கு முன்னைய எந்த ஒப்பந்தமும் நிலைபெறமாட்டா இவ்வாறு எகிப்து வலியுறுத்தியது. புரட்சியின் விளைவாக எகிப்து குடியரசாகியது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர்தம் முதல் நடவடிக்கையே சூயசுக் கடற்காலைத் தேசியமயமாக்கும் திட்டமாக இருந்தது. பிரிட்டன் இதனை விரும்புமா? எகிப்துக்குச் செய்யும் உதவிகளை உடனே நிறுத்தியது. எத்தகைய கட்டுப்பாடும் விதிக்காமல் உருசியா போர்த் தளவாடங்களும், பொருள்வள வாய்ப்பும் செய்தது. எகிப்து அசுவான் அணைக்கட்டுத் திட்டத்திற்கு உலகவங்கியில் 500 கோடி வெள்ளி கடன் கேட்டது. அதற்குப் பிரிட்டனும் அமெரிக்காவும் முட்டுக்கட்டை இட்டன. உடனே எகிப்து தன் பார்வையைச் சூயசுப் பக்கம் திரும்பியது. 1956 சூலை 27-இல் கடற்கால் முழு உலகக் கழகத்தாரிடமிருந்து எகிப்தின் தேசிய உடைமை என்று அறிவித்துவிட்டது. ஆம்! தேசிய உணர்வின் அழுத்தமான முத்திரை இது. சுதந்திரம் எம்பிறப்புரிமை என்னும் ஒலி இந்தியாவில் முகிழ்த்தது. அம்முகிழ்ப்பு அன்னியப்பிடியில் இருந்து இந்தியாவை விடுவித்தது. அத்தகு உரிமை உணர்வே எகிப்தின் தன்மானத்தையும் உரிமை வாழ்வையும் காத்தது. வாழ்க உரிமை உணர்வு! 10. புத்துலகக் கனவு என்பது பற்றித் தொகுத்தெழுதுக. நல்ல கனவுகள் வல்லவர்க்கு வாய்க்குமானால் அது நனவாகி நாடும் உலகும் நலம்பெற உதவும். அவ்வகையால் புத்துலகமாம் அமெரிக்காவில் தோன்றிய பனாமா இணைப்புக் கனவு பரந்த இரண்டு உலகத்தையும் சுருக்கி, ஓருலகாக இணைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அதனைப்பற்றிக் காண்போம். அமெரிக்காவை முதன்முதலாகக் கண்ட கடலோடி கொலம்பசு. ஆனால் முதற்கண் பனாமாப் பகுதியைக் கண்டவர் ரோடரி கோடி என்பவரே. அவர் பனாமாவை 1501ஆம் ஆண்டில் கண்டார். 1502ஆம் ஆண்டில் கொலம்பசு செய்த நான்காம் கடற்பயணத்தின்போதே பனாமாவைக் கண்டார். அவரிடம் மேற்கிந்தியப் பழங்குடி மக்கள் பனாவைக் கடந்து செல்ல ஒரு கடற்கால் இருப்பதாகக் கூறினர். ஆயினும் அக்கடற்காலை கொலம்பசு கண்டார் அல்லர். அவருக்குப் பின் நூனெசு டி பல்போவா என்பவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் முயன்று பார்த்துக் கடற்கால் எதுவும் இல்லை; நிலக்காலே உண்டு என்று தெளிந்தார். அவரே பசிபிக் கடலைக் கண்டு பனாமாத் திட்டத்தையும் கனவு கண்டார். ஆதலால் பசிபிக் மாகடலில் பல்போவா என்னும் ஒரு துறைமுகம் அவர் பெயரால் பின்னாளில் அமைக்கப் பெற்றது. பனாமாத் திட்டத்திற்கு முதற்கண் செயல்முறை நடவடிக்கை எடுத்துக்கொண்டவர் இசுபானிய நாட்டின் அரசரான 5-ம் சார்லசு என்பவரே. அவர் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு 1534ஆம் ஆண்டிலேயே செயல்முறை ஆய்வு செய்யுமாறு கட்டளை இட்டார். அவர் கருதிய வண்ணம் நில ஆய்வு வெற்றி தரவில்லை. வட்டாரத் தலைவரின் அறிக்கை திட்டத்திற்குக் கேடு செய்யும் நிலையில் இருந்தது. வீரன் கென்னாண்டோ பின்னர் இத்திட்ட ஆய்வில் முனைந்தார். நான்கு பாதைகளில் ஆய்வு நடாத்தினார். இவ்வாறே நான்கு நூற்றாண்டுகள் அதாவது 16 முதல் 20-ம் நூற்றாண்டு வரை பலநாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. எழுத்தாற்றல் மிக்க வான்கம்போர்டு, பெஞ்சமின் பிராங்கலின் ஆகியோர் தம் எழுத்து வன்மையால் திட்டம்பற்றி ஆய்வாளர் களைத் தட்டி எழுப்பினர். தூயதிரு சைமன் கழகத்தார் சூயசுத் திட்டத்துடன் பனாமா திட்டத்தையும் இணைத்து விளம்பரப் படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் புத்துலகக் குடியேற்றத்தில் இசுபானிய நாட்டிற்கு இருந்த ஆதிக்கம் தகர்ந்தது. அமெரிக்கா முதலாய மேலை நாடுகள் பனாமா ஆய்வில் தலைப்பட்டன. அமெரிக்க உள் நாட்டமைச்சர் கென்ரிகிளே என்பவரும் காலன் என்பவரும் திட்டவரைவுகள் செய்வதில் முனைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த பாமர்சு என்பவர் கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சாக்சன் ஆய்வு நடத்தினார். கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்யவும் முயன்றார். ஆனால் இவையெல்லாம் அரைகுறை முயற்சிகளாகவே நின்றன. 1849-ஆம் ஆண்டில் காலிபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசின் மேல் கடல் பகுதியான அக்காலிபோர்னியாவில் இருந்து கீழ்கரைப் பகுதிக்குத் தங்கத்தைக் கொண்டு செல்லவும், பிறதொடர்புகள் கொள்ளவும் வேண்டிய தாயிற்று. ஆதலால் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் முனைப்பில் பனாமா இருப்புப் பாதை வழி உருவாயிற்று. இந்நிலவழி பனாமாக்கடல்வழி உண்டாகப் பெருந் தூண்டுதலாக இருந்தது. 1879-ஆம் ஆண்டு லூசியன் வைசு என்பவர் கொலம்பியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கடற்கால் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பன்னாட்டுப் பேரவை ஒன்றுகூடி இத்திட்டம் பற்றி ஆய்ந்தது. வைசு பெற்றிரந்த உரிமையை வாங்க முடிவு செய்தது. முழு உலகக் கழகம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பைச் சூயசுத் திட்ட முதல்வர் டிலெசெப்சே கொள்ள முடிவாகியது. வேலையும் தொடக்கம் ஆகியது. இவ்வாறாகப் புத்துலகம் கண்ட கனவு தன் அடியெடுப்பைத் தொடங்கி வைத்தது. தன் குடும்பம் தன் சுற்றம் தன் ஊர் எனத் திட்டம் தீட்டி வளர்ப்பவர் பலர். ஆனால் உலகநலம் கருதித் திட்டம் தீட்டுவோர் அறியர். அத்தகைய அரிய பெரிய சால்பாளர்களால் தான் உலகம் நல்வாழ்வு வாழ்கிறது. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது உலகப் புலவர் வள்ளுவனார் வாக்கு! 11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக. புதிய உலகத்தையும் பழைய உலகத்தையும் ஓருலகாக்கிக் காட்டும் உயர்ந்த உணர்வால் உருவாகியது பனாமாத் திட்டம். அத்திட்டத்தின் மலர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம். சூயசுக் கடற்கால் திட்ட வீரர் டிலெசெப்சு பனாமாத் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணியாற் றினார். ஆனால் சூயசுத் திட்டத்தைப்போல் வெற்றியாக அவரால் நடத்த முடியவில்லை. அவர் பொறுப்பேற்றிருந்த பிரெஞ்சுக் கழகமே 1889இல் கலைக்கப் பெற்றுப் புதியதோர் பிரெஞ்சுக் கூட்டுக் கழகத்தின் பொறுப்பில் திட்டம் விடப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசும், பனாமாக் குடியரசும் பெரும்பங்கு கொண்டு திட்ட நிறைவேற்றத்திற்கெனப் பாடுபட்டன. 1899இல் அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் மக்கின்லி கொலம்பியக் குடியரசின் ஒப்பந்தத்துடன் கடற்கால் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். அதன்பின் அமெரிக்கக் கூட்டரசே பிரெஞ்சுக் கழகத்தினிடமிருந்து கொலம்பிய ஒப்பந்தப்படி பனாமாத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றுக் கொண்டது. அமெரிக்க அரசுக்குத் தரப்பெற்ற உரிமைகள் 100 ஆண்டுகள் செல்லும் என்றும், பின்னர் நூற்றாண்டுதோறும் உரிமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்யப்பெற்றது. கடற்கால் ஆட்சி உரிமை அமெரிக்கக் கூட்டரசுக்கே என்றும், திட்டப் பகுதியின் நில உடமை கொலம்பியக் குடியரசுக்கே என்றும், உரிமை மதிப்பாக முதற்கண் 1 கோடி அமெரிக்க வெள்ளியும், பின்னர் ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் அளிக்கவேண்டும் என்றும், திட்ட வேலைகளை நான்கு ஆண்டு களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. இத்திட்ட ஒப்பந்தம் பெரும்பாலும் கொலம்பியாவுக்கே நன்மை யாக இருந்தும்கூட அது அதனை மறுப்பதிலேயே முனைந்தது. அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் ரூசுவெல்டு சினங்கொண்டார். இந்நிலைமையில் பனாமா தன்னுரிமைக் கிளர்ச்சியில் இறங்கியது. அதற்கு அமெரிக்க அரசு மிகத்துணை புரிந்தது. ஆதலால் பனாமா விரைந்து தன்னுரிமையும் பெற்றது. உடனே அமெரிக்கக் கூட்டரசு பனாமாக் கூட்டரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது. புதிய ஒப்பந்தத்தால் பனாமாக் கடற்கால் பகுதி முழு உரிமையும் அமெரிக்கக் கூட்டரசுக்கே உடமை ஆயிற்று. அதற்கு ஈடாகப் பனாமாவின் விடுதலையை ஏற்பதுடன், முதற்பொருளாக ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் தர இசைந்தது. கடற்கால் அகழ்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மிக நெருங்கிய நில இடுக்கு ஆகும். பசிபிக் மாகடல் முகத்திலுள்ள பல்போவோத் துறைமுகத்தில் இருந்து அட்லாண்டிக் மாகடல் முகத்திலுள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடியும். அக்கால் 50 கல் நீளம் உடையது. வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடரும் கேதன் ஏரியும் இக்கால் பகுதியில் உள்ளன. கேதன் ஏரிக் கோடியில் கேதன் பூட்டுக்கால் என்னும் அமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கப்பல்களை இறக்கி ஏற்றும் நீரேணியாக இது பயன்படுகிறது. இப்பகுதியைக் கடந்து 7 கல் தொலைவுக்குக் கடல் மட்டத்திலேயே கால் சென்று அட்லாண்டிக் மாகடல் முகப்பில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடிகிறது. கேதன் ஏரி கடந்த பகுதி மிராப்ளோர்சு ஏரி என்னும் நீர்த்தேக்கத்தின் ஊடே கடற்கால் செல்கிறது. இதன் நீளம் 3 கல். இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. எனினும், கடல்மட்டத்தைவிட 54 அடி உயர்ந்தது. கேதன் ஏரிக்கும் மிராப்ளோர்சுக்கும் இடையே உள்ள பெட்ரோ மிகுபெல் என்னும் பூட்டு, ஒரு படி நீரேணியாக இருந்து கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி மட்டத்திற்குக் கொணர்கிறது. இதன்பின் மிராப்ளோர்சு பூட்டுக்கள் என்னும் இரண்டு படிகள் உள்ள நீரேணி அமைப்பு, கப்பல்களை 54 அடி கீழே இறக்கிக் கடல் மட்டத்தில் விடுகிறது. இதன்பின் கடற்கால் 7 கல் தொலைவு சென்று பல்போவோத் துறையில் சேருகிறது. ஊடுநெடுந் தொடர்மலையைப் பிளந்தே கடற்கால் அமைப்புச் செய்தனர். அப்பணியைத் திறமாகச் செய்தவர் கால்லியர்டு. ஆகவே இவர் பெயரால் கால்லியர்டு பிளவு என அது பெயர் பெற்றது. அப்பிளவுக்கு அப்பால் சாக்ரிசு என்னும் ஆறு கடற்காலில் சேர்கிறது. அப்பால் கேதன் அணை உள்ளது. ஆங்குள்ள நீர்ப்பெருக்கால் குன்றுகள் தீவுகளாக மாறின. அத்தீவு களில் பெரியது பாரோ கொலராடோ என்பது. கேதன் அணை அன்றி மாடன்அணை என்பது ஒன்றும் உண்டு. அது கடற்கால் பணிநிறைவேறிப் பதினாறு ஆண்டுகள் கழிந்தபின் அமைக்கப்பெற்றது. இவ்வமைப்பால் கப்பல் போக்கு வரத்து மட்டும் அன்றி, நீர்ப்பெருக்கமும், அதனால் நிலவளப் பெருக்கமும் ஊற்றெடுக்கத் தொடங்கின. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ? என்று தாயுமானவர் வினாவினார். வல்லவர் வகுத்த வாய்க்கால் பொற்சுரங்கமாகப் பொலிவதை இன்று காண்கிறோம். வினையே ஆடவர்க்கு உயிர் 12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட வளர்ச்சிப் பணிகளை விவரிக்க. அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது. மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவி அதனையும் தன் காலடிக்கீழ்க் கொண்டுவரும் அளவில் வளர்கின்றது. இந்நிலைமையில் எந்தத் திட்டமும் முதற்கண் ஏற்பட்ட அளவிலேயே அமையும் என்பதற்கு இல்லை. அவ்வகையில் பனாமாத் திட்ட நிறைவின் பின் உண்டாய வளர்ச்சிகளைக் காண்போம். பனாமாப் பூட்டுக் கால்களும் அவற்றில் அமைக்கப்பெற்ற பொறிகளும், படகுகளும், சிறு கப்பல்களும் போய்விடும் அளவுக்கே பயன்பட்டன. ஆனால், மிகப்பெரிய நீராவிக் கப்பல்களும், போர்க்கப்பல்களும் போய்வரவேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. அத்தேவைக்கு ஏற்றபடி கடற்காலை கேழவும், அகலமாக்கவும் வேண்டியதாயிற்று. அதற்காக நாள்தோறும் பணிகள் தவறாமல் நடைபெற்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. செயலாட்சி, அமைப்பாட்சி, நிலஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி என்னும் பல்வகை ஆட்சிக் குழுக்கள் தனித்தனி - ஆனால் - வளர்ச்சியில் ஒன்றுபட்டு அயராது உழைத்த வண்ணம் இருக்கின்றன. கொள்ளை நோய்க் கொடுமையைப் பனாமாவில் இருந்து மட்டுமென்ன பாருலகம் எங்கும் கூடத் தலைகாட்டாவண்ணம் செய்யத்தனி முயற்சி கொண்டுள்ளனர். பசிபிக் கடலில் உள்ள பல்போவாத் துறைமுகத்திலும், அட்லாண்டிக் கடலில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்திலும் பெரும் பெரும் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் செய்யப்பெற்றன. கப்பல் பணிப் பட்டறைகளும் கப்பல் கட்டுமான நிலையங்களும் அமைக்கப் பெற்றன. பணி செய்வோர் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியன திட்டமிட்டுக் கட்டப்பெற்றன. கடற்காலின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குக் கப்பல் எட்டுமணி நேரத்தில் சென்றுவிடுகின்றது. ஆனால் அக்கப்பல் வருதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே அதனை வரவேற்றகத்தக்க முன்னேற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. கடற்காலின் செயற் சீர்மையை விளக்கும் சீரிய சான்று இது. கடல்கால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அடிக்கடி நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் திட்ட நிறை வேற்றத்தின் பின் 1916ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சறுக்கல் உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பேரிழப்பு உண்டாக்கிற்று. கடற்காலில் சரிந்த மண்ணை வெட்டியெடுத்து வெளியேற்றுதற்குப் பெருமுயற்சி வேண்டியிருந்தது. ஆயினும் அயரா முயற்சியால் திட்டமிட்ட கால எல்லைக்கு முன்னரே பணியை நிறைவேற்றி யதுடன் சிறப்பாகவும் செய்து முடித்தனர். எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர், திண்ணியர் ஆகப் பெறின் என்பது வள்ளுவர் வாய்மொழி அல்லவா! ஒரு கப்பல் கேதன் ஏரியில் இருந்து கடலுக்குச் செல்லும் போது 520 இலட்சம் காலன் நீர் ஏரியில் இருந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஓர் ஆண்டுக்கு 4850 கோடி குழியடி நீர் கடலுக்குச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஏரிப்பரப்பின் நீர், வெப்பத்தால் ஆவியாதலாலும் வற்றுகின்றது. இவற்றை ஈடு செய்தற்கென்று கட்டப்பெற்றதே மாடன் அணைக்கட்டு என்பதாகும். அந்நீர்ப் பெருக்கம் கடற்கால் பூட்டுக்கு மட்டுமன்றி, மின்சாரம் எடுப்பதற்கும் குடிநீர் வாய்ப்புக்கும் உதவியாயிற்று. 1929ஆம் ஆண்டில் கடற்காலில் சென்ற கப்பல்கள் 6289 ஆகவும் அவற்றால் கிட்டிய வருவாய் 2,71,11,000 வெள்ளியாகவும் இருந்தது. 1952 முதல் கப்பல் எண்ணிக்கையிலும், வருவாயிலும் மிகப்பெருகியது. 1956ஆம் ஆண்டுக்குள் 25,00,000 கப்பல்கள் இக்கடற்கால் வழி சென்று உலகத் தொண்டு செய்துள்ளன. பனாமாக் கடற்கால் அமெரிக்காவின் தெற்கு வடக்குப் பகுதிகட்கு இடையே உள்ளது. எனினும் உலகின் உயிர்வழி யாகும் உயர்வு பெற்றுள்ளது. அதனால் காலமும், இடமும், அல்லலும் மிகமிகக் குறைந்துள்ளன என்பதும், வளமும், வாய்ப்பும், நலமும் மிக மிகப் பெருகியுள்ளன என்பதும் மிகப் பேருண் மையாம்! வாழ்க வளர்ச்சித் திட்டங்கள்! முற்றிற்று. அறப்போர் 1. இளமையும் கல்வியும் முன்னுரை: - ஓர் இடம் உயர்ந்த கட்டங்களாலோ ஓடும் ஆறுகளாலோ, நிமிர்ந்து நிற்கும் மலைகளாலோ, விரிந்து கிடக்கும் கடல்களாலோ மட்டும் பெருமை அடைந்து விடுவதில்லை. ஆங்குப் பிறந்த பெருமக்களாலேயே அழியாப் புகழ் அடை கின்றது; அவ்வகையில் இந்திய நாட்டுக்கு இணையில்லாப் புகழ் தேடித்தந்தவர்களுள் கவிஞர் தாகூரும் ஒருவர் ஆவர். கற்பனைவித்து:- கல்கத்தாவில் சீரோடு திகழ்ந்த தாகூர் குடியில் 1861 ஆம் ஆண்டில் தேவேந்திரநாத தாகூருக்குப் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார் இரவீந்திரர். எளிய வாழ்வை விரும்பிய தேவேந்திரர் இரவீந்திரரையும் அவ்வாறே வளர்த்தார். ஆதலால் எளிய விளையாடுப் பொருள்கைளத் தாமே படைத்துக் கொண்டு வீட்டு முற்றத்திலும் தோட்டத்திலும் விளையாடிப் பொழுது போக்கினார். இவ்வெளிமையும், விளை யாட்டுப் படைப்பும் இரவீந்திரர் கற்பனைக்கு வித்திட்டன. கற்பனைக்கு விருந்து:- சிறுவர் இரவீந்திரரை அண்ணன்மார் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆதலால் வேலைக்காரர்களையோ, அன்னையையோ, அத்தையையோ, கணக்கர்களையோ இரவீந்திரர் நாடிச்செல்ல நேரிட்டது. அப் பொழுதில் அவர்களிடம் சிலச்சில கதைகளைக் கேட்டார்; கதைப் பாட்டுக்களையும் அறிந்தார்; இவை இரவீந்திரரின் கற்பனைக்கு விருந்தாயின. இயற்கைக் கவர்ச்சி:- இரவீந்திரர் தனியே இருக்கம் பொழுது அவர் தம் கற்பனை உலகம் உண்மை உலகமாக மாறியது. பயன்படாமல் அவர்கள் வீட்டில் கிடந்த பல்லக்கில் இரவீந்திரர் ஏறி அமர்வார். அப்பல்லக்கு வானில் பறக்கும்; மலையையும், ஊரையும், ஆற்றையும் கடலையும் தாண்டும் எல்லாம் கற்பனையில் தான்! பச்சைப்புல், பனித்துளி, இளந்தளிர், மென்காற்று, மழை முதலிய இயற்கைப் பொருள்கள் இரவீந்திரரைக் கவர்ந்தது போலவே, மண்ணும் அதிலுள்ள பொருள்களும் கவர்ந்தன. பள்ளிப் படிப்பு:- வீட்டில் அடைபட்டுக் கிடந்த இரவீந்திரர் மற்றைச் சிறுவர்களைப் போலத் தாமும் பள்ளிக்குப்போக ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் சென்றதும், வீட்டைப் பார்க்கிலும் பள்ளிக்கூடமே கொடிய சிறைச்சாலையாக இருப்பதாக உணர்ந்தார்; ஆகவே பள்ளிப் படிப்பை வெறுத்தார். படிப்பில் வெறுப்பு:- இரவீந்திரரின் அண்ணன் மார்களுள் ஏமேந்திரர் என்பவர் ஒருவர். அவர் இரவீந்திரர், வீட்டிலேயே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அந்நாளில் வங்காளம், ஆங்கில மோகத்தில் சிக்கிக் கிடந்தது. ஆயினும் இரவீந்திரர் வங்கமொழியிலேயே பாடங்களைக் கற்றார். உடற்பயிற்சி, ஓவியம், ஆங்கிலம் ஆகியவனவும் அவர் படிப்பில் இடம் பெற்றன. பள்ளிப் பாடத்தைப் போலவே, வீட்டுப் பாடமும் இரவீந்தருக்குச் சுமையா யிற்று. ஆசிரியர்க்கு நோய் உண்டாகி வராமல் இருக்கமாட்டாரோ என்றும் தமக்கு நோய் வந்துவிடக்கூடாதா என்றும் ஏங்கினார். ஏட்டுப் படிப்பில் அவருக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. படிப்பும் பாராட்டும்:- பள்ளியில் படிக்கும் போதே பாட்டு எழுதும் திறம் பெற்றிருந்தார் இரவீந்திரர். அருஞ்சொற்களை அமைத்து எழுதுவதும், துன்பத்தைப் பற்றிப் பாடுவதும், சிறப்பு எனக்கருதிப் பாடினார். தம் மைந்தன் திறமை கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தம் மாணவர் திறமையை அறிந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார். நாடக நாட்டம்:- பிற்காலத்தில் உலகப் பெரு மேடையே இரவீந்திரருக்குக் காத்திருந்தது. எனினும் அவரது பிள்ளைப் பருவத்தில் அவர் அண்ணன்மார், வீட்டில் நடித்த நாடகங்களை தொலைவில் நின்றே காண முடிந்தது; நாடக மேடையை நெருங்கவும் அவர்கள் விட்டது இல்லை. இயற்கைக் கல்வி :- இரவீந்திரர் தம் தந்தை யாருடன் ஒருமுறை போல்பூருக்கும், இமயமலைக்கும் தொடர் வண்டியில் சென்றார் தொடர் வண்டிப் பயணம் அவர்க்கு மிகுந்த இன்பம் வழங்கியது. விடுதலைபெற்ற பறவை போல இன்புற்றார். தேவேந்திரர் போல்பூருக்கு அருகே அமைந்திருந்த சாந்தி நிகேதனம் இரவீந்திரரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இமயமலையின் இயற்கைச் சூழல் இரவீந்திரரின் சிறந்த கல்வி மேம்பாட்டுக்கு உதவியது. அங்கே தான் தேவேந்திரர் இரவீந்திரருக்கு ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்பித்தார்; விண்மீன்களையும், கோள்களையும் வானத்தை நேரில் காட்டி விளக்கினார்; நேராகத் தாவர இயலைக் கற்பித்தார்; இவற்றால் இரவீந்திரர் தாமே உற்றறியவும் எண்ணிப் பார்க்கவும் திறம் பெற்றார். கல்லூரிக் கல்வி :- கல்கத்தாவுக்குத் திரும்பிய இரவீந்திரர் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். கல்வி ஓரளவு கவர்ச்சியாக இருந்தது; கற்பித்த ஆசிரியர்களும் நிறைவளித்தனர். எனினும், இமயமலைக் காட்சி தந்த இன்பத்தை அடைய முடியவில்லை. ஆகவே ஏட்டுக் கல்வி அவ்வளவுடன் நின்றது. இயற்கைக் கல்வியோ பெருகத் தொடங்கியது. முடிவுரை :- உலகப் பெரும் புலவர் தாகூர், அவர் இளமைப் பருவத்திலேயே இயற்கையாகக் கற்பனை வித்துக்கள் ஊன்றப் பெற்றன; கதையும்; பாட்டும் நாடகமும் கற்பனை வரைத்துணை செய்தன; இயற்கைக் காட்சிகள் நெறிப்படுத்தின; விளையும் பயிர் முளையிலே என்பது மெய்யாயிற்று! 2. தாகூரின் கலைவளர்ச்சி முன்னுரை:- கலைத்திறம் அரிதில் அமைவது; ஆனால், எளிதில் எவரையும் கவர வல்லது; கலைத்திறம் பெற்றவர்கள் உலகவர் பாராட்டைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வர். அத்தகைய பேறு பெற்றவர் கவிஞர் தாகூர் ஆவர். குடும்பத்தில் கலை:- தாகூரின் குடும்பமே ஒரு கலைக் கழகம் .மூத்j அண்ணன் மெய்ந்நூற் பயிற்சியும் கணக்கறிவும் மிக்கவர்; ஐந்தாம் அண்ணன் சோதி ரீந்திரர் சீர்திருத்தக்காரர், இசை நாடகங்களில் தேர்ந்தவர். இவர்கள் எப்பொழுதும் கலைஞர் களோடும் அறிஞர்களோடும் அளவளாவுவர். அப்பொழுது உடனிருக்கும் வாய்ப்பு. தாகூருக்குக் கிட்டியது. ஆகவே இக் கலைகளில் தாகூர் திறம்பெற வாய்ந்தது. கதைத் திறம்:- வங்கக் கதையாசிரியர்களுள் தலை சிறந்த ஒருவர் பக்கிம்சந்திரர்; அவர் எழுதிய கதைகள் பங்கதர்சன் என்னும் திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அக்கதை களைத் தாகூர் குடும்பத்தினர் விரும்பிப் படித்தனர். இரவீந்திரர் அக்கதைகளை உரக்கப் படித்துக் காட்டி வீட்டார் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆனார். இந்நிலையில் பாரதி என்னும் பெயரில் தாகூர் குடும்பத்தில் இருந்து ஒரு திங்கள் இதழ் வரத் தொடங்கியது. அதில் இரவீந்திரரின் பாடல்களும், கதைகளும் வெளிவரலாயின. சோதிரீந்திரர் எழுதிய நாடகமும் அவ்விதழில் வந்தது அந்நாடகத்தை வீட்டில் நடித்துக் காட்டுவது வழக்கம். அதில் தாகூரும்சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். ஆங்கிலக் கல்வி:- தாகூர் தம் பதினேழாம் அகவையில் இங்கிலாத்துக்குச் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில்சேர்ந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார்; ஒன்றரை ஆண்டுகள் பயின்றும் ஒரு துறையிலும் பட்டம் பெறாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினர், தாகூர் சட்டப் படிப்பில் தேறவேண்டும் என விரும்பினர். அதனால் மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தம் உடன் வந்த அண்ணன் மகனுக்கு நோய் பற்றிக் கொண்ட மையால் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அவ்வளவில் தாகூரின் சட்டக் கல்வி நின்று விட்டது. மாலைப் பாடல்கள்:- இரவீந்திரர் தமக்குக் கிடைத்த பொழுதைக் கலைத்துறையில் செலவிட்டார். புதிய புதிய இசை நயங்களைக் கண்டார். கங்கையின் அழகையும், பெருக்கையும் கண்டு பலப்பல பாக்கள் இயற்றினார். அவை மாலைப் பாடல்கள் என்னும் பெயரால் வெளியாயின. அதற்குப் பின் வங்காள செல்வி என்னும் புகழ் தாகூருக்கு உண்டாயிற்று. வங்கக் கதை ஆசிரியர் பக்கிம்சந்திரர் ஒரு திருமண வீட்டிற்கு வந்தார். அவரை மணவிழா வீட்டினர் மாலையுடன் வரவேற்றனர். அம்மாலையைத் தம் கழுத்தில் ஏற்காமல் வாங்கி அங்கிருந்த தாகூருக்குச் சூட்டி, இவரே இதற்குத்தக்கவர் என்று பாராட்டினார் இவரின் மாலைப் பாடல்கள் என்ற நூலைப் படித்ததில்லையா? என்று வினாவிப் பெருமைப் படுத்தினார். ஊற்றின் எழுச்சி:- ஒரு நாட் காலையில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கதிரவன் தோற்றத்தைக் கண்ணுற்றார் தாகூர். மரங்களுக்கு இடையே கதிரவனின் ஒளிக் கதிர் பரவிவந்த காட்சி அவர் உள்ளத்தே ஒரு பெரு மாறுதலை உண்டாக்கிற்று. இவ்வகக் காட்சியால் உலகமே ஒரு புதிய அழகுடன் விளங்கியது. எல்லாப் பொருள்களும் முழு அழகுடனும், முழு நிறைவுடனும் கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பாகக் காட்சி வழங்கியது. வெறுப்பு மிக்க ஒருவனும் தாகூர் பார்வையில் விருப்புமிக்கவனாகத் தோற்றம் அளித்தான். அன்று தோன்றிய உணர்ச்சியைப் பாவாக்கி ஊற்றின் எழுச்சி என்று தலைப்புச் சூட்டினார். சந்நியாசி:- ஒரு சமயம் மேல் கடலை ஓட்டிய கார்வாருக்குச் சென்றார் தாகூர். கடற் பரப்பும் அதன் காட்சிகளும் அவர்க்கு விருந்தாயின. அங்கிருந்த நாளில் எழுதியவற்றுள் சந்நியாசி என்னும் நாடகம் குறிப்பிடத்தக்கது. துறவி ஒருவன் நெடுங்காலம் காட்டில் வாழ்ந்து உள்ளத்தை மிக உறுதிப்படுத்திக் கொண்டான். இனி உள்ளத்தில் அசைவு உண்டாகாது. என்னம் எண்ணத்துடன் ஊர்க்குள் போனான். அங்கே வசந்தி என்னும் திக்கற்ற குழந்தையைக் கண்டான். அக்குழந்தை நெருங்கித் தொடவும் பழகவும் இடம் தந்தான். அதனால் அவன் உள்ளத்தில் பாசம் உண்டாகின்றது. பாசம் உண்டாகக் கூடாது என எண்ணி துறவி வசந்தியை விடுத்து ஓடினான். வழியில் ஒரு வறிய பெண் தன் தந்தையைக் கூவிக் கொண்டு ஓடுவதைக்கண்ட துறவியின் மனம் மாறுபாடுற்றது. மீண்டுவந்து வசந்தியைத் தேடினான்; பலரையும் வினவினான். வசந்தி இறந்து விட்டாள் என்பதை அறிந்து வருந்தினான். அன்பு நெறியே வாழ்வு நெறி என்பதைச் சந்நியாசி நாடகத்தால் தெளி வாக்கினார் தாகூர். முடிவுரை:- குடும்பச் சூழல் இளமையிலேயே பலவகைக் கலைகளை அறிதர்க்கும் பெறுதற்கம் வாய்ப்பாக இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு இசையிலும், நாடகத்திலும், பாட்டு எழுதுவதிலும், கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். உலகம் பாராட்டும் பேறு பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? 3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் முன்னுரை : பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே எனப் பாடினார் பாரதியார். தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் ஒவ்வொருவருக்கும் இயல்பானது: இன்றியமையாதது இவ்வகையில் பெரும் புலவர் தாகூர் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். தாகூர் உள்ளம்: தாகூர் பேருள்ளம் உடையவர், சமயத்தின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் பெருக்குவதை வெறுத்தார். அது போலவே ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பகையை வளர்க்கும் நாட்டுப் பற்றையும் வெறுத்தார். நாட்டுக்கு நன்மை தேடுவதில் பிறர்க்கு எவ்வகையிலும் குறையாதவராக விளங்கினார். நாட்டுக்கு கொடுமை உண்டாக்கப்படும் போது வன்மையாகக் கண்டித்தார். நாடும் மொழியும்:- தாகூர் நெஞ்சில் உலகம் குடிகொண்டி ருந்தது. உலகவர் அனைவரும் அவர் அன்புக்குரியவர். ஆயினும் அவருடைய எழுத்துக்களில் வங்க நாடு பொலிவாக விளங்கியது. வங்க நாட்டுக் கருப் பொருள் மிக இடம் பெற்றன. வங்க மொழி முன்னேற்றமும் வங்க நாட்டு முன்னேற்றமும் அவர்க்கு உயிர்ப்பு ஆயின. ஆங்கில மோகம்:- வங்கமக்கட்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த ஆங்கில மோகத்தை அகற்ற அரும்பாடு பட்டார் தாகூர். தாய்மொழி வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டும் என வற்புறத்தினார். பொது மேடைகளில் தாய் மொழியே முழங்க வேண்டும் என்று கூறித் தாமே வழிகாட்டினார். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவுகளையும் வங்க மொழியிலேயே நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் தேர்ந்தவரான அவரது செயல் நாட்டு மக்களை விழிப்படையத் தூண்டியது. சிற்றூர் முன்னேற்றம்:- நாட்டின் முன்னேற்றம் சிற்றூர் களிலே அடங்கிக்கிடப்பதை அறிந்தார் தாகூர் சிற்றூர் மக்கள் செல்வர்களையும் ஆட்சியாளர்களையும் நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்பதை அறிந்தார். அந்நிலையைப் போக்குதற்கு முனைந் தார்; கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். சிற்றூர் முன்னேற்றத்தில் கற்றோர் ஈடுபடத் தூண்டினார். சாந்தி நிகேதனம்:- நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் அடங்கிக்கிடப்பதை நன்கு உணர்ந்தவர் தாகூர். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவது போன்ற பயன்மிக்க செயல் வேறு இல்லை என உணர்ந்தார். தம் இளமைப் பருவத்திலே பள்ளியைச் சிறைச்சாலையாகக் கருதிய நிலையை நினைத்துக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பள்ளிச் சூழ்நிலை யையும் பாடத்திட்டத்தையும் அமைக்க விரும்பினார். குழந்தைகள் ஆடிப்பாடி மகிழவும், இசையும் நாடகமும் கற்கவும், அறிவுப் பசி உண்டாகி ஆர்வத்துடன் கற்கவும் வழிவகை காண விரும்பினார். இத்தகைய எண்ணங்களால் 1901 ஆம் ஆண்டு உருவாகியதே சாந்தி நிகேதனம் என்னும் கலைக்கோவில் ஆகும். முடிவுரை:- வாழ்க ஒழிக என்று முழங்குவதிலே நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இருப்பதாகக் கூறிவிட முடியாது, நாடும் மொழியும் நன்மை பெரும் வகையில் எண்ணிப் பார்த்து ஏற்ற தொண்டுகள் செய்வதிலேதான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அடங்கிக் கிடக்கிறது. அத்தகைய அருந்தொண்டு செய்தவருள் தலைமணியாகத் திகழ்பவர் தாகூர். அவரது அயரா உழைப்பால் வையத்தில் வங்க நாட்டுக்கும் வங்க மொழிக்கும் தனிப்பேர் இடம் உண்டாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை. 4. இல் வாழ்க்கை தனி வாழ்க்கையை உலக வாழ்க்கையாக - தன்னல வாழ்வைப் பொதுநல வாழ்வாக - மாற்றியமைக்க அமைந்த போற்றத்தக்க அமைப்பே இல்வாழ்வாம். ஒருவர் தம் இல்வாழ்வில் பெறும் அமைதியே அவர் தம் சீர் சிறப்புக்கு அடிப்படையாம். இவ்வகையில் சீரிய இல்வாழ்க்கை எய்தி உலகுக்கு எடுத்துக் காட்டாக இலங்கி யவர் கவிஞர் தாகூர். இல்லறம்:- அன்பு நெறியே உலகை உய்ப்பது என்னம் உண்மையைத் தாகூர் கண்கூடாக அறிந்து கொண்ட நாளிலே தான் அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவர் மிருணாளினி தேவியார். அவர்அருங்குணச் செல்வி யராகத் திகழ்ந்தவர். ஆதலால் இல்லறம், அன்புக்கும் அமைதிக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தார். இல்லத்தில் கலைப்பணி:- மிருணாளினி தேவியார் கணவர் தம் உள்ளப்பாங்கை நன்கு உணர்ந்தவர். அவர்தம் கலைமேம் பாட்டை நன்கு அறிந்தவர். ஆகவே தம் கடமையில் தவறாமல் கணவர் கலைத் தொண்டுக்குத் துணையாக வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கலைப்பணி செய்வதற்குத் தாகூர்க்கு வாய்ப்பு ஏற்பட்டது தேவியாரலேயே. எளிமை வாழ்வு:- தாகூர் எளிமையும் தூய்மையும் விரும்புவர். எந்த ஒன்றிலும் அழகு காணத் துடிப்பவர். ஆடம்பரத்தை வெறுப் பவர். செல்வக் குடியில்பிறந்து வளர்ந்த மிருணாளினி தேவியார். கணவர் குறிக்கோளுக்கு ஒரு சிறிதும் மாறாது நடந்தார். மூட்டை யாகக் கொண்டு வந்த நகைகளை மூட்டையாகக் கட்டி வைத்து எளிமை பூண்டார். அணிகலம் ஆடை இவற்றில் மட்டும் தானா எளிமை? இணைந்த எளிமை:- தட்டு முட்டுச் சாமான்களிலும் எளிமை போற்றுவதே தாகூர்க்கு இயல்பு. நிறைய உடைகளை எடுத்துக் கொண்டு வெளியூர்க்குச் செல்ல நேர்ந்தால் இரண்டு உடை போதுமே என்பார். சாந்தி நிகேதனத்தில் பிறரைப் போலவே தமக்கும் குடிசை அமைத்துக்கொண்டு வாழவும், எளிய உணவே உண்டு வாழவும் தாகூர் முனைந்தார். இவற்றுக் கெல்லாம் மிருணாளினி தேவியார் இணைந்து செல்லும் மனைவியாக இலங்கினார். ஒத்த இல்லறம்:- மிருணாளினி தேவியாரின் சீரிய பண்புகள் தாகூரைக் கவர்ந்தன. ஆதலால் பற்பல கடமைகளுக்கும் இடையேயும் சமையல் அறையில் வந்து பொழுது போக்குவார். காய்கறி தின்பண்டம் பற்றியும் உறையாடுவார். மனைவியார் நோயுற்ற காலத்தில் வேறு எவரையும் அவர்க்கு விசிற விடாமல் தாமே விசிறி இன்புற்றார். குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளின் மேல் பேரார்வம் உடையவர் தாகூர். அவர்தம் இல்வாழ்வின் பயனாக ஆண்மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவரும் தோன்றினர். அவர்கட்கு வழிகாட்டுவது மட்மல்லாமல் குளிப்பாட்டுதல், உடுத்தி விடுதல், உறங்கச் செய்தல் ஆகிய கடமைகளிலும் முடிந்த பொழுதுகளில் எல்லாம் பங்கு கொண்டார். பேரிடி:- தாகூரின் இல்வாழ்க்கை அன்பிலே தொடங்கி அமைதியிலே வளர்ந்து அறத்திலே முதிர்ந்து இன்பமே பொருளாகத் துலங்கியது. அந்த இனிய இல்லறம் தாகூரின் முப்பத்தொன்பதாம் அகவையுடன் நிறைவாயது. தாகூர்க்குக் கிட்டிய பேரிடிகளில் தலைமையானது மிருணாளினி தேவியாரின் மறைவேயாம். முடிவுரை:- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் திருவள்ளுவர். அதற்கு ஏற்ப அமைந்தது தாகூரின் இல்வாழ்வு. அந்த வாழ்வே வங்கக் கவிஞரை உலகக் கவிஞர் ஆக்கிற்று என்பதில் ஐயமில்லை. 5. தொண்டுகள் தனக்கென வாழும் வாழ்வு, பறவை, விலங்குகட்கும் உண்டு. ஆனால், பிறவுயிர்க்கென வாழும் வாழ்வு அவற்றுக்கு இல்லை. பிறர்க்கென வாழும் வாழ்வு கொள்ளாதவர்கள் மனித வடிவில் இருப்பினும் - கற்றத் தேறியவராய் இருப்பினும் - மனிதர் ஆகார். அவர் மற்றை உயிர்களைப் போன்றவரே ஆவர். தாகூர் உள்ளம் பேருள்ளம்! நாடு, இன, மொழி கடந்த பேருள்ளம். அவ்வுள்ளம் தொண்டிலே தோய்ந்து நின்ற உள்ளமாம். சாந்தி நிகேதனம்- தாகூரின் தலையாய தொண்டு சாந்தி நிகேதனத்தைத் தோற்றுவித்து வளர்த்ததாம். நைவேத்தியம் என்னும் பெயருடன் தாகூர் இயற்றிய நூற் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தந்தையார் அதற்குப் பரிசாகப் பெரும் பொருள் வழங் கினார். அத் தொகையைக் கொண்டு அச்சிட்டு நைவேத்தியத்தை நூலாக்கினார் தாகூர். அதைக் கொண்டு சென்று, ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடந்தந்துதவுமாறு தந்தையாரை வேண்டினார். அதற்கு இசைந்து வேண்டிய வாய்ப்புக்கள் அனைத்தும் செய்து உதவினார். இவ்வகையில் 1901 இல் சாந்தி நிகேதனம் தோன்றியது. கலைவளர்ச்சி: எளிமையயை செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக்கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியை தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். பள்ளி இசை முழக்கத்துடன் ஒவ்வொருநாளும் தொடங்கும். இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப் பெறும். வாய்த்த பொதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப் பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிப்பிலும் பங்கு கொள்வார் தாகூர். கல்விப்பயிற்சி:- இளையவர்கள் இனிய முறையில் கல்விகற்க ஏற்பாடு செய்தார் தாகூர், விளையாட்டின் வழியாகவே கற்க வேண்டியவற்றை விரும்பிக் கற்க வழிவகை கண்டார். அடக்கு முறை இல்லாமல் சிறைச் சாலை என்னும் எண்ணம் தோன்றாமல் விருப்பத்தோடு மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக இருக்கவும். அவர்களுக்குள் வரும் தவறுகளை அவர்களே ஆராய்ந்து தீர்க்க வல்லவர்களாக இருக்கவும் வாய்ப்புக்கள் செய்தார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்குணரப் பயிற்றுவித்தார். இவ்வகையால் நன்மக்களை உருவாக்கி நாட்டுக்குத் தருதலில் சாந்தி நிகேதனம் பெரும் பங்கு கொண்டது. இடர்ப்பாடுகள்:- சாந்தி நிகேதனத்தை அமைத்து வளர்க்கும் பொறுப்பில் தாகூர்க்குப் பொருள் மிகச் செலவாயிற்று. பொருள் முடை ஏற்பட்டது போதாது என்று மனைவியார், மகள், தந்தை யார், மைந்தன், சிறந்த ஆசிரியர் ஒருவர் ஆகியோர் அடுத்தத்து இறந்தனர். இவ்விழப்புக்கள் தாகூரை வாட்டின. அவர், நாட்டுத் தொழிலும், வாணிகமும் வளரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில அமைப்புக்ளில் போட்டு வைத்திருந்த பணமும் வரப்பெறாமல் போய் விட்டன. இந்நிலையிலும் தளராமல் அரிய பல பணிகள் புரிந்தார். பொதுப்பணிகள்:- 1889இல் கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது தாகூர், நிவேதிகை அம்மையாருடன் ஓய்வின்றி பாடுபட்டு பணம் திரட்டினார். வங்கத்தில் வெள்ளக்கேடும், பஞ்சயத்துயரும் உண்டாக்கிய பொழுதுகளில் எல்லாம் அயராது பாடுபட்டார். பீகாரிலும், குவெட்டாவிலும் நில நடுக்கம் உண்டாக்கிய போது மக்கள் சொல்ல முடியாத் துயரடைந்தனர். அப்பொழுது தாகூர் செயற்கரிய செயல்களை மேற்கொண்டார். அரசியல் ஈடுபாடு:- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க நேர்ந்த போது மக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கட்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தினார் தாகூர். நாடெல்லாம் சென்று மேடைதோறும் முழங்கினார். வீரப் பாடுக்கள் இயற்றிப் பரப்பினார்; ஊர்வலம் நடத்தினார்; நிதி திரட்டி உதவினார். பகை கொள்ளாத ஒத்துழையாமையே அவர் கருத்தாக இருந்தது மாணவர்கள் இயக்த்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறினார். இந்நெறிப்படி அமைப்புச் செல்லாமையைக் கண்டு அரசியலில் இருந்து விலகிச் சாந்தி நிகேதன அமைதிப் பணியை மேற்கொண்டார் இந்து முகமதியர் வேறுபாட்டைத் தடுக்க எவ்வளவோ அவர் முயன்றார். அது கைகூடாமையால், வங்கம் இரண்டாகப் பிரிந்து பட நேர்ந்தது. கலைத்தொண்டு:- அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர் கலைத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்டோர், புகழ் வாய்ந்த கீதாஞ்சலியையும், வேறு சில நாடகங்களையும் இப் பொழுதில் இயற்றினார். மாணவர்களை நடிப்பு முதலாய துறைகளில் நன்கு வளர்க்கப் பாடுபட்டார். அவருடைய தொண்டை நாடு அறியத் தொடங்கியது ஒப்பற்ற உலகக் கவிஞராம் தாகூரைப் பலவகை அமைப்புக்களும் வரவேற்கவும் பாராட்டவும் தொடங்கின. முடிவுரை:- தாகூர் பரந்த பாங்கு படைத்தவர் இளையவர் உள்ளத்தே உண்டாகும் உணர்ச்சிகளே எதிர்கால உலகைக் காக்க வல்லது எனத் தெளிந்து தொண்டாற்றினார். மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவன் உவக்கும் தொண்டு என்பதைச் செயலில் காட்டினார். அவர் தொண்டுள்ளம் வாழ்வதாக. 6. பெருவாழ்வு ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்றார் வள்ளுவர். ஆம் உலகத்தில் நிலை பேறானது புகழ்ஒன்றேயாம். நிலைபெறாத உலகத்தில் பிறந்த மக்கள் தம் செயற்களும் செயலால் ஈட்டிய புகழை நிலைக்கச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும், இந்நோக்கத்தை நன்கு நிலையாட்டியவர் தாகூர் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டுப்பயணம்:- தாகூர் தாம் வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலிப் பாக்களைப் பொழுது போக்குப் போலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1912இல் தாகூர் இலண்டனுக்குச் சென்றபோது அம்மொழி பெயர்ப்பையும் எடுத்துச் சென்றார். ஆங்கிருந்த தம் நண்பர் வில்லியம் என்பார்க்குக் காட்டினார். அவர் பாடலின் அருமையை வியந்து பாராட்டியதுடன் தம் நண்பர்கள் பலர்க்கும் காட்டினார். இவ் வகையில், வெல்சு, பெர்னாட்சா, இரசல், பிரிட்சு, ஆண்ட்ரூசு என்பவர்கள் நண்பர் ஆயினர். இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சில பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். தாகூர் பெருங் கவிஞராகவும் சமயத் தலைவராகவும் பேரறிஞர் உள்ளங்களில் இடம் பெற்றார். உள்நாட்டில் புகழ்:- தாகூர் மேல் நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், அவர் இயற்றிய கீதாஞ்சலிக்கு உலகத்தின் உயர்ந்த பரிசாகிய நோபல் பரிசு கிட்டியது. ஐரோப்பியர் அல்லாத எவரும் அதுவரை அப்பரிசைப் பெற்றது இல்லை தாகூர் அப் பரிசைப் பெற்றது கண்டு, அவரது தாய் நாடான வங்கம் மிகப் பெருமை எய்தியது; தாகூரை அழைத்து விருந்தும் விழாவும் எடுத்தது. பாராட்டுக்கள் நலகியது. பக்கிம் சந்திரர் புகழ்ந்தும் உள்ளவாறு உணரப்பெறாத வங்கம், தங்கள் நாட்டுப் புலவர் மணியை மேல் நாட்டார் பாராட்டிய பின்னரே உணர்ந்து பாராட்டியது இலக்கணம் அறியாப் புலவர் என்று பழித்தவரகளும், பாராட்டத் தொடங்கியது தாகூர்க்கு வியப்பாகவே இருந்தது. கல்லூரிப் பட்டம் பெறாத அவரைக் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அழைத்து டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பட்டமளிப்புப் விழாப் பேருரை நிகழ்த்த வேண்டிக் கொண்டது. தாய்மொழிப்பற்று:- தாகூர் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்; உலகத்தைத் தம் குடும்பமாகக் கருதபவர். அதே பொழுதில் தாய் மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். வங்க நாட்டினர் வங்க மொழியில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், கற்க வேண்டும் என்று அவரைப்போல வற்புறுத்தியவர் எவரும் இலர். அது போல் தமிழ் மக்கள் தம் தாய் மொழியில்தான் பேச வேண்டும், கற்க வேண்டும். என்று வற்புறுத்தினார் தாகூர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது அவரக்குத் தமிழ்ப்புலவர் ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்புத்தர குயில் கிளியைப்போல பாட முயலக் கூடாது. குயில் தன் குரலால்தான் கூவ வேண்டும். நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பாடி இருக்க வேண்டும் என்றார். உலக வழிகாட்டி:- மேல்நாட்டு அறிஞர்களுடன் அளவள வாவும் வாய்ப்புக் கிடைத்தது. குறித்துத் தாகூர் மகிழ்ந்தார். அதே பொழுதில் மேலைநாடுகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சியும் நடுங்கியும் வாழும் நிலைமையைக்கண்டு வருந்தினார். ஒரு நாட்டை அழிக்க மற்றொரு நாடு படைகளைப் பெருக்குவதை அறவே வெறுத்தார். போட்டியும் பொருமையும் நாகரிகம் ஆகாது எனக் கண்டித்தார். உலகுக்கு இவ்வகையில் வழிகாட்ட வேண்டியது. இந்தியாவின் கடமை என உணர்ந்து சாந்தி நிகேதனத்தின் வழியாக உலக அமைதிக்குப் பாடுபட முனைந்தார். காந்தி யடிகளை வரவேற்று உலக அமைதிபற்றி ஆராய்ந்தார். வெளி நாட்டு மாணவர்களையும், பெருந்தலைவர்களையும் சாந்தி நிகேதனத்தில் கலந்து உரையாடினார். பொதுமைவேட்கை:- சாந்தி நிகேதனத்தில் 1918 இல் விசுவபாரதி என்ற உலகக் கலைக் கழகத்தை அமைத்தார். ஆண்ட்ரூசு, பியர்சன் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்தி நிகேதனத்தில் தங்கி இருந்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் அங்கு இடம் பெற்றன. சீனா, ஜப்பான் முதலான கீழை நாட்டுக் கலைகளும், ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும், ஆங்கு இடம் பெற்றன. கிழக்கு மேற்கு என்று பாராமல் நல்லவற்றை யெல்லாம் கொள்ள வேண்டும் என்பதே தாகூர் கொள்கை. உலகவர் அனைவரும் மனிதர் என்னும் பொதுத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே தாகூரின் உள்ளார்ந்த தொண்டின் அடிப்படை ஆயிற்று. அஞ்சாமை:- 1916-17 இல் தாகூர் சப்பானுக்குச் சென்றார். அந்நாட்டு கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டு அளவளாவினார். பல கூட்டங்களில் பேசினார். சப்பானியரின் அழகுணர்ச்சியை மதித்துப் போற்றினார் அதே பொழுதில் அரசியல் பகை, மண்ணாசை ஆகியவற்றைக் கண்டித்தார். எவர் தம்மைப் புறக் கணித்தாலும் தமக்கு நேரிது எனத் தோன்றிய கருத்தை அஞ்சாது வெளியிட்டார் தாகூர். பட்டம் துறப்பு:- டயர் என்னும் வெறியன் சாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் திரண்ட மக்களைத் தக்க முன்னறி விப்பு இல்லாமல் சுட்டுத் தொலைத்த கொடுமையைக் கண்டித்தார். ஆங்கில அரசால் தமக்குத் தரபெற்ற சர் என்னும் பட்டத்தை உதறினார். நாட்டு முன்னேற்றத்திற்குக் கிராம முன்னேற்றமே அடிப்படை என உணர்ந்து தொண்டாற்றினார். கிராமத் தொண்டர்படை அமைத்தார். தேர்வு முறையால் உண்டாகும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தம் கலைக் கழகத்தில் தேர்வு முறையை ஒழித்துக் கட்டினார். இவ்வாறாக உலகுக்குப் பயன்படும் பெருவாழ்வு கொண்டார் தாகூர். முடிவுரை:- பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்றார் வள்ளுவர். அதுபோல் பண்பாளராகத் திகழ்ந்த தாகூரால் உலகம் நல்ல பல வாய்ப்புகளை எய்திற்று. தாகூர் புகழ் வாழ்வதாக: 7. சாந்தி நிகேதனம் தாகூர் பெருங்கலைஞர்; கவிஞர்; இசையிலும் நாடகத்திலும் தேர்ந்தவர்; வங்க மொழியும், ஆங்கிலமும் கொஞ்சி விளையாடும் அளவில் கவிகள் இயற்றியவர்; நாட்டுத்தொண்டிலே ஈடபட்டவர். அவர் தம் எண்ணத்தைச் செயற்படுத்துதற்கு என ஏற்பட்ட அமைப்பே சாந்தி நிகேதனம் ஆகும். நிலையத் தோற்றம்:- தாகூர் நைவேத்தியம் என்னும் தலைப்பில் இனிய தெய்வப் பாடல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த தேவேந்திரநாத் தாகூர். பெருந் தொகையைப் பரிசாக வழங்கினார். அத்தொகையைக் கொண்டு நைவேத்தியத்தை அச்சிட்டுத் தந்தையாரிடத்தில் படைத்தார் தாகூர். அப்பொழுது ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடம் தந்து உதவுமாறு தந்தையிடம் வேண்டினார். அவ்வாறே தந்தையார் இசைந்தார். இவ்வகையால் 1901 இல் எழுந்த நிலையமே சாந்தி நிகேதனக் கலைக்கழகம் ஆகும். கலைத் திட்டங்கள்:- எளிமையில் செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக் கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியைத் தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். இசை முழக்கத்துடன் தொடங்கும் பள்ளி இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப்பெறும். வாய்த்த பொழுதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப்பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிகராகவும் திகழ்ந்தார் தாகூர். கல்வி முறை:- சாந்தி நிகேதனத்தில் ஐவரே மாணவராக இருந்தனர். பின்னர்நூற்றுக்கணக்காகப் பெருகினர். சிறுவர்களே அல்லாமல் சிறுமியரும் இடம் பெற்றனர். விளையாட்டின் வழியாக விரும்பிக் கற்கும் முறையை உருவாக்கினார் தாகூர். பள்ளிக் கூடம் அடக்கிவைக்கும் இடம் என்றோ. சிறைச்சாலை என்றோ மாணவர் மனத்துத் தோன்றாவண்ணம் சூழ்நிலை யையும், பாடத்தையும், கற்பிக்கும் முறையையும் வகுத்தமைத்தார். அதே பொழுதில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாகவும், தமக்குள் உண்டாகும் சிக்கல்களைத் தாமே தீர்த்துக் கொள்ளத் தக்கவர்களாகவும் மாணவர்களை உருவாக்கினார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்கு வளர்த்தார். விசுவ பாரதி:- உலகம் ஒருகுடி என்பதை உணர்ந்தவர் தாகூர். அதனால் 1918 இல் சாந்தி நிகேதனத்தில் விசுவபாரதி என்னும் உலகக் கலைக் கழகத்தை உருவாக்கினார். அங்கு உலகப் பெருமக்கள் பலரும் வருகைதந்து அளவளாவ வாய்ப்புச் செய்தார். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் சாந்தி நிகேதனத்தில் இடம் பெற்றன. சீனா, சப்பான் முதலான கீழை நாட்டுக் கலையும் ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும் ஆங்கு இடம் பெற்றன. சமயம் கடந்த, இனம் கடந்த, நாடு கடந்த பொதுத் தன்மைக்குச் சாந்தி நிகேதனம் இருப்பிடம் ஆயிற்று. திருநிகேதன்:- கிராமங்கள் பெருகியுள்ள இந்திய நாட்டில் கிராமங்கள் வளம் பெறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என கண்டார். அதற்காகத் தம் மைந்தர் இரவீந்திர நாதரை அமெரிக்கா வுக்கு அனுப்பி உழவைப்பற்றி மூன்று ஆண்டுகள் கற்றுவரச் செய்தார் விசுவபாரதியில் கற்பிக்கும் கலைகளில் கிராமத் தொண்டு என்பதையும் ஒன்றாக்கினார். சாந்தி நிகேதனத்திற்கு அருகில் இருந்த சுருள் என்னும் ஊரில் இருந்த தம் விட்டைத் திருநிகேதன் எனப்பெயர் சூட்டிக் கிராமத் தொண்டுக்கு உரிய தலைமை நிலையம் ஆக்கினார். அங்கே நூலகமும் அலுவலகமும் அமைத்தார். தரிசாகக் கிடந்த அப்பகுதி வளமான பயிர்நிலமாக மாறியது. கூட்டுறவுக் கழகம்:- திருநிகேதனில் கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பெற்றது அங்குக் குடியிருந்த அனைவரும் உறுப்பினர் ஆயினர். கூட்டுறவுக் கழகக் கட்டணத்தின் ஒரு பகுதி மருத்துவக் கட்டணம் ஆக்கப் பெற்று மருத்துவர்க்குத் தர ஏற்பாடாயிற்று. ஆதலால் மருத்துவர் நோய் வராமல் பார்த்துக் கொள்வதில் மிக அக்கறை காட்டினார். மக்களுக்கு நோய் வராவிட்டாலும் தமக் குரிய தொகை கிடைக்க வகை இருந்தால் நோய் வராமல் தடுக்க மருத்துவர் முயல்வது இயல்பு அல்லவா! தொண்டர் படை:- கிராமப் பள்ளிக்கூட மாணவர் களுக்குத் தொண்டர்படை அமைக்கப் பெற்றது. கிராமத்து மக்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அந்தத் தொண்டர் படை உதவியது. உடலையும் உள்ளத்தையும் வளர்த்துப் போற்றினர் தொண்டர் தொண்டர்கள் தத்தம் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல் வேண்டும். பொதுத்தோட்டத்திலும் பாடுபட வேண்டும். அதன் பயனால் கிடைத்த தொகையைக் கொண்டு பள்ளிக்கூட நூல்கள் வாங்கப் பெற்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், நாடகங்கள் ஆகியன அவ்வப்போது மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப் பெற்றன. உரிமைக் கல்வி:- பக்கத்துக் கிராமங்களில் பயிலும் மாணவர்கள் திருநிகேதனில் வந்து ஐந்தாறு ஆண்டுகள் பயின்றனர். உலகச் செய்திகளும், வாழ்க்கை வரலாறுகளும், வங்க இலக்கியமும் கற்பிக்கப் பெற்றன. ஆனால் பொதுத் தேர்வு என்பது அங்கு இல்லை. உரிமை உணர்ச்சி இல்லாத கல்வி, கட்டாய உணவு போல் தீமை தரும என்பது கவிஞர் கொள்கை. அதனைத் தம் கழகத்தில் செயல் திட்டமாகக் காட்டினார். முடிவுரை:- தாகூர், மக்கள் அமைதியும் இனிமையுமான வாழ்வு வாழக் கருதினார். அதற்கு ஏற்ற செயல் திட்டங்களைச் சாந்தி நிகேதனில் உருவாக்கி வளர்த்தார். அதன் செயல் மணம் பக்க மெல்லாம் பரவி நலம் செய்வதாயிற்று. 8. உள்ளத்தின் ஒளி உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல் என்றார். திருவள்ளுவர். உள்ளத்தே ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார் பாரதியார். ஊழினை உருக்கி உள்ளொழி பெருக்கி என்றார் மாணிக்க வாசகர். உள்ளொளியைத் தெள்ளிதின் ஆராய்ந்து எழுதினார். திரு.வி.க. உள்ளொளி வாய்ந்த மாந்தர் உலகில் அரியர். தாகூர் அவ் வரியருள் அரியராகத் திகழ்ந்தார். உள்ளொளி:- தாகூர் கவிஞர் கதை ஆசிரியர்; நாடக ஆசிரியர்; இசைக் கலைஞர்; நடிகர்; ஓவியர் இயற்கைச் சுவைஞர். இயற்கை வாழ்வினர்; இறையருட் பேற்றாளர் அவர்தம் படைப்புக்கள் அனைத்தும் உள்ளத்தின் ஒளியை உலகுக்கு அறிவிப்பன. நூலாகவும், இதழாகவும் வெளிவந்து உலகுக்கு ஒளிபரப்பின. படைப்பின் மாண்பு:- தம் வாழ்க்கையில் கண்ட எளிய நிகழ்ச்சிகளையும், கேட்ட எளிய, செய்திகளையும் அரிய படைப் பாக்குதலில் தேர்ந்தவர் தாகூர். அவர் கற்பனை ஒளி பட்டதும் எளிய காட்சிகளும், செய்திகளும் அரிய ஒளி வீசிச் சுடர்ப்பிழம் பாகக் காட்சி வழங்கின. கதையாயினும் பாட்டாயினும் எழுதி முடிக்கப் பெற்றதும் நண்பர்களை அழைத்து உடன் வைத்துக் கொண்டு யாழிசை போன்ற தம் குரலால் படிப்பார்; நாடகம் ஆயின் நடித்துக் காட்டவார். பாடல் தொண்டு பாடல் தொண்டு செய்வதே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தாகூர் என்பதில் தவறு இல்லை. கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர் ஓய்வற்ற பணிகள் மிகுந்தும் பாடல் தொண்டு செய்வதில் அவர் தவறவில்லை. பக்கம் பக்கமாக உரைநடை எழுதிய போதிலும் ஒரு பாட்டு எழுதுவதற்கு ஈடான மகிழ்ச்சி உண்டாவது இல்லை. ஒருவர் தம் கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவைபோல் பாட்டுக்கள் அமைகின்றன. ஆனால் உரைநடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனமாகவும், கையாள முடியாததாகவும்அசைக்க இயலாததாகவும் இருக்கின்றது. நாளுக்கு ஒரு பாட்டு எழுதி முடிக்க இயலுமானால் என் வாழ்வு இன்பமாக நடைபெறும் என்று கூறும் வரிகளில் தாகூரின் கவிதை ஆர்வம் நன்கு புலப்படும். நாடகத் தொண்டு:- இளமையிலேயே வீட்டில் அண்ணன்மார் நடிக்கக்கண்டு களித்தது நாடகக்கலை. மேடையை நெருங்க முடியாதிருந்த நிலைமாறித் தாமே நாடகம் இயற்றவும், இயற்றிய நாடகத்தைப் பயிற்று விக்கவும். தாமே நடிக்கவும் ஆகிய நிலைமைகள் உண்டாயின. சாந்தி நிகேதனப் பாடத் திட்டங்களில் நாடகத்திற்குச் சிறந்த இடம் தரப் பெற்றது. வால்மீகி தீபம் என்னும் நாடகத்தைத் தம் பத்தொன்பதாம் வயதில் எழுதினார். தாமே வால்மீகராக நடித்தார். மிக முதிர்ந்த காலத்திலும் நாடகப் பற்றை விட்டாரல்லர். கற்பனை வளம்:- கற்பவரின் மனக்கண்ணில் அழுத்தமாக நிறுத்தத் தக்க கற்பனைச் சொல்லோவியங்களைப் படைத்தலில் வல்லவர் தாகூர். கடலைக் காண்கிறார் தாகூர். கற்பனை வளம் பொங்குகிறது; வெட்ட வெளியில் கிடக்கம் கடல் அலைந்து புரண்டு நுரை கக்குகிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம் போன்ற தோற்றம் மனதில் எழுகிறது. நிலம் கடலின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை. தாயின் அரியணையைப் பற்றிக் கொண்டது. அது முதல் பெற்ற தாய் பித்துப்பிடித்தவளாய், நுரை நுரையாய்க் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள். தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயரடைகிறாள். குழந்தை நெஞ்சம்:- பெருமக்கள் குழந்தை நெஞ்சம் உடையவர். தாகூர் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமக்குப் புகழ் வருவது கண்டு வருந்தினார் தாகூர். என் ஆடைகளின் கரைகளைத் தொடுவதற்காகவும், அதை முத்தமிடுவதற்காகவும் மக்கள் சூழ்ந்து நெருங்குவது எனக்குக் கவலையை உண்டாக்கிறது. நான் வணங்கத் தக்க மக்கள் அவர்களிடத்தே பலர் இருக்கின்றனர் என்பதை நான் எப்படி உணர்த்துவது என்று ஏங்கினார். குழந்தைகளைப் பற்றி உருக்கும் படியாகப் பாடிய புலவர்களுள் உலகில் முதலிடம் பெறுபவர் தாகூர் என்பர். பிறைமதி என்னும் தொகுப்பில் அவர்தம் குழந்தைப் பாடல்கள் உள. அமைதி வேட்கை:- போரை வெறுத்தவர், கண்டித்து உரைத்தவர் தாகூர். போர் முடிந்தபின்னர் பிரஞ்சு நாட்டிற்கும், செர்மனி நாட்டிற்கும் சென்ற கவிஞர் ஆங்குப் பாழடைந்து கிடந்த கட்டிடங்களைக் கண்டு கலங்கினார். போரில் மடிந்த வீரர்களின் கல்லறைகளைக் கண்டு உருகினார். உலகத்து அறிஞர்கள் செய்த வரும் செயற்கருஞ் செயல்களை யெல்லாம் போர்ப் பேய் விழுங்கி விடுவதைக் கண்டு புண்பட்டார். போரைத் தூண்டி விட்டவர் எங்கோ இருக்க, இன்னதென்று அறியாத மக்கள் படும் அவலங்களை எண்ணி நொந்தார். தம்மால் ஆன தொண்டுகளை அவ்வப்போது செய்தார். சீனா, இரசியா முதலான நாடுகளுக்குச் சென்று அறிஞர்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டார். பெருந்தலைவர்களுடன் இணைந்த அமைதிப் பணி புரிந்தார். அத்தகயருள் காந்தி யடிகள் தலையாயவர் ஆவர். அவருக்கு மகாத்மா பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தவரே தாகூர்தாம். ஒளிமிக்க உள்ளம்:- உயிர்கள் அனைத்தின் மேலும் ஒப்பற்ற அன்பு செலுத்தினார் தாகூர். தனிப் பட்ட மனிதர் மேல் வெறுப்புக் கொள்ளாதவர் தாகூர். கொள்கைகளில் விரும்பத் தக்கவை, வெறுக்கத்தக்கவை இவை எனக் கருதுவதே அல்லாமல் கொள்கை யுடையார் மேல் விருப்பு, வெறுப்புக் காட்டாத பெரும் பாங்கு அவருடையது. உலகப் போர் அல்லலை நினைந்து உருகிய அவர் 1941 இல் தம் என்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் ஒன்றில் நாகரிகத்திற்கு உண்டாகிய நெருக்கடி எனப் பேசினார். அழிவை மூச்சாகக் கொண்ட நாகரிகம் அன்று வாழ் நாளெல்லாம் பறை யறைந்தார். அவர் உள்ளம் அத்தகையது. முடிவுரை:- தாகூர் தண்ணொளி பரப்பும் பேரொளிச் சுடர். அச்சுடரொளியால், வழிபிடித்துக் கொண்டு உலகம் செல்லும் நாளே உய்யும் நாள். அந்நாள் வருவதாக! 1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும் கல்வியும் உலகின் நன்மைக்காகப் பிறந்த பேரருளாளர்கள் பலர்; செயற்கருஞ் செயல் செய்த சீரிய தொண்டர்கள் பலர்; இறையன் பில் இணையற்று விளங்கியவர்கள் பலர்; இத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் சுவைட்சர் 1875ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் ஐரோப்பாவைச் சேர்ந்த கேயர் சுபர்க் என்னும் ஊரில் லூயி சுவைட்சர் - என்பவரின் இரண்டாம் திருமகனாராகப் பிறந்தார். அவர் பிறப்பால், பிறர்க்கென வாழ்ந்த பெருமக்கள் பிறந்த நாள்களுள் சனவரித் திங்கள் பதினான்காம் நாளும் ஒருநாள் ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சரின் தந்தையார் லூயி சுவைட்சர் கிறித்தவ சமய போதகராகப் பணிசெய்தார். ஆர்கன் என்னும் இசைக் கருவியை மீட்டுதலில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர்தம் முன் னோரும் உடன் பிறந்தவர்களும் இசைத் தேர்ச்சியும் இறையன்பும் மிக்கவராக இருந்தனர். ஆகவே இறையன்பும் கவர்ந்து ஆட் கொண்டனர். ஐந்தாம் அகவையிலேயே ஆல்பர்ட்டுக்கு அவர் தம் தந்தையார் பியானோ கற்பித்தார். ஏழாம் அகவையிலேயே தம் இசையாசிரியை பாராட்டும் திறம் பெற்றார். எட்டாம் அகவையில் ஆர்கன் இசைப்பதில் ஈடுபட்டார்! இவ்வாறு இசையால் இசை பெற்றுத் திகழ்ந்தார். லூயி சுவைட்சர் கேயர்சுபர்க்கில் இருந்து கன்சுபர்க் என்னும் இடத்திற்குச் சமய போதகராக மாற்றப் பெற்றார். ஆகவே கன்சுபர்க்கில் தான் சுவைட்சரின் இளமைக் கல்வி தொடங்கியது. எளிய சூழ்நிலையில் அமைந்த கன்சுபர்க் பள்ளிக்குச் சென்ற சுவைட்சர், தாமும் அந்த எளிமையை மிக விரும்பிப் போற்றினார். உடன் பயிலும் உழவப் பிள்ளைகளைப் போலவே உடை உடுத்தார். அவர்களுக்குக் கிடைக்காத எந்த அரிய பொருளையும் பயன் படுத்துவதை வெறுத்தார். ஏழை எளியவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார் இளைஞர் ஆல்பர்ட். ஒரு நண்பனின் வற்புறுத்தலை மறுக்க முடியாதவராக ஒரு நாள், சுவைட்சர் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார். பறவைகள்மேல் வில்லுண்டை படக்கூடாதென எங்கேயோ குறிபார்த்து எப்படியோ வில்லை வளைத்து ஏவினார். தம் நண்பன் எந்தப் பறவையையும் அடித்து வீழ்த்திவிடக் கூடாதே என்ற அருளால் அவற்றை எழுப்பிப் பறந்தோடச் செய்து இன் புற்றார். அத்துணை இளக்கமானது அவர் உள்ளம். இறைவனுக்குச் செய்யும் நாள்வழி பாட்டுரையுடன் இறைவனே எல்லா உயிர் களுக்கும் அருள் சுரந்து நலம் செய்வாயாக! அமைதியாக உறங்குவதற்கு அருள்புரிவாயாக என்னும் வரிகளையும் சேர்த்துக் கொண்டு முறையிட்டார்! இளமையில் முதிர்ந்த பெருமகனார் ஆல்பர்ட் சுவைட்சர் அல்லவா! சுவைட்சரின் தலைமயிர் எளிதில் படியாதது. எத்தனை முறை சீவினாலும் எழும்பி நிற்கக் கூடியது. அதனைக் கண்ட பணிப்பெண், இத்தலை மயிரைப் போலவே இவன் அடங்கா தவனாக இருப்பான் என்று கூறுவாள். இவ்வுரையால் தம்மைத் தாழ்வாகக் கருதிக் கொண்ட சுவைட்சர் ஒரு நாள் ஒரு பொருட் காட்சி சாலையில் புனிதர் யோவான் உருவத்தைக் கண்டார். அவர் தலை தன் தலைபோலவே படியாமல் இருப்பதைக் கண்டு புறத் தோற்றத்துக்கு ஏற்றபடிதான் அகத் தோற்றமும் இருக்கும் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று உறுதி செய்தார். அவர் உள்ளத்தில் அமைதி உண்டாயிற்று. 1884 ஆம் ஆண்டு வரை சுவைட்சர் கன்சுபர்க் பள்ளியில் பயின்றார். பின்னர் ஓராண்டு மன்சிட் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இலத்தீன் மொழியைத் தனியே ஓராசிரியரிடம் கற்றார். முல்காசன் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். முல்காசனில் சுவைட்சரின் தந்தைவழிச் சிறிய பாட்டனாரும் பாட்டியும் இருந்தனர். அவர்கட்குக் குழந்தைகள் இல்லாமையால் ஆல்பர்ட்டை ஏற்றுப் போற்றினர். அங்கு எட்டாண்டுகள் இருந்து மிகத் திறமையாகக் கற்றார். ஆர்கன் இசைப்பதிலும் தேர்ந்தார். தம் பதினெட்டாம் அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு தாய் தந்தையிரிடம் சென்றார். நீகிரோ ஒருவனின் உருவச் சிலையைச் சுவைட்சர் தம் இளமையில் ஒரு நினைவுச் சின்னத்தில் கண்டார். அச்சிலையின் தோற்றம் ஆல்பர்ட் உள்ளத்தில் அளவிறந்த இரக்கத்தைத் தோற்று வித்தது. அச்சிற்பத்தை வாய்த்த போதெல்லாம் அடிக்கடி கண்டு கண்டு உருகினார். பின்னாளில் பிணிதீர்க்கும் பெருமகனாராகத் திகழத் தூண்டியவற்றுள் இச் சிற்பம் தலையாயது ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சர் இளம் பருவத்திலேயே இரக்கமிக்க வராய், எளிமை போற்றுபவராய், இறையன்பு மிக்கவராய் இசைச் தேர்ச்சி பெற்றவராய் இலங்கினார் என்பதைக் கண்டோம். விளையும் பயிர் முளையிலேயே என்பது மெய்யுரை யாயிற்று! 2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி இளமையிலேயே அன்பும், அருளும், இசைத்திறமும் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்; உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தம் பதினெட்டாம் அகவையளவில் முடித்த சுவைட்சர் அதன் பின்னர் மேல்நிலைக் கல்வியில் ஈடுபட்டார். சமய போதகராகிய லூயி சுவைட்சரின் மைந்தர் ஆதலால் ஆல்பர்ட் சுவைட்சருக்குச் சமயப் பற்று மிக்கிருந்தது இயற்கையே. குலவிச்சை கல்லாமல் பாகம் படும்! அதனால் 1893ஆம் ஆண்டில் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் மேல்நிலைக் கல்வி கற்கப் புகுந்த சுவைட்சர் சமய இயல், தத்துவம் ஆகிய இருபாடங்களையும் விரும்பி எடுத்துக்கொண்டார். இப்பாடங்களுக்கு இடையே எபிரேய மொழியை முயன்று கற்று முதிர்ந்த புலமை பெற்றார். கல்வி கற்றுவந்த காலையில் கட்டாய இராணுவப் பயிற்சியில் சேரவேண்டிய கடமைக்கு ஆட்பட்டார். அதே பொழுதில் உதவித் தொகை பெறுவதற்காக ஒருதேர்வு எழுதியாக வேண்டிய இன்றியமையாமையும் உண்டாயிற்று. அத்தேர்வுக்கு மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியவர்கள் அருளிய ஆகமங்களை ஆராயும் கடப்பாட்டை மேற்கொண்டார். இக்கல்வி இவர்தம் சமயத்துறை மேம்பாட்டுக்குப் பெருந்துணையாயிற்று. சுவைட்சர் 1897 ஆம் ஆண்டில் தத்துவத்தேர்வு எழுதுவ தற்காகத் தம்மை பதிவு செய்துகொண்டார். அத்தேர்வுக்குச் செல்பவர் தம் தகுதியை நிலைநாட்டுவதற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் வேண்டும். இயேசு நாதரின் கடைசி உணவு என்பதை ஆராய்ந்து திறம்பட எழுதினார் சுவைட்சர். அவ் ஆய்வுக் கட்டுரையில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியும் ஆசிரியர் பரிந்துரையும் இவரைக் கோல் என்னும் உதவித் தொகை பெறுவதற்கு உரியவர் ஆக்கின. கோல் உதவித்தொகை என்பது, ஆண்டுக்கு ஏறத்தாழ எண்ணூறு ரூபாய் அளவில் ஆறாண்டு கட்குத் தொடர்ந்து கிடைக்கும் தகுதி உடையதாகும். கோல் உதவித் தொகை பெறும் மாணவர் தாம் எடுத்துக் கொண்டபட்டப்படிப்பை ஆறாண்டு கால அளவுக்குள் முடித்தல் வேண்டும். அப்படிப்பை எப் பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். ஆகாவே இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சுவைட்சர் பாரிசு மாநகர் சென்றார். ஆங்கு சார்லசு விடார் என்பவரிடம் பயின்றார். ஆர்கன் வாசிப்பதிலும் பியானோ மீட்டுவதிலும் மேலும் தேர்ச்சி பெற்றார். கான்ட் என்பரின் தத்துவநூற் கொள்கைகளை ஆராய்ந்து தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். ஆய்வுக் கட்டுரையை வழங்கிப் பட்டம் பெறுவதற்கு முன்னர் இருந்த இடைக்காலத்தில் பெர்லின் நகர்க்குச் சென்று இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் தம் திறமையைப் பெருக்கினார். தேர்வுக்கு முன்னரே திருக்கோவில் போதகராக நியமிக்கப் பெற்றார். அங்கிருந்தவர் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆனார். ஆகவே, தேர்வு முடிந்த பின்னர் அவ்விடத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்தார். மாலை வேளையில் இவர் செய்து வந்த சமயச் சொற்பொழிவு சிறிது நேரமாக இருந்ததால் அதனை விரிவாக்குமாறு வேண்டினர்; மேலிடத்திலும் மக்கள் குறை கூறினர். அந்நிலையில் தாம் நெடும் பொழுது உரையாற்ற இயலாக் குறையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொண்டு எடுத்துக் கொண்ட மறைநூல் பகுதியை விரித்துரைக் இயலாமல் முடித்துவிடுகிற ஏழைப் போதகர் என்று தம்மைத் தாமே கூறினார். ஆயினும் தாம் பிறந்த ஆசிரியக் குடும்ப இயல்புக்கு ஏற்பச் சிறந்த ஆசிரியர் விரிவுரை ஆற்று போல் உரையாற்றும் திறத்தை விரைவில் பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? சுவைட்சருக்கு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் ரோமன் ரோலண்டுடன் தொடர்பு உண்டாயிற்று. நாடறிந்த உலகறிந்த பெருமக்கள் பலர் உறவும் தொடர்ந்து உண்டாயிற்று. செருமன் இலக்கியமும் தத்துவமும் என்னும் பொருள்பற்றிப் பாரிசு மாநகரில் தொடர்ந்து விரிவுரையாற்றினார். நாகரிகத்தின் தத்துவம் என்பது பற்றி நூல் எழுதுவதற்குத் திட்டம் வகுத்தார்; குறிப்புக்கள் தொகுத்தார். இந்நிலையில் தாம் கற்ற பல்கலைக் கழகத்திலேயே சமய நூல் பேராசிரியராகும் பேறு பெற்றார். பொழுதைப் பொன்னினும் சிறந்ததாகக் கருதி வாழ்ந்தவர் சுவைட்சர். டிராசுபர்க் பல்கலைக் கழகப் பேராசிரியராகிச் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவைட்சர் ஒரு விடுமுறையில் கன்சுபர்க் சென்றார். அவ்வேளையில் யான் தொல்லையோ துயரோ இல்லாமல் வாழும் பேறுபெற்றேன்; இப்பேற்றைப் பிறரும் பெறப் பாடுபடுவதைக் கடனாகக் கொள்வேன் என்னும் உறுதி பூண்டார். சமயம் தத்துவம் ஆய துறைகளில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் - அதாவது தம் முப்பதாம் அகவை வரை - பாடுபடுவதென்றும், அதன் பின்னர் பொதுநலத் தொண்டில் இறங்குவ தென்றும் உறுதி செய்தார். ஆம்! கற்பன கற்றார்; கற்றவாறு நிற்கத் திட்டமிட்டார்! அவர் திட்டம் வாழ்வதாக!! 3. பலதுறைப் பணிகள் ஒருவர் ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதே அரிது. பல துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக அரிதாகும். பல துறைகளில் தேர்ச்சி பெற்று அவ்வத் துறைகளில் எல்லாம் சிறந்த தொண்டு செய்வது அரிதினும் அரிதாகும். இத்தகைய அரிதினும் அரியதிறம் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். சுவைட்சர் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப் பல்கலைக் கழகச் சமயத் துறைத் தலைமைப் பொறுப்பும் ஏற்றார். இப் பணிக்கு இடையே திருக்கோவில் சமய போதகராகவும் திகழ்ந்தார். சமய இயல், தத்துவம் ஆகியனபற்றி அரும்பெரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தினார். இப் பணிகளுடன் சுவைட்சர் அமைந்தார் அல்லர். பாக் என்னும் இசைக் கலைஞரைப் பற்றிச் சீரியதோர் ஆராய்ச்சி நூல் இயற்றினார். பாரிசு மாநகரில் நிறுவப்பெற்ற பாக் இசைக் கழகத்தின் சிறப்பு விழாக்களில் ஆர்கன் வாசிக்கும் பொறுப்பும் ஏற்றார். இத்துணை வழிகளில் இடைவிடாது உழைத்தாலும் தாம் முன்னர்த் திட்டமிட்டுக் கொண்டுள்ளவாறு தம் முப்பதாம் அகவையில் பொதுப் பணியில் முழுமையாக ஈடுபடுவதையே விரும்பினார். எப்பணியைத் தேர்ந்தெடுப்பது? எங்கே தொடங்குவது? கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தின் விளம்பரத்தாள் ஒன்றைக் கண்டார் சுவைட்சர். அத்தாளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைத்த அருளாளர்கள் உடனே வேண்டும் என்னும் வேண்டுகோளைக் கண்டார். தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். சுவைட்சர் தம் இளமையில் கண்டறிந்த நீகிரோவின் சிலை கண்ணெதிரில் காட்சி வழங்கியது. காங்கோ சென்று அங்கே அல்லல்படும் மக்களுக்குத் தொண்டு செய்வதே தக்கது என்னும் முடிவுசெய்து அதற்குத் திட்டம் தீட்டினார். இவர் திட்டத்தை ஏற்பார் அரியர் ஆயினர். தெளிவற்ற முடிவு என்றும், வேண்டாத விருப்பு என்றும், கிறுக்குத்தனமான செயல் என்றும் பலவாறு கூறினர்; குழப்பினர்; ஆயினும் ஆல்பர்ட் சுவைட்சர் தம் திட்டத்தில் இருந்து சிறிதும் மாறினார் அல்லர். எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா! ஆப்பிரிக்காவுக்குச் சென்று என்ன தொண்டு செய்வது? கிறித்தவ சங்க அறிக்கை வழியாக மருத்துவப் பணி செய்வதே வேண்டும் என்பதை அறிந்தார். சமயம், தத்துவம், இறை வழிபாடு இப்பணிகளிலேயே பொழுதெலாம் செலவிட்ட சுவைட்சர் மருத்துவப் பணியை உடனே ஏற்க எப்படி முடியும்? பல்லாண்டுகள் பயின்று பயிற்சி பெற்றாலல்லவோ அப்பணியை ஏற்க முடியும்? இதனி எண்ணிச் சோர்ந்தாரல்லர் சுவைட்சர். தாம் பேராசிரியராக இருந்த பல்கலைக் கழக மருத்துவத்துறைத் தலைவரிடம் சென்று தம்மை மருத்துவ மாணவராகப் பதிவுசெய்து கொண்டார்! விந்தையான செய்தி. பல்கலைக் கழகத் துறைத்தலைவர், மற்றொரு துறையின் மாணவராகத் தம்மைப் பதிகிறார்! சுவைட்சரின் பொதுப்பணி நாட்டம் அத்தகையது! சுவைட்சர் இயற்கையாக ஏற்றுக் கொண்டிருந்த பலவகைப் பணிகளுக்கு இடையே மருத்துவக் கல்வி கற்பது இயலாததாக இருப்பினும் முயன்று கற்றார். 1911 ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வெழுதி வெற்றி கொண்டார். ஓராண்டுக்காலம் மருத்துவ மனையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் மருத்துவப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தார். இதற்குப் பின்னர், காங்கோவுக்குச் சென்று மருத்துவ பணி செயதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தாம் ஏற்றிருந்த பேராசிரியர் பதவியையும், சமய போதனைப் பணியையும் விட்டு விலகினார். செலன் பிரசுலோ என்னும் பெயருடைய ஒரு நங்கையை மணந்து கொண்டு, அவர்க்குத் தாதியர் பயிற்சி தந்தார். கிடைத்த பொழுதை எல்லாம் மருத்துவம் பற்றி மேலும் கற்கவும், வேண்டிய மருந்துகளைச் சேர்க்கவும் செலவிட்டார். வழக்கற்றுப் போய்க் கொண்டிருந்த ஆர்கன் இசைக்குப் புத்துயிரூட்டினார். அக்கருவி அமைப்பைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதினார். ஆர்கன் இசைக் கருவியில் ஏற்படும் பழுது பார்த்துச் செவ்வை செய்தார். இவ்வாறு பல்வேறு திறம் வாய்ந்த பலபேர்கள் செய்யும் செயற்கரிய செயல்களைத் தம் முப்பதாம் அகவை அளவிலே செய்தார், சுவைட்சர். சுவைட்சர் இணையற்ற முயற்சியாளர்; அயராத தொண்டர்; விலையாக்கிக் கொள்ளும் திறம் வாய்ந்தார்; அவர் எடுத்த பணி எதுவாயினும் நிறைவேறத் தவறியது இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட துறை யாதாயினும் ஒளிவிடாமல் போனது இல்லை. அவர்தம் முயற்சியும் தொண்டும் உலகுக்கு நல்வழி காட்டுமாக! 4. இலாம் பரினிப் பயணம் ஆல்பர்ட் சுவைட்சர் பொது நலத்தொண்டு செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ ஆகும். ஆங்கு வாழ்ந்த நீகிரோக்கள் தீராபிணிகட்கு ஆட்பட்டு அல்ல லுற்றனர். நாகரிகம் அறியாத மக்கட்குத் தொண்டு செய்து நல்வழிப்படுத்துவது தன் கடன் எனக்கொண்டு ஆங்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். அவர்மேற் கொண்ட செலவு பற்றி அறிவோம். சுவைட்சர் ஆர்கன் இசைப்பதன் வழியாக ஒரு தொகை சேர்த்திருந்தார். நூல் வெளியீட்டாலும் ஓரளவு தொகை ஈட்டி யிருந்தார். தம் சம்பளத்திலும் ஒரு பகுதியை மீதப்படுத்தி யிருந்தார். தக்கவர்களிடம் நன்கொடை வழியாலும் ஓரளவு தொகை சேர்த்தார். ஆக எவ்வுதவி இல்லாமலும் ஒரு மருத்துவ மனையை ஓரிரண்டாண்டுகள் தாமே நடத்த இயலும் என்று கணக்கிட்டறிந்தார். அதன் பின்னர்த் தம்மை மருத்துவப் பணிக்கு ஏவிய பாரிசு கிறித்தவ சங்கத்திற்கும் தம் விருப்பத்தை வெளி யிட்டார். கிறித்தவ சங்கத்தால் தம்மைக் கலந்து பேச வருமாறு ஆல்பர்ட்டை, தம் சமயத் சீர்திருத்த நோக்கத்தை விரும்பாத பலர் அக்குழுவில் இருப்பதால் அவர்களை நேரில் காண்பது தம் பயணத்திற்குத் தடையாகலாம் என்று எண்ணி அக்குழுவைக் காண மறுத்தார். எனினும் தனித்தனியே அவர்களைக் கண்டு கலந்து பேச ஒப்பினார். அவ்வாறே அவர்களைக் கண்டு தம் பயணத்திற்கு இசைவு பெற்றார். செருமணி நாட்டுப் பல்கலைக் கழக மருத்துவப் பட்டம் பெற்றவர் சுவைட்சர். அவர் பிரான்சு நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் பணி செய்யப் போகிறார். ஆகவே பிரான்சு நாட்டார் இவர் பெற்ற மருத்துவப் பட்டத்தை ஏற்று இசைவு அளிக்க வேண்டும். அவ் விசைவையும் பெற்றார். அன்றியும் அந்நாட்டவர் பலர் மனமுவந்து நன்கொடையும் வழங்கினர். பிற நாட்டவர்கள் உதவியும் கிட்டின. இவை சுவைட்சர் மேற்கொள்ள இருந்த பணிக்குப் பேருதவியாயின. சுவைட்சர் தம் உற்றார் உறவினர் களிடத்தும், உடன் பணி புரிந்தவர்களிடத்தும் அன்பு நண்பர் களிடத்தும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். சுவைட்சருக்குப் கப்பற் பயணம் புதிது தம் பணிக்கு வேண்டிய பொருள்களை எழுபது பெட்டிகளில் அடைத்துக் கப்பலில் ஏற்றிச் சென்றார். புறப்பட்ட இரண்டாம் நாளே கடலில் புயல் கிளம்பியது. கப்பலை சுழற்றி யடித்தது. பெட்டிகளைக் கட்டிவைக்காமையால் அவை சிதறி ஓடின. மூன்று நாட்கள் தொடர்ந்து புயல் வீசிற்று புயல் ஓய்ந்தபின்பே அமைதி தவழ்ந்தது. அதற்கு முன்னர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்கள் கடற் பயணம் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டின் இயற்கையமைப்பு, வெப்பதட்பம், நீகிரோவர் நிலை ஆயன பற்றியும் பலப்பல செய்திகளை விரித்துரைத்தனர். ஆப்பிரிக்காவின் வெயில் கொடுமை பற்றியும், காலை மாலைப் பொழுதுகளில் அடிக்கும் இள வெயிலால் உண்டாகும் வெயில் வாதம் பற்றியும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர். இச் செய்திகளை அனைத்தும் ஆல்பர்ட் சுவைட்சர் செய்யப்போகும் அரும்பெரும் பணிக்கு உதவுவனவாக இருந்தன. பயணத்தின் இடையே டாக்கர் என்னும் இடத்தில் சுவைட்சர் இறங்கினார். ஆங்கு அவர் கண்ட ஒரு சாட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. கரடுமுரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் ஒரு குதிரை வண்டியைக் கண்டார். வண்டி தாங்க மாட்டாத அளவுக்கு - குதிரைகள் இழுக்க மாட்டாத அளவுக்கு - பாரம் ஏற்றப் பெற்றிருந்தது. ஆயினும் வண்டியில் நீகிரோக்கள் இருவர் அமர்ந்து கொண்டு குதிரைகளை அடித்துத் துன்புறுத்திப் படாப்பாடு படுத்தினர். இதனைக் கண்ட சுவைட்சர் அங்கே சென்று அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னிருந்து தள்ளினார். வண்டி எளிதாகச் சென்றது. ஆப்பிரிக்காவில் செய்ய இருந்த தம் தொண்டைத் தொடங்கி விட்டார் சுவைட்சர். தொண்டு செய்வர்க்கு இவ்விடம் - இக்காலம் - இப்பணி என உண்டா? ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்பது தானே அறநெறி. டாக்காவிம் இருந்து புறப்பட்ட கப்பல் லோபசு என்னும் இடத்தைச் சேர்ந்தது. அங்கிருந்த சுங்கச்சாவடிகள் பொருட்கள் தணிக்கை செய்து வரி விதிக்கப் பெற்றன. அதற்கு மேல் ஓகேவே ஆற்றில் படகு வழியாகப் பயணப் தொடங்கியது. படகுப் பயணம் இலாம்பரினி வரைக்கும் உண்டு. அதற்குப் பின்னர், கிறித்தவ சங்கத்தின் பகுதிக்குத் தோணியில்தான் செல்ல வேண்டும். இலாம் பரினியை அடைந்த சுவைட்சர் பொருள்களைப் படகில் இருந்து தோணிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அந்நிலையில் கிறித்தவ சங்கஞ் சார்ந்த இரண்டு தோணிகள் விரைந்து வந்து, தங்கட்கு உதவ வந்திருக்கும் மருத்துவரையும், அவர் இல்லக் கிழத்தியாரையும் வரவேற்று வாழ்த்தின. பொருள்களை ஒரு தோணியில் ஏற்றி வைத்துத் தாமும் தம் மனைவியாரும் ஒரு தோணியில் அமர்ந்து தாம் சேர வேண்டிய கிறித்தவ சங்கத்தைச் சேர்ந்தனர். எடுத்துக்கொண்ட பணி பெரிது. பணி செய்யப் புகுந்த நாடு தொலைவானது; பழக்கப் படாதது; அந்நாட்டு மொழியோ தாம் அறியாதது. போக்குவரவு முதலாய எந்த வாய்ப்புக்களும் இல்லாதது. எனினும் துணிவே துணை தொண்டே கடவுட் பணி எனக் கொண்ட சுவைட்சர் தாம் செய்யப்போகும் பணிக்குத் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தார். இத்தகையரே அருளாளர் என்பதில் ஐயமில்லை! 5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த மருத்துவப்பணி சுவைட்சர் தம் முப்பதாவது அகவையில் எந்தப் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அந்தப் பொதுத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தினார். அத்தொண்டு அல்லல் மிக்கது. ஆயினும் அயராது பாடுபட்டு அரிய வெற்றி சுவைட்சரின் பேருள்ளத்திற்கும் பெருந்திறத்திற்கும் சான்றாகும். நீகிரோவர்க்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற சுவைட்சருக்கு அவர்கள் மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதற்காக அவரிடம் மருத்துவம் செய்யவந்த யோசேப்பு என்பவனை மொழிபெயர்ப்பாளியாக வைத்துக் கொண்டார். அவன் ஆங்கிலேயர் ஒருவர்க்குச் சமையற்காரனாக இருந்தவன். ஆதலால் அவனுக்கு மொழி பெயர்ப்புப்பணி ஏற்றதாயிருந்தது. இப்பணியில் அவன் நெடுநாள் நிலைத்திருக்கவும் செய்தான். மருத்துவ மனைக்கு வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும். ஆகவே உடனடியாகப் பார்க்க வேண்டிய நோயாளர்கள் மட்டுமே முதற்கண் தம்மிடம் வருமாறு பக்கங்களில் பறையறைந்து அழைக்கச் செய்தார். ஆனால் எல்லா நோயாளர்களுமே கூடிவிட்டனர். வீட்டு வாயிலில் தான் மருத்துவ ஆய்வு நடத்த வேண்டியதாயிற்று. அங்கு வெயில் பட்டாலே வெயில்வாதம் உண்டாகி அல்லல் படுத்தும் வீட்டு நிழலில் மருத்துவ ஆய்வு செய்யவும், மரநிழலில் தங்கவும் முடிந்தது. ஒவ்வொரு நாளும் நோயாளிகள் வந்ததும் அவர்களை உட்காரவைத்து மருத்துவர் மனைக்குப் பக்கத்தில் எச்சில் துப்பக்கூடாது. கூச்சல் போடக்கூடாது. தங்களுக்கு ஒருநாளுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவர வேண்டும். மருத்துவர் இசைவு இல்லாமல் இரவில் எவரும் தங்கக்கூடாது. மருந்துதரும் சீசாக்களும் டப்பாக்களும் திருப்பித்தரப்பெற்ற வேண்டும். மாத நடுவில் கப்பல் வந்து திரும்பும்வரை உடனடி நோயாளர்கள் மட்டுமே பார்க்கப் பெறுவர் என்னும் செய்திகளை உரக்கப் படிப்பர். இச்செய்திகள் அவர்கள் வழியாக மற்றவர்கட்கும் பரவும். ஒவ்வொரு நாளும் காலை எட்டுமணிக்கே மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடும். நண்பகல் பன்னிரண்டரை மணி உணவுவேளை. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணிவரை மீண்டும் மருத்துவம் செய்யப்படும். அன்று பார்க்கப்படாமல் எஞ்சிய நோயாளர் மறுநாள் பார்க்கப்படுவர். நோயாளர் ஒவ்வொருவர்க்கும் வட்டமான ஓரட்டை கொடுக்கப்படும். அவ்வட்டையில் மருத்துவரின் பதிவுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள நோயாளியின் எண் இருக்கும். அதன் துணை யால் அவன் நிலை, மருந்து முதலியவற்றைக் கேட்டுப் பொழுதை வீணாக்காமல் மருந்து கொடுக்க வாய்ப்பாக இருந்தது. அவனிடம் கொடுத்துத்திரும்பப் பெற வேண்டிய சீசா, டப்பா முதலியவையும் அதில் குறிக்கப் பெற்றிருந்தன. ஆதலால் அவற்றைத் திரும்பப் பெற உதவியாக இருந்தது. நாள்தோறும் முப்பது நாற்பது நோயாளர் மருத்துவ மனைக்கு வந்தனர். மலேரியாக் காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையீரல் கோளாறு, வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் அங்கே மிகுதியாக இருந்தன. சொறி சிரங்கும் மிகுதி. குருதி கொட்டும் வரை சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இந்நோய்க்கு உடலைக் குளிப்பாட்டி ஒருவகை மருந்தைப்பூசி விரைவில் குணப்படுத்தினார், சுவைட்சர். நுரையீரல் நோய் பலருக்கு இருந்தது. அந்நோய்க்கு மருத்துவம் செய்வது ஐரோப்பாவைவிட எளிதாகவும், விரைந்து பயன் தருவதாகவும் இருந்தது. கிறுக்கர் எண்ணிக்கை ஆப்பிரிக் காவில் குறைவு. ஐந்தாறு கிறுக்கர்களுக்குச் சுவைட்சர் மருத்துவம் செய்தார். அவர்கட்கு மருத்துவம் செய்வது கடினமாக இருந்தது. நஞ்சு, ஊட்டுவதாலும் சிலரைக் கிறுக்கர்கள் ஆக்கும் கொடுமை ஆப்பிரிக்காவில் இருந்தது. இவ்வகையால் கிறுக்கர் ஆகியவரை எம் மருத்தாலும் சரிப்படுத்த முடிவதில்லை. காங்கோவில் பெருவாரியாக இருந்த நோய்களுள் தூங்கு நோய் என்பதொன்று உகண்டா என்னும் பகுதியில் தூங்கு நோய் பரவிய மூன்றாண்டுகளில், ஆங்கிருந்த மூன்று நூறாயிரம் பேர்களில் இரண்டு நூறாயிரம் பேர்கள் இறந்தனர். காய்ச்சலுடன் தொடங்கும் இந்நோய், தூக்கத்தில் கொண்டு வந்து வைக்கும். பொறுக்க முடியாத தலைவலி யுண்டாகும். மூளைக் கோளாறும் உண்டாகிவிடும். இறுதி நிலையில் வரும் தூக்கத்தால் மயக்கம் உண்டாகும். உடல் மரத்துப்போகும். சாவும் எளிதில் வராது. பிழைக்கவும் முடியாது. இத்தொற்று நோய் மருத்துவத்திற்கு ஒதுங்கலாக ஒருவிடுதி வேண்டியதாயிற்று. ஆகவே சுவைட்சரின் பெரும் பொருளையும் பொழுதையும் இந்நோய் கவர்ந்து கொள்ளத் தவறவில்லை. எதற்கும் அயராதவராயிற்றே சுவைட்சர்! அதனால் வெற்றி கண்டார். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் தொடங்கியது. அதன் விளைவதென்ன? அருட் பணிக்கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்ட சுவைட்சரும் அவர் மனைவியாரும் சிறை செய்யப் பெற்றனர். செருமணி நாட்டைச் சேர்ந்தவர் சுவைட்சர். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்க்குத் தொண்டு செய்யலாமா? இரண்டும் பகை நாடு ஆயிற்றே! என்னே அரசியல்! சுவைட்சரும் அவர் மனைவியாரும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும், மருத்துவப் பணி புரியக்கூடாது என்றும் தடை விதிக்கப் பெற்றனர். இவற்றுள், மருத்துவம் செய்யக் கூடாது என்பதே துயரூட்டியது. ஐரோப்பியர் நீகிரோவர் ஆகிய இருசார்பினருமே இத்தடையை எதிர்த்தனர். இவர் தம் ஆசிரியர் சார்னர்சு விடார் தடையை நீக்க முயன்று வென்றார். மீண்டும் மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். போரின் விளைவால் வெளிநாடுகளில் இருந்து பணவரவும் மருந்து வரவும் நின்றன. உள்நாட்டில் அவ்வப்போது சிறிதளவு வந்த வருவாயும் நின்றது. மனைவியார் உடல்நிலை சீர்கெட்டது. ஒன்றின்மேல் ஒன்றாகத் துயர் மேலிட்டன. நாலறை யாண்டுகள் பணி செய்ததற்குப் பயனாகப் பெற்று ஐரோப்பாவுக்குக் கப்பலேறினர். நஞ்சையூட்டு போதினும் அஞ்சாதவரே தொண்டர் அல்லரோ! ஆப்பிரிக்காவில் சுவைட்சர் செய்த உயிரிரக்கப் பணிகள் சொல்லொண்ணாய் பெருமையுடையன. அவ்வேளையில் அவர் பட்ட அல்லல்களும் சொல்லொண்ணாதவை. ஆனால் அவற்றை அவர் அல்லலாகக் கருதினார் அல்லர். அல்லல் அருளாள்வார்க் கில்லை வெளிவழகு மல்லல்மா ஓலாம் கரி என்பது பொதுமறை. 6. நீகிரோவர் வாழ்க்கை முறை ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகள் ஒன்று ஓகேவே அவ்வாறு எழுநூறு கல் நீளமுடையது. அவ்வாற்றின் பகுதியில் எட்டுக் குழுக்களைச் சேர்ந்த நீகிரோவர் முன்னர் வாழ்ந்தனர். அவர்களுள் கலோவா என்னும் ஒரு குழுவினரே எஞ்சினர். மனிதரைக் கொன்று தின்னும் ஒரு கூட்டத்தாரும் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி உயிர்க் கொலையைக் தொடங்கி யுள்ளனர். நீகிரோவர் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் வாழைப் பழம். மரவள்ளிக் கிழங்கு ஆகியவையே. அங்கே நெல் முதலிய தானியங்கள் விளைவதில்லை. வேறு நாடுகளில் இருந்தே தானியங் களும், பாலும் அரிசியும் பெறுகின்றன. நீகிரோவர்களும் சிலர் முகமதியர் சிலர் கிறித்தவர். எச்சமயம் தழுவினவராக இருந்தாலும் தம் பழைய பழக்கவழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் விடுவதில்லை. நாகரிமற்றவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், காட்டு வாழ்வினராகவும் இருப்பதால் இவர்களை நோய்கள் வளைத்துச் சூறையிடுகின்றன. நோய்கள் வந்தால் சாவது அன்றி வேறு வகையில்லை. நீகிரோக்களில் மந்திரவாதிகள் உண்டு. நோயைத் தீர்க்க வல்லவன் மந்திரவாதியே என்று நம்புகிறார்கள். நோயைத் தீர்ப்பவனால், அதை உண்டாக்கவும் முடியும் என்று கருதி மந்திரவாதிகட்கு மிக அஞ்சுவர். சுவட்சரையும் மந்திரவாதி என்றே கருதினர். நோய்களைத் தீர்த்தால் அல்லவா! மருத்துவர் தரும் அடையாள அட்டையை மந்திரத் தகடாகக் கருதி அதைத் தவறவிடுவது இல்லை. அடிமைக்கு அடையாளமாகத் தந்த அட்டையுடன் இவ்வட்டையையும் சேர்த்துக் கட்டிக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வர். மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை அறியார். எத்தனை முறை கூறினால் புரியார். பல நாட்களுக்குப் பல வேளைகளுக்குத் தந்த மருந்தை ஒரே முறையில் சாப்பிட்டு விடுவதுண்டு. பூச்சு மருந்தை உட்கொண்டு விடுவதும், உட்கொள்ளும் மருந்தைப் பூசிக் கொள்வதும் எளிய காட்சி! தங்களுக்கு வேண்டாதவர்களை எவ்வழி கொண்டும் ஒழித்து விடுவது ஆப்பிரிக்கர் இயல்பு. தேடிப் பிடித்து நஞ்சு வைத்து விடுவர். தங்களை மதிக்காதவர், மறைவாக வைத்திருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியவர் ஆயவரையும் நஞ்சூட்டி விடுவர். தங்களுக்கு நஞ்சுவைத்து விடுவர் என்று ஒவ்வொரு நீகிரோவும் அஞ்சுவதுடன், மந்திரத் தகட்டுக்கு மிக அஞ்சுவர். ஆவதும் அழிவதும் மந்திரத் தகட்டால்தான் நடக்கிறது என்பது அவர் களின் திட்டவட்டமான முடிவு. சரியான மந்திரத்தகடு வைத்திருப்பவன் எவனை அழிக்க விரும்பினாலும் அழித்து விடலாம். என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்பது அவர்களின் அசையாத உறுதிப்பாடு தோட்டத்தைக் காப்பதற்கும் மந்திர சீசாக்களை மரத்தில் கட்டி வைப்பர். மந்திரவாதி அப்பகுதியில் திரிவதாக எவரேனும் பரப்பி விட்டால் எவரும் வெளியேறாமல் வீட்டுள் அடைந்து கிடப்பர். பலநாட்கள் பட்டினியாகவும் வீட்டுள் இருப்பர். ஏனெனில், மந்திரவாதி மண்டைச்சில்லை எடுத்து மந்திரத் தகடு செய்து விடுவானாம். புகையிலைக்கு நீகிரோவர் கொடுக்கும் மதிப்பு அளவிட முடியாதது. இங்கு வரும் அமெரிக்கப் புகையிலை மிகக் காரமானது. புகையிலையைச் சில்லறைப்போலப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது புகையிலை தருவதாகச் சொன்னால் பலவேலைகள் நீகிரோவர் செய்யக் காத்திருப்பர். ஒருவரிடம் இருந்து ஒருவராகச் சுக்கானை வாங்கி மாற்றி மாற்றிப் புகைத்துக் கொண்டிருப்பர். நீகிரோ வேலைக்காரர்களில் மிக நல்லவனைக் கூட நம்ப முடியாது. எதனையும் அவர்கள் கைக்கு அகப்படாதவாறு பூட்டிக் காக்க வேண்டும். அல்லது, வேலை செய்யும் போது உடன் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் பெருமைக் குறைவாக எண்ணுவது இல்லை. யாக இல்லாதவர் பொருளை எடுத்துக் கொள்வது தவறு என்று அவர்கள் எண்ணுவதே இல்லை! பூட்டி வைக்காதது கம்பி நீட்டிவிடும் என்பது அவர்கள் பழமொழி. இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழிலுக்குச் சென்ற போது ஒருவன் இறந்துவிட்டால் இறந்தவனுக்குப் பொறுப்பாளி உடன் இருந்தவனே என்று குற்றஞ் சாட்டுவதும் பழிவாங்குவதும் நீகிரோவர் நீதி. நீதிக்காக எவ்வளவு கடுந்தண்டனையையும் தாங்கிக் கொள்வர். தவறு செய்து தண்டனை கிடைக்கவில்லை என்றால் தங்களால் தவறு செய்யப்பட்டவர்கள் அறிவற்றவர்கள் என்று நினைப்பர். நீகிரோவர் சோம்பேறிகள் அல்லர். ஓய்வு ஒழிவின்றி வேலை செய்வர். இயற்கையின் குழந்தைகளாக அவர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தேவை அளவுக்குகே உழைக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குறைவு. அத் தேவைகள் இயற்கையில் எளிமையாகக் கிடைக்கின்றன. அதனால் கூலிவேலை செய்து பொருள் திரட்ட வேண்டிய இன்றியமையாமை இல்லை. திருமணம் செய்தல், துணி எடுத்தல், புகையிலை வாங்குதல் இவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவுக்குகே கூலிவேலை செய்வர். வேண்டிய அளவு தொகை கிடைத்துவிட்டால் வேலைக்குப் போக மாட்டான். ஆதலால் அவரைச் சோம்பேறி என்று சொல்ல முடீயாது. நீகிரோவர் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறைகள் ஆகியன பற்றி ஆராய்ச்சிகள் செய்து நூலாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் சுவைட்சர். நீகிரோவர் மேல் எக்குற்றத் தையும் ஏற்றமுடியாது. அவர்கள் அறியாமை அத்தகையது! அறிவுடைய கூட்டம் அக்கறை காட்டி வளர்க்காமையே குற்றம் என்பதே உண்மை. 7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில் ஆல்பர்ட் சுவைட்சர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்களுள் ஒன்று கன்னிப் பெருங்காட்டின் கங்கிலே என்பதாம். ஆப்பிரிக்காவுக்குச் சென்று தாம் செய்த பணி குறித்தும், அங்குச் சென்றதால் உண்டாய பட்டறிவு குறித்தும் விரித்தெழுதி யுள்ளார். அவர் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கம் வருமாறு. நாலரை யாண்டுகளாக நான் பெற்ற பட்டறிவு இங்கு வந்து பணிசெய்ய வேண்டு என்று நான் செய்த திட்டம் சரியானது என்பதை மெய்ப்பிக்கிறது. இயற்கை வாழ்வினராகிய நீகிரோக்கர் நம்மைப்போல் கொடிய நோய்களில் நலிவடையார் என்று என் திட்டத்தைத் தடுக்குமாறு கூறிய நண்பர்களின் உரை தவறானது என்பது எனக்குத் தெளிவாயிற்று. மற்றை இடங்களைப் போலவே இங்கும் கொடு நோய்கள் உள்ளன. ஐரோப்பியரே கொண்டு வந்தனர். நாகரிகமுறாது இயற்கையின் மடியில் வாழும் இவர்கள் நம்மைப் போலவே நோய்த்துயர் படுகிறார்கள். மருத்துவ உதவி பத்தாண்டுகளுக்கு அறவே நமக்கு இல்லை என்றால் நம் குடும்ப வரலாறு என்னாகும்? இத்துயர் நீகிரோவர்க்கும் உண்டு. நாகரிகம் படைத்த நாம் நம் உறக்கம் நீங்கி நம் கடமையை உணரவேண்டும். தொலையிடங்களிலுள்ள நோயாளர்க்குப் பாடுபடுவதே என் கடன். இறைவன் பெயரால் அனைவர் உதவியையும் வேண்டு கிறேன். நீகிரோவின் தொல்லைகளை அகற்றுதல் நற்பணி, என்பது மட்டுமன்று! நம் தீராக் கடடையும் ஆகும். இறைவன் வழியை பின்பற்றுவராகத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பியர் இந்நாட்டைக் கண்டு பிடித்தது அழிவு செய்வதற்காகவே? இவர்கள் ஆளும் பொறுப்பு ஏற்ற பின்னரும் பலர் இறந்தனர். இறந்து கொண்டு இருக்கின்றனர்; இருப்பவர் நிலையோ மிகச் சீர்கெட்டு வருகிறது. ஐரோப்பியர் செய்துவரும் கேடுகளாலேயே இவை நிகழ்கின்றன. இவர்களுக்குப் பழக்கிவிட்ட குடிகளும், பரவவிட்ட நோய்களும் சீர்கேட்டுக்கு அடிப்படை. நாம் நீகிரோவர்க்குச் செய்யும் நன்மை நல்லெண்ணத்தால் செய்வதாகக் கொள்ளக் கூடாது. நாம் செய்த கொடுமைகளை ஓரளவு ஈடு செய்வதற்கே ஆகும். ஆளுகின்ற அரசு பல மருத்துவர் களை அனுப்ப வேண்டும். சமூகமும், தனிப்பட்டோரும் ஈடுபட்டாதல் வேண்டும். தாங்கள் செய்யும் நன்மையால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்கட்கு ஒரு பெரிய பரிசாக திகழும். நீகிரோவர் பொருளைப் பெற்று நாம் வாழ்க்கை நடத்தவும், பணி செய்யவும் இயலாது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் வாய்ப்புக் களை உண்டாக்கித் தரவேண்டும். இஃது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நோய்த்துயர் இன்னதென்ன அறிந்த கூட்டத்தாரே முதற்கண் இதற்கு உதவ முன்வரவேண்டும். நோய் படுத்தும் பாட்டையும் அல்லலையும் அவரறிவர். நோயால் உண்டாம் துயர் தீரப்பெற்ற ஒருவன் தன்னைப் போலவே பிறனும் அத்துயரில் இருந்து விடுபடுதற்கு உதவுவானாக. இத்தகைவனே குடியேற்ற நாட்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தக்க பொறுப்புடையவன் ஆவன். இக்கொள்கையை உலகம் ஒரு நாள் ஏற்றே தீரும். ஏனெனில் அறிவுக்கும், உணர்வுக்கும் பொருந்திய மறுக்க முடியாத உண்மை இது. என் உடல் நிலை 1918 முதல் குன்றியது. இரண்டு அறுவை யால் குணம் பெறமுடிந்தது. பல இடங்களுக்குச் சென்று சொற் பொழிவு செய்ததாலும் ஆர்கன் இசைத்ததாலும் போர்க்காலத்தில் பட்ட கடனைத் தீர்த்தாயிற்று. தொல்லையிலும் தொடர்ந்து இம்மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை எனக் கொள்கிறேன். போரின் விளைவால் வேண்டிய பொருள்பெற முடிய வில்லை. மருந்தின் விலையோ மும்மடங்கு ஆயிற்று. இவற்றைக் கருதி, யான் சோர்வடைய வில்லை. நான் அடையும் தொல்லைகள் வலிமையூட்டுகின்றன. மக்கட் கூட்டம் உதவும் என்ற எதிர்கால நம்பிக்கையே மிகுகின்றது. நோயில் இருந்து விடுபட்ட பலர் பிறரும் நோயில் இருந்து விடுபட உதவுவாராக. வேறுபல மருத்து வரும் இப்பணிக்கு வருவாராக! சுவைட்சர் உள்ளம் பெரிது! வானினும் விரிவானது! அவர் தொண்டுள்ளத்தின் முத்திரையாக இலங்குவது கன்னிப் பெருங் காட்டின் கங்கிலே என்னும் நூல். அந்நூல், பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறள்மணிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதாம். 8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர் உலகப் போரின்போது போர்க் கைதியாக்கப் பெற்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு வரப்பெற்ற சுவைட்சர் போர்ட்டோ, கெரேசன், செயிண்ட் ரெமி முதலிய இடங்களில் சிறைவைக்கப் பெற்றார். இவரும் இவர் மனைவியாரும் உடல் நலக்குறைவு உற்றனர். 1918ஆம் ஆண்டு சூலைத் திங்களில் விடுதலை பெற்றார். சூரிச் நகருக்குச் சென்று, டிராசுபர்க்கை அடைந்தார். சுவைட்சர் தந்தையாரைக் காண விரும்பினார். அவர் இருந்த கன்சுபர்க் போர்க்களப் பகுதியாக இருந்ததால் இயன்று இசைவு பெற்றே போய்க் கண்டார். போர் அழிபாட்டையும் பஞ்சக் கொடுமையையும் நேரில் கண்டு உருகினார். தம் சொந்த ஊரில் தங்குவதால் தமக்கிருந்த காய்ச்சலையும், களைப்பையும் போக்கலாம் எனக் கருதினார். ஆனால் உடல்நிலை மிகச் சீர்கெட்டுக்கொண்டே வந்தது. ஆகவே மனைவியாருடன் டிராசுபர்க்குக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார். உடல் நலம் பெற்றதும் பணிசெய்வதை நாடினார் சுவைட்சர். மருத்துவப் பணியும், சமய போதனைப் பணியும் டிராசுபர்க்கில் கிடைத்தன. போர்க் கொடுமையால் செருமனியில் அல்லல் படுபவர்க்கு அவ்வப்போது உணவுப்பொருள் அனுப்பி உதவினார். தம் பணிகளின் இடையே நாகரிகமும் தத்துவமும் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி முடித்தார். 1919இல் பார்சலேனா என்னும் இடத்தில் ஆர்கன் வாசிக்க அழைப்பு வந்தது. சுவீடனைச் சேர்ந்த உப்சலா பல்கலைக் கழகத்தில் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்பு வந்தது. இவ்வழைப்புக்களால் தம்மை உலகம் மறந்து விடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அத்துறைகளில் தொண்டு செய்தற்கு வாய்ப்பு உண்டு என்று மகிழ்ந்தார். பல ஆண்டுகளாகத் தம் மனத்துக் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படுமாறு உலகம் உண்டு என்ற தத்துவக் கொள்கையும் ஒழுக்க நெறியும் என்னும் பொருள்பற்றி உப்சலாச் சொற்பொழிவை நிகழ்த்தினார். போர் மூண்டதற்குப் பின்னர் இலாம்பரினியில் மருத்துவ மனை நடத்துதற்காகப் பட்டிருந்த கடனை எவ்வாறு தீர்ப்பது என ஏங்கிக் கொண்டிருந்தார். சுவீடனில் இருக்கும் போதும் அவருக்கு இவ்வெண்ணம் இருந்தது. இதை அறிந்து இவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த பெருமகனார் ஆர்கன் இசைத்தும் சொற்பொழி வாற்றியும் பணம் திரட்டலாம் என வழி கூறினார். அவ்வுரையை ஏற்றுக்கொண்ட சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அமைந்த மருத்துவமனை குறித்துப் பேசினார்; ஆர்கன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்நாட்டை விட்டுப் புறப்படும்போது தாம் பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும் அளவுக்குச் செல்வம் சேர்ந்து விட்டது. மீண்டும் ஆப்பிரிக்கா சென்று மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளலாம் என்று முடிவு செய்தற்கும் தூண்டியது. ஆக சுவீடன் வாழ்வு பலவகைகளிலும் சுவைட்சருக்கு மகிழ்ச்சியாயிற்று. உப்சலாவில் இருந்த பதிப்பகத்தார் சுவைட்சர் நடத்திய மருத்துவமனை குறித்து ஒரு நூல் இயற்றித் தருமாறு வேண்டினர். அதனால் கன்னிப் பெருங்காட்டின் கங்கில் என்னும் நூலை இயற்றினார். அந்நூல் பல ஐரோப்பிய மொழிகளில் உடனே பெயர்க்கப்பெற்று நல்ல வருவாய் தந்தது. சொற்பொழிவாலும் ஆர்கன் இசையாலும் பணம் தேடமுடியும் என்னும் துணிவால் தாம் ஏற்றிருந்த பணிகளை விடுத்தார். மனைவியையும், தமக்குப் பிறந்திருந்த ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றார். அங்கே போய் நாகரிகமும் தத்துவமும் என்னும் நூலை எழுதத் திட்டமிட்டார். எனினும் சொற்பொழிவு, ஆர்கன் இசை அழைப்புக்கள் மிகுதியாயின. பொருள் ஈட்ட வாய்ப்பு என்று அவற்றில் மிக ஈடுபட்டார். சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல மேடைகளில் இசை மீட்டினார். அதன்பின் டென்மார்க், செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறு அவர் எண்ணிய எண்ணங்கள் இனிது நிறைவேறிக்கொண்டு வந்தன. 1913இல் இலாம்பரினியில் பணியாற்றச் செல்லுங்கால், ஆசிரியத் தொழில், இசை ஈடுபாடு ஆகியவற்றை விட்டுவிட முடிவு கட்டினார். பிறரிடம் பொருளை எதிர்பார்க்கக்கூடாது என்றும் திட்டமிட்டார். இவ்வனைத்தும் பொது நலம் கருதி மீண்டும் மேற்கொள்ளப் பெற்றன. இறைவன் திருவருள் என்றே இவற்றில் மீண்டும் ஈடுபட்டார். இறைவன் வழிகாட்டுதல் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கும் என்னும் குறிக்கோளு டையவர்கள் பெருமக்கள்! அவர்கள் வழி தூயது! துலக்கமானது! உலகுக்கு நலம் பயப்பது! அவர்கள் வழி வாழ்வதாக! 9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில் உயிர் இரக்கத்தால் உந்தப்பட்ட ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் வாழும் நீகிரோவர்க்குத் தொண்டு செய்வதற்காக 1913ஆம் ஆண்டு முறையாகப் போய்ச் சேர்ந்தார். அம்முதற்றடவையில் நாலரையாண்டுகள் பணி செய்தார். அதன்பின் ஏற்பட்ட முதல் உலகப் போரால் போர்க்கைதி யாக்கப் பெற்று ஐரோப்பாவுக்கு வந்தார். ஐரோப்பாவிற்கு வந்தாலும் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று தொண்டு செய்வதையே விரும்பினார். அங்குப் போய்ப் பணி செய்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடிக் கொள்வதற்காகவே உழைத்தார். வேண்டிய அளவு பணத்தை ஈட்டியதும் 1910 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலாம்பரினியில் மருத்துவமனை இருந்தது. ஆல்பர்ட் தோற்றுவித்து வளமுற நடத்திய மருத்துவமனை அது. சில ஆண்டுகள் பேணுவாறற்றமையால் அதன் பெரும்பாலான பகுதிகள் அழிபாடு அடைந்தன. ஓரிரண்டு கட்டடங்களின் அடித்தளங்கள் எஞ்சி நின்றன. சிலவற்றின் கூரைகள் பழதடைந்து கிடந்தன. அவற்றைப் பெருமுயற்சியால் சரிப்படுத்தி மருத்துவப் பணி புரிந்தார். நோயாளர் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டு வந்தமையால், ஐரோப்பாவில் இருந்து இரண்டு மருத்துவர்களையும் இரண்டு தாதியர்களையும் வரவழைத்துக் கொண்டார். இந்நிலையில் கடுமையான உணவுப்பஞ்சம் உண்டாயிற்று. வயிற்றுக் கடுப்பு நோய் பெருகியது. மருத்துவமனை போதாததால் இடத்தை மாற்றி விரிவாகக் கட்டவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஆற்று வெள்ளம், மலையில் இருந்துவரும் நீர்ப்பெருக்கு ஆயன தொல்லை தராத மேடான இடத்தில் கட்டடம் கட்டினார். பக்கங்களில் பயன்மிக்க பழமரங்கள் நட்டினார். இரண்டே ஆண்டுகளில் திரும்ப எண்ணியிருந்த அவர் திட்டம் மூன்றரை யாண்டாக வளர்ந்தது. 1927 சனவரியில் புதிய இடத்திற்கு மருத்து வமனையை மாற்றி அமைத்து மற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஐரோப்பாவுக்குப் பயணப்பட்டார். ஐரோப்பாவுக்கு ஆல்பர்ட் வருவதெல்லாம் ஆபிரிக்கத் தொண்டுக்குப் பணம் திரட்டுவதற்குத் தானே. அதனால், ஐரோப்பாவுக்கு வந்ததும் மீண்டும் சொற்பொழிவாலும், ஆர்கன் இசையாலும் பொருள் தேடினார். புனிதர்பால் அடிகளின் பத்தி நெறி என்னும் நூலை எழுதி முடித்தார். செருமன் கவிஞர் கேதேயின் நினைவுப்பரிசு இவரது மனிதசமூகத் தொண்டு கருதி வழங்கப் பெற்றது. அப்பொருளைக் கொண்டு, கன்சுபர்க்கில் கேதேமனை உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு சுவைட்சர் தாமும் தம் மனைவியும் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்கா சென்றனர். நோயாளர் மிகுதியைக் கண்டு மருத்துவமனைக் கட்டடத்தை மேலும் விரிவாக்கினார். மனைவியார்க்கு உடல்நலம் இல்லமையால் அவர் 1930 இல் ஐரோப்பா திரும்பினார். ஆல்பர்ட் 1932 இல் ஐரோப்பாவுக்கு மீண்டார். மீண்டும் 1933 இல் இலாம்பரினி சேர்ந்தார். 1934 இல் ஐரோப்பா திரும்பினார். ஓராண்டு ஐரோப்பாவில் தங்கினார். 1935 சனவரி 4 இல் தம் அறுபதாம் பிறந்த நாளை டிராசுபர்க்கில் கழித்தார். 1935 பெப்ரவரியில் ஆபிரிக்காவுக்குச் சென்று 1939 சனவரியில் திரும்பினார். இதற்கு இடையே 1938 இல் மருத்துவ மனையின் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நிலைமை தோன்றியது. ஆகவே சுவைட்சர் உடனேயே தாம் வந்த கப்பலிலேயே ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார். போர் முடிவால் பிரான்சுக்கும் இலாம்பிரினுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இங்கிலாந்து அமெரிக்கா இவற்றுடன் தொடர்பு உண்டாயிற்று. அமெரிக்க மக்கள் நிரம்ப பொருளுதவி புரிந்தனர். சுவைட்சரின் திருக்கூட்டத்தார் அமெரிக்காவில் பெருகினர்; போரும் நின்றது. பொருளும் உதவிகளும் பெருகின. உதவியாளர்களும் வந்தனர். இலாம்பரினிக்குச் சென்று அமெரிக்கர் பலர் பார்வையிட்டு, சுவைட்சரைப் பற்றியும், அவர் தொண்டு பற்றியும் நூல்கள் எழுதினர். இனி மருத்துவமனை இனிதாக இயங்கும் என்னும் எண்ணத்தால், 1948-இல் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். 1949இல் மீண்டும் இலாம்பரினிக்குச் சென்று 1952-இல் திரும்பினார். அல்லல் அடைவார் அவலம் போக்குதற்கென்றே ஆண்டவனால் அருளப்பெற்றவர் ஆல்பர்ட். அவர் புகழை நாடவில்லை. ஆனால் புகழ் நிழல்போல் தொடர்ந்தது. 1953இல் அமைதிப் பணிக்காக நோபல் பரிசு கிடைத்தது. 1955இல் பிரிட்டிஷ் அரசியார் பெருந்தகைவுடையர் என்னும் பெருமை தந்து பாராட்டினார். நல்லவர் உள்ளமெல்லாம் கோவில் கொண்டார் சுவைட்சர்! அவர் புகழ் வாழ்வதாக! 10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம் உள்ளத்தால் பொய்யாது ஒழுக்கியவர் ஆல்பர்ட் சுவைட்சர். இவர் நூலறிவு, பட்டறிவு, நுண்ணறிவு ஆயவற்றால் கண்டறிந்தவை நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும், உரைவடிவிலும் வெளிப் பட்டன. உலகுக்கு ஒளிகாட்டின. அவற்றுள், இவர் ஆக்கிய நூல்களில் திகழும் அரிய பொருள்களைப் பற்றிச் சிறிது காண்போம். பால் அடிகளின் பத்திநெறி என்பது சுவைட்சர் எழுதிய நூல்களுள் ஒன்று. இயேசு நாதர் வாழ்வு கட்டுக்கதை அன்று என்றும், அவர் வழங்கிய அருள்மொழிகள் புத்தொளி யுடைவை என்றும், ஓர் உயிர் தன்பாலும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் பாலும் ஈடுபாடு கொள்வதே பக்திநெறி என்றும், மனிதன் தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாது இறைவனுடன் இரண்டறக் கலக்க ஆவலுறுவதே பாலடிகளின் உள்ளம் என்றும் அந்நூலில் விளக்கினார். பாக் என்னும் என்னும் இசைக் கவிஞரைப்பற்றி இவர் எழுதிய நூலில் அப்புலவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இசையை, உணர்வுடன் கையாளும் திறத்தை விளக்கினார். ஆர்கன் கருவியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு நூல் எழுதினார். இசை வல்லார்க்கு இவ்விரு நூல்களும் எளிய விருந்தாயின. நாகரிகத்தின் தத்துவம் என்னும் நூலிலே மேல் நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் உலகம் பற்றி வெளிப்படுத்தப் பெற்ற பல்வேறு கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் வாழ்வுநெறியை இவை எவ்வாறு அமைத்தன என்பதை வரலாற்று முறையில் வெளியிட்டார். காட்டுமிராண்டி தன் குழுவுக்கு உதவி செய்தலே தன் கடமை என உணர்கிறான். பிறர்க்கு உதவி செய்வதைக் கருதாமல் அவன் என் உடன் பிறந்தான் என ஒதுக்குகின்றான். ஒவ்வொரு மனிதனும் நம்முடைய அருளுக்கும் அக்கறைக்கும் உரியவன் என்றால் நிலை நாகரிகம் உடையதெனக் கூறும் சமுதாயத்திலும் காணுதல் அரிதாகின்றது. இனம், சமயம், நாடு என்பன எதிரிடு கின்றன. அண்டையில் வாழ்பவனையும் அயலானாகக் கருதத் செய்கின்றன. இந்நிலை மாற யாவரும் கேளிர் என்னும் அடிப்படை அறம் உண்டாதல் வேண்டும். இதுவே மக்கட் பண்பு. யாவரும் கேளீர் என்னும் பண்பு பின்னர் யாவும் கேளே என்று விரிவடைய வேண்டும். எவ்வுயிர்க்கும் அன்பு காட்டு என்னும் நீதி, ஒழுக்க நெறியின் ஒளியாம். நான் வாழ வேண்டும் என்னும் கொள்கை மற்றோருயிர் நான் வாழ வேண்டும் என்னும் கொள்கைக்கு மாறுபட்டதாக இருத்தல் கூடாது. நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளதும் உயிர் அதுவும் என்னைப்போலவே வாழ விரும்புகிறது என்பதை உணர வேண்டும். இக்கருத்துக்களை விளக்கி உயிர்ப்பத்தி என்னும் நூலை உருவாக்கினார் சுவைட்சர். உலக சமய கோட்பாடுகளை ஆராய்ந்த சுவைட்சர் இந்திய சித்தாந்தங்களை ஆராய்ந்தார். இந்திய சித்தாந்தமும் அதன் வளர்ச்சியும் என்னும் நூலை ஆக்கினார். அதில் வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களையும் கீதை, திருக்குறள் முதலிய நூல்களையும் விரிவாக ஆராய்கிறார். குறளைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சிறப்புடையனவாம். உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறிபரவ விட்டுள்ளார். பகவத்கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்ற கருத்து அந்நூலில் கூறப்படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது. மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தியுள்ளார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தில் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறெந்த நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே உலகம் உண்மை என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப் பெற்றன. மேலும், கன்னிப்பெருங் காட்டின் கங்கில் என் வாழ்க்கையும் கொள்கையும் என் ஆப்பிரிக்கக் குறிப்புக்கள் என்னும் நூல்களையும் சுவைட்சர் இயற்றினார். பொற்சுரங்கம் போன்றவை சுவைட்சரின் நூல்கள்! அவர் நூல்களுக்கு எடுத்துக் காட்டான இலக்கியமாகத் திகழ்வது அவர் வாழ்வு! வாழ்வையே அருள் இலக்கியமாகிய பெருமகன் சுவைட்சர் என்றும் உலகில் வாழ்வாராக. 1. அருந்தவத்தோன் இறைவன் அருளாளன்; அழகே உருவம் ஆனவன்; அவன் அருள் அழகிலே தோய்ந்து தோய்ந்து பாடிய புலவர் பெருமக்கள் பலப்பலர். அவர்களுள் பெருந்தேவனார் என்பார் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர்களுள் ஒன்று பெருந்தேவனார் என்பது. அப்பெயரைத் தம் பெயராகத் தாங்கிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய இனிய பாடல்ஒன்று புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாகத் திகழ்கின்றது. சிவபெருமானது உருவக் காட்சியிலே உள்ளந்தோய்ந்தார் பெருந்தேவனார்; முடிமுதல்அடிவரை கண்டுகண்டு, எண்ணி எண்ணிக்களிப்படைந்தார்; கவியாகப் புனைந்து கற்பவர் நெஞ்சங் களை அக்கடவுட் காட்சியிலே ஊன்றுமாறு செய்தார். கார் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் கொன்றை மலரைத் தன் திருமுடிக் கண்ணியாகக் கொண்டுள்ளான் சிவன். கண்ணியாக மட்டுமோ அக்கொன்றை திகழ்கின்றது? மார்பில் திகழும் தாராகவும் அக்கொன்றையே உள்ளது. சிவனது செவ்வண்ண மார்பிலே மணி பதித்தால் போல அழகு செய்கின்றது அது. வெண்ணீற்றை விரும்பி அணியும் சிவன் தூய வெள்ளேற்றின் மேல் (காளையின் மேல்) ஏறி வருகின்றான்! அம்மட்டோ? அந்த ஏறே அவனுடைய சிறப்புமிக்க கொடியாகவும் விளங்கிப்பட்டொளி வீசுகிறது. செந்தழல் மேனிச் சிவபெருமான் கழுத்திலே கறை என்ன? ஆம்! நீலகண்டன் அல்லனோ அவன்! அது கறையா? இல்லை! இல்லை! செவ்வண்ணத் திருமேனியில் எழுந்த கருமணி! மண்ண வரும் விண்ணவரும் போற்றும் மாமணி. ஏன்? அமுது வேண்டி அமரர் பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் கிடைத்தது நஞ்சு! இறவாத வாழ்வை விரும்பி அமுதுவேண்டி நின்றோர்க்குக் கிடைத்தது. எளிதில் இறப்பளிக்கும் நஞ்சு! சாவவா பாற்கடல் கடைந்தனர்? சாவாமை நாடிய அவர்கள் சங்கரனைச் சார்ந்து நின்று வேண்டினர். நலிவு செய்யும் நஞ்சை அள்ளி உண்டு நீலகண்டன் ஆயினான். அவன் ஆலம் உண்ட நீலகண்டன் ஆனதால் அமரர் உயிர்தப்பினர். உயிர்அருளிய உரவோனை உயர்த்திப் பாடத்தவறவோ செய்வர்! உயர்த்தி உயர்த்தி அமரர் பாடினர்: அந்தணர் பாடினர்; அடியவர் பாடினர். கறையின் பெருமையே பெருமை! இதோ! சிவபெருமான் ஆண் வடிவாகமட்டுமோ தோன்று கின்றான்? மாதிருக்கும்பாதியனாக - அம்மை அப்பனாக - அருட்காட்சி வழங்குகின்றான். தன் ஒரு பாதியைப் பெண்ணுக்குத் தந்தவண்மை பெரிது. அது மட்டும் அல்லவே! அப்பெண்வேறு தான் வேறு என்று இல்லாமல் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்ளவும் செய்கிறானே அவன்! என்னே விந்தை! செஞ்சடையப்பன் திருமுடியிலே விளங்குவது என்ன? பிறை நிலா அது! அப்பிறையின் எழில் என்னே! ஒளி என்னே! நெற்றிக்கு அப்பிறையூட்டும் அழகு என்னே! அவ்வழகிலே நெஞ்சைப் பறிகொடுத்து வாழ்த்துப் பாடுவது ஒரு கூட்டமா? இரண்டு கூட்டமா? அமரர்கணங்கள் பதினெட்டும் அல்லவா அப்பிறையை வாழ்த்துகின்றன. இனி, பிறையைத் தாங்கிய சடையின் சீர்மைதான் என்னே! உலகத்து உயிர்களெல்லாம் காப்பது நீர். அந்நீரை வற்றிப்போகா மல்காப்பது அச்சடை! அச்சடை வாழ்க! அச் சடை அணிந்த அருந்தவத்துப் பெருந்தேவன் வாழ்க! என்று தொடர்ந்து எண்ணினார் பெருந்தேவனார். தம் எண்ணத்திற்குத் தமிழ்க் கவி உருவம் தந்தார். அவ்வுருவம் அவர் உருவமாகப் புறநானூற்றில் நின்று நிலவுகின்றது. வாழ்க பெருந்தேவனார். 2. அறப்போர் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உண்டாகும் சண்டையே போர் எனப்படுகிறது. அப்போர் மறப்போர் அல்லது வீரப்போர் எனப் பெயர் பெறும். அம்மறப்போரையும் அறப்போர் ஆக்கிய பெருமை பழந்தமிழர் உடைமையாம். அதனை இக் கட்டுரைக்கண் காண்போம். காலமும் இடமும் குறித்துக் களப்போரில் இறங்குவது பழந்தமிழர் போர்ப் பண்பாடு. அவர்கள் போரில் இறங்குமுன் பசுக்களும், பசுக்களை ஒத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளர்களும், மக்கட்பேறு இல்லதவர்களும் பாதுகாப்பான இடங்களைச் சேருங்கள், நாங்கள் போர் செய்யப் போகின்றோம் என்று கூறிப் பறை முழக்குவர். இச்செய்தியை அறிய மாட்டாத பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து பாதுகாப்புச் செய்வர். அதன் பின்னரே போர் தொடங்குவர். மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்பதற்கு இச்செய்தி சான்றாம். போர் நிகழும்போதும், மடித்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படை இழுந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் கொல்லாது போக விடுதல் வேண்டும் என்னும் அறமுறை வீரர்களால் மிகப் போற்றப் பெற்றது. இவ்வாறு அறப்போர்நிகழ்த்திய வீரவேந்தர்களுள் ஒருவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்பவன். வழுதி பலப்பலவேள்விகளை விரும்பிச் செய்தவன். மாற்றார்கள் எவ்வளவு முயன்றும் தழுவிக் கொள்ள முடியாத மதிற் சிகரங்களைக் கொண்டவன். ஆகவே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயர் பெற்றான். அப்பெரு மகனைப் பாடிய பெரும்புலவர் நெட்டிமையார் என்பர். அவர் வழுதியை நேரில் கண்டு அவன் செய்யும் அறப்போரை அழகுபெறக் கூறி வாழ்த்துகிறார். நிலந்தந்த புல்லைத் தின்று, நீரைப்பருகிப் பாலைச் சொரியும் வள்ளற் பசுக்களைக் களப்பலியிடலாமா? கூடாது. கூடவே கூடாது. ஆகவே போர் என்றால் என்ன என்பதையே அறியாத பசுக்களை நாட்டை விட்டே கொண்டு சென்றுகாத்தல் வீரர் கடன். அப்பசுக்கள் மட்டுமோ? அப்பசுக்கள் போல் அருள் பேணும் அந்தணர்களையும் நாட்டு நலம் கருதி காத்தல் கடமை. இனி, மெல்லியல் வாய்ந்த நல்லியல் நங்கையரை அழிப்பது தகுமா? பேயும்இரங்க வேண்டிய பெண்மையை நினைத்து இரக்கம் கொள்ளாதவன் பேராண்மையாளன் ஆவானா? ஆகான்! ஆகவே, மகளிரைக் காத்தல் வேண்டும். வாழப்பிறந்த மாந்தன் தன்குடி வாழ்வுக்குரிய மகப்பேறுபெறுதல்இன்றியமையாக் கடமை. அக்கடமையைச் செய்து முடிக்காத மகப்பேறு வாய்க்காத - பெற்றோர்களைக் கொல்லுதல் பெரும் பாவம். இப்படி எல்லாம் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி அறப்போர் புரியும் முதுகுடுமிப் பெருவழுதி நீ வாழ வேண்டும்; நீடு வாழ வேண்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். எத்துணைப் பல்லாண்டுகள்? ஆடுபவர்க்கு நீடிய பரிசுகளை வழங்கியவனும் கடல்விழா எடுத்துக் களிப்புற்றவனும் ஆகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரிய பஃறுளியாற்று மணல்கள் எத்துணை? அளவிடற்கு அரிது! அவ்வாற்று மணல்போல் எண்ணற்கு அரிய காலங்கள் வழுதி இனிது வாழ்வானாக. அறப்போர் பேணும் அண்ணல் ஆற்று மணல்போல் வாழ்வானாக என்று வாழ்த்தினார் நெட்டிமையார். வழுதி, மன்னவன்; நெட்டிமையார், பாடும்புலவர்; புலவர் வழுதியையா இப்பாடலில்பாடி வாழ்த்தினார். இல்லை! அற நெறியை வாழ்த்தினார். வழுதி அறம் பேணுகிறான்; ஆகவே அவன் வாழ்க என்று வாழ்த்தினார், அறத்தின் மேல் அவர்க்கிருந்த காதல் அது! வாழ்க அறப்போர்! வாழ்க அறவோர்! 3. பெற்ற பரிசில் பூவை நாடிச் செல்லும் தேனீ, பழமரம் நாடிச் செல்லும் பறவை. அவற்றைப் போல் இரவலர் ஈவாரைத் தேடிச் செல்வர். அவ்வாறு, இல்லை என்று இரந்து வருவாரை வரவேற்றுப் போற்றிய பெருமக்களுள் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் ஒருவன். கடுங்கோ, சேரநாட்டு வேந்தன். பாலை என்னும் அகத்திணை பாடுவதில் தேர்ந்தவன். அவனைப் பாடும் பேறு பெற்றார் இளவெயினி என்னும் பெயருடைய புலவர் பெருமாட்டி. இளவெயினி எயினி என்பவருக்குத்தங்கையாக இருந்தார். அவள் தாய் பேய்மகள் என்னும் பெயருடையவர். ஆகவே பேய்மகள் இளவெயினி எனப்பட்டார். அவர் பாலைபாடிய பெருங்கடுங் கோவைப் பாடினார்; பரிசில் பெற்றார். சேரனைப் பாடக் கருதிய புலவர் இளவெயினிக்குச் சேர நாட்டின் நினைவு தோன்றியது அந்நாட்டுத் தலைநகராம் வஞ்சி முன்னின்றது. அவ்வஞ்சி மாநகரில் வாழும் வஞ்சிக்கொடி போன்ற மகளிர்நினைவில் வந்தனர்; அன்னார் ஆன்பொருநை ஆற்றிலே விளையாடும் மணல் விளையாட்டு முன்னின்றது. அண்மையில் போருக்குச் சென்று வெற்றியுடன் திரும்பிய வேந்தனது படைத் திறமும் கொடைத்திறமும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன இக்கருத்துக்களை யெல்லாம் தண்டமிழ்ப் பாமாலையாக்கிப் பாலைபாடிய கோவுக்குச் சூட்டினார் இளவெயினி. மெல்லிய மயிரையுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலங்களையும் உடைய இளைய பெண்கள் மணலில்கோடு கிழித்து உண்டாக்கிய பாவைக்குப் பூக்களைச் சூட்டி விளையாடியும் தண்பொருநை ஆற்றிலே வீழ்ந்து நீர் விளையாட்டு நிகழ்த்தியும் களிப்படையும் வளமை வாய்ந்தது வஞ்சி மாநகர். அவ்வஞ்சி மாநகரின் வேந்தன் சேரமான் அவன் பகைவரின் அரண்களைக் கைக்கொண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வல்லாளன். அவர்களைப் பாடிச் சென்ற பாடினி மாற்றுயர்ந்த பொன்னால் ஆகிய அணிகலங்களைப் பெற்றாள். அவள் பாட்டுக்கு ஏற்பத் தாளக்கட்டு விடாமல் யாழிசைத்த பாணர் வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூக்களைப் பெற்றான். அவர்கள் பெற்ற பேறு என்னே! என்று வியந்து பாராடினாள் இளவெயினி. கடுங்கோவின் முன்னர் நின்று இவரிவர் இன்ன இன்ன பெற்றார்! யான் எதுவும் பெற்றிலேன்; இவர் இவர்க்கு இன்ன இன்ன நீ வழங்கினை; எனக்கு எதுவும் நீ வழங்கவில்லை என்று குறிப்பாக அறிவுறுத்தினார். வள்ளலின் கை தாழ்க்குமா? அள்ளி அள்ளி வழங்கியது பாடிய எயினி பரிசிலால் மகிழ்ந்தாள். பாடுதல் எமக்கு எளிது; ஆனால் பாடல் நயமறிந்து பரிசு வழங்குவதே அரிது என்று சங்கப் புலவர் ஒருவர் கூறினார். ஆம்! ஈகை, அரிய பண்பு; கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று குறிக்கப்பெறும் பண்புத், தாதா கோடிக்கொருவர் என்று பாராட்டப் பெறும் பண்பு. அப்பண்பில் தலை நின்ற பாலை பாடிய இளங்கடுங்கோ கற்பவர் உள்ளததெல்லாம் நிற்பான் என்பது உறுதி. 4. சேரமான் புகழ் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை ஓரிடத்தே அமைவது அரிது. அறிவு உடையவர் இடத்துப் பண்பும், பண்பு உடையவர் இடத்து அறிவும், அவ்விரண்டும் உடையவர்இடத்து ஆற்றலும் அமையக் காண்பது அரிது. அவை அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து அமைந்துவிடின் அத்தகையவர் பிறர் உள்ளங்களை எளிதில் ஆட்படுத்தி விடுவர் பாடும் புகழுக்கும்உரியவர் ஆவர். அத்தகையவருள் ஒருவனாக விளங்கினான். சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரஞ் சேரல் சேரர் பரம்பரையில் வந்தவன். இரும் பொறை என்பது அவன் பரம்பரைக்குரிய பட்டப் பெயர். யானையின் சிறிய கண்களைப் போன்ற கண்களை உடையவன். ஆகவே இவற்றையெல்லாம் கூட்டி, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனப்பட்டான். இம்மன்னவனைப் பன்முறையும் கண்டு அன்புறப் பழகினார் ஒரு புலவர் அவர் குறுங்கோழியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்தவர். ஆகவே, குறுங்கோழியூர் கிழார் என்று பிறரால் அழைக்கப்பெற்றார். அப்பெயரே தம் பெயராக அமைந்து விளங்கினார். கிழார் மாந்தரஞ்சேரலின் அறிவுப் பண்பிலே - பல்கலைத் திறத்திலே தம் நெஞ்சைப் பறிகொடுத்தார். விரிக்க விரிக்க விரிந்து செல்லும் பண்பு மேம்பாட்டிலே தோய்ந்து நின்றார். அவன் ஆட்சியிலே அவன் அடிசார்ந்த குடிமக்கள் அடைந்து நிற்கும் இனிய தண்ணிய வாழ்வை எண்ணி இன்புற்றார். ஆற்றல் பெருகிக் கிடந்தும் அறவழிக்கு அன்றிப் பிறவழிக்கு பயன்படுத்தாத பெருந்தகைமையைப் பெரிதும் தெளிந்தார். குறை சொல்லிக் கொண்டு எவரும் முறை வேண்டிவரும் நிலை இல்லை என்பதையும் அவ்வாறு வரினும் அக்காலையில் வேந்தன் செலுத்தும் செங்கோல் மாண்பு இத்தகையது என்பதையும் சிந்தையில் தேக்கினார். இத்தகைய அரிய தன்மைகள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்து ள்ளமையால் மக்கள் உள்ளங்களில் உண்டாக்கி இருக்கும் நல்லெண்ணத்தையும் ஆய்ந்து உணர்ந்தார். தம் கருத்தை எல்லாம் கூட்டி அதற்குப் பாட்டுருத் தந்தார். வேந்தே! விரிந்த கடலின் ஆழம், பெரிய நிலத்தின் அகலம், காற்று வீசும் திசை, உருவம் அற்று நிலைபெற்ற வானம்இவற்றை எல்லாம் அறிவாற்றல் மிக்கோர் அளப்பினும் அளக்கலாம். ஆனால், அவற்றை அளந்து காணும் அறிவினராலும் நின் அன்பு, அருள், அறிவு ஆகியவற்றை அளப்பது அரிது. சோறு சமைக்கும் போது உண்டாகும் தீயின் வெப்பமும், செங்கதிரோன் வெப்பமும் அன்றி நின்குடிகட்கு வேறு வெப்பம் எதுவும் இல்லை வான வில்லைக் கண்டது அன்றி வாட்டும் கொலை வில்லைநின் மக்கள் அறியார். உழுபடை (கலப்பை) அன்றிப் பிற படைகளை அவர்கள் அறிந்தது இல்லைபிறர் மண்ணை நீ பறித்துக் கொண்டதோ இல்லை அவ்வாறே மண்ணாசை கொண்டு நின்னாட்டின் மேல் வந்தாரும இலர். கருக்கொண்ட மகளிர் மண்ணை உண்டதை அன்றிப் பகைத்து வந்து நின் மண்ணைப் பற்றி உண்டார் இலர். நின் மதிலிலே அம்புகள் தங்கிச் செயலற்றுக் கிடக்கின்றன. அறமோ, நின் செங்கோலிலே தங்கிக் கிடக்கிறது. பழம்பறவை போயினும் புதுப்பறவை வரினும் நடுக்கம் இன்றிக் காவற்கடமை புரிகின்றனனை நீ. ஆகவே நின்கீழ்வாழும் உயிர்கள் அனைத்தும் நினக்குச் சீறுதீமையும் வருதல் கூடாதே என அஞ்சி வாழ்கின்றனர் என்று பாராட்டினார் குறுங்கோழியூரார். உள்ளதை உள்ளவாறு பாடுதல் எமக்கு எளிது என்று காட்டினார் கிழார். உள்ளம் உவக்க ஈவது எனக்கு எளிது என்று காட்டினான் சேரமான். ஈத்துவக்கும் இன்பம் ஒருவர்க்கு மட்டும் அல்லவே! இருவருக்கும் உரியது தானே! வாழ்க ஈத்துவக்கும் இன்பம். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு 5. மறப்பது எப்படி? நின்னை எப்பிறப்பிலும் மறவாமை வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டினான் கர்ணன். என் மார்பைப் பிளந்து பார்; அங்கே நின் உருவைக் காண்பாய் என்று சங்கப் புலவர் ஒருவர் தம் பேரன்புக்குரிய வேந்தனை நோக்கிக் கூறினார். நல்லதை மறப்பது என்பது புல்லியர் பண்பு. உப்பிட்டவரை உள்ளவரைநினைப்பது உயர்ந்தோர் தகைமை அத்தகு உயர்ந்தோ ராகத் திகழ்ந்தார் ஆவூர் மூலக்கிழார். ஆவூரைச் சேர்ந்த புலவர் மூலங்கிழார் சோழன் கிள்ளி வளவனது வரிசை அறிந்து வழங்கும் வள்ளன்மையிலே உள்ளம் தோய்ந்தார். வாரிக் கொடுக்கும் வள்ளல் எனினும், பாடும்புலவர் தகுதி அறிந்து - பாடல் தகுதி அறிந்து - கொடுப்பது அரிது. அவ்வரிய திறமை எளிதில் கைவரப் பெற்றவன் கிள்ளி வளவன். கிள்ளிவளவனை அன்புற நெருங்கி வாழ்ந்த புலவர் மூலங்கிழார். நெடுநாட்கள் அவனைக் காண வாராமல் இருந்தார். அரசனுக்கு அவரைக் காணும் ஆவல் பெரிதாயிற்று; ஏக்கமாகவும் மாறிற்று. எவர் எவரையே கேட்டுக் கேட்டுச் சலித்தான். ஒரு நாள் புலவரையே நேரில் கண்டான். தன் ஆவலை எல்லாம் சேர்த்து எம்மை நினைத்தீரோ? எந்த நாடு சென்றிருந்தீர் என்று வினாவு முகத்தால் எம்முள்ளீர்? எந்நாட்டிடீர்? என்றான். அதற்கு விடையாக அவன் சிறப்புக்களையெல்லாம் வடித்தெடித்த சாறாகப் பாட்டொன்று பாடினார். வேந்தர் வேந்தே! மலை போன்றவை நின் இளைய வலிய யானைகள்; அவற்றின் மேலே, வானத்தில் கறை உண்டாயின் துடைப்பது போல ஓங்கி உயர்ந்த வண்ணக் கொடிகள் யானையைத் தொடர்ந்து செல்லும் படைகள் எண்ணற்கு அரியன. மன்னவனே, நீ சினந்து பார்க்கின்றோரின் இடம் அப்பார்வை மட்டிலே தீப்பற்றி எரிகின்றது நீ அன்பால் விரும்பிப் பார்ப்பவர் நாடுகள் பொன்விளையும் கழனிகளாக மாறுகின்றன.. நீ கதிரோன் இடத்தில் இருந்து நிலவொளியைப் பெற விரும்பினால் விரும்பிய வாறே பெறுவாய் அவ்வாறே நிலவில் இருந்து வெயில் உண்டாக்க வேண்டும் என்று உண்ணினாலும் நின் எண்ணம் நிறைவேறத் தவறுவது இல்லை. வேண்டியவற்றை வேண்டியவாறு முடிக்கவல்ல வீரன் நீ. ஆதலால் நின்குடை நிழற்கண் பிறந்து அந்நிழலே தஞ்சமாக வாழும் யான் நின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ? பிறநாட்டில் இருந்து நின்னை நேரில் காணாமல் வேள்வி அளவால் அறிந்தவர்களும் நின்னைப் பாராட்டி மகிழ்கின்றனர். அரசே, மக்கள் தாம் செய்த நல்வினைக்கு ஏற்றபடி வானுலகம் சென்று ஆங்குள்ள இன்பம் நுகர்வர். ஆனால் அவ்வானிலோ ஒன்றை ஈவாரும் இலர்; இல்லை என்றி வந்து இரப்பாரும் இலர். ஆதலால் அவ்வானம் செயல் இகந்து பொலி வற்றது என்றே கூற வேண்டும் எனப் புலவர் கருதுகின்றனர். ஆங்குப் பெறும் இன்பம் அனைத்தும் நின்னாட்டில் ஒருங்குபெறக் கூடும் என்றே கருதுகின்றனர். ஆகவே புலவர்கள் எங்கு இருந்தாலும் - பகைவர் நாட்டில் இருந்தால்கூட நின் சோழ நாட்டையே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நான் மட்டும் நின்னை மறந்து வாழ்வேனோ? மறவேன். மறவேன்! என்றார் புலவர். தழுவிக் கொண்டான் கிள்ளி வளவன். செல்வக் குவியலிலே திளைப்பவன் வளவன்; பாடிப் பரிசில் பெற்று வாழ்பவர் ஆவூர் மூலங்கிழார் செல்வச் செருக்கு - வறுமைத் தாழ்வு - இவை ஆங்குத் தலைகாட்ட வில்லைஏன்? அன்பு தலைகாட்டியமையே காரணம். வாழ்க அன்பு வாழ்வு! அன்புற் றமர்ந்த வழக்கெனப் வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு 6. கோட்டிடை வைத்த கவளம் கோடு என்பது பல பொருள் ஒரு சொல்; அது வளைவு, மலை, கிளை, கொம்பு, தந்தம் முதலிய பல பொருள்களைத் தரும். இங்கே தந்தம் என்னும் பொருளில் வருகின்றது. யானையின் தந்தங்களுக்கு இடையெ தொங்கும் துதிக்கையில் வைக்கப் பெற்ற கவளம் என்னும் பொருளில் இச்சொற்றொடர் வருகின்றது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை அதிகமான் ஆண்டு வந்தான். அவன் உள்ளத்தால் உயர்ந்தோன். ஊருணி நீர் போலவும், உள்ளூர்ப் பழ மரம் போலவும் அனைவருக்கும் பயன்பட்டு வந்தான். அவனது பேரன்புக்கும் பெருநண்புக்கும் உரிமை பூண்டவராகத் திகழ்ந்தார் ஔவையார். ஔவையார், அதிகமான் அரண்மனையில் இருந்த பொழுது களில், எப்பொழுதும் புலவர் வந்தவண்ணமாக இருப்பதைக் கண்டார். நேற்று வந்து பரிசில் பெற்றோமே என்றும் எண்ணாமல் அவர்கள் மறுநாளும் வந்தனர்; அடுத்த நாளும் வந்தனர்; ஒருவர் இருவராக இல்லாமல் பலராகப் பல நாட்கள் தொடர்ந்து வந்தும் பரிசு பெற்றனர். அதிகமான் அவர்களை யெல்லாம் முதல்நாள் போலவே முகமலர்ந்து வரவேற்றுக் கொடுக்கும் வள்ளன்மையைக் கண்டு உள்ளம் உவந்தார் ஔவையார் தம் நெஞ்சார வாழ்த்தினார். அதிகமானிடம் விடைபெற்றுக் கொண்டு வேறு பல இடங் களுக்குச் சென்று மீண்டும் வந்தார் ஔவையார் அப்பொழுதில் அதிகமானை மிகுதியாகக் காணமுடிய வில்லை; அளவளாவிப் பேசமுடிய வில்லை; பரிசு பெற்று விடை பெற்றுக்கொண்டு போகவும் முடியவில்லை. சேர வேந்தன் அதிகமான் மேல்பகை கொண்டிருந்தான். அதிகமானை அழித்து ஒழிக்கவும் திட்டமிட்டிருந்தான். ஆகவே தன் படையைப் பெருக்கிச் சேரனை அழிக்கும் முயற்சியில் முனைந்திருந்தான் அதிகமான். அதனால் ஔவையாரை முன்னைப் போல் அவனால் பேண முடியவில்லை. நாம் வந்தபொழுது சரியில்லை என்று தமக்குள் ஔவையார் எண்ணினார்; நாட்கள் கடந்தன; பரிசில் தருதற்கு விருப்பம் இல்லாதவன் தான் இவ்வாறு நாட்களை நீட்டிக்கிறானோ என்னும் எண்ணம் அவருக்கு ஒரு நொடிப்பொழுது உண்டாயிற்று! மறு நொடியில் பேதை நெஞ்சமே, என்ன நினைத்தாய்? ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் பல நாளும். ஒருவர், இருவர் என்று இல்லாமல் பலரும், முதல் நாள் போல் பரிசு பெற்றுச் செல்ல வழங்கும் வள்ளல் அதிகமானா நமக்குப் பரிசு வழங்கத் தவறுவான்? தவறான், என்று மறு நொடியிலே எண்ணினார். மேலும் அவர் தம் எண்ணம் வளர்ந்தது. அதிகமான் என்ன வறுமைக்கு ஆட்பட்டு விட்டானா? அணிகலம் அணிந்த யானைகள் அவனிடம் குறைந்து விட்டனவா அழகு நடைபோடும் தேர்களும் குதிரைகளும் குறைந்து பேயினவா? அவன் பரிசு கிடைக்கலாம்; அல்லது நாளை கிடைக்கலாம்; அல்லது காலம் நீடித்தும் கிடைக்கலாம். ஆனால் பரிசு கிடைக்கத் தவறாது. யானை தன் கையில் சோற்றுத் திரளையை - கவளத்தை - எடுத்து வைத்துள்ளது. அதனை உடனே தன் வாய்க்குள் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் அல்லது சற்றே பொறுத்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் வாய்க்குள் போதில் தவறுமா? தவறாது. அதுபோலவே அதிகமான் தரும் பரிசிலும் ஒருநாளும் தவறப்போவதில்லை. அவன் தரும் பரிசு நம் கையகத்தே இருக்கிறது. ஆகவே அருந்துதலில் ஏமாற்றம் கொண்ட என் நெஞ்சமே. நீ வருந்த வேண்டா! அவன் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்! அவன் எடுத்துக் கொண்ட இனிய முயற்சி எளிதில் வெற்றி தருவதாக! வாழ்வதாக அவன் முயற்சி, என்று வாழ்த்தித் தம் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். பூமாலை வாடும்; பொழுதுபோனால் மணமும் தேனும் இல்லையாகும். பாமாலையோ என்றும் வாடா மாலை; வற்றாத் தேன் மணமாலை; அம்மாலையைப் பெற்ற அதிகமான் பேறு பெற்றேன். புகழுடலால் அதனை வாழச் செய்வன அப்பாமாலைகள் தாமே! 7. புலவரின் வள்ளன்மை இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவது வள்ளன்மையாம், வள்ளல் தன்மையே, வள்ளன்மை எனப்படும். வள்ளல்களை நாடித்தேடித் திரிந்து பொருள்பெறும் இயல்புடைய புலவரே வள்ளலாகத் திகழ்ந்த பெருமித மிக்க வரலாற்றை இவண் அறிவோம். பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர். பெரிய குடும்பம் உடையவர்; சுற்றமும் சூழலும் மிக்கவர்; அத்தகையவரை வறுமை வாட்டாமல் விடுமா? சித்தனாரின் மனைவியார் சீரிய பண்புகள் வாய்ந்தவர் மனைக்கு விளக்காக அமைந்தவர்; அவர்தம் அருந்திறப் பெருங் குணத்தால் அண்டை அயலார் அனைவரும் அவருக்குத் தக்க வண்ணம் ஆதரவாக இருந்தனர். குறிப்பறிந்து தாமே முன் வந்தும் பல வகையில் உதவினர்; கைம்மாற்றாகவும் வேண்டுவனவற்றை வழங்கினர்; இத்தகு நிலையிலே குடும்பம் என்னும் வண்டி ஒருவாறு உருண்டு கொண்டு இருந்தது. ஆனால், வறுமையின் வாட்டுதலைப் பிறர் எவ்வளவு நாட்கள் தாம் தடை போட்டுவிட முடியும்? சித்திரனார் குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கக்கூடும்; வறுமையுள் ஒருவன் உறங்க இயலாது என்பது பொய்யாமொழி. ஆகவே வள்ளலைத் தேடிச் செல்லும் எண்ணம் சித்திரனார்க்கு எழுந்தது. யாரைக் காண்பது? பல்லைக் காட்டி மானம் இழந்து பாடித் திரிவதற்குச் சித்தரனார் உள்ளம் உடன்பட வில்லை. குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல் யார்? என் எண்ணினார். முதிரமலை வள்ளல் - தலைக் கொடையாளி - குமணணே சித்திரனார் நெஞ்சில் தோன்றினான். புலவர் முதிரமலை நோக்கி நடந்தார். காடும் மலையும் கடந்தார்; கால்கடுக்க நடந்தார்; நெஞ்சில் நின்ற குமணனின் நேரில் நின்றார் சித்தரனார். உள்ளார்ந்த அன்பால் வரவேற்று உவகைக் கூத்தாடினான் குமணன். நெடுநாட்கள் தன்னுடன் தங்குமாறு வலியுறுத்தினான் பொழுதெல்லாம் புதுக் கவிதையிலும், இலக்கிய ஆய்விலும் கழிந்தது புலவரோடு அளவளாவி மகிழும் இன்பம் போல வேறு இன்பம் இல்லை என்னும் கருத்துடைய குமணனன் புலவரை எளிதில்போக விடுவானா? புலவர்க்கும் தம்கவியைச் சொட்ட சொட்ட நுகரும் அன்பனை விட்டுப் பிரிய மனம் வருமா? வராது எனினும் புலவர் தம் வறுமை வாழ்வு அடிக்கடி குறுக்கிட்டு ஊருக்குச் செல்லுமாறு ஏவிக்கொண்டே இருந்தது. குமணனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கினார் புலவர். குமணன் அளவிறந்த பொருள்களைப் பரிசாக வழங்கினான். பீடுமிக்க பெருஞ் செல்வர் போல் வீடு புகுந்து சித்தரனாரை வியப்புடன் வரவேற்றார் மனைவியார். பருவமழை வரக்கண்ட பயிர்போல் உற்றார் உறவினர் உவகை எய்தினர். புலவர், தம் மனைவியாரை நோக்கி, அன்புமிக்க மனைவியே, முதிரமலைத் தலைவன் குமணனன் கொடைவளம் இது. இதனை நின்னை விரும்பி வாழ்ந்து வருபவர்க்குக் கொடு. நீ விரும்பி வாழ்பவர்க்கும் கொடு; கற்பு மேம்பட்ட நின் சுற்றத்தார்க்கும் கொடு. நம் வறுமை தீருமாறு பயனெதிர் பாராது வழங்கியவர்க்கும், கைம்மாற்றாகப் பொருள் தந்தோர்க்கும் கொடு; இன்னார்க்கு என்று இல்லாமல் என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்று இல்லாமல் எல்லார்க்கும் கொடு. நானும் அவ்வாறே கொடுப்போன் என்றார். அவ்வாறே பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து பெருவாழ்வு வாழ்ந்தார் சித்திரனார். நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது வள்ளுவ நெறி அந்நெறியைச் செவ்வையாகப் போற்றி வாழ்ந்தவர் செந்தமிழ்ச் சித்தரனார். ஆகவே தாம் பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து ஈத்துவக்கும் இன்பம் எய்தினார். வாழ்க சித்தரனார்! வாழ்க அறநெஞ்சம்! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 8. ஏன் புகழ வேண்டும்? நில்லா உலகத்தில் நிலை பேறுடையது புகழ் ஒன்றே. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றாது நிற்ப தொன்றில் என்பது வள்ளுவம். அப்புகழை அடைதற்கு உலகம் பெரிதும் ஆவலுற்று நிற்கின்றது. அதிலும் புலவர் பாடும் புகழை அடையார் விண்ணுலக்கின்பமும் எய்தார் என்னும் கருத்து சங்க நாளில் இருந்தது. ஆகவே உயர் பெருமக்கள் புலவர் பாடும் புகழை விரும்பினர். புலவர்களும் தக்கோரைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தகைய புகழ் வாழ்வு ஒன்றை இக்கட்டுரைக் கண் காண்போம். இன்றைய புதுக்கோட்டைச் சீமை முன்னாளில் கோனாடு என்னும் பெயருடன் இலங்கியது. அவ்வூர்க்குப் பெருமைதரும் புலவர் மணியாக குமரனார் என்பார் பிறந்தார். அவர் மதுரையிலே வாழ்ந்தார்; மாடலன் என்பார் வழி முறையில் வந்தார். ஆகவே அவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனப் பெயர் பெற்றார். சோழனது படைத் தலைவனான ஏனாதி திருக்கிள்ளி என்பானைக் குமரனார் கண்டார். அப்பொழுது புலவர்கள் பலரும் அவனைச் சூழ்ந்திருந்தனர் அவனது சீரிய இயல்புகளையும் ஆற்றல்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏனாதியின் பகைவர்களைப் புலவர்கள் பழித்து உரைக்கவும் செய்தனர். திருக்கிள்ளி புலவர்களை நோக்கிப் புலவர் பெருமக்களே, நீங்கள் என்னையே புகழ்கிறீர்கள்; என் பகைவர்களைப் பழிக்கின்றீர்கள்; என்னிடத்தும் பழிக்கத்தக்க தன்மைகள் இருக்கக் கூடும்; என் பகைவர்களிடத்தும் புகழத்தக்க தன்மைகள் இருக்கவும் கூடும். அவற்றை உரைக்காமல் என்னையே புகழ்வது ஏன்? என் பகைவர்களையே பழிப்பதும் ஏன்? என்னைப் பழித்தாலும், என் பகைவர்களைப் புகழ்ந்தாலும் உங்களுக்குப் பரிசு கிட்டாது என்பது உங்கள் எண்ணமா? அவ்வாறு எண்ண வேண்டா. உண்மையை நான் மிக வரவேற்பேன்; மறைக்காமல் பாடுங்கள் என்றான். புலவர்கள் பலரும் அமைதி கொண்டனர், ஆங்கிருந்த குமரனார் வீறுடன் எழுந்தார், வீரச் செம்மலே, தாங்கள் கூறியவாறு உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். தங்களிடம் இன்னாததும் உண்டு; தங்கள் பகைவரிடம் இனியதும் உண்டு; கேளுங்கள்: தாங்கள் அச்சம் என்னும் ஒரு பொருளை அறியாமல் அமர்க்களம் போகிறீர்கள்; ஆங்கும் பகைவர் படைகளுக்கு நேர் முன்னர்ச் சென்று நிற்கிறீர்கள்; வாள் வேல், வில் விளையாடும் வெங்கொடுமைக் களத்திலே புகுந்து வீறுடன் போரிடும் தங்களை அவை வெட்டவும், குத்தவும், துளைக்கவும் செய்கின்றன; அதனால் உடலெங்கும் ஒரே வடுவாகக் காட்சியளிக்கின்றது; ஆதலால் தங்கள் ஆண்மையைப் பிறர் சொல்ல இனிமையாகக் கேட்டவர்கள் நேரில் வந்து தங்கள் உடலைக் காணுங்கால் அது இன்னாததாகத் தோன்றுகின்றது. தங்கள் பகைவர்களோ களத்தில் புறமுதுகிட்டு ஓடி ஒளிவதால் கேள்விக்கு இனிமை இல்லாதவராகத் தோன்று கின்றனர். ஆனால் நேரில் காணும்போது சிறிய வடுவும் இல்லாதவர் களாய்ப் பொலிவு மிக்க உடலுடன் கண்ணுக்கு இனியவராகக் காட்சி வழங்குகின்றனர். தாங்களும் ஒருவகையில் இனியர்; அவர்களும் ஒருவகையில் இனியர்; தாங்களும் ஒரு வகையில் இன்னாதவர்; அவர்களும் அவ்வாறே ஒரு வகையில் இன்னாதவர் எனினும் தங்களை மட்டுமே உலகம் பாராட்டுகின்றது. இஃது ஏன்? எனக்கு உண்மை புலப்படவில்லை. பெருமானே, தாங்கள் அறியக்கூடுமாயின் அறிந்து கூறுக என்றார். திருக்கிள்ளி நுண்ணிய அறிவினன்; புலவர் வஞ்சமாக உரைத்ததிலே உள்ள புகழ்ச்சியை அறிந்தான்; புலவர்களும் வியந்தனர்; குமரனாரின் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் அவையை மகிழ்வித்தன. புலமைச் சீர்மை பெரிது; புகழ்ச்சியால் பழிப்பு உண்டாகவும் செய்யலாம். பழிப்பால் புகழ் உண்டாகவும் பாடலாம் பாடுவோர் திறமையைப் பொறுத்தது. அத்திறத்தில் வல்லவர் மதுரைக் குமரனார் என்பதில் ஐயம் இல்லை. 1. சூயசு - பனாமா - திட்டங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தொகுத்து எழுதுக. மாந்தர் இனத்தின் அயரா முயற்சியால் அமைந்த பெருந் திட்டங்க்ள் பல. அவற்றுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன.இவ்வரும்பெருந் திட்டங் களுக்கும், தொல்பழம் பெருநிலமாம் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். உலக ஒருமைப்பாடு என்பது தமிழர்க்குப் புதுப்பொருள் அன்று. மிகு பழம் பொருளாம். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பழந்தமிழ்ப் பண். உலகம் ஒன்று ஆதலால் அதன் தலைவனான இறைவனும் ஒருவனே என்பது அவர்கள் தெளிவு. காலத்தையும் இடத்தையும் கடந்து தமிழர் கண்ட கனவை, அக்காலத்தையும் இடத்தையும் வென்றே உலகம் காண முடியும். அவ்வாறே கண்டது. விசை ஊர்திகள், நீராவிக் கப்பல்கள், வான்கலங்கள், தொலைபேசி, தொலை அச்சு, கம்பி இல்லாத்தந்தி, தொலைக்காட்சி, சேண்கதிரி முதலாய அறிவியற் புதுமைகள் உலகத்தைச் சுருக்கி நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. இவற்றைப் போலவே சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்களும் உலகத்தைச் சுருக்க உதவியுள்ளன. ஆகவே, உலக நெருக்கம் கருதிய தமிழகக் கனவு, இக்கடற்கால் இணைப்புக்களால் நனவாகியுள்ளதென்பது உண்மையாகும். எகிப்து நாட்டின் கண்ணோட்டம் கீழ்த் திசையில் இருந்தது. கீழ்த்திசை நாடுகளுடன் தொடர்புகொள்ள எகிப்தியர் விரும்பினர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே எகிப்தியர் பண்ட் என்ற கீழ்த்திசை நாட்டுடன் கலை, வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமான ஓபீர் என்ற இடத்தில் இருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அத் தொடர்புடைய நாடே தம் பழந் தாயகம் என்றுகூட எண்ணினர். ஆதலால் எகிப்தியர் கண்ணோட்டம் கீழ்த்திசை நோக்கி இருந்தது இயல் பேயாம். இப் பண்ட் நாடும், ஓபீர் துறையும் எங்கே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அரேபியாவிலும், ஆப்பிரிக்கா விலும் தேடினர். ஆனால் அங்குக் காணவில்லை. பாண்டி நாடே அப் பண்ட் என்றும், அந்நாட்டில் இருந்த உவரி என்னும் துறைமுகமே ஓபீர் என்றும் கால்டுவெல் பெருமகனார் தெளிவு செய்தார். ஆம்! சிந்து வெளி நாள்முதல் தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம், தங்கம் முதலிய பொருள்கள் தமிழகத்தில் இருந்து உலகெங்கும் போயின. பொருள்கள் மட்டுமோ போயின? தமிழ்ப் பெயர்களும் அத் தமிழ்நாட்டுப் பொருள்களுடன் போயின. இந்நாளிலும் உலகெங்கும் அத்தமிழ்ப் பெயர்களே பல வகையாக மருவி வழங்குவது அதற்குத் தக்க சான்றாகும். இத்தகைய வளமிக்க தமிழகத்துடன் வாணிகம் செய்யும் ஆவலில் இருந்தே எகிப்தியரின் சூயசுக் கடற்கால் கனவு உருவாயிற்றாம். மற்றொரு வகையாலும் தமிழகம் சூயசுக் கடற்கால் தோன்றத் துணையாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு வர நன்னம்பிக்கை வழி ஒன்றே இருந்தது. இவ்வழியையும் பிரிட்டீசாரே பயன்படுத்த முடிந்தது. ஆகவே புது வழி ஒன்று காண்பதற்காக மேலை நாட்டார் பெரிதும் முயன்றனர். அம்முயற்சியின் விளைவே சூயசுக் கடற்காலாக உருவாயிற்று. தமிழக வாணிகத் தொடர்புபற்றிய ஆவலே சூயசுத் திட்டத்தை உருவாக்கியது போலவே பனாமாத் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலை உலகம் முயன்ற பொழுதில் உலகம் உருண்டை என்னும் எண்ணம் அரும்பியிருந்தது. ஆதலால் மேற்கே சென்றால் இந்தியாவின் கிழக்குக் கரையை அடையலாம் என்னும் துணிவுடன் கொலம்பசு என்னும் கடலோடி முயன்றார். அவர் இந்தியாவைக் காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவைக் கண்டார். அவரே இந்தியாவுக்கு மேல்திசை வழிகாண முயன்று ஆத்திரேலியாவைக் கண்டார். தென்கிழக்கு ஆசியாவைக் கண்டு அதனையே இந்தியா எனத் தவறாகக் கருதிக் கொண்டார். செவ்விந்தியர். மேற்கிந்தியத் தீவுகள், கிழக்கிந்தியத் தீவுகள் என்பன இவற்றை விளக்கிக் காட்டும் சின்னங்களாம். பனாமாக் கடல் இணைப்புக்கும், அதன் வரலாற்றுக்கும் தாயகமாக இருப்பது அமெரிக்கா. அவ்வமெரிக்காக் கண்டமே தமிழகத்துடன் வாணிகம் செய்ய எழுந்த ஆவலின் பரிசேயாம். ஆதலால், தமிழகக் கனவால் எழுந்த அமெரிக்க நாட்டிலே அத்தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பையும் உருவாக்கிற்று என்பது நினைவுகூரத் தக்கதாம். சூயசு, பனாமாத் திட்டங்கள் உலக வரலாற்றைத் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இவ்விரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழ் ஒளியும் பரவிக் கிடக்கின்றமை நமக்குப் பெருமையளிக்கின்றன. நன்றே நினைமின் நமரங்காள் என்பது நம் முன்னோர் ஒருவர் வாக்கு! 2. ஓருலகச் சாதனைகள் என்பது பற்றி எழுதுக. உலகத்தை ஒரே குடும்பமாக்கி வாழ்வதற்கு உயர்ந்த பெரு மக்கள் எண்ணினர். அரும்பெருஞ் செயல் வீரர்கள் முனைந்து செயலாற்றினர். அத்தகு செயற்பெருஞ் சாதனைகளுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாம். உலகம் பலவகைப் பெருங்காப்பியங்களையும் வீரகாவியங் களையும் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆனால் செயல் என்னும் அரங்கத்திலே தீட்டிக் காட்டப்பெற்ற சீரியவண்ண ஓவியப் பெருங்காவியங்களாகச் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்பான வீரகாவியங்கள் உலகில் இல்லை என்றே துணிந்து கூறலாம். சூயசு, பனாமா என்பன இயல்பாகவே கடல் பகுதிகள் அல்ல. மிக ஆணித்தான காலம்வரை நிலப்பகுதிகளாகவே இருந்தன. மாந்தன் நிலத்தைப் பிளந்தும், மலையை உடைத்தும் கடலோடு கடலைக் கலக்கவிட்டு உலகக்கடல் வழியைப் படைத்துள்ளான். உலகப் பேரளவில் சுருக்கியுள்ளான். சூயசுத் திட்டம் பழைய உலகைச் சார்ந்தது. பனாமாத் திட்டம் புதிய உலகைச் சார்ந்தது. சூயசுத் திட்டத்தில் நாலாயிர ஆண்டு உலக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. பனாமாத் திட்டத்தில் கடந்த நானூறு ஆண்டு நாகரிக உலக வரலாற்றின் தடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் உலக வரலாற்றின் நிலைக்களங்களாக அமைந்துள்ளன. ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் இருந்து நடுக்கடல், செங்கடல் இவற்றால் தனிப்பெரு நிலமாகப் பிரிக்கப் பெற்றிருப்பது ஆப்பிரிக்கா. ஆனால் ஆசியாவில் இருந்து முழுமையும் ஆப்பிரிக்கா பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுக்கமான ஒருநில இடுக்கு அவற்றை இணைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இந்நில இடுக்கே சூயசு நில இணைப்பு. இதனை வெட்டி அகழ்ந்தே கடலிணைப்புத் திட்டத்தை மாந்தர் இனம் நிறைவேற்றியது. இத்திட்டம் 19-ஆம் நூற்றாண்டின் சாதனையாம். அமெரிக்கா தென்வடலாகக் கிடக்கிறது. அதன் இரு பகுதிகள் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா என்பன. ஒரே கண்டம் எனினும் தனித்தனிக் கண்டங்கள் போலப் பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் முற்றிலும் பிரிந்து பட்டுவிடவில்லை. அங்கேயும் நீண்டு ஒடுங்கிய ஒருநில இடுக்கு உள்ளது. அந்நில இணைப்பே பனாமா நிலஇணைப்பு. இதனை அகழ்ந்தே பனாமாக் கடலிணைப்புத் திட்டத்தைப் புத்துலக வீரர்கள் படைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இணையற்ற சாதனை இது. உலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப்பகுதிகள். அவை உயிர்களின் வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள் - பனிப்பாறைகள். பனிப்புயலும், சூறைக்காற்றும் எப்பொழுதும் உண்டு. ஆதலால் வடதென்துருவப் பகுதிகள் போக்கு வரவுக்குத் தக்கவை அல்ல. அவ்வாறே வட, தென் கடல்களும் போக்குவரவுக்குத் தக்கவை அல்ல. ஆகவே உலகமா கடல்கள் ஐந்தனுள் பசிபிப்மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்துமாகடல் ஆகிய மூன்று மாகடல்களிலேயே போக்குவரவு நடத்த முடியும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நிலப்பரப்பு உலகை இருவேறாகப் பிரித்து விடுகின்றது. அதன் வடகோடி வடகலையும், தென்கோடி தென்கடலை ஒட்டியும் கிடக்கின்றன. இந்நிலையில் ஆசியா ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்காவுடன் இணைக்கும் சூயசு நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்புச் செய்தமையால் மேற்கு உலகும் கிழக்கு உலகும் ஓருலகாக வாய்ப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் ஆப்பிரிக்காக் கரை முழுமையும் சுற்றியே மேற்குலகும், கிழக்குலகும் தொடர்பு கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் வடதென் பகுதிகளும் உலகை இரண்டாகப் பிரித்து வடகோடி வடகடலுடனும், தென்கோடி தென்கடலுடனும் பொருந்திக் கிடக்கின்றன. ஆதலால் வடமெரிக்கா தென்னமெரிக் காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்பாக்கியமையால்தான் மேற்கு கிழக்கு உலகங்கள் ஓருலகாக வழி உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் தென்அமெரிக்கக் கரை முழுமையும் சுற்றியே ஆகவேண்டும். சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பலநாட் பயணத்தையும், பெரும் பணச்செலவையும், பெருகிய அல்லல் களையும் குறைத்துவிட்டன. அன்றியும் உலகைப் பிணைத்து, வாணிக வளமும், தொழில் வளமும் பெருகச் செய்துள்ளன. இத்தகைய செயற்கரிய செயல்களே ஓருலகச் சாதனைகள் என்று கூறத்தகும். வாழ்க உலக ஒருமைப்பாடு! 3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக. சூயசுக் கடலிணைப்புத் திட்டத்தின் முன்னோடி நீலாற்றுக் கால்வாய்த் திட்டம் ஆகும். அத்திட்டம் கி.மு. 2500 ஆண்டுக்கு முற்பட்ட திட்டமாகும். அரிட்டாட்டில், டிராபோ, பிளினி என்னும் அறிஞர் பெருமக்களின் புகழ்ச்சிக்கு நிலைக்களமாக இருந்த பேறு நீலாற்றுத் திட்டத்திற்கு உண்டு. நீலாற்றுக் கால்வாய், பரோவாக்களின் கால்வாய் என்றும் வழங்கப்பெற்றது. பண்டை எகிப்திய மன்னர்கள் பரோவாக்கள் எனப்பெற்றனர். அவர்கள் ஆக்கிய கால்வாய் ஆதலால் அப்பெயர் பெற்றது. நீலாற்றுக்கால், நீலாற்றில் இருந்து பிரியும் பெலியூசக் என்னும் ஆற்றின் கிளையான பூபாசிபிசியில் இருந்து புறப்பட்டு துமிலாத்து, கைப்பேரி இவற்றின் வழியாகச் செங்கடலில் முடிவுற்றது. எகிப்தில் உள்ள பாரக் கூம்புகளுக்குத் (பிரமிடு) தமிழகத் தேக்கு மரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இஃது எகிப்து தமிழக வாணிகப் பழமையை உணர்த்தும். இவ்வாணிகம் கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவே தமிழக மேலை உலக வாணிகமாக 19ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்தது. பழந்தமிழக வாணிகம் இருபெரு வழிகளில் நடந்தது. சீனத்தில் இருந்து ஆசிய நடுமேட்டு நிலவழியாக எகிப்து செல்லும் ஒரு வழி. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தமிழகக் கடலைக் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி மற்றொன்று. முன்னை வழி, பருவமாறுதல் கேட்டாலும், கொள்ளைக் கூட்டத்தார் கொடுமையாலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மறைந்து போயிற்று. ஆதலால் தமிழகத்தின் ஊடாகச் சென்ற கடல்வழி ஒன்றே உலகக் கடல் வழியாக அமைந்தது. எகிப்திய மாமன்னர்களாகிய பரோவாக்கள் தமிழக வாணிகத்தில் பங்கு கொள்ளும் ஆவல் கொண்டமையால்தான் நீலாற்றுக் கால் தோண்டினர். தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல்வழியாகத் திறந்த கடல் காலாகவும், மறு பக்கத்தில் ஆற்றுடன் இணைந்த காலாகவும் அமைந்தது. அந்நாளில்தான் பண்ட் என்னும் பெயரால் பாண்டிநாடும், ஓபீர் என்னும் பெயரால் உவரித் துறைமுகமும் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கின. பரோவாக்களின் கால்வாய் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வந்தது. ஆனால் கி.மு. 7ஆம் நூற்றாண் டளவில் பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெக்கோ மன்னன் தன் பாலத்தீனப் பெருவெற்றியில் பிடித்த 1,20,000 போர்க் கைதிகளைக் கால்வாய் வேலையில் ஈடுபடுத்தினான். எனினும், அவன் அமைச்சர்கள் இப்பணியை விரும்பாமையால் திட்டம் கைவிடப்பெற்றது. கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடுவுலக முழுவதும் பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டது. பேரரசர் டேரியசு, கால்வாயைப் புதுப்பிக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டாலும் முற்றுவிக்கப் பெறாமல் நின்றது. பேரரசர் செர்க்கிசு காலத்தில் மீண்டும் கால்வாய் சேலை தொடங்கப்பெற்று நிறை வேறியதுடன், படகுப் போக்குவரவுக்கு ஏற்ற சீரமைப்புக்களும் செய்யப்பெற்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடுவுலக அரசியல், பேரரசர் அலெக்சாண்டர் கைக்குள் சென்றது. இக் கிரேக்க மரபினருள் டாலமி பிலாடெல்பசு என்பவனும் யூர்கெடிசு என்பவனும் கால்வாயை மீண்டும் சீராக்கிச் செங்கடலில் உள்ள ஆர்ச்சனா துறைமுகத்துடன் இணைத்தனர். அவ்விணைப்பை அன்றி நடுநிலக் கடலுடன் இணைக்கவும் அவர்கள் கனவு கண்டனர். ஆனால் அக்கனவு நனவாகாதலே நின்று போனது. செங்கடலின் நீர்மட்டத்திற்கும் நடுநிலக் கடலின் நீர் மட்டத்திற்கும் வேற்றுமை உண்டு; ஆதலால் இணைப்பு ஏற்படுத்தினால் பேரழிவு உண்டாம் என்று அந்நாளைய மக்கள் எண்ணினர். பரப்பியும் வந்தனர். அதனால் பலவிய அச்சமே கடலிணைப்பைத் தடைசெய்ததுடன், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தொழியவும் செய்து விட்டது. குருட்டு நம்பிக்கையின் கேட்டுக்கு வேறு சான்றும் வேண்டுமோ? எகிப்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. உரோமப் பேரரசன் திராசன் நீலாற்றுக் காலை விரிவு செய்தான். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்து அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆராபிய ஆட்சியில் எகிப்துக்குத் தலைவராயிருந்த அம்ரு, கால்வாயை மீண்டும் செப்பனிட்டார். அவர் நடுநிலைக் கடல் வரை கால்வாயைக் கொண்டுசெல்லவும் கருதினார். அவர் முயற்சியும் ஈடேறிற்றில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கலிபா சாபர் அலி இசுலாமியக் கொந்தளிப்பைப் கருதிக் கால்வாயை மூடுமாறு கட்டளை இட்டார். அந்நூற்றாண்டிலேயே இராசித் என்னும் மன்னன் கால்வாயை விரிவு செய்ய முனைந்தான். ஆயினும் அப்பணியும் துருக்கியர் கடற்படை, எகிப்தின் உள் நாட்டுக்குள் வருதற்குத் துணையாகிவிடும் என்னும் அச்சத்தால் நின்றுவிட்டது. கி.பி. 1811இல் கால்வாயை மூடிவிடுமாறு முகமத் அலி என்பார் கட்டளை இட்டார். ஆனால் முழுமையும் மூடப்பெறாமல் சூயசுக் கடற்கால் வேலை தொடங்கும் வரை நீரோடிக் கொண்டும், போக்குவரவுக்குத் துணையாகிக்கொண்டும் நீலாற்றுக் கால் இருந்தது. அந்நீலாற்றுக்காலே சூயசுக் கடலிணைப்பின்போது நன்னீர்க் காலாக அகழப்பெற்றுக் கடற்காலுடன் இரண்டறக் கலந்துவிடும் பேறு பெற்றது. கனவு காண்பது எளிது! அதனை நனவாக்குவது மிக அரிது. நல்ல கனவொன்று நனவாக எத்தனை முட்டுக்கட்டைகள் உண்டாகின்றன என்றும், நல்ல கனவு எவ்வாறு இறுதியில் இணையற்று ஓங்கி நின்று, வெற்றி கொள்ளுகின்றது என்றும் நீலாற்றுக்கால் திட்டம் உலகுக்கு உணர்த்தத் தவறாது. வாழ்க நல்ல கனவுகள்! வாழ்க நற்கனவை நனவாக்குவோர்! 4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையை எழுதுக. எந்தவொரு நினைவு உண்டாதற்கும், செயல் நடைபெறுதற்கும், ஏற்றவொரு தூண்டுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். அவர்கள், தூண்டல் இன்றில் துலங்கல் இல்லை என அறுதியிட்டு உரைப்பர். நாம் இக்கட்டுரையில் சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையைக் காண்போம். இந்தியா முதலிய கீழை நாடுகளின் செழுமையும் வளமும் மேலைநாடுகளை மிகக் கவர்ந்தன. ஆகவே கீழை நாடுகளுடன் வாணிகம் செய்து வளம் திரட்ட மேலைநாடுகள் மிக விரும்பின. அந்நாடுகளுக்கு உரிய போக்குவரவு வழி நன்னம்பிக்கை முனைவழி ஒன்றாகவே இருந்தது. அவ்வழியுங்கூட நாளடையில் பிரிட்டனுக்கு மட்டுமே உரித்தாகப் போய்விட்டது. ஆதலால் புதுவழி காணும் நாட்டம் மேலை நாட்டவருக்கு உண்டாயிற்று. அந்நாட்டத்தால் உருவாகியதே சூயசுக்கடல் இணைப்புத் திட்டமாகும். சூயசும் அதனை உள்ளடக்கிய எகிப்தும் பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியின் மேலாட்சிக்கு உரியனவாய் இருந்தன. துருக்கி மன்னர்க்குச் சூயசுக் கடலிணைப்புக் குறித்து ஒரு தூதுக்குழு எகிப்தில் இருந்து சென்றது. துருக்கிய மன்னர் இசை வளிக்கவில்லை. திட்டம் தொடங்காமலே நின்று போனது. யூட்சு அலி என்பார் துருக்கியின் மன்னராக வந்த காலையில் சூயசுத் திட்டத்திற்கு ஆதரவு நல்கினார். பிரஞ்சு நாட்டு மன்னரும் இதனால் பேருவகை உற்றார். ஆனால் இத்திட்டம் வீண் செலவில் கொண்டு போய் விடும் என்று துருக்கிய நாட்டு அமைச்சர்கள் கருதினார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், கடலோடிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். எனினும் என்ன, அமைச்சர்கள் எண்ணமே நிறைவேறியது. திட்டம் நிறைவேறவில்லை. திட்டத்தை விரும்பிய அனைவரும் தம்பேச்சிலும் எழுத்திலும் நன்றாக வலியுறுத்திக் கொண்டு வந்தனர். நம்பிக்கை முனைவழி ஒன்றே நன்மை பயப்பது என்ற தன் கருத்தை பிரிட்டன் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. சூயசு வழியின் கேடுகள் இவையென எடுத்துக்காட்டித் தடைப்படுத்தியும் வந்தது. பிரான்சு நாட்டினர் சூயசு வழியைக் காண்பதற்கு இறங்கி விடாதவாறும் பிரிட்டன் அக்கறை கொண்டது. ஆனால் கி.பி. 1798-ல் எகிப்தை வெற்றி கொண்ட நெப்போலியன் கடற்கால் இணைப்புக்குரிய திட்டங்கள் தீட்டினான். நில அளவை ஆய்வு செய்தான். இந்தியாவில் திப்பு சுல்தான் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்நிலையில் அவன் முயன்றாலும் கடல் நீர்மட்டம் தொடர்பான பழைய அச்சம் தலைதூக்கி நின்றது. நடுக்கடல் மட்டத்திலும் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவை ஆராய்ச்யிளர் லெப்பேர் முடிவு செய்தார். ஆகவே திட்டம் மீண்டும் கைவிடப்பெற்றது. 19ம் நூற்றாண்டுவரை கீழ்த்திசை அஞ்சல்கள் நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்றுகொண்டிருந்தன. 1835-ல் வாக்கார்ன் என்பார் எகிப்து நாட்டின் வழியாக அஞ்சல் அனுப்பினால் 70 நாட்கள் குறைவாகும் என்று எடுத்துக் காட்டினார். அதன் பயனாகப் புதிய அஞ்சல்வழி உண்டாயிற்று. கடலில் இருந்து மறு கடலுக்கு எகிப்திய நிலவழியில் அஞ்சல் போக்குவரவு இணைப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பே கடற்கால் திட்டத்திற்கு மிகத் துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இந்நிலையில் தூய திரு சைமன் சங்கத்தார் சூயசுத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். 1846-ல் திட்ட வேலையை மேற்கொள்ள அனைத்து நாட்டுக் கழகம் ஒன்று அமைத்தனர். திட்டவேலைக்கென மூவரடங்கிய குழுவொன்றைத் தேர்ந்தெடுத்து வேலையைப் பகுத்துத் தந்து விரைந்து நிறைவேற்றக் கருதினர். பங்குகள் திரட்டினர். அப்பொழுதும் பிரிட்டன் இத்திட் டத்திற்கு ஆதரவு தரவில்லை! கடற்கால் திட்டத்திற்கு எதிர்த் திட்டமாக அலெக்சாண்டிரியா - கெய்ரோ - இருப்புப் பாதைத் திட்டம் ஒன்றை வகுத்து அதனை நிறைவேற்றுவதில் முனைந்து பிரிட்டன் வெற்றி கண்டது. கடற்கால் இணைப்புத் திட்டமோ படுத்துவிட்டது. எனினும் அத்திட்டத்தில் ஒருவகை வளர்ச்சியும் உண்டாகியிருந்தது. சைமன் கழகத்தைச் சார்ந்த அன்பாந்தின் நிறுவிய ஆராய்ச்சிக் கழகம், நீர்மட்ட வேறுபாட்டைத் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது. நீர்மட்ட வேறுபாடு என்பது வெறும் அச்சத்தின் விளைவே அன்றி வேறன்று என்று விளக்கிக் காட்டியது. ஆகவே, திட்ட ஆர்வமுடையவர்களுக்கு இவ்விளக்கம் ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. இத்தகு நிலைமையில் தான், பிரான்சு நாட்டுப் பெருவலியாளர் டிலெசெப்சு கடலிணைப்பு அறிக்கை ஒன்றைத் தற்செயலாகக் காணுகிறார். அத்திட்டத்தை நிறைவேற்றுவதே தம் பணியெனக் கொண்டு முழுமையாக இறங்கி வெற்றியும் காணுகிறார்! நல்ல திட்டங்களுக்கு நாலாயிரம் எதிர்ப்புக்களும், தடை களும் உண்டானால்கூட என்றேனும் ஒருநாள் நிறைவேறியே தீரும் என்பதற்குச் சூயசுக் கடலிணைப்புத் திட்டமே சான்றாம். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருவள்ளுவர் 5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல் தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக. எளிதில் நிறைவேறத்தக்க செயலையே பலரும் எடுத்துக் கொள்வர். ஆனால் சிலரோ, அரிய செயல்களையே தேர்ந்து எடுத்துக் கொள்வர்; வெற்றியும் கண்டு வீறுமிக்க நடைபோடுவர். இத்தகையவரைக் கருதியே கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் எந்தல் இனிது என்றார் வள்ளுவர். சூயசுத் திட்டம் யானைப் போரினும் உயரியது அல்லவா! பெர்டிணாண்டு டிலெசெப்சு என்பவர் பிரான்சு நாட்டினர்; பெருஞ் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் தந்தையார் அரசியல் செல்வாக்கு மிக்கவர். முகமதலி எகிப்து மன்னர் பதவிக்கு வர அவரே காரணமானவர் என்றால் அவர் தம் அரசியல் செல்வாக்கை உரைக்கவேண்டியரில்லை! பெர்டிணாண்டு இச் செல்வாக்கால் இளமையிலேயே எகிப்து மன்னர் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தது. அவ்வாய்ப்பே சூயசுத் திட்டம் நிறைவேறத்தக்க சூழலை உருவாக்கியது எனலாம். டிலெசெப்சு தூதராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்தார். நேர்மையையும் உழைப்பையும் - பொன்னேபோல் போற்றி வாழ்ந்த அவர்க்கு எதிராகப் பொறாமைக்காரர்கள் பலர் கிளம்பினர். பொய்க்குற்றம் பல சாட்டினர்! முடிவில் தம் பதவியைத் துறந்தார். அத்துறவும் உலக நலனுக்கென்றே அமைந்தது போலும்! டிலெசெப்சு பதவியில் இருந்தபொழுது ஒரு கடற் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்; அப்பயணத்தில், பொழுது போக்குக்காகப் பார்த்துக் கொண்டிருந்த நூலில் சூயசுக் கடல் இணைப்புத் திட்ட அறிக்கை ஒன்று காணப்பெற்றது. அஃது அவரை மிகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியே அவரைச் சூயசுத் திட்டத்தை முயன்று முடிக்குமாறு ஏவியது. டிலெசெப்சின் நண்பர் இராட்டர் டாம் என்பவர். எகிப்தில் டச்சுத் தூதரகத் தலைவராக அவர் இருந்தார். அவருக்கு ஒரு முடங்கல் தீட்டி அவர் வழியாக எகிப்திய மன்னர் அப்பாசிடம் தம் திட்டத்தை எடுத்துரைக்க வேண்டினார். அதற்கு வாய்ப்பான பதில் கிட்டவில்லை. அரசர் அப்பாசை அடுத்து வந்த மன்னர் டிலெசெப்சின் இளமைக் கால நண்பர். எனவே உரிமை பாராட்டி உண்மை நிலைமையை அவருக்கு விளக்கி எழுதினார். அவரும் அரசியல் முறையில் அல்லாமல் அன்பு முறையிலே அழைப்பு விடுத்துக் கலந்து பேசினார். திட்டத்தையும் உவகையுடன் ஏற்றுக் கொண்டார். கி.பி. 1856-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் டிலெசெப்சின் ஆவலும், எகிப்து மன்னர் இசைவும் உறுதிப்பத்திர உருவங் கொண்டன. அவ்வுறுதிப் பத்திரத் திட்டங்களே இறுதிவரை எழுத்து எழுத்தாகப் பின்பற்றப்பட்டது என்றோ, சிறிய பெரிய மாற்றங்கள் எவையும் செய்யப்பெறவில்லை என்றோ உறுதி கூறுதற்கு இல்லை. நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்ட திட்டம் நிறைவேற்றப் பெற்றது. எனினும் 1856-ஆம் ஆண்டு உறுதிப் பத்திரமே திட்டத்தின் அடிப்படையாக இருந்தது என்று துணிந்து கூறலாம். சூயசுக் கடற்கால் இணைப்பு பெர்டினாண்டு டிலெசெப்சுக்கும், அவர் தலைமையில் அமையும் ஒரு கூட்டுக் கழகத்திற்கும் உரிமையாக இருந்தது. கூட்டுக்கழகம், சூயசுக் கடற்கால் முழு உலகக் கழகம் என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், தரப்பெறும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளில் இருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அவ்வாண்டு நிறையும் போது, உரிமை வழங்கியவரிடமே உரிமை மீண்டும் வந்து சேரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வுரிமையை வழங்கிய தற்காக எகிப்திய அரசுக்கு இத்திட்டத்தால் பெறும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரியாகத் தர வேண்டும்; அதேபோல் எகிப்திய அரசினர் கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்புச் செய்து உதவுதல் வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்டு உறுதிப்பத்திரம் எழுதினர். ஆயினும் திட்டத்தை உடனடியாகச் செயலில் கொண்டு வர இயலவில்லை. எகிப்தின் மேலுரிமை துருக்கியினிடம் இருந்தது. ஆதலால் அதன் ஒப்புதலும் வேண்டியிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்குப் பிரிட்டன் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. தனி மனிதர் ஒருவர்க்கு இப்பெரிய உரிமையை வழங்கியது பற்றித் துயர் கொண்டது. பிரிட்டன், தன் மனக்குறையை வன்மையாகத் தெரிவித்தது. போதாதென்று, துருக்கி சுல்தான் இத்திட்டத்திற்கு இசையாது இருக்குமாறு தம் செல்வாக்குடைய தூதர் ரெட்கிளிப் என்பவர் வழியாக முயன்றது. டிலெசெப்சு கடற்கால் திட்டத்திற்கு இசைவு பெற வேண்டித் துருக்கிக்குச் சென்றார். சுல்தான் ஆதரவு அவருக்குக் கிட்ட வில்லை. பிரிட்டீசுத் தூதரைக் கண்டுபேச டிலெசெப்சு விழைந்தும் அவருக்கு வாய்ப்புத் தரப்பெறவில்லை. என் செய்வார் டிலெசெப்சு! நேரிடையாகப் பிரிட்டனுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்சனிடம் வாதாடினார். பிரிட்டன் அரசும், செய்தித்தாள் களும் அவருக்கு எதிரிடையாகவே வரிந்து கட்டிக் கொண்டு நின்றன! டிலெசெப்சு விடாப்பிடியாக முயன்றார்! பிரிட்டனின் நிலை மாறவில்லை. அன்றியும் சூயசுத் திட்டம் துருக்கிக்குக் கேடு பயக்கும் என்று கிளப்பி விட்டுத் தடைபடுத்திக் கொண்டிருந்தது. இந்நிலை எகிப்திய மன்னர் சயீதீன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. வெதும்பி வெகுண்டெழுந்தார் அவர். சூயசுக் கடற்கால் இணைப்பு உள்நாட்டுத் திட்டம். ஆதலால் துருக்கியின் இசைவு வேண்டுவதில்லை; திட்டம் தொடங்கலாம் என்று துணிந்து ஆணையிட்டார்! வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா என்பது போல் திட்டம் உறுதியாகி விட்டது. டிலெசெப்சு மகிழ்ந்தார்; உலகமும் மகிழ்ந்தது! ஓருலக உணர்வும் மலர்ந்தது! வாழ்க அயராமுயற்சி! வெல்க வீரர் டிலேசெப்சு! 6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட நிறைவேற்றம் பற்றி எழுதுக. ஊழையும் உப்பக்கங் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு ஏற்பப் பல்லாற்றானும் தடைப்பட்டு வந்த சூயசுக் கடல் இணைப்புத் திட்டம் உலக நலங் கருதிய பெருமகனார் பெர்டினாண்டு டிலெசெப்சு அவர்களின் அயரா முயற்சியால் நிறைவேறிற்று. சூயசுத் திட்டத்தின் தொடக்கவிழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஐந்தாம் நாள் நடைபெற்றது. பல்லாயிரம் தொழிலாளர் களும், பணியாளர்களும், பொறியில் வல்லார்களும் பேராரவாரங் களுக்கு இடையே தம் பணியைத் தொடங்கினார். முதன்முதலாக டிலெசெப்சு ஒரு கூடை மண்ணைத் தம் கையால் வெட்டி வெளியேற்றினார். அதன்பின், தொடர்ந்து வேலை நடைபெற்றது. எகிப்திய அரசின் முயற்சியால், 60000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் எகிப்தியரே அன்றிப் பிற நாட்டவர்களும் ஈடுபட்டிருந்தனர். புற்றில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புக் கூட்டம்போல் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். உலகச் சாதனையில் தமக்குள்ள பங்கை உணர்ந்து உவகை கூர்ந்தனர். கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ நூறுகல் நீளமுடையது. அவ்வளவு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லுமாறு அகல ஆழம் உடைய கால்வாய் வெட்டுதல் வேண்டும். மண், மணலை அன்றிச் சில இடங்களில் பாறையையும் அகற்ற வேண்டியிருந்தது. குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக நன்னீர்க் கால்வாய் ஒன்றும் தனியாக வெட்டிக் கொண்டு வரவேண்டியிருந்தது. தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் குடியிருப்புகள் அமைத்தல் இன்றியமையாததாயிற்று. இத்துணைப்பணிகளும் இணைந்து நடைபெற்றன. உலகம் இதற்குமுன் கண்டிராத உயரிய திட்டம் இது. ஆதலால் செலவு முதற்கண் திட்டமிட்டுக் கொண்ட அளவினை விஞ்சியது. அன்றியும் அரசியல் பிணக்குகளும், எதிர்ப்புக்களும் திட்ட நிறைவேற்றத்திற்கும், பங்குத்தொகைச் சேர்ப்புக்கும் தடை செய்தன. மனித இயன்முறை கடந்து வன்முறையாகத் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகப் பிரிட்டன் பழி கிளப்பியது. அக்கூற்றைத் துருக்கியும் ஆமாம் என்று வரவேற்றது. இதற்குள் டிலெசெப்சின் நண்பர் சயீத் காலமானார். அவருக்குப் பின்வந்த மன்னர் இசுமாயில் பிரிட்டனின் சார்பாளராக இருந்தார். அதனால் வளர்ந்து வந்த திட்டம் தளர்ந்தது. நன்னீர்க் கால்வாய்ப் பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்வேண்டும் என்று கடலிணைப்புக் கழகத்திற்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை அஃதாயினும், தலைமைப்பொறியாளர்கள் ஏற்று வேலையை நிறுத்தினர் அல்லர். இத்தகு சூழலில் டிலெசெப்சு, பிரான்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை உதவுமாறு வேண்டினார். அவர் நடுவராக இருந்து வழங்கும் முடிவை இரு பகுதியாரும் ஏற்பதாக ஒப்பினர். அறிவார்ந்த மன்னன் நெப்போலியன், திட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற பொறுப்பும் தகுதியும் உடைய தீர்ப்பு வழங்கினார். நன்னீர்க் கால்வாய்ப் பகுதியை மன்னவர் விரும்பிய வண்ணமே அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று நெப்போலியன் தீர்ப்பு வழங்கினார். அதற்கு ஈடாகவும், திடுமென வேலைநிறுத்தம் ஆகிய இழப்புக்காகவும் கடற்கால் கழகத்துக்கு மன்னர் 840 இலட்சம் வெள்ளி தரவேண்டும் என்று கூறினார். இத் தீர்ப்பால் கடற்கால் பணி தொடர்ந்து நடந்ததுடன் பொருள் தட்டுப்பாடும் ஓரளவு குறைந்து, திட்டத்திற்கு உதவியாயிற்று. திட்டவேலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. நான்கு வேறு குழுக்களிடம் வேலை பகுதிகள் ஒப்படைக்கப் பெற்றன. முதற் பிரிவினர் நீற்றுக் கட்டிப் பாளங்கள் உருவாக்கினர். அடுத்த பகுதியினர் கடற்காலில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல்தோண்டும் பொறுப்பேற்றனர். வேறொரு பிரிவினர் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு கற்பாறை பிளக்கும் கடமை ஏற்றனர். இறுதிப் பிரிவினர், எஞ்சிய கடற்கால் பகுதியைத் தோண்டும் பணி ஏற்றனர். இவ்வாறாக தனித் தனியே பொறுப்பு வாய்ந்த குழுக்களின் தலைமையில் திட்டம் நடந்து கொண்டிருந்தது. கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளம் இருந்தது. அதில் 77 கல் தொலைவுக்குக் கடற்காலின் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடிப் பகுதியில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் தோண்டப்பட்டது. கற்பாறையுள்ள இடங்களில் மேற் பரப்பு 196 அடி அளவு கொண்டு தோண்டப்பட்டது. கி.பி. 1865-ஆம் ஆண்டில் கடற்கால் வேலையை மதிப்பிடுமாறு பலநாட்டு வணிகக் கழகப் பிரதிநிதிகளையும் பார்வையாளராக வருமாறு டிலெசெப்சு அழைத்தார். அவ்வழைப்பை ஏற்றுப் பல்வேறு நாடுகளில் இருந்தும் 100 பேர்கள் வந்தனர். நிறை வேறியுள்ள வேலையை நேரில் கண்டு மிகப் பாராட்டினர். வேலை மேலும் விரைந்து நடக்க அவர்கள் பாராட்டு ஊக்கமளித்தது. செங்கடலில் இருந்தும், நடுக்கடலில் இருந்தும் வெட்டிக் கொண்டு வரப்பெற்ற கால்வாய்கள் இரண்டும் ஒன்றை ஒன்று இணையும் நிலையை அடைந்தது. இரண்டு கால்வாய்களையும் இணைக்கும் நிகழ்ச்சி பெருவிழாவாகவே நடைபெற்றது. முதற்கண் மண்தோண்டும் விழாவைத் தொடங்கிய டிலெசெப்சே கடற்கால் களை இணைக்கும் கடைசி மண்ணை வெட்டி எடுக்கும் உயர் பொறுப்பை நிறைவேற்றினார். செயற்கரிய செய்த செம்மல் டிலெசெப்சு வாழ்க என்னும் வாழ்த்துதல் ஒலிக்கிடையே, உலக ஒருமைப் பாட்டுத் திட்டம் முழுமை பெற்றது. எத்தகைய அரிய முயற்சி இது? உலகங்காணாத உயரிய முயற்சி இது! அம்முயற்சியால் உலகம் அடைந்துள்ள நன்மை இவ்வளவா, அவ்வளவா? இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த அனைவரும் உலகோர் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருப்பர் என்பது உண்மை! 7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப் பற்றி எழுதுக. காடு கழனிகளில் விதைத்த உழவன், விளைவு கைவரப் பெறும்போது எத்துணை மகிழ்வு எய்துவான்! வறுமைக்கும் வாழ்வுப் போராட்டத்திற்கும் ஆட்பட்டுக் கற்றுத்தேறிய ஒருவன் உயர்நிலைப்பதவி ஒன்று எய்தப் பெருங்கால் எத்தகு மகிழ்வு எய்துவான்! இத்தகு நிலைகளினும் உயர்ந்த உவகை கொண்டனர் ஓருலகச் சாதனையாம் சூயசுத் திட்டம் நிறைவேறிய போழ்து. ஆகவே சூயசுக் கடற்கால் இணைப்பு நிறைவு விழாவை உலக விழாவாகவே கொண்டாடி உலகோர் உவகை பூத்தனர். கி.பி. 1869-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ஒரு நன்னாள்! பலகோடி மக்களின் பன்னூற்றாண்டுக் கனவுகள் நனவாகிய இணையற்ற பொன்னாள். அந்நாளே சூயசுக் கடற்கால் பெருவிழா நாளாகும். எகிப்து மன்னர் இணையில்லா மகிழ்வால் எல்லா நாடு களுக்கும் அழைப்பு விடுத்தார். அன்பர்கள் அரசியல் தலைவர்கள், வாணிகப் பெருமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் உலக விழாவைக் காணச் சூயசுக் கடற்காலின் இருபக்கங்களிலும் முதல் நாள் மாலைப் பொழுதிலேயே நிரம்பி வழிந்தனர்! உள்நாட்டுப் பொதுமக்கள் ஈட்டத்தைக் கூறவேண்டுமா! இருகரைகளிலும் நூறு கல் நீளத்திற்கும் இடமின்றிச் செறிந்து நின்றனர். போர்க் கப்பல்கள், வாணிகக் கலங்கள், வண்ணப் படகுகள் ஆயன அணிவகுத்து நின்றன. இந்நாட்டைச் சேர்ந்த மிதப்பு இது என்பதைப் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள் பளிச் சிட்டுக் காட்டின. 17-ஆம் நாள் காலை 11 மணிக்கும் குண்டுகள் முழங்கக் கொடிகள் பறக்கக் கப்பல்கள் சயீத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன. ஒரு கப்பலா? இருகப்பலா? அணிவகுப்பில் கலந்து கொண்ட நாடுகள் 11. அவற்றுக்குரிய கப்பல்கள் 67. உலகம் கண்டறிதற்கு அரிய கப்பல் அணிவகுப்பு இது! முன்னும் பின்னும் பிற கப்பல்கள் செல்ல நடுநாயகமாகப் பிரான்சு நாட்டுக் கப்பல் சென்றது. அதன்மேல் ஓங்கி உயர்ந்து ஒளியுடன் திகழ்ந்தது கழுகுக் கொடி. பிரான்சு நாட்டின் பெருமை மிகு அரசியார் யூசினும், எகிப்து மன்னர் இசுமாயிலும் அக்கப்பலில் இருந்து மக்களின் கரைகடந்த ஆரவாரத்தையும் களியாட் டத்தையும் கண்டு கண்டு உவகைக் கடலில் நீந்தினர். தங்கள் களிப்பைக் கையாட்டுதலாலும் வணக்க வாழ்த்துக்களாலும் புலப்படுத்தினர். பிரசிய நாட்டு இளவரசரும், கனோய் நாட்டு இளவரசரும் விழாவில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தினர்! கடற்காலின் இரு கரைகளிலும் வண்ணக் கொடிகள் வனப்புற விளங்கின. இரவுப் பொழுதிலோ வண்ண விளக்குகளின் வரிசை எங்கும் ஒளிக்கடல் ஆக்கிக்கொண்டு இருந்தது. இதற்கு இடையே கப்பல்களின் அணிவகுப்புச் சென்ற காட்சியும் மக்கள் ஆரவாரமும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. இவை காணாவென்று ஆடல் பாடல்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. எகிப்துப் பேரரசர் பெரிய நாடு ஒன்றைத் தமதாக்கி வெற்றி பெருவிழாக் கொண்டாடினால் கூட இணைகூற இயலாத அளவு பெருவிழாவாகத் திகழ்ந்தது கடற்கால் இணைப்புப் பெருவிழா. ஒரே நாளில் முடியும் விழாவா இது? தொடர்ந்து நான்கு நாட்கள் விழா நிகழ்ந்தது. முதல் நாள் பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் 40 கல் தொலைவே கப்பல்கள் நகர்ந்து சென்றன. இடையே ஒரு நாள் இசுமாலியாப் பெருநகரில் விழாவுக்குள் விழாப்போல் ஒரு விழா எடுத்தனர். 19ஆம் நாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி அடுத்த நாள் சூயசுத் துறையை அடைந்து செங்கடலில் சேர்ந்து விழாவை நிறைவு செய்தனர். விழா நிறைவுற்ற மறுநாளில் இருந்தே மேலை உலகில் இருந்து கீழை உலகுக்கும் கீழை உலகில் இருந்து மேலை உலகுக்கும் நேரிடைச் செல்லும் கடல்வழித் தொடர்பு உண்டாயிற்று. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் என்னும் மொழிக்குச் சான்றாக இலங்கிய பெரியார் டிலெசெப்சின் மேல் உலக மக்கள் நோக்கம் திரும்பியது! பிரெஞ்சு அரசியார் கோமான் என்றும் உயர்பட்டம் வழங்கினார். அதுவரைக்கும் முட்டுக்கட்டையாக இருந்த இங்கிலாந்தும் புகழ்ந்து பேசியது. விக்டோரியா மகாராணியார், டிலெசெப்சைத் தம் பளிங்கு மாளிகையில் வரவேற்றுப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நம்முடைய வாழ்த்தும், இனிவரும் உலகோர் வாழ்த்தும் வீரர் டிலெசெப்சிற்கு உரித்தாம். வாழ்க உலகுக்குழைத்த உரவோர்! 8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக. வீட்டைக் கட்டிமுடித்த பின்னரும் வேறு சில வேலைகள் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். வண்ணம் பூசுதல், தோட்டம் அமைத்தல், மின்னிணைப்புச் செய்தல், நிலைப் பேழைகள், தளவாடங்கள் வாங்கி ஏற்ற முறையில் அமைத்தல் - இன்னவாறு பல பணிகள் தொடர்ந்து நிகழும். அதுபோல் சூயசுக் கடற்கால் திட்டம் நிறைவேற்றப் பெற்ற பின்னரும் சில வளர்ச்சிச் செயல்கள் நிறைவேற்றப் பெற்றன. வளர்ச்சிக்கு எல்லை இல்லை அல்லவா! அறிவியல் வளரவளரக் கப்பல்களும், உருவிலும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒருபெரு நகரமே ஊர்ந்து செல்வது போலச் செல்லும் பெரும் கப்பல்களும் உண்டாகி விட்டன. அவற்றைக் கடற்கால் வழிச் செலுத்த வேண்டுமானால் அதன் ஆழ அகலங்களை மிகுதிப்படுத்துதல் வேண்டும். தொடக்கத்தில் 8 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் அகலமுமாக இருந்தது கடற்கால். அது 1885-ஆம் ஆண்டில் 8 1/2 மீட்டர் ஆழம் ஆக்கப்பெற்றது. பின்னர் அதுவும் போதாதென்று 9 மீட்டர் அளவுக்கு அகழப் பெற்றது. அகலம், சயீத் துறைமுகத்தில் இருந்து கைப்பேரி வரைக்கும் 65 மீட்டர் ஆகவும், அதற்குத் தெற்கே 75 மீட்டர் ஆகவும் வேறுசில இடங்களில் 80 மீட்டர் ஆகவும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது. 1913-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெருங் கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லுமாறு ஏறத்தாழ 11 மீட்டர் அளவுக்கு ஆழமாக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குக் கப்பல் செல்லும் போது எதிரேவரும் கப்பலுக்கு இடம் தருதல் வேண்டும். அத்தகைய கடவு இடங்களில் மட்டும் ஒருகல் அளவுக்குக் கடற்கால் அகலம் முன்னர் இருந்தது. கடற்கால் விரிவுப்பணி தொடங்கிய பின்னர் பெரும்பாலான இடங்களில் ஒரு கப்பல் நின்று மறுகப்பல் கடக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. முதற்கண் போரொளி விளக்குடைய கலங்கள் மட்டுமே இரவுப்பொழுதில் கடற்காலில் செல்ல அனுமதிக்கப்பெற்றன. பின்பு, காலின் இருகரைகளிலும் ஒளி விளக்குகள் அமைக்கப் பெற்றன. ஆதலால் எந்தக் கப்பலும் இரவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சூயசுக் கடற்கால் பணி நிறைவேறிய நாளினும் இந்நாளில் அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கியுள்ளது. அதற்கேற்பக் கடற்கால் புதிய வளர்ச்சிகளைப் பெற்றது. சயீத் துறைமுகத்தில் கப்பல் தங்கு துறைகள், ஏற்றி இறக்கும் பொறிகள், பழுது பட்ட பொறிகளைச் செப்பம் செய்வதற்குதிய பட்டறைகள் ஆயன நிரம்பிய துறையாக மாறியது. சிறந்த கலங்கரை விளக்கம் ஒன்று அமைக்கப்பெற்றது. 2070 கெசத்தில் ஒன்றும் 2730 கெசத்தில் ஒன்றுமாக இரண்டு அலை தாங்கிகள் சயீத் துறைமுகத்தில் கட்டப்பெற்றன. கடற்காலை அன்றித் துறைமுகத்திலும் பல விரிவுப் பணிகள் செய்யப்பெற்றன. 850 கெச நீளமுள்ள பெரிய அலைதாங்கி அமைத்தது, சூயசில் நடைபெற்றுள்ள விரிவுப் பணிகளில் தலைமையானதாகும். மேலும். எகிப்திய சுல்தான் 413 அடி நீளமும் 95 அடி அகலமும் கொண்ட ஓர் இரேவு அமைத்துத் தந்தார். பி அண்டு ஓ கூட்டகத்தார் 300 அடி நீளமும் 85 அடி அகலமும் உள்ள ஓர் இரேவு அமைத்தனர். இத்தகைய சீர்திருத்தங்களால் விரிந்த அளவில் கடற்பயண வாய்ப்புக்கு வகை உண்டானதுடன், கட்டணக் குறைவும் நாளா வட்டத்தில் உண்டாகிக் கொண்டே வந்துள்ளது. கப்பல் அளவைப் பாரம் ஒன்றுக்கு முதற்கண் 10 வெள்ளியாகக் கட்டணம் இருந்தது. 1885 இல் பாரத்திற்கு 9 1/2 வெள்ளியாகக் குறைந்தது. 1906இல் 7 1/2 வெள்ளி ஆயது. 1928இல் சரக்கு கப்பல்களுக்குக் கட்டணம் 7 வெள்ளி என்றும் பிற கப்பல்களுக்குக் கட்டணம் 4 1/2 வெள்ளி என்றும் குறைக்கப் பெற்றது. வாய்ப்புகள் பெருக வருவாய் பெருகுகிறது; வருவாய் பெருக வாய்ப்பும் பெருகுகிறது! உலகுக்கு நலமாகிறது. ஒரு திட்ட நிறைவேற்றம் என்பது முற்றும் முடிந்து விட்டது ஆகாது. மேலும் மேலும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பெற்ற வண்ணமே இருக்கவேண்டிய இன்றியமையாமை உண்டா கின்றது. அதற்கு அறிவியல் வளர்ச்சியும், மாந்தர் தேவையும் காரணங்கள் ஆகின்றன. இவற்றைச் சூயசுத் திட்ட வளர்ச்சிகள் உலகுக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. 9. எகிப்தின் புதுவாழ்வு எகிப்து மிகத் தொன்மையான நாடு. உலக நாகரிகத்திற்கு வித்திட்ட நாடு. பல்வேறு இனங்களைத் தன்னகத்துக் கொண்டு இரண்டறக் கலந்த பெருமைமிக்க நாடு. மேலை உலகும் கீழை யுலகும் ஓருலகாவதற்கு நுழைவாயில் ஆக இருக்கும் கீர்த்திமிக்க நாடு. இத்தகு நாடு பன்னாட்டவர்களின் படையெடுப்பிற்கும், கெடுபிடித் தாக்குதல்களுக்கும் இடமாக இருந்து துயருற நேரிட்டது. ஆயினும் மங்காப்புகழ் படைத்த அந்நாட்டின் தொல்பழஞ் சிறப்பை மாற்றிவிட முடியாது என்பதைக் காட்டத்தக்க எழுச்சியை அந்நாடு கொண்டிருந்தது. அதைப் பற்றிக் காண்போம். உலகச் செல்வாக்கும் வளமும் பெறுதற்கு எகிப்தைத் தன்னகப் படுத்துவதொன்றே வழி என்று நெப்போலியன் உணர்ந்தான். அதே நுட்பத்தை இட்லரும், முசோலினியும் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் தாக்குதலுக்கு எகிப்து உள்ளாயிற்று! அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் எகிப்தைப் பிரிட்டன் காத்தது. ஏன்? எகிப்தில் பிரிட்டன் தன் காலை வலிமையாக ஊன்றிக் கொள்வதற்கே! தொடக்க நாள் முதல் சூயசுத் திட்டத்தை உருவாகாமல் தடுத்தும் ஒழித்தும் வருவதே தொண்டாகக் கொண்ட பிரிட்டன், சூயசுத் திட்டம் நிறைவேறியதும் கடற்காலின் மிகுதியான பங்கு களை விலைக்கு வாங்கியும், அதன் செயற் கழகத்தில் இடத்தைப் பிடித்தும் கொண்டது. உலகப்பெரு வளத்தைப்பெற எகிப்தைத் தன் கைக்குள் வைத்திருத்தல் ஒன்றேவழி என்று பிரிட்டன் கண்டமை காரணமாம். எகிப்து நாட்டைப் பற்றிக்கொள்ளுவதற்குப் பிற நாடுகள் கொண்டிருந்த ஆவலும், அடாச் செயலும் எகிப்திய மக்களின் தன்மானத்திற்குச் சோதனையாயிற்று. எவர் ஆண்டால் என்ன என்றிருந்த எகிப்திய மக்கள் கொதித்து எழுந்தனர். தன் தேச உடைமையைப் பிற நாட்டார்க்கு ஊதாரித்தனமாக எகிப்து மன்னர் அளித்துவிட்டார் என்னும் சீற்றம் எகிப்து மக்கட்கு உண்டாகியது! கிளர்ச்சி மூண்டு வலுத்தது. ஐரோப்பியர் உடைமைகள் பாழாயின. 50 பேர்கள் உயிர் இழந்தனர். இதனால் பிரிட்டீசுப்படை எகிப்துக்கு விரைந்தது. இசுமாலியா நகரைத் தன்னகப்படுத்திற்று. பிரிட்டீசார் எகிப்தில் தம் காலை வலுவாக ஊன்றிக் கொண்டனர். சூயசுக் கடற்கால் ஆட்சிப் பொறுப்பைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாயிற்று. இந்நிலையில் செருமனி, துருக்கியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தைத் தன் கைக்கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கியது. இது பிரிட்டனுக்கு அச்சத்தை உண்டாக்கியது. எகிப்தில் துருக்கியின் மேலுரிமை முடிந்துவிட்டது என்று பிரிட்டன் ஒரு பேரிடியை வீசியது. இதைக்கேட்ட துருக்கி கொதித்தெழுந்தது. எழுந்த விரைவிலேயே பிரிட்டனால் தடுத்து நிறுத்தவும் பெற்றது. 1941-42 ஆம் ஆண்டு களில் எகிப்தும் சூயசும் இத்தாலியின் பெருந் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டனே முன்னின்று காத்தது. தாக்கிய நாடுகளே தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமை உண்டாயிற்று! 1914இல் துருக்கியின் மேலுரிமையை ஒழித்த பிரிட்டன் அதற்குக் காப்பாட்சி நல்கியது. ஆனால் தேசிய உணர்ச்சி காப்பாட்சி அளவில் அமையவில்லை. தன்னாட்சியை வேண்டியது. 1922இல் எகிப்தில் காப்பாட்சி முடிந்ததாகப் பிரிட்டன் அறிவித்தது. ஆனால் பெயரளவில் இருந்ததே அன்றிச் செயலில் வரவில்லை. ஆகவே 1924இல் எகிப்திய மன்னர் சாக்லூல் எகிப்தில் இருந்து பிரிட்டனும் படைகளும் நிதி நீதித்துறைகளில் ஆலோசகராக இருக்கும் ஐரோப்பியர்களும் அகல வேண்டும் என்றும், எகிப்திய ஆட்சி, வெளிநாட்டுத் தொடர்பு இவற்றில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும், எகிப்தில் வாழும் சிறுபான்மையினர், அயல் நாட்டினர் இவர்களையும் சூயசையும் காக்கும் பொறுப்பு எகிப்தியருக்கே இருக்க வேண்டும் என்றும், பிரிட்டனின் முதல் வரிடம் வலியுறுத்தினர். இது, பிரிட்டன் விட்டுக் கொடுக்கும் உதவிகளைப்பெற எகிப்து விரும்பவில்லை; அதனை வெளி யேற்றவே விரும்பியது என்பதைக் காட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்களுடையனவே! அன்னியர் புகலென்ன நீதி என்னும் உரிமையுணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. 1952-இல் குடியரசுப் புரட்சி நடைபெற்றது. பிரிட்டனின் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுபாடு உண்டானால் உதவிக்கு வரலாம்; ஆனால் அப்பணி முடிந்ததும் அகன்று தீரவேண்டும்; எகிப்துக் கெனப் போர்த் தளவாடங்களும் வானூர்திகளும் வழங்கவேண்டும்; இத்திட்டங்களுக்குப் பிரிட்டன் உதவாவிடில், அதற்கு முன்னைய எந்த ஒப்பந்தமும் நிலைபெறமாட்டா இவ்வாறு எகிப்து வலியுறுத்தியது. புரட்சியின் விளைவாக எகிப்து குடியரசாகியது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர்தம் முதல் நடவடிக்கையே சூயசுக் கடற்காலைத் தேசியமயமாக்கும் திட்டமாக இருந்தது. பிரிட்டன் இதனை விரும்புமா? எகிப்துக்குச் செய்யும் உதவிகளை உடனே நிறுத்தியது. எத்தகைய கட்டுப்பாடும் விதிக்காமல் உருசியா போர்த் தளவாடங்களும், பொருள்வள வாய்ப்பும் செய்தது. எகிப்து அசுவான் அணைக்கட்டுத் திட்டத்திற்கு உலகவங்கியில் 500 கோடி வெள்ளி கடன் கேட்டது. அதற்குப் பிரிட்டனும் அமெரிக்காவும் முட்டுக்கட்டை இட்டன. உடனே எகிப்து தன் பார்வையைச் சூயசுப் பக்கம் திரும்பியது. 1956 சூலை 27-இல் கடற்கால் முழு உலகக் கழகத்தாரிடமிருந்து எகிப்தின் தேசிய உடைமை என்று அறிவித்துவிட்டது. ஆம்! தேசிய உணர்வின் அழுத்தமான முத்திரை இது. சுதந்திரம் எம்பிறப்புரிமை என்னும் ஒலி இந்தியாவில் முகிழ்த்தது. அம்முகிழ்ப்பு அன்னியப்பிடியில் இருந்து இந்தியாவை விடுவித்தது. அத்தகு உரிமை உணர்வே எகிப்தின் தன்மானத்தையும் உரிமை வாழ்வையும் காத்தது. வாழ்க உரிமை உணர்வு! 10. புத்துலகக் கனவு என்பது பற்றித் தொகுத்தெழுதுக. நல்ல கனவுகள் வல்லவர்க்கு வாய்க்குமானால் அது நனவாகி நாடும் உலகும் நலம்பெற உதவும். அவ்வகையால் புத்துலகமாம் அமெரிக்காவில் தோன்றிய பனாமா இணைப்புக் கனவு பரந்த இரண்டு உலகத்தையும் சுருக்கி, ஓருலகாக இணைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அதனைப்பற்றிக் காண்போம். அமெரிக்காவை முதன்முதலாகக் கண்ட கடலோடி கொலம்பசு. ஆனால் முதற்கண் பனாமாப் பகுதியைக் கண்டவர் ரோடரி கோடி என்பவரே. அவர் பனாமாவை 1501ஆம் ஆண்டில் கண்டார். 1502ஆம் ஆண்டில் கொலம்பசு செய்த நான்காம் கடற்பயணத்தின்போதே பனாமாவைக் கண்டார். அவரிடம் மேற்கிந்தியப் பழங்குடி மக்கள் பனாவைக் கடந்து செல்ல ஒரு கடற்கால் இருப்பதாகக் கூறினர். ஆயினும் அக்கடற்காலை கொலம்பசு கண்டார் அல்லர். அவருக்குப் பின் நூனெசு டி பல்போவா என்பவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் முயன்று பார்த்துக் கடற்கால் எதுவும் இல்லை; நிலக்காலே உண்டு என்று தெளிந்தார். அவரே பசிபிக் கடலைக் கண்டு பனாமாத் திட்டத்தையும் கனவு கண்டார். ஆதலால் பசிபிக் மாகடலில் பல்போவா என்னும் ஒரு துறைமுகம் அவர் பெயரால் பின்னாளில் அமைக்கப் பெற்றது. பனாமாத் திட்டத்திற்கு முதற்கண் செயல்முறை நடவடிக்கை எடுத்துக்கொண்டவர் இசுபானிய நாட்டின் அரசரான 5-ம் சார்லசு என்பவரே. அவர் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு 1534ஆம் ஆண்டிலேயே செயல்முறை ஆய்வு செய்யுமாறு கட்டளை இட்டார். அவர் கருதிய வண்ணம் நில ஆய்வு வெற்றி தரவில்லை. வட்டாரத் தலைவரின் அறிக்கை திட்டத்திற்குக் கேடு செய்யும் நிலையில் இருந்தது. வீரன் கென்னாண்டோ பின்னர் இத்திட்ட ஆய்வில் முனைந்தார். நான்கு பாதைகளில் ஆய்வு நடாத்தினார். இவ்வாறே நான்கு நூற்றாண்டுகள் அதாவது 16 முதல் 20-ம் நூற்றாண்டு வரை பலநாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. எழுத்தாற்றல் மிக்க வான்கம்போர்டு, பெஞ்சமின் பிராங்கலின் ஆகியோர் தம் எழுத்து வன்மையால் திட்டம்பற்றி ஆய்வாளர் களைத் தட்டி எழுப்பினர். தூயதிரு சைமன் கழகத்தார் சூயசுத் திட்டத்துடன் பனாமா திட்டத்தையும் இணைத்து விளம்பரப் படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் புத்துலகக் குடியேற்றத்தில் இசுபானிய நாட்டிற்கு இருந்த ஆதிக்கம் தகர்ந்தது. அமெரிக்கா முதலாய மேலை நாடுகள் பனாமா ஆய்வில் தலைப்பட்டன. அமெரிக்க உள் நாட்டமைச்சர் கென்ரிகிளே என்பவரும் காலன் என்பவரும் திட்டவரைவுகள் செய்வதில் முனைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த பாமர்சு என்பவர் கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சாக்சன் ஆய்வு நடத்தினார். கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்யவும் முயன்றார். ஆனால் இவையெல்லாம் அரைகுறை முயற்சிகளாகவே நின்றன. 1849-ஆம் ஆண்டில் காலிபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசின் மேல் கடல் பகுதியான அக்காலிபோர்னியாவில் இருந்து கீழ்கரைப் பகுதிக்குத் தங்கத்தைக் கொண்டு செல்லவும், பிறதொடர்புகள் கொள்ளவும் வேண்டிய தாயிற்று. ஆதலால் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் முனைப்பில் பனாமா இருப்புப் பாதை வழி உருவாயிற்று. இந்நிலவழி பனாமாக்கடல்வழி உண்டாகப் பெருந் தூண்டுதலாக இருந்தது. 1879-ஆம் ஆண்டு லூசியன் வைசு என்பவர் கொலம்பியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கடற்கால் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பன்னாட்டுப் பேரவை ஒன்றுகூடி இத்திட்டம் பற்றி ஆய்ந்தது. வைசு பெற்றிரந்த உரிமையை வாங்க முடிவு செய்தது. முழு உலகக் கழகம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பைச் சூயசுத் திட்ட முதல்வர் டிலெசெப்சே கொள்ள முடிவாகியது. வேலையும் தொடக்கம் ஆகியது. இவ்வாறாகப் புத்துலகம் கண்ட கனவு தன் அடியெடுப்பைத் தொடங்கி வைத்தது. தன் குடும்பம் தன் சுற்றம் தன் ஊர் எனத் திட்டம் தீட்டி வளர்ப்பவர் பலர். ஆனால் உலகநலம் கருதித் திட்டம் தீட்டுவோர் அறியர். அத்தகைய அரிய பெரிய சால்பாளர்களால் தான் உலகம் நல்வாழ்வு வாழ்கிறது. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது உலகப் புலவர் வள்ளுவனார் வாக்கு! 11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக. புதிய உலகத்தையும் பழைய உலகத்தையும் ஓருலகாக்கிக் காட்டும் உயர்ந்த உணர்வால் உருவாகியது பனாமாத் திட்டம். அத்திட்டத்தின் மலர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம். சூயசுக் கடற்கால் திட்ட வீரர் டிலெசெப்சு பனாமாத் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணியாற் றினார். ஆனால் சூயசுத் திட்டத்தைப்போல் வெற்றியாக அவரால் நடத்த முடியவில்லை. அவர் பொறுப்பேற்றிருந்த பிரெஞ்சுக் கழகமே 1889இல் கலைக்கப் பெற்றுப் புதியதோர் பிரெஞ்சுக் கூட்டுக் கழகத்தின் பொறுப்பில் திட்டம் விடப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசும், பனாமாக் குடியரசும் பெரும்பங்கு கொண்டு திட்ட நிறைவேற்றத்திற்கெனப் பாடுபட்டன. 1899இல் அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் மக்கின்லி கொலம்பியக் குடியரசின் ஒப்பந்தத்துடன் கடற்கால் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். அதன்பின் அமெரிக்கக் கூட்டரசே பிரெஞ்சுக் கழகத்தினிடமிருந்து கொலம்பிய ஒப்பந்தப்படி பனாமாத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றுக் கொண்டது. அமெரிக்க அரசுக்குத் தரப்பெற்ற உரிமைகள் 100 ஆண்டுகள் செல்லும் என்றும், பின்னர் நூற்றாண்டுதோறும் உரிமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்யப்பெற்றது. கடற்கால் ஆட்சி உரிமை அமெரிக்கக் கூட்டரசுக்கே என்றும், திட்டப் பகுதியின் நில உடமை கொலம்பியக் குடியரசுக்கே என்றும், உரிமை மதிப்பாக முதற்கண் 1 கோடி அமெரிக்க வெள்ளியும், பின்னர் ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் அளிக்கவேண்டும் என்றும், திட்ட வேலைகளை நான்கு ஆண்டு களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. இத்திட்ட ஒப்பந்தம் பெரும்பாலும் கொலம்பியாவுக்கே நன்மை யாக இருந்தும்கூட அது அதனை மறுப்பதிலேயே முனைந்தது. அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் ரூசுவெல்டு சினங்கொண்டார். இந்நிலைமையில் பனாமா தன்னுரிமைக் கிளர்ச்சியில் இறங்கியது. அதற்கு அமெரிக்க அரசு மிகத்துணை புரிந்தது. ஆதலால் பனாமா விரைந்து தன்னுரிமையும் பெற்றது. உடனே அமெரிக்கக் கூட்டரசு பனாமாக் கூட்டரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது. புதிய ஒப்பந்தத்தால் பனாமாக் கடற்கால் பகுதி முழு உரிமையும் அமெரிக்கக் கூட்டரசுக்கே உடமை ஆயிற்று. அதற்கு ஈடாகப் பனாமாவின் விடுதலையை ஏற்பதுடன், முதற்பொருளாக ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் தர இசைந்தது. கடற்கால் அகழ்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மிக நெருங்கிய நில இடுக்கு ஆகும். பசிபிக் மாகடல் முகத்திலுள்ள பல்போவோத் துறைமுகத்தில் இருந்து அட்லாண்டிக் மாகடல் முகத்திலுள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடியும். அக்கால் 50 கல் நீளம் உடையது. வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடரும் கேதன் ஏரியும் இக்கால் பகுதியில் உள்ளன. கேதன் ஏரிக் கோடியில் கேதன் பூட்டுக்கால் என்னும் அமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கப்பல்களை இறக்கி ஏற்றும் நீரேணியாக இது பயன்படுகிறது. இப்பகுதியைக் கடந்து 7 கல் தொலைவுக்குக் கடல் மட்டத்திலேயே கால் சென்று அட்லாண்டிக் மாகடல் முகப்பில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடிகிறது. கேதன் ஏரி கடந்த பகுதி மிராப்ளோர்சு ஏரி என்னும் நீர்த்தேக்கத்தின் ஊடே கடற்கால் செல்கிறது. இதன் நீளம் 3 கல். இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. எனினும், கடல்மட்டத்தைவிட 54 அடி உயர்ந்தது. கேதன் ஏரிக்கும் மிராப்ளோர்சுக்கும் இடையே உள்ள பெட்ரோ மிகுபெல் என்னும் பூட்டு, ஒரு படி நீரேணியாக இருந்து கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி மட்டத்திற்குக் கொணர்கிறது. இதன்பின் மிராப்ளோர்சு பூட்டுக்கள் என்னும் இரண்டு படிகள் உள்ள நீரேணி அமைப்பு, கப்பல்களை 54 அடி கீழே இறக்கிக் கடல் மட்டத்தில் விடுகிறது. இதன்பின் கடற்கால் 7 கல் தொலைவு சென்று பல்போவோத் துறையில் சேருகிறது. ஊடுநெடுந் தொடர்மலையைப் பிளந்தே கடற்கால் அமைப்புச் செய்தனர். அப்பணியைத் திறமாகச் செய்தவர் கால்லியர்டு. ஆகவே இவர் பெயரால் கால்லியர்டு பிளவு என அது பெயர் பெற்றது. அப்பிளவுக்கு அப்பால் சாக்ரிசு என்னும் ஆறு கடற்காலில் சேர்கிறது. அப்பால் கேதன் அணை உள்ளது. ஆங்குள்ள நீர்ப்பெருக்கால் குன்றுகள் தீவுகளாக மாறின. அத்தீவு களில் பெரியது பாரோ கொலராடோ என்பது. கேதன் அணை அன்றி மாடன்அணை என்பது ஒன்றும் உண்டு. அது கடற்கால் பணிநிறைவேறிப் பதினாறு ஆண்டுகள் கழிந்தபின் அமைக்கப்பெற்றது. இவ்வமைப்பால் கப்பல் போக்கு வரத்து மட்டும் அன்றி, நீர்ப்பெருக்கமும், அதனால் நிலவளப் பெருக்கமும் ஊற்றெடுக்கத் தொடங்கின. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ? என்று தாயுமானவர் வினாவினார். வல்லவர் வகுத்த வாய்க்கால் பொற்சுரங்கமாகப் பொலிவதை இன்று காண்கிறோம். வினையே ஆடவர்க்கு உயிர் 12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட வளர்ச்சிப் பணிகளை விவரிக்க. அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது. மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவி அதனையும் தன் காலடிக்கீழ்க் கொண்டுவரும் அளவில் வளர்கின்றது. இந்நிலைமையில் எந்தத் திட்டமும் முதற்கண் ஏற்பட்ட அளவிலேயே அமையும் என்பதற்கு இல்லை. அவ்வகையில் பனாமாத் திட்ட நிறைவின் பின் உண்டாய வளர்ச்சிகளைக் காண்போம். பனாமாப் பூட்டுக் கால்களும் அவற்றில் அமைக்கப்பெற்ற பொறிகளும், படகுகளும், சிறு கப்பல்களும் போய்விடும் அளவுக்கே பயன்பட்டன. ஆனால், மிகப்பெரிய நீராவிக் கப்பல்களும், போர்க்கப்பல்களும் போய்வரவேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. அத்தேவைக்கு ஏற்றபடி கடற்காலை கேழவும், அகலமாக்கவும் வேண்டியதாயிற்று. அதற்காக நாள்தோறும் பணிகள் தவறாமல் நடைபெற்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. செயலாட்சி, அமைப்பாட்சி, நிலஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி என்னும் பல்வகை ஆட்சிக் குழுக்கள் தனித்தனி - ஆனால் - வளர்ச்சியில் ஒன்றுபட்டு அயராது உழைத்த வண்ணம் இருக்கின்றன. கொள்ளை நோய்க் கொடுமையைப் பனாமாவில் இருந்து மட்டுமென்ன பாருலகம் எங்கும் கூடத் தலைகாட்டாவண்ணம் செய்யத்தனி முயற்சி கொண்டுள்ளனர். பசிபிக் கடலில் உள்ள பல்போவாத் துறைமுகத்திலும், அட்லாண்டிக் கடலில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்திலும் பெரும் பெரும் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் செய்யப்பெற்றன. கப்பல் பணிப் பட்டறைகளும் கப்பல் கட்டுமான நிலையங்களும் அமைக்கப் பெற்றன. பணி செய்வோர் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியன திட்டமிட்டுக் கட்டப்பெற்றன. கடற்காலின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குக் கப்பல் எட்டுமணி நேரத்தில் சென்றுவிடுகின்றது. ஆனால் அக்கப்பல் வருதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே அதனை வரவேற்றகத்தக்க முன்னேற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. கடற்காலின் செயற் சீர்மையை விளக்கும் சீரிய சான்று இது. கடல்கால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அடிக்கடி நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் திட்ட நிறை வேற்றத்தின் பின் 1916ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சறுக்கல் உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பேரிழப்பு உண்டாக்கிற்று. கடற்காலில் சரிந்த மண்ணை வெட்டியெடுத்து வெளியேற்றுதற்குப் பெருமுயற்சி வேண்டியிருந்தது. ஆயினும் அயரா முயற்சியால் திட்டமிட்ட கால எல்லைக்கு முன்னரே பணியை நிறைவேற்றி யதுடன் சிறப்பாகவும் செய்து முடித்தனர். எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர், திண்ணியர் ஆகப் பெறின் என்பது வள்ளுவர் வாய்மொழி அல்லவா! ஒரு கப்பல் கேதன் ஏரியில் இருந்து கடலுக்குச் செல்லும் போது 520 இலட்சம் காலன் நீர் ஏரியில் இருந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஓர் ஆண்டுக்கு 4850 கோடி குழியடி நீர் கடலுக்குச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஏரிப்பரப்பின் நீர், வெப்பத்தால் ஆவியாதலாலும் வற்றுகின்றது. இவற்றை ஈடு செய்தற்கென்று கட்டப்பெற்றதே மாடன் அணைக்கட்டு என்பதாகும். அந்நீர்ப் பெருக்கம் கடற்கால் பூட்டுக்கு மட்டுமன்றி, மின்சாரம் எடுப்பதற்கும் குடிநீர் வாய்ப்புக்கும் உதவியாயிற்று. 1929ஆம் ஆண்டில் கடற்காலில் சென்ற கப்பல்கள் 6289 ஆகவும் அவற்றால் கிட்டிய வருவாய் 2,71,11,000 வெள்ளியாகவும் இருந்தது. 1952 முதல் கப்பல் எண்ணிக்கையிலும், வருவாயிலும் மிகப்பெருகியது. 1956ஆம் ஆண்டுக்குள் 25,00,000 கப்பல்கள் இக்கடற்கால் வழி சென்று உலகத் தொண்டு செய்துள்ளன. பனாமாக் கடற்கால் அமெரிக்காவின் தெற்கு வடக்குப் பகுதிகட்கு இடையே உள்ளது. எனினும் உலகின் உயிர்வழி யாகும் உயர்வு பெற்றுள்ளது. அதனால் காலமும், இடமும், அல்லலும் மிகமிகக் குறைந்துள்ளன என்பதும், வளமும், வாய்ப்பும், நலமும் மிக மிகப் பெருகியுள்ளன என்பதும் மிகப் பேருண் மையாம்! வாழ்க வளர்ச்சித் திட்டங்கள்! முற்றிற்று. இரு கடற்கால்கள் 1. இளமையும் கல்வியும் முன்னுரை: - ஓர் இடம் உயர்ந்த கட்டங்களாலோ ஓடும் ஆறுகளாலோ, நிமிர்ந்து நிற்கும் மலைகளாலோ, விரிந்து கிடக்கும் கடல்களாலோ மட்டும் பெருமை அடைந்து விடுவதில்லை. ஆங்குப் பிறந்த பெருமக்களாலேயே அழியாப் புகழ் அடை கின்றது; அவ்வகையில் இந்திய நாட்டுக்கு இணையில்லாப் புகழ் தேடித்தந்தவர்களுள் கவிஞர் தாகூரும் ஒருவர் ஆவர். கற்பனைவித்து:- கல்கத்தாவில் சீரோடு திகழ்ந்த தாகூர் குடியில் 1861 ஆம் ஆண்டில் தேவேந்திரநாத தாகூருக்குப் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார் இரவீந்திரர். எளிய வாழ்வை விரும்பிய தேவேந்திரர் இரவீந்திரரையும் அவ்வாறே வளர்த்தார். ஆதலால் எளிய விளையாடுப் பொருள்கைளத் தாமே படைத்துக் கொண்டு வீட்டு முற்றத்திலும் தோட்டத்திலும் விளையாடிப் பொழுது போக்கினார். இவ்வெளிமையும், விளை யாட்டுப் படைப்பும் இரவீந்திரர் கற்பனைக்கு வித்திட்டன. கற்பனைக்கு விருந்து:- சிறுவர் இரவீந்திரரை அண்ணன்மார் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆதலால் வேலைக்காரர்களையோ, அன்னையையோ, அத்தையையோ, கணக்கர்களையோ இரவீந்திரர் நாடிச்செல்ல நேரிட்டது. அப் பொழுதில் அவர்களிடம் சிலச்சில கதைகளைக் கேட்டார்; கதைப் பாட்டுக்களையும் அறிந்தார்; இவை இரவீந்திரரின் கற்பனைக்கு விருந்தாயின. இயற்கைக் கவர்ச்சி:- இரவீந்திரர் தனியே இருக்கம் பொழுது அவர் தம் கற்பனை உலகம் உண்மை உலகமாக மாறியது. பயன்படாமல் அவர்கள் வீட்டில் கிடந்த பல்லக்கில் இரவீந்திரர் ஏறி அமர்வார். அப்பல்லக்கு வானில் பறக்கும்; மலையையும், ஊரையும், ஆற்றையும் கடலையும் தாண்டும் எல்லாம் கற்பனையில் தான்! பச்சைப்புல், பனித்துளி, இளந்தளிர், மென்காற்று, மழை முதலிய இயற்கைப் பொருள்கள் இரவீந்திரரைக் கவர்ந்தது போலவே, மண்ணும் அதிலுள்ள பொருள்களும் கவர்ந்தன. பள்ளிப் படிப்பு:- வீட்டில் அடைபட்டுக் கிடந்த இரவீந்திரர் மற்றைச் சிறுவர்களைப் போலத் தாமும் பள்ளிக்குப்போக ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் சென்றதும், வீட்டைப் பார்க்கிலும் பள்ளிக்கூடமே கொடிய சிறைச்சாலையாக இருப்பதாக உணர்ந்தார்; ஆகவே பள்ளிப் படிப்பை வெறுத்தார். படிப்பில் வெறுப்பு:- இரவீந்திரரின் அண்ணன் மார்களுள் ஏமேந்திரர் என்பவர் ஒருவர். அவர் இரவீந்திரர், வீட்டிலேயே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அந்நாளில் வங்காளம், ஆங்கில மோகத்தில் சிக்கிக் கிடந்தது. ஆயினும் இரவீந்திரர் வங்கமொழியிலேயே பாடங்களைக் கற்றார். உடற்பயிற்சி, ஓவியம், ஆங்கிலம் ஆகியவனவும் அவர் படிப்பில் இடம் பெற்றன. பள்ளிப் பாடத்தைப் போலவே, வீட்டுப் பாடமும் இரவீந்தருக்குச் சுமையா யிற்று. ஆசிரியர்க்கு நோய் உண்டாகி வராமல் இருக்கமாட்டாரோ என்றும் தமக்கு நோய் வந்துவிடக்கூடாதா என்றும் ஏங்கினார். ஏட்டுப் படிப்பில் அவருக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. படிப்பும் பாராட்டும்:- பள்ளியில் படிக்கும் போதே பாட்டு எழுதும் திறம் பெற்றிருந்தார் இரவீந்திரர். அருஞ்சொற்களை அமைத்து எழுதுவதும், துன்பத்தைப் பற்றிப் பாடுவதும், சிறப்பு எனக்கருதிப் பாடினார். தம் மைந்தன் திறமை கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தம் மாணவர் திறமையை அறிந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார். நாடக நாட்டம்:- பிற்காலத்தில் உலகப் பெரு மேடையே இரவீந்திரருக்குக் காத்திருந்தது. எனினும் அவரது பிள்ளைப் பருவத்தில் அவர் அண்ணன்மார், வீட்டில் நடித்த நாடகங்களை தொலைவில் நின்றே காண முடிந்தது; நாடக மேடையை நெருங்கவும் அவர்கள் விட்டது இல்லை. இயற்கைக் கல்வி :- இரவீந்திரர் தம் தந்தை யாருடன் ஒருமுறை போல்பூருக்கும், இமயமலைக்கும் தொடர் வண்டியில் சென்றார் தொடர் வண்டிப் பயணம் அவர்க்கு மிகுந்த இன்பம் வழங்கியது. விடுதலைபெற்ற பறவை போல இன்புற்றார். தேவேந்திரர் போல்பூருக்கு அருகே அமைந்திருந்த சாந்தி நிகேதனம் இரவீந்திரரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இமயமலையின் இயற்கைச் சூழல் இரவீந்திரரின் சிறந்த கல்வி மேம்பாட்டுக்கு உதவியது. அங்கே தான் தேவேந்திரர் இரவீந்திரருக்கு ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்பித்தார்; விண்மீன்களையும், கோள்களையும் வானத்தை நேரில் காட்டி விளக்கினார்; நேராகத் தாவர இயலைக் கற்பித்தார்; இவற்றால் இரவீந்திரர் தாமே உற்றறியவும் எண்ணிப் பார்க்கவும் திறம் பெற்றார். கல்லூரிக் கல்வி :- கல்கத்தாவுக்குத் திரும்பிய இரவீந்திரர் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். கல்வி ஓரளவு கவர்ச்சியாக இருந்தது; கற்பித்த ஆசிரியர்களும் நிறைவளித்தனர். எனினும், இமயமலைக் காட்சி தந்த இன்பத்தை அடைய முடியவில்லை. ஆகவே ஏட்டுக் கல்வி அவ்வளவுடன் நின்றது. இயற்கைக் கல்வியோ பெருகத் தொடங்கியது. முடிவுரை :- உலகப் பெரும் புலவர் தாகூர், அவர் இளமைப் பருவத்திலேயே இயற்கையாகக் கற்பனை வித்துக்கள் ஊன்றப் பெற்றன; கதையும்; பாட்டும் நாடகமும் கற்பனை வரைத்துணை செய்தன; இயற்கைக் காட்சிகள் நெறிப்படுத்தின; விளையும் பயிர் முளையிலே என்பது மெய்யாயிற்று! 2. தாகூரின் கலைவளர்ச்சி முன்னுரை:- கலைத்திறம் அரிதில் அமைவது; ஆனால், எளிதில் எவரையும் கவர வல்லது; கலைத்திறம் பெற்றவர்கள் உலகவர் பாராட்டைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வர். அத்தகைய பேறு பெற்றவர் கவிஞர் தாகூர் ஆவர். குடும்பத்தில் கலை:- தாகூரின் குடும்பமே ஒரு கலைக் கழகம் .மூத்j அண்ணன் மெய்ந்நூற் பயிற்சியும் கணக்கறிவும் மிக்கவர்; ஐந்தாம் அண்ணன் சோதி ரீந்திரர் சீர்திருத்தக்காரர், இசை நாடகங்களில் தேர்ந்தவர். இவர்கள் எப்பொழுதும் கலைஞர் களோடும் அறிஞர்களோடும் அளவளாவுவர். அப்பொழுது உடனிருக்கும் வாய்ப்பு. தாகூருக்குக் கிட்டியது. ஆகவே இக் கலைகளில் தாகூர் திறம்பெற வாய்ந்தது. கதைத் திறம்:- வங்கக் கதையாசிரியர்களுள் தலை சிறந்த ஒருவர் பக்கிம்சந்திரர்; அவர் எழுதிய கதைகள் பங்கதர்சன் என்னும் திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அக்கதை களைத் தாகூர் குடும்பத்தினர் விரும்பிப் படித்தனர். இரவீந்திரர் அக்கதைகளை உரக்கப் படித்துக் காட்டி வீட்டார் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆனார். இந்நிலையில் பாரதி என்னும் பெயரில் தாகூர் குடும்பத்தில் இருந்து ஒரு திங்கள் இதழ் வரத் தொடங்கியது. அதில் இரவீந்திரரின் பாடல்களும், கதைகளும் வெளிவரலாயின. சோதிரீந்திரர் எழுதிய நாடகமும் அவ்விதழில் வந்தது அந்நாடகத்தை வீட்டில் நடித்துக் காட்டுவது வழக்கம். அதில் தாகூரும்சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். ஆங்கிலக் கல்வி:- தாகூர் தம் பதினேழாம் அகவையில் இங்கிலாத்துக்குச் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில்சேர்ந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார்; ஒன்றரை ஆண்டுகள் பயின்றும் ஒரு துறையிலும் பட்டம் பெறாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினர், தாகூர் சட்டப் படிப்பில் தேறவேண்டும் என விரும்பினர். அதனால் மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தம் உடன் வந்த அண்ணன் மகனுக்கு நோய் பற்றிக் கொண்ட மையால் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அவ்வளவில் தாகூரின் சட்டக் கல்வி நின்று விட்டது. மாலைப் பாடல்கள்:- இரவீந்திரர் தமக்குக் கிடைத்த பொழுதைக் கலைத்துறையில் செலவிட்டார். புதிய புதிய இசை நயங்களைக் கண்டார். கங்கையின் அழகையும், பெருக்கையும் கண்டு பலப்பல பாக்கள் இயற்றினார். அவை மாலைப் பாடல்கள் என்னும் பெயரால் வெளியாயின. அதற்குப் பின் வங்காள செல்வி என்னும் புகழ் தாகூருக்கு உண்டாயிற்று. வங்கக் கதை ஆசிரியர் பக்கிம்சந்திரர் ஒரு திருமண வீட்டிற்கு வந்தார். அவரை மணவிழா வீட்டினர் மாலையுடன் வரவேற்றனர். அம்மாலையைத் தம் கழுத்தில் ஏற்காமல் வாங்கி அங்கிருந்த தாகூருக்குச் சூட்டி, இவரே இதற்குத்தக்கவர் என்று பாராட்டினார் இவரின் மாலைப் பாடல்கள் என்ற நூலைப் படித்ததில்லையா? என்று வினாவிப் பெருமைப் படுத்தினார். ஊற்றின் எழுச்சி:- ஒரு நாட் காலையில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கதிரவன் தோற்றத்தைக் கண்ணுற்றார் தாகூர். மரங்களுக்கு இடையே கதிரவனின் ஒளிக் கதிர் பரவிவந்த காட்சி அவர் உள்ளத்தே ஒரு பெரு மாறுதலை உண்டாக்கிற்று. இவ்வகக் காட்சியால் உலகமே ஒரு புதிய அழகுடன் விளங்கியது. எல்லாப் பொருள்களும் முழு அழகுடனும், முழு நிறைவுடனும் கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பாகக் காட்சி வழங்கியது. வெறுப்பு மிக்க ஒருவனும் தாகூர் பார்வையில் விருப்புமிக்கவனாகத் தோற்றம் அளித்தான். அன்று தோன்றிய உணர்ச்சியைப் பாவாக்கி ஊற்றின் எழுச்சி என்று தலைப்புச் சூட்டினார். சந்நியாசி:- ஒரு சமயம் மேல் கடலை ஓட்டிய கார்வாருக்குச் சென்றார் தாகூர். கடற் பரப்பும் அதன் காட்சிகளும் அவர்க்கு விருந்தாயின. அங்கிருந்த நாளில் எழுதியவற்றுள் சந்நியாசி என்னும் நாடகம் குறிப்பிடத்தக்கது. துறவி ஒருவன் நெடுங்காலம் காட்டில் வாழ்ந்து உள்ளத்தை மிக உறுதிப்படுத்திக் கொண்டான். இனி உள்ளத்தில் அசைவு உண்டாகாது. என்னம் எண்ணத்துடன் ஊர்க்குள் போனான். அங்கே வசந்தி என்னும் திக்கற்ற குழந்தையைக் கண்டான். அக்குழந்தை நெருங்கித் தொடவும் பழகவும் இடம் தந்தான். அதனால் அவன் உள்ளத்தில் பாசம் உண்டாகின்றது. பாசம் உண்டாகக் கூடாது என எண்ணி துறவி வசந்தியை விடுத்து ஓடினான். வழியில் ஒரு வறிய பெண் தன் தந்தையைக் கூவிக் கொண்டு ஓடுவதைக்கண்ட துறவியின் மனம் மாறுபாடுற்றது. மீண்டுவந்து வசந்தியைத் தேடினான்; பலரையும் வினவினான். வசந்தி இறந்து விட்டாள் என்பதை அறிந்து வருந்தினான். அன்பு நெறியே வாழ்வு நெறி என்பதைச் சந்நியாசி நாடகத்தால் தெளி வாக்கினார் தாகூர். முடிவுரை:- குடும்பச் சூழல் இளமையிலேயே பலவகைக் கலைகளை அறிதர்க்கும் பெறுதற்கம் வாய்ப்பாக இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு இசையிலும், நாடகத்திலும், பாட்டு எழுதுவதிலும், கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். உலகம் பாராட்டும் பேறு பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? 3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் முன்னுரை : பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே எனப் பாடினார் பாரதியார். தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் ஒவ்வொருவருக்கும் இயல்பானது: இன்றியமையாதது இவ்வகையில் பெரும் புலவர் தாகூர் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். தாகூர் உள்ளம்: தாகூர் பேருள்ளம் உடையவர், சமயத்தின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் பெருக்குவதை வெறுத்தார். அது போலவே ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பகையை வளர்க்கும் நாட்டுப் பற்றையும் வெறுத்தார். நாட்டுக்கு நன்மை தேடுவதில் பிறர்க்கு எவ்வகையிலும் குறையாதவராக விளங்கினார். நாட்டுக்கு கொடுமை உண்டாக்கப்படும் போது வன்மையாகக் கண்டித்தார். நாடும் மொழியும்:- தாகூர் நெஞ்சில் உலகம் குடிகொண்டி ருந்தது. உலகவர் அனைவரும் அவர் அன்புக்குரியவர். ஆயினும் அவருடைய எழுத்துக்களில் வங்க நாடு பொலிவாக விளங்கியது. வங்க நாட்டுக் கருப் பொருள் மிக இடம் பெற்றன. வங்க மொழி முன்னேற்றமும் வங்க நாட்டு முன்னேற்றமும் அவர்க்கு உயிர்ப்பு ஆயின. ஆங்கில மோகம்:- வங்கமக்கட்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த ஆங்கில மோகத்தை அகற்ற அரும்பாடு பட்டார் தாகூர். தாய்மொழி வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டும் என வற்புறத்தினார். பொது மேடைகளில் தாய் மொழியே முழங்க வேண்டும் என்று கூறித் தாமே வழிகாட்டினார். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவுகளையும் வங்க மொழியிலேயே நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் தேர்ந்தவரான அவரது செயல் நாட்டு மக்களை விழிப்படையத் தூண்டியது. சிற்றூர் முன்னேற்றம்:- நாட்டின் முன்னேற்றம் சிற்றூர் களிலே அடங்கிக்கிடப்பதை அறிந்தார் தாகூர் சிற்றூர் மக்கள் செல்வர்களையும் ஆட்சியாளர்களையும் நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்பதை அறிந்தார். அந்நிலையைப் போக்குதற்கு முனைந் தார்; கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். சிற்றூர் முன்னேற்றத்தில் கற்றோர் ஈடுபடத் தூண்டினார். சாந்தி நிகேதனம்:- நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் அடங்கிக்கிடப்பதை நன்கு உணர்ந்தவர் தாகூர். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவது போன்ற பயன்மிக்க செயல் வேறு இல்லை என உணர்ந்தார். தம் இளமைப் பருவத்திலே பள்ளியைச் சிறைச்சாலையாகக் கருதிய நிலையை நினைத்துக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பள்ளிச் சூழ்நிலை யையும் பாடத்திட்டத்தையும் அமைக்க விரும்பினார். குழந்தைகள் ஆடிப்பாடி மகிழவும், இசையும் நாடகமும் கற்கவும், அறிவுப் பசி உண்டாகி ஆர்வத்துடன் கற்கவும் வழிவகை காண விரும்பினார். இத்தகைய எண்ணங்களால் 1901 ஆம் ஆண்டு உருவாகியதே சாந்தி நிகேதனம் என்னும் கலைக்கோவில் ஆகும். முடிவுரை:- வாழ்க ஒழிக என்று முழங்குவதிலே நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இருப்பதாகக் கூறிவிட முடியாது, நாடும் மொழியும் நன்மை பெரும் வகையில் எண்ணிப் பார்த்து ஏற்ற தொண்டுகள் செய்வதிலேதான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அடங்கிக் கிடக்கிறது. அத்தகைய அருந்தொண்டு செய்தவருள் தலைமணியாகத் திகழ்பவர் தாகூர். அவரது அயரா உழைப்பால் வையத்தில் வங்க நாட்டுக்கும் வங்க மொழிக்கும் தனிப்பேர் இடம் உண்டாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை. 4. இல் வாழ்க்கை தனி வாழ்க்கையை உலக வாழ்க்கையாக - தன்னல வாழ்வைப் பொதுநல வாழ்வாக - மாற்றியமைக்க அமைந்த போற்றத்தக்க அமைப்பே இல்வாழ்வாம். ஒருவர் தம் இல்வாழ்வில் பெறும் அமைதியே அவர் தம் சீர் சிறப்புக்கு அடிப்படையாம். இவ்வகையில் சீரிய இல்வாழ்க்கை எய்தி உலகுக்கு எடுத்துக் காட்டாக இலங்கி யவர் கவிஞர் தாகூர். இல்லறம்:- அன்பு நெறியே உலகை உய்ப்பது என்னம் உண்மையைத் தாகூர் கண்கூடாக அறிந்து கொண்ட நாளிலே தான் அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவர் மிருணாளினி தேவியார். அவர்அருங்குணச் செல்வி யராகத் திகழ்ந்தவர். ஆதலால் இல்லறம், அன்புக்கும் அமைதிக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தார். இல்லத்தில் கலைப்பணி:- மிருணாளினி தேவியார் கணவர் தம் உள்ளப்பாங்கை நன்கு உணர்ந்தவர். அவர்தம் கலைமேம் பாட்டை நன்கு அறிந்தவர். ஆகவே தம் கடமையில் தவறாமல் கணவர் கலைத் தொண்டுக்குத் துணையாக வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கலைப்பணி செய்வதற்குத் தாகூர்க்கு வாய்ப்பு ஏற்பட்டது தேவியாரலேயே. எளிமை வாழ்வு:- தாகூர் எளிமையும் தூய்மையும் விரும்புவர். எந்த ஒன்றிலும் அழகு காணத் துடிப்பவர். ஆடம்பரத்தை வெறுப் பவர். செல்வக் குடியில்பிறந்து வளர்ந்த மிருணாளினி தேவியார். கணவர் குறிக்கோளுக்கு ஒரு சிறிதும் மாறாது நடந்தார். மூட்டை யாகக் கொண்டு வந்த நகைகளை மூட்டையாகக் கட்டி வைத்து எளிமை பூண்டார். அணிகலம் ஆடை இவற்றில் மட்டும் தானா எளிமை? இணைந்த எளிமை:- தட்டு முட்டுச் சாமான்களிலும் எளிமை போற்றுவதே தாகூர்க்கு இயல்பு. நிறைய உடைகளை எடுத்துக் கொண்டு வெளியூர்க்குச் செல்ல நேர்ந்தால் இரண்டு உடை போதுமே என்பார். சாந்தி நிகேதனத்தில் பிறரைப் போலவே தமக்கும் குடிசை அமைத்துக்கொண்டு வாழவும், எளிய உணவே உண்டு வாழவும் தாகூர் முனைந்தார். இவற்றுக் கெல்லாம் மிருணாளினி தேவியார் இணைந்து செல்லும் மனைவியாக இலங்கினார். ஒத்த இல்லறம்:- மிருணாளினி தேவியாரின் சீரிய பண்புகள் தாகூரைக் கவர்ந்தன. ஆதலால் பற்பல கடமைகளுக்கும் இடையேயும் சமையல் அறையில் வந்து பொழுது போக்குவார். காய்கறி தின்பண்டம் பற்றியும் உறையாடுவார். மனைவியார் நோயுற்ற காலத்தில் வேறு எவரையும் அவர்க்கு விசிற விடாமல் தாமே விசிறி இன்புற்றார். குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளின் மேல் பேரார்வம் உடையவர் தாகூர். அவர்தம் இல்வாழ்வின் பயனாக ஆண்மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவரும் தோன்றினர். அவர்கட்கு வழிகாட்டுவது மட்மல்லாமல் குளிப்பாட்டுதல், உடுத்தி விடுதல், உறங்கச் செய்தல் ஆகிய கடமைகளிலும் முடிந்த பொழுதுகளில் எல்லாம் பங்கு கொண்டார். பேரிடி:- தாகூரின் இல்வாழ்க்கை அன்பிலே தொடங்கி அமைதியிலே வளர்ந்து அறத்திலே முதிர்ந்து இன்பமே பொருளாகத் துலங்கியது. அந்த இனிய இல்லறம் தாகூரின் முப்பத்தொன்பதாம் அகவையுடன் நிறைவாயது. தாகூர்க்குக் கிட்டிய பேரிடிகளில் தலைமையானது மிருணாளினி தேவியாரின் மறைவேயாம். முடிவுரை:- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் திருவள்ளுவர். அதற்கு ஏற்ப அமைந்தது தாகூரின் இல்வாழ்வு. அந்த வாழ்வே வங்கக் கவிஞரை உலகக் கவிஞர் ஆக்கிற்று என்பதில் ஐயமில்லை. 5. தொண்டுகள் தனக்கென வாழும் வாழ்வு, பறவை, விலங்குகட்கும் உண்டு. ஆனால், பிறவுயிர்க்கென வாழும் வாழ்வு அவற்றுக்கு இல்லை. பிறர்க்கென வாழும் வாழ்வு கொள்ளாதவர்கள் மனித வடிவில் இருப்பினும் - கற்றத் தேறியவராய் இருப்பினும் - மனிதர் ஆகார். அவர் மற்றை உயிர்களைப் போன்றவரே ஆவர். தாகூர் உள்ளம் பேருள்ளம்! நாடு, இன, மொழி கடந்த பேருள்ளம். அவ்வுள்ளம் தொண்டிலே தோய்ந்து நின்ற உள்ளமாம். சாந்தி நிகேதனம்- தாகூரின் தலையாய தொண்டு சாந்தி நிகேதனத்தைத் தோற்றுவித்து வளர்த்ததாம். நைவேத்தியம் என்னும் பெயருடன் தாகூர் இயற்றிய நூற் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தந்தையார் அதற்குப் பரிசாகப் பெரும் பொருள் வழங் கினார். அத் தொகையைக் கொண்டு அச்சிட்டு நைவேத்தியத்தை நூலாக்கினார் தாகூர். அதைக் கொண்டு சென்று, ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடந்தந்துதவுமாறு தந்தையாரை வேண்டினார். அதற்கு இசைந்து வேண்டிய வாய்ப்புக்கள் அனைத்தும் செய்து உதவினார். இவ்வகையில் 1901 இல் சாந்தி நிகேதனம் தோன்றியது. கலைவளர்ச்சி: எளிமையயை செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக்கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியை தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். பள்ளி இசை முழக்கத்துடன் ஒவ்வொருநாளும் தொடங்கும். இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப் பெறும். வாய்த்த பொதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப் பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிப்பிலும் பங்கு கொள்வார் தாகூர். கல்விப்பயிற்சி:- இளையவர்கள் இனிய முறையில் கல்விகற்க ஏற்பாடு செய்தார் தாகூர், விளையாட்டின் வழியாகவே கற்க வேண்டியவற்றை விரும்பிக் கற்க வழிவகை கண்டார். அடக்கு முறை இல்லாமல் சிறைச் சாலை என்னும் எண்ணம் தோன்றாமல் விருப்பத்தோடு மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக இருக்கவும். அவர்களுக்குள் வரும் தவறுகளை அவர்களே ஆராய்ந்து தீர்க்க வல்லவர்களாக இருக்கவும் வாய்ப்புக்கள் செய்தார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்குணரப் பயிற்றுவித்தார். இவ்வகையால் நன்மக்களை உருவாக்கி நாட்டுக்குத் தருதலில் சாந்தி நிகேதனம் பெரும் பங்கு கொண்டது. இடர்ப்பாடுகள்:- சாந்தி நிகேதனத்தை அமைத்து வளர்க்கும் பொறுப்பில் தாகூர்க்குப் பொருள் மிகச் செலவாயிற்று. பொருள் முடை ஏற்பட்டது போதாது என்று மனைவியார், மகள், தந்தை யார், மைந்தன், சிறந்த ஆசிரியர் ஒருவர் ஆகியோர் அடுத்தத்து இறந்தனர். இவ்விழப்புக்கள் தாகூரை வாட்டின. அவர், நாட்டுத் தொழிலும், வாணிகமும் வளரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில அமைப்புக்ளில் போட்டு வைத்திருந்த பணமும் வரப்பெறாமல் போய் விட்டன. இந்நிலையிலும் தளராமல் அரிய பல பணிகள் புரிந்தார். பொதுப்பணிகள்:- 1889இல் கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது தாகூர், நிவேதிகை அம்மையாருடன் ஓய்வின்றி பாடுபட்டு பணம் திரட்டினார். வங்கத்தில் வெள்ளக்கேடும், பஞ்சயத்துயரும் உண்டாக்கிய பொழுதுகளில் எல்லாம் அயராது பாடுபட்டார். பீகாரிலும், குவெட்டாவிலும் நில நடுக்கம் உண்டாக்கிய போது மக்கள் சொல்ல முடியாத் துயரடைந்தனர். அப்பொழுது தாகூர் செயற்கரிய செயல்களை மேற்கொண்டார். அரசியல் ஈடுபாடு:- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க நேர்ந்த போது மக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கட்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தினார் தாகூர். நாடெல்லாம் சென்று மேடைதோறும் முழங்கினார். வீரப் பாடுக்கள் இயற்றிப் பரப்பினார்; ஊர்வலம் நடத்தினார்; நிதி திரட்டி உதவினார். பகை கொள்ளாத ஒத்துழையாமையே அவர் கருத்தாக இருந்தது மாணவர்கள் இயக்த்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறினார். இந்நெறிப்படி அமைப்புச் செல்லாமையைக் கண்டு அரசியலில் இருந்து விலகிச் சாந்தி நிகேதன அமைதிப் பணியை மேற்கொண்டார் இந்து முகமதியர் வேறுபாட்டைத் தடுக்க எவ்வளவோ அவர் முயன்றார். அது கைகூடாமையால், வங்கம் இரண்டாகப் பிரிந்து பட நேர்ந்தது. கலைத்தொண்டு:- அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர் கலைத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்டோர், புகழ் வாய்ந்த கீதாஞ்சலியையும், வேறு சில நாடகங்களையும் இப் பொழுதில் இயற்றினார். மாணவர்களை நடிப்பு முதலாய துறைகளில் நன்கு வளர்க்கப் பாடுபட்டார். அவருடைய தொண்டை நாடு அறியத் தொடங்கியது ஒப்பற்ற உலகக் கவிஞராம் தாகூரைப் பலவகை அமைப்புக்களும் வரவேற்கவும் பாராட்டவும் தொடங்கின. முடிவுரை:- தாகூர் பரந்த பாங்கு படைத்தவர் இளையவர் உள்ளத்தே உண்டாகும் உணர்ச்சிகளே எதிர்கால உலகைக் காக்க வல்லது எனத் தெளிந்து தொண்டாற்றினார். மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவன் உவக்கும் தொண்டு என்பதைச் செயலில் காட்டினார். அவர் தொண்டுள்ளம் வாழ்வதாக. 6. பெருவாழ்வு ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்றார் வள்ளுவர். ஆம் உலகத்தில் நிலை பேறானது புகழ்ஒன்றேயாம். நிலைபெறாத உலகத்தில் பிறந்த மக்கள் தம் செயற்களும் செயலால் ஈட்டிய புகழை நிலைக்கச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும், இந்நோக்கத்தை நன்கு நிலையாட்டியவர் தாகூர் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டுப்பயணம்:- தாகூர் தாம் வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலிப் பாக்களைப் பொழுது போக்குப் போலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1912இல் தாகூர் இலண்டனுக்குச் சென்றபோது அம்மொழி பெயர்ப்பையும் எடுத்துச் சென்றார். ஆங்கிருந்த தம் நண்பர் வில்லியம் என்பார்க்குக் காட்டினார். அவர் பாடலின் அருமையை வியந்து பாராட்டியதுடன் தம் நண்பர்கள் பலர்க்கும் காட்டினார். இவ் வகையில், வெல்சு, பெர்னாட்சா, இரசல், பிரிட்சு, ஆண்ட்ரூசு என்பவர்கள் நண்பர் ஆயினர். இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சில பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். தாகூர் பெருங் கவிஞராகவும் சமயத் தலைவராகவும் பேரறிஞர் உள்ளங்களில் இடம் பெற்றார். உள்நாட்டில் புகழ்:- தாகூர் மேல் நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், அவர் இயற்றிய கீதாஞ்சலிக்கு உலகத்தின் உயர்ந்த பரிசாகிய நோபல் பரிசு கிட்டியது. ஐரோப்பியர் அல்லாத எவரும் அதுவரை அப்பரிசைப் பெற்றது இல்லை தாகூர் அப் பரிசைப் பெற்றது கண்டு, அவரது தாய் நாடான வங்கம் மிகப் பெருமை எய்தியது; தாகூரை அழைத்து விருந்தும் விழாவும் எடுத்தது. பாராட்டுக்கள் நலகியது. பக்கிம் சந்திரர் புகழ்ந்தும் உள்ளவாறு உணரப்பெறாத வங்கம், தங்கள் நாட்டுப் புலவர் மணியை மேல் நாட்டார் பாராட்டிய பின்னரே உணர்ந்து பாராட்டியது இலக்கணம் அறியாப் புலவர் என்று பழித்தவரகளும், பாராட்டத் தொடங்கியது தாகூர்க்கு வியப்பாகவே இருந்தது. கல்லூரிப் பட்டம் பெறாத அவரைக் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அழைத்து டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பட்டமளிப்புப் விழாப் பேருரை நிகழ்த்த வேண்டிக் கொண்டது. தாய்மொழிப்பற்று:- தாகூர் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்; உலகத்தைத் தம் குடும்பமாகக் கருதபவர். அதே பொழுதில் தாய் மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். வங்க நாட்டினர் வங்க மொழியில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், கற்க வேண்டும் என்று அவரைப்போல வற்புறுத்தியவர் எவரும் இலர். அது போல் தமிழ் மக்கள் தம் தாய் மொழியில்தான் பேச வேண்டும், கற்க வேண்டும். என்று வற்புறுத்தினார் தாகூர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது அவரக்குத் தமிழ்ப்புலவர் ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்புத்தர குயில் கிளியைப்போல பாட முயலக் கூடாது. குயில் தன் குரலால்தான் கூவ வேண்டும். நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பாடி இருக்க வேண்டும் என்றார். உலக வழிகாட்டி:- மேல்நாட்டு அறிஞர்களுடன் அளவள வாவும் வாய்ப்புக் கிடைத்தது. குறித்துத் தாகூர் மகிழ்ந்தார். அதே பொழுதில் மேலைநாடுகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சியும் நடுங்கியும் வாழும் நிலைமையைக்கண்டு வருந்தினார். ஒரு நாட்டை அழிக்க மற்றொரு நாடு படைகளைப் பெருக்குவதை அறவே வெறுத்தார். போட்டியும் பொருமையும் நாகரிகம் ஆகாது எனக் கண்டித்தார். உலகுக்கு இவ்வகையில் வழிகாட்ட வேண்டியது. இந்தியாவின் கடமை என உணர்ந்து சாந்தி நிகேதனத்தின் வழியாக உலக அமைதிக்குப் பாடுபட முனைந்தார். காந்தி யடிகளை வரவேற்று உலக அமைதிபற்றி ஆராய்ந்தார். வெளி நாட்டு மாணவர்களையும், பெருந்தலைவர்களையும் சாந்தி நிகேதனத்தில் கலந்து உரையாடினார். பொதுமைவேட்கை:- சாந்தி நிகேதனத்தில் 1918 இல் விசுவபாரதி என்ற உலகக் கலைக் கழகத்தை அமைத்தார். ஆண்ட்ரூசு, பியர்சன் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்தி நிகேதனத்தில் தங்கி இருந்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் அங்கு இடம் பெற்றன. சீனா, ஜப்பான் முதலான கீழை நாட்டுக் கலைகளும், ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும், ஆங்கு இடம் பெற்றன. கிழக்கு மேற்கு என்று பாராமல் நல்லவற்றை யெல்லாம் கொள்ள வேண்டும் என்பதே தாகூர் கொள்கை. உலகவர் அனைவரும் மனிதர் என்னும் பொதுத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே தாகூரின் உள்ளார்ந்த தொண்டின் அடிப்படை ஆயிற்று. அஞ்சாமை:- 1916-17 இல் தாகூர் சப்பானுக்குச் சென்றார். அந்நாட்டு கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டு அளவளாவினார். பல கூட்டங்களில் பேசினார். சப்பானியரின் அழகுணர்ச்சியை மதித்துப் போற்றினார் அதே பொழுதில் அரசியல் பகை, மண்ணாசை ஆகியவற்றைக் கண்டித்தார். எவர் தம்மைப் புறக் கணித்தாலும் தமக்கு நேரிது எனத் தோன்றிய கருத்தை அஞ்சாது வெளியிட்டார் தாகூர். பட்டம் துறப்பு:- டயர் என்னும் வெறியன் சாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் திரண்ட மக்களைத் தக்க முன்னறி விப்பு இல்லாமல் சுட்டுத் தொலைத்த கொடுமையைக் கண்டித்தார். ஆங்கில அரசால் தமக்குத் தரபெற்ற சர் என்னும் பட்டத்தை உதறினார். நாட்டு முன்னேற்றத்திற்குக் கிராம முன்னேற்றமே அடிப்படை என உணர்ந்து தொண்டாற்றினார். கிராமத் தொண்டர்படை அமைத்தார். தேர்வு முறையால் உண்டாகும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தம் கலைக் கழகத்தில் தேர்வு முறையை ஒழித்துக் கட்டினார். இவ்வாறாக உலகுக்குப் பயன்படும் பெருவாழ்வு கொண்டார் தாகூர். முடிவுரை:- பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்றார் வள்ளுவர். அதுபோல் பண்பாளராகத் திகழ்ந்த தாகூரால் உலகம் நல்ல பல வாய்ப்புகளை எய்திற்று. தாகூர் புகழ் வாழ்வதாக: 7. சாந்தி நிகேதனம் தாகூர் பெருங்கலைஞர்; கவிஞர்; இசையிலும் நாடகத்திலும் தேர்ந்தவர்; வங்க மொழியும், ஆங்கிலமும் கொஞ்சி விளையாடும் அளவில் கவிகள் இயற்றியவர்; நாட்டுத்தொண்டிலே ஈடபட்டவர். அவர் தம் எண்ணத்தைச் செயற்படுத்துதற்கு என ஏற்பட்ட அமைப்பே சாந்தி நிகேதனம் ஆகும். நிலையத் தோற்றம்:- தாகூர் நைவேத்தியம் என்னும் தலைப்பில் இனிய தெய்வப் பாடல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த தேவேந்திரநாத் தாகூர். பெருந் தொகையைப் பரிசாக வழங்கினார். அத்தொகையைக் கொண்டு நைவேத்தியத்தை அச்சிட்டுத் தந்தையாரிடத்தில் படைத்தார் தாகூர். அப்பொழுது ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடம் தந்து உதவுமாறு தந்தையிடம் வேண்டினார். அவ்வாறே தந்தையார் இசைந்தார். இவ்வகையால் 1901 இல் எழுந்த நிலையமே சாந்தி நிகேதனக் கலைக்கழகம் ஆகும். கலைத் திட்டங்கள்:- எளிமையில் செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக் கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியைத் தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். இசை முழக்கத்துடன் தொடங்கும் பள்ளி இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப்பெறும். வாய்த்த பொழுதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப்பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிகராகவும் திகழ்ந்தார் தாகூர். கல்வி முறை:- சாந்தி நிகேதனத்தில் ஐவரே மாணவராக இருந்தனர். பின்னர்நூற்றுக்கணக்காகப் பெருகினர். சிறுவர்களே அல்லாமல் சிறுமியரும் இடம் பெற்றனர். விளையாட்டின் வழியாக விரும்பிக் கற்கும் முறையை உருவாக்கினார் தாகூர். பள்ளிக் கூடம் அடக்கிவைக்கும் இடம் என்றோ. சிறைச்சாலை என்றோ மாணவர் மனத்துத் தோன்றாவண்ணம் சூழ்நிலை யையும், பாடத்தையும், கற்பிக்கும் முறையையும் வகுத்தமைத்தார். அதே பொழுதில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாகவும், தமக்குள் உண்டாகும் சிக்கல்களைத் தாமே தீர்த்துக் கொள்ளத் தக்கவர்களாகவும் மாணவர்களை உருவாக்கினார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்கு வளர்த்தார். விசுவ பாரதி:- உலகம் ஒருகுடி என்பதை உணர்ந்தவர் தாகூர். அதனால் 1918 இல் சாந்தி நிகேதனத்தில் விசுவபாரதி என்னும் உலகக் கலைக் கழகத்தை உருவாக்கினார். அங்கு உலகப் பெருமக்கள் பலரும் வருகைதந்து அளவளாவ வாய்ப்புச் செய்தார். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் சாந்தி நிகேதனத்தில் இடம் பெற்றன. சீனா, சப்பான் முதலான கீழை நாட்டுக் கலையும் ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும் ஆங்கு இடம் பெற்றன. சமயம் கடந்த, இனம் கடந்த, நாடு கடந்த பொதுத் தன்மைக்குச் சாந்தி நிகேதனம் இருப்பிடம் ஆயிற்று. திருநிகேதன்:- கிராமங்கள் பெருகியுள்ள இந்திய நாட்டில் கிராமங்கள் வளம் பெறாவிட்டால் நாடு முன்னேற முடியாது என கண்டார். அதற்காகத் தம் மைந்தர் இரவீந்திர நாதரை அமெரிக்கா வுக்கு அனுப்பி உழவைப்பற்றி மூன்று ஆண்டுகள் கற்றுவரச் செய்தார் விசுவபாரதியில் கற்பிக்கும் கலைகளில் கிராமத் தொண்டு என்பதையும் ஒன்றாக்கினார். சாந்தி நிகேதனத்திற்கு அருகில் இருந்த சுருள் என்னும் ஊரில் இருந்த தம் விட்டைத் திருநிகேதன் எனப்பெயர் சூட்டிக் கிராமத் தொண்டுக்கு உரிய தலைமை நிலையம் ஆக்கினார். அங்கே நூலகமும் அலுவலகமும் அமைத்தார். தரிசாகக் கிடந்த அப்பகுதி வளமான பயிர்நிலமாக மாறியது. கூட்டுறவுக் கழகம்:- திருநிகேதனில் கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பெற்றது அங்குக் குடியிருந்த அனைவரும் உறுப்பினர் ஆயினர். கூட்டுறவுக் கழகக் கட்டணத்தின் ஒரு பகுதி மருத்துவக் கட்டணம் ஆக்கப் பெற்று மருத்துவர்க்குத் தர ஏற்பாடாயிற்று. ஆதலால் மருத்துவர் நோய் வராமல் பார்த்துக் கொள்வதில் மிக அக்கறை காட்டினார். மக்களுக்கு நோய் வராவிட்டாலும் தமக் குரிய தொகை கிடைக்க வகை இருந்தால் நோய் வராமல் தடுக்க மருத்துவர் முயல்வது இயல்பு அல்லவா! தொண்டர் படை:- கிராமப் பள்ளிக்கூட மாணவர் களுக்குத் தொண்டர்படை அமைக்கப் பெற்றது. கிராமத்து மக்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அந்தத் தொண்டர் படை உதவியது. உடலையும் உள்ளத்தையும் வளர்த்துப் போற்றினர் தொண்டர் தொண்டர்கள் தத்தம் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல் வேண்டும். பொதுத்தோட்டத்திலும் பாடுபட வேண்டும். அதன் பயனால் கிடைத்த தொகையைக் கொண்டு பள்ளிக்கூட நூல்கள் வாங்கப் பெற்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், நாடகங்கள் ஆகியன அவ்வப்போது மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப் பெற்றன. உரிமைக் கல்வி:- பக்கத்துக் கிராமங்களில் பயிலும் மாணவர்கள் திருநிகேதனில் வந்து ஐந்தாறு ஆண்டுகள் பயின்றனர். உலகச் செய்திகளும், வாழ்க்கை வரலாறுகளும், வங்க இலக்கியமும் கற்பிக்கப் பெற்றன. ஆனால் பொதுத் தேர்வு என்பது அங்கு இல்லை. உரிமை உணர்ச்சி இல்லாத கல்வி, கட்டாய உணவு போல் தீமை தரும என்பது கவிஞர் கொள்கை. அதனைத் தம் கழகத்தில் செயல் திட்டமாகக் காட்டினார். முடிவுரை:- தாகூர், மக்கள் அமைதியும் இனிமையுமான வாழ்வு வாழக் கருதினார். அதற்கு ஏற்ற செயல் திட்டங்களைச் சாந்தி நிகேதனில் உருவாக்கி வளர்த்தார். அதன் செயல் மணம் பக்க மெல்லாம் பரவி நலம் செய்வதாயிற்று. 8. உள்ளத்தின் ஒளி உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல் என்றார். திருவள்ளுவர். உள்ளத்தே ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றார் பாரதியார். ஊழினை உருக்கி உள்ளொழி பெருக்கி என்றார் மாணிக்க வாசகர். உள்ளொளியைத் தெள்ளிதின் ஆராய்ந்து எழுதினார். திரு.வி.க. உள்ளொளி வாய்ந்த மாந்தர் உலகில் அரியர். தாகூர் அவ் வரியருள் அரியராகத் திகழ்ந்தார். உள்ளொளி:- தாகூர் கவிஞர் கதை ஆசிரியர்; நாடக ஆசிரியர்; இசைக் கலைஞர்; நடிகர்; ஓவியர் இயற்கைச் சுவைஞர். இயற்கை வாழ்வினர்; இறையருட் பேற்றாளர் அவர்தம் படைப்புக்கள் அனைத்தும் உள்ளத்தின் ஒளியை உலகுக்கு அறிவிப்பன. நூலாகவும், இதழாகவும் வெளிவந்து உலகுக்கு ஒளிபரப்பின. படைப்பின் மாண்பு:- தம் வாழ்க்கையில் கண்ட எளிய நிகழ்ச்சிகளையும், கேட்ட எளிய, செய்திகளையும் அரிய படைப் பாக்குதலில் தேர்ந்தவர் தாகூர். அவர் கற்பனை ஒளி பட்டதும் எளிய காட்சிகளும், செய்திகளும் அரிய ஒளி வீசிச் சுடர்ப்பிழம் பாகக் காட்சி வழங்கின. கதையாயினும் பாட்டாயினும் எழுதி முடிக்கப் பெற்றதும் நண்பர்களை அழைத்து உடன் வைத்துக் கொண்டு யாழிசை போன்ற தம் குரலால் படிப்பார்; நாடகம் ஆயின் நடித்துக் காட்டவார். பாடல் தொண்டு பாடல் தொண்டு செய்வதே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தாகூர் என்பதில் தவறு இல்லை. கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர் ஓய்வற்ற பணிகள் மிகுந்தும் பாடல் தொண்டு செய்வதில் அவர் தவறவில்லை. பக்கம் பக்கமாக உரைநடை எழுதிய போதிலும் ஒரு பாட்டு எழுதுவதற்கு ஈடான மகிழ்ச்சி உண்டாவது இல்லை. ஒருவர் தம் கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவைபோல் பாட்டுக்கள் அமைகின்றன. ஆனால் உரைநடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனமாகவும், கையாள முடியாததாகவும்அசைக்க இயலாததாகவும் இருக்கின்றது. நாளுக்கு ஒரு பாட்டு எழுதி முடிக்க இயலுமானால் என் வாழ்வு இன்பமாக நடைபெறும் என்று கூறும் வரிகளில் தாகூரின் கவிதை ஆர்வம் நன்கு புலப்படும். நாடகத் தொண்டு:- இளமையிலேயே வீட்டில் அண்ணன்மார் நடிக்கக்கண்டு களித்தது நாடகக்கலை. மேடையை நெருங்க முடியாதிருந்த நிலைமாறித் தாமே நாடகம் இயற்றவும், இயற்றிய நாடகத்தைப் பயிற்று விக்கவும். தாமே நடிக்கவும் ஆகிய நிலைமைகள் உண்டாயின. சாந்தி நிகேதனப் பாடத் திட்டங்களில் நாடகத்திற்குச் சிறந்த இடம் தரப் பெற்றது. வால்மீகி தீபம் என்னும் நாடகத்தைத் தம் பத்தொன்பதாம் வயதில் எழுதினார். தாமே வால்மீகராக நடித்தார். மிக முதிர்ந்த காலத்திலும் நாடகப் பற்றை விட்டாரல்லர். கற்பனை வளம்:- கற்பவரின் மனக்கண்ணில் அழுத்தமாக நிறுத்தத் தக்க கற்பனைச் சொல்லோவியங்களைப் படைத்தலில் வல்லவர் தாகூர். கடலைக் காண்கிறார் தாகூர். கற்பனை வளம் பொங்குகிறது; வெட்ட வெளியில் கிடக்கம் கடல் அலைந்து புரண்டு நுரை கக்குகிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம் போன்ற தோற்றம் மனதில் எழுகிறது. நிலம் கடலின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை. தாயின் அரியணையைப் பற்றிக் கொண்டது. அது முதல் பெற்ற தாய் பித்துப்பிடித்தவளாய், நுரை நுரையாய்க் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள். தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயரடைகிறாள். குழந்தை நெஞ்சம்:- பெருமக்கள் குழந்தை நெஞ்சம் உடையவர். தாகூர் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமக்குப் புகழ் வருவது கண்டு வருந்தினார் தாகூர். என் ஆடைகளின் கரைகளைத் தொடுவதற்காகவும், அதை முத்தமிடுவதற்காகவும் மக்கள் சூழ்ந்து நெருங்குவது எனக்குக் கவலையை உண்டாக்கிறது. நான் வணங்கத் தக்க மக்கள் அவர்களிடத்தே பலர் இருக்கின்றனர் என்பதை நான் எப்படி உணர்த்துவது என்று ஏங்கினார். குழந்தைகளைப் பற்றி உருக்கும் படியாகப் பாடிய புலவர்களுள் உலகில் முதலிடம் பெறுபவர் தாகூர் என்பர். பிறைமதி என்னும் தொகுப்பில் அவர்தம் குழந்தைப் பாடல்கள் உள. அமைதி வேட்கை:- போரை வெறுத்தவர், கண்டித்து உரைத்தவர் தாகூர். போர் முடிந்தபின்னர் பிரஞ்சு நாட்டிற்கும், செர்மனி நாட்டிற்கும் சென்ற கவிஞர் ஆங்குப் பாழடைந்து கிடந்த கட்டிடங்களைக் கண்டு கலங்கினார். போரில் மடிந்த வீரர்களின் கல்லறைகளைக் கண்டு உருகினார். உலகத்து அறிஞர்கள் செய்த வரும் செயற்கருஞ் செயல்களை யெல்லாம் போர்ப் பேய் விழுங்கி விடுவதைக் கண்டு புண்பட்டார். போரைத் தூண்டி விட்டவர் எங்கோ இருக்க, இன்னதென்று அறியாத மக்கள் படும் அவலங்களை எண்ணி நொந்தார். தம்மால் ஆன தொண்டுகளை அவ்வப்போது செய்தார். சீனா, இரசியா முதலான நாடுகளுக்குச் சென்று அறிஞர்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டார். பெருந்தலைவர்களுடன் இணைந்த அமைதிப் பணி புரிந்தார். அத்தகயருள் காந்தி யடிகள் தலையாயவர் ஆவர். அவருக்கு மகாத்மா பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தவரே தாகூர்தாம். ஒளிமிக்க உள்ளம்:- உயிர்கள் அனைத்தின் மேலும் ஒப்பற்ற அன்பு செலுத்தினார் தாகூர். தனிப் பட்ட மனிதர் மேல் வெறுப்புக் கொள்ளாதவர் தாகூர். கொள்கைகளில் விரும்பத் தக்கவை, வெறுக்கத்தக்கவை இவை எனக் கருதுவதே அல்லாமல் கொள்கை யுடையார் மேல் விருப்பு, வெறுப்புக் காட்டாத பெரும் பாங்கு அவருடையது. உலகப் போர் அல்லலை நினைந்து உருகிய அவர் 1941 இல் தம் என்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் ஒன்றில் நாகரிகத்திற்கு உண்டாகிய நெருக்கடி எனப் பேசினார். அழிவை மூச்சாகக் கொண்ட நாகரிகம் அன்று வாழ் நாளெல்லாம் பறை யறைந்தார். அவர் உள்ளம் அத்தகையது. முடிவுரை:- தாகூர் தண்ணொளி பரப்பும் பேரொளிச் சுடர். அச்சுடரொளியால், வழிபிடித்துக் கொண்டு உலகம் செல்லும் நாளே உய்யும் நாள். அந்நாள் வருவதாக! 1. ஆல்பர்ட் சுவைட்சரின் இளமையும் கல்வியும் உலகின் நன்மைக்காகப் பிறந்த பேரருளாளர்கள் பலர்; செயற்கருஞ் செயல் செய்த சீரிய தொண்டர்கள் பலர்; இறையன் பில் இணையற்று விளங்கியவர்கள் பலர்; இத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் சுவைட்சர் 1875ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் ஐரோப்பாவைச் சேர்ந்த கேயர் சுபர்க் என்னும் ஊரில் லூயி சுவைட்சர் - என்பவரின் இரண்டாம் திருமகனாராகப் பிறந்தார். அவர் பிறப்பால், பிறர்க்கென வாழ்ந்த பெருமக்கள் பிறந்த நாள்களுள் சனவரித் திங்கள் பதினான்காம் நாளும் ஒருநாள் ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சரின் தந்தையார் லூயி சுவைட்சர் கிறித்தவ சமய போதகராகப் பணிசெய்தார். ஆர்கன் என்னும் இசைக் கருவியை மீட்டுதலில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர்தம் முன் னோரும் உடன் பிறந்தவர்களும் இசைத் தேர்ச்சியும் இறையன்பும் மிக்கவராக இருந்தனர். ஆகவே இறையன்பும் கவர்ந்து ஆட் கொண்டனர். ஐந்தாம் அகவையிலேயே ஆல்பர்ட்டுக்கு அவர் தம் தந்தையார் பியானோ கற்பித்தார். ஏழாம் அகவையிலேயே தம் இசையாசிரியை பாராட்டும் திறம் பெற்றார். எட்டாம் அகவையில் ஆர்கன் இசைப்பதில் ஈடுபட்டார்! இவ்வாறு இசையால் இசை பெற்றுத் திகழ்ந்தார். லூயி சுவைட்சர் கேயர்சுபர்க்கில் இருந்து கன்சுபர்க் என்னும் இடத்திற்குச் சமய போதகராக மாற்றப் பெற்றார். ஆகவே கன்சுபர்க்கில் தான் சுவைட்சரின் இளமைக் கல்வி தொடங்கியது. எளிய சூழ்நிலையில் அமைந்த கன்சுபர்க் பள்ளிக்குச் சென்ற சுவைட்சர், தாமும் அந்த எளிமையை மிக விரும்பிப் போற்றினார். உடன் பயிலும் உழவப் பிள்ளைகளைப் போலவே உடை உடுத்தார். அவர்களுக்குக் கிடைக்காத எந்த அரிய பொருளையும் பயன் படுத்துவதை வெறுத்தார். ஏழை எளியவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார் இளைஞர் ஆல்பர்ட். ஒரு நண்பனின் வற்புறுத்தலை மறுக்க முடியாதவராக ஒரு நாள், சுவைட்சர் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார். பறவைகள்மேல் வில்லுண்டை படக்கூடாதென எங்கேயோ குறிபார்த்து எப்படியோ வில்லை வளைத்து ஏவினார். தம் நண்பன் எந்தப் பறவையையும் அடித்து வீழ்த்திவிடக் கூடாதே என்ற அருளால் அவற்றை எழுப்பிப் பறந்தோடச் செய்து இன் புற்றார். அத்துணை இளக்கமானது அவர் உள்ளம். இறைவனுக்குச் செய்யும் நாள்வழி பாட்டுரையுடன் இறைவனே எல்லா உயிர் களுக்கும் அருள் சுரந்து நலம் செய்வாயாக! அமைதியாக உறங்குவதற்கு அருள்புரிவாயாக என்னும் வரிகளையும் சேர்த்துக் கொண்டு முறையிட்டார்! இளமையில் முதிர்ந்த பெருமகனார் ஆல்பர்ட் சுவைட்சர் அல்லவா! சுவைட்சரின் தலைமயிர் எளிதில் படியாதது. எத்தனை முறை சீவினாலும் எழும்பி நிற்கக் கூடியது. அதனைக் கண்ட பணிப்பெண், இத்தலை மயிரைப் போலவே இவன் அடங்கா தவனாக இருப்பான் என்று கூறுவாள். இவ்வுரையால் தம்மைத் தாழ்வாகக் கருதிக் கொண்ட சுவைட்சர் ஒரு நாள் ஒரு பொருட் காட்சி சாலையில் புனிதர் யோவான் உருவத்தைக் கண்டார். அவர் தலை தன் தலைபோலவே படியாமல் இருப்பதைக் கண்டு புறத் தோற்றத்துக்கு ஏற்றபடிதான் அகத் தோற்றமும் இருக்கும் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று உறுதி செய்தார். அவர் உள்ளத்தில் அமைதி உண்டாயிற்று. 1884 ஆம் ஆண்டு வரை சுவைட்சர் கன்சுபர்க் பள்ளியில் பயின்றார். பின்னர் ஓராண்டு மன்சிட் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இலத்தீன் மொழியைத் தனியே ஓராசிரியரிடம் கற்றார். முல்காசன் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். முல்காசனில் சுவைட்சரின் தந்தைவழிச் சிறிய பாட்டனாரும் பாட்டியும் இருந்தனர். அவர்கட்குக் குழந்தைகள் இல்லாமையால் ஆல்பர்ட்டை ஏற்றுப் போற்றினர். அங்கு எட்டாண்டுகள் இருந்து மிகத் திறமையாகக் கற்றார். ஆர்கன் இசைப்பதிலும் தேர்ந்தார். தம் பதினெட்டாம் அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு தாய் தந்தையிரிடம் சென்றார். நீகிரோ ஒருவனின் உருவச் சிலையைச் சுவைட்சர் தம் இளமையில் ஒரு நினைவுச் சின்னத்தில் கண்டார். அச்சிலையின் தோற்றம் ஆல்பர்ட் உள்ளத்தில் அளவிறந்த இரக்கத்தைத் தோற்று வித்தது. அச்சிற்பத்தை வாய்த்த போதெல்லாம் அடிக்கடி கண்டு கண்டு உருகினார். பின்னாளில் பிணிதீர்க்கும் பெருமகனாராகத் திகழத் தூண்டியவற்றுள் இச் சிற்பம் தலையாயது ஆயிற்று. ஆல்பர்ட் சுவைட்சர் இளம் பருவத்திலேயே இரக்கமிக்க வராய், எளிமை போற்றுபவராய், இறையன்பு மிக்கவராய் இசைச் தேர்ச்சி பெற்றவராய் இலங்கினார் என்பதைக் கண்டோம். விளையும் பயிர் முளையிலேயே என்பது மெய்யுரை யாயிற்று! 2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி இளமையிலேயே அன்பும், அருளும், இசைத்திறமும் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்; உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தம் பதினெட்டாம் அகவையளவில் முடித்த சுவைட்சர் அதன் பின்னர் மேல்நிலைக் கல்வியில் ஈடுபட்டார். சமய போதகராகிய லூயி சுவைட்சரின் மைந்தர் ஆதலால் ஆல்பர்ட் சுவைட்சருக்குச் சமயப் பற்று மிக்கிருந்தது இயற்கையே. குலவிச்சை கல்லாமல் பாகம் படும்! அதனால் 1893ஆம் ஆண்டில் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் மேல்நிலைக் கல்வி கற்கப் புகுந்த சுவைட்சர் சமய இயல், தத்துவம் ஆகிய இருபாடங்களையும் விரும்பி எடுத்துக்கொண்டார். இப்பாடங்களுக்கு இடையே எபிரேய மொழியை முயன்று கற்று முதிர்ந்த புலமை பெற்றார். கல்வி கற்றுவந்த காலையில் கட்டாய இராணுவப் பயிற்சியில் சேரவேண்டிய கடமைக்கு ஆட்பட்டார். அதே பொழுதில் உதவித் தொகை பெறுவதற்காக ஒருதேர்வு எழுதியாக வேண்டிய இன்றியமையாமையும் உண்டாயிற்று. அத்தேர்வுக்கு மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியவர்கள் அருளிய ஆகமங்களை ஆராயும் கடப்பாட்டை மேற்கொண்டார். இக்கல்வி இவர்தம் சமயத்துறை மேம்பாட்டுக்குப் பெருந்துணையாயிற்று. சுவைட்சர் 1897 ஆம் ஆண்டில் தத்துவத்தேர்வு எழுதுவ தற்காகத் தம்மை பதிவு செய்துகொண்டார். அத்தேர்வுக்குச் செல்பவர் தம் தகுதியை நிலைநாட்டுவதற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் வேண்டும். இயேசு நாதரின் கடைசி உணவு என்பதை ஆராய்ந்து திறம்பட எழுதினார் சுவைட்சர். அவ் ஆய்வுக் கட்டுரையில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியும் ஆசிரியர் பரிந்துரையும் இவரைக் கோல் என்னும் உதவித் தொகை பெறுவதற்கு உரியவர் ஆக்கின. கோல் உதவித்தொகை என்பது, ஆண்டுக்கு ஏறத்தாழ எண்ணூறு ரூபாய் அளவில் ஆறாண்டு கட்குத் தொடர்ந்து கிடைக்கும் தகுதி உடையதாகும். கோல் உதவித் தொகை பெறும் மாணவர் தாம் எடுத்துக் கொண்டபட்டப்படிப்பை ஆறாண்டு கால அளவுக்குள் முடித்தல் வேண்டும். அப்படிப்பை எப் பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். ஆகாவே இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சுவைட்சர் பாரிசு மாநகர் சென்றார். ஆங்கு சார்லசு விடார் என்பவரிடம் பயின்றார். ஆர்கன் வாசிப்பதிலும் பியானோ மீட்டுவதிலும் மேலும் தேர்ச்சி பெற்றார். கான்ட் என்பரின் தத்துவநூற் கொள்கைகளை ஆராய்ந்து தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். ஆய்வுக் கட்டுரையை வழங்கிப் பட்டம் பெறுவதற்கு முன்னர் இருந்த இடைக்காலத்தில் பெர்லின் நகர்க்குச் சென்று இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் தம் திறமையைப் பெருக்கினார். தேர்வுக்கு முன்னரே திருக்கோவில் போதகராக நியமிக்கப் பெற்றார். அங்கிருந்தவர் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆனார். ஆகவே, தேர்வு முடிந்த பின்னர் அவ்விடத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்தார். மாலை வேளையில் இவர் செய்து வந்த சமயச் சொற்பொழிவு சிறிது நேரமாக இருந்ததால் அதனை விரிவாக்குமாறு வேண்டினர்; மேலிடத்திலும் மக்கள் குறை கூறினர். அந்நிலையில் தாம் நெடும் பொழுது உரையாற்ற இயலாக் குறையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொண்டு எடுத்துக் கொண்ட மறைநூல் பகுதியை விரித்துரைக் இயலாமல் முடித்துவிடுகிற ஏழைப் போதகர் என்று தம்மைத் தாமே கூறினார். ஆயினும் தாம் பிறந்த ஆசிரியக் குடும்ப இயல்புக்கு ஏற்பச் சிறந்த ஆசிரியர் விரிவுரை ஆற்று போல் உரையாற்றும் திறத்தை விரைவில் பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? சுவைட்சருக்கு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் ரோமன் ரோலண்டுடன் தொடர்பு உண்டாயிற்று. நாடறிந்த உலகறிந்த பெருமக்கள் பலர் உறவும் தொடர்ந்து உண்டாயிற்று. செருமன் இலக்கியமும் தத்துவமும் என்னும் பொருள்பற்றிப் பாரிசு மாநகரில் தொடர்ந்து விரிவுரையாற்றினார். நாகரிகத்தின் தத்துவம் என்பது பற்றி நூல் எழுதுவதற்குத் திட்டம் வகுத்தார்; குறிப்புக்கள் தொகுத்தார். இந்நிலையில் தாம் கற்ற பல்கலைக் கழகத்திலேயே சமய நூல் பேராசிரியராகும் பேறு பெற்றார். பொழுதைப் பொன்னினும் சிறந்ததாகக் கருதி வாழ்ந்தவர் சுவைட்சர். டிராசுபர்க் பல்கலைக் கழகப் பேராசிரியராகிச் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவைட்சர் ஒரு விடுமுறையில் கன்சுபர்க் சென்றார். அவ்வேளையில் யான் தொல்லையோ துயரோ இல்லாமல் வாழும் பேறுபெற்றேன்; இப்பேற்றைப் பிறரும் பெறப் பாடுபடுவதைக் கடனாகக் கொள்வேன் என்னும் உறுதி பூண்டார். சமயம் தத்துவம் ஆய துறைகளில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் - அதாவது தம் முப்பதாம் அகவை வரை - பாடுபடுவதென்றும், அதன் பின்னர் பொதுநலத் தொண்டில் இறங்குவ தென்றும் உறுதி செய்தார். ஆம்! கற்பன கற்றார்; கற்றவாறு நிற்கத் திட்டமிட்டார்! அவர் திட்டம் வாழ்வதாக!! 3. பலதுறைப் பணிகள் ஒருவர் ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதே அரிது. பல துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக அரிதாகும். பல துறைகளில் தேர்ச்சி பெற்று அவ்வத் துறைகளில் எல்லாம் சிறந்த தொண்டு செய்வது அரிதினும் அரிதாகும். இத்தகைய அரிதினும் அரியதிறம் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். சுவைட்சர் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப் பல்கலைக் கழகச் சமயத் துறைத் தலைமைப் பொறுப்பும் ஏற்றார். இப் பணிக்கு இடையே திருக்கோவில் சமய போதகராகவும் திகழ்ந்தார். சமய இயல், தத்துவம் ஆகியனபற்றி அரும்பெரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தினார். இப் பணிகளுடன் சுவைட்சர் அமைந்தார் அல்லர். பாக் என்னும் இசைக் கலைஞரைப் பற்றிச் சீரியதோர் ஆராய்ச்சி நூல் இயற்றினார். பாரிசு மாநகரில் நிறுவப்பெற்ற பாக் இசைக் கழகத்தின் சிறப்பு விழாக்களில் ஆர்கன் வாசிக்கும் பொறுப்பும் ஏற்றார். இத்துணை வழிகளில் இடைவிடாது உழைத்தாலும் தாம் முன்னர்த் திட்டமிட்டுக் கொண்டுள்ளவாறு தம் முப்பதாம் அகவையில் பொதுப் பணியில் முழுமையாக ஈடுபடுவதையே விரும்பினார். எப்பணியைத் தேர்ந்தெடுப்பது? எங்கே தொடங்குவது? கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தின் விளம்பரத்தாள் ஒன்றைக் கண்டார் சுவைட்சர். அத்தாளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைத்த அருளாளர்கள் உடனே வேண்டும் என்னும் வேண்டுகோளைக் கண்டார். தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். சுவைட்சர் தம் இளமையில் கண்டறிந்த நீகிரோவின் சிலை கண்ணெதிரில் காட்சி வழங்கியது. காங்கோ சென்று அங்கே அல்லல்படும் மக்களுக்குத் தொண்டு செய்வதே தக்கது என்னும் முடிவுசெய்து அதற்குத் திட்டம் தீட்டினார். இவர் திட்டத்தை ஏற்பார் அரியர் ஆயினர். தெளிவற்ற முடிவு என்றும், வேண்டாத விருப்பு என்றும், கிறுக்குத்தனமான செயல் என்றும் பலவாறு கூறினர்; குழப்பினர்; ஆயினும் ஆல்பர்ட் சுவைட்சர் தம் திட்டத்தில் இருந்து சிறிதும் மாறினார் அல்லர். எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா! ஆப்பிரிக்காவுக்குச் சென்று என்ன தொண்டு செய்வது? கிறித்தவ சங்க அறிக்கை வழியாக மருத்துவப் பணி செய்வதே வேண்டும் என்பதை அறிந்தார். சமயம், தத்துவம், இறை வழிபாடு இப்பணிகளிலேயே பொழுதெலாம் செலவிட்ட சுவைட்சர் மருத்துவப் பணியை உடனே ஏற்க எப்படி முடியும்? பல்லாண்டுகள் பயின்று பயிற்சி பெற்றாலல்லவோ அப்பணியை ஏற்க முடியும்? இதனி எண்ணிச் சோர்ந்தாரல்லர் சுவைட்சர். தாம் பேராசிரியராக இருந்த பல்கலைக் கழக மருத்துவத்துறைத் தலைவரிடம் சென்று தம்மை மருத்துவ மாணவராகப் பதிவுசெய்து கொண்டார்! விந்தையான செய்தி. பல்கலைக் கழகத் துறைத்தலைவர், மற்றொரு துறையின் மாணவராகத் தம்மைப் பதிகிறார்! சுவைட்சரின் பொதுப்பணி நாட்டம் அத்தகையது! சுவைட்சர் இயற்கையாக ஏற்றுக் கொண்டிருந்த பலவகைப் பணிகளுக்கு இடையே மருத்துவக் கல்வி கற்பது இயலாததாக இருப்பினும் முயன்று கற்றார். 1911 ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வெழுதி வெற்றி கொண்டார். ஓராண்டுக்காலம் மருத்துவ மனையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் மருத்துவப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தார். இதற்குப் பின்னர், காங்கோவுக்குச் சென்று மருத்துவ பணி செயதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தாம் ஏற்றிருந்த பேராசிரியர் பதவியையும், சமய போதனைப் பணியையும் விட்டு விலகினார். செலன் பிரசுலோ என்னும் பெயருடைய ஒரு நங்கையை மணந்து கொண்டு, அவர்க்குத் தாதியர் பயிற்சி தந்தார். கிடைத்த பொழுதை எல்லாம் மருத்துவம் பற்றி மேலும் கற்கவும், வேண்டிய மருந்துகளைச் சேர்க்கவும் செலவிட்டார். வழக்கற்றுப் போய்க் கொண்டிருந்த ஆர்கன் இசைக்குப் புத்துயிரூட்டினார். அக்கருவி அமைப்பைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதினார். ஆர்கன் இசைக் கருவியில் ஏற்படும் பழுது பார்த்துச் செவ்வை செய்தார். இவ்வாறு பல்வேறு திறம் வாய்ந்த பலபேர்கள் செய்யும் செயற்கரிய செயல்களைத் தம் முப்பதாம் அகவை அளவிலே செய்தார், சுவைட்சர். சுவைட்சர் இணையற்ற முயற்சியாளர்; அயராத தொண்டர்; விலையாக்கிக் கொள்ளும் திறம் வாய்ந்தார்; அவர் எடுத்த பணி எதுவாயினும் நிறைவேறத் தவறியது இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட துறை யாதாயினும் ஒளிவிடாமல் போனது இல்லை. அவர்தம் முயற்சியும் தொண்டும் உலகுக்கு நல்வழி காட்டுமாக! 4. இலாம் பரினிப் பயணம் ஆல்பர்ட் சுவைட்சர் பொது நலத்தொண்டு செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ ஆகும். ஆங்கு வாழ்ந்த நீகிரோக்கள் தீராபிணிகட்கு ஆட்பட்டு அல்ல லுற்றனர். நாகரிகம் அறியாத மக்கட்குத் தொண்டு செய்து நல்வழிப்படுத்துவது தன் கடன் எனக்கொண்டு ஆங்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். அவர்மேற் கொண்ட செலவு பற்றி அறிவோம். சுவைட்சர் ஆர்கன் இசைப்பதன் வழியாக ஒரு தொகை சேர்த்திருந்தார். நூல் வெளியீட்டாலும் ஓரளவு தொகை ஈட்டி யிருந்தார். தம் சம்பளத்திலும் ஒரு பகுதியை மீதப்படுத்தி யிருந்தார். தக்கவர்களிடம் நன்கொடை வழியாலும் ஓரளவு தொகை சேர்த்தார். ஆக எவ்வுதவி இல்லாமலும் ஒரு மருத்துவ மனையை ஓரிரண்டாண்டுகள் தாமே நடத்த இயலும் என்று கணக்கிட்டறிந்தார். அதன் பின்னர்த் தம்மை மருத்துவப் பணிக்கு ஏவிய பாரிசு கிறித்தவ சங்கத்திற்கும் தம் விருப்பத்தை வெளி யிட்டார். கிறித்தவ சங்கத்தால் தம்மைக் கலந்து பேச வருமாறு ஆல்பர்ட்டை, தம் சமயத் சீர்திருத்த நோக்கத்தை விரும்பாத பலர் அக்குழுவில் இருப்பதால் அவர்களை நேரில் காண்பது தம் பயணத்திற்குத் தடையாகலாம் என்று எண்ணி அக்குழுவைக் காண மறுத்தார். எனினும் தனித்தனியே அவர்களைக் கண்டு கலந்து பேச ஒப்பினார். அவ்வாறே அவர்களைக் கண்டு தம் பயணத்திற்கு இசைவு பெற்றார். செருமணி நாட்டுப் பல்கலைக் கழக மருத்துவப் பட்டம் பெற்றவர் சுவைட்சர். அவர் பிரான்சு நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் பணி செய்யப் போகிறார். ஆகவே பிரான்சு நாட்டார் இவர் பெற்ற மருத்துவப் பட்டத்தை ஏற்று இசைவு அளிக்க வேண்டும். அவ் விசைவையும் பெற்றார். அன்றியும் அந்நாட்டவர் பலர் மனமுவந்து நன்கொடையும் வழங்கினர். பிற நாட்டவர்கள் உதவியும் கிட்டின. இவை சுவைட்சர் மேற்கொள்ள இருந்த பணிக்குப் பேருதவியாயின. சுவைட்சர் தம் உற்றார் உறவினர் களிடத்தும், உடன் பணி புரிந்தவர்களிடத்தும் அன்பு நண்பர் களிடத்தும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். சுவைட்சருக்குப் கப்பற் பயணம் புதிது தம் பணிக்கு வேண்டிய பொருள்களை எழுபது பெட்டிகளில் அடைத்துக் கப்பலில் ஏற்றிச் சென்றார். புறப்பட்ட இரண்டாம் நாளே கடலில் புயல் கிளம்பியது. கப்பலை சுழற்றி யடித்தது. பெட்டிகளைக் கட்டிவைக்காமையால் அவை சிதறி ஓடின. மூன்று நாட்கள் தொடர்ந்து புயல் வீசிற்று புயல் ஓய்ந்தபின்பே அமைதி தவழ்ந்தது. அதற்கு முன்னர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்கள் கடற் பயணம் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டின் இயற்கையமைப்பு, வெப்பதட்பம், நீகிரோவர் நிலை ஆயன பற்றியும் பலப்பல செய்திகளை விரித்துரைத்தனர். ஆப்பிரிக்காவின் வெயில் கொடுமை பற்றியும், காலை மாலைப் பொழுதுகளில் அடிக்கும் இள வெயிலால் உண்டாகும் வெயில் வாதம் பற்றியும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர். இச் செய்திகளை அனைத்தும் ஆல்பர்ட் சுவைட்சர் செய்யப்போகும் அரும்பெரும் பணிக்கு உதவுவனவாக இருந்தன. பயணத்தின் இடையே டாக்கர் என்னும் இடத்தில் சுவைட்சர் இறங்கினார். ஆங்கு அவர் கண்ட ஒரு சாட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. கரடுமுரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் ஒரு குதிரை வண்டியைக் கண்டார். வண்டி தாங்க மாட்டாத அளவுக்கு - குதிரைகள் இழுக்க மாட்டாத அளவுக்கு - பாரம் ஏற்றப் பெற்றிருந்தது. ஆயினும் வண்டியில் நீகிரோக்கள் இருவர் அமர்ந்து கொண்டு குதிரைகளை அடித்துத் துன்புறுத்திப் படாப்பாடு படுத்தினர். இதனைக் கண்ட சுவைட்சர் அங்கே சென்று அவர்களைக் கீழே இறங்கச் செய்து வண்டிக்குப் பின்னிருந்து தள்ளினார். வண்டி எளிதாகச் சென்றது. ஆப்பிரிக்காவில் செய்ய இருந்த தம் தொண்டைத் தொடங்கி விட்டார் சுவைட்சர். தொண்டு செய்வர்க்கு இவ்விடம் - இக்காலம் - இப்பணி என உண்டா? ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்பது தானே அறநெறி. டாக்காவிம் இருந்து புறப்பட்ட கப்பல் லோபசு என்னும் இடத்தைச் சேர்ந்தது. அங்கிருந்த சுங்கச்சாவடிகள் பொருட்கள் தணிக்கை செய்து வரி விதிக்கப் பெற்றன. அதற்கு மேல் ஓகேவே ஆற்றில் படகு வழியாகப் பயணப் தொடங்கியது. படகுப் பயணம் இலாம்பரினி வரைக்கும் உண்டு. அதற்குப் பின்னர், கிறித்தவ சங்கத்தின் பகுதிக்குத் தோணியில்தான் செல்ல வேண்டும். இலாம் பரினியை அடைந்த சுவைட்சர் பொருள்களைப் படகில் இருந்து தோணிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அந்நிலையில் கிறித்தவ சங்கஞ் சார்ந்த இரண்டு தோணிகள் விரைந்து வந்து, தங்கட்கு உதவ வந்திருக்கும் மருத்துவரையும், அவர் இல்லக் கிழத்தியாரையும் வரவேற்று வாழ்த்தின. பொருள்களை ஒரு தோணியில் ஏற்றி வைத்துத் தாமும் தம் மனைவியாரும் ஒரு தோணியில் அமர்ந்து தாம் சேர வேண்டிய கிறித்தவ சங்கத்தைச் சேர்ந்தனர். எடுத்துக்கொண்ட பணி பெரிது. பணி செய்யப் புகுந்த நாடு தொலைவானது; பழக்கப் படாதது; அந்நாட்டு மொழியோ தாம் அறியாதது. போக்குவரவு முதலாய எந்த வாய்ப்புக்களும் இல்லாதது. எனினும் துணிவே துணை தொண்டே கடவுட் பணி எனக் கொண்ட சுவைட்சர் தாம் செய்யப்போகும் பணிக்குத் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தார். இத்தகையரே அருளாளர் என்பதில் ஐயமில்லை! 5. இலாம்பரினியில் சுவைட்சர் செய்த மருத்துவப்பணி சுவைட்சர் தம் முப்பதாவது அகவையில் எந்தப் பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அந்தப் பொதுத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தினார். அத்தொண்டு அல்லல் மிக்கது. ஆயினும் அயராது பாடுபட்டு அரிய வெற்றி சுவைட்சரின் பேருள்ளத்திற்கும் பெருந்திறத்திற்கும் சான்றாகும். நீகிரோவர்க்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற சுவைட்சருக்கு அவர்கள் மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதற்காக அவரிடம் மருத்துவம் செய்யவந்த யோசேப்பு என்பவனை மொழிபெயர்ப்பாளியாக வைத்துக் கொண்டார். அவன் ஆங்கிலேயர் ஒருவர்க்குச் சமையற்காரனாக இருந்தவன். ஆதலால் அவனுக்கு மொழி பெயர்ப்புப்பணி ஏற்றதாயிருந்தது. இப்பணியில் அவன் நெடுநாள் நிலைத்திருக்கவும் செய்தான். மருத்துவ மனைக்கு வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும். ஆகவே உடனடியாகப் பார்க்க வேண்டிய நோயாளர்கள் மட்டுமே முதற்கண் தம்மிடம் வருமாறு பக்கங்களில் பறையறைந்து அழைக்கச் செய்தார். ஆனால் எல்லா நோயாளர்களுமே கூடிவிட்டனர். வீட்டு வாயிலில் தான் மருத்துவ ஆய்வு நடத்த வேண்டியதாயிற்று. அங்கு வெயில் பட்டாலே வெயில்வாதம் உண்டாகி அல்லல் படுத்தும் வீட்டு நிழலில் மருத்துவ ஆய்வு செய்யவும், மரநிழலில் தங்கவும் முடிந்தது. ஒவ்வொரு நாளும் நோயாளிகள் வந்ததும் அவர்களை உட்காரவைத்து மருத்துவர் மனைக்குப் பக்கத்தில் எச்சில் துப்பக்கூடாது. கூச்சல் போடக்கூடாது. தங்களுக்கு ஒருநாளுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவர வேண்டும். மருத்துவர் இசைவு இல்லாமல் இரவில் எவரும் தங்கக்கூடாது. மருந்துதரும் சீசாக்களும் டப்பாக்களும் திருப்பித்தரப்பெற்ற வேண்டும். மாத நடுவில் கப்பல் வந்து திரும்பும்வரை உடனடி நோயாளர்கள் மட்டுமே பார்க்கப் பெறுவர் என்னும் செய்திகளை உரக்கப் படிப்பர். இச்செய்திகள் அவர்கள் வழியாக மற்றவர்கட்கும் பரவும். ஒவ்வொரு நாளும் காலை எட்டுமணிக்கே மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடும். நண்பகல் பன்னிரண்டரை மணி உணவுவேளை. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணிவரை மீண்டும் மருத்துவம் செய்யப்படும். அன்று பார்க்கப்படாமல் எஞ்சிய நோயாளர் மறுநாள் பார்க்கப்படுவர். நோயாளர் ஒவ்வொருவர்க்கும் வட்டமான ஓரட்டை கொடுக்கப்படும். அவ்வட்டையில் மருத்துவரின் பதிவுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள நோயாளியின் எண் இருக்கும். அதன் துணை யால் அவன் நிலை, மருந்து முதலியவற்றைக் கேட்டுப் பொழுதை வீணாக்காமல் மருந்து கொடுக்க வாய்ப்பாக இருந்தது. அவனிடம் கொடுத்துத்திரும்பப் பெற வேண்டிய சீசா, டப்பா முதலியவையும் அதில் குறிக்கப் பெற்றிருந்தன. ஆதலால் அவற்றைத் திரும்பப் பெற உதவியாக இருந்தது. நாள்தோறும் முப்பது நாற்பது நோயாளர் மருத்துவ மனைக்கு வந்தனர். மலேரியாக் காய்ச்சல், தூங்குநோய், குட்டம், யானைக்கால், நுரையீரல் கோளாறு, வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்கள் அங்கே மிகுதியாக இருந்தன. சொறி சிரங்கும் மிகுதி. குருதி கொட்டும் வரை சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இந்நோய்க்கு உடலைக் குளிப்பாட்டி ஒருவகை மருந்தைப்பூசி விரைவில் குணப்படுத்தினார், சுவைட்சர். நுரையீரல் நோய் பலருக்கு இருந்தது. அந்நோய்க்கு மருத்துவம் செய்வது ஐரோப்பாவைவிட எளிதாகவும், விரைந்து பயன் தருவதாகவும் இருந்தது. கிறுக்கர் எண்ணிக்கை ஆப்பிரிக் காவில் குறைவு. ஐந்தாறு கிறுக்கர்களுக்குச் சுவைட்சர் மருத்துவம் செய்தார். அவர்கட்கு மருத்துவம் செய்வது கடினமாக இருந்தது. நஞ்சு, ஊட்டுவதாலும் சிலரைக் கிறுக்கர்கள் ஆக்கும் கொடுமை ஆப்பிரிக்காவில் இருந்தது. இவ்வகையால் கிறுக்கர் ஆகியவரை எம் மருத்தாலும் சரிப்படுத்த முடிவதில்லை. காங்கோவில் பெருவாரியாக இருந்த நோய்களுள் தூங்கு நோய் என்பதொன்று உகண்டா என்னும் பகுதியில் தூங்கு நோய் பரவிய மூன்றாண்டுகளில், ஆங்கிருந்த மூன்று நூறாயிரம் பேர்களில் இரண்டு நூறாயிரம் பேர்கள் இறந்தனர். காய்ச்சலுடன் தொடங்கும் இந்நோய், தூக்கத்தில் கொண்டு வந்து வைக்கும். பொறுக்க முடியாத தலைவலி யுண்டாகும். மூளைக் கோளாறும் உண்டாகிவிடும். இறுதி நிலையில் வரும் தூக்கத்தால் மயக்கம் உண்டாகும். உடல் மரத்துப்போகும். சாவும் எளிதில் வராது. பிழைக்கவும் முடியாது. இத்தொற்று நோய் மருத்துவத்திற்கு ஒதுங்கலாக ஒருவிடுதி வேண்டியதாயிற்று. ஆகவே சுவைட்சரின் பெரும் பொருளையும் பொழுதையும் இந்நோய் கவர்ந்து கொள்ளத் தவறவில்லை. எதற்கும் அயராதவராயிற்றே சுவைட்சர்! அதனால் வெற்றி கண்டார். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் தொடங்கியது. அதன் விளைவதென்ன? அருட் பணிக்கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்ட சுவைட்சரும் அவர் மனைவியாரும் சிறை செய்யப் பெற்றனர். செருமணி நாட்டைச் சேர்ந்தவர் சுவைட்சர். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்க்குத் தொண்டு செய்யலாமா? இரண்டும் பகை நாடு ஆயிற்றே! என்னே அரசியல்! சுவைட்சரும் அவர் மனைவியாரும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும், மருத்துவப் பணி புரியக்கூடாது என்றும் தடை விதிக்கப் பெற்றனர். இவற்றுள், மருத்துவம் செய்யக் கூடாது என்பதே துயரூட்டியது. ஐரோப்பியர் நீகிரோவர் ஆகிய இருசார்பினருமே இத்தடையை எதிர்த்தனர். இவர் தம் ஆசிரியர் சார்னர்சு விடார் தடையை நீக்க முயன்று வென்றார். மீண்டும் மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். போரின் விளைவால் வெளிநாடுகளில் இருந்து பணவரவும் மருந்து வரவும் நின்றன. உள்நாட்டில் அவ்வப்போது சிறிதளவு வந்த வருவாயும் நின்றது. மனைவியார் உடல்நிலை சீர்கெட்டது. ஒன்றின்மேல் ஒன்றாகத் துயர் மேலிட்டன. நாலறை யாண்டுகள் பணி செய்ததற்குப் பயனாகப் பெற்று ஐரோப்பாவுக்குக் கப்பலேறினர். நஞ்சையூட்டு போதினும் அஞ்சாதவரே தொண்டர் அல்லரோ! ஆப்பிரிக்காவில் சுவைட்சர் செய்த உயிரிரக்கப் பணிகள் சொல்லொண்ணாய் பெருமையுடையன. அவ்வேளையில் அவர் பட்ட அல்லல்களும் சொல்லொண்ணாதவை. ஆனால் அவற்றை அவர் அல்லலாகக் கருதினார் அல்லர். அல்லல் அருளாள்வார்க் கில்லை வெளிவழகு மல்லல்மா ஓலாம் கரி என்பது பொதுமறை. 6. நீகிரோவர் வாழ்க்கை முறை ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகள் ஒன்று ஓகேவே அவ்வாறு எழுநூறு கல் நீளமுடையது. அவ்வாற்றின் பகுதியில் எட்டுக் குழுக்களைச் சேர்ந்த நீகிரோவர் முன்னர் வாழ்ந்தனர். அவர்களுள் கலோவா என்னும் ஒரு குழுவினரே எஞ்சினர். மனிதரைக் கொன்று தின்னும் ஒரு கூட்டத்தாரும் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி உயிர்க் கொலையைக் தொடங்கி யுள்ளனர். நீகிரோவர் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் வாழைப் பழம். மரவள்ளிக் கிழங்கு ஆகியவையே. அங்கே நெல் முதலிய தானியங்கள் விளைவதில்லை. வேறு நாடுகளில் இருந்தே தானியங் களும், பாலும் அரிசியும் பெறுகின்றன. நீகிரோவர்களும் சிலர் முகமதியர் சிலர் கிறித்தவர். எச்சமயம் தழுவினவராக இருந்தாலும் தம் பழைய பழக்கவழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் விடுவதில்லை. நாகரிமற்றவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், காட்டு வாழ்வினராகவும் இருப்பதால் இவர்களை நோய்கள் வளைத்துச் சூறையிடுகின்றன. நோய்கள் வந்தால் சாவது அன்றி வேறு வகையில்லை. நீகிரோக்களில் மந்திரவாதிகள் உண்டு. நோயைத் தீர்க்க வல்லவன் மந்திரவாதியே என்று நம்புகிறார்கள். நோயைத் தீர்ப்பவனால், அதை உண்டாக்கவும் முடியும் என்று கருதி மந்திரவாதிகட்கு மிக அஞ்சுவர். சுவட்சரையும் மந்திரவாதி என்றே கருதினர். நோய்களைத் தீர்த்தால் அல்லவா! மருத்துவர் தரும் அடையாள அட்டையை மந்திரத் தகடாகக் கருதி அதைத் தவறவிடுவது இல்லை. அடிமைக்கு அடையாளமாகத் தந்த அட்டையுடன் இவ்வட்டையையும் சேர்த்துக் கட்டிக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வர். மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை அறியார். எத்தனை முறை கூறினால் புரியார். பல நாட்களுக்குப் பல வேளைகளுக்குத் தந்த மருந்தை ஒரே முறையில் சாப்பிட்டு விடுவதுண்டு. பூச்சு மருந்தை உட்கொண்டு விடுவதும், உட்கொள்ளும் மருந்தைப் பூசிக் கொள்வதும் எளிய காட்சி! தங்களுக்கு வேண்டாதவர்களை எவ்வழி கொண்டும் ஒழித்து விடுவது ஆப்பிரிக்கர் இயல்பு. தேடிப் பிடித்து நஞ்சு வைத்து விடுவர். தங்களை மதிக்காதவர், மறைவாக வைத்திருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியவர் ஆயவரையும் நஞ்சூட்டி விடுவர். தங்களுக்கு நஞ்சுவைத்து விடுவர் என்று ஒவ்வொரு நீகிரோவும் அஞ்சுவதுடன், மந்திரத் தகட்டுக்கு மிக அஞ்சுவர். ஆவதும் அழிவதும் மந்திரத் தகட்டால்தான் நடக்கிறது என்பது அவர் களின் திட்டவட்டமான முடிவு. சரியான மந்திரத்தகடு வைத்திருப்பவன் எவனை அழிக்க விரும்பினாலும் அழித்து விடலாம். என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்பது அவர்களின் அசையாத உறுதிப்பாடு தோட்டத்தைக் காப்பதற்கும் மந்திர சீசாக்களை மரத்தில் கட்டி வைப்பர். மந்திரவாதி அப்பகுதியில் திரிவதாக எவரேனும் பரப்பி விட்டால் எவரும் வெளியேறாமல் வீட்டுள் அடைந்து கிடப்பர். பலநாட்கள் பட்டினியாகவும் வீட்டுள் இருப்பர். ஏனெனில், மந்திரவாதி மண்டைச்சில்லை எடுத்து மந்திரத் தகடு செய்து விடுவானாம். புகையிலைக்கு நீகிரோவர் கொடுக்கும் மதிப்பு அளவிட முடியாதது. இங்கு வரும் அமெரிக்கப் புகையிலை மிகக் காரமானது. புகையிலையைச் சில்லறைப்போலப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது புகையிலை தருவதாகச் சொன்னால் பலவேலைகள் நீகிரோவர் செய்யக் காத்திருப்பர். ஒருவரிடம் இருந்து ஒருவராகச் சுக்கானை வாங்கி மாற்றி மாற்றிப் புகைத்துக் கொண்டிருப்பர். நீகிரோ வேலைக்காரர்களில் மிக நல்லவனைக் கூட நம்ப முடியாது. எதனையும் அவர்கள் கைக்கு அகப்படாதவாறு பூட்டிக் காக்க வேண்டும். அல்லது, வேலை செய்யும் போது உடன் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் பெருமைக் குறைவாக எண்ணுவது இல்லை. யாக இல்லாதவர் பொருளை எடுத்துக் கொள்வது தவறு என்று அவர்கள் எண்ணுவதே இல்லை! பூட்டி வைக்காதது கம்பி நீட்டிவிடும் என்பது அவர்கள் பழமொழி. இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழிலுக்குச் சென்ற போது ஒருவன் இறந்துவிட்டால் இறந்தவனுக்குப் பொறுப்பாளி உடன் இருந்தவனே என்று குற்றஞ் சாட்டுவதும் பழிவாங்குவதும் நீகிரோவர் நீதி. நீதிக்காக எவ்வளவு கடுந்தண்டனையையும் தாங்கிக் கொள்வர். தவறு செய்து தண்டனை கிடைக்கவில்லை என்றால் தங்களால் தவறு செய்யப்பட்டவர்கள் அறிவற்றவர்கள் என்று நினைப்பர். நீகிரோவர் சோம்பேறிகள் அல்லர். ஓய்வு ஒழிவின்றி வேலை செய்வர். இயற்கையின் குழந்தைகளாக அவர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தேவை அளவுக்குகே உழைக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குறைவு. அத் தேவைகள் இயற்கையில் எளிமையாகக் கிடைக்கின்றன. அதனால் கூலிவேலை செய்து பொருள் திரட்ட வேண்டிய இன்றியமையாமை இல்லை. திருமணம் செய்தல், துணி எடுத்தல், புகையிலை வாங்குதல் இவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவுக்குகே கூலிவேலை செய்வர். வேண்டிய அளவு தொகை கிடைத்துவிட்டால் வேலைக்குப் போக மாட்டான். ஆதலால் அவரைச் சோம்பேறி என்று சொல்ல முடீயாது. நீகிரோவர் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறைகள் ஆகியன பற்றி ஆராய்ச்சிகள் செய்து நூலாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார் சுவைட்சர். நீகிரோவர் மேல் எக்குற்றத் தையும் ஏற்றமுடியாது. அவர்கள் அறியாமை அத்தகையது! அறிவுடைய கூட்டம் அக்கறை காட்டி வளர்க்காமையே குற்றம் என்பதே உண்மை. 7. கன்னிப் பெருங்காட்டின் கங்கில் ஆல்பர்ட் சுவைட்சர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்களுள் ஒன்று கன்னிப் பெருங்காட்டின் கங்கிலே என்பதாம். ஆப்பிரிக்காவுக்குச் சென்று தாம் செய்த பணி குறித்தும், அங்குச் சென்றதால் உண்டாய பட்டறிவு குறித்தும் விரித்தெழுதி யுள்ளார். அவர் குறிப்பிடும் செய்திகளின் சுருக்கம் வருமாறு. நாலரை யாண்டுகளாக நான் பெற்ற பட்டறிவு இங்கு வந்து பணிசெய்ய வேண்டு என்று நான் செய்த திட்டம் சரியானது என்பதை மெய்ப்பிக்கிறது. இயற்கை வாழ்வினராகிய நீகிரோக்கர் நம்மைப்போல் கொடிய நோய்களில் நலிவடையார் என்று என் திட்டத்தைத் தடுக்குமாறு கூறிய நண்பர்களின் உரை தவறானது என்பது எனக்குத் தெளிவாயிற்று. மற்றை இடங்களைப் போலவே இங்கும் கொடு நோய்கள் உள்ளன. ஐரோப்பியரே கொண்டு வந்தனர். நாகரிகமுறாது இயற்கையின் மடியில் வாழும் இவர்கள் நம்மைப் போலவே நோய்த்துயர் படுகிறார்கள். மருத்துவ உதவி பத்தாண்டுகளுக்கு அறவே நமக்கு இல்லை என்றால் நம் குடும்ப வரலாறு என்னாகும்? இத்துயர் நீகிரோவர்க்கும் உண்டு. நாகரிகம் படைத்த நாம் நம் உறக்கம் நீங்கி நம் கடமையை உணரவேண்டும். தொலையிடங்களிலுள்ள நோயாளர்க்குப் பாடுபடுவதே என் கடன். இறைவன் பெயரால் அனைவர் உதவியையும் வேண்டு கிறேன். நீகிரோவின் தொல்லைகளை அகற்றுதல் நற்பணி, என்பது மட்டுமன்று! நம் தீராக் கடடையும் ஆகும். இறைவன் வழியை பின்பற்றுவராகத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பியர் இந்நாட்டைக் கண்டு பிடித்தது அழிவு செய்வதற்காகவே? இவர்கள் ஆளும் பொறுப்பு ஏற்ற பின்னரும் பலர் இறந்தனர். இறந்து கொண்டு இருக்கின்றனர்; இருப்பவர் நிலையோ மிகச் சீர்கெட்டு வருகிறது. ஐரோப்பியர் செய்துவரும் கேடுகளாலேயே இவை நிகழ்கின்றன. இவர்களுக்குப் பழக்கிவிட்ட குடிகளும், பரவவிட்ட நோய்களும் சீர்கேட்டுக்கு அடிப்படை. நாம் நீகிரோவர்க்குச் செய்யும் நன்மை நல்லெண்ணத்தால் செய்வதாகக் கொள்ளக் கூடாது. நாம் செய்த கொடுமைகளை ஓரளவு ஈடு செய்வதற்கே ஆகும். ஆளுகின்ற அரசு பல மருத்துவர் களை அனுப்ப வேண்டும். சமூகமும், தனிப்பட்டோரும் ஈடுபட்டாதல் வேண்டும். தாங்கள் செய்யும் நன்மையால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்கட்கு ஒரு பெரிய பரிசாக திகழும். நீகிரோவர் பொருளைப் பெற்று நாம் வாழ்க்கை நடத்தவும், பணி செய்யவும் இயலாது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் வாய்ப்புக் களை உண்டாக்கித் தரவேண்டும். இஃது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நோய்த்துயர் இன்னதென்ன அறிந்த கூட்டத்தாரே முதற்கண் இதற்கு உதவ முன்வரவேண்டும். நோய் படுத்தும் பாட்டையும் அல்லலையும் அவரறிவர். நோயால் உண்டாம் துயர் தீரப்பெற்ற ஒருவன் தன்னைப் போலவே பிறனும் அத்துயரில் இருந்து விடுபடுதற்கு உதவுவானாக. இத்தகைவனே குடியேற்ற நாட்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தக்க பொறுப்புடையவன் ஆவன். இக்கொள்கையை உலகம் ஒரு நாள் ஏற்றே தீரும். ஏனெனில் அறிவுக்கும், உணர்வுக்கும் பொருந்திய மறுக்க முடியாத உண்மை இது. என் உடல் நிலை 1918 முதல் குன்றியது. இரண்டு அறுவை யால் குணம் பெறமுடிந்தது. பல இடங்களுக்குச் சென்று சொற் பொழிவு செய்ததாலும் ஆர்கன் இசைத்ததாலும் போர்க்காலத்தில் பட்ட கடனைத் தீர்த்தாயிற்று. தொல்லையிலும் தொடர்ந்து இம்மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை எனக் கொள்கிறேன். போரின் விளைவால் வேண்டிய பொருள்பெற முடிய வில்லை. மருந்தின் விலையோ மும்மடங்கு ஆயிற்று. இவற்றைக் கருதி, யான் சோர்வடைய வில்லை. நான் அடையும் தொல்லைகள் வலிமையூட்டுகின்றன. மக்கட் கூட்டம் உதவும் என்ற எதிர்கால நம்பிக்கையே மிகுகின்றது. நோயில் இருந்து விடுபட்ட பலர் பிறரும் நோயில் இருந்து விடுபட உதவுவாராக. வேறுபல மருத்து வரும் இப்பணிக்கு வருவாராக! சுவைட்சர் உள்ளம் பெரிது! வானினும் விரிவானது! அவர் தொண்டுள்ளத்தின் முத்திரையாக இலங்குவது கன்னிப் பெருங் காட்டின் கங்கிலே என்னும் நூல். அந்நூல், பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறள்மணிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதாம். 8. ஐரோப்பாவில் ஆல்பர்ட் சுவைட்சர் உலகப் போரின்போது போர்க் கைதியாக்கப் பெற்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு வரப்பெற்ற சுவைட்சர் போர்ட்டோ, கெரேசன், செயிண்ட் ரெமி முதலிய இடங்களில் சிறைவைக்கப் பெற்றார். இவரும் இவர் மனைவியாரும் உடல் நலக்குறைவு உற்றனர். 1918ஆம் ஆண்டு சூலைத் திங்களில் விடுதலை பெற்றார். சூரிச் நகருக்குச் சென்று, டிராசுபர்க்கை அடைந்தார். சுவைட்சர் தந்தையாரைக் காண விரும்பினார். அவர் இருந்த கன்சுபர்க் போர்க்களப் பகுதியாக இருந்ததால் இயன்று இசைவு பெற்றே போய்க் கண்டார். போர் அழிபாட்டையும் பஞ்சக் கொடுமையையும் நேரில் கண்டு உருகினார். தம் சொந்த ஊரில் தங்குவதால் தமக்கிருந்த காய்ச்சலையும், களைப்பையும் போக்கலாம் எனக் கருதினார். ஆனால் உடல்நிலை மிகச் சீர்கெட்டுக்கொண்டே வந்தது. ஆகவே மனைவியாருடன் டிராசுபர்க்குக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார். உடல் நலம் பெற்றதும் பணிசெய்வதை நாடினார் சுவைட்சர். மருத்துவப் பணியும், சமய போதனைப் பணியும் டிராசுபர்க்கில் கிடைத்தன. போர்க் கொடுமையால் செருமனியில் அல்லல் படுபவர்க்கு அவ்வப்போது உணவுப்பொருள் அனுப்பி உதவினார். தம் பணிகளின் இடையே நாகரிகமும் தத்துவமும் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதி முடித்தார். 1919இல் பார்சலேனா என்னும் இடத்தில் ஆர்கன் வாசிக்க அழைப்பு வந்தது. சுவீடனைச் சேர்ந்த உப்சலா பல்கலைக் கழகத்தில் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்பு வந்தது. இவ்வழைப்புக்களால் தம்மை உலகம் மறந்து விடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அத்துறைகளில் தொண்டு செய்தற்கு வாய்ப்பு உண்டு என்று மகிழ்ந்தார். பல ஆண்டுகளாகத் தம் மனத்துக் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படுமாறு உலகம் உண்டு என்ற தத்துவக் கொள்கையும் ஒழுக்க நெறியும் என்னும் பொருள்பற்றி உப்சலாச் சொற்பொழிவை நிகழ்த்தினார். போர் மூண்டதற்குப் பின்னர் இலாம்பரினியில் மருத்துவ மனை நடத்துதற்காகப் பட்டிருந்த கடனை எவ்வாறு தீர்ப்பது என ஏங்கிக் கொண்டிருந்தார். சுவீடனில் இருக்கும் போதும் அவருக்கு இவ்வெண்ணம் இருந்தது. இதை அறிந்து இவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த பெருமகனார் ஆர்கன் இசைத்தும் சொற்பொழி வாற்றியும் பணம் திரட்டலாம் என வழி கூறினார். அவ்வுரையை ஏற்றுக்கொண்ட சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அமைந்த மருத்துவமனை குறித்துப் பேசினார்; ஆர்கன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்நாட்டை விட்டுப் புறப்படும்போது தாம் பட்டிருந்த கடனையெல்லாம் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும் அளவுக்குச் செல்வம் சேர்ந்து விட்டது. மீண்டும் ஆப்பிரிக்கா சென்று மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளலாம் என்று முடிவு செய்தற்கும் தூண்டியது. ஆக சுவீடன் வாழ்வு பலவகைகளிலும் சுவைட்சருக்கு மகிழ்ச்சியாயிற்று. உப்சலாவில் இருந்த பதிப்பகத்தார் சுவைட்சர் நடத்திய மருத்துவமனை குறித்து ஒரு நூல் இயற்றித் தருமாறு வேண்டினர். அதனால் கன்னிப் பெருங்காட்டின் கங்கில் என்னும் நூலை இயற்றினார். அந்நூல் பல ஐரோப்பிய மொழிகளில் உடனே பெயர்க்கப்பெற்று நல்ல வருவாய் தந்தது. சொற்பொழிவாலும் ஆர்கன் இசையாலும் பணம் தேடமுடியும் என்னும் துணிவால் தாம் ஏற்றிருந்த பணிகளை விடுத்தார். மனைவியையும், தமக்குப் பிறந்திருந்த ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றார். அங்கே போய் நாகரிகமும் தத்துவமும் என்னும் நூலை எழுதத் திட்டமிட்டார். எனினும் சொற்பொழிவு, ஆர்கன் இசை அழைப்புக்கள் மிகுதியாயின. பொருள் ஈட்ட வாய்ப்பு என்று அவற்றில் மிக ஈடுபட்டார். சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல மேடைகளில் இசை மீட்டினார். அதன்பின் டென்மார்க், செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறு அவர் எண்ணிய எண்ணங்கள் இனிது நிறைவேறிக்கொண்டு வந்தன. 1913இல் இலாம்பரினியில் பணியாற்றச் செல்லுங்கால், ஆசிரியத் தொழில், இசை ஈடுபாடு ஆகியவற்றை விட்டுவிட முடிவு கட்டினார். பிறரிடம் பொருளை எதிர்பார்க்கக்கூடாது என்றும் திட்டமிட்டார். இவ்வனைத்தும் பொது நலம் கருதி மீண்டும் மேற்கொள்ளப் பெற்றன. இறைவன் திருவருள் என்றே இவற்றில் மீண்டும் ஈடுபட்டார். இறைவன் வழிகாட்டுதல் எப்பொழுதும் நன்மையாகவே இருக்கும் என்னும் குறிக்கோளு டையவர்கள் பெருமக்கள்! அவர்கள் வழி தூயது! துலக்கமானது! உலகுக்கு நலம் பயப்பது! அவர்கள் வழி வாழ்வதாக! 9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில் உயிர் இரக்கத்தால் உந்தப்பட்ட ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் வாழும் நீகிரோவர்க்குத் தொண்டு செய்வதற்காக 1913ஆம் ஆண்டு முறையாகப் போய்ச் சேர்ந்தார். அம்முதற்றடவையில் நாலரையாண்டுகள் பணி செய்தார். அதன்பின் ஏற்பட்ட முதல் உலகப் போரால் போர்க்கைதி யாக்கப் பெற்று ஐரோப்பாவுக்கு வந்தார். ஐரோப்பாவிற்கு வந்தாலும் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று தொண்டு செய்வதையே விரும்பினார். அங்குப் போய்ப் பணி செய்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடிக் கொள்வதற்காகவே உழைத்தார். வேண்டிய அளவு பணத்தை ஈட்டியதும் 1910 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலாம்பரினியில் மருத்துவமனை இருந்தது. ஆல்பர்ட் தோற்றுவித்து வளமுற நடத்திய மருத்துவமனை அது. சில ஆண்டுகள் பேணுவாறற்றமையால் அதன் பெரும்பாலான பகுதிகள் அழிபாடு அடைந்தன. ஓரிரண்டு கட்டடங்களின் அடித்தளங்கள் எஞ்சி நின்றன. சிலவற்றின் கூரைகள் பழதடைந்து கிடந்தன. அவற்றைப் பெருமுயற்சியால் சரிப்படுத்தி மருத்துவப் பணி புரிந்தார். நோயாளர் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டு வந்தமையால், ஐரோப்பாவில் இருந்து இரண்டு மருத்துவர்களையும் இரண்டு தாதியர்களையும் வரவழைத்துக் கொண்டார். இந்நிலையில் கடுமையான உணவுப்பஞ்சம் உண்டாயிற்று. வயிற்றுக் கடுப்பு நோய் பெருகியது. மருத்துவமனை போதாததால் இடத்தை மாற்றி விரிவாகக் கட்டவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஆற்று வெள்ளம், மலையில் இருந்துவரும் நீர்ப்பெருக்கு ஆயன தொல்லை தராத மேடான இடத்தில் கட்டடம் கட்டினார். பக்கங்களில் பயன்மிக்க பழமரங்கள் நட்டினார். இரண்டே ஆண்டுகளில் திரும்ப எண்ணியிருந்த அவர் திட்டம் மூன்றரை யாண்டாக வளர்ந்தது. 1927 சனவரியில் புதிய இடத்திற்கு மருத்து வமனையை மாற்றி அமைத்து மற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஐரோப்பாவுக்குப் பயணப்பட்டார். ஐரோப்பாவுக்கு ஆல்பர்ட் வருவதெல்லாம் ஆபிரிக்கத் தொண்டுக்குப் பணம் திரட்டுவதற்குத் தானே. அதனால், ஐரோப்பாவுக்கு வந்ததும் மீண்டும் சொற்பொழிவாலும், ஆர்கன் இசையாலும் பொருள் தேடினார். புனிதர்பால் அடிகளின் பத்தி நெறி என்னும் நூலை எழுதி முடித்தார். செருமன் கவிஞர் கேதேயின் நினைவுப்பரிசு இவரது மனிதசமூகத் தொண்டு கருதி வழங்கப் பெற்றது. அப்பொருளைக் கொண்டு, கன்சுபர்க்கில் கேதேமனை உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு சுவைட்சர் தாமும் தம் மனைவியும் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்கா சென்றனர். நோயாளர் மிகுதியைக் கண்டு மருத்துவமனைக் கட்டடத்தை மேலும் விரிவாக்கினார். மனைவியார்க்கு உடல்நலம் இல்லமையால் அவர் 1930 இல் ஐரோப்பா திரும்பினார். ஆல்பர்ட் 1932 இல் ஐரோப்பாவுக்கு மீண்டார். மீண்டும் 1933 இல் இலாம்பரினி சேர்ந்தார். 1934 இல் ஐரோப்பா திரும்பினார். ஓராண்டு ஐரோப்பாவில் தங்கினார். 1935 சனவரி 4 இல் தம் அறுபதாம் பிறந்த நாளை டிராசுபர்க்கில் கழித்தார். 1935 பெப்ரவரியில் ஆபிரிக்காவுக்குச் சென்று 1939 சனவரியில் திரும்பினார். இதற்கு இடையே 1938 இல் மருத்துவ மனையின் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நிலைமை தோன்றியது. ஆகவே சுவைட்சர் உடனேயே தாம் வந்த கப்பலிலேயே ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார். போர் முடிவால் பிரான்சுக்கும் இலாம்பிரினுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இங்கிலாந்து அமெரிக்கா இவற்றுடன் தொடர்பு உண்டாயிற்று. அமெரிக்க மக்கள் நிரம்ப பொருளுதவி புரிந்தனர். சுவைட்சரின் திருக்கூட்டத்தார் அமெரிக்காவில் பெருகினர்; போரும் நின்றது. பொருளும் உதவிகளும் பெருகின. உதவியாளர்களும் வந்தனர். இலாம்பரினிக்குச் சென்று அமெரிக்கர் பலர் பார்வையிட்டு, சுவைட்சரைப் பற்றியும், அவர் தொண்டு பற்றியும் நூல்கள் எழுதினர். இனி மருத்துவமனை இனிதாக இயங்கும் என்னும் எண்ணத்தால், 1948-இல் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். 1949இல் மீண்டும் இலாம்பரினிக்குச் சென்று 1952-இல் திரும்பினார். அல்லல் அடைவார் அவலம் போக்குதற்கென்றே ஆண்டவனால் அருளப்பெற்றவர் ஆல்பர்ட். அவர் புகழை நாடவில்லை. ஆனால் புகழ் நிழல்போல் தொடர்ந்தது. 1953இல் அமைதிப் பணிக்காக நோபல் பரிசு கிடைத்தது. 1955இல் பிரிட்டிஷ் அரசியார் பெருந்தகைவுடையர் என்னும் பெருமை தந்து பாராட்டினார். நல்லவர் உள்ளமெல்லாம் கோவில் கொண்டார் சுவைட்சர்! அவர் புகழ் வாழ்வதாக! 10. ஆல்பர்ட் சுவைட்சரின் நூல்வளம் உள்ளத்தால் பொய்யாது ஒழுக்கியவர் ஆல்பர்ட் சுவைட்சர். இவர் நூலறிவு, பட்டறிவு, நுண்ணறிவு ஆயவற்றால் கண்டறிந்தவை நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும், உரைவடிவிலும் வெளிப் பட்டன. உலகுக்கு ஒளிகாட்டின. அவற்றுள், இவர் ஆக்கிய நூல்களில் திகழும் அரிய பொருள்களைப் பற்றிச் சிறிது காண்போம். பால் அடிகளின் பத்திநெறி என்பது சுவைட்சர் எழுதிய நூல்களுள் ஒன்று. இயேசு நாதர் வாழ்வு கட்டுக்கதை அன்று என்றும், அவர் வழங்கிய அருள்மொழிகள் புத்தொளி யுடைவை என்றும், ஓர் உயிர் தன்பாலும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் பாலும் ஈடுபாடு கொள்வதே பக்திநெறி என்றும், மனிதன் தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாது இறைவனுடன் இரண்டறக் கலக்க ஆவலுறுவதே பாலடிகளின் உள்ளம் என்றும் அந்நூலில் விளக்கினார். பாக் என்னும் என்னும் இசைக் கவிஞரைப்பற்றி இவர் எழுதிய நூலில் அப்புலவர் உள்ளத்தில் நிறைந்திருந்த இசையை, உணர்வுடன் கையாளும் திறத்தை விளக்கினார். ஆர்கன் கருவியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு நூல் எழுதினார். இசை வல்லார்க்கு இவ்விரு நூல்களும் எளிய விருந்தாயின. நாகரிகத்தின் தத்துவம் என்னும் நூலிலே மேல் நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் உலகம் பற்றி வெளிப்படுத்தப் பெற்ற பல்வேறு கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் வாழ்வுநெறியை இவை எவ்வாறு அமைத்தன என்பதை வரலாற்று முறையில் வெளியிட்டார். காட்டுமிராண்டி தன் குழுவுக்கு உதவி செய்தலே தன் கடமை என உணர்கிறான். பிறர்க்கு உதவி செய்வதைக் கருதாமல் அவன் என் உடன் பிறந்தான் என ஒதுக்குகின்றான். ஒவ்வொரு மனிதனும் நம்முடைய அருளுக்கும் அக்கறைக்கும் உரியவன் என்றால் நிலை நாகரிகம் உடையதெனக் கூறும் சமுதாயத்திலும் காணுதல் அரிதாகின்றது. இனம், சமயம், நாடு என்பன எதிரிடு கின்றன. அண்டையில் வாழ்பவனையும் அயலானாகக் கருதத் செய்கின்றன. இந்நிலை மாற யாவரும் கேளிர் என்னும் அடிப்படை அறம் உண்டாதல் வேண்டும். இதுவே மக்கட் பண்பு. யாவரும் கேளீர் என்னும் பண்பு பின்னர் யாவும் கேளே என்று விரிவடைய வேண்டும். எவ்வுயிர்க்கும் அன்பு காட்டு என்னும் நீதி, ஒழுக்க நெறியின் ஒளியாம். நான் வாழ வேண்டும் என்னும் கொள்கை மற்றோருயிர் நான் வாழ வேண்டும் என்னும் கொள்கைக்கு மாறுபட்டதாக இருத்தல் கூடாது. நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளதும் உயிர் அதுவும் என்னைப்போலவே வாழ விரும்புகிறது என்பதை உணர வேண்டும். இக்கருத்துக்களை விளக்கி உயிர்ப்பத்தி என்னும் நூலை உருவாக்கினார் சுவைட்சர். உலக சமய கோட்பாடுகளை ஆராய்ந்த சுவைட்சர் இந்திய சித்தாந்தங்களை ஆராய்ந்தார். இந்திய சித்தாந்தமும் அதன் வளர்ச்சியும் என்னும் நூலை ஆக்கினார். அதில் வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களையும் கீதை, திருக்குறள் முதலிய நூல்களையும் விரிவாக ஆராய்கிறார். குறளைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சிறப்புடையனவாம். உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறிபரவ விட்டுள்ளார். பகவத்கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கூறுகிறது. மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்ற கருத்து அந்நூலில் கூறப்படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது. மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தியுள்ளார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார். உலகத்தில் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறெந்த நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே உலகம் உண்மை என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப் பெற்றன. மேலும், கன்னிப்பெருங் காட்டின் கங்கில் என் வாழ்க்கையும் கொள்கையும் என் ஆப்பிரிக்கக் குறிப்புக்கள் என்னும் நூல்களையும் சுவைட்சர் இயற்றினார். பொற்சுரங்கம் போன்றவை சுவைட்சரின் நூல்கள்! அவர் நூல்களுக்கு எடுத்துக் காட்டான இலக்கியமாகத் திகழ்வது அவர் வாழ்வு! வாழ்வையே அருள் இலக்கியமாகிய பெருமகன் சுவைட்சர் என்றும் உலகில் வாழ்வாராக. 1. அருந்தவத்தோன் இறைவன் அருளாளன்; அழகே உருவம் ஆனவன்; அவன் அருள் அழகிலே தோய்ந்து தோய்ந்து பாடிய புலவர் பெருமக்கள் பலப்பலர். அவர்களுள் பெருந்தேவனார் என்பார் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர்களுள் ஒன்று பெருந்தேவனார் என்பது. அப்பெயரைத் தம் பெயராகத் தாங்கிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய இனிய பாடல்ஒன்று புறநானூற்றில் கடவுள் வாழ்த்தாகத் திகழ்கின்றது. சிவபெருமானது உருவக் காட்சியிலே உள்ளந்தோய்ந்தார் பெருந்தேவனார்; முடிமுதல்அடிவரை கண்டுகண்டு, எண்ணி எண்ணிக்களிப்படைந்தார்; கவியாகப் புனைந்து கற்பவர் நெஞ்சங் களை அக்கடவுட் காட்சியிலே ஊன்றுமாறு செய்தார். கார் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் கொன்றை மலரைத் தன் திருமுடிக் கண்ணியாகக் கொண்டுள்ளான் சிவன். கண்ணியாக மட்டுமோ அக்கொன்றை திகழ்கின்றது? மார்பில் திகழும் தாராகவும் அக்கொன்றையே உள்ளது. சிவனது செவ்வண்ண மார்பிலே மணி பதித்தால் போல அழகு செய்கின்றது அது. வெண்ணீற்றை விரும்பி அணியும் சிவன் தூய வெள்ளேற்றின் மேல் (காளையின் மேல்) ஏறி வருகின்றான்! அம்மட்டோ? அந்த ஏறே அவனுடைய சிறப்புமிக்க கொடியாகவும் விளங்கிப்பட்டொளி வீசுகிறது. செந்தழல் மேனிச் சிவபெருமான் கழுத்திலே கறை என்ன? ஆம்! நீலகண்டன் அல்லனோ அவன்! அது கறையா? இல்லை! இல்லை! செவ்வண்ணத் திருமேனியில் எழுந்த கருமணி! மண்ண வரும் விண்ணவரும் போற்றும் மாமணி. ஏன்? அமுது வேண்டி அமரர் பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் கிடைத்தது நஞ்சு! இறவாத வாழ்வை விரும்பி அமுதுவேண்டி நின்றோர்க்குக் கிடைத்தது. எளிதில் இறப்பளிக்கும் நஞ்சு! சாவவா பாற்கடல் கடைந்தனர்? சாவாமை நாடிய அவர்கள் சங்கரனைச் சார்ந்து நின்று வேண்டினர். நலிவு செய்யும் நஞ்சை அள்ளி உண்டு நீலகண்டன் ஆயினான். அவன் ஆலம் உண்ட நீலகண்டன் ஆனதால் அமரர் உயிர்தப்பினர். உயிர்அருளிய உரவோனை உயர்த்திப் பாடத்தவறவோ செய்வர்! உயர்த்தி உயர்த்தி அமரர் பாடினர்: அந்தணர் பாடினர்; அடியவர் பாடினர். கறையின் பெருமையே பெருமை! இதோ! சிவபெருமான் ஆண் வடிவாகமட்டுமோ தோன்று கின்றான்? மாதிருக்கும்பாதியனாக - அம்மை அப்பனாக - அருட்காட்சி வழங்குகின்றான். தன் ஒரு பாதியைப் பெண்ணுக்குத் தந்தவண்மை பெரிது. அது மட்டும் அல்லவே! அப்பெண்வேறு தான் வேறு என்று இல்லாமல் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்ளவும் செய்கிறானே அவன்! என்னே விந்தை! செஞ்சடையப்பன் திருமுடியிலே விளங்குவது என்ன? பிறை நிலா அது! அப்பிறையின் எழில் என்னே! ஒளி என்னே! நெற்றிக்கு அப்பிறையூட்டும் அழகு என்னே! அவ்வழகிலே நெஞ்சைப் பறிகொடுத்து வாழ்த்துப் பாடுவது ஒரு கூட்டமா? இரண்டு கூட்டமா? அமரர்கணங்கள் பதினெட்டும் அல்லவா அப்பிறையை வாழ்த்துகின்றன. இனி, பிறையைத் தாங்கிய சடையின் சீர்மைதான் என்னே! உலகத்து உயிர்களெல்லாம் காப்பது நீர். அந்நீரை வற்றிப்போகா மல்காப்பது அச்சடை! அச்சடை வாழ்க! அச் சடை அணிந்த அருந்தவத்துப் பெருந்தேவன் வாழ்க! என்று தொடர்ந்து எண்ணினார் பெருந்தேவனார். தம் எண்ணத்திற்குத் தமிழ்க் கவி உருவம் தந்தார். அவ்வுருவம் அவர் உருவமாகப் புறநானூற்றில் நின்று நிலவுகின்றது. வாழ்க பெருந்தேவனார். 2. அறப்போர் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உண்டாகும் சண்டையே போர் எனப்படுகிறது. அப்போர் மறப்போர் அல்லது வீரப்போர் எனப் பெயர் பெறும். அம்மறப்போரையும் அறப்போர் ஆக்கிய பெருமை பழந்தமிழர் உடைமையாம். அதனை இக் கட்டுரைக்கண் காண்போம். காலமும் இடமும் குறித்துக் களப்போரில் இறங்குவது பழந்தமிழர் போர்ப் பண்பாடு. அவர்கள் போரில் இறங்குமுன் பசுக்களும், பசுக்களை ஒத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளர்களும், மக்கட்பேறு இல்லதவர்களும் பாதுகாப்பான இடங்களைச் சேருங்கள், நாங்கள் போர் செய்யப் போகின்றோம் என்று கூறிப் பறை முழக்குவர். இச்செய்தியை அறிய மாட்டாத பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து பாதுகாப்புச் செய்வர். அதன் பின்னரே போர் தொடங்குவர். மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்பதற்கு இச்செய்தி சான்றாம். போர் நிகழும்போதும், மடித்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படை இழுந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் கொல்லாது போக விடுதல் வேண்டும் என்னும் அறமுறை வீரர்களால் மிகப் போற்றப் பெற்றது. இவ்வாறு அறப்போர்நிகழ்த்திய வீரவேந்தர்களுள் ஒருவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்பவன். வழுதி பலப்பலவேள்விகளை விரும்பிச் செய்தவன். மாற்றார்கள் எவ்வளவு முயன்றும் தழுவிக் கொள்ள முடியாத மதிற் சிகரங்களைக் கொண்டவன். ஆகவே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயர் பெற்றான். அப்பெரு மகனைப் பாடிய பெரும்புலவர் நெட்டிமையார் என்பர். அவர் வழுதியை நேரில் கண்டு அவன் செய்யும் அறப்போரை அழகுபெறக் கூறி வாழ்த்துகிறார். நிலந்தந்த புல்லைத் தின்று, நீரைப்பருகிப் பாலைச் சொரியும் வள்ளற் பசுக்களைக் களப்பலியிடலாமா? கூடாது. கூடவே கூடாது. ஆகவே போர் என்றால் என்ன என்பதையே அறியாத பசுக்களை நாட்டை விட்டே கொண்டு சென்றுகாத்தல் வீரர் கடன். அப்பசுக்கள் மட்டுமோ? அப்பசுக்கள் போல் அருள் பேணும் அந்தணர்களையும் நாட்டு நலம் கருதி காத்தல் கடமை. இனி, மெல்லியல் வாய்ந்த நல்லியல் நங்கையரை அழிப்பது தகுமா? பேயும்இரங்க வேண்டிய பெண்மையை நினைத்து இரக்கம் கொள்ளாதவன் பேராண்மையாளன் ஆவானா? ஆகான்! ஆகவே, மகளிரைக் காத்தல் வேண்டும். வாழப்பிறந்த மாந்தன் தன்குடி வாழ்வுக்குரிய மகப்பேறுபெறுதல்இன்றியமையாக் கடமை. அக்கடமையைச் செய்து முடிக்காத மகப்பேறு வாய்க்காத - பெற்றோர்களைக் கொல்லுதல் பெரும் பாவம். இப்படி எல்லாம் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி அறப்போர் புரியும் முதுகுடுமிப் பெருவழுதி நீ வாழ வேண்டும்; நீடு வாழ வேண்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். எத்துணைப் பல்லாண்டுகள்? ஆடுபவர்க்கு நீடிய பரிசுகளை வழங்கியவனும் கடல்விழா எடுத்துக் களிப்புற்றவனும் ஆகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரிய பஃறுளியாற்று மணல்கள் எத்துணை? அளவிடற்கு அரிது! அவ்வாற்று மணல்போல் எண்ணற்கு அரிய காலங்கள் வழுதி இனிது வாழ்வானாக. அறப்போர் பேணும் அண்ணல் ஆற்று மணல்போல் வாழ்வானாக என்று வாழ்த்தினார் நெட்டிமையார். வழுதி, மன்னவன்; நெட்டிமையார், பாடும்புலவர்; புலவர் வழுதியையா இப்பாடலில்பாடி வாழ்த்தினார். இல்லை! அற நெறியை வாழ்த்தினார். வழுதி அறம் பேணுகிறான்; ஆகவே அவன் வாழ்க என்று வாழ்த்தினார், அறத்தின் மேல் அவர்க்கிருந்த காதல் அது! வாழ்க அறப்போர்! வாழ்க அறவோர்! 3. பெற்ற பரிசில் பூவை நாடிச் செல்லும் தேனீ, பழமரம் நாடிச் செல்லும் பறவை. அவற்றைப் போல் இரவலர் ஈவாரைத் தேடிச் செல்வர். அவ்வாறு, இல்லை என்று இரந்து வருவாரை வரவேற்றுப் போற்றிய பெருமக்களுள் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் ஒருவன். கடுங்கோ, சேரநாட்டு வேந்தன். பாலை என்னும் அகத்திணை பாடுவதில் தேர்ந்தவன். அவனைப் பாடும் பேறு பெற்றார் இளவெயினி என்னும் பெயருடைய புலவர் பெருமாட்டி. இளவெயினி எயினி என்பவருக்குத்தங்கையாக இருந்தார். அவள் தாய் பேய்மகள் என்னும் பெயருடையவர். ஆகவே பேய்மகள் இளவெயினி எனப்பட்டார். அவர் பாலைபாடிய பெருங்கடுங் கோவைப் பாடினார்; பரிசில் பெற்றார். சேரனைப் பாடக் கருதிய புலவர் இளவெயினிக்குச் சேர நாட்டின் நினைவு தோன்றியது அந்நாட்டுத் தலைநகராம் வஞ்சி முன்னின்றது. அவ்வஞ்சி மாநகரில் வாழும் வஞ்சிக்கொடி போன்ற மகளிர்நினைவில் வந்தனர்; அன்னார் ஆன்பொருநை ஆற்றிலே விளையாடும் மணல் விளையாட்டு முன்னின்றது. அண்மையில் போருக்குச் சென்று வெற்றியுடன் திரும்பிய வேந்தனது படைத் திறமும் கொடைத்திறமும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன இக்கருத்துக்களை யெல்லாம் தண்டமிழ்ப் பாமாலையாக்கிப் பாலைபாடிய கோவுக்குச் சூட்டினார் இளவெயினி. மெல்லிய மயிரையுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலங்களையும் உடைய இளைய பெண்கள் மணலில்கோடு கிழித்து உண்டாக்கிய பாவைக்குப் பூக்களைச் சூட்டி விளையாடியும் தண்பொருநை ஆற்றிலே வீழ்ந்து நீர் விளையாட்டு நிகழ்த்தியும் களிப்படையும் வளமை வாய்ந்தது வஞ்சி மாநகர். அவ்வஞ்சி மாநகரின் வேந்தன் சேரமான் அவன் பகைவரின் அரண்களைக் கைக்கொண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த வல்லாளன். அவர்களைப் பாடிச் சென்ற பாடினி மாற்றுயர்ந்த பொன்னால் ஆகிய அணிகலங்களைப் பெற்றாள். அவள் பாட்டுக்கு ஏற்பத் தாளக்கட்டு விடாமல் யாழிசைத்த பாணர் வெள்ளி நாரால் தொடுக்கப்பெற்ற தாமரைப் பூக்களைப் பெற்றான். அவர்கள் பெற்ற பேறு என்னே! என்று வியந்து பாராடினாள் இளவெயினி. கடுங்கோவின் முன்னர் நின்று இவரிவர் இன்ன இன்ன பெற்றார்! யான் எதுவும் பெற்றிலேன்; இவர் இவர்க்கு இன்ன இன்ன நீ வழங்கினை; எனக்கு எதுவும் நீ வழங்கவில்லை என்று குறிப்பாக அறிவுறுத்தினார். வள்ளலின் கை தாழ்க்குமா? அள்ளி அள்ளி வழங்கியது பாடிய எயினி பரிசிலால் மகிழ்ந்தாள். பாடுதல் எமக்கு எளிது; ஆனால் பாடல் நயமறிந்து பரிசு வழங்குவதே அரிது என்று சங்கப் புலவர் ஒருவர் கூறினார். ஆம்! ஈகை, அரிய பண்பு; கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று குறிக்கப்பெறும் பண்புத், தாதா கோடிக்கொருவர் என்று பாராட்டப் பெறும் பண்பு. அப்பண்பில் தலை நின்ற பாலை பாடிய இளங்கடுங்கோ கற்பவர் உள்ளததெல்லாம் நிற்பான் என்பது உறுதி. 4. சேரமான் புகழ் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை ஓரிடத்தே அமைவது அரிது. அறிவு உடையவர் இடத்துப் பண்பும், பண்பு உடையவர் இடத்து அறிவும், அவ்விரண்டும் உடையவர்இடத்து ஆற்றலும் அமையக் காண்பது அரிது. அவை அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து அமைந்துவிடின் அத்தகையவர் பிறர் உள்ளங்களை எளிதில் ஆட்படுத்தி விடுவர் பாடும் புகழுக்கும்உரியவர் ஆவர். அத்தகையவருள் ஒருவனாக விளங்கினான். சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரஞ் சேரல் சேரர் பரம்பரையில் வந்தவன். இரும் பொறை என்பது அவன் பரம்பரைக்குரிய பட்டப் பெயர். யானையின் சிறிய கண்களைப் போன்ற கண்களை உடையவன். ஆகவே இவற்றையெல்லாம் கூட்டி, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனப்பட்டான். இம்மன்னவனைப் பன்முறையும் கண்டு அன்புறப் பழகினார் ஒரு புலவர் அவர் குறுங்கோழியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உழவர் குடியில் பிறந்தவர். ஆகவே, குறுங்கோழியூர் கிழார் என்று பிறரால் அழைக்கப்பெற்றார். அப்பெயரே தம் பெயராக அமைந்து விளங்கினார். கிழார் மாந்தரஞ்சேரலின் அறிவுப் பண்பிலே - பல்கலைத் திறத்திலே தம் நெஞ்சைப் பறிகொடுத்தார். விரிக்க விரிக்க விரிந்து செல்லும் பண்பு மேம்பாட்டிலே தோய்ந்து நின்றார். அவன் ஆட்சியிலே அவன் அடிசார்ந்த குடிமக்கள் அடைந்து நிற்கும் இனிய தண்ணிய வாழ்வை எண்ணி இன்புற்றார். ஆற்றல் பெருகிக் கிடந்தும் அறவழிக்கு அன்றிப் பிறவழிக்கு பயன்படுத்தாத பெருந்தகைமையைப் பெரிதும் தெளிந்தார். குறை சொல்லிக் கொண்டு எவரும் முறை வேண்டிவரும் நிலை இல்லை என்பதையும் அவ்வாறு வரினும் அக்காலையில் வேந்தன் செலுத்தும் செங்கோல் மாண்பு இத்தகையது என்பதையும் சிந்தையில் தேக்கினார். இத்தகைய அரிய தன்மைகள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்து ள்ளமையால் மக்கள் உள்ளங்களில் உண்டாக்கி இருக்கும் நல்லெண்ணத்தையும் ஆய்ந்து உணர்ந்தார். தம் கருத்தை எல்லாம் கூட்டி அதற்குப் பாட்டுருத் தந்தார். வேந்தே! விரிந்த கடலின் ஆழம், பெரிய நிலத்தின் அகலம், காற்று வீசும் திசை, உருவம் அற்று நிலைபெற்ற வானம்இவற்றை எல்லாம் அறிவாற்றல் மிக்கோர் அளப்பினும் அளக்கலாம். ஆனால், அவற்றை அளந்து காணும் அறிவினராலும் நின் அன்பு, அருள், அறிவு ஆகியவற்றை அளப்பது அரிது. சோறு சமைக்கும் போது உண்டாகும் தீயின் வெப்பமும், செங்கதிரோன் வெப்பமும் அன்றி நின்குடிகட்கு வேறு வெப்பம் எதுவும் இல்லை வான வில்லைக் கண்டது அன்றி வாட்டும் கொலை வில்லைநின் மக்கள் அறியார். உழுபடை (கலப்பை) அன்றிப் பிற படைகளை அவர்கள் அறிந்தது இல்லைபிறர் மண்ணை நீ பறித்துக் கொண்டதோ இல்லை அவ்வாறே மண்ணாசை கொண்டு நின்னாட்டின் மேல் வந்தாரும இலர். கருக்கொண்ட மகளிர் மண்ணை உண்டதை அன்றிப் பகைத்து வந்து நின் மண்ணைப் பற்றி உண்டார் இலர். நின் மதிலிலே அம்புகள் தங்கிச் செயலற்றுக் கிடக்கின்றன. அறமோ, நின் செங்கோலிலே தங்கிக் கிடக்கிறது. பழம்பறவை போயினும் புதுப்பறவை வரினும் நடுக்கம் இன்றிக் காவற்கடமை புரிகின்றனனை நீ. ஆகவே நின்கீழ்வாழும் உயிர்கள் அனைத்தும் நினக்குச் சீறுதீமையும் வருதல் கூடாதே என அஞ்சி வாழ்கின்றனர் என்று பாராட்டினார் குறுங்கோழியூரார். உள்ளதை உள்ளவாறு பாடுதல் எமக்கு எளிது என்று காட்டினார் கிழார். உள்ளம் உவக்க ஈவது எனக்கு எளிது என்று காட்டினான் சேரமான். ஈத்துவக்கும் இன்பம் ஒருவர்க்கு மட்டும் அல்லவே! இருவருக்கும் உரியது தானே! வாழ்க ஈத்துவக்கும் இன்பம். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு 5. மறப்பது எப்படி? நின்னை எப்பிறப்பிலும் மறவாமை வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டினான் கர்ணன். என் மார்பைப் பிளந்து பார்; அங்கே நின் உருவைக் காண்பாய் என்று சங்கப் புலவர் ஒருவர் தம் பேரன்புக்குரிய வேந்தனை நோக்கிக் கூறினார். நல்லதை மறப்பது என்பது புல்லியர் பண்பு. உப்பிட்டவரை உள்ளவரைநினைப்பது உயர்ந்தோர் தகைமை அத்தகு உயர்ந்தோ ராகத் திகழ்ந்தார் ஆவூர் மூலக்கிழார். ஆவூரைச் சேர்ந்த புலவர் மூலங்கிழார் சோழன் கிள்ளி வளவனது வரிசை அறிந்து வழங்கும் வள்ளன்மையிலே உள்ளம் தோய்ந்தார். வாரிக் கொடுக்கும் வள்ளல் எனினும், பாடும்புலவர் தகுதி அறிந்து - பாடல் தகுதி அறிந்து - கொடுப்பது அரிது. அவ்வரிய திறமை எளிதில் கைவரப் பெற்றவன் கிள்ளி வளவன். கிள்ளிவளவனை அன்புற நெருங்கி வாழ்ந்த புலவர் மூலங்கிழார். நெடுநாட்கள் அவனைக் காண வாராமல் இருந்தார். அரசனுக்கு அவரைக் காணும் ஆவல் பெரிதாயிற்று; ஏக்கமாகவும் மாறிற்று. எவர் எவரையே கேட்டுக் கேட்டுச் சலித்தான். ஒரு நாள் புலவரையே நேரில் கண்டான். தன் ஆவலை எல்லாம் சேர்த்து எம்மை நினைத்தீரோ? எந்த நாடு சென்றிருந்தீர் என்று வினாவு முகத்தால் எம்முள்ளீர்? எந்நாட்டிடீர்? என்றான். அதற்கு விடையாக அவன் சிறப்புக்களையெல்லாம் வடித்தெடித்த சாறாகப் பாட்டொன்று பாடினார். வேந்தர் வேந்தே! மலை போன்றவை நின் இளைய வலிய யானைகள்; அவற்றின் மேலே, வானத்தில் கறை உண்டாயின் துடைப்பது போல ஓங்கி உயர்ந்த வண்ணக் கொடிகள் யானையைத் தொடர்ந்து செல்லும் படைகள் எண்ணற்கு அரியன. மன்னவனே, நீ சினந்து பார்க்கின்றோரின் இடம் அப்பார்வை மட்டிலே தீப்பற்றி எரிகின்றது நீ அன்பால் விரும்பிப் பார்ப்பவர் நாடுகள் பொன்விளையும் கழனிகளாக மாறுகின்றன.. நீ கதிரோன் இடத்தில் இருந்து நிலவொளியைப் பெற விரும்பினால் விரும்பிய வாறே பெறுவாய் அவ்வாறே நிலவில் இருந்து வெயில் உண்டாக்க வேண்டும் என்று உண்ணினாலும் நின் எண்ணம் நிறைவேறத் தவறுவது இல்லை. வேண்டியவற்றை வேண்டியவாறு முடிக்கவல்ல வீரன் நீ. ஆதலால் நின்குடை நிழற்கண் பிறந்து அந்நிழலே தஞ்சமாக வாழும் யான் நின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ? பிறநாட்டில் இருந்து நின்னை நேரில் காணாமல் வேள்வி அளவால் அறிந்தவர்களும் நின்னைப் பாராட்டி மகிழ்கின்றனர். அரசே, மக்கள் தாம் செய்த நல்வினைக்கு ஏற்றபடி வானுலகம் சென்று ஆங்குள்ள இன்பம் நுகர்வர். ஆனால் அவ்வானிலோ ஒன்றை ஈவாரும் இலர்; இல்லை என்றி வந்து இரப்பாரும் இலர். ஆதலால் அவ்வானம் செயல் இகந்து பொலி வற்றது என்றே கூற வேண்டும் எனப் புலவர் கருதுகின்றனர். ஆங்குப் பெறும் இன்பம் அனைத்தும் நின்னாட்டில் ஒருங்குபெறக் கூடும் என்றே கருதுகின்றனர். ஆகவே புலவர்கள் எங்கு இருந்தாலும் - பகைவர் நாட்டில் இருந்தால்கூட நின் சோழ நாட்டையே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நான் மட்டும் நின்னை மறந்து வாழ்வேனோ? மறவேன். மறவேன்! என்றார் புலவர். தழுவிக் கொண்டான் கிள்ளி வளவன். செல்வக் குவியலிலே திளைப்பவன் வளவன்; பாடிப் பரிசில் பெற்று வாழ்பவர் ஆவூர் மூலங்கிழார் செல்வச் செருக்கு - வறுமைத் தாழ்வு - இவை ஆங்குத் தலைகாட்ட வில்லைஏன்? அன்பு தலைகாட்டியமையே காரணம். வாழ்க அன்பு வாழ்வு! அன்புற் றமர்ந்த வழக்கெனப் வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு 6. கோட்டிடை வைத்த கவளம் கோடு என்பது பல பொருள் ஒரு சொல்; அது வளைவு, மலை, கிளை, கொம்பு, தந்தம் முதலிய பல பொருள்களைத் தரும். இங்கே தந்தம் என்னும் பொருளில் வருகின்றது. யானையின் தந்தங்களுக்கு இடையெ தொங்கும் துதிக்கையில் வைக்கப் பெற்ற கவளம் என்னும் பொருளில் இச்சொற்றொடர் வருகின்றது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை அதிகமான் ஆண்டு வந்தான். அவன் உள்ளத்தால் உயர்ந்தோன். ஊருணி நீர் போலவும், உள்ளூர்ப் பழ மரம் போலவும் அனைவருக்கும் பயன்பட்டு வந்தான். அவனது பேரன்புக்கும் பெருநண்புக்கும் உரிமை பூண்டவராகத் திகழ்ந்தார் ஔவையார். ஔவையார், அதிகமான் அரண்மனையில் இருந்த பொழுது களில், எப்பொழுதும் புலவர் வந்தவண்ணமாக இருப்பதைக் கண்டார். நேற்று வந்து பரிசில் பெற்றோமே என்றும் எண்ணாமல் அவர்கள் மறுநாளும் வந்தனர்; அடுத்த நாளும் வந்தனர்; ஒருவர் இருவராக இல்லாமல் பலராகப் பல நாட்கள் தொடர்ந்து வந்தும் பரிசு பெற்றனர். அதிகமான் அவர்களை யெல்லாம் முதல்நாள் போலவே முகமலர்ந்து வரவேற்றுக் கொடுக்கும் வள்ளன்மையைக் கண்டு உள்ளம் உவந்தார் ஔவையார் தம் நெஞ்சார வாழ்த்தினார். அதிகமானிடம் விடைபெற்றுக் கொண்டு வேறு பல இடங் களுக்குச் சென்று மீண்டும் வந்தார் ஔவையார் அப்பொழுதில் அதிகமானை மிகுதியாகக் காணமுடிய வில்லை; அளவளாவிப் பேசமுடிய வில்லை; பரிசு பெற்று விடை பெற்றுக்கொண்டு போகவும் முடியவில்லை. சேர வேந்தன் அதிகமான் மேல்பகை கொண்டிருந்தான். அதிகமானை அழித்து ஒழிக்கவும் திட்டமிட்டிருந்தான். ஆகவே தன் படையைப் பெருக்கிச் சேரனை அழிக்கும் முயற்சியில் முனைந்திருந்தான் அதிகமான். அதனால் ஔவையாரை முன்னைப் போல் அவனால் பேண முடியவில்லை. நாம் வந்தபொழுது சரியில்லை என்று தமக்குள் ஔவையார் எண்ணினார்; நாட்கள் கடந்தன; பரிசில் தருதற்கு விருப்பம் இல்லாதவன் தான் இவ்வாறு நாட்களை நீட்டிக்கிறானோ என்னும் எண்ணம் அவருக்கு ஒரு நொடிப்பொழுது உண்டாயிற்று! மறு நொடியில் பேதை நெஞ்சமே, என்ன நினைத்தாய்? ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் பல நாளும். ஒருவர், இருவர் என்று இல்லாமல் பலரும், முதல் நாள் போல் பரிசு பெற்றுச் செல்ல வழங்கும் வள்ளல் அதிகமானா நமக்குப் பரிசு வழங்கத் தவறுவான்? தவறான், என்று மறு நொடியிலே எண்ணினார். மேலும் அவர் தம் எண்ணம் வளர்ந்தது. அதிகமான் என்ன வறுமைக்கு ஆட்பட்டு விட்டானா? அணிகலம் அணிந்த யானைகள் அவனிடம் குறைந்து விட்டனவா அழகு நடைபோடும் தேர்களும் குதிரைகளும் குறைந்து பேயினவா? அவன் பரிசு கிடைக்கலாம்; அல்லது நாளை கிடைக்கலாம்; அல்லது காலம் நீடித்தும் கிடைக்கலாம். ஆனால் பரிசு கிடைக்கத் தவறாது. யானை தன் கையில் சோற்றுத் திரளையை - கவளத்தை - எடுத்து வைத்துள்ளது. அதனை உடனே தன் வாய்க்குள் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் அல்லது சற்றே பொறுத்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் வாய்க்குள் போதில் தவறுமா? தவறாது. அதுபோலவே அதிகமான் தரும் பரிசிலும் ஒருநாளும் தவறப்போவதில்லை. அவன் தரும் பரிசு நம் கையகத்தே இருக்கிறது. ஆகவே அருந்துதலில் ஏமாற்றம் கொண்ட என் நெஞ்சமே. நீ வருந்த வேண்டா! அவன் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்! அவன் எடுத்துக் கொண்ட இனிய முயற்சி எளிதில் வெற்றி தருவதாக! வாழ்வதாக அவன் முயற்சி, என்று வாழ்த்தித் தம் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். பூமாலை வாடும்; பொழுதுபோனால் மணமும் தேனும் இல்லையாகும். பாமாலையோ என்றும் வாடா மாலை; வற்றாத் தேன் மணமாலை; அம்மாலையைப் பெற்ற அதிகமான் பேறு பெற்றேன். புகழுடலால் அதனை வாழச் செய்வன அப்பாமாலைகள் தாமே! 7. புலவரின் வள்ளன்மை இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவது வள்ளன்மையாம், வள்ளல் தன்மையே, வள்ளன்மை எனப்படும். வள்ளல்களை நாடித்தேடித் திரிந்து பொருள்பெறும் இயல்புடைய புலவரே வள்ளலாகத் திகழ்ந்த பெருமித மிக்க வரலாற்றை இவண் அறிவோம். பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர். பெரிய குடும்பம் உடையவர்; சுற்றமும் சூழலும் மிக்கவர்; அத்தகையவரை வறுமை வாட்டாமல் விடுமா? சித்தனாரின் மனைவியார் சீரிய பண்புகள் வாய்ந்தவர் மனைக்கு விளக்காக அமைந்தவர்; அவர்தம் அருந்திறப் பெருங் குணத்தால் அண்டை அயலார் அனைவரும் அவருக்குத் தக்க வண்ணம் ஆதரவாக இருந்தனர். குறிப்பறிந்து தாமே முன் வந்தும் பல வகையில் உதவினர்; கைம்மாற்றாகவும் வேண்டுவனவற்றை வழங்கினர்; இத்தகு நிலையிலே குடும்பம் என்னும் வண்டி ஒருவாறு உருண்டு கொண்டு இருந்தது. ஆனால், வறுமையின் வாட்டுதலைப் பிறர் எவ்வளவு நாட்கள் தாம் தடை போட்டுவிட முடியும்? சித்திரனார் குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொண்டது. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கக்கூடும்; வறுமையுள் ஒருவன் உறங்க இயலாது என்பது பொய்யாமொழி. ஆகவே வள்ளலைத் தேடிச் செல்லும் எண்ணம் சித்திரனார்க்கு எழுந்தது. யாரைக் காண்பது? பல்லைக் காட்டி மானம் இழந்து பாடித் திரிவதற்குச் சித்தரனார் உள்ளம் உடன்பட வில்லை. குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல் யார்? என் எண்ணினார். முதிரமலை வள்ளல் - தலைக் கொடையாளி - குமணணே சித்திரனார் நெஞ்சில் தோன்றினான். புலவர் முதிரமலை நோக்கி நடந்தார். காடும் மலையும் கடந்தார்; கால்கடுக்க நடந்தார்; நெஞ்சில் நின்ற குமணனின் நேரில் நின்றார் சித்தரனார். உள்ளார்ந்த அன்பால் வரவேற்று உவகைக் கூத்தாடினான் குமணன். நெடுநாட்கள் தன்னுடன் தங்குமாறு வலியுறுத்தினான் பொழுதெல்லாம் புதுக் கவிதையிலும், இலக்கிய ஆய்விலும் கழிந்தது புலவரோடு அளவளாவி மகிழும் இன்பம் போல வேறு இன்பம் இல்லை என்னும் கருத்துடைய குமணனன் புலவரை எளிதில்போக விடுவானா? புலவர்க்கும் தம்கவியைச் சொட்ட சொட்ட நுகரும் அன்பனை விட்டுப் பிரிய மனம் வருமா? வராது எனினும் புலவர் தம் வறுமை வாழ்வு அடிக்கடி குறுக்கிட்டு ஊருக்குச் செல்லுமாறு ஏவிக்கொண்டே இருந்தது. குமணனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கினார் புலவர். குமணன் அளவிறந்த பொருள்களைப் பரிசாக வழங்கினான். பீடுமிக்க பெருஞ் செல்வர் போல் வீடு புகுந்து சித்தரனாரை வியப்புடன் வரவேற்றார் மனைவியார். பருவமழை வரக்கண்ட பயிர்போல் உற்றார் உறவினர் உவகை எய்தினர். புலவர், தம் மனைவியாரை நோக்கி, அன்புமிக்க மனைவியே, முதிரமலைத் தலைவன் குமணனன் கொடைவளம் இது. இதனை நின்னை விரும்பி வாழ்ந்து வருபவர்க்குக் கொடு. நீ விரும்பி வாழ்பவர்க்கும் கொடு; கற்பு மேம்பட்ட நின் சுற்றத்தார்க்கும் கொடு. நம் வறுமை தீருமாறு பயனெதிர் பாராது வழங்கியவர்க்கும், கைம்மாற்றாகப் பொருள் தந்தோர்க்கும் கொடு; இன்னார்க்கு என்று இல்லாமல் என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்று இல்லாமல் எல்லார்க்கும் கொடு. நானும் அவ்வாறே கொடுப்போன் என்றார். அவ்வாறே பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து பெருவாழ்வு வாழ்ந்தார் சித்திரனார். நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது வள்ளுவ நெறி அந்நெறியைச் செவ்வையாகப் போற்றி வாழ்ந்தவர் செந்தமிழ்ச் சித்தரனார். ஆகவே தாம் பெற்ற வளத்தைப் பிறர்க்கும் பகுத்துத் தந்து ஈத்துவக்கும் இன்பம் எய்தினார். வாழ்க சித்தரனார்! வாழ்க அறநெஞ்சம்! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 8. ஏன் புகழ வேண்டும்? நில்லா உலகத்தில் நிலை பேறுடையது புகழ் ஒன்றே. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றாது நிற்ப தொன்றில் என்பது வள்ளுவம். அப்புகழை அடைதற்கு உலகம் பெரிதும் ஆவலுற்று நிற்கின்றது. அதிலும் புலவர் பாடும் புகழை அடையார் விண்ணுலக்கின்பமும் எய்தார் என்னும் கருத்து சங்க நாளில் இருந்தது. ஆகவே உயர் பெருமக்கள் புலவர் பாடும் புகழை விரும்பினர். புலவர்களும் தக்கோரைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். அத்தகைய புகழ் வாழ்வு ஒன்றை இக்கட்டுரைக் கண் காண்போம். இன்றைய புதுக்கோட்டைச் சீமை முன்னாளில் கோனாடு என்னும் பெயருடன் இலங்கியது. அவ்வூர்க்குப் பெருமைதரும் புலவர் மணியாக குமரனார் என்பார் பிறந்தார். அவர் மதுரையிலே வாழ்ந்தார்; மாடலன் என்பார் வழி முறையில் வந்தார். ஆகவே அவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனப் பெயர் பெற்றார். சோழனது படைத் தலைவனான ஏனாதி திருக்கிள்ளி என்பானைக் குமரனார் கண்டார். அப்பொழுது புலவர்கள் பலரும் அவனைச் சூழ்ந்திருந்தனர் அவனது சீரிய இயல்புகளையும் ஆற்றல்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏனாதியின் பகைவர்களைப் புலவர்கள் பழித்து உரைக்கவும் செய்தனர். திருக்கிள்ளி புலவர்களை நோக்கிப் புலவர் பெருமக்களே, நீங்கள் என்னையே புகழ்கிறீர்கள்; என் பகைவர்களைப் பழிக்கின்றீர்கள்; என்னிடத்தும் பழிக்கத்தக்க தன்மைகள் இருக்கக் கூடும்; என் பகைவர்களிடத்தும் புகழத்தக்க தன்மைகள் இருக்கவும் கூடும். அவற்றை உரைக்காமல் என்னையே புகழ்வது ஏன்? என் பகைவர்களையே பழிப்பதும் ஏன்? என்னைப் பழித்தாலும், என் பகைவர்களைப் புகழ்ந்தாலும் உங்களுக்குப் பரிசு கிட்டாது என்பது உங்கள் எண்ணமா? அவ்வாறு எண்ண வேண்டா. உண்மையை நான் மிக வரவேற்பேன்; மறைக்காமல் பாடுங்கள் என்றான். புலவர்கள் பலரும் அமைதி கொண்டனர், ஆங்கிருந்த குமரனார் வீறுடன் எழுந்தார், வீரச் செம்மலே, தாங்கள் கூறியவாறு உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். தங்களிடம் இன்னாததும் உண்டு; தங்கள் பகைவரிடம் இனியதும் உண்டு; கேளுங்கள்: தாங்கள் அச்சம் என்னும் ஒரு பொருளை அறியாமல் அமர்க்களம் போகிறீர்கள்; ஆங்கும் பகைவர் படைகளுக்கு நேர் முன்னர்ச் சென்று நிற்கிறீர்கள்; வாள் வேல், வில் விளையாடும் வெங்கொடுமைக் களத்திலே புகுந்து வீறுடன் போரிடும் தங்களை அவை வெட்டவும், குத்தவும், துளைக்கவும் செய்கின்றன; அதனால் உடலெங்கும் ஒரே வடுவாகக் காட்சியளிக்கின்றது; ஆதலால் தங்கள் ஆண்மையைப் பிறர் சொல்ல இனிமையாகக் கேட்டவர்கள் நேரில் வந்து தங்கள் உடலைக் காணுங்கால் அது இன்னாததாகத் தோன்றுகின்றது. தங்கள் பகைவர்களோ களத்தில் புறமுதுகிட்டு ஓடி ஒளிவதால் கேள்விக்கு இனிமை இல்லாதவராகத் தோன்று கின்றனர். ஆனால் நேரில் காணும்போது சிறிய வடுவும் இல்லாதவர் களாய்ப் பொலிவு மிக்க உடலுடன் கண்ணுக்கு இனியவராகக் காட்சி வழங்குகின்றனர். தாங்களும் ஒருவகையில் இனியர்; அவர்களும் ஒருவகையில் இனியர்; தாங்களும் ஒரு வகையில் இன்னாதவர்; அவர்களும் அவ்வாறே ஒரு வகையில் இன்னாதவர் எனினும் தங்களை மட்டுமே உலகம் பாராட்டுகின்றது. இஃது ஏன்? எனக்கு உண்மை புலப்படவில்லை. பெருமானே, தாங்கள் அறியக்கூடுமாயின் அறிந்து கூறுக என்றார். திருக்கிள்ளி நுண்ணிய அறிவினன்; புலவர் வஞ்சமாக உரைத்ததிலே உள்ள புகழ்ச்சியை அறிந்தான்; புலவர்களும் வியந்தனர்; குமரனாரின் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் அவையை மகிழ்வித்தன. புலமைச் சீர்மை பெரிது; புகழ்ச்சியால் பழிப்பு உண்டாகவும் செய்யலாம். பழிப்பால் புகழ் உண்டாகவும் பாடலாம் பாடுவோர் திறமையைப் பொறுத்தது. அத்திறத்தில் வல்லவர் மதுரைக் குமரனார் என்பதில் ஐயம் இல்லை. 1. சூயசு - பனாமா - திட்டங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றித் தொகுத்து எழுதுக. மாந்தர் இனத்தின் அயரா முயற்சியால் அமைந்த பெருந் திட்டங்க்ள் பல. அவற்றுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன.இவ்வரும்பெருந் திட்டங் களுக்கும், தொல்பழம் பெருநிலமாம் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். உலக ஒருமைப்பாடு என்பது தமிழர்க்குப் புதுப்பொருள் அன்று. மிகு பழம் பொருளாம். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பழந்தமிழ்ப் பண். உலகம் ஒன்று ஆதலால் அதன் தலைவனான இறைவனும் ஒருவனே என்பது அவர்கள் தெளிவு. காலத்தையும் இடத்தையும் கடந்து தமிழர் கண்ட கனவை, அக்காலத்தையும் இடத்தையும் வென்றே உலகம் காண முடியும். அவ்வாறே கண்டது. விசை ஊர்திகள், நீராவிக் கப்பல்கள், வான்கலங்கள், தொலைபேசி, தொலை அச்சு, கம்பி இல்லாத்தந்தி, தொலைக்காட்சி, சேண்கதிரி முதலாய அறிவியற் புதுமைகள் உலகத்தைச் சுருக்கி நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. இவற்றைப் போலவே சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்களும் உலகத்தைச் சுருக்க உதவியுள்ளன. ஆகவே, உலக நெருக்கம் கருதிய தமிழகக் கனவு, இக்கடற்கால் இணைப்புக்களால் நனவாகியுள்ளதென்பது உண்மையாகும். எகிப்து நாட்டின் கண்ணோட்டம் கீழ்த் திசையில் இருந்தது. கீழ்த்திசை நாடுகளுடன் தொடர்புகொள்ள எகிப்தியர் விரும்பினர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே எகிப்தியர் பண்ட் என்ற கீழ்த்திசை நாட்டுடன் கலை, வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாட்டின் துறைமுகமான ஓபீர் என்ற இடத்தில் இருந்து அவர்கள் தங்கம், தேக்கு, அகில், மயிலிறகு முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அத் தொடர்புடைய நாடே தம் பழந் தாயகம் என்றுகூட எண்ணினர். ஆதலால் எகிப்தியர் கண்ணோட்டம் கீழ்த்திசை நோக்கி இருந்தது இயல் பேயாம். இப் பண்ட் நாடும், ஓபீர் துறையும் எங்கே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அரேபியாவிலும், ஆப்பிரிக்கா விலும் தேடினர். ஆனால் அங்குக் காணவில்லை. பாண்டி நாடே அப் பண்ட் என்றும், அந்நாட்டில் இருந்த உவரி என்னும் துறைமுகமே ஓபீர் என்றும் கால்டுவெல் பெருமகனார் தெளிவு செய்தார். ஆம்! சிந்து வெளி நாள்முதல் தேக்கு, மயிலிறகு, அகில், தந்தம், தங்கம் முதலிய பொருள்கள் தமிழகத்தில் இருந்து உலகெங்கும் போயின. பொருள்கள் மட்டுமோ போயின? தமிழ்ப் பெயர்களும் அத் தமிழ்நாட்டுப் பொருள்களுடன் போயின. இந்நாளிலும் உலகெங்கும் அத்தமிழ்ப் பெயர்களே பல வகையாக மருவி வழங்குவது அதற்குத் தக்க சான்றாகும். இத்தகைய வளமிக்க தமிழகத்துடன் வாணிகம் செய்யும் ஆவலில் இருந்தே எகிப்தியரின் சூயசுக் கடற்கால் கனவு உருவாயிற்றாம். மற்றொரு வகையாலும் தமிழகம் சூயசுக் கடற்கால் தோன்றத் துணையாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கு வர நன்னம்பிக்கை வழி ஒன்றே இருந்தது. இவ்வழியையும் பிரிட்டீசாரே பயன்படுத்த முடிந்தது. ஆகவே புது வழி ஒன்று காண்பதற்காக மேலை நாட்டார் பெரிதும் முயன்றனர். அம்முயற்சியின் விளைவே சூயசுக் கடற்காலாக உருவாயிற்று. தமிழக வாணிகத் தொடர்புபற்றிய ஆவலே சூயசுத் திட்டத்தை உருவாக்கியது போலவே பனாமாத் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவுக்குப் புதுவழி காண மேலை உலகம் முயன்ற பொழுதில் உலகம் உருண்டை என்னும் எண்ணம் அரும்பியிருந்தது. ஆதலால் மேற்கே சென்றால் இந்தியாவின் கிழக்குக் கரையை அடையலாம் என்னும் துணிவுடன் கொலம்பசு என்னும் கடலோடி முயன்றார். அவர் இந்தியாவைக் காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவைக் கண்டார். அவரே இந்தியாவுக்கு மேல்திசை வழிகாண முயன்று ஆத்திரேலியாவைக் கண்டார். தென்கிழக்கு ஆசியாவைக் கண்டு அதனையே இந்தியா எனத் தவறாகக் கருதிக் கொண்டார். செவ்விந்தியர். மேற்கிந்தியத் தீவுகள், கிழக்கிந்தியத் தீவுகள் என்பன இவற்றை விளக்கிக் காட்டும் சின்னங்களாம். பனாமாக் கடல் இணைப்புக்கும், அதன் வரலாற்றுக்கும் தாயகமாக இருப்பது அமெரிக்கா. அவ்வமெரிக்காக் கண்டமே தமிழகத்துடன் வாணிகம் செய்ய எழுந்த ஆவலின் பரிசேயாம். ஆதலால், தமிழகக் கனவால் எழுந்த அமெரிக்க நாட்டிலே அத்தமிழகக் கனவே பனாமாக் கடலிணைப்பையும் உருவாக்கிற்று என்பது நினைவுகூரத் தக்கதாம். சூயசு, பனாமாத் திட்டங்கள் உலக வரலாற்றைத் தம் தளமாகவும், வளமாகவும் கொண்டுள்ளன. இவ்விரண்டின் வரலாற்றின் மீதும் தமிழகத்தின் கனவொளியும் புகழ் ஒளியும் பரவிக் கிடக்கின்றமை நமக்குப் பெருமையளிக்கின்றன. நன்றே நினைமின் நமரங்காள் என்பது நம் முன்னோர் ஒருவர் வாக்கு! 2. ஓருலகச் சாதனைகள் என்பது பற்றி எழுதுக. உலகத்தை ஒரே குடும்பமாக்கி வாழ்வதற்கு உயர்ந்த பெரு மக்கள் எண்ணினர். அரும்பெருஞ் செயல் வீரர்கள் முனைந்து செயலாற்றினர். அத்தகு செயற்பெருஞ் சாதனைகளுள் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாம். உலகம் பலவகைப் பெருங்காப்பியங்களையும் வீரகாவியங் களையும் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆனால் செயல் என்னும் அரங்கத்திலே தீட்டிக் காட்டப்பெற்ற சீரியவண்ண ஓவியப் பெருங்காவியங்களாகச் சூயசு, பனாமாக் கடலிணைப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்பான வீரகாவியங்கள் உலகில் இல்லை என்றே துணிந்து கூறலாம். சூயசு, பனாமா என்பன இயல்பாகவே கடல் பகுதிகள் அல்ல. மிக ஆணித்தான காலம்வரை நிலப்பகுதிகளாகவே இருந்தன. மாந்தன் நிலத்தைப் பிளந்தும், மலையை உடைத்தும் கடலோடு கடலைக் கலக்கவிட்டு உலகக்கடல் வழியைப் படைத்துள்ளான். உலகப் பேரளவில் சுருக்கியுள்ளான். சூயசுத் திட்டம் பழைய உலகைச் சார்ந்தது. பனாமாத் திட்டம் புதிய உலகைச் சார்ந்தது. சூயசுத் திட்டத்தில் நாலாயிர ஆண்டு உலக வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது. பனாமாத் திட்டத்தில் கடந்த நானூறு ஆண்டு நாகரிக உலக வரலாற்றின் தடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் உலக வரலாற்றின் நிலைக்களங்களாக அமைந்துள்ளன. ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் இருந்து நடுக்கடல், செங்கடல் இவற்றால் தனிப்பெரு நிலமாகப் பிரிக்கப் பெற்றிருப்பது ஆப்பிரிக்கா. ஆனால் ஆசியாவில் இருந்து முழுமையும் ஆப்பிரிக்கா பிரிக்கப்பட்டு விடவில்லை. ஒடுக்கமான ஒருநில இடுக்கு அவற்றை இணைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இந்நில இடுக்கே சூயசு நில இணைப்பு. இதனை வெட்டி அகழ்ந்தே கடலிணைப்புத் திட்டத்தை மாந்தர் இனம் நிறைவேற்றியது. இத்திட்டம் 19-ஆம் நூற்றாண்டின் சாதனையாம். அமெரிக்கா தென்வடலாகக் கிடக்கிறது. அதன் இரு பகுதிகள் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா என்பன. ஒரே கண்டம் எனினும் தனித்தனிக் கண்டங்கள் போலப் பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் முற்றிலும் பிரிந்து பட்டுவிடவில்லை. அங்கேயும் நீண்டு ஒடுங்கிய ஒருநில இடுக்கு உள்ளது. அந்நில இணைப்பே பனாமா நிலஇணைப்பு. இதனை அகழ்ந்தே பனாமாக் கடலிணைப்புத் திட்டத்தைப் புத்துலக வீரர்கள் படைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இணையற்ற சாதனை இது. உலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப்பகுதிகள். அவை உயிர்களின் வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள் - பனிப்பாறைகள். பனிப்புயலும், சூறைக்காற்றும் எப்பொழுதும் உண்டு. ஆதலால் வடதென்துருவப் பகுதிகள் போக்கு வரவுக்குத் தக்கவை அல்ல. அவ்வாறே வட, தென் கடல்களும் போக்குவரவுக்குத் தக்கவை அல்ல. ஆகவே உலகமா கடல்கள் ஐந்தனுள் பசிபிப்மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்துமாகடல் ஆகிய மூன்று மாகடல்களிலேயே போக்குவரவு நடத்த முடியும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நிலப்பரப்பு உலகை இருவேறாகப் பிரித்து விடுகின்றது. அதன் வடகோடி வடகலையும், தென்கோடி தென்கடலை ஒட்டியும் கிடக்கின்றன. இந்நிலையில் ஆசியா ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்காவுடன் இணைக்கும் சூயசு நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்புச் செய்தமையால் மேற்கு உலகும் கிழக்கு உலகும் ஓருலகாக வாய்ப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் ஆப்பிரிக்காக் கரை முழுமையும் சுற்றியே மேற்குலகும், கிழக்குலகும் தொடர்பு கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் வடதென் பகுதிகளும் உலகை இரண்டாகப் பிரித்து வடகோடி வடகடலுடனும், தென்கோடி தென்கடலுடனும் பொருந்திக் கிடக்கின்றன. ஆதலால் வடமெரிக்கா தென்னமெரிக் காக்களை இணைக்கும் பனாமா நில இடுக்கை வெட்டிக் கடல் இணைப்பாக்கியமையால்தான் மேற்கு கிழக்கு உலகங்கள் ஓருலகாக வழி உண்டாயிற்று. இவ்விணைப்பு இல்லையேல் தென்அமெரிக்கக் கரை முழுமையும் சுற்றியே ஆகவேண்டும். சூயசு, பனாமாக் கடல் இணைப்புத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பலநாட் பயணத்தையும், பெரும் பணச்செலவையும், பெருகிய அல்லல் களையும் குறைத்துவிட்டன. அன்றியும் உலகைப் பிணைத்து, வாணிக வளமும், தொழில் வளமும் பெருகச் செய்துள்ளன. இத்தகைய செயற்கரிய செயல்களே ஓருலகச் சாதனைகள் என்று கூறத்தகும். வாழ்க உலக ஒருமைப்பாடு! 3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக. சூயசுக் கடலிணைப்புத் திட்டத்தின் முன்னோடி நீலாற்றுக் கால்வாய்த் திட்டம் ஆகும். அத்திட்டம் கி.மு. 2500 ஆண்டுக்கு முற்பட்ட திட்டமாகும். அரிட்டாட்டில், டிராபோ, பிளினி என்னும் அறிஞர் பெருமக்களின் புகழ்ச்சிக்கு நிலைக்களமாக இருந்த பேறு நீலாற்றுத் திட்டத்திற்கு உண்டு. நீலாற்றுக் கால்வாய், பரோவாக்களின் கால்வாய் என்றும் வழங்கப்பெற்றது. பண்டை எகிப்திய மன்னர்கள் பரோவாக்கள் எனப்பெற்றனர். அவர்கள் ஆக்கிய கால்வாய் ஆதலால் அப்பெயர் பெற்றது. நீலாற்றுக்கால், நீலாற்றில் இருந்து பிரியும் பெலியூசக் என்னும் ஆற்றின் கிளையான பூபாசிபிசியில் இருந்து புறப்பட்டு துமிலாத்து, கைப்பேரி இவற்றின் வழியாகச் செங்கடலில் முடிவுற்றது. எகிப்தில் உள்ள பாரக் கூம்புகளுக்குத் (பிரமிடு) தமிழகத் தேக்கு மரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இஃது எகிப்து தமிழக வாணிகப் பழமையை உணர்த்தும். இவ்வாணிகம் கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவே தமிழக மேலை உலக வாணிகமாக 19ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்தது. பழந்தமிழக வாணிகம் இருபெரு வழிகளில் நடந்தது. சீனத்தில் இருந்து ஆசிய நடுமேட்டு நிலவழியாக எகிப்து செல்லும் ஒரு வழி. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தமிழகக் கடலைக் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி மற்றொன்று. முன்னை வழி, பருவமாறுதல் கேட்டாலும், கொள்ளைக் கூட்டத்தார் கொடுமையாலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மறைந்து போயிற்று. ஆதலால் தமிழகத்தின் ஊடாகச் சென்ற கடல்வழி ஒன்றே உலகக் கடல் வழியாக அமைந்தது. எகிப்திய மாமன்னர்களாகிய பரோவாக்கள் தமிழக வாணிகத்தில் பங்கு கொள்ளும் ஆவல் கொண்டமையால்தான் நீலாற்றுக் கால் தோண்டினர். தமிழகத்தின் திசையில் மட்டுமே அது கடல்வழியாகத் திறந்த கடல் காலாகவும், மறு பக்கத்தில் ஆற்றுடன் இணைந்த காலாகவும் அமைந்தது. அந்நாளில்தான் பண்ட் என்னும் பெயரால் பாண்டிநாடும், ஓபீர் என்னும் பெயரால் உவரித் துறைமுகமும் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கின. பரோவாக்களின் கால்வாய் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வந்தது. ஆனால் கி.மு. 7ஆம் நூற்றாண் டளவில் பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெக்கோ மன்னன் தன் பாலத்தீனப் பெருவெற்றியில் பிடித்த 1,20,000 போர்க் கைதிகளைக் கால்வாய் வேலையில் ஈடுபடுத்தினான். எனினும், அவன் அமைச்சர்கள் இப்பணியை விரும்பாமையால் திட்டம் கைவிடப்பெற்றது. கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்து உட்பட நடுவுலக முழுவதும் பாரசீகப் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டது. பேரரசர் டேரியசு, கால்வாயைப் புதுப்பிக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டாலும் முற்றுவிக்கப் பெறாமல் நின்றது. பேரரசர் செர்க்கிசு காலத்தில் மீண்டும் கால்வாய் சேலை தொடங்கப்பெற்று நிறை வேறியதுடன், படகுப் போக்குவரவுக்கு ஏற்ற சீரமைப்புக்களும் செய்யப்பெற்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடுவுலக அரசியல், பேரரசர் அலெக்சாண்டர் கைக்குள் சென்றது. இக் கிரேக்க மரபினருள் டாலமி பிலாடெல்பசு என்பவனும் யூர்கெடிசு என்பவனும் கால்வாயை மீண்டும் சீராக்கிச் செங்கடலில் உள்ள ஆர்ச்சனா துறைமுகத்துடன் இணைத்தனர். அவ்விணைப்பை அன்றி நடுநிலக் கடலுடன் இணைக்கவும் அவர்கள் கனவு கண்டனர். ஆனால் அக்கனவு நனவாகாதலே நின்று போனது. செங்கடலின் நீர்மட்டத்திற்கும் நடுநிலக் கடலின் நீர் மட்டத்திற்கும் வேற்றுமை உண்டு; ஆதலால் இணைப்பு ஏற்படுத்தினால் பேரழிவு உண்டாம் என்று அந்நாளைய மக்கள் எண்ணினர். பரப்பியும் வந்தனர். அதனால் பலவிய அச்சமே கடலிணைப்பைத் தடைசெய்ததுடன், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தொழியவும் செய்து விட்டது. குருட்டு நம்பிக்கையின் கேட்டுக்கு வேறு சான்றும் வேண்டுமோ? எகிப்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. உரோமப் பேரரசன் திராசன் நீலாற்றுக் காலை விரிவு செய்தான். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்து அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆராபிய ஆட்சியில் எகிப்துக்குத் தலைவராயிருந்த அம்ரு, கால்வாயை மீண்டும் செப்பனிட்டார். அவர் நடுநிலைக் கடல் வரை கால்வாயைக் கொண்டுசெல்லவும் கருதினார். அவர் முயற்சியும் ஈடேறிற்றில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கலிபா சாபர் அலி இசுலாமியக் கொந்தளிப்பைப் கருதிக் கால்வாயை மூடுமாறு கட்டளை இட்டார். அந்நூற்றாண்டிலேயே இராசித் என்னும் மன்னன் கால்வாயை விரிவு செய்ய முனைந்தான். ஆயினும் அப்பணியும் துருக்கியர் கடற்படை, எகிப்தின் உள் நாட்டுக்குள் வருதற்குத் துணையாகிவிடும் என்னும் அச்சத்தால் நின்றுவிட்டது. கி.பி. 1811இல் கால்வாயை மூடிவிடுமாறு முகமத் அலி என்பார் கட்டளை இட்டார். ஆனால் முழுமையும் மூடப்பெறாமல் சூயசுக் கடற்கால் வேலை தொடங்கும் வரை நீரோடிக் கொண்டும், போக்குவரவுக்குத் துணையாகிக்கொண்டும் நீலாற்றுக் கால் இருந்தது. அந்நீலாற்றுக்காலே சூயசுக் கடலிணைப்பின்போது நன்னீர்க் காலாக அகழப்பெற்றுக் கடற்காலுடன் இரண்டறக் கலந்துவிடும் பேறு பெற்றது. கனவு காண்பது எளிது! அதனை நனவாக்குவது மிக அரிது. நல்ல கனவொன்று நனவாக எத்தனை முட்டுக்கட்டைகள் உண்டாகின்றன என்றும், நல்ல கனவு எவ்வாறு இறுதியில் இணையற்று ஓங்கி நின்று, வெற்றி கொள்ளுகின்றது என்றும் நீலாற்றுக்கால் திட்டம் உலகுக்கு உணர்த்தத் தவறாது. வாழ்க நல்ல கனவுகள்! வாழ்க நற்கனவை நனவாக்குவோர்! 4. சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையை எழுதுக. எந்தவொரு நினைவு உண்டாதற்கும், செயல் நடைபெறுதற்கும், ஏற்றவொரு தூண்டுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். அவர்கள், தூண்டல் இன்றில் துலங்கல் இல்லை என அறுதியிட்டு உரைப்பர். நாம் இக்கட்டுரையில் சூயசுக் கடலிணைப்பு எண்ணம் உருவாகிய வகையைக் காண்போம். இந்தியா முதலிய கீழை நாடுகளின் செழுமையும் வளமும் மேலைநாடுகளை மிகக் கவர்ந்தன. ஆகவே கீழை நாடுகளுடன் வாணிகம் செய்து வளம் திரட்ட மேலைநாடுகள் மிக விரும்பின. அந்நாடுகளுக்கு உரிய போக்குவரவு வழி நன்னம்பிக்கை முனைவழி ஒன்றாகவே இருந்தது. அவ்வழியுங்கூட நாளடையில் பிரிட்டனுக்கு மட்டுமே உரித்தாகப் போய்விட்டது. ஆதலால் புதுவழி காணும் நாட்டம் மேலை நாட்டவருக்கு உண்டாயிற்று. அந்நாட்டத்தால் உருவாகியதே சூயசுக்கடல் இணைப்புத் திட்டமாகும். சூயசும் அதனை உள்ளடக்கிய எகிப்தும் பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியின் மேலாட்சிக்கு உரியனவாய் இருந்தன. துருக்கி மன்னர்க்குச் சூயசுக் கடலிணைப்புக் குறித்து ஒரு தூதுக்குழு எகிப்தில் இருந்து சென்றது. துருக்கிய மன்னர் இசை வளிக்கவில்லை. திட்டம் தொடங்காமலே நின்று போனது. யூட்சு அலி என்பார் துருக்கியின் மன்னராக வந்த காலையில் சூயசுத் திட்டத்திற்கு ஆதரவு நல்கினார். பிரஞ்சு நாட்டு மன்னரும் இதனால் பேருவகை உற்றார். ஆனால் இத்திட்டம் வீண் செலவில் கொண்டு போய் விடும் என்று துருக்கிய நாட்டு அமைச்சர்கள் கருதினார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், கடலோடிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். எனினும் என்ன, அமைச்சர்கள் எண்ணமே நிறைவேறியது. திட்டம் நிறைவேறவில்லை. திட்டத்தை விரும்பிய அனைவரும் தம்பேச்சிலும் எழுத்திலும் நன்றாக வலியுறுத்திக் கொண்டு வந்தனர். நம்பிக்கை முனைவழி ஒன்றே நன்மை பயப்பது என்ற தன் கருத்தை பிரிட்டன் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. சூயசு வழியின் கேடுகள் இவையென எடுத்துக்காட்டித் தடைப்படுத்தியும் வந்தது. பிரான்சு நாட்டினர் சூயசு வழியைக் காண்பதற்கு இறங்கி விடாதவாறும் பிரிட்டன் அக்கறை கொண்டது. ஆனால் கி.பி. 1798-ல் எகிப்தை வெற்றி கொண்ட நெப்போலியன் கடற்கால் இணைப்புக்குரிய திட்டங்கள் தீட்டினான். நில அளவை ஆய்வு செய்தான். இந்தியாவில் திப்பு சுல்தான் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்நிலையில் அவன் முயன்றாலும் கடல் நீர்மட்டம் தொடர்பான பழைய அச்சம் தலைதூக்கி நின்றது. நடுக்கடல் மட்டத்திலும் செங்கடல் மட்டம் 30 அடி உயர்ந்தது என்று அளவை ஆராய்ச்யிளர் லெப்பேர் முடிவு செய்தார். ஆகவே திட்டம் மீண்டும் கைவிடப்பெற்றது. 19ம் நூற்றாண்டுவரை கீழ்த்திசை அஞ்சல்கள் நன்னம்பிக்கை முனை வழியாகவே சென்றுகொண்டிருந்தன. 1835-ல் வாக்கார்ன் என்பார் எகிப்து நாட்டின் வழியாக அஞ்சல் அனுப்பினால் 70 நாட்கள் குறைவாகும் என்று எடுத்துக் காட்டினார். அதன் பயனாகப் புதிய அஞ்சல்வழி உண்டாயிற்று. கடலில் இருந்து மறு கடலுக்கு எகிப்திய நிலவழியில் அஞ்சல் போக்குவரவு இணைப்பு உண்டாயிற்று. இவ்விணைப்பே கடற்கால் திட்டத்திற்கு மிகத் துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இந்நிலையில் தூய திரு சைமன் சங்கத்தார் சூயசுத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். 1846-ல் திட்ட வேலையை மேற்கொள்ள அனைத்து நாட்டுக் கழகம் ஒன்று அமைத்தனர். திட்டவேலைக்கென மூவரடங்கிய குழுவொன்றைத் தேர்ந்தெடுத்து வேலையைப் பகுத்துத் தந்து விரைந்து நிறைவேற்றக் கருதினர். பங்குகள் திரட்டினர். அப்பொழுதும் பிரிட்டன் இத்திட் டத்திற்கு ஆதரவு தரவில்லை! கடற்கால் திட்டத்திற்கு எதிர்த் திட்டமாக அலெக்சாண்டிரியா - கெய்ரோ - இருப்புப் பாதைத் திட்டம் ஒன்றை வகுத்து அதனை நிறைவேற்றுவதில் முனைந்து பிரிட்டன் வெற்றி கண்டது. கடற்கால் இணைப்புத் திட்டமோ படுத்துவிட்டது. எனினும் அத்திட்டத்தில் ஒருவகை வளர்ச்சியும் உண்டாகியிருந்தது. சைமன் கழகத்தைச் சார்ந்த அன்பாந்தின் நிறுவிய ஆராய்ச்சிக் கழகம், நீர்மட்ட வேறுபாட்டைத் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது. நீர்மட்ட வேறுபாடு என்பது வெறும் அச்சத்தின் விளைவே அன்றி வேறன்று என்று விளக்கிக் காட்டியது. ஆகவே, திட்ட ஆர்வமுடையவர்களுக்கு இவ்விளக்கம் ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. இத்தகு நிலைமையில் தான், பிரான்சு நாட்டுப் பெருவலியாளர் டிலெசெப்சு கடலிணைப்பு அறிக்கை ஒன்றைத் தற்செயலாகக் காணுகிறார். அத்திட்டத்தை நிறைவேற்றுவதே தம் பணியெனக் கொண்டு முழுமையாக இறங்கி வெற்றியும் காணுகிறார்! நல்ல திட்டங்களுக்கு நாலாயிரம் எதிர்ப்புக்களும், தடை களும் உண்டானால்கூட என்றேனும் ஒருநாள் நிறைவேறியே தீரும் என்பதற்குச் சூயசுக் கடலிணைப்புத் திட்டமே சான்றாம். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருவள்ளுவர் 5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல் தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக. எளிதில் நிறைவேறத்தக்க செயலையே பலரும் எடுத்துக் கொள்வர். ஆனால் சிலரோ, அரிய செயல்களையே தேர்ந்து எடுத்துக் கொள்வர்; வெற்றியும் கண்டு வீறுமிக்க நடைபோடுவர். இத்தகையவரைக் கருதியே கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் எந்தல் இனிது என்றார் வள்ளுவர். சூயசுத் திட்டம் யானைப் போரினும் உயரியது அல்லவா! பெர்டிணாண்டு டிலெசெப்சு என்பவர் பிரான்சு நாட்டினர்; பெருஞ் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் தந்தையார் அரசியல் செல்வாக்கு மிக்கவர். முகமதலி எகிப்து மன்னர் பதவிக்கு வர அவரே காரணமானவர் என்றால் அவர் தம் அரசியல் செல்வாக்கை உரைக்கவேண்டியரில்லை! பெர்டிணாண்டு இச் செல்வாக்கால் இளமையிலேயே எகிப்து மன்னர் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தது. அவ்வாய்ப்பே சூயசுத் திட்டம் நிறைவேறத்தக்க சூழலை உருவாக்கியது எனலாம். டிலெசெப்சு தூதராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்தார். நேர்மையையும் உழைப்பையும் - பொன்னேபோல் போற்றி வாழ்ந்த அவர்க்கு எதிராகப் பொறாமைக்காரர்கள் பலர் கிளம்பினர். பொய்க்குற்றம் பல சாட்டினர்! முடிவில் தம் பதவியைத் துறந்தார். அத்துறவும் உலக நலனுக்கென்றே அமைந்தது போலும்! டிலெசெப்சு பதவியில் இருந்தபொழுது ஒரு கடற் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்; அப்பயணத்தில், பொழுது போக்குக்காகப் பார்த்துக் கொண்டிருந்த நூலில் சூயசுக் கடல் இணைப்புத் திட்ட அறிக்கை ஒன்று காணப்பெற்றது. அஃது அவரை மிகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியே அவரைச் சூயசுத் திட்டத்தை முயன்று முடிக்குமாறு ஏவியது. டிலெசெப்சின் நண்பர் இராட்டர் டாம் என்பவர். எகிப்தில் டச்சுத் தூதரகத் தலைவராக அவர் இருந்தார். அவருக்கு ஒரு முடங்கல் தீட்டி அவர் வழியாக எகிப்திய மன்னர் அப்பாசிடம் தம் திட்டத்தை எடுத்துரைக்க வேண்டினார். அதற்கு வாய்ப்பான பதில் கிட்டவில்லை. அரசர் அப்பாசை அடுத்து வந்த மன்னர் டிலெசெப்சின் இளமைக் கால நண்பர். எனவே உரிமை பாராட்டி உண்மை நிலைமையை அவருக்கு விளக்கி எழுதினார். அவரும் அரசியல் முறையில் அல்லாமல் அன்பு முறையிலே அழைப்பு விடுத்துக் கலந்து பேசினார். திட்டத்தையும் உவகையுடன் ஏற்றுக் கொண்டார். கி.பி. 1856-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் டிலெசெப்சின் ஆவலும், எகிப்து மன்னர் இசைவும் உறுதிப்பத்திர உருவங் கொண்டன. அவ்வுறுதிப் பத்திரத் திட்டங்களே இறுதிவரை எழுத்து எழுத்தாகப் பின்பற்றப்பட்டது என்றோ, சிறிய பெரிய மாற்றங்கள் எவையும் செய்யப்பெறவில்லை என்றோ உறுதி கூறுதற்கு இல்லை. நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்ட திட்டம் நிறைவேற்றப் பெற்றது. எனினும் 1856-ஆம் ஆண்டு உறுதிப் பத்திரமே திட்டத்தின் அடிப்படையாக இருந்தது என்று துணிந்து கூறலாம். சூயசுக் கடற்கால் இணைப்பு பெர்டினாண்டு டிலெசெப்சுக்கும், அவர் தலைமையில் அமையும் ஒரு கூட்டுக் கழகத்திற்கும் உரிமையாக இருந்தது. கூட்டுக்கழகம், சூயசுக் கடற்கால் முழு உலகக் கழகம் என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், தரப்பெறும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளில் இருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அவ்வாண்டு நிறையும் போது, உரிமை வழங்கியவரிடமே உரிமை மீண்டும் வந்து சேரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வுரிமையை வழங்கிய தற்காக எகிப்திய அரசுக்கு இத்திட்டத்தால் பெறும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரியாகத் தர வேண்டும்; அதேபோல் எகிப்திய அரசினர் கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்புச் செய்து உதவுதல் வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்டு உறுதிப்பத்திரம் எழுதினர். ஆயினும் திட்டத்தை உடனடியாகச் செயலில் கொண்டு வர இயலவில்லை. எகிப்தின் மேலுரிமை துருக்கியினிடம் இருந்தது. ஆதலால் அதன் ஒப்புதலும் வேண்டியிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்குப் பிரிட்டன் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டையாக இருந்தது. தனி மனிதர் ஒருவர்க்கு இப்பெரிய உரிமையை வழங்கியது பற்றித் துயர் கொண்டது. பிரிட்டன், தன் மனக்குறையை வன்மையாகத் தெரிவித்தது. போதாதென்று, துருக்கி சுல்தான் இத்திட்டத்திற்கு இசையாது இருக்குமாறு தம் செல்வாக்குடைய தூதர் ரெட்கிளிப் என்பவர் வழியாக முயன்றது. டிலெசெப்சு கடற்கால் திட்டத்திற்கு இசைவு பெற வேண்டித் துருக்கிக்குச் சென்றார். சுல்தான் ஆதரவு அவருக்குக் கிட்ட வில்லை. பிரிட்டீசுத் தூதரைக் கண்டுபேச டிலெசெப்சு விழைந்தும் அவருக்கு வாய்ப்புத் தரப்பெறவில்லை. என் செய்வார் டிலெசெப்சு! நேரிடையாகப் பிரிட்டனுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்சனிடம் வாதாடினார். பிரிட்டன் அரசும், செய்தித்தாள் களும் அவருக்கு எதிரிடையாகவே வரிந்து கட்டிக் கொண்டு நின்றன! டிலெசெப்சு விடாப்பிடியாக முயன்றார்! பிரிட்டனின் நிலை மாறவில்லை. அன்றியும் சூயசுத் திட்டம் துருக்கிக்குக் கேடு பயக்கும் என்று கிளப்பி விட்டுத் தடைபடுத்திக் கொண்டிருந்தது. இந்நிலை எகிப்திய மன்னர் சயீதீன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. வெதும்பி வெகுண்டெழுந்தார் அவர். சூயசுக் கடற்கால் இணைப்பு உள்நாட்டுத் திட்டம். ஆதலால் துருக்கியின் இசைவு வேண்டுவதில்லை; திட்டம் தொடங்கலாம் என்று துணிந்து ஆணையிட்டார்! வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா என்பது போல் திட்டம் உறுதியாகி விட்டது. டிலெசெப்சு மகிழ்ந்தார்; உலகமும் மகிழ்ந்தது! ஓருலக உணர்வும் மலர்ந்தது! வாழ்க அயராமுயற்சி! வெல்க வீரர் டிலேசெப்சு! 6. சூயசுக் கடலிணைப்புத் திட்ட நிறைவேற்றம் பற்றி எழுதுக. ஊழையும் உப்பக்கங் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு ஏற்பப் பல்லாற்றானும் தடைப்பட்டு வந்த சூயசுக் கடல் இணைப்புத் திட்டம் உலக நலங் கருதிய பெருமகனார் பெர்டினாண்டு டிலெசெப்சு அவர்களின் அயரா முயற்சியால் நிறைவேறிற்று. சூயசுத் திட்டத்தின் தொடக்கவிழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஐந்தாம் நாள் நடைபெற்றது. பல்லாயிரம் தொழிலாளர் களும், பணியாளர்களும், பொறியில் வல்லார்களும் பேராரவாரங் களுக்கு இடையே தம் பணியைத் தொடங்கினார். முதன்முதலாக டிலெசெப்சு ஒரு கூடை மண்ணைத் தம் கையால் வெட்டி வெளியேற்றினார். அதன்பின், தொடர்ந்து வேலை நடைபெற்றது. எகிப்திய அரசின் முயற்சியால், 60000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் எகிப்தியரே அன்றிப் பிற நாட்டவர்களும் ஈடுபட்டிருந்தனர். புற்றில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புக் கூட்டம்போல் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். உலகச் சாதனையில் தமக்குள்ள பங்கை உணர்ந்து உவகை கூர்ந்தனர். கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ நூறுகல் நீளமுடையது. அவ்வளவு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லுமாறு அகல ஆழம் உடைய கால்வாய் வெட்டுதல் வேண்டும். மண், மணலை அன்றிச் சில இடங்களில் பாறையையும் அகற்ற வேண்டியிருந்தது. குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக நன்னீர்க் கால்வாய் ஒன்றும் தனியாக வெட்டிக் கொண்டு வரவேண்டியிருந்தது. தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் குடியிருப்புகள் அமைத்தல் இன்றியமையாததாயிற்று. இத்துணைப்பணிகளும் இணைந்து நடைபெற்றன. உலகம் இதற்குமுன் கண்டிராத உயரிய திட்டம் இது. ஆதலால் செலவு முதற்கண் திட்டமிட்டுக் கொண்ட அளவினை விஞ்சியது. அன்றியும் அரசியல் பிணக்குகளும், எதிர்ப்புக்களும் திட்ட நிறைவேற்றத்திற்கும், பங்குத்தொகைச் சேர்ப்புக்கும் தடை செய்தன. மனித இயன்முறை கடந்து வன்முறையாகத் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகப் பிரிட்டன் பழி கிளப்பியது. அக்கூற்றைத் துருக்கியும் ஆமாம் என்று வரவேற்றது. இதற்குள் டிலெசெப்சின் நண்பர் சயீத் காலமானார். அவருக்குப் பின்வந்த மன்னர் இசுமாயில் பிரிட்டனின் சார்பாளராக இருந்தார். அதனால் வளர்ந்து வந்த திட்டம் தளர்ந்தது. நன்னீர்க் கால்வாய்ப் பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்வேண்டும் என்று கடலிணைப்புக் கழகத்திற்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை அஃதாயினும், தலைமைப்பொறியாளர்கள் ஏற்று வேலையை நிறுத்தினர் அல்லர். இத்தகு சூழலில் டிலெசெப்சு, பிரான்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை உதவுமாறு வேண்டினார். அவர் நடுவராக இருந்து வழங்கும் முடிவை இரு பகுதியாரும் ஏற்பதாக ஒப்பினர். அறிவார்ந்த மன்னன் நெப்போலியன், திட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற பொறுப்பும் தகுதியும் உடைய தீர்ப்பு வழங்கினார். நன்னீர்க் கால்வாய்ப் பகுதியை மன்னவர் விரும்பிய வண்ணமே அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று நெப்போலியன் தீர்ப்பு வழங்கினார். அதற்கு ஈடாகவும், திடுமென வேலைநிறுத்தம் ஆகிய இழப்புக்காகவும் கடற்கால் கழகத்துக்கு மன்னர் 840 இலட்சம் வெள்ளி தரவேண்டும் என்று கூறினார். இத் தீர்ப்பால் கடற்கால் பணி தொடர்ந்து நடந்ததுடன் பொருள் தட்டுப்பாடும் ஓரளவு குறைந்து, திட்டத்திற்கு உதவியாயிற்று. திட்டவேலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. நான்கு வேறு குழுக்களிடம் வேலை பகுதிகள் ஒப்படைக்கப் பெற்றன. முதற் பிரிவினர் நீற்றுக் கட்டிப் பாளங்கள் உருவாக்கினர். அடுத்த பகுதியினர் கடற்காலில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல்தோண்டும் பொறுப்பேற்றனர். வேறொரு பிரிவினர் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு கற்பாறை பிளக்கும் கடமை ஏற்றனர். இறுதிப் பிரிவினர், எஞ்சிய கடற்கால் பகுதியைத் தோண்டும் பணி ஏற்றனர். இவ்வாறாக தனித் தனியே பொறுப்பு வாய்ந்த குழுக்களின் தலைமையில் திட்டம் நடந்து கொண்டிருந்தது. கடற்கால், கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளம் இருந்தது. அதில் 77 கல் தொலைவுக்குக் கடற்காலின் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடிப் பகுதியில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் தோண்டப்பட்டது. கற்பாறையுள்ள இடங்களில் மேற் பரப்பு 196 அடி அளவு கொண்டு தோண்டப்பட்டது. கி.பி. 1865-ஆம் ஆண்டில் கடற்கால் வேலையை மதிப்பிடுமாறு பலநாட்டு வணிகக் கழகப் பிரதிநிதிகளையும் பார்வையாளராக வருமாறு டிலெசெப்சு அழைத்தார். அவ்வழைப்பை ஏற்றுப் பல்வேறு நாடுகளில் இருந்தும் 100 பேர்கள் வந்தனர். நிறை வேறியுள்ள வேலையை நேரில் கண்டு மிகப் பாராட்டினர். வேலை மேலும் விரைந்து நடக்க அவர்கள் பாராட்டு ஊக்கமளித்தது. செங்கடலில் இருந்தும், நடுக்கடலில் இருந்தும் வெட்டிக் கொண்டு வரப்பெற்ற கால்வாய்கள் இரண்டும் ஒன்றை ஒன்று இணையும் நிலையை அடைந்தது. இரண்டு கால்வாய்களையும் இணைக்கும் நிகழ்ச்சி பெருவிழாவாகவே நடைபெற்றது. முதற்கண் மண்தோண்டும் விழாவைத் தொடங்கிய டிலெசெப்சே கடற்கால் களை இணைக்கும் கடைசி மண்ணை வெட்டி எடுக்கும் உயர் பொறுப்பை நிறைவேற்றினார். செயற்கரிய செய்த செம்மல் டிலெசெப்சு வாழ்க என்னும் வாழ்த்துதல் ஒலிக்கிடையே, உலக ஒருமைப் பாட்டுத் திட்டம் முழுமை பெற்றது. எத்தகைய அரிய முயற்சி இது? உலகங்காணாத உயரிய முயற்சி இது! அம்முயற்சியால் உலகம் அடைந்துள்ள நன்மை இவ்வளவா, அவ்வளவா? இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த அனைவரும் உலகோர் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருப்பர் என்பது உண்மை! 7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப் பற்றி எழுதுக. காடு கழனிகளில் விதைத்த உழவன், விளைவு கைவரப் பெறும்போது எத்துணை மகிழ்வு எய்துவான்! வறுமைக்கும் வாழ்வுப் போராட்டத்திற்கும் ஆட்பட்டுக் கற்றுத்தேறிய ஒருவன் உயர்நிலைப்பதவி ஒன்று எய்தப் பெருங்கால் எத்தகு மகிழ்வு எய்துவான்! இத்தகு நிலைகளினும் உயர்ந்த உவகை கொண்டனர் ஓருலகச் சாதனையாம் சூயசுத் திட்டம் நிறைவேறிய போழ்து. ஆகவே சூயசுக் கடற்கால் இணைப்பு நிறைவு விழாவை உலக விழாவாகவே கொண்டாடி உலகோர் உவகை பூத்தனர். கி.பி. 1869-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ஒரு நன்னாள்! பலகோடி மக்களின் பன்னூற்றாண்டுக் கனவுகள் நனவாகிய இணையற்ற பொன்னாள். அந்நாளே சூயசுக் கடற்கால் பெருவிழா நாளாகும். எகிப்து மன்னர் இணையில்லா மகிழ்வால் எல்லா நாடு களுக்கும் அழைப்பு விடுத்தார். அன்பர்கள் அரசியல் தலைவர்கள், வாணிகப் பெருமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் உலக விழாவைக் காணச் சூயசுக் கடற்காலின் இருபக்கங்களிலும் முதல் நாள் மாலைப் பொழுதிலேயே நிரம்பி வழிந்தனர்! உள்நாட்டுப் பொதுமக்கள் ஈட்டத்தைக் கூறவேண்டுமா! இருகரைகளிலும் நூறு கல் நீளத்திற்கும் இடமின்றிச் செறிந்து நின்றனர். போர்க் கப்பல்கள், வாணிகக் கலங்கள், வண்ணப் படகுகள் ஆயன அணிவகுத்து நின்றன. இந்நாட்டைச் சேர்ந்த மிதப்பு இது என்பதைப் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள் பளிச் சிட்டுக் காட்டின. 17-ஆம் நாள் காலை 11 மணிக்கும் குண்டுகள் முழங்கக் கொடிகள் பறக்கக் கப்பல்கள் சயீத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன. ஒரு கப்பலா? இருகப்பலா? அணிவகுப்பில் கலந்து கொண்ட நாடுகள் 11. அவற்றுக்குரிய கப்பல்கள் 67. உலகம் கண்டறிதற்கு அரிய கப்பல் அணிவகுப்பு இது! முன்னும் பின்னும் பிற கப்பல்கள் செல்ல நடுநாயகமாகப் பிரான்சு நாட்டுக் கப்பல் சென்றது. அதன்மேல் ஓங்கி உயர்ந்து ஒளியுடன் திகழ்ந்தது கழுகுக் கொடி. பிரான்சு நாட்டின் பெருமை மிகு அரசியார் யூசினும், எகிப்து மன்னர் இசுமாயிலும் அக்கப்பலில் இருந்து மக்களின் கரைகடந்த ஆரவாரத்தையும் களியாட் டத்தையும் கண்டு கண்டு உவகைக் கடலில் நீந்தினர். தங்கள் களிப்பைக் கையாட்டுதலாலும் வணக்க வாழ்த்துக்களாலும் புலப்படுத்தினர். பிரசிய நாட்டு இளவரசரும், கனோய் நாட்டு இளவரசரும் விழாவில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தினர்! கடற்காலின் இரு கரைகளிலும் வண்ணக் கொடிகள் வனப்புற விளங்கின. இரவுப் பொழுதிலோ வண்ண விளக்குகளின் வரிசை எங்கும் ஒளிக்கடல் ஆக்கிக்கொண்டு இருந்தது. இதற்கு இடையே கப்பல்களின் அணிவகுப்புச் சென்ற காட்சியும் மக்கள் ஆரவாரமும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. இவை காணாவென்று ஆடல் பாடல்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. எகிப்துப் பேரரசர் பெரிய நாடு ஒன்றைத் தமதாக்கி வெற்றி பெருவிழாக் கொண்டாடினால் கூட இணைகூற இயலாத அளவு பெருவிழாவாகத் திகழ்ந்தது கடற்கால் இணைப்புப் பெருவிழா. ஒரே நாளில் முடியும் விழாவா இது? தொடர்ந்து நான்கு நாட்கள் விழா நிகழ்ந்தது. முதல் நாள் பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் 40 கல் தொலைவே கப்பல்கள் நகர்ந்து சென்றன. இடையே ஒரு நாள் இசுமாலியாப் பெருநகரில் விழாவுக்குள் விழாப்போல் ஒரு விழா எடுத்தனர். 19ஆம் நாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி அடுத்த நாள் சூயசுத் துறையை அடைந்து செங்கடலில் சேர்ந்து விழாவை நிறைவு செய்தனர். விழா நிறைவுற்ற மறுநாளில் இருந்தே மேலை உலகில் இருந்து கீழை உலகுக்கும் கீழை உலகில் இருந்து மேலை உலகுக்கும் நேரிடைச் செல்லும் கடல்வழித் தொடர்பு உண்டாயிற்று. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் என்னும் மொழிக்குச் சான்றாக இலங்கிய பெரியார் டிலெசெப்சின் மேல் உலக மக்கள் நோக்கம் திரும்பியது! பிரெஞ்சு அரசியார் கோமான் என்றும் உயர்பட்டம் வழங்கினார். அதுவரைக்கும் முட்டுக்கட்டையாக இருந்த இங்கிலாந்தும் புகழ்ந்து பேசியது. விக்டோரியா மகாராணியார், டிலெசெப்சைத் தம் பளிங்கு மாளிகையில் வரவேற்றுப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நம்முடைய வாழ்த்தும், இனிவரும் உலகோர் வாழ்த்தும் வீரர் டிலெசெப்சிற்கு உரித்தாம். வாழ்க உலகுக்குழைத்த உரவோர்! 8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக. வீட்டைக் கட்டிமுடித்த பின்னரும் வேறு சில வேலைகள் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். வண்ணம் பூசுதல், தோட்டம் அமைத்தல், மின்னிணைப்புச் செய்தல், நிலைப் பேழைகள், தளவாடங்கள் வாங்கி ஏற்ற முறையில் அமைத்தல் - இன்னவாறு பல பணிகள் தொடர்ந்து நிகழும். அதுபோல் சூயசுக் கடற்கால் திட்டம் நிறைவேற்றப் பெற்ற பின்னரும் சில வளர்ச்சிச் செயல்கள் நிறைவேற்றப் பெற்றன. வளர்ச்சிக்கு எல்லை இல்லை அல்லவா! அறிவியல் வளரவளரக் கப்பல்களும், உருவிலும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒருபெரு நகரமே ஊர்ந்து செல்வது போலச் செல்லும் பெரும் கப்பல்களும் உண்டாகி விட்டன. அவற்றைக் கடற்கால் வழிச் செலுத்த வேண்டுமானால் அதன் ஆழ அகலங்களை மிகுதிப்படுத்துதல் வேண்டும். தொடக்கத்தில் 8 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் அகலமுமாக இருந்தது கடற்கால். அது 1885-ஆம் ஆண்டில் 8 1/2 மீட்டர் ஆழம் ஆக்கப்பெற்றது. பின்னர் அதுவும் போதாதென்று 9 மீட்டர் அளவுக்கு அகழப் பெற்றது. அகலம், சயீத் துறைமுகத்தில் இருந்து கைப்பேரி வரைக்கும் 65 மீட்டர் ஆகவும், அதற்குத் தெற்கே 75 மீட்டர் ஆகவும் வேறுசில இடங்களில் 80 மீட்டர் ஆகவும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது. 1913-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெருங் கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லுமாறு ஏறத்தாழ 11 மீட்டர் அளவுக்கு ஆழமாக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குக் கப்பல் செல்லும் போது எதிரேவரும் கப்பலுக்கு இடம் தருதல் வேண்டும். அத்தகைய கடவு இடங்களில் மட்டும் ஒருகல் அளவுக்குக் கடற்கால் அகலம் முன்னர் இருந்தது. கடற்கால் விரிவுப்பணி தொடங்கிய பின்னர் பெரும்பாலான இடங்களில் ஒரு கப்பல் நின்று மறுகப்பல் கடக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. முதற்கண் போரொளி விளக்குடைய கலங்கள் மட்டுமே இரவுப்பொழுதில் கடற்காலில் செல்ல அனுமதிக்கப்பெற்றன. பின்பு, காலின் இருகரைகளிலும் ஒளி விளக்குகள் அமைக்கப் பெற்றன. ஆதலால் எந்தக் கப்பலும் இரவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சூயசுக் கடற்கால் பணி நிறைவேறிய நாளினும் இந்நாளில் அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கியுள்ளது. அதற்கேற்பக் கடற்கால் புதிய வளர்ச்சிகளைப் பெற்றது. சயீத் துறைமுகத்தில் கப்பல் தங்கு துறைகள், ஏற்றி இறக்கும் பொறிகள், பழுது பட்ட பொறிகளைச் செப்பம் செய்வதற்குதிய பட்டறைகள் ஆயன நிரம்பிய துறையாக மாறியது. சிறந்த கலங்கரை விளக்கம் ஒன்று அமைக்கப்பெற்றது. 2070 கெசத்தில் ஒன்றும் 2730 கெசத்தில் ஒன்றுமாக இரண்டு அலை தாங்கிகள் சயீத் துறைமுகத்தில் கட்டப்பெற்றன. கடற்காலை அன்றித் துறைமுகத்திலும் பல விரிவுப் பணிகள் செய்யப்பெற்றன. 850 கெச நீளமுள்ள பெரிய அலைதாங்கி அமைத்தது, சூயசில் நடைபெற்றுள்ள விரிவுப் பணிகளில் தலைமையானதாகும். மேலும். எகிப்திய சுல்தான் 413 அடி நீளமும் 95 அடி அகலமும் கொண்ட ஓர் இரேவு அமைத்துத் தந்தார். பி அண்டு ஓ கூட்டகத்தார் 300 அடி நீளமும் 85 அடி அகலமும் உள்ள ஓர் இரேவு அமைத்தனர். இத்தகைய சீர்திருத்தங்களால் விரிந்த அளவில் கடற்பயண வாய்ப்புக்கு வகை உண்டானதுடன், கட்டணக் குறைவும் நாளா வட்டத்தில் உண்டாகிக் கொண்டே வந்துள்ளது. கப்பல் அளவைப் பாரம் ஒன்றுக்கு முதற்கண் 10 வெள்ளியாகக் கட்டணம் இருந்தது. 1885 இல் பாரத்திற்கு 9 1/2 வெள்ளியாகக் குறைந்தது. 1906இல் 7 1/2 வெள்ளி ஆயது. 1928இல் சரக்கு கப்பல்களுக்குக் கட்டணம் 7 வெள்ளி என்றும் பிற கப்பல்களுக்குக் கட்டணம் 4 1/2 வெள்ளி என்றும் குறைக்கப் பெற்றது. வாய்ப்புகள் பெருக வருவாய் பெருகுகிறது; வருவாய் பெருக வாய்ப்பும் பெருகுகிறது! உலகுக்கு நலமாகிறது. ஒரு திட்ட நிறைவேற்றம் என்பது முற்றும் முடிந்து விட்டது ஆகாது. மேலும் மேலும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பெற்ற வண்ணமே இருக்கவேண்டிய இன்றியமையாமை உண்டா கின்றது. அதற்கு அறிவியல் வளர்ச்சியும், மாந்தர் தேவையும் காரணங்கள் ஆகின்றன. இவற்றைச் சூயசுத் திட்ட வளர்ச்சிகள் உலகுக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. 9. எகிப்தின் புதுவாழ்வு எகிப்து மிகத் தொன்மையான நாடு. உலக நாகரிகத்திற்கு வித்திட்ட நாடு. பல்வேறு இனங்களைத் தன்னகத்துக் கொண்டு இரண்டறக் கலந்த பெருமைமிக்க நாடு. மேலை உலகும் கீழை யுலகும் ஓருலகாவதற்கு நுழைவாயில் ஆக இருக்கும் கீர்த்திமிக்க நாடு. இத்தகு நாடு பன்னாட்டவர்களின் படையெடுப்பிற்கும், கெடுபிடித் தாக்குதல்களுக்கும் இடமாக இருந்து துயருற நேரிட்டது. ஆயினும் மங்காப்புகழ் படைத்த அந்நாட்டின் தொல்பழஞ் சிறப்பை மாற்றிவிட முடியாது என்பதைக் காட்டத்தக்க எழுச்சியை அந்நாடு கொண்டிருந்தது. அதைப் பற்றிக் காண்போம். உலகச் செல்வாக்கும் வளமும் பெறுதற்கு எகிப்தைத் தன்னகப் படுத்துவதொன்றே வழி என்று நெப்போலியன் உணர்ந்தான். அதே நுட்பத்தை இட்லரும், முசோலினியும் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் தாக்குதலுக்கு எகிப்து உள்ளாயிற்று! அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் எகிப்தைப் பிரிட்டன் காத்தது. ஏன்? எகிப்தில் பிரிட்டன் தன் காலை வலிமையாக ஊன்றிக் கொள்வதற்கே! தொடக்க நாள் முதல் சூயசுத் திட்டத்தை உருவாகாமல் தடுத்தும் ஒழித்தும் வருவதே தொண்டாகக் கொண்ட பிரிட்டன், சூயசுத் திட்டம் நிறைவேறியதும் கடற்காலின் மிகுதியான பங்கு களை விலைக்கு வாங்கியும், அதன் செயற் கழகத்தில் இடத்தைப் பிடித்தும் கொண்டது. உலகப்பெரு வளத்தைப்பெற எகிப்தைத் தன் கைக்குள் வைத்திருத்தல் ஒன்றேவழி என்று பிரிட்டன் கண்டமை காரணமாம். எகிப்து நாட்டைப் பற்றிக்கொள்ளுவதற்குப் பிற நாடுகள் கொண்டிருந்த ஆவலும், அடாச் செயலும் எகிப்திய மக்களின் தன்மானத்திற்குச் சோதனையாயிற்று. எவர் ஆண்டால் என்ன என்றிருந்த எகிப்திய மக்கள் கொதித்து எழுந்தனர். தன் தேச உடைமையைப் பிற நாட்டார்க்கு ஊதாரித்தனமாக எகிப்து மன்னர் அளித்துவிட்டார் என்னும் சீற்றம் எகிப்து மக்கட்கு உண்டாகியது! கிளர்ச்சி மூண்டு வலுத்தது. ஐரோப்பியர் உடைமைகள் பாழாயின. 50 பேர்கள் உயிர் இழந்தனர். இதனால் பிரிட்டீசுப்படை எகிப்துக்கு விரைந்தது. இசுமாலியா நகரைத் தன்னகப்படுத்திற்று. பிரிட்டீசார் எகிப்தில் தம் காலை வலுவாக ஊன்றிக் கொண்டனர். சூயசுக் கடற்கால் ஆட்சிப் பொறுப்பைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாயிற்று. இந்நிலையில் செருமனி, துருக்கியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தைத் தன் கைக்கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கியது. இது பிரிட்டனுக்கு அச்சத்தை உண்டாக்கியது. எகிப்தில் துருக்கியின் மேலுரிமை முடிந்துவிட்டது என்று பிரிட்டன் ஒரு பேரிடியை வீசியது. இதைக்கேட்ட துருக்கி கொதித்தெழுந்தது. எழுந்த விரைவிலேயே பிரிட்டனால் தடுத்து நிறுத்தவும் பெற்றது. 1941-42 ஆம் ஆண்டு களில் எகிப்தும் சூயசும் இத்தாலியின் பெருந் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டனே முன்னின்று காத்தது. தாக்கிய நாடுகளே தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமை உண்டாயிற்று! 1914இல் துருக்கியின் மேலுரிமையை ஒழித்த பிரிட்டன் அதற்குக் காப்பாட்சி நல்கியது. ஆனால் தேசிய உணர்ச்சி காப்பாட்சி அளவில் அமையவில்லை. தன்னாட்சியை வேண்டியது. 1922இல் எகிப்தில் காப்பாட்சி முடிந்ததாகப் பிரிட்டன் அறிவித்தது. ஆனால் பெயரளவில் இருந்ததே அன்றிச் செயலில் வரவில்லை. ஆகவே 1924இல் எகிப்திய மன்னர் சாக்லூல் எகிப்தில் இருந்து பிரிட்டனும் படைகளும் நிதி நீதித்துறைகளில் ஆலோசகராக இருக்கும் ஐரோப்பியர்களும் அகல வேண்டும் என்றும், எகிப்திய ஆட்சி, வெளிநாட்டுத் தொடர்பு இவற்றில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும், எகிப்தில் வாழும் சிறுபான்மையினர், அயல் நாட்டினர் இவர்களையும் சூயசையும் காக்கும் பொறுப்பு எகிப்தியருக்கே இருக்க வேண்டும் என்றும், பிரிட்டனின் முதல் வரிடம் வலியுறுத்தினர். இது, பிரிட்டன் விட்டுக் கொடுக்கும் உதவிகளைப்பெற எகிப்து விரும்பவில்லை; அதனை வெளி யேற்றவே விரும்பியது என்பதைக் காட்டும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்களுடையனவே! அன்னியர் புகலென்ன நீதி என்னும் உரிமையுணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. 1952-இல் குடியரசுப் புரட்சி நடைபெற்றது. பிரிட்டனின் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எகிப்தின் பாதுகாப்புக்கு ஊறுபாடு உண்டானால் உதவிக்கு வரலாம்; ஆனால் அப்பணி முடிந்ததும் அகன்று தீரவேண்டும்; எகிப்துக் கெனப் போர்த் தளவாடங்களும் வானூர்திகளும் வழங்கவேண்டும்; இத்திட்டங்களுக்குப் பிரிட்டன் உதவாவிடில், அதற்கு முன்னைய எந்த ஒப்பந்தமும் நிலைபெறமாட்டா இவ்வாறு எகிப்து வலியுறுத்தியது. புரட்சியின் விளைவாக எகிப்து குடியரசாகியது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர்தம் முதல் நடவடிக்கையே சூயசுக் கடற்காலைத் தேசியமயமாக்கும் திட்டமாக இருந்தது. பிரிட்டன் இதனை விரும்புமா? எகிப்துக்குச் செய்யும் உதவிகளை உடனே நிறுத்தியது. எத்தகைய கட்டுப்பாடும் விதிக்காமல் உருசியா போர்த் தளவாடங்களும், பொருள்வள வாய்ப்பும் செய்தது. எகிப்து அசுவான் அணைக்கட்டுத் திட்டத்திற்கு உலகவங்கியில் 500 கோடி வெள்ளி கடன் கேட்டது. அதற்குப் பிரிட்டனும் அமெரிக்காவும் முட்டுக்கட்டை இட்டன. உடனே எகிப்து தன் பார்வையைச் சூயசுப் பக்கம் திரும்பியது. 1956 சூலை 27-இல் கடற்கால் முழு உலகக் கழகத்தாரிடமிருந்து எகிப்தின் தேசிய உடைமை என்று அறிவித்துவிட்டது. ஆம்! தேசிய உணர்வின் அழுத்தமான முத்திரை இது. சுதந்திரம் எம்பிறப்புரிமை என்னும் ஒலி இந்தியாவில் முகிழ்த்தது. அம்முகிழ்ப்பு அன்னியப்பிடியில் இருந்து இந்தியாவை விடுவித்தது. அத்தகு உரிமை உணர்வே எகிப்தின் தன்மானத்தையும் உரிமை வாழ்வையும் காத்தது. வாழ்க உரிமை உணர்வு! 10. புத்துலகக் கனவு என்பது பற்றித் தொகுத்தெழுதுக. நல்ல கனவுகள் வல்லவர்க்கு வாய்க்குமானால் அது நனவாகி நாடும் உலகும் நலம்பெற உதவும். அவ்வகையால் புத்துலகமாம் அமெரிக்காவில் தோன்றிய பனாமா இணைப்புக் கனவு பரந்த இரண்டு உலகத்தையும் சுருக்கி, ஓருலகாக இணைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது. அதனைப்பற்றிக் காண்போம். அமெரிக்காவை முதன்முதலாகக் கண்ட கடலோடி கொலம்பசு. ஆனால் முதற்கண் பனாமாப் பகுதியைக் கண்டவர் ரோடரி கோடி என்பவரே. அவர் பனாமாவை 1501ஆம் ஆண்டில் கண்டார். 1502ஆம் ஆண்டில் கொலம்பசு செய்த நான்காம் கடற்பயணத்தின்போதே பனாமாவைக் கண்டார். அவரிடம் மேற்கிந்தியப் பழங்குடி மக்கள் பனாவைக் கடந்து செல்ல ஒரு கடற்கால் இருப்பதாகக் கூறினர். ஆயினும் அக்கடற்காலை கொலம்பசு கண்டார் அல்லர். அவருக்குப் பின் நூனெசு டி பல்போவா என்பவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் முயன்று பார்த்துக் கடற்கால் எதுவும் இல்லை; நிலக்காலே உண்டு என்று தெளிந்தார். அவரே பசிபிக் கடலைக் கண்டு பனாமாத் திட்டத்தையும் கனவு கண்டார். ஆதலால் பசிபிக் மாகடலில் பல்போவா என்னும் ஒரு துறைமுகம் அவர் பெயரால் பின்னாளில் அமைக்கப் பெற்றது. பனாமாத் திட்டத்திற்கு முதற்கண் செயல்முறை நடவடிக்கை எடுத்துக்கொண்டவர் இசுபானிய நாட்டின் அரசரான 5-ம் சார்லசு என்பவரே. அவர் பனாமா வட்டார ஆட்சித் தலைவருக்கு 1534ஆம் ஆண்டிலேயே செயல்முறை ஆய்வு செய்யுமாறு கட்டளை இட்டார். அவர் கருதிய வண்ணம் நில ஆய்வு வெற்றி தரவில்லை. வட்டாரத் தலைவரின் அறிக்கை திட்டத்திற்குக் கேடு செய்யும் நிலையில் இருந்தது. வீரன் கென்னாண்டோ பின்னர் இத்திட்ட ஆய்வில் முனைந்தார். நான்கு பாதைகளில் ஆய்வு நடாத்தினார். இவ்வாறே நான்கு நூற்றாண்டுகள் அதாவது 16 முதல் 20-ம் நூற்றாண்டு வரை பலநாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. எழுத்தாற்றல் மிக்க வான்கம்போர்டு, பெஞ்சமின் பிராங்கலின் ஆகியோர் தம் எழுத்து வன்மையால் திட்டம்பற்றி ஆய்வாளர் களைத் தட்டி எழுப்பினர். தூயதிரு சைமன் கழகத்தார் சூயசுத் திட்டத்துடன் பனாமா திட்டத்தையும் இணைத்து விளம்பரப் படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் புத்துலகக் குடியேற்றத்தில் இசுபானிய நாட்டிற்கு இருந்த ஆதிக்கம் தகர்ந்தது. அமெரிக்கா முதலாய மேலை நாடுகள் பனாமா ஆய்வில் தலைப்பட்டன. அமெரிக்க உள் நாட்டமைச்சர் கென்ரிகிளே என்பவரும் காலன் என்பவரும் திட்டவரைவுகள் செய்வதில் முனைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த பாமர்சு என்பவர் கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சாக்சன் ஆய்வு நடத்தினார். கொலம்பிய குடியரசுடன் ஒப்பந்தம் செய்யவும் முயன்றார். ஆனால் இவையெல்லாம் அரைகுறை முயற்சிகளாகவே நின்றன. 1849-ஆம் ஆண்டில் காலிபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசின் மேல் கடல் பகுதியான அக்காலிபோர்னியாவில் இருந்து கீழ்கரைப் பகுதிக்குத் தங்கத்தைக் கொண்டு செல்லவும், பிறதொடர்புகள் கொள்ளவும் வேண்டிய தாயிற்று. ஆதலால் மேற்கு, கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் முனைப்பில் பனாமா இருப்புப் பாதை வழி உருவாயிற்று. இந்நிலவழி பனாமாக்கடல்வழி உண்டாகப் பெருந் தூண்டுதலாக இருந்தது. 1879-ஆம் ஆண்டு லூசியன் வைசு என்பவர் கொலம்பியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கடற்கால் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பன்னாட்டுப் பேரவை ஒன்றுகூடி இத்திட்டம் பற்றி ஆய்ந்தது. வைசு பெற்றிரந்த உரிமையை வாங்க முடிவு செய்தது. முழு உலகக் கழகம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பைச் சூயசுத் திட்ட முதல்வர் டிலெசெப்சே கொள்ள முடிவாகியது. வேலையும் தொடக்கம் ஆகியது. இவ்வாறாகப் புத்துலகம் கண்ட கனவு தன் அடியெடுப்பைத் தொடங்கி வைத்தது. தன் குடும்பம் தன் சுற்றம் தன் ஊர் எனத் திட்டம் தீட்டி வளர்ப்பவர் பலர். ஆனால் உலகநலம் கருதித் திட்டம் தீட்டுவோர் அறியர். அத்தகைய அரிய பெரிய சால்பாளர்களால் தான் உலகம் நல்வாழ்வு வாழ்கிறது. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது உலகப் புலவர் வள்ளுவனார் வாக்கு! 11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக. புதிய உலகத்தையும் பழைய உலகத்தையும் ஓருலகாக்கிக் காட்டும் உயர்ந்த உணர்வால் உருவாகியது பனாமாத் திட்டம். அத்திட்டத்தின் மலர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம். சூயசுக் கடற்கால் திட்ட வீரர் டிலெசெப்சு பனாமாத் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணியாற் றினார். ஆனால் சூயசுத் திட்டத்தைப்போல் வெற்றியாக அவரால் நடத்த முடியவில்லை. அவர் பொறுப்பேற்றிருந்த பிரெஞ்சுக் கழகமே 1889இல் கலைக்கப் பெற்றுப் புதியதோர் பிரெஞ்சுக் கூட்டுக் கழகத்தின் பொறுப்பில் திட்டம் விடப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசும், பனாமாக் குடியரசும் பெரும்பங்கு கொண்டு திட்ட நிறைவேற்றத்திற்கெனப் பாடுபட்டன. 1899இல் அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் மக்கின்லி கொலம்பியக் குடியரசின் ஒப்பந்தத்துடன் கடற்கால் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். அதன்பின் அமெரிக்கக் கூட்டரசே பிரெஞ்சுக் கழகத்தினிடமிருந்து கொலம்பிய ஒப்பந்தப்படி பனாமாத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றுக் கொண்டது. அமெரிக்க அரசுக்குத் தரப்பெற்ற உரிமைகள் 100 ஆண்டுகள் செல்லும் என்றும், பின்னர் நூற்றாண்டுதோறும் உரிமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்யப்பெற்றது. கடற்கால் ஆட்சி உரிமை அமெரிக்கக் கூட்டரசுக்கே என்றும், திட்டப் பகுதியின் நில உடமை கொலம்பியக் குடியரசுக்கே என்றும், உரிமை மதிப்பாக முதற்கண் 1 கோடி அமெரிக்க வெள்ளியும், பின்னர் ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் அளிக்கவேண்டும் என்றும், திட்ட வேலைகளை நான்கு ஆண்டு களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. இத்திட்ட ஒப்பந்தம் பெரும்பாலும் கொலம்பியாவுக்கே நன்மை யாக இருந்தும்கூட அது அதனை மறுப்பதிலேயே முனைந்தது. அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் ரூசுவெல்டு சினங்கொண்டார். இந்நிலைமையில் பனாமா தன்னுரிமைக் கிளர்ச்சியில் இறங்கியது. அதற்கு அமெரிக்க அரசு மிகத்துணை புரிந்தது. ஆதலால் பனாமா விரைந்து தன்னுரிமையும் பெற்றது. உடனே அமெரிக்கக் கூட்டரசு பனாமாக் கூட்டரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது. புதிய ஒப்பந்தத்தால் பனாமாக் கடற்கால் பகுதி முழு உரிமையும் அமெரிக்கக் கூட்டரசுக்கே உடமை ஆயிற்று. அதற்கு ஈடாகப் பனாமாவின் விடுதலையை ஏற்பதுடன், முதற்பொருளாக ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் தர இசைந்தது. கடற்கால் அகழ்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மிக நெருங்கிய நில இடுக்கு ஆகும். பசிபிக் மாகடல் முகத்திலுள்ள பல்போவோத் துறைமுகத்தில் இருந்து அட்லாண்டிக் மாகடல் முகத்திலுள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடியும். அக்கால் 50 கல் நீளம் உடையது. வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடரும் கேதன் ஏரியும் இக்கால் பகுதியில் உள்ளன. கேதன் ஏரிக் கோடியில் கேதன் பூட்டுக்கால் என்னும் அமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கப்பல்களை இறக்கி ஏற்றும் நீரேணியாக இது பயன்படுகிறது. இப்பகுதியைக் கடந்து 7 கல் தொலைவுக்குக் கடல் மட்டத்திலேயே கால் சென்று அட்லாண்டிக் மாகடல் முகப்பில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்தில் முடிகிறது. கேதன் ஏரி கடந்த பகுதி மிராப்ளோர்சு ஏரி என்னும் நீர்த்தேக்கத்தின் ஊடே கடற்கால் செல்கிறது. இதன் நீளம் 3 கல். இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. எனினும், கடல்மட்டத்தைவிட 54 அடி உயர்ந்தது. கேதன் ஏரிக்கும் மிராப்ளோர்சுக்கும் இடையே உள்ள பெட்ரோ மிகுபெல் என்னும் பூட்டு, ஒரு படி நீரேணியாக இருந்து கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி மட்டத்திற்குக் கொணர்கிறது. இதன்பின் மிராப்ளோர்சு பூட்டுக்கள் என்னும் இரண்டு படிகள் உள்ள நீரேணி அமைப்பு, கப்பல்களை 54 அடி கீழே இறக்கிக் கடல் மட்டத்தில் விடுகிறது. இதன்பின் கடற்கால் 7 கல் தொலைவு சென்று பல்போவோத் துறையில் சேருகிறது. ஊடுநெடுந் தொடர்மலையைப் பிளந்தே கடற்கால் அமைப்புச் செய்தனர். அப்பணியைத் திறமாகச் செய்தவர் கால்லியர்டு. ஆகவே இவர் பெயரால் கால்லியர்டு பிளவு என அது பெயர் பெற்றது. அப்பிளவுக்கு அப்பால் சாக்ரிசு என்னும் ஆறு கடற்காலில் சேர்கிறது. அப்பால் கேதன் அணை உள்ளது. ஆங்குள்ள நீர்ப்பெருக்கால் குன்றுகள் தீவுகளாக மாறின. அத்தீவு களில் பெரியது பாரோ கொலராடோ என்பது. கேதன் அணை அன்றி மாடன்அணை என்பது ஒன்றும் உண்டு. அது கடற்கால் பணிநிறைவேறிப் பதினாறு ஆண்டுகள் கழிந்தபின் அமைக்கப்பெற்றது. இவ்வமைப்பால் கப்பல் போக்கு வரத்து மட்டும் அன்றி, நீர்ப்பெருக்கமும், அதனால் நிலவளப் பெருக்கமும் ஊற்றெடுக்கத் தொடங்கின. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ? என்று தாயுமானவர் வினாவினார். வல்லவர் வகுத்த வாய்க்கால் பொற்சுரங்கமாகப் பொலிவதை இன்று காண்கிறோம். வினையே ஆடவர்க்கு உயிர் 12. பனாமாத்திட்ட முடிவின்பின் ஏற்பட்ட வளர்ச்சிப் பணிகளை விவரிக்க. அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது. மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவி அதனையும் தன் காலடிக்கீழ்க் கொண்டுவரும் அளவில் வளர்கின்றது. இந்நிலைமையில் எந்தத் திட்டமும் முதற்கண் ஏற்பட்ட அளவிலேயே அமையும் என்பதற்கு இல்லை. அவ்வகையில் பனாமாத் திட்ட நிறைவின் பின் உண்டாய வளர்ச்சிகளைக் காண்போம். பனாமாப் பூட்டுக் கால்களும் அவற்றில் அமைக்கப்பெற்ற பொறிகளும், படகுகளும், சிறு கப்பல்களும் போய்விடும் அளவுக்கே பயன்பட்டன. ஆனால், மிகப்பெரிய நீராவிக் கப்பல்களும், போர்க்கப்பல்களும் போய்வரவேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. அத்தேவைக்கு ஏற்றபடி கடற்காலை கேழவும், அகலமாக்கவும் வேண்டியதாயிற்று. அதற்காக நாள்தோறும் பணிகள் தவறாமல் நடைபெற்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. செயலாட்சி, அமைப்பாட்சி, நிலஆட்சி, பொருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி என்னும் பல்வகை ஆட்சிக் குழுக்கள் தனித்தனி - ஆனால் - வளர்ச்சியில் ஒன்றுபட்டு அயராது உழைத்த வண்ணம் இருக்கின்றன. கொள்ளை நோய்க் கொடுமையைப் பனாமாவில் இருந்து மட்டுமென்ன பாருலகம் எங்கும் கூடத் தலைகாட்டாவண்ணம் செய்யத்தனி முயற்சி கொண்டுள்ளனர். பசிபிக் கடலில் உள்ள பல்போவாத் துறைமுகத்திலும், அட்லாண்டிக் கடலில் உள்ள கிறித்தோபல் துறைமுகத்திலும் பெரும் பெரும் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் செய்யப்பெற்றன. கப்பல் பணிப் பட்டறைகளும் கப்பல் கட்டுமான நிலையங்களும் அமைக்கப் பெற்றன. பணி செய்வோர் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியன திட்டமிட்டுக் கட்டப்பெற்றன. கடற்காலின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குக் கப்பல் எட்டுமணி நேரத்தில் சென்றுவிடுகின்றது. ஆனால் அக்கப்பல் வருதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே அதனை வரவேற்றகத்தக்க முன்னேற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. கடற்காலின் செயற் சீர்மையை விளக்கும் சீரிய சான்று இது. கடல்கால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அடிக்கடி நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் திட்ட நிறை வேற்றத்தின் பின் 1916ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சறுக்கல் உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பேரிழப்பு உண்டாக்கிற்று. கடற்காலில் சரிந்த மண்ணை வெட்டியெடுத்து வெளியேற்றுதற்குப் பெருமுயற்சி வேண்டியிருந்தது. ஆயினும் அயரா முயற்சியால் திட்டமிட்ட கால எல்லைக்கு முன்னரே பணியை நிறைவேற்றி யதுடன் சிறப்பாகவும் செய்து முடித்தனர். எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர், திண்ணியர் ஆகப் பெறின் என்பது வள்ளுவர் வாய்மொழி அல்லவா! ஒரு கப்பல் கேதன் ஏரியில் இருந்து கடலுக்குச் செல்லும் போது 520 இலட்சம் காலன் நீர் ஏரியில் இருந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஓர் ஆண்டுக்கு 4850 கோடி குழியடி நீர் கடலுக்குச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஏரிப்பரப்பின் நீர், வெப்பத்தால் ஆவியாதலாலும் வற்றுகின்றது. இவற்றை ஈடு செய்தற்கென்று கட்டப்பெற்றதே மாடன் அணைக்கட்டு என்பதாகும். அந்நீர்ப் பெருக்கம் கடற்கால் பூட்டுக்கு மட்டுமன்றி, மின்சாரம் எடுப்பதற்கும் குடிநீர் வாய்ப்புக்கும் உதவியாயிற்று. 1929ஆம் ஆண்டில் கடற்காலில் சென்ற கப்பல்கள் 6289 ஆகவும் அவற்றால் கிட்டிய வருவாய் 2,71,11,000 வெள்ளியாகவும் இருந்தது. 1952 முதல் கப்பல் எண்ணிக்கையிலும், வருவாயிலும் மிகப்பெருகியது. 1956ஆம் ஆண்டுக்குள் 25,00,000 கப்பல்கள் இக்கடற்கால் வழி சென்று உலகத் தொண்டு செய்துள்ளன. பனாமாக் கடற்கால் அமெரிக்காவின் தெற்கு வடக்குப் பகுதிகட்கு இடையே உள்ளது. எனினும் உலகின் உயிர்வழி யாகும் உயர்வு பெற்றுள்ளது. அதனால் காலமும், இடமும், அல்லலும் மிகமிகக் குறைந்துள்ளன என்பதும், வளமும், வாய்ப்பும், நலமும் மிக மிகப் பெருகியுள்ளன என்பதும் மிகப் பேருண் மையாம்! வாழ்க வளர்ச்சித் திட்டங்கள்! முற்றிற்று.