இளங்குமரனார் தமிழ்வளம் 10 காக்கை பாடினியம் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 10 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 320 = 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 210/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் காக்கை பாடினியம் ஆராய்ச்சி முன்னுரை 1 இலக்கணத்தின் சிறப்பு 26 1. உறுப்பியல் 1. எழுத்து 28 2. அசை 45 3. சீர் 54 4. தளை 73 5. அடி 83 6. தொடை 107 2. செய்யுளியல் 1. வெண்பாவும் அதன் வகையும் 157 2. ஆசிரியப்பாவும் அதன் வகையும் 191 3. கலிப்பாவும் அதன் வகையும் கலிப்பா இன்னதென்பது 210 4. வஞ்சிப்பாவும் அதன் வகையும் வஞ்சிப்பா இன்னதென்பது 254 5. மருட்பா 262 3. பொதுவியல் 1. தனிச்சொல் 267 2. புறநடை 273 3. பொருள்கோள் 280 4. விகாரம் 286 5. குறிப்பிசை 288 6. வகையுளி 289 7. வனப்பு 290 8. வண்ணம் 294 பொருட்குறிப்பு அகரவரிசை 303 இலக்கண மேற்கோள் நூற்பா அகரவரிசை 308 இலக்கிய மேற்கோள் அகரவரிசை 311 சிறப்புப் பெயர் அகரவரிசை 317 காக்கை பாடினியம் ஆராய்ச்சி முன்னுரை யாப்பருங்கல விருத்தி யாப்பிலக்கணத்தின் கலைக் களஞ்சியம்; தமிழ் இலக்கணப் பரப்பினைத் தெள்ளிதின் விளக்கிக் காட்டும் கலங்கரை விளக்கம்; உரையாசிரியர் புலமைத் திறனை அளவிட்டுக் காட்டுதற்கு வாய்த்த ஒப்பற்ற உரைகல். இத்தகைய நூலின் பதிப்புப் பணியைக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையா பிள்ளை அவர்கள் தமியேனிடம் ஒப்படைத்த ஒன்றே இன்று, காக்கைபாடினியம் உரை விளக்கம் பெற்றுத் தமிழ் கூறும் உலகத்தில் உலாக் கொள்ள வாய்ப்பாயிற்று. * * * 96 நூற்பாக்களைக் கொண்ட யாப்பருங் கலத்திற்கு அதன் விருத்தியுரையார் தொல்காப்பியம், அவிநயம், காக்கை பாடினியம், சிறுகாக்கைபாடினியம், பல்காயம், நற்றத்தம், சங்கயாப்பு முதலாய இலக்கண நூல்களிலிருந்து 1034 நூற்பாக்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். அம் மேற்கோள் நூற்பாக்களின் அருமையும் பெருமையும் உணர்ந்து அவற்றை அடைவு செய்ய வேண்டும் என உட்கொண்டேன். அதனை முடித்த பின்னர்த் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலும் சிலப்பதிகாரம் முதலான இலக்கிய நூல்களிலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்ற மேற்கோள் நூற்பாக்களையும் தொகுக்க வேண்டும் என்னும் உணர்வால் அவற்றையும் தொகுத்தேன். ஆகச் சிதறிக் கிடக்கும் இலக்கண மேற்கோள் நூற்பாக்கள் மட்டும் ஈராயிரத்தையும் தாண்டியிருக்கக் கண்டு கழிபேருவகை யுற்றேன். அவற்றை அகர வரிசைப்படுத்தி மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை என்னும் பெயருடன் தனி நூலாக அமைத்துக் கொண்டதுடன் தெள்ளிதின் ஆசிரியர் பெயர் புலப்படும் நூற்பாக்களைத் தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்க்கும் ஆர்வமும் மீதூரப் பெற்றேன். அவ் வகையில் காக்கை பாடினியமும், அவிநயமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. காக்கைபாடினியார் நூற்பாக்கள் எனத் தெரிந்தவற்றை யெல்லாம் ஒருங்கமைத்துப் பார்த்ததில் அவர் யாப்பிலக்கணம் மட்டுமே செய்தார் என்பது வெளிப்பட்டது. பின்னர் அவர் நூற்பாக்களை யாப்பிலக்கண முறைவைப்பின்படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம், ஒழிபு என அடைவு செய்தேன். யாப்பிலக்கணச் செய்திகள் என அறியத் தக்கன வற்றுள் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலவற்றைத் தவிர, அனைத்துப் பகுதி நூற்பாக்களும் அமைந்து கிடந்து இன்பத்தில் ஆழ்த்தின. தொடைகளுள் சிலவற்றுக்கும், நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியத் தாழிசை, குறட்டாழிசை முதலியவற்றுக்கும் மட்டுமே காக்கைபாடினிய நூற்பாக்கள் கிடைத்தில. அவற்றை, முன்னோர் மொழிபொருளே அன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவம் என்னும் தொன்னெறிப்படி உரைமேற்கோளாக அமைத்துக் கோடல் சாலும் எனத் துணிந்தேன். அவ் வகையில் சிறு காக்கை பாடினியார்க்கு முதன்மை இடம் தந்து நான்கு நூற்பாக்கள் மேற்கொள்ளப் பெற்றன. எஞ்சியவற்றுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார், அவிநயனார் முதலியோர் நூற்பாக்கள் மேற் கொள்ளப் பெற்றன. அவ்வாறு மொத்தம் மேற்கொள்ளப் பெற்ற நூற்பாக்கள் 13. அவற்றின் அடிகள் 17. இவை உரை மேற்கோள் நூற்பா என்பதை அவ்வவ் விடத்துக் காட்டி ஆசிரியர் பெயரும் ஆங்காங்குத் தரப்பெற்றுள்ளன. இக் காக்கை பாடினியம் 89 நூற்பாக்களில் 233 அடிகளால் இயங்குகின்றது. இவற்றுள் காக்கைபாடினியார் வாக்காக அறிந்தவை 76 நூற்பாக்கள்; அவற்றின் அடிகள் 216. இவை தவிர்ந்த சில நூற்பாக்களும் காக்கைபாடினியார் பெயரால் அறியக் கிடக்கின்றன. அவற்றை மேலே காட்டுவாம். * * * 1அகத்தியனார் மாணவர் பன்னிருவர் என்றும், அவருள் தலையாயவர் தொல்காப்பியனார் என்றும், 1அவர்தம் ஒரு சாலை மாணவருள் காக்பைடினியாரும் ஒருவர் என்றும் பிற்கால நூலாசிரியர்களும், உரையாசிரியர்களும் பரக்க உரைக்கின்றனர். ஆனால் இக் குறிப்புகட்குத் தொல் காப்பியத்திலோ, பனம்பாரனாரால் பாடப்பெற்ற தொல் காப்பியப் பாயிரத்திலோ எச்சான்றும் இல்லை. எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச், செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு, முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப், புலந்தொகுத்த2 போக்கறு பனுவல் தொல்காப்பியம் ஆகும். அஃதியற்றப் பெற்ற காலத்தே இயற்றமிழ் இலக்கணம் முக்கூறுபடவே இயங்கிற்று. இறையனார் களவியல் உரையாசிரியர் காலத்தே இயற்றமிழ் இலக்கணம் நாற்கூறுபட நடப்பதாயிற்று. தொல்காப்பியனார் பொருளதிகாரத்தில் கூறிய செய்யுளியலை மட்டும் வாங்கிக் கொண்டு, அதனைத் தனி அதிகாரம் ஆக்கி யாப்பதிகாரம் எனப் பெயர் சூட்டி, முக்கூற்றை நாற் கூறாக்கி வைத்தனர். இதனை இனி நாடு நாடாயிற்றாகலின் நூல் வல்லாரைக் கொணர்க என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப் பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம் என்று வந்தார். வர அரசனும் புடைபடக்க வன்று என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம், பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனவரும் இறையனார்களவியல் உரை நடையானும், நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே என்னும் சிறுகாக்கைபாடினியார் நூற்பாவின் பகுதி யாலும் இயற்றமிழ் இலக்கணம் நாற்கூறுபட நடந்தமையும், யாப்பிலக்கணம் கடைக்கண் வைக்கப் பெற்றிருந்தமையும் தெள்ளிதின் அறியலாம். இவ்வாறு நாற்கூறுபட நடந்த காலத்தே யாப்பிலக்கணம் ஒன்றையுமே கூறும் நூல்கள் பல எழுந்தன. அவற்றுள் காக்கைபாடினியமும் ஒன்று என்பது வெளிப்படை. தொல்காப்பியம் என்னும் முதல் நூலினின்று கிளைத் தனவே ஏனைத் தமிழ் இலக்கண நூல்களெல்லாம் என்பது எல்லா ஆசிரியருக்கும் உடன்பாடேயாம். சிற்சில வடநூல் வழித் தமிழாசிரியர் செய்த நூல்கள் இவ்விதிக்கு விலக்கென்று கொள்ளுதலே முறைமையாம். இதனைக், கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையில் தமிழறிந் தோர்க்குக் கடனே. என்னும் பல்காப்பியப் புறநடை நன்கு வலியுறுத்தும். இவ்விடத்தில் மற்றொன்றைக் கருதுதல் கடனாம். ஒரு முதனூற் கருத்தை அப்படியே வழிமொழிதல் வழிநூல் வழக் கன்று; முறைமையும் அன்று. முதனூலின் அடிப்படை மாறாமல் பழையன கழித்துப் புதுவன புதுக்கி மரபுநிலை திரியா மாண்பொடு செய்யப் பெறுவதே வழிநூலாகும். இக்கருத்தைத் தொல்காப்பியப் பாயிரமும் நன்கு வலியுறுத்தும். ஆக ஒரு முதனூல் வழியே வழிநூல் கிளைத்தற்குத் தகுதியான கால இடை வெளி ஒன்று வேண்டும் என்பது தெளிவு. ஒரு காலத்தில் ஒரு சாலை மாணவரானோர் முதனூலும் வழிநூலும் செய்தனர் என்பது வழக்கொடு பட்ட வகைமையன்றாம். ஆகலின் காக்கைபாடினியார் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர் என்பதை அடிப்படை அற்ற செய்தி என்று கொள்ளுதலே சாலும். இனி, வேறொரு குறிப்பும் இவண் கருதத்தக்கதாம். ஆசிரியர் தொல்காப்பியனார் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரியவையாய் வரும் பாவகைகளை, ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென, நாலியற் றென்ப பாவகை விரியே என்று கூறினார். பரிபாடல் இலக்கணமும் கூறினார். ஆனால் அவர் காலத்தில் பாவினங்கள் தோன்றிற்றில்லை. கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு, தாழிசை, எண் முதலியவையும், கொச்சகக் கலி உறுப்புக்களும் சங்கச் சான்றோர் காலத்திற்குப் பின்னே வளர்ச்சியுற்றுத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களாக உருக்கொண்டன. பிற்காலத்தார் பாவினங் கோடல் ஆசிரியர்1 தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்றும், மரபும் அன்று என்றும் உரையாசிரியர்கள் தெள்ளிதின் விளக்கிப் போந்தனர். ஆனால் காக்கை பாடினியாரோ விருத்தம் துறையொடு தாழிசை என்றா இனச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் என்றும், வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே என்றும் கூறியதுடன் அகவல், கலி, வஞ்சிப் பாக்களின் இனங்களைத் தனித்தனி நூற்பாக்களிலும் விரித்துரைத்துப் போதுகின்றார். இதனால் பாவினங்கள் பல்கி வளர்ந்த காலத்தேதான் காக்கையாடினியார் இருந்து நூல் செய்தாராதல் வேண்டும். என்னெனில், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் முறைமையாகலின். இம் மூவினங்களுள்ளும் தாழிசை, துறை என்பன கலிப்பாவினுள் உறுப்புக்களாக அமைந்தனவே. விருத்தம் ஒன்றுமே அவற்றின் பின் எழுந்த இனம் ஆகும். இவ் விருத்தத்தின் இலக்கணம் காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம் அவிநயம் முதலிய நூல்களில் வருதலால்1 இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தன என்பர்;2 சங்க காலத்தின் பின் வந்த பல்லவர் காலத்தில் தோன்றியிருக்கலாம் என்றும் கூறுவர். அப்பரடிகள் ஆளுடைய பிள்ளையார் ஆகியோர் காலத்திலேயே நரிவிருத்தம், எலிவிருத்தம், கிளிவிருத்தம் என்னும் நூல்கள் எழுந்தனவாகக் குறிப்புக்கள் இருத்தலால், விருத்த இலக்கணம் அமைந்திருத்தல் கொண்டு, பத்தாம் நூற்றாண்டுக்குக் காக்கைபாடினியார் காலத்தைக் கொண்டுவர வேண்டுவதின்று. இனிக் குண்டலகேசிக்குக் குண்டலகேசி விருத்தம் என்னும் பெயருண்மையும், திருத்தக்க தேவர் இயற்றியதாக நரிவிருத்தம் என்னும் பெயரிய நூலொன் றுண்மையும் இவண் கருதத்தக்கது. இவற்றால் காக்கைபாடினியார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் 7 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தவராய் இருத்தல் கூடும் என்பதை அன்றித் தொல்காப்பியனார் காலத்தொடும் தொடர்ந்தவராகவோ பத்தாம் நூற்றாண்டளவில் அமைந்தவராகவோ கொள்ளுதல் முறைமையன்றாம். இனிப் பத்தாம் நூற்றாண்டளவில் (985-1014) ஆட்சி புரிந்த முதல் இராசராசன் காலத்தில் வாழ்ந்த அமிதசாகரனார் காக்கைபாடினியத்தை முதனூலாகக் கொண்டு யாப்பருங்கலம் என்னும் நூலையாத்தார் ஆகலின் காக்கைபாடினியார் பத்தாம் நூற்றாண்டளவினும் முற்பட்டவர் என்பது போதரும். * * * ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்லியன் முறைப் படியே நாற்சீர் அடியுள் நான்கெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந்த மூன்றடியையும், குறளடி என்றும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத் தளவும் அமைந்த மூன்றடியையும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்தளவும் அமைந்த ஐந்தடியையும் நேரடி என்றும், பதினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த மூன்றடியையும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்தளவும் அமைந்த மூன்றடியையும் கழிநெடிலடி என்றும் எழுத்துக்களின் அளவினால் பெயரிட்டு வழங்குவர். இவ்வழக்கம் சங்கச் சான்றோர் காலத்திலேயே வீழ்ந்துபட்டது. இதனை, இந்நூல் (தொல்காப்பியம்) செய்த காலத்தில் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயின்று வரச் செய்யுள் செய்தார் என்பது இச் சூத்திரங்களால் (தொல். செய். 50-51) பெறுதும். பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃதரிதாதலில் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தார் என்றுணர்க என்னும் நச்சினார்க்கினியர் உரையால் நன்கறியலாம். காக்கைபாடினியார், ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தவராயின் கட்டளையடி யமைதியே கூறியிருப்பார். ஆனால் அவர், குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென் றைவகை மரபின அடிவகை தானே என்றும், இருசீர் குறளடி; சிந்தடி முச்சீர்; அளவடி நாற்சீர்; ஐஞ்சீர் நெடிலடி; அறுசீர் கழிநெடில் ஆகும் என்ப; என்றும், எண்சீர் எழுசீர் இவையும் கழிநெடிற் கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே என்றும், இரண்டு முதலா எட்டீ றாகத் திரண்ட சீரான் அடிமுடி வுடைய இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த வல்ல செய்யு ளுள்ளே என்றும் விரித்துரைக்கின்றார். இந் நூற்பாக்களால் காக்கை பாடினியார் சீர்வகை அடி கொண்டனர் என்றும், எட்டிறந்த சீர் அடியையும் சிறப்பில்லன ஆயினும் ஏற்றுக் கொண்டார் என்றும் தெற்றெனப் புலனாம். இதனால் ஆசிரியர் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர் காக்கைபாடினியார் என்பது பொருந்தாக் கூற்றெனக் கொள்க என்பதாம். * * * தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு கிளர்ந்த காக்கைபாடினியம், யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை முதலிய நூல்களுக்கு முதனூலாகும் சிறப்புற்றது. காக்கை பாடினியார் மதமே பெரும்பாலும் வழிநூலார் மதமாகப் பெரிதும் பரவலாயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார் அசைக் குறுப்பாம் எழுத்துக்களை எழுத்ததிகாரம் நோக்கி அறியக் கூறினார். அவ் வெழுத்துக்கள் பதினைந்தென்பார் பேராசிரியர். பதினாறு என்பாரும் இருந்தனர். இதனை, எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமாறென்னை யெனின் எழுத்தோத்தினுட் குறிலும் நெடிலும் உயிரும் மெய்யும் இனம் மூன்றும் சார் பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்பு வகையான் ஆண்டுப் படுத்தோதினான். உயிர்மெய்யும் உயிரளபெடையும் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஔகாரம் போலிவகையாற் கூடுமாறும் யாழ்நூலகத்து ஒற்றிசை நீளுமாறும் ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோடொக்கும் என்று உய்த்துணர்ந்து கொள்ள வைத்தான் என்பது. இவற்றோடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்து என்பாரும் உளர் என்னும் பேராசிரியர் உரையால் தெளியலாம். (தொல். செய். 2.) காக்கைபாடினியார் அசைக்குறுப்பாம் எழுத்துக்களை, குறில்நெடில் அளபெடை உயிர்உறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையோ டாய்தம் இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும் என்று பதின்மூன்றாகக் கொண்டார். இதனை, எழுத்துப் பதின்மூன்று எனத் தழுவிக் கொண்டார் அமிதசாகரனார். (யா. கா. 44) நேர், நிரை, நேர்பு, நிரைபு என அசைகளை நான்காகத் தொல்காப்பியனார் கொண்டார். 1காக்கைபாடினியார் நேர்பு நிரைபு என்னும் இரண்டசைகளையும் ஏற்றாரல்லர். அவர்க்குப் பின் வந்தோர் அனைவரும் அவர் கொள்கையையே ஏற்றனர். இனி ஆசிரியர் தொல்காப்பியனார் அசைகளை நேர், நிரை எனக் குறியிட்டு ஆண்டனர். ஆனால் காக்கைபாடினியார் நேரசையைத் தனியசை என்றும் நிரையசையை இணையசை யென்றும் குறியிட்டு இலக்கணமும் அதன்கண்ணே அமைய வழங்கினார். அவர்க்கு வழிநூல் செய்தார் அக்குறியீட்டைப் பின்பற்றாமல் நேர், நிரை என்றே வழங்கினர். அவ் வாட்சியே வலுவாக ஊன்றி நிற்பதாயிற்று. நாலசைப் பொதுச்சீர் கொள்ளுதல் தொல்காப்பிய னார்க்கு உடன்பாடன்று. இதனை, ஈரசை கொண்டும் மூவசை புணர்த்தும் சீரியைந் திற்றது சீரெனப் படுமே என்னும் நூற்பாவின்கண், நாலசையானும் ஐந்தசை யானும் உண்ணா நின்றன அலங்கரியா நின்றான் எனச் சொல் வருவன உளவால் எனின் அங்ஙனம் வருஞ் சொற்கள் சிலவாகலானும் அவை தாமும் இரண்டு சொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப் படாமையானும் அவை சீராக வருஞ் செய்யுளின்மையானும் என மறுக்க. இனி வஞ்சிப் பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச் சீர் காட்டல் வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை தூங்க லோசையிலவாகலானும் அவை சீரியைந் திறுதலின்மையானுங் கொள்ளான் என்பது. ஈண்டு எனப்படும் என்பதே பற்றி நாலசைச் சீர் கொண்டாரும் உளர். ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலம் என்க என்று பேராசிரியரும், உண்ணா நின்றான் என நாலசையாலும் வருமாலெனின் அவை பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப் படாமையானும், அவை சீராக வருஞ் செய்யுள் இன்மையானும், வஞ்சியுள் நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் என்ற ஆசிரிய அடி யினை நாலசைச்சீர் காட்ட வேண்டுவார் இரு சீரடியாக அமைப்பினும் அவற்றிற்குத் தூங்கலோசை இன்றாகலானும் சீர் தம்முட் புணர்ந்திறுதல் இன்மையானும் வஞ்சிச்சீர் அறுபது காட்டுகின்றவழி யாண்டும் நேர்பசை, நிரைபசைகள் அலகு பொறாமையானும் தொல்காப்பியனார் கொள்ளார் என்று நச்சினார்க்கினியரும் உரைத்தலால் தெளிவாம். ஆனால் காக்கைபாடினியார், நாலசை யானும் நடைபெறும் என்றும், நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் றிணைதலும் ஏனுழி ஒன்றுசென் றாகலும் அந்தம் இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குரியன ஆகலும் ஆகுந என்ப அறிந்திசி னோரே என்றும் விரித்துரைத்தார். 1இம்முறையைப் பின்னூலோர் போற்றியமை கண்கூடு. இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் முன்நிரை வரினும் அன்ன வாகும். என ஆசிரியர் தொல்காப்பியனார் இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்களை விதந்துரைத்தார். ஆனால் காக்கைபாடினியார், ஓரோ வகையினால் ஆகிய ஈரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர் என்றும், இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் என்றும் கூறினார். அவர் தம் கூற்றே பெருவழக்காகி நிலைபெற்றது. நான்கடியான் அமைந்த வெண்பாவை ஒத்தது என்றும், நான்கடியின் மிக்க வெண்பாவை நெடுவெண் பாட்டு என்றும், நான்கடியிற் சுருங்கிய வெண்பாவைக் குறுவெண்பாட்டு என்றும் தொல்காப்பியனார் குறியிட்டு வழங்கினார். காக்கைபாடினியார் நெடுவெண் பாட்டைப் பஃறொடை வெண்பா என்றும், ஒத்தது என்பதை நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்றும், குறுவெண்பாட்டைக் குறள் வெண்பா என்றும் குறியிட்டு அவற்றின் இலக்கணத்தை விரித் தோதினார்; நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா என்பவற்றின் அமைதியைத் தனித்தனி நூற்பாக்களில் விளக்கினார். வண்ணகந் தானே, தரவே தாழிசை எண்ணே வாரமென் றந்நால் வகையிற் றோன்று மென்ப என்று வண்ணக ஒத்தாழிசை இலக்கணத்தைக் கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார். வண்ணகம் என்பதன் விளக்கத்தை, வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர் அத் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப் பெயர் பெற்றதாகலின். ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினும் சிறந்த உறுப்பு இது வென்க என்று பேராசிரியர் உரைக்குமாற்றான் அறியலாம். காக்கைபாடினியார் வண்ணகத்தை அராகம் எனக் கொண்டு இலக்கணம் வகுத்தார். அச்சொலப் பட்ட உறுப்போ டராகவடி வைத்த நடையது வண்ணகம் ஆகும் என்பது அவர் நூற்பா. தொல்காப்பியனார் வழியொடு இவ்வழி மாறுபாடுடையதாகலின், இனி வண்ணகம் என்பது அராகமென உரைத்து அவ்வுறுப்புடையன வண்ணக ஒத்தாழிசை எனவும் சொல்லுவாரும் உளர். எல்லா ஆசிரியரும் செய்த வழி நூற்கு இது முன்னூலாதலின் இவரோடு மாறுபடுதல் மரபன்றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடின் அஃது அவர்க்கும் மரபன்றென்பது என மறுத்தெழுதினார் பேராசிரியர் (செய். 140.) எனினும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலாய நூல்கள் காக்கைபாடினியார் வழியையே மேற் கொண்டன. அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி என்பது யாப்பருங்கலம். அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி என்பது யாப்பருங்கலக்காரிகை. இனிக் கொச்சகக் கலியின் யாப்புறவைத் தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே என்றார் தொல்காப்பியனார், இவ்விலக்கணத்தைக் காக்கை பாடினியார், எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும், இடைநிலை இன்றி எருத்துடைத் தாயும், எருத்தம் இரட்டித் திடைநிலை பெற்றும், இடைய திரட்டி எருத்துடைத் தாயும், இடையும் எருத்தும் இரட்டுற வந்தும், எருத்தம் இரட்டித் திடைநிலை யாறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும், தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை அன்றி இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன கொச்சகம் என்னும் குறியின ஆகும். என்று அதன் வகையெல்லாம் விரித்துரைத்தார். இவ்வாறு கூறியதை வாங்கிக்கொண்டே இவர்க்கு வழிநூல் செய்தார் தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா முதலியனவாகக் குறியிட்டும் பலவிகற்பங்களை உள்ளடக்கியும் உரைத்தார். இவற்றை எருத்தியல் இன்றி எனத் தொடங்கும் இக் காக்கை பாடினிய நூற்பாவின் (78) உரைக் கண்ணும், தரவே தர விணை என்னும் யாப்பருங்கல நூற்பா விருத்தியுரைக் கண்ணும் (86) தரவே தரவிணை என்னும் யாப்பருங்கலக் காரிகை யுரைக்கண்ணும் (32) கண்டு கொள்க. இனிப் பனம்பாரனார் தமிழ்நாட்டின் எல்லையை வட வேங்கடம் தென்குமரி, ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியப் பாயிரத்தின்கண் கூறினார். காக்கை பாடினியமும் இவ்வாறே எல்லை கூறித் தொடங்கிய தென்பது இறையனார் களவியலுரையாலும், தொல்காப்பியப் பேராசிரியர் உரையாலும் விளக்கமாகின்றது. இந்நூல் எவ்வெல்லையுள் நடக்குமோ எனின் வடக்கு வேங்கடம், தெற்குக் குமரி, கிழக்கும் மேற்கும் கடல் எல்லையாக நடக்கும் என்பது. என்னை? வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமுரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை அகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் எனவும், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து எனவும், காக்கைபாடினியாரும் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் கூறிய பனம்பாரனாரும் சொன்னாராகலின் என்பது இறையனார் அகப்பொருளுரை. தொல்காப்பியனார் செய்யுள் உறுப்புக்களை முப்பத்து நான்காகக் கொண்டார். காக்கைபாடினியம் நூல் வடிவில் கிடைக்காமையாலும், செய்யுள் உறுப்பெண்ணிய நூற்பா மேற்கோள் ஆட்சி வழியால் கிட்டாமையாலும் செய்யுள் உறுப்புக்கள் எத்துணை என்று கொண்டார் என்று புலப்பட வில்லை. யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகைகளை இயற்றிய ஆசிரியர். அமிதசாகரனார் செய்யுள் உறுப்புக்களை எண்ணுதற்குப் பல்காயனார் மதத்தை மேற்கொண்டார் என்பது புலனாகின்றது. காக்கைபாடினியார் மதம் தெற்றெனப் புலனாகவில்லை. ஆசிரியர் தொல்காப்பியனார் தளை என்பதோர் உறுப்பைக் கொண்டிலர். காக்கைபாடினியார்க்கும் தளை என்பதோர் உறுப்பு உடன்பாடன்று என்பது பேராசிரியர் உரையானும் நச்சினார்க்கினியர் உரையானும் (செய்.1) நன்கு விளங்கும். சிறுகாக்கை பாடினியார் தளையென்னும் உறுப்பைக் கொண்டவர் என்பதும் வெளிப்படுகின்றது. தளை உறுப்பெனப்படாது. எழுத்தும் அசையும்போல் யாண்டும் வருவன எல்லாம் உறுப்பெனப்படுவன என்றதற்கு, இணைநூன் முடிபு தன்னூன் மேற்றே என்பதனால் காக்கை பாடினியார் ஓதிய தளை இலக்க ணம் ஈண்டுக் கோடல் வேண்டும் எனின், அதுவே கருத்தாயின் அவர்க்கும் இவர் முடிபே பற்றித் தளை களையல் வேண்டும். அல்லதூஉம் இவர்க்கு இளையரான காக்கை பாடினியார் தளை கொண்டிலரென்பது இதனாற் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்து ஓராசிரியர் என்பது. என்னை? வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை அகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின் எனக் கூறி வடவேங்கடந் தென்குமரி எனப் பனம்பாரனார் கூறியவாற்றானே எல்லை கொண்டார் காக்கை பாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து, வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்திசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் எனத் தென்திசையும் கடலெல்லையாகக் கூறப்பட்ட தாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தார் அல்லர் என்பதூஉம், குறும்பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவ தன்றென் பதூஉம் பெற்றாம். பெறவே அவர் இவரோடு (தொல்காப்பிய ரோடு) ஒருசாலை மாணாக்கர் அல்லர் என்பது எல்லார்க்கும் உணரல் வேண்டும் என்பது இது பேராசிரியர் விளக்கவுரை. தொல்காப்பியரோடு ஒருசாலை மாணாக்கராகிய காக்கை பாடினி யாரும் உறுப்பென்னார்; பின் தோன்றிய காக்கை பாடினியார் முதலியோர் கொள்வர்; அது பொருந்தாது என்பது நச்சினார்க்கினியர் குறிப்புரை. பாவினங்களைச் சுட்டுங்கால் விருத்தம், துறை, தாழிசை என முறை வைப்புச் செய்தல் காக்கை பாடினியார் மதமாகும். சிறு காக்கை பாடினியார் மதம் தாழிசை, துறை, விருத்தமென, முறைவைப்புச் செய்தலாகும். இவற்றுள் அமித சாகரனார் சிறுகாக்கை பாடினியார் மதத்தை மேற்கொண்டார். இதனை, பாவினங்களை விருத்தம், துறை, தாழிசை என்று காக்கை பாடினியார் வைத்த முறையானே வையாது தாழிசை, துறை, விருத்தம் என்று தமது மதம் படுத்து முறை பிறழச் சென்னார் அல்லர் இந்நூலுடையார். சிறுகாக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் வைத்தமுறைபற்றிச் சொன்னாராகலின் குற்றம் இல்லை என்று தெளிக என்னும் யாப்பருங்கல விருத்தியால் தெளிக. (56) வெண்பாவினுள் அளபெழுந்தால் நாலசைப் பொதுச் சீர் வரும் என்பது ஒருசார் ஆசிரியர் மதமாகும். காக்கை பாடினியார் மதம் அன்னதன்று என்பது குணசாகரர் உரையால் தெளிவாகின்றது. ஒரு சாரார் வெண்பாவினுள் அளவெழுந்தால் நாலசைப் பொதுச்சீர் வருமென்பார் உளராயினும் அவ்வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும் பொழுது செப்ப லோசை பிழைக்கு மென்பதூஉம், ஆண்டுச் சீருந் தளையும் சிதையவாராமையின் அளபெடுப்பனவும் அல்ல; அள பெடுப்பினும் அளபெடைகள் அலகு காரியம் பெறுவனவும் அல்ல என்பதூஉம் காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே 1இந் நூலுடையார்க்கும் உடன்பாடு என்பது குணசாகரர் விளக்கவுரை. (யா. கா. 8.) ஓர் இலக்கணத்தைக் கூறி அதற்குரிய இலக்கிய முத னினைப்பு உணர்த்துதல் காக்கைபாடினியார் மதமாகும் என்பது குணசாகரர் உரையாலும் (யா.வி.) மயிலைநாதர் உரையாலும் புலனாகின்றது. சீர்கட்கு முதனினைப்புக் கூறிய காரிகையில் இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக் கொள்க. என்னை? குன்று கூதிர் பண்பு தோழி விளியிசை முத்துறழ் என்றிவை எல்லாம் தெளிய வந்த செந்துறைச் செந்துறை என்றார் காக்கை பாடினியார் என்றார் குணசாகரர். இந் நூற்பாவை, ஓங்கெழில் முதலாக், குன்று கூதிர் பண்பு தோழி விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாந் தெளிய வந்த செந்துறைச் செந்துறை எனக் காட்டி, இதனுள் ஓங்கெழில், என்புழி, ஓங்கெழில் அகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு பொரு தலற என்னும் பாட்டும், குன்று என்புழி, குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான் என்னும் பாட்டும், பண்பு என்புழி, பண்பு கொள் செயல் மாலை என்னும் பாட்டும், தோழி என் புழி, தோழி வாழி தோழிவாழி. வேழமேறி வென்ற தன்றியும் என்னும் பாட்டும், விளியிசை என்புழி, விளியிசைப்ப விண்ணக நடுங்க என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி, முத்துற ழகவந் தேங்கி என்னும் பாட்டும் குறிப்பினான் முன்னின்ற மொழியான் அறிய வந்தன. என்று முதனினைப்பை விளக்கி எழுதுகின்றார் மயிலைநாதர். (நன். 268) இலக்கணத்தைத் தொகுத்துரைத்தல் காக்கைபாடினியார் மதம் என்பது யாப்பருங்கல விருத்தியால் புலப்படுகின்றது. தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து என்பது விருத்தியுடையார் காட்டிய பாட்டு. காக்கைபாடினியார் தாம் இயற்றிய நூலை விரித்துக் கூறாது தொகுத்துக் கூறினாராயினும் விரித்துரைக்க வேண்டும் இடத்து விரித்துச் செய்தார் என்பதைக் கொச்சகக்கலி வகைகளை விரித்துக் கூறுமாற்றான் உணரலாம். ஒரு யாப்புறவின் சிறப்புண்மை, சிறப்பின்மை ஆகியவை விளங்குமாறு தனித்தனி நூற்பாக்களில் முறையே காட்டுவது காக்கைபாடினியார் கைக்கொண்ட சீரிய நெறி என்பதைக் கழிநெடிலடிக்கு அளவு கூறிய வகையால் அறியலாம். கற்பார்க்கு இவ் வகையால் மயக்க முண்டாம் என்று நுழை புலத்தால் உணர்ந்து அம் மயக்கம் நேரா வண்ணம் நூற்பா யாத்தலை மேற்கொண்டவர் காக்கை பாடினியார் என்பது, நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை யாதல் இலவென மொழிப என ஓதிய நூற்பாவால் அறியலாம். குறிலிணையும், குறில் நெடில் இணையும் இணையசை (நிரையசை) எனக் கற்பார் நெடிலிணையையும், நெடில் குறில் இணையையும் இணையசை எனக் கொள்ளலாமோ என ஐயுறவால் வினாவுதலும் கற்பிப்பார் ஐயமகற்றலும் வெள்ளிடை. இதனை உணர்ந்து நூற்பா யாத்த சீர்மை காக்கைபாடினியார் தம் நுண்ணுணர்வுக்குச் சான்றாம். யாப்பருங்கல விருத்தியுடையார் காக்கை பாடினியார் புலமைத் திறத்தில் தம் நெஞ்சைப் பறிகொடுத்துப் பல்கால் பாராட்டுகின்றார். காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் என்றும் (பக். 58), காக்கை பாடினியார் முதலிய மாப்பெரும் புலவர் என்றும் (பக். 101) காக்கை பாடினியார் முதலாகிய மாக்கவிப் புலவோர் என்றும் (பக். 430) நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் என்றும் (பக். 19) அவர் பாராட்டும் சீர்மை உளங்கொளத் தக்கதாம். * * * காக்கை பாடினியார் பெண்பாற் புலவர் என்பது அவர் தம் பெயரானே தெள்ளிதின் அறியப் பெறுகின்றது. பாடுவதையே தொழிலாகக் கொண்ட பழந்தமிழ்க் குடியினர் பாணர் எனப் பெற்றனர். அவர்களுள், பாணன் என்னும் ஆண்பாற் பெயர்க்கு அமைந்த பெண்பாற் பெயர் பாடினி என்பதாம். இதனை, இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் என ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடிய பாட்டால் (புறம். 242) அறியலாம். அன்றியும், புறம்பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே ஏருடைய விழுக்கழஞ்சிற் சீருடைய இழைபெற்றிசினே; இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே - புறம். 11. என்னும் இளவெயினி பாட்டும், வாடா மாலை பாடினி அணியப் பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க - புறம். 364. என்னும் கூகைக் கோழியார் பாட்டும், புரிமாலையர் பாடினிக்குப் பொலந்தாமரைப் பூப்பாணரொடு கலந்தளைஇய நீளிருக்கையால் - புறம். 361. என்னும் கயமனார் பாட்டும், முதுவாய்ப் பாண, .......... நின் பாடினி மாலை யணிய வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே - புறம். 319. என்னும் ஆலங்குடி வங்கனார் பாட்டும் அறியத்தக்கன. பாடினியரை நன்கனம் போற்றிப் புரந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஒரு காலைக்கு இருகாலை, பாடினி வேந்து என்று பாராட்டப் பெற்றான். (பதிற். 14, 17.) பெடைமயில் வடிவப் பெருந்தகு பாடினி யின் வனப்பைத் தலை முதல் அடியீறாக இருபத்து ஐந்து அடிகளில் வண் ணித்துப் பாடினார் முடத்தாமக் கண்ணியார். (பொருந.23-47). பாணர் அரசவை யேறிப் பாடியும் ஆடியும் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரிசு பெறுகை உண்டென்பதை, முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன் பெறுப என்னும் அடியார்க்கு நல்லார் மேற்கோளால் (சிலப் 3 : 162-3) அறியலாம். இத்தகைய கலைத்தேர்ச்சியும் நிலைப்புகழும் வாய்ந்த பாணர் குடியில் தோன்றிய புலவர் பெருமாட்டி ஒருவர் இருந்தார். அவர் நச்செள்ளை என்னும் இயற் பெயருடையவர். அவர், திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினும் சிறிதென் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே என்னும் குறுந்தொகைப் பாட்டை (210)ப் பாடினார். 1 இப் பாட்டில் காக்கையை நயமுறப்பாடும் சிறப்பறிந்த சான்றோர் இவர் தம் குடிப்பெயரும் கெழுமக் காக்கை பாடினியார் நச் செள்ளையார் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குடிப் பிறப்புக் கருதாமல் காக்கையைப் பாடியது கொண்டே காக்கை பாடினியார் எனப் பெயர் சூட்டப் பெற்றனர் என்று கோடல் முறைமை யன்று. அவ்வாறாயின், காக்கை பாடிய நச் செள்ளையார் என்று பெயர் அமைதலே முறைமை. இதனைக், கோடை பாடிய பெரும் பூதனார், நோய் பாடியார், பாரதம் பாடிய பெருந்தேவனார்,1 பாலை பாடிய பெருங்கடுங்கோ, மடல் பாடிய மாதங்கீரனார், மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் சங்கச் சான்றோர் பெயர்கொண்டு தெளிக. இனி இங்கெடுத்துக் காட்டப்பெற்ற புலவர் பெருமக்கள் அனைவரும் ஆடவர்; இக் காக்கைபாடினியார் பெண்டிர்; ஆகலின் பாடிய என்னாமல் பாடினி என்னப் பெற்றார் என்னின், வெறிபாடிய காமக்கண்ணியார் (காமக் காணியார்) என்னம் ஒரு புலவர் பெருமாட்டியாரின் பெயருண்மையால் இக் கூற்றுப் பொருந்தாமை உணர்க. மேலே குறிப்பிட்ட நச்செள்ளையார் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம் பத்தால் பாடிக், கலன் அணிக என்ற ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் அவ்வரசனால் வழங்கப்பெற்ற பெருமை யுடையவர். அவர் பெயர் பதிற்றுப்பத்துப் பதிகம் பாடினோர் காலத்திலேயே காக்கை பாடினியார் என்னும் அடைமொழியுடன் விளங்கியது என்பது, யாத்த செய்யுள் அடங்கிய கொள்கை காக்கை பாடினியார் நச் செள்ளையார் என்பதனால் புலப்படும். இன்னும் குறுந்தொகை முடித்த பூரிக் கோவின் காலத்திற்கு முன்னேயே இப் பெயர் வழக்கத்திற்கு வந்துவிட்ட தென்பது, காக்கை பாடினியார் (பா.வே.பாடினி) நச் செள்ளையார் எனப் பாடினோர் பெயர் குறிக்குமாற்றான் வெளிப்படும். காக்கை பாடினியார் நச்செள்ளையார் பெயர் தமிழ் உலகில் மிக விளக்கமானதாயிற்று. அக் காலையில் நச்செள்ளையார் என்னும் இயற்பெயர் விடுத்துக் காக்கைபாடினியார் என்ற அளவானும் வழங்கப் பெற்றனராதல் வேண்டும். இதனை, நோய் பாடியார் என்னும் சங்கச் சான்றோர் பெயர் காட்டுமாறு அறிக. இந் நிலையில் தமிழ்ச் சான்றோர் தம் மகளிர்க்குக் காக்கை பாடினி என்னும் பெயரிட்டு வழங்கத் தலைப்பட்டிருத்தல் வேண்டும். இவ் வண்ணம் அழைக்கப் பெற்ற பெருமைசால் பெண் புலவர் பெருமாட்டியாரே காக்கை பாடினியம் என்னும் நலமிகு புலமை நல்லியல் யாப்பு நூல் செய்தவர் ஆவர். இவ் விடத்தில் ஓர் ஐயம் கிளைத்தலும் கூடும். காக்கை பாடினியம் இயற்றிய காக்கை பாடினியார்க்குப் பின்னரே, நச் செள்ளையார் என்னும் இயற்பெயருடையார் தோன்றிக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனப் பெயர் எய்தியிருத்தல் கூடாதோ எனின், காக்கை என்னம் அடைமொழி பெறுதற் குரிய பாட்டைப் பாடியவர் நச்செள்ளையார் ஆதலின் அவரே முதற்கண் அப்பெயர்க் குரியார் என்பது வெளிப்படை. நச்செள்ளையார் பாணர் குடியினர் ஆதல்போல் யாப் பிலக்கணம் செய்த காக்கை பாடினியாரும் அக் குடியினரோ எனின், காக்கைபாடினியார் பெயரைத் தம் இடுகுறிப் பெயராகக் கொண்ட இவரும் அக் குடியினரே ஆதல் வேண்டும் என்றும் கடப்பாடு இல்லை. அக் குடியினரும் ஆகலாம்; அன்றி எக் குடியினராகவும் இருக்கலாம் என்பதே முறைமையாம். இனி, இக் காக்கை பாடினியார்க்குப் பின்னே இளங் காக்கை பாடினியார் என ஒருவர் இருந்தார் 1என்பர். பேராசிரியர் இவர்க்கு (தொல்காப்பியனார்க்கு) இளையரான காக்கை பாடினியார் என்றது கொண்டு இவ்வாறு கருதினர். தொல் காப்பியனாரின் 2ஒரு சாலை மாணவர் காக்கை பாடினியார் என்பது பேராசிரியர் கருத்தாகலின், இவர்க்கு இளையர் என்றார். இளங்காக்கை பாடினியார் என்றொருவர் இருந்தார் என்பது பேராசிரியர் கருத்தாயின் இளங்காக்கை பாடினியார் என்றே குறித்திருப்பார். இளையரான என்னும் அடைமொழியால் வழங்கி யிருக்கமாட்டார் என்க. இவ்வாறெண்ணுவது, கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினி என்பது கொண்டு இவரின் வேறாகக் கலைக்காக்கை பாடினி என்பார் ஒருவர் இருந்தார் என்று கொள்ளவும் இடந்தருமன்றோ! காக்கை பாடினியார்க்குப் பின்னே அப்பெயருடன் மற்றொருவரும் விளங்கினார். அவரும் யாப்பிலக்கணம் செய்தார். இவர்க்கும் அவர்க்கும் வேறுபாடு அறிதல் வேண்டிய சான்றோர் அவரைச் சிறுகாக்கை பாடினியார் என்று வழங்கினர். அவர் செய்த நூல் சிறுகாக்கை பாடினியம் என்று வழங்கப்பெற்றது. காக்கை பாடினிய நூற்பாக்களும், குறிப்புக்களும் தொல் காப்பிய இளம்பூரணர் உரை, பேராசிரியர் உரை, சேனா வரையர் உரை, நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றிலும், நன்னூல் மயிலை நாதர் உரை, இறையனார் களவியல் உரை, வீரசோழிய உரை ஆகியவற்றிலும் அருகிக் காணப்பெறு கின்றன. யாப்பருங்கலக் காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை ஆகிய இரண்டனுள்ளும் மிகப் பலவாக எடுத்தாளப் பெற்றுள. அவற்றுள் கீழ்வரும் நூற்பாக்கள் இக்காக்கை பாடினியத்தில் இணைத்து உரை எழுதப்பெற்றில. ஓங்கெழில் முதலா எனத் தொடங்கும் நூற்பா மயிலை நாதரால் காட்டப் பெறுகின்றது. அது முன்னே குறிப்பிடப் பெற்றது. அந் நூற்பா இணைக்கப் பெற்றிலது. வெண்சீர் ஒன்றின் வெண்டளை கொளா அல் என்பதும் வெண்சீர் ஒன்றினும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான என்பதும் செய்யுளியலில் (55) பேராசிரியரால் எடுத்தாளப் பெற்றுள. இவ்விரு நூற்பாக்களும் இந்நூற்பாவின் உரையில் நச்சினார்க்கினியராலும் எடுத்தாளப் பெற்றுள. முன் பின் தொடர்பின்மையால் இவை இணைக்கப் பெற்றில. வெண்சீர் இறுதியின் நேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை ஆகும் என்ப -யா.கா.10 மேற். என்னனும் நூற்பா டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் நூல் நிலையக் காரிகை வெளியீட்டிலும், பெரும்புலவர் மே.வீ. வேணு கோபாலப் பிள்ளை அவர்கள் பதிப்பிலும் காக்கை பாடினியார் நூற்பாவாகக் காட்டப் பெற்றுள்ளது. காக்கை பாடினியார் மதம் தனியசை என்பதாகலின், இந் நூற்பாவில் நேரசை என ஆளப் பெற்றிருத்தலால் அவர் நூற்பா அன்றெனக் கொள்ளக் கிடக்கின்றது. கழகப் பதிப்பிலும், அண்ணாமலைப் பல்கலைப் கழகப் பதிப்பிலும் இந் நூற்பா இடம் பெற்றிலது. அசையினும் சீரினும் இசையினும் எல்லாம் இசையா தாவது செந்தொடை தானே - யா. கா. 17 மேற். என்பது காக்கை பாடினியார் நூற்பாவாகக் கழகப் பதிப்பிலும், ஐயரவர்கள் நூல் நிலையப்பதிப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பிலும் காட்டப் பெற்றுள. இந் நூற்பா யாப்பருங்கல விருத்தியில் பல்காயனார் பெயருடன் இருத் தலைக் குறித்துக் காட்டுகின்றது கழகப் பதிப்பு. கையனார், பல்காயனார் என்னும் பாட வேறுபாடுகளைக் காட்டுகின்றது நூல் நிலையப் பதிப்பு. கையனார் நூற்பா வெனக் காட்டுகின்றது திரு. மே. வீ. வே பதிப்பு. யாப்பருங்கல விருத்தியில் பல்காயனார் நூற்பாவெனத் தெள்ளிதிற் புலப்படுதலாலும், அந் நூற்பா அமைந்த இடத்தே, செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் ஒன்றா நிலையது செந்தொடை யாகும் - யா. வி. 50 மேற். என்னும் நூற்பா காக்கை பாடினியார் பெயரால் குறிக்கப் பெற்று இருத்தலாலும், ஒரே தொடையை இருமுறை இருவேறு நூற்பாக்களால் இயம்ப வேண்டிய இன்றியமையாமை இன்மை யாலும் இந் நூற்பா காக்கைபாடினியார் வாக்கன்று என்று விலக்கப் பெற்றதாம். ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும் இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும் தனிச்சொல் பெற்றுப் பலவிகற் பாகியும் அடியடி தோறும் ஒருஉத்தொடை அடைநவும் எனவைந் தாகும் இன்னிசை தானே என்னும் நூற்பா காக்கைபாடினியார் வாக்காகக் கழகப் பதிப்பிலும் பல்கலைக் கழகப் பதிப்பிலும் இடம்பெற்றுள. ஆனால் மற்றைப் பதிப்புக்களில் என்றார் பிறரும் என்றும், என்றாராகலின் என்றும் இருத்தலாலும், தனிச்சொல் தழுவல வாகி விகற்பம் பலபல தோன்றினும் ஒன்றே வரினும் இயற்பெயர் இன்னிசை என்றிசி னோரோ - யா.வி. 61 மேற். என்னும் நூற்பா காக்கைபாடினியார் வாக்காகத் தெள்ளிதிற் புலப்படலாலும் ஒருவிகற் பாகி என்னும் நூற்பாவைக் காக்கை பாடினியார் வாக்காகக் கூறாமல் தனிச்சொல் தழுவலவாகி என்னும் நூற்பாவின் உரையொடும் இணைந்து விளக்கம் செய்யப்பெற்றது. காக்கைபாடினியத்தின் வழி நூல்களாகிய யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகை இவற்றின் முறைக்கு ஏற்பத் தொடை விகற்பங்கள் பல உரை மேற்கொள் நூற்பாக்களின் வழியே விளக்கப் பெற்றுள. தொடைபற்றிய காக்கைபாடினியார் மதம் தெற்றெனப் புலனாகாமையால் அவ்விணைப்பு வேண்டாத தாக இருப்பினும் இருத்தல் கூடும். என்னெனின் இவர் தொல் காப்பியனார் மதத்தை மேற்கொண்டிருக்கவும் கூடு மன்றோ. காக்கைபாடினியப் பாயிரத்தில் நான்கு அடிகளே கிடைத் துள. அவை தொல்காப்பியப் பாயிரத்தை நினைவூட்ட வல்லன. எனினும் அதனை மேற்கோள் காட்டிய இறையனார் களவியல் உரையாசிரியரும், பேராசிரியரும் நான்கே அடியளவில் அமைத் தனர் ஆகலின் நினைதோறும் சொல்லொணா இனைவுற்று அமைய நேர்ந்தது. வடக்கும் தெற்கும் எனத் தொடங்கும் அப் பாயிரம் முன்னே காட்டப்பெற்றது. இக் காக்கைபாடினிய உரை இயங்குமுறை வருமாறு : இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின், இன்னது கூறிற்று என்று நூற்பா நுதல் பொருள் கூறி உரை தொடங்குகின்றது. அதன் பின்னே நூற்பாவின் பிண்டப் பொருள் கூறப்பெறுகின்றது. அதன் பின்னே ஆராய்ச்சியுரை, குறிப்புரை, விளக்கவுரை, எடுத்துக்காட்டு ஆகியன இடம் பெறுகின்றன. ‘இவ்வாறு கூறியமையால் இது பெற்றாம்’ என்றும், ‘இவ்வாறு கூறாக்கால் இவ்வாறாம்’ என்றும், ‘இவ்வாறு கூறினும் அமையுமாக, இவ்வாறு கூறியது இது பெறுதற்கு’ என்றும், ‘இதற்கும் இதற்கும் இவ்வேற்றுமை’ என்றும், ‘இவ் விலக்கணத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறினார்’ என்றும், ‘இவ்வாறு கூற வேண்டிய தென்னை? என்றும், பெயர் கூறு மாற்றானே இலக்கணமும் கூறினார் என்றும், நூற்பாவிலேயே இவ்விலக்கணம் அமைய வைத்தார் என்றும், இதனால் இதனைக் கூறாராயினார் என்றும், இந் நூற்பாவை இவ் வாறியைக்க வேண்டும் என்றும், இதனை இவ்வாறு கொண்டு கூட்ட வேண்டும் என்றும், இதனை மேலே கூறினாம் என்றும் இதனை முன்னே கூறுவாம் என்றும், இது தொல் லாசிரியர் நெறியாம் என்றும், இஃதிவர் மதமாம் என்றும் இதனால் தழுவி உரைத்தாம் என்றும் உரை இயங்குகின்றது. முன்னை உரையாசிரியர்களின் வழிமுறைகளும் எடுத்துக் காட்டுகளும் பொன்னே போலப் போற்றிப் பொதிந்து வைக்கப் பெற்றுள; புதிய எடுத்துக் காட்டுகளும் தரப்பெற்றுள; சில புதிய விளக்கங்களும், புதிது புனைந்த பாடல்களும் இடத்திற்கு ஏற்ப இணைக்கப் பெற்றுள. இம் முயற்சியைத் தமிழ்ச் சான்றோர் ஏற்றுப் பிழை பொறுத்து உதவுவாராக. காக்கைபாடினியக் கையெழுத்துப் படியினை யாங் காண் பித்து, அஃதுருவாகிய வகையினைக் கூறக் கேட்ட அளவில் அரும் பெரும் புதையல் போன்றது என்று அகமும் முகமும் மலரப் பாராட்டி மகிழ்ந்த கழகப் பொது மேலாளர் திருமிகு இரா. கலியாண சுந்தரனார் பி. எஃச்சி அவர்கட்கும், எள்ளத் தனைப் பொழுதும் பயனின்றி இராது இன்றமிழ்த் தொண் டிலேயே யான் இயலும் வண்ணம் செய்தருளும் கழக ஆட்சி யாளர் தாமரைச் செல்வர் திருமிகு. வ.சுப்பையா பிள்ளை அவர்கட்கும், தமிழ் உலகம் நெடு நீர் மறவி மடிதுயில் கூர்ந்து ஈட்ட முடியாத் தேட்டுக்களாகிய இவற்றை எல்லாம் இழந்தது என்று உணர்வுடையார் எண்ணி நைந்து, இயன்ற பணி செய்யுமாறு மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் நூலையாத்த அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர் கட்கும், தொல்காப்பியம் முதலான பல்வேறு இலக்கண நூல்களைத் தண்டமிழ் வாழ்வே கருதி வெளியிட்டுவரும் பதிப்பகங்கட்கும், பதிப்பாசிரியர்கட்கும் உள்ளார்ந்த நன்றியை உரித்தாக்கி உவப்புறுகின்றேன். தேனும் பாலும் ஊட்டி, ஊனும் உயிரும் கலந்த இன்ப அன்பால், தம் மகாரைப் போற்றும் தெய்வத் தாய்மார் பலர் சங்கச் சான்றோர் வரிசையில் இடம் பெற்றுத் திகழ்கின்றனர். அவர்கள் இலக்கியப் பயிரைப் பேணி வளர்த்தவர்கள். காக்கை பாடினியாரோ இலக்கணப் பயிரைப் பேணி வளர்த்த பெருமைக் குரியவர். அவர் தம் நூல், இப்பேது இல்லை என்றும். மறைந்து போனது என்றும், வாரணம் கொண்ட தந்தோ என்றும் முடிவு செய்யப் பெற்றது. அந்நிலை அகன்று, காக்கை பாடினியத்தைத் தமிழுலகம் இழந்து விடவில்லை என்னும் ஒரு நிலை இந் நூலால் அமையுமாயின் அப் பேற்றை எளியேன் வழி அருளிய திருவருள் திறத்தை வாழ்த்தி வணங்கி வண்டமிழ்த் தொண்டு புரிதல் என்றலைக் கடனாம். தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன் அருளகம் 11-3-74 காக்கை பாடினியம் சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொன்ஞானம் எல்லாம் விளக்கி யிருளகற்றும்-நல்யாப்பாம் காக்கை பாடினியம் எனுநூலைக் கற்றவர்தாம் யாக்கையாற் பெற்றார் பயன். இலக்கணத்தின் சிறப்பு எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப் பானாகும்-மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ. 1. உறுப்பியல் (எழுத்து அசை சீர் தளை அடி தொடை பா என்னும் ஏழு உறுப்போடும் புணர்ந்து குற்றமின்றி நடைபெறுவது யாப்பு எனப் பெறும். அவற்றள் எழுத்து முதல் தொடை ஈறாக அமைந்த உறுப்புகளின் கூட்டமே பாவும், பாவினமும் ஆகலின் அவ்வுறுப்புகளைப்பற்றிக் கூறும் உறுப்பியல் முதற்கண் கூறப்பெற்றது. பாவி னகத்தன்றோ உறுப்புகள் உளவாகலின் பாக்களை அறிந்து உறுப்பறிதும் எனின், உறுப்புகள் செவ்விதின் அமையாக்கால் பாவென்ப தின்று; ஆகலின், உறுப்பறிந்த பின்னரே அவற்றின் ஈட்டமாம் பாக்களையும், இனங்களையும் ஆய்தல் முறையென்க. என்னை? எழுத்துக்களால் அசையும், அசையால் சீரும், சீரால் தளையும், தளையால் அடியும், அடியால் தொடையும், தொடையால் பாவும் இனமும் யாப்புற்று நடக்குமாகலின் அம்முறையே முறையாய், எழுத்து முதலாகக் கூறினார் என்க. எழுத்து முதலியவை காரணக் குறியான் அமைந்தவை என்னை? எழுதப் படுதலின் எழுத்தே ; அவ்வெழுத் தசைத்திசை கோடலின் அசையே ; அசையியைந்து சீர்கொள நிற்றலிற் சீரே ; சீரிரண்டு தட்டு நிற்றலில் தளையே ; அத்தளை அடுத்து நடத்தலின் அடியே ; அடியிரண்டு தொடுத்தல் முதலாயின தொடையே ; அத்தொடை பாவி நடத்தலின் பாவே ; பாவொத் தினமாய் நடத்தலின் இனமெனப் படுமே -யா.கா.மேற். என்றார் ஆகலின்.) 1. எழுத்து அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை 1. குறில்நெடில் அளபெடை உயிர்உறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையோ டாய்தம் இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும். - யா. வி. 2. மே.ற் - யா. கா. 4. மேற் இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின், அசைக்கு உறுப் பாம் எழுத்துக்கள் இவை என்பதும், அவை இத்துணைய என்பதும் கூறிற்று. (இதன் பொருள்.) குறிலும், நெடிலும், அளபெடையும் உயிரும், மெய்யும், உயிர் மெய்யும், வல்லினமும், மெல்லினமும், இடையினமும், ஐகாரக் குறுக்கமும் என்னும் மூன்றும் ஆகிய பதின்மூன்று எழுத்துக்களும் அசைக்கு உறுப்பாவன என்ற வாறு. 1. குறிலாவது குற்றெழுத்து. அவை அ, இ, உ, எ, ஒ, என்பன. என்னை? அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப -தொல். எழுத்து. 3. என்றார் ஆகலின். 2. நெடிலாவது நெட்டெழுத்து. அவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்பன. என்னை? ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் ஈ ர ள பிசைக்கம் நெட்டெழுத் தென்ப -தொல். எழுத்து. 4. என்றார் ஆகலின். 3. அளபெடையாவது எழுத்தின் ஒலியளவு மிகுதிப் பட்டு வருவது. அஃது இருவகைய. அவை உயிரளபெடை, ஒற்றள பெடை என்பன. என்னை? உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென் றாயிரண் டென்ப அளபெடை தானே -யா. வி. 2. மேற் என்றார் ஆகலின். அளபு எனினும் அளபெடை எனினும் ஒக்கும். உயிரளபெடையாவது உயிர் எழுத்து அளபெடுப்பது. உயிர் எழுத்துக்களில், நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொரு மொழி யாகலின் அவை அளபெடுக்கும் என்ப. அவை அள பெடுக்குங்கால் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தமக்கு இனமாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து குற் றெழுத்துக்களோடும் அளபெடுக்கும். ஐகாரம் இகரத் தோடும், ஔகாரம் உகரத்தோடும் அளபெடுக்கும். என்னை? குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கம் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே ஐ ஔ வென்னும் ஆயீ ரெழுத்திற் கிகர வுகரம் இசைநிறை வாகும் -தொல். எழுத்து. 41-2. என்றார் ஆகலின். உயிரளபெடை நான்கு வகைப்படும். அவை, தனிநிலை, முதல்நிலை, இடைநிலை, இறுதிநிலை என்பன. என்னை? தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமா பாய் வருமிடனே யா.க.4.மேற் யா.க.வி.2. மேற் அவை வருமாறு: ஆஅ, ஈஇ, ஊஉ, எஏ, ஐஇ, ஓஒ, ஔஉ-நெட்டெழுத்து ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தன. பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஔஉவை-நெட்டெழுத்து ஏழும் முதல்நிலை அளபெடையாய் வந்தன. படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளை இயம்; புரோஒசை, மனௌஉகம்-நெட்டெழுத்து ஏழும் இடைநிலை அளபெடையாய் வந்தன. படாஅ, குரீஇ, கழூஉ, விலோஎ, விரைஇ, நிலோஒ, அனௌஉ-நெட்டெழுத்து ஏழும் இறுதிநிலை அளபெடையாய் வந்தன. இனி ஒற்றளபெடை யாமாறு: ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை என்க. ஒற்றுக்களுள் ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள என்னும் பத்தும், ஆய்தம் ஒன்றும் ஆகப் பதினென்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் வந்து அளபெடுக்கும். அவை இடைநிலை அளபெடையாயும், இறுதிநிலை அளபெடையாயும் வரும். முதல்நிலை அளபெடையாய் வாரா. என்னை? ங ஞ ண நமன வயலள ஆய்தம் ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான -யா. வி. 3. மேற். என்றார் ஆகலின். அவை வருமாறு: மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு-குறிற்கீழ் அளபெழுந்து வந்தன. அரங்ங்கம், உரிஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு-குறிலிணைக்கீழ் அளபெழுந்து வந்தன. 4. உயிராவது உயிர் எழுத்து. அவை அகர முதல் ஔகாரம் ஈறாகிய பன்னீரெழுத்துக்களும் ஆம். என்னை? ஔகார இறுவாய்ப் பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப -தொல். எழுத்து.8 என்றார் ஆகலின். உயிர் எனினும் ஆவி எனினும் ஒக்கும். 5. உறுப்பாவது மெய்யெழுத்து. அவை ககர முதல் னகரம் ஈறாகிய பதினெட்டு எழுத்துக்களும் ஆம். என்னை? னகார இறுவாய்ப் பதினென் ணெழுத்தும் மெய்யென மொழிப -தொல். எழுத்து.9. என்றார் ஆகலின். உறுப்பு எனினும், மெய் எனினும், ஒற்று, எனினும், உடம்பு எனினும், புள்ளி எனினும் ஒக்கும். என்னை? மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள் செய்யும் என்று செப்பினர் புலவர் -யா. கா. 4. மேற். என்றார் ஆகலின். 6. உயிர்மெய்யாவது உயிரும் மெய்யும் கூடிய எழுத்து அவை பன்னீருயிரும், பதினெட்டு மெய்யும் உறழப் பிறந்த இருநூற்றுப் பதினாறு எழுத்துக்களுமாம். என்னை? உயிர்ஈ ராறே மெய்ம்மூ வாறே அம்மூ வாறும் உயிரொடும் உயிர்ப்ப இருநூற் றெருபத் தாறுயிர் மெய்யே -தொல். எழுத்து. 17. என்றார் ஆகலின். 7. வலிய என்பது வல்லின எழுத்து. அவை க, ச, ட, த, ப, ற, என்பன. என்னை? வல்லெழுத் தென்ப கசட தபற -தொல். எழுத்து. 18. என்றார் ஆகலின். 8. மெலிய என்பது மெல்லின எழுத்து. அவை ங, ஞ, ண, ந, ம, ன என்பன. என்னை? மெல்லெழுத் தென்ப ஙஞண நமன - தொல். எழுத்து.20. என்றார் ஆகலின். 9. இடைமை என்பது இடையின எழுத்து. அவை ய, ர, ல, வ, ழ, ள என்பன என்னை? இடையெழுத் தென்ப யரல வழள -தொல். எழுத்து. 21 என்றார் ஆகலின். 10. ஆய்தம் என்பது ஆய்த எழுத்து. அஃகேனம் எனினும், ஆய்தம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும். என்னை? அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே -யா. கா. 4. மேற். என்றார் ஆகலின். 11. இ என் குறுக்கம் என்பது இகரம் என்பதன் குறுக்க மாகிய குற்றியலிகரம். அது குற்றியலுகரம் திரிந்தும் திரியாதும் யகரமோடு இயைதலால் வந்த இகரம். குற்றியலுகரம் ஆறு வகையாக வருமாகலின் அவற்றின் திரிபால் வரும் இகரமும் ஆறாம். மியா என்னும் அசைக் சொல்லின் வழியாகத் திரி பின்றி வரும் இகரம் ஒன்றாம். என்னை? யகரம் வரும்வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது என்றும், குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக் காவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே -தொல். எழுத்து. 84. என்றும் கூறினார் ஆகலின். எடுத்துக் காட்டு: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது-ஆறுவகைக் குற்றிய லுகரத்தின் மேலும் யகரம் இயை தலால் திரிந்துவந்த குற்றியலிகரம். ஒழிந்த வல் லெழுத்துக்களுக்கும் இவ்வாறே கண்டு கொள்க. கேண்மியா, சென்மியா-மியா என்னும் அசைச்சொல் வழியாகத் திரியாது வந்த குற்றியலிகரம். 12. உ என் குறுக்கம் என்பது உகரம் என்பதன் குறுக்க மாகிய குற்றிய லுகரம் என்றவாறு. அது தனிக் குற்றெழுத் தல்லாத மற்றை எழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளின் இறுதியில் வல்லின மெய்களின்மேல் ஏறி நிற்கும் உகரம். அஃது ஆறு வகைப்படும். அவையாவன: ஈரெழுத் தொருமொழி, உயிர்த் தொடர்மொழி, இடைத் தொடர்மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி, ஆய்தத் தொடர்மொழி என்பன. என்னை? ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொட்ர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் -தொல். எழுத்து. 406. என்றார் ஆகலின். (எ - டு): நாகு, காசு, காடு, காது, காபு, காறு - ஈரெழுத்தொரு மொழி. வரகு, பலாசு, முருடு, எருது, துரபு, கயிறு - உயிர்த்தொடர் மொழி. ஆய்கு, ஆய்சு, ஆய்து, ஆய்பு - இடைத்தொடர் மொழி. (இடையெழுத்துக்கள் ஆறனையும் டகர றகரங்கள் தொடரா) எஃகு, கஃசு, கஃடு, பஃது, அஃபு, சுஃறு - ஆய்தத் தொடர் மொழி. சுக்கு, கச்சு, கட்டு, கத்து, சப்பு, கற்று - வன்றொடர் மொழி. கங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று - மென்றொடர் மொழி. இனிக் குற்றியலுகரம் நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணை யொற்றின் கீழும், குறில் நெடிற் கீழும், குறில் நெடிலொற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என்று இவ்வேழிடத்து ஆறு வல்லெழுத்துக்களையும் ஊர்ந்து வரும் என்பாரும் உளர். என்னை? நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை ஒற்றொடு வருக லொடு குற்றொற் றிறுதியென் றேழ்குற் றுகரக் கிடனென மொழிப -யா.வி.2.மேற். என்றார் ஆகலின். 13. ஐ என் குறுக்கம் என்பது ஐகாரம் என்பதன் குறுக்க மாகிய ஐகாரக் குறுக்கம். அளபெடுக்கம் இடத்தும், தனித்துச் சொல்லும் இடத்தும் என இரண்டிடங்களும் அல்லாத வழி வந்த ஐகாரம் ஒன்றரை மாத்திரையும், ஒரு மாத்திரையு மாகக் குறுகும். அவ்வாறு குறுகுவது மொழி மூவிடத்தும் என்பர். இந் நூலுடையார் இடை, கடை ஆகிய இரண்டிடங்களிலேயே ஐகாரம் குறுக்கமாம் எனக் கூறுவார். (7) (எ - டு) ஐப்பசி, மைப்புறம், ஐக்கட்டி - மொழி முதல். இடையன், உடைவாள், கடைசி - மொழி இடை. குவளை, தவளை, பனை - மொழி யிறுதி. சொல்லில் வரும் இவை ஒரு மாத்திரை பெற்றன. பை, மை, கை-ஓரெழுத்து ஒருமொழியாக வரும் இவை ஒன்றரை மாத்திரை பெற்றன. ஐகாரத்திற்குக் கூறிய இதனை ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பதனால் ஔகாரக் குறுக்கத்திற்கும் கொள்க. ஔகாரம் மொழி முதல் அன்றி, இடை, கடை இடங்களில் வாரா. (எ - டு) ஔவை ; கெளவை. இடைமையோடு ஆய்தம் என்றும், குறுக்கமோடு என்றும் இரண்டு ஓடு கொடுத்துப் பிரித்தார், ஆய்தம் தனித்து வாராமையாலும், மொழி முதல் கடை இடங்களில் வாராமை யாலும், மெய்யெழுத்துடன் கூடி வாராமையாலும், அஃது உயிரெழுத்து அன்று என்றும் ; உயிர் ஏறுதற்கு இடம் தாராமை யாலும் மெய்போல மொழிமுதல் ஈறுகளில் வாராமையாலும் மெய்யெழுத்து அன்று என்றும்; உயிர் எனவும் மெய்யெனவும் ஆகாதவொரு தனிநிலை யெழுத்து அஃது என்பது அறி வித்தற்கும் ; குற்றியலிகரம் முதலிய மூன்றும் வரிவடிவால் இகரம் முதலியவற்றொடு வேற்றுமை இல்லா தவை எனினம் ஒலியளவால் வேறுபாடுடையன என்று அறிவித்தற்கும் என்க. இனிக் குற்றியலிகர உகரங்கள் புள்ளி பெறும் என்பார் உளராயினும் இதனால் கொள்க. அசைக்கு உறுப்பு எனினும் அமையுமாக அசைக்கு உறுப்பாகும் என விரித்துக் கூறியமையால், இவற்றினும் மிகுத்தும் குறைத்தும் உறுப்பு எண்ணினாரும் உளரெனக் கொள்க. என்னை? உயிரே மெய்யே உயிர்மெய் என்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐ ஔ மகரக் குறுக்கம் என்றாங் கைம்மூ வெழுத்தும் ஆம் அசைக் குறுப்பே - யா. வி. 2. என்றார் அமித சாகரனார். குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக் கெழுத்தே - யா. வி. 2. மேற். என்றார் சிறுகாக்கை பாடினியார். எழுத்தும் சொல்லும் கற்றாரன்றே யாப்பிலக்கணம் கற்பர்; அவ்வாறாகவும் அவர் அவ்வெழுத்துக்களை அறிதல் வேண்டுமோ? எனின், வேண்டும் என்க. என்னெனின், ஆண்டுக் கற்றவை சொல்லின் உறுப்பாகிப் பொருட்கிடனாகிய எழுத் துக்கள். அவ்வெழுத்துக்கள் அத்தன்மையொடு அசைக்கு உறுப்பாகி நிற்றலும், அலகு பெறுதலும், அலகு பெறாமையும் உடைமையின் அப்பயன் கருதி ஈண்டுக் கற்றல் வேண்டும். ஆயின், குறில் நெடில் ஒற்று என்னும் மூன்றும் அறியவே அசை அறியக் கூடுமாகப் பதின்மூன்றெழுத்தும் அறிய வேண்டுவதென்னை எனிற் கூறுதும்: உயிர் அறிந்தன்றிக் குறில் நெடில் அறிதற்கியலாது. ஆகலின், உயிரெழுத்தை அறிதல் வேண்டும். அன்றியும், அளபெடை அலகிடுமாறும், அளபெடைத் தொடை காணுமாறும் உயிரறிதல் வேண்டும் ; உயிர் அளபெடுக்குமாறும் அறிதல் வேண்டும்; வருக்கமோனை, உயிர் ஏறிய எதுகை ஆகியவை ஆராய்தற்கும் அவ்வாராய்ச்சி வேண்டும். வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவை, இன எதுகை ஆராய்வுக்கு இன்றியமையாது வேண்டும். இனச் செய்யுள் யாத்தற்கும் அது வேண்டும். ஒற்றெழுத்துப்போல அலகுபெறாது ஆய்தம் என்பதற்கும், ஒற்றளபெடை போல ஆய்தம் அளபெடுக்குமிடத்து அலகு பெறும் என்பதற்கும் ஒற்றும், ஆய்தமும் ஆராய்தல் வேண்டும். குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பவை சீரும் தளையும் சிதையும் இடங்களில் அலகுபெறாமையும். தளைபிழைபடா இடங்களில் அலகுபெறுதலும் உடைமையின் அவற்றை அறிதல் வேண்டும். ஐகாரம் நெடிலளவாய் நிற்றலும், குறிலளவாய் நிற்றலும் என்னும் இரு நிலைகளை யுடைமையின் அதனை ஆய்தலும் வேண்டும். ஆக இவ்வெழுத்தாராய்ச்சி இவண் வேண்டும் என்க. ஆய்தமும் ஒற்றும் அலகுபெறும் இடம் 2. ஆய்தமும் ஒற்றும் அளபெழ நிற்புழி வேறல கெய்தும் விதியின ஆகும். -யா. வி. 3 மேற். -யா. கா. 36 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் அலகுபெறாத ஆய்தமும் ஒற்றும் அலகுபெறும் இடம் இன்னதெனக் கூறிற்று. (ï - Ÿ.), (செய்யுட்கண் அலகுபெறாத) ஆய்த எழுத்து, ஒற்றெழுத்து ஆகிய இரண்டும் அளபெடுத்து நிற்கும் இடங்களில் அலகுபெறும் முறைமையுடையன என்றவாறு. அளபெழ நிற்புழி அலகெய்தும் என்றமையால் அள பெழாக் கால் அலகு எய்தாது என்பது பெற்றாம். என்னை? தனிநிலை ஒற்றிவை, தாமல கிலவே, அளபெடை அல்லாக் காலை யான -யா. வி. 3. என்றார் ஆகலின். விதியாவது முறைமை; முறைமையாவது சான்றோர் ஆய்ந்து ஏற்றுக் கொண்ட முறைமை. இவண் அலகு என்றது நேர் என்னும் ஓர் அசை அலகாம். (எ - டு) (குறள் வெண்பா) எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃகுவார்க் கில்லை வீடு -யா. வி. 3 மேற். -யா. கா. 36 மேற். இதனுள் ஆய்தம் அளபெழுந்து ஓரலகு பெற்றவாறு கண்டு கொள்க. (இன்னிசை வெண்பா) கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ மின்ன் நுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு -தொல். உவம. 3 பேரா. மேற். -யா. வி. 3 மேற். -யா. கா. 36 மேற். இதனுள் ஒற்று அளபெழுந்து ஓரலகு பெற்றவாறு கண்டு கொள்க. இவ்வாறு அலகு கொள்ளாக்கால், வெண்பாவின் ஈற்றில் அன்றி அசைச்சீர் வருதல் கூடாது என்னும் விதியோடு முரணி வழுவாம் என்க. அலகெய்தும் என்றாலே அமையுமாக வேறு அலகு எய்தும் என்ன வேண்டியது? என்னை எனின், நிற்கும் எழுத் தொடும் இணைந்து அசையாமோ எனின், அற்றன்று. அதனின் வேறாக அலகு எய்தும் என்பதை விளக்கி ஐயமறுத்தற்கு வேறல கெய்தும் என்றார் என்க. அன்றி, இவை அளபெழுங்கால் நேரசையாய் அல்லாமல் நிரையசையாய் அலகிடப் பெறாவோ எனின் பெறா என்பது அறிவித்தற்கும் என்க. என்னை? இருவகை மருங்கினும் மெய்யள பெழினே நிரைநேர் நேர்நேர் ஆகுதல் அன்றி நிரை நிரை நேர்நிரை ஆகுதல் இலவே -யா. கா. 36 மேற். என்றார் ஆகலின். மேற்காட்டிய எடுத்துக்காட்டுக்களை நேர் நிரை என அலகூட்டின் விளமுன் நிரையாகி வெண்டளை பிழைபடுதல் காண்க. வேறலகெய்தும் என்று அமையாரால் விதியின ஆகும் என்றது பயனில் உரையாம் எனின், அற்றன்று ; ஈரொற்றுட னிலையாய் நிற்பன இவைபோல அலகு பெறுமோ? என்பார் உளராயின், பெறாது என்பது அறிவித்தற்கு இது வேண்டும் என்க. இவை, ஓரெழுத்து அளபெடுத்தலால் அதற்கு அடையாள மாக ஈரெழுத்தாய் அமைந்தவை என்பதையும், அவை இருவேறு ஒற்று எழுத்துக்கள் கூடி உடனிற்பவை என்பதையும் கருதி, இவற்றுள் வேற்றுமை அறிக. (குறள் வெண்பா) துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக். 42. இதனுள் ஈரொற்றுடனிலை அலகுபெறாமை காண்க. அலகு பெறின் மூவசைச் சீரும் நாலசைச் சீரும் ஆகி வெண்டளை பிழை படுதல் அறிக. இனி, இதனால் அளபெழா ஆய்தம், ஒற்றெழுத்தின் பயத்தவாய் நிற்பதொடு இடைவிலக்கி அலகிடப் பெறுவதும் கொள்க. (குறள் வெண்பா) அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு. - திருக். 943. இதனுள் அஃதுடம்பு என்பதிலுள்ள ஆயுத எழுத்தை விலக்கி அலகிடாக்கால், மாமுன்நேராகி நேரொன்றாசிரியத் தளையாதல் அறிக. ஆனால், ஆய்தத்தை விலக்கி அலகிட அதுடம்பு என்றமைந்து, மாமுன் நிரையென இயற்சீர் வெண்டளையாகித் தளைபிழைபடாமை காண்க. (குறள் வெண்பா) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி -திருக்.226. என்பதிலும் ஆய்தம் தள்ளுண்டு அலகுபெறுதல் அறிக. ஆய்தம் தள்ளுண்டு அலகுபெற்றாற் போல மகரக் குறுக்கம் தள்ளுண்ணும் இடமும் உண்டு போலும். அதனால் அன்றே, கொங்கைக்கும் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கும் என்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை என்னத் தரியார் மலைவாணர் தாம் -களவியற்காரிகை மேற். 42. என்னும் வெண்பா கிளிவித் தெளிவுடையாரால் யாக்கப் பெற்றது. இதில் தேசம் என்பதிலுள்ள மகர ஒற்றினை விலக்கி அலகிடாக்கால் தேமாங்கனிச் சீராகி ஒன்றாத வஞ்சித்தளை என்னப் பெற்றுச் செப்பலோசை பிழைபடுதல் கண்டறிக. இவ்விலக்கணத்தைத், தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான - யா. வி. 3. என்று கூறினார். அமிதசாகரனார். இகர உகரங்களுக்குச் சிறப்பு விதி 3. இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் 1நிலையின ஆகும். -யா. வி. 4, 94. மேற். -யா. கா. 36. மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின், சீரும் தளையும் சிதைய நிற்குங்கால் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒற்றெழுத்தின் தன்மையவாய் நின்று அலகுபெறா என்பது கூறிற்று. (இ - ள்.) இகரம் உகரம் என்னும் இரண்டு குறுக்கங்களும் செய்யுளில் சீரும் தளையும் சிதைய நிற்கும் காலையில் அலகு பெறாத ஒற்றெழுத்துப் போலவே நிற்கும் தன்மையுடையன வாகும் என்றவாறு. தளை தப நிற்புழி ஒற்றாம் நிலையின எனவே, தளை தபா இடங்களில் குற்றெழுத்தளவாய் அலகுபெறும் எனக் கொள்க. குற்றியலுகரத்தின் வழியாகப் பிறப்பது குற்றியலிகரம் எனினும், அடங்கன் முறையின் முன்மை கருதி இகரத்தை முன் வைத்தார் ; அசைக்கு உறுப்புகள் எண்ணிய இடத்தும் (நூற்பா. 1) இவ்வாறே கூறியமை அறிக. (குறள் வெண்பா) குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் -திருக். 66. இக்குறள் வெண்பாவினுள் குழலினி தியாழினி என்பதிலுள்ள குற்றியலிகரத்தை விலக்கி அலகிடாக்கால் நிரையொன்றாசிரியத் தளையாய் வெண்பா யாப்புப் பிழைபடுவதையும், குற்றிய லிகரத்தை விலக்கி அலகிடுங்கால் இயற்சீர் வெண்டளையாய் வெண்பா யாப்புப் பிழைபடாமையையும் காண்க. (குறள் வெண்பா) வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். - திருக். 291. இக்குறள் வெண்பாவினுள் எனப்படுவ தியாதெனின் என்பதிலுள்ள குற்றியலிகரத்தை விலக்கி அலகிடாக்கால் கலித்தளையாய் வெண்பா யாப்புப் பிழைபடுவதையும், குற்றியலிகரத்தை விலக்கி அலகிடுங்கால் வெண்சீர் வெண்டளையாய் வெண்பா யாப்புப் பிழை படாமையையும் காண்க. இஃது இகரத்திற்குக் கூறியது ; உகரத்திற்கு வருமாறு ; (குறளடி வஞ்சிப்பா) கொன்றுகோடுநீடு குருதிபாயவும் சென்றுகோடுநீடு செழுமலைபொருவன வென்றுகோடுநீடு விறல்வேழம் என்றுமூடுநீடு பிடியுளபோலும் அதனால், இண்டிடை இரவிவண் நெறிவரின் வண்டுண் கோதை உயிர்வா ழலளே. -தொல். செய். 46 பேரா. -யா. வி. 4 மேற். -யா. கா. 36 மேற். இக்குறளடி வஞ்சிப்பாவினுள் குற்றியலுகரம் பல வந்து ஆறசைச் சீரும் ஆயின. நாலசைப் பொதுச்சீர் வருதல் அத்துணைச் சிறப்பின்று என்பதும், அவ்வாறு வரினும் வஞ்சிப்பாவின் கண்ணேயாம் என்பதும், அதுவும் கண்ணுற்று நில்லா என்பதும் இலக்கணம் ஆகலின், ஆறசைச் சீர் வருதல் வழுவாம் என்க. ஆயின், குற்றிய லுகரங்களைக் கெடுத்து அலகிடின் மூவசைச் சீராகித் தளை பிழை படாவாம். தளை தப நிற்புழி ஒற்றாம் நிலைமைய என்றார் ; செய்யுட்கண் ஒற்றெழுத்து அலகுபெறாமை, விளங்கக் கிடக்கும் மரபுநிலை ஆகலின், அதனைக் காட்டி அந்நிலைமைய என்றார் என்க. ஒற்று அலகுபெறாமை, குறில் தனித்தும் குறில் ஒற்றடுத்தும், நெடில் தனித்தும் நெடில் ஒற்றடுத்தும் வரின் நேரசை அல்லது தனியசை என்பதனாலும், குறில் இணைந்தும் குறில் இணைந்து ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வரின் நிரையசை அல்லது இணையசை என்பதனாலும் அறிக. இனித், தளை தபா இடங்களில் குற்றியலிகர குற்றிய லுகரங்கள் அலகு பெறுமாறு கூறுதும் : (குறள் வெண்பா) வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை இல -திருக். 4 இக்குறள் வெண்பாவில் சேர்ந்தார்க் கியாண்டும் என்பது தளை கெடா நிலையில் நிற்றலால் குற்றியலிகரம் அலகுபெற்றது. (குறள் வெண்பா) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று -திருக். 82. இக்குறள் வெண்பாவில் விருந்து என்பதிலுள்ள குற்றியலுகரம் தளைகெடா நிலையால் அலகுபெற்று வந்தது. (நேரிசை வெண்பா) வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால் முந்தியாய் பெய்த வளைகழலும்-முந்தியாங் கோளானே கண்டனங் கோல்குறியாய் இன்னுமோர் நாளானே நாம்புணரு மாறு. - யா. வி. 4 மேற். - யா. கா. 36 மேற். இந்நேரிசை வெண்பாவில் வந்துநீ எனக் குற்றியலுகரமும் முந்தியாய், முந்தியாம் என்னும் இடங்களில் குற்றியலிகரமும் வந்து சீரும் தளையும் செவ்விதின் நிற்றலால் அலகுபெற்றமை காண்க. இவ்விலக்கணத்தை ஆசிரியர் அமிதசாகரனார், தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பிலவே - யா. வி. 4. என்று கூறினார் என்க. உயிரளபெடைக்குச் சிறப்பு விதி 4. உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே. -யா. வி. 4 மேற். -யா. கா. 36 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின் சீரும் தளையும் சிதைய நிற்குமிடங்களில் உயிரளபெடை அலகுபெறாது என்பது கூறிற்று. (இ - ள்.) உயிரளபெடைகள் ஏழும் மேலே உரைத்தவாறு தளைபிழைபட வருமிடங்களில், அலகுபெறாவாய் நெடில் அளவாகவே அலகுபெறும் என்றவாறு. அலகுபெறாமை அளபெடை ஒன்றுமே அன்றி, நெடில் அன்று என்க. அவ்வியல் வைத்தலாவது அதிகாரம் வந்த முறையில் ஒற்றெழுத்துப்போல அலகுபெறாமை வைத்தல். வருமெனின் எனவே வாராக்கால் - அதாவது தளைதப வாராக்கால் - அள பெடை அலகுபெறும் என்க. அலகுபெறாமை: (நேரிசை வெண்பா) இடைநுடங்க ஈர்ங்கோதை பின்றாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து-கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு. - யா. வி. 4 மேற். - யா. கா. 36 மேற் இந்நேரிசை வெண்பாவினுள் உப்போஒ என்னும் இடத்து அளபெடை அலகிடப் பெறின் கலித்தளையாமாறும், வெண்பா யாப்புக் கெடுமாறும் காண்க. அவ்வாறு அலகிடாக்கால் சீரும் தளையும் சிதையாது அவ்வாறு செவ்விதின் இயலுதல் அறிக. (நேரிசை வெண்பா) பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை ; பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னந் தோன்றிலவால்-நெல்லுக்கு நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் வெம்முலைக்கும் மாறோமால் அன்றளந்த மண். - யா. வி. 4 மேற். - யா. கா. 36 மேற். இந்நேரிசை வெண்பாவினுள் நூறோஒநூ றென்னும் சீரிலமைந்துள்ள அளபெடை அலகுபெறுங்கால் ஒன்றாத வஞ்சித்தளையாய்ச் செப்பலோசை கெடுமாறும், அலகு பெறாக்கால் வெண்டளை பிழையாது செப்பலோசை அமைந்து கிடக்குமாறும் காண்க. அலகுபெறுதல்: *(குறள் வெண்பா) வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். - திருக். 38. இக்குறள் வெண்பாவினுள் படாஅமை என்னும் சீர்க்கண் உள்ள அளபெடையை விலக்கி அலகிடின் வெண்டளை பிழைக்கு மாறும், அளபெடையை விலக்காது அலகிடின் வெண்டளை பிழையாவாறும் காண்க. (குறள் வெண்பா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. - திருக். 12. இக்குறள் வெண்பாவினுள் தூஉம் என்னும் சீர்க்கண் அமைந்துள்ள அளபெடையை விலக்கி அலகிடின் அசைச்சீராகி வெண்பாப் பிழைபடுதல் காண்க. அவ்வாறு விலக்காது அலகிடின் வெண்டளை பிழையாது அமைந்து நிற்றல் அறிக. உயிரள பேழும் அவ்விய லாமே என்றாலும் கருதிய பொருள் தருமாக, உரைத்த முறையான் வருமெனின் என விரிக்க வேண்டியது என் எனின், மூன்று மாத்திரையினும் மிக்கு அளபெடை வரினும் தளைசீர் வண்ணம் பிழையாமல் அலகு பெறும் என்பதும், முதல்நிலை அளபெடை நேர் நேர் எனவும், இறுதிநிலை அளபெடை நிரைநேர் எனவும் அலகிடப் பெறும் என்பதும் அறிவித்தற்கு என்க. என்னை? தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே -யா. வி. 4 மேற். -யா. கா. 37 மேற். என்றார் ஆகலின். (குறள் வெண்பா) உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅ அய் வாழிய நெஞ்சு. -திருக். 1200 இக்குறள் வெண்பாவில் செறாஅஅய் என்று அளபெடை நான்கு மாத்திரை பெற்றுக் கருவிளச்சீராக அமைந்து இயற்சீர் வெண்டளையாய தறிக. இவ்வாறே (இன்னிசை வெண்பா) தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல் பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல் மாஅ மிசையான்கொல் நன்னன் நறுநுதலார் மாஅமை எல்லாம் பசப்பு - மலைபடு. இறுதிவெண்பா. - யா. வி. 5 மேற். என்னும் இவ்வின்னிசை வெண்பாவில் அளபெடை தளைசீர் வண்ணம் கெடாவாறு அலகு பெற்றமை அறிக. எழுத்து முடிந்தது. 2. அசை அசைகளின் பெயரும் தொகையும் 5. தனியசை என்றா இணையசை என்றா இரண்டென மொழிமனார் இயல்புணர்ந் தோரே. -யா. வி. 5 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின் அசைகளின் பெயரும் தொகையும் கூறிற்று. (இ - ள்.) யாப்பியல் உணர்ந்த புலவர், அசைகள் தனியசை என்றும், இணையசை என்றும் இரண்டாம் என்று கூறுவர் என்றவாறு. தனியசை எனினும் நேரசை எனினும் ஒக்கும். இணையசை எனினும் நிரையசை எனினும் ஒக்கும். நேரசை, நிரையசை என வழங்காது தனியசை, இணையசை என்று கூறவேண்டிய தென்னை? எனின், ஒருசார் ஆசிரியர்குறி அஃதெனவும், அக்குறி தக்கதெனல் தங்கருத்தெனவும் அறிவித்தற்கு என்க. இனி, நேரசை நிரையசை என்னின் அவற்றின் இலக்கணமும் வகுத்துரைக்க வேண்டுமன்றே; அவ்வாறு உரைக்காமல் பெயர் கூறுமாற்றானே அவற்றின் இலக்கணமும் பெற வைத்தற்கு இவ்வாறு கூறினார், தொகுத்துக் கூறுதல் இவர்க்கியல்பு ஆகலான் என்க. என்னை? (நேரிசை வெண்பா) தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்பகுத்துப் பன்னினார்-நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து -யா. வி. 1 மேற். என்றார் ஆகலின். என்னோ இலக்கணம்? என்னின், தனியசை என்பது தனியெழுத்தசை என்க. அஃதாவது குறிலும், நெடிலும், குறிலொற்றும், நெடிலொற்றும் என்னும் நான்குமாம். ஒற்றுக்கு அலகின்மையால் தனியெழுத்தசை ஆயிற்றென்க. என்னை? நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற் றடுத்தும், நடைபெறும் நேரசை நால்வகை யானே - யா. வி. 6. இனி, இணையசையாவது இரண்டெழுத்தசை. அவை குறிலிணையும், குறில்நெடில் இணையும், குறிலிணை ஒற்றும், குறில் நெடில் ஒற்றும் என்னும் நான்குமாம். என்னை? குறிலிணை குறில் நெடில் தனித்துமொற் றடுத்தும் நெறிமையின் நான்காய் வருநிரை யசையே - யா. வி. 8. என்றார் ஆகலின். தனி, ஒன்று என்னும் பொருள் தருமோ என்னின் தனிமையும் ஆகும் எனவும், தனிமரந் தோப்பாகாது எனவும் இருவகை வழக்கினும் தனி ஒன்று என்னும் பொருட்டாக வருதல் அறிக. அவ்வாறே, இணையடி நீழலே எனவும், இணை இணையாக எனவும் இருவகை வழக்கினும் இணை இரண்டு என்னும் பொருட்டாக வருதல் காண்க. தனியசை இணையசை என்னும் குறியீடு புதுவதன்று என்பாராய் மொழிமனார் இயல்புணர்ந்தோரே என்றார். மொழிமனார் என்பது, என்மனார் என்பது போன்றதொரு முற்றுச் சொல் என்க. அதன் இலக்கணத்தைச் சேனாவரையர் (தொல். சொல்.1) சீருரையால் அறிக. (எ - டு) தனியசை — ஆழி வெள்வேல். ஆ — தனிநெடில் தனியசை. ழி — தனிக்குறில் தனியசை. வெள் — குறில் ஒற்றடுத்த தனியசை. வேல் — நெடில் ஒற்றடுத்த தனியசை. இணையசை — வெறி சுறா நிறம் விளாம். வெறி — குறிலிணைந்த இணையசை. சுறா — குறில்நெடில் இணைந்த இணையசை. நிறம் — குறிலிணை ஒற்று இணைந்த இணையசை விளாம் — குறில்நெடில் ஒற்று இணைந்த இணையசை. தனியசைக்குக் கோழி வேந்தன் என்றும், இணையசைக்குக் கழி கனா கடல் கடாம் என்றும் பிறவாறும் வாய்பாடு கூறினாரும் உளர் என்க. இயல்புணர்ந்தோரே என்னும் விதப்பினால் தனியசை, இணையசை தொடர்பான மரபு நிலைகளைப் போற்றிக் கொள்ளுமாறு வைத்தார். தனிக்குறில் தனியசை மொழிமுதற்கண் நிற்குமோ எனின் குறிப்பு, ஏவல், தற்சுட்டு ஆகிய பொருள்களில் நிற்கப் பெறும். பிறவாறு நில்லா என்க. என்னை? குறிப்பே ஏவல் தற்சுட் டல்வழித் தனிக்குறில் மொழிமுதல் தனியசை இலவே - யா. வி. 7. என்றார் ஆகலின். (எ - டு) (நேரிசை வெண்பா) உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்*துடையான்-கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அ ஆ இழந்தான்என் றெண்ணப் படும். -நாலடி. 9. இதனுள், அஆ எனக் குறிப்பின்கண் தனிக்குறில் சீர்முதல் தனியசை யாயிற்று. (நேரிசை வெண்பா) வெறிகமழ் தண்புறவின் வீங்கி உகளும் மறிமுலை உண்ணாமை வேண்டிப்-பறிமுன்கை அ உ அறியா அறிவில் இடைமகனே நொஅலையல் நின்னாட்டை நீ -யா. வி. 7, 37, 95 மேற். -யா. கா. 87 மேற். இதனுள் நொ என ஏவற்கண்ணும், அ, உ, எனச் சுட்டின் கண்ணும் சீர் முதற்கண் தனிக்குறில் நின்று தனியசை யாயிற்று: இனிக் குறிப்பு ஏவல் தற்சுட்டு ஆகியவற்றில் வந்த குறில், விட்டிசைத்து நிற்பின் சீரின் இடையும் இறுதியும் தனியசையாம் எனவும் கொள்க. அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே -யா. வி. 7 மேற். இதனுள் விட்டிசைத்தலால் சீரின் மூவிடத்தும் குறில் தனியசையாகி நின்றமை அறிக. குறிலிணை, குறில்நெடில் இணை, குறிலிணை ஒற்று, குறில் நெடில் இணை ஒற்று என்பவை ஈரெழுத்திணைதல் கொண்டு இணையசை எனப்படுதல் போல, நான்கு மாத்திரை அளவாக நிற்கும். செறா அ அய் தூ உ உ பா அ அய் போன்றவற்றின் அளபெடைக் குறிலிணைகளையும் இணையசை என்று கொள்க. நீட்ட அளவு காட்டற்கு, விட்டிசைப்பு எழுத்துக் குறி காட்டிய தன்றி, ஓசைக்கண் விட்டிசைப்பு இல்லை ஆகலின் என்க. என்றா என வந்த இரண்டும், ஆ ஈறாகிய என்று என்னும் எண்ணிடைச் சொற்கள். என்னை? உம்மை தொக்க எனாஎன் கிளவியும் ஆ ஈறாகிய என்றென் கிளவியும் ஆ யிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன - தொல். இடை. 41. என்றார் தொல்காப்பியனார் ஆகலின். (எ - டு.) (நிலைமண்டில ஆசிரியப்பா) நீடு வாழ்க நீடு வாழ்க நாடு வாழ நற்பா லாற்றி நீடு வாழ்க நேயங் கூர்ந்தே. (இ.கு) இது தனியசை நான்கும் வந்த பாட்டு. (நேரிசை ஆசிரியப்பா) தமிழ்மொழி தனிமொழி தகவுறு முயர்மொழி கனியினுஞ் சுவைமிகு கவின்மொழி நனியென துயிரென நவில்மொழி நயமே. (இ.கு.) இது குறிலிணை, குறிலிணை ஒற்று என்னும் இரண்டு இணை யசைகளாலுமே வந்த பாட்டு. (நேரிசை ஆசிரியப்பா) அளவளா வறிகிலான் ; அமைகிலான் ; உணர்கிலான் ; வளவளா வகையினான் ; கரையிலாக் குளவளாப் புனலெனாக் கழிகுவன் விரைந்தே (இ. கு.) இது நான்கு இணையசைகளாலும் வந்த பாட்டு. நயமே, விரைந்தே என்பனவற்றுள் தனியசையும் வந்துளவே எனின் அகவற் பாவின் ஈறு அவ்வாறு முடிதல் வேண்டும் என்னும் மரபுநிலை உண்மையான் அவ்வாறே வரும் என்க. அகவற்பாவின் ஈற்றை, அப் பாவின் இலக்கணம் கூறுகின்றுழிக் கூறுவாம். அசையின் வகைகளை ஆசிரியர் அமிதசாகரனார். நேரசை என்றா நிரையசை என்றா ஆயிரண் டாகி அடங்குமன் அசையே -யா. வி. 5. என்றார். இணையசை யாகாதவை 6. நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை யாதல் இலவென மொழிப. -யா. வி. 8 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின் இணையசை யாகாதவை இவை என்பது கூறிற்று. (இ - ள்.) நெடிலுடன் நெடில் கூடிய இரண்டு எழுத்துக்களும், நெடிலுடன் குறில் கூடிய இரண்டு எழுத்துக்களும் இணை யசையாவது இல்லை என்று யாப்பியல் உணர்ந்தோர் கூறுவர் என்றவாறு. அலகூட்டுதற்கு, நெடிலுடன் நெடில் இணையுங் கொல், நெடிலொடு குறில் இணையுங் கொல், அவை இரண்டெழுத்துக்கள் ஆகலின் இணையசை எனப் பெயர் பெறுங் கொல் என்று ஐயுறுவார் உளராயின் அவர் ஐயம் அறுத்தற்குக் கூறினார். குறிலொடு நெடில் இணையுமே அன்றி நெடிலொடு நெடிலோ, நெடிலொடு குறிலோ இணையசை யாகா என்க. ஆயின் இவை எவ்வாறு அலகூட்டப் பெறுமோ எனின் நெடிலொடு நெடிலும், நெடிலொடு குறிலும் தனிக்கப் பெற்றுத் தனியசை என்றே கொள்ளப்பெறும். முன்னே இணையசை இலக்கணம் கூறியது (5) உடன் பாட்டுவிதி. இணையசை ஆகாதவை இவை என இவண் கூறியது எதிர்மறை விதி. இவ்வாறே மேல் வருவனவும் கொள்க. (குறள் வெண்பா) ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். -திருக். 370. இக்குறள் வெண்பாவில் ஆரா என்றும், பேரா என்றும் வரும் நெடிலிணைகளை இணையசையென அலகிடின் அசைச் சீராகித் தளைசீர் பிழைபடுதல் காண்க. (குறள் வெண்பா) ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. -திருக். 1312. இக்குறள் வெண்பாவில் வரும் ஊடி என்னுஞ் சீரை நெடில் குறில் இணைந்த இணையசையென அலகிடின் அசைச் சீராக அமைந்து தளைசீர் பிழைபடுதல் காண்க. இது, விதி எனக் கூறிய அளவே அமையுமே, அஃதல்லாதது விதியன்று எனக் கொள்வரே, இது வேண்டாத கூறுதல் எனின், நுண்ணுணர்வினார்க்கு அஃதொக்கும் ; ஏனையோர்க்கும் தெளிவாதல் கருதி வெளிப்பட மறுத்துரைத்து விளக்கினார், மயங்க வைத்தல் நூற்குற்றம் ஆகலானும், விளங்க வைத்தல் நூல் அழகு ஆகலானும் என்க. இவ்வாறு இவர்க்கு வழி நூல் செய்தார் காட்டாமையால், குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும் நெறிமையின் நான்காய் வருநிரை யசையே என்னும் நூற்பாவின்கண் (8) நெறிமையின் என்ற விதப்பினால் நெடில் இரண்டு இணைந்தும், நெடில் குறில் இணைந்தும் நிரையசை ஆகா. என்னை? நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை ஆதல் இலவென மொழிப என்றார் காக்கைபாடினியார் என்று (யாப்பருங்கல விருத்தியுடையார்) காட்டினார் என்க. ஐகாரத்திற்குச் சிறப்பு விதி 7. ஐயென் நெடுஞ்சினை ஆதி ஒழித்தல கெய்தும் இணையசை என்றிசி னோரே. -யா. வி. 9 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஐகாரம் சீரின் இடையும் கடையும் வரின் இணையசையாம் என்பது கூறிற்று. (இ - ள்) ஐகாரம் என்னும் நெட்டெழுத்து, சீரின் முதலிடம் அன்றி மற்றை இடை, கடை இடங்களில் வருமாயின் பின்னும் முன்னும் உள்ள எழுத்துக்களுடன் இணைந்து இணை யசையாகும் என்று அறிந்தோர் கூறுவர் என்றவாறு. இவ்வாறு கூறவே சீர் முதல் நிற்கும் ஐகாரம் தனியசையாம் என்றும், இடையும் கடையும் வரும் ஐகாரம் தன்னோடோ, பிற எழுத்துக்களோடோ இணைந்து வருங்கால் இணையசையாம் என்றும் கூறினார் என்க. இது சொல்லவேண்டிய தென்னையோ? எனின், ஐகாரம் நெடிலாகலின் ஐகாரம் இணைந்து வரும் இடங்களில் நெடிலொடு நெடிலாகவோ, ஐகாரத்தின் பின் குறில் வரும் இடங்களில் நெடிலொடு குறிலாகவோ அலகிட்டுத் தனியசை என்ன வேண்டுமோ என்னின் அது வேண்டா ; அஃதிணையசையே என்று அறுதியிட்டுரைத்து ஐயம் அறுத்தற்கு இச் சிறப்பு விதி யாத்தார் என்க. ஐகாரம் நெட்டெழுத்தாய் இருக்க இவ்விதிவிலக்கப் பெறுமாறு என்னை? எனின், ஐகாரம் நெட்டெழுத்தே எனினும் சீரின் இடையும் கடையும் வருங்கால் தன் நெடில் அளவில் குறைவுற்றுக் குறிலளவாகி ஐகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும். என்னை? (குறள் வெண்பா) குறுமை எழுத்தின் இயல்பேஐ காரம் நெடுமையின் நீங்கியக் கால் -யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற். என்றார் ஆகலின். ஆயின் ஐகாரம் குறிலாமோ? எனின், ஆகாது ; அளவால் குறுகி நின்றதன்றிக் குறில் ஆமாறு இல்லை. அதனான் அன்றே குறில் என்னாது, குறுக்கம் என்றார் என்க. குறுகிய ஒலியளவைத் தனக்கியல்பாக உடையது குறில் ; குறித்த இடங்களில் தன் அளவில் குறுகி ஒலிப்பது குறுக்கம் ; இவை வேறுபாடு என்க. இனி ஒருசார் ஆசிரியர், ஐகாரம் தன்னை ஒலிக்கும் இடம் ஒன்றுமே அன்றிச் சொல்லோடு வருமிடத்து அதன் மூவிடங் களிலும் குறுகியே ஒலிக்கம் என்பர். இவர் இரண்டிடங்களைக் கொண்டார். இவ்வாறே, இடையும் கடையும் இணையும்ஐ யெழுத்தே -யா. வி. 9 மேற். என்றார் சிறுகாக்கை பாடினியார். (எ - டு.) (குறள் வெண்பா) அன்னையையான் நோவ தவமால் அணியிழாய் புன்னையையான் நோவன் புலந்து -யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற். இதனுள் அன்னையையான் புன்னையையான் என்னும் ஈரிடங்களிலும் சீர்நடுநின்ற ஐகாரங்கள் இணைந்து இணையசை யாகிக் கூவிளங்காய் என அலகுபெற்றமை அறிக. இவ்வாறு அலகிடாக்கால் நாலசைச் சீராகி வெண்பா யாப்புப் பிழைபடுதல் காண்க. (குறள் வெண்பா) கெண்டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள் பண்டையள் அல்லள் படி - யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற். இதனுள் கெண்டையை என்னும் இடத்துச் சீர்க் கடைக்கண் நின்ற ஐகாரங்கள் இணைந்து இணையசை ஆயதும், பண்டையள் என்பதில் சீரிடை நின்ற ஐகாரம் குறிலுடன் இணைந்து இணை யசை யாயதும் காண்க. இதனுள் ஐகாரங்களையும் குறிலையும் தனியசை எனக் கொண்டு காய்ச்சீராக அலகிடப் பெறினும் காய் முன் நேர் என்னும் வெண்டளை யாப்புறவு கெடா தன்றே என்பார் உளராயின், இது பொது விதி என்றறிக. இவ்விதி கூறாக்கால் அன்னையை யான் என்பது போன்றவை சீரும் தளையும் சிதைய வந்தனவாய்க் குற்றப்படுதல் கண்டு கொள்க. இனிச் சீர் முதற்கண் நிற்கும் ஐகாரம் நெடிலளவாகவே அலகுபெறுதல் வருமாறு: பையுள் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப் பறை வாவல்- - தொல். களவு. 23 நச். மேற். -யா. வி. 9 மேற். எனவும், (குறள் வெண்பா) ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். -திருக். 702. எனவும் சீர் முதல் ஐகாரம் தனியசையாக நின்று அலகு பெற்றமை அறிக. இவ்வாறு அலகுபெறுதற்கு எடுத்துக் காட்டும் தருவார் போன்றன்றே இவ்வாசிரியரும், ஐயென் நெடுஞ்சினை என்று ஓதினார் என்க. இவ்விலக்கணத்தைக், கடையும் இடையும் இணையும் ஐ இரட்டியும் -யா. வி. 9 மேற். என அவிநயனாரும், ஈறும் இடையும் இணைந்தும் இணையசை ஆகும் ஐ என்ப அறிந்திசி னோரே -யா. வி. 9 மேற். என அமிதசாகரனாரும் கூறினார். அசை முடிந்தது. 3. சீர் இயற்சீர் இன்னதென்பது 8. ஓரோ அகையினால் ஆகிய ஈரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர். -யா. வி. 11 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயற்சீர் இலக்கணம் இன்னதென்பது கூறிற்று. (இ - ள்) ஒரே கூறுபாட்டினால் அமைந்த ஈரசைகளால் ஆகிய சீர் இயற்சீர் என்று நுண்மாண் நுழைபுல மிக்க புலவர் கூறினர் என்றவாறு. அகை - கூறுபாடு. இதனைச் சிந்தாமணிக் கண்ணும் (2694) கலித்தொகைக் கண்ணும் (18) ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையான் அறிக. ஈரசைகளான் அமைந்த சீர் ஈரசைச்சீர் ; அதற்கு இயற்சீர் என்பது குறியீடு ; இயற்சீர் என்பது வெண்பா, ஆசிரியங்களுள் பெரிதும் இயன்று, சீருற நடந்து வரும் சீர் என்னுங் காரணக் குறி. இயற்சீர் ஆசிரியப் பாவிற்கு உரிமை பூண்டது ஆகலின் ஆசிரிய உரிச்சீர் எனவும் பெயர் பெறும். இதனை வரும் நூற்பாவிற் (9) கூறுவார். ஈர் என்பதைத் தாப்பிசைப் பொருள்கோளாய் இரண் டிடத்தும் கூட்டி இரண்டு ஒரே கூறுபாட்டால் ஆகிய இரண்டு அசைச்சீர் என்க. இரண்டு ஒரே கூறுபாட்டால் ஆகியது என்பது மா எனவும், விளம் எனவும் வாய்பாடு பெறும் இருகூறு ஈரசைச் சீர்களை. அவை: நேர்நேர், நிரைநேர்-தேமா, புளிமா-மாச்சீர் நிரைநிரை, நேர்நிரை-கருவிளம், கூவிளம்-விளச்சீர் இந்நான்கு சீர்களுமே இயற்சீர் எனவும், ஆசிரிய உரிச்சீர் எனவும் பெயர் பெறும். என்னை? ஈரசைகூடிய சீரியற் சீரவை ஈரிரன் டென்ப இயல்புணர்ந் தோரே -யா. வி. 11. என்றார் அமிதசாகரனார் ஆகலின். (நேரிசை ஆசிரியப்பா) நீல மேனி வாலிழை பாகத் தொருவன் இருதாள் நிழற்கிழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே -ஐங்குறு. கடவுள். இவ்வகவற் கண்ணும், (குறள் வெண்பா) இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. -திருக். 23. இக்குறள் வெண்பாவின் கண்ணும் ஈரசைச்சீர் நான்கும் அமைந்துள்ளமை அறிக. ஈரசைச் சீரியற்சீர் எனின் அமையும் ; ஓரோ அகையினால் ஆகிய என்று விரித்துக் கூறவேண்டியதென்னை? எனின், இவ் வீரசை நாற்சீர் ஒலி, எடுத்தல் படுத்தல் துள்ளல் தூங்கல் முதலிய வேறுபாடு மிக்கின்றி ஓர் ஒழுங்குபெற இயன்று செல்வது என்பது அறிவித்தற்கு என்க. இனி, இயற்சீரை முற்படக் கூறியது என்னை? எனின், அசை இன்னதென முன்னைக் கூறியவர், அவ்வசையால் ஆம் சீர் கூறுவாராய் அச்சீர் எண்ணுமுறையால் ஈரசை முதலாக எண்ணி இயற்சீர் கூறினார். அன்றியும் இயற்சீர் என்னும் அளவுகோல் கொண்டு அன்றே அதனினும் வேறுபட்டுச் செப்பியும் துள்ளியும் தூங்கியும் வரும் சீர்களை அறிதல் இயலும் ஆகலின் என்றுமாம். இயற்சீர்க்கு மேலுமொரு பெயர் 9. இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர். -யா. வி. 11 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே இயற்சீர் எனக் கண்டவை இப்பெயராலும் அழைக்கப்பெறும் என்பது கூறிற்று. (இ - ள்.) இயற்சீர் எனக் கூறிய ஈரசை நாற்சீர்களும், ஆசிரிய உரிச்சீர் என்றும் கூறப்பெறும் என்றவாறு. ஆசிரியப் பாவிற்கே மிக்குரிமை பூண்டு வருதலின் இக்குறி காரணங் கருதியது என்க. ஆசிரியமாவது யாது? ஆசிரியம் என்பது அகவற்பா ஆகும். என்னை? அகவல் என்பது ஆசிரியப் பாவே -(சங்கயாப்பு) யா. வி. 16 மேற். என்றார் ஆகலின். காய்ச்சீர் கனிச்சீர்களை முறையே வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர் எனக் குறியிட்டு வழங்கினர் ஆகலின், ஒருசார் ஆசிரியர் இயற்சீரை ஆசிரிய உரிச்சீர் எனக் கொண்டனர் என்க. எனினும், இயற்சீர் என்பதே பெருவழக்கினது எனக் கொள்க. யாப்பருங்கல விருத்தி யுடையாரும், ஈரசை கூடிய சீரியற்சீர் என்னும் நூற்பாவின்கண் கூடிய என்ற மிகையான் இயற்சீரை ஆசிரிய உரிச்சீர் என்றும் வழங்குவாரும் உளர். என்னை? இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் என்றார் காக்கைபாடினியார் என விதப்பினால் கொண்டார் ஆகலின். வெண்பா உரிச்சீரும் வஞ்சி உரிச்சீரும் 10. மூவசை யான்முடி வெய்திய எட்டனுள் அந்தத் தனியசை வெள்ளை ; அல்லன வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே. -யா. வி. 12 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின் வெண்பா உரிச்சீரும் வஞ்சி உரிச்சீரும் இவை என்பது கூறிற்று. (இ - ள்.) மூவசையான் முடிவன எட்டுச் சீர்களாம். அவற்றுள் தனியசை இறுதியாய நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீர்கள். அவை அல்லாத இணையசை இறுதியாய நான்கு சீர்களும் வஞ்சிப்பாவிற்கு உரிமை பூண்டு நடக்கும் வஞ்சி உரிச்சீர்கள் என்றவாறு. முறையானே ஈரசைச்சீர் இயம்பி மூவசைச்சீர் இயம்புவான் எடுத்துக் கொண்டார். மூவசையான் முடியும் எட்டுச் சீர்களுள் தனியைசையாய் முடிவன நான்கும் காய்ச்சீர்கள். அவை ; நேர்நேர்நேர் - தேமாங்காய் நிரைநேர்நேர் - புளிமாங்காய் நிரைநிரைநேர் - கருவிளங்காய் நேர்நிரைநேர் - கூவிளங்காய் என்பன. இணையசையாய் இறும் நான்கும் கனிச்சீர்கள். அவை; நேர்நேர்நிரை - தேமாங்கனி நிரைநேர்நிரை - புளிமாங்கனி நிரைநிரைநிரை - கருவிளங்கனி நேர்நிரைநிரை - கூவிளங்கனி என்பன. கலிப்பாவிற்குரிய சீர் இன்னவெனக் கூறாரோ? எனின் வெண்பா உரிச்சீராய காய்ச்சீரே கலிப்பாவிற்கும் உரியவாகலின் கற்போர்க்கு உணர்வு பெருக்கல் வேண்டித் தழுவிக்கொள்ள வைத்தார் என்க. (குறள் வெண்பா) மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து -திருக். 968. என்றும், (குறள் வெண்பா) உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் -திருக். 1079. என்றும், (நேரிசை வெண்பா) பொன்னார மார்பிற் புனைகழற்கால் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்-கென்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும் - யா. வி. 12 மேற். -யா. க. 9 மேற். என்றும் வரும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன. (குறளடி வஞ்சிப்பா) பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்றிரிதரு வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே -யா. வி. 15, 21, 90 மேற். -யா. கா. 9 மேற். இக்குறளடி வஞ்சிப்பாவினுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தன. (தரவு கொச்சகக் கலிப்பா) கொன்றாற்றும் கொடுஞ்செயலைக் கோட்புலிபோல் செய்கின்றான் நன்றாற்றும் நயத்துள்ளும் தவறுண்டாம் பண்பறிந்து சென்றாற்றும் செயலற்றால் என்றறநூல் கூறுகையில் கொன்றாற்றும் குணமுள்ளோன் கொள்வானோ நற்பேறே. -(இ. கு.) இத் தரவு கொச்சகக் கலியுள் வெண்பா வுரிச்சீர் நான்கும் வந்தன நேர் இறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வெண்பாவிற்கே உரிமை பூண்டு நிற்றலின் வெண்பா உரிச்சீர் என்பதும், நிரை இறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும் பான்மையும் வஞ்சிப் பாவிற்கே உரிமை நிற்றலின் வஞ்சி உரிச்சீர் என்பதும் காரணக் குறிகளாம். உரிச்சீர்ப் பெயரும் எண்ணும் இவ்வாறே பிறரும் கூறினார். என்னை? ஈரகை யாகிய மூவசைச் சீர்தான், நேரிறின் வெள்ளை ; நிரையிறின் வஞ்சி -யா. வி. 12 மேற். என்றார் சிறுகாக்கைபாடினியர். மூவசைச் சீர்உரிச் சீர்; இரு நான்கினுள், நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே -யா. வி. 12. என்றார் அமிதசாகரனார். இயற்சீரும் உரிச்சீரும் வரும் இடங்கள் 11. இயற்சீர் உரிச்சீர் எனவிரு சீரும் மயக்க முறைமையின் நால்வகைப் பாவும் இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும். -யா. வி. 15 மேற். இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயற்சீரும் உரிச்சீரும் வரும் பாக்கள் இவை எனவும், இனங்கள் இவை எனவும் கூறிற்று. (இ - ள்) இயற்சீர் உரிச்சீர் என்னும் இருவகைச் சீர்களும் நால்வகைப் பாக்களிலும், மூவகை இனங்களிலும், மயங்கி வரும் என்றவாறு. மயக்க முறையாவது மயங்கி வருமுறை ; மயக்கம் எனினும் கலத்தல் எனினும் விரவல் எனினும் ஒக்கும். மயக்க முறைமை சுட்டியதால் தனித்து வருதலும் கொள்க. இயற்சீரே வருதலும் உரிச்சீரே வருதலும் இருவகைச் சீர்களும் கலந்து வருதலும் என மூவகையும் கொள்க. நால்வகைப் பாக்கள் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. இனி மருட்பா என்பதும் உண்டன்றே; அதனைக் குறிக்காமை என்னை; அதனுள் வாராதோ? எனின் வரும்; மருட்பா என்பது வெண்பா முன்னாக அகவல் பின்னாக வரும் இயல்பிற்றாகலின் வெண்பாவும் அகவற்பாவும் கூறவே அவ்விரண்டன் கூட்டமாகிய மருட்பாவுக்கும் அஃது ஒக்கும் எனக் கூறார் ஆயினார் என்க. இனத்தின் மூன்று தாழிசை, துறை, விருத்தம் என்பன. இவற்றை நால்வகைப் பாக்களுடன் உறழப் பன்னீரினமாம். ஆக, எல்லாப் பாக்களிலும் இனங்களிலும் இவை வரப்பெறும் என்றார் என்க. இது பொது விதி. என்னை எனின், மேலே இவை இன்ன விடத்து வாரா எனச் சில சீர்களை விலக்கி உரைப்பார் ஆகலின். மயக்க முறையில் வருதலே பெருவரவிற்று என்று கூறு வாராய் இனிதின் இயலும் என்றார். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது விதியாகலின். இவ்வாறே, விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே -யா. வி. 15. என்றார் அமிதசாகரனாரும். (எ - டு.) (குறள் வெண்பா) உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். -திருக். 294. இக்குறள் வெண்பாவுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. (நேரிசை ஆசிரியப்பா) நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. -குறுந். 3. இந்நேரிசை ஆசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. (கலித் தாழிசை) அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே. -கலித். 11 இக்கலித் தாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. (குறளடி வஞ்சிப்பா) தாழ்பொழில் தடமாஞ்சினை வீழ்குயில் பெடைமெலிவினைக் கண்டெழுந் துளர்சிறகிற் சென்றணைந்து சேவலாற்றும் செழுநீர்க் கழனி யூரன் கேண்மை மகிழ்நறுங் கூந்தற் கலரா னாவே -யா. வி. 15 மேற். இக்குறளடி வஞ்சியுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. (குறள் வெண்பா) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். - திருக். 28. இக்குறள் வெண்பாவுள் இயற்சீர்களே வந்தன. (குறள் வெண்பா) யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. -திருத். 397. இக்குறள் வெண்பாவுள் உரிச்சீர்களே வந்தன. (நேரிசை ஆசிரியப்பா) ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே இளையள் என்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. -குறுந். 70. இந்நேரிசை ஆசிரியத்துள் இயற்சீர்களே வந்தன. உரிச் சீர்களாலேயே ஆசிரியம் வாராதென்க. அதுபோல் இயற் சீர்களாலேயே கலியும் வஞ்சியும் வாரா. (தரவு கொச்சகக் கலிப்பா) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே. -யா. வி. 15 மேற். -யா. கா. 11 மேற். இக்கலிப்பா, வெண்பா உரிச்சீரானே வந்தது. (குறளடி வஞ்சிப்பா) எல்லாரும் எந்தமக்கே நல்லறிவே உளவென்பர் நல்லார்கள் நனிதெரியின் கல்லாரும் கற்றாரும் சொல்லாலே வெளிப்படுவர் அதனால், மண்மிசை மாண்ட கற்பின் விண்ணொடு வீடு விளக்குமால் அதுவே -யா. வி. 15 மேற். இக்குறளடி வஞ்சிப்பா, வெண்பா உரிச்சீரானே வந்தது. பூந்தாமரைப் போதலமர - கா.பா. 10 மேற். என்னும் வஞ்சிப்பா வஞ்சியுரிச் சீரானே வந்தது. இனிப் பாவினம் வருமாறு: (வெண்டாழிசை) போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியனையான் தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார் தீதார் வினைகெடுப்பார் சிறந்து -யா. வி. 15, 66 மேற். இவ்வெண்டாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன் -யா. வி. 15, 67 மேற். -யா. கா. 27 மேற். இவ் வெண்டுறையுள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன (வெளி விருத்தம்) மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்- எந்தை குன்றம் ; காலை மணிக்குவளை காதலர்போல் கண்விழிக்கும்- எந்தை குன்றம் ; நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும்- எந்தை குன்றம் ; ஆலி மயிலகவ வந்தன்று வானமே- எந்தை குன்றம் ; -யா. வி. 68 மேற். இவ் வெளிவிருத்தத்துள் இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வந்தன. பிற பாவினங்களுள்ளும் இவ்வாறே கண்டு கொள்க. இயற்சீர் உரிச்சீர் வருமிடங்களுக்கு ஒரு சிறப்பு விதி 12. உரிச்சீர் விரவ லாயும் இயற்சீர் நடக்குந ஆசிரி யத்தொடு வெள்ளை ; அந்தந் தனியாய் இயற்சீர் கலியொடு வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே -யா. வி. 15 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே இயற் சீரும் உரிச்சீரும் மயக்க முறையின் நால்வகைப் பாவினுள்ளும் மூவகை இனத்தினுள்ளும் வருமென்றதற்கு விளக்கமும் விலக்கும் கூறிற்று. (இ - ள்.) ஆசிரியப்பாவும் வெண்பாவும் உரிச்சீர் கலந்து இயற்சீரால் நடப்பனவாம். கலிப்பாவுள்ளும் வஞ்சிப்பாவுள்ளும் தனியசையால் முடியும் இயற்சீர் மயங்கிவரப் பெறா என்றவாறு. ஆசிரியத்தொடு வெள்ளை உரிச்சீர் விரவலாயும் இயற் சீர் நடக்குந எனவும், கலியொடு வஞ்சி மருங்கின் இயற்சீர் அந்தம் தனியாய் மயங்குதல் இலவே எனவும் இயைக்க. அகவலும் வெள்ளையும் உரிச்சீர் விரவி இயற்சீரான் நடப்பதற்குச் சான்று மேலை நூற்பாவிற் காட்டினாம். (தரவு கொச்சகக் கலிப்பா) குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத் தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு, ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே -யா. வி. 22, 86 மேற். -யா. கா. 21, 32, 38. -இத் தரவு கொச்சகக் கலிப்பாவுள் நேரீற்று இயற்சீர் வாராமை காண்க. கலியொடு வஞ்சி என்னாது வஞ்சி மருங்கின் என்றார். அதனால் வஞ்சிப்பாவின் இறுதியில் நேரீற் றியற்சீர் வாராது எனக் கொள்க. என்னை? பிற நூன் முடிந்தது தானுடன் படுதல் என்பது தந்திர உத்தியாகலின். (குறளடி வஞ்சிப்பா) பானல்வாய்த் தேன்விரிந்தன ; கானல்வாய்க் கழிமணந்தன ; ஞாழலொடும் நறும்புன்னை ; தாழையொடு முருகுயிர்ப்ப வண்டல்வாய் நறுநெய்தல் கண்டலொடு கடலுடுத்துத் தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராஅய் இன்னதோர், கடிமண முன்றிலும் உடைத்தே படுமீன் பரதவர் பட்டினத் தானே -யா. வி. 26, 90 மேற். -இக்குறளடி வஞ்சியுள் நேரீற்றியற்சீர் வாராமை காண்க. (குறளடி வஞ்சிப்பா) தேந்தாட் டீங்கரும்பின் பூந்தாட் புனற்றாமரை வார்காற் செங்கழுநீர் -யா. வி. 15, 94 மேற். -இக்குறளடி வஞ்சியுள் நேரீற்றியற்சீர் அடி ஈற்றில் வாராமை காண்க. நேரீற்றியற்சீர் கலியுள்ளும், வஞ்சியுள்ளம் வாரா வென யாப்பருங்கல முடையார் கூறிற்றிலர் ஆகலின் நேரீற்றியற் சீர்ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும், வஞ்சிப்பாவின் இறுதியினும் வரப்பெறா என்பதை உரையிற் கோடலால் விருத்தியுடையார் கொண்டார். இணைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் ஆசிரியத்துள் வாராமை 13. இணைநடு வியலா வஞ்சி யுரிச்சீர் இணையுள ஆசிரி யத்தன ஆகா. -யா. வி. 16 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின், இணை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் ஆசிரியத்துள் வரப்பெறா என்பது கூறிற்று. (இ - ள்) நடுவே இணையசை அமைந்த வஞ்சியுரிச் சீர்களாகிய கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் இரண்டும் ஆசிரியப்பாவின்கண் வாரா என்றவாறு. இயலா என்பது இயலும் என்னும் பொருட்டது. செய்யா என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். நடு இணை இயலும் இணையுள வஞ்சி யுரிச்சீர் ஆசிரியத்தன ஆகா என இயைக்க. (இணையுள - இரண்டாயுளதாகிய. ஆசிரியத்தன - ஆசிரியப் பாவிற்குரியன.) இணை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வாரா எனவே, தனி நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருமென்பது பெற்றாம். தனி நடுவாகிய வஞ்சியுரிச்சீர் தேமாங்கனி புளிமாங்கனி என்பன. நடு விணை என்னாது இணை நடு எனக் கூறியமையால் அகவற் பாவிற்கு வாரா; இணை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் கலிப்பாவின் கண்ணும் வாராவெனக் கொள்க. யாப்பருங்கல விருத்தியுடையாரும், இவர் (காக்கை பாடினியார்) கலிப்பாவினுள்ளும் உடன்பட்டார் என்றார். என்னை? இணைநடு இயலா வஞ்சி யுரிச்சீர் இணையுள ஆசிரி யத்தன ஆகா என்றார் காக்கை பாடினியார். நடுவு நேரியல் வஞ்சி உரிச்சீர் உரிமை யுடைய ஆசிரியத் துள்ளே என்றார் சிறுகாக்கை பாடினியார். நேர்நடு வியலா வஞ்சி யுரிச்சீர் ஆசிரி யத்தியல் உண்மையும் உடைய என்றார் அவிநயனார். நிரைநடு வியலா வஞ்சி உரிச்சீர் வருதல் வேண்டும் ஆசிரிய மருங்கின் என்றார் மயேச்சுரர். இவர்களும் இலேசு, எச்சவும்மை, விதப்பாற் கலிப்பாவினுள்ளும் உடம்பட்டார் என்க என்றாராகலின். (யா. வி. 16) (எ - டு.) (நேரிசை ஆசிரியப்பா) பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப் பனிக்கழி துழவும் பானாட் டனித்தோர் தேர்வந்து பெயர்ந்த தென்ப அதற்கொண் டோரும் அலைக்கும் அன்னை பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் இளையரும் மடவரும் உளரே அலையாத் தாயரொடு நற்பா லோரே -குறுந். 246. இக்குறுந் தொகையுள் களிற்றுச் செவி எனவும் பின்னு விடு எனவும் தனி நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (புளிமாங்கனி, தேமாங் கனி) இரண்டும் வந்தன. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) புனற்படப்பைப் பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை கழுநீரும் குவளையுமங் கரும்பினொடு காய்நெல்லும் பழுநீருள் ஒடித்தேறும் பழனஞ்சூழ் ஊர ! கேள் இது தரவு. வடித்தடங்கண் பனிகூர வால்வளைத்தோள் பசப்பெய்தத் துடிக்கியையும் நுண்ணிடைவாய்த் துன்னாது துறப்பாயேல் பொடித்தகன்ற வனமுலையாள் புலம்பலும் புலம்பாளோ? வண்டுற்ற நறுங்கோதை வால்வளைத்தோள் மெலிவெய்தப் பண்டுற்ற எழில்வாடப் பரியாது துறப்பாயேல் உண்டுற்ற காதலின் உள்ளாகி இருப்பாளோ? வேய்தடுத்த மென்றோளும் மேனியும் விளர்ப்பெய்த நீவிடுத்தாங் கொண்பொருட்கே நீங்குதலை நினைப்பாயேல் ஆய்மலர்க்கண் பனிகூர ஆவியும் உள்ளாமோ? இவை மூன்றும் தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். குவளை உண்கண் இவள்நலம் தொலைய உறுபொருட் கெண்ணிய எண்ணம் மறுபிறப் புண்டெனிற் பெறுக யாமே -யா. வி. 15 மேற். இது சுரிதகம். இந்நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் பூந்தாமரை எனவும், இரைதேரிய எனவும் தனி நடுவாகிய வஞ்சி யுரிச்சீர் இரண்டும் வந்தன. நாலசைச்சீரும் ஓரசைச்சீரும் 14. நாலசை யானும் நடைபெறும் ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே -யா.வி. 13 மேற். -யா. கா. 6 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் பொதுச்சீர் எனப் பெறும் நாலசைச்சீரும், ஓரசைச்சீரும் வருமாறு கூறிற்று. (இ - ள்.) நாலசையால் வரும் தண்பூ, நறும்பூ, தண்ணிழல், நறுநிழல் வாய்பாட்டுப் பொதுச்சீர்கள் பதினாறும், தனி, இணை என்னும் ஓரசைப் பொதுச்சீர்கள் இரண்டும் ஆகிய பதினெட்டுச் சீர்களும் செய்யுளிற் சிற்சில இடங்களில் வரப் பெறும் என்றவாறு. பொதுச்சீர் என ஆசிரியர் கூறாராகவும் கூறியது என்னை எனின், பிற நூன் முடிந்தது தானுடன் படுதல் என்பது தந்திர உத்தியாகலின் கொண்டாம் என்க. என்னை? நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே -யா. வி. 18. என்றும், ஓரசைச் சீரும்அஃ தோரிரு வகைத்தே -யா. வி. 14. என்றும் அமிதசாகரனார் கூறினார் ஆகலின். பொதுவாவது, சிறப்பின்மை என்னும் காரணக் குறியால் அவர் வழங்கினார் என்க. என்னை? (நேரிசை வெண்பா) புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க பூம்புனல் ஊர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின் கால் -பழமொழி 5. என்னும் பழமொழி வெண்பாவால் பொது, சிறப்பின்மைப் பொருட்ட தாதல் அறிக. நாலசைச் சீர்கள் பதினாறனுள் தனியசை ஈறானவை எட்டும் இணையசை ஈறானவை எட்டும் ஆம். தனியசை ஈறானவை : நேர் நேர் நேர் நேர் தேமாந் தண்பூ நிரை நேர் நேர் நேர் புளிமாந் தண்பூ நிரை நிரை நேர் நேர் கருவிளந் தண்பூ நேர் நிரை நேர் நேர் கூவிளந் தண்பூ நேர் நேர் நிரை நேர் தேமா நறும்பூ நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ நிரை நிரை நிரை நேர் கருவிள நறும்பூ நேர் நிரை நிரை நேர் கூவிள நறும்பூ இணையசை ஈறானவை : நேர் நேர் நேர் நிரை தேமாந் தண்ணிழல் நிரை நேர் நேர் நிரை புளிமாந் தண்ணிழல் நிரை நிரை நேர் நிரை கருவிளந் தண்ணிழல் நேர் நிரை நேர் நிரை கூவிளந் தண்ணிழல் நேர் நேர் நிரை நிரை தேமா நறுநிழல் நிரை நேர் நிரை நிரை புளிமா நறுநிழல் நிரை நிரை நிரை நிரை கருவிள நறுநிழல் நேர் நிரை நிரை நிரை கூவிள நறுநிழல். இவற்றை, (நேரிசை வெண்பா) தேமா புளிமா கருவிளம் கூவிளமென் றாமா றறிந்தவற்றின் அந்தத்து-நாமாண்பின் தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும் நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம் -யா.வி. 13 மேற். என்னம் வெண்பாவான் அறிக. அசைச்சீர் நேர், நிரை என்பன. அவை நாள், மலர் என்னும் வாய்பாடுகள் பெறுவன. (குறளடி வஞ்சிப்பா) அங்கண்வானத் தமரரரசரும் வெங்களியானை வேல்வேந்தரும் வடிவார்கூந்தல் மங்கையரும் கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச் சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக் கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையும் முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப அனந்தசதுட்டயம் அவையெய்த நனந்தலையுலகுடை நவைநீங்க மந்தமாருதம் மருங்கசைப்ப அந்தரதுந்துபி நின்றியம்ப இலங்குசாமரை எழுந்தலமர நலங்கிளர்பூமழை நனிசொரிதர இனிதிருந் தருள்நெறி நாடாத்திய ஆதிதன் திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே. (திருப்பாமாலை) -யா.வி. 13 மேற். -யா. கா. 9 மேற். இக் குறளடி வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் பதினாறும் அடி தோறும் முதற்சீராக வந்தன. நாலசைச்சீர் செய்யுளில் வருமாறு மேல்வரும் நூற்பாவிற் கூறுதும். அசைச்சீர் வருமாறு : (குறள் வெண்பா) மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்றந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல் -திருக். 70. எனவும், (குறள் வெண்பா) பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற -திருக். 61. எனவும் அசைச் சீராக வந்தன. (வஞ்சி விருத்தம்) உரிமை யின்க ணின்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால் பெருமை கொன்ற என்பவே -யா. வி. 15, 21. மேற். -யா. கா. 11 மேற். இவ்வஞ்சி விருத்தத்துள் மழை என்னும் இணையசையும் செய் என்னம் தனிசையும் சீர்நிலை எய்தி நின்றன. நாலசைச்சீர் செய்யுளில் வருமாறு 15. நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் றிணைதலும் ஏனுழி ஒன்றுசென் றாகலும் அந்தம் இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குரியன ஆகலும் ஆகுந என்ப அறிந்திசி னோரே -யா. வி. 15 மேற். -யா. கா. 8 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் முன்னே கூறிய நாலசைப் பொதுச்சீர் செய்யுட்கண் நிற்குமாறு இதுவெனக் கூறிற்று. (இ - ள்.) வஞ்சிப்பாவினுள் ஓரடிக்கண்ணே நாலசைப் பொதுச்சீர்கள் இரண்டு இணைந்து நிற்றலும், பிற பாக்களுள் ஓரடிக்கண் ஒன்றே நிற்றலும் ஆகும் என்று புலவோர் கூறுவர். அன்றியும் இறுதி இணையசையாகிய நாலசைப் பொதுச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கே உரியன என்றும் கூறுவர். வஞ்சிப்பா ஒன்றனையுமே குறித்துப் பிற பாக்களை ஏனுழி என்றாரேனும், வெண்பாவினுள் நாலசைச்சீர்கள் வாரா ; ஆசிரியத்துள் குற்றியலுகரம் வருமிடத்தன்றி வார; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றியலுகரம் வருமிடத்தன்றி வாரா ; பாவின் அளவு பாவினத்துள் பயின்று வாரா எனக் கொள்க. (குறளடி வஞ்சிப்பா) செங்கண்மேதி கரும்புழக்கி அங்கண்நீலத் தலரேந்தி பொழிற்காஞ்சி நிழற்றுயிலும் செழுநீர், நல்வயல் கழனி ஊரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே -யா. வி. 15 மேற். -யா. கா. 15 மேற். இக்குறளடி வஞ்சிப்பாவினுள் செங்கண்மேதி எனவும் அங் கண் நீலம் எனவும் நாலசைச்சீர்கள் வந்தன. அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு வேங்கைவாயில் வியன்குன்றூரன் -யா. வி. 15 மேற். -யா. கா. 9 மேற். இவ்வஞ்சியுள் நாலசைப் பொதுச்சீர் கண்ணுற்று நின்றன. (நேரிசை ஆசிரியப்பா) அந்தண் சாந்தமோ டகில்மரம் தொலைச்சிச் செந்துசிதைய உழுத செங்குரற் சிறுதினைப் படுங்கிளி நம்மொடு கடியும் நெடுவரை நாடர்க்கு நேர்ந்தனர் எமரே? -யா. வி. 15 மேற். இவ் வாசிரியத்துள் குற்றுகரம் வருமிடத்து நாலசைச்சீர் வந்தது. திரைந்துதிரைந்து திரைவரத் திரண்முத்தம் கரைவாங்கி நிரைந்துநிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும் கண்டல்வண்டற் கழிபிணங்கிக் கருநீல மதுவுண்ணவும் கொண்டஞெண்ட மணற்குன்றில் பண்ணையாயம் குடிகெழுவவும் போதணிந்த பொழிற்புன்னைப் பராரைப்பெண்ணைப் படுதுறையெம் தூதணிந்த வண்டுண் கண்ணித் துறைவனெங்கள் துறைவனே -யா. வி. 15 மேற். இக்கலியுள் குற்றியலுகரம் வருமிடத்தன்றி வாரா இடத்தும் நாலசைப் பொதுச்சீர் வந்தவாறும், கண்ணுற்று நில்லாவாறும் காண்க. (குறளடி வஞ்சிப்பா) நின்றுநின்றுளம் நினைபுநினைவொடு நீடுதெருமரு நிறைசெலச்செல இவளின்றுதன தெழில்வாடவும் நறுமாந்தளிர்நிறத் தகைபிறக்கெந் தண்முகைமென்குழற் பெருந்தடங்கண் பூவுறுநலந்தொலைந் தினியாற்றலள் செலச்செலவூரலர் செவிசுடச்சுடமுகிழ் முகிழ்ப்பயலாரறி வுறுப்பவுநீடினை திரிவொடு கெழுமிய திருநலம் புரிவொடு கெழுவுக புனைதா ரோயே -யா. வி. 15 மேற். இக்குறளடி வஞ்சியுள் இணையசை இறுதியாகிய நாலசைப் பொதுச்சீர்கள் எட்டும் வந்தன ; கண்ணுற்றும் நின்றன. சீர் முடிந்தது. 4. தளை ஆசிரியத்தளை 16. இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்பம் இலவாய் விரவி நடப்பின் அதற்பெயர் ஆசிரி யத்தளை ஆகும் -யா. வி. 18, 21 மேற். -யா. கா. 10 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் தளைவிகற்பங்கள் ஏழனுள் இயற்சீர் ஒன்றுதலால் உண்டாகும் நேரொன்றாசிரியத்களை, நிரையொன்றாசிரியத்தளை என்னும் இரண்டன் இலக்கணமும் கூறிற்று. (இ - ள்.) இயற்சீர்கள் இரண்டு கூடிநின்று தம்முள் வேறுபாடு இல்லாமல் இணைந்து நடக்குமாயின் அதற்குப் பெயர் ஆசிரியத்தளை என்பதாம் என்றவாறு. இயற்சீர் விகற்பமிலவாய் நடப்பது என்பது நின்ற சீர் ஈறும் வருஞ்சீர் முதலும் அசை வேறுபாடற இசைந்து நடப்பது என்க. அது மாச்சீர்முன் நேர்வருதலும், விளைச்சீர் முன் நிரை வருதலுமாம். மாச்சீர்முன் நேர் வருதல், நேர் ஈற்றொடு நேர்முதல் ஒன்றிய வாகலின் நேரொன்றாசிரியத்தளை எனக் காரணக்குறி எய்திற்று. விளச்சீர்முன் நிரைவருதல், நிரை ஈற்றொடு நிரை முதல் ஒன்றிய வாகலின் நிரையொன்றா சிரியத்தளை எனக் காரணக்குறி எய்திற்று. இதனான் அன்றே இயற்சீரை ஆசிரிய உரிச்சீர் என்றதூஉம் என்க. (நேரிசை ஆசிரியப்பா) போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே -யா. வி. 6, 69 மேற். -யா. கா. 5 மேற். என்னும் இவ்வாசிரியத்துள் நேரொன்றாசிரியத் தளையே வந்தவாறு காண்க. (நேரிசை ஆசிரியப்பா) அணிநிழ லசோகமர்ந் தருள்நெறி நடாத்திய மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே -யா. வி. 8 மேற். -யா. கா. 5 மேற். என்னும் இவ்வாசிரியத்துள் நிரையொன் றாசிரியத் தளையே வந்தவாறு காண்க. இவ்விரு தளைகளும் அன்றி இயற்சீர் விகற்பத்தால் வரும் தளைகள் ஆசிரியத்துள் வாராவோ எனின் வரும் என்றற்கு அன்றே விரவி நடப்பின் என்று கூறினார் என்க. அன்றியும் இயற்சீர் இரண்டு எனத் தொடங்கும் இந்நூற்பாவை நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை இலவாக, இயற்சீர் விகற்பத்தால் வரும் இயற்சீர் வெண்டளை ஒன்றானே யாத்ததும் இக்குறிப்பை வெளிப்படுத்துதற் கென்று கொள்க. ஆசிரியத் தளைகளின் இலக்கணத்தை, ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை ஆசிரி யத்தளை ஆகும் என்ப -யா. வி. 19 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாரும், ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரொடு நேரசை ஒன்றல் நிரையசை ஒன்றலென் றாயிரு வகைத்தே ஆசிரி யத்தளை -யா. வி. 19. என அமித சாகரனாரும் கூறியவாறு அறிக. நின்றசீர் அன்றி வருஞ்சீரையும் இயற்சீரெனக் குறித்துக் கூறினார் ; எனினும் பிற சீர்களையும் கொள்க. தளை கொள்வது நின்றசீர் ஈறும், வருஞ்சீர் முதலும் ஆகலின். என்னை? இவர் வருஞ்சீரும் குறித்துக் கூறினார் அன்றோ எனின், அவர் அவை சிறப்புடைமை நோக்கி எடுத்து ஓதினார் ; அல்லாத சீரும் உடம்பட்டார் எனக் கொள்க என்றார் யாப்பருங்கல விருத்தியுடையார். இயற்சீர் வெண்டளை 17. இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்ப 1 நடையது வெண்டளை யாகும். -யா. வி. 18, 21 மேற். -யா. கா. 10 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயற்சீர் விகற்பத்தால் நடக்கும் வெண்டளையின் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) இயற்சீர் இரண்டு தம்முள் கூடுங்கால் ஒன்றாது நடக்குமாயின் அஃது இயற்சீர் வெண்டளை எனப்படும் என்றவாறு. இயற்சீர் ஒன்றுதலால் ஆகும் ஆசிரியத்தளை இலக்கணம் முன்னே கூறினார் ஆகலின், அதன் விகற்பத்தால் ஆகும் இயற் சீர் வெண்டளையினை அதிகார முறைமையாற் கூறினார். விகற்பமாவது ஒன்றாமை. நின்றசீரும் வருஞ்சீரும் ஒன்றாமையாவது, மாமுன் நிரையும், விளைமுன் நேரும் வருதல் ஆகும். ஆகவே மாச்சீர்முன் நிரை வருதலும் விளச்சீர்முன் நேர் வருதலும் ஆகிய இரண்டும் இயற்சீர் வெண்டளை என்க. ஈரசைச்சீர் என்பது இயற்சீர் ஆகலானும்; இயற்சீர் விகற் பத்தாலாய இத்தளை வெண்பாவிற்கு உரியது ஆகலானும் இயற்சீர் வெண்டளை எனக் காரணக் குறி பெற்றது. இயற்சீர் ஒன்றுதலை நேரொன்றாசிரியத்தளை, நிரை யொன்றாசிரியத்தளை என இரண்டாகப் பகுத்தாற்போல இயற்சீர் விகற்பமாவதையும் இரண்டாகக் குறியிடாமல் ஒன்றாக்கியதென்னை? எனின் தொல்லாசிரியர் நெறி அஃதாகலின் என்க. (எ - டு.) (குறள் வெண்பா) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் திருக். 1128. இக்குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளே வந் தமையை அலகிட்டுக் காண்க. இஃது இயற்சீரொடு இயற் சீர்களே வந்த பா. (குறள் வெண்பா) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று -திருக். 100. இக்குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், காய் ஈற்று உரிச்சீர் ஒன்றுதலால் பிறக்கும் வெண்சீர் வெண்டளையும் விரவி நிற்றல் காண்க. இஃது இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்த பா. வெண்சீர் வெண்டளை 18. உரிச்சீர் அதனுள் உரைத்ததை அன்றிக் கலக்கும் தளையெனக் கண்டிசி னோரே. -யா. வி. 21 மேற். -யா. கா. 10 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெண்சீர் வெண்டளை கூறிற்று. (இ - ள்.) வெண்பா உரிச்சீரினுள், மேலே இயற்சீர் விகற்பம் உரைத்தவாறு அல்லாமல் ஒன்றி நிற்பது வெண்சீர் வெண்டளை என்று யாப்பியல் ஆய்ந்தோர் கண்டனர் என்றவாறு. இயற்சீர் வெண்டளையைக் கூறினார் ஆகலின் அதிகார முறைமையால் அவ்வெண்பாவிற்குச் சிறப்புரிமை பூண்ட வெண் சீர் வெண்டளையை அடுத்துக் கூறினார். உரைத்ததை என்றது இயற்சீர் விகற்பத்தினை. அன்றி என்றது அவ்வாறல்லாமல் ஒன்றி நிற்றலை. எதனோடு ஒன்றுதல் எனின் உரிச்சீரோடு ஒன்றுதல். ஆகவே காய்ச்சீர்முன் நேர் வருதல் வெண்சீர் வெண்டளை எனக் கொள்க. (குறள் வெண்பா) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை -திருக். 758. இதனுள் வெண்சீரோடு வெண்சீர் ஒன்றிவந்தது. வெண்சீரோடு இயற்சீர் ஒன்றி வந்தமை மேலை நூற்பாவிற் காட்டினாம். வெண்டளைகள் இரண்டையும், வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே -யா. வி. 18. என அமித சாகரனாரும், இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை உரிச்சீர் அதனுள் ஒன்றிய தியல்பே -யா. வி. 21 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாரும், மயேச்சுரனாரும் கூறினார். இனி, உரிச்சீர் அதனுள் உரைத்ததை அன்றிக் கலக்கும் தளை என வளைத்துச் சொல்ல வேண்டியது என்னை? உரிச்சீர் ஒன்றுதல் வெண்டளை என்றால் அமையுமே எனின், வெண்பாவினுள் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என உரைக்கப் பெற்ற இரண்டு தளைகளையும் அன்றிப் பிற தளைகள் வாரா என்பது அறிவித்தற்கு என்க. என்னை? வெள்ளையுள் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும் - யா. வி. 22. என்றார் ஆகலின். இனி ஆசிரியர் குணசாகரர் இந் நூற்பாவொடு, வெண்சீர் இறுதியின் நேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை யாகும் என்ப என்றொரு நூற்பாவையும் காக்கை பாடினியார் வாக்காகக் காட்டியுள்ளார். (யா. கா. 10) அவ்வாறாயின், காய்ச்சீர்முன் நேர் அசை வருமாயின் அது வெண்சீர் வெண்டளை ஆகும் என்று கூறுவர் எனப் பொருள் கொள்க. இதனை நூற்பாவெனக் கொண்டு உரை வகுக்காது இவண் வைத்த தென்னை எனின், இவர் தனியசை இணையசை என்னும் கொள்கையினர் ஆகலின், இந் நூற்பாவில் நேரசை என வருதல் கொண்டு தழுவிக் கொள்ளப் பெற்றது. அன்றியும் முந்துரை யாசிரியராகிய யாப்பருங்கல விருத்தியுடையார் இந் நூற்பாவைக் காட்டாமையும் தழுவி யுரைக்க வேண்டியதாயிற்று. கலித்தளை 19. வெண்சீர் இறுதிக் கிணையசை பின்வரக் கண்டன வெல்லாம் கலித்தளை யாகும் -யா. வி. 21 மேற். -யா. கா. 10 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ வெனின் நிறுத்த முறையானே கலித்தளையின் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) வெண்சீர் இறுதியின் முன் இணையசை வருமாறு கண்டவை எவையோ அவை கலித்தளையாம் என்றவாறு. வெண்சீர் இறுதி என்றது காய்ச்சீர் இறுதியை. அதன் பின் இணையசை வருதல் என்பது காய்முன் நிரைவருதல். கண்டனவெல்லாம் என்று பன்மையாற் கூறினார் காய்ச்சீர் நான்கு ஆகலின். பிறிதிடங்களில் கூறாராய் இவண் கூறியது என் எனின், எஞ்சிய பாக்களுக் கெல்லாம் இரண்டிரண்டு தளைகள் உரிமையாய் அமையக் கலி ஒன்றற்கு மட்கும் ஒரு தளையோ என்பார்க்கு அற்றன்று மேலே கூறிய வெண்சீர் வெண்டளையும் கலிப்பாவிற் பெருவரவிற்றாம் என்பது அறிவித்தற்கும் என்க. பிற சீர்களும் வரப் பெறுமாயினும் நின்றசீரும் வருஞ்சீரும் நேர் ஈற்று உரிச்சீராகவே அமைந்து ஒன்றாது வருவது கலிக்குச் சிறப்பு என்க. (தரவு கொச்சகக்கலிப்பா) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப் போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே -யா. வி. 20 மேற். -யா. கா. 11 மேற். இக் கலிப்பா நேரீற்று உரிச்சீரானே வந்தது. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? இது தரவு. சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நயமிலரே? சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவாற் புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? இவை மூன்றும் தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். அருளென லிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னெடுந் தேரொடும் தானையிற் பொலிந்தே. -யா. வி. 32 மேற். -யா. கா. 30 மேற். இந்நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா நேரீற்றுரிச்சீர் ஒன்றியும் ஒன்றாதும் வந்தது. (கலித்தாழிசை) வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ லேழுந்தம் பயன்கெட இடைநின்று நரம்பறூஉம் யாழினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ -கலித். 8 இக்கலித் தாழிசையுள் பிற தளைகளும் பயின்று வந்துவாறு காண்க. கலித்தளை யாமாற்றை, வெண்சீர் இறுதி நிரைவரிற் கலித்தளை -யா. வி. 21 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாரும், நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர் நிரைவருங் காலைக் கலித்தளை ஆகும் -யா. வி. 20. என அமித சாகரனாரும் கூறினார். வஞ்சித் தளைகள் 20. தன்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முளொத் தொன்றினும் ஒன்றா தொழியினும் வஞ்சியின் பந்தம் எனப்பெயர் பகரப் படுமே -யா. வி. 21. மேற். -யா. கா. 10 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்தமுறையான் வஞ்சித்தளைகளாமாறு கூறிற்று. (இ - ள்.) இணையசை இறுதியாகிய உரிச்சீர் இரண்டு தம்முள் ஒத்து வரினும் ஒவ்வாது வரினும் வஞ்சித்தளை என்று பெயரிட்டு அழைக்கப் பெறும் என்றவாறு. தம்முள் ஒத்து ஒன்றுதல் என்பது நிரையீற்று உரிச்சீர், நிரைமுதல் உரிச்சீருடன் ஒன்றி நிற்றல். தம்முள் ஒன்றாது ஒழிதல் என்பது நிரையீற்று உரிச்சீர் நேர் முதல் உரிச்சீருடன் ஒன்றாது நிற்றல். அஃதாவது கனிச்சீர் முன் நிரை வருதலும், கனிமுன் நேர் வருதலும் ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையுமாம் என்க. ஒன்றுதல், ஒன்றாமை உடைமையாலும், வஞ்சிப்பாவிற்கு உரிமை பூண்டு வருதலானும் இத்தளைப் பெயர்கள் காரணக் குறிகளாம். பிற பாக்களிலும் இனங்களிலும் அருகியே வரப்பெறும் நாலசைச்சீர் இதன்கண் பயின்று வருதலும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருதலும், இச்சீர்கள் கண்ணுற்று நிற்றலும் ஆகியவை கருதி ஒன்றியும் ஒன்றாதும் என்னாது ஒன்றாது ஒழியினும் என்றார் என்க. பந்தம் - தளை. வஞ்சியின் பந்தம் என்றாலே அமையுமாக, பந்தம் எனப் பெயர் பகரப் படுமே என விரிக்க வேண்டியதென்னை எனின் நாலசைப் பொதுச்சீர், ஓரசைப் பொதுச்சீர் ஆகியவற்றைப் பிற சீர்களோடு ஒப்பிட்டு நோக்கித் தளைவிரித்துக் கொள்ளுமாறு என்க. அவற்றுக்குத் தளை கொள்ளுமாறு : நேர் இறுதியாகிய நாலசைப் பொதுச்சீரை வெண்பா உரிச் சீர் போலாகக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்சீர் வெண்டளையாகவும், ஒன்றாதது கலித்தளையாகவும் கொள்க. நிரை இறுதியாகிய நாலசைப் பொதுச்சீரை வஞ்சியுரிச் சீரே போலாகக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றியதை ஒன்றிய வஞ்சித் தளையாகவும், ஒன்றாததை ஒன்றாத வஞ்சித் தளையாகவும் கொள்க. ஓரசைப் பொதுச்சீரை இயற்சீரே போலாகக் கொண்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியதை ஆசிரியத் தளையாகவும், ஒன்றாததை இயற்சீர் வெண்டளையாகவும் கொள்க. என்னை? நேரிற நேர்வரின் வெண்டளை யாகுமந் நேரிற்ற சீர்ப்பின் நிரைவரின்-ஓரும் கலித்தளையாம் பால்வகையால் வஞ்சித் தளையாம் நிரைவரினும் நாலசைச்சீர்க் கண். -யா. வி. 21 மேற். என்றும், ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயின் வெண்டளை ; ஒன்றிய தாசிரியத் தளையே -யா. வி. 21 மேற். என்றும் சொன்னார் ஆகலின். அங்கண்வானத் தமரரரசரும் -கா. பா. 14 மேற். என்னும் பாடலுள், வெங்களியானை வேல்வேந்தரும் என நேரீற்று நாலசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியதால் வெண்டளையும், கடிமலர்ஏந்திக் கதழ்ந் திறைஞ்சி என நேரீற்று நாலசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாமையால் கலித்தளையும், மந்தமாருதம் மருங்கசைப்ப என நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றியமையால் ஒன்றிய வஞ்சித்தளையும், அந்தரதுந்துபி நின்றியம்ப என நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முத லசையோடு ஒன்றாமையால் ஒன்றாத வஞ்சித்தளையும் ஆகிய வாறு காண்க. உரிமையின்கண் இன்மையால் -கா. பா. 14 மேற். என்னும் வஞ்சி விருத்தத்துள், அரிமதர் மழைக் கண்ணாள் என்பதில் மழை என்னும் அசைச்சீர் நின்று வரும் சீர் முத லசையோடு ஒன்றாமையால் இயற்சீர் வெண்டளை யாகவும், செருமதி செய் தீமையால் என்பதில் செய் என்னும் அசைச்சீர் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியமையால் ஆசிரியத்தளையாகவும் வந்தன. தளை முடிந்தது. 5. அடி அடியின் வகை 21. குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென் றைவகை மரபின அடிவகை தானே. -யா. வி. 23 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் தளைகளால் ஆம் அடிகளின் வகையும் தொகையும் கூறிற்று. (இ - ள்.) அடிவகை, ஐவகை மரபு உடையன ; அவை குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்பன என்றவாறு. அடிவகை இவை எனப் பெயர் கூறினார்; அவற்றின் இலக்கணம் முறையே கூறுவார். அடிக்குச் சிற்றெல்லை இருசீர்கள் ஆகலானும் இருசீர்க ளேனும் இன்றேல் அடியாமாறு இல்லை ஆகலானும் ஏறிச் செல்லும் எண்முறையில் இருசீரடி முதல் எண்ணினார். இவ்வாறே இவர்க்கு வழிநூல் செய்தாரும், குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே -யா. வி. 23. என ஓதினார். ஒருசீரான் அடி அமையாதோ எனின் ஒருசீர் அளவிலோ, ஒரு சொல்லின் அளவிலோ வருமாயின் அவற்றைச் சொற்சீரடி என்றும், தனிச்சொல் என்றும், கூன் என்றும் வழங்குவரே அன்றி அடியொடு வைத்து எண்ணார். என்னை? இரண்டு சீர்கள் கூடினல்லது தளை என்றொன்று ஆகாமையானும், இருதாள் கொண்டு நடக்கு முறை போல் இருசீர் கொண்டு நடப்பதே அடி யாகலானும் என்க. ஐவகை அடிவகை தானே எனக் கூறினும் சாலும் ; மரபின என்று கூற வேண்டியது என்னை எனின், ஒவ்வொரு பாவும் இவ் வைவகை அடிகாளலும் இயலுமோ என்பார்க்கு அற்றன்று; மரபுநிலை ஆய்ந்து எவ்வெவ் வடியால் எவ்வெப் பா வரும் என்பதைக் கண்டு கொள்க என்பாராய்க் கூறினார். அடிவகை இத்துணை என்பதும், இன்ன அடி இவ் வளவினது என்பதும், இன்ன அடிகள் இன்ன பாவிற்குரியன என்பன பாக்களுக்கு வரும் அடிச்சிற்றெல்லை பேரெல்லை இவ்வளவின என்பதும் ஆக அடியின் இலக்கணம் நான்கு கூற்றினவாகக் கூறப் பெறும். அவற்றுள் முதற்கூறு இந் நூற் பாவிற் கூறினார்; எஞ்சியவை முறையே கூறுவார். அடி அளவு 22. இருசீர் குறளடி ; சிந்தடி முச்சீர் ; அளவடி நாற்சீர் ; 1 ஐஞ்சீர் நெடிலடி ; அறுசீர் கழிநெடி லாகும் என்ப. -யா. வி. 24 மேற். -யா. கா. 12. இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் இன்ன அடி இவ்வளவிற்று என்பது கூறிற்று. (இ - ள்.) இரண்டு சீர்களை யுடையது குறளடி ; மூன்று சீர்களை யுடையது சிந்தடி ; நான்கு சீர்களை யுடையது அளவடி; ஐந்து சீர்களை யுடையது நெடிலடி ; ஆறு சீர்களை யுடையது கழி நெடிலடி என்று இலக்கணம் கண்டோர் கூறுவர் என்றவாறு. ஆகும் என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு இருசீர் குறளடி யாகும் ; சிந்தடி முச்சீர் ஆகும் என்பன போலப் பிறவற்றோடும் ஒட்டிக் கொள்க. (வஞ்சித்துறை) திரைத்த சாலிகை நிரைத்த போல்நிரந் திரைப்ப தேன்களே விரைக்கொள் மாலையாய் -சூளாமணி 744. இது குறளடியான் வந்த செய்யுள். (வஞ்சிவிருத்தம்) இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய் -சூளாமணி 742. இது சிந்தடியான் வந்த செய்யுள். (கலிவிருத்தம்) கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண் மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன் நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம் -சூளாமணி 17. இஃது அளவடியான் வந்த செய்யுள். (கலிநிலைத் துறை) காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையாற்றிசை போய துண்டே -சீவக. 31. இது நெடிலடியான் வந்த செய்யுள். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இடுக்கண்வந் துற்ற காலை எரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானு மின்றி நகுகதாம் நக்க போழ்தவ் விடுக்கணை யரியு மெஃகாம் இருந்தழு தியாவ ருய்ந்தார் வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே -சீவக. 509. இஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். இதனைக் கழிநெடிலடியான் வந்த செய்யுள் என்னின் அமையாதோ எனின் அமையாது. என்னெனின் அறுசீரின் மிக்கும் கழிநெடிலடி வருமாகலின் வருஞ்சீர் எண்ணிக்கையுடன் உரைத்தல் வேண்டும் என்பது. அவ்வாறாயின் அறுசீர்க் கழிநெடிலடி என்று அறுதியிட்டு உரைத்தாரால் என் எனின், அறுசீர் அளவான் நிற்பதே சிறப்பு என்றும் அதனின் மிக்கு வரினும் கொள்க என்பதற்கு அன்றே வரும் நூற்பாவை ஓதினார் என்க. கழிநெடிலடிக்கு மேலும் ஓர் அளவு 23. எண்சீர் எழுசீர் இவையும் கழிநெடிற் கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே. -யா. கா. 12 மேற் இந் நூற்பா என்ன கூறிற்றோ வெனின் அறுசீர், கழி நெடிலடி என்றதற்கு மேலும் இருசீர் உயர்ந்த அளவு கூறிற்று. (இ - ள்.) எண்சீர் அளவும், எழுசீர் அளவும் கழிநெடில் அடிக்குப் பொருந்தி வருதல் உண்டு என்று யாப்பியல் அறிந் தோர் கூறுவர் என்றவாறு. இவையும் என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிற்று, அறுசீர் என மேலே நூற்பாவில் அளவு கூறினார் ஆகலின். எழுசீர் எண்சீர் என்னாது முறை பிறழக் கூறினார், எண் சீரின் மிக்கும் கழிநெடிலடி வரும் என்பதுரைத்தற்கு. என்னை? இவர்க்கு வழி நூல் செய்தாரும், கழிநெடி லடியே கசடறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரன் டீறா வருவன பிறவும் வகுத்தனர் கொளலே -யா. வி. 25. என்றார் ஆகலின். இனி வழி நூற்கு உரைகண்டாரும் பதினாறு சீரின் காறும் வருவனவும் உள ; அவற்றையும் கழிநெடிலடியின் பாற்படுத்து வழங்குக என உரைத்துச் சான்று காட்டிப் போந்தார் ஆதல் அறிக. (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கணிகொண் டலர்ந்த நறுவேங்கை யோடு கமழ்கின்ற காந்தள் இதழால் அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி அகிலாவி குஞ்சி கமழ மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து வரையாக மீது திவளத் துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவானி தென்கொல் துணிவே -சூளாமணி 1327. இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண முழுதுலகு மூடியெழின் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழல் சுடரோய்நின் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால் ; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே -சூளாமணி 1904. இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். எண்சீரின் மிக்கு வரும் கழிநெடிலடியை இவர்க்கு வழி நூல் செய்தார் கூறினாராக, இவர் கூறினர் இலரோ எனின் முறை பிறழ இந் நூற்பா அமைத்ததால் அன்றி வெளிப்படவும் உரைத்தார். அதனை வெளிப்படக் கூறுவது அன்றே வரும் நூற்பா. எண் சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள் 24. இரண்டு முதலா எட்டீ றாகத் திரண்ட சீரான் அடிமுடி வுடைய ; 1இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த அல்ல செய்யு ளுள்ளே -யா. வி. 24 மேற். -யா. கா. 13 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் எண்சீரின் மிக்கும் கழிநெடிலடி வரும் எனவும், அஃது அத்துணைச் சிறப்பின்று எனவும் கூறிற்று. (இ - ள்.) இரண்டுசீர் முதலாக எட்டுச்சீர் அளவாக அடி அமைந்து வருதலை நெறியாக உடையன. அவ்வெட்டுச் சீரினும் மிக்க அடி செய்யுளுள் வருமாயினும் அத்துணைச் சிறப்புடையன அல்ல என்றவாறு. இரண்டு முதலா எட்டீறாக எனக் கூறினார், கூறியது கூறலோ எனின், அற்றன்று; அறுசீர் அளவே சிறப்புடைத்து என்றும், எண்சீர்காறும் வருவன அதனளவு சிறப்புடையன அல்ல என்றும், எண்சீரின் மிக்கு வருவன அவற்றளவினும் சிறப்புடையன அல்ல என்றும் முத்திறக் கூறுபாட்டான் உரைத்தல் வேண்டிக் கூறினார் ஆகலின் குற்றமின்றாம். என்னை? கூறியது கூறல் குற்றம் இல்லை வேறொரு பொருளை விளக்கு மாயின் -யா. வி. 57 மேற். -யா. கா. 23 மேற். என்றார் ஆகலின். (ஒன்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த தாரையை இலங்கும் ஆழியின் விலங்கியோள் முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் வடங்கொள் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வனங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன் தடங்கொள் தாமரை இடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே -யா. வி. 25 மேற். -யா. கா. 13, 29 மேற். இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். (பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு கூடி நீடும் ஓடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத நாத வென்று நின்று தாழ அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின் நீதி யோடும் ஆதி யாய செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே -யா. வி. 25, 53 மேற். -யா. கா. 13, 29 மேற். இது பதின்சீர்க் கழிநெலடியான் வந்த செய்யுள். இவ்வாறே பதின்மூன்று சீர்காறும் சான்று காட்டினார் யாப் பருங்கல விருத்தியுடையார்; ஆண்டுக் காண்க. அவர் காலத்துப் பதின்மூன்று சீரின் மிக்குவருவன அரியன போலும். (பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்பத் தீயரும்பும் தேமா நிழற்கண் துஞ்சுமிளம் செங்கட் கயவாய்ப் புனிற்றெருமை இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன் றுள்ளி மடித்தலநின் றிழிபா லருவி உவட்டெறிய எறியுந் திரைத்தீம் புனற்பொய்கைப் பொன்னங் கமலப் பசுந்தோட்டுப் பொற்றா தாடிக் கற்றை நிலாப் பொழியுந் தரங்கம் பொறையுயிர்த்த பொன்போல் தொடுதோல் அடிப்பொலன்சூட் டன்னம் பொலியும் தமிழ்மதுரைக் கரசே தாலோ தாலேலோ அருள்சூற் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ -மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் -24. இது பன்னிருசீர்க் கழிநெடிலடியான் வந்தது. (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் ; உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும் ; பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண் டும்;பொய்மை பேசா திருக்க வேண்டும் ; பெருநெறி பிடித்தொழுக வேண்டும்; மதமானபேய் பிடியா திருக்க வேண்டும் ; மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டுமுனை மறவா திருக்க வேண்டும் ; மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்; நோயற்ற வாழ்வில்நான் வாழ வேண்டும் ; தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்த வேளே ! தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே ! -வள்ளலார். இது பதினான்கு சீர்க் கழிநெடிலடியால் வந்தது. இன்னும் பதினாறு சீர், இருபதின் சீர், இருபத்து நான்கு சீர், நாற்பத் தெண்சீர்க் கழிநெடிலடியால் வருவனவும் அருணகிரியார் முதலாயவர் பாடல்களுள் காண்க. சிறந்த அல்ல என்று கூறவே அமையும் செய்யுள் உள்ளே என்று மிகுத்துரைக்க வேண்டியது என்னை எனின் சீர் அளவால் அடி கொள்ளாது எழுத்தளவால் அடிகொண்டாரும் உளர் என்பது குறித்தற்கு என்க. எழுத்தளவால் அடிகொள்ளுமாறு என்னை எனின் கூறுதும். நாற்சீர் அடியையே, நாலெழுத்து முதலாக ஆறெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியையும் குறளடி என்றும், ஏழு எழுத்து முதல் ஒன்பது எழுத்தின்காறும் உயர்ந்த மூன்று அடியையும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்தின் காறும் உயர்ந்த ஐந்தடியையும் அளவடி அல்லது நேரடி என்றும், பதினைந்து எழுத்து முதலாகப் பதினேழு எழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியையும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியையும் கழிநெடிலடி என்றும், இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை என்றும் கூறுவர். மேலும், குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய என்றும், சிந்தடியும் அளவடியும் நெடிலடியின் முதல் இரண்டடியும் வெண்பாவிற்கு உரிய என்றும், அளவடியுள் கடைசி இரண்டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் இலக்கணக் கலிப்பாவிற்கு உரிய என்றும், நான்கெழுத்து முதல் பன்னிரண்டெழுத்தின் காறும் இருசீரடி வஞ்சிப்பாவிற்கு உரிய என்றும், எட்டெழுத்து முதலாக நெடிலடிக்குக் கூறிய அளவு காறும் முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு உரியவென்றும் கூறுவர். என்னை? நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே நாலெழுத் தாதி ஆறெழுத் தெல்லை ஏறிய நிலத்த குறளடி என்ப ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அவ்வழி யான பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே மூவைந் தெழுத்து நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப மூவா றெழுத்துக் கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இவட்பெறும் என்ப -தொல். பொருள். 344, 348, 352. என்றார் தொல்காப்பியனார் ஆகலின். குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் ஒற்று ஆகியவற்றை ஒழித்து அடிக்கு எழுத்தெண்ணுக. (எ - டு.) (நேரிசை ஆசிரியப்பா) குறளடி பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து (4) 4-6 தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து (5) வண்டு சூழ விண்டு வீங்கி (6) சிந்தடி நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் (7) 7-9 ஊர்வாய் ஊதை வீச ஊர்வாய் (8) மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9) அளவடி நன்மணங் கமழும் பன்னெல் ஊர (10) 10-14 அமையேர் மென்றோள் ஆயர் நெடுங்கண் (11) இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12) இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் (13) நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14) நெடிலடி அணிகடை அசைஇய அரியமை சிலம்பின் (15) 15-17 மணிமருள் வளர்குழல் வளரிளம் பிறைநுதல் (16) ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17) கழிநெடி நனிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் (18) லடி இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19) 18-20 கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20) பெருமணம் புணர்ந்தனை என்பஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே -யா. வி. 95 மேற். -யா. கா. 43 மேற். -தொல். பொருள். 352 பேரா மேற். இவ்வாசிரியத்துள் நான்கெழுத்து முதல் இருபது எழுத்தளவும் உயர்ந்த பதினேழ் நிலமும் (இடமும்) பெற்றுக் குறளடி முதலாகிய ஐந்தடியும் வந்தமை காண்க. வெண்பா முதலியவை இவ்வடி வகையால் வருதற்கு எடுத்துக்காட்டு யாப்பருங்கல விருத்தியுள் கண்டுகொள்க. (யா. வி. 95). வஞ்சிப்பாவிற்கு வரும் அடிவகை 25. சிந்தடி குறளடி என்றா இரண்டும் வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே : -யா. வி. 26 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வஞ்சிப்பாவிற்கு வரும் அடி இவை எனக் கூறிற்று. (இ - ள்.) சிந்தடி என்றும் குறளடி என்றும் கூறப்பெறும் இருவகை அடிகளும் வஞ்சிப்பாவிற்கு உரிமைப்பட்டன ஆகும் என்றவாறு. வெண்பா அகவல் கலி வஞ்சி என்று கூறுதல் முறைமை யாகவும் வஞ்சிப்பாவினை முற்கூறினார் எண்ணு முறைமையால் இருசீர் முச்சீர்களாகிய குறள் சிந்தடிகட்கு உரிமையுடைய ஆகலின். ஆயின் குறள் சிந்து எனக் கூறாது சிந்து குறள் என முறை பிறழக் கூறியது என்னோ வெனில் கூறுதும் : சிந்தடி வஞ்சிப்பாவினும், குறளடி வஞ்சிப்பா சிறப்புடைத்து என்று அறிவித்தற்கு என்க. என்னை? தலைதடு மாற்றம் தந்துபுணர்ந் துரைத்தல் என்பது தந்திர உத்தி ஆகலின். இனி, அமிதசாகரனாரும், சிந்தடி குறளடி என்றிரண் டடியான் வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்! -யா. வி. 26. என்று கூறியதும் அறிக. (குறளடி வஞ்சிப்பா) பானல்வாய்த் தேன்விரிந்தன கானல்வாய்க் கழிமணந்தன ஞாழலொடு நறும்புன்னை தாழையொடு முருகுயிர்ப்ப வண்டல்வாய் நறுநெய்தல் கண்டலொடு கடலுடுத்துத் தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராய் இன்னதோர் கடிமண முன்றிலும் உடைத்தே படுமீன் பரதவர் பட்டினத் தானே -யா. வி. 26, 90 மேற். இது குறளடியான் வந்த வஞ்சிப்பா. (சிந்தடி வஞ்சிப்பா) தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச் சொன்னலத்தகை பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும் கலங்கஞர் எய்தி விடுப்பவும் சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே -யா. வி. 26, 90 மேற். இது சிந்தடியான் வந்த வஞ்சிப்பா. குறளடி வஞ்சிப்பாவே சிறப்புடைத்து என்பது ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்துமாம். என்னை? வஞ்சி யடியே இருசீர்த் தாகும் எனக் கூறி, முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே -தொல். செய். 45, 46. என்று தழுவிக் கொண்டார் ஆதலின் என்க. அகவல் வெள்ளை கலி ஆகிய பாக்களுக்கு வரும் அடி 26. ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும் நாற்சீர் அடியான் நடைபெற் றனவே. -யா. வி. 27 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஆசிரியப்பா வெண்பா கலிப்பா ஆகிய பாக்கள் இன்ன அடியான் வரும் என்பது கூறிற்று. (இ - ள்.) ஆசிரியப்பா வெண்பா கலிப்பா என்னும் மூவகைப் பாக்களும் நாற்சீர் அடியான் நடைபெறும் என்றவாறு. குறள் சிந்து அடிகளை மேலே கூறினார் ஆகலின் நிறுத்த முறையான் அளவடியைக் கூறினார். வெண்பா ஆசிரியம் எனக் கூறாது ஆசிரியம் வெண்பா எனத் தலை தடுமாற்றமாகக் கூறினார் ஆகலின் ஆசிரிய விருத்த மும் கலித்துறையும் ஒழித்து மூன்று பாவினமும் நாற்சீரடியான் வரும் என்றும், ஒருசார் ஆசிரிய அடியும் கலியடியும் ஐஞ் சீரான் அருகி வருவனவும் உள என்றும் கொள்க. இவர்க்கு வழி நூல் செய்தாரும் இவர் கூறியாங்கே தலை தடு மாற்றமாக, கலியொடு வெண்பா அகவல் கூறிய அளவடி தன்னால் நடக்குமன் அவையே -யாப்பருங்கலம். 27. என்றார். (எ - டு.) (வெண்பா) காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து -நாலடி. 63. — வெண்பா அளவடியான் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நம்நலம் கொள்வாம் என்றி தோழி கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே -குறுந்தொகை. 349. — அகவற்பா அளவடியான் வந்தது. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவற் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறண்மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணீரோ பெரும காணே மல்லேங் கண்டனங் கடத்திடை ஆணெழில் அண்ணலோ டருஞ்சுரம் முன்னிய மாணிழை மடவரல் தாயிர்நீர் போறீர் ; இது தரவு. பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ; சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ; ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும் சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே இவை முன்றும் தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் அறந்தலை பிரியா ஆறுமற் றதுவே -கலித். 9. இஃது ஆசிரியச் சுரிதகம். கலிப்பா அளவடியான் வந்தது. சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே -புறநா. 235 என்னும் அகவற்பாவினுள். சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே என ஐஞ்சீரடிகள் வந்தன. அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறி துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து மலைந்தனையே எனக் கலிப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. இனங்களுக்கு வருமாறு இனங்கூறுமிடத்துக் கூறுவாம். வெண்பாவினுள் ஐஞ்சீரடி வருதல் இன்று என்னை? ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல -தொல். பொருள். 375 மேற். என்பது நக்கீரனார் அடிநூல் ஆகலின். இனி ஒருசார் ஆசிரியர் வெண்பாவுள் அரிதின் ஐஞ்சீரடி வருதலும் உரித்து எனக் கொண்டனர் போலும்! இன்றேல், (நேரிசை வெண்பா) உதிரந் துவரிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க-எதிருநர்க் கின்பம் பயந்த இளவேனில் காண்டொறும் துன்பங் கலந்தழியும் நெஞ்சு -ஐந்திணை ஐம்பது. 31. என வெண்பாவில் ஐஞ்சீரடி வாராதென்க. மேலதற்கொரு சிறப்பு விதி 27. சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி உண்டென் றறைய உணர்ந்திசி னோரே. - யா. வி. 27 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பா அகவல் கலிப்பா ஆகியவற்றில் அளவடி அன்றிச் சிந்தடி குறளடிகளும் வருதலுண்டு என்பது கூறிற்று. (இ - ள்.) மேலே கூறப்பெற்றவாறு வெண்பா, அகவல், கலிப்பாக்களில் அளவடி வருவதுடன் சிந்தடியும் குறளடியும் வருவதும் உண்டென்று யாப்பியல் ஆய்ந்தோர் கூறுவர் என்றவாறு. வருதலும் என்பதிலுள்ள உம்மை அளவடியைத் தழுவி நின்றது. அவ்வழி, என்பதிலுள்ள சுட்டு வெண்பா, அகவல், கலிப்பாக்களைச் சுட்டி நின்றது. சிந்தும் குறளும் இப்பாக்களுள் யாண்டு வருமோ எனின், வெண்பாவின் ஈற்றடியும், நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடியும், கலிவெண்பாவின் ஈற்றடியும் முச்சீரான் வரும் ; இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் இருசீரடியாயும் முச்சீரடியாயும் வரும். கலியுள் அம்போதரங்க உறுப்புச் சில இருசீர் அடியாயும் முச்சீர் அடியாயும் வரும். சிந்தும் குறளும் வருதலும் உண்டு என்று இவ்வாறு இலக்கணம் கூறாமையான் அன்றே பிறரும் இவ்விலக்கணத்தை விதப்பினால் தழுவிக்கொண்டார் என்க. வெண்பாவின் ஈற்றடியும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடியும் முச்சீரான் வருமாற்றை 26 ஆம் நூற்பாவிற் காட்டிய எடுத்துக் காட்டுக்களாலும் பிறவற்றாலும் அறிக. (இணைக்குறள் ஆசிரியப்பா) நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே -தொல். செய். 66 இளம். பேரா மேற். -யா. வி. 72 ; யா. கா. 23 மேற். இவ்விணைக் குறள் ஆசிரியப்பாவில் இடையடிகள் பலவும் இரு சீரடியாகவும் முச்சீரடியாகவும் வந்தன. (கலி வெண்பா) அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப் பிரிந்துறை சூழாதி ஐய விரும்பிநீ என்தோள் எழுதிய தொய்யி லும் யாழநின் மைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக்காண் வென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவர் எல்லாரும் உண்ணாதுஞ் செல்லார் இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநாள் ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை ஒன்றன்கூ றாடை வுடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு -கலித்தொகை. 18. இக்கலி வெண்பாவின் ஈற்றடி முச்சீரடியாதல் அறிக. கெடலருமா முனிவர் - (கா.பா.76) என்னும் கலிப்பாவினுள், போரவுணர்க் கடந்தோய் நீ ; புணர்மருதம் பிளந்தோய் நீ ; நீரகலம் அளந்தோய் நீ ; நிழல் திகழும் படையோய் நீ ; என்றும் ஊழி நீ ; உலகு நீ ; உருவு நீ ; அருபு நீ ; ஆழி நீ ; அருளு நீ ; அறமு நீ ; மறமு நீ ; என்றும் அம்போதரங்க உறுப்பு, சிந்தடியானும் குறளடியானும் வந்தது. பாவினங்களுக்கு வரும் அடிவகை 28. விருத்தம் துறையொடு தாழிசை என்றா இனச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும். -யா. வி. 28 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் பாக்களுக்கு அடி வகை கூறி நிறுத்த முறையான் பாவினங்கட்கு அடிவகை கூறிற்று. (இ - ள்.) விருத்தம் துறை தாழிசை என்னும் மூன்று பாவினங்களும் குறளடி தல் எல்லா அடிகளாலும் நடை பெறும் என்றவாறு. பாவினம் தனித்தனியே நடக்குமாற்றை இனத்தின் இலக்கணம் கூறுங்கால் விரித்துக் கூறுவார். இவண் அடிவகை கூறியதற்கு ஏற்பத் தொகுத்துச் சுட்டினார். விரிவு ஆண்டுக் காண்க. இவர் கூறியாங்கே ஆசிரியர் அமிதசாகரனாரும், பாவினம் எல்லா அடியினும் நடக்கும் - யா.வி. 28 என்றார். இனம் இவை என்பதைச் சுட்டிக் கூறுமாற்றால் விருத்தம் துறை தாழிசை என்றார். விருத்தம் துறை தாழிசை என்னாது விருத்தம் துறையொடு தாழிசை எனப் பிரித்துரைக்க வேண்டுவ தென்னை எனின் தாழிசை பெரும்பாலும் அளவடியான் வரும் என்றற்கும், துறை விருத்தம் போல அத்துணைச்சீர் ஏற்ற இழிவு உடையதன்று என்றற்கும் பிரித்துரைத்தார் என்க. (வஞ்சித்துறை) மைசிறந்தன மணிவரை ; கைசிறந்தன காந்தளும் ; பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய் -யா. வி. 23 மேற். -யா. கா. 34 மேற். — குறளடியால் பாவினம் வந்தது. (வஞ்சி விருத்தம்) சோலை ஆர்ந்த சுரத்திடை காலை யார்கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல உண்கணிவள் வாழுமே -யா. வி. 28 மேற். -யா. கா. 34 மேற். — சிந்தடியால் பாவினம் வந்தது. (கலி விருத்தம்) தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே -சூளாமணி 49. — அளவடியால் பாவினம் வந்தது. (கலிநிலைத்துறை) யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையு மெல்லாம் கரியன்றே -யா. வி. 28, 88, 94 மேற். -யா. கா. 33 மேற். -நெடிலடியால் பாவினம் வந்தது. (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்தே காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலப்பல நினைக்கின் றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே -அப்பர் தே. 4. 46 : 1. -அறுசீர்க் கழிநெடில் அடியால் பாவினம் வந்தது. எழுசீர் முதலாக ஏறிவரும் அடிகளுக்கு எடுத்துக் காட்டு இருபத்து நான்காம் நூற்பா உரைக்கண் காண்க. பாக்களின் அடிச்சிறுமை 29. ஒருதொடை ஈரடி வெண்பாச் சிறுமை ; இருதொடை மூன்றாம் அடியின் இழிந்து வருவன ஆசிரியம் இல்லென மொழிப ; வஞ்சியும் அப்பா வழக்கின ஆகும். -யா. வி. 32 மேற். -யா. கா. 14 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் பாக்களின் அடிச் சிறுமை இத்துணை எனக் கூறிற்று. (இ - ள்.) ஒரு தொடையால் அமைந்த ஈரடியே வெண் பாவின் சிற்றெல்லையாகும்; இரண்டு தொடைகளால் அமைந்த முன்றடியினும் குறைந்து ஆசிரியப்பாக்கள் வருதல் இன்றெனக் கூறுவர் ; அவ்வாறே வஞ்சிப்பாக்களும் மூன்றடியினும் குறைந்து வாராத மரபுடையன ஆகும் என்றவாறு. ஒருதொடை ஈரடி என்றார், இருதொடை நான்கடி ஆகாவோ எனின் ஆகா. இரு மரங்களுக்கு இடைவெளி ஒன்றாக, மும்மரங்களுக்கு இடைவெளி இரண்டாயினாற் போல. ஆக லின் அடி எண்ணிக்கை எத்துணையோ அத்துணையில் ஒன்று குறைந்தது தொடை என்க. முன்னே வரும் கலிப்பாவிற்கும் இஃதொக்கும். வெண்பா அகவல் கலிப்பாக்களின் அடிச் சிற்றெல்லை கூறிக் கலிப்பாவிற்கும் இவண் கூறாமல் தனி நூற்பா வமைத்தது ஏன் எனின், வெண்பா அகவல் வஞ்சி என்பன ஈரடி மூவடி சிற்றெல்லை உடையன ஆகலானும், ஒருசார் ஆசிரியர் வஞ்சிக்குச் சிற்றெல்லை இரண்டடி என்பராகலானும், ஆசிரியச் சுரிதகம் இரண்டடியான் வருவதும் உண்டு ஆகலானும், நான் கடியிற் குறைந்து கலிப்பா வாராது ஆகலானும் இவற்றின் விலக்கித் தனியே கூறினார் என்க. (குறள் வெண்பா) இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு -திருக் 987. - வெண்பா இரண்டடியான் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) நன்றே பாண கொண்கனது நட்பே தில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கெளவை யெழாஅக் காலே - ஐங்குறு 131. -அகவல் மூன்றடியான் வந்தது. (குறளடி வஞ்சிப்பா) செங்கண்மேதி கரும்புழக்கி அங்கண் நீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலும் செழுநீர் நல்வயல் கழனி ஊரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே - யா. வி. 15 மேற். -யா. கா. 15 மேற். — வஞ்சி மூன்றடியான் வந்தது. வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனும் நுண்பா உணர்ந்தோர் நுவலுங் காலை இரண்டும் மூன்றும் நான்கும் இரண்டும் திரண்ட அடியின் சிறுமைக் கெல்லை என்று இலக்கணம் கூறி, (சிந்தடி வஞ்சிப்பா) பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்கழல் பரவாதவர் வினைவெல்லார் அதனால் அறிவன தடியிணை பரவப் பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே -யா. வி. 93. என்று வஞ்சிக்கு எடுத்துக் காட்டுத் தந்தார் மயேச்சுரனார். இச் சிந்தடி வஞ்சிப்பாவினைக் குறளடி வஞ்சியாக்கி, (குறளடி வஞ்சிப்பா) பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்கழல் பரவாதவர் வினைவெல்லார் அதனால், அறிவன தடியிணை பரவப் பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே என அமைப்பினும் இழுக்கின்று என்க. கலிப்பாவின் அடிச்சிறுமை 30. நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே. -யா. வி. 32 மேற். -யா. கா. 14 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறாதொழிந்த கலிப்பாவின் அடிச்சிறுமை கூறிற்று. (இ - ள்.) நான்கு அடிகளினும் அவ்வடிகள் இணை தலால் ஆம் மூன்று தொடைகளினும் குறைந்து கலிப்பா வாராது என்றவாறு. நான்காம் அடியிற் றாழ்ந்து வாராது என்றோ, மூன்றாம் தொடையிற் றாழ்ந்து வாராது என்றோ கூறின் அமையுமாக நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் என இரட்டித் துரைக்க வேண்டியது என்னை எனின், எவ்வாற்றானும் கலிப்பா நான்கடியிற் சிறுமையாய் வாராது என்பதை வலியுறுத்தற் கென்க. தாழிசை, அம்போதரங்கம், சுரிதகம் முதலியவை நான் கடியிற் சிறுமையாய் வருமெனின் அவை உறுப்பாவனவே அன்றிப் பாவன்றாம். ஈண்டுப் பா என்றது உறுப்பின் ஈட்டத்தை உள்ளடக்கியதாம். கலிவிருத்தம், கலித்துறை, கட்டளைக் கலித்துறை ஆகிய எவையும் நான்கடியினும் குறைதல் இல்லை என்பதைச் சான்றோர் செய்யுட்களால் அறிக. (கலி விருத்தம்) நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே -அப்பர் தே. 5, 19 : 9. இக் கலிவிருத்தம் நான்கடியான் வந்தது. (கலித்துறை) மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும் தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும் தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும் சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும் -யா. வி. 88 மேற். இக் கலித்துறை நான்கடியான் வந்தது. (கட்டளைக் கலித்துறை) திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டோங்குதெய்வ மருவளர் மாலையோர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே -திருக்கோ. 1. இக் கட்டளைக் கலித்துறை நான்கடியான் வந்தது. கலிப்பா நான்கடியின் மிக்கு வருதலை எறித்தரு கதிர் தாங்கி எனவரும் பாவானும் (26 மேற்.) பிறவற்றானும் அறிக. ஈரடி வெண்பாச் சிறுமை ; மூவடி ஆசிரி யத்தொடு வஞ்சி ; எஞ்சிய தீரிரண் டடியே இழிபென மொழிப -யா. வி. 32. என்று பாக்களின் அடிச்சிறுமையை எடுத்தோதினார் ஆசிரியர் அமித சாகரனார். பாக்களின் அடிப்பெருமை 31. உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை இல்லென் றுரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே. -யா. வி. 32 மேற். -யா. கா. 14 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நால்வகைப் பாக்களுக்கும் உரிய அடிப்பெருமை இனைத்தெனக் கூறிற்று. (இ - ள்.) யாப்பியல் உணர்ந்த சான்றோர், பாப்புனைய விழைந்த புலவர் குறிப்பளவே பாவின் பெருமை அளவு என்று கூறுவதன்றிப் பாவின் பெருமை அளவு இத்துணையை என்று அறுதியிட்டுக் கூறுதல் இல்லை என்று உரைத்தனர் என்க. தொல்லிலக்கியங்களைக் கண்டு இத்துணை அடிப் பெருமையுடையது இப் பா என வரையறுத்துக் கூறுதல் ஒல்லுமாயினும், முக்காலத்துக்கும் ஒத்தியலும் வண்ணம், உரைப்போர் குறிப்பே பெருமை எனக் கூறினார். உரைப்போர் குறிப்பே பெருமை என உடன்பாட்டில் கூறாமல் எதிர்மறையில் கூறினார் ஒருசார் ஆசிரியர், அகவற் பாவின் பெருமை அளவு ஆயிரம் அடி என்றும், அகவற்பா வஞ்சிப்பா ஆகிய இருபாக்களின் பெருமை அளவு ஆயிரம் அடி என்றும் கூறினார் என்பதறிவித்தற்கு என்க. என்னை? ஆசிரியப் பாவின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் ; இழிவுமூன் றடியே -தொல். செய். 157 எனத் தொல்காப்பியனாரும், ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும் ; பெருமை ஆயிரம். -யா. வி. 32 மேற். என நற்றத்தனாரும், மூவடிச் சிறுமை ; பெருமை ஆயிரம் ஆகும் ஆசிரி யத்தின் அளவே -யா. வி. 32 மேற். எனச் சங்க யாப்புடையாரும், ஆயிரம் இறுதி மூவடி இழிபா ஆசிரியப் பாட்டின தடித்தொகை அறிப -யா. வி. 32 மேற். எனப் பல்காயனாரும் கூறினார். இனி ஆசிரியத்துடன் வஞ்சியும் ஆயிரம் அடிப் பெருமை யுடைய தென்பதை, ஐயிரு நூறடி ஆசிரியம் ; வஞ்சிச் செய்யுள் நடப்பினும் சிறப்பென மொழிப -யா. வி. 32 மேற். என்றார் மயேச்சுரர். வஞ்சி ஆசிரியம் என்றிரு பாட்டும் எஞ்சா மூவடி இழிபுயர் பாயிரம் -யா. வி. 32 மேற். என்றாரும் உளர் எனக் கொள்க. பாடுவோர் குறிப்பின் அளவே பாவின் பெருமையளவு என்று கூறியமையால் அன்றே, வள்ளலார், அருட்பெருஞ் சோதி அகவலை ஆயிரத்து ஐந்நூற்றுத் தொண்ணுற்றாறு அடிப் பெருமையாய் யாத்தார் என்க. அடிச் சிறுமையாவது அடிச் சிற்றெல்லை ; அடிப் பெருமையாவது அடிப் பேரெல்லை. அடி முடிந்தது. 6. தொடை தொடை இன்ன தென்பது 32. தொடையெனப் படுவ தடைவகை தெரியின் எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றின் நிரல்பட வந்த 1 நெறிமைத் தாகி அடியோ டடியிடை யாப்புற நிற்கு முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே -யா. வி. 33 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் அடியோடு அடி தொடுக்கப் பெறுவதால் ஆகும் தொடையின் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) தொடை என்று கூறப்படும் ஒன்று அமையும் வகையை ஆராய்ந்தால், எழுத்து சொல் பொருள் என்னும் இம் மூன்றும் ஓர் ஒழுங்குற அமைந்த அமைதியுடைய தாய், ஓர் அடியோடு மற்றோர் அடி கட்டுற்று நிற்கும் முடிவுடைய தாகும் என்று முற்றறிவினர் கூறுவர் என்றவாறு. அடியோடு அடி தொடுக்கப் பெறுதலின் தொடை என்பது காரணக் குறியாயிற்று. அடி இன்றேல் தொடை இன்றே; ஆதலால் அடியின்பின் தொடை வைக்கப் பெற்றது. அடியோடு அடி யாப்புற நிற்கும் முடிவினது தொடை எனின் அமையும் ; எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றின் நிரல்பட வந்த நெறிமைத் தாகி எனக் கூற வேண்டுவது இன்று எனின் வேண்டுவது இன்றியமையாதது என்க. என்னை? (குறள் வெண்பா) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 2 சிகர முதற்றே உலகு - திருக். 1. என்றும், (குறள் வெண்பா) தக்கார் தகவிலர் என்ப தவரவர் 1 மக்களாற் காணப் படும் - திருக். 114. என்றும் வள்ளுவப் பாக்களை மாற்றி யமைத்துச் சீரிய தொடையமைதி காணீர் என்று தமக்குத் தாமே செயற்கருஞ் செயலெனச் செம்மாந்தார் போலவும், பொருட்பொருத்தம் சிறிதும் தழுவாத போலி நடை காட்டித் தொடையிது காணீர், பாவிது காணீர் எனப் போன போக்கிற் பாடுவார் போலவும், உளராயின் அவர்க்கு அறிவுறுத்தி மொழிநலம் காத்தற்கு இது கூறவேண்டும் என்பது. இனி, எழுத்தால் தொடையாவனவும், சொல்லால் தொடையாவனவும், பொருளால் தொடையாவனவும் உள ஆகலின் அவற்றையெல்லாம் தழுவிக்கொள்ள வேண்டி இவ் வாறு கூறினார் என்றுமாம். எழுத்தால் தொடையாவன மோனை, எதுகை, அளபெடை என்பன ; எழுத்தாலும் சொல்லாலும் தொடையாவது இயைபு என்பது ; பொருளால் தொடையாவது முரண் என்பது. இவற்றின் இலக்கணமும் எடுத்துக் காட்டும் முன்னே கூறப் பெறும். தொடுக்கப் பெறுவது தொடை என்பது காரணக்குறி. பூத்தொடை போல்வது இப்பாத் தொடை என்க. இனி இடுப் பொடும் இணைக்கப்பெற்ற தொடை என்பதுவும், ஏவும் இடத் தொடும் தைக்கும் இடத்தொடும் தொடுக்கப்பெறும் அம்புத் தொடை என்பதுவும் அன்னவேயாம். தொடை எனப் படுவது என்றார் ; அவை யாவையோ னின், மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் ஐந்துமாம். ஐந்து தொடையும் எங்ஙனம் பாடற்கண் வரும் எனின், அடி, இணை, பொழிப்பு, ஒருஉ, கூழை, கீழ்க்கதுவாய், மேற் கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி எண்வகையாக வரும் என்க. என்னை? தொடையே அடியிரண் டியையத் தோன்றும் -யா. வி. 33. எனவும், மோனை எதுகை முரணியை பளபெடை பாதம் இணையே பொழிப்போ டொரூஉத்தொடை கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணுமார் அவையே -யா. வி. 34. எனவும் கூறினார் ஆகலின். இனித் தொடைகளைக் கூட்டி உரைக்குமாறு : அடிமோனை, இணைமோனை, பொழிப்புமானை, ஒரூஉ மோனை, கூழைமோனை, மேற்கதுவாய்மோனை, கீழ்க் கதுவாய்மோனை, முற்றுமோனை. -மோனையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு. அடிஎதுகை, இணையெதுகை, பொழிப்புஎதுகை, ஒரூஉ எதுகை, கூழைஎதுகை, மேற்கதுவாய்எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றுஎதுகை -எதுகையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு. அடிமுரண், இணைமுரண், பொழிப்புமுரண், ஒரூஉ முரண், கூழைமுரண், மேற்கதுவாய்முரண், கீழக்கதுவாய்முரண், முற்று முரண் -முரணுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு. அடிஇயைபு, இணைஇயைபு, பொழிப்புஇயைபு, ஒரூஉ இயைபு, கூழைஇயைபு, மேற்கதுவாய்இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்றுஇயைபு. -இயைபுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு. அடிஅளபெடை, இணைஅளபெடை, பொழிப்புஅள பெடை, ஒரூஉஅளபெடை, கூழைஅளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, மேற்கதுவாய்அளபெடை, முற்றுஅளபெடை -அளபெடையுடன் எட்டையும் கூட்டி வழங்கியவாறு. மோனை முதலியவை, அடிமுதற்சீர் முதலாக எண்ணப் பெறுவன. இயைபு ஒன்றும் இறுவாய் முதலாக எண்ணப் பெறும். என்னெனின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகலானும், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் நெறி ஆகலானும் என்க. இவற்றுக்கு எடுத்துக் காட்டுத் தத்தம் இலக்கணம் உணர்த்துமிடத்துக் கூறுதும். அடிமோனை அடியெதுகைத் தொடைகள் 33. முதலெழுத் தொன்றி முடிவது மோனை ; ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே ; உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் நெறிப்பட வந்தன நேரப் படுமே. -1யா. வி. 37 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் அடிமோனை அடி யெதுகைத் தொடைகளின் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி முடிவது அடிமோனைத் தொடை எனப்பெறும் ; முதல் எழுத்துக்கு அயல் எழுத்தாகிய இரண்டாம் எழுத்து ஒன்றி முடிவது அடி எதுகைத் தொடை எனப்பெறும் ; ஓர் எழுத்தின் வருக்கமும் இனமும் அப்பகுதிப்பட்ட பிறவும் ஓர் ஒழுங்குபெற வந்தன வாயினும் மோனை என்றும் எதுகை என்றும் கொள்ளப் பெறும் என்றவாறு. முதல் எழுத்து என்றது அடிதோறும் வரும் முதற்சீரின் முதல் எழுத்தை. ஏனையது என்றது அம் முதல் அல்லாத மற்றொன்றை. அஃது இரண்டாம் எழுத்து. தொடை என்பதை மோனையொடும் கூட்டியுரைக்க. உறுப்பாவது எழுத்து ; இனி மெய் என்றுமாம். உறுப்பின் ஒன்றின் விகற்பம் என்றது ஓர் எழுத்தின் வருக்கத்தையும் இனத்தையும் என்க அப்பால் ஆவது அப்பகுதி. இஃதிப் பொருட்டதா தலை, அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப -தொல். நூன். 3. என்னும் தொல்காப்பிய நூற்பாவின்கண் காண்க. உறுப்பின் ஒன்றின் விகற்பம் என்றமையால் வருக்க மோனை, இனமோனை, வருக்கஎதுகை, இனஎதுகை என்பன வற்றைக் குறித்தார் என்க. அப்பால் நெறிப்பட வந்தன என்றமையால் மோனையுள் நெடில்மோனை, விட்டிசைமோனை, தலையாகுமோனை, இடையாகுமோனை, கடையாகுமோனை ஆகியவையும், எதுகையுள் நெடிலெதுகை, விட்டிசை எதுகை, உயிர் ஒன்றிய எதுகை, தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை, இடையிட்டெதுகை, இரண்டடி எதுகை, மூன்றாம் எழுத்தெதுகை ஆகியவையும் கொள்க. இனி ஆசிடை எதுகை என ஒன்று கூறுவர் அன்றே ; அப்பால் நெறிப்பட வந்தன வற்றொடு இயைக்காது விலக்கியது என்னெனின், அஃது எதுகையன்று. எதுகைக்கு இடையே முதலெழுத்தை ஒன்றி வந்த ஆசு எழுத்து. அஃது இடையே வந்தமையால் ஆசிடை எதுகை எனப் பெயர் பெற்றது ஆகலின் அன்றே அதனை எதுகையுடன் எண்ணாமலும், விதப்பினால் கொள்ள ஏவாமலும் தனித்ததொரு நூற்பாவான் ஆசிரியர் அதன் இலக்கணம் கூறினார். அதனை முன்னே காண்க. முதலெழுத்தே வரின் என்னாது முதலெழுத்து ஒன்றி முடிவது என்றமையால் இனமும் கொள்க. என்னை? அ ஆ ஐஔ என்றிவை எனாஅ இஈ எஏ என்றிவை எனாஅ உஊ ஒஓ என்றிவை எனாஅத் தசமவ ஞந வெனும் என்றிவை எனாஅ முந்நா லுயிரும் மூவிரு மெய்யும் தம்முள் மயங்கினும் தவறின் றென்ப -(நல்லாறனார்) யா. வி. 53. என்றார் ஆகலின். அகரமும் ஆகாரமும் ஐகாரமும் ஔகாரமும் தம்முள் இனமாம் ; இகரமும் ஈகாரமும் எகரமும் ஏகாரமும் தம்முள் இனமாம் ; உகரமும் ஊகாரமும் ஒகரமும் ஓகாரமும் தம்முள் இனமாம். இவ்வாறே இவ்வுயிர்மெய்க்கும் இணைத்துக் கொள்க. மெய்களுள், சகர தகரம் தம்முள் இனமாம் ; ஞகர நகரம் தம்முள் இனமாம் ; வகர மகரம் தம்முள் இனமாம். அனு எனினும் இனம் எனினும் ஒக்கும். ஏனைய தொன்றல், உறுப்பின் ஒன்றின் விகற்பம், அப் பால் வந்தன எதுகை என்று கூறாமல் பிரித்து வைத்தும், விகற்பமும் என உம்மை தந்தும், பக்குவிடக் கூறிய தென்னை எனின், ஒன்றின் ஒன்று அத்துணைச் சிறப்பு இன்றாம் என்பதற்கு அவ்வாறு கூறினார் என்க. முதலெழுத் தொன்றின் என்று கூறியாங்கு இரண்டாம் எழுத்தொன்றின் என்ற கூறுதல் தெளிவு அன்றோ எனின் ஒக்கும்; ஆயின் இரண்டாம் எழுத்து ஒன்றுதல் ஒன்றுமே அன்றோ அது சுட்டும் ; முதலெழுத்து அளவால் ஒத்து இரண்டாம் எழுத்து ஒன்றி நிற்றைலைச் சுட்டாதன்றே; அதனால் அதனையும் தழுவி ஏனை எழுத்தென்றதே தகவு என்க. முதலெழுத்து அளவால் ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றுமாறு என்னை எனின், பாட்டு என்பதற்குக் காட்டு என்பது எதுகையாகுமே அன்றிப் பட்டு என்பது எதுகை ஆகாது. அவ் வாறே பட்டு என்பதற்கக் கட்டு என்பது எதுகை ஆகுமே அன்றிக் காட்டு என்பது எதுகையாகாது. குறிலாயின் குறிலும், நெடி லாயின் நெடிலும் முதல் எழுத்தாக அமைந்து, இரண்டாம் எழுத்து ஒன்றுதலே எதுகை என்பது கொள்க. என்னை? முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை அதன்வழி இயையவும் பெறுமே -யா வி. 36 மேற். என்றும், முதலெழுத் தொன்றுவ மோனை; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப -யா. வி. 36 மேற். என்றும் பல்காயனார் பகர்ந்தார் ஆகலின். எடுத்துக் காட்டு வருமாறு : மோனைத் தொடை. (நேரிசை ஆசிரியப்பா) மாவும் புள்ளம் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப மாலை தொடுத்த கோதையும் கமழ மாலை வந்த வாடை மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே -யா. வி. 35 மேற். -யா. கா. 18 மேற். இதில் அடிமோனைத் தொடை வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) பகலேபல் பூங்கானல் கிள்ளை ஓப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப் பின்னுப் பிணிஅவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படத் திருத்திப் புனையீர் ஓதி செய்குறி நசைஇப் பூந்தார் மார்ப புனத்துட் டோன்றிப் பெருவரை அடுக்கத் தொருவேல் ஏந்திப் பேயும் அறியா மாவழங்கு பெருங்காட்டுப் பைங்கண் உழுவைப் படுபகை வெரீஇப் பொருதுசினந் தணிந்த பூநுதல் ஒருத்தல் போகாது வழங்கும் ஆரிருள் நடுநாள் பௌவத் தன்ன பாயிருள் நீந்தி இப்பொழுது வருகுவை யாயின் நற்றார் மார்ப தீண்டலெம் கதுப்பே -யா.வி. 36 மேற். -யா. கா. 41 மேற். இதில் பகர வருக்க மோனை வந்தது. இவ்வாற அறஞ்செய விரும்பு என்பது முதலாகவும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது முதலாகவும் வரும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆயவை வருக்க மோனையான் அமைந்தவை என்க. (நேரிசை வெண்பா) கயலேர் உண்கண் கலுழ நாளும் சுடர்புரை திருநுதல் பசலை பாயத் திருந்திழை அமைத்தோள் அரும்படர் உழப்பப் போகல் வாழி ஐய ! பூத்த கொழுங்கொடி அணிமலர் தயங்கப் பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே -யா. வி. 36 மேற். இதனுள் எல்லா அடிகளின் முதற்சீர் முதல் எழுத்துக்களும் வல்லினமாக வந்தமையால் வல்லினமோனை. இது கையகனார் காட்டிய பாட்டு என்பார் யாப்பருங்கல விருத்தியுடையார் (36). (நேரிசை ஆசிரியப்பா) ஞயம்பட உரைக்கும் நாவினர் என்றும் நலிதுயர்க் காட்பட லின்றி மாண்பயன் எய்தி வாழ்குவர் இனிதே -இ. கு. இதனுள் எல்லா அடிகளின் முதற்சீர் முதல் எழுத்துக்களும், மெல்லினமாக வந்தமையால் மெல்லின மோனை. (குறள் வெண்பா) வாழைக் கழகு வளமுற நீள்குலை; யாழுக் கழகிசை யாம் -இ. கு. இதனுள் ஈரடிகளின் முதற்சீர் முதல் எழுத்துக்கள் இடையினமாக வந்தமையால் இடையின மோனையாம். வல்லினமோனைக்கு ஐந்து எழுத்துக்கள் அமைந்த பாட்டைக் காட்டினாராக, மெல்லினத்திற்கு மூன்று எழுத்துக்களாலும், இடையினத்திற்கு இரண்டு எழுத்துக்களாலும் சான்று காட்டிய தென்னை எனின், மெல்லினத்துள் ஞ, ந, ம என்னம் மூன்றும், இடையினத்துள் ய, வ என்னும் இரண்டும் அல்லா வெழுத்துக்கள் மொழி முதலாக வாரா ஆகலின் இவ்வாறு காட்டினாம் என்க. இனி, ங கரம் மொழி முதல் வாராதோ எனின் ஙனம் என்னும் ஓரிடத்தன்றி வாராதாகலின் விடுத்தாம். (குறள்வெண் செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை -முதுமொழிக் காஞ்சி 1. இம் முதுமொழிக் காஞ்சி நெடில் என்னும் அளவொப்புமை ஒன்றே கொண்டு முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி நின்றமையால் நெடில் மோனை ஆயிற்று. (குறள் வெண்பா) அ அவனும் இ இவனும் உ உவனும் கூடியக்கால் எ எவனை வெல்லார் இகல் -யா. வி. 7 மேற். இதனுள் ஈரடிகளிலும் முதற்சீர் முதல் எழுத்து விட்டிசைத்து நிற்றலால் விட்டிசை அடிமோனை யாயிற்று. விட்டிசைச் சீர் மோனையும் இதன்கண் உளவாதல் அறிக. (குறள் வெண்பா) சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு -திருக். 267. இதனுள் அடி முதலெழுத்துடன் பல எழுத்துக்களும் ஒன்றி வருதலால் தலையாகு மோனை யாயிற்று. மாவும் புள்ளும் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப என்னும் செய்யுள், முதல் எழுத்து ஒன்றுமே ஒன்றி வருதலால் இடையாகுமோனை யாயிற்று. பகலேபல் பூங்கானல் கிள்ளை ஓப்பிபும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ என்னும் செய்யுள், முதல் எழுத்துப் பகரமாக அவ்வெழுத்து வாராமல் அதன் வருக்கம் வருதலால் கடையாகு மோனை ஆயிற்று. இனி எதுகைக்குச் சொல்லுமாறு : (குறள் வெண்பா) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் -திருக். 2 இதில் அடியெதுகை வந்தது. (குறள் வெண்பா) நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு -திருக். 791. இதில் டகர வருக்க எதுகை வந்தது. (குறள் வெண்பா) தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும் -திருக். 114. இதில் வல்லின எதுகை வந்தது. (குறள் வெண்பா) அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு -திருக். 74. இதில் மெல்லின எதுகை வந்தது. (குறள் வெண்பா) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு -திருக். 299. இதில் இடையின எதுகை வந்தது. (வெளி விருத்தம்) ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார்-ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார்-ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார்-ஒருசாரார் ஏகீர் நாகீர் என்செய்தும் என்றார்-ஒருசாரார். -யா. வி. 37 மேற். -யா. கா. 27, 41. மேற். இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை யாயிற்று. (குறள் வெண்பா) பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை நொஅலையல் நின்னாட்டை நீ -யா. வி. 53 மேற். -யா. கா. 41 மேற். இதில் வல்லொற்று அடுத்தாற்போல, விட்டிசைத்த குற் றெழுத்தினொடு புணர்ந்தமையால், விட்டிசை வல்லொற்று எதுகையாயிற்று. (நேரிசை ஆசிரியப்பா) துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள் அணிகிளர் தாரோய் அருஞ்சுரம் நீந்தி வடியமை எஃகம் வலவயின் ஏந்தித் தனியே வருதி நீ எனின் மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே -யா. வி. 36 மேற். -யா. கா. 41 மேற். இதில் இரண்டாம் எழுத்து ஒன்றாது அதன்மேல் ஏறிய உயிர் ஒன்றியமையால், உயிர் ஒன்று எதுகையாயிற்று. (குறள் வெண்பா) மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு -திருக். 800. இதில் சீர் முழுதும் ஒன்றி வந்தமையால் தலையாகு எதுகை. (குறள் வெண்பா) எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து -திருக். 125. இதில் இரண்டாம் எழுத்து ஒன்றுமே ஒன்றி வந்தமையால் இடையாகு எதுகை. (குறள் வெண்பா) செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத் திற கேமாப்புடைத்து -திருக்.112. இதில் இரண்டாம் எழுத்து அதன் இனத்தொடும் ஒன்றி வந்தமையால் கடையாகு எதுகை. (நேரிசை ஆசிரியப்பா) தோடார் எவ்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் கலுழ வாடா அவ்வரி வகைஇப் பசலையும் வைகல் தோறும் பைப்பயப் பெருகலின் நீடார் இவணென நீள்மணங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவம் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே -யா. வி. 37 மேற். -யா. கா. 41 மேற். இதில் அடி இடையிட்டு எதுகை வந்தது. (கலி விருத்தம்) உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான் - வளையாபதி. இவ் வளையாபதிப் பாட்டும், (கலி விருத்தம்) பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதன எலிமயிர்ப் போர்வைவைத் தெழினி வாங்கினார் ஒலிமயிர்ச் சிகழிகை உருவக் கொம்பனார் -சிந்தா. 2471. இச் சிந்தாமணிப் பாட்டும் இரண்டடி எதுமையாய் வந்தன. (குறள் வெண்பா) பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் - திருக் 292. (குறள் வெண்பா) பவழமும் பொன்னும் குவைஇய முத்தின் திகழரும் பீன்றன புன்னை -யா. வி. 36 மேற். -யா. கா. 41 மேற். இவை மூன்றாம் எழுத்து ஒன்றிவந்தமையால் மூன்றா மெழுத் தொன்று எதுகை யாயின. நெறிப்படவந்த என்னும் விதப்பால் மோனை எதுகைகளில் பிறவாறு வருவனவும் உண்டாயின் சான்றோர் செய்யுளை நோக்கிக் கொள்க. எதுகைக்கு மேலும் ஒரு சிறப்புவிதி 34. யரலழ என்னும் ஈரிரண் டொற்றும் வரன்முறை பிறழ்ந்து வந்திடை உயிர்ப்பினஃ தாசிடை எதுகையென் றறிந்தனர் கொளலே. -1யா. வி. 37 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் எதுகையுள் ஆசிடை எதுகையு முண்டென்று காட்டி அதன் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) ய, ர, ல, ழ என்னும் நான்கு புள்ளி எழுத்துக்களும் தாம் எதுகையாக நிற்கும் இடத்தல்லாமல் முறை பிறழ்ந்து மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே நிற்பின் அஃது ஆசிடை எதுகை என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்றவாறு. ஆசிடை எதுகையை மேலே நூற்பாவுடன் இணைக்காமல் தனித்துக் கூறியதற்குக் காரணம் ஆண்டுக் காட்டினாம். மற்றும், மோனை எதுகை இரண்டற்கும் பொதுவாய் அமைந்த இலக்கணம் ஆங்கு இரட்டுறலாகக் கூறப் பெற்றது. ஈண்டுக் கூறியது எதுகை ஒன்றற்குமேயாம். ஆதலால் தனித்துக் கூறவேண்டும் என்பதுவும் ஒன்று. ஆசு என்பது பற்றுக்கோடு. ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ (235) என்னும் புறப்பாடலால் ஆசு இப்பொருட்ட தாதல் அறிக. இவண் பொது விதிக்கு முரணாகப் பற்றிக் கொண்டு வரும் எழுத்தைக் குறித்து நின்றது. இனிப் பொற் கொல்லர் பயன் படுத்தும் பற்றாசு போன்றதோர் எழுத்து என்றுமாம். ய, ர, ல, ழ என்னும் எழுத்துக்கள் எதுகையாய் அமைந்த இரண்டாம் எழுத்துக்கள் அல்ல என்பாராய் வரன்முறை பிறழ்ந்து என்றார். இடை என்றது மோனைக்கும் எதுகைக்கும் இடை என்பது குறித்து நின்றது. அவ்வெழுத்துக்களும் எழுத் தளவாய் நின்று ஒலியாவோ எனின் அற்றன்று ஒலிக்கும் என்பாராய் உயிர்ப்பின் என்றார். (கலித்துறை) காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே -சீவக. 31. இது யகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை. (கலி விருத்தம்) மாக்கொடி மாணையு மவ்வற் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்னின் ஞாழலும் தூக்கொடி கமழ்ந்துதான் துறக்கம் ஒத்ததே -சூளாமணி 35. இது ரகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை. (குறள்வெண் செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை -முதுமொழிக். 1. என்பதுவும் அது. (நேரிசை வெண்பா) ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்-பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு -நாலடி. 118. இது லகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை. (நேரிசை வெண்பா) அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம் மந்தரமே போலும் மனைவாழ்க்கை-மந்தரத்துள் வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாணாளும் போகின்ற பூளையே போன்று -யா. வி. 37 மேற். -யா. கா. 41. மேற். இது ழகர ஒற்று இடைவந்த ஆசிடை எதுகை. (கலி விருத்தம்) சாந்துமெழு கிட்டதட மாமணி நிலத்தைச் சேர்ந்துதிகழ் பொன்னியல் சலாகைநுதி தீட்டிப் பேர்ந்துமொரு கால்விரையி னான்மெழுகு வித்தான் ஆய்ந்தமறை ஓதியத னாரிட மறிந்தான். -சூளாமணி 1095. இது ரகர யகர ஒற்றுக்கள் இடைவந்த ஆசிடை எதுகை. (நேரிசை வெண்பா) நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனை உள்ளத்தால் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ் இவ் வெண்பாவில் வந்த ரகர ஒற்ற ஆசிடை எதுகையாமோ எனின் அன்று ; ஆசிடை என்பது மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே வருவது. இஃது எதுகையாகவே வந்த எழுத்து ஆகலின் அன்ன தன்று என்க. பிறவும் இவ்வாறே கொள்க. முரண் தொடை 35. மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின் இரணத் தொடையென் றெய்தும் பெயரே. -யா. கா. 40 மேற். -யா. வி. 38. இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே முரண் தொடை இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) அடிதோறும் மொழியாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுக்கப் படின் அது முரண்தொடை என் னும் பெயர் பெறும் என்றவாறு. இரணத்தொடை யாவது பகைத்தொடை ; பகைத் தொடை எனினும் முரண்தொடை எனினும் ஒக்கும். மொழியினும் பொருளினும் என்றார் மொழியால் முரண் தொடையும், பொருளால் முரண்தொடையும், மொழியும் பொருளும் முரண்தொடையும் எனக் கொள்க. மொழியாவது சொல். மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே என்று ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறே இலக்கணம் கூறினார். இதனை ஆசிரிய மொழியாக மேற்கொண்டு யாப் பருங்கலம் உடையார் கூறினார். முரண்தொடையை அணியின் பாற்படுத்து விரோத அணி என்பார் அலங்கார முடையார். இனி மொழியினும் பொருளினும் முரணுதல் என்பதைச் சொல்லும் சொல்லும் முரணுதல், பொருளும் பொருளும் முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முர ணுதல் என ஐந்தாக்கியும் கூறுவர் (தொல். பேரா.) (எ - டு.) (நேரிசை ஆசிரியப்பா) செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற் பசும்புண் வார்ந்த அசும்புடைக் குருதியொடு வெள்விளி பயிற்றும் நாடன் உழையன் ஆகவும் விழையுமென் நெஞ்சே -தொல். செய். 95 பேரா. மேற். -யா. வி. 38 மேற். இது சொல்லும் சொல்லும் முரணியது. செம்மை, கருமை, பசுமை, வெண்மை, என்பவற்றில் வண்ணம் இல்லை; நேர்மை, வன்மை, ஆறாமை, அறிவின்மை என்னும் பொருள் தரும் சொற்களே நின்றன. (நேரிசை ஆசிரியப்பா) தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து நீர்நசை பெறாஅ நெடுநல் யானை வானதிர் தழங்குகுரல் மடங்கல் ஆனாது நிலஞ்சேர்பு முயங்கு புலஞ்சேர்ந் தந்தி நிலவென விளக்கு நிரைவளைப் பணைத்தோள் இருளேர் ஐம்பால் ஒழியப் பொருள்புரிந் தகறல் புரைவதோ அன்றே -யா. வி. 38 மேற். இது பொருளும் பொருளும் முரணியது. தீ என்னும் பொருள் நீர் என்னும் பொருளொடும், வான் என்னும் பொருள் நிலம் என்னும் பொருளொடும், நிலவு என்னும் பொருள் இருள் என்னும் பொருளொடும் முரணி நின்றன. (நேரிசை ஆசிரியப்பா) பெருமலைக் குறுமகள் பிறிதோர்த்து நடுங்கலிற் சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு நெடுநீர்ப் பொய்கைக் குறுநர் தந்த தண்பனி அவிழ்மலர் நாணுநின் கண்பனி துடைமார் வந்தனர் நமரே -யா. வி. 38 மேற். இது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது. பெருமலை என்னுமிடத்துப் பெருமை என்னும் சொல்லும் உண்டு ; மலை பெரிது என்னும் பொருளும் உண்டு. நெடுநீர் என்னுமிடத்து நெடுமை என்னும் சொல்லும் உண்டு. நீர் நெடிது என்னும் பொருளும் உண்டு. ஆனால் குறுநர் என்னும் இடத்துக் குறிது என்னும் சொல்லுண்டு ; குறும் பொருள் இல்லை. (நேரிசை ஆசிரியப்பா) செந்தீ அன்ன சினத்த யானை நீர்நசை பெறாஅக் கானல் தேர்நசைஇ ஓடும் சுரனிறந் தனரே -யா. வி. 38 மேற். இது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. செந்தீ என்னுமிடத்துச் செம்மையும் உண்டு ; தீயிற் செய்யது என்னும் சொல்லும் உண்டு. நீர் நசை பெறாஅ என்பதில் சொல் இல்லை; பொருள் முரணியது. (நேரிசை ஆசிரியப்பா) ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி செங்குரல் ஏனல் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை நல்லன் என்றும் யாமே தீயன் என்னுமென் தடமென் றோளே -யா. வி. 38 மேற். இது சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியது. செங்குரல் என்பதில் செம்மை என்னும் சொல்லும் உண்டு. செந்நிறக் கதிர் என்னும் பொருளும் உண்டு. பசுங்கிளி என்பதில் பசுமை என்னும் சொல்லும் உண்டு. பசுமை நிறக் கிளி என்னும் பொருளும் உண்டு. ஓங்குமலை என்பதில் ஓங்குதல் என்னும் சொல்லும் உண்டு. ஓங்கியமலை என்னும் பொருளும் உண்டு. தாழ்ந்திலங் கருவி என்பதில் தாழ்தல் என்னும் சொல்லும் உண்டு. தாழும் அருவி என்னும் பொருளும் உண்டு. ஆதலால் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணின. (நேரிசை ஆசிரியப்பா) இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில் நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன நுண்டா திறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே -யா. வி. 38 மேற். -யா. கா. 18 மேற். இஃது அடிதோறும் முரண்படத் தொடுத்தமையால் அடி முரண். இவை யாப்பருங்கல விருத்தியுடையார் காட்டியவை. முரண்தொடை என்னாது இரணத்தொடை என்று வேறொரு பெயரால் குறித்த விதப்பினால் ஒருசாரார் கடை இணை முரண், பின்முரண், இடைப்புணர் முரண் எனக் கூறு வனற்றையும் கொள்க. என்னை? கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென இவையும் கூறுப ஒருசா ரோரே என்றார் ஆகலின். இவற்றுள் கடையிணை முரணாவது கடை இருசீரும் முரணமையத் தொடுக்கப் பெறுவது. பின்முரணாவது கடைச் சீரும் இரண்டாம் சீரும் முரணமையத் தொடுக்கப் பெறுவது. இடைப்புணர் முரணாவது இடை இருசீரும் முரணமையத் தொடுக்கப் பெறுவது. (நேரிசை ஆசிரியப்பா) மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம் தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான் தேரோ காணலம் காண்டும் பீரேர் வண்ணமும் சிறுநுதல் பெரிதே -யா. வி. 39 மேற். -யா. கா. 40 மேற். இது கடையிணை முரண். (நேரிசை ஆசிரியப்பா) சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமியம் இருந்தன மாக நின்றுதன் நலனுடைப் பணிமொழி நன்குபல புகழ்ந்து வீங்குதொடிப் பணைத்தோள் நெகிழத் துறந்தோன் நல்லனெம் மேனியோ தீதே -யா. வி. 39 மேற். -யா. கா. 40 மேற். இது பின் முரண். (நிலைமண்டில ஆசிரியப்பா) போதவிழ் குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையிற் றாழ்ந்த ஓங்கு வெள்ளருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் பெருமலைச் சீறூர் இழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின இனியோர் மாட்டே -யா. வி. 39 மேற். -யா. கா. 40 மேற். இஃது இடைப்புணர் முரண். இது கையகனார் காட்டிய பாட்டு. இனி, ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்ப தனால் கடைச்சீர் மூன்றும் முரணுறத் தொடுக்கப் பெறுவதைக் கூழை முரண் எனக் கொள்க. (நேரிசை வெண்பா) (எ - டு.) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளும் அணங்குமால் எம்மே -தமிழ்நெறி விளக்கம் 16 மேற். -களவியற் காரிகை 28 மேற். கடையிணை முதலியவற்றை மோனை, எதுகை, இயைபு, அள பெடை ஆகியவற்றுக்கும் கொள்வர். அவற்றின் விரிவையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க. இயைபுத்தொடை 36. இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. 1இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயைபுத் தொடையின் இலக்கணம் இன்னதெனக் கூறிற்று. (இ - ள்.) அடிதோறும் இறுதி ஒன்றி நிற்றல் அடி இயைபுத் தொடையின் இலக்கணம் என்றவாறு. இறுவாய் ஒன்றல் எனப் பொதுவாகக் கூறினாலும் எழுத்து ஒன்றுதல் சொல் ஒன்றுதல் ஆகிய இரண்டையும் கொள்க. அது கருதியே இயைபு என்னாராய் இயைபின் யாப்பே என்றார் என்க. அவரோ வாரார் கார்வந் தன்றே கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே -குறுந்தொகை 221. இஃது எழுத்தியைபு. (நேரிசை ஆசிரியப்பா) இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே அரிமதர் மழைக்கணும் அணங்கே திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே -யா. வி. 40 மேற். -யா. கா. 18 மேற். இது சொல்லியைபு. முதல் ஒன்றுதல் மோனை என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றுதல் எதுகை என்றும் கூறினார் ; இறுவாய் ஒன்றல் இயைபு என்றமையால், இயைபு என்பது இறுதியையே முதலாகக் கொண்டு எண்ணப் பெறுவது என்பது தெளிவாம். அல்லாக் கால் முன்னே இணைஇயைபு, கூழைஇயைபு முதலாகக் கூறுவன வெல்லாம் பொருந்தாவாய் அமையும். இயைபு என்பது காரணக்குறி. இயைதல், ஒன்றல், இணைதல் என்பன ஒரு பொருள். இயைபினை, இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே -யா. வி. 40. என்றார் அமிதசாகனார். அளபெடைத்தொடை 37. சொல்லிசை அளபெழ நிற்பதை அளபெடை. 1 இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் அளபெடைத்தொடை யாமாறு கூறிற்று. (இ - ள்.) அடிதோறும் மாத்திரை அளபெடுத்து நிற்பது அளபெடைத்தொடை என்று கூறப்பெறும் என்றவாறு. சொல்லிசை யாவது, சொல்லின் மாத்திரை. எழுத்தின் மாத்திரை மிகுதியே அளபெடையாய் அமையுமாகச் சொல்லின் என்றது என்னை எனின் உயிர் அளபெடை தனியே வருவதுடன் சொல்லின், முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களினும் வருதல் உண்மையானும் ஒற்றளபெடை சொல்லின் இடை, கடை ஆகிய ஈரிடங்களிலும் வருதல் உண்மையானும் மயக்கற உணர்த்துதற்குச் சொல்லிசை என்றார். அளபெழ எனப் பொதுவாகக் கூறியது, உயிரளபெடை, ஒற்றளபெடை என்னும் இரண்டையும் தழுவிக் கொள்ளுதற்கு என்க. (குறள் வெண்பா) ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தா அ மிதற்பட் டது -திருக். 1176. இது தனிநிலை அளபெடை. (குறள் வெண்பா) காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான் ஆஅழி ஏந்தல் அவன் -யா வி. 41, 95 மேற். இது முதல்நிலை அளபெடை. (குறள் வெண்பா) உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ விராஅய கோதை விளர்ப்பு -யா. வி. 41 மேற். இஃதிடைநிலை அளபெடை. (குறள் வெண்பா) கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் -திருக். 1087. இஃதிறுதிநிலை அளபெடை. இவை உயிரளபெடை ; ஒற்றளபெடைக்கு வருமாறு : (குறள் வெண்பா) வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை பரிது -யா. வி. 41 மேற். இஃது இடைநிலை ஒற்றளபெடை. (குறள் வெண்பா) உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில் -யா. வி. 41 மேற். இஃது இறுதிநிலை ஒற்றளபெடை. (பஃறொடை வெண்பா) ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோ டீஇர் இரையுங்கொண் டீரளைப் பள்ளியுள் தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன் தோள் மேஎ வலைப்பட்ட நம்போல் நறு நுதால் ஓஒ உழக்கும் துயர். -யா. வி. 41 மேற். -யா. கா. 18 மேற். இஃது அடிதோறும் முதற் சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வந்தமையால் அடி அளபெடைத் தொடை. மோனை அளபெடை, எதுகை அளபெடை, முரண் அளபெடை, மயக்க அளபெடை, செவ்வளபெடை முதலியவாக அளபெடைத் தொடைகளைக் கூறுவாரும் உளர். அவை வரும் வழிக் கண்டுகொள்க. அளபெடைத் தொடையை ஈற்றில் வைத்தார், மோனை முதலியன போலப் பெருவரவிற்று அன்று என்றும், அத்துணைச் சிறப்பின்று என்றும் அறிவித்தற்கு என்க. இதனால் அன்றே ஆசிரியர் தொல்காப்பியனாரும், மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப -தொல். செய். 87. என்று கூறி, அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும் -தொல். செய். 88 எனப் பகுத்துக் கூறினார் என்க. இணைத்தொடை 38. 1இரண்டாம் சீர்வரின் இணையெனப் படுமே. இவ் வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மோனை முதலிய ஐந்தொடைகளும் சீர்த் தொடையாக வருங்கால் இணை, பொழிப்பு, ஒருஉ, கீழ்க்கதுவாய், மேற்கதுவாய், கூழை, முற்று என்னும் விகற்பங்களைப் பெறும் என்பது கூறுவான் தொடங்கி நிறுத்த முறையே இணை என்பதன் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) முதற் சீருடன் இரண்டாம் சீர்க்கண்ணும் மோனை முதலிய தொடுக்கப் பெறுமாயின் அஃது இணை என்று கூறப் பெறும் என்றவாறு. அடிமோனை முதலியன முதற்சீர் கொண்டு எண்ணப் பெற்றன வாகலின் அம் முதற் சீருடன் இரண்டாம்சீர் இணைந்து வரின் என்பது கொண்டாம். இணை என்பதை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்து தொடைகளுக்கும் கொள்க. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. இணைதலால் இணை என்பது காரணக்குறி. இணை யசை என்று இவ்வாசிரியர் கொண்டதும் அறிக. இரண்டாம்சீர் வரின் என்றது, முதற் சீர்க்கண் வந்தாற் போல இரண்டாம் சீர்க்கண்ணும் வருதல் என்னும் பொருள் தந்தது. இவ்வாறே பிறரும், இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே என்றார். (எ - டு.) (குறள் வெண்பா) ஈத்துவக்கம் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் -திருக். 228. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) தண்ணறுந் தகரம் நீவிய கூந்தல் தாதார் தண்போ தட்டுபு முடித்த தயங்குமணித் தளர்நடைப் புதல்வர் தாயொடும் தம்மனைத் தமரொடும் கெழீஇத் தனிநிலைத் தலைமையொடு பெருங்குறை வின்றே -யா. வி. 42 மேற். என்றும் இணைமோனை வந்தது. (குறள் வெண்பா) கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் -திருக். 1293. என்றும், (இன்னிசை வெண்பா) கல்லிவர் முல்லைக் கணவண்டு வாய்திறப்பப் பல்கதிரோன் செல்லும் பகல்நீங் கிருள்மாலை மெல்லியலாய் மெல்லப் படர்ந்த திதுவன்றோ சொல்லியலார் சொல்லிய போழ்து -யா. வி. 42 மேற். என்றும் இணை எதுகை வந்தது. (குறள் வெண்பா) ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு -திருக். 1269. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) கருங்கால் வெண்குருகு கனைதுயில் மடியும் இடுகுதுறை அகன்கழி இனமீன் மாந்தி ஒடுங்கிருங் குனிகோட் டிருஞ்சினை உறையும் தண்டுறை வெஞ்செலல் மான்றேர்ச் சேர்ப்பன் பகல்கழீஇ எவ்வம் தீரக் கங்குல் யாமத்து வந்துநின் றனனே. -யா. வி. 42 மேற். என்றும் இணைமுரண் வந்தது. (குறள் வெண்பா) வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு -திருக். 882. என்றும், (நேரிசை வெண்பா) பிரிந்துறை வாழ்க்கையை யாமும் பிரிதும் இருந்தெய்க்கும் நெஞ்சே ! புகழும்-பொருந்தும் பெரும்பணைத் தோளி குணனும் மடனும் அருஞ்சுரத் துள்ளும் வரும் -யா. வி. 42 மேற். என்றும் இணை இயைபு வந்தது. (குறள் வெண்பா) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல் -திருக். 1005. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) உலாஅ அலாஅ தொருவழிப் படாஅ எலாஅ எலாஅ என்றிது வினவவும் வெரீஇ வெரீஇ வந்தீ ஒரீஇ ஒரீஇ ஊரலர் எழவே -யா. வி. 42. என்றும் இணை அளபெடை வந்தது. பொழிப்புத் தொடையும் ஒரூஉத் தொடையும் 39. ஒருசீர் இடைவிடிற் பொழிப்பு ; இருசீர் ஒரூஉ. 1 இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் பொழிப்பு ஒரூஉத் தொடைகள் ஆமாறு கூறிற்று. (இ - ள்.) முதற்சீர் ஒழிந்த ஒருசீரும், மூன்றாம்சீர் ஒழிந்த ஒருசீரும் மோனை முதலிய தொடை பெறாவாய் வரின் பொழிப்புத் தொடை எனப்பெறும். முதற்சீரும் நான்காம்சீரும் ஒழிந்த இரண்டாம் மூன்றாம் சீர்கள் இரண்டும் மோனை முதலிய தொடை பெறாவாய் வரின் ஒரூஉத் தொடை எனப் பெயர் பெறும் என்றவாறு. ஒருசீர் இடைவிடிற் பொழிப்பு எனவும், இருசீர் இடைவிடில் ஒரூஉ எனவும் இயைத்துப் பொருள் கொள்க. ஒருசீர் இடை விடுதல் என்றது ஒன்று கூறி ஒன்று விடுவதை. இருசீர் இடைவிடுதல் என்றது ஒன்று கூறி இடையே இருசீர் விடுவதை. ஆக முதற்சீர் மூன்றாம் சீரும் மோனை முதலியன பெற்று வருவது பொழிப்பு எனவும், முதற்சீரும் நான்காம்சீரும் மோனை முதலியன பெற்று வருவது ஒரூஉ எனவும் பெற்றாம். இதனைப் பிறரும், முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே -யா. வி. 43. எனவும், சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத் தொடை -யா. வி. 44. எனவும் தனித்தனி விளக்கிக் கூறினார் ஆதலறிக. (எ - டு.) பொழிப்பு : (குறள் வெண்பா) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் -திருக். 3. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக் கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த கண்போல் நெய்தல் கமழும் ஆங்கண் கலிமாப் பூண்ட கடுந்தேர் கவ்வை செய்தன்றாற் கங்குல் வந்தே -யா. வி. 43 மேற். என்றும் பொழிப்பு மோனை வந்தது. (குறள் வெண்பா) தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் -திருக். 614. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) பல்கால் வந்து மெல்லக் கூறிச் சொல்லல் வன்மையின் இல்லவை உணர்த்தும் செல்புனல் உடுத்த பல்பூங் கழனி நல்வயல் ஊரன் வல்லன் ஒல்கா துணர்த்தும் பல்குறை மொழியே -யா. வி. 43 மேற். என்றும் பொழிப்பு எதுகை வந்தது. (குறள் வெண்பா) நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் -திருக். 1203. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை நல்லன் என்றும் யாமே தீயன் என்னும் தடமென் றோளே -யா. வி. 43 மேற். என்றும் பொழிப்பு முரண் வந்தது. (குறள் வெண்பா) நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் -திருக். 320. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) பெருங்கண் கயலே ; சீறியாழ் சொல்லே ; முருந்தம் பல்லே ; புருவம் வில்லே ; மயிலே மற்றிவள் இயலே ; தண்கதுப் பறலே ; திங்களும் நுதலே -யா. வி. 43 மேற். என்றும் பொழிப்பு இயைபு வந்தது. (குறள் வெண்பா) ஆஅஇது வென்கொல் ஆஅழி செல்வழியை ஈஇஇர்ஞ் ஞெண்டு மறைப்பு -இ. கு. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) சுறாஅக் கொட்கும் அறாஅ இருங்கழிக் கராஅம் கலித்தலின் விராஅல் மீனினம் படாஅ என்னையர் வலையேஎ கெடாஅ நாமிவை விடாஅம் விலைக்கே -யா. வி. 43 மேற். என்றும் பொழிப்பு அளபெடை வந்தது. ஒரூஉ (குறள் வெண்பா) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் -திருக். 249. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) புயல்வீற் றிருந்த காமர் புறவிற் புல்லார் இனநிரை ஏறொடு புகலப் புன்கண் மாலை உலகுகண் புதைப்பப் புரிவளைப் பணைத்தோட் குறுமகள் புலம்புகொண் டனளாம் நம்வயிற் புலந்தே -யா. வி. 44 மேற். என்றும் ஒரூஉ மோனை வந்தது. (குறள் வெண்பா) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு -திருக். 21. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) பரியல் யாவதும் பைந்தொடி அரிவை பொரியரை மராஅத்து வாலிணர்ச் சுரிமலர் எரியிணர்க் காந்தளோ டெல்லுற விரியும் வரிவண் டார்க்கும் நாடன் பிரியான் ஆதல் பேணின்மற் றரிதே -யா. வி. 44 மேற். என்றும் ஒரூஉ எதுகை வந்தது. (குறள் வெண்பா) புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் -திருக். 298. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) குறுங்கால் ஞாழல் கொங்குசேர் நெடுஞ்சினை ஓங்குதிரை உதைப்ப மருங்கிற் றாழ்ந்த தண்ணந் துறைவன் பின்னிலை வெம்படர் பரிந்துநாம் களையாம் ஆயிற் பரியான் பெருங்கடற் படப்பைநம் சிறுகுடிப் பொங்குதிரைப் பெண்ணை மடலொடு வருமே -யா. வி. 44 மேற். என்றும் ஒரூஉ முரண் வந்தது. (குறள் வெண்பா) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு -திருக். 106. என்றும், (நிலைமண்டில ஆசிரியப்பா) பல்லே முத்தம் ; புருவம் வில்லே ; சொல்லே அமுதம் ; அணங்கவள் நுதலே ; இயலே எண்ணினும் தெரியினும் மயிலே ; கயலே கண்ணும்நற் கூந்தலும் அறலே -யா. வி. 44 மேற். என்றும் ஒரூஉ இயைபு வந்தது. (குறள் வெண்பா) உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் -திருக். 1096. என்றும், (நேரிசை வெண்பா) வழாஅ நெஞ்சிற் றெய்வமும் தொழாஅ செறாஅச் செய்தியின் யாங்கணும் பெறாஅ தேஎம் பல்பகல் ஒரீஇத் தாஅம் செய்வதே செய்வ மனாஅ -யா. வி. 44 மேற். என்றும் ஒரூஉ அளபெடை வந்தது. மேற்கதுவாய்த் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும் 40. முடிவதன் முதல்அயல் கதுவாய் கீழ்மேல். 1இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் வருமாறு கூறிற்று. (இ - ள்.) முடியுஞ் சீர்க்கு முதற்சீர் மோனை முதலிய தொடை பெறாமல் வருமாயின் கீழ்க்கதுவாய் என்றும் முடியுஞ் சீர்க்கு முதற்சீரின் அடுத்தசீர் மோனை முதலிய தொடை பெறாமல் வருமாயின் மேற்கதுவாய் என்றும் பெயர் பெறும் என்றவாறு. முடிவதன் முதல் கதுவாய் கீழ் என்றும் முடிவதன் முதலயல் கதுவாய் மேல் என்றும் இயைத்துப் பொருள் கொள்க. இது நிரல் நிறைப் பொருள்கோள். கதுவாய் என்பதை இடைநிலை விளக்காக்கி முதல் கதுவாய் என்றும் முதல் அயல் கதுவாய் என்றும் ஈரிடங்களிலும் கூட்டிக் கொள்க. இதனைத் தாப்பிசைப் பொருள்கோள் என்னாமோ எனின் என்னாம். அஃது இடைநின்ற சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் தருவது ; இஃதன்ன தன்றாதல் அறிக. முதல் அயல் என்று கூறாமல், முடிவதன் முதல் அயல் என்று தலை தடுமாற்றமாகத் தொடுத்தார்; ஒருசார் ஆசிரியர், முதலயற்சீர் கதுவாய் ஆதல் கீழக்கதுவாய் என்றும், ஈற்றயற்சீர் கதுவாய் ஆதல் மேற்கதுவாய் என்றும் கொள்வார் என்ப துணர்த்துதற்கு. கதுவாய் ஆவது குறையுறுதல் ; இக்காலத்துக் கொறுவாய் என வழங்கும். இவற்றை, முதலயற் சீரொழித் தல்லன மூன்றின் மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே -யா. வி. 46. என்றும், ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது கீழ்க்கது வாயின் கிழமைய தாகும் -யா. வி. 47. என்றும் ஆசிரியர் அமிதசாகரனார் கூறினார். (எ - டு.) மேற்கதுவாய் (குறள் வெண்பா) விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி -திருக். 13. என்றும், (நிலைமண்டில ஆசிரியப்பா) கணைக்கால் நெய்தல் கண்போல் கடிமலர்க் கருங்கால் ஞாழலொடு கவின்பெறக் கட்டிக் கமழ்தார் மார்பன் கவளம் கடிப்பக் கங்குல் வந்த கறங்குமணிக் கலிமா கடல்கெழு பாக்கம் கல்லெனக் கடுப்பக் கங்குல்வந் தன்றாற் கதழ்பரி கலந்தே -யா. வி. 46 மேற். என்றும் மேற்கதுவாய் மோனை வந்தது. (குறள் வெண்பா) வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதனோய் எல்லாங் கெட -திருக். 1266. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) கண்டலங் கைதையொடு விண்டன முண்டகம் தண்டா நாற்றம் வண்டுவந் துண்டலின் நுண்டா துறைக்கும் வண்டலந் தண்டுறை கண்டனம் வருதல் விண்டன தெண்கடற் சேர்ப்பனைக் கண்டவெங் கண்ணே -யா. வி. 46 மேற். என்றும் மேற்கதுவாய் எதுகை வந்தது. (குறள் வெண்பா) இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் -திருக். 628. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) வெளியவும் வெற்பிடைக் கரியவும் செய்யவும் ஓளியுடைச் சாரல் இருளவும் வெயிலவும் பரியவும் பன்மணி சிறியவும் நிகரவும் முத்தொடு செம்பொனும் விரைஇச் சிற்றிலும் எங்கள் பேரிலும் நடுவே -யா. வி. 46 மேற். என்றும் மேற்கதுவாய் முரண் வந்தது. (குறள் வெண்பா) ஊஉழி பேரினும் தாஅமோ பேஎரார் வாஅழி அன்னாய் அவர் -இ. கு. என்றும், (நிலைமண்டில ஆசிரியப்பா) கூஉம் புடைக்கலம் சுறாஅ அறாஅ வறாஅ இடைக்கழி கராஅம் உராஅம் ஏஎம் எமக்கள மாஅல் எனாஅத் தாஅம் சொல்லவும் பெறாஅர் இதோஒ -யா. வி. 46 மேற். என்றும் மேற்கதுவாய் அளபெடை வந்தது. (குறள் வெண்பா) நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் -திருக். 154. என்றும், (இன்னிசை வெண்பா) இருங்கண் விசும்பின்கண் மான்ற முகங்காண் கருங்கண் முலையின்கண் வேங்கை மலர்காண் குறுந்தண் சுணைக்கண் மலர்ந்த உவக்காண் நறுந்தண் கதுப்பினாள் கண் -யா. வி. 46 மேற். என்றும் கீழ்க்கதுவாய் இயைபு வந்தது. கீழ்க்கதுவாய் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்றும், (நேரிசை வெண்பா) குழலிசைக் குரல தும்பி குறைந்த குண்டுசுனைக் குற்ற மாயிதழ்க் குவளை குலைவேற் குறவன் பாசிலைக் குளவியொடு குறிநெறிக் குரல்வருத் தடைச்சிய குறிஞ்சிசூழ் குவட்டிடைச் செய்தநம் குறியே -யா. வி. 47 மேற். என்றும் கீழ்க்கதுவாய் மோனை வந்தது. (குறள் வெண்பா) பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி இரவு -திருக். 1280. என்றும், (நேரிசை வெண்பா) அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்பக் கடுந்தேர் நெடும்பகற் றோன்றும்-கொடுங்குழாய் பாடுவண் டாடும் பனிமலர் நீடுறை நாடுவாம் கூடும் பொழுது -யா. வி. 47 மேற். என்றும் கீழ்க்கதுவாய் எதுகை வந்தது. (குறள் வெண்பா) புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் -திருக். 1267. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) விரிந்தும் சுருங்கியும் வில்லென ஒசிந்தும் குவிந்தும் மலர்ந்தும் குலையுறக் குலாவியும் பெருகியும் சிறுகியும் பின்னெறி நின்றும் இருந்தோள் உண்கண் மலர்ந்தும் பொருந்தா பொருந்திய புருவம்புடை பெயர்ந்தே -யா. வி. 47 மேற். என்றும் கீழ்க்கதுவாய் முரண் வந்தது. (குறள் வெண்பா) பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - திருக்.979 என்றும், (தரவு கொச்சகம்) அன்னையும் என்னையும் தன்னில் கடியும் பன்னாளும் பாக்கமும் ஓவா தலர்தூற்றும் பூக்கமழும் மெல்லம் புலம்பன் பிரியினும் இன்னுயிர்யாம் இன்னம் இறந்தி ரேமுளேம் -யா. வி. 47 மேற். என்றும் கீழ்க்கதுவாய் இயைபு வந்தது. (குறள் வெண்பா) ஏஎடி ஈஇதென் ஏராருந் தோஒகை கூஉடி ஆடும் குறி என்றும், (நேரிசை ஆசிரியப்பா) ஆஅம் பூஉ மணிமலர் தொடாஅ யாஅம் தேஎம் தண்புனம் தழாஅம் நாஅம் குறியிடை நண்ணும் தேஎ மாஅம் பொருப்பிடை எனாஅ -யா. வி. 47 மேற். என்றும் கீழ்க்கதுவாய் அளபெடை வந்தது. கூழைத் தொடையும் முற்றுத் தொடையும் 41. மூன்றுவரிற் கூழை ; நான்குவரின் முற்றே. 1 இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் கூழைத் தொடையும் முற்றுத் தொடையும் ஆமாறு கூறிற்று. (இ - ள்.) முதல் மூன்று சீர்களிலும் மோனை முதலியன தொடுக்கப் பெற்று வருமானால் கூழை எனப் பெறும். நான்கு சீர்களிலும் அவ்வாறு தொடுக்கப் பெறுமானால் முற்று எனப் பெறும் என்றவாறு. மூன்று என்றது முதல் மூன்று சீர்களை. நான்கு வரின் முற்றே என்றது, தொடைகள் அளவடிக்கண் நிற்கு முறை கொண்டே பெயர் சூட்டப் பெறுவன ஆகலின் முடிந்த எல்லையாகக் கூறினார். கூழை என்பதற்கு அளவில் சற்றே குறுகியது என்பது பொருள். கூழைப் பலாத் தழைக்க என்பது ஔவையார் வாக்கு. நீளமில்லாப் பாம்பைக் கூழைப் பாம்பு என்பது வழக்கு. ஆதலால், முற்றும் நிரம்பாமல் முக்கால் நிரம்பியது கூழை; இது காரணக்குறி. இனி, முழுதும் நிரம்பாத கூந்தலைக் கூழை என்றதும் கருதுவதொன்று. கூழை, கூழி எனவும் இந்நாள் வழங்கும். பிறரெல்லாம் கூழை, கதுவாய், முற்று என்று எண்ணி ணாராக இந் நூற்பாவுடையார் இவ்வாறு எண்ணிய தென்னை எனின், கதுவாய் இரண்டும் முறையே நிரம்பாமல் முதலயற் சீரோ ஈற்றயற் சீரோ குறைந்தன ; கூழையோ, முறையே மூன்று சீரும் நிரம்பியது. ஆகலின் அதற்கப் பின்னர் நான்காம் சீரும் நிரம்பிய முற்றைக் கூறுதல் தகவுடைத்து என்க. இவற்றைப் பிறகும், மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது கூழை என்மனார் குறியுணர்ந் தோரே -யா. வி. 45. என்றும், சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே -யா. வி. 48. என்றும் கூறினார். (எ - டு.) கூழைத்தொடை (குறள் வெண்பா) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - திருக் 350 என்றும், (நேரிசை வெண்பா) அருவி அரற்றும் அணிதிகழ் சிலம்பின் அரக்கின் அன்ன அவிழ்மலர்க் காந்தள் அஞ்சிறை அணிவண் டரற்றும் நாடன் அவ்வளை அமைத்தோள் அழிய அகன்றனன் அல்லனோ அளியன் எம்மே -யா. வி. 45 மேற். என்றும் கூழைமோனை வந்தது. பற்றுக பற்றற்றான் என்னும் குறள் வெண்பா கூழை எதுகைக்கும் பொருந்தி நிற்றல் அறிக. (நேரிசை வெண்பா) பொன்னின் அன்ன புன்னை நுண்டா தன்ன மென்பெடை தன்னிறம் இழக்கும் பன்மீன் முன்றுறைத் தொன்னீர்ச் சேர்ப்பன் பின்னிலை என்வயின் நின்றனன் என்னோ நன்னுதல் நின்வயிற் குறிப்பே -யா. வி. 45 மேற் . இதில் கூழை எதுகை வந்தது. (குறள் வெண்பா) ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் -திருக். 1109. என்றும், (நிலைமண்டில ஆசிரியப்பா) கரிய வெளிய செய்ய கானவர் பெரிய சிறிய இட்டிய பிறழ்ந்த நெடிய குறிய நிகரில் நீலம் படிய பாவை மாயோள் உண்கண் கடிய கொடிய தன்மையும் உளவே -யா. வி. 45 மேற். என்றும் கூழை முரண் வந்தது. (குறள் வெண்பா) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் - திருக் 26. என்றும், (நேரிசை வெண்பா) நின்றழல் செந்தீயும் தண்புனலும் இவ்விரண்டும் மின்கலி வானம் பயந்தாங்கும்-என்றும் பெருந்தோளி கண்ணும் இலங்கும் எயிறும் மருந்தும் பிணியும் தரும் -யா. வி. 45 மேற். என்றும் கூழை இயைபு வந்தது. (குறள் வெண்பா) பாஅலும் தேஎனும் பாஅகும் என்றனர் சாஅலும் சாலும் அது (இ-கு) என்றும், (நிலைமண்டில ஆசிரியப்பா) விடாஅ விடாஅ வெரீஇப் பெயரும் தொடாஅத் தொடாஅத் தொடாஅப் பகழியாய்ப் பெறாஅப் பெறாஅப் பெறாஅப் பெயரெனச் செறாஅச் செறாஅச் செறாஅ நிலையே -யா. வி. 45 மேற். என்றும் கூழை அளபெடை வந்தது. முற்று (குறள் வெண்பா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்றும், (நேரிசை ஆசிரியப்பா) அணியிழை அமைத்தோள் அம்பசப் படைய அரிமதர் அலர்க்கண் அரும்பனி அரும்ப அரும்பொருட் ககன்ற அறவோர் அருளிலர் அற்பின் அழியுமென் அறிவே -யா. வி. 48 மேற். என்றும் முற்றுமோனை வந்தது. (குறள் வெண்பா) இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்(கு) இடும்பை படாஅ தவர் -திருக். 623. என்றும், (நேரிசை வெண்பா) கல்லிவர் முல்லையும் மெல்லியலார் பல்லரும்பும் புல்லார்ந்து கொல்லேறு நல்லானைப்-புல்லின பல்கதிரோன் எல்லைக்கட் செல்லுமா றில்லைகொல் சொல்லியலார் சொல்லிய சொல் -யா. வி. 48 மேற். என்றும் முற்று எதுகை வந்தது. (குறள் வெண்பா) நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது -திருக். 235. என்றும், (நேரிசை வெண்பா) நெடுந்தோட் குறுந்தொடி வீங்குபிணி நெகிழ அரும்பொருள் எளிதெனச் சென்றனர் வருதல் சேய்த்தன் றணித்தெனத் தேற்றவும் தேறாய் அகஞ்சுடப் புறஞ்செவி நிறுத்தனை கிடத்தல் சின்மொழிப் பல்லிருங் கூந்தல் பெருந்தகு சீறடி நன்னுதல் தீதே -யா. வி. 48 மேற். என்றும் முற்று முரண் வந்தது. (குறள் வெண்பா) ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் -திருக். 484. என்றும், (இன்னிசை வெண்பா) கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும் பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும் முல்லையும் யாழும் இகும் -யா. வி. 48 மேற். என்றும் முற்று இயைபு வந்தது. (குறள் வெண்பா) தாஅமோ வாஅரார் யாஅனோ தாஅழேன் கூஉறாய் வாழும் வகை -இ. கு. என்றும், (நேரிசை ஆசிரியப்பா) குராஅம் விராஅம் பராஅம் உராஅம் தொழாஅள் எழாஅள் விடாஅள் தொடாஅள் இதோஒ இதோஒ என்மகள் எலாஅ ! எலாஅ ! யாங்குற் றனளே? -யா. வி. 48 மேற். என்றும் முற்று அளபெடை வந்தது. நான்கு வரின் முற்றே என்ற ஏகார விதப்பினால், முதலிரு சீர்களும் ஒருவகையான் முரணி, கடையிரு சீர்களும் மற்றொரு வகையான் முரணினும் அவையும் முற்று முரணே எனக் கொள்க. இணை முதலாய இத்தொடை எழனையும், (கட்டளைக் கலித்துறை) இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூ உவாம் இருசீர் இடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றின்முற்றாமென்ப மற்றவையே -யா. கா. 19. என்று தொகுத்துரைத்தார் யாப்பருங்கலக் காரிகை யுடையார். இரட்டைத் தொடை 42. ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை. 1இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறிய தொடைகளை அன்றி இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை, செந்தொடை என்பனவும் உள என்று கூறத் தொடங்கி இரட்டைத் தொடையாவது இஃதென்பது கூறிற்று. (இ - ள்.) முதற்சீர் வந்தவாறே அவ்வடியிலுள்ள நாற் சீர்களும் வருமாயின் அஃதிரட்டைத் தொடை எனப் பெயர் பெறும் என்றவாறு. என்றது, அடியின் முதற்சீரில் வந்த சொல்லே நான்கு சீர்களிலும் மடங்கி வருதல் இரட்டை என்பதாம். அடி முழுதும் என்றார் ஆயினும் நாற்சீர் அடியே அடியெனும் அளவு கொண்டு தொடை விகற்பம் கூறப்பெறும் ஆகலின் அவ்வளவே அளவென்க. அடிமுழு தொன்றின் என்னாமல் அடிமுழுது ஆயின் என்றார், இது பிற தொடைகளைப் போல் எழுத்தோ வருக்கமோ; இனமோ, அளவோ முரணோ கொண்டு வருவதன்று முதற்சீர்ச் சொல்லே மடங்கி வருவது என்ற வேறுபாடு காட்டுவதற்கு. இனி ஒன்றின் எனினும் குற்றமின்று. ஒன்றுபோல என்னும் பொருளும் பயக்குமாகலின். அதனால் அன்றே, முழுவதும் ஒன்றின் இரட்டை ஆகும் என்று பல்காயனாரும், சீர்முழு தொன்றின் இரட்டை ஆகும் என்று நற்றத்தனாரும், ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை என்று மயேச்சுரனாரும், அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை -யா. வி 51 மேற். என்று பரிமாணனாரும் இருவகையாகவும் கூறினர். (எ - டு.) (நேரிசை வெண்பா) ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் சீரெரி ஒக்குமே குளக்கொட்டிப் பூவின் நிறம் -யா. வி. 51 மேற். -யா. கா. 18 மேற். -தொல். செய். 91 பேரா. என்றும், (சிந்தியல் வெண்பா) நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும் மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார் -யா. வி. 51 மேற். -நீலகேசி 51 மேற். என்றும் இரட்டைத்தொடை வந்தது. இனிச் சொல் பிறிதாகாது பொருள் பிறிதாகி வருவனவும் இரட்டை என்ற கொள்ளப் பெறும். (பஃறொடை வெண்பா) ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்துங் கொடுங்குழாய் நாடி உணர்வார்ப் பெறின் யா. வி. 51 மேற். இதனுள் ஒருசொல்லே நாற்கால் வரினும் பொருள் வேறுபட்டு நின்றது. கூடற் பழனத்து ஓடை என்பது ஓடைக் கொடி ; கொல்லி மலைமேல் ஓடை என்பது மலைவழி; மாறன் மதகளிற்று நுதல்மேல் ஓடை என்பது நெற்றிப் பட்டம் ; கோடலங் கொல்லைப் புனத்து ஓடை என்பது நீரோடை. அந்தாதித் தொடை 43. அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை முந்தா இசைப்பினஃ தந்தாதித் தொடையே. 1இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே அந்தாதித் தொடையாமாறு கூறிற்று. (இ - ள்.) அசையான் ஆயினும் சீரான் ஆயினும் அடி தோறும் இறுதிக்கண் நின்றதை அடுத்த அடியின் முதலாக வைத்துக் கூறின் அஃது அந்தாதித்தொடை எனப் பெயர் பெறும் என்றவாறு. அடிதொறும் இறதியை என்றமையால், அசை சீர்களே அன்றி அடிமுழுமையுமே அடுத்த அடியாக மடங்கி வருவதும் கொள்க. அசை எனக் கூறினார் ஆயினும் அசைக்கு உறுப்பும் அந்தாதியாம் என்பதுவும் கொள்க. இறுதியை முந்தா இசைப்பின் என்றமையால் ஒரு செய்யுளின் ஈறு வருஞ் செய்யுளின் முதலாக அமைத்துப் பாடுதலும் அந்தாதியே எனக் கொள்க. இனிப் பிற்கால நூல்களில் செய்யுள் தோறும் அந்தாதித் தொடை பெற்று ஈற்றுச் செய்யுளின் ஈறு முதற் செய்யுளின் முதலாக வரும் மண்டல அந்தாதி, மாலை மாற்றுமாலை ஆகியனவும் ஓரடியே, நான்கு அடிகளாகவும் அமைந்து வேறு பொருள் தரும் ஏகபாத அந்தாதி முதலியனவும் கொள்க. அந்தாதி பண்டு தொட்டே உண்டு என்பதைக் காப்பி யாற்றுக் காப்பியனார் பாடிய நான்காம் பத்தினால் அறிக. (நேரிசை வெண்பா) உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழற் பொற்புடை யாசனம் ஆசனத் திருத்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருத்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தரஃ தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே -திருப்பாமலை. -யா. வி. 52 மேற். -ய. கா. 18 மேற். -தொல். செய். இளம். மேற். இதனுள் மதி என அசையும், முக்குடை எனச்சீரும், ஆசனத் திருந்த திருத்தொளி அறிவன் என அடியும், புரிந்து என்பதில் து என எழுத்தும் அடி அந்தாதியாக வந்தன. உலகு என்னும் ஈற்றுச் சொல், முதற் சொல்லாகவும் நிற்றலால் மண்டலித்தும் நின்றது. இனிப் பொருட்டொடர்பு அறாமல் ஒரு போக்காகச் செல்லும் அந்தாதியினைச் செந்நடைச் சீரந்தாதி என்பர். அதனையும் கொள்க. (நேரிசை ஆசிரியப்பா) முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம் நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர் எக்கர் இட்ட எறிமீன் உணங்கல் உணங்கல் கவரும் ஓய்தாள் அன்னம் அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர் மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை தாழை அயலது வீழ்குலைக் கண்டல் கண்டல் அயலது காமரு நெடுங்கழி நெடுங்கழி அயலது நெடுங்குடிப் பாக்கம் பாக்கத் தோளே பூக்கழ் ஓதி பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் இடவ குடவ தடவ ஞாழலும் இணர துணர்புணர் புன்னையும் கண்டலும் கெழீஇய கானலம் சேர்ப்பனை இன்றித் தீரா நோயினள் நடுங்கி வாராள் அம்ம வருதுயர் பெரிதே -யா. வி. 52 மேற். இதனுள் சீர்கள் அந்தாதியாக வந்தமையும், நடையறாது பொருளால் தொடர்ந்தமையும் காண்க. செந்தொடை 44. செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் ஒன்றா நிலையது செந்தொடை யாகும் -யா. வி. 50 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே செந்தொடையாவது இஃதெனக் கூறிற்று. (இ - ள்.) முரண் தொடை என்னும் ஒன்றும் அல்லாத மோனை முதலிய தொடைகளுள் வேறுபட்டு வரும் நிலைமையினது செந்தொடை எனப்படும் என்றவாறு. செம்பகை யாவது நேர்முரண் ; பகைத்தொடை. இரணத் தொடை என்பதும் அதன் பெயர் எனக் கூறினாம். செம்பகை ஒன்றனை விலக்கிய தென்னை எனின், அது முரண்தொடை என்று ஒரு பெயர் கொண்டு விடும் ஆகலின் விலக்கினார் என்க. ஆகலின், முரண் போலவும் இன்றிப், பிற தொடைகளைப் போலவும் இன்றி எவ்வகையானும் ஒன்றி வாராத தொடை செந்தொடை எனறார் என்று கொள்க. செம்மை அமையாத தொடையைச் செந்தொடை என்றது, மங்கல வழக்கெனக் கருதுக. (நேரிசை ஆசிரியப்பா) பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே -தமிழ்நெறி விளக்கம் 17. இஃதகவற்பாவின் அமைதி பெற்று வந்ததை அன்றி, மோனை முதலிய தொடைகளுள் எதுவும் பெற்று வாராமை கண்டறிக. இதன் இலக்கணத்தைச், சொல்லிய தெடையொடும் வேறுபட் டியலின் சொல்லியற் புலவரது செந்தொடை என்ப -தொல். செய். 96. என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும், ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும் ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே -யா. வி. 50 மேற். என்று சிறுகாக்கை பாடினியாரும் கூறினர். ஒரு செய்யுளில் தொடையும் அடியும் பல விரவிவரின் அவற்றை வழங்குமாறு 45. தொடைஅடி யுட்பல வந்தால் எழுவாய் உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே. -யா. வி. 53 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஒரு செய்யுளில் பல தொடையும் பல அடியும் விரவி வந்தால் அவற்றை வழங்கும் முறை இதுவெனக் கூறிற்று. (இ - ள்.) ஒரு செய்யுளில் பலவகைத் தொடைகளும் பல வகை அடிகளும் வந்தால் அதன் முதற்கண் அமைந்த தொடையாலோ அடியாலோ அதற்குப் பெயரிட்டுக் கூறப் பெறும் என்றவாறு. ஒரு செய்யுள் ஒருவகைத் தொடையால் அமைந்திருக்கு மாயின் இன்ன தொடை யெனக் கூறிவிடலாம்; அனால் பல தொடைகள் அதனுள் வரப் பெறுமாயின், அவற்றுள் எப் பெயரிட்டு அச் செய்யுளை வழங்குவது என்னும் ஐயம் எழு மன்றே; அதனை ஒழித்தற்கு இந் நூற்பா கூறப் பெற்றது. இனி ஒன்றற்கு மேற்பட்ட அணிகள் ஒரு பாடற்கண் வருமாயின் கலவை யணி என அணியிய லுடையார் கூறுவர் அன்றே. அவ்வாறே அடி தொடை பலவாக வருவனவற்றிற்குமோர் குறியிட்டு வழங்குவரோ என்பார்க்கு இவ்விதி கூற வேண்டியது இன்றியமையாமை யாயிற்று. இதனை, பல்வகைத் தொடையொரு பாவினிற் றொடுப்பின் சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே என்று சிறுகாக்கை பாடினியாரும். தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும் முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே என்று அமிதசாகரனாரும் கூறினர். (நேரிசை ஆசிரியப்பா) தாமரை புரையும் காமர் சேவடிப் (பொழிப்பெதுகை) பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் (ஒரூஉ எதுகை) நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் (ஒரூஉ மோனை) சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றல் உலகே (பொழிப்புமோனை) -குறுந். கடவுள். இதனுள் பொழிப்பெதுகை, ஒரூஉஎதுகை, ஒரூஉமோனை முதலியன வரினும் முதற்கண் வந்த பொழிப் பெதுகையாலே பொழிப்பெதுகைச் செய்யுள் என்று வழங்கப் பெறும். (நேரிசை ஆசிரியப்பா) (அடிஎதுகை) கடிமலர் புரையும் காமர் சேவடி (பொழிப்பு மோனை) கொடிபுரை நுசுப்பிற் பணைத்தேந் திளமுலை (அடிமோனை) வளையொடு கெழீஇய வாங்கமை நெடுந்தோள் (பொழிப்பு மோனை) வளர்மதி புரையும் திருநுதல் அரிவை (அடிமுரண்) சேயரி நாட்டமும் அன்றிக் கருநெடுங் கூழையும் உடையவால் அணங்கே -யா. வி. 53 மேற். இதனுள் அடிஎதுகை, அடிமோனை, அடிமுரண், பொழிப்பு மோனை முதலியன வரினும் முதற்கண் வந்த அடிஎதுகையாலே அடியெதுகைச் செய்யுள் என்று வழங்கப் பெறும். (கட்டளை கலித்துறை) காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே -யா. வி. 53, 94 மேற். இதனுள் எதுகையும் மோனையும் வந்தன வாயினும் முதலடி முதற் சீர்க்கண் ஆசெழுத்து வந்தமையால் ஆசிடை எதுகைச் செய்யுள் எனப்பெறும். தொடை அடிகளை அன்றித் தளைக்கும் இதனை விரித்துக் கூறுவர். அவர் கூறுமாறு : (நேரிசை ஆசிரியப்பா) நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின் விண்டுவார் தீஞ்சுனை வீங்குகவுட் கடுவன் உண்டுசிலம் பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப மடியாக் கொலைவில் என்னையர் மலையே -யா. வி. 53 மேற். -யா. கா. 38 மேற். இதனுள் வெண்டளையும் கலித்தளையும் வஞ்சித்தளையும் வந்தன எனினும் முதல் வந்ததனால் பெயர் கொடுத்து வெண் டளையால் வந்த ஆசிரியப்பா என்று வழங்கப்படும். (யா. வி. 53) தொடை முடிந்தது. உறுப்பியல் முடிந்தது. 2. செய்யுளியல் 1. வெண்பாவும் அதன் வகையும் வெண்பா இன்ன தென்பது 46. சிறந்துயர் செப்பல் இசையன வாகி அறைந்த உறுப்பின் அகறல் இன்றி விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும். -யா. வி. 57 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின், வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் பாக்களும் அவற்றின் இனங்களும் என்ப வற்றுள் வெண்பாவாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) எல்லா இசைகளினும் சிறந்துயர்ந்த செப்பல் இசைகளை உடையனவாகி, அதற்கென்று ஆன்றோரால் கூறப்பெற்ற உறுப்புக்களுள் சற்றேனும் விலகுதல் இல்லாமல் மயக்கமின்றிப் பொருள் விளங்கும் வண்ணம் கிடப்பது யாது அது வெண்பா என்றவாறு. சிறந்துயர் செப்பல் என்றார், வெண்பாவினுள் இயற் சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை என்னும் இரண்டு தளைகள் அன்றி வேறு எத்தளையும் விரவா ஆகலின். இசையன வாகி எனப் பன்மையாற் கூறினார், செப்பல் இசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைக் செப்பல் என்று முத்திறத்தன ஆகலின். என்னை? ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா செப்பல் ஒசை வெண்பா ஆகும் - யா.வி.57 மேற் என்றார் சங்க யாப்புடையார். வெண்சீர் வெண்டளையான் வருவது ஏந்திசைச் செப்பல் ; இயற்சீர் வெண்டளையான் வருவது தூங்கிசைச் செப்பல் ; இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை என்னும் இரு தளைகளும் விரவி வருவது ஒழுகிசைச் செப்பல். என்னை? வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் என்றும், இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர் என்றும், வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல் -யா. கா. 21 மேற். என்றும் சங்க யாப்புடையார் கூறினார் ஆகலின். அறைந்த உறுப்பு என்றது முன்னே கூறப்பெறும் வெண்பா உறுப்புக்களை. இஃது எதிரது போற்றல் என்னும் உத்தி. இலக்கணச் செப்பமும் செறிவும் அன்றிப் பொருள் விளக்கமும் பிற பாக்களுக்கும் வேண்டும் எனினும் வெண்பாவிற் கின்றியமையாதது என்பாராய் விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும் என்றார். சவியுறத் தெளிந்து என்றார் கம்ப நாடரும். வெண்பா என்பது பொருள் விளங்கக் கிடக்கும் தன்மை கருதிய காரணக் குறி என்பதூஉம் போலும். வேலி யிட்டு வித்தி விளைப்பார் போல வெண்பா இலக்கணம் சிறப்பு வகையாற் கூறுதற்குமுன் பொதுவகையால் அதன் செப்பமும் செறியும் உரைத்தார். பா என்பது காரணக்குறி. பாவென்பது சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்த்துதற்கு ஏதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை என்பார் பேராசிரியர். தொல். செய். 1. இனி அறம் பொருள் இன்பம் வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் பா என்பதூஉம் காரணக் குறி என்பாரும் உளர். பா என்பது பரந்து பட்டது என்னும் பொருட்ட தா தலைப் பா அடி, பாவடி யனை, பாஅய், பாஅய என்னும் செய்யுள் வழக்கானும், பாவாடை பாய் என்னும் உலகியல் வழக்கானும் அறிக. (குறள் வெண்பா) யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு -திருக். 397. இவ்வெண்பா, தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் காசு என்று அலகுண்டு, வெண்சீர் வெண்டளையானே வந்தமையான் ஏந்திசைச் செப்பலாயிற்று. (குறள் வெண்பா) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் -திருக். 28. இவ் வெண்பா, கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளம் தேமா மலர் என அலகிடப் பெற்று, இயற்சீர் வெண்டளையானே வந்தமையான் தூங்கிசைச் செப்பல் ஆயிற்று. (குறள் வெண்பா) கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி -திருக். 356. இவ் வெண்பா, தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா மலர் என அலகிடப் பெற்று இயற்சீர் வெண்சீர் என்னும் இருவகை வெண்டளைகளானும் வந்தமையால் ஒழுகிசைச் செப்பல் ஆயிற்று. காசு என்றும் மலர் என்றும் வெண்பாவின் ஈற்றுச்சீர் அலகூட்டப் பெற்றது என்னை? எனின் அதனைக் கூறுவதன்றே முன்னே வரும் நூற்பா என அமைக. வெண்பாவின் ஈற்றடி 47. சிந்தடி யானே இறுதலும் அவ்வடி அந்தம் அசைச்சீர் வருதலும் யாப்புற வந்தது வெள்ளை வழக்கியல் தானே. -யா. வி. 57 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பாவின் பொது இலக்கணத்துள் எஞ்சி நிற்கும் அதன் ஈற்றடி இத் தகைத்து என்பது கூறிற்று. (இ - ள்.) முச்சீர் அடியால் முடிதலும், அம் முச்சீர் அடியின் இறுதி அசைச்சீராக வருதலும் வெண்பாவிற்கு உரிய முறைமை யாகும் என்றவாறு. மேலே, ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும் நாற்சீர் அடியான் நடைபெற் றனவே -கா. பா. 26. என்று நாற்சீரடி, வெண்பாவிற்கு உரியது எனக் கூறி, சிந்துங் குறளும் வருதலும் அவ்வழி உண்டென் றறைப உணர்ந்திசி னோரே -கா. பா. 27. என்று சிந்தடியும் வெண்பாவுள் வருதல் உண்டு எனக் கூறினார். ஆயினும் சிந்தடி யாண்டு வரும் என்பது கூறிற்றிலராகலின் அதனை ஈண்டுக் கூறினார். அந்தம் அசைச்சீர் வருதல் என்றது நாள் மலர் வாய்பாடு களால் வருதல். தனியசையை நாள் எனவும், இணையசையை மலர் எனவும் அலகூட்டிக் கொள்க. யாப்புற வந்தது என்னும் மிகையான் சிந்தடியின் ஈற்றுச் சீர் அசைச்சீராக வருவதே அன்றி நேரீற்றுக் குற்றியலுகரச் சீராகவும் வரப்பெறும் என்று கொள்க. அவற்றுள் நேர் நேர் என்பது காசு எனவும், நிரைநேர் என்பது பிறப்பு எனவும் அலகூட்டப் பெறும் எனக் கொள்க. (குறள் வெண்பா) ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் -திருக். 233. இவ் வெண்பாவை, தேமா புளிமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் நாள் என்று அலகிட்டு, வெண்பா இறுதி நேர் என்னும் ஓரசைச் சீரால் வந்துவாறு கண்டு கொள்க. (குறள் வெண்பா) வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் -திருக். 240. இவ் வெண்பாவை, கருவிளங்காய் தேமாங்காய் தேமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா மலர் என்று அலகிட்டு வெண்பா இறுதி நிரை என்னும் ஓரசைச் சீரால் வந்தவாறு கண்டு கொள்க. (குறள் வெண்பா) தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று -திருக். 236. இவ் வெண்பாவை, தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் தேமாங்காய் காசு என்று அலகிட்டு வெண்பா இறுதி, நேர் ஈற்று இயற் சீராய் குற்றியலுகர ஈறு பெற்று வந்துவாறு கண்டு கொள்க. (குறள் வெண்பா) நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது -திருக். 235. இவ் வெண்பாவை, தேமங்காய் தேமா புளிமாங்காய் தேமங்காய் கூவிளம் தேமா பிறப்பு என அலகிட்டு வெண்பா இறுதி, நிரை ஈற்று இயற்சீராய்க் குற்றியலுகர ஈறுபெற்று வந்தவாறு கண்டு கொள்க. இனி முற்றியலுகரம் வெண்பாவின் ஈறாக வாராதோ எனின் அருகியன்றி வாராது என்க. (குறள் வெண்பா) பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு -திருக். 1280. இவ் வெண்பாவின் இறுதி இரவு என முற்றிய லுகர ஈற்று நேரீற்று இயற்சீராக வந்து பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிந்தது காண்க. தேமா, புளிமா என இரண்டு வாய்பாடுகள் உளதாகவும் உகர ஈற்றான் காசு பிறப்பு என இரண்டு வாய்பாடுகள் கூற வேண்டியது என்னை? எனின், காசும் பிறப்பும் குற்றியலுகர ஈறாய் ஓசை சுருங்கி வெண்பாவின் ஈற்றின்கண் நிற்கும் என்றும், தேமா, புளிமா என்பன செப்பலோசை கொண்டு வெண்பாவின் முதலும் இடையும் நிற்பன என்றும் வேறுபாடு அறிக. காசு, பிறப்பு என வாய்பாடு கூறிய வாற்றானே, குற்றியலுகர வீறு என்பதூஉம் கொள்ளக் கிடத்தலும் அறிக. நிகரில் வெள்ளைக்கு, ஓரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்ஒண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாம்என்று தேறுகவே -யா. கா. 25. என்று வெண்பாவின் ஈறும், செப்பல் இசையன வெண்பா மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகவும் பெறுமே -யா. வி. 57. என்று வெண்பாவின் ஓசையும் ஈற்றடியும் கூறினார் அமித சாகரனார். வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும் என்றும், அசைச்சீர்த் தாகும் அவ்வயி னான என்றும் கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார். குறள் வெண்பா 48. தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே. -யா. வி. 57 மேற். -யா. கா. 23 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்னும் வெண்பா வகையுள் குறள் வெண்பாவினது இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) (வெண்பாவிற்கெனக் கூறப்பெற்ற இலக்கண அமைதி பூண்டு) ஒரு தொடை ஈரடியாகி, குறள் வெண்பா என்று சான்றோரால் சூட்டப் பெறும் பெயர்க்குரிமை யுடையதாகி வரும் என்றவாறு. ஒருதொடை யீரடி என்றமையால் மேலையடி நாற்சீராய் ஈற்றடி முச்சீராய் வருமெனக் கொள்க. இதனை ஒருசார் ஆசிரியர் ஓரடி முக்கால் என்றதூஉம் அறிக. (யா. கா. 23) ஆசிரியர் தொல்காப்பியனார், குறுவெண் பாட்டின் அளவெழு சீரே -செய். 156. என ஈரடியும் கூட்டி யுரைத்தார். தொடை ஒன்று என்னவே அடியிரண்டு எனக் கொள்ளப் பெறுமாக, அடியிரண்டென்றது என்னை எனின், குறட்பா வின்கண் முதலடி ஈற்றுச் சீர்க்கண் முதற்சீர்க் கேற்ற எதுகை பெற்று வருதலும், இரண்டாம் அடி முதற்சீர்க்கண் எதுகை பெற்று வருதலும் என்னும் இருவகை மரபும் உண்டென்பது இயம்புதற்கு இவ்வாறு கூறினார் என்க. (குறள் வெண்பா) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர் -திருக். 395. என்றும், (குறள் வெண்பா) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை -திருக். 151. என்றும் இரண்டாம் அடி முதற்சீர் எதுகை பெற்று வந்தன. (குறள் வெண்பா) ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -திருக். 156. என்றும், (குறள் வெண்பா) நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் - திருக் 154 என்றும் முதலடி இறுதிச்சீர் முதற்சீர்க் கேற்ற எதுகை பெற்று வந்தன. (குறள் வெண்பா) இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - திருக் 153 என்றும், (குறள் வெண்பா) பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு -திருக். 733. என்றும் முதலடி இறுதிச்சீரும், இரண்டாம் அடி முதற் சீரும் முதற் சீர்க்கேற்ற எதுகை பெற்று வருவனவற்றையும் இவ் விதப்பினால் கொள்க. இனி இரண்டாம் அடி முதற்சீர் முதலடி முதற்சீர்க்கு ஏற்ற எதுகையுடையதாகவரின் ஒரு விகற்பக் குறள்வெண்பா என்றும், மூதலடி இறுதிச் சீரிலேயே எதுகை பெற்றுவரின் இருவிகற்பக் குறள் வெண்பா என்றும் கூறுவர். உளர் எனக் கொள்க. சிந்தியல் வெண்பா 49. தொடையிரண் டடிமூன் றாகிற் சிந்தாம் 1இவ்வுரை நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறை யாற் சிந்தியல் வெண்பாவாமாறு கூறிற்று. (இ - ள்.) இரண்டு தொடையினவாகிய மூன்றடிகளை யுடையது யாது; அது சிந்தியல் வெண்பா என்றவாறு. தொடை யிரண்டு என்னவே அடிமூன்று என்பது அமையுமாக விரித்துரைக்க வேண்டியது என்னை எனின், சிந்தியல் வெண்பாவுள், இரண்டாம் அடி இறுதிச்சீர் தனிச் சொல் பெற்று முதலடி முதற்சீருக் கேற்ற எதுகையோடு வருவன வற்றை நேரிசைச் சிந்தியல் என்றும் ஒருசார் ஆசிரியர் கூறுவர் என்பது அறிவித்தற்கு என்க. இவ் விலக்கணத்தை வெளிப்படக் கூறாது விதப்பினால் கொள்ள வைத்தது என்னை எனின், கற்பார் உணர்வு பெருக்கல் வேண்டி அவ்வாறு கூறுதல் ஆசிரியர் மரபாகலின் என்க. இனி இவர்க்கு வழி நூல் செய்தாரும் இவ்வாறே, ஈரடி குறள் ; சிந் திருதொடை இயற்றே -யா. வி. 59 மேற். என்று கூறியதூஉம் அறிக. இனி நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல் எனத் தழுவிக் கொள்ளுமாறு முன்னே அவற்றைத் தொடுத்து வைத் தார் என்க. (எ - டு.) (நேரிசைச் சிந்தியல் வெண்பா) அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து சிறந்தார்க்கும் செவ்வன் உரைக்கும்-சிறந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு -யா. வி. 59 மேற். -யா. கா. 25 மேற். இஃது ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா. (நேரிசைச் சிந்தியல் வெண்பா) நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே-பொற்றேரான் பாலைநல் வாயின் மகள் -தொல். செய். 114 இளம். மேற். -யா. வி. 59 மேற். -யா. கா. 25 மேற். இது பல விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா. இரு விகற்பம் என்னாமல் பலவிகற்பம் என்றது என்னை எனின் ஒன்றல்ல பல என்பது தமிழ் நெறி ஆகலின். ஒருமை, பன்மை என்னும் எண்களைக் கருதி அமைக. (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சோர்தல் வழி -ஆசாரக்கோவை 30. இஃது ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) அந்திப் பொழுது கிடவார் நடவாரே உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி அல்குண் டடங்கல் வழி - ஆசாரக்கோவை 29. இது பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பா 50. இரண்டாம் அடியின் ஈறொரூஉ எய்தி முரண்ட எதுகைய தாகியும் ஆகா திரண்டு துணியாய் இடைநனி போழ்ந்து நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா. -யா. வி. 60 மேற். -யா. கா. 23 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் நேரிசை வெண்பா இன்னது எனக் கூறிற்று. (இ - ள்.) இரண்டாம் அடியின் இறுதிச் சீர் ஒரூஉத் தொடை பெற்று வேறோர் எதுகை ஆகியும் அவ்வாறு ஆகாமல் ஒரே எதுகையாய் நின்றும், இரண்டும் துண்டாய் இடையே சீருறப்பிளக்கப் பெற்று அடிநான்கு உடையதாய் அமைவது யாதோ அது நேரிசை வெண்பா என்றவாறு. முரண்ட எதுகையை முற்படக் கூறினார் அதுவே பெரு வரவிற்று ஆகலின். இரண்டு துணியாய் என்றது இரண்டு குறட்பாக்களாய்த் தனித்தனி அமைந்தது என்பது அறிவித்தற்கு. துணியாவது துண்டு; துணிக்கப் பெற்றது என்னும் காரணப் பொருட்டு. இடைநனி போழ்ந்து என்றது நடுவே சீருறப் பிளக்கப் பெறுதலை. அஃதாவது வெண்பாவிற்குக் கூறப்பெற்ற ஈறு திறம்பாது முதல் ஒரு குறளாகவும், பின்னொரு குறளாகவும் நிற்றல். நிரந்து அடிநான்கின நேரிசை என்றது ஈறு திறம்பாது நிற்றலுடன், ஒன்றிரண்டு அசைகளை உடன் பெற்றும் தனிச் சொல் பெற்றும் இடையறாது ஒழுங்குற்று வருவதை. ஆசிடை வெண்பா என்பர். ஆசு என்பது பற்றாசு. அஃது, ஒற்றுமைப் படாத இரண்டு உலோகங்களை ஒற்றுமைப் படுத்தற்குத் தூவி ஊதும் ஒருவகைப் பொடி. அதுபோல் முதற் குறள் ஈறும், தனிச் சொல்லும் ஒற்றுமைப்பட்டுத் தழுவி நிற்குமாறு அமைந்த ஒன்றிரண்டு அசைகள் ஆசு எனப் பெற்றன. ஆசு இடையே அமைந்த நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனக் காரணக் குறி பெற்ற தென்க. இனி ஆசிடை எதுகைக்கும் இதற்கும் வேற்றுமை என்னையோ எனின், மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே வரும் ய, ர, ல, ழ என்னும் நான்கு எழுத்துக்களும் ஆசிடை எதுகை என்றும், இங்கே வரும் ஆசு இரண்டு சீர்களுக்கு இடையே வரும் ஒன்றிரண்டு அசைகள் என்றும் வேறுபாடு காண்க. ஆசிடை எதுகை, குறித்த எழுத்துக்களின் அளவில் நிற்க, இவ்வாசோ இரண்டு அசைகள் அளவும் மிக்கு நிற்பது என்னும் வேறுபாடும் அறிக. நிரந்து என்பது இடையறாது ஒழுகுதலைக் குறிக்குமோ எனின் குறிக்கும். நிரந்து இலங்கு அருவி (228) என்னும் ஐங்குறு நூற்றாலும் இடையறாது வீழ்ந்து விளங்குகின்ற அருவி என்னும் அதன் குறிப்புரையாலும் இப் பொருட்ட தாதல் அறிக. இனி, இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்துதலைக் குறித்தார் எனினும் கதுவாய், முற்றுத் தொடைகளையும் கொள்க. என்னெனின், அவையும் நான்காம் சீர், தொடையியையு பெற்று வரும் ஆகலின். (எ -டு.) (நேரிசை வெண்பா) தடமண்டு தாமரையின் தாதா டலவன் இடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினான் ஊர் -யா. வி. 60 மேற். -யா. கா. 23 மேற். இஃது இரண்டு குறள்களாய் நடுவு தனிச் சொல் பெற்று வந்த இருவிகற்ப நேரிசை வெண்பா. (நேரிசை வெண்பா) அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரம் கொண்டு-தெரியின் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு. -நீதிவெண்பா. -யா. வி. 60 மேற். -யா. கா. 23 மேற். இஃது இரண்டு குறள்களாய் நடுவு தனிச் சொல் பெற்று வந்த இருவிகற்ப நேரிசை வெண்பா. இவற்றை இருகுறள் நேரிசை வெண்பா என்பர். (நேரிசை வெண்பா) இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தானோவின் அல்லது-துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ளல் அரிது - நாலடியார் 76. இஃது இரண்டு குறள்களாய் நடுவே முதற்றொடைக்கு ஏற்ற தனிச் சொல்லாய், முதற் குறள் ஈற்றில் ஓரசை மிக்கு வந்த இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா. (நேரிசை வெண்பா) தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலும் குன்றல் இலராவர்-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு -நாலடியார் 112. இஃது இரண்டு குறள்களாய் நடுவே முதற்றொடைக்கு ஏற்ற தனிச் சொல்லாய் முதற் குறள் ஈற்றில் ஈரசை மிக்கு வந்த இரு விகற்ப ஆசிடை வெண்பா (நேரிசை வெண்பா) ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப-மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற் போத்தறார் புல்லறிவி னார் -நாரடியார் 351. இஃது இரண்டு குறள்களாய் நடுவே முதற்றொடைக்கு ஏற்ற தனிச் சொல்லாய் முதற் குறள் ஈற்றில் ஓரசை மிக்கு வந்த ஒருவிகற்ப ஆசிடை வெண்பா. (நேரிசை வெண்பா) கல்லானே ஆயினும் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல் -நல்வழி 34. இஃது இரண்டு குறள்களாய் நடுவே முதற்றொடைக்கு ஏற்ற தனிச் சொல்லாய் முதற் குறள் ஈற்றில் ஈரசை மிக்கு வந்த ஒருவிகற்ப ஆசிடை வெண்பா. இந்நேரிசை வெண்பாக்கள் அனைத்தும் இரண்டாம் அடி ஒரூஉத் தொடை பெற்று வந்தவை. (நேரிசை வெண்பா) பண்ட மறியார் படுசாந்துங் கோதையும் கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்து முடைச்சாகா டச்சிற் றுழி -நாலடியார் 48. (நேரிசை வெண்பா) சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள்-ஒன்று மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று மலரிவருங் கூத்தன் தன் வாக்கு -தண்டி. 48 மேற். இவை இரண்டாம் அடி கதுவாய்த் தொடை பெற்றுவந்த நேரிசை வெண்பா. முன்னது மேற்கதுவாய் ; பின்னது கீழ்க் கதுவாய். (நேரிசை வெண்பா) பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்த தொல்லவையார் எல்லாரும் சொல்வதூஉம்-மெல்லிணர்ப் பூத்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத் தேந்தாம வேலான் திறம் -யா. வி. 60 மேற். இஃது இரண்டாம் அடி முற்றுத்தொடை பெற்று வந்த நேரிசை வெண்பா. இனி இணை, பொழிப்பு, கூழை ஆகியவற்றை விலக்கி யுரைத்த தென்னை எனின், அவை ஈற்றுச்சீர் தழுவா ஆகலானும், ஈற்றுச்சீர் முதற் றொடைக்கு ஏற்ற வண்ணம் வாராக்கால் நேரிசை வெண்பா ஆகாது ஆகலானும் அவற்றை விலக்கி யுரைத்தது என்க. நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை, நாலோர் அடியாய்த் தனியிரண் டாவதன் ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும் நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும் என்றார் அமிதசாகரனார். இரண்டாம் அடியின் என்னும் இந் நூற்பாவை, இரண்டாம் அடியின் ஈறொரூஉ எய்தி முரண்ட எதுகைய தாகியும் ஆகா திரண்டு துணியாய் இடைநனி போழ்ந்து நிரந்தடி மூன்றின நேரிசை வெண்பா என ஒருசீர் மாற்றிக் கொள்ளின் நேரிசைச் சிந்தியல் வெண்பா வின் இலக்கணம் கூறிற்றாம். இன்னிசை வெண்பா 51. தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் பலபல தோன்றினும் ஒன்றே வரினும் இயற்பெயர் இன்னிசை என்றிசி னோரே. -யா. வி. 61 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே இன்னிசை வெண்பா இன்னதெனக் கூறிற்று. (இ - ள்.) வெண்பாவின், இரண்டாம்அடி இறுதிச்சீர் முதற்றொடைக்கு ஏற்பத் தனிச்சொல் தழுவாது, பல விகற்பகங் களோடு வரினும், ஒரு விகற்பத்தோடு வரினும் அதன் பெயர் இன்னிசை வெண்பா என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு. இன்னிசையாவது இனிய இசை, நேரிசையாவது சான்றோ ரால் தக்கது என நேர்ந்த இசை. இரண்டாம் அடி இறுதிச் சீர் முதற்றொடைக்கு ஏற்ப அமைத்தல் முறையாகவும் பொருட் டொடர் பருமையும், ஓசைப்பாடு கெடாமையும் கருதி அமைக்கப் பெறுவதாகலின் இன்னிசை என்றார். ஆயினும் நேரிசை யளவு அத்துணைச் சிறப்பின்று என்பாராய்ச் சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல் என்னும் முறையால் நேரிசை வெண்பா வினை உரைத்துப் பின்னே இன்னிசை வெண்பாவினை உரைத் தார் என்க. இவ்வாறு வாராதது இன்னிசை எனின் இவ்வாறு வருதலே சீரிது என்பது பெறப்பட்டதாம். தனிச்சொல் இன்றி என்னாமல் தழுவலவாகி என்ற விதப்பினால், தனிச்சொல் தழுவிப் பலவிகற்பத்தான் வருவனவும், அடியடிதோறும் ஒரூஉத் தொடை பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவில் வேறுபட்டுப் பிறவாறு வருவனவும் இன்னிசை என்று கொள்க. இதனால் அன்றே யாப்பருங்கலவிருத்தி யுடையாரும், தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தால் வருவன விதப்பினால் உடன்பட்டார் காக்கை பாடினியார் என்றார் என்க. இன்னிசை வெண்பா வருமாற்றை, ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியும் தனிச்சொல் இன்றிப் பலவிகற் பாகியும், அடியடி தோறும் ஒரூஉத்தொடை அடைநவும் எனவைந் தாகும் இன்னிசை தானே -யா. வி. 61 மேற் -யா. கா. 24 மேற். என எண்ணி விரித்துரைத்தார் பிறரும் எனக் கொள்க. (இன்னிசை வெண்பா) கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து -நாலடியார் 135. (இன்னிசை வெண்பா) தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையர் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி -நாலடியார் 137. (இன்னிசை வெண்பா) இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம் -நாலடியார் 36. இவை தனிச்சொல் இன்றிப் பலவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. (இன்னிசை வெண்பா) வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாகில் ஆற்றுந் துணையும் பொறுக்கப் பொறானாயில் தூற்றாதே தூர விடல் - நாலடியார் 75. (இன்னிசை வெண்பா) இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. -நாலடியார் 132. இவை தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. (இன்னிசை வெண்பா) அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்-திங்கள் மறுவாற்றும் சான்றோர்அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒருமா சுறின். -நாலடியார் 151. (இன்னிசை வெண்பா) மலிதேரான் கச்சியு மாகடலும் தம்மில் ஒலியும் பெருமையும் ஒக்கும்-மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும். -தண்டி. 49 மேற். -யா. வி. 61 மேற். -யா. கா. 24 மேற். இவை தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. (இன்னிசை வெண்பா) மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் தவமிலார் இல்வழி இல்லை தவமும் அரசிலான் இல்வழி இல்லை; அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல். -நான்மணிக்.8 இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று வந்த இன்னிசை வெண்பா. (இன்னிசை வெண்பா) கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும் வடுப்பட வைதிறந்தக் கண்ணும்-குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து -நாலடியார். 156. (இன்னிசை வெண்பா) வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவ ராற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை-களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல் -நாலடியார் 107. இவை மூன்றாமடி இறுதிச்சீர் தனிச்சொல் பெற்று இருவிகற் பத்தான் வந்த இன்னிசை வெண்பா. இனிப் பிறவாறு வருவனவும் கொள்க. இன்னிசை வெண்பாவிற்குக் கூறப் பெற்ற இந்நூற்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும் தகுமாறு அமைந்துள்ளமை அறிக. இவ் விலக்கணத்தை, விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொல் இயற்றப் படாதன இன்னிசை வெண்பா -யா. வி. 61. என்று அமிதசாகரனாரும். ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன இன்னிசை வெண்பா -யா. வி. 61 மேற். என்று சிறுகாக்கை பாடினியாரும் கூறினார் ஆதல் அறிக. பஃறொடை வெண்பா 52. தொடைஅடி இத்துணை என்னும் வழக்கம் உடையதை அன்றி உறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே. -யா. வி. 62 மேற். -யா. கா. 24 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் பஃறொடை வெண்பாவாவது இஃது என்பது கூறிற்று. (இ - ள்.) இத்துணைத் தொடையையும் இத்துணை அடியையும் உடையது என்னும் முறைமை உடையதல்லாமல், வெண்பாவுக்கு ஓதப்பெற்ற உறுப்புக்களுள் எவ்வொன்றும் சிதைவுறாமல் நடக்கும் தன்மையது யாது அது பஃறொடை வெண்பா என்னும் பெயர் கொள்ளும் என்றவாறு. பஃறொடையாவது பல தொடை. இதனை நெடுவெண் பாட்டு என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். செய். 117. தொடை இத்துணை என்றோ அடி இத்துணை என்றோ கூற அமையுமாக இரண்டையும் கூறியது தொடை யொன்றடி யிரண்டாகி (48) எனத் தொடங்கி யுரைத்தாராகலின் இவ்வாறு கூறினார் என்க. இத்துணை என்பதைத் தொடை, அடி இரண்டற்கும் கூட்டுக. அறைந்த உறுப்பின் அகறல் இன்றி என்று மேலே கூறியவர் மீண்டும் உறுப்பழி வில்லா நடையது என்று கூறியது, கூறியது கூறலோ எனின் அற்றன்று ; அவை யெல்லாம் ஈரடி, மூவடி, நாலடியான் வரும் வெண்பாக்கள் என அறுதியிட்டு உரைக்கப் பெற்றன. இப் பஃறொடையோ அடிதொடை இத்துணை என்று வரம்பு கட்டப் பெறாதது ; ஆகலின் வரம்பிலாத் தொடை அடிப் பஃறொடை, உறுப்பழிதலும் உறுமோ என்பார் உளராயின் அவர் ஐயம் அறுத்தற்கு உரைத்தார். ஆகலின் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படாது என்க. இனி, வழக்கம் உடையதை என்னும் விதப்பினால் அடி தொடை அளவிறந்து வாரா என்பதூஉம் அவ் வளவினை வழக்கறிந்து போற்றுக என்பதூஉம் கொள்க. என்னை? ஏழடி இறதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக் கிசைந்தன அடியே மிக்கடி வருவது செய்யுட் குரித்தே (சங்கயாப்பு)-யா. வி. 62 மேற். என்றும், ஆறடி முக்காற் பாட்டெனப் படுமே ஏறிய அடியும் செய்யுளுள் வரையார் -யா. வி. 62 மேற். என்றும் ஒருசார் ஆசிரியர் சிறப்புடைமை நோக்கி ஏழு அடி எடுத்து ஓதினார் ஆகலின். ஆயினும் அதனின் மிக்கு வருவனவும் வழக்கியல் நோக்கி அவர் உடம்பட்டார் எனக் கொள்க. (எ - டு.) பஃறொடை வெண்பா சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன மாவடர் ஆற்றுக்கால் ஆட்டியர் கண் -தொல். செய். 114 இளம். -யா. வி. 62. இஃது ஒரு விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா. பஃறொடை வெண்பா பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும் வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியும் ஆனேறே அங்கவன்றன் ஊர்தியுமற் றவ்வேறே அவ்வேற்றின் கண்டத்திற் கட்டும் கதிர்மணிக்கிங் கென்கொலோ பைந்தொடியார் செய்த பகை -சிதம்பரச் செய்யுட்கோவை 19. இது பல விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா. (பஃறொடை வெண்பா) கருந்தாது கொல்லும் கருங்கைத்திண் கொல்லர் வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு திருந்தாதார் முன்றிறொறும் சென்றுசிலர் தூங்க இருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம அருந்தா தலர்தில்லை யம்பலத்திற் றூங்கும் பெருந்தேன் முகந்துண்ணப் பெற்று -சிதம்பரச் செய்யுட்கோவை 20. இஃது ஒரு விகற்பத்தான் வந்த ஆறடிப் பஃறொடை வெண்பா. (பஃறொடை வெண்பா) பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே-பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள்-யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேற் றென்னன் திருத்தார்நன் றென்றேன் றியேன். -தொல். செய். 114 இளம். -யா. வி. 62. இது பல விகற்பத்தான் வந்த ஆறடிப் பஃறொடை வெண்பா. (பஃறொடை வெண்பா) வானே நிலனே கனலே மறிபுனலே ஊனேஅவ் வூனின் உயிரே உயிர்த்துணையே ஆனேறும் ஏறே அரசே அருட்கடலே தேனே அமுதே அளியோங்கள் செல்வமே யானே புலனு நலனு மிலனன்றே ஆனாலு மென்போன்மற் றார்பெற்றார் அம்பலத்துள் மாநாட கங்காணும் வாழ்வு -சிதம்பரச் செய்யுட்கோவை 22. இஃது ஒரு விகற்பத்தான் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா. (பஃறொடை வெண்பா) வையக மெல்லாம் கழனியா ;-சையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் ;-செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு ;-வான்கரும்பின் சாறே அந் நாட்டுத் தலையூர்கள் ;-சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் ;-கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கக்சி அகம் -யா. வி. 62 மேற். -யா. கா. 24 மேற். இது பல விகற்பத்தான் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா. (பஃறொடை வெண்பா) சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய்! நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக் கூறக் கட்டலர் தாமரையுள் ஏழும் கடுமான்தேர்க் கத்திருவ ருள்ளைந்தும் காயா மரமொன்றும் பெற்றவிழ்தேர்ந் துண்ணாதபேயின் இருந்தலையும் வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயரென்றாள் வானவன்கை விற்பொறித்த வேற்புருவத் தாள். -தொல். செய். 114 இளம். -யா. வி. 62. இது பன்னீரடியான் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா. இது பெருவல்லத்தைப் பற்றிக் கூறியது. இன்னும் பலவடியான் வந்த பஃறொடை வெண்பா இராமாயணம். புராணசாகரம் முதலாகவுடைய நூல்களில் உளவாகக் கூறுவார் யாப்பருங்கல விருத்தியுடையார். வந்துழிக் கண்டு கொள்க. இதனைத், தொடை பல தொடுப்பன பஃறொடை வெண்பா -யா. வி. 62 மேற். என்றார் சிறுகாக்கைபாடினியார். பாதம் பலவரின் பஃறொடை வெண்பா என்றார் ஆசிரியர் அமித சாகரனார். நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே -செய். 156. என்று அறுதியிட்டுரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். வெண்பாவின் இனம் 53. வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே. -யா. வி. 56 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பாவின் வகைகளைக் கூறி முடித்து, அதன் இனங்கள் இவையெனத் தொகுத்துக் கூறிற்று. (இ -ள்.) வெண்பாவின் இனம், விருத்தம் துறை தாழிசை என்னும் இம் முறையால் எண்ணப்பெற்ற மூன்றும் பாவின் பெயரும் இனத்தின் பெயரும் தழுவி நின்ற பெயருடன் வரும் என்றவாறு. வெண்பா என்பதை விருத்தம், துறை, தாழிசை என்னும் மூன்றுடனும் இணைக்க. இது முதனிலை விளக்காம். தத்தம் பெயரால் தழுவும் பெயர் என்றது வெண்பா விருத்தம் என்பது வெளி விருத்தம் என்றும், வெண்பாத்துறை வெண்டுறை என்றும், வெண்பாத் தாழிசை வெண்டாழிசை என்றும் பெறும் பெயர்களை. வெண்பா அதிகாரப் பட்டமையால் அதனோடு இனம் மூன்றையும் இணைத்துக் கூறினார். இவற்றைப் பிற பாக்களொடும் சார்த்திக் கொள்ளுமாறே முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் என்றார் என்க. தழுவிக் கொள்ளுமாறு : ஆசிரியப்பாவின் இனம் ஆசிரியவிருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை என்பன. கலிப்பாவின் இனம், கலிவிருத்தம், கலித்துறை, கலித் தாழிசை என்பன. வஞ்சிப்பாவின் இனம், வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வஞ்சித் தாழிசை என்பன. இவற்றைத், தத்தம் பாக்களைக் கூறுகின்றுழிக் கூறுதும். விருத்தம் துறையொடு தாழிசை என்றும் முறையின் என்ணிய என்றார் ; இம்முறையின் எண்ணாமையும் கொள்க. என்னை? விருத்தம் தாழிசை துறை என்றும், தாழிசை துறை விருத்தம் என்றும், பிறவாறும் எண்ணினார் உளர் ஆகலின் என்க. வெண்பாவின் இனம் இவை எனப் பெயரும் தொகையும் கூறினார். வெண்பாவினுள் ஒருதொடை ஈரடி எனப்பெறும் குறட்பாவிற்கு இனம் இன்றோ எனின் உண்டு என்றற்கு அன்றே மேல் வரும் நூற்பா ஓதினார் என்க. குறள்வெண் செந்துறை 54. அந்தங் குறையா தடியிரண் டாமெனிற் செந்துறை என்னும் சிறப்பிற் றாகும் -யா. வி. 63 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் குறள் வெண்பாவின் இனம் இரண்டனுள் ஒன்றாகிய செந்துறை என்பதன் இலக் கணம் கூறிற்று. (இ - ள்.) இறுதியடி அளவிற் குறையாமல் அடி இரண்டாக வருமானால் அது குறள் வெண் செந்துறை என்னும் சிறப் புடையதாகும் என்றவாறு. அந்தங் குறைந்து வருதல் வெள்ளைக்கியல்பு ஆகலின் அதனை விலக்குதற்கு அந்தங் குறையாது என்றார். இவ்வாறு விலக்கவே தன்றளை யன்றிப் பிறதளை வாரா என்னும் யாப்புறவும் நீங்கிற்றென்று கொள்க. அன்றியும் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பயக்க இரண்டடியும் அளவடியாய் ஒத்து வந்தது குறள் வெண் வெந்துறை அல்லது செந்துறை வெள்ளை எனக் கொள்க. என்னை? ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே -யா. வி. 63. என்றார் ஆகலின். குறள் விருத்தம் என ஒன்று இன்றோ எனின் மூவடியிற் சிறுமையுடையதாய் விருத்தம் வாராது ஆதலின் ஈரடிக்குறள் வெண்பாவிற்கு விருத்தம் என்னும் இனமொன்று இன்றெனக் கருதுக. (எ - டு.) (குறள்வெண் செந்துறை) ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை -முதுமொழிக்காஞ்சி 1. (குறள்வெண் செந்துறை) கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோ மியாமே -கொன்றைவேந்தன் 1. (குறள்வெண் செந்துறை) செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே -சிதம்பரச் செய்யுட்கோவை 29. (குறள்வெண் செந்துறை) பெருநூல் பிறபல கற்பதின் மாறன் ஒருநூல் கற்ப தூதியம் உயிர்க்கே -பாப்பாவினம் 29. அந்தங் குறையாது என்றமையால் அளவடியின் மிக்கு ஈரடியாய் அளவொத்து ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பயப்பனவும் குறள் வெண் செந்துறை எனக் கொள்க. (குறள்வெண் செந்துறை) நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே -யா. வி. 63 மேற். இஃது அறுசீர் அடியால் வந்த குறள்வெண் செந்துறை. குறட்டாழிசை 55. அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும் சந்தழி குறளும் தாழிசைக் குறளே. 1 இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் குறட்டாழிசை ஆமாறு கூறிற்று. (இ - ள்.) ஈற்றடி குறைந்து வருவனவும் (விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாமல்) குறள்வெண் செந்துறையில் சிதைந்து இரண்டடியும் ஒத்துவருவனவும், செப்பலோசையில் சிதைந்து வந்த குறள் வெண்பாவும் குறட்டாழிசை அல்லது தாழிசைக் குறள் எனப்பெறும் என்றவாறு. குறள் வெண்பாவின் இனம் ஆகலின் இஃது இரண்டடி எனக் கொள்க. சந்தழி என்பது செப்பலோசை ஆகிய சந்தம் அழிந்து-பிற தளையும் தழுவி - வந்தது என்க. ஈற்றடி குறைந்து என்றமையால் முதலடிமிக்கு என்பது பெற்றாம். (எ - டு.) (குறட்டாழிசை) நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற் கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே -யா. வி. 64. அண்டர் நாயகன் அரங்கன தடித்தளிர் அணிமுடி மிசைபுனை தூயோர் மண்டு தெண்டிரைக் கடற்புவி யிடைப்பிற வாரே -பாப்பாவினம் 30 (குறட்டாழிசை) தண்ணந் தூநீர் ஆடச் சேந்த வண்ண ஓதி கண் -யா. வி. 64. இவை இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை (குறட்டாழிசை) பிண்டியின் நீழல் பெருமான் பிடர்த்தலை மண்டிலந் தோன்றுமால் வாழி அன்னாய் -யா. வி. 64. -யா. கா. 26. (குறட்டாழிசை) முன்புல கீன்ற முகிழ் முலைக் கன்னியோ டின்புறும் யோகி எழுபுவிக் கரசே -சிதம்பரச் செய்யுட்கோவை 31. (குறட்டாழிசை) திடுதிம் மெனநின் றுமுழா அதிரப் படிதம் பயில்கூத் தருமார்த் தனரே -யா. வி. 64. இவை இரண்டடியாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி இரண்டடியும் ஒத்து வந்தமையால் செந்துறை சிதைந்த குறட்டாழிசை. (குறட்டாழிசை) வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் பண்டையள் அல்லள் படி -யா. வி. 64 மேற். -யா. கா. 26 மேற். (குறட்டாழிசை) பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதரீஇ மால்யானைக் கன்றீனு முக்கட் களிறு -சி. செ. கோவை 32. இவை செப்பலோசையிற் சிதைந்து வந்த குறட்டாழிசை. வெளிவிருத்தம் 56. ஒருமூன் றொருநான் கடியடி தோறும் தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே. -யா. வி. 68 மேற். -யா. கா. 27 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெளி விருத்தமாவது இன்னது எனக் கூறிற்று. (இ - ள்.) மூன்றடியாயும், நான்கடியாயும் வந்து அடி தோறும் தனிச்சொல் பெற்று நடக்குமவை யாவை. அவை வெளிவிருத்தம் எனப்பெயர் கொள்ளப் பெறும் என்றவாறு. மூன்று நான்கு என்னாது ஒரு மூன்று ஒரு நான்கு என்றார் அவ்வடி அளவடி என்றற்கு. தனிச்சொல் பெற்று என்னாது தழுவி என்றார், அளவடிக்கு மிக்குத் தனியே வருஞ்சொல் தனிச்சொல் என்று கோடற்கு என்க. யாதானுமொரு தனிச் சொல்லோ என்பார்க்கு, அற்றன்று ஒரே சொல் என்பாராய் அடியடி தோறும் என்பதை அடுத்துத் தனிச்சொல்லை அடைவு செய்தார் எனக் கொள்க. வெள்ளை வெண்பாவைக் குறிக்குமோ எனின் குறிக்கும். அந்தத் தனியசை வெள்ளை (10) என்று இவரும், வெள்ளைக்கு இரண்டடி (யா. கா. 14) எனப் பிறரும் கூறியவாற்றான் அறிக. நான்கடி யானும் நடைபெற் றடிதொறும் தான்தனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே -யா. வி. 68 என்று கூறி மூன்றடியையும் கொண்டார் பிறரும். இவர் வெளிப் படக் கூறினார் என்க. (வெளிவிருத்தம்) ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே-எந்தைகுன்றம் ; நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே-எந்தைகுன்றம் ; கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே-எந்தைகுன்றம். -யா. வி. 68. (வெளிவிருத்தம்) கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்செய்கோயான் எண்டிசையும் தோகை இசைந்தகவி யேங்கினவால் - என்செய்கோயான் -யா. கா. 27. (வெளிவிருத்தம்) அங்கட் கமலத் தமர்கமல மேயீரும்-நீரேபோலும் வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரும்-நீரேபோலும் திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும்-நீரேபோலும் -சி. செ. கோவை 39. இவை மூன்றடியாய் அடிதோறும் இறுதிக்கண் தனிச்சொல் பெற்று வந்த வெளிவிருத்தம். (வெளிவிருத்தம்) மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்-எந்தைகுன்றம் காலை மணிக்குவளை காதலர்போல் கண்விழிக்கும்-எந்தைகுன்றம் நீல மழைமுங்கி நின்று சிலம்பதிரும்-எந்தைகுன்றம் ஆலி மயிலகவ அந்தண் டுவனமே-எந்தைகுன்றம் -யா. வி. 68 மேற். (வெளிவிருத்தம்) சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும் புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும் கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும் நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும் -யா. வி. 68 மேற். (வெளிவிருத்தம்) ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்-ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார்-ஒருசாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீத்தார்-ஒருசாரார் ஏகீர் நாகீர் என்செய்தும் என்றார்-ஒருசாரார் -யா. வி. 68 மேற். -யா. கா. 27, 41 மேற். இவை நான்கடியாய் அடிதோறும் இறுதிக்கண் தனிச் சொல் பெற்று வந்த வெளி விருத்தம். வெண்டுறை 57. அடியைந் தாகியும் மிக்கும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும் வெண்டுறை என்னும் விதியின வாகும். -யா. வி. 67 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெண்டுறையாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) ஐந்தடிகளையுடைய தாகவும் அவ்வடிகளினும் ஒன்றோ இரண்டோ மிகுத்தும், முதற்கண் அடிகளுக்கு ஈற்றடிகள், ஒரு சீரோ இரு சீரோ குறைந்துவரின் வெண்டுறை என்னும் பெயர் பெறும் முறைமையுடைய தாகும் என்றவாறு. ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தப என்பதனை ஈற்றடி ஒன்றும் .இரண்டும் என்றும், சீர் ஒன்றும் இரண்டும் என்றும் கூட்டிப் பொருள் கொள்க. விதியின வாகும் என்ற விதப்பினால், செய்யுளின் முற்கூறு ஓர் ஒலியாகவும், பிற்கூறு வேறோர் ஒலியாகவும் வருவனவும் கொள்க. இனி, மூன்றடி முதலா ஏழடி ஈறாக வெண்டுறை வரும் என்பார் உளராகலின் அவர் கருத்தையும் இவ்விதப்பான் தழுவிக் கொள்க. என்னை? மூன்றடி முதலா ஏழடி காறும்வந் தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும் -யா. வி. 67. என்றார் ஆகலின். இவ்வாற்றான் அவர் வெண்டுறையை ஓர் ஒலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை என இருபாற் படுத்துக் கொள்வார் எனக் கொள்க. (வெண்டுறை) தாளாளர் அல்லாதார் தாம்பல ராயக்கால் என்னாம் என்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே -யா. கா. 27 மேற். -யா. வி. 67. இது மூன்றடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த வெண்டுறை. (வெண்டுறை) குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சழிந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பானோ அல்லன். -யா. கா. 27 மேற். -யா. வி. 67. இது நான்கடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த வெண்டுறை. (வெண்டுறை) வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன் செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிறபிற நிகழ்வன பின். -யா. வி. 67 மேற். -யா. கா. 27 மேற். இஃது ஐந்தடியாய் ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த வெண்டுறை. இம் மூன்றும் ஓரொலி வெண்டுறை. ஐந்தடியின் மிக்கு வருவன பெரும்பாலும் வேற்றொலி வெண்டுறை எனக் கொள்க. ஐந்தடியான் வருவன இருதிறமும் ஏற்கும் எனக் கொள்க. (வேற்றொலி வெண்டுறை) கல்லாதார் நல்லவையுட் கல்லேபோல் சென்றிருந்தால் கருமம் யாதாம்? இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்? பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்? புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே! அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ? -யா. வி. 67 மேற். இஃது ஐந்தடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை. (வேற்றொலி வெண்டுறை) முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர் வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன் செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத் தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ. -யா. வி. 67 மேற். இஃது ஆறடியாய் முதலடி இரண்டும் ஆறு சீராய்ப் பின் நான்கடியும் நாற்சீராய் வந்த வேற்றொலி வெண்டுறை; (வேற்றொலி வெண்டுறை) முழங்கு திரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய் கோமான் வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய வைவேல் பாடிக் கலங்கிநின் றாரெல்லாம் கருதலா காவணம் இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள் புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின்றா ரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே -யா. வி. 67 மேற். இஃதேழடியாய் முதலிரண்டடியும் ஆறு சீராய்ப் பின் ஐந்தடியும் நாற்சீராய் வந்த வேற்றொலி வெண்டுறை. இவை யாப்பருங்கல விருத்தியுடையார் காட்டிய பாட்டு. ஐந்தா றடியின் நடந்தவும் அந்தடி ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும் வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே -யா. வி. 67 மேற். என்றார் அவிநயனார். வெண்டாழிசை 58. தன்பா அடித்தொகை மூன்றாய் இறுமடி வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின் தண்பா இனங்களில் தாழிசை யாகும். -யா. வி. 66 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெண்டாழிசையாமாறு கூறிற்று. (இ - ள்.) வெண்பா அடி மூன்றாகி, ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீர் அடியாக முடிவது வெண்பாவின் இனங்களுள் ஒன்றாகிய தாழிசையாம் என்றவாறு. தன்பா என்றது ஈண்டு வெண்பாவை. தன்பா என்னாமலும் அமையுமே எனின் வெண்டளை பிழையாது மூன்றடியாய் வருவனவும், பிற தளைகளான் வருவனவும் என இருதிறத்தனவும் தழுவிக் கோடற்குத் தன்பா என்றார். புரைய என்றது போல என்னும் பொருட்டு. வெண் பாவாய் இறும் என்னாமல் வெண்பாப் புரைய என்றது என்னை எனின் ஈற்றுச்சீர் ஒன்றே வெண்பா யாப்புறவில் முடியுமாறும் ஈற்றடிப் பிற இரண்டு சீர்களும் அவ்வாறு முடிக என்னும் யாப்புறவு இல்லை என்னுமாறும் காட்டற்குப் புரைய என்றார்; இதனைப், (குறள் வெண்பா) பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் -திருக். 292. என்னும் குறளில் வாய்மை என்று கூறாது வாய்மை இடத்த என்றாற் போல வெண்பா என்னாமல் வெண்பாப்புரைய என்றார் என்று கொள்க. வெள்ளை என்னாமல் வெள்ளையின் தண்பா என்ற விதப்பினால் சிந்தியல் வெண்பா ஒரு பொருள் மேல் முன்றடுக்கி வந்தன வெள்ளொத் தாழிசை என்றும். அவ்வாறன்றிப் பிற தளைகளும் கலந்து ஒன்றாகியும் இரண்டாகியும் ஒரு பொருள் மேல் மூன்றாகியும் வருவன வெண்டாழிசை என்றும் கொள்ளப் பெறும் என்க. (வெள்ளொத்தாழிசை) அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல் ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து வீடான் துறந்து விடல் பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல் -யா. வி. 66 மேற். -யா. கா. 27 மேற். இவை வேற்றுத்தளை விரவாது வெள்ளோசை கொண்டு ஒரு பொருள்மேல் முன்றடுக்கிவந்த வெள்ளொத் தாழிசை. (வெண்டாழிசை) நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவ செய்யார் அன்பு வேண்டு பவர் -யா. வி. 15 66 மேற். -யா. கா. 27 மேற். (வெண்டாழிசை) கனக மார்க வின்செய் மன்றில் அனக நாட கற்கெம் அன்னை மனைவிதாய் தங்கை மகள் -சிதம்பரச் செய்யுட் கோவை. 33. இவை ஒரு பொருள்மேல் ஒன்று வந்து வெள்ளோசை தழுவாது மூன்றடியாய் வெண்பாவே போல் முடிந்த வெண்டாழிசை; இதனை, அடிமூன் றாகி வெண்பாப் போல இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை -யா. வி. 66 மேற். எனச் சிறுகாக்கைபாடினியாரும், அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் விடினது வெள்ளொத் தாழிசை யாகும் -யா. வி. 66. என அமிதசாகரனாரும் கூறினார். வெண்பாவும் அதன் வகையும் இனமும் முடிந்தன. 2. ஆசிரியப்பாவும் அதன் வகையும் நேரிசை ஆசிரியப்பா 59. இறுசீர் அடிமேல் ஒரு சீர் குறையடி பெறுவன நேரிசை ஆசிரி யம்மே. 1இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நேரிசை யாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக் குறள் ஆசிரியப்பா, அடி மறிமண்டில ஆசிரியப்பா என்பன வற்றுள் நேரிசை ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்.) ஈற்றடிக்கு மேலடி, ஒரு சீர் குறையடியாகி வருவன யாவை அவை நேரிசை ஆசிரியப்பா என்றவாறு. இறும் அடி என்னாது இறு சீர் அடி என்றார், ஈற்றடி ஈற்றுச்சீர்க்கு நேர்மேல் அமைந்த ஒரு சீர் குறைந்த அடியை. ஈற்றயலடியில் எச்சீர் குறையுமோ எனின், இறுதிச் சீர் ஒன்றுமே குறையும் என்க. இனிச், சீருற முடியும் மேலடி என்னும் பொருட்டு மாம். சீர் என்னும் இவ்விதப்பால், ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ என்று ஆசிரியப்பா முடியும் என்பது கொள்க. என்னை? அகவல் இசையன அகவல்; மற்றவை ஏஓஈ ஆய் என்ஐ யென் றிறுமே - யா. வி. 69. என்றார் ஆகலின். ஆசிரியம் என்னாது ஆசிரியம்மே என விரித்துக் கூறிய தால் அகவல் - ஏந்திசை அகவல், தூங்கிசை அகவல், ஒழுகிசை அகவல் என முத்திறப்படும் எனக் கொள்க. ஏந்திசை அகவலாவது நேரொன்றாசிரியத் தளையான் வருவது; தூங்கிசை அகவலாவது, நிரையொன்றாசிரியத் தளை யான் வருவது. ஒழுகிசை அகவலாவது, இவ்விரு தளையானும் வருவது. என்னை? நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும் நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும் ஆயிரு தளையுமொத்தாகிய வகவலும் ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்றா ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப -யா. கா. 21 மேற். என்றார் ஆகலின். (நேரிசை ஆசிரியப்பா) போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதி நாதற் சேர்வோர் சோதி வானம் துன்னு வோரே -யா. வி. 69 மேற். -யா. கா. 5, 21 மேற். இவ்வாசிரியம் நேரொன்றாசிரியத் தளையானே வந்தமையால் ஏந்திசை அகவல். (நேரிசை ஆசிரியப்பா) அணிதிகழ் அசோகமர்ந் தருணெறி நடாத்திய மணிதிகழ் அவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே -யா. வி. 69 மேற். -யா. கா. 5, 21 மேற். இவ்வாசிரியம் நிரையொன்றாசிரியத் தளையானே வந்தமை யால் தூங்கிசை அகவல். (நேரிசை ஆசிரியப்பா) குன்றக் குறவன் காதல் மடமகள் வரையர மகளிர் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே -யா. வி; 69 மேற். -யா. கா. 9, 21 மேற். இவ்வாசிரியம் இருவகைத் தளைகளானும் வந்தமையால் ஒழுகிசை அகவல். அசை கூறியவிடத்துக் (கா. பா. 5) காட்டிய நீடு வாழ்க தமிழ்மொழி தனிமொழி என்னும் அகவற்பாக்கள் ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும் ஆதல் அறிக. இங்குக் காட்டப்பெற்ற எடுத்துக் காட்டுகள் ஏகாரத்தால் முடிந்தமையும் அறிக. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் (46) என்னும் அகப்பாட்டு, சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ என ஓகாரத்தான் முடிந்தது. (நேரிசை ஆசிரியப்பா) குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி இரங்குமென் றழுங்கல் வேண்டா செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ -யா. வி. 69 மேற். இஃது ஈகாரத்தான் முடிந்தது. (நேரிசை ஆசிரியப்பா) வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் தண்ணக மண்ணளை நிறைய நெல்லின் இரும்பூ உறைக்கும் ஊரற்கிவள் பெருங்கவின் இழப்ப தெவன்கொல் அன்னாய் (30) இவ்வைங்குறுநூறு ஆய் என முடிந்தது. இவ்வாறே தோழிக் குரைத்த பத்து முழுமையும் (4) அன்னாய்க் குரைத்த பத்து முழுமையும் (22) ஆய் என முடிந்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை அகவல்கள் என் என்னும் ஈற்றால் முடிந்தன. (நேரிசை ஆசிரியப்பா) நின்றன நின்று தன்துணை ஒருசிறைப் பூந்தண் சிலம்பன் தேந்தழை இவையெனக் காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப் பூண்முலை நோக்கி இறைஞ்சி வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை -யா. வி: 69 மேற். இஃது ஐகாரத்தான் முடிந்தது. இனி, இகரத்தான் முடிந்தனவும் உள என்பதை மணி வாசகரின் போற்றித் திருவகவலாலும், வள்ளலாரின் அருட்பெருஞ் சோதி அகவலாலும் அறிக. பிறவும் அன்ன. (நேரிசை ஆசிரியப்பா) நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே - குறுந்தொகை3. (நேரிசை ஆசிரியப்பா) வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானற் சேக்கும் துறைவனோ டியானெவன் செய்கோ பொய்க்குமிவ் வூரே -ஐங்குறு நூறு 154. இவை ஈற்றயலடி முச்சீராயின ஆகலின் நேரிசை ஆசிரியப்பா. நிலைமண்டில ஆசிரியப்பா 60. ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே. -யா. கா. 28 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் நிலைமண்டில ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்.) எல்லா அடிகளும் அளவடிகளாய், மரபுநிலை திரியாது நிற்பது யாது அது நிலைமண்டில ஆசிரியப்பா என்றவாறு. நேரிசை ஆசிரியத்திற்கும் நிலைமண்டில ஆசிரியத்திற்கும் வேறுபாடு என்னை எனின், ஈற்றயலடி ஒன்றும் முச்சீராய் வருவது நேரிசை ; எல்லா அடிகளும் நாற்சீராய் வருவது நிலை மண்டிலம் ; என்பது வேறுபாடு என்க. இன்னும் வேற்றுமை இன்றோ என்பார்க்கு உண்டு என்று கூறுவாராய் உலையா மரபொடு நிற்பது என்றார். உலையா மரபாவது யாது? அதனைக் கூறாரோ எனின் கூறுதற்கு அன்றே முன்னை நூற்பா (61) வகுத்தார் என்று அமைக. (எ - டு.) (நிலைமண்டில ஆசிரியப்பா) வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே -குறுந்தொகை 18. (நிலைமண்டில ஆசிரியப்பா) பானலொடு கமழும் கானலம் தண்கழி முத்துகுத் தன்ன கொத்துதீர் புன்னைக் கொடுஞ்சினை நெடுங்கோட் டிருந்தபார்ப் பிற்குக் குண்டுறை அன்னம் மீன்கவர்ந்து கொடுக்கும் தண்டுறை ஊரன் தக்கானெனல் கொடிதே -யா. வி. 74 மேற். இவை எல்லா அடியும் நாற்சீர் அடியாக நடத்தலின் நிலை மண்டில ஆசிரியப்பா. மண்டிலம் எனின் அமையும் நிலைமண்டிலம் என்ன வேண்டியது என்னை எனின், நாற்சீர் அடிகளாலேயே அமைந்து நின்று, சுழலும் மண்டிலம் அடிமறி மண்டிலம் என ஒன்று இருத்தலின், அதனின் வேறுபாடு கண்டறிதற்கு இப் பெயர் வேண்டும் என்பது. அடிமறி மண்டிலம் எவ்வண்ணம் நிலை மாறும் எனின் அதனைக் கூறுதற் கென்றே வருவது வரும் நூற்பாவிற்கு முன் நூற்பா (62) என அமைக. நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு 61. என்னென் கிளிவி ஈறாப் பெறுதலும் அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற நிற்கவும் பெறூஉ நிலைமண் டிலமே. -யா. கா. 28 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு இவ்வாறு வரும் என்பது கூறிற்று. (இ - ள்.) நிலைமண்டில ஆசிரியப்பா என் என்னும் அசைச்சொல்லை இறுதியாகப் பெற்று வருதலும், என் என்பதில் அமைந்துள்ளவாறு, பிற ஒற்றெழுத்துக்களை ஈறாகப் பெற்று வருதலும் பெறும் என்றவாறு. கிளவியாவது சொல். கிளவியாக்கம் என்று ஓர் இயல் வகுத்தமைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். இரட்டைக் கிளவி என்பதன் கண்ணும் கிளவி சொல்லாதல் அறிக. அந்தம் பெற நிற்றல் என்னாது, நிலைபெற நிற்றல் என்றார் அடிநிலைமாறாத தன்மையது இவ்வாசிரியம் என்பது உரைத்தற்கு. அன்னவை என்றது என் என்பதிலுள்ள னகர ஒற்றுப் போன்ற பிற ஒற்றுக்களை. பிறவும் என்றது ஒழிந்த அகவற்பாக்களுக்கு வரும் ஏ ஓ முதலியவற்றை. இவற்றை முப்பகுதியாக உரைத்த தென்னை எனின் நிலை மண்டிலத்திற்கு என் என முடிதல் சிறப்பு என்பதுவும், பிற வொற்றுக்களால் முடிதலும் கொள்க என்பதுவும், பிறவாறு வரினம் சிறப்பின்றாயினும் கொள்க என்பதும் கூறுதற்குப் பகுத்தோதினார் என்க. பிறரும், ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே -யா. வி. 74 மேற். என்றும், ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்னென் கிளவியை ஈறாகப் பெறுதலும் அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே -(அலிநயனார்) யா. வி. 74 மேற். என்றும் கூறினார். என் என முடியும் நிலைமண்டில ஆசிரியப்பாக்களைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவற்றுள் காண்க. ஏ எனமுடியும் நிலைமண்டிலம் மேலே நூற்பாவிற் காட்டினாம். (நிலைமண்டில ஆசிரியப்பா) கோண்மாக் கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க் கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வானவன் கூடல் அன்ன குறுந்தொடி அரிவை ஆடமை மென்றோள் நசைஇ நாடொறும் வடிநுனை எஃகம் வலவயின் ஏந்திக் கைபோற் காந்தள் கடிமலர் அவிழும் மைதோய் சிலம்பன் நள்ளிருள் வருமிடம் -யா. வி. 74 மேற். இது மகர ஒற்று ஈறாய் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கொள்க. அடிமறிமண்டில ஆசிரியப்பா 62. உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி இடைப்பான் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதது மண்டில யாப்பே. -யா. வி. 73 மேற். -யா. கா. 28 மேற் இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்.) பாடுவோர் குறித்த குறிப்பால் உணர்ந்து கொள்வதை அல்லாமல், முதலிது ஈறிது இடையிது என்று எண்ணப் பெறாத் தன்மையுடன் நடப்பது யாது அஃது அடிமறி மண்டில ஆசிரியப்பா என்றவாறு. மண்டிலம் எனினும் அமையும் ; அடிமறி மண்டிலம் என்ன வேண்டியது என்னை எனின், ஏற்கும் ; எனினும் நூலாசிரியர் நோக்கை மயக்கற உணர்த்துதல் உரையாசிரியன் கடனாகலின் அடிமறி மண்டிலம் எனப்பெற்றது என்க. அவன் கருத்து அன்ன தாகலின். என்னை? இடை முதல் ஈறு என்று இவை தம்முள் மதிக்கப்படாதது - அஃதாவது அடிநிலை பெறாது மறிந்து செல்வது - என்றாராகலின், மண்டிலம் என்பது காரணக்குறி. சுழற்சி என்னும் பொருட்டு. மண்டில மாக்கள் என்பார் எங்கும் திரிந்து அரசாணை பரப்புவார் ஆதலும், கதிர் முதலாம் மண்டிலச் சுழற்சியும் கண்டு கொள்க. பயில்வார்க்கு எவ்வடி முதல், எவ்வடி இடை, எவ்வடி ஈறு என்பது போதராது. ஆயின் யாத்தவன் குறிப்பில் முதல் இடை ஈறு உண்டன்றே; ஆகலின் உரைப்போர் குறிப்பின் என்றார். மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம் -யா. வி. 73. என்றும், கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர் -சிறுகாக்கை பாடினியார்) -யா. வி. 73 மேற். என்றும் கூறினார் பிறரும். (அடிமறி மண்டில ஆசிரியப்பா) மாறாக் காதலர் மலைமறந் தனரே ஆறாக் கட்பனி வரலா னாவே ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே -தொல். செய். 115 பேரா மேற். -யா. வி. 73 மேற். (அடிமறி மண்டில ஆசிரியப்பா) சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரலை எனினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே -தொல். செய் 113 இளம். மேற். -யா. வி. 73 மேற். -யா. கா. 28 மேற். (அடிமறி மண்டில ஆசிரியப்பா) தீர்த்தம் என்பது சிவகங் கையே ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே -சிதம்பரச் செய்யுட் கோவை 45. (அடிமறி மண்டில ஆசிரியப்பா) பதிகளின் அதிபதி திருமகள் பதியே துதிகளின் அதிபதி தமிழ்மறைத் துதியே மதிகளின் அதிபதி மாறனுண் மதியே நதிகளின் அதிபதி வரசுர நதியே -பாப்பாவினம் 31. இவை அடிமறி மண்டில ஆசிரியப்பா. எவ்வடியை எவ்வடியாக மாற்றினும் சீரும் தளையும் சிதையாமையும், பொருளமைதி கெடாமையும் கண்டு கொள்க. இதனைப் பொருள்கோள் வகையுள் ஒன்றாகக் கொண்டு, அடிமறி மாற்றுப் பொருள் கோள் என்பர். அதற்கும் இதற்கும் வேறுபாடு என்னை எனின் இஃது ஆசிரியப்பா வகையுள் ஒன்று என்பதும். அது பிற பாக்களையும் இனங்களையும் தழுவியும் வருவது என்பதும் வேறுபாடாம். இணைக்குறள் ஆசிரியப்பா 63. அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா இரண்டும் இடைவர நிற்ப திணைக்குறள் ஆகும். -யா. வி. 72 மேற். -யா. கா. 28 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் இணைக் குறள் ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்) முதலும் நாற்சீரடியாய், முடிவும் நாற்சீரடியாய் இடையே இருசீரடி முச்சீரடி என்னும் இருவகை அடியும் வர நிற்பது இணைக்குறள் ஆசிரியப்பா எனப்பெயர் பெறும் என்ற வாறு. அளவடி என்பதை அந்தமும் ஆதியும் என்னும் ஈரிடத்தும் கூட்டுக. இரண்டும் இடைவர என்றார், அளவடி இடையே வருதலையும் தழுவிக் கொள்ளுதற்காக. இடைஇடை சீர்தபின் இணைக்குறள் ஆகும் -யா. வி. 72 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாரும், இணைக்குறள் இடைபல குறைந்திறல் இயல்பே -யா. வி. 72. என அமித சாகரனாரும் கூறினார். (இணைக்குறள் ஆசிரியப்பா) நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே -தொல். செய் 66 இளம். பேரா. மேற். -யா. வி, 72 மேற். -யா. கா. 28 மேற். (இணைக்குறள் ஆசிரியப்பா) சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே நரந்தம் நாறும் தன்கையால் புலவுநாறும் என்றலை தைவரு மன்னே அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல்நுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன் அருநிறத் தியங்கிய வேலே ; ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப் பாடுநரும் இல்லை பாடுநருக்கொன் றீகுநரும் இல்லை பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே -புறநானூறு 235. (இணைக்குறள் ஆசிரியப்பா) தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர வெண்மதிக் கண்ணி சூடும் கண்ணுதற் கடவுள் புண்ணியப் பொதுவில் ஆடும் பூங்கழல் இறைஞ்சும் விண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே -சிதம்பரச் செய்யுட் கோவை 43. இவை முதலடியும், ஈற்றடியும் நாற்சீராக நிற்க, இடை யடிகளுள் இருசீரும் முச்சீரும் வந்திருத்தலால் இணைக்குறள் ஆசிரியப்பா. இடையடிகள் இருசீர் முச்சீராக வருதல் உடையது இணைக்குறள் என்றாராக ஐஞ்சீரடியும் வருதல் என்னை எனின், கலிப்பாவுள்ளும் ஆசிரியப்பாவுள்ளும் ஐஞ்சீரடியும் வருதற் குரியது என்பது பொது விதியாகலின் அவ்விதி கொண்டு வந்ததையன்றி வேறன்று. இனி இணைக் குறளில் அன்றே, சீர்கள் குறைபடுவது; ஆகலின் அதனை ஈடு செய்யுமாறு இணைக்குறள் ஆசிரியத்தின் கண்ணேயே பெரும்பாலும் ஐஞ்சீரடி வருமெனக் கொள்ளல் இழுக்காகாது ; பிற ஆசிரியங்களுள் வருவனவும் கொள்ளப் பெறும். இனி, ஈற்றயலடி முச்சீராக வருவதும் இணைக்குறள் என்னாமல் நேரிசையாசிரியப்பா என்றது என்னை எனின், ஈற்றயலடி ஒருசீர் குறைவதை அன்றி இடையடிகளுள் எவையும் இருசீர் முச்சீர் அடியாக வாராமை அதன் இலக்கணமாகலின் இதனின் வேறுபாடு அறிக. ஆசிரியப்பாவின் இனம் ஆசிரியவிருத்தம் 64. அறுசீர் முதலா நெடியவை எல்லாம் நெறிவயிற் றிரியா நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா வினத்துள விருத்தம். -யா. வி. 77 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஆசிரியப்பாவின் இனமாகிய விருத்தம், துறை, தாழிசை என்பனவற்றுள் விருத்தம் ஆமாறு கூறிற்று. (இ - ள்.) ஆறுசீர்களை முதலாகக் கொண்டு ஏறிய சீர்களை யுடையதாய், எல்லா வகையினும் ஒத்ததாய நான்கு அடிகளை யுடையதாய் அமைந்தது யாது அது ஆசிரியப்பாவின் இனத்துள் ஒன்றாகிய விருத்தம் ஆகும் என்றவாறு. அறுசீர் முதலா நெடியவை எல்லாம் என்றார் ஆயினும் எண்சீரின் மிக்கு வருவன சிறப்பில எனக்கொள்க ; இதனை அடி கூறியாங்கு விரித்துக் கூறினாம்; ஆண்டுக் காண்க. (கா. பா. 22, 23) அறுசீர் முதலா நெடியவை என்றமையால் கழிநெடில் எனக் கொள்க, கழியாவது மிகுதிப் பொருட்டதோர் உரிச் சொல். கழிபேர் இரையான் என்னும் இடத்துக் கழி மிகுதிப் பொருளதாதல் அறிக, (திருக். 946) (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்) சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும் ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட் கியல்பு கண்டாய் நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி என்றான் -சீவகசிந்தாமணி 269. இது விளம் மா தேமா, விளம் மா தேமா என்னும் யாப்புறவில் வந்த ஆறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்) முன்னைப் பிறவித் தனிப்பயனோ முழுதும் அறியா மூடனிவன் என்னக் கருத்தில் இரங்கியோ யாதோ அறியேன் இரவுபகல் கன்னற் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட அன்னத் தொகுதி வயல்கருவை ஆண்டான் என்னை ஆண்டதுவே -திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி . 6. இது மா மா காய், மா மா காய் என்னும் யாப்புறவில் வந்த அறு சீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம். (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்) சுற்றத்தார் தேவரொடும் தொழநின்ற கோசலையைத் தொழுது நோக்கிக் கொற்றத்தார்க் குரிசிலவர் யாரென்று குகன்வினவக் கோக்கள் வைகும் முற்றத்தான் முதற்றேவி மூன்றுலகும் ஈன்றானை முன்னீன் றானைப் பெற்றத்தால் பெருஞ்செல்வம் யான்பிறத்த லாற்றுறந்த பெரியாள் என்றான் -கம்பராமாயணம். அயோத். 1075. இது காய் காய் காய் காய் மா தேமா என்னும் யாப்புறவில் வந்த அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம். (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்) படைமாண் அரசைப் பலகால் மழுவாள் அதனால் எறிவான் மிடைமா வலிதான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் உடைமா மகுடம் புனையென் றுரையா உடனே கொடியேன் சடைமா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ என்றான் -கம்பராமாயணம். அயோத். 354 இது மாச்சீர் ஒன்றானே வந்த அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாறே பிறவும் கண்டு கொள்க எழுசீர் எண் சீர் முதலாக ஏறிய அடிகள் அடி இலக்கணம் கூறிய இடத்துக் கண்டு கொள்க. யாப்பருங்கல விருத்தி, சிதம்பரச் செய்யுட் கோவை, பாப்பாவினம் ஆகியவற்றுள்ளும் கண்டு கொள்க. ஆசிரியத்துறை 65. அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற் கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி எடுத்துரை பெற்ற இருநெடி லீற்றின் அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும். -யா. வி. 76 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் ஆசிரியத் துறை ஆமாறு கூறிற்று. (இ - ள்) அடி எண்ணிக்கை நான்காகி, ஈற்றயலடி ஒன்றும் நான்குசீர் உரிமை உடையதாகி உரைக்கப்பெற்ற முன்னிரண்டடியும் ஈற்றடியும் நெடிலடியாகப் பெறின் அஃது ஆசிரியத்துறை ஆகும் என்றவாறு. அடி நான்கு பெறுதலும், ஈற்றயலடி நாற்சீரான் வருதலும் அறுதியிட்டார்; எஞ்சிய நெடிலடி என்றது வேண்டியவாறு வரும் என வழக்கு நோக்கிக் கொள்ளுமாறு வைத்தார். இவண் நெடில் என்றது கழிநெடிலையும் அடக்கியது என்க. எடுத்துரை பெற்ற இரு அடி, ஈற்றின் அடி நெடில் என இயைத்துக் கொள்க. (ஆசிரியத்துறை) கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலி யேறஞ்சி அகன்று போக நரையுரு மேறு நுங்கை வேலஞ்சும் நும்மை வறையர மங்கையர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையோ -தொல். செய். 175 இளம். மேற். -யா. வி. 76 மேற். -யா. கா. 29 மேற். இஃது ஈற்றயலடி ஒன்றும் நாற்சிரடியாகப் பிற ஐஞ்சீர் அறுசீர் நெடிலடியாக வருதலால் ஆசிரியத்துறை. (ஆசிரியத்துறை) கண்ணியோர் கண்ணி வலத்தசைத்த காரி கமழ்தண்டார் காமம் புனைபவோ காரி ? பண்ணியோர் பாடல் எழப்பண்ணி காரி பணைமுழவின் சீர்தயங்கப் பாடானோ காரி ? சீர்தயங்கத் தார்தயங்கச் செய்யாத செய்திவண் நீர்தயங்கு கண்ணின ளாய்நிற்கவோ காரி ? நினக்கினியார்க் கெல்லாம் இணையையோ காரி ? - யா.வி 76 மேற். இஃது ஈற்றயலடி நாற்சீரடியாய், எஞ்சியவை எண்சீர்க் கழிநெடி லடியாய் வந்த ஆசிரியத்துறை. பிறவாறு ஆசிரியத்துறை வாராதோ எனின் வரும் என்றற் கன்றே வருநூற்பா ஓதினார். ஆசிரியத்துறைக்கு மேலும் ஒரு விதி 66. அளவடி ஐஞ்சீர் நெடிலடி தம்முள் உறழத் தோன்றி ஒத்த தொடையாய் விளைவதும் அப்பெயர் வேண்டப் படுமே. -யா. வி. 76 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஆசிரியத் துறைக்கு மேலும் ஒரு சிறப்பு விதி கூறிற்று. (இ - ள்.) நாற்சீர் அடியும் ஐஞ்சீர் அடியும் தம்முள் மாறியமைய ஒத்த தொடை யுடையவாய் வரும் எனினும் ஆசிரியத் துறை என்னும் பெயர் கொள்ளும் என்றவாறு. கழிநெடிலடியை விலக்குதற்கு ஐஞ்சீர் நெடிலடி என்றார். ஆயினும், பொது விதியால் சிறப்பின்றாயினும் கொள்க என்ப தாம். தம்முள் உறழத் தோன்றி என்றாராயினும் ஈற்றயல் அடி அளவடியென விதித்தார் ஆகலின் அதனைப் போற்றிக் கொள்ளுதல் சிறப்பு என்க. உறழத் தோன்றி என்றமையால், கூறப்பெற்றவாறன்றி இடைமடக்காயும், மிக்கடியாயும், சுருக்கடியாயும் வருவனவும் வழக்கறிந்து கொள்க என்றாராம். (ஆசிரியத்துறை) இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில் -யா. வி. 76 மேற். -யா. கா. 36 மேற். இது நான்கடியும் ஒத்த தொடையாய் நான்கு சீரடியும் ஐந்து சீரடியும் உறழ்ந்து வந்த ஆசிரியத்துறை. அடி, இடை மடக்காக வந்தமையும் அறிக. (ஆசிரியத்துறை) வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோன் அன்றே. -யா. வி. 76 மேற். -யா. கா. 36 மேற். இது நான்கடியும் ஒத்த தொடையாய் ஈற்றயலடி ஒன்றும் அளவடியாய் எஞ்சிய மூன்றடியும் அறுசீர் அடியாய் வந்த ஆசிரியத்துறை. இது மிக்கடி பெற்றது. (ஆசிரியத்துறை) வரிகொள் அரவும் மதியும் சுழலக் கரிகால் ஏந்தி ஆடும் கரிகால் ஏந்தி ஆடும் இறைவன் புரிபுன் சடைமேற் புனலும் பிறழ்வே -யா. வி. 76 மேற். இது முதலயல் அடி ஒன்றும் சிந்தடியாகப் பிற வெல்லாம் அளவடியாய் வந்த ஆசிரியத்துறை. இது சுருக்கடி ஆயினமை காண்க. இனி உறழ என்றமையால் நடுவிரண்டடியும் குறைந்து வருவனவும், நடுவிரண்டடியும் மிக்குவருவனவும் ஆசிரியத்துறை எனக் கொள்க. (ஆசிரியத்துறை) பாடகஞ்சேர் காலொருபால் பைம்பொற் கனைகழற்கால் ஒருபால் தோன்றும் நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால் வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந் தாடும் துகிலொருபால் அவ்வுருவம் ஆண்பெண்ணென் றறிவார் யாரோ -யா. வி. 76 மேற். இது நடுவிரண்டடியும் இரு சீர் குறைந்து வந்த ஆசிரியத்துறை. (ஆசிரியத்துறை) கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய் மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம் ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்! வாடல் ; மைந்தர் தேரும் வந்து தோன்றுமே -யா. வி. 76 மேற். இது நடுவிரண்டடியும் இருசீர் மிக்கு வந்த ஆசிரியத்துறை. இதனைக், கடையதன் அயலடி கடைதபு நடையவும் நடுவடி மடக்காய் நான்கடி யாகி இடைஇடை குறைநவும் அகவற் றுறையே -யா. வி. 76. என்றார் அமித சாகரனார். ஆசிரியத் தாழிசை 67. அடிமூன் றொத்திறின் ஒத்தா ழிசையே. 1இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் ஆசிரியத் தாழிசை ஆமாறு கூறிற்று. (இ - ள்.) அடியால் மூன்றாகி அளவால் ஒத்து முடிவன யாவை அவை ஆசிரியத் தாழிசை என்றும் ஆசிரிய ஒத்தாழிசை என்றும் ஆம் என்றவாறு. ஆசிரியத் தாழிசைக்கும் ஆசிரிய ஒத்தாழிசைக்கும் வேறு பாடு என்னை எனின் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது ஆசிரிய ஒத்தாழிசை என்றும், ஒரு பொருள் மேல் ஒன்றும் இரண்டும் வரினும், மூன்றடுக்கி வந்து பொருள் வேறுபடினும் ஆசிரியத் தாழிசை என்றும் கூறுவர் ஒரு சார் ஆசிரியர் ; இதுவே வேறுபாடு என்க. அடிமூன்று ஒத்திறுதல் இரண்டற்கும் ஒக்கும் ஆகலின் அதனைக் கூறி, ஒத்தாழிசை என்பதைத் தாழிசை எனவும், ஒத்தாழிசை எனவும் பகுத்துக் கொள்ளுமாறு நூற்பா யாத்தார். இனித் தாழிசைக்கும் ஒத்தாழிசைக்கும் வேறுபாடு இன்று என்று கூறினும் ஒக்கும். ஒத்த தாழிசை யாவது ஒத்தாழிசை. எவற்றால் ஒத்ததோ எனின் யாப்பாலும் பொருளாலும் அளவாலும் ஒத்தது என்க. (ஆசிரியத் தாழிசை) வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம் -யா. வி. 75 மேற். -யா. கா; 29 மேற். (ஆசிரியத் தாழிசை) இருநில மூவடி யெனவளர்ந் தோங்கிய திருமரு மார்பனைச் சிந்தையுள் வைப்பவர் ஒருபொழு தினுமிடர் உறுவதொன் றிலரே -பாப்பாவினம் 77. இவை ஒரு பொருள் மேல் ஒன்றுவந்த ஆசிரியத் தாழிசை. (ஆசிரிய ஒத்தாழிசை) கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி -சிலப். 17 : 1-3. இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரிய ஒத்தாழிசை. (ஆசிரிய ஒத்தாழிசை) சாருண் ஆடைச் சாய்கோல் இடையன் நேர்கொள் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே அத்துண் ஆடை ஆய்கோல் இடையன் நற்கார் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே துவருண் ஆடைச் சாய்கோல் இடையன் கவர்கான் முல்லை நெற்றி வேய வாரார் வாரார் எற்றே எல்லே -யா. வி. 75 மேற். இவையும் அன்ன. மூன்றடி ஒத்த முடிவின ஆய்விடின் ஆன்ற அகவற் றாழிசை யாகும் -யா. வி. 75. என்றார் யாப்பருங்கல முடையார். ஆசிரியப்பாவும் அதன் இனமும் முடிந்தன. 3. கலிப்பாவும் அதன் வகையும் கலிப்பா இன்னதென்பது 68. வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி எடுத்துயர் துள்ளல் இசையன ஆகல் கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே. -யா. வி. 76 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிப்பாவாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்) மேலே உரைத்த உறுப்புக்களிலும் முன்னே உரைக்கப்பெறும் உறுப்புக்களிலும் தவறுதல் இன்றி, உயர்ந்தோங்கி நடக்கும் துள்ளல் ஓசையை உடையதாகி நடத்தல், கலி என்னும் சொல்லுக்கு இடமான பாவின் இலக்கணம் என்று அறிந்தோர் கூறுவர் என்றவாறு. கலித்தளையாவது இன்னது என்பதும், கலிப்பாவின் அடியளவு இனைத்து என்பதும் முதலியன மேலே உரைக்கப் பெற்றனவாம். அதன் வகையும் தரவு தாழிசை முதலிய உறுப்புக்களும் முன்னே கூறப் பெறுவனவாம். இவ்வனைத்தையும் வகுத்த என்பதனுள் அடக்கினார் துள்ளல் ஆவது யாது? அது கலி ; கலித்தல் துள்ளிச் செல்லுதல் ; ஒலியெழுப்பித் துள்ளும் அலைகடல் ஆர்கலி என்னும் பெயருடைய தாதலும், ஆர்கலி உலகம் என உலகம் அடையொடும் அழைக்கப் பெறுதலும் அறிக. துள்ளுதல் யாங்ஙனம் அமையுமோ எனின், ஏறி இறங்குதலே துள்ளுதல் ஆகலின், காய்ச்சீராய் உயர்ந்து, நிரையென இறங்கி நிற்றலின் துள்ளல் கலியோசையாயிற்று, காய்முன் நிரை வருதல் கலித்தளை என்பது அறிந்ததே. துள்ளல் இசை என்னாது இசையன என்றார் என்னை? துள்ளல், ஏந்திசைத் துள்ளல், அகவல் துள்ளல், பிரிந்திசைத் துள்ளல் என மூன்று வகைப்படும் ஆகலின். கலித்தளையானே வருவது ஏந்திசைத் துள்ளல் ; வெண்டளை யானும் கலித்தளையானும் வருவது அகவல் துள்ளல் ; கலித்தளையானும் பிறதளைகளானும் வருவது பிரிந்திசைத் துள்ளல். என்னை? ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின் வெண்டளை தன்றளை என்றிவை இயையின் ஒன்றிய அகவல் துள்ளலென் றோதுப தன்தளை பிறதளை என்றிவை அனைத்தும் பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல் -யா. கா. 21 மேற். என்றார் ஆகலின். (தரவு கொச்சகக் கலிப்பா) முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார் இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா நிருமலராய் அறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே -யா. கா. 21 மேற். இது கலித்தளையான் வந்தமையால் ஏந்திசைத் துள்ளல். (தரவு கொச்சகக் கலிப்பா) செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொழித்ததே. -யா. வி. 78 மேற். -யா. கா. 21 மேற். இது கலித்தளை வெண்டளை ஆகிய இருதளைகளாலும் வந்தமையால் அகவல் துள்ளல். அடியிறுதிச்சீர் முதற்சீரோடு வெண்டளையால் இணைந்து நிற்றல் அறிக. (தரவு கொச்சகக் கலிப்பா) குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத் தடநிலைய பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு, ஆனொடு புள்ளிப் பெரும்புதல் முனையுங் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே. -யா. வி. 78. மேற். -யா. கா. 21 மேற். இது கலித்தளையும் பிறதளைகளும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் துள்ளல். இதனுள் குடநிலைத் தண்புறவு என்பது இயற்சீர் வெண்டளை ; தண்புறவிற் கோவலர் என்பது வெண்சீர் வெண்டளை; கோவலர் எடுத்தார்ப்ப என்பது நிரையொன்றாசிரியத் தளை. எடுத்தார்ப்பத் தடநிலைய என்பது முதலியன கலித்தளை. வீங்குமணிக் கயிறொரீஇ என்பது ஒன்றிய வஞ்சித்தளை. தாங்குவனத் தொன்றப் போய் என்பது ஒன்றாத வஞ்சித்தளை, பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. வீங்கு-மணி எனவும் தாங்கு-வனத் தெனவும் பக்குவிட்டு இசைத்தலால் தேமாங் கனி என அலகிடப் பெறும் என்பதுவும் அறிக. துள்ளல் இசையன கலிப்பா ; மற்றவை வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே -யா. வி. 78. என்று அமித சாகரனாரும், ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி ஏந்திய துள்ளல் இசையது கலியே -யா. வி. 78 மேற். என்று அவிநயனாரும் கூறினார். கலிப்பாவின் வகை 69. வெண்கலி ஒத்தா ழிசைக்கலி கொச்சகம் என்றொரு மூன்றே கலியென மொழிப. -யா. வி. 79 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிப்பா முக்கூறு பட்டு நடக்கும் என்பது கூறிற்று. (இ - ள்.) வெண் கலிப்பா, ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா எனக் கலிப்பா முக்கூறு பட்டு நடக்கும் என்று நூலோர் கூறுவர் என்றவாறு. வெண்கலி யாவது கலிப்பா வகையுள் ஒன்று ; கலி வெண்பாவோ எனின் வெண்பா வகையுள் ஒன்று. இவற்றை ஈற்றில் நிற்கும் கலி என்னும் சொல்லும் வெண்பா என்னும் சொல்லும் தெள்ளிதிற் காட்டும். இனி ஒருசார் ஆசிரியர் வெண்கலி எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும் எனக் கொள்வர். இவர்க்கு அது கருத்தன்று என்பது முன்னே காட்டுதும். ஒத்தாழிசைக்கலி எனக் கூறினார், நேரிசை ஒத்தாழிசைக் கலி, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி, வண்ணக ஒத்தாழிசைக் கலி என்னும் மூன்றும் கொள்க. கொச்சகம் என்பது கொச்சகக் கலி. மகளிர் உடையில் பல கூறாக மடிந்து தொங்கும் கொய்சகம் போலப் பல திறப்பட்ட உறுப்புக்களைத் தன்னகத்துக் கொண்டது எனக் காரணக் குறி. பலகோடு பட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்ச கம் என்ப ; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகம் என்றார். இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடை உறுப்பாக்கியும் கொய்சகம் என்று சிதைத்தும் வழங்குப என்பார் பேராசிரியர் (தொல். பொருள். 464). சிறப்பில்லாதது என்னும் பொருளொடு வருவது கொச்ச கம்என்பாரும் உளர். அவர், சிறப்பில்லாததனை ஒரு சாரார் கொச்சை என்றும், கொச்சகம் என்றும் வழங்குவர் எனக் கொள்க என்றனர். (யா. வி. 79) கொச்சகம், தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச் சகக் கலிப்பா, சிஃறாழிசைச் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐவகைப்படும் என்பர். கலிப்பாவின் வகையை, ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும் -யா. வி. 79. என அமித சாகரனாரும், ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகமென முத்திறத் தான்வரும் கலிப்பா என்ப -யா. வி. 79. என அவிநயனாரும் கூறினார். வெண்கலிப்பா, கலிவெண்பா 70. வெண்டளை தன்றளை என்றிரு தன்மையின் வெண்பா இயலது வெண்கலி யாகும். -யா. வி. 85 மேற். -யா. கா. 31 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிவகை மூன்றனுள் முதற்கண் நின்ற வெண்கலிப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்.) வெண்டளை கலித்தளை என்னும் இருதளை களாலும் நடந்து வெண்பாவைப் போல் முடிவது வெண் கலிப்பா என்றவாறு. வெண்டளையால் வருவன ஒரு தன்மை எனவும், தன் தளையால் வருவன ஒரு தன்மை எனவும் கொள்க. வெண்டளையானே வந்து வெண்பா இயலது கலிவெண்பா தன்றளையான் வந்து வெண்பா இயலது வெண்கலிப்பா. வெண்டளை தன்றளை என்றிரு தன்மையின், என இணைத்து நிறுத்தியமையாலும் வெண்பாவுள் கூறாது கலிப்பாவுள் வைத் தமையாலும் வெண்டளையும், கலித்தளையும், கலிக் கண்ணே வரும் எனக் கொள்ளப்பெறும் தளைகளும் விரவி, வெண்பா இயலதாய் முடிவதும் வெண்கலிப்பாவே எனக் கொள்க. இதனை, வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா என்றும், பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும், வேறு படுத்திச் சொல்வாரும் உளர் என்றார் யாப்பருங்கல விருத்தி யுடையார். அவர் வெண்கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும் ஒக்கும் என்னும் கொள்கை உடையவர். யாப்பருங் கலமுடையாரும். தன்தளை ஓசை தழீஇநின் றீற்றடி வெண்பா இயலது கலிவெண் பாவே -யா. வி. 85. என்று கூறியதூஉம் அறிக. பன்னீரடிகாறும் பஃறொடை வெண்பா வரும் என்றும், அதன் மிக்கு வருவன கலிவெண்பா என்றும் கூறுவர். இனி ஒரு சார் ஆசிரியர் கலித்தளையால் வரும் வெண்பா கலிவெண்பா என்றும், அடிவரையறை இன்று என்றும் காட்டுவர்; அவர் காட்டும் பாட்டு : (கலிவெண்பா) பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா விண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள் விண்ணாளும் வேந்தரா வார். -யா. வி. 85. இது கலித்தளையால் வந்த கலிவெண்பா. (வெண்கலிப்பா) வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொன்முறையான் மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த தொன்மைசால் சுழிகுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு -யா. கா. 31 மேற். இது கலித்தளையானும் வெண்டளையானும் வந்த வெண் கலிப்பா. (கலிவெண்பா) சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றிற் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீர் ஊட்டிவா என்றாள் எனயானும் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னா யிவனொருவன் செய்ததுகாண் என்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன் -கலித்தொகை. 51. இது வெண்டளையானே ஒரு பொருள் நுதலி வந்த கலி வெண்பா. தீம்பால் கறந்த என்னும் கலிவெண்பா (கலித்தொகை. 111) இருபத்து நான்கு அடியான் வந்தது. மணிவாசகர் இயற்றிய சிவபுராணம் தொண்ணூற்று ஐந்தடியான் வந்தது. இடைநாளில் தூது, உலா முதலாய சிறுநூல்கள் கலி வெண்பா யாப்பால் இயற்றப் பெற்றன. அவை ஈரடி ஓரெதுகைத் தாய் நேரிசை வெண்பாப்போல் தனிச்சொல் பெற்று நடந்தன. ஒரெதுகை ஈரடி கண்ணி என்று அழைக்ப்பெற்றது. மூவருலாவில், ராசராசசோழனுலா 391 கண்ணிகளால் நடந்தது. வள்ளலார் இயற்றிய விண்ணப்பக் கலிவெண்பா 417 கண்ணிகளாலும், நெஞ்சறிவுறுத்தல் 703 கண்ணிகளாலும் நடையிட்டன. கலிவெண்பாவை வெண்கலிப்பாவுடன் இணைக்க வேண் டிய தென்னை தனித்துக் கூறாமல் எனின், கலிவெண்பாவுள் பிறதளை மயங்கிவரின் அது கலிவெண்பா அன்று, வெண் கலிப்பாவேயாம், என்று கோடற்கு இவ்வாறு யாப்புறவு செய் தார் என்க. கலிவெண்பா இவ்வாறு வருமாற்றை, ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே -தொல். செய். 152. என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். ஒத்தாழிசைக் கலிப்பா 71. தரவே தாழிசை தனிநிலை சுரிதகம் எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி. -யா. வி. 82 மேற். -யா. கா. 30 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஒத்தாழிசைக் கலிப் பாவாவது இஃது என்பது கூறிற்று. (இ - ள்.) தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்களை யுடையது யாது அஃது ஒத்தாழிசைக் கலிப்பா என்றவாறு. நான்கு உறுப்பினது என்றார், முறை வைப்பு என்னை, இவற்றின் இலக்கணம் என்னை, எனின் வைத்த முறையே முறை எனக்கொள்க. தரவு தாழிசை முதலியவற்றின் இலக்கணத்தைத் தனித்தனி முன்னே கூறுவார். எடுத்துக் கொண்ட பொருளை முதற்கண் தந்து நிற்றலில் தரவு ; எருத்தம் என்பதுவும் அது. எருத்தம் என்பது இவண் தளையைச் சுட்டி நின்றது. தாழ்ந்து இசைப்பது தாழிசை ; தாழம்பட்ட இசை என் பாரும் உளர். இடைநிலைப் பாட்டு என்பதுவும் அது. ஒரு சொல்லாய்ப் பொருள் நிரம்பித் தனியே நிற்பது தனி நிலை. இடைநிலை, கூன் என்பனவும் அது. ஓரிடத்து ஓடும் நீர் குழிக்கண்ணும் திடர்க்கண்ணும் சாரின் சுரிந்தோடுதல் போலச் சுரிந்து செல்வது சுரிதகம் ; சுழி, சுழியம், அடக்கியல், வாரம், வைப்பு என்பனவும் அது. இவை நான்கும் காரணக்குறி, என்னை? தந்துமுன் நிற்றலின் தரவே ; தாழிசை ஒத்ததா ழத்தின தொத்தா ழிசையே தனிதர நிற்றலின் தனிநிலை ; குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின் சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப -யா. வி. 82. -யா. கா. 30. என்றார் ஆகலின். (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? இது தரவு. சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவாற் புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? இவை மூன்றும் தாழிசை எனவாங்கு இது தனிச்சொல் அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னொடும் தேரொடும் தானையிற் பொலிந்தே. -யா. வி. 82 மேற். -யா. கா. 30 மேற். இஃது ஆசிரியச் சுரிதகம். இது, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் முறையே வந்தமையால் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய் எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து பத்தறு காவதம் பகைபசி பிணிநீங்க உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரைபோற் செவ்வியோய் ! இது தரவு. எள்ளனைத்தும் இடரின்றி எழில்மாண்ட பொன்னெயிலின் உள்ளிருந்த உனையேத்த உறுதுணையென் றடைந்தோரை வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் விழுமிதோ ? குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் அடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டுள் உறைகென்றல் பெருமையோ? விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய் மடத்தகைய மயிலனையார் வணங்கநின் அடைந்தோரைத் தடத்தகைய காடுறைக என்பதுநின் தகுதியோ? இவை தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். அனைத்துணையை ஆயினும் ஆகமற் றுன்கண் தினைத்துணையும் தீயவை இன்மையிற் சேர்தும் வினைத்தொகையை வீட்டுக என்று. -யா. வி. 82 மேற். -இலக் விளக். 788 மேற். இது வெண் சுரிதகம். இதுவும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. ஒத்தாழிசை எனினும் நேரிசை ஒத்தாழிசை எனினும் ஒக்கும். பிற ஒத்தாழிசைகளும் உண்டே எனின் அவை வண்ணக ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை என விகற்பங் கூறி அழைக்கப் பெறும். ஒழுக்கம் என்பதே நல்லொழுக்கம் என்றா யினாற்போல, ஒத்தாழிசை என்பதே நேரிசை ஒத்தாழிசை என்றாயிற்று என்க. இதன் இலக்கணத்தை இதன் வழி நூல் உடையாரும், தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த் தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச் சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய் நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையே -யா. வி. 82. என்றார். இந்நூலுடையார்க்குத் தொகுத்துக் கூறல் இயல்பாக லின் இவ்வாறு கூறினார். தரவு இன்ன தென்பது 72. தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும் துன்னும் இடத்துத் துணிந்தது போலிசை தன்னொடு நிற்றல் தரவிற் கியல்பே. -யா. வி. 82 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறிய நான்கு உறுப்புக்களுள் தரவாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) தனது இறுதியும் தாழிசையின் முதலும் கூடும் இடத்துப் பிறிதொடும் தொடராது தனித்து நிற்றல் தரவிற்கு இயல்பாகும் என்றவாறு. தரவு, தாழிசை முதலியவற்றுடன் தொடர்ந்து நிற்குமோ என்றும், யாங்கு நிற்குமோ என்றும் வினாவுவார்க்கு, தரவு தனித்து நிற்கும் என்றும், பாவின் முதற்கண்ணே தாழிசைக்கு முன்னாக நிற்கும் என்றும் வெளிப்பட உரைத்தார். தரவு தாழிசை என முறை கூறவே இஃதமையுமே எனின் இன்றி யமையா இடத்து விரித்துக் கூறலும் வேண்டும் என்பது இந் நூலுடையார் கொள்கையுமாம் என்க. தரவுக்கு அடியளவு கூறாரோ எனின், வழக்கு அறிந்து போற்றிக் கொள்ளுமாறு வைத்து அளவு கூறார். ஆயின், தாழிசை அளவினும் தரவின் அளவுமிக் கிருத்தல் வேண்டும் என்பது விதி. இவர்க்கும் அஃது உடன்பாடே என்பது முன்னை நூற்பாவால் போதரும். வாணெடுங்கண் பனிகூர (கா. பா. 71) என்னும் ஒத்தா ழிசைக் கலிப்பாவின் தரவு மூன்றடியாகவும், முத்தொடு மணிதயங்கு (கா. பா. 71) என்னும் ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு நான்கடியாகவும் இருத்தலை அறிக. அத் தரவின் அடியினும் தாழிசை அடி குறைந்து வருதலும் கண்டு கொள்க. (தரவு) அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி -கலித்தொகை 11. இக் கலிப்பாட்டின் தரவு ஐந்தடியாக வந்தது. இவ்வனைத்தும் ஒரு விகற்பத்தான் வந்தன. இன்னும் மிக்கு வருவன ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வருமெனக் கொள்க. (தரவு) வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்தோள் பேரெழின் மலருண்கண் பிணையெழில் மானோக்கின் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற் கூரெயிற்று முகைவெண்பல் கொடிபுரையு நுசுப்பினாய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை ஆருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள் -கலித்தொகை. 58. இத்தரவு ஆறடியான் ஒரு விகற்பத்தான் வந்தது. (தரவு) மடியிலான் செல்வம் போல் மரன்நந்த அச்செல்வம் படியுண்பார் நுகர்ச்சி போல் பல்சினை மிஞிறார்ப்ப மாயவன் மேனிபோல் தளிர்ஈன அம்மேனித் தாயசு ணங்குபோல் தளிர்மிசைத் தாதுக மலர்தாய பொழில்நண்ணி மணிநீர்க் கயநிற்ப அலர்தாய துறைநண்ணி அயிர்வரித் தறல்வார நனியெள்ளுங் குயில்நோக்கி இனைபுகு நெஞ்சத்தால் துறந்துள்ளா ரவரெனத் துனிகொள்ளல் எல்லா நீ கலி. 35. இக் கலிப்பாட்டின் தரவு எட்டடியாயவாறும், பல விகற்பத்தான் வந்தவாறும் கண்டு கொள்க. இதனின் மிக்கு வருவனவும் கலியுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க. (தாழிசை இன்ன தென்பது) 73. தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை. -யா. வி. 82 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் தாழிசையாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) தம்மில் ஒவ்வொன்றும் அளவால் ஒத்துத் தரவின் அடியினும் குறைந்து ஒரு பொருள் மேல் மூன்றாகி வருவன யாவை அவை தாழிசையாம் என்றவாறு. தத்தமில் ஒத்தல் அளவால் ஒத்தல் என்க. ஈரடித் தாழிசை முதற்கண் வரின் பிறவும் அவ்வாறே வருதல். அதேபோல் மூன்றடி, நான்கடி அளவும் கொள்க. நான்கடி என்று அமைந்த தென்னை எனின், அதனின் மிக்குத் தாழிசை வாராது ஆகலின் என்க. தரவின் அகப்படுதல் என்பது தரவின் அடியளவினும் தாழிசையின் அடியளவு சுருங்கிநிற்றல். சுருங்கும் தரவினில் தாழிசையே (யா. கா. 42.) என்றார் பிறரும். ஒரு பொருள்மேல் மூன்றாதல் தாழிசை என்பதை யாங் ஙனம் பெறுதும் எனின் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் விதி ஆகலானும், ஈங்கு நிரந்தவை மூன்று நிற்பன என்றமையாலும் கொண்டாம் என்பது. நிரந்து, ஒழுங்கு என்னும் பொருட்டது என்பதை மேலே கூறினாம். (கா. பா. 50) வாணெடுங்கண் பனிகூர (கா. பா. 71) என்னும் நேரிசை ஒத்தாழிசைக் கலியுள், சூருடைய கருங்கடங்கள் என்பது முதலாக ஈரடித்தாழிசைகள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தன. முத்தொடு மணிதயங்கு (கா. பா. 71) என்னும் நேரிசை ஒத்தாழிசைக் கலியுள் எள்ளனைத்தும் இடரின்றி என்பது முதலாக மூன்றடித் தாழிசைகள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தன. இமையவில் வாங்கி ஈர்ஞ்சடை அந்தணன் என்னும் கலியுள். (38) (கலித்தாழிசை) ஆரிடை என்னாய்நீ அரவஞ்சாய் வந்தக்கால் நீரற்ற புலமேபோற் புல்லென்றாள் வைகறை கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும் அக்கவின் தீராமற் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக்காண் ; இருளிடை என்னாய்நீ இரவஞ்சாய் வந்தக்கால் பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை அருள்வல்லான் ஆக்கம்போல் அணிபெறும் அவ்வணி தெருளாமற் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக்காண் ; மறந்திருந்தார் என்னாய்நீ மலையிடை வந்தக்கால் அறஞ்சாரான் மூப்பேபோல் அழிதக்காள் வைகறை திறஞ்சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும் அத்திருப் புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருளுண்டேல் உரைத்தைக் காண் என நான்கடித்தாழிசையாய் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்தன. தாழிசை அடிச்சிறுமை பெருமையை, இரண்டடி சிறுமை; பெருமையதன் இரட்டி ; தரவிற் குறைந்தன தாழிசை யாகும் -யா. வி. 82. என்பதனாற் கொள்க. தனிச்சொல் இன்னதென்பது 74. ஆங்கென் கிளவி அடையாத் தொடைபட நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் -யா. வி. 82 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் தனிச் சொல்லாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) ஆங்கு என்னும் சொல் எவ்வுறுப்போடும் அடுக்காமல் தொடுக்கப் பெற்றுத் தனித்து நின்று இசைக்கும் தன்மையதாய்த் தனிச் சொல்லாக வரும் என்றவாறு. தொடைபடாது வரும் தனிச்சொல் என்பதற்கு அடையாத் தொடைபட என்றார். நீங்கி இசைக்கும் நிலையது என்பதால் தனிச் சொல் என்பதை விளக்கினார். இத் தனிச் சொல் ஒரு சொல்லளவாய்ச் சொற்சீரடி, கூன் என்பன போல வருவதன்று, கலிப்பாவின் உறுப்பாக வருவது என்றற்கே தரவு, தாழிசை, தனிச் சொல் என வைத்தார். இதனால், தாழிசைக்கும் சுரிதகத்திற்கும் இடைப்பட்டு நிற்பது இத் தனிச் சொல் ; பிற தனிச் சொல் அத்தன்மைய அல்ல. அவற்றைத் தனியொரு நூற்பாவிற் காட்டினார். ஆண்டுக் கூறுதும் (87). ஆங்கென் கிளவி என்றார் எனினும் எனவாங்கு என்று வருவதே பெருவரவிற்று எனக் கொள்க. நூற்றைம்பது கலியுள் தாழிசைக்கும் சுரிதகத்திற்கும் இடையே வரும் தனிச்சொல் பெற்ற கலிகளுள், 61 எனவாங்கு என்னும் தனிச்சொல் பெற்றனவாம். ஆங்கு ஆங்க என்றாங்கே ஆங்கதை என 13 கலிகள் வந்தன. என இவள், என நின். என நாம், என நீ என்று நின் ஒவ்வொன்று வந்தன. அதனால் என ஆறும், அவனை என ஒன்றும் பிறவாறும் வந்தன. அதனால் என ஆறும், அவனை என ஒன்றும் பிறவாறும் வந்தன. ஆகலின், என வாங்கு என்பதே பெருவரவிற்றாதலின் இந் நூலுடையார்க்கும் அஃது உடன்பாடாம் எனக் கொள்க. ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குக் காட்டப் பெற்ற எடுத்துக் காட்டுக்களுள் தனிச்சொல், தாழிசைக்கும் சரிதகத்திற்கும் இடையே நிற்குமாறு கண்டு கொள்க. சுரிதகம் இன்னதென்பது 75. ஆசிரியம் வெண்பா எனஇவை தம்முள் ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது சுழியம் எனப்பெயர் சுரிதகம் ஆகும். -யா. வி. 83 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிப்பாவுக்கு ஓதப் பெற்ற உறுப்புக்களுள் இறுதியில் நிற்கும் சுரிதகமாவது இன்ன தென்பது கூறிற்று. (இ - ள்.) ஆசிரியப்பா வெண்பா என்னும் இவ்விரண்டனுள் ஒன்றாகி அப் பாவிற்குரிய அடி அளவு பெற்று இறுதிக் கண்ணே வருவது சுரிதகம் ஆகும். அது சுழியம் என்னும் பெயரும் பெறும் என்றவாறு. ஆசிரியப்பா ஆகவும் சுரிதகம் வரும்; வெண்பா ஆகவும் சுரிதகம் வரும் என்றார். முன்னது ஆசியச் சுரிதகம், எனவும் அகவற் சுரிதகம் எனவும் பெயர் பெறும். பின்னது வெண்சுரிதகம் என்றும் வெள்ளைச் சுரிதகம் என்றும் பெயர் பெறும். இவ்விரண்டும் இணைந்து மருட்பாப் போல் வருமோ என்பார் உளராயின் அவர்க்கு அவ்வாறு வாராது என்பரராய் ஒன்றாகி என்றார். சுழியம் எனப்பெறும் சுரிதகத்திற்கு அடியளவு எனைத்து என்பாராயின் அவர்க்கு, அடி பெற்று என்றார் ; அஃது ஆசிரியச் சுரிதக மாயின் மூன்றடிச் சிறுமையும், வெள்ளைச் சுரிதகமாயின் இரண்டடிச் சிறுமையும் ஆம். இனி ஒரு சார் ஆசிரியர் ஈரடி ஆசிரியச் சுரிதகம் கொள்வார் உளராகலின் அதனையும் தழுவிக் கொள்க. வாணெடுங்கண் பனிகூர (கா. பா. 71) என்னும் கலிப்பா மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. முத்தொடு மணிதயங்க (கா. பா. 71) என்னும் கலிப்பா மூன்றடி வெள்ளைச் சுரிதகத்தால் முடிந்தது. ஈதலிற் குறை காட்டா தென்னும் கலிப்பா (37) நோய்மலி நெஞ்சமோ டினையல் தோழி நாமில்லாப் புலம்பாயின் நடுக்கஞ்செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் நல்குவள் பெரிதென ஏமுறு கடுந்திண்டேர் கடவி நாமமர் காதலர் துணைதந்தார் விரைந்தே என ஐந்தடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. ஊர்க்கால் நிவந்த என்னும் கலிப்பா (56) பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய் யாதொன்றும் வாளா திறந்தீவாய் கேளினி ; நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க வென்னா இறையே தவறுடை யான் என ஏழடி வெள்ளைச் சுரிதகத்தால் முடிந்தது. இவற்றின் மிக்கு வருவனவும் கண்டு கொள்க. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 76. நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கஞ் சுருங்கி அசையடி தாழிசை விட்டிடை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாங்கித் தழுவும் தரவினோ டைந்தும் யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம் -யா. வி. 83 மேற். -யா. கா. 30 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஒத்தாழிசைக் கலியுள் ஒன்றாகிய அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) நீருள் தோன்றும் அலைபோல முறையே வரவர அளவால் சுருங்கித் தாழிசைக்குப் பின்னே அமைந்து தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்றுத் தரவினோடு ஐந்துறுப்புக்களாலும் தொடர்பு கொண்டு அமைந்தன யாவை அவை அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றவாறு. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு அமைந்த நான்கு உறுப்புக்களொடும் அம்போ தரங்கம் என்னும் உறுப் பொன்றும் பெற்று வந்தமையால் அச் சிறப்புக் கருதி அம்போ தரங்க ஒத்தாழிசை எனப் பெயர் பெற்றதாம். அம்புத் தரங்கம் என்னும் வடசொல் அம்போ தரங்கம் எனத் திரிதல் ஆயிற்று ; நீர்த்திரை என்பது அதன் பொருள் என்றார் யாப்பருங்கல விருத்தியுடையார். இவர் அதனை நீர்த்திரை போல என உவமை காட்டிப் பொருந்தப் பொருள் விளக்கமும் செய்தார். கரைசாரக் கரைசார ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கி வருநீர்த் தரங்கமே போல நாற்சீரடியும், முச்சீரடியும் இரு சீரடியும் ஆகிய அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் நடுவே கொடுத்து வருமெனின் அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்னும் குணசாகரர் உரை இவண் கொள்ளத்தக்கது (யா. கா. 30). அம்போதரங்கம் தாழிசைக்குப் பின், ஈரடியால் இரண்டும், அதன்பின் நாற்சீர் அடியால் நான்கும், அதன் பின் முச்சீர் அடியால் எட்டும், அதன்பின் இருசீர் அடியால் பதினாறுமாக வரும். என்னை? ஈரடி இரண்டும்; ஓரடி நான்கும் முச்சீர் எட்டும்; இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம் -யா. வி. 83. -யா. கா. 30. என்றார் ஆகலின். ஈரடியாய் இரண்டு வருவதைப் பேரெண் எனவும், அளவடி ஓரடியாய் நான்கு வருவதை அளவெண் எனவும், சிந்தடி ஓரடியாய் எட்டு வருவதை இடையெண் எனவும், குறளடி ஓரடியாய்ப் பதினாறு வருவதைச் சிற்றெண் எனவும் வழங்குவர். (யா. கா) பிறவாறு கூறுவாரும் உளர். (தொல். செய். 145 பேரா.) அம்போதரங்கம் எனினும் அசை அடி எனினும் பிரிந் திசைக் குறள் எனினும் சொற்சீர் அடி எனினும் எண் எனினும் ஒக்கும். தனிச்சொல் என்பதைக் கூறிற்றிலராயினும் தரவினோ டைந்தும் என்றமையால் எண்ணிக் கொண்டார் ; அதிகாரப் பட்டு நிற்றலான். (அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா) நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே. இது தரவு. ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ ஊர்கேளோ டுடன்முளைத்த ஒளிவட்டம் உடைத்தன்றே. கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே. வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார் நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் திருந்துநிழல் திளைத்தன்றே! இவை தாழிசை. மல்லல் வையம் அடிதொழு தேத்த அல்லல் நீக்கற் கறப்புணை ஆயினை ; ஒருதுணி வழிய உயிர்க்கரண் ஆகி இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினை ; இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம். ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி ; வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி ; விருப்புறு தமனியம் விளக்கும் நின்நிறம் ; ஒருக்குல கூடுறு உஞற்றும் நின்புகழ். இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம். இந்திரர்க்கும் இந்திரன் நீ ; இணையில்லா இருக்கையை நீ ; மந்திர மொழியினை நீ ; மாதவர்க்கு முதல்வனும் நீ ; அருமைசால் அறத்தினை நீ ; ஆருயிரும் அளித்தனை நீ ; பெருமைசால் குணத்தினை நீ ; பிறர்க்கறியாத் திறத்தினை நீ. இவை முச்சீர் ஒரடி எட்டு அம்போ தரங்கம். பரமன் நீ ; பகவன் நீ ; பண்ணவன் நீ ; புண்ணியன் நீ ; உரவன் நீ ; குரவன் நீ ; ஊழி நீ உலகு நீ ; அருளும் நீ ; அறமும் நீ ; அன்பும் நீ ; அணைவும் நீ ; பொருளும் நீ ; பொருப்பும் நீ ; பூமி நீ ; புணையும் நீ. இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம். எனவாங்கு, இது தனிச்சொல். mUŸbe¿ xUt!நிற் பரவுதும் எங்கோத் திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத் தெண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன் செருமுனை செருக்கறத் தொலைச்சி ஒருநனி வெண்குடை ஓங்குக எனவே. -யா. வி. 83 மேற். இது சுரிதகம். இது நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கமும், நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கமும், மூச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கமும், இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கமும் வந்து ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. (அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா) கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்த கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்! இது தரவு. முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோள் போர்மலைந்த மறமல்லர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவண் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோவும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ? இவை தாழிசை. இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல்! நின்னிறம். விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் ! புரையும் நின்னுடை. இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை ; தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம். போரவுணர்க் கடந்தோய் நீ ; புணர்மருதம் பிளந்தோய் நீ ; நீரகலம் அளந்தோய் நீ ; நிழல்திகழும் படையோய் நீ. இவை முச்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம். ஊழி நீ ; உலகும் நீ ; உருவும் நீ ; அருவும் நீ ; ஆழி நீ ; அருளும் நீ ; அறமும் நீ ; மறமும் நீ . இவை இருசீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். எனவாங்கு, இது தனிச்சொல். அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பில் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே. இது சுரிதகம். யா. வி. பாட்டு 83 மேற் இஃது எட்டு என்று சொல்லப்பட்ட முச்சீர் அம்போ தரங்கம் நான்காகவும், பதினாறு என்று சொல்லப்பட்ட இருசீர் அம்போ தரங்கம் எட்டாகவும் குறைந்து வந்த அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. இதனை, முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே -யா. வி. 83. என்றார் அமிதசாகரனார். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா 77. அச்சொலப் பட்ட உறுப்போ டராகவடி வைத்த நடையது வண்ணகம் ஆகும். -யா. கா. 31 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வண்ணக ஒத் தாழிசைக் கலிப்பா ஆமாறு கூறிற்று. (இ - ள்.) மேலே அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா விற்குச் சொல்லப்பட்ட ஐந்து உறுப்புக்களுடன் அராகமும் வந்து நடைபெறுமானால் அதன் பெயர் வண்ணகம் எனப் பெறும் என்றவாறு. அராக நடையது எனினும் அமையுமாக, அராக அடி வைத்த நடை என்றது என்னை எனின், அராக நடை முடுகியல் நடை என்பது காட்டற்கு என்க. என்னை? அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி - யா.வி. 84 என இவர்க்கு வழிநூல் செய்தாரும் கூறினாராகலின். அராக அடியாவது வண்ணக அடி. ஆகலின் பெயர் ஒன்றும் கூறவே அமையும் எனின், அதன் பல பெயர்களையும் தழுவிக் கோடற்கு இவ்வாறு கூறினார். நீர்த்திரை போல... அம்போ தரங்கம் என மேலே நூற்பாவில் ஓதியதூஉம் அறிக. அராகம் எனினும், வண்ணகம் எனினும், அடுக்கியல் எனினும், முடுகியல் எனினும் ஒக்கும். அராக உறுப்பு என்னாது அராக அடி என்றார், அராகம் அளவடி முதலாகிய எல்லா அடியாலும் வரப்பெறும் என்றும், நான்கடிச் சிறுமையாய் எட்டடிப் பெருமையாய் எத்துணை அடியானும் வரப்பெறும் என்றும், அகவலும் வெள்ளையும் விரவியும் வரும் என்றும் அறிவித்தற்கு. அளவடி முதலா அனைத்திலும் நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும் -யா. கா. 31 மேற். -யா. வி. 84 மேற். என்றார் பிறரும். வண்ணகமாவது இஃது என்றார்; அஃது எவ்விடத்து வந்து கலியுள் நடக்கும் எனக் கூறிற்றிலரால் எனின், வரன் முறையே கூறும் ஆகலின் கூறார் ஆயினார். வரன்முறை என்னை எனின், தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் முறையில் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா வரும் என்று கூறினார். பின்னைத் தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் இடையே அம்போ தரங்கம் பெற்று ஐந்துறுப்பாகி நடப்பது அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றார். அதனால் அம்முறையே முறையாய், தாழிசைக்கும் அம்போ தரங்கத்திற்கும் இடையே வருவது வண்ணகம் என வருமிடம் குறிப்பால் காட்டினார் என்க. (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்ற துளங்குமணிக் கனைகழற்கால் துறுமலர் நறும்பைந்தார்ப் பரூஉத்தடக்கை மதயானைப் பகட்டெழில் நெரிகுஞ்சி குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலையளிக்கும் தண்டுறை ஊரநீ. இது தரவு. காட்சியாற் கலப்பெய்தி எந்திறத்துக் கதிப்பாகி மாட்சியா றறியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந் தருளுவதும் அருளாமோ? அன்பினால் அமிழ்தளைஇ அறிவினால் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோள் அருளதற் கிருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த் தடவரைத்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ ? இவை தாழிசை. தாதுறு முறிசெறி தடமலர் இடையிடை தழலென விரவின பொழில் ; போதுறு நுறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி ; தீதுறு திறமறு கெனநனி முனமுனம் துணையொடு பிணைவன துறை; மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல். இவை நான்கும் அராகம். கொடுந்திறல் உடையன சுறவெறி கொட்பதனால் இடுங்கழி இரவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ ? கருநிறத் தெறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானல் இரவாரல் என்றிலமோ? இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே ; துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே ; அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே ; நயப்பொடு கழிந்தன்றால் நனவதுவும் நன்னுதற்கே. இவை நாற்சீர் ஓரடி அம்போ தரங்கம். அத்திறத்தால் அசைந்தன தோள் ; அலரதற்கு மெலிந்தன கண் ; பொய்த்து ரையால் புலர்ந்தது முகம் ; பொன்னிறத்தால் போர்த்தன முலை ; அழலினால் அசைந்தது நகை ; அணியினால் ஒசிந்த திடை ; குழலினால் அவிர்ந்தது முடி ; குறையினாற் கோடிற்று நிறை. இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். உட்கொண்ட தகைத்தொருபால் ; உலகறிந்த அலர்த்தொருபால் ; கட்கொண்டல் துளித்தொருபால் ; கழிவெய்தும் படித்தொருபால் ; பரிவுறூஉம் தகைத்தொருபால் ; படர்வுறூஉம் பசப்பொருபால் ; இரவுறூஉம் துயரொருபால் ; இளிவந்த எழிற்றொருபால் ; மெலிவுவந் தலைத்தொருபால் ; விளர்ப்புவந் தடைத்தொருபால் ; பொலிவுசென் றகன்றொருபால் ; பொறைவந்து கூர்ந்தொருபால் ; காதலிற் கதிர்ப்பொருபால் ; கட்படாத் துயரொருபால் ; ஏதிலார்சென் றணைந்தொருபால் ; இயல்நாணிற் செறிவொருபால். இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம். எனவாங்கு, இது தனிச்சொல். இன்னதிவ் வழக்கம் இத்திறம் இவணலம் என்னவும் முன்னால் துன்னாய் ஆகிக் கலந்த வண்மையை ஆயினும் நலந்தகக் கிளையொடு கெழீஇத் தளையவிழ் கோதையைக் கற்பொடு காணிய யாமே பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே -யா. வி. 64 மேற். இது சுரிதகம். இவ் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவினுள், ஆறு உறுப்புக்களும் குறைவின்றி வந்தமை காண்க. (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா) தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும் பல்பொறிய படவரவும் அடுபுலியும் பணிசெய்ய அந்தரதுந் துபிமுழங்க அமரர்மலர் மழைசிந்த இந்திரனும் மலரவனும் கரியவனும் ஏத்தெடுப்பச் சூடகம் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப ஆடகத் திருமன்றத் தனவரதம் நடஞ்செய்வோய். இது தரவு. முன்மலையும் கொலைமடங்கல் ஈருரியும் மும்மதத்த வன்மலையும் கடமலையின் முடையுடலின் வன்தோலும் பொன்மலையின் வெண்முகிலும் கருமுகிலும் போர்த்தென்ன வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. கடநாகம் எட்டும்விடங் கானாகம் ஓரெட்டும் தடநாகம் அவையெட்டும் தரித்துளபூந் துகிலொன்றும் உடனாக அடல்புரியும் கொடுவரியின் உடுப்பொன்றும் அடனாக அரவல்குற் கணிகலையாய் அசைத்தனையே. வருநீலப் புயன்மலர மலரிதருக் கண்ணியையும் அருநீல முயற்களங்கம் அகன்றமதிக் கண்ணியையும் கருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும் திருநீலக் கண்ணியையும் செஞ்சடைமேற் செறித்தனையே. இவை மூன்றும் தாழிசை. கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல் எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை; உலகமொ டுயிர்களும் உலைதர வலம்வரும் மலர்மகள் கொழுநனும் மகபதி முதலிய புலவரும் அடிகளொர் புகலென முறையிட அலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை ; விசையிலெ மிறைவியும் வெருவர விரசத அசலம தசைதர அடல்புரி தசமுக நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென வசையில்பொன் மலரடி மணிவிரல் நிறுவினை ; இலவிதழ் மதிநுதல் இரதியொ டிரதம துலைவற நடவிடு மொருவனும் வெருவர அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. இவை நான்கும் அராகம். அருவமும் உருவமும் ஆகி நின்றுமவ் வருவமும் உருவமும் அகன்று நின்றனை. சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச் சொல்லையும் பொருளையும் துறந்து நின்றனை. இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். அந்நலம் விழைந்தவர்க் கறமும் ஆயினை ; பொன்னலம் விழைந்தவர் பொருளும் ஆயினை ; இன்னலம் விழைந்தவர்க் கின்பும் ஆயினை ; மெய்ந்நலம் விழைந்தவர் வீடும் ஆயினை. இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம். முத்தொழிலின் வினைமுதல் நீ ; மூவர்க்கு முழுமுதல் நீ ; எத்தொழிலும் இறந்தோய் நீ ; இறவாத தொழிலினை நீ ; இருவிசும்பின் மேலோய் நீ ; எழில்மலரின் மிசையோய் நீ ; அரவணையில் துயின்றோய் நீ ; ஆலின்கீ ழமர்ந்தோய் நீ. இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். பெரியை நீ ; சிறியை நீ ; பெண்ணும் நீ ; ஆணும் நீ ; அரியை நீ ; எளியை நீ ; அறமும் நீ ; மறமும் நீ ; விண்ணும் நீ ; மண்ணும் நீ ; வித்தும் நீ ; விளைவும் நீ ; பண்ணும் நீ ; பயனும் நீ ; பகையும் நீ ; உறவும் நீ. இவை இருசீர் ஓரடி, பதினாறு அம்போ தரங்கம். எனவாங்கு இது தனிச்சொல். கற்பனை கழன்றநின் பொற்கழல் இறைஞ்சுதும் வெண்மதிக் கடவுள் மீமிசைத் தவழ்தரத் தண்முகிற் குலங்கள் தாழ்வுறப் படிதலிற் செங்கால் அன்னமும் வெண்மருப் பேனமும் கீழ்மேல் துருவ ஆரழற் பிழம்பாய் நின்றநின் தன்மையை உணர்த்தும் பொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே. -சிதம்பரச் செய்யுட் கோவை 59. இது சுரிதகம். இதுவும் ஆறு உறுப்புக்களும் குறைவின்றி வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. கொச்சகக் கலிப்பா 78. எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் இடைநிலை இன்றி எருத்துடைத் தாயும் எருத்தம் இரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் எருத்தம் இரட்டித் திடைநிலை யாறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும் தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை அன்றி இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும் மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன கொச்சகம் என்னும் குறியின ஆகும். -யா. வி. 86 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் கொச்சகக் கலிப்பா இவ்விவ்வாற்றான் வரும் என்பது கூறிற்று. (இ - ள்.) தரவு இன்றித் தாழிசை பெற்றும், தாழிசை இன்றித் தரவு பெற்றும், தரவு இரண்டாகித் தாழிசை பெற்றும், தாழிசை இரண்டாகித் தரவு பெற்றும், தாழிசையும் தரவும் இரண்டிரண்டாகியும், தரவு இரண்டாய்த் தாழிசை ஆறாய்ச் சுரிதகம் ஈறாக அமைந்த உறுப்புக்கள் நிற்கும் முறையால் அமைந்தும், தரவு தாழிசை அம்போதரங்கம் வண்ணகம் சுரிதகம் என்னும் இவை நிற்குமுறை தடுமாறியும், கூறிய அவ் வுறுப்புக்களை அன்றி இடைஇடையே சிலவும் பலவும் ஆகிய வெண்பாக்களைப் பெற்றும், பிறபிறவாறு ஒப்பாத உறுப்புக்கள் வந்தும், முறை மயங்கியும் நடந்தன யாவை அவையெல்லாம் கொச்சகக் கலிப்பா என்னும் பெயருடையன ஆகும் என்றவாறு. இடைநிலை இன்றி எருத்துடையதைத் தரவு கொச்சகம் என்றும், எருத்தம் இரட்டித்து வருவதைத் தரவிணைக் கொச்சகம் என்றும், இடையது இரட்டித்து எருத்துடைத்தாக வருவதைப் பஃறாழிசைக் கொச்சகம் என்றும், முறை தடுமாற அமைந்தனவும் ஒப்புறுப்பு இல்லனவாக அமைந்தனவும் மயங்கிசைக் கொச்சகம் எனவும் குறியிட்டு வழங்குவார் ஆசிரியர் அமித சாகரனார். அவற்றை யாப்பருங்கலத்துள்ளம் காரிகையுள்ளும் கண்டு கொள்க. அவர் சில தாழிசைகளால் வருவதைச் சிஃறாழிசைக் கொச்சகம் என்பதுவும் ஆண்டு அறிக. தரவின்றித் தாழிசை பெறுவதையும், தாழிசை இன்றித் தரவாக வருவதையும் பிறவற்றையும் கொச்சக ஒருபோகு என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார். என்னை? தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை இட்டுச் சின்னங் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக ஒருபோ `காகும் என்ப -செய் 148. என்றார் ஆகலின். (எ - டு.) (தாழிசை) இறைவாழி தரைவாழி நிரைவாழி இயல்வாழி இசைவாழியே மறைவாழி மனுவாழி மதிவாழி ரவிவாழி மறைவாழியே -தக்கயாகப்பரணி. 9. இப் பரணிப் பாட்டு, தரவின்றித் தாழிசை ஒன்றாய் வந்தது. (தாழிசை) கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி. பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி. கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லிநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி - சிலப். 17 : 1 - 3. இச்சிலப்பதிகாரம் தரவின்றித் தாழிசை மூன்றாய் வந்தது. (தரவு கொச்சகம்) நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்ததுபோற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையோ குறிசெய்ய வேறணிந்த சுவடெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த வேறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே -தொல். செய். 149 பேரா. இது தாழிசை இன்றித் தரவே வந்தது. இது தரவு கொச்சகம் எனப்பெறும். செல்வப்போர்க் கதக்கண்ணன் என்பதும் இது. (தரவிணைக் கொச்சகம்) செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற வினி ; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மறியா முள்ளத் துறந்தவன் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்றிறம் யாதும் வினவல் வினவின் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர் அவலம் படுதலும் உண்டு -கலித்தொகை. 19. இது தரவு இரட்டித்து வந்த கொச்சகம். (தரவிணைக் கொச்சகம்) வார்பணிய தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்ச ஊர்பணிய மதியம்போல் நெடுங்குழைக்கீழ் உலாப்போந்தான் கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே. அவற்கண்டு, பூமலர் நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டைத் தூமலர்க்கண் மடவார்க்குத் தொல்பகையே அன்றியும் காவலற்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதோ. - யா. வி. 86 மேற். இது தரவு இரட்டித்துத் தனிச் சொல்லுடன் வந்த கொச்சகம். இது தரவிணைக் கொச்சகம் எனப்பெறும். (தரவிணைக் கொச்சகம்) மாமலர் முண்டகம் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த உயர்மணல் எக்கர்மேல் சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த நீர்மலி கரகம்போல் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்: ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையர் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறா அமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் ; இவை இரண்டும் தரவு. ஆங்கதை அறிந்தனி ராயினென் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல் நின்றலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூன்கநின் தேரே. - கலித்தொகை 133. இது சுரிதகம். இது தனிச்சொல் இன்றித் தரவு இரண்டாய்ச் சுரிதாகத் துடன் முடிந்த தரவிணைக் கொச்சகக் கலிப்பா. (சுரிதகத் தரவிணைக் கொச்சகம்) வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க் கொடிபடு வரைமாடக் கோழியார் கோமானே! இது தரவு. எனவாங்கு, இது தனிச்சொல். துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங் கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ இதுவும் தரவு. அதனால், இது தனிச்சொல். செவ்வாய்ப் பேதை இவள்திறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே -யா. வி. 86. -யா. கா. 32. இது சுரிதகம். இது தரவு இரட்டித்துச் சுரிதகத்துடன் வந்த கொச்சகம். சுரிதகத் தரவிணைக் கொச்சகம் என்பது இது. (சிஃறாழிசைக் கொச்சகம்) பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை இடைப்பொலிந்தான் கூடலார் கோமானே. இது தரவு. ஆங்கொரு சார், இது தனிச்சொல். உச்சியார்க் கிறைவனா யுலகெல்லாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங் காணாத காரணத்தால் மயங்கினரே. ஆங்கொரு சார், இது தனிச்சொல், அக்காலம் அணிநிரைகாத் தருவரையாற் பகைதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே. ஆங்கொரு சார், இது தனிச்சொல். மால்கொண்ட பகைதணிப்பான் மாதடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார் வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே. இவை மூன்றும் தாழிசை. அஃதான்று, இது தனிச்சொல். கொடித்தேர் அண்ணல் கொற்கைக் கோமான் நின்றபுக ழொருவன் செம்பூட் சேஎய் என்றுநனி அறிந்தனர் பலரே தானும் ஐவருள் ஒருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே. -யா. வி. 86 மேற். -யா. கா. 32. இது சுரிதகம். இஃது இடைஇடை தனிச்சொல் பெற்றுத் தனித்தனித் தாழிசையாய் மூன்று வந்தமையால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. (பஃறாழிசைக் கொச்சகம்) தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங் குண்மதியும் உடனிறையும் உடன்றளர முன்னாட்கண் கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையின் நிரைகவர்ந்து பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ? இது தரவு. இளநலம் இவள்வாட இரும்பொருட்குப் பிரிவாயேல் தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ? தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநலம் இவள்வாடி வருந்தியில் இருப்பாளோ? அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல் மணிநலம் மகிழ்மேனி மாசோடு மலிவாளோ? நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோம் என்றநின் உயர்மொழியும் பழுதாமோ? குன்றளித்த திரள்தோளாய் கொய்புனத்துக் கூடியாநான் அன்றளித்த அருள்மொழியால் அருளியதும் அருளாமோ? சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப் பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ? இவை ஆறம் தாழிசை. அதனால், இது தனிச்சொல். அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரியன; வெறுக்கையும் அற்றே; விழுமிய தறிமதி அறிவாம் கழுமிய காதலில் தரும்பொருள் சிறிதே. -யா. வி. 86 மேற். இது சுரிதகம். இது தரவு ஒன்றாய்த் தாழிசை ஆறாய் வந்த கொச்சகக் கலிப்பா. இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப் பெயர் பெறும். (மயங்கிசைக் கொச்சகம்) மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் நுரைநிலந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இறைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவகேள் : வரையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கரையெனக் கடலெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவகேள்! இவை இரண்டும் தரவு. கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால் ; கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால் ; நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால் ; கனைவரல்யாற் றிடுகரைபோல் கைந்நில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால் ; வீழ்சுடரில் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கில்லா தாழுமென் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால் ; கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால் இவையாறும் தாழிசை. அதனால், இது தனிச்சொல். அடும்பயில் இறும்பிடை நெடும்பனை மிசைதொறும் கொடும்புற மடலிடை ஒடுங்கின குருகு ; செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர் நெறிதரு புரவியின் மறிதரும் திமில் ; அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைதரு திரையொடு கரைபொரும் கடல் ; அலங்கொலி விரிசுடர் இலங்கெழில் மறைதொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில் ; இவை நான்கம் அராகம். விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ; கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன் ; நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன் ; நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? மறவாத அருளுடையேன் மனதிற்கு மாறுரையாய் ; துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் ; காதலர் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய் ; ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய் ; இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய் ; துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் ; இவையாறும் தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். பகைபோன்றது துறை ; பரிவாயின குறி ; நகைஇழந்தது முகம் ; நனிநாணிற் றுளம் ; தகைஇழந்தது தோள் ; தலைசிறந்தது துயர் ; புகைபரந்தது மெய் ; பொறையாகின்றென் உயிர் இவை இருசீர் ஓர் அடி எட்டு அம்போ தரங்கம். அதனால், இது தனிச்சொல். இனையதுநிலையால் அனையது பொழுதால் இனையல் வாழி தோழி ! துனைவரல் பனியொடு கழிகஉண்கண் ; என்னொடு கழிகவித் துன்னிய நோயே. -யா. வி. 86 மேற். இது சுரிதகம். இது தரவு இரண்டாகித் தாழிசைஆறும் தனிச்சொல்லும் அராகமும் மீண்டும் தாழிசை ஆறும், தனிச்சொல்லும் சுரிதக மும் பெற்று வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. (மயங்கிசைக் கொச்சகம்) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினால் பூணாக முறத்தழீஇப் போதந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே ! இது தரவு. அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் கானக நாடன் மகன் ; சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே ! வள்ளிகீழ் வீழா ; வரைமிசைத் தேன்தொடா ; கொல்லை குரல்வாங்கி ஈனா ; மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான் : காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வற் றொழுதெழலால் தம்மையரும். தாம்பிழையார் தாம்தொடுத்த கோல். இவை தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். அறத்தோடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்ந்தார் தலை. தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண். நல்லாய், நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாம் தாங்குவார் என்னோற் றனர்கொல் ! புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்கும் அன்றோ ! நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ ? விண்டோய் நாடனும் நீயும் வதுவையுள் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ ? பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ? மைதவழ் வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉம் கண்களும் கண்களோ ? என்னைமன் நின்கண்ணால் காண்பென் மன்யான் ; நெய்தல் இதழுண்கன் நின்கண்ணா கென்கண்மன் ; எனவாங்கு, நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக வேய்புரை மென்றோள் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் போதெழில் உண்கணும் பொலிகமா இனியே. -கலித்தொகை 39. இது சுரிதகம். இது வெண்பா இடை இடை மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. இவ்வாறே எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்று வந்தனவும், இடையும் எருத்தும் இரட்டுற வந்தனவும் பிறவும் வந்துழிக் கண்டு கொள்க. கலிப்பாவும் அதன் இனமும் கலிவிருத்தம் 79. நாலொரு சீரான் நடந்த அடித்தொகை ஈரிரண் டாகி இயன்றவை யாவும் காரிகை சான்ற கலிவிருத் தம்மே. -யா. வி. 89 மேற். -யா. கா. 33 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிப்பாவின் இனத் துள் ஒன்றாகிய விருத்தம் இன்னதென்பது கூறிற்று. (இ - ள்.) ஒப்பற்ற நான்கு சீர்களால் நடந்த அடியின் தொகை நான்கு ஆகி அமைந்தவையெல்லாம் அழகான் நிரம்பிய கலிவிருத்தம் என்று கூறப்பெறும் என்றவாறு. கலியின் துள்ளல் நடையின் அழகு கருதிக் காரிகை சான்ற கலி என்றார். நாற்சீரான் என்னாமல் நாலொரு சீரான் என்ற விதப்பி னால், கலித்தளை தவறாது நாற்சீர் நாலடியான் வருவன தரவு கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்பெறும் எனக் கொள்க. (எ - டு.) (கலிவிருத்தம்) வானகத் திளம்பிறை வளர வையக மீனகத் திருள்கெட இன்ப மெய்துமே நானகக் குழலிநீ வளர நங்குடி தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே. - சூளாமணி. 224. இது விளம் விளம் மா விளம் என்னும் யாப்புறவில் வந்த கலி விருத்தம். (கலிவிருத்தம்) புலவர் சொல்வழி போற்றில னென்பதோர் அலகில் புன்சொலுக் கஞ்சுவ னல்லதேல் உலக மொப்பவு டன்றெழு மாயினும் மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே - சூளாமணி. 640. இது மா விளம் விளம் விளம் என்னும் யாப்புறவில் வந்த கலி விருத்தம், (கலிவிருத்தம்) பூத்தலை வாரணப் போர்த்தொழில் இளையவர் நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயில்தரக் காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால் -சீவகசிந்தாமணி 120. இது விளம் விளம் விளம் கருவிளம் என்னும் யாப்புறவில் வந்து புளிமா வாக முடிந்த கலிவிருத்தம். (கலிவிருத்தம்) கானங்க ளாவன கற்பகம் காமுகர் தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில் நானங்க ளாவன நாசி நறுவிரை வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ -சூளாமணி. 282. (கலிவிருத்தம்) வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும் வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு மையன்மும் மூடப் பகுதி மயக்கின்மை செய்ய மனத்தோர் தெருளின் திறமே -சூளாமணி. 2011. இவை வெண்டளையான் வந்த கலிவிருத்தம். (கலிவிருத்தகம்) தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாகும் ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரையோடைக் கார்மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் -கம்பர். பால. 1278. இது விளம் காய் விளம் காய் என்னும் யாப்புறவில் வந்த கலிவிருத்தம். இவ்வாறே பிறவாறு வருவனவும் கண்டு கொள்க. அளவடி நான்கின கலிவிருத் தம்மே - யா. வி. 84. என அமிதசாகரனாரும், நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே -யா. வி. 89 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாகும் உரைத்தார். கலித்துறை 80. ஐஞ்சீர் அடியின் அடித்தொகை நான்மையொ டெஞ்சா தியன்றன எல்லாம் கலித்துறை. -யா. வி. 88 மேற். -யா. கா. 33 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் கலித்துறையாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) ஐஞ்சீர் உடையது ஓர் அடியாய் அவ்வடித் தொகை நான்காகிக் குறைவின்றி நடப்பவை எல்லாம் கலித் துறை எனப்பெறும் என்றவாறு. (கலித்துறை) யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே -யா. வி. 88. என்றும், (கலித்துறை) கண்ணின் செல்வம் கண்டவர் கண்டே மனம்விம்ம மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வெய்தி விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித் தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றாள். - சூளாமணி. 1743. (கலித்துறை) தூவி அன்னந்தன் இனமென்று நடைகண்டு தொடரும் கூவு மென்குயிற் குதலையர் குடைந்ததண் புனல்வாய் ஓவில் குங்குமச் சுவடுற ஒன்றொடொன் றூடிப் பூவு றங்கினும் புள்ளுறங் காதன பொய்கை -கம்பர். பால. 542. என்றும் ஐஞ்சீரடியால் கலித்துறை வந்தது. நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை என்று அமிதசாகரனாரும், ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும் என்று அவிநயனாரும் கலத்துறைக்கு இலக்கணம் கூறினார். இனிக் கட்டளைக் கலித்துறை என்பதும் ஒன்று. அஃதெழுத் தெண்ணிப் பாடப்பெறுவது. அடிதோறும் ஐந்து சீர்களைக் கொண்ட நான்கு அடியினவாய், முதற்சீர் நான்கும் வெண்டளையாய், ஈற்றுச்சீர் ஒன்றும் விளங்காயாய், நேரசையில் தொடங்கிய ஓரடிக்கு ஒற்று நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையசையில் தொடங்கிய ஓரடிக்கு ஒற்று நீக்கிப் பதினேழு எழுத்துக்களும் உடையதாய் ஏகாரத்தான் முடிவது கட்டளைக் கலித்துறை எனப்பெறும். என்னை? அடியடி தோறும் ஐஞ்சீர் ஆகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்காய் ஆகி நேர்பதி னாறே நிரைபதி னேழென் றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே என்றார் ஆகலின். (கட்டளைக் கலித்துறை) சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே ! அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே -திருக்கோவையார். 12. நேரசையால் தொடங்கிய இச் செய்யுட்கு ஒற்றுநீக்கி அடி தோறும் பதினாறு எழுத்தாதல் அறிக. (கட்டளைக் கலித்துறை) தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம் திங்களின்வாய்ந் தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன் துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே -திருக்கோவையார். 16. நிரையசையால் தொடங்கிய இச் செய்யுள் ஒற்று நீக்கி அடி தோறும் பதினேழு எழுத்தாதல் அறிக. கட்டளைக் கலித் துறைக்கு ஓதிய இலக்கணம் அனைத்தும் இவற்றின்கண் இடம் பெற்றிருத்தலும் கண்டு கொள்க. கலித்தாழிசை 81. அந்தடி மிக்குப் பலசில வாயடி தந்தமில் ஒன்றிய தாழிசை ஆகும். -யா. வி. 87 மேற். -யா. கா. 33 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் கலித் தாழிசை யாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) ஈற்றடிமிகுந்து பலவும் சிலவும் ஆகிய அடிகள் தத்தம்முள் ஒத்த அளவினவாக வருமாயின் அது கலித்தாழிசை ஆகும் என்றவாறு. அந்தடி மிக்கு என்றமையால் அடிவரையறுத் திலாமை கொள்க. பல சில வாயடி தந்தமில் ஒன்றிய என்றமையால் ஈற்றடி ஒன்றும் ஒழிய எஞ்சிய மூன்றடியும் அளவொன்றி வருவனவும் ஈரடி அளவொன்றி வருவனவும் கொள்க. ஈரடியால் தாழிசை வருவது முண்டாகலின், அஃது ஈற்றடி மிக்கு முதலடி அதனின் அகப்பட்டு நிற்கும் என்பதும் கொள்க. (கலியொத் தாழிசை) கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின் ! ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம் ஆசில் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின் ; மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின் -யா. வி. 87 மேற். -யா. கா. 33 மேற். இவை இரண்டடியாய் ஈற்றடிமிக்கு வந்தன. இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தமையால் கலியொத் தாழிசையாம். மேலே வெள்ளொத் தாழிசைக்கும் வெண்டாழிசைக்கும் காட்டிய வேறுபாடு, கலிக்கும் உண்டாதல் கண்டு கொள்க. (கலித்தாழிசை) வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம் கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்? -யா. வி. 87 மேற். -யா. கா. 33 மேற். இஃது ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வந்தது. ஒருபொருள் மேல் ஒன்றாக வந்ததால் கலித்தாழிசை. (கலித்தாழிசை) பூண்ட பறையறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே நீண்ட சடையான் ஆடும் என்ப மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே -யா. வி. 87 மேற். இதுவும் ஈற்றடி மிக்கு இரண்டாமடி ஒன்றும் குறைந்து ஏனை இரண்டடிகளும் ஒத்து வந்த கலித்தாழிசை. அந்த அடிமிக் கல்லா அடியே தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையயே -யா. வி. 87 மேற். எனச் சிறுகாக்கை பாடினியாரும், அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினிற் கடைடி மிகுவது கலித்தா ழிசையே -யா. வி. 87. என அமித சாகரனாரும் கலித்தாழிசை இலக்கணம் எடுத் துரைத்தார். கலிப்பாவும் இனமும் முடிந்தன. 4. வஞ்சிப்பாவும் அதன் வகையும் வஞ்சிப்பா இன்னதென்பது 82. தன்தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே. -யா. வி. 90 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நால்வகைப் பாவினுள் எஞ்சி நின்ற வஞ்சிப்பாவாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) வஞ்சித்தளை அடி தனிச்சொல் சுரிதகம் என்னும் இவை நான்கும் முறையே வரத் தூங்கிசையால் நடப்பது யாது அது வஞ்சிப்பா என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் என்றவாறு. தன்தளை பாதம் எனவே தூங்கிசை என்பது அமையுமாகத் தூங்கிசை வஞ்சி என்றது என்னை எனின், செப்பல், அகவல், துள்ளல் போலத் தூங்கிசையும் மூவகைப்படும் என்பது அறிவித்தற்கு என்க. தூங்கல் ஓசை ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என்று மூவகைப்படும். ஒன்றிய வஞ்சித் தளையான் வருவது ஏந்திசைத் தூங்கல் ; ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது அகவல் தூங்கல் ; இவ்விரு தளைகளாலும் பிறதளைகளாலும் மயங்கி வருவது பிரிந்திசைத் தூங்கல். வஞ்சி என்று அமையாது வஞ்சி எனப் பெயர் வைக்கப் படுமே என்ற விதப்பினால், வஞ்சிப்பா குறளடி வஞ்சிப்பா எனவும் சிந்தடி வஞ்சிப்பா எனவும் இருவகையாம் எனக்கொள்க. என்னை? விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும் என்றார் ஆகலின். (குறளடி வஞ்சிப்பா) பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதர வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே -யா. வி. 9, 15, 21, 90 மேற். -யா. கா. 9, 34 மேற். இது குறளடி வஞ்சிப்பா. (குறளடி வஞ்சிப்பா) தொடியுடைய தோள்மணந்தனன் ; கடிகாவிற் பூச்சூடினன் ; நறைகமழும் சாந்துநீவினன் ; செற்றோரை வழிதபுத்தனன் ; நட்டோரை உயர்வுகூறினன் ; வலியரென வழிமொழியலன் மெலியரென மேற்செல்லலன் ; பிறரைத்தான் இரப்பறியலன் ; இரப்போர்க்கு மறுப்பறியலன் ; வேந்துடை அவையகத் தோங்குபுகழ் தோற்றினன் ; வருபடை எதிர்தாங்கினன் ; பொருபடை புறங்கண்டனன் ; கடும்பரிய மாக்கடவினன் ; நெடுந்தெருவில் தேர்வழங்கினன் ; ஓங்கியல் களிறூர்ந்தனன் ; தீந்தேறல் தசும்புதொலைச்சினன் ; பாணுவப்பப் பசிதீர்த்தனன் ; மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்பவை எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் தலையே. -புறநானூறு. 239. இப் புறப்பாடலும், குறளடி வஞ்சிப்பா. (சிந்தடி வஞ்சிப்பா) கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன பணைஎருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலால் செப்பியோன் புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறும் நாற்கதி வீடுநனி எளிதே. -திருப்பாமாலை -யா. வி. 90. மேற். (சிந்தடி வஞ்சிப்பா) தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச் சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும், கலங்கஞர் எய்தி விடுப்பவும் சிலம்பிடைச் செலவும் சேணிவந் தன்றே. -யா. வி. 90 மேற். இவை சிந்தடி வஞ்சிப்பா. தூங்கல் இசையன வஞ்சி மற்றவை ஆய்ந்த தனிச் சொல்லோ டகவலின் இறுமே -யா. வி. 90 மேற். என்றார் அமிதசாகரனார். இதனால், கலிப்பாவே போல் வெண் சுரிதகமாகவும். ஆசிரியச் சுரிதகமாகவும் வஞ்சிப்பா இறாது எனவும், ஆசிரியச் சுரிதகம் ஒன்றானே இறும் என்பதும் கொள்க. வஞ்சி விருத்தம் 83. முச்சீர் நாலடி ஒத்தவை வரினே வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே 1 இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் விருத்தம் துறை தாழிசை என்னும் இனம் மூன்றனுள் முதற்கண் நின்ற விருத்தம் ஆமாறு கூறிற்று. (இ - ள்.) முச்சீர்களைக் கொண்ட நான்கு அடிகள் அள வான் ஒத்துவரின் வஞ்சி விருத்தம் என்று அதனைக் கொள்ளு தல் வேண்டும் என்றவாறு. (வஞ்சி விருத்தம்) இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய் -சூளாமணி. 742. (வஞ்சி விருத்தகம்) அடலே றமரும் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னும் கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வார் அவர்தூ நெறியாரே -திருஞான. தேவாரம். (வஞ்சி விருத்தம்) சொல்லல் ஒம்புமின் தோம்நனி ; செல்லல் ஓம்புமின் தீநெறி ; கல்லல் ஒம்புமின் கைதவம் ; மல்லல் ஞாலத்து மாந்தர்காள் ! -யா. வி. 92 மேற். இவை முச்சீர் அடி நான்கு கொண்டு அளவொத்து வந்தமை யால் வஞ்சி விருத்தம். இவ்வஞ்சி விருத்தத் திலக்கணத்தை, சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய தெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யா. வி. 92. என்று கூறினார் அமித சாகரனார். வஞ்சித்துறை 84. ஒன்றின நான்மை யுடையதாய்க் குறளடி வந்தன வஞ்சித் துறையென லாகும். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வஞ்சித் துறையாவது இன்னது என்பது கூறிற்று. (இ - ள்.) குறளடி நான்கு ஒப்புடையனவாக வரின் அது வஞ்சித் துறை எனப்பெறும் என்றவாறு. குறளடி ஒன்றின நான்மையுடையதாய் வந்தன வஞ்சித் துறை என இயைக்க. முல்லைவாய் முறுவலித்தன ; கொல்லைவாய்க் குருந்தீன்றன ; மல்லல்வான் மழைமுழங்கின ; செல்வர்தேர் வரவுண்டாம். -யா. வி. 91. (வஞ்சித்துறை) திரைத்த சாலிகை நிரைத்த போனிரந் திரைப்ப தேன்களே விரைக்கொண் மாலையாய் -சூளாமணி. 744. (வஞ்சித்துறை) பொன்செய் மன்றில்வாழ் கொன்செய் கோலத்தன் மின்செய் தாள்தொழார் என்செய் கிற்பரே -சிதம்பரச் செய்யுட்கோவை. 79. இவை குறளடி நான்கு ஒப்புடையனவாகி ஒரு பொருள் மேல் ஒன்றாகி வந்தமையால் வஞ்சித்துறை. வஞ்சித் தாழிசை 85. குறளடி நான்கிவை கூடின வாகி முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி வருவன வஞ்சித் தாழிசை ஆகும். -யா. வி. 91 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வஞ்சித் தாழிசை யாவது இஃது என்பது கூறிற்று. (இ - ள்.) குறளடி நான்கு கூடிய தொன்றாய், அவ்வாறு, மூன்று இணைந்து ஒப்புடையதாக ஒரு பொருள் மேல்வரின் அது வஞ்சித் தாழிசை என்னும் பெயர் பெறும் என்றவாறு. குறளடி நான்கு கூடியவை வஞ்சித்துறை ; அவை, மூன்று ஒரு பொருள்மேல் வரின் வஞ்சித் தாழிசை ; ஒரு பொருள் மேல் ஒன்றாகிவருதல், ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வருதல் இதுவே இவற்றுள் வேற்றுமை என்க. இதனால் பிறரும் துறை, தாழிசை இரண்டையும் இணைத்தே கூறினார் ; இவர் பிற பாவினங்களுக்குக் கூறியவாறே இதனைத் தனித்துக் கூறினார். எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில் வஞ்சித் தாழிசை ; தனிவரில் துறையே -யா. வி. 91 மேற். என்றார் சிறுகாக்கை பாடினியார். இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது வஞ்சித் தாழிசை ; தனிவரில் துறையே -யா. வி. 91 மேற். என்றார் அவிநயனார். குறளடி நான்மையிற் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; தனிவரில் துறையென மொழிப துணிந்திசி னோரே -யா. வி. 91. என்றார் அமித சாகரனார். (வஞ்சித்தாழிசை) இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனே காண் ; மடப்பிடியை மதவேழம் தடக்கையால் வெயில்மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனே காண் ; பேடையை இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண் -யா. வி. 91, 95 மேற். -யா. கா. 34 மேற். இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வஞ்சித் தாழிசை. (வஞ்சித்தாழிசை) பிணியென்று பெயராமே துணிநின்று தவஞ்செய்வீர் ! அணிமன்ற லுமைபாகன் மணிமன்று பணியீரே என்னென்று பெயராமே கன்னின்று தவஞ்செய்வீர் ! நன்மன்ற லுமைபாகன் பொன்மன்று பணியீரே அரிதென்று பெயராமே வரைநின்று தவஞ்செய்வீர் ! உருமன்ற லுமைபாகன் திருமன்று பணியீரே -சிதம்பரச் செய்யுட்கோவை. 73. இவையும் அன்ன. வஞ்சிப்பாவும் இனமும் முடிந்தன. 5. மருட்பா 86. வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும் ; 1 கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பா முதலாக ஆசிரியம் இறுதியாக வரும் மருட்பாவின் இலக்கணம் கூறிற்று. (இ - ள்.) வெண்பா முதலாகவும் அகவல் இறுதியாகவும் வரத் தொடுப்பது மருட்பா என்னும் பெயர் பெறும். இவ் விருபாக்களும் இணைந்து வருதல் அன்றிக் கலிப்பாவும் வஞ் சிப்பாவும் கலக்கப் பெறா என்றவாறு. மருளாவது மயக்கம். இருவகைப் பாக்கள் கலந்து நிற்றலின் மருட்பா ஆயிற்று. அம்மை அப்பர் ஒன்றிய உடலம் போலவும், நரமடங்கல் போலவும் இரு கூறமைந்து ஒன்றிய ஒருபா இஃதென்க. இம்முறையே முறை என்பாராய் வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி என்றார் ; இம் முறை மயங்காது என்க. வெள்ளை முதலா ஆசிரியம் இறுதியாத் தொடுப்பது எனினும் அமையுமாகக் கொள்ள என்ற விதந்தது என்னை எனின் இம்மருட்பா புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா என நாற் கூறுபடும் என்பது கொள்ளுதற் கென்க. என்னை? (கட்டளைக் கலித்துறை) பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருள்மிசை ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே -யா. கா. 35. என்றார் ஆகலின். வெண்பாவும் அகவலும் சமன் அளவில் வருவனவற்றைச் சமனிலை மருட்பா என்றும், சமனின்றி வருவனவற்றை வியனிலை மருட்பா என்றும் வழங்குவர். வழிபடு தெய்வம் நின்னைக் காப்பப் பழிதீர் செல்வ மொடு நாளும் சிறந்து நன்கனம் வாழ்க என்பது புறநிலை வாழ்த்து ஆகும். என்னை? வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -தொல். பொருள். 422. என்றார் ஆகலின். (மருட்பா) கண்ணுதலான் காப்பக் கடல்மேனி மால்காப்ப எண்ணிருதோள் ஏர்நகையாள் தான்காப்ப-மண்ணிய நூற் சென்னியர் புகழும் தேவன் மன்னுக நாளும் மண்மிசை யானே -பெரும்பொருள் விளக்கம். -புறத்திரட்டு. 1501. இது புறநிலை வாழ்த்து மருட்பா. வேம்பும் நஞ்சும் போல வெஞ்சொல் இன்றி நலம்பல பயக்குமென ஓம்படை கூறுதல் வாயுறை வாழ்த்து ஆகும் ; வாய்த்த உறை (மருந்து) போல்வதாகலின் வாயுறை வாழ்த்து ஆயிற்று. வாயுறை மெய்ப்பொருளுமாம். என்னை? வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்கதல் இன்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே -தொல். பொருள் 424. என்றார் ஆகலின். (மருட்பா) பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின் சொலன் முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும் சிலமுறை யல்லது செல்வங்கள் நில்லா இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் விலங்கி வருங்கூற்றை விலக்கலும் ஆகா அனைத்தாதல் நீவிரும் காண்டிர்-நினைத்தக்க கூறிய வெம்மொழி பிறழாது தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே -யா. வி. 55 மேற். -யா. கா. 35 மேற். இது வாயுறை வாழ்த்து மருட்பா. உயர்ந்தோரிடத்து அடங்கி நடத்தல் கடனென்று மொழி வது செவியறிவுறூஉ ஆகும். என்னை? செவியுறை தானே, பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே -தொல். பொருள். 426. என்றார் ஆகலின். (மருட்பா) பல்யானை மன்னர் முருங்க அமருழந்து கொல்யானை தேரோடும் கோட்டந்து-நல்ல தலையாலங் கானம் பொலியத்-தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக !-அடுதிறல் ஆளி நிமிர்தோள் பெருவழுதி !-எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி , உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல் ; மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம் காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல் ; அடைத்த அரும்பொருள் ஆறன்றி வௌவல் ; ஈகைப் பெரும்பொருள் ஆசையாற் சென்று பெருங்குழிசி மன்ற மறுக அகழாதி ; என்றும் மறப்புற மாக மதுரையார் ஓம்பும் அறப்புறம் ஆசைப் படேற்க ;-அறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி ;-நவையாக நட்டார் குழிசி சிதையாதி ;-ஒட்டார் செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் கலிபடைத்தாய் ! கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி ; அற்றம் அறிந்த அறிவினாய் !-மற்றும் இவைஇவை நீயா தொழுகின் நிலையாப் பொருகடல் ஆடை நிலமகள் ஒருகுடை நீழல் துஞ்சவள் மன்னே -யா. வி. 55 மேற். -யா. கா. 35 மேற். இது செவியறிவுறூஉ மருட்பா கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ என்றமையால் புறநிலை வாழ்த்து முதலியவை வெண்பாவானும், ஆசிரிய மானும் வருதலும் கொள்க. கைக்கிளையாவது ஒருதலைக்காமம். காட்சி முதற் கொண்டு கூடுதல் வரை ஒரு பால் புலம்பிக் கேட்போர் இல்லா மொழியின தாகும். என்னை? காட்சி முதலாக் கலவியின் ஒருதலை வேட்கையிற் புலம்புதல் கைக்கிளை அதுதான் கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே -யா. கா. 35. என்றார் ஆகலின். (மருட்பா) திருநுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும் இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த போகித ழுண்கணும் இமைக்கும் ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே -பு. வெ. 287. இது கைக்கிளை மருட்பா. இவற்றுள் கண்ணுதலான் காப்ப என்பதுவும் திருநுதல் வேர் வரும்பும் என்பதுவும் சமனிலை மருட்பா. எஞ்சிய இரண்டும் வியனிலை மருட்பா. ஏனைப்பாக்களுக்கு இனங் கூறினார் ; இதற்கு இனம் கூறிற்றிலர் ; இல்லையாகலின். விளரிப் பண்ணிற்குத் திறம் இல்லாதது போல் மருட்பாவிற்கு இனம் இல்லை. என்னை? (நேரிசை வெண்பா) பண்ணும் திறமும்போல் பாவும் இனமுமாய் வண்ண விகற்பம் வகைமையால்-பண்மேல் திறம்விளரிக் கில்லதுபோற் செப்பல் அகவல் இசைமருட்கு இல்லை இனம் என்றார் ஆகலின். மருட்பா முடிந்தது. செய்யுளியல் முடிந்தது. 3. பொதுவியல் 1. தனிச்சொல் 87. உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும் மறுக்கப் படாத மரபின ஆகியும் எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது தான்தனிச் சொல்லே. -யா. வி. 94 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் செய்யுளின் உறுப்பும், செய்யுள் இனமும் இவை எனக்கூறி எல்லாச் செய்யுட்கும் பொதுவாக வரும் இலக்கணமாவன இவை என்பது கூறத் தொடங்கித் தனிச் சொல் கூறிற்று. (இ - ள்.) அடி அளவில் குறைந்தும், பாவில் மயங்கியும் விலக்கப்படாத இயல்பினதாகி அடி முதற்கண் அதன் பொரு ளெல்லாம் தழுவிக் கிடக்க நடப்பது யாது அது தனிச்சொல் என்றவாறு. உறுப்பிற் குறைதல் என்பது அடியளவிற் குறைதல் ; பாக்கண் மயங்குதல் என்பது பாவின் முதற்கண் அன்றி, அடி முதற்கண்ணும் விரவி நிற்றல் ; அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது என்பது வாளா நிற்காமல் வருபொருட்கு நிலைக் களமாக நிற்றல். கலிப்பா உறுப்புக் கூறுகின்றுழித் தனிச்சொல்லையும் ஓதினார் ; ஈண்டுப் பெயர்த்தும் கூறிய தென்னை எனின், ஆண்டுக் கலிப்பாவின் உறுப்பாகி நிற்கும் தனிச்சொல்லைக் கூறினார் ; ஈண்டு அவ்வுறுப் பல்லாது செய்யுள் முதற்கண்ணும். அடிமுதற்கண்ணும், பெருளோடு நிற்கும் தனிச்சொல்லைக் கூறினார். தனிச்சொல்லைக் கூன் என்பாரும் உளர். என்னை? அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூனென மொழிப -யா. வி. 94 மேற். எனப் பல்காயனாரும், தானே அடிமுதற் பொருள்பெற வருவது கூனென மொழிப குறியுணர்ந் தோரே -யா. வி. 94 மேற். என நற்றத்தனாரும் கூறினார் ஆகலின். (நேரிசை வெண்பா) உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி-இரந்தார்மாட் டின்மை அகல்வது போல இருள்நீங்க மின்னும் அளித்தோ மழை -யா. வி. 94 மேற். இந்நேரிசை வெண்பாவினுள் அடிமுதற்கண் உதுக்காண் எனத் தனிச்சொல் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா) அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே ; யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே ; அன்னள் அளியள் என்னாது மாமழை இன்னும் பெய்ய முழங்கி மின்னும் தோழியென் இன்னுயிர் குறித்தே -குறுத்தொகை 216. இவ்வாசிரியத்துள் அவரே என்றும் யானே என்றும் அடி முதல் தனிச் சொற்கள் வந்தன. (நேரிசை ஆசிரியப்பா) அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொள் முரசின் மூவரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே ; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே ; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே; நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான்க ணற்றவன் மலையே ; வானத்து மீன்க ணற்றதன் சுனையே ; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே ; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே -புறநா. 109. இவ்வாசிரியத்துள் ஒன்றே, இரண்டே, மூன்றே, நான்கே எனத் தனிச்சொல் அடிமுதற்கண் தொடுத்து வந்தது. (தரவுகொச்சகம்) உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய இறுவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே ; சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி உறுதகைமை உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே -யா. வி. 94 மேற். இத் தரவு கொச்சகக் கலியுள் உலகினுள் என அடி முதற்கண் தனிச்சொல் வந்தது. (வெண்கலிப்பா) நோக்குங்கால் நோக்கித் தொழூஉம் பிறர்காண்பார் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப் போக்குங்காற் போக்கும் நினைத்திருக்கும் மற்றுநாம் காக்கு மிடமன் றினி ; எல்லா எவன்செய்வாம் ; பூக்குழாய் செல்லல் அவனுழைக் கூஉய்க்கூஉய் விரும்பியான் வீட்டேனும் போல்வலென் றோண்மேற் கரும்பெழுது தொய்யிற்குச் செல்வலீங் காக இருந்தாயோ என்றாங் கிற ; அவனின், திருந்தடி மேல்வீழ்ந் திரக்குநோய் தீர்க்கும் மருந்துநீ ஆகுத லான் ; இன்னும் கடம்பூண் டொருகால்நீ வந்தை யுடம்பட்டாள் என்னாமை என்மெய் தொடு ; இஃதோ அடங்கக் கேள் ; நின்னொடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா என்னொடு நிற்றல் எளிதன்றோ மற்றவன் தன்னொடு நின்று விடு -கலித். 63. இவ்வெண்கலியுள் அடிமுதற்கண் தனிச்சொற்கள் பல வந்தன. (குறளடி வஞ்சிப்பா) உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும் பிற்கொடுத்தார் முற்கொளவும் உறுதிவழி ஒழுகுமென்ப ; அதனால், நற்றிறம் நாடுதல் நன்மை பற்றிய யாவையும் பரிவறத் துறந்தே -யா. வி. 94 மேற். இவ்வஞ்சிப்பாவினுள் உலகே என அடிமுதற்கண் தனிச்சொல் வந்தது. வஞ்சிப்பாவில் தனிச்சொல் வருதற்கு மேலும் ஒரு விதி 88. வஞ்சி மருங்கின் இறுதியும் ஆமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே. -யா. வி. 94 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வஞ்சிப்பாவின்கண் தனிச்சொல் வருதற்கு மேலுமொரு சிறப்புவிதி கூறிற்று. (இ - ள்.) அடிமுதற் கண்ணே வரும் என்று பொதுவிதியாகக் கூறப்பெற்ற தனிச்சொல் வஞ்சிப்பாவின் இறுதிக் கண்ணும் வருமென யாப்பியல் அறிந்தோர் கண்டு உரைத்தனர் என்றவாறு. இறுதியும் என்ற உம்மையால் அடியின் இறுதிக் கண்ணே அன்றி இடையும் வருமெனக் கொள்க. ஆக வஞ்சிப் பாவினுள் தனிச்சொல் அடிமுதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் வருதல் பெற்றாம். பிற பாக்களினகத்து அவ்வாறு வருமோ என்பார்க்கு அவ்வாறு வாராது என்றற்கு அன்றே இதனைத் தனித்து ஓதினார் என்க. களிறணைப்பக் கலங்கின, காஅ ; தேரோடத் துகள்கெழுமின, தெருவு ; மாமறுகலின் மயக்குற்றன, வழி; கலங்கழாஅலிற், றுறை, கலக்குற்றன ; தெறன்மறவர் இறைகூர்தலின் பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவர் இரும்பின் நோவுறழ் இரும்புறங் காவல் கண்ணிக் கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை மையல் நோக்கிற் றையலை நயந்தோர் அளியர் தாமேயிவ டன்னை மாரே ; செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினு மன்னோ என்னா வதுகொல் தானே பன்னல் வேலியிப் பணைநல் லூரே -புறநானூறு 345. இப் புறப்பாட்டில் வஞ்சியடியின் இடையிலும், ஈற்றிலும் தனிச்சொல் வந்தது. வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனினும் அமையுமாகக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே என விதந்துரைத்த தென்னை எனின், நான்குவகைப் பாவினுள்ளும் அடிமுதற்கண் சீர் தனிச் சொல்லாக வரும் எனினும் வஞ்சிப்பாவின்கண் அசையே தனிச்சொல்லாக வருதலும். உகர ஈற்று நேரீற்றியற் சீர் தனிச்சொல்லாக வருதலும் சிறப்பு என்றும், வஞ்சிப்பாவின் இடையும் இறுதியும் அசையும் உகர ஈற்ற நேரீற்று இயற்சீருமே தனிச்சொல்லாக வரும் என்றும் வலியுறுத்தற்கு அவ்வாறு கூறப்பெற்றது என்க. களிறணைப்பக் கலங்கின என்னும் பாடலில் வஞ்சி யடியின் இடையிலும் ஈற்றுலும் அசையும் உகர ஈற்று நேரீற்று இயற் சீருமே தனிச்சொல்லாக வந்தமை கண்டறிக. (நேரிசை ஆசிரியப்பா) வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப் போன்றன தான், களங்கொளக் கழல் பறைந்தன கொல்ல் லேற்றின் மருப்புப் போன்றன தோல், துவைத்தம் பிற்றுளை தோன்றுவ நிலைக்கொராஅ விலக்கம் போன்றன மா எறிபதத்தான் இடம்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் எருத்துவவ்விய புலிபோன்றன களிறு கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப் போன்றன நீயே, அலங்குளைப் பரீஇ யிவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி மாக்கடல் நிவந்தெழு தரும் செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ அனையை யாகன் மாறே தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூவுநின் னுடற்றியோர் நாடே -புறநா. 4. இப் புறப்பாட்டுள் வஞ்சியடிகளின் முன்னே அசையும், உகர ஈற்று நேரீற்று இயற்சீரும் வருதலும், நீயே என மாச்சீர் அருகி வருதலும் கண்டு கொள்க. இனி இவ் விதப்பால் கலிப்பாவின்கண் ஓர் அடியே தனிச்சொல்லாக வருமாறும் அமைத்துக் கொள்க. காமர் கடும்புனல் என்னும் கலிப்பாவின்கண் (கா. பா. பக். 245) அவனுந்தான், எனவாங்கு, நல்லாய் எனச் சீர் தனிச் சொல்லாக வருவதுடன், சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே என அடியே தனிச் சொல்லாக வந்தது. இத் தனிச்சொல் வருமாற்றை, அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் ; அஃ திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப -யா. வி. 95. என அமிதசாகரனாரும் கூறினார். தனியே அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் ; அஃ திறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப -யா. வி. 95. என அவிநயனாரும் கூறினார். 2. புறநடை 89. உணர்த்திய பாவினுக் கொத்த அடிகள் வகுத்துரை பெற்றியும் அன்றிப் பிறவும் நடக்குந ஆண்டை நடைவகை யுள்ளே. -யா. வி. 98 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேற் சொல்லப்பட்ட பாக்களுக் கெல்லாம் எய்துவதோர் பொதுவிலக்கணம் கூறிற்று. (இ - ள்.) மேற் சொல்லப்பட்ட பாக்களுக்கு உரிய அடிகள் விரித்துக் கூறியவாறு அல்லாமல் பிறவாறு நடக்குமாயினும் அவற்றை ஒருசார் ஒப்பு நோக்கி அவ்வியலுள் அமைத்துக் கொள்க என்றவாறு. இன்னதற்கு இன்ன இலக்கணம் என வகுத்த பாவுள்ளும் இனத்துள்ளும் சற்றே மிக்கும் குறைந்தும் வருமெனினும் ஒரு சார் ஒப்புமை நோக்கி அப் பாவினுள்ளும் இனத்தினுள்ளும் அமைத்துக் கொள்க என்று கூறினாராயிற்று. இவ்வாறே பிறரும், மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே -யா. வி. 93. என்றும், ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும் மிக்கடி வரினும் அப்பாற் படுமே - (அவிநயனார்) - யா-75.93.மேற்) என்றும் கூறினார். இப் புற நடையால் ஒரு பாவின்கண் பிறிதொரு பாவின் அடி மயங்கி வருதலும் அமைத்துக் கொள்க. (கலிவிருத்தம்) கோழியும் கூவின குக்கில் அழைத்தன தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ; ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக் கூழை நனையக் குடைதும் குளிர்புனல் ஊழியும் மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய் -யா. வி. 98 மேற். -யா. கா. 43 மேற். இது நாற்சீர் ஐந்தடியான் வந்தது. நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம். ஓரடி மிக்குவரினும் கலிவிருத்தத்தின் பால் அமைத்துக்கொள்க. (கலிவிருத்தம்) வேயே திரள்மென்றோள் வில்லே கொடும்புருவம் வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தார் ஏயே இவளொருத்தி பேடியோ வென்றார் எரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வென்றார் (கலிவிருத்தம்) பலிகொண்டு பேராத பாசம் இவள்கண் ஒலிகொண் டுயிருண்ணும் கூற்றமென் றெல்லே கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தார் இலைகொண்ட பூணினீர் என்றெழினி சேர்ந்தான் இலங்குபொற் கிண்கிணியாள் நக்கெழினி சேர்ந்தாள் -சிந்தா. 652-53. இச் சிந்தாமணிப் பாடல்களும், (கலிவிருத்தம்) நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே ! கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே ! காலக் கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே (கலிவிருத்தம்) வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே; மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே ! உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே ! இவ் வளையாபதிப் பாடல்களும் கலிவிருத்தத்தின் பாற்படும். இதனைக் கொச்சக ஒரு போகு எனினும் ஆம். வஞ்சிப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை கூறினார். எனினும், (குறளடி வஞ்சிப்பா) சுற்றும்நீர் சூழ்கிடங்கில் பொற்றாமரைப் பூம்படப்பைத் தெண்ணீர் நல்வயல் ஊரன்கேண்மை அல்லிருங் கூந்தற் கலரா னாதே -யா. வி. 93 மேற். -யா. கா. 43 மேற். என்று வந்துள்ளமையால் இதனை வஞ்சிப்பாவின் பாற்படுத்திக் கொள்க. இனி மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் வஞ்சிக்கு இரண்டடிச் சிறுமையும் வேண்டினார் எனக் கொள்க. இவ்வாறே பிறவும் அமைத்துக் கொள்க. இனி அடிமயக்கம் கூறுமாறு : அகவற்பாவினுள் வெண்பா அடியும், வஞ்சி அடியும் கலியடியும் மயங்கும். கலிப்பாவினுள் வெண்பா அடியும், ஆசிரிய அடியும் மயங்கும். வஞ்சிப்பாவினுள் அகவல் அடியும், கலியடியும் ஒருசார் வெண்பா அடியும் மயங்கும். வெண்பாவினுள் பிறபா அடி மயங்கா. என்னை? (நேரிசை வெண்பா) ஆசிரியப் பாவின் அயற்பா அடிமயங்கும் ; ஆசிரியம் வெண்பா கலிக்கணாம் ;-ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் ; வெண்பாவின் ஒண்பா அடிவிரவா உற்று -யா. வி. 31 மேற். என்றார் ஆகலின். (நேரிசை ஆசிரியப்பா) வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக வொறுத்தி வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் றண்டமும் தணிதி பண்டையிற் பெரிதே அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்த லல்லது மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப ! செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் நெய்தலங் கானல் நெடியோய் எய்தவந் தனம்யாம் ஏத்துகம் பலவே -புறநா. 10. இவ்வாசிரியத்துள், செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் என வெள்ளையடி வந்தது. இதனை, செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் எய்தினை அண்ணால் இனிது என்றாக்கி வெண்பா வாதல் அறிக. (நிலைமண்டில ஆசிரியப்பா) முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய உரவோர் உம்பல் ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய பெருமைத் தாகநின் னாயுள் தானே நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கதூஉம் இனவாளை நுண்ணாரற் பருவராற் குரூஉக்கெடிற்ற குண்டகழி வானுட்கும் வடிநீண்மதில் மல்லல்முதூர் வயவேந்தே செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன் தகுதி கேளினி மிகுதி யாள நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண் டுடம்பும் உயிரும் படைத்திசி னோரே வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி யாளும் இறைவன் தாட்குத வாதே ; அதனால் அடுபோர்ச் செழிய இகழாது வல்லே நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே -புறநா. 18. இவ்வாசிரியத்துள், அடுபோர்ச் செழிய இகழாது வல்லே என இயற்சீரும் வெண்சீரும் விரவிய வெள்ளடி வந்தது. இதனை, அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லே நெடுநீர்த் தடுத்து நிலை - (இ.கு.) என்றாக்கி வெண்பாவாதல் அறிக. இவ்வாசிரியத்துள், நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி என்பது முதலாக வஞ்சியடிகள் வந்தன. இவற்றை, (குறளடி வஞ்சிப்பா) நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கதூஉம் இனவாளை நுண்ணாரற் பருவராற் குரூஉக்கெடிற்ற குண்டகழி வானுட்கும் வடிநீண்மதில் மல்லல்மூதூர் வயவேந்தே என்றும், ஒருநீ யாகல் வேண்டின் வருநீர் தடுத்து வளஞ்செயல் கடனே (இ. கு.) என்றாக்கி வஞ்சிப்பாவதல் அறிக. (நேரிசை ஆசிரியப்பா) ஆனாப் பெருமை அணங்கும் நனியணங்கும் வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது முருகவேள் உறையும் சாரல் அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே -யா. வி. 29 மேற். இவ்வாசிரியத்துள், வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது என்பது கலியடி. இதனை, வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது தேனோங்க நறும்பைந்தார்ச் சேயமரும் திருவிற்றே -யா. வி. 20 மேற். என்றாக்கிக் கலியடியாமாறு கண்டு கொள்க. காமர் கடும்புனல் என்னும் கலிப்பாவினுள் (39) (இன்னிசை வெண்பா) அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் கானக நாடன் மகள் என்பது முதலாக வெண்பா அடி மயங்கி வந்தன. கொடுவரி தாக்கி என்னும் கலிப்பாவினுள் (49) நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை என்பது முதலாக ஆசிரிய அடி மயங்கி வந்தன. பட்டினப்பாலை என்பது, வஞ்சி நெடும் பாட்டு. அதனுள், நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் என்பது முதலாக ஆசிரிய அடி மயங்கி வந்தன. வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும் எனக் கலியடி மயங்கி வந்தது. இதனை, வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் கயல்நாட்டக் கடைசியர்தம் காதலர்தோள் கலந்தனரே -யா. வி. 39 மேற். என்றாக்கிக் கலியடியாமாறு கண்டு கொள்க. அதனுள் கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை என்பது வெள்ளடி. இதனை, கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை ஆழிசூழ் வையக் கணி -யா. வி. 31 மேற். என்றாக்கி வெள்ளடியாமாறு கண்டு கொள்க. இனி, நடைவகையுள்ளே என்ற விதப்பினால் எல்லாப் பாக்களுக்கும் பொதுவாகிய பொருள்கோள், விகாரம், குறிப் பிசை, வகையுளி, வனப்பு, வண்ணம் முதலியனவும் கொள்க. என்னை? நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும் அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும் எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும் வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும் அம்மை முதலிய ஆயிரு நான்மையும் வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத் திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே -யா. வி. 95. என்றார் ஆகலின். 3. பொருள்கோள் பொருள்கோள் என்பது செய்யுள் பொருள் கொள்ளக் கிடக்கும் முறை என்பதாம். அதனை நான்கென ஆசிரியர் தொல்காப்பியனாரும், எட்டெனப் பின்னூலாரும் கூறுவர் ; ஒன்பதென எண்ணுவாரும் உளர். என்னை? நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே -தொல். சொல். 404. என்றும், யாற்நுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண் தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே -நன்னூல். பொது. 60. என்றும் கூறினார் ஆகலின். ஒன்பதென எண்ணுவார் மொழிமாற்றினைச் சுண்ண மொழிமாற்று, அடிமொழி மாற்று என இரண்டாக்கிக் கொள் வார். முன்னது ஓரடி மொழி மாற்று. பின்னது ஈரடி மொழி மாற்று. அடிமொழி மாற்றினை ஈரடி மொழி மாற்று என்றும் கூறுவர். 1. நிரல்நிறைப் பொருள்கோள் நிரல் - வரிசை; நிறை - நிறுத்துதல். சொல்லையும் அது தழுவும் பொருளையும் வரிசை வரிசையாய் நிறுத்திப் பொருள் கொள்ள வைத்தல் நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும். இது பெயர் நிரல் நிறை, வினை நிரல் நிறை, முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல் நிறை முதலியவாகப் பலவாம். நிரல் நிறைப் பொருள்கோளினை நிரல் நிறை அணியின்பாற் படுத்து வார் அலங்கார முடையார். பெயர் நிரல் நிறை : (இன்னிசை வெண்பா) கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் -யா. வி. 95 மேற். -நேமிநாதம். 92 மேற். வஞ்சிமகள் நுசுப்பு கொடி ; கண் குவளை ; மேனி கொட்டை ; முகம் மதி ; வாய் பவளம் ; முறுவல் முத்தம் ; நடை பிடி ; நோக்கு பிணை ; சாயல் மயில். என இயைத்துப் பெயர் நிரல் நிறையாமாறு காண்க. வினை நிரல் நிறை: (நேரிசை வெண்பா) காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப போதுசேர் தாழ்மார்ப ! போர்ச்செழிய-நீதியால் மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை எற்றார்க்கு நுண்ணிய வாய பொருள் -யா. வி. 95 மேற். -நேமி. 93 மேற். சேர்ப்ப, மார்ப, செழிய, நீதியால் மண்கா ; அமிர்தம் து ; மங்கையர்தோள் சேர் ; மாற்றாரைத் தாழ் ; ஏற்றார்க்குக் குழை ; நுண்ணியவாய பொருள் ஆய் என இயைத்து வினை நிரல் நிறையாதல் காண்க. முறை நிரல் நிறை : (குறள் வெண்பா) முறிமேனி ; முத்தம் முறுவல் ; வெறி நாற்றம் ; வேலுண்கண் ; வேய்த்தோள் ; அவட்கு -திருக். 1113 சொல்லும் பொருளம் முறையே இயைந்து நின்றமையால் முறை நிரல் நிறையாதல் காண்க. எதிர் நிரல் நிறை : (குறள் வெண்பா) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் -திருக். 410. விலங்கொடு மக்கள் என எடுத்துக் கற்றாரோடு ஏனையவர் என முடிப்பினும், விலங்கு ஏனையவர்; மக்கள் கற்றார் என இயைத்துக் கொள்ளப் பெறுதலால் எதிர் நிரல் நிறையாதல் காண்க. மயக்க நிரல் நிறை: (இன்னிசை வெண்பா) கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு -யா. வி. 3, 95 மேற். இதனுள், கண்ண் என்று தொடங்கியதற்கு எற்ப எயிறு, சுணங்கு, மருங்குல் என்ற முறையால் வைக்காமல் முல்லை, பொன், மின் என்பனவற்றை முறை மாற்றி வைத்தமையால் மயக்க நிரல் நிறை ஆயிற்று. 2. சுண்ணமொழி மாற்று ஓரடிக்கண் நின்ற சொற்களை ஏற்ற பெற்றியில் மாற்றி யமைத்துப் பொருள் கொள்வது சுண்ணமொழி மாற்றாகும். (நேரிசை வெண்பா) கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை இதனுள் மஞ்ஞை என்பது கரையாட என்பதனோடும், கெண்டை என்பது கயத்தாட என்பதனோடும் சுரை என்பது மிதப்ப என்பதனோடும், அம்மி என்பது ஆழ என்பதனோடும், யானை என்பது நிலை என்பதனோடும், முயற்கு என்பது நீத்து என்பத னோடும் இணைந்து பொருள் கொண்டமை அறிக. இவை அவ்வவ்வடிக் கண்ணே மாறிநின்று பொருள் தந்தமையும் கருதுக. 3. அடிமறி மொழிமாற்று வேண்டிய எவ்வடியை முதல் இடை கடையாகச் சொன்னாலும் பொருள் பொருந்தி நிற்பது அடிமறி மொழி மாற்றுப் பொருள் கோள் ஆகும். (அடிமறிமண்டில ஆசிரியப்பா) மாறாக் காதலர் மலைமறந் தனரே ; ஆறாக் கட்பனி வரலா னாவே ; ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே ; கூறாய் தோழியான் வாழு மாறே -யா. வி. 73, 95 மேற். -நேமி. 92 மேற். இவ்வாசிரியத்தின்கண் எவ்வவடியை முதல் இடை கடையாகக் கொண்டு கூறினும் ஓசையும் பொருளும் குற்றப்படாமை கண்டு கொள்க. 4. அடிமொழிமாற்றுப் பொருள்கோள் இரண்டடி மொழிமாற்று என்பதுவும் இது. இரண்டு அடிக்கண்ணும் அமைந்து கிடக்கும் சொற்களை ஏற்றபெற்றி எடுத்துப் பொருள் கொள்ள அமைவது அடிமொழி மாற்றுப் பொருள்கோள் இலக்கணமாகும். (குறள் வெண்பா) உள்ளடி உள்ளன ஓலை செவியுள முள்ளஞ்சித் தொட்ட செருப்பு -யா. வி. 95 மேற். இதனை உள்ளடி உள்ளன முள்ளஞ்சித் தொட்ட செருப்பு ; செவியுள தொட்ட ஓலை என இயைத்து அடிமொழி மாற்றாதல் அறிக. 5. பூட்டுவிற் பொருள்கோள் விற்பூட்டுப் பொருள்கோள் என்பதுவும் இது. பூட்டிய வில்லென அடியும் முடியும் தழுவிக் கிடக்க அமைந்து நிற்பது பூட்டுவிற் பொருள்கோளாம். (நேரிசை வெண்பா) திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு -முத்தொள்ளாயிரம். இதனைக் கதவு திறந்திடுமின் என ஈறும் முதலும் இணைத்துப் பூட்டுவிற் பொருள்கோளாதல் அறிக. 6. புனல் யாற்றுப் பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பதுவும் இது. அடி தோறும் பொருள் அற்றுத் தொடுத்துச் சேறலால் இப்பெயர் பெற்றது; அற்றற்று ஒருநெறியே ஓடும் ஆறு போல்வதாகலின். (இன்னிசை வெண்பா) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம் ; விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம் ; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் ; கொலைப்பாலும் குற்றமே யாம் -நான்மணிக்கடிகை 26. அடிதோறும் பொருள் அற்றுத் தொடர்ந்து செல்லு செலு தலால் இது புனல் யாற்றுப் பொருள்கோள் ஆயிற்று. 7. தாப்பிசைப் பொருள்கோள் தாப்பாவது கயிறு ; தாம்பு என்பது வலித்தல் விகாரம் பெற்றது. இவண் கயிறு கயிற்று ஊசலுக்கு ஆயிற்று. இடைநிற்கும் ஊசல் இருபாலும் சென்று வரல்போல இடை நிற்கும் ஒரு சொல் முன்னும் பின்னும் போய்ப் பொருள் பொருந்த நிற்றல் தாப்பிசைப் பொருள் கோள் ஆகும். (குறள் வெண்பா) உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு -திருக். 255. இதனுள் ஊன் என்னும் சொல் ஊன் உண்ணாமை உள்ள துயிர் நிலை என்றும், ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு என்றும் இயைந்தமையால் தாப்பிசைப் பொருள் கோளாதல் அறிக. 8. கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஒரு செய்யுளில் அமைந்துள்ள எவ்வடிச் சொல்லையும் எவ்வடியோடும் பொருள் பொருந்தக் கொண்டு கூட்டுவது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும். செய்யுள் முழுவதும் தழுவி நடத்தலின் சுண்ணமொழி மாற்றினும், அடிமொழி மாற்றினும் வேறாதல் அறிக. (நேரிசை வெண்பா) ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் பாரி பறம்பின்மேல் தண்ணுமை-காரி விறன்முள்ளூர் வேங்கை வெதிர்நாணும் தோளாய் நிறனுள்ளூர் உள்ள தலர் -யா. வி. 95 மேற். -யா. கா. 43 மேற். இதனுள் வெதிர் நாணும் தோளாய் என்றும், நிறன் வேங்கை என்றும், அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் என்றும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால், இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆயிற்று. 9. அளைமறிபாப்புப் பொருள்கோள் அளையாவது புற்று. புற்றுள் சுருண்டு கிடக்கும் பாம்பு போன்ற அமைப்புடையது இது. பல எச்சங்கள் ஒரு முற்றைத் தழுவிக் கிடக்கும் என்று கொள்க. (நிலை மண்டில ஆசிரியப்பா) துன்பினைக் கண்டதும் துவண்டு சோர்தலும் இன்பினைக் கண்டதும் எழுச்சி கூர்தலும் வன்பினைக் கண்டதும் வரிந்து நிற்றலும் அன்பினைக் கண்டவர் அணுகியல் அன்றே - (இ.கு.) சோர்தலும், கூர்தலும், நிற்றலும் அன்பினைக் கண்டவர் அணுகியல் அன்றே என இயைந்து நின்றமையால் அளை மறிபாப்புப் பொருள்கோள் ஆயிற்று. பாப்பு - பாம்பு. வலித்தல் விகாரம் பெற்றது. பொருள்கோட் பெயர் ஒன்பதும் காரணக் குறியான் அமைந்து நின்றமை அறிக. 4. விகாரம் செய்யுள் இன்பங் கருதிச் செய்யப் பெறுவதோர் வேறு பாடு விகாரம் எனப்படும். அது வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல், நீட்டல், குறுக்கல் என ஆறாம். என்னை? அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர் -தொல். சொல். 408. என்றார் ஆகலின். இனி இவற்றுடன் முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூன்றையும் கூட்டி ஒன்பதாகக் கூறுவாரும் உளர். இம் மூன்றும் தொகுத்தலுள் அடங்கும் என்பதும் ஒன்று. (நேரிசை வெண்பா) சிறுக்கட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுக்கை இரும்புலி பொரூஉ நாட நனிநா ணுடைமைய மன்ற பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே -ஐங்குறு 266. இதனுள் சிறுகண் என்பது சிறுக்கண் என விரித்தும், குறுங்கை என்பது குறுக்கை என வலித்தும் வந்தன. ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் -தொல். கிளவி. 8. இதனுள் குற்றியலுகரம் என்பது குன்றிய லுகரம் என மெலித்து வந்தது. ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே. மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே இதனுள் சிறிய இலை என்பது சிறியிலை எனத் தொகுத்தும் விளையுமே ஊழ்க்குமே வீழ்க்குமே சொரியுமே என்பன விளையும்மே ஊழ்க்கும்மே, வீழ்க்கும்மே, சொரியும்மே என விரிந்தும் வந்தன. (கலிவிருத்தம்) மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே -தேவாரம் 5. 90 : 1. இதனுள் நிழல் என்பது நீழல் என நீண்டு வந்தது. அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்குப் பிரிவில புலம்பி நுவலுங் குயிலினும் தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே -நற்றிணை 67. இதனுள் ஆழ்ந்து படு என்பது அழுந்துபடு எனக் குறுகி வந்தது. பன்மாடக் கூடல் என்னும் பாடலில் (கா. பா. 53) திருத்தார்நன் றென்றேன் றியேன் எனத் தீயேன் என்பது தியேன் என ஆகி வந்ததும் குறுக்கமே. தாமரை என்பது மரை என்றும் உள்ளம் என்பது உளம் என்றும், நீலம் என்பது நீல் என்றும் குறைந்து வருவன முறையே முதற்குறை, இடைக்குறை, கடைக்குறையாம். 5. குறிப்பிசை எழுத்தல் இசை என்பதும் இது. முற்கு (முக்குதல்) வீளை (சீழ்க்கை) இலதை (கோழை வெளிப்படுத்துதல்) அநுகரணம் (பறவை ஒலி, விலங்கொலி போன்ற ஒப்பொலி) முதலியவை செய்யுட்கண் வந்தால் அவற்றைச் செய்யுள் நடை கெடாது அசையும் சீரும் அமைத்துக் கொள்ளுதல். (நேரிசை வெண்பா) மன்றலங் கொன்றை மலர்மிலைந் தஃகுவஃ கென்று பயிரும் இடைமகனே-சென்று மறியாட்டை யுண்ணாமை வன்கையால் வல்லே அறியாயோ அண்ணாக்கு மாறு -யா. வி. 95 மேற். -யா. கா. 43 மேற். இவ் விடைக் காடர் ஊசிமுறிப்பாட்டில், அஃகுவஃ கென இலதை ஒலி வந்து நேர் நிரை என அசையும் கூவிளம் எனச் சீரும் பெற்று வெண்டளை பிழையாமை காண்க. கக்கா குக்கூ கிக்கீ கீச்சென ஒக்கக் கூவும் ஒலியாம் இசையைக் செவிக்கண் ஏற்றுச் சிந்தை குளிர -(இ.கு) -குரங்கு சொல்லிய கதை. 35-6. என்றும், குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை -திருப்புகழ் என்றும், (பஃறெடை வெண்பா) ஒஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை அட்ட களத்து. -களவழிநாற்பது. 36. என்றும் வருவனவற்றுள் குறிப்பிசைகளை அலகிட்டுச் சீரும் தளையும் சிதையாமை கண்டு கொள்க. 6. வகையுளி வகையுளி என்பது முன்னும் பின்னும் அசை முதலிய உறுப்புக்கள் நிற்கும் வகை அறிந்து பிழைபடாது வண்ணம் அறுத்துக்கொள்ளுதல். இதனை அசையும் சீரும் இசையொடு சேர்த்தல் என்பார் தொல்காப்பியனார். (குறள் வெண்பா) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் -திருக்குறள். 4. இதனை நிலமிசை நீடு வாழ்வார் எனக்கொண்டு அலகிடின் இயற்சீர் வெண்டளையும் ஆசிரியத் தளையும் ஆகியும், காசு பிறப்பு நாள் மலர் என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் வெண்பா இறுதல் வேண்டும் என்னும் விதியுடன் முரண்பட்டும் குற்றப் படும். படாமை, நிலமிசை நீடுவாழ்வார் என வண்ணம் அறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். (கலிவிருத்தம்) நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே - தேவாரம் 5.19:9 இதனை நம் கடம்பனை, தென் கடம்பை, தன் கடன் அடியேனையும், என் கடன் பணிசெய்து கிடப்பதே என அல கிடின் கலிவிருத்த யாப்புறவு அழிதல் அறிக. இவ்வாறே பிறவும் கொள்க. 7. வனப்பு வனப்பு என்பது பல உறுப்பும் திரண்டவழி உண் டாவதோர் அழகு. அதுபோல் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்ட தொடர்நிலைக் கண்ணே உண்டாவது வனப்பு எனக் காரணக் குறி பெற்றது. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எட்டாம். 1. அம்மை: சிலவாகிய மெல்லி சொற்களால் சீரிய பொருள் தரும் வண்ணம் சொல்வது. என்னை? வனப்பியல் தானே வகுக்கும் காலைச் சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே -தொல். சொல். செய். 233. என்றார் ஆகலின். அம்மை என்பது குணப்பெயர் ; அமைதிப் பட்டு நிற்றலின் அம்மை ஆயிற்று என்றார் பேராசிரியர். (தொல். செய். 233.) (குறள் வெண்பா) உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் -திருக். 294. 2. அழகு: செய்யுட் சொல்லாகிய திரி சொல்லால் ஓசை இனிதாக இயற்றப் பெறுவது அழகு எனப்பெறும். என்னை? செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே -தொல். செய். 234. பாட்டும் தொகையும் அழகுக்கு எடுத்துக்காட்டாம். 3. தொன்மை : பழைமையாய் நிகழ்ந்தவற்றை உரையும் பாட்டும் விரவ உரைப்பது தொன்மை எனப்பெறும் என்னை? தொன்மை தானே, உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே -தொல். செய். 235. என்றார் ஆகலின். பெருந்தேவனாரால் இயற்றப் பெற்ற பாரத வெண்பா எடுத்துக் காட்டாம். தகடூர் யாத்திரையும் அத்தகைத்தென ஆன்றோர் உரையால் அறிதும். 4. தோல் : இழுமென்னும் மெல்லிய சொற்களால் விழுமிய வற்றைக் கூறினாலும், பரந்த சொற்களால் அடிமிக்கு நடப்பினும் தோல் எனக் கூறப்பெறும். (நேரிசை ஆசிரியப்பா) காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி வேலையும் குளனும் வெடிபடச் சுவறித் தந்தைதாய் மக்கள் முகம்பா ராமே வெந்த சாகமும் வெவ்வே றருந்திக் குணமுள தனையும் கொடுத்து வாழ்ந்த கணவனை மகளிர் கண்பா ராமே விழித்தவிழி யெல்லாம் வேற்றுவிழி யாகி அறவுரை இன்றி மறவுரை பெருகி உறைமறந் தொழிந்த ஊழிகா லத்தில் தாயில் லவர்க்குத் தாயே ஆகவும் தந்தையில் லவர்க்குத் தந்தையே ஆகவும் இந்த ஞாலத்தில் இடுக்கண் தீர வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன் நீலஞ் சேரும் நெடுமால் போன்றவன் ஆலஞ் சேரி அயிந்தன் என்பான் ஊருண் கேணி நீரே போலத் தன்குறை சொல்லான் பிறர்பழி உரையான் மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்றான் இறந்து போகா தெம்மையும் காத்தான் வருந்தல் வேண்டா வழுதி இருந்தனம் இருந்தனம் இடர்கெடுத் தனமே -தனிப்பாடல் திரட்டு. 1 : 9. வற்கடம் நீங்கிவந்த புலவரை நோக்கிப் பாண்டியன் வினாவ, அவர் பாடிய இப் பாடல் தோல் என்பதற்கு எடுத்துக்காட்டு. அடிநிமிர்ந்து ஒழுகும் பாட்டு, பத்துப்பாட்டில் கண்டு கொள்க. 5. விருந்து : புதியனவற்றின் மேற் பாடுவது விருந்து எனப்படும். என்னை? விருந்தே தானும், புதுவது புனைந்த யாப்பின் மேற்றே -தொல். செய். 237. என்றார் ஆகலின். இப்பொழுதுள்ளாரைப் பாடுவதும், இப்பொழுது காணப் பெறும் விந்தையினையும் நிகழ்ச்சியினையும் பாடுவதுமாம். 6. இயைபு : ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியெழுத்தும் ஈறாக வந்த பாட்டு இயைபு எனப்பெறும். என்னை? ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே -தொல். செய். 238. என்றார் ஆகலின். பெருங்கதை, மணிமேகலை முதலியன னகார ஈற்றால் வந்தன. பிறவாறு வருவனவும் கண்டு கொள்க. 7. புலன் : இயற் சொல்லால் பொருள் எளிதில் புலப்படப் பாடப் பெறுவது புலன் எனப்பெறும். என்னை? தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந் தோரே -தொல். செய். 239. என்றார் ஆகலின். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட ரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் ; தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் -பாரதியார். என்றும், (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) தாயெழிற் றமிழை என்றன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாயுநாள் எந்த நாளோ ஆரிதைப் பகர்வார் இங்கே -பாவேந்தர். என்றும், (எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறும் தேக்கியநல் வாய்க்காலும் வகைப்ப டுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு? -பாவேந்தர். என்றும் வரும். இவை, புலன் என்னும் வனப்பாதல் அறிக. 8. இழைபு : வல்லொற்று வாராமல் செய்யுளியல் உடை யாரால் எழுத்து எண்ணி வகுக்கப் பெற்ற குறளடி முதல் கழிநெடிலடி ஈறாகிய ஐந்தடியும் முறையே வருவது இழைபு எனப்பெறும். என்னை? ஓற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித் தோங்கிய மொழியால் ஆங்ஙனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும் -தொல். செய். 240. என்றார் ஆகலின். இதற்கு எடுத்துக்காட்டு, அடி கூறியாங்குக் காட்டிய பேர்ந்து சென்று என்னும் பாட்டாதல் அறிக. 8. வண்ணம் அழகு, குணம், சந்தம், சாதி, நிறம், முடுகியல், விதம் முதலிய பலபொருள் தரும் ஒரு சொல் வண்ணம் என்பது. இவண் சந்தம் என்னும் பொருள் குறித்து வந்தது. வண்ணம் இருபது என்பார் தொல்காப்பியனார். என்னை? வண்ணம் தானே நாலைந் தென்ப என்றும், அவைதாம், பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென் றாங்கவை என்ப அறிந்திசி னோரே -தொல். செய். 210-211 என்றும் கூறினார் ஆகலின். 1. பாஅ வண்ணம் : சொற்சீர் அடியால் நூலுள் பயின்று வருவது பாஅ வண்ணமாகும். என்னை? அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் -தொல். செய். 212. என்றார் ஆகலின். இதற்கு இந் நூற்பாவையே எடுத்துக் காட்டாகக் கொள்க. 2. தாஅ வண்ணம் : இடையிட்டுவந்த எதுகையதாகும் தாஅவண்ணம் என்பது, என்னை? தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும் -தொல். செய்.213. என்றார் ஆகலின். (நேரிசை ஆசிரியப்பா) தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழவா வாடா அவ்வரி புகைஇப் பசலையும் வைகல் தோறும் பையெனப் பெருக நீடார் இவணென நீண்மணங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே -யா. வி. 37, 95 மேற். -யா. கா. 41 மேற். -இலக். விளக், 757 மேற். இடையிட்டு எதுகை வந்த தறிக. உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை -ஐங்குறு. 143. என்பதும் அது. 3. வல்லிசை வண்ணம்: வல்லெழுத்து மிகுந்து வருவது வல்லிசை வண்ணம். என்னை? வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே -தொல். செய். 214. என்றார் ஆகலின். முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் -பட்டினப்பாலை 218. இது வல்லெழுத்து மிக்கு வந்தது. 4. மெல்லிசை வண்ணம் : மெல்லெழுத்து மிகுந்து வருவது மெல்லிசை வண்ணம். என்னை? மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே -தொல். செய். 215. என்றார் ஆகலின். பொன்னின் அன்ன புன்னை நுண் டாது. -யா. வி. 95 மேற். -இலக். விளக். 757 மேற். இது மெல்லெழுத்து மிக்கு வந்தது. 5. இயைபு வண்ணம் : இடையெழுத்து மிகுந்து வருவது இயைபு வண்ணம். என்னை? இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே -தொல். செய். 216. என்றார் ஆகலின். (குறள் வெண்பா) வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வார் அயலுழுவார் வாழ்வாருள் வாழா தவர் -யா. வி. 2, 15, 95 மேற். இஃது இடையெழுத்து மிக்கு வந்தது. 6. அளபெடை வண்ணம் : அளபெடை மிகுந்து வருவது அளபெடை வண்ணம். என்னை? அளபெடை வண்ணம் அளபெடை பயிலும் -தொல் செய். 217. என்றார் ஆகலின். மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் -அகம். 99. கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் -மலைபடு 352. இவை அளபெடை மிக்கு வந்தன. 7. நெடுஞ்சீர்வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். என்னை? நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் -தொல். செய் 218. என்றார் ஆகலின். (குறள் வெண்பா) யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு -திருக். 397. இது நெட்டெழுத்து மிக்கு வந்தது. 8. குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். என்னை? குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும் -தொல். செய். 219. என்றார் ஆகலின். குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி -அகம் 7. இது குற்றெழுத்து மிக்கு வந்தது. 9. சித்திரவண்ணம் : நெடிலும் குறிலும் ஒப்ப விரவி வருவது சித்திரவண்ணம். என்னை? சித்திர வண்ணம், நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே -தொல். செய். 220. என்றார் ஆகலின். ஓரூர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் -குறுந். 231. இது நெடிலும் குறிலும் நேர்ந்து வந்தது. 10. நலிபு வண்ணம் : ஆய்த எழுத்து மிகுந்து வருவது நலிபு வண்ணம் ஆகும். என்னை? நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும் -தொல். செய். 221. என்றார் அகலின். (குறள் வெண்பா) அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் -திருக்குறள் 178. இஃது ஆய்தம் மிகுந்து வந்தது. 11. அகப்பாட்டு வண்ணம் : முடியாதது போன்று முடிவது அகப்பாட்டு வண்ணம் ஆகும். என்னை? அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்த தன்மேற்றே -தொல். செய். 222. என்றார் ஆகலின். (நேரிசை வெண்பா) பன்மீன் உணங்கற் படுபுள் ஓப்பியும் புன்னை நுண்தாது நம்மொடு தொடுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி தோழி நீங்காமை சூளில் தேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்து புறமாறி இனைய னாகி ஈங்குனைத் துறந்தோன் பொய்தல் ஆயத்துப் பொலந்தொடி மகளிர் கோடுயர் வெண்மணல் ஏறி ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி -யா. வி. 95 மேற். -இலக். விளக். 757 மேற். இதில் முடித்துக் காட்டும் ஈற்றசை, ஏகாரத்தால் வாராது பிறவாறு வந்தமையால் அகப்பாட்டு வண்ணமாயிற்று. 12. புறப்பாட்டு வண்ணம் : முடிந்தது போன்று முடியாத தாக நிற்பது புறப்பாட்டு வண்ணம் ஆகும். என்னை? புறப்பாட்டு வண்ணம், முடிந்தது போன்று முடியா தாகும் -தொல். செய். 223. என்றார் ஆகலின். இன்னா வைகல் வாரா முன்னம் செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே -புறம். 363. இதன் ஈற்றயலடி முடிந்ததுபோல் முடியாதது ஆயிற்று. 13. ஒழுகு வண்ணம் : ஒழுகிய ஓசையால் செல்வது ஒழுகுவண்ணம் ஆகும். என்னை? ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும் -தொல். செய். 224. என்றார் ஆகலின். (நேரிசை வெண்பா) அம்ம வாழி தோழி ! காதலர் இன்முன் பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நலிய உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே செய்யவல்ல இன்னளி மறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே -யா. வி. 95 மேற். -இலக். விளக். 757 மேற். இஃது ஒழுகுவண்ணம். 14. ஒரூஉ வண்ணம் : சொல்லிய பொருள் பிறி தொன்றனை விரும்பி நிற்கா வண்ணம் அறுத்துச் சொல்வது ஒரூஉ வண்ணம் ஆகும். என்னை? ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் -தொல். செய், 225. என்றார் ஆகலின். ஒரூஉ வண்ணம் என்பது ஒன்றாத தொடையால்-அஃதாவது செந்தொடையால்-தொடுப்பது என்பாரும் உளர். முன்னதற்குப் பாட்டு : (நேரிசை ஆசிரியப்பா) யானே ஈண்டை யேனே ; என்னலனே யானோ நோயொடு கான லஃதே துறைவன் தம்மூ ரானே, மறையல ராகி மன்றத் தஃதே -குறுந்தொகை. 97. பின்னதற்குப் பாட்டு : (நேரிசை வெண்பா) தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய முள்ளிற் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா லிளமழை துவைப்ப மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே -தொல். செய். 219 இளம். மேற். -யா. வி. 95 மேற். 15. எண்ணு வண்ணம் : செவ்வெண், உம்மை எண் என எண், என்றா எண் முதலியவற்றாலும் பிறவும் யாதானுமோர் எண்ணினாலும் வருவது எண்ணுவண்ணம் ஆகும். என்னை? எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் - தொல். செய். 226. என்றார் ஆகலின். நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை -பதிற்றுப். 14. என்றும், (குறள் வெண்பா) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண் -திருக். 983. என்றும் எண்ணுப்பயின்று வருதலால் எண்ணு வண்ணம் ஆயிற்று. 16. அகைப்பு வண்ணம் : விட்டு விட்டுச் சேறல் அகைப்பு வண்ணம் ஆகும். என்னை? அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும் -தொல்.செல்.227 என்றார் ஆகலின். வாரா ராயினும் வரினும் அவர்நமக் கியாரா கியரோ தோழி -குறுந். 110. இஃதறுத் தறுத்துச் சேறலால் அகைப்பு வண்ணம் ஆயிற்று. 17. தூங்கல் வண்ணம் : வஞ்சியுரிச்சீர் பயின்று வருவது தூங்கல் வண்ணம் ஆகும். என்னை? தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும் -தொல். செய். 228. என்றார் ஆகலின். வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி -பட்டினப்பாலை. 1-6. இது வஞ்சி பயிலுதலால் தூங்கல் வண்ணம். 18. ஏந்தல் வண்ணம் : சொல்லிய சொல்லில் சிறந்து வருவது ஏந்தல் வண்ணமாகும். என்னை? ஏந்தல் வண்ணம், சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும் -தொல். செய். 229. என்றார் ஆகலின். ஏந்தலாவது மிகுதல்; சொல்லிய சொல்லே பல்கால் வருதல். (குறள் வெண்பா) சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் -திருக். 200. சொல் என்னும் சொல்லே பல் கால் வந்தமையால் இஃது ஏந்தல் வண்ணம். 19. உருட்டு வண்ணம் : அராகத் தொடையாக வருவது உருட்டு வண்ணம் ஆகும். என்னை? உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும் -தொல். செய். 230. என்றார் ஆகலின். தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில் -தொல். செய். 65 பேரா. மேற். இஃதராகம் தொடுத்தமையால் உருட்டுவண்ணம் ஆயிற்று. 20. முடுகு வண்ணம் : நாற்சீரடியின் மிக்கு அராக நடைய தாக வருவது முடுகு வண்ணம் ஆகும். என்னை? முடுகு வண்ணம் முடிவறி யாமல் அடியிறந் தொழுகி அதனோர் அற்றே -தொல். செய். 231. என்றார் ஆகலின். நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ -கலி. 39. அளவடியின் மிக்கு அராகமாக வந்ததால் முடுகுவண்ணம் ஆயிற்று. இனி வண்ணங்களை நூறு என எண்ணுவாரும் உளர். (யா. வி; யா. கா.) அவற்றையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுள் கண்டு கொள்க. இனி ஒழிந்தனவற்றையும் யாப்பருங்கல விருத்தி யுள்ளும், தொல்காப்பியத்துள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க. பொதுவியல் முற்றும். காக்கை பாடினியமும் அதற்குப் புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய சிற்றுரையும் முற்றும். பொருட்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அகப்பாட்டு வண்ணம் அகவல் இசையன அகவல் வெள்ளை கலிக்கு வரும் அடி அகவலுள் கலியடி மயங்கல் அகவலுள் வஞ்சியடி மயங்கல் அகவலுள் வெள்ளையடி மயங்கல் அகவற்பாவின் ஈறு அகைப்பு வண்ணம் அசை அசைக்குறுப்பு அசைகளின் பெயரும் தொகையும் அடி மயக்கம் அடிமறி மண்டில ஆசிரியப்பா அடிமறி மண்டிலப் பொருள் கோள் அடிமறி மொழிமாற்று அடிமொழி மாற்றுப் பொருள் கோள் அடிமோனை அடியளவு அடியின்வகை அடியெதுகை அடியே தனிச்சொல்லாக வருதல் அடுக்கியல் அந்தாதித் தொடை அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி அம்போதரங்கம் அம்மை அராகம் அழகு அளபெடை அளபெடைத் தொடை அளபெடை வகை அளபெடை வண்ணம் அளைமறி பாப்புப் பொருள் கோள் அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தவகை அனு ஆசிடை எதுகை ஆசிரிய உரிச்சீர் ஆசிரியச் சுரிதகம் ஆசிரியத் தளை ஆசிரியத் தாழிசை ஆசிரியத்துள் இயல் உரிச்சீர் வருதல் ஆசிரியத்துள் ஐஞ்சீரடி வருதல் ஆசிரியத்துள் நாலசைச்சீர் வருதல் ஆசிரியத்துறை ஆசிரியத்துறைக்கு ஒரு சிறப்பு விதி ஆசியப்பாவின் இனம் ஆசிரிய விருத்தம் ஆசிரிய வொத்தாழிசை ஆசு ஆய்தம் ஆய்தம் அலகுபொறாமை ஆய்தம் அலகு பெறுதல் ஆய்தம் தனிநிலை எனப் பெறுதல் இ என் குறுக்கம் இடையினம் இணைக்குறள் ஆசிரியப்பா இணைக்குறள் ஆசிரியப்பாவுள் ஐஞ்சீரடி வருதல் இணைக்குறள் ஆசிரியம்-நேரிசை ஆசிரியம் வேறுபாடு இணைத் தொடை இணை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் ஆசிரியத்துள் வாராமை இணை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் கலியுள் வாராமை இணையசை இணையசையீறாம் நாலசைச்சீர் இணை மோனை முதலியன இயற்சீர் இயற்சீர், உரிச்சீர் வருமிடம் இயற்சீர்க்கு ஒரு சிறப்புவிதி இயற்சீர்ப் பெயர்க்காரணம் இயற்சீர் வெண்டளை இயைபு இயைபுத் தொடை இயைபுத் தொடையின் வகை இயைபு வண்ணம் இரட்டைத் தொடை இழைபு இன்னிசை வெண்பா இன்னிசை வெண்பா வகை இனத்துள் இயலுரிச்சீர் வருதல் ஈரொற்றுடனிலை உ என் குறுக்கம் உடன்பாட்டுவிதி உயிர் உயிர்மெய் உயிரளபெடை வகை உயிரளபெடை அலகுபெறாமை உயிரளபெடை அலகுபெறுதல் உயிரளபெடைக்குச் சிறப்புவிதி உருட்டுவண்ணம் உறுப்பு உறுப்பு அறிதலின் பயன் எண்சீரின் மிக்கு வரும் கழிநெடிலடி எண்ணுவண்ணம் எதிர்நிரல்நிறை எதிர்மறைவிதி எதுகைக்கு எடுத்துக்காட்டு எதுகைக்குச் சிறப்புவிதி எழுத்தால் தொடையாவன எழுத்துக்களால் அடிகொள்ளுமாறு எழுத்து முதலாக யாப்புறுப்புறுத்துக் கூறுதல் எழுத்து முதலியன காரணப் பொருட்டு ஏகபாத அந்தாதி ஏந்தல் வண்ணம் ஏந்திசைச் செப்பல் ஏந்திசைத் துள்ளல் ஏந்திசைத் தூங்கல் ஏந்திசை யகவல் ஐ என் குறுக்கம் ஐ காரத்திற்குச் சிறப்புவிதி ஐகாரத்தைச் சொல்லிய காரணம் ஐகாரம் அலகூட்டப் பெறுமுறை ஐகாரம் நெடிலாக நிற்குமிடம் ஐஞ்சீரடியால் கலிவிருத்தம் வருதல் ஐயம் அகற்றுதல் ஒத்தாழிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஒருவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா ஒருவிகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா ஒரூஉத் தொடை ஒரூஉத் தொடை பெற்ற இன்னிசை ஒரூஉ மோனை முதலியன ஒழுகிசை அகவல் ஒழுகிசைச் செப்பல் ஒழுகுவண்ணம் ஒற்றளபெடை ஒற்றளபெடையும் ஈரொற்றுடனிலையும் ஒற்று அலகுபெறாமை ஒற்ற அலகுபெறுதல் ஓரசைப் பொதுச்சீர் ஔகாரக் குறுக்கம் ஔகாரம் வருமிடம் கட்டளைக் கலித்துறை கடையிணை முரண் கண்ணி கதுவாய் கலித்தளை கலித்தாழிசை கலித்தாழிசையுள் இயலுரிச்சீர்கள் மயங்குதல் கலித்துறை கலிப்பா கலிப்பாவிற்குரிய சீர் கலிப்பாவின் இனம் கலிப்பாவின் வகை கலியின் அடிச்சிறுமை கலியுள் ஐஞ்சீரடி வருதல் கலியுள் நேரீற்றியற்சீர் வாராமை கலியுள் வெண்பா உரிச்சீர் கலியுள் வெள்ளையடி மயங்கல் கலியொத்தாழிசை கலிவிருத்தம் கலிவெண்பா கழிநெடிலடி கீழ்க்கதுவாய் மோனை முதலியன குற்றயலிகர முன்வைப்பு குற்றியலுகரம் அலகுபெறாமை குற்றியலுகரம் அலகுபெறுதல் குறட்டாழிசை குறட்டாழிசை வகை குறள் விருத்தமின்மை குறள் வெண்செந்துறை குறள் வெண்பா குறள் வெண்பா இனம் குறளடி வஞ்சிப்பா குறிப்பிசை குறில் குறிலுக்கும் குறுக்கத்திற்கும் வேறுபாடு கூழைமோனை முதலியன கூன் கொச்சகக் கலிப்பா கொச்சகத்துள் வெண்பா உரிச்சீர் கொச்சகம் கொண்டு கூட்டுப் பொருள் கோள் சந்தழி குறள் சமனிலை மருட்பா சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா சித்திர வண்ணம் சிந்தடி வஞ்சிப்பா சிந்தியல் வெண்பா சிந்தியல் வெண்பா வகை சுண்ண மொழிமாற்று சுரிதகத் தரவிணைக் கொச்சகம் சுரிதகம் சுருக்கடி சுழியம் செந்துறைச் சிதைவுக் குறட்டாழிசை செந்துறை வெள்ளை செந்தொடை செந்நடைச் சீரந்தாதி செய்யுளில் அடிவகை பலவரின் வழங்குமுறை செய்யுளில் தளைவகை பலவரின் வழங்குமுறை செய்யுளில் தொடைவகை பலவரின் வழங்குமுறை செவியறிவுறூஉ சொல்லால் தொடையாதல் சொற்சீரடி தரவிணைக் கொச்சகம் தரவிரட்டி வருதல் தரவின்றி வந்த தாழிசை தரவு தரவு கொச்சகம் தனி இணையசைகள் தனிக்குறில் தனியசை நிற்கு மிடம் தனிச்சொல் தனிச்சொல் இன்றி வந்த பல விகற்ப இன்னிசை தனிநடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருமிடம் தனிநிலை தனியசை தனியசை நான்கு தனியசை யீறாகிய நாலசைச்சீர் தா அவண்ணம் தாப்பிசைப் பொருள் கோள் தாழிசை தாழிசை இன்றித் தரவு வருதல் துள்ளல் துள்ளல் வகை தூங்கல் வண்ணம் தூங்கிசை அகவல் தூங்கிசைச் செப்பல் தொடை தொடை- காரணக்குறி தொடை வகை - விரி தொன்மை நலிபு வண்ணம் நாலசைச்சீர் பதினாறு நாலசைச்சீர் வருமிடம் நாலசைச் சீரும் ஓரசைச்சீரும் நாலசைப் பொதுச்சீர்க்குத் தளை கொள்ளுமாறு நான்கடி வெளி விருத்தம் நிரல்நிறைப் பொருள்கோள் நிலைமண்டில ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு நீட்ட அளவு நெடில் நெடுஞ்சீர் வண்ணம் நெடுவெண்பாட்டு நேரிசை ஆசிரியப்பா நேரிசை, இணைபொழிப்பு கூழைத் தொடைபெறாமை நேரிசை இன்னிசை முறை வைப்பு நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா நேரிசைச் சிந்தியல் நேரிசை - நிலைமண்டில வேறுபாடு நேரிசை வெண்பா நேரிசை வெண்பா வகை பஃறாழிசை கொச்சகம் பஃறொடை வெண்பா பஃறொடை வெண்பா அடித்தொகை பலவிகற்பப் பஃறொடை பாஅவண்ணம் பாக்களின் அடிச்சிறுமை பாக்களின் அடிப் பெருமை பாவின் இலக்கணம் பாவினங்களின் அடிவகை புலன் புறநடை புறநிலை வாழ்த்து புறப்பாட்டு வண்ணம் புனல்யாற்றுப் பொருள்கோள் பூட்டுவிற் பொருள்கோள் பெயர் நிரல் நிறை பொதுச்சீர் பொதுச்சீர் - காரணக்குறி பொருள்கோள் பொருளால் தொடையாவன பொழிப்பு மோனை முதலியன மகர ஒற்று ஈறாகிய நிலை மண்டிலம் மகரக் குறுக்கம் அலகுபெறு முறை மண்டல அந்தாதி மண்டிலம் காரணக்குறி மயக்க நிரல்நிறை மயங்க வைத்தல் மயங்கிசைக் கொச்சகம் மருட்பா மருட்பாவிற்கு இனமில்லாமை மாலை மாற்று மாலை முடுகியல் முடுகு வண்ணம் முரண் தொடை முரண் தொடை வகை முற்றுமோனை முதலியன முறை நிரல்நிறை மூன்றடி வெளிவிருத்தம் மூன்றாமடி தனிச் சொல் பெற்ற இன்னிசை மெல்லிசை வண்ணம் மெல்லினம் மேற்கதுவாய் மோனை முதலியன மோனை வகை யாப்பின் உறுப்பு வகையுளி வஞ்சிச்சிறுமை வஞ்சித் தளைகள் வஞ்சித் தாழிசை வஞ்சிப்பா இனம் வஞ்சிப்பா வகை வஞ்சிப்பாவின் அடிவகை வஞ்சிப்பா வெண்பா உரிச் சீரான் வருதல் வஞ்சியுருச்சீர் வஞ்சியுள் அசைச்சீர் சீர்நிலை பெறுதல் வஞ்சியுள் அகவலடி மயங்கல் வஞ்சியுள் இயல் உரிச்சீர் மயங்கல் வஞ்சியுள் கலியடி மயங்கல் வஞ்சியுள் நாலசைச்சீர் கண்ணுற்று நிற்றல் வஞ்சியுள் நாலசைச்சீர் வருதல் வஞ்சியுள் நேரீற்றியற்சீர் வாராமை வஞ்சியுள் வெள்ளையடி மயங்கல் வஞ்சி விருத்தம் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா வண்ணகம் வண்ணம் வல்லிசை வண்ணம் வல்லினம் வனப்பு வாயுறை வாழ்த்து விகாரம் விட்டிசை வியனிலை மருட்பா விருத்தம் தாழிசை துறை விருந்து விளங்க வைத்தல் வினைநிரல் நிறை வெண்கலி வெண்சீர் வெண்டளை வெண் சுரிதகம் வெண்டாழிசை வெண்டாழிசை வெள்ளொத் தாழிசை வேறுபாடு வெண்டுறை வெண்டுறை அடிவகை வெண்பா வெண்பா அகவல் கலி அடிவகை வெண்பா உரிச்சீர் வெண்பாவின் இனம் வெண்பாவின் ஈற்றடி வெண்பாவின் ஈறு வெண்பாவுள் இயல் உரிச்சீர்கள் மயங்கல் வெண்பாவுள் இயற்சீரே வருதல் வெண்பாவுள் உரிச்சீரே வருதல் வெண்பாவுள் ஐஞ்சீரடி வருதல் வெள்ளை விருத்தம் வெள்ளை - வெண்பா வெள்ளொத் தாழிசை வெளி விருத்தம் வெளி விருத்தம் அடியளவு இலக்கண மேற்கோள் நூற்பா அகரவரிசை (எண் : பக்க எண்) அ ஆ ஐ ஔ அ இ உ எஒ இவை அ இ உ எஒ என்னும் அஃகேனம் ஆய்தம் அகப்பாட்டு வண்ணம் அகவல் இசையன அகவல் என்ப அகைப்பு வண்ணம் அசைச் சீர்த்தாகும் அசையும் சீரும் அடிமுதற் பொருள்பெற அடிமுழு தொருசீர் அடிமூன் றாகி அடியடி தோறும் அடியினிற் பொருளை அடியெனைத் தாகியும் அடியொரு மூன்று அந்த அடிமிக் அந்நாற் சொல்லும் அளபெடை தலைப்பெய அளபெடை வண்ணம் அளவடி நான்கின அளவடி முதலா அவற்றுள் அ, இ அவற்றுள், பாஅவண்ணம் அவற்றொடு முடுகியல் அவைதாம், பாஅவண்ணம் ஆ ஈ ஊ ஏ ஐ ஆசிரியப்பாவின் ஆசிரியப்பாவின்... அளவிற் ஆசிரியப்பாவின்... சிறுமை ஆசிரியம் வெண்பா ஆய்ந்த உறுப்பின் ஆயிரம் இறுதி ஆறடி முக்கால் இடை இடைசீர்தபின் இடையும் கடையும் இணைக்குறள் இடைபல இணைநடு வியலா இயற்சீர் எல்லாம் இயற்சீர் ஒன்றா இயற்சீர் வெண்டளை இயைபு வண்ணம் இரண்டடி சிறுமை இரண்டாம் அடியின் இருசீர் நாலடி இருசீர் மிசையிணை இருவகை மருங்கினும் இறுவாய் ஒப்பின் ஈரசை ஆகிய ஈரசை இயற்சீர் ஈரசை கூடிய ஈரசைச் சீர்முன் ஈரடி இரண்டும் ஈரடி குறள் ஈரடி வெண்பா ஈரெழுத் தொருமொழி ஈற்றயற் சீரொழித் ஈறும் இடையும் உம்மை தொக்க உயிரளபெ டையும் உயிரீராறே உயிரே மெய்யே உருட்டு வண்ணம் எஞ்சா இருசீர் எண்ணு வண்ணம் எழுதப்படுதலின் ஏந்தல் வண்ணம் ஏந்திசைச் செப்பலும் ஏந்திசைத் துள்ளல் ஏழடி இறுதி ஏழெழுத் தென்ப ஐ ஔ வென்னும் ஐஞ்சீர் அடுக்கலும் ஐஞ்சீர் நான்கடி ஐந்தா றடியின் ஐயிரு நூறடி ஒத்த அடித்தாய் ஒத்த அடியின ஒத்த அடியினும் ஒத்தாழிசைக்கலி... கொச் ஒத்தாழிசைக்கலி... முத் ஒருசீர் அடிமுழுதும் ஒருபொருள் நுதலிய ஒரு விகற்பாகி ஒருஉ வண்ணம் ஒழுகிய ஓசையின் ஒழுகு வண்ணம் ஒற்றொடு புணர்ந்த ஒன்றறி கிளவி ஒன்றிய தொடையொடும் ஒன்றும் பலவும் ஓரசைச் சீரும் ஓரசைப் பொதுச்சீர் ஓளகார இறுவாய் கடையதன் அயலடி கடையிணை பின்முரண் கடையும் இடையும் கலியொடு வெண்பா கழிநெடி லடியே காட்சி முதலா குற்றிய லிகரம் குறளடி சிந்தடி குறளடி நான்மையிற் குறிப்பே ஏவல் குறிய நெடிய குறிலிணை குறினெடில் குறுஞ்சீர் வண்ணம் குறுமை எழுத்தின் குறுவெண் பாட்டின் குன்றிசை மொழி கூறியது கூறல் கொண்ட அடிமுதலா ஙஞண நமன சித்திர வண்ணம் சிந்தடி குறளடி சிந்தடி நான்காய் சிந்துங் குறளும் சீர் தொறும் சீர் முழுதொன்றின் சீரிரண் டிடைவிட செப்பல் இசையன செய்யுண் மொழி செவியுறை தானே சொல்லிய தொடையொடும் தந்துமுன் நிற்றலின் தரவின்றாகி தரவொன்று தாழிசை தலை தடுமாற்றம் தளைசீர் வண்ணம் தன் தளை ஓசை தன்தளை பிறதளை தனிநிலை அளபெடை தனிநிலை ஒற்றிவை தனிநிலை முதனிலை தனியே அடிமுதற் தாஅ வண்ணம் தானே அடிமுதற் தூங்கல் இசையன தூங்கல் வண்ணம் தெரிந்த மொழியாற் தேமா புளிமா தொடைபல தொடுப்பினும் தொல்காப்பியப் புலவோர் தொன்மை தானே நடுவு நேரியல் நலிபு வண்ணம் நாலசைச்சீர் நாலெழுத்தாதி நாலோர் அடியாய் நாற்சீர் கொண்டது நாற்சீர் நாலடி நான்கடி யானும் நிரல் நிறை சுண்ணம் நிரல் நிறை முதலிய நிலை நடு வியலா நிரையீ றில்லா நெடில் குறில் நெடிலடி நான்காய் நெடிலே குறிலிணை நெடிலொடு நெடிலும் நெடுவெண் பாட்டே நேர்நடு வியலா நேர்நேர் இயற்றளை நேரசை என்றா நேரிற நேர்வரின் பண்ணும் திறமும் பண்பார் புறநிலை பத்தெழுத் தென்ப பல்வகைத்தொடை பாதம் பலவரின் பாவினம் எல்லா புறப்பாட்டு வண்ணம் மனப்படு அடிமுதல் மிக்கும் குறைந்தும் முச்சீரானும் முடுகு வண்ணம் முதலயற் சீரொழித் முதலெழுத் தளவொத் முதலெழுத் தொன்றும் முதலொடு மூன்றாம் முந்திய தாழிசை முழுவதும் ஒன்றின் மூவசைச் சீர் மூவடிச் சிறுமை மூவா றெழுத்தும் மூவைந் தெழுத்தும் மூவொரு சீரும் மூன்றடி ஒத்த மூன்றடி முதலா மெய்யுடம் புறுப்பொற் மெல்லிசை வண்ணம் மோனை எதுகை யகரம் வருவழி யாற்றுநீர் மொழி வஞ்சி அடியே வஞ்சி ஆசிரியம் வல்லிசை வண்ணம் வழிபடு தெய்வம் வனப்பியல் தானே வாயுறை வாழ்த்தே விகற்பொன் றாகி விதப்புக் கிளவி விரவியும் அருகியும் விருந்தே தானும் வெண்சீர் இறுதி வெண்சீர் இறுதியின் வெண்சீர் ஒன்றலும் வெண்சீர் வெண்டளை வெண்டளை தன்தளை வெண்பா ஆசிரியம் வெண்பாட் டீற்றடி வெள்யுள் பிறதளை னகர இறுவாய் இலக்கிய மேற்கோள் அகரவரிசை (எண் : பக்க எண்) அ அவனும் அஃகாமை செல்வத்திற் அகரமுதல அகழ்வாரைத் தாங்கும் அங்கட் கமலத் அங்கண் வானத் அங்கண் விசும்பின் அடலே றமரும் அடிதாங்கும் அடுபோர்ச் செழிய அடும் பவிழ் அணிமலர் அடும்பின் நெடுங்கொடி அண்டர் நாயகன் அணிகிளர் சிறுபொறி அணிநிழல சோகமர்ந் அணியிழை அமைத்தோள் அத்துண் ஆடை அந்தண் சாந்தம் அந்தரத் துள்ளே அந்திப் பொழுது அம்ம வாழி அரிதாய அறனெய்தி அரிதென்று பெயராமே அரிய வரைகீண்டு அரும்பொருள் வேட்கை அருவி அரற்றும் அலைப்பான் பிறிதுயிரை அவரே, கேடில் அவனுந்தான், ஏனல் அள்ளற் பள்ளத் அளவளா வறிகிலான் அளிதோ தானே அற்றார் அழிபசி அற்றால் அளவறிந் அறிந்தானை ஏத்தி அன்பீனும் ஆர்வ அன்புநாண் ஒப்புரவு அன்னாய் அறங்கொல் அன்னையும் என்னையும் அன்னையை யான் ஆஅ அளிய ஆஅ இதுவென் ஆஅம் பூஉ ஆடுகழை கிழிக்கும் ஆய்தினை காத்தும் ஆர்கலி யுலகத்து ஆர்த்த அறிவினர் ஆரா இயற்கை ஆரிடை என்னாய் ஆரிய மன்னர் ஆவா வென்றே ஆவே றுருவின ஆனாப் பெருமை இடங்கை வெஞ்சிலை இடுக்கண் வந்துற்ற இடும்பைக் கிடும்பை இடைநுடங்க இம்மை பயக்குமால் இரங்கு குயில்முழவா இருங்கண் விசும்பின் இருதுவேற்றுமை இருநில மூவடி இரும்பிடியை இருமை வகை இருள்சேர் இருவினை இருளிடை என்னாய் இறைவாழி இன்பம் விழையான் இன்மையுள் இன்மை இன்றுகொல் இன்னகைத் துவர்வாய் இன்னாசெய் தார்க்கும் இன்னா செயினும் இன்னா வைகல் இனிய உளவாக ஈத்துவக்கு மின்பம் ஈதலில் குறை உடுப்பதூஉம் உடையார் முன் உண்ணாமை உள்ள உண்ணான் ஒளி உதிரந் துவரிய உதுக்காண் உரன்ன் அமைந்த உராஅய தேவர்க் உரிமையின்கண் உலகமூன்றும் உலகினுள், பெருந் உலகுடன் விளக்கும் உலகே, முற்கொடுத்தார் உலாஅ உலாஅ உள்ளடி உள்ளன உள்ளத்தால் பொய்யா உள்ளத்தில் உண்மை உள்ளார் கொல்லோ உறாஅர்க் குறுநோய் ஊஉழி பேரினும் ஊடல் உணர்தல் ஊடி இருந்தேமா ஊர்க்கால் நிவந்த எஃகிலங்கிய எல்லார்க்கு நன்றாம் எல்லாரும் எந்தமக்கே எல்லா விளக்கும் எறித்தரு கதிர்தாங்கி என்னென்று பெயராமே ஏஎடி ஈதென் ஏடி அறங்கொல் ஐயப்படாஅ ஒக்குமே ஒக்கமே ஒடுங்கீ ரோதி ஒருநாள் எழுநாள் ஒருமையுடன் நினது ஒழுக்கத்து நீத்தார் ஒறுத்தார்க்கொரு ஒன்றா உலகத் ஒன்றே சிறியிலை ஓஒ இனிதே ஓங்குமலைத் தொடுத்த ஓடையே ஓடையே ஓம்பினேன் கூட்டை ஓரூர் வாழினும் கக்கா குக்கூ கடாஅக் களிற்றின் கடித்துக் கரும்பினை கடிமலர் புரையும் கண்டலங்கோதை கண்ண் கருவிளை கண்ண் டண்ண்ணெனக் கண்ணியோர் கண்ணி கண்ணின் செல்வம் கண்ணுதலான் காப்ப கண்ணும் புருவமும் கணங்கொள் வண்டினம் கணிகொண் டளர்ந்த கணைக்கால் நெய்தல் கயலேர் உண்கண் கரிய வெளிய கருங்கால் வெண் கருந்தாது கொல்லும் கரைபொருகான் கரையாடக் கெண்டை கல்லாதார் நல்லவையுள் கல்லானே ஆயினும் கல்லிவர் முல்லை கல்வி கரையில களிறணைப்பக் கற்றதனால் ஆய கற்றீண்டு மெய்ப் கன்று குணிலாக் கனக மார்க காஅரி கொண்டார் காதுசேர் தாழ் காமர் கடும்புனல் காய்ந்து விண்டார் காய்மாண்ட காலை ஞாயிறு காவா தொருவன் காவியங் கருங்கண் கானங் களாவன கிடக்குங்கால் குக்குக் குகு குடநிலைத் தண் குரங்குளைப் பொலிந்த குராஅம் விராஅம் குவளை உண்கண் குழலிசைய குழலினி தியாழினி குன்றக் குறவன் குன்றேறி கூஉம் புடைக்கலம் கைவிரித்தன கெட்டார்க்கும் கெடலருமா முனிவர் கெடுப்பதூஉம் கெண்டையை வென்ற கொங்கு கங்கு கொங்கைக்கும் கொடிகுவளை கொடிவாலன கொய்தினை காத்தும் கொல்லையஞ் சாரல் கொன்றாற்றும் கொன்றைவேய்ந்த கோடல்விண்டு கோழியுங்கூவின கோழியெறிந்த கோண்மாக் கொட்கும் சாதலும் பிறத்தல் சாந்துமெழுகி சாரல் ஓங்கிய சாருண் ஆடை சிந்தாமணிதெண் சிற்றூரும் சிற்றியாறு பாய்ந் சிறியகட் பெறினே சிறுகட் பன்றி சிறுகுடியீரே சுடச்சுடரும் சுடர்த் தொடீஇ சுற்றத்தார் சுற்றுநீர் சூழ் சுறாஅக் கொட்கும் சூரல் பம்பிய செங்கண் மேதி செந்தீயன்ன செந்தொடைப் பகழி செப்ப முடையவன் செம்பொன் வேய்ந்த செய்திரங் காவினை செயற்கரிய செல்வப்போர்க் செவ்விய தீவிய சென்று கோடு சென்று செவி சேற்றுக்கால் சேற்றுநிலை சொல்லல் சொல்லல் சொல்ல லோம்புமின் சொல்லுக சொல்லில் சோலையார்ந்த தக்கார் தகவிலர் தக்காரும் தக்கவர் தடமண்டு தாமரை தண்ணந் தூநீர் தண்ணறும் தண்ணென் கடுக்கை தண்மதியேர் தமிழ்மொழி தனி தவலருந் தொல் தாஅமோ வாஅரார் தாதுறு முறிசெறி தாமரை புரையும் தாயெழிற் றமிழை தாழ்பொழில் தட தாளாண்மை இல் தாளாளர் அல் திடுதிம்மென திருநுதல்வேர் திருவளர் தாமரை திரைத்த சாலிகை திரைந்து திரைந்து திறந்திடுமின் தீமேய்திறல் தீர்த்தம் என்பது துப்பார்க்குத் துவருண் ஆடை துளியொடு மயங்கிய துறந்தார்க்கும் துன்பினைக் கண்டு தூஉஉத் தீம்புகை தூவி அன்ன தெருளாதான் தெளிவளர் வான்சிலை தென்னன் தமிழின் தேந்தாட்டீங் தேம்பழுத்தினிய தேர்மிசை வருவாரும் தொடி நெகிழ்ந்தனவே தொடியுடைய தொல்லுகம் தொன்னலத்தின் தோடார் எல்வளை நங்கடம்பனை நண்ணுவார் வினை நண்பிதென்று நத்தம்போல நலங்கிளர் நற்கொற்ற வாயில் நன்றியாங்கள் நாடாது நட்டலில் நிலத்தினும் நிலம் நீர்வளி நிற்பவே நிற்பவே நிறைமொழி மாந்தர் நிறையுடைமை நின்றழல் செந்தீ நின்றன நின்று நின்று நின்றுளம் நினைப்பவர் போன்றுளம் நீடுவாழ்க நீர்த்தாழ்ந்த நீரின் தண்மையும் நீல நிறத்தன நீலமேனி நீறணிந்த திருமேனி நெடுந்தோட்குறு நெடுவரைச் நெறியறி செறிகுறி நேர்த்து நிகரல்லார் நோக்குங்கால் நோயெல்லாம் பகலே பல்பூங் படைமாண் அரசைப் பண்கொண்ட பண்ட மறியார் பதிகளின் அதிபதி பரியல் யாவதும் பரூஉத் தடக்கை பல்கால் வந்து பல்யானை மன்னர் பல்லுக்குத் தோற்ற பல்லே முத்தம் பல்வளையார் கூடி பலமுறையும் ஓம்பப் பலிகொண்டு பவழமும் பொன்னும் பற்றிப் பலகாலும் பற்றுக பற்றற்றான் பன்மாடக்கூடல் பன்மீன் உணங்கல் பனிமயிர் குளிர்ப்பன பாஅலும் தேஎனும் பாடகஞ்சேர் பாம்பு கயிறா பாவாய் அறங்கொல் பானலொடு கமழும் பானலொடு தேன் பானல்வாய்த்தேன் பிண்டியின் நீழல் பிணியென்று பிரிந்துறை வாழ்க்கை புயல்வீற்றிருந்த புலப்பேன் கொல் புலமிக்கவரைப் புலவர் சொல்வழி புறந்தூய்மை நீரான் புனற்படப்பை பூண்டபறை பூத்தலை வாரணம் பூத்த வேங்கை பூந்தண் சினை பூந்தாமரைப் பெண்மையாற் பெருங்கடற் பெருங்கண்கயலே பெருநூல் பிறபல பெருமலைக் குறுமகள் பெருமை பெருமித பெறுமவற்றுள் பேடையை இரும் பேர்ந்து சென்று பையுண்மாலை பொய்மையும் பொறையொருங்கு பொன்செய் மன்றில் பொன் புரிந்த பொன்னார மார்பிற் பொன்னின் அன்ன போதவிழ் குறிஞ்சி போதார் நறும் போது சாந்தம் மகன் தந்தைக் மடப்பிடியை மடியிலான் மணிகிளர்நெடு மராஅ மலரொடு மருந்தோமற் மருவுக மாசற்றார் மலர்மிசை மலிதேரான் மழையின்றி மறந்திருந்தார் மறவற்க மன்றலங் கொன்றை மாக்கொடி மாணை மாசில் வீணையும் மாமலர் முண்டகம் மாலைமணங் மாவும் புள்ளும் மாறாக் காதலர் மிக்க மாதவம் மீன்தேர்ந் தருந்திய முட்டாச் சிறப்பின் முத்தொடு மணி முருகவிழ் தாமரை முல்லைவாய் முந்நீர் ஈன்ற முழங்கு களியானை முழங்குதிரை முழங்கு முந்நீர் முறிமேனி முத்தம் முன்புல கீன்ற முன்னைப் பிறவி மூவடிவினால் மென்றினை காத்தும் மைசிறந்தன யாதானும் நாடாமால் யானும் தோழியும் யானே ஈண்டை வசையில் புகழ் வசையொழிய வடிவுடை நெடு வண்டார்பூங் வண்டுளர்பூந் வண்ண்டு வாழும் வந்துநீ சேரின் வயலாமைப் வயலுழுவார் வரிகொள் அரவும் வருகமன் வழா அ நெஞ்சில் வழிபடுவோரை வளம்பட வேண் வாணெடுங்கண் வாய்மையெனப் வார்பணிய வாரா ராயினும் வாருறு வணர் வாழைக் கழகு வாள்போற் பகைவரை வாள்வரி வேங்கை வாள் வலந்தர வாளார்ந்த வானகத் திளம்பிறை வானுற நிமிர்ந்தனை வானே நிலனே வானோங்கு சிமையத்து விடாஅ விடாஅ விண்ணின்று வித்தகர் செய்த விரிந்தும் சுருங்கியும் விருந்து புறத்ததா விலங்கொடு மக்கள் விளங்குமணிப் வீழ்நாள் படாஅமை வீழுநர்க் கிறைச்சி வெள்ளாங் குருகின் வெளியவும் வெற்பிடை வெறிகமழ் தண் வெறியுறுகமழ் வேண்டுதல் வேண் வேப்பு நனை வேரல்வேலி வேயேதிரள் வேற்றுமை இன்றி வையினும் வாழ்த்தினும் சிறப்புப் பெயர் அகரவரிசை (எண் : பக்க எண்) அகப்பாட்டு அச்சுதன் அசோகமர் வரதன் அணியியலுடையார் அந்தணர் அம்பலம் அம்மையப்பர் அமிதசாகரனார் அயிந்தன் அரங்கன் அரிமா அருட்பெருஞ்சோதி அகவல் அருணகிரியார் அவிநயனார் அன்னாய்க்குரைத்த பத்து அனகநாடன் ஆடகத் திருமன்றம் ஆண்பெண் உரு ஆதி ஆதிநாதன் ஆதி நூல் ஆரிய மன்னர் ஆலஞ்சேரி ஆனேற்றான் இந்திரர் இந் நூலுடையார் இரதி இராசராச சோழனுலா இராமாயணம் இறைவன் உமைபாகன் உலகீன்ற கன்னி உலா உறந்தையர்கோன் ஊசிமுறி ஏமாங்கதம் ஐங்குறுநூறு ஒருசார் ஆசிரியர் ஔவையார் கங்கை கச்சி கச்சியகம் கடம்பன் கண்ணுதலான் கண்ணுதற் கடவுள் கதக்கண்ணன் கந்தகோட்டம் கந்தவேள் கம்பநாடர் கரியவன் கருநீலக்கண்ணி கருவை கழுமலம் கன்னித்துறை கனகமன்று காக்கைபாடினியார் காதி காப்பியாற்றுக் காப்பியனார் காரி காவிரிநாடன் கிள்ளி கிளவியாக்கம் குகன் குணசாகரர் கூடல் கூடலார் கோமான் கூத்தன் கூந்தற்பிடி கொல்லிமலை கொற்கைக் கோமான் கொற்கை வேந்தன் கொன்றை வேந்தன் கோசலை கோழிப்புனல் நாடன் கோழியார் கோமான் சங்கயாப்புடையார் சண்முகத் தெய்வமணி சிதம்பரச் செய்யுட் கோவை சிந்தாமணி சிலப்பதிகாரம் சிவகங்கை சிவபுராணம் சிறு காக்கைபாடினியார் சிறு நூல்கள் சுந்தரி சுரநதி சுவணமாப்பூதன் செங்கண்மால் செம்பூட்சேய் செம்பொன் மன்றம் செழியன் சென்னியர் சென்னை சேட்சென்னி சேதிகம் சேவலங்கொடியோன் சேனாவரையம் சோ தகடூர் யாத்திரை தசமுக நிசிசரன் தமிழ் தமிழ் மதுரை தமிழ் மறை தமிழ் மொழி தமிழர் தமிழர் பெருமான் தலையாலங்கானம் தாரை திருமகள் பதி திருமருமார்பன் தில்லையம்பலம் தில்லையான் தில்லையொருவன் தில்லைவனம் தென்கடம்பை தென்னவன் தென்னன் தென்னன் தமிழ் தேவர் தொண்டைநாடு தொல்காப்பியனார்-தொல் தொல்காப்பியம் தோழிக்குரைத்த பத்து நக்கீரனார் அடி நூல் நச்சினார்க் கினியர் நரமடங்கல் நற்றத்தனார் நன்னன் நாகீர் நாய்கன் நான்காம்பத்து நீண்ட சடையான் நீலமேனி வாலிழை பாகன் நீனிற வண்ணன் நூற்றைம்பது கலி நெஞ்சறிவுறுத்தல் நெடுமாலை நெய்தலங்கானல் நெடியோன் பட்டினப்பாலை பரதவர் பட்டினம் பரிமாணனார் பல்காயனார் பழைசை பாப்பாவினம் பாரதவெண்பா பார் பாரி பறம்பு பிண்டி பிண்டியின் நீழற்பெருமான் பிறரும் புத்தூர் புரந்தரன் புராண சாகரம் புலியூர் புறப்பாடல் பூழியர்கோன் பெருங்கதை பெருந்தேவனார் பெருவல்லம் பேராசிரியர் பொதுமக்கள் பொன்மன்று பொன்னெயில் போற்றித்திரு அகவல் மகபதி மணிமேகலை மணிவாசகர் மதன் மதுரை மயேச்சுரர் மலர்மகள் மலரவன் மலரிவருங் கூத்தன் மலைமகள் மறலி மாயவன் மாயவன் தம்முன் மால் மாறன் மாறனொரு நூல் முக்கட்களிறு முரண்டராசன் முருகவேள் முள்ளூர் மூவர் மூவருலா யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலவிருத்தி யோகி வரதன் வழி நூல் வழி நூல் செய்தார் வழுதி வள்ளலார் வளையாபதி விண்ணன் விண்ணப்பக் கலிவெண்பா வேனிலான்* * * 1. வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காமென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் புலமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் பன்னிருபடலம் (தொல்.மரபு,.94 பேரா.) மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன் - புறப்பொருள் வெண்பாமாலை பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய இமையோர் வேண்டலில் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகடல் அடக்கி மலையத் திருந்த இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவன் ஆகிய தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் - நம்பியகப் பொருள் 1. தொல்காப்பியரோடு ஒருசாலை மாணாக்கராகிய காக்கை பாடினியாரும் (தளையை) உறுப்பென்னார்; பின்றோன்றிய காக்கை பாடினியார் முதலியோர் கொள்வர். - தொல். செய்.1.நச். இவர்க்கு இளையரான காக்கை பாடினியார் தளை கொண்டிலரென்பது இதனால் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்து ஓராசிரியர் என்பது - தொல். செய்.1 பேரா. 1. தரவின் றாகித் தாழிசை பெற்றும் எனவருவம் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவிற்குப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் உரைத்த உரை காண்க. அன்றியும், இத் தொடர்நிலைச் செய்யுளை (சீவகசிந்தாமணியை) இனமென்ப. அந் நூல்கள் இனமென்று காட்டிய உதாரணங்கள் தாம் அவர் சேர்ந்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை ஏற்றமையானும் மூவா முதலா என்னும் கவி முதலியன தாழம்பட்ட ஓசையான் விருத்தமாயும் சீர்வரையறையானும் மிகத்துள்ளிய ஓசையானும் துறையாயும் கிடத்தலின் இதனை விருத்தக்கலித்துறை எனல் வேண்டும்; அது கூறவே துறையும் விருத்தமுமெனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாம் ஆகலானும் இனமென்றல் பொருத்தமின்று. இச் செய்யுட்களின் ஓசை வேற்றுமையும் மிக்கும் குறைந்தும் வருவனவும் கலிக்கே ஏற்றலிற் கொச்சகம் என்றடங்கின என்னும் உரைப்பகுதியும் காண்க. (சீவகசிந்தாமணி. கடவுள் வாழ்த்து. நச்.) 1. தமிழ்ப் புலவர் அகராதி - காக்கை பாடினியார்; அவிநயனார் சிறுகாக்கை பாடினியார் (தி.ந.சி.க) 2. தமிழ்ப புலவர் அகராதி - காக்கை பாடினியார்; மேற்கோள். திரு. ந.சி.க. 1. தொல். செய். 4 இளம்பூரணருரை காண்க. 1. நேர்பசை நிரைபசை வேண்டாது நேரசை நிரையசை வேண்டாது நாலசைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கை பாடினியார் முதலியஒருசாராசிரியர் என்றும், காக்கை பாடினியார் முதலிய தொல்லாசிரியர் தம் மதம் பற்றி ஈண்டு நாலசைச்சீர் எடுத்தோதினார் என்றும் வரும் யாப்பருவிருத்தியுரை நோக்குக. (யா. வி. 10.) காக்கைபாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மாப் பெரும்புலவர் தம் மதம் பற்றி நாலசைசீர் விரித்தோதினார் இந்நூல் யார் என்று மேலும் கூறுமாறும் கருதுக. (யா. வி.பக்.448) 1. இவ்வாறே, ஒருசார் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வந்தனவாலோ எனின் திரு வள்ளுவப்பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க் கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய பிறசான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர் வாராமையாலும் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஓத்தில்லாமையாலும் வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையாலும் இத்தொடக்கத்தன குற்றமல்லது குணமாகாதென்பது காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; இதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு என்பதுவும் கருதத்தக்கது. (யா.கா.38 உரை) 1. காக்கை கரைதலைப் பாராட்டிப் பாடினமை பற்றிப்போலும் இதனாசிரியர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனப்பெயர் பெறுவாராயினர் - குறுந்தொகை. திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கனார் பதிப்பு காக்கையை இங்ஙனம்பாடிய சிறப்பால் இச்செய்யுளைப் பாடியவர் காக்கை பாடினியார் என்னும் பெயரைப் பெற்றார் - ஐயரவர்கள் பதிப்பு. 1. செந்தமிழ் - தொகுதி 19. பக்.292. இளங்காக்கை பாடினியார் என்னும் கட்டுரை; ஆசிரியர் - பெயர் விழையான் 2. இளையர் என்றது ஒருசாலை மாணாக்கராதல் பற்றிப் போலும் - தொல். பொருள் பேரா. திரு. சி. கணேசையர் பதிப்பு. (பா.வே.) 1. நிலைமைய. (பா.வே.) 1. களையான். (பா.வே.) 1. வகையது. (பா.வே.) 1. அறுசீர் அதனின், இழிப நெடிலடி என்றிசினோரே. (பா.வே.) 1. இறந்து வரினும். அடிமுடி வுடைய. 1. நெறிமைய. 2. பகவன். 1. எச்சத்தாற். 1. பா. வே. சிறுகாக்கை பாடினியார் 1. பா. வே. கையகனார் 1. தொல். செய் 95. 1. சிறுகாக்கை பாடினியார் யா.வி. 41 மேற். 1. யா. வி. 45 மேற். 1. யா. வி. 42 மேற்.. 1. யா.வி.48 மேற். 1. யா.வி.47 மேற். 1. யா.வி. 52 மேற். 1. அவிநயனார். யா.வி.51 மேற். 1. யா.வி. 64 மேற். 1. தொடையொன் றடியிரண்டாகி வருமேற் குறள் என இவர் கூறியமை கொண்டு (48) இந்நூற்பா இவ்வாறு யாக்கப் பெற்றது. 1. சிறுகாக்கை பாடினியார் . யா. வி. 75 மேற். 1. சிறுகாக்கை பாடினியார். யா.வி.92 மேற். 1. சிறுகாக்கை பாடினியார். யா.வி.71 மேற். 1. ஈற்றடியொன்றும் தொல்காப்பியனார் வாக்கு. தெரல். செய் 109.