இளங்குமரனார் தமிழ்வளம் 21 சான்றோர் வரலாறு 1. பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் 2. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 3. தமிழ் வளர்த்த தாமோதரனார் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 21 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 168 = 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் 1. சண்முகனாரின் முன்னோர் 1 2. மாணவர் சண்முகனார் 5 3. கவிஞர் சண்முகனார் 8 4. ஆசிரியர் சண்முகனார் 13 5. பேராசிரியர் சண்முகனார் 23 6. புலவர்மணி சண்முகனார் 37 7. வாழ்க்கைக் குறிப்புகள் 47 8. சண்முகனார் நூல்கள் 52 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1. இளமையும் கல்வியும் 67 2. மொழி பெயர்ப்பாளர் பணி 69 3. முன்சீப் வேலை 71 4. நீதிபதிகள் நிலைமை 73 5. வழக்கறிஞர் கடமை 75 6. முன்சீப் வேதநாயகரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் 79 7. வேதநாயகரும் சுப்பிரமணிய தேசிகரும் 80 8. தாய்மொழியும், பிறமொழிகளும் 82 9. வேதநாயகர் செய்த நகர்மன்றத் தொண்டுகள் 84 10. வேதநாயகர் இயற்றிய நூல்கள் 86 தமிழ் வளர்த்த தாமோதரனார் 1. வரலாற்று முன்னோட்டம் 93 2. வரலாற்றுச் சுருக்கம் 96 3. வரலாற்று இணைப்பு 1 109 வரலாற்று இணைப்பு 2 111 வரலாற்று இணைப்பு 3 121 வரலாற்று இணைப்பு 4 124 4. பதிப்புப் பாடுகள் 126 5. ஆய்வு 152 குறிப்புகள் 166 பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் 1. சண்முகனாரின் முன்னோர் சோழவந்தான் மண்ணை நினைக்கும்பொழுதே தமிழுணர்ச்சி உந்தி எழுகின்றது. அவ்வாறு உந்தியெழக் காரணமென்ன? ஒரே ஒரு தமிழ்ச் சண்முகனார் ஆங்குத் தோன்றியமைதான். காடாகலாம் - அன்றி - நாடாகலாம்; மேடாகலாம் - அன்றிப் பள்ளமாகலாம்; இவை சிறப்புடைமை ஆகா ஓரிடத்திற்கு. ஆண்மையாளர் ஆங்குத் தோன்றியுளரா? உளரேல், அவ்விடம் நல்லிடம்! இன்றேல் இல்லை! இடத்தின் சிறப்பியல் அவ்விடத்து வாழ்நரைப் பொறுத்ததே.1 இவ்வாறு உரைத்தார் அவ்வையார். தக்கவோர் சான்றானார் தமிழ்ச் சண்முகனார். சோழவந்தான் வளம் சோழவந்தான் மண்ணுக்கு இயற்கைக் கொழுமை உண்டு. வான்பொய்ப்பினும் தான் பொய்யாக்2 காவிரி புரக்கும் நாடு சோழநாடு. அந்நாட்டின் வேந்தனே, சோழவந்தான் வயல் வளத்தினைக் கண்டு உவந்து பாராட்டினானாம்! சோழன் உவந்து பாராட்டினான் ஆகலின், சோழன் உவந்தான் என்னும் பெயர் பெற்றுப் பின் நாளில் சோழ வந்தான். ஆங்குச் சோழன் வந்தான் ஆதலின் அப்பெருமை நோக்கி அவ்வூர் சோழ வந்தான் ஆயிற்று என்றுரைப்பதும் உண்டு. காரணங்கள் ஊரின்பெயரைக் கொண்டு இட்டுக்கட்டப் பெற்றவையே இவை. இட்டுக்கட்டப் பெற்றவையே எனினும், சோழவந்தானுக்கு நீர்வளம் சான்ற நிலவளம் உண்டு. வையை என்னும் பொய்யாக் குலக்கொடி3 தன் சீர்கெழு மகவுகளுள் தலைமகவாய்ச் செந்தண்மை கொண்டு சோழ வந்தானைக் காத்து வருகின்றமை கண்கூடு. வையையால் நிலவளம் பெற்றோங்கும் சோழவந்தான், அரசஞ் சண்முகனாரால் புலவளம் பெற்றுப் புவிபுகழ் பெருமை ஏற்றது. சோழவந்தானை நினைக்கும் பொழுது நெஞ்சில் நிற்பவர் எவர்? எல்லாருமா நினைவில் முகிழ்க்கின்றனர்? சோழவந்தானே சண்முகனார் ஆயது; சண்முகனாரே சோழவந்தான் ஆனார். சோழவந்தானும் சண்முகனாரும் மலரும் மணமும்போல் இயைந்துவிட்டனர். ஊர்ப் பெயர்க் காரணம் புலவர்மணி சண்முகனார் பிறந்த ஊர்ப் பெயர் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது. ஏனைய வேந்தர்களை எதிரிட்டு இயமனுலகு புகச் செய்ய வல்ல ஏற்றமிக்க ஆற்றல் வாய்ந்த வேந்தர் பலர் பராந்தகன், பராந்தகதேவன், பராந்தக சோழன், பராந்தக பாண்டியன் என்னும் பெயர்கள் பெற்றுள்ளனர். பர அரசர்க்கு அந்தகனே (இமயன்) பராந்தகன். இப்பெயர்கள் போலவே சோழாந்தகன் (சோழர்க்கு அந்தகன்) என்னுஞ் சிறப்புடன் பாண்டிய வேந்தன் ஒருவன் இலங்கினான். அவன் இயற்பெயர், வீரபாண்டியன் என்பது வீரபாண்டியன் கல்வெட்டுக்கள், சோழன் தலைகொண்ட கோவீரபாண்டியன் என்று பாராட்டுகின்றன. சோழன் தலை கொண்ட பெருமிதங்கருதி அவன் சோழாந்தகன் என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றான். அச்சிறப்பு விளங்குமாறும் தனக்கு அழியாத அடையாளமாய் இருக்குமாறும் அவன் தன் பெயரால் அழைத்துக் கொண்டவூர் சோழாந்தக நல்லூர் என்னும் சோழவந்தானூர் ஆகும். இப் பெயரே சோழவந்தானாக மருவி வழங்குகின்றது. இதனைப் பழங் கல்வெட்டே1 அன்றிச், சோழன் தலைகொய்த சொல்வீர பாண்டியனைச் சோழாந் தகனென்று சொன்னாரே - தோழியே! சோழாந் தகனென்ற சொல்மருவித் தீந்தமிழில் சோழவந்தான் ஆனதெனச் சொல் என்னும் புதுப்பாட்டும் விளக்கும். சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் இவ்வூருக்கு உண்டு. அன்றியும் சனகை என்றும், சனக நாராயணபுரம் என்றும் வேறுபெயர்களும் இவ்வூருக்கு உள. இவ்வூரின் பழம் பெயர் குருவித் துறை என்பர். சோழனை வென்றான் நகர் என்று மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலையில் சண்முகனார் குறிப்பிடுகின்றார். சண்முகனாரின் முன்னோர் சோழவந்தான் வளங்கண்டு வாழவந்தார் பலர். அவருள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகம் பிள்ளை என்பவரும் ஒருவர். பதினேழாம் நூற்றாண்டளவிலே சோழவந்தானில் குடியேறிய இச் செண்பகம் பிள்ளை குடும்பத்தார். இன்று பெருகிப் பல்கிக் கல்வி, திரு. ஆற்றல்களில்சிறந்தோங்குகின்றனர். இந்நற் குடியிலே பிறந்தார் இராமுபிள்ளை என்னும் நல்லார். அவர் தம் மைந்தர்அரசப்ப பிள்ளை. அரசப்பர் தக்க பருவம் அடைந்தவுடன் உறவினரும் பனையூரில் வாழ்ந்தவருமான வீரபத்திர பிள்ளை என்பவர்தம் மகளார் பார்வதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இல்லறம் இனிது நடாத்தினார். சண்முகனார் பிறப்பு அரசப்பர் பார்வதியம்மை ஆகிய இவர்கள் தம் அருமைப் புதல்வராய் விபவ வருடம், புரட்டாசித் திங்கள் முதல் நாள் செவ்வாய்க் கிழமை பகல் நாழிகை பதின்மூன்றரைக்கு விருச்சிக ராசியில் (15-9-1868) பிறந்தார் சண்முகனார். சண்முகனார்க்குப் பின் பிறந்தவர் இருவர். இருவரும் புதல்வர்களே; இராமுபிள்ளை, சதாசிவம்பிள்ளை என்னும் பெயர்களால் அழைக்கப்பெற்றனர். அரசப்பர் அருங்குணங்கள் அரசப்பருக்கு உழவுத் தொழில்மேல் மிகுந்த ஈடுபாடுண்டு. அவர் குடிநலன் கருதி மடியா உளத்தொடும் முயற்சியில் ஊன்றியிருந்தார். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்1 என்னும் நன்மொழிக்கேற்ப, உழவுத் தொழிலே தொழிலாகக் கொண்ட அரசப்பர் உயர்ந்த வேளாளராக - உபகாரியாக - இலங்கினார். அவர்தம் குணநலன்களை அவர் செல்வமணியாம் சண்முகனார் நவமணிக்காரிகை நிகண்டின் தற்சிறப்புப் பாயிரத்தில் விரித்துள்ளார். கிண்ணிமடம் அரசப்பர் உழவுத் தொழில் புரிந்ததே அன்றிக் கிண்ணிமடம் என்னும் மடத்தின் அறப்பொறுப்பாளராகவும் இருந்துவந்தார். இப் பொறுப்பு அவர்தம் பரம்பரை வழியே இறங்கி வந்தது. கிண்ணிமடம் அருளானந்த அடிகள் என்னும் அறத் துறவியாரால் தோற்றுவிக்கப் பெற்றது ஆகும். அருளானந்த அடிகள் நெடுங்காலம் இருந்து அறப்பணிகள் ஆற்றித் தாம் தோற்றுவித்த மடத்திலே அடக்கமும் ஆனார். அடிகள் பிறந்தவூர் கிண்ணிமங்கலம் ஆகும். அக் கிண்ணிமங்கலம் மடமே கிண்ணிமடம் ஆயிற்று. கிண்ணிமடப் பொறுப்பு செண்பகம் பிள்ளை வீட்டாருக்கு உரிமையாக இருந்துவந்தது. அவ்வுரிமை அரசப்பருக்கும் உரிய பொழுதில் வந்து சேர்ந்தது. குறைவற அறப்பணிகள் புரிந்துவந்தார் அரசப்பர். 2. மாணவர் சண்முகனார் அழகர்சாமி தேசிகரிடம் தொடக்கக் கல்வி சோழவந்தானில் கல்மண்டபம் என்னும் இடத்தே தொடக்கப் பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. அப்பள்ளியின் பொறுப்பாளரும் தலைமையாசிரியருமாக அழகர் சாமிதேசிகர் என்பவர் இருந்தார். அவர் சிவகங்கையைச் சேர்ந்தவர். வேங்கடசாமி என்பவர்தம்புதல்வர்; சோழ வந்தானையே தம் ஊராக்கிக் கொண்டு வாழ்ந்தார். அவர் தொடக்கப் பள்ளி ஆசிரியரே எனினும் பேராசிரியர் என்னுந் தகுதிக்கு உரியவர். பண்டைக் காலத்தில் இளம் பாலாசிரியர்1, பாலாசிரியர்2 என்று இருந்தோரும் பேராசிரியராகவும், பெரும் பேராசிரியராகவும் இருந்தவர்களே. இத்தகையோர் வழிவந்த தேசிகரிடத்துச் சண்முகனார் ஐந்தாம் அகவையில் ஒப்படைக்கப் பெற்றார். தேசிகர் பேரறிஞர்; அரசப்பர் நற்குணச் செம்மல்; சண்முகம் கூர்த்த மதியும் அடங்கிய பண்பும் உடையவர். இவர்கள் கூட்டுறவு சிறந்தோங்கியது போலவே கல்வியும் சிறந்தோங்கியது. ஐந்தாம் அகவை முதல் பன்னிரண்டாம் அகவை முடிய ஏழாண்டுகள் தேசிகரிடம் சண்முகம் பயின்றார். நூலறிவும் நுண்ணறிவும் அக்காலத்தே சண்முகம் கற்றுக்கொண்ட நூல்களை நினைத்துப்பார்க்கவே தலை சுற்றும்! அம்மாவோ என்று கூறும்! அத்துணை நூல்களைப் பாடங் கேட்டார்; மனனம் செய்தார். அரிச்சுவடி, கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம் இவற்றைத் தெளியக் கற்றார். நீதிநூல்களாம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, உலகநீதி, நன்னெறி, நல்வழி, அறநெறிச்சாரம், நீதிநெறி விளக்கம், நாலடியார், திருக்குறள் ஆகியவற்றைப் பாடங்கேட்டு, வரப்பண்ணினார். இவ்வளவும் எட்டு ஒன்பதாம் அகவைக் குள்ளாகவே! பத்தாம் அகவையில் கலசையந்தாதி, மருதூரந்தாதி, புகலூர் அந்தாதி, திருவரங்கத்தந்தாதி முதலாய அந்தாதிகளும், மாலைகளும், உலாக்களும் கற்றார். பதினொன்றாம் அகவையில் மதுரைக் கலம்பகம், வெங்கைக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலாம் கலம்பக நூல்களும், திருக் கோவையார் முதலாம் கோவை நூல்களும் கற்றுத்தெளிந்தார். பன்னிரண்டாம் அகவையில் பிங்கல நிகண்டு, திவாகரநிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு முதலாம் நிகண்டுகளை வரப்பண்ணினார். இவற்றுடன் கீழ்க்கணக்கு நூல்களிலும் கருத்துச் செலுத்தினார். நாளும் தமிழால் வளரும் சண்முகம் நன்னிலை கண்டு ஆசிரியரும், பெற்றோரும் அகமிக மகிழ்ந்து பாராட்டினர். இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாள்கொல் என்று ஊர் உரைக்க உளத்தாலும், மொழித் திறத்தாலும் வளர்ந்தார் சண்முகனார். இந் நிலைமையிலே அரசப்பர்நல்லுள்ளத்தில் ஒரு சிறுகவலை இருந்து வந்தது. அது, தம் பொறுப்பிலே இருந்துவரும் கிண்ணி மடம் பசித்துவந்தோருக்குச் சோறும் நீரும் தந்துவரும் அளவுடன் நில்லாது அறிவுத் தொண்டும் செய்ய வேண்டும் என்பதாகும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல் ஆகிய அனைத்தினும் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் அன்றோ1 தலையாய அறம்? உடலுக்கு உண்டி உதவும் மடம், உயிருக்கு உறுதுணையாம் கல்விப் பணியும் ஏற்றுக் கொண்டால் எவ்வளவு சிறக்கும்? என்றெல்லாம் எண்ணினார். அரசப்பர் நற்றொண்டு அறிவுப் பணிக்குத் தக்கவர் வேண்டு மன்றோ! அதற்காக எங்கெங்கோ தேடியலைந்தார். கசடறக் கற்று, கற்ற வழியிலே நின்று, தன்னை அடுத்து வந்தோருக்குத் தகவுற வழிகாட்டிச் செல்லும் ஒருவரால் அல்லவா அறிவுப்பணி புரிய முடியும்! இந்த ஆவலால்தான் தேடியலைந்தார். அதுவும் வீண்பட்டு விடவில்லை. தம் இல்லக்கிழத்தியார் பிறந்த பனையூருக்கு ஒருமுறை சென்றி ருக்கும் போது, அவ்வூர் மடத்தில் இருந்த செந்தமிழ்த் துறவியார் சிவப்பிரகாசர் என்பவரைக் கண்டு கனிவுறப் பேசிக் களிப் படைந்தார். அவர்தம் புலமை நலத்தாலும், பண்பு முதிர்வாலும் ஈர்க்கப் பெற்றார் அரசப்பர். இவர் கிண்ணி மடத்திற்கு எழுந்தருளித் தமிழ்த் தொண்டாற்றினால் சிறக்குமே என்று சிந்தித்தார். வருவரோ? வாராரோ? என்று ஐயுற்றார். அதன்பின் தம்மடத்தின் நிலைமையையும் தம் விருப்பையும் சிவப்பிரகாசரிடம் எடுத்துரைத்து அளவளாவிப் பேசி விடை கொண்டார். அரசப்பர் மொழியும் வேட்கையும் அடிகளுக்கு உவகை தருவனவாக அமைந்தன. அடிகளார், சோழவந்தானை நண்ணினார். அரசப்பர் அளப்பருங் களிப்பு அடைந்தார். அன்று தொட்டுக் கிண்ணிமடம் தமிழ்க் கோயில் ஆயிற்று. சிவப்பிரகாச அடிகள் சிவபிரகாசர் ஓர் தமிழ் மலை. அத்தமிழ் மலையில் இலக்கணம், இலக்கியம், சோதிடம், வேதாந்தம், தருக்கம் ஆகியவை பொற் சிகரங்காளாய் அமைந்து பொலிவூட்டின. தனித்தனிச் சிகரங்களிலே தோய்ந்து தோய்ந்து நலம்நுகர்ந்த சுவைஞர் பற்பலர்! அச் சுவைஞர்களுள் ஒருவர் ஆனார்நம் சண்முகனார். இவர், அடிகள் வந்தவுடன், அவர்தம் தமிழ்ப் புலமை வெள்ளத்திலே ஒன்றிப் போயினார். இத்தகைய மேதைமையும் உண்டா? இவரே தமிழ் மலை; இவரே வழிகாட்டி என உள்ளத்திலே கொண்டார். அதனால் சிவப்பிரகாசராம் செம்மலரிடத்துத் தண் தேன் பருகும் தமிழ் வண்டானார் சண்முகனார். சிவப்பிரகாசர் செந்தமிழ் மலர்; சண்முகனார் செந்தமிழ்த்தும்பி; மலரையும் தும்பியையும் இணைத்தது தமிழ்த்தேன்! மலரும் வண்டும் வண்டின் வருகையை நாடுதல் மலரின் இயற்கை. வண்டு மலரின் மதுவை நுகருமாறு தேடுவதும் இயற்கை. நாடவும் தேடவும் வழிசெய்வது நற்றேன். தேனுக்கு ஒன்றுபடுத்துவது இயற்கைத் தன்மை! தமிழ்த் தேனின் இயற்கைத் தன்மையும் அதுவே. தேசிகரிடத்துக் கற்றுக் கொண்ட கல்விக்குத் தனியொளி தந்தார் சிவப்பிரகாசர். சண்முகனார்கல்வித் திறனைச் சோதித்தறிந்த அடிகள் எடுத்த எடுப்பிலேயே திருக்குறள் ஆராய்ச்சி, தொல் காப்பிய ஆராய்ச்சி, சங்க இலக்கியப் பாடம் முதலியவற்றிலே புகுந்தார். சோதிட நூல்களையும், மெய்யறிவு நூல்களையும் ஒழிந்தவேளைகளில் கற்பித்தார். சண்முகனாரும் அடிகளும் உருவும் நிழலும் ஆயினர். பகலிலும் இரவிலும் அடிகள் உறையும் மடமே சண்முகனார்க்கு வீடாயிற்று. அடிகளே தாயும் தந்தையும் ஆயினார். 3. கவிஞர் சண்முகனார் சண்முகனார்க்குத் தட்டுத்தடையின்றிக் கவியியற்றும் திறமை பதினான்காம் அகவையிலேயே வாய்த்துவிட்டது. எதுகைக்கு எண்ணித் திரியாமலும், மோனைக்கு முட்டுப்படா மலும் பாடினார். சொற்கள் தாமாகவே வலிய ஓடி ஓடி வந்து சேர்ந்தன. பொருளும் யாப்பும் அணியும் போட்டி போட்டுக் கொண்டுவந்தன. அரிதில் பொருள் காணும் மடக்கும் திரிபும் எளிதில்இவர்க்கு வயப்பட்டன. அந்நாதியும் மாலையும் தடையின்றி வெளிவந்தன. முன்னர்ப் பாடம் செய்து வைத்திருந்த பாடல்களைத் திரும்பக் கூறுவது போன்று புதிய கவிதைகளை இயற்றுவது இவர்க் கியல்பாயிற்று. இவற்றை நன்கறிந்தசிவப்பிரகாசர், பெரிதும்பாராட்டிப் பேருவகை கொண்டார். தம்மை நாடிவந்து கற்க விரும்பினோர்க்குச் சண்முகனாரைக் கற்பிக்குமாறு செய்தார். சண்முகனார் அடிகளிடத்து மாணவராக இருந்து கொண்டு அவரிடத்து வந்த மாணவர்க்கு ஆசிரியராகவும் துலங்கினார். அரசப்பர் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட ஈன்ற தாயாம் பார்வதியம்மையின் மகிழ்ச்சியை எப்படிக் கூறுவது? அவரே அறிவார்! கல்மண்டபம் பிள்ளையார் கோயிலில் தானே எழுத்தறிவு பெற்றார் சண்முகனார். அதனை மறவாமல் முதன்முதலாகக் கல்மண்டபச் சிதம்பரவிநாயகர் மேல்சிதம்பர விநாயகர் மாலை பாடினார். அதன் பின்னர்த் திருவடிப் பத்துப் பாடினார். இவற்றை இயற்றுங்காலையில் சண்முகனாகர்க்கு வயது ஈரேழே! அம்மம்ம! இயற்கைக் கொடை என்பது அன்றி, இதனை என்னவென்று சொல்வது? ஆசிரியரும் மாணவரும் பதினைந்தாம் அகவை நடக்குங்கால், கொச்சகப்பா என்னும் ஒரு வகைப் பாவினை யாத்தார். அப் பாவகையிலும் தம் திறத்தைக் காட்டினார். அகரத்தில் பாடல் தொடங்கினார். அப்படியே ஔ காரம் முடியவுள்ள பன்னீருயிர்களுக்கும் ஒவ்வொரு பாடல் பாடினார். பின் ககரம் தொடங்கி னகரம் இறுதியாம் பதினெட்டு எழுத்துகளையும் முதலாகக் கொண்டு பாடல்கள் பாடினார். உயிரும் உடம்பும் ஆம் முப்பதும் முதலே1 என்றும் முப்பது எழுத்துகளும் முறையாய் வர, பொருள் திறம் செறியப் பாடி முடித்தார். அடிகள் உள்ளம் உவகையால் விம்மியது; வாய் தளதளத்தது; மயிர்க் கூச்செறிந்தது; உவகைக் கண்ணீர் பெருகியது. சண்முகம் வாழ்க கவிப்புலவர் வாழ்க என்று தம்மை மறந்து வாழ்த்தினார். இணையற்ற கவிஞர் பெருமான் சண்முகம் இவ்விடத்து மாணவன் என்னும் நினைவு துறவியாம் அடிகளையும் தூக்கி நிறுத்திப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அகங்குழையத் தழுவிக்கொண்டு தமிழன்பைக் காட்டினார் அடிகள். அடிகளிடத்துத்தான் சண்முகனார்க்கு எத்தகைய பற்று! ஐயோ! அப்பற்றினைச் சண்முகனாரே குறிக்கின்றார். மடங்கொண்ட சிந்தை மயல்கொண்ட போதே மறைந்தகல இடங்கொண்ட ஞான ஒளிகொண்ட ஆசான் எவர்க்கு மனம் அடங்கொண் டளிக்கல்வி நூல்மழை பெய்தங் கறிவுறுத்துந் தடங்கொண்டல் நங்கந்தசாமி முனிவர்................ கந்தசாமியாம் முனிவர் யார்? அவரே சிவப்பிரகாசர். முதற் பெயர் அது; துறவுப் பெயரே சிவப்பிரகாசர். ஞானஒளி கொண்ட ஆசான்! கல்வி மழை பொழியுந் தடங்கொண்டல்! சாக்ரடீசிற்கு ஒரு பிளேட்டோவும், இராமகிருட்டிணருக்கு ஒரு விவேகானந்தரும் கிடைத்தனர். அடிகளுக்காக ஓர் அரசஞ் சண்முகனார்பிறந்திருந்தார். அடிகள் உண்மையில் பேறு பெற்றவரே! உள்ளத்துரத்தை உலகுக்கு வெளிப்படுத்துமாறும், உண்மைத் திறத்தை அறிவிக்குமாறும் இயற்கை இடை இடையே சோதனைகள் நிகழ்த்துவது உண்டு. உச்சி மீது வானிடந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை2 என்று முழங்கி முட்டறுப்போரே,இடும்பைக்கு இடும்பை3 படுத்து ஏற்றங் காண்பர். அல்லாதார், அவதிக்கு ஆட்பட்டுத் தந்திறங்கெட்டுத் தளர்வர். இச் சோதனை வாழ்க்கைப் படிப்புக்கு இயற்கை நடத்தும் தேர்வு எனின் மெய்ம்மையேயாம். இச் சோதனைக்குச் சண்முகனார் விலக்காக முடியுமா? துன்பமிக்கபதினாறாம் ஆண்டு சண்முகனார்க்குப் பதினாறாம் ஆண்டுநடந்து கொண்டி ருந்தது. அதுகாறும் புத்தகம், படிப்பு, பாட்டு, ஆராய்ச்சி என்றிருந்தது அன்றி வேறு வேலையொன்றும் செய்தறிந்தார் அல்லர். குடும்பக் கடமைகளை முறைபெற நிறைவேற்ற அரசப்பர் இருந்தார். குடும்பத்திற்கு வாய்த்த அரசரே அவர். செல்வமாய் வளர்த்த மக்களையும், அன்பு மனைவியையும் ஏங்க விட்டுவிட்டு அவர் இயற்கை எய்தினார். அரசப்பர் மறைவு சண்முகனார்க்கு மலையொன்று தலைமீது வீழ்ந்தது போலாயிற்று! பார்வதி யம்மையோ சித்தங்குழம்பி அரற்றினார். அரசப்பர் பிரிவுத்துயர் வீட்டைப் பெரும் புயலாய்க் கொடுஞ்சூறையாய் வாட்டியது. இன்பமிக்க அரசப்பர் மனைப்படகு துன்ப வெள்ளத்தில் ஆழத் தொடங்கியது. அதற்கு முகாமனோ செல்வந்திரட்டும் வழி வகை எதுவும் அறியாது வளர்ந்துவிட்ட சண்முகனார். இவர் தாமே அரசப்பருக்குத் தலைமகனார்! ஆண்டுகள் ஒன்றிரண்டு கடக்கு முன்னமே சுறாவும், கராவும் போன்று வறுமை தன் பாழ்வாயைத் திறக்கத் தொடங்கிற்று. பார்வதியம்மையாரோ தம் பைந்தமிழ்ப் பாவலன் சண்முகத்தின் மீதுள்ள சுமை கண்டு துன்புற்றார். தம் மைந்தர் நலனொன்றே கருத்திற்கொண்டு நிலங்களுக்குச் சென்று நேரடியாகக் கவனித்தார். தன்னலம் எனவொன்று இருப்பதையே அறியாதது அன்றோ உண்மையான தாய்மை! தந்தையாரின் பிரிவுத் துயரைச் சிறிதுசிறிதாக மாற்றிக் கொண்டுவந்தது சண்முகனாரிடத்துக் குடிகொண்டிருந்த தண்டமிழ்த் தெய்வம். ஆம்! சண்முகனார் மீண்டும் ஓய்வு ஒழிவு இன்றித் தமிழ் அன்னையின் தூய தொண்டரானார். துயரம் துகள்துகள் ஆயின! என்னை வளர்ப்பது தமிழே என்னும் உறுதிகொண்டார் ஏந்தல் சண்முகனார். தமிழ்க் கடலிலே மூழ்கி மூழ்கி முத்தெடுக்குந் திறங் கண்டுவிட்ட சண்முகனார்க்கு வறுமை வெள்ளத்தில் எதிரோட்டம் ஓடுவது ஒரு பொருட்டாக இருக்க வில்லை. வறுமைக்கும் வாழ்வுக்கும் கட்டுப்பட்டு இயங்காத கதிர் தன் கடமையில் தவறாது சுழன்றுகொண்டு இருந்தது. ஆண்டுகளும் உருண்டன. சண்முகனார்க்கு அகவை பதினெட்டு ஆயிற்று. திருமணம் சோழவந்தானில், தமிழ் மருத்துவத்தில் தனித் திறம் பெற்றவராய்ச் சிதம்பரம்பிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் காளியம்மை என்னும் பெயருடைய மகளார் ஒருவர் இருந்தார். அவரைச் சண்முகனார்க்கு வாழ்க்கைத் துணையாக் கினார் பார்வதியம்மையார். மணக்கோலத்தில் மாலை மாற்றிக் கொண்ட சண்முகனார் தமிழன்னைக்கும் ஒருமாலை சூட்டினார். அது பூமாலையன்று! பாமாலை! மாலைமாற்று மாலை என்பது அதன் பெயர், முருகக் கடவுள் மீது பாடப் பெற்றது, இம் மாலைமாற்று மாலையாகும். சண்முகனார் வயிற்று வலி நோய்க்கு ஆட்பட்டார். மருந்துகள் பயன்படவில்லை. நோய் நீடித்துச் சென்றது. சண்முகனார்க்கு அரியூர் சாமிநாதையர் என்னும் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் இவர் நோய்நிலை அறிந்து வருந்தி, முருகக் கடவுள் மீது பாமாலை பாடின் நோய் நீங்கும் என்று வற்புறுத்தினார். அதற்கு ஏற்பப் பாடப் பெற்றதே இம் மாலைமாற்று மாலையாகும். புலவனுக்கு வரும் இன்பமும் புதிது படைக்கின்றது. அவனுக்கு வரும் துன்பமும் புதிது படைக்கின்றது. ஆம்! புலமை வெளிப்படுவதற்குத் தூண்டுதல்கள் வேண்டும். அஃது இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால்தான் என்ன? விகடகவி என்னுஞ் சொல்லைக் கொண்டு இளைஞர்கள் விளையாட்டுக் காட்டுவது உண்டு. இச்சொல்தொடக்கத்திலிருந்தே அன்றி இறுதியிலிருந்து எழுத்துக் கூட்டிப் படித்தாலும் விகடகவி என்றே வருமாறு அமைந்துளது. இது ஒரு தனிச் சொல். ஆனால் தொடக்கத்திலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் அடி எத்தகைய மாற்றமும் அடையாதவாறு அமைக்கும் பாடலே மாலைமாற்றாம். இத்தகைய மாலை மாற்றுப் பாடல் ஒன்றிரண்டு அமைத்தாரல்லர் கவிஞர் சண்முகனார். ஒரு நூலே யாத்தார். நூலின் இறுதிச் சொல் தொடக்கச் சொல்லாக இருக்குமாறும் பாடினார். அதனால் நூல் மாலைமாற்று மாலை என்னும் பெயர் பெறுவதாயிற்று. மாலை பாடுவது அரிது. மாலைமாற்றுப் பாடுவது அதனினும் அரிது. மாலைமாற்று மாலை பாடுவது அதனினும் அரிது. ஆனால் கவிஞர் சண்முகனார்க்கோ அரிய கவிதை இயற்றலும் எளிதாயிற்று காரணம், கவித் தெய்வத்தின் திருமகனாராகத் திகழ்ந்தார் அவர். ஏகபாத நூற்றந்தாதி அகவை இருபது கடக்கவில்லை. சண்முகனார்க்கு; மற்றுமொரு புதிய நூலைப் படைத்தார். அதற்குப் பெயர் ஏகபாத நூற்றந்தாதி. பாடலின் முதல்அடியே, இரண்டாம், மூன்றாம், நான்காம் அடிகளாவும் இருக்கும். ஆனால் அடிஅடிதோறும் பொருள் மட்டும் வேறு வேறாக இருக்கும். ஒவ்வொரு பாட்டின் இறுதியும் அடுத்த பாட்டின் தொடக்கமாக அமையும். இவ்வாறு நூறுபாட்டுகள் பாடினார். வேலை வாய்ப்பு சண்முகனார், புலமை வளம் பெற்று வந்ததற்கு நேர்மாறாகப் பொருள் வளஞ் சுருங்கி இடர்ப்பட்டார். ஏதேனும் தொழில் செய்ய விரும்பினார். மதுரைச் சேதுபதி உயர்பள்ளியில் தமிழராசிரியர் வேலை வாய்த்தது. அக்காலத்தில் தமிழாசிரியராக ஒருவரை நியமிக்க வேண்டுமானால் அவரைத் தமிழ்ப் புலவர்கள் சிலர் கூடிச் சேர்ந்து பலவாறு சோதனையிட்டுப் பார்ப்பர். ஒரே இடத்திற்குப் பலர் போட்டியிடுவார்கள் ஆயின், அவர்களை வாய்மொழி, எழுத்து எனவிரு திறத்தானும் சோதனை செய்வர். யாதானுமோர், அடியையோ, பொருளையோ தந்து கவியியற்றிக் காட்டுமாறு செய்வர். பலருக்கும் மன நிறைவு ஏற்படுமாறு இருந்தால்தான் வேலை கிடைப்பதற்குப் பரிந்துரை வழங்குவர். காலநிலை இவ்வாறிருந்தும் சண்முகனார் புலமையை முன்னரே அறிந்திருந்த நிர்வாகத்தினர் எத்தகைய சோதனையும் செய்யாமல் வேலை தந்தனர். வேலை ஏற்றுக்கொள்ளுங்காலையில் சண்முகனார்க்கு வயது இருபத்திரண்டே. 4. ஆசிரியர் சண்முகனார் சண்முகனாரின் எளிமைத் தோற்றம் முதற்கண் மாணவர் களைக் கவர்ந்து விடவில்லை. மெலிந்த உருவினராய் எளிய உடையினராய்க் குடுமித் தலையினராய்த் தோன்றிய அவர், பகட்டுடையினர் இடையே பாராட்டப் பெறுவது அரிதுதான். ஆனால் அவர் பாடம் நடத்திய திறனும் புலமையும் மாணவர் களைக் கவர்ந்தன. ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் அப்பாடலுக்குப் பொருள்கூறும் அளவுடன் சண்முகனார் நிற்க மாட்டார். வழக்கிடையில் உள்ள உரை இன்னது எனக்கூறி அதற்கு இப்பொருள் காணில் சிறக்கும் என்று காட்டி, அப்பொருளே கூறப்படின் வரும் இழுக்கு இது என்று நிறுவி, தாங்கொண்ட பொருளுக்கு ஆன்றோர்கள் மொழி இவை இவை துணை புரிகின்றன என்று சான்று காட்டி, வகுப்பினை ஆராய்ச்சி மன்றம் ஆக்கி விடுவார். மாணவர்கள் மெய்மறந்து போய் இவர்தம் புலமைதான் என்னே! எப்படித்தான் இவ்வளவு பாடல்களையும் வரப்பண்ணிக் கொண்டார்? இப்பாடலுக்கு இத்தனை விதமாய்ப் பொருள் கூறுவது அம்மம்ம! அரிது! என்று தங்களுக்குள் பேசி மகிழ்வர். ஆசிரியர் பாடம் சொல்லுந்திறமும் நுண்ணறிவும் தந்தை போன்று அமைந்து மாணவர்களை அன்புற நடத்திய தகைமையும் சண்முகனாரை மாணவர்கள் மதிக்குமாறு செய்ததுபோலவே தமிழையும் மதிக்குமாறு வைத்தது. சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலே சண்முகனார் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1890 ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு முடிய அங்கே அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் அளப்பரியன. அவை தமிழுலகில் அவருக்குத் தனியிடத்தைத் தந்தன. நவமணிக் காரிகை நிகண்டு தேசிகர் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சண்முகனார் நிகண்டு நூல்கள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தார் அல்லவா! அப்பயிற்சியைப் பயன்படுத்தி நலம் விளைக்கும் செயல் ஒன்று செய்து முடிக்க விரும்பினார். அதன்படியே சொல்லையும் பொருளையும் ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையிலே பாடி முடித்தார். ஒன்பது இயல்களைக் கொண்டதாகவும் நிகண்டடெனும் அமைதி உடையதாகவும் செய்யப்பட்டது. ஆதலால் நவமணிக் காரிகை நிகண்டு என்னும் பெயர் சூட்டினார். இந்நூல் புலவர் கூடிய அவையிலே சிவப்பிரகாச அடிகளின் சீர்சால் தலைமையிலே 1898 ஆம் ஆண்டு சிறப்புற அரங்கேற்றம் செய்யப்பட்டது. நூலாராய்ச்சியும் புத்துரையும் தொல்காப்பியத்தின்மீதும், திருக்குறளின்மீதும் தணியாத பற்றும், பேராராய்ச்சியும் சண்முகனார்க்குண்டு. இவ்விரண்டையும் தமிழ்மொழியின் இருகண்களாகக் கருதினார். எப்பொழுதும் நூல்களை மேற்போக்காகப் படிப்பது இவர்க்கு இயல்பு அன்று. பொதுநிலையே இவ்வாறாகத் தொல்காப்பியம் திருக்குறளைப் பொறுத்த அளவிலே எழுத்தெழுத்தாக எண்ணிப் பார்த்துப் படித்தவர் என்று கூறலாம். நூலையே அன்றி உரையையும் தெளிய ஆய்ந்தார். அவ்வாராய்ச்சி தமிழுக்குச் சிறப்புத் தருவது ஆயிற்று. நூலாசிரியர் கருத்தினை எண்ணிப் பார்க்காமல் உரையாசிரியர்கள் பல இடங்களில் வலிந்து உரை கூறியிருந்தமை புலனாயிற்று. ஏடெழுதுவோர்களால் பாடல்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ள மையும் தெளிவாயிற்று. ஆனால், அரும்பெரும் ஆசிரியர்கள் கூறிய உரைகளை எளிதில் குறைகூறிவிட முடியுமா? அவ்வாறு கூறினால் புலமை உலகம்பொறுத்துக் கொண்டிருக்குமா? இதனால் மேலும் மேலும் ஆராய்ந்தார். தாம் ஆராய்ந்த விதத்தையும் காரணத்தையும் அவரே குறிப்பிடுகின்றார். தொல்காப்பியத்தின் பெருமையும், சில் காப்பியமும் முற்றத் தேரா என் அறிவின் சிறுமையும் தம்முள் ஒப்பு நோக்கி உரைப்புழி அண்டமும் அணுவுமாம் எனினும் சாலாமை கண்டேன் ஆயினும் அவாவின் பெருக்கால் அந் நூலும்அதன் உரையும் புன்னூலும் ஆராய்வான் புக்குச் சிற்சில் இடத்து முன் உரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமையின் தொன்னூல் துணிபு இதுவோ அதுவோ எனவும், பிறிது ஒன்றே எனவும் ஐயுற்றும் பன்னூலு முறைப்படப் பல்லாற்றான் நாடி என் அறிவிற்கு எட்டிய அளவின் அவற்றுள் சில துணிந்தும் எழுதினேன். இவ்வாறு பெரிதின் ஆய்ந்து அரிதின் எழுதிமுடித்தார் ஒரு நூல். அதன் பெயர்1 நுண் பொருட் கோவை என்பதாம். நுண்பொருட்கோவை வரன்முறையாய்த் தொல்காப்பிய இலக்கணத்தையுரைக்கும் நூலன்று. ஆசிரியர் கருத்துக்கு மாறுபட்டு உரையாசிரியர்கள் செல்லும் இடங்களைமட்டும் சுட்டிக் காட்டி, அவ்வுரை பொருந்தாமைக்குரிய காரணங்களை விரித்துச் செல்லுவது ஆயிற்று. ஆனால் சண்முகனார் மேலும் மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியின் பயனால் உரையாசிரியர்களும் நன்னூல் முதலாம் பின்னூல் ஆசிரியர்களும் வழுவிச் சென்ற இடங்கள் வரம்பிலவாக விருத்தல் புலனாயிற்று. அதனால்இனி வழுவின்னது வழுவில்லது இன்னது, காரணம் இன்னது என்று சுட்டிக்காட்டிச் செல்வதினும் தொல்காப்பியநூல் முழுமைக்குமே உரைகாணல் ஒன்றே தக்கது என்னும் முடிவுக்கு வந்து2 புத்துரை காண விரும்பினார். தொல்காப்பியம் போலவே திருக்குறளும் இவரைக் கவர்வதாயிற்று. திருக்குறளுக்குப் பதின்மரும் அவர்க்குமேல் பலரும் உரைகண்டிருக்கின்றனர். இருந்தும் ஆசிரியர் கருத்துடன் இணைந்ததாகப் பலபாடல்களின் உரைகள் இல்லாமை கண்டு சண்முகனார் வருந்தினார். சிலபாடல்களின் சொற்களும், அதிகாரத் தலைப்புகளும் தவறாகக் குறிக்கப் பெற்றிருப்பதையும் கண்டார். தொல்காப்பியம்போலவே திருக்குறளுக்கும் புத்துரை இயற்றல் தங்கடன் என்று கருத்தில் இருத்தினார். உரைகாணும் உணர்ச்சி உந்தித் தள்ள மேலும் மேலும் ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். ஆழ்ந்து கண்டெடுத்த முத்துகளை ஆன்றோர் முன்வைத்து அவர்தம் கருத்துகளை அறிவதற்கு ஆவலுற்றார். வரைமொழியில் வருமுன்னர் வாய்மொழியில் வெளியிட விரும்பினார். மதுரையிலும், மற்றுள்ள சில இடங் களிலும் தம் கருத்துகளை எடுத்துரைத்தார். உண்மை காணும் எண்ணமுடைய சிலர் உவகைகொண்டு பாராட்டினர்; ஊக்க வுரைகள் பல உரைத்தனர். ஆனால், பொறாமையும், தன்னலமும் சிறு மதியும் கொண்டசிலர், முன்னோர் மொழிகளை மாற்றி யுரைக்க இவருக்கு என்னே துணிவு? என்று வெறுத்தனர். வேண்டியவாறு நேரிடையாகவும், மறைமுகமாகவும் பழித்தனர். பழிமொழி கேட்டுப் பதைத்தாரல்லர் சண்முகனார். அவர்தம் மெல்லிய உள்ளத்தில் வன்மையே வலுத்தது. தம் உரைக்கு மறுப்புரை நிகழ்த்துவோர் பொறாமை வயப்பட்டுப் புகல்கின்றவரே அன்றி முறைகண்டு அறத்துடன் கூறுவோரல்லர் என்பதைத் தெள்ளிதின் உணர்ந்தார். தம் கருத்துகள் நிறுவுவதற்கு ஏற்ற கருத்துகளை மேலும்மேலும் சேர்த்தார். என்ன எதிர்ப்புக் கிளைத்தாலும் புத்துரை எழுதிவிட உறுதிகொண்டார். துன்பத்தின்மேல் துன்பம் இச்சமயத்தே சண்முகனாரை இருவகை இடர்கள் அரித்துத் துன்புறுத்தின. ஒன்று, வழக்கமாகப் போய்விட்ட வறுமை; மற்றொன்று, உடலை வாட்டித் துன்புறுத்தும்பிணி. இவ்விரண்டின் ஒருமுகத் தாக்குதலுக்கும் ஆட்பட்ட சண்முகனார் உயர்நிலைப் பள்ளியினின்று ஓய்வுகொள்ள நேரிட்டது. மாதங்களாகவும், ஆண்டுகளாகவும் பன்முறை விடுமுறை கொண்டார். இச்சமயங் களிளெல்லாம் ஏற்பட்ட துயரினை அளவிட்டுரைத்தல் அரிது. எனினும் துன்பத்தின் இடையேயும் இன்பங்கொண்டார். இடும் பைக்கும் இடும்பை ஆக்கி உரத்துடன் நின்றார். வறுமைத்துன்பமும் வாட்டும் பிணித்துன்பமும் கவி இன்பத்தாலும், நூலாய்வு இன்பத்தாலும் மாற்றப்பெற்றன. இந்நிலையிலே எழுந்தது இன்னிசை இருநூறு என்னும் அருமையான அறநூல். புலமையாளர்களை மதித்து நடப்பதில் சண்முகனார்க்கு நிகரான ஒருவரைக் காண்பது அரிது. ஆனால், போலிப்புலமைக்குத் தலைவணங்க மறுப்பதும் அவர்க்கு இயல்பு. தாம் எழுதி முடித்த நூல்களைத் தாம் மதித்தற்குரிய புலமையாளர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் கருத்தினையும் அறிவார். தவறோ மாறுபாடோ இருக்குமாயின் எடுத்துக்காட்டித் திருத்துமாறு வேண்டுவார். இத்தகைய உயர்பண்பு சண்முகனார்போலும் பெரும் புலமை யாளர்களுக்கு வாய்ப்பதென்பது அருமையினும் அருமையே. இவரை அணிசெய்த குணங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று எனல் வெளிப்படை. இன்னிசை இருநூறு சண்முகனார் தாம் எழுதிமுடித்த இன்னிசை இருநூறு என்னும் நூலின் கையெழுத்துப் படியினைத் தென்மொழிக்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், முனைவர், தமழ்த்தாத்தா என்னும் தகவுகள் படைத்த உ.வே. சாமிநாதையர் அவர்கட்கு அனுப்பி வைத்தார். அதனுடன், உடல் நலமின்மையால்இவ்வாண்டிலும் மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் விடுமுறை பெற்றுக் கொண்டு நாளதுவரை சோழவந்தானில் வசித்து வருகிறேன். இப்போது இன்னிசை இருநூறு எனவொரு நீதிநூல் அடியேன் சிற்றறிவிற்கு எட்டிய அளவில்பாடிச் சிறிதும் நாணாது பெரியீரது திருமுன்புக்குப் புத்தக அஞ்சல் செய்து அனுப்பியிருக்கிறேன். அரிய பெரிய சங்கநூலெல்லாம் ஆராய்ந்த பெரியீருக்கு இதுமிக்க அருவருப்பைத் தருமாயினும், சிறிது கடைக்கண் நோக்குச் செய்தருளித் திருத்த வேண்டின் திருத்தியும், நீக்க வேண்டின் நீக்கியும் சேர்க்க வேண்டின் சேர்த்தும் அனுப்பினால் உடனே அச்சிடுதற்கு இவண் அநேகர் எதிர்பார்த்திருக்கின்றனர். பெரியீரிடத்துப் பாயிரம் பெறல்வேண்டும் என்பது அடியேனது அவா என்று கடிதமொன்றும் எழுதிவைத்தார். என்னே சண்முகனாரின் பணிவுடைமை! முற்றிய நெற்கதிர் தலை தாழ்கின்றது; முற்றாப் பதர்க் கதிர்கள் நிமிர்ந்து நிற்கின்றன 5 என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்? பண்டிதமணி கதிரேசச்செட்டியார் சண்முகனார் மதுரைக்கு வந்தபின் அவர் திறமும், ஆராய்ச்சியும் வெளியிடங்களிலும் பரவத் தொடங்கின. அடிகளின் மாணவர்களாக இருந்த பலரும், சண்முகனார் உடன்பின்ற சிலரும் வெவ்று இடங்களிலிருந்து தமிழ்த் தொண்டாற்றிக் கொண்டுவந்தனர். ஆகவே அவர்கள் வழியாகக் கற்றோர் கூடிய அவையில் சண்முகானர் புகழ் பரவத் தொடங்கிற்று. இவ்வாறு பரவிய இடங்களில் தலையாயது செட்டிநாட்டுச் சீமை எனலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்1 என்று பறை முழக்கிய பாவலர் கணியன் பூங்குன்றன் பிறந்த பூங்குன்றம் என்னும் ஊர் செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டியே யாகும். இம் மகிபாலன் பட்டியிலே பிறந்திருந்த பெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் ஆவர். அவர் சோழவந்தானிலிருந்து கிளர்ந்தநறும்பூந் தமிழ்த் தென்றலின் நயநுகர விரும்பிய சுவைஞர் ஆனார். அதனால் இயற்கைப் புலமையும், இருமொழித்திறமும், நுண்ணறிவும், கவியாக்கமும் நிரம்பியிருந்த அவர் சண்முகனாரை, என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே என்று விரும்பிக் கிடந்தார். மறைமலையடிகள் இக்காலையில், தனித் தமிழ் இயக்கப் பெருந்தலைவராம் மறைமலையடிகளிடத்துச் சண்முகனார்க்குப் பேரன்பு உண்டா யிற்று. அப் பேரன்பு வளர்மதிபோல் வளர்ந்து நிறைமதியாய்த் திகழ்வதும் ஆயிற்று. இத்தகு பற்றினை ஊக்கியது அடிகளார் ஆராய்ச்சி வன்மையேயாகும். பத்துப் பாட்டாதி பழம்பெரு நூல்களுக்கு உரையாசிரியர்கள், நூல் ஆசிரியர் கருத்திற்கு மாறான உரைகளையும் கூறியுள்ளனர் என்று தெளிவுறக் கண்டார். அதனைப் பேச்சாலும் எழுத்தாலும் தமிழுலகில் பரப்பிக் கொண்டுவந்தார். அவர் செயலும், அம்முறையும் சண்முகனார் செய்கைகளுக்கு ஊக்கமும் உறுதித் துணையும் தருவனவாக இருந்தன. அடிகளார் 1901 ஆம் ஆண்டிலே சண்முகனார்க்குத் தாம் இயற்றிய மும்மணிக் கோவை நெஞ்சறிவுறூஉ ஆகிய நூல் களையும், ஞான சாகர இதழ் ஒன்றையும் அனுப்பிவைத்திருந்தார். அவற்றைக் கண்ணுற்ற சண்முகனார், தாம் அன்பு கூர்ந்து விடுத்த தமது நூல்களும், ஞானசாகரத்து நான்காவது இதழும் பெற்று உள்ளுதொறுள்ள முருகித் தமது தரிசனம் எஞ்ஞான் றெய்துங் கொலோ வென வரம்பிகந்த அவாவின்கண் அமிழ்கின்றேன். அகல் வானத்து உம்பர் உறைவார் பதியினும் இன்பமிக்கெய்துதற் கேதுவான சான்றோர் நட்பையே பெரும் பொருளெனக் கருதும் அடியேற்குத் தமது கருணையால்மற்றைப் புலவரது மாண்புற்ற நண்பும் வாய்க்குமேல்அது சிந்தாமணித் தெண்கடல் அமிர்தந்தில்லையான் அருளால் வந்தால் அதனை ஒக்கும் என்று நன்றியுரை எழுதினார். இங்ஙன நூலியற்றல் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார்க்கும், பின்னுள்ளோர்களில் கல்லாட நூலார், ஞானாமிர்த நூலார், கச்சியப்ப முனிவர், குமரகுருபரர், முதலிய சிலர்க்கும் தமக்குமே அன்றி ஏனையோர்க்கு எவ்வாற்றானும் அரிது அரிது என்பது அழுக்குற்ற நெஞ்சத் தரல்லாத நட்டார் பகைவர் நொதுமலர் என்னும் முத்திறத்தாரும் ஒத்துக் கோடற் பாலதாம் என்று புலமை மாண்பு பாராட்டினார். அடிகளாரும், நம் உண்மை நண்பர் சண்முகம்பிள்ளை என்றும், நண்பரவர்கள் நற்குண மாட்சியினையும் ஒருமைப் பாட்டினையும் மிக வியந்து அவர்கள்மாட்டு எழுபிறப்பும் திரியா உழுவல் உரிமை அன்பு பாராட்டுங் கடப்பாடுடையயேன் என்றும் தம் உள்ளன்பு உடைமையைத் தெள்ளிதில் காட்டுவார். சான்றோர் சான்றோர் பாலராப1 என்னும் நன்மொழிக்குச் சான்றாய் இலகினர் சண்முகனாரும், மறைமலையடிகளாரும். தமிழ்க் கல்லூரித் தோற்றம் சண்முகனார் தமிழ்ப் பெரியார் பலருடன் பழகும் பேறு பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தே மற்றுமோர் அரிய வாய்ப்பும் கிட்டுவது ஆயிற்று. பைந்தமிழ்ப் புலவரும் பெரும் புரவலருமான பாலவனத்தம் அரசர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் முயற்சியாலும், சேதுவேந்தர் உதவியாலும் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று, 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 14ஆம் நாள் தொடங்கப் பெற்றது.2 அச்சங்கத்திற்குத் தமிழ் நாட்டிலுள்ள அரும் பெரும் புலவர்கள் அனைவரும் வந்திருந்து பங்கு கொண்டனர். நம் புலவர் சண்முகனாரும் சீரிய பங்கு கொண்டார். தமிழ்ப் புலவர்களை உருவாக்குவதற்காகச் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் பெயரால் கலாசாலை ஒன்று உருவாகியது. அரிய பெரிய தமிழ்நூல்களை வெளியிடும் முயற்சிக்கு அச்சகம் ஒன்று நிறுவப்பெற்றது. பல்லாயிரக் கணக்கில் நூல்களும் ஏட்டுச் சுவடிகளும் சேர்த்து நூலகம் ஒன்று ஆக்கப் பெற்றது. தமிழ் ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிடுமாறு செந்தமிழ் என்னும் பெயரால் திங்களிதழ் ஒன்று தொடங்குவது என்று உறுதிசெய்யப் பெற்றது. இவ்வளவும் சண்முகனார்க்குப் பேரின்பம் பயப்பதாயின. சங்கத் தொடக்க விழாவுக்குத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் புலவர் பெருமக்கள் வந்திருந்தார்கள். அவர்களுள், திருமயிலையிலிருந்து வந்தவரான சண்முகம் பிள்ளை என்பவரும் ஒருவர். நம் சண்முகனார் பெயரும் சண்முகம் பிள்ளை தானே! அதனால், சண்முகம் பிள்ளை என்னும் பெயர் பலருக்கு மயக்கத்தை எழுப்பலாயிற்று. இருவரும் புலமைத் துறையில் ஈடுபட்டவர்கள். ஆதலின் ஒருவரின் வேறு கண்டறியுமாறு பெயரில் தெளிவு இருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் சண்முகனார்க்கு ஏற்பட்டது. அதனால் அப்பொழுதே தம் தந்தை அரசப்ப பிள்ளையின் பெயர்ச் சுருக்கமாக அரசன் என்பதைத் தம் பெயருடன் சேர்த்துக் கொண்டார். சண்முகனார், அரசஞ் சண்முகனார் ஆனார். அதுகாலையில் இவருக்கு வயது முப்பத்து நான்கு. சங்கப் பேரவையில் சண்முகனாரும் பேசினார். அரசஞ் சண்முகன் என்று பெயர் கொண்டிருக்கிறான்! என்ன இறுமாப்பு? என்று பொறாமை வயப்பட்டுப் புழுங்கினோரும், பொருந்தும், இவர் தமிழுக்கும் அரசர் என்னத் தக்கவரே என்று ஒப்பித் தம் அறியாமைக்காக வருந்திக் கொண்டனர். சிலரோ, தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாது விடாப்பிடியாக இருந்தனர். புலவர் சண்முகனார் அரசன் சண்முகன் என்று வைத்துக் கொள்ளாது, அரசஞ் சண்முகன், என்று அமைத்துக் கொண்டது ஏன், என்னும் ஐயம் எழக் கூடும். புணர்கூட்டுண்ட சங்கப் புலவர் பெருமக்கள் பெயர்களை எண்ணிப் பார்க்குங்கால் இவ்வையம் கிளைத்தெழக் காரணம் இல்லையாய் ஒழியும். தொல்காப்பியமாதி நூல்களைத் துருவி யாராய்ந்த சண்முகனாரோ, தம் பெயரினைக் காரணமின்றி வழங்குவார்? பிறர் தந்த பெயரும் அன்றே! இவரே அன்றோ ஆக்கிக் கொண்டார்! அரசன் சண்முகன் எனின் அரசனான சண்முகன் என இரு பெயரொட்டாய் அமையும். அரசஞ் சண்முகன் எனின் அரசனுக்கு மகனாம் சண்முகன் என்று ஆகும். இதனைப் பழம் புலவர்களாம் கொற்றஞ் சாத்தன், கீரஞ்சாத்தன், காப்பியஞ் சேந்தன், அந்துவஞ் செள்ளையார், கீரங்கீரனார், கொற்றங் கொற்றனார், கொற்றங்கீரனார், சேந்தங் கொற்றனார், தாயங் கண்ணனார், சல்லியங் குமரனார், சேந்தங் கண்ணனார், மருதங் கிழார், சேந்தம் பூதன் ஆகியோர் பெயர்களை நோக்கின் தெளிவாகும். இன்னார் மகன் இன்னார் என்பதை இப்பெயர்கள் காட்டி நிற்றல் வெளிப்படை. சண்முகனாரைத் தமிழகம் அரசஞ் சண்முகன் என அழைத்தது. ஆனால் சோழவந்தான் வட்டாரத்தினர்க்குச் சோதிடம் சண்முகம் பிள்ளையாகவே இருந்தார். அரசனா னாலும் தாய்க்குப் பிள்ளைதானே! தமிழ்ச் சங்கம் புதிதாகத் தோன்றியதும் புலவர் குழாத்துடன் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததும், சண்முகானர்க்குப் பேரின்பம் பயப்பதாயின. எனினும் அவ்வின்பம் முளைத்து வந்த பொழுதிலேயே, துன்பமொன்றும் கிளைத்து வந்தது. துன்புள தெனின் அன்றோ சுகமுளது? உயர்நிலைப் பள்ளி வேலையை விட்டு விலகுதல் சண்முகனார் பணிபுரிந்து வந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் தமிழுக்குரிய பெருமை தர மனமற்றவராய் இருந்து வந்தார். அவர் மனநிலை அவர் உரையாலும் செயலாலும் வெளிப்பட்டது. அயல் மொழிக்குத் தரக்கூடிய வாய்ப்பில் ஒரு பங்கேனும் தாய்த் தமிழுக்குத் தர ஒப்பாத தலைமையாசிரியர் நிலைமைக்காக வருந்தினார். இந் நிலைமையிலே அதற்கு முன் தமிழ்ப் பாடத்திற்கு ஒதுக்கியிருந்த நேரத்தையும் குறைத்து விட்டார். இயற்கையாகவே துன்புற்ற நிலைமையிலே இருந்த சண்முகனாரைத் துடிதுடிக்கச் செய்தது இந்நிகழ்ச்சி. தலைமையா சிரியரிடம் சென்று, தாங்கள் செய்த செயல் தவறானது என்று இடித்துக் காட்டினார். அவர் முறையுடன் பதிலளிப்பதாகத் தெரியவில்லை. இவருக்கு அவர் தம் உரையும் செயலும் ஒத்து வரவில்லை. முடிவு என்ன? தானே வந்த வேலையைத் தாமே உதறி விட்டு வெளியேறினார். சென்னைக்குச் செல்லுதல் சோழவந்தானில் சில திங்கள் தங்கியிருந்தார் சண்முகனார். அக்காலத்தே சென்னைக்கு ஒருமுறை சென்றார். அப்பொழுது தவத்திரு. மறைமலையடிகளார் இல்லத்தில் சின்னாள்கள் தங்கியிருந்து செவிச்சுவையும், அவிச் சுவையும் மாந்தினார். அடிகளாரும் சண்முகனாருடன் அளவளாவிப் பழகியும் உரையாடியும் இன்புற்றார். அடிகளாரைச் சண்முகனார் மைத்துனராகக் கொண்டார். அவர்தம் குழந்தையார் நீலா என்னும் நீலாம்பிகையைத் தம் தோளில் சுமந்து இன்புற்றார். வண்டமிழ்ப் புலவர்களோடு பழகும் இன்பத்தினும் வானுலக இன்பம் சீரியதாயின் அதனையும் பார்த்து வருவோம்1 என்று மொழிந்த பழம் புலவர் மெய்யுரையைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார். சண்முகனார் சால்பு ஒருநாள் சண்முகனாரை அடிகளார் தாம் பணி புரிந்து வந்த கிறித்தவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். சண்முகனாருக்கு அக்கல்லூரியிலே வேலை வாங்கித் தரவேண்டும் என்னும் ஆவல் அடிகளாருக்கு உண்டாயிற்று. அதனால் தம் மாணவர் முன்னிலையில் சண்முகனாரை அழைத்துச் சென்று அவர்தம் கல்விமாண்பினை எடுத்துரைத்தார். தாம் சண்முகனாரிடத்துத் தமிழ் கற்காதிருந்துங்கூட இவர் எமக்கு ஆசிரியர் என்று கூறினார். சண்முகனாரை மாணவர் அவையிடைப் பேசுமாறு வேண்டினார். அடிகள் வேண்டுகோட்படி அரிய சில செய்திகளை மாணவர்கள் வியக்குமாறு சண்முகனார் பேசினார். இவர் ஆசிரியராக இங்குவரின் சிறப்பாக இருக்குமே என்று மாணவர்கள் விரும்பியுரைக்குமாறு பேச்சு, பொலிவுடையதாக இருந்தது. அதன்பின் அடிகள், சண்முகனாரைத் தம் கல்லூரித் தலைவராக இருந்த மில்லர் துரைமகனாரிடம் அழைத்துச் சென்றார். இவர் திறமையினை எடுத்துரைத்து கல்லூரியில் வேலை தந்துதவுமாறு வேண்டினார். மில்லர் துரைமகனாரும் அடிகளார் மாட்டுக் கொண்டிருந்த அன்பினால் மறுக்காத வராய் உடனே வேலை தர ஒப்புதல் தந்தார். ஒப்புதல் அளித்தபின், இவருக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றார் அடிகள். இப்பொழுது ஆங்கிலம் தெரியாதது பற்றி ஒன்று மில்லை. இனியேனும் இவர் ஆங்கிலம் கற்றுக்கொள்ள இசைய வேண்டும் என்று கூறினார். சரி அவ்வாறே கற்றுக் கொள்வார் என்றார்அடிகள். ஆனால்உரையாடலைக் கேட்டு அறிந்த சண்முகனார் வேலை ஒன்றே கருதி ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டு விடவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது. இனி ஆங்கிலம் கற்றுக் கொள்ள என்னால் இயலாது. கற்கவும் விருப்பு இல்லை என்று மறுத்துக் கூறினார். இது கட்டாயம் அன்று; வேலையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பின்னர் வாய்ப்புப் போல் செய்து கொள்ளலாம் என்று அடிகள் பன்முறை வற்புறுத்தினார். எனினும் சண்முகனார் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னால் முடியாததை முடியும் என்று ஒப்புக் கொள்ள முடியாது என மறுத்துவிட்டார். சண்முகனார் செம்மை இது! 5. பேராசிரியர் சண்முகனார் சண்முகனார் நுண்மதியையும், அவர் வேலையினின்று விலகிச் சோழவந்தானிலே இருந்து வருவதையும் கேள்வி வழியாக அறிந்தார்தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரைத்தேவர்; சண்முகனாரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார். பாண்டித் துரைத் தேவரை நன்கறிந்து அவர்பால் பேரன்பு கொண்டிருந்த புலவர் சண்முகனார் இவ்வழைப்பினைத் தமிழம்மையின் அழைப்பாகக் கருதிக் கொண்டு மதுரை மாநகருக்கு வந்தார். சங்கத்திற்குச் சென்று தேவரைச் சந்தித்தார். சண்முகனார் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்களுள் ஒருவரானார். சங்கத்தின் தலைமைப் பேராசிரியராகத் திரு நாராயண ஐயங்கார் திகழ்ந்தார். பெரும் புலவர்களாம் ரா. இராகவ ஐயங்கார் மூ. இராகவ ஐயங்கார், மு. ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் சங்கத்தின் பல திறப்பணிகளைக் கவனித்து வந்தனர். சண்முகனார்க்குப் பண்டித வகுப்பு மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லித்தரும் பணி விருப்புக்குரியதாக ஆயிற்று. உயர்நிலைப் பள்ளி அளவினைப் பார்க்கிலும் தமிழ்க் கல்லூரி மாணவர் களுக்குத் தம் ஆராய்ச்சிப் புலமையைக் காட்டிப் பாடம் நடத்த வாய்ப்பு இருந்திருக்கு மல்லவா! எழுத்துப் பணியும் இடையூறும் சண்முகனார் சங்கப் பேராசிரியப் பணி ஏற்றவுடனே முன்னர்த் தாம் எழுத உறுதி செய்திருந்த தொல்காப்பிய உரையை எழுதி முடிக்க இதுவே தக்க சமயம் என நினைத்தார். அந்நினைவின் படியே சுபகிருது யாண்டு பங்குனித் திங்கள் உத்தர நாளில்(14-3-1903) தொடங்கினார். ஆனால் விரைந்து எழுதி முடிக்க முடியவில்லை. நோய் பெரிதும் வாட்டத் தொடங்கிற்று. இதனைச் சண்முகனார், இடை இடையுற்றுக் கிடைகொளச் செய்த பிணியினாலும் அணி அணியாக வந்து தடைபல செய்த மிடியெனும் படையினாலும் இடையூறு நேர்ந்தமையின் இது பொழுது முடிந்தன பாயிரமும், நூன்மரபும், மொழிமரபும் என மூன்றே. பிறப்பியல் எழுதப்படுகின்றது. என்று எழுதுகின்றார். 1903 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களிலே தொடங்கப் பெற்ற உரை 1905 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் வரை மூன்று பகுதியளவுடன் நின்றது. ஏன்? படுக்கையில் கிடத்திய கொடு நோய்! படைகளைப் போல வரிசை வரிசையாக வந்து தாக்கிக் கொண்டிருந்த வறுமைப் போர்! - இவை போதாவா? போதாவென்று, புலவர்கள் செய்த கொடுந்துயரைக் கேட்போம். இங்ஙனம் எழுதி வருகின்ற காலை நண்பர் சிலர் என்மருங்கு உற்று, முன் உரை இருப்பப் புதியதாகிய நின் உரை உலகங் கொள்ளாது,. ஆகலின் இம் முயற்சி கைவிடுக எனக் கூறினாரும் உளர். முன் உரையாகிய இளம்பூரணம் இருப்பப் பின்னரும் பலர் உரை செயற்குக் காரணம் என்னை எனவும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவெனப் பொதுமறை கூறிற்று அன்றி முன் உளதாயின் கொள்ளுக, பின்னுளதாயின் தள்ளுக என்று கூறிற்று இன்றே எனவும் அதனால் உலகம் முன் எனப் பின் என எண்ணாது முதனூற் கருத்தொடு முரணாகா வழிக் கொள்ளும், முரணாய வழித் தள்ளும் எனவும் அவர்க்கு இறுத்து அவர் உடன்பாடும் பெற்றேன். அவருள் இலக்கணம் என்று பெயருங் கேட்டு அறியாதார் சிலர், எமக்குக் காட்டி நன்றென யாங் கொண்ட பின்னரே எழுதல் வேண்டும் என யான் கண்ணீர்விட்டு அழுதல் செய்யுமாறு துன்புறுத்தி னாரும் உளர். அந்தோ! அவர்கட்கு எவ்வாறு உணர்த்தல் கூடும்? உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தேயன்றோ? அம்மட்டோடு ஒழியாமல்அவர் பின்னுஞ் செற்றங் கொண்டு நிந்தை பல கூறி இன்னுந் தீங்கிழைப்பான் எண்ணித் திரிகின்றனர். நன்றல்ல தன்றே மறப்பது நன்றாகலின் யான் அவர் பெயரை யாண்டும் உரையேன். அதுவும் ஒரு நன்மை என்று கண்டே அவரையும் உதவி செய்தாராகவே மனத்துட் கொண்டேன். சண்முகனார்க்குத் தமிழறிஞர் தொல்லை எல்லை இன்றிப் பெருகிய இவ்வமயத்தே நோய்த்தொல்லையும் முதிர்ந்து எழுந்தது. ஐயோ! கொடுமை! தம் நிலையை நெஞ்சந் துடிக்க - நெட்டுயிர்ப்பு வாங்க - அவரே எழுதுகின்றார்: முன்னரேயுள்ள நோய்முற்றி வயிற்றினுள் நாபியின் கீழ்க் கழலையொப்பத்திரண்டு இரு மலமும் வெளிப் படாவண்ணம் தடுத்து ஆவி போக்க முயன்றது. அக்காலைப் பல சுதேச மருத்துவரிடத்தும் பல ஆங்கில மருத்துவரிடத்தும் சென்று பிணிதீர்த்துக் காத்தல் வேண்டுமெனப் பெரிதும் வேண்டினேன். அவரெல்லாரும் அந்நோய், கருவி கொண்டு சேதிக்கற் பாற்று என்றும் அதுவும் முற்றிய படியால்இனிச் செய்யின் உயிர்க்கேடு செய்யும் என்றும் சொல்லினர். பின்னர்ப் பிறநாடு சென்றாயினும் பிணி தீர்ப்பான் கருதி, யான் அக்காலைச் சேதுபதி கலா சாலையில் கற்பிக்கும் தொழில் பெற்றிருந் தமையால், மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவரும் பாலவனத்தம் அரசரும், உத்தம குணமேருவும், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை எனக் கொண்ட பெருவள்ளலு மாகிய உயர்திரு. பாண்டித்துரைத்தேவர் அவர்களைக் கண்டு நடந்தன உரைத்தேன். உடனே அவர்கள் கலாசாலையில் யாம் பெற்று வந்த ஊதியத்தை ஓராண்டுவரை வேலையின்றிப் பெறுமாறு ஆணை செய்து அளித்ததூஉம் அன்றி இருநூறு வெண் பொற்காசும் பரிசிலாக அளித்தார்கள். அவர்கள் செய்த பேருதவியை யான் என்றும் மறவேன். பின்னர்ப் புதுக்கோட்டை மருங்குள்ள ஆலங்குடி சென்று சுதேச மருத்துவ நண்பர் ஒருவரிடத்து மருந்துண்டு வருகாலை நோய் தணியாது பின்னும் பெருகி ஆவி அகத்ததோ புறத்ததோ என்று ஐயுறு மாறு கிடத்திய அளவில், அதன் முன்னர் ஒருகாலத்தும் யான் கண்டுங் கேட்டும் அறியாத வரும் ஆங்கில வைத்திய கலா நிபுணரும் இன்றும் ஆலங்குடியில் புதுக்கோட்டைத் தமிழ் நாட்டரசரது வைத்திய சாலையில் உத்தியோகம் பெற்றிருப்பவரும் இரக்கமே ஓருருக்கொண்டால் அனையாருமாகிய உயர்திரு. வேணு கோபாலநாயுடு அவர்கள் யான் படும் பாட்டைத் தாமே கேள்வியுற்று யான் அழையாதே என் மருங்கெய்திப் பன்மருந்துதவிச் சிற்சில உபாயத்தால் சின்னாளில் நடையுறச் செய்து நோயளவு தெரிந்து, இந்நோய் என்னால் போக்கப் படுவது அன்றாகலின் தஞ்சை மாவட்ட மருத்துவர் லெப்டி னென்ட் கர்னல், எச்.எம். அக்கீம் ஐ. எம் எஃச். துரையவர்கள் சமூகத்தில் தெரிவித்து அவர்களால்குணமுறுக என வற்புறுத்திச் செலவிற்காக ஐம்பது வெண் பொற்காசும் பரிசி லளித்துத் தஞ்சையிலுய்த்தார்கள். mt®fŸ brŒah k‰ brŒjcjÉ¡F itafK« thdfK« M‰wš mÇj‹nwh! பின்னர்த் தஞ்சை சென்று ஆங்கில வைத்திய கலா நிபுணர்களாகிய உயர்திரு. மல்லன்சு அவர்கள், உயர்திரு. முத்துசாமிநாடார் அவர்கள் இவ்விருவர் சகாயத்தால் அத்துரையவர்களைக் கண்டு என்பரிவு சொல்லி வேண்டக் கருணையங்கடலாகிய அத்துரையவர்கள் உடனே பிணிதீர்ப்பான் உறுதி கூறி அவ்வாறே மும்மதிக் கொருகால் மூன்று முறை கருவி கொண்டு சேதித்து அந்நோய் முற்றத் தீர்த்து என்னுயிரை எனக்கே பரிசிலாக அளித்துப் பேருதவி புரிந்தார்கள். அவர்களால் அன்றோ நீங்கு நிலையிலிருந்த என்னுடல் இன்றும் உளதாயிற்று. இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையும் தாயும் ஆயினார், அத்துரையவர்களே. முப்பதைந்தாம் வயது நிரம்பு முன்னரே சண்முகனார் பட்ட முந்திய அவலங்கள் இவை! சண்முகனார்பெற்றிருந்த பேரறிவு நோக்கி வியப்பதா? அவர் பட்டழுந்திய அல்லல்களை எண்ணித் துயருறுவதா? நாள்தோறும் உயிரை அணு அணுவாகப் போக்கிக் கொண்டிருந்த கொடுமைக் கிடையிலும் உலக நலங் கருதிப் புத்துரை கண்டெழுதிய உதவிச் செயலை நினைத்து வாழ்த்துவதா? நூல் வெளியீடு சண்முகனார் தொல்காப்பியத்திற்கு விருத்தியுரை எழுதிக் கொண்டுவருவதை அரிமளநகரில் வாழ்ந்த தவத்திரு. சிவானந்த சற்குருநாத சுவாமிகள் என்பார் அறிந்து, சண்முகனாரை அழைத்து விரைவில் உரையை வெளியிடுமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் நம் சண்முகனாரோ, நூல்முழுமையும் எழுதிமுடித்து அதன் பின்னரே வெளியிடுமாறு கருதியிருந்தார். சுவாமிகளோ யாக்கை இளமை முதலாயின நிலையின்மையின் எழுத எழுத ஓரோர் இயலாக வெளியிடலே தக்கது என்று வற்புறுத்தி உரையை அச்சிட்டு முடிக்குமாறும் கட்டளை யிட்டார். இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என்னும் ஏக்கத்திலே நலிவுடன் நாளைக் கழித்துக் கொண்டு வரும் சண்முகனார் நூல்வெளியிட யாது செய்வார்? சுவாமிகளே உரைநூல் வெளியிடுவதற்குரிய அளவில் பொருள் கிடைக்குமாறு செய்தற்குச் சிந்தித்தார்கள். அரிமள நகர வணிகப் பெருமக்களை அழைத்து மனமுவந்து நன்கொடை வழங்குமாறு கோரினார்.சுவாமிகளின் கட்டளையை ஏற்ற வணிகப் பெருமக்கள் 861 வெண்பொற் காசுகள் உவந்தளித்துச் சண்முகனார் பணியினையும் வாழ்த்தி அனுப்பிவைத்தனர். தாம் அதுகாறும் எழுதி முடித்திருந்த பகுதிகளை வெளியிடுமாறு கருதி குரோதி வருடம் தைமாதம் (1905 சனவரி) தஞ்சைக்குச் சென்றார்; அச்சிடும் வேலையும் தொடங்கினார். வேலை தொடங்கிய சின்னாட்களில்சண்முகனார்க்குக் காய்ச்சல்கண்டது. உணவு நின்றது; படுக்கையாகி விட்டார். பின் என்ன! அச்சிடும்பணியும் படுத்துக் கொண்டது. சண்முகனார் நண்பரும் அறிஞரும்வள்ளலுமான அரித்து வார மங்கலம் இரகுநாத ராசாளியாரவர்கள் சண்முகனாரைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்று பெருந்தகை கொண்டு, அருஞ்செலவு செய்து பிணிதீர்த்தார். நூல் வேலையினையும் தொடங்கிப் பதிப்பித்து முடித்தார். இவ்வாறாக 1905 ஆம் ஆண்டிலே தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிர விருத்தி வெளிவந்தது. இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையுந் தாயு மாயினார். அத்துரையவர்களே என்று தஞ்சை மாவட்ட மருத்துவர் அக்கீம் துரையவர்களைப் பாராட்டினார் அல்லவா சண்முகனார்! அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்று நிறுவுமாறு கருதினார். அவ்வாறே, தொல்காப்பியச் சண்முகவிருத்தியை நினைவுச் சின்னமாக்கி வாழ்வுதந்த பெருமகனுக்கு அழியா வாழ்வளித்தார். சண்முகவிருத்தி வெளிவந்த பின்னர் தலையாய புலவர் சிலர் சண்முகனாரைப் பெருக மதித்துப் போற்றினர். ஆராய்ச்சித் திறத்தைப் பாராட்டினர்; தேடிவந்து பழகினர்; ஆனால் நெஞ்சக் காழ்ப்புடைய சிலர் பேச்சாலும் எழுத்தாலும் தாக்குவதையே தம் கடமையாகக் கொண்டுவிட்டனர். தாக்குவதிலும் அறத்தின் பாற்பட்டு நின்று வாதிக்காமல் வசைபாடுவது ஒன்றே கொண்டனர். புல்லிய சொற்களால் தாக்கித் தம்புன்மை ஒன்றையே நிலையாட்டினர். சண்முகனார். மறுப்புக்கு மறுப்புக் கூறி வாயடக்கினர். என்றாலும், வெறிகொண்ட அவர்களை அடக்குவது எளிதாக இல்லை. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க், குளித்தானைத் தீத்துரீஇ யற்று1 என்னும் பொய்யா மொழியின் மெய்நிலை கண்டமையே பயனாயிற்று. நாவலர் பாரதியார் நட்பு சண்முக விருத்தி வெளிவந்த காலையிலே மாறா அன்புக்கு ஆட்பட்டவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஒரு பெரு நாவலர். அவர் கணக்காயர், டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் ஆவர். நாவலர் தூத்துக்குடியிலிருந்து செட்டிநாட்டுப் பகுதிக்கு வழக்குத் தொழில் காரணமாகப் போவதுண்டு. அப்பொழுது களிலெல்லாம் மதுரையில் தங்க நேரின், தமிழ்ச் சங்கம் சென்று புலவர் பெரு மக்களுடன் உவந்து அளவளாவுவார். அச் சமயங்களிலேயே நம் சண்முகனாரின் அறிவாராய்ச்சித் திறங்களிலே ஈடுபட்டு இன்புற்றதுண்டு. ஆங்கில மொழி வல்லுநரும், தமிழ்ப புலவரும், வழக்கறிஞருமான பாரதியார் அன்பிலே தம்மை மறந்து ஒன்றி நிலைத்ததும் உண்டு. நாவலர் பாரதியாரும் சண்முகனாரும் முதன்முதல், சங்கத்தில் நூல் பரிசோதகராகவும், நூல்வெளியீட்டாளராகவும் இருந்த மு. ரா. கந்தசாமிக் கவிராயர் வீட்டிலே சந்தித்தனர். கவிராயர் குடும்பம் தமிழ்ப் புலமையில் தலையோங்கி நின்ற குடும்பமாகும். வாழையடி வாழையாகப் புலமைச் செல்வர் எழுவர் பிறந்து திகழ்ந்தோங்கிய குடும்பம் அது. இக்குடும்பத்தினர் பேரன்புக்கு உரியவராக இருந்தது சண்முகனார் புலமைநிறை விற்கோர் துணை எனலாம். கவிராயர் வீட்டிலே சண்முகனாரைந் சந்தித்தது குறித்து நாவலர் எழுதுகின்றார். மு. ரா. கந்தசாமிக் கவிராயர் என்பவர் ஆசுகவி; மதுரமான கவிகளை உண்டுபண்ணும் ஆற்றல் உடையவர். மதுரையிலுள்ள அவர் வீட்டிலே ஓர் ஆசிரியரைக் கண்டேன். அவரே அரசஞ் சண்முகனார். அவருடன் உரையாடியபோது என் வாயிலிருந்து தொல்காப்பிய நூற்பாக்களும் வெளிவந்தன. இதுகண்ட ஆசிரியர் சண்முகனார் என்னைப் பார்த்து, இந்தக் காலத்திலே ஆங்கிலம் படித்த வழக்கறிஞர் கூடத் தமிழில் விருப்பமுடையவராக இருப்பது வியத்தற் குரியதே என்றார். அன்றுமுதல் அவருடன் தொடர்பு கொள்ளலானேன். அவர் மிகவும் அழுக்கு வேட்டியுடன் திண்ணையில் படுத்துக் கொண்டிருப்பார். அவருடன் பேசுவேன்; இலக்கண இலக்கியங்களை நன்றாக என்னிடம் எடுத்துக் கொட்டுவார். பணத்தை மதியாது இருப்பார். பணத்திற்காக யாரையும் மதிக்கமாட்டார். அவரது நிலையைக் கண்டால் வித்துவான் என்று அவரைச் சொல்ல முடியாது. அவரது மதி நுட்பத்தையும் பண்பையும் எடைபோட்டால் எது பெரியது என்று கூறமுடியாது. வெள்ளை உள்ளம் உடையவர். மதிநுட்பத்தையும் பண்பையும் எடைபோட்டால் எது பெரியது என்று கூறமுடியாது. வெள்ளை உள்ளம் உடையவர். மதிநுட்பத்தோடு தொல்காப்பிய நூற்பாக்களைக் கற்ற பெரியார். வரையறையின்றி எல்லோருடனும் குழந்தைபோலப் பேசிப்பழகுவார். அன்பே உருவாகக் கொண்ட அவரிடம் வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் பழகி மகிழ்வேன். சண்முகனாரை, இலக்கணக் கடலனார் சண்முகனார் என்றும், நுண் மதி நாவலர் சண்முகம் பிள்ளை என்றும் வாய்ப்புழி எல்லாம் நாவலர் உரைப்பது வழக்கம். நாவலர், மறந்தும் புனைந்துரை கூற அறியாதவர்; அவர்பாராட்டுப் பெற்றமை சண்முகனார் உண்மைப் பண்பாலும், நுண்ணிய திறத்தாலும் அன்றி வேறொன்றால் அன்றாம். சண்முகனாரது தொல்காப்பியப் புத்துரைகண்டு உள்ளம் உவந்து நேரடியாகப் பாராடடுத் தெரிவித்த தொல்காப்பியப் புலமையாளர்களுள் தலையாயவர் நாவலரே எனின் மிகையன்று. பின்னை நாளில் சண்முகனாரைப்போலவே, நாவலர்தாமும் தொல்காப்பியப் பொருட்படலத்திற் சில இயல்களுக்குப் புத்துரை கண்டமையும் குறிப்பிடத் தக்கது. தொல்காப்பியப் பேராசான் இருமொழிப் பெரும்புலவராக விளங்கிய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் சண்முகனாரைத் தம் இலக்கணப் பேராசிரியராகக் கொண்டார். தொல்காப்பியப் பாடங் கேட்டார். ஆராய்ச்சி செய்தார். சண்முகனார்க்குப் பண்டித மணியின் நுண்ணறிவும் கூர்த்த மதியும் இன்பம் பயப்பனவாயின. மாணவ நிலையிற் கொள்ளாது நண்பரெனக் கொண்டார். வடமொழி தென்மொழிப் புலமையையும் இலக்கிய ஆராய்ச்சி வன்மையையுங் கருதி, மகாவித்துவான் கதிரேசச் செட்டியார் என்று சண்முகனார் குறிப்பிட்டார். மாணவ நிலையில் வந்தோரின் கூரறிவுநோக்கி மதித்தொழுகும் ஆசிரியர் எத்துணையர்? சண்முகனார் சிறப்புக்கு மேலும் சிறப்பளிப்பதன்றோ இப்பண்பு? பண்டிதமணியுடன் மகிபாலன்பட்டிக்குச் சண்முகனார் பன்முறை போனார்; பன்னாட்கள் தங்கினார்; கல்வியும் செல்வமும் ஒரு நிலையில் பெருகியிருந்த பண்டிதமணியின் அன்பில் மூழ்கி யிருந்தார். இச்சந்திப்புகள் இருவருக்கும் பேரின்பமும் பெரும் பயனும் உண்டாக்கின. கந்தசாமிக் கவிராயர் சண்முகனார் சங்கக் கலாசாலைக்கு வந்த காலந்தொட்டுக் கந்தசாமிக் கவிராயர் உற்ற நண்பரானார். இவர்கள் அன்பு வேற்றுமையற்ற உடன்பிறப்பாளர் என்னும் நிலையைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. தருவளர்சனகைப் பதியும்என் உளமும் சார்ந்துவாழ் சண்முகன் நாமத்தொரு பெரும் புலவன் என்று சண்முகனாரை உள்ளத்தே கொண்டொழுகிய உயிரன்பை உரையால் எப்படிக் கட்டுவது! சண்முகனார் முட்டுப் பாடுற்ற நேரங்களிலெல்லாம் கவிராயர் முன்வந்து பொருளுதவி செய்ததுண்டு. செல்வப் பொருள் கொண்டும்புலவரைப் புலவர் போற்றி வாழ்தல் உண்டு என்பது வரலாற்றில் காணற்கு அரிய செயல் அல்லவா! புகழ் பரவுதல் சண்முகனார் புகழ் மேலும் மேலும் பரவத் தொடங்கியது. ஆராய்ச்சி நுண்மையும் பலரால் போற்றப்பட்டது. இவர்கண்ட தொல்காப்பிய, திருக்குறள் புத்துரைகளைக் கேட்குமாறு கருதிய அன்பர் பலர்அவரவர் ஊர்கட்கு அழைத்துப் பேசச்செய்து பெருமைப்படுத்தினர். இவர் ஆராய்ச்சியுரைகளை மு. ரா. கந்தசாமிக் கவிராயர் நடத்திவந்த விவேகபானு இதழும், சி.வை. தாமோதரம் பிள்ளை நடத்திவந்த ஞானசித்தி இதழும், மறைமலையடிகளார் நடத்திவந்தஞானசாகரம் இதழும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்று வெளிவந்த செந்தமிழ் இதழும் விருப்புடன் வெளியிட்டுப் பெருமையுற்றன. ஆராய்ச்சியுரைகள் செய்தித் தாள்களின் வழியாக வெளிவரத் தொடங்கியவுடன் சண்முகனாரைப் போற்றுவோரும். தூற்றுவோரும் பலர் பலர் ஆயினர். போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோரும் பலர் பலர் ஆயினர். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்று பொறுமையுடன் தம் கடப்பாட்டினை வழுவாது செய்துகொண்டு வந்தார். இடைஇடையே சிலநூல்களும் இயற்றினார். சண்முகனார், முன்னவர் பின்னவர் என்று காலவேறுபாடு கொண்டு புலவர்களை மதித்தலை அறியாதவர். புலமை ஒன்றே புலவரை மதித்தற்குரிய அளவுகோல் ஆகும். அன்றிக் காலம் ஆகமுடியாது என்னும் தெளிவு கொண்டவர். இதனைத் தெளிய அறியாத சிலருக்குச், சண்முகனார், புலவரை மதித்தலை அறியாதவர் என்னுங் கருத்து நிறைந்திருந்தது. அதுமறைந் தொழியுமாறு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 26-5-1906 இல் உ.வே. சாமிநாதையர் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது மறைமலையடிகளார் தாம் எழுதிய பட்டினப் பாலைப் புத்துரையைப்பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். இதன்பின் தம்மை அழைக்காதிருந்தும் கூடச் சண்முகனார் எழுந்து சென்று அடிகள் பேச்சின் மாண்பையும் உரைச் சிறப்பையும் உள்ளது உள்ளவாறு புகழ்ந்து பாராட்டினார். உண்மைப் புலமைக்குத் தலைவணங்காதவன் புலவன் அல்லன்; போலிப் புலமைக்குத் தலைவணங்குபவனும் புலவன் அல்லன் என்று உரத்த கையொலிக் கிடையே தம் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் குறைகூறி வந்த சில புலவர்கள் வாயடங்கிப் பேயினர். குற்றம் கூறுதலே குறி என்று கொண்டு விட்டால் குற்றம் கூறவாமுடியாது? வள்ளல் சண்முகனார் கல்விச் செல்வம் கடல்போல் பெருக்கிக் கொண்டிருந்த சண்முகனார்க்குப் பொருட் செல்வம் சிற்றூற்றாகக் கூடத் தோன்றிற்றில்லை. இந்நாளில் அவர்பட்ட பொருள் முட்டுப் பாட்டை நினைய நெஞ்சம் நடுங்கும்; எழுதக்கை நடுங்கும்; சொல்லவோ வாய் நடுங்கும்; ஆனால், புலவன் வறுமை மற்றையோர் வறுமை போலல்லாது பிறர்க்கு இன்பம் பயக்கும் நற்செயலையும் செய்து விடுகின்றது. என்பதையும் மறக்க இயலவில்லை. 1906 ஆம் ஆண்டு மேத்திங்கள் இருபத்து நான்காம் நாள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் விக்டோரியா மண்டபத்தில் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாத்தலைவர் உ.வே. சாமிநாதையர் தம்தலைமையுரையின் போது, மதுரை வாசியாய்த் தமிழ்க் கடலுண்டு அரியபெரிய உரைகள் எழுதி அழியாப் புகழ் நிறுவிய ஆசிரியர் நச்சினார்க் கினியரது உபகாரத்தைக் குறிக்கத்க்க ஓர் அடையாளம் இந்நகரில் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் புலவர், பெருமக்களும், செல்வப் பெருமக்களும் சங்கப் புரவலர் பாண்டித் துரைத்தேவர் அவர்கட்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவர்உரைக்குப்பின், ஆங்கெழுந்தருளியிருந்த பெருஞ் செல்வரும்நல்லுளம் உடையவருமான அரித்து வார மங்கலம், இரகுநாதராசாளி யாரவர்கள் ரூபா 50 நன்கொடை புரிந்தார்கள். வேறு சிலரும் நன்கொடை புரிந்தனர். ரூபா 119 அவ்விடத்திலேயே கைவந்து சேர்ந்தது. ஆங்கிருந்தவர்களுள் உயர் கொடையாளர் எவர்தெரியுமா? அவர்நம் சண்முகனாரே! வறுமைப்புலவரா வள்ளல்ஆனார்! ஆம்! பெருஞ்சித்திரனார் வள்ளல் ஆகவில்லையா! உள்ளம் உடைமை வள்ளன்மை; உள்ளம் இன்மை வறுமை! என்ன கொடை கொடுத்தார் சண்முகனார்? பணத்திற்கு எங்கே போவார்? சந்ததம் தரித்திர ராசனை வணங்கும் அவர், பையிலே பணமா வைத்திருந்தார்? அரசப்பர் தம்மகனுக்குப் போட்டிருந்தார்தங்க வளையல். அது விற்பனைக் கடைக்குப் போகும் நிலையை அதுவரை அடையாது காத்துக்கிடந்திருக்கிறது வள்ளல்சிறப்பினைச் சண்முகனார்க்கு வழங்குவதற்காக! தலைவர் உரைவெளி வந்தவுடனே சண்முகனார் வளையலைக் கழற்றினார். மனமுவந்து அளித்தார்.1 பயன் என்ன? நச்சினார்க்கினியர் நூலகம் சங்கத்தில் உருவாகியது. சண்முகனார் பொருளால் பெருவாழ்வு வாழ்ந்தார் அல்லர். பொருள்வளம் அவர் பெற்றிருந்தால் அவ்வளம் எவ்வெவ் வறங்களாய்த் தலை நின்றிருக்குமோ? வாட்டும் வறுமை இந்நிகழ்ச்சி நடைபெற்று ஏழுதிங்கள் அகன்றது. 18-12-1906 இல் தம் கெழுதகை அன்பர் பண்டிதமணிக்குச் சோழவந்தானி லிருந்து கடிதம் ஒன்று எழுதினார். அதனை நோக்கின் சண்முகனார் கொடைக்கு நிகர் அதுவே என்பது புலனாகும். சோழவந்தான் 18-12-06 அன்புருவாய நண்பரவர்கள் சமூகத்துக்கு வந்தனம். உபய குசலோபரி; இருபாலும் நலனே விளைக. தங்களை விட்டு நீங்கி இவ்விடம் வந்தபின் கார்த்திகை 15ஆம் தேதி வரை சில காரணங்களால் திண்டுக்கல் முதலாய சில விடத்துக் கடிதப்போக்கு வரத்தின்றியும் பிறரறியாதும் வசிக்க நேர்ந்தது. அதனால் தங்களுக்கும் ஏனை யோருக்கும் கடிதம் எழுதுதல் தடையுற்றது. கனம், பொருளாளர் (டிரசரர்) அவர்கள் மூன்று கடிதம் எழுதியும் என்கைக் கெட்டாது பின் இவ்வூர் அஞ்சலதிகாரி (போட் மாடர்) அவர்களால் கேள்வியுற்றுச் சென்ற வாரம் கடிதம் எழுதினேன். இன்று அவர்கள் கடிதம் நேரிலும் பெற்றேன். அவர்கள் கட்டளைப்படி டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளி இவணின்று பிரயாணமாய் மேலூர் மார்க்கம் வருவேன். வந்தால் ஞாயிறு அல்லது திங்கள் மகிபாலன்பட்டியில் தங்களைக் கண்டபின் யாமிருவேமும் கனம் பொருளாளர் அவர்கள் பாற் செல்ல உத்தேசம். தாங்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய் மாலைவரை ஊரிலிருக்கும்படி பிரார்த்திருக்கிறேன். இனி, என் வரலாறு சிறிது கூறுவல்: சுயோதனன் என்னுங் கடனால் ஊக்கமெனும் நாடு இழந்து, சஞ்சலம் என்னும் காட்டில், மதியென்னும் பாஞ்சாலியொடு, பொறியென்னும் பஞ்சவர் கூட்ட மாகிய யான் அலைந்து திரிந்தமை தாங்களும் அறிந்ததொன்றே. இவ்வாறு நிகழ்தலைத் தங்களைப் பரிந்து இங்குற்றபின் ஐப்பசி முதற் கரந்துறைவும் நேரத் திண்டுக்கல் என்னும் விராட நகரத்து ஒரு மகமதியக் கனவானிடந் தங்கி அக்கனவானுக்கு ஏக்கர் 5 உள்ள நன்செயை ரூ. 3058க்குக் கிரயஞ் செய்து, வேறுசில நன்செயை ரூ. 2000க்கு ஒத்தி வைத்துப் பத்திரம் எழுதிக் கரந்துறை விடுத்து வெளிப்பட்டுப் பின் கார்த்திகை முதல் தேதி முதல் 15தேதி வரை உத்தியோக பருவமும் நடத்தினேன். இப்போது 18 நாட்போரும் முடிந்தது. சுயோதனனும் துடைமுறிந்து வீழ்ந்தான். இன்னும் உயிர் போகவில்லை. சீக்கிரம் போம் (ரூ.5000 வரை கடன் தீர்த்தும் இன்னும் ரூ 800 இருத்தலால் இவ்வாறு உருவகப் படுத்தினேன்) போயபின் நூலாராய்ச்சி என்னும் முடிசூட்டும் நடக்கும். நடந்தால் ஊக்க நாட்டாட்சியில் தொல்காப்பியப் பயிர் தழைத் தோங்குதலும் உண்மையே. பிற நேரில். அன்பன், அ. சண்முகன் வளையல் கொடையையும், வறுமைக் கடிதத்தையும் இணைத்து நோக்கிப் பார்ப்பவர்கள் மனத்தில் முல்லைக்குத் தேரீந்த முதிர்வள்ளல் பாரியும், மயிலுக்குப் போர்வையளித்த மாண்புப் பேகனும் தோன்றாமல் போகார். பாண்டுவுக்குத் தருமன் முதல் ஐவரும், திருதராட்டிரனுக்குத் துரியன் முதல் நூற்றுவரும் புதல்வராகத் தோன்றி, சூதாட்டத்தின் காரணத்தால் நாடு நகரிழந்து, பாண்டவர் பாஞ்சாலியுடன் காடுசென்று பன்னீராண்டுகள் வாழ்ந்ததும், ஓராண்டுக் காலம் எவரும் அறியாமல் விராடநகரில் கரந்துறை வாழ்வு செய்ததும், பின்னர்ப் போர் தொடங்கி அது பதினெட்டு நாள்கள் நடைபெற்றுத் துரியன் முதலாயோர் களத்திடை வீழ்ந்துபட்டதும், பாண்டவர் வென்று முடிசூடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் நாடு நலம் பெற்றதும் ஆகிய வரலாறு எவரும் அறிந்ததே. இக்கதையையே தம் வரலாற்றுடன் இணைத்துக் கற்பித்து விட்டார் சண்முகனார். வறுமையையும் வளமாக மாற்றுவது கற்பனையின் விளைவால் தோன்றிய கலைதானே! அன்பர்க்கு உதவுவதே கடனாகக் கொண்ட பண்டிதமணி பலகாலும் உதவினார். அவ்வுதவியால் சண்முகனாரால்பாடு புகழும் பெற்றார். கல்விதனம் மிக்க திரேச னாம்வணிகன் வல்விதனம் எற்கொழித்தான் வள்ளுவரே1 என்று புகழ்ந்து பாடப்பெறும் சிறப்பென்ன எல்லோருக்கும் எளிதில்கிடைக்கக் கூடியதா? ஈழத்திற்குப் பயணம் சண்முகனார்தமிழ்ப்புலமை ஈழம் வரைக்கும் பரவிச் சென்றது. அதனால், இவரை அழைத்துச் சிறப்பிக்கவும், பயன் பெறவும் யாழ்ப்பாணம் வாழ் செந்தமிழ் அன்பர்கள் விரும்பினர். ஈழம் வரும் சண்முகனாரை வரவேற்பதற்காகப் பல ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தனர். புகைவண்டி நிலையத்திலேயே வரவேற்புச் செய்வதற்கும், மாலைகள் அணிவிப்பதற்குமாகப் பெரியோர்சிலர் சென்றிருந்தனர். சண்முகனார்வருவதாக இருந்த வண்டி வந்து சேர்ந்தது. ஆனால் கண்முகனாரை எவரும் கண்டாரல்லர். சண்முகனார் வண்டியை விட்டுக் கீழே இறங்கி எவரையும் எதிர்பார்க்காமல் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு நடந்து பேய்விட்டார். வரவேற்க வந்தவர்கள் நெடுநேரம் காத்திருந்து விட்டு வரவில்லை போலும் என்னும் ஏமாற்றத்துடன் சோர்ந்துபோய், அடுத்த வண்டியை எதிர் நோக்கியிருந்தனர். கூட்டத்திற்குள் நுழைந்துபோய்ச் சண்முகனார், ஓரிடத்தே உட்கார்ந்து கொண்டார். அவரை முன்பு கண்டறிந்தவர் எவரும் அங்கு இல்லை. எனினும் சண்முகனாரைநன்கு கேள்விப்பட்டிருந்த ஒருவருக்கு, இவர் சண்முகனாராக இருக்கலாமோ என்னும் ஐயம் உண்டாயிற்று. அதனால் அடுத்துச் சென்று வணக்கம் செலுத்தி, ஐயா தங்களுக்கு எந்த வூர்? என்று வினாவினார். யாமதுரையோம் என்றார் சண்முகனார். யாம் அது உரையோம் என்றும், யாம் மதுரையோம் என்றும் இரு பொருள்படும் சொற்சிறப்பை அறிந்தவரான அப்புலவர் இவரே சண்முகனார் என்று அறிந்து கொண்டு, வரவேற்க நின்றுகொண்டு இருப்பவர் களை அழைத்துவர ஏற்பாடு செய்தார். சண்முகனாரின் அடக்கமான பண்பு அவையோரை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ் வளர்ச்சி, புதுமுறை ஆய்வு ஆகியன பற்றி விரிவுரை ஆற்றினார். மறுத்துரைக்க முடியாத அளவு மாண்புடையதாக இருந்தது சொற்பொழிவு. அதனால்அறிஞர் பலர் உளமுவந்து பாராட்டினர். முன்னரே இவர்தம் ஆராய்ச்சியுரைகளைப் படித்து, வெறுப்புக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களும் அவையில் இருந்தனர். அவர்களுக்கு இவர்பேச்சு வெதும்புதலை எழுப்பிற்று. ஆனால்முறையொடு வாதிடவும் முடியவில்லை. அமைதியாக இருந்து ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. அதனால்இங்கும் அங்கும் நடந்தும் கூச்சல் எழுப்பியும், விசிறியும் தமது வெறுப்பைக் காட்டினர். அவர்கள் உள்ள நிலையைத் தெள்ளிதின் உணர்ந்த சண்முகனார், இது போலிப் புலமையின் அறிகுறி; அவைக்குரிய நெறிமுறை தெரிவிப்பது தவறாகாது என்று தம் சொற்பொழிவில் பல இடங்களில் சிலேடையாகச் சுட்டிக் காட்டிக் கொண்டு வந்தார். Éá¿¡ bfh©oUªj xUtU¡F¥ glnt©Lbk‹W, ‘fšÉ¡»uf¤â‰F Éa®¡Fkh? என்று கேட்டார். கல்விக் கிரகம் (கல்விக்கு இருப்பிடம்) கல்விக்கிரகம் (கற்சிலை) என்று இச் சொற்றொடர் இருபொருளாகி நகையாக்கியது. ஆடவல்லான் அவை அமர்ந்தான் என்று இருபொருள் பெறக் கூறி, ஆடி அசைந்து நடைபோட்டிருந்தவர்க்குச் சூடு வைத்தார். அமைதி கொண்டது அவை. ஆனால் அவர்கள் வெளியே சென்று சண்முகனாரைப் பற்றி வாளா பறையறைந்து திரிந்தனர். இப் பழிவழிக் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தவர் அம்பலவாண நாவலர் என்பவர் ஆவர். அவர் நல்லபுலமையாளர்; சிவனடியார்; சிந்தனையாளர்; ஆனால், ஒருப்போக்குடையவர், தவறாகவோ சரியாகவோ ஒரு கருத்து அவருக்குப் பட்டுவிட்டது என்றால் - அவ்வளவுதான் - அதனை ஒருநாளும் மாற்றிக் கொள்ளார். சண்முகனார் பழைய உரையாசிரியர்கள் கருத்தை மறுத்துத் தொல்காப்பியம் திருக்குறள் இவற்றுக்கு உரைகண்டார் அல்லவா! பழம்பெரும் ஆசிரியர்களைக் குற்றங்கூற இவர்யார்? அவர்களைக் குற்றங்கூறும் இவருக்கென்ன பெருமை தருவது என்று கருத்துக் கொண்டு விட்டார். முன்னவர்உரையையும், பின்னவர் உரையையும் கண்டு உண்மை காணலன்றோ நேர்மை. வெறியிலே இறங்கியபின் நேர்மைக்கு இடமிருக்குமா? 6. புலவர்மணி சண்முகனார் ஈழப் பயணத்திற்குப் பின்னும் உரைத் தகராறு ஓய்ந்தபாடில்லை. நன்றாக முற்றியது. தொல்காப்பியச் சண்முக விருத்தி 1905 ஆம் ஆண்டு வெளிவந்தது அல்லவா! அன்று தொட்டு மறுத்து வந்த அம்பலவாண நாவலரும், அவர் வயப்பட்டோரும் 80 திங்கள் காலம் ஆராய்ந்து அதன்பின் 1912 ஆம் ஆண்டிலே மறுப்புரை விடுத்தனர். இதற்கு மறுப்பு விடுப்பது சண்முகனார் கடமையாயிற்று. நேரிய மறுப்பெனக் கருதிய வற்றிற்கு நேரிய விடையளித்துச் சாதித்தார். பொறாமை வயப்பட்டெழுந்தபோலியுரையை வாக்கு வன்மையால் தாக்கினார்; புல்லிய உரைகளை எள்ளி நகையாடினார். மறுப்பும் மறுப்புக்கு மறுப்பும் அரசஞ் சண்முக விருத்தி அனுபவத்தீ பிரதிபத்தி முதற்பாகம் என்னுந் தலைப்பில் அம்பலவாண நாவலர் மறுப்புரை எழுதினார். அதற்கு அம்பல வாண நாவலர் போலியுரை மறுப்பு என்னுந் தலைப்பில் நாவலர் மறுப்பு வெளிவந்த ஏழே நாள்களில் எதிர்மறுப்பு விடுத்தார் சண்முகனார். மதுரை, திருஞான சம்பந்த சுவாமிகள் சந்நிதானத்தில் திருவுளக் குறிப்பின் வழி இதனை அச்சிடப் பெற்றது என்று தொடங்கியிருந்தார் நாவலர். சந்நிதானத்தின் என்பது சந்நிதானத்தில் என்றாகி இருக்கும் குற்றத்தை எடுத்துக் காட்டியதுடன், மதுரைமகா சந்நிதானத்திற்கும் கடிதம் எழுதி, தங்கள் திருவுளக் கருத்தின்படி இது வெளியிடப் பெற்றதா? என்று கேட்டார். யாம் அக்கருத்துகள் அனைத்திற்கும் உடன்படேம்; ஆயினும், மறுப்புரை வெளிவந்துளதை அறிவோம் என்று ஏற்றும் ஏற்காமலுமாய்ப் பதிலெழுதி ஓய்ந்தார். அதன்பின் நாவலரது மறுதலைக் கடாக்களுக்குரிய விடைகளை விரித்தெழுதினார். பாயிர விருத்தியில், கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாப் போலப் பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல்இனிது விளங்கும் என்று கூறி, பாயிரத்திற்குக் கொழு உவமம்; கொழு துன்னூசி நுழைதற்கு வழியாக்கலுடைத்து; பாயிரம் நூல் நுழைதற்கு வழியாக் கலுடைத்து என்று விளக்கி, கொழு வென்பது ஊசித் தொளையின் மேலுள்ள கோலினை? துன்னூசி என்பது தைத்தல் தொழில் செய்யும் நூல்கோத்த தொளையையுடைய ஊசியின் காதினை. கொழுவுதலால்கோல் கொழுவெனப் பட்டது என்று விரித்தெழு தியிருந்தார். இதனை மறுக்கும் நாவலர் செருப்புத் தொழிலில் கைதேர்ந்த சீமான் அரசஞ் சண்முகனார் என்று எள்ளி நகையாடியிருந்தார். இதற்குப் பதிலுரைக்க வேண்டுமல்லவா! கொழு துன்னூசியினும் பரியது; துன்னூசி கொழுவினும் சிறியது; கொழு மரப்பிடியுடைத்து என்று வடிவு விளக்கம் செய்து செம்மார்பாற் சென்று நல்லன கூறிக் கேட்கு மாற்றிற் கேட்பின் அவர்மனமிரங்கித் தம் தையலைக் கொண்டு விளக்கு மாற்றின் விளக்கி ஐயமகற்றி மெய்ப்படக் காட்டி விடுவர். ஆங்குச் செல்க என்று எள்ளி நகைத்தார். இம்மறுப்பில் தையல் (மனவி, தைத்தல் தொழில்) விளக்குமாறு (துடைப்பம், விளக்கத் தக்கமுறை) மெய்ப்பட (உடலில்பட, மெய்யாகத் தெளிய) என்னுஞ் சொற்கள் இருபொருட்டாகி இகழ்பட நிற்கின்றவாம். நாவலர்தம் மறப்பில், அது மெய்யுரையா? என்று கேட்க வேண்டியதை அஃது மெய்யுரையா? என்றும் இஃதென் கொலோ என்று கூற வேண்டியதை, இதென்கொலோ என்றும் எழுதியிருந்தார். இதனைச் சண்முகனார்பதப்புணர்ச்சி செய்ய விரும்பிச் சந்தி தெரியாது புகுந்து தடுமாறும் இந்த அம்பலவாணரா முதனூலாய தொல்காப்பிய விவகாரத்தைப் பேசத்தக்கார். அந்தோ பரிதாபம்! தாம் கொண்ட வசைமொழிப் புலமையைத் தாளம் விடாது பாடுகின்றார். வசைமொழிக் குப்பையை வாரி இறைக்கின்றார். அம்மம்ம! இவர் நடிப்பிருந்தவாறு என்கொலோ? எங்று பதில் விடுத்தார். மற்று மோரிடத்தே, இவ்வாறு எந்தக் கடையன் தான் ஓதுவான்; எந்த மடையன் தான் ஓதுவான் என்று அம்பலவாணர் எழுதியிருந்தார். அதற்குச் சண்முகனார் ஈழத்தார் மதிமயங்கித் தப்பறைகின்றார். இவ்வாறறையுந் தப்பினைக் கல்லரும் மதியார் என்று இடித்துக் காட்டினார். நீண்டவோர் வரியினைச் சுட்டிக் காட்டி, இத்தனை இழுப்புடைய அரசஞ் சண்முகனார் என்று போலியுரை புகன்றார் அம்பலவாணர். அரசப்பர் மைந்தர், அம்பலவாணர் எழுதிய ஓர் வரியினைச் சுட்டிக் காட்டி, ஈழத்தார்க்கு ஏனோ இத்தனை பேரழுப்பு என்று மாட்டினார். நன்று கூறினாய் என்று தம் பண்பின்மையை உறுதிப் படுத்தினார் அம்பலவாணர். சண்முகனார் உள்ளங் கொதித்தது. சீசீ! இத்தகையாருடன் என்ன வாதம்? வென்றாலும் தோற்றாலும் பெருமை இன்றே? கல்லாரோடு வாது செய்து வெற்றி பெறலினும் கற்றாரொடு வாது செய்து தோல்வியுறல்நன்றே என்று எழுதினார். அந்தோ! சண்முகனார் பட்ட துயர் பெரிது. மிக மிகப் பெரிது! ஒல்காப்புலமைத் தொல்காப்பியத்தை உளங்கொள ஆய்ந்த வளந்திகழ்புலமையர் என்று பாராட்டிச் சிறப்பிக்க வேண்டியதை விடுத்து பழிதூற்றிக் கொண்டலைந்த இழிதகைமை கழிபேதைமையயோகும். கருத்து என்று தோன்றிற்றோ அன்றேகருத்து வேறுபாடும், மாறுபாடும் தோன்றிற்றாதல் வேண்டும். அதற்காக மனித நிலை மறந்து தாக்குவதும் மறுப்பதும் மனித நிலையாகாது. அம்பலவாண தேசிகரின் அழைப்பு சண்முகனார் சைவ சமயத்தவர்; சமய உணர்ச்சியும் மிகுந்தவர். சைவப் பற்றுக் காரணமாகச் சமயப் பெரியவரே மொழிக்கும் பெரியவர்; அவர் தம் மொழிப் புலமை ஒன்றே வழுவற்றது என்று கொள்வாரல்லர். இக்கோட்பாட்டால்பாயிர விருத்தியில் சிவஞான முனிவர் கூற்றுகளை முப்பத்திரண்டு இடங்களில் மறுத்தெழுதினார். இதனைக் கண்டு மனங்கவன்றார் திருவாவடுதுறை, குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர். சிவஞான முனிவர் அவ்வாதீனத் தலைவருள் ஒருவரல்லரோ? திருவாவடுதுறைக்குச் சண்முகனார் வருமாறு தேசிகரிட மிருந்து அழைப்பு வந்தது. சண்முகனார் உரையை மறுத்து நிறுவ வேண்டும் என்பதே தேசிகர் ஆவல். அழைப்பினை ஏற்றுக்கொண்ட சண்முகனார் ஆவடுதுறை அடைந்தார். விவாதமும் தொடங்கப் பெற்றது. தேசிகரது மறுப்புரைகளுக்கெல்லாம் தகுந்த மறு மொழி கூறித் தங் கொள்கை சரியானதே என நிறுவினார் சண்முகனார். இவர், ஆராய்ச்சிப் பரப்பும் சொல்வன்மையும் தேசிகரைக் கவர்ந்து வயப்படுத்தி விட்டன. அதனால் மன மகிழ்ந்து பகையுணர்ச்சி விடுத்துத் தம் பாராட்டின் அறிகுறியாகப்பட்டாடை ஒன்றினைப் பரிசாக வழங்கினார். தேசிகர் இவ்வாறு உண்மை யுணர்ந்து சண்முகனாரைப் பெருமைப்படுத்தினாலும் அவரைச் சூழ்ந்திருந்தசிலருக்கு இவர் மீதிருந்த காழ்ப்புக் குறைந்த பாடில்லை. வெல்லும் வகையறியாத அவர்கள் கொல்லுவுஞ் சூழ்ந்தனர். ஆனால் தெளிவு கொண்ட தேசிகர் அவர்களைக் கடிந்துரைத்துப் பேறு பெற்றார். சண்முகனாரையும் சில நாள்கள் திருமடத்தில் தங்கியிருக்குமாறு செய்து அளவளாவி இன்புற்றார். அகரம் எதிர்மறைப் பொருட்டு இவ்வாறிருக்கும் போது ஒருநாள் தேசிகர் சண்முகனாரிடம், தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும், தான் தற் புகழ்தல்தகுதி யன்றே என்றிருக்கத் தாங்கள் அரசஞ் சண்முகன் என்று வைத்துக் கொண்டது சரியாகுமா? சண்முகனுக்கும் அரசன் என்று பொருள் படுகின்றது, அல்லவா! என்றார். சண்முகனார் பொறுமையாக, ஆதீனம், அடியேன் கொண்ட கருத்தை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்; அகரம் எதிர்மறைப் பொருட்டன்றோ என்று கூறி, ரசஞ் சண்முகன் முருகன், ரசமற்ற (அ+ரசன்) சண்முகன்யான் என்று விளக்கினார். தேசிகர் மகிழ்ந்தார். பின், அவரிடம் விடை பெற்றுக் கொண்டு ஒரு வண்டியில் பயணமானார். ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் செல்லும் வழியில் ஒரு பெண்மணி எதிரே வந்தாள். அவள் அரைகுறை யானதும் கிழிவுகளை உடையதுமான சீலையைக் கைகளால் அணைத்துப் பிடித்துக்கொண்டு மானத்தைக் காக்குமாறு திண்டாடுவதைக் கண்ணுற்றார். வண்டியை நிறுத்தித் தம் கழுத்தில் கிடந்ததும் தேசிகரால் வழங்கப்பட்டதுமான விலை மதிப்பு மிக்கபட்டாடையை எடுத்து அப்பெண்ணினிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவளோ, வாழ்த்துரைக்கவும் வாய்வராது கண்ணீர் வழியக் கைகூப்பி நின்றாள். வறுமையிலும் வள்ளன்மை உள்ளம் படைத்த பெருஞ் சித்திரனார் ஒருவர் மட்டும் தமிழகத்தில் இருந்தார்அல்லர். சண்முகனார்போன்று எத்தனை எத்தனை பேர்கள் வாழ்ந்தார்களோ? தன் வரலாறு எழுதி வைக்காத தமிழகத்தை நினைத்து வேதனை ஏற்படத்தானே செய்கின்றது! சண்முகனார் ஏழைப் பெண்மணிக்குப் பட்டாடை வழங்கிய செய்தி தேசிகருக்கு எட்டியது. ஏழைக்கு இரங்கிய தன்மைக்காகச் சண்முகனாரைப் பாராட்டினாலும், பரிசுப் பொருளை மதியாமல் நடந்து கொண்டாரே என்ற கவலையும் அவருக்கிருந்தது. சிலநாள்களுக்குள் சண்முகனார், தேசிகர் மனநிலையை அறிந்தார். பிறர் துன்புறுதலை மறந்தும் விரும்பாத சண்முகனார் திருவாவடுதுறைக்குச் சென்று தேசிகரிடம், பெண்ணின் ஏழ்மை நிலையையும், உடை வழங்க வேண்டி ஏற்பட்டதையும் தெளிவாக அவர் கேட்கு முன்னரே கூறினார். தேசிகர் சண்முகனார்உரையை ஏற்றுக் கொண்டார். எனினும் உயரிய பரிசுகளை மதித்துப் போற்றிக் காப்பதே பெருமை, இனியேனும் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி மற்றுமொரு பட்டாடை அளித்துச் சிறப்புடன் அனுப்பிவைத்தார். சன்மார்க்க சங்கம் பண்டிதமணி கதிரேசச் செட்டியார், மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சங்கம் எனவோர், சங்கம் ஏற்படுத்துமாறு விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை அவ்வூர் மக்களைக் கொண்டு செய்து முடித்தார். ஆண்டுதோறும் நடத்திவரும் திருநாவுக்கரசர் குருபூசை விழா 13-5-1909 இல் நடைபெற்றது. அதற்கு மறுநாள் சங்கத்தைத் தொடங்கி விடவேண்டும் என்பது பண்டிதமணி முதலானோர் திட்டம். அதற்கு வாய்ப்பு இருக்குமாறு, குருபூசை விழாவுக்கு அரசஞ் சண்முகனார், மு. ரா. கந்தசாமிக் கவிராயர், கீழைச் செவற்பட்டி வீமகவிராயர், தேவகோட்டை வித்துவான் வேற்கவிராயர், விருதைச் சிவஞான யோகிகள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பண்டித மணிக்குச் சண்முகனார் மீது தணியாப் பற்றும் மதிப்பும் பேறும் உண்டன்றோ! அதனால் தமிழ்மணியாம் சண்முகமணியைக் கொண்டே சன்மார்க்க சங்கத்தைத் தொடங்கிவைக்கச் செய்தார். அப்பொழுது சண்முகனார், நகரத்தார் செய்யும் நற்செயல்களைப் பற்றியும், பண்டித மணியின் பண்பு நலம் பற்றியும், சன்மார்க்க சங்கம் பற்றியும் ஒன்பது பாடல்கள் பாடினார். நகரத்தார் எவ்வாறு நல்லறங்கள் பலசெயினும் நாட்டிற் கல்வி பகரத்தான் பரவாத பான்மைதெரிந் திக்குறையும் பாற்ற நாடி ஒகரத்தார்வேள்பின்னும் வாய்பேசி வணிகர்குலத் துதித்தா லன்ன சிகரத்தார்திகழ்மேலைச் சிவபுரிவாழ் பழனியப்பன் சிந்தித் தானே! செந்தமிழும் ஆரியமும் முற்றவுணர் நுண்மதியான் சீர்த்திச் சிந்து வந்துமிழு மாரி நிகர் வண்மையினான் நற்குணமே வடிவ மானோன் சுந்தரஞ்சேர் மகிபால நகர்வாழுங் கதிரேசச் சுமுக னோடு முந்தவே பலகாலு மாராய்ந்து சபையொன்று முளைப்பித் தானே என்று தம் பாடல்கள் இரண்டில் பழனியப்பரையும் பண்டித மணியையும் பாராட்டியுரைத்தார் சண்முகனார். சன்மார்க்க சங்கம் தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருப்பதையும், புலவர் கல்லூரி நடத்திவருவதையும் தமிழகம் நன்கறியும். இச் சங்கம் தோற்றுவித்தநாள்முதல் நடைபெற்ற பலவிழாக்களில் சண்முகனார் பங்கு கொண்டார். ஆங்கிருந்து தமிழ்த் தொண்டாற்றிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை முதல், தமிழ்ப் பேரறிஞர் பலர் போற்றுதலுக்கும் அன்புக்கும் ஆட்பட்டார் சண்முகனார். இளங்காட்டில் சொற்பொழிவு தஞ்சை மாவட்ட இளங்காட்டில் 14-4-1912 இல் நற்றமிழ்ச் சங்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. சண்முகனார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவருடன் பண்டித மணி, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள் ஆய பெரும்புலவர் பங்குகொண்டனர். கூட்டங் கூடுவதற்கு முன்னர்ச் சிலர், நன்னூலே யாயின் குற்றங் கூறித் திரிவது மன்னிக்க முடியாத குற்றமேயாகும். அது நன்னூலா அன்றா என்பதைத் தொல்காப்பியமாய முன்னூலும் நன்னூலாய பின்னூலும் ஆய்ந்தோரே கூறற்குரியர். நன்னூலையும் வரன் முறையாக் கற்றறியார், நன்னூல்இதுவே என்று தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடினால் மட்டும் நன்னூல் ஆகிவிடாது என்று கூறினார். பின், வட்டத்திலும், நன்னூல் என்னும் இலவம் பஞ்சானது தருக்கம் என்னும் சூறாவளியின் கட்பட்டு நிலை பேறின்றி அலையாடுகின்றது என்று பேசினார். உண்மை கூறலொன்றே சண்முகனார் விரும்புவது. மற்றொன்றை அன்று! தமிழ் லெக்சிகன் ஆசிரியர் சண்முகனார் சங்கக் கலாசாலைப் பணியினின்று உடல்நிலைகாரணமாக விரைவில் ஓய்வு கொண்டார். ஆயினும் அவர் ஆராய்ச்சிக்கு மட்டும் ஓய்வு ஏற்படவில்லை. இயற்கைச் சிந்தனையைத் தடுக்க இயலுமா? சோழவந்தானில் இருந்து கொண்டு அமைதியாகத் தமிழ்த் தொண்டாற்றிவந்தார். இச் சமயத்தே மதுரையில் தமிழ்லெக்சிகன் அகராதி தயாரிக்கும் பணியில்மறைத்திரு. சாண்ட்லர்என்பார் ஈடுபட்டிருந்தார். அவர் சண்முகனார்தமிழறிவு மாண்பினை அறிவார் ஆகலின் லெக்சிகன் ஆசிரியராக நியமித்தார். அகராதி வெளியிடும் பணியில்அயராது பாடுபட்டார் சண்முகனார். எனினும் தொடர்ந்து பணிபுரிய உடல்நிலை இடந்தரவில்லை. என்ன செய்வது? அவ்வேலையையும் விரைவில் விடுத்துச் சோழவந்தானை அடைந்தார். தேசிகருக்கு இரங்கல் சண்முகனாருக்கு அகவை நாற்பத்தாறாகும் போது, இவர்தம் தொடக்க நிலைப் பேராசிரியர் அழகர்சாமி தேசிகருக்கு அகவை எண்பத்தாறாயிற்று. அதுகாறும் கல்வித் தொண்டு புரிந்துவந்த அப்பெருந்தகை இயற்கை எய்தினார். அந்நிகழ்ச்சி சண்முகனாரைப் பெருந் துயரத்தில் ஆழ்த்தியது. ஆசிரியர் மறைவுக்காகக் கசிந்தழுது நொந்தார். புலவன் புலம்பல் பொய்யாய்ப் போகுமா? அரிய கவிகளாய் உருவெடுத்தது. திருமாது கேள்வனடி மறவாத சிந்தையன் சிவகங்கை நகரினின்று திரைகொண்டு மணிமுன்றில் எறிவையை அருகோங்கு செயசோழ வந்தானிடை வருமா தவக்குடியில்வருமா தவச்சிறார் மனத்திரு ளகற்றுகுரவன் மாநிபுண மேருவேங் கடசாமி செய்தவ வடிவெடுத் தெனவுதித்தோன் பெருமான் சிதம்பரவி நாயகன் கோயிலமர் பேசரிய ஞானபானு பீடுற்ற வடுகர்குல தீபமனை யானெய்து பெயரழகர் சாமியென்போன் திருமேவும் எமதுகுல வேளாளர் தேவெனச் சிந்தைவைத் தேத்து தூயான் திறமாக எண்பதுடன் ஆறாவ தகவையில் திகழ்முத்தி பெற்றானரோ! என்பது ஆசிரயருக்காகச் சண்முகனார் பாடிய கையறுநிலைச் செய்யுட்களுள் ஒன்றாம். சவமுகம் பிள்ளை தேசிகருக்குக் கையறு நிலை பாடிய பின் பதின்மூன்று திங்கள் உருண்டன. தம் வீட்டுத் திண்ணையில்சண்முகனார் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது தேடிவந்தது ஒருகடிதம். வித்துவான் அ. சவமுகம் பிள்ளை, தெற்குத் தெரு, சோழவந்தான் என்பது முகவரி. சண்முகம் பிள்ளையின் பெயர் சவமுகம் பிள்ளையாக இருந்தது. எழுதத் தெரியாதவர் - அரைகுறைப் படிப்பாளர் - எழுதிய கடிதமா? அன்று! அன்று! பாவேந்தராய் இலங்கியோர் பரம்பரையிலே வந்தவரும், ஆராய்ச்சி ஒன்றே தம் தொழிலாகக் கொண்டிருந்தவரும், சண்முகனார் மாட்டு உயிர் நண்புடையராய், மதுரைத் தமிழ்ச் சங்க நூலாய்வாளராய், வெளியீட்டாளராய், விவேக பானு இதழாசிரியராய் இலங்கிய வருமான மு. ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதியனுப்பிய கடிதம் தான் அது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது மெய்யாயிற்று. இல்லையேல் சண்முகம், சவமுகம் ஆகுமா? கடிதங் கண்ட சண்முகனார்அதிர்ச்சி அடைந்தார். புலவன் உரை பொய்க்காது என்பது அவர் கருத்தாயிற்று. மீண்டும் மீண்டும் முகவரியைப் படித்துக் கொண்டே இன்னுமொரு முறை முகம் வழிக்க வேண்டும் என்று சவரம் செய்வோரிடம் கூறினார். ஏனையா! இப்படி, ஒருநாளும் நீங்கள் சொன்னது இல்லையே. என் வேலை திருத்தமாக இல்லையா? என்று கேட்டார். உன் வேலை திருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதோபார்! இக் கடிதம் எழுதியவர்வேலை திருத்தமாக இல்லை. திருத்தமாக எழுதத்தெரியாதவரும் அல்லர். பின் வர இருப்பதை அறியாமலே அவர் எழுதிவிட்டார். யான் இன்னொரு முறை முகத்தை வழித்துக்கொள்ளுமாறு இருக்கப் போவது இல்லை. நீ இனி என் சவ முகத்திற்குத்தான் வழிக்க வேண்டிவரும். அதனால் இப்பொழுதே இன்னொரு முறை இந்தச் சண்முகத்திற்கு வழித்துவிடு என்றார். வினைஞர் என்னென்னவோ கூறித் தேற்றினார். அறியாதவரா சண்முகனார் - தேற்றிவிட, மீண்டும் முகத்தை வழித்து விட்டுக் கவலையுடன் சென்றார் வினைஞர். தாள் எழுத்தே தலையெழுத்து ஆயது முப்பது நாட்கள் கழியவில்லை. அந்தோ! சண்முகனார் படுத்த படுக்கையானார், எல்லாம் துறந்திருந்த சிவப்பிரகாச அடிகளையும் துடிக்குமாறு செய்தது சண்முகனார் படுக்கை. மாணவர் நலமுற மருந்து வகைகளைத் தேடித் தேடிக் கொணர்ந்தார் அடிகள். இரவு பகல்என்று பாராது மருத்து வத்திலே தோய்ந்திருந்தார். ஒருநாள் காலையில் மருந்தும் கையுமாய்த் தெரு வழியே வந்து கொண்டிருந்தார் அடிகள். அப்பொழுது கேள்விப்பட்டார். சண்முகனார் மண்ணுலக வாழ்வை நீத்தார் என்று அந்தோ! அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். சண்முகனார் இறந்திருக்க மாட்டார் என்பது அவர் எண்ணம். ஆமாம்! சண்முகனார் காலை இளஞாயிறுதாம். கடும்பகல் எல்லை கூட எய்தாதவர் தாம். எனினும் இருட்படலம் சூழ்ந்து கொண்டது. அடிகள் கண்கள் குளங்கள் ஆயின. கன்னங்கள் வடிகால்கள் ஆயின. துறவிநிலை இவ்வாறாயின் மற்றையோர்நிலை யாதாக இருக்கும்? அருமை அருமையான ஆராய்ச்சிகளைச் செய்து வந்த நுண்ணறிவு அடங்கி விட்டது! கேட்டார் வியக்கக் கேளாரும் நயக்க உரைக்கும் நா அமைந்து விட்டது; வாய் ஒடுங்கி விட்டது. எத்தனை எத்தனை எதிர்ப்புரை கிளம்பினும் அலுப்புச் சலிப்பு இன்றி எழுதி எழுதிக் குவித்த கை ஓய்ந்து விட்டது. தமிழ் மடந்தை வான்துயர்கூர, அண்ணல் சண்முகனார் 1915 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினொன்றாம் நாள் (ஆனந்தவருடம் மார்கழி மாதம் 28 தேதி) புகழ்வடிவானார். சண்முகனார் மறைந்த செய்தி கேட்டுத் துடிதுடித்தார் பண்டிதமணி. அருமை ஆசானை இழந்து விட்டேன் யான்; தமிழகம் தனியொரு புலவனை இழந்து விட்டது என்று அரற்றினார். கரந்தைக் கவியரசு, அரங்க வேங்கடாசலம் பிள்ளை உண்மை அன்பனை, உயர் தமிழனை இழந்துவிட்டமை குறித்துக் கையறு நிலை பாடிக் கசிந்து உருகினார். எனக்கு இரங்கல் பாட வேண்டிய சண்முகனார்க்கு நானோ இரங்கல் பாட என்று புலம்பினார் சிவப்பிரகாச அடிகள். சண்முகனாரின் அன்னை பார்வதியம்மையும், மனைவி காளியம்மையும் ஆறாத் துயருக்கு ஆளாயினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எல்லோரும் துன்புற்றார்கள் என்றால் சிவப்பிரகாசர்துன்பச் சேற்றிலே ஆழ்ந்துவிட்டார் எனலாம். மானமே உயிரெனக் கொண்ட மாணவன் உயிர்நீத்தது அறிந்து தம்முயிரும் நித்த ஆசான் பொய்கையார் ஒருவரே உலகில் பிறந்தார் என்னும் உரையைப் பொய்யாக்குவேன் என்று உறுதி கொண்டு விட்டாரா சிவப்பிரகாச அடிகள்? சண்முகனார் உடலம் சுடுகாடு சென்றதுதான்! அங்குத் தீ மூண்டு எரிவதைக் கேட்டுக் கசிந்தழுது கண்ணீர் பெருக்கினார். மாணவன் பிரிவு மாறா நோய் ஆய்விட்டது. 50 நாள்கள் கடந்தன. அடிகள் சண்முகனார் சென்ற வழியிலே நடந்துவிட்டார். தகவுடையார் கண்ணீர் விட்டு அழுமாறு சாவும் சாவே ஒருவருக்கு வேண்டும். அத்தகைய சாக்காடு இரந்தும் பெறுதற்குரியது என்பது1 அறநூற் கட்டளை. ஆனால், அன்பொன்றே கருதித் தம்மிற் பெரியராம் அடிகளே தம் உயிர் கொண்டு இவர் உயிர் தேடினாற்போல்இறக்க என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்! குறைந்த நாள்களே சண்முகனார் வாழ்ந்தார். ஆனால் நிறைநாள் வாழ்ந்தோரும் செய்வற்கரிய செயல்களைச் செய்து முடித்து ஓய்வு கொண்டார். வேறென்ன வேண்டும்? சண்முகனார் புகழ் வாழ்க! 7. வாழ்க்கைக் குறிப்புகள் உடல் சண்முகனார் உடல்ஒல்லியானது; நெட்டை என்றோ குட்டை என்றோ கூற முடியாத உயரம்; செந்நிறம்; பேணி வளர்க்கப் படாத மீசை; வரன்முறையாக மழித்தலை அறியாத முகம்; குடுமித் தலை; ஒளியுடைய கூரிய கண்கள்; வரிசையான, காவிக்கறை ஏறாத அழகிய பற்கள்; சற்று நீண்டு குடைந்த காது; காற்று வெயில் குளிர் இவற்றுக்கு மறைப்பு அறியாத மார்பு; நீண்ட கைகள்; விரைந்து நடக்கும் கால்கள்; ஒற்றைச்சுற்று வேட்டி; கழுத்தைச் சுற்றிச் சுருண்டு தொங்கும் நீளத்துண்டு - பொதுவில் தமிழகத்து உழவர் திருக்கோலம். இவை சண்முகனார் உடலைப் பற்றிய குறிப்புகள். உள்ளம் தமக்கு உதவி புரிந்தவர்களைச் சண்முகனார் என்றும் மறவார்; வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் உதவியுரைத்தலைக் கடப்பாடாகக் கொள்வார்; தொல்காப்பியப் பாயிரவிருத்தியில் எழுதியுள்ள நன்றியுரைத்தல் என்னும் பகுதி ஒன்றே இவர் நன்றியறிதலுக்குச் சான்றாதற்குப் போதுமானது; இவர்தம் வள்ளன்மை, அம்பலவாண தேசிகர் அளித்த பட்டாடை யினைப் பஞ்சைப் பெண்மணிக்கு அளித்தமையாலும், சங்க வளர்ச்சிக்காகத் தங்க வளையல் தந்தமையாலும் புலனாகும்; எளிமையை விரும்பும் இவர் உளப்பாங்கை இவர் உருவம் காட்டாநிற்கும்; களங்கமற்ற வெள்ளை யுளத்தினர் என்பதை இவரொடு பழகிய அன்பர்கள் உரை தெளிவிக்கும்; மற்றைப் புலவர்களை மதித்து ஒழுகுதலைஇவர் புலமையாளர்கட்கு எழுதிய கடிதங்கள் புலப்படுத்தும்; உண்மையை உரைக்க அஞ்சா உளத்திண்மையை இவர்கட்டுரைகள் காட்டும்; கடவுளன்பும், பொதுநல நாட்டமும்உடையார் என்பதை இவர் தம் கவிதை நூல்கள் அனைத்தும் தெள்ளிதின் நிறுவும். வறுமைத் துயருக்காக வாழுநெறி பிழையாமையை வரலாறு முழுவதும் அறைகூவும். சிந்தனை சண்முகனார் சிந்தனையில் மூழ்கினால் பசியறியார்; நீர்வேட்கை அறியார்; உலாவுதலையோ உறங்குதலையோ அறியார்; வீட்டின் முன் திண்ணையிலே குப்புறப் படுத்துக் கொண்டும், உருண்டு புரண்டு கொண்டும் மணிக் கணக்காகக் கிடப்பார். அங்கு வருபவரைப் பற்றியோ, உட்கார்ந்திருப் பவரைப் பற்றியோ வீட்டைப் பற்றியோ கவலை சிறிதும் கொள்ளார். ஆராய்ச்சியின் போது அவர் உலகமே தனி உலகம்! அதனிடையில்அவர் மனைவியரும் நடைபோட முடியாது. சாப்பிட வாருங்கள், நேரமாகிறது! உலர்ந்துபோகும்; பசிக்காதா? இக்குரல்கள் அணு அணுவாய் ஓங்கி உச்சநிலை அடையும். அதன்பின், சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும்; எப்போதும் இதே கூப்பாடு; பசி எடுத்தால்எனக்குச் சாப்பிடத் தெரியாதா? என்னும் துயர ஒலியை எழுப்பிக் கொண்டன்றி விருப்பொடு உணவுக்குச் செல்லார். இரவில்படுத்திருந்தாலும் தலைப்பக்கத்தே தாளும் எழுதுகோலும் இருக்கவே செய்யும். அணையா விளக்கொன்று பக்கத்தே எரிந்து கொண்டிருக்கும் அதனை அணைக்கவே கூடாது. எவரேனும் அணைத்து விட்டால்சினம் பொங்கி எழும்; விளக்கு எந்நேரமும் வளரும்; சுருங்கும்; அதற்கு நேரம் பொழுது இல்லை; இவர்எழுத்துக்கு நேரம் பொழுது இருந்தால் தானே; இரவெல்லாம்விழிப்பார்; பகலிலும் விழிப்பார்; பல நாள்கள் வேலைஎதுவுமே அற்றுத் திண்ணையிலும் கட்டிலிலும்புரண்டு கொண்டு ஆராய்வதும் எழுதுவதும், பாட்டியற்றுவதும் இயல்பாய் நடைபெறும் நிகழ்ச்சி. இவருரைக்கு மறுப்புரை ஒன்று வந்துவிட்டால் மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திப்பார். மறுப்புரையைக் கொண்டே மறுக்குமாறு துருவுவார். நூல் ஒன்றையும் திருப்பாது மனத்திலேயே வரவழைத்து வரவழைத்துக் குறித்துக் கொள்வார், பின்னர்முறைப்படுத்தி எழுதுவார். மறுப்புக்கு மறுப்பு விட்டால்தான் ஓய்வு -உலாவுதல் - உணவு எல்லாம். அதுவரை குளிப்பது பற்றிக் கூடக் கவலைப்படார். நோய்த் தொல்லை பெருகும்; ஆனால் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டால்நோய் பறந்துவிடும். ஆராய்ச்சிகள் பெரும்பாலனவும் நோயின் இடையே எழுந்தவையே என்பது குறிப்பிடற்கு உரியது. சுவையான சில நிகழ்ச்சிகள் சண்முகனார் வாழ்வில் நடைபெற்றனவாகச் சில சுவையான நிகழ்ச்சிகள் அறியப்படுகின்றன. அவற்றை இப்பகுதியில் காணலாம்: கூலியாளான கூத்து சண்முகனார் ஓர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கர் வந்து சேர்ந்தார். அவர் சற்றுக் கனமான ஒரு சுமையைக் கொண்டுவந்தார். சண்முகனாரின் எளிய தோற்றத்தைக் கண்டு இந்தச் சுமையை எடுத்துக் கொண்டுவந்தால் கூலி தருகிறேன் என்றார். சண்முகனாரும், சுமக்க முடியாமையால் தான் வழிப்போக்கர் இவ்வாறு கூறுகிறார் என்று கருதினார். ஆகலின் சுமையை வாங்கிக் கொண்டு நடந்தார். சில கல்தொலைவு நடந்து சென்றபின் சண்முகனார்செல்ல வேண்டிய ஊருக்குரிய வழி பிரிந்தது. ஐயா, இவ்வழியாக யான் போகவேண்டும்; சுமையை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கூறி, சுமையை அவரிடம் ஒப்படைத்தார். கூலி எவ்வளவு என்று கேட்டார் வழிப்போக்கர். வேண்டா வேண்டா என்று கூறிக் கொண்டு நடந்தார் சண்முகனார். இப்படியும் ஆள் உண்டா? சுமையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டுக் கூலிவேண்டா என்பதற்கு! என்று நினைத்துக் கொண்டிருந்தார் வழிப்போக்கர். அப்பொழுது சண்முகனாரை வரவேற்க மாலையும் கையுமாய் ஒரு கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் ஊரில் நடைபெறவிருந்த விழா ஒன்றுக்காகவே சண்முகனார் சென்றார். வந்தவர்கள் மாலை போட்டு வாழ்த்தியதுதான்! அதுவரை திகைப்பில் நின்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒன்றும் புரியாமல் திண்டாடினார். வந்தவர்களிடம், இவர் யார் எனக் கேட்டறிந்து வெட்கினார்; வணக்கம் செலுத்தி மன்னிக்குமாறு கோரினார். மெல்லுள்ளம் படைத்தவரானசண்முகனார், பிறருக்கு உதவிசெய்வதற்காகவே மனிதன் பிறந்துள்ளான். நீங்கள் கவலைப்படவும், நான் மன்னித்துக் கொள்ளவுமான தவறு எதுவும் நடந்துவிடவில்லை என்று அவரைத் தேற்றிவைத்து அனுப்பினார். சண்முகனார் பண்புக்கு வேறு சான்று வேண்டுமா? உயிர் காத்த உபகாரி சண்முகனாருக்கு நீந்தத்தெரியாது வாழ்நாள் முழுவதுமே நீந்துதலை அறியார். ஒருநாள் வண்டியூர்த் தெப்பக்குளம் என்னும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இறங்கினார். பாசி படர்ந்திருந்த படித்துறையில்இவர்அடிவைத்ததும் வழுக்கல் உள்ளுக்குக் கொண்டு போயிற்று. தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கித் திக்குமுக்காடினார். அப்பொழுதுதிரு. சுப்பிரமணிய முதலியார் என்னும் அன்பர்திடுமென் ஓடிவந்து சண்முகனாரைத் தூக்கினார். வெளியே கொண்டுவந்து தளர்ச்சியை அகற்றினார். அவரை, உயிர்காத்த உபகாரி என்று வாழ்த்தினார். முன்னரே அன்பராக இருந்த அவர் அன்பு மேலும் வளர்வதாயிற்று. சண்முகனார் வறுமைத்துயருக்கு உதவிவந்த உபகாரிகளுள் அவரும் ஒருவராக வாணாள் முழுமையும் இருந்தார். அவரை ஏகபாத நூற்றந்தாதியில் பாராட்டினார். மழைபொழியப் பாடும் காளமேகம் ஒருநாள் சுப்பிரமணிய முதலியாரும், சண்முகனாரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்பொழுது வெப்பம் அதிகமாக இருந்தபடியால் முதலியார், பழம் புலவர் களெல்லாம் மழை பொழியப் பாடியுள்ளனரே; நீங்களும் அவ்வாறு செய்யலாமே என்றார். அதன்படி சண்முகனார் மழைபொழிய வேண்டிப் பாடினார். சிறிதுபொழுதில் மழையும் பொழிந்தது. இப்படி நிகழ்ச்சிகள், காளமேகப் புலவர் வரலாற்றில் மிகுதி அல்லவா! கூட்டத்தில் குறும்பன் தஞ்சையில் ஒரு கூட்டத்தில் சண்முகனார் சொற்பெருக் காற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் அமைதி குலையும் வண்ணம் ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். பன்முறை கூறியும் அமைதியடையாத அவனைக் கண்டு வருந்திய சண்முகனார், படுவயலே என்றார். உடனே பையன் படுத்து விட்டான். எழுந்திருக்கவே இல்லை. பின்னர் அவையிலிருந்தோர் உரையால் பையன் நிலைமையை அறிந்த சண்முகனார். பாடு பயலே என்றார். பையன் பழையபடி துள்ளியோடினான். துறவி காட்டிய மருந்து சண்முகனார் நோயில் படுத்திருந்தார். மருந்துகளால் அது தீர்ந்தபாடில்லை. ஒருநாள் துறவியார் ஒருவர் சண்முகனார்முன் தோன்றினார். அவர் இவரை அழைத்துக் கொண்டு நாகமலைக்குச் சென்றார். அங்கே ஒரு மருந்துச் செடியைக் காட்டி, இதனைப் பறித்து உண்டால் நோய்தீரும் என்றார். சண்முகனார் குனிந்து மருந்துச் செடியைப் பறித்துக்கொண்டு நிமிர்ந்தார். பெரியவரைக் காணவில்லை; வியப்படைந்தார் சண்முகனார். வீட்டில் சண்முகனாரைக் காணாது அலறியடித்துத் தேடிக் கொண்டலைந்த உற்றார் உறவினர் தன்னந் தனியராக வந்துகொண்டிருக்கும் சண்முகனாரைக் கண்டு மகிழ்ந்தனர்; நடந்ததைக் கேட்டறிந்து வியப்புற்றனர். அவிச்சுவையும் செவிச்சுவையும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் விருந்தொன்று நடைபெற்றது. பெரும்புலவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுள் நம் சண்முகனாரும் ஒருவர். விருந்துக்கு இலைபோடப் பெற்றது இன்னும் காய்கறிகள் பரிமாறப் பெறவில்லை. புலவர்களுக்குள் ஒருபேச்சு எழுந்தது. அது விருந்து பற்றி ஏதேனும் பாட்டியற்ற வேண்டும் என்பதே. ஒரு புலவர், சண்முகனார்பாட்டைத் துவங்கிவைக்கட்டும் என்று முன்மொழிந்தார். ஆமாம்! ஆமாம்! அவர் துவங்குவதே சரி என்று வழிமொழிந்தார் ஒரு புலவர். அவை அமைதியாயிற்று. சண்முகனார் கூறினார்: விருந்து பரிமாறும் இராமாநுசம், பக்கத்தே வந்து பரிமாறும் போது அவர் பரிமாறும் பண்டங்களுள் ஒன்றன் பெயரைச் சேர்த்து சங்கொடுவா இராமாநுசம் என்று முடியுமாறு வெண்பா அமைக்க வேண்டும். இராமாநுசம் பரிமாறிக் கொண்டு வந்தார். ஒருவர், ரசங் கொடுவா ராமாநுசம் என்று இறுதியடி வர வெண்பாப் பாடினார். மற்றொருவர், பாயசங் கொடுவா ராமாநுசம் என்றார். வேறொருவர், அதிரசங் கொடுவா ராமாநுசம் என்றார். அடுத்துப் பாடவேண்டியவர் சண்முகனார். விருந்துப் பண்டங்களில்ஒன்றைக் குறிக்குமாறு பாட்டு அமைக்க வேண்டும். விருந்தில் சம் வருமாறு ரசம் பாயசம் அதிரசம் ஆகிய மூன்று பண்டங்களே இருந்தன. அடி எடுத்துத் தந்தபுலவரே பாடமுடியாதுபோயின் இழுக்கு இல்லையா? வல்லவனுக்குப் புல்லே ஆயுதம் ஆகும்போது புலவனுக்குச் சொல்லா பஞ்சம்? இராமாநுசம் பரிமாறும் பொருளை, இன்னுங் கொஞ்சங் கொடுவா ராமாநுசம் என்றார். கொஞ்சம் என்பதில் சம் வந்து விடுகின்றது! பரிமாறிக் கொண்டிருந்த பண்டத்தை மேலும்போடு என்று பண்டத்தையும் குறிக்கின்றது! பாடுதற்கு என்னதான் பண்டம் இருக்கிறது. இவர் பாடப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாவலர் அவை கலீர் என்று சிரித்தது. வியப்புத் தாங்காமல்அவரவர் உணர்ச்சியைப் பலவகைக் குரல்களாலும் வெளிக்காட்டி வியந்தனர். 8. சண்முகனார் நூல்கள் 1. திருக்குறள் சண்முக விருத்தி பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரின் ஆராய்ச்சி வன்மையைப் புலப்படுத்தும் நூல்களுள் திருக்குறள் சண்முக விருத்தியும் ஒன்றாகும். உரையாசிரியர்கள் திருக்குறள் பாக்களுள் சிலவற்றிற்குப் பொருந்தாவுரை கூறியிருப்பதாகக் கண்டார்: அதன் விளைவாகவே சண்முக விருத்தி எழுந்தது. பரிமேலழகர் உரையினைக் காண்டிகையாகக் கொண்டு அவ்வுரையுள் பொருந்தாமை மறுத்து, ஏனையவற்றோடு விரிப்பன விரித்து எழுதப்படுகின்றது என்று உரை எழுதத் தொடங்குகின்றார். விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்னுங் குறளில் சாவாமருந்து என்னுந் தொடருக்குச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து என்று பரிமேலழகர் கூறிய உரையை மறுத்து, மருந்து என்றாலே சாவாமைக்குரிய பொருள் தொனித்தலின் சாவா என்ற சொல்லை மருந்து என்னுஞ் சொல்லுக்கு அடையாகக் கொள்ளக் கூடாது என்று கூறிச் சவா என்னுஞ் சொல்லைச் சாவாம் என்று முற்றாக்கி, விருந்தினர் புறத்தே இருக்கத் தான் உண்பது சாவோடு ஒக்கும் என்று பொருள் கூறுவார். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் என்னுங் குறள், தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப் படும் என்றிருத்தல் வேண்டும் எனக் காரணம் கூறி மாற்றுவார். இவ்வாறு திருக்குறளுக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும் புத்துரை கண்டார் சண்முகனார். இதனாலேதான், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவராம் சண்முகனார் இவ்வுலகுக்குத் தந்து சென்ற பொருள்கள் மூன்று. அவை தொல்காப்பியச் சண்முக விருத்தி, திருக்குறள் சண்முக விருத்தி, பெரும் பேராசான் பண்டிதமணி என்று ஆய்ந்தோர் நயம் பெற உரைப்பர். 2. தொல்காப்பியச் சண்முக விருத்தி பதினைந்து வரிகளையுடையதும், ஆசிரியர் தொல் காப்பியர் உடன்மாணவராக இருந்த பனம்பாரனாரால் தொல்காப்பியத்திற்குப் பாயிரமாகப் பாடியளிக்கப் பட்டதுமான வட வேங்கடம் தென்குமரி என்னும் பாடலுக்கும் தொல்காப்பியமுதற் சூத்திரத்திற்கும் மட்டும் 246 பக்க அளவில் விருத்தியுரை எழுதியுள்ளார் சண்முகனார். தொடர்ந்து, நூல் மரபு, மொழிமரபு, பிறப்பியல் ஆகியவற்றுக்கும் விருத்தி எழுதியுள்ளார். நிறை நாள் வாழ்ந்து குறைவறாப் புலமையால் ஒல்காப்புலமைத் தொல்காப்பியத்திற்கு முற்றமுடிய உரை எழுதியிருப்பாரேல், ஐயோ! அதன் சிறப்பை என்னென்பது! கிடைத்த அளவுக்கேனும் மகிழ வேண்டியதுதான். பாயிர விருத்தி சண்முகனார் ஆராய்ச்சி வன்மைக்குச் சான்றாக மிளிர்கின்றமை கண்கூடு. இவை மேற்கோள் காட்டி விளக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஒன்றே இவர்தம் புலமைப் பரப்பினைக் காட்டத் தவறாது. பாயிரத்தினை விளக்குவதற்கு 164குறட்பாக்களைத் தகவுறச் சுட்டியும் விளக்கியும் செல்கின்றார் எனில் இவர்தம் திருக்குறட் புலமையையும் பற்றினையும் என்னென்பது! தொல்காப்பியச் சண்முகவிருத்தி அக்கீம் துரை யவர்கள், தமக்குச் செய்த உயிருதவியின் நினைவாக உரிமை செய்யப்பெற்று, அரிமள நகர வணிகப் பெருமக்கள் பொருளுதவியால், தஞ்சையில் 1905 ஆம் ஆண்டு அரித்துவார மங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியாரவர் களால் பதிப்பிக்கப் பெற்றமை முன்னரே அறிந்ததாம். 3. தொல்காப்பிய நுண்பொருட் கோவை தொல்காப்பிய ஆராய்ச்சியின் விளைவால் தோன்றிய மற்றுமொரு நூல் இது. பெரும்பாலும் உரையாசிரியர்கள் உரை வேற்றுமைகளை விளக்கி உண்மை உரை இதுவே எனத் தெளிவிக்குமாறு எழுந்த ஆராய்ச்சி நூலாகும். 1903 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் திங்கள் இதழான செந்தமிழின் வழி வெளிவந்தது. தமிழ்ச் சங்கத்தில் ஓர் உரையாடலின் போது, உகர ஊகார நவவொடு நவிலா என்னுந் தொல்காப்பிய நூற்பா சிந்தனைக் குரியதாயிற்று. உரைத் தவறுளது என்று சண்முகனார் கூறினார். நச்சினார்க்கினியர்உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிறமெய்களோடு நின்றும் பயில்வதன்றி நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா என்று கூறுவது ஏற்கத் தக்கது அன்றி, மறுத்தற்கு உரியது அன்று என்று மறுப்புரை எழுப்பினார் பேராசிரியர். மு. இராகவ ஐயங்கார். உகரம் வகரத்தொடு கூடி நிற்றல் வழக்கிடையில்உண்டே. கதவு என்னுஞ் சொல்லில் வு என்று வந்திருப்பது, சூத்திரக் கருத்திற்கு முரணாதோ என்பது சண்முகனார் எதிர்க் கேள்வி. கதவி வடசொல் - என்பது இராகவர் காட்டிய அமைதி! தங்கள் கருத்துப் படி கதவு என்ற சொல்லை நீக்கினாலும் களவு இயல் (களவியல்) என ஓர் இயல் கண்ட நூலாசிரியரா, நூலகத்து முரணுமாறு நூற்பா வகுப்பார்? fsî v‹DŠ brhš x‹nw a‹¿ Jwî, Juî, beh›î, Kjyh« jŤ jÄœ¢ brh‰fŸ ‘î’ fu¤jhš’ ï‰W¥bg‰W ïU¥gj‰F Éâba‹nd? என்று கிளப்பினார் சண்முகனார்; பேச்சு மேலும் தொடருமாறின்றி நின்றது. நூற்பாவின் பொருள்தான் என்ன? என்று பலர் சிந்தனையில் ஆழ்ந்தனர். சிலர் சண்முகனார் உரையை எதிர் நோக்கியிருந்தனர். உகரம் நகர ஒற்றோடு கூடி நு என மொழிக்கு இறுதியிலும் ஊகாரம் வகர ஒற்றோடு கூடி வூ என மொழிக்கு இறுதியிலும் வாராது என்று நிரல்நிறைப் பொருள் காணின் ஆசிரியர் கருத்து முரண ஆகாது என்று கூறினார். இவ்வாறு புலவர் அவையிடையேயும், கல்லூரிப் பாடத்திடையேயும் ஆராய்ச்சிக்கு வந்தவையே நுண்பொருட்கோவை என்னும் பெயர் பெற்றதாம். 4. இன்னிசை இருநூறு அறத்தினை உலகுக்கு உணர்த்துமாறு ஆசிரியரால் எழுதப் பெற்ற இருநூறு இன்னிசை வெண்பாக்களையுடைய நூல் இது. மு. ரா. கந்தசாமிக் கவிராயரால்நடத்தப் பெற்ற விவேக பாநு இதழில் 1904 ஆம் ஆண்டு தொட்டு வெளிவந்தது. தனி நூலாக ஆக்கித் தருமாறு பலரும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, கவிராயரே 1-7-1913 இல் தம் வெளியீடாக வெளியிட்டார். இந் நூல் சண்முகனாரது அறநெஞ்சத்தைத் தௌளிதிற் புலப்படுத்தும் கட்டளைக் கல் எனின் புனைந்துரை அன்றாம். நன்னெறி என்னும் கடலினின்று அறிவு என்னும் நாழியால்முகந்து கொள்ளப்பட்டது இவ்விவ்ன்னிசை வெண்பா என்று கூறி நூலினைத் தொடங்குகின்றார் ஆசிரியர். வாழ்த்து முதல் மேல் கீழியல்பு ஈறாக இருபது அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு,. அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப் பத்துப் பாக்களை யுடையதாகி மிளிர்கின்றது. மெய்யறிவன் நூலின் விதித்த விலக்கிய செய்தலும் செய்யா விடலும் திகழ்அறன்; மைதீர்மனநாவால் காயத்தால் வாய்ப்பன செய்கஎஞ் ஞான்றுந் தெரிந்து. (11) அறத்தின் இலக்கணத்தை எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது இப் பா! செல்வம் விரும்பின் பிறர்க்களிக்கத் தேடுக; கல்வி விரும்பின் நெறிநிற்பக் கற்கமன்; அல்லலிலா இன்பமுற எண்ணி அருநெறியிற் செல்லின்இடர் நோன்றல் செயல். (50) நான்கு வரிகளிலே நாற்பால் (அறம், பொருள், இன்பம், வீடு) சாரமும் கனிகின்றது அல்லவா! கொல்லக் கருதில்யா னென்னதெனல் கொல்கமன்; வெல்லக் கருதிற் புலமைந்தும் வெல்க; நலம் புல்லக் கருதிற் பரனன்பே புல்லுக; சீர் சொல்லக் கருதிற் சொலல். (100) கொலையும் அழிவும்புல்லுதலும் பொறாமையும்மிக்க உலகம் கடைப்பிடிக்க எவ்வளவு அருமையான மாற்று வழிகள்! நூலினைப் போற்றுதும் நூலினைப் போற்றுதும் காலங் கருதாது காயம் இறுவரையும் வாலறிவ னற்றாள் வணங்கிப் பிறப்பறுக்கச் சாலத் துணையாத லான். (5) இது நூல்வாழ்த்து. ஈப்பிற் பிறமிக்க நல்லன இல்லவாம்; நீப்பிற் பிறமிக்க வீடில்லை; நீடுயிர்க் காப்பிற் பிறமிக்க கொள்வவில்; வள்ளுவன் யாப்பிற் பிறமிக்க இல். (66) இது வள்ளுவர் யாப்புக்குப் பாராட்டு. பன்றிக் குருளை படாம்போர்த்து நிற்பினும் வென்றிக் களிறென விள்ளுப யாவரே நன்றுகல் லார்லகவி பாடினும் நாவலோர் என்று மதித்தல் இலர் (116) இது போலிப் புலவர்க்குச் சூடு. உகரமும் குற்றியலுகரமும் உருவால் ஒப்பதே. எனினும் வல்லின எழுத்துக்களைச் சாரும்பொழுது அவ்வெழுத்துக்கள் இவை குற்றுகரம் என்பதைக் காட்டிவிடுகின்றன. அதுபோல் சிறியர் செவ்வியர்போல் தோன்றினும், வல்லவர்கள் முன் சென்று நிற்குங்கால்அவர்தம் சிறுமை வெளிப்பட்டுத் தீர்வது உறுதி என்னுங் கருத்தினை, உவ்வொடு குற்றுகரம் ஒக்கும் உருவெனினும் தவ்வெனுந் தன்மைசார் வல்லாறு தாங்காட்டுஞ் செவ்வியர் போல்வர்சிறியரும் வல்லாரே வெவ்வேறு காட்டி விடும் என்னும் 199 ஆம் பாடல்கூறுகின்றது. இது இவர்தம் இலக்கணப் புலமையையும், இயல் நோக்கிப் பொருத்திக் காட்டும் திறத்தையும் வெளிப்படுத்தாநிற்கும். விரிப்பில் பெருகுமாதலின் நூலிடைக் கண்டு நலம் நுகர்தல் இனிதாம். 5. வள்ளுவர் நேரிசை வள்ளுவர் நேரிசை, இருபத்துநான்கு அதிகாரங்களுக்கே எழுதப்பெற்றது. இது, பின்னிரண்டடியில் வரிசைக் கிரமமாக ஒவ்வொரு திருக்குறளையும், முன்னிரண்டடியில் அக் குறள் நீதிக் கியைந்த ஒரு சரித்திரம் அல்லது விசயத்தையும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீராக வள்ளுவரே என முன்னிலையையும் அமைத்துப்பாடப் பட்டதாகும். ஆயினும் அந்தோ! பிள்ளை அவர்கள் உற்றநோய், குடும்பவிவகாரம், அசிரத்தை முதலியன அவர் அந்திய காலத்தில் இயற்றி முடிக்கத் துணிந்தஇந்நற்காரியம் நிறைவேறாது செய்துவிட்டனவே. இதுவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு முன்செய்த தீவினைப் பயனே போலும் என்று இவர் மாணவரும் இந்நூலின் உரையாசிரியருமான பண்டித. ம. கோபால கிருட்டின ஐயர் குறிப்பிடுகின்றார். இந்நூல் 1919 ஆம் ஆண்டு இ. மா. கோபாலகிருட்டினக்கோன் அவர்கள் வெளியீடாக முதற்பத்து அதிகாரங்கள் வெளிவந்தன. திருத்தகு தெய்வத் திருவருள் ளுவர்தாள் வருத்தமறச் சென்னிமிசை வைத்துக் - கருத்திருத்தி அன்னார் மறைப்பாட்டோ டியானும் அரைப் பாட்டிசைப்பேன் முன்நே ரிசைப்பேர் மொழிந்து என்பது இந்நூல் தற்சிறப்புப் பாயிரச் செய்யுள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாளெல்லாம் உழவாரப் படையால்நற்பணி புரிந்து வந்த நாவுக்கரயரை, பன்னுமுழ வாரப் பணியும் புரிந்ததென்னோ மன்னுதமிழ் நாவரையர் வள்ளுவரே- உன்னுங்கால் ஒல்லும் வகையால்அறவினை ஓவாதே செல்லும்வார யெல்லாம் செயல் என்று எடுத்துக் காட்டுவது பெரிதும் உவக்கத்தக்கதாம். பெரியோர் தாந்தளரினும் தம்நிலை தவறார்என்பதைப் பெருந்தலைச்சாத்தர்க்கு ஏற்றி, என்தலைநீ கொள்க எனக் குமணன் வாள் கொடுத்தும் வன்தலைகொள் ளார் சாத்தர் வள்ளுவரே - என்றும் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி என்று கூறுவது அறந்திறம்பாப் புலவர்க்கு இவர்தம் தலை தாழ்ந்து வணங்குவதை அறிவிக்கும். 6. நவமணிக்காரிகை நிகண்டு இதனைப் பற்றி முன்னே கண்டோம்: எண்ணிய ஆதி திவாகரம் பிங்கலம் இன்னசில மண்ணிடை நின்றன சென்றன பின்னுமற் றையவை நுண்ணிய தல்லர்க் குணர்வரி தாமென நோக்கிப்பின்னும் நண்ணிய சூடா மணியுரிச் சொல்முதல் நானிலத்தே. நானிலத் தேயவற் றோடு கயாகர நிகண்டும் தேனிகர் சொல்லக ராதி நிகண்டா சிரியநிகண் டானபின் நூலுமற் றுள்ளவும் ஓர்ந்தீங் கமைவுகொண்டு தூனிகர் சொற்கள் ஒருங்கே திகழத் தொகுத்தெடுத்தே. தொகுத்த வொருபொள் பலசொல் தொகையின்பல் வகைப்படு தேவர் ,வரை வணங்கும் மக்களிவர்க் கிகற்ற னுபோகப் பொருளின் வாழிடம் இவ்விடத்தே புகப்பெரு மக்கள் மரங்கள் இவ் வாறும் பொருள்வகையே. வகைகொள் பொருளின் குணஞ்செய லாம்பல் வகைப் பண்புடன் புகலுமிப் பண்பினில் சங்கியைகொள் பல்பொருள் கூட்டமும் தொகைபெறு பல்பொருட்கோர் சொல்லுமென் னத்துலங்கு மொன்பான் வகைபெற மண்மேல் நவமணி போலென்றும் மன்னுறவே. மன்னிய காரிகை யாப்பிலந் தாதி, வரநிகண்டொன் றுன்னுஞ் சிறிய சிறார்தமக் காக உவந்துரைத்து என்று ஆசிரியர் பாடும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் நூல் வந்த வரலாற்றையும் பயனையும் விளக்கும். 1898 ஆம் ஆண்டில் ஆசிரியருக்கு வயது 30 ஆக இருக்கும் போது - இந் நூல் இயற்றி அரங்கேற்றமும் செய்யப் பெற்றது. 7. மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை மதுரை மீனாட்சி அம்மையின் மீது சண்முகனார் முப்பத்திரண்டு சந்தப்பாக்கள் பாடி, அதனை நூலாக்கி மீனாட்சி யம்மை சந்தத் திருவடி மாலை என்று பெயர் சூட்டினார். சந்தத் திருவடி மாலையில் சந்தம் நோக்கி, சொற்களை நீட்டல், குறுக்கல், தொகுத்தல், விரித்தல் ஆதிய விகாரப் படுத்தாமல்விழுமிய பொருள் பயக்கும் முழுமுழுச் சொற்களாகவே தொடுத்துள்ளார்கள். சந்தம் அமைத்து அதற்கு இயையச் செய்யுள் இயற்றல் விலங்கிட்டுக் கொண்டு நடனமாடுவதை ஒப்பது ஒன்றாகவும், இச் சந்தப் பாக்கள் ஆக்கியோர் கருதிய பொருட் போக்குக்குச் சிறிதும் முட்டுப்பாடுறாது செவ்விது செல்லுந் தன்மையினவாக அமைந்துள்ளன. இந்த நயத்தை ஊன்றி உணர்வாரெவரும் வியவாது இரார். அன்றியும் நகர் வருணனை, வையை நதி வருணனை, தண்ணீர்க் குழாய்கள் மின்சாரவிளக்குகள் ஆகிய வற்றின் வருணனைகளும் நன்கு அமைந்துள்ளன. அம்பிகை மீது இத்தகைய சந்தப்பா நூலொன்று இதுகாறும் யாமறிந்ததிலம் ஆதலின் எமது பரம மாதாவுக்கு வாய்த்ததோர் நவமணி யணியாகவே கொண்டு தமிழ் மக்கள் மகிழ்வார்என்பது எமது துணிவு என்று சண்முகனார் உழுவலன்பர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதியுள்ள உரை இந்நூற் சால்பினை தெரிவிப்பதாகும். எழுபது நாள்கள் பாலுணவு அன்றி வேறுணவு கொள்ளாத நோன்பு கொண்டிருந்து பாடப்பெற்ற நூல் இச்சந்தத் திருவடி மாலை எனின் இதன் பத்திச் சுவையினைக் கூற வேண்டுவதின்று. இந்நூலினகத்து ஒற்றை வழியோடுகின்ற இரட்டையுருள் என்று சைக்கிளையும் (Bicyele), அப்பின் ஆவியின் வேகமுற்ற உருள் என்று நீராவியால் ஓடுகின்ற வண்டிகளையும் (Steam Locomotives), மின்சாரமுற்ற வுருள் என்று மின்சார வண்டிகளையும் (Electric Tram ways), ஒலிகால்வ என்று முன்வாங்கிய ஒலியை ஆதியில்போல மீளமீளக் காலுகின்ற யந்திரத்தையும் (Gramma Phone) நெய்த்திரிகளாதியற்ற வொளி என்று மின்விளக்கு களையும் (Electric light), இருப்பின் இயல்வார் குழல் என்று இரும்பால் செய்த நீண்ட குழாய்களையும் சுட்டுகின்றார். இம் மாலை நூலின் 19ஆம் பாடலிலே, இருபாத கமலமு நாடுவன், இனிவாதை செயுநம னோடுவன் என்று பாடி, கைப் பிரதியிலும் அவ்வாறே குறித்துக் கொண்டார். ஆனால் அச்சிடுங்காலையில் இச் சொற்றொடரில் அமைந்து கிடந்த தவறொன்று சண்முகனார்க்குப் புலனாயிற்று. இனிவாதை செயு நமன் என்பது பின்வரும் மரணத் துயருக்கு அமைந்த முன்னறிவிப்பாக அமைந்து விடுகின்றது அன்றோ! சண்முகனார் சொல்லை மாற்றினார், இனிவாதை இலை; நமன் ஓடுவன்; என்று ஆனால்நமன் ஓடினானா? நம்மவன் என்று உரிமை கொண்டாடி விட்டான். சந்தத் திருவடி மாலை வெளிவந்த 1915 ஆம் ஆண்டில் தானே சண்முகனாரும் இயற்கை எய்தினார். 8. மாலை மாற்று மாலை குமரக் கடவுள்மீது தொகுக்கப்பட்ட மாலையாகும் இது. சண்முகனாரால், 1887 ஆம் ஆண்டில் இயற்றப்பெற்றது. சொல் சொல்லாக ஈறுமுதல் வாசிப்பினும் மாலை மாற்று மாலை என்றே ஆகும். 30 பாக்களையுடைய இந்நூல் 1901 ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரவர்கள் தலைமையில், ஆன்றவிந் தடங்கிய சான்றோர்கள் முன்னிலையில் அரங்கேற்றமாயது. 1903 ஆம் ஆண்டில் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதிய உரையுடன் அவராலேயே வெளியிடப் பெற்றது. ஒருமாலை மாற்றுச் செய்யுள் செய்தற்கே படித்தவர்கள் மிகவும் கவலையுடைதற்குரிய இக்காலத்தில் மேற்படி செய்யுள் பலவற்றில் பிரபந்தமொன்று இயற்றியிருப்பதும், அச் செய்யுட் களைப் பொருளணி அமைந்த செய்யுட்களாகவே இயற்றியிருக்கும் கல்வி வன்மையும் நிரம்ப வியக்கற்பாலன என்று மாலை மாற்று மாலையை உ.வே. சாமிநாதையர் அவர்கள் பாராட்டியுள்ளார்கள். மாலை மாற்று மாலைச் செய்யுளுள் ஒன்றும், அதன் பொருளும் வருமாறு. வாகா னவவன காவா வாகா னவவன காவா வாகா னவவன காவா வாகா னவவன காவா சொற் பிரிவு : 1) வா. கானவ - வல் - நகா - வா. 2) வாகு - ஆன. அவன் - அகா - ஆ. 3) ஆ - கா - நவ - வன - கா - ஆ. 4) வாகு - ஆனவ - அனகா - வா. பொருள் : வேட உருக்கொண்டானே வருக; வலிய மலைகளையுடையோனே; வாவுகின்ற அழகிய இடப வாகனத்தையுடைய அச்சிவபிரானது மனத்தில் விளங்குபவனே; என்னை இப்பொழுதே காத்தருள்க. புதுமையான அழகுடையவனே, கை கற்பகமாக ஆனவனே, மலரகிதனே வருக. 9. ஏகபாகநூற்றந்தாதி ஓரடியினையே நான்கு முறை எழுதி ஒரு பாடலாக ஆக்கி, வரிவரிதோறும் வெவ்வேறு பொருள் தரும் நூறு பாட்டுகளை யுடையது இந்நூல். மிக இளம் பருவத்திலே யாக்கப் பெற்ற நூல் இது என்பதை முன்னரே அறிவோம். ஒரு பாடலின் அந்தம் மற்றொரு பாடலின் ஆதியாக இருக்க யாக்கப்பெற்றமையால் இந்நூல் ஏகபாத நூற்றந்தாதிஎனப் பெயர் பெற்றது. இந்நூலுக்கு ஆசிரியராலேயே உரை எழுதப் பெற்று, 1902 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் தொடங்கி, சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் வெளியிட்டுவந்த ஞானசித்தி இதழில் வரன்முறையாக வெளிவந்தது. அரிதிற் பொருள் காணக் கிடக்கும் இந்நூற் பாக்களுள் ஒன்றும் அதன் பொருளும் வருமாறு: திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே 1. திரு - தகு - ஐயா - கத்த - மாலையது - அணித்து - இல - கவ்வை - ஏ. 2. திருத்த - கை - யாகத்த - மாலைய - தண் - நித்தில - கவ்வை - யே 3. திரு - தகை - ஆகத்த - மால், ஐய - தணித்து - இலக - வை - ஏ. 4. திருத்த - கை - ஆகு - அத்தம் - ஆலைய - தணி - திலக - ஐயே. (1) அழகிற்குரிய ஐயனே, கர்த்தனே, மாலைப் பொழு தாயிற்று (பறவை முதலியவற்றின்) ஒலியும் இலவாய் அடங்குகின்றன. (2) பூரணனே! ஒழுக்கமுள்ள வேள்வித்தலைவா! தண்ணிய முத்து மாலை அணிந்தவனே! அலரே பரவா நின்றது. (3) இலக்குமி வசிக்கும் பெரிய மார்பத்தையுடைய விண்டுவுக்குத் தலைவா, தலைவியின் காம வேட்கையைத் தணித்து விளங்கத் தலையளி செய்தாயாக. (4) அவள் வாட்டம் திருத்துக. கையின் கணுள்ள பொருளை ஒப்பாய், திருத்தணி ஆலயத்து விளங்கும் திலகம் போல்பவனே, அழகனே! 10. சிதம்பர விநாயகர் மாலை சோழவந்தான் கல்மண்டபத்தில்எழுந்தருளிய சிதம்பர விநாயகர் மீது சண்முகனார் பாடிய முப்பது பாடல்களைக் கொண்ட நூலாகும் இது. ஈதல் இசைபெறுதல் எக்காலும் நின்பதமே ஓதல்இவை நாயேன் உறப்பணிப்ப தெக்காலம்? இயலாதி முத்தமிழும் மற்றுமெனக்குணர்த்தி மயலாதி நீக்கியெனை வாழ்விப்ப தெந்நாளோ? என்பனபோல் சீரார் சனகைச் சிதம்பர விநாயகனிடம் வேண்டும் வேட்கையுரைகள், தாயுமான அடிகளின் கண்ணிகளை நினை வூட்டத் தவறா. 11. திருவடிப்பத்து மதுரை மீனாட்சியம்மையின் திருவடிப் பெருமையை வியந்து பத்து நேரிசை வெண்பாக்களால் பாடப் பெற்ற நூல் திருவடிப்பத்தாகும். உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றானும் ஒன்றுபட்டு இறைவனடி தொழுதலே இன்பங் கூட்டும் என்பதனை, ஈரம் படைத்த இதயமும் எக்காலும் ஓரம் படையா ஒருநாவும் - காரென்ன ஈகையும் பெற்றோர் இருக்கும் திருக்கூடல் தோகையடி சேர்மின் தொழுது என்னும் பாடலால் காட்டும் நயம் அறிந்தின்புறற்பாலதாம். ஐயமிடாரை அருக்கன் மகனென்று பொய்யேபுகலும் புலவீர்காள் என்று விளிப்பதும், கல்லய்ப் பிறந்திலேன் காமாரி கூடலிலே நல்லய் மணம்புரிந்த ஞான்று என்று வேட்கையுரைப்பதும், கற்குந்தொறும் களிப்புத் தருவதாம். சந்தத் திருவடிமாலை, சிதம்பரவிநாயகர்மாலை, திருவடிப் பத்து ஆகிய மூன்றையும்சேர்த்து 1914 ஆம் ஆண்டில் மு. ரா கந்தசாமிக் கவிராயர் வெளியிட்டார். சந்தத் திருவடிமாலைக்குச் சண்முகனார் எழுதிய குறிப்புரை உண்டு. இந்நூல்களையன்றி இசை நுணுக்கச்சிற்றுரை, பஞ்சதந்திர வெண்பா, ஆகு பெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சி ஆகிய நூல்களும், நுணங்கு மொழிப் புலவர்க்கு வணங்கு மொழிப் புலவர் விண்ணப்பங்கள், இருவல மாறுகோள் ஒருதலைத் துணிவு, ஆனந்தக் குற்றம் மதுக்கூரார் புலம்பலுக்கு வாயாப்பு, மதுக்கூரார் புலம்பலுக்கு வாயாப்பு வச்சிரம், கொழுத்துன்னூசி விளக்கமும் மறுதலைக் கடாமாற்றமும் ஆகிய கட்டுரைகளும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். ************************************************************************** காப்பியத்திற்கு ஒருவர் பின் ஒருவராகத் தம்முள் ஒருவரைஒருவர் மறுத்துரை எழுதிய வித்தகர் இதுகாறும் ஐவராவர் என்பதூஉம், அவ்வுரைகளைத்தழுவிச் செய்த நன்னூல் முதலாய பின்னூல் பலவு முன்னூல் போலப் போக்கற்றனவல்ல என்பதூஉம், கற்றறிந்த செப்பமுடையா ரெல்லாரும்ஒப்ப முடிந்தவே யாகலின் அவற்றைப் பற்றி ஈண்டான்றேனும் உரையேன். (தொல்காப்பியப் பாயிர விருத்தி, நன்றி கூறல்) சண்முகனார் தோற்றத்தால் இலக்கணம் விளக்கமுற்றது. ஆராய்ச்சி விரிவுற்றது; தருக்கம் உயர்வுற்றது; வர கவிக்கும் வர கவியாய், இயற்கவிக்கும் இயற்கவியாய் இலங்கினார். புலவரைத் திணறச் செய்யும்கவிகள், இவர் பாடியவற்றுள் மிகுதி. சிறாரும் உணருமாறான கவிகள் இயற்றாமலும் இல்லை. இவ்வாறு உரிய வழிகளிலெல்லாம் உவந்து தமிழ்த் தொண்டாற்றிய அண்ணல் சண்முகனாரை நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்துதல் வேண்டும். இது தமிழர் கடன்; இதற்கு முதன்மையானது அவர் இயற்றிய நூல்களைக் கற்றுத் தெளிவதே! 1. இளமையும் கல்வியும் தோன்றிற் புகழொடு தோன்று - என்றார் பொய்யா மொழியார். புகழொடு தோன்றிய பெருமக்களால் அவர்கள் பிறந்த மரபும், குடியும், இடமும், நாடும் பெருமையடைகின்றன. அவ்வகையில் தோன்றிய பெருமக்களுள் ஒருவர் வேதநாயகர். அவர் தம் இளமையும் கல்வியும் பற்றி இவண் காண்போம். திருச்சியை அடுத்த வேளாண் குளத்தூரில் கத்தோ லிக்கக் கிறித்தவருள் சிறந்தோராய் விளங்கினார். சவரி முத்துப்பிள்ளை என்பார். அவர்தம் அருமை மனைவியார் ஆரோக்கிய மரியம்மாள். இவர்களின் செல்வ மகவாக ஆயிரத்து எண்ணுற்று இருப்பத்தாறாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் பதினொன்றாம் நாள் வேதநாயகம் பிறந்தார். வேதநாயகர் குடும்பம் அன்னைத் தமிழே அன்றி, ஆங்கிலத்திலும் அரிய புலமை பெற்றது; மருத்துவத் தொழிலில் மாண்புற்றது; சமயச் சால்பிலே தலைமை பெற்றது; தொண்டு புரிதலில் துலக்கம் எய்தியது; ஆகவே அக்குடியில் பிறந்த வேதநாயகருக்கு இளமையிலேயே கல்வித் திறமும் தொண்டு உள்ளமும் இயற்கையாக வாய்க்கப் பெற்றன. வேதநாயகர் குழந்தைப் பருவத்தினராக இருந்த நாளில் செல்வர் வீட்டுப்பிள்ளைகள் கல்வியில் சிறிதும் கருத்துச் செலுத்தினார் அல்லர். வீண்பொழுதுபோக்கு, வெட்டிப் பேச்சு, வேண்டாச் செயல் இவற்றில் ஈடுபட்டனர். பெரியவர்களும் தம் குழந்தைகளுக்குச் செல்லங் கொடுத்து வளர்த்துச் சீரைக் கெடுத்தனர். ஆனால் வேதநாயகர் செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தும் அக்கேடுகட்கு ஆளாயினார் அல்லர். வேதநாயகரின் அன்னையார் மரியம்மாள் தம் மைந்தர் கல்விப் பயிற்சிலே பெரிதும் கருத்துச் செலுத்தினார். உடல் நலத்தையும் உள்ளத் தூய்மையையும் கல்வித் திறத்தையும் ஒருங்கே பேணி வளர்த்தார்; அதனால் வேதநாயகர் துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலேயே கூரிய அறிவும் சீரிய பண்பும் உள்ளவராகத் திகழ்ந்தார்; பார்த்தவர் பாராட்டியுரைக்கும் பாங்கு பெற்றார்! பெற்றோரிடத்தில் தம் பத்தாம் அகவை வரை வேதநாயகர் கல்வி பெற்றார். mj‹ã‹ âÇáuòu« br‹wh®.; ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த தியாகப்பிள்ளை என்பாரை அடைந்து கற்றார். தவறின்றி ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்றார்; அதேபொழுதில் தமிழில் கவிதை இயற்றவும் தேர்ச்சி பெற்றார். பலருடைய விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது பல பாடல்கள் பாடினார். அத் தொடக்கப் பணியிலேயே எதிர்காலப் பெரும் புலவர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். வேடிக்கை விளையாட்டுக்களில் வேதநாயகர் இளம் பருவத்திலேயே ஈடுபட்டறியார். தமக்குக் கிடைத்த பொழுதுகளை யெல்லாம் தமிழ் ஆங்கில நூல்களைக் கற்பதிலே செலவிட்டார். பாடம் ஏறினும் ஏடது கைவிடேல் என்பதற்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தெளிந்து கற்றார். சிலர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்வியே முடிந்துவிட்டதாகக் கருதுவது உண்டு. ஆனால் வேதநாயகர், பள்ளிப் படிப்பு முடிந்த பின்னரே உண்மையான கல்வி தொடங்குகிறது என்னும் கருத்து உடையவர். பள்ளிப் படிப்பு பிற்காலப் படிப்பிற்கு அடிப்படை! பிற்காலக் கல்வியால்தான் மாளிகை எழுப்ப வேண்டும். பூட்டி வைத்திருக்கும் நிதியறைத் திறவுகோல் பள்ளிக் கல்வி. பிற்காலக் கல்வியால் தான் அறையைத் திறந்து செல்வக்குவியலை அடையவேண்டும். இவ்வாறு அழுத்தமாகக் கூறியவர் - எழுதியவர் - வேதநாயகர். ஆகவே அவர், தம் கல்வித் திறம், கவிதை, ஆற்றல், அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றை வளர்த்துக் கொண்டது இயல்பேயாம். வேதநாயகர் இளமைப் பருவம் பண்பும் பயனும் மிக்கது. இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவது; அவர் காட்டிய வழியில் சென்று நல்வாழ்வு வாழ்தல் இன்றைய இளைஞர்தம் தலையாய கடமையாம். 2. மொழி பெயர்ப்பாளர் பணி ஆங்கிலவர் இந்திய நாட்டை ஆளத் தொடங்கிய காலம் தொட்டு நீதிமன்றம் முதலியவற்றில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்கும் பணி ஒன்று உருவாகியது. வேதநாயகர் அப்பணியில் ஈடுபட்டுச் செய்த தொண்டுகளை இவண் அறிவோம். வேதநாயகர் தம் இருபத்திரண்டாம் அகவையில் நீதிமன்றத்தில் பத்திரப் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். அப்பொழுது திருச்சி, மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவர் வேண்டியிருந்தார். அவ்வேலைக்கு விண்ணப்பம் செய்தார் வேதநாயகர். அவர் விரும்பியவாறே அவ்வேலையும் அவர்க்குக் கிட்டியது. மொழிபெயர்ப்பு வேலை சிக்கல் நிறைந்ததாகவும், அளவுக்கு மிஞ்சியதாகவும் இருந்தது. நீதிமன்ற நடவடிக்கை களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற கலைச் சொற்கள் வேண்டும். அச் சொற்களும் கருத்து வேற்றுமைக்கும் முரண் பாட்டுக்கும் இடம் அளிக்காதவையாக இருத்தல் வேண்டும். இந்நாளில் கூட நீதிமன்ற நடவடிக்கைகளை மொழி பெயர்ப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ள போது அந்நாளில் வேதநாயகர் பெரும் பாடுபட்டிருக்க வேண்டும். ஆயினும் சிக்கலான முடிவுகளையும் சட்ட நுணுக்கம் தவறாமல் மூலத்திற்கு ஏற்றவாறு மொழி பெயர்த்தார். பிறர் பாராட்டும் மொழிபெயர்ப்பாளியாகத் திகழ்ந்தார். நீதிமன்ற மொழிபெயர்ப்புப் பணியுடன் தம் கடமையை நிறுத்திக் கொண்டார் அல்லர் வேதநாயகர். ஆங்கிலம் அறியாத மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளையும், சட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார். சதர் நீதிமன்றத்தில் 1805 முதல் 1861-ஆம் ஆண்டு வரை செய்யப் பெற்ற முடிவுகளை யெல்லாம் ஒருங்கு திரட்டி மொழிபெயர்த்து 1862ஆம் ஆண்டில் சித்தாந்த சங்கிரகம் என்னும் பெயரால் நூலாக வெளியிட்டார். பின்னர் 1862. 1863-ஆம் ஆண்டு நீதிமன்ற முடிவுகளைத் தமிழாக்கம் செய்து 1864ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நாளில் வழக்கு மன்றங்கள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்னும் கருத்து உருவாகியுள்ளது. சட்டங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப் பெறல் வேண்டும் என்றும் முடிவு செய்யப் பெற்றுள்ளது. அதற்குரிய முயற்சிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் முன்னரே இச்சீரிய எண்ணத்தால் உந்தப் பெற்றுத் தன்னந்தனியாக நின்று பணிசெய்த பெருமை வேதநாயகரையே சாரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. குற்ற வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும்போது நீதிபதியுடன் காசியார் பத்துவாக் கொடுப்பதும் அந்நாளில் வழக்கமாக இருந்தது. நீதிபதி முடிவும், காசியார் முடிவும் மாறுபாடு உடையதாயின் அவ்வழக்குகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சதர்க்கோர்ட்டார் முடிவுக்கு அனுப்புதல் வேண்டும் என்பது விதி. அத்தகைய வழக்கு ஒன்றை மொழி பெயர்த்த வேதநாயகர் நீதிபதியின் கையொப்பத்திற்காகத் தந்தார். நீதிபதி டேவிட்சன் என்பார், அவர் வேற்றூர் மாற்றிச் செல்லும் நிலைமையில் இருந்ததால், பார்த்துக் கையொப்பமிட்டு அனுப்புவதாக மொழிபெயர்ப்பை எடுத்துச் சென்றார். ஆனால், டேவிட்சன் நினைப்பு நிறைவேறவில்லை. அவர் போன இடத்தில் மாண்டு போனார். மொழிபெயர்ப்பு வாராத குற்றம் வேதநாயகர் மேல் வீழ்ந்தது. வேதநாயகர் பணியாற்றிய நீதிமன்றத்திற்குப் புதிதாக வந்திருந்த நீதிபதி மிக முன் கோபக்காரர். அவரே, வேதநாயகரைக் குற்றவாளியாக்கத் துடித்தார்; வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று மேல் மன்றத்தை வேண்டி அதில் வெற்றியும் கண்டார். வேதநாயகர்க்குத் தொல்லைகள் அடுக்கடுக்காய் வந்தன. தத்திருமல் நோய் வாட்டியது; ஒருநாள் பாம்பு தீண்டிவிட்டது; வண்டி குடை சாய்ந்தது! ஆயினும் சிறிதும் தளராது நிமிர்ந்து நின்றார். தம் மேல் குற்றம் இல்லாமையைத் தெளிவாக விளக்கினார். இந்நிலையில் டேவிட்சன் பெட்டியில் இருந்த மொழிபெயர்ப்பும் கிட்டியது. ஆகவே வேதநாயகர்க்கு மீண்டும் வேலை கிட்டியது. அதனையும் பலவழிகளிலும் தடுத்தார் நீதிபதி. அவர் இங்கிலாந்து சென்ற பின்னரே அவ்வேலை வாய்க்கப்பெற்றார் வேதநாயகர். பட்ட காலிலே படும் என்பது பழமொழி. மொழிபெயர்ப்பாளராக இருந்த நாளில் வேதநாயகர் பட்ட துயர் பெரிது. எனினும் துணிவாக நின்று அத்துயரை ஓட்டினார். முயற்சி திருவினை ஆக்கும் அன்றோ! 3. முன்சீப் வேலை உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? - என்பது முதுமொழி. வேதநாயகர் இடையறா உழைப்பாளர். உழைப்புத் திறத்தால், மொழிபெயர்ப்பாளராக இருந்த அவர் முன்சீபாக உயர்வு பெற்றார். அவர்தம் உழைப்பும் உயர்வும் பிறர்க்கு நல்வழி காட்டிகளாம். 1856ஆம் ஆண்டில் முன்சீப் வேலையில் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவ்வேலைக்கு அறுபது பேர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மூவர் தக்கவர் எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். அம்மூவருள் வேதநாயகர்க்கே வேலை கிடைத்தது. தரங்கம்பாடியில் வேதநாயர் முன்சீபாக அமர்ந்தார்; நேர்மையான நீதிபதியாக விளங்கினார்; மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆங்கிலேயர்களும் பாராட்டும் வண்ணம் திகழ்ந்தார். அவர்களால் துணை நீதிபதி வேலைக்குத் தக்கவர் எனப் பரிந்துரை செய்யப் பெற்றார். வேதநாயகர் நீதிவழங்குவதில் உள்ள செம்மையைக் கண்டு வேறு மன்றங்களில் வழக்கு நடத்தியவர்கள் கூட அவ்வழக்குகளை மாற்றிக்கொண்டு இவரிடம் வந்தனர். வழக்கு விசாரிக்கப்படுவதையும், முடிவு கூறுவதையும் திரளாக மக்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். மாவட்ட நீதிபதியாக நெல்சன் என்பவர் வந்தார். தம் செயலில் நேர்மையை நாடும் வேதநாயகர், அவரைப் போய்ப் பேட்டி கண்டார் அல்லர். ஆனால் ஓடித் தேடிப்போய் ஒன்றுக்குப் பத்தாகத் தூண்டிவிடுபவர் வாய்க்கு வேறு வேலை உண்டா? வேதநாயகர் மேல் வேண்டுமட்டும் பழிகூறினர். நெல்சனுக்கு வெறுப்பு ஏற்படும் வண்ணம் பலப்பல கூறினர். மனமாற்றம் கொண்ட நெல்சன் மாயூரம் மன்றத்தை ஆய்வதற்குத் திடுமென ஒருநாள் வந்தார். வேதநாயகர் அப்பொழுது உடல்நலம் குன்றி இருந்தார். ஆதலால் தமக்குக் கீழுள்ளோர் பணிகளை முன்னைப்போல் தணிக்கை செய்யமுடியவில்லை. ஆதலால் அங்கும் இங்கும் சில குறைகளை நெல்சனால் காண முடிந்தது. அவற்றுக்குத் தக்க விளக்கம் தருமாறு கட்டளையிட்டார். வேண்டிய விளக்கங்களை அளித்தும் நேரில் தம் சிப்பந்திகளுடன் வர வேண்டும் என்று மீண்டும் கட்டளையிட்டார் நெல்சன். அதற்கு வேதநாயகர் உடல்நிலை இடம்தரவில்லை. ஆதலால் தம் பணியாட்களை அனுப்பி உண்மை நிலையை உரைக்கச் சொன்னார். அதனை உணராத நெல்சன் சீற்றம் கொண்டார். வேலையில் இருந்து வேதநாயகரை நீக்குமாறு பரிந்துரை செய்தார். இந்நிலையில் ஓய்வுக்கால உதவித்தொகையுடன் வேதநாயகர் தாமே வேலையில் இருந்து நீங்கிக் கொண்டார். உதவித் தொகையைத் தடுக்கவும் நெல்சன் முயன்றார். அவ்வளவு சீற்றமும் சிறு குணமும் அவரிடம் மண்டிக் கிடந்தன. ஆனால் மேல் மன்றம் திங்களுக்கு நூறு ரூபாக்கள் உதவித் தொகையாக வழங்கியது. ஓய்வுபெற்ற வேதநாயகர் அதற்குப் பின்னரும் அரிய தமிழ்ப் பணிகள் புரிந்தார். அப்பணிகள் அவர்க்கு அழியாவாழ்வு நல்கின. வேதநாயகர் அதிகாரிகளின் இழிநிலையை எண்ணி எண்ணித், தாம் வேலையில் இருந்து நீங்கியதற்கு மகிழ்ந்தார்; சிறை வாழ்வு நீங்கியதாக இன்புற்றார்; குறைபல நீங்கியதாகக் களிப்புற்றார்; துன்பங்கள் அனைத்தும் தொலைந்தன என விம்மிதம் அடைந்தார்; இறைவன் அன்பில் என்றும் ஈடுபட்டு இன்னிசை பாடித் திளைத்தார். அண்டப் புரட்டன் அந்தவாதி - அகி லாண்டப் புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி சண்டப் பிரசண்டன் நியாயவாதி எனப்பாடிய அவர், போதும் போதும் உத்தியோக கனமே - இதில் ஏது சுகம் நமக்கு மனமே என்று பாடினார். வேதநாயகர் உள்ளம் தூயது; நீதியிலே நிலைத்தது; நேர்மைக்குத் தலை வணங்குவது; நேயத்தில் ஊடாடி நிற்பது. அவ் உள்ளத்திற்கு விடுதலை வேட்கை உண்டாவது இயல்பே யாம்! உள்ளம் உடைமை உடைமை என்பது வள்ளுவர் வாக்கு. 4. நீதிபதிகள் நிலைமை நீதிபதியைக் காப்பதற்குரிய தலைமை இடத்தில் தகுதியான பொறுப்பில் அமர்ந்திருப்பவர் நீதிபதி ஆவர். அவர் சொல்லும் சொல் ஒவ்வொன்றும் நன்மையோ தீமையோ உடனுக்குடன் விளைவிப்பன. ஆதலால் அவர் தம் சொல்லையும் செயலையும் பொன்னேபோல் போற்றுதல் வேண்டும். வேதநாயகர் நீதித்துறையில் ஈடுபட்டவர்; நீதிமன்றத்து மொழிபெயர்ப்பாளராக இருந்து முன்சீபாகவும் பல்லாண்டுகள் பணியாற்றினார். நீதிமன்ற நடவடிக்கைகளையும் சட்டங் களையும் தமிழாக்கம் செய்தார். ஆகவே அவர், நீதிபதிகளைப் பற்றி உரைத்துள்ள உரைகள் கருத்தில் இருத்தத் தக்கனவாம். குறித்த காலத்தில் நீதிபதிகள் மன்றங்களுக்குச் செல்வது இல்லை. எப்பொழுது வருவார் எப்பொழுது வெளியே போவார் என்பது எவருக்கும் தெரியாது. ஆதலால் பொதுமக்கள் நாள் முழுமையும் காத்துக் கிடக்க நேரிட்டது. பொழுதெல்லாம் காத்துக் கிடந்தால் கூட திடுமெனத் தோன்றிக் கட்சிக்காரர் வரவில்லை என்று வழக்கைத் தள்ளி விடுவார். வந்து இருந்தவர் வழக்கும் விசாரிக்கப்படுவது இல்லை. குற்றத்தின் அடிப்படையை உணராமலே வழக்கறிஞர் சொல்லைக் கொண்டே முடிவு வழங்குவதும். சரியான சான்றுகள் இல்லை என்று தள்ளுபடி செய்வதும் எங்கும் எளிதாக நடை பெற்றன. பல வழக்குகளை ஒரே வேளையில் எடுத்துக் கொண்டு எதையும் தீர ஆராயாமல் முடிவு செய்தனர். சாட்சிகளை உருட்டியும், மருட்டியும் அவர்களிடம் சொல்லை வாங்கி முடிவு கூறினர். வழக்காளிகளைப் பார்த்த உடனேயே அவர்மேல் தவறான எண்ணங் கொண்டு முடிவு கூறுவதும் உண்டு; இவ்வா றெல்லாம் நீதிபதிகள் இருந்தனர் என்று வேதநாயகர் கூறியுள்ளார். அதிகாரிகள் பொதுமக்களின் ஊழியராக இருக்கத் தக்கவரே அன்றித் தலைவர் அல்லர் என்பது வேதநாயகர் துணிபு. அதனை எங்கும் எவரிடத்தும் உரைக்கச் சிறிதும் அஞ்சினார் அல்லர். உரையாக எழுதியும், கவியாகப் பாடியும் இக் கருத்தைப் பரப்பினார். உரிமை பெற்றுள்ள இக்காலத்தும் கூறுதற்கு இயலாத வற்றை எல்லாம் வேதநாயகர் அந்நாளிலே கூறினார். அயலார் ஆட்சியில் அதிகாரிகளைக் கண்டித்து உரைக்க வேண்டும் ஆனால் எவ்வளவு துணிவு வேண்டும்! இடித்துச் சொல்வதிலும் நயமான முறையைக் கையாண்டார் வேதநாயகர்; தவறியவர் நெஞ்சத்தில் படும் வண்ணம் கேலியும் கிண்டலும் கலக்க இகழ்ந்து எழுதினார்; இசைப் பாட்டாகப் பாடி நாணுமாறு செய்தார். பழிப்பது போலப் புகழ்வதும், புகழ்வது போலப் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி எனப்படும். இவ்வஞ்சப் புகழ்ச்சி சங்ககாலத்தில் அங்கதம் எனப்பட்டது. நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியவர்களைப் பற்றி வேதநாயகர் எழுதியுள்ளவை அனைத்தும் மிக உயர்ந்த அங்கதங்கள் என்று கூறத்தக்கன. வேதநாயகர் தம் எழுத்தாற் றலையும் பண்பாட்டையும் விளக்க வல்லன. செருக்கு மிக்க அதிகாரி ஒருவனை விவரிக்கின்றார் வேதநாயகர்; அவன் இருக்கிற இடத்திலே ஈ பறக்கக் கூடாது; எறும்பு ஊரக்கூடாது; குருவி கத்தக்கூடாது; ஒருவரும் பேசக் கூடாது; எப்போதும் நிசப்தமாய் இருக்கவேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் சோடுபோட்டுக் கொண்டு போகக் கூடாது; அங்கவத்திரம் போடக் கூடாது; கைவீசிக் கொண்டு நடக்கக் கூடாது; தாம்பூலம் தரிக்கக்கூடாது; சிங்கத்தின் குகை ஓரத்திலே போகிறவர்கள் பயந்து பதுங்கிக் கொண்டு போகிறது போல இவன் வீட்டுக்கு எதிரே செல்லுகிறவர்களும் நடுங்கிக் கொண்டு அடக்கமாகப் போக வேண்டும். அவன் வெளியே புறப்பட்டால் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லோரும் எழுந்துவிட வேண்டும்; நடக்கிறவர்கள் எல் லோரும் நின்றுவிட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு ஆக்கினைகளும், அபராதங்களும் கிடைக்கும். அவனைக் கண்டவுடனே சோடு போட்டுக் கொண்டிருப்பவர் அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால் அவனை அடிப்பதற்காகவே கழற்றுவதாகத் தோன்றும் அதிகார ஆணவத்தை இதனைப் பார்க்கிலும் இடித் துரைத்து அறிவு மூட்ட இயலுமா? உயர் அதிகாரத்திலே இருந்த வேதநாயகர் தொண்டராக வாழ்ந்தார் என்பதற்கு இவ் வெழுத் துக்கள் சான்றாம். தொண்டர் தம் பெருமை சொல்ல வொண்ணாதே என்பது ஔவையார் வாக்கு. 5. வழக்கறிஞர் கடமை வழக்குகளையும் சட்ட நுணுக்கங்களையும் தெளிவாக உணர்ந்து அறத்தைக் காப்பதற்காகக் கடமை புரிய வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். அவர்கள் பணியோ சமூக நலத்திற்கு மிகமிக வேண்டத்தக்கது. நாட்டில் கொடுக்கல் வாங்கல், நிலபுல விற்பனை, ஒப்பந்தம் ஆகியன நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுள் எத்துணையோ மாறுபாடுகளும் தகராறுகளும் உண்டாகின்றன. இவற்றையெல்லாம் அனைவரும் அறிந்து தெளிந்து சட்டமுறைப்படி வழக்காடுவோர், முறைமையை நாடவோ இயலாது. ஆகவே அவற்றுக்குத் துணையாக அமைந்து பாடுபடத் தக்கவர்களே வழக்கறிஞர்கள். ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கைத் தாம் ஏற்றுக் கொள்ளுமுன் அது முறைமையானதுதானா என்பதை நன்கு ஆராய்தல் வேண்டும். அறமுறைக்கு மாறான வழக்குகளால் எவ்வளவு வருவாய் வருவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. வருவாய் ஒன்றே கருதி வழக்கை எடுத்துக் கொள்பவர் அவ்வழக்கைக் கொண்டுவந்த தீயவனினும் தீயவர் ஆவார். நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா - என்பது வழக்குக் கொண்டு வருபவனுக்கு மட்டுமன்றி வழக்காட முன்வரும் வழக்கறிஞர்களுக்கும் உரிய பொது அறமேயாகும். முறைமையான வழக்கு என ஒன்றை எடுத்துக்கொண்ட பின்னரும், அதற்காக எடுத்துக்கொள்ள நேரும் உழைப்பு, வழக்கின் தன்மை, வழக்குக் கொண்டு வருபவனின் பொருள் நிலை ஆகிய இவற்றை எல்லாம் கருதித் தகுதியான பணத்தையே வாங்குதல் வேண்டும். துன்பப்படுகிறவர்களுக்குச் செய்யும் துணை என்னும் பெயரால் அவர்களை மீளா வறுமைக் குழிக்கு ஆளாக்குவது கொடுமை. அளவுக்கு மிஞ்சித் தொகை வாங்குவது அட்டை உறிஞ்சுவது போன்றது என்பதும், சிறு தெய்வங்கள் உயிர்ப்பலி வேண்டுவது போன்றது என்பதும் தேவநாயகர் கருத்து. தாம் வழக்காட ஏற்றுக்கொண்ட வழக்கைத் தாமே நடத்தாமல் தமக்காகப் பிறரை வழக்காட விடுக்கும் வழக்கறிஞர்களும் உளர். அவர்கள் செயல் பெருங்கேடு தரும். தம்மால் முடிந்தால் மட்டுமே ஒரு வழக்கை ஏற்க வேண்டுமே அன்றி வரும் வழக்குகளை எல்லாம் பண ஆசையால் வாரிப் போட்டுக் கொண்டு கெடுப்பது கூடாது. தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழிலேயா வழக்குகள் நடத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் நடைபெறுவது கொடுமையானது. இதனை அந்நாளிலேயே வேதநாயகர் கண்டித்தார். தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல்கள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேசமொழியும் தமிழ்; கோர்ட்டிலே வழங்குகிற மொழியும் தமிழ்; நியாய வாதியும் தமிழர்; வாதிக்கிற வக்கீலும் தமிழர்; கட்சிக்காரர் தமிழர்; எல்லாம் தமிழ் மயமாயிருக்க யாருக்கு உவப்பாக அவர்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை. நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலராய் இருந்தால் ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ் நியாயாதிபதி முன் தமிழ் வக்கீல் ஆங்கிலத்தில் வாதிப்பது ஆச்சரியம் அல்லவா! ஆங்கில அதிகாரிகள்கூட தேசமொழியிலே பரீட்சையில் தேறவேண்டும் என்ற ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்க தமிழ் வக்கீல்கள் தாய்மொழியைத் தள்ளிவிட்டு அந்நிய மொழியிலே வாதிப்பது அசந்தர்ப்பம் அல்லவா! தமிழ் நன்றாகத் தங்களுக்குப் பேசவராது என்று பெருமை போலச் சொல்லிக்கொள்கிறார்கள். இதனினும் இழிவு வேறொன்றுமில்லை. சட்ட நூல்கள் ஆங்கிலத்திலே அமைந்து கிடப்பதாலும் சட்ட நுணுக்கங்களுக்குரிய சரியான பதங்கள் தமிழிலே இல்லாமையாலும் தாங்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்து வதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அது அறியாமையே; உண்மை அல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி ஆராய்ந்தால் பதங்கள் அகப்படாமற் போகா. இரண்டொரு குழுக்குறிகளுக்குத் தமிழ்ச் சொற்கள் இல்லை என்றால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதிவழங்குவது கோர்ட்டார் கடமை; தாய்மொழியிலே கோர்ட்டு நடவடிக்கைகள் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே அன்றி மக்களுக்குப் புரியாத மொழியிலே நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்? சுருங்கச் சொன்னால் தமிழ் நியாயாதிபதி முன் ஆங்கிலத்திலே வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள் வேதநாயகர் தமிழின்பால் கொண்ட பற்றும். அதன் வளர்ச்சியில் காட்டிய ஊக்கமும் இப்பகுதிகளால் நன்கு விளங்கும். அந்நாளுக்கு மட்டுமன்றி இந்நாளிலும் வேதநாயகர் உரை நூற்றுக்கு நூறு வற்புறுத்தத் தக்க நிலைமையிலேயே உள்ளது என்பதில் ஐயம் சிறிதும் இல்லை! 6. முன்சீப் வேதநாயகரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வேதநாயகர் அறிஞர்; புலவர்; பாவலர். மீனாட்சி சுந்தரர் மகாவித்துவான்; நடமாடும் சுவடிச்சாலை; கவிஞர் கோமான்! இவர்கள் தொடர்பு புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் என்பதுபோல் தோன்றிற்று. மீனாட்சிசுந்தரர் வேதநாயகரைக் காண்பதற்கு முதன் முறையாகச் சென்றார். செய்தித் தாளில் தங்களைப் பற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன் என்னும் வரவேற்புடன் களிப்புற்றார் வேதநாயகர். முதற்காட்சியே முழுமைக் காட்சியான நலம் கொழித்தது. திருச்சி மலைக்கோட்டைத் தாயுமானவர் கோவில் கட்டளைத் தம்பிரான். தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்டவர்; ஆதீனத்தால் நியமிக்கப் பெற்றவர். ஆனால், ஆதீனத்திற்கு மாறுபட்டும் வேறுபட்டும் நடக்கத் தலைப்பட்டார். அவரைத் தட்டி ஒடுக்கி நிலைப்படுத்த வேண்டிய முயற்சியில் ஈடுபட்டார் தருமபுர ஆதினத் தலைவர். அப்பொறுப்பைப் பிள்ளை அவர் களிடம் ஒப்பித்தார். அதனால்தான் வேதநாயகரைக் காண்பதற்குப் பிள்ளை அவர்கள் சென்றார்கள். கட்டளைத் தம்பிரான் செய்யும் பொருந்தாச் செயல் களைப் பிள்ளை அவர்கள் வேதநாயகரிடம் எடுத்துரைத்தார். முறைப்படி அச் செய்தியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ஒரு விண்ணப்பமாகத் தர வேண்டினார். அவ்வாறே அப்பணியை இனிது முடித்துத் தந்தார் வேதநாயகர். செம்மையும் நேர்மையும் வாய்ந்த அவ் விண்ணப்பம் ஆதீனத்தார்க்கு வெற்றியைத் தேடித் தந்தது; பெரும் புலமையாளர் இருவரைச் சேர்த்து வைத்த பெருமையையும் அது தேடிக் கொண்டது. பிள்ளை அவர்கள் நினைத்த உடனே எத்தகு சிறுதடையும் இல்லாமல் செய்யுள் இயற்றும் திறம் படைத்தவர். நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பாடல் பாடுதல் அவர்க்கு எளிய செயல். இத்தகையவர் உள்ளத்தில் வேதநாயகர் அன்பும், புலமையும், தொண்டும் மின்னி மின்னி மிளிர்ந்தன. அவற்றைக் கொண்டு, வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவராக்கி 438 பாடல்கள் பாடினார். குளத்தூர்க் கோவை என்பது அதன் பெயர். பெரியோர் தொடர்பு உலகுக்குப் பெருநலம் ஆக்கும் என்பதற்கு இச் செய்தி சான்றாம். வேதநாயகர் நீதி நூல் என்னும் அரிய நூல் ஒன்று இயற்றினார். பிள்ளை அவர்கள் அந் நூல் முழுவதையும் பார்த்துச் சிறப்புப் பாயிரம் பாடினார். முன்னிலும் இவர்கள் தொடர்பு முதிர்ந்தது. தம்முடன் சில நாட்களேனும் பிள்ளையவர்கள் தங்கி இருக்க வேண்டும் என்று வேதநாயகர் விரும்பினார்; தம் வேட்கையைப் பிள்ளை அவர்களுக்கு எழுதினார். பிள்ளை அவர்கள் வேதநாயகர் முன்சீப் பணிசெய்து கொண்டிருக்கும் சீர்காழிக்குச் சென்றார். பிள்ளை அவர்கள் சீர்காழிக்கு வந்தது ஊர்ப் பெருமக்கள் உள்ளத்தைக் குளிர்வித்தது. அவரைக் கொண்டு தம் ஊரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமான் மேல் ஒரு கோவை நூல் பாடுமாறு வேண்டினர். பிள்ளை அவர்களும் தம் விருப்புக்குரிய அப் பணியை ஏற்றுக் கொண்டு விரைந்து இயற்றினார்; நூல் அரங்கேற்றத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றன. கவியரங்கத் தலைமையை வேதநாயகர் ஏற்றார். தானும் தவறாமல் வந்து கவியரங்கம் முடியும் வரை இருந்து சிறப்பாக நடத்தினார். கவிச் சுவையிலே மிகமிக ஈடுபட்டார் வேதநாயகர். தம் கருத்துக்களை அவ்வப்போது கவியாகக் கூறினார். இறைவனே, எத்துணையோ மாலைகள் நீர் அணிந்திருப்பீர்; ஆனால் இந்தக் காழிக்கோவைபோல் ஒரு மாலையை அணிந்த துண்டோ? உண்டாயின் நீதிபதியாகி எம்முன் உரையும் என்னும் கருத்தமைய காழிவைப்பின் நீதி அதிபதி நாம் என அறிவீர்; நம் முன்னம் சத்தியமா அறைகுவீரே என்று பாடினார். வளரும் பிறை போன்றது மேலோர் நட்பு என்பர். அவ்வாறே வேதநாயகர், பிள்ளை அவர்கள் நட்பு வளர்ந்து முழுமதியாகத் திகழ்ந்தது. அந்நட்பால் நற்றமிழ்; இலக்கியம் மேலும் நலம் பெற்றது. 7. வேதநாயகரும் சுப்பிரமணிய தேசிகரும் சைவ சமயத்தைப் பரப்புவதற்கெனச் சைவ ஆதீனங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் திருவாவடுதுறை ஆதீனமும் ஒன்று. அதன் முதல் தலைவர் நமச்சிவாய மூர்த்திகள் என்பவர்; 16-ஆம் பட்டத்திலே வந்தவர் சுப்பிரமணிய தேசிகர் அவர்க்கும் வேதநாயகர்க்கும் உண்டாய தொடர்பு பற்றிக் காண்போம். சுப்பிரமணிய தேசிகர் தமிழாய்ந்து தெளிந்த உயர்ந்த பரம்பரையில் வந்தவர். திருக்குற்றலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் வழியில் வந்தவர். தமிழ் - வடமொழி ஆய இருமொழிப் புலமையும் பெற்றவர்; இசை வல்லவர்; மெய்ப்பொருள் தேர்ச்சியாளர். அவர் தமிழ்ப் புலமை தவறாத நடுவுநிலைமையும் உடைய வேதநாயகரைப் பற்றிக் கேள்விப் பட்டார். அவரைக் காண மிக விரும்பினார். அன்பீனும் ஆர்வம் உடைமை; அது வீனும் நண் பென்னும் நாடாச் சிறப்பு என்பதற்கு ஏற்ப உள்ளார்ந்த அன்பு. நண்பாக உருக்கொள்ள லாயிற்று. வேதநாயகருடைன் முன்னரே தொடர்புடைய பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனப் புலவர். ஆகவே அவர் வழியாக, வேதநாயகர்க்கு அழைப்பு விடுத்தார் தேசிகர். வேலை மிகுதியால் உடனே புறப்பட்டு வர இயலாமையால் வேதநாயகர் கவிதைக் கடிதம் ஒன்று விடுத்தார். அதில், திருவாவடு துறையில் வாழும் தேசிகர் பெருமானே! தாங்கள் எப்பொழுதும் இடையறாமல் என் உள்ளத்தே தங்கி இருக்கிறீர்கள்; என்னைப் பிரிய மாட்டீர்கள் என்பது என் துணிவு; ஆனால் பிள்ளை அவர்கள் தாங்கள் திருவாவடு துறையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களோ பெரும் புலவர்; பொய் சொல்லவும் கற்றுக் கொண்டார்கள் போலும் என்னும் கருத்துடன் அமைந் திருந்தது அப் பாட்டு. வேதநாயகர் விடுத்த பாடலைக் கண்டு மகிழ்ந்தார் தேசிகர்; தாமே மாயூரம் வர இருப்பதாகவும் துறவியாகிய தாம் இல்லறத்தார் மனைக்கு வருதல் கூடாது என்பதால் தம்மைத் தாம் தங்கியிருக்கும் மடத்திற்கு வந்து காணுமாறும் வேண்டினார். அதனை அறிந்த வேதநாயகர் புலவர்தம் பொய் சொன்னார்; தேசிகராகிய தாங்கள் சொல்வதோ விந்தையாக இருக்கிறது. என் மனையில் எங்கு நோக்கினும் அங்கெல்லாம் தாங்கள் இருக்கிறீர்கள்; அவ்வாறாகப் பிறர்மனை புகாத பெருந்துறவு பூண்டது என்பது பொய்தானே என ஒரு பாடல் பாடி விடுத்தார். தேசிகர் மாயூரத்திற்குச் சென்றார். பிள்ளை அவர்கள் வழியாக வேதநாயகர்க்குச் செய்தி அனுப்பினார். அன்று அமாவாசையும் கிரகணமும் கூடிய நாள். ஆதலால், நெஞ்சமே! அமாவாசையுடன் கிரகணமும் சேர்ந்ததால் இருள் மிகுதி என அஞ்சவேண்டா. தேசிகர் ஆகிய அறிவுக் கதிர் இங்குத் தோன்றியுள்ளது. இனி இருள் நிற்குமோ? என்று வேதநாயகர் பாடினார். தேசிகரை நேரில் கண்டு உவர்க் கடலில் பிறந்து கடுவெயிலால் சுட்டெரித்து மாலையில் மறைகின்றது கதிர்; ஞானக் கடலில் தோன்றித் தன்மை செய்து, என்றும் மறையாச் சுடருடன் விளங்குகின்றார் தேசிகர் என்று பாடினார். தேசிகர், அல்லி நிலவை நோக்கும்; என் மனம் வேதநாயகரையே நோக்குகிறது எனப் பதிற் கவி பாடினார். மீண்டும் ஒருகால் வேதநாயகரைப் பார்ப்பதற்குத் தேசிகர் விரும்பினார். தம் வண்டியை அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்தார்; தேசிகரைக் கண்ட வேதநாயகர் பயிர் மழையை நாடும்; சேய் தாயை நாடும்; அவற்றைப்போல் யான் உம்மை நாடி வந்தேன் எனப் பாடினார். நுனியில் இருந்து கரும்பைத் தின்பது போன்ற சுவையினது நம் நட்பு; வளர்பிறை போன்றது நம் நட்பு; என்று வியந்து போற்றினார் தேசிகர். தேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு வேதநாயகர் ஊர் திரும்பினார். திரும்பியதும் தேசிகருக்கு ஒரு கவி விடுத்தார். தேசிகர் பெருமானே யான் ஊர் வந்து சேர்ந்தேன்; ஆனால் உளம் வந்து சேரவில்லை. அதனை அன்பு கூர்ந்து அனுப்பி உதவுக என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் வேதநாயகர். தேசிகர் சைவ சமய குரு; வேதநாயகர் கிறித்தவர். எனினும் சமயவேறுபாடு அவர்கள் அன்புக்கும் நண்புக்கும் இடையூறாக இருக்கவில்லை. தமிழ் இணைத்து வைத்தது. இணைக்கும் தமிழ் என்றும் வாழ்க! 8. தாய்மொழியும், பிறமொழிகளும் ஒருவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறக்கும் வரை தொடர்பு உடையது தாய்மொழி. பிறமொழிகள் ஒரு சூழலிலோ ஒரு காலத்திலோ இன்றியமையாது வேண்டியிருக்கும். இவ்விரண்டு வகை மொழிகளையும் ஏற்ற ஏற்ற வகைகளில் பேணுதல் அறிவுடையார் கடமை. அக் கடமை உணர்ச்சியில் தேர்ந்த வேதநாயகர் தாய்மொழி - பிறமொழி பற்றித் தம் கருத்துக்களைத் தெளிவாக விளக்கியுள்ளார். வேதநாயகர் வாழ்ந்த நாளில் கல்வி மொழி குறித்து மூவகைக் கருத்துக்கள் நடமாடின. வைதிக மொழியான வடமொழி அரபு மொழிகட்கு முதன்மை தருதல் வேண்டும் என்பது ஒரு சாரார் கருத்து; ஆங்கில மொழிக்கே அத்தகுதி தருதல் வேண்டும் என்பது மற்றொரு சாரார் கருத்து; தாய்மொழியே முதன்மைக்கு உரியது என்பது இன்னொரு சாரார் உரிமை முழக்கம். ஒவ்வொரு வகைக் கருத்தையும் ஏற்பவரும் மறுப்பவரும் இருந்தனர். கல்கத்தாவிலும் காசியிலும் வடமொழிக் கல்லூரிகள் உருவாயின. வங்கத்து இராசாராம் மோகனார் ஆங்கிலமொழியைப் பெரிதும் வரவேற்றுப் போற்றினார்; நாட்டுப்புற மக்கள் இடம் அரபி, வடமொழிகளால் கல்வி பரப்ப இயலாது; ஆங்கிலத்தால் கூடாது; தாய்மொழியால் பரப்புவதுதான் கைகூடும்; அதுவே முறைமையானது என்று வில்கின்சன் என்பவர் கூறினார். சேகூர் என்னும் இடத்தில் கல்லூரி நிறுவித் தம் கருத்தை நிலைநாட்டினார். இவ்வகையால் தாய்மொழிப் பற்றும் ஊக்கமும் கொண்டு பாடுபட்டவர் நம் வேதநாயகர் ஆவார். ஆங்கிலத் திணிப்பின் முதல்வர் மெக்காலே. அவர் ஆதரவால் நாடெங்கும் கல்வி நிலையங்களும் பல்கலைக் கழகங்களும் தோன்றின. அறிஞர்க்கு ஆங்கிலம்; அறியார்க்கே தாய்மொழி - என்னும் முறைகெட்ட கருத்து உருவாகியது. ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கே ஆவியோ டாக்கையும் விற்றார் என்னும் நிலைமை உண்டாயது. அக் காலையில் தமிழின் பெருமையை உள்ளது உள்ளவாறே எழுதினார் வேத நாயகர். வீட்டு மொழியும் தமிழ்; நாட்டு மொழியும் தமிழ்! என முழங்கினார்; எழுதினார். ஆங்கிலம், பிரெஞ்சு முதலாய ஆட்சி மொழிகளைப் படிக்க வேண்டா என்று நாம் விலக்கவில்லை. சட்டம் ஒழுங்கு அறநெறி ஆயவை அவற்றிலே இருப்பதால் அவற்றை அறியாமல் எப்படி ஆட்சி செய்ய முடியும்? அறிவை வளர்க்க முடியும்? ஆனால் அன்னை வயிறு எரிய ஆண்டவன் பூசை செய்வது போல் தாய்மொழியை அறவே விடுத்துப் பிறமொழியைப் படிப்பது ஏற்கத்தக்கதன்று என்று சுட்டிக் காட்டினார். தமிழ் தெரியாது என்பதிலே பெருமைப் பட்டுக் கொள்ளும் சிறுமை இந்நாட்டிலே உளதாயிற்று. தமிழ் புத்தகங்களைத் கையால் தொடுவதைப் பாம்பின் புற்றுக்குள் இடுவதாய் எண்ணுவதாகவும், கன்னித் தமிழைக் கற்பது வேப்பிலை கசாயநீர் குடிப்பது போலவும் கருதுகின்றனர்; இவர்க்கு நாட்டுப் பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை; என வருந்தினார். ஆங்கிலவரை மதிக்கும் இவர்கள், அவர்கள் தம் தாய்மொழியைப் போற்றுவது கண்டேனும் தம் தாய்மொழியைப் போற்ற வேண்டாமா? என்னே அறியாமை! திருவள்ளுவருடைய குறளை அவர்கள் எப்போதாவது பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப் பார்களா? ஔவையாருடைய நீதி நூல்களைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? என இடித்துரைக்கிறார். வேதநாயகர் தமிழ் நெஞ்சம் பெரிது! உயர்ந்தது! இன்று தாய்மொழிமேல் உண்டாகியுள்ள விழிப்புணர்ச்சிக்கு வித் திட்டவர்களுள் வேதநாயகரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. வாழ்க, செயற்கரிய செய்த பெருமகனார்! 9. வேதநாயகர் செய்த நகர்மன்றத் தொண்டுகள் மொழி பெயர்ப்பாளர் வேதநாயகர் முன்சீப் வேதநாயகர் ஆனார்; முன்சீப் வேதநாயகர் நகர் மன்றத் தந்தை என்னும் தகுதியில் உயர்ந்தார்; அதுகால் அவர் செய்த பணிகள் பலப்பல; அவற்றைக் காண்போம். ஆங்கில அரசினால் நம் நாடு கொண்ட பெறற்கரும் பேறு நகரமைப்பு என்பர். சோழர் காலத்தே குடியுரிமை ஆட்சி தோன்றிச் செழித்திருந்தது. குடவோலை வழியாகத் தேர்ந் தெடுக்கப் பெற்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடையவரே ஊராட்சி. நகராட்சிப் பொறுப்பேற்றனர் செல்வம் உடையவர் எவரும் எத்தகைய மேற்பதவியும் இன்று பெற்றுவிடலாம். ஆனால், அந்நாளில் அப்பதவியை ஒழுக்கம் இல்லாதவர் ஒட்டவோ எட்டவோ இயலாது. இச் சீர்மை ஒன்றே சோழர் காலக் குடியாட்சிச் செம்மைக்கு எடுத்துக்காட்டாம். முன்சீப் வேலையில் இருந்து வேதநாயகர் ஓய்வுற்றார்; நகர் மன்றத்தலைவர் ஆனார். நேரிய நீதிபதியாகத் திகழ்ந்த அவரைப் போன்றவர் நகர் மன்றத் தலைமைப் பொறுப்பில் அமர்வது உண்மையாகவே பெரும் பேறாகும். அதிலும் நகர்மன்றத் தொடக்க நாளில் அத்தகையார் அமைந்து வழிகாட்டிச் செல்வது மிகமிகப் பயனாகும். அத்தகு சிறப்பை மாயூர நகர் மன்றம் பெற்று ஓங்கியது. குடும்பத்தலைவன் தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கிறான். ஆயிரம் ஆயிரம் குடும்பங்களுக்குத் தலைவனாயிருக்கிற நகர பிதா ஒரு கணமேனும் சும்மா இருக்கலாமா? சொற்பக் கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்கிறவன் அல்லும் பகலும் உழைக்கிறான். அப்படியானால் அளவில்லாத வருமானங்களையும் ஊதியங்களையும் உரிமை களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தலைவன் அந்த மக்களுக்காக எவ்வளவு பாடுபடவேண்டும். ஆதலின் தலைவனுடைய நேரமும் புத்தியும் சக்தியும் மக்களுக்குச் சொந்தமே அன்றித் தலைவனுக்குச் சொந்தம் அல்ல என்று பிரதாப முதலியார் சரித்திரத்திலே எழுதுகிறார் வேதநாயகர். இதற்கு ஏற்பவே நகர்மன்றத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார். பல நகர் மன்றங்கள் கடனில் மூழ்கித் தத்தளித்தல் கண்கூடு. வேதநாயகர் நகர் மன்றத்தின் வரவுக்கு ஏற்பச் செலவைத் திட்டமிட்டுச் சரிக்கட்டினார். நடைபாதைகளையும் சாலை களையும் செம்மையாக அமைத்துப் பேணினார்; குருடர் முடவர் ஆகிய உறுப்புக் குறை உடையவர்களுக்கு விடுதிகள் அமைத்து இரந்து திரியும் இழிநிலையைப் போக்கினார்; மருத்துவமனைகள் நிறுவினார்; காசிலாமல் ஏழை எளியவர்கள் மருத்துவம் செய்து நலம் பெறுதற்கு ஏற்பாடு செய்தார்; பள்ளிகள் தோற்றுவித்தார்; பெண் கல்வியில் பேரூக்கம் காட்டினார்; கல்விக் கூடங்களில் நீதிநெறி கற்கவும், உடற்பயிற்சி செய்யவும் வாய்ப்புக் கண்டார். பொதுமக்கட்கும் உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தை ஊட்டினார்; அதற்காகச் சிலம்பக் கூடங்கள் நிறுவினார்; காற்றோட்டம் வெளிச்சம் முதலாய நலத்துறைகள் அமைந்த வீடுகள் கட்டுதற்கும், திருத்தி அமைத்தற்கும் நடவடிக்கைகள் எடுத்தார். இவ்வாறு தம் இல்லத்தைத் தனித் தன்மையுடன் பேணிக் காக்கும் தந்தையைப் போலவே நகரத்தின் தகைமை வாய்ந்த தந்தையாக வேதநாயகர் விளங்கினார். வேதநாயகரைப் பாராட்டுவோர் மிகுந்தனர்; பழிப்பவரும் இல்லாமல் இல்லை. இந் நிலையில் வேதநாயகர் பேசுகிறார்; விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாகச் சிருட்டிக்சு ஆரம்பித்தது போலவே நாங்களும் புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம்; விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் இடையிலே தூங்கிவிட்டார். நாங்களோ தூங்காமல் எங்கள் எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். எங்களில் பிரதிகூலம் அடைந்தவர்கள் எல்லோரும் எங்களைத் தூசித்தார்கள்; அனுகூலம் அடைந்தவர்கள் பூசித் தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் எங்களுக்குப் பொருத்தமாய்த் தோன்றிய பிரகாரம் நடந்தோம். வேதநாயகர் எவ்வெத் துறைகளில் புகுந்தாரோ அவ்வத் துறைகளில் எல்லாம் பிறர்க்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மல்லிகைப்பூ எவ்விடத்தில் இருந்தாலும் மணம் பரப்பத் தவறாது அல்லவா! 10. வேதநாயகர் இயற்றிய நூல்கள் வேதநாயகர் ஆங்கிலம் தேர்ந்த அறிஞர்; மொழி பெயர்ப்பாளர்; தமிழ்க் கவிஞர்; உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டவர்; நீதிபதி; நகரத் தந்தை; பன்னூல் ஆசிரியர்; சீரிய சிந்தனையாளர்; தெய்வப் பற்றாளர்; சமயப் பொதுமை மல்கியவர்; இத்தகைய தன்மைகள் அனைத்தும் சேர்ந்திருந்த வேதநாயகர் நூல்கள் எத்தகு சிறப்புக்குரியன என்பதைச் சொல்லவேண்டுவதில்லை. வேதநாயகர் இயற்றிய நூல்களை நீதிநூல்கள், புனைகதைகள், சமய நூல்கள், பெண்ணலன் பேணும் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் எனப் பகுக்கலாம். அவற்றைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம். நீதி நூல்கள் : ஆத்திசூடி முதல் திருக்குறள் இறுதியாக நிரம்பிய நீதி நூல்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ் இலக்கியம். அதற்கு மேலும் சிறப்பு உண்டாக்கும் வகையில் வேதநாயகரால் தோற்றுவிக்கப் பெற்றது நீதி நூல் என்னும் பெயருடைய நீதிநூல் ஆகும். நீதிநூல் எளிய இனிய பாவகையால் அமைந்தது. மாந்தர் நல்வாழ்வுக்கு இன்றியமையாத நற்கருத்துகளையெல்லாம் ஒருங்கு திரட்டிய நீதிக்களஞ்சியம். அஃது எனின் புகழ்ச்சி அன்றாம். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதலிய புலவர்கள் 56 பேர்கள் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளனர்! வடலூர் வள்ளலார் பாராட்டும் அந் நூற்கு உண்டு எனின் அதன் சிறப்பை விரித்துரைக்க வேண்டுவதில்லை; நானூறு பாக்களைக் கொண்டது நீதி நூல். புனைகதைகள் : சிறு கதைகளும் தொடர்கதைகளும் இந்நாளில் பெருகி வருகின்றன. ஆனால் ஏறத்தாழ நூற்றாண்டு கட்கு முன்னர் அத்தகு நூல்கள் தமிழில் தோன்றவில்லை. பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் பெயரால் நகைச்சுவையும், நல்லொழுக்கப் படிப்பினையும் மிக்க நூலை 1876ஆம் ஆண்டிலேயே வேதநாயகர் இயற்றி அச்சிட்டார். 1887 ஆம் ஆண்டில் சுகுண சுந்தரி என்னும் நூலை இயற்றினார். தமிழ்ப் புனைகதைகளின் தந்தை வேதநாயகர் என்று சொல்லத் தக்க பெருமையை இந்நூல்கள் வழங்கின. சமய நூல்கள் : வேதநாயகர் கிறித்தவர்; இறைவன்மேல் இணையற்ற அன்பு உடையவர்; திருவருள் மாலை. திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவதோத்திர மாலை, சருவ சமய சமரசக் கீர்த்தனை என்னும் சமயச்சார்புடைய நூல்களை இயற்றியுள்ளார். சருவ சமய சமரசக் கீர்த்தனைகள் தமிழ் இசைக்கு வேதநாயகர் செய்துள்ள தொண்டை மலைமேல் விளக்கெனத் தெளிவாகக் காட்ட வல்லன. இராகமும், தாளமும் வகுத்து இசை நலம் துலங்கப் பாடப் பெற்றவை அவை. பெண்ணலன் பேணும் நூல்கள் : அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்னும் கருத்து வேதநாயகர் காலத்தில் இருந்தது. அந்நாளில் பெண்களைப் பற்றி விரிவாகவும், அழுத்தமாகவும் உரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண் மானம், பெண்மதிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். சருவ சமய சமரசக் கீர்த்தனைகளிலும் பெண் கல்வி, திருமணம், இல்லறம் ஆகியவை பற்றி இனிய பல பாடல்களை இயற்றினார். மாயூரம் நகரவைத் தலைவராக இருந்தபோது பெண் கல்வி வளர்ச்சியில் பேரூக்கம் காட்டினார். மொழி பெயர்ப்பு நூல்கள் : ஆங்கிலத்தைத் தமிழாக்கம் செய்வதில் தேர்ந்தவர் வேதநாயகர். அத்திறமை வீண்பட்டு விடாமல் 1805ஆம் ஆண்டு முதல் 1861ஆம் ஆண்டு முடிய உள்ள சதர் கோர்ட்டு முடிவுகளைத் திரட்டி மொழிபெயர்த்துச் சித்தாந்த சங்கிரகம் என்னும் பெயரால் வெளியிட்டார். பின்னர் 1862-63 ஆம் ஆண்டுத் தீர்ப்புகளைத் தமிழாக்கி 1864-இல் வெளியிட்டார். சட்ட விவரங்களைப் பற்றிய தமிழ் முதல் நூல் வேதநாயகர் இயற்றிய சித்தாந்த சங்கிரகமேயாகும். வேதநாயகர், தமிழ்மொழி அதற்கு முன் காணாத புதுப் புதுத் துறைகளில் புகுந்து தொண்டாற்றினார். அவரைப் போன்ற நன்மக்கள் பெருகும் அளவுக்கே ஒரு மொழி எய்தும் ஏற்றம் கணிக்கப்படும்! அத்தகு ஏற்றம் தரும் ஏந்தல்கள் வாழ்க! பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். முன்னுரை தாமோதரர் பிறப்பால் ஈழத்தமிழர். ஆனால், அவர்தம் கல்வி வாழ்வு தொண்டு ஆகியவை பெரிதும் தமிழக மண்ணிலேயே நிகழ்ந்தன. ஈழத் தமிழ்மண், தமிழகத் தமிழ் மண்ணுக்கு நல்லபல கொடைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் தாமோதரக் கொடை சுட்டத் தக்க பெருமையுடைய தாகும். தாமோதரர் பதிப்பின் ஏந்தல். தாமோதரர், பதின்மரொடு பதினொன்றாமவராகப் பதிப்புப் பணியில் எண்ணத்தக்கார் அல்லர்! அவர் பழந்தமிழ்ப் பதிப்பின் முன்னவர், முதல்வர், மூலவர்! தாமோதரர்க்கு முன்னவர், ஈழக் கொடையாம் ஆறுமுக நாவலர். ஆனால், அவர்தம் தொல்காப்பியப் பழம்பதிப்பு தாமாதரர் தூண்டலால் துலங்கியதேயாகும்! தொல்காப்பியம் வழக்குக் குன்றியிருந்த காலம்; ஏடும் அகப்படாநிலை; கற்றாரும் அரியரெனின் கற்பிப்புக் கடமை எப்படி நிகழ்ந்திருக்கும்? அந்நிலையில் தொல்காப்பியத்தைப் பகுதி பகுதியாக வெளியிட்டு, முழுமையாக உயிருலாக் கொள்ள வைத்தவர் தாமோதரரே. தாமோதரர் தமிழ் நன்கு கற்றவர்; கற்பித்தலும் செய்தவர்; தமிழ்ப்பற்றாளர். பணிநிலையில் தமிழ்ப் பணியே செய்யும் தொழிலை மேற்கொண்டாரல்லர். வரவு செலவுத்துறை, முறைமன்றத் துறை ஆகியவற்றில் பதிந்தவர். அவர் தமிழ்ப் பதிப்பிலே பதிந்தார். வியத்தகு விந்தையாகும் அது! பிறர் பதிப்பித்தவற்றைப் பதித்தாரல்லர்! பிற்கால இலக்கியமும் பதித்தார் அல்லர்! பழந்தமிழ்த் தொல்காப்பியம் இலக்கியமா? இலக்கண நூல்! அதனைப் பதிப்பித்தல் முறையெனத் தேர்ந்தார் முறைமன்றங் கண்ட தாமோதரர்! சூளாமணி என்ன, இலக்கண விளக்கம் என்ன, வீரசோழியம் என்ன, கலித்தொகை என்ன இன்ன நூல்களைப் பதிப்பித்தார். ஏன் பதிப்பித்தார்? உயிர் போய்விடும் ஏட்டைக் கண்டார் உருகினார்! உயிர்போகத் தக்க ஏட்டைக் கண்டும் கொண்டும் உயிர் வாழும் தமிழ்ப்புலவர்கள் உருகிப் பதிப்பிக்கும் தொண்டு கொள்ளாமையையும் கண்டார். அவற்றை அச்சேற்றிக் காத்தல் தலைக் கடன் எனப் பணிபூண்டார். உருகிய தாமோதரர் உள்ளம், உருக்காகிச் செய்த செயன்மை இது! தாமோதரனார் வரலாற்றுச் சுருக்கம் இச்சுருக்க நூலில் உண்டு. எடுத்தோம் முடித்தோம் என்றிருக்க வேண்டுமெனக் கதையுலகமே போய்க்கொண்டு ஒரு பக்கக் கதையிலும் துணுக்கிலும் உலா வருகின்றது. ஆய்வு நூல், அளவால் பெருகின் பயில்வார் அரியரே யல்லரோ! இச் சுருக்கநூலில் வரலாற்று இணைப்புகள் உண்டு; பதிப்புக்கலைச் செய்திகள் உண்டு; ஆய்வுப் பகுதியும் உண்டு. தம்பிடிக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; தட்டிவிட்டால் பறக்கவும் வேண்டும்! பழந்தமிழ்ப் பதிப்பின் முன்னோடி தாமோதரர். பழந்தமிழ் நூற்பேழைத் திட்டம் கண்டு செயற்படுத்தியது தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அக் கழக வழியே பழந்தமிழ் காத்த தாமோதரர் வரலாறு வெளிப்படுத்தல் பெருந்தக வுடையதாகும். அதனை மேற்கொண்டு உதவும் பெருமகனார் கழக ஆட்சியாளர் பைந்தமிழ்ச்சீர் பரவுவார் ஆகிய திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் ஆவர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். பாவாணர் ஆய்வுநூலகம், தமிழ்த் தொண்டன், திருநகர், இரா. இளங்குமரன், மதுரை-6. 30-4-91 1. வரலாற்று முன்னோட்டம் பதிப்பு மாளிகை : பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர் என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் வரைகின்றார். சாமிநாதரைப் பற்றி எழுதவரும் அவர் அவர்க்கு முன்னோடி களைத் தெளிவாகச் சுட்டி வரிசை பாராட்டுகிறார் (வா.கு.160). பதிப்புத் துறையிலே ஈடுபட்ட வையாபுரியாரைச் சுட்டும் இடத்தில் இப்பொழுது வையாபுரிப்பிள்ளை தமிழ் நாட்டுப் பதிப்பாசிரியர் உலகிலே ஒரு வான்மணி எனத் திகழ்கிறார்; ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, சாமிநாத ஐயர் ஆகியவர் இனத்தில் சேர்ந்தவரானார் என அவ்வரிசை மாறாமல் வரிசையைப் பெருக்குகிறார் (வா.கு. 208) நினைவுக்குறி : சைவசித்தாந்த சமாசத்தின் அடக்கவிலைப் பதிப்புக்குக் கால்கோள் செய்து நடாத்தியவர் கிழக்கு மருதூர் நாராயண சாமி. அவர் திரு.வி.க. வை வழிகாட்டியாகக் கொண்டவர். சங்க இலக்கியப் பதிப்பைத் திரு.வி.க. நினைவுக்குறியாக்க அவர் விரும்பினார். ஆனால் திரு.வி.க. உம் தந்தையார் நினைவுக்கோ தாமோதரம்பிள்ளை நினைவுக்கோ பதிப்பை அர்ப்பணம் செய்யுங்கள் என்றார் (வா.கு. 945) ஏன் தாமோதரனைச் சுட்டினார் திரு.வி.க.? முன்னோடி : பாட்டு, தொகை ஆகிய சங்கநூல்களுள் பாட்டு 1889 இல் உ.வே. சாமிநாதரால் வெளியிடப்பட்டது. ஆனால், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை அதற்கு ஈராண்டுகளின் முன்னரே (1887) வெளியிடப்பட்டு விட்டது தாமோதரரால். அன்றியும் அதற்கு இருபத்தோராண்டுகளின் முன்னரே தொல், சேனாவரையமும். (1868) நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொல் பொருளும் (1885) தாமோதரரால் அச்சேற்றப்பட்டு விட்டன. அவ்வகையில் சங்கநூற்பதிப்பு முன்னோடி தாமோதரனார். ஆதலாலேதான், திரு.வி.க. வரிசை கண்டு உரைத்தார். ஊக்கர் : தாமோதரனார் கும்பகோணத்தில் வந்து வழக்கறிஞர் தொழில் நடாத்த விரும்பினார். அக்காலத்தில் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதர் கும்பகோணத்திலேயே பணிசெய்து வந்தார். செய்தியை அறிந்து மகிழ்ந்தார். பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ்நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும், எப்படியாவது விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சியிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று என்று இதனை என் சரிதத்தில் எழுதுகின்றார் (760). (இதனொடும் இதன் தொடர்ச்சியும் வரலாற்று இணைப்பில் உண்டு). தன்னந்தனியர் : பதிப்புத் துறையில் சாமிநாதர்க்குப் பின்வரிசையில் வந்த வையாபுரியார் தாமோதரரை எப்படிப் பார்க்கிறார்: ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள் குறள் பாரதம் வெளியிடுவதோடு அமைந்துவிட்டார்கள். வித்துவான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும், பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும், அச்சியற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்கையர் தொல்காப்பியம் எழுத்ததி காரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு, அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு, அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார் இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, நமது பிள்ளையவர்கள் தன்னந் தனியாய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெருமுயற்சியை மேற்கொண்டனர். (தமிழ்ச்சடர்மணிகள் பக். 234-4) இம் முன்னோட்டம் இவ்வாறமைய, வரலாற்றோட்டம் காண்போம். 2. வரலாற்றுச் சுருக்கம் ஈழம் : ஈழம், பொன்; இருக்கும் திசையால் தென்னிலங்கை எனப்பட்டாலும் வளத்தால், பொன்னிலங்கை, எனவே, பழந்தமிழ் நூல்களாலும், வடமொழி நூல்களாலும் பாராட்டப்பட்டது. ஈழந்தந்த தமிழ்ப் பொன்கள் பலப்பல. சங்கப் புலவராகத் திகழ்ந்த ஈழத்துப் பூதன் தேவனார் சங்க நூல் என்னும் தங்க நூல் பேழையுள் இடம் பெற்றவர். அவரனையார் அன்று தொட்டே இருந்தனர். எதனால்? ஈழம், தமிழ் மண்; தமிழர், மண்; தொல்பழந்தமிழர் மண். பழந்தமிழ்க் குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் அழிந்து போன காலத்தில், அழிந்த தென்வளம், என்வளம் காணீர் என்பதை இற்றை நாள்வரை கைம்மேல் கனியாகக் காட்டி வரும் மண். பின்னாளை வந்தேறிகளால், முன்னாளை நிலைத் தமிழர், ஆற்றா அவலத்திற்கு ஆட்பட்டாலும் புறநானூற்று வீறு பொய்க்கவில்லை என்பதை நிலை நாட்டி - உலகுக்குப் பறையறைந்து வரும் மண், ஈழமண். தாமோதரர் : இம் மண்ணின் வடபால் அமைந்து, என்றும் வண்டமிழ்த் தேன் கொழிக்கும் பெயரும் பெருவாழ்வும் கொண்டிலங்குவது பெரும் பெயர் யாழ்ப்பாணம். அதன் அணித்தால் அமைந்த புத்தூரை அரவணைத்துள்ள சிற்றூர் சிறுப்பிட்டி. அவ்வூரிலே பிறந்த பெருமகனார் சி.வை. தாமோரனார், பிறந்த நாள் கி.பி. 12-9-1832. பெற்றோர் பெயர் வைரவநாதர் - பெருந்தேவி. எண்சீர் அகவல் விருத்தம் ஒன்றிலே தம் முன்னோர் பின்னோர்களை அடக்கிக் கூறுகிறார் தாமோதரர் : சிற்றூர்ப் பகீரதி கோத்திரனாள் வேளாண் திகழ்மரபோன் மாப்பாண முதலி மேனாள் பெற்றனன் வேலாயுதனை, அவன்தன் மைந்தன் பேர்மலி அம்பலவாணன், மூத்த தம்பி உற்றான், அன் னோற்கவன்சேய் குருநா தேந்தல், உதவு வயி ரவநாதா சிரியன், தந்த சொற்றார் தா மோதரனுக், கமிர்த லிங்கன், சுதன் தியாக ராசனவன் தோன்றல் மாதோ! மாப்பாணர் மகனார் வேலாயுதனார்; அவர் மகனார் அம்பலவாணர்; அவர் மகனார் மூத்தநம்பி; அவர் மகனார் குருநாதனார், அவர் மகனார் வயிரவநாதனார்; அவர் மகனார் தாமோதரனார்; அவர் மகனார் அமிர்தலிங்கனார்; அவர் மகனார் தியாகராசனார். தியாகராசனார் பிறந்த பூரிப்பில், தாமோதர னாரிடம் பூத்த பாமலர் ஈது. வைரவநாதர் : வைரவநாதர் - பெருந்தேவியார் மக்கள் எழுவர். அவருள் தலைமகனார் தாமோதரனார். வைரவ நாதர் சிறந்த தமிழ்ப் புலமையர்; தமிழ்ப் புலமைத் தொழிலும் நடாத்தியவர். தாமோதரர் பாடலிலே வயிர வநாதாசிரியன் என்றுள்ள தொழிலிணைப்பு இதனைத் தெளிவிக்கும். கல்வி : தொடக்கக் கல்வியும் வளர்கல்வியும் தந்தையாரிடமே கற்றார் தாமோதரனார். அறநூல்கள், சொற்பொருள் கூறும் நிகண்டு நூல்கள் ஆகியவற்றைக் கற்ற பின்னர், மேனிலை நூல்கள் கற்க விரும்பினார் தாமோதரனார். சிறுப்பிட்டிக்கு அருகிலமைந்த சுன்னாகம் (சுன்னை) முத்துக்குமார நாவலரை அடுத்து இலக்கிய இலக்கணப் புலமை பெற்றார். முத்துக்குமரர் கொடை மாண்பே தாமோரர் தண்டமிழ்த் தொண்டின் வித்தும் விளைவுமாய் அமைந்தது எனலாம். வீரசோழியம், கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பியம் ஆகிய பதிப்புகளில் தம் தமிழாசிரிய வணக்கம் தெரிவித்துள்ளார் தாமோரர். மேற்கல்வி : தமிழ்க் கல்வி கற்றுச் சிறந்தபின்னே தாமோதரர்க்கு ஆங்கிலங் கற்கும் அவா உண்டாயிற்று. அதனால் தெல்லியம் பதி அமெரிக்க மிசன் கலாசாலை, வட்டுக் கோட்டைக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். அக் கல்லூரியில் 1844 இல் சேர்ந்து 1852 ஆம் ஆண்டுவரை எட்டாண்டுகள் பயின்றார். சிறந்த தேர்ச்சி பெற்றார். பயிலும் காலத்திலேயே தமிழ்ப் புலவர் என்னும் பட்டத்தைத் தம் ஆசிரியர்கள் பாராட்டு முகத்தால் தர, ஆங்கிலத்திலும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கினார். கோப்பாய் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியப் பணியை உடனே பெற்றார். அப்பொழுது தாமோதரர் அகவை இருபதே. ஆசிரியர் : ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பணி செய்து கொண்டிருக்கும் போதில், அவரைப்பற்றிச் சிறப்பாகப் பலராலும் கேள்விப்பட்ட திருத்தந்தை பெர்சிவல் (Rev. P. Percival), விரும்பி அழைத்தவாறு, இந்திய நாட்டுக்கு வந்து தினவர்த்தமானி என்னும் இதழாசிரியப் பொறுப்பு ஏற்றார். தினவர்த்தமானி : பெர்சிவெலார் கிறித்தவத் திருமறையை ஆறுமுக நாவலரைக் கொண்டு மொழியாக்கத் திருத்தம் செய்து வெளியிட்டவர். தினவர்த்தமானி எனப்படும் கிழமை (வார) இதழின் ஆசிரியராக இருந்தவர். இவ்விதழ் வியாழக்கிழமை தோறும் வெளிவந்தது. நாட்டியல் செய்திகள், இலக்கியம், அறிவியல் ஆகியவை அதில் இடம் பெற்றன. இவர் அவ்விதழில் இருந்து ஓய்வு பெறும் போது, அவ்விடத்திற்கே நம் தாமோதரரை அமர்த்தினார். தாமோதரனார் எழுத்துத் திறம், பல வகைகளில் ஊற்றம் பெறுவதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தது இவ்விதழ்ப் பணியாகும். இதழாசிரியர் : இதழாசிரியராகத் தாமோதரர் இருந்துகொண்டே கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் புலமை வாய்ந்திருந்த தாமோதரர், ஆங்கிலப் பெருமக்கள் சிலர்க்குத் தமிழ் கற்பித்தார். அவ்வாறு இவரிடம் பயின்றோருள் பேராசிரியர் பர்னல், சர் வால்டர் எலியட், லூசிங்டன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர் : ஆங்கிலப் பெருமக்களுக்குத் தமிழ்கற்பித்துச் சிறந்த செய்தி அரசுக்கு எட்டியது. எட்டவே, சென்னை, மாநிலக் கல்லூரித் தமிழாசிரியராகத் தாமோதரரை அமர்த்த அரசு விரும்பியது. அவ்வாறே அமர்த்தமும் பெற்றார். அக் கல்லூரிப் பணியில் இருக்கும் போது சென்னைப் பல்கலைக்கழகம் உருவாயிற்று. அதனால் அப்பல்கலைக் கழகத் தேர்வு எழுத அவாவினார் தாமோதரனார். அதனால் 1857 இல் பல்கலைக் கழகம் முதன் முதலாக நடாத்திய நுழைவுத் தேர்விலும், அதன் பின் அடுத்தே நடந்த இளங்கலை (பி.ஏ.) தேர்விலும் சிறந்த வெற்றி பெற்றார். அவ் வெற்றி கள்ளிக்கோட்டை அரசுக் கல்லூரித் துணையாசிரியராம் உயர்வைத் தாமோதரர்க்குத் தந்தது. அக்கல்லூரிப் பணியில் தாமோதரர் காட்டிய திறமை சென்னை அரசு வரவு செலவுக் கணக்குத் துறை அலுவலராகும் வாய்ப்பை வழங்கிற்று. மணவாழ்வு : கல்வியாலும் பதவிகளாலும் சிறப்புற்று வந்த தாமோதரர் அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை; அறத்தான் வருவதே இன்பம் என்பவற்றை உணர்ந்து யாழ்ப்பாணம் தெல்லியம்பதி காலிங்கராயர் வழிவந்த வள்ளியம்மையை மணம் புரிந்தார். இருமகவுக்குத் தாயாகிய பிள்ளை வள்ளியம்மை இயற்கை எய்தவே, அவர் உடன்பிறந்தாராகிய முத்தம்மாள் என்பாரை மணந்தார். அவர் வழியாக மக்கள் அறுவர் பிறந்தனர். மனைவியர் இருவர் வழியும் மக்கள் எண்மர் பிறந்தனர். எனினும், அவருள் நெடுவாழ்வு கொண்டவர் ஒருவரே ஆவர். அவர் சி. தா. அழகு சுந்தரம் என்பார், ஏனையோர் எழுவரும் பிள்ளைப்பருவம், காளைப் பருவம், திருமணம் முடித்த சில்லாண்டுகள் என்னும் நிலையில் முப்பது அகவைக்குள்ளாகவே முடிவு கண்டவர்கள் ஆயினர். இரண்டாம் மனவியரை இழக்கும் நிலையும் உண்டாயிற்று. இவை தாமோதரர் உள்ளத்தை அசைத்தன, உருக்குலைத்தன. எனினும், அவர் தம் ஊற்றம் ஆற்றுவார் மேற்றே பொறை என்று கொண்டு தாங்கியது. குடும்பச் சுமை : தாமோதரர் தம் தந்தையாரை இளம்பருவத்திலேயே இழந்தவர்; குடும்பத்தில் தலைமகனாராகத் தோன்றியவர், அதனால், கறையானால் அரிக்கப்பட்ட அடிமரம் வீழ்ந்துவிட்ட போதில் அதன் விழுதால் தாங்கப்படும் ஆலமரம்போலத் தாமோரர் தம் பெரிய குடும்பப் பொறையைத் தாங்கும் கடப்பாட்டில் தலைப்பட்டு நிற்கும் கட்டாயத்திற்கு ஆட்பட்டு அதனைச் செம்மையாகச் செய்து முடித்தவரும் ஆவர். அப் பயிற்சியும் உள்ள உறுதியுமே தம் தனிக் குடும்ப இழப்புகளையும், பொறுப்புகளையும் தாங்கும் உறுதியைத் திடமாகத் தந்தது என்க. தாமோதரனார் குடிக்குத் தலைமகனாகப் பிறந்து தந்தையெனக் குடிதாங்கிய தகவினை, தந்தையெமை இளவயதில் தணந்திடநீ அன்றுமுதல் தந்தை யாகி வந்தபல இடரகற்றி வாழ்வெமக்கீண் டளித்துவந்து வந்தாய் உன்றன் சிந்தைமிக நொந்திடயாம் செய்தபிழை பலவெனினும் சிந்தி யாது முந்தையினும் அருள்சுரந்த முன்னவனே இனிஎன்றுன் முகம்காண் போமே என இவர் இயற்கை எய்திய போது இவர் இளவல் சி.வை. சின்னப்பர் பாடிய இரங்கல் பாடலால் அறியலாம். இவர்க்குத் தமிழ் கற்பித்த ஆசிரியரும் தாமோதரரே என்பதும் குறிப்பிடத் தக்கதாம். குடும்பக் கடமைகளை இளந்தைப் பருவந் தொட்டே இனிது செய்துவந்த தாமோதரர் தாம் மேற்கொண்ட பணிக் கடமைகளையும், பாராட்டுமாறு செய்தார். இவ்விரண்டன் இடையேயும் இடையறவு இல்லாமல் இறுதிக்காலம் வரை செய்து வந்த தமிழ்த் தொண்டு ஈடு இணையற்றதாகும். அத் தொண்டே தமிழ்வாழுங் காலத்தளவும் வாழும் நிலைபெற்ற புகழை அவர்க்கு வழங்கிற்று. அதனை மேலே காண்போம். கணக்குத் துறை : சென்னை வரவு செலவு கணக்குத் துறையில் இவர் பணியாற்றிவந்தபோது ஒருநாள் அவ்வலுவலகத்தலைவர் விரைந்து முடிக்க வேண்டிய ஒரு கணக்கைத் தாமோதரரே தக்கவரெனத் தேர்ந்து அவரிடம் ஒப்படைத்தார். அப்போது, இதனை யானே முடிப்பதாயின் ஒரு கிழமை (7 நாள்) ஆகும். நீர் பத்து நாள்களில் முடித்துத் தருவீரென நம்புகிறேன் என்றார். அவ்வாறே ஆகுக எனப் பணியை ஏற்றுக் கொண்ட தாமோதரர், நான்கே நாள்களில் முடித்துத் தந்தார். அதனைக் கண்ட அவ்வாங்கிலத் தலைமகனார் நீவிரென்ன இவ்வேலையை நும் இரு கைகளாலும் செய்து முடித்தீரோ என வியந்து பாராட்டினார். அப் பாராட்டும் நல்லெண்ணமும் தாமோதரர் உள்ளம், உழைப்பு, உயர்வு ஆகியவை போலவே பதவியுயர்வும் வழங்கின. அவ்வலுவலக ஆய்வுத் தலைமையையும் அது வழங்கிற்று. அப்போது, பல்கலைக் கழகம் நடாத்திய சட்டத்துறைத் தேர்விலும் பட்டம் பெற வேண்டும் என்னும் ஆர்வம் தாமோதரர்க்கு உண்டாயிற்று. அதனால் அப்படிப்பில் தலைப்பட்டு 1871-ஆம் ஆண்டு சட்டத் தேர்வு எழுதித் தேர்ச்சி யுற்றார். 1882-ஆம் ஆண்டு தாமோதரர்க்கு ஐம்பதாம் அகவை. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, உதவித்தொகை பெறுவாராயினார். ஆனால், ஓய்வு ஓய்வாயிற்றா? ஓய்வுக்கு ஓய்வு தந்து, உழைப்பின் வடிவாக - தொண்டின் உறைவாகத் - தாமோதரர் தண்டமிழ்த் தொண்டிலே புகுந்தார். பதிப்பு : ஓய்வு பெறுதற்கு முதல் ஆண்டிலே (1881) வீரசோழியம் வெளியிட்டார். ஓய்வு பெற்ற மறு ஆண்டிலேயே (1883) திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப்பொருள் என்னும் நூல்களைச் சுவடிகளை ஆய்ந்து அச்சிட்டு வெளியிட்டார். சென்னைப் பகுதியினும் தென்னிலப் பகுதிகளே ஏடு தொகுத்தற்கு ஏற்றவையாக இருத்தலை எண்ணித் தம் இருப்பிடத்தைக் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) மாற்றிக் கொண்டார். ஆங்குக் குடியிருப்புக் கொண்ட இடம் கருப்பூர். ஆண்டு 1884. தாம் பெற்றுள்ள சட்டத் துறைத் தேர்ச்சி எவ்விடத்திற்கும் பயன்படுவ தாயிற்றே. அதனால் குடந்தையில் வழக்கறிஞர் தொழிலும் நடாத்தினார் தாமோதரர். அத்துறை வழியாக வரும் வருவாய் அனைத்தும் தமிழ்நூல் பதிப்புக்கே பயன்படுத்தும் குறிக்கோளைக் கொண்டு உழைத்தார். 1885 ஆகிய அவ்வாண்டிலேயே தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுடன் வெளியிட்டார். அதனால் அவர்க்கு உருபா 3500 செலவாயிற்று. ஆனால், நூல் விற்பனையாலும் நன்கொடை வகையாலும் செலவில் மூன்றில் ஒரு பகுதிதானும் கிட்டவில்லை. அந்நிலையை விரித்தெழுதி 1886 சூலை 15-இல் ஓர் அறிக்கை விடுத்தார். இந்து இதழிலும் எழுதினார். இவ்வறிக்கைகள் வருதற்கு முன்னரே, இவர்தம் இழப்பினை அறிந்துகொண்டு உதவிய பெருமக்கள் இருவர். ஒருவர், சென்னை மாநிலக் கல்லூரிக் கணக்கியல் பேராசிரியராகத் திகழ்ந்தவரும் தமிழ்ப் புலமையில் தலைநின்றவருமாகிய பூண்டி அரங்கநாதர். மற்றொருவர் மைசூர் உயர்முறைமன்ற நடுவராக விளங்கிய வராகிய பெருமை தரு அ. இராமச்சந்திரர். அறிக்கை கண்ட பின்னர் அவ்விழப்பை ஈடுசெய்யும் அளவில் பலர் உதவினர். அவர்க்கெல்லாம் நன்றியுரைத்தார். ஏடு வழியாகவும், உதவி வழியாகவும் பேருதவி செய்த திருமடம் திருவாவடு துறை என்பது இவண் அறியத்தக்க செய்தியாம். அந்நாளில் அத்திரு மடத்துத் தலைவராக இருந்தவர் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் என்பார். கலித்தொகைச் சுவடிகள் வழங்கிப் பதிப்பிக்கத் தூண்டியவர் அவரே. அதற்குப் பொருளுதவி புரிந்தவர் புதுக்கோட்டை அரசின் அமைச்சராக விளங்கிய சேசையா ஆவர். கலித்தொகைப்பதிப்பு 1887 இல் வெளிவந்தது. நடுவர் : பேரன்பும் பெருந்தன்மையும் கொண்ட அமைச்சர் சேசையா தாமோதரர் தொடர்பு, நூல்வெளியீட்டு அளவில் நிற்கவில்லை. தாமோதரர் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராகவும் அமர உதவிற்று. அதனால் 1887 முதல் தாமோதரர் புதுக்கோட்டை வாழ்வினரானார். பதிப்பு : ஒருகாலத்தில் இலக்கண விளக்க நூலுக்கு மாறாக இருந்த திருவாவடுதுறைத் திருமடம், தாமோதரர் எடுத்துக் கொண்ட நன் முயற்சியால் சுவடிதந்து வழக்கம் போல் உதவியது. சமணம் சார்ந்த நூலாகிய சூளாமணி வெளியிடவும் தூண்டி உதவியது. தாமோதரர் செயல் திறமும் எடுத்துரைக்கும் பாங்கும் இவ்வாறு எய்தா நலங்களும் எய்தச் செய்தன. இலக்கண விளக்கம் போடி குறுநிலமன்னர் திருமலை போடய காமராச பாண்டியர் உதவியால் 1889-இல் வெளிவந்தது. சூளாமணி தாமோதரரின் இளவல், சி.வை. இளைய தம்பியும் அவர் நண்பர்களும் புரிந்த உதவியால் அதே ஆண்டில் வெளிவந்தது. இன்பும் துன்பும் : சூளாமணி வெளிவந்த இன்பியல் ஒருபால். அதே ஆண்டில், தம் தலைமகனார் சி.வை. நல்லதம்பி தம் இருபத்தாறாம் அகவையில் இளமனைவியையும் இரு மக்களையும் விடுத்து இயற்கை எய்திய துன்பியல் ஒருபால். அந்நிலையில் 1890-இல் தாம் ஏற்றிருந்த முறைநடுவர் பொறுப்பைத் தாம் உடன்பட்டிருந்த கால எல்லை வந்த அளவில் விடுத்து யாழ்ப்பாணம் சென்று சில காலம் தங்கினார். நல்லதம்பி மறைவால் குடும்பத்தில் அவலம் சூழ்ந்தது. அடுத்த மகனார் சி.தா. அழகு சுந்தரம் இளைஞர். தாமோ 1882-ஆம் ஆண்டே தம் இரண்டாம் துணைவியையும் இழந்துவிட்ட தமியர். இந்நிலையில் குடும்பச் சூழல் கருதி மூன்றாம் மணமும் புரிந்தார். பின்னே, சிங்கார வேல், வெற்றிவேல் என மக்கள் இருவரும் அவர்வழியே தோன்றினர். 1890-இல் தாமோதரர் தம் குடும்பத்துடன் மீளவும் சென்னைக்குச் சென்றார். புரச பாக்கத்தில் குடியமர்த்திக் கொண்டார். சிறப்புகள் : சென்னை சேர்ந்த பின்னர்த் தொல்காப்பிய எழுத்ததி காரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட விரும்பிச் சுவடிகளை ஆய்ந்தார். கல்வி வழியாலும், பதிப்பு வழியாலும், பதவி வழியாலும் நன்கு அறியப்பட்டிருந்த தாமோதரர், பல்கலைக் கழகப் பாடநூற்குழு, பதிப்புக்குழு, சட்டக்குழு, தேர்வுக்குழு, ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பாண்மை பெற்றுத் திகழ்ந்தார். தமிழ்ப்பாடத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் விளங்கினார். தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1891 - இல் வெளிவந்தது. அதற்குப் பொருள் உதவி புரிந்தவர் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவருள் ஒருவராக விளங்கிய அண்ணாமலை என்பார். 1893-ஆம் ஆண்டில் தாமோதரர் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று பற்றி 1934-ஆம் ஆண்டு வெளிவந்ததும், இராசரத்தினம் என்பார் எழுதியதும் ஆகிய தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் (The Life of Rao Bahadur C.W. Thamotharam Pillai, in Tamil) என்னும் நூல் கூறுமாறு: மகனார் நிலை : 1893-ஆம் வருடத்திற் பிள்ளையவர்களுக்கு அதிக வியாகுலத்தைத் தந்த பிறிதோர் சம்பவம் அவர் குடும்பத்து நிகழ்ந்தது. அவருக்குப் புத்திர சிகாமணிகளாக வுதித்தோர் யாவரும் இறந்துவிட சி. தா. அழகு சுந்தரம் என்னும் ஒருவரே எஞ்சி நின்றனர். ஆகவே, பிள்ளையவர்களும் அக்குமாரரிடத்து மிக்க அன்பு பாராட்டி வந்தனர். பிள்ளையவர்கள் சிவபெருமானே முழுமுதற் கடவுளென்று துணியும் சைவராகலின் அப்பெருமான் திருவடிகளையடைதற் குரிய மார்க்கமாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினுள் முதலிரண்டினாலும், அப்பெருமானை வழிபட்டுச் சமயதீட்சை, விசேட தீட்சை என்னும் இரண்டும் பெற்றுச் சிவலிங்கம் எழுந்தருளச் செய்து பூசித்து வந்தனர். ஆகவே, அவர் குமாரரும் சிறுவயது முதல் சைவ சமயத்தில் மிக்க பற்றுடையவராகிச் சமயதீட்சை பெற்றுச் சிவபெருமானையே பூசித்து வந்தனர். ஆயினும், இக் குமாரர்பிரவேச பரீட்சை கடந்து எப்.ஏ. வகுப்பில் கல்வி கற்கும் காலத்து, அவருடைய மனத்தின்கண் மதவிஷயமாகச் சில சந்தேகங்கள் நிகழ்ந்தன. ஆயினும் அவர் அதை வெளியில் காட்டாது வழக்கப் பிரகாரம் தமது கடமை களைச் செவ்வனே செலுத்திவந்தார். ஆயினும் நாளடைவில் அம்மத சந்தேகங்கள் வளர்ந்துகொண்டே வந்தமையால் அவர் விபூதி தரித்தல், சந்தியாவந்தனம் பண்ணுதல் முதலிய வற்றை நிறுத்திவிட்டனர். இச்சமயத்தில் தமது தாயாருடைய திதி வந்தது. இவரே திதியின் அன்று நடக்க வேண்டிய சடங்குகள் யாவையும் செய்ய வேண்டியவராகலின் பிள்ளையவர்களும் தம் குமாரர் வழக்கப் பிரகாரம் செய்யவேண்டியவற்றைச் செய்து முடிப்பர் என்று எதிர் பார்த்திருந்தார். ஆயின் குமாரரோ தாம் வீட்டில் அன்று தங்கினால் தமக்குச் சம்மதமில்லாத சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய நேரிடுமென்று நினைந்து, அன்றைத் தினத்தில் அதிகாலையில் எழுந்து தம் தந்தையார் அனுமதியின்றி வெளிப்போந்தனர். பிள்யைவர்கள் புரோகிதர் வந்தவுடன் குமாரரைத் தேடியும் காணாது தாமே அச் சடங்கை நிறைவேற்றினர். அதன்பின்னர்ப் பிள்ளையவர்கள் தம்குமாரரிடத்திருந்து ஓர் கடிதம் பெற்றனர். அக்கடிதத்தில் தாம் வீட்டை விட்டு அன்றைத் தினத்தில் வெளிப்போந்ததற்குக் காரணம் இன்ன தென்றும், தமக்குச் சைவசமயம் திருப்தியைத் தரவில்லை என்றும், அது காரணமாகத் தாம் கிறிதவ மதப்பிரவேசஞ் செய்ய நிச்சயித்திருப்பதாகவும், அவ்வாறு செய்யத் தந்தையார் அனுமதி தரல் வேண்டுமென்றும், அவ்வண்ணம் கிறிதவ மதத்தைச் சார்ந்த பின்னர் தந்தையாருக்கு யாதும் தடையிராத பட்சத்தில் அவரோடு தாம் வசிப்பதற்குச் சித்தமாய் இருப்பதாகவும் குமாரர் தெரிவித்தனர். பிள்ளையவர்கள் இக்கடிதத்தைப் பார்வையிட்டு மிக வருந் தினராயினும் கிறிதவமதப் பிரவேசஞ் செய்த பின்னர்த் தம்மோடு கூடத் தம் குமாரர் வசித்தல் தகாதென்று மறுத்தது மன்றிக் குமாரர் கருதியவாறு அம்மதப் பிரவேசஞ் செய்வதற்கு அனுமதியும் அளித்திலர். அதுவுமன்றித் தம் புதல்வர் இவ்விதமாகக் கிறிதவ மதத்தில் பிரவேசிப்பதற்கு யாதானுமோர் முக்கிய நியாயமிருத்தல் ண்டுமென்றும், அது இன்னதென உணர்ந்து; அறிந்து பரிகரித்து அவரை அவ்வாறு செய்யாது தடுப்பது தமது கடமை என்றும் கொண்டு, அதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் யாவும் செய்தார். ஆயினும், அழகு சுந்தரம் தாம் கொண்டதே சரியெனக் கொண்டு அம் மதத்தைத் தழுவினர். ஆகவே, தந்தையாருடன் வசித்தலும் கூடாததாயிற்று: தாம் சைவரென்றும் சிறந்த தமிழ் வித்துவான் என்றும் பெயர் வகித்தும் தமது குமாரர் கிறிதவரானது தமக்குப் பெருங்குறைவென்று பிள்ளையவர்கள் நினைந்து மிக வருந்தினர். அவர் குமாரரோ தமக்கு உண்மையான மனப்பாக்கியத்தை அளிக்கவல்ல மெய்ச் சமயத்தைக் கண்டோமென்று மகிழ்ந்தனர். ஆகவே, தகப்பனாரும் புத்திரரும் சிறிது காலம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பேசுவதும் இல்லையாயிற்று. இச் சம்பவத்தைப் பிள்ளையவர்கள் தம் நண்பர் கிலரிடத்துத் தமது கண்களினின்று நீர் பெருக எடுத்துக் கூறியும் இருக்கின்றனர். நம் இந்துக்கள் தம்முள் ஒருவர் எவ்விதத் துன்மார்க் கராயினும் அவரைத் தம் கூட்டத்தினின்றும் நீக்கிவிடார். கொலை களவு கள் காமம் முதலிய கொடிய பாதகங்களைச் செய்தவரும் அவை நிகழ்ந்த காலத்துச் சிறிது அவமதிக்கப் பெறினும் சாதியை விட்டு நீக்கப் பெறார். ஆயின் ஒருவன் கிறிதவ னாயினான் எனின், உடனே அவனைப் பகைப்பர். வித்துவ சிரோமணியாகிய பிள்ளையவர்களும் தம் குமாரர் கிறிதவரானதன் நிமித்தம் அவரைப் புறக்கணித்தது அவர் மாட்டு என்றும் நீங்காதவோர் களங்கமேயாம். ஏனெனில் அவர் குமாரர் உண்மையான விசுவாசத்தோடும் மெய்ப்பத்தியோடுமே கிறிதவ மதத்தைத் தழுவினார் என்பதும் அவ்வாறு தழுவிய பின்னர் அவரிடத்து அநேக நன் மாறுதல்கள் காணப்பட்டிருக் கின்றன என்பதும் அவர் தாம் புதிதாய் அங்கீரித்த மதத்தில் உறுதியாய் இருக்கின்றனர் என்பதும் அவர் ஜீவியத்திலிருந்து நன்கு விளங்குகின்றன. கிறிதவரான பின்பு அவரிடத்து அநேக விசேட நற்குணங்கள் காணப்படுவதாகப் பிள்ளை அவர்களும் வெளி யிட்டிருக்கின்றனர். தம் குமாரருக்கு ஒரு முறை கடிதம் எழுதிய போது அக்குமாரர் மெய்யான பத்தியினாற்றான் கிறிதவ மதத்தைச் சார்ந்தனர் என்பதைத் தாம் அப்பொழுது தான் கண்டதாகவும், தம் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அவ்வாறு செய்த தம் புத்திரரோடு தமக்கு அச்செய்கையளவில் யாதும் விரோதம் இல்லை என்றும், சைவ சமயத்துண்மைகளைக் கற்றறியாது அதை நீத்ததே தமக்குப் பெருவிசனம் என்றும், செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களைச் செய்து திரும்பியும் சைவ சமயத்தை அனுசரித்தால் தாம் அவரை ஏற்றுக்கொள்ளத் தடை யில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இவ்விதக் கேள்விகளுக்கு அவர் குமாரர் சிறிதும் இடம் தாராது தாம் அங்கீகரித்த மதத்திலேயே இன்றும் உறுதியாக நிற்கின்றனர் என்பது அது. (பக். 75-78). இராவ்பகதூர்: தாமோதரர் செய்துவந்த தமிழ்த் தொண்டு கல்வித் தொண்டு முறைத்தொண்டு ஆகியவற்றை நன்கறிந்த அரசு அவரைச் சிறப்பிக்கக் கருதி இராவ்பகதூர் (Rao Bahadur) என்னும் மதிப்புறு விருதினை 1895 ஆம் ஆண்டு வழங்கியது. அதனை அறிந்த மைசூர் அரசு தாமோதரரை அழைத்துப் பாராட்டெடுத்துப் பரிசு வழங்கியது. ஆங்கிலப் பெருமக்கள் செல்வர்கள் திருமடத்தலைவர்கள் ஆகியோரெல்லாம் தாமோதரர் பெற்ற சிறப்பினை வரவேற்றுப் பாராட்டினர். உடல்நிலை : புலமையாலும் புகழாலும் பெருகிவந்த தாமோதரனார் உடல்நலக்குறைவாலும் நெருக்குற்றார். அந்நிலையில் ஈழத்திற்குச் சென்று கீரிமலைப்பகுதியில் உறைந்தார். முன்னர் இருமுறை அரச பிளவை என்னும் நோய்க்கு அவர் ஆட்பட்டதுண்டு. எனினும் இம்முறை (1896) ஏற்பட்ட அந்நோயால் இறுதியே நேருமென அவரும் எண்ணினார். உற்றார் உறவினரும் எண்ணிச் சோர்ந்தனர். எனினும் அக் கட்டியும் இக்கட்டு ஏற்படுத்தாமல் தூர்ந்தமை அனைவரையும் மகிழ்வித்தது. உடல்நலம் பெற்றுச் சிறிதுகாலம் யாழ்ப்பாணத்தில் தங்கினார். அக்காலத்தில் அவர்தம் இளைய மகளார் சிவபாக்கியம் என்பார் இயற்கை எய்தினார். பட்டுப் பட்டுப் பழக்கமாகிப் போவதுதானே உள்ளம்! ஒருவாறு தேறி, ஈழத்தில் இருந்து சென்னைக்கு வந்தார் தாமோதரர். அவர்க்கு அமைதியும் நிறைவும் தந்ததாகிய பதிப்புப் பணியைத் தொடர்ந்தார். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டும் எனக் கருதித் தக்க தமிழ்ப்புலமையர் இருவரை ஒருங்கமர்த்திக் கொண்டு ஆய்வு செய்தார். மணிமிடை பவளம் வரையில் ஆய்வு நிகழ்ந்தது. அதனை முற்றுவிக்கு முன்னர்த் தாம் முன்னே பதிப்பித்த சூளாமணியை உரைநடையில் எழுதி வசனசூளாமணி என்னும் பெயரால் 1898 இல் வெளியிட்டார். இயற்கை எய்துதல் : ஆண்டு 1900 கார்த்திகைத் திங்களில் தாமோதரர் உடல்நிலை மிகச் சீர்கேடாயது. இருமல் பெருகியது. செரிப்புக் குறைந்தது; மருத்துவம் ஆங்கிலமுறை, சித்தமுறை, யுனானி முறை எனப் பார்த்தும் நலமுண்டாக வில்லை. தமக்கு மருத்துவம் செய்து கொள்வதிலும் அக்கறை அற்றார் தாமோதரர்; மருந்துண்பதையும் வெறுத்தார்; மருந்து உட்செல்லுதலும் அரிதாயிற்று. 1900 திசம்பர் 31ஆம் நாள் நலப்படுவதுபோல் தோற்றந் தந்து 1901 சனவரி முதல் நாள் செவ்வாய் காலை 9-3-0 மணிக்குத் தாமோதரர் இயற்கை எய்தினார். அவர்தம் உடன்பிறந்தார் ஆகிய சி.வை. சின்னப்பாவும், மகனாராகிய அழகு சுந்தரரும் அருகிருக்க, சுற்றமும் நண்பும் சூழ்ந்திருக்கத் தாமோதரர் அமைதியுற்றார். அன்று பிற்பகலில் புரசபாக்கம் சுடுகாட்டில் அவர்தம் உடலம் எரியூட்டப்பட்டது. தமிழ்ப் புலமை சான்ற பெருமக்கள் பலர் புடைசூழ்ந்திருந்து இரங்கலும் கையறு நிலையும் உரைத்தனர். பரிதிமாற் கலைஞர் கையறு நிலை பாடினார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேலரும் பிறரும் இரங்கல் உரைத்தனர். இறுதிமுறி : தாமோதரனார் ஓர் இறுதிமுறி எழுதி வைத்திருந்தார். அதில் சில திட்டங்கள் ஏற்படுத்தி அவற்றைத் தம் கடைசி மனைவியின் வழிவந்த மக்கள் நிறைவேற்று வரானால் தம் சொத்து முழுவதும் அவர்களிடத்து ஒப்பிக்கப்படவேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் செந்தமிழ் வளர்ச்சியின் பொருட்டு ஈழத்தில் ஒரு கல்லூரி ஏற்படுத்துமாறு அரசினிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்றும், தம் ஏட்டுப்படிகள் கைப்படிகள்ஆகியவை திருவாலங்காட்டிலுள்ள செந்தமிழ்ப் பரிபாலன மடத்தில் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், தாம் வழிபட்டு வந்த சிவலிங்கமும் அணிந்திருந்த உருத்திராக்க மாலையும் தம் ஆசிரியரைஅடையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தம் மைந்தர் அழகுசுந்தரம் தக்க அலுவலில் அமர்ந்திருப்பதால் தம் சொத்தில் அவர்க்குப் பங்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தம் இறுதிமுறியில் தம் சொத்தை அடைவதற்குத் தம் மூன்றாம் மனைவியின் மக்கள் தக்க பருவத்தினராகி, இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.ஏ. பட்டம் பெற்று, திருமணம் செய்த பின்னர் அடையலாம் என்று வரையப்பட்டிருந்த திட்டமும், தம் நூல்கள் ஏலத்தில் விற்கப்பட்டு அதனையும் தம் சொத்தோடு சேர்க்கப்பட வேண்டும் என்று குறிக்கப்பட்டதையும் பெருமை சேர்க்காதவை என்பர்; வாழும் மக்கள் உரிமையைப் பொதுவாக நோக்கி இறுதி முறி எழுதாமை குறை என்றும் சுட்டுவர். இவர் வைத்திருந்த நூல்களைக் கொண்டு ஒரு நூலகமாக்கும் ஏற்பாட்டைச் செய்திருப்பின் பெரும் பயனாக இருந்திருக்கும் என்றும் குறிப்பர் (தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம். பக். 100-102). யாழ்ப்பாணத்து ஏழாலை சைவப்பிரகாச வித்தியா சாலையை நிறுவியவர் தாமோதரர் என்பதும் (19ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்; மயிலை சீனி. வேங்கடசாமி பக்.243), ஆந்திரம் வடமொழி ஆங்கிலம் தமிழ் ஆகிய நான்கு மொழிப் புலமையும், வாய்ந்தவர் தாமோதரர் என்பதும் (நா. கதிரைவேலர் இரங்கல்) பூண்டி அரங்கநாதர் இயற்றிய கச்சிக்கலம்பகம் பற்றிச் சென்னைக் கிறித்தவக் கல்லூரிச் செய்தி இதழில் சில வழுக்கள் செறிந்த கலம்பகம் என்றொரு கட்டுரை வந்ததாக அதற்குத் தாமோதரர் ஆங்கிலத்தில் A defence for the modern Kalambakam என்றொரு கட்டுரை எழுதி அக்கலம்பகப் பெருமையை நிலைப்படுத்தினர் என்பதும் அறியவரும் பிற செய்திகள். 3. வரலாற்று இணைப்பு 1 பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார்) தாமோதரனார் சென்னையில் வாழ்ந்த காலத்தில் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாத்திரியார். அவர் கிறித்தவக் கல்லூரியிலேயே இளங்கலை பயின்றவர். அப்பயிற்சி நிறைந்த அளவில் அவர் எழுதிய தேர்வில் தமிழ்ப் பாடத்தில் மாநில முதல்வராக வெற்றி பெற்றார். அத்தகு முதன்மையரை ஆண்டுதோறும் அழைத்துத் தாமொரு தேர்வு நடாத்திப் பரிசும் பாராட்டும் வழங்குதலைக் கடமையாகக் கொண்டிருந்தார் தாமோதரர். அம் முறைப்படி பரிதி மாற்கலைஞரைத் தம்மிடத்து அழைத்தார் தாமோதரர். பரிதி எப்பொழுதும் தூய தமிழில் உரையாடும் வழக்கம் கொண்டவர். அம் முறைப்படியே வினாவிய வினாக்களுக்கும், தாமே உரையாடியவற்றுக்கும் செந்தமிழே இயல்பான மறு மொழியாய்ப் பரிதியாரிடத்திருந்து வரக்கண்ட தாமோதரர் வியப்புற்றார். தாம் வினாவிய வினாக்களுக்கு ஒருமணிப் பொழுதில் விடை எழுதித் தரப்பணித்தார். அதனையும் அரை மணிப் பொழுதிற்குள்ளாகவே நல்ல தமிழில் விடை எழுதி முடித்தார். பேச்சைப்போலவே எழுத்தும், எழுத்தைப் போலவே பேச்சும் ஒன்றுபட்டுத் திகழும் பரிதியை மிகப் பாராட்டித் தாம் பதிப்பித்த நூல்களுள் ஒவ்வொரு படி வழங்கிப் பாராட்டினார். அப் பாராட்டில் பரிதியைத் திராவிட சாத்திரி என்று நும்மைச் சொல்வது சாலப் பொருந்தும் என்றார். அதன்மேல் தாமோதரனார் பரிதியாரைத் திராவிட சாத்திரி என்றே வழங்கினார். முதற் சங்கரர் திருஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று கூறியதை நினைவூட்டும் செய்தி ஈதாகும். வெனிசு வாணிகன் என்னும் ஆங்கில நூலின் ஒரு பகுதியைத் தந்து தமிழ்ப்பாடலாக்கித் தருமாறு கோரினார் தாமோதரர், பரிதியாரிடம். அதனைத் தமிழ்ப்பாடலே என்னுமாறு விரைந்து பாடித்தந்தார் பரிதியார். அதனைக் கண்டு வியந்த தாமோதரர் உரைநடையில் இருக்கும் கடுமை, செய்யுள் நடையில் இல்லாமல் எளிமையாய் இருத்தலைக் கண்டார். தூயதும் கடியதுமாம் உரைநடையில் ஒருநூல் பரிதியார் படைத்துத்தரின் நன்றாம் என எண்ணினார். அதனால் நுமது தமிழ் நடையைக் கண்டு வியந்த எமக்கு நீர் அதே உயரிய நடையில் இயன்ற ஒரு நூல் எழுதித்தர இயலுமாயின் அவ்வாறு எழுத வேண்டுகிறேன் என்றார். அது கேட்ட பரிதியார், ஆகா! அவ்வாறே செய்வேம்! நுமக்கு வேண்டியவாறே உயர்தனிச் செம்மொழி நடையிலேயே இயன்ற உரைநடைநூல் ஒன்று இயற்றித் தருவல் என்றார். தாமோதரர் விரும்பியவாறு விரும்பிய நடையில் மதிவாணன் என்னும் புனைகதையை எழுதினார் பரிதியார். அது 1897 - ஆம் ஆண்டு முதல் ஞானபோதினி என்னும் மாதிகையில் பகுதி பகுதியாக வெளிவந்தது. 1902-ஆம் ஆண்டில் அது நூலுருக் கொண்டது. அப்போது தாமோதரர் உலக வாழ்வை நீத்து விட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே முடிந்து நூல் வடிவு பெறாமைக்குப் பரிதியார் மிக வருந்தினார். காலஞ் சென்ற இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களது வேண்டுகோளின்படி வகுக்கப்பட்ட இந்நூல் அன்னார் இருந்த காலத்திலேயே முற்றுப் பெறாது போனமைபற்றிப் பெரிதும் மனமுளைகின்றேம் என மதிவாணன் முகவுரையில் வரைந்தார் பரிதியார் (16-5-1902). தாமோதரர் பிரிவாற்றாது கையறு நிலை பாடியோருள் பரிதியாரும் ஒருவர். அதில் தரவு கொச்சகம் ஒன்று; அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் மூன்று. தரவு கொச்சகப்பாடல் : காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போல் நாமோது செந்தமிழில் நன்னூல் பல தொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந்நாப்புலவீர் வரலாற்று இணைப்பு - 2 உ.வே. சாமிநாதர் தாமோதரனார் மதித்துப் பாராட்டிய பெருமக்களுள் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதரும் ஒருவர். அவர் என்சரிதத்தில் தாமோதரர் பற்றி எழுதிய குறிப்புகள் சில : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும் திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடு துறை மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக் கடிதங்களை எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற்பிரதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்க்கச் சொன்னார். தாமோதரம் பிள்ளை இறையனாரகப் பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59 ஆவது சூத்திரத்தின் உரையின் பிற்பகுதி தமக்குக் கிடைக்க வில்லை என்றும் கிடைத்தால் அனுப்பவேண்டும் என்றும் எழுதினார்; மடத்திலே தேடிப் பார்த்தபோது இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் அந்தச் சூத்திர உரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார். தேசிகர் அனுப்புவித்த ஏட்டுப்பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை இராமசாமிப் பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அது வரையில் தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற் கடிதம் எழுதினார். அதிற் சில பகுதிகள் வருமாறு: அடியேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும் போது தங்கள் சிநேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று வருவேன் என்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதம் எழுதியதனை நினைக்க நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதியருளிய கடிதம் வந்து மூன்றாம் நாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டு அருளிய இறையனாரகப் பொருட்பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59 ஆவது சூத்திர உரையின் கடைசிப்பாகமும் கண்டு மகிழ்வுற்றேன். திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீல ஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேன். ஆதலால், தாங்களாவது ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச்சரித்திரத்தை விரைவில் எழுதியனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை எழுதியனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்டதென்பதை அதிற்குறித்துக் காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது. மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் கொள்வேன். பங்குனி மதியில் உற்பத்தியான தங்கள் சினேகம் பற்குனன் போலச் சீர்பெருகுவதாக. சென்னபட்டணம், இங்ஙனம் பங்குனி 18 தங்கள் ஊழியன் 25-3-1883 சி.வை. தாமோதரம்பிள்ளை. இறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன் தாமோதரம்பிள்ளை திருவாவடு துறை மடத்துக்கும் எனக்கும் பிரதிகள் அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளை யிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ பதிப்பிக்க வில்லை. பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் இலக்ஷியம் செய்ய வில்லையே. நல்ல பொருள் கிடைத்த தென்று மிக்க மகிழ்ச்சியோடு உபயோகப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே என்று நான் எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும்அதே கருத்தை உடையவராக இருந்தார். தாமோதரம் பிள்ளை கும்ப கோணத்திற்கே வந்து வசிக்கப் போகிறார் என்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் இராமசாமி முதலியார் கூறியபடி பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ்நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை, நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி இருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. - என் சரித்திரம். 757 - 760. சென்னையில் இருந்த சி.வை. தாமோதரம் பிள்ளை எனக்கு எழுதிய படியே கும்பகோணத்தை அடைந்து அங்கே வக்கீலாக இருந்து வந்தார். அவர் முன்னமே ஒரு பெரிய உத்தியோகத்தில் இருந்து பென்ஷன் பெற்றவர். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தமிழ் நூல்கள் விஷயமாகச் சல்லாபம் செய்து பழகலானார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கருப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். அவர்வீட்டுக்கு நானும் அடிக்கடி போய் வருவதுண்டு. தாம் பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணியிருப்பதாகத் தெரிவித்ததோடு திருவாவடுதுறை சென்று ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனமே நான் அவரை அழைத்துச் சென்று தேசிகருக்குப் பழக்கம் செய்வித்தேன். மடத்தில் பல ஏட்டுச் சுவடிகள் இருக்கு மென்றும் அவற்றைத் தம்முடைய பதிப்புக்கு உபயோகித்துக் கொள்ளலாமென்றும் அவர் கருதினார். தேசிகருடன் செய்த சம்பாஷணையில் இருந்து அவருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் உணர்ந்து கொண்டார். கும்பகோணத்திலுள்ள கனவான்களையும் வக்கீல் களையும் தாமோதரம் பிள்ளைக்கு அவர் விரும்பியவாறு பழக்கம் செய்வித்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி தமிழ் சம்பந்தமான விஷயங்களைப் பேசுவோம். அவர் பல விஷயங்களைக் கேட்பார்; நான் சொல்லுவேன். யாழ்ப்பாணத்திலுள்ள பல வித்துவான் களுடைய செய்திகள் அவர் மூலமாகத் தெரியவந்தன. அவருடன் ஆராய்ச்சிக்கு உதவியாக, யாழ்ப்பாணம் நல்லூர் சிற். கைலாசபிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் நல்ல அறிவாளியாகத் தோன்றினார். என்பால் மிக்க அன்புடன் அவர் பழகினார். ஒருநாள் சம்பாஷணையில் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கம்பராமாயணத்தில் மிக்க விருப்ப முடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து பல திருத்தமான பாடங்கள் தெரிய வந்தன என்றும், தாமோதரம் பிள்ளையிடம் சொன்னேன். அன்றியும் மடத்திலுள்ள பிரதிகளை வைத்துக் கொண்டு இராமாயணம் முழுவதும் சோதித்து நல்ல பாடங்களைக் கைப்பிரதியில் குறித்துக் கொண்ட செய்தியையும் தெரிவித்தேன். பின்பு அவர் என்னிடமுள்ள கம்பராமாயணப் பிரதியை ஒவ்வொரு காண்டமாக வாங்கி நான் செய்திருந்த திருத்தங்களை யெல்லாம் தம் பிரதியில் செய்துகொண்டு என் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஒருநாள் பிற்பகலில் தாமோதரம் பிள்ளை என் வீட்டுக்கு வந்தார். நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தபின்பு, தங்களிடம் சிந்தாமணி விசேஷ உரையுள்ள பிரதியொன்று இருக்கிறதென்றும், அது நல்ல பிரதி என்றும் சென்னையில் நாவலர் பதிப்பு நூல்களை மீட்டும் பதிப்பித்து வந்த சதாசிவ பிள்ளை சொன்னார். சிந்தாமணியைப் பதிப்பிக்கலாம் என்று நான் எண்ணியிருக்கிறேன். கொழும்பில் இருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் இராமநாதன வர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன் என்றார். மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால் கொடுக்க மனம் வரவில்லை என்று சொல்லி நான் மறுத்தேன். தாமோ : இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும். சென்னைப் பட்டணத்தில் அச்சிட வேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. நான் தொடங்கி னேனானால் இன்னும் மூன்று நான்கு மாதங்களுள் புத்தகத்தை நிறைவேற்றிவிடுவேன். உங்கள் கையில் பொங்கலுக்குள் முந்நூறு பிரதிகள் தருவேன். நான் : இதற்கு முன்பு சென்னையில் கும்பகோணபுராணம் முதலிய சில நூல்களை அச்சிட்டதுண்டு. சேலம் இராமசுவாமி முதலியார் வேண்டிய உபகாரங்களைச் செய்வதாக வாக்களித் திருக்கிறார். தாமோ : அவர் என்ன உபகாரம் செய்வார்? பணம் வேண்டு மானால் சிறிது கொடுப்பார். புரூப் பார்ப்பாரா? பதிப்புக்கு வேண்டிய அமைப்புக் களைச் சொல்லித் தருவாரா? நீங்கள் முன்னமே பதிப்பித்த கும்பகோண புராணம் போன்றதன்று இந்த நூல். இதைப் பதிப்பிக்க வேண்டிய முறையே வேறு. சென்னைக்கே போய் அங்கே நேரில் இருந்து காரியத்தை முடிக்க வேண்டும். அங்குள்ள காட்டிஷ் அச்சுக் கூடத்தலைவர் எனக்கு மிக வேண்டியவர். நான் எது சொன்னாலும் நிறை வேற்றித் தருவார். இந்த விஷயத்தில் காலேஜ் வேலை வேறு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும். நான் : காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த நேரத்தில் தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன். அவசியமானால் லீவு வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக வன்றோ போய்விடும்? தாமோ : ஏன் வீணாகும்? அவ்வளவும் நன்றாக உபயோகப் படுமே! நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக்கொள்ளுகிறேன். உங்கள் பெயரை யும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக எழுதுவேன். நான் : எனக்குப் புகழ் வேண்டும் என்றும், பிறர் என்னைப் பாராட்ட வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து கொண்ட சங்கற்பமும் அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி விடுமே என்று யோசிக்கிறேன். தாமோ : இது வரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் பதிப்பிப்பதிலே தான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம் உங்களுக்கு ஏற்பட வேண்டாமே என்று தான் சொல்லுகிறேன். நான் அந்தத் துறையில் உழைக்க வேண்டும் என்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால், என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என்பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் பெயரும் வெளிப்படும். நான் : நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத் தானே இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்டபிறகு தானே உலகம் அதை மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்? தாமோ : ஏதாவது நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கிருந்தால் கம்பராமாயணத்தை வெளியிட லாமே! நீங்கள் பல வருஷங்களாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள். அருமையான திருத்தங்களை உங்கள் பிரதியிற் கண்டேன். இராமாயணத்துக்கு எல்லா நூல்களையும் விட மதிப்பு அதிகம்; பதிப்பித்தால் புண்ணியமும் உண்டு. நான் : அதிலும் பொருட் செலவு இல்லையா? தாமோ : இருந்தால் என்ன! இராமாயணம் பதிப்பிப்பதாக இருந்தால் பிரபுக்கள் நான் நான் என்று பொருளுதவி செய்ய முன்வருவார்கள். ஒவ்வொரு காண்டமாகப் பதிப்பியுங்கள். நானே ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒவ்வொரு கனவானை உதவி செய்ய ஏற்பாடு செய்கிறேன். சிந்தாமணிப் பதிப்பை எனக்கு விட்டு விடுங்கள். என்மனநிலை : அச்சமயம் எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. மனம் சஞ்சலமடைந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் விஷயத்தில் தமிழிலும் ஜைன நூல்களிலும் இன்னும் தேர்ந்த அறிவிருந்தால் நன்றாக இருக்குமென்று ஒருசமயம் நான் எண்ணியதுண்டு. அப்போது இந்தப் பெரிய காரியத்தை நிறைவேற்ற நமக்குச் சக்தியுண்டா என்ற அபிப்ராயம் மனத்தே எழும். ஆனாலும் ஒன்றிலும் தளராமல் எப்படியாவது பதிப்பைத் தொடங்கி விடுவது என்ற உறுதியோடு இருந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் இந்நூலைப் பதிப்பிக்கும் விஷயத்தில் வேண்டிய உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறார். அதை ஆராய்ந்து பதிப்பிப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு வேண்டிய வற்றைச் செய்து வந்திருக்கிறோம். இப்போது இவரோ இப்படிச் சொல்லி நம் பிரதியை விரும்புகிறாரே! நாம் பின்வாங்கலாமா? நம் கைப் புத்தகத்தில் போட்டிருக்கும் ஒவ்வொரு கோடும் புள்ளியும் ஒவ்வொரு குறிப்பும் எவ்வளவு உபயோகமானவை! மற்றவர்கள் கண்களுக்கு ஒரு சிறிய கோடாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கோட்டின் சந்தேகத்தால் நமக்குத் தோன்றும் விஷயங்கள் வேறு. அந்தக் குறிப்புக்களை இவர் எப்படி உணரமுடியும்? நாம் இட்ட ஒவ்வோர் அடையாளமும் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது? அவற்றை மற்றவர் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? எவ்வளவு ஜைன நூல்கள் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டோம்! எவ்வளவு ஜைனர்களிடம் சென்று சமயமறிந்து நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்து கொண்டோம்! எல்லா வற்றையும் வீணாக்கி விடுவதா? என்று இவ்வாறு சிறிது நேரம் அவரோடு ஒன்றும் பேசாமல் சிந்தனை செய்தேன். அவர் மீட்டும் மீட்டும் பல விஷயங்களைச் சொல்லி என் சிந்தாமணிப் பிரதியை விரும்பினார். அப்போது நான் என் தந்தையாரவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்பு கேட்டுக்கொண்டு நாளைக் காலையில் தங்களிடம் வந்து பதிப்பு விஷயத்தைப் பற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன் என்று சொன்னேன்; அவர், அப்படியே செய்யுங்கள்; இப்போது புதகத்தைக் கொடுங்கள். நான் ஒருமுறை பார்த்து வைக்கிறேன்; பிறகு உங்கள் தீர்மானப்படியே செய்யலாம். பெரும்பாலும் எனக்கு அனுகூலமாகவே முடியுமென்று எதிர்பார்க்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். உள்ளே சென்றேன். நான் ஆய்ந்து திருத்தி இரண்டு பாகங்களாக எழுதிவைத்திருந்த சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவர் கையில் கொடுத்தேன். உடனே, அவர் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அவர் செய்த புன்முறுவலிலே சந்தோஷம் பொங்கியது, சரி, நான் போய் வருகிறேன். நான் சொன்னவற்றையும் என் வேண்டுகோளையும் தங்கள் தந்தையார் அவர்களிடம் தெரிவித்து நாளைக் காலையில் வந்து தங்கள் சம்மதத்தைத் தரவேண்டும் என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுப் புதகத்துடன் தம் வண்டியிலேறித் தம் வீட்டுக்குச் சென்றார். அது வரையில் சாவதானமாகப் பேசிக்கொண்டு இருந்த தாமோதரம் பிள்ளை புதகம் கைக்கு வந்தவுடன் திடீரென்று புறப்பட்டது. என் மனத்தில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று. பின்னும் சிறிதுநேரம் அவர் பேசியிருந்தால் ஒருகால் அந்த உணர்ச்சி உண்டாகியிருக்குமோ இராதோ அறியேன். அவர் போனபின் எனக்கு ஒரு மயக்கம் உண்டாயிற்று; ஒன்றிலும் புத்தி செல்லவில்லை; அவர்கைக்குச் சென்ற பிரதி மீட்டும் வருமோ வென்று எண்ணிக் கலங்கினேன். வெகுநேரம் வரையில் பல வகையான சிந்தனைகளுடன் ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்தி ருந்தேன். வெளியே போயிருந்த என் தந்தையார் அப்போது வந்தார். என்னைக் கவனித்து என்ன? வழக்கம்போல் இராமல் ஒரு மாதிரியாக இருக்கிறாயே? என்ன விசேஷம்? என்று கேட்டார். உடனே நான் முதலில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, தாமோதரம் பிள்ளை வந்திருந்ததையும் சிந்தாமணிப் பதிப்பு விஷயமாக நடந்த சம்பாஷணையையும் நான் என்னிடமிருந்த கைப்பிரதியைக் கொடுத்ததையும் மற்ற விவரங்களையும் கூறினேன். அவர், அவசரப்பட்டுப் பிரதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் கவலைப்படவேண்டாம். சிந்தாமணியை நீயே பதிப்பிப்பதாகப் பலரிடம் தெரிவித்திருக் கிறாய். இரவும் பகலும் அதே வேலையாக இருந்து வருகிறாய். நீ தான் பதிப்பிக்க வேண்டும். ஒரு கவலையும் இல்லாமல் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் காப்பாற்றுவார். நாளைக் காலையில் அவரிடம் போய் நான் சொன்னதைச் சொல்லிக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வந்து மேலே கவனிக்க வேண்டியதைக் கவனி என்று தைரியமாகச் சொன்னார். நானே பதிப்பிப்பது தான் முறையாகும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகாரம் செய்துவிட்டுப் படுத்தேன்; தூக்கம் வரவில்லை. தாமோதரம் பிள்ளையிடம் என்ன சமாதானம் சொல்லிப் பிரதியைத் திரும்ப வாங்கி வருவது என்று யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை. பொழுது எப்போது விடியுமென்று காத்திருந்தேன். பொழுது விடிந்தவுடன் அனுஷ்டானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு என் தம்பி சிரஞ்சீவி சுந்தரேசனுடன் தாமோதரம் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுத் திண்ணையில் நான் இருந்து, அவர் வருவதை எதிர்பார்த்துக்கொண்டே யிருந்தேன். நான் வந்ததைக் கேட்டு அவர் வெளியே வந்தார். வந்தவர் என் பிரதியை என் கையில் கொடுத்துச் சில சந்தேகங்கள் கேட்கத் தொடங்கினார். அப்போது யாழ்ப்பாணம் அம்பிகை பாக உபாத்தியாயர் என்பவரும் உடன் இருந்தார். முதற் பாகத்தைப் பார்க்கையில் 20 பக்கங்கள் வரையில் அவர் கோடிட்டு பே அடையாளம் செய்திருப்பது தெரிந்தது. அவர் ஞமனேறுயர்த்த என்னும் செய்யுளின் உரையில்உள்ள ஏற்றை மேம்படுத்தின என்பது என்ன? பவர்துரை அச்சிட்டுள்ள புத்தகத்தில் மேம்படுத்தின் என்று இருக்கிறது. இதை விளங்கச் செய்யவேண்டும் என்று கேட்டார்; விளக்கினேன், வென்றிக் களிற்றை விரிதாரவன் வென்ற வாறும் என்பதற்குப் பிறரை முன்பு வென்ற வெற்றியையுடைய களிறு என்று உரை எழுதியிருக்கிறதே. என்ன விஷயம்? என்று கேட்டார். அதையும் விளக்கமாகச் சொன்னேன். அப்பால் இவற்றைப்போன்ற வேறு சில ஐயங்களை வினாவினார். விளக்கமாகச் சொன்னேன். எல்லா வற்றையும் அம்பிகைபாக உபாத்தியாயர் கவனித்து வந்தார். அப்பால் நான் தாமோதரம் பிள்ளையைப் பார்த்து, நீங்கள் இப்போது கேட்ட கேள்விகள் மிகவும் சாதாரணமானவை; கடினமான பாகங்கள் இந்நூலில் எவ்வளவோ உண்டு. அவை விளங்குவதற்கு ஏற்ற சௌகரியம் உங்களுக்கு இல்லை. ஆதலால் இம்முயற்சியை நீங்கள் நிறுத்தி விடுங்கள். நானே பதிப்பித்தலை மேற்கொள்வேன். பொருள் விளங்காமல் நீங்கள் எங்ஙனம் பதிப்பிக்க முடியும் என்றேன். அவர் நூல் இறவாமல் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. பொருளுதவி கிட்டும் போது நூலைப் பதிப்பித்து விட்டால் படிப்பவர்கள் பொருள் செய்து கொள்வார்கள் என்று சொன்னார். விஷயம் தெரியாமல் வெளியிட்டால் படிப்பவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? நான் ஒரு வகையாக வரையறை செய்து வைத்திருக்கிறேன். ஆதலால், இந்தக் காரியத்தை நானே செய்வேன். நீங்கள் பதிப்பித்தாலும் பதிப்பிக்கலாம்; ஆனாலும், என் முயற்சியை நான் விடப் போவதில்லை என்று சொல்லி என்கையிலிருந்த என் பிரதி இரண்டு பாகங்களையும் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தம்பி வசம் கொடுத்து இவற்றை ஜாக்கிரதையாக வீட்டிற்கு எடுத்துப்போய் வைத்திரு. அப்பாவிடமும் சொல்லு, நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லியனுப்பிவிட்டு அவரிடம் சிறிது நேரம் பேசினேன். எங்கள் சம்பாஷணையைக் கவனித்த அம்பிகைபாக உபாத்தியாயர் அவரை நோக்கி, ஐயா, இந்த ஐயர் பல முறை ஆராய்ந்து ஆழ்ந்து படித்தவரென்றும் நீங்கள் ஒருமுறையேனும் இந்த நூலைப் படித்துப் பார்க்க வில்லை என்றும் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணை யிலிருந்து நான் அறிந்தேன். ஆதலால், இந்த நூற்பதிப்பு வேலையை இவரிடமே விட்டு விடுங்கள். நீங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னார். பிள்ளை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். அப்பால் அவ் விருவரிடமும் விடைபெற்று வீடுவந்து சேர்ந்தேன். மிக்க கவலையோடிருந்த என் தந்தையார் சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து ஆறுதல் உற்றார். வென்றிக் களிற்றை என்ற தொடரையும், அம்பிகைபாக உபாத்தியாயரையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். - என் சரித்திரம். 782 - 791. இது தொடர்பாகத் தாமோதரர் எழுத்து வழியே ஒன்றும் அறிந்து கொள்ளக் கூடவில்லை. சிந்தாமணி பதிப்பிக்க முயன்ற முயற்சியும், சிந்தாமணி ஏடுதொகுத்ததும் ஆகிய தாமோதரர் செயல்களையும் பழந்தமிழ்நூல் பரப்பை உ.வே. சாமிநாதர்க்கு உணர்த்திய சேலம் இராமசாமியாரும், தாமோதரரின் சிந்தாமணிப் பதிப்புக்குச் சாமிநாதரிடம் பரிந்துரைத்தார் என்பதையும் என் சரிதத்தில் குறிப்பிடுகிறார் சாமிநாதர். மேலும், சிந்தாமணி முதற்பதிப்புக்கே சி. வை. தாமோதரனார் ஏட்டுப் படிகள் இரண்டு உதவியதை முதற்பதிப்பின் முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார் சாமிநாதர் (அக். 1887). இந்நூலையும் இவ்வுரையையும் பின்னும் இரண்டொரு முறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவிற் பதிப்பித்துப் பிரகடனம் செய்யும்படி யாழ்ப்பாணம் k.s.s.ஸ்ரீ.á.it. தாமோதரம் பிள்ளையவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன் என அம்முதற்பதிப்பின் முகவுரையிலேயே சாமிநாதர் வரைந்துள்ளார். எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகள் இவை என்பதாலும், பதிப்புத் துறை வரலாற்றுக்குரிய சான்றுகள் இவை ஆகலானும் அப்படியே தரப்பட்டுள்ளன. தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்-அல்காத தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்ட துன்பை யாமோ தரமியம்ப வே இது தாமோதரர் இயற்கை எய்திய போது சாமிநாதர் பாடிய இரங்கற்பா. வரலாற்று இணைப்பு-3 சி.வை. அழகு சுந்தரனார் (கிங்பெரி) அழகு சுந்தரம் என்னும் கிங்பெரி தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை முதல் முதல் வெளியிட்ட பெருமை வாய்ந்த தாமோதரம் பிள்ளையின் அருமைப் புதல்வர். அவர் இளமையில் கிறிதுவம் தழுவினர். அதற்குக் காரணம், நான் ஏன் கிறிதுவன் ஆனேன் என்று அவரால் எழுதப் பெற்ற நூற்கண் குறிக்கப்பட்டுள்ளது. அந்நூலை யான் படித்துப் பார்த்தேன். அழகு சுந்தரத்தால் குறிக்கப்பெற்ற காரணம் பொருந்திய தென்று எனக்குத் தோன்றவில்லை. ரெவரெண்ட் கிங்பெரி, மெஸபெட்டோமியா யுத்த களஞ்சென்று திரும்பியதும், என் அன்புக்குரிய நண்பராயினர். முதல் முதல் அவருடன் யான் பேசிய போது கோயில் கிறிதுவமென்னும் பாதிரிக் கிறிதுவத்தை அவர் விரும்பவில்லை என்பது நன்கு விளங்கிற்று. திருவாசகத்தையும் சுவிசேஷத்தையும் ஒருமைப் படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கிங்பெரி, கிறிது தெய்வத்தினின்றும் இறங்கிய மகன் அல்லன் என்றும் அவர் மனிதராயிருந்தே தெய்வ நிலை யடைந்தவர் என்றும் பேசியும் வந்தார். எழுதியும் வந்தார். அப்பேச்சும் எழுத்தும் பாதிரிக் கிறிதுவருக்கு வெறுப்பூட்டின. கிங்பெரி திருச்சபையினின்றும் விலக்கப்பட்டார். பாதிரிக் கிறிதுவம் எக்பர்ட் ரத்தினத்தை (பிஷப்நிலையத் தலைமைக் கணக்கர்) வேலையினின்றும் விலகச் செய்தது. கிங்பெரியைத் திருச்சபை யினின்றும் நீக்கியது. எட்டாம் எட்வர்ட்டை அரியாசனத்தினின்று அகற்றியதும் ஈண்டு நினைவுக்கு வருகிறது. இச் செயல்கள் உண்மைக் கிறிதுவ மாகுமா? பகைவரையும் நேசிப்பதன்றோ கிறிதுவம்? - திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் (630-31) கிங்பெரி 1941 ஏப்பிரலில் தமிழ்ப்பொழிலில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார் (17:1). அவர் சிறந்த மொழியியற் சிந்தனையாளர் என்றும் மொழிமரபு போற்றுபவர் என்பதுடன், பிறரும் போற்ற வேண்டும் என்று வலியுறுத்துபவர் என்றும் அக்கட்டுரையால் அறிய வாய்க்கிறது. தமிழ்படும் பாடு என்பது கட்டுரைத் தலைப்பு. பிரான்சிசு கிங்பரி தேசிகர் என்பது கட்டுரை யாசிரியர் பெயர். செய்திக்குறிப்பு : பத்தனாய்ப் பாட மாட்டேன் - ககரம் வேறுமெய் சாராது. இந்நாள் பண்டிதர் வித்துவான் புலவர் நாவலர் மகோபாத்தி யாயர்கள் பக்தனாய் (Bhaktha) என்கின்றனர். பத்தனைச் சூத்திரத் தமிழ் என்கின்றனர். பக்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எனப் பாடப் பாவம் என் தமிழ் நாப் புரள மாட்டாதே! இப்படிக் கூறுவதால் பிராமணரை மட்டும் குறித்தேன் என்று எண்ண வேண்டா. முப்புரிநூல் இல்லாத சூத்திரப் பார்ப்பாரும் தங்களைச் சத் சூத்திரர் எனச் சொல்லிப் பிராமணப் போலி பேசவும் எழுதவும் வந்து விட்டார். இவர் வடமொழியைக் கனவிலும் காணாதார். அன்னநடை நடக்கத் தன்னடை கெட்டவர் இவர் மகேஷ்வரன் ஆஷ்ரமம் எனப்பேசி வெட்கக்கேட்டைக் காட்டுகின்றனர். பாலராசன் பால்ராஜ் ஆகிவிட்டான். கோபாலன் கோபால் ஆகிவிட்டான். சங்கரன் ஷங்கர் ஆகிவிட்டான். ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி என்பது இழிவாம். ஒருவள் என்கிறார். தமையன் என்பதற்குப் பெண்பால் தமையந்தி என்பார் போலும்; இரண்டு இராசாக்கள், ஆறுவீரர்கள் பிழை என்றார் என் ஆசிரியர்; திணை வழுவமைதி பால் வழுவமைதி என்பர் புத்திலக்கணக்காரர்; இலக்கணமெல்லாம் வழுவாம் போலும். அழகு சுந்தரம் பாவலர் என்பதும் நன்கு விளங்குகின்றது. தம் தந்தையார் மறைந்த போது பாடிய இரங்கல் பாக்கள் அவர்தம் உள்ளமும் உருக்கமும் ஊற்றெழச் சுரந்தனவாம். தாயில்லான் என்றென்னைத் தரணியோர் செப்பிடினும் நேய உடன்பிறப்பில் நீசனெனப் பேசிடினும் பேயேனுக்குண்டோர் பிதாவென்று நானிருந்தேன் நீயோ எனையிந்த நீணிலத்தில் விட்டகன்றாய்! என்றினிமேல் உன்றன் எழிலார் முகம் காண்பேன்! என்றினிமேல் உன்றன் இனிய குரல் கேட்பேன்; என்றினிமேல் நீதான் எழுதுநிரு பம்பெறுவேன்; என்றினிமேல் இவ்வுலகில் எந்தாய் எனவிளிப்பேன்! ஆனந்தங் கொண்டேன் அரதனம் பெற்றாள் மணியென் றானந்தத் தோடே அனுப்பினநின் கைக்கடிதம் போன வருடமிந் நாள் புந்திகுளி ரப்பெற்றோம், போன விடத்திருந்து போடாயோ ஒர் கடிதம்? மன்னுங் கமலமென வைப்பாய் ஒருபெயரே உன்னுடைய பிள்ளைக்கென் றோர்கடிதம் வரைந்தாய்; மன்னுங் கமலமவள் வாய்திறந்து தாதாவென் றுன்னையழைக் கின்றாள்; ஒளித்தெங்கே சென்றாய் நீ? பிள்ளைகடாந் தேடப் பெரியார் ஒளித்தாடல் உள்ளதுநம் நாட்டில் ஒருவரில்லை யீதறியார்; பிள்ளைமுடி யாது பெரிதாய் வருக வெனிற், பிள்ளைக்கு முன்னிற்றல் பெற்றியன்றோ நீபகராய்? ஒன்பான் பாடல்களுள் இவையைந்து. கொச்சகக் கலிப்பா என்பது யாப்புக் குறிப்பு; இறுதியது மட்டும் வெண்பா. அழகு சுந்தரம் (பிரான்சி கிங்பெரி) 1873 - 1941. இவர் சி.வை. தாமோதரம் பிள்ளையின் புதல்வர். பி.ஏ. பட்டதாரி, சென்னை அரசாங்கத்தார் தொகுத்த பேரகராதியின் தொகுப்புக் குழுவில் துணையாசிரயராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சியாளராகவும் இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள் ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை. பாண்டவர் கதை, சந்திரகாசம் என்பன. Life of Jesus, Jesus of nazareth முதலிய நூல்களையும் எழுதியுள்ளார் - தமிழ்ப் புலவர் அகராதி. ந.சி.க. வரலாற்று இணைப்பு - 4 நூல்கள் தாமோதரர் பதிப்பித்த நூல்கள் நீதி நெறிவிளக்கம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் - நாவலர் பதிப்பு 1868 வீரசோழியம் ஆண்டு 1881 திருத்தணிகைப் புராணம் 1883 இறையனார் களவியல் உரையுடன் 1883 தொல். பொருள். நச்சினார்க்கினியம் 1885 கலித்தொகை. நச்சினார்க்கினியம் 1885 இலக்கண விளக்கம் 1889 சூளாமணி 1889 தொல். எழுத்து. நச்சினார்க்கினியம் 1891 தொல். சொல். நச்சினார்க்கினியம் 1892 இயற்றிய நூல்கள் வசன சூளாமணி 1898 சைவமகத்துவம் 6,7 ஆம் வகுப்புப் பாடநூல்கள் கட்டளைக் கலித்துறை - இலக்கண நூல் நட்சத்திரமாலை. பயன்பட்ட ஏட்டுச் சுவடிகள் (முகவுரைகளால் அறியப்படுவன). கலித்தொகை: புதுவை நயனப்பர் மூலப்படி - 1 ஆறுமுக நாவலர்படி - 1 திருவாவடு துறைப்படி - 1 தென்னாட்டுப்படிகள் - 2 புதுவை நெல்லித்தோப்பு, சொக்கலிங்கபடி நெய்தற்கலி மட்டும் - 1 திண்டிவனம் படி - நெய்தற்கலி முதற்பகுதி - 1 சென்னை ஓலைச்சுவடித்துறை - நெய்தற்கலி - 2 யாழ்ப்பாணம் ம.வி. கனகசபை படி - 1 திருமணம் கேசவ சுப்பராயர் படி - 1. இலக்கண விளக்கம் : திருவாவடுதுறைத் திருமடத்துப்படிகள் சூளாமணி : சென்னை மகாலிங்கர் படி - 1. கருவூர் பண்டிதர் வெங்கட்டராமர் படி - 1 வேதாரணியம் அ. அனந்த விசயர் படி - 1. பெருமண்டூர் சைவப்புலவர் ஒருவர் படி - 1 வீடூர் அப்பாசாமி படி - 1 திரிசிரபுரம் தமிழ்ப்புலவர் படி -1. காஞ்சிபுரப் படி - 1. 4. பதிப்புப்பாடுகள் தாமோதரர் எழுதிய பதிப்புரைகளிலே பதிப்புப் பற்றிய பல அரிய செய்திகள் பொதுளியுள்ளன. ஏட்டுப்படிகளில் காலந்தோறும் புகுந்த எழுத்துப் பிழையும் சொற் சிதைவும் சொற்றொடர்ப் பிறழ்வும் இத்துணைய என்று சொல்லுதற்கு இயலாது என்று கூறும் தாமோதரர் இராமாயண ஏட்டுப்படி குறித்து ஒரு செய்தியை எழுதுகின்றார்: ஏடு : இராமாயண அரங்கேற்றத்தின் பின்னர்க் கம்பர் சோழன் மேற்கொண்ட வெறுப்பால் சேரநாடு சென்று 20, 30 ஆண்டுகளின் பின் சோழனைக் காண வந்தாராம். வரும் வழியில் ஓரிடத்தில் இராமாயண ஏட்டுச் சுவடிகள் படியெடுக்கப் படுவதைக் கண்டாராம். சுவடி தோறும் வழுவும் திரிபும் மிக்கிருந்தனவாம். இடைக்கிடை சொருகு கவிகள் இருப்பதும் கண்டாராம், இதனைக் கூறும் தாமோதரர், ஒரு புலவர் வாழும் காலத்திலேயே அவர் சுவடி நிலைமை இத்தகைத்து ஆயின் ஆயிரத்தைந் நூறு ஆண்டுத் திரிபு எப்படி இருக்கலாம் என்பதை எண்ணிக் கொள்க என்கிறார். நாடுதோறும் வழங்கும் ஏடுகள் இத்தகைய எனவும் குறிக்கிறார். ஒரு தேசத்தில் வழங்கி வரும் பிரதிகளை மாத்திரம் பார்த்தார்க்கு இம்மாறுபாட்டின் பெருக்கம் தோன்றாது. மதுரைப் பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு. யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விருதேசப் பிரதிகட்கும் வேறு; தஞ்சாவூர்ப் பிரதி முதன் மூன்றிற்கும் வேறு; சென்னபட்டினப் பிரதிகள் இவையெல்லாவற்றிற்கும் வேறு. என்பது அது. ஏட்டெழுத்து : ஏட்டிலுள்ள செய்தியை ஒழுங்குபடுத்துதல் எத்தகு கடினமான செயல் என்பதையும் குறிப்பிடுகிறார் : மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால்போலப் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்திலும் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வா லென்றும், கட்டிலைக் கடால் என்றும் பஞ்சபாண்டவரைப் பிஞ்குப் பாகற்காய் என்றும் மாற்றி எழுதி வைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா? என்பது அவர் எழுப்பும் வினா, சுவடிகள் பழமையானவை என்றால் பிழைகள் குறைவாயிருக்கும். ஆனால் பூச்சியரித்த துளைகள் மிக்கிருக்கும் என்பதைச் சுட்டும் தாமோதரர், பிரதி எத்துணைப் பழையதோ அத்துணை அதன் மாறுபாடுகள் குறைவு. ஆனால் பூர்வ பிரதிகள் பாண வாய்ப்பட்டு எழுத்தொன்றற்குப் பாணவரி மூன்று என்றால் யாது தான் செய்யத்தக்கது! என்கிறார். ஏட்டின் நிலை : ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது; ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது; இனி எழுத்துக்களோ வென்றால் வாலும் தலையும் இன்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று ஏட்டின் நிலைமை அவர் குறிக்கும் தன்மை நவிற்சி, நம் மென்மனத்தைப் படாப்பாடு படுத்துதல் மெய்ம்மை. பதிப்பாசிரியர் பாடு: சுவடிகளில் இருந்து படித்துப் படியெடுத்துப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியர்பாடு எத்தகைய பெருமையது என்றும் குறிக்கிறார்: இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர், உரை யாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனா ஆசிரியரென இன்னு மொன்று கூட்டி, இவர் தொழில், முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக் கடியதென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டிய தென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன். தூக்கினால் அன்றோ தெரியும் தலைச்சுமை? பரிசோதனாசிரியர் படும் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்தமனசாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க் கன்றி விளங்காது. இவையெல்லாம் அநுபவத்தால் அன்றி அறியப்படாப் பொருள்கள். ஒன்றற் கொன்று ஒவ்வாத இருபது இருபத்து ஐந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமத் வே. சாமிநாதையரைக் கேட்டால் இந் நால்வகை யாசிரியர் பாட்டின் தார தம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி என்பது அது. சுவடியின் அருமை : சுவடி கிட்டும் அருமையையும் அதனைப் படிக்கும் அல்லலையும் மேலும் சுட்டுகிறார் தாமோதரர் : ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுவதற்கு முதலில் கையெழுத்துப்பிரதிகள் சம்பாதிப்பதே மஹாபிரயாசை. அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காதது மானால் எழுதுவாரும் ஓதுவாரும் இல்லாமல் இருக்கிற இடமும் தெரியாமல் போய்விடுகின்றது. கலித்தொகைப் பிரதிகள் தேடயான்பட்ட கட்டம் வாயினால் கூறும் அளவைத் தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலபாடப் பிரதி. அது தலையும் கடையும் குன்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்பு உண்டாய் நீக்கிவிட்டேன் என்கிறார். ஒருவரிடத்துள்ள சுவடியைப் பெற்றுத் தருமாறு வேண்டியபோது அவர், அரவின் சுடிகை அரதனத்திற்கும் ஆழிவாய் இப்பியுண் முத்திற்கும் அவை உயிரோடு இருக்குங் காறும் ஆசை கொளல் வேண்டாவாறுபோல இம்மஹானுடைய சீவதசையில் இவர் கைப்பட்ட புதகங்களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிக என்று பதிலெழுதினர். சிவனே! சிவனே! இதுவும் கலித்தொகையைப் பிடித்த கலித்தொகையோ என்று உளநொந்தேன் என்பதால் ஏட்டுப்படி கிட்டற் காம் அருமையைச் சுட்டுகிறார் தாமோதரர். ஏடு படித்தல் : ஏட்டெழுத்தைப் பொருளொடு படித்தற் குரிய இடரை அவர் பலவாறு குறிப்பிடுகிறார் : பொருட் டொகுதி என்பது பொருட்டொகுதி, போருட்டொகுதி, பேரர் உட்டொகுதி, பேர் அருட்டொகுதி, பேரருட்டோகுதி, போருட்டேர்குதி, பொருட்டேர்குதி, என்றற்றொடக்கத்தனவாய்ப் பல பாடவேறுபாட்டுடன் படிக்க இடமாக இருத்தலையும் குறிக்கிறார். விடியல வெங்கதிர் காயும வெயமல கலறை என்னும் தொடரையும் ஓர் பரிபாடற் செய்யுளையும் சரியாய்ப் பிரித்துணர்தற்கு எத்தனையோ புலவர்களிடம் கொண்டு திரிந்ததையும், எத்தனையோ புலவர்களுக்குக் கடிதம் எழுதிக் கேட்டதையும், அவருக்கு அவர்களிடமிருந்து வந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் வெட்கக் கேடாதலையும், அவற்றால் ஆறுமுக நாவலர் பெருமையைத் தாம் உணர்ந்தமையையும் விளக்குகிறார். சரகத்தைச் சாகம் என்றும், அளபை அன்பென்றும் இதர விதரத்தை இதா விதா என்றும், திகந்தராளத்தை திகந்தாரள மென்றும், மென்மையை மேன்மை என்றும் தபுதார நிலையைத் தபுதரா நிலை யென்றும், மூதலவன் என்பதை முதல்வன் என்றும் இன்னம் பலவாறாக மயங்கினோர். பெயர் பெற்ற வித்துவான்களே யாதலின், ஏட்டுப் பிரதியோடு ஊடாடிய சிரேஷ்ட புலவர்கள் அடியேன் தவறுகளைப் பாராட்டாது பொறுத் தருளுவதுமன்றி இன்னம் இம்முயற்சியை வியந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை, என்கிறார். பாடம் : இருந்த வண்ணம் பதிப்பித்ததை அன்றித் திருத்திப் பதிப்பித்தது இல்லை எனினும், இதுவே உண்மைப்பாட மெனக் கொள்ளவேண்டுவதில்லை என்ற குறிப்பையும் வைக்கிறார் தாமோதரர் : தற்காலத்தில் தமிழ் நாடுகளில் வழங்கும் பிரதிகள் அனைத்திலும் இப்பொழுது யாம் அச்சிட்டு வெளிப்படுத்தும் ரூபம் மேலானதென்று கொள்வதே யன்றி, ஏட்டுப் பிரதியின் ஆதாரமில்லாது யாம் ஒரு மொழியும் மாற்றிலேமாயினும், இது தான் ஆசிரியர் எழுதிய சுத்தரூபமென்று கொள்ளற்க. அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டுதல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது. பிறநூற்றுணிவிற்கு மாறுபட்டும் தற்கால வழக்கத்தை விரோதித்தும் சரியான அர்த்தம் புலப்படாமலும் சமுசயம் நிகழ்ந்த இடத்தும் எல்லாத் தேசத்துப் பிரதியும் ஒத்திருந் தனவற்றையும் யாம் சிறிதும் திருத்திப் பதிப்பித்திலேம். அவற்றைத் தம் மதத்தின்படி திருத்துதல் அறிவுடையோர்க்கு இயல்பன்று, என்கிறார். பதிப்புநிலை : சில மேற்கோள் நூற்பாக்கள் ஏட்டுப்படிகளில் ஒழிக்கப் பட்டமையும், அவற்றுக்குச் சான்று வட மொழியில் காணாமையும், பொருள் புரிந்து கொள்வதற்கு இயலாமையும் இருந்தும், அவற்றைப் பதிப்பில் சேர்த்தலால் பயனில்லை எனப் பலர் கூறியும், தாம் விடாது பதிப்பித்த பதிப்புச் செம்மையையும் பகர்கிறார். தாமோதரர் மேலும், இறந்து போகவிடாது நிலைநிறுத்துவதேயன்றி உலகத்திற்கு வீரசோழியத்தை உணர்த்துவது நமது நோக்கமன்று. ஆதலானும், இவ்வாறு பொருள் விள்ளாதிருந்தன சில பின்னர் வீசகணித ஆதாரமாகக் கணக்கேற்றிய போது புலப்பட்டமையாலும் கூட்டுதலும் மாற்றுதலும் போலக் குறைத்தலும் ஒருவர் நூலைப் பதிப்பிப் போர்க்குப் பெருங் குற்றமாதலானும் அவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தனம் என்கிறார். பதிப்பு நோக்கம் : தாம் வீர சோழியத்தைப் பதிப்பிப்பதன் நோக்கம் இன்ன தெனவும் திட்டமாகத் தெரிவிக்கிறார் தாமோதரர் : நல்ல வித்துவான்களுள்ளும் அநேகர் தாம் வீரசோழியம் என்னும் பெயரைக் கேட்டதன்றி நூலைப் பார்த்தறியேம் எனப் பலப்பல சமயங்களில் நமக்கு நேரே சொல்லினர். ஆதலால், அழிந்திறந்து போன நூல்களுள் தானும் ஒன்றாகி இன்னும் சிலகாலத்தில் மருந்துக்கும் அகப்படாமல் போய்விடும் என்றஞ்சி அதன் பாலிய யவ்வன சொரூபம் கிட்டாது ஆயினும் கிடைத்த வரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்த நோக்கம் என்றுணர்க என்கிறார். கலித்தொகைப் பதிப்புரையில் மேலும் அழுத்தமாகப் பதிப்புச் செம்மையைக் குறிப்பிடுகிறார். நெய்தற்கலி 29 ஆம் செய்யுள் 7 ஆம் அடியில் உண்கணிறை மல்க எனவும் 16 ஆம் அடியில் தூவற எனவும் பாடமாக, உரையில் அவற்றிற்கு முறையே உண்கண் நீர் நிறைகையினாலே எனவும் வலியறும்படி எனவும் பொருள் கூறியிருப்பது பிற்காலத்து ஏடெழுதுவோரால் நேரிட்ட தவறென்றும், நீர் என்றதற்கும் வலி என்றதற்கும் இயையுமாறு பாடத்தை உறை என்றும் தா என்றும் மாற்றிவிடுதல் தகுதி என்றும் சில தக்கோர் சொல்லியும் யான் அதற்கு உடம்பட்டிலேன். நீரிற்கு உறை யென்பது போல இறை என்றும் வலிமைக்குத் தா என்பது போலத் தூ என்றும், முற்கால வழக்கு இருந்திருக் கலாமே! எத்தனை சொற்கள் தற்கால வழக்கில் எடுத்தாளாத பொருளில் பண்டையோராற் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றன. இலக்கிய இலக்கண ஆதாரமாக ஒன்றினைத் தவறென்று ஒருதலையாக நிச்சயித்துழியன்றி ஏட்டுப்பிரதிகள் யாவும் ஒத்திருந்தனவற்றை யான் மாற்றகில்லேன். அடியேன் சிற்றறிவுக்கு ஏற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அடியோடு அழிந்து போகும் பழைய நூல்களை நிலை நிறுத்துவான் புகுந்தேன். ஆதலின் நூலைத் திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமை அன்று. இயன்ற அளவும் பூர்வரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற்கு ஒப்பிப்பது மேயான் தலையிட்ட தொழிலென்பதை இன்னும் ஒருகால் உலகத்தார் முன் விண்ணப்பஞ் செய்து கொள்கின்றேன். பிழையாயினவற்றைத் திருத்திப் படித்தல் ஆன்றோர் கடன். கண்ணுக்கும் அகப்படாமல் கிடந்த ஏட்டுப் பிரதிகளைக் கடிதத்தில் பல பிரதிரூபஞ் செய்து கைக் கெட்டப் பண்ணுகின்றேன் என்றே கொள்ளுக என்கிறார். தாம் பதிப்புத்துறையில் புகுதற்குரிய கட்டாயம் ஏற்பட்ட தையும் அதனால் பிழையுண்டாயின் பொறுத்தற் கடனையும் சுட்டுகிறார். தொல்காப்பியப் பதிப்புரையில் யான் விவரித்துக் கூறிய பல ஏதுக்களால் இவ்வித முயற்சியில் சிந்தை சென்றில தாதலின் அன்றோ, சகிக்கலாற்றாத பரிதாப சிந்தையோடு பதினாலாம் நாளைப் போரில் துரியோதனன் தன் சேனாபதியிடம் சென்று முறையிட்டு, இனி அர்ச்சுனனோடு சண்டையிட யானாவது போகின்றேன் என்று போனதை ஒப்ப, யான் இத்தொழிலில் பிரவேசித்தது. ஆதலால், என்னைக் கடந்து சிற்சில வழுக்கள் இலைமறை காய்போல் அங்கும் இங்கும் கிடப்பின் அதையிட்டு என்மேற் குற்றம் ஏற்றல் மறைமுகத்தால் தர்மமாகாது போவதின் நில்லாது, நேர் முகத்தால் பேர் அநியாயம் என்றுணர்க என்கிறார். இக் குறிப்பால், இவர்தம் பதிப்பிலுள்ள குற்றங் குறைகளை மெய்யாகவும் புனைவாகவும், இவர் வருந்துமாறு பலர் உரைத்தும் எழுதியும் வந்தனர் என்பது விளங்கும். பதிப்பில் ஈடுபட்டமை : ஏடுகளின் நிலைமையையும் அதுகண்ட தம் வேட்கையையும், தமிழ் அறிஞராயவர் இத்துறையில் ஈடுபடாமையையும், ஈடுபட்டாரும் ஒதுங்கி நிற்றலையும், அன்னாரும் குறைகூறித் திரிவதையும் பதிப்புரைகளில் விரிவாக விளக்கியுள்ளார் தாமோதரர் : சம்பளத்திற்காக ஏடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் விதத்தையும், பழைய காலத்து ஏட்டுப் பிரதிகள் அடைந்திருக்கும் ஈனதிதி யையும், பாடங்கேட்டோர் இல்லாத தன்மையையும் நோக்கில், அநேக வித்துவான்களாய் ஒருசபை சேர்ந்து ஒருவரோடு ஒருவர் தீர்க்க ஆலாசனை செய்து பதிப்பினும் பல வழுக்கள் புகுதற்கு இடனாய இவ்வரிய நூலை (தொல். பொருள்), யான் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்தமையால் இடமிடந்தோறும் பலபல வழுக்கள் செறிந்திருத்தல் இன்றியமையாமையாம். ஐயந்திரிபறத் தாம் கற்றறியாததோர் நூலை இவர் இங்ஙனம் வழுவுற அச்சிட வேண்டிய தென்னை என யாரும் வினவுவராயின், வழுச் செறிந்தது ஆயினும், அடியோடழிந்து போகிற் நூலை அடியேன் பாதுகாத்தது பேருபகாரமன்றோ என்க. மேலும் இதனை உரை உதாரணங்களோடு பாடம் கேட்டவர் யாராவது உளராயின் அன்றோ அவரையன்றி யான் செய்தது தவறாவது? யார் செய்யினும் இதுவே முடிவாயின் அடியேன்மேற் குறை கூறுதல் தர்மம் அன்று அன்றியும் சும்மா கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா? காண்டற்கும் அரிய நூலைக் கைக் கெட்டப் பண்ணினது கேடாமா பிரதி கிடைப்பதே மிக அருமையாயும் கிடைப்பினும் குறைப்பிரதிகளாகவும் அவை தாமும் ஒரோ ஒரு வரிக்குப் பல வழுவாக ஆயிரக் கணக்கான வழு உடையனவாகவும் இருக்க அடியேன் அவ்வழுத் தொகையைக் குறைத்து நூற்றுக் கணக்காக்கி விட்டதா என்மேற் குறையாயிற்று? அங்ஙனமாயின் இவரினும் வல்லோராய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசுரஞ் செய்யத் தக்க வித்துவான்கள் இலரோ எனின், உளராயின் ஏன் செய்திலர் என விடுக்க. பலபெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடில் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுன்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜ பண்டிதர் மகாவித்துவான் புலவர் என்றின்னை பெரும் பட்டச் சுமையைத் தலை மேலேற்றிக் கொள்ளாது இன்னும் பல காலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போலியரே இதில் கையிடுவது பேரவசிய மாயிற்று. இவை தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரையில் தாமோதரர் வரைவன. நூல் அச்சிடும் புலமையர் எண்ணம் அந்நாளில் இருந்த வகையைக் கலித் தொகைப் பதிப்புரையில் சுட்டுகிறார்: இக்காலத்துப் புத்தகங்களைத் தேடிப் பரி சோதித்து அச்சியற்றும் வித்துவசனர்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலைபோகும் விநோத நூல் களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாடப் புத்தகங்களையும் சர்வகலா சாலையாரால் பற்பல பரீக்ஷைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர். சரவதியின் திருநடனம் சொலிக்கப் பெற்றனவாகிய சங்க மரீஇய நூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சற்றேனும் திருட்டி சென்றிலது. இதனைக் கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்து போகும் சுவடிகளை இயன்றமட்டும் தேடி, அவற்றுள் தமிழிற்குப் பேரிலக்கணமாகிய தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், திருத்தணிகைப் புராணம் என்று இன்னவற்றைப் பலதேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன் என்கிறார். சபாபதி நாவலர் நடாத்திய, ஞானாமிர்த இதழாசிரியர் ஒருவர் அவர் தம் பெயரைத் தாமோதரம் பிள்ளை என்று கையெழுத்திட்டு, அவ்விதழின் தமிழ் நடைக்குத் தாமே பொறுப் பென்று விளம்பியவர்; பின்னர்க் கலியாண சுந்தரம்எனப் பெயர் சூட்டிக் கொண்டவர். அவர், தாமோதரம் பிள்ளை எனப்பெயர் எழுதுதல் தவறென்றும் தாமோதரப் பிள்ளை என்றிருத்தல் வேண்டுமென்றும் வினாக் கிளப்பினார். அதற்கு மறுமொழி எழுதுகிறார் தாமோதரர்: பெயர்ப் பிழை : யான் தாமோதரம் பிள்ளை என என் பெயர் எழுதுதல் தவறு என்றும், அது தாமோதரப் பிள்ளை என்றிருத்தல் வேண்டும் என்றும் கிளம்புகின்றார். அப்படிப்பட்டவரோடு யாது வாதம் புரிவது? தம் பெயர் எழுதுவதற்கே இன்னும் கற்றுக் கொண்டிருக் கின்றார் போலும். இவரை எதிர்த்தல் வென்றா லும் தோற்றாலும் வசையன்றோ? இக்காலத்துப் புலவர் பெருமானென யாவரும் கொண்டாடும் திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை யவர்கள், இராமநாதபுரம் வித்துவான் பொன்னுசாமித் தேவரவர்கள், நவீன பவணந்தி எனச் சிறப்புப் பெயர் விளங்கிய ஐயம்பிள்ளை உபாத்தியாயரவர்கள், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் என்று இன்னோரெல்லாம் தம்பெயர் வல்லொற்று மிகாமல் எழுதுபவராயின் யான் தாமோதரம் பிள்ளை என்று எழுதுதலும் விலக்காகுமன்றிக் குற்றமாகாதே விதி, விலக்கு இரண்டும் உணர்ந்தாரன்றோ குற்றங் காட்டற்கு உரியர் ஆவர்? அப்பசுவாமிகளையும் அப்பச் சுவாமிகள் ஆக்குவர் என்றஞ்சுகின்றேன். யான் சாதித்த மௌனத்தை என் இஷ்டர்கள் மன்னிக்க என்கிறார். அறைகூவல் : குறை கூறுவார்க்கு ஓர் அறைகூவல் விடுக்கிறார் தாமோதரர் : இந்நூற்பதிப்பில் (கலித்தொகை) யாவர்க்காயினும் குற்றங்கூற இஷ்ட மளதாயின், அன்னோர் இன்னும் அச்சில் தோற்றாத நற்றிணை பரிபாடல் அகம் புறம் என்று இவற்றின் ஒன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன்மேற் குறைகூறும்படி வேண்டிக்கொள்கின்றேன். யான் வித்தியா அகங்காரத் தினாலாவது திரவிய ஈட்டத்தினாலாவது இதில் ஏற்பட்டவன் அல்லன் என்பதை இன்னும் ஒருகால் வற்புறுத்துகின்றேன் என்கிறார். வடமொழிப் பயிற்சி : வீரசோழியப் பதிப்புரையில் வடநூற் பயிற்சி யில்லாத எனக்கு என்று எழுதி, அந்நூல் விதிகளை உதவியவர்களுக்கு நன்றியுரைத்திருந்தார் தாமோதரர், மறுத்துக் கூறுவதே நோக்காக உடையவர் இதனை விட்டு வைப்பரா? அதனால் வடநூற் பயிற்சியில்லாத அவர் போன்றவர் இவ்வித ஆராய்ச்சியில் ஒரு முடிவு காண அருகர் அல்லர் என மறுத்தனர். அவர்க்குத் தம் கேள்வியறிவுச் சிறப்பை வலியுறுத்தி எழுதிய தாமோதரர், வடநூற் பயிற்சியில்லாத எனக்கு என்று யான் வீரசோழியப் பதிப்புரையில் எழுதியது அப்பாஷையறிவு சிறிதும் இன்மையான் அன்று. சமகிருதத்தில் சந்தியும் கிரியையும் பாடம் பண்ணி, அமரமும் நானார்த்த ரத்தினா வலியும் ஓதி, இதோபதேசமும் இரகுவமிசமும் பார்த்துளேன்; ஆயினும் சின்னூல் கற்றுப் பன்னூற் புலவர் போலத் தம்மை மதிப்பார் போலாது,. என் வடமொழியுணர்ச்சி ஓர் உணர்ச்சி யன்றென்று யான் கருதியமை பற்றியே எனக் கொள்க. தமிழிலே தானும் யான் என்னை ஒரு பொருளாக மதியாமை தொல்காப்பியப் பதிப்புரையில் பண்டிதர், கவிராசர், வித்துவான், புலவன் என்று இன்னோரன்ன பட்டத்திற்கு அருகனாகாது இன்னும் பல காலந் தமிழ்ப் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போலியர் என்பதனான் விளங்கும். நமது தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும், கையெழுத்துப் பிரதிகளின் கதியையும், அவை அடைந்திருக்கும் திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமை யொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது என்று கலித்தொகைப் பதிப்புரையில் எழுதினார். குறைகூறுவார்க்கு : குறைகூற விருப்பமுடையார் பழநூல் பதிப்பில் இறங்கிப் பணிசெய்து காட்டுக என்று கலித்தொகை பதிப்பிலே அறைகூவல் விட்ட தாமோதரர் தொல். பொருள் பதிப்பிலே, குறைகூற இஷ்டமுள்ளவர்கள் இன்னும் அச்சிலே தோற்றாதனவாய், அடியேன் காட்டும் கிரந்தங்களில் இரண்டொரு ஏட்டையாயினும் எழுத்துப் பிழையற மாத்திரம் வாசித்துக் காட்டுவாராயின் அவர்கள் பாதாம் புயத்தை உச்சிமேற் சூடி அவர்கட்குத் தொண்டு பூண்டு ஒழுகுவென் என்று அறிவாராக. ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்து. தேகவியோகமான தந்தை கையெழுத்துப் போல் தோன்றிற் றென்று கண்ணீர் பெருக அழுத கதையும் உண்டன்றோ!என்று எள்ளி நகைக்கிறார். இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்பதில் என்று தெளிந்த தெளிவு இது. என்னெனில் குறை கூறுவாருள் பலர் பொறாமை வழிப்பட்டவர் என்பதைத் தெள்ளென உள்ளகங் கொண்டு மறுப்புரைத்தலும் வேண்டா என விடுத்ததும், அவர் கடைப்பிடியே, மறுப்புகள் எப்படி? சேனாவரையைப் பதிப்புப் பற்றிய விளம்பரத்தில், இலக்கண இலக்கியங்களில் மகா வல்லவரும் சென்னை முதல் ஈழம் ஈறாகவுள்ள தமிழ் நாட்டு வித்துவான்களில் தமக்கு இணை யில்லாதவருமாகிய நாவலர் என்று தாமோதரனார் வரைந்தி ருந்தார். இதில் என்ன குற்றம்? குற்றமாக ஒருவருக்குப்பட்டது! அதற்கு 1869 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்களில் விஞ்ஞானபனப் பத்திரிகை என்று ஒருவசை இதழ் வெளியிட்டார்! இணை யில்லாதவர் என்பதற்குப் பெண் சாதியில்லாதவர் என்று பொருள் கொள்வாரென எண்ணியாவது பார்க்க முடியுமா? இதற்குத் தாமோதரர் மறுப்புரைக்க எண்ணவில்லை எனினும் நாவலர் வழியே நல்லறிவுச் சுடர் கொளுத்தல் வெளிப்பட்டது. இது நிற்க. பதிப்பு விகற்பம் : முன்னெல்லாம் படியில் உள்ளவாறு அன்றி மாற்றிப் பதிப்பிப்பதைக் கொள்ளாத தாமோதரர்க்குச் சில விகற்பம் செய்து பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. அது கலித்தொகைப் பதிப்பிலே ஏற்பட்டது. அதனையும் பதிப்புரையில் இந்நூற் பதிப்பை ஏட்டுப் பிரதிகளின் போக்கிலே விடாது சிற்சில இடங்களில் சில விகற்பங்கள் செய்திருக்கின்றேன். அவை இன்னவென உணர்த்தல் என் கடமையாம் எனக் கூறி வரிசையாகக் குறிப்பிடுகிறார். அவை : 1. பாட்டுக்கள் தோறும் முதலிலே அவ்வப் பாட்டின் முதற்குறிப்பைச் சொல்லி இஃதின்ன துறைத் தென்று கிளவி கூறிப் பின்னர்ப் பாட்டு வரும். அதனை யான் மாற்றி முதலிலே பாட்டை அச்சிட்டு அதன்கீழ் இஃதின்ன கிளவியெனக் கூறுங் கருத்துரையை அச்சிட்டிருக்கிறேன். 2. பாட்டு முழுதும் ஒருங்கே தொடர்ந்து வராது. எடுத்துக்கொண்ட உரைக்கு வேண்டிய அளவாய்ப் பிளவுபட்டுப் பின்னம் பின்னமாய்க் கிடந்ததை ஒரு தொடராகச் சேர்த்து ஒவ்வொரு கலிப்பாவையும் முடித்த பின்னர் அவ்வப் பகுதியை முதலும் ஈறும் காட்டி மீளவும் பகுத்து அப்பகுதியின் உரையைப் பதிப்பித் திருக்கிறேன். 3. விசேட உரைகள் சில உரைக்கு முன்னும் சில உரைக்குப் பின்னும் சில இடைப்பிற வரலாக உரைக் கிடையினும் கிடந்தவற்றை ஒரு கிரமப்படுத்தி அனைத்துப் பாடமும் உரையுமான பின்னரே வரும்படி சேர்த்திருக்கின்றேன். 4. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென நிகழும் பாட்டுறுப்புக்களில் மூலம் ஒன்றினும் உரை ஒன்றினுமாகச் சில இடங்களில் பிறழ்ந்து கிடந்தன வற்றை இரண்டும் ஓரிடத்தாம்படி உரையிடத்தை மாற்றியிருக்கின்றேன் இவ்விகற்பங்களிலெல்லாம் ஓரிடத்துக் கிடந்த வாக்கியத்தைப் பின்னோரிடத்தில் இடமாற்றி வைத்ததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஓரெழுத்தையாவது யான் மாற்றியதே இல்லை. 5. இந்நூல் துரைத்தன வித்தியாசாலைகளிலும் பிற கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டு மென்னும் அவாவினாலே தற்காலம் அவையிற்றுக்கு இணங்காததோர் (இழி சொல்லும் மகளிரின் சிறப்பவய வத்தின் இடக்கர்ப் பெயருமாகிய) குஃறொடர்ந்த அன்மொழி இந்நூல் முழுவதினும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்தும் செய்யுள் ஊனமுறா திருத்தற் பொருட்டு அதற்குப் பதிலாக அவ்வவ்விடத்திற்கு இசைந்த பிற அவயவத்தின் பெயரைச் சந்தத்திற்கு வேண்டிய அளவு விசேணத்தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொருகியது இன்ன இன்ன மொழி இன்ன இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியில் என்பதை யாவர் ஒருவராயினும் அறிய விரும்பின் அவற்றை ஈண்டுக் காண்க. மாற்றி வைத்த பிரதி மொழியின் பொருளே உரையகத்தும் மாறியிருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு மாற்றியது குற்றமாயின் அதனை உலகம் மன்னிக்கும்படி பல முறையும் பிரார்த்திக்கின்றேன் என்பவை அவை. பாடமாற்றப் பட்டியையும் பதிப்புரையிலே தந்துள்ளார். பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திற்குத் தக்கவாறு பதிப்பித்த அப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், செய்யக் கூடாதவை எனப் பற்பல பேரறிஞர்கள் மிகக் கண்டித்து எழுதினர். அதனால், அத்தகைய இடக்கர்ச் சொற்களைச் சிதைத்து அச்சிடுதல் முறையன்று எனத் தெளிந்தார். எனினும் சூளாமணிப் பதிப்பில் ஒரு துணிவு பிறந்தமையைச் சுட்டுகிறார். பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய் மொழியாக இருக்க மாட்டாதென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியரினின்றும் வேறுபட்ட பிழைபாடென்றும் நிச்சயிக்க ஏது உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்தையாவது மொழியையாவது சந்தர்ப்பத் திற்கும் பொருளுக்கும் இயையுமாறு திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதும் அன்றிச் சில பாடங்கள் ஒரு பயனும் தராமலும் சில முன்பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும்நிற்கும். ஆதலின், திருத்தம் அத்தியாவசியகம் ஆயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்பென்று உண்ர்ந்து இங்ஙனம் தெரிவிக்கலானேன் என்கிறார். திருத்தம் செய்ய வேண்டுவதன் இன்றியமையாமை குறித்து மிகவும் ஆய்ந்து எட்டுக் குறிப்புகள் வழங்கியுள்ளார். 1) மூல நூலிலோ உரையிலோ தாம் திருத்தம் புரியவில்லை என்றும், உரை விளக்கம் மேற்கோள் ஆகியவற்றில் உள்ள வழுக்களே திருத்தப்பட்டன என்றும், 2) மேற்கோளிலும் பொருள் துணிவுக்கு உரிய பகுதியில் திருத்தப்படாமல் பிற பகுதியிலேயே திருத்தம் செய்யப்பட்டன என்றும், 3) உரை வரையப்படாத நூலின் வாக்கிய முடிபு வழுவே திருத்தப்பட்டன என்றும், 4) சுவடியில் உள்ளவாறு பதிப்பித்துத் திருத்தம் வேண்டி அறிக்கை விடுத்தும் எவரும் திருத்தம் தராமையால் தம்மால் செய்யப்பட வேண்டுமெனச் செய்யப்பட்டன என்றும், 5) திருத்தம் செய்யப்பட்டதை உலகிற்குத் தெரிவியாது திருத்தம் செய்வது ஆசிரியர் வாக்கென்று நடையிட விடுவதே குற்றம் என்று கொள்ளப்படும் என்றும், 6) சுவடியில் பிழைபட்டது ஆசிரியரது அன்று என்றும், மாறுபட்டு நிற்பதன் மாற்றத்தை விலக்கிச் செய்யப்பட்டதே என்றும், 7) இத் திருத்தங்களும் அச் சமயச் சான்றோர் பலரைக் கலந்து சுவடியைக் காட்டியும் திருத்தம் செய்யப்பட்ட வடிவு காட்டியும் அவர்கள் ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்றும், 8) தாம் திருத்திய மூல நூலாசிரியர் கொண்ட பழைய வடிவமாக இருக்கவும் கூடும் என்றும், இவற்றால் உலகம் தம்மைப் பொறுத்துக்கொள்ளும் என்றும் கூறுகின்றார். எலும்பு அழுகிய நாசியைச் சத்திரம் பண்ணிப் பொன்னாசி பொருத்தியது போலவும், என்பு நொறுங்கிய காலை வெட்டி யெறிந்து பொய்க்கால் வைத்தது போலவும், முழுத் தோட்டமும் அகத்தி நட்டினும் வெற்றிலைத் தோட்டம் வெற்றிலைத் தோட்டமே என்பது போலவும் தம் செயற்பாடு அமையுமெனக் குறிக்கிறார். மேலும் சங்கர நமச்சிவாயர் உரையை இடைமடுத்துச் சிவஞான முனிவர் வரைந்த புத்துரையையும், வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்க அணியியலில் சில நூல்களை அவர் மகன் சதாசிவதேசிகர் செய்ததையும் சுட்டிக் காட்டுகிறார். அச்சீடு : ஒரு நூல் அச்சில் வாராமை அதன் பயிற்சி இன்மைக்கும், அச்சில் வருதல் பயிற்சி உண்மைக்கும் காரணமாதலை எதுகை மோனை உவமைக் கதை நயத்தொடும் குறிக்கிறார் தாமோதரர்; சூறாவளி மாறாய் மோதி என்? சூத்திர விருத்தி வான் ஆர்த்து இடித்தென்? கன்ன துரோண சயித்திரதர் என்ன துரோகம் இயை த்திடினும் தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன்! அச்சுவாகனம் கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது! இது கலித்தொகைப் பதிப்புரை, இதனையே இலக்கண விளக்கப் பதிப்புரையிலும் சுட்டுகிறார். நன்னூல் பரவிய அளவுக்கு இலக்கண விளக்கம் பரவாமையை எண்ணி எழுதுவது இது. இலக்கண விளக்கச் சூறாவளி தொல்காப்பிய சூத்திர விருத்தி என்பன இலக்கண விளக்கம் குறித்துச் சிவஞான முனிவரால் எழுதப்பட்ட கண்டன நூல்கள். சிறுவன் என்பான் அபிமன்யு. அவனுக்குத் தேர் இருந்திருப்பின் சூழ்ச்சியை வென்றிருப்பான். இலக்கண விளக்கம் அச்சூர்தி ஏறியிருப்பின் எதிர்ப்பை வென்றிருக்கும்! மேலே ஆய்வில் இப்பகுதியை விரியக் காணலாம். பிறர் பதிப்பித்த நூலைத் தாம் பதிப்பிப்பதில்லை என்னும் கொள்கையுடையவர் தாமோதரர். அதற்கு ஒரு மருங்கு தவிர்த்துச் செல்லும் நிலையும் அவர்க்கு உண்டாகியது. எழுத்திற்கு இளம்பூரணமும் சொல்லிற்குச் சேனா வரையமும் சிறந்த உரை எனத் தாம் கண்டாலும், அவற்றுக்குப் பின்னாக எழுந்ததும் மூன்றதிகாரத்திற்கும் உரையுடையதும் பிறர் மதங்களை ஆங்காங்குக் கண்டித்து வரைவதுமாம் நச்சினார்க் கினியத்தைப் பதிப்பிக்கத் தாமோதரர் எண்ணினார். பொருளதிகாரத்திற்கு எவருரையும் அச்சாகாமலும் எழுதுவாரும் படிப்பாரும் இல்லாமலும் இருந்த நச்சினார்க் கினியர் உரையை முதற்கண் வெளியிடுவது நலமென்று வெளியிட்டார். பின்னர்ச் சொல்லதிகாரத்தை வெளியிடத் துணிந்தார். அதன் படிகளைத் தொகுத்துப் பதிப்பிக்க ஒழுங்கு படுத்தும் போது, சொல்லதிகாரம் அச்சிட்ட பின்னரும் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரை முழுமையாகாது விடப்படின், சொல்லும் பொருளும் பெற்றும் எழுத்தில்லாமல் தலையற்ற உடலையே தாங்கலாகும். ஆதலால், எழுத்தையும் சேர்த்தே அச்சிடல் வேண்டுமெனக் கட்டுரைத்தனர். ஆனால் மழவை மகாலிங்கரால் தொல். எழுத்து, நச்சினார்க்கினியம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அச்சிடப்பட்டிருந்தது! இஃது அவர் கொள்கைக்கு மாறாயிற்று. அதனால், ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும், ஒரு நூலின் முதலிலே யுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதியடைந்துவிட்டாற் பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற்பாகத் தையும் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலகவழக்கும் அதுவே. எனக் கொண்டார். மழவை மகாலிங்கர் சென்னைப் பகுதி ஏட்டுப் படிகளைக் கொண்டு ஆய்ந்து பதிப்பித்திருந்தார். அதனால் தென்னாட்டுப் படிகள் சிலவற்றைக் கொண்டு ஆய்ந்து அவ்வெழுத்ததிகார நச்சினார்க் கினியத்தை வெளியிட்டார் தாமோதரர். சூளாமணிப் பதிப்பிற்கு மூன்று சுவடிகளே தாமோத ரர்க்குக் கிடைத்தன. அவற்றைப் படியெடுத்து ஆய்ந்து பதிபபுப் பணியைத் தொடங்கினார். நூறு பக்க அளவும் அச்சாயிற்று. அதன்பின் மல்லாகம் வி. கனகசபை அவர்கள் படியொன்று கிடைத்தது. அதற்கும் தம்மிடம் இருந்த முன்மூன்று சுவடிகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. அதனால் இன்னும் சில சுவடிகள் கிடைப்பின் அவற்றையும் தேடி ஒத்துப் பார்த்துக்கொண்டு அச்சிடுதல் நலமென்று முடிவு செய்தார். பின்னர் ஒரு பழம்படி காஞ்சியில் கிடைத்தது. இவற்றொடு பழைய இருப்புச் சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்த அளவில் முன்பு அச்சிட்ட அவ்வளவும் மறுபடி திருத்தி அச்சிட வேண்டியதாயிற்று. திருவாவடுதுறைத் திருமடத்தில் இருந்துதான் இலக்கண விளக்கத்திற்கு மறுப்புகள் வலுவாய்க் கிளர்ந்தன. எனினும் அத் திருமடத்தின் தலைவராகப் பின்வந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இலக்கண விளக்கத்தையும், சமண சமயக் காப்பியமாகிய சூளாமணியையும் வெளியிடுமாறு தாமோதரரைத் தூண்டினார். இவ்விரண்டற்கும் ஏட்டுச் சுவடிகள் வழங்கியதுடன் வழக்கமாக மடத்திற்கு வாங்கும் படிகளுக்குரிய விலையுடன் இவ்விரு நூல்களின் அச்சீட்டுக்கும் தனித்தனி உருபா நூறு நன்கொடை வழங்குவதாகவும் கூறி விரைவில் பதிப்பிக்கத் தூண்டினார். இவற்றை இலக்கண விளக்கப் பதிப்புரையிலும் சூளாமணிப் பதிப்புரையிலும் குறிப்பிடுகிறார் தாமோதரர். ஒரு நூல் பதிப்புரையிலே அடுத்து இந்த நூல் ஆய்வில் உள்ளது என்றும், இவை இவை வெளிவரும் என்றும் குறிப்பிடுதல் தாமோதரர் வழக்கமாகும். தம் அச்சீடு ஆய்வு முதலியவற்றை நூல் வெளிவரும்வரை மறைவாகவே வைத்திருத்தல் அக்கால வழக்கமாக இருந்தும் அதனை மேற்கொள்ளாமல் வெளிப்படக் காட்டிய தாமோதரர் பேருள்ளம் பாராட்டுக்கு உரியதாகும். கலித்தொகைப் பதிப்புரையிலே இலக்கண விளக்கம் பதிப்பது குறித்து எழுதுகிறார். சூளாமணி வெளியீடு பற்றியும் குறிக்கிறார். தொல்காப்பியம் எழுந்து நச்சினார்க்கினியப் பதிப்புரையில் சொல் நச்சினார்க்கினியம் பதிப்பாகி வருவதையும், எட்டுத்தொகை ஆய்வில் இருப்பதையும் குறிக்கிறார். அதில் குறிப்பிடும் தகடூர் யாத்திரை பின்னர்க் கிட்டாமலே போனது பேரிழப்பாகும்! புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும், பரிபாடல் முழுப்படியும், பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் அகப்படவில்லை என்றும், அவற்றை வைத்திருக்கும் பெருமக்கள் எவராயினும் சில நாள்களுக்கு இரவலாக வழங்கின் தாம் மிகக் கடப்படுவதுடன், தம் வழக்கப்படி அச்சிட்ட படிகள் இரண்டு இரண்டு வழங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இலக்கண விளக்கப் பதிப்புரையில் ஒரு சிறப்பான குறிப்பைப் பொறிக்கிறார் தாமோதரர். மாணவர்கள் இலக்கணத் தேர்ச்சி பெறுவது பற்றியும், அவர் நிலையில் விலை தந்து வாங்குதற்குத் தக்க உதவியைக் கருதியும் அக் குறிப்பை வெளிப்டுத்தியுள்ளார் : மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஐந்தும் எவ்வாற்றானும் ஓதி உணர்தல் வேண்டும் என்னும் விருப்பம் மிக்குளேன் ஆதலானும் அவர்களுள் பெரும்பான்மையோர் அதிகச் செல்வரல்லர் ஆதலானும், வித்தியாசாலைகளில் தமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பிப்பின் இப்புத்தகம் அவர்களுக்கு அரைவிலையாகக் கொடுக்கப்படும் என்பது அது. அந்நூல் விலை உருபா 5-00. பண்பு நலம்: தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரையிலே தாமோதரர் மற்றொரு சீரிய கருத்தினை வரைந்துள்ளார். அவர்தம் பதிப்பு நலக் கருத்தும்,தூயவுள்ளமும் ஒருங்கே பளிச்சிட்டுக் காட்டுகிறது அக்கருத்து: இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் பதிப் பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பல முறையும் பிரார்த்திக்கிறேன். அன்னோர் அறிவிக்கும் திருத்தங் களைத் திரட்டி இன்ன இன்ன வழு, இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டன என்று குறிப்பிட்டுத் தொல்காப்பியப் பதிப்புத் திருத்தம் என்று ஒன்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கிறேன். ஐம்பது புதுத் திருத்தங் களுக்கு ஒரு பிரதி என் நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந்நூல் பிழையற வழங்கச் செய்தல் ஓர் பெரும் லோகோபகாரம் என்று உணர்வாராக என்பது அது. தாம் ஈடுபட்டதுபோல் அறிஞர்களும் தமிழ்ப் பழநூல் களைப் பதிப்பித்தலில் ஈடுபட வேண்டும் என்றும், வள்ளன் மையாளர் அதற்கு உதவ வேண்டும் என்றும் கலித்தொகைப் பதிப்புரையில் ஒரு பேரறிக்கை விடுகின்றார் தாமோதரர்! தாமோதரர் தமிழுள்ளம் பள்ளம் பாயும் வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்தல் விளக்கமாகின்றது: சங்க மரீஇய நூல்களாய் வகுக்கப்பட்ட எட்டுத்தொகை பத்துப்பாடல் பதினெண்கீழ்க்கணக்குள், தலைமைபெற்ற எட்டுத் தொகையுள் இக் கலித்தொகையும் பத்துப்பாடலுள்ளே திருமுருகாற்றுப்படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற் போதுமா? பதினெண் கீழ்க்கணக்குள்தானும் இன்னும் வெளிவராது கிடப்பன உள. இவைகளைத் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்வாம்சர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியோர் மடாதிபதிகள் என்று இன்னோர் இவற்றிற் கடைக்கண் சாத்துமாறு சரவதியே அநுக்கிரகிப் பாளாக. பழைய சுவடிகள் யாவும் கிலமாய் ஒன்றொன்றாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியம் இல்லை. சரவதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்கின்றாள் இல்லை. திருவுடையீர்; நும் கருணை இந்நாள் தவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒருதரம் அழிந்த தமிழ் நூல்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென்? ஓடன்றோ கிட்டுவது! காலத்தின் வாய்ப்பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினும் கம்பையும் நாராசமும் தான் மீரும். அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. சங்கமரீயஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம், முப்பால் அப்பாலாய் விட்டது. என் காலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறு நூறு இப்பொழுது தேசங்கள் தோறும் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! அயலான் அழியக் காண்கினும் மனம் தளம்புகின்றதே! தமிழ் மாது நும் தாயல்லவா! இவள் அழிய நமக்கென் என்று வாளா இருக்கின்றீர்களா! தேசாபிமானம் மதாபிமானம் பாஷாபிமானம் என்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக! என முறையிடுகிறார்! மன்றாடுகிறார்! ஓரொருவர் ஓரொரு நூலைத் தமது செலவில் தமக்கு இஷ்டமான வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிடுவிப்பினும் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேருபகார மாகும்! எத்தனை நூல்கள் இறவா தொழியும்? எனத் தொல். பொருள். பதிப்புரையிலே இரங்கிக் கெஞ்சுகிறார். நாட்டுக்கோட்டை இராமநாதன் என்பார் இரங்கூனில் இருந்து உருபா 50 நன்கொடை அனுப்ப, அதனைத் தொல். சொல். சேனாவரையப் பதிப்பு நன்றி கூறலில் சுட்டி இம் முன்மாதிரியை அனுசரித்து இப்படிப்பட்ட முயற்சியுடையவர்களுக்கும் ஒருவாறு துணைசெய்யும்படி அவர்கள் மனத்தில் எந்நாளும் குடிகொண்டிருக்கும் நடராசப் பெருமான் அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறார். சூளாமணிக்கு உதவியவர்களைக் குறிப்பிட்டு இவர்கள் முன்மாதிரியைப் பின்பற்றி இன்னும் அநேகர் தத்தமக்கு ஏற்ற வித்துவான்களைக்கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களை வெளிப்படுத்தி நிலை நிறுத்தக் கலைமகள் கடாட்சிப் பாளாக என வேண்டிக் கொள்கிறார். தாம்தாம் பதிப்பிக்க வேண்டும் என்றும், தமக்கே உதவவேண்டும் என்றும் குறிப்பிடாமல் பிறர் பதிப்பிக்கவும், பிறர் பதிப்புக்கு உதவவும் வேண்டும். தாமோதரர் சால்பு, பிறர்க்கு வருதல் அருமையாம்! இச் சால்பை எவ்வளவு பாராட்டினும் தகும்! ஏனெனில் புகழைப் பங்கிட்டுக் கொள்ள ஒப்பும் உண்மையாளர் உலகில் மிக மிக அரியர்! திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இது வரையில் பதிப்பித்தநூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்சமன்று. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பருக்ஷையிற்றேறி ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை என்று எண்ணுகின்றேன் எனத் தொல். பொருள். பதிப்பிலே வேண்டுகை விடுகிறார் தாமோதரர். இதுவும் தம் பதிப்புக்கு மட்டுமே உரிய வேண்டுகையன்று. தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய வேண்டுகையுமன்று. தாமோதரரின் பேருள்ள வெளிப்பாடு இது. இவர்க்கென ஏற்பட்ட அல்லல் இல்லையா? இழப்புகள் இல்லையா? ஏடு தேடற் செலவென்ன? ஆய்தல் செலவவென்ன? அச்சீட்டுச் செலவென்ன? இவையெல்லா வற்றாலும் ஏற்பட்ட இழப்புக்குச் செல்வக் குவியலைத் திரட்டி வைத்துக் கொண்டு இச் செல்வத்தை என் செய்வேம் எனத் தவிப்பவரா தாமோதரர்? அதனால் செல்வர்கள் உதவியை நாடினார்! செய்தித்தாள் அறிக்கையும் வெளியிட்டார். தொல் பொருள் பதிப்புரையிலே, இதனைப் பதிப்பித்ததில் அச்சிற்கும் காகிதத்திற்கும் வந்த செலவினும் பரிசோதனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்ற தாகலானும், இப்பெயர்ப்பட்ட அரிய நூல்களைப் படிக்க விரும்பி வாங்குவார் சிலரே யாதலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம் முதலுக்கே நஷ்டத்தை விளைவிக்கின்றது. ஆதலால், தமிழ் விருத்தியில் அபிமானமுள்ள பொருட் செல்வர்களால் சிறிது சகாயம் பெற்றாலன்றி இன்னும் இதுபோல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தலில் ஊக்கஞ் செல்லாது. இதுவரையும் அச்சுமணமும் பெறாத பூர்வ கிரந்தங்களையே தேடிப்பதிப்பிக்கும் நோக்க முடையோற்குக் கல்வியருமை தெரிந்த திரவிய சீலர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்புகின்றேன். என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார். எவ்வெம் முயற்சிக்கும் துணைக் காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடை பெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்கால சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்கு வரும் பரீக்ஷா நிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்திவருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோ என்று கட்டி வருகின்றது என்று தொல். எழுத்துப் பதிப்புரையிலே எழுதும் சிக்கலான நிலையை அறியின் அவர் துணிந்து இறங்கிய துறையின் இக்கட்டுத் தெளிவாகும். உதவி வேண்டல் : அவர் இந்து இதழ் வாயிலாக உதவிவேண்டி வெளியிட்ட அறிக்கையைக் கலித்தொகைப் பதிப்புரையிலே குறிப்பிடுகிறார்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், திருத்தணிகைப்புராணம் என்று இன்னவற்றைப் பல தேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன். இதனால், எனக்குப் பிரதிகள் விலைபோகாமல் மூவாயிரத்து ஐந்நூறு ரூபா வரையில் திரவிய நஷ்டம் நேரிட்டது. இவ்வாறான நஷ்டத்தைத் தருமசீலரான பிரபுக்கள் நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரித் தாலன்றி என் முயற்சியைக் கைவிடும்படி நேரிடுவது கண்டு பரிபவமுற்றுச் சென்ற வருஷம் ஆடிமாதம் ஹிந்து பத்திரவாயிலாக ஓர் அபயம் எழுதி என் குறை நிறையை உலகத்திற்குத் தெரிவித்ததும் அன்றி எனது இஷ்டர்கள் பலர்க்கும் தமிழ்ப் பிரபுக்கள் சிலர்க்கும் அக்கடிதத்தின் பிரதியைப் பிரத்தியேகமாகவும் அனுப்பினேன். அது கண்டு அநுதாபமுற்றோர் சிலரன்றி இலர். நன்றிபாராட்டல் : இந்து இதழ் வழியாக வந்த வேண்டுகையைக் கண்டு உதவியோர் பெயரையும் அவர்கள் வழங்கிய தொகையையும் கலித்தொகைப் பதிப்புரையிலே குறிப்பிடுகின்றார். கொடைஞர் இருபதின்மர் பெயர்களும் அவர்கள் வழங்கிய தொகை உருபா ஆயிரத்து நூறும் இடம் பெற்றுள. மேலும், சிலர் ஒவ்வொரு நூல் வெளியீட்டுக்கும் ஒருதொகை தருவதாக உறுதி கூறியுள்ளனர். தாள் வாங்கும் வகைக்காக முன்தொகை தந்து இழப்பு உண்டாகுமானால் ஈடு செய்ய வேண்டியதில்லை என்றும் வழங்கியுள்ளனர். கலித்தொகைக்குப் புதுக்கோட்டை அரசின் அமைச்சர் அ. சேசையாவும், இலக்கணவிளக்கத்திற்குப் போடி குறுநில மன்னர் திருமலை போடய காமராச பாண்டியரும், சூளாமணிப் பதிப்புக்கு இவர் இளவல் இரங்கூன் சி.வை. இளையதம்பி முதலிய எண்மரும் தொல். எழுத்துக்குப் புதுக்கோட்டை முறைமன்ற நடுவர் ம. அண்ணாமலையும் பிறரும் உதவியுள்ளனர். இந்து இதழாசிரியர் க. சுப்பிரமணியரும் மு. வீரராகவரும் 30-31 படிவங்களுக்கு மேற்படாத ஒரு நூலைத் தாள் செலவோடு கூடத் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தருவதாகக் கூறிய செய்தியை உரைக்கும் தாமோதரர் இவர்கள் முன்மாதிரியைப் பின்பற்றிப் பிற அச்சுக் கூடத் தலைவர்களும் தலைக்கொரு பழைய நூலைத் தத்தம் யந்திர சாலையில் தக்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்துப் பதிப்பாராயின் எத்தனை நூல் அழியா தொழியும்? அன்றியும் அஃது அருந்தந்திரங்கள் இறவாமல் நிலைபெறுவதற்கு ஆனதோர் பெருந் தந்திரம் ஆகுமன்றே! என்று நயந்து கூறுகிறார். தஞ்சைத் துணை முறைமன்ற நடுவர் கனகசபை என்பார் பழமையான 35 ஏடுகளைத் திரட்டித் தந்தார். பதிப்பு முயற்சிக்குப் பணத்தினும் பழஞ்சுவடியே பெரும் பயனாம் என்பதை உணர்ந்து செய்த செய்கையைப் பாராட்டும் தாமோதரர் இவற்றை யான் அத்துணைப் பொன் மொகராவாக மதித்து அவர்களுக்கு வந்தனம் செய்கின்றேன் என்று பாராட்டுகிறார். ஏடு பெற்ற வரலாறு, அதனைப் பெறுதற்கு உதவியவர்கள், பெற்றுத் தந்தவர் ஆகியோர்களைப் பற்றியெல்லாம் விரிவாகக் கூறி நன்றி செலுத்துகின்றார் தாமோதரர். அப்படியே நன்கொடை உதவினோர்களையும் பாராட்டியுரைக்கிறார். அவர்தம் மனத்தில் கிடந்த ஆர்வத்தை நிறைவேற்றவல்ல மூவர் இளம் பருவத்திலேயே இயற்கை எய்தியமையை எண்ணி இரங்குகிறார். அவர்கள் வேதாரணியம் கைலாசநாதர், திருப்பனந்தாள் குமாரசாமிமுனிவர், சீர்காழி கிருட்டிண சாமி என்பார். எனது தவக்குறையோ தமிழின் துரதிர்ஷ்டமோ தெரிகிலேன். இம்மூவரும் இளம் வயதிலே சிவபதமடைய என் நம்பிக்கை நிறைவேறாமல்போய்விட்டதுஎன்றுஇரங்குகிறார்(கலி..gâ¥). பதிப்புத்துணை புரிந்தாரை அவ்வந்நூல்களில் தவறாமல் பாராட்டுகிறார் தாமோதரர். அவர்களுள் ந.க. சதாசிவம், யாழ்ப்பாணம் சிந்தாமணி உபாத்தியாயர் வேலு, நல்லூர் சிற். கைலாசர் திருகோண மலை ந.க. கனகசுந்தரம் ஆகியோர் குறிப்பிடத் தக்கோர். வடமொழி தொடர்பான செய்திகளை வேதாரணிய ஆதீனம் கைலாயநாத சந்நிதி, சென்னை பச்சையப்பர் பாடசாலை வடமொழியாசிரியர் மண்டைக்குளத்தூர் கிருட்டிணர், யாழ்ப்பாணம் நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர் என்பார்(வீரசோழியம்)உதவியுளர். சமணசமயம் தொடர்பான செய்திகளை, அச்சமயச்சான்றோர்கŸவழிaதெளிîசெய்Jபயன்படுத்தியுள்ளார். அவர்கள், வீடூர் அப்பாசாமியார், மன்னார்குடி மு. அ. அப்பாண்டார், காஞ்சிபுரம் பச்சையப்பன் பாடசாலைத் தமிழாசிரியர் வ.கணபதி என்பார் (சூளாமணி). ஆசிரியர் : கலித்தொகைப் பதிப்புரையில் என் சிறு பிராயத்தில் என் தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப்பார்த்தால் அன்றோ தெரியவரும் என்று இளமையை நினைவு கூர்ந்து எழுதுகின்றார். ஒவ்வொரு நூல் பதிப்புரையிலும் தமக்குக் கற்பித்த ஆசிரியர் சன்னாகம் முத்துக்குமரக் கவிராயரைச் சிறப்பப் பாடுகிறார்; பரவுகிறார். எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்த செந் நாவினன் முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா கத்துயர் மரபினோன் முத்துக் குமார வித்தகன் அடிதலை வைத்து வாழ்த்துவனே என்பது வீரசோழியப் பதிப்பில் உள்ள தமிழாசிரிய வணக்கம். திங்கள் ஆம்பலும் செங்கதிர்ச் செல்வன் கொங்கவிழ் நறையிதழ்ப் பங்கய மலரும் நீர்மிசை அலர்த்தும் சீர்வறி தாக வளமலி உலகில் உளநிறை புலமைக் கலைக்கதிர் கொடுகருஞ் சிலைக்கிணை கடந்த என் இதயமும் சிறிதளவு உதயமாம்படி பார்மிசைப் பக்குவிட நெகிழ்த்திய மிக்க சிறப்பினையுடைய, சன்னை முத்துக் குமாரன் துணைக்கழல் சென்னி நாவொடு சிந்தை திருந்தவைத்து அன்ன மூதறி வாளர் பதந்துதித்து இந்நிலத்திவ் வுரையின் றியம்புகேன் எனக் கலித்தொகைப் பதிப்புரை முகப்பில் பரவுகிறார். சூளாமணிப் பதிப்பில், தெள்ளுதமிழ்க் கடல்கடந்து செழியகலைத் Jறைப்படிந்துâரிபில்Pனக் கொள்ளைகொண்டு நுகர்ந்தமுத்துக் குமாரகவி மேகமிதைக் கொடிச்சுன் னாக வள்ளலென துள்ளமதி கொள்ளநறை விள்ளுதமிழ் மணஞ்சற் றேறி வெள்ளறிவின் முடைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள் மலைவன் மாதோ என இசைக்கிறார். கற்றறி வில்லாக் கடையனேன் தனக்கு நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை முத்துக் குமார வித்தகன் அடியினை சித்தத்து இருத்தி. என்று தொல். பொருள். பதிப்பிலும், சங்க மங்களத் தமிழ்முத்துக் குமரன்தண் மலர்ப்பா தங்கள் வங்கமாத் தமிழ்க்கட விடைப்படி குவனே என்று இலக்கண விளக்கப் பதிப்பிலும், முத்துக்குமார நற்கவி ராசனை வழுத்தி vன்றுbதால்vழுத்துப்gதிப்பிலும்gலபடப்gகர்கிறார்.ït®j« பதிப்பின் அருமுயற்சியும் பெரும்பாடும் புலமை யாளர்க்குப் புரியாமல் போய்விடவில்லை. நெஞ்சாரப் பாராட்டி நேயங்காட்டுவாரும் இருந்தனர். இதற்கு வீரசோழியப் பதிப்புக்கு வாய்த்த சிறப்புக் கவிகளே சாலும். தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணியனார், புரசை அட்டாவதானம் சபாபதியார், கோப்பாய் வித்துவான் சபாபதியார், துரைத்தன வித்தியாசாலைத் தமிழ்ப் புலவர் தொழுவூர் வேலாயுதனார், திரிசிரபுரம் சோடாசாவதானம் சுப்பராயர், சொர்ண நாதபுரம் துவாதிரிம் சதாவதானம் இராமசாமியார், சுன்னாகம் அ. குமாரசாமியார் என்னும் எழுவர் சிறப்புக் கவி இயற்றியுள்ளனர். முதல் பாட்டே ஏட்டின் நிலையையும் பதிப்பின் சிறப்பையும் அருமையாக விளக்குகின்றது. சொல்துளைத்த நாவலர்கள் எழுதிவைத்த முதுவீர சோழி யத்தைச் செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத செல்நாள் ஏட்டில் பல்துளைத்து வண்டுமண லுழுதவரி யெழுத்தெனக்கொள் பரிசின் ஆய்ந்து கல்துளைத்த எழுத்தாஅச் சிட்டனன்தா மோதரனாம் கலைவல் லோனே சொல்லாய்வு வல்ல புலவர்கள் எழுதிய பழைய ஏடு; அதில் மெய்யெழுத்திற்குப் புள்ளியிருப்பதில்லை; ஆனால் செல்லும் பூச்சியும் துளைத்த புள்ளிகள் ஒன்றிரண்டல்ல, பலவுண்டு; நீர்ப்பூச்சி நிலத்தில் போட்ட கோடென வரிகளும் உண்டு; அத்தகைய எழுத்தையும் படித்து ஆய்ந்து கல்லில் எழுதிய எழுத்துப் போல நிலைக்குமாறு அச்சிட்டுவிட்டான் தாமோதரன்; அவன் கலைக்கோமான்தான்! என்னும் பொருள் நயம் சொல் நயமிக்க இப்பாடல் தாமோதரனார் பதிப்புப் பணி நலத்தை நன்கு விளக்கும்! நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட செயலன்றோ இது. (1881) தாமோதரர் ஏட்டை அச்சாக்கிய அருமை உவமை வாயிலாகப் பாடப்படுகின்றது. ஒரு கருத்தையே மும்முறையில் முச்செய்தியால் கூறுதல் கலித்தாழிசை மரபு. ஆனால், வீரசோழியச் சிறப்புக் கவிகளோ தனித் தனி வேறு வேறு புலவர்கள் பாடிய இரட்டைத் தாழிசைகள் என விளங்குகின்றன. கல்லாகக் கிடந்த அகலிகையை நல்லாளாக எழுப்பிய இராமன்கதை, மாயையினின்று உலகம் வந்தது என்னும் மெய்ப் பொருட் கொள்கை, முதலை வாய்ப்புக்க பாலனைச் சுந்தரர் மீளக் கொண்டு வந்த fதை,ïwªj பூம்பாவை என்பைக் கொண்டு பெண்ணுருவாக்கிய ஞானசம்பந்தர் கதை, பரற்கல்லைப் பைம் பொன்னாக்கும் வித்தை, இந்திரசாலம் என்று சொல்லப்படும் கண்கட்டு வித்தை, இன்னவற்றுக்கு இணையாகவும் மேம்பட்டும் நிற்பது இவர் பதிப்பு என்கின்றனர். தாமோதரர்க்கு எவர் தாமோதரர்? என்று இவர் இயற்பெயர் அமைந்த வாற்றைச் சிறப்பிக்கிறார் தொழுவூரார். பின்னாளில் பரிதிமாற் கலைஞர், தாமோதரம் பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோ தரம் என்று பாடுதற்கு முற்பட்டது இது! ஈழகேசரி உரை : இவர்தம் தொல்காப்பியப் பதிப்பைப் பின்னுக்குத் தள்ளி ஒருவர் எழுத அதற்கு உண்மையுரைத்து மறுக்கு முகத்தான், இந்தப் பூ மண்டலத்திலே தமிழ்நாட்டிலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தைத் தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களைக் கொண்டு பதிப்பித்து முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப் பித்தவர்கள் தமிழ் மகனார் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியைக் கோடாநு கோடி கூறிட்டு அக்கூறுகளில் ஒரு கூறாகிய ஒரு மயிர் நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை என்று தொல்காப்பியப்பதிப்பு என்னும் தலைப்பில் பண்டிதர் சி. கணபதியார் வரைகிறார் (ஈழகேசரி. 17.9.50) தாமோதரர் தொல்காப்பியப் பதிப்பில் தலையிட்ட நியையும் அக்காலத்தில் அவர் பணிக்குக் கிடைத்த பரிசையும் அதே கட்டுரையில் வரைந்துள்ளார் : மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும், ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும் தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்து வைத்தும் தமிழ்நாட்டுப் புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருள் முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியம் தொலையக் கூடா தென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணம் என்பது கருதத் தக்கது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ் நாடு முழுவதிலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்: தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகம் செய்ய முன்வந்தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவ சூடாமணிகள் சிலர். தாமோதரம் பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டு போகப் போகிறார் என்று சிரித்தார்கள் என்கிறார்கள். தொல்காப்பியம் முதலிய நூல்கள் இறந்து படாது காத்த தாமோதரர் செய்கையைப் பாராட்டும் இக்கட்டுரை யாசிரியர் அவரை ஆதிவராகம் என்று குறிக்கிறார். திருமால் வராகமாய்த் தோன்றித் தம் வலிய கொம்புகளால் அறிவுக் கருவூலங்கள் அழியாமல் காத்த தொன்மக் கதையொடு சார்த்தித், தொல்காப்பியம் சிதைந்ததுமறையும் காலத்தில் அதனைத் தேடி எடுத்து ஏந்திப் பேருதவி புரிந்த ஆதிவராகம் என்கிறார். இத்தகைய பாராட்டாளர் ஒருபால்: பதிப்புரை : எமக்கு நீர் தாமோ தரர்? என்று இடித்தாரும் இருந்தனர். இவர்தம் பதிப்புரையைப் பதிப் புரை எனப் பிரித்துப் பதிக்கச் செய்யும் குற்றம் என்று பொருள் உரைப்பாரும் இருந்தனர். நும் குழறு படை விரிப்பில் சாலப் பெருகும் எனப் பழிப்பாரும் இருந்தனர். இவற்றையெல்லாம் வாயளவில் கூறியமையாமல் அச்சிட்டு நிலைப்படுத்தினாரும் இருந்தனர் (திராவிடப் பிரகாசிகை 31-46) இத்தகைய பழிப்பாளர் ஒருபால்! இருவேறு உலகத்து இயற்கை என அறிந்தவரும், சால்பின் கொள்கலமாய் இலங்கியவரும், பணிவுக்கோர் அணிகலமாய் அமைந்தவருமாகிய தாமோதரர் இவற்றைப் பற்றிய விருப்பு வெறுப்பு இன்றித் தம் அயராப் பணியிலேயே ஊன்றிச் செயற்கரிய செய்யும் செம்மலாகத் திகழ்ந்தார். 5. ஆய்வு தாமோதரனார் பதிப்பித்த நூல்களின் பதிப்புரைகளிலே சில ஆய்வுகளைச் செய்துள்ளார். அவை அ. தமிழ் என்னும் சொல்லாய்வு, ஆ. பதினெண் கீழ்க் கணக்கு ஆய்வு, இ. இலக்கண விளக்கச் சூறாவளி ஆய்வு, ஈ. இலக்கிய வரலாற்று ஆய்வு என்பன குறிப்பிடத்தக்கன. அ. தமிழ் தமிழ் என்னும் சொல்லாய்வு குறித்து வீரசோழியப் பதிப்புரை, கலித்தொகைப் பதிப்புரை ஆகிய இரண்டிலும் செய்கின்றார். தமிழும் வடமொழியும் நாவலந்தீவின் பழைய மொழிகள் என்றும், இரண்டுமே தெய்வத்தன்மை உடையவை என்றும், வடமொழி பனிமலைக்கு அப்பால் இருந்து வந்த தென்றும், தமிழ் கங்கை வரை பரவியிருந்தென்றும். ஆரியர் வடபால் நிலங்களைப் பற்றிக்கொள்ளத் தமிழர் தென்பால் வந்தவர் என்றும் இதனால் தமிழே நாவலந்தீவின் பழமையான மொழி என்றும் கூறுகின்றார். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பது கொண்டு அது முந்திய மொழியெனல் கூடாது என்றும் கூறுகிறார். இகழ், இமிழ், உமிழ், கமழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப் பேறு பெற்ற சொற்கள் போலத் தமிழ் என்னும் சொல் தனிமைப் பொருள் குறித்த தமி என்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித் தனக்கு இணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது என்கிறார். தமி என்பது தமியேன் என்பது போல இழிவுப் பொருள் தருமோ என வினவி, ஓரடியில் பிறந்தும் அடியேன் அடிகள், அளியேன் அளியாய் என்பன போல ஒன்று இழிவும் ஒன்று உயர்வும் உணர்த்தின என்கிறார். செவிக்கு இனிமை பயத்தலால் இனிமைப் பொருளுடைய தூய்த் தமிழ் என்பாரும் உளர் எனப் பிறர் கருத்துக் கூறி அஃதெவ்வாறு ஆயினும் தமிழ் என்பது தென் மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரேயாம் என்று உறுதிப் படுத்துகின்றார். திராவிடம் என்னும் வடமொழியே தமிழ் என்று ஆகியது என்று சற்றும் ஆய்வின்றிக் கூறுவாரும் உளர். அவர் மதம் சாலவும் நன்றாயிருந்தது! தமிழிலே தமிழ் என்னும் சொல் வருமுன்னர் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் உளதாகில் அப்பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ! உலகத்தில் எக்காலத்தும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா, அஃது இல்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃது உணராது தமிழ் வழங்கிய இடத்தில் தமிழுக்கோர் பெயர் இருந்ததில்லை என்றும், வடமொழியில் இருந்து அதற்குப் பெயர் வந்த தென்றும் சொல்வது யார்க்கும் நகை விளைக்குமே என்று மறுக்கிறார். யாதொரு தமிழ்ச் சொல்லில் இரண்டோரெழுத்து வடமொழிக்கு ஒப்ப நிகழுமாயின் அது வடமொழியினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலை நாட்டு மக்களின் ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பன முதலியன வடமொழி அடியாய்ப் பிறந்தன என்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணாமுன் அந்நாட்டின ரெல்லாம் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச் சொல் இல்லாதிருந்தனர் என்றன்றோமுடியும்! ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்தில் காக்கையேறப் பனம்பழம் விழுந்தது என்னும் முறையின் உண்மை அறியாமலும் ஆரிய மொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம்? இவர் வாய்க்கு விலங்கிட யாரால் முடியும்? என்று வினாக்கள் பலப்பல அடுக்கி விளக்குகிறார். தமிழ் என்னும் தென்மொழிச் சொல்லே வட மொழியில் திராவிடம் என மரீஇயது என்று கூறும் ஒரு சாராரையும் இவரும் உண்மை கண்டவர் அல்லர்: என்று மறுத்து, இரு கூற்றாரும் திராவிடம் என்னும் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் வழக்கியலும் அறியாராயினார் எனத் தள்ளுகிறார். திராவிடம் என்னும் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதல் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது என்கிறார். பஞ்சத் திராவிடம் என்பதால் தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழிகளையும் திராவிடம் எனவே இவ்வைந்து மொழிகளும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். அன்றியும் ஈராயிரம் ஆண்டுச் சொல்லையா பதினாறாயிரம் ஆண்டு மொழிக்கு இட்ட பெயரென்பது? இவற்றால் தமிழ் திராவிடம் ஆயதூஉம், திராவிடம் தமிழாயதூஉம் இரண்டும் தவறே என்று முடிவுகட்டுகிறார். மேலும் கீழ்வாய்க் கணக்கு, விரவியல் செய்யுள், மணிப் பிரவாளம் என்பவற்றுக்கு முன்னோர் வேற்றுமை வகுத்த இலக்கணமே தமிழ் தனிமொழி என்பதற்குச் சான்றாகுமே என்கிறார். இக்காலத்தில் ஆங்கிலம் பிரெஞ்சு மொழி கலந்த தமிழ்ச் செய்யுளுக்கு உள்ள குறை, அக்காலத்தில் வடமொழிக் கலப்புக்கு இருந்த தெனின் அது தமிழுக்குத் தாய்மொழி எனப்படுவது எவ்வாறு? என்கிறார். சங்க நூல்களிலும் சங்கஞ்சார் நூல்களிலும் வடமொழிக் கலப்பு எத்துணைச் சிறுபான்மை? என வினவிப் பலசான்றுகள் காட்டுகிறார். கல்வியறிவில்லார் மட்டுமன்றிக் கற்றாரும் மயங்கு வதை எடுத்துக் காட்டுகிறார். தமிழ் என்னும் சொல்லையும் திராவிடம் என்னும் சொல்லையும் அவற்றின் பழமை புதுமை நோக்காமல் ஒன்று என்பாரைப் பார்த்து நகைத்து, பாட்டன் திருமணத்தில் பேரன் சந்தன தாம்பூலம் பரிமாறினான் என்பதற்கும் இதற்கும் யாது பேதம் என்கிறார். ஆ. கீழ்கணக்கு பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் காட்டுவதொரு வெண்பா அது. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு என்பது. இப்பதினெட்டு நூல்களும் இவை இவை என்பதில் அறிஞர்களிடையே சிக்கல் இருந்த காலம் அது. அதனால், கலித்தொகைப் பதிப்புரையிலே தாமோதரர் எழுதுகிறார்: கோவை என்றது ஆசாரக் கோவையை; முப்பால் என்றது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகியன போன்று நாலடிவெண்பாவான் இயன்று அக்காலத்திலே வழங்கிய மூன்று சிறுத்தரும் நூல்களை என்றும், இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின் பெயரை என்றும் உத்தேசிக்கிறேன். அன்றேல் ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாக இவர்க்குக் கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? இவ்விடர் நோக்கிப் போலும் சிலர் ஐந்திணையை ஐந்தொகை என்று பாடம் ஓதுவர். அன்னோர் நெடுந் தொகையொன்றொழிய வேறு தொகை யின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பில் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத் தொகைக்கு நூல் காணாது பேரிடர்ப் படுவர். இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே என்றும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு குறைவதன்றிக் கணக்குச் சரிபெறாது. இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை வாதபுரீசராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையாரும் சங்கத் தாரைப் பங்கப் படுத்தி அழித்துவிட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யா மொழித் திருக்குறளுமென்று மயங்கித் தடுமாறுப. பெயர் படைத்த வித்துவான்களுள்ளும் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேதமென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பல முடையார் கையெழுத்தா கீழ்க்கணக்கின் கீழகப்பட்டது? இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறையையும் ஒருங்கு சேர்த்து முப்பதாக்கி விட்டாரில்லை! மேலும் நாலடி நான்மணி என்றற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யாண்டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப் புலவருள் ஒருவராற் சொல்லப் பட்டதென்பது உண்மையாயின், நாயனார் திருக்குறளின் பின் சங்கம் எங்கே இருந்தது? இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும். நாற்பத்தொன்ப தின்மர் புலவருங்கூடி மனத்தாலும் வாயாலும் வாழ்த்திய மாலையின் சாரம் அதனைத் தமது சிறுநூல்களோடு ஒக்கவைத்தற் கருத்தினை உடையதா? என்கிறார். பின்னே வந்த இலக்கண விளக்கப் பதிப்புரையில், k.s.s.ஸ்ரீ கொ. ஸ்ரீநிவாசராக வாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில், நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி என்பவற்றுள் ஐந்திணை அகப் பொருட்டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாகக் கீழ்க்கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? என யான் கொண்ட கொள்கை மாற ஐந்திணை என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள் எனக் கூறி ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது இந்நான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தன என்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்றும் சொற்றனர். கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப்பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான் கூறிய கூற்றுச் சரியன்றென்று ஒத்துக் கொள்வதுமன்றி, ஆசாரியாரவர் கட்கு என் வந்தனமும் கூறுகின்றேன். பிறர் சிலரொப்பக் கோவையைத் திருச்சிற்றம் பலக்கோவை என்று கொள்ளாது யான் சொல்லியது போல ஆசாரக்கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடைத்தேயாம். முப்பால் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யா மொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பிற்றைநாண் மொழியைச் சங்கத்தார் காலத்து முதுமொழிபோல் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்துகின்றேன். கோவை திருக் கோவையாராகாது ஆசாரக் கோவை யாயினாற் போல முப்பாலும் நாயனார் தமிழ் வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலே யாதல் வேண்டுமென்பது என் துணிவுமாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டுபேசிய பல மடாதிபதிகள் வித்துவான் கட்கும் இஃதொப்பென் றறிக. இஃதெழுதிய பின்னர், ஸ்ரீ திரு. த. கனகசுந்தரம் பிள்ளை யவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப்பழைய கீழ்க்கணக்குச் சுவடியில் நாலடி நான்மணி என்னும் செய்யுள் அதிகம் சிதைவு பட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணை மொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப்பட்டிருக் கின்றன என்றும், முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானும் சுட்டாது முப்பால் என்றே கூறப்பட்டிருக்கிற தென்றும் கைந்நிலை என்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனிநூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறி வித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்துகின்றது. இதனால், நானாற்பதைந் திணை என்பதில் நாலென்னும் அடையை நாற்பது ஐந்திணை என்னும் இரண்டனொடும் ஒட்டி நானாற்பது, நாலைந்திணை என்று கோடல் வேண்டுமென்றும் ஐந்திணை யான் கூறியவாறு ஒரு நூலுமன்று, ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று; ஐந்திணைப் பொருள் உணர்த்திய நான்கு நூல்கள் என்று கொள்ளத் தக்க தென்றும் சொல்ல ஏதுவாகின்றது. அங்ஙனமாயின் முப்பாலென்றது ஒரு நூலாகவும்; இந்நிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும் கைந்நிலை என்றது வேறொரு தனிநூலாகவும் கொள்ளல் தகும். இவ்வாறு கொள்ளிற் கைந்நிலை யோடாங்கீழ்க் கணக்கு என்று ஈற்றடிப் பாடம் திரிதல் வேண்டும். எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்குகளுள் இன்னும் அச்சிற் தோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களுள் மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஓர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கிறேன். அவ்வாறு போய்த் திரும்பியபின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன் என எழுதுகின்றார். இவ்வுரைகள் எழுதப் பட்ட காலம் 1887, 1889 ஆம் ஆண்டுகளாம். மற்றை நூல்களினும் கைந்நிலையா, இன்னிலையா என்னும் சிக்கலே வலுத்திருந்தது. இன்னிலை ஏட்டுச் சுவடி ஒன்று 1915 ஆம் ஆண்டில் த. மு. சொர்ணம் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்டது. அதனை வ.உ. சிதம்பரனார் அச்சிட்டார். 1931 இல் கைந்நிலை ஏட்டுச் சுவடி கிடைத்தது. அதனை அச்சிட்டவர் இ. வை. அனந்தராமர் என்பார். இரண்டும் கீழ்க்கணக்கைச் சேர்ந்தன என்றால் பதினெட்டு என்னும் எண் பொருந்தாது. இவற்றுள் ஒன்றே கீழ்க்கணக்கைச் சேர்ந்ததெனின் ஒன்றை விலக்க வேண்டுமே! எதை விலக்குவது? இன்னிலை மதுரையாசிரியர் என்பவர் தொகுத்தார் என்றும், மதுரையாசிரியர் என்பார் நல்லந்துவனாரும் மாறனாருமே என்றும், அவருள் எவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை என்றும், இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் வ.உ.சி குறிப்பிடுகிறார். ஆதலால், இந்நூல் சங்க காலத்தது எனக் கொண்டார் என்றும் இதுவே கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்று அவர் கொண்டார் என்றும் விளங்கும். செல்வக் கேசவராயர் 1893 இல் வெளியிட்ட ஆசாரக் கோவையில், இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கண இலக்கிய உரைகளிலும் கைந்நிலைச் செய்யுள் மேற்கோளாக வழங்கப்பட்டுள்ள தாகவும் எவர்க்கும் கட்புலனாயிற்றில்லை. ஆகவே, கைந்நிலையைக் கையில் நிலைபெறக் காணும் தனையும் உறுதி கூறலாகாது என்று எழுதினார். பின்னே ஆய்வாளர்களால் இன்னிலை போலி நூல் என்றும், கைந்நிலையே கிழ்க்கணக்குள் ஒன்றாகிய நூல் என்றும் உறுதி செய்யப்பட்டன. ஆனால், இச் சிக்கல்கள் எல்லாம் தோன்றுதற்கு முன்னரே 1849 இல் வேம்பத்தூர் முத்து வேங்கட சுப்பபாரதியார் என்பார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்பதைப் பிரபந்த தீபிகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது அக்காலத்தில் அச்சேறாமையால் ஆய்வுச் சிக்கல் தீர்க்க இயலாமல் தடுமாறி நின்றது. ஆய்வில் கண்டமுடிபும், அதன் செய்தியும் ஒத்திருத்தல் அப்பதிப்பு வெளிவந்த பின்னர் உறுதியாயிற்று. அப்பாடல்: ஈரொன் பதின்கீழ்க் கணக்கினுட் படும்வகை இயம்பு நாலடி நானூறும் இன்னாமை நாற்பது நான்மணிக் கடிகைசதம் இனிய நாற்பான் காரதே ஆருகள வழிநாற்ப தைந்திணையு மைம்பதும் ஐந்துட னிருபானுமாம் அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுகம் ஐயிரு பதாகு மென்பர் சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாம் சிறுபஞ்ச மூலம் நூறு சேர்முது மொழிக்காஞ்சி யேலாதி எண்பதாம் சிறுகைந் நிலையறு பதாகும் வாரிதிணை மாலைநூற் றைம்பதாம் திணைமொழி வழுத்தைம்பதாம் வள்ளுவ மாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம் வழுத்துவார்கள்புல வோர்களே. நூல்களும் கிடைத்தன. நூல் வரிசை பற்றிய பாட்டும் கிடைத்தது. உண்மை தெளிவாயிற்று. கருவிகள் இல்லாப் பொழுதில் எவ்வெவ்வாறெல்லாம் ஆய்வுச் சிக்கல்கள் நேர்கின்றன என்றும் எத்தகு பேரறிஞர்களையும் இடர்க்கு ஆளாக்குகின்றன என்றும் இப் பதினெண்கீழ்க்கணக்கு நூலெண்ணிக்கை ஆய்வும் நூலாய்வும் வெளிப்படுத்துகின்றன. கருவி நூல்கள் வெளிப்படாக் காலத்துப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலை மேற்கொண்டார் பாடும் எத்தகைத்து என்பதை விளக்க வேறுசான்று வேண்டுவதில்லை. இ. இலக்கண விளக்கச் சூறாவளி இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவரர் இயற்றிய நூல். இலக்கண விளக்கத்தில் உள்ளதாகப் பல குற்றங் குறைகளைக் கூறுநூல். இலக்கண விளக்கம் அச்சேறியிருந்தால் சூறாவளி மாறாக மோதினும் ஒன்றும் செய்யாது என்பதைக் கலித்தொகைப் பதிப்புரையிலே காட்டினார் தாமோதரர். இலக்கண விளக்கப் பதிப்புரையிலே சூறாவளியின் மாறாந்தகைமையை விரித்துரைத்தார். இலக்கண விளக்கச் சூறாவளி என்பது அநியாய கண்டனம் என்பது தாமோதரர் முடிபு. அதனால் முனிவரர் சிறப்பையும் புலமையையும் குறைத்து மதிப்பிட்டாரல்லர். யோகீ வரரது பேரறிவு இமாசலம் ஒப்பது; எளியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதூளி போல்வது என்றார். அவர், தப்பை ஒப்பு என்று தாபிக்கவும் ஒப்பைத் தப்பு என்று வாதிக்கவும் வல்லர் என்பதை இராமாயண நாந்திச் செய்யுளாகிய நாடிய பொருள் கூடும் என்பதன் குற்றங்களைக் கூறி அக்குற்றங்கள் குற்றங்கள் ஆகாமையை நிலைநாட்டிய இராமாயண சங்கோத்தர விருத்தியைக் காட்டி மேலாய்வைத் தொடர்கிறார். சிவஞானமுனிவர் தெரிவித்த குற்றங்கள் எத்தகையன என்பதற்கு ஐந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார் தாமோதரர்; அவை வருமாறு: 1. முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்று உரைத்துப் பின்னர் அது கேட்ட மாணாக்கர்க்கு நூலுரைப்பான் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவ தென்னை என்னுங் கடா நிகழ்தற்கு இடனுள தாயவழி, இவ்விவ் வேதுக்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்கவேண்டும் என்று இறுத்தல் அமையும். அவ்வாறோர் இயைபு மின்றித் திருவிளங்கிய மாநகரம் முதலாக எடுத்துரைக்கும் உத்தரம் செப்பு வழுவும் மற்றொன்று விரித்தலுமாய் முடியுமென்க என்றார். வலம்புரி முத்திற் குலம் புரி பிறப்பும் என்று தலையிட்ட ஆத்திரையன் பேராசிரியன் எந்தப் பாயிரத்தை முன்னர் வைத்து இது பாயிர மென்று உரைத்துப் போந்தனன்? ஆண்டு யாண்டையோ கடா நிகழ்ந்ததும், விடையிறுத்ததும் அமையப்பெற்றது? முகவுரை பதிகம் என்றற் றொடக்கத்துப் பொதுப் பாயிர முதலியன கூறிய நன்னூலார் மாடக்குச் சித்திரமும் என ஈற்றிலே கூறியதனை இந்நூலார் முதலே எடுத்துரைத்ததுதானா ஒரு தவறாயிற்று? இது குற்றமாயின் நன்னூலாரும், முகவுரை பதிகம் என்னும் சூத்திரம் கூறுவதற்கு முன்னர்த் தம் பாயிரத்தை வைத்து இஃது யாது? இதன் பெயரென்னை? என்று கடா நிகழ்தற்கு இடனாய வழியன்றோ அச்சூத்திரம் செய்தல் வேண்டும். அவ்வாறன்றி, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம், புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் எனச் சொற்றது செப்பு வழுவும் மற்றொன்று விரித்தலுமாகுமே. இதனைக் குற்றமென்று தெரிக்கப் புகுந்ததே குற்றமாம் என்றொழிக. 2. அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காது என்றார், அவற்றியல்பு உணராமையின் என்றனர். இதற்கு விடை இன்னும் நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி என்பதனைத் தழீஇயி னாராகலின், நூலியல்பு பாயிரத்துள் அடங்கா தென்றல் அவர்க்குங் கருத்தன்றென மறுக்க என்னும் அவரது சொந்த வாய்மொழியேயாமெனக் கூறுக. நூல் குணியும் நூலியல்பு குணமுமாகலின் நூல்வேறு நூலியல்பு வேறென்றொழிக. ஆதலாற் பல அவயவங்களை உடையதோர் அவயவி அவற் றொன்றில் அடங்கா தாகுதல் பொருத்தமுடைத் தென்றும் அடங்கும் என்பார் கூற்றிற்குப் பொருள் வேறென்றும் கூறி விடுக்க. 3. எழுத்ததிகாரம் என்புழி அதிகாரம் முறைமை என்றார். அதிகாரம் என்னும் வடசொற்கு அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறிய வாற்றான் அறிக எனச் சொற்றனர். இதற்கு விடை அதிகாரம் முறைமை எனவே உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் முதலியோர் கொண்டனரென்க. மேலும், இப்பொருள் வடமொழியிலும் உண்மை சமகிருத அகராதிகளிற் கூறிக்கிடத்தலான் அறிக. 4. மலைமக ளொருபான் மணந்துல களித்த தலைவனை வணங்கிச் சாற்றுவன் எழுத்தே என்னும் எழுத்ததிகாரத் தற்சிறப்புப் பாயிரத்தில் நான்கு குற்றம் பாரித்து, முதலாவது மலைமகள் என்பது மலையும் மகளெனவும் அமங்கலப் பொருள் தந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றலின் மலை தன் மங்கலப் பயன் குறித்து வாராமை அறிக என்றார். நன்னூலார் எடுத்துண்ட பூமலி என்பது இலைநிறைந்த என்றும் இடம் அகன்ற என்றும் பொருள் தரத்தக்கதாதலால் தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற இடமில்லையா? நீடாழியுலகம் என்று மங்கலம் வகுத்த வில்லிபுத்தூராழ்வாரை அது நீள் தாழி எனவும் பகுக்கக் கிடந்ததென்று குற்றப்படுத்தல் பொருந்துமா? அன்றியுந் தாமே ஒருகால் உவந்ததோர் மங்கல மொழியைப் பிறர் கொண்டக்கால் குற்றமென்றது பேரற்புதமே. மேலும், தம் மரபினோர் அனைவருக்கும் அங்கீகாரமான சிவதருமோத்திரத்தில், மலைக்குமகள் பெற்ற மகனைக் கயமுகத்தானை மனத்தெழுதியான் அலற்பிணி பிறப்பற வணுக்களை யகத்திய முனிக்கருளினான் உலப்பிற் கருணைக் கடலுருத் திரனுருத் தனிலுதித்தகுமரன் இலக்குமி யலைக்கலியினைக் கவுமுரெப்பலுவ கிட்ட முறவே என மறைஞானசம்பந்த நாயனார் எடுத்தாண்ட மங்கல மொழியை அமங்கலப்படுத்துதல் தன் தாயை வேசி என்று ஏசுதல் போலும்! இரண்டாவது, மணந்து என்றதும் ஒரு குற்றம். என்னை! இஃது ஈண்டு இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி என்றார்க்கு மறுதலையாகப் பொருளதிகாரத்தில் உமையுரு வுருமடுத் தென்றது இந்நூல் நின்று நிலவாது இறுதல் வேண்டி எனப் பொருள் தருதலின் என்றார். ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு பொருள் விரித்துரைக்க என்று ஆசிரியர் கூறினாராக இவரை ஏலாவாறு பொருள் கொள்ளச் சொன்னது யாரோ? மூன்றாவது, உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உலகு பொருட்கு உரிய வேந்தன் என்றல் அவன் இறைமைக்கு ஏலாதவாறுபோல ஐந்தொழிற்கும் உரிய தலைவனை உலகளித்த தலைவன் என்பது தலையன்மையின் உலகளித்த தலைவன் என்றது குற்றம் என்றார். எழுத்ததிகாரத்தில் உலகளித்த தலைவன் எனவும், சொல்லதிகாரத்தில் உலகு புரந்தருளும் அமைவன் எனவும், பொருளதிகாரத்தில் உலகினைப் பொழிக்கும் இமையவன் எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலும் கூறியே புகுந்தாராகலின் ஈண்டுப்பட்ட குற்ற மென்னோ? ஆன்றோர் ஆங்காங்குச் சிறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமை யனைத்தும் ஒருங்கு சொல்லாது இரண்டொரு குண மாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக்கேயாம். முனிவரர் இஃது உணராதவரா? இதனாற் குற்றமே தெரிவார் குறுமாமுனி, சொற்ற பாவினும் ஓர் குறை சொல்லுவர் என்பதற்குத் தம்மை இலக்கிய மாக்கினாரன்றோ! நான்காவது, வணங்குதல் சிறப்பு வினையாவதல்லது பொதுவினை யாகாமையின் வணங்கி என்பது குற்றம் என்றனர். மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே என்புழி ஒப்புமை பற்றிக் கூறியதேயாம் எனத் தாமே கூறும் இவர், மனத்தாற் றுணிவு தோன்ற நினைத்தலும், மொழியாற் பணிவு தோன்ற வாழ்த்தலும் தலையால் தணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி என்று கூறிய ஆசிரியர்மேற் குற்றஞ் சொல்வதென்னை? சிருஷ்டியும் திதியும் சங்காரத்தில் ஒடுங்குதலாற் சங்காரத்திற்கு முதன்மை கூறுஞ் சுத்த சைவசித்தாந்த சாகரமாகிய யோகீவரர், நினைத்தலும் துதித்தலும் சேர்ந்து அந்தர்ப்பித்து நடைபெறும் வணக்கத்திற்கு முதன்மை கொடுப்பதே முறையாகும். வில்வணக்கம் தீது குறிப்பது போலச் சொல்வணக்கம் நன்மை குறிக்குமே. ஆதியில் வளைதற் பொருளிற் பிறந்த வணக்கம் ஒப்புமையால் இப்போது மனம் வாக்குக் காயம் மூன்றற்கும் செல்லுமென்று கொள்க. 5. எண்பெயர் முறை பிறப்பு என்னும் சூத்திரத்தில் எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற்கூறாதது முறையன்று. எண்ணும் முறையும் போல்வனவற்றால் ஒரு பயனின்மையின், அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாறறிக. போலியெழுத்தென ஒன்றில்லை என்பது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுட் காண்க என்று மூன்று குற்றமேற்றினர். இஃது இலக்கண விளக்கச் சூறாவளி யன்று. நன்னூற் கருப்பைப் படையோடு சார்தற் பால தென்று விடுக்க என்கிறார். சிவஞான முனிவரர் வரலாறு எழுதிய தமிழ்க் கா.சு (சுப்பிரமணியனார்) இலக்கண விளக்கை அணைக்கும் சூறைக்காற்று என்னும் பெயரால் எழுதப்பட்ட கண்டன நூல் என்கிறார். குற்றம் என்று பாராட்டத் தகாதவற்றையும் குற்றமாகக் கூறுதல் வழக்கமாய் இருந்தது என்றும் கூறுகிறார். மலைமகள் என்பதில் பொருள் தெளிவாய் அமைந்திருக்கவும் அதனை மலையுமகள் என்று பொருள்படக் கூடுமெனக் கண்டித்தல் முற்கால வழக்கொடு பட்டதன்று என்று நயமாக மறுக்கிறார். திருவாவடு துறைத் திருமடத்தைச் சார்ந்த ஈசான தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்தில் மறுக்கப்படுவன பல இருந்தும் குறிப்பாகத் தம் நூல்களில் மறுத்ததை அன்றித் தனியே மறுப் பெழுதாமைக்குக் காரணம் அவ்வாறு செய்யும்படி முனிவரைத் தூண்டுவாரின்மையே என்று கூறும் வகையால், சூறாவளிக்குத் தூண்டினார் உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். தாமோதரனார் திருவாவடுதுறைத் தொடர்பு மிக்கிருந்தும், அதன் உதவியை நாடித் தேடிப் பெற்றிருந்தும் பெறும் நிலை இருந்தும், ஐந்தெழுத்தால் ஒரு பாடை எனக் கூறிய சுவாமிநாத தேசிகரை மாழ்கி (மயங்கி) யுரைத்தவராகச் சுட்டிக் கண்டிக்கவும் செய்கிறார். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையவராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும் அம் மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிது மொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எப்பாஷைக்கும் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்து உச்சரிக்கும் ஐவர்க்கத்தையும் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத் தாலொரு பாஷை இன்றே என்று சமகிருதத்தையும் புரட்டி விடலாமே; இங்கிலீஷ் பாஷையில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் கு, இரண்டாதலால், இரண்டெழுத்தாலொரு பாஷை இன்றே என அதனையும் மறுப்பார் போலும்! இரண்டற்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங்குற்றமாம் என்கிறார். தமிழ் தனிமொழி என்றும் அதன் தனித் தன்மை இன்னது என்றும், கலப்பின் இயல்பு இன்னது என்றும் கூறி, இஃது எத்தேசத்து எந்தப் பாஷையினது அநுபவத்திற்கும் யுக்திக்கும் முழு விரோதம் என்க என முடிக்கிறார். ஈ. இலக்கிய வரலாற்று ஆய்வு தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு கொள்ளும் தாமோதரர் அபோத காலம், அக்ஷரகாலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமண காலம், இதிகாசகாலம், ஆதீனகாலம் என எண் கூறுபடும் என்கிறார். வரிவடிவின்றி ஒலிவடிவு மாத்திரமாய் நிகழ்ந்த காலத்தை அபோத காலம் என்கிறார். அஃது அகத்தியர்க்கு முன்சென்ற காலம் என்கிறார். அக்காலத்தே (அகத்தியர்க்கு முன்னரே) தமிழ் எழுத்தும் மொழியும் இருந்தன என்று விளக்குகிறார். அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறியது வரைக்கும் சென்ற காலம் அக்ஷர காலம். தொல்காப்பியன் அதங்கோட்டாசான் முதலியோர் அகத்தியரிடம் கற்றுத் தத்தம் பெயரால் இலக்கணம் செய்தது இலக்கணக் காலம். மதுரைச் சங்கத்தார் காலம் சமுதாயகாலம். சங்க அழிவுக்குப் பிற்பட்டது அநாதர காலம். அதனைப் புத்தர்காலம் எனினும் பொருந்தும். தமிழில் மிக அருமையான இலக்கிய இலக்கண கலைஞான நூல்கள் செய்யப்பட்ட அடுத்த காலம் சமணகாலம். அது தாயிறந்து பெண்ணுக்கோர் சற்குண நிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலும். அப்பால் முன்பின் எண்ணூறு வருஷ காலம் இதிகாச காலம். அப்பால் தற்காலத்து நிகழும் ஆதீனகாலம். இது சந்தான குரவர் காலத்தையும் சேர்த்து இற்றைக்கு எழுநூறு வருஷத்தின் முன் தொடங்கியது. இவற்றைத் தனித்தனி விரித்துரைக்கிறார். ஆங்கில ஆட்சிக்காலத்தில் ஒரு சிறிதாகவும், ஓரொரு நூலில் சிறு பகுதியாகவும் கற்பிக்கப்படும் தமிழ் குறித்து எழுதி அப் பகுதியை நிறைக்கிறார். நீந்துதற் றொழிலைக் கற்பிப்பான் ஓர் நீராசிரியன் கற்பானை ஏரி நதி கிணறு குளங்களில் இறங்க விடாது குடத்தில் த்ண்ணீர் மொண்டு சிறு குழியில் விட்டுக் கால் மறையாத் தண்ணீரில் மாரடிக்க விட்டாற் போலக், கடனீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்கும், குளநீரெனிற் சளிபிடிக்கும், தலைநோவுண்டாம், யாற்று நீரெனிற் சர்ப்பம் தீண்டும் முதலை பிடிக்கும் என்று ஓரோர் நூலுக்கு ஓரோர் குற்றம் சாற்றி ஒன்றிலும் இறங்க விடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமுமாக அள்ளி வைத்துப் படிப்பிக்கும் அவரது முயற்சியாற் பெரும்பயன் விளைவதே இல்லை. அவரிடம் கற்றுத் தமிழ் வல்லோ ராயினாரை யாண்டும் கண்டிலேம். அன்றியும் அவ் வித்தியா சாலைகளில் நிகண்டு கற்று இலக்கிய ஆராய்ச்சி இல்லாதார்க்குச் சிற்றிலக் கணங்களை மாத்திரம் கற்பித்தலால் அன்னோர் வ வந்தானெனக் கண்டு கா கந்தானென்றும், சா செத்தான் எனக்கண்டு தா தெத்தான் எனவும் கூறுவர் போலத் தமிழைப் பலவாறு விபரீதப் படுத்துகின்றனர். இதனால் தமிழுக்கு வரும் கெடுதியைக் குறித்து மிக அஞ்சுகின்றோம் என்கிறார். கருவி நூல்கள் இல்லாமையாலும், கருவிநூல்கள் இருப்பினும் அச்சூர்தி ஏறாமையாலும், ஆய்வாளர் உள்ளகப்பகை, பொறாமை முதலியவற்றாலும் தாமோதரர் தம் ஆய்வுகள் முழுமையும் திருத்தமும் பெறாவாய் அமையினும், அக்காலச் சூழலை நோக்க அவர்தம் ஆர்வப் பெருக்கம் உழைப்பின் அருமையும் நன்கு வெளிப்படுதல் தெளிவாம். அவர் தலைப்பட்டுச் செய்த பழந்தமிழ்ப் பதிப்புத் துறையே பின்னவர்க்குத் தூண்டலாய் அமைந்து துலங்குவித்தன என்பதை எண்ணின் தாமோதரர் தமிழ் வளர்த்தவர் மட்டுமல்லாமல், தமிழ் காத்த தாதாவும் ஆவர் என்பது விளக்கமாம்! தமிழ்த் தொண்டர் தாமோதரர் புகழ் வாழ்வதாக! முற்றிற்று. 1. புறநானூறு 188. 2. பத்துப்பாட்டு, பட்டினப்பாலை,5. 3. சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதை 170. 1. பாண்டியர் செப்பேடுகள் பத்து XXXII 1. திரிகடுகம், 12. 1. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் அகம். 102, 348, நற்றிணை, 273 2. மதுரைப் பாலாசிரியர் நப்பாலத்தனார்; அகம் 172; மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் அகம், 92. 1. பாரதியார், வெள்ளைத் தாமரை, 9. 1. நன்னூல், 59. 2. பாரதியார், அச்சமில்லை, 2, 3. திருக்குறள், 623. 1. செந்தமிழ்: தொகுதி, 1 பகுதி, 1. சோழவந்தான் அ. சண்முகம் பிள்ளை சேதுபதி செந்தமிழ்க் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதன் 2. தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிர விருத்தி வெளிவந்த ஆண்டு கி.பி. 1905. 1. புறநானூறு 192 1. புறநானூறு, 218. 2. செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1. 1. நாலடியார், 137 1. திருக்குறள், 929. 1. செந்தமிழ் தொகுதி, 5, பகுதி, 8. 1. வள்ளுவர் நேரிசை 1. திருக்குறள், 780.