இளங்குமரனார் தமிழ்வளம் 24 1. பாண்டி நாட்டுப் புலவர்கள்-1 2. பாண்டி நாட்டுப் புலவர்கள்-2 3. கொங்கு நாட்டுப் புலவர்கள் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 24 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 160 = 176 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 110/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் பாண்டிநாட்டுப் புலவர்கள் (முதல் புத்தகம்) 1. பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் 1 2. பண்டித மணி 12 3. பேரறிஞர் பரிதிமால் கலைஞர் 24 4. நாவலர் பாரதியார் 33 பாண்டி நாட்டுப் புலவர்கள் -2 1. முதுபெரும் புலவர் வெ. ப. சு. 45 2. விருதை சிவஞான யோகிகள் 53 3. பேராசிரியர் கா. சு. பிள்ளை 62 4. சொல்லின் செல்வர் 74 5. செம்மல் சிதம்பரனார் 86 கொங்கு நாட்டுப் புலவர்கள் 1. கோவைகிழார் இராமச்சந்திரன் செட்டியார் 103 2. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் 111 3. புலவர் முத்துசாமிக் கோனார் 118 4. புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை 123 5. பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை 128 6. கவியரசு கு. நடேச கவுண்டர் 133 7. புலவர் குழந்தை 141 8. சிவநெறிச் செம்மல் கந்தசாமி முதலியார் 147 9. கோவைப்புலவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை 153 பாண்டி நாட்டுப் புலவர்கள் - 1 1. பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே ஒரு விருந்து நடைபெற்றது. அவ்விருந்தில் பல புலவர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டனர். விருந்து நடந்தால், விருந்து உணவில்தான் எவர் நினைவும் இருக்கும்.! ஆனால், அங்கிருந்த புலவர்க்குத் தமிழ் விருந்திலே நினைவு சென்றது. அந்நினைவு விருந்தில் விருந்தாக அமைந்தது. விருந்து படைப்பவர் பெயர் இராமானுசம் என்பது. அவர் படைக்க வரும்போது, தமக்கு வேண்டிய பொருளின் பெயரைக் கூறிச், சங்கொடுவா ராமா னுசம் என்று முடியுமாறு புலவர்கள் வெண்பாப் பாடவேண்டும் என்று ஒரு திட்டத்தை வகுத்துத் தந்தார் அப்புலவர். புலவர்களின் எண்ணம் சாப்பாட்டில் இருந்து, பாட்டுக்கு மாறிற்று. ஒரு புலவர்க்கு ரசம் வேண்டியதாக இருந்தது. அதனால், ரசங்கொடுவா ராமா னுசம் என்று பாடி முடித்து ரசத்தை வாங்கிக் கொண்டார். இன்னொரு புலவர் அங்கே வழங்கப் பெற்ற அதிரசத்தைக் கண்டார். அதனால், அதிர, சங்கொடுவா ராமா னுசம் என்று பாடி அதிரசத்தைப் பெற்றுக் கொண்டு அமைந்தார். அடுத்திருந்த புலவர்க்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இராமானுசம் பாயசம் கொண்டு வந்தார். அதனால், பாய, சங்கொடுவா ராமா னுசம் என்று கேட்டு இனிப்பாகப் பாட்டை அவர் முடித்தார். பாட்டுத் திட்டம் வகுத்துத் தந்த புலவர் அடுத்தாற் போல் இருந்தார். அவர் சங்கொடு வா என்று கேட்பதற்குத் தக்க பண்டம் எதுவும் இல்லை. என்ன செய்வார்? அடி எடுத்துத் தந்தவரே முடிக்க முடியாமல் விடுவாரா? தமக்கு இராமானுசம் வழங்கிய கறியையே, இன்னுங்கொஞ், சங்கொடுவா ராமா னுசம் என்று சொல்லிச் சுவையாகப் பாடி முடித்தார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்னும் பழமொழியை மெய்யாக்கினார். சம் என்று முடியக் கூடிய பொருள் ஒன்றும் அங்கு இல்லாவிடினும், கொஞ்சம் என்பதில் சம் இருப்பதையும், முன்னே வழங்கிய கறியை அது குறிப்பதையும் அறிந்த புலவர்கள் மிகப் பாராட்டினர். பாராட்டுக்கு உரியவராக விளங்கிய அப் புலவர் சோழ வந்தான் அரசஞ் சண்முகனார் ஆவர். சோழவந்தான் என்னும் ஊர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். அது நிலவளமும் நீர் வளமும் நிறைந்தது. அதன் அறிவு வளத்திற்குச் சான்றாக தோன்றினார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார். சோழவந்தானில் அரசப்பபிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் புலமை நலம் சிறந்தவர்; பாடும் திறமை பெற்றவர்; வேளாண் தொழிலில் ஈடுபட்டு விருந்தோம்பி வாழ்ந்தவர். அவர் தம் அருமை மனைவியார் பார்வதி அம்மையார். இவர்கள் நல்வினைப் பயனால் நாடும் புகழும் நன்மகவாகச் சண்முகனார் தோன்றினார். அவர்க்குப் பின்னே இலக்குமி அம்மையார், தெய்வானை அம்மையார், இராமபிள்ளை, சதாசிவம் பிள்ளை, மீனம்மாள் என்பவர்கள் பிறந்தனர். சண்முகனார் பிறந்த நாள் 15-9-1868 ஆகும். சோழவந்தானில் தெற்குத் தெருவில் ஒரு பிள்ளையார் சோயில் உண்டு. அது சிதம்பர விநாயகர் கோயில் எனப்படும். முன்பு அக்கோயில் கல்மண்டபம் என்று அழைக்கப் பெற்றது. அக் கல்மண்டபத்திலே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் நடந்தது. அதன் ஆசிரியர்அழகர்சாமி தேசிகர் என்னும் பெருமகனார் ஆவர். அப்பள்ளியிலே சண்முகனார் தம் கல்வியைத் தொடங்கினார். ஐந்தாம் வயது முதல் பன்னிரண்டார் வயதுவரை அங்கே கற்று அறிவுநலம் பெற்றார். சண்முகனாரில் அன்னையார் ஊர் பனைக்குளம் என்பது. அங்கே அரசப்பிள்ளை ஒருமுறை சென்றிருந்த போது சிவப்பிரகாச அடிகள் என்னும் பெயருடைய செந்தமிழ்த் துறவியார் ஒருவரைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். அவர்தம் பண்புச் சிறப்பிலும், அறிவுத் திறத்திலும் அரசப்பர் ஈடுபட்டார். அவரைத் தம் மாமனார் வழியாக அன்புடன் வேண்டிச் சோழவந்தானுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். அவரைச் சோழவந்தானில் இருந்த கிண்ணி மங்கல மடத்தின் தலைவர் ஆக்கினார். சிவப்பிரசாச அடிகள் சோழவந்தான் கிண்ணி மங்கல மடத்திற்கு வந்ததும் அம்மடம் தமிழ்க் கோயில் ஆயிற்று. பக்கமெல்லாம் மணம் பரப்பும் தமிழ்ப் பூஞ்சோலையும் ஆயிற்று. அக் கோயிலும் சோலையிலும் அமைந்து உலாவினார் அரசஞ் சண்முகனார். அவர் இளமையிலே பெற்றிருந்த இனிய தமிழ்ப் புலமை, அடிகளார் தொடர்பால் மிக ஏற்றம் பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர் என்றும் இலக்கணக் கடல் என்றும் சான்றோர் புகழும் பெருமையைச் சண்முகனார்க்கு வழங்கியது. சிவப்பிரகாச அடிகளிடம் சண்முகனார் தன் பதின் மூன்றாம் வயது முதல் பதினாறாம் வயது முடிய நான்கு ஆண்டுக்காலம் கற்றார். அக்காலத்திலேயே கற்றோர் மதிக்கும் கவிஞராகத் திகழ்ந்தார். அவ்விளமைப் பருவத்திலேயே சிதம்பர விநாயகர் மாலை திருவடிப் பத்து முதலிய நூல்களை இயற்றினார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றவாறு அறிவில் சிறந்து விளங்கினார். ஆசிரியர் பாராட்டும் அறிவார்ந்த மாணவராகச் சிறந்தார். சண்முகனார்க்குப் பதினாறாம் வயது நடந்து கொண்டி ருந்தது. அப்பொழுது அவர் தம் அருமைத் தந்தையார் அரசப்பர், ஆறாத் துயரில் குடும்பத்தை ஆழ்த்தி இறைவனடி சேர்ந்தார். தலைவரை இழந்த குடும்பம் தவித்தது. கல்வியே செல்வமாகக் கருதிக் கழனிப் பணியை அறியாத சண்முகனார் கலங்கினார். குடும்பத்தில் தலைமகனார் அவர் அல்லரோ! ஆனால், அருமை அன்னையார் தம் ஆறாத் துன்பத்திற்கு இடையே, தந்தையார் கடமைகளையும் தாமே மேற்கொண்டு செய்தார். குடும்பத்திற்கு முதல்வர் ஆகிய சண்முகனார்க்கு அவர்தம் அன்னையார் திருமணம் செய்து வைக்க எண்ணினார். அவ்வாறே அவ்வூரில் சிறந்த மருத்துவராக விளங்கிய சிதம்பரம்பிள்ளை என்பாரின் நன்மகளார் காளியம்மையை மணமுடித்து வைத்து இன்புற்றார். சண்முகனாரின் தமிழ் ஈடுபாடு, குடும்ப வறுமையைப் பொருட்டாக எண்ண வைக்கவில்லை. திருமண மகிழ்ச்சியிலே பொழுதைப் போக்கவும் விடவில்லை. தமிழ் ஆராய்ச்சியிலும் புதிய நூல்கள் இயற்றுவதிலும் ஏவிற்று. மாலைமாற்றுமாலை, ஏகபாத நூற்றந்தாதி ஆகிய நூல்களை இயற்றினார். விகடகவி என்னும் தொடரை முதலிலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் விகடகவி என்றே வரும். இதுபோல் ஒருபாடலை முதலிலிருந்து படித்தாலும் இறுதி யிலிருந்து படித்தாலும் ஒரே மாதிரி வருவது மாலைமாற்று எனப்படும். அப்படிப் பாடல்கள் பலவற்றை, ஒருபாட்டின் இறுதி அடுத்தபாட்டின் முதலாக வருமாறு பாடுவது மாலைமாற்று மாலை எனப்படும். ஏகபாதம் என்பது ஓர் அடி. பாட்டின் ஓர் அடியை அப்படியே மாறாமல் நான்குமுறை எழுதி வெவ்வேறு பொருள் கூறுவது ஏகபாதம் எனப்படும். அதில் நூறு பாடல்கள் அந்தாதியாகப் பாடுவது ஏகபாத நூற்றந்தாதி ஆகும். இத்தகைய அரிய நூல்களை யெல்லாம் எளிமையாகப் பாடினார் சண்முகனார். இந்நிலையில் சண்முகனார் புகழ் பக்கங்களிலும் பரவியது. அப் புகழ் அவர் எதிர்பாராத நிலையில் ஒரு வேலையைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நாள் சண்முகனாரிடம் ஒருவர் வந்தார். அவர், ஐயா, நான் மதுரையில் இருந்து வருகிறேன். சேதுபதி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் என்னை அனுப்பி வைத்தார். அப் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் உடனே வேண்டும். அதற்கு தாங்கள் தக்கவர் என அறிந்து தங்களை அழைத்து வருமாறு என்னை அனுப்பினார் என்றார். தம் குடும்ப நிலைமையை எண்ணினார் சண்முகனார். தம் விருப்பத்துக்கு ஏற்ற பணி அஃது என்பதையும் உணர்ந்தார். அதனால் அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு மதுரைக்குச் சென்று, அப்பணியை ஏற்றுக் கொண்டார். அப்பொழுது சண்முகனார்க்கு வயது இருபத்து இரண்டேயாகும். கி.பி. 1890 ஆம் ஆண்டில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்தார் சண்முகனார். மொழிப் பற்றும் மொழித் திறமும் மிகுந்தவர் அவர். ஆனால், அப்பள்ளியில் அயல் மொழிகளுக்குத் தந்த பெருமையைத் தாய்மொழிக்குத் தாராமை அவரை நாளும் துன்புறுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழ்மொழிக்குரிய பாடவேளையையும் தலை மையாசிரியர் குறைத்துவிட்டார். அதனால் வருந்தி முறையற்ற இச்செயலை ஏற்கமுடியாது என்று கடிந்துரைத்து வேலையை விட்டு வெளியேறினார் சண்முகனார். பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளி என்று எண்ணாமலும், இனி வேலைக்கு என்ன செய்வது என்று எண்ணாமலும் தமிழ்மொழிக்குத் தரவேண்டிய பெருமையைத் தாராத பள்ளியில் பணி செய்ய விரும்பாது வெளியேறியமை சண்முகனார் மொழிப்பற்றுக்குச் சிறந்த சான்றாகும். சேதுபதி உயர்நிலைப்பள்ளி வேலையை விட்ட பின்பு சண்முகனார் சென்னைக்குச் சென்றார். அங்கே தவத்திரு மறைமலையடிகளாரைக் கண்டு அளவளாவி இன்புற்றார். முன்னரே அடிகளார்க்கும் சண்முகனார்க்கும் கடிதத் தொடர்பு இருந்தது. அத் தொடர்பை இச் சந்திப்பு மிக வலுப்படுத்திற்று. அடிகளார் சென்னை, கிறித்தவக் கல்லூரியில் பேராசிரி யராகப் பணிபுரிந்து வந்தார். அங்கே சண்முகனாரையும் வேலையில் அமர்த்த விரும்பினார். அதனால் கல்லூரி முதல்வர் மில்லர் துரைமகனாரிடம் தம் விருப்பத்தை அடிகளார் உரைத்தார். அடிகளார் உரையை நிறைவேற்ற மில்லர் துரைமகனார் இசைந்தார். சண்முகனார்க்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அடிகளார் வழியாக அறிந்து கொண்ட மில்லர் துரைமகனார், வேலையில் சேர்ந்த பின்பு ஓரளவு ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உரைத்தார். இச் செய்தியை அடிகளார் சண்முகனாரிடம் நயமாகக் கூறினார். ஆனால், சண்முகனார் எனக்கு வயது ஆகிவிட்டது; இனிப் புதிய ஒரு மொழியைக் கற்க முடியாது; கற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆதலால் இவ்வேலை எனக்கு வேண்டா; நிறைவேற்ற முடியாத உறுதியை வேலை பெறுதற்காகக் கூறமுடியாது என மறுத்துவிட்டார். அடிகளார் தம் முயற்சி பயன்படாமைக்கு வருந்தினார். ஆயினும், சண்முகனார் உயர்ந்த நெஞ்சத்தை உணர்ந்து இன்புற்றார். 1901 ஆம் ஆண்டிலே பாலவனத்தம் குறுநிலமன்னர் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அதன் தொடக்க விழாவுக்குப் பெரும்புலவர்களெல்லாம் அழைக்கப் பெற்றிருந்தனர். விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. புலவர்கள் தத்தம் ஆராய்ச்சித் திறங்களைக் காட்டினர். அத்தகையவர்களுள் நம் சண்முகனாரும் ஒருவர் ஆவர். தமிழ்ச் சங்கம் தொடங்கி ஓராண்டுக்குப் பின் பேராசிரியர் ஒருவர் வேண்டியநிலை இருந்தது. அவ்விடத்திற்குத் தக்கவர் சண்முகனாரே எனப் பலரும் கருதினர். சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவரும் சண்முகனாரை நன்கு அறிவார். ஆதலால், அவரைப் பேராசிரியராக அமர்த்தினார். சங்கத்தில் அமர்ந்தது தம் பொழுதையெல்லாம் சண்முகனார் தமிழ் ஆராய்ச்சியிலேயே செலவிடுவதற்கு வாய்ப்பு ஆயிற்று. 1902 முதல் 1906 வரை நான்கு ஆண்டுகள் சங்கத்தில் பேராசிரியராக இருந்தார். சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும், சங்கக் கல்லூரியிலும் பணியாற்றிய காலங்களில் சண்முகனார் புதிதாகப் படைத்த நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் பல. அவை : இன்னிசை இருநூறு, நவமணிக்காரிகை நிகண்டு, மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, வள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பியர் சண்முகவிருத்தி, நுண்பொருட்கோவை, இசைநுணுக்கச் சிற்றுரை என்பன. நூல்களை அல்லாமல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிலவற்றையும் எய்தினார் சண்முகனார். அவை செந்தமிழ், தமிழ்ப்பொழில், விவேக பாநு, ஈழகேசரி முதலாய இதழ்களில் வெளியிடப் பெற்றன. ஆராய்ச்சி உலகில் தனிச் செங்கோல் செலுத்தும் வேந்தராக விளங்கினார் சண்முகனார். தம் ஆராய்ச்சிகளை மறுத்தெழுதியவர்களைத் தக்கமுறையால் மறுத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார். தமிழ்ச்சங்கக் கல்லூரிப் பேராசிரியராகச் சண்முகனார் பணிசெய்த காலத்தில் அவர் புகழ் பரவியது போலவே உடலில் இருந்த நோயும் பெருகத் தலைப்பட்டது. எவ்வகை முயற்சியாலும் தடுக்க முடியாத அளவுக்கு வலுத்தது. வயிற்று வலியாகத் தொடங்கிய நோய் அடிவயிற்றில் பெரிய கட்டியாகத் திரண்டது. அறுத்து எடுத்தால் அன்றித் தீராது என மருத்துவர்கள் கூறினர். அறுவையால் உயிருக்கும் கேடுவரக் கூடும் எனவும் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் பணி செய்ய இயலுமா? பணியை விடுத்தால் இயல்பாகவே பொருள் முட்டுப்பாடு உடைய அவர் ஊதியமும் இன்றிப் பெருஞ்செலவும் செய்ய நேருமே! என்ன செய்வார்! சங்கத் தலைவர் ஆகிய பாண்டித்துரைத் தேவர், சண்முகனார் புலமைக்குத் தலைவணங்கும் தன்மையாளர். சண்முகனார்க்கு வந்த நோயை நினைந்து உருகினார். அதனைத் தீர்க்க வேண்டிய வகையை ஆராய்ந்தார். ஓர் ஆண்டுக்காலம் சம்பளத்துடன் விடுமுறை தந்தார். கைச்செலவுக்கென உரூபாய் 200 நன்கொடையாக வழங்கினார். அதனைக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஆலங்குடிக்குச் சென்று நாட்டு மருத்துவர் ஒருவரிடம் மருந்துண்டு வந்தார். அதனால் பயன்காணாது இருந்த அளவில், அவ்வூர் அரசினர் மருத்துவ மனையில் பணிசெய்து வந்த அருளாளர் திரு. வேணுகோபால நாயுடு என்பார் தாமே முன்வந்து உதவினார். அவர் உதவியால் எழுந்து நடக்கும் அளவு நலம் பெற்றார். பின்னர் அவ்வன்பரது வேண்டுகோளின்படி தஞ்சை மாவட்ட மருத்துவர் திரு. எச். எம். அக்கீம் துரைமகனாரை அணுகி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக மூன்றுமுறை அறுவை செய்து முழுநலம் பெற்றார். இதனால் சண்முகனார், இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையும் தாயும் ஆயினார் அத்துரை அவர்களே என்று பாராட்டினார். சண்முகனார் உடல்நிலை நலம் பெற்றது. ஆயினும் கல்லூரிப் பணியை ஏற்கும் அளவுக்கு இடம் தரவில்லை. அதனால் வேலையை விடுத்துச் சோழவந்தானிலேயே தங்கினார். பொழுதெல்லாம் ஆராய்ச்சியிலேயே செலவிட்ட சண்முகனார் வீட்டுள் அடங்கிக் கிடந்தாலும் ஆராய்ச்சியும் ஒடுங்கி விடுமா? விடாது அல்லவா! ஆதலால் வாழ்நாள் எல்லாம் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளை இடையறாமல் செய்தார். அவ்வப்போது தமிழ்ச்சங்கம் முதலிய இடங்களில் நடந்த கூட்டங்களிலும் விழாக்களிலும் பங்கு கொண்டார். இதழ்களுக்குக் கட்டுரை எழுதினார். தம்மை அணுகியவர் ஐயங்களை அகற்றினார். மதுரையில் தமிழ் லெக்சிகன் அகராதி தொகுக்கும் பணியில் மறைத்திரு சாண்ட்லர் என்பார் ஈடுபட்டிருந்தார். அவர் சண்முகனாரின் புலமையைக் கேள்வியுற்று அவரை அகராதி தொகுக்கும் பணிக்கு ஆசிரியராக அமர்த்தினார். சிறிதுகாலம் அப் பணியைச் செய்தார் சண்முகனார். அதற்கும் உடல்நிலை இடம் தரவில்லை. அவ் வேலையையும் விடுத்தார். அகராதி வேலையும் மதுரையில் இருந்து சென்னைக்கு அதன் பின்னர் மாறியது. சண்முகனார்க்கு வயது நாற்பத்துஆறு நடந்து கொண்டி ருந்தது. அவர்க்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த அழகர்சாமி தேசிகர் தம் எண்பத்து ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். அந்நிகழ்ச்சி சண்முகனாரை மிக வருத்தியது. உருக்கமிக்க இரங்கல் பாடல்கள் இயற்றினார். ஏக்கந்தீரப் பல மாதங்கள் ஆயின. தேசிகர் மறைந்து பதின்மூன்று மாதங்கள் கடந்தன. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து முகம் வழித்துக் கொண்டிருந்தார் சண்முகனார். அப்பொழுது ஒரு கடிதம் வந்தது. அதில் வித்துவான் அ. சவமுகம் பிள்ளை, தெற்குத்தெரு, சோழவந்தான் என்று முகவரி எழுதப்பட்டு இருந்தது. அக்கடித முகவரியைக் கண்டு வெதும்பினார் சண்முகனார். அதனை எழுதியவர் அரைகுறைப் படிப்பாளரா? அல்லர்! முதிர்ந்த புலவர்கள் பரம்பரையிலே வந்த புலவர்-ஆராய்ச்சியாளர்-இனிய நண்பர் ஆகிய மு.ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதிய கடிதம் அது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்னும் பழமொழி மெய்யாயிற்று! தமக்கு முகம் வழித்துக் கொண்டிருந்த இராமனிடம், இதனை எழுதியவர் பெரும் புலவர், என்னைச் சவமுகம் பிள்ளை என்று எழுதியிருக்கிறார். இனி என் சவத்தின் முகத்திற்குத்தான் நீ வழிக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். கடிதம் எழுதிய கந்தசாமிக் கவிராயர்க்கும் நொந்துபோய்ச் சில பாடல்களை எழுதி அனுப்பினார். முப்பது நாட்கள் முடியவில்லை. அந்தோ! சண்முகனார் படுத்த படுக்கையானார். தூய துறவியாகிய சிவப்பிரகாச அடிகளையும் துடிக்குமாறு செய்தது சண்முகனார் நிலை. தம் மாணவர் நலம் பெறுவதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டார் அடிகள். ஒருநாள் காலையில் மருந்தும் கையுமாய்த் தெருவில் வந்து கொண்டிருந்தார் அடிகள். சண்முகனார் விண்ணுலக விருந்தாயினார் என்னும் செய்தியைக் கேட்டு விம்மினார். கண்கள் குளங்கள் ஆயின. அடிகளார் நிலையே அவ்வாறாயின் மற்றையோர் நிலையைக் கூறவேண்டுமோ? அண்ணல் சண்முகனார் 1915 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினொன்றாம் நாள் காலை 6.30 மணிக்குப் புகழ்வடிவானார். அப்பொழுது அவர்தம் வயது 47. தமிழ்மலையாம் மறைமலையடிகள், நம் தமிழன்னை இன்று தன் தலைமைப் புதல்வனை இழந்துவிட்டாள் என்று ஏங்கினார். பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், அருமை ஆசானை யான் இழந்துவிட்டேன்; தமிழகம் தனியொரு புலவனை இழந்துவிட்டது என்று இரங்கினார். எனக்கு இரங்கல்பாட வேண்டிய சண்முகனுக்கு நானோ இரங்கல் பாட என்று புலம்பினார் சிவப்பிரகாச அடிகள்! சண்முகனார் மறைந்து ஐம்பது நாட்கள் கடந்தன. சிவப்பிரகாச அடிகள் தம் மாணவர் வழியைப் பின்பற்றி நடந்துவிட்டார்! அறிஞர் மு.ரா. கந்தசாமிக் கவிராயரோ மூன்று திங்களுக்குள் தொடர்ந்தார்! இயற்கை நடத்தும் திருவிளையாடலை எவரே இயம்ப வல்லார்! சில குறிப்புகள் உடல் : சண்முகனார் உடல் ஒல்லியானது; நெட்டை என்றோ குட்டை என்றோ கூறமுடியாத உயரம்; செந்நிறம்; பேணி வளர்க்கப்படாத மீசை; வரன்முறையாக மழித்தலை அறியாத முகம்; குடுமித் தலை; ஒளியுடைய கூரிய கண்கள்; வரிசையான காவிக்கறை ஏறாத அழகிய பற்கள்; சற்று நீண்டு குடைந்த காது; காற்று வெயில் குளிர் இவற்றுக்கு மறைப்பு அறியாத மார்பு; நீண்ட கைகள்; விரைந்து நடக்கும் கால்கள்; ஒற்றைச் சுற்று வேட்டி; கழுத்தைச் சுற்றிச் சுருண்டு தொங்கும் நீளத் துண்டு-பொதுவில் தமிழகத்து உழவர் திருக்கோலம்! இவை சண்முகனார் உடலைப் பற்றிய குறிப்புகள். உள்ளம் : சிறிய நன்றியையும் பெரிது பாராட்டுதல்; எளிமையான விரும்புதல்; புலமையாளரை மதித்தல்; உண்மையை எடுத்துரைக்க அஞ்சாமை; தாம் வறுமைப்பட்டாலும் தக்கார்க்கு இயன்றவாறு உதவுதல்; களங்கம் அற்ற நினைவும் சொல்லும் செயலும்; தமிழே வாழ்வு எனக் கொள்ளும் தகைமை ஆகியவை சண்முகனார் உள்ளம் பற்றிய குறிப்புகள். குடும்பம் : சண்முகனார் தம் நாற்பத்து ஏழாம் வயதில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்தோம். ஆனால், அவ்வயதுள் செயற்கரும் செயல்களைச் செய்து சிறந்து விளங்கினார். புலமையில் இணையற்ற வேந்தராகத் திகழ்ந்தார். கருத்து ஒத்த இல்வாழ்க்கையும் அமைந்தது; ஆயினும் மக்கட்பேறு வாய்க்க வில்லை. சண்முகனாரின் தம்பியார் இராமபிள்ளையின் மைந்தர் மாணிக்கவாசகம் என்பவரை வளர்ப்பு மகனாகக் கொண்டார். அவர்தம் தங்கையின் மகனார் கவிக்குஞ்சரம் பிள்ளை என்பவர். அவர் புலமையாளராய்த் திகழ்கின்றார். சில சுவையான செய்திகள் கூலியாளான விந்தை : சண்முகனார் ஓர் ஊருக்கு நடந்துபோய்க் கொண் டிருந்தார். அவ்வழியில் ஒரு வழிப்போக்கர் கனமான சுமையுடன் வந்தார். அவர் சண்முகனாரின் எளிய தோற்றத்தைக் கண்டு, இச் சுமையை எடுத்துக் கொண்டு வந்தால் கூலி தருகிறேன் என்றார். சண்முகனார் சுமையை எடுத்துக் கொண்டு நடந்தார். சண்முகனார் திரும்பிச் செல்ல வேண்டிய விலக்குப் பாதை வந்தது. சுமையை உரியவரிடம் தந்து பிரியத் தொடங்கினார். ‘TÈ v›tsî? என்று கேட்டார் சுமைக்கு உரியவர். வேண்டா என்று மறுத்துவிட்டார் சண்முகனார். அவ்விலக்கில் இருந்து சண்முகனாரை அழைத்துச் செல்லுவதற்காக அவ்வூர்க்காரர் மேளம், பூமாலை ஆகியவற்றுடன் நின்றனர். மங்கல ஒலி முழங்க மாலையிட்டு வரவேற்றனர். சுமையைத் தந்தவர் இமை கொட்டாமல் பார்த்து நாணினார். ‘ït® ah®? என்று வரவேற்க வந்தவர் களிடம் கேட்டறிந்து மன்னிப்புக் கேட்டார். மெல்லுள்ளம் படைத்தவராகிய சண்முகனார், பிறருக்கு உதவி செய்வதற்காகவே மனிதன் பிறந்துள்ளான். நீங்கள் கவலை கொள்ளவும் நான் மன்னிக்கவும் ஆகிய தவறு எதுவும் நடந்துவிடவில்லை என்று தேற்றி அனுப்பினார். தெப்பக்குளத்தில் மூழ்குதல் : சண்முகனார்க்கு நீந்தத் தெரியாது. அவர் ஒரு நாள் மதுரையில் உள்ள வண்டியூர்த் தெப்பக்குளம் என்னும் மாரியம்மன் தெப்பக் குளத்தில் இறங்கினார். பாசி படிந்திருந்த படித்துறை வழுக்கிவிட்டது. சண்முகனார் நீருள் சென்று மூழ்கித் திக்கு முக்காடினார். அப்பொழுது சுப்பிரமணிய முதலியார் என்பவர் ஓடிவந்து சண்முகனாரைக் காப்பாற்றினார். அவரைத் தாம் இயற்றிய ஏகபாத நூற்றந்தாதி என்னும் நூலில் உயிர்காத்த உபகாரி என்று பாராட்டினார் சண்முகனார். துறவி காட்டிய மருந்து : சண்முகனார் நோயில் படுத்திருந்தார். மருந்துகளால் அது தீரவில்லை. ஒருநாள் இரவில் சண்முகனார் உறங்கிக் கொண்டு இருந்தபோது ஒரு துறவியார் தோன்றினார். கையைப் பிடித்து அழைத்தார். அவரைத் தொடர்ந்து பின் சென்றார் சண்முகனார். நாகமலைக்குச் சென்று ஒரு மருந்துச் செடியைக் காட்டி, இதைப் பறித்து உண்க என்றார். செடியைப் பறிக்கச் சண்முகனார் குனிந்து நிமிர்ந்தபோது துறவியைக் காண வில்லை. வியப்படைந் தவராக வீடு திரும்பினார். படுத்திருந்த சண்முகனாரைக் காணாமல் தேடியலைந்த வீட்டினர் நிகழ்ந்ததை அறிந்து வியப்புற்றனர். கூட்டத்தில் குறும்பன் : அரசஞ் சண்முகனார் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் அமைதி கெடுமாறு ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். பலமுறை நயமாகச் சொல்லியும் அவன் அடங்கவில்லை. அதனால் படுபயலே என்றார் சண்முகனார். படுத்துவிட்டான் பையன்; கால் கைகளை அசைக்கவும் அவனால் முடியவில்லை. பின்னர் அவன் நிலைமையைக் கண்டவர்கள் சண்முகனாரிடம் உரைத்தனர். பாடு பயலே என்றார். பையன் பழையபடியே துள்ளி ஓடினான். ஆனால், கூட்டத்துள் இல்லை. வீட்டுக்கு! யாமதுரையோம் : சண்முகனார் இலங்கைக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்பதற்குத் தொடர்வண்டி நிலையத்தில் பலர் நின்றனர். ஆனால், அவர்கள் முன்னே சண்முகனாரைக் கண்டவர்கள் அல்லர். சண்முகனார் நேரே மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அங்கிருந்தவருள் ஒருவர் இவர்தாம் சண்முகனாரா இருக்க வேண்டும் என்று எண்ணித் தாங்கள் யார்? என வினாவினார். அதற்குச் சண்முகனார் யாமதுரையோம் என்றார். யாம் அது உரையோம் என்றும், யாம் மதுரையோம் என்றும் இருபொருள் தருகின்றது அல்லவா! தந்த வரிசை போயிற்று : சண்முகனார்க்குச் சில பற்கள் போய்விட்டன. அதனால் பல் கட்டியிருந்தார். அதனை ஒருவர் தந்த வரிசை போயிற்று என்றார். தந்த வரிசை என்பது பல்வரிசை அல்லவா! இதனைக் கேட்ட சண்முகனார், ஆம்! கடவுள் தந்த வரிசை போயிற்று என்றார். பொற்காப்புக் கொடை : 1906 ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ந்தது. அதன் தலைவராக முதுபெரும் புலவர் உ.வே. சாமிநாதையர் இருந்தார். அவர்தம் தலைமை உரையில், மதுரையில் இருந்து அரிய தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் பெயரால் ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றார். அதற்குப் பெருமக்கள் பலர் நன்கொடை வழங்கினர். சண்முகனார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்புகளை நன்கொடையாக வழங்கினார். தங்கக் காப்பு களை வழங்கும் அளவுக்கு வளமுடையவராகச் சண்முகனார் இருக்கவில்லை. ஆனால், அவர் உள்ளம் அவ்வளவு வளமை யானது! உள்ளம் உடைமைதானே உடைமை! 2. பண்டித மணி பொன்னமராவதியில் ஒரு மருத்துவமனை உண்டு. அதில் மருத்துவராக வேணுகோபால் நாயுடு என்பவர் இருந்தார். அம் மருத்துவமனையிலே பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் மருத்துவம் பெற்று வந்தார். ஒரு நாள் நாயுடு அவர்கள் வெளியே சென்றிருந்தார். சண்முகனார் மருத்துவமனைத் தாழ்வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே ஒரு வண்டி வந்தது. வண்டியில் இருந்து தூய வெண்ணிற ஆடை உடுத்த ஒரு பெரியவர் இறங்கினார். தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த சண்முகனாரிடம் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்றார். சண்முகனார் எளிமையே வடிவானவர். சட்டை போடாமலும் குடுமித் தலையுடனும் நின்றார். அவரைப் பணியாள் என்று எண்ணிவிட்டார் போலும் வண்டியில் வந்தவர்! சண்முகனார் விரைந்து தண்ணீர் கொண்டு வந்து தந்தார். பின்னர் இட்டிலி வேண்டும்! »il¡Fkh? என வினாவினார் வண்டியில் வந்தவர். சண்முகனார் இட்டிலி வாங்கிக் கொண்டு வந்து அன்புடன் வழங்கினார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த வேணுகோபால் நாயுடு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தார். பெரும் புலவர்களாகிய உங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களாகவே பழகிக் கொண்டது மகிழ்ச்சியளிக் கிறது என்றார். இருவரும் திகைப்பு அடைந்தனர். பெரும் புலவர் என்கிறாரே! இவர் யார்? என இருவருமே திகைப்பு அடைந்தனர். ‘t©oÆš tªjt® ah®? என்னும் திகைப்பு நமக்கும் உண்டாகத்தானே செய்யும்! அவரே பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் ஆவர். பண்டித மணிக்குத் தணியாத ஆவல் ஒன்று இருந்தது. அது, சண்முகனாரிடம் தொல்காப்பிய இலக்கணத்தைப் பாடம் கேட்கவேண்டும் என்பது. அதற்குரிய வாய்ப்பை எண்ணிக் கொண்டு இருந்தார். அந்த வாய்ப்பு இவ்வாறு எளிமையாகக் கிடைத்தது. தாம் ஆசிரியராகக் கொண்டு கற்க விரும்புபவரையே எடுபிடி ஆள்போல நடத்திய துயர் பண்டித மணியை ஆட்டியது! செருக்கு உடையவர் போலும் என்று கூடச் சிலரை நினைக்க வைக்கும்! ஆனால், உண்மை அஃதன்று, உண்மையாக இருக்கு மானால் சண்முகனார் ஓடிப்போய் உதவி இருக்க மாட்டார்! பண்டிதமணி சேய் போலத் தோன்றினார்; சண்முகனார் தாய் போல விளங்கினார்! மேலே படிக்க இது விளக்கமாகும். சண்முகனாரிடம் தம்மைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டினார் பண்டிதமணி. ஒருவர்க்கு ஒருவர் உதவியாக வாழ்வதே கடமை என்று தேற்றினார் சண்முகனார். வழிப் போக்கர்க்கே சுமை தூக்கிச் சென்ற சண்முகனார் பண்டித மணிக்கு உதவியதைப் பெரிது பாராட்டுவாரா? யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் மணிமொழியைக் கேட்டிருப்பீர்கள். அதனை வழங்கியவர் கணியன் பூங்குன்றனார் என்னும் பெரும்புலவர். அவர் ஊர் பூங்குன்றம் என்பது. அவ்வூர், பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம் என்று வழங்கப்பெற்றது. அப் பூங்குன்றம் செட்டி நாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்பது ஆகும். இன்றும் அவ்வூர் அம்மன், பூங்குன்ற நாயகி என்றும், ஐயனார், பூங்குன்ற ஐயனார் என்றும் வழங்கப்படுகின்றனர். பழம் பெருமை வாய்ந்த அவ்வூர்க்குப் புதுப் பெருமையும் சேர்ப்பவர் போலப் பண்டிதமணி தோன்றினார். மகிபாலன்பட்டியில் முத்துக்கருப்பன் செட்டியார் என்பார் ஒருவர் இருந்தார். அவர்தம் இனிய மனைவியார் சிவப்பி ஆச்சி என்பவர். இவர்கள் செய்த நற்பேறும் தமிழ்நாடு செய்த தவப்பயனுமாகக் கி.பி. 1881ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினாறாம் நாள் கதிரேசனார் தோன்றினார். அன்னை சிவப்பி ஆச்சியாரின் சீர்மை பெரிது. அவர் தம் சிறப்புகளைக் கதிரேசனார் பின்னாளில் கனிவுறு கவிதைகளால் பாராட்டி உருகினார். என்னைப் பெற்றெடுத்தார்; என் உடல் நலனைப் பேணி வளர்த்தார்; பெரும் புலவர் கூட்டத்துள் யான் இருப்பது கண்டு களிப்புற்றார்; சொல்லரிய நல்லுதவிகள் புரிந்தார்; என் முன்னை நல்வினையின் முதிர்ச்சியால் நெடுநாள் என்னைக் காத்தார். ஓரன்னையின் பெருமைக்கு இதனினும் வேறென்ன வேண்டும்? அம் மைந்தருக்கும் இவ்வன்னையினும் விஞ்சிய பேறுதான் என்ன இருக்க முடியும்? கதிரேசனார் இரண்டு வயதினராக இருந்தபோது அவர்க்கு இளம் பிள்ளைவாதம் என்னும் நோய் தோன்றியது. மருத்துவத்தின் சிறப்பாலும் இளமைத் துடிப்பாலும் அந்நோய் அடங்கியது. அது அவரைப் படுக்கையில் கிடத்திவிடவில்லை. இயல்பாக நடந்து திரியத் தடையில்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் ஆறு ஏழு வயதை அடைந்தார். மகிபாலன்பட்டியில் ஒரு திண்ணைப் பள்ளி இருந்தது. அப் பள்ளியில் கதிரேசனார் சேர்க்கப் பெற்றார். அங்கும் எவ்வளவு நாட்கள் கற்றார்? ஏழே ஏழு திங்கள் அளவே அத்திண்ணைப் பள்ளியில் கதிரேசனார் கல்வி கற்றார். பெரும் புலவர், தென்மொழி, வடமொழித் தேர்ச்சியாளர், சிறந்த ஆராய்ச்சியாளர், சீரிய உரையாசிரியர், பெரு நாவலர், உயர் கவிஞர் - ஆகிய கதிரேசனார் ஒரு திண்ணைப் பள்ளியில் கற்றவர் தாமா? அதுவும் ஏழு திங்கள் அளவு காலம் கற்றவர் தாமா? என மூக்கில் விரலை வைத்து வியப்படைகிறோம் அல்லவா! இதனை அவரே சொல்கின்றார். யான் ஆறு ஏழு ஆண்டு அகவை (வயது) உடையவனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக் கூடத்திலே கல்வி பயின்றேன். அப் பள்ளியிலே பாடமாகவுள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது, அச் சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோ ஒரு தெய்வத் தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும், அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளி வாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடே ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் (நூல்கள்) இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். உள்ளனவாயின் அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. திருத் தொண்டர் புராணம், கம்பராமாயணம், சிற்சில பிள்ளைத் தமிழ் - இவைகளே அவ்விளம் பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன். அப் பெரு நூல்களும் தம் செய்யுள் பொருளை இளைஞன் ஆகிய எனக்கு உலோவாது (மறைத்துக் கொள்ளாது) அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுள்களும் - ஆசிரியரின் உதவி இன்றியே யான் பயின்ற பொழுதும் - பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்படலாயின. மேலும், என் இளம் பருவத்து நண்பருக்கும் அயலுள் ளார்க்கும் அவற்றின் பொருளை எடுத்துச் சொல்லுதலும் உண்டு. நான் இவற்றை அயலார்க்குச் சொல்லுங்கால் அவர்கள், நீ யாரிடம் பாடம் கேட்டாய்? v§nf go¤jhŒ? என்று என்னை அடிக்கடி வினவுவது உண்டு. இங்ஙனம் வினவுவார்க்கு மறுமொழி கூற என்னால் இயல்வதில்லை. யான் ஒருவரிடமும் பாடங் கேட்காமலே இவற்றைத் தெரிந்து சொல்கின்றேன் என்றாலோ அவர்கள் அக்கூற்றை நம்புதலும் அரிது அன்றோ! செட்டி நாட்டுத் திண்ணைப் பள்ளிகளில் எழுத்தறிவைப் புகட்டுவதினும் எண்ணறிவைப் புகட்டுவதிலேயே மிகுந்த அக்கறை காட்டப் பெற்றது. ஆனால், கதிரேசனார் ஆர்வம் எழுத்தறிவில் மிக ஈடுபாடு உடையதாயிற்று. ஏழு மாதக் கல்வியிலேயே தமிழின் அடிப்படையாக அமைந்த நூல்களின் அழகிலே தோய்ந்து கற்றார். மேலும் அதனை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும் அத் திண்ணைப் பள்ளியில் கற்ற கல்வி தூண்டியது. அந்த ஆர்வம் செல்வம் சேர்ப்பதற்காகவோ, அலுவலை நாடுவதற்காகவோ ஏற்பட்டது இல்லை. அதனையும் கதிரேசனார் குறிப்பிடுகின்றார். செய்யுளின் அழகிலே, அது தரும் இன்பத்திலே ஈடுபட்டே யான் கலைகளைப் பயின்றேன் அல்லது, பொருட்பேறு அடைதற்குக் கல்வி ஒரு சாதனம் ஆம் என்று கருதியாதல் (கருதியாவது) புகழ்பெற வேண்டும் என்றாதல் (என்றாவது) யான் கலை பயின்றேன் இல்லை. தன வணிகர்கள், தம் மக்களை இளையராக இருக்கும் போதே கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து பொருள் தேடுவதற்குப் பழக்கப்படுத்துவர். அவ்வகையில் கதிரேசனார் பெற்றோரும் அவரை வாணிகத்திற்காக இலங்கைக்கு அனுப்பினர். அப்பொழுது அவர் வயது பதினொன்றே. இலங்கைக்குச் சென்ற கதிரேசனார் தோட்டத் தொழிலாளர் களுக்கு அரிசி, புடைவை முதலியன விற்கும் வணிக நிலையம் ஒன்றில் பணி செய்தார். பணியின் இடையே பைந்தமிழ் நூல் களையும் கற்றார்; இயற்கைக் காட்சிகளிலே ஈடுபட்டு இன்புற்றார். யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழன்பர்களுடன் உறவாடி மகிழ்ந்தார். இந்நிலையில் இளமையில் வந்த வாத நோய் படிப்படியே வளர்ந்து வரலாயிற்று. உடல் நோய் வலுத்தது போதாது என்று, அன்புத் தந்தை முத்துக் கருப்பன் செட்டியார் இயற்கை எய்தினார் என்னும் செய்தி வந்து உளநோயையும் ஊட்டிற்று. அதனால் கதிரேசனார் தம் பதினான்காம் வயதில் இலங்கையில் செய்து கொண்டிருந்த வாணிகப் பணியை முடித்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்தார். இளங்காளைப் பருவத்திலேயே கதிரேசனாரின் இடக்காலும் இடக்கையும் செயலற்று வலுவிழந்து போயின. தமிழ்மொழிக்கும் சிவநெறிக்கும் ஊன்றுகோல் போலாக வந்த கதிரேசனார், ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாத நிலைமைக்கு ஆட்பட்டார். என்றும் இருக்கும் இனிய தமிழன்னையின் திருமடியிலே, என்றும் இருக்கும் சிறப்புப் பெறுவதற்காகத்தான் கதிரேசனார்க்கு இவ்விருப்பு நிலை அமைந்தது போலும்! கதிரேசனார் கல்வியிலேயே கருத்தூன்றினார். அன்னை சிவப்பி ஆச்சியாரும் தம் மைந்தன் பெறும் கல்வியையே தாம் பெறும் அழியாச் செல்வமாகக் கருதினார். இளம் பருவந் தொட்டே கதிரேசனார் இல்லம் புலவர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. அதற்குக் காரணம் கதிரேசனாராக மட்டும் இருத்தற்கு இயலுமா? அறிவுடையாரைப் போற்றுதலில் அன்னையார் கொண்டிருந்த ஆர்வமும் காரணமாம். அதனால், கல்வி தனம் மிக்க கதிரேசன் என்று பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரால் பாராட்டும் சிறப்புப் பெற்றார் கதிரேசனார். கதிரேசனார் அகலக் கல்வியைக் காட்டிலும் ஆழக் கல்வியைப் போற்றினார். அரிய நூல்களைத் தேர்ந்து தேர்ந்து கற்றார். அவ்வகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், திருவாசகம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம் என்பவை குறிப்பிடத்தக்கவை. அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா! இலக்கியங்களைத் தாமே கற்றுத் தேர்ந்த தனி மேதை கதிரேசனார். ஆயினும் அவர் உள்ளம் இலக்கணம் செவ்வையாகக் கற்றுத் தெளிவதற்கு ஓர் ஆசிரியர் வேண்டும் என விரும்பியது! ஆம்! இலக்கணம், மெய்ப்பொருள், பிறமொழி ஆகியவற்றைக் குருவின்வழி கற்பதே குறையிலா நிறைவாக அமையும். அதனைத் தெளிவாக உணர்ந்த கதிரேசனார் அம் முயற்சியில் ஈடுபட்டார். இதனை அவரே குறிப்பிடுகின்றார். இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு இயல்பாகவே யான் பொருள் உணர்ந்து கொண்டேன். எனினும், இயல் நூலாகிய தொல்காப்பியம் முதலிய நூல்களோ சேனாவரையர் முதலியவர்கள் உரைகளோ என் அறிவிற்கு எட்டாத ஆழமுடையனவாக இருந்தன. என் அறிவிற்கு இயலும் துணையும் அந்நூல்களை யான் பிறர் உதவியின்றிப் படித்தேன். பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தன. எண்ணிறந்த ஐயங்கள் தோன்றின. இவ் இயல் நூல்களை ஐயம் திரிபு அறக்கற்றாலன்றிப் புலமை நிரம்பியதாகாது எனவும் அறிந்து கொண்டேன். அந்நூலின் பெயர் அறிவார்கூட அக்காலத்தே அரியராயினர். அவற்றைக் கற்க ஆசிரியர் வேண்டுமே! ஆசிரியர் எங்கே கிடைப்பர்? இவ்வாறு இயல்நூல் கற்ற ஆசிரியரை யான் அவாவி இருந்த காலத்தே, திருவருளின் உதவியால் சோழவந்தான் அரசன் சண்முகனாரை யான் காண நேர்ந்தது. அவருடன் அளவளாவி நட்புரிமையும் கொண்டேன். அப் புலவர் பெருமானும் யானும் ஒத்த தகுதியுடைய நட்புரிமையே கொண்டிருந்தோம். எனினும் அவர் எனக்கு ஆசிரியரே ஆவர். அவருடைய நுண்மான் நுழை புலத்தையும் இயல்நூல் அறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன். இவர் என்னோடு என் இல்லத்திலேயே பற்பல செவ்விகளில் (காலங்களில்) பன்னாள் உடனுறைந்து இயல்நூல் அறிவில் எனக்குள்ள குறையைப் போக்கினர். இப் புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பியம் முதலிய இயல் நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின. இலக்கணக் கடலாக விளங்கிய அரசன் சண்முகனாரிடம் அதனைக் கற்றுத் தெளிந்த கதிரேசனார், வடமொழி கற்க விரும்பினார். அதற்குத் தருவை நாராயண சாத்திரியார் என்பவர் துணைபுரிந்தார். அவர் வழியாக வடமொழிக் காவியங்களும், நாடகங்களும் கற்றுப் புலமை நிரம்பினார். இருமொழிப் புலவராம் பெருமையுடன் விளங்கிய கதிரேசனார் சைவசமய நூல்களை ஆழ்ந்து கற்கும் ஆவல் கொண்டார். அதற்குச் சிவநெறிச் செல்வராகிய காரைக்குடி சொக்கலிங்கையா அவர்கள் உதவி வாய்த்தது. அதனால் அவ்வறிவிலும் நிரம்பினார். நடத்தினார். பின்னர்த் தம் முப்பத்தோராம் வயதில் (1912) மகிபாலன்பட்டியை அடுத்த வேகுப்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி ஆச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார். ஆச்சியார் அருங்குணங்கள் நிரம்பியவர்; வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் துணை இலக்கணம் எல்லாம் ஒருங்கே அமைந்தவர். சமையல் கலையில் தேர்ந்தவர். அவர்கள் இல்வாழ்க்கைப் பேற்றை நேரில் கண்டறிந்த பண்டிதமணியின் மாணவர் பெருமழைப் புலவர், ஆச்சியாராதல், பண்டித மணியாராதல், தம் மக்களை இன்சொல்லால் அன்றி ஒரு பொழுதும் சுடு சொல்லாலே கண்டிப்பதில்லை; வீட்டுப் பணியாளரிடத்தும் மிக்க அன்புடையவர்களாகவே இருப்பர்; பண்டிதமணியாரின் இல்லமே ஓர் அன்புக்கடல் என்னலாம் என்று கூறுகின்றார். பண்டிதமணியின் வாழ்க்கை இனிமையே உருவெடுத்தது ஆகும். இனிமை என்பது என்ன? இனிமை இல்லாமை என்பது என்ன? தீமையும் நன்மையும் பிறர்தர வருவன அல்ல! நாமே அமைத்துக் கொள்வனவே என்று முழக்கமிட்ட கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், பண்டித மணியார் பிறந்த மண். ஆதலால் தம் வாழ்க்கையை இனிமை உலகம் ஆக்கிக் கொண்டார். இதனை, இவரிடத்தே சுவையுலக வாழ்க்கையைக் கண்கூடாகக் காணலாம்; இல்வாழ்க்கையிலும் இனிமை; உடையிலும் இனிமை; ஊணிலும் இனிமை; பேச்சிலும் இனிமை; மூச்சிலும் இனிமை; எழுத்திலும் இனிமை; குழுவிலும் இனிமை; இவர் பிறரைப் புகழ்வதிலும் இனிமை; இகழ்வதிலும் இனிமை என்பார் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். பண்டிதமணி அவர்களின் இனிய இல்வாழ்வுப் பயனாக மக்கள் எழுவர் தோன்றினர். அவர்களில் ஆடவர் நால்வர்; மகளிர் மூவர்; அவர்கள் சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன், மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என்பார். மக்கள் எழுவரும் தம் குடியின் சீரும் சிறப்பும் விளங்க இனிய மக்கட் செல்வம் எய்தி நலம்பெருக வாழ்கின்றனர். அன்புக் கடலாக இருந்து, இனியவை கூறி நற்றுணையாக வாய்த்த மீனாட்சி ஆச்சியார் பண்டிதமணி அவர்கள் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது 26-8-1945 இல் இயற்கை எய்தினார். அத் துயர் பண்டிதமணியைப் பெரிதும் வாட்டிற்று. தந்துணை இழந்த பண்டிதமணி பணியில் இருந்தும் ஓய்வு பெற்று மகிபாலன்பட்டிக்கு வந்து சேர்ந்தார். இறை மாட்சியே உள்ளத்தில் ஊன்றி நின்றது; திருவாசகத் திலேயே அழுந்தி நின்றது; அதன் பயனாகக் கதிர்மணிவிளக்கம் ஒளி செய்தது. பின்னர் அவ்வொளி விளக்கம் ஒளியருளிய ஒளியுடன் ஒன்றி நிற்பதைக் கருதி அழுந்தி நின்றது. 1953 அக்டோபர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் கதிரொளி பேரொளிப் பிழம்புடன் கலந்து ஒன்றுபட்டது. அவ்வொளிக் கொரு திருவுருவச் சிலை 3-4-1974 இல் மகிபாலன்பட்டியில் நிறுவப் பெற்றது. அவர் ஒளியுருவோ தமிழன்பர் உள்ளத்து அணையாச் சுடர் ஆயிற்று! என்றும் அது நின்று நிலவும்! சில சுவையான நிகழ்ச்சிகள் ஒரு கூட்டம் நடந்த இடத்தில் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். அமைதியாக இருக்குமாறு பன்முறை வேண்டியும் அவர்கள் பேச்சு ஓயவில்லை. அதைக் கண்ட பண்டிதமணி, பெண்மணிகள் ஒலித்துக் கொண்டுதாமிருக்கும் என்று கூறினார். கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் பண்டிதமணி பருகுதற்குப் பால் வழங்கினர். பால் குவளையைக் கையில் வாங்கிய பண்டிதமணி, திருப்பாற்கடலில் சீனிவாசன் துயில் கொள்ளுகிறார் என்றார். ஆங்கிருந்தோர்க்கும் நண்பர்க்கும் பண்டிதமணி கூறியது புரியவில்லை. பாலில் ஓர் எறும்பு கிடந்தது. சீனியில் வாசம் செய்யும் எறும்பு சீனிவாசன் தானே! பாற்கடலில் பள்ளி கொண்ட சீனிவாசனை, பால்குவளையில் கிடந்த சீனிவாசனுடன் இணைத்து இருபொருள் நயம்படக் கூறிப் பாற்சுவைக்கு மேற்சுவைப் படுத்தினார் பண்டிதமணி. கரந்தையில் ஒரு விருந்து நடைபெற்றது. அவ்விருந்தில் புலவர் வரதநஞ்சையபிள்ளை ரசம் சாப்பிடும் போது இருமினார். அதனைக் கண்ட பண்டிதமணி. ‘ur« mâfhunkh? என்றார். ரசம் அதிக காரமோ? எனவும் அதிகாரத்தோடு அவரை அழைக்கிறீர்களோ? எனவும் இருபொருள் தருகின்றது அல்லவா! தூத்துக்குடியில் பண்டிதமணியின் தலைமையில் புலவர் ஒருவர் பேசினார். அவர் தேவாதி தேவர்கள் எல்லாரும் வந்தனர்; அவர்களில் முருகன்தான் பெரியவனாக இருந்தான் என்றார். அதனைப் பண்டிதமணி, பரமேசுவரன் பார்வதி முதலிய தேவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். முருகன் எல்லார்க்கும் மேலாக இருந்தானாம். ஆமாம், பெரிய கூட்டம். முருகன் ஒரு குழந்தை. ஆதலால் பரமேசுவரன் குழந்தையைத் தோள்மேல் தூக்கி வைத்திருந்திருப்பார். முருகன் எல்லார்க்கும் பெரியவனாகக் காட்சி கொடுத்திருப்பான் என்றார். ஒருமுறை ஒருவர் பெண்கள் கூட்டத்தைப் பார்த்து, நீங்கள் உங்கள் கணவன்மார்களின் எச்சில் உணவை உண்கிறீர்களே! இம் மூடப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று உரக்கக் கூறினார். அக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பண்டிதமணி, இந்தத் தவறான பழக்கத்தை நீங்கள் விட்டு விட்டால் மட்டும் போதாது. எத்தனை ஆண்டுகளாக அவ்வாறு உண்டு வந்தீர்களோ, அவ்வளவு காலமாவது உங்கள் எச்சிலையும் உங்கள் கணவன்மார்களை உண்ணச் செய்து பழிக்குப்பழி வாங்கினால்தான் என்மனம் அமைதி அடையும் என்றார். நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் பண்டிதமணி அவர்களைத் திருக்கற்குடிக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது கோயிலில் வழி கூட்டி அழைத்துச் செல்லும்போது படி இல்லை என்று சொல்லிக் கொண்டே வந்தார். பண்டிதமணி, இறைவன் திருமுன்வந்து படியில்லை என்று சொல்லாதீர்கள்; இறைவன்தானே எல்லார்க்கும் படியளப்பவன் என்று கூறினார். கம்பர் யார்? என்று ஒரு வினா தமிழகத்தில் எழுந்தது. அப்பொழுது பண்டிதமணி அவர்கள் கம்பை உடையவன் கம்பன்; அவ்வகையில் பார்க்கும்போது யானே கம்பன் என்றார். அவர் கம்பின் துணையால் உலா வந்தவர் அல்லரோ! பண்டிதமணி இளமையிலே திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்திருந்தார். அதனைச் சரியாக ஒப்பித்துச் சரிபார்ப்பதற்காக அன்பர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அவரிடம் நான் சொல்வதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எதுவும் பிழை கண்டால் நறுக்கென்று குட்டிவிடுங்கள். நட்பு முறையில் இரக்கம் காட்ட வேண்டா. நன்றாகவே குட்டி விடுங்கள் என்றார். பின், முதற் குறளை, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று ஒப்பித்தார். ஒப்பிக்கு முன்னரே நண்பர் நறுக்கென்று நன்றாக ஒரு குட்டுப் போட்டார். பண்டிதமணி திகைக்துப்போய் இதில் என்ன ஐயா பிழை? ஏன் குட்டினீர்? என்று வினவினார். அதற்கு அவர், அகர முதல வெழுத் தெல்லாம் என்று புத்தகத்தில் இருக்கிறது. வெழுத் தெல்லாம் என்பதை எழுத் தெல்லாம் என்று கூறியதால் குட்டினேன் என்றார். பண்டிதமணி நகைப்புடன், உங்களிடம் ஒப்பித்தால் 1330 குறளுக்கும் 1330 குட்டு வாங்க வேண்டும். அதற்கு என் தலை தாங்காது என்று சொல்லி மேலும் ஒப்பித்தலை நிறுத்திக் கொண்டார். காரைக்குடியில் ஒரு விழா நடைபெற்றது. அவ்விழாவுக்குப் பண்டிதமணி வந்தார். அவர் வருதற்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த உந்துவண்டி (கார்) இடைவழியில் பழுதுபட்டு ஒருமணிநேரம் காருக்குள் தங்க நேரிட்டது. அப்பொழுது பண்டிதமணி பாட்டொன்று பாடினார் : காட்டானை போலக் கதறிக் கிளம்புகின்ற மோட்டாரை நம்புவதும் மோசம்தான்- இதற்குக் கார் பதிலுரைக்கின்றது! பாட்டாய்கேள்! காரைக் குடிநகரைக் காணவிழைந் தாயன்றோ! காரைக் குடியாகக் காண். 3. பேரறிஞர் பரிதிமால் கலைஞர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மில்லர் என்னும் பெயருடைய ஒரு துரைமகனார் தலைவராக இருந்தார். அவர் ஒருநாள் தெனிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ஒரு பாடலைச் சுவையாக நடத்தினார். ஒரு படகைப் பற்றியது அப் பாட்டு. ஒரு படகு, இருபக்கங்களிலும் துடுப்புகளால் தள்ள நீரில் மிதந்து செல்கின்றது. அஃது, ஓர் அன்னம் தன் இரு சிறகுகளையும் வீசி அழகாகப் பறந்து செல்வதுபோல் உள்ளது என்று வருணிக்கப்பட்டிருந்தது. அப் பாட்டை இனிமையாக நடத்திய மில்லர், இத்தகைய வருணனை பிறமொழிப் பாடல்களில் உண்டோ? என ஐயமுற்றார். அதனால் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய செய்தி உண்டா? என வகுப்பில் பொதுவாக வினாவினார். அனைவரும் அமைதியாக இருந்தபோது ஓர் இளைஞர் எழுந்து, முடுகின நெடுவாவாய் முரிதிரை நெடுநீர்வாய் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் எனக் கம்பராமாயணத்தில் இச்செய்தி வந்துள்ளது என்பதைக் கூறி விளக்கினார். தெனிசனுக்கு எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன் கம்பன். அவன் அப்பொழுதே இப்படிப் பாடியுள்ளான் எனப் பெருமிதத்துடன் இளைஞர் கூறினார். மில்லர் வியப் படைந்தார். இளைஞர் அறிவாற்றலையும், துணிவையும் வியந்து பாராட்டினார். அந்த மாணவர் பட்டம் பெற்றதும் அக் கல்லூரியிலேயே பணிபுரியும் வாய்ப்பும் தந்தார். அம் மாணவர் யாவர்? அவரே வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர் ஆவர். ஊரும் பேரும் : மதுரை மாநகரை அடுத்துள்ள ஓர் ஊர் விளாச்சேரி. அவ்வூரில் கோவிந்த சிவனார் என்றொரு பெருமகனார் இருந்தார். அவர் தம் அருமைத் திருமகனாக 6-7-1870இல் தோன்றினார் சூரிய நாராயண சாத்திரியார். வி.கோ. என்பது விளாச்சேரியையும் கோவிந்த சிவனாரையும் குறிப்பன ஆகும். கோவிந்தசிவனார் பேரறிஞர், வடமொழிப் புலமை நிரம்பியவர்; சைவசித்தாந்த ஆராய்ச்சி மிக்கவர். யோகப் பயிற்சியுடையவர்; தம்மை அடுத்து வந்தவர்க்குக் கனிவுடன் கற்பிக்கும் கடமை புரிந்தவர். இத்தகையவரின் மைந்தர் அறிவுச் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ? கல்விப் பயிற்சி : சாத்திரியார் இளமையில் தம் தந்தையாரிடமே கற்க வேண்டுவன எல்லாம் கற்றார். பத்தாம் வயதில் பசுமலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்பொழுதே சிலம்பம், மற்போர் ஆகிய பயிற்சிகளிலும் விளையாட்டிலும் ஆர்வமாக ஈடுபட்டார். அதன்பின் மதுரை மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர், மதுரைக் கல்லூரியில் எப்.ஏ. வகுப்பில் சேர்ந்து சிறப்பாக வெற்றி பெற்றார். தமிழ்க் கல்வி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சாத்திரி யார்க்குத் தமிழ்மொழியின்மேல் தணியாத அன்பு உண்டாயிற்று. அதன் இலக்கிய இலக்கணங்களைக் கற்க விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்த தந்தையார், பெரும் பேராசிரியர் சபாபதி முதலியார் அவர்களிடம் தனியே தமிழ்ப்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். முதலியார் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமையாளர். கணக்கு, தத்துவம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர்; பழுத்த பேராசிரியர்; பெரும் பாவலர்; நாவலர்; இவரிடம் 1885 முதல் 1890 வரை ஐந்தாண்டுகள் சாத்திரியார் தமிழ் கற்றார். அக்கல்வி அவர்தம் பிற்காலத்தில் இணையில்லாப் பெருமை தந்தது. படிக்கும் காலத்திலேயே மாலா பஞ்சகம் என்றொரு நூல் இயற்றியமை குறிப்பிடத்தக்கதாம். பட்டப் படிப்பு : சாத்திரியார் மேற்கல்வி கற்க விரும்பினார். தந்தையாரும் இசைந்தார். அதனால் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்; தமிழ்க் கல்வி இவர்க்கு எளிது ஆயிற்று. உடன் பயின்ற மாணவர்க்கு இவரே தமிழ் கற்பித்தார். ஆங்கிலம் கற்பதிலும், தத்துவ நூல்களை ஆராய்வதிலும் மிக ஈடுபட்டார். கற்றுக் கொண்டிருக்கும் காலத்திலேயே கட்டுரைகள் எழுதி இதழ்களில் வெளியிட்டார். 1892இல் இளங்கலைத் தேர்வில் (B.A.) தமிழில் முதன்மை பெற்றதற்காகப் பாற்கர சேதுபதியின் பொற்பதக்கம் இவருக்குப் பரிசாகக் கிடைத்தது. திராவிட சாத்திரி : அந்நாளில் சென்னையில் சி. வை. தாமோதரம் பிள்ளை என்னும் பேரறிஞர் ஒருவர் இருந்தார். அவர் சாத்திரியாரின் தமிழ்மொழிப் புலமையைக் கேள்விப்பட்டார். ஒருநாள் அவரை அழைத்து உரையாடினார். சாத்திரியார் பேசிய தூய தமிழ் நடையையும், தமிழ்மொழித் தேர்ச்சியையும் அறிந்து மகிழ்ந்தார். ஒருமணிப் பொழுதில் எழுதுவதற்குத் தக்க வகையில் ஒரு தமிழ்த்தேர்வு வைத்தார். அதனை அரைமணிப் பொழுதில் அருமையாக எழுதி முடித்தார் சாத்திரியார். இவர்தம் புலமையை நன்கு அறிந்து கொண்ட தாமோதரனார் இவரைத் திராவிட சாத்திரி என்று பாராட்டினார். தாம் பதிப்பித்த நூல்களில் ஒவ்வொன்று அன்பளிப்பாக வழங்கினார். அதன் பின்னர் இவ்விருவர் நட்பும் வளர்பிறைபோல வளர்ந்தது. ஆசிரியப் பணி : மில்லர் துரைமகனார்க்குச் சாத்திரியாரின்மேல் அளவற்ற அன்பு இருந்தது. அதனால் தம் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக அமர்த்த விரும்பினார். ஆனால், சாத்திரியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றவே விரும்பினார். மில்லரும் அதற்கு இசைந்து அவ்வாறே செய்தார். சாத்திரியார் கொண்ட தமிழ்ப்பற்றுக்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த சான்று அன்றோ? பரிதிமால் கலைஞர் : சாத்திரியாரின் தமிழ்பற்றுக்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று சூரிய நாராயண சாத்திரியார் என்னும் பெயரைத் தனித் தமிழில் பரிதிமால் கலைஞர் என மாற்றிக் கொண்டதே ஆகும். (சூரியன்-பரிதி; நாராயணன்-மால்; சாத்திரி-கலைஞர்.) பல திறத் தொண்டுகள் : பரிதியார் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் போது கல்லூரிப் பணிகளைக் செவ்வையாகச் செய்தார். மாணவர் பாராட்டுமாறு வகுப்பு நடத்தினார்; கல்லூரி ஆசிரியர்கள் புகழுமாறு கடமை புரிந்தார். வகுப்பு அளவில் தமிழ் பயிற்றுவதை நிறுத்திவிடாமல் வீட்டிலும் தமிழ் ஆர்வம் உடையவர்க்குக் கற்பித்தார். தம் வாழ்வையே தமிழ் வாழ்வாக்கிக் கொண்டார். கிறித்தவக் கல்லூரியில் தமிழ் மொழி முன்னேற்றச் சங்கம் ஒன்றை நிறுவினார். பொதுமக்களுக்குத் தமிழ்த் தொண்டு செய்வதற்காகத் திராவிட பாசர சங்கம் என ஒரு சங்கத்தையும் தொடங்கினார். ஆங்காங்கு அரிய பொருள்களைக் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினார். சிறந்த கட்டுரைகளை எழுதிச் செய்தித் தாள்களில் வெளிப்படுத்தினார். பல்கலைக் கழகத் தேர்வாளராக இருந்தும் பணி செய்தார். பல்வேறு ஆசிரிய நிலை : பரிதியார் போதக ஆசிரியர் என்னும் பொறுப்பில் இருந்தால் கூட, நூலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும் சிறந்து விளங்கினார். இளமையிலேயே மாலா பஞ்சகம் என்னும் நூலை இயற்றியதை முன்னே அறிந்தோம். மேலும் ரூபாவதி, கலாவதி, மானவிசயம் என்னும் நாடக நூல்களை இயற்றினார். பல வேளைகளில் பல பொருள்களைப் பற்றிப் பாடிய பாடல்களைத், தனிப் பாசுரத் தொகை என ஒரு நூலாக்கினார். இதனை மேல்நாட்டுத் தமிழ்ப் பேரறிஞர் போப்பையர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பாவலர் விருந்து என்னும் நூல் பரிதியார் பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு நூலாகும். இவையன்றித் தமிழ்மொழி வரலாறு என்னும் ஓர் அரிய நூலையும், நாடக இயல், மதிவாணன், மணியசிவனார் சரித்திரம் என்பவற்றையும் இயற்றினார். பரிதியார் தாம் இயற்றிய நூல்களையும், பிறர் இயற்றிய நூல் களையும் தாம் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற் கொண்டார். அவ் வகையில் நாடக நூல்களை நாமகள் சிலம்பு என்னும் வரிசையிலும், செய்யுள் நூல்களைத் தமிழ்மகள் மேகலை என்னும் வரிசையிலும், கதை நூல்களை இன்பவல்லி என்னும் வரிசையிலும், மெய்ப்பொருள் நூல்களை ஞான தரங்கிணி என்னும் வரிசையிலும், முற்கால நூல்களைக் கலைமயில் கலாபம் என்னும் வரிசையிலும், இவற்றில் அடங்காத நூல்களைக் கலாநிதி என்னும் வரிசையிலும் வெளியிட்டார். சென்னையில் பூரணலிங்கம் பிள்ளை என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் ஞானபோதினி என்னும் திங்கள் இதழ் நடத்தி வந்தார். அவர் தம் ஆசிரியர் பணி தொடர்பாகக் கோவைக்குச் செல்ல நேர்ந்தது. அதனால் பரிதியார் அவ்விதழின் கூட்டாசிரியராக இருந்து தம் வாழ்நாள் அளவும் நடத்தினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளிவந்த செந்தமிழ் என்னும் இதழில் அரிய கட்டுரைகள் எழுதினார். அருந்தமிழ்த் தொண்டு : ஆங்கிலேயர் இந் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலத்திற்கே முதலிடம் தந்தனர். உள்நாட்டு மொழிகளைப் புறக்கணித்தனர். இந் நிலையில் வடமொழிப் பற்றுடையவர்கள் ஆங்காங்குக் கூடி, வடமொழி தவிர்த்த உள்நாட்டு மொழி எதற்கும் அரசு சிறப்புத் தருதல் ஆகாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். அப்பொழுது இந்திய அரசுப் பொறுப்பாளராக இருந்தவர் கர்சன் பிரபு என்பவர். அவர் இத்தீர்மானத்தை ஆராய்ந்து கருத்துக் கூறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். இச் செய்தியை அறிந்தார் பரிதியார். தம் நண்பர் பூரணலிங்கம் பிள்ளையை உடனே கோவையில் இருந்து சென்னைக்கு வருமாறு தொலைவரி (தந்தி) அனுப்பினார். அவர் வந்ததும், பல்கலைக் கழக உறுப்பினர்களைத் தனித்தனியே கண்டு அத் தீர்மானத்தை எதிர்க்குமாறு வேண்டிக் கொண்டனர். இவ்வாறு இவர்கள் காலத்தால் செய்த கடமையே தமிழ்மொழி கட்டாய பாடமாகும் நிலைமையைப் பெற்றது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் ஒரு தீர்மானம் செய்யுமாறு பரிதியாரே தூண்டினார். பரிதியார் செய்த பணி, தமிழ் உள்ளங்களில் எல்லாம் மிகுந்த மகிழ்வை உண்டாக்கிற்று. இல்லறம் : பைந்தமிழ்ப் பரிதியார்க்குப் பத்தொன்பதாம் வயதில் திருமணம் நிகழ்ந்தது. திண்டுக்கல் பா. கலியாண சுந்தர ஐயர் என்பவரின் திருமகளார் முத்து சுபலக்குமி என்பவரை வாழ்க்கைத் துணையராகக் கொண்டார். இனிய பண்புகள் எல்லாம் ஓர் உருவானவர் இவ் அம்மையார். இவர்கள் இல்வாழ்வின் பயனாக ஆனந்தவல்லி, நடராசன், சுவாமிநாதன் என்னும் நன்மக்கள் மூவர் தோன்றினர். இறுதிநாள் : பரிதியார் இனிய இல்லறம் பதினான்கு ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றது. பரிதியாரின் அளவு கடந்த உழைப்பு உடலைத் தாக்கத் தொடங்கியது. அன்றியும் பரிதியார் கொண்டிருந்த நாடகப் பற்றால், பெரும்பாலும் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டிருந்து நாடகம் பார்ப்பதும் சேர்ந்து கொண்டு உடலை வாட்டுவதாயிற்று. பனியே வாடையே என்று கருதாமல் திறந்த வெளியில் இருந்தும் இரவெல்லாம் எழுத்துப் பணி செய்தது உடல்நலம் கெட விரைந்து தூண்டிற்று. இவற்றால் பரிதியார் உடல் இளைத்தது! இருமல் வாட்டியது! கல்லூரிக்குச் செல்லவிடாமல் கட்டிலில் கிடக்க வைத்தது. ஆயினும் கன்னித்தமிழ் கற்பிப்பதை அவர்தம் கனிவாய் மறக்கவில்லை. தமிழ் நூல்கள் இயற்றுதலை அவர்தம் தவக் கை ஓயவில்லை. நாள் செல்லச் செல்ல வண்டமிழ் வாழ்வே வாழ்வாகக் கொண்ட பரிதியாரின் வாயும் ஒடுங்கிப் போயிற்று! நூற்றாண்டு காலம் வாழ்ந்தாரும் செய்ய முடியாத தொண்டுகளை முப்பத்திரண்டு வயது அளவிலேயே முடித்த பரிதியின் பருவுடல் அதற்குமேல் தாங்கவில்லை! அந்தோ! தமிழகத்தின் தவக்குறையான நாட்களில் ஒன்றாயிற்று 1903 நவம்பர் இரண்டாம் நாள்! பரிதியார் ஒளி உருக் கொண்டார்! தமிழ் உள்ளங்கள் களி இழந்தன! என் புருவம் சுருக்கம் ஏறிக் கண்களை மறைக்கும் முதுமையிலும் வாழ்கின்றேன்; நடுவயதும் வருமுன்னரே நற்றமிழ்ப் பரிதி அகன்றானே என்று கூறிக் கண்ணீர் வடித்துக் கலங்கி நின்றார் மில்லர் துரைமகனார் என்றால் கட்டிளம் மனைவியர், கைக் குழந்தையர் கற்றறிந்த மாணவர், அன்பர் கவலையை உரைக்கச் சொல்லும் உண்டோ? சில சுவையான நிகழ்ச்சிகள் எழுவாய், பயனிலை : பரிதியார் வகுப்பு எப்பொழுதும் எல்லாரும் விரும்பத் தக்கதாகவே இருக்கும். ஒருநாள் ஒரு மாணவன் வகுப்பில் கருத்தின்றி இருந்தான். அவன் நிலையை அறிந்தார் பரிதியார். நீ இவண் இருந்து எழுவாய்! இவண் இருத்தலால் பயனிலை! நீ செல்ல வேண்டியதே செயப்படு பொருள்! என்று எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னும் இலக்கணச் சொற் களாலேயே மட்டம் தட்டினார். தாமரைக் கண் : ஒருநாள் சீவக சிந்தாமணிப் பாடல் ஒன்றை விரிவாக எடுத்துரைத்தார். அப்பாட்டில் சீவகனைக் கண்ட மாதர், தாமரைக் கணால் பருக என்னும் தொடர் வந்தது. அதனைத் தாமரை போன்ற கண்ணால் பார்த்தனர் என்று ஒரு பொருள் கூறினார். பின்னர், தா மரை எனப் பிரித்துத் தாவும் மான் கண் போன்ற கண்ணால் பார்த்தனர் என்று வேறொரு பொருள் கூறினார். பிறகு சற்றே நிறுத்தி, சீவகன் பேரழகுடைய ஆடவன். ஆதலால், மகளிர் நேரே பார்க்க நாணித் தாம் அரைக் கண்ணால் நோக்கினார் என்று கூறினார். வகுப்பே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் உடையதாயிற்று. தேனிசையன் : தமிழ் இலக்கியத்தைப் போலவே ஆங்கில இலக்கியத்திலும் பரிதியார்க்கு மிக ஈடுபாடு உண்டு. ஆங்கிலக் கவிஞருள் தெனிசன் என்பார் கவிதைகளில் பரிதியார்க்குச் சிறந்த பற்று இருந்தது. அதனால் தெனிசன் என்னும் பெயரைத் தேனிசையன் என உள்ளர்ந்த அன்போடு உரைப்பார் பரிதியார். பெயரை மாற்றுதல் : பரிதியார் கிறித்தவக் கல்லூரி மாணவராக இருந்த போது ஒருநாள் மில்லர் பெருமகனார் சூரிய நாராயணன் என்னும் உன் பெயரைச் சொல்ல எனக்குக் கடினமாக உள்ளது. உன் பெயரை மாற்றிக் கொள்ளலாமே என்றார். சரி! அப்படியே மாற்றிக் கொள்கிறேன் என்றார் பரிதியார். மறுநாள் பெயர்ப் பதிவேட்டில் பெயர் மாற்றப்பட்டிருந்தது. அதனை வியப்போடு பார்த்த மில்லர் பெருந்திகைப்பு அடைந்தார். ஏன்? சூரிய நாராயண சாத்திரி எனப் பெயர் இருந்தது! திகைப்பு வராமல் என்ன செய்யும்? பரிதியார் ஏற்றுக் கொண்டவாறு செய்யாமல் தவறு செய்தாரா? இல்லையே; பெயரை மாற்றிக் கொண்டாரா இல்லையா? பரிதியாரின் செம்மை : பரிதியார் சென்னையில் படிக்கும்போது, தங்கசாலைத் தெருவில் செங்கல்வராய முதலியார் என்பவர் வீட்டில் குடியிருந்தார். அச் செங்கல்வராய முதலியார் மைந்தர் சரவண முதலியார் என்பவர். அவர், பரிதியார் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியரானபோது அக் கல்லூரியிலே பயின்றார். பரிதியாரிடம் தமிழ்ப்பாடம் தனியேயும் கற்றார். தமிழ் ஆர்வமும் புலமையும் மிகவுடையவர். அவர் இளங்கலைத் (பி.ஏ.) தேர்வுக்குச் செல்லும் ஆண்டு, பரிதியாரே தேர்வாளராகவும் இருந்தார். இதனால், இவ்வாண்டு சரவண முதலியாரே தமிழில் முதன்மை பெறுவார் என்று பலரும் எண்ணினர். சிலர் பேசவும் தொடங்கினர். இச் செய்தி பரிதியின் செவிக்கு எட்டியது. உடனே இவ்வாண்டு எனக்குத் தேர்வாளர் பதவி வேண்டா என்று பல்கலைக் கழகத்திற்கு எழுதிவிட்டார். வருவாய் மிக்க அப் பொறுப்பை எவராவது விடுவரா? மில்லர்கூட நாங்கள் குறை சொன்னால் அல்லவா நீவிர் கவலைப் படவேண்டும்? உம் நேர்மையை நாங்கள் அறிவோமே என்று மறுத்துக் கூறினார். ஆனால். பரிதியார் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவ்வாண்டு கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர். உ.வே. சாமிநாதையர் அவர்கள் தேர்வாளராக அமர்ந்தார். அப்பொழுது, சரவண முதலியாரே தமிழில் முதன்மை பெற்றார். பரிதியாரின் செம்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? பரிதிமால் கலைஞரைப் பற்றிய ஓர் ஓவியம் வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் இருந்தவர். அக்காலத்தில் யான் வெசிலி கல்லூரியில் மாணாக்கனாய் இருந்தேன். அதனால் சாத்திரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றேன் இல்லை. ஆனால் என் கண்கள்மட்டும் அவரைக் காணும் பேறு பெற்றன. சூரிய நாராயண சாத்திரியாரிடத்தில் சிறந்து விளங்கிய இயல்புகள் பல உண்டு. அவைகளுள் சிறந்தது எங்கும் எப்பொழுதும் எக்காரணம் பற்றியும் கொச்சைத் தமிழ் பேசாமை. சாத்திரியாரால் இயற்றப்பட்ட நூல்கள் தமிழ் அன்னையின் அணிகள். அவைகளுள் ஒன்று தமிழ்மொழி வரலாறு. தமிழ் நாட்டில் தாய் மொழி வரலாற்றுக்கு வழி காட்டியவர் சூரிய நாராயண சாத்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும். - தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார். 4. நாவலர் பாரதியார் திருநெல்வேலியில் ஒரு கூட்டம் நடந்தது. அக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தவர் ஈழ நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவர். அவர் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்த அறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பாடலின் இறுதியடியைத் தந்து மற்றை அடிகளை அமைத்துப் பாடித் தருமாறு கேட்டார். புலவர்கள் பாட்டியற்றத் தொடங்கினர். அக் கூட்டத்திற்குச் சோமு என்றும், சுப்பு என்றும் பெயருடைய இளைஞர் இருவரும் வந்திருந்தனர். அவர்களுள் சோமுவைப் பார்த்துச் சுப்பு, அடே சோமு, நீ ஒரு பாட்டுப் பாடு; நானும் ஒரு பாட்டுப் பாடுகிறேன்; நாம் இவர்கள் பாடித் தருவதற்கு முன்னே, நம் பாட்டைத் தந்துவிடுவோம் என்று கூறினான். அவ்வாறே இருவரும் பாட்டுப் பாடிக் கொண்டு ஈழத்துப் புலவரிடம் தந்தனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் இவ்வளவு விரைவில் பாட்டை எழுதிக் கொண்டு வந்துவிட்டார்களே எனப் புலவர் வியந்தார். பெரியவர்கள் அதற்குப் பின்னர்த் தாம் பாடிய பாடல்களைக் கொண்டு வந்தனர். புலவர், எல்லாப் பாடல்களையும் ஆராய்ந்தார். அவற்றுள் சுப்பு பாடல் சிறப்பாகவும், அதனை அடுத்துச் சோமுவின் பாடலும் இருக்கக் கண்டார். அவர்களின் புலமையைப் பாராட்ட விரும்பினார். அதனால் அங்கிருந்த அனைவரும் ஒன்றுபோல ஏற்றுக் கொள்ளுமாறு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார். பாரதி என்பதற்குக் கலைமகள் என்பது பொருளாகும். புலவர்களால் பாராட்டப் பெற்ற சுப்புவே சுப்பிரமணிய பாரதியார்; சோமுவே சோமசுந்தர பாரதியார். நாவலர் கணக்காயர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் என்பவரும் அச் சோமுவேயாம். எட்டையாபுரம் அரசரிடம் சுப்பிரமணிய நாயகர் என்பார் பணி செய்து வந்தார். அரசர் அன்புக்கும் அரவணைப் புக்கும் மிக உரியவராக இருந்தார். அரசர்க்குரிய பட்டத்தாலே, சுப்பிரமணிய நாயகர், எட்டப்பபிள்ளை என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் நிலைமையைப் பெற்றார். அரசியாரின் வளர்ப்புப் பிள்ளை முத்தம்மாள் என்றொருத்தி இருந்தார். அவரை அரசியார் விருப்பப்படி எட்டப்ப பிள்ளை மணஞ்செய்து கொண்டார். இவர்களின் அன்பு வாழ்க்கையின் அரிய கனியாக 1879 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் பிறந்தார். எட்டப்ப பிள்ளையின் உறவினர் சோம சுந்தர நாயகர் என்பவர். அவர்மேல் அளவிலா அன்பு கொண்டிருந்தார் எட்டப்ப பிள்ளை. அதனால் தம் மைந்தருக்குச் சோமசுந்தரம் என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். அரசியார் சத்தியானந்தன் என்னும் பெயராலே அழைத்தார். அதனால் சத்தியானந்த சோமசுந்தர பாரதியார் ஆனார். ச. சோ. பாரதி என்பது சுருக்கப் பெயராயிற்று. நாவலர் பாரதியார் என்பது நாடறிந்த பெயரும் ஆயிற்று. சோமு அரண்மனையிலே தவழ்ந்தார்! ஓடி ஆடினார்; மழலை பொழிந்தார்; அரசியாரின் செல்வப் பேரனாக வளர்ந்தார். ஐந்தாம் வயதில், அரண்மனை ஆசிரியராக இருந்த சங்கர சாத்திரியாரிடம் தமிழ், வடமொழி எழுத்தறிவு பெற்றார். பின்னர்த் தெய்வசிகாமணி ஐயங்கார் என்பார் நடத்திய திண்ணைப் பள்ளிக்குச் சென்றார். சென்ற அன்றே ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ஒரு சிறுவனைப் பிரம்பு கொண்டு நன்றாக அடித்துவிட்டார். அதனைக் கண்டு அஞ்சினார் சோமு. கண்ணீர் வடித்துக் கொண்டே வீட்டுக்குத் திரும்பினார். பள்ளிக்குப் போக முடியாது என்று மறுத்துவிட்டார். அரசியார் துணை இருப்பதால் சோமுவை எவரும் கண்டிக்க முடியவில்லை. அரண்மனைப் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்தார். சோமுவுக்கு வயது ஒன்பது ஆயிற்று. இந்நிலையில் அரசியார் இயற்கை எய்தினார். அரவணைத்து வந்த அரசியார் மறைவு ஆறாத் துயராயிற்று. அரண்மனை வாழ்வு விடுபட்டது. தாய் தந்தையர் சொல்வழி நிற்க வேண்டிய நிலைமை உண்டாயிற்று. நின்ற கல்வி மீண்டும் பதினொன்றாம் வயதில் தொடங்கியது. எட்டையாபுரத்தில் எட்டாம் வகுப்பு வரைக்குமே பள்ளி இருந்தது. அப் பள்ளியில் சோமு கற்று வந்தார். அக்காலத்தில் அரண்மனைக்குப் பல தமிழ்ப் புலவர்கள் வந்து போயினர்; சில வேளைகளில் புலவர்கள் விரிவுரைகளும் நிகழும். அக் காலத்தில் புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஆயிற்று. அவ்வாய்ப்பு, சோமுவுக்குத் தமிழ்ப் பற்றை ஊட்டிற்று. அப்பொழுது கேட்ட இராமாயண பாரதக் கதைகளில் உண்டாகிய கருத்து வேறுபாடுகளே பிற்காலத்தில் அரிய ஆராய்ச்சிகளாக வெளிவரத் தூண்டின எனலாம். எட்டாம் வகுப்புப் படிப்பை முடித்ததும் சோமுவுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் கருதினர். கடம்பூரைச் சேர்ந்த மீனாட்சியம்மை என்பவரை மணமுடித்து வைத்தனர். அப்பொழுது சோமுவின் வயது பதினைந்தே ஆகும். அக் காலத்தில் அப்படி இளமையிலே திருமணம் முடித்து வைப்பதும், அதற்குப் பின்னர்க் கற்கச் செல்வதும் இயல்பாக நடந்தன. சோமு மேற்படிப்புப் படிக்க விரும்பினார். அதனால் திருநெல்வேலி சர்ச் மிசன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவ்வுயர்நிலைப் பள்ளியுடன் கல்லூரியும் இணைந்து இருந்தது. அதனால் கல்லூரி இடைநிலை வகுப்பும் (எப். ஏ.) அங்கேயே கற்றார். அதற்குமேல் பட்டப்படிப்புப் பெறவும் விரும்பினார். அதனால் அக் கல்லூரி முதல்வர் சாஃப்டர் என்பவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரி முதல்வர் மில்லர் துரைமகனாருக்கு ஒரு கடிதம் தந்து வாழ்த்தி அனுப்பினார். மில்லரின் அன்பால் சோமு கிறித்தவக் கல்லூரி மாணவரானார். பலரும் பாராட்டும் வண்ணம் படித்து இளங்கலைப் பட்டமும் (பி. ஏ.) பெற்றார். அப்பொழுது தவத்திரு மறைமலையடிகளார் இடத்தும், பேரறிஞர் பரிதிமால் கலைஞர் இடத்தும் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்குமேல் சட்டக்கல்வி பெறவும் விரும்பினார். அவ்வாறே சட்டக் கல்லூரியிலும் சேர்ந்தார். இந்நிலையில் இனிய தந்தையார் எட்டப்ப பிள்ளை இயற்கை எய்தினார். குடும்பச் சுமை சோமுமேல் வீழ்ந்தது. அப்பொழுது இவருக்கு மக்கள் மூவர் இருந்தனர். அவர்களைக் காக்க என்ன செய்வது? தம் கல்விக்கு என்ன செய்வது? வறுமை சூழ்ந்தது. ஆனால், உள்ளந்தளராமல் உறுதியாக நின்றார் சோமு. அரசியார் அன்பளிப்பாகத் தந்த நிலம் 12 ஏக்கர் இருந்தது. அதனை விற்றார்; கவலையைத் தீர்த்தார்; கல்வியைத் தொடர்ந்தார். சட்டக் கல்லூரித் தேர்வை (பி. எல்.) எழுதினார். தேர்வு முடிவு தெரியும்வரை பணியின்றி இருப்பதற்குக் குடும்பச் சூழ்நிலை விடவில்லை. அதனால் வருவாய்த் துறை அலுவலகம் ஒன்றில் எழுத்தராகப் பணி செய்தார். சட்டப் படிப்பின் முடிவு அறிவிக்கப் பெற்றதும் அவ் வேலையில் இருந்து விலகி வழக்கறிஞர் தொழிலை நடத்தத் தொடங்கினார். வழக்கறிஞர் தொழிலில் முதலாவதாக ஈடுபடுபவர்கள், பெயர் பெற்ற வழக்கறிஞர்களிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெறுவது வழக்கம். அதன் பின்னரே தனியே வழக்குகளை எடுத்து நடத்துவர். ஆனால், நாவலர் பாரதியார் அவ்வாறு செய்தாரல்லர். மிகவும் துணிச்சலாகத் தாமே வழக்குகளை எடுத்துக்கொண்டு நடத்தத் தொடங்கினார். தம்மேல் அவர்க்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்படா வண்ணம் எடுத்த வழக்குகளில் எல்லாம் வெற்றி கொண்டார். ஓரொரு வேளை தோற்றுப் போயினும்கூட எதிர் வழக்கறிஞர் களைத் திணற வைத்தார். அதனால் பலரும் நாவலர் பாரதி யாரிடம் வந்து தம் வழக்குகளை எடுத்து நடத்த வேண்டினர். பணமே குறியாக எந்த வழக்கையும் நாவலர் ஏற்றுக் கொள்வது இல்லை. பொய் வழக்குகளை எவர் சொன்னாலும், எவ்வளவு தொகை கிடைத்தாலும் எடுத்துக் கொள்ள மறுத்து விடுவார். குறைந்த எண்ணிக்கையான வழக்குகளையே எடுத்துக் கொண்டு தெளிவாக ஆராய்வார். குறையாத அளவு பணமும் பெறுவார். ஏற்றுக் கொண்ட வழக்குக்காக இவர் எடுத்துக் கொள்ளும் உழைப்பு கட்சிக்காரர் எவருக்கும் நிறைவு தராமல் போகாது. இவையே நாவலர் பாரதியார் செய்த வழக்கறிஞர் தொழிலின் வெற்றிக்கு அடிப்படைகளாம். நாவலர் 1905ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியிலே இருந்து பணி செய்தார். அதன் பின்னர்த் தம்மிடம் வழக்குக்காக வரக்கூடியவர்களுள் பெரும்பாலோர் நாட்டுக் கோட்டையைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அறிந்து தம் இருப்பிடத்தை மதுரையை அடுத்துள்ள பசுமலைக்கு மாற்றிக் கொண்டார். நாவலர்க்கு இளமையிலே அரும்பிய தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து கொண்டே வந்தது. அதனால் தமிழைக் கற்கும் வாய்ப்பாக முதுகலைத் தேர்வுக்கு (எம். V.)ச் சென்றார். அப்பொழுது வேறொரு மொழியும் எடுத்துப் படித்தல் வேண்டும் என விதி இருந்தது. அதனால் மலையாளமும் கற்றார். 1913இல் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அந்நாளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் நாவலரைக் கவர்ந்தது. அதன்மேல் ஈடுபாடு கொண்டார். கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் தொடர்பு நாவலர்க்கு ஏற்பட்டது. மேடைகளில் சிதம்பரனாருடன் தோன்றினார்; முழங்கினார்; சொல்மழை பொழிந்தார். வ.உ.சி. செய்த தொண்டுகளில் துணிந்து பங்கேற்றார். மாதத்திற்கு 1000 உரூபா வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலையும் விடுத்து 100 உரூபா ஊதியத்தில் கப்பல் கழகத்தில் பணி செய்தார். இவற்றால் ஆட்சியாளர்கள் நாவலரை ஐயுறத் தக்கவர் பட்டியலில் வைத்து அவ்வப்போது மறைமுகமாக ஆராய்ந்து வந்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல் பணி புரிந்தார். 1919இல் நெல்லையிலும், 1920இல் மதுரையிலும் மாநிலக் காங்கிரசு மாநாடு நடைபெற ஏற்பாடு செய்தார். இவற்றின் செயற் பொறுப்பாளராக நாவலரே இருந்தார். காந்தியடிகளைத் தூத்துக்குடிக்கு ஒரு முறையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு முறையும் முயன்று வரவழைத்தார். அவ்வப்போது காங்கிரசுக் கட்சிக்கு நன்கொடை திரட்டித் தந்தார். தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார். இவர்தம் ஈடுபாடு இவர் மக்களிடத்தும் விளங்கியது. அதனால் இவர்மம் திருமகனார் இலக்குமிரதன் பாரதி, திருமகளார் இலக்குமி பாரதி, மருமகனார் கிருட்டிணசாமி பாரதி ஆகியோர் விடுதலைப் போராட்டத்தில் சிறந்த பங்கு கொண்டு பணியாற்றினர். 1937இல் திரு. இராசகோபாலாச்சாரியார் சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். உடனே பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்கினார். அதனை எதிர்த்தவர்களுள் நாவலர் குறிப்பிடத் தக்க ஒருவர் ஆவர். முதலமைச்சருக்கு வெளிப்படைக் கடிதம் எழுதினார். சென்னை முதலிய இடங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பினார். அதனால் கட்டாய இந்தித் திட்டம் கைவிடப் பெற்றது. 1948இல் மீண்டும் இந்தியைப் புகுத்தினர். அப்பொழுதும் நாவலர் எதிர்த்தார். இந்தி கட்டாயம் என்னும் நிலை ஒழிந்தது. இவற்றால் நாவலர் நாட்டுக்கும் நற்றமிழ் மொழிக்கும் செய்த தொண்டுகள் நன்கு புலப்படும். நாவலர் தமிழ்த் தொண்டு, ஆராய்ச்சி வன்மை ஆகியவற்றை அண்ணாமலை அரசர் நன்கு அறிந்தார். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு விரும்பினார். தமிழ் மேல் கொண்ட பற்றால் நாவலர் தட்டாமல் அப்பொறுப்பை ஏற்றார். 1933 முதல் 1938 வரை பணிபுரிந்தார். அந்நாளில் இவர் செய்த ஆராய்ச்சிகளும் ஆக்கப் பணிகளும் மிகப் பலவாகும். நாவலர் பல்வேறு மாநாடுகளில் பங்கு கொண்டார். தமிழ் மாநாடுகளும், விழாக்களும் அவர் சொல் மழையால் செழித்தன. அவர் நிகழ்த்திய ஆராய்ச்சி உரைகள் நூல் வடிவம் பெற்றன. தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர் என்பவை குறிப்பிடத் தக்கவை. இன்னும் சேரர்பேரூர், சேரர் தாய முறை, நற்றமிழ், பழந்தமிழ் நாடு என்பவை நாவலர் படைத்த ஆராய்ச்சி நூல்கள் ஆகும். மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, மாரிவாயில் என்பவை செய்யுள் நூல்கள். இனித் தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு அவர் இயற்றிய புத்துரை உரையுலகில் ஒரு புதுத் திருப்பத்தை உண்டாக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நாவலர் பேச்சும் எழுத்தும் செயல் மாண்பும் நாட்டு மக்களையும், அறிஞர்களையும் வயப்படுத்தின. தமிழ் உலகில் ஓர் அரிமாவாக உலா வந்தார். ஈழநாடு நாவலரை வரவேற்றது. அந்நாடுதான் நாவலர் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்புச் செய்தது. ஈழநாட்டுப் புலவர் பாரதி எனப் பட்டம் வழங்கியதை முன்னரே அறிவோம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்புக் கொண்டது. மதுரைத் திருவள்ளுவர் கழகம் கணக்காயர் என்னும் பட்டத்தைக் கனிந் தளித்துப் பெருமை கொண்டது. நாவலர் பேச்சைக் கேட்பதிலே மேடைகள் கவின் கொண்டன. அவர் எழுத்துகளைத் தாங்குவதிலே இதழ்கள் எழில் பெற்றன. நாவலர்க்கு, மீனாட்சியம்மையை மணமுடித்த செய்தியை அறிவோம். அவர்கள் நல்லற வாழ்வின் பயனாக இராசாராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி, இலக்குமி பாரதி என்னும் நன்மக்கள் மூவர் தோன்றினர். பின்னர் 1927இல் நாவலர்க்கும் வசுமதி அம்மையார்க்கும் திருமணம் நிகழ்ந்தது. அவர்தம் அன்பு வாழ்வின் பயனாக மீனாட்சியம்மை, லலிதா அம்மை என்னும் இரு செல்வியர்கள் தோன்றினர். தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கு ஏற்பப் பல்வேறு துறைகளிலும் பணிகளிலும் இம் மக்கள் சிறப்புற்று விளங்குகின்றனர். தூத்துக்குடி வாழ்வும், கப்பல் கழகப் பணியும் விடுதலை வீரர் வ. உ. சி. அவர்களுடன் இணைத்தமையை அறிந்தோம். அதுபோல் எட்டையாபுரத்தில் பிறந்து வளர்ந்தமையும், மொழிப்பற்றும் வாழ்நாள் எல்லாம் தேசியகவி சுப்பிரமணிய பாரதியாருடன் இணைத்து வைத்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலியவை தமிழகத்துப் பேரறிஞர் களுடன் எல்லாம் தொடர்புபடுத்தியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி சீரிய செந்தமிழ் மாணவர் பலரை வழங்கியது. இவ்வெல்லா வகைகளாலும் குறையா நிறைவு எய்தியவர் நாவலர் பாரதியார் ஆவர். நாவலரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. அதற்குப் பின்னர்த் தமிழகப் புலவர் குழுவின் சார்பிலும் அவ்விழா தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப் பெற்றது. எண்பது வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர் எனப் பாராட்டுவர். அப் பாராட்டுப் பெற்ற நாவலர், படைவீரர் வந்தும் நடை கற்கத் தக்க பீடு நடையுடையவர். நாட்காலை உலாவுதலைத் தவறாதவர். ஒருநாள் உலாவச் சென்றபோது சாலையிலே மயக்கமுற்று வீழ்ந்தார். பின்னர்ச் சில நாள்களில் நலம் பெற்றார். மீண்டும் வீட்டிலேயே மயக்கமுற்று வீழ்ந்தார். அரிய மருத்துவங்கள் பெரிதும் முயன்று செய்யப் பெற்றன. அம்முயற்சிகள் அனைத்தும் அவரை மேலும் சில நாள்களே உயிரோடு இருக்கச் செய்தற்குப் பயன்பட்டன! உடையை மாற்றிக் கொள்வதுபோல, உடலை மாற்றிச்செல்வது தானே உயிரின் இயற்கை! கூட்டை விட்டுப் பறவை பறந்து வெளியே செல்வது போன்றது தானே உடலை நீத்து உயிர் செல்லும் செலவு? பூங்கொடியில் இருந்து ஒரு மலர் அமைதியாக உதிர்வதுபோல நாவலர் நல்லுயிர் உடலை விட்டுப் பிரிந்தது. அது 1959 திசம்பர் 14ஆம் நாள் ஆகும்; தமிழ்த்தாய் கண்ணீர் வடித்துக் கசிந்தழுத நாள்களுள் அந்நாளும் ஒன்றாயிற்று. சில சுவையான நிகழ்ச்சிகள் தலைப்பாகை : சென்னையில் வருவாய்த் துறை அலுவலகத்தில் நாவலர் பணி யாற்றினார் அல்லவா! அங்கே ஒரு வழக்கம் இருந்தது. ஆங்கிலேயர் தொப்பிகளைக் கழற்றி வைப்பதற்கு ஒரு தாங்கி இருந்தது. அதில் இந்தியர் எவரும் தலைப்பாகையைக் கழற்றி வைத்தல் கூடாது என்பது அது. நாவலருக்கு இது பிடிக்கவில்லை. வேலைக்கு வந்த மறுநாளே தம் தலைப்பாகையை அத் தாங்கியில் வைத்தார். ஆங்கிலேயர் எதிர்த்தனர். மேலதிகாரியிடம் குறை கூறினர். நாவலர் உறுதியாக வாதாடினார். அவர் செய்தது சரிதான்! தவறில்லை எனக் கூறினார் மேலதிகாரி. இது நாவலரின் துணிவின் வெற்றி ஆயிற்று. தட்டச்சு : நாவலரின் இச் செயல் ஆங்கிலவர்க்கு வெறுப்பை உண்டாக்கிற்று. அதற்கு மேலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வலுவலகத்தில் ஆங்கில இந்திய மகளிர் தட்டச்சாளராக இருந்தனர். அவர்களிடம் ஏதாவது விளக்கம் தர நேரிட்டவர் ஆங்கிலேயராக இருந்தால் அறைக்கு உள்ளே சென்று சொல்லலாம். இந்தியராயின் அறைக்கு வெளியே இருந்து பலகணி வழியாகவே பேச வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. இதனை வெறுத்த நாவலர் அறைக்கு உள்ளே நுழைந்தார். இது தவறு எனத் தடுத்தனர். அவ்வாறாயின் அப் பெண் என் அறைக்கு வந்து விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் எனத் தாம் செல்ல மறுத்துவிட்டார். இச் செய்தி உயர் அலுவலர்க்குப் போனது. பெண்களை இழிவு படுத்தும் நிலையில் உம்மைப் போன்ற படித்தவர் பேசலாமா? என உயர் அலுவலர் நாவலரை வினாவினார். உண்மையை விளக்கினார் நாவலர். உண்மையுணர்ந்த உயர் அலுவலர் இனி எவரும் அறைக்குள்ளே புகாமல் பலகணி வழியாகவே பேசுதல் வேண்டும் என்று ஆணையிட்டார். இது நாவலர் பெற்ற இரண்டாம் வெற்றி ஆயிற்று. நாற்காலி : ஒரு நீதி மன்றத்தில் நாவலர் வழக்காடச் சென்றார். அங்கே மாவட்டத் துணைக் காவலர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சான்று கூறினார். அதனைக் கண்ட நாவலர் தாமும் அமர்ந்துகொண்டு வினாவினார். நீதிமன்ற நடைமுறைக்கு மாறுபட்ட செய்தி இது! உடல் நலம் இல்லாத வேளையில் மட்டுமே நீதிமன்றத் தலைவரின் இசைவுடன் வழக்கறிஞர் அமரலாம். அதனால், உமக்கு உடல் நலமில்லையா? என மன்றத் தலைவர் நாவலரை வினாவினார். நான் நன்றாகவே இருக்கிறேன்; இவருக்குத் தான் நலமில்லை என்று துணைக் காவலரைச் சுட்டிக் காட்டினார். நாணிய துணைக் காவலர் நான் நன்றாகவே இருக்கிறேன் என்று கூறி எழுந்தார். எழுந்ததும் நாற்காலியை அகற்றச் செய்துவிட்டுத் தாமும் நின்று வழக்காடினார். அறத்தின் முன் அனைவரும் ஒப்பானவரே என்பது நாவலரால் விளக்கமாகக் காட்டப் பெற்றது அல்லவா! சட்டை : இன்னொரு வழக்கு மன்றத்திற்கு நாவலர் சென்றார். அம் மன்ற நடுவர் சட்டை கூடப் போடாமல் அமர்ந்திருந்தார். நாவலர் எல்லா உடைகளுடனும்தான் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால், நடுவரைக் கண்டதும் தாமும் சட்டையின்றி உள்ளே சென்றார். நடுவர் திகைத்துப் போய் நீதி மன்றத்திற்கு வரும் முறை இது தானா? என்றார். நீதிமன்றத்திற்கு வரும் முறையை நான் நன்கு அறிவேன். ஆயினும் தங்களைப் பார்த்ததும் இவ்வாறு வருவதுதான் முறை என்பதை அறிந்து கொண்டேன் என்றார் நாவலர். நடுவர் தம் உடைகளை அணிந்துகொண்டு அமர்ந்தார். நாவலரும் அவ்வாறே தம் உடைகளை அணிந்து கொண்டார். சட்டத்தைக் காக்க வேண்டியவரே காக்கத் தவறலாமா? துண்டு : நாவலர் பாரதியார், அமரகவி பாரதியார்க்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார். அதனைப் போர்த்திக் கொண்டு உலாவப் போனார் பாரதியார். போன வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைக் கண்ட பாரதியார் அப் பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்திவிட்டார். J©L ïšyhkš tªj ghuâahiu¡ f©l ehty® ‘J©L v§nf? என வினாவினார். பாரதியார், இங்கே வா என நாவலரை அழைத்துக் கொண்டு போய்த் தெருவில் உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார். இச் செயலை உணர்ந்து உருகிய நாவலர் பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றார். கப்பல் : வீரர் வ.உ.சி. தம்மிடம் மூன்று கப்பல்கள் இருப்பதாகக் கூறினார். இரண்டு கப்பல்கள் தாமே உள்ளன. மூன்றாவது கப்பல் எங்கே? என்று அதனைக் கேட்டவர் வினாவினார். S.S. (Steam ship) பாரதி என்னும் கப்பலை மறந்து விட்டீர்களா என்றார் வீரர் வ. உ. சி. கற்றார் : நாவலர் நகைச்சுவையாகப் பேசவும் வல்லவர். சிலர் பற்பொடி என்பதைப் பல்ப்பொடி என்றும், சொற்பொருள் என்பதைச் சொல்ப்பொருள் என்றும் சொல்லியும் எழுதியும் மொழிக் கேடு செய்து வந்தனர். அதனைக் குறித்து நாவலர் இனி இவர்கள், கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதைக் கல்த்தாரைத் கல்த்தாரே காமுறுவர் என்றுதாம் எழுதுவர்! பேசுவர் என்று கூறி எள்ளி நகையாடுவார். பாண்டி நாட்டுப் புலவர்கள் 2 1. முதுபெரும் புலவர் வெ. ப. சு. குளிர் தூங்கும் குற்றாலம் உலகப்பெருமை வாய்ந்தது. அதற்கு அப் பெருமையைத் தருவது அங்கு ஒழுகும் அருவியே ஆகும். அவ் அருவிநீர் சிற்றாறு என்னும் பெயருடன் ஓடி வருகிறது. அச் சிற்றாற்றின் கால்கள் பல. அவற்றுள் வெள்ளப் பெருக்குடைய கால் ஒன்று. ஆதலால், அது வெள்ளகால் எனப் பெயர் பெற்றது. அக் காலைச் சார்ந்த ஊரும் வெள்ளகால் என்றே அழைக்கப்பெற்றது. நீர்வளம் பெருகிற இடத்தில் நிலவளமும் பெருகும். ஆதலால், நெல்லும் கரும்பும் வாழையும் தென்னையும் வளமாக வளர்ந்து செல்வங்கொழிக்கும் சிறப்புப் பெற்றது வெள்ளகால். வெள்காலில் பழனியப்ப முதலியார் என்பார் ஒருவர் இருந்தார். அவர் கல்வியும் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். அருங்குணங்கள் எல்லாம் அமைந்தவர். திருநெல்வேலி மேடை தளவாய் முதலியார்க்கு உறவினர். அவர்தம் அருமைத் திருமகனாராக 14-8-1857 இல் தோன்றினார் சுப்பிரமணியம் என்பார். அவரே நம் முதுபெரும்புலவர் வெ.ப.சு. ஆவர். வெ. ப. சு. என்பது, வெள்ளகால் பழனியப்ப முதலியார் மைந்தர் சுப்பிரமணிய முதலியார் என்பதன் சுருக்கம் ஆகும். வெ. ப. சு. பிறந்தமையால் வெள்ளகால் நாடறிந்த ஊராயிற்று. புலமையாளரைப் பெற்ற புகழுக்கும் இருப்பிடம் ஆயிற்று. பிறந்த மண்ணுக்குப் பெருமை தந்தவர் அறிஞர் வெ.ப.சு. இக்காலத்தைப்போல் அக்காலத்தில் ஊர்தோறும் பள்ளிகள் அமையவில்லை. சில பெரிய ஊர்களில் மட்டும் சிறிய திண்ணைப் பள்ளிக் கூடங்கள் நடந்துவந்தன. அங்கும் பணம் செலுத்திப் படிக்க வாய்ப்புடைய செல்வர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே கல்வி கற்றனர். திண்ணைப் பள்ளியாக இருந்தாலும் அங்குக் கற்பித்த ஆசிரியர்கள் இலக்கணம், இலக்கியம், கணக்கு, சோதிடம், மருத்துவம் முதலிய பல்வேறு துறைகளில் தேர்ச்சி யுடையவர்களாக விளங்கினர். அப்பள்ளிகள் மண்டபங்கள், மடங்கள், கோயில்கள் ஆகியவற்றில் நடைபெற்றாலும், பெரும் பாலும் திண்ணைகளில் நடைபெற்றமையால் திண்ணைப் பள்ளிகள் என்றே அழைக்கப்பெற்றன. திண்ணையின் உறுதிபோலவே அங்குக் கற்ற கல்வியும் மிக உறுதியாக அமைந்தது. வெள்ளகாலில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. அதனால் பழனியப்பர் தம் மைந்தரைத் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றார். அங்கே தெற்குப் புதுத் தெருவில் கணபதி ஆசிரியர் திண்ணைப்பள்ளி இருந்தது. பெரும்புலவர் அழகிய சொக்கநாத பிள்ளையின் சிறிய தந்தையாரே கணபதி ஆசிரியர். அவரும் மிகுந்த புலமையாளராக விளங்கினார். அவரிடம் கல்வி பயிலுமாறு பழனியப்பர் ஏற்பாடு செய்தார். அப் பள்ளியிலே நான்கு ஆண்டுகள் வெ.ப. சு. கற்றார். அக் கல்வி அவர்தம் எதிர்காலப் புலமைக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. பின்னர், அரசடிப் பாலத் தெருவில் உள்ள கிறித்தவப் பள்ளியில் வெ.ப.சு. சேர்ந்தார். அங்கே ஆங்கிலமும் தமிழும் கற்க வாய்ப்பு இருந்தது. அங்கே ஓராண்டு கற்ற பின் திருநெல்வேலிப் பாலம் இந்துக் கல்வி நிலையத்தில் பயின்றார். 1876 இல் பள்ளி இறுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பள்ளியில் பெற்ற கல்வி இவ்வாறு சிறக்க, வெளியில் பெற்ற கல்வி நிலையை அறிவோம். பழனியப்ப முதலியாரின் உடன் பிறந்த நங்கையரே திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் வாழ்க்கைத் துணைவியார் ஆவர். அவர் வெ. ப.சு. வின் அத்தையார் அல்லரோ! அவர் வீட்டில் முத்துசாமிப் பிள்ளை என்னும் பெயருடைய ஒருவர் பணியாளராக இருந்தார். அவர் கண்ணொளி இல்லாதவர். எனினும் பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களிலுள்ள கதைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்தவர்; சுவையாகக் கேட்டு மகிழுமாறு சொல்லும் திறமை வாய்ந்தவர். அதனால் ஓய்வு கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் அவரிடம் அக் கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார் வெ. ப.சு. அதனால், அந் நூல்களைத் தாமே ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். அப்பொழுது இவருக்கு வயது பன்னிரண்டே ஆகும். தளவாய் அரண்மனையில் பெரும்புலவர் அழகிய சொக்க நாத பிள்ளையை ஒருமுறை கண்டு உரையாடினார். தாம் கற்ற தமிழ்நூல்களைப் பற்றிப் பேசினார். இவர் தமிழ்ப் புலமையை அறிந்து மகிழ்ந்தார் சொக்கநாதர். அதனை வளர்ப்பதற்கு ஆவல் கொண்டார். திருநெல்வேலித் தெற்குப் புதுத் தெருவில் ஒரு சதுக்கம் இருந்தது. இராசவல்லிபுரம் வள்ளல் முத்துசாமிப் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்தபோதெல்லாம் அச் சதுக்கத்திலேதான் தங்குவார். அவர் தமிழ்ப் புலவர்களைத் தரம் அறிந்து பேணிக் காப்பவர்; வேண்டுவார் வேண்டுவன நல்குபவர்; அதனால் அச் சதுக்கம் தமிழ் அறிஞர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. அவ்விடத்திற்கு வெ. ப. சு. வை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார் சொக்கநாதர். அத் தொடர்பு, புற்பறிக்கப் போனவருக்குப் பொற்குவியல் கிடைத்தது போன்ற இன்பத்தைத் தந்தது. வெ. ப. சு. வாய்த்த போதெல்லாம் சதுக்கத்துக்குச் சென்றார். தமிழ் ஆராய்ந்தார்; புலவர்கள் உரைகேட்டு உவந்தார். அவர்களோடு அளவளாவிப் பழகும் வாய்ப்புப் பெற்றார். அவ்வகையில் பெற்ற அறிஞர்களில் வேம்பகதூர் பிச்சுவையர், கல்போது புன்னைவனக் கவிராயர், மு. ரா. அருணாசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அறிவுடையார் தொடர்பு என்ன செய்யும்? அறிவை வளர்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும் அல்லவா! வெ. ப. சு. எண்ணியதை எண்ணிய வண்ணம் இனிக்கப் பாடும் கவிஞர் ஆனார்! புலவர் புகழும் புலமை எய்தினார்! இந்நிலையில் கவிராச நெல்லையப்ப பிள்ளையின் நட்பும் வெ. ப. சு. விற்குக் கிடைத்தது. கவிராயர் வீட்டின் பின்பக்கத் தோட்டப் புறத்தில்தான் சதுக்கம் இருந்தது. அதனால் அவரை அடிக்கடி காணவும், நெருங்கிய நட்புக் கொள்ளவும் வாயப்பு ஏற்பட்டது. இருவரும் கலந்து இலக்கிய இலக்கணங்களை ஆராய்ந்தனர்! கல்விக்கு இருவர் என்பது பழமொழி அல்லவா! அதனால் இருவரும் பெரும்பயன் கொண்டனர். அப்பொழுது இவருக்கு வயது பத்தொன்பதே ஆகும். அவ்வயதில் தானே பள்ளியிறுதி வகுப்பும் தேர்ச்சி பெற்றார்! பாம்புப் புற்றுள் கை வத்தாலும் வைப்பேன்; பாடப் புத்தகத்துள் கைவையேன் என்று வாளா பொழுது போக்கித் திரிபவர்களும் மாணவர்களாக உள்ளனர். பள்ளிநூல் ஒன்றை யன்றித் தள்ளி ஒரு வரியும் படிக்காத மாணவர்களும் உளர். பள்ளிப்படிப்பையும் பாழாக்கி, பணத்தையும் பாழாக்கி, பண்பாட்டையும் பாழாக்கிக் கொள்பவர்களையும் பார்க்கிறோம்! ஆனால் வெ. ப. சு. எத்தகையர்? பள்ளியில் வெ. ப. சு. கற்ற கல்வி மிகுதியா? பள்ளிக்கு வெளியே தேடிக்கொண்ட கல்வி மிகுதியா? இரண்டுமே ஒன்றை ஒன்று விஞ்சுமாறு கற்றார். மாணவப் பருவத்திலேயே அறிவுடையார் பாராட்டும் அறிவு நலம் பெற்றார். ஆராய்ச்சி யாளராகவும், பாவலராகவும் விளங்கினார். பள்ளிப் படிப்புக் காகத்தானே பெற்றோர் வெ. ப. சு. வை நெல்லையில் விடுத்திருந்தனர்? அப் பணி நிறைவேறிய பின்னர் ஆங்கிருக்க வேண்டியதென்ன? வெள்ளகாலுக்கு வந்தார். வேளாண்மையில் ஈடுபட்டார். ஈடுபடும் எந்த ஒன்றிலும் அரைகுறையாக ஈடுபடுதல் வெ. ப. சு. அறியாதது. ஆதலால் முழுமனத்துடன் வேளாண்மைக் கண்காணிப்பில் முனைந்தார். அதே பொழுதில் நெல்லையில் கற்றுவந்த அருந்தமிழ்க் கல்வியையும் நெடுகிலும் வளர்த்துக் கொண்டு வந்தார். பாடம் ஏறினும் ஏடது கைவிடேல் என்னும் நன்மொழியைப் போற்றி அவ்வழியில் நின்றார். நெல்லை இந்துக் கல்வி நிலையத்தில் வெ.ப.சு. வுடன் பயின்றவர் சிவஞானம் பிள்ளை என்பவர்; உடன்பயின்ற மாணவரை உயர்த்துவதில் ஆர்வம் உடையவர்; அவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று எஃப். ஏ. வகுப்பில் சேர்ந்தார். தம் இனிய நண்பர் வெ. ப. சு. வும் இங்குக் கற்க வருவார் எனக் கருதினார். வெ.ப.சு. வின் நாட்டம் பட்டப்படிப்பிலே இல்லை; அரசுப் பணியிலேயும் இல்லை என்பதை அறிந்தார். தம் நட்புரிமை காட்டி வற்புறுத்திக் கல்வி பயில வருமாறு அழைத்தார். கல்லூரி முதல்வர் மில்லர் பெருமகனாரிடம் எஃப். ஏ வகுப்பிற்கு ஓரிடத்தை வாங்கிக் கொண்டு, கட்டாயமாக வரவேண்டும் என எழுதினார். நண்பர் உரையை மதித்துக் கிறித்தவக் கல்லூரி மாணவர் ஆனார் வெ.ப. சு. அப்பொழுது வகுப்புத் தொடங்கி ஆறு திங்கள் கடந்துவிட்டன. ஆண்டு இறுதித் தேர்வு வந்தது. எல்லாம் புதிய பாடங்களாக இருந்தமையாலும், நெடுங்காலம் பாடங் கேட்காமையாலும் தேர்வில் தோல்வியுற்றார். முயன்று படித்து அடுத்ததேர்வுக்குச் சென்றார். அதிலும் தோல்வியே கண்டார். மேலும் தொடர விருப்பு இல்லாமல் வெள்ளகாலுக்கு வந்தார். எவ்வளவு செல்வ வாய்ப்பு உடையராயினும் அரசினர்பணி ஒன்றே அணிகலம் என்று பலரும் கருதி இருந்த காலம் அது. பழனியப்பரும் அதற்கு விலக்கானவர் அல்லர். ஆதலால் திருநெல்வேலி வட்ட அலுவலகத்தில் எழுத்தர் பணிபுரிய ஏற்பாடு செய்தார். பணியும் மேற்கொண்டார் வெ.ப.சு. அப்பொழுது சென்னையில்புதிதாக வேளாண்மைக் கல்லூரி தொடங்கியது. அதில் சேர ஆர்வமுற்றார். ஆங்குச் சென்று ஆர்வத்துடன் பயின்று 1884 ஆம் ஆண்டில் (G.M.A.C. என்னும்) பட்டம் பெற்றார். அப் பட்டம் பெற்றதும் கால்நடைநோய் மருத்துவர்பணி வாய்த்தது. சில ஆண்டுகளில் கால்நடை மருத்துவத் துறையையே அரசு எடுத்துவிட்டது. அதனால் வெ. ப. சு. வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டார். அத்துறையில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார். மீண்டும் 1895இல் கால்நடை மருத்துவத் துறையை அரசினர் உண்டாக்கினர். அதனால் அப் பணிக்குத் திரும்பினார். திறமையாகக் கடமை புரிந்தார். மேல் அதிகாரிகளின் பாராட்டையும், பொதுமக்களின் அன்பையும் ஒருங்கே பெற்றார். வெ. ப. சு. வின் ஆர்வத்தையும் ஆற்றலையும் உணர்ந்த அரசினர் இவரைக் கால்நடை மேற்படிப்புப் பட்டம் பெறுவதற்காகச் சம்பளத்துடன் பம்பாய்க்கு அனுப்பினர். அப் படிப்பில் பல பாடங்களில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றுப் பொற்பதக்கங்கள் பெற்றார். அப்பொழுது இவர் பெற்ற பட்டம் G. B. V. C. என்பதாகும். மேற்படிப்புப் பெற்ற வெ. ப. சு. கால்நடை உயர் கண்காணிப்பாளர் பதவி பெற்றார். பின்னர் மாவட்டத் துணைக் கால்நடை மருத்துவராகவும் பதவி உயர்வு பெற்றார். அனைவரும் பாராட்டும் வண்ணம் பணி செய்து 1915 ஆம் ஆண்டில் தம் ஐம்பத்து எட்டாம் வயதில் ஓய்வு பெற்றார். அரசுப் பணியில் பெறும் ஓய்வு சிலருக்கே ஓய்வாக இருக்கும். பொதுத் தொண்டில் ஈடுபாடும், ஆராய்ச்சியில் ஆர்வமும் உடையவர்க்கு என்றாவது ஓய்வு உண்டோ? எந்த வேலை ஆயினும் தட்டிக் கழிப்பவர்க்கு எந்நாளும் ஓய்வுதான்! எந்தவேலை ஆயினும் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்க்கு எந்நாளும் ஓய்வு இல்லை! வயதைப் பொறுத்தது அன்று ஓய்வு உழைப்பு என்பவை. உள்ளத்தைப் பொறுத்தனவேயாகும். இல்லாவிடின் வெ. ப. சு. தம் எண்பதாம் ஆண்டு நிறைவின் பொழுதிலும் இளமையாக இருந்திருக்க முடியுமா? எட்டு வயதிலேயே எத்தனை கிழவர்களைக் காண்கிறோம்! எண்பதாண் டான இளைஞனே! இன்னமுதின் பண்பெலாம் காட்டுதமிழ்ப் பாவலனே! - நண்பனே! வெள்ளகால் செல்வனே! வேள்சுப் பிரமணிய வள்ளலே வாழ்க மகிழ்ந்து என்பது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய வாழ்த்துப்பா. அரசினர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் முழுமையாகத் தொண்டிலே ஈடுபட்டார் வெ. ப. சு. அத்தொண்டுகள் அவர்க்கு அழியாப் பெருமை அளித்தன. வாயில்லா உயிர்கள் அல்லவா கால்நடைகள்? அவற்றின் நோயை அறிந்து மருந்தூட்டிக் காப்பதுஅருஞ்செயல் அல்லவா! அப் பணியில் அறிஞர் வெ. ப. சு. காட்டிய திறமையை அரசினர் நன்கு அறிவர். அதனால் அவர் தொண்டினை நாட்டுக்குப் பயன்படுத்த விரும்பினர். அக்காலத்தில் வட்ட ஆட்சிக் கழகம், மாவட்ட ஆட்சிக் கழகம் என்னும் அமைப்புகள் இயங்கி வந்தன. இவற்றுள் வட்ட ஆட்சிக் கழக உறுப்பினராக வெ. ப. சு. வை ஆக்கினார். பின்னர்த் துணைத்தலைவர், தலைவர் ஆகிய பதவிகளையும் வழங்கினர். வெ. ப. சு. தலைவர் பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் முயற்சியால் அமைந்ததே கடையநல்லூர் உயர்நிலைப்பள்ளி என்பது அறியத்தக்கது ஆகும். இப் பொறுப்பில் வெ. ப. சு. நான்கு ஆண்டுகள் பணி செய்தார். 1922இல் இவரைத் தென்காசிக் குழு நீதிமன்றத் தலைவராக அரசினர் அமர்த்தினர். அப் பணியில் பலரும் பாராட்டுமாறு ஏழாண்டுகள் தொண்டு செய்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சில குழுக்களில் பொறுப்பேற்றுச் சிறப்பாகக் கடமை செய்தார். மேலும், வேலூரில் இந்தியக் கால்நடை மருத்துவர் சங்கம் என ஒரு சங்கம் தோன்றியது. அச் சங்கத்திற்கும் அரும்பணி பல செய்தார். திருநெல்வேலியில் தோன்றிய சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சார்பில், தமிழ்க் கலைச் சொல்லாக்கக் கழகம் தோன்றியது. அக்கழகப் பணியிலும் தலைநின்று அருந் தொண்டு செய்தார். இவ்வாறெல்லாம் இவர் செய்த அரும்பெருந் தொண்டு களைக் கண்டு மகிழ்ந்த அரசினர் இராவ் சாகிபு என்னும் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தினர். சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார் முதுபெரும் புலவர், தமிழ்ப் பெருங்கவி என்னும் பட்டங்களை வழங்கினர். தமிழ் மொழிக்கு வெ. ப. சு. செய்துள்ள பணிகள் பலவாம். இளமையிலே பெற்ற ஆராய்ச்சித் திறமையும், பாட்டியற்றும் தேர்ச்சியும் வர வர முதிர்ந்து பெருகின. இவற்றால் தமிழில் அரிய நூல்கள் சில தோன்றின. அகலிகை வெண்பா, நெல்லைச் சிலேடை வெண்பா, சருவசனசெபம், திருவாவடுதுறை அம்பலவாண தேசிகமாலை தனிக்கவித் திரட்டு என்பவை இவரியற்றிய செய்யுள் நூல்களாகும். சுவர்க்க நீக்க முதற்காண்டம், இந்திய நாட்டுக் கால்நடைக் காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணும் மிகக் கொடும் நோய்களைப் பற்றிய புத்தகம், கால்நடைகளுக்கு நோய்வராமல் அம்மை குத்தலும் அதன் பயன்களும் என்பவை மொழிபெயர்ப்பு உரைநடை நூல்கள் ஆகும். கம்பராமாயண சாரம் என்பது உரையும், உரைநடையும் அமைந்த நூல் ஆகும். இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்பது ஆராய்ச்சி நூல் ஆகும். இவருக்கு இருபத்து மூன்றாம் அகவையில் திருமணம் நடந்தது. ஆழ்வார் குறிச்சி இராமலிங்க முதலியார் என்பாரின் திருமகளார் வேலம்மையார் இவர் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இவர்தம் இனிய வாழ்வின் பயனாக உலகம்மை, கலியாணி என்னும் செல்வியர் இருவர் தோன்றினர். பத்தொன்பது ஆண்டுகள் கணவர் வாழ்வே தம் வாழ்வு எனக்கொண்டு வாழ்ந்த வேலம்மையார் கொடிய நோய்க்கு ஆட்பட்டு இயற்கை எய்தினார். அதன் பின்னர்த் தென்காசி வட்டம் கிடாரங்குளம் இராமசாமி முதலியார் திருமகளார் வடிவம்மையாரை இரண்டாம் தாரமாக மணந்தார். அவர் வழியாகப் பழனியப்பன், தீர்த்தாரப்பன், செல்லம்மாள் என்னும் நன்மக்கள் தோன்றிக் குடிக்கு விளக்கம் செய்தனர். கல்வி, செல்வம், குடிநலம், செல்வாக்கு ஆகிய பலவும் ஒருங்கே அமைந்த வெ. ப. ச. வின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா 1-8-1937 இல் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நிகழ்ந்தது. பெரும்புலவர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் விழாத் தலைமை ஏற்றார்கள். எண்பது ஆண்டினை நினைவூட்டுமுகத்தான் எண்பது வாழ்த்துகள் படித்துக் கொடுக்கப்பெற்றன. நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பெற்றது. பல்கலைச் செல்வர் கா. சுப்பிரமணியபிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை முதலாய சான்றோர் பலர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துரைத்தனர். தமிழகத்துப் பெருமக்கள் அனைவரும் திரண்டு வந்து தமிழ் வளர்த்த பெருமகனார் பெருவிழாவிலே கலந்து கொண்டு இன்புற்றனர். ஆண்டுகள் பத்து உருண்டன. தொண்ணூறாம் அகவை நடந்தது. ஓயா வாழ்வுக்கு ஓய்வு அருள்வது இறைவன் திருவருள் அன்றோ! அவ்வருள் வண்ணத்தால் 12-10-1946 இல் உலக வாழ்வில் இருந்தே ஓய்வு கொண்டார் திரு. வெ. ப. சு. அறிஞர் வெ. ப. சு. அரிய நூல்கள் பலவற்றைத் தொகுத்து வைத்திருந்தார். விலை மதிப்பற்ற அச் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் எனக் கருதினார். தாம் இயற்றிய நூல்களால் வரும் வருவாயும் நாட்டு நல்லறிவு வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என நினைத்தார். அந்நினைவு திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் அறிஞர் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் நூல்நிலையமாகத் திகழ்கின்றது. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின் என்னும் பொய்யாமொழியைப் பொய்யாமொழியாக நிலை நாட்டினார் வெ. ப. சு.! அவர் திருப்பெயர் என்றும் வாழ்க! 2. விருதை சிவஞான யோகிகள் எல்லா ஊரும் எம் ஊரே; எல்லா மக்களும் எம் உறவினரே என்னும் உயர்நிலையில் வாழ்பவர் பெரியோர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவராக விளங்கியவர் விருதை சிவஞான யோகிகள் ஆவர். தமிழ் நாட்டின் பகுதிகளுள் ஒன்று கொங்குநாடு என்பது. அது சேலம், கோவை மாவட்டங்கள் அடங்கிய பகுதியாகும். அக் கொங்கு நாட்டில் அவிநாசி என்பதோர் ஊர் உண்டு. அவ்வூரின் பழம்பெயர் திருப்புக் கொளியூர் என்பதாகும். திருப்புக்கொளியூரில் வாழ்ந்த ஒரு பெருமகனார் இராமசாமிப் பிள்ளை என்பார். அவர் தம் அருமை மனைவியார் கிருட்டிணம்மாள் என்பார். இருவரும் இணைபிரியாப் புறாக்கள்போல் இனிய இல்லறம் நடத்தினர். எனினும் பல்லாண்டுகளாக மகப்பேறு இன்றி வருந்தினர். இறைவன் திருவருளை வேண்டிக் கிடந்தனர். அவன் திருவருளே போல 1840 ஆம் ஆண்டிலே ஒரு திருக்குழந்தை பிறந்தது. குடிவிளங்கப் பிறந்த அச் செல்வக் குழந்தையே சிவஞானம் ஆகும். சிவஞானக் குழந்தை இனிய மழலை பொழிந்து ஓடியாடி மகிழ்வித்தது. காலங்கடந்து கையில் கிடைத்த பிள்ளைக்கனி அமுதை, எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டனர் பெற்றோர். அதன் அறிவு நிறைந்த ஆடல்களிலும் பாடல் களிலும் இன்பம் பெருகி நின்றார்கள். குழந்தை சிவஞானத்திற்கு வயது மூன்றாயிற்று. தந்தை இராமசாமி தம்மிரு கண்களையும் என்றும் திறவாமல் மூடிவிட்டார். மூன்றாம் அகவையிலேயே தந்தையை இழந்தவன் ஆனான் சிவஞானம். கணவனை இழந்து கண்ணீரே வடிவானார் கிருட்டிணம்மாள்; சிவஞானத்தை உயிராகக் கொண்டு சிறிது தேறி இருந்தார். ஈராண்டுகள் நகர்ந்தன. சிவஞானத்திற்கு வயது ஐந்தே! அந்தோ! சிவஞானம், தந்தையிலி, தாயுமிலி என்னும் நிலைமையை அடைந்தான். தந்தையும் தாயும், பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனிதநீ என்று கரைந்தழுத வள்ளலார் வாழ்வு, சிவஞானம் வாழ்வாயிற்று! அனலில் சுடாமல் அடித்துத் தட்டாமல் அணிகலம் ஆவதில்லையே! சிவஞானம் கயிறறுந்த பட்டம் ஆனான். ஆனால், கயிறறுந்த பட்டமும் சில வேளைகளில் மரக்கிளையில் மாட்டிக் கொண்டு காற்றில் ஆடுவது இல்லையா! அதுபோல் தாயுடன் பிறந்த மாமன்மார் வீட்டிலே வளரும் வாய்ப்பு வாய்த்தது. கோவையிலே இருந்தார் பெரியமாமனார். அவர் அரவணைப்பில் சென்றான் சிவஞானம். இளமையில் கல் என்பது சிவஞானத்திற்குத் தெரிந்து பயன் என்ன? மாமனார்க்கு அல்லவோ தெரியவேண்டும்! அவர்க்கு நன்கு தெரிந்தது! சிவஞானத்தை ஒரு திண்ணைப் பள்ளியிலே சேர்த்தார். பசித்தவனுக்குப் பாற்சோறு கிடைத்ததுபோல் ஆயிற்று சிவஞானத்திற்குப் படிப்பு. பாடவரையறை, காலவரையறை அக்காலப் பள்ளிக்கு இல்லை! ஆசிரியர் உள்ளமும், மாணவர் ஆர்வமுமே வரையறை! சிவஞானம் சில ஆண்டுகளிலே சிறந்த அறிவாளியானான். சிவஞானத்தின் இளையமாமனார் நீலமலையில் இருந்தார். சிவஞானத்தைத் தம் அரவணைப்பில் கொண்டு சென்றார். பெரியமாமனார் தம்மருமகனை, தமிழ்ச சிவஞானம் ஆக்கி வைத்திருந்ததற்கு மகிழ்ந்தார். தாம், ஆங்கிலச் சிவஞானம் ஆக்குவது கடன் எனத் துணிந்தார். ஆங்குள்ள குன்னூர் (குன்றூர்) ஆங்கிலப்பள்ளியில் சிவஞானத்தைச் சேர்த்தார். செந்தமிழ்ச் சிவஞானம் ஆங்கிலத்திலும் செழித்தான். நீலமலைக் காட்சிகள் அவன் நெஞ்சைக் கவர்ந்தன. அவனிடம் உறங்கிக் கிடந்த தமிழ்க்கவி ஊற்றெடுத்தது. சிவஞானம் தவஞானம் ஆகவேண்டுமே! அதற்கென வாய்த்தார் இரண்டாம் மாமனார். திருப்பூரை அடுத்த பல்லடத்திலே வாழ்ந்தார் அவர். ஆங்குச் சென்றான் சிவஞானம். ஆங்கிருந்த பெரியார் அருளானந்த அடிகள் அன்புக்கு ஆட்பட்டான்! பல்லடத்தில் வரதராசலு நாயுடு என்பார் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பஞ்சாலை உரிமையாளர். அவர் பாதுகாப்பிலே இருந்தார் அருளானந்த அடிகள். இளைய சிவஞானம் அந்த முதிய ஞானியைக் கண்ட நாள் முதல் அவர் அடிமையானான். அறிவுச் செல்வமும் கைவரப்பெற்றான். ஒருநாள் அடிகள் நாயுடுவையும் சிவஞானத்தையும் அழைத்தார். எனக்கு ஆணை கிடைத்துவிட்டது. நாளைக் காலை ஞாயிறு தோன்றச் சிறிது முன்னர் சவாரி போகின்றேன் என்றார். சவாரி போவதென்ன? சமாதி அடையப் போகின்றேன் என்பதையே அவ்வாறு கூறினார். இவ்வளவு விரைவில் பிரிதல் கூடாது! இன்னும் சில காலமாவது இருத்தல் வேண்டும் என வலியுறுத்தினர். அடிகள் தம் முடிவு, முடிவே என்று உறுதி கூறினார். சமாதி வைத்தற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய ஏவினார். அவராணையை மறுக்க அஞ்சி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். குறித்த பொழுதில் அடிகள் சமாதியானார். ஊர் எல்லாம் கூடி உருகி நின்றது. சமாதியைச் சுற்றிக் கோயில் எழுப்பி நாற்பதுநாள் வழிபாடு நிகழ்ந்தது. அப்பொழுது சிவஞானத்தின் அகவை பதினான்கே. அருளானந்த அடிகளை எண்ணி உள்ளம் உருகி ஒரு பாட்டிசைத்தான்: ஊனே இல்லாத உலர்ந்த எலும்பு; அதனை ஒரு நாய் எடுத்துக் கடிக்கிறது. கடித்த கடியில் நாயின் பல்லின் அடியில் இருந்த எயிறு குத்தப்பட்டது. இரத்தம் எழுந்தது. அவ்விரத்தம் எலும்பில் இருந்து வந்ததாக எண்ணிச் சுவைத்தது நாய். அதுபோல், இல்வாழ்வு இன்பமே எனக் கருதித், துன்பமே இன்பமாகக் கொண்டவர் சொற்களை என் மனத்துக் கொள்ளேன்; பல்லட நகரில் வாழும் அருளானந்த அடிகளே நீவிர் என்னை ஆட்கொள்வீராக என்பது இளைய சிவஞானத்தின் முதிய பாடலின் பொருளாகும். சிவஞானம் பல்லடத்தில் இருந்து வெலிங்டனுக்குச் சென்று ஒரு வணிகரிடம் வேலையில் அமர்ந்தான். ஓரிரு திங்கள் அளவே பணி செய்தான். பின்னர் உதகமண்டலம் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் நிலையம் ஒன்றில் பணிக்கு அமர்ந்தான். இக்காலத்தில் சச்சிதானந்த அடிகள் என்பார் தொடர்பு வாய்த்தது. அவ்வடிகள் சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சியாளர். அவர் சிவஞானத்தின் மருத்துவப் பேராசிரியர் ஆனார்; யோகப் பயிற்சியும் கற்பித்தார். அவரை, பிச்சிருக்கும் உளத்தன்எனைச் சித்தமுறை பலபயிற்றிப் பெரிய பட்சம் வச்சிருக்கும் குணக்குன்றே என்றும், கசடனெனைக் கயமை போக்கக் குருவாகி வந்தசச்சி தானந்த என்றும் பாடிப் போற்றினான். பார்த்த பணியை உதறினான்; ஊர் ஊராகச் சென்று இறைவன் அடித்தொண்டு செய்வதையே பணியாகக் கொண்டான். இப்பொழுது சிவஞானம் அல்லன்; சிவஞான யோகிகள்! உலாவந்த யோகிகள் பழனியில் தங்கினார். பழனிச் செவ்வேளைப் பணிந்து பாடியும் ஆடியும் மகிழ்ந்தார். அப்பழனிச் செவ்வேளைப் பாடும் பணியே பணியாகக் கொண்டு விளங்கிய மாம்பழக் கவிச்சிங்க நாவலரைக் கண்டார். கண்ணொளியற்ற அப் புலவர் பெருமான் பாடிய கட்டிப் பாகினும் இனிய பாடலில் ஈடுபட்டார். அப் பெருமகனாரை அணுகிச் சங்க இலக்கியங் களைப் பாடங்கேட்டார்! போகிய இடங்களில் எல்லாம் யோகிகளுக்குப் பல்கலைச் செல்வங்கள் கிட்டின! அவரோ பல்கலைச் செல்வராக விளங்கினார். பழனியில் யோகிகள் ஆங்கிலமும் தமிழும் கற்பிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தி நடத்தினார். பின்னர்ப் பல ஊர்களுக்கும் சென்று விருதுநகர்க்கு வந்தார். அங்கே இருந்த ஆடற் செல்வர் சக்கரபாணி அடிகளுடன் நட்புக் கொண்டார். அக்கலையிலும் தேர்ந்தார். விருதுநகரிலேயே நெடுங்காலம் உறைந்தார். விருதுநகர் புலவர்களால் விருதை என்று அழைக்கப் பெறும். ஆதலால் யோகிகள், விருதை சிவஞான யோகிகள் ஆனார். அக்காலத்தில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் விளங்கினார். அவர் சைவ சித்தாந்தத்தில் ஒப்பில்லா வித்தகர். அவரை அடுத்தார் யோகிகள். சித்தாந்த சாத்திரத்தில் பெரும்புலமை பெற்றார். கற்ற கலைகளால் பெற்ற பயன் என்ன? மற்றவர்களுக்குப் பயன்படுவது அல்லவா பெற்றதன் பயன்! அதனால் யோகிகள் இலவச மருத்துவமனை ஒன்றனை விருதுநகரில் ஏற்படுத்தி நடத்தி வந்தார். எவருக்கு இலவசம்? கொடுக்க இயலாதவர்க்கு இலவசம்! மருந்துடன் உண்ணும் பழவகைகளும்கூட இலவசமாகத் தருவதுண்டு. ஆனால், செல்வரிடம் நிரம்பக் கட்டணம் வாங்குவார்! இருப்பவரிடம் வாங்க வேண்டியதுதானே! இருப்பவரிடம் பணம் வாங்கி இல்லாதவர்க்கும் மருத்துவம் செய்தார் யோகிகள். இஃது அவர்கள் கைக்கொண்ட புதுமையான பொதுநிலையறம்! விருதுநகரில் சொக்கநாதர் கோயில் ஒன்று உண்டு. அக் கோயிலில் சில திருப்பணிகள் செய்ய விரும்பினார் யோகியார். எத் திட்டத்திலும் புதுமை காண்பது அவர்தம் அறிவுக் கூர்மை. அதனால், இரண்டாயிரம் மண் கலயங்கள் செய்வித்தார். அவற்றை எடுத்துக் கொண்டு, அக் கோயிலை வழிபடும் அன்பர் வீடு தோறும் ஒவ்வொரு கலயத்தை வைத்தார். சமையலுக்கென அவ்வீட்டார் அரிசி எடுக்கும்போது அக் கலயத்தில் ஒரு கைப்பிடியளவு அரிசியோ அவர்கள் விரும்பிய அளவிலோ போட்டு உதவுமாறு வேண்டினார். அத் திட்டத்தை அருமையாக நடத்தினார். வீடுதோறும் தந்த பிடி அரிசித் திட்டத்தால் சொக்கநாதர் கோயிலின் இரண்டாவது சுற்றுச் சுவர் எழும்பியது. கீழைக் கோபுரத்தில் சில பணிகளும் செய்யப் பெற்றன. பாரமென எவருக்கும் தோன்றாமல், பாரமான பணிகளை யெல்லாம் முடித்தவர் யோகியார்! யோகியார் மேலும் சில திருப்பணிகள் செய்ய விரும்பினார். அதற்குத் தக்கவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெளியூர்களுக்குச் சுற்றுலாக் கொண்டார். அதற்காகத் திருநெல்வேலியைச் சார்ந்த இராசவல்லிபுரம் சென்றார். ஆங்கிருந்த வள்ளல் முத்துசாமிப் பிள்ளையின் அன்பைப் பெற்றார். செப்பறை, திருச்செந்தூர், திருநெல்வேலி முதலிய திருக்கோயில்களுக்குச் சென்று பதிகமும் நூலும் பாடிப் பரவசமுற்றார். செட்டிநாட்டுக் கண்டனூர்க்குச் சென்று பெரிய திருப்பணிச் செட்டியார் என விளங்கிய இராமசாமிச் செட்டியார் அன்பில் ஒன்றினார். செட்டியார் மூன்று திங்கள் அளவாக ஊணும் செல்லாமல், உறக்கமும் கொள்ளாமல் துன்புற்றார். அவரைத் தேற்றித் திருவருளை எண்ணி அமைதி கொள்ளுமாறு கூறித் திருநீறு வழங்கினார். மந்திர மாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தை ஓதி அவரையும் ஓதச் செய்தார். அன்று இரவு அயர்ந்த உறக்கம் உண்டாயிற்று. ஊணும் சீராகச் சென்றது. காலையிலே யோகியாரை அழைப்பித்து வழிபட்டுச் சிறப்புச் செய்தார் செட்டியார். யோகிகள் மேற்கொண்டிருந்த திருப்பணிக்கு ஆயிரம் வெண்பொன் வழங்கினார். பிறரும் பொருளுதவி செய்யுமாறு செய்தார். அதன்பின் யோகியார் கண்டனூர்க் கயற்கண் அம்மைமேல் பதிகம்பாடி அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு விருதுநகர்க்கு வந்தார். விருதுநகரில் செய்யத்தக்க திருப்பணிகள் நிறைவேறின. இரண்டாவது சுற்றைக் கல்மண்டபமாக்கினார். குடமுழுக்கு விழாவும் நடத்தினார். கோயில் திருப்பணி என்றும் தட்டின்றி நடப்பதற்கு மகிமைத் திட்டத்தை உருவாக்கினார். மகிமைப் பணத்தால் நிலம் வாங்கிப் பேட்டையும், கட்டடங்களும் கட்டி வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கினார். யோகியார் செய்த செயல்கள் வற்றாத ஊற்றாகப் பெருகி வளமை தருவது கண்கூடாகும். விருதுநகரில் இருந்து யோகியார் எட்டையபுரம் சென்றார். அதற்கும் ஓர் அடிப்படை உண்டு. அவ்வூரில் வடமொழியில் ஈடிணை இல்லாத பெரும் புலவர் ஒருவர் இருந்தார். குருநாத சாத்திரியார் என்பது அவர் பெயர். அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் விளங்காமல் இருந்தன. ஆனால், அவருக்கு விளங்காத வடமொழி நூல் எதுவும் இல்லை. அவரை அடுத்து வடமொழி கற்க விரும்பினார் யோகியார்! என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்னும் பொய்யாமொழிக்கு மெய்யாய சான்றானார் யோகியார்! சாத்திரியிடம் பதஞ்சலியோக சூத்திரம் என்னும் நூலையும் பிரமசூத்திரம் என்னும் நூலையும் பாடங்கேட்டார். பிரம சூத்திரத்திற்கு நால்வகை விளக்கவுரைகள் உண்டு. அவ்வுரைகளையெல்லாம் ஆராய்ந்தார். தாம் ஒரு புதிய உரையும் கண்டார். ஆகப் பிரம சூத்திரத்தைத் தமிழாக்கி ஐவகை விளக்கவுரைகளுடனும் வெளிப்படுத்தினார். வடமொழி தென்மொழித் தேர்ச்சியுடைய புலவர்கள் பலரையும் கூட்டிப் பிரம சூத்திரத்தை அரங்கேற்றினார். அரங்கேற்றச் செலவு மிகுதியாயிற்று. அச் செலவைச் சேற்றூர் குறுநில மன்னர் சுந்தரதாசுத் தேவரும் சிங்கம் பட்டிக் குறுநில மன்னர் சுப்பிரமணிய தீர்த்த பதியும் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு நல்லோரை எல்லாம் ஒருங்கு சேர்க்கும் திறமை யோகியார்க்கு மிகவுண்டு! இவருக்கு அணுக்கராக இருந்து மருத்துவப் புலமை பெற்ற திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், எத்தகைய பெரிய மனிதர் ஆனாலும் சரி; இவர் சென்று காணும் போது இவருக்கு வசப்பட்டு வேண்டும் துணைபுரிவது உறுதி என்பது நேரில் கண்டுரைத்த உரையேயாகும். யோகியார் எட்டையபுரத்தில் இருந்து கோயிற்பட்டிக்கு வந்தார். அவர் அங்கே வந்த காலத்தில் ஊர்ப் பெருமக்களால் பத்திவிளை கழகம் என ஒரு கழகம் தோன்றியிருந்தது. அக் கழகத்தின் தலைவர் ஆயினார் யோகிகள். கிழமைதோறும் தேவார திருவாசகத்திருப்பாடல் முழக்கம் செய்தார்; விரிவுரையாற்றினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் திராவிடர்கழகம் தோன்றியது. அக் கழகத்திலும் அரிய பணிகள் செய்தார் யோகிகள். கோயிற்பட்டியில் வட்டங்களம், விழாக்களும் மல்கின. அதற்கு யோகிகள் அங்கு உறைந்ததே காரணம் என்பது உண்மை. 1901 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அது தோன்றிய நாள் முதல் வாழ்நாள் அளவும் யோகிகள் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1934இல் திருநெல்வேலியில் சென்னைமாகாணத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அதனைத் தோற்றுவித்தவர்களுள் யோகிகளும் ஒருவர் ஆவர். இவற்றுக்கு இடையில் இவரே 1920 இல் கோயிற்பட்டியில் தமிழ் மருத்துவச் சங்கத்தைத் தொடங்கினார். பின்னர்த் தோன்றிய சென்னை மாகாணச் சித்த வைத்திய சங்கத்தின் அமைச்சராக விளங்கியவர் நம் யோகிகளே. அதன் சார்பில் சித்த மருத்துவப் பள்ளி ஒன்றைத் தொடங்கி வைத்தியமணி, வைத்தியர் என்னும் பட்டங்கள் வழங்கினார். சென்னையில் இலவச மருத்துவ சாலை ஒன்றும் நடத்தினார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்தசாகரம் என்னும் அரிய இசை நூலை முழுமையும் ஆராய்ந்து அறிஞர்கள் முன்னிலையில்அதன் சிறப்பை நிலைநாட்டினார். தமிழ் வைத்தியம் என ஒரு செய்தித்தாள் நடத்தினார். தாம் உறைந்தகோயிற்பட்டிக்குக் கோயிற்புரிப் புராணம் என ஒரு நூல் இயற்றினார். நூற்றுக் கணக்கான திருக்கோயில்களுக்குச் சென்று இவர் அவ்வப்போது பாடிய பாடல்கள் கடவுள் மாலை என்னும் நூலாக வெளிப்பட்டது. யோகிகள் முதுமை எய்தியபோது, இல்லறமே நல்லறம் என்பதை உணர்ந்தார் போலும்! அதனால் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், அவ் வாழ்வு நீடிக்கவில்லை. சில ஆண்டுகளிலே இவர் சிவனடி சேர்ந்தார். சில அரிய நிகழ்ச்சிகள் யோகியார் வாழ்வில் சில அரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அவை, மக்கள் அவரை மதித்துப் போற்றுதற்கு இடமாக அமைந்தன. யோகிகள் விருதுநகரில் இருந்தார். அக் காலத்தில் ஓராண்டு, மழையின்றி மக்கள் அல்லல் உற்றனர். குடி நீர்க்கும் பெருந் தட்டுப்பாடு உண்டாயிற்று. அன்பர் வேண்டுதற்கு ஏற்ப அறுமுகக் கடவுளை நோக்கிப் பதிகம் பாடினார். அதன் ஏழாம் பாடலைப் பாடிக் கொண்டிருக்கம் போதே மழை பொழிந்தது! யோகிகள் ஒரு பூங்கா உண்டாக்கினார். அப் பூங்காவில் கோயிற்பசு புகுந்தது. அது பூங்காவை அழித்துவிடும் என அஞ்சினார். அதனால் சில சுடு சொற்களைக் கூறினார். அப் பசு அச் சோலைப் பக்கம் வருவதே இல்லை! கோயிலுக்குள்ளும் வந்து தங்குவது இல்லை! திருவாதிரைத் திருநாள் வந்தது. பசு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், பசு கோயில் எல்லைக்கு எவ்வளவு முயன்றும் வரவில்லை. இச் செய்தியை அறிந்தார் யோகிகள். தாம் கூறிய சுடு சொற்களின் விளைவே என உணர்ந்து வருந்தினார். இறைவனிடம் வேண்டினார்! மறுநாள் காலையிலே சோலைக்குப் புல் மேய வந்தது. கோயிலுக்குள்ளும் தங்கியது. விருதுநகர் சொக்கநாதர் கோயில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. 30 அடி உயரத்தில் ஒரு பெரிய கல் ஏற்றப்பட்டது. அக் கல் இருப்பில் இருந்து நழுவி விழத் தொடங்கியது. அப்பொழுது யோகிகள் வேலையாட்களுடன் கீழே நின்று கொண்டிருந்தார். அக் கல் வீழ்ந்து கொன்று விடுதல் உறுதி என உணர்ந்த யோகிகள் சிவ! சிவ எனக் கண்களை மூடிக் கொண்டு கூறினார். விழுந்த கல் சாரத்தில் பட்டு நின்றது. திருவையாற்றில் இருந்து திருநெய்த்தானத்திற்குச் சென்றார் யோகிகள். அங்கிருந்து திருப்பூந்துருத்திக்குப் போக விரும்பினார். கையில் பூக்குடலையுடன் ஓதுவார் ஒருவர் தோன்றினார். திருப்பூந்துருத்திக்கும் திருவாலம் பொழிலுக்கும் அழைத்துச் சென்றார். கண்டியூருக்குப் போகும் வழியைக் காட்டி நீங்கள் அங்கே போகும்போது நண்பகல் வழிபாடு நடைபெறும் என்று சொல்லி மறைந்தார். அவ்வாறே நிகழ்ந்ததை அறிந்து யோகிகள் வியந்தார். யோகிகள் திருவாரூருக்குப் போனார். அங்குச் சில நாள்கள் தங்கினார், இவரிடம் மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டு. ஆனால், கோயிலுக்குள் போடுவது இல்லை. கோயிலுக்குள் இருக்கும்போது அவ்வெண்ணம் முதிர்ந்ததால் எவரும் அறியாமல் ஒரு தூண் மறைவுக்குச் சென்று தம் மூக்கைத் தூணில் மோதிக் கொண்டார். அதற்குப் பின்னர்க் காவிரிக்கு நீராடச் சென்றார். vânu tªj xUt®, ‘Ú v§nf ngh»whŒ? என்றார். நீ என்றது கேட்டுச் சினங் கொண்டார் யோகிகள். கண் சிவக்க அவரைப் பார்த்தார். உனக்கென்ன அகந்தை! பொடிபோடுவதை நிறுத்தும் ஆற்றல் இல்லாமல் மூக்கைத் தூணில் மோதியதை மறந்தாயா? என வினாவி மறைந்தார். அவரை வணங்கி அன்று தொட்டுப் பொடி போடுவதை விட்டார் யோகியார். 3. பேராசிரியர் கா. சு. பிள்ளை காசு என்பதற்குப் பொன் என்பது பொருள். தமிழுக்குக் காசு எனத் திகழ்ந்தவர் பேராசிரியர் கா. சு. பிள்ளை ஆவர். கா. சுப்பிரமணிய பிள்ளை என்பது அவர் தம் முழுப் பெயர். திருநெல்வேலியிலே பி. ஏ. பிள்ளை என ஒருவர் இருந்தார். அவர் புட்டாபுரத்தியம்மன் கோயில் தெருவில் வாழ்ந்தார். அவரே சைவ வேளாளர் குடியில் முதற்கண் பி. ஏ. பட்டம் பெற்றவர். ஆகலின் பி. ஏ. பிள்ளை என்று அழைக்கப் பெற்றார். காந்திமதிநாத பிள்ளை என்பது அவர் தம் இயற்பெயர். பி. ஏ. பிள்ளையின் மைந்தர் எத்தகையவர் ஆனார்? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது பழமொழி. பி. ஏ. பிள்ளையின் மைந்தர் எம். எல். பிள்ளை ஆனார். எம். எல். என்னும் உயர் பட்டம் பெற்ற முதற்சைவ வேளாளர் இவரே ஆவர். மகன் தந்தைக்குச் செய்யும் உதவி இதைப் பார்க்கிலும் ஒன்று உண்டா? காந்திமதி நாதபிள்ளையின் அருமைத் திருமனைவியார் மீனாட்சியம்மையார். இவர் தம் இல்லறத்தின் கனியாகக் காசு திருவள்ளுவராண்டு 1919 ஐப்பசித் திங்கள் 22ஆம் நாள் (5-11-1888) பிறந்தார். புட்டாபுரத்தியம்மன் கோயில் தெருவில் ஒரு திண்ணைப் பள்ளி இருந்தது. அதில் நம் காசு மூன்றாண்டுக் காலம் பயின்றார். தந்தையாரிடம் தனிப்பாடமாகத் தமிழும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வயதைக் காசு இன்னும் எய்தவில்லை. இவர் தம்பியார் குஞ்சிதபாதத்திற்கு இன்னும் இரண்டாம் வயதும் எய்தவில்லை. அன்னை மீனாட்சியார் இறைவன் திருவடி எய்தினார். ஏற்றமிக்க எதிர்காலம் உடையவர்க்கு இளமைப் பருவத்திலே இத்தகைய இடர்ப்பாடுகள் நேருவது இயற்கை போலும்! இல்லத் தரசியை இழந்தார் காந்திமதிநாதர். உற்றார் உறவினர் உருகினர். ஆனால், ஏழாண்டுக் காசு, ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? என்னும் ஔவையார் பொன் மொழியை உரைத்து ஆறுதல் கூறினராம். எத்தகைய தெளிந்த நெஞ்சம்! எத்தகைய கலங்கா உள்ளம்! நெல்லையில் இருந்த சி. எம். கிழக்குக்கிளைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார் காசு. அப்பொழுது நான்காம் வகுப்புத் தேர்வு தொடக்கத் தேர்வு என்றும், ஏழாம் வகுப்புத் தேர்வு நடுத்தரத் தேர்வு என்றும், பத்தாம் வகுப்புத் தேர்வு பள்ளியிறுதித் தேர்வு என்றும் பெயர் பெற்று அரசினரால் நடத்தப் பெற்றன. தொடக்கத் தேர்விலும், நடுத்தரத் தேர்விலும் காசு, மாநில முதல்வராகத் தேர்ந்தார். அதனால் எவ்வகுப்புக்கும் சம்பளம் கட்டிப் படிக்கவேண்டியது இல்லாமல் போயிற்று. தேர்ச்சி தந்த பரிசு இது! தொடக்கத் தேர்விலும், நடுத்தரத் தேர்விலும் மாநில முதன்மை பெற்ற காசு மேற்படிப்பை வயற்காட்டுப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்பொழுது ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அரிய தேர்ச்சி காட்டி ஆசிரியர் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். ஆயினும் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டார். தோல்விகண்ட ஆண்டில், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதன்மைப் பரிசு பெற்றவர் காசுவே. அடுத்தஆண்டு நிகழ்ந்த அரசினர் தேர்வில் வெற்றி பெற்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்தார் காசு. 1908 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் மாநில முதல்வரானார். தமிழ்ச்சங்கத் தமிழ்த்தேர்வில் இவரே முதற்பரிசும் பெற்றார். காசு பிள்ளையின் தந்தையார் காந்திமதிநாத பிள்ளை சிவநெறிச் செல்வர்; இறையுறையும் நிறை திருவினர்; வழி பாட்டையே வாழ்வுப் பணியாகக் கொண்டவர். நாள் தவறாமல் திருக்கோயிலுக்குப் போதலைத் தவறாதவர். அடியார்களைப் பேணுதலில் ஆர்வம் மிகக் கொண்டவர். செப்பறைச் சிதம்பர அடிகளாரும், திருப்பதி சார அடிகளும் அவருடன் பெரும்பாலும் தங்கியிருப்பர். அடிகளார் இருவரும் தமிழிலும் வடமொழியிலும் வளமான புலமையுடையவர்கள். அவர்கள் தொடர்பு இளமைப் பருவத்திலேயே காசுக்கு வாய்த்தது திருவருட் செயலேயாகும். காசு தமிழ் இலக்கண நூல்களை முறையேஅவர்களிடம் பாடம் கேட்டார். சமய நூல்களையும் பாடம் கேட்டார். ஒருமுறை கேட்ட பாடம் மறுமுறை ஓதாமலே மனத்தில் தங்கும் திறம் வாய்த்திருந்தார். ஆகலின் சிறுப் பெரியாராகத் திகழ்ந்தார் காசு. செப்பறைத் திருமடம் சென்று சிவதீக்கையும் பெற்றுக் கொண்டார். இளம் பெரியார் தாமே காசு! இறை வழிபாட்டில் மிக ஈடுபாடு கொண்டார் காசு. விளையாடும் எண்ணம் என்றும் ஏற்பட்டது இல்லை. ஓரொரு வேளை ஏற்பட்டு விளையாடச் சென்றாலும் தோழர்கள் இவரைச் சேர்த்துக் கொள்ளாது பூசைப் பிள்ளை எனத் தள்ளிவிடுவர். அதற்காக இவர் வருந்துவதும் இல்லை. உயர் வகுப்பில் படிக்கும்போது காசு நெல்லையில் சைவ சித்தாந்த சங்கத்தைத் தோற்றுவித்தார். ஞாயிறுதோறும் அச் சங்கம் கூடும். அரிய தலைப்புகளில் சொற்பொழிவு நடத்தும்; ஆராய்ச்சியும் செய்யும். அச் சங்கத்தின் தலைவர்காசுவே ஆவர். சைவசித்தாந்த சங்க உறுப்பினர் ஒத்த வயதினரே எனினும் ஒருவரை ஒருவர், அவர்கள் இவர்கள் என்றே அழைக்க வேண்டும் என்றும், காபி குடிக்கக் கூடாது என்றும், நாடகம் பார்த்தல் ஆகாது என்றும், கடைப்பிடியாகக் கொண்டனர். குடுமித் தலையராகவும் இருந்தனர். இளம் பருவத்திலேயே இத்தகைய கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்வது எதிர்கால உயர்வுக்கு வாய்ப்பு அல்லவா! நெல்லையில் கல்வியை முடித்த காசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் (பி.ஏ.) சேர்ந்தார். அவ் வகுப்பில், மாநில முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். அதனால் பவர்மூர்கெட் என்னும் ஆங்கிலப் பெருமகனார் தமிழ் ஆராய்ச்சிக்கு என அமைத்துள்ள பரிசு காசுவுக்குக் கிடைத்தது. அப் பரிசு வாய்ப்பால், 1913 ஆம் ஆண்டில் ஆங்கிலத்திலும், 1914 ஆம் ஆண்டில் தமிழிலும் இவர் முதல்வராகத் தேர்ச்சியடைந்து இரண்டு மொழிகளிலும் முதுகலைப் பட்டம் (எம். ஏ.) பெற்றார். அடுத்த ஆண்டில் தத்துவக் கலையை எடுத்துப் பயில முயன்றார். ஆனால், இரண்டு பாடங்களில் தேறியவர் மூன்றாவது பாடத்திற்குப் போதல் கூடாது என்றொரு விதி இருந்தமையால் அதனை விடுத்துச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். எம். எல் பட்டத் தேர்வுக்குப் பணமும் கட்டிவிட்டார். தேர்வுக்கு நாற்பத்தைந்து நாள்களே இருந்தன. இவர் எடுத்துக் கொண்டதோ சொத்துரிமைச் சட்டம் என்பது. அது மிக உழைத்துப் படிக்க வேண்டிய பாடம். ஆயினும் நாற்பத்தைந்து நாள்களிலேயே தெளிவாகக் கற்றுத் தேர்ச்சியும் பெற்றார். நெல்லையிலே சைவசித்தாந்த சங்கம் அமைத்த காசு, சென்னையிலே பயிலும்போது நண்பர் சங்கம் என ஒரு சங்கத்தை உண்டாக்கினார். அதன் தலைவர் இவரே. மற்றை உறுப்பினர் மூவர். அவருள் ஒருவர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை ஆவர். நான்கு பேர் போன வழி நல்லவழி என்று பாராட்டுமாறு நண்பர் சங்கம் பயனுற நடைபெற்றது. பலரும் எட்டமுடியாப் பட்டங்களையெல்லாம் பெற்ற காசு நெல்லைக்கு வந்தார். திருமணப் பேச்சு எழுந்தது; தொடர்ந்தது; நிறைவேறவும் செய்தது. திருநெல்வேலி நெல்லை நாயகம் பிள்ளை என்பார் திருமகளார் பிரமும்அமாள் தமிழ்க் காசுவின் தகுதி வாய்ந்த மனைக்கிழத்தி ஆயினார். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது பொய்யா மொழி. ஆகலின் வாழ்வுக்கு இன்றியமையாத பொருள் ஈட்டுதற்கு ஒரு வேலை வேண்டுமே! வேலை தேடுவது அடுத்த கடமை ஆயிற்று. சட்டத் தேர்வில் வெற்றி கொண்ட காசு வழக்கறிஞர் தொழிலை விரும்பினார் அல்லர். ஆசிரியத் தொழிலை விரும்பினார். ஆம்! சட்டக் கல்லூரியில் கற்பிப்பவரும் ஆசிரியர் தாமே! அப் பணியை விரும்பினார். நீதிபதி சேசகிரி ஐயர் என்பார் துணையால் சட்டக் கல்லூரி ஆசிரியர் ஆனார். பேராசிரியர் ஆதற்கு உரிய தகுதி காசுவுக்கு இருந்தது. நீதிக் கட்சித் தலைவர் சர். பி. டி. தியாகராசச் செட்டியார் முயற்சியால் அவ்வாய்ப்புக் கிடைத்தது. காசு அவர்கள் பேராசிரியர் ஆகியதைத் தம் வெற்றியாகவும், நீதிக் கட்சியின் வெற்றியாகவும் கருதி மகிழ்ந்தார் தியாகராசர். பேராசிரியர் காசுவுக்கு வேறொரு பெருமை காத்து நின்றது. உண்மை அறிவே மிகும் என்பது உண்மையாயிற்று. உலகப் பெருங்கவிஞர் தாகூர். அவர் தம் குடும்பப் பெயரால் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசு என்ற ஒரு பரிசுத் திட்டம் அமைந்துள்ளது. சட்டக்கலை பற்றி மூன்று பொருள்கள் கொடுக்கப்பெறும். அவற்றுள் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பன்னிரு சொற்பொழிவுகள் செய்தல் வேண்டும். அப் பரிசுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர் சொற்பொழிவுச் சுருக்கத்தை எழுதி அனுப்புதல் வேண்டும். அவற்றைச் சட்ட நுணுக்கம் அறிந்த குழு ஆய்ந்து தக்கதொன்றைத் தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற கட்டுரையாளர் தாகூர் சட்ட விரிவுரையாளர் எனச் சிறப்பிக்கப் பெற்றுக் கல்கத்தாவுக்குச் சென்று தம் பன்னிரு சொற்பொழிவுகளையும் ஆற்றுவர். பல்கலைக் கழகம் அவருடைய செலவுகளை ஏற்றுக்கொண்டு, பத்தாயிர ரூபா பரிசு வழங்கிப் பாராட்டும். இதுவே தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசுத் திட்டமாகும். பேராசிரியர் காசு அவர்கள் எடுத்துக்கொண்ட ஆய்வு குற்றங்களின் நெறி முறைகள் (Principles of Criminology) என்பதாகும். மிகச் சிக்கலான இத் தலைப்பை ஆராய்ந்து கட்டுரைச் சுருக்கம் அமைத்து அனுப்பினார். இவர் அனுப்பியதே பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. பரிசும் கிடைத்தது. அது முதல், தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பட்டம் பேராசிரியர்க்கு வாய்த்தது. இந்திய நாடு முழுவதற்கும் பொதுவாக அமைந்த போட்டியில் வெற்றி வீரராகத் திகழ்ந்த பேராசிரியரை அன்பர்களும் நண்பர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். 1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணி செய்தார் பேராசிரியர் காசு. மாணவப் பருவத்திலேயே அவை கூட்டி ஆராய்ந்தகாசு, ஆசிரிய நிலையுற்ற பின்னர் மறப்பரோ? மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் என ஒரு கழகத்தைத் தோற்றுவித்தார். அதன் தலைவராக இருந்து அரிய பணி செய்தார். எப்பணி செய்தாலும் எங்கே சென்றாலும் செந்தமிழும் சிவநெறியும் பேராசிரியர் காசுவுடன் ஒன்றுபட்டே நின்றன. 1927 இல் ஒரு புதிய சட்டம் வந்தது. சட்டத்துறைத் தலைவராக சர். சி. பி. இராமசாமி ஐயர் அமர்ந்தார். சட்டக் கல்லூரிக்கு நிலையான பேராசிரியரோ விரிவுரையாளரோ வேண்டுவதில்லை. அவ்வப்போது தக்கவர்களை அமர்த்திக் கொளளலாம் எனப் புதியதோர் ஆணை பிறப்பித்தார். அவ்வாணையால் இவர் பதவி விலகி வரும் கட்டாயம் உண்டாயிற்று. சட்டக் கல்லூரிப் பணியில் இருந்து விலகிய பேராசிரியர், நெல்லைக்கு வந்தார். பொதுப்பணியும், தமிழ்ப்பணியும் அவரைப் போட்டி போட்டுக்கொண்டு ஆட்படுத்தின. அப்போது வெளிப்பட்ட நூல் இலக்கிய வரலாறு ஆகும். 1929-30இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்து பணிபுரிந்தார். 1932இல் நெல்லை நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அதன்பின் நெல்லையப்பர்கோயில் அறங்காவலராக விளங்கினார். இவர் காலத்தேதான் தேவாரப் பாடசாலை, வேதாகமப் பாடசாலை என இரண்டு பாடசாலைகளைக் கோயிலில் தோற்றுவித்தார். கோயிலில் பல நல்ல திட்டங்களை உருப்படுத்தினார். 1934ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அதன் தலைவராகப் பேராசிரியர் கா. சு. பிள்ளையையே தேர்ந்தெடுத்தனர். நான்கு ஆண்டுகள் தமிழ்ச் சங்கத் தலைவராக விளங்கிப் பலரும் பாராட்டும் பணிகள் புரிந்தார். அதன் பின்னர்க் காஞ்சி மாநகர் சென்று சிலகாலம் தங்கினார். அக்காலத்தில் பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து என்னும் நூலையும் வானநூல் என்னும் நூலையும் படைத்தார். அதன் பின்னர் சென்னைக்குச் சென்றார். பேராசிரியர் சென்னையில் இருந்தபோது அண்ணாமலை அரசர் திருப்பார்வை மீண்டும் கிடைத்தது. பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களும் துணை நின்றனர். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பேராசிரியப் பதவியைப் பெற்றார். இயல்பாக இருந்த உடல் நலிவும் வளர்ந்தது. அதனிடையேயும் நான்காண்டு காலம் சீர் சிறக்கப் பணி செய்தார். உழைப்பதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதுமா? உடலும் ஒத்துவர வ்ணடுமே! இவர்க்கு நெடுநாட்களாக இருந்த வாதநோய், கைகளை வலுக்குன்றச் செய்தது; நடையையும் தளர்த்தியது. இனிப் பணி செய்ய இயலாது என்னும் நிலைமையும் உண்டாயிற்று. பேராசிரியர் அவர்களின் புலமை மாண்பை உள்ளவாறு அறிந்தவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர்கள். ஆதலால் அவர் நலம்பெற்று நற்றமிழ்த் தொண்டு செய்தற்கு ஆவனவெல்லாம் செய்தல் கடன் எனக் கொண்டார். பேராசிரியர் ஔவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் துணையுடன் தமிழ்க் காசு நெல்லை சைவ சித்தாந்தக் கழக மாளிகைக்கு வந்துசேர ஏற்பாடு செய்தார். கழக மாளிகையில் பேராசிரியர் தங்கினார். நோய் நீங்குதற்குத் தக்க வகையெல்லாம் ஆய்ந்து மருத்துவம் செய்விக்கப் பெற்றன. நோயும் நீங்கினாற்போலத் தோன்றியது. தமிழன்பர் களும் உற்றார் உறவினரும் மகிழ்ந்தனர். எனினும் இறைவன் எண்ணத்தை எவரே அறிவார்? நோய் மீண்டும் முதிர்ந்தது. இனித் தீராது என்னும் நிலைக்குச் சென்றுவிட்டது. அந்நிலையில் பேராசிரியரின் மாமனார் நெல்லை நாயகம் பிள்ளை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றார். 30-4-1945 ஆம் நாள் அம்மை அம்பலவாணர் திருவடியை நினைந்து பேருறக்கத்தில் ஆழ்ந்தார். அருமை மனைவியார் பிரமு அம்மாள் ஆரூயிர்த் தலைவரைப் பிரிந்து ஆறாத் துயருற்றார். அத் துயரிலேயே ஆறு திங்கள் அளவு உயிர் தாங்கி நின்றார். பின்னை, அவரும் இறைவன் திருவடிக்கு ஆளாயினார். பேராசிரியர் அவர்களுக்கு மக்கள் மூவர் உளராயினர். அவர்கள் மீனாட்சிசுந்தரம், திருநாவுக்கரசு, மங்கையர்க்கரசி என்பார். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பது வள்ளுவர் வாய்மொழி! காசு விட்டுச் சென்ற செல்வங் களை இவ்வளவு என்று வரையறுக்க முடியுமோ? வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சமய நூல்கள், அறிவுச்சுடர் நூல்கள், கதை நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள். ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் என்னும் பல்வேறு தலைப்புகளில் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் தமிழுலகுக்குக் காசு வழங்கிய அழியாச் செல்வங்களாகும். பேராசிரியர் காசு அவர்கள் இதழாசிரியராகவும் விளங்கினார். மணிமாலை என்பது இவர் நடத்திய திங்கள் இதழ், ஓராண்டே நடைபெற்றது. அதில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாமும் இவரால் எழுதப்பட்டனவேயாகும். ஒன்பது பகுதிகளாகப் பிரித்து ஒன்பது துறைகளில் ஒருவரே கட்டுரை எழுதுவது எத்தகைய அரிய செயல்! அச் செயலைச் செய்தார் பெரியார் காசு! செயற்கு அரிய செயல்களைச் செய்த பெருமக்கள் பெயரையும், அவர்கள் செயலையும் எழுதிக் கல்நடுவதும், திருவுருவச் சிலை படைப்பதும் பழங்காலம் தொட்டுவரும் பழக்கமாகும். அதனை உணர்ந்த கழக ஆட்சியாளர் அவர்கள், கா. சு. பிள்ளைக்கு நடுகல் அமைத்தல் தம் கடமை என முயன்றார். நெல்லை நகராட்சியின் இசைவுடன் நெல்லைச் சந்திப்பு வெற்றி வளைவின் அருகில் உள்ள பூங்காவில் நடுகல் நிலைபெறுத்தப் பெற்றது. திவான்பகதூர் ஆவுடையப்ப பிள்ளை அவர்களும், கழகத் தலைவர் சிதம்பரம் பிள்ளை அவர்களும் இத் திருப்பணியில் பெரும்பங்கு கொண்டு கடமை ஆற்றினர். அமைச்சர் திரு. மீ. பக்தவத்சலம் அவர்கள் நடுகல்லினை நாட்டி மாலை சூட்டினார். பல்வேறு சங்கங்களின் சார்பில் பாராட்டுரைகள் வழங்கப்பெற்றன. நடுகல்லில் பொறித்துள்ள செய்தி பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களின் வாழ்க்கையை ஓவியமெனத் தீட்டிக் காட்டுவதால் அது அவ்வாறே குறிக்கப் பெறுகிறது: இந்நடுகல் நுண்மாண் நுழைபுலச் செம்மல் பல்கலைப் புலவர் வழக்குரைஞர் (அட்வகேட்) கா. சுப்பிரமணிய பிள்ளை 5-11-1888-ல் திருநெல்வேலியில் fhªâkâ ehjãŸis (ã.V.)க்F« மீனாட்சியம்மைக்கும் திருமகனாகப் பிறந்து; ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எம்.ஏ. பட்டமும்; r£l¡ fiyÆš v«.vš., பட்டமும்; 1920-ல் குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology) என்னும் நூலியற்றிப் பதினாயிரம் ரூபாய் பரிசுடன் தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் பட்டமும் பெற்று 1919முதல் 1927 வரையில் சென்னைச் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் 1929-1930, 1940-1944 இவ் ஐந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கி; 1926-1932-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராகவும்; 1932 முதல் 1937 வரை நெல்லை நகராட்சி மன்ற உறுப்பினராகவும்; நெல்லை யப்பர் கோவில் அறங்காப்பாளராகவும்; அமர்ந்து சீர்திருத்தங்கள் பல செய்து; மணிவாசக மன்றம் நிறுவி, மணிமாலை என்னும் தாளின்வழிப் பல கலை நூல்களை இயற்றி வெளியிட்டு நூலாராய்ச்சியுடன் நால்வர் வரலாறுகள் சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானவர், குமர குருபரர், சிவஞான முனிவர், மெய்கண்டார் வரலாறுகள்; திருக்குறள் திருவாசகப் பொழிப்புரைகள்; தமிழிலக்கிய வரலாறு; தமிழர் சமயம், வானநூல், மெய்கண்ட நூல்களின் உரைநடை, நீதிநெறிவிளக்கம், சிவப்பிரகாசம் இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்; இந்தியத் தண்டனைத் தொகுதி விரிவுரைகள் (Lectures on the Indian Penal Code) முதலிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களியற்றி, பல பேரவைகளில் தலைமைதாங்கிச் சொற்பொழிவாற்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் தமிழ்மக்கட்குப் பல்லாற்றானும் பணிசெய்து 30-4-1945 ல் மனைவியாருடன் மக்கள் மூவரையும் பிரிந்து திருவருட் பேறெய்தியதை நினைந்து நிலைநாட்டப்பெற்றது. தென்னிந்திய தமிழ்ச் சங்கம், வ. சுப்பையா பிள்ளை, திருநெல்வேலி அமைச்சர் இந் நடுகல்லை யன்றித் தென்னிந்திய தமிழ்ச் சங்கச் சார்பில் தொடங்கப் பெற்ற கா. சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றமும், குளித்தலையில் திரு. இளமுருகு பொற்செல்வி அவர்களால் நடத்தப்பெறும் கா.சு. பிள்ளை தமிழ் மன்றமும் நல்ல நினைவுச் சின்னங்களாம். சில சுவையான செய்திகள் கா. சு. பிள்ளை அவர்கள் சென்னையில் பயிலும்போது விக்டோரியா மாணவர் விடுதியில் இருந்தார். ஒரு நாள் விடுதி மாணவர் சிலர் விடுதிக் காப்பாளரிடம் சென்று இவர் பூசை செய்யும்போது மணியடிப்பது தொல்லை தருகின்றது. அதனைத் தடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். விடுதிக் காப்பாளர் இவர் பூசை செய்யும் பொழுது வந்து பார்த்தார். பூசை முடிந்ததும் மணியாட்டி, (Bell man) நீர் அடிக்கும் மணி இவர்களுக்கு இடையூறு செய்கிறதாம் என்றார். ஓ! இவர்களுக்கு இடையூறாக இருந்தால் நாளை முதல் மணியடிப்பதை நிறுத்திவிடுகிறேன். பூசை செய்வது நன்மைக்கு அன்றிப் பிறர்க்கு இடையூறு செய்வதற்கு அன்று என்று கூறித் தாம் இடைஞ்சல் செய்ததற்காகப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டினார். குறை சொல்லிய மாணவர்கள் உண்மையில் குறை கண்டவர்கள் அல்லர்! வேடிக்கைக்காகவே கூறினவர் ஆதலால், மணியாட்டி, நீங்கள் மணியடிப்பது எங்களுக்குச் சிறு இடையூறும் செய்யவில்லை! எங்களால் பூசை செய்ய முடியவில்லை! பூசை செய்யும் உங்களை மதிக்கிறோம். நீங்கள் வழக்கம்போல் மணி யடித்துப் பூசை செய்யுங்கள் என்று கூறினர். பாதுகாப்பாளரும் மகிழ்ந்தார். தமிழ்க் காசு இடைநிலை வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அந்தோனி என்பார் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு நாள் தாம் சொல்லச் சொல்ல மாணவர்கள் எழுதுமாறு செய்து கொண்டிருந்தார். ஆனால், அதனைக் காசு எழுதவில்லை. கருத்துடன் கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தார். பாடம் சொல்லி முடிந்ததும் எழுதியதைப் படிக்குமாறு காசுவைக் கேட்டார். இவர் ஒரு பிழையும், முறைமாற்றமும் இல்லாமல் முழுமையாகச் சொல்லி முடித்தார். பேராசிரியர்க்கு மிக வியப்பு ஆயிற்று! மாணவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா? அத்தகைய நினைவாற்றல்! பேராசிரியர் காசு அவர்கள் நீதிபதி திரு. வெங்கட சுப்பா ராவ். நீதிபதி திரு. தேவதாசுப் பிள்ளை ஆகிய இருவரையும் விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்கள் வந்தபோது பூசை அறையில் இருந்தார் காசு. தம்மை மறந்து இறையன்பில் மூழ்கிக் கண்ணீர் வார்ந்து உருகி நிற்றல் இவர்க்கு இயல்பு. பொழுதும் அறியார்; பிறவும் அறியார்! பூசை முடித்த பின்னரே விருந்துக்கு அழைத்த செய்தி நினைவுக்கு வர விரைந்து வந்தார். நெடுநேரம் காத்திருந்த நீதிபதிகளிடம் தம்மைப் பொறுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஐயா, உண்மை வழிபாடு இன்னது என்பதைத் தங்களிடம் அறிந்தோம். நீவிர் வருந்தற்க என்று போற்றினர். தம்மை மறந்து ஈடுபடும் தனிநிலையே பத்தி அன்றோ! சட்டக் கல்லூரிக்கு மின் பேருந்தில் போய்க் கொண்டி ருந்தார் காசு. அவர் இனிய நண்பரும் வழக்கறிஞருமாகிய சிவஞானம் பிள்ளையை அங்கே கண்டார். காசு சட்டைப் பொத்தான்களைத் துளை மாறி மாறி மாட்டியிருந்தார். மாட்டாமலும் விட்டிருந்தார். இவற்றைக் கண்ட சிவஞானம் பிள்ளை அவற்றைச் சரி செய்ததுடன், அறிவாளிகள் இப்படித்தாம் இருப்பார்கள் போலும் என்று எண்ணி வியப்புற்றார். மேதைகள் வரலாறு இத்தகையதுதானே! பொறியியல் துறையில் பேரறிஞராக விளங்கியவர் பா. வே. மாணிக்க நாயகர். அவர் தமிழ் மொழிக்கு அரிய தொண்டு செய்த பெருமகனார். கழக அமைச்சர் திருவரங்கனார்க்கு எழுதிய கடிதம் ஒன்றில், இக் காலத்தில் ஆண்டவன் அருளால் உள்ளுணர்ச்சியுடன் கூடிய நிகரற்ற பெரும் புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள். ஆனால், அவர்கள் தம்முடைய பெருமைகளை அறியாதிருக் கின்றார்கள். அதனால் ஒலிப்பன அல்லவாகிய உயர்ந்த உலோகங்களைப் போல அவர்கள் ஆரவாரம் செய்வதில்லை. நானோ மங்கிய உலோகங்களைப் போலத் தமிழ் நாட்டில் பெரிய ஆரவாரம் முழக்கி வருகின்றேன் என்று எழுதியுள்ளார். ஒலியில்லாத் தங்கம் காசு என்பதை அறிஞர் பா. வே. மா. அன்றே கண்டார்! புலமையாளரை எடைபோடப் புலமையுடையார்க்குத் தாமே இயலும்! 4. சொல்லின் செல்வர் சிலர் சொல்லும் சொற்கள் வெறுஞ் சொற்களாகத் தோன்றுவன அல்ல. அவை மணி மொழி என்றும் பொன் மொழி என்றும், முத்துக்குவியல் என்றும் கருத்துக் களஞ்சியம் என்றும் பாராட்டப்படுகின்றன. மதித்துப் போற்றவும்படுகின்றன. இதனால் சொல்லின் மதிப்பு விளங்கும். தமிழில் உள்ள சில சிறு நூல்கள் இணைமணி மாலை, இரட்டைமணி மாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை என்று பெயர் பெற்றன. இதனால் சிறந்த வாக்குகளைப் பாராட்டினர் என்பது வெளிப்படும். 300 அடிகளையுடைய பட்டினப்பாலையைப் பாடிய கண்ணனார் என்னும் புலவர்க்குக் கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொன் வழங்கினான். இதனால் விலை மதிப்பில்லாச் செல்வம் சொல்லே என்பது உறுதியாகும். மதுரையை அடுத்துள்ள திருவாதவூரில் பிறந்த ஒருவர் திருவாதவூரர் என்று அழைக்கப் பெற்றார். பின்னர் அவர் வாக்கின் அருமை அறிந்தோர் அவரை மாணிக்க வாசகர் என்று அழைத்தனர். அவர் பாடிய வாசகம் திருவாசகம் ஆயிற்று. சொல்லின் சிறப்பு அன்றோ இது. முன்னோர் வழங்கிய சொற்களைச் செல்வமாகக் கருதித் தொகுத்து வைத்துக் கொண்டு அச் செல்வத்தைத் தக்க இடத்தில் வள்ளல்போல வாரி வழங்குபவர்க்கு எப்பெயர் சூட்டலம்? சொல்லின் செல்வர் என்று பெயர் சூட்டலாம் அல்லவா! அத்தகைய சொல்லின் செல்வரே இரா. பி. சேதுப்பிள்ளை. பணிந்த மொழியுடனும் வணங்கிய கையுடனும் இராமனைக் காணுகின்றான் அனுமான். அவன் சொல்லிய சொல்லின் நயங்களையும் இனிமையையும் உணர்கிறான் இராமன். தம்பி இலக்குவனை நோக்கி, யாவனோ இச் சொல்லின் செல்வன் என்று வினாவுகின்றான். இராமாயணத்தின் சுவையில் ஈடுபட்டு அதன் நயங்களை நாளும் பரப்பிய நாவலர் சேதுப் பிள்ளையைச் சொல்லின் செல்வர் என்று நாடு அழைத்தது தக்கதேயாம். நெல் வயல்கள் வேலியாக அமைந்த பேரூர் திருநெல்வேலி. அதனை அடுத்துக் கீழ் பால் திசையில் செப்பறை என்றோர் ஊர் உண்டு. அவ்வூர்க்கு வடபால் அமைந்தது இராசவல்லிபுரம். அவ்வூரில் இருந்த செல்வர் பிறவிப் பெருமாள் பிள்ளை என்பார். அவர் தம் இனிய மனைவியார் சொர்ணத்தம்மாள் என்பார். இவர்கள் உற்றாரும் உறவும் உவந்து பாராட்ட இனிய இல்லறம் நடத்தினர். ஒருவர் பின் ஒருவராக ஒன்பது மக்களைப் பெற்றும் ஒருவரும் தங்காமல் ஒழிந்தனர். பத்தாவதாகப் பிறந்த திருமகள் ஒருத்தியே குடிக்கு விளக்காக அமைந்தாள். ஆண்பிள்ளை ஒன்று வேண்டும் என்று ஆவல் மிகக் கொண்டனர். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இராமேசுவரம் சென்று சேதுக் கடலில் நீராடினர். அதன் பின்னர்த் திருவருளால் பிறந்த செல்வப் பிள்ளையே நம் சேதுப்பிள்ளை. சேதுக் குழந்தை பிறந்த நாள் 2-3-1896 ஆகும். சேது ஐந்தாம் வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்தார். பத்தாம் வயதில் திண்ணைப் பள்ளிப் படிப்பை முடித்தார். அந் நாளிலேயே அங்கிருந்த செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி முதலாய நூல்களைப் பாடங் கேட்டார். சேதுவின் மனப்பாடத் திறத்தையும் சொல்லின் அழகையும் உணர்ந்த செப்பறை அடிகள், சிவஞான மாபாடியத்தில் சில பகுதிகளைக் குறித்துத் தந்து ஒப்பிக்கச் செய்தார். தவறாது ஒப்பிக்கும் சேதுவைத் தட்டித்தந்து பாராட்டினார்.Ú பின்னாளில் பெரிய நாவலனாக விளங்குவாய் என்று வாழ்த்தினார். சேதுவின் தொடக்கக் கல்வி முடிந்ததும் பாளையங் கோட்டையில் இருந்த சேவியர் உயர்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவர் படிப்பில் ஆர்வம் காட்டியது போலவே விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார். உடன் பயின்ற மாணவர்கள் சேதுவை இரும்பு மனிதன் என்று பாராட்டுமாறு உடல் வலிமை வாய்த்திருந்தார். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது சேதுவுக்கு நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூல் கிடைத்தது. விடு முறையில் அதனை ஊருக்குக் கொண்டு சென்ற சேது, தம் பெற்றோர்க்கு அதனைக் காட்டி மகிழ்ந்தார். அப்பொழுது அவர்கள் செப்பறை அடிகள் திருவடிகளில் வைத்து அவர் வாழ்த்துடன் பெற்றுக் கொள்க என்று ஏவினர். அவ்வாறே செய்தார் சேது. அடிகள், தம்பி, இது மிகச் சிறந்த அறநூல்; விடுமுறையில் இங்கு வரும் போதெல்லாம் என்னிடம் வா. உனக்கு இதனைக் கற்றுத் தருகிறேன். நாள்தோறும் ஐந்து குறட்பாக்களை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்க வேண்டும். அதனால் நீ பிற்காலத்தில் பெரும்பயன் பெறுவாய் என்று கூறினார். அடிகளார் அறிவுரைப்படியே அன்று முதல் திருக்குறளை மனப்பாடம் செய்து வந்தார் சேது. பாளையங் கோட்டையில் சைவ சபை ஒன்று உண்டு. சேது அச்சபை நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் போவார். சேது சேவியர் பள்ளியில் படிக்கும்போது அதன் வெள்ளிவிழா நடந்தது. அவ் விழாவுக்குச் சேது தொண்டர் படைத் தலைவராக இருந்து பணி புரிந்தார் விழாவுக்கு வரும் பெரியோர்களை அழைத்து வருதல், அவர்களுக்கு வேண்டும் உதவிகள் புரிதல், கூட்டத்தில் ஆவன செய்தல் ஆகிய பொறுப்புகளைத் தொண்டர்கள் சிறப்பாகச் செய்தனர். வெள்ளி விழாத் தலைமையைப் பாலவனத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் பேருரையாற்றினார். அவர், தொண்டர் படைத் தலைவராகிய சேதுவை அழைத்து, நீங்கள் பள்ளிப் பிள்ளைகளா? என்று வினவினார். ஆம்; சேவியர் பள்ளியில் படிக்கிறோம்! சைவ சபைத் தொண்டர் படையில் சேர்ந்துள்ளோம் என்று பணிவுடன் கூறினார் சேது. பின்னர்த், தாங்கள் குளிப்பதற்கு வெந்நீர் வேண்டுமா? தண்ணீர் வேண்டுமா? எது வேண்டு மானாலும் இருக்கிறது என்று கூறினார் சேது. அது கேட்ட சண்முகனார், நாள்தோறும் வையை ஆற்றில் குளித்துப் பழகியவன் யான். அதனால் தண்ணீரே போதும்; நீங்கள் நல்ல சிறுத் தொண்டர்கள், தொண்டு செய்வது மிகவும் நன்று; தொண்டர்தம் பெருமை, சொல்லுவது அருமை என்று பாராட்டினார். பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரால் சிறுத் தொண்டர் என்று பாராட்டப் பெற்ற சேது வாழ்நாள் எல்லாம் தமிழ்த் தொண்டராக விளங்கினார். முற்றுந் துறந்த பட்டினத்து அடிகளாராலும் ஒப்பில்லாத் தொண்டராக உரைக்கப் பெற்றவர் அல்லரோ சிறுத்தொண்டர்! சேவியர் பள்ளியில் படித்த சேது பள்ளியிறுதி வகுப்புத் தேர்வைச் சிறப்பாக எழுதிவிட்டு ஊர்க்குச் சென்றார். அருந்தவங் கிடந்து தம்மைப் பெற்ற அன்னையார், பாயும் படுக்கையுமாகக் கிடப்பதைக் கண்டு சொல்ல முடியாத துயருற்றார். அத்துயர் நிலைக்கும் வண்ணம், அன்னையார் சில நாட்களில் உயிர் துறந்தார். இளைய சேதுவும் முதிய தந்தையும் ஆற்ற முடியாத் துயருக்கு ஆட்பட்டனர். கல்வியில் தேர்ச்சி காட்டிய சேதுவைக் கலைப் பட்டம் பெறச் செய்தல் வேண்டுமெனத் தந்தையார் கருதினார். அதனால் நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்த்தார். தமிழில் தேர்ந்த சேது ஆங்குள்ளோர் உள்ளங் கவர வளர்ந்தார். தமிழ் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தமிழ்ப் பேச்சப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் முதல்வராக விளங்கியதுடன், ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் அவரே பரிசைத் தட்டிக் கொண்டார். அதனால் நல்லாசிரியர் பாராட்டுக்கும் மாணவர் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார். இடைநிலைக் கல்வியில் தேர்ந்த சேது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அவர்க்கு விருப்பப் பாடமாக வரலாறும் பொருளாதாரமும் அமைந்தன. தமிழ்க் கல்வி இவர் பாடத் திட்டத்தில் இல்லாமல் இருந்தது. ஆனால், இலக்கிய மன்றங்களின் சார்பாகத் தமிழ்க் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப் பெற்றன. பேச்சுப் போட்டியில் முதல்வராக வந்தார் சேது. அவர் நாவன்மையைக் கல்லூரி முதல்வர் அறிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பு ஆயிற்று. கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அன்பைப் பெறுதற்கும் அரிய வாய்ப்பு ஆயிற்று. பச்சையப்பன் கல்லூரி முதல்வர் உரோலோ துரை என்பவர். அவர் சேதுவின் சொற்பொழிவைக் கேட்ட மறுநாள் சேதுவைத் தனியே அழைத்துப் பாராட்டினார். அடுத்த ஆண்டு நீ நம் கல்லூரித் தமிழாசிரியராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று தம் விருப்பத்தையும் கூறினார். அவர் வாக்குத் தந்தபடியே சேதுவுக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆயினும் சட்டக்கலை பயில வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்தது. அதனை உணர்ந்தார் கல்லூரி முதல்வர். கல்லூரியில் தமிழாசிரியப் பணி செய்துகொண்டு சட்டக் கல்லூரியில் பயிலவும் வாய்ப்புத் தந்தார்! ஒரு பக்கம் ஆசிரிய நிலை! இன்னொரு பக்கம் மாணவர் நிலை! சேதுவுக்கு வாய்த்த தனி வாய்ப்பு அல்லவா! சட்டப்படிப்பை முடித்த சேது நெல்லைக்கு வந்தார். படிப்பு முடிந்ததும் பணிதேடுதலும் மணமகள் தேடுதலும் போட்டி போட்டுக் கொண்டு நடைபெறும் செயல்கள். இதில் பிள்ளைகள் கருத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் பெற்றோரும் உற்றார் உறவினரும் அக்கறை காட்டுவது உலகியல். அவ்வாறே சேதுவுக்கும் நிகழ்ந்தது. பெரும்புகழ்ச் செல்வர் வடமலையப்ப பிள்ளையன் வழியில் வந்த நெல்லையப்ப பிள்ளையன் என்பாரின் திருமகளார் ஆழ்வார் சானகி என்பார் சேதுவின் மனைவி ஆனார்! சேதுவுக்கும் சானகிக்கும் அமைந்த பெயர்ப் பொருத்தம் பெரும் பொருத்தம் அல்லவா! வழக்கறிஞர் சேது சென்னைக்குச் சென்றார். அங்கே புகழ் வாய்ந்த வழக்கறிஞராக விளங்கிய முத்தையா முதலியார் அவர்களிடம் பயிற்சியாளராக அமர்ந்து ஈராண்டுகள் பணி புரிந்தார். தொழில் தேர்ச்சியில் நம்பிக்கை உண்டாகியமையால் தாமே தனித்து வழக்கறிஞர் தொழில் நடத்த முடிவு செய்து கொண்டு நெல்லைக்கு வந்தார். நெல்லையில் வழக்கறிஞர் தொழில் செய்ய வந்தாரா? வண்டமிழை வளர்க்க வந்தாரா? சொல்லின் செல்வர் இரண்டாவதையே இனிது செய்தார். தீந்தமிழ் கொழிக்கும் திருநெல்வேலியின் திக்கெல்லாம்- தெருவெல்லாம்- தேன் மழை பொழிந்தார். தமிழ் என்பது இனிமை என அகராதியும் நிகண்டும் தரும் பொருளைத் தம் சொல்லாலே நிலை நாட்டினார். சேது செந்தமிழானார்! செந்தமிழ் சேதுவாயிற்று! நெல்லை மாணவர் சங்கத்தில் திருக்குறள் பற்றி ஓர் அரிய ஆராய்ச்சியுரை நிகழ்த்தினார் சொல்லின் செல்வர். ஆங்கில உரையே நிகழ்ந்த அம் மன்றில் செந்தமிழ் அன்று தொட்டுக் களிநடம் புரியத் தொடங்கியது. அதன் பின் நெல்லையில் கம்பன் கழகம் என ஒரு கழகம் தோன்றியது. அக் கழகத்திலும் சொல்லின் செல்வர் உரையாற்றினார். திருக்குறளிலே முழுதும் தோய்ந்திருந்த சொல்லின் செல்வர் கம்பன் கழகத்தில் பெரியார் சுப்பையா முதலியாரின் கம்பராமாயண உரையைக் கேட்டு அதன் இனிமையில் தோய்ந்தார். அந் நாள் தொட்டுக் கம்பன் காவியத்தில் முழுமையாக ஈடுபட்டார். கம்பன் கழகத்தில் வாரத்திற்கு ஒருமுறை இராமாயண இன்ப மழை பொழிந்தார் சொல்லின் செல்வர். நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று என்பது வள்ளுவர் வாய்மொழி. நாநலத்தைப் பெற்றவர்க்கு எந்த நலம்தான் அரிதாகும்? சொல்லின் செல்வர் புகழ் பக்கமெல்லாம் பரவியது. பேரூர் சிற்றூர்களிலும் அவர் பேருரை நிகழ்ந்தது. நெல்லை நகர் மன்றம் அவர் தொண்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பித் தன் உறுப்பினராக்கிக் கொண்டது; மும்முறை தொடர்ந்து தேர்ந்து கொண்டது. நகர்மன்றத் துணைத் தலைவரும் ஆக்கிப் பெருமை கொண்டது. நகர் மன்றப் பணியில் சொல்லின் செல்வர் ஈடுபட்டது நற்றமிழ்ப் பணிக்கும் வாய்ப்பு ஆயிற்று. அவர் பணியால் கூழைக்கடைப் பசார் கூலக்கடைத் தெரு ஆயிற்று. விளாமடித் தெரு விலங்கடித் தெரு ஆயிற்று. அக்கா சாலைத் தெரு, அக்கசாலைத் தெரு ஆயிற்று. பழம் பெயர்ச்சிறப்பை உணர்ந்து சிதைவை மாற்றிச் செம்மைப்படுத்தினார் சொல்லின் செல்வர். நகர்மன்ற ஆட்சி புரிவோர்க்கு நற்றமிழ்ப் புலமை வேண்டும் என்பதும், அப் புலமை அமைந்தவராய் அருந் தொண்டாற்றினால் தான் நகரில் தமிழ்முணங் கமழும் என்றும் நடைமுறையிற் காட்டினார் சொல்லின் செல்வர்! ஆயினும் இந்நாள்கூட சேது வளர்த்த செந்தமிழை நகரங்களில் காணற்கு முடிவதில்லை! தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் தான் இல்லை என்னும் நிலைமைதான் உள்ளது. கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்றார் பாரதியார். அப் புலவர்கள் படைத்த இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களை ஆராய்ந்து நயங்கண்டார் சொல்லின் செல்வர். அந்நயங்களைச் செல்லுமிடந்தோறும் சொல்மாரியாகப் பொழிந்தார். சொல் காற்றில் கலந்து போய்விடவும் கூடுமே! அதனை நிலைக்கச் செய்ய வழியென்ன? நூல் நயங்களையெல்லாம் எழுத்து வடிவில் உலாவ விடுவதே அழியா வாழ்வு தருவது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் கட்டுரைகளை அருந்தமிழ் இதழ்கள் தாங்கி வெளிப் போந்தன. நூல் வடிவும் எடுத்தன. இதனால் சொல்லின் செல்வர் செல்லாத இடங்களுக்கும் அவர் தம் எழுத்து ஓவியங்கள் சென்றன. செல்வாக்கை உண்டாக்கித் தந்தன. எதுகை மோனை நயம் அமைந்த அவர் தம் சொற்கள் கற்றோர் நெஞ்சில் கல்லில் எழுத்துப்போல் நின்று இன்புறுத்தின. இவை சொல்லின் செல்வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் விரும்பி அழைக்க வகை செய்தது. தமிழ்க் காசு (பொன்) என்று சொல்லப் பெறும் பெருமகனார் கா. சுப்பிரமணிய பிள்ளை ஆவர். நெல்லையைச் சேர்ந்த அப் பெருமகனார் சொல்லின் செல்வர் திறமையை நன்கு அறிந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைக்கு அவரை அழைத்துக் கொள்ள நினைந்தார். அதனைச் செயற் படுத்தவும் செய்தார். செந்தமிழ்ச் சேது தமிழ்த் துறையையே தம் தொழிற்றுறையாகக் கொண்டு பணி செய்ய ஒரு திருப்பம் தந்தவர் தமிழ்க் காசுவே ஆவர். சொல்லின் செல்வர்அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், புலவர் பொன்னோதுவார், சர்க்கரை இராமசாமிப் புலவர், பேராசிரியர் கந்தசாமியார் ஆகியோர் பணிசெய்து வந்தனர். கலைக்கல்லூரி மாணவர்க்கும், புலவர் வகுப்பு மாணவர்க்கும் இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், மொழிநூல் ஆகியவற்றை நடத்தினார். செல்வர் வகுப்புக்கு, வகுப்பு மாணவரும் செல்வர்! பிறரும் செல்வர்! சொல்வாக்குச் செல்வாக்காக வளர்ந்தது! அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணிச்சிறப்பு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு அழைத்தது. விரைவில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார். ஆராய்ச்சித் துறைத் தலைவராக அமர்ந்தார். பொழுதை யெல்லாம் ஆராய்ச்சியிலேயே செலவிடுவது பெருவாய்ப்பு அல்லவா! இவ் வாய்ப்பு தமிழன்னைக்கு இணையற்ற பல அணிகலங்களைப் பூட்டி அழகு செய்தன. ஊரும் பேரும், திருவள்ளுவர் நூல் நயம், சிலப்பதிகார நூல் நயம், தமிழ் இன்பம், தமிழ் நாட்டு நவமணிகள், தமிழர் வீரம், தமிழ் விருந்து, வேலும் வில்லும், வேலின் வெற்றி, வழிவழி வள்ளுவர், கால்டுவெல் ஐயர் சரிதம், திருக்காவலூர்க் கோயில், கிறித்துவத் தமிழ்த் தொண்டர், தமிழகம் அலையும் - கலையும், கடற்கரையிலே, ஆற்றங்கரையினிலே என்பவை சொல்லின் செல்வர் ஆராய்ச்சியில் வெளிப்பட்ட அரிய நூல்களாகும். தமிழ்க் கவிதைக் களஞ்சியம், செஞ்சொற் கவிக் கோவை, பாரதியார் இன்கவித் திரட்டு என்பவை சுவைதேர்ந்து வழங்கிய தொகுப்பு நூல்களாகும். இவற்றுள் ஊரும் பேரும் என்னும் ஒப்பற்ற ஆராய்ச்சி நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஐந்நூறு வெண்பொன் பரிசு பெற்றது. தமிழ் இன்பம் என்னும் அரிய நூல் இந்தியப் பேரரசின் ஐயாயிரம் வெண்பொன் பரிசு பெற்றது. இவ்வாறு சொல்லாலும், எழுத்தாலும், தொண்டாலும் தமிழ் வளர்த்த சொல்லின் செல்வரைப் புகழ் தேடி வந்து அடைந்தது இயல்பேயாம். அறிவுடையோர் பாராட்டுக்கு அமைவிடமாக இருந்த சொல்லின் செல்வர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா 1957 இல் நிகழ்ந்தது. அப்பொழுது அரும்பணி ஆற்றிய பெரும் புகழ்ச் செல்வர் சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் தொண்டு பாராட்டப்பெற்றது. அதன் முகத்தான் அவருக்குப் பண்டாரகர் (டாக்டர்) என்னும் தகுதிவாய்ந்த பட்டம் வழங்கப்பெற்றது. சொல்லின் செல்வர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார் அல்லவா! அதனைப் பாராட்டுமுகத்தான் 13-4-1961 இல் வெள்ளி விழா எடுக்கப் பெற்றது. அவர்தம் திருவுருவப் படம் அவ்விழாவில் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இலக்குமணசாமி முதலியார் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது. ஆற்றங்கரையினிலே என்னும் நூல் அன்று வெளியிடப் பெற்றது. வெள்ளிவிழா மலரை மலேயாப் பல்கலைக் கழகப் பேரறிஞர் தனிநாயக அடிகள் வெளியிட்டார். செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார் அவர்கள் சொல்லின் செல்வர் சேவையைப் பாராட்டினார். விழாச் செல்வர் நன்றியுரை படிக்கப்பெற்றது ஏன்? அவர் உடல் நலக் குறையால் மருத்துவமனையில் இருந்தார்! 2-3-1961இல் பணியில் இருந்து தாமே ஓய்வு கொண்டார் சொல்லின் செல்வர். அப்பொழுதே உடல் நலங்குறைந்திருந்த செல்வர் ஓய்வின்பின் பெரிதும் நலிவடைந்தார். 14-4-1961இல் சென்னை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப் பெற்றார். அரிதின் முயன்று, தமிழ் நாட்டுச் செல்வம் எனக் காக்கத் துணிந்தாலும், இயற்கையை வெற்றிகொள்ள இயலுமோ? தேன் மழை பொழிந்த சொல்லின் செல்வரின் திருவாய் 25-4-1961 காலை 11-30 மணியளவில் மூடியது! அன்று மாலை 6-30 மணியளவில் அடையாற்றைச் சார்ந்த நன்காட்டில் அவர் உடல் எரிமூட்டப் பெற்றது. செந்தமிழ்ச் சேது ஒளியுருக் கொண்டார்! அருமை மனைவியாரும் அன்புத் தமிழரும் கொண்ட அவலத்திற்கு அளவும் உண்டோ! இதழ்கள் அழுதன! மலர்கள் கண்ணீர் வடித்தன! மன்றங்கள் இரங்கின! அவைகள் அரற்றின! செல்வர் வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்தார்! சொல்லின் செல்வர்க்கு மக்கட் செல்வம் வாய்க்கவில்லை. ஆனால், தாம் பெற்ற மாணவச் செல்வங்கள் எல்லாம், மாத்தமிழ்ச் செல்வங்கள் எல்லாம் தம் செல்வங்களாகவே போற்றினார். அதனால் தேடிச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அச் செல்வங்கள் நன்மைக்காகவே வாரி வழங்கி வள்ளலானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களிலும் பணிபுரிந்தவர் அல்லரோ நம் சொல்லின் செல்வர்? அப் பல்கலைக் கழகங்களில் தம் அன்னையார் சொர்ணம்மையார் பெயரால் தனித்தனி இருபத்தையாயிரம் வெண்பொற் காசுகளை வைப்பு நிதியாக வைத்துச் சொற்பொழிவு அறக்கட்டளைகளை நிறுவினார். தமிழ் இலக்கியம், சமயம் ஆகியவற்றைப் பற்றிச் சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் ஐந்து சொற்பொழிவுகள் ஆற்றுதல் வேண்டும்! அதற்கு வைப்புத் தொகையின் வட்டித் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனத் திட்டமிட்டார். இதனால் சொல்லின் செல்வரின் தாயன்பும், தாய்மொழியன்பும், பணிபுரிந்த இடங்களின்மேல் கொண்டிருந்த பற்றும் புலப்படும். பல்கலைக் கழகங்களுக்கு வழங்கிய தொகை போக எஞ்சிய தம் செல்வம் எல்லாமும், தாம் இயற்றிய நூல்களின் வழியே வரும் வருவாய் எல்லாமும் திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்கு வழங்கினார்! மகப்பேறு வாய்க்காமை குறையன்று; நாட்டு மக்கள் அனைவரும் எம் நன்மக்களே என்று வாழும் பெரு நிலை பெற இறைவன் அருளியதேயாம் என்னும் எண்ணத்தால், சொல்லின் செல்வர் அறச்செயல் செய்தது போல் பிற செல்வரும் செய்வரோ! அவ்வாறு செய்யாமையால் அல்லவோ பலர் செல்வம் பாழுக்கு இறைக்கப்பட்டும், வம்புக்கம் வழக்குக்கும் ஆட்பட்டும் அழியாப் பழிக்கு உறைவிடமாகின்றன? வள்ளல் பெருமான் சொல்லின் செல்வர் வழி சிறப்பதாக! சில சுவையான நிகழ்ச்சிகள் சொல்லின் செல்வர், சேவியர் உயர் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்தார். அவருக்கு ஞானப்பிரகாச சுவாமிகள் என்பார் ஆசிரியராக இருந்தார். அவர் வகுப்பில் எவரேனும் தமிழில் ஒரு சொல் சொன்னாலும் அதற்கு ஒரு காசு தண்டனை உண்டு. அவ்வாறு தண்டனை மிகுதியாகச் செலுத்தியவர் நம் சொல்லின் செல்வரே ஆவர். சொல்லின் செல்வர் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியரான பின் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் நிகழ்ந்த வீரமாமுனிவர் விழாவுக்கு விரிவுரை நிகழ்த்த வந்தார். சேவியர் பள்ளி ஆசிரியர் ஞானப்பிரகாச சுவாமிகள் திருச்சி சூசையப்பர் கல்லூரி ஆட்சியாளாராகி ஓய்வு பெற்று அங்கே இருந்தார். அவர்க்குப் பழைய சேதுவின் நினைவு உண்டாயிற்று. அவர் அங்கே இருப்பதை அறிந்த சொல்லின் செல்வர், அவரைக் கண்டு அளவளாவி இன்புற்றார். அப்பொழுது நான் தங்களிடம் மாணவனாகப் பயின்ற நாளில் தங்கள் வகுப்பில் தமிழில் பேசியதற்காகச் சொல்லொன்றுக்கு ஒரு காசு தண்ட.னை செலுத்தினேன். இன்று தங்கள் கல்லூரியில் இரண்யிரம் சொற்களுக்குக் குறையாமல் பேசுவேன். அதற்குரிய ஒறுப்புக் கட்டணத்தைத் தங்களிடம் முன்னதாகவே செலுத்திவிடலாமா? என்றார். அப்பொழுது ஞானப்பிரகாசர், அக்கால நிலைவேறு; இக்கால நிலைவேறு; எங்கம் தமிழ் என்னும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நானும் இதனை விரும்புகிற்ன. நானும் இப்பொழுது உங்களுடன் தமிழில்தான் பேசுகிறேன் என்று கனிவுறக் கூறினார். சேதுவுக்குத் திருக்குறள் பரிசு கிடைத்ததையும் செப்பறை அடிகள் உரைத்தபடி அதனை மனப்பாடம் செய்ததையும் அறிவோம்! இராசவல்லிபுரத்தில் வாழ்ந்த செல்வர் சங்கர சுப்பிரமணியபிள்ளை என்பவர் தம் செல்வத்தை எல்லாம் திருவள்ளுவர் பெயரால் அறக்கட்டளை நிறுவியவர் ஆவர். அவர் செப்பறை அறக் கட்டளை நிறுவியவர் ஆவர். அவர் செப்பறை அடிகளை ஒரு முறை கண்டபோது, சேது திருக்குறள் அறத்துப்பாலைக் கரைத்துக் குடித்துவிட்டான் என்றார். அதற்கு அவர், குறளைக் கரைத்துக் குடிப்பானேன்; அது பால் அமுது அல்லவா! இனிக்கப் பருக வேண்டிய பொருள் அன்றோ என்றார். பின்னர்ச் சேதுவைப் பார்த்து, தம்பி டோடோ என்பது எந்தக் குறளில் வருகிறது? என்று வினவினார். நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பிற் பிறர்க்குரியா டோடோயா தார் என்னும் குறளைக் கூறினார் சேது. தோள் தோயா தார் என்பது டோடோயாதார் எனவரும் இலக்கண முறையை அறிந்து சேது மனப்பாடம் செய்திருந்தமை சங்கர சுப்பிரமணியர்க்கு இன்பம் தந்தது. மிகவும் பாராட்டினார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது முதுமொழியன்றோ! ஒரு நாள் இரண்டு பெரியவர்கள் சொல்லின் செல்வருடன் உரையாடுதற்கு வந்தனர். வெயில் கடுமையாக இருந்தமையால் சொல்லின் செல்வர் வைத்திருந்த கூசாவில் நீர் தீர்ந்து போயிற்று. அதன் பின்னர் அவர் நண்பர் ஒருவர் நீர் பருக வந்தார். அவரைப் பார்த்து இன்று இரு பெருந்தகையர் வந்தனர்: அதனால் தண்ணீர் தீர்ந்து போயிற்று என்றார். பெருந்தகையர் என்பதில் இருபொருள் அடங்கியிருக்கிறது அல்லவா? ஒரு நாள் சொல்லின் செல்வரை ஓர் அன்பர் கண்ட உரையாடிக் கொண்டிருந்தார். அவர் இளைஞராயினும், அவர் தலை மழுக்கையாக இருந்தது. அங்கிருந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம், இவர் என் தலையாய நண்பர்களுள் ஒருவர், என்றார். இவர் தலைபோல அவர் தலையும் மழுக்கையாக இருந்ததைக் கண்ட ஆராய்ச்சி மாணவர் சொல்லழகைச் சுவைத்து மகிழ்ந்தார். சொல்லின் செல்வர் ஒரு முறை திருவனந்த புரத்திற்குச் சென்றார். அப்பொழுது புனலூர் என்னும் ஊரை அடுத்து வண்டி செல்லும் போது, அப் பெயரின் அருமையை உடன் வந்தவர்களிடம் உரைத்து மகிழ்ந்தார். வண்டி நின்று அங்கே நீர் பிடித்துக் கொண்டது. அப் பொழுது, புனலூர் வந்தவுடன் புகை வண்டிக்கும் புனல் குடிக்க வேண்டுமென்ற உணர்வு வந்துவிட்டது! என்றார். சொல்லின் செல்வர் எதுகை மோனை அமைய உரையாற்று தலும் எழுதுதலும் கைவரப் பெற்றவர். ஊரும் பேரும், சேரனும் கீரனும், கன்னனும் கும்ப கன்னனும் நல்லமரமும் நச்சு மரமும் வேலும் வில்லும் என இவ்வாறே நூல் தலைப்பு, கட்டுரைத் தலைப்பு ஆகியவற்றை அமைப்பர். இலக்கணக் கடல் புகுந்து இடர்ப்பட வல்லேம் அல்லேம் தேவியை விடுகின்றானா அன்றி ஆவியை விடுகின்றானா அறிந்துவா வள்ளியின் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்ற குமரன் என்றெல்லாம் கேட்பவர் மகிழவும், என்றும் நினைந்து இன்புறவும் தக்கவாறு கூறுவார். சொல்லை அவர் தேடிப் போவது இல்லை! சொல் அவரைத் தேடி வந்து நின்று ஏவல் கேட்டன என்பது நாடறிந்த செய்தி. 5. செம்மல் சிதம்பரனார் செம்மல் என்பது தலைவன், அரசன், சிறந்தோன், வலிமையாளன் முதலாய பல பொருள் தரும் ஒருசொல். இப் பலபொருளுக்கும் உரிய ஒருவராகத் திகழ்ந்தவர் கப்பலோட்டிய தமிழர், விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனார் ஆவர். கப்பற்படை கொண்டு கடற் பகைவர்களை அழித்த வேந்தன் சேரன் செங்குட்டுவன். அதனால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பெற்றான். யவனம், சீனம் முதலான நாடுகளுக்கு வணிகக் கப்பல்களைச் செலுத்திச் சென்று உலகப் புகழ்வாய்ந்த வேந்தர் பலர் தமிழ் நிலத்தில் இருந்தனர். எனினும் கப்பலோட்டிய தமிழர் என்று கூறினால் வ.உ.சி. யையே குறிக்கும். அத்தகைய சிறப்புடையவர் ஆயினார் அவர். கடலோடிகளாகத் திரிந்து உலக வாணிகருள் சிறந்து விளங்கி ஒரு பெரிய இடத்தைப் பெற்றிருந்த தமிழர் அயலார்க்கு அடிமை ஆயினர். ஆட்சி உரிமை இழந்தனர். வாணிக உரிமை இழந்தனர். இந்நிலையில் கப்பல் வாணிகமும் அயலார் கையில் சென்றது. அதனைக் கண்டு வீறு கொண்டு எழுந்த வீரர் வ.உ.சி. பண்டைப் பெருமையை நிலைநாட்டுவார் போலக் கப்பல் கழகம் நிறுவினார். இரண்டு கப்பல்களை வாங்கி, கடல் உலா வந்தார். அப்பெருமையால் கப்பலோட்டிய தமிழர் ஆனார். உரிமை வீரன் எனப் போற்றப்பெறும் வீரபாண்டியக் கட்டபொம்மனும், உரிமைக் கவி எனப் பாராட்டப் பெறும் பாரதியாரும் பிறந்த நெல்லை மாவட்டத்து மண்ணிலேதான் வீரர் சிதம்பரனார் பிறந்தார். ஓட்டப்பிடாரத்தில் கவிராய சிதம்பரம் பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் வழிவழிக் கவிராயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்னார்க்கு நன்மக்கள் மூவர் பிறந்தனர். அவர்கள்: சிதம்பரம், உலகநாதன், குமாரசாமி என்பார். குமாரசாமி இளமையிலேயே இயற்கை எய்தினார். சிதம்பரம் வழக்கறிஞராகிப் பேரும் புகழும் பெற்றுத் தம் இருபத் தெட்டாம் அகவையில் இயற்கை எய்தினார். அவரைப் போன்றே புகழ் வாய்ந்த வழக்கறிஞராக விளங்கி, நெடுங்காலம் வாழ்ந்தவர் உலகநாதர் ஆவர். உலகநாதர் அன்பு மனைவியார் பரமாயி அம்மையார் என்பார். அவர் திருவயிற்றில் 5-9-1872ஆம் நாள் பிறந்த குழந்தையே நம் சிதம்பரனார் ஆவர். பெரிய தந்தையார் சிதம்பரனார் இறந்த கவலையில், தாயும் தந்தையும் தத்தளித்தனர். அவர்களுக்கு ஆறுதலாக, அச் சிதம்பரனாரே இக் குழந்தை வடிவாகப் பிறந்துள்ளார்! அவர் பெயரையே இக் குழந்தைக்கும் இடுவோம் என்று கூறி இப் பெயரைச் சூட்டினார் உலக நாதர். உலகநாதரின் உள்ளார்ந்த அன்புக்கும் உயர்ந்த அறிவுக்கும் இப் பெயர் சூட்டுதல் சான்றாக விளங்கிற்று. சிதம்பரனார், வீரப்பெருமாள் அண்ணாவியார் பள்ளியில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்றார். அந்நாளில் ஒட்டப் பிடாரத்தில் ஆங்கிலம் கற்பதற்கு ஏற்ற பள்ளியில்லை. அதனால் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்தார் உலகநாதர். ஒரு மகனுக்குச் செய்த கல்வி ஏற்பாடு, ஊருக்கே பயன்படுவதாக அமைந்தது. உலகநாதர் பெருங்குணம் அது! சிதம்பரனார் பிறந்த சிறப்பும் அது. அறம் வளர்த்த நாத பிள்ளை என்பார் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். அவரிடம் கற்றுத் தெளிந்த சிதம்பரனார் தூத்துக்குடி சேவியர் உயர்பள்ளியிலும், கால்டுவெல் உயர் பள்ளியிலும் கற்றுப் பள்ளியிறுதித் தேர்வை முடித்தார். சிதம்பரனார் இளமையிலேயே அறிவு வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் சீராகப் பேணினார். அறிவு வளர்ச்சி யுடையோர் உடல் வளர்ச்சியைப் பேணுவதும், உடல் வளர்ச்சி யுடையோர் அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டுவதும் அரிதாகும். அவ் விரண்டையும் ஒருங்கே வளர்த்தல் கடமை எனக் கொண்டு போற்றினார் சிதம்பரனார். தொடக்கப்பள்ளியிலேயே அரிச்சுவடி, ஆத்தி சூடி, எண்சுவடி, உலகநீதி, கொன்றைவேந்தன், குழிப் பெருக்கல், வெற்றிவேற்கை, நீதி வெண்பா, மூதுரை முதலிய நூல்களைக் கற்றார். சுவர்மேல் நடத்தல், மரம் ஏறுதல், கல்லெறிதல், கண்பொத்தி விளையாடல், மூச்சடக்குதல், குதித்தாடல், கோலி ஆடுதல், குதிரை ஏறல், கொம்பேறி நடத்தல், திரிவிளையாட்டு, கால்மாறி ஓடுதல், திரிபந்து ஆடுதல், சடுகுடு, கிளித் தட்டு பல்லி முதலியன ஆடுதல், மல் விளையாடல், சதுரங்க விளையாட்டு, முத்துக்குறி விளையாட்டு, பன்னான்கு குழி விளையாட்டு, சீட்டு விளையாட்டு, வெடிவைத்துச் சுடுதல், அம்பு எறிதல் ஆகிய பல விளையாடல்களை விளையாடினார். இத்தகைய அறிவொடு கூடிய ஆற்றல்தான் சிதம்பரனாரை வீர சிதம்பரனார் ஆக்கியது என்பது உண்மையல்லவா! பள்ளியிறுதி வகுப்பை முடித்த பின்பு ஒட்டப்பிடாரம் வட்ட ஆட்சி அலுவலகத்தில் ஓர் எழுத்தராக அமர்ந்தார் சிதம்பரனார். அவ் வேலையில் தொடர விருப்பில்லாமல், வழக்கறிஞர் வேலைக்குப் படிக்க விரும்பித் திருச்சிக்குச் சென்றார். சட்டக் கல்வியை முடித்துக் கொண்டு மீண்டார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார் சிதம்பரனார். ஆனால், அவர் தம்மோடு இருந்து பணி செய்வது நலம் என அறிந்து ஓட்டப்பிடாரத்திற்கு அழைத்துக் கொண்டார் உலகநாதர். வழக்கறிஞர் தொழிலை அறநெறிக்கு அல்லாமல் பிற நெறிக்குப் பயன்படுத்தாத நல்லோர் சிலரே ஆவர். அவர்கள் இந்திய நாட்டுத் தந்தையார் காந்தியடிகள், அமெரிக்க நாட்டுப் பெருந்தலைவர் ஆபிரகாம் லிங்கன் என்பவர் போல விரல் விட்டு எண்ணத்தக்கவர் ஆவர். அவர்களுள் ஒருவராக விளங்கினார் சிதம்பரனார். தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்க்குத் துணிவு மிக வேண்டும். அத் துணிவால் அல்லல்களும் உண்டாகும். அவற்றையும் தாங்கிக் கொள்ளும் உரமும் வேண்டும். அவ் வெல்லாமும் அமைந்தவராகச் சிதம்பரனார் விளங்கியதால் பேரும் புகழும் பரவின. அதே அளவுக்குத் தீயவர்களால் பகையும் கேடும் பல்கின. அறத்திற்குத் தலைவணங்கத் துணிந்தவர்க்கு அச்சம் உண்டா? ஒட்டப்பிடாரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் இருந்தார். கொடுமைக்கு ஒரு வடிவம் காட்ட வேண்டுமானால் அவரையே காட்டிவிடலாம் என்னும் நிலைமையில் கொடுமையானவர். அவர் கொடுமையை எதிர்க்கத் துணிந்தவரும் உலகில் உண்டு அல்லவா! ஆதலால் அவரைக் கொன்றொழித்தனர். ‘bfh‹wt® ah®? என்பதை எவ்வளவு முயன்றும் கண்டறிய முடியவில்லை. குற்றமற்ற ஒருவர் குற்றவாளியாக்கப் பெற்றார். அவருக்காக வழக்காட எவரும் முன்வரவில்லை. எவரும் எதிர்பாராத நிலையில் சிதம்பரனார் நீதிபதிமுன் தோன்றி வழக்காடினார். பொய் வழக்கு நிற்கமாட்டாமல் ஒழிந்தது. தூக்கேற நின்றவரின் உயிர் காக்கப்பெற்றது. குற்றமற்றவர் விடுதலை செய்யப் பெற்றார் என்று குற்றம் சாட்டியவர் மகிழ்வரா? விடுதலை செய்ய வழக்காடிய சிதம்பரனார் மேல் ஒரு பொய் வழக்குப் போட்டனர். வழக்குப் போட்டவரின் பொய்யை உடைத்தெறிந்தார் சிதம்பரனார். அதற்குமேல், காவல் துறைக்குச் சிதம்பரனார் மேல் ஓர் அச்சம்! நீதிபதிகளுக்கும் ஒரு நடுக்கம்! சிதம்பரனார் வழக்கறிஞர் ஆனவுடன் திருமண ஏற்பாடும் நடைபெற்றது. திருச்செந்தூரில் சுப்பிரமணியபிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருமகளார் வள்ளியம்மை என்பார். அவரே நம் சிதம்பரனார் வாழ்க்கைத் துணை ஆனார். மனைவியர்க்கு எல்லாம் வாழ்க்கைத் துணை என்னும் பெயர் இருப்பினும் மிகச்சிலரே உண்மையாக வாழ்க்கைத் துணையாக அமைபவர். அத்தகையவருள் ஒருவராக அமைந்தார் வள்ளியம்மையார். சிதம்பரனார், குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை, மொழி வாழ்க்கை எனப் பல்வேறு வாழ்வில் ஈடுபட்டவர். ஆனால் ஒன்றில் இருந்து ஒன்று பிரித்துக் காண முடியாமல் அமைந்த பெருவாழ்க்கையுடையவர். அதனால் எவரும் அவரைத் தேடி வருவர்; எப்பொழுதும் வருவர்; நிலைத்துத் தங்குவாரும் இருந்தனர். இத்தகையவருக்கு மனைவியாக வாய்த்தவருக்கு எத்தகைய பெருநிலை வேண்டும்! தொண்டுள்ளம் வேண்டும்! அவ்வளவும் அமைந்தவராக வாய்த்தார் வள்ளியம்மை யார். என்னைப் பெற்றோர் என்னோடு பிறந்தோர் என்னை நட்டோர் யாவரும் தன்னுடை உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த செயிரிலா மனத்தள்; தெய்வமே அணையள் என்று வள்ளியம்மையாரைப் பாராட்டுகிறார் சிதம்பரனார். கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் பாராட்டி வாழ்ந்தார் வள்ளியம்மையார். அவரே தெய்வமாகக் காட்சி வழங்கினார் சிதம்பரனார்க்கு. வாழ்க்கைத் துணை என்பது இதுதானே! இன்னும் அவரைப் பற்றிச் சொல்கிறார்: எண்ணிலா நண்பரை இழுத்துக் கொண்டுயான் உண்ணச் செல்லுவேன் உரையாது முன்னர்; அறுசுவை அடிசில் அன்பொடு படைப்பாள்; சிறிதும் தாமதம் தெரிந்திலேன் ஒன்றும்; பாடுவள் இன்புறப் பாதம் வருடுவள் உடையோ நகையோ ஒன்றும் என்றும் படைஎனக் கேட்டிலள் பண்பெலாம் செய்தனள். இராமையா தேசிகர் என்பார் ஒரு துறவியார். அவர் கண்ணொளி இழந்தவர், சிதம்பரனாரை அடைந்து, அவர் துணையில் வாழ்ந்தார். இல்லத்திலே உறைந்தார். அம்மையார் அவரைத் தம் தந்தையினும் மேலாக மதித்துப் பேணினார். தேசிகர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்த உற்றார் உறவினர் பழித்தனர்; ஊரார் குறை கூறினர். அக் கருத்தை அம்மையாரிடம் உரைத்தார் சிதம்பரனார்; என்ன செய்யலாம் என ஆராய்ந்தார். அம்மையார், எல்லா உயிர்களும் கடவுளாக இருக்கின்றன. உருவம் முதலியவற்றால் எந்த வேற்றுமையும் அமைவது இல்லை. கற்பனையாகப் படைக்கப்பட்டது சாதி எனத் தாங்களே கூறியுள்ளீர்கள். போலிச் சாதி, துறவியைத் தொடர்வதும் உண்டோ? ஆதலால் பழிப்பவர் சொல்லை மதிக்காமல் ஒழிப்போம். இவர் இங்கேயே இருக்கட்டும் என்று கூறினார். தொட்டால் தீட்டு; கண்ணில் பட்டாலும் தீட்டு என்று இருந்த நாளையில் வள்ளியம்மையார் கூறிய வாய்மொழி இது. வாய்மொழிப் படியே வாழ்ந்தும் காட்டினார். அவரைத் தெய்வம் என்பதை அன்றி என்ன சொல்வது? அத் தெய்வம் 1900 இல் ஒடுங்கியது. சிதம்பரனாரை அஃது எப்படி ஒடுக்கியிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? நாட்டுக்குக் கப்பலோட்ட வந்த சிதம்பரனார் வீட்டுக் கப்பல் அலைக்கழிந்தது. பின்னர், வள்ளியம்மையார்க்கு நெருங்கிய உறவினர் - அவர் தன்மைகளே உருக்கொண்டவர் - ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் - ஆகிய மீனாட்சியம்மையார் சிதம்பரனார் மனையறத்தை மாண்புறத் தாங்கும் இரண்டாவது மனைவி ஆயினார். விடுதலை வேட்கையுடைய சிதம்பரனார் ஒருமுறை சென்னைக்குச் சென்றார். அப்பொழுது விவேகானந்தர் திருமடத்தில் இராமகிருட்டிணானந்தர் என்பவரைக் கண்டார். அவர் நாட்டுக் கைத்தொழில் வளர்ச்சிக்கும், புதிய புதிய தொழிலாக்கத்திற்கும் நீர் என்ன செய்தீர்? என்று வினாவினார். நாட்டுத் தொழில் வளர்ச்சியே நன்மையை அளிக்கும்; இதுவே எம் கொள்கை என்றும் கூறினார். அவர் எழுப்பிய வினாவும், விளக்கமும் வீரர் சிதம்பரனாரை மிக எழுப்பியது. அதனால் அவர் தம் வாழ்வையே நாட்டுப் பணிக்கு ஒப்படைத்தார். தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார் சிதம்பரனார். தரும சங்க நெசவு சாலை, சுதேசிய நாவாய்ச் சங்கம், சுதேசியப் பண்டக சாலை என்னும் மூன்று அமைப்புகளை நிறுவினார். வாணிகம் செய்வதற்காக இந்திய நாட்டுக்கு வந்து, ஆட்சியாளராக மாறிய ஆங்கிலேயர், சிதம்பரனார் ஏற்பாடுகளை விரும்புவரா? தம் அரசையும், வணிகத்தையும் ஒழிப்பதற்காகச் செய்த ஏற்பாடுகள் என எண்ணி வெதும்பினர். அவற்றை ஒழிப்பதற்காக என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தனர். அவர்களுடன் போரிட வேண்டியது ஒருபக்கம்! அடிமை வாழ்வில் பழகிப் போனவர்களும், ஆங்கிலேயர் களுக்கு அஞ்சி அஞ்சி ஒடுங்கிப் போனவர்களும் ஆகிய, இந்நாட்டு மக்களைத் தட்டி எழுப்பித் தம் வழிக்குக் கொண்டு வருவதிலே எடுத்துக் கொள்ள வேண்டிய பெரு முயற்சி ஒருபக்கம்! சிதம்பரனார்க்கு வரும் புகழைக் கண்டு பொறாமை கொண்டு மறைமுகமாகக் கேடு செய்யும் கெடுமதியாளரை இனங்கண்டு, அவர்கள் சூழ்ச்சி வழிகளை ஒடுக்கித் தாக்குப் பிடிக்க வேண்டியது ஒருபக்கம்! அமைப்புகளுக்கு வேண்டிய பங்குத் தொகையைத் திரட்டுவதற்காகவும், பங்குத் தொகை தந்தவரும் அத்தொகையைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தும் நிலைமை வந்தபோது, அவர்களைச் சரிப்படுத்துவதற்காகவும் கொண்ட அல்லல் ஒருபக்கம்! இத்தகைய தாக்குதல்களுக்கு ஈடுதந்து நிலைகுலையா மலைபோல் நிமிர்ந்து செயலாற்றினார் சிதம்பரனார். நாவாய்ச் சங்கச் செயலாளர் சிதம்பரனார். தலைவர் பாலவனத்தம் குறுநில மன்னர் பொ பாண்டித்துரைத் தேவர். செயற்குழுவினர் பதின்மூவர். சட்டத்துறை ஆய்வுரைஞர் சேலம் விசயராகவாச்சாரியார் முதலிய நால்வர். நாவாய்ச் சங்கம் முதற்கண் சாலயன் கப்பற் கழகம் என்னும் கழகத்தில் இருந்து கப்பல்களைக் குத்தகைக்கு அமர்த்தித் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் போக்குவரவு நடத்தியது. ஆங்கிலக் கப்பல் கழகமும், அரசும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால் குத்தகைக் கப்பல் தந்த கழகத்தார் அதனை மறுத்து விட்டனர். ஆங்கில அரசை எதிர்க்க ஆகுமா? என்று இடித்துப் பேசுதற்கும் பொறாமைக்காரர் முன்வந்தனர். மலையே உருண்டு வந்தாலும் மலையேன் என நிமிர்ந்து நின்றார் சிதம்பரனார். கப்பல்களை விலைக்கு வாங்கிவருவது என முடிவு செய்தார். கப்பல்களோடு இங்கு வருவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன் என்னும் துணிவுடன் பம்பாய்க்குச் சென்றார். அருமை மைந்தன் உலகநாதனுக்கு உடல்நலமில்லை; வருக என்று அன்பர்கள் தந்தி தந்து, அழைத்தனர். ஆனால் சிதம்பரனார், கடவுள் பெரியவர்! அவர் காப்பார்! என்று கூறித் தம் முயற்சியில் இறங்கினார். காலியா லாவோ என்னும் இரண்டு கப்பல்களுடன் திரும்பினார். தாயின் மணிக் கொடியோடு கடலுலா வந்தன காலியா லாவோ. களிப்பிலே உலாவந்தாரா சிதம்பரனார்? உட்பகை உண்டாகியது. ஒழிக்கத் திட்டமிட்டிருந்த அரசின் பகையும் வலுத்தது. அயலரசின் கொடுமையையும் அடக்கு முறையையும் அஞ்சாமல் கூட்டங்களில் எடுத்துரைத்தார் சிதம்பரனார். குறிப்பெடுத்தனர் அரசினரின் ஒற்றர்கள். சூரத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டுக்குச் சென்றார் சிதம்பரனார். அதில் முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த பெருவீரர் திலகருக்கு வலக்கையாக விளங்கினார். விடுதலைக் கவிஞர் பாரதியாருடனும், வீரத் துறவி சுப்பிரமணிய சிவாவுடனும் தொடர்பு கொண்டார். தடை விதிக்கப்பெற்ற விபினசந்திரபாலர் விழாவைக் கொண்டாடினார். திருநெல்வேலியில் தேசாபிமானச் சங்கம் தோற்றுவித்தார். தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது அவர்களுக்குப் பேருதவி புரிந்தார்! இவ்வளவும் ஆங்கிலேயர்க்கு இடிமேல் இடியாகத் தோன்றின. இந்திய நாட்டை விட்டு ஓட்டுவதற்குத் திட்டமிட்ட செயலைக் கண்டால் அவர்களுக்கு இடியாகத் தோன்றாதா என்ன? சிதம்பரனாரும் சிவாவும் தன்னை வந்து காணுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியாளன் விஞ்சு என்பான் ஆணை யிட்டான். சென்றவர்கள்மேல் வழக்குத் தொடரப் போவதாகச் சொல்லிச் சிறைப்படுத்தினான்! நெல்லை மாநகர் கொதித்தது! காவல் நிலையம் எரிந்தது! மாவட்ட நீதிபதி ஓடித் தப்பினார்! அரசினர் அலுவலகங்கள் தாக்கப்பெற்றன! விஞ்சு, காவற்படையை ஏவினான்! சுட்டுத்தள்ள ஆணை தந்தான். நால்வர் இறந்தனர்! பலர் காயமுற்றனர்; நகரம்வேட்டைக் காடு ஆகியது. அரச நிந்தனைக் குற்றவாளி ஆக்கப்பெற்றார் சிதம்பரனார். பின்னி என்பான் நெல்லை மாவட்ட நீதிபதி, சிதம்பரனார்க்கும் சிவாவுக்கும் தனித்தனி ஆயுள் தண்டனையும், சிவாவுக்குத் துணை நின்ற குற்றத்திற்காகச் சிதம்பரனார்க்கு மேலும் ஓர் ஆயுள் தண்டனையும் வழங்கினான். அவ்வழக்கு உயர் நீதிமன்றம் செல்ல, சிதம்பரனார்க்கு ஆறாண்டு நாடு கடத்தல் தண்டனையும், சிவாவுக்குத் துணை நின்றதற்கு நான்காண்டு நாடுகடத்தல் தண்டனையும் தந்து இரண்டு தண்டனைகளையும் ஒரே காலத்தில் அடைய வேண்டுமென்றும் முடிவாயிற்று. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதன் பயனாக ஆறாண்டுக் கடுங்காவலாக மாற்றப்பெற்றது. பாளையங்கோட்டைச் சிறையிலே வைக்கப்பெற்றார் சிதம்பரனார். கால்களில்லாத கால்சட்டை ஒன்றும்; கைகள் இல்லாத கைச்சட்டை ஒன்றும், தலைக்குல்லா என்னும் ஒன்றும் தந்தனர். அந்த மூன்றையும் அணிந்தால் எப்படி இருக்குமாம்! சிதம்பரனாரே சொல்கிறார்: மூன்றையும் அணிந்திடின் முண்டமே ஆகத் தோன்றுவது அல்லது சொரூபம் தோன்றா(து) இத்தகைய உடை! காலுக்கு இரும்பு வளையம்! உண்பதற்குச் சட்டியும் கலையமும்! பாளையங்கோட்டையில் இருந்து அன்று மாலையே கோயமுத்தூர்ச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சிதம்பரனார். சணல் நார் எடுக்கும் பொறியைச் சுற்றும் வேலை தரப்பெற்றது. அதனைச் சுற்றுதலால் கைத்தோல் உரிந்து இரத்தம் கசிந்தது. அதனைக் கண்ட சிறையதிகாரி அவ் வேலையை மாற்றினான். என்ன வேலை தந்தான்? எண்ணெய், ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப் பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட அனுப்பினன்; அவனுடை அன்புதான் என்னே என்று கூறுகிறார் சிதம்பரனார். இவ் வேலை வாங்கியவன் தரும் உணவு என்ன? பழுத்த இலையும் புழுத்த காயும் வெந் நீரில் சேர்த்து வார்க்கிறான் குழம்பென. சோற்றைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? நாட்டுக்கு உழைக்கும் நற்றவத்தை மேற்கொண்டவர்க்கு நல்லோர் உதவி எங்கும் கிட்டும்! எப்பொழுதும் கிட்டும்! சிறைச்சாலைக்குள்ளே இருந்த கைதிகளே வடையும் பாயசமும் பாலும் பழமும் வழங்கினர் என்றால், இவர் செய்யும் வேலையையும் தாமே செய்தனர் என்றால் நம்ப முடியுமா? சிவகாசி வழக்கில் தண்டனை பெற்ற ஆறுமுகம்பிள்ளை, வடுகுராமன் என்பாரும், கோவை வழக்கறிஞர் சிவக் கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களும் இலக்குமணப் பிள்ளை அவர்களும் செய்த உதவிகள் எண்ணற்றனவாகும். கோயமுத்தூர்ச் சிறையில் இரண்டரையாண்டுகள் இருந்தார். பின்னர்க் கண்ணனூர்ச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் நல்லோர் துணை சிதம்பரனார்க்குத் தட்டின்றிக் கிடைத்தே வந்தது. 1912 டிசம்பர் மாதம் விடுதலை பெற்றார் சிதம்பரனார். நாலரை ஆண்டுக் காலம் சிறையில் இருந்தார். விடுதலை பெற்ற சிதம்பரனார் திருப்பேரூர் சென்றார். ஆங்கு ஒரு வங்கியிலே பணி செய்தார். பின்னர் இவர் சென்னை மயிலாப்பூரிலும் சிந்தாதிரிப்பேட்டையிலும் குடியிருந்தார். அதற்குப் பின்னர் ஒட்டப்பிடாரத்திலும் கோயிற்பட்டியிலும் தங்கினார். அப்பொழுது அமைச்சர் சர். தி. நெ. சிவஞானம் பிள்ளையின் துணையால், நீதிபதி வாலேசுதுரை, சிதம்பரனார் மீண்டும் வழக்கறிஞர் பணி செய்யும் உரிமை ஆணை வழங்கினார். வழக்காடுதல், வண்டமிழ் ஆராய்ச்சி, சமூகச் சீர்திருத்தம், நூல் வெளியீடு ஆகியவற்றிலே தம் பொழுதை யெல்லாம் செலவிட்டார் சிதம்பரனார். துணைமாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் கோயில் பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு 1932ஆம் ஆண்டில் மாறியது. அதனால் சிதம்பரனாரும் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கேதான் இவர்தம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா அமைதியாகக் கொண்டாடப்பெற்றது. அதன் பின்னர் வழக்கு களை ஏற்று நடத்தமுடியாத அளவு தளர்வுற்றார். திருக்குறளுக்கு விருத்தியுரை எழுதுவதிலும் அதனை வெளியிடுவதிலும் பெரிதும் உழைத்தார். எத்தகைய வலிமை வாய்ந்தது என்றாலும் இரும்பு மண்ணில் கிடந்தால் துரு ஏறி வலிமையழிந்து கெடும். அவ்வாறே எத்தகைய உடல் நலமும் உள்ள வலிமையும் உடையவர் ஆயினும் சிறைச்சாலை அவர்களை உருக்குலைத்து விடும். இந்நிலையில் பல ஆண்டுகள் சிறையுள் கிடந்து அல்லல் உற்ற சிதம்பரனார் உடல்நிலை விரைந்து கெடுவதாயிற்று. படுத்துவிட்டால் பழைய நோய்களுக் கெல்லாம் கொண்டாட்டம் என்பது போல் நோய்கள் வாட்டின. ஒரு திங்களுக்கு மேல் படுத்த படுக்கையாகவே இருந்தார். மருத்துவத்தால் இனி எதுவும் செய்யமுடியாது என்னும் நிலையை அடைந்தார். நாட்டு நலமே தம் நலமாகக் கொண்ட பெருந்தகை சிதம்பரனார் நல்லோர் உள்ளம் நைய ஒரு மாமணியாய் ஓங்கிய திருமைந்தனை இந்நாடு உணர்ந்து போற்றத் தவறியதே என்று வருந்த - தம் இறுதி மூச்சை 18-11-1936 ஆம் நாள் முடித்தார். இந்நாளில் வங்கக் கடலில் வீரர் சிதம்பரனார் பெயரால் அமைந்த கப்பல் கொடி கட்டிப் பறந்து உலா வருகின்றது. தூத்துக்குடியில் கலைக்கோயில்கள் எழும்பிச் சிதம்பரனார் புகழைப் பறையறைகின்றன. நாட்டிலுள்ள சோலைகள், தொழிற் சாலைகள், ஊர்கள், தெருக்கள், பல்வேறு அமைப்புகள் வ.உ.சி.யின் திருப்பெயரை விளக்குகின்றன. இவ்வெல்லாவற்றுக்கும் மேலாக வ.உ.சி. உயிர்வடிவாக வீடுதோறும் விளங்கச் செய்வதே - கொள்கை வழி நிற்பதே - அப் பெருமகனார்க்கு அழியா நினைவுச் சின்னமாம். தாய்நாட்டுப் பற்றில் இணையற்ற சிதம்பரனார் தாய் மொழிப்பற்றும் மிக்கவர். அப் பற்றால் அரிய நூல்கள் பலவற்றை இயற்றியும், பதிப்பித்தும் வெளியிட்டார். சிறையில் இருக்கும் போது தம் வரலாற்றைச் சுயசரிதை என்னும் பெயரால் ஆசிரியப்பாவால் இயற்றினார். மெய்யறம், மெய்யறிவு என்னும் நூல்களையும் கவிதையிலேயே எழுதினார். இவையும் சிறையில் இருக்கும்போது எழுதப்பெற்றவையே யாம். பின்னர் அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், மனம்போல் வாழ்வு என்னும் நூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார். திருக்குறள் மணக்குடவர் உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, இன்னிலை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு விருத்தியுரையும் எழுதி அறத்துப்பாலை வெளியிட்டார். இந் நூல்கள் செம்மல் சிதம்பரனார்க்கு அமைந்த அழியா உடல்களாம்! சில குறிப்பான செய்திகள் சிதம்பரனார்க்கு வழங்கிய தண்டனை மிகக் கொடுமை யானது. இதனை இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சர் மார்லி கூறுகிறார். எவருக்கு? இந்திய ஆட்சிப்பொறுப்பாளர் மிண்டோவுக்கு. சிதம்பரனார்க்கு வழங்கிய தீர்ப்பை நான் ஒப்ப இயலாது. இந்தப் பிழையையும் பேதைமைச் செயலையும் உடனே நீங்கள் ஆராயவேண்டும். கொடுமை அளவுக்கு மீறினால் ஒழுங்கு நிலைக்காது. வெடிகுண்டுக்கு அது வழி காட்டும். * * * எங்கிருந்தாலும் மாணிக்கம் மாணிக்கமே தான். சிதம்பரனார் கோயமுத்தூர்ச் சிறையில் இருந்தார். அச்சிறையில் சிறைத் தண்டனை அடைந்திருந்த ஆறுமுகம் பிள்ளை என்பவரும் வடுகு இராமன் என்பவரும் சிதம்பரனார் ஆங்கு வந்திருப்பதை அறிந்து, அன்று நள்ளிரவில் அவர் அறையில் கண்டனர். அதற்கு மேல் சிதம்பரனாரே கூறுகிறார்: வந்தனர்; வணங்கினர்; வடைபழம் வழங்கினர்; உம்முடை ஆள்கள் ஒரு சிலர் ஈங்குளேம்; ............................................................................................................................... ஒவ்வோர் இரவினும் உம்மையாம் காண்பேம் விடியற் காலம் ரவைஉப்பு மாவும் மதியமும் மாலையும் ரவைநற் றோசையும் அனுப்புவோம் அருந்துமின் அறியா மல்பிறர் என்று சில சொல்லி ஏகினர் அவர்தாம் சொல்லிய வண்ணமே செய்தனர் அவரும்; அவருரைப் படியே அருந்தினேன் யானும்; இரவில் வந்தவர் இன்புறப் பேசுவர்; பண்டம் வழங்குவர் பாரதம் பாடுவர். * * * கடலிலே கப்பலைத் தள்ளியதற்காகச் செக்கைத் தள்ளும் தண்டனை தந்தார்கள் அல்லவா! அந்தச் செம்மல் சிதம்பரனார் சிறையை நீங்கி வந்தபோது, கப்பல்கழகம் தான் இல்லை அக் கப்பலையாவது வேறு யாருக்கும் விற்றனரா? அவரைத் தண்டித்த ஆங்கிலக் கப்பல் கழகத்திற்கே விற்றனர்! சொல்ல ஒண்ணாக் கொடுமை இது. சிறைக்கு வெளியே இருந்தவர் செயல் இவ்வளவு தாழ்ந்தது என்றால், உள்ளே இருந்த சிறைக் கைதிகள் உள்ளம் எவ்வளவு உயர்ந்து இருந்தது! செக்கினை என்னோடு சேர்ந்து தள்ளியோர் நாங்களே தள்ளுவோம் நமன்கள் போன்ற சூப்பிரண் டெண்டு காட்சனும் செயிலரும் வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்; போய்நிழல் இருந்து புசிமின் எள்ளும் வெல்லமும் என்றே விளம்பினர் அன்போடு. * * * சிறைச் சாலைக்குள் இருக்கும்போதும் சிதம்பரனார் சிதம்பரனாராகவே விளங்கினார். நாடு கடத்தப்படுவீர் என ஒருவன் கூறினான். உடனே சிதம்பரனார், ஆட்சியை இழந்தவர் அன்னியர் கையில் மாட்சியைப் பெற்றிட மறந்தும் நினைப்பரோ? என்றார். சிறையதிகாரி ஒருவன் சிதம்பரனார் இருந்த அறையின் முன் நின்றான். சிதம்பரனார் அலுப்பால் அமர்ந்திருந்தார். அவன், நின்றிட இங்கியான் நீவிர் இருப்பதேன் என வினாவினான். சிதம்பரனார், ஏகுதற் காய, விதிவர விலை எனப் பதில் மொழிந்தார். ஒரு முறை சிறையதிகாரியைக் கண்ட சிதம்பரனார் சிரித்தார். அவன், சிரிக்கிறாய் ஏன்? என்றான். அழச் சொல்கிறாயா? அது செயேன் என்றார் செம்மல் சிதம்பரனார். சிதம்பரனார்க்கு அவர்தம் அருமைத் திரு மனைவியார் கடிதம் விடுத்தார். அதில்சிதம்பரனார் கடிதம் எழுதியதாகச் செய்தி இருந்தது. எமக்கு அறிவிக்காமல் நீர் எப்படி உம் மனைவிக்குக் கடிதம் எழுதலாம்? என்றான் சிறை அதிகாரி. நீ நன்று சொன்னாய்! என் கடிதம் வந்ததாக என் மனைவி பெயரால் எவனும் எழுதலாமே என்றார். அதனைக் கேட்ட அதிகாரி, உன்னைத் தூக்கஇஃ தொன்றே போதும் என்றான். குலைநடுக்கம் கொண்டாரா சிதம்பரனார்? பாக்கிய வசத்தால் தூக்கநீ சட்சலை என்று பதில் மொழிந்தார். * * * சிதம்பரனார் நன்றியறிதலுக்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. கோவை அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் செய்த உதவியை நினைத்துத் தம் மைந்தருக்குச் சுப்பிரமணியம் எனப் பெயர் சூட்டியதும், வழக்கறிஞர் பணிசெய்ய ஆணையிட்டுதவிய வாலேசு என்னும் ஆங்கில நீதிபதியின் பெயரைத் தம் மைந்தர் ஒருவருக்கு வாலேசுவரன் எனச் சூட்டியதும் அவர் நன்றியறிதலுக்கு நல்ல சான்றுகள் அல்லவா! கப்பலை ஓட்டிக் கடுங்காவற்கு ஆளாகி உப்பிலாக் கூழ்உண்டு உடல் மெலிந்தோன் - ஒப்பிலாத் தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின் நன்னாமம் வாழ்த்துகவென் நா -கவிமணி. கொங்கு நாட்டுப் புலவர்கள் 1. கோவைகிழார் இராமச்சந்திரன் செட்டியார் சங்க காலத்திலே அரிசில் கிழார், ஆலத்தூர் கிழார், ஆவூர் கிழார், கோவூர் கிழார் எனப் பெயர் பெற்றுப் புவவர் பலர் விளங்கினார்கள். அவர்களைப்போல் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய புலவர் ஒருவர் கோவை கிழார் ஆவர். அரிசில் கிழார், அரிசில் என்னும் ஊரினர். அவ்வாறே ஆலத்தூர், ஆவூர், கோவூர் ஆகிய ஊரினர் மற்றைப் புலவர்கள். நம் கோவை கிழார் கோயமுத்தூர் எனப்பெறும் கோவையைச் சேர்ந்தவர் ஆவர். கிழார் என்பது உழவுத் தொழிலில் ஈடுபட்ட பெரியவர்களைக் குறிக்கும்; அப் பெயர் வணிகர்களைக் குறித்த வழக்கும் உண்டு. அம் மரபுப்படியே, உழவும் வணிகமும் ஒருங்கே பேணிய குடும்பத்தில் வந்தவர் கோவை கிழார். கோவை கிழாரின் இயற்பெயர் இராமச்சந்திரன் செட்டியார் என்பது. இராமச்சந்திரனார் தம் புலமையாலும், தொண்டாலும் கோவை ஆனார்; கோவை இராமச்சந்திரனார் ஆயிற்று. கோவைகிழாரின் அன்புரிமை அத்தகையது. கோவையில் வாழ்ந்த மருதாசலம் செட்டியார், கோனம்மாள் என்பவர்களின் தவப்புதல்வராக இராமச் சந்திரனார் தோன்றினார். அவர் தோன்றிய நன்னாள் 30-11-1888 (சர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 19ஆம் நாள்.) இராமச்சந்திரனாரின் தொடக்கக் கல்வி நகரவைத் தொடக்கப் பள்ளியிலே தொடங்கியது. ஈராண்டுகளில் முதலிரண்டாம் வகுப்புக்களில் தேர்ச்சியடைந்தவர், நேரே நான்காம் வகுப்புக்கு உயர்த்தப் பெற்றார். பள்ளியில் படித்த பொழுதுபோக மற்ற நேரங்களில் வீட்டில் தனியேயும் ஓர் ஆசிரியரிடமும் பயின்றார். ஆதலால், இளம் பருவத்திலேயே நல்லறிவு பெற்றுச் சிறந்தார். 1899ஆம் ஆண்டில் இலண்டன் மிசன் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1904இல் பள்ளி இறுதித் தேர்வில் (மெட்ரிக்குலேசன்) வெற்றி பெற்றார். இதற்கு இடையே 1903இல் கோவை வட்டாரத்தில் பிளேக் என்னும் கொள்ளைநோய் வந்து மக்களை வாட்டியது. அதனால் மருதாசலனார் தம் குடும்பத்தோடு வேற்றூருக்குச் சென்றார். பல இடங்களுக்கும் திருக்கோயிலுக்கும் சென்று இராமேசுவரம் போய்ச் சேர்ந்தார். அங்கே கிழக்கிந்தியத் தீவுகளில் வழங்கும் நாணயம் ஒன்று இராமச்சந்திரனார்க்குக் கிடைத்தது. அஃது அவர்தம் வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டது. 1906ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்பில் தேறினார். பின்னர்ச் சென்னைக்குச் சென்று மாநிலக் கல்லூரியில் சேர்ந்து (பி.ஏ) இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலையில் பயின்று கொண்டிருந்தபொழுதிலேயே திருமண ஏற்பாடு நடந்தது. அங்கண்ண செட்டியார் என்பவரின் திருமகளார் செல்லம்மாள் இராமச்சந்திரனாரின் வாழ்க்கைத் துணைவியர் ஆனார். திருமணம் முடிந்ததாயினும் மேற்கல்வி தடைபட்டுவிடவில்லை. சென்னை, சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயின்று 1912ஆம் ஆண்டில் பட்டமும் பெற்றார். அதன் பின்னர்க் கோவைக்கு வந்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். இராமச்சந்திரனார் இளமையிலேயே தமிழின்மேல் ஆர்வம் கொண்டார். திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை என்பவர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை முறையே பாடம் கேட்டார். சென்னையில் படித்த காலத்தில் இவருக்குத் தமிழ் அறிஞர் பலர் தொடர்பு வாய்த்தது. குறிப்பாகத் தமிழ்ப் பேரறிஞர் உ.வே. சாமிநாதையர் தொடர்பு உண்டாயிற்று. அத்தொடர்பு இயல்பிலே கொண்டிருந்த மொழிப்பற்றையும் ஆராய்ச்சித் திறத்தையும் மேலும் வளர்த்தது. இவர் தமது பொழுதில் பெரும் பகுதியை மொழி ஆராய்ச்சியிலேயும் வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுப்பதிலேயும் செலவிட்டார்; கவிதை இயற்றுவதிலும் திறமை பெற்றார். இராமச்சந்திரனார் மொழிப்புலமை தமிழுடன் நிற்கவில்லை. ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளையும் பயின்றார். பல்வேறு மொழி மாநாடுகளில் கலந்து கொண்டு அவ்வம் மொழியிலேயே உரையாற்றினார். இத் திறம் அரிதாக வாய்க்கப்பெறுவதே ஆகும். ஆதலால் பல்வேறு மொழிப் புலவர்களும் பாராட்டும் புகழ் பெற்றார். வழக்கறிஞர் தொழிலைப் பல ஆண்டுகள் செய்தார். ஆயினும் அத் தொழிலில் அவர் உள்ளம் பெரிதும் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் மிக ஈடுபட்டார். அவர் தொடர்பு கொள்ளாத தமிழ் மேடையோ, மாநாடோ, அமைப்போ கோவைப் பகுதியில் இல்லை என்னும் நிலைமையில் பங்கு கொண்டார். அப் பங்குதான் அவரைக் கோவைக் கிழார் ஆக்கிற்று. 1940ஆம் ஆண்டில் கோவை கிழார் அறநிலைய ஆணையர் என்னும் பதவி பெற்றார். அஃது அவர் உள்ளத்திற்கு மிக ஏற்றதாக அமைந்தது. திருக்கோயில்களையெல்லாம் காணவும், சீர்திருத் தங்கள் செய்யவும், திருக்கோயில் வரலாற்றுக் குறிப்புகளையும், கல்வெட்டுக்களையும் தொகுக்கவும் அரிய வாய்ப்பு ஆயிற்று. மலைநாடு, துளுநாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடு, நடுநாடு ஆகிய நாடுகளில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றையும் கண்டு இன்புற்றார். இவ்வகையில் 2,250 அரிய குறிப்புகளைக் கோவைகிழார் தொகுத்தார். இத்தொகுப்பு வரலாற்றுலகுக்குக் கிடைத்த அரிய செல்வமாகும். முயற்சியாளர்க்கும் தொண்டர்களுக்கும் வாழ்நாள் அளவும் ஓய்வு என்பது ஏது? அவர்கள் பிறர்க்கு உழைப்பதையே பெருந்தவமாகக் கொள்வர். அவ்வாறே நம் கோவைகிழார் அவர்களும் இளமை தொட்டே பொதுப்பணியில் ஈடுபட்டார். பின்னர் அரசியல் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் பொதுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் அல்லர். நாளும் பொழுதும் நற்பணிகளிலேயே செலவிட்டு வந்தார். அவர் செய்த பொதுப்பணிகள் பல திறத்தன. பத்தாண்டுக் காலம் நகரவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணிசெய்தார். சில ஆண்டுகள் மாவட்டக் கல்விச் சங்கத்தலைவராக விளங்கினார். கோவை வட்டக் கழகத்தின் உறுப்பினராகவும், மருத்துவ ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக மும்முறை தேர்ந்டுக்கப் பெற்றுக் கடமையாற்றினார். கோவை கிழார், தேவாங்கர் இனத்தைச் சேர்ந்தவர். அவ்வினத்தார் படிப்பில் அவ்வளவாக அந்நாளில் அக்கறை காட்டினர் அல்லர். அதனால் அறிவறிந்த கிழார் அந் நிலையை மாற்றியமைக்க விரும்பினார். சமூகக் கூட்டங்களைக் கூட்டி நல்லறிவு கூறினார். கல்வியின் இன்றியமையாமையை எடுத் துரைத்தார். முதியோர் கல்வி பெறுவதற்கும், மகளிர் கல்வி பெறுதற்கும் வாய்ப்பு உண்டாக்கினார். தேவாங்கர் உயர்நிலைப் பள்ளி என்னும் ஒரு பள்ளியைக் குலப்பெருமக்கள் துணையால் நிறுவினார். அதன் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். படிக்க முடியாத ஏழைச் சிறுவர்களுக்கு உதவியும், படித்துத் தேர்ந்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினார். இவர்தம் தொண்டால் நல்ல பயன்களை விரைவில் கண்டார். கோவையில் புலவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப் பெற்றிருந்தது. அவர் மறைவுக்குப் பின்னர், அச் சங்கம் செயலற்று நின்றது. அதனை மீண்டும் வளர்க்க முடிவு கொண்டார் கோவை கிழார். அதன் செயலாளர் ஆனார். ஆசிரியர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களிடம் பயின்ற திரு. சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தலைவர் ஆனார். இருவரும் சேர்ந்து தம் ஆசிரியர் புகழ் வளர்க்கும் சங்கத்தை நன்கு வளர்த்தனர். கோவை நகர், நற்றமிழ் வளம் சுவைக்கத்தக்க கடமைகளைத் தேர்ந்து தேர்ந்து செய்தது தமிழ்ச் சங்கம். மயிலத்திலும், தருமபுரத்திலும் தமிழ்க் கல்லூரி தொடங்கும் ஆர்வம் இருந்தது. அதனை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார் கோவைகிழார். அதன் பின்னர்த் திருப்பேரூரில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி தோற்றுவிக்க முழுமையாக ஈடுபட்டார். சாந்தலிங்கர் உயர்நிலைப் பள்ளியும் தோன்றுதற்கு ஆவன செய்தார். தம் பணியைக் கல்விப் பணியாகவே அமைத்துக் கொண்டார் அறவோர் கோவை கிழார். கல்விப் பணியே கடவுள் பணி அன்றோ! கோவைகிழாரின் ஆற்றலையும் அயரா உழைப்பையும் அறிந்த பெருமக்கள் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியின் முதல்வராக அவரே இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தினர். தம் முதுமையிலும் அன்பர் வேண்டுதலைத் தட்டாமல் அவர் ஏற்றுக்கொண்டார். அறிவுத் தொண்டு அக் கல்லூரிக்கு அவர் செய்தார். பணமும் அக் கல்லூரிக்கு வேண்டியதாக இருந்தது. ஆதலால், கல்லூரிப் பொருளாளராகவும் கோவைகிழாரே இருந்தார். தாம் பெற்ற தமிழ்ச்செல்வியாம் கல்லூரியைத் தாய்போல் இருந்து பலவகைகளாலும் பேணி வளர்த்தார். பல்வேறு கட்டடங்களை எழுப்பினார்; விடுதிகள் உண்டாக்கினார்; தம்மிடம் இருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைப் பேழையுடன் சேர்த்துக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார். கோவை கிழார் கல்லூரிப் பணியிலிருந்து தம் முதுமையால் ஓய்வு பெற்றார். ஆயினும் வாரந்தோறும் சென்று வகுப்பு எடுத்தலை விடுத்தார் அல்லர். அவர்தம் தொண்டுள்ளம் அத்தகையது! பிறவி ஆசிரியர் கடைசி மூச்சுவரை அறிவுத் தொண்டு செய்தல் தவிரார் என்பதற்குக் கோவைகிழார் தக்க சான்றாவர். கோவைகிழார் போதக ஆசிரியர் மட்டும் அல்லர். இதழாசிரியராகவும், நூலாசிரியராகவும் விளங்கினார். கொங்கு மலர் என்னும் மாத இதழின் ஆசிரியராக இருந்து நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். கொங்கு நாட்டைப்பற்றிய கலைக்களஞ்சியம் என்று அறிஞர்கள் பாராட்டுமாறு அவ்விதழ் வெளிப்பட்டது. சென்னையிலிருந்து வெளிவரும் சித்தாந்தம் என்னும் திங்களிதழின் ஆசிரியராக ஆறாண்டுகள் பணிபுரிந்தார். அரிய வரலாற்றுக் குறிப்புகளும், சமய நுண்மைகளும் அவ்விதழ்வழி வெளிப்பட்டன. நூலாசிரியர் என்னும் நிலையில் கோவை கிழாருக்குத் தனிப்பெரும் சிறப்பான இடமுண்டு. பாடல்கள், உரைநடை, நாடகம், வரலாறு, கதை எனப் பல்வேறு வகைகளில் அவர்தம் நூல்கள் வெளிப்பட்டன. நாள்தோறும் தாம் கண்ட காட்சிகளைப் பாடலாகப் புனைந்தார். நாட் குறிப்புக்களைத் தவறாமல் எழுதினார். கோவை கிழாரின் நாட்குறிப்பு மிகச் சீரியது என்று நண்பர்களாலும், அறிஞர்களாலும் பாராட்டப்பெறும் சிறப்பினதாகும். நாட்குறிப்பு எழுதுவதைக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று தம் அன்பர்களையும், நண்பர்களையும் தூண்டினார் கோவைகிழார். அவர் ஆர்வம் அத்தகையது. கோவை கிழாரின் நாள்வழிக் கடமைகள் குறித்துக் கோவைத் தமிழ்ச்சங்கம் வெளியிடும் செய்தி வருமாறு: காலையில் பொழுது விடியுமுன் எழுந்தவுடனே காலைக் கடனை முடித்துவிட்டு ஊருக்கு வெளியே சிறிது தூரம் நடந்து உலாவி வருவதுண்டு. அப்போது தூய்மையான குளிர்ந்த காற்று உடலில் தோயவே மிகவும் உற்சாகப்படுவார். இவ்விதம் உலாவி வரும்போது தம் கண்களில் படும் நற்காட்சிகளையெல்லாம் தம் நெஞ்சில் படம்போல் பிடித்துவிடுவார். திரும்பி வீடு வந்து சேர்ந்தவுடன் குளித்துவிட்டுச் சிறிதுநேரம் கடவுளைத் திருமுறைப் பாக்களால் துதித்துவிட்டுத் தமிழ்மறையை எடுத்து வைத்துக்கொண்டு முந்தின நாள் ஓதி நிறுத்தின இடத்தில் இருந்து மேல் உள்ள ஒரு பகுதியை ஓதுவார். இந்தப் பாராயணத் தொழில் சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைபெறும். இவ்வாறு பன்னிரண்டு திருமுறைகளையும் பலதடவை படித்துத் திருப்பி இருக்கிறார். பிறகு எழுதுகோல் எடுத்துக்கொண்டு தாம் காலையில் கண்டு மனத்தில் இருத்தின காட்சிகளிற் சிறந்த ஒன்றைச் சில பாக்களில் எழுதுவார். பெரும்பாலும் நாள்தோறும் நான்கைந்து பாக்கள் எழுதுவதுண்டு. இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பிறகு சிற்றுண்டி அருந்திவிட்டுத் தமது தொழிலுக்குச் செல்லுவார். பகல் வேளையில் தொழில் செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பினவுடன் சிறிது சிற்றுண்டி அருந்திவிட்டு வெளியே செல்வார். மாலை நேரங்களிலும் தவறாமல் உலாவுவதுண்டு. பெரும்பான்மையான நாள்களில் ஏதாவது ஓர் இடத்தில் பேச்சு இருக்கும். அல்லது தலைமை வகிக்க வேண்டியிருக்கும். அவை இல்லாத நாள்களில் நடத்தலையே உடற்பயிற்சியாக வைத்துக்கொண்டிருப்பார். பெரும்பாலும் இருட்டுவதற்கு முந்தியே வீடு வந்து சேர்ந்திடுவார். சிறிதுநேரம் படித்துவிட்டு உணவு அருந்திவிட்டுத் தம் நாட்குறிப்பு நூலில் அன்று எண்ணினதும் செய்ததும் ஆன குறிப்புகளை எழுதி வைப்பார். இவ்வாறு எழுதிவைத்த படிகள் முப்பது நாற்பது உண்டு. 1906ஆம் ஆண்டிலும் பிறகு 1912 முதலும் எழுதிவைத்த குறிப்பு நூல்கள் ஒரு பெரிய வரலாறாக அமையும். கோவை கிழாரின் அரும்பண்புகள் பல. அவற்றைத் தவத்திரு சாத்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியினின்று வெளிப்பட்ட நினைவு மலர் தொகுத்துக் கூறுகின்றது : இவர் எல்லோரிடத்தும் இனிமையாகப் பேசுவார். இவரிடமிருந்து யாரும் கடுஞ்சொல் கேட்டிருக்கமாட்டார்கள். தம்மால் பிறர்க்கு ஒரு துன்பம் வருவதை இவர் பொறுத்துக் கொள்ளமாட்டார். இவர் தம் கீழ் வேலை செய்த யார் மேலும் ஒரு முறையும் நடவடிக்கை எடுத்ததில்லை என்பது இவரைப்பற்றிப் பலர் புகழ்ந்து கூறும் உரைகளுள் ஒன்று. எவரையும் எளிதில் நம்பிவிடும் இயல்பினர் இவர். தமக்கு ஒரு பதவி வேண்டும் என்பதற்காக ஒரு பொருளையும் எதிர்பார்க்கமாட்டார். தம்மிடம் வருந்தி வந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார். சிறப்பாகக் கல்வியின் பொருட்டு வரும் ஏழை மாணவர்க்குப் பிறரை இரந்தும் உதவி செய்வார். தம் மக்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மாணவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார். புத்தகங்களை உயிரினும் மேலாகப் போற்றுவார். புத்தகங்கள், பத்திரிகைகள், நோட்டுகள், கடிதங்கள் எல்லாம் ஆண்டு, மாதம், நாள் வரிசைப்படி அட்டைகட்டி ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும். பல ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சி எழுதப்பட்ட இதழ்களை மிக எளிதில் கண்டுபிடித்து எடுத்துவிடலாம். அவ்வளவு முறையாக அவை அடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக எளிமை, இனிமை, கனிவு, உழைப்பு, உதவி - இவையே கோவை கிழாரின் உருவம் என்றால் அது மிகையாகாது. கோவை கிழாருக்கு மக்கள் அறுவர் உளர். மகளார் ஒருவர்; மற்றையவர் ஆடவர். அவருள் முதல் மகனார் திரு. கிருட்டிணமூர்த்தி என்பவர் சென்னை நகரில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இரண்டாவது திருமகனார் மகாதேவன் என்பார் பொறி இயலராக இருக்கின்றார். ஏனையோர் கோவையில் தொழில் துறையில் ஈடுபட்டுச் சிறப்புற வாழ்கின்றனர். அவர்தம் அருமை மனைவியார் 1965இல் இயற்கை எய்தினார். தென்னாடும் வடநாடும் ஒருங்கே சுற்றியவர் கோவை கிழார். ஈழநாட்டிற்கு ஆறுமுறை போய் வந்துள்ளார். அச் செலவு குறித்து மூன்று நூல்கள் இயற்றினார். அவற்றில் கடலின்கண் முத்து என்பது கழக வெளியீடு. தொண்டர்தம் பெருமை சொல்ல ஒண்ணாதே என்பது ஔவையார் மொழி. சீரிய தொண்டராம் கோவை கிழாரை மதிப்புமிக்க பட்டங்கள் பல தேடிவந்தன. 1930ஆம் ஆண்டில் இராவ் சாகிப் என்னும் பட்டத்தையும், 1938 ஆம் ஆண்டில் இராவ் பகதூர் என்னும் பட்டத்தையும் அரசினர் வழங்கினர். ஆங்கில நிலநூற் கழகத்தார் ‘F.R.C.S.’ என்னும் பட்டம் வழங்கினர். சென்னை மாநிலத் தமிழ்க் கழகம் செந்தமிழ்ப் புரவலர் என்னும் பட்டத்தையும், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் சித்தாந்தப் புலவர் என்னும் பட்டத்தையும், மதுரை ஆதீனம் சைவஞாயிறு என்னும் பட்டத்தையும் வழங்கின. கொங்குநாட்டு வரலாறு என்னும் இவர் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு வழங்கப்பெற்றது. இன்னும் பல்வேறு பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுச் சிறப்புற்றார் கோவை கிழார். ஆயிரம் பிறை கண்டவர் என்னும் புகழ், எண்பது வயது அடைந்தவர்க்கு உண்டு. அத்தகைய புகழைப் பெற்றார் கோவை கிழார். தம் பெருமுதுமையில் தம் மூத்த திருமகனார் இல்லத்தில் சென்னையில் வாழ்ந்தார். ஆயினும் தாம் தோற்றுவித்த சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரித் துணைத் தலைவராக விளங்கினார். இவ்வாறு பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகையாம் கோவைகிழார் 3-12-69ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் தமிழ்த் திருவுடலம் திருப்பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரித் தோப்பில் அடக்கம் செய்யப்பெற்றது. தமிழே வாழ்வாகிய கோவை கிழார் தமிழ்ச்சோலையிலே என்றும் மணம்பரப்பி வாழ்வாராக. 2. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் கவிமணி என்றால் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் என்பதைத் தமிழ் உலகில் அறியாதவர் இலர். அதுபோல் சிவக்கவிமணி என்றால் அறியாதவர் சைவ உலகில் அரியர். சிவக்கவிமணி என்பார் கோவையைச் சேர்ந்த அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆவர். சிவக்கவிமணி என்பதற்கும் சி.கே. சுப்பிரமணியனார் என்பதற்கும் பெயரிலேயே ஒரு பொருத்தம் இருக்கிறது அல்லவா! பட்டம் வழங்கியவர் திறம் அது. தொண்டை நாட்டிலிருந்து கோவையின்கண் குடியேறிய ஒரு குடும்பத்தில் தோன்றியவர் கந்தசாமி முதலியார் என்பவர். அவர் கவிஞர்; புலவர்; வழக்கறிஞராக விளங்கியவர்; பன்னூல் ஆசிரியர். அவர்தம் அருமைத் திருமனைவியார் வடிவம்மை என்பார். இவர்கள் அருந்தவப் பெரும்பயனாகக் கி.பி. 1878ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இருபதாம் நாள் தோன்றிய திருமகனார் சுப்பிரமணியனார். தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும் என்பதும், தந்தையறிவு மகன் அறிவு என்பதும் பழமொழிகள். கந்தசாமியாருடைய புலமையனைத்தும் ஓருரு எடுத்தாற்போல விளங்கினார் சுப்பிரமணியனார். சுப்பிரமணியனார் இளமையில் திண்ணைப்பள்ளியிலே சேர்க்கப் பெற்றார். தந்தையாரும் அருந்தமிழ் வளத்தை வீட்டிலே தந்தார். ஈழ நாட்டிலிருந்து கோவைக்கு வந்து கோவைக் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக விளங்கிய வைத்தியலிங்கம் பிள்ளை என்பாரிடம் தனிக்கல்வி பெறவும் ஏற்பாடு செய்தார் தந்தை. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி. இதுதானே! சுப்பிரமணியனார் பெற்றுவரும் கல்விச் சிறப்பிலும், பண்புநலத்திலும் பெருமகிழ்வு பெற்றுவந்த கந்தசாமியார், நீண்டநாள் வாழ்ந்தார் அல்லர். அவர் சுப்பிரமணியனாருக்குப் பதினோராம் அகவை நடந்தபோதே காலமானார். தந்தையார் பெரும்பிரிவுத் துயரை முழுவதும் உணரக்கூடாத இளம்பருவம்! கல்விமேல் வைத்த காதலாலும் தாயின் அரவணைப்புச் சிறப்பாலும் மேற்கல்வியிலே மனம் ஊன்றினார் சுப்பிரமணியனார். கோவைக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் அவர் கற்றார். தம் தவத்தந்தையார் கந்தசாமியாரிடம் பயின்ற புலவர் பெருமகனார் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பாரிடம் தமிழ் நூல்களைப் பாடங் கேட்டார். 1897ஆம் ஆண்டில் இடைக்கலைத் தேர்வில் (F.A.) வெற்றியடைந்தார். பின்னர்ச் சென்னை சென்று மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் (B.A.) சேர்ந்தார். அக்கால வழக்கப்படி அந்த இளம்பருவத்திலேயே சுப்பிரமணியனார்க்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்தம் அன்புத் திருமனைவியார் பெயர் மீனாட்சியம்மை என்பது. அந்த இளம்பருவத்திலே தம் திருமணப்போதில் மணமகனார் ஒரு வெண்பா இயற்றினார். கங்கைவல்லி மேவும் கனக சபாபதி நங்கைமீ னாட்சிதனை நான்மணம்செய்-துங்கமிகு நாள்விளம்பி ஆவணியின் நற்பதினொன் றார்குருவே வேள்வியொடு வேட்ட தினம். இதில் மாமனார் ஊர்ப் பெயர், மாமனார் பெயர், மணமகளார் பெயர், மணநாள், மணமுறை எல்லாம் தொகுத்துக் கூறியமை காண்க. சுப்பிரமணியனார் திருமணம் நிகழ்ந்தது சேலத்தைச் சேர்ந்த கங்கை வல்லி என்னும் ஊரிலாகும். திருமணத்தின் பின்னர் அவன் மணமகளாருடன் சென்னைக்குக் குடியேறித் தம் படிப்பைத் தொடர்ந்தார். 1899ஆம் ஆண்டு இளங்கலைத் தேர்வில் தேறினார். அத் தேர்வில் தமிழில் சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேறிப் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யும் தேர்வில் ரூ. 120 பரிசு பெற்றார். எப்படி? மொழி பெயர்ப்புக்குத் தரப்பெற்றது ஆறடிகளில் அமைந்த ஓர் ஆங்கிலச் செய்யுள். அதனைத் தமிழ் உரைநடையில் மொழிபெயர்த்தாரா? எட்டடியில் அமைந்த ஓர் ஆசிரியப் பாவாக மொழிபெயர்த்தார். தேர்வாளர் வியந்தனர். அதனால் தேடி வந்தது பரிசு! பரிசுத்தொகையை உண்டிக்கும் உடைக்கும் செலவழித் தாரோ? விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல் அப் பணத்தைக் கொண்டு தம் ஆசிரியர் திருச்சிற்றம்பலனார் இயற்றிய மாணிக்கவாசகர் என்னும் நூலை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அவ் வெளியீடு பின்னாளில் அருந்தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிடுதற்கு முன்னோடியாயிற்று. இளங்கலையில் தேர்ந்த சுப்பிரமணியனார் தொழிற்கல்வி ஒன்றைப் பெற விரும்பினார். தம் தந்தையார் செய்த தொழிலே தமக்கு நினைவில் நின்றது. ஆதலால் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1903ஆம் ஆண்டு முதல் தம் உள்ளங்கவர்ந்த உரிமை ஊராம் கோவையில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். சுப்பிரமணியனார் முதன் முதலாகக் குற்ற வழக்கு களையே எடுத்து நடத்தத் தொடங்கினார். ஆனால், அவை தம் உள்ளத்திற்குப் பொருந்தி வரவில்லை. ஆதலால் உடைமை வழக்குகளையே எடுத்துக் கொண்டார். அவ் வழக்குகளிலும் தக்கதை ஆராய்ந்து, தம் வருவாய்க்குப் போதுமான அளவுக்கே பணம் எடுத்துக்கொண்டார். வந்த வழக்குக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அல்லல்பட்டார் அல்லர். கோவை நகரில் பிளேக் என்னும் கொள்ளை நோய் முன்னே அடிக்கடி வந்தது. அக் காலத்தில் சுப்பிரமணியனார் தம் குடும்பத்துடன் திருகோயில்களுக்குச் சென்று வழிபட வெளியூர் களுக்குச் சென்றார். குறிப்பாக இராமேசுவரம் செல்லுதல் அவர்க்கு மிக உவகை தந்தது. அவர்க்கு இயல்பாக இருந்த கடவுட்பற்றை இப் பயணம் மிகுதியாக்கியது. கோயிற் பணிகள் செய்தற்கும் அவரை ஏவியது. அதனால் கோவை வட்டக் கோயிலாட்சிக் கழகத்தின் தேர்தலுக்கு நின்றார். சட்டப் படிப்புப் படிக்கும்போதே அத் தேர்தலில் வென்று உறுப்பினரானார். பின்னர்த் தொடர்ந்து உறுப்பினராகவும் செயலாளராகவும் இருபதாண்டுகள் பணி செய்தார் (1902-1921). கவிமணியோடு சிவம் சேர்தற்கு அமைந்த பணி இது. சிவக்கவிமணியின் தந்தையார் கந்தசாமியார் தம் இல்லத் திற்கு எதிரே ஒரு நிலையம் தோற்றுவித்திருந்தார். அதற்கு சைவப்பிரசங்கசாலை என்பது பெயர். வாரம் ஒரு முறை சைவசமயச் சொற்பொழிவு அவரே நடாத்தி வந்தார். புலவர் திருச்சிற்றம்பலனார் கோவைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்து வந்தார். இவ்விரண்டு அமைப்புக்களும் பின்னர்ச் செயலற்றுக் கிடந்தன. இவற்றை உயிர்ப்பிக்கச் சிவக்கவிமணி கருதினார். அவர்தம் உழுவலன்பர் கோவைகிழார் இராமச்சந்திரன் செட்டியாரும் உறுதுணையாக அமைந்தார். இருவரும் கூடித் திட்டமிட்டுத் திறமாகக் கடமை புரிந்தனர். வாரச் சொற்பொழிவு நடத்துதல், மாணவர்க்குத் தமிழ்த் தேர்வு நடத்துதல், பரிசு வழங்குதல், நூல் நிலையம் தோற்றுவித்து வளம் பெருக்குதல் ஆகிய பல்வேறு பணிகள் புரிந்தனர். ஆண்டு விழாக்களும், பெரு விழாக்களும் அவ்வப்போது நடாத்தப் பெற்றன. நாடறிந்த பெருமக்கள் பலர் கோவைக்கு வருகை புரிந்து சிவநெறியும் செந்தமிழும் பரப்பினர். சுப்பிரமணியனார் தம் இல்லத்திலே சேக்கிழார் திருக்கூட்டம் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்று நடத்தினார்; திருக்கோயில் களுக்குப் பயணம் செல்லும் திட்டங்கள் வகுத்து நடாத்தினார். திருத்தொண்டர் புராண விரிவுரை முதலான சொற்பொழிவுகளும் நடத்தப் பெற்றன. இப்பணிகளால் கோவை நகர் சிவமணம் கமழ்வதாயிற்று. தொண்டில் ஈடுபட்ட சுப்பிரமணியனார் புகழ் பரவு வதாயிற்று. இவர் நகர்மன்றச் சார்பிலே சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். தமிழ் அகராதி ஆலோசனைக் குழுவில் இருந்தும் அரிய பணிபுரிந்தார். அக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் சேக்கிழார் என்பது பற்றி மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினார். அச் சொற்பொழிவு நூல் சேக்கிழாரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு முன்னோடியாக விளங்குகின்றது. இவ்வாறே, மாணிக்கவாசகர் அல்லது நீத்தார் பெருமை என்னும் நூலும், திருத்தொண்டர் புராண விரிவுரையும் சுப்பிரமணியனாருடைய அயரா உழைப்புக்கும், ஆராய்ச்சித் திறத்திற்கும் சான்றுகளாம். சிவக்கவிமணி அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் கலையில் கைவந்தவர். எத்தனை மணிநேரம் ஆயினும் கேட்பவர் விரும்புமாறு சுவையாகப் பேச வல்லவர். இன்னிசையுடன் இடையிடையே பாடல்களைப் பாடியும் சிறந்த உவமைகளையும் மேற்கோள்களையும் எடுத்துரைத்தும் அரிய கருத்துக்களையும் எளிமையாக விளக்க வல்லவர். இலங்கைக்கு மும்முறை சென்று சிவநெறியும் செந்தமிழும் வளர்த்தார். தமிழகத்தில் மேடைகளும், மன்றங்களும், மாநாடுகளும் அவர்தம் உரைகளால் பொலிவு பெற்றன. தொண்டும், எழுத்தும், பேச்சும் ஒருங்கே அமைவது அருமை அல்லவா! இயல்பாகவே சிவக்கவிமணியின் உடல் மெலிந்த தன்மையுடையது. ஆயினும், நோன்புகள் மிகக் கொள்வார். வேலை மிகுதியிலும், இறைவழிபாட்டிலும், ஆராய்ச்சிப் பணியிலும், ஊர்த் தொண்டிலும் உள்ளத்தைப் பறிகொடுத்து உணவை மறந்து போவார். ஆதலால் என்றும் மிக மெலிவுடைய வராகவே இருந்தார். ஆனால், உடலின் மென்மை போன்று இல்லாமல் உள்ளத்திண்மை பெரிதும் உடையவராக இருந்தார். ஆதலால் எண்ணிய செயல்களை எல்லாம் எத்தகைய இடையூறு நேரினும் தளராமல் செம்மையாக முடித்துச் சிறப்புப் பெற்றார். ஓயாமல் ஒழியாமல் எழுதுவதிலும் படிப்பதிலும் ஈடுபட்டாராயினும், மிக முதுமையிலும் கண்ணாடி அணிந் தாரல்லர். அவர்தம் பார்வை மிகத் தெளிவானது. எண்ணெய் விளக்குகளையே எழுதும்போதும் படிக்கும் போதும் பயன் படுத்தினார். எழுதுவதற்கு இறகு எழுது கோலைப் பயன் படுத்தினார். இவற்றால் அவர் மிக நன்மையே பெற்றார். சிவக்கவிமணியின் சால்புகள் அனைத்துக்கும் தகுதி வாய்ந்தவராக அவர்தம் இல்லக் கிழத்தியார் அமைந்தார். தம் கணவர் கருத்தறிந்து கடமை புரிந்தார். அடியாரைப் பேணுதல், விருந்தோம்புதல், வழிபாட்டுக்குத் துணை செய்தல் ஆகியவற்றில் ஒரு குறையும் வாராமல் எவரும் பாராட்ட வாழ்ந்தார். 1916ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு அவர் மனைவியார் இறையடி சேர்ந்தார். நங்கை மீனாட்சியாரின் தங்கை ஒருவர் இருந்தார். அவர் பெயரும் மீனாட்சி என்பதே. அவர் சிவக்கவிமணியின் இரண்டாம் மனைவியானார். தம் தமக்கையாரைப் போலவே பாராட்டத்தக்க இல்லாளாக அமைந்தார். தம் கணவர் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்டு சிறப்புற்றார். இவர்கள் இருவருக்குமே மக்கட்பேறு வாய்க்கவில்லை. 1938ஆம் ஆண்டில் சிவக்கவிமணி அவர்களுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ந்தது. 1948ஆம் ஆண்டில் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா திருப்பேரூரில் நிகழ்ந்தது. அப்பொழுது, திருத்தொண்டர் புராண உரை நிறைவு விழாவும் கொண்டாடப் பெற்றது. சிவக்கவிமணி சீரிய உள்ளத் துறவு நெறி போற்றியவர். மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்துத் தலைவர் வழியாகத் துறவு நெறியைப் பெற்றார். அப்பொழுது, சம்பந்த சரணாலயத் தம்பிரான் என்னும் பெயர் சூட்டப்பெற்றார். எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார் சிவக்கவிமணி. எண்பது ஆண்டு எய்தியவரை ஆயிரம் பிறை கண்டவர் என்று பாராட்டுவர். அப் பாராட்டுரைக்குத் தகுந்தவாறு வாழ்ந்த சிவக்கவிமணி தம் முதுமையில் 1961ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்து நான்காம் நாள் சிவனடி சேர்ந்தார். அவர் திருவுடல் திருப்பேரூர் பட்டிவிநாயகர் திருக்கோயிலின் பின்புறத்தில் குகைக்கோயில் அமைத்து அதன்கண் வைக்கப்பெற்றது. சிவக்கவிமணியாரின் புகழ் என்றும் வாழ்க! சிவக்கவிமணி அவர்களின் புகழ் மாலையுள் ஒன்று ஆங்கில மதனைப் பாங்குறக் கற்றுப் பட்டமும் பெற்றான்; சட்டமும் பயின்றொன்; தக்கோர் புகழும் வக்கீல் தொழிலினன்; தெய்வச் சிவமென மெய்வகை கொண்டோன்; சிவனடி யவரே அவனெனப் பணிவோன்; பன்னிரு திருமுறைப் பாரா யணத்தான்; இன்னிசை யோடவை இசைத்திட வல்லோன்; கேட்டார் தம்மொடு கேளா தாரும் கெட்பேம் மன்எனக் கிளந்துநா வல்லோன்; என்பால் நண்புகொள் அன்பன்; சுப்பிர மணியனாம் ஒப்பில்சீ மானே 3. புலவர் முத்துசாமிக் கோனார் கொங்கு நாட்டில் திருச்செங்கோடு என்னும் பெயருடைய மலை ஒன்றுள்ளது. அம் மலைப் பெயரே மலை சார்ந்த ஊர்க்கும் பெயர் ஆயிற்று. செந்நிறமாக அமைந்த மலை செங்கோடு. அதனைச் செங்குன்று என்றும் வழங்குவர். கொடிமாடச் செங்குன்று என்று திருஞானசம்பந்தர் செங்கோட்டுத் திருக்கோயிலைப் பாடினார். கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் என்பதும், குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் என்பதும், ஞானசம்பந்தர் வாக்கு. உமை ஒரு பாகனாக விளங்கும் இறைவனுக்கே அல்லாமல் திருமுருகனுக்கும் சீர்மை வாய்ந்த இடம் செங்கோடு ஆகும். அச் செங்கோட்டு வேலர் அருணகிரியாரால் அழகொழுகப் பாடப் பெற்றுள்ளார். கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே என்பது அருணகிரியார் வாக்கு. திருச்செங்கோட்டைக் கோடை, கோடை நகர், செங்குவடு, நாகமாமலை ஆகிய பெயர்களாலும் அருணகிரியார் வழங்கியுள்ளார். கொங்கு நாட்டுக்குப் பெருமை தரும் இச் செங்கோட்டிலே, கொங்கு நாட்டு வரலாற்றை எங்கும் பரப்பிய பெரும்புலவர் முத்துசாமிக் கோனார் தோன்றினார். இவர் தோன்றியது கி.பி. 1858ஆம் ஆண்டு ஆனித் திங்கள் ஆகும். அக்கால நிலைக்கு ஏற்றவாறு இளம் பருவத்தில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து எண்ணும் எழுத்தும் திருத்தமாகக் கற்றார். கேட்டு எழுதி ஓதி வாழ்வார் என்னும் முறைமைப்படி ஆசிரியர் கூறுவதைச் செவ்வையாகக் கேட்டும், சீராக எழுதியும் பல்கால் ஓதியும் கற்றவாறே கடைப்பிடித்தும் வாழ்ந்தார். ஆதலால் ஆசிரியர் பாராட்டும் அருமை பெற்றார். தமிழ்மொழித் திறமை கைவரப் பெற்ற முத்து, தெலுங்கு வடமொழி ஆகிய மொழிகளையும் தக்கவர்கள் வழியாகப் பயின்றார். பயின்றவற்றைச் செல்வர்கள் பணத்தைப் பெட்டியில் சேர்த்து வைப்பது போலச் சிக்கென நெஞ்சில் சேர்த்து வைத்தார். நினைவு ஆற்றலில் நிகரற்று விளங்கினார். ஒரு வெண்பாவை இரு முறை கேட்டால் பிழையின்றிக் கூற வேண்டும்; ஒருமுறை எழுத்தைக் கண்ணால் பார்த்தால் அதனைப் பிழையின்றி எழுத வேண்டும்; அதுவே அறிவுக் கூர்மைக்கு அடையாளம் என்று முன்னோர் கருதினார். அக் கருத்துக்குத் தக்கவாறு முத்து விளங்கினார். எவராவது ஒரு வெண்பாவைக் கூறினால் அதனை மிக அக்கறையுடன் கேட்பார். அன்பு கூர்ந்து அதனை மீண்டும் கூறுக என்று வேண்டுவார். இரண்டாம் முறை கூறியதும் பிழையில்லாமல் திருப்பிக் கூறிவிடுவார். இத்தகைய திறமை இளமையிலேயே வாய்க்கப் பெற்றிருந்தமையால், பிற்காலத்தில் அட்டாவதானம் எனப்படும் எண்வகை நினைவுக் கலையில் தேர்ந்து விளங்கினார். புலமை நலமும் மனப்பாடத் திறமும் வாய்ந்த முத்துசாமி அங்கொன்றும் இங்கொன்றும் என்று நுனிப்புல் மேயாமல் நூல்களை முழுமையாக முறையாகத் தக்க புலவர்களிடம் பாடம் கேட்டார். திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பாரதம், இராமாயணம் முதலிய இலக்கிய நூல்களையும் ,தொல் காப்பியம், நன்னூல், அகப்பொருள், புறப்பொருள் ஆகிய இலக்கண நூல்களையும்; திருவிளையாடற் புராணம், கந்த புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், இலிங்க புராணம் முதலிய புராண நூல்களையும், சைவ சமய நூல்களையும் செவ்வையாகக் கற்றுத் தெளிந்தார். நாட்டு வரலாற்றை ஆராய்வதிலே இவர்க்குப் பெரிதும் ஈடுபாடு உண்டாயிற்று. குறிப்பாகக் கொங்கு நாட்டு வரலாற்றை ஆராய்வதில் பெரும்பொழுதைச் செலவிட்டார். வரலாற்று நூல்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றைத் தொகுத்து ஆராய்ந்தார். வரலாற்றுத் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று நேரில் கண்டும், குறிப்புக்கள் திரட்டியும் ஆராய்ந்தார். இவ் வாராய்ச்சியால் தமிழ்நாட்டு வரலாறு பல விளக்கங்களைப் பெற்றது. இவர் தாம்பெற்ற அறிவுப் பயனை நாடும் பெறுதல் வேண்டும் என நல்ல நோக்கம் கொண்டார். அதனால் சித்தூர்ப் பெருநிலக்கிழார் ஒருவர் உதவியால் ஒரு பதிப்பகம் தோற்று வித்தார். அதன் சார்பில் விவேக திவாகரன், கொங்குவேள் என்னும் செய்தித் தாள்களை வெளியிட்டுத் தாய்த் தமிழை வளர்த்தார். தாமே ஓர் அச்சகம் நிறுவினார். அதன் வழியாக அரிய நூல்கள் சிலவற்றை வெளிப்படுத்தினார். அவற்றுள் கொங்கு நாட்டு ஊர்த்தொகை, அர்த்த நாரீசுவரர் மாலை, செங்கோட்டு மாலை, சிவமலைக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுப் புராணம், திருச்செங்கோட்டுக் கலம்பகம், திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ், பாம்பலங்கார வருக்கக்கோவை முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. புலவராக விளங்கிய இவர் புலவர்களைப் போற்றுவதி லும், புலவர்களுக்கு உதவுவதிலும் பெரும்பங்குகொண்டார்; தம்மால் இயன்ற பொருளுதவி புரிந்தார். தக்க செல்வர்களிடம் புலவர்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி அவரவர்க்கு வேண்டும் உதவிகளை அவ்வப்போது செய்வித்தார். இவ்வாறு புலமைத் தொழிலுடன் வள்ளன்மையாளராகவும் விளங்கியமை இவரைப் புலவர் தோழராக்கி வைத்தது. இவர்தம் பேருள்ளம் புலவர்களுக்கு உதவுதல் என்னும் அளவுடன் நிற்கவில்லை. தமக்குத் திருச்செங்கோட்டிலிருந்த ஒரு பெரிய மனையைப் பொதுப்பணிக்கு உதவினார். அவ் வீட்டில் நூல்நிலையம் ஒன்றைத் தோற்றுவித்து நன்கொடையாக வழங்கினார். அங்கே சைவப் பேரவை ஒன்றையும் நிறுவினார். அதன் வழியாகச் சைவப் பெரும் புலவர்களாகிய சோமசுந்தர நாயகர், பூவை கலியாண சுந்தர முதலியார், காசிவாசி செந்திநாதையர் முதலியவர்களின் பேருரைகளை அவ் வட்டார மக்கள் கேட்டுப் பயன்கொள்ள வாய்ப்பு உண்டாயிற்று. யாழ்ப்பாணத்தில் கதிரை வேற்பிள்ளை என்னும் ஒரு பெரியார் இருந்தார். அவர் சிறந்த நாவலர். அட்டாவதானம் என்னும் கலையிலும் தேர்ந்தவர். ஒருவர் ஒரு வேளையில் ஒரு செயலைச் செவ்வையாகச் செய்வதே அரிது. அவ்வாறாக ஒரு வேளையில் எட்டுவகைச் செயல்களைச் செய்வது பெரிதும் அரிது அன்றோ! அதற்கு நினைவாற்றலும் திறமையும் மிகுதியாக வேண்டும். அக் கலையைக் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் இவர் கற்றுத் தேர்ச்சி பெற்றார். ஆதலால் இவர் புகழ் மேலும் பெருகுவதாயிற்று. புலமைநலம் பெற்ற இவர் இயற்றிய நூல்கள் பல. அவற்றுள் திருச்செங்கோட்டு மான்மியம், திருப்பணி மாலை, மும்மணிக் கோவை, கொங்கு மண்டல சதக உரை என்பன குறிப்பிடத்தக்கன. இயற்றமிழ்ப் புலமை அன்றி இவர்க்கு இசைத் தமிழிலும் சிறந்த புலமை உண்டு. ஆதலால் அமர்நீதி நாயனார் வரலாறு, சண்டன் வரலாறு, புரந்தரதாசர் வரலாறு, சக்குபாய் வரலாறு ஆகிய வரலாறுகளை இசைப்பாட்டில் அமைத்தார். இசையரங்கு களில் இவ் வரலாறுகளைப் பாடி இன்புறுத்தினார். இவர்தம் புலமைநலமும் தமிழ்த்தொண்டும் எங்கும் பரவின. அதனால் சேதுபதி அரசர் இவரை இராமநாதபுரத்துக்கு அழைத்துப் பெரும்பொருள் வழங்கிப் பொன்னாடையும் போர்த்தினார். திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் அம்பலவாண தேசிகர் அம் மடத்தில் இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். அக் காலப் பெரும் புலவர்களாகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் முதலியவர்களால் பாராட்டப் பெறும் பெருமை பெற்றார். இவருக்குச் சைவசமயத்தில் மிகுந்த பற்றுண்டு. முருக வழி பாட்டிலும் முதிர்ந்திருந்தார். திருச்செங்கோட்டுத் திருக்கோயிலில் சில திருப்பணிகள் செய்துள்ளார். ஒழுக்கமே விழுப்ப மேலாம் உணர்ச்சியும் இல்லாப் பொல்லாப் புழுத்தநாய் அனைய ரேனும் புண்ணியா முருகா என்று வழுத்துவோர் துயரம் ஏக வான்மறை பொழிதல் மான பழுத்தநல் வரத்தை ஊற்றும் பணிகிரி குகனை உள்வாம் என்பது இவர் திருமுருகன்மேல் பாடிய ஒரு பாட்டு. சிவநெறியும் செந்தமிழும் ஒருங்கே போற்றிய இப்புலவர்க்கு ஆண்மக்கள் அறுவரும், பெண்மகள் ஒருவரும் ஆக மக்கள் எழுவர் தோன்றினர். நிறை வாழ்நாள் எய்திய இப் பெருமகனார் தம் எண்பத்து ஆறாம் வயதில் 2-11-1944ஆம் நாள் இறைவன் திருவடி யடைந்தார். இவர் தம் அழியாப் புகழுடற் சான்றாகக் கொங்குமண்டல சதகம் முதலாகிய நூல்கள் விளங்குகின்றன. புலவர் முத்துசாமிக் கோனார் புகழ்மாலையுள் ஒரு மலர் அம்மை யப்பர் ஆயசெங் குன்றூர் தன்னில் வந்த சத்திய சற்குணன்; தென்மொழி வடமொழி திகழாந் திரமுதல் பன்மொழிக் கடலும் பருகும் படரிசை இலக்கண இலக்கியத் தெழுவரம் பிசைத்தோன்; செப்பிய ஆகமத் திப்பிய பொருளும் சைவசித் தாந்தத் தெய்வநன் னூலைக் கற்றுணர்ந் தடங்கு நற்றவப் பெரியோன்; நங்கோட் டந்தவிர் செங்கோட்டு மான்மியம் ஞானப் பேரொளி ஞான திவாகரன், விரிசடைக் கடவுள் விளக்கமுற் றிலகு வெஞ்சமாக் கூடல் மேதகு புராணம், தெள்ளிய தமிழால் செப்பிய வள்ளல்; திருவா வடுதுறைத் தேசிகன் அன்பாய் வருவாய் நோக்கு மனமகிழ் சீலன்; பூம்பழ னிப்பதி மாம்பழக் கவிஞன் பன்னாள் இருந்து சின்னாள் அறிந்து மெச்சினன் என்று விருதுசில வழங்கும் கோதுபதி யாதவன் சேதுபதி யாதவன் தம்முன் நெடுநாள் வம்மினென் றழைத்தே தள்ளரு நட்பின் சார்புறத் தழுவி உள்ளம் நெக்குருக உரோமம் சிலிர்ப்பப் பேர்பெறும் வரிசைச் சீர்தரப் பெற்றோன்; ..................................................................................... அட்டாவ தானத் தரும்புகழ் பெற்ற வித்தக ஞான விவேகமார் முத்தமிழ் முத்துச் சாமிமொய் தவனே. 4. புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை அரசர்களுக்கு அரசராக விளங்குபவரை அரசருள் ஏறு என்பர். ஏறு என்பது சிங்கம், பகையரசர்களாகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவன் என்று வீறுமிக்க அரசர்களைக் கூறுவது உண்டு. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்றார் திருவள்ளுவர். புலவர்கள் போற்றும் புலவராக, புலமைத்திறத்தின் உயரெல்லையாக, எதிர்த்து உரையாடுவாரை வெல்லும் ஏற்றமுடையவராக இருப்பவர் புலவரேறு என்று பாராட்டப் பெறுவார். அப் பேறுபெற்ற பெருமகனார் அ. வரதநஞ்சைய பிள்ளை என்னும் பெரும்பெயர்ப் பெரியார் ஆவர். கொங்குநாட்டுச் சேலத்தைச் சேர்ந்த ஊர் தோரமங்கலம். அவ்வூர்க்குப் பெருமை சேருமாறு பிறந்த பெருமகனார் வரதநஞ்சையர். இவர்தம் தந்தையார் திருப்பெயர் அப்பாசாமிப் பிள்ளை. இவர்தம் தாயார் திருப்பெயர் வரதாம்பாள். இவர்தம் உடன்பிறந்தோர் கந்தசாமிப் பிள்ளை என்பார். வரதநஞ்சையர் கி.பி. 1877ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் தமிழன்னை செய்த நல்வினையால் தோன்றினார். இவர்தம் முன்னோர் வழிவழியாக ஊர்க்கணக்கு எழுதும் உரிமைத் தொழிலினர். இவர்கள் கருணீகர் எனப் பெறுவர். அருட்பெரு வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த குடி இதுவேயாகும். வள்ளலார் ஒளிக்கூறு வரதநஞ்சையரிடத்தும் வாய்த்திருந்தமை வியப்புக்குரியதாம். ஆசிரியர்க்கு ஆசிரியராக விளங்கிய வரதநஞ்சையர் எந்த ஓர் ஆசிரியரிடமும் கற்றவர் அல்லர். இவர்தம் தந்தையார் புலமையாளர். ஆதலால் அவர் வழியே சிறிது கற்றார். அவரும் நெடுநாள் வாழ்ந்திலர். உள்ளொளியே உண்மை ஆசிரியராக அமர்ந்து உணர்த்த, ஓதாது உணர்ந்தார்! வள்ளலார் கற்ற கல்வியும் ஓதாக் கல்விதானே! பூவாமல் காய்க்கும் மரமுமுள; விதையாமலே முளைத்துப் பயன்தரும் வித்துகளும் உள. அவற்றைப்போல் ஓதாமலே உணரும் மேதையரும் உளர் என்பர். இதற்குச் சான்றாக விளங்கியவர் வரதநஞ்சையர். வழிவழியாக வாய்த்தது ஊர்க்கணக்கு எழுதும் தொழில். அதற்குத் தக்கவாறு எண்ணும் எழுத்தும் குடும்பச் செல்வமாக வாய்த்தன. குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்பது பழ மொழியல்லவா! அதன் பின்னர்த் தாமே கற்றுப் புலமையுற்றார். தம் பன்னிரண்டாம் வயதுக்குள் பன்னிரு திருமுறைகளையும், சித்தாந்த நூல்களையும், தொல்காப்பியம், திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களையும், பிற்கால இலக்கண இலக்கியங்களையும் கற்றுத் தெளிந்தார் எனின், முன்னைப்பிறவித் தனிப் பயன் அன்றோ! ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றுதானே கொள்ளவேண்டும்? இளைய வரதநஞ்சையர் தாமே பயில்வார்; பயிலுவதில் ஐயம் உண்டாயின் உறங்கப்போகுங்கால் அதனை எண்ணிக் கொண்டே கண்ணயர்வார். உறக்கம் நீங்கி எழும்போது ஐயம் நீங்கித் தெளிவுடன் எழுவார். அண்ணல் அறுமுகன் அருளிய அருளொளி அஃதென வாழ்த்துவார். அப்பருவத்திலே அறுமுகன்மீதும், அம்மைமீதும் பாடிய பாடல்கள் பல. தமிழ்ப் புலமைமிக்க வரதநஞ்சையர் வடமொழியிலும், தெலுங்கிலும் தேர்ந்து விளங்கினார். தாய்மொழிப் புலமை கண்டே வியந்து மூக்கில் விரல்வைத்து நோக்கிய புலவர்கள் இதனைக் கண்டு பெருவியப்பில் ஆழ்ந்தனர். வாங்கிவந்த வரம் என்று வாழ்த்தினர். கணக்கராகிய இவர் கணியராகவும் (சோதிடராகவும்) திகழ்ந்தார். இசைக்கலை நாடகக்கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி யுற்றார். நடக்கும் பல்கலை நூல்நிலையம் என்று பலரும் புகழும் பான்மையராக விளங்கினார். ஓதாது கற்ற இவர் கணக்கர் தொழிலுடன் ஓதும் தொழிலும் புரிந்தார். உடன்பிறந்தாராகிய கந்தசாமிப் பிள்ளைக்கு ஆசிரியராக விளங்கி அருந்தமிழ்க் கொடை புரிந்த வள்ளல் இவரே. இவர்தம் மாணவராகித் தெளிந்து கற்ற பலர் பல்வேறு உயர் பட்டங் களையும் பதவிகளையும் பெற்று ஆராய்ச்சியாளராக விளங்குகின்றனர். அறிவுத்தொண்டு புரிந்து வருகின்றனர். புலவர்களை அன்றிச் செல்வர்களும் இவரிடம் செந்தமிழ் பயில விழைந்தனர். குறுநிலக் கிழாரும், பெருநிலக் கிழாரும், வணிகரும் என வள வாழ்வு வாழ்வோர் பலர் புலமை நலம் பெற்றுப் புகழ்ப்பேறு எய்தினர். அத்தகையவருள் ஒருவர் கலைத்தந்தை கருமுத்து தியாகராசச் செட்டியார் ஆவர். நாமக்கல்லுக்கு அண்மையில் இலத்திவாடி என்பதோர் ஊர் உள்ளது. அவ்வூர்ப் பெருநிலக் கிழார் இராமசாமி ரெட்டியார் என்பார். அவர்தம் ஒரு மகனார் சின்னசாமி ரெட்டியார். அவர்க்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக வரதநஞ்சையர் அமர்ந்தார். அதன் விளைவு வரதநஞ்சையரை நாமக்கல் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் ஆக்கிற்று. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும், - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனையாளும் ஈசன் செயல் என்பதுபோல நாமக்கல் பணி வாய்த்தது. பின்னர்த் தம் ஊர்க்கணக்கர் வேலைக்கு மீண்டார். தோரமங்கலம் சலகண்டபுர ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து பல்லாண்டுகள் பணி செய்தார் புலவரேறு! ஆட்சிமுறை மாநாடுகளில் கலந்துகொண்டு சிறந்த தொண்டு செய்தார். காஞ்சிபுரத்தில் கூடிய கருணீகர் குல மாநாட்டில் பெருந் தலைவராக உவந்து தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தலைமையுரை ஆற்றினார். இனத்தவர்களின் ஒற்றுமை, முன்னேற்றம் ஆகிய கருத்துக்களைப் பசுமரத்தாணியினும் பதியும் சொல்லால் எடுத்துரைத்தார். இவ்வாறு புலமைத் துறையோடு, பொதுப் பணியும் புகழும் ஒருங்கு சேர்வதாயிற்று. புலமையும் புகழும் மட்டும் வாழ்வில் அமைதி தந்துவிடுவன அல்ல. கருத்துணர்ந்த மனைவி வாய்த்தல் மிக இன்றியமையாத தாகும். அவ் வகையில் எல்லா நலங்களும் ஒருங்கமைந்த இல்லாளைப் பெற்றிருந்தார் புலவரேறு. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்பதற்கு ஏற்பப் புலவரேறு எண்ணும் எண்ணங்களை எல்லாம் அறிந்து அவர் இன்புறும் வண்ணம் கடமை புரிந்தார். ஊரார் பாராட்டும் உயர்நலங் கனிந்த இவர்கள் இல்வாழ்வின் பயனாக மக்கள் நால்வர் பிறந்தனர். அவர்கள் அமிர்தம், இராமலிங்கம், தெய்வயானை, இலக்குமி என்பார். சிவநெறிச் செல்வராகிய புலவரேறு நாளும் இன்னிசையால் இறைவனை நாவாரப் பாடி இன்புற்றார். திருமறையும், திருமுறையும் ஓதுதலை நாட்கடனாகக் கொண்டு விளங்கினார். திருக்கோயில் வழிபாட்டிலும் பெரிதும் ஈடுபட்டார். மொழியையும் தெய்வமாகப் போற்றி வழிபட்ட பெருமை புலவரேறு அவர்களுக்கு உண்டு. அதன் விளைவே தமிழரசி குறவஞ்சியாகத் தோன்றியது. கட்டுரை என்பது திட்பமாக உரைக்கும் உரையைக் குறிக்கும். சொற்பொழிவாக அமைவதும் கட்டுரையே. எழுத்து வடிவம் பெறுவதும் கட்டுரையே. இவ்விரு வகையாலும் கட்டுரை வல்லாராகத் திகழ்ந்தார் புலவரேறு. அவர்தம் கட்டுரைகளை ஏற்ற மேடைகளும் மன்றங்களும் எண்ணற்றன. அவ்வாறே அவர்தம் கட்டுரைகளை ஏந்திய இதழ்களும் பல. ஆதலால் இவர் புகழ் மூலை முடுக்குகளிலும் பரவுவதாயிற்று. இவர் இயற்றிய தமிழரசி குறவஞ்சி கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவின்போது அரங்கேற்றப் பெற்றது. அப்பொழுது ஆசிரியர் என்னும் பட்டத்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது. இளங்காடு தமிழ் மன்றத்தினர் புலவரேறு என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர். தஞ்சை நாவலர் நாட்டார் பேரவையினர் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர். பின்னர்ச், சேலம் குகை திருவள்ளுவர் கழகச் சார்பில் பொன்னாடை போர்த்திப் பெருவிழா எடுக்கப்பெற்றது. புகழைத் தேடிப் போகாதவரைப் புகழ் தேடி வந்தடைதல் உண்மைதானே! இலக்கணக் கோவை, துருவ சரிதை, மனோவசிய மாலை என்பவை இவர் இயற்றிய நூல்கள். அவ்வப்போது பாடிய பதிகங்களும், தனிப் பாடல்களும் பல. புலவரேறு தம் எழுபத்து ஒன்பதாம் அகவையில் 11-7-1956ஆம் நாள் எதிர்பாராவகையில் திடுமென இறைவனடியில் இரண்டறக் கலந்தார். அன்பர் ஆறாத் துயருற்றனர். இனிய மனைவியாரும் செல்வர்களும் இரங்கினர். புலவர்கள் கையறு நிலை பாடிக் கரைந்துருகினர்! புலவரேறு புகழ்வடிவானார்! வாழ்க வரத நஞ்சையர்! புலவரேறு புகழ்மாலை நீர்க்காவிச் சட்டையினால் போர்த்த தேகம் நினைவெல்லாம் தமிழாக ஆன நெஞ்சம் சோர்வின்றித் தொண்டாற்றச் சுற்றுங் கால்கள் சுடர்க்கவிகள் வடிக்கின்ற பொற்க ரங்கள் கூர்ந்தெதையும் நோக்குகின்ற விழிகள்; யாரும் கும்பிட்டார் தலைவணங்கும் அடக்கப் பண்பு சார்ந்தாரைச் சாரவைக்கும் இனிமை கொண்டான் சால்புடையான் வரதநஞ்சைப் புலமை யோனே. புலவனுக்குள் புலவனாய் நின்றான் என்றும் புதுமையிலே தமிழ்வளரச் செயல்பு ரிந்தான் நலங்கொழிக்கும் தமிழ்ப்பிழம்பாய் சின்னா ளேனும் நனிமுடங்கிக் கிடக்கட்டும் பின்வி ரிப்போம் அலங்கலினால் அடுக்குகின்ற அன்புச் சேய்காள் அதிகரிக்க நும்பணிகள் என்ற ஏறு குலங்கல்விப் பெருமையிலே உயர்ந்தோன்; எங்கள் குணக்குன்றாம் வரதநஞ்சைப் புலமை யோனே. 5. பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை அவர்கள் உடன் பிறந்தவர் கந்தசாமிப் பிள்ளை என்பதை அறிவோம். அவரே பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை ஆவர். அப்பாசாமிப் பிள்ளை பெற்ற மக்கள் இருவரும் குடிக்கு விளக்கமாக விளங்கினர். வரத நஞ்சையர் பிறந்து ஒன்பது ஆண்டுகள் ஆன பின்னர்க் கந்தசாமியார் பிறந்தார். இவர் பிறந்தது 1885ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆகும். கந்தசாமியார் பிறந்த மறு ஆண்டிலே தந்தையார் இயற்கை எய்தினார். குடும்பத் தலைமகனார் வரதநஞ்சையர் தந்தையாரின் கடமையைத் தாங்கினார். அப்பொழுது அவர் தம் வயது பத்தேதான். தமையனை ஒரு தந்தை என்பர்! ஆசிரியரையும் அவ்வாறே தந்தை என்பர்! ஒரே வேளையில் இரு தந்தையர் பொறுப்பையும் தாங்கி அரவணைத்தார் வரதநஞ்சையர். இளவல் கந்தசாமி அண்ணன் இருக்க எனக்கு என்ன குறை? என்பார் போல வளர்ந்தார். மூன்றாம் வயதிலே கண்டமாலை என்னும் கொடிய நோய் உண்டாயிற்று. இறைவன் திருவருளால் நீங்கிற்று. அறியாப் பருவத்திலேயே அவ்வளவு அல்லல்கள் வாய்த்தன. எதிர்கால வாழ்வுக்கு வலுவூட்டுதற்கு வந்தன போலும்! இலத்திவாடி சின்னசாமி ரெட்டியார் வரதநஞ்சையரிடம் பாடம் கேட்டார். அப்பொழுது கந்தசாமியாரும் உடனிருந்து பாடம் பயின்றார். அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களும், சங்க இலக்கியங்களும் அக் காலத்தில் பாடமாயின. நாமக்கல்லில் இருந்து தமையனார் தம் ஊர்க்கு வந்து கணக்கர் பணி புரிந்தார். அப்பொழுது சிவஞான முனிவர் இயற்றிய நூல்களையும் உரைகளையும் வரன் முறையே பாடங் கேட்டார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுத விரும்பிய அன்பர் பலர் புலவரேறு அவர்களிடம் பாடம் கேட்க வந்தனர். அவர்களுடன் சேர்ந்து கந்தசாமியாரும் பாடம் கேட்டார். யாப்பிலக்கணம் பயிலும் போதே பாட்டியற்றும் திறம் பெற்றார். அப்பொழுது தமக்கு ஆசிரியராகத் திகழும் தமையனார் மேல், பழுத்த செந்தமிழ்ச் சுவையுணர் சிவபிரான் பதத்தில் அழுத்து சிந்தையை உய்திஅஞ் செழுத்தின்என் றருளிப் புழுத்த நாயினும் கடையனாம் எனைப்புகுந் தாண்ட தழைத்த சீர்வரத நஞ்சைய அடிகள்எம் சரணே எனப் பாடினார். தொட்டுக் காட்டிய வித்தை துலங்கும் போது மகிழாதவர் எவர்! அன்புத் தம்பிக்கு அண்ணனார் ஆசிரிய நிலையில் கற்பித்தார். இனிய தம்பி எம் குரு இவரே எனக் கொண்டு கற்றார். பண்டித நுழைவுத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளிலும் முதலாமவராகத் தேர்ந்தார். பொற்பதக்கமும் தங்கத் தோடாவும் பரிசாகப் பெற்றார். இப்படி மூன்று தேர்வுகளிலும் ஒருங்கே முதன்மை பெறுதல் அரும்புலமை யாளர்க்கே அமைவதாம்! தம்பியார் பெற்ற பேற்றைத் தாம் பெற்றதாகக் களிப்புற்றார் தமையனார்! அவர் தந்த அருட்கொடையின் பயனல்லவா அது! பண்டிதப் பட்டம் பணியையும் தேடித் தந்தது. 1907ஆம் ஆண்டில் காட்டுப் புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் ஆனார் கந்தசாமியார். தமிழ்ச் சங்கத் தேர்வில் தனி முதன்மை பெற்றவர் அல்லரோ இவர்? அதனால் சங்கத் தொடர்பு பெரிதும் இவர்க்கு உண்டாயிற்று. சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு டாக்டர் உ.வே. சாமிநாதையர் தலைமையில் மழவர் என்னும் தலைப்பில் ஓர் ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். அது செந்தமிழ் இதழில் கட்டுரையாகவும் வெளிவந்தது. 1915ஆம் ஆண்டில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அழைப்பின்படி கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சங்க இலக்கியம் என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். அவ் விழாவில் தலைமை ஏற்றிருந்தவர் தி.அ. இராலிங்கம் செட்டியார் ஆவர். அவர் கந்தசாமியாரின் புலமை ஆற்றலை வியந்து கோவைக் கல்லூரிப் பணி செய்ய வருமாறு அழைத்தார். அவ்வண்ணம் கந்தசாமியார் கல்லூரிப் பேராசியர் ஆனார். கோவைக் கல்லூரி 1919இல் அரசினர் கல்லூரி ஆயிற்று. அங்கே அவர் பணிபுரிந்தார். பின்னர்க் கும்பகோணத்திற்கு மாறுதல் ஆயிற்று. மீண்டும் கோவைக்கு வந்து பணிபுரிந்தார். கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்ப் பேரூரில் தங்கி பலருக்குப் பாடம் சொல்லி வந்தார். 1953ஆம் ஆண்டில் பேரூரில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி தோன்றியது. அக் கல்லூரிப் பேராசிரியரானார் கந்தசாமியார். அவ்பொழுது தருமபுர ஆதீனத் தலைவரின் அழைப்பு வந்தது. அதன்படி தருமபுரம் சென்று தங்கினார். தேவாரத்தில் மூன்றாம் திருமுறைக்கு அங்கிருந்து உரை எழுதினார். ஆதீன வெளியீடாக அவ் வுரை வெளிவந்தது. மேலும் அங்கே இருக்க விரும்பாமல், பேரூர்க்கு வந்து பேராசிரியப் பணியை மேற்கொண்டார். இவ் வேளையில் தம் அருமைத் தமையனார் இயற்கை எய்தினார். அது கண்டு இவர் ஆறாத் துயரில் ஆழ்ந்தார். ஐம்பெருந் தந்தையாய் அமைந்து எனக்கு அருளிய அண்ணாவே! என அரற்றினார். புலவன் புலம்பல் மற்றவர் புலம்பல்போல் அழிவது இல்லை! கந்தசாமியார் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பல. அவற்றுள் ஒன்று : தந்தைபுரி அறம்பாவம் தனில்அறம் தனதுருவாய்த் தரநீ வந்தாய் முந்துபுரி பவமனைத்தும் திரண்டடியேன் ஓருருவாய் முளைத்திட் டேனால் வந்தமுறைப் படியேநீ புகழ்பூணப் பழியடுத்தே வயங்கு கின்றேன் ஐந்துபெருங் குரவருமாய் அடியேனை ஆளவந்த அண்ணா அண்ணா! 1958ஆம் ஆண்டில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிப் பணியிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். பின்னர்ப் புலவர் குழு உறுப்பினராக விளங்கினார். முயற்சியாளர்க்கு ஓய்வு என்பது ஏது? எப்பொழுதும் அவர்கள் பணி செய்து கொண்டிருக்கவே விரும்புவர். ஆதலால் ஓய்வு பெற்ற பின்னரும் கோவைத் தமிழ்ச்சங்கத்தில் விநாயக புராணம் பாடம் சொல்லிவந்தார். பேரூர்ப் புராணத்திற்கு உரை எழுதும் முயற்சியும் மேற்கொண்டார். தம் வாழ்நாள் அளவும் சாந்தலிங்கர் திருமடத்து ஆதீனப் புலவராக விளங்கினார். சிவவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கந்த சாமியார். பொழுது போவதே தெரியாமல் அதில் ஊன்றிவிடுவார். இந் நிலையில் கல்லூரிக்குக் காலங் கடந்து செல்லும் நிலைமை கூட பலமுறை உண்டாகியது. ஒருமுறை அவ்வாறு நிகழ இரண்டு ரூபாய் பிடித்துக்கொண்டு சம்பளம் வழங்கக் கல்லூரி முதல்வர் கட்டளையிட்டார். அப்பொழுது கல்லூரி முதல்வராயிருந்தவர் இராமகிருட்டிணன் என்பவர். அவரை நோக்கி இவர், மலைகொடுக்கும் புயமுடையாய்! இராமகிருட்டிண பூபால! மகிழ்ந்திந் நாட்டார் தலைகொடுத்தும் தமிழ்ப்புலவர் தமைப்புரந்தார் நின்கலா சாலை தன்னில் கலைகொடுக்கும் தொழில்நிற்பேன் சம்பளத்தில் இருரூபாய் பிடித்துக் கொண்டு விலைகொடுத்தல் கூலிதரல் எனக்கொடுத்தல் நியாயமதோ மேதக் கோனே எனப் பாடினார். பிடித்த பணத்தைத் திருப்பித் தந்தார் முதல்வர். எழுதிய பாட்டுக்கு உடனே பயன் வாய்த்ததற்கு மகிழ்ந்தார் புலவர். கந்தசாமியார்க்கு இடையிடையே வறுமை; சொல்ல முடியாத் துயர் தந்ததுண்டு. அதனை மாற்றுவதற்காகச் செல்வர் களையும், மடத்துத் தலைவர்களையும் காண்பதற்குக் காத்துக் கிடந்ததும், காணமுடியாமலும், கண்டும் பயன் பெறாமலும் திரும்பியதும் உண்டு. அந் நிலையில் ஒருநாள் ஒரு வெண்பா வெளிப்பட்டது. எண்ணெய்இருக் காது; அரிசி ஏதும்இருக் காது; உறியில் வெண்ணெய்இருக் காதே; என் வீட்டிலே - உண்ண இலையும்இருக் காதே; போய் என்செய்வேன்? பேரூர்த் தலைவனே பட்டீச னே! இப் பாட்டு இவர்தம் வறுமைக் கொடுமையையும் மனம் பட்ட பாட்டையும் நன்கு வெளிப்படுத்துகிறது அல்லவா! கந்தசாமியார் உரிய பருவத்தில் இல்லறம் மேற்கொண்டார். இவர்தம் இல்லக்கிழத்தியார் பொன்னம்மாள் என்பார். அவருக்கு இவரே ஆசிரியராக இருந்து தமிழ் பயிற்று வித்துப் புலவராக்கினார். அறிவாளர் குடும்பம் கலைப் பயிற்சிக் கழகம் என்பதைக் கந்தசாமியார் நிறுவினார். இலக்கண நிறைகடலாகவும் பேராசிரியராகவும் பெரும் புலவராகவும் விளங்கிய கந்தசாமியார் 15-11-1969இல் இறைவனடி சேர்ந்தார். கூட்டிலிருந்து பறவை வேறோர் இடத்திற்குக் குடிபோவது போன்றதுதானே வாழ்வு! ஆனால், புகழ் நிலைப்பது ஆயிற்றே! கந்தசாமியார் புகழ் வாழ்வதாக! 6. கவியரசு கு. நடேச கவுண்டர் எந்த மொழி ஆனாலும், அஃது அந்த மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் பொதுச் சொத்து ஆகும். அம் மொழியின் வாழ்வும் தாழ்வும், அதனைப் பேசும் மக்கள் அனைவர் கையிலேயும் உள்ளன. ஆதலால், அதனை வளர்க்கும் பொறுப்பு அம் மொழி பேசும் அனைவருக்கும் உண்டு என்பது வெளிப்படை. இக் கருத்து, புதுமையானது அன்று. சங்க காலந் தொட்டே கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையாகும். கோவூர்கிழார் முதலிய கிழார்ப் பெயர் பெற்ற புலவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள். சீத்தலைச் சாத்தனார் கூல (தானிய) வாணிகத்திலும், இளவேட்டனார் அறுவை (துணி) வாணிகத்திலும், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் பொன் வாணிகத்திலும் ஈடுபட்டவர்கள். மதுரைக் கணக்காயனார், மதுரை இளம்பாலாசிரியர் சேந்தங்கூத்தனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலத்தனார் முதலியவர்கள் ஆசிரியப் பணி புரிந்தவர்கள். உறையூர் மருத்துவன் தாமோதரனார், வெண்ணிக் குயத்தியார், தண்கால்பூண் கொல்லனார், மதுரைப் பெருங் கொல்லனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோர் முறையே மருத்துவம், குயவேலை, பொன்வேலை, கொல்லுவேலை, சோதிடம் (கணியம்) ஆகிய தொழில்களில் ஈடுபட்டவர்கள். இவ்வாறே வேறு பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் சங்கப் புலவர்கள்; தமிழ் வளர்த்த சான்றோர்கள்; மொழியை வளர்த்தல் அனைவர்க்கும் கடமை என்பதை உணர்ந்தவர்கள். இந் நிலை இந்நாள் வரை தொடர்ந்து வருதல் உண்மையாம். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து பின்னே புலவராக விளங்கியவர். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் முதலில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்து பின்பு புலமைநலங் கனிந்தவர். கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை முதலாய பெருமக்கள் பலர் வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழ்த் தேர்ச்சி பெற்றவர்கள். அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் பொறியியல் அறிஞராக இருந்து மொழித் தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சையபிள்ளை ஊர்க்கணக் கராக இருந்து பின்பு, ஒண்டமிழ் தேர்ந்தவர். இவ்வாறு பிற பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தும் அன்னைத் தமிழுக்கு அருந் தொண்டாற்றிய பெரும்புலவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கவியரசு கு. நடேசகவுண்டர் ஆவர். ஆலைவளங் கொழிக்கும் கோவைப் பகுதியைத் தமிழ்ச் சோலையாக்கிய பெருமக்கள் சிலர். அவருள் ஒருவர் நம் கவியரசு அவர்கள். நடேசனார் கொங்கு வேளாண்குடியில் பிறந்தவர். அவர் தம் திருத்தந்தையார் குமாரசாமிக் கவுண்டர். திருத் தாயார் அங்கம்மாள். இவர்தம் பிறந்தநாள் 2-4-1901. செந்தமிழும் சைவமும் சிறக்கத் தோன்றிய செல்வனார் பிறந்தது பங்குனி உத்திர நன்னாள் ஆகலின் நடேசன் எனப் பெற்றோர் பெயர் சூட்டினர். ஆனால், செல்லப்பன் என்னும் செல்லப் பெயரும் இட்டு அழைத்தனர். அவர்கள் குலதெய்வம் செல்லாண்டியம்மன் என்பதாம். குடி சிறக்கத் தோன்றி முழு முதல்வன் அன்பில் ஒன்றிய நடேசனார்க்கு இப் பெயர்கள் இரண்டும் இயற் பொருத்தம் உடையவையாம். செல்லப்பனார் பள்ளிக்குச் சென்றார். ஏழாம் வகுப்பு வரை கற்றார். அக்காலையில் அவர்தம் அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். தந்தையோடு கல்வி போம் என்னும் பொது நெறிப்படி, பள்ளிப் படிப்புக்குப் புள்ளி வைக்கப் பெற்றது. கணவரை இழந்த அங்கம்மையார் ஆற்றவொண்ணாத் துயருடன் குடும்பத் தலைவர் கடமையையும் தாமே தாங்கினார். அந் நிலையில் அவர்தம் உடன் பிறந்தார் வெள்ளியங்கிரிக் கவுண்டர் உரிமை அன்புடன் உதவ முன் வந்தார். வெள்ளியங்கிரிக் கவுண்டர் தையற்கடை ஒன்று வைத்திருந்தார். அவர் தேவார திருப்புகழ்ப் பாடல்களில் ஈடுபாடு உடையவர்; அவற்றுள் பலவற்றை மனப்பாடம் செய்து கொண்டவர். துணி தைத்துக் கொண்டிருக்கும்போது பொறி ஓடும்; காலும் கையும் ஆடும்; வாயோ தேவார திருப்புகழ்ப் பாடல்களைப் பாடும்! அவர் இயல்புக்கு ஏற்ற நண்பர்கள் அங்கே வந்து கூடுவர்; பாடுவர்; தையல் நிலையம் ஆராய்ச்சி நிலையமாக மாறும்! இத் தையற்கடைப் பணியாள் ஆனார் இளைஞர் நடேசனார். எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும், முத்தர் மனமிருக்கும் மோனத்தே என்பர் பெரியோர். அது போல், பொத்தான் துளைபோட்டாலும், பொறியேறி மிதித்தாலும் நடேசனார் நினைவு தேவார திருப்புகழ்ப் பாடல்களிலேயே தோய்ந்து நின்றது. திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடல் ஒன்று மாய வாடை எனத் தொடங்குகிறது. அப் பாடலில், சீய மாயுரு வங்கொடு வந்தசு ரேசன் மார்பைஇ டந்துப சுங்குடர் சேர வாரிய ணிந்தநெ டும்புயல் - மருகோனே என ஓர் அடி வருகின்றது. அவ்வடியின் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் கவுண்டரும் அவர் நண்பர்களும் இறங்கினர். சொற்களை இப்படியும் அப்படியும் பிரித்துக் கிளித் தட்டு விளையாடுவதுபோல விளையாடினர். ஒருவர்க்கு ஒருவர் மாறுபட்ட பொருள்களும் உரைத்தனர். அந்நிலையில் இளைய நடேசனார் எளிமையாக உரை கூறினார். செம்மையாகப் பிரித்துக் காட்டினார். எப்படி? சீயமாய் உருவங்கொ(ண்)டு வந்து அசுரேசன் மார்பை இடந்து பசுங்குடர் சேரவாரி அணிந்த நெடும்புயல் மருகோனே என்று சொற்களைப் பிரித்தார். பின்னர் இதில் அமைந்துள்ள கதையைக் கூறினார். பிரகலாதனுக்காகத் திருமால் நரசிங்க வடிவங் கொண்டு வந்து இரணியன் மார்பைப் பிளந்த கதை இதில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய திருமாலின் மருமகனே என்று முருகன் குறிக்கப் பெறுகிறான் என்று கூறினார். நரசிங்கமாக வடிவங்கொண்டு வந்து அசுரர் தலைவனாகிய இரணியனது மார்பைப் பிளந்து அவன் பச்சை ரத்தத்தையும் குடலையும் மொத்தமாக அள்ளி மார்பில் பூசிக் கொண்ட நெடிய கருமேகம் போன்ற திருமாலின் மருமகனே என்பது இதன் பொருள் என விளக்கினார். இதனைக் கேட்டவர்கள் நன்று! நன்று! மிகப் பொருத்தமாக உள்ளது எனப் பாராட்டினர். இளம் பருவத்திலே முதிய அறிவு பெற்றிருந்த நடேசனார் தையல் தொழிலைக் கருத்தோடு செய்திருப்பாரா? அவரைப் பணியாளாக வைத்திருந்த மாமனார்க்கு மகிழ்வாக இருந்திருக்கு மா? வேலையில் அக்கறை இல்லாத நடேசனாரை நினைத்து வருந்தினார். தொழிலைக் கெடுத்துக் கொள்ள யார்தாம் விரும்புவர்? அதனால் இடித்துக் கூறினார்; பழித்தும் கூறினார். அக் கடை வாடிக்கையாளர்களுள் வையாபுரிப் பிள்ளை என்பவரும் ஒருவர். அவர் தமிழறிஞர். அவரிடம், சிறுவன் தான் செய்தொழிலில் அக்கறை இல்லாமல் இருக்கிறான். தமிழ் படிப்பதில் ஆர்வத்தோடு இருக்கிறான். இவனை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்? என்று வருந்தினார். திருப்புகழ்ப் பாட்டுக்கு உரை சொல்லியதையும் உரைத்தார். வையாபுரிப் பிள்ளைக்குச் சிறுவன் நடேசன்மேல் அன்பு உண்டாயிற்று. அவன் அறிவை வியந்தார். முழுப்பாட்டுக்கும் உரைகூறக் கேட்டார். நடேசன் அப் பாடற்கு உரை கூறியதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். இவனை என்னோடு அழைத்துச் சென்று தமிழ் கற்பிக்கிறேன்; அதில் புகழ் பெறுவான் என்று கூறி மாமனார் இசைவுடன் அழைத்துச் சென்றார். வையாபுரியாரின் மாணவரானார் நடேசனார். நடேசனார் குடும்பத்திற்கு ஏதாவது வருவாய் வேண்டுமே! தந்தை இல்லாத குடும்பம் ஆயிற்றே? ஆதலால் வையாபுரியார் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தராகப் பணி செய்யும் வாய்ப்பை, நடேசனார்க்கு ஏற்படுத்தித் தந்தார். ஆங்குப் பணி செய்துகொண்டு வையாபுரியாரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு நடேசனார்க்குக் கிடைத்தது; கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் அமைந்தது வையாபுரியார் செயல்! செய்யத்தக்கது இன்னது என்று அறியாமல் அலையும் என்னை, பையா விருப்பத்துடன் தமிழ்படி என்று கற்பித்த ஐயா, சிவனடியை முடியில் சூடிய அன்புடையீர், வையாபுரி என்னும் பெயருடைய வள்ளலே, உம்மை என்றும் மறவேன் என்னும் பொருள் அமைய ஒரு பாட்டுப் பாடினார் நடேசனார். வள்ளலை வாழ்த்துதல் புலவர் கடமைதானே! கல்விச் செல்வம் வழங்கிய வள்ளல் வையாபுரியார் அல்லரோ! துய்யாபுரி வதுதேர்கில னாகிச்சுழல் வேனைப் ‘igah!புரி வொடுபைந்தமிழ் பயில்கென்றினி துய்த்த Iah!புரி சடையானடி முடிசூடிய அன்பா! itahòÇ tŸshš!உனை மறவேன் மறவேனே என்பது அப் பாட்டு. வையாபுரியாரிடம் தொடங்கிய தமிழ்க் கல்வி வளர்பிறையென வளர்ந்தது. அது அப் பகுதியில் பெரும் புலவராக விளங்கியவர்களையெல்லாம் அணுகிக் கற்க ஏவியது. புலவரேறு அ. வரத நஞ்சையபிள்ளை, அவர்தம் உடன் பிறந்தார் இலக்கணக் கடல் அ. கந்தசாமிப் பிள்ளை ஆகியோரிடம் பாடம் கேட்டார்; ஐயம் அகற்றிக் கொண்டார். கௌமாரமடம் அருட்டிரு கந்தசாமி அடிகளிடம் முறையாகப் பயின்று மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வு எழுதி முதன்மையாகத் தேறினார். வேட்டைக்காரன் புதூரில் தவத்திரு அழுக்குச் சுவாமிகள் என்பார் ஒருவர் இருந்தார். அவர் நடேசனார்க்கு இளமை தொட்டே உழுவலன்போடு உதவியவர் ஆவர். திருமுறை ஓதி அதனை ஓதச் செய்தவர் அவ்வழுக்குச் சுவாமிகளே ஆவர். ஆதலால், நடேசனாரின் சைவத் தொண்டுக்கு வித்து இட்டவர் அழுக்குச் சுவாமிகளே என்பது உண்மையாம். இதனால், நடேசனார் இயற்றிய ஆன்மார்ப்பணத்துதி என்னும் நூலில் அழுக்குச் சுவாமிகளை உள்ளார்ந்த அன்புடன் பாடிப் புகழ்கின்றார் : இழுக்கு நெறியில் புகுதாமல் என்னைச் சிறுகா லையிலாண்டின் பொழுக்கு நெறிய தமிழ்ப்புலமை உறுக என்றே வாழ்த்தியெனை முழுக்க ஆண்ட பெருங்கருணை மூர்த்தி வேட்கைக் காரனகர் அழுக்குச் சாமி திருவடிக்கிவ் அலங்கல் அணியா யுறுமாதோ! என்பது அப் பாட்டு. இனிச் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் தொடர்பும், அத் தொடர்பால் பழனி சாதுமா முனிவர் தொடர்பும் நடேசனார்க்கு வாய்த்தன. அம் முனிவரால் சைவசித்தாந்தப் பயிற்சி பெற்றுச் சிறப்புற்றார். திருப்பேரூர் சாந்தலிங்கர் திருமடத்துத் தொடர்பும் இவர்தம் ஆழ்ந்த புலமைக்கு ஆக்கமளித்தது. ஒருமுறை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் . ciuah‰¿னார்.அப்பொழுJ ஆதிசங்கரர் அருளிய ஒரு பாடலை உருக்கமுடன் பாடி உரை கூறினார். அப் பாட்டும் உரையும் நடேசனாரைக் கவர்ந்தன. அதனால், வடமொழி கற்கும் ஆர்வம் மிகக் கொண்டார். அதனால், பெரும்புலவர் அனந்த நாராயண சாத்திரி அவர்களிடம் வடமொழி நூல்களைப் பயின்றார். அப் பயிற்சியால் வடமொழி நூல்கள் பல தமிழாக்கம் பெற்றன. நடேசனார் வாழ்வு தமிழ்வாழ் வாயிற்று. இளமையிற் பெரும்பாலும் தமிழ்க் கல்வியிலே ஈடுபட்ட அவர் 25 ஆண்டுகள் கோவை நகராண்மைக் கழகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிசெய்தார். ஈராண்டுக் காலம் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் ஓய்ந்தார் அல்லர். பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் சில ஆண்டுகள் பணிசெய்தார். இவரிடம் தனியாகக் கற்றுச் சிறப்புற்று மேனிலையுற்றோரும் மிகப் பலராவர். பெரும்புலவர் நடேசனாரின் புலமைத் திறத்தைப் புலமையாளர் பலர் அறிந்து பாராட்டிச் சிறப்பித்தனர். மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்துத் தலைவர் செந்தமிழ்க்கவிமணி என்னும் பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தார். கோவை மெய் கண்டார் கழகத்தார் கவியரசு என்னும் பட்டம் தந்து பெருமைப் படுத்தினர். தொண்டை மண்டல ஆதீனத் தலைவர், சித்தாந்தச் செல்வர் என்னும் பட்டம் வழங்கி மகிழ்வித்தார். பேரூர் ஆதீனத் தலைவர் திருமுறைச் செல்வர் என்னும் பட்டம் அளித்து இன்புறுத்தினார். இவ்வாறு முதுபெரும் புலவர் நடேசனார் பலர் பாராட்டுக்கும் உரியவராக விளங்கினார். செந்தமிழ்ச் செல்வராகிய நடேசனார் உரிய பருவத்தில் இல்லற வாழ்வு மேற்கொண்டார். இவர்தம் இனிய மனைவியார் இலக்குமி அம்மையார் என்பார். கணவர் கருத்தறிந்து கடமை ஆற்றுதலில் மிகத் தேர்ந்தவர். இல்லவள் மாண்பானால் இல்லாதது என்ன? எல்லா வகை நலங்களும் அமைந்து எடுத்துக்காட்டான வாழ்வாக வாழ்ந்தனர். இவர்தம் இனிய வாழ்வின் பயனாகப் புதல்வர் இருவரும், புதல்வியர் நால்வரும் ஆக மக்கள் அறுவர் உளராயினர். அவர்கள் கல்வி அறிவு பண்பு ஆகியவற்றால் மேம்பட்டு விளங்குகின்றனர். கவியரசர் சைவ நெறியில் அழுத்தமான பற்றுடையவர். நாள் தவறாமல் திருமுறை ஓதுதலை வழக்கமாகக் கொண்டவர். இறைவனையும் இறைவனடியாரையும் பாடுதலை அன்றிப் பிறரைப் பாடுதல் இல்லாத உறுதிப்பாட்டில் இறுதிவரை நின்றவர். இவர்தம் நண்பர் ஒருவர் தம் மகளார் புலமைத் தேர்வில் முதிர்ந்தமையை வாழ்த்தி ஒரு பாடல் பாடித் தரவேண்டும் என வேண்டினார். அப்பொழுது, காந்தியார் தமக்கும் கையறு நிலைப்பாக் கழறிட மறுத்தது என் உள்ளம்; மாந்தரில் பிறரைக் கவிசொலிப் புகழ மனமறுக்கின்றது; என் செய்வேன் எனக் கூறியனுப்பினார். இஃது இவர்தம் கடைப்பிடியைக் காட்டும். சாந்துணையும் கற்க வேண்டும் என்பதனைக் கடைப் பிடியாகக் கொண்டவர் கவியரசர். ஒருமுறை காசிக்குச் சென்றிருந்த தவத்திரு இராமசாமி அடிகளார், சிவமகா புராணம் என்னும் வடமொழி நூலை வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அதனைக் கண்டு பேருவகை கொண்டார் கவியரசு. பிறவிப் பேற்றை யடைந்ததாக மகிழ்ந்தார். வடமொழி கற்ற பயனை முற்றும் அடைந்ததாக உவந்தார். அதனை வழங்கிய இராமசாமி அடிகளை, இவ்வேடு கொண்டு வந்த கொடைக்குக் கைம்மாறு உண்டோ? என்று பாராட்டினார். நடேசனாரின் நன்றி பாராட்டும் நெஞ்சம் மூன்று பாடலாக வெளிப்பட்டது. பிறவா வரம் வேண்டும் என்று வேண்டுபவர் கவியரசு. ஒருகால் இறைவன் திருவுள்ளம் பிறவி அருளுவதாயின் கடக்க முடியுமோ? அதனால், இறைவனைப் பன்னிப் பன்னி வேண்டினார் : இறைவனே, எனக்குப் பிறவி அருளுவதாக இருந்தால் தமிழ்நாட்டிலே பிறக்கச் செய்! என் அடியராக இருப்பார் குடியிலே பிறக்கச் செய்! சித்தாந்த நெறியைக் கடைப்பிடிக்கச் செய்! வீணே வாதிட்டு வெறும் பொழுது போக்காமல் உன் அடித்தொண்டு செய்தற்கே ஆளாக்கு! இவையே என் ஆவல்! இறைவன்மீதும், இறைவனடியார்மீதும் எண்ணற்ற பாடல்களைப் பாடினார் கவியரசு. தனித்தனி நூல்களும் செய்தார். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தார். சில நூல்களுக்கு உரை எழுதினார். ஆங்கில நூல்கள் சிலவற்றையும் மொழிபெயர்ப்புச் செய்தார். இவ்வகைகளால் ஏறக்குறைய நாற்பது நூல்களைப் படைத்துள்ளார் கவியரசு. டாக்டர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பெயரில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நிறுவியுள்ள திருமுறைப் பரிசுச் சொற்பொழிவுத் திட்டத்தின்படி 2-4-1972இல், அப்பர் வரலாற்று ஆராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும் என்னும் தலைப்பில் கவியரசு அவர்கள் ஆற்றிய உரை அவர்தம் ஆராய்ச்சி வன்மைக்குச் சீரிய எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பாவலராகவும், நாவலராகவும், சிவனடியா ராகவும், செந்தமிழ்ப் பேராசிரியராகவும், உரையாசிரியராகவும், முத்தமிழ் வித்தகராகவும், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலவராகவும் விளங்கிய முதுபெரும் புலவர் கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்கள் தம் 72ஆம் அகவையில் 1972ஆம் ஆண்டு மேத் திங்கள் 26ஆம் நாள் இறைவன் திருவடி அடைந்தார்கள். அவர்கள் படைத்த அழியாத அறிவுச் செல்வம் என்றும் ஒளிமிக்க நினைவுச் சின்னமாக விளங்கும் என்பது உறுதி. கவியரசு புகழ்மாலை உயருந் திருநீற் றொளிநுதலும் உருத்தி ராக்க மணிமார்பும் மயர்வில் கேள்வி மலிசெவியும் வள்ளல் திருப்பேர் சொலப்பொடிக்கும் வியர்வும் அன்பு பொழிமழையும் விளங்கும் நடேசன் என்றதிரு பெயரும் நினைக்க நினைக்கஎன்னுட் பெருகும் உவகைக் கடல்மாதோ. - மதுரகவி 7. புலவர் குழந்தை பெற்ற தாய், பிறந்த நாடு, பேசும் மொழி ஆகிய மூன்றும் தாய் என்று கூறினார் தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார். அக் கூற்றின்படியே வாழ்ந்து காட்டிய புலவர் பெருமக்களுள் புலவர் குழந்தை சிறந்த ஒருவர் ஆவர். அறிஞர் அண்ணாவை அறியாதார் இலர். mt®, ‘òyt® njhH®! அவர் பெயர் சொல்லாமல் புலவர் என்றால் புலவர் குழந்தை அவர்களையே குறிக்குமாறு புகழ் வாய்ந்தவர் என்றால் இவர்தம் சிறப்புப் புலனாகும். ஈரோட்டிற்குத் தெற்கே பதினாறாவது கல்லில் ஓலவலசு என்பதொரு சிற்றூர் உளது. அவ்வூரில் பண்ணையார் குடும்பம் ஒன்றுள்ளது. ஓலவலசுப் பண்ணையார் குடும்பம் என்ற அளவிலே அவ் வட்டாரத்தார் நன்கு அறியக்கூடிய செல்வாக் குடையது அக் குடும்பம். அக் குடும்பத்தில் 1-7-1906இல் பிறந்தார் புலவர் குழந்தை. இவர்தம் தந்தையார் முத்துசாமிக் கவுண்டர். தாயார் சின்னம்மையார். குழந்தை இளம் பருவத்தில் திண்ணைப் பள்ளிக்குச் சென்று படித்தார். ஆண்டுக்கணக்கில் படித்தாரல்லர். நான்கு ஆண்டுக் காலத்தில் இடை இடையே நிறுத்தி எட்டுத் திங்கள்அளவே படித்தார். எழுத்தறிவைக் கூட ஒழுங்காகக் கற்றிருக்க இயலாதே! ஆனால் இளைய குழந்தை பத்தாம் வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார். ஓர் இசைப் பாட்டைக் கேட்டால் போதும். அப்பாட்டின் அமைப்பிலே புதுப்பாட்டு இயற்றி உடனே பாடுவார். பாட்டு இயற்றுவதைப் பொழுதுபோக்கு விளையாட்டாகக் கொண்டவரே பின்னாளில் பெரும் புலவராக விளங்கிய குழந்தை ஆவார். குழந்தையின் இசைப் பாட்டைக் கேட்டுப் பெரியவர்கள் பாராட்டினர். ஆனால், பாட்டிற்கு இலக்கணம் வேண்டும் அல்லவா! அதனைக் கற்காமல் பிழையில்லாத பாட்டைப் பாட முடியாதே! குழந்தையின் உள்ளம் பாட்டின் இலக்கணம் பயில விரும்பியது. எழுத்தறிவு பெற்றவரே அரியராகிய அச் சிற்றூரில் இலக்கணம் கற்பிக்க வல்லவர் எவரைக் காண்பது? தாமே கற்பது என உறுதிகொண்டு இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். கற்கக் கற்க ஆர்வம் பெருகியது! ஆர்வத்தால் முழுமையாக ஈடுபட்டார்! முயற்சி உயர்ச்சியைத் தருதல் உறுதியல்லவா! அயரா உழைப்பால் அருந்தமிழ் உணர்ந்த குழந்தை புலவர் தேர்வு எழுத ஆர்வங் கொண்டார். அதற்குரிய நூல்களைப் பயின்றார். 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகப் புலவர் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார். அது முதல் குழந்தை, புலவர் குழந்தை ஆனார். புலவரானதும் குழந்தை தம் ஊர் நிலைமையை மறந்து விடவில்லை. அவரையன்றிப் படித்தவர் எவரும் அவ்வூரில் இலர். ஆகவே, முதியோர்க்குத் தாமே எழுத்தறிவு புகட்டும் பணியை மேற்கொண்டார். இளைஞர் சிலர்க்குக் கற்பித்து அவர்களைக் கொண்டு முதியோர்க்குக் கற்பிக்குமாறு செய்தார். இவ்வாறு ஊர்தோறும் நிகழ்ந்திருந்தால் கல்லார் இந் நாட்டில் இல்லார் என்னும் நிலைமை என்றோ ஏற்பட்டிருக்கும் அல்லவா! புலவர் குழந்தையினிடம் ஒருவர் உங்கள் ஊர் எது? என வினாவினார். அவர் அதற்கு விடையாக ஒரு வெண்பாக் கூறினார். அதில் தாமன்றித் தம் ஊரில் படித்தவர் எவரும் இல்லாமையும், தாமே கற்றுக் கொண்டதையும் எடுத்துரைத்தார். என்னை அலாதார் எழுதப் படிக்கறியார்; தன்னை எழுத்தறியத் தான்செய்தேன் - என்னைகொல் சால வலசியன்னார் சங்கத் தமிழ்பாடும் ஓல வலசெங்கள் ஊர் என்பது அவ் வெண்பா. தந்தை பெரியார் அவர்களால் 1925ஆம் ஆண்டில் தன்மான இயக்கம் தொடங்கப்பெற்றது. தமிழர் நன்னிலை பெறவேண்டும்; தம்மை உணர்ந்து முன்னேற வேண்டும்; முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டும்; தமிழ்நாடு தன்னுரிமை பெறவேண்டும் என்பன போன்ற கருத்துக்களுடன் தன்மான இயக்கம் உருவெடுத்தது. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றைத் தம் குருதிநாடிகள் போலக் கருதுபவர் குழந்தை. ஆதலால், அதன் தொடக்க காலத்தில் இருந்தே அவ் வியக்கத்தில் பெரும்பங்கு கொண்டார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலியவர்களுடனும், பாவேந்தர் பாரதிதாசனார் ஆகியவர் களுடனும் உறவு கொண்டார். இன நன்மைக்கும் மொழி நன்மைக்கும் பாடுபட்டார். 1938ஆம் ஆண்டிலும் 1948ஆம் ஆண்டிலும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டார். இசைப் பாடல்களாலும், பேச்சாலும், எழுத்தாலும், துண்டு வெளியீடுகளாலும் இந்தித் திணிப்பைக் கண்டித்தார். இந்தி ஆட்சிமொழியானால் என்ன நிகழும் என்பதை ஆராய்ந்து, இந்தி ஆட்சியானால் என்னும் நூலை வெளியிட்டார். அதனை இந்தி நுழைப்பு மாநாடுகளில் துணிவுடன் வழங்கி கருத்துக்களைப் பரப்பினார். சீர்திருத்த நோக்கங்கள் உடைய புலவர், வேளாள வகுப்பாரிடையே உள்ள பல பிரிவுகளையும் ஒன்று சேர்க்கப் பாடுபட்டார். வேளாளன் என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்று நடத்தினார். விதவையர் மணம், கலப்பு மணம், சீர்திருத்த மணம், பெண்ணுரிமை ஆகியவற்றைப் பற்றி வேளாளன் இதழில் எழுதினார். வேளாள இளைஞர்கள் இதனால் புத்துணர்ச்சி பெற்றனர். வேளாள சங்கத் தலைவர் திரு. வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் தலைமையில் தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாளர் மாநாடு நடைபெற்றது. இவர் அம் மாநாட்டில் விதவையர் மணம் பற்றி விரிவாக எடுத்துரைத்துத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். வாழ்நாளெல்லாம் அத்தகைய சீர்திருத்தங்களைத் தாமே முன்னின்று நடத்தியும், பல வகையாலும் பரப்பியும் வந்தார். கடவுள் இல்லை என்னும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் இவர். அதனையும் துணிந்து கூறினார். நெஞ்சில் பட்டதை மறைக்காமல் மழுப்பாமல் சொல்லும் உறுதி இயல்பாகவே இவர்க்கு வாய்த்திருந்தது. 1930ஆம் ஆண்டில் வெள்ளக்கோயில் தீத்தாம் பாளையத்தில் சுவாமி சிவானந்த சரசுவதி என்பவரோடு கடவுள் இல்லை என்று நான்கு நாள்கள் சொற்போரிட்டார். 1929ஆம் ஆண்டு தொடங்கி 1962ஆம் ஆண்டு வரை 39 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்தார். 1941 முதல் 1962 வரை பவானி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார். பவானியையே தம் வாழ்விடமாக அமைத்துக் கொண்டார். புலவர் தம் இனிய வாழ்க்கைத் துணையாக அமைந்தவர் முத்தம்மையார். இவர்கள் இனிய வாழ்வின் கனிகளாக மகளிர் இருவர் தோன்றினர். அவர்கள் சமத்துவம், சமரசம் என்னும் பெயரினர். புலவர் உள்ளத்து நிரம்பி வழிந்த கொள்கைகள் பெயர் சூட்டலிலேயே வெளிப்படுகின்றது அல்லவா! இசைப்பாடல் பாட அடியெடுத்து வைத்த குழந்தை, புலமை நலங்கனிந்த நூல்களை இயற்றித் தமிழ்த் தாய்க்கு அணி செய்தார். திருக்குறளுக்கும், தொல்காப்பியப் பொருளதி காரத்திற்கும் புத்துரை கண்டார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப் பழம், காமஞ்சரி முதலிய நூல்களை இயற்றினார். இராவணன் ஏற்றங்களை இயம்புவதற்கு எழுந்த நூல் இராவண காவியம். புலவரவர்கள் சீர்திருத்தக் கொள்கையும், புலமைத்திறமும் நன்கு புலப்பட எழுந்த புத்தம் புதிய காவியம் இராவண காவியம் ஆகும். அதிலுள்ள புரட்சிக் கருத்துக்களைக் கண்டு அந்நாள் காங்கிரசு அரசு அந்நூலுக்குத் தடை விதித்தது. பின்னர் ஏற்பட்ட கழக அரசில் அந் நூல் தடைநீங்கி உலா வந்தது. தடைப்படுத்தப்பட்ட இராவண காவியம் புலவர் குழந்தையின் புகழை நாடெங்கும் நன்கு பரப்பிற்று! எதிர்ப்பினால் விளைந்த நன்மை அது! காமஞ்சரி என்னும் நாடகநூல் : இவர் செய்யுள் நடையில் இயற்றிய இந்த நாடக நூல் ஆங்கிலப் பெருங்கவிஞரான மத்தேயு அரனால்டு (Matthew Arnold) என்பவரால் செய்யப்பட்ட சோராப்பும் ரூதமும் (Sohrab and Rustum) என்னும் ஆங்கில நூலைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்த ஒரு பாரசீகக் கதையை பிர்தோசி என்னும் பாரசீகக் கவிஞர் சோராபின் கதை என்னும் பெயர் வைத்து அம் மொழியில் ஒரு நூலாக எழுதினார். அதனைக் கண்டு பின்னர் ஆங்கிலத்தில் மத்தேயு அர்னால்டு எழுதினார். கதையை மாற்றாமல், நாடக உறுப்பினர் பெயர்களையும் இடங்களின் பெயர்களையும் தமிழாக மாற்றி இவ்வாசிரியர் காமஞ்சரி என்னும் நூலை அமைத்துள்ளார். இந்த நாடக நூல் தமிழ் மரபை விளக்கும் தமிழ் நாடகம்போலவே காணப்படு கின்றது. இந்த நாடகநூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வகுப்புக்கு ஒரு முறை 1971ஆம் ஆண்டில் பாடமாக வைக்கப்பெற்றது. இந் நூல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற மனோன்மணீயம் என்னும் நாடகத்தைப் போன்று காட்சியளிக்கின்றது. எவர் துணையுமின்றித் தாமே இடர்ப்பட்டுத் தமிழ் கற்றவர் அல்லரோ புலவர் குழந்தை! ஆதலால், அந் நிலை பிறர்க்கு ஏற்படக்கூடாது என எண்ணி எளிமையாகக் கவிதை இலக்கணங் களை எவரும் கற்றறியுமாறும் கவிதை இயற்றுமாறும் யாப்பதிகாரம், தொடையதிகாரம் என இரண்டு நூல்களை இயற்றினார். பிற்காலத்தில் உண்டான பாவகைகளுக்கு அந் நூல்களில் இலக்கண அமைதி காட்டப் பெற்றுள்ளமை கவிபாடுவார்க்குப் பெரும்பயன் நல்குவதாம். கவிதை நூல்களையன்றி உரைநூல்களும், உரைநடை நூல்களும் பல இயற்றினார் குழந்தை. கொங்குநாடு தமிழக வரலாறு, தீரன் சின்னமலை, கொங்கு நாடும் தமிழும், கொங்குக் குலமகளிர், அண்ணல் காந்தி, சங்கத் தமிழ்ச் செல்வம், நீதிக் களஞ்சியம் முதலியவை அத்தகைய நூல்களாம். காந்தக் கருவியின்முள் எப்பொழுதும் வடக்கு நோக்கியே நிற்பதுபோலப் புலவர் குழந்தை தம் வாழ்நாளெல்லாம் தமிழ் வளர்ச்சி நோக்கியே இருந்தார். மொழிக் கேடு எங்கு முளைத்தாலும் அதனைக் கண்டிக்கத் தவறார். மொழி நலங்கருதிய அமைப்புக் களில் பெரும் பங்கு கொண்டார். உலகத் தமிழ்க் கழகம் தோன்றிய நாள் தொட்டு அதில் கடமையாற்றினார். தமிழகப் புலவர் குழுவிலும் இருந்து பணி செய்தார். பிழைபட்ட பாடல்களைக் காணும்போது பெருந் துயரடைவார். முறையாக இலக்கணம் பயின்று பாட்டியற்ற வேண்டுமென்று அனைவர்க்கும் கூறுவார். பிழைபட்ட பாடல் களைத் திருத்தித் தந்து அறிவுரை கூறுவார். தவறாகப் பாட்டு எழுதுவதால் எழுதுபவர்க்கு உண்டாகும் இழிவைச் சுட்டிக் காட்டுவார். முயற்சி எதுவும் செய்யாமல் தமிழைக் கெடுத்துக் குறுக்கு வழியில் கவிஞராகப் புகழ் பெறுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். அத்தகையவர்களை இடித் துரைத்து வழிப்படுத்துவார். மொழிநலங் காப்பார்க்கு இத் தன்மைகள் வேண்டும் அல்லவா! நாவண மல்கிய நல்லாசான் என்று பாவேந்தர் பாரதி தாசனாரால் பாராட்டப் பெற்றவர் புலவர் குழந்தை. கம்பனை வெல்லுங் காவியம் பாட வல்லவர் என அறிஞர் அண்ணாவினால் பாராட்டப் பெற்றவர் புலவர் குழந்தை. அவர்தம் பெருமையையும் தொண்டையும் தமிழ் உள்ளங்கள் மறந்து போகுமா? பவானிக் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகத்தார் பொதுக்கூட்டம் நடத்திப் புலவரைப் பாராட்டினர். அப்பொழுது புதுவை முதல்வர் பரூக்மரைக்காயர் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். விழுப்புரம் பகுத்தறிவுக் கழகத்தார் பாராட்டுக் கூட்டம் நடத்தித் தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர். இவ்வாறே பல்வேறு இடங்களிலும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றார் புலவர் குழந்தை. தம் வாழ்வைத் தமிழ்க் காவியம் ஆக்கிக்கொண்ட புலவர் குழந்தை 25-9-1972ஆம் நாள் இயற்கையோடு இரண்டறக் கலந்தார். இனிய தமிழுடன் இரண்டறக் கலந்த அப் புலவர் பெருமகனார் என்றும் வாழ்வார். 8. சிவநெறிச் செம்மல் கந்தசாமி முதலியார் திருவள்ளுவரின் புலமை மாண்பினை அறிந்த பெரியோர்கள் அவரைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்று புகழ்ந்தனர். தமிழ் மொழியின் தனிப்பெருஞ் சிறப்புக்களை அறிந்து அதனை தெய்வத்தமிழ் என்று பாராட்டினர். பெரியோர்கள் மொழித் தொண்டையும், தெய்வத் தொண்டையும் தம் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தனர். அத்தகைய வர்களுள் ஒருவர் அறிஞர் கந்தசாமி முதலியார் ஆவர். கொங்கு நாட்டைச் சேர்ந்த பழம் புகழ் வாய்ந்த பேரூர்களுள் கருவூர் என்பதும் ஒன்று. அது திருவிசைப்பாப் பாடிய கருவூர்த்தேவர் முதலிய பெருமக்கள் தோன்றிய பெருமைமிக்க ஊர்; திருஞானசம்பந்தர் முதலிய பெரியோர் களால் பாடப்பெற்ற புகழ்மிக்க ஊர்; ஆம்பிரவதி என்னும் ஆன்பொருநை ஆற்றின் கரையிலே அமைந்த அழகிய கருவூரிலே அறிஞர் கந்தசாமியார் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் உலகநாத முதலியார். தாயார் பெயர் பார்வதி அம்மையார். பிறந்த ஆண்டு கி.பி. 1838. கந்தசாமியார் இளைஞராயிருந்தபோதே அவர்தம் தந்தையார் உலகநாதர் இயற்கை எய்தினார். அதனால் பார்வதி அம்மையார் தாம் பிறந்த வீடு சென்று, உடன் பிறந்தோர் துணையால் வாழ்ந்தார். இச் செய்திகளைக் கந்தசாமியார் தாம் இயற்றிய திருப்பேரூர்க் கிள்ளைவிடுதூது என்னும் நூலில் கூறியுள்ளார். வீசு புகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம் பேசு கருவூரில் பிறந்தேன்யான் - மூசுதிரை வெள்ளப் புனல்மே வியசீர்க்கங் காகுலத்தில் பிள்ளையென வந்து பிறந்தேன்யான் - வள்ளல்பேர் பூண்உலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபால் பேணும் மகவாய்ப் பிறந்தேன்யான் - பூணற்கு அரிய புகழ்சேர் அரங்கசா மிக்குப் பிரிய மருகாகப் பிறந்தேன் யான்; என்றும், தந்தை இறந்தொழியத் தாயார் பிறந்தகத்தில் வந்து வளர்க்க வளர்ந்தேன்யான்; என்று நயமாகப் பாடியுள்ளார். இளமையிலே தந்தையை இழந்தாலும் கந்தசாமியார் கல்வியை இழந்தார் அல்லர். மிக ஈடுபட்டுக் கல்வி கற்றார். பள்ளியில் பயிலும்போதே பைந்தமிழ்மேல் அளவு கடந்த பற்றுக் கொண்டார். ஆதலால் தமிழ்க்கல்வியில் தேர்ச்சிபெற்ற ஆசிரியரை அணுகித் தனிப்பாடம் கேட்க ஆவலுற்றார். அக்காலத்தில் திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர் என்னும் பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவரிடம் தமிழ்க்கல்வி கற்றுச் சிறப்புற்ற மாணவர்கள் பலர். அவர்களுள் ஒருவர், சந்திரசேகரன் பிள்ளை என்பார். அச் சந்திரசேகரன் பிள்ளையை அடுத்துக் கல்வி கற்றார் கந்தசாமியார். சந்திரசேகரன் பிள்ளை இலக்கிய இலக்கணங்களில் மிகத் தேர்ச்சி பெற்ற புலவர். கந்தசாமியார் அவற்றைக் கற்பதில் தணியாத ஆர்வம் உடையவர். ஆதலால், கற்பிப்பவர்க்கும் கற்பவர்க்கும் இடையே தமிழ்க் கல்வி இன்பத் தென்றலாகத் தவழ்ந்தது. கந்தசாமியார் நாளடைவில் கல்வியில் மிகத் தேர்ந்து புலவர் பாராட்டும் புகழுடையவராக விளங்கினார். ‘njid ÉU«ã¤ njÜ¢ brštJ ïašò mšyth? அதுபோல், புலமை உடையவரைப் புலமை உடையவரே அறிவர். கந்தசாமியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் உலகில் பெரும்புகழோடு உலாவந்த புலவர் பெருமக்கள் பலர் ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர் என்பவர்கள். இவர்களின் இனிய நட்புக்கு உரியவராகக் கந்தசாமியார் விளங்கினார். ஆதலால், புலமை சிறந்த கந்தசாமியார் அரிய தமிழ்த் தொண்டு செய்தற்கும் விரும்பினார். பள்ளியில் கற்ற கல்விமுறையால் கந்தசாமியார் வழக்கறிஞர் ஆனார். கோவை முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதில் வருவாயும் மிகுதியாகக் கிடைத்தது. ஆயினும், அத் தொழில் புரிவதையே வாழ்வாகவும், அவ் வழியில் பொருள் திரட்டி வாழ்வதையே குறியாகவும் கொண்டார் அல்லர். தீந்தமிழ்த் தொண்டும், தெய்வத் திருத்தொண்டும் செய்வதிலேயே அவர் உள்ளம் ஈடுபட்டது. அழியா வாழ்வுடையது தொழில் இல்லையே! தொண்டுதானே என்றும் நிலைக்கும் பெருமை யுடையது! கற்பித்தல் தொண்டு கந்தசாமியார் தாம் அரிதில் கற்ற கல்விச்செல்வம் யாருக்கும் பயன்படாமல் தம்மோடு நின்றுவிட விரும்பவில்லை. தமிழ் கற்கும் ஆர்வமுடையவர் சிலரை அன்போடு அழைத்து அவர்களுக்கு அருந்தமிழ் அமுது ஊட்டினார். ஓர் அன்னை தன் பிள்ளைகளிடத்துக் காட்டும் அன்பினைப் போல மாணவரிடத்து இவர் பரிவு காட்டிப் பைந்தமிழ் கற்பித்தார். அரிய செய்திகளை யெல்லாம் எளிமையாக விளக்கிக் கற்பவர் உள்ளங்களை மகிழ்ச்சியடையச் செய்தார். ஆதலால் கந்தசாமியார் நடுவூருள் பழுத்த நன்மரம்போல எல்லாருக்கும் பயன்பட்டு விளங்கினார். தாமே கற்பித்ததோடு தகுதி வாய்ந்த தமிழ் அறிஞர்களை அவ்வூருக்கு வருமாறு அழைத்து அவர்களைக் கொண்டு சொற்பொழிவாற்றவும் தக்க ஏற்பாடு செய்தார். கந்தசாமியார் தம் இருபத்தெட்டாம் வயதிலே அஃதாவது கி.பி. 1866ஆம் ஆண்டிலே சொற்பொழிவு மன்றம் என ஒரு மன்றம் அமைத்தார். அதற்குச் சைவப் பிரசங்க சாலை என்பது பெயர். நிலையான தொண்டுக்கு நிலைத்த அமைப்பு ஒன்று வேண்டும் அல்லவா! காலை ஊன்றிக் கொள்ளாமல் நிற்பதற்கு முடியுமா? சைவப் பிரசங்கசாலை செய்த தொண்டுகள் மிகச் சிறந்தனவாகும். முதற்கண் சைவப் பிரசங்கசாலைக்கு ஒரு கட்டடம் எழுப்பப்பெற்றது. அதில் நாள்தோறும் வழிபாடு செய்வதற்கு திட்டம் வகுத்து, அது நன்கு நடத்தப்பெற்றது. திங்கட்கிழமை தோறும் சிவபுராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. அவ்வப்போது அடியார் திருநாள்களும், விழாக்களும் நடாத்தப் பெற்றன. அவற்றின் சார்பிலே பெரும் புலவர்கள் அழைக்கப் பெற்றுச் சொன்மழை பொழிந்தனர். இதனால் கோவை நகரை அன்றிப் பக்கலிலுள்ள ஊர் மக்களும் அறிந்து போற்றும் அருமை நிலையமாகவும், அன்பு நிலையமாகவும் திகழ்ந்தது சைவப் பிரசங்கசாலை. இசைக்கு வயப்படாதவர் எவரும் இலர். பறவையும், பசுவும், பாம்பும் இசைக்கு வயப்படுதலை அறிவோம். இப்பொழுது செடி கொடிகளும்கூட இசைக்கு இன்புறுவதை ஆராய்ந்து வெளிப் படுத்தியுள்ளனர். இத்தகைய இசையால் இறைவழிபாடு செய்ய விரும்பினார் கந்தசாமியார். அதிலும் இளைஞர்கள் உள்ளத்தில் இவ் வுணர்வு ஏற்பட்டால்தான் என்றும் நிலைக்கும் எனத் தெளிந்தார். அதனால், தேவாரப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தினார். தேர்ச்சிமிக்க ஓதுவார்களைக் கொண்டு தேவார வகுப்பு நடத்தினார். கோயில் திருப்பணி கோவை வட்டத், திருக்கோயில் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார் கந்தசாமியார்; வாழ்நாள் அளவும் அப் பொறுப்பில் இருந்து அரிய பணிகள் செய்தார். சைவசமயத்தில் ஆழ்ந்த பற்றுடைய அவர், அப் பணியினால் செயற்கரிய செயல்களைச் செய்தார். கோவையை அடுத்துள்ள திருப்பேரூர்த் திருக்கோயிலைச் சார்ந்த சுவாமி கோயில் அம்மை கோயில் ஆகியவற்றை முழுமையும் கருங்கல் திருப்பணியாகச் செய்தார். கோயிலுக்கு வேண்டும் அணிகலங்கள், ஊர்திகள் ஆகியவற்றையும் செய்தார். திருவிழாக்கள் சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்தார். காலவேச்சுரத் திருக்கோயில் முழுமையும் இவர் செய்த திருப்பணியால் அமைந்ததே ஆகும். பேரூர்த் திருக்கோயிலுக்கு உரிமையாக இருந்த ஒரு சிற்றூரும் நிலங்களும் வேறு மக்களால் இருபதாண்டுகள் வரையில் பறிமுதல் செய்யப்பெற்றிருந்தன. அவ் வூரையும் நிலங்ளையும் மீட்டுத் திருக்கோயிலுக்கு உரிமையாக்கினார். பேரூர்க் கிராமத்தைச் சர்வமானியம் ஆக ஆக்கவும் செய்தார். நூல்களைப் பதிப்பித்தலும், இயற்றுதலும் கற்பன கற்றுக் கனிந்த கந்தசாமியார் சைவசமய நூல்கள் சிலவற்றை நுட்பமாக ஆராய்ந்தார். அவற்றைப் பொதுமக்கள் கற்று நன்மையடையுமாறு, பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். கோயில்களைப் பற்றிய பழைய வரலாறுகளையும் செவிவழிச் செய்திகளையும் தொகுத்துக் கூறும் நூல் தலபுராணம் எனப்படும். கந்தசாமியார் திருப்பேரூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருக்கருவூர், திருநணா (பவானி) ஆகிய திருவூர்களுக்குரிய புராணங்களை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்தார். தாமேயும் சில நூல்களை இயற்றினார். அவ் வகையில் வெளிவந்தவை : திருப்பேரூர்க் கிள்ளைவிடுதூது, பச்சைநாயகி அம்மையார் ஊசல், திருப்பேரூர் மும்மணிக்கோவை, மரகதவல்லிமாலை முதலிய பதினொரு நூல்கள் ஆகும். கொடுமுடித் திருக்கோயில் செய்திகளைத் தொகுத்து தலபுராணம் பாடத் தொடங்கிச் சில பகுதிகள் பாடினார். பின்னர் இவரிடம் பயின்ற மாணவர் வேங்கடரமணதாசர் என்பவரால் பாடி அது நிறைவு செய்யப்பெற்றது. இல்வாழ்வும் இறுதியும் கந்தசாமியார் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமனைவியாராக வாய்த்தவர் வடிவம்மை என்னும் பெயருடையவர் ஆவர். இவர் தம் கணவர் குறிப்பறிந்து நடக்கும் பண்பு மாண்பு உடையவராக விளங்கினார். ஊர்ப்பணியில் ஈடுபட்டவர்க்கு ஓய்வு ஒழிவு உண்டா? அவரைக் காண வருவார்க்குக் கணக்கும் உண்டா? இத்தகைய கந்தசாமியாரின் இல்வாழ்க்கைத் துணைவியாராக அமைந்த இவ் வம்மையார் அயராது உழைப்பவராகவும், விருந்து ஓம்புதலில் விருப்புடையவராகவும், அன்புக்கு எடுத்துக் காட்டானவராகவும் விளங்கினார். இவர்தம் திருவயிற்றிலே பிறந்த மைந்தரே, பின்னாளில் சி.க. சுப்பிரமணிய முதலியார் ஆவர். தந்தையறிவு மகனறிவு என்பதற்கு ஏற்பவும், தாயைப் போலப் பிள்ளை என்பதற்கு ஏற்பவும் உயர்பண்புகளே ஓருருக்கொண்டாற் போன்று விளங்கிய சிவக்கவிமணியைப் பெற்றெடுத்த பெற்றோர் களின் பேற்றுக்கு இணையான பேறு உண்டோ? அவர்கள் மேற்கொண்ட இனிய இல்வாழ்க்கையின் பயனே சைவசமயத்திற்கு அழியாத்தொண்டு செய்யும் அருமை மகனைத் தந்தது எனின் அத்தகைய இல்லறம் அன்றோ நல்லறம்! நாளெல்லாம் நல்ல தொண்டுகள் செய்து வந்த கந்தசாமியார் தம் ஐம்பத்திரண்டாம் அகவையில் 1890ஆம் ஆண்டில் இறைவன் திருவடி சேர்ந்தார். இவரியற்றிய பச்சைநாயகியம்மை ஆசிரிய விருத்தம் என்னும் நூலில் ஒரு செய்யுளை அடியிற் காண்க. சீர்கொண்ட வதனமும் கார்கொண்ட முகிலெனத் திரள்கொண்ட பைங்கூந்தலும் சிலைகொண்ட கருவமும் விலைகொண்ட புருவமும் செங்கையிற் கொண்டகிளியும், ஏர்கொண்ட பண்மொழியும் கூர்கொண்ட வேல்விழியும் எழில்கொண்ட நுண்பணிகளும் இடைகொண்ட கலையுமவ் விடைகொண்ட மேகலையும் ஏழ்கொண்ட புவித வியே, தார்கொண்ட மணிமுடியும் நார்கொண்ட வடிகளும் சயங்கொண்ட மால்முதலினோர் தலைகொண்ட தேகமோர் நிலைகொண்ட பாகமும் தனங்கொண்ட திருமார்பமும், பார்கொண்ட அடியரொடு நேர்கொண்டு நீசேவை பாலிப்ப தெந்தநாளோ பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சைமர கதவல்லியே 9. கோவைப்புலவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அறிஞர் கந்தசாமி முதலியார் வரலாற்றை அறிந்தோம். அவர்தம் ஆசிரியர் பெருந்தகையாக விளங்கியவர் சந்திரசேகரன் பிள்ளை என்பார் என்பதை அறிவோர் அல்லவா! அப் பெரியாரின் திருமகனாரே இத் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பார். இவர்தம் அருமை அன்னையார் பெயர் பார்வதி அம்மையார் என்பது. சந்திரசேகரனார் திருமனைக் கிழத்தி, பார்வதியார் என வாய்த்தது இயற்கைப் பொருத்தம் அல்லவா! திருச்சிற்றம்பலனார் இளமைப்பருவத்தில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். அக் காலத்திலேயே தம் தந்தையாரிடம் கல்வி கற்ற கந்தசாமியாரிடம் தனியே தமிழ்க்கல்வி கற்றார். இஃதொரு சிறப்பு ஆகும். சந்திர சேகரனாரிடம் கல்வி கற்ற கந்தசாமியார், சந்திரசேகரனாரின் மகன் திருச்சிற்றம்பலத்துக்கு ஆசிரியரானார். பின்னர்க் கந்தசாமியாரின் மைந்தராகிய சிவக்கவிமணிக்கு, இத் திருச்சிற்றம்பலனாரே ஆசிரியராக விளங்கினார். இவ்வாறு ஆசிரியர் மாணவர்நிலை தொடர்ந்து வருதல் அருமையாகும். திருச்சிற்றம்பலம் பிள்ளை அயராத உழைப்பாளர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? ஆதலால், அறிவில் சிறந்து விளங்கினார். ஆராய்ச்சித்திறம் மிகுந்து தோன்றினார். இவர்தம் இலக்கண இலக்கியப் புலமை அறிஞர்களால் பெரிதும் போற்றப்பெற்றது; தங்கு தடையற்ற இவர்தம் சொற்பொழிவு பாராட்டுக்கு உரியதாயிற்று. இவர் தம் அறிவு வன்மையும், நாவன்மையும் தமிழ்ப்புலமை நடாத்த விரும்பி அழைத்தன. கோயமுத்தூரில் உள்ள இலண்டன் கிறித்துவ சங்க உயர்நிலைப் பள்ளியிலும், உரோமன் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியிலும் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணி செய்தார். பள்ளிப் பணியின் வழியே பைந்தமிழ் வளத்தை வாரி வழங்கி மாணவர்களை வயப்படுத்தினார். மொழிப் பாடத்தில் சிறந்தோங்க வழிகாட்டினார். மாணவர்களின் ஒருமித்த அன்புக்கும் உரியவராக விளங்கினார். அதே அளவில் தம் பணியே முடித்துக்கொண்டார் அல்லர். தனியே தமிழைக் கற்க விரும்பு பவரை எல்லாம் தணியா விருப்புடன் அழைத்து வைத்துத் தம் இல்லத்தில் பாடம் நடத்தினார். அவ்வகையில் தமிழ்ப்புலமை பெற்றுச் சிறந்தோர் பலராவர். கோவை உயர்நிலைப் பள்ளிகளில் திருச்சிற்றம்பலனார் பணி செய்தாலும், இவர் புகழ் அவ்வூர்ப் பக்கமெல்லாம் பரவிற்று. சென்னையிலுள்ள பேரறிஞர்கள் இடையேயும் பரவியது. கொங்கு நாட்டிலும் தொண்டை நாட்டிலும் திருச்சிற்றம்பலனார் புலமை மதிக்கத்தக்கது ஆயிற்று. பூமணம் போன்றது அல்லவே புலமை மணம்! அஃது எட்டாத் தொலைவிலும் எட்டி இனிது மணக்கும் இயல்பினது அன்றோ! 1898ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் மாணிக்கவாசகரைப் பற்றி ஓர் அரிய ஆராய்ச்சியுரை நிகழ்த்தினார். அந் நிகழ்ச்சி அறிஞர்களையெல்லாம் கவர்ந்தது. இவருடைய சொல்வன்மையும், ஆராய்ச்சி வன்மையும் கண்டு ஆங்கிருந்தவர்கள் இன்பத்தில் ஆழ்ந்தனர். மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்பதை இவர் அறுதியிட்டு முடிவுகட்டியுரைத்தார். அன்றியும் கல்லாடம் என்னும் நூலை இயற்றிய கல்லாடனார் சங்ககாலக் கல்லாடனார் அல்லர். சங்ககாலக் கல்லாடனார்க்குப் பிற்பட்டவர் இக் கல்லாடனார் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டினார். இத்தகைய ஆராய்ச்சிகள் அறிஞர் உலகுக்கு வழி காட்டிகளாக அமைந்து மேலும் ஆராய்வதற்குத் தூண்டுதலாயின. சொற்பொழிவில் வல்லவரான திருச்சிற்றம்பலனார் ஒருநாள் அன்னிபெசண்டு அம்மையாரின் சொற்பொழிவு நூல் ஒன்றைக் கற்றார். அப் பொருளில் ஆர்வங்கொண்டார். இராமாயணச் சுருக்கமாக அமைந்த எட்டுச் சொற்பொழிவுகளைக் கொண்டது அந்நூல். அதனை அழகாக மொழி பெயர்த்து இராமச் சந்திரர் என்னும் பெயர் சூட்டி இவர் வெளிப்படுத்தினார். அக்காலத்தில் இங்கிலாந்தில் எட்வர்டு அரசர் திருமுடி சூட்டுவிழா நிகழ்ந்தது. அந் நிகழ்ச்சியின் நினைவாக எட்வர்டு அரசரின் வரலாற்றை எழுதி, எட்வர்டு அரசர் என்னும் பெயருடன் ஒரு நூலை இவர் வெளியிட்டார். கதைத் துறையிலும் தொண்டாற்றும் ஆர்வம் கொண்டார் திருச்சிற்றம்பலனார். தமிழ்ப் புலவர்கள் கதைத் துறையில் ஈடுபட்டுச் சிறப்படைய வேண்டும் என்றும், அவர்கள் கதைத் துறையை ஏறிட்டுப்பார்க்காமையால் செவ்விய நடையில் வெளிப்படும் கதைகள் இல்லாமல் ஒழிகின்றன என்றும் உணர்ந்தார். அதனால், தாம் அவ்வகையில் வழிகாட்டல் கடமை எனத் தெளிந்தார். வங்காளத்தில் பெரும்புகழோடு விளங்கிய கதையாசிரியர் களுள் ஒருவர் பக்கிம் சந்திர சட்டர்சி என்பவர். அவர் எண்ணற்ற கதைகள் எழுதியவர். கதைத்துறையில் முடிசூடா மன்னரெனத் திகழ்ந்தவர். அவர் கதைகளையெல்லாம் வரன்முறையாகத் திருச்சிற்றம்பலனார் கற்றார். சில கதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார். தாம் பெற்ற இன்பத்தைத் தமிழ் உலகமும் பெற வேண்டும் என விரும்பினார். அதனால் ஆனந்த மடம், சந்திர சேகரர், பனங்குளம் என்னும் கதைகளைக் கன்னித் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சில குடும்பங்களில் வியக்கத்தக்க சில நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ்வது உண்டு. ஒரு குடும்பத்தில் எல்லாரும் இளமையிலே நரைத்த தலையராகத் தோன்றுவதையும், பிறிதொரு குடும்பத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் கூட நரை எட்டிப்பாராது இருத்தலையும் காண்கின்றோம். சில குடும்பங் களிலே நடுவயது வருமுன்னரே இறப்பாரையும், சில குடும்பங்களில் நூற்றாண்டை ஒட்டிவராமல் எவரும் இறவாமையையும் காண்கின்றோம். இத்தகைய நிகழ்ச்சிகள் குடும்பநிலை என்று கூறப்படுவதையும் கேட்கிறோம். இவ்வாறு திருச்சிற்றம்பலனார் குடும்ப நிலை வியக்கத்தக்க இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடமாக இருக்கின்றது என்பர். அவற்றுள் ஒன்று, எவரும் அவர்தம் இல்லத்திற்கு வெளியிலேயே இயற்கை அடைவது. மற்றொன்று, நாற்பது வயது தாண்டு முன்னரே இயற்கை அடைவது. விதிக்கு விதிவிலக்கும் இருக்கத் தானே செய்கின்றது! ஆனால் விதிக்கு முரணாகாதவாறே திருச் சிற்றம்பலனார் முடிவும் இருந்தது, விந்தையான செய்தியேயாம். திருச்சிற்றம்பலனாரின் மனைவியார், திருப்பழனிக்கு வழிபாடு செய்யச் சென்றார். அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய தந்தையார் பாலக்காட்டில் மருத்துவம் செய்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். சென்று, மருத்துவம் செய்து திரும்பி வரும் வழியிலேயே இறைவனடி சேர்ந்தார். அவ்வாறே இவர்தம் இளவலாரும் மருத்துவமனைக்குச் சென்று மீண்டு வரும்வழியிலேயே மாண்டு போனார்! இவர்கள் அனைவரும் நாற்பது வயது கடவாத நிலையிலேயே மறைந்தவர்கள் ஆவர். திருச்சிற்றம்பலனார் நிலைமைதான் என்ன ஆயிற்று? அயராப் பணிகளுக்கு இடையே நோய்க்கு ஆட்பட்டார் திருச்சிற்றம்பலனார். அவ் வேளையில் பழனிக்குச் சென்று வழிபாடு செய்யவேண்டும் என விரும்பினார். ஆறாத் துயரையும் அறுமுகன் திருவருளே ஆற்றும் எனக் கொண்டு பழனிக்குச் சென்றார். உள்ளம் உருக,-கண்ணீர் வார-பண்ணிசை பாடிப் பைந்தமிழ் முருகனை வழிபட்டார்! எல்லாத் துயரும் நீங்கிச் சுமை இறக்கி வைக்கப்பெற்றார் போன்ற இன்பம் பெற்றார். ஆங்கிருந்தும் திரும்பி வரும் வழியில் தாராபுரத்தில் ஆம்பிரவதி ஆற்றின் கரையில் இறைவன் திருவடி சேர்ந்தார். அஃது 1904ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். வாழ்ந்த காலம் எத்தனை என்று எண்ணுவதினும், வாழ்நாள்கள் எல்லாம் நன்முறையில் பயன்படுத்தப்பெற்ற வாழ்நாள்களாக இருந்தனவா? என்று எண்ணுவதே தகுதியான தாகும். நூறாண்டு வாழ்ந்தாலும் வாணாளை வீணாள் ஆக்கி ஒழிவார் இல்லையா! பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறந்ததாமே என ஏசப் பேச நெடிது வாழ்வார் இல்லையா? பதினாறே ஆண்டுக் காலம் வாழ்ந்த திருஞான சம்பந்தரும், பதினெட்டே ஆண்டுக் காலம் வாழ்ந்த சுந்தரரும், முப்பத்திரண்டே ஆண்டுகள் வாழ்ந்த மாணிக்கவாசகரும், முப்பத்து எட்டே ஆண்டுகள் வாழ்ந்த விவேகானந்தரும், முப்பத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்த பாரதியாரும் உலகு புகழ் பெருமையோடு வாழ்ந்தவர்கள் அல்லரோ! ஒருவர் வாழ்வு அவர் வாழ்ந்த வகையைப் பொறுத்ததே அல்லாமல், வாழ்நாள் அளவைப் பொறுத்தது அன்று என்னும் கருத்தைத் திருச்சிற்றம்பலனார் மறைவு நமக்குக் கற்பிப்பதாகும்! முற்றிற்று.