இளங்குமரனார் தமிழ்வளம் 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 14 நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 7 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 296 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோரஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. நல்ல அலுவராக 1 15. நல்ல செல்வராக 26 16. நல்ல சான்றோராக 51 17. திருக்குறளில் வினை 76 18. திருக்குறளில் பிறப்பு 94 இணைப்பு 113 19. தவம் 117 20. வறுமையும் வளமையே 138 1. அறிவே கருவி 138 2. வறுமையும் வளமையே 145 3. பொய் மெய்யாகுமா? 152 21. மங்கல மனையறம் 160 22. தக்கார் தகவிலர் 181 23. அறத்தாறு இதுவென வேண்டா 205 24. மூவர் 227 25. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை 254 26. நினைக்கும் நெஞ்சம் 275 திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. நல்ல அலுவராக அலுவல் அலுவல் என்பது பிற்காலச் சொல். அலுவலர்; அலுவலகம் என்பன அதன்வழி விரிவானவை. ‘என்ன அலுவல் செய்கிறீர்கள்? என்ன அலுவலாகப் போகிறீர்கள் என்று கேட்பது நடைமுறை. அலுவல் என்பது மதிப்பு மிக்கதாகக் கொள்ளப் படுகிறது. உழைப்பு, தொழில், வேலை, பணி என்பவற்றினும் அலுவலுக்கு மதிப்பு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். வியர்வைச் சொட்ட உழைக்கும் உடலுழைப்பினும், உடலுக்கு அலுப்பு, அயர்வு இல்லாமல் வேலை செய்வதை-அலுவல் என வழங்கினர், அலுப்பு என்பது உடல் தொல்லை. ‘அவனுக்கு என்ன காற்றாடிக்குக் கீழ் வேலை? என்று பாராட்டுதல் கேட்கக் கூடியதே. வாழ்க்கையிலே காற்றாடியாகிப் போன மக்கள் காற்றாடிக்குக் கீழிருந்து செய்யும் வேலையை மதிப்பது இயல்பே! உங்களுக்கென்ன? உங்கள் மகன் வெள்ளை மாளிகையிலே இருக்கிறார் என்று பாராட்டக் கேட்ட தாய், ஆமாம்! அவன் மட்டுமல்லன்! இதோ உழவு செய்கின்றானே; அவனைப் பெற்ற தாலும் பேறு பெற்றவள் நான் என்று எவ்வேலை ஆயினும் மதிப்புக்குரியதே எனக் கண்ட மதிப்புக்குரிய தாய் மதிப்பீடு அது. வள்ளுவரும் தொழிலால் உயர்வு, தாழ்வு இல்லை எனக் கண்டார். தொழிலைச் செய்யும் சிறப்பு தாழ்வு என்ப வற்றால்தான் வேறுபாடேயன்றி வேறு, வேறுபாடு இல்லை எனத் தெளிந்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்பது அது. வையகம் காப்பவ ரேனும்-சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய்யக லத்தொழில் செய்தே-புவி போற்றிட வாழ்பவர் மேலோர் என்றார் பாரதியார். தப்பாக வேதம் சொல்பவனைப் பார்க் கிலும் நன்றாகச் சிரைப்பவன் உயர்ந்த சாதி என்றும் அவர் உரத்துக் கூறினார். அலுவலகம் இந்நாளில்! அலுவலக இயக்கமே அரசின் இயக்கம். அரசு என்பதே, அலுவலக வழியாகவே நடைபெற்று வருதல் வெளிப்படை. அலுவலகமே அரசின் அச்சாணி. அது சிக்கலானால் அரசும் சிக்கலுக்கு ஆட்படும். அது சிக்கலின்றி இயங்கின் அரசும் சிக்கலின்றி இயங்கும். ஓர் அலுவலர் ஆக்கம் செய்யின் அவ்வாக்கம் அரசைச் சாரும். ஓர் அலுவலர் தேக்கம் செய்யின் அத்தேக்கமும் அரசைச் சேரும். அரசின் புகழுக்கும், பழிக்கும் இடம் செய்பவை அலுவலக நடைமுறைகளே! அலுவலகம் ஒன்றா இரண்டா? அரசை இயக்கும் தலைமைச் செயலகம் அலுவலகம். முறை மன்றம், பல்கலைக் கழகம், ஆட்சியகங்கள், பொருளகங்கள், அஞ்சலகங்கள், நகர் மன்றங்கள், ஒன்றியங்கள், கல்வி நிலையங்கள்-எங்கும் அலுவலகம்! துறைவாரி அலுவலகங்கள் எல்லாம் அலுவலகம்; ஒவ்வொன்றிலும் அலுவலர் ஒருவரா, இருவரா?, ஆயிரம் ஆயிரம் பேர் அலுவலகங்களும் உண்டு. நகரங்கள் என்பவை, அலுவலகக் குவியலகங்கள்! அலுவலகங்களின் தேவை என்ன? அரசு தோற்றுவிக்கும் சட்டங்களை நிறைவேற்றி நடைமுறைப் படுத்துவதே அதன் நோக்கமாகும். அரசின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுக் கடனாற்ற வேண்டியதே அலுவலகங்களின் கடமை. சட்டத்தை உருவாக்குபவர்க்கு அடிமைப் பட்டுக் கிடத்தலோ ஆடிப் பாவைப் போலத் தூக்கத் தூக்கியாய் இருப்பதோ அலுவலர் கடமை என்று. ஆள்பவர் இன்று ஒருவர் ஆகலாம். நாளை ஒருவர் ஆகலாம். ஆள் மாறினாலும் மாறாதது-மாற்றப்படும் வரை மாறாதது-சட்டம். அச்சட்டத்தின் காவலராக விளங்க வேண்டியவரே அலுவலர். தீ நிலைப்பாடாக ஆள வந்து விட்டவர் அலுவலர் அனைவரும் தமக்கு அடிமை என்று ஆள்வோரும், அடிமைப்பட்டுக் கிடத்தல் எழுதா விதிமுறை என்று தம் நலக் குறியராம் அலுவலரும் நடந்து கொள்வதால் முறைமை ஒதுங்கவும், முறைகேடு அரசோச்சவுமாம் நடைகள் உண்டாகி விடுகின்றன. குற்றம் செய்வாரைக் கண்டுபிடிக்க ஒரு துறை; கண்டு பிடித்தவர்களை வழக்குத் தொடுத்துக் குற்றத்தை நிலை நாட்ட ஒரு துறை; தண்டனை தர அல்லது தண்டனை விதிக்க ஒரு துறை; தண்டனை பெறுவிக்க ஒரு துறை என முறையே ஒற்றர் துறை, காவல் துறை, முறைமன்றத் துறை சிறைத் துறைகள் இருந்தும் குற்றவாளி தப்பிக் கொள்ளவும், குற்றம் இல்லான் தண்டிக்கப்படவும் நேர்கின்றதென்றால் எங்கோ குறையுள்ளமை தெளிவுதானே! எங்கே குறையெனினும் ஆட்சிக் குறைதானே! ஆதலால் கடமை தவறாமை அலுவலர் கடமையாகவும், கடைப்பிடியாகவும் கட்டாயம் இருத்தல் வேண்டும். கையூட்டு வாங்குவான் மேல் எவன் நடவடிக்கை எடுக்க முடியும்? கையாடுவானை எவன் நடவடிக்கை எடுக்க இயலும்? காலம் தவறுவானைக் கண்டிக்க எவனுக்குப் பொருந்தும்? அவற்றை இல்லான்தானே, இருப்பானைக் கடியவும் கண்டிக்கவும் கடனுறுத்தவும் கூடும். அதனால் குற்றங் கடிய விரும்பும் அல்லது கட்டாயமுடைய அலுவலர் குற்றமற்றவராக இருத்தல் வேண்டும். குற்றங்கடிதல் குற்றங்கடிதல் என்பதோர் அதிகாரம் ஆட்சிப் பகுதியிலே உள்ளமை அலுவலர் போற்றிக் கொள்ளத் தக்கதாம். ஒருவர்க்கு முழு அழிவைத் தரும் பகை குற்றமே. ஆதலால் குற்றம் தம்மிடத்து உண்டாகாமல் காத்துக் கொள்ளல் வேண்டும் (434) குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை குற்றம் செய்து அதன்பின் தன்னைக் காப்பதா? குற்றம் செய்யாமல் இருப்பது காப்பதா? குற்றம் வருவதற்கு முன்னரே அது வராமல் காப்பதே காப்பாகும். அவ்வாறு காவாதவன் வாழ்வு, தீயின்முன் வைக்கப்பட்ட வைக்கோற் போர் அழிவது போல் அழிந்து விடும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (435) அலுவல் தலைவன் அப்பொறுப்புக்குத் தக்கவனாகத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளல் தலையாய கடமை தான் இருக்கும் பொறுப்புக்கு இழிவுண்டாகச் செய்வான் நன்மகன் அல்லன்; தலைவனும் அல்லன்! தகவாளன் ஒருவன் இருந்த இருக்கை அத்தகுதியால் வணக்கத்திற்கு உரியது ஆகிவிடும். அந்த இருக்கையில் இன்னொருவன் இருக்கும் நிலை உண்டாகும் போதே இத்தகைய பெருமகன் இருந்த இருக்கை என்னும் பெருமிதமும் தூய்மையும் உண்டாதல் வேண்டும். அதனால், தன் குற்றம் நீக்கல் முதற் கடமை; பிறர் குற்றம் களைதல் அடுத்த கடமை; இவ்வாறு செய்தால் அவன் ஆளுகைக்குள் என்ன குற்றமும் நிகழாது. பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள் என்பது வழக்கு. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு (436) இறைக்கு என்பது இவண் அலுவலகத் தலைவனுக்கு. அலுவல் பொறுப்பாளன் ஒருவனுக்கு வேண்டும் குணம் என்பது தற்பெருமை கொள்ளாமை. கொண்டால் அலுவலகத்தார் அனைவர் நல்லெண்ணத்தையும் இழந்து விடுவான். மண்டைக் கனம் பிறரை மதிக்க அறியாது; மற்றையோர் மதிக்கும் பேற்றைக் கொள்ளவும் கொள்ளாது! எந்த ஓர் அலுவலக நல்லியக்கமும் பலர் ஒத்துழைப்பில் இயல்வதே. தனியாளாகத் தம்மைக் கொண்டு விட்டால் அனைவரும் தங்கள் தலையைப் பொறுப்பில் இருந்து எளிதாகக் கழற்றிக் கொள்வர். பின்னர், மாட்டிக் கொண்டு மன்றாடும் நிலைக்கு வந்தே தீர வேண்டும். மெழுகு, நான் உருகுவதால்தான் ஒளி உண்டாகிறது என்றது. திரி, நான் கருகுவதால்தான் ஒளி உண்டாகிறது என்றது. தீ, நான் எரிவதால்தான் ஒளி உண்டாகிறது என்றது. மூன்றும் முரணி நின்றன. காற்று வலுவாய் அடித்தது, மெழுகு திரி அணைந்தது. மூன்றும் கேட்டன; காற்றே ஏன் அணைத்தாய்? மூவரும் கூடிக் கேட்டீர்! முன்னே என்ன செய்தீர்? மூவரும் நான் நான் எனச் செருக்கினீர்! நானும் உள்ளேன் என்பதை நான் காட்டினேன்! நானெனல் ஒழிக! நாமெனச் சுடர்க! என்றது காற்று. நானெனல் ஒழிந்தது, அலுவலகம்! நாமெனச் சுடர்வது, அலுவலகம். நானெனல் ஒழிதல் ஒன்று; நலஞ் செய்யாச் செயல் எதனையும் செய்யாமை மற்றொன்று. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க நன்றி பயவா வினை (439) தெரிந்து செயல் வகை அலுவலர் எவரும் எச்செயலைச் செய்யத் தொடங்கு முன்னரும் அதன் நடைமுறை, விதிமுறை, முன்னவர் பட்டறிவு, அச்செயலைச் செய்யும் வகை, செய்வதன் விளைவு என்பவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்துச் செய்தல் வேண்டும். அத் தெளிவுக்குத் தெளிவாக அமைந்தது வள்ளுவத் தெரிந்து செயல் வகை (47) ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் அதனைச் செய்தால் உண்டாகும் கேட்டையும், நன்மையையும் தொடர்ந்து அரசுக்கு வரும் வருவாயையும் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் (461) எடுத்துக் கொள்ள இருக்கும் செயலைப்பற்றி நன்கு தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணிச் செய்பவர்க்குச் செய்தற்கு அரியது என எதுவும் இல்லை. தெரிந்த இனத்தொடுதேர்ந் தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (462) பின்னே பெரும் வருவாய் வரும் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் முதற்பொருளையும் இழந்து விடும் செயலை அறி வுடையவர் செய்ய மாட்டார். ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (463) தமக்குத் தெளிவு இல்லாத ஒன்றைச் செய்தல் ஆகாது. தக்கார் வழியே தெளிந்து நல்லது எனக்கண்ட பின்னரே செய்யும் முடிவெடுக்க வேண்டும். இல்லாக்கால் அவர் இழி வடையாமல் இருத்தல் இயலாது. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர், (464) ஆராயும் வழிகளில் எல்லாம் ஆராயாது செயலாற்றுவது பகைவருக்கு இடந் தந்து பாழ்படுத்தி விடும் (465). செய்யத் தக்கவை அல்லாதவற்றைச் செய்தலும் கேடு செய்யத் தக்க வற்றைச் செய்யாது இருத்தலும் கேடு; ஆதலால் செய்வன தவிர்வன அறிந்து செய்தல் வேண்டும். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் எச்செயலை எனினும் செய்யத் தொடங்கு முன்னரே தீர எண்ணிப் பார்த்தல் வேண்டும். செய்யத் தொடங்கி விட்டு, இனி எண்ணலாம் என எண்ணுவது இழிவுக்கும், இழப்புக்கும் ஆளாக்கும். (477) ஒரு செயலைச் செய்யும் போதே முழுமையாக முயன்று செய்தல் வேண்டும். அவ்வாறு முயன்று செய்யா முயற்சி பலபேர் பின்னே கூடிவந்து உதவிக்கு நின்றாலும் நிறை வேறாமல் போய் விடும். ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் (468) நான் நல்லதை எண்ணி நல்லதைச் செய்கிறேன் என்று அமைந்தால் மட்டும் போதாது. அதனைப் பெறுவான் எடுத்துக் கொள்ளும் இயல்பைப் பொறுத்தது நல்லது என்பதும், கெட்டது என்பதும், ஆதலால் நல்லதும் அல்லதாகி விடக்கூடும். நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (469) ஒருவர் தம் தகுதியொடு பொருந்தாத செயலை எவரும் ஏற்றுக் கொள்ளார். ஆதலால் தம் தகுதிக்குப் பொருந்தாத எச்செயலையும் செய்தல் ஆகாது. செய்யின் இகழ்வுக்கு உரியவர் ஆவர். எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு (470) அலுவலர் பல துறையர்; பல நிலையர் என்பதைக் குறித்தோம். அவ்வவர்க்குத் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளல் கடமையாகும். ஓரங்காடியில் பலர்க்கும் வேண்டும் பொருள்கள் ஒருங்கே இருக்கும். அவ்வவர்க்கு வேண்டுவனவற்றைத் தாமே வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். இவண் அலுவல் புரிவார் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படும் குறிப்புகள் இடம் பெற்றாலும் சிறப்பாகச் சில துறையர்க்குப் பயன்படுவனவும் உண்டு. அவற்றை அவர் மிக உன்னிப்பாகக் கொள்ளல் வேண்டும். அத்தகையவற்றுள் வலி யறிதல், காலம் அறிதல், இடம் அறிதல், என்பவை குறிப்பிடத் தக்கவை. இவை பொதுவில் பலர்க்கும் உரியவை எனினும் படைத்துறை, காவல் துறை, உளவு ஆகிய ஒற்றர் துறை என்ப வற்றுக்கு மிக மிக வேண்டத்தக்கவையாகும். பத்துப்பேர் கூடிய கூட்டமென எளிமையாகப் போய் விட முடியாது. பின்னே பெருங்கூட்டமன்று, வன்முறைக் கூட்ட மாகவும் இருக்கலாம். திருடன் பொய்த்தலை காட்டி மெய்த்தலையைத் தப்பு வித்தல் போலவும் இருக்கலாம். போக்குக் காட்டிவிட்டு வேறொரு பக்கம் போனாலும் போகலாம். கடத்தலில் தேர்ந்தவர்கள் காவற்படையை மோதத் துணி யினும் துணியலாம். கொலையாட்டி ஒருத்திக்கு மூலத்துணையாக அல்லது ஏவாளனாக இருந்தவனைப் பற்றுதற்குப் பத்து இலக்கமெனத் தலைக்கு விலை வைத்தும் கண்டபாடு இல்லையே! காட்டு மரங்களைச் சொந்த வீட்டு மரமாக வெட்டி அழிக்கும் கூட்டத்தைப் பற்றி வளைக்க என்னென்ன பாடு பட்டும் பயன்படாமை ஏன்? குற்றம் செய்தவன் தப்பிக் கொள்ளக் காடென்ன, கட லென்ன, வானென்ன எத்தனை வகை? தேள்கடித்ததற்கு மருந்து தேடப்போய்ப் பாம்புக் கடிக்கு ஆட்பட்டதாகி விடக்கூடாதே! கரட்டானைத் துரத்திப் போய்க் காட்டானை முன்னர் நிற்கும் நிலை ஏற்ப்பட்டால்? வலியறிதல் - காலமறிதல் - இடமறிதல் ஆகிய இவை இவ் விடர்க்குத் தீர்வுகாண முனைவார் தேர்ந்திருக்க வேண்டியவை. வலியறிதல் ஒரு செயலைச் செய்ய எடுத்துக் கொள்பவன் தான் எடுத்துக் கொள்ளும் செயலின் வலிமை செய்யப் போகும் தன் வலிமை, அதனை எதிரிடுவான் வலிமை, தனக்கும் அவனுக்கு மாம் துணை வலிமை என்பவற்றையெல்லாம் நன்றாக எண்ணிச் செயலாற்ற வேண்டும். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (471) தம்மால் செய்யக் கூடும் செயலை அறிய வேண்டிய வகையான் அறிந்து அச்செயற்பாட்டில் நிலைபெற ஊன்றிச் செய்யும் ஆற்றல் உடையவர்க்குச் செய்ய முடியாத செயல் இல்லை (472) தமக்கு உள்ளதாகிய வலிமையை அறிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு மன எழுச்சியால் ஒரு செயலைக் செய்யத் தொடங்கி விட்டுப் பின்னர் இடையே அதனைக் கைவிட்டு விட்டவர் உலகில் பலர். உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் பலரோடு ஒத்து நடவாதவனும், தன் தகுதியை அளவிட்டு அறியாதவனும், தன்னைப் பெரிதாக எண்ணிக் கொள்பவனும் விரைவில் கெட்டொழிவான். (474) அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் மயில்தோகை மெல்லியது; கனமற்றது. என்றாலும் அதற்கும் அளவு இல்லையா? அளவில்லாமல் ஏற்றினால் வண்டியின் வலிய அச்சும் ஒடிந்து விடும். ஆதலால் எவர் வலிமைக்கும் ஓர் அளவுண்டு என்பதை எண்ண வேண்டும். (475) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் மரத்தின் மேல் ஏறப் பயிற்சி உடையார்க்கும் ஏறும் எல்லை என ஒன்று உண்டு. அவ்வெல்லை கடந்து மேலே மேலே சென்றால் தொல்லையில் இருந்து தப்ப முடியுமா? (476) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதியாகி விடும் காலம் அறிதல் காலம் அறிதலைப் போற்றுவார் நம் தலைவர்களுள்ளும் அரியராகிவிட்டனர். காலை 10 மணி என்றால் இரவு 10 மணிக்கு எய்தும் தலைவர்! அவர்க்காகக் காத்துக் கிடக்கும் ஏமாறி மக்கள். திங்கள் கிழமை என்றால் எந்தத் திங்கள் என்பதைத் தலைவரே அறிவார்! மாலை 6 மணிக்கு வரவேண்டிய தொடர்வண்டி மிகச் சரியாக வந்தது. அவ்வண்டியோட்டியின் காலக்கட்டுத் திறத்தைப் பாராட்ட விரும்பிய நல்லெண்ணத்தர் ஒருவர் ஒரு மாலையுடன் ஓடிப்போய் அவர் கழுத்தில் போட்டார். எதற்கு மாலை என்றார் ஓட்டி. காலம் தவறாது சரியாக ஆறுமணிக்கு வண்டியைக் கொண்டு வந்ததற்கு என்றார் மாலை சூட்டி. அப்படியா! இது நேற்று மாலை 6 மணிக்கு வந்திருக்க வேண்டிய வண்டி என்றார் வண்டி ஓட்டி. சூலம் பார்ப்பார்; சொகினம் (சகுனம்) பார்ப்பார், புறப்பட நேரம் பார்ப்பார்; ஐந்திரம் (பஞ்சாங்கம்) பாராமல் எட்டு வையார், ஆனால் குறித்த காலம் மட்டும் பெரும்பாலும் கருதவே கருதார். விதிவிலக்காக இருப்பவர் விதியாகி விடமாட்டாரே! வள்ளுவக் காலம் அறிதல் என்பது செயலாற்றத் தக்க காலம் அறிதல் ஆகும். விதைக்கக் காலம்! அறுக்கக் காலம். இல்லையா? பருவத்தால் அன்றிப் பழுக்க மாட்டாவே, உருவத்தால் நீண்ட உயர் மரங்களும்! ஆடிப்பட்டம் தேடிவிதை என்பதும், சித்திரைப் புழுதி பத்தரை மாற்று என்பதும் காலக் கருத்துப் பழமொழிகள் அல்லவா? குடை வணிகம் எப்பொழுது நன்றாக நடைபெறும்? செருப்பு வணிகம் எப்போது சீராக நடைபெறும்? காலம் அறியா வணிகம் கைப்பொருள் தராதே! எப் பொருளை - எக்காலத்தில் - எங்கே வாங்கி - எக்காலத்தில் எவ் விடத்தில் விற்பது என்னும் தெளிவால்தானே, வாணிகர் கொள்ளை வளம் கொழிக்கின்றனர். பயிராகும் காலத்தே உரக் கடைக்கும், பூச்சி மருந்துக் கடைக்கும் வாய்ப்பு. அறுவடைக் காலத்தில் அவற்றுக்கு என்ன நிலை? பகற் போதில் கூகையைக் காக்கை வெற்றி கொள்ளும், இரவுப் போதில் காக்கையைக் கூகை தொலைத்து விடும். இக்காட்சி காணாக் காட்சியா, கண்டறிந்தேனும் காலம் அறிந்து கடமை செய்க, என்கிறார் வள்ளுவர் (481). பருவத்தே பயிர் செய் என்பது உழவுக்கு மட்டும் தானா? எத்தொழிலுக்கும் எச் செயலுக்கும் உண்டே! (482) காலம் அறிந்து செய்க! அரியவை, பெரியவை என்பவை இல்லை? செய்தற்கு உரியவை ஆகிவிடும் (483) காலமும், இடமும் கருதிச் செயலாற்றினால் எத்தகைய பெரிய செயலைச் செய்ய வேண்டுமெனினும் செய்து முடிக்க முடியும் (484). ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் பெருஞ்செயலைச் செய்யக் கருதுவோர் எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செய்யார். ‘இந்தப் பூனையும் பால் குடிக் குமா! என்று எண்ணிக் கொண்டிருக்க எடுத்த செயலைக் கமுக்கமாக முடித்து விடுவர் (485).முன்னேறித் தாக்க வேண்டிய கடா, பின் வாங்குகிறதே ஏன்? வலுவாக முன்னேறி ஒரே முட்டாக முட்டி வீழ்த்து வதற்காகத்தான் (386). ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து காலம் அறிந்த தேர்ச்சியாளர், உடனுக்குடன் தம் உணர்வை வெளிப்படுத்தி விடார், உரிய பொழுதை எதிர் பார்த்து உள்ளத்தே குறிவைத்துக் கொண்டு இருப்பர் (487) பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் கிடைத்தற்கு அரிய வாய்ப்பான பொழுது கிடைக்கு மானால் அவ்வாய்த்த பொழுதிலேயே செய்தற்கு அரிய செயல் களைச் செய்து முடித்துக் கொள்வர் (489) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல் மீனை நோக்கிய கொக்கு எவ்வாறு ஆடாமல் அசையாமல் ஒரே நோக்கமாக நோக்கி நிற்கிறது! ஆனால் மீன் வரக் கண்டவுடன், எப்படி ஒரே குத்தாகக் குத்தித் தூக்கிக் கொள்கிறது. அதுபோல் அமைதியாக இருக்கும் பொழுது இருந்து, செயலாற்ற வாய்க்கும் போது செயலாற்றி வெற்றி காண வேண்டும் (490) கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து இடனறிதல் ஒரு பெரியவர்; மிகச் செல்வாக்கானவர், செல்வமும் உடையவர், செல்வத்தினும் பண்பால் மிக மதிக்கப் பட்டவர். அவர்க்கு ஒரே மகள். அவள் வேறோரிடத்தில் திருமணம் செய்யப் பட்டாள். அவளைத் தம் வீட்டில் அவள் கணவனோடு வைத்துக் கொள்ள முடியவில்லை! அவள் மேல் உள்ள அன்பால் அவள் கணவன் பணியாற்றிய ஊருக்குச் சென்று வாடகை வீடு பிடித்து அவர்களுடன் தங்கியிருந்தார். புதிய ஊரில் அவரை எவர் கண்டார்? எவர் மதிப்பர்! தெருவில் வரும் போது ஒவ்வொருவரும் எழுந்திருப்பதும், வணங்குவதும், நலம் கேட்பதும் எனக் களிப்பாக இருந்த வாழ்வு புதிய ஊரில் கசப்பானது. பொழுதும் போகவில்லை. போன பொழுதும் இன்பமாகவில்லை! மனம் உடைந்து போனார். மருத்துவம் எவ்வளவோ பார்த்தனர்! உள்ளச் சுமையால் மருந்தும் பயன்பட வில்லை! பெரியவர் பிழைப்பாரா? திடுமென ஒருநாள் மருமகனுக்கு மாறுதல் வாய்த்தது. பெரியவர் ஊருக்கே வாய்த்தது. நலிந்த உடலோடு ஊருக்கு வந்த அவர்க்கு எந்த மருந்தும் வேண்டியிருக்கவில்லை. எந்த நோயும் இல்லை! பழைய கலகலப்பான வாழ்வு தொடர்ந்தது. இடைப் பிரிவு ஊடலுக்குப் பின் கூடல் போல மிக இனிமை ஆயிற்று; இடனறிதல் வாழ்வுக்கு எவ்வளவு இன்றியமையாதது! வாழ்வு நலத்திற்கு மட்டுமா இடனறிதல்? செயலாற்று வதற்குத் தான் இடனறிதல் எத்தகைய பயன்! கடலில் செல்லும் கப்பல் நிலத்தில் ஓடுமா? நிலத்தில் செல்லும் தேர் கடலில் ஓடுமா?-ஓடாதே! என்கிறார் வள்ளுவர். கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து (496) இடமறிந்து செயலாற்று என்பதற்கு இதனைக் கூறுகிறார். நீருள் முதலை வெல்லும்; நிலத்தில் மற்றவை முதலையை வெல்லும். என்கிறார். வெற்றிக்கு இடவாய்ப்பு வேண்டும் என்கிறார். சேற்றுள் பதிந்து விட்டால் களிறு என்ன களிறு, நரி அதனை வென்று விடும் என்கிறார். வலிமையால் சிறந்தவன் என்றாலும் மாட்டக் கூடாத இடத்தில் மாட்டக் கூடா வகையில் மாட்டிக் கொண்டால் என்ன ஆவான்? பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையில் ஓர் ஓட்டை. ஆங்கிலேயர் ஏவிய குண்டு துளைத்த ஓட்டை. தம் படைகளை ஒவ்வொருவராக உள்ளே இறக்கிப் போரிட ஏவினர் ஆங்கிலேயர். உள்ளே போனவர், போரொலி ஒன்றும் வெளிவரவில்லை. உள்ள ஒவ்வொருவரும் ஓட்டை வழி நுழைய, நுழைய வெட்டுப் பட்டுப் பிணமாயினர். ஒருவன் உள்ளே தலை நீட்டவும் வாள் வீசவும் மயிரளவில் தப்பி வெளியே வந்து செய்தியைச் சொன்னான். இதனை நிகழ்த்தியவன் பகதூர் வெள்ளை. கோட்டையை இடித்தே உள்ளே நுழைய வேண்டும் என மீண்டும் குண்டு பொழிந்தனர், காளையார் கோயில் பழைய கானப்பேரெயில். அக் காட்டுக்குள் மருதிருவர் இருந்தனர். ஆங்கிலர் படை அக் காட்டுள் புக அரும்பாடு பட்டது. வெட்டியழித்தும் நெருப் பூட்டியுமே செல்ல முடியும் எனக் கண்டது. அதற்கும் நெருங்கிச் செல்ல வேண்டும்! காடு எவ்வளவு பாதுகாப்பு. காட்டை அழித்தால் கொடியவர் பாதுகாப்பை அழித்த தாகுமே எனத் தோன்றலாம். அதன் அழிப்புத்தானே நாடு காக்கும் வானமிழ்தாம் மழையே இல்லாமல் செய்கின்றது. எலி புகுந்தது என்பதற்காக இல்லத்தை எரியூட்டுவார் எவர்? சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது என்கிறார் வள்ளுவர் (499). பாதுகாவல் சிறப்பும், படைச்சிறப்பும் இல்லார் எனினும் பகைவர் வாழும் இடத்தை நெருங்கிப் போருக்குச் செல்லல் அரிது என்பது இதன் பொருள். காட்டுக்குப் புலிகாவல்; புலிக்குக் காடு காவல் என்பது பழமொழி. உறை நிலம் எவர்க்கும் ஒரு பெரு வலிமையேயாம். தாக்கும் வழிகள் மட்டுமல்ல தப்பும் வழிகளும் உறை நிலத்த வர்க்கு நன்றாகத் தெரியும் அல்லவா! சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் என்பது இதுவே (498). பெரும்படையுடையவன் எனினும் போர் மேற் கொண்டு சிறிய படையுடையவன் இடத்திற்குச் செல்வான் எனின், அவன் படை ஊக்கம் கெட்டுப் போய் விடும் என்கிறது இது. அதனால். அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் என அதிகாரக் கருத்தைத் திரட்டித் தருகிறார் வள்ளுவர் (497) எண்ண வேண்டியவற்றைக் குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தோடு செயலாற்றுவர் எனின், அஞ்சாமை என்னும் ஒரு தன்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை எனத் தெளிவாக்குகிறார். அலுவலில் ஈடுபட்டார் இவற்றை அறிந்து செயலாற்றல் வேண்டும் எனின், அவர் எத்தகையராக இருத்தல் வேண்டும்? அமர்த்தப்பட்ட துறைக்குத் தக்கவராக அவர் இருந்தால் தானே ஈடுபட்ட துறைக்குத் தக்க செயலாற்றுபவராக இருப்பர்! வள்ளுவத்தில் தெரிந்து தெளிதல் என்பதோர் அதிகாரம், இடனறிதலை அடுத்தே உள்ளது. அலுவலுக்குத் தக்கவர் இவரென அறிந்து அமர்த்துதலே இதன் பொருளாம். தெரிந்து தெளிதல்: அலுவலொன்றில் அமர்த்தத் தக்காரை எவ்வாறு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை முறையே கூறுகிறார். அமர்த்தச் செம்மை அமைந்தால் தானே, பணி யாக்கச் செம்மையும் அமையும். அறம் பேணுபவனா, பொருளில் சாயாதவனா, இன்பத் தில் கோணாதவனா, உயிருக்கு அஞ்சாமல் பணியாற்றுபவனா என்பவற்றை எண்ணிப் பணியமர்த்தம் செய்தல் வேண்டும். அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம் தெரிந்து தேறப் படும் (501) நல்ல குடிப்பிறப்பு, குற்றமில்லாமை, பழிச் செய்கை செய்யாமை, இழிவுக்கு நாணுகை என்பவற்றை உடையவனை அலுவலுக்குத் தெரிதல் வேண்டும். இவ்வளவு நல்லியல்புகளும் அமைந்தாரே அலுவலுக்கு வாய்ப்பரா? இத்தகையர் அரியர் அல்லரோ எனின் மேலும் கூறுகிறார். பிறர் கற்பதற்கு அரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்ற வரிடத்தும் ஆராய்ந்து பார்க்கும் போது அறியாத்தனம் இல்லாது இருத்தல் அரிதேயாம். ஆதலால் அவரையும் தக்க வகையால் பயன் கொள்ளல் தகும். அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (505) குணத்தை ஆராய்க; குற்றத்தையும் ஆராய்க. இரண்ட னுள்ளும் குணம் மிக்கிருந்தால் கொள்க! குற்றம் மிக்கிருந்தால் கொள்ளாது ஒழிக என்றும் கூறுகிறார் (504). ஒருவர் பெருமையும் சிறுமையும் தோற்றத்திலும் இல்லை; சான்றேட்டிலும் இல்லை; சொல்லாடலிலும் இல்லை. அவர் செயலே அளவு கோலாகும். தங்கத்தின் மாற்றுக் காட்டுவது உரைமாற்றுக்கல் என்னும் கட்டளைக்கல். ஒருவர் செயலுக்கு உரைமாற்றுக் கல் அவர் செயல் (505). பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் நல்லநெறி நில்லாரை அலுவலுக்கு ஆராய்ந்து கொள்ளுதல் ஆகாது. அவர் நிலைத்த பற்றுதலும் இல்லார்; பழிக்கும் அஞ்சார் (506). தமக்கு விருப்பமானவர் வேண்டியவர் உறவினர் என்ப தற்காகத் தகுதியில்லாதவரைத் தேர்ந்து கொள்ளுதல் எல்லாத் தீமைகளையும் தரும். (507) ஆராயாமல் ஒருவனை ஒரு பொறுப்பான அலுவலுக்குத் தேர்ந்து கொண்டால், தேர்ந்து கொண்டவன் வழிவழிக்கும் தீராத் துன்பமாக அமையும் (508). எவரையும் ஆராயாமல் அலுவலராகத் தேர்ந்தெடுத்தல் ஆகாது. தக்கார் எனத் தெளிந்து தேந்தெடுத்த பின்னரும் அவர் இயல்புக்கும், திறத்திற்கும் தக்க துறைவகைக்கே பயன் படுத்து தலும் வேண்டும் (509). தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் ஒருவனை ஆராயாமல் ஓர் அலுவலுக்குத் தெளிவு செய் தலும் ஆகாது; தெளிவு செய்த ஒருவனை அதன்மேல் ஐயுறு தலும் ஆகாது; இவ்விரண்டும் நீங்காத் துயர் தரும் (510) தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் அலுவலுக்குத் தக்காரைத் தெரிந்தெடுத்த அளவில் கடமை முடிந்து விடுமா? அவர் பணி செய்வதை ஆராயாமல் விட்டு விட்டால் அனைவரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள் வரா? தெரிந்து தெளிதல் என்பது இந்நாள் தேர்வாணைக் குழுவின் கண்ணோட்டத்திற்கு உரியது என்றால், தெரிந்து வினையாடல் என்பது தணிக்கைக் குழுவுக்கும், ஆய்வுக் குழு வுக்கும் உரியதாகும். தெரிந்து வினையாடல் தெரிந்து வினையாடல் என்பது அலுவல் செய்வாரை ஆராய்ந்து ஆளுந்தன்மை ஆகும். செயலாற்றுபவன் செம்மையிலேயே உலகின் செம்மை யிருப்பதால் தலைவனாக இருப்பவன் செயலாற்றுபவனை நாள்தோறும் தவறாமல் கண்காணித்து வருதல் வேண்டும் (520). நாடோறும் நாடுக மன்னன் வினை செய்வான் (520) கோடாமை கோடாது உலகு இச்செயலை இவ்வாறு செய்தால் நன்மையும், இவ்வாறு செய்தால் தீமையும் உண்டாகுமென ஆராய்ந்து, நன்மை உண் டாகும் முறையிலே செய்ய வல்லவனையே பயன் படுத்துதல் வேண்டும் (511) செய்யும் செயலை நன்றாக அறிந்து பொறுப்பாக அதனைச் செய்யும் திறத்தவனை அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என எண்ணிச் செய்ய ஏவுதல் ஆகாது (515) அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற்று அன்று எத்தனை வழிகளால் ஆராய்ந்து தெளிந்தாலும் செயலை மேற்கொண்டு செய்யும் நிலையில் வேறுபட்டு விடும் மாந்தர் பலராவர். ஆதலால் எந்நிலையிலும் விழிப்பாக இருத்தல் ஆளுந் தன்மையாம் (514). எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் செயலைச் செய்ய வல்லவனை ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யும் காலத்தொடும் பொருந்து மாறு ஆராய்ந்து செய்தல் வேண்டும் (516). இச்செயலை இவ்வகையால் இவன் சிறப்பாகச் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து அச்செயலைச் செய்யுமாறு அவனிடம் ஒப்படைத்து விடுதல் வேண்டும் (517). இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் இச்செயலைச் செய்தற்குரிய தகுதியாளன் இவன் என்பதை ஆய்ந்து கண்டு கொண்ட பின்னர் அதனை அவன் செய்வதற்கு முழுவதும் உரிமையுடையவனாகச் செய்து விடுதல் வேண்டும். ஏனெனில் இடை, இடைத் தடையால் நடைமுறைச் சிக்கல் உண்டாகி விடலாம் (518). வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் எடுத்த செயலை முடித்தலைக் குறிக்கோளாகக் கொண்டுச் செயலாற்றுபவனை வேறுபட நினைத்தல் ஆகாது. அவ்வாறு நினைப்பின் அச்செயல் நிறைவேறும் நலத்தை இழந்து விடவே நேரும் (519). வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு அலுவலர் கடமைகள் விரிந்து பெருகிவரும் காலம் இது. வேண்டும் அளவில் அலுவலர் இல்லாமையும், இருக்கும் அலுவலர் விடுப்புக்குப் பதிலி இல்லாமையும் ஆகிய இடர் களும் உண்டு. குடும்பம் ஓரிடத்தும் பணிக்களம் ஓரிடத்துமாய் நெட்ட நெடுந் தொலைக்கு அப்பாலாம் பிரிவுத் தடையும் உண்டு. இந்நிலையில் கடமையில் சோராமையும், மறதி இல்லாமையும் கட்டாயம் வேண்டும். இல்லாக்கால் அலுவல் களம் அல்லல் களமாகவே மாறிவிடும். மறதி என்பது எவர்க்கும் பொதுவாக உள்ள ஒரு தன்மை. ஆனால் ஒழுங்கான நடைமுறையும், ஒழுங்கான கோப்பு முறை யும் இருக்குமானால் மறதிக் கேட்டைத் தவிர்க்கலாம். வைத்த பொருளைத் தேடவே பொழு தெல்லாம் போகின்றது என்னும் நிலை உண்டானால் என்ன அலுவல்தான் நடக்கும்? பொழுது ஆகி விட்டதே என்று உண்ணாமல் கொள்ளாமல், வேர்க்க விறுவிறுக்க வந்து நின்று பையைத் தடவி, அலுவலகத் திறவு கோலை மறந்து விட்டதே என்று உணர்ந்தால் அந்நாள் வேலை எப்படி இருக்கும்? பொச்சாவாமை என்பதோர் அதிகாரம் திருக்குறளில் உண்டு (54) மறதி இல்லாமை என்பது அதன் பொருள். வறுமை எவ்வாறு அறிவுக்குப் பகையோ அவ்வாறு புகழுக்குப் பகை மறதி என்கிறார் (532). மறதியாளர்க்குப் புகழ்ப் பேறு இல்லை. இது உலகத்து அறிவாளர் அனைவர்க்கும் ஓரொத்த கருத்தாகும் (533). அச்சமுடையவர்க்குப் பாதுகாப்பு எதுவும் இல்லை; அது போல் மறதியுடையார்க்கு எந்த நன்மையும் இல்லை (534). தீது ஒன்றை முன்னரே காத்துக் கொள்ளாது மறந்தவன், பின்னே அதற்கு நூறு மடங்கு வருந்தவே நேரிடும் (535). மறதி இல்லாமை என்னும் அரிய கருவியைக் கொண்டு பேணிச் செயலாற்றினால், செய்தற்கு அரிய செயல் என்பது ஒன்றும் இல்லை (537). அரியஎன் றாகாதது இல்லை பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் ஒவ்வொருவரும் தாம்தாம் மகிழ்ச்சியால் பெருமிதம் கொண்டு கடமை மறக்கும் போது, கடமையைச் செய்யாமல் மறந்து கெட்டுப் போனவர்களை நினைவாராக (539). இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து அலுவலில் ஈடுபட்டார் மேலும் அறிந்து போற்றும் மும்மணிகளாக இருப்பவை வினைத் தூய்மை, வினைத் திட்பம், வினை செயல் வகை என்பனவாம். வினைத் தூய்மை செய்யப்படும் செயல் தூயதாக இருத்தல் வினைத் தூய்மை ஆகும். செயல் தூய்மை எப்படி உண்டாம்? மனத் தூய்மையும் இனத் தூய்மையும் அமைய உண்டாம். ஒருவர்க்கு வாய்க்கும் துணையின் நல்ல தன்மை மன நிறைவாம் ஆக்கத்தைத் தரும். ஆனால் அவர் நல்ல செயல் தன்மையராக இருப்பின் அவர்க்கு வேண்டிய நன்மைகள் எல்லாமும் உண்டாகும் (651). துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் நிறைந்த புகழும், நீடித்த நலமும் தாராத செயலை எவரும் எக்காலத்தும் செய்தல் ஆகாது (652). மேலும், மேலும் மேம்பாடு அடைய வேண்டும் என்று எண்ணுபவர், தம் புகழ் மழுங்குமாறான செயல்களைச் செய்ய நினைத்தலும் ஆகாது (653). அசைவிலா உள்ள உறுதிப்பாடு உடையவர், எத்தகைய துன்பத்திற்கு ஆட்படுவராயினும் அதனை நீக்குவதற்காக இழி செயல் செய்யார் (654). இடுக்கட் படினும் இனிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் யான் என்ன தவறு செய்து விட்டேன் என்று தானே வருந்துமாறான செயலை ஒருவன் செய்யாது இருத்தல் வேண்டும். ஒருகால் அவன் அவ்வாறு செய்வன் எனினும் மீளவும் அதனைச் செய்யாதிருத்தலே நன்மையாம் (655). எற்றுஎன்று இரங்குல செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று தன்னைப் பெற்று வளர்த்த தாயே பசித்துக் கிடப்பள் எனினும் அவள் பசி தீர்த்தலைக் கருதிக் கூட நல்லோர் பழிக்கும் செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும் (656). அறவோரால் விலக்கப்பட்டவற்றை விலக்கித் தள்ளாமல் செய்தவர்க்கு அச்செயல்கள் செய்து முடிக்கப் பட்டன வாயினும் நீங்காத் துன்பமேயாம் (658). கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் பிறர் அழுமாறு அடித்துப் பறித்துக் கொண்டவை எல்லாம் தாமும் அழுமாறே போய் விடும். நல்வழியால் வரும் செல்வம் முதற்கண் இழப்பது போல் தோன்றினும் பின்னே பெருகி விடும் (659). அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை வஞ்சத்தால் பொருள்தேடி அதனைப் பாதுகாப்பாக வைத்தல், சுடப்படாத பச்சை மண் பானையில் நீரை நிரப்பி வைத்தது போன்றதாகும் (660). சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர் பெய்திரீஇ அற்று இவ்வினைத் தூய்மை நெஞ்சத்தில் இருக்குமானால் பதவி பறிபோதல், குற்றச்சாட்டுக்கு ஆளாதல், பணிக்கு இடைத் தடை ஆதல், ஆய்வுக் குழுவுக்கு உட்படல், ஓய்வு நலமும் பெறக் கூடாது ஒழிதல், ஈட்டியவெல்லாம் பறிமுதலாதல், சிறைக் கோட்டத்தை நண்ணல் என்பனவெல்லாம் கால்பட்ட தடத்தில் கூடப்படாவாய் ஒழியும்! பிறர்க்கு அரிய பெரியதோர் தொண்டு எனக்கு இயல்பாக வாய்த்ததே; கைந்நிறைய ஊதியம் வாங்கிக் கொண்டு கடமை யாற்றும் பேறு வாய்த்ததே, தேடிப் போய் அலையாமல் தேடி வருவார்க்கு உதவி உவகை பெறும் இன்பம் வாய்த்ததே, என்னை நன்றாக ஆக்கிய என் பெற்றோர்க்கு நற்பெயர் தரும் நலப்பாடு நண்ணியதே, இம்மண்ணில் பெற்ற கடனை என்னளவால் தீர்க்கும் சிறப்பு எய்தியதே எனத் தம் அலுவல் பேற்றை எண்ணிக் கொண்டு தூய உள்ளத்தொடும் கடமை புரிவார்க்கு இணை உண்டோ? உண்டோ? இவ்வியல்பு இல்லாத் தந்நலத்தர் நாளும், நாளும் எய்தும் பழிக்கும் - பகைக்கும் இணையும் உண்டோ? உண்டோ? வினைத் திட்பம் வினைத்திட்பம் என்பது செயலாற்றும் உறுதியாகும். இதனை விளக்குவார் போல, வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்றார் வள்ளுவர் (661) அரியநாதர் கிருட்டிண தேவராயரைக் காணச் சென்ற போது கைம் முதலாகக் கொண்டு சென்றது என்ன; மனத் திட்பம் என்னும் ஒன்றுதானே! அதுதானே அவரைத் தள வாய் ஆக்கி வைத்தது. ஒருநாள் நள்ளிரவில் ஒருசிறுவன் உரக்கக் கத்திக் கத்திப் பேசுகிறான். உறங்கிக்கொண்டிருந்த தாய் அலறி அடித்துக் கொண்டு ‘என்னவோ ஏதோ? எனக் கதவைத் தட்டுகிறார். ஏனடா! இப்படிக் கத்துகிறாய்? என்ன நிகழ்ந்தது? என்றார். எதுவும் நிகழவில்லை. நிகழப் போவதற்கு ஒத்திகை பார்க் கிறேன். நான் எதிர்காலத்தில் இந்நாட்டின் தலைவனாக விளங்கு வேன். அப்பொழுது சொல்லாற்றலோடு விளங்கவேண்டுமே! அதற்காகப் பயிற்சி கொள்கிறேன் என்றான். அவன் சொல் வாளா போனதா? நாட்டின் தலைவன் ஆனான் அவன். முசோலினியே அச்சிறுவன். அவன் மனத்திட்பம்தானே அது. அதுதானே வினைத்திட்பம் ஆகியது. இளையன் இவன் என்றனர் பகைவர்! நான் இளையனா? பாருங்கள் என அரிமாவைப் போல் கிளர்ந்தான். ஒருவரை அன்று, எழுவர் பகைவரை அவர் படையுடன் வென்றான். அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம். 72) வினைத்திட்பத்தை ஆராய்ந்தவர் கொள்கை, ஒரு செயலைச் செய்தற்கு வரும் தடையை நீக்குதல், அதன் மேலும் தடையுற்ற தெனினும் தளராமை என்னும் இவ்விரண்டுமே யாம் (662). ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் எடுத்த செயலைக் கடைசி வரை வெளிப்படாமல் நிறை வேற்றி முடிப்பதேவினைத் திட்பம் ஆகும். அதனை இடையே வெளிப்படுத்தின் நீங்காத்துன்பம் தரும் (663) கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் எவர்க்கும் சொல்லுதல் என்பது எளிதாகும். ஆனால் சொல்லியவாறு செய்து முடிப்பதே அரிதாகும் (664) பல்லாயிரம் பேர் இடையேயும் ஒருவர் தனிச்சிறப்புற்றுச் செயலாற்றும் திறம் பெற்றால் அத்திறம் ஆட்சியாளரின் தலைமை வரைக்கும் சென்று சிறப்பிக்கப் படும். சிறந்த செயல் திறம் அரசின் பாராட்டுக்கும் உரியதாகும் என்பது இது. (665) நினைத்ததை நினைத்தவாறு நிறைவேற்றுவர், நினைப் பவர் உறுதிப்பாட்டில் சிறந்தவராக இருந்தால் (666) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின் உருவத்தைக்கண்டு ஒருவரை இகழாமை வேண்டும். அவரிடம் நிரம்பிய திறம் அமைந்து கிடக்கலாம். உருவத்தால் பெரியதேர் உருள வேண்டுமானால் அதற்கு அச்சாணி இல்லாமல் ஓடுமா? அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. அவ்வச்சாணி போன்றவரும் உருவில் சிறியவரும் உளர் (667) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து தெளிவாக ஆராய்ந்து துணிவுடன் மேற்கொண்ட செயலைச் சிறிதும் நடுக்கம் இல்லாமலும், சோர்வு இல்லாமலும் செய்தல் என்பது வினைத்திட்பம் ஆகும். (668) கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல் துன்பம் பெரிதாக வரும் என்றாலும் முடிவில் கட்டாயம் இன்பம் உண்டு என்னும் துணிவுடன் எடுத்த செயலைச் செய்தல் வேண்டும் (669) துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை ஒருவர்க்கு உடல் திட்பம் இருக்கலாம்; பொருள் திட்பம் இருக்கலாம்; அறிவுத் திட்பம் இருக்கலாம்? உறவு, நட்பு ஆகிய திட்பங்களும் இருக்கலாம். ஆனால் வினைத் திட்பம் என்ப தொன்றை இல்லாரை உலகம் விரும்புதல் இல்லை. துணிவு என்பதொரு சொல். அதன் பொருள் என்ன? ஆயிரம்பேர் கூடிய கூட்டத்தின் முன்னே ஒருவன் அடாவடித் தனம் செய்கின்றான். அத்தனை பேர்களும் வாய்மூடிக் கிடக் கின்றனர். நமக்கேன் என்று நழூவப் பார்க்கின்றனர். ஆனால் அக்கூட்டத்தின் இடையே வாலுருவி விடப்பட்ட புலியெனத் துணிந்து ஒருவன் வந்து தட்டிக் கேட்கிறான். என்ன செய்வாய் வந்து பார் என்கிறான். மற்றையோர் கூட்டத்தில் இருந்து துணிந்துப் (தனித்து) போனதுதான் துணிவு என்று சொல்லப் படுவதாயிற்று. துணிவு என்பது பிறர்க்கில்லாத மனத்திட்பம் ஆகும். வினை செயல் வகை வினைசெயல் வகை என்பது செயல்களைச் செய்யும் முறையாகும். ஒன்றை ஆராய்தலின் முடிவு, துணிவு பெறுதல் ஆகும். அத்துணிவு, காலத்தாழ்வு முயற்சித் தாழ்வுகளால் தடைப்பட்டு விடுதல் தீமையாகும் (617) சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. காலந் தாழ்த்திச் செய்ய வேண்டும் செயல்களும் உண்டு. காலம் தாழ்த்தாது உடனே செய்யத் தக்க செயல்களும் உண்டு. அவ்வச் செயல்களைச் செய்யும் வகையால் வேண்டும் (672) இயற்கை செயற்கை நேர்ச்சிகள் உண்டாயின், அடுத்த நொடி எனத் தள்ளி வைத்தலும் தீமை. உடனே வேண்டும் நடவடிக்கையில் போர்க்கால நடவடிக்கை என இறங்குதல் வேண்டும். தொழில் உரிமம் வழங்க வேண்டுமாயின், தொழிலின் தன்மை - அதன் கழிவு - மாசு - இரைச்சல் நிலை, சூழலில் பள்ளி, மருத்துவமனை முதலியவற்றுக்கு இடையூறு இலா நிலை என்பவற்றையெல்லாம் ஆழமாகப் பல்கால் எண்ணி முடி வெடுத்தல் வேண்டும். தொடங்கிய செயல், தொடங்கியபோர் என்பவற்றை முழுமையாக நிறைவேற்றி வைக்காமல் அரைகுறையாக விடு வதை ஆராய்ந்து பார்த்தால், பற்றிய தீயை முற்றாக அணை யாமல் விட்டது போன்றதாகும் (674) ஒரு செயலைச் செய்யுங்கால் பொருள் - கருவி - காலம் செயல் - இடம் என்னும் ஐந்தையும் மிகத் தெளிவாக எண்ணிச் செய்தல் வேண்டும் (675) எடுத்த செயலை நிறைவேற்றும் வகை, செயலாற்றும் போது இடையே உண்டாகும் தடை, அதனை முடிக்கும் போது உண்டாகும் பயன் என்பவற்றை எல்லாம் முன்னரே எண்ணிச் செய்தல் வேண்டும். மலைகல்லி எலிபிடித்தல் போல் செய லாற்றி என்ன பயன்? (676) ஒரு செயலை வெற்றியாகச் செய்து முடிக்க விரும்புபவன் செய்ய வேண்டும் முறை, அச் செயலைச் செய்து அதன் உட் கூறுகளை எல்லாம் அறிந்த ஒருவன் கருத்தை முதற்கண் அறிந்து கொள்ளலாகும் (677) செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். மேற்கொண்ட ஒரு செயலால் மேலும் ஒரு செயலையும் முடித்துக் கொள்ளுதல் பழகிய யானையைக் கொண்டு பழகாத யானையைப் பிடித்தல் போன்றநலம் செய்யும் (672) அணைக்கட்டுக் கட்டுங்கால் மின்னாற்றல் எடுத்தலும் தொழிலகம் பூங்கா ஆகியவை அமைத்தலும் போல்வன. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையார்த் தற்று அலுவல் செய்வார் தம் தலைவரிடத்தும், ஆட்சியாள ரிடத்தும் நடந்து கொள்ள வேண்டும் முறையும் வள்ளுவ வழியே அறியப் பெறுவதாம். கால நிலைக்குத் தகத் தம் மேலாண்மையொடு நடந்து கொள்ளும் வகைகளாகக் கொள்ளத் தரும். வலிய ஆட்சியரைச் சேர்ந்திருந்து செயல்பட வேண்டிய அலுவலர் அவரை மிக விலகாதும் மிக நெருங்கி விடாதும், தீமூட்டிக் குளிர் காய்பவர் போல் நடந்து கொள்ளுதல் வேண்டும் (691). அகலாது அணுகாது தீய்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் அரசைச் சார்ந்தவர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் பொறுத்தற்கு அரிய தவறு தம்மிடம் வாராமல் காத்துக் கொள்ள வேண்டும். தவறு நிகழ்ந்து ஐயமுண்டாகி விடின் அதற்குமேல் அதனைத் தெளிவித்தல் எவர்க்கும் இயலாததாகும் (693). போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது தலைமையர் மேலாண்மையர் இயல்பாகப் பழகுவர் எனினும் அவர் முன்னே அலுவலர் ஒருவருக்கொருவர் காதோடு பேசிக் கொள்ளுதலும், சேர்ந்து சிரித்தலும் இல்லாமல் அடக்க மாக நடந்து கொள்ள வேண்டும். இல்லாக்கால் தீமையாம் பொழுதும் உண்டு (694). செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து உறுதியான உள்ளமும் நல்லறிவும் உடையவர், யாம் ஆட்சியாளரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணிக் கொண்டு விரும்பத் தகாத செயல்களைச் செய்ய மாட்டார் (699). கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் ஆட்சியர்க்கும் அலுவலத் தலைவர்க்கும் மிகப் பழைய தொடர்பு உடையவராகச் சிலர் இருக்கலாம். அலுவலகத்திலும் மூத்த பழமையராக இருக்கலாம். எனினும் அவற்றைக் கருதித் தனி உரிமை எடுத்துக் கொண்டு விதிக்குப் புறம்பாக எதனையும் செய்தல் ஆகாது. அத்தகைய உரிமையை ஒருவர் எடுத்துக் கொண்டால் தீமையே உண்டாகும் (700). பழையம் எனக் கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் வள்ளுவர் நாளில் அலுவலர் இருந்திருப்பாரோ, அலுவலகம் இருந்திருக்குமோ என ஐயுறுவார் உளர் எனின், அவர் அரசிய லும் - அமைச்சியலும் - உறுப்பியலும் - படையியலும் எனப் பலப் பல இயல்கள் கொண்ட வள்ளுவப் பொருளை உள்ளங் கொள்ளாமலும் ஆளுங்கணம், எண் பேராயம், ஐம்பெருங்குழு, குடவோலை முறை, அறங்காவல் என்பனவெல்லாம் கொண்ட பண்டை அரசைக் கருதாமலும் ஐயுறுவார் என்க. 15. நல்ல செல்வராக செல்வம் என இங்கு நாம் காண்பது பொருட் செல்வமே. கல்வி, கேள்வி முதலிய செல்வங்கள் வள்ளுவத்தில் சொல்லப் பட்டு இருப்பினும் அவற்றை விலக்கி, இங்குப் பொருட் செல்வமே செல்வம் எனக் கூறப்படுகின்றது. செல்வம் என்னும் ஆட்சியும் வள்ளுவத்தில் நிரம்ப உண்டு. நன்றியில் செல்வம் ஓரதிகாரப் பெயர். பொருள் என்ற அளவிலும், செல்வப் பொருளைக் குறிப்பது உண்டு. பொருள் செயல் வகை என்பது செல்வப் பொருளைக் குறிப்பதே. பிற இடங்களிலும் பொருள் என்பது செல்வம் குறித்து வருதல் பெருக்கமாக உண்டு. திரு என்பதும் பொருட் செல்வத்துக்கு ஒரு பெயரே; வெறுக்கை என்பதும் அத்தகையதே. செல்வம் என்பதும் முயற்சியால் தேட வேண்டிய ஒன்று; முயற்சி இன்றியும் முறை கேடாகவும் வரும் செல்வம் செல்வ மாகாது என்பது வள்ளுவர் முடிவு (63). முயற்சியே திருவைத் தரும்; முயற்சி இன்மையே வறுமைக்குள் தள்ளும் என்றும் கூறுகிறார் வள்ளுவர் (616). நாட்டின் இலக்கணத்தைக் கூறும் வள்ளுவர் பிணி இல்லாமை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் (பாதுகாப்பு) என்பவை ஐந்தும் வேண்டும் என்கிறார் (738). செல்வம் உடையவரும் எத்தகையராக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். அவர் தாழ்விலாச் செல்வராக இருத்தல் வேண்டும் என்கிறார் (731). தாழ்வாவது கேடும் இழிவும்; கேடும் இழிவும் இல்லாச் செல்வரே செல்வர் என மதிப்பிடுகிறார் என்பது விளங்கும். பொருளின் தேவையையும், அதன் பயன்பாட்டையும் அதனால் வரும் சிறப்பையும் வள்ளுவர் மிக ஆழமாக ஆய்ந்தே கூறுகிறார். அவர் கால நிலையினும் இக்கால நிலையில் அப் பொருளின் இன்றியமையாமை மிகக் கணிசமாகவே உயர்ந் துள்ளது. பொருள் செயல் வகை சிலரிடம் கல்வியறிவு இராது; நல்ல குணமும் இராது; பிறர்க்கு உதவும் பான்மையோ, நல்வழிக்குப் பயன்படுத்தும் நாட்டமோ இரா. எனினும் அப்பொருளுடைமையாலே அறியா மாந்தரிடத்து அவர்க்கொரு பெயர் இருக்கும். முதலாளி என்றும், செல்வர் என்றும், பணக்காரர் என்றும் சொல்லும் நிலை இருக்கும். அப்பொருளே அவரைப் பொருட்டாக (பொரு ளுடையவராக) எண்ண வைத்து விடுகின்றது. அதனால், பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் என்றார் (751). பொருள் எத்தனை சொல்லாகிப் பொலிவு முகம் காட்டுகின்றது! பொருளின் பளிச்சிடுதல் இத்தகையதே! செல்வத்திற்கென ஒரு மதிப்பு இருக்கிறது அல்லவா! அம்மதிப்பு அதனை உடையார் மதிப்பு ஆகிவிடுதலும் உலகியலில் காணக் கூடியதே. செல்வம் இல்லாதவரை இவர் அவர் என்று இல்லாமல் எல்லாருமே இகழ்வாக நடத்துவர்; செல்வம் உடையவரை அவர் இவர் என்று இல்லாமல் எல்லாருமே மதிப்பாக நடத்துவர். நடைமுறைக் காட்சியும் இதுதானே (752). இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு பொருள் என்பது ஒரு விளக்கு. அதுவும் அணையா விளக்கு. அதனை உடையவர் நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று, அவரைப் பற்றி அறியாமல் இருந்த அறியாமை என்னும் இருளை அழிக்கும். எத்தனை அயல் நாட்டு நிறுவனங்களும், பெருமக்களும் நம் நாட்டு மூலை மூடுக்குகளில் பளிச்சிடும் பலகைகளில் மின்னுகின்றனர். எதனால்? பொருட் கொடையால்தானே (753). பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று அறம் - பொருள் - இன்பம் என்பன முப்பொருள்கள். அவையே திருக்குறள் முப்பால்களாக விரிந்தன. நடுவணது எய்த இருதலையும் எய்தும்; நடுவணது எய்தாதான் உலையில் போட்டுக் காய்ச்சுவது போல் துயர்ப்படுவான் என நாலடியார் கூறும். அந்நடுவணதாம் பொருள் முறையாகவும் தீயது இல்லாத தாகவும் வந்தால் அது அறத்தையும் தரும் இன்பத்தையும் தரும் என்கிறார் திருவள்ளுவர் (754). அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு அருளும் அன்பும் அரிய குணங்கள். அன்பு, தாய், அருள், குழந்தை. அன்பினும் சிறந்து பெருகியது அருள். அன்பில் அரும்பி, அருளில் மலர்தலே, வாழ்வின் நிறை நிலை. அவ் வருளும்கூட, பொருள் எனப்படும் செல்வச் செவிலியால் வளர்க்க வேண்டும் குழந்தையாகவே உள்ளது என்கிறார் வள்ளுவர் (757). அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு தன் கையிலே பொருளை வைத்துக் கொண்டு செய்பவன் செயல், மலைமேல் ஏறி நின்று கொண்டு அம்மலைக்குக் கீழே நடைபெறும் யானைப் போரை எளிமையாகக் காண்பது போன்றதாம் (758). குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை பொருளுக்கு இத்தகைய வாய்ப்பும் சிறப்பும் இருப்பதால் அப்பொருளை மிக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவர்தம் பகையினார் செருக்கை அழிக்கும் கூர்மையான படைக் கருவி அப்பொருளைப் போல ஒன்றும் இல்லை (759). செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் இவை பொருள் செயல்வகைக் குறள்கள். இனிச், ‘செல்வம் நிலை பேறு உடையதா? எனின் இல்லை என்று தெளிவாகப் பல இடங்களில் வள்ளுவர் கூறு கிறார். அதே பொழுதில் செல்வத்தின் பயன் நிற்கும் என்பதையும் அழுத்திக் கூறுகிறார். நிலையாமையில் (34), இரண்டு பாடல்கள் செல்வம் நிலையாது என்பதைக் கூறுவன. கூத்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்கு ஒருவர் இருவராக வந்து கூடி, கூத்து முடிந்ததும் ஒரு மொத்தமாக அனைவரும் போவது போலச் செல்வமும் சிறுகச் சிறுகச் சேர்ந்து ஒரு மொத்தமாகப் போய்விடும் என்கிறார். இந்நாளில் திரையரங்கம் - நடன அரங்கம் - நாடக மேடை இவை மட்டுமா? அரசியல் திரைப்படச் சிறப்புடையவர் கூட்ட மும் கூடும் வகையும் பிரியும் வகையும் சான்றாகுமே. பழந் தேர்த் திருவிழக்களும் புது மாநாடுகளும் விலக் காகாவே. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332) செல்வம் நிலையாத் தன்மையதுதான். ஆனால் செல்வம் உடையவன் தகுதியானன் எனின் அதனை நிலை பெற்ற அற வகைகளில் செலவிட்டு நிலைபெறச் செய்து விடலாம் என நிலைபேற்று வகை கூறுகிறார் (333). அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் இயக்கம் தேக்கம் செல்வம் என்பது ஓரிடத்தில் தங்காமல் சென்று கொண்டே இருக்க வேண்டியது என்னும் பொருளது. அதனால் இல்லாமல் போய்விட வேண்டும் என்னும் பொருளது அன்று. நீர்தேங்கிக் கட்டுக் கிடையாகி விட்டால் மூக்கடை நாற்றம் மட்டுமோ உண்டாம்? நச்சுயிரிகள் தோன்றி நோயைப் பெருக்கிக் கெடுக்கவும் செய்யும். பாய்ச்சல் நீராகிப் பயன் படாமல் அல்லது குடிநீராக இருந்து பயன்படாமல் விளைவுக் கேடும் செய்யும், பொருள் தேக்கமும் அத்தகையதே. ஒரு காசோ, காசுத் தாளோ செல்லவில்லை என்றால் அதனையே முதற்கண் செலுத்திவிட என்ன முயற்சி செய்கிறோம். செல்லாததைச் செலுத்த உந்தும் உணர்வை எண்ணி உள்ளுள் நகைப்பே உண்டாகும். அச் செல்லவில்லை என்னும் வழக்கே, அது செல்ல வேண்டுவதுஎன்பதைப் புலப்படுத்திவிடுமே! நீர், தேக்கக் கேட்டினும் கேடாவது, பொருள் தேக்கக் கேடு. அது பற்றுள்ளம் என்றும், கருமித்தனம் என்றும் சொல்லப்படும் வடிகட்டிய இறுக்கத்தின் செயற்பாடாகும். அதனைப் பெருங் குற்றமாகக் கருதிக் குற்றங்கடிதலில் வைத்தார் வள்ளுவர். கலையகமாகவும் - மருந்தகமாகவும் - வளவாழ்வாகவும் அமைய வேண்டிய வைப்பு வளம் ஒரு கருமியின் இறுக்க இயல்பாக எப்பயனும் இல்லாமல் இப்படிப் பாழாகக் கிடக் கின்றதே! அவன் நன்மை கண்டானா? அவன் அமைதி தான் கண்டானா? அக்குற்றம் பால்மாட்டுக் காம்பை அறுத்தது போலும் பாவம் அல்லவா என வருந்தினார் போலும்! செய்ய வேண்டிய நற்செயலுக்குப் பயன்படுத்தாத கருமியின் செல்வம் எவ்வளவு முயன்று காப்பினும் காக்கப்படுதல் இல்லாமல் அழிந்து போகும் என்கிறார் (437). செயற்பால் செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் பற்றுள்ளம் என்று சொல்லப்படும் கருமித்தனம் எந்தக் குற்றத்தொடும் வைத்து எண்ணக் கூடியது அன்று. அது பெருங் குற்றமாகும். சில சில குற்றங்கள் பொருள் இல்லாமையால் ஏற்படும் குற்றங்கள். இக்குற்றமோ பொருள் இருந்தும், அதன் அரிய பயன்பாட்டைத் தடுத்த அன்று கெடுத்த குற்றம். ஆதலால் பெருங்குற்றமேயாம் (439). பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று உடையவனுக்கும் உலகுக்கும் பயன்படாச் செல்வம் என்ன செல்வம்? நன்மையமைந்த செல்வமன்று. உடையானின் நல்ல தன்மை இல்லாமையால் அதுவும் நல்லது இல்லாததாய் நன்றியில் செல்வம் ஆயிற்று. எவர்க்கும் நன்மை இல்லாத செல்வம் என்பது இதன் பொருள். அச்செல்வம் உடைமையால் புகழ் பெறாமல் போனாலும் போகிறான். பழியில்லாமலாவது இருந்தானா? அறவோர் பழிக்கு அல்லவோ அச்செல்வத்தால் ஆட்படுகின்றான். செல்வத்தின் நிலையாத் தன்மையை மேலும் கண்டு நன்றியில் செல்வத்தைத் தொடர்வோம். ஊக்கமுடைமை செல்வம் என்பது ஓர் உடைமையே; அவ்வுடைமையினும் உயர்ந்ததோர் உடைமை எந்நாளும் நீங்கா உடைமை ஒன்று, நம்முள்ளத்திலேயே உண்டு. அதன் பெயர் ஊக்கமுடைமை என ஊக்கமுடைமையில் கூறுகிறார் வள்ளுவர் (592) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்பது அது. மேலும் கூறகிறார். ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர், எம் செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்திக் கூறும் ஏக்க நிலைக்கு ஆட்பட மாட்டார் என்கிறார் (593). ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் மேலும் தொடர்ந்து, தளர்ச்சி என்பதை அறியாத ஊக்கம் உடையவனிடத்தை அடைவதற்காகச் செல்வம் தானே வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும் என்கிறார் (594). ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஊக்கம் இல்லாதவர்க்கு வளமை மட்டுமா சேராது? வள்ளன்மை (கொடை) என்று பேசப்படும் பேறும் இல்லாமலே போய்விடும் எனத் தெளிவிக்கிறார் (598). உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு கொடுங்கோன்மை என்பது கொடுமையாக ஆளுந் தன்மையே ஆகும். அது அளவால் நாடு - அலுவலகம் - ஆலை நிலையம் - வீடு என ஆகலாம். அவ்வளவில் அதன் கொடுமை! கொடுமையே. செல்வம் பெற்றுள்ளேன் என்னும் செருக்குடன் தனக்கு உட்பட்டாரை வாயில்லாப் பூச்சிகளென வாட்டி வதைப்பினும், வன்துயர்க்கு ஆட்படுத்தினும், வயிற்றில் அடிப்பினும் அவை ஒழியாமல் அவற்றைச் செய்தானை அழித்தே தீரும் என்பது வள்ளுவம். வெள்ளம் தடுப்பதற்கு ஆளுண்டு; மக்களாம் வெள்ளம் தடுப்பார் எவர்? என்பது எம் கைவிளக்குக் குறள். திருக்குறளோ, அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறது (555). அல்லல்படுதல் செல்வத்தை அழிக்குமா? அல்லற் படுவார், அல்லற்படுத்துவாரை அரவணைப்பரா? அவர் ஏவும் கடமையை இனிது இயற்றுவரா? அல்லற் படுத்து வார்க்கு இயல்பாக ஏற்படும் துயர்க்கோ, ஏற்படுத்தப்படும் துன்பத் திற்கோ எவரும் தாங்குதலாக துணையாக இருப்பரா? அல்லற் படுத்துவார் தொழிலாக்கத்திற்கோ, அழிவுக்கோ முறையே தம் உள்ளம் ஒன்றித்துணை செய்யவோ, தடுத்து நிறுத்தவோ விரும்புவரா? அவர் அழிவுக்கும் அவர் கேட்டுக்கும் அவர்பாடு என விட்டு விட்டாலே செல்வம் சென்று விடாமல் தீராதே! ஆதலால் அல்லற்படுவார் கண்ணீர் அல்லற்படுத்துவார் செல்வ அழிவுக்கு வழிசெய்வதேயாம். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என்றும் கூறுகிறாரே (659). ஒருவன் கொடுஞ் செயலும், கடுஞ்சொல்லும் உடையவ னாக இருக்கிறான். கண்ணோட்டம் எனப்படும் அருள் அறவே இல்லை. அவனுக்கு நெடிய பெரிய செல்வம் நெடிதிராது ஒழியவே செய்யும். அவன் குணமே அத்திருச் செயலைச் செய்து முடிப்பதற்காகத்தானே அப்படி அமைந்துள்ளது. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் (566) சிலர்க்குள்ள பேராசையால் பொருள் வரவையே கருதிப் பொருள் வரும் வழியைப் பற்றிக் கருதவே கருதார். வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? நாய் விற்ற காசு குரைக்குமா? என்றெல்லாம் கேட்பர். கெட்டிக்காரன் பொய்யும் எட்டு நாள் என்பது பழமொழி. கெட்டிக்காரன் களவும் - திருட்டும் -கையூட்டும் - கலப்படமும் - கடத்தலும் அப்படித் தானே! மாட்டிக் கொள்ளும் வரையாவது அமைதி உண்டா? மாட்டிக் கொண்டால் உள்ளது, உரியது எல்லாம் போதுமா? அதனால், உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் (282) என்றும், களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் (283) என்றும் உரைத்தார். செல்வம் குன்றாமல் குறையாமல் இருக்க வேண்டு மானால் பிறருக்கு உடைமையாக உள்ளவற்றைக் கவர விரும் பாமை வேண்டும் என்றார். அஃகாமை செல்வத்திற்கு யாதெனில் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (178) வெஃகாமை-விரும்பாமை. நடுவுநிலை இல்லாமல் பிறருடைய நல்வழிப் பொருளை ஒருவன் விரும்பினால் அவன் குடியையும் கெடுத்துப் பழியையும் உண்டாக்கும் (171). நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் எமக்கு இல்லையே என்றும் கூடப் பிறர் பொருளை விரும்புதல் ஆகாது. விரும்பின் அடக்கமுடையவராகக் கருதப் படார் என எச்சரித்தார் (174). வஞ்சத்தால் பொருள் தேடி அதனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம் என்பது சுடப் படாத மண்கலத்தில் தண்ணீரை விட்டு வைப்பது போல் நீரும் கசிந்தோடிக் கலமும் கெட்டுப் போவது உள்ளதும் போகவே ஆகும் எனத் தெளி வித்தார் (660). சலத்தால் பொருள்செய் தேமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ அற்று முப்பகை தீய வழியில் தேடுவார் தீயவழியில் தொலைப்பதற்கும் முந்துவர். அவற்றை. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு என்பார் திருவள்ளுவர் (920). இருமனப் பெண்டிர் என்பார் நன்னெறி வரம்பில் நில்லாத மகளிர். அவர்கள் பண்பிலார் என்றும், பொருள் விழைவார் என்றும், வரைவு (ஒழுக்க வரம்பு) இலார் என்றும் கூறப்படுவார். அவர் வழியில் பொருளைத் தொலைத்தல் ஒருவகை. வைப்பு என்பது பொருள்; வைப்பாட்டி என்பது பொருளை ஆட்டிப் படைப்பவள் என்னும் பொருள் தருவது. அத்தகு ஆடவரும் இல்லாமல் இல்லை. அவர் வயப்பட்ட மகளிர் உடைமையும் வெளியே சொன்னால் வெட்கமென விட்டொழிந்து, கெட்டொழிந்து போதலும் உண்டு! இரு பாலுக்கும் உள்ள பிழையை ஒருபால்மேல் உலகம் சொன் னாலும் அவனை வள்ளுவம் விட்டு வைக்கவில்லை. பரத்தன் என்று சுட்டவே செய்தது (1311). மதுக்குடித்து மயங்கிக் கைப்பணத்தை இழப்பாரைக் கண்டு வள்ளுவர்க்கு நகைப்பே உண்டாகின்றது. கையறி யாமை உடைத்தே, பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். என்கிறார் (925) கையில் உள்ள பொருளைக் கொடுத்து, ஊட்டத்தையோ, உயர்வையோ பெற்றால் சரிதான். இவன் உள்ள பொருளைக் கொடுத்து மதிமயக்கத்தையும், பரியையும் அல்லவோ விலைப் பொருளாக வாங்கிக் கொள்கிறான்! என்ன மதிகேடன்! என நகைக்கிறார். பொருளைக் கெடுப்பது சூது; பொய்யை ஊக்குவது சூது; அருளைக் கெடுப்பதும் சூது (938). உடையா செல்வமா ஊணா புகழா எல்லாம் ஒழிப்பது சூது (939). காசு போகப் போகக் காதல் பெருக்கி ஆட வைப்பது சூது (940). ஒன்றைத்தந்து ஒரு நூறைத் தட்டிப்பறிப்பது சூது (932). புழுவுக்கு ஆசைப்பட்டு மீனின் உயிரைப் போக்கிக் கொள்ளத் தூண்டும் தூண்டில் (ஆசையைத் தூண்டுவது) போல்வது சூது (931). பொருள் உள்ளோம் என்று இம்மூன்றன் பக்கம் தலை வைத்துப் படுப்பாரும் பொருளோடு இரார். பிறரால் பொருட்டாக எண்ணப் படவும் மாட்டார். பொருட்செல்வம் உயர்ந்ததுதான். ஆனால், உயர்ந்தோ ரிடத்து மட்டுமேயா உள்ளது? பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (241) என்கிறது வள்ளுவம். பூரியார் எவர்? கையில் நாலு காசு வந்தால் நான் தான் உலகப் பணக் காரன் எனச் செருக்கோடு திரிபவன். எண்ணெயில் போடப் பட்ட பூரி எழும்புகிறதே அப்படிக் கொதித்து எழுபவன்! பண்புடையான் செல்வன் ஆக்கம்; பண்பிலான் செல்வம் அழிவு. பண்பிலான் செல்வம் எத்தகையது என்கிறார் வள்ளுவர். பால் உயர்ந்த பொருளே; அது அங்கணத்தில் கொட்டிக் கிடந்தால்? பால் உயர்ந்த பொருளே! அது களிம்பேறிய கலத்தில் வைக்கப்பட்டிருந்தால்? வைக்கப்பட்ட பொருள் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? வைக்கப்பட்ட கலமும் நன்றாக இருக்க வேண்டுமே! பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று (1000) திரிந்த பால் நன்மை செய்யாதது மட்டுமன்று; தீமையும் செய்யுமே. அறிவிலானிடம் செல்வம் இருக்கிறது. அச்செல்வம் என்ன செய்கிறதாம்? எப்படிப் பாழாகிறதாம்? அறிவிலான் செல்வம் உற்றார் உறவை எண்ண, பெற்ற தாய் தந்தையரை, உடன் பிறப்பைப் பட்டினி கிடக்கச் செய்கிறது. பொய்யாய்ப் புனைவாய், வாய்ப் பரத்தைமை கொள் வார்க்கு ஊணாய், உடையாய், உதவியாய்ப் பயன்படுகின்றது. பொருள் என்ன செய்யும்? பொருளுடையான் செயல் அது. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை எவரையும் காணவும் மாட்டான்; காண விடவும் மாட் டான். பார்க்க நேரிட்டாலும் சுடுநெருப்பாக முகம் காட்டுவான். அத்தகையவனிடம் செல்வம் இருக்குமானால் அச்செல்வம் எச்செல்வம்? பேய் கண்ட-கொண்ட-செல்வம் என்கிறார் (565). அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து நல்லவை எவற்றையும் கண்ணாலும் காணேன்; காதாலும் கேளேன்; கையாலும் செய்யேன் என்னும் பிறப்புகளிடமும் செல்வம் சேர்ந்து விடுதல் உண்டு. அச்செல்வம் என்ன பயனைச் செய்யும்? நல்லவர்கள் வறுமை என்பது பிறர்க்கு உதவ முடிய வில்லையே என்னும் ஏக்கமே! தமக்கு இல்லையே என்ற ஏக்கம் அவர்க்கு இல்லை! அத்தகையர்க்குப் பொருள் இல்லாமை குமுகாய நலக்கேடு, முன்னவனுக்குப் பொருள் சேர்ந் திருப்பதோ குமுகாயத்திற்கு மிக மிகக்கேடு. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (408) நன்றியில் செல்வம் நல்லோர் செல்வம் நலம் செய்யும்; பண்பாளர் செல்வம் பயன் செய்யும். அல்லோர் செல்வம் என்ன செய்யும்? என்ன செய்யும் என்பதைக் கூறினாரே வள்ளுவர். அவர் கொண்ட செல்வம் பற்றியது வருவது. அளவுக்கு மிஞ்சிய பொருள் கணக்கிடவும் முடியாப் பொருள். வைக்குமிடமெல்லாம் போதாத அவ்வளவு பெரும் பொருள். அந்நிறைந்த பொருளை உண்டானா? உடுத்தானா? உதவினானா? பார்த்தே செத்தான்! அப்பொருட் பயன்தான் என்ன? (1001) வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருக்கிறான்; நாளும் பொழுதும் எண்ணுகிறான்; வைக்கிறான்; எடுக்கிறான்; எண்ணு கிறான். இதனை ஓர் ஏழை பார்த்தான். அவனுக் கொரு நிறைவு. இல்லாத ஏழை நான்; இருந்தும் ஏழை இவன் என எண்ணினான். இவன் பொருள் என்றால் எதற்காவது பயன்படுத்துவான். பயன்படுத்துவதே இல்லை! என் பொருளாகவும் இல்லை. நான் பயன்படுத்தவும் இயலாது. அவ்வாறானால் எங்களுக்குள் என்ன வேறுபாடு? எதுவுமில்லை! அவன் அதனை என்பொருள் என்று எண்ணிக் கொண்டே (கணக்கிட்டுக் கொண்டே) இருக்கலாம். நானும் என் பொருள் என்றே எண்ணிக் கொண்டு (நினைத்துக் கொண்டு) இருக்கலாம்! இருவரும் தாம் பயன்படுத்தப் போவ தில்லையே! இது நாலடிச் செய்தி. பொருள் இருக்கிறது! பொருளால்தான் எல்லாம் என்னும் எண்ணமும் வந்து விடுகிறது. பொருள் வேண்டுவது தான்! பொருளே குறியாகிவிட்டால், அப்பொருள் பயன் கொள்ள வாராதே! நூற்றுக்குமேல் ஊற்று எனத் தேடுவது சரிதான். ஆனால், மண்டையை உடைத்தாலும் கூடிக் கொள்ளும், நூறு உருபாத் தாளை மாற்றி விட்டால், கூடவே கூடாது என எண்ணினால், அந்நூறால் ஆகும் பயன் என்ன? தேடித் தான் ஆவதென்ன? சேர்ந்துதான் ஆவதென்ன? எவனிடானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே!அதற்காக அடித்துக் கொள்வானேன்? இத் தகைய கருமிப் பிறப்பு, பிறப்புக்கே இழிவு (1002)! பொருளான்ஆம் எல்லாம் என்றீயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு சிறந்த முயற்சியாளி; தேடத் துடிக்கிறான்; தேடிக் கொழிக் கிறான்; தேடியவற்றை வெளியே விடுவது இல்லை. உள் வாங்கும் புதைகுழியென வாங்கி வைத்துக் கொண்டுளான். பொருட் பயனாம் நலமோ, புகழோ அவன் உள்ளத்தில் இல்லை. இத் தகையான் இருப்பது நிலத்துக்குப் பாரமே! அவன் தேடி வைத்த பொருள் தானும் நிலத்துக்குப் பாரமே. ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப்பொறை. (1003) ஒருவன் தானிருக்கும் இடத்திலேயே எத்தனை நற் பணிகளைக் காண்கிறான். பள்ளியைக் காண்கிறான்; மருத்துவ மனையைக் காண்கிறான்; பொது மன்றங்களைக் காண்கிறான்; பொழுது போக்குக் களங்களைக் காண்கிறான்; நூலகம் படிப் பகம், பூங்கா, தண்ணீர்ப் பந்தல், நிழற்குடை. என எவ் வெவற்றையோ காண்கிறானே! அவற்றை எல்லாம் உண்டாக்கி யவர்கள் இன்று உயிரோடு இருக்கவா செய்கிறார்கள்! பயன் படுத்தவா செய்கிறார்கள்? அவர் இன்றும் இருக்கும் அடை யாளச் சான்றுகள் அல்லவோ இவை? இவற்றைப் பயன் கொள்ளும் நான், நானாக அறியவில்லை எனினும் அவர்கள் செய்து காட்டியவற்றைக் கண்டாவது அத்தகைய எச்சங்கள் நான் செய்யவேண்டும் என எண்ணிச் செய்ய வேண்டாமா? எதுவும் செய்யாமல் பணத்தைப் பார்த்தே சாகப் போகும் இவன் தனக்குப்பின் தானிருந்தற்கு அடையாளம் என என்ன தான் வைத்து விட்டுப் போவானோ! அறியோம்! என்று நீள நினைந்த நினைவின் வெளிப்பாடாகப் பிறந்த குறள் போலும், எச்சமென் றென் எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்? (1004) என்பது. ஒரு சங்கைத் தட்டினால் சிறுசிறு சிதறல்களாகும். அச்சிதறல்களுக்கு நூறு என்பது பெயர்; அதனைக் கோட்டு நூறு என்பர். கோடு-சங்கு; நூறு-தூள். அந்நூறு, பல என்னும் எண் குறிக்க நின்றது. அயிரை என்பது சிறுமீன்; அயிர் என்பது குறுமணல். அயிரம் என்பது மிகப்பல என்னும் எண்குறித்து ஆயிரம் ஆயிற்று. இலங்குதல், விளங்குதல், இலக்கம் என்பதும் அது. அதுவும் பேரெண்ணுக்கு ஆயிற்று. கோடி என்பது கடைசி. கடை கோடி என்பதும் அது. அக் கோடியும் ஒரு பேரெண்ணாயிற்று. வள்ளுவர் கோடியும் கூறுவார்; அடுக்கிய கோடியும் கூறுவார். எழுபது கோடி எனவும் குறிப்பார். பத்தடுத்த கோடி எனவும் சுட்டுவார். ஒரே ஒரு புதுத்துணி கொடுத்தால் அதனைப் பெற்ற மகிழ்வால் கோடி எனக் கொள்வது இயற்கை. கோடிக்குப் புதிது, தேயாதது முதலிய பொருள்கள் வந்தன. இக்காலத்தில் கோடி தேடல் எளிது! பெரு நகரில் சரியான இடத்தில் பாழ்பட்டுக் கிடக்கும் சிற்றிடம் இருந்தால் போதும்! அது கோடி தந்து விடும்! அந்நாளில் இலக்கம் தேடியவன் அதிபதி எனப்பட்டான். கோடி தேடியவன் ஈசுவரன் எனவே பட்டான். அப்படி அடுக்கிய கோடியைத் தேடியவன் ஒருவன். அவன் கொடுப்பதும் அறியான்; தான் நுகர்வதும் கொள்ளான். அவன் கோடிப்பணத்துக்கும், கோடிப் பாம்புக்கும் என்ன வேறுபாடு? பணம் என்பதற்குப் பாம்பு என்பதும் ஒரு பொருள். கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் (1005) இல் என்பது என்ன? இல்லாத வறுமையன் என்பதேயாம் வள்ளுவர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்துவற்றுள் எல்லாம் தலை என்றவர் (322). அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி என்றவர், அவ்வாறு அற்றார் அழிபசி தீரப் பெறாமையால், நேற்று, தவறாமல் வந்து கொன்று விட்டுப் போனது போன்ற வறுமை இன்றும் வருமோ? என இரவுப் போதே வறுமையன் வருந்திக் கிடத்தலை உரைத்தவர் (1048) நெருப்பினுள் கண்ணை மூடுதலும் முடியாது என்று அவன் நிலைக்காகத் தாம் வருந்திக் கூறியவர் அவர் (1049) ஆதலால், பயன்படும் செல்வம் பாழாய்க் கிடக்கிறதே என வருந்தி மேலே மேலே செல்கிறார்; சொல்கிறார். தான் நுகராதவனாகவும் தக்கவர்க்கு ஒன்று கொடுக்கும் இயல்பு இல்லாதவனாகவும் இருப்பவன் பெற்றுள்ள பெரிய செல்வம் உலகுக்கு அமைந்த நோயேயாகும். (1006). ஏதம் பெருஞ் செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான் எல்லா நலங்களும் பெற்ற பெண்மணி. எனக்கு வாய்க்க மாட்டாளா? எனக்கு வாய்க்க மாட்டாளா? எனக் காளையர் போட்டியிட்டு விரும்பும் கட்டழகி. எம் வீட்டு மருமகளாக வர நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்று ஏக்கத் துடன் நோக்கும் காளையைரைப் பெற்ற பெற்றோர். அவளை எவன் மணங் கொள்ளப் போகிறானோ. அவன் பேற்றாளன் என ஒத்த வயது நங்கையர் உரையாடும் நலத்தி. அவளைத் தக்கோனுக்கு வாழ்க்கைப் படுத்திக் குடி விளங்கச் செய்தல் இல்லாமல், வாழையடி வாழையாக வழி முறை தொடர வைக்காமல் மணங் கொள்ளாமலே மூப்படைய விட்டு விட்டால், அச்செயல் எது போன்றதாம்? தேவைப்பட்டவர்க்கு உதவும் அத்தேவைப் பொருள், தனக்குத் தேவைப் படுத்திக் கொள்ள வேண்டாமல் இருந்தும் அதனை அவர்க்குக் கொடுக் காமல் வைத்து இருப்பது போன்றது என்கிறார். (1007) அவள் வாழ்க்கைக்குத் தகாதவளோ, விரும்பாதவளோ அல்லள் என்பாராய் மிக நலம் பெற்றாள் என்கிறார். அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று ஒருமரம்; பழமரமன்று; நிழல் மரமும் அன்று; முள் மரமும் அன்று. காற்றுப்பட்டாலே மயங்கி விழ வைக்கும் நச்சு மரம். அம்மரம் இலை தழைகளுடன் நிற்பது மட்டுமன்று; பூவும் பூத்து, காயும் காய்த்துப் பழமும் ஆகி நிற்கிறது. நிற்பதும் காட்டிலா? எட்டாத் தொலைவிலா? இல்லை! ஊர் ஓரத்தும் இல்லாமல் ஊர் நடுவில். அந்த நச்சுமரத்தின் கேடு ஊர்க்கு எத்தனை வகைகளில் உண்டாம். அப்படி ஒரு மாந்த நச்சுமரம் உண்டு. அம்மரம் எவராலும் விரும்பப்படாதவன். அங்கே யுள்ளது நச்சுப்பழம். இங்கேயுள்ளது நஞ்சன் பணம். நஞ்சன் பணம் எனலாமா? எனலாம். இவன் பணம் ஊரை அச்சுறுத்த, அடிக்க, கெடுக்க, எரிக்க அமைந்த பணம். அம்மரக் காற்றுப் படுதல் என்பதோ அடுத்துச் சென்றால் தான். சென்றார்க்குத்தான். இந்நஞ்சனோ தேடி வந்தே கெடுப்பான் கேடு; புரிவான்; தானே வந்தும் செய்வான்; ஏவி விட்டும் செய்வான் (1008). நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத் தற்று இன்னொரு கருமி; அவன் உயிர் உள்ளவன் என்பதற்கு அது அடையாளமாகிய அன்புடையவன் அல்லன். உலைக்களத் துருத்தி இல்லையா? அது விடும் மூச்சும் மூச்சா. இவன் மூச்சும் அம்மூச்சு. உடல் எத்தகைய அரிய படைப்பு! எத்தகைய அருமைப் பொறித்திறம்! அதன் இயக்கத்திலும் செயற்பாட்டிலும் தாம் எத்தனை வியத்தகு தன்மைகள்! இவ்வுடலை மெய்யாக அறிய வேண்டாமா? போற்ற வேண்டாமா? தன் உடல் மேல் காதலும் காவலும் கொள்ள வேண்டாமா? இவன் தன்னை உணரானாய்த் தன்னை அழித்துக் கொள்ளும் சிறுமையன். மனத்துக்கண் மாசின்மை அறம்; மனமாசில்லா நிலை என்பதை இவன் என்ன அறிவான்? அழுக்காறும் (பொறாமை யும்) அவாவும் வெகுளியும் கொடுஞ் சொல்லுமே அறமெனக் கொண்டு பலப்பல குடிகளைக் கெடுத்துத் தேடிக் கொண்டவன்! இவன் தேடியது இவனுக்கு ஆகுமா? எப்படி ஆகும் இக் கருமிக்கு! பயன் படுத்தினால் தானே! பயன் படுத்த விட்டால் தானே! எவரோ கொண்டு போவார், இவனை எவரோ கொண்டு போன பின்னே! (1009). அன்பொரீஇத் தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் அதோ, ஒரு நல்லவர்; இருந்த பொருள், தேடும் பொருள் என்று பாராமல் தக்கோர்க்கும், தக்க வகைக்கும் உதவினார். இப்பொழுது வழங்கும் நிலையில் இல்லை! எவ்வளவு சிறிது இருப்பினும் இருப்பதில் பெரிதை வழங்கும் பேருள்ளம், சீருள்ளம் அவருள்ளம்! அவர்க்கு உண்டாகி உள்ள வறுமை அவர்க்கு உண்டாகியதா? இல்லை! வயலிலே பயிர் வாடிப் போய் நிற்கிறது! வானம் பார்த்துக் கொண்டு ஏங்கி நிற்கிறது. துளி துளியாகவாவது மழை விழாதா என எதிர்பார்க்கிறது. மழை பொழிந்தால் பயிர் செழிக்கும். அவர்க்கு வளம் வந்தால் ஊர் செழிக்கும். ஊரே வானம் பார்க்கும் பயிராக உள்ளது. அவர் வானமாக உள்ளார். பொருள் என்னும் மழைத்துளி வேண்டுமே அங்கே. இருந்தால் பொழிந்து விடுமே இங்கே (1010). சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் என்பது வெற்றி வேற்கை. செழுங்கிளை என்பது செழிப் புடைய சுற்றம் என்னும் பொருளதா? இல்லை. இங்குள்ள செழுமை மிகுதி என்னும் பொருளது. பெரிய சுற்றம் என்பதாம். வளமான சுற்றத்தைத் தாங்க வேண்டிய தென்ன? அது தாங்குமே தன் சுற்றத்தை? சுற்றந் தழுவல் சுற்றந் தழால் என்பது ஓர் அதிகாரம். தழால் என்பது தழுவுதல். தாய் தந்தையர், பெற்றோர்; உடன் பிறந்தவர், உற்றார்; பின்னே கொண்டும் கொடுத்தும் உறவானவர், உறவு; உறவினர்க்கு உறவாகவும், தாய்வழி தந்தை வழி வந்தவரும் சுற்றம்; நட்பு அன்பு என்பவர் சூழல். படிப்படியே விரிவு இவை. ஓரளவு வாய்ப்பு உடையவரும் உற்றார் உறவைப் பேணிக் கொள்வர். ஆனால் சுற்றம் தழுவுதல் வாய்ப்புடையார்க்கே இயல்வது. அதனால் அவர் அதனைத் தவிர்த்தல் ஆகாது எனக் கருதிய வள்ளுவர், சுற்றத்தார் சுற்றப்படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்றார் (524). அது செலவன்று; இழப்பன்று; பயன் என்பாராய், செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்றார். முற்காலத்தில் பெரு வழக்கமாகவும் இக்காலத்திலும் மறைந்து படாமலும், வளவு : வளசல் (வளைவு, வளைசல்) என்று வழங்குவது சுற்றம் குறிப்பதே. பழங்காலத்தில் செல்வர் வாழ்ந்த வீடுகள் நகர் என்று வழங்கப்பட்ட வழக்கு பல்குடி ஒருங்கிருந்த இருப்புக் கருதிய பெயரீடேயாம். ஒரு செல்வர் வீடு; இரவும் அடுப்பு அணையாது, பகலும் அணையாது. அரித்தல் - ஆக்கல் - பொங்கல் - பொரித்தல் இடித்தல் புடைத்தல் என்பன எப்பொழுதும் நிகழும். மாறி மாறி ஆள்கள் வருவர்! அண்டா அண்டாவாக வேகும்; குண்டா குண்டாவாகப் போகும். சுற்றத்தார் உரிமை இல்லாச் சிலரும் இருப்பரே. அவர்க்கு வீட்டு வாயிலில் இருபெருங்கல் தொட்டிகள் உண்டு. அவற்றில் ஒன்றில் சோறு கொட்டி நிரம்பிக் கிடக்கும், மற்றொன்றில் குழம்பு கொட்டப் பட்டிருக்கும். வேண்டுவோர் வேண்டும் அளவு எடுத்துக் கொண்டு போகத் தடையில்லை. கேட்க வேண்டுவதும் இல்லை. ஆள் வந்து போட வேண்டும் என்பதும் இல்லை! இவ்வாறு ஊர் தழுவல் ஒப்புரவு! நிலப்பிரிவு இல்லை! சொத்துப் பிரிவு இல்லை! உணவுப் பிரிவும் இல்லை! ஊர்ப் பிரிவும் இல்லை! இற்றை நிலை-? பெரிய பெரிய உழவர்களெல் லாம் விழுந்து விட்ட நிலை! எப்படிப் போற்றுவர்? பற்றுதல் நீங்காத சுற்றம் அமையுமானால் குறை வில்லாத நலங்கள் எல்லாமும் உண்டாகும். (522) ஈதலும் இனியவை கூறலும் கொண்டிருந்தால் தொடர் தொடராகச் சுற்றத்தார் சூழ்ந்திருப்பர் (522). பெருங் கொடையனாகவும் சினமில்லானாகவும் இருந்தால் அவனுக்கு ஒப்பான பெருஞ் சுற்றமுடையவர் உலகில் இரார் (526); கா கா எனக் கூவுகிறார் ஒருவர்! சோற்றைப் போடுகிறார். அக்காக்கை ஊரைக் கூட்டுகிறது; உறவைக் கூட்டுகிறது. சுற்றந் தழுவுதலுக்குக் காக்கை சான்று. செல்வர்களாக இருப்பவர் காக்கை இயல்பைக் கொள்ள வேண்டும். அத்தன்மை போற்றுவ தற்கே அவர்க்குச் செல்வம் வாய்த்துள்ளது. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே உள (527) ஒப்புரவறிதல் சுற்றத்தாரைத் தழுவவல்ல செல்வர்க்கு ஒப்புரவு அறிதல் இயல்பாகி விடும். சுற்றந் தழுவலின் விரிவே ஒப்புரவு என்க. வாழப் பிறந்த அனைவரும் பிறரும் வாழப் பிறந்தவரே என உணர்ந்து தாம் கொண்டுள்ள நலங்களைப் பிறரும் ஒப்பத் துய்க்குமாறு செய்யும் செயலே ஒப்புரவாகும். நிலத்தில் மேடு பள்ளம் உண்டாகி இருக்கும். அவற்றை ஒரு சமனிலைப் படுத்தா விடின் பயிர்க்கு ஒரு சீராக நீர் செல்லாமல் வாடும்; பட்டுப் போகும். நிலத்தை நடவுக்கு முன்னரே ஒரு சமம் ஆகி விடச் செய்தலுக்கு ஒப்புரவாக்கல் என்பது இன்றும் வழக்கமாகவே உள்ளது. ஒப்புரவாளனின் செயல் மழைக்கு ஒப்பானது என்கிறார். அது போலவே ஊருணி, பயன்மரம், மருந்து மரம் என்று அவர் கூறும் உவமைகள் எல்லாம் ஒப்புரவுக்கு உயர்ந்த எடுத்துக் காட்டானவை. வாவிநீர் தென்றல் மதி இரவி பெய்யுமழை மேவு நீர்ச்சாலை விவேகிநிதி என்பவை எல்லாம் ஒப்புரவுப் பொதுமையன என்பதொரு தனிப்பாட்டு. இனி வள்ளுவர் கூறும் ஒப்புரவைக் காணலாம். மழை பொழிகிறது. அப் பொழிவுக்கு, இவர்க்கு என்றோ, இன்ன இடத்துக்கு என்றோ, இவ்வளவுக்கு என்றோ, இதற்காக என்றோ எண்ணிப் பெய்தது உண்டா? பொழிதல் அதன் இயற்கை. எதையாவது எதிர் நோக்கிப் பொழிகின்றதா? கைம்மாறு வேண்டும் நிலையே அதற்கு இல்லை. அம்மழையைப் போன்றவர் ஒப்புரவாளர். அவர்க்கு இன்னார், இனியார் எனல் இல்லை. இவ்வளவு எனல் இல்லை. ஏன் எனல் இல்லை. எதையாவது எதிர் நோக்கும், நோக்குதலும் இல்லை (211) கைம்மாறு வேண்டாக் கடபாடு மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு ஒப்புரவாளர் என்பார் ஓயா முயற்சியாளர். கொழுந்து விட்டு எரியும் எரிபோல விரைந்து கடனாற்ற வல்லவர். நீருள் மூழ்கிக் கிடந்து மூச்சுத் திணறுபவன் வெளிப்பட விரும்பும் விருப்பம் போலக் கடனாற்ற வல்லவர். அப்படிக் கடனாற்றுதலும் பிறர்க்கு எவ்வெவ்வாறெல்லாம் உதவலாம்-உதவும் என்பதற் காகவே கொண்டவர். அவர் தேடுபவை எல்லாம் பிறர்க்கு உதவுதற்கே என்ற திட்டமுடையவர் (212) தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு புதுமை, புதுமை என வேற்று நாட்டவர் நடைமுறைகள் பலவற்றைக் கூறுகின்றனர். எழுதியும் வைத்துளர். இங்கும் நாட்டு நடைமுறை என எவ்வளவோ சொல்லப்படுகின்றன. எழுதவும் படுகின்றன. எனினும் என்ன? ஒப்புரவு எனப்படும் பொதுச் சமநிலைக்கு ஒப்பான நல்லது ஒன்றை இவ்வுலகம் கண்டது இல்லை. (213) புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற உயிர் வாழ்பவன் என்பவன், பிறர் உயிர் வாழவும் செய் பவன்! தானே உயிர் வாழ்தல் வேண்டும் என்பதா? பிறகும் வாழ வேண்டும்; அக்கடமைக்காகத் தானும் வாழ வேண்டும். என்று கருதுபவனே ஒப்புரவாளன். அவனே உயிர் வாழ்பவன்; மற்றவன் செத்தவருள் சேர்ந்தவன் (214) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் உயிரோடு இருக்கும் போதே செத்தவனா? தத்தம் கடமையைச் செய்யாத பொறி, பொறியாகாது என்பது வள்ளுவம் அல்லவோ? (9). உலகவர் பாராட்டும் உயர்பேர் அறிவாளன். அவனிடம் செல்வமும் நிரம்பி வழிகின்றது. அச்செல்வம் எத்தகையது? ஊருணிநீர் நிறைந்தது போன்றது அது. ஊரார் பருகுதற்குப் பயன்படும் நீரையுடையது ஊருணி. ஊருணி நீர் என்பது பாதுகாக்கப்பட்ட நீர். அதில், கலம் கழுவார்; குளியார்; உடை தோயார்; மாடு குளிப்பாட்டார். அச்செயல்களுக்குப் பயன்படுவது ஊருணி. ஊர்க்கு அணித்தாக இருப்பது. நீருண்ணும் குளத்தின் தூய்மை பேணல் ஒருவர் கடனா? ஊர்க்கடன்! அதற்கு நீர் வரவேண்டும், அதன் வழிகள் அடைபடாமல் தடைபடாமல் வரவேண்டும் எனக்கடனாற்றல் ஒருவர் கடனா? ஊர்க்கடன்; நீர் பெருகிக் கிடந்தால் மகிழ்வதும், நீர்வற்றிப் போனால் கவலைப்படுவதும் ஒருவர்க்குரியதா? ஊர்க் குரியது! ஒப்புரவாளன் உடைமை, அவனொருவன் உடைமையா இல்லையா? ஊர்ப்பொது உடைமை! அதன் ஆக்கமும் அழிவும் வளமும் வறட்சியும் ஊர்ப் பொதுவுக்கே (216) ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு நச்சுமரம் ஊர் நடுவே பழுத்ததைக் கண்டோம்! இதோ ஒரு நன்மரம்! பயன்மரம்! பழமரம்! பழுத்துக் குலுங்குவதும் ஊர் நடுவே. தேடியலைய வேண்டியதில்லை. நிழலும் தரும். பழமும் தரும், உடலுக்கு நலம் செய்யுமா? தீது செய்யுமா? ஐயப்படுதற்கு இடம் இல்லாமல், சுவைத்துச் சுவைத்து ஊர் திளைக்கும் மரம். ஏறிப் பறிக்க இடரில்லை; தோட்டியால் பறிக்கவும் வழி வுண்டு எவரிடம் கேட்க வேண்டும்? எப்பொழுது கேட்க வேண்டும்? எதுவும் வேண்டியதில்லை. தேவைப்படும் போது பறித்துக் கொள்ளலாம். பிறர்க்கும் தேவைப்படுமே என்னும் எண்ணத்தால் சுருக்கிக் கொள்ளலாமே அன்றி அம்மரத்திற்காக வேண்டுவதென்ன? என்னிடம் உள்ளவை எல்லாமும் ஊர்க்கே என்பது தானே அப்பிறவி நோக்கு! அதன் வாழ்வும் - தாழ்வும் அதற்கென்ன? ஊர்ப் பொதுவுக்கே.(216) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் இதோ இன்னொரு மரம் இது மருந்து மரம்! ஆம் வேப்ப மரம் போலும் மரம். அதன் காற்றுப்படுதலும் மருந்து. இலையும், பட்டையும், வேரும், குச்சியும் மருந்து. வெப்பு நோய்க்கு இணையற்ற மருந்து. பழத்திற்கு மட்டுமா அம்மரம்! நிழலுக்கு அது! நிலைக்கு அது! பல்துலக்குதற்கு அது! வேது பிடிக்க அது! அரைத்துக் காப்புப்போட-குளிக்க அது! இன்னும் இன்னும் அது! வேப்பம் பழம் கசக்குமா? காய்க் கசப்பு, பழுத்தால் எப்படி மாறிப் போகிறது! விந்தையினும் விந்தை! அதன் எண்ணெய் எத்தனை நோய்களுக்கு மருந்து? ஊருணியில் நீர் இருந்தால் தான்! பழமரம் பழுத்தால் தான்! இம்மருந்துமரம் பிறந்த நாள் தொட்டு, முடியும் நாள்வரை இடையற்ற பயன்பாடு! எல்லாவற்றாலும் பயன்பாடு. அறிவாளன் செல்வம் ஊருணி நீர்; நயனுடையான் செல்வம் பயன் மரம்; பெருந்தகையான் செல்வம் மருந்து மரம். ஊர்காக்கும்-ஊர்ப்பொதுகாக்கும் மூவரும் வாழ்க! மூன்றும் வாழ்க! ஏன்? ஊர்வாழ! உலகு வாழ (217) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் தம்மிடம் வாய்ப்பு இருக்கிறதா; இல்லையா? உள்ளதை, உரியதை விற்றும் உதவுதலைக் கடமையாகக் கொண்டவர்க்கும் இருப்புக் கருத்தும் இல்லை! எடுப்புக் கருத்தும் இல்லை இறைக்க ஊறும் மணற்கேணி என்பது அவர்கள் கொள்கை (218). இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் ஒப்புரவாளனுக்கு வறுமை என்பது என்ன? உண்ண இல்லையே! உடுக்க இல்லையே! கஞ்சிக்கு என்ன செய்வோம்! கந்தைக்கு என்ன செய்வோம் என்பதா? இல்லை! உதவுதற்கு இயலவில்லையே! உதவி செய்யாமல் இருப்பதற்கு உள்ளம் இடந்தர வில்லையே! என்ன செய்வோம்? என்னும் ஏக்கமே வறுமையாம் (219) நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர செய்யாது அமைகலா வாறு ஒப்புரவாளன் அவ்வொப்புரவுக்காக என்ன செய்வான்? விற்கக் கூடாதவற்றையும் விற்பான். உடல் என்பது உயரிய முதல் அல்லவா! அம்முதல் இருக்க, ஊதியம் இல்லாமல் போகுமா? ஆதலால் உடலே ஊதிய இருக்கையாய் வைப்பகமாய்க் கருதி ஒப்புரவாளன் தன்னை விற்றும் பிறர்க்கு உதவுவான்! அக்கேடு கேடா? கோடி கோடி தந்தும் வாங்கிக் கொள்ள வேண்டும் தகுதியுடையதல்லவா (220) ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக் கோள் தக்கது உடைத்து ஒப்புரவும் ஈகையும் தெருவிளக்குப் போடுவதும் வடிகால் தூய்மை செய்வதும், குடிநீரில் மாசு சேராமல் காப்பதும், தொற்று நோய்த் தடுப்பு ஊசி போடுவதும் போன்றவை ஒப்புரவு. ஒவ்வொருவர் உடல்நிலை, உளநிலை, வயது நிலை, தேவை நிலை என்பவற்றைப் பார்த்து உணவும் மருந்தும் வழங்குவது போன்றது ஈகை. முன்னது பொதுநலம் போற்றுதல் பின்னது தனிநலம் பேணல். இரண்டும் ஒன்றாகிக் கைகோத்துக் கொண்டு செல்லும் நிலையும் உண்டு. தனித்தனித் தேவையர் ஒரு கூட்டாகப் பெற் றால் ஈகை ஒப்புரவாகிவிடும். ஈகை இல்லார்க்கும், தேவை இருப்பார்க்கும் அவர் தேவை அறிந்து கொடுப்பதே கொடை, இருப்பார்க்கும் தேவை இல்லார்க்கும் கொடுப்பது திருப்பிப் பெறும் நோக்கு உடையதாகும் (221) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து ஈந்தால் இன்னது கிடைக்கும் என்று எண்ணாமல் கொடுப்பவனே ஈகையாளன் (222). இவன் இல்லாதவன் என்னும் சொல்லையும் சொல்லாமல், ஈயும் ஈகையே ஈகை (223). ஒருவர் நல்ல தன்மை என எவையுண்டோ அவற்றை எல்லாம் அழிக்கும் பசியை அழிக்கும் கொடையே உயர் கொடை. அக்கொடை பொருள் இழப்பன்று; பொருட் காப்பு ஆகும். அப்பசி தீர்ந்தான் உலகுக்கு ஆக்கும் நலப்பாடுகள் எல்லாமும், பசி தீர்த்தான் ஆக்கிய நலப்பாடுகள் ஆகிவிடும் அல்லவா (226) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி தன்னிடத்துள்ள உணவைப் பகுத்துண்ணும் வழக்க முடையவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் நெருங்காது (227) பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது தம் பொருளைப் பிறர்க்கு உதவாமல் வைத்துப் பிறர் கவர்ந்து கொள்ள இழக்கும் கொடியவர், ஈதலால் அடையும் இன்பம் ஒன்று உண்டு என்பதை அறியவும் மாட்டாரோ? (228). தாம் தேடியதைத் தாமே நிரப்பி வைத்துக் கொண்டு உண்பதற்கும், இரப்பெடுத்து உண்பதற்கும் என்ன வேறு பாடு? (229). இறப்புத்துயர் கொடியதே! எனினும் ஈதற்கு முடியா நிலை யில் இறப்பும் கூட இனிப்பாக அமைந்து விடுமே! (230). வாழ்வுப் பேறு என்பவை எவை? (249) வசை ஒழிதல் இசை பெறல் என்பவை வாழ்வுப் பேறுகள்! உயிர்க்கு ஊதியமாவது ஈதலும் இசைபட வாழ்தலுமே என்றும், பல நிலைப்பட உலகத்தில் ஒரு நிலைப்பட்ட புகழே அல்லாமல் நிலைப்பது ஒன்றில்லை என்றும் புகழ் வள்ளுவம் புகலும் (231, 233). சங்கைச் சுடச்சுட வெண்மை பளிச்சிடும்; புகழ் வளர வரும் வறுமை அத்தகையதே; சிலர் எய்தும் இறப்பு, நினைவினை விட்டு அகலவே அகலாது! இவை புகழாளர்க்கு வாய்ப்பவை (235). நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது ஒப்புரவு என்றும் ஈகை என்றும், இருப்பவற்றை எல்லாம் இழந்து தம்மை நம்பி இருந்தவரைத் தெருவில் நிற்கச் சொல் கிறதா வள்ளுவம்? இல்லை! ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் நாடும் வள்ளுவம் வீட்டை மறந்து விடுவது இல்லை! வீட்டைக் காவான் உலகைக் காவான் என்ற தெளிவுடையது அது. செய்யத் தக்க முறையால் தம் பொருளின் அளவை அறிந்து உதவுதல் வேண்டும். அதுவே பொருளுக்கு அழிவு வராமல் போற்றிக் கொண்டு பிறர்க்கு உதவும் முறை என்கிறது வலியறிதல் வள்ளுவம் (477) ஆற்றின் அளவறிந்து ஈக, அதுபொருள் போற்றி வழங்கும் நெறி தன்னிடத்து உள்ளதாம் பொருளின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போலப் பளிச்சிட்டு இல்லாததாய் மறைந்து விடும் என மேலும் வலியுறுத்துகிறது (479). அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் தன்னிடத்துள்ள பொருளின் அளவை அறிந்து பாராமல் ஒருவன் செய்யும் உதவியால் அவன் பொருளின் அளவு மிக விரைவிலேயே அழிந்து போகும் என மீண்டும் வலியுறுத்து கிறது (480). உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் வாழ்வை அழித்துக் கொண்டு பிறரை வாழ வைக்க ஏவுவதன்று வள்ளுவம். வாழ்வைக் கருத்தாக வைத்துக் கொண்டு பிறரையும் வாழ வைப்பதே வள்ளுவ நோக்காம். சிறந்த செல்வமுடையவர், பிறர்க்கு இல்லாத வாய்ப்பு தமக்கு இருப்பதை எண்ணிப் பெருமிதம் உடையவராய்ப், பிறந்த பிறவிப் பேற்றை வழிவழிப் பிறப்புக்கும் வைத்துச் செல்வ தன்றோ கடப்பாடு! 16. நல்ல சான்றோராக சான்றோர் சான்றோர் என்பது பெருவழக்குச் சொல். அதன் பொருள், மிக விரிவுடையது. சால்பு என்பது நிறைவு, மிகுதி என்னும் பொருளுடையது. பண்பு என்பதனையும் அது குறிக்கும். சால என்பது மிக என்னும் பொருளது. சால்பு என்பதன் வழிவந்த சொல் சான்றாண்மை. சால்பை ஆளும் தன்மை சான்றாண்மை. அதனை ஆளுவார் சான்றோர். சங்கப் புலவர்கள் சங்கச் சான்றோர் என வழங்கப்படுதல் நினைக்கத் தக்கது. சான்றோர் என்பதற்கு எதிர்ச் சொல் சாலார் என்பது; சால்பிலார் என்னும் பொருளது. சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே என்பது புறநானூறு. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்னும் புறநானூறு (312) சான்றோன் என்பதற்கு வீரன் என்னும் பொருள் தருதல் அறியலாம். அவ்வாறே வீரப் பொருள் தரும் சான்றுகள், பழைய இலக்கியங்களில் நிரம்ப உள்ளன. பண்பாளர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. நற்பண்புகள் எல்லாம் நிரம்புதல் என்னும் பொருளி லேயே திருவள்ளுவர் சால்பு, சான்றாண்மை ஆகியவற்றை வழங்குகிறார். வீரம் என்னும் பொருளும் கொண்டார் என்பதும், அறிய வருகின்றது (985, 986). ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69) எனத் தன்னைப் பெற்ற அன்னையின் தனி மகிழ்ச்சிக்கு இடமாக இருப்பது அம்மகன் சான்றோன் என்று பாராட்டப்படுதலே என்பது, சான்றோர் சிறப்பை நன்கு வெளிப்படுத்துவதாம். நடுவு நிலைமை தவறாதவர் சான்றோர் என்பதை வள்ளுவர் கூறுகிறார். வறுமையும், வளமையும் வாழ்வில் காணாத புதுமைகள் அல்ல. அவற்றைக் கருதி மனத்தில் நடுவு நிலை தவறாது இருத்தலே சான்றோர்க்கு அழகாகும் என்கிறார் (115). கேடும் பெருக்கமும் இல்லல்ல, நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி மேலும், முதற்கண் சமமாக நின்று பின் தன்னிடத்து வைக்கப்பட்ட பொருளின் எடையைச் செம்மையாகக் காட்டும் நிறை கோல் (தராசு) போல், ஒரு பக்கம் சாயாமல் நடுவு நிலையோடு இருத்தல் சான்றோர்க்கு அழகாகும் என்கிறார் (118). சமன்செய்து சீர்தூர்க்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி சான்றோர் பிறன்மனை விரும்பார் என்பதைச் சுட்டுகிறார். சான்றோர்க்குப் பிறன்மனையை விரும்பாத பெருந்திறம் அமைந்திருத்தல் அறம் என்பது மட்டுமன்று; அதுவே அவர்கள் சிறந்த ஒழுக்கமும் ஆகும் (148). பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு சான்றோர் பயனிலாச் சொல்லைச் சொல்லார் என்பதையும் குறிக்கிறார். சான்றோர் பிறர் விரும்பிக் கேட்கும் சுவை நயமிக்க சொற் களைச் சொல்லாதவர் ஆயினும் ஆக. ஆனால் அவர் பயனில்லாத சொற்களைச் சொல்பவராக இருத்தல் நல்லதன்று (197). நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று சான்றோர் பொய்யுரையார் என்பதையும் புகழ்கிறார். ஒளிதரும் விளக்குகள் எத்தனையோ உள்ளன. அவை யெல்லாம் விளக்குகள் எனப்படுவன அல்ல. சான்றோர்க்குப், பொய் கூறாமை என்னும் விளக்கே இணையில்லா விளக்காகும் (299). எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு கொல்லாமை சான்றோர் பண்பு நலமாவதைக் குறிப் பிடுகிறார். ஓர் உயிரைக் கொல்லுதலால் எண்ணற்ற நலங்கள் கிடைக்கும் என்றாலும், சான்றோர்க்கு அக்கொலையால் ஏற்படும் நலங்கள் மிகக் கீழானவையேயாம். சான்றோர் என்பதை மாற்றிக் கொலைஞர் என்று ஆக்கி விடுகின்றது அல்லவா! (328). நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை சான்றோர் சிற்றினம் சேரார் என்பதைத் தெளிவிக்கிறார். மனநலங்கள் பலவும் நன்றாக அமைந்தவர் என்றாலும், சான்றோர் சிற்றினத்தினரைச் சேராதவராக இருத்தல் வேண்டும். அவர் போலும் சான்றோர் கூட்டுறவுடன் இருப்பதே அவர் மன நலத்திற்கு மேலும் மேலும் நலமாக அமையும் (458). மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து சான்றோர் செயல் தூய்மையாளர் என்பதை வினைத் தூய்மையில் விளக்குகிறார். தன்னைப் பெற்றவள் பசித்துக் கிடக்கும் கொடுமையை ஒருவன் தன் கண்முன்னே காண்பான் எனினும் அதனைப் போக்குவதற்காகச் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்தல் ஆகாது. (ஏனெனில், சான்றோர் புகழும் பேற்றுக்கு உரியவ னாகத் தன் மகன் இருக்கிறான் என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டவள் அவள்) (656) ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை பழி வழிகளில் சென்று அதனால் ஒருவன் ஈட்டிய செல்வம் செல்வச் சிறப்புடையது ஆகாது. அதனினும் அச்செயல் செய் தலைக் கனவிலும் கருதாத சான்றோர் கஞ்சியும், கந்தையும் கிட்டா நிலையராகக் கொண்டிருக்கும் கொடிய வறுமையே பெருமைக்குரிய தாகும் (657). பழிமலைந்து எய்திய ஆக்கத்தில் சான்றோர் கழிநல் குரவே தலை சான்றோர் என்பார் வழிவழி நட்பாக விளங்கும் பழை மையைப் பண்பொடு பாராட்டுபவர் ஆவர் எனப் பகர்கிறார். நட்பு என்னும் அழகிய வடிவுக்கு உறுப்புகளாக விளங்கு வன உரிமை நண்பர் செய்யும் நண்புச் செயல்களே. அவ்வுரிமைச் செயல்களுக்குச் சுவை சேர்ப்பவராக இருத்தல் சான்றோர் கடமையாகும். நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை, மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் பேதைமையுடையார் செல்வதற்கு நாணும் பெரு நிலை யது சான்றோர் அவை என்றும் குறிப்பிடுகிறார். பண்பாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோர் அவையில் அறிவிலி ஒருவன் புகுதல், தூயதல்லாததை மிதித்த காலைக் கழுவாமல் தூய்மை போற்றப்படும் இடத்தில் வைப்பது போன்றதாம் (840). கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழா அத்துப் பேதை புகல் சான்றோர் மதுவுண்டு மயங்குவாரைக் காணவும் நாணுவர் என்பதையும் நவில்கிறார். பேரன்பு அன்றி மாறிய அன்பு அறியா அன்னையும் தன் மகன் குடியன் என்பதை அறிந்த அளவில் முகத்தில் கடுகடுப்பும் வெறுப்பும் கொள்வாள் எனின், பண்புமிக்க சான்றோர் முகத் திற்கு அக்குடி எத்தகையதாகத் தோன்றும்? (923) ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி? குடியரைச் சான்றோர் மதியார் என்பதைக் காட்டியாவது அறிவுறுத்தித் திருத்தத் திருவள்ளுவர் விரும்புகிறார். அதனால், குடியரை நோக்கி, மயக்கும் குடி வகைகளைக் குடித்தல் வேண்டா; குடித்தே தீருவேன் என்றால் குடியுங்கள்; ஆனால் உங்களைச் சான்றோர் ஒரு பொருளாக எண்ணவே மாட்டார் என்கிறார். உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார் (922) சான்றாண்மைச் சிறப்பை இரவச்சத்திலும் கயமையிலும் கூட நினைவு கூர்ந்து உரைக்கிறார் வள்ளுவர். வறுமையைத் தீர்த்துக் கொள்ள வழி எதுவும் இல்லாத நிலையிலும் மானம் கெடப் பிறரிடம் இரந்து கேட்டலை மேற் கொள்ளுதல் இல்லாத சான்றாண்மை, உலகு என்னும் இப் பரந்த இடத்தளவிலும் அடங்காத பெருமையுடையதாகும். (1064) இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடதுமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு இஃது இரவச்சத்தில் வரும் சான்றாண்மை, கயமையில் வரும் சான்றாண்மைச் சீர் வருமாறு: ஒரே ஒரு சொல், சொல்லிய அளவிலேயே நன்னெறி போற்றி நயம் செய்வர் சான்றோர்; ஆனால் கயவரோ, கரும்பை ஆட்டிப் பிழிவது போல் வருத்தினால் தான் சொன்னதைக் கேட்டுச் செயல் படுவர் (1078) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் இதுவரை கூறப்பட்டவை சான்றாண்மை குறித்த வள்ளுவச் சிதறல் துளிகள். அடை மழையெனச் சான்றாண்மை பொழியப் பட்ட அதிகாரங்கள் ஆறு. அவை, குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை என்பன. குடிமை தாயைப் போல் பிள்ளை நூலைப்போல் சீலை தந்தை அறிவு மகனறிவு என்பன பழமொழிகள். இவை பிறந்த குடிக்குத் தக்க பிறவி என்பதைக் காட்டுவன. குடி என்பது குடும்பம்; சாதி யன்று; குலமும் அன்று. குடும்பத்தையும் குடும்பத்து முன்னோரையும் அவர்தம் பண்பாட்டையும் குறித்து வருவது குடிமையாகும். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடத்து அல்லாமல் மற்றவர்களிடத்து, நடுவு நிலைமையும் பழிக்கு நாணும் தன்மையும் ஒருசேர இயல்பாக அமைவது இல்லை. (951) இற்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு உயர் குடியில் பிறந்தவர் எந்நிலையிலும் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய இந்த மூன்று தன்மைகளில் இருந்தும் தவறி நடக்க மாட்டார் (952) ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் சிறந்த நற்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, கொடைத் தன்மை, இனியவை கூறல், பிறரைப் பழித்துரையாமை என்னும் நான்கு இயல்புகளும் சீராக அமைந்திருக்கும் என்பர் (953) நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு கோடி, கோடி என அடுக்கிச் சொல்லப்படும் பல கோடிச் செல்வம் வருவதாக இருந்தாலும் அச்செல்வத்தைப் பெறுவதற்காகத் தாம் பிறந்த குடிப் பெருமைக்குக் குறைவு வருமாறான செயலை நற்குடிப் பிறந்தோர் செய்ய மாட்டார் (954) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் மிகப்பழைமையான பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர் தாம் வைத்திருந்த செல்வம் எல்லாம் இழந்து சுருங்கி விட்ட நிலையிலும், தம் கொடைத் தன்மையில் இருந்து நீங்குதல் இல்லை. (955) வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று தாம் பிறந்த நற்குடி இயல்புக்குத் தக வாழ்வோம் என்பவர் போலியாக உண்டாகும் ஆரவாரத்திற்கு ஆட்பட்டுத் தம் குடிக்குத் தகாத செயல்களைச் செய்ய மாட்டார் (956) சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார் நற்குடிப் பிறந்தாரிடத்துத் தோன்றும் சிறு குற்றமும், வானத்து விளங்கும் முழுமதியில் தோன்றும் கறை போலப் பலரும் வெளிப்பட அறியும் வகையில் தோன்றிவிடும். வெள்ளைச் சுவரில் பட்ட கறை போல என்பது உலக வழக்கு (957) குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து பெருமக்கள் மதித்துப் போற்றும் நல்லவற்றில் ஒருவ னுக்குப் பற்றுதல் இல்லாமை தோன்றினால் அவன் பிறந்த நற்குடிப் பிறப்பை உலகோர் ஐயப்படுவர். ஒருவன், நன்றியறியாத் தன்மை குடிப்பழியாம் என்பது இது (958) நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் ஒரு நிலத்தின் உழவு, உரம், வளம் என்பவற்றை அந்நிலத்து முளைத்த முளை வெளிப்படக் காட்டி விடும்; அதுபோல் நல்ல குடியில் பிறந்தவர் பண்பாட்டு இயல்பை அக்குடியில் பிறந்தவர் சொல்லும் சொல்லே காட்டி விடும் (959). ஏனெனில், ஒழுக்க முடையவர்களால் முயன்று சொல்ல வேண்டும் என்று எண்ணி னாலும் இழிந்த சொல்லைச் சொல்ல இயலாது என்பது ஒழுக்கக் குறள் (139) நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் ஒருவன் தனக்கு நன்மையை விரும்புவனாயின் பழிக்கு நாணும் இயல்புடையவன் ஆதல் வேண்டும். அதுபோல் குடிப் பெருமை அடைய விரும்புவனாயின் எவர்க்கும் பணிவுடை யவன் ஆதல் வேண்டும் (960) நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு மானம் மானம் என்பது தன்மதிப்பில் குறையாத் தன்மை அது தன்னைத்தானே போற்றி உயர்த்திக் கொள்ளும் தன்மை. அடுத்து வரும் பெருமை என்பது மற்றையோரை மதித்துப் போற்றும் பெருந்தன்மையாகும். இவை இவ்விரண்டின் வேறு பாடு எனினும், நிலவும் ஒளியும் போலவும், மலரும் மணமும் போலவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியா உறவுடையவை. அதனால் தான் போற்றும் மானம் கூறிப், பிறரை மதிக்கும் பெருமை பின்னர்க் கூறப்பட்டதாம். பிறரை மதிப்பார்க்கு என்ன கிட்டும்! அம்மதிப்பே கிட்டுவதாம். இவை இல்லாமல் தீராது என்னும் சிறப்புடையவையே என்றாலும், அவற்றிலும் இன்றியமையாச் சிறப்புடைய மானம் குறையும் படியான செயலைச் செய்யாது விடுக (961) இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல். சிறப்பையும், சிறந்த உறுதிப்பாடாம் மானத்தையும் விரும்புவர் சிறப்பினும் சிறப்பு அல்லாத செயலைச் செய்ய மாட்டார். ஏனெனில் மானமே எவற்றினும் சிறந்தது (962) சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் செல்வம் பதவி முதலியவை பெருகி வரும் போது, அவற் றினும் பணிவுடைமையும் பெருகுதல் வேண்டும். அந்நிலை யில்லாமல் செல்வம், பதவி என்பவை சுருங்கியுள்ள போதில் பெருமிதமாக நிற்றல் வேண்டும். பெருக்கத்தில் பெருமிதம் கொள்ளலும், சுருக்கத்தில் பணிந்து கிடத்தலும் மானமாகக் கொள்ளப்படாமல் தாழ் வாகவே கருதப்படும் (963). பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு மாந்தர் தமக்குரிய சிறந்த ஒழுக்க நிலையில் இருந்து தாழ்ந்த இடத்துத், தலையில் இருந்து கழிந்து வீழ்ந்த மயிருக்கு ஒப்பானவராகவே கருதப்படுவர். முடியில் இருந்த நிலைக்கும் உதிர்ந்து விட்ட நிலைக்கும் எவ்வளவு வேறுபாடு? மதிப்பிழிவு (964). தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை நாடெல்லாம் அறியப்படும் குன்று போன்றவராகத்தான் இருந்தாலும் என்ன, ஒரு குன்றிமணியின் அளவு மானக் குறை யுடையவராயின் அக்குன்றி மணியளவுக்குக் குன்றி விட்டவ ராவர் (965). குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் வாழும் நாளில் புகழையும் தாராது; மாறாகப் பழியையும் தரும்; வணங்கப்படும் புகழுலக நிலையையும் தாராது. அவ் வாறாகவும் தம்மை இகழ்பவர்க்குப் பின்னே சென்று மானத்தில் தாழ்ந்து நிற்கின்ற இழிநிலை என்ன? (966). புகழின்றால் புத்தேள்நாட் டுய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை உள்ளத்தை ஒட்டாதவர்களுக்குப் பின்னே ஒட்டினாற் போலக் காட்டிக் கொண்டு பின்னே சென்று ஒருவன் தன் மானங்கெட வாழ்வதைக் காட்டிலும் அப்பொழுதேயே அவ் வாழ்வை இழந்தான் எனப்படுவது எவ்வளவோ நன்மையாம் (967). ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று ஒருவன் தனது பெரிய தன்மைக்குரிய மானம் அறிய வந்த இடத்தில், அழியாமல் உடலைப் பேணி வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகி விடுமோ? ஒருபோதும் ஆகாது. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து குளிர்க்காப்பாம் மயிரை நீங்கினால் உயிரோடு வாழ்தற்கு இயலாத கவரிமா என்னும் விலங்கினைப் போன்றவர் தமக்கு மானக்கேடு வருமெனின் அதனைத் தாங்காராய்த் தம் உயிரை விட்டு விடுவர் (969) மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் மானக்கேடு வந்த இடத்து, அதன் மேலும் உயிர் வாழ விரும்பாமல் இறந்த மானமுடையவர் புகழை, உலகோர் வணங்கி மகிழ்வர் (970). இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு மானம் என்பது மாந்தப் பிறவிக்கே உரிய பொருள். மானம் போற்றும் சான்றே உடை. அதனால் மானமறை என்பது பெயர். மற்றை உயிரிகளுக்கு அத்தகு அறிவு இல்லை; உணர்வு இல்லை! அவற்றைப் போல அருந்தல், பொருந்தல், வாழல் ஆகியவற்றில் மாந்தனும் நடந்து கொண்டால், அவற்றுக்கும் அவனுக்கும் என்னதான் வேறுபாடு? காட்டு விலங்காண்டி வாழ்வு நிலையிலும் மாந்தன் இலை, தழை, தோல் முதலியவற்றை உடுத்தே திரிந்தான்; வாழ்ந்தான். அகவாழ்வைப் புறவாழ்வு ஆக்காமலேயே நடந்து கொண்டான். ஒருவர் மதிக்க வாழ்தலும், மதிக்காத வரை மதித்துப் பின் சென்று நில்லாத நிலையும் போற்றினான். ஒருவன் செய்யும் இழிவுக்கெல்லாம் ஆட்பட்டு அவனை அடுத்தும், தொடுத்தும் வாழ வேண்டுவதுதான் என்ன? அவ்வாழ்வுதான் என்ன? என்றும் அழியாததா? அழியும் வாழ்வுக்கு, மானத்தையுமா அழியவிட வேண்டும்? உன்னொத்த ஒருவனை அல்லது உன்னிற் குறைந்த பண்பாடு உடைய ஒருவனை, நீ மதிக்கவும் அவன் மிதிக்கவும் ஆகும் நிலையில் அவ்வாழ்வை விட்டு நிமிர்ந்தல்லவா நீ நிற்க வேண்டும். உன்னைத் தாழ்த்தி இழிவு செய்ய நினைப்பவன் எவனோ, அவனே தன் பிழையை உணர்ந்து உன்னை நிமிர்ந்து பார்த்து நெடுமூச்சு விடச் செய்கின்ற நிலையன்றோ நீ கொள்ள வேண்டும் என்னும் பெருமிதத்தைத் தோற்றுவிக்க உரைத்த உரையே மானம் என்க. ஒரு சொல் ஒருவர் சொன்னார் என்பதற்காகவோ, ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டது என்பதற்காவோ உடனே உன் உயிரைப் போக்கிவிடு என்பதன்று வள்ளுவம். அப்படி ஒருவர், உடனே உயிரைப் போக்கிக் கொள், உன் மானம் கெடின் என்பதுதான் வள்ளுவம் என்று கூறின், அவர் வள்ளுவ உயிர் நிலை அறியார். மதிப்பு மிக்க மக்களுமா மானங்கெட இழிந்து வாழும் வாழ்வை மேற்கொள்வது; ஆகாது எனத்தடுத்தாட் கொள்வதே இது போலும் கருத்துகளாம். நான் என்ன செய்து விட்டேன் என்று நீயே வருந்து மாறான செயலைச் செய்யாதே; அப்படி ஒருவேளை நீ செய்து விட்டால், மீளவும் அவ்வாறு வருந்தும் படியான செயலைச் செய்யாதே எனத் திருந்தி வாழச் சொல்லும் திருவுள்ளமா உடனே சாவ ஏவும்? எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்பதை நினைக (655). பெருமை ஒருவற்குப் பெருமையாவது உள்ளத்தின் கண் உண்டாகும் ஊக்கம் உடைமையே. அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வோம் என ஒருவர் சோர்ந்து வாழ்வது அவர்க்கு இழிவாகும் (971). ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல் எல்லா உயிர்களுக்குமே பிறப்பால் வேறுபாடு இல்லை. ஓரொப்பு உடையனவே. அவ்வாறே செய்யும் தொழில்களிலும் வேறுபாடு இல்லை. ஓரொப்பு உடையனவே. எனினும் பிறப்பின் மேல் அவரவர் ஒழுகும் ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றால் பெருமையும், சிறுமையும் வருவது போல், தொழிலைச் சிறப் பாகவும், சிறப்பின்றியும் செய்யும் முறையாலே சிறப்பும், இழிவும் உண்டாம். அவை ஒத்தவையாக இரா (972). பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் சிலர் பதவி, பொறுப்பு முதலியவற்றில் மேல் நிலையில் இருப்பர். சிலர் அவற்றில் கீழ் நிலையில் இருப்பர். மேல் நிலையில் இருப்பதால் மேன்மைக்குரியர் என்பதும், கீழ் நிலையில் இருப்பதால் கீழ்மைக்குரியர் என்பதும் இல்லை. மேலே இருப்பவரிலும் மேன்மைத் தன்மை இல்லாதவர் மேலோர் ஆகார். கீழே இருப்பவரிலும் கீழ்மைத் தன்மை இல்லாதவர் கீழோர் ஆகார். அவரவர் தன்மைகளைப் பொறுத்தே மேலும் கீழும் ஆம் (973) மேலிருந்தும் மேலல்லார் மேலல்லார் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் ஒருப்பட்ட உள்ளம் என்பது உறுதி உள்ளம். அவ் உறுதியே மகளிர்க்குக் கற்பென்னும் திண்மை என்று சொல்லப் படும். மகளிர் கொண்டிருக்கும் ஒருமை உள்ளம் போன்ற ஒருமை உள்ளத்தை ஆடவரும் கொண்டு வாழ்வார் எனின் அவர்க்கும் அப்பெருமை உண்டு (974). ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு பிறரெல்லாம் செய்தற்கு அரியது எனக் கைவிடும் செயலையும், உள்ள உறுதி மிக்கவர் எளிமையாகச் செய்து முடிப்பர். அதனால் அவர்க்குப் பிறர்க்கு இல்லாத பெருமை உண்டு. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் செயற்கரிய செய்வார் பெரியர் என்ற செய்தி இவண் எண்ணத் தகும். பெரியவரைப் போற்றுதல் பெருமை; அவரைச் சார்ந்து இருத்தல் பெருமை; அவர் வழியிலே நின்று செயலாற்றுதல் பெருமை எனச் சிறுமைக் குணத்தர் எண்ணார். ஏனெனில் அறிந்தவரும் பழகியவரும் கொண்டாடியவரும் பெரியர் அல்லரே; சிற்றினச் சேர்க்கையுடையவர்க்கு அவரினும் சிற்றினச் சிறுமையரே பெரியராக விளங்குவார் (976) சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம் என்னும் நோக்கு சிறந்த ஒரு பதவி நிலை. அதை எவர்க்குத் தரல் வேண்டும்? சிறந்தவர்க்குத் தருதல் வேண்டும். பதவியால் அவர்க்குச் சிறப்பும், அவரால் அப்பதவிக்குச் சிறப்பும் உண்டாகும். ஆனால் சிறந்த பதவி சீர்மை இல்லாத ஒருவர்க்குத் தரப் பட்டால் என்ன ஆகும்? இயல்பாகவே குறும்புத் தனம் மிக்க குரங்குக்குக் கொள்ளிக்கட்டை கொடுத்தது போல் திருவிளையாடல் நடத்தவே உதவும். குரங்கின் கை மாலையாக இருந்தாலும் கேடில்லை. குரங்கின் கைக் கொள்ளி என்ன பாடு படுத்தும்? மு.வ. வரைந்த கயமையில் வரும் ஆணவர் எண்ணத் தக்கார் (977). இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின் பெருக்கத்து வேண்டும் பணிதல் என்று கூறியது போல் பெருமைக் குணத்தவர் என்றும் பணிவோடு இருப்பர். ஆனால் அப்பெருமைப் பொறுப்பைச் சிறுமையர்க்குத் தந்தால், அவர் தம்மைச் செருக்குவதற்கும் சிறுமைத் தனத்தில் மிதந்து நீச்சலடித் தற்கும் கேட்க வேண்டுவது இல்லையே. (978) பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து பெருமைக்குணம் உடையவர் எத்தகு பெருமைக்குரிய பதவியில் இருந்தாலும் செருக்கு இல்லாதவராகவே இருப்பர். ஆனால் சிறுமைக்குணம் உடையவர்க்கு ஓர் பெரும் பதவி வாய்த்தால் தம் செருக்கையே ஊர்தியாகக் கொண்டு உலாக் கோலம் போவர். (979) பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் பெருந்தன்மை உடையவர் பிறர் பிறர் பெருமைகளையே எடுத்துக் கூறி அவர்தம் சிறுமைகளைத் தாம் அறிந்திருப்பினும், அதனைக் கூறாமல் மறைத்துக் காப்பர். ஆனால் சிறுதன்மை உடையவரோ பிறர் - பிறர் குற்றம் குறைகள் எவை, எவை எனக் கண்டு கூறுவதையே தொழிலாகக் கொண்டிருப்பர். அவர்தம் பெருமைகளைத் தாம் அறிந்திருப்பினும் அவற்றை மறந்தும் வெளிப்படுத்தாமல் மறைத்து விடுவர் (980). அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் பெருமை என்பது பெருந்தன்மை யுடையாரையும் சிறுமை என்பது சிறு தன்மை யுடையாரையும் குறித்தல் அறிக. பெருமை பற்றிக் கூறுதலே அவர் நோக்காயினும் அதற்கே எதிரிடை யாவாரையும் கூறியது என்ன எனின், சிறியோர் சிறுமை உண்மையால்தானே பெரியோர் பெருமைக்குப் பெருமை உண்டாகின்றது. இல்லாக்கால் பெருமை என்று ஒன்று இல்லாமல் போகும் அல்லவா! ஒரே ஒரு குச்சியை வைத்துக்கொண்டு குட்டையா நெட்டையா என வினவின், வினவினவர் நல்ல நிலையில் தான் இருக்கிறாரா? என்ற ஐயமல்லவோ வந்து, விடும். குட்டை நெட்டை காண ஓருயரம் இல்லாத இரண்டு பொருள்கள் வேண்டியது போல் பெருமை பேசச் சிறுமையும் இடம் பெறலாயிற்று என்க. இனி, இச்சுவடித் தலைப்புக்கு முழுதிடமாக விளங்கும் சான்றாண்மையைக் காணலாம். சான்றாண்மை பண்புகளால் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை சான்றாண்மையாகும். தம் கடமையை உணர்ந்து சான்றாண்மையைக் கடைப் பிடிப்பவர்க்கு நன்மையானவை என எவையுண்டோ அவற்றை எல்லாம் செய்தல் கடமை என்று ஆய்ந்தோர் கூறுவர். (981) கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மதுரையை அடுத்துள்ளதோர் ஊர் சோழவந்தான். மிக வளமான ஊர்; நில வளம் போலவே புல வளமிக்க சான்றோர் பெருமக்களும் ஆங்குத் தோன்றியுளர். அவருள் சிறந்தார் ஒருவர், அரசஞ் சண்முகனார். தஞ்சை இளங்காட்டில் ஒரு நிகழ்ச்சி; அந்நிகழ்ச்சிக்கென விரும்பி அழைக்கப்பட்டார். வண்டி வாய்த்த அளவுக்கு வண்டியில் சென்றார். அதன்மேல் நடந்தே போகவேண்டிய வழி. நடக்கத் தொடங்கினார். சண்முகனார் செல்லும் வழியில் இன்னொரு நடையரும் வந்தார். அவர் சண்முகனாரின் எளிய தோற்றங் கண்டு தாம் வைத்திருந்த சுமை ஒன்றைக் கொண்டு வந்தால் கூலி தருவதாகக் கூறினார். மறுக்காமல் சண்முகனார் வாங்கிக் கொண்டு நடந்தார். இளங்காட்டுக்குப் பிரியும் தடம் வந்தது. அங்கே சண்முகனாரை அழைத்திருந்தவர்கள் வரவேற்பதற்காக மேள தாளங்களுடன் நின்றனர். ஓடி வந்து ஒருவர் மாலை சூட்டினார்! சுமைக்கு உரியவர் திகைப்புக்கு உரியவர் ஆனார். அந் நிலையில் ஐயா, நீங்கள் உங்கள் சுமையைக் கொண்டு செல்லுங்கள்; இவர்களுடன் நான் போகவேண்டும் என்றார். சுமையர் கையைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத் தார்! ஒன்றும் இல்லை; ஒருவர்க்கு ஒருவர் உதவிதானே என்று சொல்லி விட்டு நடந்தார் சண்முகனார். திருவாவடு துறைத் திருமடத்திலிருந்து ஓர் அழைப்பு; சண்முகனார் சென்றார்; உயர்ந்த பட்டாடை போர்த்திப் பாராட்டப் பட்டார். ஆங்கிருந்து ஊர்க்கு வரும் வழியில் ஒரு பெண். தன் உடலை முழுமையும் மறைக்க முடியாக் கந்தையுடன் நாணி ஒதுங்கி நடையிடக் கண்டார். உருகினார்! என்னாடை எனக் கொண்டிருந்த பொன்னாடையை அவள் போர்த்திக் கொண்டு போக விட்டு வந்தார். கூமாப்பட்டிக் கந்தசாமி என்பார் ஒருவர். அவர்க்குச் சோழவந்தானே ஊணும் உடையும் உறைவும் தந்தது. அவர்க்குத் தமிழ்வளம் தந்தவர் அரசஞ் சண்முகனார். அக் கொடையே மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதராய், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராய் அமரச் செய்து சோழ வந்தான் கந்தசாமியார் ஆக்கியது. மதுரை மாரியம்மான் தெப்பக் குளத்தில் இறங்கினார் சண்முகனார். பாசி வழுக்கிவிட உள்ளே போய்விட்டார். குளத்தில், நிரம்பிய நீர். சண்முகனார்க்கு நீந்தத் தெரியாது. அவ்வழியே சென்ற பெருமகனார் அய்யாத்துரை என்பார் தெப்பத்துள் வீழ்ந்து தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றினார். தாம் பாடிய ஏகபாத நூற்றந்தாதியில் உயிர் காத்த உபகாரி எனச் சிறப்பிக்கிறார் சண்முகனார். இவை சண்முகனார் வரலாற்றில் சில குறிப்புகள்! சென்னை மாநகர்! கொடுவெயில்; தார்ச்சாலை; தாங்க முடியாப் பாரத்துடன் கட்டை வண்டி; முன்னே ஒருவன் இழுக்க; பின்னே ஒருவன் தள்ள; கொதிக்கும் வெயிலிலும் வெப்பத்திலும் மிதியடியில்லாத காலுக்கு, குழைகளைக் கந்தையால் கட்டிய கட்டு! இக்கொடுமையைக் கண்டு பொறுக்காமல் கூட்டத்தோடு போன கிழவர் ஒருவர் ஓடி வந்து வண்டியைத் தள்ளிக் கொண்டு போனார். வண்டியிழுத்தவர்களும் திகைத்தனர். கூட்டத்தவரும் திகைத்தனர். அவர் விநோபா பாவே. கூண்டு வண்டி; முறை மன்றத்திற்குப் போகும் வழக் குரைஞர்கள் அதில் செல்கின்றனர். வண்டி செல்லும் வழியில் ஒரு குட்டை. அதில் ஒரு பன்றி நீர் குடிக்கச் சென்று சேற்றில் மாட்டிக் கொண்டது. உள்வாங்கு சேற்றில் உடலில் பெரும் பகுதி பதிந்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட ஒருவர் உள்ளம் உருகியது. வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினார். அவர் செயலை நகைத்த மற்றவர்கள் வண்டியை ஓட்டச் சொல்லிச் சென்றனர். இறங்கியவர் குட்டையில் இறங்கினார்; அவர் கால் உள் இறங்கியது; உடையில் சேறுபட்டது; எனினும் பன்றியைத் தூக்கினார். அது என்ன அறியும்? ஓர் உதறல் உதறியது; உடையெல்லாம் சேறு; நனைத்து உலரப் போட்டுக் கொண்டே அவ்வழக்கறிஞர் நடந்தார். அவர் நிலை கண்டு நண்பர்கள் மேலும் நகைத்தனர். ஆனால், அவரோ நான் ஒரு நல்லது செய்தேன் என நிறைவுற்றார். அவர் ஆபிரகாம் இலிங்கனார். சான்றோர்க்கு நல்லவையெல்லாம் கடமை என்பதற்குச் சில துளிகள் இவை. நீங்கள் எண்ணுங்கள் எண்ண எண்ண எண்ணற்று வரும். சான்றோர் என்பார் ஓர் ஊரரா? ஒரு காலத்தரா? வள்ளுவர் கூறுவது போல் சான்றோரை எண்ணிக் கணக்கிடல் என்பது வையத்து இறத்தாரை எண்ணிக் கொண்டற்று என்பதேயாம். சான்றோர் சிறப்பு என்று சொல்லப்படுவது என்ன? பண்புச் சிறப்பேயாம். மற்றைச் செல்வச் சிறப்பு உண்டே! பதவிச் சிறப்பு உண்டே! அறிவுச் சிறப்பு உண்டே! கொடைச் சிறப்பு உண்டே! சொல்வன்மைச் சிறப்பு உண்டே! ஆமாம், அவை யெல்லாம் சிறப்பானவையே எனினும் பண்பொடு நோக்க அவை சிறப்புடையவை ஆகா. அதற்குப் பிற்பட்டனவேயாம். பண்பில்லான்; அவனிடம் இருக்கும் அறிவென்ன பயன் செய்யும்? இடுகாட்டுக்குள் முள் சூழ்கிடக்கையிடையே பழமரம் பழுத்தென்ன, பழாமல் இருந்தென்ன? பண்பில்லான்; அவனிடம் இருக்கும் செல்வம் என்ன செய்யும்? நல்ல ஆவின்பால் தான்; நீர் கலத்தல் இல்லாத் தனிப் பால் தான்; ஆனால் அதனை வைக்கப்பட்ட கலம் களிம்பு உடையது. பால் பாலாக இருக்குமா? நஞ்சாகி விடுமே அல்லவோ? இப்படியே பண்பில்லார் எவற்றை உடையர் எனினும் உடையர் ஆகார் (982). குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉம் அன்று சால்பு என்பதோர் மாடம். அம்மாடத்தை வளமாகவும் வன்மையாகவும் தாங்கி நிற்கும் தூண்கள் ஐந்து, அவை அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்பன. இவ்வைந்து பண்புகளும் ஐந்ததிகாரங்கள். அன்பு அன்புடைமை; நாண், நாணுடைமை; ஒப்புரவு, ஒப்புரவறிதல்; கண்ணோட்டமும், வாய்மையும் அப்பெயர்களே. அன்புடைமை ஓர் உடலில் குருதி ஓட்டம் உடைமை இருப்பினும், மூச்சு ஓட்டம் இருப்பினும் அன்பின் ஓட்டமும் இருந்தால் தான் உயிரோட்டமுடையது எனப்படும் என்பவர் வள்ளுவர். அதனால், அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றார் (80) விளை நிலத்திலும் புது மனையிலும் பார்வைப் பொம்மைகள் இருக்கக் காணலாம். கண்ணேறு படாமைக்கு அவை என்பர். அப்பொம்மைகள் கம்பாலும், துணியாலும் அமைந்தது. அதற்கு உயிரில்லை; ஓட்டமில்லை! அதுபோல் அன்பில்லாப் பிறப்பும் பிறப்பு அன்று. அன்பாம் உயிர்நிலை இல்லாத அப்பிறப்பு என்பு (எலும்பு) தோல் போர்த்த பிறப்பு. அது நிற்கும் பொம்மை; இது நடமாடும் பொம்மை; வேறுபாடு அவ்வளவே. அன்பு என்ன செய்யும். தன்னலத்தை மறக்கும்! பிறர் நலத்தை விரிக்கும். தன்னினும் தன் துணையின் நலத்தை நாடும் அன்பு, பின்னே மக்கள் நலத்தில் பாயும். அதன் பின்னே மக்கள், மக்கள் கொண்டவர்கள் - கொடுத்தவர்கள் - அண்டியவர்கள் அடுத்தவர்கள் என விரியும். அன்பு அன்பை மட்டும் தான் தருமா? தன் உணவு! தன் உடை என்பவற்றை மட்டுமே தருமா? அன்பு, அன்புடையான் தன்னையே தருதற்கும் ஏவும். ஏனெனில்; அன்பிலார் எல்லாம் தமக்குரியார் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (72) அன்பு இருந்தால் என்பும் தருமா? தருகின்றதே; அறிவியல் வளர, வளர அவ்வன்பின் ஆக்கமும் வளர்கின்றதே! குருதிக் கொடை என்ன, கண்பார்வைக் கொடை என்ன, சிறுநீரகக் கொடை என்ன-இவை அன்பு அளிக்கும் என்புரிமை அல்லவோ? தான் இறப்பின் தன் உடலையே ஆய்வுப் பயிற்சி யாளர்க்குப் பொருளாக வழங்குகின்றதே! மூளையை ஆய்வுக்கு வைத்துப் போகின்றதே! ஈட்டியவெல்லாம் இதற்கென இறப் போலை எழுதி வைக்கின்றதே! இவையெல்லாம் அன்பு வழங்கும் என்புரிமை அல்லவா! அன்பின் வழியது தானே ஆர்வம்; அதன் விரிவுதானே நண்பு; அன்பின் செயற்பாடுதானே விருந்தோம்பல்; இனியவை கூறல். அன்பே இறைமை என்னும் நிறைவு தருவதன்றோ அன்பு. நாணுடைமை நாணுடைமை சான்றோர் இயல்பு. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (833) இயல்பாக அமையும் நாணுதல் என்னும் பண்பு மகளிர் சிறப்பாக அமைவது. சான்றோர் நாணுடைமை என்பது வேறு பட்டது. அது கருமத்தால் நாணுதல் என்பது. கருமத்தால் நாணுதல் என்பது தாம் செய்த தவற்றை எண்ணித் தாமே நாணுகின்ற தன்மையாம். இப்படிச் செய்து விட்டோமே எனப் பழிப்பாரும், இழிப்பாரும் இல்லெனினும் தமக்குள் உண்டாகும் தலைகுனிவாம். அப்படி உண்டாகுமா? உண்டாவதால் தானே அவர் சான்றோர் ஆகிறார். இல்லை யேல் சாலார் (பண்பிலார்) அல்லரோ! ஆள்மறைந்த பொழுது பார்த்துப் புகுகிறது நாய். அகப் படுவது எதுவாயினும் தின்கிறது. தின்னும்போது கண்டு விட்டால் விடுவரா? தடியை எடுத்து வெருட்டி, வெருட்டி அடித்தாலும் வெருட்டினாரே அடித்தாரே இவர் முன் வர லாகாது, இவரைக் காண்பது நாணத்திற்கு உரியது என ஒதுங்கி விடுகிறதா? நாய் மீண்டும் அடுத்த நாள் அன்று; அன்றே கூட, ஆளில்லை என்றால் புகும்; அடிபடும்; மீளும்! நாய்க்கு என்ன வந்தது நாணம்! நாண மில்லாப் பிறப்பு அப்பிறப்பன்றோ! நாணாப் பிறவி கண்டு எது நாணுகிறதாம்; அறமே நாணு கிறதாம்! பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து என்பது அது (1018). நாணம் இல்லாதவரும் உள்ளனரே; உலவுகின்றனரே! என ஒருவர் வினா எழுப்புகிறார். ஆம்! மரப்பாவைக்கு உயிர் இல்லை. ஆனால் அதனைக் கட்டிய கயிற்றால் உயிருள்ளது போல் அங்கும் இங்கும் போய் இயங்க வில்லையா? காலையும், கையையும் ஆட்டி உயிருள்ளதாகக் காட்டிக் கொள்ளவில்லையா? அம்மரப் பாவை இயக்கத்திற்கும் மரத்துப்போன இந்நாணிலி இயக்கத் திற்கும் என்ன வேறுபாடு என்கிறார் வள்ளுவர். நாணிலார் சான்றோர் ஆகார். ஒப்புரவு: தன்னலம் தேயத், தேய வளர்வது ஒப்புரவு. பொது நலம் புரிவதே ஒப்புரவாகும். ஒருவர் வாழ்வு என்பது அவர் உழைப்பளவில் நிற்பதா? அவர் தேவை அனைத்தையும் அவரே நிறைவேற்றிக் கொள்ள இயலுமா? எத்தனை பேர்களின் உழைப்பில் என் உணவு வருகிறது; எத்தனை பேர்களின் உழைப்பில் என் உடை கிட்டுகிறது? எத்தனை பேர்களின் உழைப்பில் என் உறைவிடம் எழுந்தது? இவற்றை எண்ணினால் நான் அவர்களுக்கு எவ்வழியால் உதவ வேண்டும் என்னும் துடிப்பு இயற்கையாக எழ வேண்டும் அல்லவோ! மங்கம்மாள் சாலை மறந்துவிடாதே சோலை இது வழங்குமொழி. சாலையும் சோலையும் ஆக்குதல் ஒப்புரவு; அதன் தூய்மை போற்றல் ஒப்புரவு. பிறரும் அதனைப் பேணுமாறு செய்தல் ஒப்புரவு. இவ்வொப்புரவு இல்லாமையால் சாலை மரங்கள் மொட்டையாகின்றன; வெட்டிச் சாய்க்கப்படுகின்றன; போக்குவரவு நிறுத்தப்படுகின்றன; போக்கு வரவுக்கு உதவும் வண்டிகள் எரியூட்டப் படுகின்றன; மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். ஒப்புரவு போற்றாத நாடு உயர்வு எய்தாது; பொது நலம் போற்றாது; பொதுநலப் பணியிலும் சுரண்டலே ஆட்சி நடத்தும்; பொதுச் சொத்தும் தன் சொத்து ஆக்கப்பட்டு விடும்; அறப்பணி நிலையம், புறப்பணி நிலையமாகப் போகிவிடும். ஒரு குமுகாயத்தில் அவர் இவர் என இல்லாமல் அனைவர் உழைப்பையும் பயன்படுத்துதல், அனைவரிடமும் பொருள் வாங்கல், அனைவருக்கும் பொருள் விற்றல், அனைவரிடத்தும் ஊதியம் திரட்டல் என்று தொழில் நடத்துபவரும், வணிகம் செய்பவரும் குமுகாயம் என்னும் பொதுப் பார்வை பார்த்து ஒப்புரவு செய்யாராய்த் தம் சாதிக்கு எனப் பயன்படுத்துதலும், சாதியர்க்கே வேலை கொடுத்தலும், சாதி வளர்ச்சியைச் சார்ந்தே நிற்றலும் ஒப்புரவுக் கேடு. பொருள் ஈட்ட ஒப்புரவாம்! பொருட்பயன் கொள்ளச் சாதியாம்! கருமித் தனம், கடைத்தனம் என்றால், ஒப்புரவு பேணாச் சாதித்தனம் சிறுதனம்! ஒப்புரவாளன் ஊருணி-பழமரம்-மருந்துமரம் என ஒப்புமை காட்டப்படும் உயர்ந்தோன். அவ்வொப்புரவு பேணு வோரே சான்றோர். கண்ணோட்டம் சான்றோர்க்கு அமையவேண்டும் நான்காம் இயல்பு கண்ணோட்டம். கண்ணோட்டம் என்பது பழம்பெரும் நன்மையினது கண்ணோட்டத்தால் தான் உலகம் இயங்குகிறது கண்ணோட்டம் இல்லார் கண், கண் அன்று; புண் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோட்டம் இல்லா மரம் என்றெல்லாம் கண்ணோட்டத்தைச் சிறப்பிக்கிறார் திருவள்ளு வர். கண்ணோட்டம் என்பதுதான் என்ன? நமக்குத் தொடர்பாளர் ஒருவர்; அவர் பழந் தொடர்பாளர்; பல்கால் உதவியும் புரிந்தவர்; நம் மதிப்புக்கும் அன்புக்கும் உரிமை பூண்டவர். அவர் ஒரு கருத்தை வெளியிடுகிறார். அக் கருத்தை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ள நம் மனச்சான்று இடந் தரவில்லை எனினும் ஏற்க முடியாது எனக் கட்டென்று, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு எனச் சொல்லிவிட முடிவது இல்லை ஒப்ப முடியாமலும், எதிர்க்க முடியாமலும் ஒருவழியால் அவர்வழியில் செல்கிறோம். இது எதனால் ஏற்பட்டது? கண்ணோட்டத்தால் ஏற்பட்டது. தாட்சண்யம் என்னும் வேற்றுச் சொல் வந்தது. வந்தவள் வலுக்க இருந்தவள் கெட்டாள் என்பது போல் கண்ணோட்டம் என்பதை விளக்க அச்சொல்லைச் சொல்லிக் காட்ட வேண்டியது ஏற்பட்டு விட்டது! கண்ணோட்டம் என ஓர் அதிகாரம் திருக்குறளில் இருந்தும் இந்நிலை என்றால் இதிலும் இடம் பெறவில்லையானால்-கண்ணோட்டமே தமிழர்க்கு இல்லை என எவ்வளவு நேரம் ஆகும்? கண்ணோட்டம் அகம் - புறம் - பதிற்றுப் பத்து ஆகிய பழநூல்களிலும் உண்டே எனின், திருக்குறள் கண்ணோட்டத் திற்கே இப்பாடு எனின், அவற்றைச் சீந்துவார் எவர்? தாம் எடுத்துக் கொண்ட செயற்பாட்டில் தவறச் செய் வதோ கண்ணோட்டம்? இல்லை; தவறாமையும் வேண்டும்; கண்ணோட்டம் காட்டலும் வேண்டும். அத்தகைமையே கண் ணோட்டச் சீர்மை. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு என்கிறது கண்ணோட்டக் குறள் (578) தண்டித்தே தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மை உடையவரிடத்தும கண்ணோட்டத்துடன் பொறுத்துக் கொண்டு தம் கடமையை நிறைவேற்றுதல் வேண்டும் என்றும் கூறுகிறது (579) ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை என்பது அது. வாய்மை: சால்பு ஊன்றிய ஐந்தாம் தூண், வாய்மை என்பதாம். உள்ளது உள்ளவாறு கூறுதல், நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு கூறுதல் வாய்மை. ஆனால் அவ்வாறு கூறுதல் அதன் அளவுகோல் ஆகாது. அதன் அளவுகோல் அவ்வாறு கூறுவதால் கூறப் படுபவர்க்கு நன்மை ஏற்படுமா? தீமை ஏற்படுமா? என்பதைப் பொறுத்தது. தீமை ஏற்படுமானால் வாய்மை ஆகாது. நன்மை ஏற்படுவதே வாய்மை. அதனால், வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத கொலல் என்றும், பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்றும் திருக்குறள் கூறுவது ஆயிற்று. வள்ளுவ அடிப்படையே இன்ப ஆக்கமாகும். அதற்கு எதிரிடை, எதிரிடையே; உள்ளம், உரை, செயல் என்பன மூன்றும் ஒத்தியல்வது வாய்மை. அப்படி ஒத்தியல்வார் சான்றோர். அவர் ஒரு சிறிய இடத்தளவில் அமைவார் அல்லர்; ஒரு கால அளவில் மறைவார் அல்லர். உலகோர் அனைவர்க்கும் எக்காலத்திற்கும் உரிமை பூண்டவர் அவர். உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பது உலக வாய்மை உயர்குறள் (284) இதில் உள்ளமும், பொய்யாது என்றதால் உரையும், ஒழுகின் என்றதால் செயலும் ஆகிய மூன்றும் ஒத்தியலும் உயர்மை காணலாம். வள்ளுவர், தாம் அறிவறிந்த காட்சிகளுள் எல்லாம் வாய்மை போலும் உயர்காட்சியது ஒன்று இல்லை எனக் கூறும் சிறப்பினது சான்றோர் சால்பாகிய வாய்மை. அது, யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்பது (300) நாற்கால், அறுகால், எண்கால், பதினாறுகால், முப்பத் திருகால், அறுபத்து நான்குகால். நூற்றுக்கால், ஆயிரங்கால் எனத்தாமே மண்டபங்கள் நாட்டில் உண்டு. ஐங்கால் மண்டபம் உண்டோ? ஐந்து சால்பூன்றிய தூண் என்கிறாரே வள்ளுவர்; ஆம், அரிய மண்டபம்தான் ஐந்து கால் மண்டபம். அருமைக்கு அருமைதானே உவமை ஆதல் வேண்டும். பரியதும் உயர்ந்ததுமாம் நடுக்கால் ஒன்று; மற்றை நான்கு பக்கங்களிலும் நான்கு கால்கள். உயர்ந்து பருத்த நடுக்காலில் நான்கு பக்கக் கால்களின் சட்டங்களும் கூடி முகடாகி விளங்கும் மண்டபம் சால்பு மண்டபம். நடுத்தூண் அன்பு; மற்றவை பக்கத் தூண்கள். உயிர் நிலையே அன்பு தானே! அவ்வொன்று இருந்தால் வேறென்ன வேண்டும்? மற்றவை எல்லாம் கை கோத்து நின்று கடனாற்றும் அல்லவோ! இனிச் சான்றாண் மையை மேலே தொடர்வோம். உறுதிப்பாடு என்பது கொலை செய்யாமை என்னும் அறத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத நிறைவை அடிப்படையாகக் கொண்டது (984). கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு ஒருவர்க்குப் பாராட்டு விழா. அப்பாராட்டில் கலந்து கொண்ட கவிமணி தேசிக விநாயகர், அவர் தம் நல்லியல்புகள் சிலவற்றைப் பாடி அமைந்தார். ஒருவர், அவர்தம் குறையைச் சுட்டவில்லையே என்றார். ஆம்! அவர் போய் விடுவார்; அவர் குறையைப் பாடினால் அது நின்றுவிடும் என்று மறுமொழி தந்தார்! பிறர் தீமை சொல்லா நலச் சால்பு அது. செயலாற்றுதலில் தேர்ந்தவரின் ஆற்றலாக இருப்பது பணிவு ஆகும். அப்பணிவு, சால்புடையர் தம் பகைமையை நீக்கி நண்பாக்கிக் கொள்ளும் நல்ல திறமாகும் (985). ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை நீங்கள் பகைவரைப் பகைவராகக் கருதுவது இல்லை. அவரை அழிக்காமல் உறவாடுகிறீர்கள் என்று ஆபிரகாம் இலிங்கனிடம் ஒருவர் குறை கூறினார். நண்பரே நீங்கள் பகையை அழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நானும் அதைத்தானே செய்கிறேன். எப் பொழுது நண்பராகிக் கொண்டேனோ, அப்பொழுது முதலே பகைமை அழிந்து போகத்தானே செய்கின்றது என்றார் இலிங்கன். சால்பு என்னும் பொன்னை மாற்றறியும் உரைகல்யாது எனின், தமக்கு இணையாகாத மெலியவர் இடத்திலும் தம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகும் (986). சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் பள்ளித் தாளாளர் ஒருவர்; ஆசிரியர் - தலைமையாசிரியர் கூட்டம்; தாளாளர், ஆசிரியர்கள் காலத்தில் பள்ளிக்கு வருவதில்லை; வகுப்பைச் சரியாக நடத்துவதில்லை; தேர்வு சீராக வைப்பதில்லை; ஒழுங்காகத் திருத்துவது இல்லை; பாடக் குறிப்பு ஏடு, தேர்ச்சி அறிக்கை ஆகியவற்றைக் காலத்தால் முடிப்பதில்லை என அடுக்கினார். ஓராசிரியர் எழுந்தார். ஐயா, எந்த மருத்துவரும் ஓரிடத்தில் கட்டி வந்தது என்பதற்காக உச்சி முதல் உள்ளங்கால் வரை அறுப்பது இல்லை. கட்டி வந்த இடத்தே கத்தி வைப்பார்; நீங்களோ முழு உடலையும் அறுத்துப் பார்க்கும் மருத்துவராக இருக்கிறீர்கள். உங்களிடம் குறிப்பு உள்ளது; இவர் இன்னது தரவில்லை; இன்னது செய்யவில்லை என்று சொல்வது முறை; அல்லது தனியே அவரவரை அழைத்து அவர் குறை சுட்டல் திருந்த வாய்ப்பாம். இல்லையானால் இவரைப் பற்றியது, அவரைப் பற்றியது என ஒவ்வொருவரும் மழுப்பிக் கடமை செய்யாதிருக்கவே ஆகும். ஒழுங்காகக் கடமை செய்பவரும் செய்தார் செய்யார் என இல்லாத ஒரு நிலை உள்ள போது நாம் செய்யத்தான் வேண்டுவதென்ன என்று அவரும் தட்டிக் கழிக்கவே செய்வார் என்றார். அந்தச் சான்றாண்மைத் தாளாளர் சினந்தாரா? எரிந்தாரா? எதிர்த்தாரா? இல்லை! ஆம் தவறுதான்; நான் பொதுவாகச் சொல்லியிருத்தல் கூடாது; வருந்துகிறேன்; பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார். சால்புக் கட்டளை, தோல்வி துலையல்லார் கண்ணும் கொண்டது இது. தமக்குத் தீயவை செய்தார்க்கும் நல்லவையே செய்யாத போது சால்புடைமை என்பது என்ன பயனுடையதாகும் (987). இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? சான்றாண்மை என்று சொல்லப்படும் உறுதிப்பாடு ஒருவற்கு உண்டானால், இல்லாமை என்னும் வறுமை இழிவாகாது. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் ஒருவர் மிதியடி பழுது பட்டு விட்டது. அவர் சிறந்த எழுத்தாளர். அவர்க்கு உதவ எண்ணிய ஒருவர் அவர் இயல்பையும் அறிந்து மிதியடி வாங்கி அவர்க்குத் தெரியாமல் இரவில் அவர் வீட்டு வாயிலில் வைத்து விட்டார். காலையில் அதனைக் கண்டவர், ‘என் வறுமையை எள்ள இவர்க்கு என்ன செருக்கு? என எண்ணினார். இதனை இங்கே வைத்தவனை இதனாலேயே அடிப்பேன் என எழுதி முற்றத்தில் கட்டித் தூக்கினார். சால்புத் திண்மை உண்டானால் இன்மை இழிவா? சான்றாண்மை என்னும் நிறை பண்புக்குக் கடல் போன்றவர், அக்கடல் கரை கடந்து நிலை மாறினாலும் தம் சால்பு நிலை மாறார் (989). ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் சான்றாண்மை உடையவரின் சால்பு குறையுமாயின் இப்பேருலகம் தன் சுமையைத் தான் தாங்கவும் மாட்டாதது ஆகி விடும். உலகைத் தாங்கிக் காப்பார் சான்றோரே என்பது இது (990). சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை அடுத்துவரும் பண்புடைமை, பெரியோர் சான்றோர் இயல்பறிந்து ஒழுகும் இயல்பாகும். பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்பது கலித்தொகை. உலகத்தைக் காக்கும் பண்பாடு பெருமக்களிடத்துப் பொருந்தி இருப்பதால்தான் உலகம் தடைப்பாடின்றி இயல் கின்றது. இல்லையானால் உலகியல் என்றோ அழிந்து போயிருக்கும் எனச் சான்றாண்மையைச் சாற்றுகின்றது (996) பண்புடைமை. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர் யான் வாழும் ஊரே என்று பெருமிதம் கொண்ட பிசிராந்தையார் கண்ட உலகம் அமையுமா? அவ்வுலகம் இன்ப உலகமாம்! 17. திருக்குறளில் வினை வினைக் கருதுகோள்கள் ஒருவர் இப்பிறப்பில் அடைகின்ற இன்பத்திற்கும் துன்பத் திற்கும், முற்பிறப்பில் செய்த செயல்களே (வினைகளே) காரணம் என்கிறார்கள். ஒருவர் வறியவராகவும் வளமையாளராகவும் இருப்பதற்கு, அவர் முற்பிறப்பில் செய்த நல்வினை அல்வினைகளே காரணம் என்றும் கூறுகின்றனர். இப்பிறப்பில் நான் எதுவும் தீவினை செய்தது இல்லையே; அவ்வாறாகவும் எனக்கு ஏன் இவ்வளவு துயரங்கள், தொல்லைகள்? என் முற்பிறப்பில் செய்த தீவினையாக இருக்குமோ? எனத் தம்மைத்தாமே நொந்து கொண்டு ஒருவகை அமைதியும் காண்கின்றனர். நீ இந்த மாந்தப் பிறப்புப் பிறந்ததே, நீ முற்பிறப்பில் செய்த நல்வினைதான்; அவ்வாறு நல்வினை செய்யாதவரே புழு பூச்சியாய், நண்டு நத்தையாய், நாய் நரியாய், புலி கரடியாய்ப் பிறந்துள்ளனர் என்றும் நமக்குச் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஒவ்வொரு விளைவுக்கும் முன்வினையே காரணம் என்றால், அவ்வப் பிறப்பில் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளுக்குரிய பயன் அவ்வப் பிறப்பில் இல்லை என்பதா, அவ்வப் பிறப்பில் அதற்குரிய பயனை அடைந்து விட்டு அப்பொழுது அடையாத பாக்கியே அடுத்த பிறவிக்கு வருவது என்பதா? வள்ளுவர் இவ்வினைக் கொள்கையை ஒப்புக் கொண்டு ஏதாவது சொல்கிறாரா? வள்ளுவர் தம் வினைக் கொள்கை தான் என்ன? என்பதைத் தெளிவதே இவ்வாய்வு ஆகும். வினை யதிகாரங்கள் வள்ளுவர் ஊழ் என்றோர் அதிகாரம் வைத்துள்ளார். அதில் ஊழ்வினை என்னும் சொல்லும் இல்லை. அப்பொருளும் இல்லை. உலகியலில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளே ஊழ் எனப்பட்டமை தெளிந்த செய்தி. (ஊழ் பற்றிய ஆய்வு தனிச் சுவடியாக வெளி வந்துள்ளது; அதனைக் காண்க). ஆள்வினை உடைமை (62), தீவினையச்சம் (21), தெரிந்து வினையாடல் (52), வினை செயல்வகை (68) வினைத் திட்டம் (67), வினைத்தூய்மை (66) என வினைத் தலைப்புடைய ஆறு அதிகாரங்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. வினை என்னும் சொல் (சொல்லடைவின் படி) அறுபது இடங்களில் இடம் பெற்றுள்ளன. வினை வகை தீவினை அச்சத்தில் தீய செயல் என்னும் பொருளில் மூன்று இடங்களில் இடம் பெற்றதை அன்றி, பழவினை, முன் வினை, பின்வினை, செய்வினை என்பன போலும் வினைகள் இடம் பெற்றில. நல்வினை என்பதும் நல்ல செயல் என்னும் பொருளிலேயே வந்துள்ளது (335). செய் வினை இடம் பெற்றுள்ள இடங்களில் செய்யும் செயல் என்னும் பொருளிலேயே வந்துளது (465, 463, 653, 677) ஆதலால், திருக்குறளுக்கு உரை கண்டவர்கள் கூறும் வினைக் கொள்கைகள் வள்ளுவப் பார்வையொடு கூடியதா என ஆய்ந்து முடிவு கொள்ளல் முறையாகும். இலக்கண வினை வினை என்பது செயல்; தொழில். அதனைக் குறிக்கும் சொல், வினைச் சொல். அதனைப் பற்றி இலக்கண நூல்கள் விரியக் கூறும். சமய நூல்கள் கூறும் வினை செய்வினை என்பவற்றுக்கும், இலக்கண நூல்கள் கூறுவதற்கும் சொல்லளவால் அன்றிப், பொருளளவால் தொடர்பு இல்லை. சமயம் சாராக் குறள் அறநூல் எனவும், வாழ்வியல் நூல் எனவும் கொள்ளப் படும் திருக்குறளில், ஆளப்படும் வினைகள் அனைத்துமே செயல் என்பன பற்றியே உள்ளன. சமயஞ் சாராதது எனச் சைவக் கல்லாடரே கூறும் நூலுக்குச் சமயக் கருத்தை ஏற்றி உரை காண்பது முறையாகாது. பழந்தமிழில் வினை பழந்தமிழ் நூல்களில் செய்வினை, நல்வினை, தீவினை என்பன இல்லையோ எனின், உண்டு என்பது உண்மையே. அவற்றில் உண்டு என்றால் வள்ளுவர்க்கும் அவற்றில் உடன் பாடு என்பது எப்படிப் பொருந்தும்? ஒருவர், ஒருகால எல்லையில் வாழ்வார். அவர் காலக் கருத்தெல்லாம், அனைவர்க்கும் உடன்பாடானவையா? உடன் பாடானவையாக இருக்கும் என்பது கட்டாயமா? கால எல்லை கடந்து பார்க்கும் திறம் இல்லையேல், தூக்கணங் குருவி கூடு கட்டுவது போலவும், கறையான் புற்றெடுப்பது போலவும், சிலந்தி வலை பின்னுவது போலவும் அதே நிலைதானே இன்று வரை உலகியல் இருந்திருக்கும்? வளர்நிலை ஏற்பட்டிருக்குமா? பழந்தமிழ் வழக்கொடு புரட்சி சங்கத்தார் காலத்தில் சான்றோர் என்ற பலராலும் கொள்ளப்பட்ட மதுவும் ஊனும், வள்ளுவரால் கடியப் பட்டனவே. பரத்தைமை வெறுக்கப்பட்டதே. இப்பார்வை காலத்தொடு பட்ட பார்வையா? காலமும், கருத்தும் வென்ற பார்வை அல்லவோ இது. வள்ளுவர் கண்ட ஒப்புரவு அந்நாள் எல்லையில் உலகங் கண்டதா? அவ்விரி பார்வையரைக் கால எல்லைக்குள்ளும் இடஎல்லைக்குள்ளும், பொருள் எல்லைக்குள்ளும் அடக்குதல் ஆய்வு முறை ஆகாது. செய்வினைக் குறள்கள் ஒருவன் படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும், வளமைக் கும் - வறுமைக்கும் அவன் தலைவிதி எனப்படும் செய்வினையே அடிப்படை என வள்ளுவர் எங்காவது கூறுகிறாரா? உரை காரர்கள் கூறுகின்றனரா? மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (455) இதில் வரும் செய்வினை என்பது செய்யும் செயல் தானே. மனத் தூய்மையும் செய்யும் செயல் தூய்மையும் ஆகிய இரண்டும் ஒருவன் சேர்ந்த இனத்தின் தூய்மை தருதலால் வருவதாம் என்பதுதானே பொருள். இதில் விதி ஏது? ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (463) ஆகின்ற நன்மையை எண்ணி இருக்கும் முதலையும் இழந்து விடும் செயலை அறிவுடையவர் செய்யார் என்பதுதானே பொருள்! இதில் விதி உண்டாகுமா? ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர் (653) என்பதில் வரும் செய்வினைக்குத் தலைவிதிப் பொருளா? மேனிலை அடைய வேண்டும் என்று விரும்புபவர் புகழைக் கெடுக்கும் செயல்களை விட்டு நீங்குதல் வேண்டும் என்னும் இதில் விதிப் பொருள் இல்லையே. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் (677) இதில் வரும் செய்வினை விதிப் பொருளதா? ஒரு செயலைச் செய்ய விரும்புவானது செயல்முறையாவது அச்செயல் நுணுக்கங்களை அறிந்தான் ஒருவனது கருத்தை அறிந்து கொள்ளுதல் ஆகும் என்னும் இப்பொருளில் தலைவிதி தலை காட்ட வில்லையே. நல்வினை இனி நல்வினை, நன்றி பயவாவினை, நன்றாகா வினை, இன்பம் பயக்கும் வினை என்றெல்லாம் திருக்குறளில் வருகின்ற னவே. அவற்றுக்கும், வினைக்கும் தொடர்பு இல்லையா? எனின் காண்போம். நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் (335) என்னும் நிலையாமை இயம்பும் குறளில் செய்யப்படும் நல்வினை இரு வினையுள் ஒன்றா? இல்லையே. நாவு உள்ளிழுக்கும்; விக்கல் மேலே எழும்பும்; அக்காலம் இறுதிக்காலம். அக்காலம் செய்து கொள்ளலாம் என்றால், அவ்விழுத்தலுக்கும், எழுப்புதலுக்கும் பாடாக இருக்கும் அவ் வேளையில், எதுவும் செய்ய இயலாது. திடமும், தெம்பும், தெளிவும் இருக்கும் போதே நல்ல செயல்களைச் செய்து விடு; தள்ளிப் போட்டுக் கொண்டு போனால், காலம் உன்னைத் தள்ளிப் போட்டு விடும்; நிலையாமையை உணர்ந்து நிலைப்பன செய் என ஏவுகிறார். இதில் வினை அச்சுறுத்தல் எங்கே உள்ளது? வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை (439) என்கிறார், குற்றங்கடிதலில். தற்பெருமை கொள்ளாதே; நன்மை தாராத செயல்களைச் செய்ய விரும்பாதே. இவை குற்றமானவை. இவற்றை விட்டொழி என்கிறார். இது அறங்கூறும் செயல் கொள்கையா? சமயம் சொல்லும் வினைக் கொள்கையா? மனம் தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை (466) என்பது சிற்றினம் சேராமை குறிக்கும் குறள்! மனத்தூய்மை உடையவர்க்கு அவர் வைத்துச்செல்லும் புகழ் - பொருள் - மக்கள் முதலியனவும் நல்லனவாக அமையும். அதுபோல் சேர்ந்த இனத் தூய்மை உடையவர்க்கு நன்மை தாராத செயல் என எதுவும் இல்லை. எல்லாமும் நல்லனவாம் இப்பொருளில் விதிக் கொள்ளை உண்டா? என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயா வினை (652) என்னும் வினைத் தூய்மைக் குறள், நிறைந்த புகழும் நீடித்த நலமும் தாராத செயலை எவரும் எக்காலத்தும் செய்யாமல் கட்டாயமாக விலக்கி விட வேண்டும் என்கிறது இதிலும் வினைக் கொள்கை இல்லையே. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை (669) என்னும் வினைத்திட்பக் குறளும், இன்பந் தரும் செயல் என்ப தையே குறிப்பிடுகிறது. தீவினை: இனித் தீவினை என்பதும் திருக்குறளில் இடம் பெறாமல் இல்லை. அதிகாரம் ஒன்றன் பெயரே தீவினை அச்சம் என்பது. அது, தீயசெயல்களைச் செய்ய அஞ்சுதல் என்னும் பொருளதே. தீய, தீயவை, தீப்பால என அதில் வருவன போலத் தீவினை என்பதும் வருகின்றது. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் எனவரும் முக்குறள்களிலும் (201, 209, 210) இடம் பெற்றுள்ள தீவினை தீச்செயல் என்னும் பொருளவே. இந்நல்வினை தீவினை என்பவை, நல்லினம் - தீயினம் (460) என்பன போல வந்தவையே. இவ்வாறே அறவினை, பிறவினை (321) எனவும், ஆள்வினை - நீள்வினை (1022) எனவும் வருவன அறச் செயல் அறமல்லாச் செயல் என்பவற்றையும், முயற்சி தொடர்முயற்சி என்பவற்றையுமே குறிப்பனவாம். அருவினை: அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் (483) என்றும், கருவியும் கால மும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு (621) என்றும் வரும் இடங்களில் உள்ள அருவினை செய்தற்கு அரிய செயல் என்னும் பொருளதையன்றித் தீர்த்தற்கு இயலாத வினை என்னும் பொருள் தாராவே. செயற்கு அரிய செயல் என்னும் வள்ளுவப் பொருளே அருவினை என்பதன் பொருளுமாம். அஞசும் வினை: அஞ்சும் வினை என்கிறாரே வள்ளுவர். அது சமயங் கூறும் அச்சுறுத்தும் வினையா? மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை (244) என்பதில் வரும் அஞ்சும் வினையை அருளாள்வார்மேல் சூட்டச் சமயச் சால்புடையார் துணிவரோ? தம்முயிர்க்கு அருளாட்சியை விடார் என்பதல்லவோ பொருள்! தவாவினை: இனித் தவாவினை என்பது நீங்காத வினை என்னும் பொருளதா? அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும் (367) என்பதிலுள்ள தவாவினை நீங்கா வினையா? அழியாத செயல் தானே. அதனை, அவாஇல்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேல்மேல் வரும் (368) என்னும் அடுத்த குறளே தெளிவித்து விடுகின்றதே. தந்தம் வினை: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் (63) என்பதில் உள்ள தந்தம் வினை அவரவர் முயற்சிதானே! செயல் திறம் தானே! வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (471) என்பதில் உள்ள வினைவலி என்பது தன்வலிமை, பகை வலிமை, துணை வலிமை என்பன போலச் செயல் அல்லது முயற்சி வலிமையே அல்லவோ! தலைவிதிப் பொருளதா அது? இனி இருவினை எனவும் வருகின்றதே! அதன் பொருள் என்ன? எனின் கருதுவோம். இருவினை: முதல் அதிகாரமாகிய இறைவணக்கத்தில் வரும் - ஒரோ ஓர் இடத்து மட்டுமே வரும்-ஆட்சி இருவினை என்பதாம். இருமனம், இருவேறு எனவரும் ஆட்சியினையும் இவண் எண்ணல் வேண்டும் (820, 374.) இருதலை (1196) இரு நோக்கு (1091) என எண்ணுப் பொருளிலும். இருநிலம் (990) எனப் பண்புப் பொருளிலும் ஆக இருவகைப் பொருளிலும் இடம் பெறும் ஆட்சி இது. இருமை என்னும் ஆட்சியும் உண்டு (23). இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5), என்பது இருவினை வரும் இடம் இறைமை இயல்பறிந்து அவ்வழியில் நிற்பவர்க்கு அறியாமை என்னும் மயக்கத்தால் உண்டாகும் தீய செயற் பாடுகளும், அறமும் ஆக்கமும் செய்தேன் என்னும் தற்செருக்கு தன்முனைப்புகளும் ஆகிய இரண்டும் சேரமாட்டா என்பதே பொருளாம். என்ன செய்துவிட்டேன் என்று தானே வருந்து மாறான செயலோ, என்ன செய்து விட்டாய் என்று பிறர் வருந்து மாறான செயலோ நிகழாமை ஒன்று. நான் செய்தேன் என்றும், எனது என்றும் பெருமிதம் உண்டாகாமை மற்றொன்று. ஆகலான் இவ்விருமையும் பல் வகைப் பிறப்புகளுக்கும் தொடர்ந்து வரும் எனப்படும் வினைகள் அல்லவாம். மற்றை இடங்களைப் போலவே செயல் என்னும் பொருள் தருவதேயாம். இவற்றை நோக்கச் சமயங்கள் சாற்றும் வினைகள் திருக்குறளில் இல்லை என்றும், ஆங்குளதாகக் குறித்தமை உரையாசிரியர்கள் குறிப்பே என்றும் தெளிவாக விளங்கும். இனி உரைகாரரால், வினை, விதிப்பொருளாக்கப் படுதலைக் காணலாம். மனத்துக்கண் மாசில னாதல் அனைத்து அறன் எனத் திட்டம் தெளிவாகக் கூறும் திருவள்ளுவத்திற்கு உரை வரையப் போகும் பரிமேலழகர் தம் உரைப் பாயிரத்தில் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் என்று உரைக்கும் போதே, குறளைக் கையிலே வைத்துக் கொண்டு, மனுவை எழுதவரும் போக்கு வெட்டை வெளியாகி விடுகின்றது. வருணப் பாகுபாடு: ஒழுக்கம் உடைமை குடிமை என்பதும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் வள்ளுவ வாய் மொழிகள் இவற்றை மாந்தப் பிறப்பின் ஒத்த நிலையில் காட்ட வேண்டிய உரையாசிரியர் பரிமேலழகர் தம் உரைப் பாயிரத்தில் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல் என்று விளக்கங் கூறும் வகையாலேயே வள்ளுவநூலின் வழியும், தம் உரையின் வழியும் வேறு வேறு என்பதை வெளிப்படுத்திக் காட்டி விடுகிறாரே! அவரும் அவரனையரும் சொல்வன வெல்லா வற்றையும் வள்ளுவர் மேல் நாம் வரிந்து கட்டுவதோ வாய்மை? வகுத்தான் வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்னும் ஊழ்க் குறளில் வரும் வகுத்தானை விளக்கும் பரிமே லழகர், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின் கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார். மேலும், வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது; அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று எனவும் கூறினார். இயற்றியான் வகுத்தான் என்பதற்கு ஊழ் என்னும் பொருள் கொண் டார். இவ்வாறே, இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்னும் குறளுக்கு, இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன் கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின், அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக என்று உரையும். மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும் அதற்கு வேண்டுவ தாய உண்டியும் அதற்கேதுவாய செய்தொழிலும் பழவினை வயத்தாற் கருவொடு கலந்தவன்றே அவன் கற்பிக்குமன்றே? அவற்றுட் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின் அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம் என விளக்கமும் வரைந்தார். வகுத்தானும் இயற்றியானும் இயற்றியான் இறைவன் என்கிறார் அழகர். கடவுள் வாழ்த்தில் (கடவுள் என்னும் பெயரே இல்லை) இறைவனுக்கு இயற்றியான் என்றொரு பெயர் சுட்டப்பட்டதும் இல்லை. ஆனால் வகுத்தற் கடனும் இயற்றற் கடனும் உடையான் ஆள்வோன் என்பதைத் தெள்ளத் தெளிவாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்பது அது (385). இயற்றல் கடனாளன் இயற்றியான். வகுத்தற் கடனாளன் வகுத்தான். இயற்றுதல் என்பது நூல் இயற்றுதல், சட்டம் இயற்றுதல் என்று வருமேயன்றிப் படைத்தல் உண்டாக்கல் என்னும் பொருள்களில் வாராது. இயற்றுதல் கருத்துப் பொருள் வினை. படைத்தல் காட்சிப் பொருள் வினை. உலகம் யாவையும் தாமுளவாக்கல், படைத்தல் என்று சொல்லப்படுமேயன்றி இயற்றுதல் எனல் மரபு இல்லை. துணி நெய்தான்; பானை வனைந்தான்; அணி செய்தான் என அதனதன் மரபு போற்றியே வினைகள் ஆளப்படும். அவ் வாறாகவும் வகுத்தலையும், இயற்றலையும், ஊழுக்கும் இறைமைக்கும் ஆக்கியமை அடிப்படை மரபுக்கும் புறம் பானதாகும். மக்கள் எழுச்சியால் எத்தனை எத்தனை அரசுகள் வீழ்ந் துள்ளன? எத்தனை எத்தனை அரசுகள் நிலைமாற்றம் கண்டுள்ளன? வெள்ளம் தடுக்க வல்லாரும் மக்களாம் வெள்ளம் தடுக்க ஆற்றாராய்த் தலைதெறிக்க ஓடியது இல்லையா? இந்திய நாடு கண்முன் கண்ட சட்டங்கள் எத்தனை? ஓராணையால் எத்தனை குறுநில மன்னர்கள் ஒரே நாளில் ஒழிக்கப்பட்டனர்! ஒரே ஆணையால் எத்தனை வங்கிகள் நாட்டுடைமை யாக்கப்பட்டன! கோடி தேடியவனையும் துய்க்க ஒடுக்கிச் சிறைக் கோட்டத் துய்க்க முடிகின்றதே அரசின் சட்டத்தால்! மிசா என்றும் தடா என்றும் சொல்லப்படுவன வகுத் தான் வகுத்த வகைதானே! வினை எப்படி எப்படி யெல்லாம் திணிக்கப்படுகின்றது. செல்வமும் செய்வினையும் அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை என்னும் குறள் என்ன பொருளது? பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும் அதன் மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையேயுள்ள வேறுபாடு அறத் தின் பயன் என எண்ணவே வேண்டா (அது பொருட் செல்வத் தால் ஏற்பட்டதாகும்) என இயல்பான பொருள் உடையது. இதற்கு அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவை யான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் என்று உரை கூறினார் பரிமேலழகர். இதனைக் கொண்டும் கூட்டியும் குறிப்புரை வரையும் வை.மு. சடகோபராமாநுசர் தருமத்தின் பயன் இப்படிப்பட்ட தென்று நூல்களைக் கொண்டு அரிதின் தெரிவிக்க வேண்டிய தில்லை. உலகத்தில் ஒருவன் பல்லக்கைத் தூக்க மற்றொருவன் அதன் மேலேறி வீற்றிருப்பதைக் கண் கூடாகக் காணுதலாலேயே அறஞ் செய்தவன் இன்பம் அனுபவிப்பான் என்றும், அது செய்யாதவன் துன்பம் அனுபவிப்பான் என்றும் எளிதில் தெரிந்து கொள்ளலாமே என்பது கருத்து. இனி இத்திருக்குறளுக்குத் துறவறத்தின் பயனாகிய ஆத்ம சொரூப ஞானம் இப்படிப்பட்டதென்று யாம் இப்பொழுது புதிதாக வகுத்துச் சொல்ல வேண்டியது இல்லை; சவ்வீர மகாராஜனான ரகூகண மகாராஜனுக்கும் அவனுக்குப் பல்லக்கைச் சுமந்த ஜடபரத யோகிக்கும் நடந்த சம்பாஷணையாலே அறியப்படும் என்றும் உரைக்கலாம்; ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இரண்டாம் அம்சத்தில் இறுதி நான்கு அத்தியாயங்களிற் காண்க எனப் பரிமேலழகர் போட்ட ஒட்டுச் சட்டைக்கு, ஒட்டுவால் ஒன்றையும் கட்டித் தூக்குகிறார். வள்ளுவ வாய்மைகள் உரையாளர்களால், வழிப் பறிக் கொள்ளையாகக் கவர்ந்து கொள்ளப்பட்டதுடன் குப்பையும் கூளமும் வாரிச் சுமத்தி வைத்த கதையும் ஆயிற்று. பல்லக்கும் மறுப்பும் சம்பந்தர் பல்லக்கை நாவுக்கரசர் தாங்கிச் சென்ற செய்தி திருத்தொண்டர் புராணம் கண்டது. அதில் இருந்தோர் அற வோர் என்றும் சமந்தோர் பிறவோர் என்றும் சொல்லத் துணிவரோ? அதனால், நால்வர் நான் மணி மாலை. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடையை-மறுத்தார்சம் பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற் றுந்துஞ் சிவிகையினை ஊர்ந்து என்று கூறிற்று. தந்தம்வினை தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் என்பதற்குத் தம் பொருள் என்று பெருமையாகச் சொல்லப் படுவது தம்மக்களே. அவருடைய மற்றைப் பொருள்களோ அவரவர் செயலுக்குத் தக்க வகையில் வரும் என்பது நேர்ப் பொருள். எனினும், தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர். அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையாலே தம்பால் வரும் ஆத லால் என்றார் பரிமேலழகர். தமக்கு அழியாத உடைமையாவர் புதல்வர். அந்தப் புதல்வர் என்னும் பேறு தாம்தாம் செய்த விதிவசத்தால் வரும் என்றவாறு என்றார் பரிதியார். மக்கள் என்னும் பொதுச் சொல் இருக்கவும் மக்கள் என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது என்று வள்ளுவர்க்குத் தம் அயற்சார்புக் கருத்தால் மாசு சேர்க்கும் பரிமேலழகரும் அவர் வழி உரைகாரர்களும் வேண்டா வகையில் வினைப் பொருள் கண்டனர் என்பது வெளிப்படை. விருந்தும் வினையும் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று என்னும் குறளுக்கு வினை (விதி)யொடும் தொடர்பு உண்டோ? தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந் தருவானது இல்வாழ்க்கை நல்குரவான் வருந்திக் கெடுவதில்லை என்றே பரிமேலழகர் உரைத்தார். ஆனால் இதற்கு விளக்கம் கூறும் பரிதியார், சரீரத்தில் ஒரு பருவந்து விதனமான காலத்துச் சீப்பறிய விதமாறுவது போல வருவிருந்து உபசரிக்கில் வினையறும் என வினைக்கு ஏற்றுகிறார். வினையும் கேடும் பெருக்கமும் கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி என்பதில் தலைவிதி உண்டா? தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் எனச் செல்வம் கெடுதற்கும் பெருகுதற்கும் வினைகளைக் காரணமாக்குகிறார் பரிமேலழகர். முன்பு விதிமுறையான் வருகின்ற பொருளினது கேடும் மற்றும் இதன் பின் வரும் ஆக்கமும் என்கிறார் காளிங்கர். தீவினை தீய செயல்கள் தீயைப் பார்க்கிலும் தீமையானவை என் கிறார் வள்ளுவர். தீய செயல்களைத் தீவினைகள் என்னும் பரிமேலழகர், பிறிதொரு காலத்தும் பிறிதொரு தேயத்தும் பிறிதோருடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படும் என்றார் என விளக்கம் கூறுகிறார். சோறாக்குதல் நோய் நீக்குதல் முதலாகத் தீ, நலமும் செய்யும்; ஆனால் தீய செயல்கள் எவையும் எந்நலமும் செய்யா ஆகலின் தீயினும் அஞ்சப்படும் என விரிய விளக்குவார் அரசஞ்சண்முகனார் ( தொல்காப்பியப் பாயிர விருத்தி.) தவமும் நோற்றலும் வள்ளுவர் கண்ட தவம் உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்பது. நோற்றல் என்பது தாங்குதல் பொறுத்தல் என்னும் பொருளது. தவமுடையவர் சிலராகவும் தவமில்லாதவர் பலராகவும் இருத்தற்குக் காரணம் உறுதிப்பாடு உடையவர் சிலராகவும் உறுதிப்பாடு இல்லாதவர் பலராகவும் உலகில் இருத்தலேயாம் என்பது இயல்பான நேர்ப்பொருள். இதற்கு உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் அது, தவம் செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல் எனப் பரிமேலழகர் உரை கூறுகிறார். பரிதியார் பாக்கியவான்கள் சிறிதாக மிடியாளர் பெருத்த தாகிய காரியம் எஃது என்னில் தவம் பண்ணினவர்கள் அற்பம் தவம் செய்யாதவர் பலராகையால் என்றவாறு என்கிறார். இவற்றால் தவப்பயன் விளைவே செல்வராக விளங்குதல் என்றும், தவப்பயன் இன்மையே வறியராக உழலுதல் என்றும் காரணம் காட்டித் தாம் கொண்ட வினைக் கொள்கையை வள்ளுவர் மேல் திணிக்கின்றனர். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அதுவொப்ப தில் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் என்றும் அவாவறுக்கும் தவத்துப்பயன், செல்வப் பெருக்கு என்னின்; அஃது இரங்கத் தக்கதேயாம்! குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசுதல் அன்று; சேற்றைப் பூசுவதற்காகக் குளித்தது ஆகாதோ? ஊழ் ஊழதிகாரத் தொடக்கத்தில், இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட் கிளவி என்கிறார் பரிமேலழகர். ஊழ் என்பது உலகத்து இயற்கை என்னும் பொருளது. (637) ஆகூழ் போகூழ், இழவூழ், ஆகலூழ், நல்லூழ், அல்லூழ் என்பன இருவேறு உலகத்து இயற்கை யுள் அமைவன. கெடுப்பதூஉம், எடுப்பதூஉமாம் மழை ஊழை வான் சிறப்பிலேயே வள்ளுவர் சுட்டியுள்ளார். உலகத்து இயற்கை அமைச்சன் தன் கடமையைத் தெரிந்தும், தெளிந்தும் புரிவதற்கு ஊழறிவு இன்றியமையாதது என்றும், அவ்வறிவு இல்லாக்கால் நாடு எதிர்பாராத இடுக்கண் அலக்கண்கள் ஆகியவற்றுக்கு ஆட்படுதல் தீராது எனக் கருதிய வள்ளுவர். செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) என்று ஆணையிடுகிறார். இவ்வூழ்ப் பொருள் உணரும் வண்ணம், இணர் ஊழ்த்தும் நாறாமலர் என்று ஆள்கிறார் வள்ளுவர். முகையாக இருக்கும் பூ மலர்தல் ஊழ்த்தல் எனப்படுதல் அறியத் தக்கது. இயற்கையில் உண்டாம் புயல், நிலநடுக்கம், இடி, காற்று, மழை, பனி, வெயில் இன்னவை ஊழ் எனல் வள்ளுவப் பார்வை. அதனை அறிந்து செயலாற்றல் ஆட்சியர் கடமை என்பதும் அது. இந்நாள் வானொலி, தொலைக்காட்சி என்பவை வெப்பம், மழை முதலாம் வானிலை அறிக்கை தருதல் ஊழ்ச் செய்தியாம். ஊழ் முறைமையானது ஆதலால் முறைகேட்டை ஊழல் என்னும் பொருளறி ஆட்சி எண்ணத் தக்கதாம். உலகத்து இயற்கையாம் ஊழை ஒருவன் செய்வினை யொடும் இயைத்தமை, சமயச் சார்பாளர் சார்பின் வழிப் பட்டதே யாம். பால் இனிப் பால் என்பது, உலகத்து இயற்கையாம் ஊழே. காப்பன வெல்லாம் நில்லா; காவாதன வெல்லாம் போகா; கிட்டுவ கிட்டும்; கிட்டாதன கிட்டா என்னும் உலகத்து இயற்கை யுரைப்பது (376). பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம என்பது அது. முறை முறை என்பது முறைமை ஒழுங்கு என்னும் பொருளது. திருக்குறளில் பன்னீரிடங்களில் இடம் பெற்றுள்ள சொல் இது. முறை செய்து காப்பாற்று மன்னவன் (388) தேர்ந்து செய்வஃதே முறை (541) அவனை முறை காக்கும் (547) முறை செய்யா மன்னவன் (548; 553; 558) முறை கோடி மன்னவன் செய்யின் (559) முறைப் படச் சூழ்ந்தும் (649) செய்வான் செயல் முறை (677) இளையர் இனமுறையர் (698) உறல்முறை...இறல்முறை --(885) ஊழ் என்பதற்குரிய முறைமை என்னும் பொருளில் அன்றி, சமயம் சுட்டும் வினைப் பொருளில் எவ்விடத்தும் இடம் பெற்றில. உண்மை உண்மை என்பதும், நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் என்னும் ஊழதிகாரக் குறளில் வந்துள்ளது. இவ் உண்மை அறிவு என்பது பிறப்பொடு வந்த அறிவாகும். தந்தையர் தாயர் அவர் முந்தையர் என்பார் வழியாக வந்த மரபு அறிவாகும். அது, தலைவிதிப் பொருளதன்று. தெய்வம் தெய்வம் என்பது சங்க இலக்கியத்தில் முனிவர் என்னும் பொருளது. இச்சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் (43, 50, 55, 619, 702, 1023) இடம் பெற்றுள்ளது. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என்னும் குறளில் வரும் தெய்வத்திற்கு வினைப்பொருள் காண் கிறார் பரிமேலழகர். அவர் ஊழ் என்பதற்கே வினைப் பொருள் கொண்டமையால் நேர்ந்த நேர்ச்சி இது. உலகியற்கையால் எனப்பொருள் கண்டிருப்பின் சிக்கல் நேர்ந்திராது. நியதி, நீதி இனி நியதி என்பதோ நீதி என்பதோ திருக்குறளில் இடம் பெறாச் சொற்கள். பொறி பரிமேலழகர் இவ்வரிசையில் சுட்டாமல் விதி என்னும் பொருள் கண்ட ஒரு சொல் பொறி என்பது. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி (618) என்னும் குறளில் வரும் பொறி என்பது அது. பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழி யாகாது; அறிய வேண்டுமவற்றை அறிந்து வினை செய்யாமையே பழியாவது என உரை கண்டார். தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையாற் பய னில்லை என்பாரை நோக்கி உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்ப தென்றார் என விளக்கமும் வரைந்தார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதில் (6) வரும் தொடர்க்கு, மெய்-வாய்-கண்-மூக்குச்-செவி என்னும் பொறிகளை வழி யாகவுடைய ஐந்தவாவினையும் அறுத்தான் எனப் பொருள் கண்ட பரிமேலழகர், அப்பொறிக்குக் கண்டவாறு இதற்குப் பொருளைக் கூறாது வேறு கூறியமை வியப்போம். மெய்வாய், கண், மூக்குச், செவி குறைந்தது பங்கமல்ல என்னும் பொருளையே பரிதியார் கொண்டார். உறுப்புக் குறை குறையன்று; வினையாற்றும் திறம் இன்மையே குறை என்னும் ஆள்வினைக் குறளை, விதி வினைப்பால் படுத்தியமை வலிந்த முயற்சியும் வள்ளுவத் திற்கு முரணுமாகும். முரண்பட்ட விதிக் கொள்கைப் புட்டிக்குள் வள்ளுவ நறுமணப் பொருளை அடக்கி வைத்தமை எத்தகு பெருங் கேட்டைச் செய்துவிட்டது. ஆளைப்பாடாது அறம்பாடிய வள்ளுவத்தை, ஆள் வோனைப் புகழாது அரசியல் புகன்ற வள்ளுவத்தை, முடி மன்னர் காலத்தில் இருந்து கொண்டும், அம்மன்னர் முறை கேடர் எனின் குடிமக்கள் குமுறி அரசை அழிப்பர் என்ற வள்ளுவத்தை, கோலொடு நின்றான் இரவு, வேலொடு நின்ற கொள்ளை என்ற வள்ளுவத்தைச் செல்லாத்தடத்துச் செலுத்தச் சீர்குலைத்து விட்டது. செயலாக்க நூலாம் செந்தமிழ்க் குறளைச் செயலறவு வினைப்பாற் கொள்கையால் அளவெடுத்து உறையிட்டுப் போர்த்து முடக்கிவிட்ட முடக்கம் இது. வள்ளுவத்தில் சமயங்கள் கூறும் வினைக் கொள்கை இல்லை. செயல், செயல், செயல் என்னும் வினைத் திறம், வினைமாட்சி, வினைசெயல், வினைத் திட்பம் என்பனவே உண்டு. உலகியற்கையாம் ஊழையும் உலையா முயற்சி வெற்றி கொள்ளும் என்னும் வீறுகோள் உரைப்பது வள்ளுவம். ஊழே தடுத்தாலும் கெடுத்தாலும் உலையா முயற்சி அவ்வூழின் பிடர்பிடித்து உலுக்கித் தன் உழைப்புப் பங்கைப் பெற்றே தீரும் என்னும் உறுதியைப் பட்டயமாகத் தீட்டித் தந்ததும் வள்ளுவம். அதனை வினைப்பாற் படுத்தித் தலையைப் பிடித்துக் கொண்டு சோர்ந்து மடியராய்க் கிடக்கவும் வைத்தது வினைச் சார்பில் ஒன்றிவிட்ட உரைகாரர் உரைகளேயாம்! வள்ளுவப் பொருள் வள்ளுவமே! வள்ளுவத் தெளிவு வள்ளுவமே! வள்ளுவக் கொள்கையைச் சிதைத்து உரைக்கும் உரைகள் எத்தகைய உயர்ந்தவை எனினும் தேன் பூச்சுடைய நஞ்சே! நஞ்சில் இனிப்புக் காட்டிக் கொல்லும் நஞ்சே, இயற்கை நஞ்சினும் கேடாம். என்னெனில் இயற்கை நஞ்சு ஈதென்னின் நாவில் பட்ட அளவானே உயிர்க்கொல்லி என உடன் உணர்ந்து துப்பி விடவும். தப்பி விடவும் கூடும். இனிப்புறு நஞ்சு உணர்வில் பொய்ப்பித்து, உள்ளே சென்று உறுதியாக உயிர்க்கொல்லியாய் உய்வில்லா ஒழிவைத் தந்தே விடுமே! வள்ளுவம் வள்ளுவப் பொருளாகக் காணப்படின் அது வையகப் பொருளாக வாய்த்தல் மிகமிக அணித்தேயாம்! ஏனெனில், வையகம் தழுவிய வாழ்வியல் நூல் அஃதொன்றே யாம். 18. திருக்குறளில் பிறப்பு செய்ந்நன்றி அறிதல் என்பது திருக்குறளில் 11 ஆம் அதிகாரம் செய்ந்நன்றி மறந்தார்க்கு உய்வு இல்லை என்பது அதன் பத்தாம் பாட்டு. காலத்தால் செய்த நன்றி, செய்யாமல் செய்த நன்றி, பயன் கருதாமல் செய்த நன்றி என்பனவெல்லாம் என்றும் மறவாமல் போற்றத் தக்கனவே. தினையளவான நன்றி எனினும், நன்றிப் பயனை அறிந்தவர், அதனைப் பனையளவாகப் போற்றுவர் என்று அவர்தம் சிறப்புக் கூறுகிறார். கொன்றாற் போன்ற கொடுமையை ஒருவர் செய்தாலும், அவர் செய்த நன்று ஒன்று இருக்குமானால், அதனை எண்ணிய அளவால் அவர் செய்த கொடுமையும் மறைந்து போகும் என்று நன்றிச் சிறப்பை வலியுறுத்துகிறார். இவ்வெல்லாமும் கடைப் பிடியாகக் கொள்ளத் தக்கனவே. இவ்வாறு செய்ந்நன்றி அறிதலுடையாரை உலகில் கண்டே, அத்தன்மை உலக நலம் செய்யும் என்பதால் வலியுறுத்துகிறார் வள்ளுவர். அதில் ஏழாம் குறள், எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு என்பதாக உள்ளது. இந்தப் பிறப்பிலேயே, புரிவு தெரியாத இளந்தைப் பருவத்திலேயே நமக்கு எவ்வெவர் என்ன என்ன நன்மைகள் செய்தனர் என்பதை நாமாக அறிந்து கொள்ள இயல்வது இல்லை. புரிவு தெரிந்த பின்னரும் நமக்குப் பிறர் செய்த நன்மைகள் அனைத்தும் ஒன்றுவிடாமல் நினைவில் கொண்டு போற்றுகிறோம் என்பதும் முற்றாகச் சொல்ல இயல வில்லை. மறதி என்னும் கள்வன் வாரிக் கொண்டு போனவற்றை நாம் முட்டிமுட்டி நினைப்பினும் தட்டுப்படப் போவதில்லை. இவ்வாறாகவும், தங்கள் துயரம் துடைத்த நட்பை ஒருவர் எழுமை எழுபிறப்பும் நினைவர் என்பது எப்படி? போன பிறப்பில் நான் என்ன பிறப்பாய் இருந்தேன்? நான் மாந்தப் பிறப்புத்தான் பிறந்திருந்தேனா? மாந்தப் பிறப்புப் பிறந்து சிந்திக்கும் மன அறிவு கொண்ட இப்பிறப்புச் செய்தியே அறிய முடியாமல் பலவற்றை இழக்கும் நான், என்ன பிறப்புப் பிறந்தேன் என்பதையும் அறியாத மற்றைப் பிறப்பில் எனக்கு நன்மை செய்தார் எவர்? என்பதை எப்படி அறிவேன்? ஆற்றுநீரில் எழுதிய எழுத்தும், வான வெளியில் எழுதிய எழுத்தும்கூட அருகில் இருந்து கூர்ந்து காண்பார் பார்வையில் இன்ன எழுத் தெனப் பட்டாலும் படக்கூடும். முந்தைப் பிறப்புச் செய்தியே அறிய மாட்டாத யான் அப்பிறப்பில் எவரெவர் நலம் பொலம் செய்தார் என்பதை எப்படி அறிவேன்? அறியவும் மாட்டாத ஒன்றை நினைத்து உருகி மறவாது போற்றிக் கொண் டிருப்பேன் என்று தன்னறிவோடு நான் சொல்ல முடியாதே! இன்னும் எழுபிறப்பு என்று சொல்லப் படுவன, மாந்தப் பிறப்பாகவே ஏழுபிறப்பு என்றாலும் அறியமாட்டாத ஒருவன், கல், மண், மரம், செடி, புல், பூண்டு, புழு, பூச்சி, பறவை, விலங்கு எனப் பகுத்தறிவு இல்லாப் பிறப்பும் அடைந்திருப்பின், அப் பிறப்பில் செய்யப் பட்ட நன்மையும் இப்பிறப்பில் தோன்றுமா? என் முன்னைப் பிறப்பு இது என்று நெஞ்சார லஞ்ச மின்றிச் சொல்ல ஒருவர் உளரா? அவ்வாறு சொல்லும் ஒருவர், தமக்கு இவர் இவ் விடத்துப் பிறந்திருந்து அல்லது இன்னவாகப் பிறந் திருந்து அவர் எனக்கு இன்ன செய்தார் என்று அவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் உறுதிப்படுத்த முடியுமா? இவையெல்லாம் வானப்பூ மணந்தது என்பார் உரை போல் மயக்குவதே அன்றித் தெளிவிப்பனவாக-உண்மை தெளி விப்பனவாக-உள்ளனவா? பரிமேலழகர் முதலாம் பழைய உரையாசிரியர்களை இக் குறளுக்கு என்ன உரை விளக்கம் வரைந்துளர்? பரிமே: தங்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். எழுமை என்றது வினைப் பயன் தொடரும் ஏழு பிறப்பினை. அது வளையா பதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் என்கிறார். அவர் உரைத்தது எழு பிறப்பும் தீயவை தீண்டா என்னும் குறளிலாகும். மணக்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலேயன்றி எழுமையிலும் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர் என்றவாறு என்கிறார். பரிதி: செனனந் தோறும் நினைக்கப்படும், தம்முடைய மனக் கிலேசத்தைத் துடைத்தவர் நட்பை என்றவாறு என்கிறார். காளிங்: எழுவகையாகத் தோன்றி வருகின்ற பிறப்பு தோறும் தம்மாட்டு வந்தெய்தும் இடுக்கண் துடைத்தவர் நட்பை ஈண்டுச் செயலாகும் நன்றியைக் கொண்டே பிறவி தோறும் இடருறுங் காலத்துப் பெரியார் செய்த நன்றிகள் என்று, இங்ஙனம் எழுவகைப் பிறப்பினும் தமக்குச் செய்தார் செய்த நன்றிகளைச் சிந்திப்பர் செய்ந் நன்றி அறிவார் என்றவாறு என்கிறார். மற்றொரு பழைய உரை: தன்னிடத்தில் வந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை எழுமையினையுடைய எழுபிறப் பினும் நினைப்பார் நல்லோர் என்கிறது எழுமை, எண்பத்து நான்கு நூறாயிரம் பேதமாகிய பிறப்பென முன்சொன்ன உரையிற் கண்டு கொள்க (62) என்று மேலும் கூறுகின்றது. பிறப்பு ஏழும் அவற்றின் விகற்பமும் பற்றி அகராதிகள் கூறும் செய்திகள்: தேவர், மக்கள், விலங்கு, புள், நீர்வாழ்வன, ஊர்வன, தாவரம் இவற்றின் பிறவி விகற்பம் (யோனி பேதம்) எண்பத்து நூறாயிரம். அவையாவன: தேவர் பதினான்கு நூறாயிரம் மக்கள் ஒன்பது நூறாயிரம் விலங்கு பத்து நூறாயிரம் புள் பத்து நூறாயிரம் ஊர்வன பதினொரு நூறாயிரம் நீர்வாழ்வன பத்து நூறாயிரம் தாவரம் இருபது நூறாயிரம் அன்றி தேவர் பதினாறு நூறாயிரம் எனவும், தாவரம் பதினெட்டு நூறாயிரம் எனவும் கூறுப. என்பது அது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டுவிட்டு, உன் முன்னால் இருக்கும் செடி கொடி மரப் பெயர்களையெல் லாம் சொல் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? எழுபிறப்புமே என்னவென எண்ண முடியாத ஒரு பிறப்பில், அப்பிறப்புகளில் பிறர் செய்த நன்மைகளையெல்லாம் நினைத்தல் என்பது அறநூல் உரையா? வாழ்வியல் கண்டார் உரையா? வாழ்வொடு உராய்ந்து பார்த்தன்றோ கடைப் பிடியாகக் கொள்ளப்படுவன அறச்செய்கைகள். அறிவறியாப் பொருளை ஆய்ந்து கொள்வதுதான் எப்படி? எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் என்னும் குறளின் பழைய உரைகளும் இப்படித்தான். பிறராற் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல் வரைப் பெறுவன் ஆயின், வினை வயத்தாற் பிறக்கும் பிறப்பேழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென் றடையா என்று உரை கூறுகிறார் பரிமேலழகர். இதனினும் ஒருபடி மேலே செல்கிறார் பரிதியார்: தேவர்-மனிதர்-மிருகம்-ஊர்வன-நீர்வாழ்வன பட்சி தாவரம் என்னும் எழுபிறப்பிற் சென்றாலும் எழுநரகத்திற் சென்றாலும் துன்பம் வராது; நல்ல புத்திரனைப் பெற்றவர்க்கு என்றவாறு என்கிறார். நல்ல புத்திரனைப் பெற்றவன் இவ்வேழு பிறப்புகளையும் அடைவான் எனின், அவன் நல்ல புத்திரனைப் பெற்ற பயன் என்ன? ஏழு நரகத்தில் சென்றாலும் துன்பம் வராது என்றால் புத் என்னும் நரகத்துப் புகாமல் காக்கப் பிறந்தவன் புத்திரன் என்னும் புனை புரட்டு என்ன ஆயிற்று! நரகத்துச் செல்லவும் நல்ல புத்திரன் செய்வானா? வாழ்வு நூலைப் புராணப் புனைவு நூற்பார்வை கொண்டும், அவ்வவர் சமயச் சிறு சிட்டிக்குள் புகுத்தி விட வேண்டும் என்று கொண்டும் செய்து வைத்த ஏற்பாடுகள் இவை. சமயங்கடந்த பார்வையர்-பகுத்தறிவுப் பார்வையர்-வாழ்வியல் பார்வையர் இப்பிறப்புரையை ஏற்றனர் அல்லர். மறுப்புரை கண்டனர். பல தலைமுறை; ஏழேழு தலைமுறை எனக் கண்டனர். நடைமுறை வாழ்வியலொடு பொருந்த ஆய்தல் தெளிவு பிறக்கும். அதனை மேற்கொள்ளல் வாழநூல் செய்த வள்ளுவர் வழி. என் தந்தையர் படிக்கராமர். அவர் ஒரு வீடு கட்டுகிறார். அவரிடம் வண்டி மாடு உண்டு. கட்டடத்திற்கு வேண்டும் கற்கள், மணல், மரம் முதலியவை கொண்டுவர அவை போதா. முந்தைச் சிற்றூர் வழக்கப்படி வண்டி மாடு இருப்பார் ஓரிரு நாள்கள் அவற்றைக் கொண்டு வந்து உதவுவர். மாடிருப்பார் மாடு மட்டும் உதவுவர்; கூலிவேலை செய்வார் கூலி பெறாமல் சில நாள்கள் வேலை செய்து உதவுவர். சிற்றாள்களும் அப்படியே. சிறு குடிசை போடுவர் எனின், மரம், கம்பு, தட்டை, தாள்கல் முதலியவற்றை உடையவர் அவற்றை இலவயமாகக் கொடுத்து உதவுதல் ஊர்ப்புற வழக்கம் இவ்வழக்கப்படி, கட்டடப் பொருள்கள் கொண்டு வரு வதற்காக வண்டி மாட்டொடு வந்தார் அண்டையூர் உறவினர் ஒருவர்; அவர் சக்கணர் என்பார். ஊர் குன்றக்குடி. வண்டி இராசபாளையம் சென்று மரம், இரும்பு முதலியன ஏற்றிக் கொண்டு திரும்பியது. ஊருக்கு ஒரு கல் தொலைவுக்கு மேற்கே ஓர் ஓடை. அவ்வோடையில் இறங்கிய வண்டியில் சக்கரம் ஆழ்ந்து சென்றது. உட்சேற்றில் புகுந்தது. ஆயினும் மாடு முனைந்து இழுத்தது. வண்டியின் தெப்பக் கட்டை மட்டம் நிலமட்டமாய் இருந்தும், மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து என்பதற்குச் சான்றாய் விளங்கிய காளை, தலையைக் குனிந்து கொம்பை நிமிர்த்தி, காதை, வெடைத்து மூக்கை ஊன்றி இழுத் தது ஆற்றுக் கரைமேட்டை நோக்கி. அவ் விழுப்பின் வலுவை ஆற்றாமல் மாட்டின் கழுத்துப் பட்டை அறுந்தது. அறுந்த நிலையில் அப்படியே மாடு நிலத்தில் மோதி மூக்கு அடிபட்டு அவ்விடத்திலேயே மூச்சை முடித்து விட்டது! உதவிக்கு வந்தவர்க்குக் கிடைத்த பரிசு எத்தகைய பரிசு? சக்கணரைத் தேடிச் சென்றார் எந்தையார். ஓரைம்பது உருபா தந்து மாற்று மாடு பிடித்துவர ஏவினார். மறாமல் அத்தொகையைப் பெற்றுக் கொண்டு அத்தொகைக் குள்ளாகவே இழந்த மாட்டை ஒத்த ஒரு மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்தார் சக்கணர். இரண்டு மூன்று திங்கள் கடந்தன. சக்கணர் ஒருநாள் எந்தையாரைத் தேடி வந்தார். மடியில் இருந்து ஐம்பத்து ஐந்து உருபாத் தாள்களை எடுத்து எந்தையர் கையில் வைத்தார். என்ன! என்ன! எனத் திகைத்தார் எந்தையார். அவர் மடியைப் பற்றி அத்தொகையை வைத்தார். அவர் மீளவும் எடுத்துக் கையில் திணித்தார். இப்படி இருவரும் விடாப்பிடியாக மாறி மாறி நின்ற நிலை. எந்தையர், எங்களுக்கு உதவியாக வந்தீர்கள்; இந்த இழப்பு ஆயிற்று; அதனால் நான் தொகை கொடுக்க வேண்டி யது முறையே என்றார். சக்கணர், எங்கள் வேலைக்குச் சென்றிருந்து இப்படி நேர்ந்திருந்து, உங்களிடம் தொகை வாங்கியிருந்தால் நான் தருவேனா இல்லையா? நேர்ந்ததற்கு உங்கள் வேலை, என் வேலை எனப் பிரித்துப் பார்க்கவேண்டா. அன்று பணம் தந்த உடனேயே மறுத்திருப்பேன். ஆனால் என்னிடம் வேறு மாடு பிடிக்கப் பணம் இல்லை. உங்கள் பணத்தை அதனால் வாங்கிக் கொண்டு மாடும் பிடித்தேன்; பருத்திக் காட்டுக்கு நீர்ப்பாய்ச்ச உதவியது; பருத்தியும் நன்றாக வெடித்தது. இன்று பருத்தியை எடை போட்டேன்; தொகை வந்தது; பெற்றுக் கொள்ளுங்கள்; காலத்தால் உங்கள் உதவி பயன்பட்டது என்பதற்கு இத் தொகையே சான்று; உருபா 50க்கு 5 கூடுதல் வைத்துள்ளேன்; அதனை வேண்டுமானால் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிக் கட்டாயமாக ஐம்பது உருபாவை எந்தையாரிடம் கொடுத்து விட்டே சென்றார் சக்கணர். இப்பொழுது, அச் சக்கணர்க்குச் சக்கணர் எனப் பேரர் உள்ளார்; அச் சக்கணர்க்கு மகனார், மகளார் உள்ளனர்; அவர்க்கு மக்கள் உள்ளார். ஐந்தாம் வழிமுறை இதுகால் நிகழ்கின்றது. இவர்களுள் எவரை நினைப்பிலும், எவரைப் பார்ப்பினும் அப் பழஞ் சக்கணர் அல்லவோ முந்து, முந்து நிற்கிறார். அவர் அவ்வாறு நிற்றல் படிக்கராமர்க்கு மட்டுமோ, அவர் மக்களுக்கும், மக்களின் மக்களுக்கும், அம்மக்களின் மக்களுக்குமென ஐந்தாம் வழி முறைக்கும் உண்டாகிப் பசுமையாக நிற்கின்றதே. சொல்லிச் சொல்லிப் பாராட்டவும், நினைக்கவும், உதவவும் உந்துகின்றதே! இவ்வாறு ஒருவர் செய்த நன்றிச் செயல் அவர் வழி முறையில் வருவார் எவராலும் நினைந்து போற்றப்படுதல்தானே எழுமை எழுபிறப்பும் உள்ளல் என்னும் வாழ்வியல் வள்ளுவ நெறியாகும். தெள்ளத் தெரிந்த இம்முறையைக் கருதாமல், நினைவிலே கூடவும் கூடாப் பிறப்பாக உரைகாணின் வாழ்வியல் வள்ளுவத் திற்கு வாய்த்த பொருளாகி விடுமா? இந்நாட்டு விடுதலைக்காகத் தம்மை மெழுகாக எரித்து, சந்தனமாகத் தேய்த்து முழுதுற ஈகம் செய்த செம்மல் வ. உ. சிதம்பரனார். அவர் தம் படத்தையன்றி முகத்தையும் கண்டறியாப் பேர்த்தியின் பேர்த்திக்குத் திருமணம். அத்திருமண வாழ்த் துரையெல்லாம் என்னவாயின? செம்மல் சிதம்பரனார் ஈகமே ஒளி செய்தன. இப்பேர்த்திக்கும் அவ்வீகத்திற்கும் என்ன தொடர்பு? அவ்வீகர் வழிமுறை என்னும் தொடர்பு ஒன்று தானே. வீட்டுக்கும், நாட்டுக்கும் இவ்வாறு செய்யப்படும் நல்லப்பாடுகள் தாமே நன்றிக்குரிய நினைவுகளாகவும், குறி களாகவும், சிலைகளாகவும், வரலாறுகளாகவும் நின்று நிலை பெறுகின்றன. கண்காணக் கிடைக்கும் சான்றை விடுத்துக் கருதவும் இயலாப் பொருளைக் கதைப்பதால் ஆகும் பயன் தான் என்ன? எழுபிறப்பும் உள்ளுதலுக்கு-பலதலை முறையினரும் நன்றியை நினைத்தலுக்கு-இது ஏற்கும். எழுபிறப்பும் தீயவை தீண்டா என்பதற்குப் பொருந்து மாறு உண்டா? என்னும் வினாவுதல் உண்டாகலாம். பழியில்லா மக்கள்-பண்புடைய-மக்கள் பிறந்த குடியில் ஏழு தலைமுறைகளுக்கும் பழி உண்டாவது இல்லை என்பது கொள்ளத்தக்க பொருள்தானே! தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சீலை தந்தை அறிவு மகன் அறிவு தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி வாழையடி வாழை என்பனவெல்லாம் என்ன சொல்கின்றன? தாய் தந்தையர் இயல்பும், அவர் தாய் தந்தையர், அவர்க்கு முந்தையர் இயல்புகளும் கூடியே ஒருவர் இயல்பு அமைகின்றது என்று இற்றை அறிவியல் ஆய்வாளர் கூறுகின்றனரே. பெற்றோர் இயல்பு பாதியும், அவர் பெற்றோர் இயல்புகாலும், அவர் பெற்றோர் இயல்பு அரைக்காலும் எனப் பல தலைமுறை இயல்பே ஒருவர் இயல்பாய் அமைகிறது என்கின்றனரே. பழிபிறங்காப் பண்புடைய மக்கள் வழியினர்க்கு அத் தன்மை பிறப்புக் கொடையாய் அமைதலால் அன்றோ, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் என்றார் திருவள்ளுவர். இதில் வரும் உண்மை அறிவு என்பது. ஒரு பிறப்பின் பிறவிக் கொடையாய் அமைந்திருக்கும் அறிவுதானே! ஒரு குடும்பச் சாயலை உருவமைப்பு வெளிப்படக் காட்டுதல் எவரும் அறிந்ததே. பார்வை இல்லாத ஒருவர், தாம் பார்வையோடு இருந்த காலத்தில் கண்டிருந்தவரின் வழி முறையினர் எவரை எனினும், காதைத் தடவிப் பார்த்த அளவில் இன்னார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை என் இளந்தைப் பருவத்தில் கண்டது உண்டு. என் காதைத் தடவி அவ்வாறு கூறியதும் உண்டு. குடும்பச் சாயல் உருவமைப்பில் இருப்பது போல் அறிவு, பண்பு ஆகியவற்றில் இருத்தல் ஆய்வார்க்கு வெளிப்படைச் செய்தியேயாம். சோழன் நலங்கிள்ளி என்பான் ஒரு வேந்தன்; அவன் தம்பி மாவளத்தான் என்பான்; அவனும் தாமப்பல் கண்ணன் என் பான் ஒரு புலவனும் வட்டு எனப்படும் சூதாட்டம் ஆடினர். அதில் புலவன் ஒருவட்டினைக் கையுள் மறைத்து விட்டான். அது கண்ட மாவளத்தான் ஒரு வட்டை எடுத்துப் புலவன் மேல் எறிந்தான். எறிபட்ட புலவன் தன் பிழையுணரானாய் நீ சோழன் மகன் அல்லை என்று கூறி மீண்டுமொரு பிழை புரிந்தான். புலவன் சொல் தன் தலைமுறையைச் சுட்டியதை உணர்ந்த மாவளத்தான் தானொரு தவறு செய்தான் போலத் தலை நாணினான். அந்நிலையில் தன் பிழை உணர்ந்த புலவன், ஆர்புனை தெரியலநின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்; மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மைக் காண்மெனக் காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள் என்று பாடினான் (புறநானூறு 43) அங்காடி மேயும் பழங்கன்று ஏறு ஆதலும் உண்டு என்பது பழமொழிப் பாட்டு (202) இதிலுள்ள பழங்கன்று என்பது வள்ளுவர் குடிமையில் கூறும், வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று என்பதில் வரும் பழங்குடி போல்வது. தொல்காப்பியம் சுட்டும் முதுகுடி புறநானூறு காட்டும் மூதில் என்பன போல மரபுச் சிறப்புரைப்பது இது. நல்லினத்துப் பிறந்த கன்று பேணுவாரற்று அங்காடி மேய்ந்து திரிந்தாலும் உரிய பருவம் வரும் காலத்துத் தன் னினத்துப் பிறவிப் பேற்றை வெளிப்படுத்தி விடும் என்பது இக் கால அறிவியல் இனவகை ஆய்வொடு பொருந்தும் செய்தியாம். ஆதலால், மரபு வழி அறிவும், பண்பும், உருவும், சாயலும் அமைதல் என்பது முறையான உண்மையேயாம். ஏழு என்பது பல என்னும் பொருளது. இப்பொருளில் குறளில் பிற இடங்களிலும் வரும். பழிக்கு இடமாகாத மக்களைப் பெற்றால் அவர்குடி வழியினர் தீமைக்கு ஆட்படாமல் வாழ்வர் என்பது இயல்பான பொருள்தானே! பாலைப் பார்க்கவில்லை எனினும் பால் பானையைப் பார்க்க வேண்டும் என்பது குடிச் சிறப்பைக் காட்டு வதேயன்றோ! எழுமையும் ஏமாப்புடைத்து என வருவன இரண்டு குறள்கள்; அவை; ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கலாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (126) என்னும் அடக்கமுடைமைக் குறள் ஒன்று. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து (398) என்னும் கல்விக் குறள் மற்றொன்று, இவற்றில் வரும் ஒருமை ஒருபிறப்பில் வருவது என்னும் பொருளது அன்று. ஒன்றாம் தன்மை என்னும் பொருளது. ஒருமைச் செயல் என்றும் (835) ஒருமை மகளிர் என்றும் (974) வரும் குறள்களின் நடையின இக்குறள்கள். ஒருமைச் செயல் வரும் குறளில் எழுமையும் என்னும் இயைபும் உண்டு. அது பல என்னும் பொருளதே. ஓர் ஓட்டினுள் தன் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்ளும் உறுப்படக்கி எனப் பெயர் பெறும் ஆமை போல், ஒருவன் ஒருகாலத்தில் ஐம்பொறிகளையும் அடக்கிப் பழகினால் பின்வரும் காலங்களுக்கெல்லாம் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது முதற்குறளின் பொருளாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது இளமையில் கல் இளமையில் கல்வி சிலையில் எழுத்து பருவத்தே பயிர் செய் என்று வழங்குவனவற்றை அறியின் இப்பொருளை எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்பாகும். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி என்பது உள்ளத்தை அலைய விடாது ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வி என்பதாகும். ஒருமுகப் பட்டுக் கற்கும் கல்வி ஆழ்மனத்தில் அல்லது உள்ளுள் நன்கு பதிந்து விடுமாகலின் மறுமுறை படிக்க வேண்டும் என்பது இல்லையாய்ப் பதிந்துவிடும். இத்தகைய கல்வி கல்லானையே, வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானை என ஔவையார் தனிப்பாடல் பழிக்கும். நான்படிக்கும் போது என்னை நானறியேன் நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க் குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் என்ற வள்ளலார் கல்வியை ஓதாக் கல்வி என உலகம் உயர்த்திப் பேசும். ஒருமைக்கண் கற்கும் கல்வியே ஓதாக்கல்வி என்பதாம். ஓதுதல் என்பது பல்கால் பயிலுதல். ஓதாமை என்பது பல் கால் பயில வேண்டியதில்லாமல் ஒருமுறை கற்ற அளவானே உள்ளத்துப் பதித்துக் கொள்ளல். இந்நிலை வல்லார் உலகளாவிய அளவில் பலப் பலர். அவர் அன்றும் இருந்தனர்; இன்றும் உளர். ஒருமுகப்பட்ட கதிரொளி அறுவைக் கருவியாக மருத்துவ உலகில் பயன்படுவதையும், குவியாடியில் படிந்து அரியதாய் வெளிப்படும் கதிரொளி பஞ்சில் தீயைப் பற்ற வைப்பதையும் காணத்தானே செய்கிறோம். பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் இறைமைச் சீர் வழிப்பட்டது, ஒருமைக்கண் கற்கும் கல்வி என்க. பிறப்பு என்று திருவள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்? இறந்தார் ஒருவர், மீண்டும் பிறப்பார் என்றும் அதுவே பிறப்பு என்பது என்றும், அவ்வாறு ஏழு முறையோ ஏழேழு முறையோ பிறப்பார் என்றும் எங்கேனும் கூறுகின்றாரா? தோன்றிற் புகழோடு தோன்றுக; அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று என வரும் வெளிப்படு தெளிபொருள் விளக்கக் குறளுக்கே, மக்களாய்ப் பிறக்கின் புகழுக் கேதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று என்று பொருள் கண்டுளரே தோன்றல் என்பது பிறத்தல் தானா? புகழ்க் குணத்தோடு பிறக்கவேண்டும் என நான் நினைத்துப் பிறக்க முடியுமா? என் பிறப்பு என் கையிலேயா உள்ளது? என் எண்ணப்படி நான் பிறக்க முடிந்தால் புகழிலாப் பிறப்பாகப் பிறக்க நான் நினைவேனா? ஒரு முயற்சியில் ஒருவர் ஈடுபட்டால் அம்முயற்சிக்கும் தமக்கும் புகழுண்டாக ஈடுபடுவாராக; அத்திறம் இல்லார் அம்முயற்சியில் ஈடுபடாதிருத்தலே நல்லதாம் என்பதன்றோ வெளிப்படுபொருள். கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் (403) என்றும், நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு (715) என்றும் வருவன போன்றவை இக்குறளமைதிக்குச் சான்றாகுமே! தோன்றல் என்பதே பிறப்பென்னும் இப்பாடு படின், பிறப்பு என்பது எப்பாடு படாது? பிறப்பு என்பதன் பொருளைத் தெள்ளிதின் அகரமுதலி கூறுவது போலக் கூறுகிறதே திருக்குறள். பிறப்பு என்னும் பேதைமை என்கிறது அது (358) மெய்யுணர்வு இன்மை பிறப்பு: அதனை உடைமை சிறப்பு என்கிறாரே! அம்மட்டோ! பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (351) என்றும், பொருளானாம் எல்லாம் என் றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு (1002) என்றும் மெய்ப்பொருள் ஈதென அறியாமையும், பொருளே குறியாகக் கருமியாக வாழ்தலையும் மாணாப் பிறப்பு என் கிறாரே! அப்பிறப்பு மருள் எனப்படும் மயக்கத்தால் உண்டாவது என விளக்கமும் தருகிறாரே! அளாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (361) என்றும், வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (362) என்றும், பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் பேதைமை, மருள் என்பவற்றோடு அவாவையும் பிறவிக்கு வித்து என்றும் அவாவறுத்தலே பிறப்பறுதல் என்றும் கூறுகிறாரே! பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பு மிகை என உடற் பற்றறுதலையும் சொல்கிறாரே! இவற்றைத் தொகுத்து நோக்கின் புலப்படுவது என்ன? பிறப்பு என்பது அறியாமையும் அறியாமை வழிப்பட்ட தன்மைகளுமாம் எனத் தொகுத்துக் காணலாம். அறிதோறும் அறியாமை புலப்படும் என்பது வள்ளுவம். அறிவுச் சிறப்பு அடைய, அடைய அறியாமைப் பிறப்பு அகன்று ஒழியும் என்பதே இதன் பொருளாம். இவற்றால் ஒருவர் தம் ஒரு வாழ்விலேயே பல பிறப்புகள் உண்டு என்பது விளக்கமாகும். பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாம் சாகின் றோமால் எனவரும் பழைய குண்டலகேசிப் பாடல்; ஒருவாழ்வில் உண்டாம் பல சாக்காடுகளைக் குறிக்கு முகத்தான் ஒரு வாழ்வி லேயே பல பிறப்புகள் உண்மையை விளக்கிக் காட்டுகிறது. திரு. வி. க. இயற்றிய நூல்களுள் ஒன்று சித்தம் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் என்பது. நூலின் பெயரே எது பிறப்பு என்பதைத் தெளிவாக்கி விடுகிறது. சித்தம் திருந்தச் சாதலும் பிறத்தலும் தொடர்தலை விளக்கிக் கூறுகிறது நூல். பிறந்தவன் வளர்ந்தான் இறந்தான் மீண்டும் பிறந்தான் வளர்ந்தான் இறந்தான் என்னல் பருமைப் பேச்சே; நுண்ணிய தன்று; நாளும் நொடியும் நாளும் நொடியும் பிறத்தலும் வளர்தலும் இறத்தலும் உண்டே என்கிறார். கொந்தி என்பான் கொலைஞன்; ஒரு புலவன்; கிறித்துவின் மலைப் பொழிவு பற்றிப் பேசுவது கேட்டான். அதனால், இறந்தனன் கொந்தி; பிறந்தனன் மீண்டும்; அந்தக் கொந்தியோ இந்தக் கொந்தி? அவனெங் கேயோ? இவனெங் கேயோ? அவனிவன் அல்லன் இவனவன் அல்லன் என்கிறார். மன்னவன் ஒருவன்; அவனுக்கொரு பிள்ளை; அடாச் செயலே அவன் வடிவம்; நந்தி என்பான் அவ்வூர் நண்ணினன். அவனிடம், பொல்லான் ஒருவன் நல்லான் ஆகும் வழியும் உண்டோ மொழிக என்றான். நல்லான் பிறர்குறை சொல்லான் என்று நந்நி அருளினன் மைந்த னிடத்தில்; சித்திரம் ஆனான் செத்தவன் ஆனான் தெளிவு பிறந்தது; ஒளியும் பிறந்தது; பழைய பாவமும் பழியும் பிறவும் கரைந்து கரைந்து கழிய லாயின; சித்தம் திருந்தினன்; செத்துப் பிறந்தனன் புதியன் ஆயினன்; மதியன் ஆயினன் எத்தனை கொலைஞர் எத்தனை கள்வர் எத்தனை குடியர் எத்தனை தூர்த்தர் எத்தனை பொய்யர் எத்தனை கபடர் சித்தம் திரும்பிச் செத்துப் பிறந்தனர்! சித்தம் திரும்பல் செத்துப் பிறத்தலே மறப்பும் நினைப்பும், இறப்பும் பிறப்பாம்; என்று தொடர்கிறார். இப்பிறப்பு இறப்பு விளக்கம் அன்றோ, ஒரு சுவடியாக எழுந்தது. மேலும் பிரிவு வேண்டுவோர் சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் என்னும் சுவடி காண்க. இத்தேகத்திற்கு ஏழு பிறவியுண்டு. யாதெனில்: கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாய் இருப்பது! அவயவாதி உற்பத்திக் காலம்! பிண்டம் வெளிப்பட்ட காலம்! குழந்தைப் பருவம்! பாலப் பருவம்! குமாரப் பருவம்! விருத்தப் பருவம்! ஆகப் பிறவி 7! என்கிறார் வள்ளலார் (உபதேசக் குறிப்புகள்-எழுவகை பிறப்பு) பூர்வஜென்மம் என்பது கர்ப்பகோளவாசம் உத்தர ஜென்மம் என்பது ஜனனகாலம் எனவும் கூறுகிறார் (உபதேசக் குறிப்புகள்-ஜென்மம்). உயிரணுக்கள் தோன்றிக் கொண்டும், மறைந்து கொண்டும் உள்ளன என்றும், அவ்வுயிரணுக்களின் முழுத் தொகுதியும் மறைந்து, புதிய அணுக்களாலேயே முழுமையாகிவிடும் நிலை ஒரு பிறப்பாகும் என்றும் அறிவியல் கூறுவது எண்ணத் தக்கது. பிழைத்தது மறுபிறவிதான் என்றும், முப்பிறவி பெற்றவர் என்றும் செத்துச், செத்துப் பிறக்க வேண்டியதுள்ளது என்றும், நெருநலும் கொன்றது போலும் நிரப்பு, இன்றும் வருவது கொல்லோ என்றும் கூறப்படுவனவற்றை எண்ணின், ஒரு பிறப்பினுள்ளாக வரும் நிலை மாற்றங்களே பல பிறப்புகளாகப் பரவலாகக் கூறப்படுதல் அறிய வரும். இனிச் சமயத்தர் கூறும் எழுவகைப் பிறப்புக்கும் இதற்கும் வேறுபாடு உண்டே எனின், வாழ்வியல் கூறவந்த வள்ளுவர், கொண்ட பிறவியில் கொள்ள வேண்டுவன இவை என்றாரே யன்றிப் பிறவற்றைக் குறித்தார் அல்லர் என்றும், சமயம் சாரா நூலைச் சமயக் கணக்கர் வழியில் சார்த்திக் காணல் முறை யாகாது என்றும் அமைதல் கடனாம். இனி இம்மை, மறுமை என்பவற்றையும் ஆள்கிறாரே வள்ளுவர் எனின் காண்பாம். சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் (98) என்பது இம்மை, மறுமை ஆகிய இருமையும் சுட்டும் குறள்களுள் ஒன்று. சிறுமையில்லா இனிய சொல் சொல்லின், வாழும் நாளிலும், வாழ்ந்து மறைந்த பின்னரும் இன்பம் தருதலில் சிக்கல் இல்லையே. வாழும் போது அவர் இன்புறுவார்; பின்னர் அவர் குடி வழியர் அவர் புகழ் கேட்டு இன்புறுவர் என்பது தானே இயற்கை. இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் (1043) என்பது இருமையும் வரும் மற்றொரு குறள். வறுமை, வாழ்வாரைக் கெடுப்பதுடன், அவர் வழியில் வருவாரையும் வாட்டுவது கண்கூடுதானே! வறுமைக்கு ஆற்றா மல் எத்தனை பேர்கள் தம் வாழ்வையும் தம் குடி வழியவர் வாழ்வையும் உய்விக்க இயலாமல் வருந்தியே தம் வாழ்வை முடித்துக் கொள்ளலும், வழிமுறையினரையும் ஒருங்கே முடித்து வைத்தலும் நாடு காணாத-ஏடுகாணாத- செய்திகள் இல்லையே! மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து (459) என்னும் சிற்றினம் சேராமைக் குறள். ஒருவன் கொண்டுள்ள மனநலத்தினால் அவன் வாழும் காலத்தன்றி மறைந்த பின்னரும் புகழாம்; அப்புகழும் இன நலத்தொடும் கூடியிருப்பின் குடும்பத்திற்கு மிகப் பாது காப்பாகும் என்னும் நேரிய பொருளுடையதுதானே! மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று (904) என்னும் பெண்வழிச் சேறல் பற்றிய குறள் மனைவிக்கு அஞ்சி நடத்தலால் மேல்வரும் புகழை இழப்பவன், தான் கொண்ட செயலாற்றலில் சிறப்படைதல் இல்லை என்னும் பொருளதே. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள் (1315) என்னும் புலவி நுணுக்கக் குறள் காதலராகக் கூடிய இவ் வாழ்வில் பிரிய மாட்டோம் என்ற அளவில், அவ்வாறானால் இறப்பில் பிரிவோமா? என்று கண்ணில் நீர்தேக்கி நின்றாள் என்பதுதானே உணர்வு ததும்பி நின்று உரையாடும் நிலை. இனி வள்ளுவத்து வரும் இருமை உண்டே எனின், நீத்தார் பெருமையில், இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (23) எனவரும் குறளில் இருமை இடம் பெறுகின்றது. அது இருவேறு உலகத்து இயற்கை எனப்படும் ஊழியல் தெளிவுச் செய்தியாம். அது இம்மை, மறுமைப் பொருளது அன்று. நீத்தார் பெருமைக் குணங்கள் ஓரைந்தும் காப்பார், ஐந்தவித்தார், ஐந்தின் வகைதெரிவார், செயற்கரிய செய்வார், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகு வார் என்னும் நீத்தார் பேறுகளுள், ஆகலூழ், போகலூழ், நல்லூழ், அல்லூழ். கெடுக்கும் ஊழ், எடுக்கும் ஊழ் என்னும் இருமை அறிதலும் இணைத்துக் கூறியது அஃதாகும். ஆதலால் வாழ்வியல் வள்ளுவப் பார்வையில், பிறந்த பிறப்பைச் சிறப்பாக்குதல் பற்றியவை சொல்லப்படுகின்றனவே யன்றிச் சமயங்கள் கூறும் பல்வேறு பிறப்புப் பற்றிய கருத்துகள் இல்லை என்பதும், அக்கருத்துள்ளார் பார்த்த பார்வையே அவர் உரையாக வெளிப்பட்டது என்பதும் தெளிவாம். முட்டைக்குள் இருக்கும் குஞ்சு அம்முட்டை உலகை அன்றி, அப்பால் உலகை அறியாது; அவ்வாறே இவ்வுலகில் வாழும் யான் காணும் உலகையன்றிக் காணா உலகை அறியேன் என்றார் புத்தர். வள்ளலாரோ, மனித தேகமே சுவர்க்கம், நரகம் இருக்கிற இடம் என்றார். மேலும் மனித தேகத்திலேயே மற்ற பதங்களும் (சுவர்க்கங்களும் நரகங்களும்) உண்டு என்று விளக்கினார். (உபதேசக் குறிப்புகள்-சுவர்க்க நரகம்) இனித் தொடக்க அதிகாரத்தின் இறுதியிலேயே, பிறவிப் பெருங்கடல் என்கிறாரே வள்ளுவர்; கடல் என்றல்லவோ கூறுகிறார் என்ற வினா எழுதல் இயற்கை. ஆசையையும் - கல்வியையும் - சமயங்களையும் - துன்பங் களையும் கடலாகச் சொல்லியவை எத்தனை பாடல்கள்? அவற்றைப் போல் பிறவியையும் கடலாகக் கூறினார். ஒரு பிறவியிலேயே எத்தனை இன்ப - துன்ப, வாழ்வு - தாழ்வு, வரவு - இழப்பு, மேடு - பள்ள நிலைகள். இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது (1166) என்றாரே வள்ளுவர். இன்பம் கடல் என்றால் துன்பம் பெருங் கடலாமே! இன்ப துன்பமுடைய பிறவியைப் பெருங் கடல் என்றதும் அத்தகையதுதானே! கடலன்ன காமம் என்றும் (1137) கடலாற்றாக் காமம் என்றும் (1175) வள்ளுவர் தாமே கூறுகிறார். பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவன் அடிப்புணை வேண்டும் எனப் பெற ஒருமருங்கு உருவமாகக் கூறினார். காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை (1134) காமம் கடல்மன்னும் உண்டே அதுநீத்தும் ஏமப் புணைமன்னும் இல் (1164) புணையொடு கடலைப் பொருத்தி நீந்துதலையும் காட்டுகிறாரே வள்ளுவர். திருக்குறள் இன்பம் என்னும் நூலுக்குக் கவிமணி வழங்கிய சிறப்புப் பாயிரத்தில், ஒப்பற்ற இந்நூற்கு உரைவகுத்தவர் பற்பலர்; அவரெலாம் விற்பன ராயினும் உலகிருள் விலக்க உதித்தொளி வீசி முழுமதி யினைத்தம் முன்றிலில் நின்று நோக்கி ஈதெம்மதி நும்மதி யன்றெனச் செப்பும் சிறுமகார் செய்கையே போன்றுஅத் தெய்வப் புலவனைச் செந்நாப் போதனைச் சைவன் வைணவன் சமணன் பௌத்தன் எனக்கொண் டவரவர்க் கிசைந்தபடிநூற் செம்பொருள் முற்றும் திரியச் செய்தனர் என்று கூறுவது எண்ணினால் சமயஞ்சார்த்தி வள்ளுவத்தைக் காணல், வேண்டா அழிவழக்கெனல் தெளிவாகும். இணைப்பு மீள் பிறப்பு உண்டா? உண்டெனவே கொள்வோம். கொண்டால் என்ன ஆகும்? இதோ ஒரு சான்று; ஆக்கிராவில் ஒரு சிறுவன். அகர்வால் என்பது அவன் பெயர். அகவை பதினைந்து. ஒரு நாள் அவனுக்குக் குழப்பம். மண்டைக்குள் பல்வேறு ஒலிகள்! தொடர் வண்டி ஓடும் ஓட்டம்; பம்பாய் பம்பாய் என்னும் ஒலி! தலையைப் பிடித்துக் கொண்டு அமைந்த இருப்பு. உறக்கமில்லா உழற்றல்; தனியே பேசல். என்ன பேசுகிறாய்? எவரிடம் பேசுகிறாய்? -என அன்னையும் தந்தையும் கேட்டனர் என் மனைவியிடம் பேசுகிறேன்; உங்களுக்கென்ன? என்றான் அகர்வால்! என் பெயர் வினய்தாகுர். எனக்கு மனைவியும் மக்கள் நால்வரும் உள்ளனர். தொழிற்சாலை ஒன்றில் பணிசெய்தேன்; என்னைக் கொன்று விட்டனர் என்று மீண்டும் மீண்டும் கூறினான். பம்பாய்க்குப் போக வேண்டும்; பம்பாய்க்குப் போக வேண்டும் என அடம் பிடித்தான். போவோம் என அழைத்துப் போயினர் பெற்றோர். அகர்வால் மாமனார் பம்பாயில் இருந்தார். அவரிடத்தை அடுத்துச் செய்தியை உரைத்தனர். ஆர்வத் துடிப்புடன் அகர்வால் மாமனார் ஈடுபட்டார். கேள்வி கேள்வியாய் எழுப்பினார் அகர்வாலிடம். நீபணி செய்த தொழிலகம் எங்கேயுள்ளது என்றார். ஓ! தாதர் பக்கத்தில் என்றான் அகர்வால். தாதர் சென்றனர்; எந்தத் தொழிலகம் எனக் கண்டு பிடிக்க இயலவில்லை! குழம்பினான் அகர்வால்! தொடர் வண்டியில் ஏறிச் சென்றனர்! மாதுங்காப் பகுதி வந்ததும் அகர்வால் உடலில் துள்ளல் கிளர்ந்தது. அவனைக் கட்டுப்படுத்த இயலவில்லை! வண்டியில் இருந்து இறங்கி ஓடினான். பின்னே ஓடினர் பெற்றோரும் மாமனாரும்! அகர்வால் ஒரு தொழிற்சாலை முன்னர் நின்றான். தொடர் வண்டிச் சக்கரம் உருவாக்கும் ஆலை அது. அனுமதி பெற்று அதனுள் நுழைந்தனர். அகர்வால் கண்கள் மின்னின! புன்முறுவல் பூத்தது! ஒவ்வொரு பொருளையும் தொட்டுக் கொண்டு ஆவலால் நடந்தான் அகர்வால்! உறவினரோடு, தொழிலாளர் தாமும் வியப்பால் கூடித் தொடர்ந்து சென்றனர். முதிய தொழிலாளர் ஒருவர் பெயரைச் சொல்லி அழைத்தான் அகர்வால். என்னைத் தெரியவில்லையா? நான்தான் வினய்தாகுர் என்றான். முதிய தொழிலாளர் அதிர்ந்து போனார்! வினய்தாகுர் கொல்லப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன! அவனே நானே எனின் கேட்டவர்க்கு எப்படி இருக்கும்? பழகார்க்கு இயக்க இயலாப் பொறியை இயக்கியும் காட்டினான் அகர்வால்! இன்ன இடமே பயன் இருந்து பணி செய்த இடமெனக் காட்டவும் செய்தான். அஞ்சிய தொழிலாளர் அவனை விடாமல் சுற்றிச் சூழ்ந்தனர். ஆளும் ஆளும் கேள்வியால் துளைத்தனர். மீட்டுக் கொண்டு வரவே போதும் போதும் என்று ஆய்விட்டது! பேயைப் பார்ப்பது போலப் பார்த்தனர்; என்னால் தாங்க முடியவில்லை என்றார் அகர்வாலின் தாய்! இதழார் விடுவரா? படை படையாகக் கிளர்ந்தனர்! அடையடையாக வினாக்கணை தொடுத்தனர்! என் மகனின் மன நிறைவுக்காகவே இங்கே அழைத்து வந்தோம்; குழம்பிய நிலையில் அவனுள்ளான்; அவன் மீளவும் நன்னிலை எய்த வேண்டி நிற்கிறோம்; இதழ்களின் முகவர்கள் இரக்கமில்லாமல் துளைத்துத் துளைத்துக் கேட்டனர். யார் கொலை செய்தார்கள்? எத்தனை பேர்கள் வந்தார்கள்? என்றெலாம் கேட்டனர். அழுதே விட்டான் அகர்வால் என்று கம்பிய குரலொடு கடுப்பாய் உரைத்தார் தந்தை. மனைவி மக்களைக் காணவும் துடித்தான் அகர்வால். உறவினரோடு காவலர் துறையும் உதவலாயிற்று. மாதுங்கா தொடர் வண்டி நிலையம் ஒட்டிய பகுதி. இடிபாடுடைய ஓரில்லின் முன் நின்றான் அகர்வால். இதுதான்! இதுதான் என் வீடு! என்றான். காவலர் துறையர் அவ்வீட்டுக் கதவைத் தட்டினர். கதவு திறந்தது. வினய்தாகுர் இறந்ததும் மனைவியும் குழந்தைகளும் வீட்டைக் காலி செய்து விட்டுப் போனதாகவும் போன இடம் தெரியாது எனவும் கூறினார், அவ்வீட்டுக் குடியிருப்பாளர். கொலை நடந்த மாதுங்காப் பாலத்தையும் பின்னர் காட்டினான் அகர்வால். ஆக்ராவுக்குப் புறப்படுமுன், நான் பள்ளியில் படித்து அதன்மேல் தொழிற் பயிற்சி பெற்று இதே மாதுங்கா பணிமனையில் சேருவேன் என்றான் அகர்வால்! அகர்வால் தான் வினய்தாகுர் என்னும் நினைவை யெல்லாம் மறக்க வேண்டும். அவன் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அதுவே எங்கள் வேட்கை. பம்பாய்ப் பக்கம் மீளவும் பார்க்கவே மாட்டோம். என்றார் அகர்வாலின் தந்தை. பழம் பிறப்புண்மையும், அதனை அறிந்து கொள்ளும் உள்ளுணர்வுண்மையும், அதனை ஆய்ந்து காணலின் பயனும் என்ன? உலகியல் வாழ்வில் உதவியாகுமா? எங்கும் குழப்பம்! எல்லாம் குழப்பம்! கிறுக்கர் உலகமாகவே ஆக வேண்டுமா?-பழம் பிறப்பறிவு வேண்டத் தக்கதோ! ஒரு பிறப்பு வாழ்வே பேயாய் அலைக்கும் பெருமை உலகில், பல்பழம் பிறப்பும் ஒரு பிறப்பின் தலையில் சுழன்றால், மண்டைக்குள்ளே எத்தனை, எத்தனை வண்டுகள் சுற்றிச் சுழலும்? தாங்க முடியுமா வாழ்வு? உலகமும் கூட! பையன் படத்துடன் - செய்தி, தினமலர் 7.4.92 19. தவம் உலகியலில் தவம் தவம் என்னும் சொல்லை நாம் மிகுதியாகவே கேட்டுக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம். தவம் என்னும் சொல்லுக்கு ஒரு தனி மதிப்பு இருப்பதாக உணர்கிறோம். தவம் என்று சொன்னால், சிலர் தோற்றங்கள், அவர் களின் பூச்சு புனை கோலங்கள், உடைவகை, அவர்கள் சூழல் என்பன வெல்லாம் கூட நமக்குத் தோற்றமளிக்கின்றன. தவம் பொதுவான ஒரு தோற்றம் தராமல், சமயம் சார்ந்த ஒரு சிறப்புத் தோற்றம் உடையதாகவும் நாம் கண்டு வருகிறோம். தவத்தோர் ஊண், நடைமுறை, சடங்குநெறி, கட்டு திட்டம் என்பனவும் கூடத், தனித் தனித் தோற்றம் தருகின்றன. இவ்வளவு இருந்தும், “தவம்’ என்றால் என்ன? என்று ஒருவினா நமக்குள் எழுந்தால், அதற்குத் தக்க விடை எளிதில் தோன்றுவதில்லை! தோன்றுவதும் ஒருபடியாய் இல்லை. உறுதிப்படுத்த இயலா மயக்கப் பொருளாகவே போய்விடு கின்றது தவம். ஏன்? தவம் என்பது சடங்கு நெறியன்று; அடங்கு நெறியும், ஒடுங்கு நெறியும் ஆகும். ஆதலால், ஆயிரம் பக்கம் சடங்கு களை எழுதித் தவத்தைக் காட்டினாலும் மணற் சோற்றில் அரிசி தேடிய வகையாகவே முடிகின்றது! திருவள்ளுவர் இயல்பு திருவள்ளுவர், மெய்ப்பொருள் காட்ட வந்த மெய்யர். மெய்ப் பொருள் காண்பதே அறிவு என்றவர். கற்பவர் தம்மிடத்துள்ள கசடு (அழுக்கு, குற்றம்) நீங்குவதற்குக் கற்பதே கல்வி என்றவர். பிற உயிர்களின் துயரைத் தன் துயரென எண்ணி அதனை நீக்கா அறிவால் பயனில்லை என்றவர். மனத்தில் மாசில்லாமையே மாப்பெரும் அறம் என்றவர். பயனில்லாச் சொல்லைச் சொல்வதும் அதனைக் கேட்டுப் பாராட்டுவதும் பதர்த் தன்மை என்றவர். ஆதலால், அவர் மொழி, வாய்மொழி எனப்பட்டது. அவரோ, பொய்யா மொழியார் எனப்பட்டார். சொல்லாதனவும் சொல்வனவும் இறைமாட்சி என்றோர் அதிகாரம் வகுத்துள்ளார் திரு வள்ளுவர். அதில், ஆள்பவன் தோற்றம், உயரம், கனம், நிறம், உடை இன்னவற்றையா உரைத்தார்? அவன் அரண்மனை, அதன் சூழல், அட்டிற்சாலை, திரு வோலக்கம், பொழுது போக்கு இன்னவற்றையா சொன்னார்? இன்னவற்றைச் சொன்னால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இன்றும் பொருந்தாதே! நம் பாட்டன் உண்ட உணவு, உடுத்த உடை, பயன்படுத்திய பொருள்கள், கருவிகள், கலங்கள் ஆகியவற்றுக்கும் நாம் கொள்வனவற்றுக்கும் எவ்வளவு வேறுபாடுகள், மாறுபாடுகள்! ஆதலால், மாறும் பொருள்களைப் பற்றிப் பேசாமல், மாறாப் பண்புகளையும் உணர்வுகளையும் சொல்வதே வள்ளுவர் வகுத்த முறை ஆயிற்றாம். விருந்து என்றோர் அதிகாரம் திருக்குறளில் உள்ளமை அறிவோம். விருந்துணவு வகை, அதனை ஆக்கும் வகை, படைக்கும் முறை, இட இயல்பு இன்னவற்றையே எழுதி யிருந்தால் இன்று பொருந்தி வருமா? இவ்வாறு எதனைக் கூறினாலும், அதன் மாறா இயல்பைக் கூறுவதே வள்ளுவர் நெறி ஆதலால், தவம், என்பது யாது? என்று தட்டிய உடனே கிட்டிய பொருள் போல அவரிடம் விளக்கம் கிடைக்கின்றது. தவ வேர் தவம் என்னும் சொல்லின் வேர் தவ் என்பது. தவ் என்னும் வேருடன் அம் என்னும் சொல்லிறுதி சேரத் தவம் ஆயிற்று (தவ் + அம் = தவம்) தவ் என்பதைத் திருவள்ளுவர், சுருங்குதல் பொருளில் வழங்கியுள்ளார். அது, கவ்வையால் கவ்விது காமம்; அது வின்றேல் தவ் வென்னும் தன்மை இழந்து (1144). என்பது. ஊரவர் பழிச்சொல்லால் எங்கள் காதல் பெரிதாகி விட்டது; இல்லை எனின், அது தன் இயல்பு இழந்து சுருங்கி யிருக்கும் என்பது இதன் பொருள். தவம் என்பதன் வேராகிய தவ் என்பது, சுருங்குதல் பொருளில் வரத் திருவள்ளுவரே அமைத்துக் காட்டியது இது. தவ்வை உள்ள நலங்களையெல்லாம் - வளங்களையெல்லாம் - திறங்களையெல்லாம் - ஒவ்வொன்றாய் - படிப்படியாய்ச் சுருக்கிக் கொண்டு வரும் கொடிய இயல்பு ஒன்று மாந்தர்க்கு உண்டு. அது, உள்ளதை மடியச் செய்தலால் மடி என்றே பெயர் பெற்றது. மடித்தல், மடிதல், மட்கல், மண்ணாதல் என்பன வெல்லாம் மடி என்பதன் வழிப்பட்ட பொருட் சொற்கள். மடி என்னும் தன்மையை உருவக வகையால் பெண்ணாக்கிக் கூறுவது வழக்கம் அது, முகடி என இலக்கிய வழக்கில் உள்ளது. மூடிக்கிடக்கும் ஒன்று, முகடி மூடி என்பது. மண் மூடிப் போகுமாறு கண்மூடிக் கிடக்கும் அது, முகடியாம்! முகடிக்கு மற்றொரு பெயர் தவ்வை என்பது. எல்லா நலங்களையும் சுருக்கி, இல்லாமல் ஒழிக்கும் குணத்தை - இயல்பைத் - தவ்வை என்றனர். வள்ளுவரும் தவ்வை என்பதை ஆள்வார். அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள், தவ்வையைக் காட்டி விடும் என்பது அது. நலத்தைச் சுருக்குகின்ற தன்மையே தவ்வை யாம். பொது மக்கள் தவ்வையை மூத்தவள் என்றும், மூதேவி என்றும் அக்காள் என்றும் குறிப்பர். அதற்கு மாறான ஆக்கத் தன்மையை இளையவள் என்றும் சீர்தேவி என்றும் (திரு மகள்) தங்கை என்றும் குறிப்பர். தவ் என்பதன் வழியாக வந்த தவ்வையும் அப்பொருளே - சுருக்குதல் பொருளே - தருதல் இதனால் விளங்கும். தவல் - தவம் தவ் என்பதன் வழியாகத் தவல் என்னும் சொல்லும் பிறக்கும். அதற்குக் குறைதல் என்பதே பொருள். தவிர்தல் எனினும் நீக்குதல் என்னும் பொருளதே. தபு என்பதும் அவ் வழியதே ஆதலால், சுருக்குதல் குறைத்தல், நீக்குதல் என்னும் பொருளிலேயே தவச் சொற்கள் வருவதை உணரலாம். அவ்வாறு உணர்ந்தார், திருக்குறளில் இவ்விளக்கம் உண்டா! எனின், உண்டு என்பது முன்னே தோற்றமாகின்றது. அது, யாதனின் யாதனின் நீங்கியான் என்பது, இது, துறவின் முதற்பாட்டின் முதலடி. எதனில் எதனில் இருந்து வேண்டா என்று விலகு கின்றான் என்பது இப்பகுதிப் பொருள். இப்படி, நீங்கினால், நோதல், அதனின் அதனின் இலன் என்பது பயன். இஃது அடுத்த அடி. துன்புறுதல், அதனில் அதனில் இருந்து இல்லாமல் இருப்பான் என்கிறது இத்தொடர். எதனை வேண்டா என்று நாம் விலக்குகிறோமோ அதனால், நமக்கு வரும் துன்பம் இல்லை என்பது இப்பாடற் கருத்து. இதனால், கேடானதை விலக்குதல், தேவையைச் சுருக்குதல் என்னும் இரு வகையாலும் தவ இன்பம் பெறலாம் என்று நாம் தெளியலாம். தேநீர்க்குடிக்கு அடிமைப் படாதவர் அரியர். அக்குடி மதுக்குடி போலப் பழிப்புக்கு இடமாகவும் இல்லை. ஆயினும், அதற்கு அடிமைப்பட்டவர், அதற்காகப் படும் விருப்பமும் தேடலும், அது கிடையா நிலையில் படும் துயரும் சோர்வும் தலைவலியும் சஞ்சலமும் எப்படிப் பெருகுகின்றன. ஆனால், அதனை வேண்டா என விலக்கும் உறுதிப்பாடு அவர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால், எத்தனை எத்தனை இன்ப ஆக்கங்கள் உண்டாகின்றன! துன்ப நீக்கங்கள் உண்டாகின்றன! பிறவி நோக்கமே துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் தாமே! அவற்றுக்குத் தடையாக நிற்பது, சிறிதானால் என்ன? பெரிதானால் என்ன? தடை தடைதானே! எத்தகைய நல்ல சூழலிலும், பெருமக்கள் முன்னிலையிலும் தாம் பழகிப் போன புகைக்குடி யைத் தவிர்க்க முடியாமல், தடுமாற்றம் கொள்பவர். இடைவெளி பார்த்து இடத்தைவிட்டு வெளியேறித் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்பவர், இருக்கத்தானே செய்கின்றனர். அப்பழக்கம் இல்லாமல் இருந் தால், அவரை அவ்வெண்ணம் அலைக்கழிக்க இடமில்லையே. தேநீரும், புகையும், வேண்டா என நினைக்கும் நினைப்பு வலுவானால், தூ என விட்டு ஒதுக்கிவிட முடிந்தவை! இப்படி ஒதுக்கி விட முடியாத கொடிய பழக்கங்கள் எத்தனை உள்ளன! அவற்றால் அடையும் கேடு நன்கு புலப்பட்டாலும், அக்கேட்டில் இருந்து விடுபட நினைத்தாலும், எத்தகைய பெரிய அறிவாளிக் கும் உறுதியாளிக்கும்கூட, முடியாமல் போகக் காண்கிறோமே! விளையாட்டாகப் பழகி, வினையாக்கிக் கொண்ட கொடுமை யல்லவோ இது. இதனை உணர உணரவே, யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்பது தெளிவுபட விளங்கும். தவம் என்னும் சொல்வழியே கண்டவை இவை. தவம் என்னும் பொருளை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார் என்பதைக் காணலாம். தவப்பொருள் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்(கு) உரு என்பது தவ இலக்கணத்தைத் தன்னிடம் கொண்ட குறள். நோன்பு என்பது நோம்பு எனக் கொச்சை வடிவில் வழங்கக் கேட்கிறோம். அந் நோன்பைக் கொள்வார் இயல்பைப் பார்த்தால் அதன் பொருள்தானே புலப்படும். நோன்பு கொள் வார்க்குப், புறந்தூய்மை போற்றுதலில் எவ்வளவு அக்கறை! உணவுக் கட்டுப்பாட்டில் எவ்வளவு உறுதிப்பாடு! பட்டுணியாக இருத்தலிலும் எவ்வளவு திண்மை! வெறும் நாளில் ஏறுமாறாக இருப்பவர்களும் உண்பவர் களும் நோன்புநாளில் ஒருகட்டுக்குள் வந்து விடுகின்றனரே! அந்த நோன்பு நிலையே வாழ்நாள் நிலையாகி விட்டால் - கடைப்பிடி ஆகிவிட்டால் - அந்தப் பிறப்பே நோன்புப் பிறப் பாய் - தவப்பிறப்பாய் - ஆகிவிடும் அல்லவோ! சிறிது நீரும், சில துளசி இலைகளும் ஒரு கையில் வாங்கி யுண்டு ஒரு நாள் முழுவதும் பட்டுணி இருக்கும் நோன்பியர் உளரே! ஒரே ஒரு குவளை பாலொடும், ஒரு நாள் முழுவதும் பட்டுணி யாவார் உளரே! இப்படி ஆறு நாள்கள் ஆயிரக்கணக்கானோர் திருமுருகன் திருவிழா நாளில் திருக்கோயில்கள் தோறும் பட்டுணியாவாரைக் காண்கிறோமே! இன்ன நாளா புலவைத் தொடோம் எனக் கட்டாக உள்ளனரே! மூவேளை யுணவு, சிற்றுண்டி, நொறுக்குத்தீன், குடிகள் என வாழ்வோர்க்கும், இப்பட்டுணி உறுதி எப்படி உண்டாகியது? உள்ளம் உறுதிப்பட்டது! உணர்வு ஏற்றுப் போற்றியது! அதற்கு இறையுணர்வு மூலமாயிற்று. அது, தெளிவும் தெம்பும் தேட்டுமாகத் திகழும், நிலையில், மனமும் பொறிகளும் கட்டுக்குள் நின்றன! நிற்கின்றன. நிறைவேறுகின்றன! அதே உறுதி நிலைபேறானதாக ஆகிவிட முடியும் தானே! ஒரு நாள் போன்றதுதானே, வருநாளும்! மேல் வருநாளும்! ஒரு முள் குத்துகிறது; முகம் சுளிக்காமல் இருக்க எத்தனை பேரால் முடிகின்றது! முள் குத்தியதற்கு, உறவையும் ஊரையும் கூச்சலிட்டுக் கூட்டிவிடும் குழந்தைகள் இல்லையா? அக் குழந்தை நிலையில், சிறு சிறு துயரையும் தாங்காதவராய் - ஒற்றடம் போடவும், ஊசி குத்தவும், ஒரு மாத்திரை விழுங்கவும் மாட்டாராய் - உறவையும் ஊரையும் கூட்டுவாரும் - உதைத்தும் உருட்டியும் தள்ளுவாரும் - இலரா! அதனைச் சிறிதும் கருதாமல் இயல்பாக எடுத்துக் கொள்வாரும் இலரா? உளரே! தவமணி திருவள்ளுவர் தவத்தின் இலக்கணமாகச் சொல்வதன் தலைமணி தன் துயர் தாங்குதல் என்பதாம்! உற்ற நோய் நோன்றல் என்பது அது. தனக்கு வந்த துயரம் தாங்குதல் தவம் என்கிறார் இங்கே கோலம் சொல்லவில்லை, திருவள்ளுவர். கோலமாவது தோற்றமும் புனைவும்! கொள்கை சொல்கிறார். கொள்கையாவது, கொள்ள வேண்டிய ஒழுக்க நிலை. கை என்பது ஒழுக்கப் பொருள் தருவது. தன் துயர் தாங்கும் கொள்கை வலியர் எவரோ அவரே பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யார்; இவ்விரண்டையும் சிக் கெனப் பற்றிக் கொண்டரே செவ்விய தவவடிவர் என்கிறார் இப்பாடலில். உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்(கு) உரு. என்பது அது. தன்துயர் பொறுத்தலுக்கும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமைக்கும் தொடர்பு உண்டா? உண்டு! உயர்நிலைக் கல்வி முடித்தவர், மேல் நிலை - கல்லூரி நிலை - பல்கலைக் கழக ஆய்வு நிலை எனக் கல்வியால் உயர்வது போன்றது, தன்துயர் பொறுத்தலும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையும் ஆம். தன் பசித் துயரைப் பெரிதாக எண்ணுபவன், தனக்கென இருக்கும் உணவைப், பிறவுயிர் பசியால் துடிக்கக் கண்டாலும் அப் பசி தீர்க்க முந்துவனோ? தன் பசியை, அவ்வுயிர் அறியாமல் தீர்த்துக் கொள்ளத் துணிவனேயன்றி, உதவ முன்வரானே! அத்தகையவனை நோக்கித் தானே விருந்து புறத்ததாத் தானுண்டல் என்றது வள்ளுவம். சித்தர் தமிழ் நாட்டுச் சித்தர்கள் மாளிகையிலா வாழ்ந்தனர்? பட்டுடையிலா பளிச்சிட்டனர்? ஊர்திகளிலேயா உலாச் சென்றனர்? பத்துவகைக் கறியோடா உண்டனர்? அவர்கள், வெயில் என்று பார்த்தார்களா? மழையென்று கருதினார்களா? பனி என்று எண்ணினார்களா? பசி என்றோ, நோய் என்றோ துடித்தார்களா? எடுபிடி. ஏவல் என ஏங்கி னார்களா? உற்றார், உறவு என உழன்றார்களா? இன்பமே அல்லால் துன்பம் இல்லை என்ற துணிவுடையர் அல்லரோ அவர்கள்! மண்ணிலே வாழ்ந்து கொண்டு, விண்ணிலே உலாவிய பெரு வாழ்வினர் அல்லரோ அவர்! துடிக்கத் துடிக்கத் துயரூட்டும் இயற்கை செயற்கைத் தொல்லைகளைத் துடிப்பின்றி இயல்பாகத் தாங்கிப் பிற எவ்வுயிரும் அப்படித் துடித்தல் ஆகாது என்னும் கொள்கையில் மருத்துவத் தோன்றல்களாய், அருளாளப் பெருமக்களாய், எதிரது உணர்ந்த பேரறிவாளர்களாய்த் திகழ்ந்தவர்கள் அவர்கள் அல்லரோ! ஆதலால், தம் துயர் தாங்க வல்லாரே பிற உயிர்க்குத் துயருட்டாதவர் மட்டுமல்லர்; அவ்வுயிர்க்கு வரும் துயரும் தணிப்பவர் ஆவார் என்க. அதனால், ஒன்றில் இருந்து மேலும் ஒன்றாக வளர்ந்து ஓங்கியதே இத்தவ இலக்கணம் என்பது விளக்கமாம். தமக்கு வந்த துயரைத் துயராக எண்ணவில்லை! அம்மட்டோ? தமக்குத் துயரிலா வாழ்வு இருந்தும், தாமே துயரை வலிய ஏற்றுக் கொண்டார் உளரே! மாரிக்கென ஒரு மாளிகையும், கோடைக்கென ஒரு மாளிகையும், இளவேனிற்கென ஒரு மாளிகையும் கொண்டு வாழ்ந்த அவர், அவற்றை விடுத்துக் காடே , மலையே, கடலே, வயலே, வெயிலே, பனியே, மழையே என எதனையும் கருதாமல் எங்கும் அலைந்தாரே! இரவென்றும், பகலென்றும், பசியென்றும், நோயென்றும் எண்ணாமல் திரிந்தாரே! அவரே புத்தர்! உலகத்து உயிர்கள் எல்லாமும் இன்புற்றிருக்க வேண்டும்; துன்பத் துடிப்பு இல்லாதாய் வாழ வேண்டும் என்னும் பெரு நோக்கை முன் வைத்துத், தம்மையே ஆய்வகமாகக் கொண்டு ஆய்ந்த பெருமகனார் அவர் அல்லரோ!அல்லல் அருளாள் வார்க்கு இல்லை என்பது வள்ளுவம். அதனைத் தெருவளவில் - ஊரளவில் - பெருக்கமாகக் காணமுடியாது எனினும், உலக அளவில் காணமுடியும் என்பதாலேயே வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி என்றார். உலகளாவிய பார்வை பார்க்கும் போது இவ்வுண்மைக்குச் சான்று புலப்படும் எனத் தெரிவித்தார். தம் துயரைத் தாங்குவார்க்குத் தான் பிற உயிர்களின் துயரைத் துடைக்கும் துணிவும் பற்றுமையும் உண்டாம் என்க. தவ விரிவு தவ இலக்கணம் இவை எனக் கண்ட தவவள்ளுவர் தம் எண்ணத்தை மேலும் விரித்தார். jt«., செயல் இல்லை; தவம் என்பது தன்மை. ஆனால் தவம் செய்தல் என்கின்றனரே! தவம் செய்தல் என்பது என்ன? மூச்சை அடக்கி இருத்தலா? பேச்சை அடக்கி இருத்தலா? வீட்டைத் துறந்து வாழ்தலா? மனைவி மக்களை மறந்து வாழ்தலா? மணந்து துறவு புரிதலா? மணவாத் துறவு கொள்தலா? வேலையின்றி ஓய்ந்து உறங்கிக் கிடத்தலா? ஓயாமல் மந்திரம் - இறைவன் திருப்பெயர் - கூறிக் கொண் டிருந்தலா? செய்தல் என்றால் செயற்பாடு இன்னதென வேண்டுமே! எனின், தவம் செய்வார் தம் கருமம் செய்வார்மற் றெல்லாம் அவம் செய்வார் ஆசையுள் பட்டு என்கிறார். தவம் செய்பவர் என்பவர், தம் கடமையைத் தவறாமல் செய்பவர் என்கிறார். அவரவர் கடமை என்பது என்ன? தந்தை கடமை, தாய் கடமை, மக்கள் கடமை, ஆள்வோர் கடமை, படைஞர் கடமை, உழவர் கடமை, வணிகர் கடமை, மருத்துவர் கடமை, ஆசிரியர் கடமை, கலைவல்லார் கடமை, சான்றோர் கடமை, தொண்டர் கடமை, நண்பர் கடமை, தலைவர் கடமை என எத்தனை எத்தனையோ பேர்களின் கடமைகளால் தானே உலகம் இயங்குகின்றது! கடிகாரத்தின் சக்கரங்களின் சுழற்சி போல அனைவர் கடமையும் ஒழுங்காக நிகழ்ந்தால், உலக நலம் ஓங்கி நிற்குமே! கதிரோன் திங்கள் செவ்வாய் முதலாம் நாள்களும், கோள்களும் தம் இயக்கம் மாறாமல் இயங்கலால்தானே உலகச் சுழற்சி ஊறுபாடு இல்லாமல் நிகழ்கின்றது. அவ்வண்ணமே அவரவர் கடமையைத் தவறாமல் செய்வதே தவம். அன்றிப் பிற செயல் என்பது இல்லை என்கிறார். தம் கடமையை உதறி ஆசைக்கு அடிமைப்பட்டுப் பிறபிற தீமைகளில் ஈடுபடுவார் - பொது நலக் கேட்டில் புகுவார் - தவம் செய்வார் ஆகார்; அவர் அவம் செய்வார் என்றார். தவ உடையென எதுவும் உண்டா? தோற்றமென எதுவும் உண்டா? தவத்திற்கெனத்தாடி சடை, மழிப்பு வளர்ப்புப் போலும் உடல் தோற்ற அமைப்பும் புறத்தே தத்தம் விருப்பம் போல் உடை பூச்சு மணை. கோல், நூல், குறி இன்னவும் தவத்தவர் என்று சொல்லப்படுவாரிடம் நாம் காண்கிறோமே! இது தவக்கோலம் என்கிறாரா வள்ளுவர்? தவத்தார் என்பதற்கு அடையாளம். உயர்ந்த பெருமக்கள் பழித்த - ஆகாவென விலக்கிக் கூறிய - இயல் செயல்களைக் கொள்ளாது இருத்தலேயாம். அப்பழிக்கு உறைவிடமாக இருப்பார், அதனை மறைக்கும் மறைவாகப் புறக் கோலமும் தோற்றமும் குறிகளும் சடங்குகளும் காட்டியிருத்தல் தக்கதில்லை; அவர் தக்கவராக இருந்து அதற்குத் தக்க கோலத்தைக் கொண் டார் என்றால் தகும். உள்ளே உள்ள கள்ளத்தை மறைக்கும் காவல் பொருளாகப் புனைவும் பூச்சும் ஏற்றமும் தோற்றமும் இருப்பின், அது கூடா ஒழுக்கம் என்பதாம் என்கிறார். இது, தவமும் தவமுடையார்க் காகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது. என்பது. தவமும் என்பது தவத்தோற்றம் காட்டுவதும் என்னும் பொருளது. தவமுடையார்க்கு என்பது தவத்தன்மை உடை யார்க்கு என்னும் பொருளது. தவ ஒழுக்க மில்லார் தவத் தோற்றம் காட்டுவது இழிவு; அஃது ஏமாற்றுச் செயல்! அது, கூடா ஒழுக்கம்! என்கிறார். தோட்டக்காரனுக்கு ஐயம் ஏற்படாமல் பயிரை மேய் வதற்குப் பசு, புலித்தோல் போர்த்துக் கொண்டது போல்வது அது என்றார். ஏனெனில், புலி புல்லைத் தின்னாது, என்பது உலகறி செய்தி அல்லவா! துறவு - தவ-க் கோலம் காட்டிக், கொள்ளை கொலை முதலாம் கொடுமை செய்வாரை உலகம் உணர்ந்து உய்ய உரைத்த வள்ளுவம் ஈதாம். செறிந்த புதருள் மறைந்து கொண்டு வேட்டுவன் பறவைக்குக் கண்ணி போடுகின்றான் அல்லவோ! அப்படி ஊரை ஏமாற்றிக் கெடுக்கத் துறவுக் கோலம் கொண்டுள்ளான் போலித் தவத்தன் என்பதும் வள்ளுவம். குன்றிமணி சிவப்பாகத் தோற்றம் தந்தாலும், அதன் மூக்குப் பகுதியில் கறுப்பு இருக்கிறது அல்லவா! அதுபோல் சில துறவியர் துறவுக் கோலத்தால் சிறப்பாகத் தோன்றி வஞ்சத்தை உள்ளே மறைத்துக் கொண்டுள்ளார்கள். என்று எச்சரிப்பதும் வள்ளுவம். அம்பு நேர்தானே! அது நன்மையா செய்கிறது? யாழ் வளைவு தானே! அது தீமையா செய்கிறது, புறத் தோற்றத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதே. அகத் தோற்றத்தைக் கண்டே முடிவெடு என்பது உலகை விழிப்புறுத்தும் வள்ளுவம். பாழாய்ப் போன இப் போலித் தவமும் கூட நாட்டுப் பயனாகும் நல்லதோர் சூழலும் உண்டு. நீங்கள் வேடந் தாங்கியாக இருக்க விரும்பினால், அதனைச் செய்யுங்கள் என அவ்வேடத்தார்க்கு அரசியலில் ஒரு வழிகாட்டினார் திரு வள்ளுவர். ஒற்றாடலில் வருவது அது. துறவுக் கோலமும் உங்களுக்குப் பயனும் நாட்டுக்கு நலனும் சேர்க்கும். தவப் பெருந்தன்மையை இழிவுக்கு ஆட் படுத்தாமல், அதனால் நலம் சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள். எவரும் ஐயப்படாமல் செயலாற்ற வேண்டிய ஒற்றர் பணிக்கு உங்கள் தவக்கோலம் உதவும். எவ்வளவு நெருக்கடியில் இருந் தாலும் அஃது உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். எவ்வளவு மறைவாக ஆராய்வதற்கும் அக்கோலம் இடம் தரும். அதனை மேற் கொள்ளுங்கள் என்கிறார். துறவுக் கோலத்தில் உள்ள உங்களுக்கு அக்கோலமே பாதுகாப்புத் தரும். ஒரு வேளை உங்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டால் நீங்கள் உங்களை எப்பாடுபடுத்தினும் பொறுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபட்டு வந்து, கண்டு கொண்ட செய்தியைச் சிறிதும் வெளியிடாதீர்கள். இச் செயலைச் சீராகச் செய்தால் சிறந்த ஒற்றராகத் திகழ்வீர். அத்துறவுக் கோலம் - தவக்கோலம் - தவநெறிக்கு மாறு பட்டதாயினும், மெய்த்தவத்திற்கு இழிவு செய்வது ஆயினும், நாட்டுக்கு நலம் பயப்பதால், அரசால் மதிக்கும் பேறு பெறு வீர்கள். அரசால் பாராட்டிச் சிறப்புச் செய்யப் பேறும் பெறு வீர்கள் என்கிறார். இதனை. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று என்னும் குறளால் அறியவைத்தார். துறவியர் எளிதாகப்பிறர் ஐயத்திற்கு உரியவர் ஆகார். அவர் கொண்ட துறவுக் கோலம் அத்தகைய பெருமைக் குரியது என்பது கொண்டு இதனைக் கூறினார். துறவுக் கோலத்தின் மதிப்பு அறிவும், தெளிவும், ஆராய்வும் உடையவர்களைப் பார்க்கிலும் அறிவிலாரிடையே - கண்மூடித் தனமாக நம்புவாரிடையே மிகுந்திருத்தல் வள்ளுவர் உள்ளத்தில் பளிச்சிட்டது! நேரில் காணப்பட்டவர் வாழ்வில் அதற்குச் சான்றுகள் மிக இருந்தன. இன்றும், போலித் துறவியர் பொய்த் துறவியர் மந்திரம் - தந்திரம் - மாயம் - செய்வினை என்று முழக்கமிடுவாரிடத்தே, கல்வியறிவில்லாரே யன்றிக் கற்றாரும் கூட நம்பிப் பற்று வைத்தலும் ஏமாற்றமடைந்து பல்வேறு தொல்லை துயரங்களுக்கும் - பழிபாவங்களுக்கும் ஆட்படுதலும் பழகிப் போன நிகழ்ச்சிகளாகவே உள்ளன. பலர் பலர் ஏமாறக் கண்டாலும், புதுப்புது வழிகளில் ஏமாற்றும் போலித் துறவியர் பெருகிக் கொண்டும். அவர்களால் ஏமாற்றப் பட்டுக் கொண்டும் இருத்தல் தொடர்கதைகளாகவே உள்ளன. திருவள்ளுவர் இச் செயலை நயமான நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்! புல்லிய அறிவாளன், நல்லவழி எதற்காகவும், பொதுப் பயன் எதற்காகவும் எச்சிறு உதவியும் செய்ய முன் வருவதில்லை. அப்படி அவன் ஒருவகையால் ஒரு வேளை உதவ முன்வந்தான் என்றால் அவன் அறிவு நலத்தாலோ, கொடை வளத்தாலோ உதவுவான் அல்லன்; அது, பெறக் கூடியவன் தவக்கோலத் தாலோ, தவத்தோன் என்னும் மதிப்பாலோ கொடுத்திருப்பான் என்பதாம். இதனை, அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் என்றார். தவப் பெருமை தவ என்பதற்கு உரிச் சொல். அதுமிகுதிப் பொருள் தருவது. சால உறு தவ நனி கூர் கழி மிகல் என்பது நன்னூல். தவ என்பதற்கு எதனால் மிகுதிப் பொருள் வந்தது. மிகச் சிறிய பிஞ்சு, தவப்பிஞ்சு என்றும், மிகச் சிறியது, தவச் சிறியது என்றும் இன்றும் பொதுமக்கள் வழக்கில் உள்ளதே! மிகப் பெரியர் தவப் பெரியர் என்பதும் வழக்குத்தானே! மிகக் கட்டொழுங்கும் மிக மேம்பட்ட நிறை நலனும் உடைய தவத்தவர் சிறப்பு நோக்கியே தவ என்பதற்கு மிகுதிப் பொருளை இலக்கணர் வழங்கினர். இத்தகு சீரிய தவத்தில் தோய்ந்து நிற்பார் பலரைக் காண முடியவில்லையே! தவத்தவராகத் தெரிவாருள்ளும் பலர் தவத்தகுதி இல்லாத வஞ்சரும், கீழ்மையரும் நம்பத் தகாருமாக உள்ளனரே எனின். அதற்கும் வள்ளுவம் தெளிவு காட்டுகின்றது. அது, இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர் பலர் நோலாதவர் என்பது. வெளிப்படப் பொருள்விளக்கமாம் இக்குறளுக்கும், உரிய பொருள் காண மிகச் சிறந்த உரையாசிரியர்களும் இடறி விட்டனர் ஏன்? தம் நோக்கில் இருக்கும் கருத்தை முன்வைத்து, வள்ளுவப் பார்வையில் இருந்து வழுக்கி விட்டமையால் அவ் வாறாயினர். இக்குறள் தவப் பகுதியின் நிறைவுக்குறள். அதிகாரப் பெயர் தவமாக இருந்தும். இலர் என்பதற்குப் பொருள் இலர் எனப் பொருள்கண்டு விட்டனர். தவம் இலர் எனக் கண்டிருப்பின் இடறி இரார். தவத் தன்மை இல்லார் பலர் ஆகியதற்குக் காரணம் மன அடக்கம் - மனவலிமை - இல்லார் பலராக உள்ளனர் என்பதே; அவருள் சிலர், மன அடக்கம் - மனவலிமை உடையவராக இருத்தலால் அவர்கள் மெய்த்தவத்தராக விளங்குகின்றனர். என்பது இதன் பொருளாம். நோற்பார் - நோன்பார் - வலிமை அமைந்தார். நோல- வலிமை. சிலர் மனத் திண்மையராகவும் பலர் மனத்திண்மை இல்லாராகவும் இருப்பதாலேயே சிலர் தவத் தன்மையராகவும் பலர் அவத்தன்மையராகவும் காண்கின்றனர் என்கிறார். திண்மை மன உறுதிப்பாடு. அது பெண்மைக்குக் கற்பு எனவும், ஆண்மைக்கு நிறை எனவும் வழங்குவது போல் தவத்தர்க்கு நோன்பு என வழங்கும். கற்பென்னும் திண்மை என்பது வள்ளுவம். நிறை ஆட்டம் அசைவு இல்லாமல் நிற்கும் நிலை, நிறை காக்கும் காப்பே தலை எனக் கற்பும் நிறையும், ஒத்த பொருள தாகவே விளங்கும், ஒருமுகப்பாடே இம் மூன்றுமாம். நோன்புத் திறம் தவத்தவர் நோன்புத் திறம் ஈதெனவும் வள்ளுவம் விளக்குகிறது. தீச்சுடரைக் காண்கிறோம். சுடரோன் கதிரோன் என்கிறோம். சுடர்விளக்கு என்று வழங்குகிறோம். எச் சுடர் ஆனால் என்ன? அதற்கொரு பொதுத் தன்மை உண்டு. அது சுடுதல் என்பது. சுடுதல் இல்லாத ஒன்று சுடர்தல் இல்லை. இது நாம் காணும் கண்கூடான காட்சி. நீரில் இருந்தோ, நிலக்கரியில் இருந்தோ, வேறு எரி பொருளில் இருந்தோ எடுத்ததாயினும் என்ன, மின்விளக்கு, ஆவிவிளக்கு, நெய்விளக்கு என்பனவாயினும் என்ன சுடத்தானே செய்கின்றன. அதனால், சுடச் சுடரும் என்பார் திருவள்ளுவர். திங்கள் ஒளி விடுகிறதே! அது சுடுவது இல்லையே என வினாவின், திங்கள் தன் ஒளியுடைய தன்று. அது கதி ரொளியை வாங்கிக் கொண்டு ஒளி செய்யும் கண்ணாடி போன்றது. அதனால், அதற்குக் கோள் என்பது பெயர். ஒளியை வாங்கிக் கொண்டு ஒளி செய்தலால் கோள். செவ்வாய் முதலியனவும் அத்தகையவே. பொன்னிலே ஒரு பொன் கரும்பொன். இரும்பொன் என்பதும் அது. இரும்பு என்பது வழக்கு. அவ்விரும்பு உலைக் களத்தில் காய்ச்சப்படும் போது எப்படி ஒளி செய்கிறது. அது மட்டுமா? வெண்பொன் செம்பொன் முதலானவும் தான் என்ன? இனிப் பைம்பொன் எனப்படும் தங்கம் சுடச்சுட மாசிலாப் பொன்னாக - உருக்குப் பொன்னாக - ஆணிப் பொன்னாக விளங்குகின்றதே! சூட்டில் தங்கம் கருத்ததா? பின்னரும் நிறம் மாறிற்றா? மற்றைப் பொன்களினும் பைம் பொன் தனித் தன்மையோடு விளங்குகிறது அல்லவா? தவத்தர் பொன்னனைய பொலிவாளர்.. அவர் துன்பம், துயர், நோய், நொடி, எல்லாம்வென்றவர் துன்பத்திற்குத் துன்பம் செய்யவல்ல துணிவர். இடும்பைக்கு இடும்பை ஆக்கும் இயல்பர். துன்பத்தை இன்பமாக்கிக் கொண்டவர்க்குத் துன்பவரவு தானே, இன்பவரவு வேம்பைக் கரும்பாகக் கருதுவாரை வேம்பின் கசப்பு வெற்றி கொள்ள முடியுமா? இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயல்பு என்று கொண்ட உள்ளத்தரை வாட்டும் துன்பம் ஒன்றும் உண்டோ? அதனால், சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்றது குறள். சுடச்சுடத் தாங்கும் வன்மையர் தவத்தவர் என்றால், சுடுசொல் ஒன்றை ஒருவர் சொன்னால், அதனைத் தாங்க மாட்டாதவர் தவமேன்மையர் ஆவரா? சுடு சொல்லைப் பொறுத்துக் கொள்ள வல்லவரினும் அதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத தவத்தர்க்குத் தனிமதிப்பு ஏற்படாதே. அதனால், உண்ணாது நோற்பார் பெரியார் பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் என்றும், துறந்தாரில் தூய்மை யுடையவர் இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற் பவர். என்றும் கூறினார் திருவள்ளுவர். ஆக்கமும் கேடும் உணர்ந்தவர் தவத்தர். அவர் ஆக்கவும் அழிக்கவும் வல்ல சொல்லாற்றலர். அத்தகையர் சுடு சொல்லை - பிறர் சினந்து சொல்லும் சொல்லைத் தாங்கும் பொறுமை யற்றவராக இருந்தால், அவர் குணம் என்னும் குன்றம் ஏறி நின்றவர்தாமா? என வினா எழுப்பி, அவர்க்குச் சினம், சீற்றம் உண்டாயினும் ஒரு நொடியளவுக்குள் அதனை வெளிப்படாவகையில் அடக்கி விடுவர் என்பதைக், குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது எனக் கூறுகிறார். கணமேயும் காத்தல் - நொடியளவு கூட வைத்திருத்தல். இல்லறப் புகழ் தவத்தவர் இல்லறக் கொடையாய்ப் பிறந்தவர். அக் கொடையாய் வளர்ந்தவர்; அக் கொடையாலே வளர்பவர்; அக்கொடையாளராய்த் தாமும் தம் குடும்பமும் அமைந்து மேனிலைத் துறவு கண்டவர். அவர் இல்லறத்தைப் பழித்தலும் ஒதுக்குதலும், வெறுத்துத் தள்ளுதலும் ஆகாது. ஏனெனில், அவரினும் மேம்பட்ட தவத்தரும் இல்லறத்தில் இருத்தல் கண் கூடாம் என்பதற்கு வேறு சான்று தேட வேண்டியதில்லை. அவரே சான்றாளர். ஆதலால் இல்லறத்தை மதித்துப் போற் றாத துறவு, துறவு ஆகாது, எனப் பண்டைத் தமிழர் நெறியைப் பாதுகாப்பு வகையால் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அது, அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்பதும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் என்பதும், ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து என்பதும், துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை என்பதும் ஆம். இல்லறத்தைப் பழிப்பது தம் பெற்றோரையும், தம் பிறவியையும், வாழையடி வாழையாய்த் தொடரும் வாழ்வு மூலத்தையும், இயற்கை இறைமையையும், பழிப்பதாம். அப்படிப் பழிப்பதிலும் பாழுங்குறையுடையது ஆடவர் பெண்டிர் என்னும் இருவருங் கலந்த இல்வாழ்வில், ஆடவரை விலக்கிப் பெண்டிரைப் பழிப்பதாம்! அவ்வாறு பாடியவருள் பேரறிவரும், பெருந்துறவரும் உளரே எனின், அவர் பெயரால் இயற்றிப் பின்னவர் அவர் பாடலோடு இணைத்தது உண்டு என்பது ஆய்வாளர் கண்டதாம். நிற்க தமிழ் மண்ணின் தனிப்பெருந்துறவைத் தமிழ்மண் மறந்து போனது தவப்பெருங்குறையாம். அதனைத் தொல்காப்பியர். காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல் கற்பு: 51) என்பார். இதனால், செய்யும் இல்லறக்கடன்களை யெல்லாம் சீர்பெறச் செய்து முடித்து, முதுவராம் நிலையில் கணவன் மனைவியர் ஆகிய இருவரும், குடும்பத்துடன் இருந்தோ, தனித்திருந்தோ பற்றற்ற துறவில் நிற்றல் நெறியாகக் கொண்டனர் என்பது விளக்கமாம். இந்நெறியே வள்ளுவ நெறியாகலின் இல்லறவியல், துறவறவியல் எனத் தொடர் அறமாக, வகுத்து இந்நெறியைப் போற்றி உரைத்தார். நெறியான இல்லறத்தில் இருந்து முறையான துறவு கொள்ளும் இயற்கை அறநிலை இருந்தமையால் தான், பெருநிலைப் பெற்றோரின் பெறுதற்கரிய மக்கள், மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் என்னும் நோன்புத் தவத்தையே மக்கட்பேற்றில் சுட்டினார் வள்ளுவர். மகன் என்றது மகளுக்கும் உரியதே. தந்தை என்றது தாய்க்கும் உரியதே. ஒரு பாலுக்குச் சொல்வது மற்றைப் பாலுக்கும் பொருந்துவதே என்பது இலக்கணர் நெறி. உள்ளும் புறமும் தவத்தவர் உள்ளொன்றும் புறத்தொன்றுமாக இருத்தல் ஆகாது என்பதைக் கூடா ஒழுக்கத்தில் தனிமுதன்மை தந்து கண்டித்தவர் வள்ளுவர். துறவுப்பகுதியில் வாய்மை என்பதோர் அதிகாரத்தை வைத்தவரும் அவர். பொய்மையும் வாய்மை இடத்த என்னும் விதிவிலக்கு நெறியைக் கூடத் தவத்தர் மேற் கொள்ளல் ஆகாது என்னும் கண்டிப்பாளராய்த் திகழ்ந்தார். அப்படி எவரேனும் வாய்மைக் குறைவான தவத்தர் இருப்பின் அவர், மனத்தொடு வாய்மை மொழிவார்க்குப் பிற்பட்டவரே எனத் தெளிவித்தார். அது, மனத் தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை என்பதாம். தவப் பயன் இனி, தவத்தால் ஆகும் பயன்கள் இவை யெனக் காட்டு கிறார் திருவள்ளுவர். அவை: 1. பகைவரை அழித்தல் 2. விரும்புவாரைக் காத்தல் 3. விரும்பியவற்றை விரும்பியவாறு அடைதல் 4. உலகத்து உயிர்கள் எல்லாம் பாராட்டுதல் 5. காலனும் நெருங்காதிருத்தல் என்பனவாம். சீரிய தவத்தர்க்கு அருளாளர்க்குப் - பகைவராவார் எவர்? எவரோ ஒருவர், பகையாக நினைத்தாலும், தவத்தவர் அவரைப் பகைவராகக் கருதமாட்டாரே, எவ்வளவு கொடுமையான வரையும் அவர் இப்படிக் கேட்டில் ஈடுபட்டுள்ளாரே என்னும் இரக்கப் பார்வை பார்ப்பவர் அல்லரோ தவத்தர். ஆதலால், அறியாச் சிறுமைக்கும், கயமைக்கும், நன்றியின்மைக்கும் ஆட் பட்டவர், தவத்தர்க்குக் கேடு செய்தாலும், அவர் அறியாமையை நினைத்துப் பரிவு காட்டும் தூய துறவிக்குப் பகைவர் இரார் ஆதலால், பகையானவரும் பகைமாறித் திருந்துதல் காணக் கூடிய உண்மை. அதனால், ஒன்னார்த் தெறலும் என்றார். தவத்தரைப் பற்றி அவர் வழியில் நிற்பார்க்கு நலமே உண்டாதல் தெளிவு ஆதலால், உவந்தாரை ஆக்கல் என்றார். இவ்விரண்டையும் ஒரு குறளில், ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் என்றார். தவத்தவர்க்கு விருப்பு என்ன? வெறுப்பு என்ன? வேண்டுதல், வேண்டாமை இலான் வழியில் நிற்கும் வேண்டுதல், வேண்டாமை இலார் அவர். அவர் வேண்டுவ எல்லாம், எல்லா உயிர்க்கும் நலமானவையே; அவர் வேண்டா தன வெல்லாம் எல்லா உயிர்க்கும் நலமாகாதன எவையோ அவையே. அவர்க்கெனத் தேடிப் பெருக்க வேண்டிய தேவை தான் என்ன? எல்லாத் தேவையும் தேவையில்லை என்னும் வேண்டாமையே விரும்பிய பெருஞ் செல்வமெனக் கொண்ட வர்க்குத் தனி வேண்டியனவாக என்ன இருக்கமுடியும். பிறர்க்கும் பிற உயிர்களுக்கும் எவ்வெவ்வற்றைச் செய்ய அவர் விரும்பு கிறாரோ அது அவர் தவப்பெருமையாலும் தக்கோர் உதவி யாலும் சிறப்பாக நிறைவேறும். அந்நிறைவேறுதல் மேலும் மேலும் தவவழியில் அவரை ஊக்கி நிற்கும். இதனை, வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் என்றார். தவத்தர்க்குத் தம் உடலும் பாரமாகத் தோன்றும். உயிர் உதவிக்காக உயிரைத் தாங்குவர் அவர். அவரோ தன்னுயிர் தானறப் பெற்றவர். தன்னுயிரை வளர்க்கப் பிறவுயிரை வாட்டா தவர்; வதைக்காதவர். அம்மட்டோ? வாட்டுவாரையும் வதைப் பாரையும் தடுத்துக் காக்கும் அருளாளர் அவர். ஆதலால், கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும்கை கூப்பித் தொழும் என்பது போல, தவநெறி நிற்பானை உயிர்கள் எல்லாம் தொழும். இதனைத், தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் என்றார். தவத்தோன் மெய்யுணர்வில் ஓங்கியவன். உயிர் நிலை உணர்ந்தவன். உறங்குவது போலும் சாக்காடு எனத் தெளிந்தவன். பறவை, கூட்டை விட்டுப் பறப்பதுபோல் உயிர்ப் பறவையும் உரிய பொழுதில் பறந்துவிடும் என்பதைக் கண்டவன்! நேற் றிருந்தவன் இன்றில்லை என்னும் நிலையாமை உணர்ந்தவன். ஆதலால் அவனுக்குத் தன்னுயிர், என்றும் தன்னத்தே என்றும் அறியாமை இல்லை! ஆதலால் அவன் தன்னுயிர் தானறப் பெற்றானாம். தன் உயிர் வாழ்வுக்காக மற்றை உயிர்ளை வாட்டி வதையா நோன்புடையன். ஆதலால், அருளாளனாகிய அவனை அவ்வுயிர்கள் போற்றும் என்பதாம். தன்னுயிர் தானறப் பெற்றவனுக்கு இறப்பு அச்சம் உண்டா? சாவுக்காகச் சஞ்சலமுறுதல் உண்டா? கூற்றுவனை விருந்தாளியாக வரவேற்கக் காத்திருப்பவனிடம் கூற்றுவன் வெற்றிப் பெற முடியுமா? அச்சமே இயல்பாகக் கொண்டவரிடம் அல்லவோ கூற்றுவனின் ஆட்டம் வெற்றிப்பெறும். இத் தவத்தனிடமோ கூற்றுவன் தோற்றுப்போய் ஓட்டம் எடுக்கிறான். அதனை, கூற்றம் குதித்தலும் கை கூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்றார். “கூற்றம் தோற்றோடும் என்றால்,” ‘அவர் சாவ மாட் டாரா? எனின், சாவுக்கு அஞ்சினால் தானே சாவு! இல்லை யேல் அது உறக்கத்தில் பெரிய பேருறக்கம் தானே உறக்கம் வருகிறதே என எவராவது அழுவாரா? தெளிவுடையவர்க்கு இறப்பு, பேருறக்கம் தானே. தவத்தவர் உயிர் ஒடுக்கமாதல் நாடறி செய்தியே. அப்படி அவர்கள் ஒடுங்கிய இடங்களே இன்றும் ஒடுக்கம் என்று பேசப்படுகின்றதாம். ஒடுக்க இடங்களே வழியாட்டுத் திருக் கோயில்களாக இருத்தல் வரலாற்று வழியாலும் செவி வழியாலும் அறியப்படும் செய்தியாம். இவையெல்லாம் தவத்தின் பயன்கள் என எண்ணி யுரைக்கும் திருவள்ளுவர், “இத்தகைய பெருமைமிக்க தவத்தை ஏன் பலரும் மேற் கொள்வதில்லை? எனத் தத்தமக்குத்தாமே வினா எழுப்புகிறார். பற்றற்ற துறவியராம் தவத்தினர்க்கு, ஊணே, உடையே, உறைவிடமே, உதவியே என்பவற்றைச் செய்வதற்காகவே மற்றவர்கள் தவநெறியைப் பற்றிக் கொள்ளாது விட்டு விட்டார்கள் போலும் என நினைத்துக் கொண்டு உள் நகைக்கிறார்! அது, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் என்பது. நிறைவு தவம் என்பது மாந்தராகப் பிறந்த எவர்க்கும் உரிய பொதுப் பொருள். அதனைத் தக்கவர்கள் எவரும் கடைப்பிடித்து உலக நலம் செய்யலாம் என்பது வள்ளுவர் கண்ட தவப் பொருள் ஆகும். 20. வறுமையும் வளமையே 1. அறிவே கருவி அறிவு அற்றம் காக்கும் கருவி அறிவு வியப்பான ஒரு பொருள்; புதிது புதிதாகத் தோன்றிப் பொலிவு செய்யும் பொருள் நேற்றுக் கண்ட அறிவு, இன்று காணும் அறிவின் முன், குன்றிப் போய் விடுகின்றது. நாளைக் காணும் அறிவுக்கு இன்று கண்ட அறிவு தோல்வி கண்டு விடுகின்றது. அறிவு, நாளும் நாளும் வளர்கிறது; வளம் பெருக்குகிறது; அதற்கு முன்னிருந்த அறிவை வென்று, அதனை அறியாமையாக்கி விடுகிறது. ஒன்றைப் புதிதாக அறியும் போது, அது வரை அதனை அறியாத, நம் அறியாமை நமக்குப் புலப்படும். இந்த எளியதையும் இது வரை அறியாமல் இருந்தோமே என்று நமக்கு நாமே இரக்கம் செலுத்த நேரிடும் அந்நிலையில் அறிதோறு அறியாமை கண்டற்று என்னும் அறிவின் இலக்கணம் புலப்படும். ஏறத்தாழ 3000 நாள்களுக்கு மேல் சிறைச்சாலையில் இருந்தவர் நேரு பெருமகனார். சிறைச்சாலையில் இருந்த நாள்களில் ஓய்வு ஒழிவு இல்லாமல் நூல்களைப் படித்தார். நூல்களும் எழுதினார். அந்நிலையில், நான் எவ்வளவு அறியாமை யுடையவனாக இருந்திருக்கிறேன் என்பதை அறிய அறியத்தான் அறிந்து கொண்டேன் என்றார். சிந்தனைச் சிற்பியாகவும் மாமேதையாகவும் விளங்கியவர் சாக்கிரடீசு, சிந்திப்பதிலும் நூல்களைத் தேடித் தேடிக் கற்பதிலும் பேரார்வம் கொண்டவர் அவர். எவராவது ஒரு நூலைக் காட்டினால் போதும்; புல்லைக் காட்டியபோது அதனைத் தின்னுவதற்கு விரைந்து செல்லும் மாட்டைப்போல, நூலைக் கற்க ஆவலோடு திரிகின்றேன் என்றார் அவர். அவரே ஒரு முறை, எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அந்த ஒன்றும் எதுவுமே எனக்குத் தெரியாது என்பதுதான் என்றார்! அவர் நஞ்சினைப் பருகிக் கொண்டிருந்தபோது ஓர் அருமையான பாடல் ஒலிக்கக் கேட்டார். உடனே பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரை அனுப்பி, அந்தப் பாடலை எழுதிக் கொண்டு வரக் கூறினார். அந்த நண்பரோ திகைப்படைந்து, இப்பொழுதுமா அந்த ஆவல் என்றார். அம்! போவதே போகிறேன்; இன்னொன்றையும் தெரிந்து கொண்டு போகலாமே என்பதுதான் என் ஆவல் என்றார் சாக்கிரடீசு. அறிதோறும் அறியாமையாக்கும் அறிவின் விந்தை நிலை இது! அறிவு நுண்மையானது; விரிவானது; ஆழமானது. அதனால் இம் முத்தன்மைகளும் பொருந்த நுண்மாண் நுழைபுலம் எனப்படும். அறிவுக்குரிய இம்மூன்று தன்மைகளையும் இறைமையாகக் கண்டார் மாணிக்கவாசகர். அதனால் இறைவனை ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்றார். இரண்டையும் உணர்ந்த சான்றோர் அறிவே கடவுள் என்றனர். அறிவுடையவரால் உலகம் அடைந்து வரும் நன்மை களுக்கு அளவே இல்லை. அதனால், பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்றார் வள்ளுவர். அவரே மக்கள் அறிவறிந்தவர்களாக இருப்பதுடன் பழிப்புக்கு இடமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். அத்தகைய மக்கள், ஒரு வீட்டிற்கு உரிமைப் பட்டவர்களாயினும், நாட்டிற்கும் உலகிற்கும் நன்மையும் பெருமையும் சேர்ப்பவர்கள் ஆவர் என்றார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று இவ்வுண்மையை வெளியிட்டார் பாரதியார். ஒரு வள்ளலார் பிறந்தார். அதனால், உலகமெல்லாம் உய்யத் தக்க சமரச சன்மார்க்கம் என்னும் ஒரு பெருநெறி உலகுக்கு வாய்த்தது. ஒரு பெரியார் பிறந்தார். எதனையும் அப்படியே நம்பி விடாமல் பகுத்தறிந்து பார் என ஓர் அறிவியக்கத்தைக் கண்டார். காந்தியடிகள் தோன்றினார்; இன்னா செய்யாமை என்னும் ஓர் உயர் கொள்கை உலகுக்கு வாய்த்தது. எடிசன், நியூட்டன், மார்க்கோனி, ரைட் உடன் பிறந்தார். சர். சி. வி. இராமன் முதலிய அறிவியல் அறிஞர்கள் தோன்றினர். அவர்களால் உலகங் கண்டறியா நலங்களை யெல்லாம் காண்ப தாயிற்று. இதனால் தான், அறிவுடையார் எல்லாம் உடையார் என்னும் பெருமை அறிவுக்கு வாய்த்தது. அறிவுடையவர்கள், வந்தது கொண்டு, வர இருப்பதை அறிவர். தீமை ஒன்று வருவதற்கு முன்னரே, அதனை அறிந்து, அத்தீமை வாராதவாறு தடுத்து விடுவர். ஆதலால், அறிவுடையார் ஆவது அறிவார் என்றும், வருமுன்னர்க் காப்பார் என்றும், எதிரதா அறிவார் என்றும் ஐயுணர்வுக்கு மேற்பட்ட மெய்யுணர் வாளர் அவர் என்றும், ஐயப்பாடு இல்லாமல் அகத்தில் உள்ளகை அறியவல்லார் என்றும்,அவர்களுக்கு வையகத் தினைப் பார்க்கிலும் வானகம் பக்கத்தில் இருப்பது போல் இருக்கும் என்றும் திருவள்ளுவர் கூறுவார், அறிவுடையவர் மனம்போன போக்கில் போகார். ஐம் பொறிகளும் மதயானைபோல் கிளர்ந்தாலும், குரங்கு போல் தாவினாலும் அறிவு கொண்டு அடக்குவர்; செல்ல வேண்டும் வழியில் செலுத்துவர். குண்டு குழி, மேடுபள்ளம், தக்கவழி தகாவழி, விரைவு, மெது என்பவற்றை யெல்லாம் அறிந்து செலுத்தும் வண்டியோட்டி போல, அறிவும் தக்க வழியில் செலுத்தும். எந்தக் கேடும் தீமையும் வாராமல் ஆக்கமும் நன்மையும் ஏற்படும் வகையிலேயே, பொறிகளைச் செலுத்தும் இதனைச், சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்றார் திருவள்ளுவர். மனத்தைப் போன போக்கில் போகவிடாமை, தீயவழியில் இருந்து விலக்குதல், நல்லவழியில் செலுத்துதல் என்னும் மும்முகக் கடமைகளையும் ஒருமுகமாகச் செய்கின்றது அறிவு. அறிவு என்பதற்கு உரன் என்பதொரு பெயர்: அவ்வுரனே தோட்டி என்னும் அங்குசம் போன்றது. அதனால் உரன் என்னும் தோட்டியால் ஓரைந்தும் காத்தல் என்று கூறுவார். ஓர் ஓட்டினுள் நான்கு கால்களையும் ஒரு தலையையும் சுருக்கிக் கொள்ளும் ஆமைபோல, அறிவுத் திறத்தால் ஐந்து பொறிகளையும் காத்தல் உயர்வினுள் எல்லாம் உயர்வாகும் என்பர். அறிவது அறிந்து அடக்கிக் காக்கும் அறிவு, தனக்குத் தீமை வருவதை முற்கூட்டியே அறிந்து வரவிடாமல் தடுப்பதுடன், தன்னைப் போலவே பிறரையும், பிற உயிர்களையும் கருதும் படியும் செய்யும். தான் துன்புற விரும்பாமை போல, மற்றை உயிர்களுக்குத் தான் துன்பமும் செய்யாது. பிறர் துன்பம் ஒரு கால் செய்யினும் தடுக்கவும் செய்யும். அவ்வாறு செய்தலே அறிவின், நிறைவின் அடையாளமாகும். அதனால்தான் அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை என்று திருக்குறள் பேசிற்று. இதனினும் மேலே ஒருபடி சென்று, அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் என்றும் கூறிற்று. தீமை புரிந்து அழிக்க வருவார்க்கும், அதனைத் திருப்பிச் செய்யாமல் விடுவதே, அறிவினுள் எல்லாம் தலை யான அறிவாகும் என்பது இதனால் விளங்கும். இத்தகைய சீரிய கூறிய நலமிக்க அறிவை, ஓர் அரிய காவற் கருவியாகக் காட்டுவதே அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதாகும். அற்றம் என்பது அழிவு, முடிவு, சிதைவு, கேடு என்னும் பல பொருளைத் தரும்சொல். உடனே என்னும் பொருளும் சூழ்ச்சி என்னும் பொருளும் தருவதும் உண்டு. இவ்வெல்லாப் பொருளும் பொருந்த நிற்கும் தொடர். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதாம். அறிவு, பிறர் செய்யும் அழிவு கேடு ஆகியவற்றை வராமல் காக்கும்; வேறு சூழ்ச்சிகளையும் தடுத்துக் காக்கும்; அதையும் உடனுக்கு உடனாகவும் காக்கும் என்றெல்லாம் பொருள் தருவதாகும் இது, பழங்காலத்தில் போர்க்குச் சென்ற வீரர்கள், கையில் கேடயம் என்னும் கருவியை வைத்துப் பகைவர் செலுத்தும் அம்பு, வாள், வேல் ஆகியவற்றைத் தடுத்துக் காத்துக் கொண்டனர். மெய்ம்மறை எனப்படும் கவசத்தை அணிந்தும் காத்துக் கொண்டனர். இந்நாளில் குண்டு துளைக்காத உடைகளும் வண்டிகளும் மேடைகளும் அமைத்தலையும் அணிதலையும் காண்கிறோமே! இவை எப்படி அழிவைத் தடுத்துக் காக்கும் கருவிகளாக இருக்கின்றனவோ, அப்படிக் காக்கும் தன்மையது அறிவு ஆகும். இக்கருவிகளும் அறிவு கண்ட அறிவுக் கருவிகள் தாமே! கருவி என்று அறிவைக் கூறிய அளவில் நில்லாமல் அரண் என்றும் கூறப்படுகிறது. அது, அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்பதாகும். பகைவரும் உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையும் அறிவே ஆகும் என்று மேலும் கூறுகிறது. கோட்டைகள் பல உண்டு. புறக்கோட்டை, அகக்கோட்டை, அகத்துள் அகக் கோட்டை என்றெல்லாம் உண்டு, ஐந்து கோட்டை, ஏழு கோட்டை என்பனவும் உண்டு. அவற்றுள் உள்ளுள் கோட்டை எவராலும் புகவோ அழிக்கவோ கூடாத பாதுகாப்புடையதாக இருக்கும். ஆதலால், உள்ளழிக்க லாகா அரண் என்று கூறப்பட்டதாம். இவற்றால் எந்தப் பாதுகாப்புக் கருவிகளினும் அறிவே மிகச் சிறந்த பாதுகாப்புக் கருவி என்பதும், எந்தப் பாதுகாப்புக் கோட்டையினும் அறிவே மிகச் சிறந்த பாதுகாப்புக் கோட்டை என்பதும் புலப்படும். இந்திய நாட்டின்மேல் பாகித்தான் படையெடுத்த நேரம் ஓர் இடத்தில் அப்படை நம் நாட்டின் உட்புகுந்தது. எல்லை கடந்து உட்புகுந்து ஒரு பாலத்தையும் தாண்டி படைஞரும், ஊர்திகளும் படைக்கலங்களும் தடுப்பாரில்லாமல் தலைகால் தெரியாத வெற்றிக் களிப்பில் வந்தனர். அவர்கள் பெருவரவாக உட்புகுந்தது நம் படை வீரர்க்கோ, படைத் தலைவர்கட்கோ தெரியாதது இல்லை. அப்பொழுது தலைமையமைச்சராக இருந்தவர் இந்திரா அம்மையார். அவரும் அறிந்தே இருந்தார். பகைவர் படைகளும் ஊர்திகளும் தடையின்றி வேண்டு மளவும் வரவிட்டு விலகிக் கொள்க என்று ஆணை தந்தனர் நம் படைக்கு. அப்படைகள் பெருவாரியாகப் புகுந்த அளவில் சுற்றிவளைத்துக் கொண்டு பாலத்தைத் தகர்த்து விட ஆணை இட்டனர். அச் செயல் எண்ணற்ற பகைப் படைஞரைப் பற்றிக் கொள்ளவும், அவர்கள் கருவிகளையும் ஊர்திகளையும் தடுத்துக் கொள்ளவும் செய்து, அவர்களுக்குப் பெருந் தோல்வியைத் தந்து போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது, இத் துணி வான நடவடிக்கை எடுத்தவர் இந்திரா காந்தியார். அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்னும் இரண்டையும் தெளிவாக்கும் ஒரு சான்று இது. ஒரு கிணற்றுமேடு; அதன்மேல் ஒருவர் நிற்கிறார்; அவரை நோக்கி யானை ஒன்று வருகிறது தாக்குவதற்கு; அவர்க்கு எதிர்ப்புறம் இருந்து புலி ஒன்று பாய்ந்து வருகிறது. இரண்டையும் பார்த்த அவர். ஒரு நொடிப் பொழுது அளவில் அக்கிணற்றை ஒட்டிருந்த ஆலமரத்தின் விழுதைப் பற்றிக்கொண்டு கிணற்றுள் இறங்குகிறார். அங்கே பாழுங்கிணறு தெரிகின்றது. ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகின்றது; கிணற்றுள் இறங்காமல் கிணற்று உட்சுவரில் நின்று கொள்கிறார். மேட்டில் யானையும் புலியும் ஒன்றை ஒன்று தாக்கி மடிகின்றன. பாம்பு புடைக்குள் புகுகின்றது; விழுதைப் பற்றிக் கொண்டிருந்தவர் வெளியேறிப் போகிறார். இது கல்கியார் படைத்துக் காட்டிய புனைகாட்சி. அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதைத் தெளிவாக்குவது. பெண் யானை ஒன்று இரைதேடிச் சென்றது. யானையைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட புதைக்குழி இருப்பதை அறியாமல் அதன்மேல் பரப்பப்பட்ட அதிமதுரத் தழையைத் தின்னும் ஆவலால் செல்கின்றது. கால் வைத்த அளவில் பொய் யாக மூடப்பட்ட அக்குழிக்குள் வீழ்ந்து விடுகின்றது. வெளியேற முடியாமல் ஓங்கிப் பிளிறுகின்றது. பெண் யானையின் பிளிறலைக் கேட்ட ஆண் யானை ஒலிவந்த பக்கத்தை நோக்கி ஓட்டமாக ஓடிவந்தது; நேரிட்டது என்ன என்பதை எண்ணியது. அதனை வெளிக் கொண்டுவரும் ஆர்வத்தால் உள்ளே பாய்ந்து விடவில்லை! மேட்டிலே நின்று காடும் மலையும் எதிரொலிக்க முழங்கியது. ஓட்டம் ஓட்டமாக யானைக் கூட்டங்கள் வந்தன. மேட்டின்மேல் நின்று காலால் ஓங்கி ஓங்கி ஒவ்வொன்றும் மிதித்தன. குழியில் மேட்டு மண் சரிந்து வழியுண்டாகியது. பெண் யானை தானே மேடேறி வருவதற்கு ஆண் யானை கை கொடுத்து உதவியது. வெளியேறிய யானையைக் கண்ட களிப்பில் யானைக் கூட்டம் மண்ணை அள்ளி எறிந்து மகிழ்வு கூர்ந்தது. அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை மதயானைக் காட்சியாலே மாந்தருக்கு அறிவுறுத்திய அருமையுடைய இது, அகநானூற்றில் உள்ள ஒரு படைப்பாகும். ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கும் ஆட்பட்டால், அவரைக் காக்கும் ஆவலால் அவரைப் பற்றின் பற்றியவரும் தப்பமாட்டார். ஆனால் உடனே மின் தொடர்பைத் துண்டித்தால் மின் தாக்கமற்றவரைக் காத்தவர் ஆவார். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதற்குச் சான்றும் ஆவார். திடுமென்று மழை பெய்தது; அது இரவுப் பொழுது ஒரு சிறிய வீடு இருந்தது; மழை பெய்கிறது; ஒதுங்க இடம் வேண்டும் என்றார் மழைக்கு ஆட்பட்டவர். வீட்டினுள் இருந்து, ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம் என ஒலி வந்தது. உள்ளே சென்றார்; படுத்திருந்தவர் எழுந்தார்; இருவரும் இருந்து கொண்டனர். பின்னே ஒரு குரல் கேட்டது; மழை பெய்கிறது; ஒதுங்க இடம் வேண்டும் என்று. உள்ளே இருந்து மீண்டும், ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் என்று குரல் வந்தது. மூவரும் நின்றனர். இது முத லாழ்வார்கள் எனப்படும் பொய்கையார். பூதத்தார், பேயார் சந்தித்துக் கொண்ட சந்திப்பு என்பது வரலாறு. இப்பொழுது போகும் மக்கட் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் போனால் உலகப் பரப்பெல்லாம் படுக்கவும் இருக்கவும் போதாமல் நிற்கும் நிலைக்கும் ஆட்படலாம். அதனால் கருவாயில் அடைக்கக் கதவு வேண்டும் என்றார் பாவேந்தர். அது உலகுக்கெல்லாம் அறை கூறல் விடுக்கப்பட்ட அற்றம் காக்கும் கருவியாகும்; உள்ளழிக்கலாகா அரணுமாகும். 2. வறுமையும் வளமையே கேட்டினும் உண்டு ஓர் உறுதி கேடு என்பது கெடுதல் அழிவு, சிதைவு, இறப்பு, குறைவு, வறுமை, துன்பம், தீமை, முதலிய பலபொருள் தரும் ஒரு சொல். இப்பொருள்கள் எல்லாமும் ஒன்றை ஒன்று தழுவி வருவனவே யாம். கெடு, கெடுதி, கெடுதல், கெடுதலை, கெடும்பு என்பனவும் இப்பொருள் வழிப்பட்ட சொற்களே. கேடு என்பதற்குப் பெருக்கம் என்பதும் ஆக்கம் என்பதும் எதிர்ச் சொற்களாகத் திருக்குறளில் ஆளப்பட்டுள. கேடும் பெருக்கமும் இல்லல்ல (115) அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் (169) என்பவை அவை. இக்கேடுகள் வறுமை என்னும் பொருள் தருதல் வெளிப்படை. இவ்வறுமை இன்மை, நல்குரவு, நிரப்பு என்னும் சொற்களாலும் திருக்குறளில் ஆளப்படும். இன்மை எனப்படும் வறுமையின் கொடுமைக்கு உவமை கூற வேண்டுமானால், தனக்கு ஒப்பு , தானே என்னும் நிலையில், இன்மைக்கு இன்மையே ஒப்பாகும் என்று கூறுவார் வள்ளுவர். இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041) என்பது அது. இருப்பவற்றையும் கூட இல்லையாகச் செய்ய வல்லது வறுமையாதலால் இன்மை எனப்பட்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் திருவள்ளுவர் (247) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் (751) என்றும் கூறுகிறாரே. இவை இன்மையை நேர்வகையிலும் எதிர் வகையிலும் விளக்குவன அல்லவா! உயிருள்ள காலத்தேயன்றி ஒருவர் இறந்த பின்னரும் கூட இன்மை அவர் வழியினர்க்கு ஆக்கம் செய்யாத தாகும் என் கிறாரே (1042)! வறுமை அவரை மட்டுமா கெடுக்கும்? அவர் குடிப் பிறப்பையும் அதன் சிறப்பையும் கூடக் கெடுத்து விடும் என் கிறாரே (1043)! நற்குடிப் பிறந்தாரிடத்தும் வறுமை உண்டாகுமானால் தம் குடிப்பிறப்புக்கு ஒவ்வா இழி சொல் சொல்லி வாழும் நிலையும் உண்டாகி விடுமாமே (1044) எவ்வளவுதான் நல்ல பொருள்களை நன்றாக உணர்ந்து சொல்லும் திறம் பெற்றிருப்பினும் வறியராயின் அவர் சொல்லும் பொருளும் பாராட்டப் படுவதில்லையாமே! (1046) முறை கேடாக ஒருவன் அடையும் வறுமை அவனைப் பெற்ற அன்னையால்கூடத் தன் மகன் என்று கொள்ளாமல் அயலான் போலக் கருத வைக்குமாமே! (1047)! இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய்வேண்டாள் என்று பிறரும் சொல்வரே (நல்வழி)! இப்பொருளின்மை எத்தனை எத்தனை இன்மைகளைச் செய்து விடுகின்றது! வறுமைக்கு, இன்மை என்று வழங்கப் பட்ட பெயர் எத்தகைய பொருத்த மிக்கது! நேற்றுக் கொன்று விட்டுச் சென்றதே அந்த வறுமை இன்றும் வருமோ என்று கண்ணுறக்கம் இல்லாமல், வந்த வறுமை கொண்டு, வாரா வறுமைக்குப் புலம்புகின்றானாம் வறியவன். (1048) அவனுக்கு உறக்கம் ஏன் வரவில்லையாம்? நெருப்புக்குள் உறங்க முடியுமாயினும் நிரப்பு என்னும் வறுமைக்குள் ஒருவன் கண்ணை மூட முடியுமா? என வள்ளுவர் உள்ளம் வருந்தியுரைக்கின்றது. (1049) இவ்வறுமை என்ன., உலகம் அறியாத ஒன்றா? மண்ணின் மேடு பள்ளங்கள் போல, வளமையும் வறுமையும் எங்கும் நிரம்பித் தானே கிடக்கின்றன? அதனால் வறுமையையும் வளமையையும் எண்ணும் வள்ளுவர், கேடும் பெருக்கமும் இல்லல்ல எனத் தெளிந்துரைக்கிறார். (115) கேடும் பெருக்கமும் இல்லாதவை அல்ல எனினும் அவை இருந்தே ஆக வேண்டுவன அல்ல; பேரறிவாளராலும், நயனுடையராலும், பெருந்தகையினராலும், கடனறி காட்சியின ராலும், கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டினராலும், வேளாண்மை மிக்காராலும் மாற்றியமைக்கத் தக்கனவே என்பது வள்ளுவரின் ஒப்புரவு உள்ளமாகும். அதனைக் கடைப் பிடியாகக் கொள்ள முயலாதவராய் அவர் இரார். இருப்பின், அவர் உயிரிரக்க முடையவர் ஆகமாட்டார். ஏன்? அவர் உயிரோடு உலவுபவரே எனினும் உயிரற்றவராகவே கொள்ளப்படுவார் என்கிறார். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்பது அவ்வள்ளுவம் (214) இனி அல்லோனிடம் செல்வம் இருத்தலும், நல்லோனிடம் வறுமை இருத்தலும், கூடக் காண்கிறோமே எனின் அத்தோற்றம் மெய்த் தோற்றம் அன்று; சீராக எண்ணிப் பார்த்தால் உண்மை புலப்படும் என்பார். அது, அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் என்பது. அவ்விய நெஞ்சத்தான் என்பான் பொறாமையாளன், செவ்வியான் என்பான் நேரிய நிறை நெஞ்சத்தான்; முன்னவன் எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் போதாது போதாது என்னும் வறுமை நெஞ்சத்தவனாகவே இருப்பான். பின்னவன் எவ்வளவு சிறிய வாய்ப்பு எனினும் அதனைப் பெரிதாக எண்ணி நிறை வடைவான். ஆதலால் வெளித்தோற்றம் கொண்டு முடிவுக்கு வராமல், உள்ளகம் உணர்ந்து முடிவெடுக்கத்தக்கது என்பாராய் எண்ணப்படும் என்றார். நல்லோன் ஒருவன், தான் வறுமைப் பட்டதாக எண்ணு வதே இல்லை. எண்ணாத அவனை வறுமை வருத்தப்படுத்திவிட முடியுமா? முடியாது. ஆனால் அவன் பட்ட வறுமையால், அவன் பிறர்க்கு உதவ வேண்டும் என்று எண்ணும் உதவிச் செயல்களை அவன் எண்ணியவாறே செய்து முடிக்க முடிவ தில்லை. அவ்வாறு செய்து முடிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் மட்டும் அவனுக்கு இருக்கும். (219) கடன்பட்டும் கூட உதவிக் கடன் செய்ய வேண்டும் என்று எண்ணுபவனுக்கு உள்ளவை உரியவற்றையெல்லாம் விற்றும், ஏன்? தன்னை விற்றும் கூடப் பிறர்க்குக் கட்டாயமாக வேண்டிய உதவியைச் செய்ய இருப்பவனுக்கு வறுமைத்துயர், - அவனைப் பொறுத்த அளவில் - ஒரு பொருட்டானதாக இருக்குமா (218, 220). வறுமையை வறுமையாக எண்ணாத பெருந்தன்மை யனுக்கு, இவன் அழிவழியால் கெட்டான்; செய்யக் கூடாதன செய்து கெட்டான்; ஊக்கமின்றிச் சோம்பிக் கிடந்து உழை யானாய் உள்ளவை இழந்தான் என்று உலகம் பேசும் பழிகள் உண்டாகுமா? பெற்ற தாயையும் பிறனாகக் கருதவைக்கும் அறஞ்சாரா வறுமை போன்றதா இந்நல்லோன் பெற்ற வறுமை? இல்லையே! அதனால், கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு என்றார் வள்ளுவர். (117) நடுவு நிலைமையைப் போற்றி நல்வழியிலே நடப்பவனுக்குக் கேடு வராது; அப்படி ஒரு வேளை வரும் எனினும் அதனைச் சான்றோர் பழித்துச் சொல்லார் என்பது இக்குறளின் திரட்டுப் பொருளாகும். பிறரால் பழித்துச் சொல்லப்படாத புகழ் வறுமை எல்லாருக்குமா வரும்? பழி வறுமையானால் பலப் பலர்க்கும் வரும். புகழ் வறுமை எவ்வளவோ மேலாந்தன்மை உடையவர்க்கு அல்லவோ வரும்! அதனால், மேலாந் தன்மையர் எய்தும் புகழ் வறுமையை நத்தம் போல் கேடு என்றார் திருவள்ளுவர் (235) நத்தம் என்பது நத்தை அல்லது சங்கு அச் சங்கினை எவ்வளவுக்கு எவ்வளவு சுடுகின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு வெண்ணிறமாக விளங்கும். மற்றைவையெல்லாம் சுட்ட அளவால் கரிந்து கரியாகவும் கறுப்பாகவும் போய்விட நத்தம் எனப்படும் சங்கு சுடச் சுட வெளுப்பாவதுடன் வெள்ளை வண்ணப் பொருளாகவும் சிறந்து விளங்கும். இதனால், அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என மூதுரை எழுந்தது (5). இப் பாடற் கருத்து வள்ளுவத்தின் நத்தம்போல் கேடு என்னும் உவமைத் தொடர்க்கு வாய்த்த உண்மை விளக்கமாகும். வள்ளுவமோ, சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு எனச் சுடுபொன் உவமையையும் கூறும். (261) நட்பியல் இன்னதென விளக்கும் வள்ளுவர், நண்ப னுக்குக் கேடாவனவற்றை விலக்குதல், அவனை நல்வழியில் செலுத்துதல், தவிர்க்க முடியாமல் கேடு வருமாயின் அவ னொடும் துன்புறுதல் என்றும், மானக்காப்பாம் உடையைப் பறிகொடுத்தவனின் கை தானேபோய் உடனே மானக் காப்பாக உதவுவது போல் நண்பனுக்குத் துன்பம் வருங்கால் உடனே போய் அத்துன்பத்தை நீக்குதல் வேண்டும் என்றும், நட்பிற்கு அமைந்த மேலான இருப்பிடம் யாது என்றால் மனச்சுழற்சி இல்லாமல் தன்னால் முடிந்த இடங்களிலெல்லாம் உறுதிப் பாடாக இருந்து உதவுதல் என்றும் (787-789) கூறும். நட்பியலைக் கூறிய வள்ளுவர் நட்புக்கு உரியவரை ஆய்ந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையையும் கூறியது. அது நட்பாராய்தல் என்பது. பலகாலமும் பல வகையாகவும் ஆராய்ந்து கொள்ளாத வனின் நட்பு. இறுதியில் தானே நொந்து நொந்து சாவுமாறான துன்பத்தைத் தரும் என எச்சரிக்கிறது ஒரு பாட்டு. (792) ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் என்பது அது. ஆக்கப் பொழுதுகளில் எல்லாம் உடனிருந்து மகிழ்ந்தவன் அழிவுப் போதில் ஓடிப்போதலும் உலகியலில் உண்டுதானே! அதனைத்தானே மூதுரை. (18). அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே ஒட்டி உறுவார் உறவு என்னும், நண்பனுக்குத் துன்பம் உற்றபோது உடன் நிற்பானை, காயும் பொன்னோடு உடன் காயும் சூட்டுக் கோலுக்கு, ஒப்பிட்டுச சுட்டுவதும் உலகியல். இத்தகைய ஊன்றிய நட்பிலாரை உரைக்கும் திரு வள்ளுவர் கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் என்பார், (799) கேடு வரும் பொழுதில் நண்பரைக் கைவிட்டுச் செல்பவர் நட்பு, போர்க்களத்தில் தனித்து நின்று பகைவரால் அழிவுறும் போதில் நினைத்தாலும் அவ்வழிவினும் கைவிட்டுப் போன நண்பன் செய்த அழிவே உள்ளத்தைச் சுட்டெரிக்கும் என்பது இப்பாடற் பொருள். கேடு என்னும் வறுமையின் கொடுமையைக் கூறிய வள்ளுவர், உலகியலில் கேடும் பெருக்கமும் இல்லாதவை அல்ல என்றும், அவை ஒப்புரவில் மாற்ற தக்கனவே என்றும், நல்லோன் வறுமையுறுவது இல்லை என்றும், அவன் வறுமை யெனக் கருதுவது பிறர்க்கு உதவ முடியவில்லையே என வருந்துவதே யாம் என்றும், நல்லோன் வறுமையைச் சான்றோர் பழியார் என்றும், நல்லோன் உற்ற வறுமை புகழுக்கு இருப் பிடமானது என்றும், ஆக்கக் காலத்தில் உடனிருந்து அழிவுக் காலத்தில் ஓடுவார் கொலையாளரினும் கொடுமையானவர் என்றும் கூறிய வள்ளுவர், வாட்டும் வன்துயர் நிலையிலும் வாய்ப்பு ஒன்று உண்டு என்று தெளிவிக்கிறார். அழிவு பாட்டையும் ஆக்கப்பாடாக எடுத்துக் கொண்டு நலம்பெற நயமான வழிகாட்டுகிறார். அது, கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் என்பது (796). வறுமையும் இடரும் வருவதிலும் ஒரு நன்மை உண்டு. அது, நெருக்கடி நிலையிலும் விலகாமல் ஒட்டியிருப்பவர் இவர் என்பதையும், அந்நிலை வருமெனத் தெரிந்த அளவில் எட்டி ஓடுவார் இவர் என்பதையும் தவறாவகையில் அளந்து காட்டும் அளவுகோலாகும் என்கிறார். கேட்டிலும் ஒரு நன்மையுண்டு என்று நலங்கண்டு கூறும் இத்தேர்ச்சி எத்தகைய மேம்பட்ட தேர்ச்சி! உலகியல் அறிந்து ஊக்கும் வகையால் ஊக்கி உயர்த்த வல்ல இத்திறம் எளிதில் வாய்ப்பதா? இவ்வாய்ந்த திறத்தல் அல்லவோ வறுமையை நல்குரவு என்றும், நிரப்பு என்றும் தேர்ந்தெடுத்த கலைச் சொற்களால் வழங்கினார் வள்ளுவர். நல்குரவு என்பது நல்கப்பட்ட (கொடுக்கப்பட்ட) உரவு (வலிமை) என்பதாம். நிரப்பு என்பது நிரம்பிய நன்மையது என்பதாம். இவ் விரண்டும் மங்கல வழக்குகள் அல்ல! இன்மையால் இந்த உலகம் கொண்டிருக்கின்ற நலங்களை எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும். வறுமைக்கும் வாட்டுதலுக்கும் ஆட்படாத எவரால் இந்த உலகம் வளம் பெற்றது; வாழ்வு பெற்றது,? வையகம் தழுவிய வாழ்வியலைப் பாருங்கள்! வாய்மை தானே வெளிப்படும்! 3. பொய் மெய்யாகுமா? பொய்மையும் வாய்மை இடத்த திருக்குறளுக்குப் பொய்யாமொழி என்பதொரு பெயர். அதன் கருத்துகள் என்றும் பொய்த்தல் இல்லாமல் பயன்படுவன ஆதலின் அப்பெயரால் வழங்கப் பெற்றது. பொய்யா மொழியாம் திருக்குறளை வழங்கிய திரு வள்ளுவர் அச்சிறப்பால் பொய்யா மொழியார் என்று வழங்கப் பெற்றார். திருவள்ளுவர் குறள் ஒன்றனைப் பொன்னேபோல் போற்றிக் கொள்ளும் புலவர் சாத்தனார், பொய்யில் புலவன் எனத் திருவள்ளுவரையும், அவர் இயற்றிய திருக்குறளைப் பொருளுரை எனவும் வழங்குகின்றார். திருவள்ளுவரின் வாய்மைப் பொருளில் தோய்ந்த ஒருவர் திருக்குறளை வாய்மை என்றே வழங்கினார். இவற்றுக் கெல்லாம் தக்காரே வள்ளுவர் என்பதை மெய்ப் பிப்பது போல் வாய்மையின் சிறப்பை, யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லைஎனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்கிறார். தம் ஆய்வுப் பரப்பையெல்லாம் சுட்டிக் காட்டுவார் போல யாம் கண்டவற்றுள் என்றும், அதிலும் மெய்யாக் கண்ட வற்றுள் என்றும், வாய்மையைப் போல நலந்தருவது எந்த ஒன்றும் இல்லை என்பார் போல் எனைத் தொன்றும் என்றும் சொல்கின்ற திட்பமும் நுட்பமும் எண்ணத் தக்கவை யாம். ஒருவன் நீராடுமுன் கொண்டிருக்கும் உடல் நிலை என்ன? அவனுக்கே தோன்றும் அளவிலா அமைகின்றது, நீராடாமை! அவனை நெருங்கியவர்க்கெல்லாம் மூக்கிலே பட்டுவிடுகிறதே, வியர்வை நாற்றம்! அகத்திலேயும் உண்டாக்கி விடுகிறதே. அருவறுப்பை! நீராடியமையால் உண்டாக்கும் கிளர்ச்சி - மன எழுச்சி- எத்தகையது! அவனுக்கே பளிச்சிட்டுத் தோன்றும் அவன் தோற்றம், பிறருள்ளத்தும் விருப்பத்தை ஊட்டுகின்ற தல்லவோ? புற உடல் அழுக்கை - வியர்வை நாற்றத்தைப் போக்கிய அளவிலோ நின்று விடுகிறது. நீரின் செயல்? புறத் தில் உண்டாகிய தூய்மை, உள்ளேயும் புகுந்து கிளர்ச்சியை உண்டாக்குதலை எவரே அறியார்? இவற்றால் அல்லவோ, புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்றார் வள்ளுவர். வெளிப்படத் தெரியும் தூய்மை, நீரால் அமைகிறது என்றால், வெளிப்படத் தெரிய அகத்தூய்மை, வாய்மை யாலேயே விளங்கித் தோன்றும் என்கிறார். உள்ளத் தூய்மையை மறைந்து கிடப்பது -கண்ணுக்குத் தோன்றாதது என்று எண்ணாதே; அது நீ சொல்லும் வாய்மைச் சொல்லால் வெளிப்படக் கண்காணும் காட்சிப் பொருளாக வெளிப்பட்டு விடும் என்பாராய்க் காணப்படும் என்றார். ஒளிவர இருள் அகலும். காரிருள் கப்பிக் கொண்டிருக்கும் பொழுது, வைகு பொழுது; வைகுறு பொழுது; அப் பொழுதில், கையில் அள்ளிக் கொள்ளலாம் போல் செறிந்து கிடக்கும் மையிருட்டை அகற்றக் கதிர் கால் கொள்கிறது. கதிர் கால் கொள்ளத் தொடங்கும் பொழுதில் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறது கப்பிக் கிடந்த இருள். அதனால் அப்பொழுது வைகறை (வைகு + அறை) எனப்பட்டது. வைகுதல் - தங்குதல்; அறை = அறுத்தல், அகற்றுதல், திரிவிளக்கும் எண்ணெய் விளக்கும் மின் விளக்கும், வீட்டு விளக்கும் தெருவிளக்கும் ஊர் விளக்கும் என்றால், கதிரோனோ உலக விளக்காகத் திகழ்கின்றது. அதன் ஒளியைத் திங்கள் முதலியவற்றுக்குத் தந்து, அக்கதிர் ஒளி காணா வாயா இரவுப் பொழுதில் ஓரளவு ஒளிதரவும் வழி செய்கின்றது. இப்படி இருளை விளக்கும் விளக்குகளாம் இயற்கை செயற்கைப் பொருள்கள் எவை எனினும் அவையும் இணையாகாத ஒரு விளக்கு உலகில் உண்டு அவ்விளக்கு எது? எனப் புதிர் போடும் பொய்யா மொழியார், பொய்யாவிளக்கு என்னும் புகழ் விளக்கை ஒரு பேரொளியுடன் உயர்த்திக் காட்டுகிறார். எல்லா விளக்கும் விளக்கல்லா சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு என்கிறார். ஒளி தருவன வெல்லாம் விளக்குகள்தாமே! இருள் அகற்றுவன வெல்லாம் விளக்குகள் தாமே! அத் தன்மை களால்தானே விளக்கு என்று வழங்கப்பட்டன. அவற்றை விளக்கல்ல எனலாமா எனின், பொதுமக்கள் அவற்றை விளக்கு என்று பெயர் கூறுதல் பற்றிய மாறு கருத்தன்று அது. பண்பியல் நிறைந்தோராகிய சான்றோர் புற இருள் நீக்கும் இப்புறக் கருவி - பொறி - இயற்கை விளக்குகளிலும், அக இருள் நீக்கும் நந்தா விளக்கு - அணையா விளக்கு - ஆகிய மெய்விளக்கு இருக்கிறதே அதனையே விளக்கு என அதன் சீர்மை கருதி வழங்குவர் என்பதாம். ஒளிதரும் விளக்குகள் என்பன புகாப்பகுதிகளும் மறைவுப் பகுதிகளும் எட்டாப் பகுதிகளும் உள. ஆனால், இப்பொய்யா விளக்கம் என்பதொன்று இருக்கிறதே; இது புகாத இடம், இதனை மறைக்கும் இடம், எட்டாத இடம் எதுவும் இல்லை. எண்ணும் இடத்தெல்லாம் எண்ணி அளவால்போய் ஒளி செய்யும் எண்ணவிளக்கு இது! இதுவே இதன் தனிச் சிறப்பு என்பாராய்ப் பொய்யா விளக்கே விளக்கு என்றார். பொய்யா விளக்கு எண்ணிய இடத்தெல்லாம் எண்ணிய படி ஒளி செய்யும் என்பதைப் பொய்யாமொழியார் எங்கே சுட்டுகிறார் எனின், பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்னும் இடத்துச் சுட்டுகிறார். பொய்யாமை அல்லது வாய்மைச் சிறப்பை உரைத்தலில் அவர் கொண்ட காதல், பொருள் என்னும் பொய்யாவிளக்கு என உருவகக் காட்சியை அருளி, எண்ணிய இடத்துச் சென்று இருளறுக்கும் என்று இணைத்து முடிக்க வைக்கிறது. கொடையால் புகழாகும் (232) வினைத் திறத்தால் புகழ் உண்டாகும் (236) அறத்தால் புகழ் வரும் (39) இல்லாள் சிறப்பால் புகழ்வரும் (59) பொறுமையால் புகழ் எய்தும் (156) இன நலம் புகழ் சேர்க்கும் (457) மறவாமை புகழாக்கும் (532) மானம் புகழ் பூட்டும் (966) ஆயினும் என்ன, பொய்யாமையால் உண் டாகும் புகழுக்கு இணையாகுமா அவை? பொய்யாமை அன்ன புகழில்லை என்கிறார் (296) அம்மட்டோ, அப் பொய்யாமையில் தவறாமையே எல்லா அறங்களுமாம் என்றும் கூறுகிறார். அதனையும் இதன் தொடராகவே கூறுகின்றார். பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். என்பது அது. எய்யாமை யாவது, சோர்வு அடையாமை பொய்யை மறந்தும் கூடச் சொல்லாமையே எய்யாமையாகும். இதனையே மேலும் வலியுறுத்தியும் கூறுவார். அது, பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்பது, இதில் பொய்யாமை பொய்யாமை செய்யாமை செய்யாமை என்றவை வாளா (வெறுமனே) அடுக்கிக் கூறப் பட்டவை அல்ல! விரைவு, அச்சம் முதலியனவாகச் சொல்லப் படும் அடுக்கு வகைப்பட்டனவும் அல்ல. பொய்யாமை என்பதைப் பொய்யா வகையில் என்னும் பொருளுற அமைந்தது, பொய்யாமை பொய்யாமை என்னும் முதல் தொடர்; அது, பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் என முடிந்து நின்றது. பிற செய்யாமை செய்யாமை நன்று என்பது இரண்டாம் தொடராய் இணைந்து நின்றது. மற்றுச் செய்யக் கூடாதவை என்று சொல்லியவற்றைச் செய்யா திருத்தல் மேலும் நல்லதாம் என்னும் பொருளது அது. ஆதலால், பொய்யாமை அறத்தின் நலத்தை வற்புறுத்திக் கூறிய வகையது ஈதாம். கருதாமலே வாய் வந்த வரத்தில் சொல்லுகின்ற பொய்யும் உண்டு. வேண்டும் என்றே திட்டமிட்டு மனம் அறியச் சொல்லும் பொய்யும் உண்டு. முன்னது விளையாட்டுத் தனம், அறியாத்தனம் என எண்ணி இகழும் அளவில் தள்ளப்படுவனவாம். ஆனால் பின்னதோ பொய் சொல்லப்பட்டவனாலே அன்றி, அதனை அறிந்தவராலும் அன்றி, அதனைக் கூறிய பொய்யனாலுமே பொறுத்துக் கொள்ளக்கூடாத குற்றமாக அமையும்; நாளும் நாளும் வாட்டுவதாக இருக்கும் என நுணுகியுரைக்கிறார் வள்ளுவ ஏந்தல். அது, தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். என்பது. சுடுபட்டான் சுடுவன் என்பதனினும் சுட்டவன் நெஞ்சே சுடும் என்பது எத்தகு கொடுமையானது? தன்னைச் சுடும் ஒன்றைத் தானே பற்ற வைத்து, பாதுகாத்து வைத்துப் பாழாகிப் போக வேண்டுமா? என்னும் உள்ளறை அறைந்து உணர்த்துகிறார் வள்ளுவர்! இப்படியெல்லாம் பொய்யாமையின் புகழை, வாய்மை யின் வானார்ந்த நிலையை வரிசைப்படுத்தும் வள்ளுவர், ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்று வரிசையில் பின்னிட வைக்கிறாரே! என்று எண்ணத் தோன்றும்; முரண்தானே இது என்று சொல்லவும் தோன்றும்! ஒன்றாகச் சொன்னதை அவரே இரண்டாம் இடத்திற்குத் தள்ளினால் இத் தோற்றங்கள் எழுதல் இயற்கை தானே! வள்ளுவர் வாய்மை நெஞ்சம் வாய்மையே! வாய்மையே! என்று பறை சாற்றிய கிளர்ச்சி நெஞ்சம், கொல்லாமைக்கு முதலிடம் தந்து, அதற்குப் பின்னே வைக்க அவரை ஏவியது ஏது? அவர்தம் அருள் நெஞ்சமே உயிர்நேய நெஞ்சமே - பிறர் துயர் காண ஒண்ணாப் பெரு நெஞ்சமே - பிறிதுயிர் துடிக்கும் துடிப்புக்குத் துடித்துத் துளங்கிய தெய்வ நெஞ்சமே அப்படி அடுத்த இடத்தில் வைக்க ஏவிற்றாம்! ஏன்? பொய்ம்மையின் விளைவு, பழியாம்! பாவமாம்! மனம் வருந்தும் நிலையாம்! வாடும் நிலையுமாம்; பொய்யாமை உயிரை வாட்டுமேயன்றிக் கொலையைப் போல உயிரை ஓட்டும் கொடுமையைச் செய்யாதாம்! பொய்மை கூறிய ஒருவன் பழியனாய் - பாவனாய் - வாழலாம்! அவன் சுடவும் வருந்தவும் வாடவும், கூடலாம். அவற்றால் வாய்மைக்கு இவனே காண் என்று அவன் பின் நாளில் பாராட்டுப் பெறுமாறு வாழவும், அவனைப் பிறர் வாழ்த்தவும் நேரலாம். ஆனால் கொலை செய்து விட்டான் ஒருவன், அக்கொலையை மாற்றி, அப்போன உயிரை மீட்டு வழங்குதற்கு ஆகுமோ? அவன் திருந்தி அருளாள வாழ்வுக்கு உறைவிடமாக மாறிப் புத்துயிர் பெற்று புகழாளனாக உலாவரும் நிலைமை ஒருகால் உண்டாயினும், அவனால் கொல்லப்பட்ட உயிர் கொல்லப்பட்டது தானே! “வாழும் உயிரை வாங்கி விடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா? என்று சொல்வது அன்றிச் சொல்வதென்ன? ஆத லாலேயே, முழுதுலக முதற்பரிசுக்குரிய மெய்யனுக்கும், உயிர்க் கொலை என்னும் ஒன்றைக் கருதாத அருளாளனை முன்னே முகங்காட்ட வைத்துப், பரிசுக்கு உரியவனாகி விட்டாராம். முதன்மையைத் தட்டி இரண்டாம் இடம் தந்து போகட்டும். பொய்யாமை பொய்யாமை என்ற பொய்யா மொழியார் - பொய்யில் புலவர் - பொய்யும் சொல்லலாம் என்கிறாரே! இது முறையா? என ஒரு பக்கம் பாய்ச்சி மறு பக்கம் உருவும் வினாக் கணை தொடுப்பார் உளர். அவர்தம், வழுவாத வாய்மைக் காவல், ஏன்? காதல் - பாராட்டுக்கு குரியதே! ஆனால் இவர் வள்ளுவ வாய்மை இலக்கணத்தை வழுவின்றி அறிந்திருந்தால் இவ்வாறு கூற வாய்திறவார். மேலும் அவர் சுட்டும் குறளின் சொல்லாட்சியைத் தீரத் தெளிய அறியினும் இவ்வளவு எளிமையாய்க் குறைகூறத் துணியார். அவர் வினாத் தொடுக்க அமைந்த குறள், பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது. (292) இதில் பொய்ம்மையும் வாய்மை என்றார் அல்லர். வாய்மை வேறு; வாய்மை இடம் வேறு. அலுவலர் வேறு; அலுவலர் இடம் வேறு என்பது வெளிப்படு செய்திதானே! அமர்ந்திருக்கும் ஆளும், அவன் அமர்ந்திருக்கும் இடமும் ஒன்றாகி விடுமா? ஒப்பாகி விடுமா? ஒன்றாக்கியோ ஒப் பாக்கியோ விடக் கூடாதே! ஓர் அலுவலகத் தலைமையாளர்; அவர் ஒருநாள் அன்று; ஒரு வேளையும் அன்று; ஒருமணிப் பொழுதளவு அலுவலகப் பணியை விட்டுச் செல்ல வேண்டியுள்ளது. அந்நிலையில் அவர் அப்பொறுப்பை அவர் வரும் வரை மற்றொருவர் பார்த்துக் கொள்ளுமாறு திட்டப்படுத்தி வைத்துச் சொல்கிறார். பொறுப்பில் இருப்பவர் அலுவலர் ஆகார். ஆனால் அலுவலர் பணியைச் செய்பவர் ஆவர். பொறுப்பில் இருப்பவர் அலுவலர் பணியைச் செய்பவர் ஆகிய நிலையிலும் அவர் பொறுப்பு என ஒப்ப மிடுவரே அன்றி, அலுவலர் என ஒப்பமும் இடார். அப்படி ஒப்பமிட்டால் அவர் அலுவல் நடைமுறைக்கு மாறு செய்தவரே ஆவர். பொறுப்பு என்ற அளவில் ஒப்பமிட்டால் அது செயல், அலுவலர் செய்ததாக ஆகாது. அது செயல் அவர் செயலாகவே கொள்ள முறைமையும் உண்டு. இவ்வாறு எண்ணிப் பார்ப்பின் வள்ளுவர் மாறு கூறினார். என்னும் கருத்து எழாது. இதற் காகவே அவர் மிக விழிப்பாக வாய்மையின் இலக்கணம் இன்னதெனத் தலைப்பட வைத்தார். அது, வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்பது. உள்ளது உள்ளபடி என்பதே வாய்மை என்று சொல்லா மல் யாதொன்றும் தீமை இல்லாததைச் சொல்லலே வாய்மை என அற - அருள் நெஞ்சச் சுரப்பாக வாய்மை இலக்கணத்தை வரம்பு கட்டி உரைக்கிறார். அவ் வரம்பை உடைக்காமல் அல்லவோ வாய்மையைக் காணுதல் வேண்டும். உள்ளது உள்ளபடி கூறலால் தீமை, கூறுபவனுக்கு இல்லை கூறப்படுபவனுக்கு உண்டாகுமானால், அது வாய்மை ஆகாது. ஏனெனில், யாதொன்றும் தீமை இலாத சொல்லே வாய்மை என இலக்கணம் கூறுகிறார். புரை தீர்ந்த (குற்றமற்ற) நன்மை பயக்கும் ஓரொரு பொய்யும் உண்டே; அத்தகு பொய், பொய்யால் உண்டாகும் தீமையை உண்டாக்காமல் வாய்மையால் உண்டாகும் நன்மையை அல்லவோ செய்கின்றது! இத்தகு நலஞ் செய்யும் பொய்யைப் பொய் என்பதும் ஆகாதே; நலம் செய்யும் நயத்தால் வாய்மை என்பதும் ஆகாதே; என்பவராய் வாய்மை இடத்த என்றார். நலம் செய்யும் பொய்யால் எவ்வகையிலும் எவர்க்கும் தீமை உண்டாகி விடுதல் ஆகவே ஆகாது என்பாராய் மிக விழிப்புடன் புரைதீர்ந்த நன்மை என்கிறார். சிறிது முன்னே ஒருவன் ஓடினான் ஓடியவனை அப் பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்தான் ஒருவன் கண்ணாரக் கண்டான். அவன் ஓடிச் சென்று சிறிது பொழுதுதான் ஆயிற்று. பின்னே ஒருவன் வாளும் கையுமாக ஓடிவந்து இவ்வழி ஒருவன் போனானா என்று வினாவுகின்றான். அவன் கொண்டுள்ள கருவியும் விரைவும் உணர்வும் அவனைக் கொல்லவே செல்கின்றான் என்பதைக் காட்டுகின்றன. ஆகலின் நான் காணவில்லையே என்கிறான். அல்லது, அவன் செல்லும் திசையை மாற்றி இவ்வழியாகப் போகிறான் என்கிறான். இவை சொல்லளவால் பொய்யாவனவே. எனினும் விளைவால் பொய் தரும் தீமையைத் தந்தில. வாய்மை தரும் நன்மையையே செய்தன. அதனால் பொய்யும் ஆகாமல், வாய்மையும் ஆகாமல் வாய்மை இடத்தது ஆகின்றது. இடத்தது என்றதால் வாய்மை இருக்கும் இடத்தில் இருக்கிறது என்று ஆகுமே அன்றி அதுவே வாய்மை ஆகிவிடும் என்று கொள்ளுதல் ஆகாதே! தவறாக நாம் எண்ணிக் கொண்டு தவக்குறளைக் குறை கூறுதல் தகாதே! 21. மங்கல மனையறம் இனிய மணமக்களே, மங்கல விழாவில் கலந்து கொண் டுள்ள பெருமக்களே, அன்புச் செல்வங்களே, உங்கள் அனை வரையும் வணங்கியும் வாழ்த்தியும் மகிழ்கிறேன். திருமணம் மணங்களில் எல்லாம் உயர்ந்த மணம் - நறுமணம் - திருமணம். திருமணத்தின் மணம், புகழ்மணம்; அந்த மணம், எந்த மணமும் செல்லாத இடத்தும் செல்லும்; போகாத இடத்தும் போகும்; கருதுவார் நெஞ்சத்தெல்லாம் கமழும் மணம் திருமண மாகும். மற்றை மணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே தமிழர், திருமணம் என்றோர் சொல்லைப் படைத்துக் கொண்டனர். திரு என்பது கண்டவர்களால் விரும்பப்படும் தன்மை என்பது பேராசிரியர் உரை. மனையற வாழ்வு பிறர் பாராட்டும் வகையில் அமையவேண்டும் என்பதற்கு அடையாளமாகவே திரு என்னும் சொல் அமைந்தது என்பது இதன் பொருள். மற்றும் திரு என்பதற்குத் தெய்வத் தன்மை என்பதும் பொருள். இக்கருத்து, வள்ளுவர்க்கு உடன்பாடானது என்பது இல்வாழ்க்கை இறுதிக்குறளில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதால் புலப்படும். நீடு வாழ்தல் மணத்தில் அமர்ந்திருக்கும் மக்களும் சரி, மற்றவர்களும் சரி, நெடுங்காலம் இனிது வாழவேண்டும் என்பது வள்ளுவர் வாய்மொழி ஆகும். நெடுங்காலம் வாழ்வதற்குச் சில வழி களையும் அவர் குறிப்பிடுகிறார். மலர் மலர் மென்மையானது; அதனினும் மென்மையானது ஒருவரை ஒருவர் விரும்பும் மனைவாழ்வு; அந்த மென்மையை உணர்ந்து போற்றி வாழும் வாழ்வு, நெடிது வாழும் வாழ்வாகும் என்கிறார். மலரை எடுத்தல், தொடுத்தல், அணிதல் எல்லா வற்றிலும் மென்மை காட்டல் வேண்டும் அல்லவா! மாந்தர் மனம், மலர் போன்றதா எனின், இல்லை; அதனினும் மெல்லி யது என்பார் திருவள்ளுவர்! விருந்தினர் ஒருவர் வருங்கால் முகமலர்ந்து நோக்குதல் வேண்டும்; இனிய சொல் கூறி வரவேற்றல் வேண்டும்; இருப்பது என்னவோ அதனைப் பகுத்துத் தந்து உடனிருந்து உண்டாலே போதும். பலவகையான செலவுமிக்க உணவு தரவேண்டும் என்பது இல்லை. உள்ளொத்த அன்பே உவகை செய்யும் என்பார். விருந்தினர் ஒருவர் வரும்போது சற்றே வெறுப்பாகப் பார்த்தாலும், முகர்ந்த காற்றுப் பட்ட அளவிலே வாடிப் போகும் அனிச்சமலரைக் காட்டிலும் விரைவாக விருந்தினர் வாடிப் போவர் என்பார். இதனால், மலரினும் மெல்லிய வாழ்வு புலப்படும். இத்தகு வாழ்வுடையவர் நெடுங்காலம் வாழ்வர். பொறிகள் வெற்றிகளில் எல்லாம் பெரிய வெற்றி, ஐம்பொறிகளை - மெய் வாய் கண் மூக்கு செவி என்பவற்றை - நெறிப்படுத்தி வாழும் வாழ்வு. அவ்வாழ்வு அமையுமானால் அவர்கள் நெடுங் காலம் வாழ்வர் என்பதும் வள்ளுவம். அடக்கம் அடக்கம் ஆற்றலின் அடையாளம்; அது கோழையின் அடையாளம் அன்று, சரக்குந்து மேல் ஏற்றியிருக்கும் பொருள்கள் எத்தனை கல் (டன்) எடை! அதனைத் தாங்கும் கால் உருள்கள் (TYRE) காற்று அடைக்கப் பட்டவை தாமே! அக் காற்றை அடக்கி வைத்ததால் தானே பாரம் தாங்குகிறது! காற்று வெளியே போய்விட்டால்...? அடக்கத்தின் சிறப்பை இது நன்கு வெளிப்படுத்தும். உடல் நலம் நெடிது வாழ்வதற்கு உடல் நலம் போற்றல் வேண்டும். பிறர் நலம் போற்ற வேண்டிய பிறவி, முதற்கண் தன்னைப் போற்றிக் கொள்ள வேண்டும். தன்னைப் போற்றிக் கொள்ளா தவன், குடும்பத்தவர்க்கும் பிறர்க்கும் சுமையாக ஆகிவிடுவான். அதனால், தன் உடலையும் உளத்தையும் ஒவ்வொருவரும் நன்றாகப் பேணிக் கொள்ள வேண்டும். அதனால்தான் திரு வள்ளுவர், மணமகனுக்கும், மணமகளுக்கும், மற்றவர்களுக்கும் தனித் தனியாகத் தன்னைப் பேணிக் கொள்ளுதலை வற்புறுத்தினார் (43, 56, 883) உடல் நலத்திற்குரிய வழிகள் பலவாயினும் தலையாய ஒன்று, பொருந்தும் உணவைப் பொருந்திய வகையில் உண்பது ஆகும். மாறுபாடு இல்லாத உணவாகவும், உண்ட உணவு செரித்தபின் உண்ணும் உணவாகவும் இருந்தால் அவர்க்கு ஊறுபாடு இல்லை; மருந்து தேட வேண்டுவதும் இல்லை என்பார் வள்ளுவர். உடலும் உயிரும் கணவன் மனைவியர் உடலும் உயிரும் போல்பவர்; உடலும் உயிரும் ஒன்றைப் பிரிந்து ஒன்று இருக்க முடியாதவை. இவ்வாறே கணவன் மனைவியர் ஒன்று பட்டுச் சிறப்புற வேண்டும் என்பது வள்ளுவம். இருவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்வதை நிலத்தொடு இணையும் நீருக்கு உவமை காட்டினார் அவர். விண்ணும் மண்ணும் விண்ணில் இருந்து விழும் மழைத்துளி, மண்ணில் பட்டதும் மண்ணின் நிறத்தையும் தன்மையையும் இணைத்துக் கொண்டு இயங்குகின்றது. இவ்வாறே கணவன் மனைவியர் இணைந்து வாழ வேண்டும் என்பார். கணவன் மனைவியர் நெஞ்சக் கலப்பை, செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்த தனவே என்பார் சங்கப் புலவர், அவர்க்குப் பெயரே செம்புலப் பெயல் நீரார் ஆயிற்று. இணை தலைவன் தலைவி என்றும், கிழவன் கிழத்தி என்றும் ஒப்புச் சொல்லே படைத்து வாழ்ந்தவர் தமிழர். மனைவியின் சிறப்பே இல்வாழ்வின் சிறப்பு எனக் கண்டமையால் மனையாள் என்றும் இல்லாள் என்றும் பெயரிட்டனர். மனையையும் இல்லத்தையும் ஆளும் சிறப்பியல் அவளுக்கு உண்டு என்பதை விளக்குவதாம் இவை. ஆவின் இரண்டு கொம்புகள் போலவும், வண்டியில் பூட்டப்பட்ட இரட்டைக் காளைகள் போலவும், இரட்டை மாலைகள் போலவும் மணமக்களை நம் முன்னோர்கள் ஒப்பாகக் கூறினர். இரு தலையுடைய ஒரு புறாப்போலவும், இரு தலையுடைய மகவு போலவும் உரைத்தும் உளர். பாவேந்தர், கணவன் மனைவியர் ஒத்த தன்மையையும் பிரிவு இல்லாத உறவையும் ஓர் உவமையால் கூறினார். படபட, மடமட, கலகல, சளசள என்பவை இரட்டைக் கிளவிகள் (கிளவி - சொல்) இவற்றைப் பிரித்துச் சொல்லல் ஆகாது; பிரித்தால் பொருள் தராது. அதனால் இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர் என்றார். உருவத்தை விட்டு நிழல் பிரியுமா? பிரியாது அல்லவா! அதனால், நிழலில் நீங்கா என் வெய்யோள் என்றார் சங்கப் புலவர் ஒருவர். வெய்யோள் என்பது விரும்பத் தக்கவள் என்னும் பொருளதாம். இல்லறம் தாமரைப் பூவிலே தேன் எடுத்துச் சந்தன மரத்திலே கட்டப்பட்ட கூட்டிலே வைத்த தேன்போன்றது இனிய மண மக்கள் வாழ்வு என்னும் சங்கப் புலவர் வாக்கு நினைதோறும் இன்பம் பயப்பது. வள்ளுவரோ மிக அருமையாக ஓவியமாகத் தீட்டியுள் ளார் இனிய மணமக்கள் வாழ்வை: ஓர் உழவன் உழுதான்; விதையும் தெளித்தான்; அது முளைத்து விளைவு தரவேண்டுமானால், மழை பெய்ய வேண்டும். மழையை நம்பியிருக்கும் நிலம் அது (வானம் பார்த்த நிலம்). உழவன் இந்த எண்ணத்தோடு வானை நோக்கினான். நோக்கிய அளவில் வானம் பொழிந்தது. அத்தகையது, நல்ல கணவனுக்கு நல்ல மனைவி வாய்த்து வாழ்க்கை நடத்துவது என்கிறார் வள்ளுவர். அமிழ்தம் மேலும், நல்ல மனைவியும் நல்ல கணவனும் இணைந்து நடத்தும் இனிய இல்லறம் வீடு பேற்று இன்பம் என்றும் கூறுவார். மனைவி என்பவள் எலும்பு, தோல், நரம்பு, தசை என்ப வற்றால் அமைந்தவள் அல்லள். அவள், அமுதத்தால் அமைந்தவள் என்றும், அவள் உலகுக்கு வழங்கும் மக்கள் அமிழ்தம் என்றும், அம்மக்கள் பேசும் சொல் அமிழ்தம் என்றும், அவர்கள் கையில் பட்ட உணவும் அமிழ்தம் என்றும் கூறுவார். அமிழ்தம் என்றால் என்ன என்பதையும், வள்ளுவர் தெளிவு படுத்துகிறார். அது, உயிர் தளிர்க்கச் செய்வது என்கிறார். வீட்டில் இயல்பாக நடத்தும் இல்லறத்தால், இத்தனை அமிழ்த நலங்களைப் பெறமுடியும் என்று அறுதியிட்டு உரைக்கிறார். ஒரு கணவனைப், பழிப்பவர் முன்னாலும் நிமிர்ந்து நடக்கவைப்பவள் அவனுக்கு வாய்த்த நல்ல மனைவியே என்று கூறும் வள்ளுவர் உள்ளம் விரிவுமிக்கது, பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது. கற்பும் நிறையும் மனைவிக்குக் கற்பு எவ்வாறு தலைமையானதோ, அப்படித் தலைமையானது கணவனுக்கு நிறை என்னும் உறுதிநிலை என்கிறார். கற்பு வேறு நிறை, வேறு என இரண்டு இல்லை; ஒன்றே என்பதைக் கற்பை ஆட்சி செய்யும் இடத்தே நிறை என்பதையும் வைத்துள்ளார் திருவள்ளுவர். வாழ்வில் ஒருமுகப்பட்ட உறுதித் தன்மை வேண்டும் என்பதை ஒருமை மகளிர் என்னும் அரிய ஆட்சியால் அவர் வெளிப்படுத்துகிறார். அதனை விளக்கிக் கூறுதல் வேண்டுவது இல்லை; வேறு நூல்களையோ நூல்வல்லாரையோ வாழ்வியல் பெருமக்களையோ தேடித்திரிய வேண்டுவதில்லை என்பாராய், உனக்கு அமைந்த உறுதி மிக்க - ஒருமுகப்பட்ட - மனைவியைப் பார். அவள் எப்படி வாழ்ந்து காட்டுகிறாள் என்பதை நன்றாக அறி; அவளைப்போல் நீயும் நட என்று தெளிவுரைக்கிறார். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பது அது. கணவன் உடன் இருக்கலாம்; பிரிந்து சென்று, செய்ய வேண்டும் கடமைகளில் ஈடுபட்டும் இருக்கலாம். ஆனால், அவன் அவள் நெஞ்சத்தனாக எப்பொழுதும் இருக்க வேண்டும். அவ்வாறே மனைவி உடன் இருக்கலாம். தான் பிரிந்து அல்லது அவள் பிரிந்து கடமைகளில் ஊன்றியிருக்கலாம். அந்நிலையில் அவன் நெஞ்சமெல்லாம் அவளே நிறைவாகித் திகழ வேண்டும் என்பவை வள்ளுவங்கள். துணை கணவன் மனைவியர் ஒருவர்க்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவ ஆணை. அவனுக்கு அவள் துணை நிற்பது போல அவளுக்கு அவனும் துணையாகக் கட்டாயம் நிற்கவேண்டும். குடும்பச் சிறப்புக்கு அவன் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டுவதே முதன்மையானது என்னும் வாழ்வியல் கருத்தால் அவன் துணை என்பதை மூன்று இடங்களில் குறிப்பிட்டார் (41, 42, 1234) இந்நாளில் கணவன் மனைவி ஆகிய இருவரும் அலுவல் - பணி - தொழில் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும் குடும்பக் கடமைகளைப் புரிவதிலும் வருவாய் தேடுவதிலும் இணையாக ஈடுபட வேண்டியவர்களாகவே உளர். திருவள்ளுவர் வாழ்ந்த நாளில் மகளிர் பொருள் ஈட்டி ஆகவேண்டிய கட்டாய நிலையில் அவர்கள் வாழ்வியல் தேவை இருக்கவில்லை. இந்நாள் அத்தேவை பெருகிக் கொண்டுள்ளது. மேலும் பெருகவும் கூடிய நிலைமையும் உள்ளது. ஆதலால், வீட்டுக் கடமைகளையும் வெளிக்கடமைகளையும் கணவன் மனைவி ஆகிய இருவரும் இணைந்து செய்ய வேண்டியவர்களாக உளர். வளர்ந்த நாடுகள் என்பவற்றில் இந்நடைமுறை கண்கூடாகக் காணத் தக்கதாக உள்ளதைப் பலரும் அறிவர். வள்ளுவர் நாளில் இல்லாத இத்தேவையையும் நுண்ணிய பார்வையால் கண்டு வழிகாட்டுகிறார். இன்பமும் காமமும் அன்பின் தொடக்க நிலை காதல்; அதன் பெருக்கநிலை காமம் கமம் என்பது காமம் என்றாகும். கமம் நிறைந்து இயலும், என்பது தொல்காப்பியம். மனமொத்து இருபாலும் முருகிவளர்ந்து பெருகிநிற்கும் பேரன்பே காமம் என்பதாம். அதனால், மூன்றாம் பாலை எப்பெயரால் கூறினார் எனின் காமத்துப்பால் என்றே கூறினாராம். பின்னாளில் காமம் என்னும் சொல் தன்பெருமைப் பொருளை இழந்து சிறுமைப் பட்டதாகக் கருதப்பட்டமையால் இன்பத்துப்பால் என்னும் பெயர் கொண்டதாம். இதற்குச் சான்று அகத்தும் உண்டு, புறத்தும் உண்டு. அகச்சான்று திருக்குறள் மூன்றாம் பால் 250 குறள்களைக் கொண்டது. அவற்றில் காமம் என்னும் சொல் 39 இடங்களில் ஆளப் பட்டுள்ளது. இன்பம் என்னும் சொல் ஈரிடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவ்விரண்டு இடங்களிலும் காமம் என்னும் சொல்லும் வருகின்றது. திருவள்ளுவம் காட்டும் சான்று இஃதாம். புறச்சான்று இன்பம் என்பது கணவன் மனைவியால் கொள்ளும் வாழ்வியல் இன்பம் மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் பொது வாய் அமைந்தது. ஐம்பொறிகளாலும் மனத்தாலும் எல்லா உயிர்களும் கொள்ளும் சுவைப் பொருள்களின் நுகர்வெல்லாம் இன்பமேயாம். அதனால் ஆசிரியர் தொல்காப்பியர். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்றார் (பொருளியல் 29). இதனால் இன்பத்திற்கும் காமத் திற்கும் உள்ள வேறுபாடு விளக்கமுறும். குடும்பப் பொறுப்பு முழுமதி போல வளர்ந்து பெருகிய இல்வாழ்விலே கணவனும் மனைவியும் ஆகிய இருவர்க்கும் ஒத்த பொறுப்புண்டு என்பதை ஓர் அரிய உவமையால் திருவள்ளுவர் விளக்கினார். பாரம் சுமப்பவர் தோளில் பாரத்தை வைத்துச் செல்வது உண்டு. பண்டு முதல் இன்றுவரை தொடரும் வழக்கமே அது. தோளால் சுமக்க ஒரு தடி உண்டு. அதற்குக் கா என்பது பெயர். அத்தடியின் இரு பக்கங்களிலும் பொருள்களைச் சமமாக வைப்பதுடன் தோளில் அக் காவை வைக்கும் நிலையிலும் முன்னும் பின்னும் கூடாமல் குறையாமல் சரிசம நிலையில் வைப்பர். இல்லாக்கால் சற்றே நிறை கூடிய பக்கம் கவிழ்ந்து தொல்லையாக்கும். கா எப்படிச் சமமாகப் பாரம் தாங்கப் பயன்படுகிறதோ அவ்வாறே கணவனும் மனைவியும் குடும்பப் பாரம் தாங்குபவராக அமைய வேண்டும் என்கிறார். ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது என்பது அது (1196) காவடி, காவட்டு என்பவற்றைத் தூக்கிச் செல்வதைக் காணலாமே. பெருமிதம் இத்தகைய சரிசம நிறைவாழ்வு வாழ்பவர், குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதையும் திருவள்ளுவர் கூறினார். இத் தகையர் வாழ்விலே ஒரு பெருமிதம் உண்டாகுமாம். கல்வி, வீரம், புகழ், கொடை என்பவற்றால் பெருமிதம் உண்டாகும் என்பார் தொல்காப்பியர். திருவள்ளுவரோ அவற்றொடு, அரிய இல்வாழ்வாலும் பெருமிதம் அமையும் என்று சுட்டு கிறார். ஒருவருக்கு ஒருவர் குறையாத விருப்புடையவராக அமைந்து இல்வாழ்வு நடத்துவார்க்கு அப்பெருமிதம் உண்டாம் என்பதை, வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு என்பார். (1193) விதை இலாப் பழம் தக்க இல்வாழ்வு அமைந்தோர் அடையும் இன்பச் சிறப்பை ஈடும் எடுப்பும் இல்லாத ஓர் உவமையால் வள்ளுவர் கூறுகிறார். 20 ஆம் நூற்றாண்டிலே அறிவியல் வளர்ச்சிச் சிறப்பால் பயிரியல், செடியியல், மரவியல் ஆய்வுகள் பெருகி மிகு விளைவு காண வழிவகை ஏற்பட்டுள்ளமை அறிவோம். அவ்வறிவியல் சிறப்பால் கடினமான விதை, கொட்டை ஆகியவற்றைக் கடின மில்லாமல் ஆக்கவும், விதையே இல்லாமல் ஆக்கவும் கண்டு மகிழ்கிறோம்; உண்டும் திளைக்கிறோம்; விதை இல்லாக் கனி எனவும் பெயர் சூட்டுகிறோம். திருவள்ளுவர் அந்நாளிலேயே இக்கனி பற்றிக் கூறுகிறார். புறக்கருவி கொண்டு ஆராய்கிறான் விஞ்ஞானி; அகக் கருவி கொண்டு ஆராய்கிறான் மெய்ஞ் ஞானி; இரண்டன் முடிவும் ஒன்றாகவே இருக்கிறது என்னும் திரு. வி. க. மணிமொழி எண்ணத் தக்கதாக உள்ளது. விதை இல்லாக் கொய்யா, முந்திரி என்பவற்றையும் கெட்டியிழந்த விதையுடைய மாதுளையையும் விரும்பித் தேடிச் சுவைக்கிறோம் அல்லவோ! அவ்வாறே ஒத்த இனிய வாழ்வும் உலகுக்கு இன்பம் செய்யுமென உவந்துரைக்கிறார் பொய்யா மொழியார். தாழ்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி என்பது அது (1191). காழ் - கெட்டித் தன்மை; வன்மை; விதை. பொருளின் தேவை ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஒருவன் உடனே மணம் செய்து கொள்வது பழைய நாளில் இல்லை. தாம் குடும்பம் நடத்துதற்குரிய வகையில், தாமே பொருள் தேடிக் கொள்ள வேண்டும் என்னும் உறுதிப்பாடு கொள்வார்! தம் வாழ்வுக்கு மட்டுமன்றிப் பெற்றோர் சுற்றம் அறவோர், துறவோர் ஆகி யோரைப் பேணுதற்கும், பொதுநல ஆக்கத்திற்கு உதவுதற்கும் எனப் பொருள் முயன்று தேடுவார். பொருள் இல்லார்க் கிவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து போற்றுவார். தமக்கெனத் தனி இல்லம் அமைத்துக் கொண்டு மனையறம் மேற்கொள்வார். தம் இல்லில் இருந்து தமது வருவாயால் வாழ் வதுடன் பகுத்துண்ணும் அறமும் கடைப்பிடிப்பார். அந் நிலையில் துய்க்கும் அவர், தம்இல் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு என மகிழ்வார். அவர் வாழ்வு முப்பால் வாழ்வு, என்பதை விளக்குகின்றது திருக்குறள். தம் இல் இருத்தல், பொருள்; தமது பகுத்துண்ணல், அறம்; அரிவை முயக்கு, இன்பம். விரிவாக்கம் இந்த இனிய வாழ்வு, நினைவும், சொல்லும், செயலும் ஆகிய மூன்றும் ஒருமைப்பட்டது. வாழ்வுப் புகழை, வையகம் எல்லாம் பரப்புவது, இவரைப் போல் வாழவேண்டும் என்று எடுத்துக்காட்டும் ஏற்றமிக்கது. இதனை, உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார் பெருநாவலர். ஒரு நீர் நிலையில் விழுந்த பழத்தின் அலை படிப்படியே விரிந்து நீர் நிலை முழுவதும் பரவும் இயல்பினது. அது போன்றது இப்புகழ் வாழ்வு. புகழ் என்பது தேடிப்போய்ப் பெறுவது இல்லை. தேடி வந்து சேர்வது என்பதால் தான், புகும் அதனைப் புகழ் என்றனர். ஒருவரோடு ஒருவர் இசைந்து வாழும் வாழ்வால் ஏற்படுவதற்கே இசை என்றனர். இசை என்பதும் புகழே. ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்பது வள்ளுவம். ஊடல் தேநீர் விருந்து என்றால் தேநீர் மட்டும் தானா தருவர்? இனிப்பு, காரம் ஆகியவும் இணையும் அல்லவோ! அதுபோல் வாழ்வில் ஒரே இன்பமாக இருந்தால், அவ்வின்பமும் வெறுத்துத் தானே போகும். இனிப்பு - காரம் - இனிப்பு என உண்பதுபோல் இனிய வாழ்வு மேலும் இனிப்பதற்கு இடையே சிறு பிணக்குகள் சில ஏற்படுதல் இயல்பு. இதற்கு ஊடல் என்பது பெயர். கூடும் கூடும் கூடுதல், கூடல்; ஊடே ஒரு கருத்துப் புகுந்து ஊடாடுதல் ஊடல் இதனை, ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின் என்னும் வள்ளுவம். ஊடலும் கூடலும் வாழ்வின் வளர் நிலைத் தேவை என்பதால், நூலின் இறுதிக் குறளாக வைத்தார் திருவள்ளுவர். உள்ளொத்த காதலர் வாழ்விலும் ஊடல் என்னும் சிறு பிணக்கு நிகழுமா எனின் அது நிகழவேண்டும். நிகழாக்கால் முழுநிறை வாழ்வாகாது என்பது வள்ளுவம். குறையொன்று கண்டால் தானே ஊடல் ஏற்பட முடியும்? குறையிலா இருவர் வாழ்விலும் ஊடல் வருமா எனின் வர வேண்டும் என்பார் வள்ளுவர். அதற்கு வழியென்ன என வினாவினால் அவர். குறையில்லாதவர் எனினும் குறையொன்று உள்ளதாகக் கற்பித்துக் கொண்டு ஊடுவர் என்பார்! இல்லாக் குறையை வைத்து இவ்வாறு பிணங்கலாமா எனின், சுள் என்று உறைக்கும் ஒன்றைத் தொட்டுக் கொண்டு, தயிர்ச் சோறு உண்பதில்லையா? சுவை என்பது இனிப்பு எனக் கருதுகிறோம். வள்ளுவரோ உப்பு என்பார். உப்பு என்பதற்கே சுவைப் பொருளும் தந்த சுவைத் தேர்ச்சியர் அவர். உப்பிலாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பு அமைந்தற்றால் புலவி என்பார் அவர். புலவியாவது ஊடல். உப்பு என்று ஏன் சொன்னார்? உப்பு இல்லாமல் சுவை இல்லை. அதே பொழுதில், உப்பு மிகுந்தாலும் சுவைக்கேடு ஆய்விடும். அதுபோலவே ஊடலும் அளவோடு இருக்க வேண்டும் என்பார். கொஞ்சம் என்பதோர் சொல்வழக்கை அறிவோம். சிறிது என்பதே அதன்பொருள். கொஞ்சும் பொழுது சிறிதாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவது அது. அதுபோலவே ஊடல் என்னும் பிணக்கும் நீடல் கூடாது. நீடின் வாடிப் போய் நிற்கும் கொடியைக் கிழங்கோடு பிடுங்கி எறிந்து விடுவது போன்றது என்பார் திருவள்ளுவர். இவர் வரவில்லையே; இன்னும் வரவில்லையே; பறவை களும் கூடுகளுக்குச் சென்று அடைந்து விட்டன; கறவைகளும் தொழுவம் சேர்ந்து விட்டன; பக்கத்து வீட்டாரெல்லாம் பணி முடித்து மீண்டு விட்டனர். இவர்க்கு மட்டும் இங்கே நான் ஒருத்தி எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது தெரியவில்லையா? இன்று வரட்டும்.... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அதோ!.... அதோ! அவன் வந்து விட்டான்! புலம்பலெல்லாம் எங்கே போனதோ, தெரிய வில்லை. பூத்த மலராக வரவேற்றாள். பேரன் பேர்த்தியர் நிலையை வள்ளுவக் கிழவர் எங்கே இருந்து காணாமல் கண்டாரோ தெரியவில்லை! அவள் பேச்சாகக் கூறினார். அவள், எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து என்கிறாள். கண்ணுக்கு மைதீட்டிப் பழக்கப்பட்ட அக்காரிகை அதனையே எடுத்துக் காட்டாக்கி உரைத்தாள். கண்ணுக்கு மை எழுதும் போது, எழுதும் கோலைக் கண்பார்ப்பது இல்லை. இமையையே பார்க்கிறது. அதுபோல் கணவர் இல்லாத போது அவர்குறை தெரிந்தாலும் வந்தவுடன் அக்குறை காணாமல் போய் மறைந்து விடுகிறது. என்பது இப்பாடற் செய்தி. இரவும் பகலும் மாறி மாறி வந்து ஓய்வும் உழைப்பும் உலகம் கொள்ள உதவுவது போல ஊடலும் கூடலும் வாழ்வில் இன்பம் சேர்ப்பன. உணர்வு வாழ்வு உடற்கலப்பைப் பார்க்கிலும் உயர்ந்த கலப்பு, உள்ளக் கலப்பு என்பது வள்ளுவம். நேயத்தைப் பெருக்கி நிறைப்பது நெஞ்சக் கலப்பே என்பதால் தான் வள்ளுவர் மிக விழிப்பாகவும் உலக நலம் கருதியதாகவும் புணர்ச்சி பழகுதல் வேண்டா என்றார். தொட்டுப் பழகும் நட்பும் கட்டிப் புரளும் நட்பும் வெட்டிக்கொள்ளும் நிலைக்கு ஆவதில்லையா? அது நட்பு எனத் தக்கதா? தூண்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டால் மாட கூடங்கள் நிற்குமா? யாழின் நரம்புகள் எல்லாம் ஒன்றாகி விட்டால் இசைக்குமா? என்பார் கலீல் கிப்ரான் என்னும் பாரசீகப் பாவலர். உள்ளம் உருகி நிற்கும் நிலையே வெள்ளப் பெருக்காய், பொங்குமா கடலாய்ச் சிறக்குமாம்! மக்கட்பேறு இன்பம் மட்டுமே இல்லறப் பயன் ஆகாதே! உலகம் வழிவழியாக உயர்ந்தோங்கி வாழ வேண்டுமே! இயற்கை ஒழுங்கு அதுதானே. அதனால் தானே ஓரறிவுயிரி முதல் ஆறறிவு மாந்தர் வரை, ஆணும் பெண்ணுமாக அமைந்து விட்டது இயற்கைச் சீர்மை. அதன்படி மக்கட்பேறு வேண்டுவது, மாநிலம் சிறக்க வேண்டுவது ஆயிற்று. இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் வகுத்த திரு வள்ளுவர் இவ்விரண்டு அதிகாரங்களை அடுத்தே மக்கட் பேறு என்றோர் அதிகாரத்தை வகுத்தார். பெறக்கூடிய பேறுகளுள் எல்லாம், அறிவறிந்த மக்களைப் பெறும் பேறே தனிப்பெரும் பேறாம் என்று உறுதிமொழிகிறார் வள்ளுவர். அம்மக்களை ஆண் என்றோ, பெண் என்றோ கூறினார் அல்லர். அம் மக்களே மதிக்கத் தக்க மக்கள் எனத் தெளிவிக்கிறார். அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவுடையார் மெய்ப் பொருள் காண்பார், அறிவுடையார் அல்லலை வெல்வார். அறிவுடையார் பிற உயிரைத் தம் உயிர்போல் கருதிக் கடமை புரிவார்; அறிவுடையாரால் உலகம் நலம் பெறும் என்பவை வள்ளுவமாகலின் அத்தகுதியாளரை மிகுதியும் விரும்பி, அறி வறிந்த மக்கட்பேறு வாய்க்க வேண்டும் என்றார். அறிவு மட்டும் போதுமோ எனின், போதாது மற்றொன் றும் வேண்டும் என்பார் வள்ளுவர். அது, பழி என்பதைக் கருதியும் பாராத பண்பமைந்த பிறவியாகவும் இருக்க வேண்டும் என்பார். ஒரு மகவைக், கற்றோர் அவையிலே முந்தி இருக்கச் செய்வதும் சான்றோர் புகழும் புகழுக்கு ஆளாக இருக்கச் செய்வதும் பெற்றவர் கடமை என்றார் பெருநாவலர். உலக நலப்பேறு மக்கள் எண்ணிக்கையால் பெருக்கமாவதைவிட, எண்ணத் தால் பெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் கருதினார் போலும் பொய்யாமொழியார். ஏன் எனில், மக்கள் மொழியும் மழலையைக் குறிப்பிடும் அவர் குழல், யாழ் என்னும் இசைக் கருவிகள் இரண்டனைக் கூறுகிறார் அல்லவா! இரண்டு கருவி களும் குழந்தைகளைக் குறிப்பதாகலாம் எனக் கருதலாமோ? இயற்கை அழகு வாய்ந்த குழலையும், இயற்கை அழகுடன் புனைவழகும் கூடிய யாழையும் கூறுதலால் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் எனக் கருதலாமோ? கருதுதல் தானே இது! கரு எவ்வாறு அமைகிறதோ அதுதானே தெளிவு! எது எவ்வாறாயினும், மக்களைப் பெற்று மாண்புறச் செய்வன செய்தல் பெற்றோர் கடமை என்பதை வலியுறுத்தும் வள்ளுவர் உள்ளகம், குடும்பத்திற்காகப் பிறக்கும் பிள்ளையைக் காட்டிலும் உலக நலனுக்காகப் பிறக்கும் பிள்ளையே பேறு மிக்கது என்று வாழ்த்துகிறது. அது, தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்பதாம். வள்ளுவர், ஒரு வீட்டில் பிறந்த பிள்ளைதாம்? வீட்டள வில் நின்றாரா? நாட்டளவில் நின்றாரா? உலக அளவில் விரிந்ததுடன் எவ்வுயிரும் தம் உயிர் எனப் போற்றும் உயர்நிலை எய்திவிட்டார் அல்லரோ! எத்தனை அருளாளர்கள், அறிவாளர்கள், படைப் பாளர்கள், சான்றோர்கள் உலகவராக விரிந்து விளங்குகின்றனர். விரல் விட்டு எண்ணிவிடவோ இயலும்? ஒருவர் வாழ்வில் உலகம் ஒரு மொத்தமாக ஒன்றிக் கிடக்கிறதென்றால் அவ்வாழ்வு பாராட்டில் அடங்கிவிடும் வாழ்வாகுமா? அதனால்தானே பண்புடையவர்களும், சான்றோர்களும் இருப்பதால் தான் உலகம் வாழ்கிறது என்பது வள்ளுவமும் தமிழியமும் ஆயிற்றாம். வரவு செலவு பொருளைத் தேடுதல், பேணிக் காத்தல், வருங்காலத்திற்கு வளமாக வைத்தல் என்பனவெல்லாம் வாழ்வியலில் உள்ளவை தாமே! எவ்வளவு குறைந்த அளவில் தேடினாலும் அதனினும் குறைந்த அளவில் செலவிட்டு மீதம் வைத்துப் பொருள் சேர்த்தலும் கடமைதானே! பொருள் இல்லாரைப் பொருளாக எவரும் கொள்ள மாட்டார் என்பதால் தானே பொருட்டாக என்னை அவர் எண்ணவில்லை எனப் பலர் வருந்தியுரைத் தலைக் கேட்கிறோம். பொருள் கால்வாய் போல வரினும் வாய்க்கால் போலச் செலவிடவேண்டும் என்பது வள்ளுவம். இவ்வெல்லாம் ஆழமாய் உரைத்த வள்ளுவர் பொருட் சிறப்பினைப் போற்றிப் போற்றி உரைத்த வள்ளுவர் - அப்பொருளிலும் உயர்ந்த பொருள் ஒன்றை மக்கட்பேற்றிலே குறிப்பிடுகிறார். அது, தம் பொருள் என்பதம் மக்கள் என்பது. தம்பொருள் மக்கள் பெயரில், பொன், மணி, முத்து, தங்கம், வயிரம் என்பவை போல வழக்கில் உள்ளவை நாம் அறியாதவை இல்லையே. தம் பொருள் என்ப தம் மக்கள் என்னும் வள்ளுவ வழிப் பெயர் சூட்டல்கள் தாமே இவை. பொருட் செல்வத்தினும் போற்றத்தக்க செல்வம் மக்கட் செல்வம் என்று கூறும் வள்ளுவர். பொருளைப் பற்றிக் கவலைப் படாமல் விட்டார் அல்லர். தம் பொருளாக மக்களைப் பேணி வளர்த்து ஆளாக்கி அறிவாற்றலாக்கி வைத்து விட்டால் அவர்களுக்கு வேண்டிய பொருளை அவர்களே ஈட்டிக் கொள்வார்கள் என்கிறார். அவர் பொருள், தத்தம் வினையான் வரும் என்கிறார். பொருள் தேடும் தகுதியை உண்டாக்கித் தந்து விட்டால், அவர்களுக்கு வேண்டியதை அவர்களே தேடிக் கொள்வார்கள் என்பது இதன் பொருளாம். வள்ளுவர் இக்கருத்தில் அழுத்தமாக இருந்தார் என்பதை இன்னொரு குறளும் உணர்த்துகிறது. அது, வீட்டு நலம் கருதிய அளவில் நில்லாமல் நாட்டு நலமும், உலக நலமும் கருதிய உயர்வினதாம். பசித்துக் கிடக்கும் வறியர்க்கு உணவு தந்து பசி தீர்த்தல் நல்லதே. ஆனால், அதனினும் நல்லது ஒன்று உண்டு. அது, தம் பசியை ஆற்றிக் கொள்ளத் தக்க வழிவகைகளை அவர்களே கண்டு கொள்ளக் கூடிய அளவில் வழிகாட்டுவதாம் என்பார். ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்பது அது. மீனைப் பிடித்துத் தருவதைப் பார்க்கிலும் மீனைப் பிடிக்கும் வழியைக் காட்டிக் கொடு என்னும் சீனப் பழ மொழியை இங்கு எண்ணுதல் தகும். வீட்டையும் நாட்டையும் உலகையும் பிச்சைக்கு ஆட் படுத்தாமல் பெருவாழ்வு வாழச் செய்வதற்குத் தூண்டும் அளப்படும் வளப் பெருங் குறள்கள் இவையாம். எதிர் பார்த்தும் கையேந்தியும் வாழும் இழிவாழ்வை ஒழித்து உலகம் மான வாழ்வு வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களும் இவையாம். காவல் கடமை ஒரு பயிர் பண்பட்ட நிலத்தில் முளைத்து பக்குவமாக வளர்க்கப்படும் பயிராக மட்டும் இருந்தால் போதாது. நாளும் பொழுதும் நல்ல காவல் செய்யவும் வேண்டும். இல்லையானால் விளைவு களத்திற்கும் வராது; களஞ்சியமும் சேராது. அதுபோலவே நல்ல குடும்பத்தில் பிறந்து நலமாக வளரும் குழந்தையையும் நாளும் பொழுதும் கண்காணித்துக் காத்தல் பெற்றோர் கடமையாம். ஒரு வேந்தனை நோக்கி ஒரு புலவர் பெற்றோர் தம் குழந்தையைக் காப்பது போல் நீ உன் நாட்டைக் காத்தல் வேண்டும்; அது உன் கடமை என்றார். நாள் தொறும் ஆராய்ந்து செங்கோல் செலுத்தாத மன்னன் நாடு, நாள் தொறும் கெடும் என்றார் திருவள்ளுவர். அவரே, நாள் தொறும் கண்காணிக்காத உழவன் நிலவளத்தை இழந்து விடுவான் என்றும் கூறினார். வளரும் குழந்தைகளுக்குப் பெற்றோரின் கண்காணிப்பு மிகமிகத் தேவையாம். இல்லாவிட்டால் அப்பிள்ளை பழிப் பிறவியாகிக் கெடும்; கெடுக்கவும் செய்யும் என்பது உறுதியாம். வானத்தில் இருக்கும் மழைத்துளியை அமிழ்து என்றவர் திருவள்ளுவர். அந்த மழைத் துளிபோன்ற தூய்மை நடையே ஒழுக்கம் என்பது நம்மவர் கொள்கை. அதனால் தான், மழை பெய்வதற்கும் மாந்தர் நடப்பதற்கும் ஒழுக்கம் என்னும் ஒரு சொல்லையே ஆட்சி செய்தனர். அம் மழைத்துளி மண்ணில் விழுந்த பின் அமிழ்தமாக உள்ளதா? நிறமற்ற அது நிறம் பெற்று விடவில்லையா? சுவையற்ற அது சுவை பெற்று விட வில்லையா? தூய்மை அமைந்த அது தூய்மை இழந்து அருவறுக்கும் நாற்றமும் அடைந்துவிடுவதும் இல்லையா? அதுபோல் மாந்தர் பிறக்கும் போது தூய்மையாகவே இருக்கின்றனர். பின்னர்த் தாம் சேர்ந்து கலந்து ஒன்றாகி விடும் வாழ்விலே தம்மைச் சேர்ந்தவர் தன்மையே தம் தன்மையாகக் கொண்டு விடுகின்றனர். நல்ல நிலத்தில் விழுந்த நீர் நல்ல தன்மையையும் தீய நிலத்தில் விழுந்த நீர் தீய தன்மையையும் பெற்றுத் தன் இயல்பு மாறி விடுவது போலச் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்று விடுகின்றனர். வளர்ந்த வர்கள் நிலைமையே இது என்றால் கள்ளம் கபடம் அறியாப் பிஞ்சுக் குழந்தை நிலைமை எப்படி ஆகிவிடும்? மூவறிவு ஒருவர்க்கு மரபு வழியாக அமைந்த அறிவு, கல்வி வழியாக ஏற்படும் அறிவு, சூழ்நிலையால் உண்டாகும் அறிவு என்னும் மூவகையாலும் வாழ்வியல் அறிவு அமைந்து விடுகின்றது. அதனால்தான், பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும் என்றும், சிற்றினம் சேராமை வேண்டும் என்றும் திருவள்ளுவர் வலியுறுத்தினார். இதனை, அழுத்தமாக எண்ணிக் குழந்தை களை நல்வழியில் வளர்த்தல் பெற்றோர்க்குக் கடமையாகின்றது. தம் மக்களைக் கண்காணிப்புடனும் கருத்துடனும் வளர்க்க வேண்டிய பெற்றோர், தம் பெற்றோரைச் சீராகப் பேணிக் காக்க வேண்டும் என்றும் வாழ்நாள் அளவும் முதியரை மீள் குழந்தையாக எண்ணிப் போற்றல் வேண்டும் என்றும் கணவன் மனைவி ஆகிய அவர்கள் ஒருவரை ஒருவர் உயிராகப் போற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுவது இக்கால நிலையில் மிகக் கட்டாயத் தேவையாம். இதனை, இயல்புடைய மூவர்க்கும் நின்ற துணை என்றார் வள்ளுவர். அப்பெரியவர்கள் வளரும் குழந்தைகளுக்குக் குழந்தைகள் ஆகவும், ஆசிரியர் ஆகவும், காவலர் ஆகவும் திகழ வேண்டும் என்றும், அக் குழந்தைகள், தம் பெற்றோர் அவர்கள் பெற்றோரைப் பேணுவது போல் தாமும் தம் பெற்றோரைப் பேண வேண்டிய தற்குப் பயிற்சிக்களமாம் என்றும் வள்ளுவர் நினைத்தே இத் திட்டம் செய்திருக்க வேண்டும். சுற்றம் பேணல் பெற்றோரையும் பிள்ளைகளையும் பேணும் அளவில் நிற்றல் இல்வாழ்வுச் சிறப்பு இல்லை. சுற்றம் பேணல் வேண்டும் என்பதும் வள்ளுவர் வாய்மொழி. அதனாலேயே சுற்றம் தழாஅல் என்றோர் அதிகாரம் வகுத்தார். சுற்றத்தார் சுற்றி வாழ வாழும் வாழ்வே, செல்வத்தைப் பெற்றதன் பயன் என்பார். அதற்காகச் சுற்றத்தார்க்குத் தவறான வழிகளில் - தீய வழிகளில்- எல்லாம் உடந்தையாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவம் ஏற்காது. பெற்றவள் பசித்துக்கிடந்தாலும் அதனைத் தீர்ப்ப தற்காகத் தீயவழிகளில் பொருள் சேர்க்கக் கூடாது. சான்றோர் பழிக்கும் செயல் செய்தல் ஆகாது என்னும் வள்ளுவர் சுற்றத் தார் தீமைக்கு உடந்தையாய் இருக்க ஒப்புவாரா? சுற்றத்தாரையும் பிறர் பிறரையும் அனைவராலும் பேணிக் காக்க முடியுமா? என் வினாவின் வள்ளுவர் போர்க்கால நடவடிக்கை போல ஒன்றைக் கூறுவார். போர்க்களம் புகுந்தார் அனைவருமா அஞ்சாத் துணி வொடு அமரில் முற்பட்டு நிற்கின்றனர்! பகைப்படையைச் சிதறடித்து வெற்றி சூடுகின்றனர்? அக்களத்து வீரர் போலவே, குடும்பக் களத்திலும் அனைவரும் ஆற்றலொடும் தாங்குவார் அல்லர். தாங்கும் வலிமையுடையாரே தாங்குவர் என்பார். அதனால் அவரவர் நிலைக்குத் தக்க அளவில் அறவாழ்வும், அருள்வாழ்வும், கொடையும் மேற்கொள்ளலாம் என்பதாம். உளத்திண்மை ஒவ்வொருவர் முயற்சியும் முன்னேற்றமும் அவரவர் உள்ளத்திலேயே உள்ளது. அதனால் உள்ளம் உடைமையே உடைமைகளில் எல்லாம் உயர்வுமிக்கது என்றார் வள்ளுவர். துன்பத்தைத் துணிவோடு ஏற்றுப் பீடுநடை இடுவதும், அதனைக் கண்ட அளவில் துவண்டு போவதும் உள்ளத்தின் உறுதி, உறுதி இல்லாமை பற்றியவை. வெள்ளப்பெருக்கென இடும்பை வந்தாலும் அறிவுடையவன் நினைத்தால் நினைத்த அளவிலேயே ஒழிந்து போம் என்று தெளிவு சொல்வார் வள்ளுவர். கூடாதவை குடும்ப வாழ்வை உயர்த்த வேண்டும் என்று வீறுடன் நினைத்து வெற்றி கொள்ள நினைவான் கொள்ளக் கூடாதவை இவையென மூன்றினைக் கூறுவார் பெருநாவலர். அவை, பருவம் மடி, மானம் என்பன. காலம் அறிதல் என ஓர் அதிகாரம் வகுத்த வள்ளுவர், தன் குடியை உயர்த்த வேண்டும் என்ற முடிவு எடுத்தவன், இப் பொழுது பிறகு நாளை எனத் தள்ளிப் போடுதல் ஆகாது. செய்ய வேண்டியதை உடனே செய்துவிட வேண்டும் என்பார். செவ்வாய் சனி பார்ப்பவர், இராகு கேது பார்ப்பவர் நல்நேரம் அல்நேரம் பார்ப்பவர், சூலம் பார்ப்பவர் எண்ணிப் பார்க்க வேண்டும். வள்ளுவர் பெயரால் சோதிடம் சொல்வார் நினைக் கவும் வேண்டும். பருவம் என்றது காலம். இனி, மடி என்னும் சோம்பலுக்கு ஆட்படுதல் கூடாது. குடி அழிவுக்கே ஆளாக்கும். குடி என்பது குறையா ஒளி விளக்கு; மடி என்னும் கருக்கு உண்டாகிவிட்டால் அணைந்து போகும் எனத் தெரிவிப்பார். மடியில் இருந்தே மடிதல், மடிவு, மட்குதல் என்பன தோன்றுதல் அறிக. உயிரினும் உயர்ந்தது மானம் எனக் கூறும் வள்ளுவர் குடிநலம் பற்றிக் கூறும்போது, குடும்பத்திற்குள் மானத்தைப் பாராதே. பார்த்தால் குடிகெடும் என்கிறார். குடும்பத்திற்குள் மானம் பார்த்தால், குடும்ப மானம் கெட்டுப்போகும் என்பது வள்ளுவத் துணிவு. ஊட்டிய அன்புத்தாய் காட்டிய உரிமைத் தந்தை ஒன்றிய உடன்பிறப்பு இவர்களிடமா மானம் பார்ப்பது? இவ்வாறு பார்த்த குடும்பம் எங்காவது ஒன்று பட்டு உள்ளதா? உயர்வு பெற்று இருக்கிறதா? இல்லையல்லவா! இம்மூன்று கேடுகளையும் தொகுத்து, குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் என்பார். இனி, இன்னோர் கேட்டையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அது இருந்த குடும்பமோ, ஊரோ, கட்சியோ, அரசோ, நாடோ அழியாமல் இருந்தது இல்லை. அதன் பெயர் உட்பகை. உட்பகையாவது கூடவே இருந்து, குழிபறித்து, இறக்கு வது என்னும் பழமொழியால் தெளிவாம். எள்மூக்கு அளவு உட்பகை இருக்கவும் கூடாது. அப்படி உட்பகை இருப்பின் உள்வாங்கும் மணல் போலவும் அளறு போலவும் குடியைக் கெடுத்துவிடும் என்பார். உள்வாங்கும் மணல், மண் மேல் ஒருவர் கால்பட்ட அளவில் மீண்டுவர முடியாவாறு - இன்னொருவர் வந்து காக்கவும் முடியாவாறு - உள்ளேயே கொண்டுபோய் உயிரைப் போக்கிவிடும். வெளியில் தெரியாமலே அழிவு செய்துவிடும். களிற்றையும் ஆழ்ந்து போகவைக்கும் அளவற்றைக் கூறும் வள்ளுவர். உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் என்பதுஅவர் வாய்மொழியை அவரே விளக்குவதாகும். முயற்சியாளன் தான் எடுக்கும் செயல் நிறை வேறுமா? என ஐயம் கொள்ள வேண்டியது இல்லை. அவன் துணிவு தடை களை எல்லாம் உடைக்கும். அம்மட்டோ. அவனுக்குத் துணை யாகத் தெய்வம் ஓடிவரும் என்பார் வள்ளுவர். ஆதலால், துணிவாளனுக்குத் துணையாக உயர்ந்தவர்கள் பலரும் முன் னிற்பர் என்பது கருத்தாம். அறவாழ்வு இனி, இன்று மணவிழாக் காணும் மக்கள் வருநாளில் மணி விழாவும் காண்பர். அந்நாள் ஓர் அரிய நாள். அந்நாள் தொட்டாவது குடும்பக் கடமைகளில் இருந்து விடுபட்டுப் பொதுப்பணியில் ஊன்ற வேண்டும் என்பதை உறுதியாக்கும் உயர்ந்த நாள் மணிவிழாக் கொள்ளும் நாள். மனைவியொடும் மக்களொடும் சிறப்புற வாழவேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டுவனவெல்லாம் செய்தல் வேண்டும். அதன்பின் தானும் தன்மனையும் பற்றற வாழ்ந்து அறப் பணி, அருட்பணி ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் என்பது தொல்காப்பியர் ஆணை; அதன்வழியே வழியாகக் கொண்ட வள்ளுவர், இல்லற வாழ்வின் மேலளவாகத் துறவு நிலையை வைத்து அறவாழ்வைத் தெளிவு செய்தார். தமிழ் நெறியாவது இதுவே. இன்ப மணம் வாழி! ஈகைத் திறம்வழி! அன்பு நெறிவாழி! ஆம்! 22. ஒரு குறள் ஒரு நூல் திருக்குறள், கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டியது, எனவும், அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டியது எனவும், தினையளவு போதாப் பனிநீர் பனையளவு காட்டுவது ஒப்பது எனவும் பாடுபுகழ் பெற்றது. திருக்குறள் ஒவ்வொரு பாவும் ஒரு நூலாகும் தன்மையது. அவ்வளவு விரிபொருளது; காதம் மணக்கும் மணத்தைக் கடு காக்கி வைத்தாற் போன்றது. அறிதோறும் அறியாமை காணவைத்து, நவில் தொறும் நூல் நயமாகி, தொட்டனை தூறும் மணற்கேணி யாம் நுண்மாண் நுழை புலத்தினது. இதனால், மிக விரிந்துபடாமல் ஓறொத்த அளவால் (32 பக்க அளவில்) நாற்பது நூல்கள் ஒருவரிசையாய் வெளிப்பட உள்ளன. அதன் முதல் நூல் இத் தக்கார் தகவிலர் என்பது. நூல்வளம் வேண்டும் குறள்கள் தெரிவு செய்யப்பட்டுள இந்நூலைக் காண்பாரும், தாம் கருதும் குறள், ஐயம், விளக்கம் ஆயன பற்றி எழுதினும் தக்கவாறு போற்றிக் கொள்ளப்படும். தக்கார் தகவிலர் என்ப தவரவர் மக்களால் காணப் படும் என ஒருவர் எச்சத்தால் என்பதை மக்களால் என மாற்றிப் பதிப்பித்த துண்டு. அவ்வாறு குறளமையின், எத்தகு பொருட் சிறுமைக்கு ஆட்படுகிறது என்பதைத் தெளிவிக்கிறது, இம்முதல் நூல் ஆய்வுரை. இவ்வெளியீட்டுக்குப் பொருளுதவி புரிந்த பெருமகனார் புலவர் திருமலி செங்கை மதுவனார் ஆவர். அவர் கொடைப்பயன் ஈது. தனித்தமிழ்த் தொண்டர்; தவப்பெரும் அன்பர்; இனிப்புறு சொல்லின் இயல்பர் - கனிப்பாகுச் செங்கை மதுவனார் செய்த கொடை வளமே, இங்கிந்த நூலாம் எழில். பாவாணர் ஆய்வு நூலகம் தமிழ்த் தொண்டன், திருநகர், மதுரை-625 006. இரா. இளங்குமரன் 9-6-92. தக்கார் தகவிலர் தக்கார்க்குத் தக்கார்: 1816 ஆம் ஆண்டு. சென்னை சார்ந்த பல்லவபுரம். சாவடித் தெருவின் ஒருவீட்டுத் தோட்டம். அங்கே ஓர் இளங்குயிலின் இசை: பெற்றதாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரைமேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்றவத்துவ ருள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே என்னும் வள்ளலார் பாடலைப் பாடியது. உடன் வந்த தந்தையின் உதடுகளும் இசைத்தன. இசையின் நிறைவில், அம்மா தேகம் என்பது வடசொல்: இச்சொல்லைப் பெய்யாமல் உடல் யாக்கை முதலிய தமிழ்ச் சொற்களைப் பெய்திருந்தால் இப்பாடல் இன்னும் எவ்வளவு மேம்பட இனித்திருக்கும் என்றார், அப்பா வடசொல் சேர்தலால் இனிமை குறையுமா தமிழ்? அதனை விலக்கலால் இனிமை நிறையுமா? என்றது அவ்விளங்குயில், ஆமாம் என்று விளக்கினார் அறிவறி தந்தை. :அப்படியாயின் நம் எழுத்திலும் பேச்சிலும் அவற்றை விலக்கி இனிமை சேர்க்கலாமே என்றது அக்குயில். நல்லது; அப்படியே செய்யலாம் என்றார் அப்பெருந் தக்க தந்தை. அத்தோட்டப் பேச்சு, நாட்டுக் கொள்கையாய் நல்லோர் உளத்தில் பாய்ந்தது. அதுவே தனித்தமிழ் இயக்கம். தந்தையும் மகளும் தனிப்பேச்சிடையே கொண்ட கொள்கையே, இயக்கமாகி இன்றமிழ் காக்கும் இணையிலா அமைப்பாய்க் கிளர்ந்தது. தந்தையார் நிறைமலையாம் மறைமலையடிகளார். அப் பாலார் குயிலி நீலாம்பிகை யார். குயிலியின் உடன் பிறந்த மறைத் திருநாவுக்கரசு தமிழ் காக்கச் சிறை சென்ற செம்மல். அடிகளார், சங்கத் தமிழை மீட்டுக் கொணர்ந்து நாட்டில் உலவ விட்டவர். முந்தை எழுத்தில் ஒன்றிரண்டாக இருந்த வடசொற்களையும் களைந்து தனித்தமிழ் நூலாகவே வெளியிட்டவர். நீலா எழுத்தும் பேச்சும் தனித்தமிழாகவே கிளர்ந்தது. மறைத்திருநாவும் அவ்வழி கொண்டது. நீலாவை மணந்த திருவரங்கனாரும், அவர்தம் இளவல் சுப்பைய வேளும் தனித்தமிழ் இயக்கப் பரப்புநராகித் திகழ்ந்தனர். அடிகளார் பாராட்டுப் பெற்ற மொழிஞாயிறு பாவாணர் உ. த. க. எனப்படும் உலகத் தமிழ் இயக்கத்தை உருவாக்கித் தனித்தமிழ் மாளிகை எழுப்பிக் கோட்டையும் கொடியும் நாட்டினார். * * * நெல்லை நகரில் ஒரு பாவலன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவொரு கவி காளமேகம். வண்ணம் பாடலில் புத்தம் புதிய அருணகிரி. பொங்குமா கடலில் இருந்து வீழ்ந்து தாவும் அருவி யெனப் பாப்பொழி பாவலன். எழுதுவார் எழுத இளைக்க இயம்பும் விரைவுறு சொற் கொண்டல். எழுதிக் குவித்தவை இலக்கத்தின் மேலும்! கிழித்துப் போட்டவை அவற்றின் மேலும்! குளிசீலை உடையன்; கையில் கம்பன்! நாவில் முருகன்! ஐந்து இலக்கணத்தைத் தாவி, ஆறாம் இலக்கணம் ஏழாம் இலக்கணம், என்னப் படைத்தவன். இதழகல்பா உளதெனின் இதழுறு பாவும் உளதெனயாத்தவன். எழுகூற்றிருக்கை உண்டெனின் எண்கூற்றிருக்கையும் ஒன்பான் கூற்றிருக்கையும் பதின்கூற்றிருக்கையும் பாடியவன். ஓரடி எனப்படும் ஏகபாதம் பதிகம் அளவில் நின்றதை நூல் நூலாக ஆக்கிய வல்லான். முத்துக் கோத்து வைத்தாற் போல அடித்தல் திருத்தல் இன்றி எழுதி வைத்த ஏட்டு நூலகம் வீட்டில் வைத்த விரகன். வள்ளலார் பெருமான் வாழ்ந்த நாளில் வாய்ந்த நட்பில் தோய்ந்த தோன்றல். ஆமாத்தூரில் ஆருயிர் ஒடுக்கம் கொண்டவன். அன்னோன் இளந்தைப் பெயரோ சங்கரலிங்கன். பின்னைப் பெயரோ முருகதாசர்; வண்ணச்சரபம் தண்ட பாணி அடிகள். அடிகள் மட்டுமோ அத்தகு பாவலர்? அவர்தம் மகனார்; மகனின் மகனார்; அவர்தம் மகனார் என்ன வழிவழி வண்ணப் பாவலர். பேரப் பாவலர் சங்கரலிங்கனார் இன்றும் உள்ளார். அவரே, வண்ணச்சரபக் கொடையை வையகம் அறியச் செய்து வரும் வளமைக் கொடையர். மெய்யுற அறிய அவாவின், விழுப்புரம் சார்ந்த ஆமாத்தூர் என்ன எட்டாக்கை ஊரோ? * * * 1917 இல் தஞ்சையில் இருந்து ஒரு நூல் வெளி வந்தது. முத்தமிழின் நடுவில் திகழ்வதாம் இசைநூல். கருணாமிர்தசாகரம் என்னும் பெயரிய நூல். பெயரிய நூல் மட்டுமோ? பெரிய நூலுமாம்; பக்க எண்ணிக்கையால் மட்டுமன்று ; நீள அகலத்தாலும். சுருதிகளைக் குறித்துச் சொல்லும் அவ்வாய்வு நூலின் நான்கு பாகங்களும் ஆயிரத்து முந்நூற்று நாற்பத்தாறு பக்கங்கள். முத்தமிழ் என்னும் பெயரைப் பெற்றிருப்பினும் அப்படி யேதும் இசைநூல் இல்லை என்று எள்ளித்துள்ளிய பேர்கள் மல்கி இருந்த போதில், இதோ பாரெனத் துள்ளிவந்த இசைத் தமிழ்நூல். விபுலானந்தரின் யாழ்நூல் தோன்ற உந்தியெழுப்பிய முந்து நூல். கருணாமிர்த சாகரக்கொடையை வழங்கிய மருத்துவ மாமணி, இசைப்பெருங்குரிசில் மு. ஆபிரகாம் பண்டிதர். சங்கீத விஷயமாய் எனக்குத் தோன்றிய புதிய முறைகளை நான் சொல்ல, அவற்றை மனஞ்சலியாமல் மிகப் பொறுமை யோடு கற்றுக் கொண்டு, இராக முறையும் கீதமும் கீர்த்தனங் களும் செய்வதிலும், கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகள் இன்னவை என்று கண்டுபிடிப்பதிலும், கான்பரென்களில் பலர் முன்னிலையில் அவற்றைப்பாடிக் காட்டுவதிலும் இராகங்களைப் பிழைப்பார்ப்பதிலும் என் குமராத்திகள் மரகத வல்லி அம்மாள், கனகவல்லி அம்மாள் எடுத்துக்கொண்ட பிரயாசையும் என்மனையாள் பாக்கியம் அம்மாளின் ஊக்கமும் மிகவும் பாராட்டத் தகுந்ததே என்று முகவுரையில் பாராட்டுமளவு ஆபிரகாம் பண்டிதர் அருமை மக்கள் திகழ்ந்தமை எண்ணத்தக்கதாம். அவர்தம் மகனார் வரகுணபாண்டியர் பாணர்கைவழி யென்னும் யாழ்நூல் செய்ததும், அவர் தம் மகனார் தன சேகரபாண்டியர் தமிழிசையாய்வில் தலைப்பட்டிருப்பதும் குடிவழிப்பேறு குறிப்பவையாம். * * * சேதுபதி அமைச்சர் பொன்னுசாமி தமிழுக்கோர் பொன்னாய்த் திகழ்ந்தவர் பொன்னுசாமி. அமைச்சுப் பணியில் அறிவார்ந்த அமைச்சர். புலமைத் திறத்தில் புலவர்க்கும் புலவர். வள்ளன்மையிலோ வரிசை யறிமுதல்வர். அவர்க்கு உடன்பிறந்தார் முத்துராமலிங்க சேதுபதி புலமை, கொடைமை ஆகியவற்றில் ஒத்த உடன் பிறப்பே. அண்ணல் அமைச்சும், தம்பி அரசும் புலவரோடு இருந்து புலவராகி வினாவும் விடையுமாய் வெண்பாப்பாடிய விந்தை தனிப்பாடல் திரட்டில் இன்றும் தனிப்பேறுடையது. ஒருவருக் கொருவர் முற்பட எத்தனை அரிய நூல்கள் வெளிப்படத் தூண்டித் துலக்கி உதவியுள்ளனர்! வெளியிடற் கியலா நூல்கள் பலப்பல வெளிவர உதவிய கொடையே ஒரு நூலாகும் அளவினதாமே. பொன்னின் வயிற்றிலே பிறந்ததோர் முத்து. அதுவே பாண்டித்துரை யெனும் முத்து. தந்தையறிவு மகனறிவு என்பதே பொருளாய்ப் பிறந்தது அப்பாண்டித்துரையின் பிறப்பு. நாலாஞ்சங்கம் என்னும் மேலாஞ் சங்கம் ஈதனெ மதுரை யில் தமிழ்ச் சங்கம் நிறுவிய சான்றோர் அவரே. சங்க நிழலில் தங்காப், புலவர் புலவரே அல்லர் என் றொரு பழமொழி கிளரத் தொண்டு செய்த ஏந்தல். கதிரொளி கால்கொள் இடமெலாம், எம்கோல் கொள் இடமென ஆங்கில அரசு ஆட்சி செய்த நாளிலே, அன்னைத் தமிழைக் காக்கவே தம் குடியிருப்பையே மதுரையில் தமிழ்க் கோயிலாக்கிப் பண்டித வகுப்பும் தேர்வும், பாண்டியன் அச்சகமும், வெளியீடும் செந்தமிழ் இதழும் ஒருங்கே ஒளிவிடச் செய்த ஒள்ளியோர் அவரே. எத்தகைய உடன்பிறப்பும், எத்தகைய தந்தையும் மைந்தரும்! * * * ஆங்கில அரசும் அரசென மதித்த அரும்பெருஞ் செல்வர் அண்ணாமலை அரசர். கோடி கோடியாய்த் தேடிக் குவித்தார். அன்னைத் தமிழ்க்கென மீனாட்சி கல்லூரியைத் தில்லைப் பகுதியில் கண்டார். அதன் விரிவாக்கச் சீர்மையே அண்ணாமலைப் பல்கலைக் கழகமாகவும், அண்ணாமலை நகரமாகவும் கிளர்ந்து தனி யொளி செய்வதாம். தனியார் ஒருவர் தமிழுலகத்தில் பல்கலைக்கழகம் கண்டு வழிகாட்டிய பேறு அவர் வழி வந்ததே. தமிழிசை குன்றி அரங்கெலாம் வேற்றுமொழியே ஆட்சி செய்ததை எண்ணி அந்நிலை மாற்ற அண்ணாமலைத் தமிழிசை மன்றம் சென்னையில் கண்ட சீர்த்தியர் தாமும் அண்ணாமலையார். அவர்தம் மைந்தர் அரசர் முத்தைய வேள். தந்தை வழியிலே தமிழ் நடையிட்டுத் தனிப்பெரும் கடமை புரிந்தவர். மதுரையில் தமிழிசைச் சங்கம் கண்ட சால்பர். எடுத்த தொண்டைத் தொடுத்து வளர்த்தவர் இத் தந்தையரும் மைந்தரும் என்பதை முத்தமிழ் உலகம் முழுதுற அறியும். * * * சேற்றூர் என்பது சிற்றரசுகளுள் ஒன்று. அவ்வரசின் வரிசைப் புலவர் இராமசாமிக் கவிராயர். முகவூர் என்றும் ஊரினர். இவர்தம் மக்களும் மக்களின் மக்களும் நூலறிபுலவராய்த் திகழ்ந்தனர். ஒரு குடியில் எழுபுலவர் என ஒருங்கிருந்து தமிழ் வளர்த்த புலமையர் இன்னோர் என்பார் வெள்ளக்கால் முது பெரும் புலவர் சுப்பிரமணியனார். மு. இரா. அருணாசலக் கவிராயர் மு. இரா. இராமசாமிக் கவிராயர் மு. இரா. கந்தசாமிக் கவிராயர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் சுப்பிரமணியக் கவிராயர் பழனிக்குமாருத் தம்பிரான் என்பார் - பாடல்கள் ஒரு தொகையாகி வருவதைத் தனிசெய்யுட் சிந்தாமணியில் காணலாம். இவர்தம் மக்கள், பெயரர் என்னும் வழியினர் தாமும் வண்டமிழ்ப் புலமை காண்டுறைபேறும் கண்டது இத்தமிழ்மண். * * * இத்தகு நிலையில், பெற்றோர் சீர்மையைப் பெற்றுச் சிறந்த மக்களும், மக்களின் மக்களும் அங்கும் இங்கும் எங்கும் கண்ணேர் காணும் காட்சிகளைக் கண்டு, தக்கார் தகவிலர் என்ப தவரவர் மக்களால் காணப் படும் என உலகோர் எண்ணிவிடக் கூடுமோ என்று வள்ளுவக் கிழவர் எண்ணி எண்ணி நின்றாரோ? * * * தக்காருக்குத் தகவிலார் அறிஞர் வயிற்றில் பிறந்தும், அறிவிலா மூடம் உண்டே; அறிவறியார் வயிற்றில் பிறந்தும், பேரறிவாளப் பெற்றிமை கொண்டார் உண்டே; பொய்யே புகலான் களவே அறியான் என்னும் வாழ்வினர் வயிற்றில், பொய் கூறுதலை நெய்ச்சோறு எனவும். களவு புரிதலைக் களியாட்டு எனவும் கொண்ட மக்கள் பிறந்ததும் உண்டே; எறும்பும் ஈயும் கூட இன்னல் இன்றி வாழ எண்ணும் அருளின் இருக்கைப் பெற்றோர் தமக்குக், கொலையும் புலையும் அலைத்துக் குலைத்துக் களிப்புறும் சிறுமையும், பெரிய இருப்பாய்க் கொண்ட கயமைப் பிறப்பும் உண்டே; சோம்பன் குடியில் முயற்சிப் பிறப்பும், வீம்பன் குடியில் விழுமியன் பிறப்பும் உண்டே; வாரி வழங்கும் வள்ளல் வாழ்வில் பிறந்தும் எச்சில் இலையை எங்கே பொறுக்கலாம் என்றும் இரந்துண்ணும் வாழ்வே இனிய வாழ்வாம் என்றும் மானம் போற்றா இழிமைப் பிறப்பும் உண்டே; இறைமை மூச்சர் குடியில், இறைமை நோக்கிலாப் பிறப்பும்; பகுத்தறிவாளன் பண்புக் குடியில், கண்மூடித்தனத்தின் ஒட்டு மொத்தப் பிறப்பும்; குடித்தலை எண்ணியும் பாராக் குடியில், குடித்துக் கிடத்தலே குடிப்பிறப்பெனக் கொண்ட பிறப்பும் உண்டே; தக்கோர் தமக்கெலாம் தக்கோர் தாமா மக்களாகப் பிறந்துளர்? தகவிலார் தமக்கெலாம் தகவிலார் தாமா மக்களாகப் பிறந்துளர்? தக்கார் தமக்குத் தகவிலார் தாமும், தகவிலார் தமக்குத் தக்கோர் தாமும் மக்களாகப் பிறந்துள காட்சியைக் கண்ணில் கண்டும் கருதுதல் இன்றித் தக்கார் தகவிலர் என்பது அவரவர் மக்களால் காணப் படும் என்னில் முழுத்த தவறாய் முடிந்து விடுமே என்றே என்றே எண்ணினர் போலும்! * * * மக்களே எச்சமா? தக்கார் ஆயினும் ஆக! தகவிலார் ஆயினும் ஆக! மக்களே அவர்தம் எச்சமா? மக்களே இல்லார் எச்சம் எதுவும் வைத்தார் இலரா? மக்கள் இல்லார் எல்லாம் எச்சம் இல்லார் என்னின் பெரும் பழியன்றோ? முழுதுற எண்ணிப் பாராப் பழுதுமாம் அன்றோ! ஈதோ காண்க; சான்றுகள் ஒன்றா இரண்டா? உலகப் பரப்பை ஒருங்கு எண்ணினால் எத்தனை வண்டிப் பரப்பில் வரலாறுகள் உண்டாம்? * * * மக்கள் இல்லாத் தக்கார் மனையொடும் வாழ்ந்த காலம், ஆறாண்டு ஆறுதிங்கள் ஆறுநாள், அரும்பிய அன்பின் முளைகள் இரண்டு. ஒன்று கருவிலே சிதைந்தது. ஒன்று உருவிலே சிறந்து, கால்காட்டி, கைகாட்டி, நகை முகம் காட்டி ஈராண்டளவில் இறந்தது. ஆனால், அந்தப் பெருந்தகு வாழ்வு தொழிலாளர் அமைப்பை முதன் முதல் கண்டது; பேராயக் கட்சிப் பணியில் அமைந்தது; இதழாசிரியப் பணியிலும் இலங்கியது; எழுத்து உலகிலும் பொழிவு உலகிலும் தனிப்புகழ் சேர்த்தது. எழுத்தே பொழிவாய், பொழிவே எழுத்தாய் இருமையும் ஒருமையாய் இயைந்து நின்றது, இளமை விருந்தா, பெண்ணின் பெருமையா, மனித வாழ்க்கையா, பொருளும் அருளுமா, வாழ்வில் ஒளியா, முதுமை உளறலா, படுக்கையில் பிதற்றலா, தாயுமானமா, வள்ள லாரியமா, வள்ளுவ விளக்கமா, பாவா, உரையா எல்லாம் எல்லாம் நூல்கள் ஆயின! அந்த வாழ்வு வைத்துச் சென்ற வாழ்க்கைக் குறிப்பு இந்த மண்ணுக் கெத்தகு பேறு! மக்களைப் பெற்று இழந்தே போயினும் என்றும் அழியா இந்தப் பேறுகளை எச்சமாய் வைத்துச் சென்ற அவர் செந் தமிழ்த் தென்றல் திரு. வி. க. * * * தந்தை பெரியார், மக்களா பெற்றார்? தந்தை என்றால் மக்களைத் தந்தவர் தாமா? மதியைத் தந்தவர் - வாழ்வைத் தந்தவர் ஒளியைத் தந்தவர் - உணர்வைத் தந்தவர் விழிப்பைத் தந்தவர் - விளக்கம் தந்தவர் ஊட்டம் தந்தவர் - ஊற்றம் தந்தவர் தாமும் தந்தையர் என்னும் புதுப் பொருள் உலகம் கொள்ளத் தந்தை பெரியார் நின்றாரே! காலையில் கன்னி; கடும்பகல் திருச்சி; மாலையில் சென்னை; மறுநாள் கோவை - என்னப் பம்பரமாகச் சுற்றிச் சுற்றிச் சொன்மழை பொழிந்ததிளமைப் போதிலோ? சொட்டுச் சொட்டாய் நீர்வழிந்திடுதல், சொல்லாத் துயரம் சொல்லிய போதும், குழாயொடு பொருத்தி வாளியில் ஏந்திக் கொண்டொரு தொண்டர் வரவும், நின்றும் இருந்தும் மணிமணியாக, மணி மணிக் கணக்கில் தொண்ணூறு கடந்தும் பொழிந்த பொழி வுக்கு அளவுதான் உண்டோ? ஓய்வுறு நாள்தான் ஒன்றும் உண்டா? ஓயா வினாக்கணை தொடுத்திடா நாள்தான் உண்டா? இதழுக் கெழுதா நாள்தான் உண்டா? காலம் தவறுதல், காலமாம் வரைக்கும் கண்டதும் உண்டா? இறங்கி இறங்கிக் குழிக்குளும் பள்ளத்துளும் சேற்றுளும் அழுந்திக் கிடக்கும், கோடி கோடி மக்களைத் தோள் மேல் தூக்கி உயர உயர உயரும் கொடு முடிமேலே கொண்டு சென்று, பாராய் பட்டொளி உலகம்; பாராய் உன்றன் பிறப்பின் ஏற்றம்; பாராய் வீழ்ந்த உன் வீழ்ச்சி! என்றே என்றே அறிவுறுத்து அணைத்த ஐயா, அவர்தாம் எத்தனை பேர்களுக்கு ஐயா! தந்தை பெரியார் ஈரோட்டு இராமசாமி தந்து சென்றவை இந்த உலகுக் கிவ்வளவென்ன இயம்பக் கூடுமா? * * * அண்ணன் என்றால் அண்ணன்; அறிஞன் என்றால் அறிஞன்; நாவலன் என்றால் நாவலன்; சிந்தனை என்னின் செழுஞ்சுடர் ஞாயிறு; அருவியாய்ப் பொயுழியும் ஈடிணை இல்லா ஏந்தல்; எழுதி எழுதிக் குவித்த எட்டாப் பெரியன்; தனக்கெனத் தம்பியை இல்லான்; தமிழகக் காளையர் இளையர் எவருமே அவன்றன் தம்பியர் ஆனவன். காளையர் முதியர் என்ன, கிழவன், கிழவியர், குட்டி குறுமான் எவரும் தம்பியர். எவர்க்கும் அண்ணா என்றே திகழ்ந்தவன் எவர்க்கே தம்பி? தம்பிக்கு எழுதிய எழுத்து எத்தனை தொகுதி? பேசிய பேச்சு எத்தனை தொகுதி? புனைந்த கதையும், நாடகம், திரைப்படம் என்பவும் எத்தனை தொகுதி? தனக்கென மக்களை இல்லான்; மக்கள் அனைவரும் தனக்கெனக் கொண்டோன் கொண்டதன் விளைவு, நாடே அவன் வழி நின்றது. ஆட்சிக் கட்டில் ஏறினான். ஆண்டாண் டிருந்திலன்; விரைவிலே ஆண்டவன் ஆனான்! அவன் பெயர் இந்த மண்ணில் பதியா இடமென உண்டா; ஆட்பெயர் மட்டுமா? அரங்கு மட்டுமா? சாலை, சோலை, நகரம் என்ற அளவிலா? போக்கு வரவா, கலைபயில் இடமா? எங்கே இல்லை அவன் பெயர்? எத்தனை சிலைகள் மூலைமுடுக்கெலாம்? அந்த அண்ணா என்னும் அண்ணா துரையார் மக்கள் என்ன எவரை வைத்துச் சென்றார்? வளர்ப்பு மக்கள் சிலராம்! வாழும் மக்கள் அனைவரும் மக்கள் என்னக் கொண்ட பெரியவர், மக்களைப் பெற்று வைத்ததா வைப்பாய் உள்ளது? எத்தனை வைப்புகள் அவர் பெயர் கூற? * * * குடிப்பதாக நடிப்பதில்லை; புகைக்குடி எனினும் ஏற்பதில்லை; திருட்டு, கொள்ளை, வஞ்சம், நஞ்சம் எனப்படும் காட்சிக்கு இசைவது இல்லை; ஏழையர்க் குதவல் இடருக் குதவல் மங்கையரைக் காத்தல் மாணறம் போற்றல் என்னின் தாம் ஏற்பார்; வாரி வழங்கும் வள்ளல்; பாரி, காரி, ஓரி என்ன? மாரியும் இணையிலை என்னக் காட்டினார். கொடுத்துச் சிறந்த கைகள்; கொள்கையின் உருவம்; குணத்தின் குன்றம்; வாழ்வோர் வாழவாழும் தெய்வம்- - என்றெல்லாம் மக்கள் நம்ப நாட்டினார். இளையர், காளையர், ஆடவர், மகளிர், கிழவர், கிழவியர், ஏழை, பாழை எவரும் எங்கள் இலக்கியக் கனவு இவரே என்ன இலங்கினார். தோற்றமும் அப்படி, தோற்றிய தோற்றமும் ஏற்றம்! குறையிலா நிறைவா? குறைகள் எல்லாம் புலப்படா வகையில், போற்றும் பகுதியே வெளிப்படப் பளிச்சிடல் என்றும் கொள்கையாய்க் கொண்டார். அலைகடல் மணலென மக்கள் தலைகள் தெரியக் கூட்டம்! கூட்டம்! கொடுக்கும் பண்பிலும் கொள்ளைச் சிரிப்பிலும் மதுவில் மயங்கிய வண்டென மக்கள் சூழ்ந்தனர். தேர்தலில் வென்றார்; ஆட்சியும் கொண்டார்; அவரே வெற்றி! அவரே ஆட்சி! அவரே எல்லாம் என்ற அளவில் ஆண்டார். அவர் பெயர் கொண்டே ஆட்சியமைக்கவும் பெரும் புகழ் பெற்றார். அவர்க்குள் நினைவுக்குறிகள் இந்நாட்டெங்கிலை? அறிவின் முதிர்வா? நாவின் திறமா? பாவின் வளமா? எழுத்தின் ஏற்றமா? பேறுகள் சேர்த்தன? ஒன்றே ஒன்று உள்ளங்கவர்ந்த ஒன்று; நல்லவனாக நடித்து - நல்லனவாகக் காட்டி - நல்லவராக முடிந்த முடிபு! மற்றும் ஒன்று கூடி நின்றது! அஃது எளியோர்க்குதவும் ஈகை! அந்த ம. கோ. இரா. (M. G. R) பொன்மனச் செம்மலாய் இதயக்கனியாய் தெய்வமாய் வைத்த வைப்பை அன்றி, மக்கட்பேறு உண்டா? மக்கள் இல்லை என்பதால் அவரிந்த உலகுக்கு எதுவும் வைத்ததில்லை என்றிடலாமா? * * * உலக அரசியல் அறியவா? உலக வரலாறு அறியவா? உலக அறிஞர்கள் இவரெனக் கண்டு கொள்ளவா? தமிழுலகுக்கு அவர்தம் கொடைக்கு ஈடு இதுகாறும் இல்லை. இனிய துணையைப் பெற்றார். நெடிதும் வாழ்ந்தார். நூல் எழுதுவதே நோன்பாய் ஆனார். ஒன்றா, இரண்டா? சிறிதும் பெரிதுமாய் ஒரு நூற்றின் மேலும் எழுதினார் இதழ்ப்பணியேற்றும் எழுதிக் குவித்தார். அவர் நூல் வெளியிடற்கெனவே தோன்றிய பதிப்பகங்கள் உண்டு. பழம் பெருந் தொண்டரொடு தொண்டர். விடுதலை வீரர்; சிந்தனைச் செம்மல்; மொழி பெயர்ப்பாற்றலில் நிகரில்லாத் திறத்தர்; எளிய வாழ்வர்; அமைந்த பண்பர்; சால்பின் வடிவர். வெ. சாமிநாதர். சர்மா எனினும் அவரே; அவர்தம் அருமைத் துணையிடம் ஓரம்மையார் கேட்டார்; உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் எல்லோரும் எங்கே எங்கள் பிள்ளைகள் எண்ணிலர்; அவர்களையெல்லாம் பாருங்கள் என்று பேழையைத் திறந்து கணவர் எழுதிய நூல்களை யெல்லாம் காட்டி எங்கள் பிள்ளைகள் இவர்கள் என்றார். மக்கள் இல்லை என்னும் ஏக்கம் இருப்பின் இப்படி நிறைவு ஏற்படலுண்டா? எழுதிய நூல்கள் இனிய மக்கள் என்பதை அந்தத் தாயுளம் காட்டிய பெருமை, எளிதில் வாய்ப்பதா? எவர்க்கும் வாய்ப்பதா? * * * மணந்த துறவர் சமரச சன்மார்க்கம் என்னும் பொதுநிலை அறத்தை உலகுக்குத் தந்தவர் எவர்? பசித்திரு - - தனித்திரு - விழித்திரு - என்னும் முழக்கம் உலகுக்களித்தவர் எவர்? பசித்தோர் முகம் பார் என ஏவி இரக்க வடிவாய் இருந்தோர் எவர்? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலே அறத்தின்மூல அறமென முழங்கிய அருளாளர் எவர்? சமரச சன்மார்க்க நிலையம் நிறுவனம், மருந்தகம், பள்ளி இன்னவெல்லாம் கண்டவர் எவர்? வடலூர்ப் பெருவெளி வையக அருளின் ஊற்றுக் கண்ணென்ன வைத்தவர் எவர்? அருட்பா என்னும் பைந்தமிழ்த் தேனை ஆருயிர் தளிர்க்க அட்டியின்றி அடை அடையாக ஆக்கிப் படைத்த அருட்பெருந் தோன்றல் எவர்? உரைநடை நூலும், உரைப் பதிப்பு நூலும் உவந்து படைத்தும், பதித்தும் வைத்தவர் எவர்! ஊரூர் சென்று தேரூர் கோலமாய்த் திருக்கோயில் வழி பாடியற்றியவர் எவர்! மணந்த துணையை மனத்துறவாலே மருவாதாதுங்கி எங்கும் தங்கிய இறைமையே அங்கும் தங்கியதென்ன வாழ்ந்தவர் எவர்? திருக்குறள் வகுப்புத் தேர்ந்து தொடங்கியும், இளையோர் கல்வியும், முதியோர் கல்வியும், இரவுப் பள்ளியும் முதன்முதல் அமைத்தும் வழி காட்டி நின்ற வள்ளல் பெருமான் எவர்? ஒளி வழி பாடே உயர் வழிபாடென உலகம் அறிய, எளிமை, அமைதிக் கோலமாய்த் திகழ்ந்தவர் எவர்? மக்களைப் பெற்று மண்ணில் வைத்தார் என்பது இன்றி, உலக மக்கள் எல்லாம், உலகத்துயிர்கள் எல்லாம் இடரிலா வாழ்வு எய்த உழைத்தலே எங்கடன் என்ற அப்பெருமகனார் வள்ளலார் இராமலிங்க அடிகளார், இவ்வுலகுய்ய வைத்துச் சென்ற எச்ச வைப்புகள் எத்தனை? எத்தனை? * * * மனைவியைத் தாயாய், மாத் தெய்வ வாழ்வாய் மதித்து வணங்கிய வணக்கம்; தம்மை மறந்த தவத்தில் ஒன்றிய தகவு; கடவுளைக் காட்டுக என்னக் காட்டுவேன் என்ற மெய்ப்பாட்டு அருமை; கொள்கைக் கொடியை உலகெலாம் பரப்பக் கொண்ட மாணவர்க்கு வாய்ந்த குருத்துவம்; ஏட்டுப் படிப்பில் எதுவும் அறியாதெல்லாம் அறிந்த அறிமை; இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகம் தம்பால் எய்த எழுந்த சுடர்ம்மை; பட்டறிவென்னும் பொங்குமாக்கடலின் அலை அலையாக ஓங்கி எழுந்த கருத்து; ஒன்றா இரண்டா உலகளாம் நிலையம் என்னக் கொண்ட பேறு; இவ்வெலாம் உடைய இராமகிருட்டிணர் வையகம் தனக்கு வைத்துச் சென்ற வைப்பின் அளவை அளவிடற் குண்டோ? * * * மணவாத் துறவுத் தக்கார் பள்ளிப் படிப்பில் முதன்மை கொண்டும் இறைமை யாய்விற்கு இடமிடம் திரிந்து, இறுதியில் ஓரிடம் இதுவே என்னக் கண்டு கொண்டு சிக்கெனப் பற்றிய சீரிய இளமை. அறிவோ டாற்றல் அரும்புலப் பயிற்சி ஐந்தவி ஆற்றல் எல்லாம் கூடிய இனிய துறவு. தொண்டே இறைவன் வழிபாடெனக் கொண்டு முழுதாய் அழுந்திய கொள்கை, உரையும் நூலுமாய் அறிவுச் சுரப்பை உலகுக்கு ஈந்த உயர்வு. பல்வகைச் சமயப் பயிற்சியும் கொண்டு பயிலும் பொதுமை ஈதெனக் கண்ட தெளிவு. குருவர் பெயரையும் கொள்கைச் சிறப்பையும் பிறந்த மண்ணின் பேற்றையும் உலகம் அறிய ஓங்கிய குரலில் உரத்துக் கூறிய ஒப்பிலா உணர்வு. மனைவாழ்வில்லை; மக்கள் இல்லை; மாணவர் அடியார் தொண்டர் தோழர் என்னும் எத்தனை எத்தனை மக்களின் உள்ளகத் தெல்லாம் உயர்ந்து விளங்கும் தந்தை - அந்த வீரமாக்குரவர் விவேகானந்தர் - விட்டுச் சென்ற வைப்பினை விரிக்கக் கூடுவதாமோ? அத்தனை நிறுவனம் உண்டே? * * * தொடக்கப் பள்ளியும் முடித்ததில்லை; முந்தையர் செல்வ முடிப்பும் இல்லை; தந்தை தாயர் வைத்த சொத்தும் இல்லை; கடையில் எடுபிடி ஆளாய் இருந்து காலம் தள்ளும் நிலைமை ஆனால், அயலார் ஆட்சியை எதிர்க்குப் போரில் என்னை இணைப்பேன் என்னும் இணைப்பு; பேராயத்து இணைந்து தொண்டர் ஆகி, தலைவரும் ஆகி நின்ற நிலைமை. ஆட்சிக்கட்டில் அமர உரியரைத் தேர்ந்து தெளிந்து அமைக்கும் அரசியலாண்மை; எளியதொண்டன் முதலாய் மேலாம் தலைவன்ஈறாய் எல்லவர் தம்மையும் நினைவில் கொள்ளும் நிலைபெறும் ஆற்றல்; ஆட்சிக் கட்டில் ஏறியமர்ந்து இலவயக் கல்வி, நண்பகல் உணவு, சீருடைத் திட்டம் என்பன வெல்லாம் தம்மது காலத்தில் நாடு கொள்ள நாட்டிய தேர்ச்சி. இந்திய நாட்டுத் தனிப்பெரும் தலைகளும் மதிக்க இருந்த தகுதி; படிப்பறிவின்றியும் பயின்ற பயிற்சியால் பன்மொழித் திறத்தால் படியாத மேதை என்னப்பட்ட ஏற்றம்; இத்தனை அமைந்து பெருந்தலைவர் என்று பாராட்டப் பெற்ற காமராசர் மக்கள் தமையோ எச்சமாய் வைத்துச் சென்றார்? அவர் பெற்றுள்ள எச்சம் எத்தனை சிலைகள் - கல்வெட்டுகள் - ஊர்கள்! பேர்கள்! கல்வி, தொழிலக நிலையங்கள், நிறுவனங்கள்! இவை யெல்லாம் எச்சம் அல்லவோ? * * * உம்மை மணக்கவே நாங்கள் உள்ளோம் என்ன ஒருவருக் கிருவர் காலம் எல்லாம் காத்துக் கிடந்தும், கண்ணை மூடும் அளவும் திருமணம் கருதா ஒருமைப்பாடு! பேராயக் கட்சியை வளர்க்கவே பிறந்த பிறவியாம் தொண்டு; ஆலைப் போராட்ட வீரர் தமக்கு ஆணைத் தலைமை; கள்ளுக் கடையை மூடவேண்டும் என்பதற்காகத் தம் காட்டில் இருந்த பனைகள் பல்லாயிரத்தை வெட்டிக் காட்டிய வீறு; முப்பத்திரண்டரை ஊரின் உடைமைத் தலைவராய் இருந் தும் செல்வ வாழ்வில் சிந்தை செல்லாமல் சிறையின் வாழ்வே நிறைவின் வாழ்வாய்க் கொண்ட கொள்கை அரிமா; அயலார் ஆட்சியை ஒழிக்க அடிபணிவதில்லை; போரிட்டுப் பெறுவதே போற்றும் உரிமை என்னக் கொண்ட வங்கவீரர் வழியில் நின்ற வரிப்புலி! நாடு விடுதலை பெற்றும் சிறைக்கோட்ட வாழ்வை அறக் கோட்ட வாழ்வாய்த் தாங்கிய துடிப்பு! பதவி என்பதன் பக்கமும் பாராப் பற்றறு துறவு! பசும்பொன் தந்த பசும்பொன் என்னப் பாடு புகழ் பெறு முத்துராமலிங்கர்! மக்களைத் தாமே எச்சமாய்க் கொண்டார். அவர்தம் நினைவின் எச்சம் - எழுச்சியின் எச்சம் - எழுத்தின் எச்சம் - பொழிவின் எச்சம் எல்லாம் எச்சம் அல்லவோ? * * * எங்கே புயல்? அங்கே அவர்! எங்கே நிலநடுக்கம்? அங்கே அவர்! எங்கே கொள்ளை நோய்? அங்கே அவர்! எங்கே போர்க் கொலை? அங்கே அவர்! எங்கே தொண்டின் தேவை? அங்கே அவர்! மண்ணா - மொழியா - சமயமா - நிறமா - பாலா - என்ன கட்டு அவர்க்கு? யாதும் ஊரே யாவரும் கேளிர் அவர்க்கு. புரிவு தெரிந்த நாள் முதல் போற்றும் இன்று வரை ஓய்ந்ததுண்டா தொண்டில்? எத்தனை பரிசுகள் - எத்தனை பட்டங்கள்- எத்தனை பாராட்டுகள் - அவற்றை நின்று கேட்டு, சென்று பெற்று - பூரித்ததுண்டா? வந்த வரவு எத்தனை எத்தனை கோடி? அந்த வரவெலாம் அவர்க்கா செலவு? வலக்கை வாங்கி இடக்கையில் வைத்தும் பாராமல் வாங்கிய படியே வழங்குதல்! குடும்பம் உண்டா? குழந்தை உண்டா? உலகமெல்லாம் அவர்க்குக் குடும்பம்; உலகோர் எல்லாம் அவர்க்குக் குழந்தைகள்; ஐந்நூறு கோடி அறுநூறு கோடி மக்களுக்கு இந்நாள் வாழும் ஒரே ஒரு தாய் அந்தத் தெரேசா தாமே! அதனால் தானே, அவர் அன்னை தெரேசா ஆனார் உலகோர் தமக்கெல்லாம். அவர்தம் தொண்டு நிறுவனம் அமைப்பு நிறுவனம் உதவிப்பேறு உலகளாவிய பெற்றி உரையுள் அடங்குமா? எழுத்தில் அடங்குமா? பெற்ற மக்களா அவர்தம் எச்சம்? இறைமைத் தொண்டின் எச்சம் அதற்கு ஈடுசோடு எதுவும் உண்டோ? * * * எங்கே வண்டி என்றார் உறங்கி விழித்து! உங்கள் உறவினர் இன்னார் எடுத்துப் போயுளார் என்றனர். அரசின் வண்டியை அவன் எப்படித் தனக்கென எடுக்க லாம் என்று கருதினார். தொலைப்பேசி எண்ணைச் சுழற்றி முதலமைச்சர்க்கென அரசு தந்த இந்த வண்டி இங்கிருந்தது; வெளியே போயுள்ளது. எங்கே காணினும் வண்டியைப் பிடித்து வைக்க; வண்டியைக் கொண்டு சென்ற ஆளைச் சிறைப்படுத்துக - என்று காவல் துறைக்கு ஆணையிட்டார். வண்டியை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தருகில் கண்டு பிடித்தனர். பேசிய முதல்வரின் உறவினர், வண்டியை எடுத்து வந்தவர் என்பதை அறிந்து காவலர் திகைத்தனர். செய்தியைத் திக்கித் திணறி முதல்வர்க் குரைத்தனர். அவன்மேல் வழக்குத் தொடுக்க. வீட்டு வசதி வாரியத்தில் என்ன பணியாய் வந்தான் என்பதை ஆய்க என்று ஆணை தந்தார். உரிய நாளில் பெறுதற்கின்றி முந்துறப் பிறரொருவர்க்கு வீடு பெற்றுத் தருதற்கு வந்ததான செய்தியை உசாவி அறிந்தார். வண்டியை முறை கேடாய் எடுத்த தொன்று; அரசின் அலுவலகத்தில் முறை கேடாய் ஒரு செயலை முடிக்க முயன்றது; மற்றொன்று; இப்படி இரண்டு குற்றம் சாற்றி வழக்குத் தொடுத்தார் முதல்வர். வீட்டு வாயிலில் மிதியேல் என்றும் விதித்தார். எத்தகு வாய்மை நெஞ்சம் அது. மதுவிலக்குக் கொள்கையில் முழுக் கடைப்பிடியாக முனைந்து நின்றவர் அம்முதல்வர்; கட்சிக்காரர் உறவுக்காரர் நண்பர் அன்பர் என்ன எவரும் தம் பெயர் சொல்லித் தவறு செய்ய இடமே தராத சின்னாள் முதல்வர்! எந்நாள் முதல்வர்க்கும் முதல்வராம் முதல்வர்! அவர் பெயர் ஓமந்தூர் இராமசாமியார்! வள்ளலார் கொள்கையில் அழுந்திய அருளர். காந்தியடிகளின் வாய்மையைத் தூய்மையாய்ப் போற்றிய தோன்றல்! அவர்தம் எச்சம் இவையே! மணவாத் துறவில் நின்றவர், வைத்தோ செல்வார் மக்களாம் எச்சம்? வடலூர் கணபதி நிலையம் முதலியன பருவுடல். வாய்மையும் உறுதியும் வாய்ந்த நெஞ்சம் நுண்ணுடல் பேரும் ஊரும் பிறவும் உள்ளவை அரசியல் முறைப்படி * * * அவரோர் ஆவணப் பதிவர். நகராட்சி மன்ற உறுப்பினர். குற்றவியல் துறை முறைமன்ற நடுவர். இவற்றினும் விஞ்சிய திருத்தகு தொண்டர். சிற்றூர் மாணவர் நகரம் புகுந்து சீரிய கல்வி பயில இலவய உண்டுறை விடுதி அமைத்த கல்வித் தொண்டர் விடுதி அமைத்த பின் அதன் முழுப் பொறுப்பையும் தாமே தாங்கிய தகவர். அவர்க்கு ஒவ்வொரு மாணவன் தானும் மகனே! அவன் கல்வியும் ஒழுக்கமும் நலமுமே வேட்கை! குறையும் நிறையும் கண்டு திருத்தும் தந்தை ஆனார். நினைந்து நினைந்து உதவும் தாயும் ஆனார். சிறுமை போக்கிப் பெருமை காக்கும் காவலர் ஆனார். உள்ளொளி பெருக்கும் பேராசான் ஆனார். மலர்ந்த முகமும் புன்முறுவலும் அந்த முதுமை கொண்ட அணிகள். நினைவுக் கொழுமையில் நிலைத்த இளமை. ஓடி ஓடிச் செய்யும் ஒடுங்கா உள்ளம் காலம் தவறாக் கடைப்பிடி! கடிய சிக்கனம்! சிக்கனத்தால் சேர்த்த தொகை மூன்று இலக்கமும் விடுதிக் கெனவே வைப்பாக்கிய வள்ளன்மை! காலம் காலமாய்த் தொண்டு தொடரக் காலத்திலேயே தமக்குப் பின்னொரு தொண்டர் மணியைப் பயிற்றுவித்த தெளிவு. விடுதி மாணவன் ஒவ்வொருவனையும் தனித்தனியே தம்மகனெனக் கொண்ட அம்மாப்பெருந் தொண்டர்க்கு மக வென ஒருவர் உண்டோ? இல்லவே இல்லை! விடுதி, மாணவர் தம்முள் மகவென அமைந்து அப்பா அப்பா எனப் போற்றா ஒருவனும் இல்லை! இன்றோ அவர்தம் வளர்ப்பு மக்கள் பல்லாயிரர்! நாடு தழுவிய வளர்ப்புப் பிள்ளைகள் கொள்ளும் பேற்றைக் கொண்டவர் அந்த வேலூர் மாசிலாமணியார்; வேலூர் மாசிலா மணியார் விடுதி இன்றா தோன்றியது? அது தோன்றிய ஆண்டு 1917. மாசிலாமணி தம் விடுதிப் பொறுப்புக்கெனக் கண்ட மணி தெய்வசிகாமணி! மக்கட் பேறிலா மாசிலா மணியார் எச்சம் மாணவர் விடுதியேயன்றோ! அது செய்து வரும் மாண்புகழ் எச்சம் எவ்வளவு பெரிது! * * * எச்சம் என்பதன் வளம் இளங்கோவடிகளார் வைத்துச் சென்ற வளமார் எச்சம் சிலம்பு! சங்கப் புலமையர் சால்பின் எச்சம், பாட்டும் தொகையும் கூட்டும் வளமை! தொல்காப்பியத் தோன்றலின் எச்சம் ஒல்காப் பெருமைத் தொல்காப்பியம்! இராசஇராசன் எழுச்சிகூர் எச்சம் தஞ்சைப் பெருங் கோயில்! திருமலை மன்னர் திருத்தொண்டின் எச்சம் கோயில் திருப்பணி! திருமலைமால்! சமணத் துறவர் எச்சம் சிற்றன்ன வாயில்! இலக்கண இலக்கியப் படைப்புகள்! அசோகனார் எச்சம் பௌத்தப் பரப்பு; விடுதலைக் கொடியின் சக்கரம்! வள்ளல் அழகப்பர் வைத்துள எச்சம், அழகப்பா பல்கலைக் கழகம்! அறிஞர் ஐன்சுடீனார் எச்சம் அணுவாற்றல்! சி. வி. இராமனார் எச்சம் வண்ணமாலை! கிறித்து பெருமகனார் எச்சம் சிலுவைக் காட்சி! நபிகளார் எச்சம் நல்வழிக் குர் ஆன்! மூவர் முதலிகள், மணிவாசகர், ஆழ்வார் ஆதிகள் எச்சம் தேவார, திருவாசக, நாலாயிரப்பனுவல்கள். இன்னவை தாமா எச்சம்? வாழ்ந்து வளர்ந்து ஓங்கி உயர்ந்து நின்றனர் என்பதை நிலைக்கக் காட்டுவன எல்லாமும் அவர்தம் எச்சங்களே ஆகலின், பெருகப் பெருகப் பெருக ஆய்ந்த வள்ளுவக் கிழவர் சுருங்கச் சுருங்கச் சுருங்க அவற்றையெல்லாம், காதம் மணக்கும் மணப்பொடி யதனைக் கடுகுக்குள் வைத்துக் காட்டுவார் போலத் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் என்றாரே! வரலாற்றுக் குறிப்பு இணைப்பு சுகாத்தியர் என்பார் எதுகை மோனை கருதித் திருக் குறளில் திருத்தம் செய்துள்ளதாகவும் அதனைப் பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரர் மாணவர் தியாகராசரிடம் காட்டி மதிப்புரை வாங்க அவர் முயன்றதாகவும், திருக்குறளைத் திருத்தினேன் என்றவரைக் கண்ணால் காணலும் பாவம் எனக் கதவை அடைத்துக் கொண்டதாகவும் பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதர் குறிப்பிடுவார். அவர் திருத்தியவற்றுள் மக்கள் என்பதும் ஒன்று. மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பொன். பாண்டித் துரையாரைச் சுகாத்தியர் கண்டு தம் நூல் பற்றி உரைத்த தாகவும், அதனைக் கேட்டு வருந்திய அவர், சுகாத்தியர் வெளியிட்ட நூல்களுள் இருந்தவற்றையெல்லாம் விலைக்கு வாங்கித் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் செவிவழிச் செய்தி உண்டு. எச்சமும் மக்களும் பற்றிய இக்குறிப்புகளும் கருதத் தக்கன. * * * 23. அறத்தாறு இதுவென வேண்டா அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்னும் குறளின் விளக்கமே இச்சுவடி. பொருள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் ஏழாம் பாடலாக இது உளது. இதற்கு உரை கண்ட பரிமேலழகர், அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவை யான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுவானோடு செலுத்து வானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் என் கிறார். விளக்கம் அறம் செய்தவர் அவ்வறத்தால் சிவிகை செலுத்துவாராகவும், அறம் செய்யாதார் சிவிகை காவுவார் (சுமப்பார்) ஆகவும் உள்ளனர் என்று பரிமேலழகர் கருதுகின்றார். மணக் குடவர் பரிதியார் காளிங்கர் முதலியோரும் இக்கருத்தையே உரைக்கின்றனர். ஆய்வு அறம் செய்தார் அடையாளமும் அறம் செய்யார் அடையாளமும் இவையா? இவை என்றால் உழைப்பார் - உடல் உழைப்பார் - அனைவரும் அறம் செய்யார் என்றும், உடல் உழைப்பும் - பொதுவில் உழைப்பும் - இல்லார் அறம் செய்தார் என்றும் ஆகி, உழைப்புக்கு இழிவும், உலகுக்குப் பாழும் ஆமே! ஓர் ஓட்டுநர் இன்னுந்து பேருந்து ஆகியன ஓட்டுநராக இருப்பார், நன்கு முயன்று உழைத்து, பணத்தைச் சேமித்து, தாமே வண்டிக்கு உரிமையராய் - உடைமையராய் - தமக்கென ஓட்டுநர் வைத்துக் கொள்ளும் நிலைக்கு வருதலைக் காண்கிறோமே! இந்நிலை அறம் செய்தல், அறம் செய்யாமை என்பவற்றின் முரணாக அல்லவோ ஆகின்றது. முன்னே பணவாய்ப்பு இல்லை; அப்பணவாய்ப்பை உழைப்பாலும் சிக்கனத்தாலும் உண்டாக்கினான்; அதனால் தனக்கோர் ஓட்டுநர் வைத்துக் கொள்ளவும், வண்டி யொன்றையோ பலவற்றையோ உடைமையாக்கிக் கொள்ளவும் வாய்ப்புப் பெற்றான் என்பதே வாழ்வியல் நடைமுறையன்றோ! அறமும் தவமும் உழைப்பு இன்றி ஓய்வாக இருந்து கொண்டு நலன்களை எல்லாம் நுகர்வதே அறப்பேறு என்றால், உழைப்பவரின் உழைப்புக் கொடையைப் பயன்படுத்திக் கொண்டு, உழை யாமல் நுகரும் பாவத்திற்குத் தண்டனை, இல்லையா? அத் தண்டனையை அடையவா அறம் தள்ளிவிடும்? அறத்தின் பயன் இன்பம் என்னின், பிறரை வருத்தி ஒருவன் பெறும் இன்பம் அறத்தின் வழி இன்பம் தானா? அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்கிறாரே வள்ளுவர்? இனித் தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் என்பதும் குறள் அல்லவோ! உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு ஆகவும், தவத்தர் எனப்படுவார் இம்மெய்த் தவம் கொள்ளாராய்ச் சிவிகையைச் சுமப்பார் துன்புற, தாம் இருந்து இன்புறு நிலை, அறந்தந்த - அறத்து வழிப்பட்ட - தவநிலை எனலாமா? கூறக் கூடாததை, அறநூல் கருத்தாகக் கூறலாமா? எதிர் நிலை அரண்மனை வாழ்வினரும் துறவரும் பல்லக்கேறிச் சென்ற காட்சியைக் கண்டு அதனைச் செய்வினைமேல் ஏற்றிக் கூறு வாரை மறுக்க வந்த வள்ளுவத்தைச், செய்வினைச் சார்பாகக் காட்டி விட்டனவே பரிமேலழகர் முதலானவர் உரைகளாம். அறத்தாறு அறத்தாறு இதுவென வேண்டா என்று தொடங்கும் போதே, அறத்தாறு இது என்பது தானே முதற்கண் நிற் கின்றது. அதனை அறிந்து கொண்டுதானே என வேண்டா என்பதன் பொருளை ஆராய வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்கிறாரே வள்ளுவர், அறம் அறம் என்பது தருமம் எனப்படும் கொடையன்று; மனத் தூய்மையே அறம் என்று தெளிவிக்கிறார். கொடைஞர் என்பார் அனைவரும் அறவோர் ஆகார்; அவர் கொடைஞரும் வள்ளன்மையரும் ஆவரேயன்றி, அறவர் ஆகார். அறவரும் அவருள் இருக்கலாம் என்று கண்டு கொள்ளத் தூண்டுகிறார் வள்ளுவர். மனந்தூய்மை இல்லாரின் செய்வினை, தூய்மையான தாகாது என்பது வள்ளுவம். அதனால், செய்வினை (செயல்)த் தூய்மைக்கு முற்பட நிற்கும் மனத் தூய்மையையே அறம் என்றார். மனம் தூயதாம் அளவு, எவ்வளவு? முழுதுறு தூய்மையா? சற்றே குறைந்த தூய்மையா? மிகக் குறைந்த தூய்மையா? அத்தூய்மையின் அளவுக்குத் தகவே அறத்தின் அளவும் ஆகும் என்பதால், மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் என்றார். இதனால் அரைகுறை மனத்தூய்மையர் முயன்று முயன்று முழுமை எய்தலாம் என்ற வழி முறையையும் சுட்டு கிறார் வள்ளுவர். மனத்திலே மாசு உண்டாயின் சொல்லிலும் செயலிலும் மாசில்லாமல் போகாவே! கெடுவல் யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் என்னும் குறளில் (116) நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின் செயின் என்றார் என்பார் பரிமேலழகர். இனி, அறத்தொடு கூடாதவை இவை என்பதை, அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்று எண்ணுகிறாரே வள்ளுவர், பொறாமை, ஆசை, சீற்றம், கொடுஞ் சொல் ஆகிய நான்கும் நெருங்கா நெறியே அறநெறி என்னின், வயிற்றுப் பாட்டுக்காக வாயில்லா உயிரிகள் போலத் தாமே அடிமைப் பட்டுக் கிடப்பாரை, அடாவடித்தனமாய் ஏறிக் கழுத்தொடியச் சுமக்கச் செய்தலை அறம் என்பதன் அடித் துகள் தானும் ஏற்றுக் கொள்ளுமா? பார்த்த பார்வையிலேயே கண்ணை உறுத்தும் கொடுமையைக் கண்ணோட்டச் செயல் (அருட் செயல்) எனின், கண்ணின் கோளாறு மட்டும் தானா? கருத்துக் கோளாறும் தானே அது. செத்தாரைச் சாவார் சுமப்பார் என்பது எவரும் அறிந்தது. செத்தது நடவாது! அதனைத் தூக்கிச் செல்லல் - இழுத்துச் செல்லல் - உருட்டிச் செல்லல் வேண்டும். சுமக்கப் படுவார் உயிருடையார் அல்லரோ? உயிர்க்குத் தான் தன் னியக்கம் உண்டே! ஒரு சுமை தாங்கி இளஞ் சூரியன் முது சூரியன் என்பார் இரட்டையர். ஒருவர் முடவர்; ஒருவர் குருடர்; இருவரும் அம்மான் மகனும் அத்தை மகனும் ஆனவர். பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பதை உணர்ந்து கற்பன கற்றுப், பாவன்மையால் தமிழுலா வந்தவர் அவர். முடவர்க்குக் காலானார் குருடர்; குரு டர்க்குக் கண்ணானார் முடவர்; கொண்டு கொடுக்கும் உறவு, பொறிபுலப் புலமையின் கொண்டு கொடுப்பாகவும் விளங்கி, இரட்டைப் பேறு ஆகியது! ஒருவரை ஒருவர் சுமந்த அற மாயிற்று இச்சுமை! இன்சுமை மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் என்பதன்றோ வள்ளுவம். கைக்குழந்தை என்ன, தவழும் குழந்தை என்ன? ஓடும் குழந்தை என்ன அவர்களை எடுத்தணைத்து மகிழாப் பெற்றோர் எவர்? குழந்தையை எடுத்தலிலே, இடுக்குதலிலே, தோளில் சுமத்தலிலே எத்துணை இன்பம்! இடர்ச் சுமை இதோ! கன்னிமாரா நூலக வளாகம்! ஒரு கன்னி! ஆம் 15, 16 அகவைக் கன்னி! ஆனால் அவளுக்குக் கால்கள்; அவள் தாயே கால்கள்! தன் தவழும் குழந்தையை இடுக்கிக் கொண்டு செல் வார் போலச் - சுமக்க முடியாத் தளர்ச்சி, மூச்சு வழியும் கால் தள்ளாட்ட வழியும் வெளிப்படத் - தூக்கிச் செல்கிறார்! ஆம்! கன்னிக் குழந்தையின் கனிவுத் தாயாகவே உள்ளார்! இச்சுமை தவிர்க்க இயலாத் தாய்மைச் சுமை. அறிவியலால் மாற்றி அமைப்பினும் இவ்வருட்சுமை வேண்டியே உள்ளது அவ்வாழ்வு! அறமே! அறமே! குழந்தைச் சுமையும் ஊனர்ச் சுமையும் நோயர்ச் சுமையும் அறத்தொடு மாறுபட்ட சுமைகள் அல்ல. அவை இன்பச் சுமையாய், தாய்மைச் சுமையாய் அருட் சுமையாய், கடப் பாட்டுச் சுமையாய் அமைவன. ஆனால் சுமந்து செல்வாரினும் கொழுத்த உடலனாய் நோயிலியாய் இருப்பானை அவனினும் மெலிந்தும் நலிந்தும், வாடியும் வதங்கியும், பசித்தும் நோயுற்றும், கிடப்பாரும் வயிற்றடிப் பாட்டுக்காகச் சிவிகையில் தாங்கிச் செல்லல் அறம் என்னின் அவ்வறம்தான் அறம் கூற வேண்டும். வண்டி தள்ளல் கடிய கோடை; கொடிய வெப்பம்; தார்ச் சாலை; கை வண்டி; வண்டி மேல் வலிய பாரம்; எளிய இருவர் முன்னும் பின்னும் இழுத்தும் தள்ளியும் செல்லல்! சுட்டெரிக்கும் வெயி லில் காற்காப்பாகப் பசுந் தழைகளை வைத்துக் கட்டிய வறுமை! அவ்வழியே ஓட்ட நடையாய்ச் செல்லும் மெலிந்த உருவத் தின் கண்ணில் இக்கட்டை வண்டிக் காட்சி தட்டுப்படுகின்றது. வண்டி தள்ளியோடு தாமும் சேர்ந்து வண்டி தள்ளியாய்ச் செலுத்தினார். கூட்டம் திகைத்தது. வண்டி தள்ளிகளின் மனமும் உருகியது! எவ்வளவு தொலைவு வண்டியைத் தள்ளினார்? மறு நாளும் தள்ளுவாரா? வண்டி தள்ளிகளின் வாழ்வுக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா? இவ்வினாக்கள் எழுப்பப்படின் அவ்வுணர் வின் அருமை புலப்பட்டது ஆகாது! துடிப்பார்க்கு உதவ ஓடும் துடிப்புணர்வே கருதத் தக்கதாம். தவிப்பாரைக் கண்டு குவித்தார் ஒருவர். தாவிச் சென்று தவிப்பகற்ற முந்தும் இவ்வுருக்கம் எங்கே? தடிப்பேறிய உள்ளச் சான்றாய் உடலும் அமைந்திருக்கத் தவித்த வாய்க்குத் தண்ணீர் குடிக்கவும் இயலாமல் தகைப்புடன் சுமப்பார்மேல் இருந்து, தேன் கலந்த பாலைத் தெவிட்டக் குடித்து ஊர்வார் தடிமை எங்கே? இக்காட்சி சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது! பரிவால் உருகி வண்டியைத் தள்ளியவர் அண்ணல் விநோபா பாவே! * * * வண்டி இழுத்தல் கூட்டம் ஒன்றற்குச் செல்லுதல் வேண்டும்; மாட்டு வண்டி யில் ஏறிச் சென்றார். வண்டி செல்ல வேண்டும் இடம் சென்றது; வண்டியில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகளில் ஒன்றன் கழுத்தில் புண்ணிருக்கக் கண்டார் வண்டியில் வந்த அப் பொழிவாளர். அவர் உள்ளம் புண்ணாயது! கூட்டம் முடிந்தது; வண்டிக்கு வந்தார் பொழிஞர்; வண்டி யோட்டி மாட்டை வண்டியில் பூட்டப் போனார்; பூட்டாமல் தடுத்தார் பொழிஞர்; கழுத்துப் புண்ணுடைய மாடு என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இவ்வண்டியில் ஏறி வந்திருக்க மாட்டேன். உனக்கு மாட்டுக்குப் புண் இருப்பது தெரிந்தே இருக்கும்; தெரிந்தும் நீ சொல்லவில்லை. இப்பொழுது நானே தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டும் தவறு செய்ய மாட்டேன். தெரியாமல் செய்து விட்ட தவற்றுக்கும் தண்டனை வேண்டுமே! அதனால், நான் எவ்வளவு தொலைவு வண்டியில் ஏறி வந்தேனோ, அவ்வளவு தொலைவு இந்த வண்டியை இழுத்துச் செல்வேன் என்றார். அப்படியே செய்தார். கழுத்துப் புண்ணுடைய மாட்டை மீண்டும் வண்டியில் பூட்டாமையே போதுமே! இவர் வண்டியை இழுத்ததால் புண் ஆறி விடுமா? அந்த வண்டி ஓட்டி அடுத்த வேளை வண்டியில் பூட்டாமல் இருப்பானா? அத்தகைய உள்ளத்தினன் அவன் எனின், முன்னையே வண்டியில் பூட்டியிருக்க மாட்டானே என்றெல்லாமே எண்ணத் தோன்றும்! மாட்டுக்கு வந்த புண்ணைத் தாங்காமல், அப்புண்ணொடு வண்டியில் பூட்டியது தாங்காமல், அறியாமல் செய்த குற் றத்தையும் அருளியல்பால் உணர்ந்து போற்றிய போற்று தல் உள்ளதே அது நம் உளங்கொள்ளத் தக்கது அன்றோ! இது வடநாட்டுச் சிற்றூர் ஒன்றில் நிகழ்ந்தது. பொழிஞராகச் சென்று வண்டியிழுத்தவர் அண்ணல் காந்தியடிகள் * * * ஆடுசுமத்தல் ஆட்டு மந்தை ஒன்று. அந்த மந்தையில் பிந்திப் பிந்தி நொண்டிச் செல்லும் குட்டியாடு ஒன்று! மந்தையை விட்டுப் பிந்தி வரும் ஆட்டை, விட்டுவிட முடியுமா? பிந்தி வரும் ஆட்டுக்காக, முந்திச் செல்லும் ஆட்டு மந்தையை விட்டுவிட முடியுமா? நொண்டியாட்டை அடித்து அடித்துத் துயரோடு துயர் ஆக்கி ஓட்டி வந்தான் மேய்ப்பன். அச் செயல் கண்ட ஓர் உள்ளம் உருகியது. ஓடமாட்டாத ஆட்டைத் தோளில் தூக்கிக் கொண்டு நடந்தது. தலைநகரில் நிகழப் போகும் வேள்வியில் தலைகொடுக்க இவ்வாட்டுமந்தை ஓட்டிச் செல்லப்படுகின்றதாம்! இதனைக் கேட்டறிந்தார் நொண்டியாட்டுச் சுமைப் பெருந்தகை. தலைநகர் வரை ஆட்டுச் சுமையுடன் சென்றார் அவ் வருளாளர் வேள்வி நிகழ இருக்கும் இடத்தையும் அடைந்தார். வெட்டுப்படப் போகிறோம் என்பதுணராத ஆடுகள், மந்தை மந்தையாய் நின்றன. வேள்விக் கொலைஞரும் நாச் சுவை நயந்து ஆர்வத்துடன் இருந்தனர். வீறாப்பு மிக்க வேந்தன் இவ்வேள்விக் களிப்பிலே வேங்கையென நின்றான். அவன் முன்னே அருட்சுமை அண்ணல் ஆடு தாங்கியாய் நின்றார். வேங்கையும் மானும் எதிரெதிர் நின்ற நிலை அது. மான் பேசிற்று; ஆம் பேசிற்று. அதன் மொழி தமிழ்ப் பாவும் ஆயிற்று. வாழும் உயிரினை வாங்கி விடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கினும் ஆகாதையா! ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர் ஆக்கிய யாகத் தவியுணவை ஈட்டும் கருணை இறையவர் கைகளில் ஏந்திப் புசிப்பரோ கூறுமையா! மைந்தருள் ஊமை மகனை ஒருமகன் வாளால் அரிந்து கறிசமைத்தால் தந்தையும் உண்டு களிப்பதுண்டோ? - இதைச் சற்றுநீர் யோசித்துப் பாருமையா; காட்டுப் புலியின் கொடுமையஞ்சி - உங்கள் கால்நிழலில் தங்கிய ஆடுகளை நாட்டுப் புலியெனக் கொல்லுவதோ - அந்த நான்மறை போற்றிய நீதிஐயா! ஆதலால் தீவினை செய்ய வேண்டாம் - ஏழை ஆட்டின் உயிரையும் வாங்க வேண்டாம் பூதலந் தன்னை நரகம் தாக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும் ஐயா! என வாய் பேசா உயிரெல்லாம் வாய்பெற்றாங்கே வாதாடி வழக்கிட்டவாறு அந்த மான் பேசிற்று. அந்த அருள்வளர் மான் எது? அதன் பேச்சைத் தமிழில் தந்தவர் எவர்? ஆடு சுமந்த அந்த அருள்மான் அண்ணல் புத்தர். வேள்வி நடைபெற இருந்த இடம் பாடலிபுத்திரம் (பாட்னா) வேங்கை என நின்ற வேந்தன் பிம்பிசாரன்! புத்தர் மொழியைத் தமிழில் தந்த மணி கவிமணி! ஆசியசோதி யெனக் கதிரொளி வீசிய காட்சி இது! இதனால், ஆடு சுமந்திளைத்த புத்தரேன் அந்தணராய்ப் பாடு புகழ்பெற்றார் வள்ளுவரே - நீடிய அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். என எடுத்துக்காட்டாம் அந்தணரானார். ஓரிடத்தில் ஓராட்டைச் சுமந்தார்புத்தர், எத்தனை நொண்டி ஆடுகள்! நோயாடுகள்! ஆட்டுத் தொட்டிகள்! எண்ணத் தொலையுமா? உயிர்க் கொலை வேள்வி உலகில் நின்று விட்டதா? உயிர்க் கொலை நின்று விட்டதா? என்றெல்லாம் எண்ணத் தோன்றும். இறைவன் பெயர் சொல்லிக் கொண்டு இரக்கமில்லாச் செயல் செய்தல் ஆகாது. வேள்விக் களத்திலே எனினும் கொலை கொலையே என்ற உயிரிரக்கப் பார்வையே உயர் பார்வை என்பதை உணர்த்துவது இது. இதுவே, * * * அவிர்சொரிந்த தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. என்னும் வள்ளுவத்திற்கு முற்பட முழங்கிய முழக்கம். எண்ணத் தக்கது இதுவே! பன்றி தூக்கல் ஒரு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. அது குதிரை வண்டி அதில் வழக்கறிஞர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் சென்ற வழியில் ஒரு குட்டை. அதில் சேறும் நீரும். அச்சேற்று நீரில் இறங்கிய பன்றி அப்படியே உள்ளே உள்ளே சேற்றுள் மூழ்கிக் கொண்டிருந்தது. வண்டியில் இருந்த வழக்கறிஞர்களுள் ஒருவர் கண்ணில் இக்காட்சி பட்டு விட்டது. வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பன்றியைக் கண்டவர் உள்ளம் உருகியது. எனினும் விரைந்து செல்ல வேண்டிய நெருக்கடியில் உடனே இறங்கத் துணியவில்லை. இறங்கி அப் பன்றிக்கு உதவாமல் செல்லவும் அவரால் முடியவில்லை! அதனால், வண்டியில் இருந்து குதித்து ஓடினார். பெரிதும் மூழ்கிச் சாவைத் தழுவிக் கொண்டிருந்த பன்றியைத் தூக்கினார். அது என்ன செய்யும்? பிழைத்த மகிழ்வில் ஓர் உதறல் உதறியது! உடையெல்லாம் சேறு ஆயிற்று! அவற்றை நீரில் அலசிப் போட்டுக் கொண்டு ஓட்ட ஓட்டமாக ஓடி, ஓடிப் போய் விட்ட வண்டியைப் பிடித்தார். நண்பர்கள் எள்ளி நகையாடினர். அதனை இனியதாக எடுத்துக் கொண்டு அவரும் நகைத்தார். உடை அழுக்கானாலும் ஓட நேரிட்டாலும் போக இருந்த ஓர் உயிரைக் காப்பாற்றிய உவகை எவ்வளவு உவகை! நான் அதனைச் செய்யத் தவறி இருந்தாலோ, காண நேராமல் இருந்திருந்தாலோ என்ன துடி துடித்திருககும்; துடிப்போடே செத்திருக்கும்! என்று தன் செயலுக்குத் தானே மகிழ்ந்தான் அவ்வருளாளன். அவன் அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையில் பின்னாளில் வீற்றிருந்து அடிமை முறையை ஒழித்துக் கட்ட வாய்த்தவனாகிய அண்ணல் ஆபிரகாம் லிங்கன்! அவன் அப் பன்றியைத் தூக்கி விட்டதால் மட்டும் பன்றி இனத்தின் அலை கொலைகள் நீங்கி விடுமா? சாவும் அழிவும் தீர்ந்து போகுமா? என்பவை வினாக்கள் அல்ல! உயிர்க்கு, உயிர் இரங்குதலே உயிர்க்கடன் என்பதை உணர்த்துவது அது! வண்டி தள்ளிய ஒருவர் காட்சியைத் தென்புறம் நிறுத் துங்கள்! வண்டியிழுத்த ஒருவர் காட்சியை வடபுறம் நிறுத்துங்கள்! ஆடு சுமந்த ஒருவர் காட்சியைக் கீழ்புறம் நிறுத்துங்கள்! பன்றியைத் தூக்கிய ஒருவர் காட்சியை மேல்புறம் நிறுத் துங்கள்! இந்நான்கு பக்கங்களின் நடுவில் ஒரு காட்சி நிகழ்வதைக் கண்முன் காணுங்கள்! எளியேன் கண்டது என் இளந்தைப் பருவத்தில்! அதனை முதியர் சிலரும் கண்டிருக்கலாம்! அக் காட்சியைக் காண்க! ஒரு பல்லக்கு நான்கு பேர்கள் சுமக்கக் கூடிய மூடுபல்லக்கு பார்க்க வயப்படுத்தும் வனப்பு. பட்டு மெத்தை, விரிப்பு, தலையணை, திண்டு. பக்கத்தில் வழிபாட்டுப் பொருள்கள் பால், பழம், பலகார பண்ட வகைகள். அப்பரிய பல்லக்கின் உரிய இடமெல்லாம் கவர்ந்து கொள்ளும் காவியுடை உருவர். இருந்த கோலமும் ஆவார்! கிடந்த கோலமும் ஆவார்! நான்கு பேர்கள் அப்பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நடப்பரா? நடந்தால் தொலைவு மாளாதே! அதனால் ஓட வேண்டும். ஒருகல் தொலைவு ஓடிப்போய் அங்கே காத்திருக்கும் சுமையர் நால்வர் கழுத்தில் தந்து பல்லக்கைச் சுமந்து சென்ற விரைவினும் விரைந்து ஓடி நான்காம் கல்லிலே நிற்றல் வேண்டும். பல்லக்கு அக்கல்லுக்கு வரும்போது அதனைத் தாங்கிக் கொண்டு அடுத்த கல்லுக்குச் சுமந்து தந்து அடுத்த நான்காம் கல்லுக்கு ஓடிப்போய் நிற்கவேண்டும். இவ்வாறு கல்லுக்கு நால்வராய் நான்கு கல்லுக்கும் பதினாறு பேர்கள் மாறிமாறி நின்று தொடர் ஓட்டச் சுமையாய் மேலே இருக்கும் துறவரைச் சுமந்து செல்ல வேண்டும். கோயில் திருவுருவங்கள் திருவுலாக் கொள்ளுங்கால் அதனைச் சுமக்கும் சேவையர் உண்டு. அவர்க்கெனக் கொடைகளும் (மானியங்களும்) உண்டு. திருவுருவங்களை மட்டுமா தூக்குவர்? ஓரடி ஈரடிச் சிறு சிலையையோ ஏழடி எட்டடிச் சிலைகளையோ தூக்கினும் அவற்றொடும் அதன் பூசகரையும் சேர்த்தல்லவோ சுமந்தனர்! அச்சுமையர்க்கேனும் ஆங்காங்கு நிற்குங்கால் தாங்கு கோல்கள் ஊன்றி நிறுத்துதல் உண்டு! ஆனால், மேலே கண்ட துறவரைத் தூக்குவோர் தோளேதான் தாங்கு கால்களும், கோல்களும்! கால்வேக - தோள்வேக- உடல்வெதும்ப - உள்ளம் வெம்ப - பசிவாட்ட - வாய் உலரச் - சுமப்பார் சுமக்க, விசிறி கொண்டு விசிறிக் கொண்டு, பருப்பு வகைகளும் மணப் பொருள்களும் இட்டுச் சுண்டக் காய்ச்சிய பாலை இடை இடை பருகிக் கொண்டு இருப்பார் இருக்கும், கண்ணைக் குடையும் காட்சியைக் கண்டும் கல்லாகவும் கட்டையாகவும் மரத்துப்போன கூட்டம் கையெடுத்து வணங்கிக் கொண்டும் திருப்பெயர் சொல்லி வாழ்த்தும் போற்றியும் பாடிக் கொண்டும் இருக்குமானால் அப்பல்லக்குச் செலவு, அருள் செத்துவிட்டது, அது நாறிப் போகுமுன் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம் என்பதற்கு அடையாளமாகத் தோன்றுமேயன்றி வாழ்த்தத் தோன்றுமோ? வரவேற்கத் தோன்றுமோ? தோன்றியதே எனின் அவ்வளவு மரத்துப் போகத் தன்னலம் செய்து விட்டது! கண்மூடித் தனம் ஒப்புக் கொண்டு விட்டது! அடிமைப்பட் டோம் என்பதும் உணரா அடிமை ஏற்றுக் கொண்டு விட்டது! அவையெல்லாம் இறைவன் பெயராலும் விதியின் பெய ராலும் எதிர்ப்பிலா நிலையில் இயன்றன. அந்நிலை, செல்வச் செருக்கர்க்கும் ஏறிற்று. அவரும் தண்டிகை வைத்துக் கொண்டனர். சிவிகை எனின் என்ன, பல்லக்கு எனின் என்ன, தண்டிகை எனின் என்ன, அணிகை எனின் என்ன, வையம் எனின் என்ன, யானம் எனின் என்ன, மூடு எனின் என்ன, எல்லாம் மாந்தரை மாந்தர் என எண்ணாரின் தடிப்பின் சின்னங்களே ஆம். செலவால் பாடை எனின் என்ன, கப்பல் தேர் எனின் என்ன, அமைப்பு வகையால் வேறுபட்டனவும், மேலிருப்பார் வகையில் வேறு பட்டனவுமேயாம். நான்கு திக்குகளிலும் மேலே கண்ட காட்சிகளைத் தனித் தனிநோக்கி, நடுவே இக்காட்சியையும் வைத்து நோக்கின் என்ன தோன்றும்? நால்வர் அருளரா - அறவரா - மெய்யுணர்வரா? நடுவர் அருளரா - அறவரா - மெய்யுணர்வரா? உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை என்பதை மேற்கொண்டவர் நால்வரா, நடுவரா? யானையேற்றம், குதிரையேற்றம், வண்டிவகை என வந்த பின்னரும் ஏன் சிவிகை ஏறினர், யானை குதிரைகளின் மேலே இருந்து ஊர அச்சம். வண்டியில் செல்லின் மேடு பள்ளக் குலுக்கல் துயர், அலுப்பிலாச் செலவு ஆள்தூக்கியாய்ச் செல்லல் என்று கொண்டவர் அருளராம்! அறவராம்! துறவராம்! மென் கண்பண்பு மனிதர் நோக மனிதர் பார்க்கும், வழக்கமினி உண்டோ அந்த வாழ்க்கை இனிஉண்டோ? என்று பாவலர் பாரதியார் இந்நூற்றாண்டில் முழங்கினாரே! மாந்தனை மாந்தனாக நினை என்பதுதானே பொருள்! நெடிய மொழிலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே! சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கண் பண்பின் செல்வம் செல்வமென் பதுவே என்னும் நற்றிணை (210), ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்தது. தன் செய்வினை என்பதுதான் செய்கின்ற செயல் என்பதைக் குறிப்பது. கடிய ஊர்தல் என்பது ஊர்திகளைக் குறிப்பது. ஊர்திகளைக் கொண்டு ஊர்வது பொருளால் கூடுவது என்பதை இது சொல்கின்றது. ஆனால் தன்னை அடுத்துளோர் துன்புக்குத் தானும் துன்புற்று அவர் துன்பினை அகற்றுதலே பண்புடையவர் போற்றும் செல்வம் என்கிறதே அது! நாம் நடுவே கண்ட பல்லக்குக் காட்சி சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கண் பண்பின் வழிவந்ததா? இனி, வள்ளுவர் உள்ளம் சிவிகையில் இருத்தலை அறத் தாறு எனக் கொள்ளுமா என்பதை ஆய்தல் முறைமை. வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் அருளுள்ளம் வானினும் உயர்ந்தது; ஆழ் கடலினும் ஆழ்ந்தது! பரிய உலகினும் விரிந்தது! இதனை முற்றிலும் உணர்ந்தார் அரியர்! எனினும் முயன்றால் ஓரள வேனும் காணக் கூடுமே! அறிவு: அறிவின் இலக்கணம் கூறுகிறாரே வள்ளுவர். அறிதல், அறிவறிதல், கற்றறிதல், கேட்டறிதல், அவையறிதல், குறிப் பறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், வலியறிதல், செய்ந்நன்றி அறிதல், ஒப்புரவறிதல் என அறிதல் அளவிலோ அறிவின் இலக்கணத்தை - குறிக்கோளைக் - கொண்டார்; அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போல் போற்றாக் கடை என்றாரே! அறிவின் முழுமை ஈதேயல்லவோ! பிற உயிர்களின் துயரைத் தன்னுயிர் என எண்ணுபவன் பெற்ற உயிரிரக்க அறிவு - அருளறிவு - எதுவோ அதுவே அறிவு! பிற அறிவுகள் அறிவு என்று சொல்லுதற்கு உரியவை அல்ல என்னும் அருட்கண்ணர் வள்ளுவரை, சிவிகை சுமத்தலை அறத்தாறு என்பார்? அதிலும் அறன் வலியுறுத்தலில் வலி யுறுத்திக் கூறுவார். அறம் அறவினையை இன்னவழி என்று இல்லாமல் என்ன வழியில் ஆயினும் செய்க என்பதை, ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்று கூறுபவர், சிவிகையேறிச் செல்லுதலையோ அறம் என்று கூறுவார்? அந்தண்மை என்பது அருள். அதனை மேற்கொண்டவர் அந்தணர்; அவர் அறவோர்; அத்தன்மையுடையோர் ஈவிரக்க மில்லாக் கல்லராய் இருப்பின், நல்லராய் இருப்பவரா? அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் எவ்வுயிர்க்கும் என்னும் அடங்கலில் சிவிகை சுமப்பார் அடங்க மாட்டாரா? அன்பு அன்புடைமையிலே அன்போடு இயைந்த வழக்கு (73) அன்புற்று அமர்ந்த வழக்கு (75) அன்பின் வழியது உயிர்நிலை (80) என்றெல்லாம் கூறுகிறாரே? அவ்வன்பர் செயலாமா சிவிகையேறல்? என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் (77) என்கிறபடி அவரை அறம் அல்லவோ சுட்டெரிக்கும்! அருள் அருளுடைமையில் உருகி உருகி உரைக்கிறாரே வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார் மேல் செல்லும் இடத்து என (220). மெலியார் மேல் செல்லுதல் என்பதற்கு மெலியார் மேல் ஏறிச் செல்லுதல் எனவும் குறிப்புப் பொருள் காண வைக்கிறாரே! “இன்னும் இப்படியே சுமக்கச் சொன்னால் எங்கே போடு வோம் எப்படிப் போடுவோம் என்பது எங்களுக்கே தெரியாது” என்று தூக்கிகள் சொன்ன பின்னர்ச் சிவிகை ஏறலைவிட்ட பெரியவர்களும் உண்டே! மெலியார் வலியரான விளைவின், விளைவுதானே அது! அருளாளர் எவர் எனின், மன்னுயிர் ஓம்புவார், என்கிறாரே வள்ளுவர்; மன்னுயிர், வாழுமுயிர் என்றெல்லாம் பொதுமையில் சொல்லப்படினும் மாந்தர் உயிரையல்லவோ சிறப்பாகச் சுட்டுதல் வள்ளுவத்தில் காண்பதாம். அருளாட்சி உடையார்க்கு அல்லல் இல்லை என்றிருக்கவும், அவர் பிறர்க்கு அல்லல் ஊட்டிகளாய் இருப்பின் அருளாளர் தாமா? (245) இன்னா செய்யாமை முதலியன இன்னா செய்யாமையில், தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) (தன்னுயிர்க்குத் துன்பம் தருவது இது என்று அறியும் ஒருவன், மற்றை உயிர்களுக்கு அத்துன்பத்தைச் செய்வது என்ன அறி வாகும்?) நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் (330) (துன்பம் எல்லாம் துன்பம் செய்தாரையே தொடர்ந்து வருவன வாம்; ஆதலால் தமக்குத் துன்பம் இல்லாமையை விரும்புபவர் பிறர்க்குத் துன்பம் செய்யார்) - என்றெல்லாம் இன்னா செய்யாமை சுட்டும் வள்ளுவரோ, இவ்வல்லல் சுமையை அறப்பயன் என்பார்? இன்னும், அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) என்றும், கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (572) என்றும், மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர் என்றும், மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் (1973) என்றும், பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு (963) என்றும் சொல்லப்படும் குறள்களை நோக்குவார், வள்ளுவர் உள்ளம் அறம் செய்யார் சிவிகை சுமப்பார் என்றும், அறம் செய்தார் சிவிகையில் இருப்பார் என்றும் கூறு எனம் எள் ளளவும் கொள்ளார். சிவப்பிரகாசர் பரிமேலழகர் முதலானோர் கொண்ட உரையில் பொருந் தாமை உண்டு என்பதை முந்தையோரும் கண்டனர். அவருள் குறிப்பிடத்தக்க ஒருவர், துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார். அவர்க்கு ஒரு வரலாற்றுச் செய்தி ஐயத்தைக் கிளப்பியது. அப்பரடிகள் திருப்பூந் துருத்தியில் இருந்து திருத்தொண்டு செய்து வருவதை அறிந்த திருஞான சம்பந்தர் அவரைக் காணும் பெருவிருப்பால் ஆங்கு வந்தார். அவர் வருமுன்னரே அவரைக் கண்களிப்பக் காணும் வேட்கையால் வழி நோக்கி நடந்தார். கூட்டத்திடையே முத்துச் சிவிகையில் வரும் ஞான சம்பந்தரைச் சிவிகை தாங்குவாரோடு தாமும் தாங்கிக் கொண்டு சென்றார். திருமடம் சார்ந்த காலை அப்பர் எங்குற்றார்? என்று வினவினார் சம்பந்தர், உம் அடிகள் தாங்கிவரும் பெரு வாழ்வு வந்தெய்தப் பெற்று இங்குற்றேன் என்றார் அப்பரடிகள்! இதனைத், திருஞான முனிவரர சிருந்த திருப் பூந்துருத்திக்கு அருகாக எழுந்தருளி எங்குற்றார் அப்ப ரென உருகாநின் றும்மடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்றிங்குற் றேனென்றார் என்கிறார் சேக்கிழார். (பெரிய. திரு. 396) அப்பர் மொழி கேட்ட சம்பந்தர் அப்படியே இருந்தாரோ? குதித்து அப்பரை வணங்கினார் இதனைச் சேக்கிழார், பிள்ளையார் அதுகேளாப் பெருவிரை வுடன்இழிந்தே உள்ளமிகு பதைப்பெய்தி உடையஅரசினை வணங்க வள்ளலார் வாகீசர்அவர் வணங்காமுன் வணங்கத் துள்ளுமான் மறிக்கரத்தார் தொண்டரெலாம் தொழுதார்த்தார் என்றார் (397) இங்கே சிவிகையில் இருந்தவர் ஞானசம்பந்தர்; சிவிகை சுமந்தவர் நாவுக்கரசர். இவரில் எவர் தாழ்ந்தார்? எவர் உயர்ந்தார்? அப்பர் என்றபெயரையும் நாவுக்கரசருக்கு வழங்கியவரே ஞான சம்பந்தர் தாம்! அப்பரும் மைந்தருமாம் கேண்மை முறையில் உயர்வென்ன தாழ்வென்ன? அறம் செய்தல் என்ன? செய்யாமை என்ன? அதனால் சிவப்பிரகாச அடிகளார் தாம் இயற்றிய நால்வர் நான்மணி மாலையில் அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடையே - மறுத்தார் சம் பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர் மற் றுந்துஞ் சிவிகையினை ஊர்ந்து என்றார். (33) சம்பந்தர் சிவிகையைத் தாங்கப் பெற்றவர், செலுத்தும் சிவிகையில் ஏறி இருந்து செலுத்தத் தக்கவரே அல்லரோ என்பதன் வழியாக மறுத்தவர் ஆகின்றார். இது வள்ளுவ மறுப்பா? இல்லை வள்ளுவத்திற்கு மாறாகப் பொருள் கண்டார் தம் உரை மறுப்பே எனல் வேண்டும். ஏனெனில், பிறப்பு ஒக்கும் என்று கண்டது வள்ளுவம். சிறப்பு அவர்தம் இயல் செயல்களைப் பொறுத்தது என்று கூறுவதன்றோ அது. ஆள் இழுவை இனி, அண்மைக் காலம் வரை ஆள் இழுவை வண்டிகள் இருந்தனவே. மாந்தன் ஒருவன் இழுக்க ஒருவரோ இருவரோ ஏறி இருக்கச் சென்னைப் பெருநகரம் கண்ட தாயிற்றே எனின், அதுவும் மாந்தரைத் தாழ்மைப் படுத்துவது என்பதால் தானே சட்டத்தால் ஒழிக்கப்பட்டது! அவ்வொழிப்புச் சட்டமே, அது மாந்தர்க்குப் பெருமை தாராச் செயல் என்பதை வெளிப் படுத்தும் அல்லவோ! குழந்தை கழித்த நீரையும் மலத்தையும் தாய் எடுப்பது கண்கூடு! ஊர் மலத்தையெல்லாம் அப்படி அள்ளிச் செல்ல ஒரு கூட்டம் வேண்டும் என்று அருள் நெஞ்சம் எண்ணுமா? அப் பணிக்கு ஆட்படுத்தல் அவர்களை மாந்தப் பிறப்பாகக் கருதுவ தாகுமா? ஆள் இழுவையை அகற்றியது போல் அகற்ற வேண்டிய ஒன்று கழிவள்ளும் தொழிலாகும். அவரவர் செய்யும் நிலை ஏற்பட்டால் தான் அவ் வுணர்வு விளங்கும் என்றால் அவர் உணர்வாளர் ஆவரா? திரு. வி. க ஆள் இழுவை வண்டியிலே திரு. வி. க. ஏறிச் சென்ற துண்டு; அவர் தத்தம் வண்டிக்கு ஏற வருவாரா எனக் காத்திருந்த இழுவையரும் உண்டு! அவர்கள் பிழைப்புக்கு உதவி என உரிய தொகைக்கு மேலே தொகையைக் கொடுத்தார் திரு. வி. க. அதனை உதவியாகக் கருதிக் கொண்டே கூட அவ்வண்டியில் ஏறினார். அவர்தம் உள்ளார்ந்த உணர்வில் அது பரிவாகவும் உதவியாகவும் இருந்திருந்தால் கூட, ஒருவன் ஓட, அவன் சுமக்கும் பாரமாய் ஒருவர் இருக்க, அமையும் நிலை இரக்க மாகாமல் ஒழியவே செய்கின்றது! அவர்தம் தொழிலாளர் தொண்டு எத்தகு மேம்பாடுடையது! உதவியின் வழியே உண்டாகிய பிழை இது என்றே கொள்ளல் முறை! நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு என்ற வகையில் கொள்ளத் தக்கதாயிற்று. சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடையை ஆய்கிறார் திரு. வி. க ஆசிரியர் காலத்தில் பலதிற வண்டிகள் இருந்தன. அந் நாளில் செல்வர் பெரிதும் சிவிகையில் ஊர்ந்து செல்வது வழக்கம். ஆசிரியர் தம் காலத்தில் கண்டதை எடுத்துக் காட்டாகக் கொண்டனர். எடுத்துக் காட்டின் நிலையை ஆராய வேண்டுவது அநாவசியம். எதன் பொருட்டு அவ்வெடுத்துக் காட்டு ஆளப் பட்டதோ அதன் வழி நின்றே பொருளுண்மை காணச் சிந்தித்தல் வேண்டும். மோட்டார் வண்டிகள் மலிந்துள்ள இந்நாளில் சிவிகை ஊர்தலும் மனிதரை மனிதர் சுமத்தலும் நகைக்கற் பாலன வாகவும் அநாகரிகமாகவும் தோன்றலாம். திருவள்ளுவர் காலத்தில் மோட்டார் இல்லை. மோட்டார் இருந்தால் அவர்தம் கருத்து அதன்மீது சென்றிருக்கும். இப்பொழுது சிவிகை மோட்டா ராகவும், சிவிகையில் செல்வோரை மோட்டாரில் செல்வோ ராகவும், சிவிகையைத் தாங்கிச் செல்வோரை மோட்டார் ஓட்டுவோராகவும் கொள்ளலாம். எடுத்துக் காட்டுகளைக் காலநிலைக்கேற்ற முறையிற் கொண்டு பொருள்மீது கருத்துச் செலுத்துவது சிறப்பு என்கிறார். மிதிவண்டியா, உந்துவண்டியா, தொடர்வண்டியா, வானூர்தியா, கப்பலா இயக்குபவரும் இருப்பவரும் ஒப்ப இருந்து செல்லுகின்றனர். ஒப்ப மதிக்கவும் படுகின்றனர். ஏன்; இயக்குவார் ஒரு படி உயர்வாகக் கூடப் போற்றப் படுகின்றனர். ஆனால், சிவிகை சுமப்பார்க்கும் இருப்பார்க்கும் இத்தகைய சமநிலை உண்டா? ஓடி ஓடி இளைப்பான் எங்கே? அவன் கழுத்தில் ஏறி இருப்பான் எங்கே? ஒப்புரவு ஏற்பட வழியுண்டா? கால - இட - சூழல் நிலை கடந்தும் அறவோருள் அறவோர் வள்ளுவர் என்பதைக் குறள் நூலே காட்டும்! திரு. வி. க. எடுத்துக் காட்டின் நிலையினை ஆராய வேண்டுவது அநாவசியம் என்றாரேனும் அவர்தம் சால்பால் எவ்வளவு அருமையாக ஆய்ந்து வடிக்கிறார். பல்லக்கைத் தாங்கிச் செல்வோரும் மனிதரே. அதில் ஏறிச் செல்வோரும் மனிதரே. அதில் ஏறிச் சொல்வோரும் மனிதரே. இருவரும் ஒருவழியில் பிறந்தவரேயாவர். இருவரும் தொழின் முறையில் ஈடுபட்டவரே யாவர். அறநெறி தொழிலிடைப் பொதுவாய் இலங்குவது. அறநெறி பல்லக்கைத் தாங்கலில் சுருங்கியும் அதில் செல்கையில் பெருகியும் நிற்பதோ இல்லை. பல்லக்கைச் சுமந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். பல்லக்கில் ஊர்ந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். அற வோராகும் வாய்ப்பு இருவர்க்கும் உண்டு. ஒருவர்க்கு மட்டும் அவ்வாய்ப்பில்லை. அறத்தாறு ஒரு சாரார் பக்கம் சாயும் தன்மையுடையதன்று. ஆகவே அறத்தா றிதுவென வேண்டா என்றார். என்னை? அது சிவிகை பொறுத்தானோடு ஊர்ந் தானிடை வெளிப்படையாக விளங்கலான் என்க. அறநெறி எத்தன்மைய தென்று ஆராய வேண்டுவதில்லை. அந்நெறி வழாத நடை வேண்டும் என்பது கருத்து என்கிறார். திருக்குறள் விரிவுரை . பாயிரம் 392-9 புதிய பார்வை ஒப்பவும் இயலாமல் மறுக்கவும் விரும்பாமல் செல்லும் இந்நிலை பரிமேலழகர் முதலோர் உரைகளின் விளைவாம். இவ்வுரைகளைக் கடந்த பார்வை - காலப் பார்வை - வாழ்வுப் பார்வை பார்த்தோர் அப்பழைய உரை வழியே சென்றார் அல்லர். புதுப் பார்வை பார்த்தனர், புலவர் குழந்தை, பேராசிரியர் சி. இலக்குவனார், பாவேந்தர் இன்னவர் அன்ன வகையர். இவர்கள் பார்வை பகுத்தறிவுப் பார்வை எனவும், சீர்திருத்தப் பார்வை எனவும் நம்பாமதத்தர் பார்வை எனவும் போற்றவும் தூற்றவுமாக இருபாற்பட்டு நின்றன. வ. சுப. மா. பரிமேலழகர் முதலியோர் பார்வை வள்ளுவத்தொடு கூடிய பார்வை அன்று என்றும், புலவர் குழந்தை முதலானோர் பார்வை புதுப் பார்வையென ஒதுக்கத் தக்கது அன்று; அதுவே வள்ளுவ வழிப் பார்வை என்றும் நிலைப் படுத்தியவர் மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் ஆவர். அது வருமாறு: அறத்தாறு...... இடை என்பது கருத்து மயக்கத்துக்கும், கருத்துப் பூசலுக்கும் உரிய குறளாகும். பல்லக்கில் ஏறியிருப்பவன் அறஞ் செய்தவன் எனவும், அதனைச் சுமப்பவன் அறஞ் செய்யாத பாவி எனவும் பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, காளிங்கர், பாவாணர் முதலியோர் பொருள் காண்பர். பல்லக்கில் ஏறுதல், அதனைச் சுமத்தல் என்ற நிகழ்ச்சியை வைத்து அறத்தின் பயனை மதிப்பிட வேண்டா எனத் திரு. வி. க. வும், குழந்தையும் பாரதிதாசனும் பொருள் செய்வர். இச் சிக்கலை நான் இக்கட்டுரையில் புதிதாகக் கூறிய குறளுத்தி மூலம் தீர்க்கலாம். உலகத்தார் நடைமுறையில் கொண்டிருக்கும் கருத்தினை மறுப்பது ஒரு குறளுத்தி. அப்போது வேண்டா என்ற நடையை ஆளுவர் வள்ளுவர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின் (497) புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் (785) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (942) இக்குறள் எல்லாம் ஓருத்தியின் வடிவமைப்புடையவை. உலகம் மழித்தலும் நீட்டலும் ஆய புறவேடத்தைத் துறவாகப் பார்த்தும், அகத்தில் அஞ்சாமையை துணையாகக் கொள்ளாது ஆளைத் துணையாகக் கொள்வதைப் பார்த்தும், ஒத்த உணர்ச்சியை நட்பாகக் கொள்ளாது பல முறை பழகுவதை நட்பென்று மயங்குவதைப்பார்த்தும், நடைமுறைப் பழக்க வழக்கமே உடல் நலத்திற்கு நல்வழியாகும் என்பது அறியாது புற மருந்தை நம்பியிருப்பதைப் பார்த்தும் இவையெல்லாம் வேண்டாம் என்று மாசுபடிந்த கருத்தினை மறுப்பர் திரு வள்ளுவர். இந்நடையில் அமைந்ததுவே அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறளும். ஆதலின் இப்புறக் காட்சியை அறமென மயங்க வேண்டா என்று உலகத்தை இடித்துரைப்பதுதான் வள்ளுவரின் உத்தியாகும். மனத்துக்கண் மாசில்லாமையே அறம் (34) எனவும், மேலிருந்தும் மேலல்லார் கீழிருந்தும் கீழல்லார் (973) எனவும் உடன் பாட்டாலும் எதிர்மறையாலும் மொழிந்த வள்ளுவப் பெருமகன், பல்லக்குக் காட்சியைப் பொருளாக மதித்துச் சொல்வாரா என்று நினைமின். அது அக்காலச் செல்வர் ஊர்ந்த ஒரு நாகரிகப் போக்குவரத்து அவ்வளவே - திருக்குறட் சுடர் 75 - 76 சுவடிச் செய்தி விளங்கப்பெறற் செய்திகள் வருமாறு. இச்சிறு சுவடியில் அறத்தாறு என்னும் குறளுக்குப் பரிமேலழகர் - முதலிய உரையாசிரியர்கள். அறம் செய்தவர் அவ்வறத்தால் சிவிகை செலுத்துவா ராகவும், அறம் செய்யாதார் சிவிகை சுமப்பாராகவும் உள்ளனர். என உரை கண்டனர். ஒவ்வொருவர் முயற்சி சிக்கனம் என்ப வற்றுக்கு ஏற்பப்பொருள் சேரும்; செய்வினை யொடு பொருளைப் பொருத்துதல் ஆகாது. வள்ளுவர் கண்ட தவம் தம் துயர் தாங்கலும் பிறவுயிர்க்குத்துயர் செய்யாமையுமே. ஈது அறமன்று என்று கூற வந்ததை அறம் என்றது தவறாம். அறத்தாறு இது என்று முடிவு கொண்டு அதன் பின்னரே வேண்டா என்பதை ஆய்தல் வேண்டும்; வள்ளுவ அறம் மனத்துக்கண் மாசின் மையே; மக்கள் நோயர் உடற் குறையர் சுமை விரும்பி ஏற்கும் இன்சுமை; விநோபா பாபேயின் வண்டி தள்ளல், காந்தியடி களின் வண்டியிழுத்தல், புத்தர் பெருமானின் ஆட்டுச் சுமை, ஆபிரகாம் அண்ணலின் பன்றி தூக்கல் என்பவற்றோடு, மெலியார்மேல் வலியார் இருந்து செல்லும் சிவிகைச் சுமையை ஒப்பிட்டுக் காணின் அதன் அறக்கேடு புலப்படும்; சிவிகையில் இருத்தலை வள்ளுவர் உள்ளம் அறத்தாறு எனக் கொள்ளாது, சிவப்பிரகாச அடிகள் சிவிகை சுமப்பார் பாவம் செய்தவர்; என்பதை மறுத்தார்; ஆள் இழுவை வண்டியைச் சட்டத்தால் ஒழித்தது மாந்தரை இழிமைப்படுத்துவது என்பதாலேயே; அறத்தாறு, சுமப்பார் இருப்பார் என்னும் இரு சாரார்க்கும் பொதுவானது என்பது திரு. வி. க. கண்ட உரை; சிவிகையைச் சுமத்தலும் இருத்தலும் அறமாகாது எனப் புலவர் குழந்தை முதலானோர் உரை கண்டனர்; அப்புத்துரை வள்ளுவர் நடையதே என்று வ. சுப. மா. மெய்ப்பித்தார் என்பவையாம். ஆகலின் இக்குறளின் மெய்ப் பொருள், பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும் அதன்மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையேயுள்ள வேறுபாடு அறத் தின் பயன் என எண்ண வேண்டா; அது, பொருளால் ஏற்பட்ட தாகும் என்பதாம். 24. மூவர் இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தின் முதற்குறள், இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்பது. அறவாழ்வு இறை வணக்கம், வான்சிறப்பு, நீத்தார் பெருமை என மூன்று அதிகாரங்களை முதற்கண் கூறிய திருக்குறள், நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தல் என்பதைக் கூறியது. அவ்வதிகாரத்தின் இறுதி இரு குறள்கள், அறத்தான் வருவதே இன்பம் என்றும், செயற்பால தோரும் அறனே என்றும் கூறின. அதன் மேல் விளக்கமே இல்வாழ்க்கை என்று உணருமாறு, அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று இல்வாழ்க்கையின் ஒன்பதாம் பாடல் கூறிற்று. இவற்றால் அறத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நிலைக்களமும் இல் வாழ்க்கையே என்பது தெளிவாகும். அத்தகைய அறவாழ்வைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இல்வாழ்வான் என்பான் என்னும் முதற் பாடல், பலப்பல சிக்கல்களுக்கு இடமாக இருந்து வருதல் குறளறிந்தோர் அனைவரும் அறிந்ததேயாம். சிக்கல் இக்குறள் சுட்டும் மூவர் எவர்? இதுவே சிக்கல்! திருவள்ளுவர் காலத்தில் இம்மூவர் எவரெவர் என்பது தெளிவு பெற எவராலும் அறியப்பட்டதாக இருந்திருக்கும்! இல்லாக்கால், வளிமுதலா எண்ணிய மூன்று எனச் சுட்டிக் காட்டியோ, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் என விரித்துக் கூறியோ வைத்தது போல வைத்திருப்பார். அவ்வாறு சொல்லாமல் மூவர் என்று கூறியது, முப்பழம் என்பது போலவும், முத்தமிழ் என்பது போலவும், மூவேந்தர், என்பது போலவும் அம் மூவர் இவர் எனக் கற்பார்க்குத் தெளிவாக இருந்தமையால் விரித்துக் கூறினார் அல்லர். அடுத்த இரண்டு பாடல்களிலும் இவர் இவர் என விரித்துச் சொல்வதை அறிவார் இதனைத் தெரிவார். மூவர் - உரைகள் இனி இம் மூவர் என்பார் பிரமச்சரியத்தர், சந்நியாசர், வானப்பிரத்தர் என்னும் மூவகையர் எனப் பரிமேலழகர் முதலாய பல உரையாசிரியர்கள் கூறினர். அவர்கள் கூறிய மூவரும், தமிழ் நெறி வகையர் அல்லர் தமிழ் நெறிப்பட்டோர் இல்லறத்தரும், இல்லறம் சிறந்து நின்ற பின்னை நாளில் துறவரும் ஆகிய இரு நிலைப்பட்டாரே ஆவர். ஆதலால் இல்லற இயல், துறவியல் என ஈரியல்களே உரியன. திருக்குறள் அறத்துப் பால் இல்லறவியல், துறவறவியல் என வகுக்கப்பட்டுள்ளமையே இதற்குச் சான்றாம். பரிமேலழகர் முதலியோர் கூறுவது போல நால்வகைப் பாட்டினர் தமிழ் நூல்களின் வழியர் அல்லர்; அவர் வடமொழி வழியர்; ஆத லால், அவர்கள் இங்குக் கூறப் பட்டார் எனல் பொருந்தாதாம். தடை - விடை இனி அடுத்த பாடலில், துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை என்பதில் துறந்தார் என எண்ணப்படுதலால் பிரமச்சரியர், சந்நியாசர், வானப்பிரத்தர் என்பாரை இங்கே சுட்டினார் எனல் அறவே பொருந்தாமல் ஒழிகின்றது. மேலும், முதற் பாடலில் உள்ள மூவர் என்பது, அடுத்து வரும் பாடலில் உள்ள துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்னும் மூவரையேயாம் என்றாரும் உளர். முதற் பாடலில் மூவர் எனத் தொகை குறித்து, வரும் பாடலில் அவர் இவர் என வகை குறிக்கும் முறை திருக்குறள் அறியாதது. அப்படி ஒரு சான்று காட்டற்கு இல்லை. அப்படிக் கூறல் வள்ளுவர் கருத்தாக இருந்திருப்பின், துறந்தாரும் துவ்வா தவரும் இறந்தாரும் கூறிய அம்மூவ ராம் என்பது போலக் கூறியிருப்பார். எழுத்தெனப் படுப அகர முதல னகர இவாய் முப்பஃ தென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே என்று கூறிய தொல்காப்பியம், அவைதாம், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற, முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன என்று, தொகையும் வகையும் கூறுவது போலக் கூறியிருப்பார். ஒரு பாடற் பொருளை அதன் அளவிலேயே முடித்துக் கூறுதலே திருக்குறள் முறையாதல் 1330 குறள் வழியாலும் அறிந்து கொள்ளலாம். அடுத்த பாடற்குக் கொண்டு கூட்டும் யாப்பியல் (குளகம்) குறளுக்கு இல்லை என்பதால் இரண்டாம் பாடலில் வரும் துறந்தார் முதலிய மூவர் அவர் என்னல் பொருந்தாதாம். வேறு பல பொருள்கள் இனி, மூவரவாவார் மூவேந்தர் என்றும், அரசர் அமைச்சர் ஒற்றர் என்றும், அன்பர் நண்பர் அறிவர் என்றும், பெற்றோர், மனைவி, மக்கள் என்றும், தாய் தந்தை தாரம் என்றும் இன்ன பலவாறாக உரைகள் கிளர்ந்துள்ளன; இன்னுங் கிளர்ந்தும் வருகின்றன. அன்பும் நண்பும் உறவும் கொடையும் ஒற்றை வழிப் பாதைகள் அல்ல. அவை இரட்டை வழிப்பாதைகள் இருபாலும் கொண்டு கொடுத்தும் இணைதலிலேதான் நீடிக்கும்; வளரும்; நிலைபெறும்; இல்லாக்கால் படிப்படியே குன்றும்; குறையும்; இல்லா தொழியும். அவ்வகையில் இல்வாழ்க்கைச்சிறப்புக்கும் சீர்மைக்கும் எவர் அடிப்படையரோ அவரை அரவணைத்துக் கொண்டு அவர்தம் ஒப்புதலும் உறுதுணையும் அமைய இல்வாழ்க்கை நடத்துதலே இனிமையும் நயனும் கூடியதாக - பலருக்கும் எடுத்துக்காட்டாம் இயல்பினதாக - இருக்க முடியும். சில சுடர்கள் 1. இல்லறவியிலின் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டது இது. 2. முதற்பாடலாகக் கூறப்பட்டதும் இது. 3. இதில் வெறுமனே மூவர் என்னாமல் இயல்புடைய மூவர் எனப்பட்டது எண்ணற்கு உரியது. 4. நின்ற துணை எனப்பட்டதும் கருத வேண்டும். 5. நல்லாற்றில் நின்ற துணை என விளக்கம் தந்து கூறப் பட்டதும் நோக்க வேண்டும். இவற்றை எண்ணுதல் இக்குறளில் குறிக்கப்பட்டுள்ள மூவர் இவர் என்பதைத் தெளிவாகக் காண உதவும். இயல்பு இல்வாழ்க்கையில் எடுத்த எடுப்பில் கூறப்பட்ட இவர்கள் அவ் வில்வாழ்க்கை சீருற நடாத்துதற்கு இன்றியமையாதவர் என்பது வெளிப்படை. அவரைப் போற்றல் தலையாய கடமை என்பது தெளிவு. அம்மூவரும் அயலிருப்பார் அல்லர்; இயல் புடையர் என்பது உறுதி. இவ்வாறே, இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் (47) என இதே அதிகாரத்தில் கூறு தலும் எண்ண வேண்டுவது. நிலை பேறு நின்ற துணை என்பது நிலைபெற்ற துணை. கால வரையறையற்ற அல்லது காலமெல்லாம் நிலைத்த துணையாக எவருக்கு இருத்தல் வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்த அளவில் மூவர் மூவராகக் கண்டாருள் பலர், உரைக்கு ஒத்து வாராமல் ஓடிவிடுவர் என்பது உறுதியாம். மூவர் ஆய்வு குடும்பத்தின் நிலை சிறக்க - இல்லறம் இனிது விளங்க - ஒரு கணவன், எவர்க்குத் துணையாக நிலைத்திருக்க வேண்டும் எனின், இறுதிக்கண் சுட்டப் பெற்ற பெற்றோர் மனைவி மக்கள் தாய் தந்தை தாரம் என்னும் இருவகை மூவருள் ஒரு வகை யர்க்கே தகும் என்னும் ஒரு கருத்துக்கு முதற்கண் வரலாம். இவருள்ளும் ஒருவகையரை முடிவு செய்து காண்பதே அடுத்துத் தேரும் முறையாகும். மூன்று மூவர் என்றோ, மூன்று எண்ணித் தனித்தனி ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையிட்டுக் கூறத்தக்கவராகவோ தக்கதாகதோ தான் இருத்தல் வேண்டும். மூன்று என்னும் எண்ணிக்கையில் பெற்றோர் என்னும் பன்மைப் பெயரோ, மக்கள் என்னும் பன்மைப் பெயரோ அடங்கி வாரா. இருவர் பெற்றோரை ஒருவர் எனவும், மக்கள் பலரை ஒருவர் எனவும் கூறின் எண் வழுவும் எண்ண வழுவும் ஆகிவிடும். ஆதலால், பெற்றோர் மனைவி கணவன் இயல்பும் மனைவி இயல்பும் ஈரதிகாரங்களில் கூறிப் பின்னே மக்கட்பேறு வைக்கப்பட்டிருத்தலாலும் அம்மக்களுக்குப் பெற்றோர் செய்ய வேண்டிய கடமை ஈதெனவும் அம்மக்கள் பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடமை ஈதெனவும் ஆங்குக் கூறியிருத்த லாலும் மக்கள் இங்குக் கூறவேண்டிய தில்லையாம். மனைவி பெற்றோர், மக்கள் என்பன போல மனைவி என்பதும் பன்மை சுட்டாதோ எனின் வள்ளுவம் சுட்டாது ஒருவ னுக்கு ஒருத்தி என்பதே முப்பாலின் முடிந்த முடிபு. அப்பாலாம் செய்தியை முப்பாலில் சார்த்துதல் முறைபெறக் கற்றவர் வழியதன்றாம். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்றும், பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு என்றும், வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி என்றும் வருவன பன்மனை வாழ்வை எண்ணத்தினும் கொள்ளா மேன்மையுடையனவாம். இவற்றால் பெற்றோர் மனைவி மக்கள் என்பார் மூவர் ஆகார் என விலக்குதல் முறைமையாம். எஞ்சியிருப்பதாம் ஒன்று தாய் தந்தை தாரம் என்னும் மூவர் பற்றியதாம். அவர்தாம் வள்ளுவர் கூறும் இயல்புடைய மூவரா என்பதை எண்ணி முடிவு செய்தல் வேண்டும். ஆய்வு முறை: ஒன்றற்கு உரிய விடையாகப் பலவற்றைக் கூறுங்கால் ஒவ்வொன்றாகக் காரணம் சொல்லி விலக்கி, இறுதியது தக்கது என முடிபு செய்யுங்காலும், அதனைப் பலதிறங்களால் ஆய்ந்தே கொள்ளல் வேண்டும். மற்றவை பொருந்தாமையால், இறுதியதே பொருந்தும் எனல் தேர்ந்த முடிபாகாமல் குறையுடையதாகவே அமைந்து விடும். அதனால் ஒன்றை உறுதிப்படுத்த, ஆட்சி காட்சி ஆவணம் என்னும் மூன்றன் துணையும் வேண்டும் என்று நம்மவர் பண்டே உறுதிப்படுத்தியிருந்தனர். அவ்வகையில் இறுதியாய் நின்ற மூவரை ஆய்தல் வேண்டும். இருவர் குடும்பத்தின் மூலவர் தந்தை தாய் ஆகிய இருவர் என்பது எவரும் அறிந்தது. மகக்கருவைத் தந்த தந்தையரும், அக் கருத்தாங்கி ஆகியிருந்து உருத்தந்து திருத்தந்து வளர்த்த தாயரும் குடும்ப முதல் என்பதில் எவர்க்கே ஐயம்? வாழையடி வாழையெனக் குடும்பம் தொடர்ந்து வரு வதற்கு மூல முதலாக இருந்த அத்தந்தை தாயரே காப்பன காத்து, கடிவன கடிந்து, வளர்க்கும் வகையால் வளர்த்து அறிவு நலமும் பண்பு நலமும் பெருக்கி மக்களை, உலகுக்குத் தந் துள்ளனர். அப்பெற்றோர்க்கு ஒப்பாக உலகில் எவரே சொல்லத் தக்கார்? பேணிப் போற்றத் தக்கார்? பெற்றோர் கருவுற்றிருந்த காலத்தும், மகப்பேற்றுப் போதிலும், குழந்தைகட்கு நோய் நொடி பற்றிய நாளிலும் தாய் பட்ட பாடு தாளில் எழுதி அமையும் ஒன்றா? சொல்லில் சொல்லிக் காட்டும் ஒன்றா? சில ஆண்டுகள் பிள்ளை பிறக்காமையால், எத்தனை கணவன் மனைவியர் நொந்து போயுள்ளனர்; மலையே, கடலே, ஆறே, கோயிலே, குளமே என்று சுற்றி வந்துள்ளனர். உண்ணா நோன்பும் உரையா நோன்பும் மேற்கொண்டுளர்! மதியில்லாத வானம், மலரில்லாத பொய்கை, ஓவிய மில்லாக் கூடம், கோயிலில்லா ஊர், குழந்தை இல்லாத வீடு என எப்படி எப்படியெல்லாம் ஒப்புமை காட்டி இரங்கியுள்ளனர். பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற்று என்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களைஇங் கில்லா தவர் என்று எத்தகைய வாறெல்லாம் ஏங்கியுள்ளனர். புதல்வற் பெற்றனை இவணர்க்கு எனப் பதிற்றுப் பத்தின் வேந்தன் ஒருவன் இவ்வுலகோர் நலத்துக்காக மகனைப் பெற்ற பேற்றைப் பேசுகின்றானே! காட்டுவேடன் ஒருவன் அவன் வழிபடும் கடவுளை நோக்கி வேண்டும் வேண்டுதலை, குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் எனப் பேசுகின்றதே சங்கப்பாட்டுள் ஒன்றாய குறுந்தொகை. முருகா! எனக்கொரு மகளைத்தா என்றல்லவோ வேண்டி நிற்கிறான்! மக்களில் மகள் என்ன, மகன் என்ன? அந்த வேற்றுமையறியா மக்கட்பேற் றையே புதல்வற்பேறு ஆக்கிய உரைக்காலமும் எய்திய தன்றோ! தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. என்பதில் தம் மக்கள் தாமே உளர்! தம் குடும்பத்து நன்மையினும் உலகுக்குமிக நன்மை தம் மக்களால் உண்டாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்தம் பெரும்பேறு எவ்வளவு உயர்ந்தது! அப்பெற்றோர் குழந்தை நிலையில், வளர்நிலையில், கல்விநிலையில் மக்களுக்குச் செய்துள்ள பயன்கருதா உதவிப் பயன் கொண்ட மக்கட் பிறப்பிகளின் கடன் என்ன? அவர்கள் தம்மைப் போற்றிய அளவினும் மிகுதியாகப் போற்றும் போற்றுதலே அன்றோ கடப்பாடு. செய்ந்நன்றி தம் வறுமையிலே, நோயிலே அல்லலிலே பேணாது அவர்கள் தம்மக்களைக் கைவிட்டிருந்தால், தாம் பட்டுணியும் பசியுமாய்க் கிடந்து கொண்டும் உண் உண் என ஊட்டி யிராக்கால், தாம் நோய் நொடியில் கிடந்து கொண்டும் மருந்து மாத்திரையென வாங்கி வாங்கித் தாங்கியிராதிருந்தால், உள்ளவை உரியவை இவையெனப் பாராமல் விற்றும் அட விட்டும் ஒப்படை செய்தும் வேண்டும் செலவு வகைகளுக் கெல்லாம் தட்டாது வழங்காதிருந்தால். பின்னே அவர் பெற் றுள்ள பட்டம் எங்கே? பதவி எங்கே? பாராட்டு எங்கே? பரிசு எங்கே? அவற்றை நினையா மக்கள் வாழ்வும் வாழ்வாகுமா? அதனால், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு எனக் குறள் கூறிற்று. நன்றி என்பது பொது நலப்பாடு. நல்லவையெல்லாவற்றை யும் தழுவிய பொது நிலையது அது. ஒருவன் அறிவனாக, அறவனாக, கண்டு பிடிப்பனாக, தொண்டனாக, மெய்யனாக, மேலனாக வாழ்வதைக் கண்டு பாராட்டி வாழ்த்துதல் நன்றி யாகும். நாட்டில் நல்லது நடைபெற வேண்டும் என்பதற்குத் தன் நெஞ்சந்திறந்து வழங்கும் சான்றே அப்பாராட்டாகும். விரிவலா அறிவினால், நயனிலா உணர்வால் அப்பாராட்டைச் செய்ய உன்னால் இயலாது என்றாலும் தொலைந்துபோ! ஆனால், உனக்குத் தனிநிலையில் உயிர் கொண்டு வாழ, உயர்வு கொண்டு விளங்க ஊணே, உடையே, உறைவிடமே கல்வியே, செல்வமே. துணிவே, துணையே, உதவியே, ஊக்குதலே எனச் செய்ந் நன்றியை, அந்நன்றியால் வளர்ந்தபிறப்பியான நீ மறந்தால் நின்னினும் கொலைஞன் ஒருவன் இலன், உனக்குக் கடைத் தேற்றம் என்பது இல்லவே இல்லை என்பதே எந்நன்றி கொன் றார்க்கும் என்ற பாட்டாம். வறுமை வாட்டல் இவ்வகையில் பெற்றோர் செய்த நன்றிகள் ஒன்றா இரண்டா? காலமெல்லாம் எண்ணினாலும் கணக்கில் அகப் படுமா? இறந்தாரை எண்ணிக் கொண்டற்று என்பாரே வள்ளுவர்? அப்படி எண்ணிக் கணக்கிட இயலாதன்றோ பெற்றோர் செய்த நன்றிப்பாடுகள். குழந்தை தாய்முகம் நோக்க, தாய் என்முகம்நோக்க, யான் நின்முகம் நோக்கி வந்தேன் என்று காடுவாழ் குமணனைக் கண்டு கவல்கின்றானேபுலவன்! அந்த வறுமை தான் பட்ட வறுமையா? கவிழ்த்த பானையைத் திறந்து கையை விட்டுக் கஞ்சி இல்லையே என்று கதறும் குழந்தை! சவைத்துச் சவைத்துப் பால் வராமல் குருதி சொட்ட வருந்தும் கைகுழந்தை! அழுங்குழந்தைக்கு மறப்புலி காட்டியும், மதியங் காட்டியும் மறக்கடிக்க முயலும் தாய்! முற்றத்திற்கும் நடையிட்டுச் செல்ல முடியாமல் முடங்கிக் கண்ணொளி மழுங்கிக் கிடக்கும் பெற்றவள்! இவர்களின் கொடுமையைத் தீர்க்கக் கொண்ட செலவு அல்லவோ அது. பெற்றோரைப் பேணல் இவற்றையெல்லாம் அறிந்த அறவாணர் யாது செய்தனர்? பெற்றோரைப் பேணுதல் மக்களின் தீராக் கடமை எனப் பண்டு தொட்டே வலியுறுத்தி வந்துளர். அவ்வாறு போற்றாரும் இருந்திருத்தல் கூடும். அவர்க்கு அறிவுறுத்தும் வகையாலும் எவருக்கும் வேண்டும் கடமை என்பதாலும் காலந்தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சேரலாதன், முதியர்ப்பேணிய உதியஞ்சேரல் எனப் பாராட்டப் படுதல் எத்தகைய பசுமையான செய்தி. முதியர் எவர்? பெற்றோர்; பெற்றோரைப் பெற்றோர்; குரவர் என்பாரும் அவர். செய்தி கொன்றார்க்கு, உய்தி இல்லென அறம் பாடின்று என்பதொரு புற நானூற்றுப் பாடல் அது, ஆன்மடியினை அறுத்த அறனில்லாதவர்க்கும், நல்லியல் மெல்லியல் ஒருத்தியின் கருவைச் சிதைத்தவர்க்கும் பெற் றோர்க்குப் பிழை செய்தவர்க்கும் கடைத்தேற்றம் ஒரு வேளை உண்டாயினும் செய்ந்நன்றி மறந்தவர்க்குக் கடைத்தேற்றம் (உய்தி) இல்லவே இல்லை என்கிறது. அதன் மூன்றாம் குறிப்பு, குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்பது. இவ்வடி, பெற்றோரைப் பேண வேண்டும் பெருங் கடமையை வலியுறுத்துவதாகும். பாட வேறுபாடு இப்பாடம் புறநானூற்றுப் பதிப்பிலும், பரிமேலழகர் உரையிலும், பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என மாறியிருத்தலைக் கண்ட சான்றோர் ஆறுமுக நாவலர், பரிமேலழகர் உரைப்பத்திப்பின் அடிக்குறிப்பாக, குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்பது ஏட்டுப்பாடம் என எழுதிக் காட்டினார். குரவர்ப் பேணல் எப்படி மாறிப் போகின்றது போகவிடப் பட்டது - என்பதற்கு ஒரு குறிப்பு இது. ஔவை சொல் ஐந்திலேயே அறிதல் வேண்டும் என அறிவிக்க முந்தி நின்ற ஔவையார், தந்தை தாய்ப் பேண் என்றார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார். இவையும் போதாவென்று, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றும், தாய்சொல் துறந்தொரு வாசகம் இல்லை என்றும் கூறினார். விளக்கம் உன்னைப் பேணுபவனே, முன்னே உன்னைப் பேணிப் போற்றிய தந்தையையும் தாயையும் முந்தி முந்திப் பேணிப் போற்றுக என்றது முதலாவது. தெய்வம் போற்றும் திருவாளனே! உன்னைத் தந்த தந்தை தாயராம் கண்கண்ட கடவுளை முப்பொழுதும் எப்பொழுதும் மறவாமல் போற்று; அப்படிப் போற்றுதலே அவர்கள் உனக்குக் காட்டித் தந்த தெய்வத்திற்கும் மகிழ்வான செய்தி என்பதைக் குறிப்பது இரண்டாமது. திருமந்திரம் உயர்ந்த மெய்ப் பொருள்நூல்; அருள் நூல்; நெறி காட்டும் நூல்; நீடு வாழ வழிகாட்டும் நூல்; அந்நூலைக் கற்று அந்நெறி நன்னெறி எனக் கொண்டவனே நீ வாழி! அந்நிலை மட்டும் போதா; உன் தந்தை சொல்லும் சொல்லை அம்மந்திர மொழியினும் மாண்மொழி எனப் போற்றி நட! அதனில் விஞ்சியதொரு மந்திரம் உலகில் உனக்கு இல்லை என்றது மூன்றாமது. உள்ளம் உருக்கும் நூல் திருவாசகம்; தன்னை மறந்த நிலையில் இறைமையில் இரண்டறக் கலக்கச் செய்யும் நூல் அது; அழுது அழதுஅவனடிஅடைந்தஅரும்பெரும்தொண்டர், நெக்கு நெக்குருகி நெஞ்சக் கனகல்லும் நெருப்பிடைப்பட்ட வெண்ணெயென உருகப் பாடிய உணர்வு நூல்தான் அது. அதில் மாறு கருத்தில்லை. அதனைக் கற்று உருகுபவனே, உன் பெற்றதாயைப் பேணிப் போற்றுதலிலே அதனினும் உருகி நிற்றல் வேண்டும்; அக்கடமையை என்றும் தவறாதே என்பது இறுதியது. இவையெல்லாம் பெற்றவரைப் போற்றிக் காக்க ஏவும் கட்டளை மொழிகள் அல்லவோ! பேணாப்பழி இனி, அப் பெற்றோரைப் பேணாமல் பிறரைப் பேணும் ஒருவன் பெருமையும் பெறுவனோ? குடந்தையிலே கோதானம் (பசுக் கொடை) புரிந்து கொண்டு, கோவையிலே பெற்றோரைப் பிச்சை எடுக்க விட்டவன் என்ன பிறப்புப் பிறந்தவனாகப் பேசப் படுவான்? ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ் செல்வம் உற்றக் கடை என வள்ளுவப் பெருந்தகையும் பேசிப் பழிக்கின்றார் எனின், பிறர் வாய் ஓயுமோ? ஒரு சான்று தந்தையர் தள்ளாடும் பருவத்தர்; பின்னர் நடையும் ஓய்ந்து கிடையும் ஆனார். அவர்தம் மக்கள் இருவர்; இருவரும் படிப்பில் மேம்பட்டோர்; பணியிலும் சிறந்தோர்; துணையாய் வந்தவர்களும் இணையாய் நிற்கவல்ல படிப்பும் பதவியும் உடையவர். எனினும் என்ன? முதுபெருந் தந்தையைப் பேணலில் கடையர் ஆயினர்! மூச்சு முடியும் வரை எப்படியேனும் இருக்க வழி வேண்டுமே! முப்பது நாள் மூத்தவர் வீட்டில்! அடுத்த முப்பது நாள் இளையவர் வீட்டில்! அவர்தாம் நடக்க மாட்டாரே! என் செய்வது? நாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு சென்று இவ் வீட்டு மக்கள் அவ்வீட்டில் வைத்து விடுவர். அவ்வீட்டு மக்களும் அப்படியே எண்ணிக் கணக் கிட்டிருந்து தூக்கிக் கொண்டு வந்து வைத்து விடுவர். மாறி மாறிச் சில திங்கள் நிகழ்ந்த திருத்தொண்டில், மாயாது மாய்ந்து மண்டையைப் போட்டார் கிழவர்! பெற்றவனை இப்பாடுபடுத்திய பிள்ளைகளை ஊரவர் ஊசி முனையளவாவது மதிப்பரா? சுற்றம் பேணல் சுற்றந் தழாஅல் என்றே ஓர் அதிகாரம் உள்ளதே திருக் குறளில்! சீலையையும் வேட்டியையும் உடையையும் சுற்றிக் கட்டிக் கொண்டிருப்பதோ சுற்றந்தழாஅல்? உடல் மானம் காப்பவை அவ்வுடையென்றால், உயிர் மானம் காப்பது சுற்றத் தார்சுற்றித் தழுவிக் கொண்டிருக்க வாழும் வாழ்வென்று கூறுகிறதே அது. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் பேணாமையின் விளைவு தாய் தந்தையரை வெளியே தள்ளி விட்டால் ஊர்ப்பழி! மானக்கேடு! முதியோர் இல்லத்திலே சேர்ந்து விடுகிறோம் ஏதிலியர் இல்லத்திலே தங்கி விடுகிறோம் எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கிடக்கும் மானப் பெற்றோர், சிலர் படும் பாடு எழுதி முடியாது. வீட்டை விட்டு வெளியே நீங்கள் போய் விட்டால், எங்களை எவர் மதிப்பார்? எங்கள் உயிர் போனாலும் சரி, நீங்கள் வெளியே போய் எங்கள் மானம் போக விட மாட்டோம் என்று கெடுபிடியாக இருக்கும் மக்கள் உளர். நாங்கள் போக வேண்டும் என்றா அடம் பண்ணு கிறோம்; நீங்கள் எங்களைப் படுத்துகின்ற பாடு நாய்படுமா? அந்தப் பாடு படுத்துவதை உங்களால் விடமுடிகிறதா? வாய்க்குச் சுவை வேண்டா; வயிற்றுக்குப் போதும் என்று சொல்ல ஒரு நாளாவது கஞ்சி உண்டா? கந்தை அன்றிக் கட்டத் துணி உண்டா? வீட்டுக்குத் தேடி வருபவர்க்கு வகை வகையாகச் செய்து போடுவதைக் கேட்டோமா? வந்தவரிடம் நல்லது பொல்லது என நாங்கள் சொன்னது ஏதும் உண்டா? என்று குமுறும் பெற்றோர் உரைக்குச் செவிடராகிச் சிறுமைப்படுத்து வதை, அண்டை அயல் கண்டு சிரியாய்ச் சிரித்தாலும் வீட்டை விட்டுப் போனால் மட்டும் மானம் போகிவிடும் எனத் தடுப்பவர் எண்ணம் என்ன? இங்கேயே செத்துத் தொலை, என்பது தானே! ஒரு பேரன் என் இளந்தைப் பருவத்திலே மூன்றாம் வகுப்பிலே படித்து நடித்த குறு நாடகம் ஒன்று. தாத்தா ஒருவர்; மகன் ஒருவன்; பேரன் ஒருவன்; - ஆக மூவர் நாடகம் அது. தாத்தா மாட்டுத் தொழுவத்தில் இருக்கிறார்; அவர் குடியிருப்பு அதுதான். அவர் உண்கலம் மண்சட்டி. அதனைக் கழுவுகிறார். பேரன் வருகிறான்; தாத்தா செயலைக் காண்கிறான். பாடல் தொடர்கிறது: பேரன் : தாத்தா! இந்த மண் ஓட்டைத் தண்ணீர் ஊற்றிக் கழுவுவதேன் தாத்தா : அப்பா பேரா இதுதானடா அன்னம் உண்ணும் கிண்ணமடா பேரன் : வெள்ளிப் பாத்திரம் எத்தனையோ வீட்டில் நமக்காய் உள்ளனவே தாத்தா : ஆமாம்=ஆனால்=உன்னப்பன் அவற்றை எனக்குத் தரமாட்டான் தரமாட்டாரா? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டுப் பேரன் போய் விடுகிறான். தாத்தா ஒரு கிழிந்த பாயில் படுக்கிறார்; மகன் வருகிறான். ஆகாரம் வேண்டா மோடா அசட்டுக் கிழப்பயலே வேகமாய் எழுந்து ஓட்டை விளக்கி எடுத்து வாடா என்று திட்டுகிறான். விரைவாய் எழுந்த தாத்தா, ஓட்டைத் தேடிப் பார்க்கிறார்; காணவில்லை. அதனால், ஐயையோ ஓட்டைக் காணோம் யாரோ எடுத்துக் கொண்டார் வையாதே என் மகனே வஞ்சமிது யார் செய்ததோ என்கிறார். அப்பொழுது அங்கே பேரன் வருகிறான். அவன், அப்பா தாத்தாவை வையாதே அன்னியக் கொடுமைகள் செய்யாதே ஓட்டை எடுத்தவன் நான்தானே உனக்கென் றதைநான் வைத்துவிட்டேன் என்று சொல்லி, அப்பா நீயும் ஒரு நாள் தாத்தாவைப் போல் முதியவனாக ஆவாயே! அப்பொழுது உனக்குக் கஞ்சி ஊற்றுவதற்காக இப்பொழுதே அவ்வோட்டை எடுத்துப் பாதுகாப்பாக வைத்துள்ளேன் என்கிறான், அதைக்கேட்ட தந்தை, புத்தி வந்தது நல்ல புத்தி வந்தது; சத்திய மாய் இப்போதுதான் புத்தி வந்தது என்று கூறித் திருந்தியவன் ஆகிறான். இந்நாள் கல்வி பெற்றோரைப் பேணுதல் வேண்டும் என்பதைப் பிஞ்சு மனத்திலே பதியவைக்க வேண்டும் என்னும் அந்நாள் மரபு நிலைப் பண்பாட்டுக் கல்வியையும் எண்ணிப் பார்க்கிறேன். இந்நாள் இன நல - அறிவு நல - பண்பாட்டு நல - அழிவுகளுக் கெல்லாம் தாயகமாக விளங்கும், அயன்மொழி மழலைக் கல்விக் கொள்ளையடிப்பு நிலையங்களையும்காண்கிறேன்.அந்த வள்ளுவக் கிழவர் உள்ளில் சுரந்திசுரப்புபெற்றோர்இருவரையும் பேணலே இல்வாழ்வான் தலைக்கடன் என்பதைத் தலைப்பிலே முத்திரையிட்டு வைத்ததையும் நினைத்து அப்பெருமகனாரை வாழ்த்துகிறேன். தாயரும் தந்தையரும் ஆகிய பெற்றோர் என்று கண்டு கொள்ளத் திருவள்ளுவர் என்ன குறிப்பு வைத்துள்ளார். என்று எண்ணத் தோன்றுகின்றதா? அவர் ஒரு குறிப்பு மட்டும் வைத்திலர்; இரு குறிப்புகளை வைத்துளார் என்பது முன்னரே சுட்டப் பெற்றது. ஒன்று,இயல்புடைய என்பது மற்றொன்று நின்ற துணை என்பது. இயல்புடையர் பெற்றோர் இயல்புடையவரோ எனின்? அவரே இயல் புடையர் என்க. ஒரு தலைவன், தனித்ததோர் இடத்தே ஒரு தலைவியைக் கண்டு கொள்கிறான். அவனும் அதன் முன்னரும் மகளிரைப் பாரான் அல்லன். அவளும் ஆடவர் எவரையும் பாராளும் அல்லள். ஆனால், அப்பொழுதெல்லாம் எவரிடத்தும் உள்ளம் சென்று தங்கியதில்லை. உணர்வு ஒன்றியதில்லை. இப் பொழுதோ ஒருவரை ஒருவர் பிரியா உரிமையன்பு கொண்டு, உயிரன்பில் ஒன்றி, அவனுக்கு அவளே, அவளுக்கு அவனே என்ற ஒருமை எய்தி விடுகின்றனர்; இந்நிலையை இலக்கண ஆசிரியர் இயற்கைப்புணர்ச்சி என்பர். இயற்கையால் கூடிய கூட்டம் என்பதே இயற்கைப் புணர்ச்சி, மேலும் இதனைத் தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, ஊழால் கூடுதல் எனவும் அப்பொருள்படவே வழங்குவர். தலைவன் தலைவியர் முதற்காட்சியே இயற்கைப் புணர்ச்சி எனப்படுதல், இயல்புடைய என்பதனொடுஎண்ணற் குரியது. எப்பெற்றோரும் இன்னாரை மகவாக யாம் பெறல் வேண்டும் என்றோ எம் மக்களும் யாம் இன்ன பெற்றோர் வயிற்றில் பிறக்க வேண்டும் என்றோ வேட்கையுற்றுப் பிறந் தாரும் அல்லர்; பிறப்பாரும் பிறப்பிப்பாரும் அல்லர். இயல் பாகப் பிறந்த பிறப்பே எவர் பிறப்புமாம். இயல்பாக மக்கள் மூலவராக இருந்தார் அவர் பெற்றோர் ஆதலால், அவர் இயல்புடையர் எனப்பட்டார். நின்றதுணை: பிறரெல்லாம் ஒரு வேளைக்கோ, ஒரு நாளைக்கோ, குறித்த கால அளவுக்கோ, குறிப்பிட்ட வகைக்கோ பேணத் தக்காரே யாம். அவர்களுக்கு நின்ற துணையர் அல்லர் இல்வாழ்வர். அவர்கள் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் என்பது போல, வரவும் செல்லவும் உரியரேயன்றி நிலைபெறத் தங்கி நீடித்திருப்பார் அல்லர். துறந்தார் முதலிய மூவருக்கும் இல்வாழ்வான் என்பான் துணை என அடுத்த குறளில் குறித்தாரே அன்றி அவர்க்கு நின்ற துணை என்றார் அல்லர் என்பது எண்ணல் தகும். இனி ஒரே ஓர் ஆவணச் சான்று காட்டல் சாலும், ஆவணம் என்பது ஆ (ஆகிய - ஆகின்ற- ஆகும்) வண்ணம் (வணம்) ஈதென உரைப்பதேயாம். ஆவணம்: அறுபான் மூன்று நாயன்மார்களுள் அப்பூதியடிகளார் என்பார் ஒருவர். அவர்தம் திருமனைக்குத் திருநாவுக்கரசு நாயனார் எய்துகின்றார். நாவுக்கரசர் மேல் மாறாக் காதலுடைய அப்பூதியார் அவரை அதற்குமுன் கண்டிருந்தாரும் அல்லர். தாமே வரக்கண்டு கொண்ட தளிர்ப்பில் பெருவிருந்தாக்கிப் படைக்கலுற்றார். விருந்தில் அமர்ந்த நாவுக்கரசர் வழக்கம்போல உண்ணு முன் தம் நெற்றியில் திருநீறிட்டுக் கொண்டதுடன் குடும்பத்துத் தலைவராகிய அப்பூதியடிகளார்க்கும் அம்மையார்க்கும் திருநீறு நல்குகின்றார். இதனைக் குறிப்பிடும் சேக்கிழாரடிகள், இயல்புடைய இருவர்க்கும் முறைமையாக நீறு நல்கி மக்களுக்கு முறையே, நீறு நல்க அழைத்தமையைச் சுட்டுகிறார். இங்கே தாய்தந்தை ஆகிய இருவரையும் இயல்புடைய இருவர் என்ற அருமை வள்ளுவர் வழியில் வெளிப்பட்டு, அதனை மெய்ப்பிக்கும் ஆவணச் சான்றாய்த் திகழ்கின்றதாம். தந்தை தாய் என்னும் இருவரையும் இயல்புடைய எனச் சுட்டுகிறார் எனக் கொள்வோம் மூன்றாம்ஒருவர்வேண்டுமே! அவரைப் பற்றிய குறிப்பு என்ன என்னும் வினா எழல் இயல்பே! அதனைக் காண்போம். மூன்றாமவர் அம்மூன்றாமவரும் இயல்புடையர் ஆதல் வேண்டும்; நின்ற துணைக்கு உரியவர் ஆதலும் வேண்டும்! அவரையும் சேர்த்து மூவரையும் ஒருங்கு சுட்டுதல் வாய்ப்பினும் நன்றே என்பனவெல்லாம் உந்தி எழும்புதல் இயற்கை. அவற்றையும் காண்போம். மண்ணிலே நிகழும் மணம் விண்ணிலே தீர்மானிக்கப் படுகிறது எனப் பிறநாட்டுச் செய்திக் குறிப்புக் காட்டுதல் பலரும் அறிந்தது. ஆனால், ஒன்றுபடுத்தும் ஊழ் ஒன்று உண்டு; பிரித்து வைக்கும் ஊழும் உண்டு. ஒன்றிய ஊழால் தலைவனும் தலைவியும் காண்பர் என்கிறார் தொல்காப்பியர். அவ்வியற்கைச் சந்திப்பால் மாறிப்புகுந்து மாறா அன்பால் மனைவியானவள் இயல்பாக ஒன்றியவள் என்பது முன்னரே குறித்தது தானே! துணைவி அவள் எளியளா? கணவன் உயிர்தளிக்கச் செய்ய வந்த அமிழ்தம் ஆனவள். உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்த்தின் இயன்றன தோள் எனப்பூரித்துப் புகழ்கின்றானே வள்ளுவக் காதலன். ஒரு புலனுக்கு மட்டுமா இன்பம் தருபவள் அவள்! ஐம்புலனுக்கும் ஒருங்கே இன்பம் செய்பவள் அலலளோ அவள்! கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள என்று விம்மித முறுகிறானே அவ்வள்ளுவக் காதலன். அறிய அறியத்தான் அறியாதவை எவை என்பது புலப் படும். அதுபோல், சுவைக்கச் சுவைக்கத்தான் இதுவரை சுவையா இன்பம் உண்டு என்பதை இவளால் அறிந்து கொண்டேன் என அறிவுக்கு இணையாக இன்பத்துய்ப்பை இசைக்கிறானே வள்ளுவ இன்பத் துய்ப்பன். அறிதோறு அறியாமை கண்டற்று இன்பம் செறிதோறும் சேயிழை மாட்டு தாமே கட்டிய வீடு; தாமே தேடிய பொருளால் வந்த உணவைப் பகுத்துத் தந்து உண்ணும் பெருவாழ்வு; இவ்விருவகை இன்பங்களும் இவளோடு அடையும் இன்பத்துக்கு ஒப் பானவை என உவமை சொல்லுகிறானே உயர்புகழ்த் தலைவன், தம்மில் இரந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு தாமரைக் கண்ணான் உலகில் அடையும் இன்பத்துக்கு இணை இல்லை என்பவரே, யாம் விரும்பும் இம்மெல்லியலா ளொடும் அடைகின்ற இன்பத்துக்கு ஒப்புடைய தாகுமோ அது? என உவமை வீறுகாட்டும் உவகைச் செல்வன் உரைக் கிறானே! தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு அமிழ்தம் தந்த அமிழ்து அவள் தந்த குழந்தை; அதன் கை அமிழ்து; மெய் அமிழ்து; வாய் அமிழ்து; வாய்மொழி அமிழ்து; அஃது ஊட்டும் உணவும் அமிழ்து; வறிய வாழ்வையும் வளமை வாழ்வாக்கும் வாழ்வமுது - வானமுது என்று புகழும் அவனும், அவனை உயிராக் கொண்ட அவளும் திகழ்கின்றனரே வள்ளுவத்தில்: தேனொடு பால்கலந்த தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு சூழலினது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளா தவர் அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் இன்பச் சுரப்பின் இருக்கை மட்டும் தானா அவள்? அவள் தானே அவனுக்கும்,அவன் குடிக்கும், அவன் புகர்ப்பேற்றுக்கும் காவல் தெய்வமாக வாய்த்தவள்! தற்காத்துத் தவற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் தன் உடலையும் உளத்தையும் உணர்வுகளையும் காக் கிறாள், தன்னைத் துணையாகக் கொண்டவனையும் பேணிக் காக்கிறாள். தக்கோர் புகழும் நற்சொல் தன்னை விட்டுப் போகாது காக்கிறாள். தான் செய்யும் கடமைகளைச் சோர் வில்லாமல் செய்து குடிநலம் காக்கிறாள்அவ்வளவையும் நிறைகாக்கும் காவலால்.காக்கிறாள் குடிநலம், குடிமானம், குடிவளம் குடித்தனம் என்பனவற்றையெல்லாம் ஒருங்கே காக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறாள். வளரும் பயிருக்குக் காலத்தால் சொரியும் வளமழை போல் வாழும் அவள், இருப்பவன் எனினும் இல்லாதவன் எனினும், அவனை உடையவனாகச் செய்பவள் அவள். அவன் நிமிர்ந்து நடையிட்டு நடக்கக் காரணமாக இருப்பவள் அவள், தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை புகழ்புரிந்த இல்இல்லோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இத்தகைய தன்மைகளின் ஒட்டு மொத்த வடிவான அவளைப் பேணல் எவர் கடன்? பிறந்து வளர்ந்த இடம் சூழல் பெற்றோர் ஆகிய எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் புகுந்த இடத்திற்கு நம்பிக்கையோடு காலடி வைத்து வந்தவளைப் போற்றுதல் எவர் கடன்? தன்னை மறந்து, தன் பெயரையும் கூட விட்டுத்தன் வாழ்வை முற்றாக ஒப்படைக்க வந்துள்ள உயிர்த் துணையைத் தாங்குதல் எவர் கடன்? அவளைக் கொண்ட வன் கடமையே அல்லவோ! உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு என்று காதற் சிறப்புரைத்தவன் கட்டாயக் கடமை அல்லவோ அவளைக் காத்தல்! முடிபு ஆதலால், தன்னைப் பெற்றெடுத்த தந்தை தாயாராம் தெய்வங்களைக் காத்தல் கடமையாவது போலத், தன்னைக் காத்துத் தன் குடிவழியை விளங்கச் செய்யவந்த காவல் தெய்வத்தை நிலைபெறக் காத்தலும் இல்வாழ்வான் கடமையாம். தான் தன் தந்தை, தாய், துணை என்பார் மூவரைக் காக்கும் கடமையாளன், தன்னைக் காத்தல் வேண்டாவோ, எனின் வேண்டும் என்பது தெளிவு தானே! தான் எவளைக் காத்தற் கடமையுடையவனோ அதே போல், அவள் அவனைக் காத்தல் கடமையள் என்பதைத் தற்கொண்டாற் பேணி என்பதில் சொல்லியது அறிந்தோமே! அன்றியும், தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்னும் குறளில் தன்னைக் காத்தலும் அவன் கடமையாகச் சுட்டுகிறாரே வள்ளுவர். அவனைக் காத்துக் கொள்ளவில்லை என்றால், அவன் எவரைத்தான் காக்க வல்லான்? தன்னைக் காவாமல் சுமையாகப் பிறர்க்கு ஆகி விடுபவன் எவனும் பிறரைக் காப்பவன் ஆக முடியுமா? எந்த மூவரைக் காத்தல் முதற் கடனோ அதனை வலியுறுத்தி, அதன்பின் அவரொடும் கூடிக் காக்க உரியாரைத் துறந்தார், துவ்வாதர் (உண்ண வகையின்றி மானங்கருதி வீட்டுள் ஒடுங்கிக் கிடப்பவர்) இறந்தார் (இரப்புப் பெற்றேனும் வாழவேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறிய இரவலர்) தென்புலத்தார் (உலகுக்கு நலஞ்செய்ய வல்ல விளங்கும் அறிவினர்), தெய்வம் (முனிவர்), விருந்தினர், ஒக்கல் (சுற்றத்தார்), என்பாருடன் தன்னையும் தான் பேணிக்கொள்ளல் வேண்டும் என்பதை மறவாமல் முறை பெறக்கூறினார் என்க. பெற்றவர் முணகலும் மனையவள் எதிரிடையும் உள்ள வீட்டில் விருந்தேனும் பிறரைப் பேணலேனும் கூடுமோ? அம்மூவரைப் பேணிக் காவானைப் பொருட்டாக எண்ணி அவனையும் அவன் சார்பாக வந்தவரையும் அவர் பேணல் இயல்பாக அமையுமோ? பேணிப் போற்றும் தலைவனுக்கும் கூடப் பெருமாறாம் துணை வாய்த்து விடல் இல்லையா? அத்தகையளைப் பேணாமலும் போய் விட்டால் பேயாட்டம் போட நேராதோ? அதனால் அல்லவோ, செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும் என உழவக் கிழவன் வழியே, இல்லக்கிழவன் கடமையை வள்ளுவக் கிழவனார் கூறினார், நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்திற்குச் சென்று செய்வன செய்யாது சோம்பியிருந்தால் அந்நிலம், கணவன் பேணுதலைப் பெறாத மனையாள் போல் வெறுப்புற்றும் பயன் தராது போய்விடும் என்பதிலே கணவன் தன் மனைவியைப் போற்ற வேண்டிய கடமையை வெளிப்பட வலியுறுத்துகிறார் அல்லரோ! ஆவணம்: இனி இம்மூவரையும் குறிக்கும் ஆவணச்சான்றும் உண்டோ எனின், உண்டு என்பதைக் காட்டுதும் சிலம்பு விற்பதற்காகப் பூம்புகாரை விட்டு மதுரைக்குக் கண்ணகியுடன் வந்த கோவலன்,மாதரியின் இல்லத்தில் கண்ணகியைத் தங்க வைத்து விட்டு, மதுரை மாநகரத்துள் செல்ல முனைகிறாள். அம்முனைப்பின் போது அவன்றன் முன்னாள் செய்கைகள் எல்லாம் நினைவில் முட்டி வாய்ச் சொற்களாக வெளிப்படுகின்றன. சிறிய பருவத்திலேயே பேரறிவு படைத்தவளே, என் தாய் தந்தையர் கட்டளை வழியில் நின்று அவர்களைக் காக்கும் கடமையைத் தவறினேன்; அம்மட்டோ, உன்னைப் பேணுதலை யும் ஒழிந்து எவ்வளவு சிறுமையனாக நடந்து கொள்ள முடி யுமோ, அவ்வளவு சிறுமையனாகவும் நடந்து கொண்டுளேன். இத்தகைய என்னையும் மதித்துப் புறப்படு என்ற அளவில், தடையென ஒரு சொல்லும் சொல்லாமல் புறப்பட்ட நீ எத்தகு பெருஞ் செயலைச் செய்துள்ளாய்? எனப் பலப்பல கூறித் தன்னிலைக்கு இரங்கினான். இவ்விரக்க வரிகளுள், இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் என்னும் ஈரடிகள், மூவர் இவர் என முகங்காட்டி விடுகின்றன வாம். இருமுது குரவராம் தாய் தந்தையர்; சிறுவயதிலேயே பேரறிவுக்கு உறைவிடமாகிய அத்துணைவி ஆகிய மூவரையும் குறிப்பிடுதல் அறியின் இளங்கோவடிகள், இயல்புடைய மூவர் இவரென்று காட்டிய முதல் உரையாசிரியர் என்பது விளங்கும். வ. உ. சி பின்னே வந்த உரையாசிரியர்களுள் தாய், தந்தை, தாரம் என மூவரைச் சுட்டியவர், இந்திய மண்ணுக்குத் தம்மை முற்றாக ஈகம் செய்த பெருந்தகு தொண்டர் வ. உ. சிதம்பரனார் ஆவர். அவர் எவ்வாற்றால் இப் பொருள் கண்டார் என்னும் குறிப்பு வாய்க்கவில்லை எனினும், அப்பொருள் தகுபொருள் என்பதைச் சேக்கிழாரும், இளங்கோவும், வாழ்வியல் வள்ளுவமும், வழக் காறும் மெய்ப்பித்தல் போற்றிக் கொள்ளத் தக்கனவாம். மேலாய்வு இனி, இம்மூவரைப் போற்றலின் இன்றியமையாமையைக் காணலும், அவர்கள் ஒத்துப் போகும் நிலையில் குடும்பத்துக்கும் குமுகாயத்திற்கும் உண்டாகும் நலங்களையும் காணலும் வேண்டும். பெற்றோரைப் போற்றுதல் செய்ந்நன்றிக்கடன் என்பது மட்டுமன்று. முதியவர்கள், குடும்ப வளமானவர்கள் என்பதை உணர்தலும் வேண்டும். வாழ்வில் தழும்பேறிய முதியவர் வழிகாட்டுதல் ஒரு குடும்பத்திற்கு உள்ளது என்றால், அது எவ்வளவு பேறு பெற்றது! இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் பெற்றோர் இருந்து குடும்பத்தைக் காத்தல் இயல்பாகக் கிடைப்பதா? பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவும், ஆடல் பாடல் காட்டவும், படிப்பைக் கண்காணித்துக் கொள்ளவும், வீடு தேடி வருவாரை முன்னின்று, கண்டு செய்வன செய்து விடுக்கவும் பெற்றோர்கள் போலும் பெருவாய்ப்பு இருத்தல் எத்தகும் உயர்வுடையது? நம்பிக்கையான வீட்டுக் கண்காணிப்பாளரும் காவலரும் அப்பெற்றோர்கள் போல் எவரே வாய்ப்பார்? சில பெற்றோர்கள் வயதால் வளர வளரப் பண்பாலும் தொண்டாலும் உயர்ந்து உயர்ந்து செல்கின்றனரே! குடும்பத்தின் புகழ் வரவுப் பொருளாகவும் அல்லவோ அவர்கள் இருக்கின்றனர்! பிஞ்சியிலே புளியங்காயின், தோலும் சதையும் ஒட்டிக் கிடப்பது போல இளமைப்பருவத்தில் பற்றுதலில் ஒட்டிக் கிடந்தவரும், அப்புளியங்காயின் ஊதைக் காய் நிலையிலே தனித்தனி முயன்று பிரிக்கத் தக்க அமைப்புப் போல நடு வயதில் இருந்த வரும், அப்புளியங்காயின் பழ நிலையில் விதையும், சதையும் தோலும் தனித்தனி ஒட்டுப் பற்றற்று நிற்பது போல முதுமைப் பருவத்தில் பற்றற்று வாழும் பெருந்தகையார். வாழ்வார் குடும்ப வாழ்வாய் வழிகாட்டியாய்த் திகழும் வாய்ப்பு அரியவற்றுள் எல்லாம் அரிதே அல்லவோ! பணிக்குச் செல்வாரும் பள்ளிக்குச் செல்வாரும் தடை யற்றுக் காலத்தின் கவலையற்றுச் செல்லும் வகையில் வேண்டும் உதவிகளை யெல்லாம் செய்து, அக்கடமைகளை நிறைவேற்றிய பின்னர்த் தமக்கு வேண்டுவனவற்றைப் பார்த்துக் கொள்ள வல்லராய்ப் புத்தம் புது நாவுக்கரசாய்த் - தாயுமானவராய் - வள்ளலாராய்த் தெரேசா அன்னையராய்த் திகழ்கின்ற பெற் றோர்களைப் போற்றிக் காத்தலிலும் தெய்வ வழிபாடு என்ன தான் உண்டு? வயதேறிய நிலையில் வாயடக்கம், நாவடக்கம், மன அடக்கம் என்பன இல்லாத பெற்றோரும் உளர் என்பது கண் கூடு. வெள்ளரிப் பழம் முதிர்ந்த நிலையில் வெடிப்பது போல வெடித்துப் போகின்றவர் அவர்! சிலர் தம் இளஞ் செல்வாக்கையும், பதவிச் செருக்கையும், பணப் பகட்டையும், ஆட்சிப்பாட்டையும் ஓய்வு பெற்ற பின்ன ரும் எதிர்பார்த்துக் கொடு அவை கிட்டா நிலையில் சரவெடி போல வெடிப்பவராக உளர் என்பதும் உண்மையே! கால நிலையறியாராய்க் காலம் காலமாகத் தம் காலத் தையே முன் வைத்துக் கண்மூடித்தனத்தின் வடிவாக இருப் பாரும், எவரோடும் ஒட்டாது தாம் எண்ணுவதே தக்கதெனக் கொண்ட மனநோயராக உழல்வாரும் இருக்கவே செய் கின்றனர். இத்தகையரைப் பேணிப் போற்றுவாரும் இல்லாக் கால், அவர்கள் குமுகாயப் பாரமானவராகி விடுகின்றனர். இரு சாராரும் அறிவறிந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் நிலை உண்டாயின் குடும்ப வாழ்வும் முதியர் வாழ்வும் நாட்டு நலமும் ஒருங்கே சிறந்து விளங்கும். பெண்டிர் நிலை ஆண்வல்லாண்மை, உலகத் தோற்ற நாள் முதல் இருந்தே வந்துள்ளது. பெண்ணைத் தெய்வமெனப் போற்றுபவரும் மனைவியை மதித்து நடத்துதல் அரிதாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தில் கண்ணாக மணியாக இருந்த பெண் பிறப்பு, முதுமையில் தாயாக தெய்வமாக அமையும் பெண் பிறப்பு, மனைவி நிலையில் மட்டும் மதிக்கப்படாது ஒழிகின்ற தென்றால் பார்வையில் குற்றம் உண்டு என்பது தெளிவாகவே தெரிகின்றது. முப்பாலிலும் முறையே பெண்ணிற் பெருந்தக்கயாவுள? பெண்ணிற் பெருந்தக்கதில் பெண்ணே பெருமை யுடைத்து என்று முழங்கிய இம்மண்ணும் பெண்ணைப் படுத்தியுள்ளதும் படுத்தி வருவதுமாம் கண்ணராவி நிலையை நோக்க மென்மனம் தாங்காது! வன்மனமும் அசையவே செய்யும்! பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீராது என்பது பொய்யாத மொழியேயாம்! வெளிவாழ்வில் பீடும் பெருமிதமும் மிக்கவனாக விளங்கும் கணவன், வீட்டு வாழ்வில் மெல்லியன் தண்ணியன் உயிரனாக இருத்தலையே ஒரு பெண் பேறாகக் கருதுகிறாள். அவள் வன்கண்ணனாக இருப்பின் அஞ்சி அஞ்சியே அடிமையாகி விடுகிறாள். அவள், பெறும் பிள்ளைகள் முரட ராகவும் போய் விடுகின்றனர். கற்ற பெண்டிரும் விடுதலை யுற்றார் அல்லர். அவர் களுக்கும் அடிமை நிலை மாறவில்லை. அவர்களுள் சிலர் ஆடவரை அடிமையாக்குதல் நோக்கராகவும் உள்ளனர். எவரடிமையும் குடும்பத்திற்கு நலமாகாது என்பதாலேயே திருவள்ளுவர். வாழ்க்கைத் துணை நலம் என்றார். துணைவன் என்றோ,துணைவி என்றோ சொல்லாமல் துணை என்ற அருமை எண்ணிக் கொள்ளத் தக்கதாம். ஆண்கள் படுத்தும் அடிமை நிலையிலும் தம்மைத் தாமே அடிமைப்படுத்திக் கொள்ளும் ஓரியல்பும் பெண்டிரிடம் உண்டு. அதற்குக் கற்றவர் கல்லார் என்னும் வேற்றுமை கூடப் பெரிதும் இல்லை. அது அணிகலங்களிலும் பட்டாடைகளிலும் வைக்கும் பற்றுமை யாகும். சிலர்க்குப் பற்றுமை என்ற அளவும் கூட இன்னி வெறியே உள்ளது. அதன் விளைவு என்ன? சிந்திக்க: தங்கத்திற்கு ஒரு பெயர் பறி என்பது. அத் தங்க அணி கலம் அணிந்ததால் எத்தனை பேர் தம் காதை, கையை, கழுத்தை அறுக்க இடமாகியுள்ளனர்? எத்தனை பேர்கள் அணிகலங் களால் கொலைக்கு ஆட்பட்டுள்ளனர்? அவற்றைக் கழுத்திலே கையிலே காலிலே பூட்டல் தங்கவிலங்கு என்பதை அன்றி உரிமைச் சீட்டு என்று சொல்லமுடியுமா? தான் விரும்பி னாலும் விடுதலை பெற முடியாத அடிமைச் சீட்டே அணி கலங்கள் என்பதையும் மகளிர் நினைப்பின் அவர்கள் உரிமைப் பிறப்பாக உயர வழியுண்டாம். சிந்திப்பார் சிந்திக்க! செயலில் இறங்குவார் இறங்குக! நிறைவுரை நாளைக்கு மூவேளையோ பல வேளைகளோ உண்பதும் குடிப்பதும் போன்றதா திருமணம்? வாழ்வில் ஒரோ ஒரு முறை நடக்கும் அது எவ்வளவு உயர்வுக்கு உரியது! நிழலின் நீங்கா என்வெய்யோள் எனத் தன் மனைவியைப் போற்றும் தலைவனும், வதுவை நாளினும் இனியனால் எமக்கே எனத் தன் துணைவனை நயக்கும் தலைவியும் உயிர்பகுத்தன்ன மாண்பினராய் இருத்தலைப்புள்ளியின் ஓருயிராய் விளங்கும் நிலையில் பெற்றோரும் சுற்றமும் மக்களும் பூரித்துப் போற்றும் துணைமலர்ப்பிணையலாக என்றும் திகழ்வர். இவற்றை எண்ணியே வாழ நூல் செய்த வள்ளுவர் தம் அற நூலின் தொடக்கப்பாடலில், இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்றார். இல்லற வாழ்வு வாழ்பவன் இயற்கைத் தொடர்பால் அமைந்த தாய், தந்தை, மனைவி என்னும் மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான் என்பது இப்பாடலின் திரண்ட பொருளாகும். 25. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி என்பது குறள் (245) அருளைப் போற்றி நடப்பவர்க்குத் துன்பம் எதுவும் இல்லை; இதற்குக் காற்று விசிறுகின்ற வளப்பமிக்க இந்தப் பெரிய உலகத்து வாழ்ந்த பெருமக்களே சான்றாம் என்பது இதன் பொருளாகும். அருளாளர்களுக்கு அல்லல் நேர்ந்தது இல்லையா? எவ்வுயிரையும் தம்முயிராகக் கருதி வாழ்பவர் தாமே அருளாளர். அத்தகும் அருளாளர் அல்லல் பட்டது இல்லையா? அல்லல் என்பது என்ன? துன்பம், அலம், அலக்கண், அலவதம், அலமரல், அலம்புதல், அலறுதல், அலற்றுதல், அலைப்பு அலைவுறல் என்பன வெல்லாம் அல்லல் வழிப்பட்ட சொற்களே. காரிருளிடைச் சிக்கிக் கொண்டது போலவும், செக் கிடையிலும் ஆற்றுச் சுழியிடையிலும் பட்டுச் சுழலுதல் போல வும், மனமயங்கிச் செயலொடுங்கி நிற்கும் நிலையும் அல்லல் களே! இவற்றை, அல் என்னும் இரவுப் பொருண்மையும், அலமரல் என்னும் சுழற்சிப் பொருண்மையும் தெளிவிக்கும். அல்லல் பட்டார் நிலையை, அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் (556) என்பாரே வள்ளுவர். அலம் வரும் அல்லல் காலை என்னும் இளங்கோவடிகளார் (4:8), அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென் கொல் என அல்லல் பட்டாளையும், அவளை நோக்கி அல்லல் பட்டாரையும் உரைப்பாரே (19: 15-18) அல்லல் என்பது பொது வகையில் துன்பம் என்னும் பொருட்டது அன்று. தாங்குதற்கு அரியதும், பிறரால் தடுத்தற்கு அரியதுமாம் துன்பமேயாம். இதனை ஆற்றாது களையாத என மேலே கண்ட சொல்லமைதிகளே காட்டும், மேலும், வடக்கிருந்த கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு, அவர் வருவார் என்று சொல்லிய பாடலில், செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே என்றுரைப்பதும் சான்றாம் (புறம். 215). அல்லல் காலை என்ப தற்கு யாம் இன்னாமையுறுங் காலம் என்று பழைய உரை யாசிரியர் உரைத்தலும் கருதத்தக்கது. அதே புறப்பாடலில் புறவின் அல்லல் என வரும் (39,46) ஈரிடங்களிலிலும் தீர்த்தற்கரிய துயர்ப் பொருளே தருதல் விளக்கமாம். அருளாள்வார்க்கு அக்கடுந்துயரே இல்லை என்கிறாரே வள்ளுவர். வாழ்வியல் உண்மையை வாய்மை தவறாமல் வையகத்துக்கு அருளிய வள்ளுவர் கூறும் இச்செய்தி, ஒப்புவதுதானா? இதற்கு எதிரிடையாக நமக்குத் தோன்றும் செய்தி - வரலாறு - ஒன்றா இரண்டா? புத்தர் பெருமான் புத்தருக்கு உறவினன் தேவ தத்தன். அவன், அம்பு ஏவி ஓர் அன்னத்தை வீழ்த்துகிறான்; வீழக்கண்டு துடித்த புத்தர், அதனை எடுத்து, மடியில் வைத்து மார்போடு அணைத்துத் தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினார். என்னுடைய அன்னம்; தருக என்றான் தேவதத்தன். இறந்து போயிருந்தால் கொன்ற உன்னைச் சேர்ந்தது; இறக்கவில்லை ஆதலால், காக்க விரும்பும் என்னைச் சேர்ந்தது என மறுத்தார். மன்றமும் புத்தர் உரையை ஏற்றது. அப்பகை அவ்வளவோடு நின்றதா? காலமெல்லாம் தொடர்ந்தே நின்றது. எவ்வளவு இடையூறு செய்ய வேண்டுமோ, எத்தனை வகைகளால் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தான் தேவ தத்தன். ஒரு மலையில் இருந்து இறங்கிப் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறார் புத்தர். ஒரு பெரும் பாறையை உருட்டித் தள்ளி உயிருக்கு உலை வைக்க முயன்றான் அத் தேவதத்தன். ஆனால், அக்கல் கால் பெரு விரலில் பட்டுப் புண்ணாக்கி விட்ட அளவில் போயிற்று. ஆளேவிப் புத்தரைக் கொல்ல முயன்றான்; சங்கத்தைப் பிளக்க எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தான். மனமாசில்லாப் புத்தருக்கு நாளெல்லாம் எதிரிடையாக நின்று அல்லல் புரிதலே வாழ்வாக்கிக் கொண்டவன் தேவதத்தன். ஆனால், அவனால் புத்தரைக் கொல்ல முடியவில்லை. பாவா என்பதோர் சிற்றூர்; அவ்வூரில் இருந்த கொல்லுத் தொழிலாளன் சுந்தன் என்பான். அவன் புத்தருக்கு விருந்து படைக்க விரும்பி அழைத்தான். காட்டுப் பன்றி உணவும் அவன் தந்த விருந்தில் இருந்தது. அதனை மறுக்காமல் உண்ட புத்தர் அன்றே வீடுபேறு பெற்றார். அருளாளராகிய அவர் வாழ் வில் அல்லல் இல்லையா? கிறித்து பெருமான் அருளின் உருவர் கிறித்து; இனியவே செய்ய வந்த இறைமையர்; இன்னாமை செய்ய எண்ணியும் பாராதவர். அவர்பட்ட பாடுகள் எத்தனை? சிலுவைப் பாட்டின் போது அவர்க்கு நேரிட்ட பாடுகளை எண்ணக் கன்மனமும் உருகுமே! அவர் உடுத்திருந்த ஆடையைக் களைந்து செந்நிறப் போர்வையைப் போர்த்தினர்; முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர் முன் முழந்தாளிட்டு யூதரின் அரசே வாழி என்று எள்ளி நகையாடினர். அவர் மேல் காறித் துப்பிப், பிரம்பை எடுத்துத் தலையில் அடித்தனர். அவரை மேலும் எள்ளி நகையாடிய பின் போர்வையைக் கழற்றி விட்டு, அவருடைய ஆடைகளை அணி வித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர். கசப்புக் கலந்த முந்திரிச் சாற்றை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்ப வில்லை. அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர்ச் சீட்டுப் போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அவருடைய தலைக்கு மேல் இவன் யூதரின் அரசன் இயேசு என எழுதி வைத்தனர். அவருக்கு வலப் பக்கத்தில் ஒருவனும் இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அறைந்த பின்னரும் ஓய்ந்தனரா? நீ கடவுள் மகனாயிருந்தால் சிலுவையில் இருந்து இறங்கிவா பிறரைக்காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இவன் இசுரயேலரின் அரசனாம் என்றெல்லாம் பழித்தனர். அவருடன் அறைபட்ட கள்வரும் அவர்மேல் வசை கூறினர். கடற்காளானை எடுத்துப் புளிக் காடியில் தோய்த்து ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். இவை மத்தேயு எழுதிய நற்செய்தியில் உள்ளவை (27:27-50) இயேசு பெருமான் பட்ட அல்லல்கள் இவை அல்லவோ? நபிகள் நாயகம் உருவமற்ற ஒரோ ஓர் இறைவனையோ வழிபட வேண்டும் என்னும் கொள்கையை முன் வைத்த நபிகள் நாயகம் பட்ட பாடுகள் எவை? அண்ணலவர்கள் வீதியில் நடந்து செல்லுங்கால், அவர்களைக் கேலி செய்து நகைத்தனர். பைத்தியம், பைத்தியம் என்று கூறினான் ஒருவன். சூனியக்காரன் என்றான் வேறொரு வன். மாயக்காரன் என்றான் மற்றொருவன். பிசாசு பிடித்திருப்ப தால் மூளைக் கோளாறு உற்றிருப்பதாகத் தூற்றினான் பிறி தொருவன். அவர்கள் எங்குத் திரும்பினும் இந்த இழி மொழிகளே அவர்களின் செவிகளில் ஒலி செய்தனர். போதாக் குறைக்கு அவர்களின் மீது வசைக்கவிகள் இயற்றி அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் பாடிவந்தனர். அவர்கள் பேசு வதற்கு எழுந்திருப்பின் பெருங்கூச்சலிட்டு அவர்களின் தொனிபிறரின் காதுகளில் விழாமல் செய்து விடுவார்கள். அவர்கள் மீது குப்பைகூளங்களையும் சகதியையும் வாரியடித் தார்கள். அவர்களைக் கஃபாவிற்குச் சென்று இறைவனை வழிபடாவண்ணம் தடுத்தார்கள். சிறுவர்களையும் போக்கிரி களையும் தூண்டிவிட்ட அவர்களைக் கல்லால் எறிந்து கொடுமைப்படுத்தவும் செய்தார்கள். அவர்கள் செல்லும் பாதைகளிலெல்லாம் முட்களைப் பரப்பி வைத்தார்கள் அண்ணலவர்களின் மகள் ருகைபாவை ஆபூலகபின் மைந்தன் உத்பா மணமுடித்திருந்தான். அவர்களின் மற்றொரு மகளான உம்ழுகுல்தூமை அவருடைய மற்றொரு மகன் உதைபா மணம் செய்திருந்தான். அம்மங்கையர் இருவரையும் உடனே மணவிடுதலை செய்யுமாறு தம் மக்களைக் கட்டாயப் படுத்தி அவ்விதமே செய்வித்து அம்மங்கைகளை அண்ணல் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அபூலகபு. “நீ தானா எங்கள் முந்தையோர் வழிபாடு நிகழ்த்தி வரும் கடவுளர்களை இழித்துரைக்கின்றனை? என்று வினவினர். ஆம் நான்தான் என்று கம்பீரமாக மறுமொழி பகர்ந்தனர் அண்ணல், அவ்வளவுதான்1. ஒருவன் தன்னுடைய மேல் துணியை அவர்களின் கழுத்தில் சரேலெனப் போட்டு முறுக்கி அவர்களைக் கீழே தள்ளினான். அதோடு அவரை விட்டானில்லை. விரைந்து விரைந்து முறுக்கினான். துணியை அவன் முறுக்க முறுக்க அண்ணலவர்களின் மூச்சுத் திணறி வெளிவந்தது அச்சமயத்தில் அண்ணல் அவர்களின் அருமைத் தோழர். அப்துல்கஃபா அவர்களும் அவ்விடத்திற்கு எதிர்பாராதவிதமாய் வந்து விட்டார். அண்ணல் அவர்களுக்கு அம்மடமாக்கள் செய்யும் கொடுமையைக் கண்டு அவற்றினூடே புகுந்து அண்ணல் அவர் களை அக்குறைசிகளின் கொடும்பிடியில் இருந்து விடுவித்தனர். இதைக் கண்ட அக்குறைசிகளுக்குச் சினம் ஏற்பட்டது. அப்துல் கஃபா அவர்களை நையப்புடைத்து அவர்களின் தாடியின் ஒரு பகுதியைப் பிய்த்தெறிந்து விட்டார்கள். அதனால் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார்கள். அப்துல் கஃபா செத்தொழிந் தார் என்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் குறைசிகள். ஒரு தடவை அண்ணல் அவர்கள் கஃபாவில் பணிந்து தலைவணக்கம் செய்த பொழுது அவர்கள் அங்கு வந்து வணக்கம் செய்வதை எவ்வாற்றானும் நிறுத்திவிட வேண்டும் என்று உறுதி பூண்ட அபூசகல் என்னும் கொடியோன். சமீபத்தில் ஈன்ற ஓர் ஒட்டகத்தின் நச்சுப்பையைக் கொணர்ந்து அண்ணல் அவர்கள் கழுத்திலும் தலையிலும் போட்டான். இதைக் கண்டு அருகில் இருந்த குறைசிகளெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அபூசகல் கஃபாவில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கற்சிலையின் முன் நின்று கொண்டு எவன் முகம்மதின் தலையைக் கொய்து கொணர்கிறானோ அவனுக்கு நூறு ஒட்டகங்கள் அன்பளிப்புச் செய்வேன். இந்த குபல் என்னும் தெய்வத்தின் மீது ஆணையாகக் கூறுகின்றேன். இது சத்தியம், சத்தியம், சத்தியம் என்று விண்ணதிரும்படி அலறினான். - நபிகள் நாயகம். 83-105 இப்படி நபிகள்நாயகம் பட்ட அல்லல்களைச் சொல்லி முடியுமா? கூறப்பட்ட மூவரும் முப்பெருஞ் சமயங்களின் மூலவர்கள் என்பதை உலகம் அறியும். அவர்கள் பட்ட பாடு களையும் உலகம் கரைந்து கரைந்து கூவும். ஆகவும், அல்லல் அருளாள்வார்க்கு இல்லை என்று வள்ளுவர் கூறியதை வாய் மொழி எனக்கொள்ள முடியாதே என்று எண்ணவே தோன்றும். சாக்கிரடீசர் உலகப்பெருஞ் சிந்தனையாளர் சாக்கிரடீசர். சிந்தித்துப் பார்க்க வைப்பதே சிந்திப்பாகக் கொண்ட சிந்தனை வேந்தர் அவர். அச்சிந்தனைத் தூண்டலுக்காகப்பட்டது தானே நஞ் சூட்டல். கிரேக்க நாடு போர்க்களத்தில் நின்றபோது முதற்படை வீரராக முனைப்பு மிக்க படைவீரராக நின்றவர் சாக்கிரடீசர். ஒருமுறையா இருமுறையா, அப்படிப் படைக்களத்தில் பணிபுரிந்தார்? மும்முறை வீறுடன் பணிபுரிந்தார். அப்பணியின் வழியே வந்த விருதினைக் கூடத் தாம் பெறாமல் தாம் ஒதுங்கிக் கொண்டு பிறர் பெறத் தாமே முன்னின்று பரிந்துரைத்தார். அத்தகும் அஞ்சா அறிவர். இளைஞர்களின் உள்ளங்களைக் கெடுக்கிறார் என்று குற்றஞ் சாற்றப் பட்டாரே; கண்மூடித் தனத்தை ஒழிக்கவும், மெய்யுணர்வைத் தூண்டவும் இறை மையை மதிக்கவும் அவரைப் போல் அரும்பணியாற்றியவர் எவர்? அவர்மேல் சாற்றப் பெற்ற குற்றங்கள் எவை? சாக்கிரடீசு ஒரு பாவி அவன் மண்ணிலும் விண்ணிலும் நடப்பவற்றை ஆராயும் கொடியன்; தன் வாக்குத் திறத்தால் பொய்யை மெய்யாக்கியும் மெய்யைப் பொய்யாக்கியும் இளைஞர்களைக் கெடுப்பவன் என்பன அவை. மக்கள் தங்கள் அறியாமையை இன்னதென அறியச் செய்வதே என் வாழ்நாள் கடமை என்றும், இறைவன் தமக்கு வழங்கிய கட்டளை அதுவே என்றும் குற்றம் சாற்றப்பட்ட அவையில் மறுத்துக் கூறினார். எவர் தம்மை அறிவாளர் என நம்பிக் கொண்டிருந் தனரோ அவர் அறிவறியார் என்பதும், எவர், அறிவறியார் எனத் தம்மைக் கருதிக் கொண்டிருந்தனரோ அவர் சிறிதாவது அறிவறிந்தவர் என்பதும் தம் ஆய்வால் புலப்பட்டமையை எடுத்துரைத்தார். எவ்வெவ் வகையில் பிறர்க்கு மெய்யறிவு இல்லை என்று மெய்ப்பித்து வந்தேனோ, அவ்வறிவை நான் அடைந்திருப்பதாக மக்கள் கருதினர். உண்மையில் எனக்கும் அவ்வறிவில்லை. மற்றவர்களுக்குமில்லை. ஆனால் என் அறிவில்லாமையை நான் அறிந்து கொண்டேன். மற்றவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இதுவே என் உயர்வாகவும் மற்றவர்களின் தாழ்வாகவும் கருதாமல், அவர்களை நான் மூடனாக்கி விட்டதாகவும் நான் செருக்குக் கொண்டவனாகவும் எண்ணிப்பகை பாராட்டினர். சட்டம் பயின்றவர், அறமன்றத்தோர், அறிவோர், ஆள் வோர், ஆகிய இவர்களெல்லாம் நன்னெறி காட்டுவோராக இருக்க நான் ஒருவன் மட்டும் எப்படித் தீநெறி காட்டிச் சிறுவர் களைக் கெடுக்கமுடியும்? எவனும் தனக்குத் தானே கேடுசெய்ய விரும்புவானா? எனக்கு விளைய இருக்கும் கேட்டை நானே மனமறியத் தேடிக் கொள்ளப் பாடுபடுவேனா? உன் உயிர்க்குக் கேடாம் இச்செயலை ஏன் செய்கிறாய்; பிறரைப் போல் இருக்க வேண்டியது தானே என்று உங்களுள் சிலர் கேட்கலாம். நீங்கள் சொல்வது நேர்மையானது அன்று; மாந்தனாகப் பிறந்தவன் தான் செய்வது அறச்செயலா, அற மல்லாச் செயலா என்பதை எண்ணிச் செய்ய வேண்டுமே அல்லாமல், உயிருக்குக் கேடா, தொல்லையா என்பவற்றையோ எண்ணல் வேண்டும்? போர்க்களத்தில் எந்த இடத்தில் எந்தப் பணியில் நிறுத்தப்பட்டேனோ அதனை எவ்வாறு அச்ச மில்லாது செய்து நின்றேனோ அதே போல் இச்சிந்தனைக் களத்திலும் துணிவுடன் நிற்கவே விரும்புகிறேன்! உன் கருத்தை மாற்றிக் கொள்; உனக்கு விடுதலை தரு கிறோம் என்று நீங்கள் கூறுவதாயினும், நான் வணக்கத்துடன் சொல்வது எனக்கு உயிரும் ஆற்றலும் இருக்கும் வரையில் உண்மையை நாடிப் போகவே செய்வேன்; அதனை மறவேன் என்றார். இத்தகைய மெய்யுணர்வாளர்க்குத்தான் நஞ்சு தரப் பட்டது. அஃது அவர்க்கு அல்லல் இல்லையா? மெய்ப்பொருள் நாயனார் அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர் மெய்ப் பொருள் நாயனார். திருக்கோவலூர் மன்னர். அவர்க்கு மாறாக இருந் தவன் முத்தநாதன் என்பான்; அவனும் மன்னனே; மெய்ப் பொருளாரை வெல்வதற்குப் பன்முறை படைகொண்டு வந்தான். தோற்றே ஓடினான். மெய்ப்பொருளார் சிவப் பற்றை அறிந்து கொண்டிருந்த அவன், சிவனடியார் கோலத்திலே வந்தான். வாயில் காவலர்கள் தடுக்கவும் தடைப்படானாய், அடியார் கோலம் காட்டியே உள்ளே புகுந்தான். அரசனும் அரசியுமாக உடனிருந்த அந்தப் புரப் பகுதியுள்ளும் சென்றான். அரசனுக்குத் தனித் துரை செய்ய வேண்டுமென்ன, அரசியாரை அப்பால் அனுப்பிவிட்டு, அடியார் கோலத்தில் வந்தவனை அரியணை யில் அமரச் செய்து அருளுரை வழங்க வேண்டி அமைந் திருந்தார் மெய்ப்பொருளார். தக்க பொழுது ஈதெனக் கண்ட பொய் வேடத்தனாம் முத்தநாதன், ஏட்டுச் சுவடிக்கட்டு போல் மூடிவைத்திருந்த உடைவாளை எடுத்துக் குத்தி வீழ்த்தினான். காவியும் நீறும் கண்டிகையும் மெய்ப் பொருளாகக் கொண்ட அருளாளர் மெய்ப் பொருளார், பொய்த்தவனால் குத்திக் கொல்லப்பட்டார். பெரிய புராணம் பேசும் செய்தி இது. மெய்ப்பொருளார் அல்லல் பட வில்லையா? காந்தியடிகளார் அண்மையில் வாழ்ந்த வாய்மை வாழ்வர் காந்தி யடிகளார். அவர் இன்னா செய்யாமை என்னும் கொள்கை யின் கொள்கலம்! அறப்போர் அன்றி அயற்போர் அறியா அவ்வண்ணல் பட்டபாடுகள் எத்தனை? ஆபிரிக்கா நாட்டு தர்பனில் பிரிட்டோரியாவுக்குத் தொடர் வண்டியில் முதல் வகுப்பில் போகிறார். வண்டிப் போக்கர் ஒருவர் இந்தியக் கறுப்பர் (காந்தி) ஒருவர் முதல் வகுப்பில் போவதைக் கண்ட தும், விரைந்து சென்று அலுவலர்களுடன் வந்தார். அலுவலர் காந்தியடிகளிடம், இப்படிவாரும்; நீர் பொருள்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்றார். என்னிடம் முதல்வகுப்புச் சீட்டு இருக்கிறதே என்றார் அடிகள். அதைப்பற்றி அக்கறை இல்லை. நீர் பொருள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றார் அலுவலர். நான் உமக்குச் சொல்கிறேன்; இந்த வண்டியில் செல்ல அனுமதிக்கப் பட்டிருக்கிறேன்; இதில்தான் செல்வேன் என்றார் அடிகள். இல்லை நீர் இதில் போகக் கூடாது; இந்த வண்டியில் இருந்து நீர் இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளக் காவலனை அழைக்க வேண்டிவரும் என்றார் அலுவலர். அழைத்துக் கொள்ளும் நானாக இவ்வண்டியில்இருந்து இறங்க மாட்டேன் என்று மறுத்து விட்டார் அடிகள். காவலர் வந்தார் காந்தியார் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். அவர் பொருள்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். வண்டிபோய் விட்டது. பொருள்கள் போட்ட இடத்திலே கிடக்கக் கைப்பையுடன் வண்டிப் போக்கர் தங்கும் அறையில் தங்கினார். அலுவலர் பொறுப்பில் பொருள்கள் இருந்தன. அது குளிர்காலம்! நடுங்கும் குளிர்; போர்த்துதற் குரியவை நிலைய அலுவலரிடம் இருந்த பொருள்களோடு இருந்தன. மீளவும் இழிவு எய்துமோ என அஞ்சிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். பின்னே பலர்க்குத் தொலைவரிச் செய்தி தந்தார் மறுநாள் வேறொரு வண்டியில் சென்றார். தொடர் வண்டியில் இருந்து இறங்கிக் குதிரை வண்டியில் செல்ல வேண்டிய இடம். அதற்குச் சீட்டு அடிகளிடம் இருந்தது. அடுத்த நாள் ஆகிவிட்டது என்று காட்டி இடமில்லை என மறுத்து விட்டார் வண்டித் தலைவர். அதனை வலியுறுத்தி வழக்காடிப் பெற்றார் அடிகள். வண்டிக்குள்ளே பிறரை உட்கார வைத்து வண்டியோட்டிக்குப் பக்கத்தில் வெளியில் இருந்த இருப்பில் அடிகளை உட்கார வைத்தார். அது பெரிய முறை கேடும் இழிவுமாம் என்பதை அறிந்தும் பொறுத்துக் கொண்டு சென்றார். உள்ளே அமர்ந்திருந்த வண்டித் தலைவர் வண்டியோட்டி அருகில் அடிகள் இருந்த இடத்தில் அமர்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்பினார். அதனால் ஏறுபடியில் அடிகள் போய் இருக்கக் கட்டளை இட்டார். அதனைப் பொறுக்க முடியாமல், போக மறுத்து விட்டார். உள்ளே வேண்டுமானால் உட்காருவேன்; ஏறுபடியில் அமரேன் என்றார். இதனைச் சொன்ன அளவில் அடிகளின் கன்னத்தில் அம்முரடர் ஓங்கி அறைந்தார். கீழே தள்ள முயன்றார். அடிகள் வண்டியின் பித்தளைக் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மணிக்கட்டுகளின் எலும்பு முறிந்தாலும் பிடியை மட்டும் விடுவதில்லை என உறுதி கொண்டார். அவர் திட்டி அடிப்பதையும், இழுப்பதையும் அடிகள் அமைதிகாப்பதையும் கண்டு உள்ளே இருந்தவர்களுக்கு இரக்கம் உண்டாகி அவரை விட்டு விடும்; அடிக்காதேயும்; அவர்மீது குற்றம் இல்லை; அவர் செய்தது சரியே; அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்து கொள்ளட்டும் என்றனர். அது முடியாது என்று கையை விட்டு விட்டுச் சிறிது பொழுது திட்டிக் கொண்டிருந்தார். இரு: இறங்குமிடம் வரட்டும் என்ன செய்வேன் என்பதைக் காட்டுகிறேன் என்று முணுமுணுத்தார்! அடிகள் வாய் திறவாமல் அமர்ந்திருந்தார். இக்கொடுமைகளெல்லாம் என்ன? வெள்ளை இனத்தவர் கறுப்பர் மண்ணிலே புகுந்து அவர் மண்ணைப் பறித்துக் கொண்டு, அவர்களைப் படுத்திய கொடுமைகள் இவை. இப் பொதுக் கொடுமையை எதிர்க்கவும், எதிர்த்து வழக்காடத் துணியவும் கிளர்ந்த காந்தியடிகளுக்கு விலங்குகளும் செய்யாக் கொடுமைகளை அம்மாந்த விலங்குகள் செய்தன. வெள்ளையர் கொடுமையை இந்திய மண்ணில் பேசிவிட்டு மீண்டும் ஆபிரிக்க மண்ணுக்குச் சென்ற அடிகள், கப்பலில் இருந்து இறங்கித் தெருவில் சென்றார். அச்செய்தியை அவரே கூறுகிறார்: நாங்கள் கீழே இறங்கியதும் சில சிறுவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். காந்தி காந்தி என்று சத்தம் போட்டனர். இதைக் கேட்டதும் ஐந்தாளு பேர் அங்கே ஓடி வந்தார்கள். அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம் பலத்துவிடக்கூடும் என்று ஸ்ரீலாப்டன் பயந்தார். பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார். ரிக்ஷாவில் ஏறுவது என்பதே எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. அப்படி ஏறியிருந்தால் அதுவே எனக்கு முதல் அனுபவமாக இருந் திருக்கும். ஆனால் நான் ரிக்ஷாவில் ஏறச் சிறுவர்கள் விடவில்லை. ரிக்ஷாக்காரனைக் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்து விட்டான். நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. மேற்கொண்டும் போக முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகிவிட்டது. முதலில் ஸ்ரீலாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி எங்களைத் தனித்தனியாகப் பிரித்து விட்டனர். பிறகு என்னைக் கற்களாலும் அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள். ஒருவன் என் தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டான். மற்றவர்கள் என்னை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தனர். உணர்வு இழந்து சோர்ந்து விட்டேன். கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு வீட்டின் முன்புறக் கிராதியைப் பிடித்துக் கொண்டேன். சற்று மூச்சு விடலாம் என்று அங்கே நின்றேன். ஆனால், முடியவில்லை அங்கே வந்ததும் என்னை முஷ்டியால் குத்தினர். அடித்தனர். எனக்குத் தெரிந்தவரான போலீ சூப்பரிண்டெண்டின் மனைவியார் அப்பக்கம் வந்தார். அந்த வீரப்பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெயில் இல்லை என்றாலும் தம் கைக் குடையை விரித்துக் கொண்டு எனக்கும் கூட்டத்திற்கும் நடுவில் நின்று கொண்டார். ஜனக் கூட்டத்தின் கோப வெறியை இது தடுத்தது. போலீ சூப்பரிண்டெண்டெண்டான ஸ்ரீஅலெக் சாண்டரின் மனைவிக்குத் துன்பம் இழைக்காமல் அந்த வெறி யர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது. என்று கூறு கிறார், அவ்வளவுடன் நின்றதா? காவல் துறையின் உதவியால் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டாலும், கூட்டம் திரண்டு வீட்டை வளைத்துக் கொண்டது. காந்தியடிகளை மாறு வேடத்துடன் வெளியேறச் செய்து காவல் துறை அலுவலகத்தில் தங்க வைத்தனர். இது சத்தியசோதனை. இத்தமிழாக்கம் இரா. வே. புகுந்த மண்ணில் பாடுபட்டதற்குப் பெற்ற பரிசுகள் இத்தகையன மிகப்பல. பிறந்த மண்ணுக்கு ஆற்றிய தொண்டுக்கு வாய்த்த துலங்கும் பரிசு என்ன? அதனை லூயிபிசர் எழுது கிறார். அதன் தமிழாக்கம் தருபவர் தி. ஜ. ர. பிரார்த்தனை மேடைக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் (காந்தியடிகள்) வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும் சில கஜ தூரம்தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந் திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோரும் எழுந்து நின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள் களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார். அப்போது ஒரு மனிதன் முழுங்கையால் இழுத்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்தில் இருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால், தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றாள். அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். ஆனால் அவனோ, அவளை உதறி ஒருபுறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக் கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மனிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டொமாட்டிக் பிடல் ஒன்றால் மூன்று முறை சுட்டான். முதல் குண்டு பாய்ந்தது. இயங்கிக் கொண்டிருந்த காந்தி யின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது. இரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பிய கைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆபாவின் கழுத்தில் பதிந்தது. ஹேராம் என்று காந்தி முணுமுணுத்தார். மூன்றாவது குண்டு வெடித்து வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைகள் பாதங்களை விட்டு நழுவிச் சென்றன. ஆபா, மனு இரண்டு பேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிறுத்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன. காந்தியின் கண்கள் பாதி மூடி யிருந்தன. அவருடைய உடம்பில் இன்னமும் உயிர் இருக்கும் குறிகள் தென்பட்டன. சற்று முன்பே மகாத்மாவை விட்டுச் சென்ற ஸர்தார் படேல் மீண்டும் அவருக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார். காந்தியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நாடி மிகவும் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. மருத்துவப் பெட்டியில் அட்ரினாலின் இருக்கிறதா என்று யாரோ ஒருவர் தேடிப் பார்த்தார். அதைச் சிறிதும் காணவில்லை. கூட்டத்தில் ஒருவர் சரேல் என்று ஓடி டாக்டர் டி. பி. பார்க்கவாவை அழைத்து வந்தார். துப்பாக்கி சுட்ட பத்து நிமிஷத்துக்கெல்லாம் அவர் வந்து சேர்ந்தார். உலகத்தில் உள்ள எதுவும் இனி அவரைப் பிழைப்பூட்ட முடியாது. அவர் இறந்து பத்து நிமிஷம் ஆகிவிட்டது என்று டாக்டர் அறிவித்தார். மகாத்மா காந்தி வாழ்க்கை 3-4 அருளாளர் காந்தியடிகளுக்கு அல்லல் இல்லையா? இப்பட்டியில் வரத்தக்கார் இன்னும் பலர் உளர். இவர்கள் குறிப்புகளே இவ்வாய்வுக்குப் போதுமெனக் கொண்டு, மேலாய்வு செய்யலாம். முழுப்பாடல் என்ன? அல்லல் அருளாள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி இப்பாடலின் முதல் மூன்று சீர்களிலேயே செய்தி நிறைந்தது. பின்னை நான்கு சீர்களும் வெறுந் தொடராய் நின்றனவா? அல்லல் அருளாள்வார்க்கு இல்லை என்பதை, உல களாவப் பார்: குறுகிய இட கால எல்லை கொண்டு மட்டும் பாராதே! உலகளாவிய பார்வையால் தான் உண்மை விளங்கும். அல்லல் என்பது நாம் உணரும் உணர்வா? அல்லல் பட்டார் உணரும் உணர்வா? அல்லல் பட்டவர் பற்றிய பிறர் எழுத்தாலும், அல்லல் பட்டவர் தாமே எழுதிய எழுத்தாலும் நாம் கண்டு கவல்கிறோமே! மிதியடியைக் காலில் போட்டு மிதித்தல் கண்கூடு. ஆனால் தொப்பியைக் காலில் போட்டு மிதித்தால்? என நினைக்கிறோமே! தாம் பட்ட அல்லல்களை அல்லல்களாக அவர்கள் கருதினார்களா? அவர்கள் கருதவில்லை என்று கொள்ளலாமா? அல்லல்பட்டாரைச் சான்றோடு அறிந்து கொண்டும் நாம் வள்ளுவர் கூறுமாறு அவர் அல்லல் பட்டிலர்; அல்லல் அவர்க்கு இல்லை என எப்படி நம்பிக்கையோடும் உறுதியோடும் கூறலாம்? இப்படியெல்லாம் வினாக்களின் மேல் வினாக்கள் எழுகின்றன. விளக்கம் காணல் வேண்டும். அல்லல் என்று அல்லல்பட்டவர் அதனைக் கருதி யிருந்தால் தம்மை அப்பாடுபடுத்தினாரைத் திட்டியிருப்பர்; தாக்கியிருப்பர்: முட்டி மோதியிருப்பர், அலை கொலைக்கும் துணிந்திருப்பர். அவர் அல்லலை அல்லலாகக் கருதவில்லை எனின் அதனை அவர்தம் சொல் காட்டும். செயல்காட்டும். இவை மெய். புத்தர் பெருமான் பெருவிரல் புண்ணாகிப் போன நிலையில் புத்தர் தேவதத்தனிடம் என்ன சொன்னார்? தேவதத்தா, ததாகதரின் (புத்தரின்) உயிருக்கே உலை வைக்கத் தூண்டிய உன் ஊழ்வினை இன்னுமா உன்னை விட்டு நீங்கவில்லை? சங்கத்தைப் பிரித்தாய். ததாகதரின் உயிரைக் கொல்லப் பலதடவை எத்தனித்தாய். ஆனால், ததாகதரின் உயிர் உன் கையில் இல்லை என்பதை நீ உணரவில்லை. நீதான் என்ன செய்வாய்? மீளா நரகில் நீ இன்னும் அழுந்திக் கிடக்க வேண்டும் என்ற கர்மம் உன்னை விட்டபாடில்லை. இப்போதாவது உண்மையை உணர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு மெள்ள நடந்து மலையேறினார். - கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் 248 சுந்தன் தந்த உணவுதானே புத்தருண்ட இறுதி உணவு. அச்சுந்தனுக்குத் தம் மாணவர் ஆனந்தன் வழியே செய்தி விடுக்கிறார் புத்தர்: ஆனந்தா! சுந்தன் கொடுத்த உணவுதான் எனது நோய்க்குக் காரணம் என்று வீணான அபவாதம் ஏற்படப் போகிறது. சுந்தன் மீது எவ்விதத் தவறும் இல்லை. அவன் பரிசுத்தன். ஆகையால், அவன் மனம் சாந்தியடையும் வண்ணம் அவனிடம் நான் சொன்னதாக இவ்வாறு சொல்ல வேண்டும். சுந்தா, நீ ததாகதருக்குக் கொடுத்த உணவு மிகப் பெருமை யுடையது. அவர் நிருவாணம் அடைவதற்கு முன்னர் உனது உணவையே உண்டு நிருவாணத்தைப் பெற்றார். ஆகையால் நீ எவ்வளவோ கொடுத்து வைத்தவன் என்று சொல். ததாகதர் வாழ்விலே இரண்டு தடவை அவருக்குக் கிடைத்த அமுது அவரால் மறக்க முடியாத சிறந்த அமுது. முதலில் அவர் சம்பாதி ஞானம் அடைவதற்கு முன்பு சுஜாதை யிடமிருந்து கிடைத்த பாலுணவு; இப்போது மகாபரி நிருவாணம் அடைவதற்கு முன்பு சுந்தனிடமிருந்து கிடைத்த உணவு. சுந்தன் ஒரு சிறந்த தானம் வழங்கியுள்ளானாகையால் நீடூழிவாழ்ந்து மறுமையில் இன்பம் பெறுவான் என்பதில் சந்தேகமில்லை, இவ்வாறு நான் சொல்லி அனுப்பியதாக அவனிடம் சொல் என்றார். - மௌதமபுத்தர் அடிச்சுவட்டில் 297-8. தேவதத்தன் செயலும் சுந்தன் செயலும் புத்தருக்கு அல்லலாகத் தோன்றியிருந்தால் இவ்வாறு அவர் சொல்லி யிருக்க முடியுமா? அதனால் அல்லல் அருளாள்வார்க்கு இல்லை என்பது மெய்ம்மையாம். கிறித்துபெருமான் கிறித்துவுக்குத் தாம் படும்பாடு அல்லலாகத் தோன்றி யிருந்தால், தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை முன்னிட்டு தந்தையே, அவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய் கிறது இன்னதென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்லியிருப்பாரா? (லூக்கா. 23: 34) இக்கருத்தை உட்கொண்டு, தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர் பிழையை மன்னியுமென் றெழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள் வள்ளல் என்று எ. ஆ. கிருட்டினர் பாடினார். இதில் எழிற்கனிவாய் மலர்ந்தார் நம் அருள்வள்ளல் என்னும் ஆட்சி அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை என்பதை மெய்ப்பிப்பதாக இருப்பது அறிந்து கொள்ளற்குரியது. சிலுவைப்பாடு அல்லலாக இருந் திருப்பின் இவ்வாறு கிறித்து சொல்லியிருப்பாரா? நபிகள் நாயகம் கஃபாவிலேயே நபிகளை அல்லலுக்கு ஆளாக்கியவர்கள் மிகப் பலர். அந்நிலையில் நபிகள் கஃபாவின் திறவுகோல் என் கைவசம் ஆகும் நாள் ஒன்று வரும் - அப்பொழுது நான் விரும்பியவரிடம் அதனை ஒப்படைப்பேன் என்று கூறினார்கள். அந்நாளில் குறைசிகளெல்லாம் அழிந்தொழிந்து விடுவார்கள் அல்லவா? என்று அண்ணலவர்களை வினவினார் உத்மான். இல்லை இல்லவே இல்லை அந்நாளில்தான் அவர்கள் தங்கள் வாழ்நாளின் உச்ச நிலையை எய்தி வாழ்ந்து நிற்பர் என்று அருளொழுகும் வாய் திறந்து பகர்ந்தனர் அண்ணல். - நபிகள் நாயகம் - 95 தாம்படுவது அல்லலாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். வலக் கையில் சூரியனையும் இடக்கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்து என்னுடைய பிரச்சாரத்தை விட்டொழிக்குமாறு கூறிய போதினும் நான் அதனை ஒரு கணமேனும் விட மாட்டேன். இறைவன் எனக்கு இம்முயற்சியில் வெற்றியளிக்கும் வரையில் அல்லது நான் இம் முயற்சியில் அழிந்தொழியும் வரையில் பிரச்சாரம் செய்தே தீருவேன் என்றும், இலாத்தின் விரோதிகள் மீது பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பமன்று. அவர்களுக்கு இன்னல் இழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை என்று அவர் கூற முடியுமா? - நபிகள் நாயகம் 87; 104 சாக்கிரடீசர் சாக்கிரடீசர்க்கு நஞ்சுண்ணல் அல்லலாகத் தோன்றியிருப் பின், விஷபானம் சித்தமாயிருந்தால் அதைக் கொண்டு வரச் சொல்லும் அல்லது சீக்கிரம் சித்தப்படுத்தச் சொல்லும் என்பாரா? அதனைக் கையசையாமல் முகம் மாறாமல் தம் கையில் வாங்கிக் கொண்டு, அப்பா? இந்தப் பானம் இவ்வளவுதானா, அல்லது நம்மிஷ்டம் போல் இன்னும் அதிகமாய்ச் செய்து கொள்ளலாமா என்பாரா? அருகில் இருந்தவர்கள் அழுவதைப் பார்த்து, நீங்கள் பொறுத்துக் கொள்ளாமல் இப்படி அழுவது தகுதியன்று ஆத்மா உடலை விட்டுப் பிரியுங் காலத்தில் சத்த மில்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். தயவு செய்து சாந்தமாய் இருங்கள் என்பாரா? என்ன மாட்டார் ஆகலின், அவருக்கு அந்நஞ்சுணவு அல்லலாக இல்லையாம். மெய்ப் பொருள் நாயனார் பொய் வேடத்தனான முத்த நாதன், மெய்ப் பொருள் நாயனாரைக் குத்திய அளவில், வாயில் காவலன் தத்தன் ஓடி வந்து, முத்த நாதனை வெட்டுவதற்கு வாளை உருவினான். அதனைக் குருதி சோர வீழும் மெய்ப் பொருளார் கண்டு, தத்தா நமர் எனத் தடுத்தார். தடையின்றி இவ்வடியார் போகுமாறு ஆளிலாக் கானம் வரை போக்கி வருக என்று வேண்டினார். அவ்வாறே முத்த நாதனை விடுத்த செய்தி அறிவதற்காக உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தார். தடையின்றிச் சென்றார் என்று தத்தம் கூறிய அளவில், இன்றெனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று பாராட்டினார். (பெரிய. மெய்ப். 16; 21) அல்லல் உற்றார் எனின் குத்தியவனை நமர் (நம்மவர்) என்ன வாய் வருமா? ஊறின்றிப் போக விரும்பி உயிர் தாங்கி இருப்பாரா? உவந்து பாராட்டுவாரா? காந்தியடிகளார் என்னைத் தாக்கியவர்களைக் கைது செய்து வழக்குத் தொடருமாறு நேட்டால் அரசாங்கத்தைக், குடியேற்ற நாடு களின் அமைச்சராக இருந்த சேம்பர்லேன் கேட்டுக் கொண்டார். உங்களைத் தாக்கியவர்களை அடையாளம் காட்டினால், அவர்களைக் கைது செய்து வழக்குத் தொடர நான் தயாராக இருக்கிறேன் என்று எகோம்பு கூறினார் என்கிறார் அடிகள். இவற்றுக்குக் காந்தியடிகள் என்ன மறுமொழி கூறினார்? யார் மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில் இரண்டொருவரை நான் அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால் என்ன பயன்...? யார் மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும், தாங்கள் நடந்து கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள் என் பதை நான் நிச்சயமாக அறிவேன் என்று வழக்குத் தொடர மறுத்து விட்டார். எழுத்து மூலமாகவும் இதனை அவர்களுக்குத் தந்தார். சுயசரிதை. 261-2 அடிகள் பட்டபாட்டை எழுதும் எட்வர்டு தாம்சன், தமது வாழ்நாளின் முடிவு வரையில் காந்தி ஒவ்வொரு வெள்ளை முகத்தையும் வெறுத்திருக்க வேண்டும் என்றார். ஆனால் அடிகளோ பெருந்தன்மையால் தாங்கினார். கோட்சேயின் குண்டு அடிகளுக்கு அல்லலாக இருந் திருப்பின், ஐயோ! கொடுமை! கொலைகாரா? என்றென்றல்லவோ கூச்சலும் அரற்றலும் கிளர்ந்திருக்கும்! ஏ! இராம்! என்று இறைமையைச் சொல்ல முடியுமா? இவற்றால் வள்ளுவர் கூறியவாறு, அருளாள்வார், தமக்கு உண்டாகும் அல்லலை அல்லலாகக் கருதவில்லை; அல்லலுக்குப் பழிவாங்க எண்ணாத அவர்கள் நல்லுள்ளமே, அவர்கள் அல்லல்களை அல்லல்களாகக் கருதவில்லை என்பதன் சான்றாகும் என்பது தெளிவாகும். மேலும், இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் என்னும் இடுக்கண் அழியாமைக் குறளும் இவண் எண்ணத் தக்கதாம். பார்வை வேறுபாடு உலகவர் பொதுப் பார்வையில் அல்லலாக இருக்கும் ஒன்று, அருளாளர் பார்வையில் அல்லலாக இல்லை. அரு ளாளர் பிறர் துடிக்கும் துடிப்பைத் தாம் தாங்க மாட்டாமல் துடித்து, அத் துடிப்பை அவர்க்கு அகற்றத் துணிவரே அன்றித் தாம் படும் அல்லலை அல்லல் எனத் துளியளவும் கருதார் என்பது இவற்றால் தெளிவாம். ஆதலால், பொதுப் பார்வையில் நாம் அல்லல் என்று கருதுவதை அருளாளர் பார்வை அல்லல் எனக் கருதாமையால் வள்ளுவக் கருத்து முரணுவது போல் தோன்றிற்றாம். அம்முரண் அகற்றி அதன் உண்மை உணர்த்துவதே இச்சுவடியின் நோக்கமாம். அடை நடைச்சீர் இனி, வளிவழங்கும் மல்லல் மா ஞாலம் கரி என்பதனை யும் மேலாய்வு செய்தல் முறைமையாம். கரி என்பது சான்று இந்திரனே சாலும் கரி (25) தானேயும் சாலும் கரி (1060) என்றும் கரியை வழங்குவார். ஞாலம் என்பது உலகம். யாம் கூறும் செய்திக்கு இவ்வுலகமே உலகப் பெருமக்களே - சான்று என்கிறார். ஞாலுதல் என்பது தொங்குதல் பொருளது. அது தட்டை எனத் தோன்றினாலும், உருண்டையானது. ஓடாது நிற்பது போல் இருந்தாலும், விரைந்து ஓடிக் கொண்டே இருப்பது. கண்ணெட்டிய அளவு இவ்வளவே எனக்கண்டாலும், விரிய விரிய விரிவாக விளங்குவது அது. வெளிப்படு பொருள்கள் அளவில் நில்லாமல் அகப்படு - உள்படு - பொருள்களாக அரியவை பலவற்றைக் கொண்டதும் அது. இன்னும் மலைவளம் - கான்வளம் - வயல்வளம் - கடல் வளம் என எண்ணில் அடங்காதவை உண்டு அதில். காற்று - ஒளி - நீர் - நெருப்பு என்னும் வளங்கள் தாம் என்ன குறைந்தவையா? வளியாகிய காற்றுத்தானே உயிர்மூச்சு; அது கண்ணுக்குப் புலப்படுகின்றதா? அக்காற்றின் வழியே வரும் ஒலி, ஒளி என்னென்ன விந்தை களுக்கு எல்லாம் இருப்பாக உள்ளன! ஒவ்வோர் அண்டமும் தன்னைத்தானே சுற்றும் சுழற்சியும், பிறவற்றைச் சுற்றும் சுழற்சியும், ஒன்றை ஒன்று மோதாமல் உரிய கடனாற்ற உதவும் ஈர்ப்பாற்றலும் அவ்வாற்றலால் அண்டம் விட்டு அண்டம் செல்லும் வாய்ப்பும் உண்மையும் ஆகிய எல்லாம் எல்லாம், எண்ண எண்ண எத்தகைய வியப்பும் நயப்பும் விந்தையும் விரிவும் ஆவன? அகழவும் - வெட்டவும் - இடிக்கவும் - குத்தவும் இடந்தந்து, அவ்வாறு செய்வாரையும் நிலைபெறத் தாங்கி அவர்க்கு வேண்டும் உண்டி, உடை, உறையுள் முதலாம் எல்லாம் வழங்கிப் பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இம்மண்ணின் பேறுதான் என்னே! என்னே! வளி வெளிப்படத் தெரிவதா? அதன் கொடைகள் தெரிவனவா? ஞால இயக்கம் வெளிப்படத் தெரிவனவா? ஞால மல்லல்கள் எல்லாம் வெளிப்படத் தெரிவனவா? வெளிப்படத் தெரியாமையால் இல்லை என்பார் ஆர்? அது போல், அல்லலை அல்லலா எண்ணா இருப்பும் அரிது என்ப தால் இல்லை எனலாமா? இவ்வுலகப் பேறு இவையென்றால் இவற்றையெல்லாம் ஆய்ந்து பொறிவாயில் ஐந்துவித்து ஐந்தின் வகை தெரிந்து நிலையில் திரியாது அடங்கி அருள்நெறிச் செம்மலாய் விளங்குபவர் பேறு இம்மட்டு அம்மட்டோ! என்பவற்றை யெல்லாம் எண்ணுமுகத்தான், வளிவழங்கும் மல்லல் மா ஞாலம் கரி என விரிவான அடைகள் நடையுறத் தொடுத்து வைத்தார் வள்ளுவர். இந்நடைய குறள் மற்றொன்று திருக்குறள் முழுமையும் இல்லை என்பதைக் காணின் இதன் அருமை மேலும் விளக்கமாம். மன்னுயிரும் தன்னுயிரும் இனி நாம்படுகின்ற அல்லல் அல்லலாக இருக்க அருளார்க்கு ஏன் அவர்கள் பட்ட அல்லல் அல்லலாக இருப்ப தில்லை என்பதையும் வள்ளுவர் விளக்குகிறார். தம்முயிர் ஓம்ப வாழ்வார் அல்லர் அருளாளர். அவர் தம்முயிர் வாழ்வை நினைப்பதே பிற உயிர்களுக்குத் தாம் செய்ய வேண்டும் கடமைகளைச் செய்வதற்காகவேயாம்! பசிக்காமல் உண்டு, அலுக்காமல் உழைத்து, அயராமல் வாழ்ந்து, வாடாமல் திரிய அவர் வாழ்வார் அல்லர். எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்று அறியாத அவர், முற்றிலும் தம்நலப் பற்று அற்றவராவர். ஆதலால், தற்பற்றொழிந்தார்க்கு இன்பு என்ன? துன்பு என்ன? ஓடும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் நோக்கும், வாளால் போழினும் தாளில் வீழினும் ஒப்ப எண்ணும் ஒருநிலையும் உடையவர்க்கு உறுதுயர் என்பது என்ன? உவகைப் பேறு என்பது என்ன? அதனாலேயே. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை (244) என இப்பாடற்கு முற்பாடலில் கூறினார் வள்ளுவர். உலகத்து உயிர்களை எல்லாம் பேணும் அருள் ஒழுக்கம் கொண்டவனுக்குத் தன் உயிர்குறித்து அஞ்சுதற்குரிய தீய செயல்கள் உண்டாகா என்று தெளிந்தோர் கூறுவர் என் கிறாரே திருவள்ளுவர். திரட்டு அல்லல் என்பது தீராத்துயர்; அத்துயர்க்கு ஆட்பட்டவர் களாக அருளாளர் வாழ்வியல் நமக்குத் தோன்றினும், அவர்கள் அத்துயர்க்கு ஆட்பட்டவராக இருந்திலர். இதற்கு அவர்கள் வாக்குகளும், வாழ்வியல்களும் சான்று. அத்தகைய சான்றோர் பெருமக்கள் ஓரிடத்து ஒரு காலத்து அமைவார் அல்லர். உலகளாவிய அளவில் காலம் காலமாக இருந்துளர். அத் தகையர்க்குச் சான்றாவார் என, புத்தர்பெருமான், கிறித்து பெருமான், நபிகள் நாயகம் என முப்பெருஞ் சமயத்தோன்றல் களும், மெய்ப்பொருளறிஞர் சாக்கிரடீசரும் நாயன்மாருள் ஒருவராய மெய்ப்பொருளாரும், இன்னா செய்யாமையின் வலிமையை வன்முறை உலகமும் அறிய எடுத்துக் காட்டிய அண்ணல் காந்தியடிகளும் ஆகிய அருட்பெருந் தகையர்கள் அறுவர் எடுத்துக்காட்டப் பட்டுளர். வளிவழங்கும் மல்லல் மாஞாலம் என்னும் அடைநடையின் நயமும், மன்னுயிர் ஓம்புவார்க்குத் தன்னுயிர் அஞ்சும் வினை இல்லை என்னும் வள்ளுவ வாய்மையும் முடிபொருளாய் அமைந்தமை இச் சிறுசுவடித் திரட்டாகும். 26. நினைக்கும் நெஞ்சம் முகவாய் நினைக்கும் நெஞ்சம் என்பது நன்மையாவதை நினைக்கும் நெஞ்சமாம். நினைக்கும் நெஞ்சம்தான் நிறைவேற்றுதற்கு மூலத் தூண்டலாம் என்பது வெளிப்படை. நினைக்கவே இல்லை எனின், நிறைவேற்றல் கூடுமா? திருக்குறளை நடைநூலாக்க - ஒவ்வொருவரின் நடத்தை நூல் ஆக்க - விரும்பியது, இந்நினைக்கும் நெஞ்சச் சுவடியாகும். இவை சிறிய சிறிய துணுக்குகள்! இத்துணுக்குகளின் பின்புலம் திருக்குறள் வாழ்வை நாம் கொள்ள முடியும் என்னும் எழுச்சித் தூண்டலாகும். இதனைப் பற்றி நடக்க நினைப்பவர்க்கும், ஆர்வமும் அரவணைப்பும் ஊக்குதலுமாக இருக்க வேண்டுபவர்க்கும் இச்சுவடி பயனாம். ஒரு குறளைப் பற்று; ஒன்பது குறள் உன்னைப் பற்றும் என ஊக்குதற்கு உதவும் சுவடி இது. ஓரதிகாரப் பொருளையோ ஈரதிகாரப் பொருளையோ பற்றிக் கொள்ள இயலாதே எனத் தளர்வார்க்கு இயல்வதைப் பற்றத் தொடங்குங்கள்; எல்லாமும் இயல்பாகி விடும் என்று எழுச்சி கொள்வதற்கு உதவும் சுவடியும் இது. உங்களால் அறியப்படும் அளவு எவ்வளவோ அவ்வளவு அறிந்துகொள்க; அது, முழுவதாக அறிந்து தெளிந்து கொள்வ தற்கு வழிகாட்டும் என்பதும் இச்சிறு சுவடி! திருக்குறள் திறமை வேண்டுவதே! தெளிவும் வேண்டு வதே; இவற்றிலும் வேண்டுவது திருந்திய நடை என்பதனை நயமாகக் கூறுவது இந்நறுக்குச் சுவடி! இதன் பார்வையும் பயனும் உங்கள் பார்வையும் பயனும் ஆவதாக. நினைக்கும் நெஞ்சப் பொருளில் தலைப்பட்டது, வாழ்க்கைத் துணை! அத்துணையின் நினைவு நாளில் வெளிப் படுவது இந்நினைக்கும் நெஞ்சம்! வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ மாகியவர் நினைவுக் கொடை, நிறைவான கொடைதானே! ஒருவர் பிறந்த நாளும் நிறைந்த நாளும் ஒன்றாகுமோ? அப்படி அமைவது சிலர்க்கு இயற்கைக் கொடை அவர் அரும்பியது : 25. 10. 1930 அவர் உதிர்ந்தது: 25. 10. 1977 நினைவில் வாழும் பெருந்தகைச் செல்வத்தின் நினைவு நாளில் நினைக்கும் நெஞ்சம் வெளிப்படல் நிறைவுதானே! இன்பமே சூழ்க! இரா. இளங்குமரன் 1. ஆலமரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகளுடையதோர் ஆலமரம். அந்த மரத்தில் சிலகிளைகளில் ஏற முடியாதெனச் சிலர் திகைப்படைந்தால் அந்தக் கிளைகளில் மட்டும் ஏறாமல் அவர் இருந்துவிட்டுப் போகட்டுமே! அவரே ஒருநாள், அந்தக் கிளைகளிலும் ஏறமுடியும் என்று துணிவு கொண்டால் அப்பொழுது அவற்றில் ஏறட்டுமே! அக்கிளைகளிலும் ஒன்று ஒன்றாகத்தான் முயன்று ஏற முடியும் என்றால், அதனை அவர் நிலைக்குத் தக்கவாறு அவரே முடிவெடுத்து ஏறட்டுமே! அந்த ஐந்தாறு கிளைகளிலும் அவர் கட்டாயமாய் ஏறி யாக வேண்டுமென வற்புறுத்தி, அதனால் அந்த ஆலமரத்திற்கு உரிமை இல்லாதவராக - அப்பாற்பட்டவராக - ஆக்குவானேன்? அச்செயல் ஒருவரை மட்டுமன்றி ஒரு கூட்டத்தையே - பெருங்கூட்டத்தையே - ஆலமரத்திற்கு அப்பாற் பட்டவராகவே ஒதுக்கிவைத்த குற்றம் ஆகிவிடாதா? ஆம்! திருக்குறள் ஆலமரத்தைத்தான் சொல்கிறேன். 2. ஊன்றுகோல் நூற்றுக்கு நூறும் ஏற்றுப் போற்றத்தக்கது - ஏற்றுப் போற்ற வேண்டும் - என்று எந்தச் சமய நூலாவது கட்டுப்பாடு விதித்தால், அச்சமயத்தைச் சார்ந்து எத்தனை பேர் இருப்பர்? வழுக்கு நிலத்தில் நடப்பவன் சறுக்காமல் நடக்கவேண்டும் என்பதற்குத் தானே ஊன்று கோலைப் பிடிக்கிறான். அந்த ஊன்றுகோல் உள்ளபோதும் சறுக்கி விடுவ தில்லையா? அப்பொழுது, அருளமைந்த உள்ளத்தான் என்ன சொல்வான்? அப்பா! ஊன்றுகோலை இன்னும் வலுவாகப் பிடி; காலை இடம் பார்த்து வை; விரைவு படுதல் இல்லாமல் அடுத்த அடியை எடுத்துவை; நம்மால் சறுக்கல் இல்லாமல் நடக்க முடியுமென எண்ணி உன் நாடி நரம்புகளில் வலுவேற்று; சறுக்கிச் சறுக்கி உறுதிவாய்த்த பின்னர்த்தான் சறுக்காமை உண்டாகும் என்று சொல்லித் தேற்றுவான் அல்லனோ? அவன் சறுக்குகிறான் என்பதற்காகக் கோலையே பறித்துக் கொண்டால் முறைமையாகுமா? அது நடக்க வைக்க விரும்பும் நல்லோன் செயலாகுமா? திருக்குறள் ஊன்றுகோல் பயன்பாட்டுக்கும் இவ்வெண் ணம் வேண்டாவா? 3. நடைப்பயிற்சி பேரனையோ, பேர்த்தியையோ இருவரையுமோ கையில் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் தாத்தா எப்படி நடக்கிறார்? அந்தக் குழந்தைகள் நடைக்கும் குறுகுறு நடையாய் நடக்கிறாரே! தமக்கு முன்னர் அவர்கள் நடக்க ஓடவிட்டு உவப்பாகச் செல்கிறாரே! ஆனால் அக்குழந்தைகளின் காலெட்டுக்கு மேலே அவர் நாலெட்டு வைத்தால்! அடுத்த நாள் நடைக்கு அழைக்கும்போது வராமலே எட்டெட்டுத் தள்ளிப் போய்விடுவார்களே! நடை தெரிந்த தாத்தா, தம் நடையைக் குறைத்துக் காட்டிக் குழந்தைகள் நடையைப் பெருக்கிக் காட்டுவார். தாத்தாவை முந்தும் மகிழ்ச்சியிலே அவர்கள் நடக்கப் புறப்பட்டால் அவர்க்கு முந்திப் புறப்பட்டு அவர் கையைப்பற்றிச் செல்வர். இம்முறை, அறிவறிந்த தாத்தா நடைமுறை! ஓட்டம் வேண்டும்; விரைவு வேண்டும்; முந்த வேண்டும்; பரிசு வேண்டும்; பாராட்டு வேண்டும் - என்பவற்றையெல்லாம் மறந்தவரா தாத்தா? இல்லை! நினைந்ததால் தான் இப்படி நடைபயிற்றுகிறார். உலகநடைப் பயிற்சி - உலக ஓட்டப் பயிற்சி - வேண்டும் என்பதற் காக அதுவும் ஒரு காலத்தில் ஒரு சிலர்க்கு வேண்டும் என்பதற் காக - தவழ்பவர் - குறுநடையர் - மென்னடையர் - மெது ஓட்டமுடையவர் ஆகியவரையெல்லாம் ஒதுக்கிவிடத் தாத்தா நினைத்தல் இல்லை. அனைவரையும் அரவணைத்து உயர்த்து வதே அவர் நோக்கம். திருவள்ளுவர் நடைபயிற்றும் தாத்தா போன்றவர். உலகம் ஏற்றுப் போற்றவேண்டும்! உலகம் ஏற்றுப் போற்றத், தாமே ஏற்றுப் போற்றும் பரப்புநர்ஆக வேண்டும்! அதற்குத் தூண்டுதல் திருக்குறள் நம் மறை என்னும் குறிக்கோள்! 4. சமைத்தல் தாய் சோறாக்குகிறார்; சோறாக்கும்போது அவர்க்குள்ள எண்ணங்கள் தாம் எத்தனை? குடும்பநிலையை எண்ணுகிறார்! பொங்கிப் பொரித்தலாலேயே குடும்பத்தை வறுமைக்கு ஆளாக்கி விடக்கூடாது. சிக்கனம் வேண்டும். சிக்கனம் கருமித்தனமாகியும் விடக்கூடாது. வருவாய்க்குத் தக்க வகையில் உணவுச் செலவு முதலியவை இருத்தல் வேண்டும். இவற்றையெல்லாம் எண்ணுகிறார். செலவைக் கருதும் வேளையில் குடும்பத்தவர் உடலையும் கருதுகிறார். குழந்தை, வளரும் பிள்ளை, உழைப்பவர், முதியர், நோயர் - இவர்களுக்குத் தக்க உணவு வேண்டுமே! அந்தச் சிக்கனத்தோடு இந்தச் சீர்மையும் அல்லவோ அவரைச் சுற்றிச் சுழல்கின்றது. இவ்வளவுடன் அமைகிறதா தாயுள்ளம்? கீரைக்கறியாக இருந்தாலும் எத்தனை சுவையாக ஆக்கு கின்றது. அத்தனைபேர் நாக்கும், அத்தனைபேர் உடல் நலமும், அத்தனைபேர் தேவையும் தாமே உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து, பழகிப் பழகிப் போன கைத்திறத்தில் சமைத்து வைக்கின்றாரே! விருந்துக்கு விருந்தாய், மருந்துக்கு மருந்தாய் உணவாக்கும் அவர், உணவை மட்டுமா ஆக்குகிறார்! உணர்வையும் சேர்த்தன்றோ ஆக்குகிறார். தாயுள்ளத்தில் நின்றன்றோ அறநூலை ஆக்கியுள்ளார் திருவள்ளுவர். அதன் பயன்பாடு கருதித்தானே ஆக்கினார்! 5. படைத்தல் தாய், தாம் ஆக்கிய உணவையும் தான், எப்படி எப்படி எல்லாம் ஊட்டுகிறார்; படைக்கிறார்; ஆக்குமுன் எண்ணிய எண்ணம்; ஆக்கும் போது இருந்த உணர்வு; படைக்கும்போது உள்ள கருத்து; இவற்றை எண்ண எண்ண அத்தாய்ப் பிறப்பின் அருமையும் பெருமையும் எப்படிப் பளிச்சிடுகின்றன. வள்ளுவர் உள்ளம் எளிய உள்ளமா? அவர் உணர்வும் எளிய உணர்வா? அவர்க்கு எவ்வளவு பெரிய உள்ளம். எவ்வளவு மேலோங் கிய உணர்வு! குடும்ப அளவில் நிற்கும், தாயுள்ளம்; வள்ளுவர் உள்ளம்? உலகாக விரியும் பேருள்ளமன்றோ அது! அதுதானே தெய்வ உள்ளம்! உடல் வளர்க்கும் சமையலா ஆக்கினார் வள்ளுவர்? உயிர் வளர்க்கும் சமையல் அன்றோ செய்தார்! காலமெல்லாம் உலகோர் நலம் கருதிய கருத்தே கருவாகக் கொண்டு அன்றோ திருக்குறள் சமையலைச் செய்தார்! உயிர் வளர்க்கும் அச்சமையலையும் எவ்வளவு சுவையாய் எவ்வளவு சிக்கனமாய் - எவ்வளவு தகவாய்-அமைத்தார் எவ்வளவு அருமையாக எடுத்தும், படைத்தும், உவப் பித்தும், ஆட்டியும், காட்டியும் ஊட்டினார். அன்று மட்டுமா ஊட்டினார்; இன்றும் ஊட்டுகிறாரே! என்றும் ஊட்டுவாரே! அவ்வூட்டம் கொண்டு ஊற்றம்பெற வேண்டாவா! பிறர் ஊற்றம்பெற நாம் எடுத்தெடுத்து ஊட்ட வேண்டாவா! நேற்றைக் கறியும் குழம்பும் பழங்கறி பழங்குழம்பு! அப்படிப்பட்ட பழையதா வள்ளுவம்! என்றேனும் ஆறிப்போவதா? அலந்து போவதா? கைத்துப் போவதா? கசந்துபோதா? என்றும் புதியது என்றானே ஒருவன் வள்ளுவ மாலையில்! அத்தகைய புத்தம் புதிதன்றோ அது! பரிவோடு ஆக்கிவைத்த அப்புது விருந்தை, ஆக்கியவர் உணர்வறிந்து படைக்கும் பரிமாறிகள் வேண்டும்! அப்பரிமாறிகள் வள்ளுக் குடியிருப்புகள் என்னும் உணர்வு வருமாறு வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டும்! எவ்வளவு சிறந்த விருந்தாயினும் என்ன? படைக்கும் முறையில் அன்றோ, அந்த ஆக்கியின் அருமையும் தேக்கிக்கிடக் கின்றது. இன்று வேண்டுபவர், வள்ளுவ விருந்தை வகையாகப் பரிமாறவல்ல பரிமாறிகள்! வள்ளுவச் சுடராய் வந்து வழங்கும் பரிமாறிகள் உண்டா னால் - பெருக்கமானால் - வையகச் சமயமாவது வள்ளுவச் சமயமே என்பது உறுதியாகிவிடும். 6. அறிவுப் பூங்கா விந்தைமிகு பூங்கா திருக்குறள்! அனைத்தும் அனைத்தும் வாடாச் செடிகொடி மலர் களால் அமைந்த பூங்கா! எங்கும் புகுவாய் (வாயில்) எங்கும் கட்டில்லா உரிமை! காலம் நேரம் காவல் - எதுவும் இல்லாத தனிப்பெரும் பூங்கா! பொதுப்பூங்கா! நறுமணப் பூங்கா ஆர்வக் கட்டணம் ஒன்றன்றி, அயற்கட்டணம் இல்லாத அறிவுப் பூங்கா! அதனுள் போகக் கூடாதா? போற்றி நலம் பெறக்கூடாதா? 7. உலக வைப்பகம் திருக்குறள் உலக வைப்பகம்! அது முதலும் தரும்! வட்டியும் தரும்! வட்டிக்கு வட்டியும் வாரி வாரி வழங்கும்! உள்ளூர்த் தேவையா, உண்ணாட்டுத் தேவையா! உலகத் தேவையா - உடனுக்குடன் உதவும்! எங்கும் உடனிருந்தும் - எங்கும் உடன்வந்தும் - ஒன்றி உறைந்தும் - வேண்டும் போதெல்லாம் வேண்டுமளவுக்கு - நேயத்தால் வழங்கும், நிகரிலா வைப்பகம் அது. ஆளர் இன்றி ஆளாளுக்கு எடுத்துக் கொள்ளவும், ஆரார்க்கும் வழங்கவும். வள்ளுவ வள்ளல் வழங்கிய ஒப்பற்ற வைப்பகம் அது. வாரிக் கொண்டும் வழங்கியும் வாழ்வோமா? 8. துறைவாரி அங்காடி நகர் தோறும் துறைவாரி அங்காடிகள் (Departmental stores) உண்டு. தொகுப்பங்காடிகள் (Complex) உண்டு.! திருக்குறள் ஒப்பற்ற துறைவாரி அங்காடி! தொகுப்பங் காடி! அவரவர் துறைக்கும் தேவைக்கும், தகத் தேர்ந்து தேர்ந்து அதில் எடுத்துக் கொள்ளலாம்; போற்றிப் பயன் கொள்ளலாம். பலப் பல இடங்களுக்கும் அலையும் காலக்கழிவும் செலவும் இல்லாமல் கைப் பொருளெனக் கருதிக் கருதி எடுத்துக் கொள்ளலாம்! தேவைக்குத் தக எடுத்துத் தேவைக்குத் தகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இருப்புச் சரக்காகவும் வைத்துக் கொள்ளலாம். இவற்றைச் செய்வோமா? 9. பாகு சொல்லத் தெரிந்தவர்க்குக் கருத்து இருப்பது இல்லை; கருத்து இருப்பவர்க்குச் சொல்லத் தெரிவது இல்லை; சுருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குப் பெருக்கமாகச் சொல்லத் தெரிவதில்லை; பெருக்கமாகச் சொல்லத் தெரிந்தவர்க்குச் சுருக்கமாகச் சொல்ல வருவதில்லை; இலக்கணம் தெரிந்தவர்க்கு இலக்கியப் படைப்பு அருமை; இலக்கியப் படைப்பாளிக்கு இலக்கணத் தெளிவு இடர்; பொருள் தெளிவுக்குக், கட்டுப்பாடான யாப்புத் தடை; யாப்புக் கட்டுப்பாட்டுக்குச் சொல்லும், சுவையும் முட்டடி; - இவ்வெல்லா இடர்களும் இல்லாமல், எவரும் போற்ற வெளிப்பட்ட பாகு நூல் திருக்குறள்! பாகு எனினும் பயன்படுத்தினால் தானே பாகு? 10. உருவுகதிர் உடலை ஊடுருவி உள்ளுறுப்பை ஒளிப்படமாக்கிக் காட்டும் உருவுகதிர் (X-Ray) அறிவியற் கொடை! ஆனால், உள்ளத்தின் உள்பொருளாம் உணர்வைத் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்ட வல்ல உருவுகதிர் உண்டோ? உண்டு! அது தான் திருக்குறள்! திருக்குறளாம் உருவுகதிர்ப் படங்கள் ஒருவர் ஒளிப் படங்களா? இருவர் ஒளிப்படங்களா? உலகோர் ஒட்டுமொத்தப் படங்கள் அல்லவோ அவை! தமிழகம் உணர்ந்துளதா அதனை? தமிழுலகு உணர்ந்து போற்றினால் அல்லவோ முழு துலகும் உணர்ந்து போற்ற ஒரு வாய்ப்பாம்! 11. உயிர் தளிர்த்தல் பழகுந் தோறும் பண்புடையாளர் நட்பு பளிச்சிட்டு வளரும். முழுகுந் தோறும் மீள மீள முழுகவேண்டும் என்னும் ஆர்வத்தை அருவி பெருக்கும். தழுவுந் தோறும் தகவார்ந்த இன்பத்தைக் காதல் மனைவாழ்வு ஊட்டும். கேட்குந்தோறும் கிளர்ச்சியுண்டாக்கிக் கிறு கிறுக்க வைக்கும் மழலைமொழி. இவற்றையெல்லாம் வென்று, உடலும் உள்ளமும் உணர்வும் ஒருங்கே மகிழச் செய்து உயிர்தளிர்க்க வைக்கும் ஒப்பற்ற இன்ப அமிழ்து திருக்குறள்! உயிர் தளிர்க்க வாய்த்த அவ்வமிழ்தை அருந்துவோமா நாம்? 12. உயிர் மருந்து காய்ச்சலிலே எத்தனை வகை? கடுப்புகளிலே எத்தனை வகை? தடுமனிலே எத்தனை வகை? தவிப்புகளிலே எத்தனை வகை? - இத்தனை வகைக்கும் மருந்து தேடி வைத்த இலவயக் கடை ஒன்று உண்டோ? உண்டாயினும், அக்கடையினும் உயர்கடை - உயிர் மருந்துக்கடை திருக்குறள் கடை! மாந்தர் மனத்துக்கண் உண்டாம் அத்தனை நோய் களுக்கும் மருந்து அங்கு உண்டு. அம்மட்டோ; அந்நோய்கள் வாராதிருக்கத் தடுப்பு மருந்தும் உண்டு.! ஒவ்வொருவர் நிலைக்கும் - நோய் நிலைக்கும் - தகத்தக உரிய மருந்துகளைச் - சுவை விருந்தென வழங்க உயிரிரக்க மருத்துவர் வள்ளுவப் பெருந்தகையும் உண்டு! இம், மருத்துவ உலகப் புதுமை, உலகப் பொருள் ஆக வேண்டுமே! ஆக்கப்பட வேண்டுமே! 13. அமுதசுரபி அருளாளியாம் ஆபுத்திரன் கை அமுதசுரபி இன்று இல்லையோ? அணிமேகலையாம் மணிமேகலையார் கை அமுதசுரபி இன்று இல்லையோ? உண்டு ! உண்டு ! இன்றும் உண்டு! என்றும் உண்டு! உலகம் உள்ள அளவும் உண்டு! அள்ள அள்ளக் குறையா அருமையும் உண்டு! அது திருக்குறளாம் அமுத சுரபியாம். வானின்றுலகம் வழங்கிவரும் அமுத மழைபோல மண்ணின் மதிநலச் சுரப்பெல்லாம் ஒன்று திரட்டிப் பொழியும் அமுதசுரபி அது! ஆராச்சுவையை எடுத்தெடுத்தூட்டி, உள்ளுதோறும் உள்ளுதோறும் உள்ளத்தே இன்ப ஊற்றெடுக்க உவப்புறுத்தும் அமுதசுரபி! எண்ணிய எண்ணியாங்கு எய்தி இன்புறத் தமிழ் மண்ணிலே வாய்த்த அமுதசுரபி திருக்குறள்! அதனைத் தரு வாரும் வேண்டும்! பெறுவாரும் வேண்டும்! 14. மணிப்பேழை! முத்துக் குளித்தென்ன? மணியைக் கழுவியென்ன? வயிரத்தைப் பிளந்தென்ன? பொன்னை எடுத்தென்ன? இவையெல்லாம் புறக் கோலப் பொருளுக்கே - புனை வுக்கே பயன்படும்! ஆனால், அகக் கோலத்திற்கன்று - அகவாழ்வுக்கே அருங் குவைப் பொருளாக - அரிதின் அரிதாகக் குளித்தும், கழுவியும், பிளந்தும், பட்டை தீற்றி எடுத்தும் வள்ளுவரால் வழங்கப்பட்ட மணிகளைக் கொண்ட பேழை திருக்குறள்! அதனைக் கொள்வார் செல்வர்; கொடுப்பாரோ பெருஞ் செல்வர்! 15. என்ன இல்லை? ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பர். சுவை இருந்தால் கருத்து இல்லை! கருத்து இருந்தால் சுவை இல்லை! செறிவு இருந்தால் புரிவு இல்லை; புரிவு இருந்தால் செறிவு இல்லை! தெளிவு இருந்தால் திருத்தம் இல்லை! திருத்தம் இருந்தால் தெளிவு இல்லை! வாழ்வு இருந்தால் வனப்பு இல்லை; வனப்பு இருந்தால் வாழ்வு இல்லை! கற்பனை இருந்தால் அடிப்படை இல்லை; அடிப்படை இருந்தால் கற்பனை இல்லை; பழமை இருந்தால் புதுமை இல்லை; புதுமை இருந்தால் பழமை இல்லை! பண்பாடு இருந்தால் பயன்பாடு இல்லை! பயன்பாடு இருந்தால் பண்பாடு இல்லை! - இப்படி ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பது பிற நூல்களுக்கு! திருக்குறளுக்கு அன்று! வேண்டும் வனப்பெல்லாம் ஈண்டியமைந்தது இன்பத் திருக்குறள்! எவருக்கு? வனப்பை விரும்பும் வளமையர்க்கு! 16. பிறந்தமண் பாட்டனாரின் பழங்கண்ணாடியையும், பாட்டியின் பழம் பட்டுத் துணியையும் பாராட்டும் உலகம், தந்தையும் தாயும் வைத்துச் சென்ற கையகல வீட்டையும் உரிமை கொண்டாடி உவக்கும் உலகம், அன்பரும் நண்பரும் ஆர்வத்தால் தந்த சிறுபொருளையும் பெரும்பரிசாகப் போற்றிக் காக்கும் நன்மனம். உலகெல்லாம் கூட்டுண்டு ஒழுக்கத்தின் தலைமணியாகக் கொள்ளத்தக்க ஒரு நூலை - திருக்குறளைப் போற்றிக் கொள்கின்றதா? அது தோன்றிய மண்ணிலே தோன்றியே பேற்றை எண்ணித் திளைக்கின்றதா? போற்றி மகிழ்ந்து திளைக்கும் நாள் எந்நாள்? அந்நாள் நன்னாள்! 17. பழஞ்சோறு நேற்றைச் சோறு, பழஞ்சோறு! ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக் குறளாம் நம்மறை இன்றும் புதிது! நாளையும் புதிது! என்றும் புதிது! சோறு - உடலை வளர்க்கும்! ‘உடலிலாது உணர்வுண்டோ? என்பர். ஆனால், உணர்வில்லா உடலால் ஆவது என்ன? நடமாடுதலால் மட்டும் மாந்தராகி விடமுடியுமா? எத்தனை உயிர்கள் நடமாடுகின்றன - ஊர்கின்றன - பறக்கின்றன! உணர்விலா மாந்தரை! மக்களேபோல்வர் என்பதன்றோ திருக்குறள். உணர்ந்து போற்றுவோமா? 18. நயத்தகு நூல் படிக்கப் படிக்கப் - படித்ததைப் பிறர்க்கு எடுத்துரைக்க உரைக்க - நூலின் நயம் சிறந்து விளங்கும். இது நவில் தொறும் நூல் நயம் எனத் திருக்குறளில் சொல்லப்படும். இத்தகைய நூல் நயத்திற்கு - நயத்தகு நூலுக்கு - எதைத் தேடுவது? என்னைப்பார்! நானே சான்று என்று நமக்குத் தன்னைக் காட்டி நிற்கின்றதே திருக்குறள்! ஈராயிர ஆண்டுகளின் அறிவு வளர்ச்சி - குமுகாய வளர்ச்சி - எத்தனை விரிந்தது! அது விரிய விரியத் தானும் விரிந்து தன்னைப் பெருக்கிக் காட்டுகிறதே திருக்குறள்! நீ வளர்கிறாயா? வளரும் அளவு எவ்வளவோ அவ்வளவு நானும் வளர்கின்றேன் என ஒவ்வொருவர்க்கும் தக வளர்ந்து செல்கின்றதே திருக்குறள்! நவில்தொறும் நூல் நயம் போலும் என்பதனைக் கூறிய திருக்குறளே அதற்குச் சான்றில்லையா?! சான்றின் பயன் என்ன? ஏற்றுக் கொள்வது தானே! 19. அறிதோறும் அறியாமை அறிய அறியத்தான் அதுவரை அறியாதது எது என்பதை அறிந்து கொள்ள முடியும்! பல்லாயிரம் நூல்களைப் படித்த பின்னர்த் தான், தாம் இதுவரை படியாதிருந்தவற்றைப் பற்றிய அறியாமை தோன்றும்! எண்ணி எண்ணித் தேர்ந்த முடிவில் தான் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அது எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனச் சொல்ல முடியும். திருவள்ளுவரோ அறிதோறும் அறியாமை கண்டற்று என்கிறார்! அறிதோறும் அறியாமை காட்டுவதற்கு வாய்த்த நூல் திருக்குறள் போல ஒன்று உண்டோ? அதனுரைக்கும் அதுவே சான்றாகத் திகழ்தல் எத்தகு பெருமையது! நாமும் அறிந்து அறிந்து நம் அறியாமை காண் போமா? 20. அவை அவை விரும்பிய போதில் எல்லாம் விரும்பிய இன்பச் சுரப்பாகத் திகழ்பவள் இனிய இல்வாழ்க்கைத் துணைவி! அதனால், வேட்ட பொழுதில் அவைஅவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் என்கிறது திருக்குறள்! விரும்பிய வாழ்வு நலங்களை - நயங்களைத் தரும் குறளுக்கு இணை எது? அக்குறளே என்பது அறிந்தோர் - ஆய்ந்தோர் தெளிவு! ஆதலால், தன் இலக்கணத்திற்குத் தானே இலக்கியமாகும் பெருமையது திருக்குறள்! அப்பெருமை நம் பெருமை ஆக வேண்டுமே. 21. அமிழ்து இன்பத்தில் அமிழ்த்துவது அமிழ்து. அவ்வமிழ்தத்தை எட்டாப் பொருளாக விண்ணவர்க்கு உரிய பொருளாகக் கண்டது தொன்ம உலகு. ஆனால், கண்கண்ட பொருளாக, கருதும் இன்ப மெல்லாம் வழங்கும் களிப்புப் பொருளாகக் காட்டுவது திருக் குறள். விண்ணமுது? அல்லது வானமுது எது? அது மழையே என்கிறது திருக்குறள். வானின் றுலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று என்பது அது! இன்பப் பொருளாக விளங்கும் துணைவியை அமிழ்தத் தால் செய்யப்பட்டது என வள்ளுவக் காதலன் இயம்பு கின்றான். மனைவி அமிழ்தம் ஆவது எதனால்? அவள் தலைவனின் உயிர் தளிர்ப்பச் செய்பவள் ஆதலால், அமிழ்தம் ஆகின்றாள்! அவள் மட்டுமா அமிழ்தம்? அவள் தரும் பால் அமிழ்து! அவள் ஊட்டும் சோறும் அமிழ்து! அவள் பெற்று வழங்கிய அருமைக் குழந்தையும் அமிழ்து! அதன் மழலை மொழியும் அமிழ்து! அவ்வமிழ்தக் குழந்தையின் கையால் பிசையப்பட்ட சோறும் அமிழ்து! இத்தனை அமிழ்தங்களைக் கண் முன்னே வைத்துக் கொண்டு இல்லாத ஊருக்கு வழி கேட்டுப் போவது போல் அமிழ்தக் கதை சொல்லித் திரிவானேன்? ஒவ்வொருவர் குடும்பமும் அமிழ்த நிலையமாக அமைந் திருக்கவும் அதனை உணராமல் அங்கும் இங்கும் அலை வானேன்? அமிழ்தக் கொள்கலமாகத் திகழ்வது திருக்குறள்! உயிர் தளிர்க்கச் செய்வது திருக்குறள்! ஒவ்வொரு சொல்லும், பொதி பொருள் சுமந்து குதிநடை கொண்டு திகழும் அவ்வமிழ்தம் கொண்டு நம் வாழ்வை அமிழ்தமாக்குவோமா? 22. பிறவிப்பேறு திருக்குறள் பிறந்தது தமிழ்மண்; திருக்குறள் எழுதப் பட்ட மொழி தமிழ்மொழி; அதனை எழுதிய வள்ளுவர் தமிழ்த் தோன்றல்; ஆதலால் என்னவர் என் மண்ணில் என் மொழியில் இயற்றிய உலகநூல் திருக்குறள். அதனால் தமிழனாக, தமிழ் மொழி பேசுபவனாக, தமிழ் மண்ணில் வாழ்பவனாக இருக்கும் பேறு - பிறவிப் பேறு - பெரும் பேறாம். எவர்க்கு இது தோன்றும்? உணர்வுடையவர்க்கே தோன்றும்! தோன்றவும் வேண்டும்! திருக்குறள் பிறந்த மண்ணில் பிறக்கவும், திருக்குறள் பிறந்த மொழியில் அதனைப் பயிலவும் மீள் பிறப்பு வர வேண்டும் என்று விரும்பிய பெருமக்கள் உரையைக் கேட்டா வது உணர்வு வாராதா? தமிழ்ப் பிறவிப்பேறு தலைப்பட்டு நில்லாதா? 23. மெய்ம்மறை போர்வீரர்கள், பகைவர் ஏவும் படைக்கலம் தம்மைத் தாக்கி இடையூறு விளைவிக்காமல் இருக்க மெய்ம்மறை ( உடற் காப்பு), அணிவதுண்டு. அம்மெய்ம் மறைக்கும் மெய்ம்மறையாய் அமைந்தது. நம்மறையாம் திருக்குறளாகும். அம்மெய்ம்மறை உடல் காத்தலால் உயிர்காக்கும்; நம் மறையாம் திருக்குறள் உடலும் காக்கும்; உயிரும் காக்கும்; குடிமையும் சுற்றமும் இனமும் ஒருங்கே காக்கும். மனக்காவல் காத்தலால் ஐம்பொறிக்காவலும், ஐம்புலக் காவலும் ஒருங்கே ஆக்கும். மெய்ம்மறை அணிந்தார்க்கு அணிந்த போதில் காவல். நம் மறையோ நம்மோடு என்றும் உள்ளும் புறமுமாய் நின்று தானே காக்கும் தனிக்காப்பாக அமையும். 24. சேணறிவி எவ்வளவோ தொலைவில் வருவதையும், மறைந்து கரவாக வருவதையும் கண்முன் காட்டிக் கடனாற்ற வைப்பது சேணறிவி (இரேடார்) ஆனால் அச்சேணறிவி காட்சிப் பொருளைக் காட்டுமேயன்றிக் கருத்துப் பொருளைக் காட்ட வல்லதோ? திருக்குறள் காலம் கடந்தும் இடம் கடந்தும் கருதுவார் கருத்துப் பொருள்களையெல்லாம் காட்டிக் காட்டி விழிப் புறுத்தும் அளவில் நில்லாமல் விழுப்பம் சேர்க்கவும் வல்லதாம். அழிவைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், ஆக்கக்குறிப்பையும் அப்பொழுது அப்பொழுதே அறிவிக்க வல்ல அரியதில் அரிய சேணறிவியாம். சேணறிவி வாய்த்தும் கண்ணை மூடிக்கொண்டால் என்ன பயனாம்? 25. விளக்கு கதிரோன் ஆகட்டும்; கைவிளக்கு ஆகட்டும். கதிர்விளக்குப் பகலில் மட்டுமே பயனமாம். இரவுப் பயனுக்கு வேறு விளக்கு வேண்டும். கைவிளக்குக்கு எண்ணெய் திரிவேண்டும்; மின்வேண்டும்; பிற, பிற வேண்டும். ஆனால், அவ்விளக்குகள் எவ்விருள் நீக்கும்? புறஇருள் மட்டுமே நீக்கும்! அகஇருள் நீக்குமா அவை? அக இருள் நீங்க அகத்தே ஒளிசெய்யும் ஒரு விளக்கு வேண்டும். அது திருக்குறள். எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு என்பது பொய்யா மொழி விளக்கு. அவ்விளக்குப் பெற்றார் அகவிளக்குப் பெற்றார். 26. பொய்யா விளக்கு குத்து விளக்கைக் கண்ட ஒருவர் குறள் விளக்கையும் நினைத்தார் நினைத்ததை இணைத்தார் அதனை ஒருபாவாக நெய்தார் அறத்துப்பால் அகலாம்; பொருட்பால் திரியாம்; இன்பத்துப்பால் நெய்யாம்; சிறந்தசொல்லே தீயாம்; விளக்கின் தண்டு குறட்பாவாம். இவ்விளக்கை வள்ளுவனார் ஏற்றினாராம். ஏன் ஏற்றினாராம்? உலகோர் உள்ளிருள் நீக்குவதற்காக ஏற்றினாராம். அறம் தகழி; ஆன்ற பொருள்திரி; இன்பு சிறந்தநெய்; செஞ்சொல் தீ; தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு என்பது அது. 27. மாசுக்கட்டுப்பாடு தீமைக்கு மூலம் எது? அழிவுக்கு மூலம் எது? பகைக்கு மூலம் எது? பழிப்புக்கு மூலம் எது? பாழுக்கு மூலம் எது? எல்லாம் எல்லாம் மனத்தில் உண்டாகும் மாசே- கறையே - மூலம். மனமாசு நீங்கினால் செயலில் மாசுசேராது! சொல்லில் மாசு சேராது! கற்கும் கல்வியில், ஆளும் ஆட்சியில், செய்யும் தொழிலில், உருவாக்கும் பொருளில் மாசு சேராது. மாசுகளுக்கு மூலம் மனமாசே! மனமாசு இல்லாமையே அறம், அன்பு, அருள், ஆக்கம் எல்லாம் எல்லாம்! மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்பது வாய்மொழி. மாசுக்கட்டுப்பாட்டிலும் மாசுக்கட்டுப்பாடு, மனமாசில்லாக் கட்டுப்பாடாம். அதனை அருள்வது திருக்குறளாம். 28. சேமக்கலம் வெப்ப நாளில் தட்பமாக்கித் தரவும், தட்ப நாளில் வெப்பமாக்கித் தரவும். வெப்பமும் தட்பமும் இல்லாமல் வைத்தது வைத்தபடி பாதுகாப்பாக வைத்திருந்து தரவும், சங்க காலத்திலே ஒருகலம் (பாத்திரம்) வைத்திருந்தனர். அதற்குச் சேமக்கலம் என்றும் சேமச் செப்பு என்றும் பெயர். வண்டியின் அச்சு ஒடிந்தால் மாற்று அச்சும், கலம் கவிழ்ந்தால் மாற்று மிதப்பும் முன்னரே கொண்டிருந்தனர். அவற்றுக்குச் சேம அச்சு, சேமக்கலம் அல்லது ஏமப்புணை எனப் பெயரிட்டிருந்தனர். இவற்றைப் போல் பண்புக்காப்பும் தற்காப்பும் வேண்டுவோர் தம் வாழ்வுக்கு முற்காப்பாகவும் முதற்காப்பாகவும் கொள்ள வேண்டும் சேமக் காப்பு முப்பாலேயாம். 29. சுரங்கம் பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே தங்கப்பாளம் தென் வடலாகப் படிந்து கிடக்கும் இடம் உண்டு. அவற்றுள் கோலார் நம் நாட்டது. நன்னூல் இயற்றிய பவணந்தியார்க்குப் புரவலனாக இருந்த குவளாலபுரம் சீயகங்கன் ஆட்சி புரிந்த பகுதி. பொன் எடுக்கும் அரிய முயற்சி பெரிது! பவழப் பாறையைக் கண்டு எடுத்து வருதலா, முத்துக்குளித்தலா, மணிவகைகளைக் கொண்டு வருதலா, வயிரச் சுரங்கத்தை அகழ்ந்து எடுத்தலா எல்லாம் அரிய முயற்சியால் அமைவன. ஆனால் அவற்றினும் சிறந்த பொன்னாய், பவழமாய், முத்தாய், மணியாய், வயிரமாய், ஏன் ஒளியமாய், ஒள்ளியமாய் (இரேடிய மாய், பிளாட்டினமாய்) ஓரிடத்துக் கொள்ள இருக்கும் சுரங்கமாக - புதையலாக - கருவூலமாகத் திருக்குறள் இருக்கிறதே. அதனைக் கருத்துள்ளோர் கண்டு கொள்ளக் கூடாதா? அக்கறை யுள்ளோர் அள்ளி அள்ளி வழங்கக்கூடாதா? 30. நூல் ஏணி மலை ஏறுவதற்கும் மதில் ஏறுவதற்கும் ஆழ் கிணற்றில் இறங்குவதற்கும் நூல் ஏணி பயன்படும். நூலே ஏணியாக - ஏறும்படியாக இருந்து தன்கண் ஏறுவாரையெல்லாம் ஏற்றி விடல் வாழ்வியல் காட்சி. நூல் கற்பிக்கும் ஆசிரியரை ஏணி என்றது பிற்கால உலகம். ஆனால் பழந்தமிழுலகம் நூலையே (கற்கும் நூலையே) ஏணியாகக் கண்டது. அதிலும் அருமை வாய்ந்ததாம் ஒரு நூலைப் பற்றிக் கொண்டு நுனியேற மாட்டாதார் மயக்கம் மிக்கோராகக் கூறப்பட்டனர். நூல் ஏணி ஒன்று வேண்டும் என்றால், எங்கெங்கோ எவ்வெவையோ தேடித் திரிவானேன்? திருக்குறள் போல ஒரு நூலேணி உலகில் உண்டோ? மாந்தரைப் பிரித்தும் பிளந்தும் பிணக்கியும் காட்டாத சால்பு நூல் திருக்குறளை அன்றி உலகில் ஒன்று உண்டோ? இல்லை எனின் அந்நூல் ஏணியில் ஏறினோமா? பிறரை ஏற்றினோமா? 31. சிக்குவாரி நான்கு முடி ஒன்றாகிவிட்டால் அதற்குச் சிக்கு என்று பெயர். சிக்கை அகற்றுவதற்குச் சிக்குவாரி உண்டு. சிக்கு உண்டாகிய நிலையில் அதனை எடுப்பார், அமைந்து மெல்லென ஒவ்வொன்றாக முடியைப் பிரித்து எடுத்தல் வேண்டும். விரைந்து பட்டென வெட்டினால் முடி கொட்டிப் போகும். சிக்குவாரியின் பல் ஒடிந்தும் போகும். நூல்கண்டில் சிக்கல் ஏற் பட்டாலும் அமைந்து பிரித்தல் வேண்டும். சிக்கு நீக்கம் போன்றதே, சிக்கல் நீக்கம், அமைந்து எண்ணிப் பொறுமையாய் முயன்றால் தீராச்சிக்கல் எதுவும் இல்லை. சிக்கல் தோன்றும் போதே சிக்கல் தீர்வும் தோன்றி விடவே செய்கின்றது. ஆனால், உணர்வு வயப்பட்டோர் உடனே மனம்போலச் செயல்பட்டு மாறாத்துயர் ஆக்கிக் கொள் கின்றனர். சிக்கல் இல்லாத ஒருவர் உண்டா? அவர்க்குச் சிக்கல் தீர்வு நாட்டம் இருந்தால் திருக்குறளை ஓதிச் சிக்கல் தீர்ப்பாராக. வாழ்வியலுக்கு வாய்த்த சிக்குவாரி திருக்குறளாம். 32. சுவைப்பால் பழமும் பருப்பும் இட்டு, கண்டும் ஏலமும் கூட்டிச், சுண்டக் காய்ச்சிய ஆவின்பால் சுவைமிக்கதே. ஆனால், நாளும் பொழுதும் அதனையே பருகுவார்க்கு, பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது போல் வெறுப்பே ஆகும். கரும்புப்பால் என்ன, தேங்காய்ப் பால் என்ன எப்பால் ஆயினும் என்ன, அந்நிலையேயாம். ஆனால், எந்நாளும் புத்தம் புதுச் சுவையாய், அதன்முன் என்றும் அறியாச் சுவையாய் அமைந்தது முப்பால் ஆகும் திருக்குறளாம். மாறும் சுவையா, மறக்கும் சுவையா அது; மாறாச் சுவை மறவாச் சுவை; மனந்தளிர்க்கும் உயிர்தளிர்க்கும் மாண் சுவையினது முப்பால். அப்பால் இருக்க எப்பால் வேண்டும்? 33. பனிநீருள் பனை தவசங்களுள் மிகச் சிறியத் தினை சிற்றளவுக்கு எடுத்துக்காட்டு தினை அதற்கு எதிராம் பேரளவுக்கு எடுத்துக்காட்டு பனை. தினையும் பனையும் திருக்குறளில் பல இடங்களில் இடம் பெறும். அதனை ஒருவர் உள்ளம் அசை போட்டிருக்கிறது. அதற்கும் சிறிதாக ஒன்றை அவர் கண்டுகொண்டார். அது பனித்துளி; புல்லின் நுனியில் நின்றது. அத்துளி முன் ஒருபனை! அப்பனை முழுதுறப் பனிநீரில் படமாகத் திகழ்ந்தது. அவர் வியப்புற்றார். மேலும் வியப்புற்றார். பனித்துளியில் பனை முழுதாகத் தெரிவது போல், குறள் வெண்பாவில் மலைமலையாம் பொருள்கள் காணரிய காட்சி யாய்த் திகழ்கின்றன என்றார். கண்டு காட்டினால் நாம் காணக்கூடாதா? 34. ஆல வித்து வித்து என்பது விதை; சிறியதில் சிறிய விதை ஆலவிதை. சிறிய மீனின் சிறிய முட்டைக்கும் சிறிதாம் ஆலவித்து. ஆனால், ஆலவித்தில் இருந்து விரிந்த ஆலமரம், எவ்வளவு பெரிது! ஊரே அடங்கும் மரம் அல்லவோ அது. திருக்குறள், சின்னஞ்சிறு வெண்பாவால் தோன்றியது. அதன் பொருள் விரிவுதான் என்ன? உரைகாண்போர் அறிவு விரிவு எவ்வளவோ அவ்வளவு கொண்டல்லவோ விரிவடை கின்றது. ஆலின் விரிவைக் காண அவாவா? அடையாற்று ஆலமரம் காணலாமே! ஆலமர் வித்தின் அருங்குறள் என்பது கம்பர் இரட்டுறல் (சிலேடை) அவ்வித்தினை உளம் கொண்டால், வானளாவிய ஆலினைக் கண்டு தெய்வ நிலை எய்தலாமே! ஆலில் தோன்றி ஆலில் நிறைவது, ஆலாய்ப் பறக்கும் இந்நினைக்கும் நெஞ்சம்! 