இளங்குமரனார் தமிழ்வளம் 16 தமிழ் வளம் - பொருள் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 16 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 248 = 264 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் தமிழ் வளம் - பொருள் நூன் முகம் 1 1. திருக்குறள் ஆராய்ச்சி 1. வள்ளுவம் - வாழ்வு நூல் 5 2. உதிர் மலர் 8 3. மறை 13 4. முப்பால் வைப்பு முறை 16 5. மரபுவழி உரை விளக்கம் 19 6. மூவின வண்ணம் 23 7. கொல்லே ஐயம் 25 8. திருக்குறளில் இரண்டு பாடவேறுபாடுகள் 27 9. ஊற்றும் ஊற்றுக்கோலும் 30 10. வரலாற்றில் செய்துள்ள வன்கொடுமை 33 11. காமத்துப்பால் காமசூத்திரத்து வழி வந்ததா? 34 12. இயல்புடைய மூவர் 38 13. அயல்புடைய மூவர் 42 14. ஐம்புலத்தாருள் தென்புலத்தார் 45 15. தென்புலத்தார் 49 16. ஐம்புலத்தாருள் தெய்வம் 53 17. விருந்தில் விருந்து 56 18. தீயினால் 62 19. தமிழ்க் கா. சு. திருக்குறள் தெளிவுரை 64 20. குறளோவியம் 72 2. சிலப்பதிகார ஆராய்ச்சி 1. கிழவர் இளங்கோ 80 2. உருபு செய்த உயிர்க்கொலை 84 3. செங்குட்டுவன் 93 4. கண்களி மயக்கக் காதல் 100 5. போற்றா ஒழுக்கம் 103 6. கண்ணகியாரும் செல்லத்தம்மனும் 105 7. மங்கல வாழ்த்துப் பாடலின் மாண்பு 109 8. சிலம்பில் சில பாடங்கள் 123 9. கொற்கை 132 10. அணில் வரிக்காய் 144 11. வலியா வழி வலித்தல் 147 3. பன்னிலை ஆராய்ச்சி 1. இலக்கியம் 150 2. புலவர் புகழ்ச் செந்நா 155 3. மீன் அருந்தும் நாரை 158 4. கங்குல் நங்கை 164 5. அக இலக்கியங்களில் தோழி 169 6. நள்ளிரவு 175 7. சேற்றில் செந்தாமரை 180 8. புண்படுத்தவா? பண்படுத்தவா? 182 9. அந்த உணர்வு எங்கே? 183 10. பல்சாலை முதுகுடுமி 195 11. சோழன் பெருநற்கிள்ளி 197 12. நிலைகொள்ளும் கலையுள்ளம் 199 13. ஓதாக் கல்வி 202 14. நம்பியின் வினாவும் நங்கையின் விடையும் 205 15. பதிப்புக் கலைப் பார்வை 212 அ. ஆரிக்கும் - ஆரிரக்கும் 213 ஆ. பார்ப்பார் - குரவர் 215 இ. திருக்குறள் உரையில் கிடைத்த பாடங்கள் 220 ஈ . குறுந்தொகையில் மூல பாடங்கள் 222 16. மரபியலில் ஓர் இடைப்பாடும் இடர்ப்பாடும் 226 17. அகவற் பாவின் ஈறு 229 18. ஆங்கிலியர் அந்தாதி 232 19. சொல்லும் சுவையும் 243 தமிழ் வளம் பொருள் நூன் முகம் தமிழ்வளம் - பொருள் என்னும் பெயரிய இந்நூல், திருக்குறள் ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, பன்னிலை ஆராய்ச்சி என்னும் முப்பெரும் பகுப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாகும். இதன் கட்டுரைகள், மலரில் மலர்ந்தவை, இதழில் நடந்தவை; பொழிவில் புகன்றவை என்னும் முத்திறத்தன. இதழ்களுள் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, குறளியம் என்பவை தாங்கி வந்தவை பெரும்பாலனவாம். கையெழுத்துப்படியில் இருந்து, வருவனவும் உண்டு. இத்தொகுப்பில் வரும் கட்டுரைகள் எல்லாமும் இலக்கியம் - இலக்கணம் - வரலாறு - பதிப்பு - பாடம் என எவ்வகையின ஆயினும் அவையெல்லாம், பொருள் குறித்த ஆய்வுகளே. பொருளாய்வை நிறுவுதற்கு வேண்டும் அளவிலேதான் சொல்லாய்வு இடம் பெற்றுள்ளது. சொல்லே ஆய்வாக வெளிவர இருக்கும் தொகுதிகள் பல. அவற்றுள், அடுத்து வெளிவர இருப்பது தமிழ்வளம் - சொல் என்பதாகும். ஆய்வு என்பது மாசு போக்கி மணியாக்கலும், தூசி போக்கித் தூய்மையாக்கலும், இழுக்கம் போக்கி ஏற்றம் காட்டலுமாக பலதிறத்தன. மணியாக்கல், தூய்மையாக்கல், ஏற்றங் காட்டல் என்பவற்றிலும் சறுக்கல்களும், வழுக்கல்களும் ஏற்படலாம். அறிதோறும் அறியாமை கண்டற்று என்பது விரிந்தோங்கும் அறிவு இலக்கணமாகலின், அவ்வறிவியல் ஆக்கமென, ஆய்வியலும் வழிவழியாகத் தட்டித் தடவிப் பார்த்து உண்மை காண்பதாய் அமைதல் உறுதியாம். உண்மை காண்பிக்கு ஓர் உளப்பாடு வேண்டும். அஃது என்றும் உண்மையை வழிபாடு செய்வதோடு நில்லாமல், உண்மை வழிப்பட்டு நிற்பதாம். இதனை, எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் என்னும் குறள் மணிகள் கையிடைக் கனியாய்க் கண்ணேர் காட்டும். கருமமே கட்டளைக்கல் என்பது நிலை நாட்டும்! தான் காணும் உண்மையை உலகவர் முன் வைக்கும் உண்மை காண்பி, உண்மை காண்பிகளாம் பிறர் கருத்துகளுள் தக்கவை காணின் தான் பெற்ற பேறாக உவந்து, தன் ஆய்வைத் திருத்திக் கொள்வதுடன், மீள்பதிப்பு வருங்கால் அச்சீரிய ஆய்வைச் சுட்டி நேரிய நெஞ்ச வெளிப்பாட்டாளியாகத் திகழ வேண்டும். ஏனெனில் உண்மை காண்பிக்கு உண்மை காண்பதே உயிர்ப்பு என்பதால், எவர் கண்டறிந்த உண்மை என்பதற்கு இடமே இல்லையாம். தக்கதை மதித்தல் என்னும் தகவே உண்மை காண்பியின் உயிர்ம்மை என்க. மேற்கோள் காட்ட எழுந்த நூலன்று வள்ளுவம். மேற் கொண்டொழுகத் தக்க மேன்மையது என்பதை நாட்டுவது வள்ளுவ வாழ்வு நூல். வள்ளுவத்தைப் பல்வேறு கோணங்களின் திரட்டாகக் காண்பது உதிர்மலர். மறைக்கப்பட்டதன்று மறைப்பொருள்; காப்புப் பொருளது என்பது மறை. முப்பால் முறைவைப்புத் தமிழ் வழியதென்பது நான்காம் கட்டுரை. தமிழ்ப்பழ நூல் மரபுவழியும் குறள் மரபு வழியுமே குறளுக்கு உரை காண வேண்டும் என்பது அடுத்தது. திருக்குறளிலும் தொல்காப்பிய வண்ணங்கள் உண்டு என்பது மூவின வண்ணம். அசைநிலையும் பொருள் நிலைப்பட்டுப் புகழ் நிலை பெறலை நிறுவுவது கொல்லே ஐயம். பாட வேறுபாடு முறையோடு கூடாமை உரைப்பது எட்டாம் கட்டுரை. வலியாவழி வலித்தலால் பொருளுற்றம் புகல்வது ஊற்றும் ஊற்றுக்கோலும், வரலாற்றில் வன்கொடுமை மொழியாக்க மரபு சுட்டுவது. காமத்துப்பால் தொல்காப்பியத் தொல்வழிப்பட்டமை நிறுவுவது 11- ஆம் கட்டுரை. இயல்புடைய மூவர், அயல்புடைய மூவர், தென்புலத்தார் தெய்வம் என்பன வாழ்வியல் நெறிப் பொருள் வாய்ப்பன. விருந்தில் விருந்து விருந்துக் குறள் ஒன்று பதினொரு வகைப் பொருளுற நிற்பது பற்றியது. தீயினால் என்பது ஆல் ஆய்வு பற்றியது. 19, 20 - ஆம் கட்டுரைகள் கா. சு. தெளிவுரை, குறளோவியம் பற்றிய ஆய்வுகள். இரண்டாம் பகுதியாகிய சிலப்பதிகார ஆய்வு, இளங்கோவடிகள் முதுபேராளராகிய நிலையிலேதான் சிலம்பு இயற்றினார் என்பதையும் (1), ஓர் உருபு செய்த கொலையே ஆயிரவர் கொலை என்பதையும் (2), செங்குட்டுவன் என்னும் பெயரடை செங்கோல் பண்பால் பெற்ற பெயர் என்பதையும் (3), எட்டா மலைவாணரும் மதிக்கும் அரசே கண்களி மயக்கக் காதல் தரும் என்பதையும் (4), போற்றா ஒழுக்கம் என்பது பிரிவொழுக்கம் என்பதையும் (5), கண்ணகியாரே செல்வத் தம்மன் (திரு) ஆனார் என்பதையும் (6), சிலப்பதிகார மங்கல வாழ்த்தின் முன் வைப்பும் முறை வைப்பும் பற்றிய விரிந்த ஆய்வு இவை இவை என்பதையும் (7), ஏட்டுப்படியுடன் அச்சுப்படியை ஒப்பிட்டுக் கண்ட சிலம்புப் பாடத் தெளிவுகள் இவை என்பதையும் (8), கொல்லுத் தொழிற் சிறப்பால் கொற்கைப் பெயர் கொண்டதையும் (9), அணில் வரிக்காய்ப் பெயர்ச் சீர்மையையும் (10), சிலப்பதிகாரப் பெயரில் உள்ள வலித்தல் விகாரம் பொருள் நலச் சிறப்புடையது என்பதையும் (11), முறையே கொண்டது. மூன்றாம் பகுதி அதன் பெயர்க்கேற்பப் பல்வேறு ஆய்வுகளைக் கொண்ட 19 பகுதிகளையுடையது. இலக்கியம் என்பதன் சீர்மை, பொய்யாப் புகழ்நாவே புலவர் நாவு, என்பவை முதலிரு கட்டுரைகள். அடுத்தவை இரண்டும் குறுந்தொகை, கம்ப ராமாயணக் காட்சிகள். சங்க இலக்கியத்தால் அறியப் பெறும் தோழியின் சிறப்பும், யாமச் சிறப்பும் அடுத்த இரண்டு கட்டுரைகள். 7,8 நடைமுறைக் காட்சிகள். 9, 10, 11 சங்க இலக்கிய உணர்வு, உண்மை ஆய்வுகள், அடுத்தது இலக்கணச் சீர்மையில் இயலும் இலக்கிய நயம் பற்றியது. வள்ளலார் கற்ற புலமைக் கல்வி பற்றியது 14. பல்வேறு பதிப்புகளின் பருந்துப் பார்வை 15. அடுத்த இரண்டும் இலக்கண ஆய்வுகள். அடுத்தது தண்ட பாணியடிகளின் ஒரு நூல் பற்றிய ஆய்வு. இறுதியது சொல்லின் பொருள் வளமாம். இத்தொகை நூல் வெளிவரத் தூண்டுதலும் துணையு மாகிய பெருமகனார் தமிழ்க் கா. சு. நினைவு இலக்கியக் குழு நிறுவனர் தமிழ்ச்சுடர் திரு. மீ. சு. இளமுருகு பொற்செல்வி அவர்கள். இதற்குப் பொருளுதவி செய்தது, தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித் துறை. எழிலுற அச்சிட்டு வழங்கியவர் மூவேந்தர் அச்சகத்தார். இவர்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றியன். வாழிய தமிழ்! வாழிய வையகம்! (பாவாணர் ஆராய்ச்சி நூலகம்) [jÄœ¤ bjh©l‹,] திருநகர், மதுரை - 625006. இரா. இளங்குமரன்.  1. திருக்குறள் ஆராய்ச்சி 1. வள்ளுவம் - வாழ்வு நூல் வள்ளுவம் வாழ்வு நூல்; வாழ்வார்க்கென வாழ்ந்த பெருமகனாரால் வழங்கப்பட்ட நூல்; வாழ்வார்க்கு வானம் வழங்குவது போல வாழவிழைவார்க்கு வாழ்ந்தாரால் வழங்கப் பட்ட நூல்! வாழ்வின் ஒரு பகுதியைச் சுட்டும் நூலன்று வள்ளுவம். எந்நிலையர் நல்வாழ்வுக்கும் ஏற்றவற்றையெல்லாம் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் பிறவிப் பொது நிலையில் கூர்ந்து நின்று, சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என அளவீடு செய்துரைக்கும் அருமை நூல் வள்ளுவம்! வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்தார், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுமென மண்ணுலகிலேயே விண்ணுலகைப் படைத்துக் காட்டும் நூல் வள்ளுவம்! வாழ்வாங்கு வாழ்தல் எனின் யாது என வினவுவார்க்கு வாழ்வாங்கு வாழ்தல் விளக்கமே வள்ளுவம் என்பதைக் கையிடைக் கனியாகக் காட்டும் நூல்! கற்பனையில் கனிந்தது கதை நூல்! கற்பனையொடு உணர்வும் கட்டமைப்பும் கெழுமியது பாவியம் என்னும் நூல்! இவை தூறலாய்த் தூவானமாய் நலம் பயப்பன; நலம் பயவாதனவும் - ஏன் - தீமை பயப்பனவும் கூட இவற்றில் உண்டு! வாழ்ந்தோர் வரலாற்று நூல் எனின் நல்வழி காட்டி நூலே. வாழ்ந்த ஒருவர் வரலாறு வாழ்வார்க்கு வழிகாட்டியாவதுடன் வழிகூட்டியாவதும் உண்மையால் முன்னை நூல்களிலும் நலம் பயப்பதே. ஆயின், வரலாற்று நூல் தனி ஒருவர் - ஒரு துறையர் - ஒரு நிலையர் - வரலாற்று நூலே, பிறதுறையர் பிற நிலையர்க்கு அத்துணைப் பயன் தரா! அன்றியும் வரலாற்றில் புனைவும், பொய்ம்மையும், சார்பும், மறைப்பும், எழுதுவார் எண்ணமும், வண்ணமும் வழுவியமைவது உண்மையால், வரலாற்று நூல்களுள்ளும் பெருநலம் பயப்பன ஒரு சிலவே. ஆனால், அறநூல் செய்யும் ஆக்கம் பெரிதாம். அறவோர் செய்த அற நூல் ஆக்கம், காலம், இடம், இனம் முதலான கட்டுகளைக் கடந்து நின்று கடலும், புவியும், வானும் போல விரிந்த நலப்பாடுகளைச் செய்வதாம். அடுத்து நின்று அருள் காட்டுவதா? அரவணைத்து நின்று அறம் கூறுவதா? எதிரில் நின்று இடித்துரைப்பதா? இனிது மொழிந்து கனிவால் தழுவுவதா? சார்பு இன்றிச் சால்புரைத்து தூக்கி நிறுத்துவதா? அல்லதையும் நல்லதையும் ஆராய்வுத் திறனுடனும் வகுத்துரைத்துச் செல்லும் நெறியைச் செவ்விதிற் காட்டுவதா? பெற்ற தாயாய், பிறங்கும் தந்தையாய், முற்றுணர் ஆசானாய், முழுநலக் காதலியாய், முறைசூழும் நண்பனாய், கட்டளையிடும் காவற் கடவோராய் - தகத்தக நின்று தக்க வகைகளில் உதவும் நூல் அறவோர் அருளிய அறநூலே! அவ்வறநூல் வகையுள் நனி சிறந்து உயர்வற உயர்ந்தது நம் மறையாம் வள்ளுவமே! வள்ளுவம் பிறபிற அறநூல் உரைக்கும் கருத்துகளை வழங்குவதுதானே! தனிச் சிறப்பென்ன, என்று அறிந்தோர் வினவார். எவரும் எம் நூலெனக் கொண்டொழுகும் வண்ணம் சார்பிலாச் சால்பில் நிற்பதை ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம் தெளிந்தறிந்து கொண்டுள்ள ஒன்றே வள்ளுவச் சீர்மையை விளக்கச் சாலுமே! வள்ளுவ அறச் சிறப்பு, பலப்பல! அவை மூன்று : ஒன்று, வரம்பிட்டு உரைத்தல், மற்றொன்று வீழ்ச்சியிலும் வாழ்ச்சிப் பயன் காட்டல், இன்னொன்று நம்பிக்கையுரைத்தல். வள்ளுவத்திற்கு அறம் என்பதொரு பெயர். முப்பால் ஊடகமும் அறமேயாகலின் முழு நூலும் அறமெனப்படுதல் முறைமையேயாம். அறநூலாம் திருக்குறள் அறத்தின் இலக்கணமாக என்ன கூறுகின்றது? முப்பால் ஊடகத்தை முச்சீர்களிலேயே முடித்து வைக்கின்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதே அது. முப்பத்திருவகை அறமென எண்ணினாலும் பட்டியலிட்டுக் காட்டினாலும் அறத்தின் ஓர் அடிப்பகுதியையும் தொட்டுக் காட்ட முடியாமல் தொலைவில் நிற்க, முச்சீர் வள்ளுவ அறமோ முழுதுறக் காட்டுகிறது. அறத்தின் வரம்பைக் காட்டுவதுடன் அடி மூலத்தை அகழ்ந்து வைத்து விரிவற விரிந்த விளக்கத்தை வெட்டவெளி மலை மேல் விளக்காகக் காட்டுகிறது. மனத்துக்கண் மாசு இலனாதல் எய்தினால் அவன் அறவோன்; அவன் சொல் அறம்! அவன் செயல் அறம்! அச் சொல்லும் செயலும், எச்சொல்லும் செயலும் ஆயின் என்ன? எல்லாம் எல்லாம் அறம்! அறத்தை எண்ணிக்கை இட்டு எண்ணிக் காண்பார், விண்ணக மீனையும் மண்ணக மணலையும் எண்ணிக் காணத் தொடங்கி இளைத்துப் போனவரே ஆவர்! இன்னொரு சான்று : தவம் என்பது யாது? தன் துயர் பொறுத்தல்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; இவை தவம்! தவத்திற்கு வகுத்த புறக்கோலம் அறக்கோலமாமோ? அறக்கோலத் தவக் கோலம், அகக் கோலமேயன்றிப் புறக்கோலமாமோ? புறக் கோலத்தில் நன்கோலமும் உண்டு! புன்கோலமும் உண்டு. உலகறிந்த சான்றுகள் பலப் பல. ஆனால் தூய அகக்கோலத் தவக்கோலம், அவக் கோல மாகுமோ? இன்னும் சொல்கிறாரே! தவம் செய்வார் தங்கருமம் செய்வார்! கடமை! கடமை! மனமாசில்லாக் கடமையெல்லாம் தவமே! தவமே! மாற்றுக்குறையா இத்தவமே ஏற்றுக் கொள்ளற்கு உரியதன்றோ! இனி வீழ்ச்சியிலும் வாழ்ச்சியுரைத்தற்கு ஒரு சான்று, இழப்பு, இடுக்கண், நோய், நொடி - இவை வாழ்வில்வரின் தளர்வார் மிகப் பலர்; தவிப்பாரும் பலர், தம்மை வெறுத்துத் தமக்கு அழிவு தாமே செய்வாரும் உளர். அன்னவர்களை அணுகி ஆரத் தழுவி, நுமக்கு நேர்ந்த இழப்பு இடுக்கண், நோய் நொடி ஒரு பெருநலம் செய்வதை உணர்க. நுமக்கு மெய்யான உறவாளர் எவர் என்பதை இப்பொழுதுதான் நும்மால் அறிந்து கொள்ளுதற்கு வாய்ப்பு; இவ்வாய்ப்பு நுமக்குக் காலமெல்லாம் பயன்படும்! bjËî¡F thŒ¤j thŒ¥ig, mÊî¡F vd v©Â mauhÔ®! என்கிறார். கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் நான் காலமெல்லாம் நல்லது செய்தேனே! நன்றி மறந்து விட்டாரே! நன்றி மறந்தாலும் போகிறார்; எனக்குக் கேடு சூழ்கிறாரே! என்று ஏங்குவார் எத்துணையர்? அவரைத் தழுவிப் புன்முறுவலுடன் புகழ்கிறார் வள்ளுவர். நீவிர் நலப்பாடு செய்தது உண்மை; அந்நலப்பாட்டைச் செய்யும் வகையால் செய்யத்தக்கார்க்கு நீவிர் செய்ய வேண்டும் அன்றோ? செய்யப் பெறுவார் பண்பை அறியாமல் என்ன செய்தும் என்ன? ஆதலால் நும் செயலை மீள்பார்வை பார்க்க; எதிர்காலத்தில் இத்துயர் எய்தாது என்கிறார். நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை நம்பிக்கையூட்டலுக்கு ஒருசான்று! நான் தவறு செய்து விட்டேனே என உணர்வாளன் ஒருவன் வருந்துகிறான். அதனை உள்ளுள் உணர்கிறார் வள்ளுவர். தவறு செய்தேன் என நீ வருந்தும் வருத்தமே இனித் தவறு செய்யேன் என்பதற்குரிய அறிகுறி. ஆதலால் நிகழ்ந்ததற்கு வருந்தற்க. இனி இப்படி ஒருமுறை நிகழாவண்ணம் எச்சரிக்கையாக இருந்து கொள்க. அவ்வாறு இருந்தால் உனக்கு இனிப் புண்பாடு ஏற்படவே ஏற்படாது! நீ போற்றிக் கொண்டு ஏற்றம் பெறுவாய் என்பதற்கு உன் இரங்குதலே சான்று எனத் தட்டிக் கொடுக்கிறார். இப்படி நம்பிக்கையூட்டும் உரவோர் எத்தகு பட்டறிவாளர்! உலகியல் உளவியல் அறிந்த திறவோர்! அவர் உரைப்பது: எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று வள்ளுவம் வாழ்வு நூல்! வாழ்வார்க்கென, வாழ்ந்த பெருமகனாரால் வழங்கப்பட்ட நூல் - என்பதை எழுவாய் முதல் இறுவாய் முடியக் காட்டி நிற்கும் நூல்! வாழ்வார்க்கு வானம் பயந்ததென அது வளம் செய்யினும், அவ்வளத்தை அள்ளிக் கொண்டு அரவணைத்தவருக்குத் தானே பயன்? 2. உதிர் மலர் முகிழம் விண்வெளிக் கூண்டில் தங்குவார் உணவெல்லாம் சில ஊட்ட முகிழங்களே (மாத்திரைகளே). அம் முகிழங்கள் அனையவாய், வாழ்வியல் நுண்மைகளையெல்லாம் திரட்டி வைத்த நூல் திருக்குறள்! விரலாழி கைவிரல் ஆழியில் (மோதிரத்தில்) வானொலிப் பொறியை ஆக்குகிறது அறிவியல் நுட்பம். மெய்யியல் வாழ்வெல்லாம் கொழுமையாகக் குறட்பா ஆழியில் தேக்கி வைத்தது திரு வள்ளுவர் தேர்ச்சி! பழத்தோப்பு உலகத்துப் பழ மரங்கள் எத்தனை! எத்தனை! அத்தனை பழவகை மரங்களும் ஓரிடத்து ஒரு தோப்பாய் ஒழுங்குற அமைந்து, உரிமையால் கொள்ள வைத்தால் எத்தகு நலமாம்! அத்தகு நலங்களை ஒருங்கே தருவது திருக்குறள்! பூங்கா விந்தைமிகு பூங்கா திருக்குறள்! அனைத்தும் அனைத்தும் வாடாச் செடிகொடி மலர்களால் அமைந்த பூங்கா! எங்கும் புகுவாய்! எங்கும் கட்டிலா உரிமை! காலம் நேரம் காவல் இல்லாத் தனிப் பெரும் பூங்கா! ஆர்வக் கட்டணம் ஒன்றன்றி அயற்கட்டணம் அறியா அருமைப் பூங்கா! உலக வங்கி முதலும் தரும்! வட்டியும் தரும்! வட்டிக்கு வட்டியும் வாரி வழங்கும்! உள்ளூர்த் தேவையா, உலகத் தேவையா எங்கும் உடனிருந்தும், உடன்வந்தும், ஒன்றியிருந்தும், உழுவலன்புடன் நினைத்தபோது எல்லாம் நினைவார் நினைவின் எல்லை யளவுக்கு நெடுகிலும் நேயத்தால் உதவும் நிகரிலா உலக வங்கி திருக்குறள்! ஆளர் இன்றி, ஆளாளுக்கெடுத்துக் கொள்ளவும், ஆரார்க்கும் வழங்கவும் அமைந்த ஒப்பற்ற உலக வங்கி! கோடை வாழ்விடம் வாழ்வுக் கானலில் வாட்டுதல் எள்ளளவும் இல்லாமல், வேண்டும் நலங்களெல்லாம் வேண்டும் வேண்டுமாற்றான் வழங்கும் வளப்பெருங் கோடைவாழ், தொடர்மலை வள்ளுவர் செய்திருக்குறளேயாம். பேராழி ஆழ்ந்துபட்டு அல்லல் அடையாமல், மூழ்குதலுக்கு மூச்சு அடக்காமல், வீழ்ந்துபட்டு விதிர்ப்பு அடையாமல், தாழ்ந்து தாழ்ந்து தானே முன்வந்து தகவார்ந்த ஆழ்கடல் வளமெல்லாம் அள்ளி அள்ளி வழங்கும் வாய்மைப் பேராழி வள்ளுவர் செய் குறளே! ஊட்டகம் நோய்க்கு மருந்துமாகிச், சுவைக்கு விருந்துமாகித் தனித் தனித் தகவுடன் வழங்கும் தவப்பேர் ஊட்டகம் தமிழ்த் திருக்குறளே! திருக்கோயில் நினை தோறும் நெஞ்சத்து ஊற்றெடுத்து, மயிர்க்கால்கள் தோறும் உவகை ஓட்டுற்று, உவப்புக்கு ஓரெல்லை ஈதென நிலைபெறுத்தி, நினைப்பவர் மனமே கோயிலாகத் திகழும் திருநூல் திருக்குறளே! வழிகாட்டி எந்த வழிகாட்டியும் இணைந்து நின்று செய்யாத அளவில், உள்ளோடு உள்ளாக இணைந்து, இடரிலா வழி ஈதெனத் தேர்ந்து, திட்டமாக அழைத்துச் செல்லும் வழி காட்டி வள்ளுவர் நூலே! தங்க வயல் கல்லாஞ் சரளையுள்ளே கட்டித் தங்கம் இருந்ததைக் கண்டதால் கண்ட பயன் கோலார் தங்கவயல்! பொல்லாத வுலகத்துப் புகுந்து பேரருட் பெருக்கால் பெரிதுற ஆய்ந்து கண்ட ஆய்வின் பயன் தங்கத் திருக்குறள்! ஆறு எப்பாலும் தேனாறு பாய்ந்தென்ன? எப்பாலும் காலாறு பாய்ந்தென்ன? முப்பாலாம் முழுதாறு பாய்ந்து உளக் கால்களிலெல்லாம் ஊற்றெடுத்துச் செயற்பாடுகளில் எல்லாம் வெள்ளமெனப் பெருக்கெடுத்தால் அல்லவோ வாழ்வு வளமாம்; வையகம் தெய்வகமாம்! துறையங்காடி துறைவாரி அங்காடிகள் நகர்தோறும் உண்டு. திருக்குறள் இணையிலாத் துறைவாரியங்காடி. அவரவர் துறைக்கும் தேவைக்கும் வேண்டும் வேண்டும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளலாம்! போற்றிப் பயன் கொள்ளலாம்! பலப்பல இடங்களுக்கு அலைந்து, பலப்பல அங்காடிகளில் ஏறி இறங்க வேண்டிய காலக் கழிவையும் முயற்சிக் கழிவையும் விலக்கி நலமெய்தலாம். அமுதசுரபி அருளாளியாம் ஆபுத்திரன் கை அமுதசுரபி இன்றில்லையோ? அணி மேகலையாம் மணிமேகலையார் கை அமுத சுரபி இன்றில்லையோ? உண்டு! உண்டு! இன்றும் உண்டு! என்றும் உண்டு! அது திருக்குறளாம் அமுதசுரபி! வானின்று உலகம் வழங்கிவரும் அமுதமழை போல, மண்ணின் மதி நலச் சுரப்பெல்லாம் ஒருங்கு வாய்ந்த அமுதமழை பொழியும் சுரபி! உள்ளுதோறும், உள்ளுதோறும் உள்ளத்தே சுவை ஊற்றெடுத்து உவப்புறுத்தும் அமுதசுரபி! எண்ணியவாறு எய்தத் தமிழ் மண்ணிலே வாய்த்த அமுத சுரபி! இல்லாதது இல்லை ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பர். சுவையிருந்தால் கருத்தில்லை; கருத்திருந்தால் சுவையில்லை; செறிவு இருந்தால் புரிவில்லை; புரிவிருந்தால் செறிவில்லை; தெளிவிருந்தால் திருத்தமில்லை; திருத்தமிருந்தால் தெளிவில்லை; வாழ்வு இருந்தால் வனப்பில்லை; வனப்பிருந்தால் வாழ்வில்லை; கற்பனை இருந்தால் அடிப்படையில்லை; அடிப்படை இருந்தால் கற்பனை இல்லை; பழமை இருந்தால் புதுமை இல்லை; புதுமை இருந்தால் பழமை இல்லை; பண்பாடு இருந்தால் பயன்பாடில்லை; பயன்பாடிருந்தால் பண்பாடு இல்லை; இப்படி ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பது பிற பிற நூல்களுக்கு. திருக்குறளுக்கு அன்று! வேண்டுவன வெல்லாம் ஈண்டியமைந்தது இன்பத் திருக்குறள்! உணர்வுப் படப்பிடிப்பு உணர்வுகளை ஊடுருவிக் காட்டும் ஒளிப்படம் திருக்குறள்! அதிலுள்ள ஒளிப்படங்கள் ஒன்றா? இரண்டா? கற்பார் அனைவர் ஒளிப்படங்களுமன்றோ கைம்மேல் வைத்துக் காணக் காட்டுகிறார் வள்ளுவர்! உடலைப் படம் பிடித்தல் உள்ளுறுப்பைப் படம் பிடித்தல் ஆகியவற்றை வியந்து மதிக்கும் உலகம், உணர்வுப் படப்பிடிப்பாளியை மதிக்கின்றதா? போற்றுகின்றதா? இன்மை இன்மை சொல்லத் தெரிவதில்லை; பெருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குச், சுருக்கமாகச் சொல்லத் தெரிவதில்லை; சுருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குப், பெருக்கமாகச் சொல்லத் தெரிவதில்லை; இலக்கணம் தெரிந்தவர்க்கு, இலக்கியப் படைப்பு அருமை, இலக்கியப் படைப்பர்க்கு, இலக்கணம் அருமை; பொருள் தெளிவுக்குக், கட்டுப்பாடு மிக்க யாப்பியல் தடை; யாப்புக்கு உட்பட்டவர்க்குச் சொல்லும் சுவையும் இடர்! இவ்வெல்லா இடர்களும் இன்மைகளும் இல்லாமல் எவரும் வந்து போற்ற வெளிப்பட்ட உலக நூல் திருக்குறள்! கொடைவளம் கதையா சுவைக்கலாம்! கற்பனையா நயக்கலாம்! அறவுரையா? தலைவலி - என்பாரும், இனிக்க இனிக்கப் படிக்க - படித்துத் தேனாக ஊற்றெடுக்க அவ்வூற்றின்பை உவந்து உவந்து பிறர்க்கு எடுத்து வழங்க அமைந்த அருமை நூல் திருக்குறள்! ஆ! ஆ! ஆ! பாட்டனாரின் பழங்கண்ணாடியையும், பாட்டியின் பழம் பட்டையும் பாராட்டிப் பேணிவைக்கும் உலகம்; தந்தையும் தாயும் தந்த கையகல வீட்டையும், உரிமை கொண்டாடி உவக்கும் உள்ளம்; அன்பரும் நண்பரும் ஆர்வத்தால் தந்த சிறுபொருளையும், பெரும் பரிசாகப் போற்றிக் காக்கும் நன்மனம்; உலகெல்லாம் கூட்டுண்டு ஒழுக்கத்தின் தலைமணியாகக் கொள்ளத்தக்க ஒரு நூலாம் திருக்குறளைப் போற்றிக் கொள்கின்றதா? அது பிறந்த மண்ணில் தாமும் பிறந்த பெருமை நினைத்து மகிழ்கின்றதா? அது மலர்ந்த மொழி பேசும் பேற்றை எண்ணிப் பெருமையுறுகின்றதா? புதுவளம் நேற்றைச் சோறு, பழையது! ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் இன்றும் புதிது! என்றும் புதிது! சோறு உடலை வளர்க்கும்! திருக்குறள் உணர்வை வளர்க்கும்! உடலிலாது உணர்வுண்டோ எனலாம். ஆனால் உணர்விலா உடலால் ஆவது என்ன? நடமாடுதலால் மட்டும் மாந்தராகிவிட முடியுமா? எத்தனை உயிர்கள் நடமாடுகின்றன - தவழ்கின்றன - பறக்கின்றன! 3. மறை மறை என்பதற்கு மறைத்து வைக்கப்பட்டது எனப் பொருள் கூறுவது தமிழ் மறையை வடமொழி வேதமாக்கி அதன் அடிப்படையில் பொருள் விரிப்பதாம். வேதம் ஒரு குலத்துக்கு உரியது என்றும், அக்குலத்தார் ஒழிந்தார் ஓதின், ஓதிய அவர் நாவை அறுக்க வேண்டும் என்றும், சொன்னவர் வாயில் இரும்புக் கம்பியைக் காயவைத்துச் செலுத்துதல் வேண்டும் என்றும், பதிய வைத்துக் கொண்டவர் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்றும், ஓதக்கேட்டவர் செவியில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்றும் மனுநூல் கூறுவதில் இருந்தே வேதம் குலப்பொருள் என்பதும், ஒருகுலத்துக்கு ஒரு நெறியுரைப்பது என்பதும் வெளிப்படை. வேதம் பொதுப் பொருள் அன்று என்பதாலேயே எழுதாக் கிளவி என்றும் கருதி என்றும் வழங்கப்பட்டதாம். ஆனால் தமிழில் மறை என்பது பொதுப்பொருள்; எழுதும் கிளவியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் கேடில் விழுச் செல்வம் கல்வி என்றும் கூறும் செய்தி, மறைத்துக் கூறும் செய்தியாமா? ஒரு குலத்துக்கொரு நெறி கூறும் செய்தியாமா? தமிழில், மொழியியல் காவல் நூலாகக் கிளர்ந்தது தொல்காப்பியம். பண்பாட்டியல் காவல் நூலாகக் கிளர்ந்தது திருக்குறள். வரையறை செய்து கூறும் இலக்கண நூல்களை மறை என்னும் வழக்குண்மை நரம்பின் மறை என்னும் தொல்காப்பிய ஆட்சியால் விளங்கும். நரம்பின் மறை யாழிசை நூலாம். தமிழில் வழங்கும் மறை என்னும் சொல்லின் பொருளைத் தொல்காப்பியம் தெளிவாக்குகின்றது. நிறை மொழி மாந்தரால் ஆணையிட்டுக் கூறப்படுவதே மறை மொழி. மந்திரம் என்பதுவும் அதுவே என்பது தொல்காப்பியர் கருத்து. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. என்பது அவர் வாக்கு (1434) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள் - 28) என்றார் திருவள்ளுவர். இவண் குறிக்கப்பட்ட நிறைமொழி மாந்தர் தகைமையை எண்ண வேண்டும்! நிறைமொழி கூறுவார் எவர்? அவர் நிறை நெஞ்சர் என்க. நெஞ்சின் ஊர்தி சொல்லே! ஆதலால், நிறை நெஞ்சில் இருந்தே நிறைமொழி தோன்றும் என்க! குறை நெஞ்சில் இருந்து நிறைமொழி தோன்றாது என்பது வெளிப்படையாம் என்க. நிறை நெஞ்சின் தனிமூலம், மனத்துக்கண் மாசின்மையாம். அம்மாசிலா நெஞ்சிலேதான் அழுக்காறு இல்லை; அவா இல்லை; வெகுளி இல்லை; இன்னாச் சொல் இல்லை! நிலையிற்றிரியாது அடங்கிய தோற்றமும், குணமென்னும் குன்றேறி நிற்கும் பெற்றிமையும் நிறைமொழி மாந்தர் வரையறை. நிறைமொழி மாந்தர் கூறும் மறைமொழி எத்தகையது? இதனைச் செய்க; இதனைச் செய்யாதே என ஆணையிட்டுக் கூறும் அத்தகையதே நிறைமொழி மாந்தர் கூறும் மறை மொழியாம். ஆணையிட்டுக் கூறப்படும் ஒன்று ஒளித்து மறைத்துக் கூறுவது ஆகுமா? மறை என்பதன் மெய்ப்பொருள் பாதுகாப்பு என்பதாம். அல்நெறி ஈது; நல்நெறி ஈது; இதனைத் தள்ளுக; இதனைக் கொள்ளுக, எனப் பாதுகாத்துக் கூறுவதே மறை மொழியாம். இப்பாதுகாப்பும் அகக்காப்பும், புறக்காப்புமென இரு வகைத்தாம். தந்நாட்டு வழக்குகளாக உள்ளனவற்றுள் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளல் அகக்காப்பாம். பிறநாட்டவர் வழக்குகளாக உள்ளனவும் நம் நடைமுறைக்கு ஆகாதனவுமாகியவற்றை விலக்குவது புறக்காப்பாம். இத்தகைய வற்றைப் பறையறைவது போலவும் அறை கூவுவது போலவும் கூறாமல் மறைத்துக் கூறுவதால் ஆகும் பயன் தான் என்ன? மறை என்பதற்குக் காவல் என்னும் பொருள் உண்டா? குடைக்கு ஒரு பெயர் வெயின்மறை என்பது. வெயிற் கொடுமை வாட்டா வண்ணம் காப்பதால் குடை வெயின் மறை ஆயிற்று. நாட்டவர்க்கு வெங்கொடுமை வாரா வண்ணம் காப்பதற்குச் சான்றாகவே முடியுடை வேந்தர் குடையுடையோராய்த் திகழ்ந்தனர் என்க. (புறம் 35 : 60) வீட்டுக்கு ஒரு பெயர் வளிமறை என்பது. கொடுங் கோடையோ, கடும் வாடையோ வருத்தாவண்ணம் கதவமைந்த வீடே வளிமறை எனப்பட்டதாம், வளி-காற்று. (புறம். 196) போர்க்களத்தில் பகைவர் விடுக்கும் படை துளைக்கா வண்ணம் அணியும் கவசத்திற்கு, மெய்ம்மறை என்பது பெயர். பதிற்றுப்பத்து மெய்புகு கருவி (14), மெய்புதை அரணம் (52) என வழங்கும். வீரருக்கு வீரராக விளங்கி முன்னின்று காக்கும் மொய்ம்புடையாரைச் சான்றோர் மெய்ம் மறை (14, 58) என்றும் மழவர் மெய்ம்மறை (55, 58) என்றும், வில்லோர் மெய்ம்மறை (59, 65) என்றும் பதிற்றுப்பத்து பயில வழங்குகின்றது. நாட்டின் காவலுக்கு அரணங்கள் இருப்பது போல, பண்பாடு நாகரிகம் இவற்றின் காவலுக்கு அரணமாக இருப்பது மறை என்க! தமிழ்மறை எனவும், பொதுமறை எனவும் வழங்கும் நம்மறையாம் திருக்குறளை மேலோட்டமாகக் காண்போரும் அல்லவற்றை மறுத்து, மறுத்துக் கூறும் நெறி முறையை நன்கு அறிவர். நல்லவற்றைக் கூறுதலினும், அல்லவற்றை மறுத்தல் கட்டாயத் தேவையாம். அதுவே காவற் கடனில் தலைப்பட்ட நிலைப்பாடு உடையதாம். ஆதலால் அறுப்பது, அறை; இறுப்பது, இறை; பொறுப்பது, பொறை; நிறுப்பது நிறை என்னும் சொல்லாட்சி போல மறுப்பது, மறை எனப்பட்டதாம் என்க. இனி, மறை என்பது களவு என்னும் பொருள் தரும் பழைய ஆட்சி. பிறரறியா வண்ணம் பாதுகாக்கும் காவல் ஒழுக்கமே மறை எனப்பட்டது அறிக. ஒரு பொருளைப் பிறர் அறியா வண்ணம் காக்கக் கருதுவார் மறைத்து வைத்தல் காவல் வழிப்பட்டதே என்பதும் எவரும் அறிவர். ஆதலால் மறை என்பது வாழ்வியல் காவல் நூல் என்பதே தெளிந்த செய்தியாம். 4. முப்பால் வைப்பு முறை உலக உயிர்களின் முதல் தேவை இன்பம் நாடுதல்; அடுத்த தேவை பொருள்; அதற்கடுத்த தேவை அறம் என்று பலரும் கருதியிருந்தனர். தொல்காப்பியரும், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு என இன்பத்திற்கு முதலிடம் தந்தார். ஆயின் திருவள்ளுவரோ அறத்திற்கு முதலிடம் தந்து இன்பத்தை மூன்றாமிடத்திற்கு அனுப்பி விட்டார். - என்பது முப்பால் வைப்பு முறைக் கட்டுரையில், நான்காம் பத்தி. இதில், தொல்காப்பியர் இன்பம், பொருள், அறம் என முப்பால் முறைக் கொள்கையர் எனவும், திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என முப்பான்முறைக் கொள்கையர் எனவும் இருவேறாகக் காட்டுதல் ஒன்று! அறம், பொருள், இன்பம் என்னும் முப்பான் முறை வைப்பு வள்ளுவரே படைத்துக் கொண்டது என்றும், தொல்காப்பிய முறையை மாற்றி முதலிடத்தை மூன்றாமிடத்திற்கு அனுப்பி விட்டவர் வள்ளுவரே என்றும் காட்டுதல் மற்றொன்று! இவற்றுக்கு மேலோட்டப் பார்வை ஒன்றையே அன்றிப் பிறிதொரு சான்றும் இன்றாம். தொல்காப்பியர், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு என எங்கு எண்ணினார்? களவியல் முதல் நூற்பாவில் எண்ணினார்! அங்கு எண்ணுவானேன்? களவியல், இன்பச் சுரப்பின் வைப்பகம்; இன்ப வளர்வின், நிலைக்களம்; இன்ப முதிர்வால் பொருளும் அறமும் சிறக்கத் தோற்றுவாயாம் இடம்! ஆகலின், அங்கே இன்பத்தை முன் வைத்து எண்ணல் முறைமையாம். இஃதிட நோக்கி இயைத்ததையன்றி வரன் முறையன்றாம். இன்பம் எனத் தொடங்கியது மரபு மாற்றம் என்பதாலே தான் இளம்பூரணர் ஒரு வினா எழுப்புவதுடன் விடையும் பகர்கின்றார்: அறனும், பொருளும், இன்பமும் என்னாது, இன்பமும், பொருளும், அறனும் என்றது என்னை? எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இரு வகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும், அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க என்பது அது. நச்சினார்க்கினியர், அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளான் இன்பம் நுகர்தற் சிறப்பானும், அதனான் இல்லறங் கூறலானும், இன்பம் முற்கூறினார் என்றார். முறையை மாற்றி நூலாசிரியர் கூறியமைக்குரிய கரணியத்தை, உரையாசிரியர்கள் உணர்ந்துரைத்த விளக்கங்கள் இவை. இனி, இலக்கணப் பேராசிரியர் தொல்காப்பியர், அறம், பொருள், இன்பம் என்னும் முறை வைப்பைக் கூறிற்றிலரோ எனின், கூறினார் என்க. அக்கூற்றுத்தானும், அவர்க்கும் முந்தையர் கொண்ட கோடா முறைமை என்றுக் குறித்தாரும் என்க : ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப இவை செய்யுளியலில் வரும் நூற்பாக்கள். இவற்றுள், அறமுதலாகிய மும்முதற் பொருள் என்பதையும் என்ப என்பதையும் கருதுக. அறமுதலாகிய மும்முதற் பொருள்கள் எவை என விளக்கவும் வேண்டுமோ? அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற் பொருட்கும் என உரை வகுக்கின்றார் இளம்பூரணர். இவ்வுரையையே பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் ஏற்று மொழிந்தனர். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளும், ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்னும் நாற்பாவாலும் கூறப்படும் என்பது தொல்காப்பியர் குறிப்பாதல் அறிக. அக் குறிக் கொண்டேயும், அவர் குறித்த குறுவெண் பாட்டைக் கொண்டேயும், அறம் முதலாக முப்பால் வகுத்தார் வள்ளுவர் என்க. அவரே, அறம், பொருள், இன்பம் உயிரச்சம் (501) என எண்ணுவதையும் அறிக. முப்பாலார் ஒழிய எப்பாலாரும், முப்பால் முறை வைப்புக் கொண்டிலரோ? ஆசிரியர் தொல்காப்பியர்க்கும் முந்துநூல் முன்னவர் முறைமை அஃதெனின், பின்னவர் கொள்வதற்கு என்ன தடை? சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடல் - (28) அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும என்கின்றது. இப்பாடலில் வரும் ஊதியம் என்னும் சொல்லுக்கு உரை கூறும் பழைய உரையாசிரியர், ஊதியம் என்பது அறம், பொருள், இன்பங்களை; அன்றி அறம் என்பாரும் உளர் என்கிறார். இச் சோழனைப் பற்றிக் கோவூர்கிழார் பாடிய மற்றொரு புறப்பாடல் (31) சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல என்கின்றது. சோழன் குடை முன்னே தோன்றுகின்றது, அதனைத் தொடர்ந்து பின்னே சேரன் குடையும் பாண்டியன் குடையும் தோன்றுகின்றன. இக்காட்சி அறத்தின் பின்னே பொருளும் இன்பமும் தோன்றினாற் போன்றது என்பதே இவ்வடிகளின் உவமை விளக்கப் பொருளாம். இம்முறைவைப்பின் நிறை வைப்பை அறிந்தமையால் அன்றோ அறன் வலியுறுத்தல் முகப்பெழுதும் பரிமேலழகர், சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் என்றார் பிறரும் என்றார். இதனால் கூறியது அறம், பொருள், இன்பமெனும் முப் பான்முறை முதுபழந்தமிழ் முறையே என்பதும், அம் முறையே தொல்காப்பியர் உரைத்த முறையென்பதும், அம்முறையே வள்ளுவர் வகுத்துக் கடைப்பிடி முறை என்பதும் தெளிவாம். ‘fsÉaÈš xUtif Kiwit¥ò«, brŒíËaÈš xUtif Kiwit¥ò« bjhšfh¥ãa® bfhŸthnd‹? என வினவலாம். இடனறிதல் அறிந்தார் அவ்வாறு வினவார். இறைவன் சூடும் கொன்றை மாலையைத் தொகை நூல்கள் இரண்டன் வாழ்த்துப் பாடல்கள், எடுத்த எடுப்பில் மடுத்துரைக்கின்றன. இரண்டு பாடல்களையும் இயற்றியவர் ஒருவரே. அவர் பாரதம் பாடிய பெருந் தேவனார். ஒன்று, கண்ணி கார் நறுங்கொன்றை என்கின்றது. மற்றொன்று கார் விரி கொன்றை என்கின்றது. வாளா உரைத்த உரைமுறையோ இவை? முன்னது, புறப்பாடல். பின்னது, அகப்பாடல். முன்னது, போர் முதன்மையது. பின்னது, காதல் முதன்மையது, முன்னது, போர்ப்பூவாம் கண்ணி. பின்னது, முல்லைக் கற்பின் பெரும் பொழுதாம் கார் காலம். ஒரு பூவையே இடமறிந்து முறையறிந்து பாடவல்ல மூத்த புலமையர், முப்பொருள் முறைமையின், வைப்பியல் தெரியாமல் எய்ப்பரோ என்பது தெளிக. 5. மரபுவழி உரை விளக்கம் அவையறிதல் அவையஞ்சாமை என்பன திருக்குறள் பொருட்பாலில் உள்ள ஈரதிகாரங்கள். அறத்துப்பாலில் உள்ளது மக்கட்பேறு. இரண்டையும் இணைத்து மரபு வழி உரைகாணின் சில விளக்கங்கள் கிடைக்க வாய்ப்பாம். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்னும் குறள் அறியார், அரியர். பள்ளிப்பாடம் முதல், பல்கலைக் கழகப் பொழிவு வரை இடம் பெறும் குறள்களுள் ஈதொன்று. இதில் வரும் அவையத்தை ஆய்தல் வேண்டும். தொல்காப்பிய அரங்கேற்றம் ஓர் அவையத்தின்கண் நிகழ்ந்த செய்தியை அதன் பாயிரம் குறிக்கிறது. அவ்வவையம், நிலந்தரு திருவிற்பாண்டியன், அவையம் எனப்படுகின்றது. பழநாளில் அளவுகோல், நிறைகோல், முகத்தலளவைக் கருவிகள் இன்ன, ஆளும் வேந்தன் பெயரால் வழங்கப்பட்டன என்பதைத் தமிழ் வரலாற்றுலகம் நன்கு அறியும். அவையமும் வேந்தன் பெயரால் அமைதலுண்டு என்பதைத் தொல்காப்பியப் பாயிரத்தின் வழியே அறியலாம். அவையம் என்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் கூடியிருந்து ஆய்ந்த பேரவையே என்பது விளக்கமாகும் செய்தி. ஏனெனில், அவையம் நூலை அரில் தப (குற்றம் நீங்க)த் தெரிந்த செய்தியையும் அப்பாயிரமே குறிக்கின்றது. புலவர்கள் ஒருமனப்பட்டுச் சேர்ந்து ஆய்ந்தமையால். புணர்கூட்டு என்றும் கூடல் என்றும் பெயர் பெற்றது. புலவர்கள், தம்மைப் பாடாமை தமக்கோர் இழிவாமென எண்ணி முடிவேந்தரும், அதற்கு முழுத்தகுதியாம் சான்றாண்மைப் புலவர்களும் ஒருங்கிருந்து ஆராய்ந்த காலவியற் பேறு அது. புலவர்களால் பாடு புகழ் பெற்றவரே, வீடுபேறும் உற்றவர் என்பதும் அந்நாள் கருத்தாக இருந்தது. புலவரொருவர் தன்னைத் தழுவாமையைத் தன் குறைபாட்டுக்கு அடையாளமாகக் கொண்டு வருந்திய, மன்னவன் உரையும், புறப்பாடலில் உண்டு. ஆகலின், புலவர் அவையத்து அல்லது சான்றோர் அவையத்து முந்தியிருப்பச் செய்தலே, ஒரு தந்தையின் தலையாய கடனெனப் பண்டைத் தமிழுலகம் கொண்டிருந்த குறிக்கோள் வாழ்வின் தூண்டுதலே குறிப்புச் சுட்டாகக் குறள்வழி இப்பாடலாக வெளிப்பட்டதெனக் கொள்ள வாய்க்கின்றது. இந்நாளில் இராசராசன் பரிசு பெறுதலும், சாகித்திய அகாதெமி பரிசு பெறுதலும், கின்னல் புத்தகத்து இடம் பெறுதலும், ஒலிம்பிக்கு ஆட்டத்தில் பொற்பதக்கம் பெறுதலும், இராயல் கழகத்தில் உறுப்பாண்மை பெறுதலும், நோபல் பரிசு பெறுதலுமென, அந்நாள் தமிழுலகம் புலவர் அவையத்து இடம் பெறுதலைப் பேரளவு கோலாக - குறிக்கோள் அளவாகக் - கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். இது மரபு வழி ஆய்வுப் பயனாம். சங்கப் புலவர்களைச் சான்றோர் எனல் பெருவழக்கு. உரையாசிரியர்கள் பலரும் சங்கப் புலவர்களைச் சங்கச் சான்றோர்கள் என்றே குறித்தனர். அவர்களுக்குப் பின் வந்த புலவர்களைப் பிற்காலச் சான்றோர் என்றும் பிற்சான்றோர் என்றும் குறித்தனர். இத்தகையர் சங்கஞ் சார்ந்த காலத்தவர் என்பதும் அறியத்தக்கது. சங்கப் புலவர்களை அன்றி வீரப் பெருமக்களையும் சான்றோர் என்று வழங்கும் வழக்கம் உண்மை சங்க நூல்களாலும் உரைகளாலும் விளங்குகின்றது. பெரும் புலமை நிறைவும், பெருமிதப் பெருக்கும் ஆகிய நிறைவே சால்பெனப் பொதுச் சுட்டாக வழங்கியதென்பது இதனால் இனிது விளங்கும். இதனையும் அவையத்துடன் இணைத்துப் பார்த்தல் வேண்டும். சான்றாண்மையைப் பொருட்பாலிலே உரைத்த வள்ளுவர், அறத்துப்பால் மக்கட்பேற்றிலே. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்கிறார். அவையம் சான்றோன் என்னும் சொற்கள் வழியே சங்கநாளில் வாழ்ந்தவர் வள்ளுவர் என்னும் குறிப்பு வெளிப் படும். இக்குறள்களின் உள்ளுறையாம் சிறப்புப் பொருளும் தெளிவுறும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்னும் குறள் ஆய்வாளரிடத்தெல்லாம் உலாவரல் வெளிப் படை. நம்பா மதத்தரும் இதனை எடுத்துப் பாரித்து விளக்கு தலும் கண்கூடு. கடவுள் கெடுக எனச் சாவிக்கிறாரே வள்ளுவர்; விட்டு விடலாமா? தமிழ்மரபு தனிச் சிறப்பினது. பானை வனைதலையோ, துணி நெய்தலையோ, யாழ் மீட்டுதலையோ, ஏர் உழுதலையோ இயற்றுதல் என்று கூறாது. அதற்கு அதற்கென அமைந்த மரபு வழியே கூறும். கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, ஆவின் கன்று என்பது போல் கூறுவதையன்றி இளமைப் பெயர்கள் அனைத்தையும் குஞ்சு என்றோ குட்டி என்றோ, கன்று என்றோ கூறி விடுவது இல்லை. இதனை இவ்வாறு சொல்ல வேண்டும் என்னும் மரபு கல்லாரிடையும் மாறாமல் வழங்கி வருகின்றது. அவ்வாறாகவும் இக்குறளில் மரபுநிலை திரிய உரை ஏறி நிற்பதாயிற்று. உலகு படைத்தவன் எனின், இறைவன் அல்லது கடவுள் எனப்பொருள் கொள்ளலாம். படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவே இறைவன் விளையாட்டாகச் செய்வன என்பர். ஐந்தொழில் என்று வளர்ப்பினும் அவையும் இம்முத் தொழிலுள் அடங்குவனவே. படைத்தலை உளதாக்கல் என்றும் கூறுவர். ஆனால் இயற்றுதல் என எவரும் கூறார்! கூறியதிலர். நூல் இயற்றுதல், சட்டம் இயற்றுதல் என்பனவே மரபு. ஆதலால், உலகியற்றியான் என்பது இறைவனைக் குறிப்பது அன்று எனத் தெளியலாம். அவ்வாறானால் உலகொடு இயற்றுதல் எப்படிப் பொருந்தும் எனின், உலக நடைமுறை அல்லது விதி என்பதே உலகு என்பதன் பொருளாகும். புதியதோர் உலகு செய்வோம் என்று பாவேந்தர் பாடினார். உலகு செய்தல் என்பது உலக நடைமுறை விதியைச் செய்தலே. இதனை, இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் என்னும் பாரதியார் பாடல் கொண்டு தெளிவு செய்யலாம். இவற்றால் இயற்றியான் என்பதை விதி அல்லது சட்டம் இயற்றும் வேந்தனொடு சார்த்திக் கூற வேண்டியதே அன்றி, இறையொடும் இயக்கத்தக்க முறைமை இல்லையாம். உலகு என்பது உலகியலை நடப்பிக்கத் தக்க அரசியல், அறிவியல், பொருளியல் சட்டங்களே எனக் கொண்டு, ஒருவன் இரந்தும், உயிர் வாழ வேண்டும் என்னும் நிலையில் சட்டத்தை வேந்தனொருவன் இயற்றுவானேயானால், அவ்வேந்தன் இவ் வுலகைவிட்டே ஒழிந்து போவானாக என்று சாவித்தார் வள்ளுவர் என்று கருதுதலே தகும். கடவுளுக்கு ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், ஐந்தவித்தான், உவமை இல்லான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்னும் பெயர்களை வழங்கிய வள்ளுவர், இயற்றியான் என வழங்கினார் அல்லர் என்பதைக் கருதலாம். அதே பொழுதில் அப்பெயரை மன்னனுக்கு வழங்கினார் என்பதும் தெளிவாகுமானால், ஐயத்திற்கு இடமில்லையே! வேந்தன் கொண்டிருக்க வேண்டிய வலிய திறங்கள் நான்கு. அவற்றுள் தலையாய ஒன்று, இயற்றுதல் : இதனை, இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. என்கிறார். நாட்டின் பொருளியல், நலவியல், வாழ்வியல் பற்றிய தகவான விதிமுறைகளை இயற்றுதல், அம்முறைப் படியே வேண்டும் பொருட் கூறுகளைத் தொகுத்தல், அவற்றைச் சிதைவின்றிப் பாதுகாத்தல், தக்காங்கு துறைவாரியாய்ப் பகுத்தளித்தல் என்னும் நாற்கூற்று நடைமுறைகளில் தலைப்பட்ட இயற்றுதல் அன்றோ பின்வரும் மூன்றுக்கும் வழி செய்வது! இந்நாள் நிகழும் சட்டமன்ற நடைமுறை என்ன? மக்களாட்சி என ஆட்சிமுறை மாறுபடினும் அடிப்படை முறை மாறிற்றில்லையே! பொருளியல் திட்ட வைப்பின் பின்னர்த் தானே மற்றை நடைமுறைகள் எல்லாம் இயல்கின்றன. ஆதலால், பொருள் வளம் பெருக்கும் வகைகளை இயற்றி, எவர்க்கும் இரந்து வாழும் இரங்கத்தக்க நிலை இல்லை என்பதை ஆக்காத அரசு அழிந்தொழிக என எக்காலத்திற்கும் தக வள்ளுவர் மொழிந்தார் எனலே மரபுவழிப் பொருளாம். 6. மூவின வண்ணம் தமிழ் மூவினப் படைப்பு தனிப் பெருஞ் சிறப்பினது. வன்மை, மென்மை, இடைமை என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் கூறப்படும். மூவினப் படைப்பு நினைதோறும் இன்பம் பயப்பதாம்! வண்ணம் பாடுதற்கு இனம் செய்யும் உதவிக்கு எல்லையொன்றில்லை என்பதைத் தமிழ் வண்ணங் கண்ட எவரும் அறிவர்! வண்ணப் பாடல்களிலும் சந்தப் பாடல்களிலும் இன எழுத்துகள் செய்யும் பயன் பெரிதுதான்! பெரும் பாவியமோ, சிற்றிலக்கியமோ பாடும் பாவலர்க்கும் இன எழுத்துகள் இடத் திற்குத் தக இயைந்து நின்று உதவுவது சிறப்புக்குரியதுதான்! ஆனால், அறங்கூற வந்த திருவள்ளுவரையும் வண்ணப் பாவலரென வியக்க வைக்கின்றனவே மூவினங்கள்! அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு இப்பாடலில் வல்லின ஒற்று ஒன்றுதானும் உண்டா? இல்லையே ஏன்? மெல்லின ஒற்று நான்கு இடம்பெற்றுள்ளனவே, ஏன்? இடையொற்று ஆறு இடம் பெறவும் மெல்லொற்று நான்கு இடம் பெறவும் பத்து ஒற்றுக்குள் ஒன்று தானும் இடம் பெறாமல் வல்லொற்று ஒதுக்கப் பட்டதேன்? ïnj ‘V‹? என்பதை அடுத்த பாடலிலேயும் பார்க்கலாம்! நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கன் டன்ன துடைத்து நோக்கு நோக்கு நோக்கு தாக்கு என வந்து உடைத்து நொறுக்குகிறதே; ஏன்? ஒரே ஒரு வல்லின ஒற்றும் வாராதது முதற்பாட்டு. அடுத்த பாடலிலேயே இத்தனை வல்லின ஒற்றுகள் ஏன்? களங்கண்ட காளை போல் வானும் நோக்கின் தாக்குக்கு ஆற்ற மாட்டாமல் உடைந்து போகும் நிலையில் அல்லவோ நிற்கின்றான். வல்லினம் வராமல், தாக்குறல் வன்மையைக் காட்டுவது எப்படி? மொழியியல் பயிற்சியால் மட்டுமா இப்படிப் பாட முடியும்? உயிரியல் - உளவியல் - உணர்வியல் - காதலியல் எல்லாமும் தெளிந்தவர்க்கு அல்லவா இப்படி, இடத் திற்குத் தக நடை நலம் வந்து கைகட்டி நின்று ஏவல் செய்யும்? சிறந்ததைச் சொல்ல வேண்டுமா? இசை நலங் கலந்த சொல்லால் சொல்லுக என்பது நூலோர் முறை. இழுமென் மொழியால் விழுமியது பயிலல் என்பது தொல்காப்பியம். திருவள்ளுவர் விழுமியற்றுள் விழுமியதாக மக்கட்பேற்றைக் கருதினார். பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற என்றார். அம் மக்கள் கூறும் இளஞ் சொல்லை - மழலையை - எவ்வளவு இழுமென் மொழியால் கூறுகிறார் என்பது அறியாததா? குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்பதில் எத்தனை இனிய ஒலிநயம்! இழுமென் மொழியால் சிறந்தது மொழிதற்குப் பயன்படுவதால்தான் ழகரம் சிறப்பு ழகரம் எனப்படுகின்றதோ? இதோ, இளங்கோவடிகள் இக் குறளை வாங்கிக்கொண்டு வளர்கிறாரே: குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலை. என்கிறாரே! குழந்தை அள்ளி வாயிலும், வயிற்றிலும் வழிய உண்ணும் கூழ் எப்படி இனிக்கிறதாம்! அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்கிறாரே! தொல்காப்பிய வண்ணங்கள் பலவும் திருக்குறளாம் அறநூலிலே அமர்ந்து கிடத்தல் அறிதோறும் இன்பம் பயப்பதாம். இங்குக் காட்டப் பட்டவை பானை சோற்றுக்கு ஓரவிழ்ப் பதம் என்பது போல்வது. 7. கொல்லே ஐயம் இத்தலைப்பே ஒரு நூற்பா: தொல்காப்பிய இடையியலில் உள்ளது (20). இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் இது குற்றி கொல்லோ, மகன் கொல்லோ; நாய் கொல்லோ; நரிகொல்லோ எனவரும் என்றார். அது கொல் தோழி காம நோயே என்ற வழி ஐயங்காட்டிற்று என்றார் தெய்வச் சிலையார். சேனா வரையர் இளம் பூரணரின் முற்பாதியை மொழிந்து நின்றார். கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருளில் வரும் என்பதை வழக்கொடு படுத்தி வள்ளுவர் உரைக்குமாற்றை ஓர் எடுத்துக் காட்டால் கூறும் குறிப்பே இஃதாம். நகரொன்றில் வாழும் நண்பர் ஒருவரைக் காணச் செல்கிறார் அவர் நண்பர் ஒருவர். நண்பர் வீடு ஒன்றே ஒன்றாக இருந்த நாளில் வந்து பார்த்தவர் அவர். அவ்வீட்டு அமைப்பு - வண்ணம் - சூழல் எல்லாமும் அப்படியே அமைந்த மூன்று வீடுகள் வரிசையாக இருக்கக் காண்கிறார். இதில் நண்பர் வீடு எது எனத் திகைப்பின்றி அவரால் அறிய முடியுமா? அறிய என்ன செய்கிறார்? திகைப்படைந்து எந்தவீடு என ஐயுற்ற அவர், முதல் வீட்டைப் பார்க்கிறார்; தம் நண்பர் பெயர்ப் பலகையோ, அவரோ, அவர் துணையோ, மக்களோ தென்படுகின்றனரா எனப் பார்க்கிறார். அவர் நிற்கிறார், திகைக்கிறார்; கூர்ந்து நோக்குகிறார்; வந்த விரைவு இல்லை; ஓட்டம் இல்லை; அசை நடையும்கூட இசைந்தே செல்கின்றது. முதல் வீட்டில் தம் நண்பர் உடைமைச் சான்று காண வாய்க்கவில்லை. எனின், அவ்வீட்டைப் போலவே அடுத்த வீட்டையும் நின்று நோக்கு கின்றார்; அப்படியே அடுத்துள்ள வீட்டையும் நின்று அமைந்து நோக்குகின்றார். உள்ளத்தில் ஐயம் தோன்றியது; உறுப்புகளுக்கும் அவ் வையம் ஏறியது; நடைக்கும் தடையாயிற்று. நின்று தெளிந்து எட்டு வைக்கும் நிலை உண்டாயிற்று. தெளிவு கொண்டபின் ஐயம் தீர்ந்தபின், அவ்வீட்டைக் காணவரும் போது நடக்கும் நடைவேறு! ஐயுற்ற நிலையில் நடந்த நடைவேறுதானே! இக் கண்ணோட்டத்தொடு வள்ளுவக் காட்சிக்குச் சொல்வோம். தலைவன் தலைவியைத் தனியிடத்துக் காண்கின்றான். அவன் கண்ட முதற்காட்சியே அப்பொழுதுதான். mt‹ mtis neh¡»a neh¡fhš ‘mz§nfh? என ஐயுற்றான்! அவள் தன்னைத் தன் எழிலால் வாட்டிய வாட்டுதலால் கொண்ட கருத்து அது. அப்படி வருத்தும் பெண்களை அணங்கு எனக் கூறுதல் அவன் கேட்டறிந்த செய்தி. ஆதலால் அப்படி எண்ணித் திகைத்தான்! அடுத்தும் நோக்கினான்; அவள் சாயலின் வயப்பட்டான்; தோகை மயிலெனத் தோன்றிய அவளை ஆய்மயிலோ என ஐயுற்றான். செறிந்து நீண்ட கூந்தலை நோக்கிய அளவான், மாதோ எனவும் ஐயுற்றான். அணங்கு, மயில், மாது என்னும் மூன்றனுள் ஒன்றனைத் தெளிதலின்றி மயங்குவதாகத் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான். பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் ஆகாது என்பதற்காகவே பயனில சொல்லாமை கூறியவர் வள்ளுவர். அப்படியும் பயனில சொல்வானை மகன் என்று கூறாதே; அவன் பதர் என்றவரும் அவர். அவர், இன்பத்துப்பால் முதற்பாடலில் மும்முறை கொல் என்னும் அசைநிலையைப் பயன்படுத்துகிறார் என்றால், ஐயுற்றான் நடைநிலையை விடுத்து, அசை நிலைக்கு ஆட்பட்டு நிற்பதும் நடப்பதும், நிற்பதும் நடப்பதுமாக இயலும் இயலைத் தம் நடையாலேயே புலப்படுத்தும் உத்தியை மேற் கொண்டார் என்பதே யன்றோ! அதன் விளைவே, அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு என்பது. இடம் நிரப்பவா - பாடல், இசை நிரப்பவா - வள்ளுவர் கொல் என்னும் இடைச் சொல்லைப் பயன்படுத்தினார்; அசையைத் தானும் பொருளின்றிப் புகலாப் புலமைச் செல்வர், அப்படிப் புகல்வார் என எண்ணலாமா? படிப்பாரைக் காட்சி நிலைக்கு கொண்டு நிறுத்திக் காட்சியைக் காட்டிக் காட்டி இட்டுச் செல்லும் இயல் நடையன்றோ ஈது! கொல்லே ஐயம் என்பதற்கு எத்தகைய நாடகச் சான்று காட்டி விட்டார் நாவலர்க்கு நாவலராம் பெருநாவலர்! மாதர் என்றாரே ஏன்? மாதர் காதல் என்பதும் தொல்காப்பிய உரியியல் நூற்பாவே! இயற்கைப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, ஊழால் கூடும் கூட்டம் எனப்படும் முதற் காதல் காட்சியைத் தொல் காப்பிய வழியில் இடையும் உரியும் கமழச் செய்தவர் முதற்பாவலர்! எப்பாவலர்க்கும் அரிதாம் திறம் அவர்க்கு எளிதாம் திறமாக வாய்த்திருத்தல் தமிழ் பெற்ற பேறு! தமிழர் பெற்ற தனிப்பேறு! 8. திருக்குறளில் இரண்டு பாடவேறுபாடுகள் 1. இழத்தலும் இழிதலும் : ஒரு நிலையில் இருந்து அகலுதல் இழத்தல்; ஒரு நிலையில் இருந்து இறங்குதல் இழிதல். இழத்தல், அப்பாலாய் அகன்று விடுவது. இழிதல், நிலையில் சரிந்து அல்லது தாழ்ந்து அதனைத் தழுவியிருப்பது. இரண்டையும் திருக்குறளில் காணலாம். இழத்தல் : ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை (463) இழந்தொறூ உம் காதலிக்கும் சூது (940) இழிதல் : தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (964) இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும் (133) இழத்தலும் இழிதலும் பொருள் வகையில் இவ்வாறு வேறுபடுதல் தெளிவாகும். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788) என்னும் குறளில் வரும் இழத்தல் இழிதலாக இருக்க வேண்டும் எனக் கருதுவார் உளர்; விரித்து விளக்கியும் வருகின்றனர். உண்மை என்ன? உடுக்கை இழிந்தவன் என்றால் உடை நெகிழ்ந்தவன் என்பது பொருள். நெகிழுங்கால் கை தானாகவே போய் அணைக்கும் - அரவணைக்கும்! அகலவிடாது கட்டும். இது நடைமுறைச் செய்தியே! ஆயின், அவ்விழிதலினும் இழிவானது இழக்கும் நிலை. தெருவிலோ - சாலையிலோ - கூட்டத்திடையிலோ ஒருவனை இழிவு படுத்துவதற்காக - மானக்கேட்டை ஆக்குவதற்காக - கட்டிய உடையைப் பறிக்கும் வன்கொடுமையில் தலைப்படுகின்றான் ஒருவன். தனித்தோ சேர்ந்தோ இருக்கும் இயல்பான சூழலில், தானே நெகிழும் உடையைப் போய்க் கைநெகிழ விடாமல் காக்கும் நிலைமை வேறு. ஒருவன் வலிந்து மானங் கெடுக்க உடையைப் பறிக்கும் நிலை வேறு. பாஞ்சாலியை இழிவு செய்ய மன்னர் அவைக்கு இழுத்துச் சென்று துகில் உரிந்த கடுவாய்த் தனம் போல்வது அது. அந்நிலை ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு நேர்ந்தால் பறிப்பவன் கண்ணிற்படாமல் தன்னுறுப்பைக் காக்க வேண்டிய மானவுணர்வு உயிரினும் விஞ்சியிருக்குமே யன்றோ! அப்பொழுது மானங்கெடாமல் காக்க விரையுங்கை எத்தகு விரைவும் வலிவும் பொருந்தியதாக இருக்கும்! பறிப்பவன் உடையைத் தொடுமுன்னரே பறிப்பவன் கையைப் பறித்து வீழ்த்த முந்தியகை - தன் கூடாமையால் தன் உடையைத் தன் உடலில் இருந்து நீங்க விடாமல் காக்க முடியாத கை - என்ன செய்யும்? தன் மறையுறுப்பை மெய்ம்மறையென - கவசமெனக் - காக்குமேயன்றோ! அந்நிலையைச் சொல்லுவது இழத்தலேயாம்! இழிதல் அன்றாம்! இக்காட்டு வழிப்போயினான் கூறை கோட்பட்டான் என்பது ஒரு முதுமொழி. இலக்கணர் எடுத்துக் காட்டும் மொழி. இது உறுதிப்பாட்டை உரைக்க வந்த கால மயக்க மொழி. ஆங்குக் கோட்படுதல் - கொள்ளப்படுதல் - வழிப்பறியாளர்கள், உடைமையைப் பறி செய்வதுடன் உடையைப் பறி செய்வதையும் உரைப்பது அது. தானே இழியும் உடையினும் பிறரால் உடை இழக்க நேருங்கால் உண்டாகும் உணர்வு வேகம் கருதின், இழத்தலின் இடப் பொருத்தம் இனிது விளக்கமாம். ஆதலால், உடுக்கை இழந்தவன் கை என்பதில் பாட வேறுபாடு காண வேண்டியதில்லை. அப்படிப் பாடம் சுவடிச் சான்றொடும் கூடியதும் இல்லை. புதிது காணின் பொருளொடு பொருந்தி வருவதும் இல்லை எனத் தவிர்க்க. 2. அரியதும் உரியதும் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்னும் குறளைத் தமிழ் கற்றோர் நன்கு அறிவர். செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்குரிய செய்கலா தார் என்றுதான் பாடம் இருந்திருக்க வேண்டும். படியெடுத்தவர் செயற்குரிய என்பதைச் செயற்கரிய என்றே எழுதி விட்டார். எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்; படித்தவர் பாட்டைக் கெடுத்தார் என்பது போல ஆகி நிலை பெற்று விட்டது. அதனைச் செயற்குரிய என மாற்றலே முறை என்பார் உளர். வள்ளுவ நடை விளக்கம் கொண்டே இதனைத் தெளிவு செய்தல் வேண்டும். ஒழுக்கம் இழுக்கம் ; வசை இசை : பெரியர் சிறியர்; வீழ்நாள் வாழ்நாள்; அறத்தாறு புறத்தாறு; சிறைகாப்பு நிறைகாப்பு ; தமக்கு பிறர்க்கு; அறம் மறம்; புறத்துறுப்பு அகத்துறுப்பு; துன்புறூஉம் இன்புறூஉம்; இன்சொல் வன்சொல்; இனிய இன்னாத; தினை பனை - இன்னவாறு இரண்டன் நடைகொண்டு ஒன்றை வலியுறுத்தும் வழக்கம் உடையவர் திருவள்ளுவர். அவர் மூன்றன் நடை கொண்டு வலியுறுத்துவார் அல்லர்; அறமுறையும் அன்ன தன்று; இருவேறு உலகத்தியற்கை; என்னும் இருமை இதற்கும் தகும். பெரியர் சிறியர் என்பதற்குச் செய்வார் பெரியர்; செய்கலாதார் சிறியர் என்பது அமைந்த நடை. இனிச், செயற்கு அரிய செய்வார், செயற்கு உரிய செய்வார்; செயற்கு உரியவும் செய்யார் என மூன்றன் நடையாக்கிப் பெரியது, உரியது, சிறியது எனவும் பெரியர், உரியர், சிறியர் எனவும் முப்பகுப்பாக்குதல் இடர் மிக்கதாம். சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வார் சிறியர் சொல்லியும் செய்யார் கயவர் என முப்பகுப்பு நடை இயலுமாறு அறிக. இனி, அரிய செய்வார் அரியர் என்றும். உரிய செய்வார் உரியர் என்றும் சிறிய செய்வார் சிறியர் என்றும் நடைப்பட இடந்தந்து இடர் விளைத்தலும் கருதுக. அரிய செய்தலும், அரிய செய்யாமையுமே இவண் கருத்தாகலின் உரிய ஆட்சிக்கு இடமில்லை. இனி, உரியது அல்லது உரிமை - உரியதாம் தன்மை. அது பெரியர்க்குப் பெருமை உரியது; சிறியர்க்குச் சிறுமை உரியது. ஆகலின் இரண்டன் இடைப்பட்டதாம் ஒரு நிலையன்று உரியது. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு என அரிய பயில வழங்குதலும், உரிய ஆட்சி இடைநிகர்வாம் பொருள் வகையில் யாங்கும் யாண்டும் இடம்பெறாதிருத்தலும் அறிதல் சாலும். ஆதலால், செயற் கரிய செய்வார் பெரியர் என்னும் குறளில் பாட வேறுபாடுகளைக் காணலும் காட்டலும் மரபு வழிப்பட்ட தன்றாவதுடன், பொருள் வழக்கொடு பொருந்தாததுமாம். 9. ஊற்றும் ஊற்றுக்கோலும் கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் என்பவை கேள்வியில் வரும் நான்காம் ஐந்தாம் குறள்கள் (414, 415). இக்குறள்களில் ஊற்று என்றும், ஊற்றுக்கோல் என்றும் வரும் இரண்டிற்கும் ஊன்றுகோல் பொருளே கூறினர். உறுதி நூல்களைத்தான் கற்றிலன் ஆயினும் அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாம் துணை யாகலான் என்பதும், வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல் உதவும், காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள் என்பதும் இவற்றுக்குப் பரிமேலழகர் உரைகள். முதற்குறள் விளக்கத்தில் ஊன்று என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது என்று, ஊன்று ஊற்றாகியதனைச் சுட்டினார் பரிமேலழகர். பற்றுக்கோடு என ஊற்று என்பதற்குப் பொருள் கூறினாலும் பற்றுக்கோடு ஊன்றுகோலேயாம். அதனால், பின் வந்த உரையாசிரியர்களும் வெளிப்பட ஊன்றுகோல் போல என்றே குறிக்கலாயினர். கேள்விப் பயனை விளக்க, ஈரிடத்தும் ஒரே உவமையை அடுத்தடுத்த பாடல்களிலேயே வள்ளுவர் வைத்தார் என்பது எண்ணித் தெளிவு கொள்ளத் தக்கதாம். முதற்பாடலில், ஒற்கத்தின் ஊற்று; அடுத்த பாடலில், இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்; ஊற்றுக்கோல் என்பது ஊன்றுகோலே. ஐயத்திற்கு அறவே இடமில்லா ஆட்சி அது; இழுக்கல் (வழுக்கல்) வேறு தெளிவுறுத்துகின்றது. மேலாய்வுக் குரியது ஒற்கத்தின் ஊற்றேயாம். ஊற்று என்பது வெளிப்படு பொருளே. ஆற்றுப் பெருக் கற்றடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் என்பது எவரும் அறிந்ததே. ஆற்றுக்கண் அடைத்தாலும் ஊற்றுக்கண் உதவும் என்பதும் பழமொழி. வான் வறண்ட காலத்தும் தான் வறளாமல் உதவும் தகைய ஊற்றே இவண் சுட்டியதாம். ஒற்கம் என்பது ஒல்கு என்பதன் வழிவந்த சொல். ஒல்குதல், தளர்தல், குறைதல், சுருங்குதல், வறுமையுறல், அடங்குதல், நலிதல், மெலிதல் ஆகிய பொருள்களைத் தரும். ஒற்கம் என்னும் சொல்லாட்சி திருக்குறளில் இவ்வோரிடத்து மட்டுமே உள்ளது. மழை பெய்யாமை, வானம் பொய்த்தல், வானம் வறத்தல் எனப்படும். அதன் விளைவு வளங்குன்றல், நீர்மை குன்றல் எனப்படும். இவை வான் சிறப்புக் குறளாட்சிகள். ஆகலின், ஒற்கம் என்பது மழை பொய்த்து வளங்குன்றலைக் குறித்தல், ஒல்குதல் என்பதன் வழியே பொருள் கொள்ள வழி செய்கின்றது. ஆதலால் மழை பொய்க்க, ஆறு வறள நேரினும் ஊற்றுக்கண் திறந்து உதவுதல் போல், கற்குங் காலத்துக் கற்கத் தவறியவரும் கேள்வியால், ஓரளவு இழந்த நலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்குவதாக இக்குறள் அமைந்துள்ளது என்பதே நேர் பொருள் ஆகும். தொட்டனைத் தூறும் மணற்கேணி என ஆளப்படும் கேணி வேறு. அது தோண்டுதல் - கருவி கொண்டு தோண்டுதல் - அளவினது. மண்வெட்டி கொண்டு மணற் கேணியாக்கி உறையிட்டு நீர் எடுத்துப் பயன் கொள்வது வழக்கு. இவ்வூற்று, அத்தகைத்தன்று. கையால் மணலைப் பறித்து ஆக்குவது; காலைக் கொண்டு மணலைக் கிளறி ஊற்றாக்குதலும் நடை முறை ஆகலின், கேணியும் ஊற்றும் அளவு, முயற்சி ஆகியவற்றால் மிகுதியும் குறைவும் உடையவை. இவை கல்விக்கும் கேள்விக்கும் ஏற்பத் தனித் தனியே உவமை கூறப் பெற்றன என்க. கேள்வியறிவானது ஊற்று நீர் போல் சுரந்து தோன்றும் என்று முதுபுலவர் மயிலை சிவமுத்தும், வறண்ட காலத்து ஆற்று மணற்கேணி ஊற்றாந்துணை; கேட்டனைத் தூறும் என்று புலவர் மு. கோவிந்த சாமியாரும் உரைத்தனர். ஆயின், திருக்குறள் உரை வேற்றுமை கண்ட சாரங்கபாணியார் ஊற்றாந்துணை என்பதற்கு ஊற்று நீர் போல் சுரந்து துணை செய்யும் எனப் பொருள் கொள்ளலாமேனும் இக்குறளின் நடைப்போக்கு உவமை வைப்புடையதாக அமையவில்லை என மறுக்கிறார். ஒற்கத்தின் ஊற்றாந்துணை என்பதற்கு வறட்சியில் ஊற்றதாகும் அளவினது என்று சொற் கிடந்தவாறே பொருள் கொள்ளலாம். அன்றியும் ஊற்றுத்துணை ஆம் எனச் சொன்னிலை மாற்றி ஊற்றின் அளவினதாம். ஊற்று ஒப்பதாம் என்றும் பொருள் கொள்ளலாம்; ஊற்று என்பது ஊற்றுக்கோல் போல் என இயைவது, ஊற்றுப்போல் என இயைவதிலும் இடரில்லையாம். ஊற்று என்பது கிடந்தவாறு பொருள் தருவதை விலக்கிப் பற்றுக்கோட்டுப் பொருளுக்குக் கொண்டு சேறலே வலிந்து கூறலாம். அன்றியும் அடுத்த குறளிலேயே ஊற்றுக் கோல் என வெளிப்பட உவமையாய் ஆட்சி பெற்றிருப்பதறிந்தும் இவ்வூற்றையும் அக்கோலாகக் கொள்ளல் நூன் முறைக்குச் சாலாதாம். கல்விப் பயன் ஆற்று நீரோட்டம் அன்ன பயன் செய்வது எனவும், கேள்விப் பயன் ஊற்று நீர்ச் சுரப்பு அன்ன பயன் செய்வது எனவும் கண்டு கொள்ள இப்பொருள் உதவும் கற்றிலனாயினும் கேட்க என்பதற்கும் பொருந்தி நிற்கும். 10. வரலாற்றில் செய்துள்ள வன்கொடுமை செந்தமிழில் தோன்றிய சீரிய நூல் திருக்குறள். இஃது ஆங்கிலம் முதலாய பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்று உலகச் செல்வமாகத் திகழ்வது உலகறிந்த செய்தி. இப்பல்வேறு மொழி பெயர்ப்புக்களில் எல்லாம் நூற் பெயர், திருக்குறள், குறள் என்றும் ஆசிரியர் பெயர், திருவள்ளுவர் வள்ளுவர் என்றுமே குறிக்கப் பெற்றுள்ளன. இதுவே முறைமை. ஆனால், ஒரு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னர்ச் செய்யப் பெற்ற வடமொழி மொழி பெயர்ப்பொன்றில் திருக் குறளின் ஆசிரியர் பெயர் திருவள்ளுவராக இல்லை! அதனை இயற்றியவர் வல்லபாசாரியராம்! வல்லபரும் இல்லை; வல்லப ஆசாரியார்! வள்ளுவர் எவ்வளவு எளிமையாக ஆச்சாரியர் ஆக்கப் பெற்று விட்டார். வரலாற்றில் செய்யப் பெற்றுள்ள வன் கொடுமைகளுக்கு இஃதோர் எடுத்துக்காட்டு! வல்லபாசாரியரால் செய்யப் பெற்ற வடமொழி நூலின் மொழி பெயர்ப்பே திருக்குறள் என்பதற்கு வடவரா வர வேண்டும்? இங்கேயே ஆள் இல்லாமல் போய் விடுமா? வெறுவாயை மெல்லுபவர்க்கு இவ்வளவு கிடைத்தால் போதாதா? அல்லது தமிழகத்தில் நடக்காத - நடந்துவிடாத நிகழ்ச்சியா? தமிழர் உறக்கம் தெளியும் வரை உருட்டிய மட்டும் ஊதியம்தானே! இஃதென்ன கதையா? கற்பனையா? கயிறு திரிப்பா? எதுவும் இல்லை. இச்செய்தியைக் குறிப்பவரே ஸ்ரீ வல்லபன் என்னும் பெயரில் இருந்தே திருவள்ளுவர் என்னும் பெயர் உண்டாயிற்று என்று அரிதில் ஆராய்ந்து அறுபது ஆண்டுகளின் முன் செந்தமிழ் நாட்டில் உலா வர விட்ட அறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவர்களே. அவர் சொல்லாலேயே அறிவோம்! தஞ்சை சரவதி பண்டாரத்தில் திருக்குறட்கு மொழி பெயர்ப்பாயமைந்த வடமொழி நூலொன்று உள்ளதெனவும், இது நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஸமகிருத பண்டித ரொருவர் இயற்றிய தென்றும் இவர் குறளாசிரியரை வல்லபாசாரியர் என்ற பெயரால் வழங்கியுள்ளாரென்றும் டாக்டர் ஸ்ரீமாந் பி. எ. சுப்பிரமணிய சாதிரிகள் என்னிடம் ஒருகால் அறிவித்த செய்தி இங்கே குறிப்பிடத் தக்கது செந்தமிழ் தொகுதி. 8 பகுதி. 11 (1909 - 1910) ஆராய்ச்சித் தொகுதி பக்கம். 209 (1938). 11. காமத்துப்பால் காமசூத்திரத்து வழி வந்ததா? தமிழ்நெறித் தழைப்பில் வந்த நூல் திருக்குறள். அதன் காமத்துப்பாலோ, தொல்காப்பியத்தின் இலக்கியமாக வெளி வந்தது. எனினும், காமசூத்திரத்தின் வழி வந்தது காமத்துப் பால் எனப் புரியார் மட்டுமல்லாமல் புரிந்தாரும் வலிந் துரைத்து வருகின்றனர். அறத்துப்பால் மநுநீதி சாத்திர வழிப்பட்டது என்றும் பொருட்பால் அர்த்தசாத்திர வழிப்பட்டது என்றும் கூறுபவர், காமப் பெயரொற்றுமை கண்ட அளவில் விட்டு வைப்பரோ? தமிழ்த் திறம் மாறாத் தகவில் அமைந்தது, திருக்குறள் காமத்துப்பால் என்பதை, அதன் அதிகாரப் பெயராலும், வைப்பு முறையாலுமே வெளிப்பட அறியலாம். தமிழர்க்குத் தனிச்சிறப்பாக அமைந்தது பொருளிலக் கணம். அப்பொருள், அகம், புறம் என இருபாற்படும். அவ் வகப்பொருள் முதல், கரு, உரியென முப்பகுப்புறும். அம்முப் பொருள்களுள் முதலிற் கருவும், கருவில் உரியும் உயர்ந்தவை என்பது தொல்லாசிரியர் துணிவு. அவ்வுரிப் பொருளே பொருளாக அமைந்தது திருக்குறள் காமத்துப் பால். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவும் இவற்றின் நிமித்தமும் உரிபொருள்கள் என ஓர் ஒழுங்கில் வைத்தார் தொல்காப்பியர் (அகத். 14). இவ்வொழுங்கில் ஒரு சிறு மாற்றமும் செய்யாமல், அப்படியே போற்றிக் கொண்டார் திருவள்ளுவர். ஐந்திணை பற்றிக் கூறும் எத்தமிழ் நூலும் தொல்காப்பியர் வகுத்த உரிப்பொருள் வைப்பு முறையை அப்படியே போற்றிக் கொள்ளவில்லை என்பதை ஆய்ந்து காண்பார், வள்ளுவர் கொண்ட தொல்காப்பியக் கடைப்பிடியை வளமாக அறிவர்! காமத்துப்பால் 25 அதிகாரங்களைக் கொண்டது. தமிழ் நெறி உரிப் பொருள்களோ ஐவகைப்பட்டவை. ஆதலின், ஓர் உரிப் பொருளையும் அதன் சார்பையும் விளக்க ஐந்ததிகாரமாய், ஐந்து உரிப் பொருள்களுக்கும் ஐந்தைந்து அதிகாரங்கள் பாடித் தமிழ் நெறியை மெய்ப்பித்தார் தவ வள்ளுவர். 1. புணர்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் முதல் ஐந்து அதிகாரங்கள் : 1. தகையணங்குறுத்தல் 2. குறிப்பறிதல் 2. புணர்ச்சி மகிழ்தல் 4. நலம் புனைந்துரைத்தல் 5. காதற் சிறப்புரைத்தல். 2. பிரிதலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் இரண்டாம் ஐந்து அதிகாரங்கள் : 1. நாணுத் துறவுரைத்தல் 2. அலரறிவுறுத்தல் 3. பிரிவாற்றாமை 4. படர்மெலிந்திரங்கல் 5. கண்விதுப்பழிதல். 3. இருத்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் மூன்றாம் ஐந்து அதிகாரங்கள் : 1. பசப்புறு பருவரல் 2. தனிப்படர் மிகுதி 3. நினைந்தவர் புலம்பல் 4. கனவு நிலையுரைத்தல் 5. பொழுது கண்டிரங்கல். 4. இரங்கலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் நான்காம் ஐந்து அதிகாரங்கள் : 1. உறுப்பு நலனழிதல் 2. நெஞ்சொடு கிளத்தல் 3. நிறையழிதல் 4. அவர்வயின் விதும்பல். 5. குறிப்பறிவுறுத்தல். 5. ஊடலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் ஐந்தாம் ஐந்து அதிகாரங்கள்: 1. புணர்ச்சி விதும்பல் 2. நெஞ்சொடு புலத்தல் 3. புலவி 4. அவர்வயின் விதும்பல் 5. ஊடலுவகை ஒவ்வோர் ஐந்தனுள்ளும், இடை நின்றது உரிப் பொருளையும், முன்னும் பின்னும் உள்ளவை அதன் சார் நிலைகளையும் விளக்கி நிற்றல் கண்டு கொள்க. இத் தமிழ் நெறியை உரையாசிரியர்கள் அறியாரோ, பதிப்பாசிரியர்கள் பாராரோ எனின், அவர்கள் அறிந்தனர்; பார்த்தனர் என்பது மறுமொழியாம். 1904-ஆம் ஆண்டில் தி. செல்வக் கேசவராயரால் திரு வள்ளுவர் என்னும் நூல் இயற்றப்பட்டு வெளிப்பட்டது. அந்நூலில், காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்தினையும் முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றனுட் பெரும்பான்மையும் உரிப் பொருள்பற்றிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரே ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்ததிகாரத்தாற் கூறினார் என்னும் அருஞ் செய்தி வந்துள்ளது. அச்செய்தி, செல்வக்கேசவர் கண்டுரையோ எனின் பண்டுரை யேயாம் அது மணக்குடவருரை என்னும் குறிப்புள்ளது (பக். 19) ஆனால் மணக் குடவருரைப் பகுப்புகளில் இப்பகுதி காணப்படவில்லை. இஃதிவ்வாறாக, 1912 - இல் அறிஞர் மு. இராகவரின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி வெளிப்பட்டது. அதன் 48 - ஆம் பக்கத்தின் அடிக் குறிப்பாகக், காமத்துப் பாலைப் பெரும்பான்மை வடநூல் வழக்குப் பற்றியும் வள்ளுவர் கூறினார் என்பதே பரிமேலழகர் கருத்து. ஆயினும், மற்றொருசார் உரையாசிரியர் தமிழ் வழக்கே பற்றி அக்காமப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையும், முதல் கருவுரிப் பொருள்களுள் பெரும்பான்மை உரிப் பொருள்பற்றி - திணையொன்றற்கு ஐந்ததிகாரமாக - இருபத்தைந்ததிகாரங்களாற் காமத்துப்பால் கூறப்பட்டது என்பதாம் என்பது அது. இதனைக் குறிக்கும் இராகவர், 1909-ம் வருஷம் என்னாற் பதிப்பிக்கப்பட்ட திருக்குறட் பரிமேலழகருரைப் (பாக்கெட் ஸை) பதிப்பினுள் திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பு 16-ம் பக்கம் பார்க்க என்றும் தம் முதற் பதிப்புச் செய்தியையும் ஆங்குச் சுட்டுகிறார். எனினும் செல்வக்கேசவர் போல, மணக் குடவர் பெயரைக் குறித்தார் அல்லர். இஃதிவ்வாறாக வெளி வந்துள்ள மணக்குடவர் உரைப் பதிப்புகளில் காமத்துப்பால் முகப்பில், இதனுள் தகையணங் குறுத்தல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தல் ஈறாக அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் மூன்றும், நலம் புனைந்துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விதும்பல் ஈறாகப் பிரிந்து கூடலும் அதற்கு நிமித்தமும் அதிகாரம் பதினெட்டும், நெஞ்சொடு புலத்தல் ஊடலுவகை ஈறாக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் நான்கும், ஆக இரு பத்தைந்ததிகாரம் கூறப்பட்டது என்னும் செய்தியே இடம் பெற்றுள்ளது. செல்வக் கேசவர் குறிப்பிட்டுள்ளவாறு மணக்குடவர் உரைச்சுவடியில் இப்பகுதி இருந்திருக்குமாயின் இதனை ஏட்டிலிருந்து பெயர்த்து எழுதினோர் - பதிப்பித்தோர் - விடுத்துள்ளனரோ என ஐயம் கிளைத்தல் உறுதி! ஆனால், அவ்வையம் அகற்றுதற்குரிய குறிப்பு ஒன்று செந்தமிழ் முதல் தொகுதியிலே (பக். 246. ஆண்டு 1903) இடம் பெற்றுள்ளது. அச்செய்தி கொண்டே, செல்வக் கேசவரும் இக்குறிப்பை எடுத்துள்ளார் என்பதும் வெளிப்படுகின்றது: இவ்வுரைப் பாயிரம் இராமநாதபுரத்தைச் சார்ந்த துன் படக்கிக் கோட்டை முத்துவயிரநாதப் புலவர் வீட்டுத் திருக் குறட் பரிமேலழகருரையேட்டினும், திருநெல்வேலி வண்ணாரப் பேட்டைத் திருப்பாற்கடனாத கவிராயர் வீட்டு அவ்வுரையேட்டினும் வேறாக எழுதப் பட்டிருந்தது என்பது அக்குறிப்பாகும். இப்பாயிரம் பரிமேலழகர் உரை ஏட்டு படியொடு இருந்தது; ஆனால், வேறாக எழுதப்பட்டிருந்தது என்பது இக் குறிப்பால் வெளிப்படும். இரண்டு படிகளில் இவ்வொரு செய்தி ஒப்ப இருந்தமையால், ஒரு சாராசிரியர் கருத்து இஃதெனக் கட்டுரை ஆசிரியர் பெரும் பேராசிரியர் இரா. இராகவனார் குறித்தார். பொருட்பால் காமத்துப்பால்களின் தொடக்கத்தில் முன்னுரைப் பகுதி, மணக்குடவர் உரையில், காணப் பெறாமையால், பரிமேலழகர் உரையில் தவறாகக் கிடைத்த முன்னுரைப் பகுதியை மணக்குடவருரையெனச் செல்வக் கேசவராயர் கொண்டிருக்கக் கூடும்! அவ்வாறு கொள்ளுதற்குக் கூடாமை, கிடைத்துள்ள பொருட்பால், காமத்துப்பால் முன்னுரைகளின் முரண்பாட்டாலேயே - அவ்வுரை உரையன்று என்பது வெளிப்படுகின்றது. இஃதிவ்வாறாகப் பரிமேலழகர் உரைப் பாயிரத்தின் வேறாகக் கிடைத்துள்ள உரைப் பாயிரம் உள்ளங்கை ஒளி மணியாகக் காட்டுதல் உண்மையால் அஃது ஏற்றுப் போற்றத் தக்கதாகும். தமிழ் நெறியின் கட்டளைக் கல்லாகத் திகழும் காமத்துப்பால் காமசூத்திர வழிபட்டதன்று என்பதும் மெய்ம்மையாம்! 12. இயல்புடைய மூவர் இயல்புடைய மூவர் எவர் எனத் திட்டப்படுத்தப் படாமலே, மனம் போன போக்கெல்லாம் உரை போன திரு விளையாடலே காட்சி வழங்குகின்றது. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்னும் குறளில் இம்மூவர் வருகின்றனர். வள்ளுவர் நாளில் முத்தமிழ் மூவேந்தர் என்பன போல இயல்புடைய மூவரும் தெளிவாக அறியப் பெற்றிருந்தனர். அதனால் மூவர் என்ற எண்ணடியாகச் சுட்டி அமைந்தார். இயல்புடைய மூவர் தனிச் சிறப்பை இக்குறள் எப்படி வலியுறுத்துகிறது? இல்வாழ்வான் என்பான் துணை, இல் வாழ்வான் என்பான் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் ஆற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் நல்லாற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை, இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என அறுமடி அழுத்தம் தரும் அடைமொழி கொண்டு வலியுறுத்துதல் அறிக. பாயிர இயல் என்பதாம் நான்கு அதிகாரம் தாண்டி, நூலுள் முதல் இயல், முதல் அதிகார, முதல் குறளில் இயல்புடைய மூவர் சுட்டப்பட்டுள்ளனர். அதனை அடுத்தே துறந்தாரும் துவ்வாரும் முதலாய வருபவர். அடுத்த குறளின் நிறைவிலேயே இல்வாழ்வானாய தான் வருகின்றான். இம்முறை நோக்கி இயல்புடைய மூவரைக் காணல் முறை. இல்வாழ்வான் மூவர் என்றவுடனே தமிழ்நெறியை அறவே மறந்து தொல்காப்பியம் திருக்குறள் தோன்றிய தமிழ்கூறு நல்லுலக வழக்கியலைத் துறந்து - எட்டாத வட்டத்திற்கு இட்டுக் கட்டி உரை கூறுவதே ஏற்றமெனப் பழைய உரையாசிரியன்மார் சென்றனர். பின்னை உரையாசிரியன்மாரும் அவர் வழியே வழியாகச் சென்றனர். அவ்வுரை ஏற்காதென மறுப்போரும் மயக்கறுக்க மாட்டாமல் பலப்பல கூறினர். மெய்யுரை கண்டாரும் நிலைநாட்ட வலுவற்று ஐயுற்றனர்! இயல்புடைய மூவர் இயல்பு இவ்வாறாயிற்று! வேந்தன் சுற்றத்தார் துறவோர் என்பதொரு புத்துரை. மாணவர் தொண்டர் அறிவர் என்பதொரு புத்துரை. பார்ப்பனர் அரசர் வணிகர் என்பதொரு புத்துரை. தாய் தந்தை மனையாள் எனலுமாம் என்பதொரு புத்துரை. சைவர் வைணவர் வைதிகர் என்பதொரு புத்துரை. ஊர் மன்றத்தார் மூவர் என்பதொரு புத்துரை. இவ்வாறே இன்னும் பலப்பல புத்துரைகள். பழைய உரைகளோ மூவரை, பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்னும். இவருள், இயல்புடைய மூவரை எவரெனலாம்? மூவரைக் காண்டற்குச் சேக்கிழார் வழி காட்டுகிறார். வள்ளுவர் வாக்கு வழியிலேயே வழி காட்டுகிறார்! ஆதலால், எளிதாகப் பற்றிக் கொள்ள வாய்க்கின்றது. ஆனால் இருவரை மட்டுமே அவர் காட்டுகிறார்! இன்னொருவரைத் தேடிப் பிடிக்க வேண்டுமே! அதற்கு இளங்கோவடிகள் உதவுகின்றார். இவ் விருவர்க்கும் மேலாக வள்ளுவரே அழுத்தமாகத் தம் சொல்லாட்சியால் நிலை நாட்டி மெய்ப்பிக்கிறார். நூலாசிரியர் வழியிலேயே நூலுக்கு உரை காண்டலே சிக்கலற்றதும் செவ்விதானதும் ஆம். பெரியபுராணத்தில் அப்பூதியடிகள் புராணம் என்ப தொன்றாம். அதிலுள்ள செய்தியே இயல்பு அரண். அப்பூதியடிகளார் வளமனையில், நாவுக்கரசர் விருந்து உண்ணத் தொடங்கு முன், தம் வழக்கப்படியே நீறணிந்து கொள்கின்றார். வளமனையார்க்கும் முறை முறையே நீறு நல்குகின்றார். எப்படி? இயல்புடைய இருவருக்கும் பொருந்திய நீறுநல்கி என்பது அத்தொடர் (31). அவ்வியல்புடைய இருவர் எவர்? தாய் தந்தையராம் இருவர். இருமுது குரவராம் இவரொழிய, இன்னொருவர் வேண்டுமே! இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் என ஏங்கும் கோவலன், சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் என நெக்குருகுகின்றானே! அடிகள் காட்டும் காட்சியில், இயல்புடைய மூவரைச் சுட்டி வள்ளுவர் வழியில் அறவோர்க் களித்தல் அந்தணர் ஓம்பல் துறவோர்க்கு எதிர்தல் விருந்தெதிர் கோடல் என்பவற்றை இழந்தமையைக் கண்ணகி வாயிலாய்ச் சுட்டுகின்றாரே! இல்வாழ்க்கை முதல் முப்பாட்டும் ஒருப்பட்ட இடம் ஈதன்றோ! தாய், தந்தை, மனைவி எனலுமாம் என்றவரும் அவர்கள் வாழ்க்கைத் துணையிலும் மக்கட் பேற்றிலும் பேசப்படுவர் என்று தாமே மறுத்தார். அரசன் ஆசான் ஆன்றோர் என்றுமாம் என்றும் உரைத்தார். மூவரைத் தாய் தந்தை மனைவி என்றும், பெற்றோர் மனைவி மக்கள் என்றும் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. என்ன? பின்னே தென்புலத்தார்...... எனவரும் குறட்பாவில் ஒக்கல் இருத்தலான் என்க. ஒக்கலுள் பெற்றோர் முதலியோர் அடங்குதலை ஓர்க. ஒக்கலுக்கு வேறு பொருள் காண முயல்வது வீண் என்று இக் கருத்தாளரை மறுத்தும் பிறர் வரைந்தனர். ஒக்கல் என்பது உறவினர். உற்றார் வேறு! உறவு வேறு. உற்றார் உறவினர் என்னும் இணைமொழி இதனை மெய்ப்பிக்கும். தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் ; ஏனைக் கொண்டும் கொடுத்தும் தொடர்பானவர், உறவினர் என்க. தாய், தந்தை, மனைவி என்பாரே இயல்புடைய மூவர் என்பது இயல்பு அடையால் விளங்கும். பிறர் பிறரெல்லாம் இயல்பொடு செறிந்தார் அல்லர். இடை இடையே தொடர்பும் விலக்கும் உடையரே! எவ்வொருவரும், இவர்க்கு மகவாகப் பிறக்க வேண்டும் எனத் திட்டப் படுத்திக் கொண்டு, அவ்வாறு பிறப்பது இல்லை; எவ்வொருவரையும் எமக்கு இவரே மகவாதல் வேண்டுமெனப் பிறப்பிப்பதும் இல்லை! இயற்றை முறையிலேயே பெற்றோர் அமைகின்றனர். கருத்தாங்கி உருத்தாங்கி திருத்தாங்க இயல்பாக வாய்க்கின்றனர். ஆகலின் அவர் இயல்புடைய இருவராம்! இனி, மனைவி இயல்பாய் அமைபவளோ? திருமணம் மேலுலகிலேயே உறுதிப்படுத்தப் படுகின்றது என்பது மறை மொழி. தமிழ்மொழியும், அதுவே : ஒன்றுவிக்கும் ஊழால் தலைவனும், தலைவியும் ஒன்றி உயர்ந்த பால தாணையால் தலைக்காதல் கொள்கின்றனர் ; கணவன் மனைவி ஆகின்றனர் என்பது தொல்காப்பியம் (களவு. 2) பாலாவது ஊழ். தாய், தந்தை, மனைவி என்பார் போல அன்பர் நண்பர், ஆசிரியர் மாணவர், அறிஞர் அரசர், தொண்டர் துறவர் - இல்வாழியின் குடிக்கு முற்றாக உறையும் இயல்புடையரோ? விரும்பின் செறியலாம்! வெறுப்பின் பிரியலாம்! பெற்றோர் பிள்ளையுரிமை, கணவன் மனைவி, உரிமை - அத்தகையதோ? இறப்பினும் அகலா இயல் தொடர்பினர் அவரல்லரோ? தன் வாழ்வைத் தந்தவர் இருவர்; தன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்தவர் ஒருவர்; இம்மூவர்க்கும் செய்வன செய்து நிறைவினைப் பெறாக்கால் அவர் துணையால் இயல வேண்டிய இல்லறம் இனிது இயலுமோ? இல்லுறையும் இவர்கள் நல்லுதவியும், நல்லுரையும் இல்லாக்கால் இல்லறம் சொல்லறம் ஆவதன்றி நல்லறம் என்னவும் படுமோ? நாணுத் தகவுடைத்தே காணுங்காலே என்பதாகவன்றோ அவ்வில்வாழ்வு அமைந்து பழிச்சுமை தாங்கியாய்ப் பளிச்சிடும்! இல்வாழ்வு இல் - வாழ்வாக அமைந்து விடலும் வியப்போ? இல்வாழ்வான் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும் என்னும் வள்ளுவர், அவனை முன்னேயே பேணிக் கொள்ள வேண்டும் என்னாராய், இறுதிக்கண் வைத்தார். பண்பாளர் முறை அதுவே! ஆனால், அன்னை தந்தை ஆட்டி ஆகியவரை அப்படிக் கடைசிக்குத் தள்ளல் ஆகாது; அஃது அறமன்று என்பாராய் முன் வரிசையிலே அவர்களைப் போற்றிக் கொள்ள வைத்தார் வள்ளுவர். குடும்பத்தில் இருந்தே உலக நலப்பாடுகள் கொழிக்க வழிவகை கண்டவர் வள்ளுவர். ஆகலின், குடியினர்க்கு நல் லாற்றின் நின்ற துணை என்றும், துறந்தார் முதலியவர்க்குத் துணை என்றும், தென்புலத்தார் முதலியவரை ஓம்பல் தலை என்றும் அவ்வவர் நிலை விளங்கச் சொல்லாட்சி செய்தார். தமிழறம், இல்லறம், துறவு என இரண்டே. அவற்றுள் துறவரை அடுத்த குறளில் கூறுதலால் இக்குறளில் கூறுபவர் இல்லறத்தாரே; அவரும் தந்தை, தாய், மனைவியாய மூவரே! அவரே இயல்புடையார்! பிறர் பிறர் அயல்புடையர் என்க. 13. அயல்புடைய மூவர் மூவரை ஆய்ந்து கொள்ள வைத்த வள்ளுவர், அயல்புடைய மூவர் இவர் என்பதைத் தாமே சுட்டியுள்ளார். ஆனால் பொருள் காணுதலில் அம்மூவர் எவர் என்பது சிக்கற்பட்டுள்ளது. வள்ளுவர் வாய்மொழி தெளிவாகவே உள்ளது. மனம் போல் பொருள் காணலில் நேர்ந்துள்ள சிக்கல்களே அவை என்பது வெளிப் படுகின்றது. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. என்பது இயல்புடைய மூவரைச் சுட்டும் குறள். இவண், துணை என்பதை எண்ணவேண்டும். இயல் புடைய மூவர்க்கு நல்லாற்றின் நின்ற துணை என்றதையும் இவ்வயல்புடைய மூவர்க்கு வாளா துணை என்றதையும் எண்ணுதல் வேண்டும், துணை என்பதன் பொருள் என்ன? இரண்டு என்பதே பொருள். இரு பொருள் இணைவே துணை எனப்படும். துணையடி நீழல் என்பதை எண்ணுக. அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம் என்பதையும் துணையோடல்லது நெடுவழி ஏகேல் என்பதையும் இணைத்துக் காண்க. துணை போன்றதே இணை என்பதையும் பிணை, புணை என்பவையும் அவற்றின்வழி வந்தனவே என்பதையும் கருதிப் பார்க்க. துணையுள் சொற்றுணை என்பதொன்று. அதனை நாத்துணை என்றும் கூறுவர். நாத்துணையாக இருக்கும் நங்கை நாத்துணையாள் (நாத்தினாள்) என வழங்கப் பெறுவதும் அறிக. நாத்துணை நங்கையை இளங்கோ வடிகளார் நாத்தூண் நங்கை என்பார். இனி வழித்துணை, மனத்துணை, துயர்த்துணை, வாழ்க்கைத்துணை என்னும் துணைகள் எல்லாம் வெளிப்படையே. கடவுள் துணை என்பதில் கடவுளைத் துணையாகக் கருதுதல் வெளிப்படை. ஆனால் கடவுளுக்கு நாம் துணையோ எனில் இல்லையாம். அதனால் அங்குத் துணை என்பது இணை என்னும் பொருளில் நீங்கி வழிப் பொருளாக அருளின் மேல் நின்றது. துணை என்னும் சொற்பொருளை நுண்ணிதின் நோக்கினால் வள்ளுவர் கூறும் துறந்தார் முதலிய மூவரும் உயிரோடு இருப்பவர்; துணையாய் - துணைக்குத் துணையாய் - உதவி பெறுபவராய் அமைபவர் என்பது வெளிப்படும். வெளிப்பட, இறந்தார் என்பதற்கு உயிர் நீத்தவர் என்னும் பொருள் பொருந்தாமை உணரப்படும். இறந்தார் என்பவரும் இருப்பவரே என்பதும் வெளிப்படும். தீரத் துறந்தார், பற்றினைப் பற்றி விடாதவர், என்று துறவில் கூறப்படுபவரே துறந்தார். தமிழ் நெறியை விடுத்து அயல் நெறிக்கு ஆட்பட்டு உரை கண்டதாலேயே பரிமேலழகர், களைகண் ஆனவரால் துறக்கப் பட்டார் என்று உரை கூறினார். இயல்புடைய மூவர்க்குப் பிரமசரியன் வானப்பிரத்தன், சந்நியாசன் என்பவரைக் குறித்து விட்டமையால் துறந்தார் என்பதற்கு நேர் பொருள் காணாமல் வேறு பொருள் காட்டினார். பிறரும், வருணத் தினையும் நாமத்தினையும் துறந்தார், மண், பெண், பொன் இந்த மூவகை ஆசையைத் துறந்தார் கடவுளைப் பற்றி நாணினைத் துறந்தார் குடிப்பிறந்தாரால் ஓரோர் காரணத்தினால் வெகுண்டு துறக்கப்பட்டார் எனப் பலப்பல கூறினார். இனித், துவ்வாதவர் என்பது சிக்கலற்றது. துன்புருறூஉம் துவ்வாமை என்பார் வள்ளுவர். துவ்வாமை உண்ணாமை; உண்ணுவற்கு வாய்ப்பு இன்மை. அஃதாவது வறுமை. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என வருந்தி வகையற்று இல்லத்தில் ஒடுங்கிக் கிடக்கும் வறியரே துவ்வா தவர் என்க. இறந்தார் என்பதற்கு, ஒருவருமின்றித் தன்பால் வந்து இறந்தவர் என்று உரை கூறி, இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்துதலை விளக்கினார் பரி மேலழகர். அதனால் பழையவுரைகளுடன் புத்துரைகள் சிலவும் இவ்வுரையையும் விளக்கத்தையும் மேற்கொண்டு இயல்கின்றன. இறந்தார்க்கு எப்படி இருப்பவர் துணையாகக் கூடும்? இறந்தார்க்குச் செய்யும் கடன்கள் கடன்களே அன்றித் துணை என்பதாமோ? அதனால், கல்வியினால் மிக்கோர் : வறுமையைக் கடந்து மிக்க செல்வத்தை உடையார் ; குடும்பத்தை விட்டுக் கடந்தவர்; யாருமற்றவர்; தாமாக வாழ முடியாத இளையரும் முதியரும்; அளவு கடந்த வாழ்க்கை நடத்திக் கெட்டுப் போனவர் என உயிரோடு இருப்பவர்களைச் சுட்டினர் முன்னும் பின்னும் உரை கண்டோர்கள். இறந்தார் என்பதற்குச் சொற்பொருள் காணில் தெளிவாம். இல்லிறப்பான் (146) என்னும் சொல்லாட்சி திருக்குறளில் உள்ளது. அதன் பொருள் இல்லத்தைக் கடத்தல் என்பதாம். இறத்தல் என்பதற்கு எட்டாமல் போதல், கழிதல், சாதல், நெறி கடந்து செல்லல், மிகுதல், நீங்குதல் ஆகிய பொருள்களை அகர முதலிகள் தரும். இவையெல்லாம் நீங்கல் பொருளில் வரு வனவே. வீட்டுத் தாழ்வாரத்தில் சுவரைக் கடந்த பகுதிக்கு இறப்பு (இறைவாரம், இறவாரம்) என்பது பெயராக இருத்தல் அறிக. ‘V£il¡ f£o ïwthu¤âš it! என்னும் பழ மொழியும் நினைக. ஆகலின் ஊணின்றி வறியராய் வீட்டை விட்டு வெளியேறியவர் இறந்தார், எனப் பெற்றனராம். துவ்வாதார், ஊணின்றி இல்லகத்திருக்கும் மானம் போற்றும் வறியர் என்றும், இறந்தார் இல்லகம் கடந்து ஊணுக்காகப் பிறர் உதவி நோக்கி வெளிப் பட்டவர் என்றும் பொருள் கொள்க. இருக்கும் இடந்தேடி வந்து என்பசிக்கு எடுத்து இடுவோர் உண்டென்றால் உண்பேன் என்னும் பட்டினத்தார் போலும் துறவியர் முதலாமவர். பொங்கிய பானையில் சோற்றுப் பொறுக்குக் காணாமல் வாய் விட்டு அழும் குழவியை அமர்த்த மறப்புலி உரைத்தும், மதியம் காட்டியும் வெதும்பி வீட்டுள் அடைந்து கிடக்கும் தாயையும், மக்களையும் உடைய கழகப் பெருஞ்சித்திரனார் அனையர் இரண்டாமவர். பெற்றவராலோ, பிள்ளைகளாலோ, உடன் பிறப்புகளாலோ, ஆள்வோராலோ, அயலாராலோ புறக்கணிக்கப்பட்டும், வெருட்டப்பட்டும், அலைக் கழிக்கப்பட்டும், வறுமைப் பட்டும், இல்லகங் கடந்து இரவா இரப்பாளராய் வருபவர் மூன்றாமவர். இம்மூவர் இயலும் நிலையும் சூழலும் தேவையும் வேறு வேறானவை யாகலின், தனித்தனி எண்ணினார். துறந்தார், ஊணிலா வறியர், பேணுவாரின்றி வெளிப்பட்டார் என்னும் மூவரே துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்க. 14. ஐம்புலத்தாருள் தென்புலத்தார் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பாரே ஐம்புலத்தார் எனத் திருவள்ளுவரால் எண்ணப்படுகின்றார். இவருள் முன்னிருவரே ஆய்வுக்குரியவர் ஆயினர். பின் மூவரும் வெளிப்படையாய் விளக்கம் பெறுகின்றனர். பண்டைய உரையாசிரியர் அனைவரும், பிற்றை உரை ஆசிரியருள் பலரும் தென்புலத்தாரையும் பிதிரர், தேவர் எனவே கொண்டனர். அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், மறுக்கவோ, வேறு பொருள் காணவோ வேண்டியதென்ன? வள்ளுவர் வாய்மொழி பிதிரர், தேவர் என்னும் பொருள்களை ஏற்கத் தடையாயுள்ளது. நூலாசிரியர் உள்ளகம் அவர்தம் சொல்லக ஊர்தியிலே உலா வருவது என்பது, உணரக் கூடியதாம். தென்புலத்தார், தெய்வம் என்பாரை ஓம்புதல் கூடுமா? அவ்வாறு ஓம்பும் வகை என்ன? ஓம்புதல், என்பதன் பொருளை அறியின் புதுப் பொருள் காண எவரையும் தூண்டும். அப்படித் தூண்டப் பெற்றாரே, தென்புலத்தார்க்கும் தெய்வத்திற்கும் புத்துரை காணத் தலைப்பட்டுள்ளனர். அத்தலைப்பாட்டுள் ஒன்றே இக்கட்டுரையும். ஓம்புதல் என்பது பேணுதல், பாதுகாத்தல் என்னும் பொருள் தரும் பழஞ்சொல். குடிபுறங் காத்தோம்பி (திருக். 549), ஓம்பும் ஊர் (புறம் 329) ஓம்பினர் காப்போர் (மலைபடு. 343) பிழையுயிர் ஓம்புமின் (சிலப். 30 : 195) ஈற்றியாமை தன்பார்ப் போம்பலும் (பொருந. 186) என்பவற்றை எண்ணினால் இப் பொருள் விளக்கம் ஆகும். பிதிரரையும், தேவரையும் இப்படி ஓம்பக் கூடுமா? ஒப்புடன் முகமலர்ந்து வரவேற்று ஓம்புவது விருந்து, ஊணும், நீரும், உடையும், மருந்தும், பிறவும் தந்து பேணுவது விருந்து! அதுவே விருந்தோம்பல். விருந்தோம்பல் சிறப்பை விளம்பவேண்டுமா? விருந்து தானே, ஊடல் போக்கிக் கூடல் அருளும் கொடைப் பொருள். பகைவர் ஆவே ஆயினும் அதற்கு நலிவும் நைவும் இன்றிப்புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, வெருட்டாமல் ஓட்டாமல் காலார நடக்க விட்டுக் கொண்டு வரும் வெட்சி மறவர் வினை, ஆதந்தோம்பல் எனப் புறத்துறையில் அறத்துறையாய்த் திகழ்வதை இலக்கணர் எவரே அறியார்? ஊரும் உற்றாரும் உறவும் உழுவலன்பும் ஒருங்கே விடுத்துத் தலைவனே தஞ்சமாய்ச் செல்லும் நெஞ்சமர் தலைவியைத், தலைவன் கையடையாய்த் தோழி அருளிக் கரைந்துருகும் காதற் கிளவிவே ஓம்படைக் கிளவி என்பதைப் புதுவழக்கெனப் புகலக் கூடுமோ? (தொல். 581, 1060). ஓம்பினேன் கூட்டை வாளா என இரங்குகிறாரே நாவரசர்; ஓம்பாது உண்டு கூம்பாது வீசிய புகழைப் பேசுகின்றதே புறப்பாடல்; ஓம்புதலும், பரிந்தொம்பல் வேண்டுமென மொழிகின்றாரே வள்ளுவர்; விருந்தோம்பல் ஓம்பா மடமை என்கிறாரே அவர்! ஓம்பின், அமைந்தார் பிரி வோம்பல் என்கிறாரே வள்ளுவ வாய் மொழித் தலைவி! உடலை, உயிரை, ஊரை, நாட்டை ஓம்பல் அன்றிப் பிதிரரையும் தேவரையும் ஓம்பக் கூடுமோ? அவரை நினைத்துப் போற்றலாம்; படையலிடலாம்; வாழ்த்தலாம்; வணங்கலாம்; பரவலாம்; பரிந்து உருகலாம்; அவரை ஓம்பக் கூடுமோ? ஆகலின் ஓம்புதற்குரிய தென்புலத்தாரும், தெய்வமும், விருந்தினர் போலவும் ஒக்கல் போலவும், தன்னைப் போலவும் உயிரோடு உறைந்து உலகிடை உலவி வாழ்பவரே எனக் கொள்ளுதல் தகவாம். அவருள் தென்புலத்தார் எவர்? பிதிரர் அல்லர் என்பதை ஓம்புதல் சொல்லால் விளக்கினோம் எனின், பின்னும் அவ்வள்ளுவச் சொல்வழியாகத் தானே புதுப்பொருள் காணவேண்டும்? அதற்கு உதவும் சொல் எது? உதவும் சொல் தென்புலத்தார் என்னும் சொல்லே! தென் என்பதன் பொருள் என்ன, அழகு; இனிமை; தெற்கு; தென்னுதல்; தேன்; வண்டு என்பன பொருள். இவற்றைத் தழுவிய பொருளும் உள. புலம் என்பதன் பொருள் என்ன? அறிவு, குடியிருப்பு, சுவை, ஒளி முதலிய ஐம்புலம்; திசை, புன்செய், நிலம், வயல், நூல், நூலறிவு என்பன பொருள். இவற்றைத் தழுவி வரும் பொருள் களும் உள. புலந்தொகுத்தது தொல்காப்பியம். புலனன் குணர்ந்த புலமையோரைச்சுட்டுவதும் அது வனப்புகளுள் (நூல் வடிவுகளுள்) ஒன்று. புலன்; புலப்படுகின்றது புலப்படவில்லை என்பவை அறிவு, அறியாமைகளை விளக்கும் வழக்குச் சொற்கள். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் ஐங்குறு நூற்றைத் தொகுத்துத் தமிழ்ப் பாவையாகத் தந்த புலமைச் செல்வர். அறிவின் எல்லை புலவரை எனப்படும். புலவரை அறியாப் புகழைப் புகலும் பரிபாடல். புலவரை இறந்த புகழைப் போற்றும் புறநானூறு! உவகை தரும் நிலைக்களங்கள் நான்கனுள் அறிவும் ஒன்று என்பது தொல்காப்பியம். செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே என்பது அது. புகை புகா இடத்தும் புகுந்து பகைத்திறம் காண வல்லான் புலனறி சிறப்புக்கு உரிமை பூண்டவன் என்பது புறப்பொருள் இலக்கணம். புலன்களின் வழியாக அமைவதுதானே புலம், புலப்பாடு, புலமை, புலவன் என்பன. புலவர்களோடு கூடி மகிழும் இன்பத்தை வீட்டுலகுக்கு மேம்பட்டதாகக் கூறுவது ஒரு நூல்; புலவர்ப் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தியும் பெறுவர் என்பது ஒரு நூல். புலவர் பாடும் புகழை இழப்பதைப் பேரிழி வாகக் கூறுவது ஒரு நூல். உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதலைப் புலவர் தொழிலாகக் கூறுவது திருக்குறள்! இவற்றால் தென்புலத்தார் என்பதன் பொருள் புலப்படுமே! இனிய அறிவாளர், தேர்ந்த அறிவாளர் என்பதே பொருள். பழநாளே புலமையை மதித்துப் போற்றியது தமிழ் மண்! அதற்கெனவே, முருகாற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவைகளைக் கண்டது தமிழ் மண்! புலவர்க்கு அரசு கட்டிலையும் அமைச்சுக்கட்டிலையும் வழங்கிய அருமை உடையது இந்த மண்! நாட்டு வேந்தனாகத் திகழ்ந்தவனே பாட்டு வேந்தனாகவும் திகழ்ந்தது இத் திருமண்! ஆதலால் வழிவழி, புலமையைப் போற்றுதல் வீட்டுக் கடமையும் நாட்டுக் கடமையுமாகத் திகழ வேண்டும் என்று கருதிய, அவரே புலவர் எனப்பட்ட திருவள்ளுவர் தென்புலத்தாரைச் சுட்டினார். பாட்டுப் பாடுபவர் தாம் புலவரா? எத்துறையில் திறம் பெற்றவரும் புலவரே, புலமையரே! அவரைப் போற்றி, அவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்யாமையால் இந்நாட்டின் புலமைச் செல்வங்களெல்லாம் வெளிநாட்டுச் செல்வங்களாகிக் கொண்டு வருதல் கண்காணத் தோன்றவில்லையா? அறிவுச் செல்வர்கள், ஆராய்ச்சி வல்லார்கள், புதியன புனைவாளர்கள் - வேடந்தாங்கலுக்குப் பறவைகள் படையெடுப்புப் போல் - வெளிநாடுகளைத் தேடிச் செல்லவில்லையா? அறிவுச் செல்வர்களைப் போற்றி அவர்க்கு வேண்டும் வாய்ப்புகளைச் செய்ய வகையற்று ஒடுக்குகின்ற - அல்லது வெளியே ஓட்டுகின்ற - இந்நாட்டுக் கொடுமையை உணர வல்லார், அறிவுச் செல்வரை வீடும், ஊரும், நாடும் போற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்வர்! தம்மைப் பற்றியும் தம் குடும்பத்தைப் பற்றியும் எண்ணாது என் கடன் பணி செய்து கிடப்பதே எனத் தொண்டிலே ஊன்றியவர் தென் புலத்தார். அவர் தேடி வாராது, உதவி தேடி, ஓடிவர வேண்டும்! அக்குறிப்பே வள்ளுவர் குறிப்பு. நாட்டுத் தொண்டுக்கே தம்மை முழுதுற ஒப்படைத்த முழுதுறும் அறிஞர் வ. உ. சி. அன்றே சொன்னார் ; எழுதினார். தென்புலத்தார் ; தென் - அழகிய; - அறிவு, அழகிய அறிவானது மெய்யறிவு தமிழ்த் தென்றல் திரு. வி. க. எழுதினார் : தென்புலத்தார் : குருமார். வள்ளுவர் காப்பியம் பாடிய பெருமகனார் பாடினார் : வானறிவர், வன்புலத்தை வென்றோர், மனம் நிறை காட்சியர், தென்புலத்தார் தென்புலத்தார் என்பவர் தேர்ந்து பலகலையும் நன்புலத்தில் நன்காய்ந்த நற்கலைஞர் தன்னொழுக்கும் தாய்மையும் சார்ந்தோர்க் கினிமையும் துன்னும் அகம்புறம் தூய்மையும் - மின்னிய தென்புலத்தார் தென்படுதல் என்பது தோன்றுதல், வெளிப்படுதல் என்னும், வழக்கில் உண்மை இன்றும் அழிந்து படவில்லையே! தென்புலத்தார், - இனிய - சீரிய - அறிவாளர், புலமையாளர் குருவர் என்றால் அவரைப் போற்றுவது எப்படி? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னேயும் திகழ்ந்த குருகுலக் கல்வி முறையை இக்கால முதியவர்கள் நன்கு அறிவரே! அக் குருவர்க்குச் சம்பளம் எவர் தந்தார்? ஊர் மக்களுக்குக் கற்பித்தவரை, ஊரே காத்தது! வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வி தந்தவரை வீடே, வீட்டில் ஒருவராகக் கொண்டு புரந்தது! அரிசி, பருப்பு, காய்கறி, விறகு என வேண்டும் பொருள்களை விரும்பித் தந்தது! ஊருக்குத் தொண்டர் ஆசிரியர். அவ்வாசிரியர்க்கு ஊரே தொண்டு பூண்டது. கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லாத அவையும், பகுத்துண்ணும் தன்மை இல்லார் அயலிருப்பும் நன்மை பயவா எனத் திரிகடுகம் பேசிற்று. இன்று கற்பிப்பார் நிலைமாறிற்று! கவனிப்பார் நிலையும் மாறிற்று. அறிஞரைப் போற்றி அவர் வழியில் நில்லாத - செல்லாத வீடும், நாடும் உய்யா! ஆதலால், புலமையரைப் போற்றுக! புலமையரைப் பேணுக! அப்பேணுதலைத் தலைக் கடமையாகக் கொள்க! என்னும் குறிப்பினதே தென் புலத்தார்... ஓம்பல் தலை என்பதாம். 15. தென்புலத்தார் திருக்குறள் இல்வாழ்க்கை மூன்றாங் குறளில் முற்படச் சுட்டப்படுபவர். தென்புலத்தார் என்பவர் ஆவர். தென்புலத்தார் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், பிதிரர் எனப் பொருளுரைத்து, பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்திசையாதலின் தென்புலத்தார் என்றார் என்று விரித் துரைத்தார். இரண்டாம் குறளில் வரும் இறந்தார் என்பதற்கு, ஒரு வருமின்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் என்று பொருள் கூறி இறந்தார்க்கு நீர்க் கடன் முதலிய செய்து நல்லுலகிற் செலுத்துதல் என விரித்தமையால், இவண் அதனைக் கூறாமலும், தென்புலத்தாரை ஓம்புவதைக் காட்டாமலும் அமைந்தார். தென்புலத்தார் என்பவர் பிதிரர் தாமா? தென்புலத்தார் பிதிரரே என்பதற்கும், அவர்க்குக் கடனிறுத்தல் புதல்வர் கடன் என்பதற்கும், புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்றாகக் காட்டப்பட்டு வருகின்றது. முதற் கண், அப்பாடல் பொருள் அதுதானா என்பதைக் கண்டறிதல் இவ்வாய்வுக்கு வேண்டத் தக்கதாம். ஆவும் 1ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை என்பது மேற்காட்டிய புறப்பாட்டு (9). 1. (ஆவும் ஆனியல் என்னும் தொடர், ஆவும் ஆவியல் என்றோ, ஆனும் ஆனியல் என்றோ ஓரொழுங்கில் இருந் திருத்தல் வேண்டும். ஆவும், மாவும், கோவும் (ஆ - உம்; மா - உம்; கோ - உம்) என்று வருவது போல் ன் பெற்று ஆனும், மானும், கோனும் என்றும் வரும். ஆமாகோ னவ் வணையவும் பெறுமே என்பது நன்னூல். ஓரொழுங்கின்மை ஏடு பெயர்த்தோரால் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அதுவும் உரையாசிரியர் காலத்திற்கு முற்படவே நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது; ஆவும் ஆவினதியல் பையுடைய எனவரும் அவருரையால் தெளிவுறும்.) இதற்குப் பழைய உரைகாரர், ஆவும் ஆவினதியல்பை உடைய பார்ப்பனரும் மகளிரும் நோயுடையீரும் பாதுகாத்துத் தென்றிசைக் கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும் பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதீரும். எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம். நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று அறநெறியைச் சொல்லும் மேற்கோள் என்றார். தென்புல வாழ்நர் இறந்தோர் தாமா? புதல்வர் கடன் பிண்டோதகக் கிரியைதானா? வடபுலம் என்பது வடநாடு என்றும், தென்புலம் என்பது தென்னாடு என்றும் பயில வழங்கும் வழக்கு பாட்டு தொகை பெரும் பாவியம் ஆகியவற்றில் உண்டே! தென்புலங் காவலர் மருமான், குணபுலங் காவலர் மருமான், குடபுலங் காவலர் மருமான் எனச் சிறுபாணாற்றுப் படை முறையே பாண்டியனையும் சோழனையும், சேரனையும் வெளிப்படச் சுட்டுகின்றதே! தென்புல வாழ்நர் எனத் தொடர் இருந்தும், இறந்தார் மேல் ஏற்றி வைத்தல் ஏற்கத் தக்கதா? அருங்கடன் என்றால் சோற்று நீர்க்கடனை அன்றி வேற்றுக் கடனொன்றும் இல்லையா? கடன் இறுக்கும் என்பது எத்தகைய அரிய ஆட்சி! அரசிறை: இறை இறுத்தல் இவையெல்லாம் அரசுக்கும், நாட்டுக்கும் செய்யும் கட்டாயக் கடன்கள் அல்லவோ? கட்டாயம் என்பதே கட்டு ஆயம் (அரசிறை) என்னும் சொல் வழியாகத் தீராக் கடமை என்பதை வலியுறுத்துவதே யன்றோ? ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்னும் பொன்முடியார் பாட்டு (புறம். 312), என்ன கடனைப் புதல்வர்க்கு அறுதியிட்டு உரைக்கின்றது? இவற்றையெல்லாம் எண்ண வேண்டாவா? இனித், தென் புலவாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் என்பதற்குத் தென்னாட்டு வாழ்பவர்க்கு அரிய கடமையினைச் செலுத்தும் என ஒரு நாட்டை மட்டும் சுட்டலாமோ எனின், இப்பாட்டுடைப் பெருவேந்தன், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி என்பதை அறியின், அவன் நாட்டு வாழ்நர்க்கு ஆற்றும் கடனைச் செய்தற்காம் மக்கள் என்பது தகவேயன்றோ! ஒருவர் வாழ்நாள் முடியும்முன் வழிவழிக் கடமையை மன்பதைக்கு ஆற்றுமாறு, மக்கட்பேறு பெறுதல் வேண்டும் என்பது தண்டமிழ் நாட்டுத் தலை வழக்காக இருந்ததால் அல்லவோ, வீறுசால், புதல்வற் பெற்றனை இவணர்க்கு எனப் பதிற்றுப் பத்துப் பாடுகின்றது! இவணர் என்பார் இவ்விடத்து வாழ்வார் அல்லரோ! இக்கொள்கை ஊற்றத்தால் அல்லவோ, வடக்கிருந்த கோப்பெருஞ் சோழன் தன்னொடும் வடக்கிருக்க வந்த புலவர் பொத்தியாரை நோக்கிப், புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா எனக் கட்டளையிட்டு நெட்டுயிர்த்தேக வைத்தான்! ஆகலின், புறப்பாடல் காட்டும், தென்புல வாழ்நர் பிதிரர் அல்லர்; தென்னாட்டாரே என்றும், அருங்கடன் இறுத்தல் சோற்றுநீர்க் கடனன்று; நாட்டுக்குக் கடனே என்றும், கொள்ளத் தக்கனவாம். இப்பொருளே, வழக்கொடு வாய்ந்து வழிவழிச் சிறக்கத் தக்கவையாம்! இனி, வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த, வெல்போர் எனவரும் பதிற்றுப் பத்து, மயக்கமற இருந்தும், அதன் குறிப்புரையோ இல்லா மயக்கத்தை வல்லாங்கு ஊட்டுவதாய் அமைந்து விட்டது. பெரியோரிடத்தே வணங்கிய மென்மையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையையும் உடைய இளந் துணையாகிய புதல்வர்களைப் பெற்றமையால் நின்குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி இல்லறத் தார்க்குரிய பழைய கடன்களைச் செய்து முடித்த வெல்லும் போரைச் செய்யும் தலைவனே என்பது அது (பதிற். 70). பெற்றோரைப் பேணுதல், பிறந்தோர் பிறவிக் கடன் ஆதலின், தந்தை தாய்ப் பேண் என்பது குழந்தைக் கல்வி ஆயிற்று! முதுமைச் செல்வத்தைப் போற்றுதல் வழிவழி முறையாக நிகழ்ந்து வருதலில் முதியர்ப் பேணிய என்பது வழக்காறாகத் திகழ்ந்தது. வாழ்வைத் தந்த பெருமக்களுக்கு வாழ்நாளெல்லாம் கடமை யாற்றினாலும் ஈடாகாது என்பது வெளிப்படையாக இருக்கவும், அவர் தம் முதுமையிலேனும் பேணிக் காத்தல் கட்டாயம் ஆகலின் அது தொல்கடன் இறுத்தல் எனப்பட்டதாம். இருக்கும் முதியரை விடுத்துப் போற்றுதல் இவண் கூறப் பெற்றதில்லை என்க. ஆதலான் பதிற்றுப் பத்திற்குப் புத்துரை கண்ட உரை வேந்தர் ஔவை அவர்கள், இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி என்பதற்கு, இளந்துணையாகிய மக்களைக் கொண்டு முதியவராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து என உரைவரைந்தார். மேலும், மகப்பேற்றினால் பிதிரர் கடன் கழியும் என்னும் வடவர் கொள்கை தமிழ்நாட்டார்க்கு இல்லை. திருவள்ளுவர், மகப்பேறு பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற கரியாம். என்று தமிழியல் விளக்கமும் அவர் வரைந்தமை பேணிக் கொள்ளத் தக்கதாம். இனிக், குறள் கூறும், தென்புலத்தார் தென்னாட்டார் தாமா? உலகுக்கு ஒரு நூல் செய்த பொது மறைப்பொய்யா மொழியார், தென்னாட்டாரைப் போற்றுதலைத் தனியே சுட்டுவாரா, ஆழிப் பெருக்காம் ஊழிக் கொடுமைக்கு ஆட்பட்டு, ஒரு காலத்தில் கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து வாழ்வு தேடி வந்தவரே இத் தென் புலத்தார் என்று புத்துரை காண்பவர் கருத்து ஏற்குமா? எக்காலத்துக்கும் ஒத்த பொருளைக் கூற வந்த திருவள்ளுவர், ஒரு காலத்து ஒரு நிகழ்ச்சிக்கு ஆட்பட்டவரைக் காட்டினார் என்பது, வள்ளுவ வாய்மையர் வழியாகாதே! வள்ளுவர் கூறும் தெய்வத்தை அடுத்துக் காணலாம். 16. ஐம்புலத்தாருள் தெய்வம் தென்புலத்தார் என்பவரை அடுத்து நிற்பவர் தெய்வம் ஆவர். தெய்வமாவார், தென்புலத்தார் விருந்து ஒக்கல் தான் என்பார் போல, உலகில் வாழுகின்றவரேயாவர். இல்லையேல் அவரை ஓம்புதல் எவ்வாறு? தெய்வம் பராவுதல், தெய்வம் வழிபடுதல், தெய்வம் வாழ்த்துதல், தெய்வத்திற்குப் படையலிடல், தெய்வம் ஏத்துதல், தெய்வம் தெளிதல் என வழக்குண்மையன்றித், தெய்வம் ஓம்புதல் என வழக்கு இல்லையே! ஆதலால் தேவர் எனப் பொருள் தருவது இல்லை இத் தெய்வம் என்னும் சொல் என்பது விளங்கும். கடவுள் என்பதற்குக் கடவுட் பொருளேயன்றி முனிவர், துறவோர் என்னும் பொருளுண்மை இலக்கியம் கண்டோர் அறிவர்; தெய்வம் என்பதற்கும் முனிவர், துறவோர் என்னும் பொருளுண்மையும் அவ்வாறே அறிவர். இப்பொருள் குறித்து அறிஞர் மயிலை சீனி. வேங்கட சாமியார் ஒரு கட்டுரையே வரைந்தார். அதில், திருவள்ளுவர் தென்புலத்தார் தெய்வம் என எண்ணியவற்றுள் தெய்வம் என்பது துறவியரைக் குறிக்குமெனச் சுட்டி விளக்குகின்றார் (அஞ்சிறைத்தும்பி; கடவுள்) ஆனால் இல்லறத்தான் ஓம்ப வேண்டியவர்களை எண்ணும் திருவள்ளுவர். துறந்தார் துவ்வாதவர் என வெளிப்படச் சொல்லி விடுவதால், இத்தெய்வம் என்பவர் துறவியர் அல்லர்; வேறொருவர் எனக் கொள்ள வேண்டும் என்க! அருமையும் மெருமையும் ஆர்வமும் உடையவர்களைத் தெய்வமாகக் கூறுதல் இருவகை வழக்குகளிலும் உண்டு. தெய்வத்தைக் கண்டது போல் தெய்வமே கொடுத்தது போல என உவமை கூறுவதும் வழக்கே. திருவள்ளுவரும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரையும், ஐயப்படாது அகத்தது உணர்வாரையும் தெய்வத்தோடு ஒப்பக் கூறுவார். முயற்சியாளனுக்குத் தெய்வம் மடிதற்று முந்து உதவுதலையும் குறிப்பார். இங்கெல்லாம் தெய்வம் தெய்வப் பொருளே தருவன. தெய்வத் தன்மை உடையாரைத் தெய்வமாகக் கொள்ளுதல் பழவழக்கே. தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வ அகத்தியன் என்னும் வழக்குகளைக் கருதுக. கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்யாம் கண்டிலமால் எனக் கண்ணகியாரைச் சுட்டும் கௌந்தியடிகள் வாக்கால் (சிலம்பு - 15: 143-4) வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வமே எனப் பெறுதல் விளக்கமாம். இதுகாறும் சுட்டியவை மேம்பட்டாரைத் தெய்வமென மேலோர் கொள்ளுதலை விளக்குவன. இனி, இவ்வாழ்வான் ஓம்ப வேண்டிய தெய்வமாவார் எவர் என்பதைக் காணலாம். சிலம்பின் வேட்டுவவரி காட்டும் சாலினி என்பாள் தெய்வமுற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்தோச்சிக் காட்சி தருகின்றாள். தெய்வமேறப் பெற்ற அவளை அருஞ் சொல் உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் தேவராட்டி என்கின்றர். தெய்வமேறப் பெற்றவளைத் தேவராட்டி எனல் பொருந்துவதாம். அவ்வழக்கு சங்கநாள் தொட்டே வருவதாம். முருகனை நோக்கி நடாத்தும் வழிபாடு வெறியாட்டு எனப்படும். வெறியாடுபவன் வேலன் என்றே சொல்லப் படுவான். இதனால், தெய்வத்தின் பெயர் தெய்வ வழிபாடு செய்பவனைக் குறிப்பதாக அமைந்தமை வெளிப்படை. ஆசிரியர் தொல்காப்பியனார். வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு என்கிறார் (1006). முருகயர்ந்து வந்த முதுவாய் வேல என விளிக்கிறது குறுந்தொகை (362). ஆடுபவன் கோலத்தை அருமையாக விளக்கிக் காட்டு கிறது ஓர் அகப்பாட்டு (195). அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச் சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல என்பது அது. இவற்றால், வேலனை வழிபடுபவன் - வெறியாடுபவன் - பூசகன் - வேலனாகக் குறிக்கப் பெற்றமையை அறியலாம். இதனைக் கொண்டு, தெய்வ வழிபாடு செய்பவன் தெய்வம் எனப் பட்டான் என்பதும் தெளிவாகும். பழங்காலத்தில் எங்கும் கோயில் வழிபாடு தமிழிலேயே நிகழ்ந்தது; தமிழ்க் குடிகளே வழிபாடு செய்தனர். இன்றும் சிற்றூர்களில் புலவர், பூசாரி, பண்டாரம், வேளார் முதலிய தமிழ்க் குடிகளே வழிபாடு செய்பவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தொழிலும், வழிபாடு செய்வதுடன் வழிபாட்டுக்கு இன்றியமையாத பூந்தோட்டம் வளர்த்தல், பூக்கட்டல், தெய்வவுருச் செய்தல் முதலியனவாக உள்ளன. ஊர்க் கோயில் வழிபாட்டைத் தம் கடப்பாடாகக் கொண்ட அவர்களைப் பேணுதல் ஊர்ப் பொதுக் கடமையாக இன்றும் இருந்து வருகின்றது. ஊர்ப் பொதுக் கடமை என்பது ஒவ்வொரு வீட்டார் கடமையும் அல்லவோ! சிற்றூர்களில் கோயில் வழிபாடு செய்பவர்க்குச் சுதந்திரம் என்னும் கொடை வழங்குதல் இந்நாள் வரை நடைமுறையிலேயே உள்ளது. உழவர்கள் ஒவ்வொரு விளைவின் போதும் களத்திலேயே இத்தனை மரக்கால் தவசமென அளந்து கொடுத்து வருதல் வழக்கம். கூலி வேலை செய்வாரும் ஆண்டுக்கு இவ்வளவு தொகையெனக் கொடுத்து வருவர். ஊர்க் கடமை செய்தற்கு உரிமைப் பட்ட வருமானம். ஆதலால், அது சுதந்திரம் (சுவந்திரம்) என வழங்கப்படுகின்றது. இவ் வழக்குண்மை தெய்வம் என்பதன் பொருளை நெட்டிடை பட்டும் திட்டமாக வெளிப்படச் செய்கின்றதாம். சிலம்பின் நிறைகாதை வரந்தரு காதை; அக்காதையில் கண்ணகியார் காப்பியத்தைக் கற்றவரும் கற்கக் கேட்ட வரும் நிற்கத் தக்க ஒழுகலாறுகள் இவை எனச் சுட்டிக் கூறி, நிறைவிக்கிறார் இளங்கோவடிகளார். அதில் தலைமையிடத்தினைப் பெறுவது : தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் என்பது. தெய்வவுண்மையைத் தெளிக; அவ்வாறு தெளிவுறக் கண்டாரைப் பேணுக எனக் கூறுவது தெய்வம் ஓம்புதலை விளக்குவதாம். தெய்வந் தெளிந்தாரைப் பேணுதல் தந்தை தாய்ப் பேண் என்பது போல ஓம்புதலே அல்லவோ! ஆதலால் தெய்வம் என்பது தெய்வவுண்மையறிந்து திருக்கோயில் வழிபாடு செய்வார் என்னும் பொருளதேயாம். விருந்து என்னும் புதுமைப் பெயர் புதிது வருவாரைக் குறித்தது போலத், தெய்வம் என்னும் பெயர் தெய்வ வழிபாடு செய்வாரைக் குறித்ததாம். 17. விருந்தில் விருந்து விருந்து என்பது புதுமைப் பொருளது. விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல். 1495) என்பது தொல்காப்பியனார் தொன்மொழி. இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்(து) ஒருமா மணியாய் உலகிற்(கு) ஓங்கிய திருமா மணியெனத் தெய்வ முற்ற (சிலப் 12, 470). சாலினி கண்ணகியைப் பாராட்டி யுரைக்க, கண்ணகி கோவலன் பின்புறம் தழுவி ஒதுங்கி மறைந்து முறுவலித்து நின்றாள். அம்முறுவலை விருந்தின் மூரல் என்பார் அடிகள். உள்ளகம் ஒளித்து இடை இடை அரும்பிய மூரல், விருந்தின் மூரல் தானே? விருந்தினர் வரக் காணின் இளையர் களிப்பர்; முதியர் மகிழ்வர். வறிய வீடும் வாழ்வுக் கோலம் பூண்டு வயங்கும். ஊடலில் தவித்துத் தனித்திருக்கும் கணவன், மனைவியரும் ஆடிப் பாடிக் கூடி மகிழ்வர். ஆகவே விருந்தில்லா வீடு விழல் (பெருந்தொகை : 406) என்று தனிப்பாடல் ஒன்று உரைக்கும். பண்டைத் தண்டமிழ்ப் பண்பாடுகளுள் தலைமை சான்ற விருந்தினை விளக்கப் புகின் விரியும். ஆகலின் கொண்ட தலைப்புக்கு ஏற்ப விருந்தாக விளங்கும் விருந்துக் குறண் மணி ஒன்றனைக் காண்போம் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள். 82) (1) உண்ணப்படும் பொருள் அமிர்தமே எனினும் தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே, உண்டல் விரும்புதல் முறைமை உடைத்தன்று என்பது தெரிமாண் புலமைப் பரிமேலழகியார் உரை. விருந்தோ, தன்னை, நோக்கி வந்தது. இருப்பதோ, தன் இல்லில். உண்பதோ, தான் மட்டும் (தானே) என்று மூன்று இடங்களில் தான் என்பதைக் காட்டிப் பொருட்கு நயமூட்டுகின்றார் அவர். சாவா மருந்து சாவாமைக்குக் காரணம் ஆகிய மருந்து என்று அமிர்தெனக் கொண்ட பொருட்குக் குறிப்பு விளக்கம் செய்கின்றார். மூவா மருந்து என்னும் சிலம்பின் செம்மொழிக்கு மரண மின்மையைப் பயக்கும் அமிழ்து. மூவா : மூத்த வென்னும் பெயரெச்ச எதிர்மறை. எனவே மூப்புக்கும் பிணிக்கும் மருந்தென்பதாயிற்று; என்றது அமிர்தத்தை என்று விளக்கவுரை செய்கின்றார் அடியார்க்கு நல்லார். ஏவா மக்கள் மூவா மருந்து என்னும் ஔவையார் மொழிக்கும் இப்பொருளே செய்கின்றார் ஆறுமுகநாவலர். மூவா மருந்து, சாவா மருந்தெனக் கொள்க. பரிமேலழகியார் உரைக்கு விரிவுரைபோல் காளிங்கர் உரை உள்ளது. விருந்து தன் கடைப்புறத்ததாகப் பெற்று வைத்துத் தான் அகத்தில் இருந்து உண்டலாகின்ற இது சாவாப்பதந் தருவதாகிய அமரர் உலகத்து அமுதமே ஆயினும், தான் விரும்பும் பான்மை நன்றன்று. தானுண்டு சாகின்ற சோற்றிணை மற்று இல்லத்திற்கு நல்வழிப் பாடாகிய விருந்து தன் கடைப் புறத்ததாகப் பெற்று வைத்து மற்றிதனைத் தானுண்டல் எக் கூற்றின் இடத்ததோ அறிகிலேன். பிற்பகுதியின் விளக்கம் மிகச் சிறக்கின்றது. சாவா மருந்து - தேவ அமுதம் என்கிறது ஒரு பழைய உரை (பக். 23). இதனை ஏற்ற மற்றொரு பழைய உரை விருந்து புறத்திலே இருக்கத்தான் பொசிப்பது (புசிப்பதது) தவிர்க்க. சரீரத்திலே பதினெட்டுக் குட்டமும் தீரப் பொசிக்கிற அமிர்தம் ஆயினும் விருந்துடன் கூடியிருந்து பொசிப்பர். (திருக்குறள் உரைவேற்றுமை பக். 85) என்று அமுதச் சிறப்பை விளக்கிக் கூறுகின்றது. இவ்வளவும், சாவா மருந்து அமிழ்து என்னும் பொருட்டது. அமிழ்தமே எனினும் விருந்தினரைப் புறத்தே வைத்து உண்ணற்க என்பதே இவற்றின் திரண்ட கருத்து. (2) விருந்தினர் இற்புறத்தாராகத்தானே உண்டல் சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி உடைத் தன்று என்று மணக்குடவர் இக்குறட்கு உரை கூறுகின்றார். சாவா என்பதை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்கிச் சாவாத மருந்து (சாவாமைக்கு உண்ணும் மருந்து), சாவினைத் தாராத மருந்து என்று கொண்டு பொருள் செய்கின்றார் அவர். மருந்தே ஆயினும் விருந்தோடுண் என்னும் தொன் மொழியைக் கருத்திற் கொண்டது இவ்வுரையாகும். இப் பொருளையே ஏற்றுக் கொண்ட புலவர் குழந்தையார் உண்டிக் கழகு விருந்தோ டுண்டல் என்று சான்று காட்டுகின்றார். (3) இனிப், பரிதியார் விருந்து புறத்திலே இருக்கத் தான் உண்பது நன்றல்லது! நஞ்சாகிலும் கூட விருந்து புசிப்பது நன்று என்கிறார். அவர் சாவா மருந்து என்பதனைச் சாவதற்குரிய மருந்து (நஞ்சு) என்று பொருள் கொண்டார். அவர்க்குச் செய்யா என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் முன்னின்று துணை புரிந்தது. சாவா மருந்து சாவும் மருந்து (நஞ்சு) புறத்ததா என்ற சொற்கொண்டு கூட விருந்து என்று தெளிவு காட்டினார். இவ்வுரைக்கு, பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள். 580) என்னும் அகச் சான்றும், முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பா நனிநா கரிகர் (நற்றிணை. 855) நஞ்சுயிர் செகுத்தலும் அறிந்(து) உண்டாங்கு (கலி. 74:8) என்னும் புறச் சான்றுகளும் வலுவூட்டுகின்றன. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கு (தொல். 1092) என்னும் ஆசான் மொழியும். வேம்பின் பைங்காய்என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் (குறுந். 196) என்னும் குறுந்தொகைக் குறிப்பும் இப்பொருட்கு ஆக்கஞ் சூழ் கின்றன. நட்பும் காதல் கூட்டத்துள் அடங்கும் ஒன்று தானே! (4) சாவா மருந்து என்பதற்கு உயிரைப் போக்காது நிறுத்தவல்ல கஞ்சி என்னும் உரையும் உண்டு என்பது பரிதி யார் தழுவல் உரை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம். 18) என்பதால் உணவே உடலையும், உயிரையும் காத்தலால் உயிர் காக்கும் அமுதம் உணவாக ஆயது. வழக்கிலும் அமுதிடுக, அமுதுண்க, கண்ணமுது (பாயசம்), பாலமுது (பாற்சோறு) என்பன போல உள. மாதிரி மனைக்கண் ஐயை துணையால் சோறாக்கிய கண்ணகி, கோவலனை அமுதம் உண்க அடிகள் (சிலம்பு. 16 : 19) என்று விளித்தழைப்பது அமுதம் உணவென்ப தற்குரிய ஒரு சான்றாகும். இவர் கஞ்சி என்று கொண்டதோ. அமிழ்தினும் ஆற்ற வினிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (குறல். 64) என்பது போல உணவுப் பொதுமை சுட்டுவதாகக் கருதுதல் சாலும். அன்றியும் உணவுக்காக உயிர்ப் போராட்டம் செய்யும் ஏழையர்க்குக் கிட்டற் கரிய உணவாக இருக்கும் கஞ்சியே அவர்க்குயிர் ஆதலால் அவ்வாறு கருதிக் கூறினார் என்பதும் சாலும். (5) விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக என்று உரைப்பினும் அமையும் என்று மற்றுமோர் உரையும் கூறுவார் பரிமேலழகர். விருந்தின்றி உண்டால்தான் இஃது அமிழ்தாகும்; அன்றி விருந்தோடுண்ணின் நஞ்சாம் என்று எவரேனும் உரைப்பினும் அதனை விருந்து புறத்ததாக உண்ணற்க என்பது அவர் கருத்தாம். புறத்ததா தான் என்பதை ஒன்றாக்கி புறத்தாத் தான் - புறத்தே வைத்துத்தான் என்று அழுத்தம் கொடுத்துப் பொருள் காண அமைந்துள்ளது இப் பகுதி. (6) சாவா மருந்து என்னுந் தொடருக்குச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து என்னும் உரையை மறுத்து, மருந்து என்றாலே சாவாமைக்குரிய பொருள் தொனித்தலின் சாவா என்ற சொல்லை மருந்து என்னுஞ் சொல்லுக்கு அடையாகக் கொள்ளக் கூடாது என்று கூறிச் சாவா என்னுஞ் சொல்லைச் சாவாம் என்று முற்றாக்கி, விருந்தினர் புறத்தே இருக்கத்தான் உண்பது சாவோடு ஒக்கும், என்று திருக்குறள் சண்முக விருத்தியில் உரைக்கின்றார் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார். செத்தார்க்கு வாய்க்கரிசியும், வாய்ச் சோறும் போடும் வழக்கம் உண்டல்லவா அவற்றை உட்கொண்ட உரை அது. (7) பிறப்பை ஒட்டி மேல் கீழ் வகுப்புகள் தோன்றிய போது சில இடங்களில் மேல் வகுப்பார் என்றவரிடை விருந்தினரை விடுத்து உண்ணும் வழக்கமும் உடன் தோன்றி இருக்கும். அதைக் கடியும் நோக்குடன் இப்பாட்டை ஆசிரியர் அருளியிருக்கலாம். தாம் உண்ட பின்னர் விருந்தினரைப் பேணும் வழக்கம் இந்நாளிலும் சிலரிடை இருந்து வருதல் கண்கூடு. தாம் உண்ட பின்னர் விருந்தினரைப் பேணுவது அந்தண்மையை அடிப் படையாகக் கொண்ட விருந்தோம்பல் ஆகாது என்பது தமிழ்த் தென்றல் திரு. வி. க. காட்டும் விரிவுரையாகும். பிறப்புக் காரணத்தால் புறத்தே வைத்து உண்பதையும், வீட்டார் உண்டபின் விருந்தாளியை உண்பிப்பதையும் கடியும் உரை ஈதென்பது தெளிவு. சில கூட்டத்தினர் முன் உண்டு பின் விருந்தினரைப் போற்றும் முறையை ஆசிரியர் கண்டித்ததாகவும் கொள்ளலாம் என்று திரு. வி. க. வின் பிற்பகுதி உரையை ஏற்று, சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே, (புறம் 25) என்று அதியமான், விருந்தினரைப் போற்றியதை ஔவையார் உரைச் சான்றால் நிறுவுகின்றார் திருக்குறள் உரை விளக்க ஆசிரியர் வரதராசனார் (பக். 38). (8) வந்த விருந்தினரைப் பேணியதாக மேல் வருவிருந்துக்கு உதவாது தான் உண்ணுதல் வேண்டத்தக்கது அன்று என்பது மற்றொரு பொருள், ஏனெனில், செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் குறள்நெறி ஆதலால். (குறள். 86) புறத்ததா(க) என்பது ஓம்பியதாக, பேணியதாக என்னும் பொருள் உடையது. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே (புறம். 312) விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை (சிலம்பு. 2: 86) வெயில் புறந்தரூஉம் (மலைபடுகடாம். 374) புறந்தருதல், புறந்தரல் - ஓம்பல், தோற்றல் (பேரகராதி. பக் : 771) என்னும் சொல்லாட்சிகள் இவ்வுரைக்கு நிலைக்களமாக உள. (9) உண்ணுக என்று விருந்தினரை வேண்டிய போது உண்டேன், உண்டு வந்தேன், உண்ணச் செல்கின்றேன், உண்டற்கியலாது, நீவிர் உண்க என்று விருந்தினர் கூறுவதுண்டு. அத்தகைய நிலையிலும் அவரைப் புறத்தே வைத்து உண்ணல் கூடாது. சாவா மருந்து, என்பதைச் சாவாம்; அருந்து என்று பிரித்து இவ்வுரை கொள்ளப் பெறுகிறது. (10) விருந்தினர் ஒருவர் இல்லின் புறத்தே இருந்து உண்டால் தான் அமுது என்பார் உளராயினும், புறத்தே இருந்து இழிபாடுற உண்ணற்க என்பது இன்னொரு பொருள். இது விருந்தினரின் மானப் பொருள், மரபுப் பொருள் கருதிய பொருள். (11) விருந்தாளி வெளியேயிருந்து உண்பது சாவோடு ஒக்கும் (ஆதலால் அதனை விடுக்க). அருந்து என்று ஒரு முறை கூறிய அளவில் உண்பதும் கூடாது என்பது பிறிதொரு பொருள். உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி யுறும் என்பது ஔவையார் பாடிய ஒருகோடி பாட்டு அல்லவா! (திருக்குறள் நயவுரை. பக் 24) தமிழர் விருந்துப் பண்புகள் அனைத்தும் ஓருருக் கொண்ட தாகக் திகழும் இந்த ஓரடி முக்காற் சிறப்பை உரைத்தற்கரிது. ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு (திருவள்ளுவ மாலை. 24) என்னும் மாங்குடி மருதனாருடன் சேர்ந்து, விருந்தில் விருந்தாக இப்பாடலை நுகர்வோமாக. 18. தீயினால் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்னும் திருக்குறளைத் தமிழறிந்தார் எவரும் அறிவர். தீச் சுட்டபுண் தீயில் சுட்ட புண் என்று கூறாமல் திருவள்ளுவர் ஏன் விரித்துரைத்தார்? இன்னும் ஆலும் சேர்த்துத் தீயினால் என்பானேன்? தீக்கங்கு அடுப்புப்பக்கம் கிடக்கிறது; அதனை அறியாமல் ஒருவர் மிதித்துவிட நேர்கின்றது. அது சுட்டு விடுகிறது; அதனை எப்படிக் கூறுவது? தீச்சுட்டது என்றோ, தீச்சுட்டு விட்டது என்றோ கூறுவதே வழக்கம். தீயால் என்றோ, தீயினால் என்றோ கூறும் வழக்கம் இல்லை. தீச்சுடுதல் என்பது தீக்கு இயற்கையும், சுடுபட்டவர்க்கு அறியாமையும் காட்டுவது. தீயில் சுடுதல் என்பது ஊண் பொருளை வாட்டித் தின்ப தற்குப் பயன்படுத்தும் முறை. கிழங்கு சுட்டுத் தின்னல், மொச்சைக்காய், நிலக்கடலை ஆகியவை சுட்டுத் தின்னல் என்பவை இன்றும் வழக்கில் உள்ளவை. வாட்டித் தின்னல் என்பது மேலெழும்பும் தீயில் வாட்டுதல். சுடுதல் என்பது கங்கில் படச் செய்து வெதுப்புதல். தீச்சுடுதல், அறியாது நிகழ்ந்தது; தீயிற்சுடுதல், விரும்பிச் செய்தது. இவ்விரண்டிலும் வேறாயது தீயாற் சுடுதல் அல்லது தீயினாற் சுடுதல். ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. வாளால் வெட்டினான் கத்தியால் குத்தினான் என்று வழங்கும் வழக்கினைக் கருதுக. திட்டமிட்டும் தீர்மானித்தும் செய்கின்ற செயலே வெட்டுதல், குத்துதல் என்பதும், அதனை அறிவிப்பதே ஆல் என்பதும் தெளிவாம். இங்கே தீயினால் சுடுதல் என்பது இயல்பாக நிகழ்ந்ததன்று என்பதும், திட்டமிட்டுத் தீர்மானித்துச் செய்யப்பட்டது என்பதும் தெளிவாம். வாளால் வெட்டினான் என்றால் எழுவாய் மறைந்திருத்தல் தெளிவு. அதுபோல் இங்கு எழுவாய் மறைந்துள்ளது. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாதகாதல் கொள்வதை நாலாயிரப்பனுவல் பாடும். உடலிடைத் தோன்றிற்றொன்றை, அறுத்ததன் உதிரம் ஊற்றிச் சுட்டுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வதை இராமாயணம் இசைக்கும். இச் சுடுதல்கள் நலப்பாட்டுச் சுடுதல்கள். சுடப்படுவார் நலத்திற்காகச் சுடத்தக்கார் தம் கடனெனக் கொண்டு செய்வன. ஆனால், இத்தீயினால் சுடுவதோ தீய நெஞ்சத்தின் வெளிப் பாடாய்த் தீமை செய்வதே நோக்காகிச் செய்யப் படுவது. காலையும் கையையும் கட்டிப் போட்டு அல்லது திமிராமல் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணிலே கொள்ளிக் கட்டையால் இடிப்பது அல்லது செலுத்துவது போல்வது. இந்த வன்கொடுமையைக் காட்டுவதற்காகவே தீயினால் என்றார் திருவள்ளுவர். புண் ஆறுதலிலும் இருவகை உண்மையைத் தெளிவிக் கிறார் திருவள்ளுவர். புறத்தே ஆறுதல்; அகத்தே ஆறுதல் என்பவை அவை. சில புண்கள் புறத்தே ஆறியது போல் தோன்றும். ஆனால் அகத்தே ஆறி இராது. அகத்தே குடைந்து குழிப் புண்ணாகிக் கொண்டே இருக்கும். புறத்தே புண் ஆறியிருப்பினும் அகத்தே புண்ணின் தடம் முற்றாக மாறாமலும் ஆறாமலும் ஒவ்வொரு வேளையில் வலியுண்டாகும். புண் பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று மெல்லெனப் பட்டாலும் குலையுயிரும் குற்றுயிருமாகத் துடிக்க வைக்கும். அந்நிலையும் ஓராண்டு ஈராண்டன்றிப் பல்லாண்டுகள் உளதாதல் பட்டார்க்கே வெளிப்பட விளங்கும்! உள்ளாறுதல் என்னும் இவ்விளக்கம் பட்டறிவால் உரைத்ததென்று உறுதியாகச் சொல்லலாம். குறளுக்கு மெய்ப்பொருள் காண்டற்குப் பட்டறிவும் இன்றியமையாதது என்பதற்கே இக்குறிப்பாம் என்க. தேடி வந்து தீயால் சுட்டவன் எவனோ அவனே, அப் பொழுதிலோ வேறு பொழுதிலோ நாவினாலும் வன்கொடுஞ் சொல்லால் சுடுகின்றான். அத்தீயால் சுட்ட புண் புறத்தே ஆறுவதுடன் உள்ளாலும் ஒருகால் ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்டது, உள்ளால் ஒருநாளும் ஆறவே ஆறாது! நிலை பெற்றே போய்விடும்! எப்படி நிலைபெற்றுப் போய்விடும் என்றால், உடலில் தீச்சுட்டதால் அமைந்த வடு (தழும்பு) மாறாமை போல ஆறாது என்கிறார். எடுத்துக் காட்டும் ஆக்கி விடுகிறார்; தீக்கொடுமையிலும் தீச்சொற் கொடுமையே பெருங் கொடுமை என்னும் இதனைத் தீயினால் சுட்ட செம்புண் உள்ளாறும் அத்தீயிற்றீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவேயன்றோ என்றது வில்லிபாரதம். தீயவை தீய பயத்தலால் என்னும் குறளைத் தீயவே தீய பயத்தலால் தீயவே, தீயினும் அஞ்சப் படும் என அரசஞ் சண்முகனார் பாடங்கொண்டதும் எண்ணத் தகும். 19. தமிழ்க் கா. சு. திருக்குறள் தெளிவுரை கா. சு. அவர்கள் திருக்குறளுக்குத் தெளி பொருள், விளக்கப் பொழிப்புரை வரைந்துளர். அதன் முதற்பதிப்பு 1928 இல் வெளி வந்தது. அதனை வெளியிட்டது சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். ஏறத்தாழ ஒரு பதின் பதிப்புகளை அது கொண்டுள்ளது. பொதுமறை, பாயிரம் திருக்குறள் பொதுமறை எனச் சுட்டும் ஆசிரியர், ஆதித் தமிழ் நான்மறைகள் மறைந்த பின்னர் அந்நான் மறைக் கருத்துகளை விளக்கு முகத்தான் ஆசிரியர் திருவள்ளுவரால் செய்யப் பட்டது என்னும் கருத்தைப் பாயிரத்தில் வைக்கிறார். அப் பகுதியிலேயே கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளின் பாயிரம் என்னும் கருத்தையும் வெளி யிடுகின்றார். சிவநெறியும் பொதுவும் திருக்குறள் வேதவழிப்பட்டது என்பது பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் கருத்து. அதனைக் கருத்தில் கொண்ட தமிழ்க் கா. சு. தமிழ்ச் சைவ நெறிப்பட்டவர் என்னும் கருத்தை நிலைநாட்டுவார் போலக் கடவுள் வாழ்த்தின் உரையை வரைகின்றார். முதற் குறளில், உலகத்திலே உடம்பெடுப்பதற்கு அருட் சத்தியோடு கூடிய கடவுளே காரணமாதலால் உலகம் மாதொரு பாகனாகிய கடவுளைத் தலைவனாக உடையது என்றும், வான்சிறப்பு முகப்பிலே மழைச் சிறப்புக் கூறுதல் திருவருட் சத்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது என்றும், மலர்மிசை ஏகினான் என்பதற்கு உயிர்களது உள்ளக் கமலத்தின் மேலிடமாகிய பரவெளியிலே கூத்து இயற்றுகின்ற கடவுள்... என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும் இது விளங்கும். சிவநெறி வழிப்பட்டது பொதுமறையோ என வினவுதலுண்டாயின், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்னும் மணிமொழி, மறுமொழியாம் எனக் கொண்டு உரை கண்டாராகலாம். புத்துரை ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி என்னும் குறளுக்குப் புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தினையும் அடக்கினானது வலிக்கு அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று என்று உரையும், தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று அளித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலுங் கரி என்றார் என்று விளக்கமும் வரைந்தார் பரிமேலழகர். பிறரும், இவ்வுரைக் கருத்தே கொண்டு வரைந்தனர். கா. சு. ஐம்பொறிகளையும் அடக்கியவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன் என்கிறார். எதிரிடை வழியால் ஐந்தவித்தான் ஆற்றலைப் பரிமேலழகர் காட்டியதை ஒவ்வாத கா. சு, நேரிடை வழியால் காட்டுதல் நூலாசிரியர் முறை வழியில் செல்வதாம். இது, முற்றிலும் அழகர் உரைக்கு மறுப்புரையாம். நுண்ணிய ஆய்வு பிறர் உரையை ஏற்று ஒருமருங்கு மறுப்பார் போல் நுண்ணிய வேறுபாடு காட்டவும் செய்கிறார். கா. சு. தெய்வம் தொழாஅள் என்னும் குறளுக்குப் பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழா நின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் எனப் பரிமேலழகர் உரை கண்டார். கா. சு. தெய்வத்தைத் தொழாத போதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள், மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும் என்கிறார். பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என உவமைப் படுத்து உரைப்பார் உளராயினும் கா. சு. அதனைக் கொண்டிலர் என்பதும், தொழாஅள் தொழுதெழுவாள் என்பதற்குப் புத்துரை வகுக்கிறார் என்பதும் எண்ணத்தக்கன. இவ்வாறே மக்கள் மெய் தீண்டல் என்னும் தொகைச் சொல்லுக்குப் பெற்றோர், மக்களது மெய்யைத் தீண்டுதல் எனப் பரிமேலழகர் பொருள் கொள்ள, மக்கள் பெற்றோரது உடம்பைத் தீண்டுதல் எனக் கா. சு. உரை கொள்ளத் தீண்டுவார் தீண்டப் படுவார் மாற்றியுரைக்கப் படுதல் அறியத் தக்கதாம். குழந்தையரின் மழலைச் சொல் பெற்றோர் காதில் விழுந்து இன்புறுத்துதல் போல், அவர்கள் மெய்வந்தும் விழுந்து இன் புறுத்துவதாகக் கொள்ளலே பொருந்தும் உரையாம் எனக் கா. சு. கண்டுரைத்தார் எனலாம். உரைமேல் உரை குறளை எழுதிப் பொழிப்புரை எழுதும் கா. சு. தழுவல் உரையாகவும், பிறருரையாகவும் குறித்தலும் மேற்கொண்டார். தென்புலத்தார் என்பதற்குப் பொருள் கூறும் கா. சு. இறந்த உயிர்க்குத் துணை நிற்கும் பிதிரர்கள் என்கிறார். மேலும் தென்புலத்தார் என்பார் தமிழ்நாட்டுப் புலவரெனவும், தமிழர் குருமார் எனவும் கூறுவாரும் உளர் என்கிறார். தம்மின் தம் மக்கள் என்னும் குறளில் வரும், மன்னுயிர் என்பதற்கு உள்ள உயிர் என்று உரை கூறுவதுடன், மன்னுயிர் என்பது அறிஞரைக் குறிக்கும் என்பாரும் உளர் என்றும் வரைகிறார். செய்யாமல் செய்த உதவிக்கு என்னும் குறளுக்கு உரை வரைந்து அதன்பின் வேறொரு வகையில் பொருள் கோடலுண்டு என வரைகின்றார். இவ்வாறே வேட்ட பொழுதில் என்னும் குறளுக்கும் ஈருரை காட்டுகின்றார். ஓருரை கூறுவதுடன் அல்லது என்னும் குறிப்புடன் ஈருரையும் தகும் என்னும் முறையிலும் உரை வகுக்கின்றார். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்னும் குறளில் வரும் காமக் கலன் என்பதற்கு விரும்பி ஏறும் மரக்கலங்களாம் அல்லது விரும்பிப்பூணும் அணிகளாம் என்பது இதனை விளக்கும். ஆயின் இவ்வுரை இரண்டும் பரிமேலழகர் உரைக்கண் வருவனவே. இவ்விரண்டின் ஒன்றைத் தெரிந்து சுட்டாமல் இரண்டையும் ஒப்புக் கொண்டார் இவர் என்க. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு நான்கு உரைகள் உரைக்கிறார். கா. சு. பரிமேலழகர் முதலாம் உரையாசிரியர் உரைத்தனவே. இவ்வாறே அடியளந்தான் தாயது தாமரைக் கண்ணான் உலகு என்பவற்றுக்கும் பிற்கால உரையாளர் வேறு வேறு புத்துரை கண்டாராக அவ்வுரையிடைக் கருத்தைச் செல விடாமல் பண்டையுரையாசிரியர்களின் உரையைத் தழுவியே செல்கிறார். இவற்றை நோக்கும்போது ஒரு கருத்துத் தெளிவாக விளங்குகின்றது. திருக்குறளின் பொருளை எளிமையாக எவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்திலேயே கா. சு. உரை எழுதியுள்ளார் என்பதாம். இதனைத் தெளிபொருள் விளக்கப் பொழிப்புரை என்னும் பெயரீடும் விளக்குவதாம். விளக்கவுரை கா. சு. உரை பொழிப்புரை எனப்பட்டாலும், அது தெளி பொருள் விளக்கப் பொழிப்புரை என்பதற்கு ஏற்பவும் நடை யிடுதல் விளங்குகின்றது. சிறப்பொடு பூசனை செல்லாது என்பதற்கு முதலிலே திருவிழா நின்று பின்பு வழக்கப் பூசையும் நின்றுபோம் என்றவாறு என்கிறார். ஒல்லும் வகை என்பதற்கு இயலும் வகை எனப் பொருள் கூறி உடம்பின் நிலைக்கும் பொருளின் அளவிற்கும் தக்கபடி செய்தலே இயலும் வகை செய்தல் என்பது என்கிறார். அன்பிலார் எல்லாம் தமக்குரிய என்பதற்கு தம் பொருட்டே எல்லாவற்றையும் தேடித் தமக்கே உரிய தாக்கிக் கொள்வர் என உரை விரிப்பதும், உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்பதற்கு, உடம்பு எடாத போது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு என உரை விரிப்பதும் பேருரை ஒப்பவை. பனைத்துணை என்பதற்குப் பனையளவு எனப் பொதுப் பொருள் குறித்தாலும் அப் பனைப் பெயர் தூண்டுதலால் ஏனை மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க என்று விளக்குவது அம்மரபியல் அறிந்த சிறப்பு வழிப்பட்டது. காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் பெரிது எனவும், பயன் கருதாமல் செய்த உதவி கடலிற் பெரிது எனவும், நிலையில் மாறாது அடங்கியவன் தோற்றம் மலையிற் பெரிது எனவும் வள்ளுவர் கூறுவார். அதனை விளக்கும் கா, சு உவமையிலும் பொருள் உயர்ந்திருத்தலையும் நயமாக விளக்குகிறார். நிலமானது காலத்தில் பயன் விளைப்பதியல்பு. அது காலத்தில் பயன் விளையாமையும் உண்டு. அக்காலத்திலும் நன்றி செய்வார் சிறந்தவர் என்றவாறு. கடல் தன்பால் மேகம் கொண்ட நீரை மட்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினும் சிறந்தவர் என்றவாறு. தானே உயர்வுடைய மலையினும் தனது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன் என்றவாறு. இவை மாண இல் என்னும் சொற்களை நோக்கி வள்ளுவர் உள்ளம் உணர்ந்து உரைக்கும் நயத்தனவாம். இவை கா. சு. வழங்கும் கொடையாம். குறிப்புரை கருத்துரை பொழிப்புரையே பெரிதும் எழுதும் கா, சு, சில இடங் களில் குறிப்புரை கருத்துரை ஆகியனவும் வரைகின்றார். விண்ணின்று பொய்ப்பின் என்னும் குறளில் கடல் சூழ்ந்த என்பதனால் கடல்நீர் அளவின்றியிருந்தும் அது பசி நீக்க உதவாது என்பது குறிப்பு என்றும், துறந்தார் பெருமை என்னும் குறளில் துறவிகளின் பெருமை அளவில் அடங்கா தென்பது கருத்து என்றும், எழு பிறப்பும் என்னும் குறளில் மக்கள் செய்யும் நற்கருமங்களால் பெற்றோரையும் தீயவை தீண்டா என்றார் என்றும், அன்போடியைந்த என்னும் குறளில் அன்பு செய்யாக்கால் உடம்பு எடுத்த பயன் யாது மில்லை என்பது கருத்து என்றும், சொற்கோட்டமில்லது என்னும் குறளில் சொல்லில் மாத்திரம் செப்பமாக இருந்து மனம் ஒருபால் சாயப் பெற்றால் அது நடுநிலைமையாகாது என்றும் உரைக்கின்றார். இவ்வாறு சொல்வனவெல்லாம் தெளிவும் விளக்கமும் நோக்கியமை என்க. ஏரின் உழாஅர் என்பதற்குக் கலப்பையால் உழ மாட்டார் என்னும் பொருள் கூறும் கா. சு. செவ்வையாக உழவு செய்ய மாட்டாதார் என்றும் பொருள் கூறுவதும் இரட்டுறல் பார்வையாம். சுருக்கமும் பெருக்கமும் ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் என்பதற்குப் பிணக்கில் தோற்றவர் வென்றவராவர்; அது புணர்ச்சியுட் காணப்படும் எனக் குறள் பொலவே பொழிப்பையும் சுருக்கியுரைக்கின்றார். வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் என்பதற்குப் புதிது புதிதாக இன்பஞ் செய்வன போலப் பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய இவளது தோள்கள் எப்பொழுதும் புதுமையான இன்பத்தைத் தருகின்றன என்று பொழிப்புரைத்து விரும்பிய பொருள்கள் விரும்பியவுடனே கிடைத்தால் எப்படி இன்பந் தருமோ அப்படி இவளுடைய தோளும் இன்பந் தருவது என்பதும் ஒன்று என்று மேல் விரிவும் தருகிறார். இதனினும் விரிவாக எழுதும் உரை விளக்கங்களும் உண்டு. அவற்றை முதற்குறள் உரையிலும், வினைபகை என்னும் 674 ஆம் குறளுரையிலும் காண்க. அதிகார ஆய்வு அதிகாரத் தலைப்பு, பொருள், தொடர்பு ஆகியவற்றையும் உன்னிப்பாக நோக்கி உரை வரைந்தனர் காசு. ஏழாம் அதிகாரம் புதல்வரைப் பெறுதல் என்பது. இதனை, ஒவ்வொரு குறளிலும் மக்கள் என்றே நாயனார் ஆண்டு வந்தமையின் இவ்வதிகாரப் பெயர் மக்கட்பேறு என மாற்றப்பட்டது என்கிறார். இல்வாழ்க்கை என்பதற்கு மனையாளோடு வீட்டிலிருந்து வாழ்தல் என்னும் கா. சு. அதனை அடுத்து வரும் வாழ்க்கை நடக்கும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்துள் ஆடவர் இல்வாழ்க்கை நடத்தும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்திலே இல்வாழ்க்கைத் துணையாய மனைவி இன்ன நற்குணங்கள் உடையவளாய் இருத்தல் வேண்டும் என்பது குறிக்கப் படுகின்றது என்பது கூர்ந்து அறியத் தக்கதாம். இல்வாழ்வான் இல்வாழ்க்கை வாழ்பவன், வாழ்வாங்கு வாழ்பவன் என இல் வாழ்க்கை அதிகாரத்தில் வருபவற்றைக் கருதின் கா. சு. உரைநயம் புலப்படும். சொல்லாலும், பொருளாலும் இனியவாகும் சொற்களைச் சொல்லுதல் இனியவை கூறல் எனவும் (10). முன் நினைப்பு இல்லாமல் வருவித்துக் கொண்ட நோயைத் தீர்க்கும் மருந்து எனவும் (95). அழகு துன்புறுத்தல் தகையணங்குறுத்தல் எனவும் (109) நற்செயல்களுக்காகப் பிறர் உதவியை நாடல் இரவு எனவும் (106). இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்றிவுடைமையே இங்கு (அறிவுடைமை என) எடுத்துக் கொள்ளப்பட்டது எனவும் (43) அறுவகை மனக்குற்றங் களையும் நீக்குதல் குற்றங்கடிதல் எனவும் (44) கூறுவன அவ்வதிகாரப் பிழிவாகிச் சிறக்கின்றன. ஒப்புரவறிதல் என்பதை விரியநோக்கித் தெரியவரைகிறார். ஒப்புரவு என்பது தம்மைச் சார்ந்த பிறரைத் தம் மோடொத்த நன்னிலை யடையும்படி செய்தல். அவருடைய குறைகளை உணர்ந்து அவற்றை நீக்குவதற்கு வழியறிதல் ஒப்புரவு எனப்படும். தம்முடைய குலத்தினருக்கும் நாட்டினருக்கும் இடர் வந்தபோது உதவுதல் ஒப்புரவு என்ப என முப்பகுப்பில் வரைந்துளார். சில விலக்குகள் இனி இகல் என்பதற்கு மாறுபடுதல் (சினத்தல்) என்று சுருக்கம் உரைக்கிறார். (76). நட்பு என்பதற்கு சினேகம் இன்னதென்பது என வட சொல்லை ஆள்கிறார். அவ்வதிகார உரையில் நேயம் மூன்றிடத்தும் நட்பு பத்திடத்தும் ஆளப்பெற்றுள. எண்ணியிருந்தால் சிநேக ஆட்சியை விலக்கியிருப்பார். என்னெனின் பிரமசரியம், வானப்பிரத்தம், சந்நியாசம் என வடநூலார் கூறுவனவற்றைக் கல்வி நிலை, மனத்தவ நிலை, துறவு நிலை எனத் தமிழாக்கம் செய்பவர் அவர் (41). இனி அவையறிதல் என்பதற்குக் கழகத்தில் உள்ளவர்கள் நிலையை அறிந்து பேசுதல் என்றும், அவையஞ்சாமை என்பதற்குப் பேசுதற்குரிய கழகத்தைத் தெரிந்து பேசத் தொடங்கிய பிறகு அதற்கு நடுங்காமை என்றும் (72-73) விளக்கம் தருகிறார். ஆயின் வள்ளுவர் காலத்தில் கழகத்தின் பொருள் சூதாடுமிடமாகக் கொள்ளப் பெற்றதைக் கா. சு. நன்கு அறிவார். கவறும் கழகமும் என்பதற்குச் சூதாடுகளத்தில் இளமையிலேயே புகுவராயின் அல்லது சூதாடு களத்திலே ஒருவனுக்குக் காலம் போமாயின் எனவும் (937) உரைவரைபவர் அவர். அறிஞர் அவையம் எனக் கழகத்திற்குப் பொருள் வரவு - கம்பர், பரஞ்சோதியார் முதலியோர் காலத்தின் ஆட்சிப்பட்டது. அதனை ஆள்தல் சைவசித்தாந்தக் கழகம், திருவிடர்கழகம், திராவிடர் கழகம் எனப் பெருவழக்கூன்றி விட்ட கால முத்திரைச் சான்றாம். உரையுள்ளும் கழகம், அவைக்களம்; அறிஞர் கூட்டம் என்பவற்றுடன் சபையையும் ஓரிடத்து ஆள்கிறார். (730). இனிக் கற்றிலனாயினும் கேட்க (414) நோக்கினாள் நோக்கி (1093) என்பவற்றுக்குத் தெளிந்த வேறுரை காண வாய்ப்பிருந்தும் பரிமேலழகர் வழியில் எளிமைப் படுத்தும் அளவிலேயே கா. சு. அமைகிறார். எற்றென்று இரங்குவ செய்யற்க (655) குறளுரையும் அவ்வகையிலேயே அமைகின்றது. நிறைவு கா. சு. 1928 இல் எழுதியது தெளிவுரை. பரிமேலழகர் உரையைத் தழுவி எளிமைப் படுத்தல் நோக்கிலும், மிக அரிதாகவே புத்துரை, புது விளக்கம் தருதலிலும் எழுதப்பட்டது என்பது தெளிவுறுகின்றது. பின்னர் அவர் இயற்றிய நூல்களில் காணக் கிடக்கும் சீர்திருத்தக் கருத்துகள், திருக்குறள் தெளிவுரை கண்ட காலத்தில் எழுந்ததில்லை; அழுத்தியுரைக்கப் பெறவும் இல்லை எனலாம். ஒருவர் தம் நூல் வரிசை ஆய்வும், அவர் தம் வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த இடமாய் அமையும் என ஒரு கருதுகோள் வகுத்துக் கொள்ள இஃது இடமாம். 20. குறளோவியம் சிலம்புக்குக் கற்கோட்டம் எடுத்தவர் செங்குட்டுவன். சொற்கோட்டம் எடுத்தவர் இளங்கோ! வள்ளுவருக்குக் கற்கோட்டம் எடுத்தவர் கலைஞர்; சொற் கோட்டமும் எடுத்தவர் அவர்! அக்கற்கோட்டத்தை ஒவ்வொரு சொற் கோட்டத்தின் நிறைவினும் கொண்டு இணையிலா இரு கோட்டக் கலை நயங்களையும் எடுத்துரைப்பது குறளோவியம். பதவுரை, விரிவுரை என்று எழுதிக் கொண்டிராமல் பலரும் விரும்பிப் படிக்கத் தக்க வண்ணம் அவர்களைக் கவர்ந்திழுத்துக் கருத்துகளை நெஞ்சத்தில் பதிய வைத்திட வேண்டும் என்ற ஆசைத் துடிப்பில் எழுந்தது குறளோவியம். ஆசை வாளா ஒழியாமல் வான் சிறப்புக் கொள்வதை வளமாகக் காட்டுகிறது குறளோவியம். 1956 இல் முரசொலி வார இதழில் தொடங்கிய குறளோவியம், பின்னர்த் தினமணிகதிர் குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து நடந்தது. தொடர்ந்து வரையப்பட்ட ஓவியங்கள் முந்நூறு; இடம் பெற்ற குறள்கள் 354. அவை அறத்தில் 76: பொருளில் 137 ; இன்பில் 141. முதன் முதல் வரைப்பட்ட ஓவியம் : புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற் பின் சாக்கா(டு) இரந்துகோள் தக்க(து) உடைத்து (780) என்பது. போருக்குச் சென்ற வீரன் பகைப் படையைப் பொடி செய்தான். மறைந்து வந்த அம்புக்கு இரையானான்! வெற்றி கண்ட படைத் தலைவன், வீரன் சாய்ந்து விட்ட காட்சியைக் கண்டு கண்ணீர்விட்டுக் கதறினான் - இது குறளோவியக் காட்சி (190-1). களம்பட்டுத் தியாகியாக நான் மாண்டு கிடக்க என் உடல் மீது என் தலைவர் அண்ணா அவர்கள் கண்ணீர் சிந்தும் பேறுபெற வேண்டுமென்ற அவா மிகுதியால் எழுதப்பட்ட முதல் குறளோவியம் இது என்பது தவிப்பு மிக்க முகப்புரை (4), நான் நினைத்தற்கு மாறாக நடந்து விட்டதே! என் அன்புத் தலைவர் எனக்கு முன் மறைந்து விட்டாரே என்பது கற்பாறையாய் இருந்து, கற்பாரையும் நீராக்கும் நேயவுருக்கு! உருக்கப் பொருளாய் உருகுதல் காட்டும் உயிரோவியம்! நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி, நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்க மிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உலவ விட்டதை எண்ண ஓவியமாக்கிக் காட்டும் கலைஞர், நாம் பாராட்ட விரும்பும் வண்ண ஓவியரையும் பாராட்டிச் சிறப் பிக்கிறார் (7). ஈரோவியங்களில் ஓரோவியத்தின் உரிமையாளர் அவரல்லரோ! எவருக்குப் படைக்கிறார் குறளோவியத்தை? தமிழ் அறிஞர்கட்கு! ஏன்? உரைநடையில் குறட்பாக்களை மலர் மாலையாக ஆக்கியோர் உளர்! செய்யுள் செய்து குறளுக்குப் பொருள் உரைத்தோர் உளர்! சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்! இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர் - எனப் பட்டியலிட்டுக் காட்டும் கலைஞர், அவருள்ளும் தெளிந்து தெரிந்து இன உணர்வுடன் இலக்கியப் பணியாற்றும் தன்மானத் தமிழ் அறிஞர்கட்குப் படைக்கிறார்! தம் தேர்ச்சி அது! குறளோவியம் வரைந்தவர் தேர்ச்சிப் படைப்பு ஈதென்றால் அக்குறளோவியம் வரைந்த கலைஞரைப் பற்றிய தேர்ச்சிப் படைப்பை மூதறிஞர் வ, சுப. மாணிக்கனார் மதிப்பு மிக்க மதிப்புரையிலே தவழ விடுகிறார்! திறனறிந்த தேர்ச்சியாம் அவர்தம் தெளிவுரை : இந்நூலை எழுதியவர் தமிழ்ப்பற்று, தமிழறிவு, தமிழ் உணர்வு மிக்கவர். சங்க இலக்கியப் பயில்வினர். தமிழ் நாகரிகமே மனித நாகரிகம் என்ற கடைப்பிடியினர். புத்திலக்கியம் படைக்கும் கற்பனைக் கவிஞர். எழுத்திலும் சொல்லிலும் தொடை வளமிக்க உரைநடைக் கவிதையர். நாடகப் பார்வையர். உரை பல கற்றவர். நாட்டின் ஆட்சியில் உயர் பதவி தாங்கியவர். உலக அரசியல் கண்ணோட்டத்தர். பல்துறை மக்களொடு அணுகிப் பழகிக் காலவுலகியல் கைவரப் பெற்றவர். வாழ்வுப் பாசறையில் மலையும் கடலும் கண்டவர். தோலா நாவினர். தொய்யா நெஞ்சினர். சாதி சமயச் சழக்கிற் புகாப் பகுத்தறிவினர். சிந்தனைச் செயலினர். திருக்குறட் சிந்தையர். தமிழினத் தலைவர். எழுத்துக்கலை, செந்நாக் கலை, நாடகக்கலை, கவிதைக்கலை, அரசியற் கலை, எழிற்கலை என்றாங்குப் பல்வேறு கலைகளிலும் நெஞ்சு, அறிவு, செயல் தோய்ந்த கலைஞரே இவர் - இவ் வனைத்தும் குறளோவியம் படைப்பில் இருந்து வடித்தெடுத்த வளச்சாற்றின் வளர் புகழ்க் கட்டிகள்! குறளோவியம் தீட்டிய கலைஞர் வள்ளுவர் தீட்டியுள்ள இந்த ஓவியங்களுக்கு நிகரான ஓவியம் உலகில் உண்டோ? என்று வினா எழுப்பி இதற்குப் பதில் இல்லை! இல்லை! என்பதுதான் என விடையிறுக்கிறார் (73). இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் தோன்றிய புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரன் பொதுவுடைமைக் கொள்கையின் வழிகாட்டி - வள்ளுவன் என நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் இனிக்கிறது என்கிறார். (533). இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உலகப் பொது ஞாயிறு எனத்தக்க வகையில் ஒளியுமிழ்ந்து தோன்றியது திருக்குறள் எனப் பூரிக்கிறார் (543). இத்தகைய நன் மதிப்பு வள்ளுவத்தின் மேலும், வள்ளுவர் மேலும் இல்லாக் கால் ஓவியம் தீட்ட முடியுமோ? ஒவ்வும் இயம், ஒவ்வியம்! அஃது ஓவியம்; ஓவியந் தீட்டியின் உளங்காட்டிகள் இவை: குறள் அழியா ஓவியம் என்பதைப் பல்கால் பகர்வார் (256) (260). மேலும்! தொலைவில் இருந்து பார்க்க நீண்டுயர்ந்து விளங்கும் பச்சை இலிங்கமெனக் காட்சியளிப்பது நெட்டிலிங்கம். அதன் தழைகளைத் தோரணத்திற்காக வெட்டி வந்ததும் கட்டி மகிழ்ந் ததுமாகிய நிகழ்ச்சிகளை நினையுமுகத்தான் நுனிக்கொம்பர் ஏறினார்; குறளுக்கு விளக்கம் தருகிறார். அஃது இளமைத் தொண்டின் இனிய செய்தி! (251). 1982 ஆம் ஆண்டு பெப்ருவரி 18 - இல் மதுரை திருச் செந்தூர் நெடும்பயணம் கொண்ட பேரணிச் செய்தி இரண்டு குறள்களுக்கு விளக்கமாகத் திகழ்கின்றது (284-285). என்னைப் போலவே அவர் வாழ்விலும் துன்பங்கள் தொடர் கதையாக இருந்திருக்கின்றன என்னும் முகப்பொடு தம் தந்தையார் முத்துவேலரை நினைவு கூறும் செய்தி நெஞ்சை நீராக்குகிறது. நச்சுப் பாம்பு, முத்துவேலர் தோளில் வீழ்ந்த போது ஆடாது அசையாது இருந்து அதன் போக்கில் போக விட்ட திண்மையை நினைக்கும் போது குடும்பக் கொடை வளம் கலைஞர்க்கு உண்மை தெளிவாகின்றது (164-165). நம்பிக்கைக் கேடரும் நட்டாற்றில் கைவிடுவாரும் எத்தகு துயர்களை விளைத்தனர் என்பது குறளோவியத்தின் பல இடங்களில் உள்ளுறையாகத் துலங்குதல் அரசியல் உலகத் திருவிளையாடலை விளக்குவன. தமிழ் வீரம் பளிச்சிடுதல் (460), மாமல்லை சிற்ப மாண்பு (620), சோழர் குடவோலை முறை (627), ஊழிக் கேடு (484) என்பவை என்ன, மனோன்மணியக் காட்சி (328) உதயணன் செய்தி (338), கண்ணகி மாண்பு (344), கோவலன் செய்தி (208), கனக விசயர் சான்று (480), குமணன் கொடை (198), அதியன் ஔவைக்கு வழங்கிய நெல்லிக்கனி (522), புகழேந்தியார் கூத்தர் வரலாறுகள் (396) என்ன, கலைவாணர் குறிப்பு (355) அண்ணா மலையார் (386), பாவேந்தர் பாநயம் (524), 606) என்பவை என்ன, மருதுபாண்டியர் உரிமைப்போர் (572), தந்தை பெரியார், மூதறிஞர் இராசாசி - உயிர் நட்பு (362) என்ன, இவையெல்லாம் குறளோவியத்தில் மின்னலிடுகின்றன. தொழுத கையுள் படையொடுங்குதற்குக் காந்தியடிகளும் (102), பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லுதற்கு, இட்லரின் படையை வென்ற சோவியத்துப் படையும் (114), காலாழ் களரின் நரி அடுதலுக்கு மராட்டிய மன்னன் சிவாசியும், உலக வரலாறு படைத்த சீசரும், அந்தோணியும் (136), பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைதலுக்குச் சாக்கிரடீசும் (146), ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை விளைவுக்குப் பூட்டோவைச் சியா படுத்திய பாடும் (218), அலைமேற் கொண்டு அல்லவை செய்தான் அடையும் கேட்டுக்கு, இடி அமீனும் (334), நிறைமொழி மாந்தர் பெருமைக்கு அண்ணல் காந்தி, அருமை நேரு, மூதறிஞர் இராசாசி, பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கர், சட்ட வல்லார் அம்பேத்கார், சால்பர் காயிதே மில்லத்து, பேரறிஞர் அண்ணா நினைவு நிலையங்களும் (349, 359) மனைத்தக்க மாண்புடைமைக்குக் காரல் மாக்கசின் ஒப்பிலாத் துணையாம் சென்னி மாக்கசும் (370) நெடும்புலனுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப்பிற என்பதற்குக் குருசேவும் தாலினும் (388) கூற்றங் குதித்தலும் கை கூடுதற்குக் காந்திய வழித் தோன்றல் விநோபாபாவேயும் (491), தற்காத்துத் தற்கொண்டான் பேணுதலுக்குச் செயப் பிரகாசரின் திருத்துணை பிரபாவதியாரும் (554) எடுத்துக் காட்டாகி இலங்குதல் வள்ளுவம் வையக வாழ்வியல் நூல் என்பதை வழிவழிக் காட்டுவதாம். மேதக்கோர் மட்டுமோ குறள்வாழ்வுச்சான்றர்? சிறை வாழ்வுக் குற்றவாளி (314), பல்லக்குத் தூக்கிப் பதை பதைப்போன் (352), குப்பை கூட்டிப் பிழைப்போர் (392), வீர மைந்தனைப் பெற்ற அன்னை (405), வண்டியோட்டியின் தாய் (427) இன்னோர் வாயில் இருந்தும் குறள் மணிகள் கொஞ்சி வருகின்றன. அம்மட்டோ? கரடியும் குறள் கூறுகின்றது (240), காளையும் குறள் மொழிகின்றது (385) கனவிலும் குறள் வழிகின்றது (395). காட்சி விளக்கங்கள் எத்தனை? கருத்து விளக்கங்கள் எத்தனை? சொல் விளக்கங்கள் எத்தனை? கதை விளக்கங்கள் எத்தனை? நகைச்சுவைச் செய்தியும்தான் இல்லாமல் போயதா? (298, 431, 503, 592). பெயரிலே கூட நகைச் சுவை! குறள் நயம் விளக்கும் பெயர் நகைச்சுவை (எ-டு) நெளிந்தான், வளைந்தான் (125) நரித்தலையன் (311), கம்பர் தலையில் கட்டப்பட்ட கன்னா, பின்னா, மன்னா, தென்னாவும் தலை நீட்டுகிறது (503). கசேந்திர மோட்சம் (135), சீதேவி மூதேவி (216), இந்திரன் அகலிகை (463) இன்ன தொன்மங்கள் தம்முருவும் மாற்றுருவும் பெறப்படுகின்றன. பேருந்துகளிலெல்லாம் குறள் பதித்த செயன்மையரின், குறளோவியத்தின் ஒரு காட்சி, ஓரிளைஞன் திருமடச் சுவரொன்றில் திருக்குறள் பதித்தலைக் குறிக்கிறது. திருத்தம் வேண்டுமிடத்துத் திருத்தம் அது (336). உன் திருத்தக் குறளை விட்டு விட்டுத் திருக்குறளைப் பாடு என்கிறது ஒரு கட்டளையுள்ளம் (268). குறும்பு வழியில் குறள் பொருள் காண்பாரைத் திருத்துகிறது ஒரு குறள் ஓவியம் (592). குறளுக்கு நகைப் பொருள் தந்து மகிழ்வாரை நகைத்து ஒதுக்கும் ஓவியம் அது. அடுங்காலைக்குச் சாம்போது என்பதும் (195), தூங்குதற்கு உறக்கம் வருவதும் (586), திருத்தம் பெறத் தக்கவை. இந்திரன் அகலிகைக் காட்சி பழையவுரை வழியது. ஐந்தவித்து, ஆற்றலால் சிறந்தவன் இந்திரன்! தொன்மக் கதை வழுக்கை, இழுக்காக்கல் இந்திரப் பேறாகாது? மனைவி யாழிசைக்க, கணவன் குழலிசைக்க... மக்கள் மழலை கேட்ட பின்னே இந்த மழலைக்குப் பின்னர்தான் குழலும் யாழும் என்பதும் (15), யாழ் போல் ஒரு பெண் பிள்ளையும், குழல் போல் ஓராண் பிள்ளையுமாக இரண்டு பிள்ளைகள் போதுமென வள்ளுவர் வாய்மொழி காட்டுவதாகக் கூறுவதும் (542) வளமான படைப்புகள். ஒன்றை விளக்க ஒரு காட்சியா? இரு காட்சியா? முக் காட்சியும் உண்டு! (436, 282). தேனடை போலத் தொங்கும் தாடி (142) பனி விழுந்து பதத்துப் போய் விட்டதால் உடனே எரியாத ஈர விறகைப் போன்றவர் (142). பித்த வெடி கொண்டுள்ள பாதம் போன்று வயலெங்கும் வெடிப்புகள் (227). இலவம் பஞ்சின் உருண்டைகள் போல் முயல்கள் தரையின் பறந்திடும் காட்சி (331). வேகமாக விழும் அந்த (அருவி) நீரினிடையே கண்ணாடிப் பேழைக்குள் தெரியும் கயல் மீன்களைப் போல் அவர்கள் தோற்றமளித்தனர் (351). பெற்றோர்க்கு அடங்காத பிள்ளைகளைப் போல அவர்களின் விழிகள் மட்டுமல்ல, நெஞ்சங்களும் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஒன்றையொன்று நெருங்கிக் கொண்டிருந்தன (391). தோல் சுருங்கிய மாம்பழம் போல அந்தக் கிழவர் ஊர்க் கோடியில் உள்ள மேடையில் உட்கார்ந்திருந்தார் (560). - இப்படி எண்ணற்ற எழிலார்ந்த உவமைகள். கூழ் அமிழ்தமாகிறதா? அல்லது அதைக் கூறும் இந்தக் குறள் (அமிழ்திலும் ஆற்ற இனிதே தம் மக்கள், சிறுகை அளா விய கூழ்) நமக்கு அமிழ்தமாகிறதா? ஆகா! நினைக்கவே இனிக் கிறது! இந்தக் குறள்தான் அமிழ்தம் தெவிட்டாத தேனமிழ்தம்! (216) என்பது உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்னும் தொல்லாணை நல்லாசிரியர் வழிப்பட்ட வாக்காம். பலப்பல நயமும் சுவையும் நிற்க! குறளோவியத்திலே வருவார் அமிழ்தத் தமிழ்ப் பெயர்க் கொடையை மட்டும் அகர நிரலில் காண்க! குறளோவியப் பெயர்கள், குழந்தையர்கள் பெயர்கள் ஆகலாமே! ஆண்கள் பெயர் : அரிமா (404) அன்புமணி (210) அரிமா நெஞ்சன் (311) அறவாழி (323, 608) அருளப்பர் (423) இளங்கோ (399) அழகடியான் (580) இளமதி (245) அழகன் (235, 536) இளவேனில் (454) அன்பின் அடிகள் (574) இன்பமணி (210) அன்புக் கடல் (606) இனியன் (154, 301) உதியன் (547) தணிகைமலை (423) உலகளந்தான் (426) தெளிந்தான் (125) எழிற்கோ (576) தென்னவன் (186) எழினி (280) நல்லான் (239, 417) ஏனாதி (608) நல்லி (283) ஒளியழகன் (330) நலங்கிள்ளி (389) ஒதியன் (154) நன்னன் (547) ஒளியன் (309) நாகன் (417) கடம்பன் (282) பரிதி (404) கணியன் (601) பூங்குன்றன் (331, 529) கதிரொளி (620) பேராளன் (443) கதிரோன் (588) பொற்கோ (408) கரிகாலன் (549) பொன்னையா (476) கிள்ளி (283) மருதன் (99, 434) குன்றன் (592, 600) மறைமுதல்வன் (389) கூத்தன் (439) முகிலன் (273, 400) கோவெண்கோ (576) வடிவழகன் (90, 391) சின்னையா (476) வயலூரன் (5`16) சீராளன் (339) வல்லான் (239, 418) செந்தமிழ்வேள் (450) வழித்துணையான் (514) செம்மல் (516) வேங்கைமார்பன் (583) செவத்தான் (570) வேழமுகன் (583) பெண்கள் பெயர் : அமுதம் (300) கண்மணி (620) அயிரை (412) கயல்விழி (71, 411) அல்லி (265) காவிரி (545) அழகம்மை (415) காளி (282) அழகரசி (325) செவ்வாய் (278) அன்புமதி (415) தாமரை (265) இளநகை (576) திங்கள் (278) ஏந்திழை (147, 486) திருமதி (245) தும்பை (478) பூவழகி (41) தேன்மொழி (64, 588) பைங்கிளி (69) தோகை (69, 478) பொன்னி (265, 620) நங்கை (408) மலர்க்கொடி (372) நல்லம்மாள் (425) மலர்விழி (527) நல்லம்மை (401) மாங்கனி (220) பாலை (331) மாங்கிளி (347) பூங்குழலி (220) முல்லைக்கொடி (273) பூங்கொடி (347) வஞ்சி (87)  2. சிலப்பதிகார ஆராய்ச்சி 1. கிழவர் இளங்கோ இளங்கோவடிகள் தமிழ்க் காப்பியங்களின் தந்தை ஆவர். முதற்காப்பியமாகச் சிலப்பதிகாரத்தை இயற்றினாலும் பின்வந்த காப்பிய நூல்களுக்கு இலக்கணமாக அமையும் சிறப்புப் பெற இயற்றினார். இளங்கோவடிகள் கொண்டிருந்த புலமையையும், பட்டறி முதிர்வையும் அவர்தம் சிலம்பு செவ்வனே தெரிவிப்பதாக இருக்கின்றது. மேலும், தமிழர் எழுத மறந்ததான தன் வரலாறு இளங்கோவடிகளாலேதான் முதற்கண் எழுதப் படுகின்றது. ஆதலின், தன் வரலாற்றின் தந்தை என்றும் இளங்கோவடிகளைக் குறிப்பிடலாம். இவ்விளங்கோவடிகள் சிலம்பு எந்த அகவையில் எழுதத் தொடங்கினார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம். இளங்கோ என்றவுடன் நம் மனக்கண்முன் இளமைதான் வந்து நிற்கின்றது. அவ்விளமைக் கோலந்தான் இளங்கோவடிகள் நூல் யாக்கப் புகுந்த கோலமா எனின் காண்போம். இமயத்தை எல்லையாகக் கொண்டு ஆண்ட நெடுஞ்சேரலாதன் பெற்றெடுத்த மக்கள் இருவர். அவருள் மூத்தவன் செங்குட்டுவன்; இளையவர் இளங்கோ! ஒரு நாள் மக்கள் இருவரும் பக்கத்தே இருக்க, சேரலாதன் அரியணையிலே அமர்ந்திருந்தான். அது காலையில் நிமித்தம் வல்லான் ஒருவன் அவ்விடத்தே அடைந்தான். அவன் இளங்கோவைக் கூர்ந்து நோக்கி இவ்விளையவனே அரசாளும் இலக்கணம் அனைத்தும் அமையப் பெற்றுள்ளான்; ஆதலால் இவனே அரசனாவதற்கு உரியன் என்றான். இச்சொல்லைக் கேட்ட இளங்கோவின் முகம் மாற்றம் உற்றது. நிமித்திகனை வெகுண்டு நோக்கி மூத்தவன் இருக்க இளையவனே ஆள வேண்டும் என்று முறைகெடக் கூறினை; உன் கூற்றைப் பொய்யாக்குமாறு இப்பொழுதே துறவு கொள்கின்றேன் என்று துணிந்தார். அப்படியே நடத்திக் காட்டினார். இளங்கோ துறவு கொள்ளும் நேரத்தே செங்குட்டுவன் ஆட்சி ஏற்கத் தக்க ஆண்டினனாக இருந்தான். அவனுக்கு நேர் இளையவர் இளங்கோ! செங்குட்டுவனுக்கு நேர்ந்த துயரத்தைக் குறிப்பால் அறியும் திறம் இளங்கோவடிகளுக்கு இருந்தது. அத்துயரை மாற்றியமைக்கத் தக்க எண்ணம் நொடிப் பொழுதில் தோன்றியது. இவற்றை நோக்குங்கால் செங்குட்டுவனுக்கு அகவை பதினாறும், இளங்கோவுக்கு அகவை பன்னிரண்டும் ஆகவாவது இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வரலாம். இஃது ஒருபுறம் இருக்க பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தைப் பாடிய புலவர்களின் பரணர் ஆவர். அவர் பொய்யா நாவிற் பரணர் என்று கொண்டாடப் பெறும் புகழாளர். அவர் செங்குட்டுவனது வரலாற்றைப் பதிற்றுப் பத்தில் குறிப்பிடுகின்றார். சேரன் மேல் கடலிடைக் கொண்ட வெற்றியும், மோகூர் மன்னர் முரசங் கொண்ட வெற்றியும் அவரால் குறிக்கப் பெறுகின்றன. வடநாடு சென்று பத்தினிக்குக் கல் கொண்டு வந்த வரலாறு அவரால் குறிக்கப் பெறவில்லை. அன்றியும் பிற்கால வாழ்வில் செங்குட்டுவன் கொண்ட வெற்றிகளும் குறிக்கப் பெறவில்லை. பரணர் பாடிய பாடல்கள் பதிற்றுப்பத்தினை அன்றி வேறு சில தொகை நூல்களிலும் உள. அங்கெல்லாம் பெரும் வரலாறுகளைச் சுட்டிச் செல்லும் அவர், செங்குட்டுவன் பிற்பகுதி வரலாற்றின் நிகழ்ச்சிகள் நடந்த போது இருந்திருப்பாராயின் அவற்றைக் கூறாது விட்டுச் சென்றிருக்க மாட்டார். ஆதலால் பரணர் செங்குட்டுவனது முற்பகுதி வரலாற்றையே தாம் பாடிய பாடல்களில் குறித்தவர் ஆகின்றார். இளங்கோவடிகள் தம் நூலில் ஒரு காண்டத்தைச் சேரனுக்கு உரித்தாக்குகின்றார். அங்கே தான் செங்குட்டுவன் வடநாடு சென்று கற்புத் தெய்வத்திற்குக் கல் கொணர்ந்த வரலாறு கூறப் படுகின்றது. இளங்கோவடிகளோ ஆய்ந்து தெளிந்து அளவொடு கூறுபவர் ஆகலின், தம் நூலுக்கு ஏற்ப வடவர் போரையும், அதன் வெற்றியையும் கல்லெடுப்பையும் விரியக் கூறினார். எஞ்சிய போர்களைச் சுருக்கிக் காட்டினார். இதனால் செங்குட்டுவன் வரலாற்றின் முற்பகுதி பரணராலும், பிற்பகுதி இளங்கோவடிகளாலும் குறிக்கப் பெற்றது எனலாம். இஃது இவ்வாறிருக்க, ஒவ்வொரு பத்திற்கும் பதிகம் என ஒன்று பதிற்றுப்பத்தைத் தொகுத்தோரால் எழுதிச் சேர்க்கப் பெற் றுள்ளது. அதனை எழுதியவர், வரலாறும் கால உணர்வும் தெளிய அறிந்தவர் என்பதை அவர் குறிப்புக்கள் அறியச் செய்கின்றன. பதிற்றுப்பத்துக் கூறும் சேர அரசர்கள் அத்தனை பேரின் ஆட்சியும் முடிந்த பின்னர் அவர் தக்க சான்றுகளைக் கொண்டு முறை பெறப் பதிகம் பாடியிருக்க வேண்டும். இவ்வாறு பாடப்பெற்ற பதிகங்களில் ஒன்றே ஐந்தாம் பத்துப்பதிகமாகும். அப்பதிகம் செங்குட்டுவன் நடத்தியதாகப் பரணர் கூறும் போர்களையும், அதற்கு மேல் அவன் நடத்திய போர்களையும் இளங்கோவடிகள் குறிப்பிடும் வடநாட்டுப் போரையும் சேர்த்துத் தொகுத்து குறிப்பிடுகின்றது. அதில், கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவிற் கானம் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி என்னும் பகுதி குறிப்பிடத்தக்கதாம். மற்றும், நமக்குத் துணையாகும் நல்லதொரு குறிப்பையும் அப்பதிகம் தருகின்றது. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டு வீற்றிருந்தான் என்பதே அது. வாழ்ந்தது ஐம்பத்தை யாண்டு அல்ல. அவன் வீற்றிருந்தது - அரியணையில் வீற்றிருந்தது - ஐம்பத்தை யாண்டு! இந்த ஆண்டினை வாழ்வுயாண்டு எனக் கருதக் கூடாதோ எனின், பதிற்றுப்பத்தின் வேறு சில பதிகங்களில் பதினாறாண்டு வீற்றிருந்தான், பதினேழியாண்டு வீற்றிருந்தான் என்று வருவனவற்றால் ஒவ்வாமை அறிக. அன்றியும் கல்லெழுத்துக்களிலே காணப் பெறும் காவலர் ஆண்டுகள் ஆட்சியாண்டாக இருக்கும் உண்மையும் தெளிக. வாழ்ந்ததை வீற்றிருத்தல் என்னும் வழக்கின்மையும் காண்க! இங்குக் கூறியவற்றால் செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டுகள் ஆட்சி செய்ததாகக் கொள்ள வேண்டுவது உண்மையாவதாலும், அவன் பதினாறாம்யாண்டிலே ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக் கூடும் எனக் கருதுவதாலும் எப்படியும் செங்குட்டுவன் எழுபது யாண்டுகட்குக் குறைவு படாமல் வாழ்ந்திருந்தான் என்பது தெளிவாம். மேலும் அவன் பிற்பகுதி வாழ்விலே நிகழ்ந்ததுதான் வடநாட்டுக் கற்கோள் செலவு என்பதை ஒருவழியால் ஆராய்வோம். சேரனது முற்பகுதி நிகழ்ச்சியாயின் மிக உயர்ந்ததான இச்செயலைப் பரணர் கூறாது விட்டுச் சென்றிருக்க மாட்டார் என்பது உறுதி. இது நிற்க; வடநாடு சென்று கண்ணகிக்குக் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சிமா நகர் வந்து சேர்ந்த செங்குட்டுவன் ஆடல் பாடல்களில் மகிழ்ந்து அரியணையில் அமர்ந்திருந்தான். அதுபோழ்து நீலன் என்னும் ஒற்றர் தலைவன் வந்தான். நீலனோ, தமிழர் தம் ஆற்றலை இகழ்ந்த கனகவிசயரைச் சேரன் ஆணைப்படி பாண்டிய, சோழ வேந்தர்க்குக் காட்டி வரச் சென்றவன். அவன், பார்த்திபர் இருவரும் தோற்றோடிய வரைச் சிறை செய்து வந்த வெற்றி போலொரு வெற்றி கண்டிலேம் என்று கூறிய இம்மொழியைக் கொண்டு வந்து சேரனிடம் சேர்த்தான். அதனால் செங்குட்டுவன் சீற்றமுற்றுச் சோழ பாண்டியர்களுடன் போரிட எழுந்தான். அது போழ்து அருகில் இருந்த மாடலன் என்னும் மறையோன், வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை என்றான். இவன் கூற்றால் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டபொழுது, ஆண்டு - வையங்காவல் பூண்ட ஆண்டு - ஐயைந்திரட்டி (ஐம்பது) ஆகி விட்டது. முன்னரே பதினாறு இளமையில் செங்குட்டுவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருக்கக் கூடும் எனக் கருதிக் கொண்டு விட்டபடியால் இப்பொழுது 66 யாண்டுகள் ஆக வேண்டும். செங்குட்டுவன் வடநாடு சென்று இமயத்தில் கல் எடுத்துக் கங்கைக் கரை வர எண்ணான்கு மதியம் ஆகின்றது. அதன் பின்னர்ச் சில திங்கள் செலவிட்டே வஞ்சி வந்தடைந்திருக்கக் கூடும். ஆகலின் செங்குட்டுவன் வட நாட்டுச் செலவுக்கு மூன்று யாண்டுகளேனும் செலவிட்டு இருக்கலாம். ஆதலால் தனது 63 ஆம் ஆண்டில் குன்றக் குறவர்களாலும், புலவர் சாத்தனாராலும் தன் தம்பி இளங்கோவுடன் இருந்து கண்ணகி வரலாற்றை அறிந்து கொண்டான் செங்குட்டுவன். அப்பொழுது இளங்கோவடிகள் அகவை 59 ஆக இருத்தல் வேண்டுமன்றோ! இமயக் கல்கொண்டு வந்த பின்னர்க் கண்ணகியார் கோயில் கட்டவும், திருச்சுற்றெடுக்கவும், நடுகல் விழா நடத்தவும், அண்டை நாட்டு வேந்தர்களுக்கும், அயல் நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பி வரச் செய்தற்கும் ஆண்டுகள் சில கடந்தன. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் கூறியவாறு செங்குட்டுவனது 55 யாண்டு ஆட்சியில் எஞ்சியிருக்கும் ஐந்தாண்டுகளையும் இப்பணியிலே செலவிட்டான் என்று உறுதி செய்யலாம். தமது ஐம்பத்தொன்பதாம் ஆண்டிலே குன்றக் குறவர் கூறிய கண்ணகியார் வரலாற்றையும், அதனை விளக்கிக் கூறித் தூண்டியும் வேண்டியும் நின்ற சாத்தனார் கூற்றையும் உளத்தே தேக்கி ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் எண்ணித் திளைத்த அடிகள் அதன் பின்னரே தம் புலமைச் செறிவும் கலை நயமும் திகழ முத்தமிழ்க் காப்பியமாம் சிலம்பை இயற்றினார் ஆதல் வேண்டும். கண்ணகியாரின் வரலாற்றைக் கேட்டவுடனே அடிகள் நூல் தொடங்கிப் பாடியிருக்கக் கூடாதோ எனின் சாத்தனார் வரலாற்றை அடிகளிடம் கூறும் இடமே, வரலாற்றின் வேறொரு திருப்பத்திற்கு உரிய இடமாக அமைந்தது. உடனே எப்படிப் பாடத் தொடங்க முடியும்? மேலும் இலக்கியம் நாட் குறிப்பா? அவ்வாறு இருக்குமாயின் கண்டவுடனோ கேட்டவுடனோ குறித்து விட முடியும்; குறிக்கவும் வேண்டும். சீரிய காப்பியம் பாடத் தொடங்குவோர் அதன் முடிநிலை தெளிந்தன்றித் தொடங்குதல் இயல்பு இல்லை. அன்றியும் சிலம்பினைச் சிறிது நோக்கிப் பார்ப்பினும் வஞ்சிக்காண்ட நிகழ்ச்சிகள் பல, புகார், மதுரைக் காண்டங்களிலே சுட்டப் பெறுவதை உணரக் கூடும். ஆகலான் வரலாறு அனைத்தும் நிகழ்ந்த பின்னரேதான் அடிகள் சிலம்பு பாடத் தொடங்கினார் என்பது தெளிவாம். ஆகையால் பன்னாட்டு வேந்தரும் பாராட்டுமாறு செங்குட்டுவன் சிலைக் கோயில் எடுத்து வழிபாடு செய்த பின்னரே அடிகள் கலைக் கோயிற் பணி தொடங்கினார். அப்பணி தொடங்கும் காலையில் அடிகட்கு அகவை ஏறக் குறைய 67 ஆக இருத்தல் வேண்டும். காப்பியம் எழுதவும், அரங்கேற்றம் செய்யவும் மேலும் சில பல ஆண்டுகளைச் செலவிட்டு நிறைநாட் செல்வராய்ப் பெருவாழ்வுற்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகும். 2. உருபு செய்த உயிர்க்கொலை பழிச் செயல் புரியார் பாண்டியர்; பழியொன்று நேரின் உயிர் வாழார். இத்தகைய பாண்டியர் குடியிலே வந்தவன் வெற்றிவேற்செழியன். ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் மதுரையிலே இருந்து அரசு புரிந்த போது, கொற்கையிலிருந்து தென்பாண்டி நாட்டைக் காத்தவன் இவ்வெற்றிவேற் செழியனே. நெடுஞ்செழியன் மாண்ட நிகழ்ச்சியை அறிந்து இவன் மதுரைக்கு வந்து காலைக் கதிர்க் கடவுள் என்ன அரசுக் கட்டில் ஏறினான். ஆரியப்படை கடந்தான் ஆராயாமல் கோவலனைக் கொன்றதால் பழிக்கு ஆளானான். அப்பழியை அறிந்த பின் கெடுக என் ஆயுள் என்று அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தான். கோப்பெருந்தேவியும் தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல் அரசனுடன் மாண்டாள். இந்நிலைமையிலே ஆட்சி ஏற்கின்றான் வெற்றிவேற் செழியன். அவன் பொறுப்பு ஏற்ற காலையில் பாண்டிய நாட்டின் நிலைமை இஃது எனவும், ஆட்சி ஏற்றவன் செயல் இஃது எனவும் சிலம்பு தெரிவிக்கின்றது. அஃது, அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையி லிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது என்பது. இஃது உரைபெறு கட்டுரையிலுள்ளது. மங்கல வாழ்த்துக்கு முன்னாகவே இருக்கும் இக்கட்டுரை அடிகள் எழுதியதுதானா? இவ்வுரையின் உண்மைதான் என்ன? இவற்றைக் காண்போம். பாண்டியன் பழிகாரன் ஆனதற்குக் காரணமாக இருந்தவன் பொற்கொல்லன் ஒருவன். ஆதலால் அரசுரிமை ஏற்ற வெற்றி வேற்செழியன் அக்கொல்லன் இனத்தவர் ஆயிரவரைக் கொன்று களவேள்வி செய்தான். இது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போன்றது அல்லவா! பழியைப் போக்கப் பெரும் பழியா புரிவது? செங்கோல் தென்னவர் செயலா இது? உரைபெறு கட்டுரை அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர் ஆகிய இருவருக்கும் முன்னரே இடம் பெற்று விட்டது என்பதை அவர்கள் உரை உண்மையால் தெளியலாம். அவர்கள் கொல்லர் ஆயிரவர் பலியை ஐயுற்று எழுதினர் அல்லர். ஆனால் சிலப்பதிகாரப் புத்துரை ஆசிரியர் நாட்டாரவர்கட்கு ஐயந் தோன்றியது. பழையதை மறுக்காமலே மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச் செய்து பலியிட்டான் போலும் என்று எழுதினார். மாவினால் இடும்பலி உயிர்ப்பலி யாகுமா? பூப்பலி போல மாப்பலி ஆகுமே அன்றி உயிர்ப்பலி ஆகாது! ஒரு பொற்கொல்லன் செய்த தவற்றுக்காக... அவன் இனத்தவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக.. ஏதும் அறியாத ஆயிரவரைக் கொன்ற கொடுமையை அறநெறி முதற்றே அரசின் கொற்றம் எனக் கொண்ட பாண்டிய நாட்டு அரசின் மேல் ஏற்றுதல் இழுக்காகும். வெற்றிவேற்செழியன் அரைசு கெடுத்து அலம் வரும் அல்லற் காலையிலே கொற்கையிலிருந்து மதுரைக்கு வந்தான் என்று நீர்ப்படைக் காதையிலே பாடினார் அடிகள். அரசினை இழந்து மயங்கும் துன்பமிக்க காலம் பாண்டிய நாட்டுக்கு இருந்ததே அல்லாமல், வெப்பும் குருவும் தொடர்ந்ததாகக் குறிப்பு இல்லை. வெப்பும் குருவும் தொடர்ந்தால் - கண்ணகியாரின் வஞ்சினத்தால் தொடர்ந்தால் - அதற்கு மன்னனும், அவனைப் பழிவழிச் செலுத்திய ஒரு பொற்கொல்லனுமே காரணமாவர் அன்றி மற்றையோர் யாது செய்வர்? நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர அரண் மனைக்குப் பொற்கொல்லன் சென்று கொண்டிருக்கும் பொழுது கோவலன் அவனைக் கண்டான். இச் சிலம்பினை விலையிடக் கூடுமோ? எனக் கேட்டான். பாண்டிமா தேவிக்குரிய சிலம்பினை நான் கவர்ந்து கொண்டது வெளிப்படு முன் இவனே கள்வன் எனக் காட்டித் தந்து என்மேல் ஐயம் ஏற்படாதவாறு காப்பேன் என உறுதி செய்து கொண்டு, காவலனைக் காணுகின்றான். தக்க உரையால் தன் எண்ணத்தையும் முடித்துக் கொள்கின்றான். நூற்றுவர் பின் தொடர்ந்து வரினும் எவரிடத்திலும் அவன் கரவு எண்ணத்தைக் கூறினான் அல்லன். அவரும் கேட்டாரல்லர். அது பற்றிய சிந்தனை எதுவும் அற்றவராய் அவரவர் பணிக்கு ஏகினர். காவலனிடம் பொற்கொல்லன் கரவாகப் பேசியதும், அதன் விளைவால் கோவலன் கொலை செய்யப் பெற்றதும் அவர் அறியார். ஒருவேளை, உண்மையைத் தெளிவாய் அறிந்திருந்தும், வஞ்ச உள்ளத்தாலோ, அச்ச நடுக்கத்தாலோ தடுத்து உரையாமல் இருந்திருப்பின் அவர்கள் மீது பழி சூட்டவும் கூடும். அதற்கும் வழியில்லை. அன்றிக் கொல்லப்பட்டவர்கள் என்று குறிக்கப் படுவர்களும் அந்நூற்றுவர் அல்லர் ஆயிரவர். இது பெரும் பழியல்லவா! காவலன் கடமையா இது? வெற்றிவேற்செழியன் அரசனையும் அரசியையும் இழந்த துயரத்தால் அறிவிழந்து, வெறி கொண்டு இச்செயலைச் செய்தான் என்றே கொள்வோம். அக்காலையில் அமைச்சர், ஆன்றோர், அறிவர் எவரும் இலரா? அவர்களெல்லாரும் தடுக்காமல் வாளாவிட்டு விட்டனரா? அன்றி இத்தண்டம் தரவேண்டியது முறையே என்று அவர்கள் உள்ளமும் ஒப்புக் கொண்டு விட்டதா? அவ்வாறாயின் பாண்டியனுக்கு மட்டு மன்று - தமிழகப் பண்பாட்டுக்கே பெருங் களங்கம் ஆகும். தனி மகன் ஒருவன் உரையை அறிவு பிறழ்ந்த நேரத்தே ஏற்றுக்கொண்டு, பிறர் அறியாமல் இட்ட கட்டளையால் நிகழ்ந்தது கோவலன் கொலை. அதுபோல்வதா ஆயிரம் பொற்கொல்லர் கொலை? ஊர் அறியாமல் - ஏன் - நாடே அறியாமல் செய்துவிட இயலுமா? ஆயிரவர்களை எவரும் அறியாமல் ஒன்று சேர்க்கவோ பலியிடவோ கூடுமோ? அவர்களும் உவப்புடன் முன்வந்து தங்களைத் தாங்களே பலியிட ஒப்பினரா? அவர்கள் மனைவி மக்களும் உடந்தையாகி விட்டனரா? எப்படி ஒப்புவது? மலையமான் மக்களை யானைக்காலின் கீழிட்டுக் கொல்லத் துணிந்த கிள்ளிவளவனைத் தடுத்து நிறுத்தியவர் எவர்? ஒற்று வந்தான் என்று இளந்தத்தன் என்னும் புலவனைக் கொல்ல நின்ற நெடுங்கிள்ளியைத் தெருட்டி நிறுத்தியவர் எவர்? மைந்தரொடு மாறுபட்ட மன்னரை, மனைவியொடு வேறுபட்ட வேந்தரைத் திருத்தி நிலை நிறுத்தியவர் யாவர்? முடி வேந்தர்கள் ஆயினும் முறை கெட்டுச் செல்லுங்கால் இடித்துக் கூறி நன்னெறி காட்டியவர்கள் யாவர்? தமிழ் வளம் கொழித்த தகைசால் புலவர்கள் அல்லரோ? அவர்களுள் எவருமே சங்கம் இருந்து புலவர் கூட்டுண்ட தமிழ் மதுரையிலே இல்லாமல் போய் விட்டனரா? இருந்தும் தடுக்க முன் வந்தாரில்லை என்றால் பழி! மாபெரும் பழி! தமிழ்த் தாய்க்கே இழிவு! நூலுள், நீர்ப்படைக் காதையிலே, கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞுற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை உயிர்ப்பலி யூட்டி என்று வரும் வரிகளை உட்கொண்டு உரைபெறு கட்டுரை எழுதப் பெற்றதாம். இந்நீர்ப்படைக்காதை வரிகளை மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனிடம் உரைக்கின்றான். மன்னன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என்ற செங்குட்டுவன் வினாவுக்கு விடையாகவே இதனைக் கூறுகின்றான். இப்பகுதி ஆயிரவரை உயிர்ப்பலி ஊட்டிய நிகழ்ச்சியாயின் சொல்லுபவன் கவலைக் குரல் காட்டியிருக்கக் கூடும். அன்றிக் கேட்பவனும் கவலை பெருக்கியிருக்கக் கூடும். இரண்டுமே இல்லை! முன்பு செங்குட்டுவனை மலை நாட்டிலே கண்டு கண்ணகி வரலாற்றைச் சாத்தனார் கூறுங் காலையில், பாண்டியன் செய்த தவற்றினையும் அதன்பின் அவன் மாண்டதனையும் கேள்விப் பட்டு, வருந்தினன்; மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்என உரைத்துக் கவலை கொண்டவன், இங்கே ஆயிரவர் பலியினைக் கேள்வியுற்று வாளா இருப்பானோ? இருக்கவும் உள்ளம் விடுமோ? இது பெரும் பழி என்று கொதித்துரைத்திருக்க மாட்டானோ? இவற்றுள் எதுவும் இல்லை. இவ்வாறு சொல்பவனும் கேட்பவனும் சிறிதும் கவலையற்றவர்களாய்க் காணப் பெறுவதால் ஆயிரவரை உயிர்ப்பலியிட்ட நிகழ்ச்சி அங்குக் கூறப் பெற்றது இல்லையாம். அவ்வாறு பலியிட வேண்டியது இல்லையாம். கண்ணகியார் கணவனை இழந்த கவலையிலே, பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்க என்று தீக்கு ஆணையிடுகின்றார். அவர் ஆணைப்படியே தீத்திறத்தோர் அனைவரும் ஒழிந்திருக்க வேண்டுமே! அதனை விடுத்து ஆயிரவர் பொற்கொல்லரைப் பலியிட்டது தெய்வமும் ஏற்கத் தகாத செயல்தானே! கண்ணகியாரே தீயவர்களுக்குத் தெய்வத்தின் பெயரால் தண்டனை தந்தார். தீயவர் அழிந்து போயிருக்க வேண்டும். எஞ்சியிருந்தவர் எவரும் தீயரல்லர்! நல்லோரே! நல்லோர் ஆயிரவரைக் கொன்றது அறநெறிக்கு ஏற்குமா? அதனை ஏற்றுக் கொண்டது எனின் கண்ணகியார் கூறியது போல் மதுரை மாநகரில், சான்றோரும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? கோவல கண்ணகியரைக் கண்டு புன்சொல் கூறிய தூர்த்தனும் பரத்தையும் கவுந்தியடிகள் சாபத்தால் முள்ளுடைக் காட்டில் முதுநரியாகி ஊளையிட்டது கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமை என்றறியல் வேண்டும் என்று கோவலன் வாயிலாகக்கூறும் அடிகள், களை பறிப்போர் பறித்து வரப்பிலே போட்ட குவளைப் பூவின் மேல், தளர்ச்சி மிகுதியால் கண்ணகி கால்களை வைத்து விடக்கூடும். அதனால் அப்பூவிலேயுள்ள தேனை எடுக்குமாறு புகுந்த வண்டு இறக்கவும் கூடும் என்று கவுந்தியடிகள் வாயிலாக அருளறங் கூறும் அடிகள் - கோவலன் இறப்புக்குக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன், கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என்று இரங்கும் அடிகள் - ஆயிரவர் பொற்கொல்லரைத் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி ஊட்டிய கொடுமையைச் சிறிதும் அசைவின்றிக் கூறிச் செல்வாரோ? செங்குட்டுவனிடம் கண்ணகியார் வரலாற்றைக் கூறும் சாத்தனாரேனும் உயிர்ப்பலி ஊட்டிய வரலாற்றைக் கூறு கின்றாரோ? இல்லை. அவர் கோவலன் கொலையுண்ட உடனேயே சேரநாடு போய்விட்டார் என்று கூறவும் இயல வில்லை. கண்ணகியாரே, கோவலன் இறந்த பதினான்காம் நாள் விண்ணுலகு சென்றார். செல்லுங் காலையில்தான் மலை வேடர்கள் கண்டனர். தற்செயலாக மலைவளங் காண எழுந்த சேர வேந்தனிடம் தாம் கண்ட வியப்புமிக்க நிகழ்ச்சியைக் கூறினர். அதற்கு விளக்கம் தருவதாகத்தான் சாத்தனார் பேசினார். இவையனைத்தும் விரைந்து நடந்தவை என்று கொண்டாலும் இடையீடு படாமல் தொடர்ந்தவை அல்லவாம்! மதுரையிலே வாழ்ந்த சாத்தனார் இந்நிகழ்ச்சியை அறியாமல் இருந்தார் என்பதும் சால்பில்லை. ஆதலின், உயிர்ப்பலியாகக் கொல்லரையிட்ட நிகழ்ச்சி உண்மையன்றாம். உரைபெறு கட்டுரைக் கூற்றும் பொய்யாம். அடிகள் கருத்துக்கு மாறு பட்ட உரைபெறு கட்டுரை எப்படி அடிகள் எழுதியது ஆகும்? சமணரைக் கழுவேற்றிய நிகழ்ச்சி ஒன்று உண்டே! அது போல் இதுவும் நடந்திருக்கக் கூடாதோ- எனின் தென்னாட்டுத் தென்றல் திரு. வி. க சமணரைக் கழுவேற்றியது பற்றி உரைப்பது காண்க. தன்மனச் சான்றால் ஒரு மன்னனை மாள்வித்த அறம் வளர்ந்த ஒரு நாட்டில் சமணரைக் கழுவேற்றிய மறம் வளர்ந்த தென்னை என்று சிலர் கருதலாம். சமணரைக் கழுவேற்றிய வரலாற்றிற்குப் போதிய அகச்சான்றாதல், புறச்சான்றாதல் உண்டா என்பது முதலாவது சிந்திக்கத் தக்கது. அச்சான்றுகள் கிடைக்கும் வரை சமணரைக் கழுவேற்றிய வரலாற்றை யான் கொள்ளேன்; கொள்ளேன். தேவாரத்தில் போதிய அகச் சான்றில்லை. அந்நாளில் பாண்டிய நாடு போந்த வெளி நாட்டார் சிலர் எழுதிய குறிப்புக்களிலும் அவ்வரலாறு காணோம். திருஞான சம்பந்தருக்கும் பின்னே பன்னூறு ஆண்டு கடந்து எழுதப் பெற்ற சில புராணங்களில் சமணரைக் கழு வேற்றிய கதைகள் சொல்லப்படுகின்றன. அக்கதைகளும் ஒருமைப்பாடுடையனவாயில்லை. ஒரு புராணக் கதைக்கு மற்றொரு புராணக்கதை முரண்பட்டு நிற்கிறது. இப்புராணக் கூற்றுக்களைச் சரித்திர உலகம் ஏற்குங்கொல்! சரித்திர உலகம் ஏற்றுக்கொள்ளும் முறையில் அல்லவோ சான்றுகள் இருத்தல் வேண்டும். இப்பொழுது ஞானசூரியன் என்னும் ஒரு நூல் தமிழ் நாட்டில் உலவுகிறது. அந்நூற்கண் எடுத்துக் காட்டப்பட்ட திருஞானசம்பந்தர் திருப்பாக்களுள் ஒரு மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்தவாது செயத் திருவுள்ளமே என்பது தேவாரம். இதன்கண் போந்துள்ள திறம் என்னும் சொல் ஞானசூரியனில் சிரம் என்னும் சொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது... அறிந்தோ அறியாமலோ உறும் மாற்றங்கள் பின்னே சரித்திர உலகிற்குப் பெருந் தொல்லை விளைக்கின்றன. இவ்வுரை மணிகளும் மேற்கொள் விளக்கமும் உயிர்ப் பலியூட்டிய இந்நிகழ்ச்சிக்கும் முற்றிலும் பொருந்துவனவாகும். உயிர்ப்பலியிடல் உண்டு என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்பல இடங்களில் சாற்றிச் செல்கின்றன. பலி பீடம், பலிபீடிகை, பலிமுன்றில், பலிப்புதவு, பலிபெறு வியன்களம், உயிர்ப்பலிமுரசு என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பூவினைத் தெய்வப் பலியாக இடுவது பூப்பலி. அதுபோல் உயிர்களை முரசங்களுக்கும், தெய்வங்களுக்கும் பலியாக இடுவது உயிர்ப்பலி. ஆனால் மக்களைப் பலியிடும் வழக்கு இல்லை. அது செய்யப்படின் கொலையாம். வீரங் கருதித் தாமே தம்மைப் பலியிட்டுக் கொள்ளும் இலக்கிய வழக்கினை இவ்வுயிர்ப் பலியூட்டுள் வைத்து எண்ணுவது முறைமையன்றாம். அதனினும் ஆயிரவரை ஒருங்கு பலியிட்டதாகக் கூறும் இந்நிகழ்ச்சியுடன் பேசவே தகுதியற்றதாம். எல்லாவிடத்தும் கொலை தீது (நான்மணி 93) என்றும், ஆருயிரைக் கொல்வதிடை நீக்கி வாழ்தல் (திரிடுகம் 25) நன்குணர்ந்தார் என்பெறினும் கொல்லார் (சிறுபஞ்ச 48) என்றும் அறநூல்கள் கூற, அறத்தின் தலைமணியாம் திருக்குறள் தோன்றிய நாட்டிலே ஆயிரவரைக் கொன்ற கொடுமை உண்டென்பதே பெரும் இழுக்காகும். இது நிற்க. பழமொழி நானூறு என்னும் நூலிலே இனங் கழுவேற்றினாரில் என்று ஒரு பழமொழி சுட்டப் பெறுகின்றது. (பழமொழி 188) இது மாறுகொண்டவர் என்று கருதி ஓர் இனத்தையே கழுவேற்றினார் இல்லை என்று உறுதியளிக்கின்றது, இல்லையா? பொற்றொழிற்கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் பத்தினிக்கு ஒரு பகல் எல்லை உயிர்ப் பலியூட்டி என்ற வரிக்குத் தவறாகப் பொருள் கருதிக் கொண்டு விட்டமையால் நேர்ந்த பிழைபாடே இது. ஈரைஞ்ஞூற்றுவர் ஆயிரவரை என்றார் அரும்பதவுரைக்கார் இரண்டன் உருவு விரிக்க என்றார் நாட்டார். நீர்ப்படைக் காதை வரிகளுக்குக் கருத்தினைப் பிறழக்கொண்டு உரைபெறு கட்டுரைகாரர் எழுதிய வரிகள் அரும்பத உரைகாரரையும், புத்துரைகாரரையும் மயங்கச் செய்து அவர் வழிக்கே இட்டுச் சென்றுவிட்டன. ஆனால் ஈரைஞ்ஞூற்றுவர் பொற்கொல்லரும் பத்தினிக்கு ஒரு நாள் அளவும் உயிர்ப் பலியூட்டினர் என்று பொருள் கொள்வோமாயின் எவருக்கும் பழி இல்லையாம். தம் இனத்தவன் ஒருவன் செய்த தவற்றுக்கு இரங்கி அவ்வினத்தவர் ஆயிரவர் கூடி, இக்கூடாத நிகழ்ச்சிக்காக ஒருநாள் முழுவதும் உயிர்ப்பலி யிட்டு வாழ்த்தி வழி பட்டனர் என்று கொள்ளல் தக்கதாம். கற்புக் கண்ணகியாரின் கடுஞ் சினம் தங்கள் இனத்திற்குக் கேடு செய்து விடாமலும், அவர் உள்ளத்தைச் சாந்தி செய்யுமாறும்; தங்கள் இனப் பழிக்குக் கழுவாய் தேடுமாறும் இவ்வுயிர்ப் பலி இட்டனர் எனின் குற்றமாகுமோ? இவ்வாறு பொருள் காணுவதைத் தடுத்தது முன்னிற்கும் ஒரு வரியாம். அதனைக் காண்போம். கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதார் அரைசுகெடுத் தலம்வரு மல்லல் காலைத் தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிலைமணிப் புரவி யோரேழ் பூண்ட ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள்ஏ றினனெ மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் சிலம்பு 27: 127-38 என்பதற்கு வெற்றிவேற்செழியன் ஈரைஞ்ஞூற்றுவரை உயிர்ப் பலியூட்டி அரசுக் கட்டில் ஏறினன் எனக் கொண்டு விட்டனர். அவ்வளவே! இதற்கு முதல் வரியும் இரண்டாம் வரியும் அமைந்துள்ள நிரலும், உயிர்ப்பலி நிகழ்ச்சியும், உரைபெறு கட்டுரைக் குறிப்பும் பின்னிப் பிணைந்து மாறு பொருள் காணுமாறு செய்து விட்டன. ஆனால் பொற்கொல்லர் ஆயிரவர் பத்தினிக்கு ஒரு பகற் பொழுதளவு உயிர்ப்பலியூட்டி புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரை மூதூர் தன் அரசினை இழந்து மயங்கும் துன்பமிக்க காலத்தே கொற்கையிலிருந்த வெற்றிவேல் செழியன் தென்னாட்டின்கண் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய உயிர்த் தொகுதியினைக் காவல் செய்யும் முறையானே முதன்மை அமைந்த சிங்காதனத்தின்கண் ஏறினான் என்று உரைகொள்ளின் எவர் மீதும் பழி போட வேண்டியது இல்லை. வெற்றிவேற்செழியன் மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற் காலையில் முறைமுதல் கட்டில் ஏறினான் என்பது பொருந்தும். அவன் அரசேற வருமுன் இருந்த மதுரை நிலைமையைக் காட்டும் அடைமொழியே உயிர்ப் பலியிட்ட நிகழ்ச்சியாகும். வெற்றிவேற்செழியன்... அல்லற்காலை என இடை வெளிப்படுகின்றதே என்ற ஐயம் இலக்கியம் பயின்றோர்க்கு கிளைக்க மாட்டாது. ஏனெனில் இவ்வாறு வருவதற்கு எண்ணிறந்த சான்றுகள் உளவாதலை அறிவர். இவ்வாறு உரை கொள்ளாவிடின், பழிமிக்க ஒரு கொலையால் அரசனும் அரசியும் இறந்துவிட்ட நிகழ்ச்சியை அரியணை ஏறுமுன்னரே மறந்து ஆயிரவர்களை அறமற்றுக் கொன்றான் வெற்றிவேற் செழியன் என்ற பெரும் பழிக்கு ஆளாக நேரிடும். பாண்டியன் அத்தகைய பழிகாரனா? அன்று! அன்று! அவனைப் பழிகாரன் ஆக்கியது ஐ என்னும் ஓர் உருபே. ஆதலால் ஆயிரம்பேர் கொலை ஓர் உருபின் கொலையேயாம்! இங்குக் கூறியவற்றால் உரைபெறு கட்டுரை அடிகளார் எழுதியது அன்று என்றும், அக்கட்டுரை சிலப்பதிகார உரை ஆசிரியர் காலத்திற்கு முற்பட்டே எழுதப் பெற்று விட்டது என்றும், அது நீர்ப்படைக் காதை வரிகளைப் பிறழக் கருதிக் கொண்டு கூறப்பட்டது என்றும், அப்பிறழ்ச்சியால் விளைந் தனவே பின்னைய உரைகாரர்கள் உரைகள் என்றும், பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த பின் நாடு அல்லலுற்ற நிலைமையிலே வெற்றிவேற் செழியன் அரைசுகட்டில் ஏறினான் என்றும், அவன் வரு முன்னரே மதுரையிலே வாழ்ந்த பொற் கொல்லர் ஆயிரவர் கூடித் தம் இனத்தினன் புரிந்த பிழைக்குக் கழுவாயாக ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டினர் என்றும், இனங் கழுவேற்றல் பெரும்பழி என்றும், பாண்டியன் பழிகாரன் அல்லன் என்றும், அப்பழி ஓர் உருபால் விளைந்தது என்றும் ஒருவாறு கூறப்பெற்றன. குறிப்பு : கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொண்டு கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது. என்பதாயின் பிழை தவிர்க்கப் பெற்றதாம். கொண்டு என்பது கொன்று எனத் திரிவது ஏடெழுதுவோரால் நிகழத்தக்கதேயாம். இவ்வாறு கருதின் உரைபெறு கட்டுரைச் செய்தியும் தவறின்றாம். ஆனால், செழியன் தூண்டலால் கண்ணகியார்க்குப் பொற்கொல்லர் உயிர்ப்பலி ஊட்டியதாகப் பொருள் கொள்ள வேண்டிவரும். 3. செங்குட்டுவன் குட்டுவன் என்பது குடிப்பெயர்; செம்மை என்பது அடை மொழி. இவ்வடைமொழி வண்ணம் பற்றியதோ? தன்மை பற்றியதோ? இதனை ஆராய்வதே இக்கட்டுரை. செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே என்பது பண்புப் பகாநிலைச் சொற்கள் பற்றிய நூற்பா. இந்நூற்பாவிற்கு உரைவரைந்த பெருமக்கள் செம்மைக்குக் கருமை வெண்மை முதலியனவற்றை எதிர்ச்சொல் எனக் காட்டினர். இவை இன்னவும் என்பதனுள் அடங்கும். கருமை முதலிய நிறங்கள் செம்மை போன்றனவே அன்றி எதிரிடையானவை அல்ல என்பது எவரும் அறிந்ததே. சிறுமைக்குப் பெருமையும், சேய்மைக்கு அண்மையும், தீமைக்கு நன்மையும் போலத் தன்மையால் எதிரிட்டவை அல்ல, கருமை முதலியவை. செம்மையின் எதிர்ச்சொல் கொடுமை: என்பதாம். செங்கோல் என்பதை அறிக. செம்மையாவது நேர்மை; வளையாத் தன்மை. ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை - சிலப் - 15 : 120. 121. என்பது அடிகள் வாக்கு. கோவலர் கைக்கண் உள்ள கோல் ஓரொருகால் அலைப்பது ஆகலின், கொடுங்கோல் கோவலர் - (முல்லைப்பாட்டு) என்கிறார் நப்பூதனார். இனி அவர் கைக்கோல் வளைவுடையது என்பதைச் சுட்டுவதுமாம். செம்மை செவ்விய தன்மையாம் நேர்மை ஆகலின், நடுவு நிலைமை என்பதாம். நடுவு நிலைமையாவது ஒரு பால் கோடாமை. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் குறள்மணி நடுவு நிலைமையை உவமையால் நன்கனம் வலியுறுத்தும். மேலும், நெடு நுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வாக்கும், நுகத்துப் பகலாணி அன்னான் என்னும் பொய்யா மொழியார் வாக்கும், செம்மையின் ஆணி என்னும் கம்பன் வாக்கும் காணத் தக்கன. ஒருபால் சாயாத நடுவு நிலைச் செம்மை, செப்பம் எனவும் பெறும். செப்பம் உடையான் செவ்வியான் எனப் பெறுவான். சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் என்றும், செப்பம் உடையவன் ஆக்கம் என்றும், செப்பமும்நாணும் ஒருங்கு என்றும், செவ்வியான் கேடும் என்றும் வரும் குறள்மணிகளைத் தெளிக. நேர் கிழக்கைச் செங்குணக்கு என்றும், சரிவின்றி நிமிர்ந் தெழுந்துள்ள மலையைச் செங்குன்று செங்கோடு என்றும், நேரிய கூரிய அம்பைச் செங்கோல் என்றும், நேரிய பார்வையைச் செந்நோக்கு என்றும், இருவகை வழக்கினும் உண்மை காண்க. இவற்றை நோக்கச் செங்குட்டுவன் என்பது செவ்விய நேரிய - நடுவுநிலை போற்றிய குட்டுவன் என்பது போதரும். அகச்சான்று காட்டின் அன்றோ ஏற்கும் எனின் காட்டுதும். (1) மதுரைச் சாத்தனார் மலை நாட்டுக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு கோவலற்கு உற்றதும், கண்ணகி வழக்கும், தென்னவர் கோமானும் தேவியும் பட்டதும், கண்ணகி மலைநாட்டுக்கு வந்ததும் ஆகிய செய்திகளை ஒழிவின்றி உரைத்தார். அதனைக் கேட்டவுடன், எம்மோ ரன்ன வேந்தற் குற்ற செம்மையில் இகந்தசொற் செவிப்புலம் படலும் உயிர்பதிப் பெயர்ந்தமை உறுக வீங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது 2-95-9 என்று செங்குட்டுவன் கூறும் உரைமணி அவன் செங்கோல் தெய்வத்திற்குத் தலை வணங்கித் தாழாத் தொண்மயற்றும் தனிப்பேரடியான் என்பதைத் தெள்ளிதின் விளக்கும். (2) மேலும், பாண்டியன் தான் செய்த பழிக்குக் கழுவாய், தானே தேடிக்கொண்டதை வியந்து பாராட்டும் செங்குட்டுவன், ஆள்வோருக்கு உண்டாம் அல்லல்களைக் கூறுமுகந்தான் தன்செங்கோல் நாட்டச் சீர்மையைப் புலப்படுத்துகின்றான். மழைவளங் கரப்பின் வான் பேர் அச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் என்பது அவன் வாக்கு. (3) இனி, வடநாட்டின்கண் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாவினைக் காவாக் கனகன் விசயன் முதலாயவர், தென்னாட்டு வேந்தர் இமயத்தில் இலாஞ்சினை பொறித்த நாளில் எம்போலும் வேந்தர் ஈங்கில்லை போலும் என்றுரைத்த மொழியைத் துறவோர் வழியாகக் கேள்வியுற்ற செங்குட்டுவன், வடநாட்டின் மேற் படை கொண்டு செல்ல விழைந்திருந்தான். அவ்விழைவைப் பத்தினிக் கற்கோள் விரைந்து தூண்டிற்று. வஞ்சினங் கூறி வடநாட்டுச் செலவு மேற்கொள்கிறான் செங் குட்டுவன். வஞ்சினமாவது நெடுமொழி. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம் (தொல். புறத். 24) என்னும் சிறப்புடையது வஞ்சினம். உயிரெனப் போற்றும் ஒன்றையோ பலவற்றையோ; சுட்டிக் கூறி வஞ்சினம் கூறப் பெறும் என்பதை இலக்கியம் கற்ற, எவரும் அறிவர். அவ்வாறாகச் செங்குட்டுவன் கூறும் வஞ்சின மொழி யாது? கடவுள் எழுதவோர் கற்கொண்டல்லது வறிது மீளுமென் வாய்வாள் ஆகிற் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகென முழங்குகின்றான். குடிநடுக் குறூஉம் கோலை எவ்வளவு கொடுமையாகக் கருதினான் செங்குட்டுவன் என்பதை விளக்க வேறு சான்று வேண்டுவ தின்றாம். (4) இனிச் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவினை மேற் கொண்டு கங்கைக் கரைக்கண் இருந்த காலையில், தென் னாட்டினின்று போந்த மாடலன் என்னும் மறையோன் பாண்டி நாட்டு நிலைமையையும், சோணாட்டுச் செய்தியையும் தானே விரித்துரைக்கின்றான். பொழுது போய பின்னர்ச் செங்குட்டுவன் மாடலனை மீண்டும் தானே அழைத்து, இளங்கோ வேந்தன் இறந்த பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவர் கொற்றமொடு செங்கோற் றன்மை தீதின் றோவென வினவுகின்றான். தன் மைத்துன வளவனுக்கு இருந்த தாயவுரிமைப் போரைத் தகர்த்து அரசாக்கி நிறுத்தியவன் செங்குட்டுவன். அச்செயல் முடித்த பின்னர் வடநாட்டுச் செலவு மேற் கொண்டான். ஆகலின் அச் சோணாட்டுச் செங்கோற்றன்மை தீதின்றோ என வினாவுகின்றான். இவ்வினாவினால் தன்னாட்டில் மட்டுமன்றி எந் நாட்டிலும் செங்கோற் றன்மை சீருற விளங்க அவாவியன் செங்குட்டுவன் என்பது விளக்கமாம். (5) செங்குட்டுவன் மலை வளங் காணச் சென்ற காலையில் ஏழ்பிறப்படியோம் வாழ்க நின் கொற்றம் என வீழ்ந்து வணங்கிய குன்றக் குறவர், கான வேங்கைக் கீழ் நின்ற காரிகை வானம் போகிய இறும்பூது நிகழ்ச்சியைக் கண்டவாறு கூறினர். கலங்கி நின்ற அக்காரிகை சேரர் நாட்டகத்து இவ்வாறு அல்லற்பட்டு ஆற்றாது அழுங்குவார், இலர் என்று உறுதியாகக் கருதினர். ஆகவே, அழுங்குவார் இலர் என்று உறுதியாகக் கருதினர். எந்நாட் டாள் கொல் யார் மகள் கொல்லோ நின்னாட் டியாங்கண் நினைப்பினும் அறியோம் என்றனர். குன்றுவாழ் மக்களே கோன்முறை கோடாக் கேண்மை தம் நாட்டில் நிகழ்வதாகக் குறிக்கொண்டு வாழ நெறிப் படுத்திய காவலன் செங்குட்டுவன் என்னின் அவன் செங்கோல் சீர்மை என்னே! (6) வஞ்சி மூதூரில் மகிழ்ந்திருந்தான் குட்டுவன். அப் பொழுது எழுந்த முழுமதியைக் கூறவந்த அடிகட்குக் குட்டுவன் குடிபுறந் தரும் கோன்மையே முன்னின்றது ஆகலின், முடிபுறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் என்றார். செங்குட்டுவன் குடி புறந்த உம் செங்கோன்மையை விளக்கும் உவமையாகலின் கருதத் தக்கதாம். (7-8) செங்குட்டுவனை விளியாக அறக்கோல் வேந்தே (28 : 96) என்றும், செங்கோல் வேந்தே(28:157) என்றும், அடிகளார் கூறியுள்ளமையும், அவன் அவையத்தைச் செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையம் (2 : 144) என்று கூறியுள்ளமையும் நோக்குதற்குரியன. (9) செங்குட்டுவற்கும் இளங்கோவடிகட்கும் உழுவலன்பு பூண்ட முத்தமிழ் ஆசான் சாத்தனார், மணி மேகலை வஞ்சி மாநகர் புக்க காலையில் ஆங்கு ஆட்சி புரிந்தவன். செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் (26 ; 77) என்று குறிக்கின்றார். இவ்வாற்றால் எல்லாம் செங்குட்டுவன் என்பதும், அவன் செங்கோற் குட்டுவன் என்பதும், தெளிவாம். இஃதிவ்வாறாக, நம் சேரல் பெருந்தகை குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன்; இவனுக்குரிய அடைச் சொல்லாகிய செம்மை இவனது நிறம் பற்றி வழங்கப் பட்டதாகும். இது பற்றியே, மணிக்குட்டுவன் என்றும் இவன் வழங்கப் பெற்றவன் என்று சாசனமொன்றால் தெரிகின்றது எனச் சேரன் செங்குட்டுவன் ஆசிரியர் மு. இராகவர் கூறியுள்ளார். மேலும் நாமக்கல் சாசனத்தில் சேரரின் முன்னோருள் மணிக் குட்டுவன் என்பவனும் ஒருவனாகக் காணப்படுகின்றான் என்றும், அவன் நன்னூல் மயிலைநாதர் உரையில் காட்டப்பெறும் திருமணக் குட்டுவன் ஆகலாம் என்றும், மணக்குட்டுவன் என்று கொள்ளத் தகும் என்றும், அதற்கு மணத் தக்காளி, மணித் தக்காளி என வழங்குவது சான்று என்றும், மணி என்பது ஈண்டுச் செம்மணியான மாணிக்கமாம் என்றும் கூறியுள்ளார். புறச் சான்றுகளைத் தேடிப் படைத்துச் செங்குட்டுவன் பெயர்க்கு ஆக்கி நிறத்திற்கு நிறுவுதலினும் அகச் சான்றுகள் நிரம்பிக் கிடக்கும் நேர்மை அடையைப் புறக்கணிக்க இயலாது என்பதறிக. மணிக்குட்டுவன் அல்லது மணக்குட்டுவனே என்பதைத் தக்க சான்று இன்றிக் கொள்ளுதற்கு இயலாது. அதனையே கொள்ளுவதற்கியலாத போது அவன் நிறத்தைக் கோடல் என்பது சிறிதும் இயலாததாம். இனி, மணி என்பது செம்மணி என்று மட்டும் குறிக்கும் என்பதன்று. அது செம்மணியையும் குறிக்கும். கருமணியையும் நீல மணியையும் பச்சை மணியையும் பிற மணிகளையும் குறிக்கும். மணிவண்ணன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. மணி ஆண்டுச் செம்மணியாமோ? அது கருமணியாம்! கருமணியைக் கண்டு கொண்டேன், கருமணியைக் கோமளத்தை என்பது ஆழ்வார் உரை மணிகள். கருமணியிற் பாவாய் என்பது வள்ளுவர் வளமணி. ஆகலின் மணி செம்மணி என்றே கோடல் சால்பன்று; இடத்தையும் பொருளையும் கருதி ஏற்ற பொருள் தருவதாம் அது. அவ்வாறாகக் குட்டுவனின் உடன் பிறந்தாராய அடிகளாரோ உழுவலன்பராய சாத்தனாரோ தன் மைந்தன் குட்டுவன் சேரற்கு நல்லாசிரியராகத் தேர்ந்து கொண்ட ஐந்தாம் பத்துப் பாடிய பரணரோ செங்குட்டுவன் நிறத்தை அடைமொழியால் கூட - உவமையால் கூட காட்டினர் அல்லர். செங்கோற்றன்மையைச் செம்மாந்து பல் கால் பாராட்டியுள்ளனர். ஆதலால் செங்குட்டுவன் நிறம் செம்மை கருமை இவற்றுள் யாதாயினும் ஆகுக! அஃதவற்குப் பெருமை தரும் ஒன்றன்று. அவன் செங்கோன்மையே உண்மைச் சான்றுடையதும் பெருமை மிக்கதும் ஆம் என்க. நிற அடை என்றால் தான் அவன் பிள்ளைமைப் பருவத்தே இடம் பெற்றிருக்கக் கூடும். தன்மை அடை எனின் அரசேற்று நாடெல்லாம் செங்கோற்றன்மை பெருகப் பரவிய பின்னரே ஏற்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணிப் பார்க்க வேண்டுவதும் முறைமை. அதற்குத் தக்க குறிப்பொன்றும் உள்ளது. பதிற்றுப்பத்தில் உள்ள ஐந்தாம் பத்து பரணரால் பாடப் பெற்றது. செங்குட்டுவன் ஐந்து இடங்களில் 42, 43, 45, 47, 49, குட்டுவன் என்றே குறிக்கப் பெற்றுள்ளான். செங்குட்டுவன் முற்பகுதி வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம் என்பதும், இவ்விரண்டையும் தொகுத்துச் சுட்டுவது பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம் என்பதும், கிழவர் இளங்கோ என்னும் எம் சிலப்பதிகார ஆராய்ச்சி முதற்கட்டுரைக் கண் குறிக்கப் பெற்ற செய்தி இவண் நோக்கத் தக்கதாம். குட்டுவன் என்னும் குடிப்பெயர் தாங்கியவன் தன் செங்கோற் சீர்மையால் செங்குட்டுவன் ஆகிப் புலவர் பாடும் புகழாளனாகத் திகழ்ந்தான் என்பது உறுதியாம். காந்தி என்று அழைக்கப் பெற்ற பெரியார் பின்னை நாளில் மகாத்மா காந்தி என்று போற்றப் பெற்றமை கண்கண்ட சான்று அன்றோ! 4. கண்களி மயக்கக் காதல் இக் கட்டுரைத் தலைப்பைக் கண்டதும் அக் காதலர் எவர்? என்னும் வினாவே எவர்க்கும் எழுதல் ஒருதலை. ஆனால் அவர், அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தராகிய இளங்கோவடிகளின் இனிய நண்பரும், மணிமேகலை துறவை ஆறைங் காதையில் பாடியவரும் ஆகிய தண்டமிழ் ஆசான் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரே எனின் வியப்புத் தோன்றக்கூடும். உண்மையில் சாத்தனாரே கண்களி மயக்கக் காதலர் என்பதை அடிகளாரே கூறிய பின்பு ஐயுறுதற்கு அணுத்துணையும் இடமில்லை. கள்ளும் நறவும் முதலாயின உண்டார்க்கே உள்ளக் களிப்புண்டாம். ஆனால் காண்டற்கரிய காட்சிகளைக் கண்டவர்க்கும் கண்களி யுண்டாம். மையலுற்றார்க்கே மயக்கம் உண்டாம்; எய்தப் பெறாத இன்பம் ஓரிடத்தில் எய்தியவர்க்கே காதல் உண்டாம். இம்மூன்றும் ஒருங்கெய்தப் பெற்றார்க்கே கண்களி மயக்கக் காதல் தோன்றும். அவ்வாறு தோன்றப் பெற்றாரே கண்களி மயக்கக் காதலர் ஆவர். சாத்தனார் அந்நிலையை எப்போது எவ்விடத்து எந்நிலையில் உற்றார்? மலைவளங் காணச் சென்ற செங்குட்டுவனுடன் இருந்த மதுரைச் சாத்தனார், அவன் முன்னிலையிலேதான் கண்களி மயக்கக் காதல் கொண்டு திகழ்ந்தார். வஞ்சி முற்றம் நீங்கி, அஞ்சாமுழவின் அருவி ஆர்க்கும் மஞ்சுசூழ் சோலை மலைவளம் காணுதற்குக் கோப்பெருந் தேவியும், அவர் ஆயமும், தன் பரிவாரங்களும் புடைசூழ நெடுவேலான் குன்றம் நண்ணிய செங்குட்டுவன், நெடியோன் மார்பின் ஆரம் போல விளங்கிய பேரியாற்றின் இடுமணற் பரப்பின் மேல் இனிது தங்கினான். அப்பொழுது உடனிருந்த சாத்தனார் கண்களி மயக்கம் கொண்டார் என்றால் எதனால் என்னும் வினா எவர்க்கும் எழும்பும். கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பாம் மலைக் காட்சி சாத்தனாரைக் கண்களி மயக்கக் காதலில் ஆழ்த்தியதா? அரிமாவன்ன ஆற்றலும் தோற்றமும் அமைந்த செங்குட்டுவன் பொலிவுதான் கண்களி மயக்கக் காதலில் ஆழ்த்தியவா? அரசியின் ஆயமும் அரசியல் சுற்றமும்தாம் அக் காதலில் ஆழ்த்தினவா? வென்றிச் செவ்வேள் வேலன் பாணி முதலாகப் பக்கமெல்லாம் பரவியெழுந்த பல்வேறு ஒலி முழக்கங்கள் தாம் தண்டமிழ் ஆசானைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கினவா? திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் முதலாக அளவற்ற அரும்பொருள்களைச் சேரவேந்தன் திருவடிகளில் படைத்து, ஏழ்பிறப்படியோம்; நின் கொற்றம் வாழ்க என்று வாழ்த்திய குன்றக் குறவர்தம் கூற்றும். செய்கையும் தோற்றமும் பிறவும் கூலவாணிகரைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கினவா? இவ்வனைத்தும் சாத்தரைக் களிப்பூட்டி இருக்கலாம் மயக்கமோ காதலோ ஊட்டியிருக்க மாட்டா. மலை நாட்டை முதன்முதலாக இப்பொழுதுதான் அவர் காண்கிறாரா? செங்குட்டுவன் சீர்மையை இப்பொழுதுதான் நேரிடையாக நோக்குகிறாரா? இளங்கோவடிகளின் கெழுதகை உழுவலன்பினர் சாத்தனார். ஆகலின் இச்சேர நாட்டுச் செலவு முதன்முறையாக இருந்திருத்தற் கியலாது. ஆதலால் இக்காட்சிகள் சாத்தரைக் களிப்புறச் செய்தவை ஆகலாமே அன்றி, மயக்கக் காதல் ஊட்டுபவையாக மாட்டா. குன்றக் குறவர் செங்குட்டுவனை வணங்கி எழுந்து. கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துயர் எய்தி வானவர் போற்ற மன்னொடும் கூடி வானோர் பேற்ற வானகம் பெற்றனர் என்று தாம் நேரில் கண்ட நிகழ்ச்சியைக் கூறினர். இதனைச் சாத்தனாரும் கேட்டார். கொற்றவன் தவறிழைத்ததும், கோவலன் மாண்டதும், கண்ணகி வழக்குரைத்ததும், அதன் விளைவும் மதுரையில் கண்டு அறிந்தவர் சாத்தனார். கண்ணகியார் கோவலர் இவர் தம் முன்னைச் செய்தியைக் கேட்டும் அறிந்தவர் அவர். ஆனால் கண்ணகியாரின் பின்னைச் செய்தி இன்னதென அவர் அறியார். ஆகலின் கண்ணகியார் கணவனுடன் கட்புலம் காண விட்புலம் போய செய்தியைக் குன்றக் குறவர் கூறக் கேட்ட அவர் கண்ணகியாரின் தெய்வ நிலையை எண்ணி எண்ணி மயக்கம் கொண்டார். காட்சியால் கண்களி கொண்ட அவர் கண்ணகியாரின் பழுதறு வரலாற்றை முழுதுற அறியும் வாய்ப்புக் கிட்டிய அளவில் கண்களி மயக்கத்தினர் ஆனார். கண்ணகியாரைப் பற்றிய செய்தியைக் குன்றக்குறவர் செங்குட்டுவனிடம் உரைத்த காலையில் அவரை, எந்நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ நின்னாட் டியங்கண் நினைப்பினும் அறியேம் என்று கூறிய வாய்மொழியே சாத்தரைக் கண்களி மயக்கக் காதலர் ஆக்கிற்றாம். சாத்தனார் மாபெரும் புலவர் ; மணிமேகலை யாத்த தண்டமிழ் ஆசான். குன்றவர் கூறிய உரையில் நன்றுறத் தோய்ந்து நெஞ்சம் பறி கொடுத்தார். எந்நாட்டாள் கொல் என்று குன்றவர் வினாவிய வினா அவரை ஆட்கொண்டது. ‘vªeh£lhŸ? என்பதில் ஒவ்வொரு நாடும் அடங்கத் தக்கது தானே. சேரநாட்டுக்கு மட்டும் விலக்குண்டா? பருவரல் ஊட்டிய பாண்டி நாடும் சரி, பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார்ச் சோணாடும் சரி, செழுமலைச் சேர நாடும் சரி எந்நாடு என்பதனுள் அடங்கியே தீரும். இவ்வெண்ணத்தில் இருந்து விடுபடு முன்னரே, நின்னாட்டி யாங்கண் நினைப்பினும் அறியேம் என்னும் குன்றக்குறவர் உரை சாத்தனார் செவியினிக்கப் பாய்ந்தது. அல்லற்பட்டு ஆற்றாது அழுவார் - ஆற்றுவாரற்று அலமந்து திரிவார் - உறுப்புச் சிதைந்து உலமருவார் - ஒரு தனி வந்து இரங்கி நிற்பார் - இச்சேர நாட்டினராக இருத்தற்கு இயலாது. செங்குட்டுவன் என்னும் செங்கோல் வேந்தன் நாட்டின் எல்லையுள் இத்தகைய அவலம் ஏற்பட்டிருக்க முடியாது என்று அவர்கள் கருதுவதை உட்கொண்டு - குன்று வாழ் மக்களும் கோல் நிலை உணர்ந்து கூறும் நிலைமையில் செங்குட்டுவன் ஆட்சிச் சீர்மை உண்மையை உட்கொண்டு - சிறக்க எண்ணினார். நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து இன்புற்றார். செங்குட்டுவன் செங்கோல் மாண்புதான் என்னே! என்னே! என இறும்பூதெய்தினார். கண்களிப்ப நோக்கி, மையல்மிக்கு, இன்னதென இயம்பவொண்ணா இன்பநிலை யுற்றார். அந்நிலையில் கண்களி மயக்கக் காதலராக விளங்கினார். சாத்தனார் உணர்வை உள்ளவாறு உணர்ந்தவர் இளங்கோவடிகளார். ஆதலால், மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கக் காதலோ டிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் என்றார். மன்னர் அவையிலும், கற்றறிந்தோர் மையத்திலும் வாழும் புலவரொருவர் தம் புரவலனை நோக்கிச், சோறு படுக்கும் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெறல் அறியார்நின் னிழல்வாழ் வோரே திருவில் அல்லது கொலைவில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார் (புறம் 20) என்று நயந்து பாராட்டுவதிலும், ஆள்வோர் தொடர்பென்பது அறியாமல், அறிவறிந்த கல்வியும் பெறாமல், காடுமலைகளில் வாழும் எளிய மக்களும் அல்லற்பட்டு நிற்பாளைக் கண்டு, எந்நாட்டாள் கொல், இந்நாட்டியாங் கண் நினைப்பினும் அறியேம் என்று வினவுமாறு ஒரு நாட்டின் ஆட்சி நடைபெறும் என்றால், அவ்வாட்சி அன்றோ உலகம் எடுத்துக் காட்டாகக் கொள்ளத் தக்க ஆட்சி. அவ்வாட்சியைக் கண்டு உலகம் கண்களி மயக்கம்கொள்ளும் காலம் வருமா? வாழ்க கண்களி மயக்கக் காதல்! 5. போற்றா ஒழுக்கம் கண்ணகியாரொடு மதுரைக்கு வந்த கோவலன், சிலம்பு விற்கப் புறப்படுவதற்கு முன், தன் குறைபாடுகளையெல்லாம் நெஞ்சாரக் கூறி நெகிழ்கின்றான். அந்நிலையில் கண்ணகியார், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்று சுட்டுவதைக், குறை போலாகக் கூறுவார் உளர். அதனைப் பற்றிக் கருதுவது இது. தன் பிழையுணர்ந்து வருந்தும் கணவனிடம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்பது கற்புக் கண்ணகியார்க்குத் தகுமா? இது திருந்தியவனை வருந்த வைக்கும் மொழியாயிற்றே எனக் குறை காண்கின்றனர். கண்ணகியார் தனித்து உறைதலை உணர்ந்த கோவலன் தாய் தந்தையர், உள்ளகம் வருந்தினர். அவர்கள் உள்ளகம் வருந்துதல் ஆற்றாத கண்ணகியார், தாம் வருந்தவில்லை என்பதைக் குறிப்பது போல் வாயல் முறுவல் செய்து வாழ்ந்தனர். அதனைக் குறிக்கும் வகையாலேயே, அவர், உள்ளகம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்றார். இதில், தம் உள்ளகம் வருந்திய குறிப்போ - வருத்திய குறிப்போ - இல்லை! கண்ணகியார் வாயல் முறுவல் செய்தலைப் பட்டறிவும் பழுத்த அறிவும் ஒருங்கமைந்த மாமன் மாமியார் உணர்ந்து கொள்ளமாட்டார்களா, என்ன? அதனால், அவர்கள் உள்ளகம் வருந்தவே செய்தனர்; அதனையே குறித்தார் கண்ணகியார். ஆதலால், அவர் மேல் குறை காண இடமில்லை. இனிப், பெற்றோர்க்காகவே எனினும், கலங்கியும் கவன்றும் கரைந்தும் நிற்கும் கணவனிடம் இவ்வாறு கூறலாமா? என அடுத்துத் தொடுப்பாரும் உளர். அவர்கள் போற்றா ஒழுக்கம் என்பதன் மரபு வழிப் பொருளை உணர்ந்து கொண்டால் இதனைக் குறையாகக் கருதார். போற்றா ஒழுக்கம் என்பதற்குப் பேணிக் காவாத குற்றம், பிறர் போற்றிக் கூறத் தகாத தவற்றொழுக்கம், பரத்தமை என்றெல்லாம் பொருள் கண்டு இவ்வாறு கூறுகின்றனர். போற்றா ஒழுக்கம் என்பதற்கு அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறினர் அல்லர். ஒன்றுக்கு மூன்று முறை போற்றா ஒழுக்கம் என்றே கூறியமைந்தனர். இதன் பொருள் என்ன? இத்தொடர்க்குப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை; புலவர் உலகம் இத்தொடரின் பொருளை வெட்டவெளியாக அறியும் என்பதே பொருளாம். இப்போற்றா ஒழுக்கத் தொடர் கொலைக்களக் காதையை அன்றி, வரந்தரு காதையிலும் வருகின்றது. ஆங்கும் அரும்பத உரையில் பொருள் இல்லை. அடியார்க்கு நல்லார் உரையோ கிடைக்கவில்லை! ஆதலால் ஆங்கும் இதே நிலைதான்! வரந்தரு காதையில், புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் நிகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் என்பது. இது கண்ணகியாரின் தாயார் கூற்றாக வருவது. தவறு சுட்டும் பொருளாக இஃதிருப்பின், கண்ணகியின் தாய் கூற்றாக - மாமியார் கூற்றாக- இடம் பெறல் உண்டா, மரபுவழி உரிமை சிறிதும் பழித்துரைக்க இடந் தராதாம் என்பதைத் தமிழியலும், தமிழர் வாழ்வியலும் அறிந்தார் நன்கு கண்டு கொள்வர். பழி சுட்டாததாக இருந்தும், பழிச்சுட்டாகக் கொள்ளப் படலான இத் தொடரின் பழம் பொருளைக் கலித்தொகைத் தொடரொன்று கைந்நீட்டி அழைத்துக் காட்டித் தெளி விக்கிறது. (133) போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்பது அது. ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை, என்பவற்றைத் தொடராகக் கூறி விளக்கும் இப்பாடலில், போற்றுதல் என்பதன் பொருள் விளக்கம் கிடைக்கின்றது. இத்தொடர்க்கு ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்வது, கூடினாரைப் பிரியாதிருத்தலை என்று பொருளுரைக்கிறார் நச்சினார்க்கினியர். போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை எனின், போற்றாமை என்பது புணர்ந்தாரைப் பிரிந்தமை தானே! நீர் பிரிந்தீர் என்பது தவறான செய்தியா? மயக்கம் தீர்க்க மரபு வழி உரை காணும் முறையைப் போற்றுதல் வேண்டும் என்று இப் போற்றா ஒழுக்கம் சுட்டுவதாகக் கொள்ளலாமோ? 6. கண்ணகியாரும் செல்லத்தம்மனும் மதுரை மாநகரின் வடக்கு வெளிவீதியில் சிம்மக்கல் என்பதோர் இடம். அவ்விடத்தில் சிம்மக்கல்லுரு உள்ளது. முன்பு அது, தென்பால் நோக்கியிருந்து, இதுகால் வடபால் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. தென்பால் திரும்பியிருந்த காலை அதன் முன் பார்வையில் இருந்த திருக்கோயில், செல்லத்தம்மன் கோயில்; இப்பொழுது பின்பார்வையில் அமைந்துவிட்டது. செல்லத்தம்மன் கோயில் வடக்குப் பார்த்தது. பழமைச் சின்னமுடையது. அங்கே கண்ணகி என்னும் பெயர் எழுதி வைக்கப்பட்ட கல்லுரு உள்ளது. அதனை அடுத்து, இடைச்சி யம்மன் உள்ளது. செல்லத்தம்மன் கோயில், கண்ணகி கோயில் என்பது ஊர் சொல்லும் செய்தி! உண்மைச் செய்தியா? சான்று உண்டா? இளங்கோவடிகள் வாக்கே அகச்சான்று! சிலம்பின் வென்ற சேயிழை கண்ணகியார்! கண்ணகி என்று சொல்லப்படும்; சிலையில் சிலம்பு உண்டா? ஆம் கண்ணில் காட்சி எழில் கவினி நிற்கக் கண்ணகியார் கையில் தனிச்சிலம்பு உள்ளது! செம்பொற் சிலம்பொன்று கையேந்தி (19, 23) காவியுகு நீரும் கையில் தனிச்சிலம்பும் (20:வெண்பா 2) கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் (20. வெண்பா 2) இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் (20;27): பொற்பொழிற் சிலம்பொன் றேந்திய கையன் (20:42) என்று அடிகளார் கூறும் சிலம்பு, அம்மையார் கையகத் துண்மை கண்ணகம் நிறைகின்றது. இது பிறிதின் கிழமைச் சான்று. மற்றொன்று; கண்ணகியார் காது, வீழ் காது! வடிந்து வீழ் காது; கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காது; மும்மடி அடையால் நம்மடிகளார், கண்ணகியார் காதெழிலை வடித்துக் காட்டுகிறார். வடிதல் - தொங்குதல்! வீழ்தல்- தட்டி வழிதல்; நீர் வீழ்ச்சியால், வீழ் அறியலாமே! ஆலம் வீழ்து அறியாததா? வளைந்து திரண்ட காதணிகளைத் துறந்தும் கூட வடிந்து வீழும் காது! ஆம்! அடிகள் உணர்வை அப்படியே வாங்கிக் கொண்டு, அவர் திருவடிப் பொடியைச் சூடிய கலைவல்லான் அடிகள் சொல்லை, அப்படியே கல்லில் வடித்திருக்கிறான்! வடிந்துவீழ் காதைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள் மதுரைச் செல்லத்தம்மன் கோயிலுக்கு என்று சொல்லாமல் சொல்லி அழைக்கின்றான்; கண்ணகியார் பக்கத்தே இருக்கும் இடைச்சியம்மன் எவர்? உணர்ந்த மக்கள் எவ்வளவு உணர்வோடு போற்று கிறார்கள் என்பதற்கு இடைச்சியம்மைப் பெயரே சான்று! கண்ணகிக்கு அடைக்கலம் தந்தவர் எவர்? கோவலர் குடியில் வந்த மாதரியம்மை! அவரோ தீதிலள்; முதுமகள் செவ்வியள் அளியள் எனப் பண்பியல் பட்டங்களைப் பாரிக்கப் பெற்றவர்! பண்பியல் பட்டங்களைத் திட்டமிட்டுத் தீர்மானித்து தந்தவரோ, முடிகெழு வேந்தன் உடன்பிறந்தும், நாடு நகர் துறந்தாலும் நற்றமிழ் துறவாத் தூய துறவி இளங்கோவடிகளார்! அதனை, வழங்குகின்ற அருமையாட்டியோ, மறந்தும் புறந் தொழா அருகசமயத் தவமூதாட்டி கவுந்தியடிகள்! நேரில் வழங்கினால் நாணத்தால் பெற மறுப்பார் மாதரியார் என்று நெஞ்சத்தால் வழங்குகின்றார்! அடைக்கலமாகக் கண்ணகியையும் வழங்குகின்றார்! எப்படி? இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் (15 : 130) அடைக்கலம் பெற்றவர் நிலை என்ன ஆயிற்று? கொடுமை கொடுமை! அடைக்கலம் இழந்தேன் இடைக்குலமக்காள் என்று கரைந்துருகி, இடையிருள் யாமத்து எரியகம் புகுந்தார் (27 ; 77-8) இடைச்சியம்மையை இவரென இன்னும் விளக்க வேண்டுமா? கோவலனைத் தம் மகனாகக் கருதினார் கோவலர் குடி மூதாட்டி மாதரி. தன் மகள் ஐயையைக் கண்ணகியார்க்கு நாத்துணை யாகத்தந்தார்! அடியார்க்கு நல்லார், நாத்தூண் நங்கைக்கு விளக்கம் வரைகின்றார். நங்கை என்று புதல்வர் மனைவியைக் கூறும் முறைப் பெயராதலின் நங்கை என்றாள் என்க என்றும், கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள் என்றும் கூறுகிறார் (16 : 14: 19). ஆய்ச்சியர் குரவைக்கு அடித்தளமானவர் மாதரி; கண்ணகி காண, கண்ணன் ஆயர்பாடியில் பிஞ்ஞை (நப் பின்னை)யோடு ஆடிய குரவையை ஆடி விளைந்த தீக்குறியைப் போக்க முனைகின்றார். ஆயர் குடி வழிபாடு மாயோன் வழி பாடே! மாயோன் மேய காடுறை உலகம் ஆய்ச்சியர் குர வைக்கும் முல்லைப் பாணிக்கும் முறைமையுடையவே அல்லவோ; பின்னே குரவையாடும் மாதரி, முன்னே தம் இல்லில் கோவலன் உண்ண, கண்ணகி படைக்கும் காட்சியை எப்படிக் காணுகிறார்? ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ! நல்லமு துண்ணும் நம்பி ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநம் குலத்துத் தொழுநை ஆற்றுள் தூமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லோ எனக் காண்கிறார். மகனாகவும் மருகியாகவும் கண்ட மாதரியார், கண்ணனாகவும், பின்னையாகவும் கருதி விம்மிதம் அடைகிறார்! வழிபடு தெய்வமே விருந்து வந்ததாகக் களி துளும்பி ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்துகிறார்கள்; கண் கொளா நமக்கிவர் காட்சி என்கிறார்கள். மாதரியார் காட்சி இவ்வளவில் நிற்க! பதிகம், கண்ணகியாரை எப்படி அறிமுகப்படுத்துகிறது? திருமாபத்தினி என்கிறது (5). மங்கல வாழ்த்து, போதிலார் திருவினாளாகக் காட்டுகிறது (25). மனையறம் படுத்ததோ, குழவித் திங்களுக்கும், மூவாமருந்துக்கும் உடன் பிறப்பாகக் கூறுகின்றது. இவளைத் திருமகளாக்கி அமிர்தின்முன் கூறப் பட்டது என்றும், இங்ஙனங் கூறினார் பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் திருமகளாக மதித்து என்றும் முறையே அருஞ் சொல் உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் உரைத்தனர். வேட்டுவச் சாலினியோ, ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி (12: 49-50) என்றும், மாடலனோ, திருத்தகு மாமணிக் கொழுந்து (15, 93) என்றும் கண்ணகியைத் திருக் காட்சி காண்கின்றனர். மாடலன் கோவலனைக் கோபாலன் என்றே விளிக்கின்றான். (15;93). கோவலன் பிரிந்த புகார், இராமன் பிரிந்த அயோத்தியா கின்றது (13. 65-6). தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்த இராமனே எடுத்துக் காட்டாக நிற்கின்றான் (14, 46-7). இவையெல்லாம் சுட்டுவதென்ன? கண்ணகி திருமகள் போல்வாராய்ப் பிறர்க்குக் காட்சி வழங்க, மாதரியார்க்கும் ஆயர் குடியார்க்கும் திருமகளாகவே காட்சி வழங்கினாராம். ஆதலால் இடைச்சியம்மைக்கும் அடைக்கலம் தந்த ஆயர் குடியார்க்கும் செல்வத் தம்மையாகக் கண்ணகியார் திகழ்ந்தாராம். செல்வத் தம்மை திருமகளல்லரோ? செல்வத் தம்மை, செல்லத்தம்மை யாகுமா? செல்வம் கொடுத்தல் செல்லங் கொடுத்தலாக வில்லையா? செல்வம் என்பாரைச் செல்லம் என வழங்குவதில்லையா? செல்லாயி, செல்லப்பன், செல்லம்மை! செல்லாண்டி, செல்லியம்மை இவையெல்லாம் வழக்கில் இல்லாதவையா? ïil¢áa«ikí« mt® tÊÆdU« bršt¤ j«ikahf¡ f©z»ahiu¡ f©L tÊg£l ‘brh‰ nfhÆš’ áy«ò v‹whš, ‘f‰nfhÆš’ ‘bršy¤j«k‹ nfhÆš! அக்கோயிலை அடுத்திருப்பவை இராமாயணச் சாவடி; பெருமாள் கோயில்; ஆயர் பெருமக்கள் குடியிருப்பு. இத்தொடர்புகள் இயல்பாய் அமைந்திருக்கவும் முடிவு செய்யவோர் இடரும் உண்டோ? 7. மங்கல வாழ்த்துப் பாடலின் மாண்பு முடிகெழு வேந்தர் மூவருக்கு முரிய முத்தமிழ்க் காவியத்தை முறை வழுவாமல் இயற்றிய பெருமை இளங்கோ வடிகட்கு உண்டு என்பது நாடறிந்த உண்மை. மூவேந்தரையும் ஒப்ப மதித்துப் பாடிய உயர்வே அன்றிச் சமயக் கோட் பாட்டிலும் நடுவுநிலை நின்று அவ்வவர்க்கு அவ்வவர் சமயத்தராய்த் தோன்றித் தமக்கென எல்லோருக்கும் ஒப்பும் பொதுச் சமயத்தினைக் கொண்ட பெருமையும் அடிகட்கு உண்டு. இது நூலில் பரந்து பட்டுக் காணக் கிடப்பினும் எடுத்த எடுப்பிலேயே - மங்கல வாழ்த்துப் பாடலிலேயே நிலை நாட்டி விடுகின்றார் அடிகள். மங்கல வாழ்த்துப் பாடத் தொடங்கிய அடிகள் இருவகை மங்கல வாழ்த்துகளை நம் முன்னர் வைக்கின்றார். முன்னது தங்கூற்றாகக் கூறும் மங்கல வாழ்த்து; அஃது இயற்கைப் பொருள்களைக் கொண்டு, இறை உண்மை நிலை நிறுத்தும் தொன்மைத் தமிழ்ச் சமயத்தின் உயர் கோட்பாட்டை விளக்குவது. பின்னது கொடியன்னார் கூற்றாகக் கூறும் மங்கல வாழ்த்து. அது, கோவல கண்ணகியரை மங்கல அமளியிலே ஏற்றி வைத்து மலர் தூவி வாழ்த்தும் திருமண வாழ்த்தாய் அந்நாளைத் தமிழக நிலைமையை நிறுவுவது. இவ்விரண்டு வாழ்த்துகளையும் உடைமையால் முதற்பகுதி மங்கல வாழ்த்துப்பாடல் என்னும் பெயர் பெற்றதாகும். மங்கல வாழ்த்துப்பாடும் அடிகள் திங்கள், ஞாயிறு, மழை, பூம்புகார் ஆய நான்கினையும் முறையே வாழ்த்துகின்றார். இம் முறை வைப்பிற்குத் தக்க காரணம் ஏதேனும் இருத்தல் இன்றி யமையாததாம். ஞாயிற்று வணக்கமே மக்கள் வழிபாட்டில் முதன்மை பெற்று நிற்கின்றது. ஞாயிற்றுக்கிழமையே முதற் கிழமை என உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அறிவியல் உலகமும், ஞாயிற்றினின்று பிரிந்து வந்த கூறுகளே திங்கள் முதலாய அண்டங்கள் என்று ஆய்ந்துரைக்கின்றது. பண்டைப் புலவர்கள் பலரும் ஞாயிற்றுக்கு முதன்மை தந்ததுடன், ஞாயிற்று வணக்கம் உண்மையையும் கூறியுள்ளனர். எனினும் ஞாயிற்றை முன்னாகக் கூறாது அடிகள் திங்களை முதற்கண் வைத்துப் போற்றியதன் உட்கிடை என்ன என்பதை நுணுகிப் பார்த்தல் வேண்டும். அடிகள் உள்ளத்தே கண்ணகியார் நீங்கா இடம் பெற்று விட்டார். மனித நிலையோடு பிறந்து தெய்வநிலை எய்தும் அளவுக்கு இடம் பெற்று விட்டார். அத்துணைப் பெருமையினைக் கோவலனோ, பிறரோ எய்தி விட முடியவில்லை. அக் காரணத்தாலேதான் கண்ணகியார் காற்சிலம்பினையே, நூற் பெயராகக் கொண்டு காவியம் இயற்றினார். பதிகம் இயற்றியவரும் சூழ்வினைச்சிலம்பு காரணமாக, நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று நூல் யாக்கப் புகுந்தார் அடிகள் என்றே கூறினார். இவ்வாறு சிலம்பினை முதலாகக் கொண்டு அடிகளார் எழுதிய ஒன்றே கண்ணகியார் சிறப்புக்குத் தக்க சான்றாக இருத்தல் உண்மையாகவும் வெளிப்படையாகவே கண்ணகியாருக்கு மங்கல வாழ்த்துக் காதையிலே முதன்மை தந்து விடுகின்றார் அடிகள். கோவல கண்ணகியரை அடிகள் அறிமுகப் படுத்தி வைக்கும் போது கண்ணகியாரைத் தான் நம்முன் கொண்டு நிறுத்துகின்றார். மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈரெட்டாண்டகவை யாள்; ...................... பெயர் மன்னுங் கண்ணகி என்பாள் என்று பாடுகின்றார். இதன் பின்னரே கோவலனைக் கொண்டு வந்து நிறுத்தி, வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான் ................. கோவலன் என்பான் என்று பாடுகிறார். பெண்ணை முற்படக் கூறவேண்டும் என்றோ ஆணை முற்படக் கூறவேண்டும் என்றோ வரன்முறை ஒன்றும் இல்லை. இருபாலரும் ஒப்ப மதித்து வாழ்ந்த பழந்தமிழ்ப் பண்பாடு இவ்வேற்றுமைக்கு இடம் அளிக்காது. எனினும் அடிகள் கண்ணகியாரை முற்படக் கூறியது அவர் உள்ளத்தே கண்ணகியார் தெய்வக்கோலம் காட்டியமையாலே தான். கோவலன் கள்வனல்லன்; என் காற்சிலம்பினைக் கவரும் பொருட்டால் கொன்ற காவலனே கள்வன் என்று நிலை நாட்டிய தீதுதீர் சிறப்பால் கண்ணகியாரை உள்ளுற எண்ணினார். இதனை எண்ணித் திளைத்தவருள் முதல்வராக அறியப் படுகின்றார் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். அவர் இவளை முற்கூறிற்று; கதைக்கு நாயகியாகலின் என்றார். இச்சொற்றொடரின் ஆழம் எண்ணி எண்ணி இன்புறற் பாலதாம். கண்ணகியாரை முற்படக்கூறிய காரணம் தெளிவாயிற்று. இனித் திங்களை முற்கூறியது ஏன் எனக் காண்போம். கோவல கண்ணகியர். மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை அமர்ந்திருந்தனர். இதனை உவமைமுகத்தான் அடிகள் கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல இருந்தனர் என்றார். ஞாயிறும் திங்களும் ஒன்று பட்டு இருந்தது போன்று கோவல கண்ணகியர் இருந்தனர் என்றாராம். இதுகொண்டு ஆடவர் பெண்டிரைக் கதிருடன் ஒப்பிட்டுக் கூறும் வழக் குண்மையினை அறியலாம். அஞ்சுடர் நீள் வாள் முகத்தாயிழையும் மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி ஒருசுடரு மின்றி உகுலபா ழாக இரு சுடரும் போந்ததென் றார் என்னும் இத்திணை மாலைப் பாட்டு. தலைவனும் தலைவியும் காட்டுவழிச் செல்வதைக் கண்டவர்கள் அவர்களைத் தேடிக் கொண்டு வரும் செவிலித் தாய்க்கு உரைப்பதாக அமைந்ததாம். உலகு பாழாகுமாறு இருசுடரும் போந்தது போல்வது தலைவன் தலைவியர் ஆகிய இருவர் உடன் போக்கும் என்றார்கள். இதில் தலைவன் தலைவியர் சுடர்கட்கு ஒப்பிடப்பட்டுள்ளதை அறியலாம். உதயணன் வாசவதத்தையுடன் கூடி நின்ற நிலைமையை வருணிக்கும் கொங்கு வேளிர், மதியமும் ஞாயிறும் கதிதிரிந்தோடிக் கடனிற வானில் உடனின்றாங்கு என்றும், தலைவனும் தலைவியும் தலைப்பட்ட நிலைமையை இறையனார் களவில் உரைகாரர் வெங்கதிர்க்கனலியும் தண்கதிர் மதியமும் தம்கதி வழுவித் தலைப்பெய்தாற் போன்று என்றும் கூறினர். இவற்றால் தலைவன் தலைவியரைச் சுட ரொடும் ஒப்பிட்டுக்கூறுவது பரவலான ஒரு வழக்கம் என அறியலாம். அவ்வழக்கைக் கொண்டே அடிகள், கண்ணகி கோவலர் திருமணம் கூறும் மங்கல வாழ்த்திலே இரு கதிர்களையும் குறிப்பிட்டு வாழ்த்தினார். இரு சுடர்கட்கும் இணையாயவர்கள் தலைவி தலைவர் ஆதலால் என்க. இங்குக்காட்டிய சான்றுகள் அனைத்தும், தலைவன் தலைவியரை இரு சுடர்க்கும் இணையாகக் காட்டுவதைத் தெளிவாக்குகின்றனவே அன்றித் தலைவன் இச்சுடர், தலைவி இச்சுடர் என்று காணுமாறு இல்லை. ஆயின் தலைவன் எச் சுடர்க்கு நிகராவான்? தலைவி எச்சுடர்க்கு நிகராவாள்? உலகைக் காத்து வருவன இரண்டாம். அவை தண்மையும், வெம்மையும் ஆம். தண்மைக் கூறே இல்லாப் பொருளோ, வெம்மைக்கூறே இல்லாப் பொருளோ உய்யா; பயன்படா; அதுபோல் உயிர் தாங்கும் மனித வாழ்வும் வெம்மையும் தண்மையும் இன்றிப் பயன்படாது. மாந்தர் உடல் வெப்ப தட்ப நிலைச்சமன்பாட்டில் மிகினும், குறையினும் ஊறுபட்டு அல்லல் உறுத்துவதை எவரும் அறிவர். ஆகலானே தான் உடலைத் தக்கவாறு பேணி, வெப்ப தட்பக்கூறுகளை ஒரு நிலையில் வைத்தல் தேவை. வெப்ப தட்பச் சமனிலை அமையா உடல் உடலன்று. இச்சமனிலை அமையாத் தனி வாழ்வும், கூட்டு வாழ்வும் வாழ்வு ஆகா. பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாகக் கொண்டவன் தீதற விளங்கும் திகிரியோன் என்னும் பெருந்தேவனார் வாக்கும், சுட்டும் சுடர்விழிதான் - கண்ணம்மா ! சூரியசந்திரரோ? என்னும் பாரதியார் வாக்கும் ஞாயிறும் திங்களும் தெய்வத் திருக்கண்களாகக் குறிப்பிடுவதைக் கண்டறிக. தண்மையொடு வெம்மைதான் ஆயினான் என்னும் திருநாவுக்கரசர் திரு வீழிமிழலைத் தேவாரத் திருமொழி இதனை விளக்கி நிற்கின்றது அன்றோ! வெம்மையும் தண்மையும் கலந்து நிற்கும் இறைவனை அம்மையே அப்பா என்றும், அம்மையுமாய் அப்பனுமாய் என்றும் கரைந்துருகிக் கண்ணீர் சிந்தி அன்பர்கள் அழைப்பதை அறியார் யார்? வெம்மையாய் - தண்மையாய் - இரண்டுமாய் நிற்கும் இறைவனை எய்த, மாந்தருக்கும் அத்தன்மைகள் வேண்டற்பாலவாம். மக்களுள் வெம்மைத் தன்மையோடு விளங்குபவர் யாவர்? தண்மைத் தன்மையொடு இலங்குவர் யாவர்? முறையே ஆடவர் பெண்டிர் அல்லரோ? ஊக்கமிக்க ஆண்மைக்கு வெம்மையும், உள்ளன்பு மிக்க பெண்மைக்குத் தண்மையும் இயல்பாய் அமைகின்றன அல்லவா! இதற்கு ஏற்ப, வெம்மையாம் ஆண்மை தண்மையாம் பெண்மையை விரும்பி நிற்பதன்றே திருமணம்! வெம்மையும் தண்மையும் ஒருங்குகூடி, ஒப்பநின்று ஒல்லும் வகையால் கடனாற்றி இல்லறம் இனிது காத்து இறுதியில் பெண்மைப் பிழம்பாக அமைவது அன்றோ கடப்பாடு! இதற்கு வழியென்ன? திருமணத்தின் பெயரால் ஆடவர் பெண்டிரை ஒன்றித்து வைத்தல் வேண்டும். இதுவே மங்கலம். இதற்குரிய வாழ்த்தே மங்கல வாழ்த்து! மங்கல வாழ்த்தில் இயற்கை வடிவாய் இறைவனை முன்னிறுத்திச் சமயப் பொதுமையைக் காட்டும் அடிகள், தலைவன் தலைவியர் தன்மைக்கு இணையாய கதிர்களை எடுத்துக் கொண்டார். இஃது இயற்கை வாழ்த்தாக - மண வாழ்த்தாக அமைந்து விடுகின்றது. மணம் இயற்கை தானே! இதுநிற்க, இருசுடர்க்கு இணையாய்க் கோவல கண்ணகியரை மனையறம் படுத்த காதையில் பொதுவாகக் கூறும் அடிகள் வஞ்சின மாலையிலும், ஊர்சூழ் வரியிலும் சிறப்பாகக் குறிப்பிட்டு உரைப்பவை நோக்குதற்குரியவையாம். கோவலன் கொலை நிகழ்ச்சியைக் கேட்டறிந்த கண்ணகியார் பொங்கி எழுந்தார்; புவியிடை வீழ்ந்தார். அவ்வீழ்ச்சி, நிலவினைப் பொழியும் திங்கள் கரியமுகிலோடும் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்தது போலாயிற்று. (18; 30.1) இதன் பின், மதுரை மக்கள் சிலர், கொலையுண்ட கோவலனைக் கண்ணகியாருக்குக் காட்டுகின்றனர். கண்ணகியார் காணுகின்றார். ஆனால் கவலையே உருவாய கண்ணகியாரைக் கதிரோன் காண மாட்டானாய்த் தன்கதிர்களைச் சுருக்கிக்கொண்டு உலகுக்கு இருள்ஊட்டி மலையிடை மறைகின்றான். (19-30-2). கண்ணகியார் மண்ணிடை வீழ்ந்து புரள்வது திங்கள் வீழ்ந்து புரள்வது போன்றது என்று வஞ்சின மாலையிலே காட்டும் அடிகள், ஊர்சூழ் வரியிலே கோவலன் மறைவைக் கதிர் மறைவுடன் இணைத்துக் குறிப்பிடுகிறார். இவை, அவர் கண்ணகியரைத் திங்களுக்கும், கோவலனை ஞாயிற்றுக்கும் இணையாகக் கொண்டமையை நிறுவத் தக்க அகச் சான்றுகள் ஆதற்குத் தக்கவையாம். கண்ணகியரை முற்பட அறிமுகப் படுத்துகின்றார் அன்றோ அடிகள்! அதற்கேற்பத் தண்சுடராம் திங்களை முற்பட வாழ்த்தினார். கோவலனைப் பிற்பட அறிமுகப்படுத்தி வைப்பது போன்று வெங்கதிராம் ஞாயிற்றைப் பிற்படக் கூறினார். இவை மேற்போக்கில் திங்கள் ஞாயிறெனத் தோற்றினாலும் ஊன்றி உணர்வார்க்குப் புலமை நலங்கனிந்த வாழ்த்துகளாக அமைந்துள்ளன. திங்களையும் ஞாயிற்றையும் மங்கல வாழ்த்துப் பாடலில் போற்றிய அடிகள், அவற்றை அடுத்து மழையையும் இறுதியில் புகாரையும் போற்றுகின்றார். திங்களையும் ஞாயிற்றையும் அடுத்து மழையைப் போற்றியதற்கும், அதன்பின் புகாரைப் போற்றியதற்கும் செவ்விய காரணங்கள் உளவாதல் வேண்டும். ஏனெனில் இயைபின்றி எடுத்துக் கூறும் இயல்புடையரல்லர் அடிகள். வெங்கதிர்க் கனலியின் வெப்பத்தால் நீர் ஆவித் தன்மை அடைகின்றது. மண்ணிடை நீராக இருந்த அது தண்காற்றுப் படுதலால் நுண்ணிய நீர்த்துளியாகி மீண்டும் மண்ணிடை மழையாய் வீழ்கின்றது. வெம்மைத் தொடக்கமும் தண்மை முடிவும் உடையது மழை என்பது கண்கூடு. இஃது இலக்கிய உலகமே அன்றி அறிவியல் உலகமும் அறுதியிட்டுரைக்கும் உண்மையாகும். மழைக் கருவுயிர்க்கும் அழல் ((10: 143) என்று சுருக்கி யுரைத்துப் பெருக்கமாகச் சிந்திக்கத் தூண்டுவார் அடிகள். கதிரோனால் எழுந்து படர்ந்த மேகம் மலைவெம்மையுற்றது. அவ்வெம்மையை நீரால் தணிவிப்போம் என்று கருதிச் செல்வது போன்றுளது என்று நயத்துடன் நவில்வர் கம்பர். (பால : 28) தண்மை, வெம்மையுடைய திங்கள், ஞாயிற்றைத் தனித் தனியே வாழ்த்திய அடிகள், அவ்விரண்டு தன்மைகளும் இணைந்ததாம் மழையினை அடுத்து வாழ்த்துதல் தகவுடையதாம். அடிகளின் மழை வாழ்த்தினையும் புகார் வாழ்த்தினையும் நினையுந்தொறும் குறுந்தொகைப் பாடல் ஒன்று (40) நெஞ்சிடை முகிழ்த்து எழுதல் உண்டு. முகிழ்த்தெழக் காரணம் என்னை எனின் இவற்றிடை அமைந்துள மாறா இணைப்புகளேயாம். அவ்வுயர்பாட்டு : யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பது. இவ்வொள்ளிய பாடல் அன்புக்கலப்பினை, நீர் நிலக் கலப்புடன் இணைத்து விளக்கி நிற்றலை இனிதின் அறியலாம். தலைவன் தலைவியர் இருவரும் தாம் இன்னார் என அறிந்து கொண்டார் அல்லர். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமலே அன்பு மிகப் பெற்ற அவர்கள், பெற்றோர்களை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் இடைவெளி சிறிது மின்றி அன்புச் செறிவு அமைந்து விட்டது. எப்படி? செம் புலப்பெயல் நீர்போல ஒன்றுபட்டு விட்டன உள்ளங்கள். வானிடைப் பரவிக் கிடந்த பெயல், செந்நிலத்திடை வீழ்ந்து அச்செந்நிலத்தின் நிறத்தைப் பெற்றுத் தனக்குரியதாம் நீர்மையுடன் செந்நீர் ஆகின்றது. எங்கோ இருப்பது பெயல்; எங்கோ இருப்பது நிலம்; எனினும் இயற்கையாய் ஒன்றி இணைவு பெற்றன.! அக்கலப்பு அன்புடை நெஞ்சக் கலப்புக்கு நிகராகின்றது. இத்தகைய மழையை, அன்புள்ளங்கள் ஒன்றுதலாம் திருமண வாழ்த்துப் பகுதியிலே போற்றுவது மிகப்பொருந்துவதாகின்றது. இவ்வாழ்த்தில் மண்ணினை முற்கூறி மழையினைப் பிற் கூறக்கூடாதோ எனின், படைப்பு முறைமையும், உண்மைக் கூறும் உற்று நோக்கிப் பார்க்கும்போது அடிகளின் முறை வைப்பு, தனிச் சிறப்பினதாதல் தெளிவாகும். ஐம்பூதங்களின் - (விண், வளி, தீ, நீர், நிலம்) தோற்ற முறைப் படி நிலத்திற்கு முன்னையது நீராம். இதனை நெருப்பாகி நீர் பயந்தனை, நீராகி நிலம்படைத்தனை (பெருந்தொகை 125) என்பதும், நிலத்திற்கு முன்னாகிய நீர் என்பதும் (புறம் 9 உரை), உருவறி வாரா ஊழியும், உந்து வளி ஊழியும், செந்தீ ஊழியும், தண்பெயல் ஊழியும், இருநிலத்து ஊழியும் என்பதும் (பரிபாடல் 2) நிலத்திற்கு முன்னையது நீர் என்பதைத் தெளிவு படுத்தும். இப்படைப்பு முறையன்றி, இயல்முறையும் நீரை முன்னிறுத்திக் காட்டுதற்கே இடம் தருகின்றது. நீர் நெகிழ்தலைக் குணமாகவுடையது; நிலம் செறி தலைக் குணமாகவுடையது (சிலம்பு 3-26 அடியார்). இவ்விரு தன்மைகளும் வாழ்வில் புகுவார்க்கு இன்றியமையாத் தன்மைகளாம். புதுவாழ்வில் புகுவார்க்கு வற்புறுத்திக் கூறத் தக்கவையும் ஆம். உள்ள நெகிழ்ச்சி அன்பு; உள்ளத் திண்மையாம் செறிவு கற்பு. அன்பும் கற்பும் அமையா வாழ்வு வாழ்வாகாது. வாழ்வில் பொதுவாக ஒன்றியிருக்க வேண்டிய நெகிழ்வையும், செறிவையும் எப்பொழுது உரைப்பது? வாழ்க்கைத் துவக்கத்தில் தானே! அன்பு - அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம் என்றார் பேராசிரியர். (தொல் - மெய் - 12) தான் வேண்டப்பட்ட பொருளின் கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி என்றார் களவியல் உரைகாரர். (இறை -1) அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு என்றார் வள்ளுவர். களவியலோ அன்பின் ஐந்திணை என்றே முதல் ஒலியை எழுப்புகின்றது. உள்ள நெகிழ்வே அன்றிச் செறிவும் வேண்டும்; ஒன்றுக்கு ஒன்று குறையா அளவில் வேண்டும் என்று கருதும் அறநூல் வள்ளல், பெண் கற்பென்னும் திண்மை உண்டாகப் பெற வேண்டும் என்றும், தற்காத்தலும், தகைசான்ற சொற்காத்தலும் வேண்டும் என்றும் நிறை காக்கும் காப்புத் தேவை என்றும் பரக்கக் கூறுகின்றார். விட்டுக் கொடுத்து விளங்கச் செய்யும் நெகிழ்ச்சி எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை கட்டுக்குலையா உளத்துடன் இருந்து கவின் பெறுதல் என்பதாம். வாழ்வு நடக்க உள்ள நெகிழ்வும், வாழ்வு சிறக்க உள்ளச் செறிவும் வேண்டத் தக்கனவாகலின் நெகிழ்வுடைய மழையை முற்கூறி வாழ்த்தி, செறிவுடைய நிலத்தினைப் பிற்கூறி வாழ்த்தினார் என்று ஏற் படுகின்றது. அன்றியும், ஐம்பெரும் பூதங்களிலே கட்புலனாம் தன்மையன மூன்றாம் அவை; தீ, நீர், நிலம். இவற்றுள் தீ மூன்று தன்மைகளையும், நீர் நான்கு தன்மைகளையும், நிலம் ஐந்து தன்மைகளையும் பெற்றிலங்குவது எவரும் அறிந்ததே. விண்ணுக்கு ஒலியும், காற்றுக்கு ஒலியுடன் ஊறும், தீயிற்கு ஒலி, ஊறுகளுடன் ஒளியும், நீருக்கு ஒலி, ஊறு, ஒளிகளுடன் சுவையும், நிலத்திற்கு ஒலி, ஊறு, ஒளி, சுவைகளுடன் மணமும் உண்டு. இத்தன்மைகள் இவற்றுக்கு உளவாதலை விளக்கமாக இரண்டாம், மூன்றாம் பரிபாடல்கள் கூறுவது காண்க. முப்பண்புகளையுடைய ஒளியை வாழ்த்தி, நாற் பண்புகளையுடைய மாமழையைப் போற்றி, ஐந்து பண்புகளை யுடைய மாநிலத்தை ஏத்தி வரன் முறையாக்கிக் கொண்டுள்ளார் அடிகள் என்றாகின்றது. திருமணத்திற்கும் ஐம்பெரும் பூதப் பண்புகளுக்கும் தொடர்பு என்னை எனில் காண்போம். ஐம் பூதங்களின் மயக்கமே உடல். மாந்தர் உடலின் கால் பகுதியில் நிலத் தன்மையும், குடல் பகுதியில் நீர்த்தன்மையும், மார்புப் பகுதியில் நெருப்புத் தன்மையும், கழுத்துப் பகுதியில் வளித் தன்மையும், தலைப் பகுதியில் விண் தன்மையும் சிறப்பு நிலை பெற்றுத் திகழ்ந்து, பூதங்களின் மயக்கமே உடல் என்பதைத் தெளியக் காட்டும். ஐம்பூத மயக்கமாம் உடலில் ஐம்பூத இயல்பும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) செறிந்திருத்தல் தானே இயல்பு. இவ்வியல்பினை வளர்க்குமாறும். சிறக்கச் செய்யுமாறும் அன்றோ வாழ்க்கை அமைப்பு இருத்தல் வேண்டும்! இவ் வியல்புகளை வளர்க்குமாறு வாழ்க்கை உளதா? மண வாழ்க்கை உளதா? கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்று வள்ளுவர் பேசிய பின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஐந்தென அவர் வகுத்துக் காட்டிய பின் பெண்மையினிடத்தே ஐம்புல வின்பமும் அமைந்துள்ளது எனல் தேவையற்ற ஒன்று. மாந்தர் எவருக்கும் உரியதாம் சுவை நிலைக் களத்தைச் சுட்டிக் காட்டினார் அறநூலார். அஃது அவர்க்கு இயல்பு. ஆனால் அடிகளோ தம் காவியச் சிறப்புக் கேற்ப மண வாழ்வின் செறிநிலை இன்பத்தை உரைக்கின்றார் - கோவலன் வாயிலாகக் கண்ணகியைப் பாராட்டு முகத்தான. மனையறம் புகுந்து மங்கல அமளியிலே இருக்கும் கண்ணகியை மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே என்று பாராட்டுகின்றான். இப்புகழ் உரையிலே ஐம்புலச் சுவையும் உளவாதலை கட்குஇனிமையான் மாசற வோடிய பொன்னை ஒப்பாய், ஊற்றின் இன்பத்தான் முத்தை ஒப்பாய், உயிர்ப்பின் இனிமையால் குற்றமற்ற விரையை ஒப்பாய், சுவையின் இனிமையால் கரும்பை ஒப்பாய், இனிய மொழியை உடைமையால் தேனை ஒப்பாய் என்றும், இவற்றைச் சொல்லியது ஒளியும், ஊறும், நாற்றமும், சுவையும், ஓசையுமாகலின் கண்டுகேட்டுண்டுயிர் துற்றறியுமைம் புலனும் ஒண்டொடி கண்ணே யுள என நலம் பாராட்டப் பட்டன என்றும், அடியார்க்கு நல்லார் பொருளும் விளக்கமும், எழுதிச் செல்வது அவரது புலமையை விளக்காநிற்கும். மணம் மலருக்கு இயற்கை! மலருக்குத் தோற்றும் இடம் மண். மண்ணின் தனிச் சிறப்புத் தன்மை மணம். மணம் செறிந்து கூடி நிற்குமிடம் மலர். ஆதலால் மலருக்கு மணம் இயல்பாகி விட்டது. மணமில்லாத மலரை மலரென மதிப்பதும் வழக்கில் இல்லை. இம்மலர்களைப்போலவே மக்களையும் மலர் எனக் கொண்டது தண்டமிழ் உலகம். அவன் அரும்பினான் என்று பேசும் வழக்கு ஆண் ஒரு மலர் என்பதை மெய்ம்மைப் படுத்தும். அவள் பூப்படைந்தாள் என்னும் நடைமுறை பெண் ஒரு மலர் என்பதை உறுதிப்படுத்தும். அரும்புதலும், பூத்தலும் மலருக்குத் தானே உண்டு! அரும்பிய ஒன்றும் மணம் பரப்பாதிருப்பின் பயன் என்ன? மணத்தின் பிறப்பிடமாம் மண்ணிடைத் தோன்றியதன் பயன் தான் என்ன? மலரில் மணம் இருத்தல் இயற்கை போலவே மாந்தர் மணம் செய்து இன்புற்று வாழ்தலும் இயற்கை! மாற்று வழிகள் இயற்கை யல்லா வழிகள். செயற்கை வழிகள். மணத்திற்கு உறையுளாம் மண்ணை வாழ்த்துவதும், மலரையும் மணத்தையும் பெருக்கும் மழையை (ஐங்குறு. 328) வாழ்த்துவதும் இயற்கை வாழ்த்தாம். மழை என்னும் சொல்லுக்கு இன்பம் என்னும் பொருள் உளதாதலைப் பெருந் தொகை மழைநாள் நமக்கு எனக் காட்டும். (2200-2) இன்பப் பொருளாம் மழையை வாழ்த்துதல் இன்ப வாழ்த்தாக - மங்கல வாழ்த்தாக அமைதல் நோக்கத் தக்கது. திங்கள், ஞாயிறு, மழை எனப் பொதுமை வாழ்த்துக் கூறிய அடிகள் மாநிலம் போற்றுதும் என்றோ நானிலம் போற்றுதும் என்றோ கூறாது பூம்புகார் போற்றுதும் எனச் சிறப்பு முறைமையால் கூறினாரே ஏன் எனில் அதன் காரணம் வெளிப் படையாகவே அறியக் கிடக்கின்றது. புகார் பொதுவறு சிறப்பிற் புகார் என்று அடிகளாலேயே குறிக்கப் படுவது ஆகலானும், காவியத் தலைவன் தலைவியர் தோன்றிய இடம் புகார் ஆகலானும், தாம் எடுத்துக் கொண்டு பாடப் புகுந்த பகுதி புகார்க் காண்டம் ஆகலானும், மூவேந்தரையும் ஒப்ப மதிக்கும் உளநலம் அடிகட்கு உண்டு ஆகலானும், வாழ்த்துக்கும், வரலாற்றுகும் தொடர்பு காட்ட வேண்டிய இடம் அஃது ஆகலானும் பூம்புகார் போற்றுதும் என்று போற்றினார் என்க. இங்குக் காட்டிய அனைத்தும் திங்கள், ஞாயிறு, மழை, புகார் என வரன் முறை கொண்டமைக்காகக் கண்ட குறிப்புக்களாம். இனி இவ்வாழ்த்திலே அடங்கியுள்ள அறநெறிக் கூறுகள் சிலவற்றைக் காண்போம். அருள் செய்தலும், அறங்காத்தலும், கொடை புரிதலும், குடிதழுவலும், செங்கோல் வேந்தர்களது கடமைகளாம். இவற்றைக் கடமைகளாகக் கொண்டிருக்குமாற்றைத் தமக்கும் பிறருக்கும் அறிவிக்குமாறே குடையையும் திகிரியையும் கருவிகளாகக் கொண்டனர்; கொடையையும் குடியோம்பலையும் குணங்களாகக் கொண்டனர். பொறுப்பு மிகக் கொண்டு கடனாற்றுவோர் வாழ்வில் களிப்புக்கு இடம் குறைவே. நேரிடைக் களிப்பும் அவர்கட்கு வாய்ப்பது இல்லை. தம் கடனாற்றால் பிறர் வாழ்வில் இன்பம் மல்கிற்றேல் அவரின்பம் நோக்கி இவரின்பங் கொள்வர். அதுவே இவர் பெறும் இன்பமாம். அன்றிக் களியாட்டம் ஆடிக் கண்டவாறு பொழுதைக் கழித்துத் திரிவோர் உளரேல் அவர் அறவகையால் கடப்பாடு ஆற்றுதலைத் துறந்தோராதல் வேண்டும். ஆயின் மக்களை உயிரெனக் கருதும் மன்னவன் வாழ்வு வெளித்தோற்றத்திற்குப் பல்வேறு நலங்கள் கனிந்ததாக இலங்கினாலும் உள்நோக்கி அறிவார்க்கு இன்னல் பல பயப்பதே என்பது தெளிவாகும். இதனாலே பொன்முடியன்று மன்னவன் சூடுவது முண்முடியே என்று மொழிந்தோரும் உளர். இளங்கோவடிகளார் வடவாரியர் படைகடக்க நிற்கும் அண்ணன் வாயிலாக, மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் என்று திட்ட வட்டமாய் உரைத்து, மழை உரிய காலத்தில் பெய்யாவிட்டாலும், மக்கள் பல்வேறு துயர்கட்கு ஆட் பட்டாலும் உலகம் மன்னனையே பழிக்கும்; ஆகலின் மன்னவர் நன்குடிப் பிறத்தல் துன்பந் தருவதே அன்றி இன்பஞ்செய்வது இல்லை என்று வற்புறுத்துகிறார். செங்கோல் மன்னனுக்குத் தன்னுயிர் என ஒன்றில்லை. மக்களே அவன் உயிர். அவ்வாறாயின் மக்களாம் உயிர்க்குத் துயர் வருமாயின் அத்துயர் நேரிய மன்னனைக் கூரிய வாள் போல் வாட்டுதல் உறுதி. மன்னுதல் என்னுஞ் சொல்லுக்கு நிலை பெறுதல் என்பது பொருளாம். உலகில் நிலைபெற்றவனே மன்னவன் ஆவான். அரசு ஏற்றவர் அனைவரும் அரசர் ஆகலாம். ஆனால் உலக ஏட்டில் மன்னினோர் அன்றி மற்றையோர் மன்னவர் ஆகார். இவ்வுலகம் நிலையிலாத் தன்மையுடையது. நிலையிலா உலகில் நிலைப்பது எளிதோ? எல்லாருக்கும் கூடுவதோ? சிலர்க்கே கைகூடும்? கூடுதற்கும் வழிவகை வேண்டும். நிலையிலா உலகில் நிலைக்க வேண்டுமாயின் புகழ்மிக்க செயல்களைச் செய்தாக வேண்டும். புகழ் ஒன்றே அழியாதது. ஒன்றா உலகத்துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்ப தொன்றில் என்றார் அறநெறி அண்ணல். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத்தா மாய்ந்தனர் என்றார் புறநானூற்றுப் புலவர். புகழால் நிலைக்குமொன்றே புவியாள்வோர் கடனாம். புகழ்க் கோயிலுக்குப் புகுவாயில்கள் எத்துணை? ஒன்றா இரண்டா? பலப்பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்காம். அவை கொடை, அளி, செங்கோல், குடியோம்பல் என்பவை. அடுக்கிய மூவுலகும் கேட்குமே. கொடுத்தார் எனப் படுஞ்சொல் என்று கொடைச் சிறப்பை எடுத்துரைக்கின்றது நாலடி. பொருள் அற்றார் அப்பொருளை முயற்சியால் மீண்டும் பெறக் கூடும்; ஆனால் அருள் அற்றார், அருளை மட்டுமோ அற்றார்? அனைத்தும் அற்றார் என்கின்றது குறள். கொடும்புலி வாழும் காட்டினும் கொடிது கொடுங்கோல் மன்னர் வாழும் நாடு என்று கூறிச் செங்கோலின் இன்றி யமையாமையை வற்புறுத்துகின்றது பிற்கால நூல். மன்னவ! வெயில் மறைக்குமாறு பிடிக்கப் பெற்றதோநின் வெண்குடை? குடிகளைக் காத்தற்காக அன்றோ எடுக்கப்பட்டது என்று பன்னுகின்றது தொன்மை நூல். இவ்வனைத்தையும் இறை மாட்சியிலே, கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று தொகுத்துரைக்கின்றார் பொய்யில் புலவர். கண்ணாகிய உறுப்பு இருந்தும் அதனிடை அருள்வரப் பெறார் கண்ணுடையர் ஆகார். அது போல் அரசுப் பொறுப்பு இருந்தும் இந்நான்கு பண்புகளும் இல்லார் அரசர் ஆகார்; உடையரே அரசர்; அரசருள் ஒளியுடைய (புகழுடைய) அரசர். ஆகலின் தகை மாண்ட புகழ்க் கோயிலுக்குச் செல்லும் வகை மாண்ட வாயில்கள் பலவற்றுள்ளும் கொடையளி செங்கோல் குடி யோம்பல் என்னும் நான்கும் நற்கலை கவினிய பொற்புறு கோபுர வாயில்கள் எனல் தகும். இனி, இதற்கும் சிலப்பதிகார மங்கல வாழ்த்திற்கும் உரிய தொடர்பென்னை எனில் காண்போம். முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரிய தொடர்நிலைக் காவியத்தை அடிகள் பாட வேண்டு மென்று தண்டமிழ்ச் சாத்தன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்பச் சிலம்பு பாடும் சேரர் வழிவரும் அடிகள் வேந்தருக்கு ஒளியாம் வழிகளைத் தெளிய உரைத்துப் போதுகின்றார். அவர் தம் காவியத்தில் பல இடங்களில் அவ்வாறு உரைக்கினும் தலையாய இடம் மங்கல வாழ்த்தாகவே புலப்படுகின்றது. யாம் திங்களைப் போற்றுவேம் - சோழனது வெண்குடை போன்று தண்ணளி செய்தலால்; யாம் ஞாயிறு போற்றுவேம் - சோழனது திகிரிபோல் (சக்கரம்) மேரு மலையை வலஞ் சுற்றி வருதலால்; யாம் மாமழையைப் போற்றுவேம் - சோழன் அருள் போல் பொழிந்து வளம் பெருக்குதலால்; யாம் பூம்புகார் போற்றுவேம் - சோழன் குலத்துடன் தோன்றி உயர்ந்து விளங்குதலால்; என்பதனை, திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற் கவனளிபோல் மேனின்று தான்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி உலகிற் கவன்குலத்தோ டோங்கிப் பரந்தொழுக லான். என்று இசைநலம் பொலியப் பாடுகின்றார் அடிகள். இப் பாடல்களிலே திங்களால் குடிக்கு நிழலாம் அளியும், ஞாயிற்றால் செங்கோலாம் ஆண்மையும், மழையால் வளஞ் சுரக்கும் கொடையும், பூம்புகாரால் குடியோம்பலும் குறிக்கப் பெற்றமை ஊன்றி உணர்வார்க்குத் தெளிவாகாமற் போகா. அரசர்க்கென்று அறநூல் வகுப்பனவற்றையே தாமும் கூறுவான் எடுத்துக் கொண்ட அடிகள் நூலின் தொடக்கப் பகுதியிலேயே இயற்கை வாழ்த்துரைக்கு முகத்தான் இவற்றை இனிதின் ஓதுகின்றார். தொடக்கமும் முடிவும் எவருள்ளத்தையும் எளிதில் ஈர்த்து நிலை பெறுத்தும் பெற்றி கொண்டிலங்குவனவாம். ஆதலின் அரச நெறிமுறையறைந்து நூல் தொடங்கும் அடிகள் மாந்தர் நல்வாழ்வுக்குரியனவாம் பொருளறங்களை விரித்துக் கூறும் வரந்தரு காதையுடன் காப்பியத்தை முடிக்கின்றார். மங்கல வாழ்த்துப் பகுதியில் கூறும் குறிப்புரைகளை நூலினகத்து விரித்தும் விளக்கியும் செல்வது அடிகட்கு இயல்பாதலை நூலினை மேற்போக்காக நோக்குவோரும் உணர்வர் என்பது ஒருதலை. திங்களை வெண் கொற்றக்குடையுடன் இணைத்த அடிகள் தண்மதி யன்ன தமனிய வெண்குடை (28: 1-2) என்று வடிவுக்கும். மண்குளிரச் செய்யும் தண்குடை (19: 21) என்று பண்புக்கும் ஒப்புமை காட்டியுள்ளார். ஞாயிற்றைச் செங்கோல் சிறக்கச் செய்யும் அறத் திகிரியுடன் ஒப்பிட்டுக் காட்டும் அடிகள் விரிகதிர்பரப்பி உலக முழு தாண்ட ஒரு தனித்திகிரி உரவோன் (2: 1-2) என்று வடிவுக்கும், பொற்கோட்டுழையதா எப்பாலும், செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனியாழி என்று தொழிலுக்கும் உவமை காட்டியுள்ளார். மழையினைக் கொடையுடன் ஒப்பிடும் அடிகள், சோழன் கொடைச் சிறப்பையும், சேரன் கொடை மாண்பையும் கேட் போர் நயப்பும் வியப்பும் ஒருங்கெய்தக் கூறுவதே அன்றி மன்னவர் பின்னோர் என்று குறிக்கப்படும் வணிகருள் உயர்ந்தோங்கிய மாநாய்கன் மாகவான் நிகர்வண்கையன் என்றும், கோவலனைச் செம்பொன் மாரிகொள்கையிற் பொழிந்தோன் (15 : 41) என்றும் கூறுகின்றார். குலந்தோடங்கிப் பரந்தொழுகும் நிலச் சிறப்பினைக் கூறும் அடிகள் பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய. பொதுவறு சிறப்பிற்புகார் (1:15-6) என்றும், பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் (1: 15 - 6) என்றும் குறிப்பிடுகின்றார். இவற்றை நோக்குங்கால் திங்களும், ஞாயிறும், மழையும், மண்ணும் தந்தொழில் திரியாத் தகைமைவாக் கடனாற்றினாலும் கொடையளி செங்கோல் குடியோம்பல் ஆகிய நான்கும் பேணாத அரசும், ஆட்சியும் கேடுபயப்பனவன்றி நன்மை பயவா என்றும், கோன்நிலைதிரியின் கோல் நிலை திரிந்து கோள் நிலையும் திரியும் என்றும், ஆள்வோர் செம்மையால்தான் ஆட்சிக்கு உட்பட்டோருக்கு நலம் விளையும் என்றும் அடிகள் உணர்த்துகின்றார் என்றாதல் வேண்டும். அரசியல் பிழைத்தோரை அறம் கூற்றாக இருந்து மடியச் செய்யும் என்பது அடிகள் நூல் பாடுவான் புகுவித்த முப்பெருங் காரணங்களுள் ஒன்றன்றோ! இத்தகைய அடிகள் நூலின் தொடக்கத்திலேயே அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்று எண்ணுமாறு செய்வித்தல் ஏற்புடையதே என்று அறியலாம். ஆகலின் மங்கல வாழ்த்து, மன்னர் கடைப் பிடிக்க வேண்டிய அறநெறிகளை வாழ்த்து முறையால் கூறும் பகுதி என்பது விளக்கமாகும். அடிகள் அறத்தை உயிரெனக் கொண்டவர். அறத்தின் வழியே அரசியல் இயங்க வேண்டும் என்று கருதுபவர். அவ்வாறு இயங்கினால் மாந்தரும் அறநெறி வழியே செல்வர் என்னும் அசையா உறுதி உடையவர்; அறத்தை நிலை பெறுத்து மாறும் மறத்தைக் கடிந்து ஒதுக்குமாறும் செய்தற்கு இலக்கியமே உயரிய கருவி என்று தெளிந்தவர். இவற்றுக்கு ஏற்ப அறவாழ்த்துப் பாடி நூலைத் தொடங்குகின்றார். கோள் நிலை தவறாது! அப்படி ஓரோர் வேளை அது தவறு படினும் கோன்நிலை தவறவே கூடாது. தவறுமாறு நேரின் குற்றமற்ற கோவலன் போல்வோர் கொலைக்களம் குறுகி - மடிவர் என்று எதிர்கால உலகம் உணரவேண்டும் என்று அறநெறி தவறியது பற்றி விவரிக்கும் காப்பியத்தின் தொடக்கத்தில் அறநெறியை அழகு பெற வைக்கின்றார் அடிகள். உணர்வார்க்கு இன்பம் பயவாமல் போகாது அடிகளின் மங்கல வாழ்த்து! 8. சிலம்பில் சில பாடங்கள் சிலப்பதிகாரத்தின் முதற்பதிப்பு 1876 இல் வெளி வந்தது. அது புகார்க்காண்டம் மட்டுமே உடையது; மூலம் மட்டுமே உள்ள பதிப்பு. சென்னை மாநிலக்கல்லூரி முதன்மைத் தமிழ்ப் பேராசிரியர் தி. ஈ. சீனிவாச ராகவாச்சாரியார் வெளியிட்டார். ஊ. புட்பரத செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம் என்று அச்சிடப்பட்ட பதிப்பு அது. சேரமான் செய்த சிலப்பதிகாரக் கதை எனவரும் சிலப்பதிகாரக் காப்புச் செய்யுளைக் கொண்டும், பெருமாளையும் நாயனாரையும் ஒட்டிக் கொண்டும் புனையப்பட்ட பெயராகலாம். ஆசிரியர் இயற்பெயர் முதலாகிய சரித்திரம் ஒன்றும் தெரியவில்லை. இவருடைய தமயன் பெயர் செங்குட்டுவன் என்பது மாத்திரம் தெரிகிறது என முகவுரையில் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் உரையுடன் 1880 இல் வெளிவந்தது. அதனை வெளிப்படுத்தியவர் திரிசிரபுரம் பெரும் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர் தி. க. சுப்பராயச் செட்டியார். கானல் வரிக்கு அவரே உரை யெழுதியும், மற்றைப்பகுதிக்கு அடியார்க்கு நல்லாருரையை அடியாக வைத்துக் கொண்டு அவரே உரையெழுதியும் வெளியிட்டார். அது சென்னை மெமோரியல் அச்சுக் கூடத்தில் பதிக்கப் பட்டது. பதிக்கப்பட்ட காலம் விக்கிரம ஆண்டு சித்திரைத் திங்கள். சுப்பராயச் செட்டியார் சென்னை அரசினர் நார்மல் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர். ஈரெண்கவனகராக (சோடசாவதானராக)த் திகழ்ந்தவர். 1869இல் பதினோராந் திருமுறையை முதற்கண் அச்சிட்டவர். சிலப்பதிகார முதற்பதிப்பு வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப்பின்னே 1892 இல் பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு வந்தது. அடியார்க்கு நல்லாருரை - அரும்பதவுரை ஆகியவற்றுடன் கூடிய பதிப்பு அது. இம்மூன்று பதிப்புகளும் வெளிப்படுமுன் 1869 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 18 ஆம் நாள் சிலப்பதிகாரத்தை ஏட்டுப்படியில் இருந்து கடிதப்படியில் தம் கையெழுத்தில் படியெடுத்து முடித்து வைத்துள்ளார் எ. ஆர். கிருட்டிண பிள்ளை. கிறித்தவக் கம்பரென விளங்கிய அவர்தம் கையெழுத்துப்படி தமிழிசைச் செல்வர் பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரனார் வழியே என் பார்வைக்கு வாய்ந்தது. அக் கைப்படியால் இருநூறுக்கு மேற்பட்ட பாடங்கள் கிடைக்கின்றன. சில பாடங்கள் சான்றாக இவண் காட்டப் படுகின்றன. இங்குக் காட்டப் படுவன, உரையொடும் ஒப்பிட்டுப் பார்த்து உரிய பாடப் பொருத்தம் கண்டு உவந்து வரைவன மட்டுமேயாம். இசையோன் பாடிய இசையின் இயற்கை வந்தது வளர்த்து வருவதொற்றி என்பன அரங்கேற்று காதை 64, 65 ஆம் அடிகள். இதில் 65 ஆம் அடியில் வரும் வந்தது வளர்த்து என்பதற்கு அரும்பத உரை பாடுகின்ற பண்களுக்குச் சுரம் குறைவு படாமல் நிறுத்தி என்பது வளர்த்து என்பதற்குக் குறைவு படாமல் எனப்பொருள் காணப்பட்டது என அறியலாம். இதன் அடியார்க்கு நல்லாருரையும் குறைவுபடாமை என்பதே. எ. ஆ. கி. இன் கையெழுத்துப்படியில் வளர்த்து என்பதற்கு வழாஅது எனப்பாடம் உள்ளது. இப்பாடமே உரைக்குத் தகப் பொருத்தி நிற்றல் வெளிப்படை. உரையால் மூலத்தின் பாடம் திருந்தும் என்பதற்கு இத்தகு பாடங்கள் சான்றாம். அதே அரங்கேற்றுக் காதையின் 97 ஆம் அடி. புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை என்பது பொதியில் வரை முதலான புண்ணிய நெடுவரைப் பக்கங்களில் நெடிதாகி உயர வளர்ந்த மூங்கில் என்பது அரும் பதவுரை. இதே பொருளையே அடியார்க்கு நல்லாரும் வரைந்தார். போகிய நெடுங்கழை என்பதற்கு நெடிதாகி உயர வளர்ந்த மூங்கில் என்பதில் உயர்தல் பொருளுக்கு ஏற்ற சொல்லின்றி இடரொடும் இயைத்துக் கொள்ள நேர்தல் தெளிவு. இதன் பாடம் எ. ஆ. கி. கைப்படியில், புண்ணிய நெடுவரைப் போகுயர் நெடுங்கழை என்றுள்ளது. இதன் பொருத்தம் தெளிவு. பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த சீரியல் வெண்குடை என்பதும் அரங்கேற்று காதையே (114 . .5) பெரிய கீர்த்தியையுடைய அரசர் பொருதுடைந்து புறங்கொடுத்த வழிப்பறிக்கப்பட்ட அழகிய நற்கொற்றக் குடை என்பது இதன் அரும் பதவுரை. பெரிய புகழையுடைய அரசர் பொருதுடைந்து புறங் கொடுத்த வழிப் பெற்ற அழகிய கொற்ற வெண்குடை என்பது அடியார்க்கு நல்லாருரை. ஈருரைகளிலும் புறங் கொடுத்த வழி என்னும் செய்தி தெளிவாக உளது. புறத்தெடுத்த என்னும் மூலப்பாடத்தொடு செவ்விதில் பொருந்திற்றில்லை என்பது புலப்படுகின்றது. அப்பாடம். பேரிசை மன்னர் பெயர் புறக்கொடுத்த சீரியல் வெண் குடை என எ. ஆ. கி. படியில் உள்ளது. வலம்படு தானை மன்ன ரில் வழிப் புலம்பட விறுத்தவிருந்தின் மன்னரின் என்பது அந்திமாலைச் சிறப்புச் செய் காதை (11-12) இதில் வரும் புலம்படு என்பதற்கு அரும் பதவுரை இல்லை. அடியார்க்கு நல்லாருரை இப்பகுதிக்கு வெற்றி பொருந்திய தானை மன்னர் இல்லாத இடமறிந்து அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்துவிட்ட குறுநில மன்னரைப் போல என்பது. இதில் புலம்பட என்பதற்கு நிலமெல்லாம் கெடும்படி என்பதே உரை என்பது விளக்கம். இப்பகுதியின் பாடம், வலம்படுதானை மன்னரில் வழிப் புலங்கெட விறுத்த விருந்தின் மன்னரின் என எ. ஆ. கி. படியில் உள்ளது. புலம்பட என்பதனினும் புலங்கெட என்பதன் செவ்வியல் வடிவம் உரைப் போக்கால் இனிதுணர வாய்க்கின்றது. சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் வள்ளைப் பாட்டின் முதற்பாட்டு ஆய்வுக்குரியது. அதனைப் பற்றி அகராதி நினைவுகள் என்பதில் (10) வையாபுரியார் விரித்துரைத்தார். அவர் கண்டுரைத்த பாடம் சிலம்பில் இதுகாறும் போற்றப் படவில்லை. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக்கொடித் திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத் தோட்பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் என்பது வள்ளை முதற்பாட்டு. இப்பாடல் ஈற்றடியில் ஆரிக்கும் என்றுள்ள சொல்லுக்கு ஆர்க்கும் என்று பாடமுண்மையைப் பெரும் பேராசிரியர் உ. வே. சா. காட்டுகிறார். இரண்டு பாடங்களும் இடத்தொடும் பொருளொடும் பொருந்தாமை மேல்வரும் வள்ளைப் பாடல்கள் இரண்டாலும் விளங்குகின்றது. இரண்டாம்வள்ளை, வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல் என்றும் மூன்றாம் வள்ளை, பனந் தோடுளங்கவரும் பாடலே பாடல் என்றும் வருகின்றன. இரண்டாம் வள்ளை பாண்டியனைக் குறிக்குமாறு வேப்பந்தார் கமழ்கின்றது. மூன்றாம் வள்ளை சேரனைக் குறிக்குமாறு பனந்தோடு ஒலிக்கிறது; ஆனால் சோழனுக்குரிய முதற்பாட்டில் அவன் மாலை இடம் பெற்றிலது. அரும்பதவுரையில் ஆரிக்கும் என்பதற்குக் குறிப்பு இல்லை. அடியார்க்கு நல்லார் உரையோ ஊர்சூழ்வரிக்கு மேல் (19) கிடைத்திலது. ஆதலால் உரையால் தெளிவுறுத்த முடியாத பாடத்தை ஏட்டுப்படியால் தான் தெளிவாக்க முடியும். செவ்விய பாடமமைந்த படி வையாபுரியார்க்குக் கிடைத்தமையால் அதனைக் கொண்டு ஆரிரக்கும் எனப் பாடம் இருத்தல் கண்டு களித்தார். அதற்கு முன்னர் அகராதியில் (சென்னைப் பல்கலைக் கழக அகராதியில்) ஆரிக்கும் - ஒலிக்கும் எனப் பொருள் ஏறி விட்டதைச் சுட்டித் திருத்தம் காட்டினார். ஆரிரக்கும் என்பது சோழற்குரிய ஆத்தி மாலையை விரும்பும் என்னும் பொருள் தந்து இவ்வள்ளைகள் மூன்றும் சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தரையும் பாடுவனவாய் அமைந்து பொருளொடு பொருந்தி நிற்கின்றன. செம்பியனைச் சுட்டும் பாடலிலே, அவன் ஆர் ( ஆத்தி மாலை) இரக்கும் (ஆரிரக்கும்) காட்சி காணத் தக்கதேயாம். ஆரிக்கும் என்னும் தவறான பாடம் அவ்வளவில் ஒழியாமல் ஒலிக்கும் என்னும் தவறான பொருளைப் படைத்துக் கொள்ளவும் தூண்டி விட்டுக் குற்றப்பட்டு நின்று விட்டது கருதத் தக்கது. ஆர்க்கும் என்பதற்கு ஒலிக்கும் எனப் பொருள் உண்டேயன்றி, ஆரிக்கும் என்பதொரு சொல்லோ அதற்கு அப்பொருளோ இல்லை என்பது கண்டு கொள்ளத் தக்கது. இவ்வள்ளைப் பாட்டின் இறுதியடி, பாவைமார் ஆரிரக்கும் பாடலே பாடல் என எ. ஆ. கி கைப்படியில் உள்ளது. சிலப்பதிகாரப் பதிப்பு எதுவும் வெளிப் படுதற்கு ஏழாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட படி அது என்பது எண்ணற்குரியது. சிலப்பதிகாரப் பதிப்புக்கு 25 சுவடிகள் கிடைத்தும், கிடையாத பாடம் வையாபுரியார் வயத் திருந்த சுவடியிலும், என்றி ஆல்பிரட்டு கிருட்டிண பிள்ளை கையெழுத்துப் படியிலும் இருந்தன என்றால் சில சுவடிகளால் பெறுகின்ற பயனின் அருமை விளங்கும்! சிலப்பதிகாரப் புதுப் பதிப்புகளில் இப்பாடம் இனி ஏறுதல் வேண்டும். நீடிருங் குன்றம் என்னும் வெண்பா நூற் சிறப்புப் பாயிரம் என நூன்முகப்பில் அச்சிட்ட புத்தகங்களில் உள்ளது. ஆனால் அவ்வெண்பா எ. ஆ. கி கைப்படியில் நூலின் நிறைவில் உள்ளது. அதில் பாடங்களும் உள்ளன. பதிப்பில் உள்ள பாடம் : நீடிருங்குன்ற நிழல்காலு மண்டிலத்துக் கோடுகோடாய்த் தோன்றுங் கொள்கைத்தே - கூடலார் கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன் தண்டா வுரை முத் தமிழ் எ. ஆ. கி. படியிலுள்ள பாடம் : நீடிருங் குன்ற நிழல் காணு மண்டிலத்துக் கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே - கூடலான் கொண்டாடுஞ் செஞ்சொற்குடக்கோ முனிசேரன் தண்டா வுரைமுத் தமிழ் நூற்கட்டுரை என்னும் இறுதிப் பகுதியில், ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம் காட்டுவார் போற்கருத்து வெளிப்படுத்து என்றுள்ள அடிகளும் (15-6) அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்னும் வள்ளுவமும், தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் என்னும் வள்ளுவ மாலையும் இவ்வெண்பாவொடு வைத்து எண்ணத் தக்கன. ஆடி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி! மூக்குக் கண்ணாடியன்று! தன் முன்னுள்ள பருமையை முழுமையாகத் தன்னுள் சுருக்கிக் காட்டுவதும், காண்பாரைக் காண வைப்பதும் இக்கண்ணாடி இயல்பு. அப்பொருள் நிழல் காலும் என்பதனினும் நிழல் காணும் என்பதில் இயல்பாக அமைந்து கிடத்தல் வெளிப்படை! மேலே காட்டிய காட்டுகள் அனைத்தும், காட்டலும் காணலுமாதலைக் கண்டு தெளிக. காலுதல் என்பதற்குக் கக்குதல், பொழிதல், வடிதல், விடுதல், உமிழ்தல் முதலிய பொருள்கள் உளவேனும் இக்காணுதல் பொருள் இயல்பாகப் பெற வாய்த்திலதறிக. இனிக் கூடலார் என்பது நாடு தழுவியது, கூடலான் என்பது அரசன் மட்டில் அமைந்தது! மன்னனே கொண்டாடும் சிறப்புப், பெருஞ் சிறப்பெனல் அக்கால நிலை. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் எனக் கண்ட காலம் அது! அதற்கு ஏற்பக் கூடலான் எனத் தகும். கூடலார் எனினும் ஏற்பதே! ஏனெனில் கூடலார் என்பதில் கூடலானும் அடங்கியவன் தானே! ஏட்டுப்படி, கைப்படி ஆகியவற்றை வாய்க்கப் பெற்று அச்சுப்படியொடு ஒப்பிட்டுப் பாடங் கண்டு பதிப்பித்தல் ஓர் அரும் பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும்! அவ்வரும் பணி அருமைப் பணியென்பது அங்கைக்கனி. இமயத்தில் புலிப்பொறி பொறித்த திருமாவளவனுக்குப் பலரும் கொடுத்த கொடைகளைக் குறிக்கும் அடிகள், மயன்விதித்துக்கொடுத்த மரபின இவைதாம் (5: 108) என்று கூறுவதாக அச்சுப் பதிப்பில் உள்ளது. இவை தனித் தனி இத்தன்மைய வாயினும் என அரும்பதவுரை அமைகின்றது. இதற்குத்தக, மயன்விதித்துக்கொடுத்த மரபின வாயினும் எனவரும் எ. ஆ. கி. எழுத்துப் பொருந்தி நிற்கின்றது. மதுரை மாநகரில் வைகறைப் பொழுதில் எழுந்த ஒலி களைக் கூறும் பகுதியில், நான்மறை யந்தணர் நவின்ற ஓதையும் மாதவர் ஓதிமலிந்த ஓதையும் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் (13:131-4) எனத் தொடர்கின்றது பாடல். இதில் நாளணியோதையும் என்னும் பாடம் எ. ஆ. கி. எழுத்தில் உள்ளது. மதுரை மாநகரில் நிகழும் பல்வேறு தொழில்களைக் கூறும் பகுதியில், (14, 175) வேதினத் துப்பவும் வேதினத் தீர்ப்பவும் என்பன பாடங்களாக உள்ளன. வேதினத் துப்பவும் - ஈர்வாளால் வலியப் பெற்றனவும்; என்றது ஈருங் கருவியாற் பண்ணப் பட்டன என்பது அரும் பதவுரை. ஈர்வாள் தொடக்கத் தனவாகிய கருவிகளும் துப்பு - கருவி என்பது அடியார்க்கு நல்லாருரை. இத்தொடரின் பாடம் எ. ஆ. கி. படியில். வேதினத்துப் படுவவும் (14. 176) என்றுள்ளது. பொருளை நோக்க இப்பாடம் பொருந்தி நிற்றல் தெரிகின்றது. வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியென் றோவர் தோன்ற என்பது அச்சுப் பாடம் (26, 123-4). ஓவர் - ஏத்தாளர் என்பது எ. ஆ. கி. கைப்படி. வரந்தரு காதையில், கண்ணகியார் வாக்காக, தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்! (80. 164) அதன் பின், ஆங்கது கேட்ட அரசனும் அரசரும் ஓங்கிருந்தானையும் உரையோ டேத்த என்பது அச்சு நூற்பாடம். முதல் அடியில் அரசரும் அரசின் என்பது எ. ஆ. கி. படியில் உள்ள பாடம். அரசரும் என்பதில் சேரனொடு பிறரும் அடங்குவர் ஆகலின், எண்ணத்தக்கது. இவ்வாறே பாடங்கள் மிகப் பல கிடைக்கின்றன. அரும் பதவுரையின் தொடக்கத்தில் காப்புச் செய்யுளாக, கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பவிழ்தார்ச் சேரமான் செய்த சிலப்பதிகா ரக்கதையைச் சாரமாய் நாவே தரி என்னும் பாடல் அச்சு நூலில் உள்ளது. m¥ghlYl‹, v.M.கி. படியில் கீழ்வருவனவும் உள்ளன: இந்திர திருவில் இயைந்தாங் கியைந்த அந்தமில் இருமுது குரவரை மைந்தரோடு பழிச்சுது மதி நலம் பெறவே கவலைமற்றெவனோ உவலையொன் றுடைமையிற் பெண்ணொரு பாகனைப் பொரூஉம் அண்ணல் யானை அருள் வழிச் செலினே அருந்திறன் முருகன் அஞ்செஞ் சீறடி பொருந்திய அன்பொடு போற்றுதும் திருந்திய இருந்தமிழ் பெருகுதற் பொருட்டே என்பவை அவை. பதிகத்தின் இறுதியில், இது குட்டச் செந்தூக்கு வந்த ஆசிரியம். பதிக முற்றும் என்று குறிப்புள்ளது. இவ்வாறே மங்கல வாழ்த்தின் நிறைவில் இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்னும் குறிப்புள்ளது. அப்பாடல், இருபதாம் அடித் தொடக்கத்தில், மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என்றும் உள்ளது. மனையறம் படுத்த காதை நிறைவில் இதுநிலை மண்டில ஆசிரியப்பா என்றுள்ளது. கடலாடு காதை கடலாட்டுக்காதை என பிறவினைப் பட்டு நிற்கின்றது. அதன் நிறைவில் இது நிலை மண்டில ஆசிரியம் என்றுள்ளது.கடலாட்டுக் காதை முற்றும் என்றும் பொறிப்புளது. கானல் வரியில் கடல்புக்கு, கொடுங்கண், ஓடுந்திமில் என்பன திணை நிலைவரி என்பது அச்சுப்பாடம். அவற்றைச் சாயல்வரி என்கிறது v.M.கி .படி. ‘ntW’ v‹D« R£Lila, ‘gtsîy¡if’ ‘ò‹id ÚHš’ ‘fŸthŒ Úy«’ v‹D« tÇ¥ghlšfŸ ‘JŸsš tÇ’ vd v.M.கி. பாடம் சொல்கிறது. இவ்வாறே வேறு என்னும் சுட்டுடைய சேரன் மட வன்னம் என்னும் வரியைத் திணை நிலவரி என்கிறது கைப்படி. வேட்டுவ வரி நிறைவில் இது கூத்தாற் பெற்ற பெயர்; பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, வேட்டுவ வரி முற்றும் என்றுள்ளது v.M.கி பாடம். கட்டுரை காதை தெய்வம் தொழாஅள் என்னும் வெண்பாவின் பின் மொழிமுறை மொழிமறை ஒன்றிய பிறைமொழியே சீர்மொழிக்கட்டுரை காதை முற்றும் என்னும் குறிப்பு கைப்படியில் உள்ளது. குன்றக்குரவையில் எற்றொன்று முதல் மூன்றும் சிறைப்புறம். தோழிக்குத் தலைவி சொல்லியது என்றுள்ளது. அக்குறிப்பு அரும்பதவுரையிலும் உள்ளது. அதனுடன் முன்னிலைப் புறமொழியுமாம் என்பதும் அரும் பதவுரைக் குறிப்பு. வாழ்த்துக்காதையில் என்னேயிஃ தென்னே என்பதன் தலைப்பு அச்சுப்படியில் செங்குட்டுவன் கூற்று என்றுளது. கைப்படியில் வானோர் வரவு என்றுளது. தெரிந்துரைத்த இவற்றையன்றிப் பாட வேறுபாடும், பிறவும் நிரம்பவுள. படியாய்வும், ஒப்பாய்வும் பயன்மிக்கன என்பதை ஆய்வுடையார் மேற்கொளல் நலப்பாடாம் என்பதைச் சுட்டுமாறே, இவற்றைக் காட்ட நேர்ந்ததென்க. 9. கொற்கை கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல் நூல், இளஞ் சிறுவரும் அறிந்தது! பழங் கொற்கை, பரவை அலைப்பால் பட்டழிந்தாலும், அக் கொற்கைச் சிறப்பும், கொற்கைப் பெயர் தாங்கியுள்ள ஓர் ஊரும், ஏட்டு வழக்கிலும், நாட்டு வழக்கிலும் இன்றும் விளங்கி வருகின்றன. கொற்கையின் சிறப்பை முதற்கண் ஆய்வின் வழியே உலகுக்கு உணர்த்தியவர் முனைவர் கால்டுவெல்! கோ நகர் - கொற்கை என்னும் நூல் வழியே கொற்கையைத் தடம் பதித்துக் காட்டியவர் நுண்கலைச் செல்வர் அ. இராகவன், அறிஞர்கள் கொற்கையின் இடமும் தடமும் கண்டு தெளித்துள்ளனர்; ஊர்ப் பெயர்க் கரணியம் பற்றியும் அறியத் தலைப்பட்டுள்ளனர். கொற்கைப் பெயராய்வே இக் கட்டுரையின் உள்ளீடு. கொற்கை என்பது, கொல்கே, கொல்கீ என்று கிரேக்க நாட்டவராலும் உரோம நாட்டவராலும் குறிக்கப் பெற்றுள்ளதாம்! திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் கொல்கை என்ற குறிப்புள்ளதாம். ஆதலால் கொல்கை என்னும் பெயரே கொற்கை ஆகியிருக்க வேண்டும் என்று அறிஞர் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வந்தார். கொல்கை என்பதைக் கொல் - கை எனப் பிரித்துக் கொலை செய்யும் கைபோன்றது என்று பொருள் கண்டார். தொன்முது மாந்தன் கொல் கருவி கையாகவே இருந்ததாகலின், அப்பெயர்ப் பொருத்தத்தால் கொற்கையாகி இருக்க வேண்டும் என்று விளக்கினார்! கொற்கையில் இருந்தவர் மட்டுமோ கொல்கையர்? இக்கொடுமைப் பெயரையோ தம் ஊர்க்குச் சுட்டி உவகையுறுவர்? முனைவர் கால்டுவெல் வரைந்த திருநெல்வேலி வரலாற்று நூலை மொழி பெயர்த்தவர் முனைவர் திரு. ந. சஞ்சீவி. அவர் இவ்வாய்வுக்கு, ஒரு மேல் விளக்கக் குறிப்புக் காட்டினார். கடற்கரைப் பட்டினமாகிய அந்நகர்க்கும் கடல், அலைப்புக்கும் உள்ள தொடர்பை உன்னி, அலைகள் கொல்லும் (தாக்கும், தகர்க்கும்) இடம் என்று பொருள் கண்டார். அதற்குக் கடற் கரை மெலிக்கும் காவிரிப் பேரியாறு என்னும் சிலம்பின் அடியையும் மேற்கோள் காட்டினார். இஃது அலைத் தாக்கு தலை நிறுவும் சான்றேயன்றி ஊர்ப் பெயர் அமைதிக்கு உரிய சான்றாகாது என்பது வெளிப்படை. கால்டுவெல் காட்டிய கொல் என்னும் சொல்லுக்கு வேறு நயம் காட்டி விளக்கிய விளக்கமே இஃது என்ற அளவில் அமையலாம்; அவ்வளவே! பொருளொடு பொருந்துவது அன்றாம். கை என்பது இடப்பொருட்சொல் என்று முனைவர் சஞ்சீவியார் கூறுவது ஏற்கும் இனிய குறிப்பு. குறுக்கை, திருவதிகை, திருக்கடிகை, வேளுக்கை, திருத்தணிகை என்னும் இன்ன ஊர் பலவும் இவ்வியலால் அமைந்தனவேயாம். ஆனால், கொல் என்னும் சொல் பற்றி ஆய்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்! கொல் என்பதன் பொருள் கொலைத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? கொல்லுத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? முதற்கண் ஆய்வுக்குரிய செய்தி ஈதே. ஒரே சொல் மூலத்தின் வழியே அமையும் பல பொருட் புணர்ச்சியை முட்டுறா வகையில் அமைத்தலே சங்கச் சான்றோர் வழக்கு. அவ்வழக்கினைக் கொண்டு ஆய்தலே முட்டறுத்து முடிவுறுத்த வல்லதாம்! கொல்லுதல் தொழில் சுட்டும் புணர்ச்சிகள் எல்லாம் இயல்பு வழிப்பட்டன. கொல்குறும்பு, கொல்படை, கொல்பிணி, கொல்புனம், கொல்களிறு என்றே பழ நூல்களில் பயின்றுள. கொற்குறும்பு, கொற்படை, கொற்பிணி, கொற்புனம், கொற் களிறு என எங்கும் ல கரப்புள்ளி, ற கரப்புள்ளியாய்த் திரிந்தன அல்ல. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு -திருக்குறள். 735 சொல்லுறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர் - பதிற். 58. கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க - பதிற். 67. கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கம் - பதிற். 50. கொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅம் - அகம். 133. இருஞ்சே றாடிய நுதல கொல்களிறு - நற். 51. கொல்களிற்று ஒருத்தல் - நற். 92. கொண்டி மறவர் கொல்களிறு பெறுக - பதிற். 43. கொல்களிற்று உரவுத்திரை பிறழ - பதிற். 50 கொடி நுடங்கு நிலைய கொள்களிறு மிடைந்து - பதிற். 52. கொல்களிறு மிடைந்த பஃறொல் தொழுதி - பதிற். 83 கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் - புறம். 9 கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் - புறம். 55 உயர்ந்தோங்கு மருப்பிற் கொல்களிறு - புறம். 153. கொல் எனும் இவையெல்லாம், கொலைத் தொழிற் பாற்பட்டு, வல்லின வருமொழிமுன் இயல்பாய் நின்றன. இனிக், கொல்லுத் தொழில் தொடர்பினவற்றைக் காண்போம். தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாடிய புறப்பாட்டில் படைக்கலங்களைச் சுட்டிக் காட்டி, இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ என்பதில் கொல்லுத்துறை கொற்றுறையாதல் அறிக. கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி என்னும் ஐந்திணை ஐம்பதும் (21), கொற்சேரித், துன்னூசி விற்பவர் இல் என்னும் பழமொழியும் (5) கொல்லுச் சேரி யைக் கொற்சேரி என்றது அறிக. கொற்பழுத் தெறியும் வேலர் என்று வேலும் (435) கொற்புனைந்தியற்றிய கொலையமை கூர்வாள் என்று வாளும் (1. 46, 89) சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் வந்தமை அறிக. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல என்றும், (371) பவணந்தியார், நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும் என்றும் (232) விதி வகுத்தலையும், இவற்றுக்கு உரை கண்டோர் காட்டிய எடுத்துக்காட்டுகளையும் நோக்குக. கொல் என்பது சூர் என்றாற் போலக், கொல்லன் என்னும் உயர்திணைப் பொருளைக் காட்டி நின்ற அஃறிணைச் சொல் என்று சங்கரநமச்சிவாயரும், முகவை இராமாநுசக் கவிராயரும் நன்னூலின் உரைக்கண் விளக்கியதை உன்னுக. இவற்றால், கொலைத் தொழில் கொண்டு கொற்கைப் பெயர் பெற்றிருக்க இயலாது என்றும், கொல்லுத் தொழில் கொண்டே கொற்கைப் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் துணிக. கொல்லுத் தொழில், பயில வழங்கும் தொழிலாயிற்றே, அதன் பெயரால் ஓர் ஊர்ப் பெயர் அமைதல் சாலுமோ எனின், ஆய்ந்து கொள்ளத் தக்கதேயாம். அலைவாய்க் கரையில் அமைந்த ஊரெல்லாம் அலைவாய் என்னும் பெயர்க்கு உரியவையாயினும் திருச்சீரலைவாய் எனத் திருச்செந்திலும், அலைக்கரை வாயெல்லாம் ஒலியெழுப்புதல் உண்டு எனினும், தரங்கம் பாடி என ஓர் ஊரும், கடல் முனைக் கோடியெல்லாம் கோடிக்கரை எனினும், கோடிக்கரை என ஓர் இடமும் உளவாதல் போலப் பலப்பல இடங்களிலும் கொல்லுத் தொழில் நிகழுமாயினும் யாதானும் ஒரு தனிச் சிறப்பு உண்மையால் அத்தொழில் தொடர்பாக ஊரின் பெயர் இடப் பெற்றிருத்தல் வேண்டும் என்க. அவ்வாறு தனிச் சிறப்பாகக் கொல்லுத் தொழில் நடந்ததேயாமாயின், அதுதான் யாது என்பதை அறிவதே நிறுவும் சான்றாகும். பொன்வகை ஐந்தென முந்தையோர் கண்டனர். அவை இரும்பு, ஈயம், செம்பு, தங்கம், வெள்ளி என்பன. அவற்றைக் கொண்டு பணிசெய்வோர் பொற்கொல்லர் எனப் பெற்றனர். பொன் செய்கொல்லர்(ன்), எனச் சிலம்பு கூறும் (5: 31: 20: 74) கொல்லுத் தொழில் செய்து கொண்டு கொழுந்தமிழும் வளர்த்த சான்றோர்கள் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், மதுரைப் பெருங்கொல்லன் என்பார் என்பது பெயரளவானே புலப்படும். படைக்கலம் முதலாம் கருவிகள் செய்தல், அணிகலம் உண்கலம் முதலாம் கலங்கள் செய்தல், தெய்வத் திருவுருச் செய்தல் என்பவை சீறூர் பேரூர் இடங்களிலெல்லாம் நடை பெறும் கொல்லுத் தொழில்; ஆனால், இவ்வாறு பொதுமைக் கொல்லு நீங்கிய தனிமைக் கொல்லு ஒன்று உண்டு. அது காசு என்னும் நாணயம் செய்யும் கொல்லுத் தொழிலாம். காவலரால் நிறுவப் பெற்றுக் கட்டுக் காவலுடன் செய்யப் பெறுவது அத்தொழில். அரசர் இருந்து கோன்மை செலுத்தும் கோநகர்க் கண்ணே செய்யப் பெறுவதாம் தொழில் அதுவேயாம். இதனை எந்நாட்டு வரலாறும் தெள்ளிதிற் காட்டுதல் அறிந்ததே! ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் பொற்காசு அடித்த இடம் தங்கசாலைத் தெருவாக இன்றும், சென்னையில் விளங்குதல் கண்கூடு. பண்டை நாளில் தங்கசாலையை அக்கசாலை (அஃகசாலை) என வழங்கினர். இந்நாளில் இரும்பாலை, செக்காலை, நூற்பாலை என்று விளங்குவன போலத் தங்க சாலை விளங்கியது. தங்க வேலை நடைபெறும் இடத்தை அக்கசாலை என்பது முந்தையோர் வழக்கு. கோவலன் பொற்கொல்லனை முதற்கண் கண்ட இடத்தைக் குறிக்கும் இளங்கோவடிகளார். கோவலன் சென்றக் குறுமகன் இருக்கையோர் தேவகோட்டச் சிறையகம் புக்கபின் என்றார். இதனை அக்கசாலை என்றார் அரும்பதவுரையார். அக்கசாலைப் பள்ளி என்றார் அடியார்க்கு நல்லார் (19. 125-6). கொற்கை என்பது கொல்லுத்தொழில் சிறக்க நடை பெற்ற இடம் என்பதைச் சுட்டும் என அறிந்தோம். பொற்கொல்லர் வாழும் தெருவும், பொன்வேலை நடைபெறும் தெருவும், அக்கசாலை எனப் பெயர் பெறும் என்பதையும் அறிந்தோம். கொற்கையில் கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது என்பதை இச்சொல்லைக் கொண்டு மட்டுமே முடிவு செய்து விடுதலினும், பிற பிற சான்றுகளும் உண்டாயின் வலுவாம் அன்றோ; ஆம்; இதனை நிலைப்படுத்துதற்கு மறுக்கொண்ணாச் சான்றுகள் கொற்கைப் பழநகரில் ஒன்றிரண்டல்ல; பல இன்றும் உண்மை ஆய்வார்க்குத் தனிப்பெரு மகிழ்வு ஊட்டுவதாம். அவற்றை முறை முறையாய் முழுதுறக் காண்போம். கொல்லுத் தொழில் வழியாகப் பெற்ற பெயரே கொற்கை என்பதை முன்னர்க் கண்டோம். அதனை நிறுவத்தக்க சான்றுகளைக் காண்போம். கொற்கையில் விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. அதனைச் சுந்தர விநாயகர் கோயில் என்று வழங்குகின்றனர். அக்கசாலை விநாயகர் கோயில் என்னும் பெயரும் அதற்கு உண்டாம்! குளக்கரையில் வளமான வயல்வெளியின் ஊடே அமைந்துள்ள அப்பழங்கோயில் எண்ணற்ற கல்வெட்டுகளைத் தன்னிடத்தே கொண்டு உள்ளது. திங்களூரில் அப்பூதியடிகள் அமைந்த தண்ணீர்ப் பந்தலில் திருநாவுக்கரசு எனும் பேர், சந்தமுறை வரைந்ததனை எம் மருங்கும் தாம் கண்டார் என்று சேக்கிழாரடிகள் குறிப்பது போல அக்கசாலைப் பிள்ளையார் கோயிலின் எம்மருங்கும் கல்வெட்டுகள்! முகப்புப் பக்கமா? பின் பக்கமா? இடப்பால் வலப்பால் பக்கங்களா? சுவரின் எழுதப் பகுதியா? எப்பகுதியும் உள்ளன கல்வெட்டுகள்! இவையெல்லாம் படிக்கப் பெற்றனவா? படியெடுக்கப் பெற்றனவா? பதிப்பிக்கப் பெற்றனவா? வரலாற்றுக்கு வளமான குறிப்புகள் இக்கல்வெட்டுகளில் இருக்கும் என்பது உறுதி. கோயில் வாயிலில் நிற்கிறோம். இதோ... ஒரு கல் பளிச் சிடுகிறது. தெளிவாகப் படிக்குமாறு தீந்தமிழில் அமைந்த கல்வெட்டு; மதுரோதைய நல்லூர் அக்கசாலை ஈசுவர முடையார் கோயில் தானத்திற்காக... கல்வெட்டுத் தொடர்கிறது. கல்லெழுத்தைக் காணும் நாம் அக்கசாலை விநாயகர் என்று வழங்கும் பெயரைக் கேட்டுத் திகைக்கிறோம். கல்வெட்டில் ஈசுவரர் என்று இருக்க விநாயகர், பெயரைக் கேட்டு, விநாயகரே வீற்றிருக்கவும் கண்டால் திகைப்படையாமல் இருக்க முடியுமா? பிள்ளையாரை ஈசுவரர் என்று வழங்கும் வழக்கம் இல்லையே! கருவறைக்குள் எழுந்தருளியுள்ள பிள்ளையாரைக் குனிந்து வணங்கிய அளவில் அசையாமல் நிமிர்ந்து பார்க்கிறோம். நிலை வாயிலின் மேற்கல்லில் அக்கசாலை ஈசுவரமுடையார் என்னும் கல்லெழுத்து விளங்குகிறது; மீண்டும் திகைத்துப் பார்க்கிறோம் திகைப்புடன் பார்க்கிறீர்களே! என்ன? என்கிறார் அக்கோயில் அறக்காவலர் திரு. சண்முக சுந்தரனார். இது முன்னே ஈசுவரன் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பின்னே பிள்ளையார் கோயிலாக மாறியிருக்க வேண்டும் என்கிறோம். சண்முக சுந்தரனார் வியப்படைந்து, இதோ ஈசுவரர் இருக்கிறார் என்று காட்டுகிறார். மூலவரைக் கருவறைக்கு வெளியே தள்ளி, மூத்த பிள்ளையாருக்கு இடந் தந்தவர்கள் மூலவரைக் கோயிலுக்கு வெளியேயே தள்ளி விடாமல், கருவறைக்கு முன்னே இடப்பக்கத்தில் முருகன் வள்ளி தேவயானை ஆகியோர் வரிசையிலேயாவது வைத்தார்களே என்று அமைதியடைகிறோம். அக்கசாலை ஈசுவரர் கோயில் என்பதன் உண்மை உணர்ந்த உணர்வால் அவ்வீசுவரர் பொன்னார் திருவருளை வியந்து வாழ்த்துகிறோம். கோயிலின் முன்னே பெரும் பரப்புடைய குளம் ஒன்று காட்சி வழங்குகின்றது. அது கொடுங்கணி, கொற்கை நிலங்களைப் புரக்கின்றது. நீர் நிரம்பி வழியும் காலத்தே அதனைப் பார்க்க வேண்டும்! பச்சைப் பசேல் என நெல்லும், வாழையும், தென்னையும் இடைவெளியறச் சூழ்ந்து விளங்கும் சூழலின் இடையே, பரந்து கிடக்கும் நீல நீர்ப் பரப்பு எத்தகு எழிற்காட்சி வழங்கும். கரைமேல் நின்று காண்கிறோம். குளத்தின் இடையே ஒரு கோயில்! நம் குறிப்பை அறிந்து அன்பர் ஐயாத்துரை செழிய நங்கை கோயில் என்கின்றனர். இது செழிய நங்கை கோயில் வெற்றிவேல் அம்மை என்று வழங்குவதும் உண்டு என்கிறார். சிலம்பின் மெல்லொலி நம் செவிக்குள் பட்டுச் சிந்தையுள் அள்ளூரி மகிழ்கிறோம்! ஆம்! ஆம்! கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பெயர் விளக்கும் அம்மை என்பதை எண்ணி இளங்கோவடிகளார் பொன்னடிகளைப் பூரிப்புடன் நினைந்தேத்துகிறோம். கோயிலின் முன்னர் உடைந்து கிடக்கும் சிலைகளைக் காண்கிறோம். கடற்பாசியும் சங்கும் பிறவும் கல்லாகிப் போக அக்கல்லைக் கொண்டே வடித்த சிலைகள், உடைந்து கிடக் கின்றன. அவை பேணுவாரற்றுக் கோயிலின் உள்ளேயும் இருக்க வகையற்று, வெளியில் கிடப்பதைப் பார்த்துத் துன்புறுகிறோம். ஒரு முலை இழந்த திருமா பத்தினி சிலையொன்று முன்னே உடைந்து கிடந்த செய்தியை உள்ளூர் அன்பர்கள் உரைக் கின்றனர். நெக்குருகுகின்றனர். படைக்கத் திறம் கெட்ட கைகள், உடைத்துக் கெடுக்கின்றனவே! இவற்றைத் தடுத்துப் போற்றிக் காக்கவும் நாடு திறனற்றுப் போயிற்றே என்று நோக்குகின்றோம். கோயில் சூழலைப் பார்க்கிறோம். சூழலெல்லாம் பழங் கட்டடப்பகுதிகள்! கட்டடச் சான்றுகள்; பெரிய பெரிய செங்கல் தளங்கள்! ஆழத்தில் பதிந்து கிடக்கும் சுவர்கள்! இவையெல்லாம் அக்கசாலைத் தெருக்கள். பதின்மூன்று தெருக்கள் இங்கு இருந்தனவென்று செவிவழிச் செய்தி என்கிறார் அன்பர் சண்முக சுந்தரம். அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னுள்ள பரப்பைப் பார்த்து இருக்கலாம், என ஏற்கிறோம். அப்பொழுது குளத்தின் வடபாற் கரையோரம் உள்ள ஊரைக் காண்கிறோம். அதன் பெயரை வினாவுகிறோம். அக்கசாலை என்கிறார்கள். அக்கசாலை அக்காசாலை யாகியதை உணர்கிறோம். நமக்குப் பட்டொளி வீசிப் பறப்பது போல உணர்வு ஏற்படுகின்றது. அந்தோ! பழந்தமிழ்க் கொற்கையே, பாராண்ட கொற்கையே! முத்துப்படு பரப்பின் கொற்கையே, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையாய் மூத்த கொற்கையே! உலக நாகரிகத்தின் உயர் பெருந்தொட்டிலே! கடல் மகள் கவின் முகமே! வாணிகத்தின் வைப்பகமே! காலத்தின் கோலத்தால் உன் நிலைமை இருந்தவாறு என்னே! என்னே! இந்நாட்டவர் நிலைமை தான் இருந்தவாறு என்னே! என்னே! என ஏங்குகிறோம். ஏக்கம் மாறாத நிலையில் நாம் நிற்க நம் கையை அன்பர் நாராயணர் பற்றுகிறார். தென்பக்கம் அழைத்துச் செல்கிறார். குளத்தின் தெற்குக் கோடிக்கே கொண்டு செல்கிறாரே! அங்கே கோயில் ஒன்று இருந்த சான்றைக் காண்கிறோம்; ஈசுவரர் பீடம் கிடக்கிறது; கோயிலும் அதன் சுற்றும் இல்லை! ஆனால் அவற்றின் அடித்தளம் புதையுண்ட சான்றாகப் புலப்படுகின்றது. இதன் பெயர் என்னுமுன், தென்னகேசர் கோயில் என்கிறார் நாராயணர். நம் உள்ளத்தில் ஒண்டமிழ் ஒளியூட்டுகின்றது. தென் அக்கஈசுவரர் கோயில் என்பது புரிகிறதா, என்கிறது. தென்னகேசுவரர் கோயில். மேற்கே அக்கசாலை ஈசுவரர் கோயில்; வடக்கே அக்க சாலை என்னும் ஊர்; தெற்கே, தென்னகேசுவரர் கோயில்; ஊடே அக்கசாலைத் தெருக்களின் அடித்தளம்; கிழக்கே செழிய நங்கை என்னும் வெற்றிவேலம்மை கோயில்! இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்ததும் இன்னும் ஐயம் என்ன எனத் தெளிவு பெறுகிறோம். பழங்காலப் பாண்டியர்கள் நாணயம் அடித்த அக்கசாலை இதுவே என்றும், அக்கொல்லுந் தொழிலால் சிறப்புற்ற கொற்கை இதுவே என்றும் முடிவுசெய்கின்றோம். நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த பெருமையும், அப் பெயர்க் கரணியமும் அறிய முடியாமல் தடம் மறைந்து போன காலக்கேட்டையும் எண்ணுகிறோம். இப்பொழுதில் அக்கசாலை ஈசுவரர் கோயிலில் பொற்கொல்லரே வழி வழியாக அறங் காவலராக இருந்து வருகின்றனர் என்னும் செய்தியையும் கேள்விப்பட்டு, அறங்காவலர் சண்முக சுந்தரத்தைப் பார்க்கிறோம். ஆம் உண்மைதான்! நான் பொற்கொல்லர் குடிவழியைச் சேர்ந்தவனே; ஏரலில் காசுக்கடை வைத்துள்ளேன் என்கிறார். அதே மூச்சில், இவ்வக்கசாலையில் இருந்து திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து போயுள்ள பொற்கொல்லர்கள், தம் பண்டையரை மறவாராய் அக்கசாலைத் தெரு என ஒரு தெருவைத் திருநெல்வேலியில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர்; அத்தெரு தொண்டை நாயனார் கோயிலின் வடக்கில் உள்ளது என்று மொழிகிறார். வள்ளிக் கிழங்கு எடுக்கப் போன ஒருவன் கையில், வயிரமும் மணியும் முத்தும் வளமாகக் கிடைத்தது போல மகிழ்கின்றோம். அறிஞர் அ. இராகவன் அவர்கள் எழுதிய கோநகர் - கொற்கை என்னும் நூலைத் திரும்புகிறோம். (கொற்கை) அஃகசாலையில் பொன் வெள்ளி செம்புக் காசுகள் பல அச்சிடப்பட்டு வந்தன. இந்த அஃகசாலையில் உருவாக்கப் பட்ட காசுகள் பல என்னிடம் உள்ளன என்று உரைப்பதுடன், 91 காசுகளை இருபக்கமும் புலப்பட அச்சிட்டும் காட்டியுள்ள அருமையையும் காண்கிறோம். கைம்மேல், கிடைத்த கனியெனச் சான்றுண்மை கண்டு களிகூர்கின்றோம்! தத்துநீர் வரைப்பிற் கொற்கை, முத்துப்படுபரப்பிற் கொற்கை, பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை, நற்றேர் வழுதி கொற்கை, மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை, பேரிசைக் கொற்கை, கலிகெழுகொற்கை, எனச் சங்கச் சான்றோரொடும் கூடி நின்று பாடுகிறோம். கொற்கையில் ஒரு வன்னிமரத்தைக் காண்கிறோம். மதுரையில், புகழ் வாய்ந்த வன்னிமரம் உண்டு! வன்னியடி விநாயகர் ஆங்கு வீற்றிருக்கின்றார். வன்னியும் கிணறும் இலிங்கமும் வரவழைத்த திருவிளையாடலொடு அதனைத் தொடர்பு படுத்திக் கூறுகின்றனர். ஆனால் கொற்கை வன்னியின் பழைமையை அறுதியிட்டுரைக்க மரநூல் வல்லார்க்கே இயல்வதாம். கொற்கை வன்னி, சில ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சீர்மை, அதன் தோற்றத்திலேயே புலப்படுகிறது. நிலத்தொடு நிலமாய்ப் படிந்து நெடிமுடியண்ணலெனக் கிடந்து, நிமிர்ந்தோங்கிப் பசுமைக் கோலம் காட்டும் அதன் அருமை, பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்! உள்ளீடற்ற கூடென அடி மரம் பட்டையொடு கிடப்பினும் அது வழங்கும் வளமைக் காட்சி காண்பாரை வயப்படுத்த வல்லதாம்! கொற்கை வன்னி, குரங்கணி ஆல் ஆழ்வார் திரு நகரிப்புளி என வழங்கும் பழமொழியைக் கொற்கை அன்பர்கள் கூறுகின்றனர். மேலைத் தொடர் சார்ந்த குரங்கணியோ என நாம் நினைக்க இடம் வைக்காமல், குரங்கணி கொற்கை சார்ந்ததோர் ஊர் என்பதையும் சுட்டுகின்றனர். வன்னிமரச் சூழலைப் பார்க்கிறோம். அதன் அருகில் 6+6 அளவில் ஒரு செங்கல் தளம் தன் பழைமை காட்டிக் கொண்டு உள்ளது. அதன் பக்கத்தில் கொற்கைக் காசுகளில் காணப் படுகின்ற காவடி தூக்கும் வானர வடிவச் சிலை ஒன்றுள்ளது! அதுவும் பீடமின்றி நிலத்தின் மட்டத்திலேயே உள்ளது. கொற்கை வன்னிக்கு நேர் வடக்கில். 7,8 மீட்டர் தொலைவில் முழுமதி முக்குடை அச்சுதன் அமர்ந்த கோலத்தில் அருமையாய்க் காட்சி வழங்குகிறார். இது காறும் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக் கெல்லாம் ஈடுதந்து, சிதையாத சீரிளமையுடன் செம்மாந்து வீற்றிருக்கும் அப் பெருமகனார் திருவுருவம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது! அப்படியே அவர் அழகை அள்ளிப் பழகுவார் போல அமைந்து நிற்கிறோம்! சிற்பத் திறனை வியப்பதா? அதன் பழைமையை வியப்பதா? அறிவர் அமர்ந்துள்ள அழகுக்கோலம் நிலத்தின் மட்டத்தில் உள்ளது. அவர் அமர்ந்துள்ள பீடத்தை அகழ்ந்து தான் காண வேண்டும். அது, புதைந்து மண் மேடிட்டுப் போயுள்ளது நன்கு தெரிகின்றது! 1971 இல் அங்கு அகழ்வு செய்யப் பெற்றது என்பதையும், அசோகர் காலத்துப் பிராமி எழுத்து அமைந்த தாழி ஒன்று அகப்பட்டது என்பதையும் அன்பர்கள் உரைக்கின்றனர். கொற்கைப் பழமைக்கு இவ்வன்னியும் இம் முக்குடைச் செல்வரும் செவ்விய சான்றுகள் என்று நாம் நினைக்கும் போதே கொற்கைத் தமிழ்மன்றத் தலைவர் திரு. சிவசங்கு அவர்களும் செயலாளர் புலவர் திரு. ஐயாத்துரை அவர்களும் அச்சிடப்பெற்ற அறிக்கை ஒன்றை நம் கையில் சேர்க்கின்றனர். கொற்கை மண்ணின் கொழுமணம் அவர்கள் கொடுத்த அறிக்கையில் மிளிர்கின்றது. இலக்கியத்தாலும், வரலாற்றாலும், உலகவலம் வந்த பெருமக்கள் குறித்து வைத்த குறிப்புகளாலும் அறியப் பெறும் செய்திகளையெல்லாம் ஒருங்கு தொகுத்து உரைக்கும் அவ்வறிக்கையைக் கண்டு களிப்படைகிறோம். தொல் பொருள் ஆய்வாளர் செய்த அகழ்வு ஆய்வு, கொற்கையைச் சூழ்ந்துள்ள ஊர்கள் ஆகியவற்றையும் அறிகிறோம். கொற்கைத் துறையின் காவல் கடவுளராக விளங்கிய துறையப்பர் கோயில் கொண்டுள்ள அகரம்! அறிவன் அமர்ந்து அருளுரை வழங்கிய அறிவன் புரமாகிய அரியபுரம்! இத்தாலி நாட்டில் இருந்து சுற்றுலாக் கொண்டு வந்த மார்க்கபோலோ இறங்கிய பழைய காயல்! சங்கப் பெண்பாற் புலவருள் ஒருவராகிய நப்பசலையார் தோன்றிய மாறோகம் ஆகிய மாறன் மங்கலம்! தொல்காப்பிய உரையாசிரியராகிய சேனாவரையர் விளங்கிய ஆற்றூர்! பழங்காலக் காட்டரணமாக விளங்கிய இடைக்காடு, காவற்காடு, கோவன்காடு, குமரிக்காடு, தெக்காடு, கோட்டைக் காடு! ஏமமாக (பாதுகாப்பாக) அமைந்த ஏமராசன் கோயில்! ஊர்க் காவல் கடனேற்ற ஊர்காத்த பெருமாள் கோயில்! கோட்டைக் காவல் கடனேற்ற கோட்டாளமுத்துக் கோயில்! தென்னெல்லைக் கோட்டையாக விளங்கிய தென்பேரெயில் என்னும் தென்திருப்பேரை! பாண்டியனின் சிறுபடைப் பிரிவின் தங்கலாக இருந்த சிறுத்தண்ட நல்லூர் என்னும் சிறுத்தொண்ட நல்லூர்! அவன் பெரும்படைப்பிரிவின் தங்கலாக இருந்த பெரும் கடை, பெரும்படைச் சாத்தன் கோயில்! தவசக் கிடங்காக (கொட்டாரமாக) இருந்த கொட்டாரக்குறிச்சி! குற்றவாளிகளைக் கழுவில் ஏற்றுதற்கு இடமாக இருந்த கழுவன் திரடு! சங்கு - கிளிஞ்சில் - என்னும் பெயரே தன்பெயராய் எழிலுடன் விளங்கும் ஏரல்! இத்தகு பெயரிய பெருமைமிக்க ஊர்களை நினைத்து வியப்படைகிறோம்! கொற்கைப் பழமைக்கு இன்னும் சான்று வேண்டுமோ எனப் பூரிக்கிறோம்! அப்பூரிப்பின் இடையே எண்ணற்ற எண் ணங்கள் பொங்கி வழிகின்றன! உலகறிந்த கொற்கையை ஊரும் அறியாமல் செய்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை! நேற்றை நிகழ்ச்சியை வாணம் விட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் வையகத்தில், தொன்முது நாகரிகத் தொட்டிலைப் பற்றி நாம் சொல்லளவில் கூடவெளிப் படுத்தவில்லையே! சுற்றுலாத்துறையும் அகழ்வாய்வுத்துறையும் தொல் பொருள் ஆய்ஞரும் இருந்தும் - இப்பழங் கொற்கையைப் புறக்கணித்துக் கொண்டிருக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலும் எப்படித்தான் எண்ணம் வருகின்றதோ? அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னே இருக்கும் வளமான குளத்தில் படகுத்துறை யமைத்துச், செழியநங்கை கோயிலைச் சூழ நீராழி மண்டபம் அமைத்துச் சுற்றுலா மையமாக்கிவிட்டால் முழுமதி எழிலுற விளங்கும் நாளில் அவ்வெள்ளி நீர் உருக்கின் மேல் ஓடம் விட்டால் போட்ட தொகையையும் கூடப் போகவிடாமல் ஒன்றுக்கு இரண்டாய் அள்ளிக் கொண்டிருக்கலாமே! பூம்புகார்ப் பெருமையைப் புதிய அமைப்பாய் உருவாக்கிப் புகழ் செய்த அரசு, பழங்கொற்கைப் பகுதியை எளிய முயற்சியால் பெரிய பயன் கொள்ளக் கருதவில்லையே! அறிவனார் அழகுத் திருமேனியைக் கண்ணாரக் கண்டும் அகழ்வாய்வு மேற்கொண்டும், பழந்தடயங்கள் பற்பல எடுத்தும் தொல்பொருள் துறை அயர்ந்து போய் அமைந்து விட்டதே! பழங்கொற்கை புதுப் பொலிவு பெறுவதாக! 10. அணில் வரிக்காய் அணிலின் முதுகில் அமைந்துள்ள கீற்றுகளைக் கண்டு அதன் அழகில் மயங்கிய ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை, மூவரி அணில் (மரபியல். 6) என்றார். சங்கச் சான்றோருள் ஒருவராய கடயலூர் உருத்திரங் கண்ணனார் அணிலின் வரிகளை அழகுற உவமை செய்து அகமிக மகிழ்ந்தார். பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற அணில் என்பது அவர் வாக்கு. இலவின் பசுங்காய் முற்றி வெடித்து அதன் வெண் பஞ்சு வெளிப்பட்டுத் தோன்றினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருக்கும் வரிகளைக் கொண்ட முதுகினையுடைய அணில் என்பது எத்துணை அரிய உவமை! அணில் அழகுறத் துள்ளி விளையாடும் ஒரு வீட்டின் முற்றத்தை. “mÂyhL K‹¿š” v‹W ghuh£oa rh‹nwhiu ‘mÂyhL K‹¿yh®!, (குறுந்தொகை. 41) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது பழந்தமிழகம். அணிலைத் தொண்டராக்கி ஆர்வத்தால் உலவவிட்டார் தொண்டர். குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்ததாம் புரண்டிட் டோடித் தரங்கதீர் அடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன் (தொண்டரடிப்பொடி ஆழ்வார். திருமாலை 27) என்பது அவர் வாக்கு. இராமர் திருவணை கட்டிய நாளில் குரங்கினம் மலை களைத் தூக்கி வந்து உதவிற்று. அணிலோ கடல் நீரில் குளித்துக் கரை மணலில் புரண்டு, ஒட்டிய மணலை அணையில் தட்டி ஆர்வம் செலுத்தியது என்ற அளவில் ஆழ்வார் அமைந்தார். அதனை மேலும் கற்பித்துக் கதை நீட்டியது பிற்கால உலகம். அணிலின் அருந்தொண்டுக்கு ஆளாகி உவந்த இராமர் தம் கைவிரல்கள் மூன்றால் முதுகில் வருட அதனால் அமைந்ததே மூவரி என்பது அக் கதை. இயற்கை உவமை, இயல்பு நவிற்சி இவற்றையே உயிர்ப்பாகக் கொண்ட சங்கச் சான்றோருள் ஒருவராகிய பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு அணில் வரிகளை ஒரு காயின் மேலுள்ள வரிகளுக்கு ஒப்பிட்டு அதனை, அணில்வரிக் கொடுங்காய் (புறம். 246) என்றார். இதற்குப் பழைய உரையாசிரியர் அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காய் என்று பொருள் கூறினார். ஆயர் முதுமகள் மாதரி தம் மகள் ஐயையைக் கண்ணகியார்க்கு அருந்துணையாக்கி, மடைக்கலங்களுடன் வழங்கிய அட்டிற் பொருள்களுள் வெள்வரிக் காயும் ஒன்றாகும். அதனைக் கூறும் அடிகள் வாக்கை, வால்வரிக் கொடுங்காய் என்று பாடங் கொண்டார் அரும்பத உரையாசிரியர். வாள் வரிக் கொடுங்காய் என்று பாடங் கொண்டார் அடியார்க்கு நல்லார். அரும்பத உரையாசிரியர் வால்வரிக் கொடுங்காய் வெள்ளரிக் காய் எனப் பொருள் எழுதினார். அடியார்க்கு நல்லார் வாள்வரிக் கொடுங்காய் என்பதற்கு வளைந்த வரியையுடைய வெள்ளரிக்காய் எனப்பொருள் எழுதி, வால் வரிக்காய் எனப்பாடம் ஓதி வெள்வரிக்காய் என்பாரும் உளர். அணில்வரிக் கொடுங்காய் எனப் புறத்தினும் காட்டினராகலின் கொடுங்காய் என்பது பெயர். வரி அடை என விளக்கம் எழுதினார். இவற்றுள் வாள்வரி என்பதினும், வால்வரி என்பதே பொருந்திய பாடமாகும். வால் என்பது வெண்மை, தூய்மை முதலிய பல பொருள் தரும் ஒரு சொல். இங்கு வெண்மைப் பொருளில் வந்தது. வெண் சங்க வண்ணனான பல தேவனை வால்வளை மேனிவாலியோன் என்றும், மிக வெண்ணிறச் சங்கினை வால் வெண்சங்கு என்றும், பனையின் குருத் தோலையால் செய்யப் பெற்ற வெண்ணிறத் தடுக்கினை, தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் கைவன் மகடூஉ கவின்பெறப் புனைந்த செய்வினைத்தவிசு என்றும் இளங்கோவடிகள் இயம்பினார். இறைவன் நரை வெள்ளேற்றை. வால் வெள்ளேறு (புறம்) என வண்ணித்துப் பாடினார் பெருந்தேவனார். கறையிலா அறிவின் இறைவனை, வாலறிவன் என வழங்கினார் வள்ளுவனார். வாள் என்பதும் ஒளி என்னும் பொருள் உடையது. அது, வால் என்பது போல வெண்மை என்னும் பொருளை நேரே வழங்குவது அன்று. ஆகலின் வாள்வரிக் காய் என்பதிலும் வால்வரிக்காய் என்பதே பொருந்தும். வால் வரிக்காய் நாம் இந்நாளும் விரும்பித் தின்னும் வெள்ளரிக்காயே ஆகும். இதனைத் தவறாக வெள்ளரிக்காய் என்றே பேச்சிலும் எழுத்திலும் பயில வழங்குகின்றோம். வெள்ளரி என்பதன் பொருள் வேறு; வெள்வரி என்பதன் பொருள் வேறு. முன்னதில் அரி யும் பின்னரில் வரியும் வருமொழிகள். வெள்ளரிக்காயில் வரி உண்டேயன்றி அரி (இரேகை) அமைந்ததில்லை. இனி, வெள்ளரி என்பதற்கு, வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை (ஊன் துண்டுகளை) வெள்ளரி என்றார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதுவதால் (மலைபடுகடாம். 465) வெள்வரி என்பதே பொருந்தும் என்பதுணரலாம். பிழைபட வழங்கும் வெள்ளரிக்காய் என்பதை, முக் கூட்டுச் சொல்லாகக் கொண்டு இரட்டுற மொழிந்தார் ஒருவர். காய்கறி விற்கும் ஒருத்திக்குக் காதலன் ஒருவன் இருந்தான். அவன் அவளை மிகக் காதலித்தான். ஆனால் அவள் ஒப்புதல் எளிதில் வாய்க்கவில்லை. அதனால் அவள் வைத்திருக்கும் மிளகாய், சுரைக்காய், வெள்ளரிக்காய், அவரைக்காய் என்பவற்றைக் கொண்டு உரையாடத் தொடங்கினான். உள்ள மிளகாயா? ஒருபேச் சுரைக்காயா? வெள்ளரிக் காயா? விரும்பு மவரைக் காயா? உள்ள மிளகாயா? v‹D« Édhîl‹ ‘cŸs« ïs fhah? எனத் தன் விருப்பைத் தெரிவித்தான். ‘xU ng¢ Riu¡fhah?’ (ngŒ¢Riu, RiuíŸ xUtif) vd Û©L« ÉdhÉ, ‘xUng¢R ciu¡fhah? எனத் தன் வேட்கையைத் தொடுத்தான். அதற்குச் சிறிதும் அசையாது கற்றூண் போல் இருந்தமையால் வெள்ளரிக் காயா? என்றான். வெள் அரி (நரசிங்கம்)க்கு ஆய் (தாய்) தூண் தானே! அதற்கும் அவள் பதில் உரைக்காமையால், விரும்புமவரைக் காயாதே என மன்றாடினான். வெள்வரிக்காய் வெள்ளரிக்காயென மாற்ற முற்றமையால் - மாற்றியமையால் அமைந்த சொற்சிலம்பம் இஃதாகும். மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை என்று அழுத்தமாக முழுமுதல் இலக்கண ஆசான் மொழிந்தும் உலக வழக்கன்றிச் செய்யுள் வழக்கினும் மரபு நிலை திரிதல் ஆயது. இதனைக் கருதிக் கடனாற்றுவது மொழி நலம் பேணுவார் முழுக்கடனாம். 11. வலியா வழி வலித்தல் வரம்பு, வரப்பு; பரம்பு, பரப்பு; இவை வலித்தல் விகாரம் எனப்படும். இவ்வாறு வருவனவற்றை வலிக்கும் வழி வலித்தல் என்பார் தொல்காப்பியர். சிலம்பு, சிலப்பு; சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம். இது வலிக்கும் வழி வலித்தல் ஆகுமா! சிலம்பு சிலப்பதிகாரத்தில் மிகப்பல இடங்களில் ஆளப் படுகின்றது; அடை தந்தும் ஆளப் படுகின்றது; ஆனால் சிலப்பதிகாரம் எனப் பெயர் சுட்டுமிடங்களிலன்றி எவ்விடத்தும் சிலம்பு, சிலப்பு என வந்ததில்லை. வேறு இடங்களிலும், வழக்கு களிலும் இல்லை. ஆதலால், இது வலிக்கும் வழி வலித்தல் அன்று; வலியா வழி வலித்தல் எனப் புது இலக்கணம் தான் சொல்ல வேண்டும்! சிலம்பதிகாரம் என்று பெயர் சூட்டாமல் சிலப்பதிகாரம் என இளங்கோவடிகளார் சூட்டியது ஏன்? தக்க காரணம் இல்லாமல் முகத்திலே முத்திரை வைத்தது போலப் பெயர் வைப்பாரா? மெல்லொற்றை வல்லொற்றாக்குவாரா? ஆக்கினால் தக்க காரணம் இருத்தல் வேண்டும்! ஏனெனில், தகவார்ந்த இலக்கியப் படைப்பாளர் அவர்! சிலம்பு என்பது மெல்லொலியது; மெல்லியலார் அணிகலம் ஆவது; ஒலிக்கும் கம்பாட்டமும், ஒலிமிக்க மலையும், ஒலிதரும் அணிகலமும் சிலம்பு எனப்படுகின்றன. சிலம்பாயி சிலம்பாறு சிலம்பி என்பனவும் பெயரீடுகளே; இவையும் ஒலிவழிப் பெயர்களே. சிலம்புகழி நோன்பு என்பது பழங்காலச் சடங்குகளுள் ஒன்று; திருமண நிகழ்ச்சிக்கு முன்னர் மணமகளின் காலில் இருந்து சிலம்பைக் கழற்றும் சடங்கே அது. அவள் திரு மணமானவள், திருமணமாகாதவள் என்பதை எளிதில் அறியக் காட்டும் அணிகலம் சிலம்பு. கண்ணகியார் சிலம்பு காலில் இல்லாமல் பொதிவாயில் (பையில்) இருந்தது அதனால் தான்! மெல்லியதும், மெல்லியலார் அணிவதும் ஆகிய அச்சிலம்பு செய்த செய்கை என்ன? சிலம்புச் செய்தியை ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் புரியுமே! சிலம்பு கவர்ந்த கள்வனெனக் கோவலனைக் கொன்றது - சிலம்பு! கள்வன் அல்லன் கோவலன்; காவலனே தவறுடையன் என்று கண்ணகியார் வழக்குரைத்தமையால் - அச்சிலம்பின் காரணத்தால் - பாண்டியன் உயிர் துறந்தான். கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று பாண்டிமாதேவியும் உடன் உயிர் துறந்தார். கண்ணகியார் விண்ணவர் போற்ற - குன்றக்குறவர் காண - விண்ணுலகு புக்கார். அவர்தம் சீற்றத்தால் மதுரை மாநகர் அலக்கண் உற்றது. பாண்டியர் குடிக்குப் பழியும் மாநகருக்கு வசையும் உற்றன. கண்ணகியாரைத் தம் இல்லில் வைத்துப் பேணிய மாதரியார், அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மக்காள் என்று கூறி எரிவளர்த்து அதில் மூழ்கினார். கண்ணகியாரையும் கோவலனையும் மதுரைக்கு அழைத்து வந்த துறவி கவுந்தியடிகளார், நிகழ்ந்தது தாங்காமல் வடக்கிருந்து உயிர் துறந்தார். மதுரையில் நிகழ்ந்ததை அறிந்த கோவலன் தாயும், கண்ணகியின் தாயும் மூச்சடங்கினர். கோவலன் தந்தையும் கண்ணகியார் தந்தையும் துறவு கொண்டனர். மாதவியார் துறவு பூண்டார்; மகள் மணிமேகலையைக் கோதைத்தாமம் குழலொடு களைந்து, போதித்தானம் புகுவித்தார். மதுரைச் செய்தியைப் புகார்க்குக் கொண்டு சென்ற மாடலன் தன் சொல்லால் நேர்ந்த நேர்ச்சியறிந்து தீர்த்தச் செலவு மேற்கொண்டான். பொற்கொல்லர் உள்ளம் புண்பட்டு, கண்ணகியார் சினந் தணிதற்கு உயிர்ப்பலியூட்டிக் குளுமை செய்தனர். செய்தியறிந்த செங்குட்டுவன், வடநாட்டுப் படையெடுப்பு மேற்கொண்டு பெரும் போராற்றிப் பேரழிவு புரிந்து, கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்தான். இவ்வெல்லாம் மெல்லியல் தன்மைகளா? மெல்லியல் சிலம்பின் நேர்ச்சிகளா? இல்லை! இல்லை! சிலம்பு மெல்லியதே எனினும் இச்சிலம்பு வல்லிதில் வல்லிதாய்க் கொடுமைகளுக்கு இடனாகியுள்ளது. ஆதலால், இக்காவியத்தைக் கற்கக் தொடங்குவார் எடுத்த எடுப்பிலேயே இவ் வன்கண்மையை ஒளிவு மறைவு இன்றி அறிந்துகொள்ளும் வகையில், சிலம்பைச் சிலப்பாக்கி வலித்தலுண்மை காட்டுவேன் - என்று, பெயர்ச் சூட்டுச் செய்துள்ளார் இளங்கோவடிகளார்! வலித்தல் விகாரம் என இலக்கணம் கூறுவதற்காகவா இப்பெயர்ச்சூட்டு? அடிகளார் எத்தகு திறவோர்!  3. பன்னிலை ஆராய்ச்சி 1. இலக்கியம் இலக்கு + இயம்=இலக்கியம் ; இலக்கினை இயம்புவது எதுவோ அதுவே இலக்கியம்; இலக்கு என்பது குறிக்கோள். கூர்மையாய் நோக்கிக் குறி தவறாமல் அம்பு ஏவுதற்கு இலைக் குறியை முன்னோர் கொண்டனர் : இலை, இலக்கு ஆயிற்று; இலக்கு குறிப்பிட்ட இடமும் ஆயிற்று; அந்த இலக்கு, இந்த இலக்கு (லெக்கு என்பது வழக்கு) என நாட்டுப் புறங்களில் இன்றும் கேட்கக் கூடியதே. இலக்கு அணம் இலக்கணம்; இலக்கினை அண்ணுவதும் (நெருங்குவதும்) அணுவுவதும் (தழுவுவதும்) எதுவோ அதுவே இலக்கணம் ஆகும். இலக்கு, இலக்கணத்திற்கும் வேண்டும்; இலக்கியத்திற்கும் வேண்டும்! இலக்கு இல்லாதது பயனில கூறலாய்ப் பழிக்கிடனாகி முடியும். இலக்கு இல்லா நூல், அன்பு இல்லாத உடல் போன்றது; இரசம்; பூசப்பெறாத கண்ணாடி போன்றது; ஒளியற்ற கண் போன்றது; மணமற்ற மலர் போன்றது. நூல்கள் இலக்கினை இயம்புகின்றனவா? அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே என்ப ராகலின் இலக்கினையுடையதே நூலாம். அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும், ஊழ்வினை வந்து உருத்து ஊட்டுவதும் ஆகிய முப்பொருளை வலியுறுத்துமாறு எழுந்த நூல் சிலப்பதிகாரம். பௌத்த சமய மேம்பாட்டைப் பகர எழுந்தது மணிமேகலை; ஆசை பற்றி அறையலுற்றேன் என இராமன் தெய்வக் காதற் பேற்றை எய்துவதே நோக்கமாகக் கொண்டு எழுந்தது, இராமாயணம்; மற்றவையும் இத்தகைய இலக்குடையவையே. இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் தொடர்புண்டோ? உண்டு; இரண்டும் இலக்கு உடையவை; ஆதலால், தொடர்பு உடையவை. எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தில் இருந்து எடுக்கப் படுவது இலக்கணம். இலக்கணம் ஆற்றின் கரை; இலக்கியம் காட்டாற்று வெள்ளம்; இலக்கணம் வரிச் சட்டகம்; இலக்கியம் வண்ண ஓவியம்; இலக்கணம் கூரை ஓட்டின்மேல் போடப்படும் காரை அமுக்கு; இலக்கியம் ஓடு; இலக்கியம் எப்படித் தோன்றியது? இரும்பில் இருந்த ஒளி, தீயொடு கூடும் பொழுது சுடர் விட்டு வெளிக் கிளம்புவது போல, பாலில் இருந்த வெண்ணெய் கடைந்த போது திரண்டு எழுவது போல உலகியலில் இருந்து உணர்வுடையார் அறிவுத் திறனால் இலக்கியம் தோன்றியது. இலக்கணத்தைத் தந்தது இலக்கியம்; அந்த இலக்கணம் பல இலக்கியங்களைப் படைத்துத் தந்தது; அவ்விலக்கணத்தின் படைப்பாகிய இலக்கியங்களும் இலக்கணங்களைப் புதுப் பிக்கவே கருவியாயின; இவ்வாறு ஒன்றால் ஒன்று வளம் பெறுகின்றன. நீர் பனிக் கட்டியாய் பனிக்கட்டி நீராய் மாற வில்லையா? நிலையாலும், வடிவாலும், வேறுபட்டாலும் ஒரு பொதுத் தன்மை உண்டன்றோ! உலக வழக்கு செய்யுள் வழக்கு இரண்டையும் கண்டு வெளிப்பட்டது முழுமுதல் இலக்கண நூலாம் தொல்காப்பியம். தண்டியலங்காரம் முதலிய அணி இலக்கணம் விரிக்கும் நூல்கள், காப்பிய இலக்கணம் இன்னதெனப் பகர்கின்றன. இக்காப்பிய இலக்கணம் எப்படி அவற்றுக்குக் கிடைத்தது? சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய காப்பியங்கள் வழங்கிய கொடையே அக்காப்பிய இலக்கண அமைதி. மகளாக இருந்தவள் ஒருநாள் மகளைப் பெறும் தாயாகவும் மாறுகிறாள் இல்லையா? காப்பியமே காப்பிய இலக்கணம் தந்த கதை இது. புலமையாளன் பெற்றெடுத்த மகவு, இலக்கியம் : புலவன் கவிதை இயற்றுகிறான் என்பர். ஆனால் அவன் கவிதையைப் பெறுகிறான்; ஈனுகிறான்; இதனாலேயே புலவனை நான் முகனுக்கு ஒப்பிட்டார் ஒரு புலவர்; நான் முகன் படைக்கும் உடல் மாயும் வெற்றுடல்; புலவன் (நாவலன்) படைக்கும் பாவுடல் அழியாப் புகழுடல். ஆதலால் நான்முகன் புலவனுக்கு ஒப்பாகான் என்றார் அவர். புலவன் கருத்து வளங்களால் கருக் கொள்கிறான்; சூழலின் உந்துதலால் சூல்உளைவு அடைகிறான்; கவிதை மகவைப் பெற்றுக் களிப்புடன் உலவ விடுகின்றான். அம்மகவும் சீரும் சிறப்புமிக்கு உலாவரும் போது, ஈன்ற பொழுதில் பெரி துவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் போல் மகிழ்கிறான். அதுவே அவனுக்குப் பேரின்பப் பெரு வாழ்வாகின்றது. கவிஞன் - அறிஞன்; உணர்வாளன்; அவன் அறிய வேண்டுமவற்றை அறிகிறான்; எதிர்காலத்தில் எண்ண வேண்டும் என்பதை நிகழ்காலத்தில் உணர்ந்து பாடுகின்றான். அவற்றை அப்படி அப்படியே பஞ்சாங்கம் போல், கடைச் சரக்குப் பட்டியல் போல், கால அட்டவணை போல் கூறாமல், உணர்ச்சி பொங்க வெளியிடுகிறான். அவ்வெளியீட்டு முறையால், உலகை வயப்படுத்தித் தனக்குத் தாளம் போட வைக்கிறான். கள்வார் இல்லை; காப்பார் இல்லை; கொள்வார் இல்லை; கொடுப்பார் இல்லை; வண்மை இல்லை; வறுமை இல்லை; திண்மை இல்லை; செருநர் இல்லை; உண்மை இல்லை; பொய்ம்மை இல்லை என்பன வெல்லாம் கம்பன் காலத்து இல்லாதவையா? இராமன் காலத்தோ தயரதன் காலத்தோ இல்லாதவையா? அவன், இவை இல்லாத உலகை எதிர் நோக்குகின்றான்; வரவேற்கின்றான்; அவன் உள்ளகம் அது; வெள்ளமெனப் பொழிவாய்; கவி - வெள்ளமெனப் பொழிவாய்; எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய் என்று புலவன் வரம் வேண்டிக் கிடக்கிறான்; என்னைப் பாடு, என்னைப் பாடு என்று உலகியற் பொருள்களும் நிகழ்ச்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அவனைப் பாட ஏவுகின்றன. அவன் வாய் கவி பொழிகின்றது. அப்பொழுது அவன் கவிமுகில் ஆகிறான்; காளமேகம் ஆகின்றான். மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம்தான் ஆகாதோ? என்று கேட்பவனாகவும் ஆகின்றான். கவிஞன் வாக்கில் இருந்து வரும் சொல் வெற்றுச் சொல் அன்று; வறட்டுச் சொல் அன்று; அஃது அடையில் இருந்து ஒழுகும் தேன்; குற்றால அருவி; சந்தனக் கலவை! இதனால் தான் பாண்டியன் வரகுணன், கன்னல் பாகில் கோல் தேனில் கனியில் கனிந்த கவி பாட அன்னத் தொகுதி வயல் கருவை ஆண்டான் என்னை ஆண்டதுவே என்று பாடினான். பொன்னின் சோதி, போதினின் நாற்றம் பொலிவே போல் தென்னுண் தேனின் செஞ்சொற் சுவியின்பம் என்றான் கம்பன். சிந்தைக்கினிய செவிக்கினிய என்றது திருவள்ளுவ மாலை. கவிஞன் சொல்லாட்சி தனிச் சிறப்புடையது. எந்த இடத்தில் எந்தச் சொல்லைப் போட வேண்டுமோ அந்தச் சொல்லை அந்த இடத்தில் போடுகிறான்; பொதிந்து வைக்கிறான்; பொலிவுறுத்துகிறான். அச்சொல்லைப் பெயர்த்து அடுத்ததோர் சொல்லை வைத்தால் அழகு குன்றிப் போகும் என்பதை மிக எளிமையாகத் தெரிய வைத்து விடுகிறான்! நாம் பழகிய ஒருவர்; பல்கால் பேசி மகிழ்ந்த ஒருவர்; அவ்வளவே அவரைப் பற்றி நாம் அறிந்தவை; ஆனால், அவர் அறிவுத் திறத்தால் பெரும் பதவிக்குரியவராக ஆக்கப்படும் போது, நாம் நம்மையறியாமல் வியப்படைகிறோம். நாம் அறிந்த இவரா? நாம் பேசிப் பழகிய இவரா? ï›tsî bgÇatuh? என்று எத்தனை எண்ணுகிறோம். அப்படி எண்ண வைக்கின்றது கவிஞன் கையாளும் சொல்! நாம் அறிந்த சொற்களே; பயன்படுத்திய சொற்களே; ஆனால், அவன் வாக்கில் இருந்து வெளிப்படும் போது அவை அத்தனை உயர்வுக்கு உரியன ஆகின்றன. கவிப் புலவனுக்கு இத்தன்மை எப்படி வாய்த்தது? அவன் கண்கள் தனித்தன்மை வாய்ந்தவை; ஊடுருவிப் பார்க்க முடியாத வற்றையும் ஊடுருவிப் பார்க்க வல்லவை! அவன் காதுகளும், மூக்கும் மெய்யும் மனமும் பிறவும் தனித் தன்மை வாய்ந்தவை; அவன் காக்கை குருவி எங்கள் சாதி; கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்னக் களிப்படைவான்; தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு நோக்குவான்; மல்லிகை சொல்லும் கதை கேட்பான்; மாமரம் கூறும் கதை கேட்பான்; உலகவர் கண்ணில் நீர் வழிந்தால் தன் கண்ணில் உதிரம் கொட்ட நிற்பான்; தன்னை மறந்த இலயம் தன்னிலே ஒன்றி விடுவான். அவன் குழந்தை; அறிஞன்; அமைச்சன்; தாய் தந்தை - இப்படிப் பல நிலைகளில் படிந்து படிந்து நிற்பான்; நொடிக்கு நொடி மாறி நின்று நடிக்கத் தேர்ந்தவன் அவன். கோவலனாக - கண்ணகியாக - மாதவியாக - கௌந்தியாக - பாண்டியனாக - பிறராக நிற்பவர் ஒரே ஓர் இளங்கோ! இந்த அழகிய பச்சோந்தி நடிப்புத்தான் நம்மை ஆட்படுத்தி மீளா அடிமை ஆக்கி வைக்கின்றது. அவருக்கு வழிபாடு செய்யும் தொண்டரடிப் பொடியார் ஆக்கி வைக்கின்றது. இலக்கியம் எப்படி உருவாகின்றது? சூழ்நிலை,. புலவன் உள்ளத்தில் தைக்கின்றது. இன்பமா? துன்பமா? எதுவானால் என்ன? அவன் உணர்வைத் தூண்ட வேண்டும்; ஊதினால் ஒரு நூறு அடி உயரம் பறக்கும் பஞ்சு அவன் உணர்வு நெஞ்சம். எந்த மெல்லிய நிகழ்ச்சியும் அவனை உந்தித் தள்ளி உயரப் பறக்க விட்டு விடும்; உடனே அவன் கோடை மழையாய்க் கொட்டி விடுவான். பெருஞ்சித்திரனாரை வறுமை அசைத்தது; வாயோ இசைத்தது; வறுமையிலே பூத்த அப்பூக்கள் வற்றா வளஞ் சுரக்கும் இலக்கியமாய்ப் புறநானூற்றில் பொலிகின்றன. முறை கேடாக அரசன் வரி வாங்குகிறான். ஆள்வோர் மக்களை வாட்டுகின்றனர். புலவர் உள்ளம் புழுங்குகின்றது; புறப்படுகின்றது ஒரு பாட்டு. காய் நெல்லறுத்து என்னும் பாட்டைப் பிசிராந்தையார் பாடியது இச்சூழலிலே தான். தண்ணீர் தாவென்று கேட்கிறான் கணைக்காலன்; ஏவலன் இழிவாக எண்ணுகிறான். குழவி இறப்பினும் என்னும் பாட்டுத் தவழ்கிறது. சிலப்பதிகாரக் கதையைக் கூறிய சாத்தனார்; அடிகள் நீரே அருளுக என்கிறார். இளங்கோ கலைக்கோயில் எழுப்பு கிறார். நாட்டுப் பாடல் அனுப்புக என விளம்பரப் படுத்துகிறார் பாரதியார். வந்து சேரவில்லை புலவர்களிடத்தில் இருந்து; புதிது படைப்பேன் எனத் தொடங்கிச் செந்தமிழ் நாடெனும் போதினிலே; பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், மன்னுமிமய மலை எங்கள் மலையே - இவ்வாறு பாடிக் குவிக்கிறார். பாரதியார். புலவன் சூழலால் கவிதை வெறிக்கு ஆட்படுகிறான்; அவன் கால், மண்ணில் நின்றாலும் விண்ணில் பறக்கிறான்; அழகு அழகுச் சொற்களை எழில் பெறப் பொழிகிறான்; பொழிந்து முடித்ததும் நம்மைப் போல எளிய மனிதனாகி விடுகின்றான் அவன். பாடிய பாட்டையே அவன், வியப்போடு நோக்கும் குழந்தை போல நோக்குகிறான். அவன் இரக்கத்திற்கு உரியவன். உலகைக் கடந்து நிற்கும் அவன், உலகவர் நோக்கில் கிறுக்கன்; வாழத் தெரியாதவன்; ஆனால் அவன் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை. அப்படி எண்ணுபவரே கிறுக்கராகவும் வாழத் தெரியாதவராகவும் அவன் பார்வையில் தோன்றுகின்றனர். பித்தனும் புலவனும் மெத்தவும் ஒப்பர் என்பது மானவிசயம். இறைவனே பித்தன் ஆனான்! புலவன் பித்தன் ஆனால் என்ன? பின்னுமோர் பேயன் ஆனால்தான் என்ன? அழியா வாழ்வாளன் அவனல்லனோ! 2. புலவர் புகழ்ச் செந்நா புலவர் நா, புகழ் நா, அது செவ்விய நா: மறந்தும் பிறன் கேடு சூழாத நா; உலக நலங் கருதி உரைக்கும் உயர் நா; உருகி உருகி நிற்கும் உள்ளத்தின் ஊற்றுக் கண்ணுக்கு உருக்கொடுத்து உயர்ந்தோங்கும் நா! அந்நா பேரருட் பெருக்கத்தின் உறைவான நெஞ்சத்தின் வழிப் பட்டதாகலின், மொழித் திறம் சிறந்து, கூறத் தக்கன இன்ன, கூறத் தகாதன இன்ன, கூறும் பான்மை இன்ன என்றவெல்லாம் உணர்ந்து சொல்லும் நன்னெறிப் பட்டதாகும். முழுமுதல் இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியனார் நனி நாகரிகச் செந்நாவினர். அவர் சில எழுத்துக்களை விரித்தோதுங்கால் அவற்றின் பெயரையும் வெளிப்படக் கூற விரும்பாராய்க் குறிப்பால் உரைத்துளார். அத்தகைய எழுத்துகளை உப்பகாரம் (உகரத்தோடு கூடிய பகரம்; பு) உச்சகாரம் (உகாரத்தோடு கூடிய சகரம்! என்றது சு)! பவ்வீ (ஈகாரத்தோடு கூடிய பகரம்; என்றது பீ) என்கிறார், சிறு நீர் என்று நாம் வழங்குவதை அவ்வாறே கூற விரும்பாத புலமையாளர்களாகிய உரையாசிரியர்கள் நீரல் நீர் என்றும், அதன் ஈரப்பதத்தை நீரல் ஈரம் என்றும் குறித்தனர். வழக்குகளில் மங்கல வழக்கு என ஒன்றை இலக்கணம் வல்லார் போற்றினர். அது மங்கலம் இல்லாததை மங்கலமாகக் கூறும் சிறப்புடையதாகும். செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும், காராட்டை வெள்ளாடு என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும், தீய பாம்பை நல்ல பாம்பு என்றும் வழங்கும் இவை போல்வன மங்கலம் என்று எடுத்துக் காட்டுத் தந்து இலக்கண உரையாசிரியர்கள் விளக்குவர். இலக்கிய ஆசிரியர்களோ தாம் எடுத்துக்கொண்ட காவிய மாந்தர்களின் நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்தே நயம் பெறக் காட்டி அமைவர். காப்பிய முதல்வராகிய இளங்கோவடிகளார் தம் காவியத்தின் நாயகன் கோவலன், காவலன் ஆணையால் வெட்டுண்டு இறந்த செய்தியைக் கூற வருகிறார். நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே கூறாமல் வெட்டுதல், உடல் துண்டாதல், இறத்தல் ஆகியவற்றை மறைத்துக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் என்று அமைகின்றார். கண்ணகியார் காவலனைக் கண்டு வழக்குரைக்க, உண்மையுணர்ந்த பாண்டியன் அரியணையில் இருந்து வீழ்ந்து இறந்தான்; அவனைத் தழுவிக் கொண்டே கோப்பெருந்தேவியும் ஆருயிர் விடுத்தார். இச் செய்தியையும் இளங்கோவடிகள் நா, மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகஎன் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே; தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி என நயம் பெற உரைக்கின்றது. மயங்கி வீழ்தல், தொழுது வீழ்தல் என்பவற்றால் குறிப்பாய் அறிய வைத்து நிகழ்ச்சியை உணர்த்தி விடுகிறார். இனிச் சேக்கிழார் நாநயம் நனி சிறப்புடையதாம். சிவ நெறிச் சீர்மையில் அழுந்திய அவர் உள்ளம் செவ்விதின் வெளிப் பட அவர் தம் வாக்குகள் மிளிர்கின்றன. மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லக் கருதி முத்த நாதன் செல்கின்றான். அதனைச் சொல்லக் கருதுகிறார் சேக்கிழார்; சொல்லத் தயங்குகிறார்; அவன் செல்லும் நிலைமையைச் செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரிற் சேர்வான், என்கிறார். செப்ப அருநிலைமை என்பது யாது? எம்மால் சொல்லுதற்கு அதன் கொடுமையை நினைந்து உருகிப் போம் யாம்சொல்லுதற்கு அரிய நிலைமை, என்று சொல்லாமல் சொல்லாடுகிறார். முத்தநாதன் தவிசின் மேல் அமர்ந்தான்; மெய்ப் பொருளார் நிலத்து அமர்ந்தார்; அவர்க்கு மறைநூல் ஓதுதற்குச் சுவடி அவிழ்ப்பான் போல் உடைவாளை எடுத்துக் குத்தினான். குத்தினான் அல்லது வெட்டினான் என்னும் சொல்லைத் தம் வாயால் கூறவும் மனங் கொள்ளாத சேக்கிழார், பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்த அப்பரிசே செய்ய என்றார் (பத்திரம் - வாள்; நினைந்த அப்பரிசே - நினைந்த அவ்விதமே). இவ்வாறே ஏனாதி நாத நாயனாரொடு மாறு பட்டு நின்ற அதிசூரன் அவரைக் களத்தில், வாளால் வெட்டினான். அதனை அவ்வாறே கூறல் சாலாது எனக் கொண்ட சேக்கிழார், முன்னின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் என்ற அளவில் அமைந்தார். இனிக் கம்பர் போற்றும் நாகரிக உரைகள் எண்ணற்றன. அவற்றுள் ஒன்றை மட்டும் காண்போம்; மந்தரையின் தூண்டலால் கைகேயி இராமனைக் காட்டுக்கு அனுப்ப உறுதி கொண்டாள். படுக்கையை விடுத்து வெறு நிலத்து உருண்டாள்; இராமன் முடிசூட்டுச் செய்தியை உரைப்பதற்காக அவள் மாளிகையை நாடி வந்த தயரதன் மருண்டான்; மயங்கினான்; தேனே, மானே என்று தேற்றினான். அவள் அவன் எதிர் பார்த்திராத செய்தியை - இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் ஆன செய்தியை உரைத்தாள். வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்; ஊதுலையிற் கனலென்ன வெய் துயிர்த்தான்; அரசர்கள் மணிமுடிகள் எல்லாம் தன் அடிகளில் கிடக்கக் கண்டு களித்த வேந்தன், கவலைக் கடலில் ஆழ்ந்து தேறிக் கைகேயியினிடம் வரம் வேண்டிக் கிடக்கிறான். உன் மகனுக்கு நாட்டைத் தருவேன் என உறுதி மொழிந்தான். ஆனால் இராமனைக் காட்டுக்கு விடுத்தல் மட்டும் வேண்டாவாம்; இராமனைக் காட்டுக்கு அனுப்பாதே என்று சொல்ல வாய் வரவில்லை. என் கண் வேண்டுமா? அதைத் தருதற்குக் கடமைப்பட்டவன் நான்; உயிர் வேண்டுமா? உடனே தருவேன்; பெண்ணிற் சிறந்தவளே; கேகயன் மகளே; மண்ணுலகையெல்லாம் கொள்க, ஆனால் மற்றது ஒன்றை மட்டும் மறந்துவிடு என்று கெஞ்சுகின்றான். இதனைக் கம்பர், கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்என் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்னே யுனதன்றோ பெண்ணே வண்மைக் கைகயன்மானே பெறுவாயேல் மண்ணே கொண்ணீ மற்றைய தொன்றும் மறவென்றான் என்கிறார். மண்ணேகொள்நீ என்று கூறியவர் இராமன் காடு செல்லுதலைக் கூறவும் பொறாராய் மற்றையது ஒன்றும் மற என்பது எத்துணை நயமிக்கது; தயரதக் கம்பன் தகுதி பளிச்சிடும் சொல் நாகரிகம் இதுவாகும். பண்டை நூலாசிரியர் போலவே உரையாசிரியர்களும் சொல் நாகரிகராக இலங்கினர். நூலாசிரியர் குறிப்புகளை யெல்லாம் நன்கறிந்து நயந்து திளைத்தனர். பயில்வார்க்கும் எடுத்துக் காட்டினர். புறநானூற்றின் 34 ஆம் பாடலில் வரும், ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்னும் பகுதிக்கு விளக்கம் எழுதும் பழைய உரையாசிரியர் கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின் ஆன்முலை யறுத்தல் எனவும், மகளிர் கருச் சிதைத்தல் எனவும் குரவர்த் தப்பிய எனவும் மறைத்துக் கூறப்பட்டன என்று குறிப்பு எழுதுவது அவரது புகழ்ச் செந்நாச் சீர்மைக்குச் சான்றாகும். சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் நறுமணம் பரப்புவ தாக அமைந்த நயத்தக்க நாகரிகச் சொற்களைக் கூறுவதே புலவர் புகழ்ச் செந்நா இயல்பு என்பது இங்குச் சான்றுகளால் சுட்டப் பெற்றது. இதனைப் போற்றி ஒழுகுதல் பொதுவில் புலமையாளர் கடமையாம்! இந்நாளில் புனை கதை எழுதுவோர் பலர் தம் நெஞ்சில் இத்தகைய நயநாகரிகத்திற்குத் துளியளவு இடந்தந்தேனும் எழுதுகின்றனரா? பச்சை பச்சையாய் எழுதி இளையர் உள்ளங்களைக் கெடுக்கும் இவ்விழிவாளர் செய்கையைப் புலமையாளர்கள் தடுத்து நிறுத்தி வளரும் இளமையைக் காத்தல் தீராக் கடமையாகும். 3. மீன் அருந்தும் நாரை அவனோ நெய்தல் நிலத்தலைவன். துறைபல ஓடி நிறை பயன் சேர்ந்தவன்; அவனது துறையின் தன்மையும், வனப்பும் நோக்கிச் சான்றோர்கள் தண்ணந் துறைவன் என்னும் சிறப்புப் பெயரால் அழைத்தனர். அவனது துறையில் எப்பொழுதும் ஆரவாரம் ஓயாது, ஒழியாது. கடல் அலை ஒருபக்கம்; கப்பல் அலை ஒரு பக்கம்; நாரை அலை ஒருபக்கம்; மிதவை அலை ஒரு பக்கம்; மீன் அலை ஒரு பக்கம் - இவ்வாறு விதவிதமான ஆரவாரம்; அடும்பு மலர் அழகாகக் காட்சி வழங்கும் அவனது துறையில் அரிய மணத்திற்கும் பஞ்சமில்லை. மீன் நிறைந்து திரியும் அவனது மிகு பெருந்துறையிலே நாரை இனத்திற்குக் கொண்டாட்டந் தான். அந்தக் கொண்டாட்டத்தில் அடும்பு மலரை மிதித்துச் சிதைத்துச் சீரழிப்பது இயல்பான நிகழ்ச்சி! துள்ளித் துள்ளிச் செல்லும் மீன்களைக் கவரத் தள்ளித் தள்ளிச் செல்லும் நாரை. அதனால் என்ன? அடும்பு மலருக்குத்தான் அழிவு! இந்நிகழ்ச்சியைக் காணத் தண்ணந்துறைவன் தவறுவது இல்லை. துறைக் காட்சியே அவன் உள்ளம் - அவன் உள்ளமே - துறைக்காட்சி என்ற நிலையில் அமைந்து விட்டான். இது அவன் நாட்டினர் அனைவரும் அறிந்து தெளிந்த செய்தி. அவளோ, அழகி! அழகுக்கோர் இலக்கியம். அது மட்டுமா அவளிடத்து விளங்கியது? அமைந்து கிடக்கும் அரிய பண்புகளை அளவிடுவதே அரிதுதான். கொடுத்துக் கொடுத்துத் தடிப்பு ஏறிய தருகையர் வழிவழி வந்தவள் அவள். கொடையாளர் குலமணியாய் வந்த அவளும் கொடைக் கையளே என்பதற்கு ஐயம் எதுவும் இல்லை. பொருள் சிறிதும் இல்லாமல் இருந்தால் கூட, போய் ஒருவன் கேட்பின் இல்லை என்னாத உள்ளம் இயற்கையாகவே இளமை முதல் அவளிடத்து அரும்பி விட்டது. அதுமட்டுமா? பிறர் கொடையை நாடி நிற்கும் இயல்பு சிறிதும் அவளிடம் இல்லை. தான் கொடுத்த பொருளை மீண்டொருவர் தரினும் அதனை வாங்காத வலிய வண்மையுள்ளம் வளர்ந்து ஓங்கிய பெரியவள் அவள். சுருங்க உரைத்தால், கொடுத்த பொருள் ஒன்றை மீண்டும் வாங்கித் தான் வாழ வேண்டும் என்னும் வாழ்வுச் சிக்கலோ, தாழ்வுச் சிக்கலோ நேருமாயின் அதற்காகப் பெரிதும் போற்றிப் பெட்புறக் காக்கும் உயிரையும் விடுவளே அன்றி அதனை வாங்கிக் கொள்ளாக் குணக்குன்று அவள். இத்தகைய தலைவனும் தலைவியும் ஒருவர் உள்ளத்து ஒருவர் உறையும் பேறு பெற்றனர். அதுவும் எளிதில் அன்று! மங்கை நல்லாளின் அழகுத் திருமேனியைத் தண்ணந் துறைவன் ஒருநாள் காண நேர்ந்தது. என்றும் பெறாப் பேரின்பம் பெற்றான்! எப்படியும் அடைந்தே தீருவேன் அவளை என்று துடித்தான். நேரிடையாகச் சென்று, பேசி அறியாத அவளிடம் என்ன சொல்வது? என்ன கேட்பது? வெட்கம் கொள்வான் - திரும்புவான், மீண்டும் போவான். நெருங்குவான்! காணாமல் இருக்க முடியாத அன்பு சில நாட்களுள் பெற்றான். ஒருவரை ஒருவர் அரைகுறையாகப் பார்க்கும் - பார்த்துச் சிறுமுறுவல் செய்யும் - அளவுக்கு வளர்ந்தனர். ஒவ்வொருவர் உள்ளத்தும் ஒவ்வொருவர் மாறிமாறிப் புகுந்து கொண்டனர். இதனை அறிந்த தோழிக்கு ஒப்புமை, ஒப்புமை, இணையிலா ஒப்புமை என்னும் மகிழ்ச்சி உண்டாயது. ஆனால் கால ஓட்டத்தில் தண்ணந்துறைவன் மறக்கத் தொடங்கி விட்டான் தலைவியை! அன்புப் பிணைப்பால் அடிக்கடி வந்து பழகிச் சென்றவன் அறவே மறந்து விட்டான் என்றால் அவனே தஞ்சம் என இருக்கும், செல்விக்கு எப்படி இருக்கும்? பொன் போன்ற உடல் பொலிவு குன்றிவிட்டது. கண்ணொளி மயங்கிவிட்டது. கால்கள் நடக்கத் தடுமாறின ஆடை அணிகலங்களைப் பற்றி அவள் அக்கறை காட்டவே இல்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டே நொடி நொடியாக நாள்களை ஓட்டிவந்தாள். இன்னும் சில நாள்கள் வேண்டு மானாலும்... ஐயோ! கொடைச் செல்வியின் கொடிய நிலைமையை நினைத்து நினைத்து உயிர்த்தோழி உருகிப் போய்விட்டாள். ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டனர். ஆனால் ஒருவரினும் ஒருவர் மெலிந்தனர். எழில் உருவங்கள் ஏக்கப் பிழம்புகளாய் ஊசலாடின. என்ன காரணமோ தெரியவில்லை. அறிவு வந்து விட்டதா? பொய்யாகத்தான் நடிக்கிறானா? கொடைச் செல்வியும் தோழியும் உரையாடிக் கொண்டு இருக்கும் சோலை வழியே வருகின்றான். எவன்? அவன்தான்! தண்ணந்துறைவன். தலைவி பார்த்துக் கொண்டாள். பார்த்தாலும் தான் தொடங்கிய உரையாடலை விடவில்லை. தோழி : அம்மா! நாம் முன் எவ்வளவு நலத்துடன் இருந்தோம். தலைவி : அடி! அதைப் பற்றி இப்பொழுது ஏன் பேசுகின்றாய்? தோழி : வேறொன்றும் இல்லை. தங்கள் மெலிவும் கவலையும் என்னைத் துன்புறுத்துகின்றன. உங்களைப் பழைய நிலைமையில் பார்க்க... தலைவி : அடி! என்ன சொன்னாய்! நம் பழைய அழகை மீண்டும் பெறுவது நம் கையிலா இருக்கிறது? தோழி : நாம் நினைத்தால் முடியாதா? தலைவி : நினைத்தால் முடியுமா? எப்படி? தோழி : நாம் கொடுத்த அழகை மீண்டும் நமக்குத்தர வேண்டுவோம். தலைவி : யாரிடம்? படைத்தவனிடமா? தோழி : ஐயையோ! நம் அழகைக் கவர்ந்து போன தண்ணந் துறைவனிடம். தலைவி : என்ன சொல்லினை? இன்னொரு முறை சொல்லாதே நாமே விரும்பித் தந்த அழகை மீண்டும் நாம் கேட்டு வாங்கிக் கொள்ளவா? தோழி : அதில் என்ன குற்றம்? நம் பொருளை நாம் பெற்றுக் கொண்டால் என்ன? அவரை வளைத்துப் பிடித்தாவது கொண்டு போன வனப்பைப் பெற்றேயாக வேண்டும். இல்லையேல்.. தலைவி : இல்லையேல்! தோழி : இல்லையேல்.. தலைவி : ஏனடி இழுக்கிறாய்? என் உயிர் போய்விடும் என்றா? இவ்வளவு தானே! தோழி : அதைச் சொல்லாதீர்கள்! தலைவி : கொடுத்த ஒன்றை மீண்டும் வாங்கித்தான் ஆக வேண்டும் என்னும் நிலைமை ஏற்பட்டால் அக்கொடுமைக்குப் பதில் இனிய உயிரைக் கூடத் தந்து விடலாமே! உயிரென்ன உயிர்? என்றைக்காவது இவ்வுடலை விட்டுப் பிரிந்து போவது தானே! வேண்டுமானால் சிறிது முன்னாகப் போய்விடும். அவ்வளவுதான். அதற்காக நிலையான புகழை விடுத்துத் தீரா வசையைப் பெறுவதா? சீ! சீ! இதுவென்ன பேச்சு! தோழி : பெயர் தான் தண்ணந்துறைவன்.. செயல்? தலைவி : பழிக்காதே. நீயே சொல்லியிருக்கிறாய். நறுமண முள்ள அடும்பு மலரை மிதித்துச் சிதைத்து - நாற்றம் உடைய மீனைத் தேடிப் பிடித்துத் தின்னும் துறை இவர் நாட்டிலே உண்டு என்று. தோழி : ஆமாம்! தலைவி : அந்தத் துறைக்கு உரியவர் நம் தலைவர் தானே! தோழி : ஆமாம்! தலைவி : துறை நிகழ்ச்சிகளை அவர் நாள் தவறாமல் கண்டிருக்க முடியும் அல்லவா! தோழி : ஆமாம்! தலைவி ! அப்படியானால் நம் தலைவர் உள்ளத்து அடும்பைச் சிதைத்து, தேனை அழித்து, மீனை அருந்தும் நாரையின் தன்மை எளிதில் இடம் பெற்றிருக்கத் தவறாது அல்லவா! தோழி : ஐயையோ! நான் அவர் நாட்டின் வளத்தை அல்லவா கூறினேன். என்னிடம் அதையே சாட்சியாகக் கூறி விட்டீர்களே! நல்ல திறமை. தலைவி : பாராட்டு வேண்டாமடி பைங்கிளி! தடந்தாள் நாரை அடும்பை மிதித்து மீனைப் பிடிக்கும்போது, அடும்பு தாங்கிக் கொண்டுதானே இருக்கும்? தோழி : ஆமாம்! அதற்கென்ன ஐயம்! வளைந்தாலும் ஒடிந்தாலும் தாங்கவே செய்யும்! தலைவி : அதே நிலைமைதான் நமக்கும். தலைவன் பிரிவைப் பொறுப்போம்; மெலிவோம்; மடிவோம். தோழி : அதோ... அதோ... (தண்ணந்தறைவன் அவர்களை அடுத்து வருகின்றான்) தலைவி : பார்த்துக் கொண்டேன். அதற்காக, சாவதற்கு அஞ்சி நாம் கொடுத்த அழகை மீண்டும் தருக என வேண்டேன். அக்கொடுமையை என்னால் செய்ய இயலாது. தோழி : பாவம்! உங்கள் பிடிவாதம் கொடியது அம்மா! தலைவி : என் வழிக்கு வராதே. உன் பரிவுக்கு நன்றி. அஞ்சும் கேழைகளிடம் வைத்துக்கொள் உன் பேச்சை. இந்த முடிவுரையைக் கேள்வியுற்ற தண்ணந்துறைவன் வேலியை முரித்துச் சோலைக்குள் தாவினான். சாவு என்றால் எளிதா? அதற்குக் காரணம் அவனே என்றால்? பேச முடிய வில்லை அவனால். பேசவும் காத்துக் கொண்டிருக்கவில்லை அவள். அவன் திருந்த வேண்டும் என்பதற்காகத் தானே அவன் கேட்கும் விதமாகக் கூறினாள். வெட்கிக் தலை குனிந்தான் தண்ணந்துறைவன். கொடைச் செல்வியின் சினம் பறந்து ஓடியது. இந்தக் காட்சியை வர்ணிக்கின்றார் குறுந்தொகை பாடிய நறுந்தமிழ்ப் புலவர் ஒருவர் : அடும்பவிழ் அணிமலர் சிதைஇ மீன் அருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர் தண்ணந் துறைவற் றொடுத்து நம்நலம் கொள்வாம் என்றீ தோழி! கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னாதோ நம்இன்னுயிர் இழப்பே. தண்ணந்துறைவன் நாட்டின் இயல்பைக் கூறுவது போலாக, அவன் இயல்பை எடுத்துக் காட்டும் அழகே அழகு! நினைத்த இடத்திற்கு எளிதிலே சென்று மீளும் வாய்ப்புப் பெற்ற நெடுங்கால் நாரையைத் தலைவன் ஆகவும், வனப்பும் இயற்கைப் பண்பும் உடைய தலைவியை அடும்பு மலராகவும், கண்ணில் மயல்காட்டிச் செல்லும் புலால் நாறும் மீனைப் பொது மகளாகவும் கற்பனை செய்து கொண்ட பாவலரின் புலமையே புலமை! நம் நலம் என்னும் சொல்லிலோ தலைவி தோழி ஆகிய இருவரும் மெலிவுற்றிருக்கின்றனர் என்றும், தலைவன் வந்து சேர்ந்தால் தலைவி நலம் பெறுவாள் என்றும், தலைவி நலம் பெற்றால் தோழி நலம் உற்றாள் என்றும், தலைவி உயிர் இழப்பின் தோழியும் உடன் உயிர் இழப்பள் என்றும் நுண்ணிதில் உணர்த்தும் கருத்தாழம் பேருவகை பயப்பதாம். இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே என்னும் மணியன்ன சொற்களைப் பன்முறை சொல்லிச் சொல்லிப் பார்த்தால் பொருளும், அமைப்பின் மாண்பும் அறியவரும். உயிரின் அருமை தோன்ற இன்னுயிர் என்றாரேனும் கொடுத்ததைக் கேட்டு வாங்கி உயிர் வாழ்வதிலும் உயிர் விடுவது இன்னாதோ? என்னும் வினாவினால் தாம் கொண்ட அறத்தை வற்புறுத்துகின்றார் புலவர். இவ்வுயர் பாடலைப் பாடிய புலவர் பெருமகனார் சாத்தனார் என்னும் பெயராளர்! 4. கங்குல் நங்கை ஒருவன் செய்த குற்றம் அவனோடு ஒழியாது அவன் வழியினரையும் பற்றிப் பிடித்துப் படுபாடு படுத்தவல்லது. பெண்கொலை புரிந்தான் நன்னன். ஆற்றில் வந்த மாங்கனியை அறியாமல் உண்ட கன்னி ஒருத்தியைக் களவு செய்து தின்றாள் என்று காரணம் காட்டிக் கொலை புரிந்தான் கயவன் நன்னன். காவலன் என்றாலும் கண்ணோட்டம் இல்லாத அவன், அரண்மனையைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் விரும்பினர் அல்லர் பைந்தமிழ்ப் பாவலர். அவனை மட்டும் தானோ பார்க்க விரும்பினார் அல்லர்? அவன் வழிவழி வந்தோரையும் பார்க்க விரும்பினார் அல்லர்; பாராட்ட விழைந்தார் அல்லர். இளவிச்சிக்கோவும் இளங்கண்டீரக் கோவும் இணைந்து இருக்கின்றனர். ஆங்கே செல்கின்றார் பெருந்தலைச் சாத்தனார். இளங்கண்டீரக் கோவைத் தழுவித் தம் அன்பையெல்லாம் ஒருசேரக் காட்டினார் சாத்தனார். விச்சிக் கோவைத் தழுவினார் அல்லர். நாணமாக இருந்தது விச்சிக் கோவுக்கு. என்னைத் தழுவாமை ஏன்? என்று புலவரை வினாவினான். புலவர் தம் எண்ணத்தை மறைத்தாரா? மழுப்பினாரா? இலர். நீயும் தழுவத் தக்கவன் தான்! ஆயினும் பெண் கொலை புரிந்த நன்னன் வழியில் வந்தவன். ஆதலால் புலவர் பாடுதல் ஒழிந்தனர்; நானும் தழுவ விரும்பிலேன் என்றார். எவன் செய்த பழி - எவனைச் சேர்கின்றது! இவ்வாறே ஓராண் செய்த பழி ஆணினத்தையே பழிக்கு ஆளாக்குகிறது; ஒரு பெண் செய்த பழி பெண் இனத்தையே சுற்றி வளைத்து வாட்டுகிறது. நல்லவற்றை அவ்வவ்வினத்துடன் இணைப்பதைப் பார்க்கிலும் அல்லவற்றை இணைப்பதிலே உலகுக்குப் பேரார்வம் உண்டு. அதற்கென வரிந்து கட்டித் திரிவதும் உண்டு. ஆணினத்திற்கு மாசு ஏற்படுத்துவதற்குக் கூட உலகம் மயங்குவதும் தயங்குவதும் உண்டு. பெண் இனத்திற்கு என்றால் பெரும் பாய்ச்சலுடன் சென்று குற்றம் கூறத் தயங்குவது இல்லை. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உலகம் பெண்மையினிடம் தண்மையை எதிர் பார்க்கின்றது. அத் தண்மைக்கும், தாய்மைக்கும், தூய்மைக்கும் எதிராக வெம்மையும், பேய்மையும், நோய்மையும் எழுமாயின் துடித்து எழுகின்றது. பாம்புப் பெட்டிக்குள்ளோ புற்றுக்குள்ளோ பாம்பு இருப்பது இயற்கையானது. ஆனால் சாந்துப் பெட்டிக்குள் பாம்பு இருக்கக் கண்டால்? சாந்து எடுக்கச் சென்று திறந்தவன் பாம்பு இருக்கக் கண்டால்? கொடுமையான நிகழ்ச்சி இது. நன்மையை எதிர்பார்க்கும் ஒன்றில் தீமை கிளம்பும் போது தான், வெறுப்பும், வேதனையும் ஏற்படும். அதனால் நன்மை நிறைந்த பெண்மையிலே நச்சுத்தன்மை எங்கேனும் தலை தூக்கி ஆடுமானால் அவ்வினத்தைச் சுற்றி வளைத்துப் பற்றி எரிக்கத் துணிகின்றது உலகம். ஒரு தவற்றை வேற்றார் வந்து இடித்துக் கூறுவதிலும் வேண்டியவர் இடித்துக் காட்டுவதும், திருந்தச் செய்வதும் சற்றே பெருமை எனலாம். உலகியலில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுவது உண்டு. இத்தகைய நிகழ்ச்சி இலக்கிய விருந்தாக அமையாமலும் இல்லை. மன்னர் மன்னவன், மைந்தன் இராமன் மண்கொண்டு லருவான் - மணிமுடி சூடி வருவான் - என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள் மங்கையர்கள். ஆனால் அவனோ சிற்றன்னையின் ஏவலால் தாழிரும் சடைகள் தாங்கி ஏழிரண்டு ஆண்டு காடு எய்தும் வரத்தைப் பெற்று மீண்டான். அரியணையில் சீருற இலங்க வேண்டிய இவன் அடவி செல்லுவதைக் காணவோ நின்றோம்? கொடுமை! பெண்ணாகப் பிறந்ததே கொடுமை! அதனினும் கொடுமை - கண்பெற்ற பெண்ணாகப் பிறந்தது. பெண்ணே கொடுவினை செய்யும் இந்நாட்டிலே கண்பெற்ற பெண்ணாகப் பிறந்ததோ என்றும் மாற்ற முடியாக் கொடுமை! என்று வெவ்வேறு வகையாகக் கூறி ஏங்குகிறார்கள். பெண் ஒருத்தி கொடுவினை செய்கின்றாள். இதை மற்றைப் பெண்களாவது தட்டிக் கேட்க வேண்டும். தட்டிக் கேட்பதற்கும் ஆள்பவன் தனிச்சிறப்பு மனைவியாக இருக்கின்றாள். என்ன செய்ய முடியும்? ஒன்றே ஒன்று செய்திருக்கலாம்! அதுவும் நம்கையில் இல்லை. இந்நாட்டிலே - பெண், கொடுவினை செய்யும் நாட்டிலே பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது. பெண்ணாகப் பிறந்திருந்தாலும், கண்ணுள்ள பெண்ணாகப் பிறந்து இக்கொடுமையைக் காணும்படி இருந்திருக்கக் கூடாது என்று முகத்திலே அடித்துக் கொண்டு அழுகின்றார்கள்; விழுகின்றார்கள். இது கம்பன் காட்டும் படப்பிடிப்பு. பெண்மையின் தன்மை எத்தகையது என்பதைப் பல கோணங்களிலிருந்தும் நிறுவிக் காட்டுகிறது இவ்விடம். உணர்வு உடைய பெண்கள் உரை நிகழ்த்தி நைந்தார்கள். உள்ளம் வெதும்பி ஒடுங்கிய பெண்கள் ஒன்றும் உரையாராய் மூலையில் முடங்கிக் கிடந்து கண்ணீரும் கம்பலையுமாய் நின்றனர். ஆனால் ஒருத்தி ஓடிப்போயே விட்டாள், பெண் கொடுமை செய்வதைத் தன்னால் காண முடியாமல்! அவள் யாவள்? கள்ளக் கருமையள் அவள். உலகம் தோன்றிய நாள் தொட்டு உலகாளும் பெருமையள் அவள்; அவள் போர்வையினால் மூடப்படாத இடமே இப்புவியில் இல்லை. அவள் அருள் நிழலிலே தங்கியவர் அனைவரும் புதுவீறு கொள்வர். அவள் தன் ஆட்சிக்கண் உள்ளவர்களுக்குத் தந்துதவும் ஊட்டப் பொருள்களுக்கு ஓரளவு இல்லை. ஒரு பெண் மகள் செய்யும் பெரும் பழியை உலகின் நலங்கருதி வாழும் அந்நங்கை நல்லாளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணின் ஆட்சியிலே, ஒரு பெண் துணிந்து கேடு செய்யக் கிளம்பிவிட்டாள் என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? மன்னவன் எப்படியோ அப்படியே மக்களும் என்னும் முது மொழிக்கு ஏற்ப, ஒரு மகள் செய்யும் கேடு ஆளும் பெரு மகளையும் சேரத் தவறாதே! இதற்குப் பொறுப்பாக இருக்க ஒருபொழுதும் முடியாது என்று முடிவு செய்கின்றாள். அவளை, உறுத்தும் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து உலுக்கித் துன்புறுத்துகின்றன. கைகேயி இருக்கின்றாளே, இவள் முன்னெல்லாம் பெண் குலத்திற்கு எவ்வளவு பெருமை தந்தவளாக விளங்கினாள்! கருத்தொத்த வாழ்வு என்பதற்கு வேறொருவரை எடுத்துக்காட்ட எவரும் விரும்புவது இல்லை! மன்னர் மன்னவன் உயிரும், இம்மாதரசியின் உயிரும் வேறு வேறு என்று கூற முடியாது. இவர்களை, உடல் இரண்டு எனினும் உயிர் ஒன்றே என்று பாராட்டாதவர் உளரா? வேந்தர் வேந்தனும் வேறுள மனை வியர்களினும் இவளிடம் விருப்புக் கொண்டிருத்தது இதனால் தானே! அந்தப் புரத்திலே அமைந்து வாழ வேண்டிய இவள் அரசவையிலே அமைச்சருக்கு இணையாக அன்றோ இடம் பெற்று இனிது இருந்தாள்! உற்ற சமயங்களில் உதவும் மெய்க் காப்பாளியாக வேந்தனுக்கு இவளையன்றி வேறு எவர் இருந்தார். சீரிய முறையில் தேரோட்டிச் சிறந்த வீரனாகத் தயரதனை ஆக்கிய பெருமை இக்கைகேயிக்குத்தானே உண்டு. இவ்வாறு பலவகையாலும் அமைந்த தொடர்பும் இன்று நேற்று ஏற்பட்டதா? என்று திருமணம் நிகழ்ந்ததோ அன்று தொடங்கிய தொடர்பு. சேணுலாவிய நாளெல்லகம் உயிர் ஒன்று போல்வன செய்து வந்த உயர்நெடுந் தொடர்பு! இத் தொடர்புக்கு ஆட்பட்ட பெருமகன்தான் எத் தகையன்? இயலாத ஒருவனா? அவன் உடலிலே வலிமை அளத்தற்கு அரியவண்ணம் அமைந்து கிடக்கின்றது. அவ் வலிமையும் தன்னலத்திற்கெனப் பயன்படுத்தப் பட்டதோ எனின் இல்லை. வாட்டமுற்று, வகைகெட்டு, வருந்தி நின்றோர்க்கு வந்தேன் துணை, தந்தேன் வென்றி என்று ஓடி ஓடி உதவுதற்கு என அமைந்தது அல்லவோ அது? அத்தகைய வலு உடையவன் இன்று நிமிர்ந்து நிற்க மாட்டாமல், தலையைத் தூக்கி நிறுத்த மாட்டாமல் கவிழ்ந்து புரள்கின்றானே! இந்த வல்லியலாளன், இம்மெல்லியலாளிடம் ஏன் வலுவிழந்து வதைந்து அடிமை போல் கிடக்க வேண்டும்? தருவேன் வரம் என்ற வாய்மை தவறக் கூடாது என்னும் ஒரே ஒரு காரணத்தால்! இவன் தனக்குரிய வாய்மையைக் காக்கட்டும். இப்பெண் மகள் தனக்குரிய தாய்மையைக் காக்க வேண்டாமா? கோசிக முனியுடன் கொஞ்ச நாள் இருந்து வர இராமன் சென்ற பொழுதே மன்னவன் இன்னுயிர் வழிக் கொண்டாலெனப், பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான் எனப் புலவன் புலம்பி அரற்றக் கிடந்த மன்னவன் ஏழிரண்டு ஆண்டு வனம் ஏகும் கொடுமையை எப்படித் தாங்குவான்? இதைத்தெரிந்து கொள்ள முடியாதவளா கைகேயி? இராமன் கானேகத் தயரதன் வானேகுவான் என்பதைக் கோசல நாட்டார் நன்கு அறிந்து கொள்ளும் வண்ணமே, கோசிகன் இராமனைக் கூட்டிச் சென்று பின் வருவதை முன் அறிவித்தானே? இதைப் புரிந்து கொள்ளாமல், இரண்டு வரம் கேட்டு மூன்று விளைவுகளை உண்டாக்கலாமா? கேட்டதற்கு மேலும் கெடுவினை பெற எண்ணிக் கொண்டாளோ கொடுவினையாட்டி! இதற்குச் சுருக்கமாக உன் உயிரைத் தா என்றே நேரிடையாக மூன்றாம் வரமும் கேட்டிருக்கலாமே! கேட்டிருந்தால் முதல் வரமாக அதனைத் தயரதன் தந்து இன்புற்றிருப்பானே! தயரதன் வாய்மை கருதி வனமேகும் வரத்திற்கு இசைகின்றான். போகட்டும். இவ்வலியாள், நலியும் வரத்தால் பெண் குலத்திற்கே பெரும்பழி தேடிக் கொடுக்கலாமா? அதையாவது எண்ணிப் பார்க்க வேண்டாமா? வரம்பெற்ற மகிழ்ச்சியிலே வாய்மை மன்னன் சாவான் என்று கூடக் கவலை கொள்ளவில்லை இவள். இரக்கம் செத்த பின் கவலை எங்கே வரப்போகின்றது? உள்ளுக்குள் மட்டுமா உவகை கொள்கின்றாள்? வெளியேயும் அல்லவா சிரித்துக் கெக்கலி கொள்ளுகின்றாள்! என் ஆட்சியிலே எனக்கு முன்னாகவே நகைக்கின்றாள்! மாசு மறுவற்று விண்ணகத்தே விளங்கும் வெண்ணிலவு போல் சிரிக்கின்றாள். இவள் பெருகச் சிரிக்கும் சிரிப்பை இதழ்களால் கூடத் திரையிட்டு மறைக்க இயலவில்லையே. முகில் மறைத்து மூடாத மதியம் போல் இதழ் மூடாச் சிரிப்பு. இச் சிரிப்பால் எழும் ஒளி என் கருமேனியிலே பட்டு எதிரொளி செய்ய நானும் கண்கொண்டு காண! நீயும் ஒரு பெண்தானே! என்னைப் போலச் சமயம் அறிந்து செயலை முடித்துக் கொள்ளும் ஆற்றல் உனக்கு உண்டா? என்று நகைக்கின்றாளா? என்னைப் பார்த்து! அடி! கொடுமையே! கொண்ட கணவன் குற்றுயிராகக் கிடக்கின்றான். கொள்ளை மகிழ்ச்சியிலே தவழ்கின்றாள் இவள். இதுதான் தற்கொண்டானைப் பேணும்தகை சான்ற செயல்போலும்! வெட்கம்! வெட்கம்! பெண் இனத்திற்கே பெரு வெட்கம்! எனக்கோ நாணம் மிகுகின்றது. இன்னும் கணவன் முன்னாக அக் கைகேயிக் கொடியாள் நிற்கத்தான் இருக்கத்தான் செய்கிறாள். நானோ அவள் செய்யும் கொடுமையை எண்ணி ஏங்கிப் புலம்புகின்றேன். நானும் இந்நாட்டிலே ஒரு பெண்ணாகப் பிறந்து பெரும்பழி தேடிக் கொண்டேனே என்று வருந்துகின்றேன். எந்த ஓர் ஆடவன் கண்ணினும் படாமல் தப்பி ஓடி ஒளியவும் அணியம் ஆகிக் கொண்டேன்! இராமன் முன் மட்டுமன்று; அவன் உயிர்த் தம்பி இலக்குவன் முன் மட்டுமன்று, வாய்மைக் கொருவனாம் தயரதன் முன் மட்டுமன்று, எந்த ஓர் ஆண் முன்னும் விழிக்க மாட்டேன் என்று ஓடுகின்றாள்! ஓடி ஒளிகின்றாள். ஏன்! கைகேயியிடம் சென்று கடிந்து உரைத்துத் திருத்தவும் முடியாது; முடியாதே என்று ஒப்புக்காகவாவது உணர்ச்சியை அமுக்கிக் கைகொட்டிச் சிரிக்கவும் முடியாது; போனால் போகட்டுமே என்று இரக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது என்று எண்ணியே ஓடுகின்றாள். மைந்தர் எவரும் வைகறையில் விழித்தெழத் தொடங்குமுன் வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகின்றாள். அவள் யாவள்? அவளா? இரவு என்னும் பெண். கங்குல் நங்கை என்பது, பாவலன் வைத்த பண்புப் பெயர். உணர்வற்ற கங்குலின் மீது ஏற்றுகின்றான் பாவலன் தான் காணும் உணர்ச்சிப் பெருக்கை. கல்லும் கவி சொல்லும், கவிஞன் வாய்பட்டால். கங்குலும் பேசும், அவன் கலையுணர்வில் நிற்கும் போது. தம்வாயால் அன்று - கவிஞனின் வாயால்! இரவு இயல்பாகக் கழிவதைக், கைகேயி செய்த கொடுமையைத் தாங்க மாட்டாமல் புறப்பட்டதாகக் காட்டி விடுகின்றான். அந்த இன்ப வெள்ளத்திலே நம்மையும் மூழ்கி மூழ்கி மகிழவும் செய்து விடுகின்றான். சேணுலாவிய நாளெலாமுயிர் ஒன்றுபோல்வன செய்துபின் ஏணுலாவிய தோளினானிடர் எய்தவுமொன்றும் இரங்கலா வாணிலாநகை மாதராள்செயல் கண்டுமைந்தர் முனிற்கவும் நாணினாளென ஏகினாள்நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 5. அக இலக்கியங்களில் தோழி தோழன் தோழி என்னும் சொற்கள் இந்நாளில் புதுமைப் பொலிவோடு விளங்குகின்றன. ஆனால், இவை அகப் பொருள் இலக்கண இலக்கியங்களில் மிகப் பழகிப் போன சொற்களாகும். தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. ஆனால் தோழி என்பதோ 550 இடங்களில் வருகிறது. இதுவே, இலக்கியத்தில் தோழிக்கு உரிய சிறந்த இடத்தை விளக்கும். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலரே; பாங்கன் ஒரு துறை அளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சில பொழுது வருகிறான்; தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இட மில்லை; தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்லலாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர்; கற்பியலில் வரும் மழலை மகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும், செவிலியும், அன்னையும், பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது என்கிறது தமிழ்க்காதல். மேலும், சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள் இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம் என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப் பகுதியில் முப்பத்து இரண்டும், கற்புப் பகுதியில் இருபத்து ஒன்றும் ஆக ஐம்பத்து மூன்று எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கப் பெண்ணியல்பு என்று சொல்லப் பெறும் பெருமைக் குணங்கள் எல்லாம் ஓருருக்கொண்டு முழுமையாக அமைந்த ஓர் அரிய படைப்பே தோழி என்பது தெளிவாகும். தோழிக்கும் தலைவிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை; அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவளும் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள் இவளைத் தோழி என்கிறாள்; இவள் அவளைத் தோழி என்கிறாள்; இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக்களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை! தோழி, தலைவியை அன்னை என்று உரிமையாய் அழைப்பாள்; தலைவியும் தோழியை அன்னை என்று உள்ளன்பால் அழைப்பாள். நம்தாய், நம் தலைவர் நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர் கலந்து ஒன்றிய தோழமையை ஒரு தோழி சொல்கிறாள். தாயோ, தன் கண்ணை விட இவளை மேலாக விரும்பு கிறாள்; தந்தையோ, இவள் கால் தரையில் படுவதையும் பொறுக்காதவனாம். உன் சிற்றடி சிவக்குமாறு எங்கே செல்கிறாய் என்று தடுப்பான். நானும் இவளுமோ பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால், இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! - தலைவியும் தோழியும் இரண்டு தலைகளையுடைய ஒரு பறவையாம்; ஓர் உயிராம்; எத்தகைய அரிய உவமை! இதைக் கருதித்தான் தொல்காப்பியனார் தாங்கருஞ் சிறப்பின் தோழி என்றார் போலும். இனித் தலைவன் சொல்கிறான்; தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி; மிதப்பின் தலைப் பக்கத்தைத் தோழிபிடித்தால், தலைவியும் அத்தலைப் பக்கத்தையே பிடிக்கிறாள்; மிதப்பின் அடிப் பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அப் பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால் தலைவியும் போய் விடுவாள் போலும். தோழியும் தலைவியும் புதுத் தொடர்பினர் அல்லர். தோழியின் தாய், தலைவியின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே. தோழியின் தாய்க்குத் தாயும், தலைவியின் தாயின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே; இம்மட்டோ? தோழியின் தாயோ தலைவியின் செவிலித்தாயும் ஆவள். ஆதலால், வாழையடி வாழையாக வருவது தலைவி தோழி தொடர்பாகும். பழங்கால அமைந்த வாழ்வு, இவ்வுரிமைக்கு இடந் தந்து நின்றது. ஒரு தலைவியைக் கண்டு காதல் கொண்ட தலைவன், அவளை அடைவதற்கு அவள் தோழியின் துணையை நாடுகிறான். அவள், இவர்கள் காதலைக் குறிப்பாக அறிந்து கொண்டவளே ஆயினும், அறியாதவள் போலவே நடந்து கொள்கிறாள். தலைவன் அடுத்தும் தொடுத்தும் பன்முறை வேண்டிக் கொண்டும், அதனைத் தட்டிக் கழிக்கவே தோழி முயல்கிறாள். தலைவன் தகுதியானவன் என்றும், அவன் இவளை இல்லாமல் வாழான் என்றும், இவள், அவனை இல்லாமல் வாழாள் என்றும் தெளிவாக அறிந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவர்கள் காதலுக்குத் துணையாகிறாள். தோழியின் நினைவு, செயல், சொல் எல்லாம் அவர்கள் களவுக் காதல், கற்பு மணமாகித் திகழ வேண்டும் என்பதேயாம். இதற்காக அவள் எடுத்துக் கொள்ளும் நன்முயற்சிகள் பொன்னிற் பதித்த மணியெனப் போற்றத் தக்கனவாம். தலைவனும் தலைவியும் உணர்ச்சி வழியிற் செல்பவர்கள். அவர்களை அறிவுத் திறத்தால் இயக்கி அறவாழ்வில் நிலை பெறுத்தும் அருமைப் பொறுப்பாளியாக விளங்குபவள் தோழியே! ஆதலால் அவள் அன்னை போல் அரவணைப்பாள்; தந்தைபோல் கண்டிப்பாள்; ஆசான் போல் இடித்துரைப்பாள்; தோழியாய்த் துணை நிற்பாள்; இவையெல்லாம் அவளுக்குக் கைவந்த திறங்கள்; நாவீறு படைத்த நங்கை அவள்; சொல்லாற்றல் மிக்க சுடர்ப் படைப்பு தோழி. தலைவன் தலைவியைக் காணுதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருபவள் தோழியே. அவள், தலைவனைப் பகலில் வரச் சொல்வாள் : பின்னொருநாள், பகலிலும் வரவேண்டா; இரவிலும் வரவேண்டா என்பாள். இரவுப் பொழுதில் காட்டு வழியே வருவதால் உண்டாகும் இடையூறுகளையெல்லாம் விரித்துரைப்பாள்; பகலில் வருவதால் உண்டாகும் பழிகளை எல்லாம் எடுத்துரைப்பாள். தலைவன் காணாமல், தலைவியை மறைத்தும் வைப்பாள். அவள் நோக்கமெல்லாம் தலைவன் தலைவியர் அன்பைப் பெருக்கி ஆக்கப்படுத்த வேண்டும் என்பதேயாம். ஒரு மலையடிவாரம்; தினைக்கொல்லை; தினைக் காவலுக்குத் தலைவியும் தோழியும் செல்கின்றனர். அங்கே தலைவன் வருகிறான். அவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியினிடம் சொல்கிறாள். தோழி! கதிர் கொய்வதற்கு முன்பே கொய்தது போல் தட்டை உள்ளது. கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போகின்றன. நீ அணிந்துள்ள மாலை அசையுமாறு அடிக்கடி எழுந்து ஒலியெழுப்பி அங்கும் இங்கும் சென்று கிளிகளை ஓட்டா விட்டால் நம் அன்னை இவள் கிளியோட்ட அறியாள் என எண்ணி வேறு யாரையாவது காவலுக்கு அனுப்பி விடுவாள். அவ்வாறானால். நம் அன்புத் தலைவரைக் காண்பதற்கு அரிதாகும் என்று கூறுகிறாள். இதனால், தலைவன் நினைத்த போதெல்லாம் தலைவியைக் காணல் அரிது என்பதைக் கூறி விரைவில் மணம் செய்து கொள்ளுமாறு தூண்டுகிறாள் தோழி. ஒருநாள் இரவுப் பொழுதில் தலைவியைக் காணத் தலைவன் வந்தான். அவன் வந்துள்ளதற்கு உரிய அடையாளம் செய்தான். தோழி விழிப்பாக இருந்து அறிந்து கொண்டாள். அப்படியே அன்னை முதலியவர்களும் விழித்திருந்தால் வெளியேற முடியாதே. அதனால் ஒரு சூழ்ச்சி செய்தாள். அன்னையே, வாழ்வாயாக! நான் சொல்வதைக் கேட்பாயாக! நம் தோட்டத்தில் உள்ள கூதாளஞ் செடியின் மீது அருவி விழும் ஒலி கேட்டாயோ? என்றாள். அன்னை மறுமொழி தந்திலள். தோழி மீண்டும் கூறினாள்; அன்னையே வாழ்வாயாக! நம் தோட்டத்தில் உள்ள அசோகின் அடிமரம் ஒடியுமாறு இடி விழுந்தது கேட்டாயோ? என்றாள். இதற்கும் அன்னை மறு மொழி தந்திலள். ஆகவே, அவள் நன்றாக உறங்குகிறாள் மற்றவர்களும் உறங்குகிறார்கள். தக்க பொழுது இதுவே என்று தலைவியை அழைத்துச் செல்கிறாள். இதனைத் தலைவன் கேட்கவும் சொல்கிறாள். காலம் நீளாமல் கடிமணம் செய்ய வேண்டும் என்பதே அவள் கருத்தாம். தலைவன் பொருளே குறியாக இருக்கிறான். வாழ்வுக்குப் பொருள் வேண்டும் என்பது தோழிக்கு நன்றாகவே தெரியும். பொருள் இருந்தால் அறத்திற்கு அளிக்கலாம். வறியோர்க்கு வழங்கலாம். விருந்தினரைப் பேணலாம். சுற்றத்திற்கு உதவலாம்; வேண்டும் நுகர்ச்சிகளை வேண்டுமாறு பெறலாம். ஆனால், இப்பொருள் தேடுவதையே, தொழிலாகக் கொண்டு இனிய இல்லற வாழ்வைத் தலைவன் பாழாக்கிக் கொள்வதை அவள் விரும்பவில்லை. ஆதலால், அறிவறிந்த தலைவனும் அறியுமாறு நயமாகக் கூறுகிறாள். தலைவ, செல்வாக்குடன் வாழ்வதும், விரைந்து செல்லும் ஊர்திகளில் போவதும் செல்வம் என்று சொல்லப் படுவன அல்ல. அவை அவ்வவர் செயல் திறனால் அமைபவை; உயர்ந்த பெருமக்கள் செல்வம் என்று சொல்வது தன்னைச் சேர்ந்த வர்களைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கனிவு ஒன்றுமேயாம் என்றாள். வாழ்வாவது யாது என்பதையும் விளக்குகிறாள் தோழி. ஒரே ஓர் உடையே உடையவராய், அவ்வுடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்பவராக இருந்தால் கூட, பிரிவும் பிணக்கும் இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்பவர் வாழ்க் கையே வாழ்க்கையாம். ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை சிறுவயதிலே எத்தகைய பேரறிவு தோழிக்கு. தோழி, சிறுப்பெருமகள் என்னும் பாராட்டுக்கு உரியவள். தலைவன் ஒருவன் பிரிகிறான்; தலைவி ஆற்றாமல் வருந்துகிறாள். அவளை ஆற்றித் தேற்றும் பொறுப்பு தோழிக்கு உண்டாகிறது. அந்நிலையில், தலைவன் நல்லியல்புகளை யெல்லாம் சொல்லித் தலைவியை மகிழ்விக்கிறாள்; கவலையை மாற்றுகிறாள். தோழி! தலைவர் நெடுந்தொலை சென்றிருப்பது உண்மைதான். ஆயினும் அவர் மிகப்பேரன்பினர் என்பதை மறக்க முடியுமோ? கோடிகோடியாகச் செல்வம் குவிந்தாலும் குறித்துச் சென்ற பொழுது தவறாமல் வந்தே தீர்வார். தோழி! நம் தலைவர் நம்மை விட்டுப் பிரியக் கூடியவரோ, பிரிந்தாலும் கவலை இன்றித் தங்கக் கூடியவரோ? நாம் படும் துயரினும் அவர் படும் துயர் பெரிதாகி ஓடி வருவார். இதோ பார்! நாம் தலைவரை நினைக்கும் போதெல்லாம் தவறாமல் பல்லி நல்ல சொல் சொல்வது, கேட்கவில்லையா? நீ கவலை ஒழிக என்கிறாள். இப்பொழுது தோழி ஒரு நல்ல மருத்துவி! காட்டையும் காட்டாற்றையும் கடந்து அஞ்சாமல் நள்ளிரவில் தலைவன் வருகிறான். அவன் வரும் வழியை நினைத்து அஞ்சி அஞ்சித் துன்புறுகிறாள் தலைவி! இவ் விருவர்க்கும் இடையே தவிக்கிறாள் தோழி! அவள் தவிப்பைக் கேட்டு நாமும் தவிக்கிறோம்! தலைவனே, நீ வழியச்சம் பாராது வருகிறாய்! இவளோ தன் பெண்மையால் உனக்கு என்ன நேருமோ என அஞ்சுகிறாள்! தான் பெற்ற இரட்டைப் பிள்ளைகளும் ஒரே வேளையில் நஞ்சுண்டதைக் கண்டு தவிக்கும் தாய் போல உங்களைக் கண்டு நான் தவிக்கிறேன். - தோழியின் தாய்மை ததும்பும் இடம் இது. தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரு பிணக்கு. தலைவன் வீட்டுக்கு வருவது இல்லை. தலைவி அவன்மேல் கொண்ட சினம் ஆறுவது இல்லை. இந்நிலையில் மிக நொந்து போகிறாள் தோழி. அன்னி என்பவனுக்கும் பெரியன் என்பவனுக்கும் ஒரு போர்; அப்போரில் ஒரு புன்னைமரம் வெட்டுப் பட்டது. அது வெட்டுப்பட்ட அளவில் போர் ஓய்ந்தது. அதுபோல் உங்கள் இருவருக்கும் உள்ளபகை யான் இறந்து போனால் என்னோடு ஒழிந்து போகும் போலும் என்றாள்! தன்னுயிர் தந்தும் அவர்கள் நலமாக வாழ வேண்டும் என்னும் பெருந்தகைத் தோழி உள்ளம் தெய்வ உள்ளமேயாம். பிறருக்கெனவே வாழும் தோழிக்கு அத்தனை தொல்லைகளுக்கு இடையேயும் ஒரு மகிழ்ச்சி; அது தலைவியின் புகழ்ச்சியாகும். தோழி, தலைவன் குடி நன்கு உடையன்: கூடுநர்ப் பிரியலன்; கெடுநா மொழியலன்; அன்பினன் என்று சொல்லி நாங்கள் மணந்து கொள்ளுதற்கு வேண்டுவன வெல்லாம் செய்தாய். உண்மையாகவே அவன் நல்லன்; இனியன்; இன்பமூட்டும் இசையினும் இனியன்; இசைக்கு அமைந்த தாளத்தினும் இனியன்; திருமண நாளினும் இனியன்; என் காதல் தோழியே, நீ மிகவும் நல்லவள்; வல்லவள் என்று தலைவி பாராட்டுகிறாள். இது தலைவி தோழிக்குச் செய்யும் மலர் வழிபாடாகும். 6. நள்ளிரவு அகப்பொருள் இலக்கண நூல்கள் பொருளை மூன்று வகையாகப் பகுத்து விரித்துக் கூறுகின்றன. அவை முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவை. அவற்றுள் முதலாவதாக உள்ள முதற்பொருள் என்பது இடமும் காலமும் ஆகும். இடமும் காலமுமே மற்றைப் பொருள்கள் எல்லாம் கருக் கொள்ளவும் உரிமை உணர்வு பூண்டு ஒழுகவும் நிலைக் களம் ஆகலின் முதற்பொருள் எனப் பெற்றன. காலமாகிய முதற்பொருளும் பெரும் பொழுது சிறு பொழுது என இரண்டாகும். கார் கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனில் என்னும் ஆறும் பெரும் பொழுதுகள். இவை ஆவணித் திங்கள் முதல் இரண்டு இரண்டு திங்களாக எண்ணப் பெறும். சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நன்பகல் என ஐவகைப்படும். இவற்றுள் யாமம் என்று கூறப்பெற்ற சிறுபொழுதே நள்ளிரவு ஆகும். நள் என்பது நடு என்னும் பொருள் தருவது. நண்பகல் என்பது பகலின் நடுப்பொழுதினைக் குறிப்பது போல் இரவின் நடுப்பொழுதினைக் குறிப்பது நள்ளிரவு ஆகும். இந் நள்ளிரவுப் பொழுதினைப் புலவர் பெருமக்கள் தம் புலமைத் திறம் விளங்க எவ்வாறு படைத்துள்ளனர் என்பதைக் காண்போம். பூக்கள் மலர்வதைக் கொண்டு நம் முன்னோர் பொழு தறிந்த துண்டு. அதனால் பொழுதில் முகமலர்வுடையது பூவே என்றார் பவணந்தியார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இதனை மிக நயமாகக் கூறுகின்றார். ஓர் ஏழைச் சிறுமி; தனக்குக் கடிகாரம் வேண்டும் என்று தன் தாயினிடம் வேண்டுகின்றாள். தாய் தன் வறுமையைக் கூறாமல் வகையாக மறுத்துக் கூறுகின்றாள் : செங்கதிர் பொங்கி வருவதுண்டு - நல்ல செந்தா மரைகள் மலர்வதுண்டு மங்கையே காலைப்பொழுதை உணர்ந்திட மற்றும் கடிகாரம் வேண்டுமோடி? முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின் மொட்டுகள் மெள்ள அவிழ்வதுண்டு மெல்லியலே மாலை வேளை யறிந்திட வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி? கம்மென வாசம் கமழ்பாரி சாதம் - இக் காவில் மலர்ந்து சொரிவதுண்டு அம்மையே நள்ளிர வீதென்று சொல்லிட ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி? பாரிசாதம் மலர்வதைக் கொண்டு நள்ளிரவை அறிந்து கொள்ளலாம் என்கிறார் கவிமணி. கபிலர் தாம் பாடிய குறிஞ்சிப் பாட்டில் நள்ளிருள் நாறி என்னும் ஒரு மலரைக் குறிப்பிடுகின்றார். நள்ளிருளில் மலர்ந்து மணம் பரப்பும் பூ என்பது அதன் பொருள். அந்நள்ளிருள் நாறி என்பது இருள் வாசியாகும். அப்பூவே இருவாட்சி என வழங்கப் பெறுகின்றது. இமை என்னும் அரங்கத்தில் எழிலுற நடிக்கும் நங்கை துயில் என்னும் மங்கை. அவள் செங்கோலாட்சி சிறப்பாகச் செய்யும் பொழுது நள்ளிரவே ஆகும். ஆதலால், பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமம் என்றார் ஒரு புலவர். கடல் மீன் துஞ்சும் நள்ளிருள் யாமம் என்றார் இன்னொரு புலவர். நள்ளிரவு கனவுக்கு நல்லிரவாகும். இதனை இலக்கியங்கள் விரித்துக் கூறுகின்றன. ஒருத்தி தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். கண்ணைத் திறக்குமாறு செவிலித்தாய் எவ்வளவோ வேண்டினாள். மன்றாடினாள்; கடிந்தும் உரைத்தாள். ஆனால் அவளோ கண்ணைத் திறக்காமல் கையாலும் இறுக்கமாக மூடிக் கொண்டாள். என் உயிரைப் போக்கினாலும் சரி; என் கண்ணைத் திறவேன். என் கனவில் பாண்டியன் தன் யானையுடன் என் கண்ணுள் புகுந்துள்ளான். கண்ணைத் திறந்தேனோ என்னை விட்டுத் தப்பிப் போய்விடுவான் என்றாள். காதல் களி மயக்கத்தில் உளறும் இதனை முத்தொள்ளாயிரப் பாட்டொன்று காட்டுகின்றது. பகுத்தறிவுடைய மக்களையன்றிப் பறவைகளும் விலங்கு களும் கூடக் கனவு கண்ட நிகழ்ச்சிகளைப் புலவர்கள் படைத் துள்ளனர். தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் தன் பெட்டையுடன் தங்கிய கடற்காக்கை, வெண்ணிற இறால்மீனைத் தான் பற்றித் தின்பதாகக் கனவு காண்பதை வெண்ணாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். சுனைப் பூவில் தேனுண்ட வண்டு காந்தள் பூவில் கண்ணுறங்கி யானையின் கன்னத்தில் ஒழுகும் மதநீரை அருந்துவதாகக் கனவு கண்ட செய்தியைத் தாயங்கண்ணனார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார். களவு செய்யக் கருதுவார்க்கு நள்ளிரவுப் பொழுது மிகக் கொண்டாட்டமானது. களவு போகாமல் காக்க முனைவார்க்கு இந்நள்ளிரவு மிகத் திண்டாட்டமானது. பொருட் களவு செய்வாரை அன்றிக் காதற் களவுக்கும் கவின் மிக்க பொழுது நள்ளிரவே ஆகும். களவையும் பிற கயமைகளையும் நாட்டில் ஒடுக்குதல் காவலர் கடமை. ஆதலால் பண்டை வேந்தர்கள் தாமே மாறு கோலம் பூண்டு மறுகில் திரிந்து காவல் புரிந்தனர். இதற்குப் பொற்கைப் பாண்டியன் வரலாறு சான்றாகும். நாட்டை நல்வழியின் நடத்தினால் மட்டும் போதுமா? வேற்று நாட்டவர் தாக்குதல் நேருங்கால் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டியதும் ஆள்வோர் கடமையாம். அவ் வேளைகளில் வீரர்கள் கண்படை கொண்டாலும் வேந்தர் கண்படை கொள்ளாது கடமையாற்றினர். நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளாது பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறைக்கண் பணி செய்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் புலவர் நக்கீரனார். வாடைக் காற்று வன்மையாக அடிக்கின்றது; பாண்டில் என்னும் ஒருவகை விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு ஏவலர் வருகின்றனர். படைத் தலைவன் வேப்பம்பூ மாலை சூட்டிய வேலைத் தாங்கி முன்னே செல்கின்றான். குதிரை தன்மேல்பட்ட மழைத் துளியை உதறிக் கொண்டு நடக்கின்றது. பாண்டியனின் இடத்தோளில் கிடந்த மேலாடை சிறிது நழுவுகின்றது. அதனைக் கையால் அணைத்துத் தழுவிக் கொள்கின்றான். வாளேந்திய வீரன் ஒருவனின் தோள்மேல் தன் வலக்கையை வைத்துக் கொள்கிறான். போரிலே விழுப்புண்பட்ட வீரர்களைத் தனித் தனி கண்டு அளவளாவுகின்றான். அவர்கள் செய்த செயற்கருஞ்செயல்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்கின்றான். அவர்கள் பட்ட புண்ணைத் தான் பட்டதாக உணர்ந்து வருந்துகின்றான். இன்மொழியும் புன்முறுவலும் இலங்கப் பணி செய்து மகிழ்விக்கின்றான். வேந்தன் அரவணைப்பிலே வீரர் விம்மிதம் அடைகின்றனர்! நெடுநல் வாடை காட்டும் நள்ளிரவுக் காட்சி இது. கலித் தொகை காட்டும் ஒரு காட்சியைக் காண்போம்! ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவுப் பொழுது; ஒரு முதியவன்; முடவன்; வழுக்கைத் தலையன்; குட்ட நோயால் காலும் கையும் குறைந்தவன்; ஒரு தெருக் கோடியில் நின்றான். அங்கே அழகிய நங்கை ஒருத்தி தன் காதலன் குறிப்பித்தபடி அவனைக் காண்பதற்கு வந்தாள். அங்கு நின்ற முதியவன் மகளிர் நிற்கும் காலம் அன்றாக இவ்விடத்து நிற்கும் நீ யார்? என்று வினாவினான். சிறியவளே, என்னாலே அகப்படுத்திக் கொள்ளப் பட்டாய் என்று நெருங்கினான். வைக்கோலைக் கண்ட கிழ எருது போலப் பக்கத்தில் இருந்து போகாமல் நின்றான். தையலே! தம்பலம் தின் என்று கூறி வெற்றிலைப் பையைத் திறந்து எடுத்துக் கொள் என்றான். நங்கை ஒன்றும் பேசாமல் துணிந்து நின்றாள். அவன் அஞ்சினான். அவளைப் பேய் என எண்ணினான். ஆதலால் விலகி நின்று நான் ஆண் பேய்; பெண் பேய் ஆகிய நீ எனக்கு அருள் செய்வாயாக. அவ்வாறு செய்யாது ஒழியின் இவ்வூரார் இடும்பலியை நீ பெறாமல் நானே எடுத்துக் கொள்வேன் என்று சொன்னான். தன்னைப் பெண் பேய் எனக் கருதி நடுங்குவதைக் கண்ட நங்கை தன் கையால் மணலை வாரி இறைத்தாள். அதனால் அவன் கடுமையாகக் கதறிப் புலம்பி ஊர்க்கெல்லாம் கேட்குமாறு கத்தினான். இச்செயல் அவள் தலைவனைக் காணுதற்குத் தடையாயிற்று. வலிய புலிக்கென அமைக்கப் பெற்ற வலையிலே, சிறு நரி அகப்பட்டது போல நகைப்பிற்கு இடமான நிகழ்ச்சியாயிற்று. நள்ளிரவிற் பெய்யுமழை பயிர்களுக்கு மிக நன்மையாம் எனச் சங்கப் பாட்டு ஒன்று சாற்றுகின்றது. ஏரி குளங்கள் வறண்டு போயின; நெற்பயிர் கருக்கொண்டு வாட்டமாய் நிற்கின்றது; அந்நிலையில் நள்ளிரவில் நல்ல மழை பொழிகின்றது. அம்மழைப் பொழிவு பிரிந்து சென்ற கணவன் மீண்டு வந்து தலைவியோடு கூடிய இன்பத்திற்கு ஒப்பானது என்று கூறுகின்றது அது. நள்ளிரவு அமைதிப் பொழுதேயாயினும் யாமங் காவலர் உலாவி வருவர்; நாய் குரைத்துத் திரியும்; அன்றிற் பறவை ஒலியெழுப்பிப் பிரிந்தவர்க்குப் பெருந்துயரூட்டும்; சேற்றிலே நின்ற எருமை அதனை வெறுத்து ஐ யெனக் கரையும்; வீட்டெலியாகிய உணவைத் தேடும் கூகை குழறும் - இவை நள்ளிரவின் நாட்டுக் காட்சிகளுள் சில. மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் பாம்பு இரை தேடும். ஈயற்புற்றில் இருக்கும் புற்றாஞ் சோற்றைத் தின்னக் கரடி கைந்நீட்டும். ஆங்குக் குடியிருந்த பாம்பு கரடியின் கைபட்டு அழியும். புற்றின் மேல் இருந்த மின்மினிகள் பறக்கும். களிற்றிரை தப்பிய புலி கடுக உலவும். இவை காட்டுக் காட்சிகளுள் சில. நள்ளிரவுப் பொழுதில் ஒரு சேவல் கூவுகின்றது. அதனைக் கேட்ட தலைவிக்கு உண்டாகிய சீற்றத்திற்கு அளவே இல்லை. நெடுநாள் பிரிந்து அன்று வந்த தலைவன் அன்பை நெடும் பொழுது பெறாமல், கெடும்படி செய்து விட்ட சேவலின் கொடுமையை எண்ணிக் குமைந்தாள். சிவந்த கொண்டையை உடைய சேவலே! இனிய உறக்கத்தில் இருந்து என்னை எழுப்பினை நீ! ஆதலால் நள்ளிரவில் வீட்டு எலியைத் தின்னுதற்குத் திரியும் காட்டுப் பூனையின் குட்டிக்கு இரையாகித் துன்பப்படுவாயாக என்றாள். தன் இன்பத்துக்கு இடையூறு செய்ததற்காகச் சேவல் இறந்தொழிய வேண்டுமாம்! என்ன கடுமையான சாவம்! நள்ளிரவு தந்த வன்மொழி இது; மென் மொழி ஒன்றைக் கேட்போம். தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வருகின்றான். அவன் வரும் வழியில் காரிருள் கப்பிக் கிடக்கிறது. கடுமழை பொழிகிறது; காட்டாறு குறுக்கிடுகிறது; களிறு முதலியவை பிளிறித் திரிகின்றன; கரடி முதலிய கடுவிலங்குகள் உலாவு கின்றன; கரடுமுரடான வழி அது. ஆகலின் தலைவி தன் தோழியிடம் சொல்கின்றாள்; தோழி! யானை முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பு போன்ற சிறிய மலை வழியின் நள்ளிருளில் தலைவன் வருகிறான். ஆதலால் அவன் அடி வைக்கும் இடத்தைப் பார்த்துப் பார்த்துத் தாங்கித் தாங்கிச் சென்றது என் நெஞ்சு! இஃது என்னையோ? தலைவன் திருவடிகளைத் தாங்கும் தாமரைத் திரு மலராகத் தலைவி தன் நெஞ்சைப் படைத்துக் கூறும் அருமை மிக அருமையாம். இத்தகு அருமையுணர்வுகளை வழங்கும் நள்ளிரவை, வாழிய இரவே, வாழிய, ஊழி ஊழியிவ் வுலகின் மேவியே என வாழ்த்தும் பரிதிமாற் கலைஞருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோமாக. 7. சேற்றில் செந்தாமரை பேருந்திலே வந்து கொண்டிருந்தேன்; அது நகருந்து. அதன் ஓட்டுநர் தம் கடமை முடித்து அவ்வண்டியிலே மீள்கிறார். என் நண்பர்; என் அருகே இடமிருந்தும் இருக்க நாணி நின்றார். இருங்கள் என்றேன்; உடையழுக்காக இருக்கிறது என்றார்; நாங்கள் வெளுப்பாக இருக்க நீங்கள் அழுக்காக இருக்கிறீர்கள், அமருங்கள் எனக் கையைப் பிடித்து அமர்த்தினேன்; அமர்ந்தார். அவர் படைத்துறையில் பணியாற்றி ஓய்வு கொண்டு இயக்கூர்தித் துறையில் பணியேற்றவர். அவர்க்குப் பழைய செய்திகள் நினைவோடின. பாகித்தான்- இந்தியப் போர் நடந்த காலையில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி சொன்னால், அச்செய்தி எவ்வளவு முதன்மைப் பட்டதாயினும் உடனே வெளிப்பட்டது. இந்தியும் அவ்வாறே வெளிப்பட்டது. சிலர் உள்ளாளாய், உறவாளாய் இருந்து கொண்டு, உளவாளாய்ப் பணி செய்தமை புலப்பட்டது. அதனால், நாங்கள் சிலர் கலந்து பேசி ஒரு கருத்துத் தெரி வித்தோம். அது, தமிழைப் பயன்படுத்துக என்பது. இயல்பாகக் கட்டளையிடும் இடத்தும், பெறும் இடத்தும் தமிழறிந்தவர் இருந்தனர். அதனால், சிக்கல் எதுவும் இல்லாமல் செய்தி தரப் பட்டது. அச்செய்திகள் உளவாளிகளால் அறியக் கூடாதனவாக அமைந்தமையால் அதன் மறைநிலை காக்கப்பட்டது! பின்னர்த் தொடர்ந்து பயன்படுத்தினர் என்றார். மிக அரிய செய்தியைக் கேட்ட மன நிறைவு இருந்தது. மேலும் தொடர்ந்தார்; தமிழ் வேந்தர்கள் வில், கயல், புலி பொறித்த செய்தியை நீங்கள் இலக்கியக் கூட்டங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். நூல்களில் இருந்தும் சான்று காட்டியுள்ளீர்கள். அது புனைவுச் செய்தி இல்லை. மெய்ச் செய்தி சோலாபாசு என ஒரு கணவாய் உள்ளது. மீனா மார்க் சேர்னா மார்க் கர்கான் மார்க் என்னும் பெயருடன் இமய மலைப்பகுதியில் ஊர்கள் உள்ளன. சோலா பாசு- சோழ கணவாய்; மீனா மார்க் - மீன்குறி பொறித்த இடம்; சேர்னா மார்க்- சேரர் குறியாம் விற்பொறித்த இடம்; கர்கான் மார்க்- கரிகாலன் புலி பொறித்த இடம் என்றார். வியப்புற்றேன். சங்கச் சான்றோர், இளங்கோவடிகளார், சயங்கொண்டார் முதலியோர் கூறியுள்ள இமயப் படையெடுப்புச் செய்திகள் மின்னலிட்டன. அழுக்கில் இருந்து தானே அருநிதியத்தை அரித் தெடுக்க வேண்டியுள்ளது! சேற்றில் தானே செந்தாமரையும் செந்நெல்லும் தோன்றுகின்றன. அழுக்கு சொன்ன உரை வெளுப்புக்கு எத்தகு பயன்? அன்பர் விடைபெற்றுக் கொண்டார். அந்த ஓட்டத்திலேயே ஆராய்ச்சித் தொகுதியை நினைத்தேன்; எடுத்துப் பார்த்தேன். சிக்கிம், திபெத்துக்கு இடையே எல்லையாய், நிற்கும் மலைத் தொடர்க்கும் கணவாய்க்கும் சோழ மலைத் தொடர் (Chole range), சோழர் கணவாய் (Chole pass) என்பன பெயர்கள். அப்பெயர்களே இன்றும் வழங்குகின்றன. சோல (Chloa) என்பதற்குச் சிக்கிம் திபெத்து மொழிகளில் வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. லா என்பதற்குத் திபெத்து மொழிகளில் கணவாய் என்ற பொருளுண்டு. நதுலா (Natule) செலப் - லா (Jelap la) எனக் காண்க. ஆனால் சோல (Chola) என்பது அவ்வாறு இரு சொல்லுடையதன்றி ஒரு சொல்லாகவே மலைக்கு வழங்கி வருவதும், அச்சொற்கு வேறு நேர் பொருள் காணாமையும் நோக்கத் தக்கன என்னும் ஆராய்ச்சித் தொகுதிச் செய்திகள் (அறிஞர் மு. இராகவையங்கார்) பளிச்சிடலாயின. எத்தனை எத்தனை வரலாற்றுச் செய்திகள் மறக்கப் பட்டுள்ளன. மறைக்கப்பட்டுள்ளன. தடங்கண்டும் இடங் கண்டும் போகும் முனைப்பும் முயற்சியும் இல்லாமல் - நிறுவிக் காட்டும் நிலையை மேற்கொள்ளாமல் பொய்யாய் - புனைவாய் - போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு, கடனாற்றும் அரசு தோன்றுமா? அறிஞர் தோன்றுவரா? தமிழ் நாட்டுச் செல்வர்க்கு உணர்ச்சி ஏற்பட்டு உதவிக்குத் துணையாவரா? இவ்வேக்கம் தான் கைப் பொருளாகக் கழிந்துபடுமா? 8. புண்படுத்தவா? பண்படுத்தவா? வழியே போகின்றோம்! கால்விரல், வழியே கிடந்த கல்மேல் பட்டுக் குருதி கொட்டிவிட நேர்கின்றது. புண்ணாகியும் போகின்றது; கல் நம்மைப் புண்படுத்தி விட்டதாக நினைக்கிறோம்; கல் புண்படுத்திவிட்டதா? நாம்தான் நம்மைப் புண்படுத்திக் கொண்டோமா? கல் நம்மைத் தேடி வந்து இடித்ததா? தேடிவந்து - ஓடி வந்து - ஏன் கூடிவந்து துன்புறுத்தும் இயல் கல்லுக்கு உண்டா? வெறி கொண்ட மாந்தனுக்கு ஈதுண்டே அன்றி இத்தீதுண்டோ கல்லுக்கு? கல்லுக்கு உயிர் இருந்தால் அன்றோ உணர்வும், விருப்பும், வெறுப்பும், பகையும், காழ்ப்பும், நடுக்கும், நலிப்பும் உண்டாம்! திட்டமிட்டு இடித்துப் புண்படுத்த என்னவுண்டு கல்லுக்கு? நாமே அதன் மேல் இடித்துப் புண்படுத்திக் கொண்டு அதன்மேல் எளிமையாகப் பழியைப் போட்டு விடுகிறோம். அடிப்படையே தவறாக இருக்கும் போது முடிப்படை எப்படிச் செவ்வையாக இருக்கும்? நம் குற்றத்தைக் கல்மேல் மட்டும் தானா சுமத்தி அமைகின்றோம். எண்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனை பழிகளைப் பிறர்மேல் பிறவற்றின் மேல் போட்டு விட்டுத் தப்பப் பார்க்கிறோம்! பிறர்மேல் பழி போட்டுப் போட்டே பழகி விட்டால் பழக்கமாகவே போய்விடும் அல்லவோ? அதனைச் சிந்திக்கும் எண்ணமும் உண்டாகாதே! உரிய பொழுதில் வண்டிக்குப் போக முடியாததை நம் தவறாக ஏற்கிறோமா? வண்டி முந்திவிட்டது என்பது எவ்வளவு எளிய பழி? நான் காலத்தில் வரத்தவறி விட்டேன். என்று நான் நினை யாதவாறு நான் எப்படிக் காலக்கடைப் பிடியைக் கொள்வேன்? நினைவிலே இல்லாத ஒன்றை நேரில் காட்ட முடியுமா? கல் புண்படுத்தியது என்று நினைப்பதை மாற்றிக், கல் பண்படுத்தியது என்று நினைக்கலாமே! பயனேனும் உண்டே! பண்படுத்தியது என்று எப்படி நினைப்பது! சிந்தித்து எடுத்துக் கொண்டால் பண்படுத்தியது என்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன! பார்த்துப்போ எனக் கல் என்னை எச்சரிக்கிறது என்பது முதல் பண்படுத்தம்! ஒதுங்கிப்போ எனக் கட்டளையிடுகின்றது என்று தெளிவது இரண்டாம் பண்படுத்தம்! உன்னைப் போலவே பாராமல் வருபவன் இடித்துப் புண்ணாக்கிக் கொள்வான். அவனுக்கு அப்புண்பாடு வாராமல் இருக்க என்னை வழியில் இருந்து எடுத்து அப்பால் போட்டு விட்டுப் போ என்று வழிப்படுத்துவதாக உறுதிப்படுத்துவது மூன்றாம் பண்படுத்தம்! இப்படி நினைக்க வருமா? சிந்திக்க வருமா? செயல்பட வருமா? வந்தால் தன்குறைகள் பெரிதும் குறைவதுடன் பிறர் குறையே காணும் பெருங்குறையும் படிப்படியே குறையும்! அடிப்படைச் சிந்தனையாக இஃது அமையக் கூடாதா? புண்படுத்தாத கல்லைப் புண்படுத்தியது என்று பழி போடுவதைப் பார்க்கிலும், பண்படுத்தியது என்று நினைத்தால் நமக்கும் நன்மை! பிறர்க்கும் நன்மை! மிதி கல்லாக இருந்தது மதி கல்லாக மாறிப்புக்கு மணிமுடி வைக்கத் தக்க வயிரக் கல்லாம் வாழ்வைப் பெற்று விடுமே; வழியே கிடந்த அக்கல், வளவாழ்வு பெறக் கூடாதா? கல் கற்பிக்காத கல்வியா கல்வி? கல்லில் இருந்து பிறந்ததே கல்வியும் கல்லுதலும் கலையும் கற்பும் பிற பிறவும்! வழியில் நின் காலடியில் கிடந்த யான், கலை வல்லான் கையிற் படின், நீ கையெடுத்து வழிபடும் தெய்வச் சிலையாக மாறி விடுவேன் இல்லையா? என்று அஃது எமக்கு நினைவுறுத்தும் பண்படுத்தமாக ஏன் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது? கல்லால் கல்லார், கல்லார். தலையாய கல்லாருள் கல்லார் அவர் என்று சுட்டுகிறதா கல்? அன்றிக் கல் கல் - என ஏவுகிறதா கல்? நாம் கற்போமே! அதன்படி நிற்போமே! 9. அந்த உணர்வு எங்கே? நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பு மிகுதி. வாழ்வையே, மனம்போல வாழ்வு என்பர். திருமணத்தை, இருமனம் கூடினால் திருமணம் என்பர். நெஞ்சே நேரான சான்று என்பதை, நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை என்பர். பொய் கூறுதலை விலக்குவாரும், நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா என்பர். btW§ fšÉíilatid ‘beŠáy¡fz« m¿ahjt‹ gŠry¡fz« m¿ªJ« gabd‹? என இழித்துரைப்பர். அழகாவது நெஞ்சத்து அழகே என அழகினை அறுதியிட்டு உரைப்பர். நீதியை வேண்டுவாரும், நெஞ்சிலே கை வைத்துக் கூறு என்று ஆணையிடுவர். நெஞ்சினால் பிழைப்பிலாள் எனப் பாவக் கழுவாய்க்கு நெஞ்சு உதவுதலையும் கூறுவர். மெய்யுணர்வுப் பெருக்கால், நெஞ்சம் பெருங்கோயிலாகக் கண்டு நெஞ்சம் உமக்கே என இறைவனுக்குப் படையலாக்கி இறைஞ்சுவர். இன்னவையெல்லாம் உலகம் நெஞ்சுக்குத் தரும் மதிப்பின் வெளிப்பாடுகளேயாம். ஆனால் பலர் வாழ்வில், நெஞ்சு என்ப தொன்றுண்டோ என்பது வினாவாகவேயுள்ளது. சுடுசோற்றை அள்ளினாள் ஒரு தலைவி; அள்ளியதை அப்படியே தட்டத்தில் போட்டாள். ஏன்? கைசுட்டு விட்டதா? இல்லை. சுடு நெருப்பிலே சோறாக்கிச் சுடச்சுட வடித்துச், சூட்டிலே இறக்கிச் சுவைப்படுத்தத் தேர்ந்த அவள் கை, சூட்டைத் தாங்காமலா போய்விடும்? சோறு கையைச் சுடவில்லை! நெஞ்சைச் சுட்டு விடுமாம் அப் பஞ்சின் மெல்லியலாளுக்கு! நெஞ்சச் சூடு, அவள் நெஞ்சங் கவர் கள்வனாகி நெஞ்சிலே வீற்றிருக்கும், நேயக் காதலனைச் சுட்டு விடுமாம்! அவன் வெந்துவிடக் கூடாதே என நொந்து உண்ணவில்லையாம்! வள்ளுவர் வரைந்த நெஞ்சக் காதல் கொஞ்சிக் குலவும் ஓவியங்களுள் ஈதொன்று! அவன் எழுதுகிறான் ஓர் ஓவியம்; சுவரிலா? இரட்டுத் துணியிலா? தாளிலா? இல்லை. உள்ளத் திரையில் எழுதுகிறான். தண்ணீர் வண்ணமோ எண்ணெய் வண்ணமோ எடாமல் தண்ணிய எண்ண வண்ணம் ததும்ப எழுதுகிறான் ஓவியம். எழுதுவதும் எப்படி? அழகு என்றால் அழகு இதுவே அழகு என்று சொக்குமாறு அந்தச் சொக்கன், சொக்கியை எழுதுகிறான்! அப்படிச் சொக்குப்பொடி போட்டு மயக்கி இருக்கிறாள் அவள். எழுதப் பெற்ற ஓவியம் எவருக்கோ எழுதப் பெற்றதோ? இல்லை! அவனுக்கு என்றே எழுதப் பெற்றது! அதனையும் மூடி மறைத்துப் பொதிந்து வைத்துக் கொள்ளாமல் இமைத்த கண் மூடாமல் இமையா நாட்டப் பெரியோனாய் நோக்கிக் கொண்டிருத்தற்கே எழுதுகிறான். சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை சிரிக்குமா? ஓவியத்தில் உள்ளவள் ஓடி ஆடிக் களிப்பாளா, அவள் உயிர் ஓவியமாகத் திகழ்கிறாள் ஆகலின் காண்கிறாள்; களிக்கிறாள்; நோக்குகிறாள்; நோக்கெதிர் நோக்குகிறாள்; தாக்கணங்காக விளங்குகிறாள் அவள், ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமாகத் திகழ்கிறாள். குமரகுருபரர் குறித்த தெய்வக் காதல் நெஞ்ச ஓவியங்களுள் ஈதொன்று. நெஞ்சம் காதலுக்குத்தானா உறையுள்? சிலர் கொண்டுள்ள சீரிய நட்பு, செவ்விய காதலையும் வென்று விடுமோ? காதல், பருவ ஒற்றுமை, பால் வேற்றுமை இவற்றிடையே அரும்பி வளர்வது. நட்போ, பருவ வேற்றுமை பால் ஒற்றுமை இவற்றிடையேயும் இனிதின் அரும்பி இலங்கும் இயல்பினது. காதலோ, புலக் குறும்புக்கு ஓரளவேனும் இடந் தாராது ஒழிவது இல்லை. ஆனால் நட்போ, புலக்குறும்பு புகுதலும் அறியாப் புனிதத்தில் ஓங்குவது. இவற்றால், காதலையும் வெற்றி கொண்டு விடுமோ கனிந்த நட்பு? இயற்கைக் காதலும் இனிய நட்பும் முரண்படுபவை போலத் தோன்றினும் இணையானவையே! நட்பு, காதலாம்; காதல் நட்பாம்; புறப்படும் இடம், போகும் வழி இவற்றால் சிலச் சில வேறுபாடுகள் இருப்பினும் முடிவில் இரண்டும் ஒன்றானவையே! இத்தகையதை நட்புக் காதல் என்பதா? காதல் நட்பு என்பதா? எப்படியுரைப்பினும் ஒப்புக்கொள்பவை அவை. உயர்வற உயர்ந்த ஒரு நட்புக் காதல் : சென்னை நகரின் ஒரு பகுதி நுங்கன் பாக்கம். அது நுங்கன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்ததோர் ஊர். சங்க நாளில் வேங்கட மலைப் பகுதியைப் பாங்குடன் ஆட்சி செய்த வேந்தருள் ஒருவன் நுங்கன். அவன் தந்தை ஆதன். ஆகலின் அவனைச் சான்றோர் ஆதனுங்கன் என்றனர். ஆதனுங்கன் அருங்கொடையாளன். அறிவறிந்த பண்பாளன்; புலவர் தோழமைப் புகழாளன். அவன் பண்பிலே ஊன்றிப் பாடிய புலவர் ஆத்திரையன் என்பார். அவர் கள்ளில் என்னும் ஊரினர். ஆகலின் கள்ளில் ஆத்திரையனார் எனப் பெற்றார். ஆத்திரையனார் ஆதனுங்கனை ஒருகால் கண்டார்; களிப்புற்றார். அவனோ பிரிதல் அறியாப் பெருவிருப்பாளனாகத் தோன்றினான். அவன் விரும்பும் விழுமிய அன்பும் புலவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அவனை, நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து மகிழ்ந்தார். உள்ளுதோறும் உள்ளுதோறும் உவகை ஊற்றெடுக்க உறவாடினார்; உரிமை அன்பு நோக்கி உருகினார். அந்நிலையில் ஆதனுங்கன் எம்மை உள்ளுமோ (எம்மை நினைப்பிரோ) என வினாவினான். அவ் வினாவினால், புலவர் வியப்பும் விம்மிதமும் ஒருங்கே எய்தினார். வேந்தே! நின்னை நினைப்பது எப்படி? நின்னை மறந்தால் அன்றோ நினைக்க முடியும்? மன்னவ! நுண்ணிய கருவி கொண்டு என் நெஞ்சைத் திறந்து காணவல்லார் ஒருவர் உளராயின், அவர் அங்கே என்ன காண்பார் என்பதை அறிவையோ? நின்னையே காண்பர். இன்னுங் கேள். v‹ÅD« vd¡F ïÅatnd!, நீ வினாவியது போல் நின்னை மறப்பேன்; ஆம். மறப்பேன். என் உயிர் என் உடலினின்றும் பிரியும்போது கூட என் நினைவு உள்ளவரை நின்னை மறவேன். என்னை மறந்து போவேன் ஆயின், அண்ணலே, என் செய்வேன்! அப் பொழுதே மறப்பேன்! இரங்கத்தக்க அந்நிலையிலே என் செயலாவது என்னே! இயம்புவாயாக என்றார். எந்தை வாழி ஆத னுங்கவென் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென் (புறம். 175) என்பது ஆத்திரையனார் வாக்கு. அரசன் ஆதனுங்கன், புலவன் ஆத்திரையன்; புரவலன் ஒருவன், இரவலன் ஒருவன்; மாடமாளிகைக்குரியவன் ஒருவன், கூரைக் குடிசைக்குரியவன் ஒருவன்; அண்ணல் யானை அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையாளன் ஒருவன், ஏடு எழுத்தாணி கொண்டு பாடு தொழிலாளன் ஒருவன்; இரைவேட்டெழுந்த புலி போன்ற இயல்பாளன் ஒருவன்; கலைந்தோடும் மான் போன்ற தன்மையாளன் ஒருவன்; செல்வம் செல்வாக்கு, பட்டம் பதவி, பழக்க வழக்கம் இவற்றால் அமைந்த இடைவெளி பெரிதாயினும், நட்புரிமை அவற்றை அகற்றி நெஞ்சந்திறக்கும் நெருக்கத்தை அமைத்துவிட்டது! இத்தன்மை எதற்கு உண்டு? காதல் நட்புக்கே உண்டு. அந்த உணர்வு எங்கே? v§nf? என்று அலமர வைக்கிறது இன்றைய உலகம்! வஞ்சமின்றி நெஞ்சத் திறந்து பழகும் நண்பர் எத்துணைப் பேர்! ஒவ்வொரு கோலம், ஒவ்வொரு நோக்கு, ஒவ்வொரு போக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, உள்ளொன்று புறம்பொன்றாம் நடிப்பு, உண்மையல்லாப் பசப்பு - இவற்றால் உருண்டு வரும் நட்புலகில் என் நெஞ்சந் திறப்போர் நிற்காண்குவர் என்னும் அந்த உணர்வு வாழ்வைத் தேடிக் கண்டலும் எளிதோ? நெஞ்சால் வாழ்ந்த அந்த வாழ்வு எங்கே? அந்த வாழ்வும் வருமோ? வாழ்க! நெடிது வாழ்க; பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க; ஆல்போல் படர்ந்து அரசு போல் துளிர்த்து வாழ்க; நூற்றிதழ்த் தாமரை போல வாழ்க; மழைத் துளியினும் மணற்பெருக்கினும் மல்கி வாழ்க என்று பற் பலவாறாக வாழ்த்து உரைப்பதைக் கேட்டுள்ளோம். வாழ்த்துரை ஒருவரை வாழ வைக்குமா? வாழ வைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மணவாழ்த்து முதல் எத் துணையோ வாழ்த்துகள் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. ஆயிரம் திட்டு ஆனையையும் சாய்க்கும் என்றால், ஆயிரம் வாழ்த்து, பூனையையும் ஆனையாக்க வேண்டுமே. வாழ்த்துதலால் வாழ்த்துவோர் வாய் இனிக்கும்; கேட் போர் செவி இனிக்கும்; வாழ்த்துக்கு உரியவர் நெஞ்சு இனிக்கும். இனியவை கூறுதலே கனியெனச் சொன்னால், செவ்விய வாழ்த்துதல் ஔவையுண்ட நெல்லிக்கனி போல் அருஞ்சுவை உடையதாகும். அதனால் அன்றோ, நீலமணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே என்று ஔவையார் வாழ்த்தும் பேறு பெற்றான் அதியமான்! கனியாலா? கனி தந்த கனிவாலா? தான் வாழக் கருதாமல் தண்டமிழ் வாழ வாழும் ஔவை வாழ வேண்டும் என்ற நேய நெஞ்சுக்கு உருகி நின்று, உரைத்த வாழ்த்தே இஃது. ஒழிக என்பதும் வாய்தான்! வாழ்க என்பதும் வாய்தான். வாய்க்கு மணம் தருவது எது? ஒழிகவா? வாழ்கவா? மணம் தருவதைச்சொல்க; சொல்ல முடியவில்லையா? மணம் தராததைச் சொல்லாமலேனும் விடுக! அடியாமல் விட்டு விட்டால், தானே படுத்து விடும் பந்து! ஆட்டாமல் விட்டு விட்டால், தானே நின்று போகும் ஊசல்! நேரில் காண்பதை நிகழ்த்திக் காட்டுவது தானே முறை! முதியவர் இளையரை வாழ்த்துவதா? இளையன் முதியரை வாழ்த்துவதா, யாரை யார் வாழ்த்துவது? இளையவர் முதியரை வணங்குவதும், முதியர் இளையரை வாழ்த்துவதும் வழக்கம். அதற்காக இளையர் முதியரை வாழ்த்துதல் கூடாது எனின் முறையன்றாம். உலகைப் படைத்த ஒருவனை வாழ்த்துகிறோம். அதற்குப் பெயரே கடவுள் வாழ்த்து! நாம் வாழ அவனை வாழ்த்துகிறோம்! அவ்வாறே, பெருமக்களும் நல்லோரும் வாழ்த்தப் பெறுவதால், பெருமையும் நன்மையும் வாழ்த்தப் பெற்று, நமக்கே நன்மை தருவதாம்! பன்னீரை இறைத்தால் இறைப்பவனுக்கு மணவாதா? சந்தனம் பூசிவிட்டால், பூசி விடுபவனுக்கு மணவாதா? வாழ்த்துக்கு அடிப்படை உள்ளார்ந்த அன்பு. அவ்வன்புடை யோர் எவரையும் வாழ்த்தலாம். அவ் வாழ்த்து இருபாலும் இன்பம் சேர்க்கும். வாழ்த்தின் நோக்கம். எதையேனும் எதிர் நோக்குவது அன்று. அது கிடைக்கும் இது கிடைக்கும் என எதிர் பார்த்து வாழ்த்தும் வாழ்த்து, உண்மை வாழ்த்து அன்று! ஏமாற்று வேலை! பூசிப் பசப்பி ஏசிக் கழிக்கும் வேலை! வாழ்த்தின் நோக்கு வாழ்த்துதல் ஒன்றே! கையசைவே வாழ்த்தா? வாயசைவே வாழ்த்தா? கண்ணசைவே வாழ்த்தா? எதுவானால் என்ன? வாழ்த்துவார் நெஞ்சம் வாழ்த்தப் பெறுவார் நெஞ்சுக்கு நிறைவு செய்வதாய் அமைய வேண்டும். அவ்வளவே! மணிக்கணக்காக வாழ்த்தும் வாழ்த்தில் உண்டாகும் உள்ள உருக்கத்தினும், மணித்துளிப் பொழுது வாழ்த்தும் வாழ்த்திலே, உருக்கம் மிக்கிருப்பது இல்லையா? அதனினும் கண்மணியசையும் ஓர் அசைவிலே உண்மை உருக்கம் வெளிப்பட்டுவிடுவது இல்லையா? வாழ்த்தின் மதிப்பீடு நெஞ்சத்து அளவேயன்றி, வேறு அளவு இன்று. இதோ, ஒரு வாழ்த்து; நெடுங்காலத்துக்கு முற்பட்ட வாழ்த்து. ஆனால், காலத்தை வென்று இருக்கும் பசுமையாகத் திகழும் வாழ்த்து. வாழ்த்துபவன் முடியுடை வேந்தன்; வாழ்த்துப் பெறுபவன் அவன் குடிபடைகளுள் ஒருவன். வாழ்த்துபவன் போரேர் உழவன்; வாழ்த்துப் பெறுபவன் சீரேர் உழவன்; வாழ்த்துபவன் மதிலும் கோட்டையும் மாடமும் கூடமும் மலிந்த மாநகராளி. வாழ்த்துப் பெறுபவன் வயலும், சோலையும், தோட்டமும், துரவும் சூழ்ந்த சிறு குடியாளி. இத்தனை வேறுபாடுகள் இருப்பினும் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பிறக்கிறது. நெஞ்சுக்கு வேண்டுவது உண்மை! உண்மை கண்ட இடத்து, நெஞ்சு, கொஞ்சி விளையாடுவதும் உண்மை! பெருநடை நடந்து சிறு குடியை நெருங்குகிறான் வேந்தன். செல்லும் வழியில் முட்ட நிரம்பிய வயிற்றொடு, கிட்ட நெருங்கி வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் அகத்து மகிழ்ச்சி முகத்து வெளிப்படுகிறது. அவர்கள் பாடிப் பிழைக்கும் பாணர்கள்! பாணர்களை நோக்கிய அதே பொழுதில் ஓர் அரவம் வேந்தன் செவியில் கேட்கிறது! முட்டைகளைத் தூக்கிக் கொண்டு, திட்டை மேலே ஏறும் எறும்பு வரிசைகள் போலச் சோற்றுக் கலங்களைத் தாங்கிக்கொண்டு, இப்பாலும் அப்பாலும் வரிசை வரிசையாகச் சிறுவர்கள் செல்வதைக் காண்கிறான்! இந்த அரவம் எங்கே இருந்து வருகிறது? இச் சிறுவர்கள் எங்கிருந்து எங்கே போகிறார்கள்? நான் தேடிவரும் சிறுகுடி அணித்தே தோன்றும் இவ்வூரோ? அன்றி வேறோர் ஊரோ? எனத் திகைக்கிறான்! அவன் திகைப்பை வினாவாக்கிப் பாணர்களிடம் கேட்கிறான். தான் பார்க்க வந்த பண்ணன் சிறுகுடி ஈதே என்றும் பண்ணன் வழங்கிய உணவை உண்டு மகிழ்வார் ஒலியும், கொண்டு செல்வார் வரிசையுமே தான் கேட்பதும் காண்பதும் என்றும் அறிந்து கொள்கிறான். நாட்டின் பசியும், பிணியும் பகையும் நலிவும் இல்லாமல் காக்க வேண்டுவது காவலனாம் என் கடன்! என் கடமை என்னைப் பார்க்கிலும் இவனல்லவோ நன்றாகச் செய்கின்றான். என் கடனை நானே செய்தலில் என்ன சிறப்பு இருக்கிறது? என் கடமையைச் செய்தேன் என்ற அளவில் ஓர் நிறைவு. அவ்வளவே. ஆனால், இவன் செய்வதோ, உயிர் இரக்கம் ஒன்றாலே செய்யும் உயர்வற உயர்ந்த உயர் செயல்! இவனன்றோ உலகை வாழ வைப்பவன்? வாழவைப்பதற்காக நெடிது வாழ வேண்டியவன்? பண்ணன்! ஆ! ஆ! பண்ணன்! இப்பெயர் எத்துணைப் பேர் இசைத்து மகிழ்ந்த பெயர்! இசைந்து வழங்கிய பெயர்! இசை எவரையும் இசைய வைப்பது! இவ்விசையாளன் தன் இனிய கொடையால், இசை போலவே எவரையும் இசைய வைத்துள்ளான்! பண் அன்னவனை எப்பெயரால் அழைப்பது? பண்ணன் என்பதே தகும் நல்லவற்றைத் தேர்ந்து தேர்ந்து பண்ணும் நல்லோனைப் பண்ணன் என்றது எத்தகைய பொருத்தம்! பண்ணன் வாழ்க! பண்ணவன் வாழ்க! பண்ணையாளனாம் இவன் வாழ்க! மருத்துவர் என்ன செய்கிறார்? உடற்பிணியைத் தீர்க்கிறார். அப்பிணி தீர்ந்தார்க்கும், பின் இல்லார்க்கும் தீராப் பிணியாக இருப்பது ஒரு பிணி, அது பசிப்பிணி! பசிப்பிணி, பாழ்ங் கொடும்பாவி! அப் பாவியின் பிடியில் சிக்கியோர் எய்தும் துயர்க்கு அளவில்லை; கேட்டுக்கும் அளவில்லை. ஆதலால் பசிப்பிணி தீர்ப்போர் அறவோர்; அவர் பிறரையும் அறவோர் ஆக்கும் பெருந்தகையன். ஆனால் அவர் பணி, சோம்பர்களையும் மடையர்களையும் ஆக்குவது அன்று; அத் திருப்புகழ்ப் பணியைத் தெளிவில்லாதார் செய்யின் சட்டி தூக்கிச் சாய்ந் துறங்கும் கூட்டமே பெருக்கெடுக்கும்! நாட்டைக் கெடுக்கும்; இவன் பணி அத்தகைத் தன்று; உண்மையில் வாடுவோர்க்கு - உழைத்து உருக்குலைவோருக்கு உயிர் இரக்கத்தால் உதவும் பணி! ஆதலால் பசிப்பிணி மருத்துவனாம் இப்பண்ணன் வாழ்வானாக! ‘ÚLthœf! என்பேனா? வாழ்த்து என்பதே அது தானே! காவலன் கடமையை ஆவலுடன் தாங்கிக் கண்ணெனப் போற்றும் இவன், ஒரு சிறந்த காவலன்! ஆதலால் காவலனாம் என் வாழ்நாளையும் இவனே எடுத்துக்கொண்டு நெடுங்காலம் வாழ வேண்டும். ‘v‹ thœehŸ v¤Jiz? எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றை எல்லாம் ஒருங்கே வழங்க உடன்பாடு கொள்கிறது என் ஆர்வம்! என்னால் கூறுவது அதுவே. இதனை நன்றியுணர்வால் யான் கூறுகிறேன் என்பது இல்லை : நாட்டு வேந்தனாம் நான் பட்டுள்ள தீராக்கடனைத் தீர்ப்பதற்காகக் கூறுகிறேன்! என் வாழ்நாளையும் இவன் கொண்டு வாழ்வானாக! யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய ஒருவன் தன் வாழ்நாளை மற்றொருவனுக்குத் தந்து வாழ வைக்கவும் முடியுமா? முடியும் என ஓரிரு சான்று காட்டுவார் காட்டுக! முடியாது எனக் கூறுவார் கூறுக! நெஞ்சார்ந்த உணர்வோடு தருதற்கு, முந்து வந்து நின்றானே அந்த வேந்தன்! அந்த உணர்வு எளிதில் காணக் கூடியதோ? உடலுக்கு மெய் என்பது ஒரு பெயர். பொய்யாய் ஒழிவதைத் தன் எண்ணத்தாலும், சொல்லாலும், மெய்யாக்கும் மேன்மைக்கு இடமாக இருக்கும் அது பொய்யோ? மெய்யேயாம்! அந்த மெய்யைப் போற்றிய மெய்யன் - சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - உணர்வு எங்கே? வாழ்வோர் வாழ வாழ்பவனுக்குத் தன் வாழ்வையே தர வழி நடந்து வந்து வாழ்த்துரைத்த உணர்வு எங்கே? எளிதில் காணக் கூடுவதோ? தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருள் கண்டனர் முன்னையோர். அக் காட்சி, தேன், பால், அமுது என்றும், இணையிலா இன்ப வீடு என்றும் அதற்குப் பொருள் விரித்துக் கொஞ்சி மகிழப் புலவோரைத் தூண்டியது. தமிழர் என்பதற்கும் இனியர் என்னும் பொருள் கிளர்ந்தது. தமிழ் தழீஇய சாயலவர் என விளக்கினார் திருத்தக்கதேவர் (சீவக. 2026). வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரை யைக் காட்டினார் கம்பர்! (கிட். 28) தமிழ் இனியர் என்பதற்குச் சான்று என்ன? அவர் தம் சாயலே - பாட்டே - நாகரிகமே - வாழ்வே - இனியர் என்பதை நிறுவும் சான்று! தமிழர் இனியர் என்பதற்கு வாழ்வுச் சான்று மல்குநிலையில்தான், பெருமையுண்டு; பேறும் உண்டு! இன் றேல் போலிப் புகழும், பொருந்தா உரையுமாய்ப் போயொழியும்! கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - (திருக். 984) இது வள்ளுவர் கண்ட தமிழினியர் தகைமை; வயல்வரப்பில் அமைந்த வளையுள், நந்தும் அலவனும் உள; வன்மையாய் அடியிட்டு நடந்தால், அவை கலக்கமுற்று அஞ்சிப் பிரிந்து அகலும்; மெல்ல நடக்க என்பதும், களையாகப் பறித்து வரப்பிலே போடப்பெற்ற குவளை அல்லிக் கொடிகளில் உள்ள பூக்களின் மேல் அடி வைக்காமல் செல்க; ஆங்குள்ள தேனை அருந்தப் புகுந்த வண்டுகள் அல்லல் எய்தக்கூடும் என்பதும் (சிலம்பு 10-86-93) இளங்கோவடிகள் கண்ட தமிழினியர் நெஞ்சம். ஓடும் தேரில் மணி ஒலிக்கிறது. அதனைக் கேட்டுத் துணையொடு வதியும் வண்டு அஞ்சுகிறது. அதற்கு மனம் இரங்கி மணிநா ஒலி செய்யாவாறு இறுக்கிக் கட்டிக் கொண்டு தேரைச் செலுத்துகிறான் ஒரு தலைமகன். (அகம் 4) இது குறுங்குடி மருதனார் குறிக்கும் தமிழினியர் உள்ளம். ஆடு மாடுகள் தம் உடலில் ஏற்பட்ட ஊறலை உராய்ந்து அகற்றிக் கொள்ள வேண்டுமே; மொழியறியா அவை என் செய்யும்? என ஏங்குகிறது இளகிய தமிழ் நெஞ்சம். ஆவுறிஞ்சுகுற்றியை நடைவழியில் நட்டு வைக்கிறது. இத் தமிழினிய நெஞ்சங்கள் என்ன வினாவுகின்றன? அந்த உணர்வு எங்கே? என்று வினாவுகின்றன இந்நாளில்! அந்தத் தமிழினியர் வாழ்ந்த நாளிலேயே கொள்ளும் பொருள் இல்லை எனினும் துள்ளுவதைக் கண்டு களிப்ப தற்காகவே, கொல்லும் கொடியரும் இருந்த குறிப்பும் இல்லையோ? எனின் (கலி 4) உண்டு என்பதே விடையாம்! ஆனால், அக்கொடியனைக், கல்லாக் கயவன் என்றும் கல்லாக்களிமகன் என்றும் கல்லினும் வலிய நெஞ்சக் கண்ணிலி என்றும் இடித்துரைக்கும் சான்றோர் இருந்தனரே. இன்று உளரோ அத்தகையர்? உண்மை உருக்க நெஞ்சர் உருக்கன்ன திண்ணியராய் உறுதி உரைக்கும் நிலையும் உண்டோ இந்நாளில்? சாதி, சமயம், கட்சி, இனம், தன்னலம் இன்னவற்றால் என்னென்ன கயமைகளையெல்லாம் கண்டும், காணாமல் போவதும் அவற்றை அறமே என்று பறையறைவதும், கயவரைக் கனிவோடு அரவணைத்துக் கட்டியங் கூறுவதும் நாட்டில் நடைமுறையாக உள்ளன! நான் எது செய்தாலும் சரியானது; செம்மையானது. நீ எது செய்தாலும் சரியற்றது; கொடுமை யானது என்றும் அறத்தைத்தான் கூற வேண்டும்! ஆனால் அது என் பக்கம் இருப்பதாகவே கூற வேண்டும் என்றும் ஓரஞ் சொல்வாரும் அவரை ஒட்டியிருப்பாரும் உவகை கொள்வாரும் கூட்டுறவாக நாட்டைக் குலைக்கத் துணிந்துள்ள போழ்திலே தமிழினியர் உள்ளம் நாணிக் குனியாமல் இருக்குமா? அந்த உணர்வு எங்கே? என்று வினவாமல் இருக்குமா? வஞ்சக வலை விரிப்பையே வாழ்வாகக் கொண்டவர்கள் போகட்டும், குணக்கேட்டையே கண்கண்ட கடவுளாகக் கொண்டு குலவுவார்கள் ஒழியட்டும்; கொலை செய்து புதைத்த குழியின்மேல் கொடிமுல்லை நட்டு மணங்கொள்ளும் மணவாளர்கள் நீங்கட்டும். தமிழ் வாழ்வுடைய தமிழர்க்கேனும் தகவு வேண்டாவா? அத்தகவமைந்த தமிழினியரை வணங்கல் வேண்டாவா? ஒரு தலைவன் வீரமிக்கவன்; அதே பொழுதில் ஈரமும் மிக்கவன்; வீரத்தினை எங்கு எப்படிக் காட்டவேண்டும் என்பதும் அறிவான்; ஈரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஆதலால் அவனை வீரச் சுற்றம் ஒரு பால் சூழ்ந்திருக்கும்; ஈரச் சுற்றமும் ஒருபால் இயைந்திருக்கும்: அச்சுற்றங்களுள் பிணக்கம் உண்டாக அவன் நடந்து கொண்டது இல்லை. அவர்கள் பிணங்கியதும் இல்லை. அவன் தேர்ச்சித் திறம் அவ்வாறு பாலமாக இணைத்தது. அவன் பெருநிலம் முழுதாளும் வேந்தனும் அல்லன்; குறுநிலங் காக்கும் கொற்றவனும் அல்லன்; சீறூர் தலைவனே அவன்! ஆனால் வேந்தர்களும் விரும்பும் ஏந்து புகழாளனாக இலங்கினான். பொய்யாச் செந்நாவுடைய புலவர் பெருமக்கள் புகழுக்கு இலக்காகிச் சிறந்தான்; பிட்டங் கொற்றன் என்பது அவன் பெயர். பிட்டங்கொற்றவனுக்கு இப்பெருமை எப்படி ஆயது? வாழ்வோர் வாழ வாழ்பவன் அவன் ஆதலால் புகழின் கொள்கலம் ஆனான். உலகில் எவர் இடரின்றி வாழவேண்டும்? வாழத்தக்க நல்லோர் அல்லல் எதுவும் இன்றி வாழவேண்டும். அவர் நல்வாழ்வு உலகின் நல்வாழ்வு. ஆதலால், அவர் நெடிது வாழ்தற்கு அரண்போல் அமைந்து காக்கவல்லார் கட்டாயம் வேண்டும். பிறர்க்கென வாழும் பெருநிலையர் தம்மைக் காத்துக் கொள்ளத் தாம் எண்ணார்! அத்தகையர்க்கு, நானே துணையும், காவலும், பணிவும், கடனுமாய் நின்று காத்தல் வேண்டும் என்னும் கடப்பாட்டாளன் வேண்டும். அவ்வாறு காப்பவனே வாழ்வோர் வாழ வாழ்பவன் ஆவான்! அவ்வாறு வாழ்பவன் பிட்டன் என்றால், அவன் மட்டில்லாப் புகழை மதிப்பிடக் கூடுமோ? புகழாளன் பிட்டனைப் பாடிய புலவர் பெருமக்களுள் ஒருவர் கண்ணனார். எழில்மிக்க கருநீலக்கண்ணர், அவர் காவிரிப்பூம்பட்டினத்தார். முடியுடைய மூவேந்தர் அன்பையும் ஒருபடியாகப் பெற்ற பெருமையர்! அவர் முழுப்பெயர் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பது. பிட்டன் பெரும்புகழ் கேட்டு, அவனை அண்மினார் கண்ணனார். தாம் கேட்டறிந்த புகழ் அனைத்தும் உண்மையே என்பதை உணர்ந்தார். தமக்கு அள்ளி வழங்கிய வள்ளன்மையில் ஒன்றினார். அவ்வொன்றுதல் தந்நலத்தால் ஆயதன்று; அவர்க்கு எப்படி அள்ளி அள்ளி வழங்கினானோ அவ்வாறே பிறர்க்கும் வழங்கினான்! மிகுத்தும் வழங்கினான்; இப் பெருந்தகை பிறர்க்கும் அன்னன் என்பதை உணர்ந்த பெருமிதத்தில் ஓங்கினார். இப்பொழுதும் தருகிறான்; இன்னும் சில நாள்கள் சென்று வரினும் தருவான்; அதற்குப்பின் வரினும் முன்னே தந்தேன் என்னாது பின்னும் தருவான்! போனமுறை எத் துணைக் கனிகளைத் தந்தேன் என்று கருதாமல் பின்னும் பின்னும் பருவந்தோறும் தரும் கனிமரம் போலத் தருவான்; கனி மரத்திற்குக் கூடப்பருவம் உண்டு; பருவத்தால் அன்றிப் பழாது: இவனோ பருவம் அன்றியும் பழுத்துக் குலுங்கும் பண்பாளன்; வருக வென வருந்தியழைத்து வேண்டுவார் வேண்டுவன வெல்லாம் நல்கும் விழுப்புகழ்ப் பழவோன்! இவன் நெடிது வாழ வேண்டும்; வாழ்வோர் வாழ, வாழ வேண்டும். இவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாய் முடியவேண்டும் என்று எண்ணி எண்ணி மகிழ்கிறார் கண்ணனார்! எம் தந்தை போல்வானாகிய இவனை நான் வாழ்த்துதல் வேண்டும்; எப்படி வாழ்த்துவேன் எனத் திகைத்தார் கண்ணனார். ஒரு நொடியில் ஒரு மின்னல் ஒளிக்கீற்று உள்ளொளி போல் பளிச்சிட்டது. கொல்லன் தன் கூடத்தைத் தூக்கி ஓங்கி ஓங்கி அறைகிறானே உலைக்கல் ஆகிய பட்டடையில்; அப்பட்டடை அசைகிறதா; அலுங்குகிறதா; நெளிகிறதா; நிலை சாய்கிறதா? அவ்வுலைக்கல் போன்றவன் பிட்டன்! அவன் பகைவர்களோ கொல்லுலைக் கூடம் (சம்மட்டி) போன்றவர்கள். அவனை என்செய்ய மாட்டுவர்? இப்படி எத்துணைப் பேரைக் கண்டவன் பிட்டன் என்று மருத்துவன் தாமோதரனார் என்பார் பிட்டனைப் பாடிய செய்தியை நினைத்தார்! (புறம் 170) கோசர் என்பார் ஒரு குடியினர்; வேந்தர் மரபினர்; அவர் படைப் பயிற்சிகள் சிறந்தவர். அப்பயிற்சிக்காக அகன்ற பெரிய முள் முருக்கை மரத்தைக் கம்பமாக நட்டு, அதனை இலக்காகக் கொண்டு வேல் ஏவியும், அம்பு எய்தும் பயிற்சியும் செய்வர்; அவ்வேலுக்கும் அம்புக்கும் பிற பிற படைக்கலங்களுக்கும் அடைக்கலம் தந்து தாங்கும் அம்மரம் அசைவது இல்லை; அம்மரம் போலல்லவோ பகைவர் படைக்கலங்களெல்லாம் தாங்கிய விழுப்புண்ணாளியாக விளங்குகிறான் இப்பிட்டன் என்று வியந்தார். (புறம். 193). பிட்டன் விழுப்புண் படட்டும்; நேர்த்தாக்குதலில் நெஞ்சகத்து இடமில்லையாய்ப் படைகள் துளைப்பினும் துளைக்கட்டும். ஆனால் அவன் உள்ளடியில் முள்ளும் நோவுமாறு உறாமல் இருக்கட்டும் (புறம் 171) என்று பெருமூச்சு விட்டார். பிறருக்காக வாழ்பவனுக்கு அவன் அறியாமல் - மறை முகமாக - ஒரு முள்ளும் கூட அதுவும் புறத்தடியில் உள்ளடியில் கூட - தைத்தல் - நோவுமாறு தைத்தல் - கூடாது என்னும் கொள்கைச் சிறப்பு என்னே! என்னே! இக்கொள்கையில் ஊன்றியிருந்தால். முத்த நாதனியமும் கோட்சேயியமும் இன்னபிற இயங்களும் நாட்டில் தோன்றியிருக்குமா? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கமும், வாழ்வும் தலை விரித்தாடுமா? எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்க என்று கனிவுடன் வேண்டும் காரிக்கண்ணரின் அந்த உணர்வு எங்கே? v§nf? 10. பல்சாலை முதுகுடுமி பழம் பாண்டிவேந்தர்களுள் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி என்பான். இவனைக் காரிகிழார், நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார் என்னும் சங்கச் சான்றோர்கள் பாடியுளர். அப்பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள. மதுரைக் காஞ்சியிலும் இவனைப் பற்றிய குறிப்பு உண்டு. இவ்வேந்தன் பெயர் பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி என வழங்கப்படுகிறது. இத்தொல்பழம் பாண்டி வேந்தன் பெயரில் உள்ள யாகம் என்ற சொல், அக்காலத்திலேயே வடசொல் தமிழில் புகுந்தமைக்குச் சான்றாகக் காட்டப் பெற்றும் வருகின்றது. யாகம் என்பதை வேள்வி எனப்பெயர்த்து பல் வேள்விச் சாலை முதுகுடுமி என வழங்கும் நிலையும் ஏற்பட்டது. இவ்வேந்தன் பெயரில் யாக ஒட்டு உண்டா? உண்டானால் அச்சான்று என்ன? இல்லையானால், யாக ஒட்டு எவரால் எப்படி ஒட்டியது என்பதை அறிந்து, மெய்யுணர்தல் வேண்டும். புறம் 6; காரிகிழார் பாடியது. இதில், தண்டா ஈகைத் தகைமாண் குடுமி என்கிறார். ஆனால் பாடினோர் பாடப்பட்டோர் பெயரில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார், பாடியது எனக் குறிப்புள்ளது. பாடலில் இல்லாத யாகக் குறிப்பு தொகுத்து அடைவு செய்தோரால் செறிக்கப் பட்டுள்ளது. புறம். 9; நெட்டிமையார் பாடியது. அதில், எங்கோ வாழிய குடுமி என்கிறார். ஆனால் பாடினோர் பாடப்பட்டோர் பெயரில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது எனக் குறிப்புளது. புறம். 15; இதுவும் நெட்டிமையார் பாட்டே; இதில் பெரும என விளியேயுள்ளது. ஆயின் அவன் வேள்வி முற்றிய செய்தியுள்ளது. வேள்விச் செய்தி விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. வேள்வி என்னும் ஆட்சி அன்றி யாக ஆட்சி இல்லை. ஆனால், வழக்கம் போலவே பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது எனப் பாடினோர், பாடப்பட்டோர் பெயர்க் குறிப்புளது. புறம் 64. நெடும் பல்லியத்தனார் பாடியது. இதில் குடுமிக்கோமாற் கண்டு என்கிறார். ஆனால் முன்னைப் போலவே பாடினோர், பாடப் பட்டோர் பெயரில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும் பல்லியத்தனார் பாடியது எனக் குறிப்புள்ளது. ஆக, புறப்பாடல்கள் மூன்றில் குடுமிப் பெயரை அறிகிறோம். யாகசலை எங்கும் தலைப்படவில்லை. பிற்காலத் தொகுப்பாளர் செறிப்புரையில் உண்மை அறிகிறோம். மதுரைக் காஞ்சியில், பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருமின் நெடியோன் (759-763) என்னும் செய்தியுள்ளது. இங்கும் யாகச் சொல் இல்லை. இங்குக் காட்டப்பட்ட பாடற் சான்றுகள் எவற்றிலும் யாகச் சொல் இல்லை. ஆயினும் யாகம் வந்த வகையென்ன? கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குலந்தவிர்ந்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன் எனவரும் வேள்விக்குடிச் செப்பேட்டில் யாகம் வருகின்றது. ஊரின் பெயர் வேள்விக்குடி. அதனை வழங்கியவன் பெயரில் யாகம் செறிக்கப்பட்டது. புறப்பாடலைத் தொகுத்தவர் பல்யாகசாலை என்பதைப் பயில வழங்கியதைக் கண்டோம். புறநானூற்று உரைகாரர் எவ்விடத்தும் குடுமியைப் பல் யாகசாலை முதுகுடுமி என வழங்கினார் அல்லர். மதுரைக் காஞ்சி உரையில் நச்சினார்க்கினியர், பல்சாலை முதுகுடுமி என்பதற்குப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என உரை விரிக்கின்றார். தொல்காப்பியம் கிளவியாக்கம் 26 ஆம் நூற்பாவுரையில் சேனாவரையர் பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பெயரை எடுத்துக் காட்டுகிறார். யாகம் என்ற சொல் பாடலில் இல்லாமல் இருந்தும் பின்வந்தோர் அச்சொல்லை அவன் மேல் ஏற்றியது முறைமை யாகாது. வேள்வி செய்தவன் என்பதற்காகவும் அவன் மேல் யாகச் சொல்லைச் சேரச் செய்தது முறைமையாகாது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி முதலிய பின்னூல்களிலும் யாகச் சொல் இடம் பெறாது இருக்க, தொல்மூதாளனாம் ஒரு வேந்தன் பெயரிலேயே யாகச் சொல்லை இணைத்தது, அக்கால முதலே அச் சொல் புகுந்ததையும் வடசொற் புகுதல் பழமையையும் காட்டித், தமிழ் மொழியின் தனித்தன்மையைக் கெடுக்க நினைவார்க்கு எடுத்துக் காட்டாகப் போகி விட்டது. 11. சோழன் பெருநற்கிள்ளி முன்னோருள், ஒருவர் வாழ்ந்த காலத்தைத் திட்டப் படுத்துவதற்குரிய கருவிகள் பல: அவற்றுள், சொல்லுக்குத் தனிச் சிறப்பாம் இடமுண்டு. இன்னசொல் இன்னகாலத்தில் வழக்கில் இல்லை; இன்னசொல் இவர் பெயரில் இவர் ஆட்சியில் இடம் பெற்றிருத்தலால், இவர் இக்காலம் சார்ந்தவர் என அறுதி யிட்டு உரைத்தல் ஆய்வாளர் நெறி. ஆனால், அச்சொல் அவர் வழக்கில் இருந்ததா? அல்லது அவர் காலத்துக்குப் பின்னவரால் இணைக்கப் பெற்றதா? என்று ஆய்ந்து பார்த்து முடிவுக்கு வருதல் ஒழுங்கு முறைமையாம். பல்சாலை முதுகுடுமி என்பதே சான்றோர் ஆட்சியில் இருந்தும், பல்யாக சாலை முதுகுடுமி எனப் பழம் பாண்டியன் பெயருள் யாகம் செறிக்கப்பட்டது என்பதை முன்னர்க் கண்டுளோம். சோழன் பெருநற்கிள்ளி என்பான் பெயரில் இராசசூயம் என இரண்டு வடசொற்களை இணைத்து இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பெயர்ப்படுத்து வழங்கியுள்ளனர். தொல்காப்பியம், பாட்டு, தொகை, திருக்குறள் முதலாம் தொன்னூல்களில் அரசர், அரசவை, அரசன், அரசியல், அரசிளங் குமரன், அரசிளங்குரிசில், அரசுகட்டில், அரசுவா என்னும் சொற்களும் தொடர்களும் பயில வழங்குகின்றன. ஆனால், இராச என்னும் சொல் ஓரிடத்துத் தானும் வந்திலது. இகரத்தொடு ரகரம் இணைந்து சொல்லாக மேற் குறிக்கப்பட்ட நூல்களில் இரா, இராது என்பனவும், இவற்றைச் சார்ந்தனவுமாகிய சொற்களுமே உள. இராமன் என்னும் பெயர் அகத்திலும், புறத்திலும் உண்டு. மணிமேகலையில், இராகுலன், இராசமாதேவி, இராவணன் என்னும் பெயர்கள் காணப் படுகின்றன. ஆதலால் இராச என்னும் சொல், சங்ககாலத்தில் வழக்கில் ஊன்றாத சொல் என்பது விளங்கும். பழந்தமிழ்ச் சொல்லடைவில் சூயம் என்பதொரு சொல் இல்லை. சூது என்பதற்கு அடுத்து, அகர முறையில் கிடைக்கும் சொல் சூர் என்பதே. ஆதலால், சங்கச் சான்றோர் நாளில் வழக்கில் இல்லாத சொல் சூயம் என்க. இராச சூயம் என்னும் சொற்கள், பாடப் பட்டோர் பெயர் சுட்டும் புறநானூற்றுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன. நூல் தொகுத்து அடைவு செய்த நாளில், அத்தொகுப்பாளரால் செறிக்கப்பட்டிருக்கும். அல்லது, அவர் காலத்திற்குப் பின்னர்ச் செறிக்கப்பட்டிருக்கும். சோழன் பெருநற்கிள்ளியைப் பற்றிய பாடல்கள் நான்கு கிடைத்துள்ளன. அவ்வனைத்தும் புறநானூற்றில் உள்ளனவே. அவை, பாண்டரங்கண்ணனார் (16), வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் (125), ஔவையார் (367), உலோச்சனார் (377) என்னும் புலவர் பெருமக்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களில் முறையே பெரும, வென்றோன், வேந்திர், குருசில் என்னும் குறிப்புகளையன்றிப் பெயர்க் குறிப்பொன்றும் இல்லை. இப்பாடல்களுள், பின்னவை இரண்டும் வாழ்த்தியல் துறைய; முன்னவை இரண்டும் போரியல் துறைய; நெல்விளை கழனியைக் கொள்ளை யூட்டியதும், நாடு சுடு நெருப்பை நல்லொளி விளக்காக்கியதும் மருத நிலம் பாழாகச் செய்ததும் ஆகியவை முதற்பாட்டில் விரிக்கப் படுகின்றன. மலையமான் திருமுடிக் காரியைத் துணையாகக் கொண்டு, சேரமான் மாந் தரஞ்சேரல் இரும்பொறையொடு போரிட்டு வென்ற செய்தி அடுத்த பாடலில் கூறப்பட்டுள்ளது. இவற்றையன்றி, இராச சூயச் செய்தி எங்கும் சொல்லப்பட்டிலது. புறநானூற்றுப் பழைய உரையாசிரியரும் இப்பாடல்களுக்கு வரைந்த உரைகளில் இராசசூயம் பற்றி எதுவும் உரைத்தாரல்லர். ஆதலால், இல்லாச் செய்திகளை இணைத்துப் பொல்லாங்கு செய்யும் வல்லாண்மை இடைக் காலத்தில் எவ்வளவு விஞ்சியிருந் திருக்கிறது என்பது இப்பெயரானே நன்கு வெளிப்படுவதாம். இனி, அரசு துறத்தலை, இராச போகத்தைத் துறத்தலாகவும் (சிலப்பதி.1), மன்னவன் கோயிலை, இராசாவின் கோயிலாகவும் (3. 118), கோவியன் வீதியை, இராசமார்க்கம், இராசப் பெருந்தெருவாகவும் (5. 40),அத்திரியை, இராச வாகனமாகிய அத்திரியாகவும் (6. 119), கோமுறை கோன்முறைகளை, இராச நீதியாகவும் (23. 101; 23. 131), பெருநல்வேள்வியை, இராசசூயமாகவும் (28. 178), அரைசு வீற்றிருத்தலை, இராச்சிய பாரமாகவும் (30, 175) சிலப்பதிகார உரையாசிரியர்கள் கூறியதைக் கொண்டு இளங்கோவடிகளார் சொல்லாட்சியை ஆய்வது எத்தகு முரணாக அமையுமோ அத்தகு முரணாக அமையும் நூலடைவாளர் குறிப்பைக்கொண்டு நூலுடையாரை ஆய்வது என்க. 12. நிலைகொள்ளும் கலையுள்ளம் காவடிச் சிந்து என்ற அளவில் முந்தியும் உந்தியும் நெஞ்சில் நிற்பவர் அண்ணாமலையார். அவர் எளிமை, இனிமை, இசைமை எல்லாம் செறிந்த சிந்துகளை இசைத்து, சிந்துக்குத் தந்தை என்னும் சீர்மையுற்றார். ஊற்றுமலை, குறுநிலமன்னர் இருதயாலய மருதப்பர் மேல், மட்டற்ற பற்றாளராக இலங்கினார் அண்ணாமலையார். புரவலர் இவரே என்னப் புகழேணியில் வைத்த அண்ணா மலையாரைப், புலவர் இவரே என்னத்தக்க பேற்றில் வைத்துப் போற்றினார் மருதப்பர். ஊற்றுமலைத் தனிப்பாடற்றிரட்டில் ஒரு பாதி அண்ணாமலையார் பாடல்களாக அமைந்திருப்பது இவ்வுண்மையைக் காட்டும். அண்ணாமலையார் பாடிய மடக்கு, திரிபுப்பாடல்கள் பொருள் காண்டற்கரியன. காவடிச் சிந்து பாடிய நாட்டியற் பாவலர் இசைத்த பாடல்கள்தாமா இவையெனக் கற்பாரை ஐயமுறச் செய்ய அமைந்தன! ஆனால், அவற்றுள் சில பாடல்கள் பொருளினிமைக்குச் சான்றாம் புகழ் வாய்ந்தவை. அவற்றுள் ஒன்று, ஐந்திலக்கணங்களும் இரட்டுறல் (சிலேடை) பொருளில் அமைந்தது. மடக்கும் திரிபும் மயக்கா நிலையில் வெளிப்பட்டது. தமிழ் இலக்கணம், தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக விளங்கியது. அதன் பின்னர், தொல்காப்பியச் செய்யுளியல் செய்தியையும் அதன் வளர்ச்சியையும் விளக்கும் வகையில் யாப்பிலக்கணம் எனத் தனியே தோன்றி, இலக்கணம் நான்காகியது அதன் பின்னர், தொல்காப்பிய உவம இயலை வாங்கிக் கொண்டு, வடமொழி அணிகளையும் சேர்த்து அணியிலக்கணம் என ஐந்தாம் இலக்கணம் ஒன்று தோன்றியது. இவ்வைந்து இலக்கணங்களும் முறையே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஆயின. இவ் வைந்து பெயர்களையும் ஊடகமாகக் கொண்டு தோன்றியது அண்ணாமலையார் பாட்டு. ஆதியிலக் கணப்படியே யுதித்திரண்டிற் கடங்காத்துன் பாக்கி மூன்றை மேதினியிற் பலவிதமாச் செலவுசெயு மாறுபுரி வித்து நாலிற் பாதியினால் யான்பட்ட பாடுசொல முடியாது பஞ்ச மென்ப தேதுமில்லை ஓதுமில்லை யிகந்துதெரு வுலவுதற்கும் ஏதுவில்லை. என்பது அது. (தனிச் செய்யுட் சிந்தாமணி. அண்ணாமலை ரெட்டியார் பாடல் எண். 43; பக்க எண். 595). ஆதியிலக்கணம் என்பது எழுத்து. இவண் எழுத்து என்பது தலையெழுத்து எனப்படுகின்ற விதியைக் குறித்து நின்றது. தலையில் எழுதிய எழுத்துப்படி பிறந்து என்னும் பொருளைத் தருகின்றது. ஆதியிலக்கணப்படியே உதித்து என்பது. இரண்டாம் இலக்கணம் சொல். ‘ïu©o‰F ml§fh¤ J‹g¤âš »lªJ mGªâdhuh«! மூன்றாம் இலக்கணம் பொருள். மூன்றை மேதினியில் பலவிதமாச் செலவு செயுமாறு புரிவித்து என்று அடுத்துத் தொடுத்தார். உலகியலில் சிக்கிக் கண்ட கண்ட வழிகளில் பொருளைச் செலவிடுமாறு நேர்ந்து விட்டதாம்! நான்காம் இலக்கணம் யாப்பு. நாலிற் பாதியினால் யான் பட்ட பாடு சொல முடியாது என்றார். பாதி என்னும் பொருள் தரும் மற்றொரு சொல் அரை என்பது. அந்த அரையையும் நான்காம் இலக்கணமாம் யாப்பு என்பதையும் இணைத்தால் அரையாப்பு என்றாகும். அரையாப்பு என்பது ஒருவகை நோய். இடுப்புக்கும் தொடைக்கும் ஊடே அமைந்த சந்து வாயில், வாழைக்காய் போலத் தோன்றி வருத்தும் கட்டி அதுவாம். அதனைத் தொடை வாழை என்று சொல்லும் பெயர், அதன் அமைப்பை விளக்கும். அவ்வரையாப்பு வந்து நடமாடுதல் இல்லாமல் கிடையாகக் கிடந்து பட்ட பாட்டைச் சொல்ல முடியாதாம், அவ்வளவு துயர்ப் பட்டாராம்! ஐந்தாம் இலக்கணம் அணி. அணி என்பது அணிகலம். அழகு, பெருமை முதலிய பொருள்களைத் தரும் சொல். ஏற்பட்ட துன்பம், பொருள் முடை, நோய் இவற்றால் காதில், விரலில், கழுத்தில் அணிகலம் இல்லை; இவர்க்கு இல்லாமை மட்டுமில்லை; இல்லவர்க்கும் இல்லை; இம் மட்டோ? வாட்டும் வறுமையானும், வருத்தும் பிணியானும் உடலின் அழகாம் தோற்றப் பொலிவும் இல்லாது ஒழிந்தது. ஆதலால், பஞ்ச மென்பது ஏதுமில்லை என்றார். பஞ்சம் என்பது ஐந்தாம் இலக்கணமாம் அணி. இனி, இவ்வளவு தான் வேறு பஞ்சம் எதுவும் இல்லை என்று தம்மைத் தாமே எள்ளிக் கொள்ளும் நகையாட்டாகவும் பஞ்சம் அமைகின்றது! இறுதியில் உள்ள தொடர் : ஏதுமில்லை இகந்துதெரு உலவுதற்கும் ஏதுவில்லை என்பது. உரிமைப்பட்டதாகச் சொல் கின்ற வீட்டை விட்டுத் தெருவுக்கு வந்து, நடப்பதற்கும் வாய்ப்பில்லாது போயிற்று என்பது இதன் பொருளாம். ஏதுமில்லை ஓதுமில்லை இகந்துதெரு உலவுதற்கும் ஏதுவில்லை என்பது, இல்லை இல்லை என மும்முறை அடுக்கி வந்து, இல்லாமையைப் பறையறைவதுடன் பாடலிற் சுவையிருப்பதையும் நிறுவுகின்றது! புலமையாளர் படுகின்ற நோயும், நொடியும்கூடப் பிறர் போலப் பிதற்றலாய் அமையாமல் பெருவாழ்வு வாழும் இலக்கியமாக உருப்பெறுதலை நாட்டுகின்றது இப்பாட்டு! வறுமையையும் பிணியையும் விலையாக வாங்கிக் கொண்டாலும் கலையுள்ளம் கலையுள்ளமே என்பதை நிலை கொள்ள வைக்கிறதே இது! 13. ஓதாக் கல்வி வள்ளலார் வரலாற்றையும் வாக்கையும் படித்தவர்கள் ஓதாக் கல்வி என்னும் செய்தியை அறிவர். ஓதாக் கல்வி என்பது என்ன? ஓதாமலே - பயிலாமலே - ஒருவர் பேரறிவினைப் பெற்று விட முடியுமா? முடியும் எனின், கற்றுணர்ந்த - கற்பித்த - பெரு மக்களுக்குப் பெருமை சேர்க்குமா! படியாமலே ஒருவர் பேரறிவு பெற்றார் என்பது அவர் தமக்குமே பெருமை சேர்க்குமா? படிக்காத மேதை என்னும் புனைவும் பள்ளிப் படிப்பின்மையைக் கருதிக் கூறுவதேயன்றி அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள், என ஒருதலையாகக் கூறுவதன்றே. தனியே எவ்வளவு படித்தனர், பட்டறிவுற்றனர்! வள்ளலார் பாக்களிலும் உரைநடை நூல்களிலும் முடங் கல்களிலும் பொதுளி நிற்கும் முந்தையோர் நூற் குறிப்புகள் எத்துணை எத்துணை! வரலாற்றுக் குறிப்புகள் எத்துணை எத் துணை! இலக்கண இலக்கிய மேற்கோள் செய்திகள்தாம் எத்துணை எத்துணை! திருக்குறளை, வள்ளலார்போல முழுது முழுதாகப் பொன்னே போல் போற்றிக் கொண்டவர் தமிழுலகில் அரியர்! முதல் திருமுறையிலுள்ள நெஞ்சறிவுறுத்தல் ஒன்று சாலுமே! நால்வர் நான்மணி மாலையின் நனி சிறப்பென்ன? நால்வர் வாக்குகளிலே தேக்கிய பிழிவின் வழிவன்றோ பெருக்கெடுத்தது அது? சிவப்பிரகாச அடிகள், நால்வர் அருள் மொழிகளைப் பயிலாமல் நால்வர் நான்மணி மாலை இயற்றியிருப்பரோ? வள்ளலார் அருளிய ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள் மாலை, ஆளுடைய நம்பிகள் அருள்மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை ஆகியவற்றைக் கற்போர், வள்ளல் பெருமகனார் உள்ளம், அந்நால்வர் பாடல்களில் தேக்கெறியத் தெவிட்டியமையே பாவெள்ளமெனப் பெருக்கெடுத்ததென்பதை மறுக்கவும் துணிவரோ? தாயுமானவர், பட்டினத்தார், சேக்கிழார், திருமூலர் இன்னோர் திருப்பாடல் குறிப்புகள், செய்திகள், வரலாற்றடை வுகள், திருக்கோயில் வைப்புகள், அடியார் அருள் விளக்கங்கள் இன்னவற்றையெல்லாம் ஓரோட்டமாய்க் கற்பாரும், செம் பொருட்பேரேட்டு நூல்களிலே வள்ளலார் தோய்விலர் எனத் துணிவரோ? அன்பர்களுக்கு விடுத்த முடங்கல்களிலேயுள்ள மருத்துவக் குறிப்புகளைக் காண்பார், வள்ளலார் சித்த மருத்துவ நூல்களிலே நுழைபுலம் இல்லார் எனச் சொல்வரோ? மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்தடிகளார்க்கு விடுத்த முடங்கலையும் தமிழ் என்னும் சொல் குறித்த விளக்க வுரையையும் கற்போர் வள்ளற் பெருமகனார் வளமான இலக்கணத் தேர்ச்சியில் ஐயுறவும் கொள்வரோ? எத்துணை யாப்பு வகைகளையும் வண்ண வகைகளையும் வள்ளலார் வளப்படுத்தியுள்ளார்! எத்துணை அகத்துறைகளை வனப்புறுத்தியுள்ளார்! பிற்கால இசை வகைகளில் எத்துணை ஏற்றங் காண்பித்துள்ளார்! இவையெல்லாம் ஏடெடுத்துப் படியாமல் வந்தனவோ? ஏடறியேன் எழுத்தறியேன்; பாடறியேன் படிப்பறியேன் என்பதுபோலக் கற்றறியாத மெட்டுப் பாவலர் அவரல்லர். அவர் கற்றறிந்த கல்விச் சால்பினரே. ஆனால் அவர் கற்ற கல்வி, ஓதிக் கற்ற கல்வியன்று ஓதாது கற்ற கல்வியேயாம். சொல்லாய்வு ஒன்றே சொற்பொருள் விளக்கத்தைத் தெள்ளிதில் காட்ட வல்லது. ஓதுதல், ஓதாமை என்பவை எவை? கடலுக்கும் கடல் அலைக்கும் ஓதம் என்பது ஒரு பெயர். அப்பெயர் வந்தது எதனால்? இடைவிடாது ஒலித்துக் கொண்டிருத்தலால் ஓதம் என்னும் பெயரை அவை பெற்றன. ஓதம் என்பது ஓதையாய் ஒலிப்பொருளும் தருவதாயிற்று. இடையீடில்லாது தெய்வத் திருக்கோயிலில் பண்ணிசைத்துப் பாடுவார் எவர்? அவர் ஓதுவார் அல்லரோ? ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது இறை புகழேயன்றோ ஆகலின் அவற்றை இசைப்பார் ஓதுவார் ஆயினர். மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்றாரே வள்ளுவர். அவ்வோத்து ஓதப்படும் மறையேயன்றோ! இடைவிடாது பயிலும் பயிற்சியுடைய மற்போர் வீரர்க்குப் பயில்வான் என்னும் பெயருண்மை நோக்கியும், ஓதுவார் பெயர்ப் பொருளைத் தெளியலாமே! ஓதுவது ஒழியேல் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும் என்பவை நாம் அறியாதவையோ? பாடம் ஏறினும் பாடை ஏறினும் - ஏடது கைவிடேல் என்பது புதுவதோ? பொது அறிவினார்க்குப் பல்கால் ஓதி அழுந்தப் பதித்து வைத்தால்தான் பதிவாகி நிற்கும்! ஆனால் கருவிலே திருவுடையார்க்கு ஒருகால் கேட்ட - படித்த - அளவானே அழுந்தப் பதிவாகி விடும். அவர்கள் பொது மக்களெனப் பல்கால் வருந்திப் பயில வேண்டுவதில்லையாம். ஆகலின், அவர்கள் கற்ற கல்வி ஓதாக் கல்வி என்னும் ஒரு பெருஞ் சிறப்புக்குரிய தாயிற்றாம். மாம்பழக்கவிச்சிங்க நாவலர் ஒரு பாடலை ஒருமுறை கேட்ட அளவானே ஒப்பித்ததை வரலாறு கூறுகின்றது. ஏழாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் எனத் தம் வரலாற்றை அந்தகக்கவி வீரராகவர் குறிப்பிடுகின்றார். வெண்பா இருக்காலில் கல்லானை வெள்ளோலை, கண்பார்க்கக் கையால் எழுதானைப் பெண் பாவி பெற்றாளே பெற்றாளே பிறர் நகைக்கப் பெற்றாளே என்று ஔவையார் தனிப்பாடல் எள்ளி நகையாடுகிறது. இக்காலத்தும் மதுரையில் திகழும் பண்ணிசை வல்லார் திருப்பதியார் ஒரு பாடலை இருமுறை கேட்ட அளவானே அருமையாக இசையுடன் பாடுதலை நேரிடையில் ஆய்ந்து கண்டுள்ளோம். திருக்குறள் எண்கவனர் கோயில்பட்டி இராமையனார் நினைவாற்றல் திறம் சொல்வார் சொல்லிறந்து செல்லும் தகைத்தாய்த் திகழ்கின்றது. இவையெல்லாம், நெஞ்சில் குத்தி உருப்போட்டு வரப்படுத்திக் கொள்வனவாய் அமைவன வல்ல! வள்ளலார் திறம், ஒருமுறை படித்தாலே - கேட்டாலே - எழுதினாலே - பச்சை மரத்தில் பதியும் ஆணி யெனப் பதிந்ததாகலின் அக் கல்வி ஓதாக்கல்வி எனப் பெற்றதாம். இன்னும் தெளிவு வேண்டுமோ? தேன்படிக்கும் அமுதாம்நின் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன்; நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே இப்பாடல்களை நோக்குக. தம்மை மறந்து தாமே நூலாகி ஊனும் உளமும் உயிரும் உயிருக்கு உயிரும் ஒன்றியும், கலந்தும் பாடிப் பெற்ற ஒருமைப்பாட்டுக் கல்வியை அறிவோர், வள்ளலார் பெற்ற ஓதாக் கல்வியைத் தெளிவர் அல்லரோ? 14. நம்பியின் வினாவும் நங்கையின் விடையும் வளமான வயல் ; வாய்த்த ஏரி; பகைவரைத் தடுக்கும் வல்லாண்மை மதில்; ஆழ்ந்த அகழ்; பக்கமெல்லாம் பறவைப் பாட்டு - இவற்றைக் கண்டு கண்டு களிப்புற்றான் ஒரு கட்டிளங் காளை! அவன் சுற்றிப் பார்த்த பார்வையில் ஓர் ஊர் தெரிந்தது. அதன் அருகே ஆறு ஒன்றும் ஓடியது. அவ்வாற்றிலே நீராடிக் கொண்டிருந்தாள் ஓர் அழகு நங்கை. அவளைக் கண்டு, சேயரி உண் கண்ணாய், தையலாய், உன் ஊர்ப் பெயர் யாது? ஒத்துணரும் வண்ணம் உரை என்றான். சிற்றாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய்! வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரை என, நயமுறக் கேட்ட நம்பியின் வினாவுக்கு நங்கை தன் ஊர்ப் பெயரை நவின்றாளா? ஆம் நவின்றாள்! எப்படி? வெளிப் படையாகக் கூறாமல், வினாவில் அமைந்தவாறு ஒத்து உணரும் வண்ணம் குறிப்பாக உரைத்தாள். கட்டலர் தாமரையுள் ஏழும் கலிமான்தேர்க் கத்திருவ ருள்ஐந்தும் காயா மரமொன்றும் பெற்றவிழ் தேர்ந்துண்ணாப் பேயின் இருந்தலையும் வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயர் என்றாள். இவ்வினாவும் விடையும் அமைந்த பாடலைப் பன்னிரண் டடியான் வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பாவிற்கு எடுத்துக் காட்டாக உரையாசிரியர் காட்டியுள்ளார். (தொல். செய். 114) இதே பாடலைக் காட்டி இது பன்னீரடியாற் பெருவல்லத்தைச் சொன்ன பஃறொடை வெண்பா என்று குறிப்பெழுதி இப் பாட்டுப் பூட்டைத் திறத்தற்குத் தாழ்க்கோல் உதவியுள்ளார் யாப்பருங்கல விருத்தி யுடையார் (யா. வி. 62). எனினும் பாட்டைத் திறத்தற்கு அரிதாகவே உள்ளது. தொல்காப்பிய இளம்பூரணர் உரைப் பதிப்புக்கள் ஆகிய வற்றில் இப்பாடற் பொருளமைதி விளக்கம் பெறவில்லை. பெருந் தொகைத் திரட்டில் இப்பாடல் இடம் பெற்றிருந்தும் (2141) அதன் குறிப்புரையில் பொருள் விளக்கம் காட்டப் பெறவில்லை. யாப்பருங்கலப் புதிய பதிப்பில் அவ்வாறு விட்டுச் செல்ல விரும்பாமையால் இப்பாடற் பொருள் ஆராய்ச்சியில் பெரிதும் ஆழ்ந்து கண்ட விளக்கமே இக்கட்டுரையாம். பெயர் விழையார் என்பார் செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 2 இல், பெருவல்லம் ஒரு நூற்பெயராமா? என்ற தலைப்புடன் ஓர் ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார். அவ்வாராய்ச்சிக் கட் டுரையுள் தம் நண்பர் சிலர்க்கும், புலவர் சிலர்க்கும் இப்பாடற் பொருள்பற்றி அவாவிக் கேட்டும் தாம் பயன்பெறவில்லை என்று கூறி இப்பாடற்குத் தாம் பொருள் கண்டறிந்த வகையைக் குறித்துள்ளார். சேயரி உண்கணாய், தையலாய் நின் ஊர்ப் பெயர் உரைத்தி எனக் கூற, புருவத்தாள் ஏழும், ஐவரும், ஒன்றும், இருதலையும், இறுதியும் பெற்றக்கால் இயைந்தது என்றாள் எனக் கூட்டி முடித்துக் கொள்க. பொருள் : ஏழு - பகரத்தில் ஏழாவது எழுத்து - பெ ஐவர் - ரகரத்தில் ஐந்தாவது எழுத்து - ரு ஒன்று - வகரத்தில் முதலாவது எழுத்து - வ இருதலை - லகரத்தில் ஒரு தலை - ல் மேற்படி மற்றொரு தலை -ல இறுதி - மகரத்தில் இறுதி - ம் ஒத்தியைந்தவாறு பெருவல்லம். இவ்வாராய்ச்சிக் குறிப்பைக் கண்ணுற்ற புலவர் சிதம்பர புன்னைவனநாத முதலியார் அவர்கள் இதற்கு மறுப்பாக, செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 6 இல், சிற்றியாறு.. வேற்புருவத்தாள் என்று செய்யுளின் பொருளை விரித்து, கட்டலர் தாமரை, கலிமான் தேர்க் கத்திருவர், காயாமரம், பெற்றவழித் தேர்ந்துண்ணாப் பேய், வித்தாத நெல் இவ்வைந்து தொடர்களும் இன்னின்ன பொருளைக் குறிப்பன என்பதை விளக்கி ஏழு, ஐவர், ஒன்று, இருதலை, இறுதி என்பவை இன்னின்ன சொற்களினின்றும் எடுக்கப் பெற்றுப் பெருவல்லம் என்று புணர்க்கப் படும் என்பதை விரித்துக் காட்டாது வாசிப்போரை மயங்கவைத்தது விசனகரமானது. நம் நண்பர் பெருவல்லம் என்றது மேற்படி செய்யுளினின்றும் இன்னவாறு பெறப்படுவது என்பதைக் கூடிய விரைவில் விளக்குவாராக என்று எழுதினார். செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 7 இல் திரு. நா. கனகராசையர் அவர்கள் அறியாமை வினா என்று தலைப்பிட்டு எழுதி அதன் இறுதியாக, சிற்றியாறு... வேற்புருவத்தாள் என்ற செய்யுளிற் குறிப்புப் பொருள் குறித்ததெவ்வாறு? கட்டலர் தாமரையுள் ஏழு என்றால் என்னை? கத்திருவர் ஐவர் யாவர்? காயா மரமொன்று என்பதில் குறிப்பென்னை? பேயின் இருதலை என்பதில் உட்கிடை என்னை? வித்தாத நெல்லின் இறுதியாவது யாது? இவ்வைந்தும் சேர்த்துப் பெறும் மொழி யாது? யாப்பருங்கல விருத்தியாசிரியர் பெருவல்லம் என்னும் ஊர்ப் பெயரை எவ்வாறு அறிய வைத்தார்? அப் பெருவல்லம் என்னும் பெயரைக் கொணர்தற் பொருட்டு ( ப, ர, வ, ல, ம) இம் மெய்களை எங்கிருந்து பெறலாம்? இம்மெய்களை எடுத்தாண்ட குறிப்பை வெளிப்படுக்கச் செய்யுளில் அதிகார முண்டோ? இவ்வெழுத்துக்களைக் குறித்து ஏதேனும் அச் செய்யுளில் வந்திருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். அன்றி வேறு வகையால் பொருள் உணரக் கூடுமாயின் அதையும் அறிவான் உயர்ந்தோர் அறிவிப்பாராக என எழுதினார். இவ்வாராய்ச்சியில் உன்னிப்பாக ஈடுபட்ட புலவர் திரு. இராமையங்கார் என்பார் செந்தமிழ்த் தொகுதி 27 பகுதி 3 இல், திரு. கனக ராசையர் பல வினாக்களை எழுப்பினார். பெயர் விழையார் விடையாதும் கூறவில்லை. யாரும் எம்முடிவுங் கூறவில்லை. இது விசயம் இம்மட்டோடு அடங்கிவிட்டது. யானும் இவற்றையெல்லாம் நோக்கிய பொழுது பலவாறு சிந்தித்ததுண்டு. கட்டலர் தாமரையுள் ஏழு என்பது தாமரையைக் குறிக்கும் ஏழுக்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய ஒரு சொல்லில் பெ என்ற எழுத்து ஏழாவது எழுத்தாய் அமைந் திருக்க வேண்டும் என்றும், மற்றவையும் அவ்வச் சொற்களில் அப்படியே அமைந்திருக்க வேண்டுமென்றுங் கருதிச் சில பொழுது முயன்று நிறைவேறாமையால் பயனில் முயற்சியெனக் கைவிட நேர்ந்தது. இருந்தாலும் இதைக் கண்டறிய வேண்டும் என்னும் அவா நீங்கவில்லை. அண்மையில் தொல்காப்பியச் செய்யுளியல் உரையைத் திருப்பிய பொழுது இச்செய்யுள் தென்பட்டது. உடனே கட்டலர் தாமரை முதலியவற்றிலே சிந்தனை செல்வதாயிற்று. புதிய வழியொன்று தென்பட்டது. முன் நினைத்தது போல் இச்செய்யுளின் பொருள் அவ்வளவு சிரமப்பட்டு அறியத் தக்கவாறு அமைந்திருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஒருவாறு முடிவும் ஏற்பட்டது. என் சிற்றறிவிற் கெட்டிய அம்முடிவைக் கீழே தருகின்றேன் என்று கூறிப் பாடற் பொழிப்புரை வரைந்து, இதனால் பெருவல்லம் எனப் பெயர் பெறப்படுமாறு என விளக்கியுள்ளார். தாமரை என்பது இங்கு அதன் பரியாய நாமமாகிய பங்கயம் என்பதைக் குறிக்க, ஏழு என்பது அச்சொல்லின் முதலில் உள்ள பகரவர்க்கத்தின் ஏழாவது எழுத்தாகிய பெ என்பதைக் குறித்தது. எனவே கட்டலர் தாமரையுள் ஏழு என்பது பெ என்னும் எழுத்தைக் குறிப்பான் உணர்த்துவதாயிற்று. கலிமான் தேர்க் கத்திரியர் ஐவர் என்பதில் கத்திரியர் என்பது அதன் பரியாய நாமமாகிய அரசர் என்பதைக் குறிக்க ஐந்து என்பது அதிலுள்ள ரகரத்தில் ஐந்தாம் எழுத்தாகிய ரு என்னும் எழுத்தைக் குறித்தது. கத்திரியர் என்றதற்கேற்ப ஐவர் என்று உயர்திணையாற் கூறினார். கத்திரியர் - க்ஷத்திரியர், அரசர். காயாமரம் என்றது அதன் பரியாயம் ஆகிய பூவை என்னும் பெயரைக் குறிக்க ஒன்று என்பது அதிலுள்ள (வை) வகர வர்க்கத்தில் முதலெழுத்தாகிய வ என்னும் எழுத்தைக் குறித்தது. பேய் என்பது அதன் பரியாய நாமம் ஆகிய அலகை என்பதைக் குறிக்க அதன் இருதலை என்பது அதிலுள்ள லகரத்தின் இறுதியும் முதலும் ஆகிய ல் ல, என்னும் எழுத்துக்களை முறையே குறித்தது. வித்தாத நெல் என்றது விதைத்து விளையாமல் தானே விளையும் நெல்லின் பெயராகிய நீவாரம் என்பதைக் குறிக்க, இறுதி என்பது அதிலுள்ள மகரத்தின் இறுதியாகிய ம் என்னும் எழுத்தைக் குறிப்பதாயிற்று. இனி, சேர்த்தக்கால் என்று செய்யுளில் கூறிய வண்ணம் இவற்றைச் சேர்த்தால் பெ - ரு - வ - ல் - ல - ம் பெருவல்லம் என ஒத்தியைந்தவாறு கண்டு கொள்க. இவ்வாராய்ச்சித் தொடர்கதை நிறைவு தந்திலது. புலவர் இராமையங்கார் கூறியது போல் வெள்ளிடை மலையாக விளங்கவும் இல்லை. ஆதலால் பொருள் காணும் ஆர்வம் மீதூரப் பெற்று ஆய்வில் தலைப்பட்டேன். அம் முயற்சியின் பயனால் விளைந்த பொருள் விளக்கத்தை வரைகின்றேன். தாமரையுள் ஏழு என்பது முதற் குறிப்பு. இக்குறிப்பின் விளக்கம் தாமரை என்பதனுள் என் ஊர்ப் பெயரின் ஏழாம் எழுத்து உள்ளது என்பதாம். ஏழு என்றும் குறிப்பால் அவள் சுட்டும் ஊர்ப் பெயர் ஏழு எழுத்துகட்கும் மிக்க எழுத் துடையதாக இருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. மற்றும் வித்தாத நெல்லின் இறுதி என்றதால் ஏழற்கு மேலேயும் எழுத்து இருக்க வேண்டும் என்றும் குறைந்தது எட்டு எழுத்துகளேனும் அவ்வூர்ப் பெயரில் இருத்தல் வேண்டும் என்றும் திட்டமிட்டேன். ஆனால், விருத்தியுரை பெருவல்லம் என்று ஆறு எழுத்துகளை யன்றோ குறிக்கின்றது! பெருவல்லம், திருவல்லம், வல்லம், வல்லை என்னும் பெயர்களாலும் அழைக்கப் பெறும். பெருவல்லம் சேக்கிழார் அடிகளாரால் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில், தீதுநீங்கிடத் தீக்காலி யாமவு ணற்கு நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்(30) என்று புகழப் பெற்றுள்ளது. இத்திருப்பாடலில் தீக்காலி யாம் அவுணற்கு அருள் புரிந்த பேறு கூறப் பெற்றுள்ளது. அவ்வருட்பேறு கருதி வல்லத்திற்குத் தீக்காலி வல்லம் என்னும் பெயர் உண்டாயிற்று. வடார்க்காடு மாவட்டம் திருவல்லம் சிவன் கோயில் கருவறைத் திருமதில் ஒன்றில் கண்ட கல்வெட்டில் திருத் தீக்காலி வல்லத்துக் கோயில் உண்ணாழிகை அதிகாரிகள் குறட்டி வரதையன் என்ற புலவர்க்கு அவர் அக்கோயிற் சிவபெருமான் மேல் திருவல்லை யந்தாதி பாடியதற்காக 100 குழி நிலம் இறையிலி வழங்கிய செய்தி கூறப் பட்டுள்ளது. (சாசனத் தமிழ்க் கவி சரிதம் பக். 208). இதனால் திருவல்லத்திற்குத் தீக்காலி வல்லம் என்னும் பெயருண்மை கல்வெட்டால் தெளிவுறுத்தப் பெறுதல் கொள்ளத்தக்கதாம். தீக்காலி வல்லம் என்னும் எட்டெழுத்துப் பெயரை ஒத்துரைக்கும் வண்ணம் உரைத்ததே இப்பாடல் என்பதைக் காணலாம். கட்டலர் தாமரையுள் ஏழு : தாமரையுள் ஏழாம் எழுத்து உள்ளது. தீக்காலி வல்லம் என்பதில் ஏழாம் எழுத்து ல, இவ்வெழுத்து தாமரையின் ஒரு பெயராகிய கமலம் என்பதில் அமைந்துள்ளமை அறிக. கலிமான் தேர்க் கத்திருவருள் ஐந்து : கலிமான் தேர்- விரைந்த செலவுடைய குதிரை பூட்டிய தேர். கத்திருவர் - அரசர். கத்திருவர் என்பதில் ஊர்ப் பெயரின் ஐந்தாம் எழுத்துள்ளது. ஐந்தாம் எழுத்து வ இப் பெயரிலும் அஃது ஐந்தாம் எழுத்தாய் அமைந்துள்ளமை அறிக. கத்திருவர் ஐவரும் என்பது நூற்பாடமாக உள்ளது. கத்திருவர் என்பதற்கு ஏற்ப ஐவர் என எழுத்தைக் கூறினார் என்பர். ஆயின் ஐந்தும் என்பதே சரியான பாடமாக இருக்கலாம் என்பது பாடல் அமைதியால் தெளிவாகும். காயாமரம் ஒன்றும். காய்க்கும் மரம், பெண் மரம்; காயாமரம், ஆண்மரம். அகக்காழ் வன்மரம் ஆண்மர மாகும் அவைகருங் காலி முதலா யுள்ளன என்பது திவாகரம். ஊர்ப் பெயருள் காயாமரம் ஒன்று உள்ளது. அம்மரம் கருங்காலி என்பதாம். அதனைக் காலி என்று குறித்தார். பெற்றவிழ் தேர்ந்துண்ணாப் பேயின் இருந் தலை எவ்வுயிரி ஆயினும் எல்லாப் பொருள்களையும் உண்பது இல்லை. தேர்ந்து உண்ணத் தக்கவற்றை - விரும்புமவற்றை மட்டுமே உண்ணும். அவ்வாறு தேர்ந்து உண்ணாமல் எதனையும் உண்ணும் ஒன்று தீ. உண்ணுவது- எரிப்பது. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று தீ; ஆதலால் பேய் என்றார். இருந் தலையாவது பெரிய தலை. தலையாவது முதல் எழுத்து. அது தீ என்னும் ஒரே முதலாக அமைந்த நெட்டெழுத்தைக் குறித்தது. இருதலை என்பது பாட வேறு. அவ்வாறாயின் தீ என்பது ஓரெழுத்து ஒருமொழி. ஆதலால் முதல் ஈறு ஆகிய இருதலையும் அதுவே என்க. வித்தாத நெல்லின் இறுதி வித்தாத நெல், விதையிட்டு விளைக்காமல் தானே விளையும் நெல். வித்தாத நெல்லின் இறுதியும் ஊர்ப் பெயரில் அமைந்துள்ளது. அஃதிரட்டுறலாக நெல்லின் இறுதி, ஊர்ப் பெயர் இறுதி இரண்டையும் சுட்டியதென்க. பாரியின் பறம்பு மலை வளத்தைப் பாடும் கபிலர், உழவர் உழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே என்கிறார். வெதிரின் நெல் மூங்கில் நெல். அது வெதிரம் எனவும் பெறும். புல்லிலை வெதிர நெல்விளை காடே என்பது கயமனார் பாடிய அகப்பாட்டின் அடி (அகம். 397). ஆதலால் வெதிரம் என்பதன் ஈறாகிய ம் என்பது ஊர்ப் பெயர் ஈறாகவும் அமைந்தமை அறிக. இனி ஐவனம் என்னும் மலைநெல் எனலாமோ எனின், ஐவனத்தை வித்தியதாகவும் காத்ததாகவும் புறப் பாடல்கள் (159, 172) குறிக்கின்றன. ஆதலின் வெதிரம் என்பதே தகும். நீவாரம் என்றாரும் உளரே எனின் நீவாரம் என்பது புல் என்பதன்றி நெல் என்னார் என்க. ஒத்து இயைந்தது இவற்றை ஒத்த வண்ணம் இயைத்துப் பார்த்தலால், க் என்னும் மெய்யும் ல் என்னும் மெய்யும் இடம் பெறும். இவ்வாறு மெய்களை இணைத்து முறைப்படுத்திக் கொள்வதையே ஒத்து இயைந்தது என்றார் என்க. முறைவைப்பு வருமாறு. தேர்ந்துண்ணாப் பேயின் இருத்தலை - தீ காயாமரம் ஒன்று - காலி கத்திருவருள் ஐந்து - வ தாமரையுள் ஏழு - ல வித்தாத நெல்லின் இறுதி - ம் ஒத்து இயைத்தலால் வருவன - க், ல் இவற்றைச் சேர்த்தலால் தீக்காலி வல்லம் என்னும் பெயர் உருப் பெறுதல் காண்க. பெருவல்லத்தின் பெயர்களுள் ஒன்று தீக்காலி வல்லம் என்ப தாகலின் இவ்வாறு குறித்தார் என்க. பாடல் வருமாறு. சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக் கூறக் கட்டலர் தாமரையுள் ஏழும் கடுமான்தேர்க் கத்திருவ ருள்ளைந்தும் காயா மரமொன்றும் பெற்றவிழ்தேர்ந் துண்ணாத பேயின் இருந்தலையும் வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயரென்றாள் வானவன்கை விற்பொறித்த வேற்புருவத் தாள். 15. பதிப்புக் கலைப் பார்வை பதிப்புக்கலை ஓர் அருமையான கலை; அறிவியல் சிறப் பால் அரும்பி மலர்ந்து மணம் பரப்பும் கலை; அக்கலை, நில்லாத வாழ்வை நிலைபெறப் பதியச் செய்து, நிலைக்க வைக்கும் கலை; வழி வழி வருவார்க்கு வளமார்ந்த வைப்பாகி வளர்க்கும், வனப்புக்கலை; தன் பதிப்புப் பொருள் போலவே பதிப் பாளியையும், அழியா அமர நிலைக்கு ஆக்கி வைக்கும் கலை! பதிப்புக் கலையின் ஒரு சிறந்த பகுதி பழஞ்சுவடிகளைத் தேடித் தொகுத்தும், பாதுகாத்தும், ஒப்பிட்டு ஆய்ந்தும், உண்மைப் பாடமும் பொருளும் கண்டு தெளிந்தும் கவின் பதிப்பென்னும் காட்சிப் பொருளாக்கி வைப்பதாகும். புது நூல் படைத்துப் பதிப்பிப்பதிலும், சிதைந்தும் செல்லரித்தும் விடு பட்டும் விளங்காதும் உயிர் தாங்கிக் கொண்டிருக்கும் பழஞ் சுவடியைப் பதிப்பிப்பதன் அருமை, அதன் வயப்பட்டார்க்கே அறியக் கூடுவதாம். ஏடு எடுக்கும் போது ஓரஞ் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது; ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது; இனி எழுத்துக்களோ வென்றால், வாலும் தலையும் இன்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கிறது - ஏட்டுச் சுவடி இயல்பைக் காட்ட இது போதுமே! கலித்தொகைப் பதிப்பில் திரு. சி. வை. தாமோதரர் எழுதியுள்ள முன்னுரைப் பகுதியில் உள்ள வரிகள் இவை! பழஞ்சுவடியை ஆய்ந்து பதிப்பிக்கும் பணி, ஒரே முறையில் ஒருவரால் செப்பமாக அமைந்து, முற்ற முடியும் தன்மையது அன்று. அறிதோறும் அறியாமை கண்டற்று என்பது போல் பிழை கண்டு கண்டு வழிவழியே திருத்தம் பெற வேண்டிய இயல்பினது; ஆகலின், அறிஞர் பெரு மக்களின் உன்னிப்பான பார்வையில் பழஞ்சுவடிகளின் புதுப் பதிப்புகள் தடங்கலின்றி நடந்து கொண்டே இருந்தால் அன்றி, அச்சுவடியின் முழுப் பயனும் உலகம் கொள்ளுதற்கு இயலாதாம்! அச்சுப்பணியோ நச்சுப்பணியோ என்பது பட்டறிந் துரைத்த பழமொழி. அச்சுத்தாள் மெய்ப்புப் பார்த்துத் திருத்துதல், ஆட்ட ஓட்டப் பரபரப்புப் பணி அன்று: ஆர அமர்ந்து, ஊன்றி உணர்ந்து, கூர்ந்து குறிக்கொண்டு நோக்கிச் செய்யத்தக்க அரும்பணியாகும். இப்படி மெய்ப்புப் பார்க்க வல்லாரிடமும் ஒளிந்து விளையாடி மறைத்துக்கொள்ள வல்லது பிழை; அது. வேலையெல்லாம் முடிந்து நூலாகிவிட்டது என்று பதிப்பாளி மகிழும் போதிலே, தன் பிழைமுகம் காட்டித் தப்பி விட்டேன். gh®¤Ôuh! என்று பழித்துக் காட்டி வினா எழுப்பும்! படிப்ப வர்க்குப் பளிச்சிட்டுத் தோன்றிப் பதிப்பாளிக்குக் குற்றப் பட்டயம் தீட்டித் தந்து குளிரும்; இத்தகைய சிக்கல் மிக்க பணியைச் செப்பமாகச் செய்பவர், செயற்கரிய செய்யும் செம்மல் என்று பாராட்டுதற்குத் தக்கோர் ஆவர். பழம் பதிப்பு நூல்களை ஆராய்தலாலும் பழம் பதிப்பாளர் குறிப்புகளை நோக்குதலாலும் அறியப் பெறும் சில அரிய கருத்துக்களைத் தக்க வகையில் சுட்டிச் செல்லுதல் இக்கட்டுரை நோக்கமாகும். அ. ஆரிக்கும் - ஆரிரக்கும் ஆர்த்தல் என்பதற்குரிய பலபொருள்களுள் ஒலித்தல் என்பது ஒரு பொருள். ஆனால் ஆரிக்கும் என்றொரு சொல்லே வழக்கில் இல்லை. இருந்தும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இயற்றாமலே ஏடுபெயர்த்து எழுதியோர் பிழையால் நேர்ந்தது. பதிப்பாசிரியர் பிழையாகவும் பதிந்து உரைகாரர் பிழையாகவும் உருக்கொண்டு, இன்று வரை அப்படியே நிலைத்துவிட்டது. களையைக் களைவது போல் பிழையையும் பிழைக்க விடாமல் செய்வதே பதிப்புச் செப்பம் ஆகும். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் என்பது வாழ்த்துக் காதையில் வரும் வள்ளைப் பாட்டு. ஆரிக்கும் என்பதற்கு ஆர்க்கும் என்னும் பாட வேறுபாடும் சிலப்பதிகாரப் பதிப்பில் காட்டப் பெற்றுள்ளது. ஆனால், ஆர்க்கும் என்பது இவ்வரிப் பாடலில் அமைந்துள்ள வெண்டளை இலக்கணத்தொடு பொருந்தாதது. ஆகலின் அப்பாடம் ஏற்கத் தக்கது அன்றாம். ஆரிக்கும் என்றொரு சொல்லே இல்லையாக, பொருளமைதியும் பொருந்திய தன்றாக, அதனை இளங்கோவடிகள் இயம்பினார் என்பது கொள்ளத்தக்கது அன்றாம். சிலப்பதிகாரப் பதிப்பினைத் தம்மிடம் இருந்த சுவடியுடன் ஒப்பிட்டு நுனித்து ஆராய்ந்த அறிஞர் வையாபுரியார் ஆரிரக்கும் எனப் பாட முண்மையைக் கண்டார். அதனை அகராதி நினைவுகள் என்னும் தம் நூலில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டவாறு ஆரிரக்கும் என்று பாடம் இருப்பதே இலக் கணத்திற்குப் பொருந்தியதுடன், பொருளமைதியும் பொருந்திய தாகும். தீங்கரும்பு என்னும் இப்பாடலை அடுத்து நிற்கும் தாழிசைகள் இரண்டன் இறுதியும் முறையே வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல் என்றும் பனந்தோடுளங்க வரும் பாடலே பாடல் என்றும் பாண்டியனுக்குரிய வேப்ப மாலையையும், சேரனுக்குரிய பனந்தோட்டு மாலையையும் குறித்தன. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கல் என்னும் தாழிசை இலக்கணத்தின்படி முதற்பாடல் சோழன் அணியும் ஆத்தி மாலையைக் குறித்திருத்தல் வேண்டும். ஏனெனில், போந்தை (பனை) வேம்பே ஆர் (ஆத்தி) என வரூஉம் மாபெரும் தானையர் மூவேந்தர் ஆகலின். இங்கே சோழனது ஆத்திமாலை மட்டும் இல்லாமை அறியத்தக்கது. அறியவே. ஆரிக்கும் என்பது பிழையானது என்றும், ஆர் (ஆத்தி) இரக்கும் என்பதே பொருந்தியது என்றும் கொள்ளவேண்டும். ஆர் இரக்கும் என்பதற்கு ஆத்தி மாலையை வேண்டும் என்பது பொருள். டாக்டர் உ. வே. சாமிநாதரின் பதிப்பொடும் ஏட்டுச் சுவடியை ஒப்பிட்டுப் பார்த்தே ஆரிரக்கும் என்னும் பாட முண்மையைக் கண்டு தெளிகிறார் வையாபுரியார். அக் கருத்தையும் வெளிப்படுத்தியுரைத்தார்; கட்டுரைகளிலும் எழுதினார். ஆனால் ஆரிக்கும் என்னும் அப்பிழைச் சொல் உ. வே. சா அவர்களின் பின்வந்த பதிப்புகளிலும் மாறாமல் அப்படியே உள்ளது. அப்பதிப்பினை மூலமாகக் கொண்டு புத்துரை கண்ட நாவலர் ந. மு. வே. அவர்கள் உரையிலும் இத்திருந்திய பாடம் ஏறவும் இல்லை; உரைத்திருத்தம் பெறவும் இல்லை; அதன் மறுபதிப்புகளின் நிலைமையும் அப்படியே தான். பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் - அம்மகளிர் ஆர்த்துச் செய்யும் பாடலே சிறந்த பாடலாகும் என்று உரையும்; ஆரிக்கும் ஆதரிக்கும் என்றுமாம் என்று குறிப்பும் நாவலர் வரைந்துள்ளமையால் இச்சொல்லும் இப்பொருளும் சான்றொடும் அகரமுதலிகளில் சுட்டிக்காட்ட நேர்ந்துவிடல் உண்மை; இத் தவறுடைய பாடத்தைக் கருத்தில் கொண்டே பல்கலைக் கழக அகரமுதலியில் இச்சொல் ஏறியதையும் அதனைக் களைய வேண்டியதையும் திரு. வையாபுரியார் குறிப்பிட்டார். ஆயினும் என்ன? இந்நாள்வரை திருத்தம் பெறவில்லை; இனிவரும் பதிப்புகளிலேனும் இப்பொருள் பொதிந்த பாடம் போற்றிக் கொள்ளப் பெறுதல் வேண்டும். பாடங்கள் பழைய இலக்கண இலக்கியங்களில் பலவாக உள. கிடைக்கும் ஏட்டுச் சுவடிகள் அளவிலேனும் பதிப்பு நூல்களுடன் ஒப்பிட்டு நோக்கி ஆராயும் ஒருநிலை அறிஞர்களிடத்தோ, அராய்ச்சி அமைப்புகளிடத்தோ உண்டாகுமானால் இப் பொழுதும் கூட சில நல்ல பாடங்கள் கிடைத்தல் உறுதியாகும். ஆ. பார்ப்பார் - குரவர் புறநானூற்றின் 34 ஆம் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாகும். அப்பாடல் செய்ந்நன்றி மறவாமையைச் சீர்பெற விளக்குகிறது. ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றார்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே என்பது அப்பாடலின் முற்பகுதி. இதிலுள்ளது. பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் என்னும் அடி. புறநானூறு உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே மூல ஏட்டில் இடம் பெற்றிருந்தது என்பது பார்ப்பாரைப் பிழைத்த கொடுந் தொழிலையுடையோர்க்கும் என அவர் உரை வகுப்பதால் கொள்ளலாம். சிந்தாமணி முதலிய நூல்களில் இருந்தும் அவர் தக்க மேற்கோளை அவ்வவ்விடங்களில் அடிக்குறிப்பாகக் காட்டுவதைத் திருக்குறள் பதிப்பிலேயே காணலாம். இனி, நாவலர் அவர்களின் திருக்குறள் பதிப்பை உ. வே. சா. அறியாமல் இருந்திருக்க இயலாது. ஏன் எனில், அப்பதிப்புக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர்களுள் முதல்வர் பெரும் பேராசிரியர் மீனாட்சி சுந்தரனார் அவர்கள். மற்றையோரும் தியாகராசர் முதலிய அவர்தம் மாணவர்களே. ஆகலின் குரவர்த் தப்பிய என்னும் பாடத்தை உ. வே. சா. அறியாமல் இருந்திருக்க இயலாது. இருப்பினும் அதனைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்றே தெளிவு செய்ய வேண்டி யுள்ளது. நிற்க. புறநானூற்றுக்குச் சிறந்த விளக்கவுரை ஆராய்ச்சியுரை ஆகியவற்றுடன் 1947 இல் உரை வேந்தர் ஔவை சு. துரைசாமி அவர்கள் ஒரு பதிப்பைக் கழக வழி வெளிக் கொணர்ந்தார். அப்பதிப்பில் குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் என்னும் பாடமும் தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை யுடையோர்க்கும் என்ற உரையும் குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் எனத் திருத்தப் பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுள்ளதென்பது திருக்குறள் உரையால் காணப் படுகிறது என்று விளக்கமும் வரைகின்றார். இவை இவ்வாறு இருக்க, பார்ப்பார் குரவர் என்பவற்றுள் எது செவ்விய பாடமாக இருத்தல் வேண்டும் என்பதை நோக்கின் குரவர் என்பதே நூலறிவுடையார்க்கு எளிதில் விளங்கும். ஆன்முலை முதலிய அடிகளில் அமைந்த மோனை நலம். பார்ப்பார்த் தப்பிய என்னும் பாடத்தில் இல்லை. குரவர்த் தப்பிய கொடுமை என்பதில் இனிது பொருந்திக் கிடக்கிறது. அன்றியும் பொருளாலும் குரவர் என்பதே சிறக்கின்றது. எவ்வகை அறங்களிலும் தலையாய அறம் பெற்றோரைப் பேணுதல் என்பது வெளிப்படை; நம்மவர் சிறந்த பண்பாடும் கூட; தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை தாய்சொல் துறந்தொரு வாசகம் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தந்தை தாய்ப் பேண் என்பவை நம் குழந்தைப் பருவத்திலேயே கற்பித்து வரும் நன்மொழிகள். கோவலன் தன் குற்றமாகக் கண்ணகியிடம் கூறி வருந்தும் போது இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன் என்பதும் தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே என்னும் பழமொழியும் குரவர்த் தப்புதல் குற்றத்தை நன்கனம் வெளிப்படுத்தும். இராமநாதபுரம் திரு. பொன்னுசாமியார் வேண்டு கோளின்படி யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரால் பல பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்துச் சென்ன பட்டணம் வாணிநிகேதன அச்சுக்கூடத்தில் துன்மதி ஆண்டு வைகாசி மாதம் பதிப்பிக்கப் பெற்றது திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் கூடிய நூல். நாவலர் காலம் 1822- 1879. இதில் துன்மதி ஆண்டு 1861 ஆகும். சீரிய பதிப்புக்குச் செவ்விய அளவுகோல் நாவலர் பதிப்பு என்னும் எண்ணம் பதிப்பாளர் படிப்பாளர் அனைவருக்கும் பதிந்து இருந்ததை இந்நாளைய அறிஞரும் அறிவர். அத்தகைய நாவலர் பதிப்பிலேயே செவ்வைப்பட வேண்டிய குறிப்புகள் இருந்தன எனில் ஏனையோர் பதிப்பைக் குறிக்கவும் வேண்டுமோ? தமிழ்ச் சங்கத்தில் இருந்த பரிமேலழகர் உரைச்சுவடி களோடும், அச்சிட்ட நூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்தார் பேரறிஞர் இரா. இராகவர். பல சுவடிகளைப் பல நூல்களொடும் ஒப்பிட்டுப் பார்ப்பது போலும் அச்செயல் அரிதே. துன்பமிக்க அப்பணியும், அதனால் உண்டாகும் பயன் கருதி இன்ப மிக்கதாய் அமைந்து எழுச்சியூட்டுகிறது! இதனை ஆய்வில் தலைப்பட்ட அறிஞர்களே உணர்வர். தினைத் துணை நன்மையையும் பனைத் துணையாக் கொள்வது பயன் தெரிவார் செயலாகலின், பனைத்துணை நன்றியை எளிதில் விடுவரோ? பதிப்பித்த பரிமேலழகர் உரையில் பல திருத்தங்கள் கிடைக்கக் காண்கின்றார் அறிஞர் இரா. இராகவர். அவற்றுள் மூன்றை மட்டும் செந்தமிழில் விளக்கி வரைந்தார். சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவியந் தணரைஆவைப் பாலரைப் பாவை மாரை வதைபுரி குநர்க்கு முண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் றார்க்கென் றேனும் ஒழிக்கலாம் உபாய முண்டோ? (கம்ப, கிட்கிந்தை. 62) என்னும் கம்பர் வாக்கின் தொடக்கமே குரவர் விளக்கமெனல் வெளிப்படை. தாயைத் தந்தையைக் குருவை என்பது குரவர்களையல்லவோ விளக்குகின்றது; இதனைக் கருதின் நாவலர் சுட்டிய பாடமே தக்கது என்பது இனிது விளங்கும். பதிப்புப் பணியில் புகுவார் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் பணித்தூய்மையே அணியாய்ப் பூண்டு விளங்குதல் வேண்டும் என்பதும், தமக்கு முற்பட்டு விளங்கும் ஆராய்வாளர் கருத்துகளைக் கருத்தில் கொண்டு கடனாற்ற வேண்டும் என்பதும் கடைப்பிடியாகக் கொள்ளத் தக்கனவாம். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பாண்டியன் புத்தக சாலையில் அரிய பல ஏட்டுச் சுவடிகள் தொகுத்து வைக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் அச்சிடப் பெற்ற நூலின் சுவடிகளும் இருந்தன. அச்சிடப் பெறாத சுவடிகளும் இருந்தன. அச்சிடப் பெற்ற நூலின் சுவடிகளுள், திருக்குறள் பரிமேலழகர் உரைச் சுவடிகள் நான்கு இருந்தன. அச் சுவடிகளுக்கு உரியவர்கள், ஆழ்வார் திருநகரித் திருமேனிக் கவிராயர் வழித்தோன்றிய இரத்தின கவிராயர் மகனார் தாயவலந் தீர்த்தான் கவிராயர், திருச்சுழியல் சோமசுந்தர கவிராயர், திருநெல்வேலித் திருப்பாற் கடனாதன் கவிராயர், துன்படக்கிக் கோட்டை முத்து வயிரவ நாதப் புலவர் என்பார். தமிழ்ச் சங்கச் சுவடிகளை ஆய்வதற்கென்றே புலவர்கள் அமர்த்தப் பெற்றிருந்தனர். செந்தமிழ் இதழாசிரியரும், தமிழ்ச் சங்கக் கல்லூரித் தலைமையாசிரியரும், பிறரும் அத் துறையில் தலைப்பட்டு அயராது உழைத்து வந்தனர். தொடக்க நாளில் செந்தமிழ் இதழாசிரியராக இருந்தவர் பெரும் புலவர் இரா. இராகவர் ஆவர். அவர் தாம் ஆய்ந்து கண்ட அரிய குறிப்பு களை ஆராய்ச்சி என்னும் தலைப்பிட்டுச் செந்தமிழில் எழுதி வந்தார். அவர் மேலே குறிப்பிட்ட நான்கு சுவடிகளையும். அச்சிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரை நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். தாம் கண்ட அரியவும் உரியவுமாகிய செய்திகளை அறிஞர்கள் அறிந்து போற்றுமாறும், அடுத்துப் பதிப்பிடுங்கால் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெளிப்படுத்தினார். கி.பி. 1812 இல் திருக்குறள் மூலமும், நாலடியார் மூலமும் இணைந்த ஒரு பதிப்பை அம்பலவாண கவிராயர் வெளி யிட்டார். சரவணப் பெருமாளார் உரைப் பதிப்பு 1838 இல் வெளிப்பட்டது; வேதகிரியார், பரிமேலழகர் உரையுடன் 1849 இல் வெளியிட்டார். இதன் பின்னர் 1861, 1875, 1876, 1891 ஆகிய ஆண்டுகளிலும் பரிமேலழகர் உரைப் பதிப்பு வெளிப் பட்டது. இவற்றுள் ஆறுமுக நாவலர் பதிப்பும் ஒன்றாகும். புறநானூற்றில் வரும் இப் பகுதியை எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் திருக்குறள் உரை விளக்கத்தில் ஆசிரியர் பரிமேலழகர், பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன் முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த் தபுத்தலும் முதலிய பாதகங்களைச் செய்தல் என உரைநடை யாக்கிக் காட்டுகின்றார். ஆகலின், அவர் காலத்திலும் இப் பாடம் இருந்தது என்பது உறுதியாகின்றது. 1861 ஆம் ஆண்டில், அஃதாவது துன்மதி ஆண்டு வைகாசித் திங்களில் திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையுமாக ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்த பதிப்பில், பரி மேலழகரின் உரைப் பகுதியின் அடிக்குறிப்பாக மேலே குறித்த புறநானூற்றுப் பகுதியை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அதில், மூன்றாம் நான்காம் அடிகள், குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வருவாய் மருங்கில் கழுவாயும் உளவே என்னும் பாடத்துடன் உள்ளன. இப் பதிப்பு வெளிப்பட்டு 33 ஆண்டுகள் கடந்த பின்னரே (1894) உ. வே. சா. அவர்களால் புறநானூறு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இருந்தும், இப்பாடம் கொள்ளப் பெற்றிலது. உ. வே. சா. அரிதின் முயன்று ஏடுகள் தொகுத்து ஒப்பிட்டுப் பாட வேறுபாடுகள் கண்டு ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையில் தமிழ்நூல்கள் வெளியிட்டுள்ளனர். அவர் காட்டியுள்ள பாட வேறுபாடுகளும், ஒப்புமைப் பகுதிகளும் அவர்தம் அயரா உழைப்பிற்குச் சான்றாக இலங்குவன. புற நானூற்றுப் பதிப்புக்கு, மூலப் படிகள் எட்டும், உரைப்படிகள் பதின்மூன்றும் பயன்படுத்தப் பட்டுள்ளன. எனினும் பார்ப்பார் வழுவாய் என்பவற்றுக்குப் பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றில; உளவே என்னும் பாட வேறுபாடு மட்டும் காட்டப் பெற்றுளது. அவருக்குக் கிடைத்த படிகள் எவற்றிலும் இப் பாட வேறுபாடே இல்லையா? நாவலருக்கு இப் பாட வேறுபாடு எப்படிக் கிடைத்தது? புறநானூற்றுச் சுவடிகள் தமிழகத்தில் மட்டுமா கிடைத்தன? ஈழத்திலும் கிடைத்தன; ஐயரவர்கள் பதிப்புக்கு, யாழ்ப்பாணம் திரு. சதாசிவனார், திரு. த. கனக சுந்தரனார், திரு. வி. கனகசபையார் ஆகியோரின் மூலப்படிகளும், திரு. சி. வை. தாமோதரரிடம் இருந்த திருத்தணிகைச் சரவணப் பெருமாளார் மூலப்படியும், வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதரின் உரைப்படியும் பயன்பட்டுள்ளன. இப்படிகளை வழங்கியவர் களுள் சதாசிவம் என்பார் ஆறுமுக நாவலர் அச்சுக்கூடப் பொறுப்பாளராக இருந்தவர். ஆதலால் தமிழ் உலகிலும், சைவ உலகிலும் அரிமாவென விளங்கிய நாவலர், ஒரே ஒரு பிழையைக் கண்டு பிடிக்கவும் இயலாத வகையில் எந்நூலையும் பதிப்பித்த பதிப்புக்கலை ஏந்தல் புறநானூற்றுச் சுவடிகளைத் தம் கைவயம் வைத்திருந்ததையோ ஒப்பிட்டு ஆய்ந்ததையோ ஐயுற வேண்டுவ தில்லை. அவர் கண்ட செப்பமான பாடம் சிதைந்துவிடக் கூடாது என்பதால் அதனை அடிக்குறிப்பாகக் காட்டினார். உ. வே. சா. அப்பாடத்தைப் போற்றிக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். இ. திருக்குறள் உரையில் கிடைத்த பாடங்கள் நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்னும் 320 ஆம் குறள் விளக்கத்தில் பரிமேலழகர் உவர் நிலத்து விளைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே யாதலின் நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்றார் என்று அச்சுப் படிகளில் பாடம் இருந்தது. ஆனால், ஏட்டுச் சுவடிப் பாடம் உயிர் நிலத்து வினை வித்திட்டார்க்கு என்பது . உவர் உயிர், என்பவற்றிலும் விளை வினை என்பவற்றிலும் ஏற்பட்டுள்ள எழுத்து வேற்றுமை சிறிதே எனினும் பொருள் வேற்றுமை எத்துணைப் பெரிதாகின்றது! பின்னதிலுள்ள பொருட்சிறப்பு முன்னதில் எதுவும் இல்லையாய் வறிதாய் ஒழிகின்றதே! ஆராய்ச்சியாளர், வெவ்வினை செய்யுமாந்தர் உயிரெனும் நிலத்து வித்தி அவ்வினை விளையுள் உண்ணும் என்னும் சிந்தாமணிச் செய்யுளை எடுத்துக் காட்டும் போது (முத்தி. 164) ஈதன்றோ உண்மைப் பாடம் என்று வியப் புறுகின்றோமே! ஈத்துவக்கும் இன்பம் என்பதும் ஈதன்றோ! இத்தெளிவு மிக்க பாடத்தைத் தந்தது, துன்படக்கிக் கோட்டை ஏட்டுச் சுவடியாம்! எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் என்னும் 582 ஆம் குறள் விளக்க உரையில் நிகழ்வன வெல்லாம் என்றது நல்லவுந்தீயவுமாய சொற்களையும் செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க வழியாகத் தேறுதலாகச் செய்ய வேண்டுதலின் வல்லறிதல் என்றும், அவ்விரு தொழிற்கும் அறிதல் காரணமாகலின் அதனையே உபசார வழக்கால் தொழிலென்றுங் கூறினார் என்பது அச்சிட்ட நூல்களில் கண்ட பாடமாக இருந்தது. ஆழ்வார் திருநகரிச் சுவடியில் தக்க வழியாகத் தேறுதலாக என்னும் பகுதி தக்க அளியாகத் தெறலாக என்று இருக்கக் கண்டார் இராகவர். அச்சுப்படியின் பாடத்திலும் சுவடியின் பாடம் முன்னையோர் மரபின் முத்திரையாய் இலங்குவதைக் கண்டு இன்புற்றார். கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும் ஒடியாமுறையின் மடிவிலை யாகி (புறம். 29) தெறலும் அளியும் உடையோய் (புறம்.2) அளியுந் தெறலும் எளிய வாகலின் (பெரும்பாண்) என்பவற்றையும், அவற்றின் உரையையும் எடுத்துக் காட்டி ஏட்டுப் பாடத்தின் இனிமையை நிறுவினார். உப்பமைந் தற்றாற் புலவி என்னும் 1302 ஆம் குறளுரையில், புலவி கலவியின்பஞ் செயற்கு வேண்டும் அளவிற்றாதல். உப்பு துய்ப்பனவற்றை இன்சுவை யாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் என்று அச்சுப் பாடத்தில் இருந்தது. ஆனால் திருச்சுழியல் ஏட்டுப் படியில், இன்சுவை யாக்கற்கு என்பது இன்சுவைய வாக்கற்கு என்றுண்மையைக் கண்டு மகிழ்ந்தார் இராகவர். உப்பு இன் சுவையாக்குதலிலும், இன்சுவையுடைய தாக்குதல் தெளிவுடையதன்றோ! பாலொடு தேன்கலந் தற்றே என்னும் குறளில் வரும் வேறு வேறு அறியப்பட்ட பல சுவைய வாய பாலும் தேனும் என்னும் பரிமேலழகர் உரையைக் கண்டு தெளிவுறுமாறும் சுட்டினார். அச்சிட்ட சுவடிகள் அனைத்தையும் தமக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகள் அனைத்துடனும் அயராமல் ஒப்பிட்டுக் கண்டு அவர் வெளிப்படுத்தியவை இம் மூன்று உண்மைப் பாடங்களாம்; எஞ்சிய சிலவும் இருந்திருக்கலாம்! ஏட்டுச் சுவடிகளை அச் சிட்ட நூல்களொடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருமரபு இன்று போற்றப்பெறினும் கூட, இன்னும் சில உண்மைப் பாடங்கள் கிடைக்கக்கூடும் என்பது பெரும்புலவர் இரா. இராகவர் எடுத்துக் காட்டிய அரிய சான்றுகளால் புலப்படுகின்றது. இவ்வாறு அவர் எடுத்துக் காட்டியது கைம்மேல் கனியாகப் பயனாயிற்று என்பதே குறிப்பிடத்தக்கதும் மகிழத் தக்கதுமாம். செந்தமிழ் முதற்றொகுதி பன்னிரண்டாம் பகுதியில் இவ்வாராய்ச்சிக் குறிப்பு வெளி வந்தது. அது சோபகிருது ஆண்டு ஐப்பசித் திங்களாகும். அதற்குப் பின் (1903) அச்சிடப் பெற்ற திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்புகள் எல்லாம் இத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு வெளிப்பட்டன. செந்தமிழும், செந்தமிழ் இதழாசிரியரும் செய்த இப்பணி, நாடு தழுவிய பணியாகி மலர்ந்தது. ஆதலால் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து கண்ட உண்மைப் பாடங்களைத் தமிழுலகு அறியுமாறு செய்தலும், செய்வித்தலும் அறிஞர் கடமையாம். இவ்வாறு செய்யாமையால் ஏற்பட்டுள்ள பயனின்மையையும், குறை பாட்டையும் குறுந்தொகைச் சுவடியாய்வு ஒன்றால் காண்போம். ஈ . குறுந்தொகையில் மூல பாடங்கள் குறுந்தொகையை முதன்முதல் பதிப்பித்த ஆசிரியர் திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கனார் ஆவர். அவர் பதிப்பு 1915 இல் வெளி வந்தது. அரங்கனாரின் பதிப்புக்கு கிடைத்த சுவடிகள் மூன்றே. அவை சென்னை அரசின் நூல் நிலையச் சுவடி ஒன்று; மணக்கால் ஐயம்பேட்டை முத்துரத்தினர் சுவடி ஒன்று; மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி ஒன்று; இவற்றைக் கொண்டே மூலத்தை உறுதிப் படுத்திக்கொண்டு ஒருவாறு உரையெழுதி வெளியிட்டார். இக் குறுந்தொகைப் பழம் பிரதியுடையார் தம் பிரதியைச் சில வாரம் யான் வைத்துக்கொள்ளுமாறு உதவினும் அன்றித் தங்கள்பால் வந்து பார்த்துக் கொள்கவெனக் கட்டளையிடினும் அவர்கள் கருத்தின்படி பார்த்துக் கொண்டு கிடைக்கும் அரியவற்றைச் சேர்த்து மறுபதிப்பிற் பதிப்பிக்குங் கருத் துடையேன். ஆதலின் அங்ஙனம் உதவ முன்வரும் தமிழபிமானம் மிகுந்த தக்கார்களுக்கு இப் பதிப்புப் பிரதியில் ஒன்றைத் தருவதோடு மறுபதிப்பிலும் அவர்கள் பிரதி கொடுத்து உதவியமையைப் பாராட்ட எட்டுணையும் மறவேனாவேன் என்று குறுந்தொகைப் பதிப்பில் உதவியுரைத்தல் பகுதியில் அரங்கனார் எழுதியுள்ளது தக்க ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஆய்தலில் அவர் கொண்டிருந்த பேரார்வத்தை வெளிப்படுத்தும். பதிப்புத் துறையில் சீரிய பணி செய்த திரு. வையாபுரியார், அரங்கனார் பதிப்புப் பற்றி வெளியிட்டுள்ள கருத்துகள் கருதத் தக்கன. எத்துணையோ பெரும் பிழைகள் காணப்படினும் அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்களாக உள்ளோம். முதலாவது அவர்க்குக் கிடைத்த பிரதிகளின் நிலைமையே பிழைகள் பலவற்றுக்கு காரணமாயுள்ளது. இரண்டாவது குறுந்தொகையின் நலத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும் படியாகச் செய்தார். மூன்றாவது தமிழறிஞர்களுடைய உள்ளத்தைக் குறுந்தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தார். நான்காவது குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டும் என்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தார் (தமிழ்ச் சுடர் மணிகள்). 1930 இல் புரசைபாக்கம், டி. என். சேசாசலம் என்பார் இரத்தினம் என்பவரின் புத்துரையுடன் கலா நிலைய வெளியீடாகக் குறுந்தொகையை வெளியிட்டார். கா. நமச்சிவாயர் மூலப் பதிப்பு ஒன்று வெளியிட்டாராம். 1933 இல் சோ. அருணாசலரும் மூலப்பதிப்பு ஒன்று வெளியிட்டார். ஆனால், இப் பதிப்புகள் எல்லாம் ஓலைச் சுவடிகள் கொண்டு ஆய்ந்து வெளிப்பட்டவை அல்ல என்று வையாபுரியார் குறிப்பிடுகிறார். ஆதலால் இப் பதிப்புகளுக்கு மூலமாக விளங்கியது, அரங்கனார் பதிப்பே என்பது வெளிப்படை. 1933 ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 12, பரல் 10 - இல் இருந்து இலந்தையடிகள் வித்துவான் இரா. சாம்பசிவனாரால் மூலமும் விளக்கவுரையும் எழுதப் பெற்று 1937 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. இம்முயற்சி, அரிய முயற்சி; விளக்கம் மேற்கோள் ஆகியன மிக விரிவுடையன; எனினும் ஐம்பது பாட்டுகள் அளவோடும் அமைகின்றது. டாக்டர் உ. வே. சாமிநாதரின் குறுந்தொகைப் பதிப்பு 1937 இல் வெளிவந்த அளவில், இக் கட்டுரை உரை விளக்கத் தொடர் அமைகின்றது என்பது உணர முடிகின்றது. சாம்பசிவனார் தமக்குக் கிடைத்த சுவடி கொண்டும் ஒப்பிட்டாராதல் வேண்டும்; இன்றேல், தாம் தக்க பாடமெனக் கொண்டு திருத்தியிருக்க வேண்டும்; ஏனெனில், ஐம்பது பாடல்களுக்குள் அரங்கனார் கொண்ட பாடத்தில் இல்லாத புதுப்பாடங்கள் மூன்று காட்டியுள்ளார், அவை தேமூரொண்ணுதல் (22), அரிதயர் (29), நினையலேன் (36) என்பன. 1937-இல் முனைவர் உ. வே. சாமிநாதர், குறுந்தொகைப் பதிப்பு உரை விளக்கத்துடன் வெளிவந்தது. உ. வே. சா. வழக்கம்போல் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து மூலத்தை உறுதிசெய்து கொண்டு உரை விளக்கம் வரைந்து பாட வேறு பாடுகள் மேற்கோள்கள் ஆகியவற்றையும் காட்டி வெளியிட்டார். அவர் தம் ஆய்வுக்குப் பயன்பட்ட சுவடிகள் 9. அச்சுவடிகளாலும் அவர்களின் அறிவாற்றல், அயரா உழைப்பு, உதவியாளர் திறம் இன்ன பல ஏந்துகளாலும் குறுந்தொகைப் பதிப்பு வெளிவந்தது. எனினும், சில செய்யுள்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிவு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை என்று அவர்கள் குறிப்பிடுவதால் முற்றிலும் தெளிவான பாடம் கிட்டவில்லை என்பதும் செவ்விய சுவடிகள் கிடைக்கப் பெறுமாயின் தெளிவு பெறக் கூடும் என்பதும் அவர்கள் கருத்தாதல் விளக்கமாகும். அரங்கனார், சோழவந்தான் கிண்ணிமங்கலம் மடத்தில் இருந்த சிவப்பிரகாச அடிகளிடம் பயின்றவர். அவ்வடிகளிடம் பயின்றவர்களுள் ஒருவர் கந்தசாமியார். அவருக்கு அரங்கனார் குறுந்தொகைப் பதிப்புக் கிடைக்க வாய்த்திருத்தல் இயல்பே. அப் பதிப்பில், தம் ஆய்வுத் திறம் விளங்க ஒப்புமைப் பகுதிகளை மிகப் பெரிய அளவில் சுட்டியுள்ளார் கந்தசாமியார். பிழைகளைத் திருத்தியுள்ளார். பதிப்பில் காணப்பெறாத ஒப்புமைப் பகுதிகளையும் கந்தசாமியார் குறித்துள்ளார் எனின், அவர் தம் நினைவுக் கூர்ப்பும் அருமையும் புலப்படும். அன்றியும் இராமசாமிபுரம் மூவரைய வண்ணம் பாடிய பூண்டியப்பப் புலவர் ஏடு பார்த்துத் திருத்தியது என்னும் தலைப்புக் குறிப்புடன், அவ்வேட்டுச் சுவடியில் கண்ட பாட வேறுபாடுகளையும் குறித்துள்ளார். இப்பாட வேறுபாடுகளுள் மிகப் பல உ. வே. சா பதிப்பில் காணப் பெறுவன எனினும், காணப் பெறாதவையும் உள. அவற்றுள் உண்மைப் பாடம் இதுவே எனக் கொள்ளத் தக்கனவும் உள. கந்தசாமியார், தாம் குறுந்தொகைச் சுவடியுடன் அச்சிட்ட நூலை ஒப்பிட்டுக் கண்ட பாடவேறுபாடுகளைத் தமிழ் நலம் கருதிய இதழ்களில் வெளிப்படுத்தியிருந்தால் அவ்வெளிப்பாடு அறிஞர்கள் ஆய்வுக்குக் கருவியாக அமைந்திருக்கும். அது, 1946 இல் பெரும் புலவர் இரா. இராகவர் உரை விளக்கம் வரையப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்த குறுந்தொகை விளக்கத்திற்கு (111 பாடல்கள்) உதவியாக இருந்திருக்கக்கூடும். 1965 இல் கழக வழியாக வெளிவந்த பெருமழைப் புலவர் பொ. வே. சோம சுந்தரனார் உரைக்கும் உதவியிருக்கக் கூடும். மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று என்று திருவள்ளுவர் உரைத்தாற் போல் அப்பாட வேறு பாடுகள் அவர்தம் குறுந்தொகை நூலில் எழுதி வைத்த அளவில் அமைந்தன. அவ்வரிய குறிப்புகள் பொதிந்த நூல், அவர் தம் வரலாற்றை எழுதுதற்கு யான் முயன்ற காலையில் கண்டும் கொண்டும் மகிழ வாய்த்தது. அப் பாடங்களை அறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தால் வெளிப் படுத்தலானேன். பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பை என்னும் பாடலில் (372) நெடுவெண் குப்பை என்பதற்கு உரையாளர்கள் நெடிய வெள்ளிய மணற்குவியல் எனப் பொருள் கண்டுள்ளனர். வெண் என்பதற்கு வெண் மணல் என்றது வருவித்து உரைத்தலேயாம். ஆனால் பூண்டியப்பப் புலவர் ஏட்டில் நெடுமணற் குப்பை என்று பாடமுண்மை இடரின்றிப் பொருள் காண உதவுகின்றது. 309 ஆம் பாடலில் இன்னா தனபல செய்யிலும், நின்னின்றமைதல் வல்லா மாறே என்பதில் இன்னாதியல்பல எனப் பாடம் காட்டுகிறது. இப் பாடம் நுண் பொருள் சிறப் புடையதாம். 274 ஆம் குறுந்தொகை, புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க் காசினை யன்ன நளிகனி உதிர என்று எல்லாப் பதிப்புகளிலும் உள்ளது. பூண்டியப்பர் ஏட்டால், புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅத் திறவுச் சினையன்ன நளிகனி உதிர என அறியப் பெறுகின்றது. இப்பாடத்தால் எதுகை நயம் வாய்ப்பதுடன், உவமை நயமும் செறிதல் வெளிப்படும். இறவுச் சினையாவது இறவு அல்லது இறால்மீனின் முட்டை. அதனை உகாவின் கனிக்கு ஒப்புக் கூறினார். பூண்டியப்பர் சுவடியால் அறியப் பெறும் பாடங்களை யெல்லாம் குறிப்பிட்டு விடுதல், ஆய்வார்க்குப் பயனாகும் என்பதால் அவற்றைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் குறுந்தொகைப் பதிப்புக்கு வழங்கப் பட்டுப் பயனும் ஆயிற்று. 16. மரபியலில் ஓர் இடைப்பாடும் இடர்ப்பாடும் மரபு காக்க வந்த மாண்பு நூல் தொல்காப்பியம். மரபியலோ, மரபுக் காப்பின் வைப்பகம். இத்தகு மரபியலிலேயே, மரபுக் கேடுகள் செறிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நோக்கும் போக்கும் அறியார், இடையிடைச் செறித்து நடைக்கேடு புரிந்துள்ளனர். இதனைப் பாயிரம் மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்று சுட்டுகிறது; மாற்றருஞ் சிறப்பின் மரபியலிலேயே நூற்பா மாறிக் கிடக்கவும் நேர்ந்துள்ளன. இவற்றுள் ஒன்றனைப் பற்றியது இக்கட்டுரை. இளமைப் பெயர், ஆண்மைப்பெயர், பெண்மைப் பெயர் என்னும் மூவகைப் பெயர்களை முறையே கூறப்புகும் ஆசிரியர், அம்முறையே முறையாக இளமைப்பெயர் இவை இவை, இன்ன இன்னவற்றுக்கு உரியன என விரித்தார். அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை என்றார் ஆசிரியர். பறப்பவற்றின் இளமைப் பெயர் பார்ப்பும் பிள்ளையும் என்ற ஆசிரியர், அப் பெயர்கள் தவழ்வன வற்றுக்கும் உரிமையாதலைக் கண்டு, தவழ்பவை தாமும் அவற்றோரன்ன என்றார். பின்னர்க், குட்டி என்னும் இளமைப் பெயரைக் கூறுவாராய், மூங்கா (கீரி), வெருகு, எலி, அணில் என்னும் நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயரைப் பெறும் என்றார். இந்நூற்பாவை அடுத்து, பறழ்எனப் படினும் உறழாண் டில்லை என்னும் நூற்பா இடம் பெற்றுள்ளது. இதனால், மூங்கா முதலிய நான்கும் குட்டி என்னும் பெயருடன், பறழ் என்னும் பெயரும் பெறும் என்றாகும். ஆனால் மூங்கா வெருகு எலி அணில் என்பவை பறழ் என்னும் பெயர் பெற்றதற்குரிய எடுத்துக்காட்டு எதுவும் உரையாசிரியர்க்குக் கிட்டிற்றில்லை. இவை இக் காலத்து வீழ்ந்தன என்றார். அணிற்பறழ் என்று இயைத்துக் கூறினாரே அன்றி, எடுத்துக் காட்டுக் காட்டினார் அல்லர்: காட்டு இருந்தால் அன்றோ காட்ட இயலும்? பறழ் என்னும் இளமைப் பெயர் மந்திக்கு வருதலை அறிந்து பேராசிரியர், பறழ் எனப்படினும் உறழாண்டில்லை என்பதிலுள்ள உறழாண்டில்லை என்னும் மிகையால் மந்திப் பறழை எடுத்துக்காட்டி அமைத்துக் கொண்டார். மந்தி, பறழ் என்னும் இளமைப்பெயர் பெறுதல் பெரு வழக்காம். துய்த்தலை மந்தி வன்பறழ் (நற். 95), புன்றலை மந்தி வன்பறழ் (நற். 163) என்றும் பிறவாறும் (நற். 233. 379; குறுந். 69; ஐங்குறு 272, 273) வழங்கப் பெறுகின்றன. குரங்கின் பறழ் (ஐங். 278), கடுவன்பறழ் (குறுந் 26) என்பனவும் வழங்குகின்றன. இங்குக் குறித்தவற்றால், பறழ் என்னும் இளமைப் பெயர் மூங்கா முதலிய நான்கும் கொண்டதற்குச் சான்று இல்லை என்றும், மந்தி குரங்கு கடுவன் என்பவை பறழ்ப் பெயர் பெற்றதற்குச் சான்றுகள் கிட்டியும் அம் மரபு தொல்காப்பியரால் சுட்டப் பெறவில்லை என்றும் கொள்ளலாம். குறளனாகிய ஒருவனைப் பறழ்மகன் என்கிறது கலி (94). அப்பறழ் மகன் ஆண்டலைக் கீன்ற பறழ்மகன் எனப்படுகிறான். ஆண்டலைப் பறவைக்கு அதன் பெட்டையீன்ற பறழ் போலும் மகன் என்பது இதன் பொருளாம். ஈன்றாள் என்பது தாயைக் குறித்தல் வெளிப்படை. விலங்கு குட்டி போடுதல் ஈனுதல் எனப்படுதலும் வழக்கே. ஆனால் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவைகளின் செயல் ஈனுதல் எனப் பெறுமோ என்னும் ஐயம் கழக நூல் அறிந்தார்க்கு எழாது. பறவை, ஈனில் இழைத்தல் ஆங்குப் பயில வழங்கும் செய்தியாதல் அறிவர். ஆகலின் பறவையின் இளமைப் பெயர்களுள் பறழ் என்பதும் ஒன்று என்று கொள்வதற்கு வாய்க்கின்றது. அதே பொழுதில் பறவை பறழ்ப் பெயர் பெறுதலை ஆசிரியர் சுட்டினார் இலரே என்னும் தடையும் தலை தூக்குகிறது. சான்றுகள் கிட்டாதவற்றுக்கு இலக்கணம் உண்மையும், சான்றுகள் கிட்டுவனவற்றுக்கு இலக்கணம் இன்மையும் ஆகிய இருதலைக் குறையும் எண்ணி, நூற்பாக்களின் வைப்பு முறையை நுண்ணிதின் நோக்கின் தெளிவு பிறக்கின்றது. இருதலைக் குறையும் போகி, இருதலை நிறையும் செறிகின்றது. அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன என்னும் நூற்பாக்களை அடுத்து, பறழ்எனப் படினும் உறழாண் டில்லை என்னும் நூற்பாவைத் தொடர்புறுத்தி வைப்பின் மரபு நிலை மாறா மாண்பு தெளிவாம். இத் தொடர்புறுத்தலால், பறப்பவை பார்ப்பு பிள்ளை என்பவற்றுடன் பறழ் என்னும் பெயரையும் பெறும் என்றும், தவழ்பவையும், இப் பெயர்களைப் பெறும் என்றும் கொள்ள வாய்க்கும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்னும் கொள்கையும் சிறக்கும். இனிப், பறழ் என்பது மந்தியின் இளமைப் பெயராகப் பயில வழங்குவது போல், பார்ப்பு என்னும் பறவையின் இளமைப் பெயரும் மந்திக்கு வழங்குதல் காண்பார் இயைத்துப் பார்த்து இனிது மகிழலாம். கருவிரல் மந்தி அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு என்றும், கருவிரல் ஊகம் பார்ப்போ டிரிய என்றும் வருவனவற்றையும் மலைபடு. 312 - 3, 208; குறுந்தொகை 249, 279, 335; ஐங்குறுநூறு 280; அகநானூறு 288 ஆகியவற்றையும் காண்க. பார்ப்பு என்னும் பறவையின் இளமைப் பெயரை மந்தியினம் பயில வழங்கப் பெற்றது போலவே, பறழ் என்னும் பறவையின் இளமைப் பெயரையும் பயில வழங்கப் பெற்றுள்ளது என்பதையும் கருதுக. இனிப் பறவையின் இளமைப் பெயர் மந்தியினத்தின் இளமைப் பெயர்க்கும் உரித்தாதற்கு யாதானும் ஓரியைபு இருத்தல் வேண்டும் எனின் பறவை பெரும்பாலும் கோடு வாழ்வுடையது ஆகலானும், குரங்கு கோடு வாழ் குரங்கு ஆகலானும், கிளை விட்டுக்கிளை தாவும் மந்தி பறவையெனத் தோற்றுதலுண்டாகலானும் இவ்விளமைப் பெயர் இயைந் திருக்கக் கூடும். ஒரு நூற்பாவின் வைப்பு முறை இடைப்பாடு எத்தகு இடப்பாட்டையெல்லாம் ஆக்கும் என்பதும், பெரும் பெரும் புலவோரையும் எவ்வெவ்வாறெல்லாம் வலிந்து உரை காணவும், நலிந்து கைவிடவும் ஏவும் என்பதும், நூன் முறை ஓதுங்கால், நூற்பா வைப்பு முறை நோக்குதலும் இன்றியமையாதது என்பதும் கருதிக் கடைப்பிடித்தற்கு உரியனவாம். இருக்கும் மரபை விடுவானேன்? இல்லா மரபைத் தொடுவானேன்? இருக்கும் இடத்தில் பிறழ்வாகி இயையும் நூற்பா உறழ்வாலே! 17. அகவற் பாவின் ஈறு காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் வெண்பா முடிதல் வேண்டும் என்னும் வரையறையை யாப்பு நூல்கள் வெளியிடுகின்றன. காரிகை உரையாசிரியர், எல்லா வெண்பாவிற்கும் நாளென்னும் நேரசைச் சீரானும், மலரென்னும் நிரையசைச் சீரானும் காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் குற்றியலுகரம் ஈறாகிய நேரீற்றியற் சீரானும் இற்ற முச்சீரடியே இறுதியாம் என்று நேரிசை இன்னிசை போல என்னும் காரிகைக்கண் விளக்கி எழுதுகின்றார். ஆனால், அகவற் பாவின் முடிநிலை இன்னதென இலக்கண நூல்கள் வரையறுத்துக் காட்டிற்றில. அது பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம். அனைத்துப் பாக்களும் வெண்பா, அகவல் என்னும் இரண்டனுள் அடங்கும் என்பது தொன்னெறி. ஆக, வெண் பாவைப் போல் அகவற்பாவின் முடிநிலையும் இன்னதென வரையறுக்கப்பட்டு விடுமாயின் அனைத்துப் பாக்களின் முடி நிலைகளும் அறிந்தவாறாம். பாட்டிலும் தொகையிலுமாகச் சங்கச் சான்றோர்களால் பாடப்பட்டு நம் கைக்குக் கிட்டியுள்ள பாடல்கள் 2381. இவற்றுள் கலிப்பாவால் அமைந்த கலித்தொகைப் பாடல்கள் நூற்றைம்பதும், பரிபா என்னும் ஒருவகைப் பாவால் அமைந்த பரிபாடலும் நீங்கிய பாடல்கள் எல்லாமும் அகவலே. இவற்றுள் ஐங்குறு நூற்றின்கண் அன்னாய் என முடிவுறும் இரண்டு பத்துகள் (கள்வன் பத்து, அன்னாய் பத்து) தவிர்த்து மற்றைப் பாடல்கள் ஏகாரத்தால் மட்டுமே முடிந்துள. இதனை நோக்குதல் இன்றியமையாதது. மேலும் இப்பாடல்களின் ஈற்றுச்சீர் அனைத்தும் மாச்சீராக மட்டுமே உள. தேமா, புளிமா என்னும் வாய்பாடு அமையும் சீரன்றி விளச்சீர் காய்ச்சீர் முதலிய சீர்கள் வரும் பாடல்கள் எவையும் இல. இவ்வாற்றான் ஏகார இறுதியாகிய மாச்சீர் மட்டுமே அகவலுக்குச் சிறப்புடைய ஈறெனப் பண்டையோர் கொண்டனர் என்பது தெளிவாகும். கல்லாடம் அகவற் பாவாலேயே அமைந்த நூல்; அதன் கண் நூறு அகவற் பாக்கள் உள. அப்பாக்களிலாதல் நால்வர் மணிமாலை, குமரகுருபர அடிகளால் இயற்றப் பெற்ற கலம் பகம், கோவை, மாலை ஆகியனவற்றுள் அமைந்துள்ள அகவற் பாக்களிலாதல் இப்பண்டை நெறி மாறுபடக் கண்டிலோம். வெண்பா முன்னாகவும் அகவல் பின்னாகவும் இணைந்து நடப்பது மருட்பா. அதன் ஈற்றுப் பகுதி அகவலே ஆதலின் அதன் முடிநிலையும் ஏகார இறுதியாகிய மாச்சீராகவே அமைந்துள்ளது. கலிப்பாவின் மடிநிலை உறுப்பு, சுரிதகம். அச்சுரிதகம் அகவற் சுரிதகம் வெண் சுரிதகம் என இரண்டாம். இவற்றுள் அகவற் சுரிதகம் கொண்ட பாக்கள் அனைத்தும் முன்னை விதிக்கு முரண்பட்டில. காட்டாக 150 கலியுள் அகவற் சுரி தகத்தால் முடியும் 88 பாடல்களுள் 86 பாடல்கள் ஏகார இறுதி பெற்ற மாச்சீராகவே உள. இரண்டு மட்டும் இகர இறுதி பெற்ற மாச்சீராக உள. (கடவுள் வாழ்த்து பாடி; பாடல் 55 தோழி) வஞ்சிப்பா அகவற் சுரிதகம் மட்டுமே கொண்டு வருவது. அச்சுரிதகமும் மேற்கண்ட முடிவுக்கு மாறுபட்டிலது. பரிபாடல் ஆசிரிய நிலையினும், வெண்பா நிலையினும் முடிதல் இலக்கிய வழி அறிந்ததாம். முழுமையாகக் கையில் கிடைத்துள்ள 23 பரிபாடல்களில் 18 பாக்கள் அகவல் முடிவும், 5 பாக்கள் வெண்பா முடிவும் பெற்றுள. அகவல் முடிவு பெற்றன அனைத்தும் ஏகார இறுதி பெற்ற மாச்சீர்களேயாம். அம்மை முதலிய வனப்பு வகை எட்டனுள் இயைபு என்ப தொன்று. இதனை ஞகாரை முதலா னகாரை ஈற்றுப், புள்ளி இறுதி இயைபெனப் படுமே (தொல். செய். 240) என்பார் தொல்காப்பியர். ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈறாக அமைத்துச் செய்யுளைப் பொருட்டொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயையெனப்படும் என்று பேராசிரியம் இதனை விளக்குகிறது. அகவல் இசையன அகவல் மற்றவை, ஏஓஈஆய் என் ஐ என்றிறுமே என்று யாப்பருங்கல விருத்தி நூற்பாவும், அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய நான்கு ஆசிரியப்பாவும் ஏ என்றும், ஓ என்றும், ஆய் என்றும், என் என்றும் இறும் என்னும் அதன் விருத்தியுரையும் நோக்குதற்குரியன. இவ்வியைபு இலக்கணத்திற்குச் சான்றாக மணிமேகலையும் பெருங்கதையும் திகழ்கின்றன. மணிமேகலையில் 30 காதைகளும் பெருங்கதையில் இன்று கிடைத்துள்ள 99 காதைகளும் இவ் வியைபு இலக்கணம் அமைந்தனவே. இவையனைத்தும் என் என னகரப் புள்ளியில் முடிந்தவை. சிலம்பில் 19 காதைகள் என் என முடிந்தன. எஞ்சியவை வரிப் பாடல்களும் பிறவுமாம். இங்கெல்லாம் வரும் இயைபுகள் அனைத்தும் மாச்சீரான் அன்றி வேறு சீர்களான் வந்தில. என் என்பதும் ஆய் என்பதும் அகவல் ஈறாதற்குரியன என்பதை இலக்கிய இலக்கணச் சான்றுகளால் அறிவது போல் இகர ஈற்றுமாச் சீரால் முடிவனவற்றை இலக்கண வழியே அறியக் கூடவில்லை. கலித்தொகையில் இகர ஈற்றுமாச்சீர் வந்துள்ளமையை அறிந்தோம். இஃதருகிய வழக்குப் போலும். இவ்வருகிய வழக்கு இடைக் காலத்தே சற்றே பெருகவும் பிற் காலத்தே மாறி மயங்கவும், இக்காலத்தே அகவலை எப்படியும் முடிக்கலாம் என்னும் துணிவால் விளச்சீர்களே அன்றி விளங்காய், விளங்கனிச் சீர்களும் வந்து முடியப் பாடுவதும் கண்கூடு. இங்குக் குறிக்கப் பெற்றவற்றால் தேமா புளிமா என்னும், மாச்சீரே அகவலின் ஈற்றுச் சீராய்ச் சான்றோர்களால் கொள்ளப்பட்டன என்றும், அவையும் மிகப்பெரிதும் ஏகார ஈற்றானே முடிக்கப்பட்டன என்றும் தெளியலாம். அகவற்பாவின் இறுதியை வாய்பாட்டு முறையில் நாளே, மலரே, காசே, பிறப்பே எனக் கொள்வது சாலும். (நேரே நிரையே, நேர்பே நிரைபே எனினும் ஆம்) இவற்றுள் நாளே மலரே என்பன போதாவோ எனின் போதா. ஏனெனில்; நேர்நிரை என்னும் தனியசைச் சொல்லுடன் ஏகாரம் பெற்று முடிவனவும், நேர்பு, நிரைபு என்னும் ஈரசைச் சொல்லுடன் ஏகாரம் பெற்று முடிவனவும், உள ஆகலின் என்க. எ-டு : ஊர் + ஏ = ஊரே; நாள் + ஏ = நாளே (புறம் 345) முறை + ஏ = முறையே; மலர் + ஏ = மலரே (ஐங். கடவுள்) வேந்து + ஏ = வேந்தே ; காசு + ஏ = காசே (நற். 81) உலகு + ஏ = உலகே; பிறப்பு + ஏ = பிறப்பே (குறுந். கடவுள்) ஏகாரத்தைப் போலவே என் என்பதற்கும் நாளென் மலரென் காசென், பிறப்பென் என ஒட்டிக் கொள்க. மரபு நிலை திரியின் பிறிதுபிறி தாகும் 18. ஆங்கிலியர் அந்தாதி நூல் ஆங்கிலியர் அந்தாதி என்பதொரு நூல். வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளாரால் இயற்றப் பட்டது அது. திருவல்லிக்கேணி முத்தமிழ் அருள்நெறி மன்ற வெளியீடாக அணித்தே (1985) வெளிப் பட்டுள்ளது. பாடுபொருளின் பல்திறச் சிறப்புகளைப் பகரும் நூலாக அமைதலே அந்தாதி நூலின் மரபு. ஆயின், ஆங்கிலியர் அந்தாதி அதற்கு மாறான வசை நூலாம். ஆங்கிலியர் தம் சுவடும் இல்லாமல் அழிந்தொழிய வேண்டும் என்னும் தீரா உணர் வில் பாடப்பட்ட நூலாகும் அது! அடிகளார் காலம் 1830 - 1898 அயலாட்சி ஒழிப்பு என்னும் நோக்கு பேராயக் (காங்கிரசுக்) கட்சிக்குக்கூட அக்காலத்தில் தோன்றியதில்லை! ஆனால் ஆங்கிலியர் கொடுமையாட்சி அடியோடு அகல வேண்டும் என்று, அடிகளார் வேண்டாத தெய்வமில்லை என்னும்படி வேண்டுகிறார். அருளுரு பேரருளுக்கு ஓருருவமாக நின்றவர் அடிகளார். அவர் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூன்முகப்பில், அவர்தம் அருட்சிறப்பைப் பேராசிரியர் கந்தசாமியார் சுட்டுகின்றார். சிற்றெறும்பொன்றை நீ கொன்றால் நம் திருவடி தருவோம் என்று முதல்வனே முன்வந்து சொன்னாலும், ஐயா, அம்முத்தி அடியேற்கு ஆகாது, அவ்வுயிர் உய்ய நன்கு அருள்க என்று வேண்டுவார் அடிகளார் என்பது அச்சுட்டு. அத்தகு அருட்பெருக்க அடிகளாரா ஆங்கிலியர் ஒழியப் பாடினார்? ஆங்கிலியர் செய் கொடுமைகளாக அடிகளார்க்குத் தோன்றியவை எவை? என்னும் எண்ணங்கள் எவர்க்கும் எழுதல் இயற்கை. அடிகளார் அருளுள்ளமே ஆங்கிலியர் அந்தாதி பாட ஏவியது என்பது தீர்மானமான முழுவிடை! கொடுங்கோல் அரசை ஒழித்தல் வேண்டும் என்பது துணை விடை! நூற்பொருள் ஆங்கிலியர் அந்தாதி 102 பாடல்களையுடையது. முதற் பாடல் காப்பு. இறுதிப்பாடல், பயன்; இடைப்பட்ட பாடல் நூறு. காப்புப்பாடலில் நான்முகன், சிவன், உமை, திருமால், பிள்ளையார், முருகன், குரு என்னும் ஏழு தெய்வங்களையும் முன்னிறுத்திப், பகைவதைத்து ஊன் உண்ணும் ஆங்கிலியர் தம் படையோடு ஒழியுமாறு அந்தாதி பாட அருள வேண்டும் என்கிறார். அடிகளாரின், அந்தாதி நோக்கு காப்பிலேயே காட்டப் பெறுகின்றது. பயனாம் இறுதிப் பாட்டில், வாக்குக் கொரு தெய்வம் உண்டென்று நாக்குப் படைத்தவரிற் பலரும் பகர்வது மெய்யானால், ஆக்குட்டியும் தின்னும் ஆங்கிலியர் அழிவுறச் சொல்லிய இப்பாக்குப்பம் (பாடல் தொகுதி) என்னதோ? அவளதேயன்றோ என்கிறார். காப்பும் பயனும் காட்டுவது மட்டுமோ? நூலில் வரும் நூறு பாடல்களுள் முப்பத்தெட்டுப் பாடல்களில் ஆங்கிலியர் கொன்றுண்ணும் கொடுமையையே குறித்துப் பாடுகிறார் அடிகளார். ஆதலால், உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் அதிலும் குறிப்பாக ஆக்கொலையும் அப்புலைப் புசிப்பும் - உடைமையால் ஆங்கிலியர் அழிய வேண்டும் என்று அந்தாதி பாடினார் அடிகளார் என்பது வெளிப்படையாம். இரக்கம் அணுவள வேனுமில்லாமல் இளம்பசுக்கன்று அரற்ற அரிந்துவந் துண்டு குலாவிடும் ஆங்கிலியர் என இளம்பசுக்கன்றும் தப்பாமைக்கு இரங்குகிறார். (5) சினைக்காலி கொல்லும் பழிகாரர் (22) சினைக்காலியுடன் இளங்கன்றும் கொன்றுண்பவர் (93) என்று சினைப்பசுவையும் கொன்று தின்னும் கொடுமைக்கு இரங்குகிறார். கன்று ஈன்ற பசுவையும் விட்டு வைத்தாரில்லையாம்; கன்றான் வதைத்துணும் பொல்லார் (66) என்கிறார். ஊன் வேட்டையாடி உண்ணும் விலங்கை ஒப்பவராம் ஆங்கிலியர்; நிணந்தின்னுந் தன்மையில் வல்விருகம் ஒப்ப நடப்பவர் (198). என்கிறார். கோடிக்கணக்காக எண்ணப்படும் தெய்வங்களுள் ஒன்றேனும் ஆங்கிலியர் கொலைக் கொடுமை கண்டும் புழுங்காமல் இருப்பது புதுமையே என வியப்புறுகிறார். தெய்வங்கள் கோடியுள் ஒன்றேனும் ஆன்நிணம் தின்றுவப்பார் பொய்வந்த நீதிகண்டுட் புழுங்காத புதுமை யென்னோ (13), என்பது அது. குணக்கேடுகள் கொலையும் புலையும் கொண்டாடும் ஆங்கிலியரின் பிறபிற குணங்கள் இவையெனவும் ஆங்காங்கு அடுக்குகின்றார் அடிகளார். அருளாண்மை சற்றும் அறியார் (9). அருளோர் சிறிதும் மருவாத நெஞ்சர் (92) கேட்டுக்கோர் கொள்கலமாம் ஆங்கிலியர் (13) கருந்தாது (இரும்பு) அனையர் (64) படங்கொண்ட பாந்தட் (பாம்புக்) குலம் போலும் ஈனர் (27) இண்டென்று (இண்டு - முட்கொடித் தூறு) அடரும் வல்வீணர் (21) எமன் ஒக்கும் ஆங்கிலியர் (74) குணங்கிய நாய்ச்சிறு வாலே யனைய குணுங்கர் (90) முன்னுவ தொன்று மொழிவதொன் றாக முரண் மனத்தர் (85) திருட்டுத் தன்மை கைவந்த ஆங்கிலியர் (7) என்பவை அவற்றுட் சில. கருங்குடை நல்லாட்சியைச் செங்கோல் என்றும் அல்லாட்சியைக் கொடுங்கோல் என்றும் கூறுவது வழக்கு. அவ்வாறே செங் கோல் வேந்தர் குடையை வெண் கொற்றக்குடை என்பதும் வழக்கே. அடிகளார் ஆங்கிலியர் குடையைக் கருங்குடை என ஆளுகின்றார். வஞ்சநீசர்முழு, வெறிப்பாழ் அநீதிக் கருங்குடை (58) உலகினர்க்குக் களங்கொண்ட துன்பம் தருவார் கை தாங்கும் கருங்குடை (52) கரிய குடை (6) என்பவை அவை: செருக்கும் சிறுமையும் ஆங்கிலியர் தம் ஆட்சி அழியாது செருக்குற்றனர்; அவர்க்கு அடிமையாய் வாழ்வார் இன்புறுகின்றனர். இவற்றைக் கண்டும் கேட்டும் நோவுறுகின்றார் அடிகளார். கழியிறு மார்ப்பில் முழுகித் தமது கரியகுடைக் கழிவிலை யென்று சொல்லிக் களி கூரும்பல் லாங்கிலியர் (6) பாவம் பெருகிப் பழுதற்ற புண்ணியம் பாறிடச்செய் தாவ லெழுந்த படியே நடித்திடும் ஆங்கிலியர் ஏவல்செய் தின்ப முறுவார் எல் லோ ருமிக் கேங்க (49) என்பன அவை. இன்னும், முகமன் பகர்பவர்க் கின்னல்மிக் கீந்து முருடரென அகமிஞ்சு வாருக்கு வேண்டியவா செய்யும் (54) என்றும், ஒவ்வோர் கொடுநீதியுண்டாக்கித் துன்பமென் கண்காணச் செய்திடும் என்றும் ஆங்கிலியரின் இரட்டைப் போக்கையும் பன்மைப் போக்கையும் பகர்கின்றார். வரிக்கொடுமை ஆங்கிலியர் ஆட்சியில் வறு நிலத்துக்கும் வரியாம். நாய்க் கும் வரியாம்; கழுதைக்கும் வரியாம்; கலங்கியுரைக்கின்றார் அடிகளார்! வித்துமிடாச் செய்த்தலைத் தீர்வைப்பகுதி கொள்வர் (29) கடிநாய்க்கும் தீர்வைப் பணங் கொள்ளும் வஞ்சக்கயவர் (73) ஈனமலியும் கழுதைக்கும் நாய்க்கும் இறைகொளற்கு மானம் அணுவள வேனுமில் லாக்கொடு வஞ்சகர் (76) இயற்கையும் மாறுதல் ஆங்கிலியர் கொடுமையால் இயற்கையின் இயல்பும் மாறிவிட்டதாம். அவர்கள் ஆளும் மண்ணில் மழை பெய்தற்கும் கொண்டல் அச்சங் கொண்டு ஓடுகிறதாம்; கொண்டல் கண்டஞ்சும் கொடுங்கோல் நடாத்தும் குணுங்கர் (37) அழிந்துபட வேட்டல் கொலைக் கொடியராம் ஆங்கிலியர் இப்படி இப்படி அழிய வேண்டும் என்றும் வேட்கையியம்புகிறார் தண்ட பாணியார்; ஆங்கிலியர் தாம் அடியோடு கெட வேண்டும் (2) ஆங்கிலியர் நிதி இறுமாப்பு முதற்சீர் எல்லாம் வெந்து நீற வேண்டும் (3) ஆங்கிலியர் குடல்யாவும் நாய்நரிக்கு ஊணாகச் செய்திடல் வேண்டும் (4) ஆங்கிலியர் கருவறுக்க வேண்டும் (64) முப்புரம் அழிந்தது போல் அழியவேண்டும் (96) ஆங்கிலியர், இருளாண்மை முற்றும் அழிவுறக் காண்பதென் இச்சை கண்டாய். (9) இறைமுறை : ஆங்கிலியரை அழிக்க தண்டபாணி அடிகளார் போர்க் கோலம் தாங்குவாரா? அவர் வேண்டுகை கேட்டு எவர் ஆங்கில வரை எதிரிடுவார்? அல்லது, கட்சியமைத்துக் கடுத்து நிற்பாரா? அவருக்கே பழகிப் போன முறையையே கையாள்கிறார்; இறையிடம் முறையிடலே அஃதாம்? அடிகளார் முழு முதல்வன் முதல் எல்லாக் கடவுளரையும் வேண்டுகிறார். பொதியமலை முனியையும் விட்டாரல்லர்! ஆங்கிலியரை அழிக்கத் தக்க ஒரு மகனை அருள வேண்டுமாம்! இல்லை, அவர்களே முன்வந்து அழிக்க வேண்டுமாம், ஆங்கிலியர் புறங்கொடுக்க, வெல்லவல் லானைப் படையாதிருக்கின்ற வேதனுக்கு, நல்லமதி என் றுண்டார்குங்கொலோ? (1) இது நான்முகனை வேண்டல் அன்று! mt‹ Jizah« ehkfËl« nt©lš!அவனுக்கு நீ நல்லறிவு தரக் கூடாதா எனும் வேண்டல்! ஆங்கிலர் தலைகளையெல்லாம் கொய்யவல்ல ஒரு வனைப் படைக்கமாட்டாத நான்முகன் கைகளையெல்லாம் இப்பொழுது அறுத்தெறிதல் தகும். முன்னரே அவன் தலையைக் கொய்த நீலகண்டன் இன்று இவ்வாறு கொய்தல் அல்லவோ நன்று என்கிறார். ஆங்கிலியர், சிரக்கும்பல் ஆயிரம் செய்யவல்லானைச் செயாப்பிரமன் கரக்கணத் தைச்சிரங் கொய்காரியின்று கழிக்கில் நன்றே (5) இலங்கை வேந்தனை அழித்தவன், இந்நாள் இவண் வந்து ஆங்கிலியர் கலங்கப் போரிடும் நாளே நன்னாள்; அதற்குத் திருமகளே நீயே இரக்கம் காட்ட வேண்டும் என்கிறார் (38). பாஞ்சாலியின் அவிழ்த்த தலை முடிக்க அன்று உதவியவன் இன்று இக்கொடிய ஆங்கிலியரை அழிக்காமல் அரவணையில் துயில்வது பாவம் என்கின்றார். (48) முதலையின் வாயில் களிறு பட்டு கதறியழ ஆழிபடையால் இடர்தீர்த்தவன் ஆங்கிலியர் கொடுமை தீர்க்காமல் அறிதுயில் கொள்வது என்ன அறிவுடைமையோ என அரற்றுகின்றார். (62) நெற்றிக்கண்ணை யுடையவனே, ஆங்கிலியரைப் பாம்பின் வாய்த் தேரையெனப் படாத்துயர் படுத்துதற்காம் வரமொன்று எனக்கு அருளக் கூடாதோ? என மன்றாடுகின்றார் (44). ஆங்கிலியக் கொடியர் தலை செந்நீர் ஆற்றில் தவழ்ந் தாலன்றிச் சிவன் முதலாம் தெய்வமெலாம் செயலற்ற வையேயாம் என்று பழிக்கவும் துணிகின்றார் (79). பொய்ப்பொருளே வேண்டி அறம் பிழைக்கும் ஆங்கிலியர்க்குப் புதியவோர் எமனாக வேலன் வேலொடு வர வேண்டும் என வேண்டுகிறார் (29). கதிரோனே, அறிவும் ஆற்றலும் ஒருங்கமைந்த வீரன் ஒருவன் தோன்றி ஆங்கிலியரை அறவே அழித்தற்கு அமைந்த ஒரு நாள் இல்லையோ? என ஏங்குகின்றார். (76). பொதியத்து வாழும் புலவர் குழாத்திடையே என்றும் வாழும் மாமுனிவனாம் அகத்தியன், இச்செந்தமிழ் நாட்டிற் பிறந்தாரும் வாடி அயலாரின் இழிந்த கலைபயிலும் கொடுமை ஏற்படக் கண்டும் கண்ணைத் திறவாமல் கிடக்கின்றானே என்று தவிக்கின்றார். (30). ஆழிப்படையே (சக்கரமே) நீயாவது அறவோர் கூறு வதைக் கேட்டு இரக்கம் கொண்டு ஆங்கிலியக் கொடியரை அழிக்கக்கூடாதோ? எனக் கெஞ்சுகிறார். (97). இறைமை நாட்ட அடிகளார், இறைமைப் பொறுப்பிலேயே எல்லாமும் நிகழ்த்த விரும்புதல் இயல்பே; அதனையே அவர் நூல் விரியக் கூறுகிறது. தந்நிலை விளக்கம் : அடிகளார் அருளுள்ளம் பற்றி முன்னேர அறிந்தோம். அவர் தந்நிலை விளக்கமாக ஆங்கிலியர் அந்தாதியாம் இந் நூலில் குறிப்பன அவர் தம் வரலாற்றின் அகச்சான்றுகளாம் அருமை வாய்ந்தன: வேள்விக்கு இரங்கல் : புலைக் கொலைக்காக ஆங்கிலியர்கள் அழியப் பாடும் அடிகள், வேள்வியில் நிகழும் கொலையைப் பற்றி என்ன கருதுகிறார்? கொலை வேள்வியை எள்ளத்தனையும் விரும்புவ தன்றாம் அவருள்ளம்! கொலைவேள்வியை நினைந்த அளவானே புலம்புதல் உண்டாகின்றதாம் : அவியென்று வேள்வியில் ஊன்பெய்கின் றாரும் அதுதவிர்சீர் புவியின்கண் ஓங்கிடச் செய்வது நாடிப் புலம்பும் என்சொல் என்கிறார் (88). வேள்விப்பலி என்று தெருட்டுவார் உண்டெனினும், வெங்கொலைப்பலி என்பது பொய்த்து விடுமா? தெய்வப் பெயர் சொல்லி விட்டால், கொலை, கொலை யாகாதா? கொலையாகாது என்றால், எவரையும் இறைவன் பெயரால் கொன்றால் குற்றமாகாதே! சமயச் சால்பு : அடிகளார்க்குத் தண்டபாணி என்பது பெயர். அவர் திருமுருகன் அடியாராகவே இருந்ததாலும் தண்டபாணி (தண்டேந்தி)யாக இருந்ததாலும் அப்பெயர் பெற்றார். முருகதாசர் என்பதும் அவர் பெயரே; புலவூண் கொள்ளாத சிவநெறிக் குடியில் தோன்றியவர். எனினும் சமயச் சால்பில் சிறந்து நின்றவர். கொள்கைச் சமயமே சமயமாகக் கொண்டவர். அதனால், பொய்ம்மத வாதப் புலயருக் கஞ்சிப் புழுங்குகின்றேன் எம்மதமேனும்கொன் றுண்ணாத தாகில் எனக்கினிதே (50) என்று பாடுகிறார். கொன்றுண்ணாச் சமயமே என் சமயம் என்கின்றார் அல்லரோ! அவர்தம் அருட்கொள்கையே சமயக் கொள்கை என்க. எல்லாரும் வாழ்க : எல்லாரும் இனிது வாழவேண்டும் என்பதே அடிகளார் வேட்கை! எல்லாரும் இனிது வாழ, என்பதனினும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்! எல்லா உயிரும் இனிது வாழ வேண்டும் என்பதே அது; எல்லா உயிரும் இனிது வாழ வேண்டும் என்னும் வேட்கையராய் நடக்கும் எல்லாரும், இனிது வாழ வேண்டும் என்பதே அடிகளார் தேர்ந்த கருத்து. இதனைக், கொல்லா விரதப் பெருநெறி பற்றிக் குவலயத்தில் எல்லாரும் வாழக் கருதுகின்றேன் (43) என்கிறார். அஞ்சுதல் ஆங்கிலியரை நினைக்கவே அடிகளார்க்கு அச்ச முண்டாகின்றதாம். தம்முயிர்க்காக உண்டாம் அச்சமோ? இல்லை! பிறவுயிர்களுக்கு என்னாமோ என்னும் அச்சமே அடிப்படையாம்! விண்ணில் ஒரு பறவையாய்க் கனவில் விளங்கி, அப் பறவையே மண்ணில் மனித வடிவுற்றுக் குருவாகி இனிய சொற்களை யெல்லாம் எனக்குச் சொல்லியது மெய்யானால் இந்த ஈனர்க்கு இவ்வாறு அஞ்ச ஏன் விடுத்தாய் (34) என்று இறையை வேண்டுகின்றார். பிறவுயிர்களின் துடிப்பு, தம் துடிப்பாக ஆகிவிட்ட அருணிலையில் தோன்றுவதே இஃதாம். வீடும் வேண்டா விறல் எச்செல்வம் எய்தாமல் போனாலும் வருத்தம் இல்லையாம்; அவருக்கு ஒரே ஒரு பேரின்பம் வாய்த்தால் போதுமாம்; அப்பேரின்பம் எது? உலகவர்க்குக் கூற்றுவனே வடிவாக அமைந்துள்ள ஆங்கிலியர், தண்ணந் தாமரை பனியாலே பற்றி எரிந்து அழிவது போல் எரிந்து அழியுமாறு ஒருவன் வந்து போரிடுவதைக் காண்பதே பேரின்பமாம்; (74). பனியால் எரியும் தாமரை என்பதால் இறையருளால் ஆங்கிலியர் அழிய வேண்டும் என்று குறித்தாராம். துறவுப்பயனாம் வீட்டையும் தூரத் தள்ளி விட்டு வேண்டும் வேட்பு அன்றோ ஈது! இன்னும் கூறுகிறார்; நினைப்பவற்றை யெல்லாம் தட்டின்றி வழங்க ஒருவன் உளன்; அவனை வணங்கி வழிபட்டு நின்மின் என மறைகள் கூறுகின்றன. அதனால், கட்டுத் தறியில் பிணைக்கப் படாக் களிறு போன்று கட்டற்ற என் நெஞ்சம். ஆங்கிலியக் கொலைஞர்களின் குலத்தை வேரோடு களைந்து எறிவதற்கே விரைகின்றது என்கிறார் (84). பற்றின் வழியது இன்பமும் துன்பமும் என்னும் தெளிவால் பற்றற்றுத் துறவு மேற் கொண்டவர் அடிகளார். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்பதைத் தெளிந்தவர் அடிகளார்; தம்வினை யொழிதற்கன்றோ தம் பற்றற்ற வாழ்வு பயன் தரும். ஆனால், கொடு நிணந்தின்னும் கழுகன்னவர் களித்தும் கூத்தாடியும் வாழும் கொடுங் காலத்தில் பிறந்து அழுது வருந்தும் தீவினை அவருக்கு உண்டாயிற்றாம்! mjid mÊ¡ftšy bjh©l® FGnthL njh‹Wth‹ xUtidna v©Â¡ bfh©LŸshuh«.(57). யானும் துறவிதானே! பிற துறவியர் போலவே ஈறிலா இன்பம் எய்த இச்சை கொண்டு உழைப்பவன் அல்லனோயான்; இருந்தும், ஆங்கிலியர் ஆட்சிக் கொடுமைக்கு உட்பட்டு மெலிகின்ற உலகோரின் துயரத்தை யெல்லாம் எண்ணி எண்ணி உருகுகின்ற உணர்வை எதற்காகவோ எனக்கு அளித்தாய் என முழு முதல்வனை வேண்டி இறைஞ்சுகின்றார். (35). தவத்தோர்க்கு அழைப்பு: தவத்தோர்களை அறைகூவி அழைக்கின்றார் அடிகளார். வீடு பேறடையும் வேட்கை மிக்க மாதவத்தீர், கொடுங்கோலருக் கெல்லாம் கொடுங்கோலராம் ஆங்கிலியரை அழிக்க வல்ல வீரன் ஒருவனை நம் நேரில் காணுதற்கு முன்னே, நாம் செய்யும் தவம் வீண்! கேடும் உண்டாம். என்சொல் உண்மை! இதனைக் கேட்டேனும் உய்யுங்கள் என்கிறார் (13). ஆங்கிலேயர் அழிந்து படச் செய்யும் தவமே காலத்துக்கேற்ற தவம் என்பது அடிகள் கருத்தாதல் விளங்கும். மேலும் தொடர்கிறார்: தவத்தால் எப்பேறும் வாய்க்கும் என்று வள்ளுவர் கூறக் கண்டும் இப் பாழரசு நிகழும் காலத்து அதனை ஒழிக்க முயலாமல், சிவத்தை அடையவும் முயல்கின்றாருளரே: அந்தோ இவரோடு என்னையும் சேர்த்துப் பரம் பொருளே கொன்று விடாதே என்கிறார். நேரொருவர் இல்லையென்று பலப்பல கோட்டை களையும் அழிக்கும் ஆங்கிலியர் அழிந்து பூழ்தியாகப் போராடும் ஆர்வம் சிறிதும் அல்லாத பொய்த்தவத்தர் மிக்குளர். அவரைப் போற்செயலற்றவனாக என்னைத் தொல்பொருளே ஆக்கி விடாதே என்றும் இறைஞ்சுகிறார் (8). ஒரு வரம் ஆங்கிலேயர் கொடிய ஆட்சியில் பிறந்ததற்கு இரங்குபவர் அடிகளார். அதற்கு அவர் என்செய்வார்? அவ்வாங்கிலியர் ஆளுங் காலத்தில் இறவாமையேனும் வேண்டும் என்று விரும்புகிறார்.Ãid¥gh® நினைத்த வடிவில் தோன்றும் மெய்யாம் தெய்வமே, வஞ்சரும், கயவரும், முழுவெளியரும், அறக்கேடரும், கொடுங்கோலருமாம் இவ்வாங்கிலியர் ஆட்சியில் உடலை விடுகின்ற கொடுமைக்கு என்னைத் தள்ளி விடாதே! இவ்வொன்றையே நின்னிடம் மிகக் கேட்கின்றேன் என மன்றாடுகின்றார். (58) போர் வேட்டல்: என் உள்ளுள் ஒரு தெய்வம் வருகின்றது; மீண்டும் பிறவாப் பெருநிலை எய்துவதிலும் சோற்றோடு ஊன் கலந் துண்ணும் ஆங்கிலியர் அழிந்து படச் செயலாற்றுதலே மேல் என்று எனக்குக் கிளர்ச்சியூட்டுகின்றது என்று (18) வியப் புறுகிறார். இறுதியில் உச்சநிலைக்கே செல்கிறார் அடிகளார். குணங்கிய (வளைந்த) நாய்ச் சிறுவாலே யனைய ஆங்கிலியப் பாவிகளை எதிரிட்டு நின்று பெரும் போர் செய்து வெற்றி கொண்டு, தெய்வத்திருக் கூட்டமெல்லாம் கொண்டாட நின்னுட் கலப்பது எப்பொழுதோ? (90) என முதல்வனை வினவுகின்றார். போரிடவும் துணிந்து நின்ற வேட்கை இது! நிறைவு: ஆங்கிலியர் ஆட்சி நாளிலே ஆங்கிலியரை இவ்வாறு பழித்துப்பாட முடியுமா? அஞ்சிச் சாவார் மலிந்த காலையில் ஆங்கிலியர் அந்தாதி பாடத் துணிவு வருமா? துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதை மெய்ப்பிக்கும் சான்றே இவ் வாங்கிலியர் அந்தாதி எனில், தவறுண்டா? பசுக்காவல் மட்டுமோ அடிகளார் நோக்கு; வரிக் கொடு மையை வலுவாகக் கூறுகின்றாரே; கொடுங்கோன்மையைக் குமைந்து கூறுகின்றாரே! ஆங்கிலியர்க்கு அடித்தொண்டு புரிந்து கிடப்பாரை அருவறுத்து மொழிகின்றாரே! போரிட்டு ஓட்டவும் புறப்படுகின்றாரே! பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆங்கிலவரை எதிர்த்து ஒரு நூலே பாடினாரே! இத்தகைய ஆங்கில எதிர்ப்பு நூலுள், இதற்கு முற்பட்டது தமிழில் உண்டோ? இந்திய மொழிகளில் உண்டோ? அடிகளார் மன்றாடி மன்றாடி இறைவனிடம் வேண்டிக் கொண்ட ஒரு மகனார் காந்தியடிகள் தாமோ? அவர்தம் வேட்கையெல்லாம் ஓருருவாகத் தோன்றிய வீறுமிக்க துறவி விவேகானந்த அடிகள் தாமோ? தண்டபாணியார் அழுதும் அரற்றியும், உருகியும், உறைந்தும் பாடிய பாடல்களுக்கு ஆற்றல் இல்லாமல் ஒழியுமோ? தந்நலம் உண்டாயினன்றோ தோல்வி? அணுவுயிர்க்கும் அருள் நாடும் பெருந்தகை நாட்டத்திற்கு வெற்றியன்றி வேறொன்று உண்டோ? 19. சொல்லும் சுவையும் சொல் என்பது பலபொருள் ஒருசொல். அதற்குரிய பல பொருள்களுள் நெல்என்பதும் ஒன்றாகும். சொல்லும் நெல்லும் மணிபிடியாப் பதர் அல்லது பதடியை எவரும் நெல் என்னார்; மணி திரளாத அரைக்காயை நெல் என்னார்; மணி சிறிது திரண்டு சிறுத்துக் கறுத்த கருக்காயை நெல் என்னார். நெல்லே சொல்லின் பொருளை உவமை வகையால் விளக்க வல்லதாம். பொருளிலாச் சொல் எதுவும் தமிழில் இல்லை. அதனால், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். பதரும் பதடியும் பயனிலாச் சொல்லைச் சொல்வானையும், அதனைக் கேட்பானையும், அதனை நன்றென நயப்பானையும் ஒருங்கே பதடி எனச் சுட்டினார் பொய்யா மொழியார். பயனிலாது கழிந்த ஒரு பொழுதைப் பதடிவைகல் என்றார் சங்கச் சான்றோர் ஒருவர். அவர் பெயரையே பதடி வைகலார் எனப் போற்றிக் கொண்டது பழந்தமிழ் உலகம். சொல்லின் ஆட்சி பொது மக்கள் வழக்கில் சொல்லின் ஆட்சி எத்தனையோ வகைகளில் வழங்குகின்றது. அவரைப் பார்த்தேன்; அவர் வாய் திறந்து ஒரு சொல் கூடச் சொல்லவில்லை; அவ்வளவு செருக்கு என்று பழியுரைப்பதில்லையா; இதனால், பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும். நீங்கள் ஒரு சொல் சொன்னால் போதும்; கட்டாயம் நடந்துவிடும் என்பதில், சொல் வாக்கின் செல்வாக்கு விளங்கும். ஒரு சொல், சொல்லி வைக்கவும் என்பதில், சொல் கண்டிப்புப் பொருளில் வருகின்றது. எச்சரிக்கை இது. ஒரு சொல்லுக்குச் சொன்னேன் என்பதில் சொல் சும்மா என்னும் பொருளை வெளிப்படுத்துகின்றது. சொல்லி விட்டேன்;அவ்வளவு தான் என்பதில், இனி நடப்பதற்கு நான் பொறுப்பில்லை; நீ வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் என ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நிலையைத் திட்டப் படுத்துகின்றது. சொல்லுக்கு வழிப்பட மாட்டான் என்பதில், வாட்டி வருத்துவதற்கு வழிப்படுவான் என எதிர்மறைக் குறிப்புப் பொருள் தருகின்றது. பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல்லுடை படுவதும் சொல்லாலே என்னும் பழமொழியோ, பெருமை சிறுமைகளின் மூலம் சொல்லே என்பதைக் காட்டும். சொற்றுணை சொற்றுணை உயர்ந்த துணையாம். தன்னந்தனியே காட்டு வழி நடந்து போகிறவனுக்குச் சொற்றுணை பொல எந்தத் துணையும் உதவுவதில்லையே! அவன் பாடிச் சொல்லும் சொல்லே, அவனுக்குத் துணையாவது அருமை அல்லவோ! சொற்றுணை என்பது பேச்சுத்துணை தானே! அதுதான் நாத் துணை, வாய்த்துணை என்பன. சொற்கோ, சொல்லின் வேந்தர், நாவுக்கரசர், வாக்கின் வேந்தர் என்றெல்லாம் சொல்லப்படுபவர் அப்பரடிகள். அவர் இறைவனைச் சொற்றுணையாக அல்லவோ கண்டார். மாணிக்கவாசகர் பெயர் சொல்லால் வந்ததே. அதனைச் சொற்றுணையாம் இறையருளியதென்பது எண்ணத் தக்கதே. சொல்லின் உந்துகோள் தாய் சொன்ன சொல், தந்தை சொன்ன சொல், தன் காதற்கிழத்தி சொன்ன சொல், அன்பு மக்கள் சொன்ன சொல் வரலாற்றின் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளன. அச்சொற்கள் அசைக்க வொண்ணா உந்து கோளாக அல்லவோ அமைந்து விடுகின்றன. சொல்லினிமை கரும்பனையாள், கரும்பன்ன சொல்லம்மை, குயிலினும் நன்மொழியம்மை, குழல்வாய் மொழியம்மை, பண்மொழி நாயகி, பண்ணின் நேர்மொழி, யாழின் மொழியம்மை, யாழைப் பழித்த மொழியம்மை, பாலினும் நன்மொழியம்மை என வழங்கும் இறைவி பெயர்கள் சொற்சுவை கருதிச் சொல்லப் பட்டவை அல்லவோ! சொல்வண்ணம் வண்ணச் சொற்களைச் சுவை சொட்டச் சொட்டப் பாடியதால் அன்றோ, வாக்கிற்கு அருணகிரி யானார்! அவ் வண்ணத் திறம் வளமாக வாய்க்கப் பெற்றமையால் அன்றோ, தண்டபாணி அடிகள் வண்ணச்சரபம் எனப்பட்டார். அத் திறம் கைவந்ததால் அன்றோ, வண்ணக் களஞ்சியப் புலவர் என ஒருவர் விளங்கினார். சொற்கொடையல்லவோ, இப்பாராட்டுப் பட்டயங்கள்! சொல் வளம் சொல்லுதல் என்னும் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் தாம் எத்தனை? ஒரு நாற்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டினார் பாவாணர். ஆயின், இன்னொரு நாற்பது சொற்களுக்கு மேலும் பட்டியலிட்டுக் காட்டும் வண்ணம் தமிழ் வளம் உள்ளது! சொல்லுவதை அழுத்திச் சொல்லுதல், அசைத்தல்; அழுது சொல்லுதல், அரற்றுதல்; அடித்துச் சொல்லுதல், அறைதல்; இசைப்படச் சொல்லுதல், இசைத்தல்; கருவியிசையும் இயைந்ததுபோல் சொல்லுதல், இயம்புதல்; சினந்து சொல்லுதல், கடிதல்; இடித்துச் சொல்லுதல், கழறுதல்; கிளிபோல் சொல்லுதல், கிளத்துதல்; குயில்போல் சொல்லுதல், குயிலுதல்; கூறுபடுத்திச் சொல்லுதல், கூறுதல்; தடைவிடையாகச் சொல்லுதல், சாடல்; பலரறியச் சொல்லுதல், சாற்றுதல்; வினாவிற்கு மறுமொழியாகச் சொல்லுதல், செப்புதல்; நூன்முறை சொல்லுதல், நுவலுதல்; பகுத்துச் சொல்லுதல், பகர்தல்; பல்கால் சொல்லுதல், பன்னுதல்; தனக்குத் தானே சொல்லுதல், புலம்புதல்; இடைவிடாது சொல்லுதல், பொழிதல்; குழந்தையின் மழலைபோல் சொல்லுதல், மிழற்றுதல்; பலரும் அறியப் பலமுறை சொல்லுதல் விளம்புதல்; சொல்லுதலில் எத்தனை நுண்ணிய வேறுபாடுகள் இந் நுண்ணிய வேறுபாடுகள் தாமே சுவை! மெய்ப்பாடு! இசை! கூத்து! பனுவல்! பாவியம்! வேரிலேயே பொருள் விளக்கம்: நேர்மை என்பதன் பொருளை நேர் என்பது தெள்ளெனக் காட்டும். நேரில் நேர்மை சொல்வது நேர்மை; நேரிலேயே சொல்ல மாட்டான், நேராய்ச் செய்வனோ? சுடர் எப்படி உண்டாம்; சுடுதலால் உண்டாம்! சுடு படாத ஒன்று சுடர் விடுவது இல்லை! சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் என விளக்கும் திருக்குறள். வலிவந்து வந்து பொறுத்தும் ஆற்றியும் பட்டுப்பட்டே வலிமை உண்டாம். வலிக்கு அஞ்சி ஆற்றாமை மேற்கொண்டவன் வலியனாகான். தமிழ்ச் சொல்லின் முதனிலையே முழுநிலை காட்டும் மாண்பினது என்பது தெளிவாம். அறிவறி பெயரீடு: பல்லின் நீட்சியால் பெற்ற பெயர் பல்லி. இடம் விட்டுத் தாவலால் பெற்ற பெயர் விட்டில்; தத்துக் கிளி. இடம்படப் பாய்ந்து செல்லலால் பெற்ற பெயர் பாய்ச்சை, பாச்சை. அணிபட வரிசையுறக் கோடு அமைதலால் பெற்ற பெயர் அணில். கொக் கொக் என ஒலிப்பதால் பெற்ற பெயர் கொக்கு; அதன் கழுத்தமைப்பைக் கண்டு ஆக்கப்பட்டது கொக்கி. இப்படி அறவறி பெயரீடுகளே தமிழ்ப் பெயரீடுகள்! வரலாற்று விளக்கம்: கரும்பு என்னும் பெயரில் உள்ள கரு என்பது கருமை நிறம் காட்டும். கரி, கரிசல், கரிதல், கரிவு, கருகுதல் இன்ன வெல்லாம் கருநிற வழிவந்தனவே. வெள்ளைக் கரும்பும் போர்க் கரும்பும் உண்டேயென்றால் அப்பெயர்களே அவற்றின் பின் வரவை வெளிப் படுத்தும். கருநிறக் கரும்பே கரும்பு என்று பெற்றுப் பின்னர் அதன் வகைக்குப் பெயராக நின்றதாம். அதற்கு அடைமொழியே விளக்கமாம். எலி என்பது ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்தது என்பதே சொல்லால் வெளிப்படும் வரலாறாம். எல்லே இலக் கம் என்பது தொல்காப்பியம். வெள்ளை எலி வெள்ளெலி என விளக்கிச் சொல்லும் நிலை வந்தது. கருநிற எலி காரெலி எனப்பட்டது. சொல்லில் வரலாறு அடங்கியிருத்தல் ஆழ நினைவார்க்குச் சுவையூட்டுவதாம். சொல்லாக்கம் ஒட்டிய அகத்தை உடையது ஒட்டகம். பன்னாள்கள் ஊணும் நீரும் ஒழிந்தும் கிடக்க வல்லது ஒட்டகம் என்பதை அறிவார். அப்பெயராக்கச் சிறப்பையறிவர். உருளைக்கிழங்கு இந்நாட்டு விளைவு அன்று. ஆனால் அதன் வடிவம் இந்நாட்டுப் பொதுமக்களின் பெரு வழக்கில் உள்ள உருளையைக் கொண்டது; அதுவே நிலைத்தது. புகையிலை வெளிநாட்டுப் பொருளே! புகை இலை என்பன தமிழகம் அறிந்த சொற்கள். இவ்விரு சொற்களையும் இணைத்துக் கலைச் சொல்லாக்கிக் கொண்டது தமிழ் உள்ளம்! இத்தகு சொல்லாக்கமும் தனிச் சுவையதே. கலைச்சொற் பிறப்பு அகரமுதல ஆதி க் குறள் வழியே அகராதி பிறந்தது; அகர முதலியும் பிறந்தது. நாளென ஒன்றுபோற் காட்டியில் இருந்து நாட்காட்டி பிறந்தது. எழுதுங்கால் கோல் சமன் செய்து சீர் தூக்குங் கோல் ஆகியவற்றில் இருந்து எழுதுகோலும், சமன்கோலும் பிறந்தன. தக்கார் தகவிலார் என்பதில் இருந்து தக்கார் பிறந்தார் இவை பாட்டனார் தந்த பழங்கொடை என்பதில் என்ன ஐயம்? வண்ணச் சினைச் சொல் செங்கால் நாரை, பைங்கால் கொக்கு, கருமுகமந்தி, செம்பின் ஏற்றை, வெவ்வாய் வெருகு என்பவை வண்ணமும் சினையும் (உறுப்பும்) பெயரோடு தொடர்தலால் வண்ணச் சினைச் சொற்களாம். எத்தகைய சொல் ஒழுங்குகளை வகுத்துக் கொண்டனர் நம்முந்தையர் என வியப்பு எழும்பவில்லையா? செல்வாக்கும் சொல்வாக்கும் செல்வாக்கு என்பதற்குச் செல்வமும் வாக்கும் சேர்ந் திருத்தல் என்பது ஒருசார் பொருந்தப் பொய்த்தல். ஓரிடத்து ஒருவர் சொல்லிய சொல் பலவிடத்தும், பலரிடத்தும், பல காலத்தும் செல்லும் வாக்காக இருத்தல் அது. வள்ளுவர் வாக்குப் போல், வள்ளலார் வாக்குப் போல், காந்தியடிகள் வாக்குப் போல் பரவியிருத்தல். வள்ளுவனார் செல்வாக்கைச் செலச் சொல்லுதல் என்பார். 719,722,724,730. செல்வாக்கு சொல்வாக்காதல் இதனால் தெளிவாம். சொல்லேருழவர் என்று வள்ளுவர் கூறியதும் (872) சொல்லம்பு என்று கம்பர் கூறியதும் எண்ணத் தக்கனவாம் (தனிப்பாடல்). சொல்வலை வேட்டுவன் என்பது புறப்பாடல் 252. சொல்லும் சுவையும் சொல்லின் சுவையை அடுக்கினால் விரிவு மிக்கது. சொற் சுவை பழுத்த தொகைத் தமிழ் என்றார் தென்றமிழ்நாட்டுக் குமரகுருபரர். ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் நாவீறு படைத்த நல்லிசைப் பாவலர் பாரதியார். தலைமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை என்றார். தமிழ்த்தாயின் தவப்பெரு மைந்தராம் பாவேந்தர். நிறைவு சொல்லும் சுவையும் இவை மட்டும்தாமோ? இணை மொழி என்ன! அடுக்கென்ன! மடக்கென்ன! இரட்டுறல் என்ன! மரபென்ன? ஒருபொருட் பன்மொழி என்ன! எத்தனை எண்ணுவது? பலபட விரித்துக் கூறத் தக்க சொல்லும் சுவையும் கட்டுரை அளவு கருதி வகையும் தொகையுமாகச் சுருக்கி ஓராற்றான் உரைக்கப் பெற்ற தாம்! 