இளங்குமரனார் தமிழ்வளம் 14 தமிழ்க் கா.சு கலைக் களஞ்சியம் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 14 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12+ 172 = 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் தமிழ்க் கா.சு. கலைக் களஞ்சியம்  மொழிநூற் கொள்கையும்தமிழ் மொழியமைப்பும் 3  இலக்கிய வரலாறு 10  பழந்தமிழர் நாகரிகம்அல்லது தொல்காப்பிய பொருளதிகாரக் கருத்து 20  தமிழ்க் கா. சு. திருக்குறள் தெளிவுரை 27  தமிழர் சமயம் 35  திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் 41  அப்பர் சுவாமிகள் சரித்திரம் 49  சுந்தர மூர்த்தி சுவாமிகள் சரித்திரம் 57  மணிவாசகப் பெருமான் வரலாறு 67  சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் 74  மெய்கண்டாரும் சிவஞான போதமும் 80  பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 88  தாயுமான சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 96  குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 104  சிவஞான சுவாமிகள் வரலாறு 112  சைவ சித்தாந்த வரலாறு 122  தனிப்பாடல் திரட்டு இரண்டு பாகங்கள் 129  மணிமாலை 138  வாழ்க்கை இன்பம் 146  உலகப் பெருமக்கள் 154  தமிழ்க் கா. சு. வின் தனித்திறம் 165 தமிழ்க்கா.சு. கலைக் களஞ்சியம் மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழியமைப்பும் சேலம் செவ்வாய்ப்பேட்டை, தமிழ் நெறி விளக்கப் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக 1939 இல் வெளி வந்த நூல் இது. நூலின் பெயர்க்குத் தக, முதற்பகுதி மொழிநூற் கொள்கை விளக்கமாகவும் ( 1- 60), அடுத்த பகுதி தமிழ் மொழியமைப்புப் பற்றியதாகவும் (60-156) அமைந்துள்ளது. முன்னதில் மொழிநூற் கொள்கை, எழுத்து வடிவம், மேலைநாட்டு மொழி நூல் வரலாறு, எழுத்தொலி இயல்பு, சொல்லமைப்பு என்பனவும்; பின்னதில் திராவிட மொழிகள், உயிர் எழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், பெயர்ச்சொல், வேற்றுமை, எண்கள், பெயரடை, வினைச் சொல் மொழியொப்புமை என்பனவும் ஆயப் பட்டுள்ளன. மொழி நூற் கொள்கைகளைக் கூறும் நூல் தமிழில் அறவே இல்லை எனக் கூறலாம். மொழிகளின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, இனம்போன்ற அரும்பெரும் பொருள்களை விளங்க விரித்துரைக்கும் சிறந்த மேனாட்டுப் பெருநூல்கள் போன்றதொரு சிறு நூலேனும் இதுவரை இங்கு வெளி வந்த தில்லை. இந்நூல் இக்குறையைப் போக்கும் முறையில் முன்னின்றுதவும் முதற் புதுநூல் ஆகும் என்னும் பதிப்புரையும், ஆங்கில நூற் கல்வி பயிலாத தமிழ் இலக்கண மாணார்க்கர்க்குப் பயன்படும் பொருட்டு இச்சிறு நூல் இயற்றப் பெற்றது. ஆங்கிலங் கற்றவர்க்கு மொழிச் சார்பாக ஆங்கில மொழியிலுள்ள பெருநூல்களைப் பயில்வதற்கு இது தோற்றுவாயாகும் என்னும் முகவுரையும் இந்நூல் முதன்மையையும் பயன்பாட்டையும் விளக்குவனவாம். கருத்து வெளிப்படுத்தும் கருவி, ஒலி ஒன்றுமேயன்று. படம் எழுதிக் காட்டல், கைக்குறிக் காட்டல், வண்ணக் கொடிகள் எடுத்துக் காட்டல், தோற் சாட்டையால் அறைந்து காட்டல் ஆகியனவும் பிறவும் கருத்து வெளிபடுத்து கருவிகளே என்கிறார். கா. சு. உணர்ச்சி வெளிப்பாடுகளே ஒலிக் குறிப்புகள் ஆவதையும், அவ்வொலிக் குறிப்புகள் சொற்கள் ஆதலையும் எடுத்துக் காட்டுகளுடன் நன்கு விளக்குகிறார் (எ-டு; மியா - பூனை (தமிழ்); டின் டின் (ஆங்); புல் புல்; குக்கூ; கா கா). நாவின் மென்மை வன்மைகளுக்கு ஏற்ப ஒலித் திரிபாதல், ஒரு பொருட் பன்மொழி தோன்றும் அடிப்படை, ஒலியுறுப்புகள், சொல்லமைதி, சொற்றொடரமைதி ஆகியவையும் இப்பகுதியில் விரிவாக ஆயப்பட்டுள்ளன. எழுத்தொலியியல், சொல்லமைப்பியல், சொற்பொருளியல் என மூவியல்களில் மொழி நூல் இயலுமாறும், உலக மொழிக் குடும்ப வரலாறு, மக்கள் இனமும் மொழியினமும் தொடக்கத்தில் ஒத்திருந்து பிற்காலத்தில் பல இடங்களில் மாறுபடுதல் என்பவை மொழிநூற் கட்டுரையின் ஆய்வுப் பொருளாக அமைகின்றன. இறுதியில் சுட்டிய கருத்தை வலியுறுத்துவார் போல் பல மொழிப் புலவர் ஒருங்கு கூடிப் பல பேச்சுக்களின் இலக்கணத்தையும் சொற்கோவையையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் மொழி மூலங்களும் மொழியமைப்பொற்றுமையும் நன்கு விளங்கும். பலமொழிக்கும் மூலமான ஒரு மொழியும் தூரத்தில் உதித்துக் காட்சி தருதலும் கூடும் என்பது (156) ஒளிமிக்க மையம் ஒன்றனைச் சுட்டி ஆய்வாளரைத் தூண்டும் அருமையதாம். தமிழில் முதற்கண் வட்டெழுத்து ஏற்பட்டதென்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுவதைக் குறிக்கும் கா. சு. மோகஞ் சதாரோவில் பட எழுத்து வழங்கியதையும், சீனரிடத்தும், அமெரிக்கரிடத்தும், எகிப்தியரிடத்தும் அப்பட எழுத்துகள் வழங்கியமையையும், டக்கர் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய மொழியியல் வரலாறு (Introduction to the Natural History of Language) கொண்டு விளக்குகிறார். சொல் எண்ணத்தினைத் தெரிவிக்கும் ஒலிவடிவாய் உள் நின்று எழுதலின் சொல்லும் சொற்பொருளும் வேறு அல்ல என்னும் கருத்து மொழிநூற் கொள்கையாளரிடத்து நிலவியமையை மேலைநாட்டு மொழிநூல் வரலாற்றுப் பகுதியில் சுட்டுகிறார் கா.சு. சொல் தக்க காரணப் பெயராய் இருக்கும் மொழியே சிறந்தது என்னும் பிளேட்டே கருத்தை உரைத்து மொழி பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்னும் தொல்காப்பிய நூற்பாவை இணைத்துக் காண வைக்கிறார் கா. சு. பதினெட்டாம் நூற்றாண்டில், பல மொழித் தொடர்பைத் தீர்மானிக்கச் சொல்லாய்வு மட்டும் போதாது, இலக்கண ஆய்வும் வேண்டற்பாலது என்னும் கருத்து வளர்ந்ததையும் அதனால் மொழிக் குடும்பம் காணப்பட்டு அவ்வாய்வு விரிந்து வருதலையும் விளக்குகிறார் கா. சு. காதிற் கேட்கும் ஒலி மூளை வழியாக நினைவில் அழுந்தி நினைவாற்றல் மூளையில் தொடர்புற்றுப் பேச்சு நரம்புகளை இயக்க, பேச்சு நரம்புகள் பேச்சுக் கருவிகளின் தசைப் பற்றுகளை இயக்கி எழுத்தொலிகளை உண்டாக்குதலைக் குறிக்கும் கா. R., மூச்சுப்பை, குரல்வளை, குரல் நாண், நா, இதழ் ஆகிய ஒலியுறுப்புகளை அறிவியல் முறையில் விரிவாக விளக்குகின்றார். அவ்வுறுப்புகள் செவ்விதின் அமையாமையால் ஏற்படும் ஒலித்திரிபு, கேடு ஆகியவற்றையும் சுட்டுகிறார். வாயிலுள்ள கருவிகள் ஒன்றையொன்று தொடாமல் பலவகையாக இயங்குவதால் உயிரொலி உண்டாகும் என்பதையும், கருவிகள் ஒன்றையொன்று ஒற்றுவதால் உளதாம் ஒலி ஒற்றொலி அல்லது மெய்யெழுத்தொலி உண்டாகும் என்பதையும் உயிரொலிகள் எல்லாம் மூச்சு வெளிச் செல்லும் காலத்தே உளதாம் எனினும் ஆய்தச் சார்புடைய ஓ, ஊ என்ற ஒலிகள் மூச்சு உட்செல்லும் போதும் ஒலிப்பனவாம் என்பதையும் சுட்டும் கா. R.; ஒலி எழுப்பிய காலை உளதாகும் காற்றலைகள் பல வகைச் சுழல்களாக வடிவெடுக்கின்றன. அவ்வடிவுகளை அவை தாக்கும் மணல் தட்டின் மீதும், விளக்கின் ஒளி அசைவாலும், எழுதுகோல் அசைவாலும் காட்டக்கூடிய கருவிகளை மேலை நாட்டினர் கண்டிருக்கிறார்கள். அவற்றின் உதவி கொண்டு எழுத்தொலிகளின் இயற்கை வடிவங்களை அறிந்து கொள்ளலாம். அவற்றையும், எழுத்துகளுக்கு மக்கள் அமைத்த செயற்கை வடிவங்களையும் ஒத்துப் பார்ப்பது இனிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியாம் என்று ஆய்வாளர் பொறுப்பையும் குறிக்கிறார் (37). வேர்ச்சொல் வினைச் சொல்லாக இருத்தற் பாலது என்ற கொள்கை பொருந்துவதில்லை. அது பெயராகவும் இருத்தல் கூடும் என்றும், வேர்ச்சொல் ஓரசைச் சொல்லாகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் சொல்லமைப்புப் பகுதியில் கூறுகிறார் கா. சு. (43-44). சொற்களைக் கடன் வாங்கும் பழக்கம் உண்டாதலால் பிற மொழிக் கலப்பு மிகுதலையும் ஆங்கில மொழியில் அவ்வாறு பிறமொழிக் கலப்பு மிக்கிருத்தலையும் கூறுகிறார். சீன மொழி, ஆரிய மொழி, ஆப்பிரிக்க திராவிட மொழிகள் ஆகியவற்றின் சொல்லமைப்புகளை விரித்துரைக்கிறார். மொழிநூலை நன்கு ஆராய்வதற்கு உள நூல், உடல் நூல், இன நூல் என்பவையும் தொன்ம (புராண)க் கதை, கட்டுக்கதை, சமயக்கோட்பாடு என்பவையும் பயன்படுதலை எண்ண வைக்கிறார் கா. சு. தமிழ்மொழி அமைப்பு என்னும் இரண்டாம் பகுதியில் இந்திய மொழிகளுட் பல, திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தவையுள்ளும் பல மொழிகள் திராவிட இலக்கணப் போக்கைத் தழுவியுள்ளன. ஆதலால் இந்தியாவில் பெரும்பான்மையும் திராவிடச் சார்புடைய மொழிகளே பேசப்படுகின்றன என்னும் கருத்தைக் கூறும் கா. சு. இந்திய மக்களுட் பெரும்பான்மையோரும் திராவிட உடற் கூறு உடையவரே என்றும், திராவிடர்களே தென்னிந்தியாவின் பண்டை மக்கள்; அதற்கு மாறான கொள்கைக்குத் தக்க சான்றில்லை என்றும் விளக்குகின்றார். தமிழ் உயிரெழுத்துச் சொல், வடமொழியிலும், திராவிட மொழிகளிலும் திரிந்து வழங்கும் வகை, வல்லெழுத்து மொழி முதல், மொழியிடை, மொழி இடை இரட்டித்தல் என வருதலால் உண்டாகும் ஓசையமைதி வேர்ச்சொல், பெயர்ச்சொல், வேற்றுமை, இடப்பெயர், எண்கள் எச்சம் முதலியவற்றைப் பல்வேறு மொழிகளுடன் ஒப்பிட்டு விரிவாக ஆய்கின்றார். மொழியொப்புமை என்னும் நிறைவுப் பகுதியில் திராவிட மொழிகள் ஆரியத்திற்குத் தாயான மொழியுடன் ஒருவகைச் சம்பந்தமுடையதாகத் தோன்றுகிறது எனச் சுட்டுகிறார் கா. சு. ஒரு சொல் வடமொழியிலும் தென் மொழியிலும் காணப் பட்ட இடத்து அது தென்மொழிக்கு உரியதென்று சில காரணங்களால் துணியவேண்டும் என்று காரணங்களைக் கூறுகிறார்;- 1. வடமொழியில் அது தனிச் சொல்லாய்ப் பகுதியும், அதனின்று உளவாகும் கிளைச் சொற்களும் இல்லாதிருப்பத் தமிழில் அது பல கிளைச் சொற்களோடு பெரு வழக்கு உடையதாய் இருப்பின் அது தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்றதேயாம். 2. ஒரு பொருளைக் குறிப்பதற்குத் தமிழில் வேறு சொல் இல்லாது ஒரு சொல்லே வழங்கவும் வடமொழியில் வேறு சொற்கள் அப்பொருளைக் குறிப்பதற்கு ஏற்பட்டிருந்தால், அச் சொல் தமிழ்ச் சொல் என்று ஊகிக்கலாம். 3. ஒரு சொல் திராவிடத்திற் காணப்படுவதாய் ஆரிய மொழிகளில் சமற்கிருதந் தவிர பிறமொழிகளிற் காணப் படாததாய் இருக்குமாயின் அது திராவிடச் சொல் என்று துணியலாம். 4. வடமொழியில் ஒரு சொல்லிற்குக் கூறும் தாது பொருட் பொருத்தமில்லாதிருந்தாலும், தமிழில் அதன் மூலம் பொருத்தமுள்ளதாய் இருந்தாலும் அச்சொல் தென் மொழிக்குரிய தென்றல் சாலும். 5. ஒரு சொல்லின் பொருள் தமிழில் இயற்கையாயும் வடமொழியில் உருவகத்தால் இயைபுடையதாய் இருந்தால் அது தமிழ்ச்சொல் என்று கொள்ளலாம். 6. வடசொல்லைப் பிரித்தறியும் தமிழ் இலக்கண நூலார், ஒரு சொல்லைத் தமிழ் என்றால், அது ஏற்றுக் கொள்ளற் பாலதே என்பவை அவை. அடவி-அடர்ந்திருக்குங்காடு; அடர் என்ற சொல் எல்லாத் திராவிட மொழிகளிலும் காணப்படுவதே. அம்பா என்ற சொல், அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. செருமனியில் அம்மெ என்ற சொல் செவிலித் தாயைக் குறிக்கும். கடுகு என்ற சொல் கடு (அதிகம்) என்பதன் அடியாகப் பிறந்து கார மிகுதியையுடைய பொருளைக் குறிப்பதாயிற்று. கடுகு (விரைந்து போ) கடி என்னும் சொற்களும் கடம், கடறு என்பனவும் அவ்வாறே வருவன. கலா - கல் என்ற தமிழ்ச் சொல்லடியாகப் பிறந்த கலை என்பதன் திரிபே கலா என்றாயிற்று. நானா - நாலா என்ற தமிழ்ச் சொல்லடியாகப் பிறந்தது. வடமொழியில் அதற்குச் சரியான வேர்ச் சொல் இல்லை. நீரம் என்ற வடசொல் நீர் என்ற தமிழ்ச் சொல்லே. தெலுங்கில் அது நீளு எனப்படும். காண்டு மொழியில் நீர், ஈ என்பனவும் பிராகுயில் தீர் என்பதும் ஒன்றே. பொன் - தமிழ்ச் சொல்லாகிய பொன் என்பதன் அடியாகப் பண்ணோ என்ற பிராகிருதச் சொல் பிறந்துள்ளது. பாகம், பங்கு என்ற வடசொற்கள் பகு என்றத் தமிழ் சொல்லடியாய்ப் பிறந்தன. சவம் என்பது சரா - இற, என்பதன் அடியாய்ப் பிறந்தது. சபாயெடிக் என்ற சித்திய மொழியில் சாவெ - இறந்த என்பது காணப்படுகிறது. அது வடமொழியிற் சவ் =போ, என்பதன் அடியாகப் பிறந்தது என்பது பொருந்தாது. கர் நாட என்பது, கருநாடகம் - கருத்த நிலப்பரப்பு என்பதனடி யாய்ப் பிறந்தது. பலன் என்பது பழம் = பழுத்தது என்பதன் மரூஉவாம். பிடகம் = கூடை, என்பது பிடி என்பதனடியாகப் பிறந்தது. உருவம் என்பது உருட, உறு, உறுதியானது என்ற தமிழ்ச் சொல் அடியாகப் பிறந்தது. இஞ்சி என்பதே சிரிங்கவோ என்ற வட சொல்லாயிற்று. பூப்பது பூ. அது புஷ்பத்தினடியாகப் பிறந்ததன்று. தீ என்ற சொல்லின் அடியாய் வடமொழித் தீபம் உண்டா யிருத்தல் கூடும். குழி என்பதன் வேரே குண்டு, குண்டம் என்பவற்றிற்கு மூலமாயிருத்தல் கூடும். இவ்வாறு வடமொழி, தென்மொழிச் சொற்களை ஆய்ந்து கூறும் கா. சு. உலகிலுள்ள பிறமொழிகளுக்கும் தமிழுக்குமுள்ள சொல்லொற்றுமை சிலவற்றையும் பட்டி யிட்டுக் காட்டுகிறார். அவற்றுள் சில: நரம்பு = நெர்வ் (இலத்தீன்) பல் = பல - பிள (இலத்தீன்) முறுமுறு - மர்மர் = (Murmur) ஈறு - ஈறு (Year) (ஆங்கிலம்) கொல் - கில் (Kill) (ஆங்கிலம்) எல்லா - ஆல் (All) பூசை - பூனை - பு (Puss) கிண்டு - கெண்டியோ (கிரீக்) சாத்து - Shut (ஆங்கிலம்) சுருங்கு - Shrink (ஆங்கிலம்) இரு - Iri = To be (Japanese) அன்னை - Anya (french & Hungarian) அந்நாளில் ஒரு ரூபாய் விலையில் வெளிவந்த இந்நூல் 156 பக்கங்களைக் கொண்டது. பல்கலைச் செல்வர் கா. சு. என்பதற்குச் சான்றாகத் திகழும் நூல்களுள் குறிப்பிடத் தக்கது மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் என்னும் நூலாகும். இலக்கிய வரலாறு தமிழ்க் கா. சு. வரைந்த இலக்கிய வரலாறு தனிப் பெருஞ்சிறப்பினது. அது, இலக்கிய வரலாறுகளின் நற்றாய்; வளர்ப்புத் தாயாம் செவிலித்தாய்! இலக்கிய ஆய்வின் கட்டளைக்கல்; வரைபடம். காசுவின் தமிழ்த்தொண்டை உலகறியச் செய்த கலங்கரை விளக்கம். நோக்கம் 1930 ஆம் ஆண்டிலே வெளிப்பட்ட இலக்கிய வரலாற்றின் முன்னுரைக் கண் தாம் இலக்கிய வரலாறு எழுத நேர்ந்த நோக்கத்தைத் தெளிவிக்கிறார். நமது தமிழ் மொழிக்குச் சுருக்கமாயதோர் அழகிய இலக்கிய வரலாறு திருவாளர் M. S. பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழிலே சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் எழுதிய புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப் படவில்லை. தக்க புலவர்கள் சிலரைப் பற்றிய குறிப்பும் அதன் கண் காணப்படுமாறில்லை. சபாபதி நாவலர் அவர்களது திராவிடப் பிரகாசிகை என்னும் நூலும் சிறந்த சில இலக்கியங்களின் இயல்பையே தொகுத்து இயம்புகின்றது. அதனை ஓர் இலக்கிய வரலாறு என்று முற்றிலும் கருத இடமில்லை. தஞ்சைத் திருவாளர் சீனிவாசபிள்ளை அவர்கள், தமிழ் வரலாறு முற்றுப் பெறாமையானும் அவர் கொள்கைகள் சில ஒவ்வாமையானும் அதனின் வேறாய ஒரு தமிழிலக்கிய வரலாறு இன்றியமையாததாயிற்று. தமியேனினுஞ் சிறந்த முறையில் எழுதத் தக்க அறிஞர் அம்முயற்சியை மேற் கொள்ளாமையால் எனது குறைவு பட்ட தமிழறிவுக்கு எட்டியவரை இத் தமிழிலக்கிய வரலாற்றினை எழுதத் துணிந்தனன். இதன்கட் குறைபாடுகள் பல உள்ளன எனினும் அவற்றை அறிஞர் ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுதற்கொரு வாயிலாக இந்நூல் இப்போது வெளி யிடப்படுகின்றது. வெளியீடு இலக்கிய வரலாறு 516 பக்கங்களாகவும், முதற்பகுதி, இரண்டாம் பகுதி என இரண்டு பாகங்களாகவும் (1-272; 273-516) வெளி வந்தது. சென்னை, பவழக்காரத் தெரு. ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம் இத் தமிழ்க்கொடையை வழங்கியது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகஞ் சார்ந்த அப்பரச்சகத்திலே நூல் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்புரையில் உண்மை காணும் வேட்கையோடு ஆய் வார்க்கும் நூல்களின் சிறப்புணர்ந்து கற்பார்க்கும், கற்பிப் பார்க்கும் அம்முறையின் நூல் யாப்பார்க்கும் சிறந்த வழி காட்டியாம் என்றுள்ள செய்தி மெய்ம்மை என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆய்வார் நன்கு அறிவர். இலக்கிய வரலாற்றுச் செய்தி கால வரன்முறையில் எவ்வாறு இயல்கின்றது என்பதும் முன்னுரையிலேயே நூலின் முழுப் பிழிவாக எழுதப்பட்டுள்ளது. முதற்கண் தமிழர் வரலாற்றினைச் சுருங்கக் கூறிய பின்னர்த் தலைச் சங்க நூலாகிய அகத்தியமும், இடைச் சங்க நூலாகிய தொல்காப்பியமும் ஆராயப்பட்டன. பின்னர்க் கடைச்சங்க காலத்துப் புலவர் வரலாற்றினை இயம்புமிடத்தே பரணர், கபிலர், நக்கீரர் என்னும் மூன்று பெரும் புலவர்கள் வெவ்வேறு காலத்தினர் எனவும், ஒருவர்க்குப் பின் ஒருவராய்த் திகழ்ந்தனர் எனவும் முடிவு கட்டப்பட்டது. அக்காலத்து மூவேந்தர் வரலாறும் அன்னோர் காலத்துப் புலவர் பாடல்களும் ஒரு சிறிது தொகுத்துரைக்கப்பட்டன. கடைச்சங்க காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியோடு முடிவடைகின்றது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் முடிவு வரையில் உள்ள காலம் மாணிக்கவாசகர் காலத்தைச் சார்ந்த வரலாற்றுப் பகுதிக்குரியதென்று கருதப்பட்டது. அதற்குப்பின் ஆறாம் நூற்றாண்டு வரை சமண காலம் கணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தே சமணருடைய கீழ்க் கணக்கு நூல்களும் பெருங்கதை என்னும் காப்பியமும் எழுந்து நிலவின. ஆறாம் நூற்றாண்டிலேயே மூர்த்தி நாயனார் மதுரையில் அரசாட்சி எய்தின காலம் முதல் சைவ நூல்கள் தழைத் தோங்கின. பின்னர் ஏழாம் நூற்றாண்டு எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவு வரை வைணவ ஆழ்வார் காலமாகும். பத்தாம் நூற்றாண்டிலே சமணக் கிளர்ச்சி மீண்டும் தொடங்கிச் சிந்தாமணி முதலிய சைனப் பெருங் காப்பியங்கள் எழுந்தன. பத்தாம் நூற்றாண்டே சைவர்களது திருவிசைப் பாக்காலம். பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை தமிழ்ப் பெருங்காப்பியக் காலமாகும். பன்னிரண்டு முதற் பதினான்காவது நூற்றாண்டு வரை தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலமாகும். பதின்மூன்றாவது நூற்றாண்டுடன் சமணரியக்கம் குன்றி ஒழிந்தது. கி. பி. பதின்மூன்று முதல் பதினாறாவது நூற்றாண்டு வரை வைணவ மணிப்பிரவாள உரைக்காலமாகும். அருணகிரி நாதரும் வில்லிபுத்தூரரும் சந்த விருத்தங்களின் பொருட்டு வட சொற்களை மிகுதியும் ஆண்டமையால் வடமொழித் தாக்கு மிகுதிப் பட்ட காலம் இதுவேயாகும். கி. பி. பதினாறு முதல் கி. பி. பதினெட்டு முடிய சைவா தீனத்தார் காலமும் தல புராணக் காலமுமாகும். கி. பி. பதினேழாவது நூற்றாண்டில் முறையே மகமது சமயக் கருத்துகளும், கிறித்துவ சமயக் கருத்துகளும் தமிழிற் கலந்தன. பதினெட்டாவது நூற்றாண்டு முதல் தற்கால உரை நடை நூற் காலம் தொடங்கிற்று. பத்தொன்பதாவது நூற்றாண்டிலே ஆங்கிலச் சார்பு தமிழ்க்கண் மிகுந்து பொது நோக்கம் சிறப்புற்றது. இருபதாவது நூற்றாண்டிலே புதிய வரலாற்று ஆராய்ச்சி முறை தொடங்கிற்று. இதுகாறும் கூறிய காலப்பகுதிகளில் எழுந்த நூல்களின் வரலாறும் புலவர் வரலாறும் மிகச் சுருக்கி இதனுள் வரையப் பட்டுள்ளன. தமிழர் யார் என வினவி அவர் இந்நாட்டவரே என உறுதிப் படுத்துகின்றார். தமிழர் வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்றால் அவர் வருமுன் வேறுமொழியர் இந் நாட்டில் இருந்ததற்குச் சான்று இல்லை. தமிழர் வெளி நாட்டவர் என்றால், அவர் அவ் வெளி நாட்டிற்கு எந்நாட்டில் இருந்து போயினர் என்னும் வினா எழும். தென்னாடு, மக்கள் முதல் முதல் தோன்றிய இடம் என அறிஞர்களால் உறுதி செய்யப் படுவதால் அத்தென்னாட்டில் இருந்து கடல் கோளின் பின்னர் படிப்படியே வடக்கே பரவியவரும், உலகளாவப் பிரிந்து சென்றவரும் தமிழரே என உறுதி செய்கின்றார். கா. சு. தமிழர் தம் கடற் செலவுத் தேர்ச்சியையும் ஆரியர் அஃதறியாமையையும் விளக்கிப் பணியர் என்பார், தமிழ் வணிகரே எனத் தெளிவிக்கிறார் (14). இறையனார் களவியலுரை கூறுமாறு, முச்சங்க காலம் சோதி வட்டக் கணக்குப்படி கூறப்பட்டது என்று கூறும். கா. சு. கதிரவனோடு ஒரே நேரத்தில் கிழக்குத் திசையில் சோதிமீன் 1480 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுமென்று வானியல் நூலார் கூறும் கருத்தை முன் வைக்கிறார். களவியலுரைகாரர் சாத்திரமானப்படி (மாதத்திற்கு 30 நாள்) சோதி வட்டத்தின் ஆண்டுகளைக் கணித்து, அதன்படியே முச்சங்க காலங்களைக் கணக்கிட்டார் என்கிறார். முதற்சங்கம் மூன்று சோதி வட்டம் இரண்டாம் சங்கம் 2½ சோதி வட்டம், மூன்றாம் சங்கம் 11/4nrhât£l« என்று கூறி இது புனைந்துரையன்று என முடிக்கிறார் (25). அகத்தியர் நூலியற்றுவதற்கு முன் வேறு தமிழ் நூல் இருந்தது என்றும், நூல் என்றது இலக்கணம் என்றும் சுட்டுகிறார் (41). அகத்தியர் நூற்பா எனப் படுபவற்றைத், தொல் காப்பிய நூற்பாவொடு ஒத்து நிற்கவில்லை என்றும் (50), சொன்னடையையும் பொருள் நடையையும் நோக்குமிடத்து அகத்தியரை வழிபட்டோரால் அவை நெடுங்காலத்திற்குப் பின் இயற்றப்பட்டிருத்தல் கூடுமென்றும் குறிக்கிறார் (51). தமிழ் மொழிக்குரிய தமிழ் என்னும் பெயர்தானும் தமிழில்லை என்பார்க்கு, இம்மொழிக்கு இம்மொழியிலேயே பெயரமையாது சேய்த்தாய்ப் பிறிதொரு மொழியிற்றான் பெயரமைந்திருத்தல் கூடுமென்பது அறிவிற்குப் பொருத்தமில்லாத தொன்று என்று மறுப்புரைக்கிறார் (52) சிலர் தொல்காப்பியம் என்பது தொல், காப்பு, இயம் என்னும் மூன்று சொற்களால் ஆயதெனக் கொண்டு பழமையாகிய மொழிப் பாதுகாப்பு நூலென்றும் அதற்குப் பொருள் கூறுகின்றார்கள். அங்ஙனமாயின் நூலை வைத்தே ஆசிரியர்க்குப் பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதி உரைக்கிறார் (59) வருணன் என்னும் நெய்தல் நிலத் தெய்வப் பெயர் வண்ணன் என்றிருந்திருக்க வேண்டும் என்னும் கா. சு. வண்ணன் மேய தண் மணல் உலகம் என்ற பாடபேதம் ஓரேட்டிலுள்ளதாக இப்போது கேள்வி என ஒரு கருது கோளையும் வைக்கிறார் (74). முத்தமிழ்ப் பகுப்புண்மை, இசையொடு சிவணிய நரம் பின் மறைய என்றும் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்றும் தொல்காப்பியத்து வருதலால் தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டே அமைந்ததாகும் என்கிறார் (87). கடைச் சங்க காலத்தைக் களவியல் உரை கூறுவது கொண்டு கி. மு. 1600 முதல் கி. பி. 250 வரை எனக் கொள்கிறார். சேரருள் முன்னவன் உதியஞ்சேரலாதன் என்றும், அவன் கி.மு 12 ஆம் நூற்றாண்டாகிய பாரத காலத்தவன் என்றும் கூறும் கா. சு. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் யவனரைப் பிணித்தவன் என அறியப் படுதலால் அவன் கி. மு.328 இல் ஆட்சி புரிந்தவன் ஆகலாம் என்றும், அவன் தந்தை உதியஞ் சேரல் அதற்கு முற்பட்டவன் என்றும் கூறுகிறார். இவ்வாறு சங்க கால வேந்தர்களையும் புலவர்களையும் கால ஆய்வு செய்கின்றார் (92-105) தமிழர் நெஞ்சப் பாங்கும் இலக்கியப் போக்கும் என்னும் தலைப்பில் (106-120) நூற்றாண்டு வாரியாக இலக்கிய வரலாற்றுச் சுருக்கத்தை அமைக்கிறார். கடைச் சங்கப் புலவர் வரலாறு, கடைச்சங்க நூல்கள் என்னும் ஆய்வுடன் முதற்பாகம் (120-269) நிறைவடைகின்றது. கபிலருக்கும் நக்கீரருக்கும் முற்பட்டவர் பரணர் என்பது கா. சு வின் ஆய்வு முடிவு (138). மேலும் மாமூலனார், கழாத் தலையார், பரணர் ஆகியோர் முறையே ஒருவர் பின் ஒருவராக வாழ்ந்திருந்தனர் என்கிறார் (141). ஈழத்துப் பூதன் தேவனார், வெள்ளெருக்கிலையார் மதுரைக் கணக்காயனார் முதலியோர் பரணர் காலத்தவர் என்பதைப் பாடப்பட்டோர் கொண்டு ஆய்ந்து நிறுவுகிறார். இவ்வாறு உடன் காலப் புலவர்களை ஆங்காங்குச் சுட்டுகிறார். முத்தொள்ளாயிரம் 2700 பாடல்களைக் கொண்டது என்றும் சங்க நூல் என்றும் கொள்கிறார். சேரமான் மா வெண்கோ, இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, உக்கிரப் பெருவழுதி முதலிய வேந்தர் மூவரும் ஒத்து வாழ்ந்த காலத்து இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறும் கா. சு. அதன் காரணம் குறித்தாரல்லர். இம்மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியை ஔவையார் முத்தீக்கு ஒப்பிட்டு வாழ்த்திய புறப்பாடலைக் கொண்டு முத்தொள்ளாயிரம் அவர் மூவரையும் பாடியதாகக் கருதினார் எனலாம் (231-2) சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றொடு திருக்குறளையும் இத்தொகுதியில் ஆய்ந்துரைக்கும் கா. சு. ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களைப் பெயரளவில் சுட்டி அமைகின்றார். திருக்குறள், கடைச்சங்க நூல்கள் யாவற்றுக்கும் முன்னதாக இயற்றப் பட்டது என்றும் கூறுகிறார். சிலப்பதிகாரத்திற்கு 250 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார். இரண்டாம் பகுதி மாணிக்க வாசகர் கால ஆராய்ச்சியுடன் தொடங்குகிறது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியே அடிகள் காலம் என்கிறார். பாவமைதி, சொல்லமைதி கொண்டு தேவாரத்திற்கு முற்பட்டது திருவாசகம் என்னும் முடிவுக்கு வரும் கா. சு. ஞானசம்பந்தர் காலத்தில் தில்லைக்கு அருகில் கடல் விலகியிருந்தமையும், மாணிக்க வாசகர் காலத்தில் நெருங்கியிருந்தமையும் அகச்சான்றாகக் காட்டி விளக்குகிறார் (274). கார் நாற்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் சமணர் ஆட்சிக் காலம் (4, 5 ஆம் நூற்றாண்டு) எனத் தெளிகிறார் (280-307). பெருங்கதை, திருமந்திரம் ஆகியனவும் இக்காலத்ததென முடிக்கிறார். தேவாரக்காலம் (4-8 நூ. ஆ) ஆழ்வார் காலம் (8-9 நூ. ஆ) திருவிசைப்பாக்காலம் (10-11 நூ. ஆ) பற்றி ஆயும் கா. சு. சித்தரும் சித்தர் நூலும், பதினோராம் திருமுறை என்னும் தலைப்புகளில் வரைகிறார். சித்தர் நூல்கள் எளிய தெளிவான பேச்சு நடையில் எழுதப் பட்டிருப்பதால், அவற்றுட் கணக்கில்லாதன சொன்ன யந்தேரும் புலவராற் பாதுகாக்கப்படாது இராமபாணத்திற்கும் கறையானுக்கும் இரையாய்க் கழிந்தொழிந்தன. இருப்பவற்றைக் கோவை செய்து செம்மையாக அச்சிடுதற்குரிய முயற்சியைத் தமிழ்ச் செல்வர் விரைவிற் கடைப் பிடிக்கக் கடவர் என்கிறார் (343 -4) சீவக சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், மேரு மந்தர புராணம், வளையாபதி என்பனவும், யாப்பருங்கலம், நேமிநாதம், நன்னூல், நம்பியகப்பொருள் என்பனவும், அறநெறிச் சாரம், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம், திவாகரம், பிங்கலம் ஆகியனவும் சமணரது நூற்கிளர்ச்சிக்காலம் என்னும் பகுதியில் சார்ந்தன என அடக்குகிறார் (10 - 13 நூ. ஆ). இக்காலத்ததே குண்டலகேசி, வீரசோழியம், பன்னிரு பாட்டியல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம் என்பனவும் என்கிறார். சைவக் காப்பியக் காலத்தில் (11,12ஆம் நூ: ஆ) கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம், கந்த புராணம் முதலிய நூல்கள் கிளர்ந்தன. ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர். ஔவையார், பொய்யா மொழிப்புலவர், சத்திமுற்றப் புலவர், கம்பர் முதலியோர் இக்காலத்திருந்த புலமைச் செல்வர்கள். பழைய திருவிளையாடற் காலம் கி. பி. 1267 என்று கல்வெட்டுச் சான்றால் மெய்ப்பிக்கிறார். தண்டியலங்காரத்தின் காலம், இராசேந்திரசோழன் கால மென்றும் (1012 - 32) கூறுகிறார். உரையாசிரியர் காலப்பகுதியில் இளம்பூரணர் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியிலாவது, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலாவது வாழ்ந்திருத்தல் கூடும் என்று கூறும் கா. சு. இளம்பூரணர் என்ற பெயர் முருகக் கடவுளதென்பர் என்கிறார் (385) ஆதலால் சைவர் என்று தெளிகிறார். பேராசிரியரின் திருக் கோவையார் உரை கொண்டு அவரும் சைவர் என முடிவு செய்கிறார். இளம்பூரணரின் தொல்காப்பிய உரை முற்றாகக் கிடைத்திருக்கவும், எழுத்திற்கும், சொல்லிற்கும், பொருளதி காரத்தின் ஒரு பகுதிக்கும் அகப்பட்டுள்ளது என்கிறார். சேனாவரையர் படைத்தலைவர் குடியினர் என்றும், அவர் கி. பி. 1280 இல் உயிர் நீத்தனர் என்றும், இவர்க்குப் பின்னவர் நச்சினார்க்கினியர் என்றும் கூறுகிறார். பரிமேலழகர் போசராசனுக்குப் பிற்பட்டவர் என்றும், காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டில் இவர் பெயர் காணப்படுவதால் இவர் காலம் கி. பி. 1272 என்றும், இவர் சேனாவரையர் காலத்தவர் என்றும் கூறுகிறார் (386, பரிமேலழகருக்குப்பின் சிவஞானமுனிவர் ஒருவரே பெரிய உரையாசிரியராகத் திகழ்ந்தனர் என அறுதியிடுகிறார். வைணவ உரையாசிரியர்கள் மணிப்பிரவாள நடையில் உரை இயற்றிய காலந்தொட்டு வடசொற்கள் பெரு வெள்ளமாகப் பரவியதையும், இற்றை நாளிலேயும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பவர் மிகுந்த வட சொற்களைப் புகுத்தி வருவதையும் சுட்டும் கா. R., இது தடைப் படுதற்குரிய முயற்சிகளைத் தமிழ்வாணர் கைக் கொள்ளவேண்டும் எனத் தூண்டுகிறார் (287). நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுசர், திருக்குருகைப் பிரான் பிள்ளான் கூரத்தாழ்வார், பராசர பட்டர், நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, வேதாந்த தேசிகர், பின்பழகிய பெருமாள் சீயர், பிள்ளை லோகாசாரியார், அழகிய மணவாளநயினார், விளாஞ்சோலைப் பிள்ளை, அழகிய வரதர், பிள்ளைப் பெருமாளையங்கார் என்பாரைப்பற்றிய செய்திகள், உரைகள் ஆகியன இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. பதினான்காம் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தைத் தத்துவ நூல்கள் கிளர்ந்த காலமாகக் கருதும் கா. சு. பதினைந்து முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நூற்றாண்டு வாரியாக எழுதிச் செல்கிறார். மெய்கண்டாரது சிவஞானபோதம் தொடங்கியுண்டாகிய மெய்ப்பொருள் நூல்களை விளக்கும் கா. சு, சைவ மடங்களின் பணியையும் உரைக்கிறார். திருவாவடுதுறை, தருமபுரம் என்பவை சிறப்பிடம் பெறுகின்றன. காளமேகப்புலவர், இரட்டையர், அருணகிரிநாதர், வில்லி புத்தூராழ்வார் என்பார் பதினைந்தாம் நூற்றாண்டிலும், அரிதாசர், குருகைப் பெருமாள் கவிராயர், மறைஞான சம்பந்தர், அனதாரியப்பர், நிரம்ப அழகிய தேசிகர், பரஞ்சோதி முனிவர், அதிவீரராமபாண்டியர், வரதுங்கராம பாண்டியர் மனைவியார், திருவொற்றியூர் ஞானப் பிரகாசர், குகைநமச்சிவாயர், இரேவண சித்தர், ஆறுமுக சுவாமிகள் என்பார் பதினாறாம், நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப் படுகின்றனர். பதினேழாம் நூற்றாண்டின் முற்பாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும், சைவ எல்லப்ப நாவலரும், குமர குருபரரும் தத்தம் சமயங்களை நிறுவுதலில் தலை நின்றமையும், பிற்பாதியில், அமிர்தகவிராயர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், அந்தகக்கவி வீரராகவர், அரச கேசரி, சிவப்பிரகாசர், சொக்க நாதப்புலவர், வைத்திய நாத நாவலர், ஈசான தேசிகர், சுப்பிரமணிய தீட்சிதர், படிக்காசுப் புலவர் முதலியோர் விளங்கி யமையும் குறிப்பிடுகிறார். சுவாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து என்ற தமது நூலில், தமிழைச் சற்றிழித்துக் கூறினமையால், இவர் வரலாற்றுணர்ச்சியில்லாமல் வடமொழிப்பற்று மிகையு முடையவர் என்பது தெளியப்படும் என்றும், திரிபுணர்ச்சியும், ஒரு பாற்கோடிய பற்றும் உடையர் என்றும் இவர் கூறுவது எண்ணத்தக்கது. இது தமிழ்க் கா. சு. என்பதுடன் நடுவாயும் சட்டப் பேரறிஞர் என்பதையும் நாட்டுவது (430 -1) பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாந்தலிங்க, கோனேரியப்பர், கண்ணுடைய வள்ளல், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், மதுரகவிராயர், வீரமாமுனிவர், தாயுமானவர், நமச்சிவாயப் புலவர், ஒப்பிலா மணிப்புலவர், அருணாசல கவிராயர், பகழிக் கூத்தர், சொக்கப்ப நாவலர் முதலியோர் வாழ்ந்து தமிழ்த் தொண்டு செய்ததும், பதினெட்டாம் நூற்ண்டின் பிற்பகுதியில் சிவஞான முனிவரர், கடவுண் மாமுனிவர், கச்சியப்ப முனிவர், தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர், சங்கரமூர்த்தி கவிராயர், வண்ணக் களஞ்சியப் புலவர், கந்தப்பையர் முதலியோர் தொண்டு செய்ததும் விளக்கப்படுகின்றன. ஆங்கிலச் சார்புக் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டாகவும் தற்காலம் இருபதாம் நூற்றாண்டாகவும் ஆயப்பட்டுள்ளன. சரவணப் பெருமாள் கவிராயர், இராமானுச கவிராயர், வேதகிரி முதலியார், வீரராகவ முதலியார், இராமச்சந்திர கவிராயர், ஆண்டான் கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், தாண்டவராய முதலியார், விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகளார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முருகதாச அடிகள், பொன்னுசாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர், அழகிய சொக்கநாத பிள்ளை, கிருட்டிண பிள்ளை, சுந்தரம் பிள்ளை, கால்டுவெல் ஐயர், போப்பையர், அண்ணாமலை ரெட்டியார், வீராசாமிச் செட்டியார், சபாபதி நாவலர், சோமசுந்தர நாயகர், தாமோதரம் பிள்ளை முதலியோர் இலக்கியப் பணிகள், ஆங்கிலச் சார்புக் காலப் பணிகளில் ஆயப்பட்டுள்ளன. சுப்பிரமணிய பாரதியார், அரசஞ்சண்முகனார், சூரிய நாராயண சாத்திரியார், செல்வக்கேசவராய முதலியார், பூவை கலியாணசுந்தரயதீந்திரர், அ. குமாரசாமிப் புலவர், செந்தில் நாதையர், கதிரைவேற்பிள்ளை, கார்த்திகேய முதலியார், பாம்பன் குமரகுருதாச அடிகள், உ. வே. சாமிநாதையர், விருதை சிவஞானயோகிகள், கா. நமச்சிவாய முதலியார், பா. வே. மாணிக்க நாயக்கர், இரா. இராகவஐயங்கார், மு. இராகவ ஐயங்கார், வெ. ப. சுப்பரமணிய முதலியார், இலக்குமணப் பிள்ளை. சி. கே. சுப்பரமணிய முதலியார், திரு. வி. கல்யாண சுந்தரனார். பூரணலிங்கம் பிள்ளை, இரா. பி. சேதுப்பிள்ளை, பண்டித மணி, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், மறை மலையடிகள் முதலியோர் பணிகளுடன் தற்காலத் தமிழ் இலக்கியப் பகுதியை நிறைவிக்கிறார். உலகெங்கும் தமிழ் மணமும் சிவ ஒளியும் பரவி ஓங்குக. ஈண்டுக் குறித்த பெரும் புலவர்கள் வாயிலாகவும், அவர் வழிவரும் எதிர் காலப் புலவர்கள் வாயிலாகவும் தென்னாட்டிலும், பிற எந்நாட்டிலும் தமிழ் நூலறிவும், பழந்தமிழ்ப் பெரு நாகரிகமும், தமிழரது உயரிய கடவுட் கொள்கையும் நிலை பெற்றுத் தழைத் தோங்கி மன்பதைகட்கும் பெரும் பயனளிக்கும் வண்ணமும், தமிழறிஞர் ஊக்கமுற்றெழுந்து கழிபேரார்வத்துடன் தளர்வின்றி இடைவிடாது முயலும் வண்ணமும் அச்சீரிய பெருமுயற்சி தழைக்கும் வண்ணமும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் திருவுளங் கொண்டு திருவருள் நல்குவாராக என நிறைவிக்கிறார். சமய - இலக்கிய - வரலாற்று ஆய்வுகளில் காலமெல்லாம் ஈடுபட்ட கா. சு. தம் இலக்கிய வரலாற்றின் வழியாக நிலை பேறுமிக்கதும், வழிவழி வளர்ப்பதுமாம் ஒரு பெரு நெறியைத் தமிழுலகுக்குத் தந்துள்ளார் என்பதை இலக்கிய வரலாறு எழுதுவாரும், பயில்வாரும் மெய்யாக உணர்தல் ஒருதலை. பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பிய பொருளதிகாரக் கருத்து சேலம் திருவாளர் ஆ. மாணிக்கம் அவர்களின் தமிழ் நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக 1939இல், பழந்தமிழர் நாகரிகம் என்னும் நூல் வெளிவந்தது; கழகப் பதிப்பு 1968 இல் வெளிவந்தது. தொல்காப்பியச் சிறந்த கருத்துகள் அனைத்தையும் தமிழ் கற்பார் அனைவரும் இனிதுணருமாறு இந்நூல் எழுதப்பட்டது என்பதைப் பல்கலைப் புலவர் கா. சு. mt®fŸ j« K‹DiuÆš F¿¥ãL»‹wh®fŸ., அன்றியும், பாட்டு தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்ந்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது என்னும் குறிப்பையும் வைத்துள்ளனர். மு. சி. பூரணலிங்கனார், த. வே. உமா மகேசுவரனார், நாவலர் ந. மு. வே. அனவரத விநாயகர், இரா. திம்மப்பர், சி கே. சுப்பிரமணியனார், நாவலர் ச. சோ. பாரதியார்,மோசூர் கந்தசாமியார், சேலம் கல்லூரி முதல்வர் அ. இராமசாமியார் ஆகியோர் ஆய்வுரைகள் வழங்கியுள்ளனர். பொருளதிகாரத்துச் சில இயல்களுக்குப் புத்துரை கண்டவர் நாவலர் பாரதியார். அவர், பழந்தமிழர் முறைகளுக்கு ஏலாத சில சூத்திரங்களுக்கிடையே வேறு பாடம் இருந்திருக்க வேண்டுமென விளக்கியும். அறவே பொருந்தாச் சில சூத்திரங்களைப் பிற்காலச் செருகலென விலக்கியும், தாமுணர்ந்த அரிய சித்தாந்த சைவக் கொள்கைகளைப் பல சூத்திரங்களில் புதை பொருளாகக் கண்டு கூறியும் கட்டுரையாசிரியர் நூல் யாத்துள்ள திறத்தை வியக்கின்றார். இவ்வியப்பும் இதன் தொடர்பாய முக்குறிப்பும் கா. சு. வின் நூன்முறை தெரிந்து பிழிந்தெடுத்து சாறு எனலாம். தமிழ்மொழி பற்றிய இனிய பாடல்களைத் தொகுத்து மூன்று பக்க அளவில் முதற்கண் வைக்கும் ஆசிரியர், இந்தியா முழுமையும் ஒரே நாடாக ஏற்பட வேண்டுமானால். சென்னை மாநிலத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ்மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காந்தியார் கூறுவதையும் சுட்டுகிறார். பழந்தமிழர் நாகரிகத்தைத் தொல்காப்பிய வழியே உரைக்கப் புகும் பல்கலைச் செல்வர் முற்சேர்க்கையாக (1-26) திருக்கோவையார் துறை விளக்கம் என்பதை வைக்கிறார். அதற்குக் காரணமாக, தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில் துறை வரிசை கூறப் படாது தலைவன் தலைவி முதலியோர் கிளவி (பேச்சு) நிகழும் இடங்களே தொகுக்கப் பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன் துறை வரிசையறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவை யாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக் கொள்வது போதிய துணை புரியுமாகலின், அவ்வரிசைகளை இங்கே தொகுக்கின்றேன் என்று உரைக்கிறார். திருக்கோவையாரில் அமைந்த துறைகள் 400. இவ் வனைத்தையும் புரிந்து கொள்ளுவண்ணம் பொருள் தொடர்பும் நிகழ்ச்சித் தொடர்பும் இயைந்து செல்ல, ஒரு கதையென அமைத்து அதன் நிறைவில் திருக்கோவையார்க்குப் பேராசிரியர் உரைத்த உரையின் வழியது அது, என்கிறார். குமரியாறு தென்னெல்லையாக இருந்த காலத்துச் செய்யப்பட்டது தொல்காப்பியம். அது கி. மு. 2000 - க்கு முற்பட்ட நூல்; நூற் பொருள்களை அகம்புறம் எனப் பகுத் தாய்ந்தமையால் பண்டைத் தமிழர் உளவியல் அறிவு சான்றவர் என்பவற்றை விளக்கிய கா. சு. பொருள் என்னும் சொற் பொருளை விரிவாக ஆய்கின்றார். நூல் பொருளதிகாரக் கருத்து ஆகலின், அப்பொருளை விரிவாக ஆய்ந்தார் என்க. பொருளதிகாரத்தில் வரும் ஒன்பது இயல்களையும் பொது வகையில் சுட்டிக் கூறிப் பின்னர்த் தனித்தனி இயல் வாரியாக விளக்கிச் செல்லும் வகையில் நூலை இயற்றியுள்ளார். அகத்திணையியல் : அகம் என்பது புறத்தார்க்கு உரைக்கப் படாத காதல். திணை என்பது ஒழுக்கம். ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உளதாய காதலொழுக்கமே அகத்திணை எனப் படும். அக்காதல் ஒருபாற்காதல், ஒத்த காதல், ஒவ்வாக் காதல் என்று மூவகைப்படும் என்பதைச் சுட்டி விளக்குகின்றார். பாலை என்பது பிற நான்கு நிலங்களுக்கும் பொதுவானது ஒன்றாகலின் அதனை ஆசிரியர் நடுவணது என்றார் என்னும் கா. சு, பொது என்ற பொருளில் நடு என்ற சொல் ஆதியில் வழங்கிற்று என்கிறார். நால்வகை நிலங்களுக்கும் பெயர்கள் அவ்வந் நிலத்துப் பூவின் பெயராகவே அமைந்தன என்கிறார். செயற்கை நிலனும், செயற்கைப் பொழுதும் உண்டென்னும் நச்சினார்க்கினியர் அவற்றை விளக்கினார் அல்லர். கா. R., செய்குன்றினைச் செயற்கைக் குறிஞ்சி என்றும், சமவெளியில் வளர்க்கப்படும் செடிப் பரப்பினையும் புற்றரைகளையும் செயற்கை முல்லை என்றும், நகரமாடங்களைச் செயற்கை மருதம் என்றும், அலைவீசும் பெருங்குளக் கரைகளைச் செயற்கை நெய்தலென்றும், செயற்கை மணற்பரப்பைச் செயற்கைப் பாலை என்றும் கூறுதல் கூடும். இருண்ட பொழுதை இரவென்றும், ஒளியுள்ள பொழுதைப் பகலென்றும் கூறுவது செயற்கையே என விளக்குவதும் மிகத் தெளிந்த புலமைத் திறத்தின் விளைவாகும். நிலமும் காலமும் பற்றித் தோன்றி இயங்கும் இயற்கை செயற்கைப் பொருள்கள் அனைத்தும் கருப்பொருள் எனப் பட்டன எனக் கருப்பொருள் இலக்கணம் வகுத்துக் காட்டு கிறார் கா. சு. (47) காட்டிற்குத் தெய்வம் மாயோன் என்று பிற்காலத்தார் கருதினும் மாயோனாகிய கருநிறமுடைய அம்மையையே சிறப்பாகக் கொள்ள வேண்டும். மாயோன் மேய காடுறை யுலகமும் என்ற பாடமே சிறந்தது என்கிறார். ஆனால், அப்பாடம் கருது பாடம் என்பதையன்றிக் கண்ட பாடம் எனச் சான்றில்லை! இன்திறன் என்ற சொற்றொடரே இந்திரனென மருவிற்றென்ப; மன்திறம் என்றது மந்திரம் என மருவியது போல என்னும் கா. R., வேந்தன் என்பானைச் சிவனென்பாரும் உளர் என்கிறார். வண்ணன் என்ற சொல்லே வருணன் ஆயிற்று என்றும் கூறுகிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனர் என்பது தொல்காப்பியத்தில் வரும் தொடர். அதற்கு. அம்மை வழிபாடு, ஆனைமுகன் வழிபாடு, முருகன் வழிபாடு, சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கதிரவன் வழிபாடு என்னும் ஆறு தெய்வங்கட்குப் பூசனை புரிவோரே அறுவகைப்பட்ட பார்ப்பனர் எனப்பட்டனர் என்கிறார். கா. சு. (49). ஆனைமுகன் வழிபாடு, சங்க நூல்களிலும் இடம் பெறாச் செய்தி. அதனை தொல்காப்பியத்தொடும் இணைத்துப் பார்த்தல் வலிந்த பொருளாதல் விளக்கம். இதனை, ஆனைமுகக் கடவுளின் வழிபாடும் குறிஞ்சி நிலத்திற்கே உரியதாயினும் ஐந்திணைக் காதல் ஒழுக்கத்திற்குச் சிறப்பாவது முருக வழிபாடேயாம் என்பது பற்றி முருகனையே குறிஞ்சிக்குத் தெய்வமென்றார் போலும் என்பதும் முன்னையோர் கொள்கையைத் தழுவியதன்று. சிறுத் தொண்டர் படையெடுப்பின் பின்னர் வரப்பட்டது மூத்த பிள்ளையார் வழிபாடு என்பது கா. சு. வுக்குத் தெரியாததா? (48). அமரர்கண் முடியும் அறுவகை என்பதற்கு, வானவர், முனிவர், ஆனினம், மழை, அரசன், உலகம் என்ப என்று கூறி வாழ்க அந்தணர் என்னும் திருப்பாடலைச் சான்றாக்குவதும் ஆயத்தக்கதே. (50). முதல் கரு உரிப்பொருள்களின் முறை வைப்பை, முதல், பொது, கரு, சிறப்பு; அதனினும் சிறப்பு உரிப்பொருள் என்று கொள்க என்பது சிறப்புடைய குறிப்பு (57). இம் முப்பொருள்களை ஆயும் கா. R., இவற்றின் வழியே நில நூல், வானநூல், அறநூல், மெய்யறிவு நூல், உழவு நூல், விலங்கு நூல், புள் நூல், நிமித்த நூல், மர நூல் எனப் பல்வேறு நூலாய்வும் பண்டே இருந்தது என்பதைச் சுட்டுதலை நோக்க, அவர்தம் ஆய்வின் நுணுக்கம் நன்கு புலப்படுகின்றது (58). கற்பு என்பது வெளிப்படையாய் நிகழ்த்தும் இல்லற வாழ்க்கை எனவும், களவு என்பது பிறர் நன்கறியாதபடி நிகழ்த்தும் ஒழுக்கம் எனவும் தந்திரமாக நடத்தும் ஒழுக்கம் எனவும் கூறப்படும் என்பது கா. சு. தரும் பொருள் விளக்கம். தொல்காப்பியத்தில் களவினைக் கந்தருவத்திற்கு ஒப்பிட்டது பிற்காலக் கருத்தாயிருக்கலாம் என்கிறார் (84). ஒருவன் ஒருத்தி என்பார்பால் காணப்படும் காத லொழுக்கத்தை தமிழ் நூலார் களவு, கற்பு என்பர் என்றும்; வட நூலார் மணத்தை எண்வகையாகப் பிரிப்பர் என்றும் அடிப்படை வேறுபாட்டைச் சுட்டுகிறார். (84). களவு, கற்பு, ஒப்பு, பொருள்கோள், அரும்பொருள் வினை, வண்டி, பேய் நிலை, தெய்வம் என்னும் எண்வகை நிறையும் தமிழ் நிலத்திற்குரியனவாய் இருந்தன என்பது தவறாகாது என்று கூறுதல் மேலாய்வுக்குரிய செய்தி (86). முதற்காட்சி நிகழுமிடம் ஒரு பொழிலென நூல்கள் கூறினும் பிற இடமும் அதற்குரியதே என்பது மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பர், இராமன் சீதையை மிதிலை நகரில் ஒரு மாடத்தில் கண்டதாகவும், சீதை தெருவில் செல்லும் இராமனைக் கண்டதாகவும், கூறியதால் உணர்க எனக்காட்சி இலக்கணத்தைக் தக்காங்கு விரித்துக் காட்டுகிறார். இதனால், சுந்தரர் கொண்ட காதல் காட்சியிடங்களும், இந்நாளில் அலுவலகங்கள், பணிமனைகள், கலை நிலையங்கள்,கடைத் தெருக்கள், காட்சியரங்குகள் இன்னவாறான இடங்களெல்லாம் காதல் அரும்புகளாகத் திகழும் பாங்கை உணர்ந்து கொள்ள ஏவுகின்றார். அகப்பொருள் துறைகளுக்குப் பேரின்பக் கருத்துரைப்பார் காட்சியை, அருட்குருவாய் வரும் இறைவன் திரு மேனியைக் காண்டல் என்றும், காட்சியின் புதுமையால் இறைவன் திரு மேனியே என்று தெளிதல், தெளிவு என்றும், திருமேனியாற் பயன் பெறலாம் என்றும் அவனிடத்தில் கருணை உண்டென்றும் அறிதல், குறிப்பறிதலின் பாற்படுமென்றும், அருள் பெற விரும்புதல் புணர்ச்சி விருப்பமென்றும் கூறுவர் என்று மணி வாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்டு ஐயுற்றுத் தெளிந்து அருள் பெற்றமையால் நிறுவுகின்றார் (90). அகத்துறைப் பாடல்களால் பண்டைத் தமிழரின் உயர்ந்த மனப்போக்கினை ஊகித்தறிதல் நம்மவர் கடன் எனக் கட்டளையிடும் ஆசிரியர், தலைவன், தலைவி, தோழி முதலியோர் கூற்று இன்ன இன்ன இடங்களில் நிகழும் என்பதறிவிப்பான் சூத்திரம் செய்துள்ளமை கொண்டு, களவு - கற்பு முறைகளை யாவரும் பொதுவாக அறிந்திருந்த காலத்துக் தொல்காப்பியர் நூலியற்றினார் எனவும், அம்முறைகளைத் துணை நூலால் அறிந்த பின்னரே தம் நூலைக் கற்றல் வேண்டுமென்பது அவர் கருத்தாகுமென ஊகிக்க இடமுண்டு எனவும் கூறுதலை அறிந்தால், திருக்கோவையார்த் துறை விளக்கத்தைத் தம் நூலின் முகப்பில் வைத்த காரணத்தை அறிந்து கொள்ளலாம். (104). தமிழர், கரணம் இல்லாமல் அஃதாவது சடங்கு இல்லாமல் மணந்து கொண்ட காலமுமுண்டு என்பதைத் தொல்காப்பிய வழியில் கூறும் கா. சு. கரணச் சான்றாக அகம் 86 ஆம் பாடல் தொகுப்பைக் காட்டுகிறார். காவணம் அமைத்துக் குளிர்ந்த மணல் பரப்பி, விளக்கு வைத்து, மாலை தொங்கவிட்டு, மக்கட் பேறுடைய நான்கு மகளிர், தலைவியைக் கற்பும் நன்மக்கட் பேறும் உடையாளாகுக என வாழ்த்தி, ஈரிதழ் கலந்த நீரில் முழுகுவித்தல், புத்தாடை புனைவித்தல், மரபென்பது குறிக்கப்பட்டுள்ளது. தலைவி ஒண்குழை அணிதலும் கூறப்பட்டது என்பது அது (122). பொருளியல் என்பது, அகப்பொருளியல்களுக்கு வழு வமைதி அல்லது புறனடை கூறுதல் எனச் சுட்டி விளக்குகிறார் கா. சு. சொல்லிற்கு இயற்கையாகவுள்ள பொருளுக்கு வேறாக அகப்பொருள் மரபில் சிறந்து வரும் கருத்தின் தன்மை கூறுதல் இவ்வதிகாரத்துள் காணப்படும் எனவும் விளக்குகிறார் (143). மெய்ப்பாடு என்பதை,உலகத்தார் உள்ள நிகழ்ச்சி உள்ளத்தில் நிகழ்ந்தவாறே புறத்து வெளிப்படுதல் உடம்பின் வாயிலாகவே ஆதலான், மெய்ப்பாடு எனப்படும் என்று கூறு முகத்தான் பண்டை உரையாசிரியர் உரையை எளிமைப்படுத்திக் காட்டுவதுடன் தெளிவாகவும் புரிய வைக்கிறார் (151). அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றை விரித்து எழுதும் கா. சு. பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல் ஆகியவற்றைத் தொல்காப்பிய நூற்பாவை எளிய உரைநடையில் தரும் குறிப்பில் சுருக்கி வரைகின்றார். (பொருளியல் (8), மெய்ப்பாட்டியல் (8) உவமவியல் (4) என்பவை 20 பக்க அளவில் அமைந்து விடுகின்றன (143-162). பொருளதிகாரத்தில் நூற்பா எண்ணிக்கையால் பெருக் குடைய செய்யுளியலை ஏழுபக்க அளவில் (162-169) சுருக்கி வரைதலும் அப்பகுதியிலும் செய்யுள் உறுப்புகளைச் சுட்டிக் காட்டும் அளவில் நிறுத்திவிட்டு, செய்யுள் வகை பாட்டு உரை நூல் வாய்மொழி பிசி அங்கதம் முதுமொழி என ஏழாதலையும், வாயுறை வாழ்த்து அவையடக்கம் செவியறிவு நூல் அங்கதம் என்பவற்றையும், பண்ணத்தி மந்திரம் என்பவற்றையும், களவு, கற்பு ஒழுக்கங்களின் பகுதிகள், அப்பகுதிகளில் கூற்று நிகழ்த்து வோர் இடம், காலம், பயன், மெய்ப்பாடு, வண்ணம், வனப்பு என்பவற்றையும் கூறி அமைதலும் அப்பகுதி தனியாய்வுப் பொருளுக்குரியது எனக் கருதினார் என்று கொள்ளச் செய்கின்றது. மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் பற்றிய நூற்பாக்களின் பொருளை மற்றை நூற்பாக்களின் பொருள் போலவே வரைந்து செல்கிறார் கா. சு. அவற்றின் இயைபு பற்றியோ, பிறவற்றைப் பற்றியோ அவர் ஐயுற வில்லை என்பது விளங்குகின்றது. ஏனெனில், அவை இடைச்செருகல் என ஒரு கருத்துண்மை அவர்க்கிலது போலும்! தொல்காப்பியத்தில் அகத்திணை இயலை அடுத்துப் புறத்திணை இயலை வைத்தாராகவும், அவ்வியலை இறுதிக்குக் கொண்டு வந்து வைக்கிறார் கா. சு. இயலை மாற்றி அமைக்கும் அவர் அதற்குரிய காரணத்தை உரைத்தார் அல்லர். அகத்திணைப் பொருளைச் சுருக்க உரைநடையாகவே சொல்லிச் செல்கிறார். இந்நெறியையே புலவர் குழந்தையார் தம் புத்துரை நெறிக்குக் கொண்டார் போலும்! இரண்டோரிடங்களில் நூலாசிரியர் தம் கருத்தைச் சிறிது வேறாகக் குறித்திருத்தலைத் தம் ஆய்வுரையில் திம்மப்பர் சுட்டுகிறார். தமிழ் மந்திரம், தமிழ்த் திருமணம் என்பவற்றைக் கா. சு. சுட்டுவது கொண்டு அக்கருத்தினைக் கண்டிருக்கலாம். மாயோன் வண்ணன் என்னும் பாட வேறுபாடு கொண்டும் கூறியிருக்கலாம். தொல்காப்பியக் கருத்துகளை எளிமைப் படுத்துதல் என்னும் வகையிலேயே ஆசிரியர் கருத்தோட்டம் செல்கின்றது; அதில் வெற்றியும் கண்டுள்ளார் எனல் தகும். கா. சு. வின் பரந்த கல்வியின் பயனான ஆராய்ச்சியுரைகளைப் படிக்க நேர்ந்த போதெல்லாம், தாம் மிக அஞ்சியதாகவும், அவ்வச்சம் இவ் வுரை நடை நூலைப் படித்தபோது இல்லை என்றும் கூறும் சி. கே. சுப்பிரமணியனார் ஆய்வுரை நம் கருத்தை மெய்ப்பிக்கும் தமிழ்க் கா. சு. திருக்குறள் தெளிவுரை கா. சு அவர்கள் திருக்குறளுக்குத் தெளி பொருள், விளக்கப் பொழிப்புரை வரைந்துளர். அதன் முதற்பதிப்பு 1928-இல் வெளி வந்தது. அதனை வெளியிட்டது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஏறத்தாழ ஒருபதின் பதிப்புகளை அது கொண்டுள்ளது. பொதுமறை, பாயிரம் திருக்குறள் பொதுமறை எனச் சுட்டும் ஆசிரியர், ஆதித் தமிழ் நான்மறைகள் மறைந்த பின்னர் அந்நான் மறைக் கருத்துகளை விளக்குமுகத்தான் ஆசிரியர் திருவள்ளுவரால் செய்யப்பட்டது என்னும் கருத்தைப் பாயிரத்தில் வைக்கிறார். அப்பகுதியிலேயே கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளின் பாயிரம் என்னும் கருத்தையும் வெளியிடுகின்றார். சிவநெறியும், பொதுவும் திருக்குறள் வேதவழிப் பட்டது என்பது பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் கருத்து. அதனைக் கருத்தில் கொண்ட தமிழ்க் கா. சு. தமிழ்ச் சைவ நெறிப் பட்டது என்னும் கருத்தை நிலைநாட்டுவார் போலக் கடவுள் வாழ்த்தின் உரையை வரைகின்றார். முதற் குறளில், உலகத்திலே உடம்பெடுப்பதற்கு அருட் சக்தியோடு கூடிய கடவுளே காரணமாதலால் உலகம் மாதொரு பாகனாகிய கடவுளைத் தலைவனாக உடையது என்றும், வான் சிறப்பு முகப்பிலே மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட் சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது என்றும், மலர்மிசை ஏகினான் என்பதற்கு உயிர்களது உள்ளக் கமலத்தின் மேலிடமாகிய பரவெளியிலே கூத்து இயற்றுகின்ற கடவுள் என்றும் கூறு வனவற்றாலும், பிறவற்றாலும் இது விளங்கும். சிவநெறி வழிப்பட்டது பொதுமறையோ என வினவுத லுண்டாயின், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்னும் மணிமொழி, மறுமொழியாம் எனக் கொண்டு உரை கண்டாராகலாம். புத்துரை ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி என்னும் குறளுக்குப் புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தினையும் அடக்கினானது வலிக்கு அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று என்று உரையும், தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலுங் கரி என்றார் என்று விளக்கமும் வரைந்தார் பரிமேலழகர். பிறரும், இவ்வுரைக் கருத்தே கொண்டு வரைந்தனர். கா. சு. ஐம்பொறிகளையும் அடக்கியவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன் என்கிறார். எதிரிடை வழியால் ஐந்தவித்தான் ஆற்றலைப் பரிமேலழகர் காட்டியதை ஒவ்வாத கா. சு நேரிடை வழியால் காட்டுதல் நூலாசிரியர் முறை வழியில் செல்வதாம் இது, முற்றிலும் அழகர் உரைக்கு மறுப்புரையாம். நுண்ணிய ஆய்வு பிறர் உரையை ஏற்று ஒருமருங்கு மறுப்பார் போம் நுண்ணிய வேறுபாடு காட்டவும் செய்கிறார் கா. சு. தெய்வம் தொழா அள் என்னும் குறளுக்குப் பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழா நின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் எனப் பரிமேலழகர் உரை கண்டார். கா. சு. தெய்வத்தைத் தொழாத போதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள், மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும் என்கிறார். பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என உவமைப் படுத்து உரைப்பார் உளராயினும் கா. சு. அதனைக் கொண்டிலர் என்பதும், தொழாஅள் தொழுதெழுவாள் என்பதற்குப் புத் துரை வகுக்கிறார் என்பதும் எண்ணத் தக்கன. இவ்வாறே மக்கள் மெய்தீண்டல் என்னும் குறளுக்கு ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல் எனப் பரிமேலழகர் முதலியோர் பொருள் கூற, குழந்தைகள் பெற்றோரது உடம்பைத் தொடுதல், அவர் உடலுக்கு இன்பம் தருவதாகும் என்கிறார். மக்கள் மெய்தீண்டல் என்னும் தொகைச் சொல்லுக்குப் பெற்றோர், மக்களது மெய்யைத் தீண்டுதல் எனப் பரிமேலழகர் பொருள் கொள்ள, மக்கள் பெற்றோரது உடம்பைத் தீண்டுதல் எனக் கா. சு. உரைகொள்ளத் தீண்டுவார் தீண்டப்படுவார் மாற்றி யுரைக்கப் படுதல் அறியத் தக்கதாம். குழந்தையரின் மழலைச்சொல் பெற்றோர் காதில் விழுந்து இன்புறுத்துதல் போல், அவர்கள் மெய்யில் வந்தும் விழுந்து இன்புறுத்துவதாகக் கொள்ளலே, பொருந்தும் உரையாம் எனக் கா. சு. கண்டுரைத்தார் எனலாம். உரைமேல் உரை குறளை எழுதிப் பொழிப்புரை எழுதும் கா. சு. தழுவல் உரையாகவும், பிறருரையாகவும் குறித்தலும் மேற் கொண்டார். தென்புலத்தார் என்பதற்குப் பொருள் கூறும் கா. சு. இறந்த உயிர்க்குத் துணை நிற்கும் பிதிரர்கள் என்கிறார். மேலும் தென் புலத்தார் என்பார் தமிழ்நாட்டுப் புலவரெனவும், தமிழர் குருமார் எனவும் கூறுவாரும் உளர் என்கிறார். தம்மின் தம் மக்கள் என்னும் குறளில் வரும் மன்னுயிர் என்பதற்கு உள்ள உயிர் என்று உரை கூறுவதுடன், மன்னுயிர் என்பது அறிஞரைக் குறிக்கும் என்பாரும் உளர் என்றும் வரைகிறார். செய்யாமற் செய்த உதவிக்கு என்னும் குறளுக்குப் பொழிப்புரை வரைந்து அதன்பின் வேறொரு வகையில் பொருள் கோடலுமுண்டு என வரைகின்றார். இவ்வாறே வேட்ட பொழுதில் என்னும் குறளுக்கும் ஈருரை காட்டுகின்றார். ஓருரை கூறுவதுடன் அல்லது என்னும் குறிப்புடன் ஈருரையும் தரும் முறையிலும் உரை வகுக்கின்றார். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்னும் குறளில் வரும் காமக் கலன் என்பதற்கு விரும்பி ஏறும் மரக் கலங்களாம் அல்லது விரும்பிப் பூணும் அணிகளாம் என்பது இதனை விளக்கும். ஆயின், இவ்வுரை இரண்டும் பரிமேலழகர் உரைக்கண் வருவனவே. இவ்விரண்டினுள் ஒன்றைத் தெரிந்து சுட்டாமல் இரண்டையும் ஒப்பக் கொண்டார் இவர் என்க. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு நான்கு உரைகள் உரைக்கிறார் கா. சு. நான்கும் பரிமேலழகர் முதலாம் உரையாசிரியர்கள் உரைத்தனவே. இவ்வாறே அடியளந்தான் தாயது, தாமரைக் கண்ணான் உலகு என்பவற்றுக்கும் பிற்கால உரையாளர் வேறு வேறு புத்துரை கண்டாராக அவ்வுரையிடைக் கருத்தைச் செல விடாமல் பண்டை யுரையாசிரியர்களின் உரையைத் தழுவியே செல்கிறார். இவற்றை நோக்கும்போது ஒரு கருத்துத் தெளிவாக விளங்குகின்றது. திருக்குறளின் பொருளை எளிமையாக எவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்திலேயே கா. சு. உரை எழுதியுள்ளார் என்பதாம். இதனைத் தெளிபொருள் விளக்கப் பொழிப்புரை என்னும் பெயரீடும் விளக்குவதாம். விளக்கவுரை கா. சு. உரை பொழிப்புரை எனப்பட்டாலும், அது தெளி பொருள் விளக்கப் பொழிப்புரை என்பதற்கு ஏற்பவும் நடையிடுதல் விளங்குகின்றது. சிறப்பொடு பூசனை செல்லாது என்பதற்கு முதலிலே திருவிழா நின்று பின்பு வழக்கப் பூசையும் நின்றுபோம் என்றவாறு என்கிறார். ஒல்லும் வகை என்பதற்கு இயலும் வகை எனப்பொருள் கூறி, உடம்பின் நிலைக்கும் பொருளின் அளவிற்கும் தக்கபடி செய்தலே இயலும் வகை செய்தல் என்பது என்கிறார். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்பதற்கு அன் பில்லாதவர்கள் தம் பொருட்டே எல்லாவற்றையும் தேடித் தமக்கே உரியதாக்கிக்கொள்வர் என உரை விரிப்பதும், உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்பதற்கு. உடம்பு எடாதபோது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு என உரை விரிப்பதும் பேருரை ஒப்பவை. பனைத்துணை என்பதற்குப் பனையளவு எனப் பொதுப் பொருள் குறித்தாலும் அப் பனைப் பெயர் தூண்டுதலால் ஏனைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க என்று விளக்குவது அம் மரவியல் அறிந்த சிறப்பு வழிப்பட்டது. காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் பெரிது எனவும், பயன் கருதாமல் செய்த உதவி கடலிற் பெரிது எனவும், நிலையில் மாறாது அடங்கியவன் தோற்றம் மலையிற் பெரிது எனவும் வள்ளுவர் கூறுவார். அதனை விளக்கும் கா. R., உவமையிலும் பொருள் உயர்ந்திருத்தலையும் நயமாக விளக்குகிறார். நிலமாவது காலத்தில் பயன் விளைப்பதியல்பு; அது காலத்தில் பயன் விளையாமையும் உண்டு. அக்காலத்திலும் நன்றி செய்வார் சிறந்தவர் என்றவாறு. கடல் தன்பால் மேகம் கொண்ட நீரை மீட்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினும் சிறந்தவர் என்றவாறு. தானே உயர்வுடைய மலையினும் தனது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன் என்றவாறு. இவை மாண இல என்னும் சொற்களை நோக்கி வள்ளுவர் உள்ளம் உணர்ந்து உரைக்கும் நயத்தனவாம். இவை கா. சு. வழங்கும் கொடையாம். குறிப்புரை, கருத்துரை பொழிப்புரையே பெரிதும் எழுதும் கா. சு, சில இடங்களில் குறிப்புரை, கருத்துரை ஆயனவும் வரைகின்றார். விண்ணின்று பொய்ப்பின் என்னும் குறளில் கடல் சூழ்ந்த என்பதனால் கடல் நீர் அளவின்றியிருந்தும் அது பசி நீக்க உதவாது என்பது குறிப்பு என்றும், துறந்தார் பெருமை என்னும் குறளில் துறவிகளின் பெருமை அளவில் அடங்கா தென்பது கருத்து என்றும், எழு பிறப்பும் என்னும் குறளில் மக்கள் செய்யும் நற்கருமங்களால் பெற்றோரையும் தீயவை தீண்டா என்றார் என்றும், அன்போடியைந்த என்னும் குறளில் அன்பு செய்யாக்கால் உடம்பு எடுத்த பயன் யாது மில்லை என்பது கருத்து என்றும், சொற்கோட்டமில்லது என்னும் குறளில் சொல்லில் மாத்திரம் செப்பமாக இருந்து மனம் ஒருபால் சாயப் பெற்றால் அது நடு நிலைமை யாகாது என்றும் உரைக்கின்றார். இவ்வாறு சொல்வனவெல்லாம் தெளிவும் விளக்கமும் நோக்கியவை என்க. ஏரின் உழாஅர் என்பதற்குக் கலப்பையால் உழ மாட்டார் என்னும் பொருள்கூறும் கா. சு. செவ்வையாக உழவு செய்ய மாட்டாதார் என்றும் பொருள் கூறுவது இரட்டுறல் பார்வையாம். சுருக்கமும் பெருக்கமும் ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் என்பதற்கு, பிணக்கில் தோற்றவர் வென்றவராவர்; அது புணர்ச்சியுட் காணப்படும் எனக் குறள் போலவே பொழிப்பையும் சுருக்கியுரைக்கின்றார். வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் என்பதற்கு, புதிது புதிதாக விரும்பிய பொருள்கள் புதிது புதிதாக இன்பஞ் செய்வன போலப் பூக்கள் நிறைந்த கூந்தலை யுடைய இவளது தோள்கள் எப்பொழுதும் புதுமையான இன்பத்தைத் தருகின்றன என்று பொழிப்புரைத்து, விரும்பிய பொருள்கள் விரும்பியவுடனே கிடைத்தால் எப்படி இன்பந் தருமோ அப்படி இவளுடைய தோளும் இன்பந் தருவது என்பதும் ஒன்று என்று மேல் விரிவும் தருகிறார். இதனினும் விரிவாக எழுதும் உரை விளக்கங்களும் உண்டு. அவற்றை முதற் குறள் உரையிலும், வினைபகை என்னும் 674 ஆம் குறளுரையிலும் காண்க. அதிகார ஆய்வு அதிகாரத் தலைப்பு, பொருள், தொடர்பு ஆகியவற்றையும் உன்னிப்பாக நோக்கி உரை வரைந்துள்ளார் கா. சு. ஏழாம் அதிகாரம் புதல்வரைப் பெறுதல் என்பது. இதனை, ஒவ்வொரு குறளிலும் மக்கள் என்றே நாயனார் ஆண்டு வந்தமையின் இவ்வதிகாரப் பெயர் மக்கட் பேறு என மாற்றப்பட்டது என்கிறார். இல்வாழ்க்கை என்பதற்கு மனையாளோடு வீட்டிலிருந்து வாழ்தல் என்னும் கா. R., அதனை அடுத்து வரும் வாழ்க்கைத் துணை நலத்திற்கு முந்திய அதிகாரத்துள் ஆடவர் இல் வாழ்க்கை நடத்தும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்திலே இல்வாழ்க்கைத் துணையாய மனைவி இன்ன நற்குணங்கள் உடையவளாய் இருத்தல் வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது என்பது கூர்ந்து அறியத் தக்கதாம். இல்வாழ்வான், இல் வாழ்க்கை அதிகாரத்தில் வருபவற்றைக் கருதின் கா. சு. உரைநயம் புலப்படும். சொல்லாலும், பொருளாலும் இனியவாகும் சொற்களைச் சொல்லுதல் இனியவை கூறல் எனவும்(10); முன் நினைப்பு இல்லாம்ல் வருவித்துக் கொண்ட நோயைத் தீர்க்கும் மருந்து எனவும் (95); அழகு துன்புறுத்தல் தகையணங்குறுத்தல் எனவும் (109); நற்செயலுக்காகப் பிறர் உதவியை நாடல் இரவு எனவும் (106); இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்தறிவுடை மையே இங்கு (அறிவுடைமை என) எடுத்துக்கொள்ளப் பட்டது எனவும் (43); அறுவகை மனக் குற்றங்களையும் நீக்குதல் (குற்றங் கடிதல்) எனவும் (44) கூறுவன அவ்வதிகாரப் பிழிவாகிச் சிறக்கின்றன. ஒப்புரவறிதல் என்பதை விரிய நோக்கித் தெரிய வரைகிறார். ஒப்புரவு என்பது தம்மைச் சார்ந்த பிறரைத் தம்மோடொத்த நன்னிலை அடையும்படி செய்தல். அவருடைய குறைகளை உணர்ந்து அவற்றை நீக்குவதற்கு வழியறிதல் ஒப்புரவு எனப் படும். தம்முடைய குலத்தினருக்கும் நாட்டினர்க்கும் இடர் வந்த போது உதவுதல் ஒப்புரவு என்ப என முப்பகுப்பில் வரைந்துளார். சில விலக்குகள் இனி இகல் என்பதற்கு மாறுபடுதல் (சினத்தல்) என்று சுருக்கம் உரைக்கிறார் (86). நட்பு என்பதற்கு சிநேகம் இன்னதென்பது என வட சொல்லை ஆள்கிறார். அவ்வதிகார உரையில் நேயம் ஓரிடத்தும், சிநேகம் மூன்றிடத்தும், நட்பு பத்திடத்தும் ஆளப்பெற்றுள. எண்ணியிருந்தால் சிநேக ஆட்சியை விலக்கியிருப்பர். என்னெனின், பிரமசரியம், வானப் பிரத்தம், சந்நியாசம் என வடநூலார் கூறுவனவற்றைக் கல்விநிலை, மனைத்தவநிலை, துறவுநிலை எனத் தமிழாக்கம் செய்பவர் அவர் (41). இனி அவையறிதல் என்பதற்குக் கழகத்தில் உள்ளவர் களின் நிலையை அறிந்து பேசுதல் என்றும், அவையஞ்சாமை என்பதற்குப் பேசுதற்குரிய கழகத்தைத் தெரிந்து பேசத் தொடங்கிய பிறகு அதற்கு நடுங்காமை என்றும் (72-13) விளக்கம் தருகிறார். ஆயின் வள்ளுவர் காலத்தில் கழகத்தின் பொருள் சூதாடுமிடமாகக் கொள்ளப் பெற்றதைக் கா. சு. நன்கு அறிவார். கவறும் கழகமும் என்பதற்குச் சூதாடும் கவற்றினையும் அஃதாடும் இடத்தையும் எனவும் (935) கழகத்துக் காலை புகின் என்பதற்குச் சூதாடு களத்தில் இளமையிலேயே புகுவராயின் அல்லது சூதாடு களத்திலே ஒருவனுக்குக் காலம் போமாயின் எனவும் (937) உரை வரைபவர் அவர். அறிஞர் அவையம் எனக் கழகத்திற்குப் பொருள் வரவு - கம்பர், பரஞ்சோதியார் முதலியோர் காலத்தின் ஆட்சிப் பட்டது. அதனை ஆள்தல் சைவசித்தாந்தக் கழகம், திருவிடர் கழகம், திராவிடர் கழகம் எனப் பெருவழக்கூன்றி விட்ட கால முத்திரைச் சான்றாம், உரையுள்ளும் கழகம், அவைக்களம், அறிஞர் கூட்டம் என்ப வற்றுடன் சபையையும் ஓரிடத்து ஆள்கிறார் (730). இனி கற்றிலனாயினும் கேட்க (414), நோக்கினாள் நோக்கி (1093) என்பவற்றுக்குத் தெளிந்த வேறுரை காண வாய்ப்பிருந்தும் பரிமேலழகர் வழியில் எளிமைப்படுத்தும் அளவிலேயே கா.சு. அமைகிறார். என்றென்று இரங்குவ செய்யற்க (655) என்னும் குறளுரையும் அவ்வகையிலேயே அமைகின்றது. நிறைவு கா. சு. 1928 இல் எழுதியது தெளிவுரை. அவ்வுரை பரிமேலழகர் உரையைத் தழுவி எளிமைப்படுத்துதல் நோக்கிலும், மிக அரிதாகவே புத்துரை, புது விளக்கம் தருதலிலும் எழுதப் பட்டது என்பது தெளிவுறுகின்றது. பின்னர் அவர் இயற்றிய நூல்களில் காணக் கிடக்கும் சீர்திருத்தக் கருத்துகள், திருக்குறள் தெளிவுரை கண்ட காலத்தில் அழுந்தவில்லை; அழுத்தி யுரைக்கப் பெறவும் இல்லை எனலாம். ஒருவர் தம் நூல் வரிசை ஆய்வும், அவர்தம் வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த இடமாய் அமையும் என ஒரு கருதுகோள் வகுத்துக் கொள்ள இஃது இடமாம். தமிழர் சமயம் வாணியம் பாடி வெ. சண்முக முதலியார் வெளியீடாக 1940 இல் வெளிவந்தது தமிழர் சமயம். இந்துமதம் என்பதற்கும் தமிழர் சமயம் என்பதற்கும் எவ்வளவு வேற்றுமையுண்டு என்பதை இந்நூல் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்கிறது முகவுரை (கி. ஆ. பெ. வி.) இந்நூலுக்கு ச. சோ. பாரதியார், து. சு. கந்தசாமியார், வெ. ப சுப்பிரமணியனார், நாவலர் ந. மு.வேங்கடசாமியார், .தவத்திரு மறைமலையடிகளார், தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார், பண்டிதர் ஆனந்தர், காழி. சிவ. கண்ணுசாமியார் ஆகியோர் மதிப்புரைகளைக் கொண்டுள்ளது. இதில் கா. சு. வரைந்த முன்னுரையோ மதிப்புரையோ இல்லை. அகில இந்திய தமிழர் மத மாநாடு 1940 இல் சென்னையில் நிகழ்ந்தது. அம் மாநாட்டு வரவேற்புரையை விரிந்த அளவில் கா. சு. வழங்கினார். அவ்வுரை நூலின் முற்பகுதியாய் 25 பக்க அளவில் நடையிடுகின்றது. பின்னர்த் தமிழர் சமயம் என்னும் நூற்பகுதி 147 பக்க அளவில் இடம் பெறுகின்றது. நூலின் இறுதியில் சென்னை, தங்கசாலை 205 ஆம் எண் சண்முகசுந்தரர் நடாத்தும் குருபர மருத்துவச் சிறப்புக் குறித்து 25 அடி அகவல் ஒன்றுடன் நூல் நிறைகின்றது. அம்மருத்துவ மகனார் கா. சு. வின் நன்றியறிதலுக்குரிய நயத்தராக விளங்கினார் என்பது அகவலால் தெளிவாகின்றது. அவர் மருந்து, முன்னியது முடிக்கும் முருகன் அருள் போல் துன்னிய நோயைத் தொலைக்கும் என்கிறார். வரவேற்புரைப் பகுதியில் தமிழின் பழமை, செம்மை, தமிழர் நாகரிகம் இந்திய நாகரிகத்தின் அடிப்படையாயிருத்தல், திருக்குறளாம் பொதுமறை தமிழர் சமயமாதல், சைவ வைணவக் கொள்கைகளின் ஒருமைப்பாடு, அறுவகைச் சமயங்கள், கோயில் வழிபாடு, கோயிலமைப்பு, கோயிலில் புகுந்த ஆரியச் சார்பு, தமிழர் சமய சங்கம் ஒவ்வோர் ஊரிலும் நிறுவுதல், சமயச் சீர்திருத்தங்கள் என்பன விரித்துரைக்கப் படுகின்றன. இப்பொழுதுள்ள இந்து சட்டமானது ஆரியருக் குரியதாய்த் தமிழருக்குப் பொருத்தமில்லாது இருப்பதாலும் ஆண் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை கொடாததினாலும் கலப்பு மணத்திற்கு இடங் கொடாமையாலும் தேச வழமை முதலிய இலங்கைச் சட்ட நூல்களில் தமிழரது குடும்பச் சட்ட வழக்கங்கள் இந்து சட்டத்திற்கு வேறாகக் காணப்படுவதாலும், தமிழ் மக்களுக்குப் பொருள் வழக்குச் சட்டமாகிய சிவில் சட்டத்திலுள்ள குறைபாடுகளை ஒழித்துக் கலப்பு மணம், பெண் சொத்துரிமை முதலிய நன்மைகளைக் கைவரச் செய்வதற்கு உரிய சட்டத் திருத்தங்களை வகுப்பதற்கும் அவற்றை உரிய சட்ட சபைகளில் நிறைவேற்றுதற்கும் வேண்டிய கிளர்ச்சி செய்ய வேண்டும். திருக்கோயில்களில் தமிழிலே பூசனை முறைகள் ஏற்படுவதற்கும் கலாசாலை, ஏழை உணவுச் சாலை முதலியன நிறுவி நடத்துவதற்கும், குலத் தடையின்றித் தக்க அர்ச்சகர்களையும் வேலைக்காரர்களையும் நியமிப்பதற்கும், இசை கூத்து முதலிய கவின் கலைகளைப் பேணுவதற்கும், ஆதீனங்களின் செல்வத்தைத் தமிழர்க்குப் பயன்படும்படி செய்வதற்கும், உரிய கிளர்ச்சியை இடைவிடாது நடத்த வேண்டும் எனச் சீர்திருத்தப் பகுதியில் சுட்டுகிறார். தமிழர் சமயக் கொள்கைகளையும், அவற்றிற்கு இணக்க மான சீர்திருத்த முறைகளையும் நாடெங்கும் போதிப்பதற்குத் தக்க சொற்பொழிவாளர்களைப் பயிற்றுவிப்பதற்குச் சிறந்த கலாசாலை தமிழ் நாட்டில் வசதி நிறைந்த இடங்களில் நடை பெற வேண்டுமென்றும், தமிழர் சமயம் நிலை பெற வேண்டுமாயின் தமிழ் மொழி பேணப்பட வேண்டும். தமிழ் மொழி நன்கு பேணப் படுதற்கு அதனைத் தாய் மொழியாக உடைய தமிழர் முன்னேற்றமடைய வேண்டும். முன்னேற்றமடைவதற்குத் தமிழரது பொருளாதார நிலை சிறக்க வேண்டும். அது சிறத்தற்குத் தமிழருட் செல்வர்களாயிருப்பவர்களும் சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ற வாயில்களை வகுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியே வறுமையை எளிதில் ஒழிக்கும். தக்க தொழிலாளிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக் கத்தக்க ஏற்பாடுகள் சமுதாயத்தில் அமைந்திருக்க வேண்டும் என்றும் விரிவாகக் கூறுகிறார். தமிழர் சமயம் என்னும் நூற் பகுதியின் பொருளடக்கம் 17 பிரிவுகளைக் கொண்டது. jÄH® ah®?, தமிழர் பண்டைய நாகரிக நிலை, நாட்டியக் கலை, இசைக்கலை, சமயக்கலை, இந்து மதம் ஒரு மதமன்று, தமிழர் மெய்க் கலை, மன இயல்புகள், உயிர் இயல்பு, ஆகமம் கூறும் முதல்கள், சீர்திருத்தங்கள், கோயில் புகுதல், பெண்ணுரிமை, மக்கள் முன்னேற்றம், சமய ஒற்றுமை, தமிழர் சட்டம், செந்நெறி விரிவு என்பன அவை. தமிழ் என்னும் சொல்லும் தமிழில்லை என்று அந்நாளில் சிலர் கூறினர். தமிழ் என்னும் சொல் தமிழே என்பதை நிலை நாட்டுகிறார் கா. சு. மக்களின் முதல் தோற்றம் கடல் கொண்ட குமரி நாடே என்பதையும் சீரிய சான்றுகளால் செவ்விதில் நிறுவுகிறார். தமிழ் மொழி வட மொழி ஆகியவற்றுள் அமைந்துள்ள வேறுபாடுகளையும் பலப்பல எடுத்துக் காட்டுகளால் நிலைப்படுத்துகிறார் (1-22). பண்டைத் தமிழர் உணவு, உடை, வணிகம், கலை, நாகரிகம், அரசு, சிற்பம், ஓவியம் ஆகிய நாகரிக நிலைகளை அகநாட்டுப் புறநாட்டுச் சான்றுகளுடன் விளக்குகிறார். (23-34) கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய தெய்வ ஆடல்களையும், கோயில் திருக் கூத்துகளையும் நாட்டியக் கலைப் பகுதியில் நாட்டுகிறார். தாளம், பண், இசைக்கருவி, இசை நயம், கோயிலில் இசை வளர்க்கப்பட்ட வகை என்பவை இசைக் கலைச் செய்திகள். தமிழ் இலக்கணச் சிறப்பு, தொல்காப்பியப் பழமை, ஆவணி முதல் ஆண்டு தொடங்கிய குறிப்பு, தமிழர் மருத்துவத் தேர்ச்சி, தமிழ் மந்திரம், தமிழர் கணிதப் புலமை இன்னனவும் ஆயப் படுகின்றன(36-46). அயலர் வருகைக்கு முன்னரே தமிழர் சமயத்தில் அமைந்து கிடந்த கொள்கைகள், வழிபாட்டு முறைகள். கோயில் திரு வுருவங்கள், விழாக்கள் என்பவை சமயக் கலைப் பகுதியில் சாற்றப் படுகின்றன(46-72). தமிழர் மெய்க்கலை உடல், உயிர், உயிர்மெய், கடவுள், இயவுள், இறைவன் முதலாய தமிழ்ச் சொற்களைக் கொண்டு, அதன் தொன்மையும், செம்மையும் நன்கு தெளிவிக்கப் பட்டுள்ளது (75-81). மனத்தின் இயல்பும், உயிரின் இயல்பும் ஆகமங்கள் கூறும் தத்துவங்களும் நிரலே ஆயப் படுகின்றன (81 - 107). சீர்திருத்தம் என்னும் பகுதி (107-147) விரிவாகவே அமைந்துள்ளது. கோயில் தூய்மை, அறிவுக்குப் பொருந்திய வழிபாட்டு நெறி, தமிழில் வழிபாடு செய்தல், கோயில் அலுவலர் தகவு, வழிபாட்டில் ஒற்றுமை, தமிழர் சட்டம் என்பன இப்பகுதியில் நன்கு ஆயப் பட்டுள்ளன. அவற்றுள் சில கருத்துகள்! கோயில்களின் மூலத்தானங்களையும் பிற இடங்களையும் எப்பொழுதும் புனிதமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆறுகாலத் திரு முழுக்கைப் பார்க்கிலும் இருகால ஒரு கால நீராட்டே போதுமானது. நித்திய வழிபாட்டில் அறிவுக்குப் பொருத்தமான நெறிச் செயல்களைக் கோயில் வரும்படிக்குத் தக்கபடி செய்வித்தலே நலம். பூசை முறைகளைத் தமிழிலே எழுதுவித்துப் பூசைகளைத் தமிழில் நடத்த அர்ச்சகர்களைப் பழக்குதல் வேண்டும். பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டிற்கு இல்லை. சைவம் விரிந்த கொள்கையுடைமையால் சைவ ஆசாரியர்கள் சமயம் புகுவித்தலாகிய தீக்கை செய்யுங்கால் மாணவன் கொடுக்கும் உணவைத் தாம் வாங்கி உண்பதும், தாம் கொடுக்கும் உணவை மாணவனை உண்பித்தலும் செய்து சிவத்தில் இருவரும் ஒற்றுமைப்படுதலாகிய நெறிச் செயல் (சடங்கு) செய்தல் விதிக்கப்பட்டுள்ளது. உடலைப் பற்றிய சாதியினும் உயிரைப்பற்றிய சமயமே பெரியதென்பது சமயநூற் கொள்கை. தமிழர் கோயில்களில் தமிழ்ப்பாடல்களுக்கு முதல் இடம் கொடுத்தல் வேண்டும். பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ய விரும்பும் மக்கள் நன்கொடைகளை ஒருங்கு சேர்த்து ஏழைகளுக்குத் தொழிலும் உணவும் உதவும் நிலையங்களைக் கோயில் அதிகாரிகள் நிறுவி நடாத்த வேண்டும். ஆதீனத் தலைவர்கள் தமிழ் மொழியையும் தமிழர் சமயத்தையும் இரண்டு கண்களாகப் பாதுகாக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். தமிழரது ஆதி நூல்களில் ஆண்மக்களுக்குப் பெண்கள் அடிமை என்ற கருத்து இல்லை. திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயது உள்ளவர்களாயும் விருப்பம் உள்ளவர்களாயும் இருக்கும் கைம் பெண்கள் மணம் செய்து கொள்வதால் இடையூறு ஒன்று மில்லை. பல்வேறு குலத்தினர் குலத்தடையின்றிக் கலப்பு மணம் செய்வதற்குரிய சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அது விரைவில் நிறைவேற வேண்டும் (இது எழுதி வெளிவந்த ஆண்டு 1940). தமிழர்களுள் சைவர்களும் வைணவர்களும் தங்கள் கொள்கையின் ஒற்றுமையான அடிப்படையை உணர்ந்து வேற்றுமைகளைப் பாராட்டாது ஒத்த உணர்ச்சி உடையவர்களாய் அறிவாராய்ச்சியால் வரும் வழக்கீடுகளில் கலகம் விளையா திருப்பின் சமய உண்மைகள் யாவர்க்கும் தெளிவாக விளங்குதல் நேரும். வைணவர்களுக்குள் தமிழ்க்கலை ஒன்றே சிறப்பாகப் பேணப் படுமாயின் வடகலை தென்கலைச் சண்டைகள் ஒழிந்து போம். கலப்பு மணத்துக்கு இடையூறாக உள்ள விதிகளைச் சட்ட வாயிலாக ஒழித்தல் வேண்டும். வெவ்வேறு சமயத்தார் தம்முள் மணந்து கொள்வதற்குத் தமிழர் நெறி தடை ஏற்படுத்தவில்லை. இன்னின்ன சட்டச் சீர்திருத்தம் வேண்டற்பாலது என்று தீர்மானிப்பதற்குத் தமிழருள் தக்க வழக்கறிஞர் சிலரைத் தெரிந் தெடுத்து ஒரு சிறு கழகம் அமைக்க வேண்டும். சிவில் சட்டத்தில் ஆண் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டும். காதல் மணம், கலப்பு மணம், கைம்பெண் மணம் என்பவை தமிழருக்கு ஒத்தனவே, உடன் உண்பதற்கும், பெண் கொள்ளுதல், கொடுத்தல் செய்வதற்கும் பிறப்பினால் ஏற்படும் தடை தமிழர்க்குக் கிடையாது. கலப்பு மணச்சட்டம் தமிழர் ஒற்றுமைக்கும் இந்தியர் ஒற்றுமைக்கும் அவசியமாய் நிறைவேற்றப் படுதற்குரியது. உலகில் உள்ள எல்லாச் சமயங்களிலும் தமிழர் நெறியானது விரிந்த நோக்கமும் அமைப்பும் உடையது, பிறப்புத்தடை, நூற் கட்டுப்பாடு, மணத் தடை, சடங்கு முறைக் கட்டுப்பாடு என்பவற்றுள் ஒன்றும் அதற்கு இல்லை. மொழிப் பற்றும் கொள்கையுமே இன்றியமையாதன. ஆதலின் தமிழர் சமயம் உலகப் பொது நெறியாய் விளங்குந் தகுதியுடையது. - இவை கா. சு. வகுத்தும், தொகுத்தும் காட்டும் சீர்திருத்தக் குறிப்புகளுள் சில (107-147) சைவ அழுத்தமிக்க கா. சு. சைவ சமயமென நூல் எழுதாமல் தமிழர் சமயம் என்று பெயரிட்டு எழுதியமை சிவனெறி, மால்நெறி இரண்டும் தமிழர் சமயமே என்பதற்காகும். இதனை இரு சமயத்தாரும் உணர்ந்து போற்றல் இருபாலும் நலம் பயக்கும். தமிழர் மதமென மறைமலையடிகளாரும், பாவாணரும் நூல் செய்தமை எண்ணத்தக்கது. திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் 1927 ஆம் ஆண்டு கழகத்தின் 88 ஆம் வெளியீடாக வெளிப்பட்டது இந்நூல். இதற்கு முன்னரே அப்பர் சுவாமிகள் சரித்திரம் கழகத்தின் 68 ஆம் வெளியீடாக வந்தது. முன்னரே அறிஞர் பலரால் ஞானசம்பந்தர் வரலாறு வெளி வந்திருந்தும் இவ்வரலாறு வெளிவருவானேன்? என்னும் வினா, பதிப்பகத்தார்க்கு எழுந்துள்ளது அதனால், முன்னர் வந்த புத்தகங்கள் எல்லாம் பெருமான் வரலாற்றினை மட்டும் சேக்கிழார் பெரிய புராணத்தின்படி சுருக்கியும் விரித்தும் கூறுகின்றனவே யல்லாது, இந்நூல் போல ஆராய்ச்சி முறையில் எழுதப் படவில்லை. ஆகலான், இது வெளிவர வேண்டியதாயிற்று என்னும் மறுமொழி தந்துள்ளனர். இவ்வரலாறு செல்லுமாற்றைப் பிரிவரிய ஊசிவழி, பின் தொடரும் நூல் போலப் பெரியபுராணத்திற்குச் சிறிதும் மாறு படாமல் எழுதப்பட்டிருக்கின்றது என்று அப்பதிப்புரை கூறுகின்றது. திருஞானசம்பந்தர் புகழ் மாலை என்பதை முதற்கண் கொண்ட இவ்வரலாற்று நூல், தோற்றுவாய், குழந்தைப் பருவம், ஞானப்பாலுண்டு திருவருள் பெறுதல், பொற்றாளம் முத்துச் சிவிகை பெறுதல், உபநயனம், முத்துப்பந்தர் பெறல் வணிகன் விடந்தீர்த்தல், திருமறைக் கதவு திறந்தடைத்தல், பாண்டிய நாட்டில் சமணரை வென்று சைவத்தை நிலை நாட்டுதல், புத்தரை வாதில் வென்றது, தொண்டை நாட்டு அற்புதங்கள், திருஞான சம்பந்தர் தேவார ஆராய்ச்சி, திருஞானசம்பந்தர் காலம், திருஞான சம்பந்தர் திருநாம விளக்கம் என்னும் தலைப்புகளில் இயல்கின்றது. நூலின் அளவு 280 பக்கங்களாகும். அந்தணர் என்போர் அறவோர் என்பதற்கு இலக் கணமாக அமைந்த வாழ்வு ஞானசம்பந்தர் வாழ்வு என்பதைத் தோற்றுவாயில் குறிப்பாக உணர்த்துகிறார் தமிழ்க் கா. சு. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. என்னும் திருக்குறளைத் தம் அனுபவத்தில் கண்டவர் எல்லா ருள்ளும் சிவபாதவிருதயர், பகவதியார் ஆகிய இருவருமே தலைசிறந்தவராவர் என்று ஞானசம்பந்தர் திருவருட் புலமைச் சிறப்பை எண்ணிக் கொண்டு கா. சு. எழுதுகின்றார். சம்பந்தர் பிறந்தநாள் இறைவனுக்குரிய சிறந்த நாளாம். ஆதிரையாக இருத்தலைக் கொண்டு, இவர் சிவம் பெருக்கும் தன்மையர் என்பதன் அறிகுறியாகக் கொள்கிறார். ஞான சம்பந்தர் திருமுருகன் திருப்பிறப்பாகக் கொள்ளும் செய்தியை, உபசாரமேயன்றி உண்மையாகாது என விரித்துத் தெளி வுறுத்துகின்றார் (19-24). ஞானசம்பந்தர் திருத்தொண்டின் நிலை விளக்க வந்த அடியவர் என்பதையே ஆசிரியர் சேக்கிழார் பலவிடத்தும் விளக்குதலை எடுத்துக்காட்டி நிலைபெறுத்து கிறார். இவ்வாறு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதியின் நிறைவிலும் அப்பகுதியின் நுண்பொருளை ஆய்ந்துரைக்கும் நெறியை முறையாகப் போற்றுகின்றார் கா. சு. பெருமான் பிள்ளைப் பருவத்திலேயே ஞானப்பால் உண்ட அருமையை உரைக்கும் கா. சு. மங்கையர்க்கரசியார் அழைப்பால் மதுரைக்கு வந்து அவர் முன் நின்று பேசும் போதும், பால் நல்வாய் ஒரு பாலன் ஆகவே இருந்த அகச் சான்றைக் காட்டி உறுதிப் படுத்துகிறார் (32). இற்றைக் காலத்திற் கூடச் சிறுமகார் சிலர் அளவற்ற கணித நூற் புலமை வல்லராய் ஒரு மணி நேரத்திற் செய்து முடிக்கக் கூடிய கணக்குகட்கு இரண்டொரு வினாடியில் முடிவு கூறவல்ல ஆற்றல் பெற்றிருத்தலைக் காண்கிறோம் என மெய்ப்பிக்கிறார். திருவருளினாலே இயற்கையறிவு விளக்கமெய்துவதாயின், அது ஒரு கணத்திலே நிகழும் என்னும் அறிஞர் கா. சு. பல விளக்குகளை ஒவ்வொன்றாகக் கொளுத்த வேண்டுமானால் மிகுந்த நேரஞ் செல்லும், பல மின்சார விளக்குகளை ஒரே கருவியின் இயக்கத்தால் ஒரு கணப் பொழுதில் ஏற்றி விடலாம் என அறிவியல் சான்று காட்டுகின்றார் (34). ஞானசம்பந்தர் தமக்குப் பாலூட்டிய அம்மை அப்பரை சுட்டிக் காட்டியதைச் சிவபாதவிருதயர் கண்டார் அல்லர் என்பதைத் தம்மைப்போல் காணுதல் பெற்றிலர் என்பதனால் கூறுகிறார். (சம்பந்தர் பு. 86). ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாட்டில் இராவணனுக்குச் சிவபெருமான் அருள் புரிந்ததையும், ஒன்பதாம் பாட்டில் மாலும் அயனும் அடிமுடி தேடியதையும், பத்தாம் பாட்டில் சமணர் சாக்கியரது இழிந்த கொள்கையையும் பற்றிக் கூறிப் பதினொன்றாம் பாட்டினைத் திருக்கடைக் காப்பாக அமைந்துள்ளமையைச் சேக்கிழார் சான்று கொண்டு விளக்கிக் காட்டுகிறார். (41-46) தவறிழைத்தவர் அத்தவற்றை உணர்ந்து இறைவனை அடைக்கலம் புகுந்தால் இறையருள் கிட்டும் என்றும், மனஞ் செருக்கி மயக்கமடைந்தாரும் இறைவன் திருவடிப் புகழ் பாடின் அவன் அருள் கிட்டும் என்றும், இறையருள் நெறியை அறியாது பழி வழிச் செல்லும் சமயத்தர் குறையுடையவர் என்றும், பதிகம் ஓதுவதால் உண்டாகும் பயன் இன்னதாம் என்றும் முறையே அப்பாடல்களில் பாடப்பட்ட அமைப்பொழுங்கை விளக்குகிறார். திருக்கோலக்காவில் சிவபெருமான், செம்பொற்றாளங்கள் பிள்ளையார் திருக்கைகளில் வந்தமையுமாறு அருளிச் செய்தமை பிள்ளையாரது இன்னிசைத் தொண்டிற்கு இறைவன் மகிழ்ந்து அது செவ்வையாய் நடைபெறும் பொருட்டும், பிள்ளையார் செங்கைகள் நோவாதிருத்தற் பொருட்டும் தாமே தமது குழந்தைக்கு வேண்டியதை நல்கிய வாறாகும் எனக் காரணம் குறிக்கிறார் கா. சு. அத்தாளம் இறைவன் திருத் தொண்டிற்கே உரியது என்பது காட்டவே அதில் திருவைந்தெழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது என்கிறார். உலகத்தார் கருதிய பொருளை, இறைவன் அவர்களுக்குத் தோன்றாமலே மக்கள் வாயிலாகவே அளித்தருள்வர். தாமே நேரில் வேண்டியதை ஈதல் ஞானிகளுக்கே யன்றிப் பிறர்க்கன்று என்றும் கூறுகிறார். ஞானசம்பந்தரது தவயாத்திரை ஆராய்ச்சியால், திருத் தலங்களைத் தொலைவில் கண்டபோதே, தொழுது போற்றுதல் வேண்டும் என்பது, திருப்பதிகளின் எல்லையை அடைந்தவுடன் அப்பதியையும் திருக்கோபுரத்தையும் தாழ்ந்திறைஞ்ச வேண்டும் என்பதும், திருக்கோயில் வாயிலிற் பணிய வேண்டும் என்பதும், திருக்கோயிலுட் சென்றகாலை வலம் வருதல் வேண்டும் என்பதும், இறைவரைத் தொழுது மீளும்போது தாழ்ந்திறைஞ்ச வேண்டும் என்பதும், தொழுங் காலை சென்னி மேற் கைகுவித்தலும் என்பதுமாம் இம்முறைகள் விளங்கும் என அடைவு செய்து காட்டுகிறார் சிவப்பெருஞ் செம்மல் கா. சு. (72). திருநீலகண்ட யாழ்ப்பாணரை ஞானசம்பந்தர் ஐயர் நீர் என்று விளித்துக் கூறுவதைக் கூறும் கா. சு. அக் காலத்திலே எம்மரபினராய் இருப்பினும் விருந்தினராய் வந்தவரை ஐயரென்று உபசரித்தழைப்பது வழக்கம் போலும் என்கிறார். (74). திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உபநயனச் சடங்கு இன்றியமையாமை இல்லை எனினும், தங்கள் சமய வழக்கங்களைக் கைவிடாத திண்மையுடைய மறையவர்கள் இறைவனது திருவருள் பெற்ற பெரியார்க்கும் உலகியலின் படி உபநயனம் செய்வித்தனர் என்கிறார்(86). கொடிமாடச் செங்குன்றூரில் தம்மொடு வந்தார்க்கு நேர்ந்த குளிர் நோயைப் போக்குதற்குச் சம்பந்தர் நீல கண்டப் பதிகம் பாடியதைச் சுட்டும் கா. R., அக்குளிர் சுரநோய் நச்சுத் தன்மை யுடையதாய், நோய் கண்டவரைக் கொல்லும் தன்மை யுடைத்து என்று ஊகிக்கப்படும் என்கிறார். இன்றும் அத் திருப்பதிகத்தை ஓதுவார் விட நோயால் வந்த இடர் நீங்கி இன்புறுவர் என்பது அறியற்பாற்று என்றும் உறுதி கூறுகிறார். நீலகண்ட யாழ்ப்பாணர் மாதம் மடப்பிடி என்னும் பதிகத்தை யாழிலிட்டு இசைக்க முடியாத நிலையில் அவ் வியாழை முறிக்க முயல, ஐயர், நீர் யாழிதனை முறிக்குமது என்? என வினவி நிறுத்திய ஞானசம்பந்தர் பெருந்தகைமையைச் சுட்டும் கா. சு, தேவாரத் திருப்பாடல்களின் இசைவளம், எல்லையற்ற தென்பதனை யாவரும் உய்த்துணரக் கடவர். நன்னீர்ப் பேராற்றிலுள்ள புனல் முழுவதையும் ஒரு பாத்திரத்திலே மக்களால் அடக்க முடியாதாயினும், தத்தமக்கு வேண்டிய அளவு தத்தமது கலங்களிலே எடுத்துப் பயன் துய்த்தல் உலக வழக்கிற் காணப்படுமாறு போலத் திருப்பதிக இசையினையும் தத்தமதறிவிற்கேற்பத், தத்தம் இசைக் கருவியில் மக்கள் அமைத்துப் பாடுதல் பொருத்தமுடையதென்பதே நமது பரமாசிரியருடைய திருவுள்ளக் கருத்தென்பது விளங்கும் என்கிறார். சம்பந்தருக்கு முன்னே, திருக்கோயில்களுக்கு அப்பர் அடிகள் சென்று கடனாற்றியமை, சம்பந்தர் வரவினைத் தெரிவித்து அவருக்கு வேண்டிய பணிவிடை செய்யக் கருதிய மையாலேயே என்று கருதுகிறார் கா. சு. மேலும், சம்பந்தரின் சிவிகை தாங்குவார்களுள் ஒருவராகத் தாமும் அதைத் தாங்கியமை சம்பந்தர் திருக்கூட்டத்தாருள் தம்மையும் ஒருவராகவே அப்பரடிகள் கருதினார் என்றும் கூறுகிறார். (122) திருஞான சம்பந்தருக்கு வாசு தீராக் காசினையும், அப்ப மூர்த்திக்கு வாசு தீர்ந்த காசினையும் இறைவர் நல்கியது, திருநாவுக்கரசர் பாடற்றொண்டும் உழவாரத் தொண்டுமாகிய இருவகைத் தொண்டு நடத்தியமையாலும், அவரது முன்னை நல்வினைப் பயனுக்கேற்ப நற்காசு பெறும்பான்மை இருந்தமை யாலும் என்க. சிவஞானம் பெற்ற பிறகும் முன்னை வினைப்பயன் வந்தடைதலின் அதற்குத் தக்கவாறு பொருள்களைப் பெறுதல் நிகழும். அதனால் சிவஞானிகட்குத் தம்மளவில் யாதொரு குறைவுமில்லை. பொற்றாளம் முத்துச் சிவிகை முதலியன ஆளுடைய பிள்ளையார்க்கு அமைந்தன போல, அப்ப மூர்த்திக்கு அமையாமையும் அவரவர் முன்னை வினைப் பயன்களுக்குள்ள இடையீடு பற்றியே என்க என்கிறார். திருமறைக் காட்டில் அப்பரடிகள் ஒரு முழுப்பதிகம் பாடக் கதவு திறந்தமையும், ஞானசம்பந்தர் பாடிய முதற் பாட்டளவிலே கதவு மூடிக்கொண்டமையும் பற்றி, இருவர் தம் பத்தித் திறம் குறித்து இடையீடு பட்டு மொழிவார் உளர். அதனைக் கருதும் கா. R., அப்பமூர்த்திகள் பாடிய அளவில் திருக்கதவங்கள் திறப்பது திண்ணமே யாயினும், திறக்கும் பேறு பெறுதற்குத் தமக்குத் தகுதியுண்டோ, இன்றோ என்னும் ஐயப்பாடு அந் நாயனார் திருவுள்ளத்தில் நிகழ்ந்திருத்தல் கூடும். அவ்வையப் பாடு அத்துவிதக்கலப்பிற்குச் சிறிது இடையூறாதல் பற்றி அதனை நீக்கக்கருதும் பிரானார் கதவந் திறக்கச் சிறிது காலந் தாழ்த்ததும் ஒரு திருவிளையாட்டே எனக் கொள்க. பின், இரக்கமொன்றிலீர் சரக்க விக்கதவந் திறப்பிம்மினே என்றருளியதும் தற்போதம் காரணமாக எழுந்த ஐயப்பாடு ஒழிந்து அத்துவித உணர்ச்சியால் வரும் உறுதியைத் தலைப்பட்ட நிலையாம் என்க, என்கிறார். மேலும் சைவச் செந்நெறிக்கு இரு கண் போன்ற சிவஞானிகள் இருவர்க்கும் பேதந் தெரித்தல், சிவத்திற்கும் சத்திக்கும் பேதம் பாராட்டுதல் போலாம் என்றும் கூறுகிறார் (129). மதுரையில் ஞானசம்பந்தர் தங்கிய மடத்தில் சமணர்களால் தீ வைக்கப்பட்டது அவர்க்கு முதற்கண் அச்சத்தையும் பின்பு முனிவையும் உண்டாக்கியது என்பதை விளக்கும் கா. சு. அன்பு வைக்கப்பட்டவர்க்குத் துன்பம் நேரிடுவதாய் இருந்தால், அன்பு வைப்பாற்கு அத்துன்பம் நேரிடக் கூடாது என்ற கவலையும் அச்சமும் விளைதல் இயல்பு. தீ ஒழுக்கத்தைக் கண்ட பொழுது ஞானிகள் சினங் கொள்ளுதல் இயல்பே. சிவனடியார் மாட்டு ஞானசம்பந்தப் பெருமான் பேரன்புடையர் ஆதலினாலும், சமணரது பாதகத் தொழிலைக் கண்டவுடன் அதனை வெறுத்தவராதலானும் அச்ச முன்புறப் பின்பு முனிவுற என்றபடி அவர் அச்சமும் சினமும் உடையவரானார். பிறரது நன்மையின் பொருட்டே இவை அவர் பால் நிகழ்ந்தன. அவர்கள் பால் உளதாய குற்றத்திற்கு அரசன் காரணன் ஆதலால் அரசனுக்கு வெப்பு நோய் வரும் படி பணித்தனர். இங்ஙனம் செய்தது அரசன் மேற் கொண்ட கோபத்தினாலன்று; அரசனை நன் னெறிப்படுத்தி உய்விக்க வேண்டுமென்ற கருணையினாலேயே என்கிறார் (172-3). சமணர் கொண்ட கழுவேற்றத்தைக் கூறிய கா. சு. அத்தண்டம் பற்றி ஞானசம்பந்தர் ஆய்ந்து தடுத்திருத்தல் வேண்டாவோ என்று கூறுவார்க்கு அமைதி கூறுவார் போலக் கூறுகிறார். கழுவேறுதல் கொடிய முறையோ, நன்முறையோ என்ற ஆராய்ச்சியைத் திருஞான சம்பந்தர் மேற்கொள்ளவில்லை. அத்தகைய அரசியல் முறைகளை ஆய்தற்கு எப்பொழுதும் பரமேபார்த்திருக்கும் பேரன்பர் தமது கருத்தினைச் செலுத்த மாட்டார். திருஞான சம்பந்தப் பெருமான் அரசியல் முறையை உலகத்திற்குப் போதிக்க வரவில்லை. பிற நாட்டிலும் சமயத் தலைவர்கள் அரசாங்கச் செய்திகளிற் றமது கவனத்தைச் செலுத்தவில்லை என்பது தெளிவு என்கிறார் (198-9). இராமன் இராவணனைக் கொன்ற பாவம் நீக்க வேண்டிச் சிவபெருமானை இராமேச்சுரத்தில் வழிபட்ட செய்தியால், போரில் நிகழ்ந்த கொலையும் பாதகமாம் என்பதும், தற்காப்பின் பொருட்டுச் செய்த கொலைப் பாவம் நீங்கச் சிவபெருமானை வழிபடுதல் இன்றியமையாததென்பதும் அக்காலத்திலேயே கருதப்பட்டன என்று அறிகின்றோம் என்கிறார் (201). திருவோத்தூரில் சம்பந்தர் நினைத்த அளவான் ஆண்பனை, பெண்பனை ஆயதைக் குறிப்பிடும் ஆசிரியர், ஆணிற்கும் பெண்ணிற்கும் கருவின் முறை ஒன்றே என்றும், கருவொன்றே சிலவகையான மாறுதல்களால் ஆணாகவும், வேறுவித மாறுதல்களால் பெண்ணாகவும் உருவெடுக்கின்றன என்று உயிர் நூலார் கூறுகின்றனர். பனையானது குலை ஒன்றும் ஈனாதபோது ஆண் என்றும், குலை ஈன்ற இடத்துப் பெண் - என்றும் கூறப்படும் சில மருத்துவ முறைகளால் மலடு நீங்கி மகவுண்டாதல் போலப் பனையானது வளமற்ற நோய் நிலை மாறி வளமுள்ள நன்னிலை அடைதலே ஆணாய் இருந்து பெண்ணான வாறாகும் எனக் கொள்ள என்க என்கிறார். திருக்காளத்தியில் கண்ணப்பர் திருவவைக் கண்டு சம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார் போல் பலமுறையும் பணிந்தெழுந்தமை கூறி வியக்கும் கா. சு. அன்பே யாவற்றினும் மேம்பட்டது என்றும், அடியாரது பேரன்பிற்கு ஈடுபட்டுத் தாழ்ந்திறைஞ்சும் நமது பரமாசாரியரது தற்போதமற்ற உயர் நிலை இதனால் இனிது விளங்கும் என்றும் கூறுகிறார். (240-1) ஞானசம்பந்தர் தம் பெற்றோர் கருத்துப்படி திருமணம் செய்தற்கு ஏற்றுக் கொண்டது, இல்லறம் உலகத்தார்க்கு உரியதே என்று காட்டக் கருதினமையாற் போலும் என்கிறார் கா. சு. அவ்விசைவும், இல்லற வாழ்க்கையை ஒருகணமேனும் உலக முறைப்படி நிகழ்த்தும் விதி தமக்கு இன்மையே முன் உணர்ந்தே அதற்கு இசைந்தனர் போலும் என்றும் கூறுகிறார். அவர்தம் திருமணக் காட்சியானது அன்பர் பலர்க்கும் சிவ பெருமானது திருமணக் காட்சி போலப் பாச நீக்கமும் சிவப் பேறும் தருவதாயிற்று என்றும், திருஞானசம்பந்தர் சமய வேந்தர் என்பதை வலியுறுத்துவான் அவர்க்கு மாத்திரமின்றி அவரது திருமணத்தில் வந்த யாவர்க்கும் இறைவர் வீட்டின்பத்தை நல்குவராயினர் என்றும் குறிப்பிடுகிறார். நமசிவய என்னும் தமிழ் மந்திரப் பொருள் இன்னது எனவும் குறிப்பிடுகிறார்; நகரம் உயிர்களை உலக வாழ்க்கையிற் செலுத்தும் மறைப்புச்சக்தி, மகரம் உலகப் பற்றிற்கு மூலமாகிய ஆணவ மலமென்னும் அறியாமை. சிவமாகிய சிகரம் கடவுளைக் குறிக்கும். வகரம் உயிர்களைக் கடவுள்பால் செலுத்தும் திருவருட் சக்தியைக் குறிக்கும். யகரம் உயிரைக் குறிக்கும். இவ்வாறு பொருள் கூறுதலே தமிழ் மக்கள் முறை என்கிறார் (260). திருஞானசம்பந்தர் தேவார ஆராய்ச்சி என்னும் பகுதியில் உருவகம், உவமை, ஒலிநயம், திணைவளம், தத்துவப் பகுதி எனப் பகுத்து சான்று காட்டி விளக்குகிறார். திருஞானசம்பந்தர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என முடிவு செய்கின்றார். திருஞானசம்பந்தர், புகலிப்பிள்ளையார், ஆளுடைய பிள்ளையார், சண்பை நாடுடைய பிள்ளை, கவுணியர் கோன், கோழிவேந்தர், வெங்குரிவேந்தர், சிவபுரச் செல்வர், தோணிபுரத் தோன்றல், முத்தமிழ் விரகர், வண்டமிழ் நாயகர், ஏழிசைத் தலைவர் இன்னவாறான பெயர்களைப் பெற்ற தகவை விளக்கிக் கூறுகின்றார். பெயர்களிலேயே அருளிச் செயல்களும் வரலாறும் அடங்கியிருத்தலைக் காட்டுகின்றார் கா. சு. இவ்வாறு விரிந்த திறனாய்வு நூலாகத் திருஞான சம்பந்த சுவாமிகள் வரலாறு விளங்குகின்றது. அப்பர் சுவாமிகள் சரித்திரம் இப்பெயருடைய நூல், குரோதன ஆண்டு பங்குனித் திங்களில் கழகத்தின் 68 ஆம் வெளியீடாக வந்தது. இரண்டாம் பதிப்பு 1927 இல் வெளிவந்துளது. கி. பி. 1926 ஆம் ஆண்டு கல்லூரி முதற் தேர்வுக்கு (Intermediate Examination) ப் பயிலும் மாணவர்க்குப் பாடமாக அமைக்கப்பட்டிருக்கிறது. நால்வர் வரலாற்றிலும் முதற்கண் கா. சு. அவர்களால் வரையப்பட்டது அப்பரடிகள் வரலாறேயாம். ஆதலால் பின் எழுதப்பட்ட சமயகுரவர் வரலாறுகளுக்கு முன்னோடியாக அமைந்தது இவ்வரலாறு என்னும் சிறப்புக்குரிய தாகும். அப்பர் புகழ் மாலை என்னும் பகுதியினை நூன் முகப்பிலே கொண்டுளது இந்நூல். அடுத்துத் தோற்றுவாய், பிறப்பு, வரலாறு, சமண்சமயம் புகுதல், சமணர் தீமைகளும் நாயனார் அருள்வெற்றியும், திருப்பதிகள் சென்று சிவ வழிபாடாற்றல், ஆளுடைய பிள்ளையாரோடு அளவளாவுதல், திருவடிமலர் சூடப்பெறல், அப்பூதியடிகளார் அன்பின் திறம், பிற பதிகள் சென்று போற்றல், திருக்கயிலைத் திருக்கோலக் காட்சி, ஞான சம்பந்தரை மீண்டுங்காணல், திருநாவுக்கரசரது சிறப்புப் பெயர்கள், தேவார ஆராய்ச்சி, தேவாரத் திருக்குறட் கருத்தொருமை என்னும் பதினான்கு தலைப்புகளில் இயல்கின்றது நூல். இதன் பக்கங்கள் 152 ஆகும். புகழ்மாலையில் பெரிய புராணம் தொடங்கிப் பதினைந்து புராணங்களில் அப்பரடிகளைப் பற்றி அமைந்துள்ள புகழ்ப்பாடல்கள் ஒவ்வொன்றைத் தெரிந்தெடுத்துத் தேர்ந்தமைத்துள்ள அருமை தனிச்சிறு நூலாம் தகையது. திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டு - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமைக்கு ஏக்குறும் சேக்கிழாரடிகளின் வாக்குத் தலைப் பட்டதுடன், தலைமைப் பட்டும் நிற்கின்றதாம். இடையறாப் பேரன்பு எனத் தொடங்கும் காஞ்சிப் புராணப்பாடல், நாவுக்கரசரை நம் கண்ணைவிட்டகலாத் திருக் காட்சியுடைய தாக்கித் திளைக்க வைக்கிறது. திருத்தொண்டின் உறைப்பும், இடர்வென்ற திறமும் ஒவ்வொரு பாடலிலும் சுவை பெருகச் சொல்லப் பட்டுள்ளன. செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வாழ் விலக்கணத்தை விரித்து விளக்கி, தந்நயங் கருதுவாரினும், பிறர் நயங்கருதுவோர் பெரியோராவர். பிறர் நயமானது குடிநலம், மரபுநலம், குலநலம், ஊர்நலம், நாட்டுநலம், உலகநலம் எனப் படிப்படியாக உயர்ந்து செல்லும். அவ்வாறே பிறருக்குச் செய்யப்படும் நலத்தின் உயர்விற்கு ஏற்ப அதனைச் செய்வோரும் பெருந்தன்மையில் மேம் பட்டவராவர். இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மைப் பயனையும் பெறுவிக்கும் பேரன்பையும், பேரறிவையும், உலகினர் யாவர்க்கும் தமது சொல்லாலும், செயலாலும் அளிக்கின்ற துறவறப் பெருநெறிப் பெரியோரே அருமை, பெருமை என்பவற்றிற்கு எஞ்ஞான்றும் அழிவில்லாத எல்லையாக இலங்குகின்றார்கள். அங்ஙனம் இலங்கும் பெரியோரிற் பெரியோரே நம் திருநாவுக்கரசர் என நிறுவுகின்றார் கா. சு. அப்பரடிகள் பிறந்த பெருமைத் தாம் திருமுனைப்பாடி நாட்டை, ஒழுக்கத்தில் நலஞ் சிறந்த குடிகள் நிறைந்த பல் வளமும் செறிந்து திருமகள் குதித்து விளையாட அமைந்தாற் போல விளங்கிற்று. ஆதலால் திரு முனைப்பு ஆடி நாடு என்று பெயர் பெற்றது போலும் என்கிறார் (5). திருநாவுக்கரசு நாயனார் புராணத்துள் உழவின் சிறப்பையும் சோலையின் வளங்களையும் சிறப்பாக எடுத்துக் கூறுவதற்குக் காரணம், புராணத்திற்குரிய தலைவர் வேளாளராதல் பற்றிப் போலும் என்றுரைக்கும் கா. சு... ஞானசம்பந்தர் புராணத்தில் வேள்விச் சிறப்பும், தடுத்தாட் கொண்ட புராணத்தில் மகளிர் சிறப்பும் கூறினமையை எடுத்துரைத்து உறுதிப்படுத்துகின்றார். (7-8). அப்பரடிகள் பிறந்த ஊர், எல்லாவகைத் திருவினும் சிறந்த சிவஞானத்தை உதிப்பிக்கும் பெரியவர் பிறக்கும் ஊரென்பதை திரு ஆம் ஊர் (திருவாமூர்) என்னும் சொற்றொடர் இனிது குறிக்கும் என்கிறார். புகழனார் பிரிந்த அளவில், மாதினியாரும் உடன் சென்றார். அவர் எவ்வாறு உயிர் நீத்தார் எனச் சேக்கிழார் விரித்துரைத்தாரல்லர் என்று கூறும் கா. R., ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் நீத்த காலத்தே, அவனுடைய கோப்பெருந்தேவியும் தீக்குழி புகாமல் தனது உடம்பை நீத்து உடன் சென்றமை போல் மாதினியாரும் செய்திருத்தல் கூடுமென்று உய்த்துணர இடமுண்டு என்கிறார். திலகவதியார் மணம் புரிவதற்கு இசைந்திருந்த கலிப் பகையார், விண்ணுலகஞ் சென்றதைக் கேட்ட மாத்திரத்தில் அவர்பால் தனது உயிரையும் இசைவிக்கக் கருதிய மனப் பான்மை வேறு எச் சரித்திரத்திலும் கேட்கப் படாதது ஒன்று என வியக்கிறார். (12). சமண சமயத்தில் தமது வினைக்கேற்பத் தம்மைப் புகுத்தியதற்கும், பின் நோய்மடுத்து ஆட்கொண்டு அதனை நீக்கியதற்கும் தமக்கு எல்லையில்லாத சிவானுபவத்தைக் கொடுத்ததற்கும் காரணமாய் இருந்தவர் சிவபெருமானே என்பதையும், சமணரினின்று தம்மைப் பிரித்தவரும் தம் தாளில் அடைக்கலம் புகுத்தியவரும் தம் தன்மையைத் தமக்கு உணர்த்தியவரும் சிவபெருமானே என்பதையும் நாவுக்கரசர் வாக்காலே காட்டுகிறார். (18-21). அப்பர் பெருமான் திருவருள் பெற்ற வரலாற்றினை உற்று நோக்குவார்க்குக் கடவுள் வழிபாடு கூறாத சமயங்கள் பொய்ச் சமயங்கள் என்பதும், பல கடவுளர் வழிபாட்டிலும் தனக்கு வமையில்லாத முழுமுதற் கடவுளது வழிபாடே சிறந்ததென்பதும் மலையிலக்காக விளங்கும் என்கிறார் (22). சமயப்பிணக்கின் அடிப்படையை ஆராயும் கா. சு. அதன் சால்பினை அருமையாக விளக்குகிறார். ஒருவர் பிறந்த சமயம் காரணமாகவாதல், அவர் கொண்ட கொள்கை பற்றியாதல் அவரை இழித்துக் கூறுதலும் பகைத்தலும் தவறு. ஆனால் சமயக் கொள்கைகளுள், ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு, என்று தமது ஆராய்ச்சியிற் கண்டபடி ஒருவர் கூறுதல் குற்றமாகாது. உலகத்திலே பிறப்பினுடைய உயர்வு தாழ்வுகளைக் கருதாது நல்லொழுக்கங் காரணமாகவே மக்களை மதித்தல் பொருத்தமுடையது. அது போலவே, உயர்ந்த சமயத்திலாதல் தாழ்ந்த சமயத்திலாதல் பிறந்ததனால் மாத்திரம் ஒருவனை இழித்துக் கூறாது அவனுடைய ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவனை மதித்தலே சால்புடைத்தாம். உயர்ந்த கொள்கையுடைய சமயத்தில் பிறந்தும், ஒழுக்கத்திற் சிறவாதவன் தாழ்ந்த சமயத்திற் பிறந்து ஒழுக்கத்திற் சிறந்தவனைப் பார்க்கிலும் இழிந்தவனே யாவான். ஒரு சமயத்தில் ஒருவன் பிறக்க வேண்டுமென்று கருதிப் பிறப்ப தில்லை. ஆதலால் ஒருவன் பிறந்த சமயத்தின் தாழ்வு அவனுக்கு ஏற்படாது. கடவுளைப் பற்றிய கொள்கைகள் மக்களது அறிவின் அளவில் அடங்குவன அல்ல. ஆதலால் தன் சமயக் கொள் கையை நம்புவதற்காக ஒருவனைக் குற்றங் கூறுதல் கூடாது. தன் சமயக் கொள்கைகளை நன்கு உணர்ந்தபின் பிறிதொரு சமயக் கொள்கைகளை ஆராய்ந்து அவைகள் மிக நல்லவை என்று கண்ட ஒருவன் தன் சமயத்தைவிட்டு அதனுட் புகுதலையும் குறை கூற இடமில்லை. தமது சமயத்தை நன்கறியாத பலரை ஒரு சிலர் தமது சமயத்திற்கு வலிந்து இழுத்தலும், முன்னவரது சமயக் கொள்கையை அறியாது அன்னோரைப் பழித்தலுமே சமயப் பிணக்கிற்கெல்லாம் அடிப்படையான காரண மாகும் என்பது அது (24-5). இவ்விடத்தே சமயக் கருத்துகள் பலவற்றை மேலும் ஆய்ந்து கூறுகிறார் கா. சு. அப்பரடிகள் சைவ சமயத்தில் இருந்து சமணஞ் சென்று, ஆண்டிருந்து மீண்டும் சைவம் வந்த வரலாறு அவ்வாய்வைத் தூண்டி விரித்ததாகும். பிற சமயத்தைப் பழித்தல் கூடாது என்பது உண்மையே ஆயினும் ஒவ்வொரு சமயவாதிகளும் தத்தம் சமயத்தைப் பாதுகாக்கும் கடமையும் உடையவராவர். ஓர் உயர்ந்த சமயத்தின் உண்மைகளை உணர்ந்தவர். அச்சமயத்தில் உள்ள ஏனையோர்க்கு அவற்றைப் போதித்தலும் அவர்கள் பிற சமயத்தாரின் பற்றுரைகளால் ஏமாறா வண்ணம் அவர்களைப் பாதுகாத்தலும் செய்வது அவரது விழுமிய நற் பணியேயாகும். உயிர்கள் மேல் வைத்த இரக்கத்தால் இக் கடமையாற்றும் பெரியோரைச் சமயப் பகை விளைவிப்பவராகக் கருதலாகாது. சைவ நாட்டிற் புகுந்து தம் அறிவுரைகளால் சைவராய்ப் பிறந்தாரைத் தம் சமயத்தே ஈர்த்த சமணர், புத்தர் முதலாயினாரைச் சைவ சமயத் தலைவர் மறுத்துக் கூறிய அருள் மொழிகள் சைவ சமயத்தாரைப் பாதுகாக்கவும் சமண சமயத்தினரது அற்றைக் காலச் சீர்கேட்டினை வெளிப்படுத்தவும் எழுந்தனவென்றே கருதற்பாலன. அகனமர்ந்த கருத்தினராய் அறுபகைசெற்று ஐம் புலனையும் அடக்கி மெய்ஞ்ஞானத்தால் முழுமுதற் கடவுளை வழிபடும் பெரியோர்க்குச் சமணர் புத்தர் முதலியோரிடம் இரக்கம் நிகழற்பாலதேயன்றிப் பகைமை நிகழக் காரணமில்லை. இஃதறியாதார் சைவ சமயப் பெரியாரைச் சமயப் போர் செய்யும் ஒடுங்கிய சிந்தையர் என்று பிழைபடக் கூறுவர். அது பெருந்தவறாகும். இனிப் புறச் சமயத்தினின்றும் சைவ சமயத்துட் புகக் கருதுவாரைச் சைவ சமயத்தார் அன்போடு ஏற்று அவர்களை முறைப்படி திருநீறு அணிவித்துச் சமய உரிமைகள் யாவற்றையும் அவர்க்களித்தலே தக்கதென்க. அது நம் நாயனாரை அவர் தமக்கையார் ஐந்தெழுத்தோதித் திருநீறணிவித்துத் திருக் கோயிலுள் அழைத்துச் சென்றமையால் நன்கு காட்டப் பட்டதாகும் - இவ்வாறு சமயச் சால்பையும், சமயத்தார் தொண்டையும் பலபட விளக்குகிறார் கா. சு (25-6). பாடலிபுரத்தில் அந்நாளில் இருந்த சமண சமயத்தவர் செயற்பாடுகளைக் கருதும் கா. சு, அவர்கள் அடிப்படைக் கொள்கையை இகந்து நின்ற செருக்கையும் சுட்டுகிறார். பாடலிபுரத்திருந்த அக்காலத்துச் சமண முனிவர்கள் தங்கள் சமயம், அரசராலே போற்றப்பட வேண்டுமென்றும் மற்றைச் சமயங்களை வென்ற புகழ் அதற்கு நிலைத்திருக்க வேண்டுமென்றும் கருதினாரே ஒழியத் தங்கள் சமயத்துட் கூறப்பட்ட அருளொழுக்கத்தைப் போற்ற வேண்டுமென்று கருதவில்லை. இஃது அச்சமயத்தாரது மிக்க இழிந்த நிலையினைக் காட்டுவதாகும் என்கிறார். விளக்கு வைத்தால் அதில் விட்டில் விழும் என்று காலை காலத்து உண்டும், தரையிலுள்ள சிற்றுயிர்கள் காலினால் மிதிபட்டு இறத்தல் கூடுமென்று பீலிகொண்டு பெருக்கியும், உடையில் ஊர்வன ஏறிச்சாமென்று உடுத்தாதும், உறியில் வாழ்ந்தும் இன்னும் பல்வகை உபாயங்கள் செய்தும் கட்புலனாகாத சிற்றுயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய சமண முனிவர்கள் மக்களுள் தலை நின்ற அப்பமூர்த்திகளை நீற்றறையில் அடைத்தல், நஞ்சுண்பித்தல், மத யானையால் இடறச் செய்தல், கல்லிற் கட்டிக் கடலிலிடல் என்னும் பெரும் பாதகச் செயல்களைச் செய்யத் துணிந்தமைக்குக் காரணம் அவர்கள் தம் சமயக் கொள்கையை அறவே கைவிட்டுச் சமயக் செருக்கினால் விழுங்கப்பட்டுப் பித்துக் கொண்ட விலங்கின் நிலைமையை எய்தியமைதான் எனக் கடிந்து உரைக்கிறார். நாவுக்கரசருக்குச் செய்யப்பட்ட இடர்களையெல்லாம் எண்ணி நைந்தெழுதும் கா. R., அவர் அவ்விடர்களை யெல்லாம் வென்ற திறத்தையும் விளக்குகிறார். நன்கு துயில்கின்றவனைத் தட்டியெழுப்பினாலும் அவன் சில வேளை உடனே எழாமல் இருப்பதற்குக் காரணம் தட்டியதைத் தான் உணராமையேயாகும். மேலைத் தேசத்தில் கணித நூலகத்தே தன் கவனம் முழுவதும் செலுத்திய ஒரு புலவன் தன் ஊரிலே பகைஞர் படையெடுத்து வந்ததையும் அவர்கள் தன்னைச் சூழ்ந்தமையையும் உணராதிருந்தான் என்று கேள்விப் படுகிறோம். நனவிலேயும் சுழுத்தியிலேயும் உணர்ச்சியற்ற நிலை எய்துதல் எளிதாயின் அவற்றிற்கும் அப்பாற்பட்ட தூயநிலை கடந்து அதீதத் தன்மையுற்றுச் சிவபோகத் தேன் பருகுதலிலேயே ஆழ்ந்த சிந்தையுடையார் தமது வெளியுடம்பிற்கு வரும் இடையூறுகளைச் சிறிதும் உணராமை வியப்பன்று. நம் நாயனார் திருமேனிக்கு நேர்ந்த துன்பங்கள் ஒன்றையும் உணர்ந்திலர். நெருப்பினைத் தின்னும் தித்திரிக்கு அதற்குத் தகுந்த உடம்பையும், பாம்பின் நஞ்சினால் கேடுறாத மயிலுக்கு அதற்கேற்ற மேனியையும் உதவிய திருவருட் சக்திதானே தனது வயமாயுள்ள திருநாவுக்கரசரது திருமேனிக்கு அத்தகைய தன்மைகளை வேண்டியபோது நல்கி அனலாலும், நஞ்சினாலும் யாதொரு கெடுதியும் இல்லாமல் பாதுகாத்தமை ஒரு வியப்பாமோ? அவ்வாறே கல்லும் மெல்லியதாய் மிதந்தமையும் ஆமன்றோ என விளக்குகிறார் (37-38). திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவர் தம் திரு வருளன்பையும், நட்பையும், பெருங்கிழமைத் தொண்டையும் உன்னி உருகும் கா. R., அன்பும் அருளும் தாயும் குழந்தையும் போலுமாதலாலும், இருகண் ஓர் உடம்பின் உறுப்பாகி அமைதலாலும், சிவமும் சத்தியும் ஒரே பொருளாதலாலும் அவற்றிற்கு உவமேயமாகக் கூறப்பட்ட நாயன்மார்கள் இருவரும் அவை போன்ற ஒற்றுமையுடைய கழிபெரு நட்பினர் என்பது ஊகித்தற் பாலது. என்கிறார் (53). திருநல்லூரிலே இறைவர், தம் தலைமேல் திருவடிச் சுவடு வைக்க வேண்டி நின்றது, பிறவி அறவே அற்றுத் திருவடியே பெறும் சிவ சாயுச்சியமாகிய முடிவிலின்ப நிலைக்கு அறி குறியாம் ஆதலின், அதற்குத் தாம் உரியார் என்னும் நினைவு தமக்கு நிகழ்ந்து பிறப்பிறப்பு அச்சத்தை ஒழித்தற் பொருட்டு அதன் அடையாளத்தையும் திருமேனியின் பகுதியாகப் பெறக் கருதிப் போலும் என்கிறார். (55). அப்பூதியடிகளின் போற்றுதலுக்குரிய நாவுக்கரசரை எண்ணும் பெருகமனார் கா. R., சிவநெறி ஒழுகிய அந்தணர் அக்காலத்தே வீண் குல நலம் பேணாது வேளாளர் முதலியோரைச் சூத்திரர் என்று எண்ணாது அவருட் சிறந்து விளங்கிய சிவநேசச் செல்வர்களைத் தாமும் வழிபட்டுப் போற்றினர் என்பது தெளிவு என்கிறார் (61). மேலும், திருப்பதிகத்தாலேயே மூத்த திருநாவுக்கரசின் நஞ்சின் விடத்தைத் தீர்த்த நாவுக்கரசர் செயற்பாட்டைக் குறிக்கும் கா. R., யாதொரு வகையான மருந்தும் மந்திரமும், பார்வையும் கைக்கொள்ளாமல், திருவருள் ஒன்றினையே நம் நாயனார் வேண்டிப் பாடினர். உடனே மகன் உயிர் பெற்றெழுந்தான். இதனைச் சித்தர் நூல் வல்லார் ஞானசித்தி என்பர். ஞானிகளுக்கே இவ்வகைச் சித்து இயலும். அவரது உள்ளத்தே இறைவன் எப்போதும் கலந்து நின்று யாதொன்று கருதினும் அதனை உடனே நிகழும் வண்ணம் அருள்வான். இதுவும் நாயானாரது உயர் ஞான நிலைக்கு ஒரு சான்றாகும் என்கிறார். (66). நாவுக்கரசர் திருத்தல வுலாவின் போது பட்ட பசி, நீர் வேட்கை, தளர்வு முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் இறைவன் பால் சார்த்திச் சென்ற அருமையை எண்ணும் கா. R., சிவப் பேறெய்திய மெய்ஞ்ஞானிகள் தமது உடம்பிற்கு நேரிடும் இடையூறுகளை ஒரு சிறிதும் பொருட் படுத்த மாட்டார் என்பது நமது நாயனார் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லுங்கால் பசியும் தாகமும் அதிகப்பட்ட போது அவற்றாற் சித்த மலையாதே அப் பைஞ்ஞீலிப் பெருமானை வணங்குதலையே கருத்தாகக் கொண்டு மேற் சென்றமையானும், அவ்வாறே திருக் கயிலைக்குச் சென்ற காலை தமது உறுப்புக்கள் தேய்ந்தொழிந்த பொழுதும் அவற்றைப் பற்றி ஒரு சிறிதும் கருதாது கயிலைக் காட்சியையே பொருளாகக் கொண்டமையானும் இனிது விளங்கும் என்கிறார். மேலும், தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்பதற்கும் கருமமே கண்ணாயினார் மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்துஞ்சார் என்பதற்கும் திருநாவுக்கரசரிலும் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளார் உலகத்தில் யாருமில்லை என்பது தெளிவு என்கிறார் (80-91). திருக்கயிலாயத்தை அடையத் திருநாவுக்கரசருக்குக் கடவுள் அருள்புரியாமை, இன்னும் சில காலம் உலகில் வாழ்ந்து திருத்தொண்டு புரிய வேண்டுமென்று அவன் திருவுள்ளங் கருதியதே என்று கூறுகிறார். (91). நாவுக்கரசர் திருமடம் ஒன்று திருப்பூந்துருத்தியில் அமைத்ததை உரைக்கும் கா. சு. அம்மடம் பின்னை என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றும் இந்நாட்டு மக்கள் நடுவே எத்தகைய மடமும் நெடுநாளாக நிலைத்தோங்கல் அரிது போலும் என இரங்குகின்றார். திருநாவுக்கரசர், சொல்வேந்தர், வாகீசர், வாகீசத் திருவடி, நிறைதவத்தோர், அருந்தவ வேந்தர், ஆண்ட அரசு, இன்றமிழீசர், தமிழ்வேந்தன், தமிழாளியார், தவமுதல், மூலஅன்பர், செப்பரிய பெருமையினார், கலைவாய்மைக் காவலர், விழுத்தவத்து மேலோர், உழவாரப்படையாளி, திருத்தொண்டர் என்றெல்லாம் வழங்கும் பெயர்களை எடுத்தோதி இனிது விளக்கி நாவுக்கரசர் சிறப்புப் பெயர்களை ஆய்கிறார் கா. சு. தேவார ஆராய்ச்சிப் பகுதியில் இறைவன் திருவடிச் சிறப்பைக் கூறுமிடங்களும் பதிகங்களும் உளவாதலைக் கணக்கிடும் கா. சு. தாழ்மை மிக்க அவரது மனத்தை விளக்கும் என்கிறார். குறுந்தொகை, தாண்டகம் ஆகியன இவர் தேவாரத்தன்றிப் பிறர் தேவாரங்களுள் காணப் படாமை சுட்டும் கா. சு. தாண்டகங்கள் பலவும் அருச்சனைப் பாட்டாம் சிறப்பை எடுத்துரைக்கிறார். ஒளியையும் இன்சுவையையும் உணர்த்தும் அடை மொழிகள் பயில வழங்கும் சிறப்பை நாவுக்கரசர் தேவாரத்தில் கண்டு கண்டு காட்டுகிறார் கா. சு. இவ்வாறே உருவகம், உவமை, சொல்லாட்சி, இயற்கை வர்ணனை அகப்பொருட்டுறை இன்னன அமைந்துள்ளமையை விரித்துரைக்கிறார். முன்னம் அவனுடைய என்னும் தேவாரத்தில் திருக் குறள் கடவுள் வாழ்த்து முழுமையும் அமைந்திருத்தலை விளக்கும் அளவான் நூலை முற்றுவிக்கிறார் கா. சு. அதனை நோக்கும் போது, பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற்கென்றுகா. சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திருந்து பலதிறத் தமிழ்ப் புதுமைகள் பிறக்கும். அவைகளைப் பழைமையென்றே அவர் சொல்வார். அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும் என்று திரு. வி. க கூறுவது நினைவில் நிற்கும். சுந்தர மூர்த்தி சுவாமிகள் சரித்திரம் 1928 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் (விபவ ஆண்டு ஆனித் திங்கள்), கழக வெளியீடு 98 ஆக வெளிவந்த நூல் இது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பெயர் பதிப்புரையிலே அழகுருவடிகள் என்றிருப்பது, பதிப்பகம் அந்நாளிலேயே காட்டிய தனித்தமிழ் விழிப்புணர்வைக் காட்டுகின்றது. கா. சு. அவர்கள் அப்பதிப்புரையிலே, தமிழ், ஆங்கிலம், சட்டம் முதலியவற்றில் பெரும் புலமை நிரம்பி, அன்பு அற வொழுக்கங்களிற் சிறந்து விளங்கித் தமிழ் மக்கள் ஆக்கங் கருதி இதுபோன்ற பல ஆராய்ச்சி நூல்களை எழுதி உதவி வரும் திருவாளர் கா. சுப்பிரமணியப்பிள்ளை எனப் பாராட்டப் படுகின்றார். சுந்தரர் புகழ் மாலையை முதற்கண் கொண்ட இவ் வரலாற்று ஆராய்ச்சி நூல், தோற்றுவாய், தடுத்தாட் கொள்ளப் பெற்றது, தில்லை வணங்கித் திருவாரூர் அடைதல், பரவையார் திருமணம், நெல் பெற்ற அற்புதம், செங்கல் பொன்னாக்கப் பெற்றதும், இறைவன் வழிகாட்டப் பெற்றதும், தண்ணீரும் பொதி சோறும் பெற்றது, சங்கிலியார் திருமணம், திருவாரூர்க்குத் திரும்பி இறைவனைத் தூதுவிடல், ஏயர்கோனுக்குச் சினந் தீர்த்தது, சேரமான் பெருமாள் நட்பு, வெள்ளை யானை, மேற் கயிலைக்குச் சென்றது, சுந்தரர் தேவார ஆராய்ச்சி, சுந்தரர் திருப்பெயர் விளக்கம் என்னும் பதினான்கு தலைப்புகளில் 246பக்கங்களில் இயல்கின்றது. நூல் இயலும் தலைப்புகளைப் பார்த்த அளவானே சுந்தரர் வரலாற்றின் வரைபடமென விளங்குதல் வெளிப்படை. இத்தலைப்பை முறையே சொன்ன அளவான சுந்தரர் வரலாற்றுச் சுருக்கம் அறிய வருதல் கண்கூடு. இவ்வாறே எவ்வரலாற்றையும் பகுத்து ஆய்ந்து தக்க தலைப்பிட்டு எழுதுதல் கா.சு. வின் வழக்கம் என்பதும் நன்கு விளங்கும். இஃதவர் தந்த கொடை மரபாகும். அருணகிரி புராணம், திருவிளையாடற் புராணம், காசி காண்டம், சங்கர நாராயணர் கோயிற் புராணம், காஞ்சிப் புராணம், திருவானைக்காப் புராணம், கருவூர்ப் புராணம், மருதூர்ப் புராணம் என்னும் எட்டுப் புராணங்களில் இருந்தும் பாடலாக எட்டுப் பாடல்களைக் கொண்டது ஒவ்வொரு புகழ் மாலையாகும். முழுமுதற் கடவுளின் திருவடிப் பேற்றை அடைதற்குரிய மைந்தர் உலகப் பற்றை அறவே ஒழித்த துறவோர் எனவும், அப்பற்றுடையராய்க் கடவுள் அன்பினை வளர்த்து அப்பற்றுத் தானே நீங்கும்படி வாழும் அறவோர் எனவும் இருவகைப் படுவாருள், பின்வகையைச் சேர்ந்த பெருந்தகை சுந்தரர் என்பதைத் தோற்றுவாயின் தோற்றுவாயில் சுட்டுகிறார் கா. சு. இதன் விளக்கமாகவே தோற்றுவாய் அமைகின்றது. சுந்தரர் என்ற திருப்பெயர் நமது நாயனார் புராணத்துட் காணப்படவில்லை. திருநாவுக்கரசர் புராணத்துள் அறந்தரும் நாவுக்கரசு ஆலால சுந்தரரும் என்ற விடத்து அது வந்துள்ளது எனச் சுந்தரப் பெயரை ஆய்ந்து கூறுகிறார் சுப்பிரமணியனார் (8). நாவலூரிற் பிறந்தவர்க்கு ஆரூரர் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் தெளிவாகத் தெரிந்திலது என்று கூறும் அவர், நாயனாரது பெற்றோர்கள் திருவாரூர்ப் பெருமானிடம் மிக்க அன்புடையவராய்த் தமது அருமைப் புதல்வருக்கு அவர் பெயரை இடக் கருதினர் போலும் என்று கருதுகிறார். திருவருளால் உதித்த இளந்தோன்றலார் அரசருக்கு (நரசிங்க முனைய தரருக்கு)க் காதலை விளைக்கும் வனப்பினராக விளங்கினமையால் ஆரூர்க்கே அழகர் என்ற பெயர் தகும் என்கிறார். (19). மணப்பருவம் அடைந்த சுந்தரர்க்குப் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் நன்மகளாரை மணம் பேசி முடிக்க, மணக் கோலம் கொண்ட சுந்தரர் புரவி மேலேறிச் சென்றார். இதனைக் கருதும் தமிழ்க் கா. சு. மணமகன் நலன் அமைந்த குற்றமற்ற குதிரையின் மேலேறித் திருமணப் பந்தர்க்குச் செல்லுதல் இக்காலத்தில் வழக்கின் வீழ்ந்து ஒழிந்தது போலும். மகமதியர்க் குள்ளேயே அவ்வழக்கம் இக்காலத்துக் காணப் படுகின்றது. அவர்கள் தமிழரிடம் இருந்து அதனைக் கற்றார்களோ தம் மத வழக்கமாய்க் கைக் கொண்டார்களோ தெரியவில்லை, என்கிறார். தமிழ்ப் பழங்குடியினராகிய கள்ளர் பிரிவினில் மணமகன் குதிரையில் ஏறியே வருதலும், அதன் முடி ஒன்றனை எடுத்து மணமகட்குத் தாலியெனக் கட்டலும் அண்மைவரை நிகழ்ந்தது. இன்றும் அரிதாக அவ்வினத்தாரின் நடைமுறையில் உள்ளது. திருநாண் பூட்டாமை, குலத்தலைவர் திருமணம் நடத்துதல், இருவினைக்கும் முற்றாக வேதியரை அழைத்துச் சடங்கு நிகழ்த்தாமை என்பவை இன்றும் நடை முறையில் உள்ளவை. ஆதலால் மணமகன் குதிரையேறிவரல் வழக்கு முற்றாக இன்றும் ஒழிந்துவிடவில்லை என்பதைக் கருதலாம். மணத்தினை வேள்வி என்று கூறுவது ஒரு வழக்கு என்கிறார். கா, சு. வேள் என்னும் அடிப்படைச் சொல் விரும்பிச் செய்வதற்கெல்லாம் அமைந்தது. விருந்தென்னும் வேள்வி, வேட்டை, வேட்டல், வேள், வேணீர் என்பன எண்ணத்தக்கன. சுந்தரர் காலத்திலே ஒருவர், தம்மையும் தம் வழி முறையையும் அடிமையாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும். அந்தணர்க்குள் அவ்வழக்கம் இல்லாமையையும் சுட்டுகிறார் கா. சு. அந்தணர் அந்தணர்க்கே, அடிமையாவதாகக் கட்டுப்பட்டமையால், குல வரம்பு கடத்தலைப் போல அது குற்றமாகாது என்று கொண்டனர் போலும் என்கிறார். சுந்தரர் அடிமை என்பதற்கு ஆட்சி, காட்சி, ஆவணம் என்னும் மூன்றனுள் ஒன்றை வெண்ணெய் நல்லூர் அவையினர் வேண்டுகின்றனர். அதனைக் கருதும் கா. சு. அக் காலப் பதிவு நிலை முதலியவற்றை வரைகிறார். ஆட்சி, ஆவணம், காட்சி என்னும் மூன்று ஆதரவுகளை வழக்குத் தீர்ப்பதற்குக் கருவியாகக் கொண்டனர் என்று தெரிகிறது. இம் மூன்றிலும் ஆட்சியே முதற்கட் கூறப் பட்டமையால், அவ் வழக்கமே தலையாய சான்றாகக் கருதப்பட்டது. ஓலைப் பத்திரம் ஒப்பினவற்றை எழுதிக் கொள்ளப் பெரிதும் பயன்பட்டதாகக் தெரிகின்றது. ஆனால் அரசாங்கத்தார் பத்திரங்களைப் பதிவு செய்யும் (Register) வழக்கம் அக்காலத்திலில்லை. காட்சி என்பது நிகழ்ந்ததொன்றைக் கண்டவர் பகரும் சான்று. வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஊராரது பேரவையே ஒவ்வொரு ஊரிலும் நியாய மன்றமாக இருந்ததென்று தோன்றுகின்றது. ஒவ்வொரு மரபினருக்கும் தனித்தனி மன்றங்கள் இருந்திருக்கலாம். திருவெண்ணெய் நல்லூரில் இருந்த அவை அந்தணர் பேரவை; பழையனூரில் இருந்த அவை, வேளாளர் பெருமன்றம். எவ்வூரில் எம்மரபினர் மிகுதிப் பட்டாரோ அம்மரபினுட் சிறந்தோரால் அவ்வூரில் நியாய மன்றம் நடைபெற்றிருத்தல் கூடும். மூல ஓலை படியோலை என்ற வழக்கமும், ஆவணத்திற்கு மேலெழுத்து இடுதலும், கைச் சாத்து இட்டாரது எழுத்தினை அவரது பிற எழுத்துக்களோடு ஒப்பு நோக்கி உண்மை தெளிதலும் இக்காலத்திற் போலவே அக்காலத்து நியாய மன்றங்களிலும் நிகழ்ந்தன என்று தெரிகின்றது. இவ்வாறு விளக்குகிறார் கா. சு. வெகுளிகொண்ட சுந்தரர் வழக்கு முடிவதற்கு முன்னரே ஓலையைக் கிழித்தமையால் வெகுளியால் தவறுண்டாம் என்பதை மெய்ப்பிக்கும் கா. R., திருவருள் பெறுந் தகுதியுடைய இவர்க்குச் சினம் எழுந்தமை கதிரவன் எழுவதற்கு முன்னுள்ள குமரியிருட்டுப் போல்வதொரு நிலையாம் என்கிறார். வழக்கிட்ட இறைவன் விடை மேல் காட்சி தந்ததை ஆழ்ந்து எண்ணும் கா. சு. முதற்கண் மானுடச் சட்டை சாத்தி வந்து வழக்கிட்ட இறைவன் பின்னர் விடை மீது தோன்றி அருள் செய்தமையால் சகலர்க்கும் பிரளயகலர்க்கும் அருள் செய்யும் முறைகள் இங்கே கலப்புற்றன. மயக்கம் மிகுந்த முதல் நிலையில் சகலர்க்கருளும் முறையையும், திருவருட்டுறையும் புகுந்து மயக்கந் தீர்ந்து நாயனார் அன்போடு அழைத்தகாலை இரு மலத்தார்க்கு அருளும் முறையையும் இறைவன் பயன் படுத்தியதும் காண்க என்கிறார். (27). சுந்தரர்க்கு இறைவனால் முதற்கண் இடப்பட்ட பெயர் வன்தொண்டர் என்பது என்னும் கா. சு. அருச்சனை பாட்டே யாகும்; சொற்றமிழ் பாடுக என்னும் இறைமொழியை விளக்கு முகத்தான், பொருள் விளங்காத மொழியிலே படர்க்கை இடமாகவுள்ள மந்திரங்களைச் சொல்லி இறைவனை மலர் தூவிப் போற்றுவதிலும் தேவார திருவாசகப் பாடல்களினால் மலர் தூவுதலே அன்பினை வளர்த்து அருளினை மல்குவிக்க வல்லதாம் என்கிறார். சுந்தரர் அழகராகவும், பட்டுடையராகவும், அணி மணி பூண்ட மணக் கோலத்தராகவும் என்றும் திகழ்ந்தவர் எனினும் அவர்தம் உள்ளத்து எளிமை பெரும் பாட்டுக்குரியதாம். அருமையின் அமைவதாம். அதனால், சுந்தரமூர்த்திகளுடன் பரிசனங்களும் பலர் சென்றனர் என்றும் சென்ற இடங்களிலே எல்லாரோடும் நமது நாயனார் நிலத்திலே யாதொரு அமளியையும் விரும்பாது படுத்திருந்தனர் என்றும் சரித்திரத்தாலே தெரிய வருகின்றது எனச் சுட்டுகிறார் (39). பொது மடத்தில் அடியார்களுடன் அளவளாவித் தங்கியதும், செங்கல்லைத் தலைக்கு வைத்துப் படுத்ததும் சுட்டி அவர்தம் எளிமையை மேலும், மேலும், அடியார்கள் வணங்குவதற்கு முன்னரே தாம் வணங்கினது அவரது தாழ்மை மிக்க உள்ளத்தையும், அடியார்மாட்டு வைத்த பேரன்பையும் விளக்கும் என்றும் கூறுகிறார் (40). காட்சியுட் கண் முற்றிலும் ஈடுபட்ட காலை காது ஒன்றினையும் கேளாது. நாவு ஒன்றினையும் சுவைக்காது. மூக்கு ஒன்றினையும் முகராது. தொடுவதை மெய் அறியாது. ஆதலின் கட் புலனில் பிறபுலன்கள் அடங்கி ஒழிந்தன என்பார். ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்றார், என்பது முதலாக அத்திருப் பாட்டுக்குக் கா. சு. தரும் எளிய இனிய விளக்கம் அருமை மிக்கதாம் (43-45). திருவாரூர் கமலை என்றும், திருக்குளம் கமலாலயம் என்றும் வழங்கப்படும். திருமகள் வழிபாடு செய்ததால் அப் பெயர் பெற்றது என்பது தொன்மக் கதை. அதனை உட் கொண்ட கா. R., திரு ஆர் ஊர் என்று பிரித்து, திருமகள் பொருந்திய இடம் எனப் பொருள் கொள்கிறார். கமலினி என்பார் பரவையாராகத் திருவாரூரில் திருப் பிறப்படைந்தமையின் பொருத்தத்தையும் புகழ்கிறார் (69). எல்லாராலும் பரவப் படுதலின் பரவையார் என்ற பெயர் அவருக்கு அமைந்தது போலும் என்றும் கூறுகிறார். அகத்துறைக் காட்சி பொழிலகத்தே நிகழ்வதாகக் கூறுதல் மரபெனினும் அது பிறவிடங்களிலும் நிகழும் என்பதற்குச் சுந்தரனாரும் பரவையாரும் திருக்கோயிலில் கண்ட காட்சியைக் குறிக்கிறார். இராமனும் சீதையும் வீதியில் இருந்தும் வீட்டின் மேல் இருந்தும் கண்ட காதல் காட்சியை இணைத்துக் காட்டுகிறார் (71). தலைவனுக்குரிய ஐயம் தலைவிக்கும் நிகழ்தற் பாலது என்பதைப் பரவையார் நினைவில் எழுந்த ஐயத்தைச் சுட்டுகிறார். இருவர் தம் ஐயக் காட்சிகளை விளக்கி இணைத்துக் காட்டும் கா. சு, புண்ணியத்தின் புண்ணியம் என்பதைத் தெளிவிக்கிறார். புண்ணியம் என்ற சொல் காவமைத்தல் குளந்தொடுதல் முதலிய அறச் செயல்களை உணர்த்தும், இவற்றினும் சிறந்தது இறைவனை வழிபடுதல், ஆதலால், இறை வழிபாடு, புண்ணியத்தின் புண்ணியம் எனப்பட்டது, என்கிறார். பேர்பரவை என்று தொடங்கும் பாட்டில், பரவை என்ற சொல் ஆறு அல்லது ஏழு பொருள்களில் வழங்கப் பட்டுள்ளமை காணும் கா. சு. இங்ஙனம் சொல்லணி அமைத்தல் பெரிய புராணத்திற்குப் பிற்காலத்திலே தான் அந்தாதியிற் பெரிதும் வழங்கலாயிற்று என்று ஆய்ந்துரைக்கிறார் (74-75). சுந்தரர் அறிவுத் திறச் சிறப்பைக் கண்டு களிப்புறும் கா. சு. வியப்புறுகிறார். பாச நீக்கமுற்றுச் சிவன் கழற்கே மிகுந்த அன்புடையவராய்த் திகழ்ந்த நாயனார் அவர் அன்பினும் மேம்பட்டதோர் பற்றினைப் பரவை யாரைக் காணும் வரை அறியாதிருந்தனர். கண்ட பின்னர் தமது பேரன்பினையும் கீழ்ப் படுத்து மேற் செல்லுமோர் அவாவினைக் கண்டு வியப்புற்றும், அவ்வவாவினையும் திருவருளின் பாலே சார்த்தும் இயல் புடையராதலின் ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே என்றனர். இங்ஙனத் திருவருளுடன் தமது அறிவை ஒட்டிப் பொருள்களை அறியும் அறிவே பேரறிஞர்க்குச் சிறப்பாகும் எனப் பாராட்டுகின்றார். (76). சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் தனியடியார் அறுபத்து மூவரைச் சுட்டியதை ஆயும் கா. R., அவர்கள் பெயரையும் பெருமையையும் அறிவதற்கு நாயனார் யாதொரு ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. திருவருள் விளக்கத்தினாலேயே அவற்றை உணர்ந்து கூறினமையால் திருத் தொண்டத் தொகையின் உயர்வு நனி விளங்கும் என்கிறார் (83). தொண்டர்களின் சிறப்புரைக்கும் சேக்கிழார் ஒருமையால் உலகை வெல்வார் என்றதைப் பல் பொருளினும் கவர்பட்டுச் சென்றோடும் மனத்தை ஒருமுகப் படுத்திக் கடவுளோடு இரண்டறக் கலந்த அன்பர்கள் இறைவன் பற்றினைப் பற்றி உலகப் பற்றினை வென்றவராதலால் ஒருமையால் உலகை வென்றார் என்றார் என்கிறார் (84). சுந்தரர் - பரவையார் திருமணம் குறிக்கும் கா. சு. மணத்தினைக் குறிப்பதற்கு யாதாவதொரு நெறிச் செயல் நிகழ்ந்திருக்க வேண்டும். மாலை மாற்றோ மங்கல நாண் பூட்டோ, ஆழி அணிதலோ இவற்றுள் யாதோ என்று ஆசிரியர் விளக்கவில்லை என்கிறார் (81). குண்டையூர்க் கிழார் ஒரு மொத்தமாகச் சுந்தரர்க்கு நெல் முதலியவை வழங்காது படி சமைத்தமையைக் கருதும் கா. சு. அவற்றை மிகுதியாகக் கொடுத்தால் எஞ்சியவற்றைப் பாது காத்து வைக்கும் கவலை சுந்தர மூர்த்திக்கும் பரவையார்க்கும் ஏற்படுமாதலின் அது நிகழாமைப் பொருட்டுப் படிசமைத் தார் போலும் என்கிறார் (88). இறைவன் அருளிய பொன்னை மணிமுத்தாற்றில் சுந்தரர் போடும்போது அதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டார். பின்னர் ஆரூர்க் குளத்தில் அதனை எடுத்ததைக் குறிக்கும் கா. R., இறைவனது பெருமையை உணர்த்தும் பொருட்டும், இறைவனது திருவிளையாடலுக் கேற்பத் தாமும் தோழமை பாராட்டக் கருதியும் என்க என்கிறார் (106). பசியும் வேட்கையும் பொருட்படுத்தாது தொண்டர் குடி வாழ்க்கையைச் செம்மை செய்வதிலேயே கருத்தூன்றிய வன் றொண்டர்க்கு இறைவன் வேண்டியன வெல்லாம் அருளியமையைக் கருதும் அறிஞர் கா. சு, குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம், மடிதற்றுத் தான் முந்துறும் என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாதலை விளக்கி இன்புறுகிறார் (113). உழவர் குடியினரே அந்தணர் - அரசர் - வணிகர் - வேளாளர் என்பதை, வேளாண்குடிச் சங்கிலியாரை மணந்த சுந்தரரைக் குறிக்குமிடத்து விளக்குகிறார் கா. சு. கொலை கடிந்து, புலவு நீக்கிக் கடவுட் பேணும் வேளாண் மரபின் ஒரு பகுதியாரே தமிழ்நாட்டுப் பார்ப்பாராகவும், வேளாளரால் முடி சூட்டப் பெறும் வேளாண் தலைவரே தமிழ் மன்னர் எனவும், விளைவித்த பொருளைப் பண்ட மாற்றின் பொருட்டுப் பல இடங்களுக்குக் கொண்டு போகும் வேளாளரே தமிழ்நாட்டு வணிகரெனவும், ஆராய்ச்சி வல்லுநர் முடிவு கட்டியிருப்பதால், மருத நிலத்துப் பெரு மரபினராகிய உழவரே தமிழ்நாட்டிலே நான்கு வகையாகப் பகுக்கப்பட்டனர் என்று தெளிக என்கிறார் (125). சுந்தரர் சங்கிலியார்க்குப் பொய்யுறுதி கூற நினைத்து இறைவரை வேண்டிக் கொண்டபோது, அவர் அதனை மறுத்துத் தடுத்தாட் கொள்ளாமல் இசைவார் போன்று நடந்து கொண்டமை, சங்கிலியார் மணத்தினை நிகழ்த்தி நாயனாருக்கு ஊழ்வினைப் பயனை ஊட்டுவித்தற் பொருட்டும், இறைவன் பெரியோர்க்கும் சிறியோர்க்கும் நடுநின்று ஒருபாற் கோடாது அருள் புரிவர் என்னும் உண்மையை யாவருக்கும் வற்புறுத்தி யருளுதற்குமாம் என்கிறார் (132-3). ஒற்றியூரைக் கடவேன் என்னும் உறுதிமொழியில் தப்பிய சுந்தரர்க்குக் கண்ணொளி போயிற்று. அதனைக் குறிப்பிடும் கா. R., சத்தியம் தவறினவர்க்குக் தண்டனை கிடைத்தல் திண்ணம் என்பதை உலகத்தாருக்கு அறிவுறுத்தியது ஆயிற்று. தம்முடைய தோழர் என்பதைப் பாராட்டாது குற்றங்கண்ட விடத்து அதற்குத் தக ஒறுத்தல் இறைவன் இயல்பு என்கிறார் (145). கண் போகிய சுந்தரர்க்குக் கவலை பெருகிற்று. அக் கவலைக்குக் காரணம் காணுகிறார் கா. சு. ஞானக் கண்ணினாலே இறைவனை நாடும் அடியவர்க்கு ஊனக் கண்ணிற்கு ஈனம் வந்தாற்படும் இழுக்கு யாதுமில்லை. எனினும் தவறு நிகழ்வதற்கு ஏதுவாயிருந்த தமது சிறுமையையும், பிறர்க்கு நல்லதோர் எடுத்துக் காட்டானமைக்கு ஏதுவாகிய தன்வினையையும் நொந்து நாயனார் வருந்தினாராவர். இறைவனடியார்க்கு ஊனம் வராது என்ற உண்மையைத் தமது வாழ்க்கையால் நிலை நாட்டப் பெற்றிலாமை பற்றியும் நாயனார் துயருற்றனர் போலும் என்று கூறுகிறார். (146-7). பரவையாரிடம் ஒருமுறைக்கு இருமுறை தூது சென்ற இறைவர் செய்கையை என்னும் கா. R., முதற்கண்ணேயே தமது மெய்த் திருவடிவத்தைக் காணுதற்குரிய உள்ளப் பான்மை பரவையாருக்கு இல்லாமையால் அருச்சக வடிவங் கொண்டு போந்தனர் என்று கருதுதல் கூடும். அருச்சக வடிவங் கொண்டு வந்தவர் இறைவனே என்று குறிப்பால் உணர்ந்து கொண்ட பின்னரே, அவர்க்குத் தம் செய்கைமேல் சினமும் வெறுப்பும் நாயனார்மேல் கழிவிரக்கமும் உண்டாகித் தடையின்றி ஏற்றுக் கொண்டார் எனத் தெளிவாக்குகிறார். ஏயர்கோன் சுந்தரர் தம்மைக் காண வருவது அறிந்து அவர் வருவதற்கு முன்னரே உயிர் விட்டது. அந்நிலையில் சுந்தரர் வர, அத்துயர் வெளிப்படாவண்ணம் மறைத்து, அவரை வரவேற்க உளமொன்றி நின்றார் ஏயர்கோன் துணைவியார். அதனை நினையும் கா. R., கணவனை இழந்த பெருந்துயர் வந்த காலத்தும் சிவனடியாரைப் பேணும் கடமை மறவாமை அரியவற்றுளெல்லாம் அரியதோர் செயலாகும் என்கிறார். மேலும், ஒரு தலைவனும், ஒரு தலைவியும் ஒத்த அன்புடையவராய் இல்லறம் நடாத்துங்கால் தலைவனுக்கு இல்லாத சிறப்புக்கள் தலைவி பாலும், தலைவிக்கு இல்லாத சிறப்புக்கள் தலைவன்பாலும் உளவாமாயின் வாழ்க்கை நிறைந்த இன்பம் பயக்கும் என்பது அறிஞர் கொள்கை என்றும் சொல்கிறார் (161). சுந்தரர் மனையிலே திருவமுதுண்ட சேரமான் பெருமாள் நாயனார், அதன் பின் திருநீறு பூசிக் கொண்டதைச் சுட்டும் ஆய்வுச் செல்வர் கா. சு, உண்டபின் திருநீறணியும் மரபு சேரமான் பெருமாள் செய்கையால் இனிது விளங்கும் என்கிறார் (180). மேலும் பரிகாலத்தின் கீழ்ப்பாவடை (பரவிய விரிப்பு) விரித்தாலும், பகலெனினும் விளக்கேற்றலும் வழக்காதலைக் கூறுகிறார். இறைவன் சுந்தரர்க்குக் காளைப் பருவத்தினராய்த் தோன்றிக் கானப்பேர் தம்மூர் என்றமையால் கானப்பேருக்குக் காளையார் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது போலும் எனக் காரணம் காட்டுகிறார் (181). கணநாதர் தலைவராய் நின்ற நம்பியாரூரர் நிலவுலகிற் புகுந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின், ஞானம் பெற்றுச் சிவன் முத்தி நிலையடைந்தனர். கணநாதர் தலைவராய் நின்றே அந்நிலையை அடைதற்குரியார், சிறியதோர் வழுவினால் ஞாலத்திடைத் தோன்றினார். தோன்றிய காரண முற்றுப் பெற்றபின் அவர் தமது பழைய அதிகார நிலையினை அடைந்தனர். அந்நிலையில் இருந்து அவர் பரமுத்தியடைதற்குரியார் என்பது சைவ நூற்கருத்து எனச் சுந்தரர் வரலாற்றை நிறைவிக்கிறார் கா. சு. தேவார ஆராய்ச்சி என்னும் பகுதி (205-244) ஒரு சிறு தகையது - அதில் சுந்தரர் வரலாற்றுச் சான்றுகள் பலவாகப் பல்கிக் கிடத்தலை முதற்கண் விளக்குகிறார். பின்னர், இறைமை நிலை, அடியார்கள் பேறு, மெய்ப்பொருட் கொள்கை, இயற்கைப் புனைவு இன்னவற்றைப் பற்பல சான்றுகளால் விரிக்கிறார். நூல் நிறைவில் சுந்தர மூர்த்திகளது திருப்பெயர்களை ஆய்கிறார். சுந்தரர் தம் கல்விநலம் தெரிவிக்கும் பெயர்கள் (8) ஊரையும், மரபையும் குறிக்கும் பெயர் (4), தவத்தையும், அன்பையும் குறிக்கும் பெயர்கள் (11) அருளையும், பெருமையையும் குறிக்கும் பெயர்கள் (6) அரசரியல் குறிக்கும் பெயர்கள் (2), போக வாழ்க்கை குறிக்கும் பெயர்கள் (8) என 39 பெயர்களை ஒழுங் குறுத்திக் கூறுகிறார். அப்பரடிகள் வரலாற்றிலே நூலின் இடைப்பகுதியில் பெயராய்வு செய்த கா. R., சம்பந்தர் வரலாற்றிலே நூலிறுதியிலே ஆய்ந்து நிறுவினார். அஃதவர் பட்டறிவு வளர்ச்சி. அதற்குப் பின்னர் வந்த இச்சுந்தரர் வரலாற்றிலே பெயர்களை வகைப்படுத்திக் காட்டி இறுதியில் நிறைவித்தது ஆய்வு வளர்ச்சிச் சான்றாகும். நூல் நிறைவில் பேர் நிற்றல் நன்றேயன்றோ! மணிவாசகப் பெருமான் வரலாறு திருவாளர் காந்திமதிநாத சுப்பிரமணியனார் (கா. சு). 1928 இல் எழுதி, கழகத்தின் வழியாக வெளி வந்த நூல் இஃதாகும். மணிவாசகர் புகழ்மாலை என மாணிக்கவாசகர் புகழ்பாடும் பாடல்கள் 8 கொண்டுள்ள முகப்பினுடன் நூல் விளங்குகின்றது. மச்சபுராணம் முதலிய 7 புராணங்களில் இருந்து ஒவ்வொரு பாட்டும் திருவருட்பாவில் இருந்து ஒரு பாட்டும் கொண்டது இது. நூல் தோற்றுவாய், குருவருள் பெற்றது, தில்லைக்கு ஏகுதல், புத்தரை வாதில் வென்றது, திருவாசக ஆராய்ச்சி, திருக்கோவையார் ஆராய்ச்சி, திருவாசக அகவல் ஆராய்ச்சி, மணிவாசகரைப் பற்றிய பட்டயத்தின் மூலம் அதன் மொழி பெயர்ப்பு என ஒன்பது பகுதிகளாக இயல்கின்றது. முதல் நான்கு பகுதிகளும் மணிவாசகர் வரலாறும், பின் மூன்று பகுதிகளும் மணிவாசகர் நூலாய்வும், இறுதியவை வரலாற்றுச் சான்றும் என முப்பொருட் பகுப்பு உடையது நூல் எனலுமாம். நூல் பக்கங்கள் 121. கடவுளைக் கண்டவர் இல்லாத நாட்டிலே, கடவுளைக் காணுதல் கூடும், என்ற கொள்கை உண்டாதற்கிடமில்லை; கடவுளைக் கண்டவர் இருந்திருப்பினும், அவர்களைப் பற்றி யறியாத மாந்தர், கடவுள் தோன்றுதல் கூடும் என்பதை நம்ப மாட்டார் என்று கூறுவதன் வழியே தமிழகம் கடவுளைக் கண்டவர் இருந்த நாடு என்றும், அவ்வாறு கண்டவரை அறிந்த மாந்தர் இருந்த நாடு என்றும் மாணிக்கவாசகப் பெருமான் வரலாற்றின் தோற்றுவாய் வழியே நிலைபெறுத்துகிறார். சைவத்திருநெறித் தலைவர்கள் நால்வருள் முற்பட்டவர் மணிவாசகர் என்றும், இறைவன் மனிதப் போர்வை போர்த்துக் குருவாக வந்து ஆட்கொண்டருளப் பெற்றவர் என்றும், அக் கருத்தே மறைமலையடிகள் கருத்தென்றும், அதற்குச் சான்றாகச் செப்புப் பட்டயம் ஒன்று கிடைத்துளதென்றும் இப்பகுதியிலே குறிப்பிடுகிறார். மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் புத்த சமயம் சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலை பெறாமை, திருவாசகத்தில் பல்லவ மன்னரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படாமை, திரு வாசகத்தின் பாவமைதி, சொல்லமைதி ஆகியவை, வட சொற்கலப்பும் விருத்தப்பாக்களும் தேவாரத்தில் காணப்படுதல் போல் திருவாசகத்தில் காணப்படாமை ஆகியவற்றால் மணி வாசகர் நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை வலியுறுத்துகிறார். மணிவாசகர் வரலாறு பற்றியுரைக்கும் நூல்களைத் தொகுத்துரைக்கும் ஆசிரியர், அறுபத்து மூவருள் அவர் சேராமைக் காரணத்தை ஆராய்கிறார். திருத்தொண்டத் தொகை வல்வினையாற்றி இறையருள் பெற்ற பெரியாரையே தனிப்பட விதந்தோதும். அறுபத்து மூவருள் மணிவாசகர் போல இறைவனே குருவாக வந்து ஆட்கொள்ளப்படாமையின் ஆகம நெறிக்குப் புறனடையாய் அமைந்தவரே நாயன்மாராகத் தொகுக்கப்பட்டனர் என்றும் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார், மணிவாசகர் என்பாரும் உளர் என்றும் அவர் பிறப்பால் வீரசைவர் என்பதொரு கொள்கை உண்டு என்றும் சில கருதுகோள்களை இத்தோற்றுவாயில் வைத்துள்ளார். குருவருள் பெற்றது பற்றிய செய்தி முன்னரும் (7-11) அதன் ஆராய்ச்சி பின்னருமாக (11-47) இரு பகுதியாய் விரிவாக அமைந்துள்ளது. மாணிக்கவாசகர் இயற்பெயரும், பெற்றோர் பெயரும் விளங்கவில்லை என்றும், முன்னூல்களில் இவை காணப் படாமையால், வடமொழி ஆலாகியம் இவர் தந்தையார் பெயரைச் சுந்தரநாதர் என்றும், பெருந்துறைப் புராணம் தந்தை, தாயார் பெயரைச் சம்புபாதாசிரியர், சிவஞானவதி என்றும் புனைந்து கூறப்பட்டனவாதல் வேண்டும் என்கிறார். சிவம் விளையும் செந்நெற் பயிரெனத் திருவாதவூரர் தோற்றமுற்றது முதலாகப் புராணம் கூறும் செய்திகளைத் திரட்டித் தரும் ஆசிரியர், இறைவன் அவர் சென்னி மேல் திருவடி சூட்டி ஆட் கொண்டருளிய காலைச் சென்னிப்பத்துப் பாடினார் என்றும், இறைவன் மாணிக்கவாசகன் என்னும் திருப்பெயர் அளித்தனன் என்றும் அடிகள் கோயில் திருப் பணியில் ஊன்றினர் என்றும் கூறியமைக்கின்றார். அடிகளை வடமொழிநூல் ஆதிசைவா என்று கூறவும் கூறியது கொண்டு, வடநூலினை நேரே கற்று அதனைத் தமிழிலே மொழி பெயர்க்காது வடமொழி வாணர் கூறுவதைக் கேட்டு தமிழ் நூலுடையார் தாம் கூறும் கதைகளை எழுதினராதல் வேண்டும் என்று கருத்துரைக்கிறார் (12). பிரமராயர் என்ற பட்டம் அடிகள் அமைச்சராய் இருந்த கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வழங்கிற்றென்று கொள்ள இடமில்லை; வரலாறு எழுதப்பட்ட காலத்து வழக்கு நுழைந் திருக்கலாம் என்று தெளிகிறார். (13). திருவருள் பெறுமுன் மணவாழ்க்கை நடத்தித் திருவருள் பெற்றபின் பேரின்ப வாழ்க்கைத் துணையாகத் தம் தேவியைக் கொண்டிருத்தல் கூடும் என்னும் கருத்தினையும் முன்வைக்கிறார். அதன் சான்றையும் சுட்டுகிறார் (14). கடவுள் திருவருளை நாடி உலகப் பயன் கருதாது வீடு பேற்றை அவாவிநின்று தம் செயலற்றிருத்தல் முதற்படி; இறைவனை அடையும் வழி யாதென்று ஆராய்ந்து மேற் சொல்லுதல் இரண்டாம் படி; அகத்தால் முற்றும் உலகத்தையே துறந்து திருவருள் வழி நின்று புறத்தே உலக வாழ்க்கை நடத்துதல் மூன்றாம் படி; அகத்தும் புறத்தும் துறுவு நிலையுற்று ஞானாசிரியன் ஒருவனையே தேடி வருந்தித் திரியும் நிலை நான்காம் படி; இந் நான்காம் படி எய்தியவர் அடிகள் எனக் கடவுள் மாமுனிவர் கூற்றின் வழியே தெளிவாக்குகிறார் கா. சு. பாண்டிய வேந்தன், வாதவூரடிகளைக் குதிரை வாங்குதற்கு அனுப்பியமை கொண்டு அவர் குதிரைகளின் இலக்கணம் பிறரினும் நன்கறிந்தவர் என்பது புலப்படும் என்று உய்த்தறிந்து கூறுகிறார் (16). குருவர் கையில் சிவஞானபோதம் இருந்ததென்பதும், அதுகுறித்து அடிகள் வினாவினார் என்பதும், அனைய பிறவும், பிற்காலத்துப் புனைவுரைகள் என்று தள்ளுகின்றார். உயிர்களைத் துன்புறுத்தும், பற்று, வினை, மயக்கம், என்னும் மூன்றனுள் பற்றினான் மட்டும் கட்டுண்டவர், பற்றினானும், வினையினானும் கட்டுண்டவர், பற்று, வினை, மயக்கம் மூன்றானும் கட்டுண்டவர் என்னும் மூவகையாருள், முதல் வகுப்பார்க்கு இறைவன் தனது இயல்பை உண்ணின்றுணர்த் துவன் என்றும், இரண்டாம் வகுப்பார்க்கு இறைவன் தெய்வத் திருமேனி கொண்டு ஆட்கொள்வான் என்றும், மூன்றாம் வகுப்பார்க்கு மனித வடிவத்தோடு வந்து மெய்யறிவுச் சுடர் கொளுத்துவான் என்றும் சைவ நூல்கள் கூறும் வகையில், அடிகளுக்கு இறைவன் மக்கட்போர்வை போர்த்தெழுந்தருளி திருவடி ஞானம் வழங்கினன் என்று ஆய்ந்துரைக்கின்றார் (19). சூழ்ச்சியொன்றாற் காணலுறுவார்க்கும், நூலுணர்ச்சியான் மட்டும் தெரியக் கருதுவார்க்கும், உருவ வழிபாட்டு மாத்திரத்தாற் காணலுறுவார்க்கும் யோக நெறியாற் காணலுறுவார்க்கும் பிறர்க்கும் ஒளித்துத் தாழ்வெனும் தன்மையுடையராய்ச் சார்பு, செயல், ஒருமை என்னும் நிலைகளைக் கடந்து, திருவருள் பதியப் பெற்ற மேலோர்க்கே இறைவன் தன் மெய்ந்நிலை உணர்த்தும் என்பதை அடிகள் வாக்கினால் தெளிவிக்கிறார் (19-20). இறைவன் கனவில் வந்திலன் என்பதையும் நேரில் வந்தனன் என்பதையும் மானுடச் சட்டை தாங்கி வந்தனன் என்பதையும் அடிகள் வாக்குகளைக் கொண்டு நிறுவுகிறார். அரசன் தந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை அவன் நலத்திற்குச் செய்த சேம வைப்பே என்றும், சித்தம் சிவமாகப் பெற்ற அடிகட்கு உலகர் விதியும் விலக்கும் ஒவ்வா என்றும் அமைதி காட்டுகிறார் (22). அடிகளை ஒறுத்த வேந்தன் வரகுணன் என்று கூறுவது தவறு என்று வரகுணனைப் பற்றி அறியப்படும் செய்திகளைக் கொண்டு மறுக்கிறார் (37). அடிகள் வாயிலாகவே, அரசனை உய்யக் கொண்டமையால் அடிகளே அவனுக்கு அருட்குருவர் என்கிறார் (47). திருவண்ணாமலையில் அடிகள் மார்கழித் திங்களில் திருவெம்பாவை பாடினராகலின், ஆவணித் திங்களில் மதுரையில் இருந்து அதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து திருவண்ணாமலைக்கு அவர் வந்தனர் என்று கருதலாம் என மதிப்பிடுகிறார் (55). திருவுந்தியார் இரண்டாம் பாடலில் ஏரம்பர் என்னும் ஆட்சி உள்ளமையால் அது காஞ்சியில் பாடப்பட்டது என்று கருதுகிறார் (55) பொன்னம்பலம் என்று ஒருகாற் சொன்னால் ஐந்தெழுத்தை இருபத்தோராயிரத்து அறுநூறு தரம் கூறியதை ஒக்கும் என்னும் புராணக் கருத்தை ஒருநாள் முழுதும் விடும் மூச்சு 21,600 ஆதலின், ஒரு நாள் முழுவதும் கூறியதாகும் எனக் கூர்ந்த திறத்தால் விளக்குகின்றார் (65). அடிகளிடம் வாதிட்டுத் தோற்ற புத்த சமயத்தர் கொடுந் தண்டனை பெற்றனர் என்று பரஞ்சோதி முனிவரும், கடவுண்மா முனிவரும் கூறுவதை, அவர்கள் மிகப் பிற்காலத்தவர்கள்; அடிகள் காலத்து மக்கள் மனநிலையை உணராதவர்கள் என மறுக்கின்றார் (66). அடிகளது திருவருட் பாடலின் பொருள் உணர்வார்க்குப் பயன், பல்லோரும் ஏத்திப் பணியச் சிவபுரத்துறைதலாம் எனின், அத்தகைய பாடல்களை மொழிந்தமைக்கு அடிகள் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பெரும் பயன் எய்துதற் குரியர் என்பது திண்ணம் என வரலாற்றை நிறைவு செய்கின்றார் (74). திருவாசக ஆராய்ச்சி என்னும் பகுதியில் அடிகள் பாடிய பதிக வரிசையை ஆய்ந்துரைக்கிறார் (76-7). இறைவன் முதல்வன், முனைவன், தலைவன் என்னும் சிறப்பினனாதலையும், ஆதியும், நடுவும் அந்தமுமாய் ஐந்தொழில் இயற்றுதலையும், எப்பொருளினும் எவ்வுயிரினும் இரண்டறக் கலந்து நின்றும் பொருட்டன்மையால் வேறாதலையும், அன்பர்கட்கு அருளு மாறு அருட்சக்தியால் பல்வேறு உருவு கொள்ளுதலையும், பசு பாசத் தொடக்கற்ற பேரின்ப வடிவனாதலையும் பிறவற்றையும் அடிகள் வாக்குகளால் விரிவாக கூறுகிறார். அடிகள் தாம் உலக இன்பத்தில் மூழ்கிய முன்னை நிலையையும், பரம்பொருளைத் தேடி அலைந்ததையும்,இறைவனோடு இரண்டறக் கலக்க விழைந்த விழைவையும், தம்மைத் தாம் பழித்துறைக்கும் தாழ்மையையும், இறையடியார் பெயர் சுட்டிக் கூறுவதையும், இறைவன் திருவுருவச் சிறப்பை அழகாகப் புனைந்துரைக்கும் உரையையும் விரிவாக எடுத்துரைக்கின்றார். திருக்கோவையார் முதற் பாடலில் தாமரை, குவளை, குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய ஐந்து மலர்களைச் சுட்டுதல், ஐந்திணைக்குரியவாகலின் ஐந்திணை இன்பமும் குறிப்பான் உணர்த்தப்பட்டன என வியக்கின்றார்(93). பிற்கால நூல்களில் காணப்படும் உவமைகள் பல, திருக்கோவையாரில் முதற்கண் எடுத்தாளப் பட்டிருத்தலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். மேலும், பழமொழி, இரட்டுறல், சொல்லழகு என்பவற்றை எடுத்துரைக்கும் ஆசிரியர், திருக்கோவையாரில் வரும் திருப்பதிகளைத் தொகுத்துக் காட்டுகிறார் (94). அவ்வாறே, சிற்றம்பலத்தின் மாட்டு அன்பிலாதவரே அல்லலுறுவார் என அடிகள் கூறும் பாடல்களையெல்லாம் பாடல் எண்ணில் படைக்கிறார் (99). திருவாசக அகவல் ஆராய்ச்சி என்னும் ஏழாம் பகுதியில் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்பவற்றின் திரண்ட பொருளுரைத்துச் சுருங்கிய அளவில் ஆய்வும் வழங்குகிறார். புராணம் என்பது பழைய வரலாறு. ஆதலால், வரலாற்று முறையில் மிகத் தொன்மையான உலகத் தோற்றம் முதலியவற்றை இறைவனது திருவருட் செயலின் வைத்து விளக்குகிறார் எனச் சிவபுராணச் செய்தியை உரைக்கின்றார். கீர்த்தித் திருவகவலுள் பெரும்பான்மையும் பாண்டிய நாட்டில் இறைவன் இயற்றிய திருவிளையாடல் எடுத்தோதப் பட்டன என்பதை விளக்குகிறார். தசாங்கம் என்பதிலும் கீர்த்தித் திருவகவலிலும் கூறப்படும் தசாங்கங்கள் வேறுபடுதலைச் சுட்டுகிறார் (108). அதனை எடுத்து விளக்கமும் செய்கிறார். திருவண்டப் பகுதியுள் படைப்புப் பொருள்கள் முழுவதையும் உள்ளடக்கிய பேரிடமாகிய பேரண்டத்தை அண்டமென்றும், அவற்றின் பல்கோடிப் பிரிவுகளை உண்டைப் பிறக்கம் என்றும் கூறி, முத்தொழிற்றன்மையைப் பொதுப்பட வியத்தல் முதலாக விரித்துரைக்கிறார் (109). போற்றித் திருவகவலில், உயிர்கள் பல்வகைப் பிறப்பெடுத்த பின் மக்கட் பிறவியை அடைந்து, பல வகையான இடையூறுகளைக் கடந்து, பேரன்பின் பயனாக இறைவனே குருவாக வந்தருளப் பெற்று, வீடு பேற்றிற்குரிய நெறியில் நிற்கும் முறையினைத் தொகுத்துக் கூறி, இறைவன் புகழைப் பகுத்துப் பாடும் சிறப்பை மிகப் பாராட்டுகிறார் (113). தென்னாடாகிய தமிழ்நாட்டில் ஆதியில் வழங்கிய சிவநெறியே பின்னர் எந்நாட்டிலும் பரவியதாதலின், தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்றார். இதனையே தமிழ்ப் பற்றுடையார் பேரவைகளில் கிளர்ச்சி மிக வழங்கி வருகின்றார்கள். இறைவன் மாதொரு பாகன் என்ற கருத்தை அடிக்கடி நினைவூட்ட விரும்புவார், குவளைக் கண்ணி கூறன் காண்க அவளும் தானும் உடனே காண்க என்னும் திருவாசக அடிகளை முறையே முதன்மொழியாகவும் எதிர்மொழியாகவும் வழங்குதல் மிகவும் பொருத்தமானது என நூலை நிறைவிக்கிறார் (118). மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப் பட்டயம் ஒன்றைத் திருவனந்தபுரத்திலுள்ள கேரள சங்கத்தின் தொன்னூலமைச்சர் டி. கே. ஜோசப் என்பார் வழியே பெற்றதுடன், அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்திருத்தல் பாராட்டுக்குரியது. அதில் காணப்படும் காலம் கி. பி. 293 என்பது. அந்நாளில் மலையாள மொழி தோற்றமுற்றதில்லையே என்னும் எண்ணம் தோன்றினும், கால ஆய்வுக் குறிப்பு எனக் கொண்டும் மேலாய்வுக்குப் பயன்படும் எனலாம். சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் இப்பெரும் பெயர் நூல், 1928இல் கழகத்தின் 108 ஆம் வெளியீடாக வெளி வந்தது. 108 என்பது, தற்செயலான அமைதலாகக் கொள்வார், உளராகலாம். ஆனால் கழக அமைச்சர் திருவரங்கனார், அவர்தம் இளவலார் தாமரைச் செல்வர் வ. சுப்பையா ஆகியவர்களை உணர்ந்தவர் திட்ட மிட்ட எண் எனத் தெளிவாக அறிவர். சேக்கிழார் புகழ்மாலை, தோற்றுவாய், சேக்கிழார் மரபு விளக்கம், வேளாளர் ஆராய்ச்சி, பெரிய புராணத் தோற்றம், சேக்கிழாரும் பெரிய புராணமும், பெரிய புராண அரங்கேற்றம், சோழ அரசனும் ஊர்கோலமும், பெரிய புராண ஆராய்ச்சி என்னும் ஒன்பான் தலைப்புகளில் நூல் இயல்கின்றது. தோற்றுவாய்க்கு முற்பட்ட சேக்கிழார் புகழ்மாலையில், காஞ்சிப் புராணம், திருவானைக்காப் புராணம், திருப் பெருந் துறைப் புராணம், திருவம்பப் புராணம், சேக்கிழார் புராணம் என்னும் ஐந்து புராணங்களில் இருந்து தெரிந்தெடுத்து ஒவ்வொரு பாடலும், சேக்கிழார் பெருமை கூறும் பாடலென்றும் (கருங்கடலைக் கை நீத்து) ஆக ஆறு பாடல்களை அமைத்துள்ளார். தோற்றுவாயில், சமயத் தொடர்பாகவே வரலாறுகள் எழுதப்பட்டன என்றும், அவை புராணம் எனப்பட்டன என்றும் கூறுகிறார். இதிகாசம், தலபுராணம் பதினெண் புராணம் என்பவற்றை ஆய்கிறார். சூதர் காலத்திற்குப் பிற்பட்ட செய்திகளும் காணப்படுதலால், புராணங்கள் வெகு காலத்தில் எழுந்தனவல்ல என்றார். சூதர் சிவ புராணம் உரைத்தாரெனச் சம்பந்தர் சொல்வதால், விண்டு புராணம் உரைத்தவர் அவராக இருக்க முடியாது என மறுக்கிறார். ஏனெனில், ஒருவர் இருகடவுட்குப் பரத்துவம் கூறமாட்டார் என்பது அவர் கூறும் மறுப்பாகும். இதிகாச புராணங்களில் பொருத்த மில்லாதவற்றைக் களைதலே நன்று என்னும் குறிப்பை வைக்கிறார் கா. சு. (4). சிவபுராணப் பழமை (திருவாசகம்) சுட்டும் ஆசிரியர், உயிர், மெய்யுணர்வுற்று வீடு பேறு எய்தும் தத்துவ விளக்கமாக அஃதிலங்குதலைக் குறிக்கிறார். தாம் எழுதும் புராணங்களுக்கெல்லாம் வடமொழி மூலம் காட்டும் தப்பு வழக்கம் இருந்ததை எடுத்துக் காட்டும் தமிழ்க் கா. R., குறைபாடு யாதும் இல்லாததாய் இறைவன் பால் அன்பு செலுத்தி வீடெய்திய தமிழ் நாட்டு மெய்த் தொண்டர் வரலாறுகளைத் தொகுத்துப் பெருங்காப்பிய நயங்களோடு செவ்விதிற் கூறும் புராணம் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் ஒன்றேயாகும் என்கிறார் (5). இது போன்ற வேறு புராணம் வடமொழியிலும் தென்மொழியிலும் இல்லை என்றே கூறலாம் என்றும் கூறுகிறார் (6). பெரிய புராணம் இயற்றப் பட்ட காலம் முதற்குலோத்துங்க சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டு என்கிறார். தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்தைச் சார்ந்த குன்றை வள நாட்டுக் குன்றத்தூரிலே சேக்கிழார் என்னும் வேளாண் திரு மரபில் சேக்கிழாரும், அவர் தம்பியார் பாலறாவாயரும் தோன்றியதும், சோழமன்னனால் போற்றப் பெற்று உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டம் வழங்கப் பட்டதும், சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்தின் மேல் கொண்ட பற்றால், தம் ஊரில் திருநாகேச்சுரத்தின் அமைப்பில் திருக்கோயில் எடுத்ததும் ஆகியவற்றைச் சேக்கிழார் நாயனார் வரலாறு என்னும் பகுதியில் கூறுகிறார் (9-11). வேளாளர் நிலத்தை ஆள்பவர் (வேள்-மண், நிலம்); கடவுள் வழிபாட்டிற்கு வேளாளருள் பிரிந்த ஒரு பகுதியாரே பார்ப்பனர்; அவரே இக்காலத்து ஆதிசைவர்; நிலமுடையாருள் இடம் - பொருள் ஏவலாட்சியில் சிறந்து குறுநில மன்னராய் மேம்பட்டவர் வேளிர்; வேளாண் தலைவர் பலர்க்கும் ஒரு தலைவனான ஆற்றலாளன் மன்னன்; தொடக்கத்தில் ஒரு வேந்தனும் பின்னர் மூவேந்தரும் ஏற்பட்டமையால் சேர, சோழ, பாண்டிய நாடுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இம்மூவேந்தரும் வேளிருடன் பெண் கொள்ளல் - கொடுத்தல் முதலியன செய்து வந்தனர். வேளாளப் பெருஞ்செல்வர்க்கு இளங்கோ என்னும் பெயரும், மன்னர் பின்னோர் என்னும் கருத்தும் உண்டு; வேளாளர்க்கு வணிகமுமுண்டு; வேளாளரை வைசியர் என்னும் வழக்கம் உண்டு; உழுது பண்ணும் தொழிலையே சிறப்பாக உடைய வேளாளர், தொழு துண்ணும் தொழிலையே சிறப்பாகவுடைய சூத்திரர் ஆகார்; சேக்கிழார் பெற்றோர் பெயர்களைப் புராணத்துட் கண்டிலம்; சேக்கிழார் சுவாமிகள் சரித்திரத்தில் (கலியாண சுந்தரயதீந்திரர்) சேக்கிழார் தந்தையார் வெள்ளியங்கிரி முதலியார் என்றும், தாயார் அழகாம்பிகை என்றும் கூறுவதற்குச் சான்று அறிந்திலம் - எனப் பல செய்திகளை வேளாளர் ஆராய்ச்சிப் பகுதியில் விளக்குகிறார் (12-48). பெரிய புராணத் தோற்றம் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றின் வழியதே என்பதைத் திருமலைச் சிறப்பு 38, 39 ஆம் பாடல்களைக் கொண்டு தெளி விக்கும் கா. R., அகத்திய பக்த விலாசமாவது, உபமன்ய பக்த விலாசமாவது முதனூலன்று என்று மறுத்ததுடன், பெரிய புராணத்தின் மொழி பெயர்ப்பே அவை என்பதை வலியுறுத்துகிறார். சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் பகுதியில், நாயன்மார்களுள் மரபறிந்தார், ஊரறிந்தார், பேரறிந்தார், முத்தியடைந்த வகை, முத்தமிழ் வல்லார், இல்லறத்தார், துறவறத்தார் என்றெல்லாம் சேக்கிழார் புராணத்து வரும் செய்திகளை அடைவாக்கிக் கூறுகிறார். சிவனடியார் எக் குலத்தினும் இருப்பர் என்றும், சிவநெறி பொதுமையது என்றும் இவ்வடைவு கொண்டு தெளிவாக்குகிறார். இத்தொகை பற்றி விரிந்த ஆய்வும் செய்கிறார். உமாபதி சிவாசாரியார், பெரிய புராணத் தொகை 4253 என்று குறித்தாராகவும், இந்நாளில் 4286 பாடல்கள் அதில் இருப்பதை எண்ணும் கா. R., திருமலைச் சிறப்பு கண்ணப்ப நாயனார் ஆகியவற்றில் வெள்ளியம்பலத் தம்பிரான் முதலிய பிற்காலத்துப் புலவர்கள் தம்முடைய பாடல்களைச் செருகின மையைச் சுட்டுகிறார். அடியார் பெருமை பகரக் கருதிய சேக்கிழார், தமது அமைச்சு வேடத்தைத் துறந்து அடியார் திருவேடத்தையே கொண்டனராகத் தெரிகிறது. தலையை முண்டிதஞ் செய்து முக்குறியிட்டு முழுநீறு பூசிக் காதிரண்டினும் குண்டலங்களும் ஓங்கார வடிவான குழையும் அணிந்து சென்னியினும் கழுத் தினும் கையினும் கண்மணி மாலையணிந்து விளங்கினமையால், அரசன் அவரது தவ வேடத்தினைக் கண்டவுடன் தன்னையறியாத கைகள் தலைமிசை ஏறப்பெற்றான். சேக்கிழார் பெருமானால் சிவ சமயப் பெருமையையும், சிவனடியார் பெருமையையும் அரசன் உணர்ந்தானாதலின் அவரைத் தமது ஞான ஆசிரியராகக் கருதி அவரது திருவடிகளை வணங்கினான் என்கிறார். அரங்கேற்றச் சிறப்பையும், ஊர்வலச் சிறப்பையும் புராணத்துக் கண்டவாறு விரித்துரைத்து ஆய்கின்றார். திருத்தொண்டர் புராணம் தில்லைப் பெருமான் அடியெடுத்துக் கொடுத்த வண்ணமே உலகெலாம் என்று தொடங்கித் திருவருள் துணை கொண்டு பாடப் பெற்று, உலகெலாம் என்று முடிந்தமையால் அதனை இறைவரது திரு வடிவம் என்றே யாவரும் கருதினராதலின் சிவபெருமானுக்குச் செய்யும் வழிபாடனைத்தும் அப்பெரிய புராணத் திரு முறைக்கும் செய்யப்பட்டது என்கிறார். திருவருள் பெற்றபின் மணிவாசகனாரைப் போலச் சேக்கிழார் பெருமானும் அமைச்சர் வேலையை மேற்கொள்ளக் கருதிற்றிலர். ஆதலின், சோழ மன்னன் அவருடைய இளவலாகிய பாலறாவாயர்க்கு அமைச்சுரிமையளித்தனன் என்ற வரலாற்றுத் தகவையுரைக்கிறார். பெரிய புராணம் ஆராய்ச்சி என்னும் பகுதி விரிவுடையதாகும். உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி என்பது போன்ற வேற்றுமைநயம், தலைமிசை வைத்து வாழும் தலைமை நந் தலைமையாகும் என்பது போன்ற ஒற்றுமை நயம், வேதியர்போற் கடிகமழும், தாமரையும் புல்லிதழும் தயங்கி நூலும் தாங்கி என்பது போன்ற சிலேடை, பேர் பரவை பெண்மையினிற் பெரும்பரவை என்பது போன்ற ஒரு சொல்லைப் பன்முறை ஒரு செய்யுளில் வைத்தல், ஆகிய இன்ன நயங்களை எடுத்துரைக்கிறார். எழுகூற்றிருக்கை போலும் அமைப்பு உண்மை, தமது நாவினால் சொல்வதற்குத் துணியாத கொடுஞ் செய்திகளை இடர் விளையாத சொற்களால் சொல்லுதல், சில சொற் றொடர்களை இருபொருள் பயக்கும் வண்ணம் அமைத்துச் சொல்லுவோர்க்கு ஒரு பொருளும் கேட்போர்க்கு ஒரு பொருளும் தோற்றுவித்து நகை விளைத்தல். (பழைய மன்றாடி), சொல்லாற்றலினாலே நுட்பமான பொருளைக் குறித்தல் (சிந்தையால் தொழுது சொன்னான், செல்கதிக் கணியனானான்). பின்வரும் செய்திக்குத் தோற்றுவாயாக முன்னரே குறிப்பு மொழியமைத்து உசாவுணர்ச்சி எழுப்புதல் (பிழைக்கு நெறி தமக்குதவப் பெண் கொடியைப் பெற்றெடுத்தார்) என்ப வற்றை எடுத்துரைத்துக் காவிய நயந்துய்க்கச் செய்கிறார். பெரிய புராணத்துக் காணும் உவமைகளைப் பகுத்துப் பல திறமாக ஆய்கிறார். உவமை, எதிர்மறை உவமை, இயற்கை உவமை, கடவுள் நெறிச் சார்பான உவமை, மெய்ப்பொருள் உவமை என்பவை சில. அவற்றுட் சில: வெங்கட் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும் பைங்கட் குறுநரியே போல்வான் - ஏனாதி 10 கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன மன்னு வான்மிசை வானவிற் போலுமால் - திருநாட்டுச் 19 பூசு நீறு போல் உள்ளம் புனிதர்கள் - திருக்கூட்டம் 6 குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க - இளையான் பெரிய புராணத்துள் திருக்குறளாட்சி பெற்றுள்ள வகைகளையும் ஆய்கிறார் கா. சு. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றமர்ந்திருந்தார் காதலினால் - ஏயர்கோன் 267 ஏதிலார் போல நோக்கி - திருநீல 7 குற்றமாகத் தோன்றுவனவற்றைக் குற்றமற்ற என விலக்குதற் பொருட்டு அழகிய உவமைகள் அமைப்பதில் திறத்தர் சேக்கிழார் என்பதை, வாயின்மஞ் சனநீர் தன்னை, விளைத்த அன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார் என்பது போன்றவற்றால் சுட்டுகிறார். மூவர் திருப் பதிகங்கள் பாடிய செய்தியைக் கூறுமிடத்துச் சில இடங்களில் திருப் பதிக முதற்குறிப்பையும், சில இடங்களில் முடிபினையும் விளக்கியும், சில இடங்களில் இரண்டினையும் அமைத்தும், திருப் பதிகக் கருத்தினைச் சில இடங்களில் விளக்கி இடை நின்ற சொற்றொடர்கள் அமைத்தும், பிற இடங்களில் திருப் பதிகக் கருத்தினை விளக்கியும் சேக்கிழார் திருப்பதிகங்கட்குத் தோற்றுவாய் அமைத்தமையைச் சான்றுகளுடன் விளக்குகிறார். தேவாரச் சொல்லாட்சிகள், செந்தமிழ்ப் பெருமை, ஒன்பான் சுவைக்குரிய மெய்ப்பாட்டு நிலைகள், குடும்பத்துடன் திருத்தொண்டில் ஈடுபட்டோர் சிறப்பியல், அநபாய சோழன் பெருமை, மகளிர் முடிமுதல் அடியீறாகிய வண்ணனை நயம், ஆடவர் வீரச் சிறப்பு, இயற்கை எழில், ஐந்திணை வளம் - இன்னவற்றை யெல்லாம் தனித் தனியே ஆய்ந்துரைக்கிறார். இவற்றுள் சில குறிப்புகள். தருஞாலம் அளந்த மேன்மைத், தெய்வத் தமிழ் - மூர்த்தி 3 தலைச்சங்கப் புலவனார் தம்முன் - திருஞான 662 காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்துமேல் கதுவ - எறிபத்தர் 24 வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி விழ - கண்ணப்ப 170 அன்புறு புணர்ச்சி தன்மை அயலறி யாமை வாழ்ந்தார் - திருநீல 8 அம்புய மலராள் மார்பன் அநபாயன் என்னும் சீர்த்திச் செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்த தன்றே தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் - மனநிதி 8 கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட மருங்குவளைக் கதிர்ச் செந்நெல் வயப்புரவி முகங்காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட வினைஓரார்ப் பொலி பிறங்க நெருங்கியச துரங்கபல நிகர்ப்பனவாம் நிறைமருதம் பெரிய புராணப் பாவிக ஆய்வு செய்வார்க்குப் பயன் மிக்க வழிகாட்டியாகவும், வரைபடம் போலவும் இப்பகுதி அமைகின்றது. மெய்கண்டாரும் சிவஞான போதமும் இந்நூல் மணிவாசக மன்ற வெளியீடாக 1932 இல் (ஆங்கீரச ஐப்பசி) வெளி வந்தது. திருவெண்ணெய் நல்லூர், மெய்கண்டார் அருளிய சிவஞான போத ஆய்வு நூல் வெளியீட்டுக்கு அவ் வெண்ணெய் நல்லூரினரும் சைவ சித்தாந்தப் பேரவை நடாத்தியவருமாகிய சின்னசாமி என்பார் பொருளுதவி புரிந்து உரிமையுரை யேற்றுள்ளார். சின்னசாமி சிரேட்டப் பெயரார்க்குப் பதியியை பானும் பல்லாற் றானும் இந்நூல் பெரிதும் ஏற்புடைத் தாமே என்பது உரிமையுரைப் பாடலின் இறுதி மூன்றடிகள். முன்னுரையில் நூல் இயலுமாற்றை விளக்குகிறார். இச் சிறு நூலானது. மெய்கண்ட தேவநாயனாரது வரலாற்றினை ஆராய்ச்சி முறையாக இயம்புகின்றது. சிவஞான போதம் தமிழிலே முதல் நூலாக அமைந்திருப்பதற்குரிய காரணங்கள் இதனுள் தொகுத்துரைக்கப் பட்டுள்ளன. சிவஞான போதத்திற்கு ஒப்பற்ற பேருரையாக விளங்குஞ் சிவஞான பாடியத்தின் சாரமானது சுருக்கமாக இதனுள் விளக்கப்பட்டிருக்கிறது. சிவ ஞான போதத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரத்திற்கும், அதன் கருத்திற்கும் அதன் அதிகரணங்களிலுள்ள வாக்கியம் ஏது உதாரணச் செய்யுள் என்பவற்றிற்குந் தெளிவான பொழிப்புரையும், குறிப்புரையும் சிவஞான போதம் தோன்றிய திருவெண்ணெய் நல்லூரின் சிறப்பும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அது. நூலின் முகப்பிலேயே திருவெண்ணெய்நல்லூரின் பெருமை, திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திலுள்ள கல் வெட்டுகள், திருவெண்ணெய்நல்லூர்த் திருப்புகழ், திரு வெண்ணெய்க் கலம்பகம், மெய்கண்ட தேவர் கல்வெட்டும் காலமும் என்பன இடம் பெற்றுள்ள திருவெண்ணெய் நல்லூரின் பெருமை, திரு. தி. கு. கி. நாராயணசாமி நாயுடு அவர்களுதவிய குறிப்பைக் கொண்டு திரு. ம. பாலசுப்பிர மணிய முதலியாரால் எழுதப்பட்டது என்னும் குறிப்புள்ளது. மெய்கண்டார் வரலாறு பத்துப் பக்கங்களால் இயல்கின்றது. திருமுனைப்பாடி நாட்டுத் திருப்பெண்ணாகடத்து அச்சுத களப்பாளர் மைந்தராக மெய்கண்டார். தோன்றியதும், அவருக்கு சுவேதவனப் பெருமாள் என்று பிள்ளைப் பெயர் இடப்பட்டதும், பரஞ்சோதியார் தம் குருவராகிய சத்திய ஞான தரிசனிகளின் பெயரையே மெய்கண்டார் எனச் சூட்டி யழைத்ததும், சிவஞான போதம் இயற்றியதும் ஆகிய செய்திகளைத் தொகுத்துரைக்கிறார். சிவஞான போதம் தமிழ் நூலே என்பதை ஒவ்வொரு நூற்பாவாக எடுத்துக்கொண்டு நிறுவுகிறார். இவ்வாய்வு 17 பக்கங்களில் நடக்கின்றது. தமிழ்ச் சிவஞான போத முதற் சூத்திரத்தையும் வடமொழிச் சிவஞான போத முதற் சூத்திரத்தையும் ஒத்துப் பார்ப்பின், தமிழ்ச் சூத்திரத்தின் பொருளைச் செவ்விதற்றெரிக்கும் ஆற்றல் வடமொழிச் சூத்திரத்திற்கில்லை என்பது புலனாகும் என்கிறார். உலகம் ஒடுங்கும் என்பதற்கும், உயிர்களுக்கு ஆணவமல பரியாகத்தின் பொருட்டு மீளவும் அது தோன்றும் என்பதற்கும் மலத்துளதாம் என்ற ஒரு சொற்றொடர் அமைத்த திறமை ஆசிரியர் மெய்கண்டார்க்கே உரியது என்கிறார். மெய்கண்டாரது நூலை மொழி பெயர்ப்பு என்பது போப்பையர் திருவாசக மொழி பெயர்ப்பைக் கொண்டு மாணிக்க வாசகர் திருவாசகத்தைத் தமிழாக்கம் செய்தார் என்பது போன்றதாம் என்று முடிக்கிறார். ஏவம் வித்யாத் சிவஞான போதே சைவார்த்த நிர்ணயம் என்னும் வடமொழிச் சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் நூற்பாவின் தொடர்க்குத் தமிழ்ச் சிவஞான போதத்தில் மொழி பெயர்ப்பு இல்லாமை ஒன்றே அது மொழி பெயர்ப்பு நூலன்று; முதல் நூல் என்பதைத் தெளிவிக்கும் என்கிறார். அன்றியும், அதுவே வடமொழி நூல் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பதன் சான்றுமாம் என்பதைத் தேர்ந்துரைக்கிறார். சிவஞான போதத்தையும் சிவஞான சித்தியாரையும் கொண்டு சிவப்பிரகாசம் எழுந்தமையை அதன் பதினொன்றாம் பாட்டால் உறுதிப்படுத்தும் ஆசிரியர், சிவாக்கிர யோகிகள் காலந்தொட்டே சிவஞான போதம் மொழி பெயர்ப்பென்ற பொய்க் கொள்கை உண்டாயிற்றென்றும் கூறுகிறார். அடுத்துச் சிவஞான போத மூலத்தை அமைத்து, சிவ ஞான பாடியத்தின் சாரத்தை விரித்தெழுதுகிறார் (30-94). கல்லால் நிழல்மலை என்னும் மங்கல வாழ்த்துச் செய்யுளே, நூலானது பன்னிரண்டு சூத்திரமுடைய தென்றும் முதல் ஆறு சூத்திரம் பொதுவும் பின்னாறு சூத்திரம் சிறப்புமாம் என்றும் மும்மூன்று சூத்திரங்கள் ஒவ்வோர் இயலாக அமைந்து முறையே முப்பொருள் உண்மை அவற்றின் இலக்கணம் சாதனம் பயன் என்பவற்றை உணர்த்துமென்றும் குறிக்குமாற்றினையும் பாடிய முடையார் காட்டியது போல நுட்பமாகப் பிறர் எவரும் காட்ட அரிதாகும் எனப் பாராட்டுகிறார். சிவஞான போத அவையடக்கத்தைப் பற்றி ஆயும் கா. R., இச்செய்யுளைப் போல உண்மை நவிலும் அவையடக்கம் வேறு யாதும் இல்லை என்கிறார். புறப்புறச் சமயக் கொள்கைகளை நிரலே எடுத்துரைக்கும் ஆசிரியர் நிறைவில், இச்சமயங்கள் எல்லாம் உலகம் உண்டு, உலகமும் உயிர்களும் உள்ளன, கடவுளும் உயிர்களும் உலகமும் உள்ளன, கடவுளும் உயிரும் முடிவில் ஒரு பொருளே, இரண்டும் முடிவில் சமமாவனவே என்ற கொள்கைகளே கொள்கைகளாக உடையன. வினையுண்டு - மாயையுண்டு - மூலமலமுண்டு - என்பதிலும் சமயிகள் வெவ்வேறு கொள்கையுடையவர்களே என்கிறார். பின்னர்ச் சைவ சித்தாந்தக் கொள்கையைச் சிவஞான போதத்தின் வழியே முதல் நூற்பா தொடங்கி விரித்துரைக்கிறார். சூத்திரக் கருத்துரைத்து, அதற்கு விளக்கம் தந்து, ஒவ்வோர் அதிகரணக் கருத்துமுரைத்து விளக்கிச் செல்கிறார். முதற் சூத்திரத்தால் பதியுண்மையும், இரண்டாம் சூத்திரத்தால் பாகவுண்மையும், மூன்றாம் சூத்திரத்தால் பசு வுண்மையும் கூறப்பட்டதாகலின் இம்மூன்று சூத்திரத்தையும் பிரமாண இயலென்ப என்கிறார். இவ்வாறே நான்காம் சூத்திரத்திலே உயிரின் இலக்கணமும், ஐந்தாம் சூத்திரத்திலே பாச இலக்கணமும், ஆறாவதில் பதியிலக்கணமும் போந்தமையின் இம்மூன்றும் இலக்கண இயல் என்னப்படும் என்கிறார். சிவஞான போதப் பொழிப்புரை என்னும் பகுதியில் உரையும் குறிப்புமாக உரைத்துச் செல்கிறார். கருத்துக் குறிப்பு உரைநடை என்னும் தலைப்பிலும் எழுதுகிறார். கருத்துப் பொருளும், நூற்பாப் பொருளும் 1. ஒடுங்குதற்குக் காரணமாயுள்ள முதற்கடவுளையே இவ்வுலகம் தனது தலைவனாக உடையது. அவன், அவள், அது என்று பகுக்கப்படும் உலகத் தொகுதி தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய மூன்று தொழிலுடைமையால் அது, ஒருவன் ஆற்றலால் தோற்றுவிக்கப் பட்டு நிலைபெறுவதேயாம். அதுதான் ஒடுங்குதற்குக் காரண மான கடவுளாலேயே தோன்றுவது. ஆணவமலம் தீர்ந்து ஒடுங்காமையால் அது ஒடுங்கியதோடு நில்லாது மீளவும் உண்டாவது. அதற்கு ஒடுக்கமாய் முடிவைச் செய்யும், அந்தக் கடவுளே ஆதியுமாகின்றான் எனத் தருக்க நூலறிந்தோர் கூறுவர். 2. மறு பிறவி வரும் வகை உணர்த்துதல் கருதப்பட்டது. இறைவன் கலப்பினால் உயிர்களேயாயும் தன்னியல்பால் தானேயாயும் உயிர்களுடன் நின்று அறிவித்தலால் உடனாயும் நின்று, கட்டளை என்ற தனது ஞானசக்தியால் இருவினைப் பயனுக்கேற்ப இறத்தல், பிறத்தல்களை உயிர்கள் மேற் கொள்ளும்படி அந்த ஞானசக்தியோடு பிரிவில்லாது நிற்பன. 1. அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர். 2. அவையே தானே ஆயிரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே. 3. உயிருண்மையும் விளக்கமும் உணர்த்துதல் கருதியது. நான் இதுவல்ல, அதுவல்ல என்று கூறுவதொன்று உண்டாகலானும், எனதுடல் என உடலைக் கூறுவதொன்று உண்டாகலானும், ஐம்பொறிகளையும் அவற்றின் நீக்கத்தையும் அறியும் அறிவுடையதொன்று இருத்தலானும், துயின்றபோது உணவு செயல் இல்லாததொன்று இருந்தலானும், ஒன்றை உணரச் செய்யுங்காலை உணர்வதொன்று இருத்தலானும், மாயையால் ஆகிய கருவியாகிய உடம்பினுள் உயிரென்பது உடம்பின் வேறாயுள்ளது. 4. இதுவும் அது. ஆன்மா அகக்கருவிகளாய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அவைகளில் ஒன்றல்ல. அரசனுக்கு அமைச்சன் போல அவற்றைத் துணையாகக் கொண்டு உள்ளது ஆன்மா. தன்னோடு எப்போதும் உள்ள ஆணவமலத்தினால் பொருள்களைத் தானே அறியமாட்டா. அவற்றின் துணை கொண்டு அறிந்து ஐந்து வகையான உணர்வெல்லைகளை உடையது ஆன்மா. 3. உளதுஇல தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா. 4. அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்றவை சந்தித்த தான்மா சகசமலத் துணராது அமைச்சர சேய்ப்ப நின்றவஞ் சவத்தைத்தே. 5. சுட்டுநிலையில் இறைவன் உயிர்க்குச் செய்யும் உதவியை உணர்த்துதல் கருதியது. மேலே கூறிய உயிராலே மெய், வாய், கண், மூக்கு, செவி என்று ஐந்து பொறிகளும் தத்தம் விடயங்களை அளவிட்டு அறிந்தாலும், தம்மையும், தம்மைச் செலுத்தும் உயிரையும் அறியமாட்டா. அப்பொறிகள் போல உயிர்களும், தம்மையும், தமது அறிவிற்கு விளக்கம் தருபவனாகிய தனி முதல்வனது திருவருட் சத்தியையும் அறியமாட்டா. உயிர்கள் முதல்வனாய் அறிதல், காந்தத்தின் முன் வைத்த இரும்பு போல முதல்வன் சந்நிதிமாத்திரையில் நிகழும். ஆதலால் முதல்வன் விகாரப் பட்டான். 6. நிலைப்பொருள் இது, நிலையாத பொருளிது என அறிவித்தல் கருதியது. இறைவன் அறியப்படும் இயல்பினன் எனின், உலகப் பொருள் போல நிலையிலாப் பொருளாவான். அவன் எவ் வாற்றானும் அறியப்படாதவன் எனின், அவன் சூனியமாவன். ஆதலின் இரண்டு தன்மையுமின்றி உயிரறிவால் அறியப் படாமையும் பதியறிவால் அறியப் படுதலுமாகிய இரண்டு வகையாலும் இறைவன் சித்தாகிய சத்தாய் உள்ளவனெனக் கூறுவர் மெய்யில் நிலைபெற்று உயர்ந்தோர். 5. விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாந்தம் உணர்வின் தமியருள் காந்தங் கண்ட பசாசத் தவையே. 6. உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென இரண்டு வகையின் இசைக்குமன் உலகே. 7. சத்திற்கும் அசத்திற்கும் வேறாகச் சதசத் துண்மை அறிவித்தல் கருதியது. அசத்தாகிய உலகப் பொருளெல்லாம், சத்தாகிய சிவத்தின் முன் பாழாம். ஆகலின், சத்து அசத்தை அறிதல் செய்யாது. அசத்தாகிய உலகம் அறிவிலதாகலின் ஒன்றையும் அறியும் தன்மையுடையதன்று. சத்தையும் அசத்தையும் அறியும் இரு வகைத் தன்மையுடையதாய்ச் சத்தேயாகவும் அசத்தேயாகவும் இல்லாத சதசத்தாகி உயிர் உளது. 8. ஞானத்தினை உணருமுறை. உயிர்களது தவமிகுதியால் அவற்றிற்கு உள் நின்று உணர்த்திய முதல்வன் குருவடிவாய் எழுந்தருளி வந்து நீ ஐம்பொறிகளாய் வேடருள் அகப்பட்டு வளர்ந்து நின் பெருந் தன்மையை மறந்தாய் என்று உண்மை அறிவிக்க அறிந்து ஐம்புல வேடரை விட்டு நீங்கி இறைவனோடு அந்நியமாகாத தன்மையில் நிலைபெற்று அவன் திருவடிகளை அணையும் என்றவாறு. 7. யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே அறியாது அசத்தில் தறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா. 8. ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே. 9. வாசனாமலம் தாக்காது உயிரினைப் புனிதமாக்குவதை உணர்த்துதல் கருதியது. குறைவான அறிவாகிய பாச ஞானத்தால் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி ஞானமாகிய கண்ணினால், அறிவின் கண்ணே ஆய்ந்தறிக. ஒருவரும் ஏறிச் செலுத்தாத விரைவுடைய பேய்த்தேராகிய கானல் போலப் பாசக் கூட்டம் நீங்கி யொழிய இறை ஞானமானது பிறவித் துயராகிய வெப்பத்திற்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அக்காட்சி சலியாமைப் பொருட்டு, அப்பொருள் பயக்கும் திருவைந்தெழுத்தை விதிப்படி தியானிக்க. 10. முற்றிலும் பாசநீக்கம் பண்ணும் வகையுணர்த்துவதைக் கருதியது. இத்சூத்திரம் திருவருட் பேற்றினை உணர்த்துவது. உயிர்கள் கட்டுற்ற காலத்திலே, இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்து நின்ற அம்முறையே, உயிர் முதல்வனோடு ஒற்றித்து நின்று தானென வேறு காணப்படுமாறில்லாமல், இறைவன் கட்டளையில் வழுவாது நிற்கவே ஆணவமலம்மாயை என்பவற்றோடு கொடிய வினையும் இல்லையாய் முடியும். 9. ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்து னத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே. 10. அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே. 11. பரமசிவனால் விளையும் சிவானந்தானுபவம் குறித்தல் கருதியது. காட்டக் காணும் இயல்புடைய கண்ணுக்கு உருவத்தைக் காட்டித் தானும் காண்கின்ற உயிர் போல, உயிர் பொருள்களை அறியும்படி முதல்வன், அதனோடு இயைந்து நின்று அறிவித்து அறிந்து வருதலால், அவ்வுபகாரத்தை மறவாது கடைப்பிடித் துச் செய்யும் அன்பாலே முதல்வன் திருவடியாகிய சிவானந்த அனுபவத்தை எய்தும். 12. சீவன்முத்தர் உலக நிலை கூறியது. சீவன்முத்தன் (உடம்பில் வீடெய்தியவன்) செந்தாமரை மலர் போல விரிந்து விளங்கிய முதல்வனது வலிய திருவடி களை அணைய ஒட்டாது (மறத்தலைச் செய்விக்கும்) மும்மல அழுக்கை ஞான நீராற் கழுவி, மறவா அன்பு செய்யும் அறிஞ ரோடு கலந்து, மலமயக்கம் நீங்க அன்பு மிக்க அவரது திரு வேடத்தையும் சிவன் கோயிலையும் முதல்வன் எனவே கண்டு வழிபடுவன். 11. காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே 12. செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே. மெய்கண்டாரும் சிவஞானபோதமும் என்னும் இந் நூலால், மெய்கண்டார் வரலாற்றை அறியச் செய்வதுடன் சிவஞான பாடியத்தை எளிதில் கற்றுணரச் செய்யும் வகையையும் கொள்கிறார் கா. சு. இவற்றுடன், பொழிப்புரை, கருத்துரை, குறிப்புரை இன்னன தாமே வரைந்து. மிக எளிமைப்படுத்தவும் முயன்றுள்ளார். ஒரு நூல் கற்பார் நிலைக்கேற்ப, எவ்வெவ் வகையான் எல்லாம் உரை கொண்டு பயன்படல் வேண்டும் என்பதற்குச் சான்றாக இந்நூல் அமைகின்றது. சிவஞான போதச் சூர்ணிக் கொத்து, சிவஞான போதம் பற்றிப் பிற்காலத்தவர் செய்த செய்யுள்கள், திருவெண்ணெய் நல்லூரின் பெருமை இன்னவாகிய பின் முன் இணைப்புகள் ஓராய்வு தொடர்பான தொடர்பாய்வுக்குப் பெரிதும் உதவுவனவாம். பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் இந்நூல் கழகத்தின் 622ஆம் வெளியீடாக 1958 இல் வெளிவந்தாலும், அதன் முதற்பதிப்பு மணிவாசக மன்ற வெளியீடாக 1930 இல் வெளிவந்ததாகும். சைவத் திருமுறைகளுள் பதினோராந் திருமுறையுட் காணப்படும் பட்டினத்தடிகள் திருவருட் பாடல்கள் இணையற்ற நுண்பொருட் செறிவும் செம்மொழி வளமும் வாய்க்கப் பெற்றன. அவற்றைத் தமிழுலகிற் பலர் கற்றுப் பயன் துய்யாமை பற்றி அவற்றின் விழுமிய கருத்துக்களை ஒருவாறு தொகுத் துரைப்பான் இந்நூல் வெளியிடப்பட்டது. பதினோராந் திருமுறையில் சேர்க்கப்படாது அடிகள் பெயரால் வழங்கும் பிற்காலத்துச் செய்யுட்கள் அவரால் இயற்றப் பட்டனவாகத் தெரியவில்லை. எனினும் அவற்றுட் சிறந்தன சில இந்நூலுட் குறிக்கப்பட்டுள்ளன. பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் இந்நூலின்கண் தெள்ளிதின் ஆராயப் பட்டுள்ளன என்னும் குறிப்புகளை முன்னுரையில் கா. சு. குறிப்பிடுகிறார். வரலாறு, வரலாற்று ஆராய்ச்சி, பட்டினத்தடிகள் நூற் கருத்து, நிலையாமை, அடியார் பெருமை, சொன்னயம் என்னும் ஆறு தலைப்புகளில் நூல் இயல்கின்றது. பிற்காலத்துப் பட்டினத்தார், பட்டினத்தார் பாடல் திரட்டு என்பவை இணைக்கப்பட்டுள்ளன. பெருஞ் செல்வத்தில் திகழ்ந்தோர் பெருந்துறவு கடைப் பிடித்தமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவார் பட்டினத்தடிகளே என்னும் கா. சு. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறக்கை அரிதரிது என்னும் தாயுமானார் வாக்கை எடுத்துக் காட்டி நூலைத் தொடங்குகிறார். பட்டினத்தாரின் தனிப்பெருஞ் சிறப்புகளையும், தனிப் பேராற்றல்களையும் பிழிந்து வடித்துத் தருகிறார் கா. சு. முழு முதற் கடவுள் வரம்பில் ஆற்றலையும், அவ்வவர் பொருளால் நிற்கும் பெருந் தன்மையையும், சைவ சமயத்தின் விரிந்த நோக்கத்தையும், சிவனது திருவடிவத்தையும், உலக மாந்தர் இயல்பையும், யாக்கை நிலையாமையையும், பிறவித் துன்பத்தையும் விழுமிய முறையில் செவ்விதின் விளக்குவதிலும், உவமை நயத்தையும் ஆசிரியப் பாவின் பலனையும் உலகர்க் கறிவுறுத்துவதிலும் இணையற்ற சிறப்பு வாய்ந்தவர் பட்டினத்தடிகள். அவர் பெருஞ்செல்வர், பெருவள்ளல், பெருங்கல்வியாளர், பெரும்பாவலர், பெருநாவலர், பெரு மெய்யுணர்ந்தவர், பெருந்துறவி, பேரருள் பெற்றவர், பேரின்பம் நுகர்ந்தவர், சிற்றின்பமறிந்தவர், சிற்றுயிர்க் கிரங்கும் சீராளர், சித்தம் சிவமாகச் செய்வன தவமாகப் பெற்றவர். பட்டினத்தடிகள் பாடல்கள் பதினோராம் திருமுறையில் உண்மையாலும், அதனை வகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள் ஆதலாலும், அவர் காலம் அபயகுலசேகரசோழன் (கி. பி. 985) ஆதலாலும் அடிகள் அக்காலத்திற்கு முற்பட்டவர் என்பது தெளிவு. அக்காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அருணகிரியார் காலம் 15 ஆம் நூற்றாண்டு. இவ்வாறாகவும் பட்டினத்தடிகளின் மைந்தர் அருணகிரியார் என்று வழங்கும் கதையும், அக்கதை புனைவின் சிறுமையும் ஒதுக்கத்தக்கன. பிற்காலத்தில் வாழ்ந்த பட்டினத்தார் ஒருவர் வரலாற்றை, அடிகளார் வரலாற்றொடு பின்னிப் பிணைத்து விட்டமையால் உண்டாகிய கேடே இஃதென்கிறார். அடிகளின் தந்தையார் சிவநேசர், தாயார் ஞானகலாம்பிகை, அடிகளின் குழந்தைப் பெயர் திருவெண்காடர். அடிகளார்க்கு ஐந்தாம் அகவை நடக்கும் போதே தந்தையாரை இழந்தார். கற்பன கற்று அருட்குருவரை நாடிச் சிவபூஜை மேற்கொண்டார். திருவெண்காட்டிலே ஒரு துறவோர் தந்த செப்பினுள் இருந்த பெருமானை வழிபட்டார். இறைவன் அருளாற் செல்வம் கிடைத்தது. சிவகலை என்பாரை மணந்து அறம் பல புரிந்து வாழ்ந்தார். மருதூர்ப் பெருமான் அருளால் ஒரு மகன் பிறந்தார். அவர்க்கு மருதவாணர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். மருதவாணர் கல்வியில் சிறந்து வளர்ந்தார். கப்பல் வணிகத்திற்குச் செல்ல விழைந்து வேண்டினார். கலமேறிச் சென்ற அவர், ஒரு தீவையடைந்து ஆங்குப் பொருள் தேடி அறப்பணிகளே புரிந்தார். அவரொடு வந்த வணிகர்கள் பிற நாடு சென்று பெரும் பொருளுடன் திரும்பினார். மருதவாணர் எருவும், அவலுமே கப்பலில் நிரப்பிக்கொண்டு வந்தார். கடலில் புயல் கிளம்பிப் பன்னாள் அலைக்கழிக்க எருவால் நெருப்பூட்டி, அவலுண்டு அனைவரும் மீண்டனர். அவரை எதிர்நோக்கியிருந்த பட்டினத்தாரிடம் மதிவாணர் மனநிலை திரியப் பெற்றனர் என உடன் வந்தோர் கூறினர். மருதவாணர் இல்லத்திற்குச் சென்று, உணவு கொண்டு, அன்னையாரிடம் ஒரு பெட்டியைத் தந்து அடிகளிடம் தருமாறு கூறி வெளியே சென்றார். அடிகள் அப்பெட்டியை வாங்கித் திறந்து பார்க்க அதில், காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்னும் குறிப்பும் காதற்ற ஊசியும் இருக்கக் கண்டார். அதனைக் கண்ட அளவில் துறவு கொண்டார் அடிகளார். தம் கணக்கர் சேந்தனாரை நோக்கி, செல்வ மெல்லாம் பிறர் கொள்ளத் திறந்து விடுக என ஆணையிட்டார். அரசன் அடிகளை அடுத்து துறவு மேற்கொண்டதேன் என வினவ நீர் நிற்க நாம் இருக்க என்றார். அவர் தம் துறவையும், இரந்துண் வாழ்வையும் வெறுத்த உறவினர் நஞ்சு கலந்த அப்பம் தந்தனர். தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்று வீட்டுக் கூரையில் சொருக வீடு எரிந்தது. பின்னர் அடிகள் திருவெண்காடு சென்றார். தம் அன்னையார் மறைந்த செய்தியறிந்து வந்த அவர்க்குக் கடனாற்றினார். பின்னர் தமிழ்நாட்டுத் திருக் கோயில் உலா மேற் கொண்டார்; அதனை முடித்து வடநாட்டுக் கோயில் உலா மேற்கொண்ட அவர், மாகாளம் என்னும் இடத்தில் நிட்டையில் இருக்க, அவர் கழுத்தில் திருடர்கள் சார்த்திய மாலை அரண்மனையில் இருந்து களவு போனதாக இருந்தமையால் கழுவில் ஏற்ற ஏற்பாடு செய்ய, அக்கழுவே எரிந்தது. அதனால் பத்ரகிரி என்னும் அரசன் தெளிவுற்றுத் துறவெய்த அடிகளின் ஆணைப்படி திருவிடைமருதூர்க்கு வந்து திருக்கோயில் மேலைவாயிலில் தங்கி இரந்துண்டு, எஞ்சியதை ஒரு நாய்க்கு இட்டிருந்தார். அடிகளார் அக்கோயில் கீழை வாயிலில் இருக்க அவரிடம் இரந்து வந்த துறவோரிடம் மேலை வாயிலில் ஒரு குடும்பி உள்ளான், அவரிடம் போக என, அதனை அறிந்த பத்ரகிரியார் அவ்வோட்டை நாய் மேல் எறிந்து உடைக்க நாயும் இறந்தது. பின்னர் அடிகளார் ஒற்றியூர்க்குச் சென்று தவநெறியில் நின்றார். ஒரு நாள் குழந்தையர்க்கு விளையாட்டுக் காட்டுவதாகச் சொல்லி ஒரு குழியுள் புகுந்து, மணலைத் தள்ளி மூடுமாறு செய்தார். அதிலே அடங்கி இலிங்க வடிவுற்றார். இக்கதையை ஆய்ந்து வரலாற்று ஆராய்ச்சி என்னும் பகுதியில் சில குறிப்புகளைச் சுட்டுகிறார் கா. சு. இம்மை, மறுமைப் பயனைக் கருதாமல் இறைவன்பால் அன்பு செலுத்தும் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்க்கே இயல்வதாகலின் அடிகள் அத்தகையர் என்கிறார். அடிகள் அருட் செல்வமும், பொருட் செல்வமும் ஒருங்குடையாராய் இல்லறம் நடாத்தினமையால் உலகத்தே இல்லற முறையைத் தமது வாழ்க்கையால் இனிதறிவுறுத்திய பெருமகனார் என்றும், துறவிலும் நின்றவராகலின் இருபெரு நிலையையும் வையகத்தார்க்கு வாக்காலும், வாழ்க்கையாலும் வலியுறுத்தின தனிப்பெருஞ் சால்பினர் என்று கூறுகிறார். மருதீசரே மருதவாணராகத் தோன்றினார் என்று கூறப்படும் கதையைக் கருதும் கா. சு, அப்பெயரே மருதீசர் அவதாரம் என்னும் கதை கிளைக்க இடமாகியிருக்கலாம் என்கிறார். தம் செல்வத்தைத் தக்காங்கு அறச்செயலில் செல விடத் தக்கார் இல்லாமையால் யாவர்க்கும் பயன் படும்படி அள்ளிக் கொள்ள அடிகள் ஏவினர் போலும் என்கிறார். நஞ்சப்பத்தின் தீமை எவ்வுயிர்க்கும் கேடு செய்யாது வீட்டை மட்டும் எரித்தமை அடிகளின் அருட்பெருக்கே என்கிறார். கழுமரம் எரிவித்தது இறைவன் அடிகளாரைக் கொண்டு பத்திரகிரியாரைப் பயன்படுத்தக் கருதிய திருவிளையாட்டு என்கிறார். அடிகள் திருவொற்றியூரிற் சமாதியுற்ற வகை வியப்பானது. இவ்வாறு எப்பெரியாரும் தம் முடிவினைத் தேடிக் கொண்டதாகத் தெரியவில்லை என்கிறார். இத்தகு சமாதி நிலையே கோயிலமைத்து வணங்கத் தக்கது; பிறரைச் சமாதி வைத்து வணங்குதல் இறை வழிபாடும் ஆகாது; அடியர் வழிபாடும் ஆகாது என்கிறார். இவ்வாய்வின் நிறைவிலே, சமாதியில் சிவலிங்க வழிபாடு உண்மையின் சிவலிங்க வழிபாடனைத்தும் சமாதியின் பாற்படு மென்று குழறுவோரது பெரியதோர் பிழையுரையால் உலகம் மயங்குதல் கூடாது. சைவநூல்களிலே சிவலிங்கத்தை நாட்டு மிடத்தை ஆழ அகழ்ந்து எலும்பு முதலிய எவ்வித அழுக்குப் பொருளையும் நீக்கித் தூயதாக்க வேண்டுமென்று விதித்தமை தெளிக என்கிறார். பட்டினத்தடிகள் நூற் கருத்து என்பது விரிவானது (41-65). அவ்வாறே நிலையாமை பற்றி ஆயவும் (66-89) பிறவும் நூற் கருத்துகளே. நூற்கருத்துகளின் சுருக்கத் திரட்டு வருமாறு: இறைவன் நிற்பனவும் நடப்பனவுமாய உலகனைத்தையும் தனக்குத் திருவடிவமாகக் கொண்டு அவற்றிற்கெல்லாம் ஆதாரமாய் நிற்கும் பெருநிலையன் (4). அறுவகைச் சமயத்தோர்க்கும் அற்றவர் பொருளாய் நிற்கும் இறைவன் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைய தாகிய உயிர் போலப் பளிங்கினை ஒப்பானவன் (42). இறைவன் எல்லாப் பொருளோடும் இரண்டறக் கலந்து நின்று எல்லாச் செயலும் தனது நிறைவினுள் அடங்குமாறு பணித்திடினும் தான் அவற்றினும் வேறாய் அறிவொளியாய் இலங்கும் தன்மையன் (43). இறைவன் உயிர்கள் பொருட்டு எளிவந்தருளும் தன்மையன். (45). இறைவன் பெரியதிற் பெரியன் சிறியதிற் சிறியன். (52). இறைவன் எல்லையற்ற பேரின்பத்தை வழங்கினாலும் அதனை நுகராமை உயிர்களின் குற்றமின்றி இறைவனது பிழையாகாது. (57). கடவுள் இயற்கை அறிவுடைமையால் எல்லாவற்றிற்கும் காரணனாய், ஒப்பற்ற முதல்வனாய்ப் பிற தேவரால் அறியப்படாத ஒருவன். (58). இறைவன் சத்தியும் சிவமுமாய்ப் போகம் வீடு அருள்வான். (59). இறைவன் ஐம்புலனுக்கும் புலப்படாது இடமும் காலமும் கடந்த பொருளாதலின் உயிர்கள் தாமே அவனை அறிய முடியா. உலகத்தின் நிலையாமையைத் தம்மின் வைத்தும், பிற வாற்றானும் அடிகள் பலவிடங்களிலும் கூறுதல், பிறவித் துன்பத்தினைக் கடல் வணிகத்தின் தொடர்பான உவமைகளைக் கொண்டு விளக்குதல், எண்ணிலாப் பிறவியால் இளைப்புற்றுப் பிறப்பின்கண் தமக்கு ஏற்பட்ட வெறுப்பினை எடுத்துக்கூறி, எவ்வாற்றானும் பிறவி நீக்கம் வேண்டும் என்று இறைவன்பால் குறையிரந்து நிற்றல், இறைவன் தம் பந்தத்தை அறுத்துத் தன் சித்தத்தைச் சிவமயமாக்கித் தம் உணர்ச்சி முழுதும் திருவடியின் கண்ணே நிலை பெறச் செய்ய வேண்டுதல், திருவருள் விளக்கம் பெறுமுன் பலபடித்தாய்த் தோன்றிய உலகம் திருவருள் நோக்கம் பொருந்திய காலை பொய்யெனத் தோன்ற இறைவன் ஒருவனே மெய்யெனத் தோன்றுதல், சிவபெருமானுடைய தெய்வக் கூத்துக் காணப் பெற்று அவனது திருவடி அடைதலும், அவன் அடியார் கூட்டத்தை அணுகுதலும் ஆகிய பெறலரும் செல்வம் பெற்றமையால் தமக்கு எக்கேடு வந்தாலும் எந்நலம் வந்தாலும், வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லையாதல், தமது சிந்தையைத் தூய்மையாக்கி இறைவன் வீற்றிருக்கத் தக்க நிலையில் அமைந்து இறைவன் இறைவியுடன் அவன் இனிது வீற்றிருக்க வேண்டுமென்று குறையிரந்து கூறுதல், உயிர்கள் இறைவனுக்குத் தொல் பழமையே மீளா அடிமைகளாயிருத்தல், இறைவனை வழிபடுதற்கு மலர் கிடையாவிடத்துப் பச்சிலை உண்டு; அதுவும் நீரும் கிடையா இடத்து நெஞ்சுண்டு எனல்; உள்ளன்பே இன்றியமையாச் சாதனமேயன்றிப் பிறவல்ல எனல்; இன்னவை யெல்லாம் அடிகள் விரித்துக் கூறுதலைச் சான்றுடன் வரைகிறார். அடிகளார் தம் நெஞ்சிற்குக் கூறுவார் போன்று நிலையாமையைக் கூறும் செய்தி: ஆசையால் மயங்கி மாசடைந்த மனமே, காணப்பட்ட பொருள்கள் மறையும், உட்கொண்ட பொருள் மலமாம்; பூசப்பட்ட மணப் பொருள்கள் அழுக்காகின்றன; சேர்ந்தவை பிரியும்; நிறைந்தவை குறையும்; உயர்ந்தவை தாழும்; பிறந்தவை இறக்கும்; பெரியவை சிறியவாம். ஓரிடத்திலுள்ள ஒருபொருள் அந்த இடத்தில் தானே நிலைபெறாது; செல்வத் தொடு பிறந்தோரும், புகழொடு விளங்கினோரும், கல்வியிலே மேம்பட்டோரும், வீரத்திற் சிறந்தோரும், கொடையில் வள்ளல் களும், படைப் பயிற்சியில் வல்லாரும், குலத்தில் உயர்ந்தோரும், நலத்தில் மிகுந்தோரும், எத்தகைய எச் சிறப்புடையோரும் இறந்தோராயினர். அவர்கள் பேரும் உலகத்தில் நீடு நிற்க வில்லை. இதனால் நீ தெளிய வேண்டியது யாதெனில் உனக்கும் அக்கேடுதான் வருமென்பதே. (நான்மணி. 23). அடியார் பெருமை என்னும் பகுதியில் மெய்யன்பர் உள்ளமே இறைவனது அம்பலம் என்றும், அன்பர் பணியே, பெருஞ் செல்வத்தினும் பேரின்பம் பயக்கும் என்றும், தொண்டர் வாழ்க்கையையும், இழிந்தோர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் பெருங்கடலும் மாட்டின் குளம்படி நீரும்போலத் தோன்றுதலின், தொண்டருடைய தொண்டருக்கு அடிமை பூண்டு, அவரொடு நெடுநாட் பழகிக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் காலாற் சுட்டிய ஏவலைத் தலையேற்று, அதனால் பெறும் பயனை அடைவதல்லது வேறு பயன் யாதும் இல்லை என்பதைத் தொகுத்துரைக்கிறார். திருக்கழுமலத்தைச் சக்கரவாள மலைக்கு உவமித்து, அந் நகர மாட மாளிகையினைப் பொதியமலைக்கு ஒப்பிடும் சிலேடை, சீர்காழிக் கோபுரத்தை வேதத்திற்கும், மேடையைச் சிவாகமத்திற்கும், தேர்வாவியை இந்திரனுக்கும் உவமை கூறுமிடத்துள்ள சிலேடை இன்னவற்றைச் சொன்னயப் பகுதியில் சுட்டுகிறார். பிற்காலத்துப் பட்டினத்தார் என்னும் பகுதியில், பட்டினத்தடிகளுக்கும், பட்டினத்துப் பிள்ளையார்க்கும் உள்ள வேறு பாட்டை நுணுகி ஆய்ந்து தெளிவிக்கிறார். பதினோராம் திருமுறையில் உள்ள பாடல்கள் அனைத்தும் உயர்ந்த செவ்விய நற்றமிழ்ப் பெருமித நடையில் அமைந்துள்ளன. அவற்றின் சொல்நடை ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழ்ச் சிறுகாப்பியங்களின் மொழியமைப்பினை ஒத் திருக்கின்றது. சிறுபான்மையே வடசொற்கள் விரவியுள்ளன. நன்மொழிப் புணர்ப்பும் செய்ய சொற்செறிவும் பெருமித ஓசை நயமும் அடிகள் திருப்பாடல்களில் அமைந்திருப்பது போலப் பிறர் பாடல்களுட் காண்டல் அரிது. இரட்டுற மொழிதலின் சிறப்பும் நயமிக்க எளிய திரிபின் அமைப்பும் அவற்றுள் மிக இனிமை பயக்கும் வண்ணம் எடுத்தாளப்பட்டன. உவமை வளமும், ஒரு பொருளின் பல பகுதிகளுக்குப் பலவகை உவமைகளையும் தொடர்ச்சியாக எடுத்தாளும் திறமும், பெருந்தன்மை மிக்க விழுமிய முறையில் உண்மைக் கருத்துகளை விளக்கும் வன்மையும் அடிகட்கு அமைந்தமை போலப் பெரும் பாவலர் பலருக்கும் அமையக் கண்டிலம். பெருஞ் செல்வங்கள் அனைத்தையும், உயர்கல்விச் சீர்கள் அனைத்தையும் அருந்தவத்தின் பெரும் பயன் அனைத்தையும் ஒருங்கு நுகர்ந்த சொல்லின் செல்வராகிய இன்றமிழ் நல்லிசைப் பேரருட் புலவர் ஒருவரது அமுதச் செழும் பாடற்றொகுதிகளாக அடிகளது சிறுகாப்பியங்கள் காணப்படுகின்றன. அவற்றோடு இற்றைக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகட்குமுன் பட்டினத்துப் பிள்ளையார் என்று பெயர் வாய்ந்த சாமானியத் துறவியொருவரால் உலக வழக்கு மொழிகளைக் கொண்டு இயற்ற பட்ட பாட்டுகளையும் உடன் சேர்த்துப் பட்டினத்தடிகள் பாடலென்று பேசும் தப்பு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அறியா மாந்தர்கள் பிற் காலத்துச் சாமானியப் பாட்டுகளையே பட்டினத்தடிகள் பாடலெனத் திரியக் கொண்டு மயங்குகின்றார்கள். பிற்காலத்துப் பாட்டுகள் உலக அனுபவம் மிக்குடையராய்த் துறவிலுள்ள விருப்பத்தால் நிலையாமையையும், பிறவித் துன்பத்தையும் வற்புறுத்துகிறவராய்ப் பெண்டிரையும், யாக்கையையும் மிக இழிவுபடுத்தி உலக வழக்கு முறையிலே பழிக்கும் இயல்புடையவராய ஒருவராற் பாடப் பெற்றன. அவர் ஓரிடத்தில் விலை மாதர்பாற் செல்வதைத் தாங்கியும், பிறிதோரிடத்தில் அவர்களைத் தாக்கியும் பேசுகின்றவர். பனிக்கு மூடக் கந்தையும், பசிக்கு உண்ணப் பிச்சைச் சோறும், காம நினைவு எழுந்தால் விலை மாதரும் உண்டு என்று பேசுகின்றவர், திருவருள் பெற்ற பட்டினத்து அடிகள் ஆவரா? எனத் தேர்ச்சி மிக்க திறத்தால் பட்டினத்தார் இருவராதலைப் பகுத்துரைக்கிறார். பாடல்களுள் ஒரு பொருள் பற்றியவற்றைத் தேர்ந்து அவற்றின் அமைதி, சொல்லாட்சி, பொருளாட்சி ஆகியவற்றின் வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறார். இறுதியில் பட்டினத்தார் பாடல் திரட்டு என்னும் பகுதியில் மணிமணியான இருபது பாடல்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம் - திருவிடை மும் 14. என்பதொரு பாட்டு. ஓதல் ஓவா ஒற்றி ஊர சிறுவர்தம் செய்கையிற் படுத்து முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே. - திருவொற்றியூர் ஒருபா. 6. என்பதொரு பாட்டின் இறுதி மூன்றடி. தாயுமான சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் இந் நூலானது, தாயுமானப் பெருந்தகையாரது வாழ்க்கை வரலாற்றினை ஆராய்ச்சியுடன் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுவதுடன், அப்பெரியாரது திருவருட் பாடல் தொகுதியுட் போந்த மெய்ந்நூற் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து வகுத்து விளக்குமியல்பிற்று. கடவுள், உயிர், மனம், தத்துவம், பாசம் என்பவற்றைப் பற்றிய அடிகள் கருத்துகளை இதன்கண் தெளிவாகக் காணலாம். இறை வழிபாட்டின் இன்றியமையாமை உடற்சித்தி, உயிர்முத்திக்குத் துணையாதல், நால்வகைச் சாதன இயல்பு, பேரன்பர் திறம் முதலிய அரும் பொருள்களின் சார்பாய உண்மைகள் யாவும், இந்நூற்கண் தொகுக்கப்பட்டிருப்பதால் இதனைக் கற்போர் நற்பயன் அடைவர் என்பது என் நம்பிக்கை. இத்தகைய ஆராய்ச்சி நூல்களுள், இதுவே முதலாக வெளிவந்துளது என்று நூல் முன்னுரையில் நூலாசிரியர். கா. சு, நூற்பிழிவைத் தருகிறார். திருநெல்வேலி மணிவாசகர் மன்ற வெளியீடாக 1930 இல் வெளிவந்தது இவ்வாராய்ச்சி நூல். இவ்வெளியீட்டின் மூன்றில் ஒரு பங்குத் தொகையைத் தருமைத் திருமடத்தினரும், இருபங்குத் தொகையைத் திருநெல்வேலி ஆடைவணிகர் திரு. ந. சுப்பையாப் பிள்ளை என்பாரும் உதவியுள்ளனர். நூலுரிமையுரை அச்சுப்பையாப்பிள்ளை அவர்களுக்கே ஆக்கப்பட்டு அவர்தம் படமும் பதிக்கப் பட்டுள்ளது. நூல், தாயுமான அடிகள் வரலாறு (1-29), முதற்கண் கொண்டுளது. பின், நூலாராய்ச்சி என்பது சமயம் (29-54) கடவுள் (55-103), உயிரியல்பு (103-115). மனவியல்பு (115-137). வினையியல்பு (137-157). தத்துவவியல்பு (155-162), வழிபாட்டியல்பு (162-176), சித்தரியல்பு (176-196), அத்துவித இயல்பு (196-212), பேரன்பியல்பு (212- 227) என்னும் பத்துத் தலைப்புகளில் இயல்கின்றது. கா. சு. இயற்றிய வரலாறு ஆய்வு நூல்களுள் எல்லாம் மேற்கோள் செய்யுள்கள் மிகுதியாகக் கொண்டது இந்நூலே என்பது தெளிவாகின்றது. இதுவே முதலாக வெளி வந்துளது என அவர் கூறுவதால் இதன் வெளிப்பாட்டுப் பயன் தந்த பட்டறிவால் வரவர மேற்கோள் செய்திகளை உரைநடை யாக்கமாக்கும் போக்கை அவர்க்கு ஊட்டியது எனலாம். தாயுமான அடிகளைப் பரவிப்போற்றி உலக நலம் விளைத்த பெருமக்களைச் சிந்தித்துத் தாயுமான அடிகளின் தகவைத் திரட்டி வைக்கிறார் கா. சு. உலகம் யாவும் போற்றும் ஒரு முதல்வனின் விரிந்த பொதுத் தன்மைகளை இன்சுவை ததும்பும் அமுதப் பாடல்கள் வாயிலாக அறிவுறுத்திய பாவலரும் உயர்ந்த பேரின்ப நிலை ஒன்றினையே விழைந்து செல்லும் உயிரினியல்பைத் தம் நிலை கூறுமுகத்தாற் பன்னிய பெரியாரும், மனமாயையின நுட்ப முரைத்த மூதறிவாளரும் தாயுமான அடிகள் என்னும் சிவானு பூதிப் பெருஞ் செல்வரே ஆவர். அவர் எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் அருளொழுக்கத்தை உலகினர்க்குரைப்பதில் ஒப்பற்ற ஆர்வ முடையவர். தாழ்வெனும் தன்மையில் தலை சான்றவர். உலகினார் யாவரும் மெய்ந்நெறி கடைப் பிடித்து அகண்டாகார சிவத்தைத் துய்க்கும் வண்ணம் கூவுங் கருணை முகிலனைய பேரறிவாளர் என்பது அது. ஏறக்குறை நானூறு ஆண்டுகளுக்கு முன் திருமறைக் காட்டிலே கேடிலியப்ப பிள்ளை என்பார், இறைவன் திருத்தளி அறத்தலைவராக விளங்கினார். அவர்தம் தலைமகனார் சிவசிதம்பரம் என்பார். கேடிலியப்பர் தம் தமையனார்க்கு மகப்பேறின்மையால் சிவசிதம்பரம் மகவுரிமையால் சென்றார். அதன்பின்னர்க். கேடிலியப்பர்க்குத் தாயுமான பெருமான் அருளால் தோன்றிய புதல்வர் தாயுமானவர். நாயக்கமன்னர் வரிசையில் எட்டாம் மன்னன் முத்துக் கிருட்டிண நாயக்கர் ஒருநாள் திருமறைக் காட்டுத் திருக்கோயில் வழிபாட்டுக்கு வர, அக்கோயில் ஒழுங்கும் சிறப்பும் அவரைக் கவர அறங்காவலராக விளங்கிய கேடிலியப்பரைப் பாராட்டித் தம் அரசில் பெருங்கணக்கர் என்னும் பதவியருளினார். அம்மன்னனுக்குப் பின்வந்த முத்து வீரப்ப நாயக்கர் என்பார் காலத்தும் அப்பதவி தொடர்ந்தது. பின்னர் அவர் இயற்கை எய்த, அக்காலையில் புலமையாலும், இறைமையாலும் தந்தையினும் மிகச் சிறந்து விளங்கிய தாயுமானவரையே பெருங்கணக்கராக அமைத்துக் கொண்டார் முத்து வீரப்பர். அரசுக் கடமையில் அடிகள் செவ்விதின் ஈடுபட்டாலும், உலக நிலையாமையுணர்ந்து பேரின்பப் பேற்றையே பெரிதும் விழைந்து விளங்கினார். இளமையிலேயே இறைவன் தம்மைப் பித்துக் கொள்ளும்படி செய்தமையை உணர்ந்து உருகினார். திருவருளை அடையும் தகுதியும், பேறும் தமக்கு இல்லையோ என ஏங்கினார். இயற்கையின் வடிவில் இறைவன் திகழ்தலைக் கண்டு கண்டு கனிந்து உருகியும், கண்ணீர் பெருகியும் பாடினார். அடிகள் பணி திரிசிரபுரம் திருக்கோயில் பணியாக அமைந்து ஆங்கே தங்கினார். இந்நிலையில் தருமபுரத் திருமட அருளுரை பெற்ற மௌன குரு தேசிகர் என்பார், திரிசிரபுரத்தில் சாரமா முனிவர் மடம் என்னும் மடத்தில் தங்கித் தம்மை நாடிவந்த மாணவர்க்கு அருளுரை நல்கியிருந்தார். அவரை ஒருநாள் கண்ட அடிகள் உளங் கவரப் பெற்றார். மௌனகுரு அவர்க்குத் திருவருள் சார்த்தினார். அதுமுதல் சித்தாந்த நூல் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கினையும் மேற்கொண்டு விளங்கினார். அக்காலத்தும், எக்காலத்தும் அவர் பாடிய பாடல்களை அவர்தம் சிற்றன்னை புதல்வராய அருளையப் பிள்ளை என்பார் எழுதிப் பாதுகாத்து வந்தார். மன்னன் 1625 - இல் உலகு நீத்தான். அரசு அரசியின் ஆட்சிக்கு வந்தது. அவர் தாயுமான அடிகளை அழைத்துப் பெரிய கணக்கு வேலையைப் பார்க்க வேண்டினார். அதனை ஒருவாறிணங்கி ஏற்றனர். ஆனால், அரசியார் உட்கோள் தாயு மானார்க்கு ஒவ்வாமையால் ஊர் துறந்து, நல்லூர் எய்தினர். புறப்பட்ட விரைவில் பூசைப் பெட்டியையும் எடுத்து வந்திலர். அதனை, அருளையர் எடுத்துக் கொணர்ந்த பின்னரே, வழி பாடாற்றி உண்டனர் என்றும், பண்ணேன் உனக்கான பூசை என்னும் பாடல் அதுகால் பாடிய தென்றும் கூறுவர். விராலிமலையில் அடிகளார் சிலகாலம் தங்கினர் என்றும் அவர்க்கு உதவிய குடும்பத்தவர் தாயுமான என்னும் அடை மொழியை இன்றும் வழங்கி வருகின்றனர் என்றும் பின்னர், இராமேச்சுரம் சென்று திருமறைக் காட்டுக்குத் திரும்பி, அன்னையாரும், தமையனாரும் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்வித்தனர் என்றும், அவ்வம்மையார் கனகசபாபதி என்னும் மகனைத் தந்து இறையடி எய்தினார் என்றும், அம்மைந்தனைத் தமையனாரிடம் ஒப்படைத்துக் கடுந்துறவு கொண்டனர் அடிகள் என்றும், மௌன குருமடத்துத் தலைவராகச் சில காலம் இருந்து இறுதியில் இராமநாதபுரத்திற்குக் கீழ்பால் அமைந்த காட்டூரணிப் புளியமரத் தடியில் நிட்டை கூடிச் சமாதியுற்றனர் என்றும் கூறுகின்றார். அடிகள் நிட்டை கூடியகாலை அவர் திருமேனி பன்னாள் உயிர் நீத்த உடல் போல் தோன்றினமையால், யாரோ அதற்கு நெருப்பிட்டனர் எனவும், இடையில் விழித்துப் பார்த்துப் பின்னும் நிட்டையிலமர்ந்து இறைவனோடிரண்டறக் கலந்தனர் எனவுங் கூறுப. அதன் உண்மை நன்கு விளங்கவில்லை. எவ் வாறாயினும் கி. பி. 1662 - க்கு ஒத்த சாலிவானக சகாப்தம் 1584 இல் தைமாதத் 28 ஆம் தேதி விசாகத்தன்று மாலை அடிகள் கடவுள் திருவடியில் கலந்தனர் என வரலாற்றை நிறைவிக்கிறார் கா. சு. அடிகள் சமாதியான இடத்தில் அவர் முத்தியடைந்த நாளைக் குறிக்கும் கல்வெட்டுண்மையையும் கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சி என்னும் பகுதியில் 1608 முதல் 1662 வரை அடிகள் காலம் என்றும், கேடிலியப்பன் என்ற பெயர் தனித் தமிழாயிருப்பதும் இக்காலத்தில் அத்தகைய பெயர்கள் அரியவாயின என்றும், கடவுளை வேண்டி மகப் பெறுவோர் தாம் பெற்ற பிள்ளைக்கு, வழிபட்ட கடவுட் பெயரையிடும் வழக்கத்தை மேற்கொண்டனர் என்றும், அடிகள் எவ்வுயிர்க்கும் இரக்கம் வைத்தல் வேண்டுமென்பதைத் தமது சொல்லாலும், செய்கையாலும் உலகிற் குணர்த்தினராதலின் அவர் யாவர்க்கும் தாய் போன்றவரே; நமக்கு மெய்யறிவுச் சுடர் கொளுத்தலால், தந்தையும் அருளொழுக்க முடைமையால் தாயும் ஆதலின் பெயராலன்றிச் செயலாலும் அடிகளுக்குத் தாயுமானவர் என்ற பெயர் பெரிதும் பொருந்தும் என்றும், அடிகள் திருப் பாடல்களிலே வடமொழிகள் மிகப் பயின்றுவரினும் அவை செந்தமிழ்ச் சுவையிற் குறைவு பட்டில என்றும், அடிகளது தெளிபளிங்கன்ன தூய உள்ளமும் தாழ்வென்னும் தன்மையும், வீடு பேற்றின் கண்ணுள்ள பேரவாப் பெருக்கும் பதார்த்தங்கள் பாராது பரமே பார்க்கும் பெருநோக்கும் புனிதப் புனற் பெரு வெள்ளம் போன்ற சொல்லாற்றலும் அவர் திருப்பாடல்களிலே தெள்ளிதின் மிளிர்கின்றன என்றும், அடிகள் அரசி வலையில் சிக்காதிருந்தமை அவரது மெய்த்துறவினை யாவர்க்கும் எடுத்துக்காட்டுவ தொன்று. இல்லற நெறியைப் பிழைபட்டதாக அடிகள் கருதாமையாலும் வைதிக நெறி, சைவநெறி என்ற இரண்டையும் உலகினர்க்கு உணர்த்துவான் தோன்றிய பெரு மகன் ஆதலாலும் திருமணம் செய்து ஒரு புதல்வரைத் தந்தவுடன் மனைவி இறக்கப் பெற்று அடிகள் துறவறம் புக்கனர் என்றும், திருமேனி எரிவாய்ப்பட்ட கதை மெய்யாயின் ஒரு வீட்டினில் தூங்குகின்றவன் அவ்வீடு தீப்பற்றி எரியக் கண்டடன், தன்பால் இருந்த வானவூர்தியில் ஏறி, விண்ணிற் செல்வது போல அடிகளும் தமது உடல் வேவக் கண்டவுடன், அதனைத் தமது சித்த நூலறிவால் பாதுகாக்கத் தலைப்படாது சமாதியில் பொருந்திச் சிவத்திற் கலப்பதையே விழைந்தனர் என்பது தெளிவாகலின் அவரது விழுமிய உயர் ஞானத் தகுதியை நாமோ அளந்தறிதல் கூடுமென்று உரைக்கிறார். நூலாராய்ச்சி என்னும் பகுதியில் சமயம் என்னும் பொருளைப் பற்றி ஆயும் கா. சு. அடிகள் சமயங்களின் பொது நோக்கத்தையும், வேறுபட்ட கொள்கையினையும், சமய வாதத்தால் வரும் இழுக்கினையும், பல இடங்களில் குறித்ததனோடு அமையாது, அறுவகைச் சமயத்தின் இயல்பினையும், சைவத்தின் சிறப்பினையும், சித்தாந்தத்தின் பெருமையினையும் செவ்விதின் விளக்கியமையை எடுத்து உரைக்கிறார். புராணங்களில் கூறும் கடவுளின் அருட்செயல்களை மிகுதியாகக் கூறாது அவரது பொதுவாகிய பெருந்தன்மைகளை எடுத்து விளக்குதலில் தாயுமான அடிகள் இணையற்றவர் என்பதைக் கடவுள் என்னும் பகுதியில் எண்ணற்ற சான்றுகளால் மெய்ப்பிக்கிறார். அவ்வாறே உயிரியல்பு, மனவியல்பு, வினையியல்பு முதலியவற்றையும் விளக்குகிறார். என்று கடவுள் உள்ளாரோ அன்றே உயிருண்மை, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம் உயிர்க்குண்மை, உயிர் சார்ந்ததன் வண்ணமாதல், உயிர்கள் எண்ணற்றவை, உயிர் அறிவிக்க அறியும் இயல்பினது, உயிர் ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்கும் தன்மையது, உயிர் ஐந்து அவத்தைகளையுடையது என்பன வெல்லாம் உயிரியல்பில் விரித்துரைக்கப் படுகின்றன. ஐயறிவாகிய ஐம்புலன்கள் வழியாக மனம் செல்லுங் காலை, அது உலகப்பற்றில் ஈடுபடும். மனமே உயிர் உலகத்தை ஆராய்தற்குக் கருவி. எல்லா விதமான நினைவிற்கும் மனம் இடமாக இருப்பது, உலகிற் கண்டவற்றை மனம் தன்னிற் பதிவு செய்து மீண்டும் உயிர் அவற்றை நினைப்பதற்குக் காரணமாய் இருத்தல் மாயையாம் என்பனவற்றையும் பிறவற்றையும் அடிகள் வாக்குகளைக் காட்டி நிலைநிறுத்துகிறார். மூலவினை, இருவினை, முன்வினை (சஞ்சிதம்), முள்வினை (பிராரத்தம்), செய்வினை (ஆகாமியம்) என்பவற்றை வினை யியல்பில் விரிய விளக்குகிறார். தத்துவ இயல்பு என்னும் பகுதியில் 96 தத்துவங்கள் இவையென விளக்குகிறார். வழிபாட்டியல்பில் மாந்தர்ப் பிறவியின் சிறப்பு, கொல்லாமை, கல்வி, ஒழுக்கம், உலகநெறி, தவ நெறி, சித்தநெறி, முத்திநெறி, பத்திநெறி என்பவற்றைக் றுகிறார். ஒரு பிறவியிலேயே முத்திக்குரியராதல், காயசித்தி, அட்டாங்கயோகம் ஆறாதாரம் என்பன சித்தரியல்பு என்னும் பகுதியில் விரிக்கப்படுகின்றன. ஏகம், அத்துவிதம் என்னும் இருவகைச் சொல் ஆட்சிகளில் அத்துவிதம் என அடிகள் கூறியதன் சிறப்பை அத்துவித இயல்பு என்பதில் கூறுகிறார். கடவுளும் உலகமும் பொருட்டன்மையால் வேறாயினும், கலப்பால் வேற்றுமை தோன்றாவாறு கடவுள் உலகத்தோடு கலந்திருக்கிறார் என்று அறிவுறுத்தற்கெனத் தெரிந்து, அத்துவித பாவனை செய்வதே ஞானநெறியாதலின் அவ்வாறன்றிக் கடவுளும் உலகமும் வேறல்ல எனக் கருதி ஏகான்மவாதங் கோடல் தவறாகுமாதலின், அத்துவிதம் என்ற சொல்லின் பொருள் தெரிந்து சிவத்தோடு அத்துவித பாவனை செய்ய வேண்டும் என்றார் என்கிறார். அன்பர் உள்ளம் இறைவற்குக் கோயில்; அன்பர் இணக்கமே எவற்றினும் சிறந்தது; அன்பர் இணக்கம் திருவருளாலே அமையும்; அன்பர்க்கு இறைவன் பலவழிகளிலும் எளிவந்தருள்வன்; அன்போடு தண்டமிழ் மாலை தொடுக்கின்றவர்களது குறைகளைச் சிறிதும் பொருட்படுத்தாது இறைவன் திருவருள் புரிவான்; என்பவற்றைப் பேரன்பின் இயல்பு என்னும் பகுதியில் விரித்து விளக்குகிறார். மேலும் கல்லால நிழலில் அருள் பெற்ற நால்வர் சுகர், மார்க்கண்டன், மெய்க்கண்டதேவர், அருணந்தியார். சமயகுரவர் நால்வர், பட்டினத்தார், அருணகிரியார், சிவவாக்கியார், திருமூலர், இன்னோர் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறார். பாதி விருத்தத்தால் இப்பார் விருத்த மாக வுண்மை சாதித்தார் எனப்பட்டவர், அருணந்தி சிவாச்சாரியார் என்றும், பாதிவிருத்தம் என்றது சிவஞான சித்தியார் எட்டாம் நூற்பா முப்பதாம் பாட்டின் முதற்பாதி என்றும், அது :- அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து என்பது என்றும் நிலைப்படுத்துகிறார். அன்பின் இயல்பை அடிகள் எந்நாட் கண்ணியல் விரித் துரைக்குமாற்றை அன்புக் கா. சு. தொகுத்துரைக்கிறார்: உள்ளமானது கதிரவனைக் கண்ட கமலம் போல் திரு வருளைக் கண்டபோது மலர்தல் வேண்டும். மேகம் கண்ட மயில் போல இறைவனது ஞான நடனத்தைக் கண்டு களித்தாட வேண்டும். திங்களொளியை நாடிச் செல்லும் சக்கரவாளப்புள் போலத் தூய அறிவிலே தோன்றும் பரஞ்சோதியை உயிர் நாட வேண்டும். அந்தரத்தே நின்றாடுகின்ற ஆனந்தக் கூத்தனுக்கே சிந்தையினைத் திறையாகக் கொடுத்து வணங்க வேண்டும். கள்ளன் இவனென்று கைவிடாதேயென்று வள்ளலைக் கூவி வருந்த வேண்டும். அண்ணா வாவென்றரற்ற வேண்டும். செய்வதெல்லாம் நின்பணியென்று மாதேவனை வழுத்தல் வேண்டும். பரம் பொருளைக் கண்டும் காணேனென்று கை குவித்தல் வேண்டும். இன்பம் எங்கே எங்கே என்றிரங்க வேண்டும். கடல் மடை திறந்தாற் போலக் கண்ணீர் பெருகி ஆறாகச் செல்ல உடல் வெதும்பி மூர்ச்சித்து உருக வேண்டும். இறைவனைக் காணாத முகம் சருகாய் வாடி அலந்து ஏங்க வேண்டும். மனக்கவலை ஆற்றாது இறைவன் பொன்னடியைப் போற்றி ஆற்றேன் ஆற்றேன் என்று அரற்ற வேண்டும் என்கிறார். இறையை என்றும் மறவாமையைத் தாயுமானவர் வேண்டு முறையைக் கா. சு. தொகுத்துக் கூறுவதைக் கூறி, அவருள்ளமும் அவ்வாறு அமைதலை நாடினார் என்பதை நினைவு கூர்ந்து அமைவாம். பூங்கொத்துள் விரிந்து மணங் கமழும் பொழில்களிலே நல்ல நிழலில் தங்கி இருந்தாலும், குளிர்ந்த இனிய நீரினைக் கையினால் அள்ளி உட் கொண்டாலும், அந்நீரிடை முழுகி விளையாடினாலும், தண்ணிய சந்தன மணங் கலந்த காற்றானது முற்றத்தில் உலாவுவது போல நல்ல மாதங்கள் உலாவக் கண்டு மகிழும் வசதியமைந்த காலத்தும், வெண்ணிற மிக்க முழுமதி பட்டப் பகல் போல நிலவு வீசுதலைக் கண்டு இன்புறுங் காலத்தும், விண்ணவர் பெற்ற கடலமுதம் போன்ற அறுசுவையுணவு கொண்டு இன்புறுங் காலத்தும், நறுமணமாலை வாசனைப் பொருள்கள் வெற்றிலை பாக்கு முதலிய விரும்பின யாவும் விரும்பிய அளவு நுகர்ந்து பலவகை விளையாட்டுகளில் பொழுது போக்கி இனிது துயின்றாலும், எக்காலத்தும் நின்னருளை மறவா வரந்தந்து அடியேனைக் காத்தருள்வாய் என்பது அது. குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் நூல், திருநெல்வேலி வடக்கு ரத வீதி மணிவாசக மன்றத்தினின்று 1932 இல் முதற் பதிப்பாக வெளிவந்தது. இந்நூல் இயற்றப்பட்ட காரணத்தை முன்னுரையில் சுருக்கமாகவும் செறிவாகவும் கா. சு. தெரிவித்துள்ளார். இச்சிறு உரைநடை நூல், செந்தமிழ்ச் சைவப் பேரருட் பெரியாருள், வரலாற்று முறையிற் பார்க்குங் காலை இறுதியாய்ச் சைவ நலத்தையும் தமிழ் மாண்பையும் பனிமலை முதல் குமரிவரை நிலைநாட்டிய குமரகுரு முனிவரது வரலாற்றினைத் தெளிவாக எடுத்தியம்புவதுடன், அதனையும் அடிகள் அருள் நூல்களையும் ஆராய்ச்சி முறையின் வைத்து விளக்கும் பொருட்டு இயற்றப் பெற்றது என்பது அது. 15.4.32 திருநெல்வேலி கா. சுப்பிரமணியன் என நாளும் இடமும் பெயரும் பொறித்துள்ளார். இந்நூலின் உரிமையுரை கா. சு. வின். பாவன்மையைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றது. நூல் அச்சிட்ட செலவில் பெரும்பால் வழங்கிய பெற்றியர் பொன்னம்பலநாத முதலியார் புகழ் கூறும் அது, முப்பத்திரண்டடிகளான் அமைந்த நிலை மண்டில அகவலாய்த் திகழ்கின்றது. உரிமையுரையுடையார், திருவைகுண்டத்தவர் என்பதும், வழக்கறிஞர் என்பதும், மருத்துவமனை முதலாம் அறச்சாலை அமைத்தவர் என்பதும், அறுபான் ஆண்டு விழாவாம் மணிவிழாக் கண்டவர் என்பதும் உரிமை உரையால் அறிய வருகின்றன. 166 பக்கங்களையுடைய இந்நூல் முப்பகுப்புகளால் இயல்கின்றது. குமரகுருபர அடிகள் வரலாறு (1-17). வரலாற்றாராய்ச்சி (18-32.) குமரகுருபர அடிகள் நூல்களின் ஆராய்ச்சி (33-166) என்பவை அவை. முதற்பகுதியில் 19 உட்டலைப்புகளும், இரண்டாம் பகுதியிலே 16 உட்டலைப்புகளும், மூன்றாம் பகுதியிலே 103 உட்டலைப்புகளும் இடம் பெற்றுள. நூல் உள் உறையை உட்டலைப்பு வரன்முறையாக நூன் முகப்பிலே ஆறுபக்க அளவில் தந்திருப்பது ஆய்வாளர்க்குப் பெரும் பயன் செய்வதாம். பெரும்பாவலராகிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம், பிள்ளை இயற்றிய குமரகுருபரர் சரித்திரத்தைத் தழுவித், தம் நூலை இயற்றுவதாகக் குறிக்கிறார். கா. சு (2). திருவைகுண்டம் என்றும் திருக்கயிலாயம் என்றும் வழங்கப் படும் நகரிலே சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாமியம்மை தவமகவாகக் குமரகுருபரர் பிறந்ததும், ஐயாண்டு வரை மூங்கையாக இருந்ததும், செந்திற் பெருமான் திருவருளால் பேசும் ஆற்றலுடன் பாடும்பேறும் உற்றதும், அப்பேறு பெற்ற போழ்திலேயே சுந்தர் கலிவெண்பா, இயற்றியதும், கயிலையாகிய தம் ஊர்ப் பெருமான் மீது கயிலைக் கலம்பகம் பாடியதும், திருக்கோயில் உலாக்கொண்டதும், மதுரைக்கு வந்தபோது திருமலை மன்னர் செய்த சிறப்பும், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம் ஆகியவை இயற்றியதும், தருமபுரத் திருமடத்துத் தலைவராகிய மாசிலாமணி தேசிகரைக் குருவாகக் கொண்டதும், அவர் மேல் பண்டார மும்மணிக் கோவை பாடியதும், பின்னர் திருக்கோயில்கள் பலவற்றை வணங்கி நூல்கள் இயற்றிக் காசியை அடைந்ததும், அந்நாளில் ஆங்கிருந்த முகமதிய மன்னனை அவன் மொழியால் வயப்படுத்தித் திருமடம் கண்டதும், சைவப்பயிரை நன்கனம் போற்றி வளர்த்ததும் ஆகிய செய்திகளை நிரலேயுரைத்து, திருப்பனந்தாள் திருமடம் உருவாகி ஆட்சி கொண்டவர் நிரலுடன் வரலாற்றை நிறைவிக்கிறார். வரலாற்று ஆராய்ச்சிப் பகுதியிலே, அடிகள் கி. பி. 1630-48 இல் தென்னாட்டில் வாழ்ந்தனர் என்று ஆய்ந்துரைக்கிறார். அடிகளைக் குட்டித் திருஞான சம்பந்தராகக் காண்கிறார். பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வகைகளின் அமைதியை விளக்குகிறார். (21-24). அடிகள் அருட்கவி இலக்கணங் கற்றவரல்லர் என்று ஒரு புலவர் குறை கூறியதைச் சிலர் அடிகட்கு அறிவித்துச் சிதம்பரச் செய்யுட் கோவை பாடும்படி வற்புறுத்தினமையால் அதனைப் பாடினர் என்பர் என்று கூறுகிறார். (24). திருமலை மன்னர் ஒருநாள் உணவு கொள்ளப் பொழுது தாழ்த்ததை அறிந்த அடிகள் வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்னும் குறளைக் கூறினாராக. அதனை உணர்ந்த மன்னர் எளிமையும் சுருக்கமும் அமைந்த நீதிநூல் ஒன்று பாடித் தருக என வேண்ட, அடிகள் நீதி நெறி விளக்கம் பாடித் தந்தார் என்னும் செய்தி கூறப் படுதலை உரைக்கிறார். ஐந்து பேரறிவும் என்னும் பாடற்குப் பொருள் கூறத் தடை நேர்ந்தமையால், மாசிலாமணி தேசிகரைக் குருவாகக் கொண்டவர் அடிகள் என்பது வரலாறு. அப்பாட்டின் சொற்பொருளை அடிகள் உணராதவரல்லர்; அதன் அனுபவப் பயனையே தேசிகர்பால் உணர்ந்தனர் என்கிறார் கா. சு. மேலும், பெருந்தவத்தினராகிய அடிகட்கும் அறிவுரை நல்கும் பெருந்தகையாரை யுடைத்தாயிருந்த ஆதீனத்தின் பெருமை இற்றைக் காலத்துக் குன்றினமை கழிவிரக்கந் தருவதே என வருந்தியுரைக்கிறார். (26). உலகப் பெருஞ் செல்வத்திற் பிறங்கினாலும், அடிகளைப் போலத் தாழ்மை மிக்க தூய பேரன்பிற் சிறந்த உள்ளமுடையார் வேறொருவருமிலர் என்பது பண்டார மும்மணிக் கோவையால் தெள்ளிதில் புலனாம் என மதிப்பிட்டுரைக்கின்றார் கா.சு. அடிகள் காசியிலே மடமமைத்துச் சைவத்தை நிலை நாட்டாவிடின், தென்னாட்டுச் சைவ சித்தாந்தம் ஒன்று உண்டு என்பதை வட நாட்டினர் அறிதற்கு இடமிராது. மகம்மதியர் ஆட்சி, திறம் பெற்றிருந்த அக்காலத்திலே காசிக்குச் செல்லும் சைவர்க்கு வசதிகள் அமைதல் எளிதன்று. மொழியும் குலமும் சமயமும் வேறாக உடைய மக்கள் கூட்டத்தின் நடுவே, எல்லா வசதிகளும் அமைத்து விசுவேசரை வணங்கும் பேறுதந்த பெருமான் குமரகுருபர முனிவரே என்பது சைவருள்ளத்திலே என்றும் நின்று நிலை பெறுதற்குரியது. என அடிகள் தொண்டுகளில் அள்ளுறி நின்று விளம்பு கிறார் கா. சு. (26-7) ஓர் ஏக்கத்தையும் இவ்விடத்திலே உரைக்கிறார் கா. சு. அடிகட்குப் பின் வந்தோர், காசியிலே செந்நெறி கடைப் பிடித்துச் சைவத்தை நிலை நாட்டியிருப்பின் இன்று வடநாடு முழுதும் சைவசித்தாந்தம் பரவியிருத்தல் கூடும். பின் வந்தோர் பொருளீட்டத்தையும் பாதுகாப்பையும் கருதித் தென்னாட்டிலே தமக்கு நிலையான இடத்தை அமைத்துக் கொண்டனர் போலும் என்பது அது. அடிகள் திருச்சியில் வைணவத்தையும், திருவாரூரில் சிவசமவாதத்தையும், தில்லையில் ஏகான்மவாதத்தையும் காசியில் துருக்க மதத்தையும் தழுவிய மக்களோடு வாதிட்டு வென்றனர் என்ற செய்தி விளக்கத்துடன் (28-32) வரலாற்று ஆய்வை நிறைவுறுத்துகின்றார். அடிகள் நூல்களின் ஆராய்வே நூலில் ஐந்தில் நான்கு பங்காக இயல்கின்றது. தனித்தனி நூல்வகை ஆய்வு மேற் கொள்ளாமல் பொருள் வகை ஆய்வினை மேற்கொள்கிறார். பழமறை, இறைவன் இலக்கணம், இறைவனது மூவுருவம், இன்னவாறு பன்னூற் கருத்துகளையும் திரட்டி அடிகளின் கொடைவளம் அனைத்தையும் பொருள் வகைத் திரட்டாகத் தருவார் போல் தருகிறார். கந்தர் கலிவெண்பாவினுள், குமரகுருபரர் சைவ சித்தாந்தக் கொள்கைகளைத் தொகுத்துரைத்தமை போலப் பிறர் எவரும் சிறுதுதி நூலுள் அவற்றை இயம்பவில்லை என்பது அந்நூலைப் பற்றிய அரிய மதிப்புரை. சக்தி சிவமென இருபகுப்பும் தன்பால் உடைமையால் இறைவனை ஒருவன் என்று கூறுதலும் தவறு, ஒருத்தி என்றலும் தவறே. ஒருவர் என்ற பொதுப்பெயரே ஏற்றது (சி. செ. கோ. 54) என்பதை நயக்கிறார் (41). இறைவன் உயிர்களின் பொருட்டு இயற்றியருளிய பெருஞ் செயல்களை வியப்புச் செயலாகப் பாராட்டுதல் அத்துணைச் சிறந்த முறையாகாது. அவை அவனது பெருங்கருணைத் திறனைக் காட்டுமேயன்றிப் பேராற்றலைக் காட்டுவனவாகா என்று கருதுபவர் அடிகள் என வியக்கிறார் (46). தமிழ்ச் சிறப்பு என்னும் உட்டலைப்பிலே, அடிகளார் தமிழின்பாற் கொண்ட பேரன்பைச் சான்றுகள் காட்டிக் காட்டித் திளைக்கிறார் கா. சு. தமிழ் அடைமொழியாக வருவன வற்றையும் திரட்டுகிறார். தமிழ் மதுரையில் ஒரு குமரி; தமிழ் மதுரைக் கொற்றியார்; மும்மைத் தமிழ்க் கூடல்; முத்தமிழ் வெற்பு; அறம் வளரும் தமிழ்க் கூடல்; விரிதமிழ்க் கூடல்; தெளிதமிழ் மதுரை; செஞ்சொற்றமிழ்க் கூடல்; தெய்வத்தமிழ்க் கூடல்; தமிழ்வேளூர் அடிகேள் தமிழ்க்கமலை. தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி என அம்மையைக் கூறுவதும், தென்னன் தமிழின் உடன் பிறந்த சிறுகால் எனத் தென்றலைக் கூறுவதும் தமிழின் பழமைச் சான்று என்று ஆய்ந்துரைக்கிறார். திருமால் திருவிழாக் கொண்டருளும்போது, திருவாய் மொழி ஓதுவார் பெருமாளுக்கு முன் செல்ல, வடமொழி வேதமோதுவார் பின் செல்வது, பெருமாள் தமிழ் மறையை விரும்பி அதற்குப் பின்போக வடவேதம் பெருமாளைத் தேடி அவரைப் பின்தொடர்ந்து முறையிடுதல் போலும் என்பார். பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே என்றார் என்கிறார் கா. சு. கணிகண்ணன் திருமழிசையாழ்வார் கதையொடு தொடர்பு படுத்தி வழங்கப் படும் செய்தியை வழக்கொடு படுத்தித் தெளிவிக்கும் அருமையராகக் கா. சு. விளங்கும் காட்சி இவண் பொலிகின்றது (95). நீதிநெறி விளக்கத்தைத் தனித் தலைப்பிலே விளக்கிச் செல்கிறார். கா. சு. (98-118). கல்வி, செல்வம், புகழ், சொற்பயன், நட்பு, காதலொழுக்கம், முயற்சி, வேந்தன் கடமை, தவம் எனப் பகுத்து அதனை விளக்குகிறார். அறம் இனையதென்றறிதற்குக் கல்வி வேண்டுமாகலின், அதன் பெருமையை முதற்கண் வைத்தார் என வைப்புமுறை காட்டுகின்றார் (98). இழிந்த உவமை கூறிச் சிறப்பான கருத்தைத் தெரிவித்தல் ஓர் அழகாக நீதிநெறி விளக்கத்தில் காணப் படுவதை எடுத்துக் காட்டுகிறார் கா. சு. வள்ளல் தன்மையில் தலை சிறந்தவர் செல்வம், பொது நலம் போல யாவர்க்கும் பயன்படும். பிறர் செல்வம் குலமகள் நலம் போல உடையார்க்கே பயன்படும். கடை மக்கள் செல்வம், கைம்பெண்டிர் நலம் போல ஒருவர்க்கும் பயன்படாது என்பது அது (செய். 66) பெரும்பாலான பாடல்களுக்கு எளிய பொழிப்புரை எழுதுவது போல் எழுதிச் சொல்கிறார் கா. சு. கற்பனை நயத்தை விரிவாக ஆயும் ஆசிரியர் (118-141) அடிகளின் எல்லாப் படைப்புகளையும் தொகுத்துப் பார்க்கும் பார்வையையே மேற்கொள்கிறார். பண்டார மும்மணிக்கோவையில் மகளிர் இடை யைப் பற்றிக் கூறும் அடிகள் ஈயாமாக்கள் தீமொழி கவர்ந்த சிற்றிடை என்பதை எடுத்துக் காட்டுகிறார். ஈயா மாக்கள் இல்லை என்னும் தீயமொழி கூறுவர். அம் மொழியைக் கவர்ந்து கொண்ட இடை என்பதால், அஃதில்லை என்னும் பொருள் தரும் நயத்தைக் குறிக்கிறார். நண்டு தன் வளையின் வாயிலை அடைப்பது கருமிகள் தம் வாயிற் கதவை அடைத்தாற் போல்வது என்பதை வச்சை, மாக்களெனவே முடஅலவன் வளைவாய் அடைக்கும் மழை நாளே என வரும் காசிக் கலம்பகத்தைக் காட்டி நயக்கிறார். சிவபெருமான் செஞ்சடை தீயொக்கும். கொன்றைப் பூ எரியில் இட்ட பொன்போலும்; அப் பூவைச் சூழும் வண்டுகள் கரித்துண்டுகள் போல்வன; கங்கை, அப்பொன்னைப் பணி யாக்குவதைப் பார்க்கும் பெண்ணொருத்தி போலும். வெண் பிறை பொற்பணி செய்யும் கிழத் தன்மையாற் கூனுற்ற கொல்லனை ஒக்கும் எனத் திருவாரூர் நான்மணிமாலையில் வரும் தொடர் உருவகத்தைக் குறித்து இன்புறுகிறார். பிற்கால இலக்கிய முறைக்குத் தக உயர்வு நவிற்சியை இயற்கை அளவிற்கு மிகை படக் கையாண்டுள்ளமையையும் இப்பகுதியில் சுட்டுகிறார். ஒருத்தி அழுத விழிநீர் முந்நீரை உவர் நீராக்கிற்று. (மீனா. பின். 17) சோலையிலுள்ள தென்னை மரங்கள் வளர்ந்தோங்கி விண்ணவர் கோமான் கொலுவிருக்குமிடத்தே நடனமிடும் மயிலினம் போன்ற மாதர்க்கு இளவேனிற் களைப்பு தீரும்படி, செலவிள நீர்க் குலைகள் கொடுத்தன. கமுக மரங்கள் பழக்க மாகிய பவளமுடன் பூவாகிய முத்துக்களும் சேர்ந்து தமது தோகையினால் அந்நங்கையர்க்குக் கவரி வீசின. (மு. கு. பி. த. 25) வாளை மீனானது கருக்கொண்ட முகில் வயிற்றைத் தாக்கி ஊடுருவிச் சென்று கற்பகக் காட்டைக் கடந்து வான கங்கையில் நீந்தி மதிமுயலைத் தடவி விண்மீன் கூட்டத்தைக் கடந்து பெரும்புறக் கடற் சுறா மீனொடு விளையாடும். (மீ. பி. த. 2) வையை வானளாவப் பெருகியமையால் கதிரோன் அந்நதித் தோணி போன்றது. திங்கள் கைத்தோணியும், விண் மீன்கள் சிறுமிதப்புகளும் போன்றன (மீ. பி. த. 57). இன்னன பல காட்டுகிறார் கா. சு. இயல்பு உவமைகள். நூற்கதை உவமைகள் இன்னனவும் அடிகளார் பாடலில் பயின்று வருதலைச் சுட்டுகிறார். கூத்தப் பெருமான் தில்லைத் திருக்கோயில் தாமரை, திருமன்று பொருட்டு; மதில்கள் இதழ்கள் மாடங்களில் தங்கும் முகில் வண்டு! என்னும் உவமை (சி. மு. கோ2)யும். கருவிரல்மந்தி பலாப்பழத்தைத் தன் மடியில் வைத்து நகங்களால் சுளைகளை எடுத்து வாயிற் போடுவது, தூணிலே தோன்றிய நரசிங்கம் இரணியன் மார்பம் பிளந்தது போன்றது (தி. நா. மா. 5) என்பதும் அவற்றுக்கு ஒவ்வொரு சான்று. அடிகள் பாடிய அகப் பொருட்டுறைப் பாடல்களில் இறைவன் திருவருள் பெற விரும்பிக் காதலுற்றவரின் பிரிவாற்றாமையும் துயரமும் உணர்த்தும் துறைகளே சிறப்பிடம் பெறுகின்றன என்று தெளிகிறார் காசு. மதியினைப் பழித்தல் என்னும் துறை நயத்தை காசிப் பெருமானது நெற்றி விழியும் இடப்பால் விழியும் வெண்ணெருப்பே; நெற்றி விழி காமனைக் காய்ந்தது. காமன் படை நாமென்று எண்ணி நெற்றி விழிக்கு இனமான இடப்பால் விழி நம்மைக் காய்கின்றது போலும் என்று ஒரு நங்கையுரைப்பதை (காசிக்க. 27) எடுத்துக் காட்டுகிறார். இரவாகிய கரிய எருமை மீதேறி, மதியாகிய கொடுங் கூற்றம் என் உயிரைப் பருகுதற்கு, நிலாக் கதிராகிய பாசத்தை வீசி வளைந்து கொண்டது. யான் இங்கு என்ன செய்வேன் என்பது மற்றொன்று (காசிக்க. 76). கரும்பை வேம்பென்றும், வேம்பைக் கரும்பென்றும் தலைவி கருதுதலை அடிகள் வாக்கால் சுட்டுகிறார்: தேனறாத சிலைக்கரும்பு கொலைக்கரும்பு வேம்பெனும் தேம்புயத்தணி வேம்பினைக்கனி தீங்கரும்பெனும் என்பது அது. (மதுரைக் . 50). குறுமுகை வெண்டளவின் என்னும் பாடலில் வரும், மணந்துவக்கும்; உருத்திகழும்; உகப்படரும், அகன்றிரியும் என்பவற்றின் இரட்டுறலழகையும் பிறவற்றையும் காட்டி அடிகளின் சொன்னயச் சிறப்பில் சொக்குகிறார். மணந்துவக்கும் - வாசனை தொடங்கும்; மணம் செய்து மகிழும். உருத்திகழும் - உருவிளங்கும் ; கோபித்து இகழும். உகப்படரும் - உவப்பினை அழிக்கும்; சிந்தும்படி பரவும் அகன்றிரியும் - அகமாகிய உள்ளம் திரியும்; நீங்கியோடும். என்பணியே - எலும்பு அணியே; என் பணிவிடையே. மதங்கி, பிச்சி, கொற்றி, இடைச்சி, வலைச்சி என்போரைப் பற்றிய கலம்பகப் பாடல் அக்கால வழக்கங் காட்டுவது என்றும் கைக்கிளை நயமிக்கது என்றும் கூறுகிறார். மதங்கி என்பாள் இருகைகளிலும் வாள் வைத்து வீசிக் கொண்டு சுற்றி விளையாடுதல் மதங்கியார். பிச்சி என்பாள் சிவ வேடந் தாங்கிப் பிச்சைக்குச் செல்வது போல் அமைத்தல் பிச்சியார். கொற்றி என்பாள் திருமாலின் சின்னங்களை அணிந்து ஐயம் எடுக்கச் செல்லல் போல் அமைத்தல் கொற்றியார். - இவ்வாறு இத்துறையாளரை விளக்குகிறார் கா. சு. ஆணும் பெண்ணும் கூடிய இறைவன் திருவுருவத்தை எந்தாய் என்றதன் நயத்தை (எம் தாய், எந்தையே) உவக்கிறார் (சி. செ. கோ. 73). இரண்டு பிள்ளைத் தமிழ்களிலும் உள்ள அம்புலிப் பருவத்தின் நயத்தையெல்லாம் திரட்டித் தந்து நூலை நிறைவிக்கிறார் (162-166) மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை என்பவை அடிகள் வாக்கோ என ஐயுறுவாரும். தனியே பதிப்பித்தாரும் உளர். ஆயின், கா. சு. அவற்றை அடிகள் வாக்கென்றே கொண்டு ஆய்கின்றமை தெளிவாகின்றது. குமரி தொட்டு இமயம் வரை சென்றவர் அடிகள், மொழி பெயர் வேந்தை, அவர் மொழியாற் பிணித்தவர் அடிகள். பொறிக் குறையராய்ப் பிறந்தும் பொறி வளம் பெற்ற புகழர் அடிகள். வழிவழித் தொண்டு சிறக்கத் திருமடம் கண்டவர் அடிகள். பதிகம் பாடும் நிலை மாற்றி, நூற்றொண்டு கண்டவர் அடிகள். அறநெறி முதற்றே உலகென அறியுமாறு, நீதிநெறி வகுத்தவர் அடிகள். ஞான சம்பந்தருக்குப் பின்னர், தமிழை மேம்படக் கொஞ்சியவர் அடிகள்; அறுவகைச் சமயத்துள் ஒருமை கண்டவரும், பிற சமயத்தவரைப் பழியாமல் தம்பால் ஈர்த்த தவச் சால்பரும் அடிகள்; புலமைத் தலைக்கோலால் அளத்தற்கரும் புலமைச் செல்வர் அடிகள். இவற்றை இவ்வாய்வு வழியே பெறுதற்கு வாய்க்கின்றது. சிவஞான சுவாமிகள் வரலாறு இவ்வரலாற்று நூல் (S. RM. C. T). சம்புலிங்க செட்டியார் அவர்கள் நன்கொடை பொருளுதவியால் 1 - 8 - 1932 இல் கா. சு. அவர்களாலேயே வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு கழக வெளியீடு 813 ஆக, 1955 நவம்பரில் வெளிவந்தது. தோற்றுவாய், சிவஞானமுனிவர் வரலாறு, வரலாற்று ஆராய்ச்சி, முனிவரது நூல்களின் சுருக்க ஆராய்ச்சி, கருவி நூல்களின் ஆராய்ச்சி என்னும் உள்ளுறையில் நூல் அமைந்தது. வேதாந்த சூத்திரத்திற்குரிய பாடியங்களும், சிவ சூத்திரமும் சைவ சித்தாந்த நூலாகாமையையும், சைவ சித்தாந்த பாடியம் தமிழ்ச் சிவஞான பாடியம் ஒன்றே என்பதையும் தோற்றுவாயில் விளக்குகின்றார் (1-3). சிவஞான முனிவரின் படைப்புகளுள் மாபாடியமே தலை சிறந்ததெனக் கா. சு. உட்கொண்டமை யால்தான், முனிவரர் வரலாற்றுக்கு முன்னரே இவ்வாய்வைத் தோற்றுவாயாக வைத்தார் எனக் கொள்ளலாம். சிவஞான முனிவர் வரலாறு, திருவாவடுதுறைத் திரு மடத்துப் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் குமாரசாமித் தம்பிரான் வேண்டுகோட்படி பாடப் படினும் அது நூற்றிருபது பாடல்களுடன் துறைசைத் திருமடத்துத் தலைவர் வரிசை கூறுமளவான் நின்றதைப் பேறின்மையாகச் சுட்டி, அதனைத் தழுவியே முனிவர் வரலாறு எழுதப் படுதலைக் குறிக்கிறார். வரலாற்று ஆராய்ச்சியும், பதினாறு பக்க அளவில் (4-19) அமைகின்றன. பொதியிற் சாரலில் அமைந்த விக்கிரம சிங்கபுரத்து ஆனந்தக் கூத்தர் மயிலம்மை ஆகிய பெற்றோர்களின் பேற்றால், முக்காளி லிங்கர் என்னும் பெயருடன் முனிவர் தோன்றியதை முதற் கண் உரைக்கிறார். தென்மொழிக்கும் வடமொழிக்கும் திலகமெனச் சிறந்த அண்ணல் ஒருவர் புலவரது வீரசிங்கமென உதிப்பார் என்றும், சிவனடிப் பேரன்பராய அவருடைய திருவடிகளை நினைவாரது பாவம் நாசமாம் என்றும் அறிவுறுத்துங் குறிப்பால் அவர் தோன்றிய திருப்பதி விக்கிரம சிங்கபுரமெனவும், பாவநாசமெனவும் பெயர் பெற்றிலங்கியது போலும் எனத் தற்குறிப்பேற்ற அணிநயத்தின் வழியே ஊர்ப் பெயர்ப் பொருத்தம் காண்கிறார் (4). இவ்வாறே தாளெடுத்துத் தலையசைத்தாடும் செங் கீரையைச் சைவம் ஒழிந்த பிறசமயம் கொள்ளேம் என மறுப்பது போன்றது என்றும், சப்பாணி கொட்டுவது உண்மைப் பொருளுணராது உரை எழுதுவாரைக் கண்டு நகையாடிக் கைகொட்டுவது போன்றது என்றும் தற் குறிப்பேற்றத்தி லேயே தொடர்வது பெரும் புலவர் பாடலுக்கு உரை வரைந்து செல்வதாக அமைகின்றது. துறைசை (திருவாவடுதுறை) அடியார் சிலர் தம்மூர் வீதிக்கண் வருதலைக் கண்ட முக்களாலிங்கர் அவர்களைத் தம் இல்லத்தில் விருந்துண்ண விரும்பி அழைத்ததும், அவர்களுக்கு அன்னையும் அருவிருந்து படைத்ததும், தந்தையார், இல்லம் எய்தியதும் நிகழ்ந்ததை அருந்ததி என் அம்மை என்னும் வெண்பாவால் உரைத்ததும், தந்தையாரை அழைத்துக் கொண்டு அடியார்கள் தங்கியிருந்த மடத்திற்குச் சென்று, அவர்களோடு அளவளாவித் தாம் துறவு பூண்டு அவர்களோடு உறையும் வேட்கையுடையராதலை உரைத்ததும், இசையா இசைவால் பெற்றோர் இசையத் துறவோருடன், முக்களா லிங்கர் துறைசை எய்தியதும் துறைசைச் சின்னப்பட்டப் பின் வேலப்பரால் தீக்கையும் துறவும் அருளப் பெற்றுச் சிவஞான யோகிகள் என்னும் துறவு நிலைப் பெயர் பெற்றதும், வட மொழி கற்றதும், பிறர்க்கு உதவு முகத்தான் ஈற்றடிப் பகுதி கொண்டு பாவொன்று தீட்டித் தந்து நூறு பொன் பரிசு பெறுவித்ததும், பெயர்ப்பும் பாட்டும் உரையும் கண்டனமுமாம் நூல்கள் இயற்றியதும், காலமும், கற்ற மாணவரும், முனிவரர் புகழும் ஆகியன வரலாற்றுப் பகுதியாய்க் கூறப்பட்டுள்ளன. வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை என்றும், கிடைத்த அளவும் வரலாற்று நூலால் கிடைத்ததே என்றும் அறிய முடிகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடை, கடைப் பகுதியிலே வாழ்ந்த முனிவரர் வரலாற்றுக் குறிப்பே இத் தகைத்தெனின் - புகழ் மிக்க திருமடத்தைச் சார்ந்து அந்நாளைச் சிவப் பெருங் குருவராய் விளங்கிய இருமொழிப் புலமையர் வரலாற்று நிலையே இத்தகைத்தெனின் - பிறர் வரலாற்றைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை! மெய் வரலாறு கிட்டாமையாலேயே புனைவும் புராணக் கூட்டும் புகுந்தன என்பது எண்ணற் குரியதாம் (எ -டு ) புலவர் புராண புராணம், விநோதரச மஞ்சரி. வரலாற்றை ஆராயும் கா. சு. அக் காலத்தே ஆதீனங்களைச் சார்ந்த துறவிகள் நல்லொழுக்கத்திற் சிறந்து, இல்லறத்தாரால் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டமையால் அன்றோ ஆனந்தக் கூத்தர் தம் அருமைப் புதல்வரை நமதூர்க்கு வந்த சிவனடியார் பால் ஒப்புவிக்கப் பின் வாங்காதிருந்தனர். புதல்வராய் முனிவரது துறவுணர்ச்சியும் அதற்கு ஒரு காரணமே. இக் காலத்திலே அத்தகைய நன்மதிப்புடைய துறவிகளையும் அப்பெற்றித்தாய நற்றவ விருப்புடைய இளஞ் சிறாரையுங் காண்டலரிது என்கிறார். இதனை எழுதியது அரை நூற்றாண்டுக்கு முன்னர்! இற்றை நிலை? முனிவரது நூல்களின் சுருக்க ஆராய்ச்சி என்னும் மூன்றாம் பகுதியில் சிவதத்துவ விவேக ஆராய்ச்சி முதற் கண்ணது. வட மொழி அப்பய தீக்கிதிர் என்னும் பெருஞ் சைவரால் இயற்றப் பட்ட நூலின் மொழி பெயர்ப்பு சிவதத்துவ விவேகம். முனிவரது மொழி பெயர்ப்புத் திறம் விளக்குவது இந்நூல் என்கிறார் கா. சு. (20) வேதம் புராணம் இதிகாசம் மிருதி முதலிய எல்லாம் சிவபெருமானுக்கே கடவுட்டன்மை குறிக்கும் என்பது இந் நூலில் காட்டப் படுதலைச் சுட்டுகிறார். தீக்கிதிர் சிவாத்து விதசைவர்; அவரைச் சைவ சித்தாந்தி என்று கொள்ளல் தவறு என்பார் கா. சு. அடுத்துச் சோமேசர் முதுமொழி வெண்பாவை ஆராய்கின்ற கா. சு. முனிவர் இயற்றிய நீதி நூல் ஒன்றே என்றும், அது சோமேசர் முதுமொழி வெண்பா என்றும் கூறுகிறார். அன்புடைமைக்கு நளனது மக்கட் காதலையும், விருந்தோம்பலுக்குப் பூவணப் பொன்னனையாளையும், அழுக்காறாமைக்கு அமணர் அழுக் காறுற்றுத் துன்புற்ற கதையையும் பிறவற்றையும் ஏற்றாங்கு விளக்கியும் சுட்டியும் செல்கிறார். மக்களைப் பாடுதல் சிறந்த வழக்கன்று என்றாலும் செய்ந்நன்றி பாராட்டு முகத்தால் அவரைச் சிறப்பித்தல் பொருந்துமென்பார் ஔவையார் அசதிக் கோவை பாடியதை விதந்தனர் என்றும், சிவபெருமான் திருக்கோயிற்குரியதை அந்தணருக்குக் கொடுத்து ஓர் அரசன் துன்புற்றான் என்ற கதையை ஆசிரியர் வெஃகாமைக்கு உதாரணமாகக் கூறினர். மறையவரை நடமாடுங் கோயிலாகிய சிவனடியாராக முனிவர் கருதவில்லை போலும் என்றும் குல நலத்தினும் கல்வி நலனே சிறந்ததென்பதற்குத் தமிழ்ச் சங்கத்தாரை வென்ற திருவள்ளுவர் கதையை முனிவர் எடுத்தியம்பினமையால் திருவள்ளுவர் தாழ் குலத்தவரென்பது அவர் கருத்துப் பாலும் என்றும் இன்னவாறு முனிவரர் கூறும் சான்று கொண்டு அவருளத்தைத் தெளிவார் கா. சு. கேள்விக்குச் சிறந்த உதாரணம் கண்ணப்பரே; அது பெரும் பயன் விளைத்தல் கண்ணப்பர் வரலாற்றிற் காணப் படுதல் போலப் பிற யாண்டுமில்லை என்று பாராட்டுகிறார். இற்றைக் காலத்து ஆராய்ச்சியாளர் இராவணன் வட நாட்டரசருடன் போர் புரிவதற்குத் தொடங்குங்கால், பசுநிரை கவர்தல் போலக் காட்டில் இருந்த பெண்ணைச் சிறை செய்தனனே யன்றிக் காமங் காரணமாகச் சீதையைக் கவர வில்லை என்பர் என்றும், வீடணன், பகைவர்பாற் செல்லுதற்குக் காரணம் இராவணன் அவைத் தழுவிக் கொள்ளாமையாம் என்பது முனிவர் கருத்தாதலின் அதனைச் சுற்றம் தழுவாமைக்குக் காட்டு ஆக்கினர். தம்பி தமையனை நீங்கிச் சென்றதனையே இக் காலத்தார் குறை கூறுவர். முற்காலத்திற்கேற்ப இராவணன் பாலுள்ள குறையையே ஆசிரியர் குறித்தனர் என்றும் ஆய்வாளர் உரைகல் கொண்டும் கூறுகின்றார். கதையை எடுத்துக்காட்டாமல் நூல் உண்மையை எடுத்துக் காட்டலையும் அரிதாக மேற்கொள்ளுதலை, தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது தூயபிற வாமையொன்றே சோமேசா - ஆயதனால் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் என்பதால் காட்டி, கருப்பையில் வாழும் உயிர்க்கு முற் பிறவிகளின் நினைவு உண்டென்றும் அது பற்றிப் பிறவாமையை வேண்டும் என்றும் சூதசங்கியை ஓதுகின்றது என்கிறார். கல்வியும் நற்பயனுடையதாக வேண்டுமாகலின் காமச் சுவையை மிகுதி விளைக்கும் சிந்தாமணி முதலிய நூல்களைப் பலகாலும் பயிறல் தீதாதலின் சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீதெனவே, தூக்கி உபதேசித்தார் என்றார். அதனை ஒருகாற் பயின்று அதன் செவ்வியுணர்தல் குற்றமன்று. பயிலுதலே தவறென்றவாறாம். ஏனெனில் இங்ஙனங் கூறிய முனிவரே சிந்தாமணி முழுதுங் கற்றவர்தான். அவர் அதன்கண் நின்று எடுத்த மேற் கோள்கள் பலவுள என்கிறார். முனிவர் கூற்றை நயமாக மறுத்துச் செல்லும் செலவு இது. கண்டிக்கத்தக்க கருத்தாக இருந்தும், முனிவர் மேலும் சிவநெறி மேலும் கா. சு. கொண்ட பற்றுமை இவ்வாறு நெகிழச் செல்கின்றது. அந்தாதிகளின் ஆராய்ச்சி என்னும் உட்பிரிவில் குளந்தைப் பதிற்றுப் பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கனசனசப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் மூன்று அந்தாதிகளையும் ஆய்கின்றார். யார்க்கும் எளிதில் விளங்கும் சொல் நடையும், இலக்கணத் திட்பமும் செவ்விய ஆற்றொழுக்கும் உடையனவாய் விழுமிய கருத்துக்களைத் தெரிவிக்கும் இயல்பின எனப் பொதுமை நயம் புகல்கின்றார். இறைவன் மும்மூர்த்திகளுக்குத் தலைவன், எண் வடிவுடையவன் என்பவற்றைச் சான்றுகளால் நிறுவுகின்றார். திருவருட் சிறப்பு மிகுந்த இடம், அம்மையப்பர் வடிவம், நிட்டை, சைவ சித்தாந்த நுகர் யோகம், அடியார் பெருமை அடியாரை இகழாமை, பிள்ளையார், கூத்தப்பெருமான், மாலின் தொடர்பு, மன்னுயிர் இயல்பு இன்ன உட்டலைப்புகளிலெல்லாம் விரிவாக ஆய்கின்றார். சொல்லழகுகள் இந்நூல்களில் பலவுண்மையைக் குறிப்பிடும் கா. சு. சிலவற்றை சுட்டுகிறார். அவற்றுள் ஒன்று. பார்ப்பதி யணங்கினொரு பாற்பதியு மெம்மான் என்ற விடத்துப் பார்ப்பதி என்ற சொல்லொடு ஒத்த ஒலி நயமுடையதாய்ப் பாற்பதி என்பது அமைந்து, பகுதியிலே பதிந்துள்ள என்னும் பொருளைத் தந்ததனோடு அம்மையின் பகுதியாய் அப்பன் இருக்கின்றான் என்று கூறும் புது முறையும் புலனாதல் காண்க என்கிறார் (51). பிள்ளைத் தமிழாராய்ச்சி என்னும் பகுதியில் செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்னும் இரண்டையும் ஆய்கின்றார். இறைவன் அகண்ட வடிவமுடைய பரமானந்தப் பொருளாயவன் எனினும் அடியவர்களை ஆளுதற் பொருட்டு அருளுருக் கொண்டவிடத்து அவ்வுருவின் இளந் தோற்றத்தை நோக்கித் தொழும் நங்கைமார் கூறுமொழியாகச் செங்கழுநீர்ப் பிள்ளைத் தமிழ் இயம்பப்பட்டது என்றும், மனம் வாக்கிற் கெட்டாத சிற்சத்தியாகிய அம்மை மலையரையன் பாவையாகவும், பாண்டியன் புதல்வி தடாதகைப் பிராட்டியாகவும் திருவுருக் கொள்ளுதலால் அவ்வப்போதுகளில் அம்மையின் அணுக்கத் தொண்டராய் சேடியர்கள் அவளது இளவனப்பைப் பற்றிப் புகழ்ந்து பாடும் பிள்ளைக் கவியாக அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டது என்றும் நூல் இயற்றப்பட்ட நோக்கை நுணுகி உரைக்கின்றார். மும்மலமாகிய மதம் பிடித்து, அறிவாகிய கட்டுத் தறியைப் பிடுங்கி எறிந்து, அன்பாகிய சங்கிலியை உதறித் தள்ளிப் பெரியாரவையாகிய கூடத்தினின்றும் விலகிப் போய்ப் புவனங்களாகிய கடுவனங்களில் அலைந்து எத்தகையரான பாகர்க்கும் அடங்காதவனாய் இயங்கும் உயிர் யானைகள் ஆனை முகவனாகிய நின்னைப் பார்த்து தம்மைப் பிணிப்ப தற்குப் பாசமும் தோட்டியும் தாங்குவதை அறியாது, தம்மைப் போல உன்னையுங் கருதி உன்பாற் சாருமவைகளைப் பார்த்து நீ கைகொட்டிச் சிரிப்பது போலச் சப்பாணி கொட்டி யருள்க என்று கூறும் உருவகக் காட்சியை எடுத்துக் காட்டுகிறார் கா. சு. பிள்ளையார் சிறப்பு, பூசனை, நீதி நூற் கருத்துகள் உயர்வு நவிற்சி. இரட்டுற மொழிதல் இன்னவற்றை நயந்துரைக்கிறார். முனிவர் தம் நகைச்சுவைச் சிறப்பாகக் காட்டுவனவற்றுள் ஒன்று: உன்னை விருந்திற்கு அழைக்க வேண்டும் எனக் கருதும் போதில் இவண் நீயே விரும்பி வந்தாய் என்றெண்ணி மகிழ்ச்சி மீக்கூர்ந்து நாங்கள் முறுவல் பூத்தோமே ஒழிய உன் யானை முகமும் பூதப் பெருவயிறும் குறுகிய தாளால் நடக்கும் வேடிக்கை நடையும் பார்த்து நகைத்திலேம். கலைசையில் உலாவும் சிறுவா எங்கள் சிற்றில் சிதையேல் என்பது செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் சார்ந்தது. திருவேகம்பரந்தாதி, திருமுல்லை வாயிலந்தாதி என்ப வற்றுள் முன்னது மடக்கும், பின்னது திரிபும் உடையது என்பதைச் சுட்டி ஒவ்வோர் எடுத்துக் காட்டுக் காட்டுகிறார். திருவேகம்பர் ஆனந்தக் களிப்புள் ஒன்று முதலாகப் பத்து வரை யுள்ள எண்களை அவ்வத் தொகைகளையுடைய பொருள்களைக் குறிக்கும் வண்ணம் பாடியதையும் அகிலாண்டேசுவரி பதிகத்தில் சாத்திரக் கருத்துகள் மலிவதையும், பஞ்சாக்கர மாலை நமச்சிவாய மூர்த்திகளின் சைவ சித்தாந்த உபதேசத் தனிப் பெருஞ் சிறப்பைக் கூறுவதையும் குறிக்கிறார். கருவி நூல்களின் ஆராய்ச்சியில், தலை நிற்பது தொல் காப்பியப் பாயிர விருத்தியும் முதற் சூத்திர விருத்தியும் என்ப தாகும். இதில் குமரி என்பது குமரியாறே மலையன்று என்றும், முந்து நூல் அகத்தியமே என்றும் ஐந்திரம் வட நூலாதலின் அதன் வழி வந்தது அன்று தொல்காப்பியம் என்றும், கேட்போர் என்பது நூல் கேட்டற்குரிய அதிகாரிகளைக் குறிக்கும் என்றும், நூன்மரபு என்பது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதலாம் என்றும் முனிவர் கூறுவதைக் கா. சு. மிகப் போற்றுகிறார். நூன்மரபுக்குக் கூறிய விளக்கத்தைச் சுட்டும் கா. சு. முனிவர் ஒருவரே இனிது காட்டினர் என்று பாராட்டுகிறார். தொல்காப்பியம் படித்தான் என்றவிடத்து முதற் சொல் ஆகுபெயர் அன்று. திருவள்ளுவர் படித்தான் என்ற விடத்து முதற்சொல் ஆகுபெயர். ஆகுபெயர்கள் சொல் மாற்றம் சிறிதும் இன்றி நின்றாங்குப் பொருள் தருவது. இந்தக் கருத்தை முனிவர் விளக்கியது போலப் பிறர் எவரும் விளக்கிற்றிலர் எனப் புகழ்கிறார். நிலம் பகுத்தோதுங்கால் நடுவணதைக் குறியிட்டாராகலின், அங்ஙனம் பகுக்கப்படும் நிலங்களுமாகாது, அவற்றின் வேறுமாகாது தனக்குரிய நிலம் நடு நிகர்த்ததாய் நிற்றல் பற்றி நடுவு நிலைத்திணை எனக் குறியிட்டாளுதலே ஆசிரியர் கருத்து என்னும் முனிவர் உரையையும் பிறர் கருத்துகளையும் எடுத் தெடுத்தாய்ந்து விளக்கும் பாங்கையும் உன்னும் கா. சு. முனிவரது உயர்ந்த வழக்கீட்டு ஆற்றலை குறிக்கும் எனப் பாராட்டுகிறார். அவ்வகையால் இறையனார் களவியல் உரையொடும் இயைத்துக் காண்கிறார். (74 -75). வைத்தியநாத நாவலர் இயற்றிய இலக்கண விளக்கத்தில் தாம் காணும் குறைகளைச் சுட்டி எழுதிய இலக்கண விளக்கச் சூறாவளியை இயற்றினார் முனிவர். இலக்கண விளக்கை அணைக்கும் சூறைக்காற்று என்னும் பெயரீடே இது, கண்டன நூல் என்பதைத் தெளிவிக்கும். இதனைக் காலத்தோடு சார்த்திக் கனிவால் பரிகின்றார் கா. சு. அதனால், குற்றம் என்று பாராட்டத் தகாதவற்றையும் குற்றமாகக் கூறுதல் வழக்கமாய் இருந்தது என்கிறார். மலைமகள் என்பதில் பொருள் தெளிவாய் அமைந்திருக்கவும் அதனை மலையுமகள் என்று பொருள் படக் கூடுமெனக் கண்டித்தல் முற்கால வழக்கொடு பட்டதன்று எனக் கா. சு. நயமாக மறுக்கிறார். திருவாவடுதுறைத் திருமடத்தைச் சார்ந்த ஈசான தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்தில் மறுக்கப்படுவன பல இருந்தும் குறிப்பாகத் தம் நூல்களில் மறுத்ததை அன்றித் தனியே மறுப் பெழுதாமைக்குக் காரணம் அவ்வாறு செய்யும்படி முனிவரைத் தூண்டுவாரின்மையே என்கிறார் கா. சு. இதனால், சூறாவளிக்குத் தூண்டினார் உண்மை குறிப்பால் புலப்படுகின்றதென்க. தருக்க சங்கிரக மூலமும் அதற்குரிய அன்னம்பட்டீயம் என்னும் உரையும் முனிவரால் மொழி பெயர்க்கப்பட்டது. தருக்க மதக் கொள்கை சைவசித்தாந்தக் கொள்கையோடு தகுவதென்று என்பதைக் கூறும் கா. சு. நூலின் பொருள் அமைதியையும், மொழி பெயர்ப்பு அழகையும் பாராட்டுகிறார். துறைசை ஆதீனஞ் சார்ந்த மரபட்டவணை நூலுக்குத் தருமபுர ஆதீனம் கண்டன நூல் வெளியிட, அக்கண்டனத்திற்குக் கண்டனம் முனிவர் இயற்றினார். அதில் கண்டன நூலின் பிற்காலப் போக்கே அமைந்துள்ளது. ஆனால் முனிவர் எதிரிகள் மீது வசை பொழியவில்லை. சில இடங்களில் அளவிற்கு மிஞ்சிய நுட்பத்துடன் எதிரிகளைக் கண்டித்தமையும், தமது கூற்றிற்குத் தக்க காரணத்தை எதிரிகட்கு உரைத்தல் கூடா தென்று சொல்லும் பான்மையும் இக்காலத்தாரால் போற்றப் பட மாட்டா என்கிறார். கா. சு. சைவ சித்தாந்திகளை வழிபட்டுக் கேட்டால் மலைவறச் சொல்லுவார்கள். என்று எதிரி படர்க்கையிற் சொன்னமையால் தான் சைவ சித்தாந்தி அல்லன் என்று அவன் கூறியதாகுமென முனிவர் கூறுதலை மறுக்கும் கா. சு. தம்மையும் உட்படுத்திப் படர்க்கையில் கூறும் வழக்கம் இக்காலத்திலும் உள்ளது. அதனைக் குறை கூறுதல் கண்டனப் போக்கின் கடுமையை உணர்த்தும் என்கிறார். சிவஞான சித்தியார்க்கு எழுதிய சிவ சமவாதவுரை மறுப்புப் பற்றிக் கூறும் கா. சு. ஆசிரியர் வட நூற் பயிற்சியும் வடசொல் வழக்கு மிகுதியும் இதனுட் காணப்படுமாறொப்ப அவரது பிற நூல்களுட் காண்பதரிது என்கிறார். அந்நடையை மணிப்பிரவாளம் என்றே குறியிடுகிறார். அதில் வரும் எடுத்து என்னும் சொல்லுக்கு எழுதிய வைரக்குப்பாயம் பற்றியும் கா. சு. விளக்குகிறார். முனிவர் தடை விடை கூறுதலில் தனித்திறத்தர் என்பதைக் காட்டும் நூல் கம்ப ராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி, இக்காலத்தில் கலாசாலைகளில் வாத சபைகளில் நிகழ்ச்சி போல்வது என்கிறார் கா. சு. இதனை இந்நாட்டு பட்டி மண்டபம் போல்வதென நாம் சுட்டலாம். நாடிய பொருள் கைகூடும் என்னும் பாடலில் எத்துணைக் குறைகள் கூற முடியுமோ அவ்வளவும் சொல் சொல்லாகக் கூறிப் பின்னர்ப் பிறர் அதனை மறுத்துரைக்க மாட்டாராய் அமையத் தாமே அவ்வமைப்பின் சிறப்பை எடுத்துரைத்தது அந்நூற் செய்தி. சின்னக்காஞ்சி சார்ந்த வைணவர் கம்ப ராமாயணம் ஒன்றே குற்றமற்ற நூல் என்றதற்காக, அச்செருக் கடக்க எழுந்த நூல் என்பது அஃதெழுந்த வரலாறு. இவ் வைணவர் வேறும் இரண்டு பாடற் பொருள் வினவ, அவற்றுக்கு நுண் பொருள் காட்டியமை முனிவர் அறிவுக் கூர்ப்புக்குச் சான்று எனலாம். முனிவர் இயற்றிய பெருநூல் காஞ்சிப் புராணம். அதன் முதற்காண்டம் மட்டுமே அவரால் முடிக்கப்பட்டது. அதன் பொருள் வளம், உவமை நயம், நீதி நூற் கருத்து, திருநகர்ச் சிறப்பு, பாலியாற்றுச் சிறப்பு, ஐந்திணை வளம், திணை மயக்கம், பொது மகளிர் இயல்பு, கல்விக் கழகம், அறம், மெய், அருமை, எள்ளாமை, ஆவணம், சிவம், மால், நகர், அடிமை, உயர்வு நவிற்சி, திருமுருகன், தமிழ்மறை, சிவதீக்கை, முப்பொருள், வீடுபேறு, தமிழ் மந்திரம், தீட்டின்று, பூசை, திருமணம், வியப்பு, ஒழுக்கம், சித்திர கவி மாலை மாற்று, திரிபங்கி என்னும் உட் பகுப்புகளில் விரிவாக ஆய்கின்றார் (87-135). மலையிலுள்ள மிளகுக்கொடி போய்க் காட்டிலுள்ள கொன்றை மரத்தின் மீது மரகதத் தோரணம் போற் படர்ந் திருப்பது, கிளியும் கோழியும் எதிரெதிர் நடக்கக் கூத்தர் கட்டிய நெடுங்கயிறு போலும். கடற்கரைக் காகமானது மலைச் சாரலில் கிடைத்த பலாச்சுளையைக் கவ்விக் கப்பலுக்குக் கொண்டு போதல் இராவணன் சீதையைக் கொண்டு இலங்கை சேர்ந்தாற் போலும் - எனத் திணை மயக்கம் சிலவற்றைத் தொகுத்துக் காட்டுகிறார். சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும், சிவஞான போதத்திற்கும் முனிவர் வரைந்த உரையைத் தனிப்பெரும் பேரூரை என்றும், ஒப்பற்ற உரை என்றும் பாராட்டுகிறார் கா. சு. (136). சிவஞான சித்தியார்க்குரிய சிவாக்கிர யோகிகள், மறைஞான தேசிகர், நிரம்வழகிய தேசிகர், ஞானப் பிரகாச முனிவர், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர் உரையுள்ளும் முனிவர் உரையே தலை சிறந்ததென்பது யாவரும் அறிந்தது எனப் பாராட்டுகிறார். அதற்குச் சான்றும் காட்டுகிறார். சிவ ஞான போத மாபாடியம் எழுதுவதற்கு முன் சிவ ஞான போதச் சிற்றுரை எழுதினர் என்றும், சிவாக்கிர யோகிகளும் வடமொழிச் சிவஞான போதத்திற்குச் சிற்றுரையும் பேருரையும் வடமொழியின்கண் எழுதியுள்ளனர் என்றும், அவை நம் முனிவர் உரைகட்கு ஈடாகா என்றும் கா. சு. கூறுகிறார். பேருரைச் சிறப்பு, சிவஞான போதப் பொருள், சிறப்புப் பாயிர ஆய்வு, பொருளொருமை, தூய்மை, மறையவர் முரண், மறை முடிவு, பொருள் நுட்பம் என்னும் தலைப்புகளில் சிவஞான போதத்தை ஆய்கின்றார். பொருள் நுட்பம் என்பதில் சிவஞான போதப் பன்னிரு நூற்பாக்களின் பொருளையும் திரட்டித் தருகிறார். அது தனியொரு நூற் பொருளைத் தெள்ளிதின் விளங்கும் நடையில் சுருக்கித் தரும் திரட்டுப் பாகென அமைந்துளது அவ் அருமையுடன் நூலை நிறைவிக்கிறார். கா. சு(147-150) சிவஞான முனிவரர் மெய்கண்ட பேருரையர்; இலக்கணப் புலமைக்கு ஆழி; கண்டன நூல் யாப்பில் நிகரிலாத்திறவர்; இருமொழி ஏந்தல்; உரையும் பாட்டும் ஒன்றிய உயர்வர்; மொழி பெயர்த்து அதர்ப்படயாத்த அறிவர், தண்டமிழ் நலத்தர் என்பவை கா. சு. வரைந்த இவ்வரலாற்றாய்வால் தெள்ளிதிற் புலனாம். சைவ சித்தாந்த வரலாறு இந்நூல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1755 ஆம் நூலாக, 1984 இல் வெளிவந்தது; ஆனால் இது நூலுருப் பெற்ற வரலாறு தனியானது. செந்தமிழ்ச் செல்வியில் 1924- ஆம் ஆண்டு சைவ சித் தாந்த வரலாறு என்னும் தொடர் கட்டுரை வரைந்தார் கா. சு. அதே போல் சைவ சித்தாந்த வரலாற்றுச் சுருக்கம், சைவ சித்தாந்த விளக்கம் என்னும் கட்டுரைகளையும் தனியே வரைந்தார். அம்மூன்றையும் முப்பகுதியாக்கி, ஒரு நூலுருவாக்கம் கொண்டதே சைவ சித்தாந்த வரலாறு என்பதாம். இதனால், நூலாக்கம் புதுவது எனினும், அதன் கட்டுரையாக்கம் மணிவிழாக் கண்ட பெருமையது எனல் சாலும். இனிச் சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பதொரு நூல் கழக வெளியீடு 28 ஆக வெளிவந்தது. அது 1927 மே; அப்பதிப்பு, கட்டுரைப் பதிப்பை நோக்க இரண்டாம் பதிப்பாதல் விளக்கம். அது சைவ சித்தாந்த வரலாறு என்பதன் முதற் கட்டுரையை மட்டும் கொண்டதாகும். அதற்கு ஆங்கில மொழி யாக்கப் பதிப்பும் உண்டு. அவ்வாறே மூன்று கட்டுரைத் தொகுப்பாகிய சைவ சித்தாந்த வரலாறு என்னும் நூலுக்கும் ஆங்கில மொழியாக்கம் உண்டு. ஆதலால் தனித்தனி நான்கு நூல்கள். பொருள் வகையால் ஒரு நூலாகி அமைகின்றது என்க. சைவ சித்தாந்த வரலாறு ( 1-26) சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம் (27-37) சைவ சித்தாந்த விளக்கம் (38-56) என்னும் மூன்றன் தொகுப்பாகிய நூல் 56 பக்க அளவான் இயல்கின்றது. அவற்றை முறையே காண்போம். சைவம் என்றது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல் வடிவாய்ப் பிறந்து சிவனொடு தொடர்புடைமை என்னும் பொருளில் விளங்குவது. சிவனைப் பற்றிய நிலையையும், சைவ நூல்களையும் சிவனடிசேர்தற்குரிய நெறியையும் அச்சொல் குறிக்கும். சித்தாந்தம் என்பது, சித்த அந்தம் என்ற இரு சொற்களால் ஆகி முடிபின் முடிபு என்று பொருள் பெறும். சைவநூல்களின் முடிந்த முடிவைக் கூறும் நூல்களைச் சைவ சித்தாந்தம் என்ப என நூற் பொருளை விளக்குகிறார் கா. சு. முதற் சைவ நெறி, திருநெறி, திருநெறியதமிழ் ஒளி நெறி, குரு நெறி, ஒரு நெறி எனச் சேக்கிழார், திருமூலர் முதலாம் பெருமக்களால் கூறப் படுதலை எடுத்துக் காட்டி அவற்றின் பொருண்மைச் சிறப்பையும் நன்கு விளக்குகிறார். சைவ சித்தாந்தவராவார், நற்கலை கற்று யோகம் பயின்று பதமுத்தி எய்துதற்குரிய ஞானமெய்தித் தம்மையும் தலைவனையும் உணர்ந்தோரே என்பதை நால்வர் பாடல் கொண்டும் நாட்டுகிறார் கா. சு. அக்கொள்கைக்கு இலக்கணமாக, கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக முற்பத ஞான முறைமுறை நாடியே தொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே என்னும் திருமந்திரம் விளங்குதலைச் சுட்டுகிறார். மேல்வரும் செய்தியைச் சித்தாந்தம் உரைக்கும் பொருட் சுருக்கம், சித்தாந்த வரலாறு என இரு பகுப்பாக்கிக் கொண்டு ஆய்கிறார் கா. சு. பொருட் சுருக்கம் உலகிலுள்ள பொருள்களுள் உயிருள்ளன அறிவுடையன. உயிரில்லன அறிவில்லாதன. அறிவுள்ளது இயக்க, அறிவில்லாதது இயங்கும். உயிரில்லாதது தானே இயங்காது. உறங்கும் காலத்தும் உயிருண்மை பற்றியே உடம்பின் உட்கருவிகள் இயங்குகின்றன. உயிர் பிரிந்தபோது அவை இயங்கா. கண்டது கொண்டு காணாததை அறிதல் வழியால், உலகம் தோன்றி நின்று மறையும் வண்ணம், தன்னை இயக்கும் ஒரு முதல்வனை இன்றியமையாதது. உயிர் அறிவுள்ளதாயினும் உடம்பில் பற்றுள்ளது. உடம்பு உலகின் பகுதியாம். உடம்பின் பற்றுக் காரணமாகத் தோன்றி மறைதலாகிய பிறப்பு, இறப்பு உடைய உயிர், தன் வயம் இல்லாதது. உலக முதல்வன் தன் வயம் உடையவன். இறைவன் துவக்குண்ணாதவன். முற்றறிவன். துவக் குண்ணும் சிற்றறிவுயிர்க்காகவே உலகைத் தொழிற் படுத்துகிறான். உலகின் தொழிற் பாடு உலகுக்காகவும் அன்று; தனக்காகவும் அன்று. உயிர்க்காக. உயிர் ஒன்றைப் பற்றி நின்றே இயங்குவது. கட்டுள்ள காலத்து உலகைப் பற்றி இயங்கும், கட்டற்ற போது இறையைப் பற்றி இயங்கும். உயிர் அறிவிக்க அறியும் இயல்பினது, அறிவிக்கும் முதல்வனையன்றி, அதற்கு வேறு நிலைபேறு இல்லை. உயிரையும் உலகையும் இறைவனோடு தொடர்பு படுத்துவது அவன் திருவருள். ஆதலால், படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் ஆகிய ஐந்தொழில் நடத்துதற்குத் திருவருளே காரணம். அதனால் அத்திருவருளே தாய் எனப் படும். கடவுள், உயிர், உலகம் என்னும் மூன்றும் வெவ்வேறானவை. முதல்வன் திருவருளே மூன்றையும் தொடர்பு படுத்துவது. இவை சித்தாந்தப்பொருள் அல்லது சித்தாந்த உண்மை என்கிறார் கா. சு. மக்கள் வாழ்க்கை செவ்வைப்பட்ட பின்னரே மெய்யுணர்வுப் பொருள் குறிக்கும் சொற்கள் ஒரு மொழியில் தோன்றும். அதன் பின்னரே நூல்கள் தோன்றும். ஆகலின் நூல்கள் முதலிய வரலாற்றுக் கருவிகள் ஒழிந்து போயினும் சொல்லாய்வு பெரிதும் பயன்படும் கருவியாம் என்கிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் தொல்காப்பிய நூற்பாவால், தமிழ்நாட்டிலே இறைவனது திருவருள் பெற்றுத் தமிழ் மக்கட்கு ஒளி நெறி காட்டவல்ல பெரியோர் தமிழ்ப் பெரு மக்களாய் விளங்கினரெனவும் அவர்வழி நின்றொழுகுவார் எண்வகைப் பட்டனர் எனவும், அவர்கள் தாம் கண்ட அரிய நூற் பொருளையும் கடவுள் அருள் பெறு முறையையும் உணர்விக்கக் கருதி இயற்றிய நூல்கள் மறையெனப்படும் எனவும் உரைக்கின்றார். அந்தணர் ஒருவகைத் துறவியராவர். அது பற்றியே அந்தணர் இலக்கணத்தைத் திருவள்ளுவர் நீத்தார் பெருமையில் ஓதினார். தமிழிலே அறம் - பொருள் - இன்பம் - வீடு என்னும் நான்கினையும் உணர்த்தும் நான்மறைகள் இருந்தன. அவை நிறை மொழி மாந்தரால் இயற்றப் பட்டன. உண்மை அறிவுச்சுடர் கொளுத்தும் அவர் அறிவர் எனப்பட்டனர். சைவ சித்தாந்த உண்மையறிவு தமிழ் நாட்டினர்க்குத் தமிழ்ப் பெயராலேயே கிடைத்தன. தமிழ் நூல்கள் தமிழர் மடிமையால் காக்கப் படாது ஒழிந்தன. தமிழ் நூற் பொருள் கிளக்கும் வடமொழி நூல்கள் காக்கப் பட்டு நாடெங்கும் பரப்பப் பட்டன என்கிறார். தமிழ் நெடுங் கணக்கையும் இயல்நூலையும் வகுத்த அறிவர், மொழியுள்ள அளவும் உண்மை நூற் கருத்து நிலை பெறுமாறு தமிழ் எழுத்தினும் சொல்லினும் இயல்நூல் அமைப்பினும் பாதுகாத்து வைத்தனர். தமிழர் மெய்ப் பொருள் உணர்வில் தலைசிறந்தார் என்பதற்குச் சான்றாக விளங்கும் சொற்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுகிறார். பார்ப்பார்: அன்பு மிக்க வழிபாட்டினால் கடவுட் காட்சி பெறவல்ல தமிழ் மக்கள். கடவுளை ஒரு வடிவத்திலே வழிபாடு செய்வதற்கு முதல் நின்றுதவுவாராகிய ஆதி சைவரே பண்டைப் பார்ப்பார். கடவுள்: இதன் நேர்பொருள் கடந்துள்ள பொருள். எதனைக் கடந்தவன் எனின் உலகத்தை என்பது. அறிவு முதிர முதிரக் கடவுள் உள்ளத்தைக் கடந்துள்ளவன் என்பது விளங்கும். விளங்கவே சொற் கடந்தவன் அவன் என்பது தெளிவாகும். இயவுள்: எல்லாவற்றையும் முதல்வன் இயக்குகின்றான் என்னும் கருத்தில் அமைந்த பழஞ்சொல் இயவுள். கந்தழி: பற்றிலான் சுட்டிறந்தவன் என்னும் பொருளுடையது கந்தழி. கந்து என்பது முதலில் தறி என்பதை உணர்த்திப் பின், பற்றும் ஒரு பொருளைக் குறிப்பதாய்ப் பின், பற்றுக்கோடாக உள்ளதை உருவகிக்கப் பயன்பட்டது. உடல் உயிர்: இச்சொற்கள் உருவகப் பொருளில் இலக் கணத்துள்ளும் வழங்குவதனால் தமிழ்நாட்டினர் யாவர்க்கும் உயிர் உடம்பு என்பதன் வேறுபாடு தொன்றுதொட்டே நன்கு தெரிந்ததென்று என்பது அமையும். சிவம் : செம்மையடியாகப் பிறந்த சொல் சிவம். நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம் என்கின்ற பண்பினையும் செந் நிறம் என்ற நிறத்தையும் குறிக்கும். செம் பொருள் என்பதன் பொருளே சிவம் என்பதற்கும் ஆம். இறைவன்: இது இறு என்பதன் அடியாகப் பிறந்தது. இறு என்பது தங்குதல் என்னும் பொருளுடையது. ஓம்: ஓம்பு என்பது ஓம் என்பதன் அடியாகப் பிறந்த சொல். பாதுகாப்பவன் என்னும் பொருளது. எழுத்து வடிவாலும் தமிழே என்பதை விளக்குவது. இவை தமிழ்ச் சொற்களாகவும், மொழி பெயர்ப்பல்லனவாயும் விளங்குவன ஆதலால், இச் சொற்கள் கூறும் உண்மைகள் ஆரியக் கலப்பின் பின் உண்டானவை அல்ல எனத் தெளிவிக்கிறார். திருமூலர் முதலிய பேரறிஞர் தமது அறிவு நூல்கள் வாயிலாகப் பண்டே விளங்கிய சைவ சித்தாந்த ஒளியைத் திகழச் செய்தனர். மெய் கண்டதேவர் சிவஞான போதமென்னும் சைவ சித்தாந்தத் தலைமணி நூலைத் தமிழுக்கு உயிரான பன்னிரண்டெழுத் தெனப் பன்னிரண்டு நூற்பாவில் ஓதினார். சிவஞான சித்தியார், சிவப் பிரகாசம் முதலிய நூல்களும் எழுந்தன. இவை செய்யுள் நூல்களாக இருந்தமையால் சைவ சித்தாந்த நூல்களின் முடிவை உணர்தற்குரிய தெளிவினைக் கற்பார்க்கு நல்கும் கதிர் மணி நூலாகச் சிவஞான முனிவரால் சிவஞான போதப் பேருரையும் சிற்றுரையும் கிளர்ந்தன. நூல் பாதுகாப்பு ஒன்றினாலேயே ஆரியர் தமிழரின் மேம்பட்டனர். நூல் பாதுகாவாமையினாலேயே தமிழர் தம் பெருமையை இழந்தனர். தமது சமய நெறி இன்னதென உணர்ந்து கடைப் பிடித்தலினாலேயே ஏனையோர் உயர்ந்தனர். அங்ஙனம் செய்யாமையால் சைவர் அஃகி ஒழிந்தனர். திருக் கோயில், திருமடம் முதலிய சைவ சமய நிலையங்களைப் புறச் சமயத்தார் பற்றிக் கொள்ள விடுத்து வாளாவிருக்க நேர்ந்தது. சைவ சித்தாந்த நூல்களை இனியாவது நாம் கை நழுவ விடாது போற்றிக் காப்போமாக. இவை கா. சு. தரும் சைவ சித்தாந்த வரலாற்றுச் சுருக்க மாகும் (1-26) சைவசித்தாந்த விளக்கச்சுருக்கம் என்னும் கட்டுரை (27-37) இறை, உயிர், உலகம், மாயை, கலை ஆகியவற்றைப் பற்றிய கலைச் சொற்களை விளக்குவதாகவும், சித்தாந்தப் பொருளடைவு கூறுவதாகவும் அமைந்துள்ளது. கா. சு. தரும் உயிர் விளக்கம் வருமாறு. மும்மலம்: 1. ஆணவம்: உலகப் பற்றினை விளக்குந் தன்மை. 2. மாயை: உலகின் சார்பால் அறிவு மயங்குந் தன்மை. 3. கன்மம்: அவாவியதை நுகர்தற்குரிய முயற்சியை எழுப்பும் தன்மை. சிவம் அறிவிக்க அறியும் தன்மையுடையதாய் அநாதியே அறியாமை காரணமாகத் தனது இயல்பு உணராது உலகப் பற்றின் வயமாய்ச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையால், இறைவன் அருளால் திருத்தமுற்று நன்னெறி எய்தற்குரியதாய் உள்ளது அறிவு. தனக்குறும் நலத்தைத் தானே அறியாத வண்ணம் அதற்கு உலகப் பற்றினை விளக்கும் தன்மை ஆணவம். அசித்தாகிய உலகின் சார்பால் அறிவு மயங்கும் தன்மை மாயை. அவாவியதை நுகர்தற்குரிய முயற்சியை எழுப்பும் தன்மை கன்மம். இம் மும்மலப் பிணிப்பால் அவ்வுயிர்க்குப் பிறப்பு இறப்பு உண்டாம். அஃது உலகத்தைப் பற்றி நின்றபோது உலக மயமாய் இருப்பினும், சிவத்தைச் சார்ந்த போது சிவமயமாய் நிற்கும். சிவத்தின் பால் பற்று மிக மிகத் தன் இயல்புக்கு வேறாகிய உலகின் பற்றுத் தேய்ந்து தேய்ந்து மாய்ந்தொழியும். உலகப் பற்று முழுதும் அற்றுப்போகவே உயிர் சிவத்தோடு இரண்டறக் கலந்த நிலையெய்தி அதில் நின்றும் அகலாது பேரானந்தப் பெருவாழ்வு பெற்றுய்யும். உலகம் என்னும் பகுதியில் 36 தத்துவங்களையும் முறையே விளக்கி, பதமுத்தி, பரமுத்தி ஆயவற்றைக் கூறுமளவில் கட்டுரையை நிறைவிக்கிறார். மூன்றாம் கட்டுரை, சைவ சித்தாந்த விளக்கம். இதில் உலோகாயதர், புத்த சமயத்தார், சமணர் ஆகிய புறப்புறச் சமயத்தார் கொள்கைகளை விளக்கிப் புறச் சமயமாகிய வைதிகப் பக்கத்தைத் தொடங்கி மீமாம்சம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம் என்பவற்றையும் விளக்குகிறார் கா. சு. அதன் நிறைவாகப், புறப் புறச் சமயங்களும் புறச் சமயங் களும் சட உலகத்தை ஆராய்ந்து பார்த்ததில் அதற்கு மூலம் பிரகிருதி தத்துவம் என்பதே முடிவாயிற்று. ஆன்மா உண் டென்பது சமண சமயத்திற்கும், வைதிக சமயங்களுக்கும் பொது வான கொள்கையாகும். புறச் சமயங்களுள் தருக்க நியாய மதங்களும் யோக மதமுமே கடவுள் உண்டென்று கூறுவன. ஆனால், அவைகளில் கடவுள் உலகத்தோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை தெளிவாகக் கூறப்படவில்லை. தருக்க யோக மதங்களே மாத்துவாச்சாரியார் கொள்கைக்கு அடிப்படை யானவை என்கிறார். ஏகான்ம வாதத்தையும் சைவ சித்தாந்தக் கொள்கையையும் ஒத்துப் பார்த்தால் சமயங்கள் பலவற்றையும் ஒத்துப் பார்த்ததன் பலனுண்டாம் என்று கூறும் கா. R., அவ்விரண்டன் கொள்கை களையும் ஆய்ந்து, உலகமனைத்தையும் உயிர்களையும் தொழிற் படுத்துவதற்குக் கடவுள் அவற்றோடு இரண்டறக் கலந்த நிலையில் நிற்க வேண்டும். உடம்பை நடத்துகின்ற உயிரானது எப்படி உடம்போடு அத்துவிதமாகக் கலந்து இருக்கின்றதோ, அவ்வாறே கடவுளும் உலகத்தோடு அத்துவிதமாகக் கலந்து நிற்கின்றார். கதிரவன் ஒளியானது கண்ணொளியோடும் உலகப் பொருளோடும் கலந்து எப்படி அவற்றை விளக்குகின்றதோ அவ்வாறே கடவுளினுடைய திருவருளும் ஆன்ம அறிவோடும் உலகத்தோடும் கலந்து ஆன்மாவை நடத்தி ஆட்கொள்கின்றது. இதுதான் கடவுள் அத்துவிதமாய் இருக்கிறார் என்பதற்குப் பொருள். அங்ஙனம் கொள்ளாமல் கடவுளே உலகமாயிருக்கிறார் என்று கொள்ளுதல் அறிவிற்குப் பொருத்தமானதன்று. ஆதலால் அத்துவிதம் என்னும் சொல்லின் உண்மைப் பொருள் உணர்ந்து உண்மையான அத்துவிதக் கொள்கையுடையது சைவ சித்தாந்தம் ஒன்றேயாம். இதனால்தான் சைவ சித்தாந்தத்தில் கூறும் அத்துவிதத்தைச் சுத்தாத்து விதமென்று கூறுதல் மரபு என்று முடிவு செய்கின்றார். கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொருள்களையும் அத்துவிதமாக ஒற்றுமைப்படுத்தி நிற்பது கடவுளது திருவருளே ஆதலால், அத் திருவருளே எல்லாம் என்று பெரியோர் கூறினர் என்று நூலை முடிக்கப்புகும் கா. சு. அருளில் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளால் என்னந்தி அகம்புகுந் தானே என்னும் திருமந்திரச் சான்றால் நிறைவிக்கிறார். பொதுப் பார்வையாக நோக்க மூன்றும் ஒன்றாய், ஒன்றை ஒன்று விளக்குவதாய் அமைந்து மும்மடி வலியுறுத்தும் ஒருமைக் காட்சி வழங்குகின்றது, சைவசித்தாந்த வரலாறு எனப்படும் நூல். தனிப்பாடல் திரட்டு இரண்டு பாகங்கள் திருநெல்வேலி மணிவாசக மன்றத் தலைவர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் இயற்றிய உரையுடன், சென்னை, பி. இரத்தின நாயகர் ஸன் அவர்கள் பதிப்பிப்பாக வெளி வந்தது இந்நூல். இதன் முதற்பாகம் 18-9-39 இலும், இரண்டாம் பாகம் 2-11-39 இலும் முன்னுரை பெற்றுள. முதற் பகுதியில் 35 புலவர்களால் பாடப் பட்ட 870+3 பாடல்களும், இரண்டாம் பகுதியில் பெயர் சூட்டிய புலவர்கள் 57 பெயரும், பெயர் சுட்டப் படாத பிறரும் பாடிய பாடல்கள் 865+2ம் இடம் பெற்றுள. ஆதலால் இருபாகங்களிலும் 1738 பாடல்கள் உரை, கருத்து, குறிப்பு ஆகியன பெற்றுள்ளன (நான்கு குறள்களை ஒரு பாடலாக எண்ணியமையால் விடு பாடு 3). தனிப்பாடல் தொகுப்பும் புதுவது அன்று. முன்னரே நிகழ்ந்ததே! உரையும் முன்னரே காணப்பட்டதே! ஏறத் தாழ 300 ஆண்டுகளின் முன்னர்த் தோன்றியது தமிழ் நாவலர் சரிதை! முதற்கண் தனிப்பாடல் திரட்டு என்னும் வடிவு கொண்டது, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரைக் கொண்டு, முகவை சேதுபதி மன்னர் அமைச்சராக விளங்கியவரும், மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரையார் தந்தையார் ஆகத் திகழ்ந்த வரும் ஆகிய பொன்னுசாமித் தேவர் தொகுத்த தனிப் பாடல் திரட்டாகும் (1862). முதற்கால புலவர்கள் கருத்து நுட்பத்தையும், பிற்காலப் புலவர்கள் சொல் நுட்பத்தையும் குறிக்கோளாகக் கொண்டனர் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். கா. சு. உரைவரைய நேர்ந்த காரணத்தையும் குறிக்கிறார் கா. சு: தனிப்பாடல் திரட்டுக்கு உரைகள் பல இருப்பினும் அதன் கணுள்ள பாடல்களை வரலாற்று முறைக்குத் தக்கபடி வரிசைப் படுத்திப் பாடல்களின் பொருளை நன்கு தெளிவு படுத்திக் காட்டும் விளக்கவுரை இன்றியமையாததாக இருப்பதைக் கருதி அத்தேவையை நிறைவேற்றும் நோக்கத்தோடு இயற்றப் பெற்றுள்ளது என்கிறார். மேலும், வரலாற்று முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் வரிசை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளமை, பாடல்கள் திருத்தம் பெற வேண்டிய இடங்களில் திருத்தம் பெற்றமை, பாட்டின் நோக்கத்திற்கும், பொருள் விளக்கத்திற்கும் வேண்டும் குறிப்புகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சேர்க்கப் பட்டமை என்பவற்றைக் குறிப்பிடுகிறார். இத் தொகுதிகளில் இடம் பெற்ற பாடல்கள் 17 ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்த புலவர்களின் அரிய பாடல்களே என்றுரைக்கிறார். புலவர்கள் பெயர்கள், அவர்கள் பாடிய பாடல்களின் தொகை, செய்யுள் முதற்குறிப்பு அகராதி என்பவை முன்னும் பின்னுமாக இணைக்கப் பெற்றுள. இரண்டாம் பாகத்தின் முன்னுரையில் பாடினோர் நிலை, பாடப் பட்டோர் இயல்புகள், பாடு பொருட் சிறப்பு என்பவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அத்தொகுதியிலேயே செம்பாதி பாடிய புலவர்களின் பெயர் சுட்டப் படாத பாடல்கள் உள்ளன. (865/432). 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட புலவர்கள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. முதற்பாகத்தில் முதல் இடம் பெறுபவர் ஔவையார்; ஆனால், அத்தொகுப்பில் மிகுதியான பாடல்களைப் பாடியவர் காளமேகப் புலவர். முன்னவர் பாடல்கள் 74; பின்னவர் பாடல்கள் 187. காளமேகரை அடுத்த எண்ணிக்கை பாடியவர் கடிகை முத்துப் புலவர். அவர் பாடல்கள் 107. ஔவையார் பாடல் எண்ணிக்கையை யடுத்து கம்பர் பாடல்களும் (68), பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் பாடல்களும் (65) உள. ஒரே பாடல் மட்டும் தொகுப்பில் இடம் பெற வாய்த்தவர் எல்லீசு துரையும், சுப்பிரமணியப் புலவர் என்பாரும்! பட்டினத்தார் பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தர் பாடல் ஒன்றும், திருமங்கையாழ்வார் பாடல் ஒன்றும் தனிப்பாடலாக இடம் பெற்றிருத்தல் வியப்பே! முன்னவர் ஒரு பாடலும், அவர் நூல் தொகுப்பில் உள்ளதே. பின்னவர்கள் பாடிய பாடல்கள் ஆலி நாட என விளியும், சம்பந்தப் பெருமாள் கேளீர் என விளியும் அமைந்திருத்தல் ஆய்வுக்குரிய செய்தி. இரண்டுமே அகத்துறைப் பாடல்கள். இரண்டாம் பாகத்திலும் ஒரே பாடலால் பெயரறியப்படும் புலவரும் சிலருளர். அத்தொகுதியிலும் ஔவையார் பாடல்களும் 5 இடம் பெற்றுள. முதற் பாகத்திலே இணைத்திருக்க வேண்டியவை பின்னுக்குத் தள்ளப் பட்டதற்குக் காரணம் காட்டப்படவில்லை; புலவர்கள் கால அடைவும் போற்றப்படவில்லை. இல்லை எனின், முதலாழ்வார் மூவர் பாடல்கள் இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றிரா. திரு வாசகம், குசேலோ பாக்கியானம் முதலியவற்றில் உள்ள சில பாடல்கள் பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடல்களில் இடம் பெற்றிரா. பெயரறியப்படாத புலவர் பாடல்களுடன் இவற்றை இணைக்க இயலாதே! மேலும், இறையனார் பாடியதாக வரும் குறுந்தொகைக் கொங்குதேர் வாழ்க்கைப்பாடல், மதுரைச் சொக்கநாதர் பாடியதாகக் குறிப்புச் செய்து இடைமடுத்திருக்க நேர்ந்திராது. ஆதலால், பெரிதும் முன்னைத் தனிப்பாடல் திரட்டைத் தழுவியே அமைத்து, உரையும் கண்டார் கா. சு. எனலாம். புருஷன், திரி, நிரபராதி, நிமிஷம், ராஜகுமாரத்தி, ராஜகுமாரன், தர்மார்த்த காமமோட்சம், இரமிக்க என்றெல்லாம் வரும் சொல்லாட்சிகள் கா. சு. வரைந்த பிற நூல்களில் காணற்கு அரியவை. இவற்றையெல்லாம் நோக்க அந் நாளில் தமிழ்ப் புலமையால் சிறந்து விளங்கிப் பலர் புகழ் பேற்றுக்கு இடமாக இருந்த கா. சு. பெயரால் தனிப்பாடல் திரட்டைக் கொண்டுவர வேண்டும் என்று பதிப்பகத்தார்க்கு இருந்த காதலே அப்பதிப்பாக வெளிவந்துளது எனலாம். எந்த வரலாற்றை எழுதினாலும் வரலாற்று ஆய்வும், வரலாறு உடையார் பாடிய பாடல் ஆய்வும் செய்தலை வழக்காறாக - மாறா நெறிமுறையாகக் கொண்டு தமக்கு என ஒரு தடம் பதித்தவர் கா. சு. அத்தடம் தனிப்பாடல் திரட்டில் இல்லாமை நம் முடிவுகோளுக்கு அரணாக அமைகின்றது. மற்றொன்றும் சுட்டலாம்; உரை காணா நூலுக்கு உரைகண்டதோ, வெளிப் படா நூலை வெளிப்படுத்தியதோ ஆகாமல் பதிப்பகத்தார்க்குத் தம் பெயரால் நூல் வழங்குதல் அளவாலேயே பாட்டும், குறிப்பும், உரையும் அமைந்துள்ளன எனலாம். இலக்கிய வரலாறு முதலாவதாகவும் முதன்மையான தாகவும் படைத்தவர் தமிழ்க் கா. சு. அவர் புலவர்கள் வரலாற்றைப் பற்றிக் கருத்துச் செலுத்தாமல், வழிவழியாகக் குறிப்பிட்ட பாடல் நிகழ்ச்சிக் குறிப்பளவில் அமைகின்றார். பிறர் வரைந்த விளக்கவுரைகளும் இல்லாமல் பொருள் குறிக்கும் அளவிலேயே அமைகின்றார். புலவர் வரிசை எண்ணோ, பாடல் தொடர் எண்ணோ இடம் பெறாமையும் குறிக்கத்தக்க குறையாக உள. ஔவையார் தனிப்பாடல்கள் முதற்பாகத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன. அவ் வவ்வையாரைப் பற்றி இலக்கிய வரலாற்றில் எழுதியுள்ளார். ஒட்டக்கூத்தர், புகழேந்தி இவர்கள் திகழ்ந்த பன்னிரண்டாவது நூற்றாண்டிலேயே ஔவையார் என்னும் பெண்மணியும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களையும் அசதிக்கோவை முதலிய சிறு காப்பியங்களையும், அட்டாங்க யோகக்குறள் என்னும் ஞான நூலினையும் இயற்றியும், பெண்ணையாற்றின் ஒருபுறம் பாலும், ஒரு புறம் நீரும் செல்லப் பணித்தது முதலிய அற்புதங்களை நிகழ்த்தியும், பெரும் புலவரோடு வாதாடி வெற்றியடைந்தும் பெரும்புகழோடு திகழ்ந்ததாக அறிகிறோம் என்கிறார் (II. 123). சுந்தரமூர்த்திகள், சேரமான் பெருமாள் நாயனார் என்பார் தமக்கு முன்னர், ஔவையார், விநாயகர் அருளால் கயிலாயம் சென்றனர் என்னும் செய்தி மேற் குறித்த இலக்கிய வரலாற்றுக் காலத்திற்கு மாறாவதால் இந்த ஔவையாரை வேறொருவர் எனக்கொள்ள நேர்கின்றது. சில இடங்களில் பாடல் தலைப்பில் நிகழ்ச்சியை விரித் துரைக்கிறார். ஔவையார் பாடல்களில் 1, 9, 18, 49, 53 ஆகிய ஐந்து பாடல்களுக்குத் தலைப்பில் நிகழ்ச்சிக் குறிப்புகள் உள்ளன. ஔவையார் மழையில் நனைந்து கொண்டு பாரி என்னும் இடையன் வீட்டிற்குச் சென்று அங்குத், திருமணமில்லாமல் இருந்த அங்கவை, சங்கவை என்னும் பெண்கள் தந்த சிற்றாடையை உடுத்தியும், கேழ்வரகுக் களியுண்டும் மகிழ்ந்தார் என்னும் செய்தியைக் குறிக்கின்றார். இதற்குச் சான்று என்னவென்று புரியவில்லை. பாரிவள்ளல்தானே தமிழிலக்கியம் கண்டது! வாதக்கோன் நாளையென்றான் என்னும் பாட்டின் உரையின் மேல் குறிப்புரையாக வாதநாடி அடங்கில் ஒரு நாளிலும், சேத்துமநாடி அடங்கில் ஒரு நாழிகையிலும், பித்த நாடி அடங்கில் ஒரு நிமிஷத்திலும் உயிர் நீங்கும் என்னும் நாடியிலக்கணம் குறித்துள்ளமை பாடற் பொருளைப் புரியவும் சிறப்பாக உணரவும் துணை செய்கின்றது. இவ்வாறு பாடற் பொருளுக்கு விளக்கம் தரும் குறிப்புகளைச் சிலச்சில இடங்களில் வழங்குகின்றார். இனி இலக்கணக் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகியனவும் இக்குறிப்புரைப் பகுதியிலே கா. சு. மேற்கொண்டு உள்ளார். அளாவிய என்பது அளாவி என நின்றது (ஔவை. 18) நீரம் என்பதில் அம் சாரியை (ஔவை. 52) இடைக்காடர் பாடிய ஐம்பொருளும் என்னும் பாடல், செங்கோல என்பது செக்கோல என்று வலித்தல் விகாரம் (காள. 3) தொடர்க்கு இறைவனது ஐந்துவகை வடிவத்தையும் எனப்பொருள் கூறும் கா. R., ஐம்பொருள் என்பன திருமாலின் பரமபத இருக்கை, திருப்பாற்கடலில் இருத்தல், அவதாரங்கள், வியாபகங்கள், உருவத்திருமேனி என்னுமிவ்வைந்தையும் குறிக்கும் என்கிறார் (இடைக், 1). பாடல் முகப்பிலே கூறும் பாடல் நிகழ்ச்சிச் செய்தியைக் குறிப்புப் பகுதியில் காட்டுவதையும் அறிய முடிகின்றது. கொங்கு தேர் வாழ்க்கை, மதிமலி புரிசை கடியுண்ட நெடுவாளை வறுக்கை நறுங்கனி முதலிய பாடற் குறிப்புகளில் இதனைக் காணலாம். கணிகண்ணன் போவென்றான் என்னும் பாடற் குறிப்பில் வரும் செய்தி, திருமழிசையாழ்வாரின் மாணவனாகிய கணிகண்ணனைக் காஞ்சிபுரத்தில் அரசாண்ட பல்லவராயன் தன்னைப் பாடும்படி கேட்க, அவர் நரனைப் பாடுவதில்லை என்றமையால், அவரை ஊரை விட்டுப் போகும்படி அவன் கட்டளையிட்டான். அதை அவர் திருமழிசையாழ்வாருக்குத் தெரிவிக்க அவர் தாமும் உடன் செல்வதாகக் கூறி பெருமாளையும் அவ்வாறு செய்யும்படி பாடிய பாட்டிது பெருமாளும் அவ்வாறு செய்யவே, காஞ்சியில் ஒளியற்றுப் போனதைக் கண்ட பல்லவராயன் அவர்களைத் திரும்பி வரும்படி வணங்கி வேண்ட அவர்கள் பெருமாளோடு திரும்பினார்கள். அப் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் ஏற்பட்டது. வடமொழியில் யதோத்காரி என்று பெயர். திரும்பிய போது ஆழ்வார் சொன்ன பாட்டு வருமாறு என முற்பாட்டையும், பிற்பாட்டையும் பொருளால் இணைத்துக் கூறுவார் போலக் குறிப்புரைக்கும் இடமும் உண்டு. பிறர் கூறும் கருத்தாகக் குறிப்புரைக்கும் இடமுமுண்டு; ஈட்டி எழுபது என்னும் நூல் தங்களைப் பற்றிப் பாடுவதற்காக ஒட்டக்கூத்தருக்குத் தமது தலைகளைப் பரிசாக அளிக்க அத் தலைகளாலாகிய சிம்மாசனத்திலிருந்து இப்பாட்டைப் பாடினர் என்ப என்பது அது. உட்பொருளும் மருத்துவம் முதலிய பிறதுறைச் செய்திகளும் அரிதாகக் குறிப்புரையில் வழங்கப்பட்டுள்ளன. பட்டத்து யானையின் கட்டு அவிழ்க்கப் பட்டால், அது சோழநாட்டினரைப் போய்த் தாக்குமாதலின் சோழனது குலமகளிரது தாலி அவிழும் என்றார் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய தென்னர் தென்னன் என்னும் பாட்டின் உட்பொருள். (ஒட். 12). பித்தத்தினால் உண்டாகிய வெப்பம் தணியும்படியாக வாழை நிழலில் இருத்தல் வைத்திய நூலில் கூறப்படும் என்று சத்தம் பயிலும் புலவர் கதலித்தண் தோட்டம் புகும் என்னும் பாடற் குறிப்பில் சுட்டுகிறார். (ஒட். 13). அரசு என்பதற்கு அரசமரமெனப் பொருள் கொண்டு அரசமரத்தின் நிழல், ஆத்தி, வேம்பு, பனை முதலியவற்றின் நிழலைப் பார்க்கிலும் பெரியதென்று தொனிப்பொருள் கொள்வதுமுண்டு எனத் தொனிப் பொருளும் காட்டுகிறார். (கம்பர். 14). சொற்பொருள் விளக்கமும் குறிப்புரையில் உண்டு. மடலேறுதல் என்பது பனங்கருக்காற் செய்த குதிரையேறித் தான் விரும்பிய பெண்ணின் படத்தை அதன் மீது வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். அப்போது கண்டவர்கள் பனங் கருக்கால் மடலூர்ந்தவன் உடம்பைக் கீறின், வெண்ணீர் தோன்றின் அவனுக்கு அவன் விரும்பிய பெண்ணை மணம் செய்வித்தல் மரபு . (சொக்க. 11) உயிர்கள் கடவுளையடைவதற்கு இருவினை யொப்பு என்னும் பக்குவம் ஏற்படவேண்டும். அதாவது புண்ணிய பாவப் பயன்களில் ஒத்த வெறுப்பு மனத்தில் அமைதலேயாகும். (பலபட்டடைச்சொக்க. 16) இன்ன காரணத்தால் இவ்வாறு கூறப்பட்டது என்றும் குறிக்கிறார். தலைவன் மேவுங்காலத்தில் இரா நீளவேண்டும் என்றும், பிரிந்த காலத்தில் இரவு விரைவில் கழியவேண்டும் என்றும் எண்ணுவது தலைவியின் இயல்பு. இரண்டிற்கும் மாறாக இர வானது இருப்பதால் அது பொல்லாதெனப் பட்டது என மேவிலுடனே விடியும் என்னும் பாடற் குறிப்பில் காரணம் காட்டுகிறார். (சொக்க. 40). ஏகம்பவாணன் தனக்கு நன்றி செய்த ஏகன் என்பவன் பெயரை முதலிலும், தகப்பன் பெயராகிய வாணன் என்பதை இறுதியிலும், தனது ஆசிரியராகிய கம்பர் பெயரை நடுவிலும் வைத்துத் தன் பெயரை அழைத்துக் கொண்டான் என்ப. பாணன் ஒருவனுக்குப் பாண்டிய அரசு கொடுத்ததாகவும் கூறுப என்பது பெயராய்வுக் குறிப்பு. (கம்பர். 32). இடத்துக்குத் தகப் பொருள் காணற் குறிப்பும் குறிப்புரைப் பகுதியில் உண்டு. வாலி என்பது சொல்லளவில் இராமாயணத்திற் கூறப்படும் குரங்கின் தலைவனைக் குறித்தாலும், இந்த இடத்தில் துரியோதனனைக் குறிப்பதாகும். மூக்கரிதல் என்பது பொதுவான மானக்கேட்டை உணர்த்திற்று. கள் என்பது கடுப்பையும் உணர்த்தும். முதிர்ந்த கள்ளுக்குக் கடுப்புண்டு. (ஒட்ட. 20) செருப்புக்குத் தோல் வாங்கும் என்பதற்கு செருப்பு தைப்பதற்காகத் தோல் வாங்கும் என்ற சாதாரண பொருளிருந்தாலும் இங்கே கூறிய பொருளே (யுத்தகளத்தில் போய் எதிரிகளின் யானைகளைத் தன் வசப்படுத்துகின்ற என்னும் பொருளே) பொருத்தமானது. அது ஒரு சொல்லழகு (ஒட்ட. 21) என்பன முதலிய இடங்களில் இடத்துக்குத் தகப் பொருள் காணற் சிறப்பு விளக்கப்படுகின்றது. முக்கண்ணன் என்றரனை என்னும் பாடல் பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய பாடல் வரிசையில் உள்ளது (3). அதனைக் காளமேகப் புலவர் பாடலெனக் கொண்டாரும் உளர் என்பதைக் குறிப்பிடுகிறார். குறிப்பு என்பதற்குப் பதில் கருத்து என்றும் கூறுகிறார். கருத்து : நீர் போனால் என் உயிர் போமென்றாள் இது இராம கவிராயர் பாடிய நாமம் பெருஞ்செல்வம் (4) என்னும் பாடற் கருத்தாகும். பசி மிகுந்த பின்னெல்லை என்னும் பாடலில் (பல வித்து. 351), முன்கூறிய செயல்கள் வேண்டிய பயனைக் கொடாமை போல வாழ்நாள் எல்லாம் சும்மா இருந்து மரண காலத்தில் தருமஞ் செய்ய முயலுதல் உரிய பயனைத் தராது என்பது கருத்து என்றும்; செந்தமிழோர் உய்ய என்னும் பாடலில் (பலவித்து. 71), கருப்பு வில்லை முறிக்க ஐங்கரனையும், கடலை அடைக்க வேலனையும், சந்திரனைத் தேய்க்க வீரபத்திரனையும், மன்மதனை எரிக்க சங்கரனையும், தென்றலை உண்ண வாசுகியையும் வணங்கு என்பது கருத்து என்றும் கூறுகிறார். சென்னிமலை என்னும் பாட்டில் (பலவித்து. 230), கொண்டு கூட்டமாக எடுத்து ஆட்டுக்குக் காலில்லை; யானைக்குக் கொம்பில்லை என்ற பொழுது ஆட்டத்திற்கேற்ற காலமைப் பில்லை என்றும் யானைக்குத் தலையில் கொம்பில்லை என்றும் கூறலாம்என்று பொருள் கோள் விளக்கம் செய்கிறார். ஒரு மரக்காலிட்டு என்னும் பாடலில் (பலவித்து. 182), எழுபதினாயிரம் என்பதில் எழு என்பதற்கு எகரமும், பது என்பதற்கு ய கரமும், ஆயிரம் என்பதற்குத் த கரமும் சேர்ந்து எய்த என்ற சொல் வருவது காண்க எனத் தமிழ் எண்ணின் எழுத்து வடிவைக் கூறுகிறார். நடுவெழுத்தலங்காரமாக வரும் பாடல்களுக்கு வேண்டும் குறிப்புகள் எழுதுகின்றார். கூறப்படும் சொற்களின் நடு வெழுத்துகளைக் கூட்டினால் ஒரு சொல் கிடைக்கும். நடு வெழுத்து நீங்கிய ஒவ்வொரு சொல்லும் வேறு பொருளும் தரும், இவ்வாறு அமைக்கப்படும் சொல்லணிப் பாடல் நடு வெழுத்தலங்காரமாகும். சீரான பசுவின்பேர் சென்னிப் பேரும் செகம்புகழும் மாதுலன்பேர் கன்னிப் பேரும் பேரான மரத்தின்பேர் நிசத்தின் பேரும் பேசரிய இவ்வாறும் ஒன்றாச் சேர்த்து ஏராக இவற்றினடு வொன்றாக் கூட்ட இயல்பிரமன் சிவமெனவே இயம்ப லாகும் வாரான ஈராறின் முன்பின் னான ஆறுமொழி யவர்க்காக அமைந்த தன்றே. இப்பாடற் சொல்லுரைக்குப் பின்னே, குறிப்புரை உள்ளது. அது: கபிலை, சிரசு, மாமன், கன்னி, ஆசினி, சாசுவதம் என்ற ஆறு சொற்களின் நடுவெழுத்தைச் சேர்ந்தால் பிரமன் சிவ என்ற சொற்களமையும். மற்ற எழுத்துக்களினாலாகிய சொற்கள் கலை, சிசு, மான் (பெண்), கனி, ஆனி, சா+சுதம் என்பன கடவுளுக்கில்லை: அதாவது கலையும் (ஆடையும்), சிசுவும் (குழந்தைத் தன்மையும்), பெண்ணுடைமையும், கனி (முதிர் தலும்), துன்பமும், இறப்பாகிய கேடும் இல்லை என்பது கருத்து என்பது அது. இவ்வாறு நடுவெழுத்தலங்காரம் வருமிடங்களிலெல்லாம் வேண்டுமளவு சுருங்கிய குறிப்புரைகள் உண்டு. இரட்டுறல் எனப்படும் சிலேடை வருமிடங்களில் உரை தருவதுடன் அரிதாக இரட்டுறல் விளக்கமும் உண்டு. பொருள் கூற வேண்டிய தேவை இல்லாத இடங்களில், இதற்குப் பொருள் வெளிப்படை என்று உரைப் பகுதியை முற்றுவிக்கிறார். அவற்றுள் ஒன்று: சக்கரவா கங்கிளியாந் தைநாரை யன்னங்க ரிக்குருவி கௌதாரி காடையன்றில் - கொக்கு குயில்கருடன் காக்கைபுறா கோழியிரா சாளி மயில்கழுகு கோட்டான்வௌ வால் பறவைப் பெயர்களை அடைமொழி ஒன்றும் இன்றி வெண்பா இலக்கணம் பொருந்தப் பாடிய பாடல் இஃதாதலால் வேறு பொருள் நோக்கு இல்லாமை கருதி வெளிப்படை எனப்பட்டதாம். இலக்கிய வரலாற்றுத் தேர்ச்சியும், புலவர் வரலாற்று ஆய்வு, நூலாய்வு, கால ஆய்வு ஆகியவற்றின் திறமும் ஒருங் கமைந்த கா. சு. வின் அத்திறங்கள் இத் தனிப்பாடல் தொகுப்பில் சிற்சில இடங்களில் அரிதாகவே ஒளி செய்கின்றன. மணிமாலை மணிமாலை என்பது தமிழ்க் கா. சு. நடத்திய திங்கள் இதழ். திருநெல்வேலி வடக்கு ரதவீதி மணிவாசக மன்றத் தலைவராக இருந்தவர் கா. சு. அம்மன்றத்தின் வழியாக வெளியிட்ட இதழாகலின் மணி என்னும் முற்சொல் அமைந்ததெனவும், இதழினுள் சரிதமாலை, இலக்கிய மாலை, உலகியல் மாலை என மாலைப் பகுப்புகள், இருந்தமையால் மணியுடன் மாலை இணைக்கப்பட்டது எனவும் கொள்ளலாம். கோவை என்பது மாலைக்கு ஒரு பெயர். கோவையில் கோக்கப்பட்டது மணி. ஆகலின் கோவை பெரும் பகுப்பாகவும் அல்லது ஆண்டுப் பகுப்பாகவும், மணி சிறுபகுப்பாகவும் அல்லது திங்கள் பகுப்பாகவும் அமைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. ஆதலால் கோவை 1: மணி 1 என இதழ்த் தலைப்பில் இடம் பெறலாயிற்று. இவ்வகையில் கோவை 1, மணி 12 என ஓராண்டு தொடர்ந்து நடத்தப் பெற்று உள்ளது. ஆண்டு 1935 ஆகும். மணிவாசகர் மன்றச் சார்பில் இதழ் நெல்லையில் இருந்து வெளி வந்ததாயினும் அதன் அச்சீடு டி. ஆர். சுப்பையாபிள்ளை என்பாரால் தென்காசி மீனாட்சி அச்சகத்தில் அச்சிடப் பட்டுள்ளது. அதன் ஆண்டுச் சந்தா ரூ. 5. ஆயுள் சந்தா ரூ. 100, பாதுகாப்பாளர் ரூ. 1000, தனிப்பிரதி அணா 8 என்னும் குறிப்பு இதழில் உள்ளது. அதன் பதிவு எண்: எம் 3229 என்பது. ஒவ் வொரு மாதமும் 8- ஆம் நாள் (ஆங்கில மாதம்) இதழ் வெளிப் பட்டுள்ளது. மணிமாலை இலக்கியம், இலக்கணம், சமயம், நாட்டு நடவடிக்கை, வரலாறு, அறிவியல், சமூக இயல், தொழில் இயல், சட்ட இயல், ஆங்கிலம் இன்ன பல துறைகளைத் தாங்கி வெளி வந்துளது. அதன் சிறப்புகள் பலப் பல. கா. சு. தாமே அவ்விதழிலமைந்த செய்திகள் அனைத்தையும் படைத்து வழங்கியுள்ளார். அவர் தனியொரு பல்கலைச் செல்வர் என்பதை நன்கு நிறுவும் சான்று அது. இதழ் பெறுவார் இதழைப் பிரித்துத் தனித்தனியே சில நூல்களாக அட்டை கட்டி வைத்துக் கொள்ளும் நிலையில் தொடர் தலைப்புகளுக்குத் தனித்தனியே தொடர் பக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வாசகர்க்குத் தனித்தனியே சில நூல்கள் கிடைப்பதுடன், நூல் ஆசிரியர்க்கும் சில நூல்கள் எழுதி முடித்த நிறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னோடி அமைப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளி வந்த திங்கள் இதழாகிய செந்தமிழ் எனல் தகும். ஏனெனில், அவ்விதழ், இவ்விதழ் தொடங்குவதற்கு 32 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி இம்முறையை நடைமுறைப் படுத்தி வந்தது. ஏறத்தாழ எட்டு அல்லது ஒன்பது படிவங்களில் (128 அல்லது 144 பக்கங்களில்) வெளிப்பட்டுள்ள மணிமாலை இதழ்கள் ஒவ்வொன்றிலும் 12 முதல் 16 பக்கங்கள் ஆங்கிலப் பகுதியாக உள்ளன. அது “Tamil Blooms” அதில் தமிழ்க்கலை, இலக்கியம், சமயம் பற்றியனவாகச் செய்திகள் விளங்கின. புறநானூற்றுப் பாடல்கள் 1-8; 1:9 இதழ்களில் ஆங்கில ஆக்கமுற்றுத் தமிழ்ப் பாடல்களுடன் வெளி வந்துள. தொடரும் என்னும் குறிப்பு இருந்தும் அதன் மேல் ஒரே பாடலுடன் நின்றுவிட்டது (1:10). ஆங்கில ஆக்கம் உரை நடையே! பாட்டன்று. நீதிநெறி விளக்க ஆங்கில ஆக்கமும் வெளிவந்துளது. கா. சு. இயற்றிய அறிவு விளக்க வாசகம், இந்திய சட்டக் கோவை, உலகப் பெருமக்கள், வாழ்க்கை இன்பம், வானநூல், பழந்தமிழர் நாகரிகம், உடல் நூல் என்பன நூல் வடிவில் பல்வேறு காலங்களில் வெளி வந்தன எனினும், அவை மணி மாலைப் பொருளாகவும், மணிமாலைப் பொருள் நூலுரு வாகவும் - கொண்டும் கொடுத்தும் சிறந்த வகை உணர வாய்க்கின்றது. பொதுமறை என்னும் தலைப்பில் திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பற்றிய ஆய்வு தொடக்க முதல் வெளி வந்துளது. அது நூல் உருவாக்கம் பெற வேண்டுவது. பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்கு பொறிவாய் இல்லாமல் ஐந்து அவித்த இறைவன் எனப் பொருள் காண்கிறார். அவித்தான் என்பதற்கு இயற்கையாகவே அடக்கியவன் எனப் பொருள் கண்டு புலனைந்தும் வென்றான் என்னும் தேவாரத்தைக் காட்டுகிறார். உலகியற்றியான் என்பதற்கு, உலகு தானே தோன்றுவது என்பது சமணர் கொள்கை. கடவுள் உலகினைப் படைத்தான் என்பது இக்குறளாதலின் வள்ளுவர் சமணர் அல்லர் என்கிறார். ஐந்து அவித்தல் என் ஐந்து அவித்தல் அன்பர் ஐந்து அவித்தல் எனக் கொள்ளல் வேண்டும் என்றும் கூறி, மலர் மிசை ஏகினான் என அன்பரது உள மலர் மேல் சென்றவன் என்பது போல் கொள்க என்கிறார். பொய் தீர் ஒழுக்கமாவது, மெய்ப் பொருளையே அடையும் ஒழுக்கம் என்கிறார். உயிர் அழியாது என்பது வள்ளுவர் கொள்கை என்பதை மாயும் என் மாயா வுயிர் என்பதால் நிலை செய்கிறார். குருடன் குருடற்கு வழிகாட்ட இயலாது; கவலையுடையான் கவலையுடையானுக்கு வழிகாட்ட முடியாது என்று விளக்கித் தனக்குவமை இல்லான் தாள் சேர்தலே, மனக் கவலை மாற்றும் மருந்தாம் என்கிறார். தாளாவது திருவடி. இடைவிடாது நினைதலே சேர்தல். இறைப் பணி கொண்டவரே தாள் சேர்ந்தவர். அறிவு ஒரு தாளும், செயல் ஒரு தாளும் என இரு தாளாம். உலகப் பொருளைப் பற்றிய மனம் திருத்தாளைப் பற்றியவுடன் கவலை தீரலின் மாற்றல் என்றார். மனமாற்றத்தால் கவலை மாற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார். உயிர் நிலைபெற்றது. அதனை மன்னுயிர் என்பதால் திருவள்ளுவர் உரைத்தார். அவர் ஆதி பகவன் என்று இறைவனைக் குறித்தது, தமிழ்ச் சொல் வடிவேயாம். மாதொருபாகன் மாதொரு கூறன் என்பது. அதனைக் கதை கட்டும் வன்மை யுடையவர் வள்ளுவர்க்குத் தாய் தந்தை என்றனர் - இவ்வாறு பொது மறைத் தலைப்பில் வள்ளுவரை விரிவாக ஆய்கிறார் கா. சு. கிடைத்த அளவால் நூலாக்கல் நலம். பண்டைத் தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து தனி நூலாகியது. சமயக் கருத்துகள், ஆங்கிலத்தில் வரைந்த சமயச் செய்திகள் ஆகியவை தமிழர் சமயத்தில் பொதிந்தவையாகும். பத்திரிகை ஆராய்ச்சி என்னும் பகுதி மிக விரிவான தாகும். செய்தித் திரட்டு என்பதும் அதிலுள்ளது. பல்வேறு பட்ட அச்செய்திகள் பெரும்பாலும் இதழுக்கு 32 பக்க அளவில் அமைகின்றன. அவற்றுள் சில:- பிப். 25: சர் ராமேசம் என்பார் முசுலீம் கிளப்பில் பேசினார். ஒரு பிள்ளையும் பிறக்கக் கூடாது என்று செய்வதற்கன்று கருத்தடை; காப்பாற்ற முடியாத நிலையில், பிள்ளை பெறா திருக்கத் தடை செய்யவே. இது சமயத்திற்கு மாறானதன்று. அகில திருவாங்கூர் மாசபை மார்ச்சு 4 இல் கூடியது. அதில் தமிழர்க்கும் இடமிருத்தல் வேண்டும். திருவாங்கூர் வரலாற்றுச் சான்று தமிழில் இருப்பதாலும், அரசமொழியாகத் தமிழ் இருந்தாலும், தொல்பொருளை ஆயும் முயற்சியில் தமிழருக்கு இடமிருக்க வேண்டும். மலையாளத்தார் தமிழர்களைச் சகோதரராகப் பாவியாமலும், தமிழைச் சொந்த மொழியாகக் கருதாமலும், தன்னலம் கருதுவாராயின் அது இரங்கத் தக்க செய்தியாகும். கனம் சவகர்லால் நேரு, தமிழரே நாகரிகத்திலும் வணிகத்திலும் பெயர் பெற்றிருந்த பூர்வ மக்களாவர் என்று தெரிவித்திருக்கிறார். உழவர்க்குரிய பணவுதவியைக் குறைந்த வட்டிக்கு அரசு தந்தால் அவர்கள் கடனில் இருந்து மீண்டு மற்ற நாட்டவர் போல் விருத்தியடைவர். மார்ச்சு 2 உடன் முடிவாகிற வாரத்தில் சென்னை மாகா ணத்தில் நோய் விவரம்: காலரா கண்ட எண்ணம் 1099 இறந்தவர் 614 வைசூரி கண்ட எண்ணம் 1085 இறந்தவர் 315 பிளேக் கண்ட எண்ணம் 41 இறந்தவர் 39 மார்ச்சு 8 : சென்னை திருவட்டீசுவரன் பேட்டை கோயில் குளத்தில் தற்கொலை செய்து கொண்ட பார்த்த சாரதிக்கு வயது 25. கிண்டிக் குதிரைப் பந்தயத்தில் சொத்தை எல்லாம் இழந்ததுதான் காரணம். மைசூர் காசான் என்னுமிடத்தில் ஒரு தந்தை தன் மகளை ஒருவனுக்கு மணம் செய்வித்து, பின் அவளைக் கடத்திச் சென்று அவள் பிளேக்கில் இறந்ததாகக் கூறி வேறொருவனுக்குத் திருமணம் செய்து தந்தான். நீதிமன்றத்தில், அவன் கீழ்சாதியான்; சாத்திரப்படி சரியான மணமன்று என வாதித்தான். இரண்டாம் மணத்தை நீக்கி, அத்தந்தைக்கு ஐந்தாண்டுச் சிறையும், 500 ரூ அபராதமும் விதித்தது நீதி மன்றம். சென்னைச் சட்ட சபையில் நியாயக் கட்சியில் இருந்து சென்னை மேயர் குமாரராசா, எம். ஏ. முத்தையா செட்டியார் முதலிய 11 பேர்கள் மார்ச்சு 6 மாலை பிரிந்து சென்று, சுயாட்சிக் கட்சி ஒன்று ஏற்படுத்தினர். அதில் கனம் எம். டி. றி. ரெங்க நாதமுதலியார் சேர்ந்திருந்து மீண்டுவந்து நியாயக் கட்சியைச் சேர்ந்தவருள் ஒருவர். பரோடா நாட்டில் 15 அங்குலமுள்ள குள்ளர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பழம் புராணம் கூறும் வாலகில்லியார் போலும். பருத்தி விதையை விதைக்குமுன் 2 மணி நேரம் வெயிலில் உலர்த்த வேண்டுமென்று தேர்ந்தவர்கள் கூறுகின்றனர். செயிப்பூர்க்கு அருகில் உள்ள ஓர் ஊரில் நெடுநாள் திறக்கப்படாமல் இருந்த நெற் களஞ்சியம் திறக்கப்பட்ட போது அதில் தவசம் எடுக்கப் போன வேலைக்காரன் இறந்தான். வேறு இருவரும் இறந்தனர். இதனால் நெல் அறைகளை அடிக்கடி திறந்து காற்று உலாவும்படி வைத்தல் வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடத் தலைவர்கள் தமிழை வளர்க்க முயலாமல் பிறமொழிகளைப் போற்றுவது தாய்மொழிப் பற்றின்மையைக் குறிக்கும். இந்தி மொழியானது பொதுமக்கள் பேச்சிற்கு, ஒருக்கால் பயன்படத் தக்கதேயன்றித் தமிழைப் போல் இலக்கியப் பயிற்சிக்குத் தக்கதன்று. எதிர்காலத்தில் கலாசாலையில் தாய்மொழி உயர்தரக் கல்விக்குக் கருவியாக இருக்க வேண்டுமாதலின் பிறமொழிகளைக் கட்டாயமாக்குதல் தாய்மொழி குன்றுவதற்கும் மாணவரின் அநாவசிய உழைப்பிற்கும் இடமாகும். அமெரிக்க நியூயார்க்கு மாகாணத்தில் காரியட்ரீகா என்பவர் 1500 சதுரமைல் விரிவுள்ள காட்டில் மலைகளும் ஏரிகளும் நிறைந்த இடத்தில் குடிசை கட்டி வதிந்து தீக் கோளில்லாது பாதுகாக்கும் காவற்காரியாய் இருந்து வருகிறாள். முற்காலத்துத் தாடகை முதலியவர்கள் இவள் தன்மையர் போலும். பிசித்தீவில் இந்தியர்கள் கூலி வேலைக்குத்தான் தகுதி யென்ற கருத்து நிலவுகிறது. சட்டப்படி அங்குள்ள இந்தியர்கள் நிலம் வாங்கக் கூடாது. நிலநூற் பேராசிரியராகிய வாட்சு என்பவர் 7. 9. 35 இல் நார்விச்சில் பேசிய போது, உலக அதிசயங்களிலெல்லாம் மனிதனது மூளையே மிக வியக்கத் தக்கது. 80 அடிநீளமும் 20 டன் கனமுமுள்ள பிராணிகளுக்குக் கோழிமுட்டையளவு மூளை தான் இருந்தது. ஒரு டன் உடம்புக்குக் காலவுன்சு மூளை தான் இருக்கிறது. சுமார் 160 பவுண்டு கனமுள்ள மனிதனுக்கு 3½ பவுண்டு மூளை இருக்கிறது. மூளைப் பெருமையால் தான் மனிதன் உலகத்தை வென்றிருக்கிறான் என்றார். கண்ணில்லாமல் பொருள்களைப் பார்க்கும் ஆற்றல் மனிதனிடம் அமைந்து கிடப்பதாகவும் அவ்வாற்றலை முயற்சியாலும், பழக்கத்தாலும் பயனுறும்படி செய்யலாம் என்று சீமை யில் கண் மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். 30. 10. 35 இல் சேலத்தில் கூடிய சேலம் பார்லிமெண்டு என்னும் சபைக் கூட்டத்தில் எந்த மொழியை இந்தியாவுக்குப் பொது மொழியாய்க் கையாளலாம் என வாக்குவாதம் நடந்தது. ஆங்கிலத்தைச் சிலரும், இந்தியைப் பலரும் தழுவிப் பேசினர். பின்னையோர் ஆங்கிலத்தை அன்னிய மொழியென்று இகழ்ந்தனர். அதைப் பேசுதல் அடிமைத் தனமென்றும் பேசினர். மொழிநூல் அறிந்தவர்கள், ஆங்கிலம் ஆரிய மொழிகளில் ஒன்றென்பதை அறிவர். மக்களிடத்துள்ள பகைமையை மொழியின் மேல் சுமத்துவது அழகாகாது. 18. 10. 35 இல் பீகார் இந்து சபைத் தலைவர் திரு. சகத் நாராயணலால், டாக்டர் அம்பேத்காரது மதமாற்றத் தீர்மானத் திற்குத் தாம் வருந்துவதாகக் கூறினார். தென்னாட்டிலுள்ள சிவநெறியுயர் கொள்கைகளை டாக்டர் அம்பேத்கார் அறிந்திருந்தால் அவ்வாறு அவர் மத மாற்றம் விரும்ப மாட்டார். இந்து மதம் என்று ஒரு தனி மதம் இல்லை என்பதும் அவர் அறிக (இச் செய்தியை வேறோரிடத்தும் எழுதுகிறார்). - இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள் ஆகியவற்றை எழுதுகிறார். தம்மோடு சம நிலை வாக்குப் பெற்ற மில்லருக்குப் பூண்டி அரங்கநாதர் சட்ட மேலவைக்கு விட்டுக் கொடுத்த பெருந்தகைமையைப் பாராட்டுகிறார் (1: 11: 252). சென்னை மாநகரின் பழைய அமைப்பை எழுதுகிறார் (1.10.216). நிலவியல், ரொட்டி வகை செய்தல், எழுதுகோல் வகை, சோப்பு ஆகியவை செய்தல் முதலியவற்றை விளக்குகிறார். ஆழ்வார்கள் வரலாறு, நெப்போலியன் வரலாறு, மேனாட்டுக் கதைகள் ஆகியனவும் இடம் பெறுகின்றன. புறநானூற்றுப் பாடல்கள் சில ஆங்கில ஆக்கமுறுகின்றன. கா. சு. பல்கலைச் செல்வர் என்பதைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடி மணிமாலையாகும். சிறந்த இதழுக்கு வழக்கமாக வரும் பொருள் முட்டுப் பாட்டு நோயால் அவ்விதழ் ஓராண்டு அளவில் நின்று விட்டது போலும். மணிமாலையில் அரும்பொருள் கட்டுரைப் போட்டி என ஒரு போட்டியும் வைக்கப்பட்டுள்ளது. கா. சு. எழுதிய நூல்களுள் ஒவ்வொரு படியும் ரூ. 102 ம் முதற் பரிசாகவும், நூல்களுடன் ரூ. 52 ம் இரண்டாம் பரிசாகவும், நூல்கள் மட்டும் மூன்றாம் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய கட்டுரைத் தலைப்புகள்: 1. பருத்தித் தொழில் (Cotton Industry) 2. பூகம்பம் - பூகாரிலும் குவெட்டாவிலும் நிகழ்ந்தன வற்றை ஒத்துப் பார்த்தெழுதுதல் 3. ரேடியோவினால் நடக்கும் விசித்திர வேலைகள். 4. மேல் நாட்டு விளையாட்டுகள் (Tennis, Foot Ball etc). விளம்பரம் செய்வதே வியாபாரத்திற்கு அழகு என அறிவித்து, ஒரு பக்கத்திற்கு ரூ. 2-00 என்றும், அரைப் பக்கத்திற்கு ரூ. 1-00 என்றும், கால் பக்கத்திற்கு ரூ. 0. 8-0 என்றும் விளம்பர விகிதம் இருந்தும் ஒன்றிரண்டு விளம்பரங்களே மொத்தத்தில் கிடைத்ததென அறிய முடிகின்றது. அவையும் நூல் விளம்பரம், போட்டிப் பரிசு விளம்பரம் என்பன. பொருட் பொருளார், அறிவுப் பொருட் பக்கம் தலை சாய்த்தும் பாராமையால் பல இதழ்கள் இவ்வாறு தலை சாய்ந்தே போகின்றன என்னும் குறிப்பை உணர்த்தும் செய்தி இது. இது பாடமாக நாட்டுக்கு அமைந்தால் நலம் என்பதால் இக்குறிப்பைச் சுட்ட நேர்கின்றது. கா. சு. திருவாவடுதுறைத் திருமடத்தின் வழக்குக்குச் சான்றுரைத்து நலம் செய்துள்ளார். உ. வே. சாமிநாதரின் 81 ஆம் பிறந்தநாட் கொண்டாட்டம் 6-3-35 இல் நிகழ, அதற்குப் பதினான்கு அடியில் ஓரகவற்பா இயற்றிப் பதிப்பித்துள்ளார் (1-3:90-91) இவை கா. சு. வரலாற்றுக் கருவிகள். மணிமாலை சங்கச் சான்றோர் பாடிய, பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த காமரு மணியும் தொடை புணர்ந் தமைத்த காட்சியை மெய்ப்பிப்பதாய்ப் பல் பொருட் களஞ்சியமாய்த் திகழ்கின்றது. சட்டப் பெயர்ப்பு ஐம்பது ஆண்டுகளின் முன்னரே செய்யப்பட்டிருந்தும், தமிழால் சட்டக் கல்லூரி இயல வில்லை! அறிவியல், உடலியல், தொழிலியல் தமிழில் தந்திருந்தும் இந்நாளிலும் அத்துறை தமிழுக்கு வாய்க்கவில்லை. புறநானூறு ஆங்கிலமாகியும், சங்கக் கொடை ஆங்கில வழியே உலகக் கொடை ஆக்கப்பட்டிலது! கா. சு. வின் முற்போக்கும் நாட்டின் பிற்போக்கும் உணர இவை மேற்போக்காகக் கிடைக்கும் சான்றுகள்! வாழ்க்கை இன்பம் இப்பெயரிய நூல் சென்னை, செம்புதாசுத் தெரு, உமாதேவன் கம்பெனி என்பதன் வழியாக 1948 இல் வெளி வந்ததாகும். 30-04-1945 இல் கா. சு. இயற்கை எய்தினார். ஆதலால். அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த நூல்களுள் ஒன்றாகும் இது. மேற்குறித்த பதிப்பகத்தார் அறிவுச்சுடர் என்னும் தலைப்பில் வெளியிட்ட வரிசையில் ஒன்றாக வெளி வந்தது வாழ்க்கை இன்பம். மலர்தொறும் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றி வாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும், வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங் கற்றுப் பயனெய்துமாறு அறிஞர்கள் எழுதி உதவும் நூல்களை வெளியிட்டு வருவதாகக் கூறும் இந்நூல் முன்னுரை, நூலாக்க முறை, பயன் ஆகியவற்றை விளக்குகிறது. தோற்றுவாய் முதல் நினைவாற்றலால் நோய் நீக்கு முறை என்பது ஈறாக இருபத்திரண்டு தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளைக் கொண்ட தொகை நூல், இது. இதன் பக்கங்கள் 91. கட்டுரைத் தலைப்புகளை அறிந்த அளவானே நூற் பயன் விளங்குமாறு அமைந்துளது. அவை: தோற்றுவாய், உடலமைப்பு, பற்கள், உணவின் செரிமானம், இரத்த ஓட்டம், மூச்சுக் கருவிகள், எலும்பும் தசையும், நரம்பின் அமைப்பு, தோல், உணவு கொள்ளுதல், பானம், நோய் நீக்கும் இயற்கை முறை, கால் முழுக்கு, முழுக்கு, மண வாழ்க்கை, விளையாட்டு வாழ்க்கை, ஓய்வு, முதுமையில் வசதிக் குறைகள், பிள்ளைப்பேறு, குழந்தைப் பாதுகாப்பு, பொதுவான நோய் நீக்க முறைகள், நினைவாற்றலால் நோய் நீக்கும் முறை என்பன. உடலியல், உணவியல், மருத்துவ இயல், வாழ்வியல், என நான்கு இயல்களாகப் பெருமைப் படுத்திப் பார்க்கும் அளவிலும் நூல் அமைந்திருத்தல் விளங்குகின்றது. எப்பகுப்பால் பார்ப்பினும், எவ்வகைத் துறைப்பால் படுத்தி ஆராயினும் முழுமை அல்லது ஊடகம் வாழ்க்கை இன்பமே ஆதலால் இப் பெயரைச் சூட்டினார் எனலாம், இத்தகு உடல் நலக் கட்டுரைகளும், துறை நிலைக் கட்டுரைகளும் கா. சு. எழுதுவதற்கு அடிப்படையாக இருந்தது, மணிமாலை என்னும் மாதிகையே என்பது இவண் நோக்கத் தக்கது. மணிமாலை பற்றிய கட்டுரை காண்க. நமக்கு ஓர் உடலுண்டு என்றும், அதனைப் பேணுதல் கடன் என்றும் எப்பொழுது நினைக்கிறோம்! நோய் வந்த போதேயன்றோ! நோய் வராக்காலும் அதனை நோய்க்கு ஆட் படுத்தாமல் காக்கக் கருதிப் பேணிக் கொள்பவரே வருமுன் காக்கும் அறிவர்; எதிரதாக் காக்கும் ஏற்ற மிக்கவர். ஆனால், இயற்கையில் எய்தும் முதுமையும் நமக்கு நம் உடலைப் பற்றிய உணர்வை அமைவாக - அருமையாக - உணர்த்தவே செய்கின்றது. ஒரு பொருளின் அருமை அதனை இழந்த போது தான் நன்கு உணரப்படும். அதுபோல இளமையின் பெரும் பயன் இளமை கழிந்த பின்னர்தான் கூர்மையாகப் புலப்படும் என்கிறார் கா. சு. உடல் நலம் இன்மையால் உண்டாகும் கேடுகள் அல்லது விளைவுகள் ஒன்றா இரண்டா? விரித்துரைக்கிறார் ஆய்வுச் செல்வர் கா. சு. உடல் நலம் பெறா விட்டால் நாம் சுயாதீனம் அற்றவர்களாவோம். உணவு முதலிய ஒன்றையும் நாம் இனிது நுகர முடியாது; நமக்கு வேண்டுபவைகளை நாமே தேடிக் கொள்ளவும் இயலாது; நோயும் வசதிக் குறைவுகளும் உடம்பில் நிலைவரமாய் இருந்து கொண்டிருக்கும்; நம்மைச் சேர்ந்த வர்களுக்கு நாம் ஒரு சுமையாய் இருப்போம். சுகக் குறைவுள்ள உடம்பில் நோய் எளிதாகப் புகுந்து நிலை பெறுவதோடு பிறர்க்கும் அது எளிதாகப் பரவும். ஒரு நோயாளியினால் பல மனிதர்க்கு நோயும், பொருட் செலவும், துயரமும் ஏற்படுதல் கூடும் என்பது அது. இவ்வடித்தளத்தை மனத்தில் கொண்டால்தான் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் நிகழ்த்துதற்காம் கடமைகளை அழுத்தமாக எண்ணி அமைவாகச் செயல்பட முடியும் என்பதால் தோற்றுவாயிடத்தே இக்கருத்துகளை வெளியிட்டுள்ளார் ஆசிரியர். மருத்துவர் உடலமைப்பைச் சிறப்பாக அறிந்திருத்தல் வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் பொது முறையிலாவது கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறித் தொடங்கும் கா. R., உடலுறுப்புகள் பற்றிய அமைப்பு, செயல் விளக்கம் ஆகியவற்றை எளிமையாகச் சுருங்கிய அளவில் எழுதுகிறார். அவர் கூறிய பொது முறையறிவுக்கு அச்செய்திப் போக்கே எடுத்துக் காட்டாகி விடுகின்றது. குழந்தைப் பருவத்தில் பல்லைப் பற்றிய அக்கறை குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. பெற்றோர்களுள் பலரும் அதனைக் கருதுவது இல்லை. அதன் விளைவு என்னாகும் என்பது அப்பொழுது தெரிவது இல்லை. பின்னே என்ன ஆகும்? நிலைவரமில்லாத பற்கள் குழந்தைகளுக்கு முதலில் முளைக்கும். அவற்றை அடிக்கடி சுத்தப் படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நிலைவரமான பற்கள் உண்டாவதற்கு முன்னே அவை விழுந்து விடும். அவை விழுந்து விட்டால், நிலைவரமான பற்கள் தோன்றும் பொழுது சரியான இடத்தில் முளையாமல் முன் நீண்டும், பின் குழிந்தும், நடுவில் வளைந்தும், தெத்துக் குத்தாய் முளைக்கும் என்று ஆய்வுரை வழங்குகிறார் கா. சு. (7). செயற்கைப் பற்குச்சு (Brush) பயன்படுத்துபவர்கள், அதைப் பயன்படுத்திய பின் அதன் மீது உப்புப் பொடியிட்டு வைத்திருந்து தூய்மைப்படுத்தினால் அதிலுள்ள புழுக்கள் மாயும். நன்கு காய்ச்சின நீரினைக் கொண்டு பல்லைக் கழுவுதல் சிறந்தது. ஒரு பல் அழுகி விட்டால், அதை உடனே பல் மருத்துவர் உதவி கொண்டு எடுத்து விட்டு, அதற்கு வேறு பல் வைத்துக் கொள்ளுதல் நலம் என்றும் கூறுகிறார். அரத்தமாகிய இரத்தத்தின் சிறப்பு விளங்க உடலியல் அறிஞர்கள் உயிர்த்துளி என அதற்குப் பெயரிட்டதை உரைத்து, ஒரு துளி இரத்தத்தைப் பூதக் கண்ணாடியாற் பார்த்தால் சிறிய உருண்டை போன்ற செவ்வணுக்களும், வெள்ளணுக்களும் காணப்படும். அவை இரத்தக் கால்வாயில் மிதக்கும் மீன்கள் போலக் காணப்படும் என உருவகக் கண் கொண்டு பார்க்கிறார். மொழிப் புலமையுடையார் துறையறிவும் வல்லாராக இருந்தால் எத்தகு நலமாம் என்பதைக் காட்டும் சான்றுகளுள் ஈதொன்று. மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து மூச்சு விடுவதே முறைமை. ஆனால், சிலர் வாய் வழியாகவும் மூச்சு விடுகின்றனரே. குறட்டையின் போது வாய் வழிக் காற்றுத் தானே புகுகின்றது. இரண்டிற்கும் உள்ள காற்றின் வேற்றுமை என்ன? மூக்கின் வழியே செல்லும் காற்று வெதுவெதுப்பும் ஈரமும் உடையதாகின்றது. வாய் வழியே உட்புகும் காற்று அவ்வாறாவது இல்லை. வாய் வழியே மூச்சு விடுவதால் இருமலும் கோழையும் உண்டாகும் என்கிறார். நம் உடம்பில் இருநூற்றாறு எலும்புகள் இருக்கின்றன என்றும், சிறு பிள்ளைகளின் எலும்பு மென்மையானது. ஆதலால், அவற்றை வடிவ மாற்றம் அடையாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறுகிறார். பிறந்த குழந்தையை ஒரு பக்கமாகவே கிடத்தி வைத்தால் நெற்றியின் ஒரு புறம் புடைத்தும், மற்றொரு புறம் தட்டையாயும் வடிவுறுதல் கூடும். ஆதலால், சில மணி நேரங்களுக்கிடையில் அதன் கிடையை மாற்ற வேண்டும், நிற்கும் திறம் உண்டாவதற்கு முன் குழந்தையை நிறுத்தி வைத்தால் அதன் கால்கள் வளைந்து போம் என்கிறார். விரல் எலும்புகளின் பொருத்துவாய் கதவுக்கீல்கள் போல இருப்பதால் விரல்கள் கதவு போல முன்னும் பின்னுமாக அசைதல் கூடும். தோள் எலும்பின் பொருத்து ஒரு குழியில் ஒரு பந்தினை அமைத்தாற் போல் இருக்கும். அது, கையை வட்டமாகச் சுழற்றுவதற்குத் துணை புரிகின்றது என்றும், எலும்புகள் இலேசாக உடைந்தால் தக்கவாறு மருத்துவம் செய்தவுடன் அவை வளர்ந்து பொருந்திக் கொள்ளும். மரத்தின் கிளைகளைப் போல அவை வளர்ந்து பொருந்துவன என்றும் கூறுகிறார். தசைத் தொகுதிகள் ஐந்நூறு இருப்பதையும், உடம்பின் பகுதிகளை அசைக்க உதவுவதையும் குறிக்கும் கா. சு. கொல்லு வேலை, தச்சு வேலை செய்வார் கை பெரிதாயும், வலுவாயும் இருப்பதையும், மலை வேலை செய்வார் கால் பெரிதாயும் திற மாயும் இருப்பதையும் எடுத்துக் காட்டித் தசைப் பயிற்சியின் பயனை விளக்குகிறார். கருங்கைக் கொல்லர் வல்வில் ஓரி என்னும் சங்க நூல் ஆட்சிகளை நினைவூட்டுகிறது இவ் விளக்கம். மூளையும் முதுகந்தண்டும் தொலைவரி (தந்தி) நிலையம் போலவும், நரம்புகள் தொலைவரி போலவும் அமைந்துள்ளமையை அருமையாக விளக்குகிறார் கா. சு. தோலைப் பற்றிக் கூறும் அவர், தோலின் மேலடுக்கு ஒன்றும், உள்ளடுக்கு ஒன்றும் இருப்பதைப் பலர் அறியாமல் இருக்கலாம் என்று கூறுகிறார். தோலின் அமைப்பு, பயன், பாதுகாப்பு என்பவற்றை விளக்கிக் கூறுகிறார். அற்றால் அளவறிந்து உண்க என்று கூறும் கா. சு. இளையர்க்கு ஏற்ற உணவு, முதியர்க்கு ஏற்ற உணவு, உயிர்ச்சத்து (Vitamin) உணவுத் தூய்மை என்பவற்றை விவரிக்கிறார். சிலர் வேலைகள் நெருக்கடியால் உண்ணும் உணவை நன்றாகச் சுவைத்து, மெதுவாக உண்ணாமையின், முதுமையில் உணவு வெறுப்பால் வருந்துகின்றனர் என்று சுட்டுகிறார். ஒரு நாளைக்கு உடலின் தேவை 5 படி நீர் (8 லிட்டர்) என்றும், ஒரு நாளைக்கு ஒரு படி நீருக்குக் குறையாமல் (1½ லிட்டர்) உட்கொள்வது முதியவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால் மலச்சிக்கலும் நீங்கும் என்றும் கூறுகிறார். தேயிலை, காபி, வெறிநீர் (மது) என்பவற்றைப் பற்றி அறிஞர்கள் கருத்துகளை ஆய்ந்துரைக்கிறார் கா. சு. அவை: வெறியுண்டாக்காத குடிகளுள் தேயிலையைச் சிலர் நல்லதென்கின்றனர். ஆனால், வாத நோயுடையவர்களுக்கு அது நல்லதன்று. அது மூளைக்குச் சில வேளைகளில் ஊக்க மளிப்பினும், சூடான தேயிலை நீர் செரிக்காமையை உண்டு பண்ணி வயிற்றைப் புண்ணாக்கும். தேயிலை உடலைப் பருக்க வைக்கின்றதென்றும், காப்பி அவ்வாறு செய்வதில்லை என்றும், காப்பி சிலவகை உணவுகள் செரிப்பதற்குத் துணை செய்கின்றதென்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். வெறிநீர் இயற்கையில் காணப் படாததொன்று, இயற்கையிற் காணப்படும் இனிய நீர் மனிதன் செயலால் புளிப்புற்றுப் பொங்கி வெறிநீர் ஆகின்றது. வெறிநீரில் ஒரு புழுவையாவது மீனையாவது இட்டால் அது உடனே செத்துப்போம். உணவென்பது, வயிற்றுள் சென்றதும், வயிற்றுக்குத் தீங்கு செய்யாமல் செரிக்கும். வெறிநீர், வயிற்றில் சென்றதும் வயிற்றுக்குக் கேடு செய்து செரிக்காமல் இரத்தத்தில் கலக்கும். வெறிநீர் உடலையும், அறிவையும் கெடுக்கும். நோய் நீக்கும் இயற்கை முறையில், கதிர் வெளிச்சம் படாத செடி வெளிறிப் போய் நோயடைகின்றது. கதிரொளி, மிக விரைந்து நோய் நுண்மங்களைக் கொல்கின்றது என்கிறார். காற்று, நீர் இவற்றின் தூய்மையையும் குறிக்கிறார். கால் முழுக்கு எனவும், முழுக்கு எனவும் நீராடலைப் பகுத்துக்கொண்டு ஆய்கிறார் கா. சு. குளிர்ந்த நீரில் நனைத்துப் பிழிந்த ஒரு துணியை, வெந் நீரில் கால் வைத்திருப்பவர் நெற்றியில் போட்டு வைத்தால், அது கிறுகிறுப்பையும், தலைவலியையும் நீக்கும் என்கிறார். ஒரு காலத்தில் ஐரோப்பியத் துறவோர், உடல் முழுக்கு உடலைத் தூய்மைப் படுத்தினாலும் உயிரைத் தூய்மைப் படுத்துவதில்லை எனக் கருதினர். ஆனால், இக்காலத்தில் கடவுட் சார்புக்கு அடுத்தபடி புனிதச் சார்பே என்னும் கருத்துப் பரவியுள்ளது என்று முழுக்கின் சிறப்பை உரைக்கிறார். தமிழர் தம் பழ வழக்கு ஈதென்றும் குறிக்கிறார். வெந்நீர்க் குளியைக் குறிக்கும் அவர், மாந்தரைத் தவிர மற்றை உயிர்கள் வெந்நீரை விரும்புவதில்லை என்கிறார். மணம் புரிந்தவர் மணம் புரியாதவரைப் பார்க்கிலும் நெடிய வாழ்வுடையவராய் உளர் என்று மேலை நாட்டிற் கணக்கெடுக்கப்பட்டுள்ளமை தெரிவிக்கிறார் கா. சு. மணம் புரிவதால் ஆண் மக்களுக்கு ஐந்து ஆண்டுகளும், பெண் மக்களுக்கு நான்கு ஆண்டுகளும் வாழ்நாள் நீடிப்பதையும் அக்கணக்குக் காட்டுதலை உரைக்கிறார். மேலும், முதுமைக் கேடு விரைவாகத் தொடங்குவதில்லை என்பதையும் சுட்டுகிறார். நடுப் பருவத்திலுள்ள மக்களுள் பலர், மணவாழ்க்கை நலன் அடையப் பெறாமல் இரத்த அழுத்தம் உடையவர் களாய்ச் சினம் அடிக்கடி தோன்றக் கூடிய மன நிலையுடன் வருந்துகின்றனர் என்பதையும் உரைக்கிறார். முதுமை என்பது ஆண்டைப் பொருத்ததன்று; உளத்தைப் பொருத்தது என விளக்குகிறார். முதுமையில் இளமைத் தன்மை தருவது விளையாட்டு என விளையாட்டு வாழ்க்கையில் சொல்கிறார். எதனையும் ஒருவன் தன் ஆற்றலுக்கு மேல் செய்தால் அவனுக்கு ஈரற்குலை (இருதய) நோய் உண்டாதல் கூடும் எனக் குறிக்கிறார். மிகவும் நுண்ணிய அறிவுக்கு எளிதாகக் கவலை ஏற்பட்டு விடும். இளமையில் உண்டாகிற அச்சம் முதுமை வரை தொடர்ந்து துன்புறுத்துகிறது. நாகரிக வாழ்க்கையில் ஏற்படும் அச்சங்களால் பைத்தியமும், தற்கொலையும் மிகுகின்றன. அருளொழுக்கத்தாலும், அறிவாராய்ச்சியாலும் அவற்றைக் குறைக்கலாம் என்றும் கூறுகிறார். உண்ணும்போது கடிதங்கள், இதழ்கள் படிப்பது கேடென்றுரைக்கும் அறிஞர் கா. சு. வயிற்றுள் நிகழ வேண்டிய இரத்த ஓட்டம் தலையில் நிகழும் என்கிறார். முதியவர்க்கும் நல்லுரை சில கூறுகின்றார்:-. முதியவர்கள் வயது காரணமாக மாத்திரம் பிறர் மதிப்பை நாடுதல் நன்றன்று. பிறர் உதவியை அதிகமாக நாடாமல் தம் முயற்சியால் வாழ்தல் முதியர்க்கு மதிப்பை உண்டாக்கும். தேவைகளைக் கூடியவரை குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்துதல், பிறர் உதவியை மிகுதியாக நாடாமைக்கு ஏதுவாகும் என்பது அது. மலச்சிக்கல் நீங்கினால் வாதநோய் நீங்கும் என்னும் குறிப்பைச் சுட்டுகிறார். குழந்தைப் பாதுகாப்பில், தாயின் கோபம் காரணமாகத் தாய்ப் பாலுக்கு நச்சுத் தன்மை ஏற்படு மாதலால், தாய் சாந்தமாயிருக்கும் போது பாலூட்டுதல் வேண்டும் என்கிறார். நினைவாற்றலால் நோய் நீக்கும் முறை என்பதில் நம்பிக்கையின் பயனை நன்கு வலியுறுத்துகிறார் கா. சு. குடிகாரர், குடியை ஒழித்தல் இயலாது என்று எண்ணும் வரை அதை ஒழிக்க இயலாதவராவர். ஏதாவது ஒருநோய் நீங்க வேண்டுமானால் அது நீங்குகிறது, நீங்குகிறது என்ற சொல்லையே வேறொன்றும் கருதாது சொல்லிக் கொண்டிருந்தால், அவ்வெண்ணத்தைச் சித்தமானது ஏற்றுக் கொள்ளுமானால் உடனே நோய் நீங்கக் காணலாம். இதனை ஒன்றி நினைத்தல் எனவும், பாவனை எனவும் இந்நாட்டு நூல்கள் கூறும். கருட பாவனையில் தேர்ந்தவர் விடத்தை நீக்க வல்லவர் ஆகின்றனர். பன்முறை ஒரு கருத்தை ஒரு வகையாகத் தீர்மானித்த சொற்றொடரால் கூறுவதே மந்திர உரு எண்ணல் போலும் என்றும், ஒவ்வொரு நாளும் எல்லா விதத்திலும் நான் மேலும், மேலும் நலமடைகின்றேன் என்று நம்பிப் பன்முறை சொல்லச் சொல்ல உடல் நோய் நீங்கி நலப்படுதலை அனுபவத்தில் கண்டுள்ளனர் என்றும் கூறுகிறார். உறங்கும்போது குழந்தைகட்கு அருகே சென்று நல்ல கருத்துகளை மெதுவாக ஒரே மாதிரிக் குரலில் கூறினால் அவ்வுரை அவர்கள் மனத்தைப் பண்படுத்தும் என்னும் அரிய செய்தியை உரைத்து எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணிய ராகப் பெறின், என்னும் குறளொடு வாழ்க்கை இன்ப நூலை நிறைவிக்கிறார் அறிஞர் கா. சு. உடல் நூல்: உடலின் பொது அமைப்பு, சுவாச நிகழ்ச்சி, நோய் வராது தடுத்தல், உடல் நலம் காக்கும், இணையறு வழிகள், உடல் நலம் பேணும் பொதுவிதிகள் என்னும் கட்டுரைகளைக் கொண்டது உடல் நூல் என்னும் பெயரியதாகும். இதனைப் பாலாசி புத்தக நிலையத்தார் 1985 இல் வெளி யிட்டுள்ளனர். கா. சு. அவர்களின் மருமகளார் சீதையம்மாள் உரிமை வழங்கியுள்ளார். பல்கலைச் செல்வர் கா. சு. இலக்கிய குழு நிறுவனர் மீ. சு. இளமுருகுபொற் செல்வி அவர்கள் நூல் வெளியிடத் துணை புரிந்துள்ளனர். அறிவு விளக்கம்; அறிவு விளக்கம் என்னும் நூல் கழகத்தின் 59 ஆம் வெளியீடாக 1925 இல் வெளிவந்துள்ளது. கடவுள், உயிர், உலகம், உலகப் பகுப்பு, சமயம், நன்மை தீமை, ஒழுக்கம் - நல்லியல்பு, நற்பழக்கம், கல்வி, நூற்பரப்பு. தமிழ் என்னும் பதினொரு கட்டுரைகளையுடையது அந்நூல். அதனை மாண வரை நோக்கி ஆசிரியர் எழுதினார் என்பது பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மோ. கந்தசாமி முதலியார் வழங்கியுள்ள முகவுரையால் விளங்குகின்றது. தமிழர் சமயம், சைவ சித்தாந்த வரலாறு. சைவ சித்தாந்த உண்மை என்னும் நூல்களில் இந்நூற் கருத்துகள் பலவும் விளக்கப்பட்டுள்ளன. அக் கட்டுரைகளில் கண்டு கொள்க. உலகப் பெருமக்கள் இப்பெயரில் முதற் புத்தகம், இரண்டாம் புத்தகம் என இரு தொகுதிகள் வெளிவந்தன. இவை முறையே 230, 258 என்னும் வெளியீடுகளாகக் கழகத்தின் வழியே வெளிவந்தன. இவற்றின் முதற்பதிப்பு ஆண்டு முறையே 1939, 1940 ஆகும். பண்டைக் காலத்தில் இருந்த பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது ஒரு முறை; இக்காலத்திற் சிறந்து விளங்கும் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது மற்றொரு முறை. இவ்விரண்டனுள்ளும் பின்னதே இக்காலத் தேவைகளுக்கு ஏற்பச் சீரிய முறையாகக் கருதப் பட்டு வருகின்றது. என்னும் கருத்தில் நூல் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட செய்தி பதிப்புரையில் சுட்டப்பட்டுள்ளது. இருப்பாரை வரலாற்றில் பொறித்தல் உலகியற்கையில் அரிது. மறைந்த பின்னர் வரலாற்றில் இடம் பெறச் செய்தலே பொது வழக்கு. அவ்வழக்கைக் கருதாமல், வாழும் பெருமக்கள் வரலாற்றைத் தொகுத்து வரைந்த அறிஞர் பல்கலைச் செல்வர் சான்றோர் கா. சு. அப்பேற்றைத் தாம் தமிழ் மண்ணில் பெற்றார் அல்லர். பின்னரும் அப்பேற்றை முழுமையாகப் பெற்றார் அல்லர். தக்கவர்களை மதிப்பதில் தமிழ்மண் உலகத்தில் மிகமிகப் பின் தங்கியது என்பது உறுதிப் படுத்தப் பட்டுக் கொண்டே வருகின்றது. முதற்புத்தகத்தில் உலகப் பெருமக்கள் எழுவரும். இரண்டாம் புத்தகத்தில் எழுவரும் ஆகப், பதினால்வர் வரலாறு இத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. முன்னது 156 பக்க அளவிலும், பின்னது 164 பக்க அளவிலும் அமைந்துள்ளன. ஆகாகான், திவாலரா, ஹாவெலாக் எல்லி, டாலின், டேவிட் லாயிட் ஜியார்ஜ், ராம்சே மாக்ட னால்ட், முசோலின் என்பார் வரலாறுகள் முதல் நூலில் சுருக்கியுரைக்கப் படுகின்றன. ஒரே காலத்தில் கீழ்த்திசையிலும், மேற்றிசையிலும் ஒத்த மதிப்போடு விளங்குதல் அருமை. தற்காலத்தில் ஆகாகான் என்ற பெயர் பெற்ற மகம்மதுஷா இவ்வுண்மைக்குப் புற நடையாக (இருதிசையிலும் சிறப்போடு) விளங்குகின்றார் என முதல் வரலாற்றைத் தொடங்குகின்றார் கா. சு. பல்வேறு நாடுகளிலும் உள்ள கோடிக் கணக்கான மகமதியர்கள் தம் சமயத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் அவரை மதிப்பதை விளக்கி ஆகாகான் என்பது திருப்பெயராதலைக் கூறுகிறார். பாரசீகத்தில் மெகலெட் என்னும் மாநிலப் பெருந் தலைவருக்கு ஆகாகான் என்பது பட்டப் பெயர். மகம்மது ஆசன் என்பவர் பாரசீகத்தில் வாரிசு உரிமைப் போட்டியில் தோற்று ஓடி வந்து பம்பாயில் தங்கினார். அவர் பேரனே ஆகாகான். மகம்மது ஆசன் பம்பாய்க்கு வந்து பெருஞ் செல்வரானார். அவரைப் பின்பற்றியவர்கள் கோசாக்கள் எனப்பட்டனர். மகம்மதியருள் சீயர் என்றும் சுனியர் என்றும் உள்ள பிரிவுகளுக்குள் ஒற்றுமையுண்டாகவும், கல்வி வணிகம் ஆகிய வற்றில் சிறந்தோங்கவும் பாடுபட்டார். இந்திய நாட்டு விடுதலை கைவருங்கால், மகம்மதியர் தம் பிளவுகளைக் கருதாமல் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனப் பெரிதும் உழைத்து வந்தார். உலகப் பெருந் தலைவர்களுள் அவர் ஒருவராக விளங்குவதுடன், கீழை நாட்டு மக்களால் கடவுட்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப்பட்டுக் காணிக்கை செலுத்தவும் பெறுகின்றார். இதுவரை அவர் செய்த வேலை வழி வகுத்தற்கே பயன்பட்டது. எதிர் காலத்தில் மிகப் பெரிய பதவி அவருக்கு அமைவதாகும் எனக் கணியங் கூறுவது போல் கூறுகிறார் கா. சு. ஐரிசு நாட்டு விடுதலைக்கு அரும்பாடுபட்டு வெற்றி கொண்டவர் திவாலரா. ஆனால், திவாலரா வரலாறு போல் நேர்மையாகக் கூறப்படாத தற்கால வாழ்க்கை வரலாறு வேறு எதுவுமில்லை என்று வருந்துகிறார் கா. சு. அவர் அழுத்தமான சனநாயகவாதியாக இருந்தும் மதப் பித்தராகச் செய்தித் தாள் உலகம் காட்டி விட்டது என்கிறார். பொதுமக்கள் உங்கள் செயலை ஒப்புக் கொள்வார்களா என்னும் போது, என் உள்ளம் எனக்கு அது தக்க தென்று சொல்லுகிறது என்று சொல்கிறார். இவ்வாறு சொல்கின்ற பொது நலத் தலைவர் அரியரெனப் பாராட்டுகிறார் கா. சு. தம் மக்களின் தந்தையாகவும் மேய்ப்பராகவும் அரசியல் துறையில் வாழ முயன்றார் என்று மேலும் கூறுகிறார். 1913 இல் ஐரிசு தொண்டர் படையில் சேர்ந்து சிறிய படைத்தலைவரானார். அனைவரும் திவாலராவாக இருந்தால் ஐரிசுக் கலகம் மும்மடங்கு காலம் நீடித்திருக்கும் என ஆங்கிலப் படைத் தலைவர் ஒருவர் 1916 இல் கூறினார். உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறுத்தவே அவர் உழைப்புப் பயன்பட்டது. அவர் அமெரிக்கக் குடியுரிமை யுடையவராக இருந்ததால் தூக்குத் தண்டனை தரப்பட்டும், நிறைவேற்றலின்றி, வாழ்நாள் உழைப்புத் தண்டனை விதிக்கப்பட்டார். தம் அறையில் இருந்து சமய நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும்போது இத்தண்டனைச் செய்திகள் வந்தன. இவற்றைக் கேட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்து படித்தார். மக்களுக்கு விடுதலை உணர்வு வலுத்தது. திவாலரா விடுதலை பெற்றார். 1917 இல் சட்டமன்ற உறுப்பினரானார். 1918 இல் மீண்டும் சிறைப் பட்டார். சிறையில் இருந்து தப்பினார். 1921 இல் அவரே தலைவரென மக்களால் எண்ணப்பட்டார். 1932 இல் அவர் புதுக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் அவர் மேல் ஐயப்பாடு சிலர்க்குத் தோன்றியுள்ளது . இவற்றையெல்லாம் கூறும் கா. சு. முடிவில் தோற்றாலும் வென்றாலும் இருள்மிக்க காலங்களில் தம் மக்களை ஊக்கிக் காத்த தந்தையாகத் திவாலரா எண்ணப்படுவார் என்கிறார். காவெலாக் எல்லிசு ஆங்கிலர்; மாந்தநூல் அறிஞர்; அவர் எடுத்துக் கொண்ட ஆய்வு எந்தப் பல்கலைக் கழகப் பாடத்தும் இல்லை என்பதைக் குறிக்கும் கா. சு, புது அறிவு நூல்கள் பல்கலைக் கழகங்களில் தொட்டில் இட்டு வளர்க் கப்படுகின்றன. அவை அங்கே பிறப்பதில்லை என்கிறார். அயல்நாட்டு மக்களை மாக்கள் என்று கருதுவது ஆங்கில நாட்டினர் இயல்பு. நாகரிகமானவர் அவர் கருதுகின்ற நாகரிகமானவர், வடிவமாகவே அவர் இருத்தல் வேண்டும் என்கிறார். எல்லிசைப்பற்றி ஆங்கிலர், கழிவுப் பொருள்களைப் பற்றி நன்றாகப் பேசுவார் என மதிப்பிடுகின்றனர். ஆனால் அமெரிக்கர், ஒரு மனிதனுடைய சொந்த நற்பயிற்சிக்கு தக்க அடையாளம், பொது மக்கள் மனத்திலுள்ள அற்பக் கருத்துக் களினின்றும், குழந்தை உணர்ச்சிகளினின்றும் விடுதலை பெற்றிருப்பதே என்றால், இந்தத் தலைமுறையில் தெளிவாக மிகுந்த நாகரிகமமைந்த ஆங்கிலர் எல்லிசு என்பவரே என்கின்றனர். குற்றவாளி என்பது எல்லிசு 1889 இல் வெளியிட்ட நூல். அதனை விற்றவன் மேலேயே குற்ற வழக்குத் தொடுக்கப் பட்டது. குற்றம் என்பதை விளக்குகிறார் எல்லிசு: குற்றம் என்பது ஒருவன் சமுதாய நிலை தொடர்பாகவும் அவன் வாழ்கின்ற இடம் காலம் தொடர்பாகவும் ஏற்படுகின்ற ஒருவகை ஒழுக்கக் குறைவு. இடம் பற்றியும் காலம்பற்றியும் ஒருவனைக் கொல்லுதல் பெருநலம் என்றும் பெருங் குற்றம் என்றும் பேச இடமுண்டு. ஐரோப்பாவில் முற்கால நாகரிகப்படி இன்ப விளையாட்டு என்று கருதப்பட்ட பழக்கங்கள் இப்போது வட ஐரோப்பாவில் இயற்கைக்கு மாறான ஒழுக்கத் தவறுகள் என்று கண்டுபிடிக்கப் படுகின்றன என்கிறார். 1894 இல் எழுதிய ஆண் மக்களும் பெண் மக்களும் என்னும் நூலில் ஆண், ஆற்றலுக்குக் காரணமாகிறது. பெண் முட்டைக்குக் காரணமாகிறது என்பதே வேறுபாடு என்கிறார். சில உறுப்பு வேறுகளும் உண்டு. அவை கொம்பு, தோகை என்பனவும் புணர்ச்சிச் சார்பான நடத்தைகளும் (நடனம் ஒலி) என்கிறார். உடலமைப்பு வேறுபாட்டையும் சுட்டுகிறார். காதற் செயல் மாற்றங்கள் என்னும் நூலை விளக்கும் கா. R., அறிவுநூல் ஒன்றின் முக்கிய அடையாளம், செயல் முறைக்கு வழிகாட்டும் விளக்கங்களை எவ்வளவுக்கு அளிக்கும் என்பதே என்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் போக்குகளைக் கூறும் கா. R., கொடுமை தவறான நம்பிக்கை என்பன நீக்கக் கூடியன என அறிந்தாலும் மனித இயற்கையில் ஆழமாய்ப் பதிந்தவை என்பதை அறியவில்லை. கொடுமையை நீக்கினாலும் அதற்குப் பதிலாக ஊக்கமுண்டாக்கும் காட்சிகளைச் சீர்திருத்தக்காரர் ஏற்படுத்தவில்லை. தனியே இருக்கலாம் என்று உரிமையில் பேசினாலும், தனிமைத் துயரை நீக்கும் வழி கண்டு பிடிக்கவில்லை. அதனால் நாகரிகமே மக்களுக்குப் பகையாகத் தோன்றிற்று என்கிறார். மருத்துவராகவும் அறிவியல் எழுத்தாளராகவும் விளங்கிய அவர் மறைந்த இரண்டாம் திங்களிலே அவரைப் பற்றிய வரலாற்றை எழுதினார் கா. சு. (1939). தாலின், இலெனினைப் பற்றி தன்னல மாந்தரென்பார் கடலில் ஒரு துளியே; இலெனின், ஒரு முழுக் கடல் என்றார். இது அவர்க்கும் பொருந்தும் என்கிறார் கா. சு. ஓருழவர் அவரைப் பார்க்கப் போய் அன்பான பெரிய தலைவரே என்றார். தாலின், அவரைத் தடுத்துத் தோழரே, பெரிய தலைவர் என்ற சொற்களை விட்டு நம் கடமையைப் பார்ப்போமே என்றாராம். தமக்கும் உழைப்பாளர்க்கும் உரிய தொடர்பு உடலோடு உயிர்த் தொடர்பு. இலெனின் புரட்சியாளருடன் உழைத்தார். தாலின் நலிந்த உழைப்பாளருள் ஒருவராய் வந்து அவருடன் நின்று உழைத்தவர்; பதினைந்து வயதில் மார்க்கசு கொள்கை நாட்டத்தால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர்ப் போல்சுவியன் இயக்கச் சார்பால் பல்கால் சிறையுற்றார்; தப்பி ஓடினார்; இலெனினார் தலைக்கு விலை வைத்த போது, அவரைத் தலை மறைந்து செல்ல வைத்துத் தாம் இயக்கப் பணியை நடத்தினார். இராணுவப் பணியையும், புரட்சிப் பணியையும் ஒப்பிட்டு ஆயும் அவர், இராணுவத் தலைவர் தயார் செய்த படைகளோடு போருக்குப் போகின்றார். ஆனால், அரசியல் தலைவர் கட்சிச் சண்டை நடக்கும் போது மக்களைச் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. கட்சிக் கொள்கையின் நன்மையை உணர்ந்தே மக்கள் கட்சியில் சேர்கின்றனர். இலெனினார் மறைந்த ஐந்தாம் நாள், சோவியத்து மாநாட்டில், தோழர் இலெனின் நிலை நாட்டிய கட்சியின் உறுப்பினர் என்னும் பட்டத்தைப் பார்க்கிலும் உயர் பட்டம் உலகில் இல்லை என்றார். தாலின், இலெனின் வேலையைத் தொடர்ந்து செய்தவர் மட்டுமல்லர். சமுதாயக் கட்சித் திட்டத்தில் பெண்களுக்குத் தக்க இடங் கொடுத்தவர் இவரே. இவரைப் போலப் பொறுமையும் வீரமும், திறமும் ஒருவரிடத்திலும் அமைதல் அரிது. உருசியப் புரட்சி ஊக்கமும் அமெரிக்கச் செயல் திறனும் ஒன்று சேர்வதே வேலை - முறையின் இலக்கணம் என்பது இவர் கொள்கை என்கிறார். கா. சு. டேவிட்டு லாயிட்டு சியார்சு, தம் கால உலகப் பெரு மக்கள் அறுவருள் ஒருவர். அவர் பிரித்தானியர்; நிலத்தை அகழும் ஒரு நாயின் பல நிலை முழுத் தோற்றங் கொண்டு அவரை நகையாடற் படம் போட்டார் ஓர் ஓவியர். அப்படம் பார்ப்பவர் உணர்வில் பல காட்சிகளை அவ்வப்போது உண்டாக்குவது. அவரிடம் ஒன்றை வினவ ஒருவர் கருதும் கருத்து மனத்தினின்று வாய்க்கு வருமுன், அதை உணர்ந்து விடை கூறிவிடுவார் என்பது அவர் திறத்திற்குச் சான்று. ஆனால் அவர் எதிர்காலத்திற்கு வைத்து விட்டுப் போனது என்ன? குடியரசில் நம்பிக்கைக் குறைவும் தனித் தலைமையாகிய எதேச்சாதிகாரத்துக்குக் கண்மூடிச் சாய்தலுமேயாம் என்கிறார் கா. சு. இராம்சே மாக்டனால்டு சௌதாம்டனில் இருமுறை தொழிற்கட்சி வேட்பாளராக - முதல்வராக - இருந்தவர் கூத்தாட்டு அவைக்குழாம் போலக் கூட்டம் கூட முழங்கியவர். அவர் தோற்றமும் அதற்கு உதவியது. அவர் குரல் உயிர்க்கு வாய்த்த மெய்ப் பொருள் தூதென விளங்கியது. ஆனால், இப்போது அரசு மேடையில் ஐயத்தோடும், சொல்லடுக்கோடும், விளங்காமலும் அது போய் விட்டது. நம்பிக்கையற்று, ஓசை நயமும் இன்றி, தூதின் மதிப்பும் போய்விட்டது என்கிறார் கா. சு. நான் மன்றத்தில் பேசுவதை இராம்சே ஒரு முறை கூடக் கேட்டதில்லை எனக் கவலைப் பட்டார் ஓரமைச்சர். எதிர்க் கட்சியார் நண்பகல் 2.45க்கு தொடங்கி மறுநாள் 1.25 வரை கூட்டம் தொடர வைத்த போது நகரச் சோலையில் உலாவிய தாகவும் அங்கே குளிர் தட்டியதாகவும் அதனால் அங்கு வந்து விட்டுப் போவதாகவும் காலையில் சொல்லிப் போய் விட்டார். பிழைப்பதற்கு வகையின்றி இலண்டனுக்கு வந்து உழைப்பு ஊதியங் கொண்டு படித்துப் பள்ளி ஆசிரியராய், எழுத்தராய் இருந்த அவர் இப்பெருநிலை எய்தியும், தக்க வைத்துக் கொள்ளாமையோடு தொழிற் கட்சி அரசையுமே தொலைத்ததை விரிக்கிறார் கா. சு. இராம்சே பெரிய மனிதரல்லர் எனினும் அவரிடத்தில் சில பெரிய தன்மைகள் இருக்கின்றன. அவையில்லாமல் தொழிற்கட்சியை அரசோச்ச வைத்திருக்க முடியாது என நடுவுநிலைக் கண் கொண்டு குறிப்பிடுகிறார். 1883 சூலை 29இல் பிறந்தவர் முசோலினி. தந்தை கொல்லர்; தாய் ஆசிரியர்; பேரரசரைச் சுட்டுக் கொன்ற மெக்சிகோ புரட்சியாளன் பெனிட்டோ. அவன் பெயரொடு பெனிட்டோ முசோலினி எனப் பெயர் பெற்றதற்கு ஏற்ற குணத்தோடு விளங்கியவர். இத்தாலிக்கு வழிவழியாகத் தொண்டு செய்த குடும்பத்தவர். படிக்கும்போது சமயப் பாடல்களை அவர் பள்ளியில் பாடுவதில்லை. மெழுகுவர்த்தி நாற்றமும் பேரிசைக் கருவி ஓசையும் அமைந்த வழிபாட்டுக்கு ஒவ்வாதெனக் கூறியவர் அவர். கரிபால்டி என்னும் வீரன் மேல் பற்றுக் கொண்டவர். ஆசிரியராய், எழுத்தராய், இதழ் நடத்துபவராய், படைஞராய்ப் பணி செய்தார். ஆயினும் நூற்காதலராக விளங்கினார். இன்று என்னை விலக்கியடிக்கிறீர்கள்; நான் தொடர்ந்து பேசத்தான் போகிறேன்; சில ஆண்டுகளுக்குள் மக்கள் என் பக்கம் இருப்பார்கள் உங்களைப் பின்பற்றுவார் எவரும் இரார் என்று ஒரு பரபரப்பான கூட்டத்தில் பேசினார். பல தொல்லைகளுக்கு ஆட்பட்டார். பாசியர் என்னும் அமைப்பை உருவாக்கினார். அது பொதுவுடைமையை அழிக்க எழுந்த இயக்கம்; அரசியலைக் கைப்பற்றியது அவ்வியக்கம். எல்லாம் அரசாங்கத்தைப் பொருத்திருக்கிறது. உள்ளமோ உடலோ அரசுக்கு வேறாக இருப்பின் பயனற்றன என்பதே அக் கொள்கை. முசோலினி இத்தாலியர்களுடைய உள்ள நோக்கத்தைச் சீர்திருத்தி அவர்கள் மனப்பான்மையை மாற்றியது போலப் பிறர் எவரும் செய்யவில்லை. இதனாலேயே சரித்திரத்தில் மிகப் பெரிய தலைவர்களுள் ஓருவராக அவர் இருத்தற் குரியவர் என்பது தெளியப்படும் என்கிறார். கா. சு. இரண்டாம் பாகத்தில் காந்தியடிகள் முந்து நிற்கிறார். நாளடைவில் விரைவாகவாவது, மெதுவாகவாவது காந்தியடிகள் இன்னாரென்பது பற்றி உலகமானது மனத் தெளிவு அடைய வேண்டும். மோசசு, சாக்ரடீசு, கிறித்துநாதர், என்பவர்களுள் அவர் யாரைப் போல்பவர்? புரட்சிக்காரரா? தத்துவஞானியா? தன்னலங் கருதாத் தியாகியா? திட்டமாக அவர் இன்னார்தாம் என்று கூறுவது கடினம் என்கிறார். தோல்வி நேரத்தில் அவர் மிகத் துன்பப் படுவதையும் அது கடவுள் நோக்கத்தை அறியத் தவறியதன் குறை என்று அவர் எண்ணுவதையும் குறிப்பிடுகிறார். தோல்வி அவரை ஒளித் தூதராக ஊக்கப்படுத்தி விடுவதையும் சுட்டுகிறார். காந்தியடிகள் வரலாற்றைச் சத்திய சோதனை வழியே கூறும் கா. சு. திலகரும் காந்தியடிகளும் சந்தித்து உரையாடிய ஒரு குறிப்பைக் குறிக்கிறார். தாயை மகள் நேசிப்பது போல நீர் இந்தியாவை நேசிக்கிறீர். ஆனால் உண்மையையும் நேசிக்கிறீர். ïu©oš x‹iwna neá¡F« neu« tªjhš Ú® vij¡ if¡ bfhŸå®? என் மனத்தில் இந்தியாவும் உண்மையும் ஒன்றே. ஆனால் இரண்டில் ஒன்றைக் கைக்கொள்ள வேண்டுமென்றே இடர் ஏற்பட்டால் நான் உண்மையின் பக்கமே சார்வேன் இதற்குப்பின் இவர்கள் கூடவில்லை என்கிறார் கா. சு. மேலும் அருள் முறையாகிய அகிம்சையும், உண்மையின் ஆற்றலாகிய சத்தியாக்கிரகமும் திலகர் மனத்துக்கு ஒத்தவை யல்ல. ஆனால், அம்முறைகளின் வெற்றியைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நிலை நாட்டினார் என்பதைத் தெளிவாக்குகிறார். சிறந்த கொள்கையாகிய இன்னா செய்யாமையை உலகெங்கும் பரவச் செய்வதற்குப் பிரிட்டீசு மக்கள் இனத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றும் காந்தியடிகள் கொள்கையை எடுத்துரைக்கிறார். பிராங்கிளின் டிரூசுவெல்ட்டைப் பற்றிக் கூறும் கா. R., அமெரிக்கப் பொதுநல வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரும் 50 அகவைக்கு முன் முயன்றடையாத பதவியை 38 அகவையிலேயே அடைந்தார் எனப் பாராட்டுகிறார். மேலும் அவருக்கு, 1921 இல் இளந்திமிர்ப் பிடிப்பு(வாத) நோய் கண்டு, இடுப்புக்குக் கீழே அசைக்க முடியாத நிலையில் இருந்தார். மூன்றாண்டு விடாது முயன்றும், உருள்கின்ற நாற்காலியில் இருக்கவும் ஊன்றுகோல் கொண்டு சிறிது தொலைவு நடக்கவுமே அவருக்கு முடிந்தது. அவர் அதிகமாக அசையக் கூடாத படியால் தம் வலுவை ஒரே இடத்தில் செலுத்தக் கூடியவராய், அவருக்கே இயல்பாக நகையுணர்ச்சியுடன் ஒருநாள் காலை முதல் மறுநாள் விடிகாலை வரை இளைப்பில்லாமல் வேலை செய்யக் கூடியவராய் இருந்தார் என்கிறார். நீராவி ஆற்றலைப் பொதுமக்கள் நலத்திற்காகப் பெருக்குதல், முதியோர்க்கு உதவிப்படி தருதல், உழவர்க்கு இடைஞ்சல் தீர்த்தல், வேலையில்லாத் திண்டாட்டத்தினர்க்கு அரசியல் உதவி புரிதல் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தார் எனப் புகழ்கிறார். ஒரு சிக்கலை அவரிடம் கொண்டு சென்றால், நீங்கள் அதை என்னிடம் கொண்டு வரும் வரை அறிந்திலேன். அதனை எளிதாக முடித்துவிடலாம். அதில் ஒன்றுமில்லை என்று நிறைவு படுத்துவதுடன் நிறைவித்தும் விடுவார். தம் துயர் கூறி நாளுக்கு 3000 கடிதங்கள் அவருக்கு வருகின்றன. எனினும் உரிய வகையில் அவரால் நிறைவுறுத்தப் படுகின்றன என்று அவர்தம் அரசியல் திறமையைப் பாராட்டுகிறார். முத்தபா கெமால் (துருக்கியத் தலைவர்) இலெனின், முசோலினி, இட்லர், ரூசுவெல்ட்டு, ரீசாசாபெலவி, காந்தியார், சன்யாட்சன் ஆகியோர் ஒரே காலத்தில் வாழும் பெருமக்கள். இவருள் கெமால், ஒரு தலைவருக்கும் பெருந் திரளான மக்களுக்கும் உள்ள ஒற்றுமையால் அடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளிப் பட்டுப் புதுமைகள் செய்கின்றன என்பதை மெய்ப்பிப்பவர் என்றும், காட்டுப் புத்தகம் என்னும் நூலில், ஒரு புலியை மிதித்து உயிர் போக்குவதற்காக உயிரோடு இருக்கிற பனிப் பாறை விழுந்தாற் போல, எருமைக் கூட்டத்தை அதன் மேல் விழும்படி செய்ததைக் கூறுவது போலச் செய்ய வல்லவர் அவர் என்றும் குறிக்கிறார். துருக்கி என்னும் ஐரோப்பிய நோயாளியை அவனது சாவுப் படுக்கையில் இருந்து எழுப்பி இளமைக்கும் நலத்துக்கும் உரிய கிளர்ச்சியோடு குதிக்கவும் ஓடவும் - ஆடவும் - பாடவும் மகிழ்வோடு கூறவும் செய்ததே அவர் செய்த புதுமையென நயக்கிறார். பல மனைவியர் மணத்தை ஒதுக்குதல், பெண்கள் பண்டை முறையில் இருந்து தற்கால நிலைக்கு மாற இடந்தருதல், முக்காட்டினை எடுத்துவிடல், தொப்பிக்குப் பதில் துணிக்குல்லா வைத்தல், பொது வாழ்விலும், ஊதியத் தொழில் வாழ்விலும் இடந்தருதல் என்பனவெல்லாம் செய்தார் கெமால். இவ்வளவு அடிப்படையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு புரட்சியை ஒரு தனி மனிதன் வாழ் நாளுக்குள் எந்நாட்டிலாவது யாராவது செய்யக் கூடுமா என்றால் அவ்வாறு செய்தவர் கெமாலே என்கிறார் கா. சு. பெர்னாட்சாவை மேலைநாட்டுச் சித்தராகக் காண்கிறார் கா. சு. அவர் மரக்கறியூணர். புரூட் என்பவர் சில மக்கள் தங்கள் தாயாரை நேசித்தமையால் அந்நேசம் அவர்கள் வாழ்க்கை முழுவதையும் உருப்படுத்திற்று என்றார். அந்த உண்மையை ஆய்ந்தவருக்குச் சா சான்றாளராவார். உழைத்துத் தேடாதமிகை ஊதியமும் கலைநலம் இல்லா வேலையும் அவருக்கு ஒவ்வா; மகளிரைப் பற்றிக் காதற் கருத்துமில்லாத வணக்கமுடையவராக இருந்தார் என்கிறார். நன்மையாய் இராதபடி மிகவும் உண்மையாக இருப்பது என்னும் கருத்தைப் படம் பிடித்துக் காட்டிய சாவை, கண்டனக்காரர்கள் நிலத்திலும், நீரிலும் இல்லாத ஒன்றை எழுதிக் காட்டினரென்று கண்டித்தனர் என்னும் கா. சு. கண்டனக்காரர் காலத்துக்கு மிகத் தொலைவான செய்தி இது எனச் சுட்டுகிறார். உண்மையான புரட்சி ஏற்படுத்தியவர்களை மறதி முற்றிலும் மூடுவது போல வேறொன்றும் மூடுவதில்லை என்றும் கூறுகிறார். உயிரற்ற வண்ணமற்ற பேச்சுப் பொறிகளைப் படைத்து உயர்ந்த அணி நயச் சொல் நடையில் பேச விடுகிறார் என்பது அவர் நாடக உறுப்பினர் பற்றிய மதிப்பீடு என்று இரங்குகிறார் கா. சு. சாவினுடைய சமய உணர்வின் அழுத்தத்தை ஒரு பொது மேடையில் பேசும்போது சா, தம் கைக்கடிகாரத்தை எடுத்துக் காட்டி நான் சொல்வது பொய்யானால் எல்லாம் வல்லவர் இன்னும் இரண்டு நிமையங்களில் என்னைச் சாக வைப்பாராக என அறை கூவியதைக் கூறி நிறுவுகிறார். சர். ஆலிவர் லாட்சு பூதவியல் ஆய்வாளர்; அறிவியலில் அறிவர் பட்டம் பெற்றவர். அதற்காகவே தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர். அறிஞர் மார்க்கோனிக்கு முற்பட அத் துறையில் ஆய்ந்தவர். மாணவராகச் சென்ற காலை, அவர் புலமையை அறிந்து ஆய்வுப் பேராசிரியராக அமர்த்தப்பட்டவர்; ஆவியுலகத் தொடர்பை ஆய்ந்து பல நூல்கள் எழுதியவர். ஏழாம் எட்வர்ட்டு முடிசூட்டு விழாவில் சர் பட்டம் பெற்றவர் (1902). ரூதர்போர்டு நியூசிலாந்தில் பிறந்து, இங்கிலாந்து கேம் பிரிட்சில் அறிவியல் ஆய்வு மாணவராகத் திகழ்ந்து கதிரி ஆய்வில் சிறந்து விளங்கியவர். யூரேனியச் சுண்ணத்தில் இருந்து ஆல்பா, பீட்டா கதிர்கள் வெளிப் படுதலைக் கண்டார். 37 ஆம் அகவையில் நோபல் பரிசு பெற்றார். போர்டின் வரலாற்று நிறைவில், அணுவின் ஆற்றல் மனித வாழ்க்கைக்குப் பயன் படுத்தற்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னாவது மனிதக் கூட்டத்துக்குப் பயன்படக் கூடிய பெரிய ஆற்றல் ஊற்றாக அது விளங்கும். அக்காலத்து மக்கள் அங்ஙனம் அணு ஆற்றலைப் பயன் படுத்தற்கு முன்னாகச் செய்யப் பட்ட ஆராய்ச்சிகளுக்கு ரூதர் போர்டு வழிகாட்டியாக இருந்தார் என்று அவரை மதிப்பார்கள் என்றார். விரைவில் அணு அச்சத்தை உலகம் கண்டுவிட்டது! ஆக்கத்தைக் காண வேண்டும் என்பதே அருளாக்கம். இத்தொகுதியின் இறுதி வரலாற்றாளர் பால் இண்டன் பர்க்கு என்பார். ஒருவர் தம் வாழ்நாளில் முற்றிலும் வெவ்வேறான மூன்று வாழ்க்கை நடத்துதல் சிலர்க்கே முடியும். செருமன் சட்டமன்றத் தலைவராய், பெரும் படைத் தலைவராய், தொகுப்புக் கலைஞராய்த் திகழ்ந்தார். எங்கே நான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்பாரே தவிர அதற்கு வரும் விடையைக் கருதாமல் 89 ஆண்டு உழைத்தவர் அவர் என்கிறார் கா. சு. மேலும் 1932 இல் முதலாம் தலைமைப் பதவி முற்றுப் பெற்ற போதே அவர் காலஞ் சென்றிருந்தால் செருமானியருள் அவரே மிகப் பெரியவர் என்ற நிலை, நிலைபெற்றிருக்கும் என்கிறார். ஏனெனில் இரண்டாம் தலைமைப் பதவிக் காலத்தில் அவர் புகழுக்குக் கறைகள் படிந்தன என்கிறார். இரண்டு தொகுதிகளில் பல்வேறு துறை, பல்வேறு நாடு, பல்வேறு நிலை - இவற்றையுடைய - ஆனால், உலகப் புகழ் பெற்ற பெருமக்களை, அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வரலாற்றுச் செல்வராகக் கண்டு, தமிழ் நிலத்துக்குப் பொருளாக்கி அவ்வழியினைத் தமிழகம் அறிந்து கொள்ளச் செய்த வரலாற்றுத் தொண்டர் கா. சு. என நினைவு கொள்ள வைக்கிறார். தமிழ்க் கா. சு. வின் தனித்திறம் கடந்த இருபத்தொரு பொழிவுகளின் அடிப்படைத் திறமாக அமைந்த செய்திகளும். கா. சு வின் வரலாற்றுக் குறிப்பும் தழுவியது இஃதாகும். தனி என்பது, ஒன்று என்பதுடன் ஒப்பற்ற என்னும் பொருளும், தரும் சொல். இவண். பிறர்க்கு வாய்த்தற்கரிய ஒப்பற்ற திறங்கள் பல, கா. சு. வுக்கு அமைந்து ஓங்கிய சிறப்பைக் குறிப்பதாக நின்றது. கா. சு. செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்க மந்தவளி யுமிழ்மலய வளர்குடுமி நின்றிழிந்து, கொந்தவிழும் மலர்வீசிக் குளிர்கெழு முத் தெடுத்திறைத்து, முந்தவெழு புனற்பொருளை முழுவளத்த தன்னாடாம் தென்பாண்டி நெல்லையிலே பிறந்தமை ஓர் இயற்கை நற்சூழலாயிற்று. தாளாண்மையிற் சிறந்த தமிழ் வேளாண் குடிப்பிறப்பும், சைவத் திருக்கோயில் சார்பும், அச்சார்பிலே அழுந்தி நின்ற காந்திமதிநாதர் மைந்தராகப் பிறக்கும் பேறும் இயல்பாக நேர்ந்த இனிய வாய்ப்பாயின. குழவிப் பருவத்தே, அறிவறிந்த இறைமைசால் தவத் தந்தையாரிடத்தே நிகண்டும் ஆங்கிலமும் பிறவும் கற்கும் பேறு வாய்த்தது. ஒருமுறை கற்றதை மீளக் கற்கவும், கேட்கவும் வேண்டாவாறு பச்சை மரத்தாணியினும் பதித்துக் கொள்ளவும், கல்லில் எழுதிய எழுத்தென நிலைத்து நிற்க வைக்கவும், கணினியன்ன மூளைக் கூர்ப்பு இயற்கை வழங்கிய இணையற்ற கொடையாய் இலங்குவதாயிற்று. வாட்டமின்றி வாழத் தக்க வளச் சூழல் தந்தைக்கு இருந்ததும், தந்தையே தாயுமானவராகவும், கா. சு. வின் ஏழாம் அகவையிலேயே நேருமாறு நேர்ந்த நேர்ச்சியும், கற்றறி தந்தை, மற்றை அனைத்தும் தம் மைந்தரே வாழ்வும் வளமுமெனக் கொண்டு வாழ்ந்த வாழ்வும், அதற்கென அதுகாறும் பார்த்துக் கொண்டிருந்த அரசுப்பணியையும் விடுத்தமையும் பிறர்க்கு வாய்த்தல் அரியன. இவ்வியற்கையும் இவ்வருமையும் கா. சு. வின். தனித்திறத்திற்கு அடிக்கால்களாக அமைந்தனவாகலின் சுட்டப் பட்டனவாம். கா. சு. விற்கு ஆறாம் ஆண்டு எட்டாம் திங்கள்; தாய் மறைந்தார்; தந்தையும்,தாயைப் பெற்ற பாட்டியும் கலங்கினர்; கண்ணீர் வடித்தனர். அவர்களின் ஆறாத் துயரம் கண்ட கா. R., தந்தையார் தமக்குக் கற்பித்த ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரா மாநிலத்தீர்; - வேண்டா; நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென் னென்றிட்டுண் டிரும் என்னும் ஔவைப் பாட்டியின் அருமைப் பாட்டை எடுத்துரைத்துத் தேற்றினார் என்றால், ஏழு அகவைக் குழந்தையிடத்து எங்கும் கேட்கும் செய்தியோ? தந்தைக்கும் அறிவுறுத்தும் மைந்தர் திறம் தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்று அமையும் எதிர்கால அமைப்பின் சுடரும், மெய்ப்பொருள் உணர்ச்சி மேம்படு மைந்தன் இவனென ஒளிவிட்டுக் காட்டிய காட்சியுமாம். அந்நாளில் அரசின் மாநிலப் பொதுத் தேர்வாக நிகழ்ந்த நான்காம் வகுப்புத் தேர்வாகிய தொடக்கத் தேர்விலும் (Primary Examination) ஏழாம் வகுப்புத்தேர்வாகிய நடுத்தர தேர்விலும் (Lower secondary Examination) மாநில முதல்வராகத் தேறினார். அதனால் பின்னர் பயின்ற எவ்வகுப்புக்கும் பள்ளிச் சம்பளம் கட்ட வேண்டும் நிலை இல்லாதாயிற்று! வகுப்பு முதன்மை, பள்ளி முதன்மை, வட்ட, மாவட்ட முதன்மை எட்டுவாரும், மாநில முதன்மை பெறுதல் அருமையேயன்றோ! கா. சு. வின் தனித்திறங்களுள் ஈதொன்று! பள்ளியிறுதித் தேர்வு அந்நாளில் ‘Matriculation Examination’ என்னும் பெயரால் பல்கலைக் கழகத்தால் நடாத் தப்பட்டது. திருவருள் ஒருபாடம் புகட்டிக் கல்வித் திறத்தில் மேலும் அழுந்துவிக்க எண்ணியதோ! அன்றிப், பாலரும் அன்றி வளர்ந்த வரும் அன்றி அமைந்த இரண்டுங்கெட்டாராம் பருவநிலை ஆட்டங் காட்டி அறிவுறுத்தத் தொடங்கியதோ! அறிய வாய்ப்பு இல்லை! கா. சு. பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி கண்டார்! ஆம்! மாநில முதன்மை மண்டியிட்டது! மறுபடி வீறியது. இடைநிலைத் தேர்வென்னும் F. A தேர்விலும் இளங்கலை என்னும் B. A. தேர்விலும் மாநில முதன்மை பெற்றார். அவ்வாறே ஆங்கிலத்தில் முன்னரும் (1913) தமிழில் பின்னரும் (1914) கலை முதியரின் முதன்மையரானார். மெய்ப் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற அடுத்த ஆண்டு முயல, இரண்டு முதுகலைப் பட்டத்திற்கு மேல் மூன்றாம் முதுகலைப் பட்டம் பெற சட்டம் இடம் தராமையால் சட்டத் துறைப் பயிற்சியில் புகுந்து சட்ட முதுவர் (M. L) பட்டமும் பெற்றார். இறுதித் தேர்வுக்கு இவர் எடுத்துக் கொண்டது உடைமைச் சட்டம் (Law of Property). இதனைக் கற்க எடுத்துக் கொண்ட காலம் 45 நாள்கள்! இவருக்குப் பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னே ஒரே ஒருவர் மட்டும் இதனைப் பாடமாகக் கொண்டு தேறியிருந்தார்! அரியதும் எளிதாயிற்று தமிழ்க் கா. சு. வுக்கு! அவ்வெளிமையே இவரைத் தாகூர் சட்ட விரிவுரையாளர் (Tagore Law Lecturer) ஆக்கிற்று. தாகூர் குடும்பத்தவர், கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை அறிஞர்க்கென அமைத்துள்ள அறக்கட்டளை ஒன்றுண்டு. அதில், சட்டக்கலை பற்றி மூன்று பொருள்கள் கொடுக்கப்படும். அவற்றுள் ஒன்றைப் பற்றிப் பன்னிரண்டு சொற்பொழிவுகள் ஆங்குச் சென்று நிகழ்த்த வேண்டும். அதற்குரிய பரிசுத்தொகை பத்தாயிரம் உரூபா. அப்போட்டி அந்நாளில் இந்தியப் பரப்பனைத்திற்கும் பொதுவானதாக அமைந்திருந்தது. 1920 இல் அப்போட்டியில் குற்றங்களின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் Principles of Criminology, பன்னிரு பொழிவுகளாற்றி அப்பரிசினைப் பெற்றார். அது முதல் தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுற்றார். சென்னைக்கு ஒருமுறை வந்த தாகூர் பெருமானும், கா. சு. வின் இருப்பிடம் தேடிச் சென்று கண்டு அளவளாவி மகிழ்ந்தனர். இவை கா. சு. வின் தனித் திறங்கள் என்பதில் தடையுண்டா? சென்னை மாநிலத்தில் முதன் முதலாக இப்பரிசு பெற்றவர் இவரே எனின், இவர் திறம் சொல்லாமலே விளங்குமே. சட்டக் கல்வித் திறம், தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் என்பன என்ன செய்தன? முனிசீப் மன்ற நடுவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கால உயர்நடுமன்ற நடுவர் வில்லியம் பாக்கு எயிலிங்கு என்பார்க்கு இருந்தது. அவர் கா. சு. வின் திறம் அறிந்து முனிசீப் மன்ற நடுவராகக் கா. சு. வைத் தேர்ந்தெடுத்து, திருத்துறைப் பூண்டியில் பதவியேற்க ஆணையிட்டார். அப்பொழுது உயர் மன்ற நடுவருள் ஒருவராகிய அப்துல் ரகீம் என்பார் நீவிர் தாகூர்ச்சட்ட விரிவுரையாளர்; நும் தகுதிக்கு இப்பதவி எளியது; அரிய பதவி வாய்க்கும்; இதனைக் கொள்ள வேண்டா என்றார். கா. சு. வுக்கு இருந்த தேர்ச்சிப் பெருமிதம் அசைத்தது. மீளவும் எயிலிங்கு அழைத்து வலியுறுத்தியும் கா. சு. பதவியைக் கை நழுவவிட்டார்! பின்னர்ச் சட்டக் கல்லூரி நிலைப் பேராசிரியப் பணியும் அந்நாள் சட்டத் துறைத் தலைவர் சர். சி. பி இராமசாமி ஐயரால் நீங்கிற்று! சட்டத் துறைப் புலமை வளம் திசை மாறியது; தமிழைச் சார்ந்தது. இதனால்தான், எம். எல். பிள்ளையின் வாழ்க்கை நீதியுலகுக்குப் பயன்படாது ஒழிந்தமை அவ்வுலகின் துரதிர்ஷ்ட மென்றே சொல்வேன் என்று திரு. வி. க. தம் வாழ்க்கைக் குறிப்பில் பொறித்து இரங்கினார். தந்தையாரின் அழுந்திய சைவக் கோட்பாடும் வழிபாட்டு முறையும் இளமையிலேயே கா. சு. விற்குப் பயின்றமைந்தன. தந்தையார்க்குப் பெருந் தொடர்பினர்களாக விளங்கிய செப் பறைச் சிதம்பர அடிகள், திருப்பதிசார அடிகள் என்பார் உறவும் அவர்கள் வழியே பெற்ற இலக்கண சமயப் புலமைகளும் இளமையிலே மூதறிவராகச் செய்தன. அவ்விளமையிலேயே உடையவர் பூசையை மேற்கொள்ளவும் ஆனார். அதனால் பூசைப்பிள்ளை எனவும் ‘Bellman’ எனவும் வழங்கப்பட்டார். பூசைத் திறங் கொண்டே தம் பூவையை மணந்து தந்தார் இவர்தம் மாமனார் என்பதும் கருதத் தக்கது. இவையெல்லாம் கா. சு. வின் சைவ சமயப் பெருநிலை விளக்கத்திற்குக் களங்களாகத் திகழ்ந்தவை. நெல்லையில் உயர்நிலை வகுப்பில் படிக்கும் காலத்திலேயே சைவ சித்தாந்த சங்கம் கண்ட இளவளச் சுடர் கா. R., இதன் உறுப்பினர் பன்னிருவர். ஒத்த அகவையுடையரையும் அவர்கள் இவர்கள் என்றுதான் வழங்க வேண்டும் என்பதும் காபி குடியாமை படம் பாராமை குடுமி வைத்தல் என்பனவும் சில கொள்கைகள். திட ஞானியார் என்னும் ஆய்வு கொண்டு சிவஞான முனிவரும், குமரகுருபரரும் அன்னவர் அவர் என முடிபு அக்காலையிலேயே செய்தனர் என்னின் ஆய்வுத் திறம் அறியவரும். சென்னையில் பயின்ற நாளில் நண்பர் சங்கம் நிறுவியவர் கா. சு. கிழமை ஒரு முறை கூடும் அமைப்பு அது. அதன் உறுப்பினர் நால்வர். அதன் தலைவர் கா. சு. தமிழ்ப் பொழிவர் சொல்லின் செல்வர் இரா.பி. சேது; ஆங்கிலப் பொழிவர் சண்முக நயினார்; வாரச் செய்திப் பொழிவர் பஞ்சாபகேசர் என்பார். அப்பொழுது கா. சு. எண்வகை நினைவுக் கலை எனும் அட்டாவதானம் செய்து பழகினார். மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் நிறுவி திருக் குறள் சொற்பொழிவு செய்தவர் கா. சு. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்னும் உயர் அமைப்பின் தலைவர் கா. சு. சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராக இருந்தவர் கா. சு. அத் தமிழ்ச் சங்க வாயிலாக வெளிப்பட்ட கலைச் சொல்லாக்கப் பணி மிகச் சீரியதாகும். கா. சு. பல்கலைப் புலவர் எனச் சிறப்பிக்கப்பட்டுப் பாராட்டுப் பட்டயம் வழங்கப் பெற்றார். திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராகப் பொதுப்பணியும், நெல்லையப்பர் திருக்கோயில் அறங் காவலராகத் திருவருட் பணியும் புரிந்த கா. சு. செய்த தமிழ்ப்பணி சாவா வாழ்வு வழங்குவதாம். சமயப் பற்றாளர் பலர்க்குத் தனித் தமிழ்ப் பற்று அமைவ தில்லை. கா. சு. நூல் இழைப்பதும் ஆடை நெய்வதும் அறவே ஒழிந்த இந்நாட்டில், அவை தழைத்தற் பொருட்டுக் கதராடை அணிதல் வேண்டுவோரைக் குறுகிய மனப் பான்மையினர் என்று கூறுதல் தவறாதல் போலத் தூய தமிழ்ப் பேச்சு மிகக் குறைந்து தமிழ்ச் சொல்லாக்கு முறைகள் பெரிதும் மறைந் தொழிந்த, இத் தமிழ் நாட்டிலே அவை நிலைத்தற் பொருட்டுத் தூய தனித்தமிழ் வழங்கல் வேண்டும் என்றல் தக்கதேயாதல் காண்க என்று உறுதி கொண்டு உழைத்தார். தம்முடைய நலத்திற்குப் பங்கம் ஏற்பட்டாலும் கொண்ட கருத்தை வெளியிடாமல்இருக்கமாட்டார்! அப்படிப்பட்ட வீரர் எங்குளர்? என்று இவரொடும் உறைந்த விடுதி மாணவர் கோவை கோ. ம. இராமச்சந்திரனார் இவரைப் பற்றிக் கூறும் செய்தியில் இவர் தம் உறுதிப்பாடு நன்கு விளங்கும். சமயச் சால்பும், சமயச் சீர்திருத்தமும், பகுத்தறிவு நாட்டமும், அருளியல் வாழ்வும் இவரியற்றிய ஒவ்வொரு நூலாலும் விளங்கும், தமிழர் சமயம் என்னும் பெயரீடே இவர் தம் சைவ வைணவ ஒருமைக் கொள்கை விளக்கமாம். அன்றியும் இவர் நெல்லையில் அறங்காவலராக இருந்த நாளில், நெல்லையப்பர் எழுந்தருளியிருக்கும் மண்டபத்தின் இடப்பால் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பதை எவரும் சென்று வணங்க இயலாதிருக்க, தடைச் சுவரைத் தவிர்த்து வழி செய்து அன்பர்கள் சென்று வழிபட்டு மகிழச் செய்தமையும், இவர் தாமே நடத்திய மணி மாலை மாதிகையில் ஆழ்வார்கள் வரலாற்றைத் தொடர்ந்தெழுதி வந்தமையும் சான்றுகளாம். இவர் ஆசிரியத்திறம் நூலாசிரியர், உரையாசிரியர், போதக ஆசிரியர், தாளாசிரியர் என நாற்றிறத்ததாய் விளங்கியது. நூலாசிரிய நிலையில் அருளிய நூல்கள் வரிசையில் வரலாற்று நூல்கள் முதன்மையன. இவர் இயற்றிய தமிழ் இலக்கிய வரலாறு தாய் வரலாறு! அது பெற்றெடுத்ததும், வளர்த்ததுமாம் வரலாறுகள் எண்ணற்றன. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், சேக்கிழார், மெய்கண்டார், பட்டினத்தார், தாயுமானவர், குமரகுருபரர், சிவஞான முனிவர் வரலாறுகளும் அவர்கள் அருளிய திருப்பாடல் ஆய்வுகளும் தனித்தனி வகையில் சிறந்தன. ஆய்வு முறைக்கு வழி காட்டி களாய் அமைவன. உலகப் பெரு மக்கள் வரலாறு என இரண்டு பாகங்கள் வரைந்தமையும் கருதத் தக்கது. அவையும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் பற்றியது என்பது தனிச் சிறப்பாகும். ஆய்வு நூல்களாக அறிவு விளக்க வாசகம், திருஞான சம்பந்தர், தேவார இயற்கைப் பொருளழகு, இறையனார் அகப்பொருள், பழந்தமிழர் நாகரிகம், மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழியமைப்பும் என்பன. கதை நூல், செகப்பிரியர் வரலாறும் நாடகக் கதைகளும் என்பது. இந்து சமயங்களின் சுருக்க வரலாறு திருநான்மறை விளக்கம், சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம், சைவ சித்தாந்த உண்மை வரலாறு, முருகன் பெருமை, சைவச் சடங்கு விளக்கம், மெய்கண்ட நூல்களின் உரைநடை, தமிழர் சமயம், சிவஞானபோதப் பொழிப்புரை என்பன சமய நூல்கள். தியானமும் வாழ்க்கை உயர்வும், கடவுளும் வாழ்க்கை நலமும், உலக நன்மையே ஒருவன் வாழ்வு, மக்கள் வாழ்க்கைத் தத்துவம், வாழ்க்கை இன்பம் என்பன அறிவுச் சுடர் நூல்கள். உடல்நூல், நோய் நீக்கம், வானநூல் என்பன கலை நல நூல்கள். சிவப்பிரகாசம், நீதிநெறி விளக்கம் என்பனவும் புற நானூற்றுப் பாடல்கள் சிலவும் இவர் ஆங்கில ஆக்கம் செய்த நூல்கள். சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம் 1, இந்து சமயங்களின் சுருக்க வரலாறு2, இந்து அற நிலையச் சட்டத் தொகுப்பின் மேல் ஒரு குறிப்பு3, தமிழ் மலர்கள்4 என்பன இவரியற்றிய ஆங்கில நூல்கள். இவற்றுள் இந்து சமயங் களின் சுருக்க வரலாறு, ஒரே நாள் இரவில் எழுதி முடிக்கப் பட்டதாகும். குற்றங்களின் உட்கிடை5, இந்தியத் தண்டனைத் தொகுதி விரிவுரைகள்6 என்பன ஆங்கிலத்தில் வரைந்த சட்ட நூல்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நூல்களையும் ஒரே நாள் இரவில் ஆய்ந்து, அதில் உள்ள சொற்றொடர்களைக் கூறுவதுடன் அதன் பக்கத்தையும் நினைவில் இருந்து சொல்லுதல் கா. சு. வுக்குக் கைவந்த கலை என்பதைக் குற்றங்களின் உட்கிடை என்னும் நூலை அவர் சொல்லச் சொல்ல எழுதிய வழக்கறிஞர் தூத்துக்குடி இ. வெண்ணி மாலை என்பார் நான் தவறின்மைக்காக அவ்வந் நூலைத் திருப்பிப் புரட்டிக் கொண்டிருப்பேன். உடனே அவர்கள் ஐயம் வந்துவிட்டதா உனக்கு? நான் சொல்லிய பக்கத்தில், தலைப்பில் இருந்து, இத்தனை வரிகளுக்கு அப்பால் பார் என்பார் என்கிறார். இது கா. சு. வின். நினைவுக் கொழுமையின் இணையின்மைச் சான்று. தொல்காப்பியத்தை ஆங்கிலப்படுத்த வல்லார் கா. சு. என அந்நாள் பரோடா மன்னரின் அமைச்சர் மாதவையா என்பார் தெளிந்து கொண்டிருந்தார் என்னும் செய்தியை அறியின் நாடறிந்த நல்லாங்கிலப் பேரறிஞர் என்பது விளக்கமாகும். ஒருவரே ஒரு மாதிகையை நடாத்துதல் அதுவும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், உடலியல், உளவியல், வானியல், மருந்தியல், ஆங்கில ஆக்கம், ஆங்கிலப் பெயர்ப்பு, சட்ட இயல், இன்னவெல்லாம் ஒருவரே எழுதிய அருமை வெள்ளிடைமலையெனக் கா. சு. வின் பல்கலைப் புலமையைப் பளிச்சிட்டுக் காட்ட வல்லது. திருக்குறள் பொழிப்புரை, தனிப்பாடல் திரட்டு உரை என்பனவும், பொதுமறை என்னும் ஆய்வும், பற்பல நூல் களுக்கு எழுதிய மதிப்புரைகளும், அவ்வப்போது பாடிய பாடல் களும், இசைப்பாடல்களும், இன்னவும் இவர் தம் பல திறங் காட்டும் பான்மைய. சமய அழுத்தம் மிக்க துறவோரும், திருமடத்தினரும் பாராட்டவும், அவற்றுக்கு எதிரிடைக் கொள்கையும் சீர்திருத்த நோக்கும் உடையரும் பாராட்டவும் இருநிலைப் பாராட்டும் ஒரு நிலையே எய்தத் திகழ்தல் கா. சு. வைப் போல் வாய்த்தல் அருமையேயாம். சமயங்கடந்த உரிமையன்பு, சாதி கருதாச் சால்பு, ஒல்லும் வகையாலெல்லாம் உதவுதல், எளிமையில் இன்பங் காணல், தொல்லை எத்துணைத்தாயினும், தொண்டில் தலைப்பட்டு நிற்றல், எந்நிலையில் நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும், மன்னியசீர் சங்கரன் தாள் மறவாமை, இன்னவெல்லாம் அமைந்த கா. சு. வின் திறம் விரிக்க விரிவது; சுருக்க எஞ்சுவது. தொண்டு செய்வாய் துறை தோறும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் என்பதற்கு எடுத்துக் காட்டெனச் சுருங்கக் கூறல் சாலும். 1. metaphysics of the saiva siddhanta system 2. A Short sketch of the Hindu Religious. 3. A Note on the Hindu Religious Endowments Bill. 4. Tamill Blooms. 5. Principles of Crlminology with special reference to their    Application in india. 6. Lectures on the Indian penal code. 