இளங்குமரனார் தமிழ்வளம் 6 திருக்குறள் ஆராய்ச்சி -1 இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 6 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 296 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் திருக்குறள் ஆராய்ச்சி -1 1. நல்ல மாணவராக! 1 2. நல்ல ஆசிரியராக 23 3. நல்ல கணவனாக 45 4. நல்ல மனைவியாக 67 5. நல்ல பெற்றோராக 90 6. நல்ல மக்களாக 111 7. நல்ல இல்லறத்தராக 132 8. நல்ல துறவராக 154 9. ஊழ் 175 இணைப்பு 194 10. குறளாயத் திருமண முறையும் விளக்கமும் 197 குறளாயத் திருமண முறையின்தனித்தன்மைகள் 204 குறளாயத் திருமணமுறைவேண்டத் தக்கதா? 205 குறளாயத் திருமண நடைமுறைக்கு வேண்டும் பொருள்கள் 207 இணைப்பு 208 11. நல்ல தோழராக 219 12. நல்ல தொழிலராக 243 13. நல்ல ஆட்சியராக 269 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. நல்ல மாணவராக! கல்வி பழந்தமிழகத்தில், கல்வி மக்கள் அனைவருக்கும் உரிய பொதுப் பொருளாக இருந்தது. ஆண் பெண் என்னும் இரு பாலாருக்கும் கல்வி தரப்பட்டது. உழவர், மருத்துவர், வணிகர், கொல்லர், தச்சர், நெசவர், குயவர், அரசர், அமைச்சர், படையர் ஆகிய அனைவருக்கும் கல்வி தரப்பட்டது. சங்கப் புலவர்களின் பெயர்களை மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் இவ்வுண் மையை நன்கு அறிவர். மூல அலகு குடும்பம் என்னும் மூல அலகு கொண்டு ஆய்ந்தவர் திருவள்ளுவர். அக்குடும்ப அலகு, படிப்படியே விரிந்து உலக மாகிச் சிறக்க வழிகாட்டியவர் அவர். அதனால், குடும்ப அலகின் முளையாகிய மக்கட் பேற்றைப் பற்றிக் கூறத் தொடங்கும் போதே, அறிவறிந்த மக்கட் பேற்றையே பேறு என்றும் மற்றவை பேறல்ல என்றும் வரையறுக்கிறார். (61). அலை வட்டம் நீர் நிலையில் ஒரு பழம் விழுந்தால் எவ்வாறு சிறிய அலை வட்டம் எழுந்து, பின் அவ்வலை வட்டம் பெரிது பெரிதாக விரிந்து, நீர் நிலையை வளைத்துக் கொள்கிறதோ அப்படியே குடும்பத்தின் அறிவறிந்த மக்கட் பேறு. உலகளாவிய பேறாகத் திகழ வேண்டும் எனத் தெளிந்தார். அதுவே, உலகைக் காக்கும் உயர்நெறி எனக் கொண்டார், ஒரு குடும்பத்தில் நல்ல மகவொன்று பிறத்தலால் அக் குடும்பமும் அக்குடும்பம் சார்ந்தவரும் பெறும் நலங்களினும், உலகம் பெறும் நலம் பெரிதாகும் என்பது வள்ளுவர் கணிப்பு. (68). உலக நிலைபேறு வள்ளுவர் பிறந்ததால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் நாம் அடைந்து வரும் நன்மை எவ்வளவு? உலகம் அடையும் நன்மை எவ்வளவு? இரைட்டு உடன் பிறந்தாரும், எடிசனாரும், நியூட்டனாரும் பிறந்தமையால் உலகம் கொள்ளும் பயன்கள் எத்தனை? அவர்கள் பிறந்த குடும்ப அளவிலோ நன்மை நின்றது? அறிவறிந்த மக்கள், பண்பமைந்த சான்றோர், பிறர்க் கென வாழும் பெருந்தகையர் பிறந்த குடியினும் இப்பேருலகம் அடைந்து வரும் நன்மையை எண்ணியே, உலகுக்கு வாழும் உயர்ந்தோர்கள் இருப்பதால்தான் உலகம் அழியாமல் நிலை பெற்று வருகிறது என்றார் திருவள்ளுவர். (996). மனவளம் கல்வி என்பது மூளை வளம் மட்டும் அன்று; நெஞ்ச வளம் அல்லது மனவளம் இல்லாத மூளைவளக் கல்வி, அழிவுக்குப் பயன்படுமேயன்றி, ஆக்கத்திற்குப் பயன்படாது. அதனால், மூளையும் நெஞ்சும் ஒருங்கே வளம் பெறச் செய்யும் கல்வியறிவே அறிவு எனக் கண்டார் வள்ளுவர். நெஞ்ச வளம் இல்லாத மூளைவளக் கல்வியால் என்ன பயன்? அது கல்வியே அன்று என்று வருந்தினார். (315). முறை கேடு வள்ளுவர் கண்ட மனவளக் கல்வி பற்றி அறிஞர்களும், ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் சிந்திக்காமல், மூளைக் கல்வி தருவதே முறையான கல்வி என்று கொண்டு விட்டமையால் நாடு நாடாக இல்லை! உலகு உலகாக இல்லை! கற்றவர் நடத்தைக்கும் கல்லாதவர் நடத்தைக்கும், கற்றவர் செய்கைக்கும் கல்லாதவர் செய்கைக்கும் வேறுபாடு இல்லாததுடன், கல்லார் மிக நல்லர் என்று கருதும்படியான நிலையும் உள்ளது. அத னால் வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக விளங்க விரும்பு வார்க்கு இச்சுருக்கக் குறிப்பு நூல் வரையப்படுகின்றது. கல்வியின் சிறப்பை வலியுறுத்த விரும்பும் வள்ளுவர், கல்லாமையின் குறைகளையும், தீமைகளையும் நன்றாக விளக்கு கிறார். அவற்றை அறிந்தாவது அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே என்பது அவர்தம் ஆவல். புலமை அறிவு நுண்ணியது; விரிந்தது; ஆழமானது; அதனை அடைவதற்காக அருமையான ஐம்புலன்கள் நமக்கு அமைந் துள்ளன. அப்புலன்களைக் கொண்டு புலமை பெறாதவன்(ள்) எத்தகைய அழகிய தோற்றமுடையவன்(ள்) ஆனால் என்ன? மண்ணால் செய்யப்பட்ட பொ(ய்)ம்மைக்கும், வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியத்திற்கும் அவனு(ளு)க்கும் என்ன வேறுபாடு? (407) எதுவும் வேறுபாடு இல்லை. அறிவுக்கண் உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உடையன. மாந்தரே ஆறறிவுடையவர். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐந்து அறிவுகளுடன், சிந்திக்கும் ஆறாம் அறிவும் (மன அறிவும்) உடையவர்கள்! அவர்கள் கண்களும், எறும்புக் கண்களா? வண்டுக் கண்களா? யானைக் கண்களா? புலிக் கண்களா? அறிவுக் கண்கள் அல்லவா! எழுதவும் எழுதியதைப் படிக்கவும் பயன் படும் அறிவுக் கண்கள் அல்லவா! வண்டும், நண்டும், யானையும் பூனையும் போல எழுத் தறியாக் கண்கள் கண்களா? இந்தக் கடிதத்தைப் படியுங்கள் என்றால் கையால் தடவிப் பார்த்துப் பார்வை இல்லாதவர்களும் படிப்பறிவு பெற்று வரும் நாளில், கண் பார்வை இருந்தும் படிக்கத் தெரியாது என்பவரும், கையெழுத்துப் போடவும் தெரியாது கீறல் போடுபவரும் பார்வையுடையவர் ஆவாரா? கண் இருந்தும் ஒளியில்லாதவர் அவர்! அதனால் எண்ணும் எழுத்துமே மக்களுக்குக் கண்கள் என்றும் (392) கற்றறிந்தவரே கண்ணுடையவர்; கல்லாதவர் கண் என்னும் பெயரால் புண்ணுடையவர் என்றும் (393) கூறினார். களர்மண் மண் வகையிலே களர்மண் என்பது ஒன்று. அது விளை வுக்குப் பயன்படாதது; என்ன பயிர் செய்யப்பட்டாலும் தீய்ந்து பயன் தராதது. கல்வி அறிவில்லாதவர், மாந்தர் எனத் தோற்றம் கொண்டு இருந்தாலும், மண் எனத் தோற்றம் கொண்டு விளை பயன் இல்லாத களர்மண் போல அவர் மாந்தர் ஆகார். ஏதோ ஒருவர் இருக்கிறார் என்பதை அல்லாமல் உரிய பெருமைக்கு உரியவர் ஆகார். (409). விலங்கு கிளி பேசுகின்றது; நாகணவாய் பேசுகின்றது; மயில் ஆடுகின்றது; குயில் பாடுகின்றது; மாடு வண்டி இழுக்கின்றது; ஏர் உழுகின்றது; யானை புலி முதலியவை கூட பயிற்சியால் ஏவியபடி நடக்கின்றன. ஆனால் அவற்றுக்குக் கல்வி அறிவு உண்டா? சிந்திக்கின்ற திறம் உண்டா? ஏதோ உள்ள அறிவும் பயிற்சியால் வந்த அறிவே! பயிற்சி உள்ள அளவு அமைந்த அறிவே! கல்வி அறிவில்லாத மாந்தர் மாந்தர் அல்லர்; கற்றறிவுடையவரே மாந்தர்; மற்றவர் விலங்கு போன்றவர்; பறவை போன்றவர் (410). ஊர்வன. நீந்துவன போன்றவர். கல்லாதான் கல்வி அறிவில்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகக் கருதிக் கொள்வதும் உண்டு; தனக்குச் சொல்லும் ஆற்றல் உண்டு என்று எண்ணிக் கொள்வதும் உண்டு. ஆனால் அவன் ஒன்றைச் சொல்லத் தொடங்கிய அளவிலேயே அவன் அறியாமை பலர்க்கும் புலப்பட்டு விடும். (405). கல்வி அறிவில்லாதவன், சில வேளைகளில் சிறந்த அறி வாளன் போலப் பேசுவதும் உண்டு. அத்தகு அறிவையும் எப்பொழுதும் இருக்கும் கல்வி அறிவு என்று அறிவாளர் கொள்ள மாட்டார்; ஆதலால் அச்சொல்லை மதியார். (404). மிதியடி மிதியடி போட்டுக் கொண்டு சென்றாலும், வீட்டிற்கு வெளியே சென்று திரும்பும் போது மிதியடியைக் கழற்றி வைத்து விட்டு, காலைக் கழுவிக் கொண்டு, வீட்டுக்குள் வருவதே நம் வழக்கம். படக் கூடாதவை கூட காலில் அறிந்தோ, அறி யாமலோ பட்டிருக்கலாம். அவற்றையும் வீட்டுள் கொண்டு வந்து விடக் கூடாதே என்பதற்காகச் செய்யும் செயலே காலைக் கழுவுதலாகும். கழுவாக் காலொடு, முற்றம் கடந்து, கூடம் கடந்து படுக்கையறைக்கும் சென்று படுக்கையில் அக்கழுவாக் காலை வைத்தல் எத்தகைய அருவறுப்பானது? அது போல்வது கல்வி யறிவில்லாதவர் கற்றவர்கள் கூடிய அவைக்குச் செல்வதும் ஆங்கு இருப்பதுமாம். (840). தற்பகை கல்வி அறிவில்லாதவர்க்குத் துன்பம் உண்டாக்குவதற்கு வேறு எவருமே வேண்டியது இல்லை; பகைவர் வந்துதான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை! அறிவு இல்லாதவன் தனக்குத்தானே வேண்டிய அளவும் துன்பத்தை உண்டாக்கிக் கொள்வான். (843). குடிப்பெருமை புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தால் தான் என்ன? அக்குடும்பப் பெருமைக்குத் தக்கவாறு கல்வியறிவு பெறாமல் இருந்தால் அப்பெருமைக்கு உரியவர் ஆகார். மதிப்பற்ற குடும் பத்தில் பிறந்த ஒருவன் என்றாலும் அவன் கல்வியிற் சிறந்தவனாக இருப்பானேயானால் அவனே உயர்ந்தவனாகப் புகழ்மிக்க குடும்பத்தவராலும் பாராட்டப்படுவான் (409). நல்லார் வறுமை கல்வியறிவில்லாதவரிடமும் செல்வம் சேர்ந்திருத்தல் உண்டு. அச்செல்வம் அவனுக்கோ பிறருக்கோ நன்மை செய்வதாகாது. மாறாகத் தீமையும் செய்வதாக அமையும். நல்லவர் களிடத்துள்ள வறுமையைக் காட்டிலும், கல்லாதவர் இடத் துள்ள செல்வமே துன்பம் தருவதாகும். ஏனெனில், நல்லவர் பட்ட வறுமையால் பிறர்க்கு உண்டாகும் நலங்கள் உண்டா காமல் தடைப்படும் அவ்வளவேயாம்! ஆனால் கல்லாத் தீயோன் செல்வமோ பலரும் கேடடைவதற்கே வழி செய்யும் (408). அறிவின்மை இல்லாமையைப் பார்க்கிலும் கொடுமையானது என எதைச் சொல்வது? அவ்வில்லாமையே இல்லாமையினும் கொடியது ஆகும் என்றவர் திருவள்ளுவர் (1041). அவரும், அறிவில்லாமையை எண்ணும் போது, அப்பொருளில்லாமை இல்லாமை ஆகாது எனக் கண்டார். அதனால், இல்லாமை களுள் எல்லாம் தலையாய இல்லாமை அறிவு இல்லாமையே; மற்றை இல்லாமைகளை உலகோர் இல்லாமைகளாகக் கருத மாட்டார் என விளக்கினார். அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு (841) ஒரு தந்தையும் தாயும் தம் மக்களுக்குத் தேடி வைக்க வேண்டியது பொருட் செல்வமன்று; அறிவுச் செல்வமே என்று திட்டவட்டமாகக் கருதினார். அதனால், அறிவுடைய சான்றோர் அவையில் தம் மகனை ஒருவனாக இருக்க வைப்பதே தந்தையின் (தாயின்) கடமை என்பதை வலியுறுத்தினார் (67). ஒரு சொல் கல்வியில் சிறந்த மகன், தன் பெற்றோர்க்குப் பெருமையும் அருமையும் சேர்ப்பன பலவாகலாம். அவற்றுள் எல்லாம் தலையாயது, இம்மகனைப் பெற்ற பெற்றோர் எத்தகைய பெருமைக்குரியவர் என்று அவையோரும் அயலோரும் பாராட்டுமாறு அறிவுடையவனாக விளங்குதலாகும் (69, 70) என்று மகனுக்குரிய கடமை ஈதெனக் குறித்தார். தோற்றம் மக்களை மக்களாக்கும் கல்வியை, கண்ணாகும் கல்வியை, செல்வத்தினும் செல்வமாம் கல்வியைத் தம் மகவு பெற வேண்டும் என்னும் பேரார்வத்தால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். கல்வி கற்பதற்காகச் செல்லும் பிள்ளை, அங்கே எப்படிக் கற்க வேண்டும்? எத்தகைய சிறப்படைய வேண்டும்? அது, ஒருவர் ஒரு செயலில் ஈடுபட்டால் அச் செயலுக்கும் தமக்கும் புகழுண்டாகுமாறு ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறு ஈடுபடும் திறம் இல்லார், அதில் தலைப்படாது இருத்தலே அவர்க்கும் அச் செயலுக்கும் நன்மையாகும் (236) என்பதாகும். நிறைக்குறை ஒருவன் தன் காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் பட்டான். அப்போது காலே இல்லாத ஒருவன், தன் தோட் கம்புகளின் துணையால் தன் கடமையைச் செய்வதற்குக் களிப்புடன் புறப்படுவதைக் கண்டான். அவனினும் தான், பெரிய பேற்றைப் பெற்றிருப்பதாக உணர்ந்தான். அதனால், கால், கை, கண், காது முதலிய உறுப்புகள் குறையுடையனவாக அமைதல் குறையுடையனவாகா. அவை இருந்தாலும் இல்லாவிடினும், அறிய வேண்டியவற்றை அறிந்து செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்யாதிருத்தலே குறையாகும் (618) என்றார் திருவள்ளுவர். நிற்கக் கற்றல் எம் மகனாயினும் எம் மகளாயினும் கட்டாயம் கல்வி கற்றல் வேண்டும். அக்கல்வியையும் ஐயமும் திரியும் இல்லாமல் தெளிவாகக் கற்க வேண்டும்; கற்கத்தக்க நூல்கள் இவையெனத் தேர்ந்து கற்கவும் வேண்டும்; இவ்வாறெல்லாம் கற்பதன் பயனை அடைவதற்காகக் கற்றபடியே கடைப்பிடித்தல் வேண்டும். விதைத்த முளை முளைத்தென்ன, வளர்ந்தென்ன, கதிர் விட்டென்ன, மணி இல்லாத பதராக இருந்தால், முளைத்து வளர்ந்து பயன் இல்லாமை மட்டுமன்று; பட்டபாடுகள் அனைத்தும் வீண்பட்டவைதாமே என அறிவுறுத்துகிறார் வள்ளுவர் (191). ஒப்புக் கல்வி கற்க; கசடறக் கற்க; கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவர் ஆண்பாலுக்குச் சொன்னாரா? பெண்பாலுக்குச் சொன்னாரா? வள்ளுவக் கல்வி குலக்கல்வி அன்று; பாற் கல்வி அன்று; பொதுக்கல்வி; பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வகையில் கண்ட பிறப்பொப்புக் கல்வி! நானில வளம் கல்வி குடிவளப் பொருள் மட்டுமா? இல்லை; நாட்டு வளப் பொருளும், நானில வளப் பொருளும் அதுவே. அதனால், பொருட்பாலின் முதல் அதிகாரமாகிய இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்தார். கல்வி நிறைமாட்சியே, இறை மாட்சி என்பதன் குறிப்பு அது. கல்வி அறிவு இல்லானைக் காவலன் எனக் கருதவும் செய்யாதது வள்ளுவம் (383). ஊற்று உள்ளூறும் கல்வியை எண்ணும் வள்ளுவர்க்கு, உள்ளூறும் ஊற்று உவமையாகத் தோன்றுகின்றது. கையால் கிளைத்த அளவிலும், காலால் கிளறிய அளவிலும் நீர் சுரப்பது மணல் ஊற்று. அவ்வூற்றுக்கு நீர் எங்கே இருந்தது? அதன் உள்ளேயே இருந்தது! அதுவே தோண்டிய அளவில் வெளிப்பட்டது; அதுபோல் கல்வியும் வெளியேயிருந்து சுரப்பதன்று: உள்ளே இருந்தே சுரப்பது! தோண்டிய அளவுக்குத் தகத்தக நீர் சுரப்பது போலக், கற்ற அளவுக்குத் தகத்தகக் கல்வி பெருகும் என்கிறார். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (396) இதனால், உள்ளிருக்கும் கல்வியை வெளிப்படுத்துவதே கற்பித்தல் என்று இக்காலத்தவர் கூறும் ஆய்வுக் கருத்து வள்ளுவர் வழியே முன்னமே வெளிப்பட்டமை அறியலாம். கற்றார் பணிந்து நின்று கற்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்றும் வள்ளுவர் குறிக்கிறார் (295). நீர் வேட்கையுள்ளோன் நீர் பருகுவது போலவும், பசித்துயர் உடையோன் உணவு உண்பது போலவும், ஆவலாய்க் கற்க வேண்டும் என்று பிறர் கூறுவர். ஒரு முகப்பாடு கற்கும்போது அக்கல்வியே கருத்தாக மாணவர் இருத்தல் வேண்டும். அவர்களின் கண் ஒன்றைக் காண, வாய் ஒன்றைப் பேச, காது ஒன்றைக் கேட்க, கை ஒன்று செய்ய, கால் தாளம் போட இருக்குமானால் கற்கும் கல்விபதியுமோ? கற்பிக்கும் அல்லது கற்கும் கடமையிலேயே, கண்ணும் காதும் கருத்தும் எல்லாம் ஒருமுகப்பட்டுக் கற்றல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியே ஒருமுறை கேட்ட அளவில் பலமுறை கேட்ட பயனைச் செய்யும். இவ்வாறு ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வியை ஒருமைக் கண்தான் கற்ற கல்வி என்பார் திருவள்ளுவர். அவ்வாறு ஒருப்பட்டுக் கற்ற கல்வியே, வாழும் நாளெல்லாம் மறந்து போகாமல் நிற்கும் என்கிறார் (398) நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத் தீர்வது கல்வி ஆகாது. இரண்டுமுறை கேட்டால் அதனை அப்படியே சொல்ல வேண்டும் என்றும், ஒருமுறை பார்த்தால் அதனை அப்படியே எழுதிவிட வேண்டும் என்றும் அதுவே சிறந்த கல்வி என்றும் ஔவையார் கூறுவார். துமுக்கி (துப்பாக்கி) யால் சுடும் ஒருவர் எவ்வளவு கூர்மை யாகக் குறிபார்க்கிறார். கைகால் ஆடாமல், கருவி அசையாமல், கண் இமையாமல் கருத்தை ஒருப்படுத்திச் சுட வேண்டியதற்குக் குறிவைக்கிறார் அல்லவா! அக் கொலைக்குரிய முயற்சியே ஒருமுகப்பட்ட குறியாக இருக்கவேண்டுமானால் கலைக்குரிய முயற்சிக்கு, அவ்வொருமைப்பாடு வேண்டாவா? நல்வழிச் செல்லுதல் ஒரு வண்டியை ஓட்டுகிறோம். அவ்வண்டி மாட்டு வண்டியானால் என்ன, குதிரை வண்டியானால் என்ன, மிதி வண்டியானால் என்ன, உந்து வண்டியானால் என்ன அவ்வண்டி போகும் போக்கிலேயே விட்டுவிட்டால் என்ன ஆகும்? திக்கு, ஓரம் சாரம், குண்டுகுழி, முள்முடல் ஆகியவற்றைப் பார்த்து ஓட்ட வேண்டாவா? வண்டி ஓட்டம் போல்வது தானே, வாழ்வு ஓட்டம்! அவ்வோட்டத்தை இயக்கும் இயக்கி எது? அறிவு தானே! அதனால் போன இடத்திற்குப் போகவிடாமல் தீமையில் இருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவே ஆகும் என்றார் வள்ளுவர். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு (422) கல்வி ஓட்டம் ஓடுவதற்கும், போனபோக்கில் மனத்தைப் போகவிடாமல் அடக்கி, நல்லவழியில் ஒருமுகமாகச் செலுத்தினால் தான் - செலுத்திப் பழகினால் தான் - பின்னே வரும் வாழ்வியக்கத்திற்கும் அப்பயிற்சி உதவும் என நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். அறிவு என்பது என்ன என்பதையும் அதன் சிறப்பென்ன என்பதையும் திருவள்ளுவர் நன்றாகக் கூறியுள்ளார். அறிவு எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும், அதனை அப்படியே ஒப்புக் கொள்ளாமல் அதில் அமைந்துள்ள மெய்ம்மையைக் கண்டு கொள்வதே அறிவாகும். (355). எப்பொருள் பற்றி எவரெவர் சொல்லக் கேட்டாலும் சொல்பவரைப் பற்றிக் கருதாமல் சொல்லப்படும் பொருளில் உள்ள மெய்த்தன்மை இன்னதென்று கண்டு கொள்வதே அறிவாகும். (423). சான்றோர்களும் அறிஞர்களும் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை நன்றாக அறிந்து கொண்டு, அவர்கள் வாழ்வோடு தன்னை இணைத்துக் கொண்டு அவர்களைப் போல் வாழ்வதே அறிவுடைமையாகும். (426). அறிவுடையவர் என்பவர் பின்னே வரக் கூடியவை இவை என்பதை நன்றாக அறிந்து கொள்ள வல்லவர் ஆவர். அவ்வாறு அறிந்து கொள்ளாதவர் அறிவுடையவர் ஆகமாட்டார். (427). பின்னே வரக் கூடியவை இவை என்பதை முன்னரே அறிந்து கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அதிர்ச்சியடையத் தக்கதாகிய துன்பம் எதுவும் வாராது. (429). மற்றவை எவை இருந்தாலும் சரி; இல்லையாயினும் சரி; அறிவு என்பதொரு பொருள் உடையவரே எல்லாப் பொருளும் உடையவர்; மற்றைப் பொருள்கள் எல்லாம் இருந்தும் அறிவு என்னும் பொருள் இல்லாதவர் என்றால். அவர் எல்லாப் பொருள்களும் இல்லாதவரே ஆவர். அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430) அறிவுச் சிறப்பு எத்தகைய உயர்ந்த செல்வங்கள் எனினும் அவை யெல்லாம் ஒருவகையால் கேடு செய்வனவேயாம். ஆனால் எவ்வகையாலும் கேடு செய்யாத உயர்ந்த செல்வமாவது கல்வியேயாம் (400). எத்தகைய தேர்ந்த நுண்ணிய படைக்கருவி என்றாலும் அது காக்கத் தவறுகின்ற பொழுதும் நிலையும் உண்டு. ஆனால், அறிவு என்னும் படைக் கருவியோ எந்நிலையிலும் தன்னை யுடையானைக் காக்கத் தவறுவது இல்லை. எத்தகைய வலிய பாதுகாப்பு அரணமாக இருந்தால் கூட, பகைவர் உட்புகுந்து அழிக்கத் தக்க நிலைமை ஏற்பட்டு விடுவது உண்டு. ஆனால், அறிவு என்னும் பாதுகாப்பு அரணமோ எத்தகைய பகைவராலும் உள்ளே புகுந்து அழித்தற்கு முடியாத சிறப்புடையதாகும் (421). கல்வி வல்லவர் எந்நாட்டினராயினும் என்ன, எவ்வூரின ராயினும் என்ன; அவர்க்கு எல்லா நாடும் அவர் நாடேயாம்; எல்லா ஊரும் அவர் ஊரேயாம்; அவ்வாறான உலக உரிமையும் உலக உறவும் தருவது கல்வியேயல்லவோ! அக் கல்வியின் பெருஞ் சிறப்பைக் கண்ணேரில் கண்டு கொண்டிருந்தும் கூட, ஒருவர் தம் உயிருள்ள அளவும் கற்றுக் கொண்டிராமல் வீணாகப் பொழுது போக்குவது எதற்காகவோ? (397). யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. கல்விக் காதல் கல்வியறிவின் சிறப்புகளாக இவ்வாறெல்லாம் வள்ளுவர் கூறுவதன் நோக்கம் என்ன? மாந்தர்காள் இங்கே வாருங்கள்! மாந்தரை மாந்தராக்கும் பொருள், அவரைத் தெய்வமாக்கும் பொருள், அவரை எந்நிலையிலும் கைவிடாத பொருள், எத்தகு துன்பமும் ஊட்டாத பொருள், என்றும் பாதுகாப்பாக உட னிருக்கும் பொருள், உடையானை அன்றி உலகையும் உய்யச் செய்யும் பொருள் கல்வி என்னும் சுவைக்கனியே ஆகும். அக்கனி காலமெல்லாம் - இன்ன பருவம் என்று இல்லாமல் எல்லாப் பருவங்களிலும் - கருதிய அளவில் கையில் எளிமையாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்தும் அதனைக் கண்டு கொண்டு நலம் பெறாமல் கருங் காய்களைத் தேடித் தேடித் திரி கின்றீர்களே; இஃது அறிவுடைமைதானா (100), எனக் கூவிக் கூவிக் கூறுகிறார். உலகெல்லாம் கற்றுணர வேண்டும் என்னும் கல்விக் காதல் அவர்க்கு அத்தகைத்து! வளர் கல்வி நான்கு சுவர்க்குள் வருவது மட்டும் கல்வியன்று; நூலள வுடன் நிற்பதும் கல்வி அன்று; அவற்றினும் மிக்க விரிவுடையது கல்வி. பெற்றோர் தந்த பிறவிக் கொடையாலும், ஆசிரியர் தந்த அருங்கொடையாலும், நூல் தந்த நுண்கொடையாலும், உடன் பயில்வோர் தந்த உயர்க் கொடையாலும், பெருமக்கள் தந்த பெருங்கொடையாலும், புலங்கள் வழியாகக் கண்டும் கேட்டும் சுவைத்தும் முகர்ந்தும் தொட்டும் அறியும் புகழ்க் கொடையாலும், எண்ணியும் நினைந்தும் எழுதியும் பேசியும் வரும் எழிற்கொடையாலும், செய்தும் வனைந்தும், புனைந்தும் வரும் செழுங்கொடையாலும் காலமெல்லாம் பெருகி வருவது கல்வி. அறிய அறிய அறியாதவை இவை என்பதை அறியச் செய்வது கல்வி (1110). இத்தகு வளமிக்க கல்வி ஓரிடத்தின் அளவிலோ, ஒரு காலத்தின் அளவிலோ அடங்கி விட்டதாகுமோ? கேள்வி இனிக் கற்கும் பருவம் இருந்தும், கற்கத்தக்க வாய்ப்பும் துணையும் இல்லாதவர் இலரா? பெற்றோர் இன்மை, வழி காட்டல் இன்மை, பொருள் இன்மை இன்னவற்றால் கற்க முடியாதவரும் உள்ளனர் அல்லரோ! இத்தகையர் கல்விக் கண் பெறுவதற்கு வழி என்ன? கல்லாவிலங்காகவே அவர்கள் காலமெல்லாம் இருந்துவிடத்தான் வேண்டுமா? தக்க ஆசிரியரை அடுத்துக் கற்க வாய்ப்பவர் எனினும் அவ்வாசிரியர் கற்பித்த அளவிலும், அங்குக் கற்பிக்கப்பட்ட நூல் அளவிலும் கல்வி முற்றுப் பெற்று விட்டதாகுமா? காலமெல்லாம் கற்க வேண்டும் என்ற வள்ளுவர் (397). அவ்வாறு கற்க வழி கூற மறந்தார் அல்லர். அதற்காகவே கேள்வி என்பதோர் அதிகாரத்தை நாட்டினார். வைப்பு கற்றவனுக்கும் கேள்விச் செல்வம் வேண்டும்; கல்லாதவனுக்கோ கேள்விச் செல்வம் கட்டாயம் வேண்டும். முன்னவன் கேள்வி வாய்ப்பை இழந்தாலும் கல்வி வாய்ப்பாவது உண்டு. ஆனால் கல்லானுக்குக் கேள்வி வாய்ப்பும் இல்லை யானால் அவன் அடையும் அறிவுதான் என்ன உண்டு என நினைந்து, கல்வி கல்லாமைகளுக்குப் பின்னர்க் கேள்வியையும் அறிவுடைமையையும் வைத்தார் வள்ளுவர். கல்வியால் மட்டும் போதாது; கேள்வியால் மட்டும் நிரம்பாது; கல்வி கேள்வி ஆகிய இரண்டும் கூடிய வழியே சிறந்த அறிவுடைமை உண்டாம் என்பது அவர்தம் வைப்பு முறை வளமாகும். கனிச்சாறு கனியாக உண்பது கல்வி என்றால், கனிச்சாறாகக் குடிப்பது கேள்வியாகும். ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்; ஒரு நூறு நூல்களைக் கற்ற பயன் உற்றேன்; ஒரு மணி நேரம் அவர் பொழிவைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்; காலமெல்லாம் கற்க வேண்டும் நூல்களை யெல்லாம் கற்ற பேற்றைப் பெற்றேன்; அவரோடு உரையாடிக் கொண்டு உலவுவது என்பது என்ன? ஓர் அருமையான நூலகத்துடன் உவப்பாக உலா வருவது போன்றது - என்றெல்லாம் கேள்விக் காதலர் தாம் பெற்ற சுவை நலத்தைச் சொட்டச் சொட்டக் கூறும் சொற்களே கேள்விச் சிறப்பை வெளிப்படுத்தும். கேட்க கற்றவன் கேட்க என்று கட்டளையிட்டார் அல்லர் வள்ளுவர். கற்றிலன் ஆயினும் கேட்க என்றார் (414). ஒளியமைந்த கண்ணைப்பெற்றிருந்தும் எண்ணும் எழுத்தும் அறியாமல் புண்ணாக்கிக் கொண்ட கல்லாதவன், ஒளியமைந்த காதைப் பெற்றிருந்தும் கேள்வி நலம் பெறாமல் செவிடனும் ஆகிவிடக் கூடாதே (418). ஒரு பொறியைக் கெடுத்துக் கொண்ட அளவில் நில்லாமல் இரண்டாம் பொறியையும் அதன் மேலேயும் மேலேயும் கெடுத்துக் கொள்ளக் கூடாதே என்னும் இரக்கத்தால் கற்றிலன் ஆயினும் கேட்க, என்றார். ஊற்று நீர் ஆற்றுப் பெருக்குள்ள காலம் ஒன்று; ஆற்றுப் பெருக்கு அற்றுப் போன காலம் மற்றொன்று; ஆற்றுப் பெருக்கு அற்றுப் போனதென நீர்வளம் கொள்ள விரும்புவார் கையைக் கட்டிக் கொண்டு இருப்பரோ? இருப்பின் அவரினும் மடவர்தாம் எவர்? நீர்வளம் கொள்ள விரும்புவார் ஆற்று மணலைத் தோண்டி ஊற்று வழியால் நீர்வளம் கொள்வதுதானே கண்கூடான காட்சி. அவ்வாறே உரிய பருவத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு இழந்து போய் விட்டாலும்கூட அறிவுடையோர் கூறு வனவற்றைக் கேட்டேனும் அப்பேரிழப்பை ஓரளவால் குறைத்துக் கல்விப் பயன் பெறலாமே என உவமை வழியாகக் கூறுகிறார் வள்ளுவர். வாய்ச்சுவை இன்னொரு காட்சியையும் கருதுகிறார் வள்ளுவர் வாய்க்குச் சுவை இங்கே கிடைக்குமா? அங்கே கிடைக்குமா? எங்கெங்கெல்லாம் எவ்வெச்சுவை கிடைக்கும்? என்று தேடித் தேடித் திரிகின்றார்களே! இவ்வாறு, செவிக்குச் சுவை எங்கெங்கு கிடைக்கும் என்று தேடித் திரிய வேண்டாவா? அப்படித் தேடித் திரிபவர் அல்லரோ கேள்விச் சுவை அறிந்த அறிவு விரும்பியவர் என்கிறார் (413) செவிச்சுவை அப்படித் தேடித் திரியும் அறிவு விரும்பியர்க்குச் சுவை சுவையாய் வகை வகையாய் விருந்துணவே - விழா உணவே - கிடைத்தாலும்கூட அவற்றைப் பெற ஓடித் திரிவரோ? மாட்டார்! அவர் விரும்பும் செவிச்சுவை கிடைத்தற்கு இல்லாத பொழுதில் சிறிய அளவிலே வாய்ச்சுவையை விரும்பிச் செல்வர். ஏனெனில், செவிச்சுவை என்பன எட்டு அல்லவோ? நாச்சுவை என்பன ஆறுதானே! அச்சுவை தானும் ஆறிப் போனால் அற்றுப் போகுமே! அன்றியும் மீண்டும் உண்டால்தானே அச்சுவை உண்டாம்? கேள்விச் சுவை போல நினைக்கும் போதெல்லாம் இனியாதே! என நீள எண்ணுகிறார் வள்ளுவர் (412) இருப்பா? இறப்பா? வாய்ச்சுவை வாய்க்குமா, வாய்க்குமா என்று தேடித் திரிந்து கொண்டு, செவிச் சுவைக்கு வாய்ப்பு இருந்தும் செவிக் கொள்ளாமல், விலங்கோடு விலங்காக இருக்கும் மக்கள், உயிரோடு இருந்தால்தான் என்ன? இறந்து போனால்தான் என்ன? ஒன்றுதான் (420) என எண்ணுகிறார். அருமை மிக்க மாந்தப் பிறவியை அடைந்தும், அப் பிறவிக் குரிய செயலைச் செய்யாமல், விலங்காக வாழும் வாழ்வு ஒரு வாழ்வா? என்னும் ஏக்கத்தில் பிறந்த சொல் இது! இவ்வாறு இடித்துக் கூறினாலேனும், இழந்த காலம் போக, இருக்கும் காலத்தளவிலாவது கேள்விச் செல்வம் பெற மாட்டாரா? என்னும் பேரெண்ணமே இவ்விடிப் புரையாக வெளிப்பட்ட தாம். செவிச்செல்வம் வழியிலே கிடைக்கும் செவிச் செல்வத்தை விடக் கூடாது என்றால், வகுப்பிலே கிடைக்கும் செவிச் செல்வத்தை நல்ல மாணவர் விடலாமா? சருக்கரைப் புலவர் என்பார் ஒருவர். அவர் பேசும் அவையிலே கூறுவதுண்டு. நான் பேசுவதைக் காசு கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இல்லை! காது கொடுத்துக் கேட்டால் போதும்என்பார். காது கொடுத்துக் கேட்பது என்ன கடினமானதா? எனத் தோன்றும். ஆனால், அவைகளில் பேசுபவர் எவர்? கேட்பவர் எவர்? என்று கண்டு கொள்ள முடியாவகையில் பேசுவார் இலரா? நீங்கள் பேச்சை நிறுத்துகிறீர்களா? நான் பேச்சை நிறுத்தவா? என்று வினாவும் பொழிலாளர் இலரா? அதனால் தான் செவியை வாயாகவும் நெஞ்சை வயிறாகவும் கொண்டு கேள்வியாம் உணவை விருப்பத் தோடு உண்ண வேண்டும் என்றனர். (நன்னூல் 50). ஒருமுகக் கேள்வியர் விவேகானந்தரின் இளமைப் பெயர் நரேந்திரன் என்பது. அவர் வகுப்பில் பாடங்கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கண்கள் மூடியிருந்தன. அசைவு இல்லாமல் அமர்ந்திருந்தார். அவர் உறங்குகிறார் என ஆசிரியர் எண்ணி விட்டார். வகுப்பில் பாடம் கற்பிக்கும் போது கண்ணுறக்கமா? என்று கண்டித்தார் ஆசிரியர். உறங்கவில்லை; உங்கள் பாடத்தை ஒன்று விடாமல் கேட்க வேண்டும் என்று கண்ணை மூடிக் கொண்டு ஒருமுக மாகக் கேட்டேன் என்றதுமன்றி, அன்று ஆசிரியர் கற்பித்த எல்லாச் செய்திகளையும் ஒன்று விடாமல் கூறினார். ஆசிரியரும் மாணவர்களும் வியப்புற்றனர்; நரேந்திரரின் அவ்விளமைப் பயிற்சி பின்னே எப்படி விரிந்தது? நாளொன்றுக்குப் பத்தாயிரம் பக்கமும் படிக்க உதவிற்று! தமிழகத்துப் பொன்விளைந்த களத்தூரில் பிறந்த ஒருவர் வீரராகவர் அவர் பிறவியிலேயே கண்ணொளி இல்லாதவர். அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். ஏடு ஆயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த அறிவாளன்; இமயமுதல் சேதுநாடு வரை இணையில்லாப் படிப்பாளன் என்பது அது அவ்வாறே பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர், திருக்குறள் எண்வகை நினைவுக்கலை ஏந்தல் இராமையனார் போன்றவர்கள் கேள்விச் செல்வமே செல்வமாய்ப் புலமையில் தலைநின்ற பெருமக்கள் ஆவர். மணித்துளியுள் மணி இத்தகைய உலகியல் கண்டமையால் வள்ளுவர் எவ்வளவு சிறிய அளவு என்றாலும் குறைவில்லை. அச்சிறிய அளவுக் கேள்வியும் பெரிய பயனைச் செய்துவிடும் (416) என்றார். மணிக்கணக்காகக் கேட்டால் மட்டும் தான் பயனா? மணித்துளி அளவில் கேட்ட மணியான கருத்து ஒன்று, ஆழமாகப் பதிந்து விட்டால், பதியப் பெற்றவனை அது மணியாக்கி விடாதா? கடப்பாறைக்கம்பி கடப்பாறைக் கம்பியைப் பாறையில் தேய்த்துக் கொண் டிருந்தாள் பாட்டி. ஏன் தேய்க்கிறாய்? எனக் கேட்டான் பேரன் ஒரு குடைக்கம்பி வேண்டும் அதற்காக என்றாள் பாட்டி. குடைக்கம்பிக்காகக் கடப்பாறைக் கம்பியைத் தேய்க்க வேண்டுமா? தேய்க்க என்ன பாடு? என்றான் பேரன் தேய்த்துக் காட்டுகிறேன் என்றாள் பாட்டி. அப்படியே செய்தாள். செய்த துடன், கடப்பாறைக் கம்பியைத்தேய்த்துக் குடைக் கம்பி செய்ய முடியும் போது, கணக்குப் பாடத்தைத் தானா முயன்று கற்று விட முடியாது? எனப் பேரனைப் பார்த்து வினாவினாள் பாட்டி! பேரன் கணக்கில் கடையனாக இருந்தவன், தலையன் ஆனான்! ஒரு சிறிய கேள்வி எவ்வளவு பெரிய பயனைத் தந்து விடுகின்றது? ஊக்கமுடைமை வணிகத்தில் நொடித்துப் போன ஒருவர், ஊரை விட்டுக் கிளம்பினார். உள்ளம் அலைக் கழித்தது. தற்கொலைக்கு ஏவியது. போகும் வழியில் ஒரு கூட்டம். பொழிவாளர், உள்ள முதல்களில் எல்லாம் உயரிய முதல் உள்ளமே ஆகும்; உள்ளம் உடைமை, உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்; உடையர் எனப்படுவது ஊக்கம்; தளராத ஊக்கமுடைய வனிடத்துச் செல்வமே தடம் கேட்டு வந்து சேரும்; ஊக்கம் உடையவர் ஆக்கம் இழந்தோம் என்று வருந்தார்; வெள்ளம் போலத் துயரம் அடுக்கி வந்தாலும், ஊக்கமுடையவன் உள்ளத் தால் எண்ணிய அளவில் ஒழிந்துபோம்; ஊக்கமே கையில் உள்ள கரையாச் செல்வம் என்றெல்லாம் திருவள்ளுவர் சொல்லும் ஊக்கமுடைமையை விரித்துரைத்தார். தாம் இழந்தது ஊக்கமே அன்றி ஒன்றும் இல்லை. அவ்வூக்கம் இருந்தால் ஒன்றுக்கு ஒன்பது பங்கு என்ன, ஒன்பதாயிரம் பங்கு தேடலாம் எனத் துணிந்தார். எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின் (666) என்றபடி வெற்றி கண்டார். கேள்விச் சிறப்பல்லவா இது. ஊன்றுகோல் கால் வலுவாக இருக்கிறது; உடல் தெம்பாக இருக்கிறது, எனினும் வழுக்கல் நிலத்தில் நடக்கும் போது - நீரும் சேறும் அமைந்த வழுக்கல் நிலத்தில் நடக்கும் போது எத்தகு விழிப் பானவனையும் தெம்பானவனையும் கூட, வழுக்கி விழ வைத்து விடுகின்றது. அந்நிலையில் ஊன்றுகோல் ஒன்று இருந்தால் வழுக்கி விழாமல் காக்கும் அல்லவோ! அதுபோல் வாழ்வில் சோர்வு, தளர்வு, துன்பம், இழப்பு முதலியவை உண்டாகும் நிலையில், உள்ளத்தில் உறுதி மிக்கவர் கூட தளர்ந்து விடுவ துண்டு. அத்தகுநிலையில் நல்லறிஞர் சொல்லி உதவும் சொற்கள் தளர்ச்சி இல்லாமல் காக்கும். (415) கேள்விப் பயன் கேள்விச் செல்வம் உடையவர் கேட்டுக் கேட்டுத் தழும் பேறிய பயிற்சியின் முதிர்ச்சியால், பண்பாடு, மிக்கவராகத் திகழ்வர், பணிவும் இனியவை கூறலும், பிறரை மதித்து ஒழுகுதலும் ஆகியவை எல்லாம் தாமாகவே அவரை வந்து அடையும். (419). நுண்ணிய கேள்விச் செல்வம் உடையவர், எவர் எவ்வாறு கூறினும் அதன் உண்மையை அறிந்து கொள்ளும் திறம் பெறுவார்; பிழையாகவும் ஒன்றை அறிந்து கொள்ள மாட்டார். அறிவிலாவகையில் எந்த ஒன்றைச் சொல்லி விடவும் மாட்டார். (417) இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது கேள்வி எனப்படும் செல்வமானது வேறு எந்த எந்தச் செல்வங்களுக்கும் உயர்ந்ததொரு செல்வமாகுமே அன்றிப் பிற செல்வங்களுக்கு ஒப்பானதாக மாட்டாது (411). அச்செல்வம் அடைவதற்குக் கைம்முதலாக வேண்டுவது ஆர்வம் என்னும் ஒன்றுதானே! வேறென்ன இழப்பு உண்டு! இழப்பெதுவும் இல்லாமல் இணை யற்ற கேள்விச் செல்வத்தைப் பெறாமல், இழத்தல், அறிவாகுமா? இனம் உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன் என்பதொரு மேலை நாட்டுப் பழமொழி. நம் வள்ளுவரோ நட்பைப் பற்றி ஓரதிகாரமா கூறினார்? நட்பு, நட் பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என ஐந்ததிகாரங்கள் ஒரு தொடராகக் கூறினார் (79 -83) பெரியாரைத் துணைக் கோடல், சிற்றினம் சேராமை என்பவற்றையும் வைத்தார். (45, 46) அறிவுடைமையை அடுத்தே குற்றங்கடிதலையும் (44) அதனை அடுத்தே இவற்றையும் வைத்தார். ஏனெனில் அறிவுடையார், தம் அறிவில் தாழாமல் அமைய வேண்டுமெனின் குற்ற மில்லாமல் திகழ வேண்டுமெனின்-பெரியாரைத் துணைக் கொள்ளவேண்டும் என்பதும் சிற்றினத்தினரைச் சேரலாகாது என்பதும் அறிவுறுத்தற்காகவே யாம். இனச் சார்பு வளர்ந்த பெரியவர்களே இனச்சார்புக்கு ஆட்பட்டு விடுவர். சார்ந்ததன் வண்ணமாகி விடுவர். அவ்வாறாக வளர்ந்து வரும் இளைஞர், காளையர்; இளைஞையர், கன்னியர்-ஆகியவர் நிலை என்ன ஆகும். பதினகவைப் பருவத்தரை-குழந்தையரும் அல்லாத, வளர்ந்தவரும் அல்லாத - இரண்டற்கும் இடைப் பட்ட பதினகவைப் பருவத்தரைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. முதன்மை பயிற்சிக் களத்திலேயே நல்ல நண்பரைத் தேர்ந்து கொள்ளல்வேண்டும். முதல்வனாக இரு அல்லது முதல்வனோடு இரு என்பது பழமொழி. முதன்மை என்பது கல்வி முதன்மை மட்டுமன்று; பண்பு முதன்மையும் குறிப்பதே. அத்தகைய மாணவரை நண்பாகக் கொண்டிருப்பின் அறிவும் பண்பும் ஒருங்கே சிறந்து விளங்க வகையுண்டாகும். கற்றலில் இனம் ஆசிரியர் வழியாகக் கற்றுக் கொள்ளும் பாடம் குறித்து நன்னூல் நல்லதொரு செய்தியைக் கூறுகின்றது; ஆசிரியர் உரைத்தவற்றை முழுமையாக வாங்கிக் கொள்ளும் திறம் இருந் தாலும் அதில் கால் பங்கையே பற்றிக் கொள்ள முடியும். தன் னோடு படிக்கும் மாணவர்களுடன் பழகும் வகையால் ஒருகால் பங்கும், கற்றுக் கொண்ட செய்தியைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வகையால் எஞ்சிய அரைப்பங்கும், கூடிக் கல்வி முழுமை பெறும் என்கிறது அது (44, 45) அந்நூலில், உலக வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய வழக்கு களை அறிதல், பாடத்தை வரப்படுத்தல், ஆசிரியரிடம் கேட்ட வற்றை மீளவும் நினைத்தல், அவற்றில் தெளிவு உண்டாகும் அளவு அவரிடம் மீளவும் கேட்டல், தன்னொத்த மாணவர் களுடன் கூடிப் படித்தல், அவர்களிடம் வினாவுதல் அவர்கள் வினாவுவனவற்றுக்கு மறுமொழி கூறுதல் என்பனவற்றைக் கடமையாகக் கொண்டால் மடமை அகன்றுவிடும் என்றும் கூறுகிறது (41) இவற்றை அறிந்தால் சேரிடம் அறிந்து சேர வேண்டிய கட்டாயம் நன்கு புலப்படும். இனநலம் திருவள்ளுவர் ஒருவனுக்கு நல்லவர் கூட்டத்தினும் மேலான துணை எதுவும் இல்லை; அவ்வாறே தீயவர் கூட்டத் தினும் தொல்லைப் படுத்துவதும் இல்லை என்கிறார் (460). மனத்தூய்மையும் செய்கைத் தூய்மையும் ஆகிய இரண்டும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் சேரும் என்றும் (455), மனநலம் நன்றாக வாய்த்திருந்தால்தான் பெருநலமாம் (458) என்றும், தக்கவர்களை நெருங்கி இருக்கும் ஒருவனைப் பகைவரே எனினும் கெடுத்துவிட முடியாது என்றும் கூறுகிறார். தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் (446) தம்மினும் தகுதி வாய்ந்த பெரியவர் தமக்கு வேண்டியவ ராக வாய்ப்பது வலிமைகள் எல்லா வற்றினும் வலிமையாம் (444) என்றும் கூறுகிறார். நிலத்தின் தன்மைக்குத் தக்கவாறு நீரின் தன்மையும் மாறிவிடும். அதுபோல் மாந்தர்க்கு அவர்சார்ந்த கூட்டத்திற்குத் தக்கவாறு அறிவு மாறிவிடும் (452) என்றும் எச்சரிக்கிறார். மடி நன்னிலை அடைய விரும்புவார்க்கு ஆகாத இயல்புகளுள் ஒன்று மடி என்னும் சோம்பலாகும். சோம்பல், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய இளம் பருவத்திலேயே ஏற்பட்டு விடுமானால் காலமெல்லாம் உண்டாகும் கேட்டைச் சொல்ல வேண்டிய தில்லை. பயன்படுத்தப்படாத இரும்பு என்ன ஆகிறது? அதில் தோன்றிய துருவே அதனை அழித்து விடுகின்றது! அதுபோல் சோம்பல் உடையவனை அழிக்க வேறொன்று வேண்டுவ தில்லை. குடும்பம் என்பது ஒரு குத்துவிளக்கு என்பர். அவ் விளக்கில் நாள்தோறும் ஒளியேற்றும்போது அதன் திரிகளைத் திருகிக் கருக்குகளை எடுப்பர். இல்லாவிடின் விளக்குத்திரி பற்றாது; எரியாது. அதுபோல் குடும்பம் என்னும் விளக்கிலும் சோம்பல் (மடி) என்னும் கருக்குப் பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் (601). மேலும், செயலாற்றுதலில் கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், மிகுந்த உறக்கம் என்னும் நான்கும், யாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணுபவர் அணியும் அணிகலங்கள் என்றும் அருமையாகக் கூறுகிறார். சோம்பல் என்னும் குடும் பத்தைச் சேர்ந்தவையே கால நீட்டிப்பு, மறதி, மிகு உறக்கம் என்பவையாம். இவை இளமைப் பருவத்திலேயே வந்து விட்டால், முதுமையில் அவற்றின் கூத்தாட்டம் எப்படி இருக்கும்? தந்நம்பிக்கை சோம்பல் கூடாது என்றால் சுறுசுறுப்பு வேண்டும் என்பது தானே பொருள்! சுறுசுறுப்பாக இருப்பவர்க்கும் தந்நம்பிக்கை இல்லாத எவரும் எடுத்த செயலை வெற்றியாக முடிக்க முடியாது. அதனால், இச்செயலைச் செய்து முடிக்க எமக்கு முடியுமோ என்று எண்ணித் தளராமை வேண்டும்; அவ்வாறு தளராமை உண்டாயின் எடுத்த செயலை முடித் தற்குத் தக்க வலிமையை முயற்சி உண்டாக்கும் என்கிறார் திருவள்ளுவர் (611) சொல்வன்மை கற்பவர்க்கு வேண்டும் திறமைகளில் ஒன்று சொல்வன்மை ஆகும். சொல்லைப் போல வெல்லும் கருவி உலகில் அரிதாகும். சொல்லாற்றலிலேயே உலகப்புகழ் பெற்ற பெருமக்கள் பலராவர். வலிய படைக் கருவிகளைக் கொண்டவர்களும் கூட, சொல் வலிமைக்கு ஈடுதர முடியாமல் தோற்றுப் போன வரலாறுகள் எண்ணற்றனவாம். அதனால், சொல்வன்மை என்று சொல்லப் படும் நன்மை போல ஒருவர்க்கு உதவும் நன்மை வேறொன்று இல்லை என்றார் வள்ளுவர் (641) சொல்லுதலில் வல்லமையாளனாகவும், சோர்வு இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவனை எவராலும் வெற்றி கொள்ள முடியாது என்று உறுதியும் கூறினார். சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (647) அதனால் வெற்றி வாழ்வை விரும்பும் இளையவர் தம் இளமைப் பருவத்திலேயே பெற வேண்டிய பயிற்சிகளுள் ஒன்று சொற் பயிற்சியாகும். பயனில சொல்லாமை சொற் பயிற்சி வேண்டும் என்பதால், எதையாவது எப்படி யாவது பேசிப் பொழுதை வீணடிப்பது அன்று அது. பயனற்ற சொல்லை எதற்காகவும் சொல்லக் கூடாது என்பது வள்ளுவம். சொல்லவே கூடாது என்றால், பயனற்றதைச் செய்யலாமா? பயனில்லாத சொற்களைச் சொல்பவனை மகன் என்று சொல்லுதல் கூடாது. அவன் மக்களுள் பதர் ஆவன் என்கிறார் அவர் (196). மணி இருப்பது நெல்; மணி இல்லாதது பதர்; பதரை எவராவது நெல் என்பாரா? அதுபோல், பயனில்லாதவற்றைச் சொல்பவனை மகன் என்று சொல்லுதல் ஆகாது என்கிறார். நீரும் உரமும் கொண்டு நெடுக வளர்ந்து நெல் மணி தராத பதர் போன்றவனே, உண்டு வளர்ந்து உயர்ந்தும் பயனில்லாத சொற் களைச் சொல்லித் திரிபவன்! தற்செருக்கு படிப்பவர்க்கு ஆகாத குணங்களுள் ஒன்று செருக்கு ஆகும். செருக்கு, அறிவின் அடையாளம் அன்று. அறிவின் மையின் அடையாளம் ஆகும். மணிபிடித்த நெற்கதிர் தலை தாழும் அல்லவா! மணியற்ற பதர்தானே நிமிர்ந்து நிற்கும்! அப்பதர் போன்ற தன்மையரே அறிவில்லாச் செருக்கர். சாக்ரடீசு என்பார் பேரறிஞர்; பெருஞ்சிந்தனையாளர்; அவரிடம் ஒருவர் ‘உங்களுக்கு என்ன தெரியும்? என்று வினாவினார். சாக்ரடீசு, எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அது எனக்கு ஒன்றும் தெரியாது என்பது என்றார். தமிழ்நாட்டில் சித்தராக விளங்கிய திருமூலர் என்பவரோ என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்; என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் என்றார். திருவள்ளுவரோ அறிய அறியத்தான் அறியாதது எது என்பது புலப்படும் என்றார். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பது ஔவையார் பாட்டு. இவ்வாறாகவும் கல்விச் செருக்குக் கொள்வது தகுமா? இதனால் யாம் பேரறிவுடையேம் என்று ஒருவர் கொள்ளும் செருக்கு அவர் அறிவில்லாதவர் என்பதற்கு அடையாளம் என்கிறார் (841) திருவள்ளுவர். இன்னும் சிலர் தாம் படியாதவற்றையும் படித்ததாகக் கூறித் தற்பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இத்தகையவரைக் கருதிய திருவள்ளுவர், தாம்படியாதவற்றையும் படித்ததாகக் கூறி நடிக்கும் நடிப்பு, அவர்களை மெய்யாகப் படித்தவற்றைக் கூடப் படியாதவர் என்று எண்ணுமாறு செய்துவிடும் என நயமாக இகழ்ந்துரைக்கிறார் (845). முந்திரித்தனம் கல்விச் செருக்கு இல்லாவிடினும் சிலர்க்குத்தாம் கற்றதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் பேரார்வம் இருப்ப துண்டு. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய காலம் இடம் அறிந்து சொல்லுதல் வேண்டும். கற்றறிந்த பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளுதல் கடமையாக இருக்கவும் அதனை விடுத்து, அவர்களுக்கு முந்தி முந்தி எதையாவது சொல்லிக் கொண் டிருத்தல் அறிவு வளம் பெற வேண்டிய மாணவர்க்கு ஆகாத் தன்மையாம் (715). திறமையான வணிகன் பொருள்களை வாங்கும் இடத்தில் வாங்கும் காலத்தில் வாங்கி, விற்கும் இடத்தில் விற்கும் காலத்தில் விற்பதுபோலக் கற்பவரும் அறிவைப் பெறத்தக்க இடங்களில் காலங்களில் பெற்று, பயன்படுத்தத் தக்க இடங்களில் காலங்களில் பயன்படுத்தல் வேண்டும். இதனை நோக்கியே காலம் அறிதல், இடம் அறிதல். வலியறிதல் என்றெல்லாம் திருவள்ளுவர் கூறினார். அறிவனைச் சார்தல் அறிவே கடவுள் என்று ஆன்றோர் கூறுவர்; அறிவுடைய ஆன்றோர்களை அறிவர் என்றே வழிபட்டும் வருதல் உண்டு. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன் என்பது நம் முன்னோர் கொடை. திருவள்ளுவர் தம் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடலில், ‘கற்றதனால் ஆகிய பயன் என்ன? என்று ஒரு வினாவை எழுப்புகிறார். தூய அறிவின் வடிவானவனின் நல்ல அடிகளை வணங்காதவர் தாம் கற்ற கல்வியால் என்ன பயன்? என்பதே அவ்வினா. அதனால் தூய அறிவின் வடிவாம் இறையை வழிபடுதலே அறிவைப் பெற்ற பயன் என்பது விளங்கும். அறிவைப் பெற விரும்புவோர் அறிவனை வணங்க வேண்டும் என்பது இயற்கைதானே! நல்ல மாணவராக விரும்புவார் வள்ளுவர் காட்டும் இவ்வழிகளை நன்கு அறிந்து நலம் பெறுவார்களாக!  2. நல்ல ஆசிரியராக பெயர் ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞர், ஓதுநர், பார்ப்பார், புலவர் என்பனவெல்லாம் ஆசிரியரைக் குறிக்கும் அருமைச் சொற்கள். குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி, செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் என்னும் சிறப் பியல்களால் பெற்ற பெயர்கள் இவை. அனைத்தும் தனித்தமிழ்ச் சொற்களே. பொருள் விரி வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும், ஒளியுண்டாக்கும் களியுண்டாக்கும் - உயர்வுண்டாக்கும், பெரும் பொறுப்புடையார் ஆசிரியப் பெருமக்களேயாவர். ஆசிரியர் என்பார் ஏட்டுக்கல்வி கற்பிப்பார் மட்டுமல்லர். ஏட்டுக்கல்வி கற்பிப்பாரே ஆசிரியர் என்ற அளவில் பொருட் சுருக்கம் அமைந்தமையே, ஆசிரியரின் பணிச்சுருக்கமும் புகழ்ச் சுருக்கமும் ஆயிற்றாம். ஆசிரியர் என்பார் எக்கலைக்குரியர் என்பது இல்லை. மருத்துவர், ஆசிரியர்; சிற்பர் ஆசிரியர்; கொல்லர், கொத்தர், தச்சர், தட்டர் ஆகியோரெல்லாம் ஆசிரியர்; ஓவியர்; வண்ணக் கர், ஒப்பனையர், துன்னர் (தையற்காரர்), சிலம்பர், மல்லர் இன்னரெல்லாரும் ஆசிரியர். பயன் கலை ஆயினும் கவின் கலையாயினும் தாம் கற்றதைப் பிறருக்கும் கற்பிப்பார் எவரோ அவரெல்லாரும் ஆசிரியர். நூலியற்றுவார், உரைகாண்பார், பதிப்பிப்பார், இதழ் நடத்துவார், பொறி இயக்கம் கற்பிப்பார் இன்னர் ஆசிரியர் அல்லரோ! நட்டுவர் என்பார், இசைஞர் என்பார், யாழர் குழலர் முழவர் தண்ணுமையர் என்பார் இன்னவரும் ஆசிரியர் தாமே! இவ்வாறு விரிவமைந்த ஆசிரியர் தொழில், ஏட்டுக் கல்வி கற்பிப்பாரே ஆசிரியர் என்னும் அளவில் சுருங்கினாலும் வழி காட்டுவாரும் பயிற்சி தருவாரும் ஆசிரியர் என்றே வழங்கும் வழக்கம் இன்றும் மறைந்து விடவில்லை என்பது உண்மை. இவண் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆய்வுத்துறை என்ற வகையில் கற்பிக்கும் கடமை கொண்ட ஆசிரியர்களைப் பற்றிய ஆய்வே இடம் பெறுகின்றது. பல செய்திகள் பல்வகை ஆசிரியர்க்கும் பொருந்துவனவேயாம். ஐவகை சங்க காலத்திலேயே ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் நிலையைப் பொறுத்து ஐவகையராகக் கூறப்பட்டமை சங்கப் புலவர்கள் பெயர்களாலேயே அறிய வருகின்றன. அவர் தொடக்கக் கல்விமுதல் வளர்நிலையில், 1. இளம் பாலாசிரியர், 2. பாலாசிரியர், 3. ஆசிரியர், 4. பேராசிரியர் 5. கணக்காயர் என்பார். ஆசிரியர், கற்பித்த நிலையில் இவ்வாறு ஐவகைப் பட்டன ரேனும், கல்வி நிலையில் ஒத்த நிலையர் என்பது இவர்கள் பாடிய பாடல்கள் வேறு பாடறப் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள தகவு கொண்டு துணியலாம். குறைந்த வகுப்புக்குக், குறைந்த அளவு கற்ற ஆசிரியர்; வளர்ந்த கல்வி தருதற்கு, வளர்நிலைப் பட்டம் தாங்கி ஆசிரியர் என்று இல்லாமல், கற்பவர் எந்நிலையர் எனினும் கற்பிப்பவர் தகுதி ஒரு பெருநிலைப் பட்டதே என்னும் பழைய நிலைமை இந்நாளிலும் எட்டுதற்கு அரிய புதிய நிலைமையேயாம்! இஃது ஆய்ந்து கொள்ளத் தக்கது ஆகும். பெயரீடு இல்லாமை திருவள்ளுவர், கல்வி, கல்லாமை, அறிவுடைமை என்ப வற்றைப் பற்றிச் சொல்லிய அதிகாரங்களிலும், சொல் வன்மை பற்றிக் கூறிய இடத்தும் அரசின் அங்கமாகிய; உறுப்புகளைக் கூறிய இடங்களிலும், ஆசிரியர் என்றோ, அப்பொருள் சுட்டும் வேறொரு பெயர் கொண்டோ, கூறினார் அல்லர். அமைச்சர் தூதர், ஒற்றர், படைஞர், உழவர், வணிகர் என்றெல்லாம் தொழில் வகையால் குறித்த அவர் கற்பித்தல் தொழில் வகையால் பெயர் குறித்துக் கூறினாரல்லர். பார்ப்பான், புலவர் எனப் பெயர்க் குறிப்பு இருப்பினும் கற்பித்தல் கருதிய பெயரீடாக அவை அவ்விடங்களில் (134, 394) அமைந்தில. வள்ளுவர் காலநிலையும் வள்ளுவர் கருத்தும் ஆழ நினைவார் ஒரு தெளிந்த முடிவுக்கு வரலாம். அம்முடிவு இன்றும் ஒரு நல்லரசால் பேணத் தக்கது என்னும் மேன் முடிவுக்கும் வரலாம். குடிபடை வள்ளுவர் காலத்திலும் சரி, பிற்பட்ட ஆங்கிலர் ஆட்சிக் காலம் வரையிலும் கூடச் சரி, குடிகள் அனைவரும் படைஞராகவும், படைஞர் அனைவரும் குடிகளாகவும் இருந்தனர். போர் என்றவுடன் எத்தொழில் செய்நரும் தம் தொழிலை விடுத்துப் போர்த் தொழில் மேல் போன வரலாறு தெளிவாக அறிந்தது. அதனால் குடிபடை என்னும் வழக்காறே இருந்தது. குடிகள் அனைவரும் படைஞர் என்பதும், படைஞர் அனைவரும் குடிகள் என்பதும் குறிப்பது அது. வள்ளுவர் பொருட்பால் முதலதிகாரமாகிய இறைமாட்சியின் முதற் பாடலில் படைகுடி என்று தொடங்கிய முறைமை எண்ணின், உண்மை புலனாம். இப்படைகுடி போலவே அந்நாளில் கற்றார் அனைவரும் கற்பிக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் கற்றவர் தம் கடமைகளுள் ஒன்றாகக் கற்பித்தல் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். ஆதலால், கற்றோரைப் பற்றிக் கூறிய வள்ளுவர் கற்பிப்போர் எனத் தனிப்படுத்திக் கூறினார் அல்லர்! வள்ளுவர் வழியிலேயே கற்போர் அனைவரும் கற்பிக்கும் கடப்பாட்டாளராகவும் இருந்திருந்தால், இம் மண்ணில் கல்லார் எவரும் இல்லார் என்னும் நிலை கட்டாயம் நெடுங் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கும். வள்ளுவக் கல்வி வளர்ந்தோர் கல்வி, முதியோர் கல்வி, இரவுக்கல்வி, மாலை நேரக் கல்வி முறைசாராக்கல்வி, என்றெல்லாம் முழுமை பெற முடியா இடர் இருந்திராது. வள்ளுவர்க்குப் பின்னே இவரிவரே கற்றற்குரியர் இவரிவரே கற்பித்தற்குரியர் என்னும் பிறப்பொவ்வாக் குலக்கருத்துகள் குடிபுகுந்து கலைப் பொருளை நிலை குலைத்து விட்டன. அக் குனி நிலை நிமிரவே எத்தனையோ பாடுகள்பட வேண்டியுள்ளன. மக்கட் பிறப்பினர் அனைவருக்கும் உரிய பொது வுடைமைப் பொருளாகிய கல்வியே வள்ளுவக் கல்வி. குலப் பிரிவுக்கும் இனப்பிரிவுக்கும், பால்பிரிவுக்கும், தொழில் பிரிவுக்கும் அடிமைப்பட்ட கல்வி அன்று அது. கல்லான் விலங்கு கல்லான் கண்ணிலான் என்னும் வள்ளுவத்தில், வருணக் கல்விக்கு எள்ளத்தனை இடமும் இல்லை! அதனைக் கடைப் பிடியா மடமையே, நெட்ட நெடுங்காலம் தமிழ் இனத்தை அடிமையாய்-விலங்காய்-விலங்காண்டியாய் வைத்து விட்டதாம் இத்தெளிவுடன் நல்ல ஆசிரியராக விளங்க வேண்டுவோர்க்கு வள்ளுவர் கூறும் வழிகளைக் காண்போம். தான் இன்புறுவது உதகை முதுமலைக் காடு; நிறை நிலாப் பொழுது; நடு யாமம்; ஆழ்ந்து செல்லும் நீரோடைக் கரை. அவ்வோடைக்கு அப்பால் கரையில் இருந்து நெஞ்சைப் பிணைக்கும் தன்னந் தனியிசை; பாடுபவரே இயக்கும் தட்டைப் பறை. ஓ! ஓ! அத் தண்ணிலா வேளையில்-வண்டொலியும் மலர்மணமும் தென்ற லும் உயிர் தளிர்க்க வைக்கும் பொழுதில்-எழுந்த இன்னிசையின் கொள்ளை இன்பத்தை எப்படி எச்சொல்லால் இசைப்பது? கேட்டுக் கேட்டு வயப்பட்டு நின்றவர், தம்மோடு வந்து தங்கும் மாளிகையில் நெட்டுறக்கத்தில் ஆழ்ந்தவர்களையும் எழுப்புகிறார். அனைவரும் செவியைக் கூர்ப்பாக்கி இசை வெள்ளத்தில் நீந்துகின்றனர். நீளத் திளைக்கின்றனர். எழுப்புவது குற்றமாக எழுப்புபவர்க்குத் தோன்றவில்லை! எழுப்பப் பட்ட வர்களுக்கும் சின்னஞ்சிறு துயர் தந்ததாகவும் தோன்றவில்லை! முதற்கண் இசையைத் துய்த்தாரே கூர்ஞ்செவியர், அவர் ஏன் பிறரை எழுப்பினார்! அவர் பேருள்ளம், அவர் ஏன் இன்பப் பேற்றைப் பிறரும் பெற வேண்டும் என்னும் தளிர்ப்பில் இருந் தமையாலேயே எழுப்பினாராம். இல்லாக் கால் அவர் எழுப்பு வானேன்? ஆ! ஆ! என்ன வனப்பு! படமெடுத்து விரிந்து நிற்கும் பாம்பு! அப்படத்தின் கீழே காணக் காணக் கவின் செய்யும் கைபுனைந் தியற்றா இலங்கம் (இலிங்கம்)! ஆம்! ஒருமலர். நாகலிங்கம் என்பது அதன் பெயர்! அதனை முதன் முதலாகக் கண்டு வியந்தவன் எத்தனை பேர்களுக்குக் கூறுகிறான்! எத்தனை பேர்களுக்கு அப்பூவைக் காட்டுகிறான்! எத்தனை எத்தனை பேர்களுக்கு அதன் பெயர்ப் பொருத்தத்தை எடுத்துரைக்கிறான்! ஏன்? தான் பெற்ற இன்பம் உலகம் பெறட்டுமே என்னும் தளிர்ப்புத் தானே! ஒரு நோயன்; தீராநோயன்; அந்நோய், ஒரு சிறந்த மருத்துவர் வழங்கிய சிலவேளை மருந்துகளால் தீரக் காண்கிறான்; களிப்புறுகிறான்; முந்தையினும் மும்மடங்கு நலத்தனாய் உலவு கிறான். தான் பெற்ற இன்பத்தை அந்நோய் கண்டவர் எவ ரெனினும் அவரைத் தேடித் தேடி ஓடி ஓடி உரைக்கின்றானே ஏன்? தான் பெற்ற இன்பத்தை அவர்களும் எய்தலாமே என்னும் தழைப்புத்தானே! இத்தகு இயற்கையான இறைமைப் பேருள்ளம், கற்பிக்கும் கடமை மேற்கொண்டார்க்குத் ததும்ப வேண்டும் என்பது வள்ளுவர் கல்விக் காதல். அதனால். தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் 399 என்றார். இன்புறக் கற்றல் கற்றறிந்தார் எதனால் இன்புறுகிறார்? தாம் கற்ற கல்வி யால் இன்புறுகிறார். அக்கல்வியால் உலகமும் இன்புற வேண்டும் என விரும்புகிறார். அதனால், தாம் கற்ற கல்வியை அவரும் கற்கச் செய்கிறார். அதற்காக, அக் கல்வியில் தணியாப் பேரார்வம் கொண்டு, தாமும் மேலும் மேலும் கற்கிறார். கற்கக் கற்க அக்கல்விப் பெருக்கத்தை உலகமும் பெற, ஒன்றும் ஒளித்து வைக்காமல் ஒழிவும் இல்லாமல் கற்பிக்கிறார். இவ்வின்பம் ஒருநாள் இன்பமா? ஒரு பொழுது இன்பமா? வாழ்நாள் முழுமை இன்பம்; பின்னும் வளர் புகழ்ப் பேற்றால் தம் வழிவழிக் குடியினர்க்கும் உயர் பேரின்பம்! இக்குடியில் பிறந்தோமே என்னும் உள்ளின்பம் மட்டுமோ? இக்குடியில் பிறந்தார் என்று பிறர் பிறர் பாராட்டும் சொல்லின்பமும் துணையின்பமும் நிலை பேற்றின்பமுமாம்! இத்தகு இன்பங் கண்டவர் அக்கல்வித் தொண்டிலேயே ஊறி ஊறித் திளைக்க வேண்டாவா? ஊன்றி ஊன்றி உயர் பணி புரிய வேண்டாவா? எத்தகைய இயற்கைப் பெரும் பேறு கல்விப் பேறு! ஈத்துவக்கும் இன்பம் அதற்கு இணையாக ஒன்று உண்டா? மேற் கோள் ஒரு நாள் என் வழக்கப்படி திருக்குறளைப் படித்தபோது தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார் என்பது தென்பட்டது. அதனால் உருசிய நாட்டினரும் தமிழ் நாட்டினர் போல் திருக்குறளைச் சுவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணி மொழி பெயர்க்கத் தொடங்கினேன் என்கிறாரே உருகிய நாட்டு அந்திரனோவ். அச் செய்தி மேற் கோளுக்குச் சொல்லும் செய்தியா? நாம் மேற் கொள்ள வேண்டிய செய்தி அல்லவோ! கல்விச் செல்வச் சீர் பொருட் பெருக்கம் நிலப் பெருக்கம், மனைப் பெருக்கம் தோட்ட துரவுப் பெருக்கம் எத்துணை இருப்பினும், வடிகட்டிய கருமியாக இருப்பாராலும் தம்மோடு கொண்டு போகிவிட முடியாதே. அவர் தாமும் பயனெய்தார்! பிறரும் பயனெய்த விடார்! அப்பொருள் அவர்வாழ் நாளில் பயன் தாராமல் வாளா கிடக்கும் அவ்வளவே! அவர்க்குப் பின் வருவாரால் கொள்ளப் படும்! கொடுக்கவும் படும். ஆனால் கல்விப் பொருள் அத் தகையதா? கற்றவன் தெளிவோடும் உணர்வோடும் இருக்கும் போதே அதனை வாரி வாரி வழங்குதல் வேண்டும். அதுவே அவனுக்கும் கல்வி வளம்! பெற்றார்க்கும் பெருவளம்! அதனைப் பயன்படுத்தாமல் அவன் முடிந்து போனால் அவன் பெற்ற புலமையும் மடிந்துதானே போகும்? மற்றைப் பொருள் களைப்போல் வைத்துப் போக வழியுண்டா? செல்வக் கருமியால் ஏற்படும் கேடு சிறிதேயாம்! ஆனால் கல்விக் கருமியால் ஏற்படும் கேடே பெருங்கேடாம். தான் பெற்ற உலகப் பெருங்கடனை ஒன்றுக்குப் பத்தாகத் தந்து தீர்க்க வேண்டியவன், ஒன்றுமே உதவாமல் தானும் தன் வழி முறையும் தீராக் கடனாளியாகிச் செல்கின்ற உறிஞ்சி (அட்டைப்பூச்சி) அவனாம்! அதனால், கொடுக்கக் கொடுக்க வளரும் கொடைப் பெருக்கக் கல்வியைக் கொடாத கருமி, கண்ணைப் பெற்றிருந்தும் கண்ணிலான்! மாந்த வடிவில் இருப்பினும் விலங்கன்! பிறனும் கண்ணிலனாய் - விலங்கனாய் - (கருமியாய் அமைந்து) பிறரையும் கண்ணிலராய் - விலங்கராய் உலவவிடும் கடையன். ஏனெனில், கல்வி, கண் என்றும், கல்லான், விலங்கு என்றும் அறிந்தவன் அல்லனோ அவன்? தாம் வைத்துள்ள செல்வத்தைப் பயன்படுத்தாமல் ஒழிந்து போவாரை நோக்கி, இவர் பிறர் உதவிக்கு அதனால் அடையும் இன்பம் என்பதொன்றை அறியவே மாட்டாரோ என்று வருந்திய வள்ளுவக் கவலை (228) கற்றறிந்த கல்வியை ஈயாக் கருமியை - அத்தொழிலையே வாழ்வு - வருவாய்த் தொழிலாக ஏற்றிருந்தும் - முற்றாக ஈயாக்கருமியைக் கருதின் எத்துணை மடங்கு கவல்வு அடையும்! கொடுங் கருமி கொடுமையிலும் கொடுமை, கற்றறிந்த ஒன்றைப் பிறர்க்குக் கருதிக் கருதிக் கற்பியாக் கொடுமையாகும். இந்த மருந்தை உண்டால், உயிர் போகும் நிலையில் இருப்பவனும் எழுந்து நட மாடுவான் என்னும் மருந்து கண்டான் ஒருவன், அம்மருந்தை எவர்க்கும் சொல்லாமலே இறந்து போனான்! இக்கொடுமையிற் கொடுமை உண்டோ என்கிறது கலித்தொகை! (129) தாமின்புறும் கல்வியைப் பிறரும் இன்புறத் தாராமை தானே இக் கொடுமை! வருந்திய செல்லல் தீர்த்த திறனறி யொருவன் மருந்தறை கோடலிற் கொடிதே என்பது அது. அவனும் திறனறி ஒருவன் என்பது இன்னும் எத்தனை கொடுமை! கண்ணொளி கொடுத்தலில் கை தேர்ந்த ஒருவனே, கண்ணைக் கெடுத்த கொடுமை போல்வதன்றோ அது. கூடலும் பிரிதலும் புலமையுடையவரைப் புலவர் எனல் பழவழக்கு. இந் நாளில் தமிழ்ப் புலவர் அளவில் பொருள் சுருங்கிற்று. எக் கல்வி கற்பிக்கும் புலமையாளரும் புலவர்களே, அவர்கள் பணி குறித்து, உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் -394 என்னும் குறள் கருதத் தக்கதாம். புலமையாளர் - ஆசிரியர் - தொழில், ஒருவரோடு ஒருவர் கூடுங்கால் மகிழ்வாகக் கூடுதல்; அளவளாவி ஆய்தல், இவ் வின்பக் கூடல் மீளவும் எப்பொழுது வாய்க்குமோ என உள்ளம் உருகப் பிரிதல் என்பதாம். உவப்பத் தலைக்கூடலும் நினையப் பிரிதலும் மட்டும் புலமையர் தொழிலாமோ? இக்கூடல் அமைந்து விட்டால் பின் என்ன குறை? உவப்பக் கூடியது எதனால்? உள்ள நிறைவால்! உள்ளப் பிரிவது எதனால்? உள்ள நிறைவால்! இந்நிறைவு உண்டாகி விடுமானால் வேறு என்ன குறைவுண்டு! உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ? என்பது பாரதியின் பாடல். புலவர்களோடு அளவளாவும் இன்பத்திலும் உயர் இன்பமென ஒன்று விண்ணகத்து இருக்குமானால் அதனையும் ஒருமுறை பார்த்து விடுவோம் என்பது புலமைக் காதலர் ஒருவர் உரை. பொருள் விரிவு ஆசிரிய நிலையில் இன்னும் இதற்கு விரிபொருள் காணலாமே! கற்பிப்பார் புலமையர்; கற்க வருவாரும் புலமை தேடி! இருவருக்கும் ஊடகம் புலமை! கற்பிப்பாரும் கற்பாரும் உவப்பத் தலைக்கூடல் தானே, வகுப்பு! கற்பித்தல்! பூஞ்சோலைக்குள் புகும் வண்டென ஆசிரியரும் மாணவரும் தலைக் கூடும் ஆர்வத் திளைப்புத்தானே கலைவளம்! நோக்கக் குழையும் விருந்தென ஆசிரிய நிலையோ, மாணவ நிலையோ அமைந்து விடுமானால் விருப்புறு விருந்து ஆகிய கல்வி, வெறுப்புறு மருந்தாக அல்லவோ அமைந்து விடும்! மாணவர் மையத்தில் எப்பொழுது சேர்வோம் என்னும் வேட்கை ஆசிரியர்க்கும், ஆசிரியரை எப்பொழுது கண்டு பாடம் கேட்போம் என்னும் வேட்கை மாணவர்க்கும் ஒப்ப ஏற்படும் ஒரு நிலைதானே உவப்பத்தலைக்கூடல்! வகுப்பு முடிந்தாலும் கல்வியையும் கற்பித்த ஆசிரியரையும் நினைந்து நினைந்து மீள வரத் துடிக்கும் மாணவரும், அவர்க்குச் சுவை சுவையாய் நயம் நயமாய்க் கற்பிக்க வேண்டி விரும்பி விரையும் ஆசிரியரும் உள்ளப் பிரிபவர் தாமே! அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு (74) என்னும் வள்ளுவப்படி அன்பும் ஆர்வமும் நண்பும் படிப்படியே பெருகின் படிப்பைப் போலும் இன்பமும் உண்டோ? பண்பாடு தலைக் கூடல், பிரிதல் என்பவை வெற்றுக் கல்வியா? ஏட்டுக் கல்வியா? பண்பாட்டுக் கல்வி அல்லவோ! அவற்றை நடைமுறையில் கண்ணேரில் காணும் மாணவர்க்குக் கற்றோர் கடமையைப் பற்றி விரித்துச் சொல்லவேண்டுவ துண்டோ? அப்படியே படிந்து விடுமே நெஞ்சத்தில் அப்படிவுதானே எதிர்கால உலகை ஏற்றமுறச் செய்விக்கும்! இன்று குழந்தைகள் நீங்கள்; நாளை இந்நாட்டின் தலைவர் என்னும் பாவேந்தர் மொழி நடைமுறைப்படும் நிலை இது தானே! சிந்தித்தல் நீ மாணவன் போல் நடந்து கொள்ளவில்லை என்று ஒரு மாணவரைக் கடிந்துரைத்தார் ஓர் ஆசிரியர். நீங்கள் எப்பொழுது ஆசிரியராக நடந்து கொள்ளவில்லையோ, அப்பொழுது என்னை மாணவனாக நடக்க வேண்டுமென எதிர் பார்த்தல் கூடாது எனச் சட்டென மொழிந்தான் அம் மாணவன். நிலைமை என்ன? பிறர்க்கு அறிவுரைக்கும் - கண்டிக்கும் - தண்டிக்கும் - ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன் உள்ளுள் உள்ளம் கணக்குப் போடுகிறது! சொல் வீறுகிறது! சிந்திக்க வேண்டியது இளைஞர் உலகமா, முதியர் உலகமா? அறிவு பெற வந்த உலகமா? அறிவு தர வந்த உலகமா? நூல் நயம் உவப்பத் தலைக் கூடல் விளக்கம் போல்தானே., நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (783) என்றார் வள்ளுவர். நவில் தொறும் என்றால் படிக்கும் தோறும் என்னும் பொருளதா? இல்லை! எடுத்துச் சொல்லும் தோறும் என்பதே பொருள்! எடுத்துச் சொல்லும் போதுதான் சிக்கல் உண்டாகும்; மயக்கம் உண்டாகும்! அந்நிலை உண்டாகும் போதுதான் சிக்கல் அறுக்கும் சிந்தனையும், அச்சிந்தனையால் கலந்துரையாடலும் வழக்கொடு படுத்தலும் உண்டாகித் தெளிவு ஏற்படும். நூல் என்பதே நுவல் என்பதன் வழியாக வந்த சொல்லே. நுவல்வது யாது, அது நூல். பாடம் சொல்லியும் எடுத்துரைத்தும் அழுந்தத் தழும்பேறிய செய்திகளே நூலுருக் கொண்டன. இவற்றை எண்ணின் நவில் தொறும் நூல் நயம் என்பது நுவல் தொறும் நூல் நயம் என்னும் பொருளுடைய தாதல் விளங்கும். சுவைக்காக ஒரு முறை, சொல்லுக்காக ஒரு முறை, பொரு ளுக்காக ஒரு முறை, அறத்திற்காக ஒரு முறை, அணிக்காக ஒரு முறை, துறைக்காக ஒரு முறை, நிறைக்காக ஒரு முறை எனப் பன்முறை சொல் விரித்துரைக்கும் போது நூலின் நயங்கள் பளிச்சிடும். அந்நூல் போலவே பண்புடையாளர் நட்பும் பல்கால் பல நிலைகளில் பழகப் பழகப் பளிச்சிடும். நூலறிவும் பண்பாடும் ஒருங்கே வேண்டும் கற்பிப்பார்க்கு என்பதை விளக்க இம்மணிக் குறளினும் இம்மாணுவமையினும் மற்றொன்று உண்டோ? உண்டோ? அறிவு உரு கல்வி தூது சொல்லச் செல்வார்க்கு அறிவு உரு ஆராய்ந்த கல்வியாகிய மூன்றும் செறிவாக வேண்டும் என்னும் திருக்குறள் (684). இம்மூன்றும் ஓதுதல் தொழிலர்க்கும் இன்றியமையா தனவாம். அறிவு வளம் வழங்கச் செல்வார்க்கு அறிவு வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும் என்பது இல்லை. வழங்க வேண்டும் அளவினும் பதின் மடங்கு அளவு கையிருப்பில் இருத்தல் வேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பைக்கு வரும் என்பது பழமொழி. உரு என்பது தோற்றமாகும். தோற்றப் பொலிவு, கண்ட அளவில் கண்டார் உளம் கவர்ந்து வயப்படச் செய்யும் வலியது. கவர்ச்சி என்பது ஆர்வத்தால் நெருங்கவும் அள்ளூறிக் கொள்ளவும் ஏவுவது. ஆகலின், தோற்றம் உடையவர் ஏற்ற மிக்கவரே. ஆராய்ந்த கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி அன்று. மனப்பாடம் செய்து கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பதன்று. அறிவுடையார் எல்லாம் உடையார் (430) என்பதை மெய்ப் பிப்பது. அறிதோறும் அறியாமை ஆராய்ந்த கல்வி உண்டாக உண்டாகத்தான், அதுவரை அறியாதிருந்தவை புலப்படும்; அறிய வேண்டியவை மலையென உயர்ந்தும் கடல் அலையெனப் பெருகியும் இருப்பது புலப்படும். கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலக அளவு என்பதை அறியச் செய்யும். இதனையே வள்ளுவம், அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்கிறது. மூவாயிரம் நாள்களுக்கு மேலாகச் சிறையில் இருந்த நேரு அப்பொழுது படித்த படிப்பால் இதுவரை படித்தறியாத நூல்கள் எவை, எவை என்பதைப் படிக்கப், படிக்கவே அறிந்து கொண்டேன் என்றார். ஒழுக்கம் படித்தவை மறத்தல் இயற்கை; மீள மீளப் படித்தல், பயன்படுத்தல், நினைவுறுதல் என்பவற்றால் மறவாமை உண் டாகும். அதனால், ஓதுவது ஒழியேல் என்றும், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்றும், நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும் என்றும், பாடம் ஏறினும் ஏடது கைவிடேல் என்றும் சாவாமல் கற்பதே கல்வி என்றும் தம்முன்னோர் கூறினர். திருவள்ளுவரோ சாந்துணையும் கல்லாத வாறு என்? என ஏவினார். கற்றவற்றை மறந்தாலும் கூட மீளவும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கற்பிப்பவன் தன் ஒழுக்கம் தவறுதல் கூடாது. தவறினால், அத் தவற்றை மாற்றுதற்கு இயலாது. பெருங் கறையாகவே இருந்து விடும் என்றும் எச்சரித்தார் (134). இவற்றால் அறிவொடு கூடிய பண்பாளர்களே ஆசிரியத் தொழிலுக்குத் தக்கார் என வள்ளுவர் உள்ளம் குறித்தது என்க. அரம், மரம் தன் கூர்மையால் வாளினையும் கூர்மையாக்குவது அரம். அவ்வரம் போலத் தாமும் கூரிய அறிவினராய், பிறரையும் கூரிய அறிவினர் ஆக்கவல்லராய் இருப்பார் உளர். அத்தகையரிடத்தும் மக்களுக்கு வேண்டிய நற்பண்புகள் இல்லை எனின், அவர்கள் வாளால் அறுபடும் மரம் போன்றவரே அன்றி அரம் போன்றவர் ஆகார் என்று கடிந்துரைத்துத் கடனாற்றினார் திருவள்ளுவர் (997). சொல்வன்மை கற்பிப்பார்க்கு இன்றியமையாத ஒன்று சொல்வன்மை ஆகும். சொல்வன்மை என்பது சொற்சுவை மட்டுமன்று. பயன் மிக்கவையாகவும் இருத்தல் வேண்டும். அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் (198) என்று வள்ளுவம் கூறும். தெளிவமைந்த தேர்ந்த அறிவினர் பொருளற்றவற்றைத் தம்மை மறந்தும் கூட உரைக்க மாட்டார் என்றும் கூறும் (199). பலரும் வெறுப்புறுமாறு பயனற்றவற்றைச் சொல்லுபவனை எவரும் இகழ்வர் என்னும் போது (191) அதனை அறிவறிந்த ஆசான் மேற் கொள்ளலாகுமா? சொல்லல், கேட்டல் அறிவறிந்து, சொல்வார்க்கு இருதிறங்கள் வேண்டும். ஒன்று, எவரும் எளிமையாக அறிந்து கொள்ளுமாறு விளங்கச் சொல்லுதல்; மற்றொன்று, பிறர் அறிந்து கொள்ள முடியா வகையில் ஒருவர் நுண்மையாகக் கூறினாலும் அதனை அறிந்து கொள்ளும் திறமை என்பன அவை (423). சொல்பவர் சொல்பவராக மட்டும் இல்லாமல், கேட்பவராகவும் இருத்தல் வேண்டும்; அவ்வாறானால்தான் தாம் சொல்வதைக் கேட்பார் திறனறிந்து கூற முடியும் என்று தெளிவு பெறச் செய்கிறார் திருவள்ளுவர். நாநலம் சொல்வன்மையைக் கூறத் தொடங்கும் வள்ளுவர் சொல் வன்மையை நாநலம் என்றே குறிப்பிடுகிறார். அதன் நன்மையை விளக்குவார் போல நலத்தை நான்கு முறை பயன்படுத்துகிறார். அது, நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று என்பது (641). சொல் கேட்டவர்களை வயப்படுத்தி ஆட்கொள்ள வேண்டும்; பொழிவை நிறுத்தி விட்டாரே; இனி எப்பொழுது கேட்போம் என ஆவலைத் தூண்ட வேண்டும் கேட்டவர்கள் சொல்லிய சொல்லைக் கேட்டவர்களுக்கும், எப்பொழுது கேட்க வாய்க்கும் என்னும் விருப்பத்தை உண்டாக்குதல் வேண்டும் (643). இது சொல்வன்மைக்கு அளவு கோல் ஆகும். இவ் வன்மையைத் தம்மிடத்துத் தங்க வைத்துக் கொள்ள விரும்புவார், பிறர் விரும்பும் வகையில் சொன்னால் மட்டும் போதாது; பிறர் சொல்லுகின்ற அரிய செய்திகளின் பயன் களையும் ஆர்வத்தால் கொள்ள வேண்டும். அத்தகைமையே தம் குறையுண்டாயின் நீக்கி மாசற்ற மணியாக்கிக் கொள்ள உதவும் (646). திறனறிதல் சொல்லும் சொல்லைத் தம் திறனறிந்து கூறுவது பயணாகி விடாது. கேட்பவர் திறனறிந்து கூறுதல் வேண்டும். கைக்குழந்தைக்கும், குழந்தைகளுக்கும், இளையர்க்கும், வளர்ந் தோர்க்கும் தகத்தக உணவாக்கமும் உண்பிக்கும் வகையும் தாயரும் பாட்டியரும், போற்றுவதில்லையா? அப்படிக் கேட் பார் திறத்திற்குத் தகச் செய்திகளைக் கூற வேண்டும். பலப்பல சொல்ல வேண்டும் என்பது இல்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே சொல்வார்க்கும், கேட்பார்க்கும் இன்பம் பயப்பன, அதனை அறியாரே பலப்பல சொல்லிப் பொழுதைப் பாழாக்கி, வெறுப்புக்கும் ஆளாகித் தோல்வி காண்பர் (649). சொல்வார்வேறு; கேட்பார் வேறு என வேறுபடத் தோன்றா வகையில் கேட்பவரோடு இரண்டறக் கலந்து இனிமையாகச் சொல்லும் திறத்தைப் பெற்றால், அவர் சொல்லைக் கேட்டவர் அனைவரும் அப்படியே ஏற்று அருமையாகப் போற்றிக் கொள்வர் (648). பார்வைப் பூ மல்லிகை முல்லை அரும்புகளின் இதழ் மெல்லென விரியத் தொடங்கிய அளவிலேயே பக்கமெல்லாம் மணம் பரவி விடுகிறது. முகையாக இருந்த போதே அதனுள் ஒடுங்கிக் கிடந்த நறுமணம் மடைதிறந்த வெள்ளமெனக் காற்றில் பரவத் தொடங்கி விடுகின்றது. இப்படியே நாளெல்லாம் தேங்கிக் கிடந்த நயமிக்க கருத்துகளெல்லாம் நாவசைத்த அளவில் சொல் வல்லாரிடத்துச் சுடரிட்டுச் சுவையாகி வெளிப் படு கின்றது. அவ்வல்லமை இல்லாரோ, இதழ் விரித்தும் மணமே இல்லாத பார்வைப்பூ - இலைப் பூ - போல, அவையோர்க்கு இன்பந் தாராராய், வெறுப்புக்கும் இடனாகி விடுகின்றனர் (650). இச்சொல்வன்மைத் திறம் ஓதுதல், ஓதுவித்தல் ஆகிய தொழிலை மேற் கொண்ட பெருமக்களுக்கு மிகமிக இன்றி யமையாதவை அல்லவோ! குறிப்பறிதல் ஒருவர் இரண்டு மணிநேரம் பேசினார்; அருமையாகத் தாம் பேசியதாக மகிழ்ந்தார்; அவையை நோக்கி யான் பேசியவற்றுள் எவையேனும் ஐயம் உண்டாயின் கேட்கலாம் என்றார் ஐயம் கேட்பதற்கு எதுவுமே இல்லை என்கிறார் அவையில் இருந்த ஒருவர். அவ்வளவு தெளிவாகப் புரிந்ததா! மகிழ்ச்சி என்றார் பொழிவாளர். இல்லை! எதுவுமே புரிய வில்லை! புரிந்தால் தானே ஐயம் ஏற்படும் என்றார் அவையில் இருந்தவர். அதனால் அவையறிதல் கூற வரும் வள்ளுவர் (72), அதற்கு முன்னர்க் குறிப்பறிதல் என்றோர் அதிகாரம் வைத் தார் (71) கற்பிக்கப் புகும் ஆசிரியர் மாணவர் குறிப்பறிந்து கற்பிக்க வேண்டும் அல்லவோ! முகத்தைப் பார்த்த அளவாலே அகத்தை அறிந்து விடலாமே என்கிறார் (707). குறிப்பறிதல் என்பதைக் கூறாமை நோக்கிக் குறிப்பறிதல் (701). ஐயப்படாது அகத்தது உணர்தல் (702) குறித்தது கூறாமைக் கொள்ளல் (704) அளக்குங்கோல் கண்ணல்லது இல்லை (710) என்றெல்லாம் கூறுகிறார். குறிப் பிற் குறிப்பு உணர்வாரைத் தெய்வத்தோடு வைக்கிறார் (705; 702). கற்றல், கற்பித்தல் மாணவர் விருப்பத்தைத் தூண்டி, அவர் தம் வயப்படச் செய்து, கற்பிக்கும் பொருளில் அவர்களை முழுமையாக ஒன்றிவிடச் செய்வதே கற்பித்தலாகும். கற்பிப்பார் வேறு, கற்பிக்கும் கல்விவேறு; கற்கும் மாணவர் வேறு என்னும் தனித்தனி நிலையில் வகுப்பறை நிற்பின் கற்பித்தல் பயனற்றதாகி விடும். நான் படிக்கும்போது என்னைநான் அறியேன்; நாஒன்றோ? ஊன்படிக்கும்; உளம்படிக்கும்; உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும் தான்படிக்கும்; அநுபவங்காண் என்று வள்ளலார் கூறியபடி கற்பிப்பாரும், கற்பாரும் கல்வியும் ஒரு பொருளாகி நிற்றல் வேண்டும். அத்தகு கல்வியே, மீளவும் கேட்டறிய வேண்டும் என்பது இல்லாத ஒருமைக் கல்வி! ஓதாக்கல்வி! செலச் சொல்லல் கேட்பார்க்குச் சொல்லுவார் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைச் செலச் சொல்லல் என்னும் தொடரால் கூறுவார் வள்ளுவர். அதனை ஏழுமுறை அவர் பயன்படுத்துகிறார் (424, 686, 719, 722, 724, 728, 730). அத்தகு அருமை உடையது அது! பாடம் கற்பித்த ஆசிரியர், ‘நுழைந்ததா? என வினவ வால் மட்டுமே பாக்கி என்று மாணவன் கூறியதாகக் கூறும் செய்தி, வழிவழி வருவது. இச் செலச் சொல்லல், செவியில் செலச் சொல்வது அன்று; மூளையில் முழுமையாகப் பதிந்து செலச் சொல்வது; இன்ன அருமையான செய்தியை இவர் கூறினார் என இடங் கடந்து, காலங் கடந்து செல்லுமாறு பலப் பலரும் சொல்லி மகிழச் சொல்வது. அதுவே, செல்வாக்கு என்பதாம். ஆதலால் ஆசிரியர் சொல்வாக்கு, செல்வாக்காக இருத்தல் வேண்டும் என்பதாம். வளர் பயிருக்கு வரு மழை ஆர்வத்தோடு கற்க விரும்புவார்க்கு அறிவு புகட்டுதலை ஓர் அரிய உவமையால் காட்டினார் திருவள்ளுவர் அது, உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது (718). மழை கற்சரளையில் பொழிகின்றது; ஓடி வழியும் மேட்டு நிலத்துப் பொழிகின்றது; பாலையிலும் பொழிகின்றது; ஆனால் அம்மழை, வளமான பயன் தருவதற்காக வான் பார்த்து நிற்கும் வளர் பயிர் நிலத்தில் பெய்யுமானால், எத்தகு பயனுடையதாக இருக்கும்? ஒன்றுக்குப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்ப் பயன் தருமன்றோ அது. அவ்வாறே, உணர்ந்து பயன் பெற வேண்டும் என்னும் ஆர்வத் தளிர்ப்புடைய மாணவர்க்கு அவர் ஆர்வம் அறிந்து புகட்டுதல் பெருநலம் செய்யும் என்பதாம். ஆசிரியப்பேறு எக்கேல் என்பார் தொல்லியல் ஆய்வுப் பேரறிஞர். அவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அவர் முகத்தில் கவலைக் கோடுகள் காணப்பட்டன. அருகில் இருந்த மாணவர் ‘ஐயா தங்கள் கவலையைக் கூறலாமா? என வினாவினார். எக்கேல், என் மாணவர்களுள் எவரும் என்னை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. மிசலே என்பான் மட்டும் அறிந்துள்ளான். ஆனால், அவனும் தவறாக அறிந்துள்ளான் என்று தம் கவலையை உரைத்தார். மெய்யான ஓராசிரியர் நிலை இதுவே. நன்மாணவப் பேறே, ஆசிரியப் பேறாம் என்பது இது. தன் மாணவன், தன் திறத்தை முற்றாக அறிந்து நன்கு வாங்கிக் கொண்டு, நாட்டுக்கும் நானிலத்திற்கும் பயன்படச் செய்யும் போது, அதற்கு மூலமாக இருக்கும் ஆசிரியன், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயினும் மகிழ்கிறான்! தன் பிறவிப் பயன் தகுதி வாய்ந்த மாணவன் வழியாக நிறைவேறுகின்ற தன்றோ! மாணவர்க்கு ஆசிரியரே அறிவுத் தந்தை ஆகலின், மாணவரைக் கல்வியில் உயர்த்துதலோடு, உயர்நிலை கண்டு உவகையடைபவராகவும் இருத்தல் இயல்பு. அதனால், தம்மினும் தம் மாணவர் அறிவுத் திறம் உலகுக்குப் பயனாம் என்னும் பெறற்கரிய பெருமிதம் உண்டாதலும் இயல்பு. எம் ஆசிரியர் கொடையால் யாம் பெற்ற பேறு இது என மேன் மாணவர் கூறும்போது, ஆசிரியர்க்கு உண்டாகும் இன்பத் தளிர்புக்குக் கோடியும் ஈடாவது இல்லை. அத்தகு மாணவர் வாய்ப்பது ஆசிரியர் பெற்ற பேறேயாம். புலமைப் பிறப்பு மாணவர் அறிவு ஆற்றல் திறங்களால் தம்மினும் உயருங் கால் பொறாமை அடைவார் ஆசிரியர் ஆகார். மாணவர் தம் புகழ்ப் பேற்றைப் பொறாராய்த் தடைப் படுத்த நினைப்பினும் அவர் தம் ஆசிரியத் தகுதியை இழந்து விட்டவரே ஆகின்றார். சர். சி.வி. இராமனார் அன்ன புலமை மாணவர்க்கும், அப் புலமையை ஏற்றுப் போற்றா ஆசிரியர் ஒருவர் இருந்தனர் எனின் பிறர் பிறர்க்கும் அந்நிலை ஏற்படுதல் அரிதன்றே! புலமைக் காய்ச்சல் கொள்ளக் கூடாப் பிறப்பே, புலமைப் பிறப்பாம்! இந்நாள் கல்விக் கூடங்களைக் காந்தியடிகள் அறிஞர் தாகூர் அனைய பெருமக்களும் வெறுத்தனர். வாழ்வொடு பொருந்தாக் கல்வி, உளத்தொடு பொருந்தாக் கற்பிப்பு என்பனவே. கல்விக் கூடங்களைச் சிறைக் கூடம் எனவும் தண்டனைக் களம் எனவும் கூறச் செய்தன. ஆனால் பள்ளிக் கூடம் என்பது அருமையான பூங்கா! புதுப்புது மலர்கள் பூத்தெழும் புகழ்ச் சோலை! தென்றல் தவழும் அருவிச் சூழல்! அந்நிலையைக் கல்வி நிலையங்கள் பெறச் செய்வது, ஆசிரியர்களிடத்தே தான் உள்ளது. நகை, பகை கடுகடுப்பான முகத்தையுடைய ஆசிரியரை எவரே விரும்புவார்? கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொல்லும் சொல்பவராக இருந்தால் எவரே நெருங்குவார்? சினம் என்பது என்ன? நகையும் உவகையும் கொல்வது? ஆதலால், நல்லோர் பகையாவது சினமே (304). சினம் என்பது சினந்தோரை மட்டுமோ கெடுக்கும்? சேர்ந்தோரையும் கெடுக் குமே! அவரை நெருங்குவார் எவர்? அவரிடம் கேட்பார் எவர்? கற்பார் எவர்? (306). தகுதி பூத்த மலராகக் காட்சி வழங்குதல், ஆசிரியர் அடிப்படைத் தகுதி. புன்முறுவலுடன் தேன் தவழ இனியவை கூறல் இரண்டாம் தகுதி! கனிவின் உருவாய்க் காட்சி தரல் அடுத்த தகுதி! இத்தகுதிகளை இல்லார் வேறு எவ்வெத்தகுதிகளைப் பெற்றவர் எனினும் மாணவர் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் ஆட்பட மாட்டார். நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் என்கிறார் திருவள்ளுவர் (999). ஒருவரோடு ஒருவர் கூடி மகிழும் இன்பத்தை அடையாதவர்க்குப் பகற்பொழுதென்ன பொழுது? அதுவும் இருட்பொழுதேயாம் என எள்ளுகிறார். அளவளாவிப் பழகும் இயல்பு இல்லாத ஒதுங்கியின் வாழ்வோ, கரையில்லாக் குளத்திற்கு வரும் நீர்வரத்துப் போலப் பயனின்றி ஒழிந்து போகும் என்றும் கூறுகிறார் (523). இவை ஆசிரியர்க்கு இன்றி யமையாதவை அல்லவோ! கண்டிப்பு ஆசிரியர் என்பார் மாணவரைக் கண்டித்தற்கு உரியர் அல்லரோ எனின், உரியவரேயாம். அவர்க்கு இல்லாத கண்டிப்பு உரிமை எவர்க்கு உண்டு? மொரார்சி தேசாய் தலைமை யமைச்சராக இருந்த போது, ஒரு மாநில முதலமைச்சரைச் சுட்டிக் காட்டி ‘அவரை நீங்கள் கண்டித்தீர்களா! என ஒரு செய்தித்தாள் முகவர் வினாவினார். அதற்குத் தேசாய், நான் என்ன பள்ளி ஆசிரியனா, கண்டித்துக் கூறுவதற்கு? கேட்டுக் கொண்டுளேன் என்றார். இதனால், ஆசிரியர்க்குரிய தனிப்பேர் உரிமை நன்கு விளங்கும். வள்ளுவரோ கண்டித்தல் தண்டித்தல் வழிகளை நயமாகக் கூறுகிறார். கடுமையான தண்டனை போல் தோன்ற வேண் டும்; ஆனால், அது மென்மையானதாய் அமைய வேண்டும் என்பது அது. (562) வளர்ந்த மாணவன்; பல்கலைக் கழகத்தில் பயில்பவன்; ஒரு தவறு செய்து விட்டான்; செய்தி துணை வேந்தர்க்குச் சென்றது. அம்மாணவனை அழைத்தார்; ஒரு பிரம்பை எடுத்தார்; ‘எத் தனை ஆண்டுகளாக இங்குப் பயில்கிறாய்? என்றார்! மூன்றாண்டுகள் என்றான் மாணவன். மூன்றாண்டுகள் இங்குப் பயின்றும் இத்தவறு செய்துள்ளாய்! ‘இது யார் குற்றம்? என்றார்! மாணவன் தலை தாழ்ந்தான்! தம் பிரம்பால் தம் கையில் அறைந்து கொண்டே, உன்னைக் கண்காணித்துத் திருத்தாத என் குற்றம் இது அதற்குரிய தண்டனை இது என்றார். மாணவன் கண்ணீர் ஒழுகச் சென்று கையைப் பிடித் தான்! காலில் விழுந்தான்! வாழ்நாளெல்லாம் இந்நிகழ்ச்சியை மறப்பானா மாணவன்? அண்ணாமலைப் பல்கழைக்கழக நிகழ்ச்சி இது! பெருமை தரு துணைவேந்தர் வெண்கல ஒலியர் சீனிவாசர்! ஆயிரம் அறிவுரையினும் இவ்வருஞ்செயல் பெரும் பயன் விளைப்பதே அன்றோ! அறியார் தவறு செய்யுங்கால் அறிந்தார் கடனென்ன? அத் தவற்றை அவரறியுமாறு உணர்த்தி, மேலே அத்தவறு வாராமல் காத்தல் அன்றோ கடமை! உணரச் செய்ய வேண்டிய உயர்வு நிலையமாய் உயர்வு நிலையமாய் கல்வி நிலையமாகக் கல்வி நிலையம் ஆகம் போது அது - உரிமை நிலையமாய் - உயிர் நிலையமாய் விளங்குதல் உறுதியாம். அந்நிலை கருதாமை கற்றறிந்தோரிடத்தும் கற்பிப் போரிடத்தும் தலைகாட்டுதல் உண்டென அறிந்ததால்தான் வள்ளுவர், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் (834) என்றார். அடக்கத்தைத் தெய்வ நிலையாகக் கண்டவர் வள்ளுவர் (121). அவ் வடக்கமில்லார் கற்றென்ன? கற்பித்தென்ன? அறி யுடையர் ஆகார்! அவரே அறிவிலிகளுள் அறிவிலி என நொந் துரைத்தது இது. நல்லாசிரியர்க்குரிய இலக்கணமாக நான்கு உவமை களைக் கூறும் நன்னூல், அவை நிலம், மலை, நிறைகோல், மலர் என்பன. நிலம், அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல எனப் பொறுமைக்கு எடுத்துக் காட்டும் திருக்குறள் (151). நிலத்திற்கு வையகம் என்பதொரு பெயர். அது வைத்துள்ள வளத்திற்கு அளவில்லை. அவ்வளம் போலும் அறிவு வளமுடையார் ஆசிரியர் என்பதாம். மலை நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (124) என்னும் திருக்குறள். அதன் தோற்றம் மட்டுமோ? அசை விலா நிலை மட்டுமோ? அதன் உயர்வென்ன! வளமென்ன! எல்லாம் மலை மாண்பே. அம்மாண்பு ஆசிரிய மாண்பாம். நிறைகோல் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (118). என்னும் திருக்குறள். நடுவு நிலைக்கு முறை மன்றங்களில் இன்று காணும் சின்னந்தானே, நடுவு நிலைக்கு வள்ளுவரால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சுட்டப்படுகிறது! வைப்பார் அளவு காட்டாமல், வைக்கும் பொருள் அளவைத் திட்டத் தெளிவாகக் காட்டும் நிறைகோல், நிறைகோலே! அந்நிறைகோல் போன்ற நடுநிலை போற்றுவார் நல்லாசிரியர். மலர் மலர்வது; மணப்பது; தேன் சொட்டுவது; மங்கலப் பொரு ளாவது; காலத்தில் மலர்வது; பயன் விளைப்பது. தாம் பெற்ற கல்வியை உணர விரித்துரைப்பார், மலர்ந்து மணம் பரப்பும் மலரன்னார் என உடன்பாட்டில் கொள்ளக் கிடப்பது இம் மலர் (650) தெளிவு பெரும் பேராசிரியராகவும் இந்திய நாட்டின் தலைவ ராகவும் விளங்கிய சர்.இராதாகிருட்டிணனார் ஒருமுறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காகக் கண்மருத்துவர் ஒருவரிடம் சென்றார். ஆய்வுக்கு அமரச் செய்தார் மருத்துவர். அமர்ந்தார் இராதாகிருட்டிணர். மருத்துவர், ஐயா, உங்கள் மடியில் இருக்கும் குழந்தையைக் கீழே இறக்கி வைத்து விடுங்கள் என்றார். இராதாகிருட்டிணர் திகைத்தார். ஏனெனில், அவர் மருத்துவர் கூறியது போல், குழந்தையைத் தம் மடிமேல் வைத்திருக்க வில்லை. தம் தலைப் பாகையையே வைத்திருந்தார். தலைப்பாகைக்கும் குழந்தைக்கும் வேறுபாடு தெரியாத கண்ணொளியுடைய மருத்துவரிடம், தம் கண்ணைக் காட்டி மருத்துவம் செய்ய விரும்பாதவராய், விடை பெற்றுக் கொண்டு வெளியேறினார். குறையுடைய பார்வையர் குறையுடைய பார்வையர்க்கு மருத்துவம் செய்தல், குறை யுடையதாகும் என அக்குருமாமணி கண்டார். தெளிவு பெற வந்த மாணவர்க்குத் தெளிவிலா ஆசிரியர் தெளிவு காட்ட முடியாது என்பது அவர்தம் முடிபு. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழு மாறே என்று திருமூலர் கூறினார் (திருமந்திரம் 1680) திருவள்ளுவரோ, தமக்குத் தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபடுவதே அவர்க்கு இழிவு என்று அறிவுறுத்தினார் (464). தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர் என்பது அது. மேலும் ஒரு செயலில் ஈடுபடுவதானால் புக ழுண்டாகுமாறு ஈடுபடுக என்றும் கூறுகிறார் (236). ஒருவர் தம் தகுதியொடு பொருந்தாத செயலைச் செய் வதை உயர்ந்தோர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் திட்டப்படுத்துகிறார் (470). ஆதலால், ஆசிரியத் தொழிலில் புகுவார் தகுதி மிகுதியும் உடையவராக அமைதல் வேண்டும். அவ்வாறு தொடக்கத்தே அமையாதவர் எனினும் பெரிதும் முயன்று அத்தகுதிக்கு உரியவராகத் தம்மை ஆளாக்கிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் ஏற்றுக் கொண்டுள்ள கடமை அத்தகு சிறப்புக்குரியதாகும். முயற்சியால் தம் தகுதியை உயர்த்திக் கொள்ள முடியுமோ? ஏன் முடியாது? பள்ளிக் கல்வி அளவில் நின்றவரும், அக்கல்வி தானும் பெறாமல் நின்றவரும்கூட, எத்துணை எத்துணைப் பெரும் பதவிகளெல்லாம் தாங்கியுள்ளனர்! அப்பதவிக்கே சிறப்பும் தந்துள்ளனர்! அவர்கள் அயரா முயற்சி நமக்குக் கண்கண்ட எடுத்துக்காட்டுகள் அல்லவா! முட்டாள் ஆசிரியனையும் மாணவன் அறிவாளியாக்கி விடுவான்; அவன் வினாக்களுக்கு மட்டும், அவனை முட்டாள் என்று மட்டம் தட்டாமல், முறையான மறு மொழிகளைத் தேடித் தந்தால் என்று கூறுவர். மாணவருள், ஆசிரியர் கூர்ப்பினும் கூர்ப்புடைய மாணவர் இலரா! ஆசிரியர் வியப்புறும் திறனமைந்த மாணவர் இலரா! கல்வி அலுவலர் ஒருவர் பள்ளி ஆய்வுக்கு வருகிறார். பத்தாம் வகுப்பு; பாடம் தமிழ்; ஆசிரியர் ஒரு வினா எழுப்பி ஒரு மாணவனைச் சுட்டுகிறார். அம்மாணவன் முழு விடையும் கூறினான் அல்லன். அடுத்தொருவனை வினாவுகிறார். அவன், அத்தோழர் அவ்வாறு விடை கூறினார்; அதனொடு இதனை யும் கூறினால் முழு விடையாக இருந்திருக்கும் என்றான். அதற்குப் பாராட்ட வேண்டிய அலுவலர் கம்யூனிட் மைண்ட் என்று உடனிருந்த தலைமையாசிரியரிடம் கூறினார். வகுப்பு நடத்திய ஆசிரியர்மேல் குறை கண்டார் போல், காட்டி னார்! தோழர் என்றானே மாணவர் அதன் விளைவு! ஆசிரியர் மறு மொழி கூற வாயெடுக்கு முன், விடை கூறிய மாணவன், ஐயா, சுந்தர மூர்த்தி நாயனார்க்குத் தம்பிரான் தோழர் என்பது பெயர்! அவர் கம்யூனிட்டா! என்றான். விதிர்விதிர்த்துப் போனார் அலுவலர். வகுப்பே அதிர்ந்தது. அலுவலர் பனிமலைக் கொடு முடிபோல் நிமிர்ந்தார். ஏன்? நான் இங்கே கற்பிப்பதைக்காண வந்தேன் அல்லேன்; கற்றுக் கொள்ள வந்தேன் என்றார்! ஒரு நாள் பார்வையிட வந்த அலுவலரே கற்றுக் கொள்ளும்போது, நாளும் பொழுதும் கற்பிக்கும் ஆசிரியர் கற்றுக் கொள்ள முடியாதா? ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக் கூடம் மூடப்படுகிறது என்று உலகளாவச் சொல்லப்படு மானால், அக்கல்விப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொள் வோர் பணி தனிச் சிறப்பினதே அன்றோ! எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான் எனக் கண் கண்ட ஒளிப் பொருளாக - இறையாக அல்லவோ ஆசிரியரைக் கண்டது தமிழுலகம்! அப்பெருமையைக் காத்துக் கொள்ள வேண்டியது ஆசிரியருலகக் கடமை தானே!  3. நல்ல கணவனாக ஓர் உருண்டை: ஒரு குளத்தின் உள்வாய்; வளமான வண்டல் மண் படிந்து கிடக்கிறது; மண் நீர்ப்பதமாக இருக்கிறது. கூண்டு வண்டி அசைந்து அசைந்து வருவதுபோல், ஒரு நத்தை மெல்லென அசை நடையிட்டு வருகிறது. அஃது ஆண் நத்தையா, பெண் நத்தையா? தெரியாது! ஆனால் இரண்டுள் ஒன்று! சற்றே தொலைவு! இன்னொரு கூண்டு வண்டி வருவது போல ஒரு நத்தை! அஃது ஆணா, பெண்ணா? இரண்டுள் ஒன்று இரண்டும் அசைந்து அசைந்து நகர்கின்றன! நகர்ச்சி இடை வெளியைக் குறைத்துக் குறைத்து ஓரிடத்தில் ஆக்கி விடுகின்றது! நெருங்கிய நத்தைகள் - விந்தையினும் விந்தை - ஓர் உருண்டையாகி விட்டன! உருண்டைகள் இரண்டும் ஓர் உருண்டை ஆகிய உணர்வு மிக்க உயிர்ப் பிணைப்பு ஆகி விட்டன! இயற்கைப் பிணைப்பு என்னே! என்னே! ஓர் உயிரை இரண்டாகப் பகுத்து வைத்தாற் போன்ற தலைவன் தலைவியர் மாண்பை நற்றிணை கூறும் (128), அவ் வுயிரொன்றிய காதலை-அன்பை-இந் நத்தைகள் காட்டு கின்றனவே! உயிரின் சிறப்பு எத்தகையது! உயிர்க் காதற் சிறப்பு எத்தகையது! இன்பம் நத்தை என்ன பேரறிவு உயிரியா? ஓரறிவு தாண்டிய ஈரறிவு உயிரி! நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்பது தொல்காப்பியம். (மரபு 28) நத்தை, இப்பி, சங்கு, கிளிஞ்சல் ஆகியவை ஈரறிவு உடை யவை! ‘இவ்வெளிய உயிரியின் இன்ப வேட்கையும் இத் தகைத்தா? என்று எண்ணும் போதே, மீளவும் தொல்காப்பிய நூற்பா மின்னலிடுகின்றது! எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்பது அது. (பொருளியல் 29). இயற்கையின் நுட்பத்தை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் தொல்காப்பியர். இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் அமைந்த உயிருரிமை! அவ்வுரிமை அவ்வுயிரியின் பிறப்போடே பிறந்து வளர்ந்து பெருகி வரும் தன்மையுடைது என்பது இதன் திரட்டு. காமம் இன்பத்துக்கு ஒரு பெயர் காமம் என்பது திருக்குறள் இன்பத்துப் பாலைக் காமத்துப்பால் என வழங்குதல் பெரு வழக்கு. இன்பத்துப் பாலில் இன்பம் என்னும் சொல்லாட்சி ஈரிடங்களிலேயே உண்டு. ஆனால், காமம் என்பதோ முப்பத் தொன்பது இடங்களில் உண்டு, இன்பம் இடம் பெற்ற இரண்டு குறள்களிலும், (1166, 1320) காமமும் உண்டு. ஏன், வள்ளுவர் இவ்வாறு காமத்திற்குப் பெருவழக்குத் தந்தார்? இன்பம் என்பது எல்லா உயிரிகளுக்கும் பொதுவகையது. காமமோ அத்தகைத்தன்று. மாந்தர்க்கே-ஆறறிவு உயிரிக்கே-சிறப்புரிமை உடையது. ஏனெனில், உடலின் அளவில் நில்லாமல், நெஞ்சின் நிறைவாகி, ஈருயிர் ஓருயிராய் ஒன்றும் பெருமையது! இதனைக் காமம் என்னும் சொல்லே தெளிவிக்கும். ஆதலால், வள்ளுவர் அச் சொல்லை பயில வழங்கினார். கமம் நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம் (உரி. 57) கமம் முதல நீண்டு காமம் ஆயிற்றாம். இதனைக் காமஞ்சான்ற என்பார் அவர் (கற் 51), சாலுதல் நிறைந்தமைதல். காமம் சான்ற என்பதற்கு விளக்கம் வேண்டுமா? அதன் விளக்கமே வள்ளுவக் காமத்துப்பால். நல்ல கணவனாக விரும்பு வானும், நல்ல மனைவியாக விரும்புவாளும் கட்டாயம் காமத் துப்பால் கற்றாதல் வேண்டும். எப்படி? தனித்துத் தனித்தும், கற்றல் வேண்டும்! கூடிக் கூடியும் கற்றல் வேண்டும்! இனி வள்ளுவர் வழியில், நல்ல கணவனாக அமைவான் இயல்புகளைக் காணலாம். வள்ளுவக் கணவன் வள்ளுவக் கணவன், கற்றவன்; கசடறக் கற்றவன்; வாழ்வில் நிற்கக் கற்றவன் (391). அவன், மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்றும், நன்றின்பால் உய்ப்பது அறிவு என்றும் கண்ட செம்பொருட் செம்மல் (34; 422). தன்னைத்தான் காதலித்து அத் தகவால் எத்தகு தீவினையையும் நாடாத தகவாளன் (209). தனக்கின்னாமை தருவதை உணர்ந்த தன்மையால் பிறர்க் கின்னாமை எண்ணாப் பெருந்தகை (318). உள்ளம் உடைமை உடைமை; வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்னும் உடைமையும் உணர்ந்த உயர்ந் தோன் (292; 661). வினைக்கிழான் ஆகிய அவன், செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும் எனத் தெளிந்த மனைக்கிழான் (1039) எதிரதாக் காக்கும் தேர்ச்சியன் ஆகலின் அதிர வருவதோர் நோய்க்கு ஆட்படாதவன் (429). கடுமொழி, கையிகந்த தண்டம், கயச்சினம் என்பவற்றைக் கருதாக் கனிவாளன் (567; 304). களவியல் கற்பியல் கண்ட கலைவல்லான். தந்தை தாய் துணை என்னும் இயல்புடைய மூவரையும் இனிது போற்றும் இயல்வல்லான் (41) விருந்து பேணி விரிபயன் காணும் விழுப்பன். பெருமையும் உரனும் ஆடுஉ மேன (தொல். கள. 7) என்னும் ஆண்மை இயலும், செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான (தொல். பொருளியல். 15) என்னும் பெண்மை இயலும் நன்குணர்ந்த நம்பி. ஒருமை மகளிரே போலப் பெருமையும் பெற்ற பேராளன் (974). செலச்சொல்லலும், வெலச் சொல்லலும் வல்ல சொல்லின் செல்வன் (722; 645) ஆகலின், அவன் எடுத்துக் காட்டாகக் கூறத்தக்க நல்ல கணவனாகத் திகழ்கிறான். பெயர் வள்ளுவக் கணவன் கொண்கன், கொண்டான், கொழுநன் என வழங்கப்படுகிறான். மேலும் அவர், இனியர், உற்றார், கலந்தார், கள்வன், காதலவர், கேள், துணை, நச்சியார், நயந்தவர், நயப்பித்தார், பரிந்தவர், பெட்டார், பேணியார், மணந்தார், வீழ்வார், வேண்டியவர் வேந்தன் என்றெல்லாம் வழங்கப் படுகிறான். யாரால்? அவன் துணையால்! ஐம்புலன் இயற்கை அழகிலே தோய்ந்தவன் வள்ளுவக் கணவன்; அவன், கண் கவர் காட்சிகளால் தன்னை மறந்து அக்காட்சியாக மாறிவிடுபவன். கானகமா வானகமா அவையெல்லாம் அவனுக்குத் தேனகங்கள்! அத்தகு காட்சிச் செல்வன் அவன். குயிலின் இசையா, வண்டின் ஒலியா, அருவியின் முழக்கா, காற்றின் அசைவா, ஆற்றின் செலவா அனைத்தும் இசை வெள்ள இன்பமாகக் கொள்ளும் கூர்ஞ்செவியன் அவன். வளமான குடும்பம்; வாய்ப்பான ஏந்துகள்; வாய்க்குச் சுவை சுவையாய் ஆக்கிப் படைக்கும் அருமையர். தேனா, பாலா, பழங்களா, பண்டங்களா, இன்குடி நீர் வகைகளா-எவற்றுக்கும் குறைவில்லாமல் சுவை நலம் கொள்ள வாய்த்த சுவைஞன். உலவுங்கால் பூம்பந்தர்; துயிலுங்கால் பூமலர்ப் படுக்கை; நீராடியபின் நறுமணப்புகை; உடல் வெப்பந்தீர நறுமணக் கலவைப் பூச்சு; உடுக்கும் உடையில் நறுமணத் தெளியல் என முகர்ச்சிக்குக் குறைவில்லாத் துய்ப்பன். முழுநிலாப்பொழிய; தென்றல் வருட, அருவி நீர் வழிய, பன்னீர் துளிக்க, மென்பட்டுத் தழுவ, பஞ்சணை மயக்க மெய் யின்பம் காணும் மேதகவெல்லாம் அமைந்தோன் கண்பெற்ற பேறே காண்! செவி பெற்ற பேறே காண்! வாய் பெற்ற பேறே காண்! மூக்குப் பெற்ற பேறே காண்! உடல் பெற்ற பேறே காண்! என அவற்றையெல்லாம் தனித்தனி துய்த்துத் தனியின்பப் பேறு அடைந்தோன்! அவன் தன் பிறவி பெற்ற பயனை இன்று தான் பெற்றானாம்! இதுவரை பெறாத இன்பமெல்லாம் இன்றுதான் பெற்றானாம்! அவனே பேசுகின்றான்! அவனே பேசட்டும்! அவன் இன்பத் தளிர்ப்பை அவனே பேசட்டும்! பேரின்பம் இதுவரை என் கண்ணுக்கு இன்பம் தந்தவை காதுக்கு இன்பம் தந்தில; காதுக்கு இன்பம் தந்தவை கண்ணுக்கு இன்பம் தந்தில; அவ்விரண்டுக்கும் இன்பம் தருவனவும் மூக்குக்கு இன்பம் தந்தில; அப்படி மூக்குக்கு அவை இன்பந் தரவல்லன எனினும் நாவுக்கும் இன்பம் தாரா. இவை எல்லாவற்றிற்கும் இன்பந் தருவன உண்டா? உண்டெனினும் அவை உடலுக்கும் மெய் யிற்கும்-இன்பம் தருமா? என்னே விந்தை! என்னே வியப்பு! என்னைத் தேடி வந்து இவ்வைந்து இன்பங்களையும் ஓரிடத்தே ஒரு காலத்தே தந்து நின்றதே ஓர் அன்புப் பிழம்பு! ஆம்! என் உயிர்த் துணை! உயிர்குயிராய் துணை! அதற்கு இணை உண்டோ? உண்டோ? கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (1101) அறிதோறும் அறியாமை காலமெல்லாம் கல்வியிலே போக்கியுள்ளேன்; கற்றதைச் சிந்திப்பதிலே போக்கியுள்ளேன்; கற்றோரொடும் அளவளா வலிலே, கற்றோர் அவையிலே கேட்பதிலே கற்றோர் அவையில் எடுத்துரைப்பதிலே - போக்கியுள்ளேன். அறிவால் வளர் கின்றேன்; வளர வளர நேற்று வரை, போன நொடி வரை அறியாதவை எவை எவை என்பதை அறிகின்றேன். அறியாத போது எல்லாம் அறிந்து கொண்டதாகத்தோன்றிய அறிவு, அறிய அறிய அறியாதவையாகி அகல்வதைக் கண்டு பூரித்தேன். இப்படி இயற்கை வளம் உள்ளதே! உள்ளதே. இதற்கு இணை உண்டோ? உண்டோ? என்று எண்ணினேன்! எண்ணினேன்! இளைத்தேன்; தோற்றேன்! ஆனால், இப்பொழுதுதான் அறிய அறிய அறியாமை புலப்படுதலுக்கு இணை உண்டு என்பதை நூற்றுக்கு நூறு கண்டு கொண்டேன்; அஃது என் உயிர்த் துணையோடு பெறுகின்றேன்! அதுதான், புதுப்புது இன்பம். பெறப் பெறப் பெறாத இன்பம் ஈதெனக் காட்டுவதாக அமை கின்றது! இவ்வின்பத் தளிர்ப்பைப் பெறாதிருப்பேனேல், அறி தோறும் அறியாமை காணும் இரண்டலா ஒருமை இன்பப் பேற்றை இத்துணைத் தெளிவாக அமைந்திருக்கமாட்டேனோ? ஆண்பால் எனவும் பெண்பால் எனவும் இருபால் படைத்து அவற்றின் இணைவுக்குப் பாலமாகப் பால் உணர்வையும் படைத்து, துய்க்கும் வாயில்களையும் இயல்பாகப் படைத்து, உலகை இயக்கும் இயற்கை எத்துணை அரிய படைப்பாளி! அம்மவோ! இவ்வியற்கை விந்தையே விந்தை! அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு நினைக்க இனிமை தேனை நினைத்தால் இனிக்குமா? பார்த்தால்கூட-கையில் எடுத்தால் கூட-இனிப்பதில்லையே! நாவில் விட்டால்தானே இனிப்பு! யாழை நினைத்தால் செவிக்கு இன்பு உண்டா? யாழைக் கண்டாலும், கையால் எடுத்தாலும் செவிக்கு இன்பம் ஆவது இல்லையே! கலை நயம் பொருந்த மீட்டிய இசை செவியைத் தழுவினால் தானே இன்பம்! தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பமா? வாயிலையும் பலகணிகளையும் மூடி வைத்துக் கொண்டு தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பம் உண்டாகி விடுமா? வெயிற் காற்றோ, விசிறிக் காற்றோ தென்றலாகி விடுமா? அதுவும், மாலைப் பொழுதில் மதியம் ஒளிவீச மலர்ப் பந்தல் தாவி வரும் தென்றல் இன்பத்தை-நினைவு மட்டும் தந்து விடுமா? ஆனால், நினைத்த பொழுதிலேயே நினைத்த இன்ப மெல்லாம் உடனுக்குடன் தந்து விடுகின்றாளே என் உயிர்த் துணை; உரிமைத் துணை! அத்துணை, நேரில் நின்று வழங்கினால் தான் இன்பமா? இல்லையே. நேரில் இல்லாமலும் நினைத்த, நினைத்த இன்பங்களெல்லாம் நெஞ்சில் சுரக்கச் செய்து விடுகின்றாளே! வேட்ட பொழுதில் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் (1105) உயிர் தளிர்த்தல் ஆற்றங்கரையிலே நிற்கும் இத்தென்னை மரங்கூட வாடி விட்டதே; வறண்டு விட்டதே; பட்டே போகுமோ எனக் கசிந்தேன்; ஆனால், வானமுதாகிய மழை பொழிந்தது; ஆற்றின் வழியேயும் நீர் ஓடியது; வான்மழைப் பொழிவும் மண் வழிக்கசிவும் தென்னைக்கு அமுதமாய்விட அது தளிர்த்துக் குலுங்கிய குலுக்கல், என்னை மகிழ்விலே குலுங்கச் செய்தது! முற்றாக உதிர்ந்து போயினவே மாவிலைகள்! மொட்டை மரமா இது! என மயங்குகின்ற வேளையிலே, இளவேனிற் பருவம் தவழ்ந்தது! யார் சொல்லி வைத்தார், இளவேனில் வந்ததென்று! குஞ்சு நெருப்புப் போலப் பிஞ்சு இலைகள் துளிர்த்துக் குழந்தை யாட்டம் போட்டுக் கொஞ்சியதே! பருவக் கொடையாம் அமிழ்தத்தால் இக் காட்சிக் கொடை மட்டுமா - கனிக் கொடையும் சொட்டுமே! காற்றிலே முரிந்தது முருங்கை! முடிந்துவிட்டதா வாழ்வு? பக்கமெல்லாம் தழைத்துக் கிளைத்துப் புத்தம் புதுத்தளிர் துள்ளுகிறதே! வேருக்கு வாய்ந்த நீரும் உரமும் அல்லவோ மொட்டைத் தலைக்குப் பசும்போர்வை போர்த்தி விட்டன! இவையெல்லாம் ஓரறிவு உயிரிகள்! ஓடி நடவாதவை! உள்ளமில்லாதவை! உரையாடாதவை! வாடிக் கிடந்த அவை தளிர்த்ததை உணரும் யான், இப்பொழுது யானே தளிர்க்கக் காண்கின்றேன். அவற்றின் இலைத் தளிர்ப்புப் போல கிளைத் தளிர்ப்புப் போல உடல் தளிர்ப்போ, உறுப்புத் தளிர்ப்போ என் தளிர்ப்பு? உயிர்த் தளிர்ப்பு அல்லவோ என் தளிர்ப்பு! உயிரும் தளிர்க்குமா? தளிர்க்க வைப்பார் உண்டா? தளிர்க்க வைப்பார் இருந்து, தளிர்க்க வைத்தலைக் கண்டு கொண்ட எனக்கு ஐயம் உண்டா? உயிர் தளிர்க்கச் செய்வது; நீர் அமிழ்தும் பால் அமிழ்தும் பயன் அமிழ்தம் என்றால்; அவ்வெல்லாம் கூடிய கூட்டமிழ்தால் செய்யப்பட்டது அல்லவோ என் துணையின் உடல்! உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் (1106) அரிவை இன்பம் என் பெற்றோரொடும் இருந்தேன். அவர்கள், அறிவறியச் செய்து ஆளாக்கிய பின்னரும் அவர்களுக்குத் துணையாக நான் நிற்பது அல்லாமல், அவர்கள் துணையில் வாழ்வது தக்கதா? செய்யாமல் செய்த அவர்கள் உதவிக்குக்-காலத்தினால் செய்த அவர்கள் உதவிக்கு-பயன் கருதாமல் செய்த அவர்கள் உதவிக்கு, இணையான உதவியை நான் செய்ய முடியாவிட்டாலும், இயன்ற உதவியைச் செய்யலாமே! மேலும், நானும் அவர் களைப் போல் என் கடனைச் செய்யக் கூடியவன் தான் என்னும் உறுதிப்பாட்டை உண்டாக்குதல் என் கடனல்லவா! அதனால், எனக்கென-வருவதற்கு இருக்கும் என்சிறிய குடும்பத்துக்கென-ஒரு வீட்டை யானே அமைத்துக் கொள்ளுதல் கடமை என மேற்கொண்டேன்; அவ்வீட்டில்-யானே என் முயற்சியால் கட்டிய-பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் புகுந்த நான் பெற்ற இன்பம் எத்தகையது! நானே பூரிப்படைந்து நான் என்னைப் பாராட்டிக் கொள்வது போலல்லவா மகிழ்ந்தேன். அது மட்டுமா? என் உழைப்பால் என் கைந்நிறைய வருவாய் வந்த போது அடைந்த மகிழ்வுக்கு அளவேது? அதனினும் அவ்வருவாயால் ஆக்கப்பட்ட உணவை-காய்கறிகளை-வந்த விருந்தினர்க்கும் உற்றார் உறவினர்க்கும் என் கையாலேயே வழங்கிய இன்பந்தான் எத்தகையது? இவற்றுக்கு இணை உண்டோ, உண்டோ? என எண்ணி எண்ணி அயர்ந்தேன்! இன்றுதான், தம் இல்லத்தில் இருந்து தாம் தேடிய பொருளால் வந்த உணவைப் பகுத்துண்ணும் இன்பத்துக்கு இணை உண்டு எனக்கண்டேன்! அவ்வின்பம் என்துணையொடும் கொண்ட இன்பமாம், தம்மில் இருந்து தமது பாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (1107) உடலும் உயிரும் உடலும் உயிரும் இருக்கின்றனவே! இவை எத்தகைய விந்தையான தொடர்புடையவை! உடல் வாழ வேண்டுமானால், உயிர் வேண்டும். உயிர் இயங்க வேண்டுமானால், உடல் வேண்டும்! ஒன்றை ஒன்று இல்லாமல் வாழமாட்டா. இயக்க மாகவும் மாட்டா. உயிரில்லா உடல், பிணம். உடலில்லா உயிர், ஆவி. தனித்தனியாய்க் கடனாற்ற மாட்டா இவை. கூடிச் சேர்ந்து எத்தகைய செயற்கரிய செயல்களையெல்லாம் செய்கின்றன. இன்று என் நிலை என்ன? என் இனிய உயிர்த்துணை நிலை என்ன? அவள் இன்றி நான் இல்லை-ஆம்! என் இயக்கம் இல்லை! என் இயக்கமே அவளாகி விட்டாள்! நான் இல்லாமல் அவள் வாழ்வு இல்லை! ஆம். அவள் தன் வாழ்வாகவே என்னைக் கொண்டுவிட்டாள். எங்கள் தொடர்பு எளிய தொடர்பா? உடல் உயிர்த் தொடர்பே அல்லவோ! உடம்பொடு உயரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடைநட்பு (1122) மாறா நினைவு தலைவன் பேச்சு நிற்கட்டும். அவன் அவளைப் பிரிந்து தன் கடமை மேற்செல்கிறான். அங்கும் அவளை அவனால் மறக்க முடிந்ததா? காணும் இனிய பொருள்கள் எல்லாம் அவள் வடிவையே நினைவூட்டுகின்றன. கேட்கும் இனிய ஒலிகள் எல்லாம் அவள் குரலையே நினைவூட்டுகின்றன. மணத்திலும் சுவையிலும் அவள் நினைவே உண்டாகின்றது. அவனுக்கே வியப்பு உண்டாகும் அளவில் ஒப்பிட்டு, ஒப்பிட்டுக் காண் கிறான். அவள் வடிவுதானா, வடிவ வனப்புத்தானா, அவள் சொல் தானா, சொல்லின் சுவைதானா, அவள் செயல் தானா, செயலின் செப்பம் தானா தன்னை இப்படி வயப்படுத்தியது. என நினைந்து நினைந்துப் பார்க்கிறான்! இவற்றின் மேலேயும் ஓர் உள்ளழகு இருப்பதை உணர்ந்து அதனையுடையாளைப் பெற்ற பேற்றை எண்ணிப் பெருமிதம் கொள்கிறான். அதனால் சொல் கிறான். நான் நினைக்கிறேன் என்றான். விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென எடுத்ததைப் போல விரைந்து நினைவை மாற்றி, நினைக்கின்றேனா? எப்பொழுதாவது மறந்தால் அல்லவோ நினைப்பேன்; மறந்தே அறியாத நான் நினைத்தேன் என்பது எத்தகைய தவறு? என்னை மறந்தாலும் மறப்பேனே ஒழிய பெருந்தக்க குணங்களையுடைய அவளை மறப்பேனோ? மறந்தறியேனே. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (1125) பெண்ணின் பெருமை பெண்ணின் பெருமையே பெருமை. அப்பெருமைக்கு இணை அதுவேயாம். அடக்கத்தில் மிக்கோன் தோற்றத்துக்கு, மலையைக் கூறுவர். நிலையில் அசையாத அம்மலை தான், நிலையில் மாறாத அடக்கத்தவனுக்கு ஒப்பாகுமாம். அவ் வொப்புமை நிறை திண்மை உடைய பெண்மைப் பிழம்பாம் என் அருமைத் துணைக்கும் பொருந்துமே! அங்கே போகாதே; இங்கே பாராதே; இவரோடு பேசாதே இத்தகைய சிறை காப்பு என்பது பெண்மையை அறியாத அறிந்து போற்றாத சிறுமைக் காப்பு. பெருமைக் காப்போ அவள் தன்னைத் தானே காக்கும் நிறை காக்கும் காப்பேயாம். அக்காவல் அவளிடம் இயல்பாகவே அமைந்து இருப்பதால், என்னைப் போல்தன் உணர்ச்சிகளை எள்ளுக்காய் வெடிப்பதைப் போல் பொட்டெனக் காட்டிவிடுவது இல்லை. காய்ந்த ஓலை ஒலியென-கல்லை மோதி வரும் வெள்ளமென-ஓசைப்படுத்தி விடுவதும் இல்லை! குணமென்னும் குன்றேறி நிற்கும் அவளோ, ஒருகணப்பொழுதும், தன் உள்ளக்கட்டைத் தளர விடுவது இல்லை. கடல் அலை போல மோதுகின்றதே உணர்ச்சி அலைகள். அவள் கொள்கிறாளா? அண்டை அயல் அறியச் செய்கிறாளா? கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (1137) காரிகை கார் என்பது மழை; கார்கால மழையே பருவமழை; பட்டத்து மழை; ஆதலால் கார்காலமே காலம் என்று வழங்கப் படும். அக்காலமாரி உழவர்களுக்கு எவ்வளவு பயன் செய்யும்? அதுவே வாழ்வார்க்கு வானம் பயந்தது போன்றது எனப்படும். என் வாழ்வுக்குக் காலமாரியாக வாய்த்த காரிகை என் துணை. அவள் என் கண் நிறைந்தாள்! உடல் அழகினால் மட்டுமா கண் நிறைந்தாள்; அவளே தன் கண்ணாகக் கொண்டு விட்டாள் என்னை? அதன் விளைவு என்ன? என் உள்ளுள் பெண் நிறைந்த நீர்மையைப் பெருக்கெடுக்கச் செய்து விட்டாள். கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (1272) முகை மணம் அவள் ஏதாவது தன் எண்ணத்தை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டுமே! வெளிப்படச் சொன்னால் எவ்வளவு நல்லதென நினைக்கிறேன். ஆனால் அவளோ ஏதோ நினைக்கிறாள்! சொல்வது இல்லை. நகைக்கிறாள்! நகைப்பும் இதழ் விரி நகைப்பா? அதுவும் இல்லை! பனிப் பொழுதில், முகையாக இருக்கும் பருவப் பூவின் உள்ளே இருக்கும் மணம் போல, உள்ளே ஒரு குறிப்புடைய உள் நகைப்பு. என்னை மேனிலைப்படுத்த வந்த குறிப்பு இது போலும்! ஏனெனில், ஐயப் படாஅது அகத்தது உணர்வாரைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் என்றபடி என்னைத் தெய்வ நிலைக்கு ஏற்ற வந்த தெய்வம் போலும்! அகம் நோக்கும் இவ்வரிய பயிற்சி நல்லதே! பயிலப், பயிலத் தெளிவாகி விடும் அல்லவோ! முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு (1274) செவ்வி என் உயிர்த்துணையாம் மெல்லியலாளுடன் ஒன்றிக் கலந்து விட்டபின் யான் பெற்ற பயன்கள் ஒன்றா? இரண்டா? யான் எத்தகு செவ்வியன் ஆகியுள்ளேன்! என்னோடு போர்க்கு வந்து போர்க்களத்தில் பட்டவர் பாட்டைக் கேள்விப் பட்டுக், களத்திற்கு வாராதவர்கள் நடுங்கிய நடுக்கம் எத் தகையது என்பதை நன்கு அறிவேன். அத்தகைய கடுமைமிக்க என் குணமெல்லாம் எங்கே ஒழிந்தன? கனிவும், மென்மையும், பணிவும் பற்றும் எப்படித்தான் என்னிடத்துப் புகுந்தன? கல்லைக் கனியாக்கும் கலை என்பது காதல் கலைதானோ? சொல்லாத அவள் சொல்கிறாளே! அவள் உள்ளத்தைக் கள்ளத்தால் கொள்ளை கொண்டு விட்டேனாமே! அவளே சொல்கிறாளே! அவள் தன் அசையா நிறை நெஞ்சையும், என் பணிவும் பணிந்த மொழியும் தாம் உடைத்து விட்டனவாமே! என்னிடம் எதிர்பார்ப்பவையா பணிவும், பணிமொழியும்? அதற்கு மூலமாக இருந்தவள் அவள்! முதலாக இருந்தவள் அவள்! முளைத்து வளரச் செய்து முழுமையாக்கி வருபவளும் அவள்! தன்னால் ஆனதை எல்லாம் என்னால் ஆனது என எப்படித் தன் பெருமையையெல்லாம் என்னுள் ஒடுக்கிக் கொள்கிறாள்! இதோ நறிய சிறிய மலர்! தினைத்தனை உள்ளதோர் பூ! இப்பூவுள்ளும் தேன்! இத்தேனை எடுப்பதற்கும் தேனீ! தும்பி! எப்படி மெல்லெனப் புகுகின்றன! எப்படி மெல்லிசை பாடிக் கொண்டே உறிஞ்சியால் (சுரும்பு) உறிஞ்சுகின்றன! பூம்பொடியை மெல்லெனத் தன்னோடு கொண்டு சென்று பூவின் இனப் பெருக்கத்திற்கு உதவுகின்றன! பனித்துளிக்கும் பன்மடங்கு சிறிய தேன் துளியையும் எப்படிப் பக்குவமாகக் கொண்டு சேர்க்கின்றன! இத்தேனுண்ணிகளின் நுகர்வு நிலைகள் எத்தகைய இருபால் இன்ப நிலைக்களமாகின்றன! இம்மலரினும் மெல்லியள் அல்லளோ என் காதற் கிழத்தி! பூப்படைந்தாள் என்றும் பூவை என்றும் சொல்லும் வழக்கு களே மகளிர் மலர் என்பதை வெளிப்பட விளக்குமே! மலரினும் மெல்லியது அல்லவோ காதல் உணர்வு! முகர்ந்து பார்த்த அளவில் வாடும் மெல்லிய பூவினும், முகம்மாறி நோக்கிய அளவில் வாடும் விருந்தினர் மெல்லியர் என்றால், இம் மெல்லியலாள் காதல் உணர்வு எத்தகு மெல்லியதாம்? இம் மென்மையுணர்வைப் புரிந்து கொண்டு பதமான நிலையில் போற்றி ஒழுகும் பண்பாடு எல்லார்க்கும் அமைவதா? அச் செவ்வியுணர்ந்து போற்ற வல்லாரே இன்ப நிலைக் களமாம் இல்லற வாழ்வில் வென்றார். மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்! கடமை தலைவன் இவ்வாறு தலைவி வயப்பட்டவனாக இருத்தலால் அவன் கடமை தவறினான் அல்லன். தவறுவானும் அல்லன். வள்ளுவக் கணவன் அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை எனக் கொண்டவன். இவ்வாழ்க்கையாம் அறம் இடர் இல்லாமல் நடக்க வேண்டுமானால் பொருள் இல்லாமல் முடியுமோ? பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதன்றோ வள்ளுவம்! செய்க பொருளை என்பதன்றோ வள்ளுவ ஏவல்! பொருள் இல்லார்க்கு அறம் உண்டா? இன்பந்தானும் உண்டா? அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் களுள் நடுப்பொருள் உண்டானால் முன்னும் பின்னும் உள்ள பொருள்கள் தாமே வந்து விடுமாமே! வள்ளுவர் கூறுகின்றாரே. அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (754) ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு (760) வள்ளுவ அதிகாரங்களுள் ஒன்று குடிசெயல் வகை. ஒவ்வொருவரும் தாம் பிறந்த குடியை உயர்த்தும் வகையைப் பற்றிக் கூறுவது அது. யான் எடுத்துக் கொண்ட கடமையைச் செய்து முடித்தற்கு எவர் கையையும் எதிர் பாரேன் என்னும் பெருமையே பெருமையாக உடையது நற்குடிப் பிறப்பாகும். (1021) போர்க்களத்தில் போர்தாங்கும் பொறுப்பு வலியவன் மேல் அமைவது போல் குடும்பப் பொறுப்புத் தாங்கும் கடமை யும் வலியவன் மேலேயே வரும். (1027) குடியை மேம்படச் செய்ய முயல்வார்க்கு இது ஏற்ற பொழுது இது ஏலாத பொழுது என்பது இல்லை. அவர்களுக்கு எக்காலமும் செயலாற்றற்குரிய காலமே. அவர்கள் சோம்பிக் கிடந்தாலும் மானங் கருதிக் கொண்டிருந்தாலும் குடிகெட்டுப் போகும் (1028). ஆதலால் வள்ளுவக் கணவன் நல்ல வழியில் பொருள் ஈட்டி! நாடு புகழ் பொருள் ஈட்டி! அறம் நோக்கியும் இன்பம் நோக்கியும் பெரும் பொருள் ஈட்டி! அதே பொழுதில் அற வழியில் அன்றிப் பிற வழியில் பொருள் தேடாத கொள்கை யாளி! பொருள் மாலை கணவன் தனக்குத்தான் மாலை சூட்டியவன் எனப் பூரித் திருந்த மனைவி, இந்தப் பொருளுக்கும் தான் மாலை சூட்டிக் கொண்டானோ, தன் மேல் கொண்ட காதலினும் பொருள் மேல் கொண்ட காதல்தான் பெரிதோ எனவும் எண்ணுகிறாள்; அதனால் பிரிந்து சென்ற மாலைப் பொழுது வந்து தன்னை வருத்துவதை உணர்ந்து தவிக்கிறாள். பொருள் மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர் (1230) நெஞ்சம் புண்ணாக நினைத்து ஏங்குமாறும், உடல் நிறம் மாறுமாறும், கண் கசியுமாறும் உறுப்பு நலன் அழியுமாறும் பிரிந்த தலைவன் அண்மை இடத்திற்குப் பிரிந்து சென்றானும் அல்லன். தொலையிடத்திற்கு - எட்டாத் தொலைவுக்குச் சென்றான் என்பதை எண்ணியும் நைகின்றான். (1231) தொலைவிடம் பிரிந்து சென்ற கணவனும் எவர் துணை யாகவும் சென்றானா எனில் இல்லை. தன் ஊக்கத்தைக் காட்டு தலை விரும்பித் தன் உள்ளமே துணையாகச் சென்றானாம். (1263) கொடையாளன் என்னும் பெருமிதத்தை ஊக்கமில்லா தவன் ஒரு நாளும் பெற முடியாது என்பதையும், (598) ஊக்கமே அழியாச் செல்வம்; அச்செல்வம் இல்லார் மரம் போல்வர்; அவர்க்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு இது மரம்; இவன் மகன் என்னும் பெயர் வேறுபாடேயாம் என்ப தையும் (600) அறிந்து கொண்டவன் மன எழுச்சி குன்றிக் கிடப்பானோ? முறையோ மனைவியின் பெருமைகளையும் அருமைகளையும் எப்படி எப்படி யெல்லாமோ பேசிய கணவன் அவனைத் தவிக்க விட்டு விட்டுப் பிரிந்து செல்வது அறமா? முறையா? உடம்பொடு உயிரிடை நட்பு என்று அவளுக்கும் தனக்கும் உள்ள உயிருரிமையை உணர்ந்து, உணர்ந்து போற்றியவன், அதனை மறந்து பிரியலாமா? மலரினும் மெல்லிது காமம்; சிலரே அதன் பதன் அறிந்து வாழ்வு நடாத்த இயலும்; அப்பேறு எனக்கு வாய்த்தது எனப் பெருமிதப்பட்டுக் கொண்டவன் அப்பெருமிதம் காற்றில் பறக்க வன்கொடுமையாய்ப் பிரிந்து செல்லலாமா? என்றெல்லாம் கணவன் மேல் கண்டபடி குறை சொல்லத் தோன்றலாம். அவ்வாறு கூறத் தோன்றுவார் வாழ்வியலும் உளவியலும் அறியாராம்! அறைகாத்தான் பெண்டிழந்தான் என்பது பழமொழி, ஒவ்வொரு பிறவிக்கும் உரிய கடமைகள் உண்டு. அக்கடமை களை மறந்து வீடே-மனைவியே-என்று தஞ்சமாகி விட்டால் குடிநலமும் உலக நலமும் கெட்டுப் போகும். அக் கணவன் மனைவியர் இன்ப வாழ்வும், பழகப் பழகப் பாலும் புளிக்கும் பன்னீராண்டு சென்றால் தேனும் புளிக்கும் என்பது போல் வெறுப்புக்கு ஆளாகிவிடும். அறுசுவைப் பொருளே எனினும் மீளவும், மீளவும் அதனையே உண்டு கொண்டிருந்தால் வெறுத்தே போகும். அவ்வெறுப்பு என்ன செய்யும், வேறுவகை மாறுவகைச் சுவை இன்பத்தைத் தேட வைக்கும். ஆனால், அச்சுவைக்கு இடைவெளி உண்டாயின்-அச்சுவை நினைவே நினைவாய் இருந்து, அதனை மீளவும் எப்பொழுது பெறுவோம் என்னும் ஏக்கமே முதிர்ந்து, முதிர்ந்து, அதனை அடையும் நாளையே எண்ணி அமையும். அதன் சுவை குறையாமல் நெஞ்சில் நிறைந்து, நிறைந்து பெருகும். பிரிவுப் பேறு முழுமையான இன்ப நிலைக்களமாக இல்லறம் கொண்ட கணவன் கடமை கருதிப் பிரிதலால் உடல்தான் பிரிகின்றதே அன்றி உள்ளம் பிரிவது இல்லை. மாறாக உள்ளம் விரியவே செய்கின்றது. எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் செயலற்ற பொழுதுகளில் எல்லாம் தன் துணையின் நினைவே நினை வாய்த் தன் கடமையை விரைவில் வெற்றியாக முடித்து அவளைக் கூடுவதையே கருதுகின்றான். வீட்டில் அவன் நினைவே நினைவாக இருப்பவளும், செல்பவன் செல்லும் வழியெல்லாம் சேம வழியாக என்றும், எடுத்த செயலெல்லாம் இனிது வெல்க என்றும் அவன் எண்ணமாகவே வாழ்கிறாள். இன்றே வருவாரா? இப்பொழுதே வருவாரா? எம் கவலை தீருமா? என்று நொடி நொடியும் எதிர்நோக்குகிறாள்! காற்றின் அலைப்பும், மரத்தின் அசைவும், தெருவின் ஒலியும் எல்லாம் எல்லாம் கணவன் திரும்பி வந்துவிட்டான் என்னும் நினைவை உண்டாக்க வாயிலுக்கும் உள்ளுக்குமாய் ஊமை நடை நடக்கிறாள். கண்மூடிப் படுத்தாலும் இர வெல்லாம் உறக்கம் இல்லாளாய், ஒருவேளை தன்னை மறந்து உறங்கினும் கனவுக் காட்சியாய்ப் பொழுது கழிய எதிர்நோக்கி வாழ்கிறாள். இவை இருபாலும் இன்பம் பெருக்கும் இயற்கை நெறிகள்! ஆதலால், ‘பிரிந்தவர் கூடினால்’ அவர்கள் பெறும் இன்பம் ‘பேசவும் கூடுமோ? என்று பெருகுதற்குரிய வழியைப் பழி சொல்லி, வாழ்வியல் பழியாக்கி விடுதல் கூடாதாம். அதனால் ‘மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய கணவர் பிரிந்து சென்றால் அவர் உறுதியாகச் சொன்ன சொல்லை நம்பி இருந்தவர்க்குக் குற்றம் உண்டாகுமோ? என்று பிரிவாற்றாப் பொழுதிலும் கூட வள்ளுவத்தலைவி மனந்திறந்து பேசுகின்றாள் (1154). பேராண்மை பிரிந்து சென்ற கணவன் எளியனா? பேராண்மையாளன். அவன் தனிநிலைப் பேராண்மை; குடிநிலைப் பேராண்மை; நாட்டியல் பேராண்மை என முப்பேராண்மை கொண்ட முழுமையன். பிறன்மனை நோக்காத பேராண்மை என்பது அவன் தனிநிலைப் பேராண்மை (148). நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த இல் லாண்மை ஆக்கிக் கொளல் என்பது குடிநிலைப் பேராண்மை (1027). பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (773) என்பது நாட்டியல் பேராண்மை. இம் முப்பேராண்மைகளையும் உடைய கணவன் தன் மனைவி போலவே தன்னுளம் காக்கும் திண்மையன். நிறை காக்கும் காப்பன். அதனால் நல்லோர்களால் கருதப்படாமல் ஒழிக்க வேண்டிய, அயன் மகளிர் தொடர்பு, மயக்கும் குடி நாட்டம், சூதாட்டம் என்பவற்றைக் கட்டாக ஒழித்தவன் (920). அதனால், தம்மைப் போன்ற நற்குண நற்செயல் அமைந்த கணவரைப் பெற்றால் அப்பெண்டிர் என்றும் புதிது மணந்து கொண்டு வாழும் இன்ப உலகினராகவே பெருஞ்சிறப்பு அடைவர் என்பதற்குத் தகப் பாராட்டும் வாழ்வுடையவனாகத் திகழ்கிறான் (58). பொருள்தேடல், போராடல், தூது, கல்வி என்ற வழி களால் பிரிந்து சென்ற கணவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றியாக முடித்து விட்டுத் தன் மனைவி நினைவே, நினைவாக மனைக்குத் திரும்புகிறான். தேடி வந்த கணவன்; நாடியிருந்த மனைவி! ஆம்! பெரிதாற்றிப் பெட்பக் கலக்கின்றனர் (1276). நிலத்தொடு நீர் இயைந்தாற்போலக் கலக்கின்றனர் (1323). ஊடல் ஊர்ப்பிரிவு உயர்ந்த இன்பத் துய்ப்புத் தருதற்குரிய பிரி வாக அமைவதை இருவரும் தம் பட்டறிவால் உணர்கின்றனர். அவ்வுணர்வு என்ன செய்கின்றது? ஊரில் இருக்கும் போதும், உடனாகி இல்லில் இருக்கும்போதும் உறவாகி ஒரு பாயலில் இருக்கும் போதும் அவ்வுயரின்பத்தை அடைவதற்கொரு வழி இருப்பதை இருவர் உள்ளகங்களும் வழிவழியாக வந்த வாழ் வியல் வழக்கால் உணர்ந்து கொள்கின்றன. அவ்வருமையான இன்பக் கருவியே ஊடல் என்பதாம்! ஊடலாவது பாயற் பிரிவு. கூடுதல் ஒன்றுபடுதல் கூடல் என்றால், ஊடு ஒன்று வந்து படுவது ஊடல் தானே! அவ்வூடு வந்த ஒன்று உண்மையானதா? பழியறியா வள்ளுவக் கணவரிடத்து உண்மைக் குறை உண்டோ? அதற்கு அவன் சான்றா? இல்லை, அவளே சான்று மொழி கிறாள்; அம்மொழி கேட்கும் போது வாய் மூடிக் கொண்டு ஒத்துக் கொள்வதை அன்றி ஒன்று சொல்ல முடியாதே! அவள் சொல்கிறாள்; இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு (1921) என்கிறாள். கணவனிடத்துத் தவறேதும் இல்லையாம். தவறு இல்லாமையும் ஒரு தவறா? ஆம்! ஊடுதலை உண்டாக்கிக் கொள்வதற்குத் தவறிலாத் தவறு வேண்டிற்றாம். ஏனாம்? அவர், மேலும் மேலும் அரவணைத்துக் கொள்ள வேண்டுமாம்; அதற்காகத்தான் இல்லாக் குறையை இசைக்கிறாளாம். அவரிடம் தவறில்லை என்று சொல்லளவிலோ ஊடி நின்றாள். இல்லை. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து (1325) என்கிறாள். அவர் தவறு இல்லாதவர் தாம்; மிக விரும்பு பவர் தாம்; எனினும் அவரை விட்டு அப்பால் சென்று கொள்வதிலே ஓரின்பம் உண்டாகின்றதாம்! அப்பேரின்பம் வேண்டுமாம்! அதற்காக ஊடல் என்னும் பொய்ச் சினம் வேண்டுமாம்! அவள் அடையத் தவிக்கும் இன்பத்தை அடைய அவ னுக்கு என்ன விருப்பம் இல்லையா? அதனால் அவள் ஊடலைத் தணிக்க எண்ணுகிறான். பலப்பல முயற்சிகளைச் செய்கிறான். தன்னொடும் ஊடல் கொண்டு இருப்பவரை வயப் படுத்தித் தழுவாது விடுதல், துன்பத்தால் நலிபவர்க்கு மேலு மோர் துன்பம் செய்வதாகும் என்றும் (1303), ஊடியிருப்பவன் உள்ளக் குறிப்பை உணர்ந்து அர வணைத்துக் கொள்ளாதவர் செயல், நீர்ப்பதமற்று வாடிப் போய்க் கிடக்கும் கொடியை அடியொட்ட அறுத்து விட்டது போலாகும் என்றும் (1034) எண்ணுகிறான். தும்மல் பொய்ச் சினத்தைத் தணிப்பதற்குப் பொய்யாக ஒரு தும்மல் தும்முகிறான். தும்மல் வந்தவுடன் வாழ்க என்று பக்கத்தில் இருப்பவர் வாழ்த்துவது வழக்கம் அல்லவா! அவ் வழக்கப்படி ஊடலை மறந்து வாழ்த்துவாள் என்பதால் தும்முகிறான்! அவளும் உடனே வாழ்த்தவும் செய்தாள். ஆனால், அவனோடு ஒன்றி வாழ்ந்தவள் அவன் செயலை உணர மாட் டாளா? அதனால், கண்ணீரை வடித்துக் கொண்டு நீர் யாரை நினைத்துக் கொண்டு தும்மினீர் என்று சினந்தாள்! இந்நிலையில் இயல்பாகவே தும்மல் வந்து விட்டது. தும்மினால் விடமாட்டாளே என்று எண்ணிக், கையால் மூக்கைத் தேய்த்துக் கொண்டு முயன்று தும்மலை அடக்கினான். பொய்ச் சினம் பொங்கிய அவள், அவனுக்குத் தும்மல் வரு வதையும், அவன் அதை முயன்று அடக்குவதையும் ஓரக் கண் ணால் கண்டு விட்டாள். அதனால், மீண்டும் அழுதாள். உமக்கு உறவானவர் உம்மை நினைப்பதையாம் அறியாதவாறு மறைக்கிறீரோ என்றாள் தோல்வி இனி எப்படித் தீர்ப்பது என்று எண்ணிக் கொண்டு அவளை ஏறெடுத்துப் பார்த்தான். அதற்கும் அவள் மசிய வில்லை. எவர் அழகோடு என்னை ஒப்பிட்டுக் கொண்டு பார்க்கிறீர் எனக் சினந்தாள். ஏன் அவன் சினங் கொள்ள வில்லை? ஏன் தன் ஆண்மைத் தனத்தைக் காட்டவில்லை! வென்றேன் என வீறாப்புக் காட்ட நினைக்கவில்லை! அவன் ஊடலுவகை அறிந்த கணவன்! அவன் சொல்கிறான்; ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும் (1327) ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (1333) களப் போர்க்குச் சென்று பகை வென்று வெற்றி காணும் நிலைவேறு! அதுபோர் வீரன் நிலை! இது குடிநலம் காக்கும் கணவன் நிலை! குடும்பத்தில் நிகழும் ஊடற் போரில் தோற்றவரே வென்றவர்! அவ்வெற்றியை அவள் அடைய விரும்ப மாட்டாளா? அவனினும் அவள் விரும்புவாள் என்பது தெளிவே. இல்லறக் கடன் இனிக் கணவனுக்கு இல்லறக் கடமையென எவையும் இல்லையா? அக்கடமைக்காகத் தானே வாழ்வு! கடிய மருந்தைக் கட்டி பூசித் தந்து மருத்துவர் உண்ணச் செய்வது போல, இன்பத் தளிர்ப்புடன் இல்லறக் கடமைகள் இவை யெனக் காட்டி அவற்றைப் பேணச் செய்வது வள்ளுவ மாகும். நல்ல கணவன் என்பவன் தன் இயற்கைத் தொடர்பால் அமைந்த தந்தை, தாய் மனைவி ஆகிய மூவர்க்கும் நிலை பெற்ற துணையாக இருந்து காத்தல் வேண்டும். இதுவே அவன் தலையாய கடமை (41). உலக நலங்கருதிய தொண்டுக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்ட துறவோர், உணவுக்கு வழியில்லா வறியர், காப்பற்ற ஏதிலியராய் வந்தவர் ஆகியோரைக் காப்பதும் அவன் கடனே! (42). நல்லறிஞர், வாழ்வில் வழிகாட்டும் பெரியவர், விருந்தினர், சுற்றத்தினர் என்பவருடன் தன்னையும் பேணிக் கொள்ளல் அவன் கடனே (43). துறவோர் வறியர் முதலானவர்க் கெல்லாம் உதவுதல் இல்வாழ்வான் கடமையா? அவனால் முடியுமா? என்று எண்ணத் தோன்றலாம்! துறவோர் அறிஞர் விருந்தர் ஆகியோரைப் போற்றுதல் வகையால் அவர்கள் அடையும் நன்மையினும், பேணுபவன் குடியும் உலகுமே அடையும் நலம் பெரிதாம். பெரியாரைத் துணைக்கோடல் என்னும் பேறு வாய்க்கும் வாயில் இது தானே! நற்பெருமக்கள் நாடிவரும் இல்லம் பற்பல நலங்களைத் தானே பெறுதல் கண்கூடு. அவர்கள் கொண்டுள்ள நிறை நலங்களை அறிந்து பயன்படவும், தாம் அறியாதே கொண் டுள்ள குறைகள் தாமே அகன்று ஒழியவும் இந்நன் மக்கள் தொடர்பு போலும் ஒன்று இல்லையாம். இனி, அவர்கள் என்ன சுவை விரும்பி வருவார் அல்லரே! சோற்று வாழ்வே வாழ் வெனக் கொண்டார் அல்லரே! குடும்ப நிலை அறியாத நீர்மையர் அல்லரே! இன்னும் ஒருவழியும் இல்வாழ்வானுக்குக் காட்டினாரே வள்ளுவர்! அளவறிந்து வாழ்க; இல்லையானால் பொருள் இருப்பது போல் இருந்து போய்விடும் என்றும் (479), தம்மிடத்துள்ள பொருளின் அளவை அறிந்து பாராமல் ஒருவர் செய்யும் உதவியால், அவர்தம் பொருளின் அளவு மிக விரைவிலேயே அழிந்து போகும் என்றும் (489) எச்சரிக்கிறாரே! அதனால், கொடுத்துக் கெடவேண்டும் என்பது வள்ளுவமன்று; கொடுத்துச் சிறக்க வேண்டும் என்பதே வள்ளுவமாகும். ஒருவன் இல்வாழ்க்கை அன்புத் தன்மையையும், அறச் செய்கையையும் கொண்டிருப்பதே அவ்வாழ்வின் பண்பாகவும் பயனாகவும் விளங்கும் என்னும் வள்ளுவர் (45), அவ்வில் வாழ்க்கையால், அவ்வாழ்வுடையான் தெய்வமாக உலகோரால் மதிக்கப்படுவான் என்று இல்வாழ்வின் நிறைவை நிலை நாட்டுகிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்பது அது . தாய் நிலைக் கணவன் உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் காந்தியடிகள். அவர் இயல்பான ஆன்மாவாகவே பிறந்தார்; வளர்ந்தார், வாய்மை வாழ்வால் பேரான்மா (மகாத்மா) என்று உலகம் போற்றும் பெருநிலை பெற்றார். காந்தியடிகள் நாட்டுக்கும் நானிலத்திற்கும் ஆற்றிய தொண்டை உலகம் நன்கு அறியும். அவர் கணவன் என்னும் நிலையில் ஆற்றிய வீட்டுத் தொண்டை, அவர் வரலாற்றைக் கற்றாரே அறிவர். ஒப்பற்ற துணையாகப் பின்னே வளர்ந்த அன்னை கத்தூரிபா-காந்தியடிகளார் துணைவியார்-நடுக்காலத்தே, அரத்த (இரத்த)க் கொதிப்பு நோய்க்கு ஆட்பட்டார். மருத்துவர் உப்பு ஆகாது; பருப்பு ஆகாது; எண்ணெய் ஆகாது என்றனர். அடிகளார், மருத்துவர் குறிப்பைப் பின்பற்ற வேண்டும் என்றார். மறுத்தார் அம்மையார். வலியுறுத்தினார் அடிகளார். முடியவே முடியாது; அவ்வாறு சுவையற்ற வகையில் உட் கொள்ள மாட்டவே மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சரி; நீ அப்படியே செய்! நான் இன்று முதல் உப்பு, பருப்பு, எண்ணெய் சேர்க்கமாட்டேன்; கட்டாயம் மாட்டேன் என்றார். எனக்குள்ள நோய்க்குத் தானே அந்நோன்பு; உங்களுக் கேன் என மறுத்தார் அன்னையார். யானே மேற் கொள்ளும் நோன்பு என்று உறுதியாக இருந்தார், அடிகள். அவர்க்கு உப்புப் பருப்பு எண்ணெய் நீக்கிய உணவை ஆக்கிப் படைத்துத், தாம் அவற்றைச் சேர்த்துண்ண அப் பெண்மை மனம் இடந் தருமா? அவர், தாமே அந்நோன்பை மேற்கொண்டார்; ஆயினும் அடிகள், மருத்துவர் அவர்க்குக் கூறிய கால அளவு எவ்வளவோ அதுவரை அவ்வுணவையே உண்டார். பெற்ற குழந்தைக்காகப் பெரும் பெயர் அன்னை நோன்பு கொள்வது உலகியல்! ஆனால், தம் வாழ்க்கைத் துணைக்காகத் தாம் நோன்பு கொண்டு கடைப்பிடியாக இருந்த வாழ்வு காந்தியடிகளார் வாழ்வேயாகலாம்! வள்ளுவர் கண்ட தெய்வப் பேற்றினர் அல்லரோ அவர்! கணவன் வெற்றி ஒரு கணவனின் வெற்றி வாழ்வு என்பது மனைவியின் நெஞ்ச நிறைவிலே இருப்பது! அந்நிறைவிலே எதுபேசும்? வாய்பேசும். அது எப்படிப் பேசுகிறது? எவரிடம் பேசுகிறது? தலைவன் நல்ல குடும்பத்தவன்; தன்னொடு கூடியவர்களைப் பிரியாதவன்; கெடுசொல் எதுவும் சொல்லாதவன்; அளவிலா அன்பன் என்று நீ சொல்லினை; என்னை, அவனைக் கணவனாகக் கொள்ள ஏவினை அவனோ, இசைநூல் இலக்கணப்படி இசைக்கும் இசையைக் காட்டிலும், புதிது புதிதாகப் படைக்கும் படைப்பைக் காட்டிலும், திருமணம் செய்துகொண்ட நாளைக் காட்டிலும்- எனக்கு இனியவனாம் என்கிறார் தலைவி. இதனைத் தன் தோழிக்குக் கூறி அவள் செயல் திறத்தையும் தன் நன்றியறிதலையும் ஒருங்கே அறிந்து கொள்ளச் சொல்கிறாள். இவ்வகப் பாட்டைப் பாடிய நங்கையர், அஞ்சியத்தை மகள் நாகையார் என்பார் (352). நல்ல கணவனின் வாழ்வியல் வெற்றி, அவன் மனைவி, வதுவை நாளினும் இனியனால் எமக்கே. என்பதேயாம்! வதுவைநாள்-திருமண நாள்!  4. நல்ல மனைவியாக வாழ்வின் அடிப்படை வாழ்வின் அடிப்படை அலகாக-அளவாக-வள்ளுவர் கொண்டது குடும்பம். குடும்பத்தின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் அல்லர்; இருவர். அவர் கணவன் மனைவியர். அதனால், முப்பால் மொழிந்த திருவள்ளுவர், முதற்பாலை அறத்துப் பாலாக்கி அதன் தொடக்கமாக இல்வாழ்க்கை என்பதனையும் அதனை அடுத்து வாழ்க்கைத் துணைநலம் என்பதையும் வைத்தார். வாழ்க்கைத் துணை வாழ்க்கை என்பது துணையொடு கூடியது என்பதும், அது நல்லதாக அமைய வேண்டும் என்பதும், துணை என்பது துணைவனையோ துணைவியையோ குறியாமல் ஒருவர்க்கு ஒருவர் துணை என்னும் பொதுக் குறிப்பினது என்பதும் இப் பெயரீட்டால் தெளிவாகும். இருபாற் பொது வாழ்க்கைத் துணை என்பது மனைவியே என்றும், வள்ளுவர் அவ்வாறு கூறுவதால் கணவனுக்கு ஓரளவால் மனைவி தாழ்ந்தவள் என்று குறிப்பிட்டு விட்டார் என்றும் கூறுவார் உளர். அவர் வாழ்வியலையோ, வள்ளுவத்தையோ தெளியக் காணாதவர். சான்று வள்ளுவர் எண்ணம் அதுவே எனின், வாழ்க்கைத் துணை என்னும் இடத்தில் வாழ்க்கைத் துணைவி என்றே கூறியிருப்பார். துணை என்பது ஆள் சுட்டாமல் துணையாம் தன்மை குறிப்பது. அவளுக்கு அவன் துணையாம் பொழுதும் நிலையும் உண்டு. அவ்வாறே அவனுக்கு அவள் துணையாம் பொழுதும் நிலையும் உண்டு. ஆதலால், ஒருவருக்கு ஒருவர் துணையேயன்றி இவருக்கு இவரே துணை என்றார் அல்லர். மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51) என்பதில் மனைவியே வாழ்க்கைத் துணை என்பது வெளிப்பட விளங்குகின்றதே என்பார் உளர். அவர், மனைவி தன் கணவனைத் துணை என வழங்குவதை அறிவாராக. அது, பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் (1234) என்பதாம். ஆதலால், நாம் கொண்டுள்ள - உலகம் வன் கொடுமையாய்க் கொண்டுள்ள - பெண்ணைத் தாழ்த்தும் சிறு மையை, வள்ளுவர் மேல் ஏற்றாமை கடனாம். பெண்ணின் பெருமை வள்ளுவர் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று அறத்துப்பாலில் (54) வினா எழுப்பிப் பெருமைப் படுத்தியவர். பொருட்பாலில் பெண்ணே பெருமை உடைத்து என்று பேசியவர் (907). இன்பத்துப் பாலில் பெண்ணிற் பெருந்தக்கது இல் என்றவர் (1137). இவ்வாறு முப்பாலிலும் பெண்ணொடு பெருமை சேர்த்துப் பேசிய பெருமகனார் உள்ளத்தை உணராமல் உரை யாடுதல், ஆய்வோர் முன் அவர்க்குப் பெருமை சேர்க்காது என்பதை உணரார் போலும்! இற்றை இருபதாம் நூற்றாண் டிலும் பெண் பிறப்பை மதியாரே பெருகிக் கிடக்கும் பெரும் பாவ மண்ணில், ஈராயிர ஆண்டுகட்கு முன்னரே பெண்மைக்கு எத்தகைய பெருமை சேர்த்த பெருமகனார் வள்ளுவர். அவர் காலத்து வாழ்ந்தாருள் எந்நாட்டிலேனும் எவரேனும் அவர்க்கு இணையாகப் பெண்ணுக்குப் பெருமை பேசிய ஒருவர் பிறந் தாரா? இருந்தாரா? பேசினாரா? ஆய்ந்து கூறலாமே அதனை? குழந்தை-மனைவி-தாய் தேனே! பாலே! கண்ணே! மணியே! மயிலே! மானே! என்று தம்மால் கொஞ்சப்பட்ட பெண் குழந்தைதானே, வளர்ந்த பெண்ணாய் மனைவி ஆகியிருக்கிறாள்! அகவை முதிர்ந்து ஆளாகிப் பொறுப்பு ஏற்றமையால் இழிவுக்கு ஆளாகி விடு வாளா? இழிவு படுத்தப்பட வேண்டுமா? அம்மா அம்மா என்று ஆயிர, ஆயிர முறை தேனொ ழுக அழைக்கப்பட இருக்கும் திருப்பிறவிதானே மனைவி! அவள் தாய் நிலையில் பெறுகின்ற பெருமை அதற்கு முன்னை நிலையாம் மனைவி நிலையில் பெறுதற்கு உரியவள் அல்லா தவளாகி விடுவாளா? பெண்ணடிமை தீருமட்டும் பேசும்திரு நாட்டின் மண்ணடிமை தீராது என்னும் மணிமொழியைப் போற்றா விடின் நாட்டுக்கு உய்வு இல்லை! அழைப்பும் பெயரும் நல்ல மனைவியாவாள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருப்பாள்? என்பதை வள்ளுவக் கணவன் தன் மனைவியை அழைக்கும் அழைப்பாலும், பெயரீட்டாலுமே காட்டி விடுகிறான். ஒருவரை அழைக்கும் அழைப்பே-பெயரீடே-குளிரச் செய்ய வேண்டாமா? சொல்பவர்க்கும், சொல்லப் படுபவர்க்கும், இடையே கேட்பவர்க்கும்-இன்பத் தளிர்ப்பு ஆக வேண்டாமா? அசைஇயல், அணியிழை, அரிவை, ஆயிழை, இல், இல்லவள், இல்லாள், இவள், ஒண்டொடி, ஒண்ணுதல், ஒள்ள மர்க் கண்ணாள், ஒளியிழை, கண்ணிறைந்த காரிகை, குறுந் தொடி, சேயிழை, திருநுதல், துணை, பணிமொழி, பூவன்னக் கண்ணாள், பெண், பெண்டகை, பெண்டிர், பேதை, பொரு ளாள், மகளிர், மடந்தை, மடவரல், மலரன்னக் கண்ணாள், மனை, மனையாள், மாணிழை, மாதர், வாழ்க்கைத் துணை என்பன மனைவி நிலையில் பெண் பெறும் பெயர்கள். தாய் நிலையில் பெற்ற பெயர் ஈன்றாள். அசை இயல் என்று ஒரு கணவன் தன் மனைவியை அழைக்கிறான் என்றால், அவள் எத்தகைய இனியவளாக இருந்திருக்க வேண்டும்! அழைப்பவனும் எத்தகைய நய வோனாக இருந்திருக்க வேண்டும்! அசைவளி என்பது தென்றற் காற்று. இவன் வாழ்வுக்குத் தென்றலாய் வாய்த்தவள், அத்தென்றலாய் அசைநடை புரி கின்றாளாம்! அந்நடையும் அந்நடைக் குறிப்பும் உள்ளங் கொள்ளை கொள்ளும் ஒப்பற்ற அழகாக உள்ளனவாம். அவளை அவன் ஆர்வத்தால் நோக்கக் களங்கமற்ற பச்சைக் குழந்தை யாய்க் கரவற்று மெல்ல நகைக்கிறாளாம்! அறிவும் பண்பாடும் திருந்த வடிவு திருந்தும் என்னும் மாந்தவியல் கொள்கைக்கு இக்குறள் கூறும் செய் தியினும் வேறு சான்று வேண்டுமோ? அது, அசையியற்கு உண்டு ஆண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் (1098) என்பது . தன் மனைவியை வள்ளுவக் கணவன் அழைத்த பெயரீடே அவன் வாழ்வியல் நாகரிகத்தைத் தெரிவிக்குமே! ஒவ்வொரு வரும் நம் மனைவியை நாம் எப்படி எப்படி அழைக்கிறோம் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்வார்களாக! நெஞ்சங் குளிர நேயப் பெயரிட்டு அழைப்பார்களாக! அழைக்கப் பழகுவார் களாக! அழைத்தால் என்ன பயன்? அழைக்கத் தொடங்கினால் அவர்களே அறிவார்கள்! நல்ல மனைவி பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் ஒருங்கே பெருமை சேர்ப்பாள். இவளை மகளாகப் பெறும் பேறு பெற்றேனே எனப் பிறந்த வீட்டுத் தாய் மகிழவும், இவளை மருமகளாகப் பெறும் பேறு பெற்றேனே எனப் புகுந்த வீட்டுத் தாய் மகிழவும், அவள் இயலும் செயலும் அமைதல் வேண்டும். இவ்வமைவுக்கு வித்து எங்கே உள்ளது? அவள் தன் கணவனைப் போற்றும் போற்றுதலிலேயே உள்ளது! அவன் நிறைவுதானே, பிறந்த இடத்து நிறைவும் புகுந்த இடத்து நிறைவும்! கண்ணுள்ளார் கண்ணாகவும் கண்ணின் கருமணிப் பாவையாகவும் மனைவியைக் கருதுபவன் தலைவன். அவளோ, அவனைத் தன் கண்ணுள்ளாகவே குடியிருக்க வைத்துக் கொண்டாள். முன்னெல்லாம் கண்ணுக்கு மைதீட்டுதல் வழக்கமாகக் கொண்டிருந்தாள். மணங் கொண்டு, கணவனைத் தன் கண்ணுள் குடியிருக்க வைத்த பின்னர், கண்ணுக்கு மை எழுதுவதையும் விட்டு விட்டாளாம்! கண்ணின் கரியமையால் அவர் காணக் கூடாமல் மறைந்து படுவாரே என்ற எண்ணத்தால் அவ்வாறு செய்கின்றாளாம். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து (1127) உள்ளத்தார் கணவன் உள்ளத்துள் உறைகின்றானாம் (1130). அதனால் தான் வழக்கமாக முன்னே உண்டபடி, வெதும்பும் உணவை உண்ண மாட்டாளாம்; வெப்பமான குடிநீர் எதுவும் பருக மாட்டாளாம். வெப்பம் உண்டால்-பருகினால்-என்னவாம்? நெஞ்சத்தில் அமர்ந்திருக்கும் நேயக் கணவனைச் சுட்டு விடு மாம், இச்சுடு பொருள்கள்! ஆகவே, வெதும்பிய உணவுகளைக் கொள்ள அச்சம் கொள்கின்றாளாம்! நெஞ்சத்தார் காத லவராக, வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து (1128) எதிர்பார்த்தல் கூட்டை விட்டுச் செல்லும் பறவையை, அதன் துணை எவ்வளவு ஆர்வமாக நோக்கியிருக்கிறது. எத்தனை முறை கூட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று, சென்று பார்க்கிறது! வரவேற்புடன் எதிர்பார்த்திருக்கும் இப்பார்வை நிலைதானே, அன்பை விரிய விரிக்கும் அரிய கருவி! அதனை அருமையாகப் போற்றிக் கொண்டு, தானும் மகிழ்ந்து வெளியே போய் வரும் தன்னவனையும் மகிழச் செய்கிறாள் வள்ளுவ மனைவி. வீட்டுக்குள் தான் அவன், எவ்வளவு ஆர்வத்தால் அடி வைக்கிறான்! எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமில்லாமல் இனிய சொற்களைச் சொல்கிறானே, எத்தனை வகையாய்! அவள் அன்புத் தளிர்ப்புக்கு எள்ளத்தனையும் குறையாத அரவணைப்பைச் செய்கின்றானே! அவன் சொல்லும் செயலும், அவளைப் புதியதோர் உலகுக்கு அன்றோ அழைத்துச் செல்கிறது! அப்பொழுது அவள் நினைக்கிறாளே, என்ன இனிமை; என்ன அன்பு, இனியும் இவர் கடமை கருதிப் பிரிந்து செல்லுதல் உண்டாகுமே! என் செய்வேன்? என்று ஏங்குகிறாள்! இந்த எதிர்பார்ப்பு, முளை என்றால், இன்பப் பயிரின் பழுதிலா விளைவு இவ்வேக்கம் தானே! இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு (1052) பிரிவு இது நாள்வழி அலுவலுக்கோ தொழிலுக்கோ போய் வரும் பிரிவுதான்! நெட்ட நெடுங்காலப் பிரிவும் அன்று! நெட்ட நெடும் இடப் பிரிவும் அன்று! அப்பிரிவு பின்னே உண்டாயினும் தாங்குதற்குரிய பயிற்சி நிலையே இப்பொழுது வழி நாள்வழிப் பிரிவுகள். அருந்தல், பொருந்தல் ஆகிய அவ்வளவிலேயே வாழ்வுச் சுருக்கமுடைய உயிரிகளுக்கே, பிரிவும், கூடலும் தவிர்க்க முடியாமல் இருக்கும் போது, மாந்தர் வாழ்வில் பிரியாமையை எதிர்பார்க்க முடியுமா? இதனால்தானே, பழந்தமிழ் அகப்பாடல் பெருந்திரட்டு நூலாம் அக நானூற்றில், நான்கு திணைகளுக்கும் 200 பாடல்கள் ஆக, பாலை என்னும் பிரிவுக்கு மட்டும் 200 பாடல்கள் உள்ளன. இனிப் புணர்தல் என்னும் குறிஞ்சித்திணை ஒன்று நீங்கிய முல்லை, மருதம், நெய்தல் என்னும் மூன்று திணைகளுமே பிரிதல் சார்பு உடையவை தாமே. அவ் வாறானால், எட்டில் ஒரு பங்குதானே கணவன் மனைவியர் இல்லத்தில் கூடியிருக்கும் பொழுது! எஞ்சிய ஏழு பங்குப் பொழுதுகளும், இருபால் கடமைகளும் இனிதின் இயலுதற்கு அமைந்த பிரிவு உடையவை அல்லவோ! அதற்கு இயல்பான பயிற்சி, தொடக்க முதலே வேண்டியிருத்தல் கட்டாயம் அல்லவோ? இவ்வொழுக்க இயல்-உலகியல்-நிலைக்குத், தன்னைத் தான் கொண்ட கடைப் பிடிகளால் சீராக்கிக் கொள்கிறாள். வள்ளுவ மனைவி! அதனால் கடமைக்குத் தடையாக அவள் இருப்பதும் இல்லை. அவனும் அவ்வாறாக இருப்பானும் அல்லன். ஏனெனில், தங்களைப் புரிந்து கொண்டதுடன் வாழ் வியலையும் புரிந்து கொண்டவர்கள் அவர்கள்! பிரிவு ஒப்புகை கணவன் தான் ஏற்றுள்ள கடமையை ஆற்றச் செல்லுதல், தங்கள் குடும்ப நலனுக்கு உரியது மட்டுமன்று; நாட்டு நலனுக்கும் உரியது-என்பதையும் உணர்கிறாள், அவன் பிரிவால், தனக்கு உண்டாகும் துயரத்தையும் எண்ணி மறுகுகிறாள். இருதலைக் கொள்ளி உள்ளெறும்பு போலத் தவிக்கிறாள். தன் நலத்தை அப்போழ்துக்குப் பலியிட்டாவது தன் கணவன் கடமை மேற் செல்வதற்கு விடை தருதல் கடமை என உணர்கிறாள். அதனால், கொடுக்கக் கூடாது எனத்தன் உள்ளுள் கொண்டிருந்த பிரிவு ஒப்பு தலைக், கொடுக்க உறுதி கொண்டாள், அதனை. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் என்கிறாள். (1181) கொடுத்தது கொடுத்தாயிற்று; பொறுத்துக் கொள்ளலாம் என்றால் பெரும்பாடாக உள்ளது. ஆற்றிலே ஊற்றுத் தோண்டி நீரை அள்ளினால், அள்ள அள்ள ஊறுவது போல, உள்ளிருந்து கவலை ஊற்றெடுக்கிறது. அக்கவலையை மறைக்கத் துணிந்தாலும் முடிவதில்லை. அயலாரும் அதை எப்படித்தான் கண்டு கொள் வார்களோ? என்ன? என்ன? என்பார்க்கு என்ன சொல்வேன்? மறைப்பேன்மன் யானிஃதோ நோயை; இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் (1161) நினைதலும் கூறலும் கணவன் பிரிவை ஆற்றுவதற்கு என்ன செய்கிறாள்? அவன் உடன் இருந்தபோது எப்படியெல்லாம் பேசினான், எவ் வெவ்வாறெல்லாம் மகிழ்ந்தான், எங்கெங்கெல்லாம் அழைத்துச் சென்றான், தான் ஒன்றுற்ற போதெல்லாம் எப்படி, எப்படி உருகினான்; உதவினான்-இவற்றையெல்லாம் எண்ணுகிறாள். ஏனெனில், எண்ணாமல் தனியே இருந்தால் நெஞ்சமே தின் கிறதாம்! ஆதலால், எண்ணுகிறாள்; தோழியிடத்தும் உரிமை யாளரிடத்தும் அவர்தம் அருமைக் குணங்களைப் பற்றியே பேசுகின்றாள். உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் (1184) அவரைப் பற்றி-அவர் குணங்களைப் பற்றி-அவர் செயல் திறனைப் பற்றி-எவராவது பேசுகிறாரா? தன் செவி குளிரக் கேட்டுக் கொள்கிறாள். அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு (1198) குறை கூறுவார் ஊரவர் அனைவரும் குறை இல்லாதவரா? பிறரைக் குறை கூறுவதே பிறவிக்கடன் என்று கொண்டாரும் இலரா? நம் பாட்டை நாம் பார்க்கலாம்; அவர்கள் பாடு அவர்களோடு என்று இருப்பார் எத்தனை பேர்? ஒருவர் துன்பப்படும் நிலையில் அத்துன்பத்திற்கு ஆறுதல் தருவதற்கு மாறாகக் கிண்டிக் கிளறிப் பேசுவாரும் இட்டுக்கட்டி மொழி வாரும் அதனையும் இனியவர் போல் வந்து என் காதில் விழுந்தது அதனால் சொன்னேன்? என்ன நடிப்புப் போலியராக இருப்பாரும் வாளாவிடுவரா? அத்தகையர் மனைவியிடம் வந்து அவள் கணவனை அப்படிக் கொடியவன் இப்படிக் கொடியவன் என்று கொடுமைப் பாட்டுப் பாடுகின்றார். அவன் ஊரில் இருக்கும் போது உறவாய் இருந்து, ஊமையாகக் கிடந்து உரிமையால் நலம் பெற்றவர்களும் அப்படிப் பழி கூறினர். அதனால் பிரிவால் படும் துயரினும் அவர் தம் பேச்சால் பெருந்துயரும் பட்டாள். தொடியொடு தோள் நெகிழ நோவல்; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து (1236) வசையும் வாய்ப்பே இந்நிலைதான் அவளுக்கு இன்னலின் இன்னல் ஆயிற்று. துன்பப்படும்போது, துணையாக இல்லாமல் போகட்டும்; துன்பத்தில் துன்பம் ஆக்காமலாவது இவர்கள் இருக்கக் கூடாதா? இத்தகைய ஊரில் என்னைத் தனியே விடுத்து அவர் போகாமலாவது இருக்கக் கூடாதா? நானாவது, இத்தகைய உறவல்லா உறவின் இடையே வாழும் கொடுமையேனும் இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா? என எண்ணினாள். இவ்வெண்ணங்கள் தந்த பயன் என்ன? அவனைப் பற்றிய நல்லெண்ணம் மேலும் உறுதிப் படவும் அவன் மேற்கொண்ட அன்பு உறுதிப் படவுமே, உதவின. தானே, பிரிந்தவனை நினைத் திருந்தமை நேரிடை நலம் என்றால், பிறர் நினைவூட்டியமை, எதிரிடை வழியால் உண்டாக்கிய நன்மையேயாயிற்று. கணவன் மேல் அசையா நம்பிக்கை கொள்ள வைத்தவை அவர்கள் வசைமொழி அல்லவோ! இன்னாது இன்னில் ஊர் வாழ்தல்: அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு (1158) கடமைத்தடை பெருமையாகாது கணவன் தன் தொழில் மேல் சென்றிருக்கும் இடத்திற்கும் சென்று விட்டால் என்ன? செல் செல் என்று கெஞ்சுகிறது மனம். துன்பமே தூண்டுகிறது. ஆனாலும் பின் சென்று கடமைத் தடை புரிதல் பெருந்தகைமை ஆகாது என்று பெண்மையும் திண்மையும் இடித்துரைத்துத் தடுக்கின்றன. செல்லலாம் எனத் தோன்றிய எண்ணத்தை அப்படியே தடுத்து விடுகின்றாள். செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் (1256) வாழ்த்து பிரிவுத் துயரம் ஒழிய வேண்டுமானால், கணவன் திரும்பி வரவேண்டும். அவன் திரும்பி வரவேண்டுமானால் அவன் மேற்கொண்ட பணி வெற்றியாக முடிய வேண்டும். ஆதலால் அவன் மேற்கொண்ட பணி வெல்வதாக என வாழ்த்துவதைத் தன் கடமையாகக் கொள்கிறாள். வினைகலந்து வென்றீக வேந்தன் (1268) வரவேற்பு எடுத்த பணியை வெற்றியாக முடித்துக் கொண்டு கணவன் திரும்பி வருவதை அறிகிறாள் மனைவி. நாட் கடமையாக ஊருக்குள் பிரிந்த நிலையில், மனை வாயிலில் நின்று எதிர் பார்த்துக் கிடந்த அவள் இப்பொழுது உண்டாக்கிய நெட்டிடை நெடுங்காலப் பிரிவுக்குப் பின் வரவேற்க மனையின் தலைவாயில் அளவிலோ நிற்கிறாள். ஊர் வாயிலுக்கே ஓடி வருகின்றாள்; தேடி வருகின்றாள். ஓர் உயர் மரம் அதன் மேல் ஏறி நின்று கணவன் தொலைவில் வரும்போதே பார்த்து விட வேண்டும் எனத் தவிக்கிறாள். ஆனால், பரிந்தவர்கள் எத்தனைபேர்? பழித்தவர்கள் எத்தனைபேர்? அவர்கள் முன்னர் மரக்கிளையில் ஏறி நின்று பார்ப்பதா? எனக்கு உண்டாகிய ஆர்வத்தில் அப்படிச் செய்தாலும் யான் கொண்ட பெண்மைக்கு அஃதழ காகாதே. ஆதலால் தன் நெஞ்சைக் கிளைகள் மேல் ஏற்றி அது பார்க்கட்டும். என்கிறாள். கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொடு ஏறும் என்நெஞ்சு (1264) நினைவு கண்போலும் கணவன் இன்று வந்துவிட்டால் பிரிந்து போனீரே எனச் சிறு சினம் (ஊடல்) கொள்வேனோ? அல்லது, ஊடல் கொள்ளாமல் ஓடித் தழுவுவேனோ? அல்லது அர வணைத்துக் கலந்து விடுவேனோ? என்ன செய்வேன் என்பது தடுமாற்றமாக உள்ளதே எனத் தன்னுள் பேசுகிறாள். புலப்பேன்கொல்; புல்லுவேன் கொல்லோ; கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் (1267) காட்சி கணவன் வருகிறான்! கண்ணிறைந்த கட்டழகன் வரு கிறான். காணவா செய்கிறாள்? அள்ளி அள்ளி அவன் அழகு வெள்ளத்தைப் பருகுகிறாள்! இழந்து போன வண்ணமும் வனப்பும் உடனே தேடி வந்து கூடுமாறு கண் கொள்ளாமல் காட்சியாகக் காண்கிறாள்! காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு (1265) பழி காணாமை கண்ணன்ன கேளிர் வரக் கண்ட களிப்பில், மனைவியின் எண்ணம் கண்மையின் மீது சென்றது! அக்கண்மை தீட்டும் கலைமேல் சென்றது. கண்ணுக்கு மைதீட்டுகிறேன். மையைத் தொட்டுத் தீட்டும் கோலைக் கண்ணிமை மேல் கொண்டு போகிறேன்; தீட்டப்படும் கண்ணிமையே, கண்ணாடி நிழலில் கண்ணுக்குத் தெரிகின்றது. மை தீட்டும் கோல் கண்ணுக்குத் தெரிவது இல்லையே! சரியான செய்திதான்! அவர் வரும் வரை அவர் பிரிந்து சென்ற குறையே தெரிந்தது. அவர் வந்து சேர்ந்த பின்னர், அக்குறை செய்த தடமும் இல்லாமல் ஒழிந்ததே! மைதீட்டும் கோலைக் காணாக் கண்போல் அல்லவோ என் செயல் உள்ளது. மைதீட்டித் தீட்டித் தேர்ந்த அத்தேர்ச்சிதான் இப்படி வயப்படுத்தி விட்டதோ? இல்லை, பெண்மைக்கே இப்பண்பட்ட உள்ளம் இயல்பாக உண்டோ? ஏழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து (1285) இந்த மனந்தான் எத்தகைத்து! அறிவற்றது என்பேனா? அறிவுற்றது என்பேனா? பொழுதுக்குத் தக நடிப்பது என்பேனா! பொருத்தமாகக் கடைப் பிடிப்பது என்பேனா? கணவரைக் காணாத பொழுது வரைக்கும், அவர்மேல் இல்லாததும் பொல்லாததுமாம் தவறுகள் மட்டுமே தெரிந்தன! அவர் வந்து கண்ணாரக் கண்ட அளவில் அவர் தவறாக எந்த ஒன்றும் தெரிந்தில. இந்நிலை எனக்கே வியப்பாக உள்ளது! என்ன மனம் இது; காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை (1286) எது இனிது? உண்பது இனிதா? உண்டது செரிப்பது இனிதா? இல் வினாக்களை எழுப்பினால் ஆராயாமையாலும் சுவை ஆர்வத் தாலும் உண்பதே இனிது என்பர். ஆனால், ஆய்வோர்க்கு உணவு செரிப்பதே இன்பம் என்பது இனிது விளங்கும். அதிலும் முதியர்க்கு மிக நன்றாக விளங்கும். வள்ளுவ மனைவி, உண்ணும் இன்பத்தினும், உண்டது செரிக்கும் இன்பமே நல்லின்பம் எனக் கண்டவள். அதுபோல் அன்பு தவழத் தவழக் கூடுவதிலும் கூட, ஊடுவதே மிகுந்த இன்பமாவது எனக் கண்டவள். ஆதலால், கணவனுடன் ஊடலின்பம் கொள்கிறாள். உணலினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது (1336) உப்பும் ஊடலும் அட்டிற் கலை (சமையற் கலை)யில் தேர்ந்தவளாகிய அவளுக்கு உப்பைப் பற்றி தெரியாதா? உப்பே இல்லை என்றால் சப்பு! ஆனால், கொஞ்சம் உப்புக் கூடிவிட்டால்? உப் பில்லாமல் கூடச் சாப்பிடலாம்! உப்பில்லா நோன்பு மருத்துவக் கட்டளை. ஆனால், உப்புக் கூடிவிட்டால், துப்பு என்ற நிலை ஆகிவிடும். துய்ப்பு எல்லாம் துப்பு தலானால் என்ன ஆவது? உப்பு இல்லாமலும் சுவையில்லை; சிறிதே கூடிவிட்டாலும் சுவையில்லை. ஓரளவே உப்பு இருத்தல் வேண்டும்! அப்படியே, ஊடல் இல்லாமலும் இன்பச் சுவை இல்லை அவ்வூடல், அளவில் மிகுந்து விட்டாலும் இன்பச் சுவையாகாது! இத்தெளிவுடைய வள்ளுவத் தலைவி, உடல் நிலை உணர்வு நிலை உயிர்நிலை உவகை நிலை ஆகிய எல்லாமும் சிறக்க, உப்பியல் முறையால் ஒப்பியல் கண்டு வாழ்வைக் களிப் பாக்குகிறாள். உப்பமைந் தற்றால் புலவி; அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (1302) இவை, இன்பத்துப்பால் கண்ட மனைவியின் தெரிப்புச் செய்திகள்! அறத்துப்பால் கண்ட வாழ்க்கைத் துணையின் வளமை காணலாம்! வாழ்க்கைத் துணை வாழ்க்கைத் துணையில் ஒரு மனைவிக்குரிய பண்பு-இயல்-செயல் நலங்களாகப் பதத்துக் குறிப்புகளை வள்ளுவர் வழங்கு கிறார். அவ்வனைத்தும் அவளுக்கே உரியனவா? இல்லை. அவனுக்கும் உரியனவே! அவள் மேல் அங்குக் கூறப்பட்ட அந்நலங்கள் அவனுக்கும் பல்வேறு இடங்களில் அதனினும் விரியக் கூறப்பட்டுளவே. வாழ்க்கைத் துணை நலத்திலும், அப்பதின் குணங்களும் அவனுக்கும் வேண்டும்; அவ்வாறு அமையின் அவ்வாழ்வே இணையில்லா இன்ப வாழ்வு என்றும் கூறியுள்ளார். அது, பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு என்பது (58), இனி, வள்ளுவர் வகுத்துக் கூறிய பத்துப் பண் பியல்களையும் முறையே காணலாம். மனைத் தக்க மாண்பு ஒரு பெரிய தலைவனின் மனைவி சொல்கின்றாள்; என் கணவர் மண நிகழ்ச்சிக்குச் சென்றால் அவரே மணமகன் போல ஆகி விடுவார்; இழப்பு நிகழ்ச்சிக்குச் சென்றால், அவரே இழப்புக்கு ஆட்பட்ட வீட்டாராக மாறிவிடுவார்! போன இடத்திற்குத் தகப் பொருந்துதல் தானே, புறந்தள்ள முடியாத-பிரித்துப் பார்க்கவும் முடியாத பொருந்துதல். அவ்வாறாக, ஒரு மனைவிக்கு வேண்டிய தலையாய பண்புகளில் எல்லாம் தலையாய பண்பு, மனைத்தக்க மாண்பு எனக் காண்கிறார் வள்ளுவர். தான் பிறந்த வீட்டுப் பழக்க வழக்கங்கள், இயல் செயல்கள் ஒருவகையாக இருக்கலாம். புகுந்த வீட்டு நிலை வேறாக இருக்கலாம். புகுந்த வீட்டுக்குப் பொருந்த வாழ்வதே போற்றும் வாழ்வாகும். தம் வீட்டு வாழ்வும், தம் வீட்டில் பழகிப் போன போக்கும் விடமுடியாமையால் புகுந்த வீட்டில் ஒட்ட முடியாமல் தம் வாழ்வைத் தாமே நிரயம் (நரகம்) ஆக்கிக் கொள்வார் எத் துணைப் பேர். புகுந்த வீட்டு நடைமுறை, போற்றிக் கொள்ளத் தகாத குறைபாடு உடையதாக இருந்தாலும், அக்குறையை அவர்கள் தாமே அறிந்து கொள்ளும் வகையில், நயமாக எடுத்துக் கூறி, அவர்களும் ஏற்கும் அளவில் நலம் செய்வதே நீடிக்கும். இல்லை யானால் அதுவே எதிரிடை வித்தாகி விடும். தான் தன் குடும்பத்தில், பெற்றோரின் செல்வத்திலே-தட்டிக்கேளா - மறுத்துச் சொல்லா - நிலையிலே, வைத்ததே வரிசை என வாழ்ந்திருக்கலாம்! அவ் வரிசையே, புகுந்த வீட்டு வரிசையாகி விடுமா? ஒருமகள் பிறப்பாளா? என ஏங்கிக் கிடந்த வீட்டிலே பிறந்து வளர்ந்த வளமையை, ஏழெட்டுப் பெண் பிறந்த வீட்டிலே போய் எதிர்பார்க்க முடியுமா? போட்டுண்ணவும் மாட்டாதவள்; போட்டாலும் கெஞ்சியும் கொஞ்சியும் உண்பிக்கப்பட்டவள், அதே கோலத்தில் புகுந்த வீட்டிலும் வாழ்ந்தால் என்ன ஆகும். அங்கே குப்பை கொட்ட முடியுமா? வறுமைக்குடியில் பிறந்தவள்; வளமைக் குடிக்குப் புகுந் துள்ளாள்! அவ்வாழ்வுக்குத் தகத் தன்னை அமைத்துக் கொள்ள வில்லையேல், அவ்விடத்துப் பணியாளரும் கருதிப் பாராரே! நல்ல மனைவியாக இருக்க விரும்புபவளுக்கு வேண்டும் முதன்மையான நற்பண்பு, புகுந்த மனைக்குத் தகப் பொருந்தி வாழ்தலே. அதுதான், பின்னே ஊரோடு ஒத்து வாழ்தலுக்கும், உலகத்தோடு ஒட்டி ஒழுகுதலுக்கும் பயிற்சி நிலை. வளத்தக்க வாழ்வு கணவன் வருவாய்க்குத் தக்க வாழ்வு என்பது வெளிப்படு பொருள். வருவாய்க்கு மேல் செலவிடும் எவரையும் போற்றாதது வள்ளுவம். வருவாய் எவ்வளவு சிறிதாக இருப்பினும் சரி; இருக்கட்டும். ஆனால் அவ்வருவாய்க்கு மேற்படாமல் வாழக் கற்றுக் கொள் என்பது அது (478). குடி, சூது, ஒழுக்கக் கேடு, நம்பிக்கை என்பவற்றால் பொருளைக் கெடுக்கும் ஆண்களால் நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் எண்ணற்றன. அதுபோல், கல்லாமை, கண்மூடி வழக்கம், போலி மதிப்பு என்பவற்றாலும், வழிவழியாக அடிமைப் படுத்தி வந்துள்ள கொடுமையாலும், குடும்பப் பொருட்கேட்டுக்கு ஆளாகும் பெண்களும் நிரம்ப உளர். இவ்வாறு, இருவகைக் கேடும் ஒருங்கமையக் கெடும் குடும்பங்களும் கூட உண்டு. ஆனால், அவற்றின் இடையே ஆற்றுப் பெருக்கு அற்றாலும், ஊற்றுப் பெருக்கால் உதவுவார் போல உள்ள, மனைவியரும் இல்லாமல் இல்லை! அவர்கள், சிக்கனமும் செம்மையும், வருவது நோக்கிச் செய்யும் செய்கையும் பெருவாழ்த்துக் குரியன. ஒரு குடும்ப அளவில், வளத்தக்க வாழ்வு என்பது பெரிதும் மனைவியைப் பொறுத்ததே. என்னதான் கணவன் இயற்றலும் ஈட்டலும் புரிந்தாலும், காத்தலும் வகுத்தலும் உடையாள் அவன் மனைவியே! அரசுக்குரிய இந்நான்கு பொருளியல் கொள்கைகளும், அறிவறிந்த குடும்பங்களில் இயற்கையான நடைமுறையாக இருப்பதால்தான், அக் குடும்பங்கள் எந்நிலையிலும் தன்னைக் காத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்றன. இனி, வளத்தக்க வாழ்வு என்பது, வருவாய் அளவில் மட்டும் பொருள் பட்டு நிற்கும் சுருக்கம் உடையது அன்று. வளம் அப்பொருள் வளமேயன்றி, மனவளம், கலைவளம், கொடை வளம், அறிவுவளம், தொண்டுவளம், தொழில்வளம், பதவி வளம், நட்புவளம் என இவையும் பிறவும் ஆகிய வளங்களை யெல்லாம் குறிக்கும் வளமுடையதாகும். அவற்றுக்கும் தகத் தன்னை அமைத்துக் கொண்டு இயையும் வாழ்வே, எடுத்துக் காட்டாம் வாழ்வாகும். மனைத்தக்க மாண்பு, வளத்தக்க வாழ்வு என்னும் பண்பியில் இரண்டையும் தெரிவிக்கும் வள்ளுவம்; மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மனைத்தக்க மாண்பு என்பது பண்பு. மனைமாட்சி என்பது செயல்திறம். அதாவது குடும்பத்தைச் சிறப்புடன் நடத்தும் செயல்திறம். வீட்டை முழுமையாக நிரப்பிக் காட்ட வேண்டும் என்ற தந்தைக்கு, ஒரு மகன் வைக்கோற் போரால் நிரப்பிக் காட்டியதும், ஒருமகன் ஒளிவிளக்கால் நிரப்பிக் காட்டியதும் ஆகிய, புனைக் கதையைக் கேளார் எவர்? நிரப்புதல் ஒன்றானாலும் நிரப்புவகை எத்தகைய வேறுபாடுடையவை! வீட்டுத் தூய்மை, சூழல் தூய்மை, கலத்தூய்மை, பொருள் வைப்பு ஒழுங்கு, சமையல் தேர்ச்சி, உரையாட்டு நயம், உரைக்கத் தக்கவை உரைத்து, உரைக்கத் தகாதவை மறைக்கும் திறம், உடைச் செம்மை, ஒப்பனைச் சால்பு, காலம் போற்றல், கருத்தில் ஒருமை என்பனவெல்லாம் மனை மாட்சிகளேயாம். இதன் விரிவைக் காண விரும்புவார் பாவேந்தர் படைத்த குடும்ப விளக்கு முதற்பகுதியைக் கற்பாராக! அதற்கு எதிராய் குடும்பத்தைக் காண விரும்புவார் இருண்ட வீடு என்னும் அவர் தம் மற்றொரு படைப்பைப் பயில்வாரக! கற்ற குடும்பச் சீர்மைக்கு முன்னதும், கல்லாக் குடும்பம் கொடுமைக்குப் பின்னதும் அவரால் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டவை. அவை பெரு வழக்கு மனைமாட்சியமைந்த கல்லா மனைவியும் அரிதின் உண்டு. இவை விதிவிலக்குகளே அல்லாமல் விதிகள் அல்லவாம். குடும்பத்திற்கு எத்தனையோ வாய்ப்புகளும் பெருமைகளும் இருக்கலாம். ஆனால், மனைமாட்சி மனைவியிடத்து அமைய வில்லை எனின், மற்று அமைந்தவை எல்லாம், அமையாதவையே! அதனால்தான். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் (52) என்றார் வள்ளுவர். பத்துவகைக் காய்கறிகள் இருந்தும், ஆக்கும் பக்குவம் அமையாமையால் ஒதுக்கி எறிபவை இல்லையா? கொல்லைப் புறத்துக் கீரையைப் பறித்துக் குழம்பாய், கொத்தாய், பொறியலாய் மூவுருப்பெற்று முழுதின்பச் சுவை நலமாய் அமைந்து விடுவது இல்லையா? இதுவும், மனைமாட்சியா? ஆம், தலையாய மனை மாட்சி! பொருளியல், உடலியல், மருந்தியல், மனஇயல் எல்லாம் கூடிய மனை இயல் மாட்சி இது! கற்பென்னும் திண்மை பெண்ணினும் பெருமை மிக்கவை எவையும் இல்லை என்று, வள்ளுவரை ஓங்கிய குரலெழுப்பி உரைக்க வைக்கும் நற்பண்பு, இக் கற்புடைமையாகும். கற்பு கற்பு என்று பலராலும், பலகாலும், உரைக்கப் படுகிறதே, அதுதான் என்ன? இவ்வினாவை எழுப்பாதீர்; யானே விடையும் கூறிய பின்னரும் அதன்மேல் வினாவுதல் வெற்றுவினாவா? வெட்டி வினாவா? என வள்ளுவம் புன் முறுவல் பூக்கிறது! திண்மை என்று சொல்லி விட்டேனே பின்னும் என்ன தெளிவு வேண்டும்? என்கிறது அது. எண்ணியதை எண்ணியபடி முடிக்க வல்லார்க்கு என்ன வேண்டும்? திண்மை வேண்டும்! திண்மையாவது உறுதிப்பாடு. அதனை உடையவர், திண்ணியர் (666). திண்மைக்கு மேலும் விளக்கம் வேண்டுமா? உரியார் அன்றிப் பிறர் உட்புகாத் திண்மை மதில் வெளிப்பட விளக்கும் பெருஞ் சான்று இல்லையா (743). கல்லும் சாந்தும் நீரும் இட்டு இட்டு, குற்றி இடித்து வலுவாக்கும் திண்ணை நம் கண்ணை அகலுமா? ஊடுருவும் ஒளிக்கதிரும் உண்டு! அயலார் ஒருவரால் ஊடுருவிச் செல்ல மாட்டா உருக்குக் கோட்டை, உரியான் ஒருவனுக்கே உருகும் கற்புக்கோட்டை! அணுவும் துளைக்க மாட்டா ஆழ்புலத்து அறையையும் வெல்லும் வாழ்புலத்து அறை கற்பு! இது, அவனுக்கு வேண்டாவா? வேண்டும்? அவளைப் பார்த்தாவது அவன் அவ்வுறுதிப்பிடி கொள்ள வேண்டும். அதற்காக, அவளைச் சுட்டிக் காட்டி அருமையாய் உரைக்கிறது வள்ளுவம். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பது (974) அது. தான் திருடி அயல் நம்பாள் என்பது போல், மனைவி உறுதியில் ஐயங் கொண்டு வேண்டாக் கட்டும் காவலும் செய் வான் உளனே, அவன் செயல் என்ன? எண்ணிப் பார்த்துத்தானே மனைவி என ஏற்றான், உறுதி செய்து கொண்டுதானே இறுதி முடிவெடுத்தான்; உறுதி கொண்டது தவறு என்றால் அத்தவறு எவரைச் சேரும்? தெரிந்து தெளிதல் வினைக்கே, தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் எனக் கண்ட வள்ளுவம், தன் துணையின் உறுதியை ஐயுற்றுச் சிறை காக்கும் காவலை ஏற்றுக் கொள்ளுமோ? காவல் என்பது அவரவர் மனக்கட்டு. மற்றை மனைக் கட்டும் புரிக்கட்டும், சிறைக்கட்டும் சிறுமைக்கட்டே. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (57) வழிபடு தன்மை வழிபடு தன்மையானது, மதித் தொழுகும் இயல்பு. ஒரு பொருளின் மேல் உள்ள மதிப்பும் ஒருவர் மேல் உள்ள மதிப்பும், இதனையும் போற்றிப் பேணிக் கொள்ள உதவும். அவ்வகையில், மனைவியால் மதித்துப் போற்றிக் கொள்ளத் தக்காருள் முழுமை யானவனும் முதன்மை யானவனும் கணவனே. மனைவியாம் பெண்மகள், தன் பிறந்தகத்தை விடுத்து எவனை நம்பிப் புகுந் தகத்துப் புகுந்தாள்? கணவனின் பெற்றோரை நம்பி என்றோ, அவன் உடற் பிறப்பை நம்பி என்றோ, அவன் உற்றாரை நம்பி என்றோ, மூளைத் திரிபுடைய ஒருத்தி கூட உரையாள். மங்கல மகளிரே மணவிழாவை முன்னின்று நடத்திய பழைய நற்கால நிலையில், அவர்கள் மணமகளாம் மனைக் கிழத்திக்குக் கூறிய அறிவுரை மூன்றனுள் தலையாய ஒன்று பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு என்பதே (அகநானூறு. 86) கணவனால் விரும்பப்படும் நல்ல மனைவியாக விளங்கு என்பது இதன் பொருளாம். அன்பு ஒற்றை வழிப்பாதை அன்று; இரட்டை வழிப்பாதை; போக்கும் வரவும் உடைய இரட்டைவழிபோல் கொடுத்தும் கொண்டும் சிறப்பது அன்பு. ஆதலால், தான் கணவனை வழிபட்டுப் போற்றும் தன்மையால் அவன் தன்னைப் போற்றும் பேற்றைத் தானும் பெறுகிறாள். இல்லறமே நல்லறமாகக் கொள்வார் மனைக்குத் துறவோரும் முனிவரும் விருந்தினராய் வருதல் வழக்கு. அவர்களைப் போற்றல் இல்லறத்தார் கடமை என ஏற்றதும் தமிழ் வழக்கு. ஆதலால், அம் முனிவரை ஓம்புதலைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று குறள் கூறியது. இத் தெய்வம் என்பார் முனிவர் அல்லது துறவியராம். தம் இல்லத்திற்கு வரும் பற்றற்றாரை வணங்கி வழிபட்டு விருந்தோம்புதலில் தன் குழந்தைப் பருவத்தில் பெரும்பங்கு கொண்டிருந்தவள் இந்நாளை மனைவி. அவள், தன் இளந்தைப் பருவத்தில் தன் பெற்றோரொடும் இருந்து துறவரை வழிபட்ட இயல்பைப் புகுந்த வீட்டில் கொள்ளுதல் ஆகாது. தன் கணவனையே அத்துறவரை வழிபட்டது போல் வழிபட்டு, வேண்டும் கடமை புரிதல் வேண்டும் என்னும் வாழ்வியல் முறையொழுங்கு காட்டுவதே, தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் என்னும் உரையாகும். புரிவு தெரியுமுன்னை நிலைவேறு; அதன் பின்னை நிலைவேறு; அவ்வந் நிலையறிந்து பெண் மகள் நடத்தல் நலம் என்னும் நயங்காட்டும் தற்காப்புச் செய்தி இது. தெய்வத்திற்கு முனிவர் துறவர் என்னும் பொருள் உண்மை பழைய நூல்களில் பலவாக உண்டு. திருக்குறளில் வரும் தென் புலத்தார் தெய்வம் என்பதில் உள்ள தெய்வம் முனிவரே! இல்லையானால் அவர்க்கு விருந்தோம்புவது எப்படி? இவ்வாறு, கணவனை வழிபட்டுப் போற்றும் மனைவி அவனாலேயே தெய்வமாகக் கருதப் படுவான்! அப்படிக் கருதியதற்குச் சான்று உண்டா? சான்று தேடிப் போக வேண்டா என்பதற்குத்தானே வள்ளுவர் அடுத்த அடியிலேயே அதனை அடித்துக் கூறினார். பெய்யெனப் பெய்யும் மழை. என்பது அது. சிறப்பொடு பூசனை உலகில் நிகழ மழையே அடிப்படை என்றால் (18) பெய்யென்ற அளவில் பெய்யும் மழையாகக் குடும்பத்திற்கு வளஞ்சுரக்கும் வள்ளியவள் மனைவி; அவள் சிறப்பொடு பூசனை செய்யப் படுதற்கு உரியவள் அல்லளா! தற்காத்தல் பிறருக்கு உதவியாக எவர் வாழவேண்டும் என நினைத் தாலும், அவர் தம் உடலை நன்றாகப் பேணிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பேணிக் கொள்ளாவிடின், எவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என அவர் எண்ணினாரோ, அவர்க்கே பாரமாகி விடுவார். ஆதலால், தற்காத்தல் அனை வருக்கும் வேண்டியதாகும். அதிலும், குடும்பத்தில் வாழ் முதலாகிய மனைவிக்குக் கட்டாயம் வேண்டியதாகும். கணவன் தானே தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மறவாமல் கூறும் வள்ளுவர் (43), மனைவி தன்னைக் காத்தலையும் வலியுறுத்துகிறார். உடல் என்பது எலும்பும் தோலும் நரம்பும் தசையும் பிறவுமாம் புன்படைப்பன்று. அரும்பெரும் நன்படைப்பு அது. அதனை ஒப்பாம் அரும்படைப்பு அரிதாம். அதனால் தான், உடலை முதல் என நம் முன்னோர் வழங்கினர். முதல் இல் லார்க்கு ஊதியம் இல்லை என்பது வள்ளுவம் (449). அம் முறையில் உடல் நலம் இல்லையானால் உளநலம் உண்டோ? வாழ்வாங்கு வாழும் வகைதான் உண்டோ? ஆதலால், தற் காத்தல் என்பது தன்னைச் சார்ந்த பண்பியல், செயலியல் எல்லாவற்றையும் குறிப்பது எனினும், தன் உடல் நலம் காத்தலே முதலும், முதன்மையும் உடையதாகும். தானும் செய்வன செய்யான்; பிறர் ஏவவும் செய்யான்; அவன் எவர்க்கு எப்பயனைச் செய்வான்? அல்லது, தனக்கேனும் எப்பயனைச் செய்வான்? அதனால், அவன் தன் தொடர்புடையார்க்கெல்லாம் தான்போகும் அளவும் நோயே ஆவான் என்கிறது வள்ளுவம் (848). அதனால், தற்காவாள் தனக்கே யன்றிக் குடும்பத்திற்கே நோயாவள் அல்லளோ! தற்கொண்டான் பேணல் தற்கொண்டானாகிய கணவனைப் பேணல் மனைவி கடமையோ? தன் தந்தையையும் தாயையும் தன் துணையையும் பேணிக் கொள்வதையே தன் தலைமையான கடமையாக மேற் கொண்ட (41) கணவனைப் பேணுதல் மனைவிக்கு வேண்டுமா என்பதே வினாவாகாது. ஆக்கி வைக்கப்பட்ட சோறு கறிகள்தாம். அவரவர் அள்ளிப் போட்டுக் கொண்டு உண்ணலாகாதோ? மனைவியே பரிமாற வேண்டும் என்பது நிலை ஆணையா? ஏன், அவன் அவளுக்கும், அவள் அவனுக்கும் பரிமாறி உடனிருந்து உண்டு பார்க்கட்டுமே! அவ்வின்பம் அன்றோ இன்பம்! இருவர்க்கும் பிறந்த நாள் உண்டே! அவள் பிறந்த நாளுக்கு அவன் எண்ணி எண்ணித் துணி எடுத்தலும், அவன் பிறந்த நாளுக்கு அவள் கருதிக் கருதிக் துணி எடுத்தலும் கொண்டால், அவ்வின்பத்திற்கு இணை உண்டா? அவரவர்க்கு அவரவரே எடுத்துக் கொள்ளு தலில் அத்தகு இன்பம் காண இயலுமா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது என்ன? ஊரவர் அனைவர் வளர்ப்பும் அப்பிள்ளைக்கு உண்டு என்பதுதானே! தற்கொண்டானைப் பேணுவாள் எவளும், அதனினும் மேலாகத் தான் பேணப் படுகிறாள் என்பதே உண்மையாம். தகைசான்ற சொற்காத்தல் சொற்காத்தல் என்பது இருவகைய. ஒன்று தான் சொல்லும் சொல்லைக் காத்தல். மற்றொன்று பிறர் சொல்லும் நற் சொல்லைக் காத்தல். சொல்லுக்குக் கூற்று என்பதொரு பெயர் பலர் தம் செயலால் இயலால் நல்லவராக இருந்தும், தம் சொல்லால் பழிக்கும், துயர்க்கும் ஆளாவதைக் காணும்போது, சொல்லுக்குக் கூற்று என்று பெயர் சூட்டிய முந்து முதல்வனை, மாலை சூட்டி மகிழ வேண்டும் என்பது தோன்றும்! பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே என்னும் பழமொழியினும் தெளிவாகச் சொற் பயன் குறித்துச் சொல்லிவிட முடியுமா? திருவள்ளுவர் தெளிவாகக் கூறினார், யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று. நன்மைக்கும் தீமைக்கும் இடமாக இருக்கும் சொல்லைக் காத்தார், புகழைக் காத்தாராம்! சொல்லை மட்டும் சொல்லித்தான் பிறர் பழிப்பாரா? செயலைச் சொல்ல மாட்டாரா? இயல்பைச் சொல்ல மாட்டாரா? அவர் கூறும் பழி தன்னளவில் நிற்பது இல்லையே! பிறந்த குடும்பம் புகுந்த குடும்பம் என்பவற்றுக்கும் தாவுமே! ஆதலால், பிறர் கூறும் பழிக்கு ஆளாகாமை பென்மைக்குச் சிறப்பாம். ஏனெனில், பழிக்கு ஆளாகா இல்வாழ்வே அறவாழ்வு என்பது வள்ளுவம் (49). சோர்வில்லாமை சோர்வு என்பது, அயர்வு, தளர்வு, நெகிழ்வு, மறதி, மெலிவு, களவு தவறு முதலாய பலபொருள் தரும் சொல். இப் பொருள்களுள் எதுவேயாயினும் ஆக்கம் தராது. இவற்றை விலக்கினார் தம் நிலையில் மட்டும் அல்லாமல், குடும்ப நலமும் காத்தாராம்! மனைவி சோர்ந்தால் குடும்பமே சோர்ந்ததாம். அச்சாணி இல்லாத தேர் மூச்சாணும் ஓடாது என்பது பழ மொழி. மனையாள் சோர்ந்த வீடு என்றும் விழுந்த வீடேயன்றி எழுந்த வீடு ஆகாது. இது கண்காணும் காட்சி! சோர்ந்து கிடக்கும் பொறுப்பில்லாக் கணவனையும் இயக்கவல்ல இயக்கி யாம் மனைவியே சோர்ந்து விட்டால் விடிவில்லை என்பது வெளிச்சம்! இந் நாற்பண்புகளையும் ஒருங்கே சொல்வது, தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண் (56) என்பது. புகழ்ப் பேறு கூறப்பட்ட ஒன்பான் இயல்புகளாலும் எய்தும் திரட்டுப் பொருள் புகழாகும். புகழ் என்பது குடும்ப வாழ்வால் அடையும் நிறைபயன். ஆதலால், இல்லறத்தின் நிறைவில் புகழ் அதிகாரம் இடம் பெற்றதாகும். அதற்கு மேற்பட்ட நிலை புகழும் கருதாத் தொண்டுப் பெரு நிலையாகும். இல்லறத்தின் நிறைபயன் ஆகிய புகழ் எவர் வழியால் குடும்பத்துக்கு நிலைபெறல் வேண்டும் எனின் மனைவி வழியே என்பது வள்ளுவம். எவ்வளவு புகழாளனாக எனினும் கணவன் இருக்கட்டுமே. அவனை ஊரவர் புகழாளனாகக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் எனின், அவன் மனைவியிடம் புகழ் நிலை அமைந் திருத்தல் வேண்டும். இல்லாவிடின், அவன் கொண்ட புகழும் கொண்டபுகழ் ஆகாது, அவன் நண்பர் அன்பர் பகைவர் அயலார் எவர்முன்னும் தலைநிமிர்ந்து நடத்தல் முடியாது. அவ்வாறானால், எத்தகைய கணவனையும் நிலைநிமிரச் செய் பவளும் தலைகுனிய வைப்பவளும் மனைவியே ஆவாள் என்பது விளங்கும். புகழ்புரிந்த இல்இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (59) இருவரும் எல்லா வகைகளாலும் ஒத்த இணையராக இருக்க முடியுமா? அரிதுதான்! அப்படி, ஒத்த இணையராக அமைந்து விட்டால், அதன் சிறப்பே தனிச் சிறப்புத்தான். எம் வாழ்வே நிறை வாழ்வு என்னும் இன்பப் பெருமிதத்தை, அக்கணவன் மனைவியர்க்கு அஃது உண்டாக்கும்! இந்நாளில் அறிவியல் உலகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விதையில்லாக் கொய்யா, விதையில்லா மாதுளை, விதையில்லா முந்திரி என்னும் கனிகளைச் சுவைத்தாற் போன்ற இன்பத்தை அவர்கள் வாழ்வு தரும். விதையில்லாக் கனியையுமா வள்ளுவர் கூறுகிறார்? ஆம்! காழில் கனி என்கிறார். காழாவது விதை! அவை: வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு தாம்வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி (1191) வாழுநம் என்னும் பெருமிதமும், காழில் கனியன்ன துய்ப்பும் வளமையர்க்கு உண்டாம். வறுமையர்க்கு உண்டாமா? கணவன் மனைவி என்னும் தொடர்பு நெஞ்சத் தொடர்பு. செல்வம், வறுமை என்பனவும் நெஞ்சத் தொடர்பினவே. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பது குமரகுருபரர் மொழி. இல்லையே போதாதே என்னும் ஏக்கமே வறுமை என்பது பண்டை உரையாசிரியர்கள் எழுத்து. ஒரு காட்சி ஒரோ ஓர் உடை; அதனையும் இரு கூறாக்கி உடுத்தும் வறுமை; எனினும் உள்ளம் ஒன்றிய வாழ்வு; அதனால், ஒப்பற்ற வாழ்வு அது. ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்பது அக்காட்சி. மற்றொரு நிகழ்ச்சி போலந்து நாட்டைப் பகைவர் பற்றிக் கொண்டனர். இங்கிருந்து பெண்களும் பிள்ளைகளும் வெளியேறலாம். ஆண்கள் எவரும் வெளியேற்றல் ஆகாது. பெண்கள் தாங்கள் விரும்பும் பொருளை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு செல்லலாம் என அந்நாட்டைப் பற்றிக் கொண்டவர் ஆணை யிட்டனர். மகளிர் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மக்க ளுடன் தப்பி ஓடினார் அல்லர். அவர்கள் விரும்பும் பொருளைக் கொண்டு செல்லலாமே; ஆதலால், தத்தம் கணவனைத் தூக்கிக் கொண்டு நாட்டின் எல்லையைக் கடந்து சென்றனர்! அப் பெண்ணின் பெருமை இன்றும் அங்கு மறக்கப்படவில்லை! அந்நாள் பெண்டிர் நாளாகக் கொண்டாடப்படுகிறது! பெண்ணின் பெருமையைச் சங்கப் புலவர் ஒருவர் கூறுகின்றார்: நிழலின் நீங்காஎன் வெய்யோள் நிழல் எவ்வாறு உருவைவிட்டு நீங்காதோ அவ்வாறே என்னைவிட்டு நீங்காத என் விருப்புக்குரிய மனைவி என்று பாராட்டுகிறார். பாவேந்தரோ, இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர் என்கிறார். எவரை? ஆயிரம் பிறைகண்ட ஓர் இனிய இரட்டையரை, இரட்டைக் கிளவியாகக் காண்கிறார். கட கட; மட மட; சல சல; பள பள; இவை இரட்டைச் சொற்கள். இவற்றைப் பிரித்துக் கூறுவ துண்டா? கூறினால் பொருள் உண்டா? பெண்ணின் பெருமையை விரிவாக அறிய வேண்டுமா? திரு. வி. க. வின், பெண்ணின் பெருமையில் தோய வேண்டும்! ஏனெனில் தென்றல் தந்த தென்றல் அது!  5. நல்ல பெற்றோராக கணவன் என்றும் மனைவி என்றும் தனித்தனியே பெயர் பெற்றவர், ஒரு மகவைப்பெற்ற அளவில் பெற்றோர் என்னும் பொதுப் பெயரைப் பெறுகின்றனர். பெற்றோர் பெற்றோர் என்பது ஓர் உயர் மதிப்புச் சொல்லாகவே வழங்குகின்றது. அம்மதிப்பை வழங்கும் மகவு, ஆணா பெண்ணா என்பது இல்லை. எம்மகவு ஆயினும், பெருமை தரும் மகவாகவே கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஒரே ஒரு பெண் மகவைப் பெற்றவரையும், பெற்றோர் என்பது தானே வழக்கு. பெண் மகவு பெற்றார் எனப் பெற்றோர் பெயர் தாராமல் ஒதுக்குவது இல்லையே! ஆண் - பெண் சமய அடிப்படையில் சில கருத்துக்கள் வழங்கலாயின. அவை பெண்மைக்குப் பெருமை சேர்க்காதனவாகவும் அமைந்தன. ஆனால், பண்டைத் தமிழுலகம் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என வேறுபடுத்திப் பெருமை சிறுமை சேர்க்க வில்லை. இவ்வுலகோர் நன்மைக்காக நீ ஒரு நன்மகனைப் பெற்றாய் என்று ஒரு மகனைப் பெற்ற தந்தை பாராட்டப் படுகிறான் (பதிற். 74). குன்றவாணன் ஒருவன், தான் வழிபடு கடவுளை வேண்டிக் கிடந்து பெற்ற எல்வளைக் குறுமகள் பற்றிய செய்தியையும் அறிகிறோம். இவையன்றித், தாய்வழி, தாய்பாகம், தாய்மொழி, தாய்நாடு என்னும் ஆட்சிகளும், இம் மண் பெண்மைக்குச் செய்த சிறப்பையே காட்டும். அதில் தாழ்வு ஏற்பட்டமை, ஆண்மைத் தன்னலமும் சமயத்துப் புகுந்த நச்சுக் கருத்துக்களின் விளைவுமேயாம். பெற்றோர் தகவு அளறு, களர், எனப்படும் சதுப்பு உவர் நிலத்தில், ஆளி ழுக்கும் உளை நிலத்தில், நெல் விளைவது இல்லை. அதுபோல், கல்வியறிவும், பண்பாடும் அமையாப் பெற்றோர்களுக்கு நன் மகவு வாய்ப்பதில்லை. அவ்வாறு பிறப்பின், விதிவிலக்குகளே அன்றி விதி ஆகிவிடா. தன் சூழலாலும் தன் முயற்சியாலும் சிலர் சிறப்படைதல் இல்லையா, அப்படி அமையும் பேறு அது. உண்மை அறிவு ஒருவன் அரிய நூல்களை ஆய்ந்து கற்கிறான். எனினும் அவனும் ஓரொருகால் தன் இயல்புக்குத் தகாச் செயலைச் செய்து விடுகிறான். இதன் அடிப்படையை ஆய்ந்து தெளியக் கூறுகிறார் திருவள்ளுவர். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் என்பது அது. உண்மை அறிவாவது பெற்றோர் வழியே பிறப்பொடு கொண்ட அறிவாகும். ஒருவன் பெற்றோர் அறிவும், அவர் பெற்றோர் அறிவும், அவர் தம் முந்தையர் அறிவும் ஆகிய அதுவே உண்மை அறிவு எனின், அதற்கு உரிமை பூண்ட பெற்றவர்கள், தம் குடிநலப் பேற்றுக்காகத் தங்களை எவ் வெவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். உண்மையாவது, உள்ளமை; பிறப்பு வழியால் உள்ளமை. பெற்றோர் தகுதி அறிவு வகையால் எவ்வளவோ முன்னேற்றங்களை இவ் வுலகம் கண்டு வருகிறது. இம்முன்னேற்றம் ஒருவர் கண்டதன்று; ஓரிடத்தாரோ ஒரு காலத்தாரோ கண்டதும் அன்று. உலகவர் அனைவர்க்கும் அதில் பங்கு உண்டு. அப்பங்கின், நம் குடும்பப் பங்கும் உண்டா? என்பதை எண்ணுதல் ஒவ்வொரு பெற்றோரின் கடமையுமாம். அதற்குப் பிள்ளைகள் தக்காரா என்பதைக் கருதுமுன், அத்தக்க பிள்ளையை நாம் தரும் தகுதியுடையவர்தாமா, அத்தகுதியை நாம் உண்டாக்கிக் கொண்டுள்ளோமா என்று எண்ணினால் எவ்வளவோ நலமாம்! கருக்கொண்ட மகள் எண்ணும் எண்ணத்திற்கும் அவள் கருவில் வளரும் உயிர்க்கும் தொடர்பு உண்டு என்பது அறிவியல் உலகம் கண்ட செய்தி. மக்கட்பேறு இல்வாழ்க்கை வாழ்க்கைத்துணை நலம் என்பவற்றை வகுத்த திருவள்ளுவர், அவற்றை அடுத்துப் பெற்றோர் என் றொரு தலைப்பு வைத்திலர். அவரைப் பெற்றோர் என்னும் பெருமைக்கு ஆட்படுத்தும் மக்கட்பேறு என்பதை வைத்தார். வாழ்க்கைத்துணை நலத்தின் கண்கண்ட நலம் ஈதெனக் குறிப்பார் போல, மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்றார். அடுத்து வரும் அதிகாரத் தொடக்கம் இது என்பார் போலக் கூறியும், அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று கண்டாரும் உண்டு. சாண்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளையே பிள்ளை என்றும், புதல்வனாலேயே பெற்றோர் புத் என்னும் நிரயத்தில் புகாமல் தப்புகின்றனர் என்றும், பெற்றோர்க்கு இறுதிக் கடன் செய்தற்கு உரியன் ஆண்மகனே என்றும் கொண்ட கருத்துத் திணிப்புகளால், ஏற்பட்ட திரியே புதல்வரைப் பெறுதல் என்பதாம். ஆனால், முதல் உரை யாசிரியர் மணக்குடவர் மக்கட்பேறு என்றே பெயர் வைத் தமை பாராட்டுக் குரியதாகும். நன்மக்கட் பேறு ஓருவர் உடை தருகிறார்; மற்றொருவர் பெறுகிறார்; ஒருவர் ஊண் தருகிறார்; மற்றொருவர் பெறுகிறார்; ஒருவர் மருந்து தருகிறார்; மற்றொருவர் பெறுகிறார்; இவ்வாறே தருவாரும் பெறுவாரும் உலகில் உள்ளனர். இவையெல்லாம் தருதலும் பெறுதலுமா? வழக்கால் இவை தருதலும், பெறுதலுமாக இருப்பினும் இவை சிறந்த தருதலும், பெறுதலும் அல்ல. அறிவறிந்த நல்ல மக்களைத் தருதலும், பெறு தலுமே சிறந்த தருதலும், பெறுதலுமாம். ஏனெனில் உடை, ஊண், மருந்து முதலானவை எல்லாம் ஒரு சிறிய அளவில் பயன் தந்து, அவரளவில் நிற்பன. ஆனால், அறிவறிந்த நன்மகவைத் தருதலோ அப்பெற்றோர் அளவிலோ, அக்குடும்ப அளவிலோ நில்லாமல் உலக அளவுக்கு விரியும் பெருமையுடையது. ஆதலால், பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்றார். இதனால் நன்மக்களைப் பெற்றோர் பெருமையையும் அம்மக்கள் பயனையும் திருவள்ளுவர் தெரிவிக்கிறார். வள்ளுவர் நோக்கம் மக்கட்பேறு என்ற அளவில் கூறாமல், நன்மக்கட்பேறு என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு என்றும் வள்ளுவர் கூறியதன் உள்நோக்கைப் பெற்றோர் உணர்தல் வேண்டும். நன்முறையில் அமைந்த மக்கள் என்றும், நன்மை விளைக் கும் மக்கள் என்றும் நன்மக்களுக்குப் பொருள் கொள்ளலாம். அந்நன்மை அறிவொடு கூடாக்கால் நன்மை ஆகாது; தீமையும் ஆதல் உண்டு. ஆதலால், அறிவறிந்த நன்மக்கள் என்றார். அறிவு அறிதல் அறிவு அறிதல் என்பது கற்று அறிதல் மட்டுமா? அவரவர் உணர்வால் கண்டு கொள்ளும் பட்டறிவு மட்டுமா? இவற்றினும் மேலே உண்டா? அறிவு அறிதல் என்பது இவற்றினும் மேலே விரிந்த பொருளது. அது தன்னை அறிவது. தனக்கு இன்பம் தருவது என்ன, துன்பம் தருவது என்ன என்பதை அறிதல் அது. அவ் வறிதல் முதல்நிலை. அதன் அடுத்த வளர்நிலை இவ்வாறு தானே, பிறர்க்கும் இவற்றால் இன்பமும், துன்பமும் ஏற்படும் என்பதை அறிதல். அதன் முடிநிலை, எனக்கு இன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்வேன்; எனக்குத் துன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்யேன் என்னும் உறுதிப்பாடு. இவற்றை, தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) அறிவினாள் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை (315) என்பவற்றால் கூறினார். ஆதலால் மூளைக் கூர்ப்பும் நெஞ்சக் கூர்ப்பும் ஒருங்கே அமைந்த பேறே, வள்ளுவர் கண்ட அறி வறிந்த நன்மக்கட்பேறு ஆகும். இப்பேற்றைத் தருவார்க்கு இப்பேறு இல்லாக்கால் தருவது எப்படி? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. பொருட்டு பொருட்டு என்பது ஒரு சொல். பொருளை உடையது என்பது பொருள். என்னை ஒரு பொருட்டாக அவன் கருத வில்லை; நானும் அவனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பன போல நாம் கேள்விப்படாதனவா? பொருட்டாக எண்ணப் படுவதே பொருளால் உண்டாவது என்பதால், பொருளின் சிறப்புப் புலப்படும். அப்பொருள் வகை எண்ணற்றவை. பொருள் மயக்கு பொருள் தேவை தான்; அப்பொருளைச் சேர்ப்பதற்குச் சிலர் தவிக்கும் தவிப்பையும் அதற்காக அப்பொருளைக் கருமியில் கருமியாகத் தாமுண்ணாமலும், பிறர்க்கும் பயன் பட விடாமலும் சேர்க்கும் சேர்ப்பையும் பார்க்கும் போது அப் பொருள் மயக்கம் புலப்படவே செய்யும்! நமக்காகப் பொருளா? பொருளுக்காக நாமா? என்றால் முன்னதே விடையாகும். நமக்காகப் பொருள் என்பதே நல்லோர் தெளிந்த முடிபு. பொருளுக்காக நாம் என்பார் பலர் வெறுப்புக்கும் அப்பொருளாலேயே ஆதல் கண்கூடு. திருவள்ளுவரே, அத்தகையவரைப் பூரியர்கள் என்று இகழ்ந்தார். தேவையா? நாம், நமக்கு வேண்டும் பொருள்கள் கட்டாயமான தேவைப் பொருள்கள் என்ற அளவிலேயோ அமைகின்றோம். வாய்ப்பு மிக்கோர் வீடுகளிலும் சரி, வாய்ப்புக் குறைந்தோர் வீடுகளிலும் சரி, ஒவ்வொரு பொருளாகப் பார்த்து ‘இது இல்லாமல் வாழ முடியாதா? எனக் கணக்குப் போட்டுக் கொண்டே வந்தால் பெரும்பாலானவை வேண்டாதவையும் தேவையற்றவையுமாகவே இருக்கும். தேவையற்றவை பெருகப் பெருக என்ன ஆகும்? தேவையானவைக்குத் தட்டுப்பாடு ஆகி விடும். அதன் வழியாகக் கடனும் வட்டியும் ஏறும்! பிறகு வாழ்வில் அமைதி ஏற்பட வழியுண்டா? இதனைச் செல்வர் எண்ணவில்லை எனினும், வறியர் எண்ண வேண்டும் அல்லவோ! இன்பா துன்பா காலமெல்லாம் உண்ணாமல் உடுத்தாமல் கருமித் தனமாகச் சேர்த்து, தங்கம், முத்து, வயிரம் என்பவற்றில் போட்டு அதற்கு எப்பொழுது எவ்வகையில் அழிவு வருமோ என அவற்றைத் தேடுவதற்குப் பட்டபாட்டினும் மிகுதியாகக் கண்ணுறக்கமும் இல்லாமல் அஞ்சி அஞ்சிக் காக்கின்ற காவலை எண்ணினால், அப்பொருள்களால் எள்ளத்தனை இன்பமாவது உண்டு என அறிவுடையவர்-தெளிவுடையவர் எண்ண மாட் டார். அப்பொருள் தேடலில் ஆவல் கொள்ளவும் மாட்டார். தங்கமும் வயிரமும் ஒரு திருமணத்திற்கு ஒரு பெற்றவள் சென்றாள். அவள் மிக எளிமையாக இருந்தாள். பட்டிலேயோ, துட்டிலேயோ அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவில்லை. இன்சொல்லும் புன்முறுவலுமான இருந்த அவளிடம், ஆடை அணிகலக் கடையே அணி கொண்டிருந்தாற் போன்ற ஒருத்தி, உன்னிடம் தங்கமும் வயிரமும் இருப்பதாகப் பலரும் சொல்லுகிறார்கள்; நீ இப்படி எதுவும் இல்லாமல் வந்திருக்கிறாயே, என்றாள். ஆமாம்; அவற்றை வீட்டிலே வைத்திருக்கிறேன்; ஒரு நாளைக்கு என் வீட்டுக்கு வாருங்கள்; அவற்றைக் காட்டுகிறேன் என்றாள். பொறுப்பாளா, தங்கி இருப்பாளா, இதனைக் கேட்டவள் மறுநாள் விடிந்தும் விடியாமலும் தேடிச் சென்று விட்டாள். பிள்ளைகளா உங்களைப் பார்க்க இந்த மாமி வந் திருக்கிறார்கள் என்றாள் வீட்டுக்காரி. நான் இவர்களைப் பார்க்கவோ வந்தேன் என்று வந்தவள் திகைக்கும் போது, இவன் தங்கமணி மூத்தவன்; இவள் வயிரமுத்து இளையவள். இவர்கள் என்னிரு மக்கள்; இவர்களே என் தங்கமும் வயிரமும் மட்டுமல்ல; மணியும் முத்தும் எல்லாம் எல்லாம் என்றாள்! வள்ளுவர் கூறுகிறார். தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் பொருள் தம் மக்களே என்றால் அம் மக்களுக்குப் பொருள் தேடி வைக்க வேண்டாவா? என்றால் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர், அது என்ன பொருள் என்றும் நன்கு கூறுகிறார். ஒரு பெற்றோர் தம் பிள்ளைகளுக்குப் பெருஞ் செல்வம் தேடி வைக்கின்றனர். அப்பொருளைக் காப்பதும் வளர்ப்பதும் அல்லது குறைப்பதும் அழிப்பதும் அப்பிள்ளைகளைப் பொறுத்ததே அல்லவா! தேடி வைத்து விட்டால் மட்டும் தீர்ந்ததா? அதனைப் போற்றிக் கொள்வது அவர்களைப் பொறுத்ததுதானே: கோடியைக் கொடுத்தாலும் கொள்ளை கொடுத்து விடுவார் உண்டு; கொள்ளை கொடுத்ததுபோல் செலவிடுவாரும் உண்டு! நூறு கொடுத்தாலும் ஆறு எனப் பெருக்கிக் கொள்வாரும் உண்டு! வினை அதனால் தம் பொருள் என்ப தம் மக்கள் என்று சொல்லி யவர், அவர் பொருள் தத்தம் வினையான் வரும் என்றார். அவரவர் முயற்சியால் செயலால் என்பதே வினையான் என்பதன் பொருள். அதனைத் தலைவிதி என்று பொருள் காண்பது, தமிழர் தம் நிலை சாய்ந்து கெட்ட தலைவிதி தான். அறிவின்மை வறுமை கொடுமையானது; அது எவர்க்கும் இருத்தல் ஆகாது; வறுமை ஒரு நாட்டில் இருக்குமானால் அதற்கு அடிப்படை அரசே; அத்தகைய தீய அரசை, மாற்றியமைத்தல் மக்கள் கடனே என்றெல்லாம் நினைத்துக் கூறியவர் வள்ளுவர். அவர், நெருப்புக்குள் உறங்கினாலும் உறங்கலாம்; ஆனால், நிரப்பு எனப்படும் வறுமைக்குள் கண்ணிமையை மூடுதலும் முடியாது என்றும், வறுமைக்கு ஒப்பான துன்பம் தருவது வேறு எது? அவ்வறுமையே என்றும் கூறினார். அத்தகையவர், பெற்றோர் கடமையை எண்ணிப் பார்க்கிறார். ஒருவன் செல்வன் எனவும், ஒருவன் வறியன் எனவும் ஆவதற்கு அவன் மட்டுமே காரணமானவன் அல்லன். ஆட்சி யமைப்பும், சமுதாய அமைப்பும் காரணம் ஆதல் உண்டு. அதனால், செல்வம் வறுமை என்பவை மதிப்புக்கும், பழிப்புக்கும் உரியவை அல்ல, என்றும் மாறாதவையோ மாற்றியமைக்க முடியாதவையுமோ அல்ல. ஆனால், அறிவு என்பது அத்தகையது அன்றே. அவனவன் முயற்சியால் அல்லவோ உண்டாவது. ஆதலால், வறியன் என்பதனினும் அறிவில்லான் என்பதே அவன் பழிக்கும். அவன் குடிப்பழிக்கும் உரியது. அவ்வாறாயின், அவ்வறுமையினும் கொடியது அறிவில்லாமையேயாம் எனத் தெளிந்தார். அதனால், அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு (841) என்றார். தம் பொருளாகிய மக்களுக்குப் பெற்றோர் தரும் பொருளாவது, அறிவே என்பது வள்ளுவமுடிபாம். பழியின்மை நெஞ்சிலக்கணம் அறியாதவன் பஞ்சிலக்கணம் படித் தென்ன? அஞ்சிலக்கணம் படித்துத்தான் என்ன? அறிவறிந்த மக்கள் பண்பறிந்த-பழியறியா-மக்களாகவும் இருத்தல் வேண்டும் எனத் தேர்ந்து கூறுகிறார். அது, எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (62) என்பது. பழிப்புக்கு இடமில்லாத பண்புடைய நல்ல மக்களை ஒரு பெற்றோர் பெற்று விட்டனர் என்றால், அந்நன் மக்கள் வழி வழியாக வருவாரும் பழியிலராக விளங்குவார்! ஆதலால் பழியற்ற மக்களைப் பெற்றவர் தம் வழி முறைக்கே பழிவராது பாதுகாப்பவர் என்று அவர்தம் பன்மடங்குப் பெருமையைப் பகர்கிறார். முன்னை ஒரு பிறப்பு என்ன? என்று அறிந்துள்ளார் எவர்? அவர் கூறட்டும்! பின்னே ஏழு பிறப்பைக் காணலாம்! வருகின்ற ஏழு தலைமுறையினர் என்பது, அறிவொடு பொருந்தும் வழி மட்டுமன்று, இற்றை அறிவியலொடும் பொருந்தும் வழி. எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் என்பதற்கும், பின்வரும் ஏழு தலைமுறையினரும் நினைவர் என்பதே வாழ்வொடும் பொருந்திய செய்தியாம் (107). திரட்டு இங்குக் கூறியவற்றால், அறிவறிந்த நன் மக்கட்பேறே பேறுகளுள் சிறந்த பேறு என்பதும், அம்மக்களே பெற்றோர்க்கு அமைந்த பொருள் என்பதும், பெற்றோர் தம் மக்கட் பொருளுக்குத் தர வேண்டிய அரும்பெரும் பொருள் அறிவே என்பதும், அவ்வறிவும் பழியறியாப் பண்பொடு கூடிய அறிவு என்பதுமாம். வளர்ப்பு இனி மக்களைப் போற்றி வளர்க்கும் முறைமையும், அவ்வாறு வளர்த்தலால் தாம் பெறும் இன்பமும், அவர்கள் கொள்ளும் நலமும் முக்குறள்களில் மும்மணிகளெனக் கூறுகிறார் வள்ளுவர். (64-66). அளவளாவுதல் இல்வாழ்வின் வெற்றிக்கும் பெற்றோர் கடமை நிறை வேற்றத்திற்கும் இன்றியமையாத ஒன்று அளவளாவுதல். அள வளாவுதல் அமைந்த இல்லறம் சிறக்கும்! குடிநலம் கொஞ்சும்! அளவளாவுதல், அன்பால் உண்டாகும். அளவளாவுதல் மேற் கொண்டால் உள்ளந் திறந்து பேசும் வாய்ப்பு ஏற்படும். ஒவ்வொருவரும் மனம் திறந்து நினைவாராக. கணவன் மனைவி மகள் மகன் என்னும் ஒரு சிறு குடும்ப உறுப்பினர் தாமும், எதுவும் மனந்திறந்து பேசி, மனந்திறந்து செயலாற்றி வாழும் வாழ்வைக் காண்கிறோமா? அவ்வாறு ஆயின், இல்லறத்தின் அடிப்படையே தகர்ந்து போய்விடுகின்றது அல்லவா! உலகளாவிய ஒரு நிலைக்கு வளர்வதற்குரிய பயிற்சி நிலையமாகிய இல்லளவிலேயே, அளவாளவுதல் இல்லை என்றால் முடிவு வெற்றி முயற் கொம்புதானே! இந்நிலைதான் இந்நாட்டையும் உலகையும் அழிக்கிறது! தாய் தந்தையொடும், தந்தை தாயொடும், மக்கள் பெற்றோரொடும், பெற்றோர் மக்களொடும் அளவளாவுதல் இன்பத்தை விரும்புகிறார் வள்ளுவர். உணவு உண்ணும் போதும் உடனிருந்து உண்ண ஏவுகிறார். ஒருவர்க்கு ஒருவர் படைத்து உவப்புடன் உண்ண ஏவுகிறார். அப்பயிற்சி குழந்தைகளுக்கே கல்லாக் கல்வியாக நாளும் பொழுதும் வருவதால் அக்குழந்தையும் அளவளாவத் தெரிந்து கொள்கிறது. அளவளாவித் தன் பெற்றோரையும் உடன்பிறந்தாரையும் மகிழ்விக்கவும் தெரிந்து கொள்கிறது. கண்டது கற்றல்; கேட்டது சொல்லல்; செய்தது செய்தல் என்பவற்றைக் குழந்தைகள் போலப் பெரியவர்கள் தாமும் எடுத்துக் கொள்வது இலரே! ஊட்ட ஊட்டல் தாயும் தந்தையும் தம் கையால் எடுத்துத் தனக்கு ஊட்டுவது போலத் தானும் தன் தாய்க்கும், தன் தந்தைக்கும் தன் சிறிய அழகிய கையால், பிசைந்து உணவை ஊட்டுகிறது. அவ்வுணவே உயிர் தளிர்க்கச் செய்யும் உயர் அமிழ்து! உயிர் அமிழ்து! இப்படி ஊட்டுமா குழந்தை என்பார் உளராயின், அவர் குழந்தையியல் அறியார்; குழந்தையொடு நெருங்கி அளவளாவார்; குழந்தை, தம்மைக் கண்ட அளவில் அஞ்சி ஒடுங்கச் செய்வார்-என்னும் உண்மையை மறைப்பார் அவர். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (64) ஏன், ஊட்டியது என்று கொள்ள வேண்டும்? ‘பிசைந்த தாகவே இருக்கலாமே! இருக்கலாம். ஆனால் பொருந்திய நயம் வேண்டாவா? பொருந்திய நயம் காண வைப்பவை வரும் செய்திகள். வளர்ந்த குழந்தை அளவளாவும் பெற்றோர்கள் குழந்தைக்குக் குழந்தையாகி விடுகின்றனர். தாம் வளர்ந்தவர்-பெரியவர்-பெற்றோர் என்பதையே மறந்து விடுகின்றனர். தாம் வேறு குழந்தை வேறு என்னும் இருமை காணா ஒருமையராகி விடுகின்றனர். ஆம்! வளர்ந்த குழந்தையர் அவர் அவ்வாறு அவர் ஆகாக்கால், குழந்தையர் அவரொடு நில்லார்; நெருங்கார்; ஒன்றார்; உரையார்! மாறாக ஒதுங்குவார்; ஒடுங்குவார்; ஓடுவார்; அயற் பிள்ளையைத் தேடுவார்; நாடுவார்! பயிற்சி இளையராகும் பெற்றோர், தம்மையறியாமலே இளமை யாகிறார்; இளையவர்க்கு நற்பயிற்சியும் தருகிறார்; கோழிக் குஞ்சுக்கு இரை பொறுக்கும் தலை எவ்வளவு அழகாகக் கற் பிக்கிறது? நாய் தன் குட்டிக்கு எத்தகு விளையாட்டும் பொய்க் கடியும் காட்டுகிறது? கன்றுக்குக் களிறு எப்படியெல்லாம் முட்டுக் காட்டுகிறது? இவையெல்லாம் தரும் பயிற்சி தானே, அக்குழந்தைகளின் கல்வியே! பெற்றோர் இதனை எண்ணின் இத்தழுவல் வழியாகவே நல்லவையெல்லாம் பயிற்றி விடுவார். தழுவுதல் தந்தையும் தாயும் குழந்தையைத் தழுவுவதுதான் வள்ளுவர் கூறும், மக்கள் மெய் தீண்டும் இன்பமாக இல்லை! அம்மக்கள் தம் பெற்றோரைத் தழுவும் இன்பமே அவ்வின்பமாம்! குழந்தைகள் பெற்றோரைத் தாமே எப்பொழுது தழுவு வர்? அக்குழந்தைக்குத் தக்க குழந்தைத் தோழராய் இருந்தால் அல்லவோ தழுவுவர்? கடுகடுத்த முகமும், வெடுவெடுத்த மொழியும், சிடுசிடுத்த சினமும்-பெற்றோர் கொண்டிருக்கும் பொருள் எனின் குழந்தை வெடு வெடுத்துத்தானே ஓடும்! மெய்யாவது திண்டுவதாவது-இன்பமாவது? குழந்தை ஊட்டும் உணவுண்ணல் தம் நாவிற்கு இன்பம். குழந்தை தம் மெய்யைத் தொடுதல் தம் உடற்கின்பம். குழந்தை பேசும் சொற் கேட்டல் தம் செவிக்கு இன்பம். சொற் கேட்டு மகிழ்வாதல் போல் ஊட்டலாலும், தொடலாலும் இன்புறுதல் தானே பொருந்திய பொருள்! பெருமிதம் குழந்தை கூறும் சொல்லைக் கேட்டு இன்புற வேண்டு மானால் அதற்கு எத்தனை நூறு முறை அதற்குச் சொல்லிச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டும். அதனைத் தானே கிளிப் பிள்ளை போல அப்பிள்ளை கூறுகிறது. அது நயமாகக் கூறுகிறது-இனிக்கக் கூறுகிறது என்றால், நயமாகவும் இனிக்கவும் கூறிவைத்த ஆசிரியர் எவர்? தாம் வரைந்து வைத்த ஓவியத்தையே கண்கொட்டாமல் கண்டு களிப்புறும் ஓவியப் பெருமிதம் இல்லையா? தம் வகுப்பு மாணவன் தம் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றான் என மகிழும் ஆசிரியப் பெருமிதம் இல்லையா? அது போல் தம் பிள்ளை ஊமை அன்று; கொன்னல், திக்கல் அன்று; என்று கொள்ளும் மகிழ்வு மட்டுமோ பெற்றோர்க்கு? அம் மகிழ்வுடன் தாம் சொல்லும் சொல்லை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்னும் மகிழ்வால் தமக்குத் தாமே பனி வைத்துக் கொள்ளும் இன்பச் சுரப்பல்லவோ சொற் கேட்டு மகிழும் இன்பம்! தான் எழுதித் தந்த எழுத்தை ஒருவன் அருமையாக மனப்பாடம் செய்து, காலைக் கையைக் காட்டி நீட்டிச், சொல்லும் வகையால் சொல்லி, அவையின் கைதட்டும், பரிசாக வெள்ளித் தட்டும் பெற்று வருவதைக் கண்ட அளவில், தொடர் பில்லாத அவ்வெழுதிக்குக் கூட எத்தகு பேரின்பம்! தன் பொருள் அன்றோ அரங்கப் பேறு பெற்றிருக்கிறது! அவ்வகைப் பட்டதோ தம் மக்கள் சொற் கேட்கும் இன்பம்! அதனின் உயர்ந்ததன்றோ? மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (65) மழலைக் குழல் குழல் வல்லான் ஒருவன்; அவன் அகவையால் இளைஞன் தான். ஆனால், இசைத் திறத்தால் முதுவர்க்கும் முதுவன். அவனுக்கு வள்ளுவர் மேல் ஒரு குறை; குழந்தையின் மழலையை எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்! மழலைச் சொல் கேளாதவரே குழலினிது என்பர் என்று சொல்லி விட்டாரே! அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்பது அவன் குறை. இளைஞன் என்றும் இளைஞனா? காளையானான்; வாலிபன் ஆனான்; மணமும் நிகழ்ந்தது. ஓராண்டு சென்றது; ஈராண்டு சென்றது; அப்படியே பத்தாண்டும் ஓடியது; வீட்டில் ஓடித் திரிய ஒரு பிள்ளை இல்லை! நினைவெல்லாம் குழந்தை! குழந்தை! மேடையிலே பொழிகின்றான் இசை! ங்கு ங்கு தத்தா தத்தா என ஒரு மழலை தாயை விட்டுத் தவழ்ந்து மேடைப்படியில் தவழ்ந்து அவன் முன் முகங்காட்டிப் பூத்த தாமரையாய்... ஐயோ! குழலிசையெங்கே! குழலெங்கே...! பண் ணெங்கே! எல்லாம் தவழ்ந்து விட்டன! என்ன இசை மேதை-குழலிசைக் கோமான்! இசை நிலை தவறிவிட்டாரே ஏன் ஏன்? அவைக்கென்ன தெரியும்? புரியும்? வள்ளுவர் எவ்வளவு பெரியவர்! வெறும் அறிவால்-வறட் டறிவால்-செருக்கால் குறைகண்டேன்! உணர்வால் உயிர்த்த அந்த உயிர்ப்பேறு அம்மவோ! என்றான். அதன் பின் அவன் அரங்கில், குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்பதைப் பொழியத் தவறுவதே இல்லை! அப்படியா? என் மக்கள் என் கல்லறைக்கு வந்து மண்டியிட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டு இங்கே உறங்குகின்றானே, அவன் வாய் எங்களை என்றும் திட்டியது இல்லை; அவன் கை எங்களை என்றும் அடித்ததில்லை என்று கூறும்படியான தந்தையாகவே இறப்பேன் என்றான் ஒருவன். அவன் இங்கர்சால்! தந்தை வீட்டுக்கு வருகிறான். அவன் தலையில் இருந்த தொப்பியை நெடுங்கம்பு கொண்டு அவன் மக்கள் தட்டி வீழ்த்தினர். அப்பொழுது அந்த அன்புப் பிழம்பு, தன் மக்களை அருகணைத்து, இனிய மக்களே இவ்விளையாட்டு உங்களுக்கும் இன்பம்; எனக்கும் இன்பம். ஆனால் இந்த விளையாட்டை நீங்கள் வேறு எவரிடத்தேனும் காட்டினால் அவர்கள் என்னைப் போல் மகிழ மாட்டார்கள். உங்களை அடிப்பார்கள். நீங்கள் அழுவீர்கள். அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆதலால் இதனைப் பிறரிடம் செய்ய வேண்டா என்கிறான். அவன் ஆபிரகாம் லிங்கன்! குழந்தை மையைக் கையால் தொட்டது; அக் கையால் முகத்தைத் தேய்த்தது; முகத்தில் மைக்கறை! என்ன அழகு என்று கண்ணாடியில் அழகு பார்த்தது! ‘என்ன அழகு? என்று கன்னத்தில் அறை போட்டாள் தாய்! வீறிட்டு அழுதது குழந்தை! அதோ முழுமதி! அதில் கறையில்லையா? அது அதன் குறையா? என்ன கொடுமை செய்து விட்டாய் என்று உருகு கிறது அருள் உள்ளம்! ஆம் தாகூர் உள்ளம்! குழந்தை உறங்குகிறது முத்தமிட்டும் எழுப்பலாம்! முதுகில் அறைந்தும் எழுப்பலாம்! எது இருவர்க்கும் இன்பம்? - இதனை எண்ணிப் பார்க்கலாமே! முற்றத்தில் நிற்கிறது குழந்தை. முகம் வாடிப் போய் இருக்கிறது. தந்தை வருகிறார். என்னம்மா, என நிலையுணர்ந்து கேட்கிறார். அப்பா! ஒட்டடை அடித்தேன்! கம்பு பட்டுக் கண்ணாடி உடைந்து விட்டது! என்கிறாள். கண்ணாடிச் சில் மேலே படவில்லையே! நல்ல வேளை! கண்ணாடி போனால் போகிறது; வேறு வாங்கிக் கொள்ளலாம். மேலே பட்டிருந்தால்தான் தொல்லை என்ற உரை கேட்ட அளவில், முகம் மலராகி விட்டது. கண்ணாடி உடைவைக் கொண்டு கண்டித்திருந்தால் நெஞ்சவுடைவல்லவோ நேரும்! பின்னர் ஒட்டடை தட்ட எண்ணமாவது எழுமா? இவை இடைக் குறிப்புச் செய்திகள். முந்தியிருத்தல் மக்களுக்குப் பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமை ஒன்றையும், அதன் பயனையும் காணலாம். அவை ஒவ்வொரு குறட் செய்திகள். ஆனால் விரிய, விரியும் விரிவுடையவை. நாம் ஓரளவால் காணலாம். முன்னது, தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்பது (67). தந்தை என்றால் தந்தை மட்டும் தாமா? தாய் செய்தல் கூடாதா? ஏன் இருவருமே செய்யலாமே! மகற்கு என்றால் மகளுக்குப் பொருந்தாதா? மகன், மகள் ஆகிய இருவருக்கும் உரியதுதானே! அவை என்பது என்ன? நாடக அரங்கும் அவைதான்! திரையரங்கும் அவை தான்! வட்டரங்கும் அவை தான்! இவை எல்லாம் பணத்தாள் தந்தவர் எவராயினும், முந்தியும் இருக்கலாம்! முன்னும் இருக்கலாம்! முதன்மையிலும் இருக்கலாம்! காலை வைத்தலும் ஆகாது என்னும் சூதர் அவையும் உண்டே! இக்காலத்தில், ஏய்ப்பர் அவை எத்தனை? மேய்ப்பர் அவை எத்தனை? எவ் வவையில் முந்தியிருப்பச் செய்தல்? முற்காலத்தே வேந்தர் அவை இருந்தது. புலவர் அவை இருந்தது; எண்பேராயம், ஐம்பெருங்குழு என்பன இருந்தன. வாரியங்கள், ஊராள் கணங்கள் என்பனவும் இருந்தன. இக்காலத்தும் மதிப்புக்குரியவை எனப் பாராட்டப்படும் அவைகளும் குழுக்களும் எத்தனையோ உள்ளனவே. பல்கலைக் கழக ஆட்சிக்குழு, அரசியல் மேலவை, அறிஞர் அவைகள் இப்படியெல்லாம் உள்ளனவே. இவற்றில் தம் மகன்(ள்) இடம் பெறுமாறு தகவாளனாக்குதல் தந்தைக்கு (தாய்க்கு)க் கடமையாம். முன்னே சொன்ன நாடக அரங்கு போல அமர வல்லதா மதிப்புமிகு அவை? அதற்கெனத் தகுதி இல்லையா? அதற்குரிய வகையில் தம் மக்களைத் தக்கோர் ஆக்குதல் பெற்றோர் கடமை யாம். தகவாக்கல் தக்கோர் ஆக்கத் தடைகள் எத்தனை? கல்வி நிலையம் விடுத்தால் போதுமா? கற்கிறாரா எனக் கண்காணிக்க வேண் டாவா? கூடார் கூட்டில் குலவினால், தோலிருக்கச் சுளை விழுங்கியது போல் ஆகிவிடுமே! பட்ட பாடெல்லாம் பாழாகி விடுமே! விதைத்து விட்டால் விளைந்து விடுமா? கருத்தில்லை யானால்-காவல் இல்லையானால், களத்தில் இருந்து களஞ்சியத்திற்கு வாராமல் களவு போய் விடாதா? கறிவேப்பிலைக்கு நூறு நோய்; இந்நாளில், கற்கும் பருவத் தார்க்கோ நூறு, நூறுநோய்! கற்ற அளவோடு கடமை முடிந்ததா? வேலை தேடும் படலம் தனிப்படலம் அல்லவா! இவ்வளவும் பெற்றோர் பிள்ளைகளை முந்தியிருக்கச் செய்தலுள் அடங்கும் அல்லவோ! திருப்பம் பெற்றோர் முயன்றனர் பிள்ளையை நெறியாக்க! அவனோ குறுஞ்சிறு கூட்டொடு குலவிப், பின்னே சிறைக் கூட்டுக் குள்ளானான். பெற்றவன் தன் பிள்ளைப் பாசம் தள்ள அவனைப் பார்க்கச் சென்றான். அப்போது சொன்னான் உள்ளிருக்கும் வள்ளல்! துள்ளித் திரிகின்ற காலத்தே என் துடுக்கை அடக்கிப் பள்ளிக்கு வைத்திலையே என் தந்தையாகிய பாதகனே அவன் திரிதிரி எனத் திரிவானாம். அது பருவக் கோளாறாம்! தந்தைப் பாவி தன் கடன் செய்யவில்லையாம்! நல்ல தோசைத் திருப்பம் அல்லவா இது! நேர்மை போற்றும் அமைச்சன் ஒருவன். அவன் மகன் குற்றம் செய்து பிடிபட்டான். தண்டனை தந்தான் அமைச்சன்! ஒருவன் கேட்டான். நீர் மிக நேர்மையர் என்பதைக் காட்டிக் கொள்கிறீரோ! மிக அழகு! அவன், பிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் கடனை நீர் ஒழுங்காகச் செய் திருந்தால், அவன் குற்றத்திற்கு ஆளாகியிருப்பானா? வீட்டுக் கடமையை ஒழுங்காகச் செய்ய மாட்டாத நீர், நாட்டுக் கடமை செய்ய வந்ததை நினைத்தால் வெட்கக் கேடு! நாடு உருப்படுமா? - வினாவியதில் பொருளில்லை எனத் தள்ளிவிடக் கூடுமா? சூழ்நிலை ஒருவனை ஒழுங்காய் - உருப்படியாய் - இருக்கவிடும் உலகா இது? அதிலும் குழந்தையாகவும் இல்லாமல் வளர்ந்தாராகவும் இல்லாமல் இரண்டுங் கெட்ட பதினகவையர்க்கும் பற்றும் சூழ்நிலை நோக்காத-நோக்கி வழி காட்டாத-பெற்றோர், பாழ்நிலை நோக்காமல் தீராது. வீட்டை விட்டு வெளியேறடா என்று கடிந்து விட்டால், வீட்டைக் காத்துக் கொண்டு கிடடா என்று மகனிடமிருந்து மறுமொழி வரும் என்னும் தெளிவு உண்டாகி விட்டால், பெற்றோர் எல்லா வகையிலும் பிள்ளைகளை இழவாமல் இருப்பர்! பயன்பாடும் கொள்வர்! விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்பது வள்ளுவத் தீர்வு. வாழா மூப்பு பெற்றோர் தம் பெண் மக்களுக்குக் காலத்தால் செய்ய வேண்டிய கடனை நினைவூட்ட வள்ளுவர் மறந்தார் அல்லர். தம் மகளுக்கு உரிய பருவத்தில் தக்க கணவனைக் கண்டு அவனொடும் குடிவிளங்க வாழச் செய்யும் கடமையாகும் அது. அதனை அவளே தேடிக் கொள்ளவும், தேடித் தந்து அமைத்துக் கொள்ளவும் ஏற்பது வள்ளுவம். மகளுக்குச் சொல்லியது மகனுக்குமேயாம். பிறர்க்கு உதவாமல் வறிதே வைத்துப் பொருளை வாழா வெட்டி யாக்கும் கருமி, மிகு நலம் பெற்ற நன்மகள் ஒருத்தி மணங்கொள்ளப் பாராமல் மூப்படைய விட்டு வாழா வெட்டி யாக்கும் பெற்றோர்க்கு ஒப்பானவன் என்னும் குறிப்பால் இதனை வெளிப்படுத்துகிறார். அற்றார்க்கு ஒன்றுஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று என்பது அது. உலகப் பயன் குடும்ப நலன் ஒன்றைக் கருதியே இவ்வாறெல்லாம் கட னாற்ற வேண்டும் எனக் கருதினால் அது விரிவிலா அறிவு ஆகும். நல்ல கல்வியின் அடிப்படையே யாதானும் தம் நாடாம். யாதானும் தம் ஊராம்! தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (1007) என்பது வள்ளுவப் பெற்றோர் வளநெறி. தம் மக்கள் அறிவுடைமை தம்மைக் காட்டிலும் இப் பேருலகுக்கே பேரின்பம் செய்வது என்பது பொருளாம். அப்படி ஒரு மகனால், பெற்றோரைக் காட்டிலும், உலகுக்கு இன்பம் உண்டாகி விடுமா? நீராவியால் இட்டவி அவிக்கலாம்; குழாய்ப்பிட்டு அவிக்கலாம் என்ற அளவில் நாம் கண்டு கொண்டிருக்க, அந்நீராவியால் கப்பலையும் தொடர் வண்டியையும் இயக்கலாம் எனத் தீவன்சனார் கண்டாரே! அது அவர்தம் பெற்றோர்க்கு உண்டாக்கிய இன்பத்தினும், உலகுக்குச் செய்துவரும் இன்பன்றோ பெரிது! நாம் கப்பலில் போக-தொடர் வண்டியில் போக, வாய்க் கிறதே, அத்தீவன்சனார் அறிவுத் திறத்தால் நேர்ந்தது தானே அது! குருவி பறக்கும் வீட்டின்மேல் கொக்குப் பறக்கும் அதற்குமேல் புறாப் பறக்கும் அதற்குமேல் பருந்து பறக்கும் அதற்குமேல் எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ? என்று நாம் பாடிக் கொண்டிருக்க, பருந்துக்கு மேலே பருந்தாகப் பாரெல்லாம் கடந்து, அப்பாலுக்கு அப்பாலும் சென்று வரும் வான ஊர்தி காண்கின்றோமே! தெருவிலே கிடக்கும் எலும்பு, இரும்பு, இலாடம் ஆகிய வற்றைப் பொறுக்கி விற்று அதனால் பிழைத்த இரைட்டு உடன் பிறந்தார் கண்ட கனவும், கொண்ட அடித்தளமும் தானே இம் முன்னேற்றம்! வானூர்தியில் செல்வாரெல்லாம் இரைட்டு உடன் பிறந்தாரின் பெற்றோர், உற்றார், உறவினர்தாமா? எடிசனாரின் ஒரு பிறப்பு மட்டும், இருநூற்றுக்கு மேற் பட்ட கண்டு பிடிப்புக்கு ஆட்பட்டு, உலகப் பயன் செய்து வருகின்றதே! இவ்வறிவியல் அறிஞர்கள் மட்டும்தாம் உலகுக் கின்பம் செய்தவரா? இப்படி அத்தனை துறைகளிலும் கட னாற்றி உலகுக்கு நலம் செய்த-செய்து வருகின்ற பெருமக்களால் தானே உலகம் உய்ந்து வருகின்றது! தேன் பதத்திற்குத் துளி போன்றவை இவை. உருக்கும் செய்தி தம் அறிவுடைமை தம் பெற்றோரினும் மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்பதை நிலை நாட்டிய ஒரு பெருமகனார், தாம் பெற்றோர் நிலையில், தம் ஆருயிர்த் துணையொடும் எப்பாடு பட்டார் என்பதை அவ்வாயிருர்த்துணை எழுத்தாலேயே அறிதல் தகும். இது முழுவதும் அன்று; ஒரு பகுதியே. ஒருநாள் நாள் தொல்லையுடன் உட்கார்ந்திருக்கையில் எங்கள் வீட்டின் உரிமையாட்டி திடுமென்று தோன்றினாள், ஏற்கனவே அவளுக்கு நாங்கள் இருநூற்றைம்பது பொன் கொடுத்திருந்தோம். அப்படிக் கொடுத்தபோது என்ன ஏற்பாடு என்றால் இனி அவள் எங்களைப் பணம் கேட்கக் கூடாது என்பதும் வீட்டு உரிமைக்காரனுக்குத்தான் நாங்கள் வாடகையைக் கொடுத்து வரவேண்டும் என்பதும் ஆகும். ஏனென்றால் அவன் தனக்கே வாடகை சேரவேண்டும் என்று முறை மன்ற ஆணை வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தலைவி இவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு நாங்கள் கொடுக்க வேண்டியிருந்த ஐந்து பொன்னை உடனே கொடுத்தாக வேண்டும் என்று கேட்டாள். உடனே நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும்? பொருள்களை ஏலம்போடும் தரகர்கள் இருவர் உள் நுழைந்தார்கள். எங்கள் துணிமணிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்தார்கள். கைக் குழந்தையின் தொட்டில், பெண் குழந்தையின் பொம்மைப் பொருள்கள் முதலியவற்றைக்கூட எடுத்துக் கொண்டார்கள். இதனைப் பார்த்துக் குழந்தைகள் உரத்து அழுது கொண் டிருந்தன. இன்னும் இரண்டு மணி நேரத்தில் பணம் கொடுக்கா விட்டால் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய் விடுவோம் என்று அவர்கள் அச்சுறுத்தினார்கள். அப்படிச் செய்து விட்டால் தாங்க முடியாத மார்பு வலியோடு, ஈரநிலத்தில், நடுக்குகிறகுளிரில், என் குழந்தைகளை விட்டுக் கொண்டு நான் எப்படிப்படுத்திருப்பது என்று கவலை கொண்ட எங்கள் நண்பர் சிராம் என்பவர், வெளியே போய் ஏதாவது உதவி பெற்று வரலாம் என்று விரைந்து சென்றார். ஒரு குதிரை வண்டியைப் பிடித்துக் கொண்டு அதில் ஏறி உட்கார்ந்தார். ஆனால் குதிரை கட்டவிழ்த்துக் கொண்டு ஓடிவிட்டது. அவர் வண்டியில் இருந்து குதித்தார். உடம் பெல்லாம் காயம். அதனொடு வீடு வந்து சேர்ந்தார். நடுங்கிக் கொண்டிருக்கிற என் குழந்தைகளுடன், நான் என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது நல்லகுளிர். மழைவேறே; மக்கள் நட மாட்டமே இல்லை. என் கணவர், வாடகைக்கு வீடு பிடிக்க எங்கெங்கோ அலைந்தார். நான்கு குழந்தைகள் என்று சொன்ன போது யாரும் எங்களுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. கடைசியில் ஒரு நண்பர் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தார். கொடுக்க வேண்டியவற்றையெல்லாம் கொடுத்தோம். எங்கள் வீட்டுக்குள் ஏலம் போடுகிற தரகர்கள் நுழைந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு, பொருள்கள் கொடுத்து வந்த எல்லோரும் அஞ்சிப் போய், தங்களுடைய பாக்கிக்கே எங்களை நெருக்கினார்கள். எனவே எங்கள் படுக்கைகள் அனைத்தையும் விற்று மருத்துவன், உரொட்டிக்காரன், புலவுக்காரன், பால்காரன், முதலியவர்களுடைய பாக்கிகளையெல்லாம் தீர்த்து விடுவ தென்று தீர்மானித்தோம் அப்படியே படுக்கைகளைத் தெருவிலே கொண்டு போய் ஒரு கைவண்டியில் ஏற்றினோம். அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா? அந்தச் சமயம் கதிரோன் மறைந்து விட்ட சமயம், இருட்டாகி விட்டது. இருட்டு வேளையில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வது சட்டப்படி தவறு. உடனே வீட்டு உரிமைக்காரன் காவல்காரர்கள் சிலருடன் வந்து விட்டான். தன்னுடைய பொருள்கள் அந்தக் கைவண்டியில் இருக்கக் கூடுமென்றும், நாங்கள் தப்பித்துக் கொண்டு வெளிநாடு செல்ல முயல்வதாகவும் எங்களைத் தாறுமாறாகப் பேசினான். அவ் வளவுதான். ஐந்து நிமிடத்திற்குள் இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டு முகப்பில் கூடிவிட்டது. படுக்கைகள் திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் அவற்றை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடிந்தது. இங்ஙனம் எங்கள் தட்டுமுட்டுப் பொருள்களை விற்று எல்லாக் கடன்களையும் பாக்கி இல்லாமல் தீர்த்துவிட்டோம். பிறகு தான் என் அருமைக் குழந்தைகளுடன் இரண்டு சிறிய அறைகளுள்ள தற்போதைய இடத்தில் வந்து குடியேறினோம். வாரத்திற்கு ஐந்தரைப் பொன்வாடகை. இந்த இடத்தில் அன் போடு வரவேற்கப் பட்டோம். ஆனால் இந்தச் சில்லறைத் தொல்லைகள் என்மன உறுதியைக் குறைத்து விட்டன என்று நீங்கள் கருத வேண்டாம். நான் மட்டும் தனித்து நின்று இந்தப் போராட்டத்தை நடத்த வில்லை என்பதை நான் அறிவேன். ஒரு சில நற்பேறு பெற்ற வர்களிலே நான் ஒருத்தி. நான் பேறு பெற்றவள். ஏனென்றால் என் கணவன் என் வாழ்க்கையின் மூலவர் என பக்கத்தில் இன்னமும் இருக்கிறார். ஒரே ஒரு செய்திதான் என்னை வாட்டி எடுக்கிறது என் நெஞ்சத்திலிருந்து குருதி பீறிட்டுக் கொண்டு வரும் படி செய்கிறது அஃது என்னவென்பீர்களோ, அவர், என் கணவர் சில்லறைத் தொல்லைகளுக்கெல்லாம் உடன்பட வேண்டியிருக்கிறதே என்பதுதான் காரல் மார்க்கசு-வெ. சாமிநாதர் 120 -123 இதை எழுதியவர் அறிஞர் காரல்மார்க்கசின் உயிருக்கு உயிராகிய துணைவியார் சென்னிமார்க்கசு. இந்த அழகியை மணப்பவன் பேறு பெற்றவன் என ஊரவர் பாராட்டுப் பெற விளங்கிய செல்வக்குடித் தோன்றல் சென்னி. இவனைப் போலும் அழகிலி, இக்கதிரொளி பரவும் உலகெங்கும் காண முடியாது என்று குறைகாணப் பட்டவர் மார்க்கசு. பொருளைப் பற்றி அருமையாக எழுதுகிறான்; பொருளைச் சேர்க்கத் துப்புத்தான் இல்லை என்று தம் தாயாலும் சான்று தரப்பட்ட வறுமையர் அவர். அத்தகு மார்க்கசுக் காகவே வாழும் பருவத்தில் ஏழாண்டுகள் காத்துக் கிடந்து மணந்தவர் சென்னி. கோடி கோடி மக்கள் பசியின்றி வாழ வழி காட்டிய அப்பெருந்தகைப் பெற்றோர் பட்டபாடு கண்ணீர்க் கசிவை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. நெஞ்சத்துக் குருதிக் கசிவையும் தோற்றுவித்து விடுவதாம். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் என்பது தமிழ்க்குறள் (114). மார்க்கசு எத்தகு தக்கார் என்பதை அவர் கண்ட கொள்கை எச்சங்கள் உலகம் உள்ள வரை காட்டு வனவாம். ஒருதாய்; தன் கணவனை இழந்தவள், ஒரே மகள். அவளைப் படிக்க வைக்கக் கருதினாள். பள்ளியில் சேர்த்தாள். மகள் எட்டாம் வகுப்புப் படித்தபோது, அவளோடு சேர்ந்து படித்தாள்! அவளோடும் தேர்வும் எழுதினாள். இருவரும் வென்றனர். மகள் பத்தாம் வகுப்புப் படித்தாள். தாயும் உடனிருந்து வீட்டில் படித்தாள். அத்தேர்வும் மகளொடும் எழுதினாள். இருவரும் வென்றனர். பின்னர் இளங்கலைத் தேர்வுக்கும் மகளுடன் தாய் சென்றாள்; இருவரும் வென்றனர். இது பீகாரில் நிகழ்ந்த நிகழ்ச்சி. ஒரு தாயின் எண்ணம் எப்படியெல்லாம் விரிகின்றது. தந்தையோடு கல்விபோம் என்று எண்ணியிருந்தால், அத்தாய் செயற்கரிய வகையில் தன் கடனைச் செய்திருப்பாளா? பெற்றோர், பெற்றோர் மட்டும் அல்லர். உடன் கற்கும் மாணவர்; கற்பிக்கும் ஆசிரியர்; வழிகாட்டி! என்பதற்கு அத்தாய் அரிய சான்று! பெருந்தக்க பெற்றோர் எண்ணுவாராக!  6. நல்ல மக்களாக மக்கள் கணவன் மனைவி என்னும் நிலையில் இருப்பாரைத் தந்தை தாய் என்னும் உயர்நிலைக்கு ஏற்றியதுடன், பெற்றோர் என்னும் பெரு நிலையாம் ஒரு நிலைக்கு உயர்த்துபவர்கள் மக்கள் ஆவர். குடிபடை மக்கள் என்பார் குடும்ப அளவில் முதற்கண் பேசப்படுவர் எனினும், அவர்களே வளர்ந்த நாளில் நாட்டின் உறுப்புகள் ஆறனுள் முன்னிரண்டுமாகிய படைகுடிகளின் உரிமை யாளரும் ஆவர். நன்மக்கள் மூளை வளமும் நெஞ்ச வளமும் ஒருங்கே கொண்டவர்களே வீட்டு நலத்திற்கும் - நாட்டு நலத்திற்கும் - உலக நலத்திற்கும் உரிய வகையால் பயன்படுவர் என்னும் தேர்ந்த தெளிவால், அறிவறிந்த நன்மக்கள் என்றும் (61) பழிபிறங்காப் பண்புடை மக்கள் என்றும் (62) வகுத்துக் கூறினார் வள்ளுவனார். மக்கள் வளம் ஒரு நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை வளங்கள் சிறந்தனவேயாம். மலைவளம், காட்டுவளம், கடல் வளம், ஆற்றுவளம் மண்வளம் என்பன பெயரளவால் ஒவ்வொன்றாய் இருப்பினும், ஒவ்வொன்றனாலும் கிட்டும் வளவகைகள் ஆயிரம் ஆயிரமாம். மண்வளம் என்று கூறப்படும் ஒன்றில் விளை பொருள்கள் மட்டுமோ? எண்ணெய் வளம், பொன் வயிரம் மணி நிலக்கரி எனக், காலம் காலமாய் உதவக் காத்துக் கிடக்கும் வளங்கள் தாம் எத்தனை? எனினும் இம்மலைவளம் முதலிய எவற்றிலும் சிறந்த வளமாவது, மக்கள் வளமே என்பதை எண்ணுவார் எவரும் அறிவர். ஏனெனில் வளங்களை எல்லாம், காண்பாரும் கண்டு தருவாரும் மக்களே அல்லரோ! மக்கள்வளம், மக்கள் வளமேம்பாடு என்பனவெல்லாம் இற்றை அறிவியல் வளத்தால் அறியப்பட்டது என்னும் எண்ணம் உண்டாதல் இயற்கை. ஆனால், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றும், ஊனுடம்பு ஆலயம் என்றும் கண்ட இம் மண்ணுக்கு இது புதுமை இல்லை. மண்வளம் மக்கள் வளமே! சங்க காலத்து வாழ்ந்த ஒளவையார், நிலத்தை முன் னிலைப்பத்தி, “நிலமே, நீ ஒன்றில் நாடாக உள்ளாய் (மருதம்); நீ ஒன்றில் மேடாக உள்ளாய் (குறிஞ்சி); நீ ஒன்றில் பள்ளமாக உள்ளாய் (நெய்தல்); எவ்வாறாயினும், எவ்விடத்தில் வினை யாற்றல் மிக்க நல்லவர் உள்ளாரோ அவ்விடத்தில் நீயும் நல்லதாக உள்ளாய்!உனக்கென ஒரு நன்மை உடையை அல்லை என்றார் (புறம். 187) மண்ணுக்குச் சொல்லிய இது, கடலுக்கும் தகுவதேயாம். மாந்தர் வளம் இல்லாத மண்வளம், வளமன்று என்பதே இதன் திரட்டுப் பொருளாம். இதன் உள்ளீட்டை எழுதும் பழைய உரையாசிரியர், தீய நிலனேயாயினும் நல்லோர் உறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோர் உறையின் தீது எனவும், தன்னிடத்து வாழ்வோர் இயல்பல்லது தனக்கென ஓரியல்பு உடையது அன்றென நிலத்தை இழித்துக் கூறுவது போல உலகத்து இயற்கை கூறிய வாறாயிற்று என்கிறார். குடும்ப அளவு மக்கள்வளம், முதற்கண் குடும்ப அளவில் வெளிப்பட வேண்டும். அது, அறிவு தந்து ஆளாக்கிவிட்ட தந்தையார் ஆகிய பெற்றோர் ஏற்றும் மகிழ்ந்தும் பாராட்டும் சீர்முத்திரையைப் பெறுதல் வேண்டும்! வீட்டுக்கு விளங்காத பிள்ளை நாட்டுக்கு விளங்கவா செய்யும்? வீட்டுக்கு விளங்காத பிள்ளைகள் கூட நாட்டுக்கு விளங்கிய வரலாறு உண்டே எனின், அது பெற்றோர் புரிந்து கொள்ளாத் தன்மையாலும், பிள்ளைகள் எண்ணமும் பெற்றோர் எண்ணமும் வேறுவேறாக இருந்து இடை வெளிப்பட்டு விரிந்து, பிரிந்துபோய் மேம்பட்டதாகும். பெற்றோர் அளவு திருவள்ளுவர், மக்கள் தாம் பிறந்த குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமையைத் தாய்க்கு தந்தைக்கு எனப் பகுத்துக் கொண்டு கூறுகிறார். பெற்றோர் என்னும் அளவில் இருவர்க்கும் கொள்ளத் தக்க கருத்துகளே இவை. எவர்க்கும் தள்ளத் தக்க கருத்துகள் அல்லவாம். பயன்பாடு பயன் கருதிப் பாடுபடும் உழவன் தன் நிலத்தில் அழகுச் செடிகளை நட்டு வைத்துக் கொண்டு, பார்வை அழகு தேடிக் கொண்டிருக்கமாட்டான். நிழல் மரங்களை உண்டாக்கி நிலப் பரப்பை வைத்திருக்க மாட்டான். அவன் எண்ணமெல்லாம் தன்னழகும் தண்ணிழலும் உடையதாய்ப் பயன்தரும் மரஞ்செடிகொடி பயிர்பச்சை களிலேயே செல்லும். அதிலும் சின்னஞ்சிறு நிலத்தையுடையவன் அந்நிலத்துப் பயிர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணுவான். அப்படிப் பேணி வளர்த்தவன் பயன் எதிர்பார்த்தல் என்பது, அவன் வாழ்வுத் தேவை எனல் கட்டாயம். அப்படியே ஓர் எளிய வறிய பெற்றோர், தாம் அரும்பாடுபட்டுத் தம் மக்களுக்குக் கவ்விக் கடமை செய்வது ஆகும். அதற்கு அக் கல்விபெற்ற மக்கள் செய்யும் பயன் என்ன? மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் என்பார் வள்ளுவர். அரிதினும் அரிது ‘ஒரு சொல் தருவதுதானா கடினம்? என்பார் உள ரென்றால், அவரறியாமை வருந்தத் தக்கதே. கடினத்தினும் கடினமாகும், இவன் பெற்றோர் இவனைப் பெற என்ன பேறு பெற்றார்களோ எனப் பாராட்டுப் பெறுவதாகும். இத்தகு பாராட்டும் கிட்டுதல் எளிதா? பட்டம் பதவி பெற்று விடலாம்; எளிதாகவும் பெற்று விடலாம். ஆனால், இத்தகைய பாராட்டுப் பெறுவது, அதுவும், குறையே காணும் எண்ணமும் தம்நலமுமே நோக்குவார் எண்ணிக்கையும் பெருகி யுள்ள நிலையில், நெஞ்சார்ந்த இப் பாராட்டுப் பெறுவது அரிதினும் அரிதாம். படிப்பிலும் சரி, பண்பிலும் சரி, பிறர்க்கு உதவியாக இருக்கும் பாங்கிலும் சரி, குடிநலம் காக்கும் கொள்கையிலும் சரி, மேற்கொண்ட பணியிலும் சரி பெருந் தக்கோனாக இருந்தால் தான் இப் பாராட்டுக் குரியவனாக விளங்குவான். நெஞ்ச நிறைவு பெற்றோர், காலத்தாலும் தம்நலன் கருதாமலும் செய்த உதவிக்கு, ஒருமகன் அல்லது மகள் ஈடு செய்துவிட இயலாது. ஆதலால், நாம் பட்டபாடு வீணில்லை என்னும் நெஞ்ச நிறைவையேனும் மக்கள் தருதல் வேண்டும் என்றார் வள்ளுவர். தாயானேன் என்னும் தளிர்ப்பு மகவைப் பெற்றபோது உண்டாதல் இயற்கை. அம்மகவு நல்லோர்களால் பாராட்டப் படும் நன்மகனாகவோ நன்மகளாகவோ, விளங்கும்போது தான் அவன் முழுநிறைவு எய்துகிறாள். சான்றோன் என்பது நிறைந் தோன். அறிவாலும், பண்பாலும், செயல் திறத்தாலும் பிற பிற நல்லவற்றாலும் நிறைந்தோனே சான்றோன் எனப்படுவான். ஆதலால், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் (69) என்றார். பிறர் பாராட்ட மகிழும் தந்தையியல் போலவே பிறர் பாராட்டக் கேட்டு மகிழ்தலே தாயின் தகைமையுமாம். தாயும் தந்தையும் தாமாகவே பாராட்டிக் கொண்டால் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்னும் பழமொழி போல் அல்லவோ ஆகிவிடும்? அறஞ்சாரா வறுமை தாய் தன் மக்களுள் வறியன் வளவன் என வேறுபாடு படுத்திக் காணும் இயல்பு பெற்றிருப்பதில்லை. சற்றே தூக்கலாகப் பரிவு காட்டினால், வறியன் பாலேயே அஃது இருக்கும். அத்தாயும் செய்யக் கூடாதன செய்து, சிறுமைக்கு இடமாகி, வறுமைக்கு ஆளாகி விடும் மகன்மேல், பரிவு கொள்ளாள். ஏனெனில், அத்தாயுள்ளம் அறத்துக்கு மாறான செயல் செய்வதைப் பொறுப்பது இல்லை; அவனைத்தன் மகவாகக் கொள்ளாள். அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் (1047) நோயான தன் மகனின் நோய் நீக்கத்திற்காகத் தன் உயிரையும் தருதற்கு முந்தும் தெய்வப் பிறவியள் தாய் ஆவாள். நோயில் கிடக்கும் போது அவனைச் சுற்றிச் சுற்றிச் சுழல்வது அத்தூய தாய் நெஞ்சு! ஆனால், தன் மகன் குடியனாகித் தன் நினைவின்றிக் கிடப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. அருவறுப்பு மிக்க ஒன்றைப் பார்ப்பது போலப் பார்த்து அம்மகன் முன் நிற்கவும் முகம் சுழித்துக் கொள்வாள். அருமைத் தாயானும் அருவறுப்பாக நோக்குதல் உண்டாவதை அறிந் தேனும் ஒருவன் குடிகெடுக்கும் குடியைக் கருதாமல் இருத்தல் வேண்டும்! தாய் தன் மகன் மேல் பரிவை நீக்கி விட்டாளா? இல்லை மிகப் பரிவு கொள்கிறாள். சான்றோர் புகழ் மொழி கேட்டு ஈன்ற பொழுதினும் இனிது மகிழ வேண்டும் யான் சான்றோர் பழிக்கு ஆளாகும் இழிமகனைப் பெற்றேனே! என்னே என் இழிமை! என்று நொந்ததால் கொள்ளும் அருவறுப்பே அதுவாம். ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி (929) மக்களாகப் பிறந்தோர் தம்மைப் போலும் மக்களாகப் பிறந்தோர் பழிப்புக்கு ஆட்படுவது என்ன அறியாமை! அதிலும் சான்றோர் எளிதில் ஒருவரைப் பழிக்க மாட்டார். அவர் பழிக்கு ஆட்படின் அப்பிறப்பு பழிப் பிறப்பாகவே இருத்தல் வேண்டும். பெற்றதாய் பசித்துக் கிடப்பினும், அத் தாயின் பசியைப் போக்கல் தன் தலையாய கடமை என்பது மெய்யானாலும், சான்றோர் பழிக்கும் செயல் செய்து அதனால் தன் தாயைக் காத்தல் ஆகாது. ஏனெனில் அத்தாய் அதனை ஒப்பாள்; ஏற்றுக் கொள்ளவே மாட்டாள். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656) பண்பு ஒப்பு உலகம் நானூறு கோடி மக்களைத் தாண்டிவிட்டது. அம்மக்கள் அனைவருக்கும் தலை ஒன்றே. இருதலையராகப் பிறப்பார் அரியர். அவ்வாறு பிறப்பினும் உயிரோடு இருப்பார் அரியர். சயாமிய இரட்டையர்தாம் உலக வியப்பு இரட்டையர். இடுப்புப் பகுதியில் பிரிக்க முடியாத் தசை ஒட்டுடன் பிறந்து இருபது அகவையை ஒட்டி வாழ்ந்து ஒன்றாக இறந்தவர். கால்கள், கைகள், விரல்கள், விரல் நகங்கள் முதலிய உறுப்பு களும் உலகத்து மாந்தர்க்கெல்லாம் ஓரொப்பே. உலகாட்சியை ஒருகாலத்துக் கொண்டிருந்த ஆங்கிலர்க்கு மட்டும் மூன்று கை என்றாகி விடவில்லை! அமெரிக்கரால் தீரா அடிமையராகக் கொள்ளப்பட்ட நீகிரோவர்க்கு ஒருகை என்றாகி இருக்கவுமில்லை! உலக மாந்தர் பிறப்பு அனைத்தும் ஒத்த பிறப்புகளே; ஒத்த உறுப்புகளே! இவ்வொத்த பிறப்பும் ஒத்த உறுப்புகளும் உடைமையால் ஒத்த பண்புடையவர்கள் எனப்படுகின்றனரா? பிறப்பு உறுப்பு ஒப்புகளினும் மக்களுக்கு உயர்ந்ததோர் ஒப்பு உண்டு; அது பண்பு ஒப்பு; அவ்வொப்பு இல்லாமையே உலக அலைக்கழிவுக்கும், சீரழிவுக்கும் அடிப்படை! பண்பு ஒப்பு இருக்குமானால், ஓரினம் ஓரினத்தை அடிமைப் படுத்த நினைக்குமா? தோளில் ஏறியமலர்ந்து சங்கை நெரிக்குமா? நீ தாழ்ச்சி; நான் உயர்ச்சி எனப் பகுத்துப் பேச வருமா? எளிமை கண்டு இரங்குதல் இல்லாமல் ஏறி மிதிக்க முந்துமா? பணிவுடையன் இன்சொலனாதல் ஒருவற்குஅணி என்றது தமிழ் மண் (திருக். 95). எதிரே நடந்து வந்த எளியவன்தன் தொப்பியை எடுத்து, தலை தாழ்ந்து வணங்குவதைக் கண்டு, குதிரை மேல் வந்த இலிங்கன் கீழே இறங்கித் தன் தொப்பியை எடுத்துத் தாழ்ந்து வணங்கி விடை பெற்றுச் சென்றதைக் கண்டது அமெரிக்க மண்! இது பண்பொப்பு அன்றோ! கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்றது தமிழ் மண் (திருக். 260) என் இறுதி ஊர்வலத்தில் என் சவப்பெட்டிக்குப் பின்னே ஆடு, மாடு, கோழி, வாத்து முதலியவை ஊர்வலமாக வர வேண்டும். ஏனெனில், அவற்றுள் எந்த ஒன்றையும் நான் கொன்று தின்றதில்லை என்ற பெர்னாட்சாவைத் தந்தது பிரித்தானிய மண். இது பண்பொப்பு அன்றோ! பண்பொப்புப் பெருகப் பெருக உலகம் உய்யும். இல்லாக் கால் தாழ்வுறும். ஆதலால், குடும்ப அளவில் தம் கடமையைச் செய்த மக்கள் விரித்த அளவில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கருதிய வள்ளுவர். உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு என்றார் (993) பண்பொப்பே பாரொப்பு என்னும் வள்ளுவக் காதல் ஓரொப்புக்கு ஐந்தொப்புகளை அமைத்துக் கூறுகிறது. வெறுத் தக்க என்பது அணிகலமாகக் கொள்ளத்தக்க, விரும்பத்தக்க என்னும் பொருளது. வெறுக்கை (செல்வம்) என்னும் சொல்லின் வழிவந்த சொல் அது. மாந்தப்போலி பிறக்கும்போதே நறுமணத்தொடும் பிறப்பது துளசி. அத்துளசி போலவே இருக்கும் செடியொன்றும் உண்டு. அது நாய்த் துளசி; பேய்த் துளசி எனவும் படும். பார்த்த அளவால் வேறுபாடு தெரியவில்லை எனினும், அவற்றை முகர்ந்து பார்த்த அளவால் வேற்றுமை நன்கு புலப்பட்டு விடும். சுவைமிக்க சுளைகளைத் தரும் பலா நாடறிந்தது. ஆனால் அப் பலாப்போலி ஒன்றற்குத் தட்டுப்பலா என்பது பெயர். செந்தட்டி எனப்படும் எரியூட்டு செடிக்கு அப்பன் அத்தட்டுப் பலா. எங்காவது அது தட்டினால் போதும், காய்ச்சல் எரிவு நுரைதள்ளல் எல்லாம் உண்டாகும் பலா வளரும் காட்டிலே தான் தட்டுப் பலாவும் உள்ளது. பட்டால்தான் அதன் வேறு பாட்டைக் காண்பார், அதனை முன்னர் அறியாதவர். காய்க் கத்தரி அறிவோம். அச்செடி போன்றதோர் கத்தரி, கண்டங் கத்தரி. அச்செடியின் முள்ளால் வேறுபாடு கொள்ள முடியும். நெல்லுக்கிடையே நெல்லுப் பயிர் போலவே வருவது ஒரு பயிர். அதற்குப் புல்லூறு என்பது பெயர். அது கதிர் வாங்கும் வரை நெற்பயிர் போலவே களை பறிப்பார்க்குத் தன்னைக் காட்டி வளர்ந்து விடும். கதிர் வாங்கும் போது தான் நெற்பயிர் அன்று அற்பயிர் என்பதை அறிவிக்கும். இப்படிச் செடி கொடி மர வகைகளில் தாம் ஒப்பான போலிகள் உண்டு என்பது இல்லை. ஊர்வன, நடப்பன வற்றுள்ளும் உண்டு. ஆனால், அரிதின் முயன்றாலும் கண்டு கொள்ள முடியாத மாந்தப் போலி உண்டு. அப்போலியே எப் போலிக்கும் ஒப்பிலாப் போலி என்பது வள்ளுவர் வாய் மொழி. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் (1071) பொய்யன்வாய், புழுத்துப் போய்க் கிடக்கும். களவன் கை, குட்டையாகிப் போகும். வஞ்சன் நெஞ்சம், புண்ணாகி ஒழுகும். கொலையன் முகம், கொள்ளிக் கட்டையாய்க் கரிந்திருக்கும். ஒழுக்கமற்றவன் கண்ணுக்குப், புருவம் இராது. பொறாமைக்காரன் தலைமுடி, செம்பட்டை. பேராசைக்காரன் வாய், பேழை வாய். என்றெல்லாம் வெளிப்படக் காணும் அடையாளம் உண்டா? ஒருவர் ஏமாற்றமடைந்த அளவிலாவது பிறர் கண்டு கொள்ள முடிகின்றதா? இல்லையே! ஒவ்வொருவரும் ஏமாறி, ஏமாறி அழிந்து கொண்டிருக்கப் புதிது புதிதாக ஏமாற ஆள்கள் அணியணியாய் நிற்கின்றதே! எத்தகைய ஒப்பற்ற ஒப்பு-இந்தப் போலி! இப்போலி வாழ்வும் ஒரு வாழ்வா? போலிகளுக்கு உள்ள மூளைக் கூர்ப்பு உண்மைகளுக்கு இருப்பதில்லை. இருப்பின் போலிகளுக்கு இடமுண்டா? ஏமாறி இருப்பதால்தானே, ஏமாற்றி உள்ளான்? ஆனால், இப்போலியின் மூளைக் கூர்ப்பும் ஒரு கூர்ப்பா? கூர்ப்பு என்பது தானும் பயன் கொண்டு பிறரும் நலம் கொள்ளச் செய்வதாக அல்லவோ இருக்க வேண்டும். பிறரையும் கெடுத்து, தன்னையும் பழிக்கு ஆளாக்கிக் கொள்ளும் அறிவுக் கூர்ப்பு ஒரு கூர்ப்பா? தன்னை உடையானை நல்ல வழியில் செலுத்த வல்லது அல்லவோ அறிவு! மரம் போல்வான் அரம் மிக்க கூரிய கருவி. தான் கூர்மையாக இருப்பதுடன் பிறவற்றையும் கூர்மையாக்கும் கருவி அது. அது போல் தானும் கூர்மையானவனாக் பிறரைக் கூர்மையாக்க வல்லவனாய் இருப்பானும் உலகில் இல்லையா? அத்தகையவன் மாந்தர்க்கு வேண்டும் நல்ல பண்பு இல்லாதவனாக இருந்தால்? அழகான தோற்றம்தான் பாம்புக்கு - அதன் நஞ்சு? அழகான அறிவுதான் பண்பிலானுக்கு-அவன் நெஞ்சு? அரத்தால் கூராக்கப்படுவது வாள் (இரம்பம்). அவ் வாளால் அறுக்கப்படுவது மரம்! மரம் எப்படி வாளால் அறு பட்டுச் சிதைபடுகின்றதோ அப்படித் தன்னால் கூராக்கப் பட்டவராலேயே கூறாக்கப் படுவான் மக்கட் பண்பு இல்லாதவன். ஆதலால், மக்கட் பிறவி என்பான் ஆறறிவு உடையான் மட்டுமல்லன்! மக்கட் பண்பு உடையானே மக்கள் வகையன்; பிறன் மாக்கள் வகையன்; மரத்துப் போன வரவகையன். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் (997) மக்கட் பண்பு இல்லாதவன் மரம் எனச் சொன்னால் போதாது. நன்மரங்கள் எத்தனை எத்தனை உள்ளன. நடுவூர்ப் பழுத்த நன்மரங்கள் நயமிக்க மாந்தனுக்கு ஒப்பாக அல்லவோ கூறப்படுவது! ஆதலால் நன்மரம் அன்று இம்மாந்த மரம். இது நச்சுமரம்! காற்றுப்பட்டாலும் கேடாம் நச்சுமரம்! விரும்பப்படாதவன் (நச்சப்படாதவன்) பெற்ற செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று என்பார் வள்ளுவர். செல்வம் நஞ்சாகுமா? செல்வம் உடையவன் நஞ்சாக இருப்பதால் அதுவும் நஞ்சாகிறது! அது என் செய்யும், உடையவன் தன்மை உடைமைக்கு ஆகிவிட்டது! அவ்வளவே! உள்ளச் சுரங்கம் ஒவ்வொருவரிடத்தும் புதையல் உண்டு. அப்புதையலும் எளிய புதையல் அன்று; பொற்புதையல்; வயிரப் புதையல்; மணிப் புதையல்; இவற்றினும் மேலாம் புதையல்! அப்புதையல் எங்கே இருக்கிறது? எப்படி எடுக்கலாம்? அப்புதையல் இருக்கும் இடத்தை அறிவதற்கு மோப்ப உயிரி வேண்டா! துப்புத் துலக்கி வேண்டா! அகழ்ந்து எடுக்கக் கடப்பாறை, மண்வெட்டி, அகழ்வான், துளைப்பி, துருவி என்பவை வேண்டா! ஊக்கம் அப்புதையல் எது? எங்கே இருக்கிறது? என்பது தெரிய வில்லையே! அப்புதையல் ஊக்கம் என்னும் புதையல். உள்ளத்தே இருக்கும் புதையல். எப் புதையலுக்கும் எவ் வெற்றிக்கும் எவ் வாக்கத்திற்கும் அடிப்படையாம் புதையல். அப்புதையல் ஆக்கப் புதையலும் ஆம்! அழிவுப் புதையலுமாம்; நோக்கத்தைப் பொறுத்தது அது! வாழ்நாளில் இரண்டுமுறை நோபல் பரிசு பெற்றவர் மேரிகியூரியார்; கணவர் பியரி கியூரியுடன் சேர்ந்து ஒரு முறை! தாம் தனித்து நின்று ஒருமுறை, என்ன கண்டார் அவர்? உயி ரொத்த - உணர்வொத்த - கணவர் மறைந்த கவலையைத் துடைத்துக் கொண்டு, கடமையிலே அவர் ஊன்றிய ஊன்றுதலால் கண்டு பிடிக்கப்பட்டதே இரேடியம்! புற்று நோய் பற்றினார்க்குக் காப்புப் படையாக இருக்கும் அப்பொருள், அப்பேரன்னை தந்த ஊக்கப் பரிசேயாம். மாசிடோனியாவில் இருந்து குதிரைமேல் ஏறும்போதே ஊக்கப்படியில் உரமாகக் கால் வைத்து ஏறி, வெற்றிமேல் வெற்றி கண்டவர் அலெக்சாண்டர்! அவர் கையிருப்பாக இருந்த பொருள் ஊக்கம்! நூற்றுக் கணக்கில் அல்ல ஆயிரக்கணக்கில் கூடிய கூட்டம்! தொழிலாளர் கூட்டம்! காவல் துறையின் தடியடி கண்ணீர்ப்புகை - துமுக்கி (துப்பாக்கி)ச் சூடு-கலைந்தோடும் கூட்டத்தினிடையே முன்னேறி வருகிறார் இளகிய நெஞ்சத்தின் இருப்பாகிய திரு. வி. க. ஓடித் தப்புக! இல்லாவிடின் குண்டு பாயும் இது காவல் துறை எச்சரிப்பு! அக்குண்டை என் மார்பு எதிர் நோக்குகிறது என்கிறது திரு. வி. க. வின் மலர்வாய்! நெப்போலியனைக் கண்ட இடத்தில் சுட ஆணை! நெப்போலியன் வந்து நிற்கிறான். இலூயி மன்னனின் ஆணைப் படி பல்லாயிரம் வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். சுடுக என்று படைத்தலைவன் ஆணை பிறப்பித்தும் விட்டான். தன் குப்பாயத்தின் (கோட்டு) பொத்தானைக் கழற்றிக் கொண்டே உங்கள் பேரரசனைச் சுடக்கூடியவர் எவராவது உளரா? என முழங்கிக் கொண்டு அப் படைப் பக்கம் சென்றான்! பல்லாயிரம் படைவீரரும் நெப்போலியன் பக்கம் ஆயினர்! துணை வேண்டாத் துணிவுக்குத் துணை பல்லாயிரம்! பல்லாயிரம். பெயர் வேறுபாடு ஊக்கத்தைப் போலும் உயர்மதிப்புடைய பொருள் உலகில் உண்டோ? உண்டோ? உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதில்லார் மரம்; மக்க ளாதலே வேறு என்பது வள்ளுவம். உரமாகிய ஊக்கம் இல்லார் மரமா? மரந்தானே, தன் கீழோ தன்னையடுத்தோ எக்கேடு நடந்தாலும் என்ன வென்று கேளாது; எதுவும் தடுத்துச் செய்யாது; அதன்மேல் ஏறினாலும் வெட்டினாலும் தாங்கிக் கொண்டு நிற்கும்! அப்படி இருப்ப வனை-எது எப்படி நடந்தாலும் எனக் கென்ன என்று உணர்வற்ற நடமாடும் சவமாக இருப்பவனை மரம் என்றதே மதிப்பு மிக்க செய்தி. மாந்த மரமாகிய இதற்கும், அம்மெய்ம் மரத்திற்கும் என்னதான் வேற்றுமை என்றால், வேறு பெரிய வேற்றுமை ஒன்றும் இல்லை; மரம் என்பது அதற்குப் பெயர். மகன் அல்லது மகள் என்பது இதற்குப் பெயர். அவ்வளவே வேறு பாடு. வெள்ளப் பெருக்கு இன்னும் ஒரு சான்றை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். அது வெள்ளம்; அவ்வெள்ளம் ஓடுகிற வெள்ளமும், நிலை வெள்ளமும் ஆகிய இருவகையாலும் சொல்லப்படுகிறது. காட்டாற்று வெள்ளம் போல என்பது பழமொழி. கரையையும் தட்டி, முட்டி மோதிச் செல்வது காட்டாற்று வெள்ளம். அவ்வெள்ளத்தின் மோதுதல் ஆடு, மாடு, வீடு, படப்பை, மரம், மட்டை ஆகியவற்றை யெல்லாம் அடித்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. அத்தகு வெள்ளத்தைக் கண்ட அளவில் அதனுள் பட்டு அல்லல் படுவாரைக் கண்டு இரக்கம் தள்ளும் உதவுதற்காக! அச்சம் தள்ளும் ஒதுங்குவதற்காக! அத்தகைய ஆற்று வெள்ளத்திலும் துணிந்து சென்று அருஞ் செயல் செய்வார் உளர். அவ்வெள்ளம் போலவே துயர்வெள்ளப் பெருக்கும், தடைவெள்ளப் பெருக்கும் வாழ்வில், அலை அலையாய் வருதல் உண்டு. அவற்றை ஊக்கமுடையான் நிமிர்ந்து நின்று வெற்றி கொள்ளல் நடைமுறைக் காட்சி. வரலாற்றேடுகள் அத்தகு வீறு மிக்கவர்களுக்கு இடந் தந்து பெருமைப்படுதல் கண்கூடு. இதனை, வெள்ளத் தனைய இடும்பை, அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) என்கிறது குறள். இது ஓட்டவெள்ளம். நிலை வெள்ளம் ஆழ்நீர்க்குளத்துள் தாமரை அல்லி குவளை ஆகிய நீர்க் கொடிகள் உண்டு. தாமரைக் குளம், அல்லிக்குளம் என்னும் பெயர்களால் ஊர்களும் உள. அக்குளத்தில் நீர் வற்றி வறண்ட நிலை; இரண்டு மூன்றடி அளவே நீர்! அந்நிலைக்கு அக் கொடிகளின் உயரமும் இறங்கிக் கொண்டு வருகின்றது. ஒரு நாள் கடுமழை; பெருநீர் வரத்து; பத்துப் பதினைந்தடி உயரத்திற்கு நீர் வந்து விடுகிறது. நீர்ப்பெருக்கு ஏற ஏற தாமரை அல்லிக் கொடிகளின் தண்டுகள் நீண்டு உயர்கின்றன. அதன் உயரத்திற்குத் தக இலைகளும் பூக்களும் மேலேயே எழுகின்றன. பூக் கொடியின் கொடிகள் எப்படி நீர்க்குத் தக ஏறி இறங்கின. கொடி நீளம் மிகுதி; நிலைக்குத் தக ஏறவும் கூடும் ஏறியே நிற்கவும் மாட்டாது; இறங்கியே கிடக்கவும் ஆகாது. நிலைக்குத்தக நிமிரும்; தாழும், அதுபோல் அவரவர் உள்ளத் திற்குத் தகவே-ஊக்கத்திற்குத் தகவே உயர்வுகளும் உண்டா கின்றன. ஊக்க நிலையின் இறக்கத்திற்குத் தகவே தாழ்வுகளும் உண்டாகின்றன. அது, வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு என்பதாம் (595). இது நிலை வெள்ளம். இதுகாறும் பண்பு ஒப்பதே மாந்தர் ஒப்பு என்றும், மக்கள் உறுப்பும் தோற்றமும் கொண்டிருப்பார் அனைவரும் மக்கள் எனப்படார் என்றும், மக்கட் பண்பு இல்லாதவர் எத்தகைய கூர்மையானவர் எனினும் மரம் போன்றவரே என்றும், ஊக்கமே மக்கட்கு உயரிய செல்வம் என்றும், ஊக்கத்திற்குத் தகவே அவர்க்கு உயர்வு கிட்டும் என்றும் கண்டோம். ஒன்றுக்கு இரண்டு கல்வி அறிவில்லான் ஒருவன். ஆனால் செல்வன்; அவ னுக்கு ஒரு மகன்; அவனையும் கற்பதற்கு அனுப்பச் செல்வனுக்கு எண்ணமில்லை. ஓராசிரியர் அச் செல்வனை அடுத்து, அவன் மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகிறார். ஆசிரியர் தம் பிழைப்புக் கருதியே தன்மகனைப் பள்ளிக்கு அழைக்க வந்திருக்கிறார் என நினைத்தான். பிள்ளையும் படிக்க வேண்டாம் பிரம்படி படவும் வேண்டாம் சள்ளையாம் சுவடி தூக்கிச் சங்கடம் படவும் வேண்டாம் முள்ளெனும் ஆணி கொண்டு முரியினில் எழுத வேண்டாம் பிள்ளையென் றிருந்தால் போதும் பெற்றவள் களிக்க என்றான். ஆசிரியரோ கல்வியின் சிறப்பைப் பலவகையாலும் எடுத்துரைத்தார். ஆனாலும், கல்வியால், என்ன பொருள் கிடைக்கும்? செலவிட்டு வேறு படிக்க வேண்டுமாமே! என நினைத்தான். உம் கல்வியால் வண்டியோ, மணியோ, மாடோ! கிடைக்குமா? நீர் தருவது எழுத்துத்தானே! அவன் தலை யெழுத்தை அழித்து விடுவீரோ! அவன் படிப்புக்குச் செல வாகும் தொகையைக் கொண்டு ஒருமாடே பிடித்து விடலாமே என்றான். ஆசிரியர், நீ ஒரு மாடு பிடித்தால் போதும்; உன்னிடம் இரண்டு மாடுகள் அப்பொழுது இருக்கும் என்றார். அப்படி ஒரு வழியுண்டா? உண்டானால் சொல்லும் என ஆவலுடன் கேட்டான். நீ விலை தந்து வாங்கும் மாடு ஒன்று; விலை தராத நிலை யில், உன் வீட்டில் வளரும் கல்வியறிவில்லாத உன் மகன் ஒரு மாடு; ஆக இரண்டு மாடுகள் கிடைக்கும் அல்லவா என்றார் ஆசிரியர். இது கா. நமச்சிவாயர், கயவன் கல்வி அருமை அறிந்தது எனப் பாடிய செய்தி. அதில், கற்றறி வில்லா மாந்தர் கண்கெட்ட மாடே யாவர்; மற்றவர் மண்ணின் மீதே மடமையில் மாழ்கி நிற்பர்; உற்றமற் றவர்தாம் இந்த உலகுக்கோர் சுமையே ஆவர்; பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறந்த தாமே எனக் கல்லாமைக் குற்றத்தைக் கூறுவார். இது, விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (410) என்னும் குறள்வழிப் பொருளாகும். விடுதலை பெற்று ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிவிட்ட நிலையிலும், அரைநூற்று விழுக்காட்டு மக்கள் தாமும் கல்வி யறிவில்லா நிலையில் உள்ளநாடு நம்நாடு. அனைவருக்கும் கல்வி கற்றவர் அனைவரும் கற்பிப்பார் என்னும் வள்ளுவக் கல்வி, கடைப் பிடியாமை அதன்மூல அடிப்படை. கால நிலைக்குத் தகக் கல்வியை அனைவரும் பெறுதற்குத் தக்க வழிகளைக் கண்டு போற்றாமை அறிஞர்கள், கல்வி வல்லார், அரசு நடாத்துவார் ஆகிய மூவர் மேலும் உள்ள குறையாம். அரசின் வேலைக்கு விண்ணப்பம் செய்வார் எவர் எனினும் அவர் கல்லாத ஓரைவர்க்கேனும் கல்வியறிவு தந்த சான்று வேண்டும்; அது மெய்ப்பிக்கப் படவும் வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தால் கூட இக் கல்லாமைக் குறை தீர்ந்திருக்கும். குறைந்த அளவு, ஆசிரியப் பணியைத் தேடு வார்க்கேனும் முதற் கட்ட ஆணையாக மேற்கொள்ளப் பட்டிருப்பினும் ஓரளவு தீர்ந்திருக்கும். ஓராசிரியர் தாம் செய்ததோர் குற்றத்திற்குத் தண்டனை யாகச், சிறைப் பட்டிருந்தார். அவர்க்குத் தந்த தண்டனை நினைவு கொள்ளத் தக்கது. இவ்வளவு பேரைக் கல்வியறிவுடையவராகச் செய்துவிட்டால், உமக்கு விடுதலை என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது. சிறைக் குள்ளிருந்த கல்வியறில்லாரைத் தேடினார்; கற்பித்தார். சிறையின் போதும் தம் கல்வித் தொண்டு ஆற்ற அவர்க்கு வாய்த்தது. அது நாட்டுத் தொண்டும் ஆகிவிட்டது. இத் தண்டனை தந்தவர் நபிகள் நாயகம். வினையால் வினையாக்கிக் கொள்ளல் என்னும் வள்ளுவ விளக்கம் இதுதானே! இந் நாளில் உண்டாகியுள்ள பலப்பல குறைகளுக்கும் அடிப்படை, மெய்யான நல்ல வழிகாட்டி இல்லை என்பதும், வழிகாட்ட வல்லாரை அரசு கண்டு கொள்வது இல்லை என்பதுமேயாம். கேள்வி கல்வி அறிவில்லா மாந்தர், மாந்தர் அல்லர் எனக் கண்ட வள்ளுவர், ஓரளவே கற்றுக் கொண்டு அதனை மேலும் வளர்த்துக் கொள்ளாமலும், நல்லறிவுச் செய்திகளைக் கேட்டுப் பெருக்கிக் கொள்ளாமலும் இருப்பாரையும் மக்கட் கூட்டிலே சேர்த்துக் கொள்ள விரும்பினார் அல்லர். வாய்ச்சுவை வாய்க்கும் இடம் இது, காலம் இது எனத் தேடி உண்பவர். அதனினும் மேம்பட்டதும் ஒருகால் சுவைத்தால் வாழ்நாளெல்லாம் பயன்படுவதும் ஆகிய செவிச்சுவையைத் தேடிக் கொள்ளாமை எத்தகு பிழையுடையது. இத்தகையவர் வாழ்வும் அறிவுடையோர் மதிக்கும் வாழ்வாகுமா? என்கிறார். செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (420) மக்கள் என்னாமல் மாக்கள் (விலங்குகள்) எனக் கால் சேர்த்தது நாலு கால்களையுடைய விலங்கு என்பதற்காகவா? மாடு, ஆடு என்பவை என்ன, புலி, கரடி என்பவை என்ன, அவை வாய்ச்சுவையாகிய உணவை மட்டும்தானே குறிக்கோளாகக் கொண்டு சுவைப்பவை! அவற்றைப் போல அச்சுவையே சுவை யாய் வாழ்வார் அத்தகையர் தாமே என்க. பதர் கற்பார்; நல்லவும் கேட்பார்; ஆயினும் பயனற்ற சொற் களைச் சொல்லிச் சொல்லியே திரிவார் உளர். அவர் காலக் கேடர்; பிறவிக்கேடர்! பயன்கேடர்; ஆதலால் நெற்பதர் போன்றவர். அவர்மட்டுமல்லர்; அவர் சொல்லைக் கேட்டும் நன்று என்று பாராட்டியும் திரிவாரும் அத்தகையரே. பயனில்சொல் பாராட்டு வாளை மகனெனல் மக்கட் பதடி எனல் (196) இனச் சார்பு நன்மகன் ஒருவன் நன்மகனாகவே இருக்க வேண்டும் என்றால், நன்மக்கள் தொடர்புடையவனாக இருத்தல் வேண்டும்! தீயமக்கள் தொடர்பு உண்டாகி விடுமானால் தன்னைக் காத்துக் கொள்ளும் உச்சமான உறுதி நிலை பெற்றிருந்தால் ஒழியத் தீமையில் இருந்து தப்பவே முடியாது. எறும்பு ஊறிக் கல்லும் தேயும் என்பது பழமொழி. அவ்வாறே பழகிப் பழகிப் தீய கூட்டினால் நல்லுள்ளமும் கெட்டுப் போகும். ஆதலால் தீயாரைக் காண்பதுவும் தீதே; தீயார் சொல் கேட்பதுவும் தீதே; தீயார் குணங்கள் உரைப்பது வும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீதே; என்னும் அறிவுரை உண்டாயிற்று. கொம்புளதற்கு ஐந்து முழம் விலகு; குதிரைக்கும் பத்து முழம் விலகு; கொடிய யானைக்கு ஆயிரம் முழம் விலகு; தீயோர்க்கோ கண்ணில் எட்டாத் தொலைவுக்கு விலகி விடு என்றும் கூறினர். மேலும் கூறுவாராய் ஈக்கு நஞ்சு தலையில்; பாம்புக்கு நஞ்சு பல்லில்; தேளுக்கு நஞ்சு கொடுக்கில்; ஆனால் தீயோருக்கோ நஞ்சு உடல் முழுவதும் என்றனர். அவ்வாறானால், தீயோரைத் திருத்தி நல்லோர் ஆக்குவார் எவர்? எல்லாரும் ஒதுங்கி விட்டால் தீயோர் முழுத் தீயோராகத் தாமே காலமெல்லாம் திரிவார். நோயுள்ளவர்களுக்குத் தானே மருத்துவர் உதவி வேண்டும் என வினாவலாம். அவரைத் திருத்துவார்க்கு வேண்டும் அடிப்படைத் தகுதி, எவரைத் திருத்த நினைக்கிறாரோ, அவர் நம்மை அவர் வழிக்குத் திருப்பி விட முடியாத உறுதிப்பாடு நமக்கு உண்டு என்பவர்தாம் அப்பணியில் ஈடுபடலாம். இயல்பாக அசைவும், ஆட்டமும் உடையார், இவ்வாறு எண்ணி அவரொடு சேர்ந்தால் கட்டாயம் அவர்க்குக் கூட்டாளியாகி விடுவார். தலைவரும் கூட ஆகிவிடுவார். அதனால். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்பது ஆகும் அறிவு என்றார் வள்ளுவர் (452). நீர்க்கு நிறம் இல்லை. மண்ணில் விழுந்த நீர்க்கு நிறம் உண்டாக்கி விடுகின்றது. எதனால்? அது விழுந்த நிலத்துக்கு உள்ள நிறத்தால்! நீர்க்குச் சுவை இல்லை. ஆனால் அது விழுந்த நிலத்தில் படிந்துள்ள சுவையைத் தன் சுவையாகக் கொண்டு விடுகின்றது! நீர் விண்ணில் இருந்து விழும்போது அழுக்கு அதற்கு இல்லை. ஆனால் மண்ணில் விழுந்தபின் அம்மண்ணில் உள்ள அழுக்கெல்லாம் நீருக்கும் உண்டாகி விடுகின்றது. இன்னான் சேர்ந்த இனத்தின் இயல்புக்குத் தக ஒருவர் உள்ளம் அமையும் என்பதை அறிய வேண்டுமா? ஒருவன் தனிப்பட்ட பழக்கத்தில் எப்படி இருக்கிறான் என்பதை அவன் அறியாமல் கண்காணிக்க வேண்டும். அவனே கூட்டத்தில் சேரும்போது எப்படி இருக்கிறான் என்பதையும் அவன் அறியாமல் கண் காணிக்க வேண்டும். அப்பொழுது உண்மை புலப்படும். மிக நல்லவனாகத் தனி நிலையில் இருப்பான் கூட ஒரு தீய கூட்டத்தில் இருக்கும் போது, அக்கூட்டத்தின் இயல்புக்கு ஏற்ப எப்படி மாறிப் போகிறான் என்பது வியப்பாக இருக்கும். அப்படியே மிகக் கெட்டவனாகத் தனி நிலையில் இருப்பான் கூட நல்லோர் கூட்டத்தில் இருக்கும் போது எத்தகு நல்லவனாக இருக்கிறான் என்பதை அறிய அதனினும் வியப்பாக இருக்கும். அதனால். மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் என்றார் வள்ளுவர். ஒவ்வொரு நல்லதும் கெட்டதும், மனத்து உண்டாகும் உணர்வைப் பொறுத்ததே. ஆக்கமும் கேடும் அவ்வாறு மனத்து உணர்வைப் பொறுத்ததே. எனினும், அம்மன உணர்வையும் சேர்ந்த இன உணர்வு வெற்றி கொள்வதும் காணக்கூடியதே. அந்நிலையில் சேர்ந்த இனத்தைப் பொறுத்து நல்லவன் அல்லவன் ஆதலும், அல்லவன் நல்லவன் ஆதலும் நடை முறைக்காட்சி. ஆதலால் இனத்தான் ஆம் இன்னான் எனப் படும் சொல் என்றார். இன்னான் - இன்ன தன்மையன். தகுதிக்குத் தக மக்கள் என்றால் அவர்க்குத் தக்க நிலை இது என ஒன்றை உலகம் எதிர்பார்க்கிறது. இவ்வெதிர் பார்த்தல் இடத்துக்குத் தக, காலத்துக்குத் தக வேறுபட இருக்கலாம். ஆனால், அடிப் படையில் பெருத்த வேறுபாடு இருப்பது இல்லை. குறையுள்ளவர்கள் கூட, தகுதியானவரைப் பழிப்பது உண்டு. உடனே உனக்கு என்னைக் குறை கூற என்ன தகுதி உண்டு? நீ குறை இல்லாதவனா? என்பது தகுதியாகாது. அவன் சொல்லிய குறையில் உண்மை உண்டா; இல்லையா? என்பதே எண்ணவேண்டிய செய்தி. குறை உண்மை என்றால், அதனைத் தவிர்க்கும் முயற்சியே தனக்குப் பெருமை சேர்ப்பது. அக்குறை பொய்மை உடைய தெனின், அதனை மேலே பட்ட தூசியெனத் தட்டி விட்டுப் போதல் முறைமை! குறையுடையவன் ஒருவன், இன்னொருவன் குறையை எடுத்துரைக்கிறானே என்றால், அவன் தன்மை காரணமாகவும் இருக்கலாம். குறை கூறப்பட்டவன் தன்மை காரணமாகவும் இருக்கலாம். ஏனெனில் குறைகூறப் படுபவனுக்கு உள்ள தகுதியை எண்ணிப் பார்க்கின்றான். இத்தகுதியுடையவன் இது செய்கிறானே! இவன் தகுதியொடு இது பொருந்துமா? என நினைக் கிறான். பொருந்தாதெனக் கண்ட அளவில் பழிக்கிறான். (470) ஆதலால் திருத்த எண்ணும் மனம் பழி சொன்னதற்காக வருந்த வேண்டுவது இல்லை. குறை நீக்க முயற்சியே குறிக் கொள்ள வேண்டுவதாகும். தலை தலையில் உள்ள முடி நம்மால் எவ்வளவு மதிக்கப் படுகிறது! அதற்கு எண்ணெய் என்ன, அழுக்குப் போக்கி என்ன, நரை நீக்கி என்ன! கண்ணாடி முன் நின்று மனங்கொள்ளுமாறு ஒழுங்கு படுத்திக் கொள்வதில் தான் பால் வேறுபாடு கூட இல்லையே. இருக்கும் முடி சிறுக்க; மழுக்கை பெருக்க ஆகும் நிலையில், சுருக்க முடியைக் கொண்டு பெருக்க இடத்தை மூட எடுத்துக் கொள்ளும் முயற்சி தான் என்ன! ஆனால் அம்முடி உதிர்ந்து விட்டால்? அதற்குச் செய்யும் மதிப்பென்ன? உடலில் படாமல் உடையில் படாமல் உதறிவிட்டுப் படுத்தும் இழிவு எத்தகையது? நாமே நொடிக்கு முன் போற்றிய முடி, அதன் நிலையில் தாழ்ந்த அளவில் அடுத்த நொடியே படும் இழிவுக்கு ஒத்த இழிவு ஒன்று உண்டா? உண்டு என்கிறார் வள்ளுவர். அது, தலையில் இழிந்த மயிரனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (964) என்பது. நன்மக்களாகத் திகழ வேண்டுவார்க்கு வேண்டும் நிலையில் தாழாமையை, இதனினும் வலியுறுத்துவதுதான் எப்படி? அதே பொழுதில் நிலையில் திரியாமல் உறுதியாக இருப் பானுக்கு ஓர் உயரிய உவமை கண்டார் வள்ளுவர். மலை ஆற்றலில் சிறந்த ஆற்றல் உடையது காற்று. கண்ணுக்குத் தெரியாத அக்காற்றின் வலிமையை என்ன சொல்வது? பத்துப் பேர் கூடி நாள் முழுவதும் வெட்டி வீழ்த்த வேண்டிய மரத்தை, வேரொடும் அடியோடும் நொடிப் பொழுதில் பெயர்த்து எறிந்து விட்டுக் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறதே! என்ன வியப்பு? மரத்தைப் பெயர்க்கும் ஆற்றல் வாய்ந்த அக்காற்றும் அசைக்க முடியாமல் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நிற்கிறதே மலை; அம்மலையின் ஆற்றல்தான் என்ன! அம்மலை போலும் அசையாத் திண்மையுடையவர்தாமே மாந்தர் வணங்கும் மாந்தத் தெய்வம் (124). நாணம் மாந்தர், நிலை தாழாமை வேண்டும் என்ற வள்ளுவர் மாந்தர்க்கே உரிய சிறப்பியல் தன்மை ஒன்றையும் வலியுறுத்து கிறார். உயிர்களுக்கெல்லாம் பொதுவான தன்மைகள் சில உள. அவை உணவு, உடற் போர்வை, தங்கிடம், கூடிமகிழல் இன்னவை. ஆனால் இவற்றோடு மாந்தர்க்கே சிறப்பான ஓரியல்பு நாணம் என்பது ஆகும். பெண்டிர்க்கு இயல்பாக அமைந்த நாணத்திலும் இந்த நாணம் வேறுபட்டது. அது பழிச் செயல்களைச் செய்தற்கு நாணும் நாணுதலாகும். களவு செய்தான் ஒருவன்; பிடிபட்டான்; ஊர்மன்றத்தின் இடையே நிறுத்தப்பட்டான்; தலை கவிழ்ந்து நின்ற அவன், தன் காலால் நிலத்தைக் கீறிக் கொண்டு இருந்தான் எனக் கலித் தொகை காட்டும். பழிக்கு அஞ்சி நாணுதல் மாந்தர்க்கே சிறப்பியல்! உரிமை இல்லா வீட்டின் உள் நுழைந்து உண்ட நாய், வீட்டுக்காரரால் காணப்பட்டு, வெருட்டப்பட்டாலும் பின்னர் அவரைக் காணும் போது அவர்க்கு நாணித் தலைகுனிதல் இல்லை! இன்னார் மகனா இது செய்தாய்?! எத்தகைய பெரு மக்கள் உன் பெற்றோர் என்னும் போது உண்டாகும் தலைக் கவிழ்வு, ஒரு மாட்டுக்கோ, ஒரு யானைக்கோ உண்டாவது இல்லை! ஏனெனில் அது நாணம் கொள்ளுதல் இல்லாப் பிறவி மட்டுமன்று. நாணம் அதனிடம் இருக்கும் எனவும், இருக்க வேண்டும் எனவும் எதிர்நோக்குதலும் இல்லாப் பிறவி! நானும் பிறவி பிறந்தவன் மாந்தன்! மாந்தனாகப் பிறந்தும், நாணத் தக்கவற்றுக்கு நாணான் எனின், மாந்தப் பிறவியன் ஆகான். பிறர் நாணத் தக்கதைத் தான் நாணான் என்றால், அவனைக் கண்டு அறமே நாணத் தக்கது உடைத்து என்றும், நாணம் இல்லாமல் ஒருவன் இயங்குவதற்கும், கயிற்றால் இயக்கப்படும் பாவை பொம்மை முதலியவை உயிருடையவை போல இயங்குவதற்கும் என்ன வேற்றுமை? எதுவும் இல்லை என்றும் வள்ளுவர் கூறுவார். (1018, 1020) நாணுடைமையே மாந்தர்க்குச் சிறப்புடைமை என்பதை, ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு (1012) என்கிறார். பழிக்கு நாணுதல் என்னும் ஒரு குணம் வாய்த்து விட்டால், அவன் உயர் மாந்தன் என்பதற்கு வேறென்ன வேண்டும்? மக்கள் என்றும் மாந்தர் என்றும் சுட்டிக்காட்டி வள்ளுவர் உரைத்த பண்பாட்டின் வழியில் கூறப்பட்ட தொகுப்பு ஈதாகும். மக்கள் நிலை வகை வேறாகலின் இப்பொது வகைச் செய்தியில் துறை பற்றிய சிறப்பியல் செய்திகள் இடம் பெற்றில. சிறப்பு நிலை வகையில் அவை இடம் பெறும். குறளாயத் தந்தை, குறள் நெறிக் காவலர், நம்மறை கண்ட நம்பி, வாழ்வாவது வள்ளுவ வாழ்வே என வாழ்ந்து காட்டி வானுறையும் தெய்வமாகி விட்ட இந் நினைவு வரிசைப் பெருமகனார் வேலா. அரசமாணிக்கனார் பெற்றோர்க்குப் பெருஞ்சிறப்பும், பிறவிக்குப் பெருஞ் சிறப்பும் தந்தவர் ஆவர். தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும். (114)  7. நல்ல இல்லறத்தராக அறநிலை தமிழர் கண்ட அறநிலை ஒன்றே; அதன், படி நிலைகள் தாம் இரண்டு. இல்லறத்தின் வளர்ச்சியே துறவு. அஃதொரு, தனி அறம் அன்று. பள்ளிக் கல்வி கற்றார், மேனிலைக் கல்வி பெறுதல் போன்ற தொடர் நிலையுடையது. இல்லறத்தின் முதிர் நிலை யாம் துறவு நிலை. துறவு துறவு உலகப் பெரும் பார்வையது; உயிர்களின் ஓர் ஒத்த உரிமைப் பார்வையது. அவற்றின் பயிலகம், இல்லறம் மக்களைப் பெறுதல்; மனையறங் காத்தல்; சிறந்தவை செய்தல்; அவற்றைப் பயிற்றல் என்பவை இல்லறம். அதனை மனையளவு கடந்து விரித்த தாக்கல் துறவு. இல்வாழ்வுக்கு அடிப்படைப் பண்பு, அன்பு. துறவு நிலைக்கு அடிப்படைப் பண்பு, அருள். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது பழமொழி. அன்புத் தாய் பெற்ற அருட் குழந்தை, அத்தாயின் நிலையினும் பெருகிப் பன்மடங்காக விரிந்து பளிச்சிடும். வள்ளுவங் கொண்ட இந்நல்ல நெறியின் மூலம்-தொல் காப்பியம் ஆகும். காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்பது அது (கற்பு. 51) இன்ப நுகர்வு நிறைந்து முதிர்வுற்ற நாளில், தாம் கொண்ட இல்லறக் காவற் கடமையை மக்களைத் தாங்கச் செய்து, தம்முதிய சுற்றத்தொடு தலைவன் தலைவி ஆகிய இருவரும், சிறந்த பொதுநலப் பணிகளில் ஈடுபடுதலே அம் முதுமைச் சிறப்பின் பயனாகும் என்பது இதன் பொருள். அன்புடைமை வள்ளுவர் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு என வரிசைப்படுத்தி அதன் மேல் கூறியது அன்புடைமையாகும். கணவன் மனைவி என்னும் நிலையில் தனித் தனியே வளர்ந்த அன்புகள் ஒன்றோடு ஒன்றாய் இணைந்தன. அவ் வன்புகள் பெற்றோர் என்னும் நிலையில் தம்மினும் தம் மக்கள் வாழ்வே வாழ்வென விரிந்து ஒருமை எய்தின. பாவநாசம் ஆற்றில் வீழ்ந்த மகவைக் காக்கத் தாம் விழுந்து அம்மகவின் வாழ்வொடு ஒன்றாகிவிட்ட ஈகர் வ. வெ. சுப்பிர மணியனார் நிலை, பெற்றோர்க்கமைந்த மக்கட் காதலை இனிது காட்டும். பூனையோ, நாயோ, பசுவோ தம் குட்டிகளைப் பிறி தொன்று நெருங்க விடுகிறதா? குஞ்சை நெருங்கும் பருந்தைக் கோழி என்ன பாடு படுத்து கிறது? மகப்பேறு என்பது, அன்பின் விரிவாக்க இயற்கைப் பேறு என்பதை விளக்குவன இவை. அன்பு நிற்கும் உடம்பே உயிர் நிற்கும் உடம்பு என்றும், அன்பிலா உடல் எலும்பாலும், தோலாலும் போர்த்தப்பட்ட பார்வைப் பொம்மை போலும் உடல் என்றும் கூறுவார் வள்ளுவர். அன்பின் தன்மை எல்லாம் தமக்கே என்பவர் அன்பில்லாதவர்; அன் புடையவரோ தம் பொருள்களால் அன்றித் தம் உடலாலும் பிறர்க்குரியர் என்று மேலும் கூறுவார். அன்பு என்பது போல் அருமைப் பண்பு உண்டா? நாலைந்து மக்களுக்குத் தாய்! அவளுக்குச் சிறுநீரகம் செயற் படவில்லை. மக்களை நோக்கி, வாழவேண்டிய கட்டாய முடையவள் அவ் வறிய தாய்! அவள் நிலை தில்லி மருத்துவ மனையில் இருந்து, ‘உதவுவார் உண்டோ? என ஓர் அறிக்கையாய் இதழ்களில் வருகின்றது. பம்பாய் மாநகரைச் சேர்ந்த ஒரு வறிய இளைஞன்! வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவ்வறிக்கை கண்டான். தில்லிக்குச் சென்றான். குருதிப் பொருத்தம் இருந்தது. தன் சிறு நீரகத்துள் ஒன்றை வழங்கினான். அவன் பெருந்தகை கண்ட மருத்துவ மனையர், அவனுக்கொரு தொகை வழங்க முன் வந்தனர். தான் எவ்வகை மாற்றுதவியையும் நோக்கி இதனை வழங்கவில்லை என்றும் வறிய அத்தாயின் வாழ்வு அவள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் பரிவே தேடிவரக் காரணம் என்றும் கூறி உதவி பெற மறுத்து விட்டான்! அன்புடையார் என்பும் உரியர் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? குருதிக் கொடை வழங்குதல், கண்பாவை வழங்குதல் என்பன வெல்லாம் இவ்வகை தாமே! என்பும் உரியர் என்றமையால் மற்றவற்றில் அவர் உரியராக இருத்தல் விளக்க வேண்டுவதில்லையாம். அன்பின் வெளிப்பாடு எத்தகையது? அதன் வெளிப்பாடு உள்ளங் கொள்ளை கொள்வது; வயப்படுத்தி விடுவது. அண்ணாவின் கண்டிப்பால் வயப்படாத இராமலிங்கத்தை, வள்ளலார் ஆக்கியது அண்ணியாரின் அன்புக் கண்ணீர்! அன்புடையார் முகம், மலர்ந்திருக்கும். மலர்ச்சியின்றி இறுகி இருக்கும் முகம், வன்பின் அடையாளம். பூத்த பூவெனக் கரவற்று மலர்ச்சியுடன் விளங்குவது அன்பின் இருக்கை! அம்மலர் இருக்கையில் இருந்து வெளிப்படுவது, இன்சொல் ஆகிய தேன்! தேனினிமை வேண்டாதவை எவை? வேண்டார் தாம் எவர்? அதுவே விருந்தோம்பல்! விருந்தோம்பல் விருந்தோம்பல் என்பது உலக நன்மக்கள் அனைவர் உள்ளகத்தும் பிறந்து, இன்றும் சிறக்கும் பண்பாடே! அதனைத் தனியொரு மண்ணோ, இனமோ தன்னுரிமை கொண்டாட முடியாப் பண்பு. அவரவர் நிலையால் விருந்தோம்பல் உல களவில் பரவியுள்ளமை காணக் கூடியதே ஏனெனின், விருந் தோம்பல், இனியவை கூறல், நன்றியறிதல் என்பன வெல்லாம் அன்புடைமை வழிவந்த தொடர் வரவுகள். உலகில் அன்புடைமை உள்ளமட்டும், விருத்தோம்பல் இருந்தே தீரும்; இனியவை கூறல் வெளிப்பட்டே தீரும்; நன்றியறிதல் இருந்தே தீரும். அன்புடைமை என்பது ஒரு, முக்காலி எனின், இம்முன்றும் அதன் முக்கால்கள். இம் முக்கால்களுள் எது முதன்மைக்கால்! முக்காலுள் எக்காலுக்கும் முதன்மை இல்லை. எல்லாமும் முதன்மையானவையே; ஒன்றினில் ஒன்று முதன்மையானவையே. அவ்வாறே விருந் தோம்பல், இனியவை கூறல், நன்றியறிதல் என்பனவும், ஒன்றனில் ஒன்று சிறந்தனவே. ஏனெனில், இம்மூன்றனுள் ஒன்று குறை யினும் குறைவே ஆதலால். விருந்தோம்பல் பண்பு உலகளாவிய சிறப்புப் பெறு வானேன்? விருந்து என்பது உறவினர்க்குச் செய்யப்படுவது அன்று. தொடர்பு இல்லாத, புதியவர்க்கும் பெரியவர்க்கும் துறவியர்க்கும் செய்யப்படுவதாகும். அவ்விருந்தால், நன் மக்கள் - பெருமக்கள் - சார்பு உண்டாகும். அவர்கள் நல்லுரையும் தொடர்பின் நிறைவும் வழிகாட்டுதலும், குடிவழிக்கு நீளப் பயன்படும். பெரியவர்கள் வரும்போது, வீட்டுப் பெரியவர்களுடன் குழந்தைகளுக்கும் அறிமுகமாகித் தொண்டு செய்யவும், நல் லொழுக்கமும் நல்லறிவும் பெற்றுக் கொள்ளவும் ஆகிய சூழல், தேடிப் போகாமல் தானே தேடி வந்து நிற்கும். குடும்பங்களில் உண்டாகியிருந்த சிறிய மனத் தாங்கல்கள், பெரியவர்களைப் பேணும் வாய்ப்பு நேரும் போது அகன்று ஒழியும். குடும்பத்தோடு வாழ்வார் பிறருக்காக வாழும் பெரு மக்களைப் பேணுமுகத்தால், அவர்கள் செய்யுள் பொது நலப் பணிக்குத் துணையாம் பேற்றைப் பெற்றுப் பிறவிப் பயனையும் இல்வாழ்க்கைப் பயனையும் பெற்றவர் ஆகின்றனர். உழையாச் சோம்பர்க்கும், வெட்டியாகத் திரிவார்க்கும் தரும் உணவு விருந்தாகாது. போலித் துறவியர்க்கும் ஏமாற்றும் வஞ்சக வேடத்தவர்க்கும் புண்ணியம் கிடைக்கும் என்னும் பொய்ம் மயக்கத்தால் தரும் உணவும் விருந்தாகாது. அவை பசிக்கு உணவு என்னும் அளவிலே பயன் பெற்றவர் நலமாக மட்டுமே-அமையும். படைத்தவர் நலமாக அமையும் விருந்து, வள்ளுவர் கூறிய துறவியர், தொண்டர், பேரறிவாளர், முனிவர் முதலியோர்க்குச் செய்யும் விருந்தேயாம். விருந்தோம்புதலால் உண்டாகும் பயன் இவ்வளவு என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. விருந்தாக வந்தவரின் தகுதி அளவே விருந்தால் பெறும் பயன் அளவுமாகும் என்கிறது வள்ளுவம். அது, இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் (87) என்பது. விருந்தோம்புதலே ஒரு வேள்வியாகும். வேள்வி என்பது விரும்பிச் செய்வது. நெய்யும் எண்ணெயும் எரிநெருப்பில் விட்டு, எரியோம்பும் வேள்வி செய்வதிலும், நல்லோர் பசியாம் எரி தணிக்கும் வேள்வியே இணையற்ற வேள்வி என்கிறார் வள்ளுவர். இதனினும் விளக்கமாக அவி சொரிந்து ஆயிரம் வேள்வி செய்யும் செயலையும் கண்டித்துக் கூறும் இடமும் வள்ளுவத்தில் உண்டு (259). மிக மென்மையான அனிச்சப் பூவும் முகர்ந்து பார்த்த அளவில்தான் வாடும். ஆனால், விருந்தினரோ முகம் மாறிப் பார்த்த அளவாலேயே வாடிப்போவர் என அவர்தம் மென்மையையும் வரவேற்பார்க்கு இருக்க வேண்டிய தன்மையையும் குறிப்பிடுவார் வள்ளுவர். இதனால் விருந்தோம்பல், ஒருவர் பண்பாட்டை வளர்க்கும் தன்மையது என்பது விளக்கமாகின்ற தன்றோ! இனியவை கூறல் படைக்கும் பொருட் சுவையினும், காட்டும் பெருங் குணத் திலும் விருந்தோம்பலில் முன்னிலை இடம் பெறக் கூடியது இன்சொல்லேயாம். அதனால், அகம் மலர்ந்து கொடுக்கும் கொடையினும், முகம் மலர்ந்து இனிய சொற்களைச் சொல்வதே சிறப்புடையது என்றார் வள்ளுவர் (92). பிறர்க்கு இனிய சொற்களையே சொல்பவர்கள் இனிய சொற்களையே பிறர் சொல்லத் தாமும் பெறுவார்கள். அவர் களைத் துன்புறுத்தும் சொற்களை எவரும் கூறார். அவர், பசித்துக் கிடக்கும் நிலைக்குப் பொருள் முட்டுப் பாட்டுக்கு ஆட்பட்டாலும், அவ்வாறு பசித்துக் கிடக்க அயலார் பாரார்! இன்சொல் சொல்லுவார் அடையும் பயன்களை மெய்யாகவே அறிவார், ஒரு நாளும் வன்சொல் வழங்கார்! அன்பு, விருந்தைத் தந்தால், விருந்து இன்சொல்லைத் தன்னொடு சேர்த்துக் கொண்டு, வந்து சேர்கிறது; பின் செய்ந் நன்றியறிதலுடன் உலாக் கொள்கிறது. ஒருமை மும்மையாகி, மும்மை ஒருமையாகும் சீர் இது. நன்றி; செய்ந்நன்றி நன்றியறிதல் வேறு; செய்ந்நன்றி அறிதல் வேறு; நன்றி யறிதல் ஒழுக்கம் பற்றியது; செயந்நன்றி அறிதல் உதவி பற்றியது. நன்றியறிதல் பொதுநலம் கருதியது. பொய்யான், திருடான், ஏமாற்றான், ஒழுக்கந் தவறான் என, ஒருவனின் நற்பண்பாட்டை மதிப்பது நன்றி அறிதல். தனக்கு ஊண், உடை, உறையுள், உற்றுழி என உதவி செய்தலை நினைந்து போற்றல் செய்ந்நன்றி அறிதல். அறிதல் நன்றி கூறல் என்றோ, செய்ந்நன்றி கூறல் என்றோ சொல்லாமல் நன்றியறிதல் என்ற வள்ளுவ நெஞ்சம் சொல்லளவில் ஒழியாமல் செயல்பாட்டை விரும்பும் நெஞ்சமாகும். செய்ந்நன்றி வகை செய்நன்றிகள்பல வகைய. அவை, முன்னர் எவ்வுதவியும் தமக்குச் செய்யார்க்குச் செய்யும் நன்றி, காலத்தால் செய்யும் நன்றி, பயன் கருதாமல் செய்யும் நன்றி, தாம் வறுமைப் பட்ட நிலையிலும் செய்யும் சிறிதளவு நன்றி என்றெல்லாம் பகுத்துக் காண்கிறார் வள்ளுவர். அதன்மேல், எந்நன்றியானால் தான் என்ன? அந்நன்றியைப் பெற்றார் தன்மையைப் பொறுத்தே அதன் அளவு அமைகின்றது என்கிறார். (101-105). ஒன்றில் ஐந்து எடிசனார் மயங்கிக் கீழே விழுந்தார். விழுந்த இடம் சாலையோரச் சாய்க்கடை. அவ்வழியே சென்ற ஒருவன் மேலே தூக்கி, முகத்தில் நீர் தெளித்தான். தேநீர் வாங்கிக் குடிக்கக் கொடுத்தான்; தெளிவுற்றார் எடிசனார். போய உயிர் மீண்டது. அப் புத்துயிர்க்குத் தந்தையாவான் எவன்? மயக்கம் போக்கிய மாண்பினன் அல்லனோ! எடிசனார் கண்டுபிடித்த பொருள்கள் இருநூற்றுக்கு மேற்பட்டன எனின், அவையெல்லாம் உலகு தழுவிய பயன் தருவன எனின், அவற்றைத் தரும்பேறாக எடிசனைத் தந்தானே அவனல்லனோ அவற்றுக்கு மூலவன்! மேலே சுட்டப்பட்ட ஐங்குறளுக்கும் பொருந்து சான்றன்றோ இவ்வொன்று. செய்யாமல் செய்த உதவி தானே இது. காலத்தால் செய்த உதவி தானே இது. பயன்கருதாமல் செய்த உதவி தானே இது. சிறிதளவால் செய்த உதவி தானே இது! செய்ந்நன்றியைப் பெற்றான் தகுதியால் அந்நன்றி எத் தகைய உயர்வுடையதாயிற்று! பிறர்க்காக அல்லது பொதுவுக்காக, நலம் செய்யும் பண்பை-தனக்கும் உள்ளீடாக அதில் நலம் இருத்தலால்-எவ்வொருவனும் பாராட்ட வேண்டியவனே. விரிவிலா அறிவால், அதனை உணர்ந்து போற்றான் எனினும், தனக்கு நேருக்கு நேரே செய்த உதவியையாவது மறவாது போற்ற வேண்டுமே! அவ்வாறு போற்றானும் உள்ளானே என்னும் வெதும்புதலால்தான், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்றார் (110) திருவள்ளுவர், நடுவு நிலை நடுவு நிலைக் கென்றே சமன்கோல் (தராசு) அறிவாளரால் காணப்பட்டதா? அல்லது, சமன்கோல் கொள்வார் அத் தன்மையைக் கொள்ளாவிடின் மக்கள் நிலை என்னாம் என்பது வெளிப்பட அறிவிக்கக் காணப்பட்டதா? சான்றோர் பண்புக்குச் சான்றாகச் சமன்கோலைக் காட்டினார் வள்ளுவர். உலக அறமே, அச் சமன்கோலைத் தன் அடையாளமாகக் கொண்ட அருமை போற்றத் தக்கதே! நுகக்கோலில் நடுவாணி உண்டு. அவ்வாணி, நடுவிடம் தவறிவிட்டால் பாரம் ஒரு பால் கூடும்; மறுபால் குறையும். நுகக்கோல் நடுமை மட்டுமன்று; பாரம் ஏற்றுதலிலும் நடுமை வேண்டும். ஒரு பால் சாயின், வண்டியே சாயும்! ஆட்சியும் முறையும் நடுமை தவறின் குடிகள் நிலை, காட்டு விலங்கு களுக்குஉட்பட்ட ஆட்டுமந்தை நிலைதான், ஆதலால் பண் பால் வளர வேண்டிய இல்வாழ்விலேயே நடுவு நிலை உண்டாகி விடவேண்டும் எனக் கண்டார் வள்ளுவர். மக்களைச் சமநிலைப் பார்வை பாராமல், ஒரு சார்புப் பார்வையைப் பெற்றோர் பார்த்தால், அவர் எத்தகு செல்வம் உடையவர் எனினும், அன்புடையவர் எனினும், மேற்பதவியர் எனினும், குடும்ப ஒற்றுமை காணார். குடும்பப் பிளவுக்கு வழிவகுத்தவரே ஆவர். சிறிதளவு காட்டும் ஓரச்சார்பும், குடும்ப அன்பைக் குலைத்துப் பாழ்படுத்தத் தவறாது. ஆதலாலேயே, வாழ்வியல் தெளிந்த வள்ளுவப் பெருமகனார், இல்வாழ்வான் போற்றிக் கொள்ளத்தக்க பண்புகளுள் ஒன்றாக நடுவு நிலையை வைத்தார். பெருங்குடும்பத்திற்குத் தலைவராகிய ஒருவரிடம் நான்கு பேர் தங்கள் பிணக்குகளைச் சொல்ல வருவர். நம்பிக்கை கொண்டும் வருவர். ஒரு முறை ஓரஞ்சாரச்சொல்லி விடின், ஊர்மதிப்பை ஒழிந்து விடுவார். அவரோடு அவ்வொழிவு நிற்குமா? அவர் வழியினர்க்கும் அப்பழி தொடரும். நடுவுநிலைச் செம்மை போற்றின், அப்புகழும் வழிமுறைக்குத் தொடரும். இல்வாழ்வானுக்குக்கூட முறையற்ற வழியில் பணம் வரும் சூழல் உண்டாகலாம். எவ்வழியால் பணம் வந்தால் என்ன? எனக்கு வேண்டுவது பணம்தானே என்றால், அச்சிறு தொகை உண்டாக்கிவிட்டுச் செல்லும் பெருங்கேட்டை, அளவிட முடியாது. அதனால், நன்மையே தரும் என்றால் கூட; நடுவு நிலை தவறி வரும் ஆக்கத்தை அப்பொழுதே ஒதுக்கிவிடு என்றார் வள்ளுவர் (113). உள்ளவற்றை எல்லாம் செலவிட்டு, உள்ள வருவாய்த் தொழிலையும் விட்டு, வறுமை நெருப்புக்கு ஊடே நின்ற போதும், கப்பல் விடாதீர் எனக் கைக்கூலியாகத் தந்த ஓரிலக்கத்தையும், காறி உமிழ்ந்து வீசி எறிந்தார் வ. உ. சிதம்பரனார். அந்நடுவு நிலை வரலாற்றுலக வாழ்வாகி விட்டதன்றோ! குடித்துக் கெட்டான்! அடித்துக் கெட்டான்; ஆடிக் கெட்டான்; கூடிக் கெட்டான் என்றால், பழித்துப் பேசும் உலகம்; நடுவு நிலை போற்றும் நல்ல நெஞ்சத்தான் ஒருவன், வறுமையுற்றான் என்றால் அவன் பண்பு நலம் பதின்மடங்கு பாராட்டப் படுமேயன்றிப் பழிக்கு இடமாகவே ஆகாது. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (117) நடுநிலை விரிவு அன்பு போற்றுவானிடத்து அமையும் அருமைக் குணங்கள் மூன்று என்பதுபோலவே, நடுவு நிலைமையுடையானிடத்து அமையும் அருமைப் பண்புகள் அதனினும் மிகுதியாம். நடுவு நிலையாளன் அடக்கமாக இருப்பான்; ஒழுக்கம் போற்றுவான்; ஆதலால், பிறர்மனை நயவான்; பொறுமையும், பொறாமை இன்மையும், அயற்பொருள் விரும்பாமையும், புறங்கூறாமையும், பயனில சொல்லாமையும், தீவினைக்கு அஞ்சலும் ஆகிய எல்லாம் கொண்ட ஒப்புரவாளனாகத் திகழ்வான். நடுவு நிலை யின் நிறைவு ஒப்புரவாகி ஓங்கும். (அதிகாரங்கள் 12-22). இல்வாழ்வான் உடைமை வள்ளுவர் கூறும் உடைமைகள் பத்தனுள் அடக்க முடைமை ஒன்று. அன்புடைமை என்பதற்குப் பின்னே வரும் உடைமை, அடக்கமுடைமையே. இதன் தொடர்பினவே ஒழுக்கமுடைமை, பொறையுடைமை எனப்படும் இல்வாழ்க்கை உடைமைகள். உடைமை உடைமை என்பது என்ன? மதிநலம் குன்றாமல் இருப்பான், தன்மானம் காப்பதற்காகத் தன் உடையை எப்படி நெகிழ விடாமல் காக்கின்றானோ அப்படிக் காப்பதே உடைமை. காக்க பொருளா அடக்கத்தை என்பது வள்ளுவம். பொருளை அப்படித்தானே காக்கிறோம். அப்பொருளுக்குத் தானே உடைமை என்னும் பொருளும் வந்தது. அவற்றினும் மேலாம் உடைமைகள் இவ்வுடைமைகள் என்பாராய், அன் புடைமை முதலிய பண்புகளுக்கு உடைமை கூட்டினார் வள்ளுவர். அடக்கமுடைமை அடக்கத்தைக் காட்சிப்பொருள் ஒன்றால் காட்டினார் வள்ளுவர். உறுப்படக்கி என்பது அதற்கமைந்த பொருத்தமான பெயர். அகத்து உறுப்புகளைச் சுருக்கிக் கொள்ளும் அதற்கு அகமை - ஆமை என்பது பெயர். காலும் தலையும் வெளிப்பட விரித்து நீந்தும் நிலை யென்ன! ஒரு சிறு நிழலாடிய அளவிலும் தன் கால்கள் நான்கையும் தலையையும் உள்ளே சுருக்கிக்கொண்டு வட்டக்கல்லென-மூடிச்சட்டியெனக் காட்சி தரும் அமைப்பு என்ன! ஆயிரங்காலி, தொட்டாற்சுருங்கி, நத்தை, சுருட்டைப் பூச்சி, கூம்பும் மலர், எனப்பல உவமை கூறத் தக்கன எனினும், அடக்கத்திற்கு ஆமை போலும் ஒன்று சொல்லுதல் அரிதேயாம். ஐந்துறுப்புகளையும் அடக்குதற்கு, அதுவும் ஐந்துறுப்புகளை அடக்கிக் கொள்ளும் சான்று ஆகிவிடுகின்றதே. அதனை, ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (126) என்றார் வள்ளுவர். ஓர் ஓட்டுள் தன் ஐந்துறுப்புகளையும் அடக்கும் ஆமையைப் போல, ஒருவர் தம் ஐம்பொறிகளையும் அடக்கும் திறம் பெற் றால் அஃது எக்காலத்திற்கும் பாதுகாப்பாகும் என்கிறார். ஐந்தும் காக்க வேண்டும். அவற்றுள்ளும் தவறாமல் காக்க வேண்டியது நாவே. அதனைக் காவாமல் இருந்தால் துன்பத்தை அடையாமல் தீரவே தீராது. கண்! உள்வாங்கும் பொறி; அது தவறும்போது வேண்டாத காட்சியை உள்வாங்கிக் கேடு செய்யும். ஆனால் அதனை உடனே வெளிப்படாமல் காக்கவும், வெளிப்படினும் வேறு சொல்லி மறைக்கவும் கூடும். காதும் - மூக்கும் - மெய்யும், கண் போலவே உள்வாங்கும் பொறிகளே. அத்தீமையும் உள்வாங்கிக் கொள்ளப்படுவனவே. ஆனால் நாவு அத்தகைத்தா? நாக்கு வெளித் தள்ளும் பொறி. அது சொல்லும் சொல், பல்லக்கும் ஏற்றும்; பல்லை உடைக்கவும் ஏவும். பன்னீர் தெளிக்கவும் செய்யும். செந்நீர் வடியச் செய்யவும் தூண்டும். மதிக்கவும் மிதிக்கவுமாம் இரண்டையும் தன்னில் கொண்டிருக்கும். அதனைச் செவ்வையாகக் காத்தலே சிறந்த அடக்கத்துள் அடக்கம் எனப் பிரித்துக் கூறினார் வள்ளுவர். யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்பது அது (127). ஏன் அதனைக் காக்க வேண்டும்? வள்ளுவரே கூறினார். ஒருவன் சொல்லும் பல்லாயிரம் சொற்களிலும் ஒரே ஒரு சொல் தீயதாக இருந்தாலும், மற்றை நற்சொற்கள் அனைத்தையும், அவன் அதுகாறும் செய்த நற்செயல்கள் அனைத்தையும், அவன் கொண்ட நல்லொழுக்கம் அனைத்தையும் ஒரே நொடியில் கெடுத்து விடும் என்றார். இதனினும் நாவடக்கத்தை எவ்வாறு வலியுறுத்துவது? ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். (128) மனைவியிடத்தும், மக்களிடத்தும் தன் பெற்றோடரித்தும் அடக்கம் பேணி, நாவடக்கம் போற்றி வாழ்வான் உற்றார் உறவிடத்தும் சுற்றம் சூழலிடத்தும் மற்றை அயலிடத்தும் அவற்றைப் போற்றிக் கொள்வான். ஆதலால் இல்லறத்தான் அடக்கம் போற்றல் ஒழுக்கமாகும். அடக்கச் சிறப்புக்கு ஒரு சான்று; சரக்குந்தில் (லாரி) எத்தனை பொதி பாரம்? அப்பாரத்தைத் தாங்குவது எது அடக்கி வைக்கப்பட்ட காற்றுத்தானே! அக்காற்று வெளி யேற்றி விட்டால், பாரம் தாங்கி ஓடல் என்னாம்? ஒழுக்கம் அடக்கத்தை இடமாகக் கொண்டு வளர்வது வளமாக விளங்குவது-ஒழுக்கம். ஒழுக்கம் என்பது என்ன? வானில் இருந்து ஒழுகும் நீர் ஒழுக்கே ஒழுக்கு எனவும், ஒழுக்கம் எனவும் பெயர் பெற்றது பின்னர் அவ்வொழுக்குப் போல, மாசற்று ஒழுகும் ஒழுக்கம், அல்லது நடத்தை, ஒழுக்கம் எனப்பட்டது. இவ்விரு பொருளும் காண்பார் காணுமாறே வள்ளுவர். வானின் றமையாது ஒழுக்கு என்றார் (20). நீர் என்பதன் வழி வந்ததே நீர்மை என்னும் தன்மை. நீர் நிலத்தை ஊடறுத்துச் செல்லுதலால் பெயர் பெற்ற ஆறு, வழி, என்பவை நீர்வழிக்கும், நீர்மை வழிக்கும் பொருந்தியமை யால்தான், நல்லாறு நல்வழி, ஒழுக்காறு இழுக்காறு, போகாறு ஆகாறு முதலாகப் பல ஆட்சிகள் எழுந்தன. ஆகலின், ஒழுக்கம் மனத் தூய்மையில் இருந்து உண்டாகும் நடத்தையாம். குடிப்பெருமை ஒழுக்கத்தைச் சார்ந்தது எனவும், ஒழுக்கமே உயர்வு எனவும், கல்வி மேம்பாட்டினும் ஒழுக்க மேம்பாடே போற்றத் தக்கது எனவும், நன்மைக்கும் தீமைக்கும் மூலங்கள் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பனவே எனவும் தெளிவாக்கினார் வள்ளுவர். ஒழுக்கத்தின் நிறைவில், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்றார் (140). ஒழுக்கம் இது என்பதற்கு அளவை எது? ஒழுக்கம் என்பதற்குரிய அளவை உயர்ந்தோர் நடையும், அவர்கள் இயற்றிய நூல்களும் என்கிறார் திருவள்ளுவர். ஒழுகுவதைப் பின்பற்றி ஒழுகி வளர்ந்ததுதானே உலகம்! ஆதலால் ஒழுக்கமுடையவரைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம் என வரம்பு காட்டினார். ஒழுக்கம் இருபால் பட்டவை. அவை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்பன. அகவொழுக்கம் பண்பாடாகத் திகழும். புறவொழுக்கம் நாகரிகமாக விளங்கும். இரண்டும் ஒன்றாக நாகரிகப் பெயர் பெறும் நிலையும் உண்டு; பண்பாட்டுப் பெயர் பெறும் நிலையும் உண்டு. ஆன்றோர் என்பதும் சான்றோர் என்பதும் வேறு வேறு பொருள்வழி வந்தவை. ஆனால், ஒரு வழிப்பட்டவை போல இந்நாளில் வழங்கப்பட்டு விட வில்லையா, அதுபோல்! நம் ஊரில் ஒருவர் நம்மைக் காணவரும்போது நாக்கைத் துருத்திக் காட்டினால் என்ன நினைப்பார்? என்ன நினைப்பார் என்ன, ‘என்ன செய்வார்? என்றே கேட்க வேண்டும். ஆனால், திபேத்தில் நாக்கைக் காட்டி நீட்டுதல் மதிப்பு மிக்க வரவேற்பு என்பர். நாம் வெற்றிலை வைத்தால் பகை மறந்து நட்புக் கொள்வோம் என்றோ, மங்கல விழாவுக்கு வரவேண்டும் என்றோ, உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன் என்றோ கொள்ளுதல் இயற்கை. ஆனால், வெற்றிலை வைத்தால் சண்டைக்கு அழைப்பதாகப் பொருளாம் சீக்கியரிடத்தே. மங்கல அணியைக் களைவது மட்டுமின்றி எவ்வணியும் களைந்து விடல் கைம்மையர்க்கு இந்நாடு வழங்கும் பரிசு. இன்னும் கொடுமைகள் பல உண்டு. ஆனால், குசராத்தில் கைம்மையர் தங்க வளையல் அணிவதும், மணப் பெண் கண்ணாடி வளையல் அணிவதும் வழக்கமாம்! நம் முந்தையர் ஒருவரை ஒருவர் கும்பிட்ட முறை என்ன? இன்று நடைமுறையில் எத்தனை வகைக் கலப்புகள் நம் வணக்கத் தில்! இப் புறஒழுக்கம் காலந்தொறும் மாறலாம். இடந்தொறும் மாறலாம். இனந்தொறும் மாறலாம். நிலைதொறும் மாறலாம். இவை புறத்தே அமையும் நடைகள். அகநடை மாறாதது; மாறக் கூடாதது. அவற்றில் மாசுறுதலும் ஆகாது. ஆதலால், அக வொழுக்கம் பற்றியே வள்ளுவம் பேசியமையால் என்றும் வழிகாட்டியாம் பெருமைக்கு உரியது ஆகின்றது. பிறன்மனை நயவாமை அறத்தால் நிகழும் இல்வாழ்க்கை, மற்றோர் குடும்பமும் அறத்தால் வாழ்க்கை நடத்தவே விரும்பும்; துணை செய்யும், ஆதலால், அத்தகு வாழ்வுடையவன் பிறனுக்கு உரிமை பூண்ட வளை விரும்பமாட்டான். அதனால், அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன் என்றார் (147). உலகில் அறத்தில் தலைப்பட்டார் உளர்; அவ்வரிசையில் கீழே, கீழே இறங்கிக் கடைப்பட்டார் ஒருவர் இருப்பின், அவரினும் கடைப்பட்டார், பிறன் வாயிற் கடைப் பட்டாரே எனப் பழிக்கிறார் வள்ளுவர் (142). பிறன்மனை விரும்பித் திரிவார்க்கு உள்ளந் தொடும் வேண்டுகை ஒன்றை வைக்கிறார் வள்ளுவர். அது, அறத்துக்கும் கட்டுப்படாமல் அறமல்லாதவற்றை ஒருவன் செய்தாலும், பிறனுக்குக் கட்டுப்பட்டாள் ஒருத்தியை விரும்பாமை நல்லது என்பதாம் (150). இல்வாழ்வை அறமாகக் கொண்டவன், பிறன்மனைவியை நாடுதல் ஆகாது என்ற வள்ளுவர், அம்மனையாள் பிறள் ஒருத்திக்கு உரியவனை நாடுதல் ஆகாது என்று கூறினார் அல்லரே எனின், ஆடவர் போலப் பெண்டிரிடம் இச்சிறுமை பெருவரவு இல்லை என்பதும், அப்படி இருப்பாரும் ஆடவரால் தீயவழிக்கு ஆட்பட்டுக் கெட்டதன் விளைவினரே என்பதும் ஆழமாக நினைவார் அறிவர். விதிவிலக்குகளை விதியாகக் கொள்ளுதல் விழுப்பம் ஆகாது என விடுக்க. பொறையுடைமை ஒழுக்கத்தின் எதிரிடையாம் இழுக்கமாகிய பிறனில் விழையாமை கூறிய வள்ளுவர், ஒழுக்கமுடைமையால் அமையும் பொறுமையைப் பொறையுடைமை எனக் கூறினார். பொறை-பொறுத்தல்; பொறுத்தல், தாங்கிக் கொள்ளுதல். இல்வாழ்வுத் தொடக்கம் கொண்டிருந்த சுமையினும் வரவரச் சுமை கூடத்தானே செய்யும். பெற்றோரைப் பேணல் ஒருபால்; பிள்ளைகளைப் பேணல் ஒருபால்; வருவாய்க்குரிய கடமைகளை ஆற்றல் ஒருபால்; மாந்தன் என்ற அளவில் பொதுப் பொறுப்பு களும் ஒருபால்; இவ்வளவு பாரங்களும் ஒரே பொழுதில் ஒன்றும் பலவுமாய் அழுத்தும் நிலையில் பொறுமையுடையவராய் இருத்தல் அருமையாம். ஆனால் அப்பொறுமை போற்றாக்கால் இல்வாழ்வு இல்லறம் ஆகாதாம். அதற்காகவே உடன்பாட்டில் பொறையுடைமையும், எதிர்மறையில் அழுக்காறாமையும், அப்பொறாமை வழிப்பட்ட வெஃகாமையையும் வரிசைப் படுத்தினார். பொன்னை எப்படிப் போற்றி வைக்கிறோம்; அப்படிப் போற்றி வைக்க வேண்டிய பண்பு பொறுமை. (155) தன்னைத் தோண்டுபவரையும் தாங்கும் தன்மையது மண், அதுபோல் தன்னை இகழ்வாரையும் பொறுத்தல் வேண்டும். (151) தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு அவரைத் தண்டித் தோம் என்னும் அந்தப் பொழுது மட்டுமே இன்பம்; ஆனால் பொறுத்துக் கொண்டவர்க்கோ வாழும் காலமெல்லாம் புகழ் (156). - எனப் பொறுமைச் சிறப்பைக் கூறுகிறார் வள்ளுவர். இல்லறப் பேறாகிய விருந்தோம்பலுக்குப் பொறுமையை ஒப்பிட்டும் கூறுகிறார். இல்வாழ்வுடையானுக்கு வறுமையினும் வறுமையாவது விருந்து பேண முடியாத நிலை. அதுபோல், ஒருவனுக்கு வலிமை யின் வலிமையாவது, அறிவிலார் செய்யும் தவற்றைப் பொறுத் தல் என்கிறார் (153) பொறுமை மிக்கார் துறவியரை ஒப்பானவர் என வள்ளுவர் கருதுகிறார். அதனால், வரம்பு கடந்து சொல்வாரின் கொடுஞ் சொற்களைப் பொறுத்துத் கொள்பவர், முற்றுந் துறந்த துறவியரினும் தூய துறவியர் என்கிறார். (159) மேலும் தாம் கொண்ட கொள்கையை நிறைவேற்றுவ தற்காகப் பெரியோர் உண்ணா நோன்பு கொள்வர். அப் பெரியவரும் பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்க்குப் பிற்பட்டவரே என்கிறார். (160) இல்லறத்தார் துறவு நிலைக்கு வளர்ந்து செல்லுதலை இப்பொறையுடைமையிலே குறிப்பது நோக்கத் தக்கது. அது துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற் பவர் என்பது (159). அழுக்காறாமை நல்லாறு, ஒழுக்காறு இழுக்காறு, என வழங்கும் வள்ளுவர் அழுக்காறு எனவும் வழங்குகிறார். ஆறு வழி; அழுக்குவழி, அழுக்காறாமை-அழுக்கு வழி, அல்லது மாசு வழியில் செல்லா திருத்தல். கடல் நீரில் குளித்தாரும் அதன் உப்புப் போக நன்னீர் ஆடல் வழக்கம். இவரோ அழுக்காற்றிலே வீழ்பவர் என்னின் எத்தகு அருவெறுப்பானவர்? பொறுமையின் எதிரியாகிய பொறாமையை அழுக்காறு என்கிறார் வள்ளுவர். அதன் இழிமை அத்தகையது. ஒருவன் நன்முயற்சியாளன்; நற்பண்பன்; பல்லோர் பாராட்டுக்குரிய நல்ல அறிஞன்; அவனைச் சோம்பனும் பண்பிலியும், அறிவிலியும் ஆகிய ஒருவன் பொறாமையால் பார்க்கிறான். இவன் பொறாமைப் பார்வை இவனுக்குத் தீமை செய்யுமே அல்லாமல், அவனுக்கு என்ன செய்துவிடும்? பொறாமையாளன் பிறர் நலம் கண்டு புழுங்குவான்; வெம்புவான்; வெதும்புவான்; உறங்கான்; அமைதி கொள்ளான்; இவ்வளவும் கொண்டான் நோய்க்கு ஆட்படாமல் இருப்பனோ? தான் மேற்கொண்ட செயலில் ஈடுபடுவனோ? மாட்டான்! அதனால், பொறாமை உடையவனைக் கெடுக்கப் பகைவர் எவரும் வேண்டியதில்லை; அவன் கொண்ட பொறாமையே அவனைக் கெடுக்கப் போதுமானது என்றார் வள்ளுவர். அழுக்காறு உடையார்க்கு அதுசாலும், ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது (165) பொறாமைப் படுகிறானே ஒருவன், அவன், பொறாமைப் பட்டார் எவரும் நலம் பெற்றதைக் கண்டதுண்டா? பொறாமைப் படாதவர் எவரும் தீமையுற்றதையேனும் கண்டது உண்டா? அவ்வாறாகவும் பொறாமையைக் கொள்கிறானே, இவன் என்ன கண்டான்? என இரக்கம் கொள்கிறார். பொறாமையாளன் செல்வமுள்ளவனாகவும் பொறாமை இல்லாதவன் செல்வமில்லாதவனாகவும் சில இடங்களில் அரிதாகக் காணப்படுதல் உண்டே என்பாரைப் பார்த்து எண்ணிப் பாருங்கள் உண்மை புலப்படும் என்கிறார். ஏனெனில் பொறாமையாளனுக்கு எவ்வளவு வந்தாலும் போதாது என்றே இருப்பான். பொறுமையாளன் தன்னிடம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், மனநிறைவாகவே இருப் பான். அதனால், பொறாமைக்காரன் உண்மையாகச் செல்வனும் அல்லன்; பொறுமையாளன் உண்மையாக வறியவனும் அல்லன் என்பதாம். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் வெஃகாமை வெஃகுதல் என்பது பிறர் பொருளைத் தன்னதாக்க விரும்பு தல். வெஃகாமை என்பது அவ்வாறு ஆக்க விரும்பாமை. பொறாமையின் பின் பிறப்பு வெஃகுதல் ஆகும். அயரா முயற்சியாளன் நேரிய வழியால் பொருள் தேடு கிறான். அவனைத் தன் வழிகாட்டியாகக் கொண்டு பாடுபட்டு முன்னுக்கு வருதல் பாராட்டுக்கு உரியதாகும். அவன் முன் னேற்றம் கண்டு பொறாமையாய், அவன் தேடிய பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புபவன் மக்கட் பண்பு உடையவன் ஆவனா? என்னிடம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? இருப்பவனிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள நினைப்பதா அதற்கு வழி? தன்னடக்கம் உடைய எவனும், தன்னறிவு உடைய எவனும் செய்யும் செயலா இது? இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (174) அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் (175) இல்லான்தான் இல்லை என்று பிறன் தேடியதைக் கவர விரும்புகின்றானா? இருப்பவனும் அதனைச் செய்வது இல்லையா? உள்ள செல்வமும் போகாமல் இருக்க வேண்டு மானால் பிறன் பொருளைக் கவர விருப்பம் கொள்ளாதிருத்தல் வேண்டும். அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (178) அஃகாமை-குறையாமை புறங்கூறாமை புறங்கூறுதல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் கூறுதல்; நல்லது கூறுதல் எவ்வளவு பெருமை சேர்க்குமோ அவ்வளவுக்கு எதி ரிடையான பழி சேர்பபது இப்புறங் கூறுதல். கோள் சொல்லுதல் என்பது இதுவே. ஓரிடத்து உள்ளதைக் கொண்டுபோய் ஓரிடத்துச் சொல்லுதல் கோள் ஆகும். புறங் கூறுதல் கோழையின் செயல். நேரில் சொல்லும் நேர்மையோ துணிவோ இருப்பவன் புறங்கூறான். அதனால் அறங்கூறாதவனாக இருந்தாலும் இருந்து போகட்டும்; அல்லவை செய்வானாக இருந்தாலும் இருந்து போகட்டும்; புறங் கூறாதவனாகவேனும் இருப்பது நல்லது என்றார் திரு வள்ளுவர். (181) பிறனைப் பழித்துப் புறங் கூறுகிறானே; இவன் என்ன பழியற்றவனா? இவன் புறங் கூறுதலே தீய பழிதானே! இவன் பழிகளைப் பிறர் கூற மாட்டார்கள் என எண்ணிக் கொண் டானோ இவன்? இவன் செய்யும் பெரிய பழிகளைத் தேடித் தேடிப் பிறர் சொல்வார் என்பதை அறிந்து கொள்வானாக என்றும் கூறினார் (186). மிகமிக நெருங்கியவர், அன்பர், நண்பர், உதவி புரிந் தோர்-என்று கூட எண்ணிப் பாராமல் புறங் கூறித் திரிகிறானே இவன், இவனுக்கு மாறானவர்களைப் பற்றி எப்படியெல்லாம் சொல்லமாட்டான்! என வியப்படைகிறார் திருவள்ளுவர். அது, துன்னியார் குற்றமும் தூற்றமும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு என்பது (188). பயனில சொல்லாமை தன் கடமையை ஒழுங்காகச் செய்வதற்கே பொழுது இருப்பதில்லை. அவ்வாறாகவும் வெட்டிப் பேச்சுப் பேசுவதற்குப் பொழுது உண்டா? சிந்தையும் செயலும் அடக்கியிருக்கும் நிலை நல்ல துறவியர்களால் சும்மா இருக்கும் நிலை எனப்பட்டது. அதனை வேலையில்லாமல் இருத்தல் எனப் பொருள் கண்டு கொண்டது மூடவுலகம். அதனால் என்ன செய்கிறீர்கள் என்றால், சும்மா இருக்கிறேன் ஏன் சொன்னீர்கள் என்றால், சும்மா சொன்னேன் எங்கே போகிறீர்கள் என்றால், சும்மா போகிறேன் என வாழ்வையே சும்மா ஆக்கும் சும்மாக்கள் பெருகி விட்டன! அவற்றின் பணிகளுள் ஒன்றே பயனில கூறுதல். நம் ஊர்க் கடைகளின் முன்னும், சாலை ஓரங்களிலும் கூடிக்கூடி இருக்கும் மக்களைப் பார்த்து விட்டும், அவர்கள் பேசும் ஆர்வத்தைக் கண்டு விட்டும், இவர்கள் எவரையாவது வரவேற்கக் காத்திருக்கிறார்களா? அல்லது ஏதாவது ஒரு தொழிலை எப்படி நடத்துவது என ஆராய்கிறார்களா? அல்லது தமக்கு உண்டாகும் சிக்கல்களைக் கலந்து பேசித் தீர்க்கிறார்களா? எனப் பெரு விருப்போடு கேட்டார் வெளி நாட்டார் ஒருவர். இல்லை! இல்லை அப்படி ஒன்றும் இல்லை! சும்மா பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் உடன் வந்தவர். வெளிநாட்டார் முன்னையினும் வியப்படைந்தார். வேலை யில்லாமல் இப்படிச் சும்மா இருக்க முடிகிறதா? என்றாராம்! சும்மா இருக்கிறார்களே! சும்மா திரிகிறார்களே! சும்மாவே பேசுகிறார்களே! ஒருநாள் இரு நாளா? காலம் காலமாகவே! சும்மா இருக்கும் சுகத்தை, இந்த நாடு போல் எந்த நாடுதான் காண முடியும்? பயனறிந்த அறிவாளர் பயனில சொல்வாரா? (198) வாழ்வுத் தெளிவுடையவர் வறுஞ்சொல் சொல்வாரா? (199) ஒருவருக்குள்ள உறுப்புகளில் பயனில்லாத ஒன்று உண்டா? உதிர்ந்து போகும் முடியும், நீண்டால் வெட்டப்படும் நகமும் கூடப் பயனற்றவை அல்லவே! அவ்வாறாகவும் பயன் உறுப்புகளாலேயே அமையப் பெற்ற ஒருவன், பயனற்ற சொல்லைச் சொல்வானானால் அவன் ஒருமகனா? பதர்! (196) தீவினை அச்சம் பயனில சொல்லலின் பதின் மடங்கு கேடு, பயனில செய்தல். அதனினும் பன்மடங்கு கேடு, தீவினை செய்தல். ஆதலால் தீவினை செய்தலை நினைக்கவும் அஞ்சுதல் நல்லோர் இயல்பாகும். தீ, தீமை பயக்குமா? தீயவை தீமை பயக்குமா? தீ, தேடிப் போய்த் தீமை செய்வது இல்லை! தீயவன் தேடிப் போய்த் தீமை செய்தல் கண்கூடு. தீ செய்யும் நன்மைகள் எண்ணற்றவை. ஆனால், தீயவன் செய்யும் தீமையால், அவனுக்குக் கூட ஏன், அவன் குடும்பத் திற்குக்கூட நன்மை இல்லை. ஆதலால், தீயினும் அஞ்ச வேண்டு வது தீயவற்றுக்கேயாம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் என்றார் திருவள்ளுவர் (202). இதனைத் தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப்படும் என்றே பாடம் இருந்திருக்கும் என்பார் அரசஞ் சண்முகனார். தீயவை செய்தவர் கெடுவரா? தப்பாது கெடுவர். நிழல் எப்படி அவரைத் தொடர்கிறதோ அதுபோல் அவர் தீய செயலும் தொடர்ந்து அவரை அழித்து விட்டே அவரோடு ஒழியும். தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடியுறைந் தற்று (208) ஒப்புரவு அறிதல் ஒப்புரவு என்பது உழவுத் துறையில் வழங்கப்படும் பண் படுத்தற் சொல். மேடு பள்ளமாக இருக்கும் நிலத்தைச் சமப் படுத்துதல் ஒப்புரவு (ஒப்புரவு) ஆகும். அதனைச் செய்யாவிடின் மேட்டு நிலத்தில் நீர் நில்லாமல் பள்ளத்திற்குச் சாய்ந்து விடும். நிலம் ஒரு நிலைப்படின், நீரும் ஒரு நிலைப்படும். பயிர்களுக்கும் ஒருநிலைப்பட நீரும் உரமும் கிட்டும். விளை பயனும் அவ்வாறே ஒரு நிலைப்பட வாய்க்கும். ஒப்புரவின் இன்றியமையாத் தேவையையும் பயனையும் இவ்வுழவடைச் சொல் இனிது விளக்கும். இங்கு வள்ளுவரால் சொல்லப்படும் மழை, ஊருணி நீர், மருந்துமரம், பழமரம் எப்படி உலகுக்கு ஒப்புரவு செய்வனவோ, அவ்வாறே இல்லறம் பேணுவானும் இருத்தல் வேண்டும் என்பது பொதுச் செய்தி. ஒப்புரவு அறிதலும், அறிந்து போற்றுதலும் அரிது என்பதை வள்ளுவர் அறிவார். ஆதலால், அவ்வொப்புரவு அறிந்து கடனாற்றுவானைப் பேரறிவாளன், நயனுடை பான், பெருந்தகையான், கடனறிகாட்சியவன் என்றெல்லாம் எடுத்துரைத்தார். ஒப்புரவு அறிபவனே உயிர் வாழ்பவன்; அவனுக்கு வறுமை என்பது, அவன் செய்ய விரும்பிய உதவிகளைப் பிறர்க்குச் செய்ய முடியாமையே என விளக்கம் தருகிறார். ஒப்புரவு செய்தலால் ஒருவனுக்குக் கேடும் வருமோ? வாராது; வரும் எனின் அக்கேட்டைத் தன்னை விற்றுக்கூட வாங்கிக் கொள்ளும் பெருமை உடையது என்கிறார் (220). உள்ளாரும் இல்லாருமாய், இருபால் பட்டுக் கிடக்கும் உலகில், எல்லோரும் உள்ளாராய் இருக்கும் நிலையே உய் வாகும் நிலை என்பதைத் தம் கூர்த்த அறிவாலும், பேரார்ந்த நெஞ்சாலும் கண்டு கொண்டதால்தான், ஒப்புரவறிதல் வள்ளுவம் அன்றே பிறந்ததாம். இல்வாழ்வின் நிறைவு அவ் வொப்புரவுக்கு வழிகோலுவதாக அமைதல் வேண்டும் என்பது வள்ளுவ நெஞ்சமாகும். ஈகையும் புகழும் ஈகையும், புகழும் தொடர்புடையவை. தன்னையும் கொடுக்கும் அன்புடைமையில் தொடங்கிய இல்லறம் புகழால் நிறைவுற்றுப் பொதுத் தொண்டாகப் பளிச்சிட்டுப் பின்னே அப்புகழும் கருதாத பற்றற்ற பெருநிலையில் சிறக்கின்றது. ஈகை பொதுவில் பொன் பொருள் ஊண் உடை முதலியன கொடுத்தல் பொருளிலேயே வழங்குகிறது அல்லது ஒருவர் தேவையை நிறைவேற்றி வைக்கும் அளவிலேயே கருதப்படுகிறது. ஒருவர் தம் தேவையைத் தாமே நிறைவேற்றிக் கொள்ளு தற்குத்தக்க வழி செய்தலை ஈகை என வேண்டும் என்பது வள்ளுவர் உள்நெஞ்சம் போலும்! அது மீனைப் பிடித்துத் தருவதினும், அம்மீனைப் பிடிக்கும் வழியைக் கற்றுக் கொடு என்னும் பிற நாட்டுப் பழமொழிச் செய்தி போன்றது. பசியாற்றல் என்பது உயர்ந்ததுதான். ஆனால் அப் பசிக்கு ஈவாரைத் தேடா வகையில் மாற்றியமைப்பவர் ஆற்றல் அதனிற் சிறந்தது என்னும் கருத்துப் பொதிய வரும், ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் (225) என்னும் குறள் சிந்திக்கத் தக்கதாகின்றது. ஆதலால், இல்லறத் தில் சிறந்தோர் தாம் பெற்ற பட்டறிவால், பிறர் சிறக்க வாழ வழி காட்டலும் சிறந்த ஈகையேயாகும். பிறர் பசிக்கு மருந்தாம் உணவைத் தருவதை வைப்பகத்து வைப்பாக வள்ளுவர் சொல்வது பெருநலப் பார்வையாகும். அந்நலம் பெற்றார் உலகுக்கு உதவியாக விளங்குவர் என்னும் பெருந்தக்க பார்வையாகும் அது. இசையோடு வாழ்தல் உயிர்ப்பேறு என்று கூறும் வள்ளுவர், உலகத்தில் அழியாப் பொருள் புகழே என உறுதிப் படுத்துகின்றார். சுடச்சுட ஒளிதரும் சங்குபோலும் வறுமையும், என்றும் மறக்கவொண்ணாச் சாவும் வாய்த்தல் அருமைப்பட்டவை என்கிறார். வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் எனப் புகழை நிலைபெறுத்துகிறார் (240). நீருள் தோன்றும் சிற்றலைவட்டம் ஒன்று வரவரப் பெருகிப் பெருவட்டமாய் அமைதல் போல், அன்புவட்டம் பெருகி அருள்வட்டமாகும் நிலையே இல்லறமாகும். அவ்வருள் வட்டச் சிறப்பு துறவாகத் துலங்கும்.  8. நல்ல துறவராக துறவு துறவு என்பது ஒரு பெருநிலை. தன்னலப் பற்று அற்ற நிலை; பிறர் நலத் தொண்டுக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்ட நிலை. விருப்பு வெறுப்பு அற்றுப் போன வியன்நிலை. மனத்துறவே துறவெனக் கண்டது தமிழுலகு. மனைத் துறவு கொள்ளாதது அது. மணவாத் துறவும், மணந்த துறவும் போற்றாதது அது. மனைவியொடும் கூடி மாணறம் காக்கும் மரபினது தமிழர் துறவு. துறவு என்னும் பெயர் கேட்ட அளவானே, புறக் கோலங்களே பளிச்சிட்டுத் தோன்றுதல் இற்றை நிலையாகிவிட்டது. ஒவ்வொரு சமயமும் புறக் கோலங்கள் தத்தமக்கெனக் கொண்டுள்ளமையால் விளையும் காட்சி இது. வள்ளுவ நீத்தார் பெருமை புறக் கோலம் அறியாதது. வள்ளுவத் துறவும் அதுவே. தவம் என்பதும் தனிச் சிறப்பினது; நோன்பு என்பதும் அது. அந்நிலையும் புறக் கோலம் கொள்ளாதது மட்டுமன்று; புறக் கோலம் பொய்க் கோலமாதலைக் கண்டித்துக் கூடா ஒழுக்கம் (கைக் கொள்ளக் கூடாத ஒழுக்கம்) என்று பெயர் சூட்டும் செய்வது. இல்லறத்தின் மேம்பாட்டில், மேம்பட்டு விளங்கும் துறவு பற்றிய வளர்நிலை விளக்கம் நல்ல இல்லறத்தராக என்பதன் முகப்பில் கண்டு கொள்க. நல்ல துறவராக விளங்க விரும்பு வார்க்குரிய வள்ளுவ வைப்புகளைக் காண்போம். அருளுடைமை அன்புக் கடைக்காலின் மேல் கட்டப்படும் மாளிகை இல்லறம். அருட் கடைக்காலின் மேல் எழும் மாடம் துறவு. ஆகலின் துறவின் முதலிடம் அருளுடைமை ஆயிற்று. உற்றார் உறவொடு தொடர்பு கொண்டு விருந்து தொடங்கி ஒப்புரவாகிய பெருமையது இல்லறம். துறவோ உயிர்கள் அனைத்தையும் தம்முயிராகப் பேணும் அருளின் வழியது. அன்பு தொடர்புடையாரிடத்துத் தோன்றும் நேயம். அருள் எவ்வுயிரிடத்தும் கொள்ளும் உருக்கம். இது பழந்தமிழ் நூல் உரையாளர் தரவு. நல்லவன் அல்லவன் என்று இல்லாமல், முயற்சியும் செயல் திறமும் உடையான் எவன் எனினும் அவனிடத்தெல்லாம் பொருள் இருக்கும். ஆனால், அருள் அத்தகையதன்று. மெய் யுணர்வு மிக்கானிடத்துத்தான் அருள் உண்டாகும். அருளாளர்க்கு மனமயக்கம் இல்லை; அச்சம் இல்லை; அல்லல் இல்லை (243-245) என்கிறார் வள்ளுவர். அருட் செல்வமே செல்வம் என்றும், அருளில்லார் கொண்டுள்ள பொருட் செல்வமும் புகழ் செய்யாது என்றும், அருளில்லான் ஓரொருகால் நற்செயலுக்கு உதவுதல் போலிமைப்பட்டது என்றும் (241, 246, 249) கூறுகிறார். நடைமுறைக் காட்சி ஒன்றைக் காட்டி அருளை வலி யுறுத்துகிறார் வள்ளுவர். ஒருவன் தன்னினும் வலிமை குறைந்தவனைத் தாக்குவ தற்குச் செல்கின்றான். அவனைப் பார்த்து, உனக்கு வலியவன் உன்னைத் தாக்கும் போது, உன் உள்ளம் எப்படிப் படபடத்தது; உன் கை கால்கள் எப்படி நடுங்கின; நீ மன்றாடிக் கிடந்து கெஞ்சிய கெஞ்சுதல் என்ன? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்துக் கொண்டு இம்மெலியவனைத் தாக்கச் செல் என்கிறார் (250). அருளாளர்க்கு அல்லல் இல்லை என்கிறாரே வள்ளுவர்! அருள்வடிவான கிறித்து பெருமான் சிலுவையில் அறையப் பட வில்லையா? அருள் வழிகாட்டிய சாக்ரடீசர்க்கு நஞ்சு தரப்பட வில்லையா? அறப்போர் அண்ணல், இன்னா செய்யாமை வடிவர் காந்தியடிகளுக்குக் குண்டுப் பரிசு கிட்ட வில்லையா? மெய்ப்பொருளே பொருள் என்ற சிவச்செல்வர் மெய்ப் பொருளார்க்கு வாட் பரிசு வாய்க்க வில்லையா? இவ்வாறாகவும் அல்லல் அருளாளர்க்கு இல்லை எனலாமா? என்னும் எண்ணம் நமக்கு எழலாம். இவை அல்லல் என்று நாம் எண்ணுகிறோம். அவர்கள் அல்லல் எனக் கொண்டனரா? அல்லலாகக் கொண்டால், தந்தையே, தாம் செய்வது இன்னதென அறியாது செய் கிறார்கள்; இவர்களைப் பொறுத்துதவும் என்று கிறித்துவும், இவ்வளவு தானா? இன்னும் கொண்டு வருகிறாயா நஞ்சு! என்று சாக்கிரடீசரும், ஏ, இராம் எனக் காந்தியாரும், தத்தா நமர் என மெய்ப் பொருளாரும் தாம் உயிர் விடும் பொழுதில் உரைக்க முடியுமா? புலால் மறுத்தல் எவ்வுயிரும் தம்முயிராகப் போற்றும் அருளாளர், தம் உடலைப் பெருக்குவதற்காகவும் நாவின் சுவையை நாடியும் புலால் உண்ண விரும்புவரா? ஏனெனில் புலால் என்பது கொலைப் பொருள் அல்லவோ! வினைப் பொருள் எனினும் கொலைப் பொருள்தானே அது? இல்லறத்தின் முதிர்வு துறவு என்றால், இல்வாழ்வில் புலவூண் உண்டான்-அதிலேயே பழகிப் போனவன்-துறவு நிலையில் ஒழித்தல் வேண்டுமா? ஒழித்தல் இயலுமா? என்னும் வினாக்கள் கிளம்பலாம். குழந்தைப் பருவத்து இயலும் செயலும் ஊணும் உறவும் காளைப் பருவத்தில் மாறிவிட வில்லையா? காளைப் பருவத்து இயலும் செயலும் ஊணும் உறவும் பெற்றோர் நிலையில் மாறிவிட வில்லையா? பொறுப்புக்குத் தக - நிலைக்குத் தக - மாறுதல் இயற்கை, ஊணும் அத்தகையதே! இளமையில் புலால் உணவில் அழுந்தி நின்றாரும், தம் முதுமையில் தாமே விலக்குதலும், வெறுத்தலும் காண்பனவே. அன்றியும், அவ்விலக்குதல் தம் உடல் நலத்திற்கும் உள நலத் திற்கும் ஒத்து வருதலால்-நலம் செய்தலால்-குடும்பமே ஏற்கவும் காண்கிறோமே! அப்படி வந்தது தானே புலவுண்ணாமை! மாந்தன் விலங்காண்டி நிலையில் புலவுண்ணாமை போற்றி யிருப்பனோ? சங்கத்தார் நாளில் புலவூண் கொள்ளாமை தனிப்படப் போற்றப் பட்டிருக்கலாம். அஃதொரு கொள்கையாக உருப் பெறவில்லை. கொள்கையாக்கிய அருளாளர் வள்ளுவர். அதனால் புலாலுண்ணாமையுடன் கொல்லாமையையும் துறவில் ஆக்கினார். ஆழ்ந்த அவர் தம் உலகியல் உடலியல் தேர்ச்சியே அவ்வமைப்புக்கு அடிப்படையாம். அறுபது அகவையர் மணிவிழா என ஒரு விழாவுக்கு ஆட்படுகின்றனர். மணி என்பது மண்ணுதல் (கழுவுதல்) உடையது; பட்டை தீட்டி மாசு போக்கிக் கழுவப்பட்டதே மணியாகும். அம் மணிவிழாவின் நோக்கு, நீ புதியதொரு பிறப்பினை; குடும்பக் கடமையை முடித்துப் பொதுக் கடமைக்கு உன்னை ஆட்படுத்திக் கொள்க என்று சொல்லாமல் சொல்வதே! அச் சிந்தனை இல்லராய் இரண்டாம் திருமணம் என இருத்தி மீளவும் மணக்கோலம் காட்டுதல் சடங்காகி விட்ட சரிவு நிலையாகும். அருளாளியின் அடிப்படை உயிரிரக்கம். அவன் புலாலுண் ணான். ஏனெனில், உயிர்க் கொலைக்கு அது இடமாக இருத்த லால். பொருளைத் தேட எப்பாடு படுகிறாய்? என்னென்ன முயற்சிகளை எல்லாம் செய்கிறாய்? அதனினும் மேலாம் அருளைத் தேடுவதற்கும் அப்பாடும் அம் முயற்சியும் கொள்ள வேண்டாமா? என்கிறார் வள்ளுவர் (252). கையில் கொலைக் கருவியை எடுத்தவன் மனம் நல்லதை நினையாது; அவ்வாறே, ஒன்றன் உடலைச் சுவைத்துண்ண நினைப்பானின் மனமும் நல்லதை நினையாது என்கிறார் (253). புலாலை விற்பார் உளரே; நாங்கள் தின்றால் என்ன? என்பாரை நோக்கி, நீங்கள் தின்பதற்காக அதனை வாங்க வில்லை என்றால், அதனை அவர் ஏன் விற்கிறார்? என எதிர் வினாத் தொடுக்கிறார் (256). எரியோம்பல் என்னும் பெயரால் உயிர்ப் பலியிடலும் நெய் சொரிதலும் சிலர் வழக்கமாக இருத்தலைக் கண்டு அப்படி, ஆயிரம் வேள்வி செய்தவைக் காட்டிலும் ஓர் உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாமையாகிய ஒன்றைச் செய்தல் நல்லது என்கிறார். அது, அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று என்பது (259). தவம் தவ என்பது ஓர் உரிச்சொல். அது மிகுதி என்னும் பொருள் தருவது. அருள் மிகுதியுடைமை காட்டித், தவம் என நின்றது. தவம் என்பதன் பொருள் இன்னது என்பதை மயக்கம் இல்லாமல் அறிந்து கொள்ள வேண்டி, அதனை எடுத்த எடுப்பி லேயே எளிமையாய், அதேபொழுதில் அருமையாய்க் கூறு கிறார் வள்ளுவர்; உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்பது அது (561). தமக்கு உண்டாகும் துன்பங்களைப் பொறுத்தலும் மற்றை உயிர்களுக்குத் தாம் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார். தவவடிவம் இன்னது எனப்பலர் பல வகையால் கூறி யமையால் அற்றே தவத்திற்கு உரு என்றார். காவி, கெண்டி, முக்கோல், பலகை, தோல், நூல், மணிமாலை, எனப்பல, தவமெனக் கொள்ளுவாரை எண்ணி உண்மை உரைத்தது இது. தவம் செய்யும் அருளாளர்க்கு-தன் துயர் தாங்கிப் பிறவுயிர்க்குத் துயர் செய்யார்க்கு-அவர் விரும்புவன வெல்லாம் விரும்பியவாறே கிடைக்கும் என்று கூறுகிறார். (265) தவத்தர்க்குப் புரியா மாந்தரால் துன்பம் வருதல் கூடும். ஆனால் அத்துன்பத்தைத் துன்பமென அவர் கொண்டால் அல்லவோ துன்பம்? குழந்தை அடிப்பதையும் மிதிப்பதையும் காறித் துப்பு வதையும் தாய் எப்படி எடுத்துக் கொள்கிறாள்? அடிக்கும் கைக்கும், மிதிக்கும் காலுக்கும் வலி ஏற்படக்கூடாது என்றல்லவோ எண்ணுகிறாள். அத்தகு தாய்மனத் தவத்தரைப் பிறர் எள்ளின் என்ன? இகழின் என்ன? புன்முறுவல் பூத்து அவர் அறியாமைக்கே உருகுவர்! ஆதலால் அவர் சுடச்சுட ஒளிவிடும் சுடர்ப் பொன்னாகத் திகழ்வர். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (267) உள்ளத்தை ஒருப்படுத்தும் ஆற்றலை உடைய தவத் தினர்க்கு இறப்பச்சம் என்பதொன்று இல்லை! கூற்றம் என்பதுவும் அவர்க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போகும். கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (269) கொடியில் இருந்து உதிரும் பூப்போல உடலில் இருந்து உயிர் பிரிதல் வேண்டும் என்பார் தாகூர். அவரே மணவாளன் கழுத்தில் மாலை சூட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டு செல்லக் காத்திருக்கும் மணமகள் போல் யான் காத்திருக்கிறேன்; இன்னும் வராமல் கூற்றுவனே நீ காலம் கடத்துவது என்ன? என வினவுகின்றார். 102 அகவை வாழ்ந்த பெருமகனார் விசுவேசுவரரை, தங்கள் நெடிய வாழ்வுக்குக் காரணமென்ன? என ஒருவர் வினாவினார். அவர் இரண்டு மூன்று முறை என்னை அழைப்ப தற்காக வந்து, காலன் என் கதவைத் தட்டினான்; அப் பொழுதெல்லாம், நான் கருத்தாக வேலையில் ஈடு பட்டிருந் தமையால் வேலை செய்பவனுக்கு இடைஞ்சல் செய்தல் கூடாது எனப் போய்விட்டான் என்று மறுமொழி தந்தார். கடமைகளைத் தலை மேல் அள்ளிப் போட்டுக் கொண்டு அதே கருத்தாக இருப்பவர் நெடிது வாழ்வர் என்னும் அரிய நுட்பத்தை அவர் தம் கூர்த்த மூளையால் கண்டு வழங்கியுள்ளார் என்க. இத்தகு பெருமக்களுக்கு இறப்பு என்பது களிப்பேயன்றிக் கவலைப் பொருள் ஆகாதாம். கூடா ஒழுக்கம் துறவர் கொள்ளக் கூடாத ஒழுக்கங்கள் எவையோ அவை கூடா ஒழுக்கங்களாம். தெரியாமல் செய்து விட்டேன் என்று தப்பக் கூடியவர்கள் அல்லரே துறவர்! கூடா ஒழுக்கத்தவர் கொள்ளும் தவக்கோலத் தோற்றமும் அவக்கோலச் செய்கையும் விளக்க ஒன்றற்கு நான்கு உவமை களைக் காட்டுகிறார் வள்ளுவர். அவை:- தவவலிமை இல்லாதவன் தவத்தினர்க்குரிய உயர்ந்த கோலங்களைக் கொண்டிருப்பது, வலிமை இல்லாத பசு வலிய புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு அச்சமில்லாமல் அயலார் பயிரை மேய்வது போன்றது! (புலி புல்லைத் தின்னாது என்னும் எண்ணம் நல்ல பாதுகாப்பு அல்லவா!) (373) தவவேடத்தில் மறைந்து கொண்டு அத் தவத்திற்கு மாறான தீய செயல்களை ஒருவன் செய்வது, புதர்க் காட்டில் மறைந்து கொண்டு (தன்சூழ்ச்சியையும் மறைத்துக் கொண்டு) வேடன் பறவைகளைப் பிடிப்பது போன்றது. (274) வெளிக் கோலங்களால் செம்மையை வெளிப்படக் கொண்டு, உள்ளே வஞ்சத்தை வைத்திருக்கும் தவ வேடத்தினர், உடலெல்லாம் சிவப்பும் மூக்கில் கறுப்பும் கொண்டுள்ள குன்றிமணி போன்றவர். (276) மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து என்பது சேக்கிழார் காட்டும் முத்தநாதன் உள்ளகம். அம்பு நேரானது. யாழ் வளைவானது. அம்பு நேராக இருத்தலால் அதன் செயற்பாடும் நேராயிற்றோ? யாழ் வளைவாக இருத்தலால் அதன் செயற்பாடும் தீயது ஆயிற்றோ? இல்லையே! அவற்றின் செயலைக் கொண்டு தானே நன்மை தீமை எனத் தீர்மானிக்கிறோம். அது போல் தவத்தினரையும் அவரவர் செயற்பாடு கொண்டே தீர்மானித்தல் வேண்டும். இவை கூடா ஒழுக்கத்தில் வள்ளுவர் காட்டிய நான்கு உவமைச் செய்திகள். வஞ்சமின்மை, நெஞ்சறிந்து குற்றம் செய்யாமை, மனத் துறவு என்பவற்றை ஒருவர் கொண்டிருப்பாரேயானால் அவர் தம்முடியை மழித்துக் கொண்டால் தான் என்ன, அன்றி நீட்டி வளர்த்துக் கொண்டால் தான் என்ன? அம்முடியிலேயோ துறவு உள்ளது? என்பாராய், மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்கிறார் (280). கள்ளாமை (களவு செய்ய நினையாமை) துறவு நிலை கொண்டார் மனத்தளவானும் பிறர் பொருளைக் கவர நினைத்தல் ஆகாதாம். அதனை, உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் என்பார் (282) இல்லறத்தாரின் பண்புகளுள் ஒன்றாகச் சொல்லப்படுவது வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை) அவ்வாறாக அவ்வில்லறத்தில் மேம்பட்ட துறவர், பிறர் பொருளைக் கவர நினைத்தலும் பெரும்பிழையாகும் என்பது தெளிவு. நல்லோர் போர்வையில் அல்லோர் புகுந்து விடுவதும் உலகியற்கை என்பதைத் தெளிவாகக் கண்டவர் வள்ளுவர். ஆதலின் அத்தகையரிடத்து விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இக்கூடா ஒழுக்கம் கள்ளாமைகளைத் துறவில் வைத்தார் என்க. களவு என்பதைக் காரறிவாண்மை என்று சுட்டுகிறார் (287)! ஏனெனில் களவு செய்யக் கருதுவார் அறிவிலரா? எவ்வளவு கூர்த்த அறிவினராகக் களவு செய்வார் உளர்! கள்வார் பெரிதா, காப்பார் பெரிதா! என்பது பழமொழி. களவு செய்வானுக்கும் அறிவு உண்டு; அதனைக் காக்க முனைவானையும் வஞ்சித்துக் கவரும் செயல் திறமும் உண்டு. அதனால், அவ்வறிவை அறிவெனல் ஆகாது. அறிவு என்றால் நல்வழியில் செல்லுதல் வேண்டும். அல்வழியைத் தவிர்த்தல் வேண்டும். ஆதலால் களவை விரும்பும் அறிவு காரறிவு என்றார். கறை படிந்த அறிவு என்பது பொருளாகும். ஒற்று அறியச் செல்வார் துறவியர் கோலத்தில் செல்லு தலும் உண்டு என்பார் வள்ளுவர் (576). அது நாட்டு நலம் கருதிய செயலாக அரசியலில் கொள்ளப்படும். ஆனால் பிறர் நலம் நாடும் துறவு கொண்டவன் அத்துறவுள் வஞ்சத்தை வைத்துக் களவாடக் கருதுவனாயின் அது வேலியே பயிரை மேய்ந்தது ஆகிவிடுமே! ஆதலால், அத்துறவு நலம் காக்கவும், மக்கள் நலம் காக்கவும் கள்ளாமையை வலியுறுத்தினார்! துறவோர்க்குரிய நல்ல பண்புகளுள் ஒன்று வாய்மை. அதனால், அடுத்துக் கூறுகிறார் அதனை, வாய்மை உள்ளது உள்ளவாறு கூறுதல் வாய்மை என்பார் உளர். ஆனால் வள்ளுவ நெஞ்சம் வாழ்வியல் நலம் கருதி அதற்குப் புத்திலக்கணம் காண்கிறது. வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் எவ்வுயிருக்கும் யாதொரு தீமையும் உண்டாகாத சொல்லைச் சொல்லுதல் என்பது அது (291) மேலும் இதன் தொடர்பாக ஒரு விலக்குரையும் வழங்கினார். பிறர் நலம் கருதுவதாய், தன்னலம் கருதாததாய் இருக்குமானால் பொய்யும் கூறலாம். அது பொய் கூறுதல் ஆகாது. ஏனெனில், மெய்மை தரும் நன்மை எதுவோ, அதனை அப்பொய்மை தருவதால்! அதற்காக அப்பொய்யை மெய்யென்று கூறிவிடக் கூடாது. அப்பொழுதில் மட்டும் மெய்மையின் இடத்தில் அப்பொய் வைக்கப்படும்; அவ்வளவே என்கிறார். இவ்வாய்மைப் பொருள் விளக்கக் குறள்கள்:- வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் பொய்மையும் வாய்மை இடத்த புரைதீரந்த நன்மை பயக்கும் எனின் என்பன (291, 292). துறவோர் புறந்தூய்மையும் கொள்வர்; அகந்தூய்மையும் கொள்வர். கூடா ஒழுக்கப் போலித் துறவியரும் தூய துறவியர் போல் நீராடுவர் என்பதை மாண்டார் நீராடி என்பார் வள்ளுவர் (278). தூய துறவோர் அகத்தும் புறத்தும் தூயராய் அமைதலை. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298) என்கிறார். தவத்தொடு தானம் செய்தால்கூட, மனத்தொடு வாய்மை மொழிதலுக்கு இணையாகாது என்றும், உள்ளொத்த நெஞ்சத் தால் வாய்மை உரைத்து வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் உறைவார் என்றும் கூறுவார். அறிஞர் மு. வ. இக் குறளுக்கு உலகம் ஒப்பும் ஒரு சான்று காந்தியடிகள் என்று பாராட்டுவார். ஏனெனில் தம் வாழ்வையே வாய்மையின் ஆய் ஆகவே கொண்டவர் அல்லரோ அடிகள்! காந்தியடிகள் பொய் கூறுதலை மலச்சிக்கலுக்கு ஒப் பிட்டுச் சொல்கிறார். மலச்சிக்கலே பலப்பல நோய்களுக்கும் மூலம். அதுபோல் பலப்பல தீமைகளுக்கும் மூலம் பொய் கூறுதலே என்பார். ஒளிசெய்யும் விளக்குகளில் எல்லாம் உயர்விளக்கு பொய்யாமை ஆகிய விளக்கே என்னும் வள்ளுவர், யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்பார் (300). வெகுளாமை உண்மை கசப்பானது; எவரும் ஏற்றுக் கொள்வது எளிது அன்று என்பர். உண்மை கசப்பானாலும் மருந்து போல் நன்மை செய்வதேயாகும். உண்மை பேசுவார் அத்தன்மை இல்லாரை மதியார் என்றும், அவர்மேல் சினம் கொள்வர் என்றும்; சினம் இருக்கும் இடத்தில்தான் சிறப்பும் இருக்கும் என்றும் உலகோர் கூறுவர். மெய்யாகக் கூறினால், உண்மை இருப்பவனுக்குச் சினம் இருத்தல் ஆகாது என்பதே. சினம் என்பது சீற்றம் அன்று; வெகுளியும் அன்று; உருத்திரமும் அன்று; உள்வெதுப்ப நிறைவே சினம். அதனையும் கூட ஆறுவது சினம் என்றார் ஔவையார். மன அடக்கம் பெற்றவன் சினமடங்கப் பெறவில்லை என்றால், அவன் பெற்ற மன அடக்கம், அடக்கம் அன்று என்பதே பொருள். சினங்கொள்பவன் தன் கடுகடுப்பையும் துடிப்பையும் படபடப்பையும் கண்ணாடி முன் நின்று ஒருமுறை காண வேண்டும். இவ்விழிந்த தோற்றம் உண்டாகுமா நாம் சீறும் போது என உணர்ந்து நலம் பெறக்கூடும். சினத்தை வள்ளுவர் அருமையாக ஒரு பெயரிட்டு வழங்கி னார். அது, சேர்ந்தாரைக் கொல்லி என்பது. சேர்ந்தாரைக் கொல்வது, தீ; மற்றொன்று நஞ்சு! சினம் சினங்கொண்டவனை எரிக்கும்; அழிக்கும்; அவன் குடும்பத்தையும் எரிக்கும்; அழிக்கும்! அவ்வாறே நஞ்சுண்டவன் கண்ணும், முகமும், பல்லும், வாயும், குருதியும் எப்படி ஆகுமோ அப்படி ஆகும், சினங் கொண்டோனுக்கும்; அதனால், சினத்தில் மிக்கவர் உயிரோடு இருப்பவர் அல்லர்! இறந்தவர் என்றும், சினத்தை அகற்றியவரே தூய துறவர் என்றும் வள்ளுவர் கூறினார். தனக்கும் சரி, பிறர்க்கும் சரி, சிரிப்பை இல்லாமல் செய்வது சினம். மகிழ்ச்சியைக் கெடுப்பதும் சினம். ஆதலால் அச்சினத்தைப் பார்க்கிலும் ஒருவனுக்குக் கெடுபகை ஒன்று உண்டா? என்கிறார். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற? (304) தனக்கு இளைத்தவர் எவரோ அவர்மேல் எரிந்து விழுவார் சிலர். அவர் தமக்கு வலியவரிடத்து என்ன சொன்னாலும் வாய்பொத்திக் கைகட்டித் தலையாட்டிக் கொண்டிருப்பர். அவரை நோக்கிச் சொல்கிறார்:- உங்களுக்கு இளைத்தவர் மேல் சினங்கொள்ளல் உங்களுக்கு இழிவுதான். உங்களுக்கு வலியவர் மேல் சினங்கொள்ளுதலோ கட்டாயம் உங்களுக்கு இழிவுண்டாக்கியே தீரும். ஆதலால் ஈரிடங்களிலும் சினம் கொள்ளுதலை விடுக என்கிறார். செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற (302) பொய்த் துறவோர் பலர் பிறரை அச்சுறுத்துதற்காகலே அடங்கி ஒடுங்கிப் பணியச் செய்வதற்காகவே சீறும் சிறு மையைக் கொண்டிருத்தல் கண்டிருக்கும் செய்தியே! தம்மை யடக்கும் வலிமை இல்லாமையின் தெளிந்த சான்று சினம் ஆகும். ஆதலால் துறவோர் சினங் கொள்ளார். இன்னா செய்யாமை சினத்தின் விளைவு துன்பம் செய்தலாகும். ஆதலால் நல்ல துறவர் பிறர்க்குத் துன்பந் தருவன செய்யார். இன்னா (தீமை) செய்யும் எண்ணம் உண்டாகும் போது உள்நோக்கு நோக்குமாறு வள்ளுவர் ஏவுகிறார். நீ உனக்குத் துன்பம் என்று அறிந்ததைப், பிறர்க்கு நீ செய்யலாமா? உன்னுயிர்க்குத் துன்பம் தருகிறது என்று நீ அறிந்ததைப் பிறவுயிர்க்குச் செய்யலாமா? உன் துன்பம் போல் பிறவுயிரின் துன்பத்தை நீ அறியாவிட்டால் நீ அறிவுடைய வனா? இப்படியெல்லாம் இடித்து இடித்துக் கேட்கிறார் வள்ளுவர் (316, 318, 315). நீ தீமை செய்யா நிலையிலும் பிறன் உனக்குத் தீமை செய்யக் கூடும். சீற்றங் கொண்டு வந்து, அமைதியாக இருக்கும் உன்னைத் துன்புறுத்தக்கூடும். அந்நிலையிலும் நீ அவன் நிலைக்குக் கீழே இறங்கி விட்டால், உன் தகுதி என்ன ஆவது? என்கிறார். தீமை செய்தார்க்கும் நன்மை செய்து, அவர்கள் உண்மை யுணர்ந்து தலை கவிழவும் திருந்தவும் செய்வதே உன் துறவின் மேம்பாடாகும் என்றெல்லாம் வலியுறுத்துகிறார். இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் (314) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை (317) தீமை செய்து தப்பிவிடலாம் என எண்ணாதே! பிறர்க்குத் தீமை நீ காலையில் செய்தால் உனக்குத் தீமை மாலையிலேயே உன்னைத் தேடிக் கொண்டு வரும். நாளை, பின்னை என் றெல்லாம் எண்ணி ஏமாறாதே என்கிறார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (319) கொல்லாமை தீமை செய்தலின் முதிர் நிலை கொலை ஆதலின் இன்னா செய்யாமை கூறி, கொல்லாமை உரைத்தார். யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்று போற்றிய வள்ளுவர், அவ்வாய்மையையும் கொல் லாமையை நோக்கப் பிற்பட்டதே என்று கூறுவது வியப்பாகவும் அதேபொழுதில் வேறுபாடாகவும் தோன்றும். ஆனால் வள்ளுவர்தம் அருள் நெஞ்சப் புலப்பாடு அது என உணர்வார் வேறுபாடாகக் கொள்ளார். ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்பது அது (323). பொய்யால் பழியும் கேடும் உண்டாதல் மெய்யே. ஆனால் கொலையொடு நோக்கின் அப் பழியும் கேடும் குன்றுதல் வெளிப்படும். சில குழல்களில் பொய்யால் கொலைப்பாடும் நேர்தல் கூடும். எல்லாப் பொய்களும் அத்தீமை செய்வன அல்ல. புண்படுத்துவன; பகையாக்குவன; மாசுபடுத்துவன என்றே அமையும். ஆனால் கொலை அத் தகைத்தா? போன உயிர் போனது தானே, மீளுமா? அவ்வகையால் மீளா வகையில் உயிரைப் போக்கும் கொலையே தீமைகளுள் எல்லாம் தலைப்பட்ட தீமை எனக் கண்டார். நன்றி மறத்தலையும் கடுமையாக நன்றி கொல்லுவதாகக் கொள்ளும் வள்ளுவர் உள்ளம், கொலைக் கொடுமைக்கு இணையாக ஒன்றைக் காணாமையால் ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற தென்க. துறவர், கொல்லலாமா? கொல்லவும் நினைக்கலாமா? துறவோர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் பான்மையர். அவர் உடலில் இருந்து உயிரைப் பகுத்துப் பிளக்கும் கொடுமையில் தலைப்படலாமா? வேள்விக்கே எனினும் கொலையை ஏற்கலாமா? சாதலின் இன்னாதது இல்லை எனச் சாற்றுவது வள்ளுவம். ஓர் உயிர் சாவுங்கால் துடிக்கும் துடியும்; அடிக்கும் அடியும், அரற்றலும் ஆர்ப்பும் கண்ணேரில் கண்டு கூட அக்கொலை செய்ய முந்தும் மனம் கன்மனம்! இரும்பு மனம்! ஆனால் உயிர்க்கு இரங்கும் துறவு மனம் கூட அதனைச் செய்யுமா? செய்யின் அது துறவா? தவமா? நோன்பா? ஓருயிரியால் தன் உயிர் நீங்கும் நிலையே உண்டு எனினும் அந்நிலையிலும் அவ்வுயிரியைப் போக்காமையே அருளாளன் இயல்பு. ஆதலால், தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை என்றார் (327) நிலையாமை கொலையும் இறப்பும் நினைவூட்டுவது எதனை? நிலை யாமையை அல்லவா! உலகில் எல்லாமும் நிலையற்றனவா? நிலை பெற்றனவும் உண்டா? இரண்டும் உள்ளமையால்தான், நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை என்றார் வள்ளுவர் (331). அவ்வாறானால், நில்லாதவை எவை? நிலைப்பவை எவை! என்று கூறவேண்டுமே! கூறுகிறாரா? செல்வம் நிலைபெற்றது என்று எண்ணுவதால் தானே பரம்பரை, பரம்பரைக்கும் வேண்டும் என்று பாடுபட்டு மக்கள் சேர்க்கிறார்கள். தேவையளவில் போதும் என நிற்கிறார்களா? இல்லாமையால் சாவார் ஒருபாலும், எல்லை இல்லாமல் பெருகுதலால் கொழுப்பார் ஒரு பாலும் உலகத்தில் உள்ளதற்கு அடிப்படையே அச் செல்வம் நிலைக்கும் என்னும் எண்ணம் உள்ளமை யால்தானே! அதனால், செல்வம் நில்லாத் தன்மையது; அதனை வரப்பெற்றால், நிலைபெற்ற அறங்களுக்கு அதனைச் செலவிட்டு நிலைப்படுத்திக் கொள் என்கிறார் (333) இதில் நில்லாதது இது என்றும், நிலைப்பது இது என்றும் தெளிவாக்குகிறார் அல்லரோ! மேலும் செல்வம் சேரும்போது சிறிது சிறிதாகச் சேரும் என்றும், போகும்போது ஒரு மொத்தமாகப் போய்விடும் என்றும் உவமையால் கூறுகிறார். கூத்துப் பார்க்க வருவார், ஒருவர் இருவராக வந்துகூடி கூத்து முடிந்ததும் ஒரு மொத்தமாகக் கலைந்து போகிறார்களே! அப்படிக் கூடிக் கலைவது செல்வம் என்கிறார் (332) இனி, நில்லாதவற்றுள் ஒன்று வாழ்வு என்று கூறி அதனை மிக விரிவாக விளக்குகிறார் (334-340) ஒருப்போல நாள்வரும் எனத் தோற்றம் உண்டாகிறது. ஆனால் அந்த நாள் என்பது நாளா? வாள்! பகல் ஒரு பக்கமாகவும் இரவு ஒருபக்கமாகவும் வாழும் நாளை அறுத்துக் குறைக்கும் வாள்! ஆனால், நிலைபெற்றதுபோல் நம்ப வைத்து விடுகின்றது. இளமையாக இருந்தவன் மூப்படைகிறான். நாவும் ஓடுங்கு கிறது; விக்கலும் உண்டாகிறது; நேற்று இருந்தான் இன்று இல்லை என்று சொல்லுமாறு கண்மூடிக்கண் திறக்குமுன் கண்ணை மூடிவிடுகிறான். கூட்டை விட்டுப் பறவை பறந்து போவதுபோல அவன் உடலை விட்டு உயிர் பறந்து விடுகிறது. உறங்கப் போனவன் உறங்கியே போகிறான். இந்த உடலும் வாழ்வும் நிலையென்று எத்தனை எத்தனை கோட்டைகள் கட்டுகிறான்? உறுதியாக இன்றைக்கு வாழ்வேன் என்று எவராவது சொல்லமுடியுமா? சொல்ல முடியாத அவர் அதனை எண்ணிப் பார்க்கிறாரா? அதனை எண்ணாமல் எத்தனையோ கோடிகளை எண்ணுகிறார்! எண்ணினால் எதை எண்ண வேண்டும்? நிலையற்றதையா? நிலை பெற்றதையா? என் றெல்லாம் சிந்திக்க ஏவுகிறார். நிலையாமை என்ன அழுகண்ணித் தனமாக அல்லவோ இருக்கிறது! நம் நம்பிக்கை, செயல் திறம் என்பவற்றையெல்லாம் குறைத்துவிடுமோ என்று தோன்றுவது அறியாமை உடைய தாகும். செல்லும் வழியில் காட்டாறு உண்டு; கள்வர் அச்சம் உண்டு; கடுவிலங்கு உண்டு; என்று ஒருவர் உரைத்தால் போகாதே என்பது பொருளன்று. விழிப்பாகப் போ! வேண்டும் காப்புடன் போ என்பதே பொருள். நில்லாமையைச் சொல்வதே நிலையானதைச் செய் என்பதற்கே ஆகும். நாளை இருப்பதை அறியோம் என்றால் எதனையும் நாளை எனத் தள்ளிப் போடாதே! உடனே செய்து விடு என்பதே பொருள். நிலையாமையை இல்வாழ்வில் புகுவானுக்கா சொன்னார் வள்ளுவர்! அவன் பெற்ற மழலைச் செல்வங்களுக்கா சொன்னார்? அவன், செய்வன செய்து அறிவன அறிந்து வாழ்வு இன்னது என்பதைத் தானே அறிந்து கொண்டுள்ள பக்குவ நிலைக்கு வந்துள்ளான் எனக்கண்ட பின்னர்த் தானே அவனுக்குச் சொல்கிறார். இல்லையானால் அவன் வளர்ந்தவன் ஆவானா? துறவு நிலையாமைத் தெளிவுடையான், எவற்றில் பற்று வைக்க வேண்டுமோ அவற்றில் பற்று வைப்பான். எவற்றில் பற்று வைக்கக் கூடாதோ அவற்றில் பற்று வையான். ஆதலால் துறவு என்றோர் ஒப்பற்ற அதிகாரம் வைத்தார் வள்ளுவர். எடுத்த எடுப்பிலேயே குழந்தைகளும் அறிந்து கொள்ளு தற்குத் தகத் துறவைக் கூறுகிறார் வள்ளுவர். ஏனெனில், அவர் அத்தகு முதுபேரறிவராம் நிலையில் இருந்து கூறுகிறார் என்க. எனக்குத் தேநீர் வேண்டா; வெற்றிலை வேண்டா நான் பயன்படுத்துவது இல்லை என்பார் எத்தனை பேர்களை நாளும் பொழுதும் பார்க்கிறோம்! அவர்களுக்குத் தேநீரைத் தேடிப் போக வேண்டிய வேலையோ, தேவையோ, வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என அவற்றை வாங்க வேண்டிய வேலையோ, தேவையோ உண்டா? இல்லையே! இவை வேண்டா என்றால்; அவற்றால் அந்த அந்த அளவால் தொல்லை யற்றார். அப்படியே எவற்றை எவற்றை வேண்டா எனத் தள்ளுகிறாரோ அவற்றால் அவற்றால் அவர்க்குத் தொல்லை இல்லை! இது சிக்கனம் மட்டுமா? செம்மையாக்கும் வழி அல்லவோ! துறவு என்பதற்கு அல்லது பற்றறுதல் என்பதற்கு எவ்வளவு எளிய பாலபாடம் இது. இப்பாடம் ஒன்றைப் படித்து மேற் கொண்டால் வேறுபாடம் என்ன வேண்டும். எல்லாம் தாமே வருமே. பற்று விடுவது, வாய்ப்பு இல்லாதபோதா? வாய்ப்பு இருக்கும் போதா? வாய்ப்பு இல்லாதபோது விடுவது துறவு ஆகாது. எல்லாமும் இருக்கும்போது அவற்றை வேண்டா என விடுவதே பற்றறுதல் அல்லது துறவு! அது ஒன்றும் கடினம் அன்று! மனம்தானே! அதனைப் பழகி விட்டால் இயற்கை யாகவே தேவையில்லாமல் போகிவிடும் (342) தேநீர் வருமுன் அதனை எவர் குடித்தார்? அதுபோலவே தமக்கு வேண்டாம் என்பவை, இல்லாதவையாகவே கொண்டு விடுகிறார் பற்றற்றோர்! இனிப்பு நோய் ஒருவர்க்கு! அதற்கு, அவர் ஊசி மருந்து ஏற்றிக் கொண்டே இனிப்பும் தின்கிறார்! இப்படித் தின் பானேன்? ஊசி ஏற்றுவானேன்? என்கிறார் அதனைக் கண்டவர். இனிப்பைக் கண்டால் தின்னாமல் இருக்க முடியாது என்று தம் இயலாத் தன்மையைக் கூறுகிறார் ஊசியர். வினாவியவர் சொல்கிறார். நான் உட்கார்ந்து கொள்கிறேன்; என்னைச் சுற்றிலும் தலை மறைக்கும் அளவுக்கு இனிப்பு வகைகளை அடுக்குங்கள்! ஒரு விரலால் தொட்டுத் நானும் நாவில் வைக்கி றேனா? பாருங்கள். எனக்கு இனிப்பு நோயும் இல்லை என்கிறார். பற்றற்ற தன்மை வெளியேயா இருக்கிறது. நெஞ்சில் அல்லவோ உள்ளது! யாகாவார் ஆயினும் நாகாக்க என்னும் வள்ளுவம் சொல்லுக்கு மட்டுமன்று; சுவைக்கும் பொருந்துவதே யாகும். இலை உண்கலமாகப் பயன்படுகிறது. அதனைக் கிழி யாமல் பேணுகிறோம்; அழுக்கை நன்கு துடைத்துக் கழுவு கிறோம். உண்டு முடிந்ததும் எடுத்து எறிகிறோம்! அப்படிப் பட்டது தானே உடலும்! உயிருள்ளவரை போற்றிக் கொள்ளப் படும் உடல், உயிர் போகிய பின்னர் அடையும் நிலை அது தானே! இத் தெளிவுடையவர்க்கு உடலும் உரிய பயன் செய்த பின் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே என்னும் முடிவு தோன்றி விடத்தானே செய்யும்? மற்றும் தொடர்ப்பா டெவன்கொல்? பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை (345) உடம்பும் மிகை என்னும் முதிர் வாளர்க்கு யான் என்னும் தற்பற்றோ எனது என்னும் பொருட் பற்றோ தலை காட்ட முடியுமா? (346). பற்றற்றார்க்கே துன்பம் பற்றுதல் இல்லை என்னும் தேர்ச்சியுடையார் (347), அந்நிலை, தம்மை விட்டு அகலாமல் இருக்க ஒரு வழி தேடிக் கொள்ளல் வேண்டும். அது, தம்மினும் வன்மையாகப் பற்றற்ற பெருமக்களைச் சுற்றமாகப் பற்றிக் கொண்டு இருப்பதாகும். இல்லாக்கால் அப்பற்றுதற்கு அசைவு உண்டாயினும் உண்டாதல் கூடும். பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு மெய்யுணர்தல்: நிலையாமை கண்டார், பற்றற்றவராவர்! அவர் அந் நிலையில் மெய்யுணர்வாளராகவும் அவா இல்லாதவராகவும் விளங்குவார். மெய்யுணர்வு என்பது ஐயுணர்வுக்கு மேற்பட்டது. பகுத் தறிவு எனப்படும் ஆறாம் அறிவிலும் முதிர்ந்து மேலேறியது. எப்பொருள் எக்காட்சி வழங்கினாலும் அப்பொருளின் மெய்க் காட்சி இன்னதெனத் தெளிவாக அறிந்து கொள்ளுந் தேர்ச்சி அது. அவ்வாறு அறிதிறம் பெற்ற மெய்யுணர்வாளர், மருள் நீங்கி மாசறு காட்சியர் எனப்படுவார். அவர்கள் மண்ணகத்தே இருந்தாலும், விண்ணகத்து நிகழ்வையும் கண்ணுறக் கண்டு அளந்து கூறுவார் போலக் கூறும் ஆற்றல் கைவரப் பெற்றவர் (352-355) உயிரின் தொடக்கம் பிறப்பு; அதன் நிறைவு சிறப்பு. பிறப்பு என்பது அறியாமை; சிறப்பு என்பது செம்பொருள். சிறப்பு என்னும் செம்பொருளைக் கண்டால் அறியாமையற்ற அறிவ ரெனத் திகழ்வர் (358). செம்பொருள் என்பது மெய்ப்பொருள். அதுவே பேரா இயற்கைப் பொருள்! அப்பொருள் இயல்பே உலகியல். அவ்வியல் இல்லையேல் உலகில்லை; உயிரில்லை; எல்லாம் இல்லை. அண்டம் சுழலல்; அணுச் சுழலல்; அணுவுள் அணுவும் சுழலல்; எல்லாம் அச்செம்பொருள் இயலின் செயலே. செம்பொருள் என்பது சிவப்பு வண்ணம் கருதியது அன்று. செங்கோல் செம்மை போலவும், நடுவுநிலைச் செப்பம் போல வும் ஒருபால் சாயா ஒரு தன்மையது! செம்பொருளுக்கு விருப்பு வெறுப்பு இல்லை; நல்லது அல்லது இல்லை; அவர் இவர் இல்லை; ஏற்றத் தாழ்வு இல்லை. அது இவ்வெல்லாம் கடந்த தன்னியற்கை ஆற்றல். அவ்வாற்றல், பெயராப் பெருநிலைப் பெற்றியது. அதுவே வள்ளுவரால் சிறப்பென்னும் செம்பொருள் என்றும், பேரா இயற்கை என்றும் சொல்லப்படுவது. நாளை என்ன நடக்கும்? அடுத்த நொடியில் என்ன நிகழும்? அறியோம்! முற்றாக முடிவாக எவர்க்கேனும் அறிய முடியுமா? ஏனெனில் மாந்தர் நிலை கடந்தது செம் பொருள் அல்லது பேரா இயற்கையின் நிலை! இயற்கைக் குறிகள் கொண்டு பின்வருவனவாம் இயற்கை விளைவுகளை ஓரளவால் சற்று முன்னர் அறிதல் கூடும். அவ்வாறு அறிதலும் அச்செம்பொருள் ஆய்விலே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் அறிவராலேயே இயலும். அவர்களே இன்னது நிகழும் என ஓராற்றான் அறிந்து வழிகாட்டி உலகைக் காக்க வல்லார். அவர் விருப்பு, வெறுப்பு, தெளிவில்லாமை எனப்படும் மூன்றன் ஆட்டுதலுக்கும் ஆட்படாமல் வீடு பெற்ற விளங்கறிவாளர். அவர்களே, நிகழ்வு அறிந்து அந்நிகழ்வுக்குத்தக நடந்து துன்ப நீக்கம் காண்பவராவர். சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் சார்தல்-வந்தடைதல். சார்பு கெட ஒழுகல்-அச்சார்பில் சிக்காமல் ஒதுங்கிக் கொள்ளல். சார்தரா- சார அல்லது சேர மாட்டா. சார்தரு நோய்-சார வரும் துன்பம். உலகியற்கையால் எய்தும் துன்பநீக்கம் கண்டு உய்வாரும் உய்விப்பாரும் மெய்யுணர்வாளர்களே என்பதைத் தெளிவிக்கும் வாய்மை வள்ளுவம் இது. அவாவறுத்தல் ஆசையே துன்பத்துக்கு எல்லாம் காரணம் என்றார் புத்தர். ஆசைக்கோர் அளவில்லை என்றார் தாயுமானார். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் என்றார் திருமூலர். ஆரா இயற்கை அவா என்றார் திருவள்ளுவர் (370). அளவிடப்படாத தன்மையது ஆசை. ஏனெனில் அளக்க அளக்க அளவின்றி விரியும் தன்மையது அது என்றார். குழந்தை கழுத்தில் இருக்கும் அணிகளைக் கவர நினைக்கும் வஞ்சர், அக்குழந்தைக்குப் பேராசை காட்டுவார்; பெரு நலஞ் செய்வார் போல் பேசுவார்; தாயினும் மேலாம் தகவால் அரவணைப்பார்; தந்தையினும் மேலாய்ப் பண்டங்கள் வாங்கி யூட்டுவார்; அப்படி வஞ்சிக்க வல்லது அவா ஆகும் (366). அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை என்ற வள்ளுவர். இன்பம் இடையறவில்லாமல் வரும் என்றும் கூறினார் (368, 369). வேண்டாம் என்று கருதும் நிறைமனம் போலச் சிறந்த செல்வம் இங்கே மட்டும் இல்லை; எங்கேயுமே இல்லை என அடித்துக் கூறினார். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல் ஆசை இருக்கும் உள்ளம் அசையும். அதனை அற்ற உள்ளம் அசையா நிலை எய்தும். அவ்வசையாப் பெரு நிலையே பேரா இயற்கையாகும். ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். உலகியக்கும் பேரா இயற்கை போல், அவாவற்றோனும் பேரா இயற்கைப் பெருநிலை எய்துவான். அப்பேரா இயற்கைக்கு எவ்வாறு விருப்பு வெறுப்பு, வேண்டுதல் வேண் டாமை, நலம் பொலம், வாழ்வு வீழ்வு இல்லையோ அவ்வாறே அவாவற்றானும் ஆவான்! அந்நிலையே வீடு பேறு! தன்னையும் தன் உடலையும் தன் உயிரையும் பற்றிய பற்றுகளை எல்லாம் ஒருங்கே விட்டதே விடுதலை ஆகிய வீடு பேறு! துறவர் இறந்த பின்னர்த்தான் வீடு பேறா? இல்லை! அவாவறுத்தலே வீடு பேறு என்ற பின்னர், இறந்த பின்னரா? என்பதற்கு இடமே இல்லை. அவாவற்றார் என்பார் வீடு பேறு உற்றார் என்பதே வள்ளுவம். ஒரு முதியர்; ஊர் அறியோம்; பேர் அறியோம். ஓர் ஊர்க்கு வருகிறார். ஊர் மடத்தில் தங்குகிறார். அவர் பார்வை அடுத்தே உள்ள ஊர்க் கிணற்றில் பட்டது. ஊர்க்கிணறு. குடிநீர்க்கிணறு! சுற்றிலும் நின்று பெண்டிர் நீர் இறைத்தனர்; கிணற்றைச் சூழவும் நீர்த்தேக்கம்; சேறு; சகதி; ஈ, கொசு, இருக்கை! அவற்றின் ஊடே நின்று கொண்டேதான் நீர் இறைத்தனர். முதியவர் எண்ணம் பளிச்சிட்டது. மடத்தில் வழக்கம் போல் படுத்தும், அரட்டையடித்தும் ஆடியும் கொண்டிருந்த சிலர் அப்பொழுதும் இருந்தனர். இளைஞர் ஒருவரிடம், ஒரு மண்வெட்டி கிடைக்குமா? என்று கேட்டார். முதியவர் அயலூரார்; அவர் அதனைக் கேட்டதும் வியப்புற்ற அவர், “எதற்கு! என்றார். கிணற்றைச் சூழ்ந்து சேறும் சகதியும் நீருமாக உள்ளது. நிலத்தைத் தோண்டி நீரை அப்புறப்படுத் தினால் தூய்மையாகும் என்றுதான் கேட்டேன் என்றார். நல்ல வேளை! அந்த இளைஞர் மண்வெட்டி கொண்டு வந்தார். கிழவர் பார்வை கிணற்றுச் சூழலில் சென்றது; அங்கே பூச்செடிகள் சில, நீரற்று வாடி வறண்டு போய்க் கிடந்தன. தேவையுள்ள இடத்திற்கு நீர் இல்லை; தேவையில்லா இடத்தில் நீர் கட்டிக் கிடக்கிறது. இரண்டையும் ஒப்புரவு செய்தால் இருபாலும் நலமாம் என எண்ணினார். கிணற்றில் இருந்து செடிப்பக்கம் வாய்க்காலாக வெட்டத் தொடங்கினார். மண்வெட்டி தந்த இளைஞர் முதியவர் திட்டத்தையும் வேலையையும் பார்த்துவிட்டு உதவ முன் வந்தார். அவர் தோழர்களைத் தூண்டினார். மேலும் மண் வெட்டி, கூடை, கடப்பாறைக் கம்பி ஆகியவை வந்தன. பொழுது சிறிதுதான்! எவ்வளவு பெரிய வேலை! எவ்வளவு நாளாக ஏறிட்டுப் பாராமல் கிடந்த வேலை! பெரியவர் அயலவராகத் தோன்றினார் அல்லர்; ஊரவர் ஆனார்; உறவர் ஆனார். பள்ளிப் பிள்ளைகள் சிலர் வந்தனர்; படிப்பைக் கேட்டார்; புத்தகங்களோடு வரச் சொன்னார்; தாமே வீட்டுப்பாட ஆசிரியர் ஆனார்; செல்லச் செல்ல இரவுப் பள்ளி ஆசிரிய ரானார் முதியர்க்கு; விளையாட்டு ஆசிரியரும், தாயரும் ஆனார் குழந்தைகளுக்கு! நோயா, அவரே மருத்துவர். பொருட்காவலா, அவரே காவலர்; சண்டையா, மனக்கசப்பா, தகராறா-அவரே தீர்ப்பாளர்! அவரில்லாமல் ஊரில்லை என்ற அளவுக்கு ஆனார். இரவலராக வந்த அவர், ஒவ்வோர் இல்லத்து விருந்தராகவும் விளங்கினார். ஊரின் அமைதிக்குக் கொள்கலம் அவரே என ஊர் மெச்சியது! முடிவு ஒருநாள் இல்லாமல் முடியுமா? கட்டுவிட்ட பூ உதிர்வது என உயிர் நீத்தார். ஊரே திரண்டது; அடக்கம் ஊர் காணா அடக்கமாயிற்று! ஆண்கள் அனைவரும் தங்கள் குடும்ப முதல்வர் போல எண்ணி மொட்டையிட அமர்ந்தனர். ஒரோ ஒருவர் முடியிறக்குபவர்; நூற்றுக்கு மேல் வரிசை! ஊர் நாட் டாண்மை எழுந்தார். ஊரை வணங்கினார். ஊர் முழுமையின் சார்பில், தாம் ஒருவரே மொட்டை போட உரிமை தர வேண்டும் என்றார். நிலைமைக்குத் தக ஊரிசைந்தது. முதியவர் எதுவும் கொண்டு வரவில்லை! பேரையும் ஊரையும் விட்டு வந்தார். அப்படியே காலமெல்லாம் எப்பற்றும் அற்றுத் தொண்டு செய்தார். அவர் மறைவா வீடு பேறு! அவர் தொண்டே வீடு பேறு. இது நிகழ்ந்த சான்று! வள்ளுவத்துறவர் அவர்! 9. ஊழ் ஊழ்வரவு ஊழ் என்னும் சொல், பழந்தமிழ்நூற் சொல்லடைவின் படி, பாட்டு தொகைகளில், 53 இடங்களில் இடம் பெற்றுளது. ஊழுறு, ஊழூழ், ஊழ்க்கும், ஊழ்த்தல், ஊழ்ப்ப, ஊழ்பாடு, ஊழ்மாறு, ஊழ்முகை என்னும் வடிவங்களில் மேலும் 35 இடங்களில் இடம் பெற்றுள. ஊழணி தைவரல் எனத் தொல் காப்பியத்தில் ஓரிடம் பெற்றுள்ளது. திருக்குறளில் ஊழ் ஆறு இடங்களிலும், ஊழ்த்தும் என ஓரிடத்தும் இடம் பெற்றுள. இத்தொண்ணூற்றாறு (96) இடங்களிலும் ஊழொடு வினை சேர்ந்து வரவில்லை. திருக்குறள் ஒழிந்த நூல்களில், ஊழ் என்பதற்கு உரையாசிரியர்களால் ஊழ்வினைப் பொருளும் தரப்படவில்லை! தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதற்கு உரை கண்டவரும் பரிமேலழகரே. அப்பாடலில் மட்டும் ஊழ் என்னும் சொல் 11 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. அவ்வுரையில் ஊழ் என்பதற்கு ஊழ்வினைப் பொருள் இல்லை. ஊழ்வினை ஊழ்வினை என்னும் ஆட்சி, பாட்டு தொகை தொல் காப்பிய நூல்களில் இல்லாமல் இருந்தும், திருக்குறளில் இடம் பெறாமல் இருந்தும் உரையாசிரியர்கள் ஊழ் என்பதற்கு ஊழ்வினை எனப் பொருள் காண்பானேன்? சிலம்பிலும் மேகலையிலும், ஊழ்வினை உருத்தலும், ஊழ்வினை வருதலும், ஊழ்வினை துரப்பலும், ஊழ் வினை கடைதலும் பெருவழக்காகியதாலும், அவற்றுக்குப் பின்னூல்களில் மேலும் பெருகியமையாலும், முன்னூல்களில் காணாத ஊழ்வினையைத் திருக்குறளில் வரும் ஊழுக்குப் பொருத்தி, வள்ளுவர் உள்ளகத்தையும் அவர் ஒளிநெறியையும் சிதைத்து உருக்குலைத்து விட்டனர். ஊழ் - பொருள் ஊழ் என்பதற்குப் பழநூல்கள் வழியே அறியப்படும் பொருள்கள் எவை? அவற்றை ஆய்ந்து, அத் தடத்தின் வழியே வள்ளுவ ஊழைக் காணல் முறையாகும். ஊழ் என்பதற்கு முறைமை, மலர்தல், அலர்தல், முதிர்தல், முற்றல், உதிர்தல், செவ்வியழிதல் அல்லது பதனழிதல், பொருந்துதல் என்னும் பொருள்கள் உள்ளமை அறிய வாய்க் கின்றன. அச்சான்றுகள் முறையே பின் இணைப்பில் இடம் பெற்றுள. ஆங்குக் கண்டு கொள்க. தொகுப்பு மேற்குறித்த இப்பொருள்களை நோக்கிய அளவால் ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுக்கோ, செயற்பாடு களுக்கோ-எத்தகைய தொடர்பும் இல்லாமல், இயல்பாகத் தானே நிகழும் நிகழ்ச்சியே ஊழ் என்பது புலப்படும். அவை ஆக்கமாதல், அழிவாதல் என்னும் இருநிலைப்பாடுறலும் புலப்படும். காற்று வீட்டுக் கொல்லையிலே இரண்டு வாழைகள். ஒருநாள் ஓங்கிக் காற்றடிக்கிறது. அக்காற்றிலே ஒரு வாழை வீழ்கிறது; மற்றொரு வாழை வீழாமல் வாழ்கிறது. இவை செய்த செய் வினை என்ன? முன்னை வினை என்ன? இற்றை வினையோ பிற்றை வினையோ தாம் என்ன? காற்றின் சுழற்சி வலுவாய இடத்தில், வீழ்ந்த வாழை இருந்திருக்கலாம். அல்லது அக்காற்றை மற்றை வாழை போல் தாங்கும் ஆற்றலான வேர்ப்பிடி இல்லாமல் இருந்திருக்கலாம். அவ்வளவே! அவற்றின் வீழ்ச்சிக்கும், வாழ்ச்சிக்கும் வேறு காரணம் காட்டல் கற்பிப்பார் கருத்தேயன்றிப் பிறிது இன்று. மழை வலுத்த மழை பொழிகின்றது; எதிர்பாராத மழை; ஓருழவன் அரிதின் முயன்று பெரிதும் பாடுபட்டு-ஆழ்நீர்க் குழாய் வழியே தண்ணீர் எடுத்துப்பாடு பட்டு-விளைவான நெற்கதிர், அடிக்கப்பட்டுக் களத்திலே கிடக்கின்றது. அடித்த பெருமழை, அப்படியே வாரிக் கொண்டு ஓடை உடைப்பொடு தள்ளிக் கொண்டு ஓடுகின்றது! விளைய வேண்டும் போது மழையில்லை! விளைந்து களத்தில் கிடக்கும்போது, வேண்டாத மழை கொள்ளை கொள்ளையாய்ப் பொழிந்து விட்டது. அவ்வுழவன் காடு மற்றொன்று; புன்செய். அதில் பருத்தி பயிரிட்டு இருக்கிறான். சாகின்ற நிலையில் இருந்த பருத்தி, பெய்த மழையால் பூவும் பிஞ்சுமாய்க் காய்த்துக் குலுங்கியது. ஒரே உழவனின் நல்வினை என்ன? அல்வினை என்ன? நெல் அழிவானேன்? பருத்தி விளைவானேன்? நெல்லுக்கும் பருத்திக் கும் வினை என்ன வினை? வெள்ளம் வெள்ளம்; பெருவெள்ளம்; பேய் வெள்ளம்; கடல் நீரெல் லாம் அள்ளிக் கொட்டிய வெள்ளம்; கடல் நீரும் உட்புகுந்த வெள்ளம்; கடற்கரையூர். ஏறிய வெள்ளம் கரை மேல் ஏறியது; ஊரைச் சீறியது; ஆடு, மாடு, கோழி, குஞ்சு ஆகிய எல்லாம் இழுத்தது; ஆண், பெண், குழந்தை பெரியர், பொய்யன் மெய்யன், வஞ்சன், திருடன், அறவன், துறவன் ஆகிய அனை வரையும் விடாமல் இழுத்தது. குடிசைகாரை, மாடம் கூடம், கோயில் குளம், பள்ளி அறச்சாலை ஆகிய எல்லாவற்றையும் அழித்து நிலமட்டம் ஆக்கியது. அதற்கென்ன எவர் வேண்டும்? எது வேண்டும்? எல்லாம் ஒன்றே! எல்லாரும் ஒன்றே. தீ ஓரிடத்தே அயர்தியால் பற்றுகிறது தீ. அது பரவத் தக்க படி காற்று வீசுகிறது! கொழுந்து விட்டு மேலே எழுகிறது. அதன் நாவு தாவித் தாவி எரிக்கிறது. எரியின் எரிவுக்கு எவர் நல்வினையர்? எவர் அல்வினையர்? அனைவருக்கும் ஒரு வினையே அது செய்யும். அணைக்கும் அளவுக்கும்-முடிந்த அளவும்-எரித்துத் தீர்க்கும். அதே பொழுதில் காற்று தெற்கே இருந்து வடக்கே தள்ளினால் வடக்குப் பக்கமெல்லாம் பாழ்! வடக்கே இருந்து காற்று தெற்குப் பக்கம் தள்ளினால், தெற்குப் பக்கமெல்லாம் பாழ்! எரிந்த பக்கத்திற்கு எதிர்ப்பக்கம் எல்லாம் நல்லினைப் பக்கமா? எரிந்த பக்கமெல்லாம் அல்வினைப்பக்கமா? பாலம் அரியலூர்ப் பாலத்தின் மேல் வண்டி வருகிறது; பாலம் சரிகிறது; வண்டி சரிகிறது; பெட்டிகள் சில கீழே வீழ்கின்றன; சில பெட்டிகள் சரியாமல் நின்றன! நின்ற பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் அறவோர்களா, நல்வினையாளர்களா? வீழ்ந்த பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் மறவோர்களா, அல்வினையாளர்களா? விண் 125 பேர்களுடன் வான ஊர்தி கிளம்புகின்றது. மேலே மேலே பறக்கின்றது. மேலேயே பொறி பழுதுபடுகின்றது; அல்லது தீப் பற்றுகின்றது. மலைமேல் மோதி விழுகின்றது ஊர்தி. அதில் இருந்த ஒருவரும் தப்பினார் அல்லர். அவர்கள் அனைவரும் ஒருமித்த தீ வினையாளர்களா? தீமைக்கு ஆட் படாமல் இறங்கிச், சேர வேண்டியவர்களைச் சேர வேண்டிய இடத்தில் இனிது சேர்த்த பிற வான ஊர்தியில் சென்றவருள் எவருமே தீவினையாளர் இலரா? நிலம் சப்பான் நாட்டிலே நிலநடுக்கம்; எரிமலைக் குழம்பு வீச்சு! அதற்கும் அந்நாட்டு மக்கள் நல்வினைக்கும் அல்வினைக்கும் தொடர்பா? ஆபிரிக்காவில் வயிரமும் தங்கமும் வெட்டிப் பார் என்னும் அளவுக்குக், கட்டி கட்டியாக எடுக்கப் படுகின்றன. அதற்கும் ஆங்கு வாழ்ந்து அல்லல்பட்டு ஆற்றாது அழும் கறுப்பு மக்க ளுக்கும், நிறவேற்றுமைக் கொடுமைப் பிறப்பாம் வெள்ளை மக்களுக்கும் ஒத்தவினைத் தொடர்பென்ன தொடர்பு? அரபு நாடுகளில் பணம் குவிகின்றது. கன்னெய் பொழி கின்றது. அதனால்! அரபு நாட்டவர்-அறவினைதான் அக் கொடைக்கு அடிப்படையா? இப்பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் இன்று (12.6.91) தினமணியில், சப்பான் நாகசாகிப் பகுதியில் உள்ள 1359 மீட்டர் உயரம் கொண்ட உன்சென் எரிமலை குமுறுவது இன்னும் நிற்கவில்லை. மலையின் கிழக்குச் சரிவில் எரிமலை கக்கிய சாம்பல் படிந்திருப்பதைப் படத்தில் காணலாம் என்று படமும் செய்தியும் வெளியாகியுள்ளன (பக்.1). அப்பகுதி மக்களே அன்றி ஆயச் சென்றவர்களும் அழிந்து பட்டமை அதற்கு முன்னே வந்த செய்திகள். அத் தினமணி பத்தாம் பக்கத்தில் பாகித்தானில் அனற் காற்று; 418 பேர் பலி என்னும் செய்தி உள்ளது. இவை யெல்லாம் செய்வினைத் தொடர்பினவா! 1961 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏறத்தாழ 70000 சதுரக் கல் பரப் புள்ள நிலப்பகுதி பெருஞ்சேதத்திற்கு ஆட்பட்டது. அப்பரப்பு உயிரிகளுக்கெல்லாம் ஒரு மொத்த வினையா? கேட்டில் கேடு இயற்கையால் நன்றாகவும் தீதாகவும் ஆகும் ஊழை, ஊழ் வினை என்றும் வினைப் பயன் என்றும் தலைவிதி என்றும் சொல்லிச் சொல்லி மக்களைச் சாய்க்கடைப் புழுவாகச் செய்து, இன்று வரையிலும் அதற்குத் தீர்வு காணவும் எண்ணாத, எண்ணுவதும் பாவம் என்கிற வகையில் செய்த மூளைச் சலவைச் செயல் மறக்கக் கூடியது அன்று; மறுக்கக் கூடியதும் அன்று! பொருள் ஊழை உலகத்தியற்கை என்றவர் வள்ளுவர். இருவேறு உலகத்து இயற்கை என்றவரும் வள்ளுவர். மழையைக் காட்டிக், கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை என்றவரும் வள்ளுவர். மாந்தர் மயக்கம் நீங்கி நல்லறிவும் நல்லாற்றலும் பெற வேண்டும் என்றே ஊழ் என்பதோர் அதிகாரத்தை வைத்தவரும் வள்ளுவர்! ஊழ் வைப்பு ஊழ் என்பது அறநூலுக்கு இன்றியமையாததா? அன் புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் போல இல் வாழ்வுக்கோ, கல்வி கேள்வி அமைச்சு ஒற்று என்றாற் போல அரசு வாழ்வுக்கோ, ஊழ் வேண்டிற்று ஒன்றா? இல்லையே! அஃது அறநெறிப் பாற்பட்ட ஒன்று அன்றே. மாந்தரின் இயற்கை கடந்த இயற்கை அல்லவோ அது? அறத்துப்பால் இறை வணக்கத்தை அடுத்து வான் சிறப்பு வைத்த வள்ளுவர். அப் பாலின் இறுதியில் ஊழ் வைத்த வைப்பு முறை எண்ணி எண்ணி ஊற்றம் பெறத்தக்க ஒன்றல்லவோ! இறைமை ஊழியற்கையை இறையோடு தொடர்பு படுத்துவதும், அதனை ஊழ்வினையாக்கி, உயிரிலா அதனை இயக்குவது இறையென்று மயக்குவதும். இறைமைக்கே ஏலாப் பழியாம். காக்கும் இறை, கூண்டோடு பூண்டோடு அற்றுப் போக அழிக்குமா? பெற்ற அன்னை தன் மூளை நிலை சரியாக இருப்பாளே யானால், தன் பிள்ளைக்குச் சிறுதுயர் வரவும் பொறாள். உள்ள பிள்ளைகளிலும்கூட வலுவற்ற குறையுற்ற பிள்ளை எதுவோ அதன் மீதே சற்றே கூடுதலான வாஞ்சையும் வைப்பாள். தான் பெற்ற பிள்ளையைத் தாய் தன் நிலைமாறாமல் இருந்தால், ஒருநாளும் கொல்ல மாட்டாள்-துயரூட்ட மாட்டாள் என்பதை மெய்யாகக் காணும் நாம் முழுமுதல் இயற்கையின் இயக்க நிலையால் ஏற்படும் நலம் பொலங்களை-தடுத்தற்கரிய நேர்ச்சி களை-இறையின்பால் படுத்தி அதனைச் சிறுமைக்கு ஆளாக்கு வது அறக் கொடுமையானதாம்! உலகியற்கை தோன்றலும், அழிதலும் உலகியற்கை; தளிர்த்தலும், உதிர் தலும் உலகியற்கை; விழுதலும், எழுதலும் உலகியற்கை; தீ மேலே கிளர்தலும், நீர் கீழே விழுதலும் உலகியற்கை; கோள்கள் திரிதலும், காற்றுச் சுழல்தலும், வெயில் முகில் உருவாக்கலும், முகில் மழை பொழிதலும், மழை பெருகலும், கடலில் சேரலும், கடல்நீர் கரித்தலும், ஆவிநீர் கரிப்பறுதலும்-எல்லாம், எல்லாம் உலகியற்கை! இவ்வியற்கையே ஊழ்! இதன் செயற்பாடு அனை வருக்கும், அனைத்துப் பொழுதுகளிலும் நன்மை தருவதும் அன்று; தீமை தருவதும் அன்று. ஒருவர்க்கே நன்மையும் ஆகலாம்; தீமையும் ஆகலாம்; ஒரு பகுதி நன்மையும் ஒரு பகுதி தீமையும் ஆகலாம்; ஒரு மொத்த அழிவும் ஆகலாம்; ஒரு மொத்த ஆக்கமும் ஆகலாம்; ஓரோர் பகுதிக்கு ஆக்கமும், அழிவும் மாறி மாறியும் ஆகலாம்! வெற்றி தோல்வி கடலுக்குள் மீன்பிடிக்கக் கட்டுமரமேறிப் போகின்றான். புயல் உருவாக்கம் காண்கிறான். மீள நினைக்கு முன் புயலுக்குள் சிக்கி மாளக் கொண்டு போகப் படுகிறான்! அவருள் ஒருவன், உடைந்த கட்டை கையில் வாய்க்க எப்படியோ பற்றிக் கொண்டு கரையேறுகிறான். முன்னவனை ஊழ் வெற்றி கொண்டு விட்டது. பின்னவன் ஊழை வெற்றி கொண்டு விட்டான்! மேலே பறக்க மாந்தனுக்கு உடலமைப்பு இல்லை. அவன் பறவை போல் பறக்கிறான். அது ஊழின் வெற்றியே! ஆனால் அவனே முகில் மூட்டத்துள் பட்டுத் திசை மாறி மலை மேல் மோதி வீழ்கிறான். அங்கே ஊழ் வெற்றி பெற்று விட்டது! ஊழ் வெல்லும் நிலையும் உண்டு. ஊழை வெல்லும் நிலையும் உண்டு! உலகியற்கையை உன்னிப்பாகக் காண்பார், உண்மை உணர்வார்! விரிப்பு விளக்கம் கறைபடாச் சுவரில் வண்ணவோவியம் தீட்டின் பளிச் செனத் தோன்றும். ஆனால், காலம் காலமாகக் கறையாக்கி எண்ணெய்ப் பிசிறும் ஆக்கி வைக்கப்பட்ட சுவரில், வண்ண ஓவியம் எத்தகு வனப்பாகத் தீட்டினாலும் எடுபடாது! முதற்கண் அச் செறி அழுக்கை அறவே போக்கும் முதற் கட்டப்பணியை முடித்தே, வரை பணியைத் தொடங்க முடியும். அவ்வாறே காலம் காலமாகக் கறையாக்கப்பட்டு வந்துள்ள ஊழ் வினைப் பசையைப் போக்கி வள்ளுவ ஊழை வகுத்துக் காட்ட இத் துணை முதற்கட்டப் பணிகள் வேண்டியுள்ளனவாம். இனி வள்ளுவர் காட்டியுள்ள ஊழைப் பற்றிக் காணலாம். ஊழ்த்தல் வள்ளுவர் ஊழ்த்தும் என்னும் சொல்லைச் சொல் வன்மையில் பயன்படுத்துகிறார். மணமுடைய பூக்கள் முகையாக இருக்கும் போதே அவற்றுக்கு அம்முகையுள்ளும் மணமுண்டு என்பதைக் காமத்துப்பால் குறிப்பறிவுறுத்தலில், முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு (1274) என உவமைப்படுத்துகிறார். அது மணப்பூ. சொல் வன்மையில் சுட்டும் பூவோ, மணமிலாப்பூ. கற்றிருந்தும் கற்றதைப் பிறர் உணர விரித்துரைக்க மாட்டாதான், முகை விரிந்தும் மணவாத பூப்போல்வான் என்கிறார். அது, இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் (650) என்பது. இங்கே வந்துள்ள ஊழ்த்தலுக்கு மலர்தல் பொருள் உண்மை அறியத் தக்கது. ஊழி ஊழ் என்பதுடன் தொடர்புடைய ஊழி என்னும் சொல்லையும் வள்ளுவர் ஓரிடத்துப் பயன்படுத்தியுள்ளார். ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் (989) என்பது அது. அதற்குப் பரிமேலழகர் சால்புடைமை ஆகிய கடற்குக் கரை என்று சொல்லப் படுவார், ஏனைக் கடலும் கரையுள் நில்லாமல் காலந் திரிந்தாலும் தாம் திரியார் என உரை வரைகின்றார். ஆதலால், ஊழி என்பதற்குக் காலப் பொருள் தருகின்றார். இவ்வூழியைப் பரிபாடல் நன்கு கூறுகின்றது. கருவளர் வானத் திசையில் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும், உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும், செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும், அவையிற் றுண்முறை வெள்ள மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் என விரிகின்றது (2.:5-.12). ஒலிவடிவான வெளி என்னும் ஒன்றாம் ஊழியும், அவ்வெளியில் இருந்த வளி என்னும் ஊழியும், அதன் பின் நீர், தீ, நிலம் எனத் தோன்றிய ஊழிகளும் என ஐவகை ஊழிகளை இப்பகுதி கூறுகின்றது. இவ்வூழி, இயற்கை வழிப் படுதலை அறிய இப்பகுதி உதவும். முப்பொருள் தொல்காப்பியனார் பொருள்களை முப்பாற் படுத்தினார். அவை, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பன. இம் முப்பொருள்களுள் முதற்பொருளே அடிப்படைப் பொருளாம். அது நிலமும் பொழுதும் (இடமும் காலமும்) என இருவகைப்படும். கருப்பொருள் என்பது முதற்பொருள் வழி யாகப் பெறும் இயற்கைப் பொருள்களும், அவற்றைக் கொண்டு மாந்தர் ஆக்கிக் கொள்ளும் பொருள்களுமாம். இனி, உரிப் பொருளோ எனின் ஒழுக்கப் பொருளாகும். இம் முப்பொருள் விளக்கமும் அறிய வாய்க்கும் நூல் திருக்குறள் ஆகும். இவற்றுள் முதற் பொருள் லிளக்கமாக வான்சிறப்பும், ஊழும், காலமறிதல், இடமறிதல் என்பனவும் அதிகார அள வால் செறிகின்றன. பிறபிற இடங்களிலும் இம் முதற் பொருள் விளக்கம் பெறுகின்றமை அறியலாம். இம் முதற் பொருள்-கால இட-வழியாக ஏற்படும் மாற்றங்களே ஊழாகும். ஆதலால், அறிவறிந்து ஆளவல்ல அமைச்சனுக்கும் ஓர் ஆணையிடு கின்றார் வள்ளுவர்: செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து இயற்கை அறிந்து செயல் என்பது அது (637). ஐம்பூதங்கள் ஐம்பூதங்களின் கலப்பால் அமைந்ததே உலகம் என்பதை இற்றை அறிவியலாரும் கூறுகின்றனர். ஆசிரியர் தொல்காப்பியனார், நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்றார் (மரபு. 90). அண்டத்திற் குரியவை பிண்டத்திற்கும் உண்டு என்பது பழமொழி. ஐம்பூதங்களும் கலந்திருத்தல் உடலுள்ளும் உண்டு என்பதை, வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்பதன் வழியாக வள்ளுவர் தெளிவிப்பார் (171) இவ்வைம்பூத இயல்பை அறிந்தோரிடத்தேதான் உலகியக்கம் அடங்கியுள்ளது என்பதை, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (27) என்பதன் வழியாகவும், அத்தகையர் வழி நிற்பாரே நீடு வாழ்வார் என்பதை, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (6) என்பதன் வழியாகவும் கூறினார். வெளி, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பூதங்களும் முறையே, ஒலி, ஊறு, ஒளி, சுவை, மணம் என்பவற்றைப் படிமான வளர்ச்சியில் பெறுவன என்பது அறியத் தகும். வெளி-ஒலி வளி-ஒலி, ஊறு தீ-ஒலி, ஊறு, ஒளி நீர்-ஒலி, ஊறு, ஒளி, சுவை நிலம்-ஒலி, ஊறு, ஒளி, சுவை, மணம் எனக்காண்க. ஐந்தவித்தல்-ஐந்தையும் அழித்தல் அன்று. அவித்தல்-பக்குவப் படுத்தல் பொருளது. அவித்துண்ணல், பாகம் செய்தல் எனப்படுவது அறிக. ஐயுணர்வு இவற்றை அறிவதற்காகவே ஐம்பொறிகள் அமைந்துள. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன, இவ்வைம் பொறிகளின் வழியாக ஐம்புலப்பாடுகள் உண்டாகும். அவை கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்து உற்றறிதல் என்பன. அவையே ஐயறிவுகளாம். அவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்பன, இவ் வையறிவளவில் நிற்றல் விலங்கியல். அவற்றுக்கு மேலறி வாம் ஆறாம் அறிவு பெறுதலே மாந்தர் இயலாம். அவ்வறிவே மெய்யறிதல் (அ) மெய்யுணர்தல்! ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு என்பது வள்ளுவ மெய்யுணர்வு (354). மெய்யுணர்வு மெய்யுணர்வு பெற்றார் உலகியற்கை அறிவார். அவர், மருள் நீங்கிய மாசறு காட்சியவர் (352). அவர், செம்பொருள் கண்டவர் (358) சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுபவர் (359) மலர்தலும் கூம்பலும் இல்லா அறிவினர் (425). ஆதலால் அவர்தம் சிறப்பியலை, ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து (353) என்று தெளிவித்தார் தெய்வப்புலவர். ஏனெனில், ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (702) என்றவர் அவர் ஆகலான். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையகத்தினும் வானகம் நணியதாகுமா? நணியதாகக் கண்டு கூற வல்லரா? இதற்குப் புறநானூறு. மறுமொழி தெளிவாகப் புகல்கின்றது:- செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே (புறம். 30) என்பது. இதனைப் பாடியவர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் முதுகண்ணன் என்பது பேரறிஞர் என்பதாம். இதன் பழையவுரை: செஞ்ஞாயிற்றினது வீசியும். அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லபட்ட இவற்றை ஆண்டு ஆண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர் என்பது. ஐம்பூதத்து இயற்கையும் அவற்றின் பண்பு கெடாமல் அகத்தேயும் இருப்பதை, மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இயதீயும் தீமுரணியை நீரும் என்றாங்கு, ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய் என்பதால் அப் புறநானூறே காட்டும் (2). இதனைப் பாடியவர் முரஞ்சியூர் முடி நாகரையர் என்பார். இதன் பழைய உரை: அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஒங்கிய ஆகாய மும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயொடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பட்ட பெரிய பூதத்தினது தன்மை போலப் பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்கும் அளவல்ல ஆயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற்கு ஏற்ற மனவலியும் சதுரங்க வலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழி பட்டால் அவர்க்குச் செய்யும் அருளும் உடையோய் என்பது. தொகுப்பு இங்குக் கூறியவற்றால் ஐம்பூதத்தால் அமைந்த உலகும், அவ்வுலகுபோல் ஐம்பூதக் கூட்டால் அமைந்த உடலும், அவ்வைம்பூத இயல்பொடு பொருந்தி அறிய ஐம்பொறிகளும், அவ்வைம் பொறிகளால் அமைந்த ஐம்புலங்களும், அவ்வைம் புலங்களின் வழியால் அமையும் மெய்யுணர்வும் ஆகியனவும் அம்மெய்யுணர்வாளர் உலகத்து இயற்கையை உள்ளவாறு அறிவோர் என்பதும், அவ்வுலகியற்கையே ஊழ் என்பதும், அது ஆக்கமும் கேடுமாம் இருமைத் தன்மை உடையது என்பதும், அதனை வெல்லும் நிலையும் அது வெல்லும் நிலையும் காணக் கூடுவனவே என்பதும், உலகியற்கையாகிய ஊழறிந்தவர் வழியே உலகியல் பாதுகாப்பு உண்டு என்பதும் அறியலாம். வானிலை காலையும், மாலையும், கடும்பகலும், நள்ளிரவும் கூட வெப்பும், வெப்பக்காற்றும், மழையும், மழைக்குறியும், புயலும் மூட்டமும், அலையெழுச்சியும், நிலநடுக்கவும் இன்னவாம் அறிவிப்புகளை வானொலிகளும், இதழ்களும், தொலைக் காட்சிகளும் ஓயாமல் ஒழியாமல் பரப்புவானேன்? அஃது ஊழியல் உரைத்து உய்யக் கொள்ளும் கொள்கையேயாம். தலைவிதி அதுவே என்னின் இவர் ஏன் இவ்வெட்டி வேலை செய்கிறார்? பயனில் சொல் ஒருவரிடம் கூறுவதும் பதர்த்தனம் என்றால், கோடி கோடிப் பேர்க்கு வேலை கெடக் கூறுவது எத்தகு பதர்த்தனம்! திருவள்ளுவர் கண்ட ஊழ் அதிகாரம், பழந்தமிழ்ப் பொருள் மரபு மாறாமல் தான் அமைந்துள்ளதா? இயற்கை நிகழ்ச்சி, முறைமை என்னும் வகைகளில் தான் செல்கின்றதா? ஆம்! குறளையும் பொருளையும் அறிந்தால் தெளிவாகிவிடுமே; ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி வளஞ்சேரத்தக்க ஆக்க இயற்கை உண்டாயின், உறுதிப்பாடு உண்டாகும்; அதனைப் போக்கும் இயற்கை உண்டாயின், சோம்பல் உண்டாகும். பேதைப் படுக்கும் இழவூள்; அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை இழக்கச் செய்யும் இயற்கை உண்டாயின் அறிவில்லாமை உண்டாகும். ஆக்கஞ் செய்யும் இயற்கை உண்டாயின் விரிந்த அறிவு உண்டாகும். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் நுட்பமான நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றுத் தெளிந் தாலும் அவன் பிறந்த பிறப்பின் முறைப்படி உண்டாகிய அறிவே ஓரொருகால் மிகுந்து தோன்றும். இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு உலகத்து இயற்கை ஆக்கமும், கேடும் என இருவேறு வகைப்பட்டதாகும். ஆதலால் திருவைப் பெற்றிருத்தல் என்பது வேறு; தெளிவைப் பெற்றிருத்தல் என்பது வேறு. ஏனெனில் இரண்டன் ஆக்க வழிகளும் வேறு வேறானவை. நல்லவை எல்லாம் தீயவாம்; தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு செல்வம் சேர்த்தற்கு நாம் நல்லவை என்று எண்ணுவன தீய இயற்கையால் தீயதாகி விடுவதும் உண்டு. தீயவை என்று நாம் கருதுவன நல்ல இயற்கையால் நன்மையாகி விடுவதும் உண்டு. பரியினும் ஆகாவாம் பாவலல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம இயற்கை ஆக்கமாக இருக்குமானால் நமக்குரியவற்றை நாம் வேண்டா எனத் தள்ளினாலும் அது நம்மை விட்டுப் போய் விடாது. அது கேடாக இருக்குமானால் நாம் அது வேண்டுமென எப்படி வருந்திக் காத்தாலும் நம்மை விட்டுப் போகாமல் இராது. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது கோடியளவில் ஒருவர் தேடி வைத்திருந்தாலும் அதனை நுகரத்தக்க-துய்க்கத் தக்க-இயற்கை உடல்நிலை துய்ப்பு நிலை என்பவை முறையே அமைந்திருந்தால் அல்லாமல் துய்க்க முடியாது. செல்வத்தைத் திரு என்றும் சோம்பலை முகடி என்றும், காலத்தைக் கூற்று என்றும் கூறுவது போல் ஊழ் வகுத்தான் எனப்பட்டதுதாம். துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் அடைதற்கு உரியவை எனப்பட்டவையும் கிடைக்க விடாமல் உலகத்து இயற்கை ஒதுக்கி விடுமானால்தான், அதனைத் துய்க்கும் வாய்ப்பு இல்லாதார் பற்றற்ற நிலையைப் பற்றுவர் போலும். (துய்த்தற்கு வாய்ப்புகள் அனைத்தும் இருக்கும்போது துய்க்காமல் பற்றறுதல் அல்லவோ பற்றறுதல்! இவர்நிலை என்னே!) நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவ தெவன்? இயற்கை ஆக்கத்தால் நன்மை விளையக் கண்டு நலப்பேறு என மகிழ்பவர், இவ்வியற்கையின் கேட்டால் நன்மையல்லாமை வரும்போது துன்பப்படுவது என்ன அறிவாகுமோ? அறியோம்! ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் இயற்கையின் நேர்ச்சியினும் மிக வலியவை என்று சொல்லத் தக்கவை எவை உள்ளன? அதனை எதிரிட்டுத் தடுக்க ஒன்று நினைக்கு முன்னரே அவ்வியற்கை முன்னே வந்து நின்று விடும். நாடும் ஊழும் இவை ஊழதிகாரக் குறளும் பொருளும். ஊழின் ஆக்கமும் அழிவும், நலமும், பொலமும் அறிந்து கொண்டால் இயன்ற வகையால் நன்மையை மிகக் கொள்ளலாம்; தீமையில் இருந்து தப்பலாம். அதனை முற்கூட்டியே அறிதற்கு வல்ல திறவோர் மெய்யுணர்வாளர். அவர் விருப்பு வெறுப்பு என்பவற்றைத் தமக்கெனக் கொள்ளாராய் உலக நலங்கருதிய உயர்ந்தோர். உண்மை உணர்வால் உரம் பெற்றோர் ஆதலால், அவர் வழிகாட்டுதல், வளரும் இல்லறத்தார்க்கும் ஆளும் அரசுக்கும் வேண்டும். அதிலும் குடும்ப அளவில் நிற்கும் இல்லறத்தாரினும் அவர்க்குக் காவற்கடமை பூண்ட அரசுக்கு உலகியற்கையும் அதன் ஆக்கக் கேட்டு நிலையும் அறிதல் இல்லையேல் காவற் கடன் செவ்விதின் செய்ய இயலாது. காவல் என்னும் ஊர்தியை இயக்கும் ஆட்சியன் தெளிவும் தேர்ச்சியும் உள்ளவனாயின் ஊறுபாடு இல்லாமல் அவ்வூர்தி உரிய வழியில் செல்லும். அவன் அவை இல்லாதவன் ஆயின் அவ்வூர்தி மாறான சேற்றில் அழுந்தி மிகப்பல துன்பங் களை மேலும் மேலும் உண்டாக்கும் எனப் புறநானூற்று ஆட்சியாளன் ஒருவனே இதனைத் தெளிவிக்கிறான். அவன் தொண்டைமான் இளந்திரையன் என்பான். வள்ளுவர், ஆட்சியாளனுக்கு இவ்வூழறிவு இன்றியமை யாதது எனக்கண்டதால் அறத்துப்பால் இறுதியில் பொருட்பால் தொடக்கத்தின் முன் வைத்தார். ஊழறிய வல்லார் மெய்யுணர்வு மிக்கோர் ஆகலின் நிலையாமை, துறவு மெய்யுணர்வு, அவா வறுத்தல், ஊழ் என அடைவு செய்தார். அதனைத் தனிப்படுத்தி ஊழியல் என ஓரியல் ஆக்கல் அவர் முறைக்கு ஒட்டாததாம். இனிப்பொருட்பாலிலே ஆட்சிக்கு அச்சாணியாம் அமைச்சன் பற்றிக் கூறும் வள்ளுவர், அவன் செயற்கை விதிகளை எத்தனை எத்தனைதான் அறிந்தவனாக இருப்பினும், இயற்கை நிலை களையும் மிக நன்றாக அறிந்தவனாக இருத்தல் வேண்டும் என்று சுட்டியதை முன்னார்க் கூறப்பட்டது. அது, செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) என்பது. ஊழறிவின் தேவை மாந்தர் வாழ்வின் நலமும் கேடும், இயற்கையின் நலத்திலும் கேட்டிலும் பொருந்தி இருப்பதால், ஆக்கமாக்கிக் கொள்ளுதல், கேடு தவிர்த்தல் என்பவற்றுடன் தற்காப்புக்கு வேண்டும் விழிப்புணர்ச்சி கொண்டிருக்க இவ்வூழறிதல் வேண்டுமாம். என்னதான் இருந்தாலும் ஊழில் வலியதே இல்லையே; அதனை வெல்ல எதுவும் கூடாதே என்ற அளவில் அமைந்தால், அவ்வூழ்வீழறிவு மாந்தர் ஊக்கத்தைக் குறைத்துவிடுமே என்று தோன்றும். அவ்வாறு தோன்றுதலும் கூடாது என்றே ஆள் வினையுடைமை என்பதோர் அதிகாரம் வைத்தார். ஆள் ஆள்வினை மாந்தர் வயிற்றுப் பிறந்தார் எவரையும் ஆள் என்பதே வழக்கு. சிறுபருவத்திலும் சிற்றாள் என்பதே பெயர். வளர்ந்தால், பெரிய ஆள் (பெரும் ஆள் பெருமாள்) ஆணும் ஆளே! பெண்ணும் ஆளே! எத்தனை ஆள் வேலை செய்கிறார்கள்? என்பதில் ஆள் இருபாலுரிமைப் பட்டமை புலப்படும். நல்லாண் என்பது நல்ல ஆணையும், நல்லாள் எனப் பெண்ணையும் குறிக்கும். அடுத்தூன்றும் நல்லாள் என்பது வள்ளுவ ஆட்சி (1030) ஆள் என்பதன் அடையாளம் ஆள்வினை கொண்டு இருத்தல். ஆள்-ஆட்சி ஆள்-ஆண்-ஆண்மை. பெண்டிர் எனினும் ஆள்வினை மிக்கார் ஆடவரே; ஆடு-வெற்றி. ஆடவர், வெற்றியாளர், ஆதலால் ஆள் என்பதன் சான்றே ஆள்வினை உடைமையாகும். அஃதிலார் மாள்வினை த் தவிர்த்தல் தீராது. வாழநூல் செய்த வள்ளுவர் இடுக்கண் அழியாமை கண்டார். ஆள்வினை யுடைமையும் கண்டார். இடுக்கண் வருங்கால் நகுக என்றவர் வள்ளுவர். அதனைப் போல அவ்விடுக்கண்மேல் ஏறி, வெற்றி பெற ஊர வைப்பது ஒன்று இல்லை என்றார். (621) இடும்பைக்கு இடும்பை ஆக்குவர்; இடும்பைக்கு இடும்பை படாதவர் என்றார் (623) வெள்ளத்தைப்போலப் பெருக்கெடுத்து வந்தாலும் (நீந்த வல்லான் நீந்திக் கடப்பது போல) அறிவுடையவன் ஊக்கத்துடன் எண்ணிய அளவில் அது கெடும் என்று இயற்கைப் பெருக்கைச் சுட்டி உரைத்தார் (621) காளை, எவ்வளவு பாரத்தை எத்தகைய இடரான வழியிலும் வண்டியோடு கொண்டு சென்று, பேராற்றல் காட்டுகிறதோ, அதுபோல் ஊக்கமுடையான் எதிரீடுகளைத் தகர்த்து வெல்வான் என்றார் (624) உடையர் எனப்படுவது ஊக்கம் (591) உள்ளம் உடைமை உடைமை (592) உரம் ஒருவற்கு உள்ளவெறுக்கை (600) உள்ளத் தனையது உயர்வு (595) என ஊக்க மேம்பாட்டை ஊக்கி உரைத்தார். இவ்வளவு சொல்லிய பின். இவற்றின் உச்சமாக ஆள்வினை உடைமையை வைத்து ஊழை வெற்றி கொள்க என வாழ்த்தினார். ஒரு குறளில் அன்று மூன்று குறள்களில். பொறி இன்மை பிறவி நிலையிலோ பின்னிலையிலோ உறுப்புக் குறை உண்டாதல் உண்டு. அவை வழிவழிக் கேடு, வயிற்றில் உள்ள போது உண்டாகிய குறை, வந்தபின் உண்டாகிய கேடு என்ப வற்றால் நேர்ந்த நேர்ச்சிகள். இந்நேர்ச்சிகளால் அப்பிறவி, வசைக்கோ பழிக்கோ உரியது ஆகாது. அவ்வாறு வசையும் பழியும் சொல்ல நினைவாகும் அதன் இயற்கைக் குறைகண்டு இரங்காக் கல்லுள்ளப் பாறையர்! பழிப்பவரோ அப்பாறையினும் வலிய பட்டடைக் கல்லர்! அவ்வுறுப்புக் குறை அவர்க்குப் பழியாகாது. அவர் தம் உடற்குறை கொண்டு ஊக்கமற்றவராய்ச் சிறந்த முயற்சிகளில் ஈடுபடாது இருத்தலே பழியாகும் என்றார் வள்ளுவர். அது, பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பது (618). காட்சி நான் கண்ணாரக் கண்ட காட்சி. ஓரிளம் பெண். தோன் மூட்டோடு இருகையும் இல்லை. அவள் தன் கால்களையே கைகளாக்கிக் கொண்டே வினைத்திறம், அம்மவோ! வியத் தொறும், வியத்தொறும் வியப்பாம். தன் காலாம் கையால், மண்ணெண்ணெய் அடுப்பை எடுத்து வைத்து, ஒருகாலில் தீப்பெட்டியும் ஒரு காலில் தீக்குச்சியும் கொண்டு தீப்பற்ற வைத்தாள்! அதன் மேல் பால்வட்டை வைத்து மூடினாள். பால் சுட்டதும் இறக்கி வட்டைக்கும், குவளைக்கும் மாற்றி மாற்றி ஆற்றினாள். தன் வாயில் தன்காற் கையால் ஊற்றிப் பருகினாள்! தன் கூந்தலைப் பிரித்தாள்; எண்ணெய் தேய்த்தாள்; வகிடு எடுத்தாள்; பின்னினாள்; பூ முடித்தாள்; பொடி பூசினாள்; பொட்டு இட்டாள்; ஒரு காலில் கண்ணாடி; ஒரு காலில் சீப்பு-பூ-பொடி-பொட்டு! ஊசியை எடுத்தாள்; நூலை எடுத்தாள்; ஊசியில் நூலைக் கோத்தாள்; துணியை எடுத்துத் தைத்தாள்! கை இல்லாளா அவள்? கை இல்லாத ஊழை வென்றாளா இல்லையா? இவ்வாண்டு உயர்பள்ளித் தேர்வு எழுதிய ஒரு பிள்ளை. கை இல்லாள்; காலால் எழுதினாள்; காலால் எழுதுவதால் தேர்வுக்குரிய பொழுதில் அரை மணி கூட்டித் தருவதாகத் தேர்வாளர் கூறினர். வேண்டா! ïu©liu kÂ¥ bghGnj nghJ«! என்றாள்! அவ்வாறே சிறப்ப எழுதி முடித்தாள்! இத்தகு சான்றுகளை அடுக்கவேண்டா. இதனைப் படிப் பாரே எண்ணிப் பார்ப்பின் பலப்பல அடுக்கடுக்காக அலையென வரிசையிடுமே. தெய்வம் இயற்கைக்குத் தெய்வம் என்பது ஒருபெயர். ஆதலால் ஊழுக்கும் அப்பெயர் உண்டு. திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் பூம்புகார் போற்றுதும் என்றவை ஊழியற்கை வழிபாடே! ஏனெனில், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற அவரே, ஊழை வெற்றி கொண்டவர் அல்லரோ! ஊழால் அல்லது இயற்கை நேர்ச்சியால் வெற்றி கொள்ள முடியாத ஒன்று இருக்குமாயினும் விடாது முயல்க. அம் முயற்சிக்குப் பயன் இல்லாமல் போகாது. பெரிய பயன் இல்லாமல் போகாது. பெரிய பயன் இல்லை எனினும் உரிய பயன் கிடைத்தே தீரும் என்னும் முறையால், தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்றார் (619). ஊழை வெல்லல் கூலி என்ன கூலி? ஊழையும் வெற்றி கொள்ள முடியும் உலையாதே! அசையாதே? தளராதே! ஊக்கமாகச் செயலாற்று! மேலே, மேலே எழுச்சி கொண்டு ஏறு நடையிட்டுச் செயலாற்று! ஊழின் பிடரைப் பிடித்து ஏறி, அதன் முதுகில் அமர்ந்து வெற்றி காணவும் முடியும் என்றார் (620) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்பது அது. உரோசாச் செடியின் (நிலமுளரி) இயற்கை, முள்ளோடு இருத்தல். முள்ளில்லா உரோசாவை உருவாக்கினார் உலூதர்பர் பாங்கு என்பார். நாற்றமில்லா வெங்காயம் உண்டா? அவர் ஆக்கினார். இந்நாளில் விதையில்லா முந்திரிப்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் காண்கிறோமே! இவற்றின் இயற்கை விதையோடு கூடியது தானே! காழில் கனி என்ற வள்ளுவத்தை மெய்ப்பிக் கிறதே அறிவியல். இது ஊழின் வெற்றிதானே! மாந்தன் பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு மானால் இறைவனே சிறகுகளைப் படைத்திருக்க மாட்டானா? என்று தடுப்பார் இருக்கவும், அரும்பெரும் பாடுபட்டு அயரா முயற்சியால் பறந்தனரே இரைட்டு உடன் பிறந்தார்! அவர் கண்டது ஊழின் வெற்றி தானே! ஊழை ஊழ்வினை யாக்கிய பாழ் வினை, கொடுமை யினும் கொடுமை. வாழ்வினை நாடுவார், அத்தாழ்வினை ஒழித்தற்கு முந்துவாராக! உலகியற்கை அறிந்து உய்வாராக! தலைவினை என்பதைத் தட்டிச் சரளைக் கல்லெனப் போட்டுச் சீரிய சாலையமைத்துச் செவ்விதில் நடப்பாராக.  இணைப்பு ஊழ் என்பதற்குப் பழநூல்களின் வழியே அறிய வரும் பொருள்கள்: முறைமை ஊழ்மலர் ஒழிமுகை-முறைப்பட மலர்தலை ஒழிந்தமுகை -மலைபடு 130 ஊழின் உருமிசை-முறையே இடிமுழக்கம்-நற் 364 ஊழ்மாறு பெயர-முறை முறையாக ஒன்றற்கு ஒன்று மாறுபட -புறம் 125 உருகெழுதாயம் ஊழின் எய்தி-அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று -பட்டினப் 227 பல்லூழ்மின்னி-பன்முறைமின்னி -அகம். 175 ஊழ்செய்து இரவும் பகலும் போல்வேறாகி-இரவும் பகலும் போலே முறைமை செய்து வேறாய் -கலி. 223 ஊழிறந்து-முறைமையைக் கடந்து -மலைபடு. 263 கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி-கிளியோட்டும் முறைமையினை யுடையவற்றை முறையே முறையே வாங்கி -குறிஞ்சி. 44 உந்துவளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்-காற்றுத் தோன்றிய முறை முறையாகிய ஊழிகளும் -பரி. 2 ஊழல் என்பது முறைகேடு என்னும் பொருளில் வழங்கும் நாட்டு வழக்கை அறிக. மலர்தல் ஊழுறுமலர் நன்கு மலர்ந்த மலர் -அகம். 398 ஊழ்கழி பன்மலர்-மலர்ந்து காம்பினின்று நீங்கின பலபூ -ஐங்குறு. 368 கொம்புசேர் கொடி இணரூழ்த்த-பூங்கொத்துகளை மலரச் செய்தன. -குறுந். 66 ஈங்கை செவ்வரும்பு ஊழ்த்த-மலர்ந்த -குறுந். 110 அலர்தல் அரும்பு முகையாய், முகை மொக்காய், மொக்கு மலராய், மலர் அலராய் வளர்நிலை அறிக. முதிரிணர் ஊழ்கொண்ட - முதிர்ந்த கொத்துக்கள் அலர்தல் கொண்ட. -கலி. 44 ஊழிணர்-அலர்ந்த இணர். -பரி. 19 நனை ஊழ்த்த செருத்தி-அரும்புகள் அலர்ந்த செருந்தி -கலி. 16 முதிர்தல் ஊழ்ப்படு முதுகாய்-மிக முதிர்ந்த காய். -குறுந். 68 ஊழுறு தீங்கனி-முதிர்ச்சியுற்ற இனியகனி. -அகம். 1 ஊழ்கழி பன்மலர்-முதிர்ந்து கழியும் பலமலர். -அகம். 202 துணர்க்காய்க் கொன்றை குழற்பழம் ஊழ்த்தன- முதிர்ந்தன. -ஐங்குறு. 458 முற்றல் ஊழுறு விளைநெற்று-முறையாக முற்றி விளைந்த நெற்று. -அகம். 115. மராஅத்து ஊழ்மலர்-கடம்பின் முற்றிய மலர் -அகம். 199 பயறுகாய் ஊழ்ப்ப-பயற்றுக் காய்கள் முற்ற. -அகம். 339 ஊழுற்று-முற்றுதலுற்று -மலை. 133 உதிர்தல் மென் கொம்பு ஊழ்த்த-மெல்லிய கொம்புகள் உதிர்த்த. -குறுந். 138. அலர் அரும்பு ஊழ்ப்பவும்-அலராகிய மலர்களைச் சொரியவும் -அகம். 273 மின்னீன்ற விளங்கிணர் ஊழா-மின்போலும் இணர் உதிராத. -பரி. 8 செவ்வியழிதல் துணரியது கொளாவாகிப் பழமூழ்த்து-செவ்வியழிந்து -புறம். 381 நீணிழற் றளிர்போல நிறனூழ்த்த-நீண்ட நிழலில் நின்ற தளிர்போலே வெளுத்த -கலி. 20 ஊழுறுபூ-மலர்ந்து கழியும்பூ. -நற். 326. பொருந்த, ஏற்ப என்னும் பொருளில் ஊழ் வருதல் பரி பாடல் வழியாக அறியலாம். ஊழுற முரசின் ஒலி செய்வோரும்-(தாளத்திற்கு) ஏற்ப முரசின் ஒலியை எழுப்புவோரும். -பரி. 19 வாளி புரள்பவை போலும் துடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவன்கண்-சீர்க்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வன போலும் -பரி. 21  10. குறளாயத் திருமண முறையும் விளக்கமும் 1. மணமக்களை ஒருங்கு அமரச் செய்தல் புத்துடை அணிந்து, மாலையுடன் மாப்பிள்ளையும் பெண்ணும் மணமேடைக்கு வந்து, மங்கல விழாவுக்கு வந்துள்ள பெருமக்களைக் கை கூப்பி வணங்குதல். மணமகன் மண இருக்கையில் வலப்பாலும், மணமகள் மணமகனுக்கு இடப்பாலும் அமரச் செய்தல். இல்லறம் என்னும் ஊர்தியை, ஒருமுகமாகத் தாங்கி இழுத்துச் செல்லும் பூணிகளைப் போன்ற ஒருமுக அமர்த்தம் இது. எதிராட்டும் இகலாட்டும் போராட்டும் அன்று இல்லறம். விளையாட்டும் அன்று இல்லறம். ஒருமுக அன்பும் ஒருமுகச் செயலாக்கமும் பற்றியது என்பதைக் குறிப்பது இவ்வொரு முகம் வொருங்கிருக்கை. குடும்பத்தைக் காக்க வந்த குலவிளக்கு குடிவிளக்கு மண மகள்! அதனால், அவ்விளக்கை என் நெஞ்ச விளக்காக வைத்துக் காப்பேன் என்பதற்குச் சான்றாக அவளை அவனுக்கு இடப்பால் அமர்த்தல். அன்பு வாழ்வு சிறக்க ஆண்மையும் ஆற்றலும் வேண்டும் என்பதற்குச் சான்றாக அவளுக்கு வலமாக அவனை அமர்த்தல். ஆண்மையும் பெண்மையும் இணைதலால் இயல்வதே உலகம் என்பதை மெய்பிக்கும் ஒரு முக இருக்கை இது. குடும்பத்தின் அடிப்படை அலகு ஆணும் பெண்ணும் கூடியமர்ந்த வழக்கே என்பது வள்ளுவம். அவ்வின்ப நிலைக் களத்தே எழுப்பும் மாளிகையே இல்லறம்! 2. செம்பொருள் நுகர்வு அறியாமை இருள் அகல, அறிவுச் செம்பொருட் காட்சி வேண்டும் என்பது வள்ளுவம். இருமனம் ஒருமனமாகக் கூட வேண்டிய-வாழ்வு, திருமண வாழ்வு! ஒருமனப்பாடே திருமணப் பாடு! ஆதலால், மனப் பொருளாம் செம்பொருள் வழிபாடு முதன்மையாகச் செய்யப் படுகின்றது. மணமக்கள் தம் வலக்கையை இடப்பால் நெஞ்சத்தில் வைத்துக் கொள்ளச் செய்தல்; செம்பொருள் நுகர்வு நடத்து பவரும் பிறரும், அவ்வாறே கையை வைத்துக் கொள்ளல். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்னும் மணிமொழியை மும்முறை சொல்லிச் சொல்லச் செய்தல். நன்றின்பால் உய்ப்ப தறிவு என்னும் மணிமொழியை அப்படியே மும்முறை சொல்லிச் சொல்லச் செய்தல். இவ்விரண்டு மொழிகளையும் முன்னே கூறியவாறே மூன்று சுற்றுகள் வருமாறு சொல்லிச், சொல்லச் செய்து வணக்கத்துடன் நிறைவித்தல். மனமாசு நீக்கத்திற்குரிய பள்ளியே, இல்லறம்! அதன் ஏடு தொடக்கமே திருமணம்! மாசடைந்த கண்ணாடி முகத்தை எப்படிக் காட்டுகிறது? மாசு நீங்கிய மணி எப்படிச் சுடர்கிறது! எளிய இனிய அரிய அடிப்படை அறம் மனமாசு நீக்கம்! மனம் தாவும்-ஓடும்! அதனை அதன் போக்கில் போக விடாமல் தடுத்து நல்ல வழியில் செல்லச் செய்யும் இயக்கி-ஓட்டி-செலுத்தி-அறிவே! நல்லவழியில் செல்லச் செய்தல் தானே, ஆக்கத்தில் எல்லாம் ஆக்கம்! ஆதலால், இச் செம் பொருள், வாழ்வியல் வளமாக்கும். 3.தாய் நாட்டு மண் வழிபாடு மண்ணில் இருந்து தோன்றுவது மணம். வெளி, வளி, தீ, நீர் என்பவற்றுக்கு முறையே ஒலி, ஊறு, ஒளி, சுவை என்பவை சிறப்புக் கூறுகள். அவ்வாறே மண்ணுக்குச் சிறப்புக் கூறு மணம். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகியவற்றின் வகையறிந்தார் வழிப்பட்டதே உலகம் என்பதும், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிவும் ஐம்புலனும் பெண்ணிடத்தே தான் உண்டு என்பதும் வள்ளுவம். ஆதலால், அவ்வைம்புல இன்பப் புகு வாயிலாம் திருமணத்தில் மண்ணின் வழிபாடு செய்ய வேண்டும் சீர்மை உடையதாம். நாம் நிற்கும் நிலை பேற்றுக்கு இடமாவது, இந் நிலம் தானே! நிலை பெற்ற புகழுக்கு இடமாவதும், இந் நிலம் தானே! நாம் துய்க்கும் துய்ப்புப் பொருள்களுக் கெல்லாம் வைப்பக மாகத் திகழ்வது இவ்வையகம் தானே! இம் மண்ணில் தானே நம்முந்தையர் வாழ்ந்தனர்; அவர் களுக்கு முந்தையரும் அம்முந்தையர்க்கு முந்தையரும் தோன்றித் துலங்கினர். அவர்கள் கொடை தானே நாம்! அவர்கள் வழி வழிக் கொடைகள் தாமே, நம் அறிவுப் பேறுகளும் பண்பாட்டுப் பேறுகளும்! இவற்றுக் கெல்லாம் ஒருமித்த உள்ளத்தால் நன்றி செலுத்தும் வழிபாடே, தாய்நாட்டு மண் வழிபாடாகும். தட்டத்தில் வைக்கப்பட்ட தாய்நாட்டு மண்ணின் மேல், மணமகனும் மணமகளும் உதிர்மலர் தனித்தனி தூவி வழிபடச் செய்தல். 4. திருவள்ளுவர் வழிபாடு அல்லது திருக்குறள் வழிபாடு அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றவர் திரு வள்ளுவர். அறத்தான் வருவதே இன்பம் என்றவரும் அவர்; வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டும் வளமான கருத்துக்களை யெல்லாம் ஒருங்கே தொகுத்து உலகுக்கு வழங்கிய ஒரு பெருவள்ளலும் அவரே! இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந் நன்றி அறிதல் என வரன் முறையே வேண்டுவ வெல்லாம் கூறி ஈகையும், புகழும் நிறைவில் வைத்து, இல்லறச் சிறப்பை நிலை நாட்டிய திருவள்ளுவரை வணங்கல்-வழிபாட்டு அளவில் நிற்பதன்று. பின்பற்றி நடப்போம் பெருந்தக்க வாழ்வு எய்துவோம் என்பதற்குரிய உறுதிமொழி கூறிக்கடைப் பிடியாகக்கொள்ளும் தெளிவு விளக்கமுமாம். பேறுகளில் எல்லாம் தலையாய பேறு, அறிவறிந்த மக்கட்பேறு என்றார் வள்ளுவர். தம் பொருள் என்பதம் மக்கள், என்றார். தம் மக்கள் மொழி கேட்டலும் அவர்கள் தழுவலும் தனிப்பேரின்பம் என்றார். உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்த மாகிய துணைவி தந்த அமிழ்தம், மக்கள் என்றார். வாழ்க்கைத் துணைவியைக் குடிகாக்கும் காவல் கடனாட்டி என்றார். தாய் தந்தை துணைவி ஆகியோரை நிலைபெற நின்று காக்கும் காவலாளன் துணைவன் என்றார். நன் மக்கட் பேற்றால் அப்பெற்றோரினும் உலகம் அடையும் நன்மையே பெரிது என்றார். பெண்ணிற் பெருந்தக்க பிறப்பு மண்ணில் இல்லை என ஒருமைக்கு மும்மையாய் உரைத்தார்! அவர் வழிநிற்றல் என்பதே வள்ளுவ வழி பாடாம். பூச் சொரிந்து வள்ளுவர் திருவுருவையோ திருக்குறள் நூலையோ வழிபடச்செய்தல். 5. சான்றோர் வழிபாடு அல்லது அவையோர் வழிபாடு மங்கலத் திருமணவிழா நடாத்தவும், வாழ்த்தவும், பங்கு கொள்ளவும் வந்த அவையோர் அனைரையும் உள்ளடக்கியது இச் சான்றோர் வழிபாடு. சான்றவர் சால்பு குன்றின் இம்மண்ணும் தன் சுமையைத் தாங்காது என்னும் திருக்குறள், சான்றோர் சிறப்பை உணர்த்தும். அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்பவை சால்பு மாளிகையின் தூண்கள் என்பதும் வள்ளுவமே! சால்பின் நிறைவால் வந்து சான்றோர், சான்றாளராகவும் திகழ்தல் நடைமுறை. அச் சான்றோர்கள் தாமே, முடிவெடுத்துத் தம் மணத்திற்கு வழி கோலியுள்ளனர். இன்று அன்றி, என்றும் அவர் துணை வேண்டும் என்னும் வேண்டுகைக் குறியே சான்றோர் வழிபாடாம். நாங்கள் அறிந்தோ அறியாமலோ, புரிந்தோ புரியா மலோ, தங்கள் கருத்துக்கு மாறாக ஏதேனும் செய்திருப்பினும், பெருந்தக்க உள்ளத்தோடு எங்களைப் பொறுத்து அருள வேண்டும்; நாளெல்லாம் நற்றுணையாக நீங்கள் திகழ வேண்டும் என்பதைத் தனித்தனியே பணிந்து வேண்டிக் கொள்ளும் கடமை இருந்தும், உரிமை அன்பால் ஒருமித்த உங்கள் வாழ்த்தினை நாடி வணங்குகின்றோம் என்று உரைக்கும் முகத்தான் மணமக்கள் எழுந்து நின்று அவையோர் அனைவரையும் நோக்கிக் கைகூப்பி வணங்குதல். 6. பெற்றோர் வழிபாடு தந்தையும் தாயுமாம் பெற்றோர்களையும், அவர்கள் பெற்றோர்கள் இருப்பின் அவர்களையும் வழிபடும் வழிபாடு பெற்றோர் வழிபாடாகும். மணமகன் பெற்றோர் மணமகள் பெற்றோர் ஆகிய இருபால் பெற்றோரையும் மணமக்கள் தனித் தனி மலர் தூவி வணங்கி வழிபடச்செய்தல். மகவைத் தந்தவர் தந்தை; அதனைக் கொண்டு ஆகி இருந்தவர் ஆய்! கருவை உருவாக்கித் திருவாக்கித் திகழச் செய்த உயிர்க்கொடை வழிபாடே, பெற்றோர் வழிபாடாம். மணமக்கள் தங்களை இத் திருக்கோலம் காணச் செய்யும் அளவும் அவர்கள் பட்ட பாடுகள் எத்தனை எத்தனை! அவர்கள் பயன் கருதாமல் செய்த-காலத்தால் செய்த-செய்யாமல் செய்த-பேருதவிகளுக்கு ஒப்பாய மாறுதவிகள் உளவோ? உளவோ? அவற்றை எண்ணி, அவர்களைத் தங்கள் கண்ணின் மணிகளாகப் போற்றுவோம் என்பதன் உறுதி மொழியே இவ்வழிபாடு! முதுமை என்பது மீள் குழந்தை நிலை! அந் நிலையில் போற்றும் போற்றுதலே, தாம் குழந்தையாய் இருந்த நாளில் போற்றிய போற்றுதலுக்கு ஓரளவு ஒப்பாவது. அதனை வலி யுறுத்துவது வள்ளுவம். இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்னும் இல்வாழ்க்கை முதல் முழக்கம் தந்தை, தாய், துணைவி ஆகிய மூவரையும் போற்றுத லேயாம். 7. உறுதிமொழி ஏற்று ஒப்பமிடுதல் இந்த ஆண்டு, இந்த மாதம், இந்த நாள், இந்த மாவட்டம் இவ்வூர் இப்பெற்றோர்க்கு மகனாகிய இப்பெயருடைய யான், இந்த மாவட்டம், இவ்வூர் இப்பெற்றோர்க்கு மகளாகிய இப் பெயருடையவரைச் சான்றோர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, என்றும் ஒன்றாகி உடனாகி வாழ்த லென உறுதி மொழிந்து ஒப்பமிடுகின்றேன் என மணமகன் உறுதி மொழிபடித்து ஒப்பமிடுதல். அவ்வாறே மணமகளும் உறுதிமொழிந்து ஒப்பமிடுதல். மணவிழா நடத்துநர், முன்னரே தனித்தனி உறுதி மொழி களை எழுதி வைத்துக் கொள்ளல்; படித்துக் கூறச் செய்தல் அல்லது படிக்கச் செய்தல். 8. முன்னிலைச் சான்றோர் சான்றொப்ப மிடுதல் மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்களில் ஒருவரை முன்னிலையாளராகத் தெரிந்து மணமக்கள் பெற்றோர் கருத்துக் கேட்டு அவர்கள் குறிப்புப்படி-அமரச் செய்தல். அவர்கள், மணமக்கள் உறுதிமொழி படித்து ஒப்பமிட்ட பின்னர், அதன் மேலொப்பமாகச் சான்றுக் கையெழுத்து வைத்தல்; முகவரியும் எழுதுதல். சான்றோர்களின் முன்னிலையில் விழா நடத்துதலே உறுதியும் ஒப்பமும் ஆம் எனினும், அதன்மேல் இவ்வெழுத்துச் சான்று என்றும் வைத்துப் போற்றும் சான்றாகவும் இருந்தலால் போற்றிக் கொள்ளத் தக்கதாம். 9. திருப்பூட்டல் மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்னும் திருக்குறளை மும்முறை கூறி, சான்றோர் வாழ்த்துடன் வந்த திருநாணை அல்லது விரலாழியை அணிவித்தல் திருப்பூட்டாகும். விழா நடத்துநர் திருநாணை எடுத்து வாழ்த்தி, மணமகன் கையில் தந்து மணமகளுக்கு அணிவிக்கச் செய்தல். விரலாழி எனின் மணமகனும் மணமகளும் ஒருவருக் கொருவர் அணிவிக்குமாறு முன்னின்று வழிநடத்துதல். மாலையிட்டு மணக்கும் மணமாயின், அவ்வாறே மண மகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் சூட்டுமாறு வழி காட்டுதல். 10. மாலை மாற்றல் மணமக்கள் கழுத்திலே அணிந்திருக்கும் மணமாலை அப்படியே இருக்கத் திருப்பூட்டு நிகழ்கிறது. மாலை மாற்றுக் கென, நறுமணமிக்க இருசிறு மாலைகள் தனியே வைத்திருத்தல் வேண்டும். அவற்றுள் ஒன்றை மணமகன் கையிலும், ஒன்றை மணமகள் கையிலும் எடுத்துத் தந்து, மும்முறை ஒருவருக் கொருவர் மாற்றி, மாற்றி அணிந்து கொள்ளச் செய்வித்தல் இம்மாலை மாற்றாகும். மும்முறை மாற்றுதலால் மணமகன் முதற்கண் அணிந்திருந்த மாலை, நிறைவில் மணமகள் மாலை யாகவும், மணமகள் முதற்கண் அணிந்திருந்த மாலை, நிறைவில் மணமகன் மாலையாகவும் ஒருவர் நெஞ்சம் ஒருவர்க்கு ஆகிக் கூடுவிட்டுக் கூடுபாயும் குறிப்பை விளக்குவது ஆகும். 11. இடவலம் மாற்றி மணமக்களை அமரச் செய்தல் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் மணத்தின் போது அமர்ந்திருந்த நிலையை மாற்றி, மணமகள் வலப்பாலாகவும், அவளுக்கு இடப்பால் மணமகனாகவும் அமரச் செய்தல். அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் தக்க தக்க வகையில் துணையாக இருத்தல் வேண்டும் என்றும் அதுவே குடும்ப நலமும் வெளி நலமும் ஒருங்கு காக்கும் என்றும் உணர்த்தும் குறிப்பாகும் இது. இதனாலேயே வள்ளுவர், வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ, வாழ்க்கைத் துணைவன் நலம் என்றோ கூறாமல் வாழ்க்கைத் துணை நலம் என்றார் என்பது கருதத் தக்கது. 12. வாழ்த்துரைத்தல் நறுமணப் பூத்தூவி, நறுமணப் புகை பரப்பி, பனிநீர் தெளித்து, தன் நறுஞ் சந்தனம் தந்து வரவேற்கும் மணவிழா வில் வாழ்த்துரைப்போர், தம் சொற்களிலும் இந்நறுமையும், மென்மையும், தண்மையும், தகைமையும் வெளிப்படவும் பல பல கூறாமல் நல்ல சில கூறி, வாழப்புகும் மக்களுக்கு வழி காட்டியாம் பெருந்தக்க நிலையில் வாழ்த்துதல் கடமையாம். சுருங்க வாழ்த்தும் பெருமக்கள் எண்ணிக்கையும், ஒரு மூவர்க்கு மேற்படாமல் அமைதல் விழாக் கோலம் சிறக்க உதவும். நிகழ்ச்சியும் வாழ்த்தும் ஒருமணிப் பொழுதைத் தாண்டா திருத்தலை முறையாகக் கொள்ளின் நிறை நலமாம். வாழ்த்து நிறைவில் மும்முறை சொல்ல வேண்டும் குறள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்னும் இல்வாழ்க்கை நிறைவுக் குறளாகும்.  குறளாயத் திருமண முறையின் தனித்தன்மைகள் குறளாயத் திருமண முறை, எளிமையானது; இயல் பானது; இனிமையானது; சிக்கனமுமானது; அதே பொழுதில் சீர்த்தியால் ஓங்கியது! குறளாயத் திருமண முறை, இறை நம்பிக்கையுடன் இணைந்தது; அதே பொழுதில் கண்மூடி வழக்கத்தை ஒப்பாதது. குறளாயத் திருமண முறையை, எக்குடிப் பிறப்பினரும் நடத்தலாம். ஏனெனில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெருமுழக்க வழியது அது. குறளாயத் திருமண முறையை, ஆண்பால், பெண்பால் எனப் பால் வேறுபாடு இன்றி எவரும் நடாத்தலாம். பண்டைத் தமிழர் கொண்ட முறைமைப்படி (அகம் 86, 136) பெண்டிரே முன்னின்று நடத்தின் தனிப் பெருமைக்குரிய தாம். ஏனெனில் பெண்ணே பெருமை உடைத்து என்பது வள்ளுவம். குறளாயத் திருமண முறை, சமயங் கடந்த சால்பினது; இனங்கடந்த, மொழி கடந்த விரிவினது; ஆர்வமுடையார் எவரேனும் இம்முறையை நடாத்தலாம்; நடாத்துவிக்கலாம். ஏனெனில் ஒருசமய, ஓரின, ஒருமொழிக் கட்டு அற்றது வள்ளுவ உலகம். குறளாயத் திருமண முறை, இயற்கை வழிபாட்டாளர்க்கும் நம்பா மதத்தர்க்கும் விலக்கானதன்று. வள்ளுவக் காதல் கொண் டார் வாழ்வியல் காதலர் அல்லரோ அவர்! குறளாயத் திருமண முறையைத் தம் தம் தாய் மொழியில் பெயர்த்து நடாத்தவும் செய்யலாம். ஏனெனில், வள்ளுவ அகல் வட்டம் வையகப் பரப்பையெல்லாம் தழுவுவது.  குறளாயத் திருமணமுறை வேண்டத் தக்கதா? ஆம்! வேண்டத் தக்கதே! ஏன்? குறளாயத் திருமணம் நடத்துபவர்க்கும் நடத்தப்படுபவர்க்கும் தொடர்பு உண்டு! நடத்துபவர் மொழிக்கும் நடத்தப்படுபவர் மொழிக்கும் தொடர்பு உண்டு! நடத்துபவர் செயல்களும் கருத்துகளும் நடத்தப்படுபவர்க்குத் தெளிவாகவும் முற்றாகவும் முறையாகவும் புரியும். நடத்துபவர், நடத்தப்படுபவர் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் ஒத்தவற்றையே ஒளிவு மறைவு இன்றி முன்வைத்து நடத்துகிறார். நடத்துபவர் நடத்தப் படுபவர் ஆகியோர் இடையே பிறப்பு வேறுபாட்டுக் கருத்து இல்லவே இல்லை. ஆதலால் தாழ்விலாத் தன்மானம் நிலைப்படுகிறது. குறளாயத் திருமண முறையால் நம் வழி, வழி மரபியல் பண்பாடு காக்கப்படுகிறது. ஏனெனில் அம்முறை முற்றாக மறைக்கப்பட்டது (அகம் 86. 136). வாழ்வின் நிலைக் களமாம் திருமணச் சடங்கு கூடத் தமிழ் முறையில் இல்லை என்று (தந்நலம் மறைத்து) உள் நகுவார் நகைப்பு, நகைப்புக்கு ஆளாகி விடுகிறது. தாய்மொழியில் நிகழ்த்தப்படும் சடங்கால் சடங்கின் உட்பொருள்வளம் மணமக்களோடு, மணவிழாவுக்கு வந்தோ ருக்கும் தெளிவுறுகின்றது. குறளாயத் திருமணங் கொண்டோர், நன்மக்களைப் பெற்று நல்வாழ்வு கொண்டு சீராட்டும் பாராட்டும் பெற்று வாழ்தலால், வேதவழித் திருமணம் மாறின் கேடாம் என்னும் ஏமாற்றுரை பொய்யாக்கப் படுகின்றது. வேதவழியை விடுத்து அவரே குறளாயவழி மண முறையை மேற்கொண்டு நடாத்தின், இது காறும் தமிழ் மாந்தர்க்குப் புரியாமல் செய்த-செய்து வருகின்ற-செயலுக்குக் கழுவாய் தேடிக் கொண்ட பெருமையும் ஆம். பேறும் ஆம்! ஏனெனில், குறளியம் எவ்வின எம்மொழி மாந்தரையும் ஒப்பக் கருதும் உலக ஒளிநெறி கொண்டது! மண்ணின் மைந்தர் மொழியில் சடங்குகளும் வழிபாடு களும் நடைபெறுவதே வயப்படுத்தும் என்பதைக் குறுகிய நோக்கம் விடுத்துப் பெரு நோக்கில், கிறித்தவ நடைமுறைகளைக் கண்டேனும், அச்சமயப் பெருக்க அடிப்படை அஃதென்பதை அறிந்தேனும், ஆர்வத்தால் ஈடுபடுதல் இருபாலார்க்கும் நலமாம். வாழிய நலனே! வாழிய வள்ளுவம்! வாழிய வையகம்!  குறளாயத் திருமண நடைமுறைக்கு வேண்டும் பொருள்கள் மணமாலைகள்-2 துணை மாலைகள்-2 தாய் நாட்டு மண்-ஒரு தட்டத்தில் வள்ளுவர் சிலை அல்லது திருவுருவப்படம் அல்லது திருக்குறள் நூல். உதிரி மலர்கள். வாய்ப்புக்குத் தக-மேசை, நாற்காலிகள். - ஒலி பெருக்கி உறுதிமொழி இதழ்-விழா நடாத்துநர் கொணர்தல். திருமண நிகழ்வுத் துணைக் குறிப்புகள் சில குறளாயத் திருமண முறையை இவர் நடாத்துவார் என முன்மொழிதல், அதனை வழிமொழிதல், வரவேற்புரைத்தல், முன்னிலையர் அமர்த்தல், நன்றி யுரைத்தல், என்பன, மண வீட்டார் கருத்துக்கு ஏற்ப அமைவுறும். அவையோருள் ஒரு முதுவரையோ மணவீட்டார் விரும்பும் ஒரு பெருமகனாரையோ தலைமையேற்க வைத்தலும் தகும். குறளாயமே முன்னின்று நடாத்தும் திருமணத் தலைமையையும் நடாத்துதலையும் குறளாயத் தலைமை யமைப்பாளரே ஏற்று நடாத்துவார். பொதுச் செயலாளர் செம் பொருள் நுகர்வுச் சடங்கு நிகழ்த்திச் சடங்கு முறை கூறுவார். இணை அமைப்பாளர் வாழ்த்துரை வழங்குவார். குறளாயமே முன்னின்று நடாத்தும் திருமணத்திற்கு அழைக்கும் கால முற்பாடே முற்படக் கருதப்படும். பிற்பட்டு வரும் வேண்டுகைகளுக்குக், குறளாயமே தக்காரை ஏற்பாடும் செய்து தரும். இணைப்பு இல்லறம் சிறக்க இனிய ஐந்து! இல்வாழ்க்கை (துணைவன் துணைவியர் கூடி நடத்தும் குடும்ப வாழ்வு) 1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லற வாழ்வு வாழ்பவன் என்பவன் இயற்கைத் தொடர் பால் அமைந்த தாய் தந்தை மனைவி ஆகிய மூவர்க்கும் நல் வழியில் நிலைபெற்ற துணை ஆவான். 41 2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. இல்லற வாழ்வு வாழ்பவன் தூய துறவியர்க்கும் உணவுக்கு வழியில்லாமல் இருப்பவர்க்கும் பாதுகாப்பு இல்லாதவர்க்கும் துணையாவான். 42. 3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங் கைம்புலத்தா ரோம்பல் தலை. தெளிந்த அறிவினர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர், சுற்றத்தினர், இவர்களைப் பேணும் தான் என்னும் ஐந்திடத் தாரையும் பேணல் இல்வாழ்வான் சிறந்த கடமையாம். 43. 4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ஒருவன் இல்வாழ்க்கை பழிகளுக்கு அஞ்சிப் (பொருள் தேடி அப் பொருளால் வந்த உணவைப்) பகுத்துண்பதைக் கடமையாகக் கொண்டால் அவ் வாழ்வு வாழ்பவனின் வழிகளில் எப்பொழுதும் குறைவுண்டாதல் இல்லை. 44 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது, ஒருவன் இல்வாழ்க்கை அன்புத் தன்மையையும் அறச் செய்கையையும் கொண்டிருக்குமானால் முறையே அவை அவ்வில்வாழ்வின் பண்பாகவும் பயனாகவும் விளங்கும் (அன்பே பண்பு; அறமே பயன்). 45 6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்? ஒருவன் தன் இல்வாழ்வை அறவழியில் நடத்து வானே யானால் அந்த இல்வாழ்வு அல்லாத பிறவழிகளில் போய் அவன் அடையத் தக்கது உண்டோ? (எதுவும் இல்லை) 46 7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. இயல்பான அறமுறையில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் (பிறவழிகளில்) தம்மை மேம்படுத்த முயலும் முயற்சியாளர் அனைவரையும் விட முதன்மை யானவன் ஆவன். 47 8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து பிறரை நல்வழியில் நடக்கச் செய்து தானும் நல்வழியில் தவறாமல் நடப்பவன், இல்வாழ்க்கை கடுந்தவம் செய்பவர் தவத்தினும் வலிமையுடையதாகும். 48 9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. அறம் என்று நூல் வல்லோரால் சொல்லப்பட்டது இல் வாழ்வே. அவ்வாழ்வு புகழுக்குரியதே எனினும் பிறர் பழித்தற்கும் இடமில்லாது அமைந்தால் மேலும் நல்ல புகழுக்குரியதாம். 49 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் உலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் மேம்பட்ட புகழுலகில் நிலைபெறும் தெய்வங்களுள் ஒரு தெய்வமாக மதிக்கப் படுவான். 50 வாழ்க்கைத் துணை நலம் (துணைவன் துணைவியர் ஒருவர்க்குஒருவர் வாழ்வுத் துணையாகும் நல்ல தன்மை) 1. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குடும்பத்திற்குத் தக்க நற்குண நற்செயல்கள் உடையவ ளாய்த் தன் கணவன் செல்வத்திற்குத் தக்க அளவில் குடும்பம் நடத்துபவனே சிறந்த மனைவி ஆவாள். 51 2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். மனைவியிடத்து மனைக்குரிய நற்குண நற்செய்கை இல்லை என்றால், அவ்வாழ்க்கை பொருள், கல்வி, பதவி முதலிய எவ் வகையில் சிறப்புடையதாய் இருப்பினும் பயனில்லை. 52 3. இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? மனைவி, குடும்பத்திற்கு ஏற்ற குணம் உடையவளாக இருந்தால் அவ்வாழ்வில் இல்லாத நலம் என்ன? (எல்லா நலங்களும் உண்டு). அவள் சிறுமைக் குணம் உடையவளாக இருந்தால் அவ்வாழ்வில் இருப்பது என்ன? (எதுவும் இல்லை) 53 4. பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்? கற்பு என்று சொல்லப்படும் உறுதித் தன்மை ஒரு பெண் ணுக்கு உண்டாகப் பெற்றிருந்தால், அப் பெண்ணினும் பெருமைப்படத் தக்கனவாக வேறு எவையும் இல்லை. 54 5. தெய்வம் தொழாஅள்; கொழுநன் தொழுதெழுவாள்; பெய்யெனப் பெய்யும் மழை. (திருமணத்தின் முன்புதான் தொழுத) தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாக நினைந்து துயிலெழும் பெண்மகள் பெய் என்ற அளவில் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் ஆவள், 55 6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். தன் உடலையும் உள்ளத்தையும் தக்கவாறு காத்து, தன் கணவன் விரும்புமாறு பேணி, தகுதி மிக்க மூத்தோர் மொழி களைப் போற்றி, சோர்வில்லாமல் கடமை புரியபவளே சிறந்த பெண். 56 7. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்! மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. பெண்டிரைப் பிறர் அடக்கிக் காக்கும் காவல் என்ன பயன் செய்யும்? அவர் தம்மைத்தாமே அடக்கிக் காக்கும் மனக் காவலே சிறந்த காவலாகும். 57 8. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. தம்மைப் போன்ற நற்குண நற்செயல் அமைந்த கணவரைப் பெற்றால் அப்பெண்டிர் என்றும் புதிது மணந்து கொண்டு வாழும் இன்ப உலகினராகவே பெருஞ் சிறப்பு அடைவர். 58 9. புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. பெருமைமிக்க செயல்களைச் செய்யும் மனைவியை அடை யாத கணவர்க்குத் தம்மைப் பழித்துக் கூறுபவர் முன் அரி மாவைப் போல் நடக்கும் பெருமித நடை இல்லை. 59 10. மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மனையாளின் பெருமையே, ஒருவன் வாழ்வில் எந்நாளும் திருமண விழாப் போன்றது என்பர். அவ்வாழ்வில் பெறும் நல்ல மக்கட் பேறே நல்ல அணிகலம் போன்றது என்பர். 60 மக்கட்பேறு (நன்மக்களைப் பெறுதல்) 1. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. இல்லற வாழ்வினர் பெற வேண்டிய பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த நல்ல மக்களைப் பெறும் பேறன்றிச் சிறந்த பேற்றை யாம் அறிந்தது இல்லை. 61 2. எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். பழிவழியில் செல்லாத பண்புடைய நல்ல மக்களை ஒருவர் அடைந்தால், அவர் வழிவழிப் பிறப்பினராலும் அவர்க்குத் தீய பழிகள் நெருங்க மாட்டா. 62 3. தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் தரும். தம் பொருள் என்று பெருமையாகச் சொல்லப்படுவது தம்மக்களே. அவருடைய மற்றைப் பொருள்களோ அவரவர் செயலுக்குத் தக்க வகையில் வரும். 63 4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். தம் குழந்தைகளின் சிறிய கைகளால் பிசையப்பட்ட உணவு சுவை மிக்க உணவுகளினும் சுவை மிக்கதாகப் பெற் றோர்க்கு இன்பம் தரும். 64 5. மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு மக்கள் தம் உடலைத் தழுவுதல், பெற்றோர் உடலுக்கு இன்பமாம். அவர்களின் சொற்களைக் கேட்டலோ செவிக்குச் சிறந்த இன்பமாம். 65 6. குழலினிது; யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். தம் மக்களின் இனிய மழலைச் சொற்களைக் கேட்டு மகிழாதவர்களே குழலிசை இனியது என்றும் யாழிசை இனியது என்றும் கூறுவர். 66 7. தந்தை மகற்காற்றும் நன்றி; அவையத்து முந்தி இருப்பச் செயல். தந்தை ஒருவர் தம் மகனுக்குச் செய்ய வேண்டிய நல்ல செயல், அவனைக் கற்றறிந்த சான்றோர் அவையில் முதன்மை யானவனாக இருக்கச் செய்வதே. (மகனுக்கு என்றது மகளுக்கும்பொருந்தும்.) 67 8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமைமாநிலத்J மன்னுயிர்க்கெல்லாக்ம்இனிது. தம் அறிவினும் தம் மக்கள் மிக்க அறிவினராக இருத்தல், (தம் குடும்பம், நாடு என்னும் எல்லைகளையும் கடந்து) இவ் வுலகத்து உயிர்களுக்கெல்லாம் இன்பம் தரும். 68 9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன் மகனை (அறிவுக் குணங்களால் நிறைந்த) சான் றாண்மையாளன் என உயர்ந்தோர் பாராட்டுவதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்வாள். 69 10. மகன்தந்தைக் காற்றும் உதவி, இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல். மகனொருவன் தனக்குப் பலவகையாலும் உதவிய தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு, இவனை மகனாகப் bபறஇவன்தந்தைஎன்னநற்பேறுசெய்தானோ என்றுசல்லும்சால்லைத்தருவதே. 70 அன்புடைமை (அன்புடையவராக இருத்தல்) 1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். ஒருவர் கொண்டுள்ள அன்பினைப் பிறர் அறியாமல் மறைத்துiவக்கும்மறைவுஇல்லை.அன்பு செலுத்தத் தக்க வரைக்கண்டஅளவில்அவர்கண்ணில்துளிக்கும்கண்ணீரேஅதைbவளிப்படுத்திவிடும்.71 2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பு இல்லாதவர் தாம் கொண்டுள்ள எல்லாப் பொருள் களையும் தமக்கே உரியவையாகக் கொள்வர். ஆனால், அன் புடையவரோ தம் பொருள்களால் அன்றித் தம் உடலாலும் பிறர்க்குரியவராக இருப்பர். 72 3. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. அருமையாக வாய்த்த உயிர்க்கு உடலோடு கூடிய உறவு, அன்பு செலுத்துதற்கென்றே அமைந்தது என அறிவுடையோர் கூறுவர். 73 4. அன்பீனும் ஆர்வ முடைமை; அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. அன்பு முதற்கண் பிறரிடத்து விருப்பத்தைத் தரும்; பின்னர் அவ்விருப்பம், நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற நன்மையைத் தரும். 74 5. அன்புற் றமர்ந்த வழக்கென்ப, வையகத் தின்புற்றார் எய்தும் சிறப்பு. இவ்வுலகத்தில் இன்பமடைந்து வாழ்பவர் பெறும் சிறப்புகள் எல்லாம், அன்பினைப் போற்றி அதில் நிலைத்து அவர் வாழ்ந்த வாழ்வின் பயனென அறிந்தோர் கூறுவர். 75 6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. அன்பியல் அறியாதவரே, அன்பு நற்செயலுக்கு மட்டுமே துணையாகும் என்பர். ஆனால், பாவ, வீரச் செயல்களுக்குக்கூட அவ்வன்பு துணையாதல் உண்டு. 76 7. என்பி லதனை வெயில்போலக் காயுமே, அன்பி லதனை அறம். எலும்பு இல்லாத புழுக்களை வெயிற்கதிர் சுடுவது போல, அறிவிருந்தும் அன்பில்லாத உயிர்களை அறக்கதிர் சுடும். 77 8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வை, உயிரோடு கூடிய வாழ்வாகக் கூறுவது,வலியபாறையின்மேல்பட்டமரம்தளிர்த்ததுஎன்றுகூறுவதுபோன்றது(அன்பில்லாதவாழ்வுவாழ்வன்று.) 78 9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்;யாக்க அகத்துறுப்பன்பிலவர்க்கு? (உயிருக்கு நலஞ்செய்யும்) உடலின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, மற்றை வெளியுறுப்புகளெல்லாம் அழகாக அமைந்திருந்தாலும், அவை என்ன பயன் செய்யும்? (பயன்தரா) 79 10. அன்பின் வழிய துயிர்நிலை;அஃதிலார்க் bகன்புதோல்nபார்த்தஉடம்பு.அன்புடன் கூடிய உடலே உயிருடன் கூடிய உடல்; அவ்வன்பில்லார்உடலோ,எலும்பும்,nதாலும்nபார்த்துக்கட்டியஉயிரிலாஉடல்ஆகும்.80 விருந்தோம்பல் (புதியவராக வந்தவரைப் பேணல்) 1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு இல்லத்தில் இருந்து குடும்பநலம் பேணி வாழ்க்கை நடத்து வது, தம்மைத் தேடிவரும் விருந்தினரைத் தக்கவாறு பேணி உதவி செய்தற்கேயாம். 81 2. விருந்து புறத்ததாத் தானுண்டல், சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விருந்தாக வந்த ஒருவர், வீட்டின் வெளியே இருக்கத் தான் வீட்டின் உள்ளே இருந்து உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்த உணவாக இருந்தாலும் உண்பது விரும்பத் தக்கது அன்று. 82 3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. நாள் தோறும் தன்னிடத்து வரும் விருந்தினரைப் பேணு பவன் இல்வாழ்க்கை, அவ்விருந்து செய்தல் வழியால் துன்புற்றுக் கெட்டுப் போவதில்லை. 83 4. அகனமர்ந்து செய்யாள் உறையும், முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று நன்முறையில் பேணுபவன் இல்லத்தில் செல்வம் என்னும்மகள்,தன்முகத்தோடுஅகமும்மலரத்தங்கியிருப்பாள்(விருந்தோம்புதலால்செல்வம்குறையாது.)84 5. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ, விருந்தோம்பி மிச்சில்மிசைவான்புலம்? விருந்தினரைப் பேணி அவருண்ட பின் மீதமாகும் உணவை உண்பவன் தன் நிலத்திற்கு விதை போடுதலையும் விரும்பான். (விதைப்பதனினும் விருந்துக்கேமுதன்மைதருவான்.) 85 6. செல்விருந் தோம்பி வருவிருந்துபர்த்திருப்பான் நல்விருந்துவனத்தவர்க்கு.வந்த விருந்தினரைப் பேணி மேலும் வரவிருக்கும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மிக மேலோரும் விரும்பும் நல்ல விருந்தாளியாவான். 86 7. இனைத்துணைத் தென்பதொன் றில்லை; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விருந்தோம்புதலால் உண்டாகும் பயன் இவ்வளவினது என்று அளவிட்டுச் சொல்ல ஒரு வகையில்லை; விருந்தாக வந்தவரின் தகுதி அளவே விருந்தின் தகுதி அளவாகும். 87 8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர், விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்தோம்பும் விருப்பமிக்க செயலில் ஈடுபடா தவரே தம் செல்வத்தை வருந்திக் காத்து எம்மை விரும்புவார் எவரும் இல்லேம் என வருந்துவர். 88 9. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை; மடவார்கண் உண்டு. செல்வம் நிரம்ப இருக்கும் போதே இருக்கும் வறுமை யாவது, விருந்தினரைப் பேணாத அறியாமையாகும்; இவ் வறியாமை அறிவிலாரிடத்தேதான் உண்டு. 89 10. மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. மிக மென்மையான அனிச்சப் பூவும் முகர்ந்து பார்த்த அளவில்தான் வாடும். ஆனால், மானமுள்ள விருந்தினரோ, முகம் மாறுபடப் பார்த்த அளவிலேயே வாடிப் போவர். 90 இனியவை கூறல் (இனிய சொற்களைச் சொல்லுதல்) 1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். இரக்கம் கலந்ததாய், வஞ்சனை இல்லாததாய் மெய்ப் பொருள் உணர்ந்த பெருமக்கள் வாயில் இருந்து வரும் சொல்லே இன்சொல்லாகும். 91 2. அகனமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். ஒருவரைப் பார்த்த அளவில் முகமலர்ந்து இனிய சொற் களைச் சொல்லும் இயல்பை ஒருவன் பெற்றால், அது அக மலர்ந்து கொடுக்கும் கொடையினும் நல்லதாகும். 92 3. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம் இன்சொ லினதே அறம். முகமும், முகமும் மலர இனிமையாகப் பார்த்து, உள்ளத் தொடு கூடிய இனிய சொற்களைச் சொல்வதே இனியவை கூறும் அறமாகும். 93 4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. எவரிடத்தும் எப்போதும் இன்பம் மிகுவிக்கும் இனிய சொற்களைச் சொல்பவர்க்குத் துன்புறுத்தும் பசிக்கொடுமை இல்லாதொழியும். 94 5. பணிவுடையன் இன்சொல னாதல், ஒருவற் கணிஅல்ல மற்றுப் பிற. பணிவுடையவனாக இருத்தலும், இனியவை கூறுபவனாக இருத்தலும் ஒருவனுக்கு அணிகலங்கள், போன்றவை. மற்றை அணிகலங்கள், அணிகலங்கள் அல்ல. 95 6. அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை நாடி இனிய சொலின். நல்லவற்றை ஆராய்ந்து அவற்றைக் கேட்பவர் விரும்பச் சொல்லும் இயல்பை ஒருவன் பெற்றால், அவனுக்குத் தீமைகள் சுருங்க நல்லவை பெருகும். 96 7. நயனீன்று நன்றி பயக்கும், பயனீன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். கேட்பவர்க்குப் பெரும் பயன் தந்து இனிமைப் பண்பில் இருந்து நீங்காத சொல், சொல்பவனுக்கும் அப்பொழுதில் இன்பம் தந்து பின்னரும் பெருநலங்களைச் செய்யும். 97 8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். உள்ளத்தில் சிறுமை சிறிதும் இல்லாமல் சொல்லப் படும் இனிய சொல் வாழும் போதே அன்றி மறைந்த பின்னரும் புகழின்பம் தரும். 98 9. இன்சொல் இனிதீன்றல் காண்பான், எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. பிறர் சொல்லும் இனிய சொல் தனக்கு இன்பந் தருவதைக் காணும் ஒருவன், பிறரிடத்து, இன்பந் தராத கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ? 99 10. இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் இன்பம்தரும் சொற்கள் இருக்கவும், அவற்றை விட்டு இனிமையிலாத சொற்களைச் சொல்வது கனியிருக்கவும் காயைத் திருடித் தின்பது போன்றது. 100 11. நல்ல தோழராக தோழமை தோழர் என்பது இக்காலத்தில் மிகுதியாக வழங்குஞ் சொல். ஆனால், தோழன், தோழி, தோழமை என்பனவெல்லாம் மிகு பழஞ்சொற்களே. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் பழமொழி, வாழ்வியல் உரைக்கும் சிறப்பினது. தோழி என்னும் சொல்லை ஒரே ஓர் இடத்தில் வள்ளுவர் வழங்கியுள்ளார் (1284). தோழன், தோழமை என்பவற்றை வழங்கினார் அல்லர். நட்பு நட்பு என்னும் சொல்லையே வள்ளுவர் பெருவழக்காக ஆள்கிறார். கேண்மை, தொடர்பு, பழக்கம், ஒன்றுதல் என்ப வற்றையும் வழங்குகிறார். பழைமை என்பது வழிவழியாக வரும் நட்பாகும். நட்பு என்பது நள் என்னும் வேர் வழியாக வந்த சொல். நள் + பு = நட்பு; நள்ளுதல்-நெருங்குதல்; செறிதல். நட்பும் காதலும் நட்பு என்பது உள்ளத்து அளவால் காதலுக்கு ஒப்பானது. அக் காதல் அளவில் நில்லாமல் இடித்துக் கூறும் ஆசிரியன் போலவும், உரிய பொழுதில் தன்னையும் கொடுக்கும் கொடை யாளன் போலவும் அமைவது அது. காதலாம் துணை ஒன்றே. ஆனால், நட்பாம் துணை அவ்வொன்று என்னும் அளவில் நிற்பது இல்லை. சங்கப் பலகை போலத் தக்கார்க்கெல்லாம் தகுதியான இடந்தந்து விரியும் விரிவினது அது. காதல் பால்வேறுபாடு உடையது. ஆனால், நட்பு அவ் வேறுபாடும் இல்லது. காதல் துணை, வீட்டளவில் நிற்றல் பெரும்பாலும் வழக்க மாக உள்ளது. நட்புத்துணை, இடங்கடந்த விரிவினது. இருமனம் கூடினால் திருமணம் ஆகும். அவ்வாறே இருமனம் ஓரொத்த இயைவே இனிய நட்பு ஆகும். காதல் வெற்றி எத்தகைய இன்பநலமும், வாழ்வுச் சிறப்பும் தருமோ, அவ்வளவு இன்பநலமும், வாழ்வுச் சிறப்பும் நல்ல நட்பும் தரும். காதல் தோல்வி எத்தகைய துன்பமும், வாழ்வுக்கேடும் தருமோ, அவ்வளவு துன்பமும், வாழ்வுக்கேடும் தீய நட்பும் தரும். ஆதலால், நட்பைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து உலகுக்கு உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். அவர்தம் வாழ் வியல் பார்வைக்கு நட்பின் விரிவே சீரிய சான்றாக விளங்கு கின்றது. நட்பு விரிவு நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, என்னும் ஐந்து அதிகாரங்கள் ஒரு தொடராக (79-83) த் திருக்குறளில் அமைந்துள்ளன. பெரியாரைத் துணைக் கோடல் (45) சிற்றினம் சேராமை (46) என்பனவும் இவ்வழிப் பட்டனவே. இனி, அதிகார அளவில் இடம் பெறாமல் தனிச் செய்திகளாகவும் உவமைகளாகவும் இடம் பெற்றவையும் பல உண்டு. அவற்றைக் காணலாம். ஒருவன் செய்ய வேண்டியவை எவற்றுள்ளும் சிறந்தது, நட்புச் செய்தலே ஆகும். அதுபோல் அவன் செய்யும் செயல் களுக்கு எல்லாம் சிறந்த அரணாக இருப்பதும் நட்பே ஆகும் (781). சிறந்த பண்புடையவர் நட்பு வளர்பிறை போல் படிப்படியே வளர்ந்து முழுமை எய்தும். அறிவிலார் நட்போ முழுமதி படிப் படியே தேய்ந்து இல்லாமல் போவதுபோல், போய்விடும் (782) கற்ற நூல்களை எடுத்துரைக்கும் போதெல்லாம் புதுப் புதுநயங்கள் தோன்றும். அவ்வாறே பண்புடையவர்களுடன் உண்டாகும் நட்பும் பழகப் பழக நன்மை சிறந்து விளங்கும் (783), ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வது, சிரித்து மகிழும் பொழுது போக்குக்கு உரியது அன்று. தன் தகுதியொடு பொருந் தாத செயலில் நண்பன் புகுவானாயின் அப்பொழுது இடித்துக் கூறி நிலைப் படுத்துவதற்கேயாம் (784). அடிக்கடி கண்டும், ஓயாது பேசியும், உடனுண்டும் தொட்டும், நெருங்கியும் பழகுவதால்தான் நட்பு ஏற்படும் என்பது இல்லை. உள்ளமொத்த எண்ணமும் செயலும் உண்டாகி விடுமானால் நீங்காத நட்பாக நிலைபெறும் (785). புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர் பிசிர். அவ்வூரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார். சோழ நாட்டில் ஆட்சி புரிந்த வேந்தன் கோப் பெருஞ் சோழன். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை தானும் கண் டிருந்தார் அல்லர். கேட்டிருந்த அளவே நட்பாகக் கால மெல்லாம் பெருகிற்று. உன் பெயரென்ன என வேந்தனை எவரும் கேட்பின், பிசிராந்தை என்று சொன்னான். உம் பெயரென்ன எனப் புலவரை எவரும் வினவின், கோப் பெருஞ் சோழன் என்று சொன்னார். ஒருவர் நெஞ்சு, ஒருவர் நெஞ்சாய் மாறின! இருவர் பெயரும் கூடு விட்டுக் கூடு பாய்ந்தன! சோழன் ஒரு குறிக்கோளோடு வடக்கிருந்தான்! அவன் நிலையை உள்ளுணர்வால் உணர்ந்தார் பிசிராந்தையார்; பாண்டி நாட்டில் இருந்து சோழ நாட்டுக்கு வந்தார். வாழ்நாளில் நேரில் கண்டறியா நண்பனைச் சாவில் சந்திக்க வந்தார் சான்றோர் பிசிராந்தையார்! வடக்கிருந்த வேந்தன் அவர் வருவார் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து அவர்க்கும் இடம் அமைத்திருந்தான்! பிசிராந்தையார் வருகையும், கோப் பெருஞ் சோழன் இடம் தருகையும் கூடியிருந்தோர் நெஞ்சங்களை உருக்கின. கண்கள் குளங்களாயின. பொத்தியார் என்னும் புலவர், வருவன் என்ற கோனது பெருமையும், அதுபழு தின்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே என்று பெருவியப் புற்றார் (புறம். 217). முகமலரக் காட்டுவது ஒரு நட்பு; அக மலர காண்பது ஒரு நட்பு. முக நட்பு நடிப்பு நட்பு; போலி நட்பு; ஆதலால் நட்பாகாது அது. அகநட்பு உண்மை நட்பு; ஆதலால் நட்பாவது அதுவே (786). போலிமை கண்டு மயங்காதீர் என்பதற்குத் தந்த எச்சரிக்கை உரை இது. நண்பனுக்குக் கேடு தருவன எதிரிடுமானால், அவற்றை விலக்குதல்; அவனை நல்ல வழியில் செலுத்துதல்; தான் முயன்றும் தடுக்க முடியாமல் அவனுக்குக் கேடு வருமானால் அக்கேட்டில் அவனை விட்டு நீங்காமல் அவனொடும் துன்பத்தில் பங்கு கொள்ளல் என்பவற்றைக் கடைப் பிடியாகக் கொண்டதே நட்பு (787). அழிவி னவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு நண்பனுக்கு ஒரு கேடு உண்டாயின் அதனை எப்படி உடனே நீக்க வேண்டும்? உடலின் உறுப்புகளுள் ஒன்று கை. அது தன்னை நீங்கா உரிமையது (தற்கிழமைப் பொருள்). உடலின் மான மறையாகக் கொள்வது உடை. அது தன்னை நீங்கும் உடைமையது (பிறிதின் கிழமைப் பொருள்). கையும் உடையும் ஒருவன் பொருள்களே! ஆனால் அவற்றில் தாம் எவ்வளவு வேற்றுமை? கள்வராலோ, மானங் கெடுப்பிகளாலோ ஒருவன் உடையை இழந்து விடும் இக்கட்டு ஏற்படுமானால், அப் பொழுது அவ்வுடையிழந்தான் கை எத்தகு விரைவாகப் போய்த் தன் மறைவு உறுப்பை மூடிக் காக்கின்றது! அப்படி, நண்பனுக்கு ஒன்று உண்டாயின் உடனே தன்னைத் தந்தும் காப்பவன் எவனோ அவனே நட்பின் கொள்கலம் (788). கொல்லர் பட்டரையில் சூட்டுக்கோல் என்பதொரு கருவி உண்டு. அது, சூடு உண்டாக்கப்படும் பொருளோடு தானும் சூடுபட்டுக் கொண்டு இருக்கும். அதுபோல் நட்பு என்னும் செம்மல் வீற்றிருக்கும் இருக்கை எது எனின், மன அசைவு இல்லாமல் உரிய இடங்களில் எல்லாம் உறுதியாக ஊன்றி நிற்றலேயாம் (789). நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை இவர் எமக்கு இத்தகைய நண்பினர்; யாம் அவர்க்கு இத்தகைய நெருக்கம் உடையோம் என்று கூறினும் அது நல்ல நட்பு ஆகாது. அது, புல்லிய நட்பேயாம்! ஏனெனில் சொல்லிக் காட்டும் சிறுமை உடையதன்று, பெருமைக்குரிய நட்பு (790). இவை நட்பினைப் பற்றிய வள்ளுவ வாய் மொழிகள். நட்பாராய்தல் நட்பு என்பது தன்னை இழக்கும் பொருள். பிறர்க்குள் தன்னைக் கொடுக்கும் பொருள். தன்னைப் பிறர்க்குள் வைக்கும் கொடையாகத் திகழும் பொருளை, ஆராய்தல் இன்றிக் கொடுத்து விடலாமா? எப்படி எல்லாம் ஆராய வேண்டும்! எத்தனை வழிகளால் எல்லாம் ஆராயவேண்டும்! ஊருக்கு ஒருவனே தோழன் என்று ஒரு பொன் மொழியை ஒரு தந்தை தம் இறுதிக் காலத்தில் தம்மகனுக்கு உரைத்தாராம். அந்த ஒருவனைக் கண்டுபிடிப்பது எப்படி? என மகன் சிந்தித்துச் செயலாற்றினான் என்பதொரு கதை. நண்பனைக் கண்டுபிடிக்க விரும்பினானுக்குக் கைக் குழந்தை ஒன்று. அக்குழந்தை இறந்ததென்னும் செய்தி அறிந்து ஊரவர் கூடினர். குழந்தையைப் புதைக்க இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றான் மகன். உடன் நூற்றுவர்க்கு மேல் வந்தனர். இடுகாட்டை நெருங்கியதும், இங்கே புதைக்க நான் விரும்பவில்லை. அப்பால் நான்கு கல்லில் இருக்கும் ஆற்றங் கரையில் புதைக்கப் போகிறேன் என்றான். போ என நாலில் மூன்று பங்கினர் திரும்பி விட்டனர். ஆற்றினை அடுத்ததும், அப்பால் என்றான்; வந்த வருள்ளும் பலர் திரும்பி விட்டனர். அப்படியே செல்ல, இறுதி வரை ஒரே ஒருவனே தொடர்ந்தான்! நான் இந்தக் கிணற்றுப் பக்கம் போய் மரத்தடியில் வைத்து இக் குழந்தையைத் தின்னப் போகிறேன் என்றான். எனினும் விடாது தொடர்ந்தான். மாவினால் செய்திருந்த அக்குழந்தை உருவைப் பிரித்துத் தின்றுவிட்டு இருவரும் திரும்பினர். ஊருக்கு ஒருவனே தோழன் என்பதைக் கண்டு கொண்டான் என்பது. இக்கதையும் ஆய்வு முறையும் பற்றி நாம் ஆயவேண்டுவ தில்லை. நட்பு ஆய்ந்து கொள்ளப்பட வேண்டிய பொருள் என்பதற்கு இவ் ஆய்வு உதவும். உண்மை எது, நடிப்பு எது என்பதை அறிந்து கொள்ள முடியா வகையில் போலிமை பெருகி விட்ட இக்கால நிலையில் ஆவதும் நட்பால், அழிவதும் நட்பால் என்னும் நட்பை ஆயாமல் கொள்ளுதல் ஆகவே ஆகாது. வள்ளுவர் நட் பாராய்தலில் சொல்லும் கருத்துகள் பொன்னெனப் போற்றிக் கொள்ளத் தக்கவையாம். ஆற்றில் வீழ்ந்து நீந்தப் போகிறேன் என்பவன் சேற்றில் வீழ்ந்தால் எப்படி இருக்கும்? சேற்றில் வீழ்ந்தாலும் அழுக்குத் தான் பற்றும்; அழிவு இல்லை. ஆனால், ஆற்றில் வீழ்கிறேன் என்று ஆழப் பதித்து ஊன்றிய கம்பியின் மேல் வீழ்ந்தால் என்ன ஆகும்? ஆராயாமல் கொள்ளும் நட்பு, ஆளைக் கொல்லும் நட்பேயாம். அதனால், நாடாது நட்டலின் கேடில்லை; நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு என்றார் வள்ளுவர் (791). ஏன் ஆய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்? நட்புக் கொண்டு விட்ட பின்பு அவரை விட்டுப் பிரிவது என்பது எளிதாக முடியாது! பேயோடு ஆயினும் பிரிவு அரிது என்பது பழமொழி. நச்சுமரமே என்றாலும் தான் வளர்ந்து விட்டதை வெட்டுவது அரிது என்பது வழக்காறு. ஆதலால் ஆராய்ந்து நட்டலே நலஞ் செய்வது. இல்லையானால் அந்நட்பைப் போலும் தற்கொலை வேறு இல்லை. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் ஆராய்ந்து பாராமல் செய்யும் நட்பு அழிவே என்னும் வள்ளுவர், ஆய்ந்து பார்க்கும் வழிகளையும் தெளிவாக உரைக்கிறார். ஒருவரை நண்பராகக் கொள்ள வேண்டும் எனின் அவரிடம் பின்வரும் எட்டுத் தன்மைகளும் உண்டா என ஆய்தல் வேண்டுமென மூன்று பாடல்களில் உரைக்கிறார் (793-795). நட்பாகக் கொள்ள விரும்புபவன் குணம். அவன் குடும்பம். அவனிடத்திலுள்ள குறைகள். அவனைச் சேர்ந்திருப்பவர்கள் பழிச் செயலுக்கு நாணும் தன்மை. உருகுமாறு எடுத்துரைத்தல். கடுமையாக இடித்துரைத்தல். உலகியல், நூலியல் அறிவு உடைமை. என்னும் இவ்வெட்டும் உள்ளவாறறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்றார். ‘இவ்வளவு ஆய்வு செய்ய வேண்டுமானால், அதுவே நட்பாகி விடாதா? என்று எண்ணத் தோன்றும். ஆய்வு மூளையின் பகுதி; நட்பு உள்ளத்தின் பகுதி. மூளைப் பகுதியின் ஆய்வு, கொள்வதைக் கொள்ளவும், தள்வதைத் தள்ளவும் வல்லது. ஆனால், அது உள்ளப்படிவு ஆகிவிடின் தள்ளுவது அரிதாகப் போகிவிடும். பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் எத்தனை, எத்தனை வழிகளில் வகைகளில் எல்லாம் ஆய்கின்றனர். ஆயும் இடமெல்லாம் தேர்ந்தெடுத்த இடங்களாகி விடுகின்றனவா? கண்டதும் காதல் என்பது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றது. எப்படியோ பொறுத்துக் கொண்டு பிரியாமல் வாழ்ந்தாலும், வாழ்க்கை என்னவோ இருபாலும் தோல்வி போலவே உணரப்பட்டு விடுகின்றது. அதுபோல் கண்டதும் நட்பு என்பதும் அப்படிப் பட்டதேயாம். தாய்க்கு எவள் தோழியாக இருந்தாளோ அவள் மகளே மகளுக்குத் தோழி என்னும் மரபைத் தமிழ் இலக்கிய உலகம் பண்டே கொண்டிருந்தமை பழகிய நட்பாம் பழைமை மாண்பு கருதியே போலும்! ஒருவனை நண்பனாகக் கொள்ளவேண்டின், அவனொடு சேர்ந்து இருப்பவரையும் ஆராய வேண்டுமா? வேண்டும். ஏனெனில், அவர்கள் இயல்பு பலவகையாலும் ஒத்துப் போவ தால்தானே சேர்ந்துள்ளனர்! அச்சேர்க்கை நல்லதா, கெட்டதா என்பதை அறியாவிடின் பெருந்தீமை ஏற்படலாமே! வலிய கூட்டத்தின் இடையே அது மாறுபட்டதெனின், தான் மாட்டிக் கொண்டு மீள முடியாதே! நாணம் என்பது மாந்தர்க்குரிய தனிப்பெருந்தன்மை; அத்தன்மையுடையான் ஓரொருகால் தவறினும் தன் செயலுக்குத் தானே நாணி மீளவும் அச் செயலைச் செய்யான். நாணம் என்னும் நல்ல பண்பு இல்லான் எனின் அவனுக்குப் புகழ் என்ன? பழி என்ன? நல்லது என்ன? அல்லது என்ன? அழுக்குப் படிந்த சுவருக்கு மேலே பட்ட அழுக்கு புது வண்ணந் தீட்டியதாகத் தானே போகும்? தோலுக்கு மேலே தொண்ணூறு அடி; துடைத்துப் பார்த்தேன் ஒன்றுமில்லை என்பார்க்கு நாணுதல் உண்டா? நாணார் நட்பு, நாணா இழிமைதானே தரும். வருந்துமாறு உரைத்தல் நண்பர் செயல் அன்று; திருந்து மாறு உரைத்தலே நண்பர் செயலாகும். அந்நிலையில் மெல்லென உருகி நின்று உள்ளந்தொட உரைத்தல் ஒருநிலை. அதற்கு இசைந்து வழிப்பட்டு வாராக்கால், கடுமையாக இடித்துரைத்தல் ஒரு வகை. பூச்சு மருந்தால் சீராகாது புரையோடிப் போன புண்ணை, அறுவையால் ஆற்றுவது இல்லையா? அத்தகையது அது. சான்றோர் வழக்கத்தைச் சார்ந்து நடத்தல் வேண்டும் என்பதைப் பன்முறை வலியுறுத்துவார் வள்ளுவர். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் உலகந் தழீஇயது ஒட்பம் எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு இவை அவற்றுள் சில. உலக நடைக்கு ஓர் அளவு கோல் வேண்டுமே. அதற்காகவே உயர்ந்தோரை-உயர்ந்தோர் நடையை -அளவு கோல் ஆக்கினார். அதுவே வழக்கறிதல் என்பதாம். அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் என்பதில் (795) இறுதி மூன்று ஆய்வுகளையும் குறித்துளார். செல்வக் காலை வாராமல், அல்லல் காலை வந்த பிசிராந்தையார் போலும் நண்பர் கோடியுள் ஒருவர் ஆகலாம். நீர் வற்றிய காலை நீருள்ள குளத்தைத் தேடும் கொக்கு குருவி களைப் போல்வார்தாமே! உலகில் மிகப்பலர், அத்தகையர். உறவு போல் இருந்து உரிய பொழுதில் விலகிச் செல்வதிலும் தீதில்லை; நன்மையே என்னும் தெளிவினைக் காட்டுகிறார் வள்ளுவர். வறுமை வருகின்றதா? சிக்கல் உண்டாகின்றதா? அவற் றால் கேடு இல்லை. ஒரு நன்மையும் உண்டு. அப்பொழுதிலும் உண்மையாக இருக்கும் நண்பர் எவர் என்பதை அளவிட்டுக் காட்டும் அளவுகோல் அப்பொழுதேயாம் (796). கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் என்பது அது. செல்வச் செழிப்புள்ளபோது கூடிக் குலாவிய கூட்டம், என்ன ஆயது? பதவி வாய்ப்பிலே இருந்தபோது பளிச்சிட்ட கூட்டம், என்ன ஆயது? என்று அமைந்திருந்து எண்ணுவார், வள்ளுவர் வாழ்வியல் நுட்பம் தெளிந்து வழிகாட்டியாக உலகுக்கு இருப்பார். போவார் போக, போக்க வேண்டியவர் எவர் என்பதையும் நயமாகத் தெளிவாக்குவார் வள்ளுவர். இழப்பிலே உண்டாகும் நன்மை இது என்ற வள்ளுவர் இழக்கச் செய்வதே ஊதியம் என மேலும் நயமாக உரைக்கிறார். அது, ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் என்பது (797). அறிவிலி ஒருவன், அறிவுடையான் வேலைக்குத்தக்கவ னாகான். அவன் செயல், அறிவாளன் வேலையையும் கெடுப்ப தாகவே அமையும். ஆனால் அறிவிலி ஒருவன் நண்பனாக அமைந்தால் அவ்வினைக் கேட்டினும் பெருங் கேட்டை - உயிர்க் கேட்டைக் கூட-அறிவிலி ஆக்கி விடுவான். ஆதலால், பேதை யின் கேண்மையை விலக்குதல் பொருள் ஊதியம் மட்டும் அன்று; உயிர் ஊதியமும் ஆகும். ஆசிரியர் படுத்திருந்தார்; அவர்க்குக் காவலாக ஒரு மாணவன் இருந்தான். அவன் ஓர் அறிவிலி. ஆசிரியர் முகத்தில் ஓர் ஈ உட்கார்ந்தது. எழுந்திரு என்றான் ஈயை! ஈ எழுந்திருக்க வில்லை. ஒரு பெருங்கல்லைத் தூக்கினான்; குறிபார்த்து எறிந் தான்; குறி தவறவில்லை. ஈயும் பறந்தது; ஆசிரியர் உயிரும் உடன் பறந்தது; பேதை உறவுக்குப் பேசும் கதை இவ்வாறு பல. இன்பக் காலை உடனிருந்து துன்பக் காலை விட்டுச் செல்வாரைப் பற்றி வள்ளுவர் உள்ளம் மிக வருந்தியது. அக் கொடுமையை ஆழமாக எண்ணியது. அதனை உள்ளகம் நொந்து உரைத்தார். கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (799) வெளிப்படு பகைவராக இருந்து வலியப் போர்க்கு அழைத்து, அப்போர்க்களத்தில் அவர்தம் கொலைக் கருவிக்கு ஆட்பட்டுத் தன் உயிரை இழக்கின்ற துடிப்பு மிக்க பொழுதில் கூட, கெடுங்காலைக் கைவிட்டுச் சென்றார் நட்பே உள்ளத்தைச் சுட்டுக் கொண்டு இருக்குமாம்! நேரில் கொல்லும் பகைவர் செயல், அத்தகைய கொடுமை உடையதாகத் தோன்றாதாம்! நட்புக்குப் பொருந்துவார், பொருந்தார் என இருவகையர் உளர். பொருந்தியவர் என்பவர் எதனையேனும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் இருந்தாலும் அவர் விரும்புவதைத் தந்து அவரை நட்பாக்கிக் கொள்ளுதல், அப்பொழுதும் பிறபொழுதும் நன்மையே ஆக்கும். அவ்வாறே பொருந்தாதவர் என்பவர் எதனையேனும் விரும்புவராயின் அவர் விரும்புவதைத் தட்டா மல் உடனே தந்து அவர் நட்பை விலக்கி விடுதல் எப்பொழுதும் நன்மையேயாகும். மருவுக மாசற்றார் கேண்மை; ஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. ஒப்பிலார்-ஒப்புதல் இல்லாதவர்; நட்புக்குப் பொருந் தாதவர். உள்ளன்பால் ஏற்படும் நட்பு, உதவி வழியால் ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலும் சிறந்து விளங்குதல் உண்டு என்பதைச் செய்ந்நன்றி அறிதலில் கூறினார் வள்ளுவர் (106, 107) அந்நட்பு பழைமை என்னும் சிறப்புடன் விளங்கும் என்பதையும் உரைத்தார். ஒரு செல்வர் நொடித்துப் போனார். அவர் குடியிருந்த வீடும் முறைமன்ற ஆணைப்படி ஏலம் விடும் இக்கட்டுக்கு ஆட்பட்டது. அவர்க்கு உறவினர் பலப்பலர் வளமாக இருந் தனர்; நண்பர்களும் அப்படி இருந்தனர்; ஆயினும் உரிய தொகையைக் கட்டி உறையுள் ஏலத்திற்கு வராமல் செய்ய முன் வந்தார் இலர். செல்வர்க்கு எவ்விழப்பும் அசைக்கவில்லை. ஆனால், தாம் குடியிருந்த வீட்டை-தம் முந்தையர் வைப்பு வளமான வீட்டை-ஏலம் விடும் நிலைமையானதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்! விடிந்தால் ஏலம்! விடிய விடிய விழித்தார்! அருமைத் துணை அழுது வழிந்தார். அன்புக் குழந்தைகள் நிகழப் போவது என்ன, நிகழ்ந்தது என்ன என்பது அறியாராய் அமைந்து உறங்குகின்றனர். விடிந்தால்? விடியும் முன்னரே ஒருவர் கதவைத் தட்டினார்! விடியு முன்னரே வந்து விட்டதா இடையூறு எனத் தத்தித் தயங்கி வந்து, கதவைத் திறந்தார். என்றோ ஒருநாள் தொழில் தொடர்பாக வந்து, அன்புத் தொடர்பால் வீட்டுக்கும் வந்து, ஒருவேளை விருந்துண்டு சென்ற ஒருவர் நிற்கக் கண்டார்! என்ன இந்தப் பொழுதில் இவர் எனத் திகைத்தார்! செய்தியை நேற்றே அறிந்தேன்; இரவோடு இரவாக வந்தேன்; என் அன்னையின் தங்க நகைகள்! தம் பேர்த்தியின் திருமணத்திற்கு எனப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தார். எத் தனையோ ஆண்டுகள் செல்லுமே? இப்பொழுதைக்கு எங் கிருந்தால் என்ன என நினைத்தேன். பணமாக்கிக் கொண்டு எடுத்து வந்தேன்; வேறொன்றும் எண்ணாமல் நேரே சென்று பணத்தைக் கட்டி விடுங்கள் என்றார். என்ன! என்ன! எனத் திகைத்தார். அவருக்குச் சொல் எதுவும் வரவில்லை. திடுமென்று கீழே வீழ்ந்து வந்தவர் காலைப் பிடித்தார்! என்ன செய்தீர்! என்ன செய்தீர்! எனத் தூக்கி அரவணைத்தார்! இருவரும் கண்ணீரில் நனைந்தனர். இன்பக் கண்ணீரா? துன்பக் கண்ணீரா? இப்படியும் ஒருவரா? என்னும் வியப்புக் கண்ணீர்! விடிவு நல்விடிவு ஆயிற்று! வீடு தங்கியது; உறுதி நிறைந்தது; இழந்தவை படிப்படியே நிறைந்தன, அச்செய்ந் நன்றி அறிதற் சிறப்பு, கொடுத்தவர் - கொண்டவர் ஆகிய இருவ ரொடும் நின்றதோ? நிற்குமோ? வழிவழியாக மக்கள் மக்கள், மக்களின் மக்கள் எனப் பாராட்டிக் கொண்டாடும் பெருமைய தாயிற்று. இத்தகைய வழிவழி நட்பே பழைமை என்பதாம். இதுவே செய்ந்நன்றியறிதலில், சொல்லப்படும். எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு என்பதாம் (107). தமக்கு உண்டாகிய கொடிய துயரைத் துடைத் தவர் நட்பினைச் செய்ந்நன்றி அறிந்தவர் வழிவழியாக வரும் தம் குடிப் பிறப்பிலும் எண்ணுவர் என்பது இதன் பொருளாம். பழமை என்பது என்ன என்பதை அருமையாக விளக்கு கிறார் வள்ளுவர். அது, கெடாஅ வழிவந்த கேண்மை என்பது. இடையறவு படாமல் தொடர்ந்து வந்த நட்பு என்பது இதன் பொருள் (800) வள்ளுவர் கூறும் பழமைச் சிறப்பு வருமாறு; பழமை பழமை என்று சொல்லப்படுவது எது என்றால் அது, வழி வழியாக வருகின்ற உரிமை நட்பை அழித்து விடாததே ஆகும் (801) நட்பு என்பதோர் வடிவுக்கு வாய்த்த உறுப்புகளாக இருப் பன உரிமைச் செயல்களே. அச்செயல்களுக்குச் சுவை சேர்ப்பவ ராக இருத்தல் சான்றோர்க்குக் கடமையாகும் (802). உரிமையாக நண்பர்கள் செய்யும் செயலைத் தான் செய்த தாகக் கொள்ளா விடில், வழிவழியாய்ப் பழகிய நட்பு என்ன பயனைச் செய்வதாகும்? பழகிய நட்புஎவன் செய்யும், கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை? (803) நண்பர்கள் தம் மனம் வருந்துமாறு ஏதேனும் செய்து விட்டனர் எனினும், அறியாமல் செய்தனர் என்றோ, உரிமைப் பெருக்கால் செய்தனர் என்றோ கொள்ளுதல் வேண்டும்! ஏனெனில் பழமைச் சிறப்புடையவர் அத்தகு சிறுமையை அறிந்து செய்ய மாட்டார் என்பது தெளிவு. ஆதலால், பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் (805) எட்டாத் தொலைவில், தொடர்புடையார் எவரும் இல்லா இடத்தில், தாம் தொல்லைப்படும் போது அத் தொல்லைக்குத் துணையாக இருந்து உதவுவார் அரியர். அவ்வாறு உதவினாரை நட்பின் உச்ச நிலை அறிந்தவர் வழிவழியாக என்றும் மறவார். அன்பு வழியில் ஊறிப் பழகிய நண்புக் குடி வழியினர் கேடு தரும் செயலைச் செய்யார். செய்வரே எனினும் அதனை நோக்கித் தம் வழிவழி நட்பினை நீக்கிக் கொள்ளார்; அன்பு செலுத்துவதிலும் தவறார். அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் (807) தம் பழமையான நண்பர் தவறினார் என ஒருவர் கூறும் போதில் தம் செவி கொடுத்துக் கேட்கவும் ஒப்பாத உரிமை மிக்கது பழைமையாகும். அவ்வாறாகவும் அவர்க்குத் தவறு செய்யின் அவர்கள் நட்புக் கொண்ட கால அளவுக்கெல்லாம் இழிவுடையதாகிவிடும். கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் (808) பழமையான தொடர்புடையாரிடத்துத் தம் நட்பினைக் கெடாமல் போற்றிக் கொள்பவர்க்குப் பகையென எவரும் இரார். அவ்வாறு பகைவர் இருப்பார் எனினும் அவராலும் விரும்பப்படும் சிறப்புடையவராகவே விளங்குவர். விழையார் விழையப் படுப; பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் (810) பாலைப் பார்க்கவில்லை எனினும், பாற் பானையைப் பார்க்க வேண்டும் என்பது பழமொழி. வழிவழித் தொடர்பின் சிறப்பைக் காட்டுவது இப்பழமொழியாகும். பாதிரிப் பூ வைக்கப் பட்ட கலத்தில் விடப்பட்ட நீர்க்கும் அப்பூமணம் இருப்பது போல வழிவழியாக வரும் நட்புக்குத் தனித் தன்மை உண்டு என்பது உலகியல் காட்டும் சான்றாகும். தீ நட்பு பழைமை நம்புதற்கு உரியது; சூழ்நிலையால் நிலை மாறி இருப்பினும் உண்மையை உணரும்போது அதனைப் போற்றிக் காத்துக் கொள்ளவும் வல்லது. ஆனால், தன்னலமும் தன் வாழ்வுமே கருத்தாகக் கைந்நாடி பார்த்துக் கொண்டு வரும் தீய நட்பு எவ்வகையாலும் கொள்ளக் கூடாததாகும். நீர் வேட்கையுடையவர் அதனைக் காணுங்கால் எத்தகைய ஆர்வத்தோடு பார்ப்பரோ, ஆவலால் பருகுவரோ, அத்தகைய அன்பைக் காட்டுபவராக இருந்தாலும் நட்பின் பண்பினை அறியாதவர் உறவு வளர்வது இன்பம் தராது. அது குறைந்து குறைந்து இல்லாமல் ஒழிதலே இன்பமாகும். பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலில் குன்றல் இனிது (811) காசு பணம் உள்ளதா எனக் கருத்தாகக் கண்காணித்து நட்புக் கொள்வர்; அக்காசு பணம் இல்லா நிலை வருமெனத் தோன்றின் அதனைக் குறிப்பால் உணர்ந்து அதற்கு முன்னரே நீங்கி விடுவார்; இத்தகைய போலியர் நட்பைப் பெற்றால்தான் என்ன? பெறாமல் இழந்தால்தான் என்ன? (பெறுவதில் கூட, இழப்பதே நன்மை ஆகலாம்!) உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? (812) இவர் தொடர்பு இருந்தால் என்ன, என்ன பயன்களைப் பெறலாம்? என்ன என்ன வழிக்கு இவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்பவர் நட்பு, நட்பாகாது. அவர் கொண்டுள்ள உடைமையைப் பெறுவதற்காக வந்து காலம் பார்த்திருக்கும் வஞ்சரையும், தட்டிப் பறித்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கள்வரையும் போன்றவர் அவர். உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (813) போர்க்குப் புறப்படுகிறான் ஒரு வீரன்; அவன் குதிரை வீரன்; தக்க குதிரை இதுவென உறுதியாக நம்பிக் கொண்டு அக்குதிரை மேலேறிச் செல்கிறான். குதிரையின் எழுச்சியும் விரைந்த செலவும் வீரனுக்கு இன்பம் ஊட்டின; அதனைக் கண்டவர்க்கும் அக்குதிரைகள் செலவிலே மயங்கியும், வியந்தும் நின்றனர். பகைப்படை அலறுவது உறுதி; வெல்வதும் உறுதி என்னும் கிளர்ச்சியால் படையை ஊடறுத்துக் கொண்டு பகைப் படைக்கு முன்னே போய்த் தன் குதிரையை நிறுத்தினான் குதிரை வீரன். பகைவன் குதிரை வாயைப் பிளந்து கொண்டு முன்னங் காலைத் தூக்கி இரண்டு கால்தானோ இதற்கு என்று எண்ணு மாறு எக்கியது. அவ்வளவு தான்! குதிரை வீரனைக் குப்புறத் தள்ளி விட்டு ஓடி வந்து விட்டது குதிரை! ஊர்வழி சுற்றப் பயின்ற குதிரையைப் போர்க்களத்திற்குப் பயன் கொள்ள இயலுமா? போர்க்கலை கல்லாக் குதிரை போல நட்பு என்னும் உயிர்த் தொடர்புக் களத்திற்குப் பயன்படாதவரை நண்பரெனக் கொண்டால், போர்க்கலை பயிலாக் குதிரையை நம்பிக் கொண்ட போர் வீரன் நிலையைத்தான் அடைவான். அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை (814) ஒரு துணை இருக்கிறது என நம்பிக்கை ஊட்டி, அந் நம்பிக்கை இழந்து போகும் நிலையைக் காட்டிலும் தன்னையே நம்பிக் கொண்டு உறுதியாயிருப்பது நலம். ஆதலால், தமரின் தனிமை தலை என்றார். நட்புக் கொண்டும் பாதுகாப்புக்கு வாராத சிறியவர்களின் பயன்படாத நட்பைக் கொள்வதைப் பார்க்கிலும், அவர் நட்பை அடையாமல் இருப்பதே நல்லது என மேலும் வலியுறுத்தினார். செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று (815) அறிவுடையாரைத் தேடி நட்பாகக் கொள்ளுதல் வேண் டும். அதனைச் செய்யாமல், அறிவுடையார் பலர் பகையைத் தேடிக் கொண்டாலும் கூட அதனால் பெரிய இடர் இல்லை. ஏனெனில் அறிவுடையார் பகை அடாப்பழி செய்யாது. ஆனால் அறிவிலி ஒருவன் நட்பை ஒருவன் மிக விரும்பிக் கொண்டான் என்றால் அதுவே பெருங்கேடாக முடியும். பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி யுறும் (816) நகைத்து மகிழ்வதற்கே என்பவர் நட்பைக் காட்டிலும் பகைவரை நட்பாகக் கொள்ளலும் பன்மடங்கு நன்மையாம் (817). எடுத்த செயலைத் தடையில்லாமல் முடித்தற்கு உதவுபவர் நண்பர். ஆனால் அவரே எடுத்த செயலை முடித்தற்கு இடைத் தடையாக நின்று கெடுப்பார் என்றால் அவரை நண்பராகக் கொள்ளல் வேண்டுமா? அவருக்கும் அல்லது எவருக்கும் சொல்லாமல் அவர் நட்பை விடுதலே நலமாகும். ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் (818) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார், உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளலார். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பவர் நட்பைக் கனவில் காணலும் கூடத் தீமையேயாம் என்பார் வள்ளுவர். உள்ளத்தை ஒழித்துப் பழகும் கள்ள நட்பு, கனவில் காணினும் தீமையே எனின் நனவில் கொள்ளலாமா? கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (819) இன்னும் சிலர் தனியிடத்தில் இனிதாகப் பழகுவர்; கனியினும் கட்டிப் பாகினும் இனிக்கப் பேசுவர்; தம் உயிரையே அவரிடத்து வைத்திருப்பார் போல இசைப்பர். ஆனால், பலர் கூடிய இடத்தில் இல்லாத, பொல்லாத பழிகளை எல்லாம் எடுத்தெடுத்துப் பேசுவர். இத்தகைய நயவஞ்சகர் நட்பு எள் ளளவும் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், பகைவர் பழித் துரைக்கின் அவன் பகைமையுள்ளத் தால் அப்படித்தான் சொல்வான் என்று நம்பாதவரும், கூடி யிருக்கும் நண்பன் கூறுகிறான் எனின் உண்மையெனக் கொண்டு விடல் ஆகும் அல்லவோ! ஆதலால், எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு (820) கூடா நட்பு நட்பைப் பற்றிக் கூறும் வள்ளுவர் இறுதியாக வைத்த அதிகாரம் கூடா நட்பு என்பது. உள்ளத்தொடு கூடாத, கைக் கொள்ளுதல் கூடாத என்னும் இருவகைப் பொருளும் ஒருங்கே தரும் நடையுடையது இது. கூடா ஒழுக்கம் என்பதும் திருக்குறளில் ஓரதிகாரம். துறவர்கொள்ளக் கூடாத ஒழுக்கம் பற்றியது அது. துறவுள்ளம் இல்லார், துறவுக் கோலம் காட்டி ஏமாற்றுதல் தப்ப முடியாத் தீமைக்கெல்லாம் இடமாகி விடும். ஆதலால், நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் என்றார் (276). அத்தகையர் மனத்தது மாசானவர் என்றும், மறைந்து ஒழுகும் தன்மையர் என்றும் குறிப்பிடுகிறார் (278). அத்துறவரின் கூடா ஒழுக்கம் அவரைத் தேடிச் சென்றார்க்கும் நம்பிக் கொண்டார்க்குமே தீமை பயக்கும். ஆனால் கூடா நட்போ நாமே தேடிக் கொள்வதாய் நம்மோடு இரண்டறக் கலந்து விட்டதாய்த் தீமை செய்வது. பால் வெள்ளைபோல் தெரிவதே சுண்ணாம்பு வெள்ளை! பால் வெள்ளைபோல் தெரிவதே பாலிடால் வெள்ளை! பால் வெள்ளைபோல் தெரிவதே அரளிப்பால் வெள்ளை! பால் என இவற்றைப் பருகினால் என்ன விளைவாம்! பாம்பும் தேளும் கூடத் தேடி வந்து தீமை செய்வது இல்லை? தன்னுயிர்க் காப்புக்காகத் தன்னச்சம் உண்டாதலால் தான் அவை கடிக்கின்றன. ஆனால் கூடாமல் கூடியிருந்து கூட்டிக் கொண்டு போய்க் கழுத்தறுத்து விடுமே கூடாநட்பு. கொல்லர் பட்டடையிலே வலுவான பெரிய இரும்புப் பட்டடை உண்டு. அடிக்க வேண்டும் பொருளை அதன்மேல் வைத்தே சம்மட்டியால் அல்லது கூடத்தால் அடிப்பர். பட்டு தல்-அடித்தல், அடை-அடைக்கல். அடிப்பதற்குத் தாங்கலாய் அமைவதே பட்டடை. அப்பெயரே ஆகுபெயராய்த் தொழி லகப் பெயராயிற்று. கூடா நட்பினர், கொல்லர் உலைக் களத்துப் பட்டடைக்கு ஒப்பானவர் என்கிறார் திருவள்ளுவர். தன்மேல் வைத்த பொருளைத் தாங்குவது போல் உள்ளது பட்டடை. அது தாங்குதலா? இல்லை. மற்றொன்று தாக்குவ தற்குச் சீரான, சரியான இடமாக இருந்து, சதப்புதற்கு உதவு கின்றது அது. உள்ளத்தொடு பொருந்தாதவர் நட்பும் அப்படிப் பிறரொருவர் வந்து அழிப்பதற்கு வழிசெய்து கொடுப்பதாகவே அமையும். ஒருவனும், ஒருவனும் பகையாயினர். பகைவனை முற்றாக அழிக்க ஒருவன் எண்ணினான். தான் அதனை நேருக்கு நேர் செய்தல் இயலாது எனத் தெளிந்தான். கூடிக் கெடுத்தல் எளிது எனத் தேர்ந்தான். தன் உறவாளன் ஒருவனை அவன் உறவாள னாகித் தனக்கு உதவ ஏவினான். பகைவன் ஆழமாக எண்ணாமல் நம்பி விட்டான். இருவரும் ஈருடல், ஓருயிர் என நம்புமாறு நண்பராயினர். உண்ணல் - உடுத்தல் - உறைதல் - உலாவல் எல்லா வற்றிலும் ஓரொப்புக் கொண்டனர். உள்ளத்துக் கொண் டிருந்த வஞ்சத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குக் காலங் கருதிக் கொண்டே உறவாடினான் கூடா நட்பன். அவன் எதிர்பார்த்த நாள் வந்தது. தன்னந் தனிக் காட்டில் பகைவன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு வழி செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டான். கூடா நட்பு என்பது, கூடிக் கெடுக்கும் நட்பு என்பதை விளக்கும் அன்றோ? கூடா நட்பினர் எத்தகையர் என்பதை இனம் போன்று இனம் அல்லார் என்கிறார் வள்ளுவர் (822). இனம் என்பது இன்பம் தருவது என்னும் பொருளது. சிற்றினம் எனினும் பேரினம் எனினும் அவ்வவர்க்கு இன்பம் சேர்ப்பதே இனமாதல் வெளிப்படை. இன்பம் சேர்ப்பவராகக் காட்டித் துன்பம் சேர்ப்பவரை என்ன பெயரால் அழைப்பது? இனம்போன்று இனமல்லார் என்பதே சரி. காவல் துறைக்கென ஓர் உடுப்பு. அவ்வுடுப்பு என்ன செய்கிறது? காவல் துறைச் சார்பைக் காட்டி விடுகிறது! எவரிடம்? காவல் துறையிடமே காட்டி விடுகிறது. போலியாகத் திட்டப் படுத்திக் கொண்ட சொற் சான்றும் எழுத்துச் சான்றும் முற்றாக நம்பிக்கை உண்டாகச் செய்து விடுகின்றது. காவல் துறையின் கண்ணிலேயே மண்ணைத் தூவி விட்டு, கருதி வந்ததை முடித்துக் கொண்டு தப்பி விடுகின்றது! அப்போலியைத் தேடி வலை விரிக்க வேண்டிய வேலை காவல் துறைக்கு! இவர் அறிவாளர்; இவர் நம்பற்கு உரியர் என முடிவு செய்தலும் இயலாது. ஏனெனில் கல்வியில் சிறந்து விளங்கு வாரும் கயமைக்கும் கரவுக்கும் இடமாக இருத்தல் கண்கூடு. கல்லான் ஏமாற்றுத் திறத்தினும் கற்றான் ஏமாற்றுத் திறம் எளிமையில் கண்டுகொள்ள முடியாதது. ஆதலால் நூலறிவாளர் என்பதற்காக ஒருவரை நம்பும் நண்பராக்கிக் கொள்ளலும் ஆகாது. பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது (823) முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது பழமொழி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதும் பழமொழியே. அகத்தின் கண்ணாடி முகமே என்பது வள்ளுவம். எனினும் அகக் குறிப்பு முகத்தில் புலப்படா வண்ணமாய் மறைத்துக் கொள்ள வல்லாரும் உளர். அதனால், முகத்தின் இனிய நகாஅ, அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் என்றார் வள்ளுவர் (824) நெஞ்சு நஞ்சாக இருந்தாலும் வாய் கரும்பாக இருப்பார் உளர். அவர் சொல்லும் சொல் தேனாறாகத் தித்திக்கும்! இவர் தோழமை உடையேன்! இனி எனக்கென்ன? என்னும் பெருமிதத்தைக் கூடத் தந்து விடும். அதனால் சொல் லளவில் நம்பி விடுதல் நல்லது ஆகாது என்பதை மூன்று குறள்களில் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். உள்ளத்தால் பொருந்தாதவரை அவர் சொல்லைக் கொண்டு சிறிது அளவு கூட நம்புதல் ஆகாது (825) என்கிறார். பகையாயினாரும் சொல்லால் உறவாகிச் செயலால் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளல் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறார். நட்டார் போல் நல்லவை சொல்வதை நம்பாதே! ஒட்டார் ஒட்டாரே என்கிறார் (826). பணிந்த சொல்லராகப் பளிச்சிட்டுத் தோன்றுவார் உளர். அவர் பணிவுச் சொல்லை நம்பிப் பாழாகி விடாதே. பகைவன் கையில் உள்ள வில் வளைந்து தாழ்கிறதே ஏன்? குறிபார்த்து அடிக்கத்தானே வளைகின்றது. இவன் சொல் வணக்கம், பகைவன் கையில் வில்வணக்கமே என அறி என்கிறார் (827). சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் வில்லாக வளைந்து, காலைத் தொட்டு வணங்கியவள் இடுப்பில் இருந்த குண்டு வெடித்துப் பட்டோரும், ஒட்டி யிருந்தோரும் தனித்தனி உறுப்புச் சிதைவுகளாக ஆயினமை இவ்வாண்டு (1991)த் திருப்பெரும்புதூர் நிகழ்ச்சி. கும்பிட்ட கையுள்ளும் கொல்படையுண்டு என்றும், பகை நெஞ்சர் அழுத கண்ணீரும் அழிக்கும் படையாம் என்றும் கைக்கருவியையும், கண்ணீர்க் கருவியையும் ஒருங்கே. சுட்டினார் வள்ளுவர். தொழுதகை யுள்ளும்ள படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து என்பது அது (828). பன்முறை போரில் தோற்றோடிய முத்தநாதன், மெய்ப் பொருளார் என்னும் சிவனடியாரை வஞ்சத்தால் வெல்ல எண்ணினான். அவர் கொண்ட சிவக்கோலத்தையே கொண்டு அடியார் போலவே போய் அருளுரைப்பது போல் காட்டி, அவர் கண்ணை மூடிக் கை குவித்துக் கொண்டிருந்த போதில், ஏட்டுச் சுவடிபோல் மறைத்துச் சென்ற குத்து வாளால் குத்தித் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். தொழுத கையில் படை ஒடுங்கும் என்பதை மெய்ப்பிப்பது இது! தொழுத கையை உடையவரைத் தொழப்பட்ட கையை உடையவர் வஞ்சத்தால் வீழ்த்திய வகை இது! இது பெரிய புராணச் செய்தி. இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட இன்னா செய்யாமைக் கொள்கை அண்ணல் காந்தியாரைக் கோட்சே (கொடுசேய் என்பார் வ. சுப. மாணிக்கர்) தொழுது கொண்டே கைத் துமுக்கியால் (துப்பாக்கியால்) சுட்டு வீழ்த்திய வரலாற்றுச் செய்தி உலகம் அறிந்தது. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கண்டு கொண்டுதான் உள்ளது உலகம்! தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டும் தான் இருக்கிறது. அன்பு என்னும் அரும் பண்பை மறைத்து வைக்க இயலாது. அன்புடையார் கண்ணீரே அவர்தம் அன்புடமையைக் காட்டி விடும் என்பது வள்ளுவம். ஆனால், கண்ணீராலேயே அழித்து விடும் கேடரும் உலகில் இல்லாமல் இல்லை என்பதைக் காட்டுவதே, ஒன்னார் (பகைவர்) அழுத கண்ணீரும் அனைத்து என்பது. தொழுது கெடுப்பவர் தொகையோ மிகுதி அழுது கெடுக்கும் ஆண்மையும் உண்டே என்பது போல் அழுகையும் அழிகருவியாதல் நடைமுறைச் செய்தியே. நள்ளிரவு; சாலையிலே ஒரு வண்டி; சாலையை ஒட்டிய ஒரு தோப்பில் ஐயோ ஐயோ என்னும் கூக்குரல். வண்டி யோட்டிக்குக் கூக்குரல் ஒலி நன்றாகக் கேட்டது. தன் பகைவன் ஒலி என்பதும் புரிந்தது. எனினும் இயல்பான இரக்கம் அவ் வொலி வந்த பக்கத்திற்கு ஓடச் செய்தது. நிகழ்ந்தது என்ன? அழுகை ஒலியால் அழைத்து, ஆளுக்கே உலைவைத்து விட்டான்! வாழ நூல் செய்த வள்ளுவர், உலகியலில் உண்டாகும் சிக்கல்கள் இவை, இவை எனத் தெளிந்து தேர்ந்து பாதுகாக்கும் நோக்குடையவை இத்தகு செய்திகளாம். இப் பாதுகாப்பின் உச்சநிலையாகவும் நின்று சொல் கின்றார். முள்ளை, முள்ளால் எடுப்பது போல் நடிப்பை, நடிப்பால் வெற்றி கொள்ளல் வேண்டும் என்னும் வாழ்வியல் வழக்கையும் ஒருமுறைக்கு இருமுறை வலியுறுத்துகிறார். நண்புடையவர் போல வெளிப்படத் தோன்றி, உள் ளத்தே இகழும் இயல்புடையவரை, நாமும் அவர் மகிழுமாறு வெளிப்படக் காட்டி உள்ளத்து நட்பை ஒழித்து விடல் வேண்டும் என்றும், பகைவராக இருந்தவர் நண்பராக வருங்காலம் உண்டாயின், அவர்க்கு முகத்தான் நட்புக் காட்டி அகத்தான் நட்பை ஒதுக்கி விடுதல் வேண்டும் என்றும் கூறுகிறார் (829, 830). பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் (830) என்பது வள்ளுவர் வாய்மொழி எனின், இதனை எத்தனை நூறுமுறைகள் எண்ணி எண்ணி, இவ்வழி சொல்லாக்கால் வாழ்வியல், தாழ்வியல் ஆகிவிடும் என நன்றாகத் தெளிந்தே, கூறியிருத்தல் வேண்டும். ஏனெனில், வாழ்வுடையவர் தாமே அறமும், சால்பும், பண்பாடும் போற்ற முடியும். அவ் வாழ்வை இழந்து விடாமைக்கு வழிகாட்டுதலும் அறவோர் கடமையே அன்றோ! நட்புச் சிதறல்கள் நட்டார்க்கு நல்லன செய்தல் வேண்டும் என்றும், அதுவும் விரைந்து செய்தல் வேண்டும் என்றும் வினைச் செயல் வகையில் குறிப்பிடுவார் வள்ளுவர் (679) நட்டார்க்குரிய தேவையை நிறை வேற்றலும் நன்மை செய்தலும் வாழ்வோன் கடப்பாடு என்றும் கூறுவார் (908). உடலுக்கும் - உயிருக்கும் உள்ள நட்பை, மடந்தைக்கும் தனக்கும் உள்ள நட்புக்கு ஒப்பாக வள்ளுவக் காதலன் உரைப்பான் (1122). வள்ளுவக் காதலி, கெட்டார்க்கு நட்டார் இல்லை என்பதை அயலார் என்ன, என் நெஞ்சமே காட்டிவிட்டது என்று கூறுகிறாள் (1293). நண்பர்க்குத் துன்பம் உண்டாகுமானால் அத்துன்பந் தீராக் குற்றம் தன் குற்றம் எனச் சால்பு நண்பு கருதும் என்பதையும் வள்ளுவத் தலைவி சுட்டுவாள் (1165). உடம்புக்கும் - உயிருக்கும் உள்ள நட்பு, கூட்டுக்கும் - குருவிக்கும் உள்ள நட்பு என்று நிலையாமை கண்ட நெஞ்சம் ஒப்பிட்டுக் காணும் (338). பிறரொடு இன்புற உரையாடி நட்புக் கொள்ளும் திறம் அறியாதவரே, பிளவு உண்டாகுமாறு புறம் பேசி உறவாக இருப்பாரையும் பிரிப்பவர் என்று புறங்கூறாமை அறங் கூறும் (187). பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் நட்பு பெரும்பாலும் அகவையொப்பு, அறிவொப்பு, உணர்வொப்பு, இயல் செயல் ஒப்பு என்பவற்றைக் கொண்டது. ஆனால் தம்மினும், பலவகையாலும் சிறந்தவரைத் துணையாகக் கொள்ளல் தளர்ச்சிக்கு உதவும் ஊன்று கோலெனச் சிறக்கும். ஆதலால் பெரியாரைத் துணைக் கோடல் (கொள்ளல்) என்பது ஒவ்வொருவர் வாழ்வுக்கும் இன்றியமையாததாம். பெரியவர் என்பார் அறன் அறிந்தவர்; முதிர்ந்த அறி வினர்; வந்த துயர் தீர்ப்பவர்; வருதுயர் வாராமல் காப்பவர்; தம்மில் பெரியவர்; இடித்துரைக்கும் இயல்பினர்; தகுதியால் உயர்ந்தவர்; தாங்கும் தன்மையர் எனப்படும் பண்பு நலங்களை உடையவர். அவர்தம் துணையைத் தேடிக் கொள்ளல், அரிய வற்றுள் எல்லாம் அரியது என்கிறார் (443). தக்க பெரியார் தம் துணையாக இருந்தால், எக்கேடும் எய்தாது; எப் பகைவராலும் கெடுக்கப்படவும் மாட்டார் என்றும் தெளிவிக்கிறார் (445, 448). முதற் பொருள் இல்லாதவர்க்கு ஊதியம் இல்லை. அது போல் பெரியவர் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை என்கிறார் (449). பெரியவர் ஒருவர் துணை வாய்ந்திருந்து அதனைக் கை விடுவது பலரைப் பகையாக்கிக் கொள்வதினும் பன்மடங்குத் தீமையாகும் என்கிறார் (450). பெரியாரைத் துணைக் கொள்ளல் எவ்வளவு நன்மையோ, அவ்வளவு தீமையாவது சிற்றினம் சேர்தல். ஆதலால், சிறு செயல் செய்வாரைச் சேராமை வேண்டும். ஒருவனுக்கு நல்லவர் கூட்டத்தினும், மேலான துணை இல்லை; அவ்வாறே தீயவர் கூட்டத்தினும், தொல்லைப்படுத்து வதும் இல்லை! நல்லினத்தின் ஊஉங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் (460) பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும் என்பது பழமொழி, ஆதலால், நட்பாலேயே ஒருவர் தன்மையும், செயலும் அமைதல் கண்கூடு. நல்ல குடிவழியில் பிறந்தவன்; பண்பாடு மிக்க பெற்றோர் வழி வந்தவன்; எனினும் அவன் தோழமையர் தக்கோராக அமையவில்லை! அவர்களுடைய சேர்க்கை குடும்பத்தில் இல்லாப் பழக்கங்களையும், வழக்கங்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றது. அதனால் குடியறியாத குடும்பத்தில் குடி புகு கின்றது. பொய்யும், களவும் அறியாப் பெருந்தக்க குடும்பத்துப் பிள்ளை, பொய்யும் - களவும் - நெய்யும் பருப்புமெனச் சுவை கொள்பவன் ஆகிறான். ஆதலால் குடும்ப நலம் கருதும் பெற் றோரும் வளரும் பிள்ளைகளை வளைக்கும் நட்பினரையும் கருதுதல் கட்டாயம் வேண்டும். வெள்ளம் வருமுன் அணைகோலல் அறிவாளர் செயல்! வெள்ளம் பெருகிவிடின் உடைப்பை அடைக்கப் போய் உள்ளதையும் இழந்து போகவே ஆகும்! நட்புக்கு ஒரு நற்சான்று, பாரியும் கபிலரும். பாரி குறுநில மன்னன்; கபிலர், பெரும்பாவலர்; இருவரும் உயிரொத்த நண்பினர். பாரி, வேந்தர் சூழ்ச்சியால் இறந்தான். உடனிறக்க எண்ணிய கபிலர் பாரியின் மகளிர் இருவரைக் காக்கும் கடமைக் காக உயிர் தாங்கினார். தம் கடமையை ஆற்றிய அளவில் அமையாமல் பாரியை இல்லா உலகில் வாழ விருப்பம் இல்லா ராய்; பெண்ணையாற்றின் இடையே இருந்த பாறையில் ஏறித் தீ மூட்டிஅதில் பாய்ந்து இறந்தார். இது கல்வெட்டுச் செய்தி! உயிர் நட்பின் சான்று இது! சீனக்கன் என்பான் வள்ளல்; பொய்யா மொழியார் புலவர்; இருவரும் உயிரொத்த நண்பர். ஒரு நாள் பள்ளியறையில் இருந்து நெடும் பொழுது உரையாடினார்; புலவர் அங்கேயே கண்ணயர்ந்து விட்டார். அவரை எழுப்பாமல் தன் கடமை மேல் சென்றான் சீனக்கன். வீட்டுக் கடமை முடித்துப் பள்ளியறைக்கு வந்த சீனக்கன் துணைவியார், அவனே படுத்திருக்கிறான் என்று எண்ணி அக்கட்டிலிலேயே படுத்தார். சற்றே கழித்து வந்த சீனக்கன் துணைமேல் ஐயங் கொண்டான் அல்லன்! புலவன் மேல் வைத்த நம்பிக்கை இழந்தான் அல்லன்! புலவரைச் சற்றே தள்ளி அக்கட்டிலில் படுத்தான். புலவர் நாணி எழுந்தார்! சீனக்கன் செல்லக்கிட எனத் தடுத்துப் படுக்கச் செய்தான். வீட்டு வேலையாளால் விடியவில் செய்தி வெளிச்ச மாகியது. பழிக்கு அஞ்சிய புலவர் ஊரை விட்டு அகன்றார். ஒரு நாள் சீனக்கன் மறைந்தான்; அவன் உயிர்த் தலைவியும் உடன் இறந்தாள். இடுகாட்டில் எரியிடையே, செல்லக்கிட என்று அன்று சொன்னாய்; இன்று எனக்குச் செல்லக்கிட என்று எரியூடு புகுந்தார். இவ்வாறு இறப்பில் ஒன்றுவதுதான் உயிர் நட்பா? இல்லை! வாழ்வியல் வள்ளுவம் அவ்வாறு கூறாது! நண்பன் இழப்புற்ற குடியின் நல்வாழ்வுக்காகக் கடனாற்றவே வள்ளுவம் ஏவும்.  12. நல்ல தொழிலராக தொழில் தொழில் என்னும் சொல் திருக்குறளில் பல இடங்களில் ஆளப் பெற்றுள்ளது. அவை பெரும்பாலும் கடமை என்னும் பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளன. புலவர் தொழில் (394) அறிவார் தொழில் (428) வேந்தன் தொழில் (549; 582) ஆளும் தொழில் (1252) என்பன அவை. செய்தொழில் என்பதிலும் (972), அறுதொழிலோர் என்பதிலும் (560) வேலை என்னும் பொருளிலே வழங்கி யுள்ளார் திருவள்ளுவர். பேதை தொழில் என்பதில் (833) இயல்பு என்னும் பொருளில் வழங்கியுள்ளார். உழவு என்னும் அதிகாரம் இருப்பினும், ஆங்குத் தொழில் என்னும் சொல் இடம் பெறவில்லை. வள்ளுவர் அறுதொழில் என்பது (560), உழவு - நெசவு - அமைச்சு - அரசு - ஓதல் - வாணிகம் என்பன என்பது. இனி, உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் என்று திவாகரம் அறுதொழில் இவையெனக் கூறும். சிறு தொழில் - பெருந்தொழில் - குடிசைத் தொழில் - ஆலைத் தொழில் எனத் தொழில் இந்நாளில் பெருவழக்காக உள்ளது. தொழிலமைப்புகள் போலவே தொழிலாளர் அமைப்புகளும் பெருகியுள்ளன. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்னும் முழக்கம் எழுந்து, உலகில் பல நாடுகள் தொழில்வள நாடுகளாகச் சிறந்து விளங்குகின்றன. அலுவலும் தொழிலும் பெரும்பான்மை மூளையுழைப்பும் பெரும்பான்மை உடலுழைப்பும் கருதிப் பகுத்தலால் முறையே அவை அலுவல் எனவும், தொழில் எனவும் உலகியலில் சொல்லப்படுகின்றன. மூளையும் உடலும் ஆகிய இரண்டுமே இரு வகைப் பணிக்கும் வேண்டும். எனினும் மிகுதி பற்றிய பகுப்பே இஃதாம். உடல் உடல் உழைப்புக்கு மூலப் பொருளாக இருப்பது உடல் நலமே. ஆதலால் உடல் என்பதற்கு முதல் என்னும் பெய ரொன்றை நம் முன்னோர் தந்துள்ளனர். முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை என்பது தெளிவு. ஆதலால் உடல் உழைப் பாளர் மிகச் சரியாகப் போற்றிக் கொள்ள வேண்டியது உடல் நலமே ஆகும். பொருளால் பொருள் தேடல் எளிது; சிக்கல் இல்லாதது; செலவும் இல்லாதது. எத்தனை வகைகளில் எனினும் தேட வாய்ப்பது. உடலால் பொருள் தேடுதல் எளிதன்று; சிக்கலும் உடையது; செலவும் மிக்கது; ஒரே ஒரு வழியிலேயே பொருள் தேட வாய்ப்பது. இவ்வேறுபாட்டைத் தெரிந்து கொண்டால் உடல் உழைப் பாளர் அல்லது தொழிலாளர் தம் உடலைக் கெடுக்கும் எத்தீய பழக்கத்தையும் கைக்கொள்ளல் ஆகாது. பணத்தைப் பத்து வகைகளில் ஈடுபத்தி ஈட்டலாம். உடலை ஓரிடத்துக் கொண்டுதானே ஈட்டலாம். பணத்தினை ஈடுபடுத்துதலில் அதற்குத் தேய்மானம் இல்லை. உடலை ஈடுபடுத்துதலில் தேய்மானம் உண்டு; ஊட்ட உணவும், ஓய்வும், மருத்துவமும் பிறவும் கட்டாயம் வேண்டியவை. பணத்தை ஈடுபடுத்துதற்குப் பகல் இரவு, மழை பனி, விடிவு, முடிவு எனக் கால வரையறை இல்லை. உடலை ஈடுபடுத்தி உழைப்பவர்க்கு இவ்வெல்லாம் உண்டு. ஆதலால் பண முதற்செல்வரைக் காட்டிலும், உடல் முதல் தொழிலாளர் உடல் நலம் போற்றிக் கொள்வதுடன், உடல் வளம் கெடுக்கும் செயல்களில் ஈடுபடுதலும் ஆகாது. மருந்து திருக்குறளில் மருந்து என்பதோர் அதிகாரம். அவ் வதிகார நாடித் துடிப்பு மருந்து என வேண்டா; ஆம் என்று அடித்துக் கூறுகிறது. அவ்வதிகாரம் முழுவதும் அளவறிந்து உண்க செரித்ததை அறிந்து உண்க மாறல்ல தறிந்து உண்க பசித்தது அறிந்து உண்க பெருந்தீனியனாக இராதே ஊதை பித்தம் கோழை என்பன மிகுந்தாலும் குறைந்தாலும் நோயாம் என்பவற்றையே வலியுறுத்துகிறார். வள்ளுவச் சித்த மருத்துவர், நோய் வாராது காக்கும் வழிகளையே மருந்து என்பதில் பெரிதும் கூறுகிறார் என்பது இவற்றால் நன்கு விளங்கும். நல்ல உழைப்பாளர்க்கு உண்டவை எளிதில் செரிப்பாகும் என்பது உண்மை. எனினும் அதற்கும் அளவு உண்டு; உடல் தேவை அளவு உண்டு; பொருந்தி வருதல் உண்டு என்பதை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாம். உடல் நலம் உயிர் வாழ்வார் எவராயினும்-ஆட்சியர் - அலுவலர் - இல்லறத்தர் - துறவர் என எவராயினும்-இவ்வுடல் நலம் போற்றல் இன்றியமையாததே எனினும், தொழிலாளர் போற்றிக் கொள்ளக் கட்டாயத் தேவையாகும். உடலை அலுக்காமல் வேலை பார்ப்பாரும், செல்வத்தால் செல்வம் சேர்ப்பாரும் நோயராக இருந்து கொண்டுகூட ஒரு வகையால் கடமை செய்யவும் வருவாய் தேடவும் வாய்ப்பு உண்டு. ஆனால் தொழிலாளர் படுத்துக் கொண்டால் வருவாயும் படுத்துக் கொள்ளும்! குடும்பமும் படுக்க நேரும்! இன்னொன்றும் எண்ண வேண்டும். தொழிலாளர் கருவிகளோடும், பொறிகளோடும் இயற்கையொடும் போராடிக் கடமை புரிய வேண்டியவர். அவர்க்கு எதிர்பாரா நேர்ச்சிகளும், விளைவுகளும் எப்பொழுதும் உண்டாதல் இயற்கை. அந்நிலை பிறர்க்கு அவ்வளவு எளிதில் இல்லை. ஆதலால் உடல் உழைப்பாளர் மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டு கடமை புரிய வேண்டும். குடி இந்நாளில் குடி இல்லாத குடியைக் காண்பது அரிதே; குடி என்னும் பெருமைச் சொல்லுக்குத் தீரா இழிவு உண்டாகும் வகைகளில் குடிகள் பெருகியுள்ளன. பொதுவாகப் பெருகியுள்ள அளவிலும் தொழிலாளர் அளவில் மிகப் பெருகியுள்ளன. அவர்கள் வருவாயைப் பாழாக்குவதுடன் வருவாய்க்கு மூலமாம் உடலையும் பாழாக்கிக் குடும்பத்தையும் சீரழித்துச் சிறுமை யாக்குகின்றன. குடி வகை ஒன்றா இரண்டா? தேநீர், குளம்பி (காபி) என்பன நாகரிகக் குடிகள் ஆகி விட்டன. அவற்றைக் குடி எனக் கருதி ஒழிப்பார் ஆயிரத்தில் ஒருவர் இருத்தலும் அருமையே! பீடி, சுருட்டு, வெண்சுருட்டு. கஞ்சா என்னும் புகைக் குடியில் ஈடுபட்டு நெஞ்சாங் குலையைச் சுட்டுக் கொண்டு, கட்டுக் குலைந்து இருமலுக்கும் - ஈளைக்கும் - ஈரற்குலை அழற் சிக்கும் இறையாவோர் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. இனிக் கள்ளே - சாராயமே - பீரே பிராந்தியே - ஒயினே என எரியக் குடிகளிலே ஈடுபடுதல் இழிவு என்பது இல்லாமல் பெருமை என்று எண்ணிக் கொண்டு குடிப்பதும் நாட்டில் இயல்பாகி விட்டது. தொழிலாளரிடத்தும் தம் கைப் பொரு ளுக்குத் தக்க குடியைக் குடித்துக் குடியைக் கெடுக்கும் கொடுமை புற்றுநோயெனப் பற்றிக் கொண்டதாயிற்று. அதற்குக் கள் மதுவும், கடை மதுவும், மலிவு மதுவும் போட்டியிட அரசும் துணை போகின்றது. இக்குடி கேடு என்பது தெரியாமலா குடிக்கிறார்கள் -விற்கிறார்கள்? விற்கவும் - குடிக்கவும் - இசைவுரிமை தருகிறார்கள்? கடை வாயிலிலேயேயும், புட்டியிலேயும், பெட்டியிலேயும் குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதிப் போட்டுக் கொண்டு, கேட்டைத் தெரிந்து கொண்டே கொடுக்கிறார்கள்! தெரிந்து கொண்டே குடிக்கிறார்கள்! ஒரு சிறுவன்; ஒரு தாளை எடுத்தான்; மிசைப் பலகைக்குக் கீழ் போட்டுத் தீ வைத்தான். அவன் தந்தையார் அதனைப் பார்த்தார். என்னடா செய்கிறாய்? தாளைப் பலகைப் பக்கம் போட்டு எரித்தால் பலகை எரியாதா? அதிலுள்ள பொருள்கள் எரியாவா? பக்கமெல்லாம் பற்றி எரியாவா? என்றார். எரியட்டும் என்றுதான் எரிக்கிறேன் என்றான் சிறுவன். எரியட்டும் என்று எரிக்கிறாயா? என்ன முட்டாள் தனம் என்றார் தந்தையார். சின்னவர்கள் செய்தால் முட்டாள்தனம். பெரியவர்கள் செய்தால் அறிவாளித்தனமோ? என்றான் சிறுவன். ‘என்ன சொல்கிறாய்? என்றார் தந்தை. குடித்தால் குடலை எரிக்கும்; உடலை அழிக்கும்; உயிரைப் போக்கும்; குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும்; என்பவற்றைத் தெரியாமலா நீங்கள் குடிக்கிறீர்கள். தெரிந்து கொண்டுதானே குடிக்கிறீர்கள். அதனால் தெரிந்து கொண்டுதான் நானும் எரிக்கிறேன் என்றான். குடிப்பவர்கள் அதன் கேட்டைத் தெரியாமலா குடிக்கி றார்கள்? மனைவியும் மக்களும் இப்படிச் செய்யலாமா என்று கேட்டால் அவர்களுக்கும் குடியைப் பழக்கி ஒரேயடியாகக் குடிகெடுக்கும் குடும்பங்களும் இல்லாமலும் இல்லையே! குடியறியாக் குடும்பப் பெண்களும் கூடக் குடிக்கும் சிறுமைக்கு ஆட்படுவதைக் கண்டு இந்நாட்டுக்கு உய்வு உண்டோ? என்று ஏக்கமே உண்டாகின்றது. உடல் நலம் காக்கக் கட்டாயம் அமைந்த உழைப்பாளர்-தொழிலாளர்-இவ்வழியில் இருந்து விடுபட்டுப் பிறர்க்கு வழிகாட்டியாக அமையும் நாளே நன்னாளாம். வள்ளுவத்தில், கள்ளுண்ணாமை என்பதோர் அதிகாரம். அதனை உணர்ந்து கற்றார் எவரும், கட்டாயம் குடியைக் கருதார். அவ்வாறு வெறுத்தும் - இடித்தும் - நயந்தும் கூறுகிறார் வள்ளுவர். எப்பொழுதும் குடியில் பேரார்வம் கொண்டிருப்பவர் இழிவுக்கு அஞ்சார்; மதிப்பை இழந்து விடுவார் (921). மயக்கும் குடியைக் குடித்தல் வேண்டா; குடிக்க வேண்டும் எனின் குடிக்க; குடிப்பாரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கொள்ளார் (922). பிறரைச் சொல்வானேன்? பெற்றவள் முகத்திலும் வெறுப்பை உண்டாக்குவது குடியாகும். அத்தகு சிறுமையது அது (923). மதுக்குடி என்னும் குடும்ப நலம் பேணாத குற்றம் உடையவர் முன்னர், நாணம் என்று சொல்லப்படும் நல்லவள் நில்லாமல் புறங்காட்டி ஓடிப் போய் விடுவாள் (924). கைப்பொருளைக் கொடுத்து நல்லுணர்வை எல்லாம் அழித்துக் கொள்ளும் இது, எத்தகு அறியாமைச் செயல்? (925). உறங்கினவர் என்பவர் அப்பொழுதில் இறந்தவர்க்கு வேறானவர் அல்லர். அவ்வாறே எப்பொழுதும் குடித்து மயங்குபவர்க்கும் நஞ்சுண்பவர்க்கும் வேறுபாடு இல்லை (926). எப்போதும் குடித்தும் படுத்துக் கிடப்பவர் ஊரவர் அனைவராலும் அறியப்பட்டு நகைப்புக்கு இடமாவர் (927). குடித்தவன் குடித்திலேன் என்று கூறுவது மெய்யாகி விடாது. அவன் ஒளித்து வைத்துள்ள செய்திகளை எல்லாம் தானே உளறிக் கொட்டி விடுவான் (928). குடித்து மயங்கிக் கிடப்பவனுக்கு அப்பொழுதில் அறி வுரை கூறித் திருந்த முயலுதல் ஆழமான நீருள் மூழ்கியவனைத் தேடுதற்குத் தீப்பந்தம் கொண்டு போவது போல் பயனற்றுப் போகும். களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று (929) ஒரு குடியன் தான் குடியாத போதில், குடித்த குடியனைக் கண்டாவது நானும் குடித்த போதில் இப்படித் தானே இருந் திப்பேன் என்றும் எண்ண மாட்டானோ? எண்ணினான் எனில் குடியை விட்டொழித்திருப்பானே! (930) கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான் கொல் உண்டதன் சோர்வு சூது உள்ளத்தை மயக்கிக் கெடுப்பதில் மதுவுக்குச் சற்றும் குறைந்தது ஆகாது சூது. அதனால் கள்ளுண்ணாமையை அடுத்துச் சூது என்றோர் அதிகாரம் வைத்தார் திருவள்ளுவர். சூழ்ச்சியால் பொருள் பறிப்பது சூழ்து. அது சூது என நின்றது. போழ்து என்பது போது என ஆவது போன்றது அது. சூதால் கெட்டழிந்த நாடுகளும் குடிகளும் எண்ணித் தொலையா. ஊரெல்லாம் உரக்க முழங்கப்படும் தருமன் கதை என்ன? நளன் கதை என்ன? நாடாண்ட வேந்தரும் சூதால் நாடிழந்தார்; மனை மக்கள் இழந்தார்; உருக்கரந்து திரிந்தார் என்று பட்டி மண்டபம் போட்டுப் பேசிப் பயனென்ன? தோற் காது உடைய நாட்டுக்குத்தான் பயன்படும். மரத்துப் போன செவியும், இரும்புக் கிட்டக் காதும் உடைய நாட்டுக்கு என்ன பயனைச் செய்யும்? சூதுக் கேட்டை, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட குடி என மணிமேகலை எடுத்துரைத்தாலும் சூதாடு கழகம் ஒழிந்து விடவில்லை. பழங்காலத்தில் சூதாடும் இடத்திற்கே கழகம் என்பது பெயர். பின்னே தான் மற்பயிற்சிக் களத்திற்கும், அறிஞர் அவைக்கும் பெயராயிற்று. இக்காலத்தில் சூது பெருகியுள்ள அளவுக்கு எல்லை இல்லை. குதிரைப் பந்தயம் சூது; பரிசுக் சீட்டு சூது; குலுக்கல் சீட்டு சூது; தவணைக் கடை சூது; விளையாட்டில் பல்வேறு சூது; சீட்டு விளையாட்டு, காய் நகர்த்து விளையாட்டு என்பனவும் சூதுகள். செல்வர்கள் மட்டுமா சூதில் ஈடுபடுகின்றனர்? அதில் ஈடுபட்டவர்களுக்கு மீட்சி உண்டா? ஊண் நினைவு உண்டா? குடும்ப நினைவு உண்டா? தொழில் நினைவு உண்டா? நோயால் படுத்த தந்தை இறுதியாகப் பார்க்க எண்ணியும் எழுந்து செல்ல விடாத சூது, இறந்த பின்னரும் எழவிட வில்லை. இடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு வரும் வழியிலே சேர்ந்து கொள்கிறேன் என்று ஆட வைத்தது என்னும் கதை புனைவு எனினும் உண்மை என்பதை மறுக்க முடியாதே. ஓர் உணவு விடுதிச் சமையல்காரர். மாதச் சம்பளம் உருபா 300. அவர்க்கு நாட்படி என உருபா 60 வரும். அந்த 360 உருபாவுக்கும் பரிசுக் சீட்டு வாங்குவார். வந்தவர் - போனவர் என்பவரிடத்தெல்லாம் கடன் வாங்கியும் - கைம்மாற்று வாங்கியும் பரிசுச் சீட்டு வாங்குவார். முன் பணம் வாங்கியும் பரிசுக் சீட்டுக்கே தொலைப்பார். மணப் பருவமுள்ள பெண் ஒருத்தியும், பள்ளிப் பருவப் பையன் ஒருவனும் இருந்தும், குடும்பச் செலவுக்கென ஒரு காசும் கொடாமல், கொண்டவளை வீட்டு வேலைகள் செய்து குடல் கழுவ விட்டார்! இது தொடர் கதை! அவர் இழந்ததை எல்லாம் கணக்கிட்டால் மனையொன்றெழுப்பி, மனையும் மக்களும் கவலையின்றி வாழ்ந்திருக்க முடியும். பரிசுச் சீட்டு என்னும் பாழுங் குழியை ஆளும் அரசுகளே நடத்தி, வாழும் அறிவிலா ஆட்டு மந்தை மாக்களைக் குழிக்குள் குப்புறத் தள்ளி வரும் கொடுமையை, அறிவுடைய எவரும் பொறுத்துக் கொள்ள முடியாது. இச்சூது பற்றி வள்ளுவர் எவ்வளவு எச்சரிக்கிறார். நல்லதுரைக்கிறார்; தெளிந்துரைக்கிறார். பெரிது தேவையாக இருந்து, அரிது தேடும் பொருளை, எளிதில் இழக்கும் இழிவுச் சூதைத், தொழிலாளர் எண்ணியும் பார்க்கலாமா? பரிசுச் சீட்டை ஒழி, பந்தயத்தை ஒழி, ஆட்டக் கழகங்களை அகற்று என்று அவர்கள் அல்லவோ கொடி பிடித்துப் போராட வேண்டும்? அவர்கள் இவற்றைக் கொள்ளக் கூடாது என எடுத்துரைக்கும் நிலை இருப்பதே இழிவுதானே! வெற்றியே வருவதாயினும் சூதை விரும்பாதே. சூதில் கொள்ளும் வெற்றி, தூண்டிலில் கோத்த இரும்பு முள்ளை மீன் கௌவிக் கொள்வது போன்றது என்கிறார். தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டுக் கௌவும் மீன், மறைந் திருக்கும் முள்ளுக்குள் சிக்கி உயிரை விட்டு ஒழிகின்றதே! இவ்வுவமையினும் சூதை விளக்க வேறுவமை வேண்டுமா? வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று (931) ஒன்றை எய்தி நூறை இழக்கும் சூதர் என அவரறி யாமைக்கு இரங்கி ஏங்குகிறார் வள்ளுவர். அவர் நன்மை கொண்டு வாழும் நிலையும் உண்டோ எனத் தவிக்கிறார் (932). சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது எனச் சூதினைத் திட்டுகிறார். அதைப் போல் வறுமை தருவது ஒன்றுமில்லை என அழுத்தமாகக் கூறுகிறார் (934). சூதாடு கருவியும், சூதாடும் இடமும், சூதாடும் திறமுமே, யாம் காணும் முப்பொருள் என்பார்க்கு, எப்பொருளும் இல்லை என்பதைத் திட்டப்படுத்துகிறார். சூதர் கஞ்சிக்கும் வழியற்றுப் போவர் என்றும், பொய்யும், புனையும் கொள்வர் என்றும், உடுக்கும், உடையும் இராது என்றும், எல்லாப் பழிக்கும் ஆளாவர் என்றும், தேர்ந்து, தேர்ந்து உரைக்கிறார் (937-939). சூதுக்கு ஒரு குணம் உண்டு. அது, பொருள் இழக்க, இழக்க மேலும், மேலும் பற்றுமை உண்டாக்கி இழக்கச் செய்வது என்கிறார். இழத்தொறும் காதலிக்கும் சூது (940) என்பது அது. சேமிப்பு உழைப்பவர்க்கே உடைமை என்னும் உலகம் வரும் வரை, எந்நாடு எனினும், உழைப்பவர் நிலை உயர்ந்து படுதல் இல்லை. வறுமைப் பருந்து வட்டமிடும் வாழ்வு தொழிலாளர் வாழ் வாகவே உள்ளது. வல்வாய்ப் பருந்து வாயிற் பற்றிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உழைப்புப் பயன் உடன், உடன் ஒழியாமல் சேமிப்பாகவும் வேண்டுமே! துளித்துளி நீர் ஆற்று வெள்ளமாகத் திரள்வது போல், தனித்தனி நூல், ஆடையாம் அருமை பெறுவது போல், சிறுகச் சிறுகச் சேமிக்கும் கருத்து இருக்க வேண்டுமே! உழவர்கள் நன்செய்ப் பயிர்க்காக நீர் தேக்கக் கண்வாய் (கம்மாய்) பயன்படும். அக்கண்வாய்க்கு நீர் கால்வாய் வழியே வரும். இரண்டு மூன்று நாள் நீர் வரத்து, கண்வாயை நிரப்பி விடும். அந்நீரை வாய்க்கால் வழியே கொண்டு சென்று இரண்டு மூன்று திங்கள் பாய்ச்சி விளைவு காண்பர். கால்வாய் பெரிது; நீர் வருவது; வாய்க்கால் சிறிது; நீர் செல்வது. கால்வாயிலும் வாய்க்கால் பெரிதாக இருத்தல் இல்லை. அது போல், வருவாயிலும் செலவு கூடுதல் ஆகாது. எவ்வளவு குறைந்த வருமானம் எனினும் குற்றமில்லை. அதனினும் குறைவாகச் செலவு இருத்தல் வேண்டும். இது பொருளியல் வள்ளுவம். ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை (478) ஆகாறு-வருவாய்; போகாறு-செலவு; இட்டிது-சிறிது. வறுமை: வள்ளுவத்தில் நல்குரவு (வறுமை) என்பதோர் அதிகாரம். அதனைக் கற்றார் வறுமைக் கொடுமையை எண்ணி எண்ணி உருகி, அதனிற் சிக்காதிருக்கக் கட்டாயம் முயல்வர். வறுமைத் துயர்க்கு இணை வறுமைத் துயரே. எத்துயரும் அதற்கு இணையில்லை என்கிறார் (1041) வறுமை பண்பைக் கெடுப்பது மட்டுமில்லை. வாயால் சொல்லக் கூடாத சொல்லையும் சொல்லச் செய்யும் (கீ044) தீய வறுமை தாயாலும் அயலான் போலப் பார்க்க வைத்து விடும் (1047) என்கிறார். நேற்று வந்து கொன்றது போன்ற வறுமை இன்றும் வருவதோ என ஏங்கவைத்தலைக் குறிக்கிறார். இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு? (1048) நிரப்பு-வறுமை. நெருநல்-நேற்று. நெருப்பினுள் ஒருவேளை உறங்கினாலும் உறங்கி விடலாம். ஆனால், வறுமை நெருப்புள் கண்ணிமை மூடலும் முடியாது எனநைகிறார். நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது (1049) இத்தகு கொடுவறுமை, குடும்பத்தை வாட்டாமல் இருக்க அல்லவை அகற்றி, நல்லவை கொள்ளல் தொழிலாளர் கடமை யாம். ஊக்கமுடைமை: மாந்தர் அனைவருக்கும் இயல்பாக அமைந்த உடைமை ஒன்றுண்டு. அவ்வுடைமை ஊக்கமுடைமை எனப்படும். உள்ளம் உடையார்க்கெல்லாம் உள்ள உடைமை அஃதாகலின் அதனை உள்ளமுடைமை என்றும் கூறுவர். வெறும் ஊக்கம் மட்டும் பயன் தாராது. அது விலங்கின் வலிமையாகவோ நச்சுயிரின் வலிமையாகவோ போய் விடும். அதனால் அறிவோடும் கூடியதாக அவ்வூக்கம் இருத்தல் வேண்டும். அறிவிலி பண்பிலி ஆகியோர் கொண்ட ஊக்கம் அவர்க்கும் நன்மை தராததாய் பிறர்க்கும் நன்மை தராத தாய் ஒழியாமல் தீமை தருவதாகவும் இருந்து விடும். அதனால் உரன் எனப்படும் ஊக்கத்திற்கு அறிவு என்னும் பொருளும் உண்டு. மாந்தர்ப் பொதுவாம் உடைமையாகிய ஊக்கத்தை அனை வரும் கொண்டுளரா? போற்றுகின்றனரா? உள்ளத்தில் உறுதி வந்து விட்டால் வெள்ளத்தையும் நீந்திக் கடத்தல் எளிது. ஊக்கம் இல்லாவிடின் வெள்ளம் அடிப்பதற்கு முன் உள்ளமே அடித்துக் கொண்டு போய்விடல் உண்மை. நான் வாழ்வேன்; நான் வளத்தோடும் வாழ்வேன்; வறுமை என் குடிப்பிறப்பாக எனக்கு இருக்கலாம். ஆனால் அதனை என் கண்ணிலும் படா வண்ணம் புற முதுகுகாட்டி ஓட வைக்கும் உறுதி என்னிடம் உண்டு. என்னுடைய பேறு எத்தகைய பேறு! உடல் உறுப்புகளில் எக்குறைவும் இல்லை! அக்குறையுடைய வரும் அக்குறையை இல்லாரினும் வெற்றியுடையவராய் வாழக் காண்கிறேன். நான் அவரிற்றாழ்ந்த பிறப்பினனா? என்று எண்ணித் துணிந்தால் வெற்றி கைகளிலே தானே வந்து நிற்கத் தானே செய்யும். மேலே செல்வது என்பது என்ன அரிதா? அறுபது அடி உயரம் உடைய தென்னை பனை ஆயின் என்ன? ஓரடி உயரம் செல்லத் துணிவு இருந்தால் அவ்வோரடி ஓரடியாக அறுபது அடி வைக்க முடியைக் காண முடிவதுதானே! உறுதி தானே வெற்றி! வறுமையை வென்றவர் எத்தனை பேர்? எச்சில் இலையை எதிர்பார்த்து இருந்தவரும் எத்தனையோ ஆலைக்கு உரிமை யாளராய் ஆகிவிடல் இல்லையா? தெரு விளக்கிலே படித்த வரும் பளிங்குச் சிலையாகிப் பளிச்சிடும் பேறு பெறவில்லையா? மண்வெட்டியில் கரித்துண்டு கொண்டு எழுதிப் படித்தவரும் வெள்ளை மாளிகைத் தலைவராகி விடவில்லையா? பள்ளிக்குச் செல்ல மட்டம் போட்டு, சாய்க்கடைக்குள் ஒளிந்து மறைந்து திரிந்த உருப்படாப் பிறப்பும் படைத் தலைமை கொண்டு நாடாட்சி செய்ய வில்லையா? எடுபிடியாளாகச் சேர்ந்து வேலையூடே முயன்று முன்னேறிப் பல்கோடி தாலர்க்கு உரிமை யாளராய் உயர்ந்து விடவில்லையா? கண்ணும், காதும், வாயும் செயலற்ற போதும் தாம் செயலற்றுப் போகாமல் உலகம் போற் றும் அறிவுச் செல்வராய்த் திகழ்ந்தவர் இலரா? இவர்களுக் கெல்லாம் திறந்த வழி நமக்கு மட்டும் அடைத்துப் போகுமா? உயர்வின் திறவு ஊக்க முடைமையே என்று குறிக்கோள் கொள்க. வள்ளுவர் ஊக்கமுடைமை வருமாறு:- ஒருவர் ஒன்றை உடையர் எனின் அவர் ஊக்கத்தை உடைய வரே. அவ்வூக்கம் இல்லாதவர் எவற்றை உடையவர் எனினும் உடையவரே ஆகார். பொருளுடையவராகச் சிலர் உளர். அவர்க்கும் ஊக்கமே உடைமையாம். அவ்வூக்கமுடைமை இல்லை எனின் பொருளுடைமையும் ஒழிந்து போகும். உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று (591) உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (592) ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாகக் கொண்டவர் எம்செல்வத்தை இழந்து விட்டேம் என்று வருந்தமாட்டார். (593) தளராத ஊக்க முடையவனை அடைவதற்காக ஆக்கமே வழி கேட்டுத் தானே செல்லும் (594). ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை நீர்ப் பெருக்கின் உயரத்திற்குத் தக்கவாறு தாமரை, அல்லி, குவளை முதலிய நீர்ப் பூக்களின் தண்டும் உயரும். அது போல் மாந்தரின் ஊக்கத்திற்குத் தக்க அளவில் உயர்வும் அமையும் (595) வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு நினைப்பவற்றை எல்லாம் உயர்ந்தவையாகவே நினைக்க. அந்நினைவு உடனே கூடாது ஒழியினும் விடாது முயல்க; வெற்றி உறுதியாம். (596) அம்பு உடலில் பட்டுத் தைத்தாலும் அதைத் தாங்கித் தன் கடமையில் சோராது யானை; அது போல் ஊக்க முடையாருக்குத் தடைப்பாடு வரினும் அதற்காகத் தளர மாட்டார் (597) வாழ்வு என்பதுதான் ஊக்கமில்லானுக்கு இல்லை என்பதா? வளமும் இல்லை! வண்மையாளன் என்னும் புகழ்ப் பேறும் இல்லை. (598)) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு யானை பரியதுதான்; கூரிய தந்தங்களையுடையதும் தான்; ஆனால் அவ்வுருவும் அவ்வுறுப்பும் இல்லாத புலி தாக்கும் போது என்ன அஞ்சுதல் அஞ்சி ஓடுகின்றது யானை? ஊக்கத்தின் சிறப்பை உரைக்கும் சான்றல்லவோ இது (599) பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் ஊக்கமே ஒருவர்க்கு எப்போதும் தம்மகத்துள்ள அரும் பொருளாகும். அதனை இல்லாதவர் மாந்தப் பிறவியர் அல்லர்; மரப்பிறவியர் ஆவர். மக்கள் என்றும் மரம் என்றும் வழங்கப் படும் பெயர் வேறுபாட்டு அளவே வேறுபாடாம் (600). உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு ஊக்கமுடையவர்க்கு மடி என்னும் சோம்பல் உண் டாகாது. உண்டாகவும் விடக் கூடாது. மடி என்பது மடிவுக்கு முற்பட்ட நிலை. மடித்துப் போதல் மட்கிப் போதலாகும் மட்குதல் என்பது மண்ணோடு மண்ணாகிப் போகும் நிலை யாகும். சோம்பாமை ஊக்கமுடைமையை அடுத்து வைக்கப்பட்ட அதிகாரம் மடி இன்மை என்பதாகும். சோம்பல் இல்லாமை என்பது இதன் பொருள். சுறுசுறுப்பு இல்லாமை சோம்பல் என்க. முன்னேறத் துடிப்பார்க்குச் சோம்பல் ஆகாது. சோம்பல் வாழ்வு தேம்பும் வாழ்வாதல் உறுதி. குடும்பத் தலைவன் சோம்பன் எனின் குடும்பத்தவரிடம் சுறுசுறுப்புக் காண்டற்கு இயலுமோ? சோம்பல் என்பது தொய்வு கண்ட இடத்து ஏறியமர்ந்து கொள்ளும் இயல்பினது. சோம்பன் தலையில் குருவி கூடுகட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் கவலைப்படான். அதனை ஓட்டவும் கைந்நீட்டான். வாழைப் பழம் சூறை போடுகிறார்கள் என்றானாம் ஒரு சோம்பன். அடுத்த சோம்பன், உரித்துப் போடுகிறார்களா? உரியாமல் போடுகிறார்களா? என்று கேட்டானாம். உரித்துப் போட்டால் அப்படியே வாயைப் பிளந்து கொண்டால் போதுமே எடுக்கவும் உரிக்கவும் வாயில் போடவும் வேண்டியது இல்லையே! உப்புமலைமேல் உட்கார்ந்து உண்டாலும், உப்பை அள்ளிப் போட்டால்தான் சுவை என்பதொரு பழமொழி. ஊணுக்கும் சோம்பி, உழைப்புக்கு எப்படிச் சுறுசுறுப்பியாக இருப்பன்? சோம்பன் குடியைக் கெடுப்பான் என்கிறார் திரு வள்ளுவர். அதனை அரிய உவமையால் குறிக்கிறார். குடும்பம் என்பது ஒரு நந்தா விளக்கு. அவ்விளக்குத் திரியை அடிக்கடி தட்டிவிட வேண்டும். இல்லாவிடில் திரியில் கருக்கு உண்டாகிச் சுடர் மழுங்கவும் அணையவும் செய்யும். அதுபோல் சோம்பல் என்பது குடும்ப விளக்கின் கருக்கு. அதனை அகற்றா விடில் அவ்விளக்கும் மழுங்கி அணைந்து விடும். குடி என்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசூர மாய்ந்து கெடும் (601) தாம் பிறந்த குடி, பெருமைமிக்க குடியாக விளங்க வேண்டும் என்று விரும்புபவர், சோம்பலைச் சோம்புமாறு செய்யும் முயற்சியாளராக இருத்தல் வேண்டும் (602) அழிவு செய்யும் சோம்பலைத் தன்னிடத்துக் கொண்டு செயற்றுக் கிடக்கும் அறிவிலி பிறந்த குடி, அவன் அழியு முன்னரே அழிந்துவிடும் (603). அழிவு செய்யும் சோம்பலில் கிடந்து சிறந்தவற்றைச் செய்யாதவரின் குடும்பம் அழிந்து போவதுடன் குற்றமும் பெருகும் (604). எடுத்த செயலைச் செய்து முடியாமல் காலம் நீட்டுதல், மறதி, சோம்பல், மிகுந்த உறக்கம் என்னும் நான்கு தன்மைகளும் கெட்டுப் போகும் தன்மையர் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகும் (605). நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் நாடாள்பவரின் நல்ல தொடர்பே வாய்த்தால் கூட, சோம்பல் உடையவர் நற்பயன் அடைய முடியாது (606). சோம்பிக் கிடந்து சுறுசுறுப்பாகச் செயலாற்றாதவர் பலப்பலரும் இடித்துக் கூறி இகழும் சொற்களைக் கேட்பவராக இருப்பர் (607). இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். சோம்பல் ஒருவன் குடும்பத்தில் நிலைபெறத் தங்கினால் அது அவன் குடும்பத்தொடு பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்து விடும். குடியை ஆளுந்தன்மையில் குற்றம் உண்டாயினும், அக் குடியில் பிறந்தான் ஒருவன், அக் குடியின் சோம்பலின் ஆட்சியை மாற்றி விடுவன் ஆயின், அக்குற்றம் நீங்கி விடும் (609). குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் சோம்பல் இல்லாத சுறுசுறுப்பாளன் ஒருவன் இவ் உலகையே கொள்ளக் கருதினும் கூடுவதேயாகும். முயற்சி அத்தகு சிறப்புடையது (610). முயற்சி மடியின்மையை அடுத்துள்ள அதிகாரம் ஆள்வினை உடைமை என்பது. ஆள்வினையாவது முயற்சி. என்னால் செய்து முடிக்க முடியுமா என்று சோராதே. துணிந்து செயலாற்று. உன் முயற்சி கட்டாயம் வெற்றி தரும் என்கிறார். அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் என்பது அது (611). ஓடமாட்டாதவன் ஒருவன்; கால் தடுக்கித் தடுக்கி விழும் அவனுக்குத் துணிவு வந்தது. ஓடுவேன்; ஓடி வெற்றியும் பெறு வேன் எனத் துணிந்தான். பயிற்சியிலும் தொடர்ந்து முனைந் தான். இகழ்ந்தவர்கள் அனைவரும் மூக்கிலே விரல் வைத்து நோக்க, மாவட்ட ஓட்டப் பந்தயத்தில் முதல்வனாக வந்து வெற்றி விருதும் பெற்றான். வெற்றி எங்கே இருந்தது? அவன் உள்ளத் துணிவில் இருந்தது. இவன் கொன்னல்-திக்கல் எனப் பலரும் சொல்லப் பட்டான். ஒருநாள் பாருங்கள் நீங்களே இவன் போல் பேச முடியவில்லையே எனப் பேசப் போகிறீர்கள் எனப் பயிற்சியைத் தொடர்ந்தான். நன்றாக விடாமல் தொடர்ந்தான். உலகப் பெரும் பேச்சாளன் ஆனான். அவனே தெமாசுதனீசு என்பான். இவர்களுக்கு மட்டுமா இத்திறம்? நாம் எண்ணினாலும் நமக்குள்ளும் இத்திறம் உண்டு. திறமை ஊக்கம் வெற்றி என்பன தனியுடைமைப் பொருள்கள் அல்ல. பொதுவுடைமைப் பொருள்கள். அள்ளிக் கொள்ள வல்லார்க்கெல்லாம் சிந்தாமல் சிதறாமல் கைகூடிவரும் பொருள்கள். ஒரு கன்றுக் குட்டி; பிறந்த அன்று அதனைத் தூக்கினான். அப்படியே விடாமல் ஒவ்வொரு நாளும் தூக்குவதைக் கடமை யாகக் கொண்டான். நாளும் நாளும் கன்றுக் குட்டி வளர்ந்து பெரிதாகியது. தூக்கியவன் பயிற்சியும் வளர்ந்து வளமாகியது. பழக்கத்தால் அவனுக்கு அதன் கனம் பெரிதாகத் தோன்றிற் றில்லை. கன்று காளையாகியது; திமிலும் கொண்டு நிமிர்ந்தது. எனினும் கன்றைத் தூக்கியது போலவே தூக்கி எடுக்க அவனால் முடிந்தது; புதிதாக ஒருவன் போய் அதனைத் தூக்கிவிட முடியுமா? முடியாது என்னும் சொல் என் அகராதியில் இல்லை என்ற நெப்போலியன் எண்ணத்தக்கவன் ஆவன். ஒரு செயலைக் செய்ய ஒருவன் தொடங்குகிறான். அத் தொடக்கமே வெற்றிபெறுவான் என்பதற்குச்சான்றாகத் திகழ வேண்டும். நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பது மேலை நாட்டுப் பழமொழி. தொடங்குவோமா வேண்டாமா என்று தொடங்கும் தொடக்கத்தின் முடிவை அப்பொழுதே உறுதியாகச் சொல்லி விடலாம். வெற்றியாக முடியாது என்பதே அதன் முடிவு. சிலர் படபடப்பாகவும் பரபரப்பாகவும் தொடங்கி விடுவர். பட்டாசு போலவும் - பொறிவாணம் போலவும் பளிச்சிடவும் காட்டுவர். தொடர்ந்து முயலார்; ஊக்கமாகவும் முயலார். அரைக்கிணறு தாண்டி என்ன? முக்கால் கிணறு தாண்டி யென்ன? தாண்டாமை தானே முடிவு! அதனால், வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு என்றார் வள்ளுவர் (612) எடுத்த செயலை நிறைவேற்றாமல் அரைகுறையாய் விட்டவரை உலகம் நினைவு கொள்ளாமல் விட்டுவிடும். ஆதலால் எடுத்த செயலில் இடையறவு படாமல் முயலுக என்பது இதன் பொருளாம். நல்ல இல்லறத்தான் தனக்காக மட்டும் அடுப்பு மூட்டான் என்பது வழக்கிலுள்ள செய்தி. அதுபோல் சிறந்த முயற்சி யாளனும் தனக்காக மட்டுமே முயற்சியில் ஈடுபட மாட்டான் என்பது உண்டு. தன் முயற்சியின் வெற்றியால் பலர்க்கும் உதவுதலே அவன் அடிப்படைக் கருத்தாக இருக்கும். அதனால், தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு என்கிறது வள்ளுவம் (613) பிறர்க்கு உதவுதல் என்னும் பெருமிதம், இடைவிடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த தன்மையிலேயே அடங்கி யுள்ளது என்கிறது அது. முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவியாக இருக்க முடியுமோ? தனக்குமே உதவியாக இருக்க முடியாத அவன் பிறர்க்கு உதவியாக இருப்பது கனவிலும் இயலாது. கருவிப் போர்ப் பயிற்சியே இல்லாத ஒருவன் கையில் வாளை எடுத்துக் கொண்டு சுழற்றினால் என்ன ஆகும்? அவன் தோளையும் தலையையும் அவனே வெட்டிப் பதம்பார்த்துக் கொள்வானே அல்லாமல் வேறு என்ன செய்து விடுவான்? என உவமை காட்டுகிறார் வள்ளுவர். தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் என்பது அது (614) வேலை நெருக்கடி! அதே பொழுதில் ஊரிலோ வீட்டிலோ விழாக் கோலம்! பணியழுத்தம்! அதே பொழுதில் பளிச்சிடும் காட்சியழைப்புகள், விருந்துக் கோலங்கள்! அசையாத உறுதியையும் அசைக்கும் ஆர்வச்சூழல். தூண்டும் இன்ப அழைப்புக்குச் செல்வதா? வேண்டும் தொழில் அழைப்புக்குச் செல்வதா? குடிநலம் காக்க விரும்புவான் எதனை முடிவு செய்வான்? இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயலாற்றுதலை விரும்புபவன் எவனோ அவன், தன் உறவினர் துன்பத்தை அகற்றி நிலை பெறத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான். முயற்சியே செல்வம்; முயலாமையே வறுமை (616) சோம்பலே முக்காட்டாள், சுறுசுறுப்பே திருமகள் (617) திரைப்பட நடிகை ஒருவர் சுதாசந்திரன் என்பார். மயூரி என்னும் திரைப்படத்தில் நடித்தவர். ஆடல் பழகி அரங்கேற்றமும் நிகழ்ந்த அவர், கால் ஒன்றை இழந்தார். இனி ஆடமுடியுமா? முடியும் என முடிவு எடுத்தார். செயற்கைக் கால் பொருத்தப்பட்டுப் பயிற்சியைத் தொடர்ந்தார். குருதி ஒழுக்கா, வலித் தாக்கமா? ஊக்கம் இழந்தார் அல்லர். பெற்றோர் உருகி நின்றனர்! அவர் உருக்கமாக நின்று பயின்றார். அரங்கேறி ஆடல் ஒழிந்து பதின்மூன்று ஆண்டுகளின் பின்னே மீண்டும் ஆடல் அரங்கேறினார். ஆட்டம் பிசிறு தட்டவில்லை. பிழை பட்டது இல்லை! பெற்ற தந்தை அக்காலைப் பற்றிக் கொண்டு கண்ணீருடன் வணங்கினார்! அவர் காலையா? இல்லை! அந்த அயரா ஊக்கத்தை! மீண்டும் ஆடிய அன்று குவிந்த தொகை ஐந்து நூறாயிரம். அதனை வைப்பு நிதியாக்கிக் கால் இழந்தோர்க்கு இலவயமாகக் கால் பொருத்துதற்குத் திட்டப் படுத்தினார். பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்ற இயற்கையே தடையாக நிற்கலாம். மழையென்ன, வெயிலென்ன, வெள்ள மென்ன, தீயென்ன எத்தனை தடைகள்! அப்படித் தடை கண்டு துவள்வதானால் சப்பானியர் வாழ முடியுமா? நில நடுக்கமும் எரிமலைக் கக்கலும் அவர்களுக்கு உள்ளது போல் எந் நாட்டவர்க்கு உண்டு. அவர்கள் அவற்றுக்காக நாட்டை விட்ட னரா? தொழிலை விட்டனரா? இரக்க மில்லாமல் அணுக் குண்டு வீழ்த்தி அழிவு சூழ்ந்தாலும் விட்டோமா என்று உலகம் வியக்க நிமிர்ந்து நிற்கும் அவர்கள் நிலை எத்தகைய வீறுமிக்கது! தெய்வத்ததான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்பவை ஆள்வினை வள்ளுவங்கள் (619, 620) இடுக்கண் அழியாமை உலகில் துன்பம் இல்லாதவர் எவர்? துன்பமே இல்லை எம்வாழ்வில்; எல்லாம் இன்பமே எனக் கூறிய மெய்யுணர் வாளரும் துன்பப் பட்டுப் பட்டுத் தழும்பேறிய பின்னர்க் கூறி யதே இஃதாகும். என் பிள்ளை இறந்துவிட்டது. எழுப்பித் தருக என்று சொல்லி அழுது நின்றாள் ஒருதாய். அவள் அவலம் கண்ட பெரியவர் அம்மா உன் பிள்ளையை எழுப்பித் தருவேன்; ஆனால், அதனை எழுப்புவதற்குக் கொஞ்சம் கடுகுவேண்டும் என்றார். கடுகுதானே! நொடியில் கொண்டு வருவேன் என்று புறப்பட்டாள். அம்மா சற்றே கேள்! நீ வாங்கும் கடுகு சாவே இல்லாத வீட்டில் வாங்கியதாக இருக்க வேண்டும் என்றார். மகவைக் கொண்டு வீடு வீடாகக் கடுகு கேட்டாள். கடுகு தர வந்தனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் அவர் சாவு, இவர் சாவு என்னும் செய்தியை அறிந்து கொண்டு கடுகு இல்லாமல் திரும்பினாள். எந்தப் பொருளை அவளே தேடிப் பெற வேண்டும் என விடுத்தாரோ அதே பொருளைப் பெற்றுக் கொண்டாள். இது புத்தர் வரலாற்றுச் செய்திகளுள் ஒன்று. சாவினை இல்லாத வீடு உலகில் இல்லாதது போல் துன்பம் இல்லாப் பிறவியும் உலகில் பிறந்ததில்லை என்பது தெளிவே. துன்பம் தாங்க முடியாதது தான்! வராமல் தீராதது தான். அதற்காக அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகவாழ வேண்டுமா? துன்பம் எவர்க்கு? துன்பத்தைக் கண்டு துடித்துத் துன்பப் படுபவர்க்குத் தாமே! பேயச்சம் எவருக்கு? பேயைப் பேய் அடிக்குமா எனக் கேட்ட ஔவையார்க்கா? அஞ்சுபவர்க்குத் தாமே மனம்பேய்! மாயப்பேய்! அரற்றல் பேய்! இடுக்கண் அழியாமை கூறிய வள்ளுவர் இடுக்கணை வெல்வதற்கு ஒருவழி கூறுகிறார். அது இடுக்கண் வருங்கால் நகுக என்பது. வலி வருகின்றது; பழகாத வேலையைச் செய்ய அதனால் உடல் கால் கைகளில் வலி உண்டாகின்றது. வலிப்பது வலிக் கட்டும் என விடாது தொடர்ந்தால் என்ன உண்டாகின்றது. வலிமை உண்டாகின்றது. வலிபோனது; வலிமை ஆனது! இடுக்கணுக்கு இடுக்கண் பட்டால்தானே! மணமகனை வர வேற்க நிற்கும் மணமகளைப் போலக் காலனை வரவேற்கக் காத்திருக்கிறேன் என்ற தெளிவும் துணிவும் வந்து விட்ட வர்க்குச் சாவுத் துயரோ அச்சமோ உண்டா? இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். இடுக்கணைக் கண்டு நகைக்கும் நகைப்பே அவ்விடுக் கணைப் பற்றி ஏறி ஊர்தியாக்கிக் கொண்டு உலாப் போகுமாம்! காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு வரும். அத்தகு வெள்ளம் போலத் துன்பம் வந்தாலும் அறிவுடையவன் ஊக்க மாக எண்ணிய அளவில் பஞ்சாகப் பறந்து போகும். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குத் தொக்கு என்பது பழமொழி. எதிர்த்து நிற்கட்டும்? வெருட்டி வந்தது வெருண்டு ஓடும். துன்பத்திற்கும் துன்பப்படுத்துவர்! எவர்? துன்பத்திற்குத் துன்பப்படாதவர். இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் (623) ஒரு வண்டி! வண்டியின் மேல் வலிய பாரம்; வழியில் காட் டாற்று ஓடை; ஆற்றில் வண்டி வருகிறது. வண்டிச் சக்கரம் மணலில் பதிகிறது; கீழே இறங்குகிறது; தெப்பக் கட்டை அளவும் கீழே இறங்குகிறது. எனினும் சலிக்காமல் மாடு இழுத்துக் கொண்டு வருகிறது ஓடையின் முடிவில் ஏற்றம்! காதைவெடைத்து, கொம்பை நிமிர்த்தி காலை மண்டியிட்டு இழுக்கிறது! இழுத்த இழுப்பிலே கழுத்துக் கயிறு அறுந்து போகிறது. மாடு மேட்டில் முட்டி வீழ்ந்து மூக்கடி பட்டு இறந்தே போகிறது! காளையின் வலிமையே வலிமை! இன்னொரு வண்டி; தார்ச்சாலை, பாரமும் இல்லை வண்டியில் பூட்டியதுதான், படுத்து விட்டது. எழுப்பினான் வண்டிக்காரன். அசையவில்லை. வாலை முறுக்கினான்? பொருட்டாகக் கொள்ளவில்லை. தார்க்கோலால் அறைந்தான்! முளைக்கோலையும் பயன்படுத்தினான். விடிவு இல்லை. மூக்குப் பொடியைக் கண்ணில் போட்டான்; இமையை இறுக்கிக் கொண்டது. தீக்குச்சியைக் கொளுத்தி வாலில் வைத்தான். அப்பாடா! vGªjJ! அவன் செய்தது கொடுமையே! ஆனால் அது செய்த கொடுமையோ கொடுமையில் கொடுமை! முன்னைக் குறித்த காளை போல்வாரும் உளர்; பின்னைக் குறித்த காளை போல் வாரும் உளர். திருக்குறள் மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து எனக் காளையை உவமைப்படுத்திக் கூறுகிறது (624). தடையுண்டாகிய பொழுதெல்லாம் வலிய காளையைப் போன்ற உறுதியாளனை அடைந்த துன்பம், துன்பப்படுதல் உடையது என்கிறது அது. துன்பம் ஒன்றாக இல்லை. அடுக்கடுக்காக வந்தாலும் துணிவாளனிடம் அவை துன்பப்பட்டுப் போகும் (625). துணிவாளர் ஒரு பெருவாய்ப்பைப் பெற்றாலும் பெற்ற தற்காகப் பேருவகை கொள்ள மாட்டார். அதனால் அப் பெருவாய்ப்பை இழக்கும் நிலை உண்டாயினும் அதற்காக இழந்தேம் என்று இரங்கவும் மாட்டார். அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர் (626) உலகில் நமக்கு மட்டுமா துன்பம். துன்பம் என்னும் அம்பு தைக்கவென்றே அமைந்த இலக்கு நம் உடம்பு மட்டுமோ? இல்லை! துன்பம் உலகியல்! துடித்தால் போய் விடாது; வெடித்தால் விலகி விடாது. ஆனால், துணிந்து நிற்பதே அதனைத் தூளாக்கிப் பறத்தும் என்பவர் துன்பத்திற்குக் கலங்க மாட்டார். இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் (627) துன்பம் இயல்பே என்று தெளிந்தவனும், இன்பம் வேண்டும் என்று எண்ணாதவனும் துன்பப்படுதல் இல்லை! (628). இன்பத்தில் இன்பம் வேண்டும் என்று எண்ணாத வனுக்குத் துன்பத்தில் துன்பம் வருவது இல்லை (629). இவற்றினும் ஒருபடி மேலே ஏறியவனும் உண்டு. அவன் துன்பப்படுதலே இன்பம் எனக் கொண்டவன். அவனைத் துன்பம் என்ன செய்துவிடும்? அவன் பகைவர் கூட அவன் துணிவு கண்டு பாராட்டும் சிறப்புப் பெறுபவன் அவன், இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு (630) பகைவர் விரும்பிப் பாராட்டுவானேன்? துன்பப் பகையையே இன்பமாகக் கருதி எதிரிட்டுக் கொள்பவன் நம்மை எப்படிப் பொருட்டாகக் கொள்வான் என்னும் தெளிவால் பாராட்டுவர். செய்யாத தவற்றைச் செய்ததாக ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் பழி சொன்னான். பழி சொல்லப்பட்ட சிறுவனின் தந்தை முரடர். பெருஞ் சினக்காரர். தம் பையன் காதைப் பிடித்துத் தூக்கினார்; கீழே போட்டார்; காலால் மாறி மாறி மிதித்தார். சிறுவன் நன்றாக மிதிபட்டான். உடலெல்லாம் புண்ணாய் வலிக்க மிதிபட்டான். ஐயோ என்றான் அல்லன்! அரற்றல் செய்தான் அல்லன்! பொய்யே என்றான் அல்லன்! பொறுக்க என்றான் அல்லன்! பொய்க் குற்றம் சாற்றிய சிறுவனுக்கே கண்ணில் தண்ணீர் வந்தது! மிதிபட்ட சிறுவனிடம் போய் இது பொய் என்று சொல்லி மிதிபடாமல் தப்பி இருக்கலாமே என்றான். தப்பி இருக்கலாம். ஆனால் என் தந்தையார்க்கு வலிமை எவ்வளவு உண்டு என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தண்டனையைத் தாங்குகிறேனா என்றும் ஆய்வதற்கு விரும்பி னேன். அதனால் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை என்றான். அச்சிறுவனே பிற்கால நெப்போலியன். குடிசெயல் வகை இடுக்கண் அழியாமை எதற்கு? தன்னை வாழ வைக்க! தன்குடியை வாழ வைக்க! பிறவியின் நோக்கத்தை நிறை வேற்ற! அதனால், உழைப்பு வல்ல துணிவாளர் தாம் பிறந்த குடியை அது முன்னே இருந்த நிலையினும் தம் பிறப்பால் உயர்த்துவதை ஒரு சூள் ஆகவே கொண்டு பாடுபடுவர். வெந்நீரிலே குளிக்க மாட்டாதவன் வேகும் நெருப்பிலே பாய்வேன் என்றால் ஒப்ப முடியுமா? என்பதொரு பழமொழி. தன் செயலைத் தானே செய்து முடிக்க மாட்டாதவன் பிறனைக் கொண்டு முடிப்பேன் என்பது அப்பழமொழி போல்வது என்று கூறுவர். யான் செய்ய வேண்டும் கடமையைச் செய்து முடிப்பதற்கு எவர் கையையும் எதிர்பார்க்க மாட்டேன் என்பதே பெருமை! பெருமையில் பெருமை என்கிறது குடிசெயல்வகைத் தொடக்கக் குறள். கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல் (1021) ஆள் வினை (முயற்சி)யும் வேண்டும்; அறிவும் வேண்டும்; இவ்விரண்டும் தொடர்ந்திருக்கவும் வேண்டும்; அவ்வாறு இருப்பின் குடிவழிப் பெருமையும் நீளும் ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. (1022) யான் பிறந்த குடும்பத்தை உயர்வாக்குவதே என் உயிர்க் கடன் என்று ஒருவன் துணிந்தால் அவன் துணிவு கண்டு மகிழ்ந்த பற்றற்றவர்களும் கூட வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஓட்ட ஓட்டமாக உதவிக்கு வந்து முன்னே நிற்பர். குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (1023) தாம் பிறந்த குடியைத் தாழ்வில்லாமல் உயர்த்த முயற்சி செய்பவர்க்கு, அதற்குரிய முயற்சியை அவர் எடுப்பதற்கு எண்ணு முன்னரே அது வெற்றியாக முடிந்துவிடும். சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு (1024) தான் பிறந்த குடியை உயர்த்துதற்குத் துணிந்தவனை அதுவும் குற்றம் குறை இல்லாமல் பெருந்தக்க வழியால் உயர்த்தத் துணிந்தவனை உலகத்தார் உரிமையால் விரும்பித் தம் சுற்றமெனச் சுற்றிக் கொள்வர். குற்ற மிலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு (1025) ஆண் ஆயினும் ஆக! பெண் ஆயினும் ஆக! பால் வேறு பாட்டில் ஒன்றும் இல்லை. சில பெண் பிறப்பர் செய்துள்ள செயற்கருஞ் செயல்களை ஆண்பிறப்பர் செய்தலும் அருமை என்பதை உலக வரலாறு காட்டும்! ஆதலால் எவராயினும் அவர்க்கு நல்ல ஆண்மை என்று சொல்லப் படுவது தாம் பிறந்த இல்ல ஆண்மை மேம்பட்டதாகச் செய்வதே. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026) போர்க்களம் செல்லும் வீரர் அனைவருமா போரை நேர் எதிரிட்டுத் தாங்குகின்றனர்; தாக்குகின்றனர்; ஓரம் சாரம் நின்று ஒதுங்குவார்; ஓடிப் பின்வாங்குவார்; மண்டியிடுவார்; மறைந் துய்வார் எத்தனை எத்தனை பேர்? அதே போல் இல்லக் களத்தில் உண்டாம் பொறுப்புத் தாங்கும் போரிலும் நேரேற்று நிற்பாரே நிற்பார்! பிறர் ஒதுங்கித் தப்பவும் ஆவர். அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை (1027) குடும்பத்தை மேலுக்குக் கொண்டு வர முயல்வார்க்கு நல் காலம் அல்காலம் என என்ன உண்டும்? சோம்பல் கொண்டும் மானம் கொண்டும் அவர்கள் இருப்பின் குடி கெட்டும் போகும். குடிசெய்வார்க் கில்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும். (1028) துன்பத்தை வைத்துக் கொள்வதற்கென்றே அமைந்த கலம் அன்று உடம்பு! துன்பம் இன்பமாகிக் கொழிக்கின்ற நிலையும் வந்தே தீரும்! இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ, குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு (1029) குடும்பம் என்பது ஓர் ஆலமரம்? அடிமரத்துடன் வீழ்து களும் அதனைத் தாங்கும் கடப்பாடு உடையன. அவ்வாறு தாங்காக்கால் இடுக்கண் எனப்படும் சுழிக்காற்று மோதி அழித்து விடும். இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி (1030), குடும்பத்துடன் குடும்பத்தைத் தாங்குதல் முந்தை உழவுத் தொழிலிலும், தச்சு கொல்லு, நெசவு முதலாம் துணைத் தொழில்களிலும் நடைமுறையாக இருந்தன, வள்ளுவர் காலத்தில் பல்வகைத் தொழில்கள் நடை பெற்றமை திருக்குறள் ஆட்சி வழியாகவே அறிந்து கொள்ளக் கூடியன. உழவுக்குரிய ஏர் கலப்பை வண்டி வேண்டும் எனின், தச்சும் கொல்லும் இல்லாமல் இராதே. உடை உண்டு எனின், நூற்பும் நெயவும் இல்லாமல் இருந் திருக்குமா? கலம் பேசப்படின் வனைவார் இருந்திருக்கத்தானே செய்வர் எனினும், வள்ளுவர் உழவு பற்றியே உதைத்தார். உழவுத் தொழிலுக்கு அவர் குறித்துக் கூறிய செய்திகள் பொதுவாகத் தொழில்கள் அனைத்துக்கும் வேண்டும் அடிப் படைச் செய்திகளாகும். பல தொழில்களில் உலகோர் சுற்றினாலும், உழவுக்குப் பின்னாலேயே அவர்கள் நிற்றற்குரியவர். அதனால் எத்தகு துயருடையதாயினும் உழவுத் தொழிலே தலைமையான தொழில். (1031). உழுபவரே உலகம் என்னும் ஊர்திக்கு அச்சாணி போன்றவர்; அவரே உலகோரைத் தாங்குபவர். (1032) வாழ்வார் என்பவர் உழவரே; மற்றையோர் அவர் வழியரே. 1033) ஆள்வோர் என்பவரும் உழவர்க்குப் பின் நிற்பவரே (1034) உழவர் பிறரை எதிர்பார்த்து வாழார்; எதிர் பார்த்து வாழ்பவர்க்கு ஈயத் தாழார். (1035) உழவர் செயலற்றால் துறவர் என்பவரும் நிலையார் (1036) உழவர் உழவடையால் நிலத்தை நொய்ப் புழுதியாகச் செய்யின் எருவிடுதலும் வேண்டாமல் விளையும். (1037) உழுவதிலும் எரு விடுதலும், எரு விடுதலிலும் களை வெட்டலும்; களை வெட்டலிலும் நீர் விடுதலும், நீர் விடுத லிலும் காத்தலும் ஒன்றில் ஒன்று உயர் கடமைகள். (1038) நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்தைப் பார்த்து செய்வன செய்யத் தவறின் பேணுதலைப் பெறாத மனைவி ஊடுவது போல நிலத்தின் விளைவும் ஊடி விடும். (1039) செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். (1039) வளமான-வைப்பான-நிலம் இருந்தும் பாடுபட்டுப் பயன் கொள்ளாராய் யாம் எதுவும் இல்லேம் என்று சோர்ந்து இருப்பவரைக் கண்டு நிலம் என்னும் நங்கையே எள்ளி நகை யாடுவாள். (1040) செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் (1039) இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (1040) என்பன எத்தொழிலுக்குப் பொருந்தாத தொழிலாளர் அனைவரும் இல்லத்திலும் தொழிலகத்திலும் நெஞ்சத்திலும் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய மணிக் குறள்கள் இவை!  13. நல்ல ஆட்சியராக ஆட்சி வள்ளுவர் காலம் முடிமன்னர் ஆட்சிக் காலம். அதனால் மன்னர், அரசன், வேந்தன், இறைவன் என்னும் சொற்களை ஆண்டுள்ளார். ஆனால், அரசும் ஆள்வோரும் என்றும் உள் ளவைதாமே. மன்னன், அரசன், வேந்தன், இறைவன் என்னும் இடங்களில் ஆட்சியாளன், ஆள்வோன் எனப் பொருள் காணின் இற்றை இயல்புக்கு ஒத்ததாகிவிடும். 1947 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆட்சிமுறை இன்று இல்லையே! ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வள்ளுவ ஆட்சி முறை இற்றைக்கு ஏற்குமா? என எண்ணத் தோன்றலாம். பார்வை காலப்பார்வை - இடப்பார்வை - சூழல் பார்வை - உலகியல் பார்வை என்பவற்றின் எல்லையைக் கடந்து பார்க்கும் நுண்ணிய பார்வையும் சிலர்க்கு உண்டு. அத்தகையர் பார்வை காலக் கட்டுக் கடந்தது; இடக்கட்டு அகன்றது; குழலுக்கு அப்பா லானது; உலகியலுக்கு விரிந்தது. அப் பார்வை பார்த்த பெரு மகனார் வள்ளுவனார் என்பது வாய்மைக் குறளால் நன்கு விளங்கும். சங்கத்தார் பெருக உரைத்த பரத்தையிற் பிரிவை அறவே தவிர்த்தவர் வள்ளுவர். பிறர்மனை நயவாமை, வரைவின் மகளிர், பெண் வழிச் சேறல் என்பவற்றையும் உரைத்தவர் அவர். மட்டுண்டு மகிழ்தல், வட்டாடிக் களித்தல் என்பவற்றை விலக்கி ஒழித்தற்காகக், கள்ளுண்ணாமை, சூது ஆகியவற்றை வைத்தவர் அவர். அருள்நெறித் தலைப்பாடுடைய துறவர் கொல்லாமை, புலால் உண்ணாமை என்பவற்றைக் கொள்ள வலியுறுத்தியவரும் அவர். ஆதலால் இந்நூற்றாண்டிலும் எதிர்வரும் நூற்றாண்டு களிலும் கொள்ளத் தக்கனவெல்லாம் அவர்தம் படைப்பில் இடம் பெற்றுளவாம். இடிப்புரை முடியாட்சிக் காலத்திலேயே, குடியாட்சியாளரைத் தட்டிக் கேட்கும் இக்கால உரிமையினும் குறையா உரிமையைக் கொண்டு, உரைத்தவர் வள்ளுவர். முறைகேடாம் அரசைக் கொடுங்கோன்மை என்கிறார். அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அரசை அழிக்கும் என்று மக்கள் வலிமையை மறைப் பின்றி வெளிப் படுத்துகிறார். இரந்தும் உயிர் வாழும் வகையில் அரசு முறை இருக்கு மெனின் அதனை அவ்வாறு இயற்றியவன் அழிந்தொழி வானாக எனச் சாவிப்பது வள்ளுவம். கொடுங்கோலன் ஆட்சிக்கும், கொள்ளையடிப்பவன் கொடுமைக்கும் வேறுபாடு இல்லை என்பதைக் குறித்துக் காட்டுகிறார் வள்ளுவர். மாறா அடிப்படை ஆட்சி உறுப்புகள் எனப் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனப் பகுத்துக் கூறும் வள்ளுவத்தில், எற்றைக்கும் உரியவை அடங்கிற்றில்லை எனக் கூற முடியுமா? அடிப் பொருள் ஆய்வுரையுடையது திருக்குறள். உடை வகை, ஊண் வகை, கருவி வகை, இடவகை, போர்முறை, வரிவகை இன்னவற்றைச் சொல்வது அன்று அது. அவற்றின் மூலத்தை-என்றும் மாறா மூலத்தை-உரைப்பதாகலின் என்றும் பொருந்தி நிற்கிறதாம். ஆட்சி என்னும் சொல் வள்ளுவத்தில் இடம் பெற்றுள்ளது. அருளாட்சியையும், பொருளாட்சியையும் ஒருங்கே குறிக்கிறது (252) இந்தியப் பேரரசின் ஓர் உறுப்பாகத் தமிழ் நாட்டு அரசு உள்ளது. பண்டைப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒப்பது இது. இத்தமிழ் மாநிலத்திற்கு ஓர் ஆளுநர் உள்ளார். குடியாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உள்ளது. அவ் வகைக்குத் தலைவர் உள்ளார். மேலவை என ஓரமைப்பும் அதற்குத் தலைமையும் உண்டு. ஆட்சி செய்யும் பொறுப்பாளராக அமைச்சர்கள் உள்ளனர். அவர்களைத் தம்மகத்துக் கொண்ட தலைமை அமைச்சரும் உள்ளார். ஆட்சிப் பெயரும், ஆள்வோர் பதவிப் பெயர்களும் மாறினாலும் ஆட்சி என்பது வழிவழிப்பட்ட தாகவே உள்ளது. ஆகலின் அவ்வகையில் நல்ல ஆட்சியர்க்கு உரியனவாக வள்ளுவர் உரைத்தவற்றைக் காணலாம். நல்லது போற்றல் அல்லது அகற்றல் என்னும் இருபால் நெறிமை கொள்ளல் உலகப் பொதுமையறம். அவ்வழியே வழியாய் அறிவோம். இறைமை ஆட்சிக்கு அடிப்படை வரி. வரி என்பது இறை எனப் பட்டது. இறுப்பது செலுத்துவது. இறுசால் என இன்றும் நிலவரி செலுத்தப்படுதல் அறிக. வரி வாங்குதல், வரிதண்டுதல். வரிதண்டுவோர் தண்டலர்; தண்டலர் தலைவர், தண்டல் நாயகர்; மாவட்ட ஆட்சி யாளர்க்குப் பின்னாளில் தண்டல் நாயகர் என்னும் பெயரீடு வந்ததே வரி வாங்குதலால்தான். தடி தூக்கியவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் பழமொழி வரி தண்டுதலை உரைக்கும். இறை எனப்படும் வரி தண்டியவன் இறைவன் எனப் பட்டான். அவன் வரி வாங்குவதோடு முறை செய்தலையும் மேற்கொண்டான். வலியோர் மெலியோரை வாட்டாமல் காத்ததுடன் பொதுப் பணிகள் செய்யவும், அறக்கடமைகள் புரியவும் அவன் பொறுப்பேற்றான். அதனால் மக்கள் உள்ளங் களில் இடம் பெற்றான். எழுத்தறிவித்தவன் இறைவன் எனப் பாராட்டப் பட்டமை போல் குடிகாவல், நாடு காவல், அறங்காவல் கொண்டவனும் இறைவன் என மதிக்கப்பட்டான். அதனால், முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்னும் இறைமாட்சிக் குறள் எழுந்தது (388) ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டும் பண்புகள் இவை யெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறது திருக்குறள்; ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அனைவர்க்கும் வேண்டும் இயல்புகள் இவையாம்; அவையாவன; அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம் என்பவை நிரம்பல். சோர்வில்லாமை, கல்வி, துணிவு என்பவை உடைமை. அறந்தவறாமை, அல்லவை அகற்றல், வீரம் தவறாமை, மானமுடைமை என்பன சிறத்தல். வருவாய்க்குரிய வழிகளை உண்டாக்குதல், ஈட்டல், காத்தல், உரிய வழிகளுக்கு வகுத்தல் என்னும் பொருளியல் திறம். இவ்வெல்லாம் ஆள்வோர்க்கு வேண்டத்தக்கவை (382-385) தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆளும் உரிமையைத் தன் வாக்களிப்பால் நேர்ந்துள்ள குடிமகன் ஒவ் வொருவனும், தான் விரும்பும் போதில் ஆட்சியாளனைத் தடையின்றிக் காண்பதற்குத் தக்க எளிமையானவனாக இருத்தல் வேண்டும். காண்பான் தான் பட்டுள்ள நெருக்கடியால் தன் சொல்லில் ஒரு கால் கடுமை காட்டினும் காட்டக் கூடும். அந்நிலையில் ஆட்சியாளன் மறுமொழியாகக் கடுஞ் சொல் கூறாமையைக் கடமையாகக் கொள்ள வேண்டும் (386) காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் கடுஞ்சொல் சொல்லாதவனாக இருத்தலுடன் இனியவை கூறுபவனாகவும், எதிர்பார்த்து வந்ததை ஏமாற்றமின்றி நிறை வேற்றுபவனாகவும், ஆட்சியாளன் இருப்பின், அவன் சொல் கிறபடி யெல்லாம் நாட்டு மக்களும் நடப்பர். இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு (387) அறநெறி தவறிச் செல்லும் போதோ, மக்களுக்கு நலஞ் செய்யாத் திட்டங்களைத் தீட்டும் போதோ, பொது நலம் நாடும் அறவோரும் நன்மக்களும் ஆள்வோனை நேருக்கு நேர் இடித்துக் கூறுவதற்கும் நேரலாம். அத்தகு போழ்திலும் அவர்மேல் சீறாமல், அவர் கூறிய கருத்தின் மேல் கருத்துச் செலுத்தி நன்முடிபு எடுத்தல் ஆள்வோன் பண்புகளில் தலையாய பண் பாகும். செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (389) கவிகைக் கீழ்த்தங்கல்-ஆட்சியில் அமைந்திருத்தல். கொடை, அருள், நடுவு நிலைமை, குடிமக்கள் அனை வரையும் பேணிக் காத்தல் என்னும் நான்கு பெருநலத் தன்மை களையும் ஒருங்குடைய ஆட்சியாளன், மற்றையாட்சியாளர் களுக்கில்லாத சிறப்புகளைப் பெறுவான். கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி (390) ஆள்வோன் கையில் ஒரு கோல் இருத்தல் வழக்கம். அக்கோல் நேரமைந்தது ஆட்சி என்பதன் சான்று ஆதலால் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் என்பது நிறம் பற்றிய பெயரன்று. செப்பம் என்று சொல்லப்படும் நடுவுநிலை பற்றியது. செங்குத்து, செங் கிழக்கு, செங்கோணம், செம்பாதி என்பவற்றில் வரும் செம்மைக் குரிய நேர்மைப் பொருளுடையது செங்கோல் ஆகும். திருக்குறளில் செங்கோன்மை என்றோர் அதிகாரமும் அதற்கு மறுதலையாம் கொடுங்கோன்மை என்றோர் அதிகார மும் உண்டு. செங்கோன்மை-செம்மையாக ஆளும் தன்மை. செங்கோல் செங்கோன்மையாவது எது என்பதை முதற் பாடலிலேயே கூறுகிறார் வள்ளுவர் அது. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை என்பது (541) நன்றாக ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாது நடுவு நிலைமையுடன் எவரிடத்தும் தக்கது செய்வதே செங்கோல் ஆகும். அத்தகு ஆட்சியையே மக்கள் ஆர்வத்துடன் விரும்புவர். அவ்விருப்பம் மழையை நோக்கி நிற்கும் உயிர்களின் வேட்கை போன்றதாகும் (542) நாட்டில் அறஞ்சாரும் நூல்கள் பெருக வேண்டுமானாலும், அறச் செயல்கள் தட்டின்றி நடைபெற வேண்டுமானாலும் செங்கோலாட்சி நிகழ்ந்தால் தான் கூடுவதாகும். (543) மக்களின் எண்ணங்களை அறிந்து அவற்றுக்குத் தக்க வகையில் நேரிய ஆட்சி நிகழுமானால்; மக்கள் அனைவரும் அவ்வாட்சியை ஆர்வத்தோடு தழுவி நிற்பர். இல்லாக்கால் அவ்வாட்சியை வெறுத்து ஒதுக்குவர். (344) குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு ஆள்வோன் செங்கோல் ஆட்சியன் என்றால் அவன் வெற்றிக்கு அவன் படைகளும் படைக்கருவிகளும் வேண்டுவ தில்லை. அவன் செங்கோன்மையே வெற்றியைத் தந்துவிடும். ஏனெனில் மக்கள் அனைவரும் நல்லாட்சியைக் காக்க முந்து நிற்பர். ஆகலின் புறப்பகையாலோ, உட்பகையாலோ கெடுத்து விட முடியாதாம். நாட்டைச் செம்மையாக ஆட்சி செய்தால் போதும்; அவ்வாட்சியாளனை அவன் கொடை செம்மையே நன்றாகக் காத்து விடும். இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (547) காணவருவார்க்கு எளிமையாகக் காட்சி தந்து, நன்றாக ஆராய்ந்து நெறிமுறையோடும் ஆளாத ஆட்சியனைக் கெடுக்கப் பகைவர் எவரும் வேண்டுவது இல்லை. அவன் இயலும் செய லுமே அவனைக் கெடுக்கப் போதுமானவை. எண்பதத்தால் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும் தண்பதம்-தாழ்ந்துபட்ட இயல்பு. சாவுக்கு அடிக்கும் பறைக்குத் தண்ணம்பறை என்பது பெயர். இரங்கல் பறையாகும் அது. குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காத்து, பேண வேண்டும் முறையால் பேணி, குற்றம் செய்தாரைக் குற்றத்திற்குத் தக்க அளவில் தண்டித்தல் ஆட்சியாளர் கடமையாகும். அது தவறு எனத் தக்கோர் எவராலும் சொல்லப்படாது. கணவனை இழந்த கண்ணகி கடுஞ் சினத்தளாய்க் காவலன் முன்னர்ச் செல்ல, அவன், நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ என்று வினவினான். தன் சீற்றமெல்லாம் கூட்டித் தேரா மன்னா என விளித்து உரைக்க அவன், சினந்தான் அல்லன், கடுமொழி கூறினான் அல்லன். தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி என்றே அமைந்துரைத்தான். கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றங் காண் என வள்ளுவ வழியில் உரைத்தான். அது, குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் என்பது (549) ஆகும் ஆராயாது தவறு செய்தான் எனினும், உண்மை உணர்ந்த பின்னர், அத் தவற்றுக்குத்தன் உயிரையே விலையாகத் தந்து வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கியவன் அவ்வாரியப் படைகடந்த நெடுஞ்செழியன்! அவனை அடித்துக் கொன்றார் எவர்? மனச்சான்றே துடித்துக் கொன்ற தன்றோ அது! நல்ல உழவன் எவனும் பயிரை அழிக்கும் களையைப் பக்கமெல்லாம் படரப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். முளைக்கும் போதே பறிப்பான். வளர்ந்து விட்டாலும் வெட்டி யழிப்பான்; வேரும் இருத்தல் ஆகாது எனத் தோண்டியும் எறிவான். ஆழச் சென்று மீள மீளத் தழைக்கும் அறுகை மேலே பிடுங்கி விட்டு என்ன பயன்? குழிதோண்டிக் கிழங்குடன் பறித்துப் போடுதலே உழவர் வழக்கு. அவ்வாறு நல்ல ஆட்சி யாளன் கொடிய குற்றவாளியைத் தண்டித்தலில் இரக்கம் காட்ட வேண்டுவதில்லை; ஓராயிரத்தை அழிக்கத் துணிந்த ஒன்றை அழிப்பது தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பதைக் காத்த அருளுடைமை ஆகிவிடும் அல்லவோ! ஆனால் அவ் வொரு கொலையும் தீராத் திருந்தாக் குற்றவாளிக்கு உரிய தாகவே இருத்தல் வேண்டும். பழியோரிடம் பாவமோரிடம் என ஆகிவிடக் கூடாதே! கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (550) கொடுங்கோல் கொடியவரைக் கண்டு கொலைத் தண்டனையும் தர உரிமை பூண்ட ஆட்சியாளனே, அக்கொடியனினும் கொடிய னாகத் தன் குடிகளை அலைக் கழிப்பவனாக இருந்தால் அவன் ஆட்சியாளன் ஆவனா? அவனே கொடுங் கொலையாளனாவான் (551) இத்தகையன் ஆட்சியில் வாழும் மக்கள் நாடு வாழ் மக்கள் ஆகார். கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்பது போல் நாடு வாழ் மக்களாக ஆவர். ஆட்சியைக் கையிலே கொண்டு முறை கேடாகக் கொள்ளையும் கொலையும் செய்யும் ஆட்சியன், கொலைக் கருவியைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவனுக்கு வேறானவன் ஆகான். வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு (552) ஆட்சியாளன் தான் செம்மையாக இருந்தால் மட்டும் போதாது. தன் பெயராலும் பிறர் செம்மைக் கேடாம் செயல் செய்யாதிருக்கப் பார்த்துக் கொள்ளல் வேண்டும். தன் அலுவலர்கள் என்றோ, உற்றார் உறவு என்றோ, அன்பு நண்பு என்றோ முறை கேடு செய்வார், ஆட்சி தொடங்கிய நாள் முதலாக உலகங் கண்டு வருவதேயாம். அதற்கு எவ்வகையாலும் இடந் தருதல் ஆகாது. ஓர் அரசின் வருவாய் குறைந்தது. குறைவதற்குக் காரணம் எதுவும் இல்லை. முன்னையிலும் மிகுதியாகவே வரி வாங்கப் பட்டுள்ளது. ஆயினும், வருவாய் எப்படிக் குறைந்தது? செலவு மிகுதியும் இல்லை! இருப்பில் குறைவானேன்? ஒரு நாள் அரசவை கூடியிருந்தது. ஆட்சியாளனுக்கு இருபாலும் பெரும், பெரும் அலுவலர்கள் அவரவர் முறையில் அமர்ந்திருந்தனர். பெருந்தட்டம் இரண்டில் பெரிய பனிக் கட்டியை வைத்து இரு பக்கத்தில் இருந்தாரிடமும் ஒரு பெரியவர் தந்து ஆள்வோனிடம் சேர்க்கக் கூறினார். பனிக்கட்டி முதற்கண் இருந்த அளவும், வரவரக் குறைந்த வகையும், ஆள்வோனிடம் வரும் போது இருந்த அளவும், ஒரு தெளிவை உண்டாக்கிற்று. வருமானம் எப்படிச் சுரண்டப் படுகிறது; எப்படி வருவாய் குறைந்து போகின்றது என்பதைத் தெளிவாக்கி விட்டது. தலைவன் செம்மையாக இருக்கும் போதே கீழறுப்பார்கள் கெடும்பு செய்வதும், குறுக்கு வழிகளில் பொருள் தேடுவதும் உலகியலில் கண்கூடு. அவ்வாறாகவும் தலைவனே வழுக்கலும் - இழுக்கலும் - சுரண்டலும் - சோரமும் உடையவன் எனின், தட்டிக் கேட்பார் எவர் என்னும் தெளிவால் இக்கேடுகள் எல்லாம் ஒன்றுக்குப் பத்தாகவும் நூறாகவும் கொடி கட்டிப் பறக்காவா? நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் (553) நன்செய் புன்செய் தோட்டம் தோப்புகளை நேற்றுப் பார்த்தோம், இன்று பார்க்க வேண்டியதில்லை எனின் அவ் வொரு நாளில் களை இராதா? களவு போகாதா? அழிவு நேராதா? நோய் பற்றாதா? அதனால் நாள்தோறும் அன்று, பொழுது தோறும் கூட நாட்டு நடைமுறையை ஆள்வோன் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருத்தல் வேண்டும். கண்ணை மூடித்திறக்கு முன்னர் மண்ணைப் போட்டு விடுவார் எத்தனை பேர்? ஆள்வோன் முறையான ஆட்சி செய்து மக்கள் நல் லெண்ணத்தைப் பெறாவிட்டால் மக்கள் மக்களாக வாழார். தத்தம் கடமைகளை முறையாகச் செய்யார். கருத்தாக உழைப்ப வர்களும் உழைப்பின் பயன் எய்தாராய் உழைத்து, உழைத்து என்ன கண்டோம்? உழையான் வாய்ப்பில் கொடி கட்டிப் பறக்கிறான்; உழைப்பான் ஓடாகத் தேய்கிறான்; இவ்வாட்சி என்ன ஆட்சி என்று வெறுப்புறுவர். அதனால் அவ்வாட்சி தன் மக்களுக்குக் கட்டாயம் வேண்டிய, உணவுப் பொருள் கிட்டாமல் தட்டுப்பாடாகிக் கெட்டுக் குலையும். மக்கள் நல்லெண்ணத்தையும் அறவே இழந்து கட்டுக் குலையும். மக்கள் அவலமும் அரற்றும் கண்ணீரும் வாளா ஒழியா. அரசையே அழிக்கும்; மாற்றியமைக்கும். ஆயிரம் திட்டு ஆனையையும் சாய்க்கும் என்பது பழமொழி. கூழும் குடியும் ஒருங்கிழங்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு (554) அல்லல் பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) அரசு செம்மை போற்றாவிடின் வறியோர்தாம் வருந்துவர் என்பது இல்லை. செல்வரும் அதற்கு மேல் வருந்துவர். வறியவர் உழைத்த பயன் காணாமல் உருக்குலைவர்; உள்ளம் நைவர்; செல்வர் தாம் உழைத்துச் சேர்த்ததும், உழைக்காமல் சேர்த்ததும், சுரண்டிச் சேர்த்ததும் ஆகிய பொருள்களையெல்லாம் ஐயோ! என இழந்து ஆலாய்ப் பறப்பர். ஆதலால் பழகிப் போன வறியவர் படும் துயரினும் செல்வர் படும் துயரம் கண்ணராவி யாக இருக்கும். இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் (558) நம்பிக்கையற்றுப் போன மக்கள் ஊக்கம் கொள்வரா? உழைப்பைக் கருதுவரா? விடிந்தாலும், அடைந்தாலும் நமக்கு விடிவு உண்டா என்று வெதும்புவர்க்கு வேலை மேல் என்ன கருத்திருக்கும். அந்நிலையில் நாட்டின் வருவாய் நிலை என்னாம்? பொருள் நிலை என்னாம்? மக்கள் அமைதி நிலைதான் என்னாம்? அலுவலர் கடமைதான் எப்படி இருக்கும்? மக்கள் மன நிலையும் அரசு என்னும் பொறி இயக்கமும் ஒருங்கே சீர்கேடாம் நிலையில் வழிவழியாகச் செயல்பட்டு வரும் தொழிற்கலைகளையும், கலைத் தொழில்களையும் கற்பார் எவர்? கற்பிப்பாரும் தாம் எவர்? நாடே சுடுகாடாம்! ஆனால் சுடுகாட்டிலேனும் அமைதியுண்டு; முறைகேட்டில் முக்குளிக்கும் நாட்டில் அவ்வமைதியையும் காணற்கு இயலாது. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவான் எனின் (560) ஆபயன்-ஆகின்ற பயன், வருவாய்; அறுதொழில்-உழவு, நெசவு, அமைச்சு, அரசு, ஓதல், வாணிகம் என்னும் ஆறு தொழில்கள். நூல் மறத்தல்-கற்பித்தலும் கற்றலும் ஒழிதல். கொடிய அரசில் குடிகள் படும் துயரைக் கண்டு இயற்கை யும் கூடப் பொறுக்காமல் தன் கடமை ஆற்றத் தவறுதலும் நிகழ்தல் கூடும். உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்தமாகிய மழையும் பெய்யாமல் ஒழியினும் ஒழியலாம். அந் நிலையில் அருவி நீர் எங்கே? ஆற்று நீர் எங்கே? ஊற்று நீர்தான் எங்கே? ஆழ்கிணறு தோண்டியும் ஆவதென்ன? வாழும் எண்ணமே வறண்டு போன மக்களிடம் என்ன ஆக்கத்தைத் தான் எதிர் பார்க்க முடியும்? முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் (559) உறைகோடல்-மழை பெய்யாது ஒழிதல். அரசு என்பது காவல் கடமை மேற்கொண்டது. கடமை என்பதற்கு வரி என்பதொரு பொருள். வரியாகிய கடமை செலுத்துவதே காவல் கடமையை ஒழுங்காகச் செய்வதற் காகவேயாம். ஆள்வோன் தன் நாட்டை, ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பது போல் காக்க வேண்டும் என்பது சங்கப் பாட்டு. காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி என்பது அது (புறம். 5). குழந்தையைக் கையால் எடுப்பதற்கே எத்தகைய தேர்ச்சி வேண்டும்! கைபோன போக்கில் தூக்கிவிட முடியுமோ? அதன் குடிப்பு, உணவு, மருந்து இவற்றில்தான் எத்தனை அக்கறை! அதன் பண்பாடு கல்வி எதிர்கால நலம் என்பவற்றில் தான் எத்தனை செயற்பாடுகள்! ஒரு குழந்தையை அழுதல், அரற்றுதல், ஏக்கம் தாக்கம் இல்லாமல் காக்க எத்தனை பாடுகள்! இவற்றை எண்ணினால் ஆட்சியாளன் கடமை வெளிப்பட விளங்கும். செம்மை போற்றும் அரசு, கொடுமைப் பக்கம்தான் பாராதும், கொடுமை செய்வாரைக் கண்காணித்து நலம் செய்தும் வருதல் வேண்டும் என்பதற்காக இறைமாட்சி, செங் கோன்மை, கொடுங்கோன்மை என்பவற்றைக் கூறிய வள்ளுவர் வெருவந்த செய்யாமை என்றோர் அதிகாரமும் அமைத்தார். மக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யா திருத்தல் என்பது இதன் பொருளாம். வெருவந்த செய்யாமை வாழவேண்டாம் என்று வாழ்வார் எவர்? இன்பமும் நன்மையும் வேண்டாம் என்பார் எவர்? துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் தாமே வாழ்வின் நோக்கு. அவ்வாறாகவும் மக்க ளெல்லாம் அஞ்சி - அஞ்சி, நொடி - நொடியும் சாகச் செய்வதாய் இருக்கும் அரசும் ஓர் அரக ஆகுமோ? அவ்வரசை ஆள் வோனும் ஆள்வோனாக நீடிக்க வேண்டுமா? குடிமக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்கின்ற கொடிய ஆட்சியாளன் எனின், அவன் ஆட்சி அரைகுறையாக அன்று, முழுமையாகவே கெட்டொழியும். ஆட்சி மட்டுமா ஒழியும்? எங்களை ஆள்வோன் கொடியவன் என்னும் ஏக்கம் மக்களுக்கு உண்டாகி விடுமானால் ஆள்வோன் வாழ் நாளும் விரைவில் குறைந்து ஒழிந்து போவான். வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (563) இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் (564) ஆட்சியாளன் எவ்வளவு செல்வப் பெருக்காளனாகத் தான் இருக்கட்டுமே! பணம் பத்தும் செய்யும்; ஈட்டி எட்டும் மட்டும்; பணம் பாதளம் மட்டும் என்றெல்லாம் இருந்தாலும் இருக்கட்டுமே! அவன் பொருளும் மதிக்கப் பெறாது. அப் பொருளும் நிற்கவும் நிற்காது (565, 566). ஆட்சியாளன் பகைவரால் அழிக்க முடியாத வலியவனாக இருந்தால் கூட அவன் செயலாலே அழிந்து படுவான். கனிவு அறியாக் கடுமையனாகவும், வரம்பு கடந்து கொடுந் தண்டனை வழங்குபவனாகவும் இருந்தால் அவன் அரத்தால் அராவப் பட்டுத் தேய்ந்து அழியும் இரும்பு போல் அழிந்து படுவான். கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் (567) ஓர் ஆட்சியாளன் எத்தகைய பேரறிவாளனாக இருந்தாலும் அவன் தன்னினும் அறிவாளர், திறனாளர் உண்டென மதித்துப் போற்றல் வேண்டும். தனக்கு எல்லாமும் தெரியும்; தன்னை விஞ்சியவர் எவரும் இலர்; தான் எவரையும் கலந்து பேசி அவர் கருத்துக் கேட்டுச் செய்ய வேண்டுவதில்லை என்னும் தலைக் கனத்திற்கு அல்லது செருக்குக்கு ஆட்பட்டு விட்டால் அவன் கெடுவதற்கு அவ்வியல்பே போதுமானது. வேறு எதுவும் வேண்டுவதில்லை. நல்ல ஆட்சியாளன் என்பான் நல்லறிஞர் தொடர்புடைய னாக இருத்தல் வேண்டும். துறைதோறும் வல்ல அறிவினரைத் துணையாகக் கொண்டிருத்தல் வேண்டும். எத்துறை தொடர்பாக எச் செயல் செய்ய வேண்டும் எனினும் அத்துறை தொடர்பான அறிஞர்களை அழைத்து அவர்கள் கருத்தறிந்து திட்ட மாகவும், தெளிவாகவும் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் தான் நினைத்ததே சரியானதென்றும், தன் முடிபுக்கு எதிரிட்டு உரைப்பார் எல்லாரும் அறிவிலார் என்றும், மாறுபட்டார் என்றும் கருதித் தன் மூப்பாகச் செயல்படுபவன் அழிவு நடை போடுபவனே அல்லாமல் ஆக்க நடை போடுபவன் ஆகான். இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு (568) அறிஞர் கூட்டத்தைத் தன் சுற்றமாகக் கொள்ளாத ஆட்சியனை எவர் சூழ்ந்திருப்பர்! அறிவிலியரே சூழ்ந்திருப்பர். அவன் எவ்வகையால் எல்லாம் மகிழ்வானோ அவற்றைத் தந்தும் அவற்றைப் பேசியும் மகிழ்வித்துத் தம் நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்ளும் தன்னலக் கூட்டமே சூழ்ந்திருக்கும். அவர்கள் செய்கின்ற பணிவிடைகளிலும் தருகின்ற பகட்டு களிலும், சொல்கின்ற பசப்புகளிலும் தன் நிலைமறந்து தானொரு தனிப்பெரும் தெய்வப் பிறவியாகத் தானே மயங்கிப் பூரித்தும் போவான். அதற்குத் துணையாக நிற்பாரையே அரவணைத்துக் கொண்டு தலைகால் தெரியாமல் செயல் படுவான். அதனைத் தவறு என எவரும் சுட்டிக் காட்டின் எத்தகு மேலோரையும் மதியாமல் எதிரிட்டுப் பகையாக்கிக் கொள் வான். பழி சொல்லியும் அடக்குமுறை செய்வான். அத்தகையன் இருப்பு மட்டுமன்று, அவன் ஆட்சியுமே நிலத்திற்குச் சுமையே யாகும். பெரியாரைத் துணைக் கொள்ளலும் சிற்றினம் சேரா மையும் ஆட்சியர்க்கு இன்றியமையாதவை. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை (570) ஒருவர் குற்றம் செய்தால் அதன் உண்மையைத் தெளிவாக ஆராய்ந்து குற்றமே என்று உறுதிப்பட்டால் தான் தண்டனை தருதல் வேண்டும். அத்தகைய தண்டனையும் வேண்டியவர் - வேண்டாதவர், தன்னைச் சார்ந்தவர் - சாராதவர் என்னும் வேற்றுமை பாராமல் உரிய தண்டனையாகவும் இருத்தல் வேண்டும். தண்டனையையும் குற்றத்தையும் அறிந்தோர். இதற்கு இது தக்கதே என ஒப்பும் வகையில் இருத்தல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் தக அறம்பேணும் முறைமன்றில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தாமல் தன்னியல்பில் அஃதியங்கத் தக்க வகையில் நடைப் படுத்த வேண்டும். ஏனெனில், முறை மன்றம் எடுக்கும் தீர்வுகளே, அரசின் செம்மையை நிலை நாட்டும் தீர்வுகள் என்னும் எண்ணம் மக்களுக்கு உண்டாகுமானால் அல்லாமல் ஆட்சியாளனை மக்கள் மதியார். தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து குற்றவாளிகளுள் சிலர் அச்சமிக்கவராகவும், திருந்தத் தக்கவராகவும், சூழ்நிலையில் குற்றத்துக்கு ஆட்பட்டவராகவும் இருப்பர். குற்றவாளிகள் அனைவரும் வன் கொடுமையானவர் என்றோ, திருந்தாத் தீயர் என்றோ எண்ணித் தண்டனை தரு தலும் ஆகாது. நோய்க்குத் தக மருந்தின் ஆற்றல் கூட்டிக் குறைத்துத் தருவது போல் தண்டனையும் தண்டனைக்கு ஆட் பட்டவர் நிலைக்குத் தக இருத்தல் வேண்டும். கடுமையான தண்டனை கிட்டும் என்று எண்ணம் உண்டாகுமாறு நடவடிக்கை இருத்தல் வேண்டும். அவ்வாறே தோற்றம் தந்து, மீண்டும் அக்குற்றம் செய்யாதிருக்கத் தக்க அச்சத்தை ஊட்டுதலும் வேண்டும். ஆனால் திருந்தி வாழத் தக்கார்க்குத் தகத் தண்டனை மென்மையாகவும் இருத்தல் வேண்டும். வாழ்வின் மதிப்பையும், குற்ற மொழிதலின் நோக்கை யும் கருதிய முறை ஈதாகும். கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காது வேண்டு பவர் கண்ணோட்டம் ஆட்சியாளர்க்கு வேண்டிய நற்குணங்களுள் ஒன்று கண் ணோட்டம் ஆகும். தன் உறவினரும், நண்பரும், தன்னொடு பழகியவரும், தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவின வரும், எளியவரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு என்று கண்ணோட்டம் என்பதற்கு விளக்கம் தருவார் பாவாணர். கண்ணோட்டம் நடுவுநிலை தழுவியதும், நடுவுநிலை வழுவியதும் என இருவகைத்தாம். தன் நலம், தன் குடும்பம் தன் இனம், தன் கட்சி என்ற அடிப்படையில் அமையின் நடுவுநிலை வழுவிய கண்ணோட்டமாகும். அவ்வாறு அமையாதது-பிறர் நலங் கருதியது எனின் நடுவு நிலை தழுவிய கண்ணோட்டம் ஆகும். கண்ணோட்டம் என்னும் சிறந்த இயல்பு இருப்பதால் தான் உலகமே உள்ளது என்றும், அக்கண்ணோட்டம் இல்லாதவர் இருப்பது உலகுக்குப் பாரம் என்றும், கண்ணோட்டமில்லாத கண், கண் அன்று புண் என்றும், கண்ணோட்டமில்லாத கண், மண்ணோடு நிற்கும் மரம் போல்வது என்றும் சொல்லப் படுகின்ற செய்திகளை நோக்க கண்ணோட்டத்தின் உயர்வு நன்கு விளங்கும் (571-575) கண்ணோட்டம் காட்டுதல் என்பது கழைக் கயிற்றின் மேல் நடத்தல் போன்றது! சற்றே சரியினும் வீழ்ச்சியும் கொடு விளைவுமேயாகும். அதனால், கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு என்றார் (578). அறத்திற்கு அல்லது முறைமைக்கு மாறுபடா இடத்தில் கண்ணோட்டம் செலுத்துதலும், அறத்திற்கு மாறுபட்ட இடத்தில் கண்ணோட்டம் செலுத்தாமையும் ஆகியவை போற்றலே கருமம் சிதையாமல் கண்ணோடல் ஆகும். வேண்டியவர் குற்றம் செய்த போது கண்ணோட்டத்தால் அவரைத் தண்டிக்காது விடுதலும், வேண்டாதவர் குற்றம் செய்யாவிடினும் தண்டித்தலும், அவர் சிறு குற்றம் செய்யினும் பெருகத் தண்டித்தலும் ஆகியவை கருமம் சிதைக்கும் கண் ணோட்டமாகும். இக்கண்ணோட்டத்தின் வழுவுதலே ஆட்சியாளர் பலர் இழிவுக்கும் - ஏச்சுக்கும் - வழக்குக்கும் - தண்டனைக்கும் ஆட்சிப் பறிப்புக்கும் அலை நேர்ச்சிக்கும் இடமாக இருந்துள்ளமையும், இருந்து வருகின்றமையும் வரலாறாகப் பெருகுகின்றனவாம். ஆயினும் அடுத்து வருவார் எக்குற்றத்தைச் சொல்லி ஆட்சியைப் பற்றினரோ அதனைத் தாமும் மறந்து அக்குற்றத்துக்கு உரியவராகி அப்பழிக்கே உறைவிடமாகி விடுதலும் வரலாற்றுக் காட்சி களேயாம். மாநிலம், மாவட்டம், வட்டம், பேரூர், சிற்றூர் என ஆட்சி இடங்கள் பகுக்கப்பட்டு ஆட்சியாளர்கள் இருப்பினும் மக்க ளாட்சியில் மாநில ஆட்சி, சட்டமன்றத்தையும் அமைச்சையும் சார்ந்தே உள்ளது. துறைகள் பகுக்கப் பெற்று அவற்றுக்குப் பொறுப்பாக அமைச்சர் அமர்த்துதலும் நடைமுறை. ஆதலால் அமைச்சர் பற்றிய வள்ளுவக் கருத்தும் இவ்வாட்சியர் பகுதியில் இடம் பெறத்தக்கதாகும். அமைச்சு அமைச்சு அதிகாரப் பத்துப் பாடல்களில், அவர்க்கு அமைய வேண்டிய தன்மைகள் இவை, இவை என ஏழு பாடல்களில் கூறுகிறார் வள்ளுவர். ஒரு செயலைச் செய்தற்குரிய கருவி, அதனைச் செய் தற்குரிய காலம், செய்யும் செயல், செயலைச் செய்யும் திறம் ஆகியவை அமைச்சனுக்கு வேண்டும் (631) செய்யும் செயலில் உறுதி, குடிகளைக் காத்தல், கற்பன கற்றல்; உலகியல் அறிவு மிகுதல், முயற்சி என்பனவும் அமைச்சனுக்கு வேண்டும் (632). ஒதுக்கத் தக்காரை ஒதுக்கல், சேர்க்கத் தக்காரைச் சேர்த்தல், ஒதுக்கி வைக்கப்பட்டாரைத் தக்க பொழுதில் இணைத்தல் என்பனவும் அமைச்சனுக்கு வேண்டுவனவே (633). பலவகைச் செயல்களுள் முறை முறையே செய்யத் தக்கன வற்றைத் தெரிதல், அதனைத் திறமாகச் செய்தல், எந்த ஒன்றை யும் திட்டமாக உரைத்தல் என்பனவும் அமைச்சனுக்கு வேண்டு வனவே (634). அறன் அறிதல், சொல்லாற்றல், செயலாற்றல் என்பனவும் அவனுக்கு வேண்டுவனவே (635). தன்னறிவு - நூலறிவு - செயலறிவு - இயற்கை - இயக்க அறிவு என்பனவெல்லாம் அமைச்சனுக்கு இன்றியமையாப் பொருள்கள் (636, 637). உலகத்து இயற்கை அறிவாவது ஊழ். இயற்கையின் எழுச்சி, வீழ்ச்சி நேர்ச்சிகளை அறிவகையால் அறிந்து நடத்தல். அவ்வறிவே புயல், மழை, நிலநடுக்கம், வறட்சி, வெப்பு, குளிர் முதலாய இயற்கை வினைகளில் இருந்து நாட்டைக் காக்கும் திறம் ஆகும். முன்னுற அத்தகைய வற்றை அறியாக்கால், அறிந்து அறிவியாக்கால் நாட்டுக்கு உண்டாகும் கேட்டுக்கு அளவே இல்லை. ஆதலால், செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் என்று அமைச்சருக்கு அறிவுறுத்தார் வள்ளுவர். ஊழ் இரு வேறு உலகத்து இயற்கையது என்றும் ஆக்கமும் கேடும் செய்வது என்றும் ஊழதிகாரத்துக் கூறியது இவண் எண்ணத் தக்கது. (இவ்வரிசையில் ஊழ் என்னும் சுவடியில் இவ்விரிவு காண்க) ஒரு சில சார்புகளும் உள்நோக்கும் கொண்டு அமைச்சர் களைத் தேர்ந்து கொள்வதும் உண்டு. அத்தகையவரால் ஆக்கச் செயல் நிகழாமையுடன் அழிவுச் செயல்கள் பெரிதும் நிகழ்ந்து விடல் உண்டு. செயலாற்றும் திறமை இல்லாதவர் பலப்பலரை முறையாக ஆராய்ந்து பேசினாலும் கூடச் செயலைச் செம்மை யாகச் செய்து முடிக்க மாட்டாத வராகவே இருப்பர். முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் (640) ஓர் அரசுக்கு உட்பகையாகவோ, வெளிப்பகையாகவோ பல்லாயிரர் இருக்கலாம்; பலகோடியரும் இருக்கலாம். அவர் செய்கையின் விளைவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலும், திறமும் ஆட்சிக்கு இருக்கவும் கூடலாம். ஆனால், ஆட்சிக்குள் ஓர் உறுப்பாக இருந்து கொண்டு கெட்ட எண்ணம் உடைய ஓர் அமைச்சர் செய்யும் கேட்டைத் தீர்ப்பது என்பது மிகக் கடின மானது. ஆதலால் ஆட்சிப் பொறுப்புக்கு அமைச்சர்களை அமர்த்தும் போது மிக விழிப்பாக இருத்தல் வேண்டும். அவர் செயல் முறையைத் தவறாமல் கண்காணித்து வருதலும் வேண்டும். பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும் தெவ்வோர்-பகைவர். தூது ஓர் ஆட்சி உறுப்புகளுள் தூது என்பதும் ஒற்று என்பதும் இடம் பெற்றிருத்தல் கட்டாயத் தேவையாகும். ஒவ்வொரு நாட்டிலும் தூதரகம் இருத்தலும், பல்வேறு ஒற்றர் பிரிவுகள் இருத்தலும் உலக நடைமுறை. சிக்கல்கள் வீட்டுக்கு வீடே உண்டு. ஆளுக்கு ஆளே உண்டு. எவ்வளவுதான் கற்றாலும் உலகியலறிவு பெற்றாலும் தான் தனது என்னும் சுருக்கம் வாராமல் இருப்பது அரிதாயிற்று. அந்நிலை இருக்குமளவும் சிக்கல் தனியாளிடமும் உண்டு; வீட்டளவிலும் நாட்டளவிலும் உலகளவிலும் உண்டு. அச்சிக்கல் தீர்வுக்கு ஒருவகையால் உதவுவது தூதும் ஒற்றுமாம். இவ்விரண்டன் மேல் நடவடிக்கையாக அமைவது படையாகும். ஆதலால் இம்மூன்றையும் ஒவ்வொரு நாடும் தன் உறுப்பு களாகக் கொள்ளத் தவறுவது இல்லை. கொள்ளாமல் இருக்கவும் இயலாது. இம்மூன்றனையும் வள்ளுவர் தேர்ந்துரைக்கிறார். தூது என்பது ஓரரசு என்ன சொல்கிறதோ அதனைச் சொல்ல வேண்டும் முறையால், சொல்ல வேண்டும் காலத்தால், மாற்றுப் பொருள் ஏற்படா வகையில் தெளிவாக எடுத்துக் கூறுவதாகும். தூது செல்வானுக்கு நாட்டின் மேல் அன்பும், ஆட்சியின் மேல் பற்றும் இருத்தல் வேண்டும். இவை இல்லாக்கால் உள் ளொத்த கடமையாகக் கொள்ளுதற்கு இயலாதாம் (681). அறிவும், தோற்றமும், ஆராய்ந்த கல்வியும் தூதனுக்கு வேண்டும். செல்லுமிடத்தில் நன்மதிப்புத் தேடிக் கொண்டு தன் பணியைச் சீர்மையாக முடிப்பதற்கு இவை தேவை (684). கடனறிதல் - காலமறிதல் - இடமறிதல் என்பவை தூதனுக்கு இன்றியமையாதவை (687). தூய்மையும் - துணையுடைமையும் - துணிவுடைமையும் ஆகிய தன்மைகளும் தூதனுக்கு வேண்டுவனவே (688). உயிர்க்கு இறுதியே ஏற்படும் எனினும் தன் அரசுக்காகச் சொல்ல வேண்டியவற்றைக் குறைவில்லாமல் சொல்லி நன்மை விளைப்பவனாக அவன் இருத்தல் வேண்டும் (690). நூலறிவாலும் சொல் திறத்தாலும் வல்லார் பலர் தான் செல்லும் இடத்தில் இருத்தல் கூடும். அவர்க்கு முன்னர் அத் தகுதியில் மேம்பட்டோனாகத் தூதன் அமைதல் தனி வாய்ப்பாக அமையும் (683, 689). சொல்ல வேண்டியதை வேண்டிய அளவால் தொகுத்துச் சொல்லவும், சொல்லக் கூடாதவற்றைச் சொல்லாமல் விலக்கவும், கேட்பவர் விரும்பிக் கேட்குமாறு உரைக்கவும் வல்லவ னாகத் தூதன் இருத்தல் வேண்டும் (685). தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது தூதனை இழிவுபடுத்துவதும், சிறையிடுவதும், ஒரு நாட்டை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானது என்றும், அது முறை கேடானது என்றும் கொள்ளப்பட்ட வழக்கம் தூதின் சிறப்பை உணர்த்தும். தூதனுக்கு இன்றியமையாதவை சொல்வன்மை; அவை யறிதல்; அவை அஞ்சாமை; குறிப்பறிதல் என்பனவாம். சொல்வன்மையாவது செலச் சொல்லல் ஆகும். கேட்பவர் மனத்துப் பதியுமாறு சொல்லலும், அவர் அதனைப் பலப் பலரிடத்தும் சொல்லுமாறு சொல்லலுமாம். உள்ளங் கொள்ளச் சொல்லும் திறமை இல்லாக்கால், உண்மையானதும் கூட எடுத்துக் கொள்ளப் படாததாய்ப் போய் விடுதல் தெளிவு. தூதன் சொற்சோர்வு ஆட்சிச் சோர்வாகவும் கேடாகவும் முடிவதை எண்ணின் செலச் சொல்லல் சிறப்பு விளங்கும். அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் என்று அவையறிதலும் (711) கற்றாருள் கற்றார் எனப்படுவார் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் என்று அவையஞ்சாமையும் (722) சொல்லப்படும். கூறாமை நோக்கிக் குறிப்பறிதல் (701), ஐயப்படாஅது அகத்தது உணர்தல் (702) குறிப்பிற் குறிப்பு உணர்தல் (703) என்று குறிப்புணர்தல் திறம் குறிக்கப்படும். ஒற்று ஒற்று, வேவு, உளவு என்பன ஒரு பொருள் தரும் சொற்கள். வேறுபாடு தோன்றா வகையில் ஒன்றியிருந்து அறிவது ஒற்று எனப்படும். ஒன்றுபட்ட தன்மை ஒற்றுமை எனப்படுதல் அறிக. வெளிப்பட அறியாது அறிதலால் வேவு எனவும், உளவு எனவும் பெயர் பெற்றது. திருக்குறளில் ஒற்றாடல் என்பதோர் அதிகாரம் (59). ஒற்றாளல் என்பது ஒற்றாடல் ஆயிற்று. கையாளல் என்பது கையாடல் என வழங்கப்படுகிறது அன்றோ! ஆட்சியாளனுக்குத் தன்கண்மட்டும் போதாது. ஒற்றன் கண்ணும் தன் செவ்விய ஆட்சிக்கு உறுதுணையாக வேண்டும் என்பது வள்ளுவம் (571). ஆட்சியாளன் ஒரு குறித்த இடத்தில் இருக்கலாம். ஆனால் அவன் ஆட்சி இடம் அவன் கண்பார்வையளவில் கட்டுப் பட்டது அன்றே! அங்கே, அங்கே நிகழ்வனவெல்லாம் அவன் அறிந்து கொள்ளாக்கால், அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாக் கால் அவ்விடத்து நல்லதும், அல்லதும் அறிந்து கொள்வது எப்படி? நல்லது செய்யும் நன் மக்களே தம் செயலைத்தாமே வெளிப்படுத்த நாணி அமைவர்; அவர்கள் அறச்செயல்களும், ஆக்கச் செயல்களும் அறிந்து ஊக்கப்படுத்துதல் நாட்டுக்கு நலப்பாடாம். நல்லறிஞர் ஒருவர் இருப்பாரானால் அவர் தம்மைப் பறையறையார். அவரை அறிந்து கொள்ளல் நாட்டுப் பேறாம். இனி அல்லது செய்யும் மாந்தரோ தம்மை மறைத்தே கரவால் செய்வர். ஒருகால் அவரைக் கண்டு கொள்வார் சான்றாவர் எனின் அவரை ஒழிக்கவும் துணிவர். அந்நிலையில் பொது மக்கள் அனைவரும் அல்லது செய்வாரைக் காட்டிக் கொடுப்பர் என்று கூறுதற்கும் இயலாது. நாட்டைக் கெடுக்கும் கேடுகள் பல. அவற்றுள் எவை எங்குத் தலைகாட்டினும் முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும். இல்லையேல் முள் மரம் போலவோ, நச்சு மரம் போலவோ வளர்ந்து தீமை செய்யும். ஆதலால் ஒற்றர் ஒரு நாட்டுக்கு மிகமிக இன்றியாமையாதவராவர். சொல்லி வைத்தாற்போற் கொள்ளை, வழிப்பறி, தீவைப்பு, கொலை, குண்டு வெடிப்பு இன்னவை நிகழ்கின்றன. வானூர்திக் கடத்தல் அளவும் கூட வளர்ந்து விட்டது. கட்டுக் காவலும், ஒற்றும், படையும் எல்லாம், எல்லாம் இருந்தும் நாட்டில் இத் தகைய அழிவுகள் என்னின் இவை இல்லாக்கால், இருந்தும் செயல்படாக்காமல் நாட்டு நிலை என்னாம்? ஒற்றும் காவலும் சீராகச் செயல்படும் நாட்டில் குற்றம் செய்வாரும், குற்றம் செய்து தப்புவாரும் அரியர் ஆகிவிடுவர். துப்புத் துலக்கித் தருவதற்கெனவே சில நாடுகளில் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதை அறியும் போது அதன் இன்றிமையாமை நன்கு வெளிப்படும். இராசராசன் காலத்திலே நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி. சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன் என்பான் கி.பி. 969 இல் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். அச்செயலைச் செய்தோர் எவரென அந்நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. சுந்தர சோழனுக்குப் பின்னே உத்தம சோழன் ஆட்சியும், அதன் பின்னே இராசராசன் ஆட்சியும் நிகழ்ந்தன. இராசராசன் காலத்தில் அக்கொலை செய்தோரைக் கண்டு பிடித்துத் தண்டனை வழங்கப்பட்டது (கி.பி. 987). ஓர் உண்மை காண்டற்குரிய அருமை இதனைல் புலப்படும். காற்றும், ஒளியும் புகாத இடத்தும் தீயோர் புகுந்து தம் திறம் காட்டுகின்றனர் என்றால் அத்தீயரைக் காண்டற்குத் தூயரும் அவரினும் நுணுக்கமாகப் புகுந்து ஆய்ந்து தடங்கண்டும், இடங்கண்டும் ஆய்வு மூலங்களின் வழியே ஆளைக் கண்டு கொள்ளுதல் நுண்ணிய தேர்ச்சியேயாம். ஒற்றர் துறையின் செயல் மாண்பு இக்காலத்தில் விரிவும் வியப்பு மிக்கதாக வளர்ந் துள்ளமை அறியக் கூடியதே! அவராலும் கண்டு கொள்ள முடியாத தீமையின் மூளைக் கூர்ப்பு இத் தீ வழியில் புகுந்ததே என்று நல்லோர் இரங்கும் இரக்கத்திற்கும் இடமாக உள்ளது. நாட்டில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஒற்றரால் உடனுக்குடன் அறிந்து கொள்ளல் ஆள்வோர் கடமை (582). ஒற்றரைக் கொண்டு உண்மை உணர்ந்து கொள்ளாத ஆட்சியாளன் தன் ஆட்சித் திறத்தில் வெற்றி பெறுதல் இல்லை (583). அலுவல் புரிவார் தம் சுற்றத்தார் தம் பகைவர் என்னும் அனைவரையும் ஆராய்ந்து உண்மை காண்பதே ஒற்றாடலாகும் (584) ஐயப்படாத தோற்றத்தோடு அச்சப்படாமல் எவ்விடத்தும் தன் கருத்து வெளிப்படாவகையில் ஆய வல்லதே ஒற்றாகும் (585). துறவோர் முதலிய வேடங் கொண்டு கூடச் செல்ல முடியா இடங்களுக்கும் சென்று எத்துயர்ப்படுத்தினும் அயராமல் ஆய்வதே ஒற்றாகும் (586). மறைவாகப் பிறர் செய்தவற்றைக் கேட்கும் திறனுடையவராய் அவ்வாறு அறிந்தவற்றையும் மேலும் தெளிவு செய்து கொள்பவராய் அமைபவரே ஒற்றராவர் (597). ஒற்றன் ஒருவன் அறிந்துரைத்த செய்தியையும் மற்றோர் ஒற்றனைக் கொண்டு தீர ஆய்ந்து ஒப்பிட்டு அறிந்து கொள்ளல் ஆள்வோர் கடமை (588). ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறிந்து கொள்ள முடியா வகையில் இயங்கச் செய்தல் வேண்டும். அத்தகைய ஒற்றர் மூவர் சொல்வன ஒன்று போல் இருப்பின் உண்மையெனக் கொள்ளல் வேண்டும் (589). ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை மற்றோர் ஒற்றனோ, பிறரோ அறியா வகையில் செய்தல் வேண்டும். பிறர் அறியச் சிறப்புச் செய்யின் கமுக்கமாக இருக்க வேண்டிய செய்தி வெளிப்பட்டதாகி விடும் (590). ஒற்றொற்று உணராமை ஆள்க உடன் மூவர் சொற்றொக்க தேறப் படும். சிறப்பறிய ஒற்றின் கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை என்பவை எத்தகைய நுணுக்கமும் தேர்ச்சியும் மிக்க செய்திகள். இன்றும் போற்றிக் கொள்ளத் தக்கவை அல்லவோ! நாடு ஓர் உழவன் உழைப்பாளன் அல்லது உழைப்பிலி என்பதன் சான்று அவன் நிலபுலங்களே. அதே போல் ஓர் ஆட்சி செம்மை யானது அல்லது செம்மையற்றது என்பதைக் காட்டுவது நாடேயாம். ஆட்சிச் சிறப்பைக் காட்டுவது நாட்டுச் சிறப்பேயாம். நாடு என்பது விரும்பு என்னும் பொருளது. ஆராய்தல், தேடுதல் என்னும் பொருளும் தரும். ஒரு நல்ல நாட்டின் இலக்கணம் எவ்வாறு இருக்கும் என்பதை வள்ளுவம் வகுத்தும், தொகுத்தும் வளமாக உரைகின்றது. அதன் நிறைவிலே, எத்தகு வளநாடு எனினும் ஆட்சிச் செம்மை இல்லையேல் நாடாகாது என்று திட்டமாகக் கூறுகிறது. குறையாத விளைவு, தகுதி வாய்ந்த பெரியவர், பெரு நலச் செல்வர் ஆகியோர் சேர்ந்திருப்பது நாடு (731). மிகுந்த பொருள்களால் விரும்பத் தக்கதாகி தவிர்க்க முடியாக் கேட்டின் இடையேயும் மிகுதியாக விளைவது நாடு (732). எவ்வளவு பாரம் வருமாயினும் அதனைத் தாங்கிக் கொண்டு ஆட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிவகைகளை முழுமையாகச் செலுத்தும் குடிகளைக் கொண்டது நாடு (733). நீங்காப் பசி, தீராநோய், அழிபகைஎன்பவை இல்லாமல் இருப்பது நாடு (734). பல்வேறு சிறுமையர் கூட்டம், பாழாக்கும் உட்பகை, அரசை ஆட்டிப்படைக்கும் கொலைக்கும் அஞ்சாக் கொடியவர் இனம் இல்லாததே நாடு (735). எளிதில் கேடு அடையாததும், கெட்டாலும் வளமை குறையாததும் ஆகிய நாடே நாடு (736). மழை நீர், ஊற்று நீர் ஆகிய இருவகை நீரும் வளம் நிரம்பிய மலையும், ஆறும், அரணும் நாட்டின் உறுப்புகளாகும் (737). நோயில்லாமை, செல்வவளம், பெருவிளைவு, அமைதி இன்பம், பாதுகாப்பு என்னும் ஐந்தும் நாட்டிற்கு அணிகலம் போல்வன (738). நாடு என்று சொல்லப்படுவது, இது கிடைக்கவில்லையே எனத் தேடி அலைதல் இல்லாமல் வேண்டும் எல்லாமும் எளிதில் கிடைப்பதேயாகும். தேடிப் பெறும் நாடு நாடாகாது. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு (739). ஒரு நாடு இவ்வியல்புகளை எல்லாம் கொண்டிருந்தது என்றாலும் பயனில்லை. ஆட்சி ஒழுங்கும் அமைந்திருந்தால் தான் நாடாகும். இல்லையேல் நாடாகாது (740). ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு எந்த ஒருநாடும் பிறிதொரு நாட்டை எதிர்பாராமல் வாழ முடியுமா? வேண்டும் பொருளெல்லாம் அந்த அந்த நாட்டி லேயே கிடைத்து விடுமா? நாடென்ப நாடா வளத்தன என்பது ஏற்கும் கருத்தா? என்னும் எண்ணங்கள் எழலாம். நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு எனக் காவிரிப்பூம்பட்டினம் பண்டை நாளே பாடப் படு கின்றதே! (பட்டினப்பாலை 185-193) இவையெல்லாம் நாடிய வளத்தன அல்லவோ! எனவும் தோன்றும். மூலப் பொருள் வளம் பெரிதும் இல்லாத சப்பான் செய் பொருள் வளத்தால் உலகில் சிறப்பிடம் பெறுவதும், கல் லெண்ணெய் வளத்தாலேயே உலகை விலைக்கு வாங்கத் துணியும் அரபு நாடுகளும் வளமில்லாதவை என முடியாததே உண்டாகும் பொருள், உண்டாக்கப் பொருள், வாங்கும் ஆற்றல் இவற்றை உடைய நாடுகள் எல்லாம் நாடாவளத்தன நாடு களேயாம். யானைக்கே எனினும் கவளம் கவனமாக ஊட்டின் சிறிய நிலத்து விளைவும் பலநாள்களுக்கு ஆகும். ஆனால் அதனைக் கட்டவிழ்த்துத் திரிய விட்டுத் தின்னச் செய்தால் நூறு ஏக்கர் நிலம் எனினும் வாய் புகுவதிலும் கால் மிதியில் அழிந்து விடப் பயனில்லாது ஒழியும் என்று புறநானூறு கூறும். ஆட்சியமைதி இல்லாத நாடு கட்டவிழ்த்து விடப்பட்ட யானை அழிக்கும் அழிவினைச் செய்யும் நாடாகவே இருக்கும். அரண் இனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அரணும், படையும் இன்றியமையாதவை. அரண் என்பது பாதுகாப்பு. வலிமையைக் காட்டுவதற்கும் அரண் உதவும்; பாது காப்புக்கும் அரண் உதவும். நீரும் நிலமும் மலையும் காடும் அரண்களாம். இவற்றொடு வானும் இந்நாள் அரணாகும் (741-742). காவல் இடம் சிறிதாகவும் உள்ளிடம் பெரிதாகவும் இருத்தல்அரணச் சிறப்பாகும் (744). பகைவரால் பற்றுதற்கு அருமையும் உள்ளிருப்பார்க்கு வேண்டும் வளமையும், வாய்ப்பும் உடையது அரண் (745). முற்றுகையிட்டும், முற்றுகையிடாது அழித்தும், உள் ளிருப்பாரை வஞ்சத்தால் வயப்படுத்தியும் பகைவரால் பற்றிக் கொள்வதற்கு அரியது அரண் ஆகும் (747). எத்தகைய சிறப்புடையதாக அரண் அமைந்திருந்தது ஆயினும் செயலாற்றும் திறம் இல்லாதவர்களிடத்தில் அது பயனற்றது ஆகிவிடும். ஆதலால் வினைமாட்சியையுடைய வீரச் சிறப்பே அரண் சிறப்பாம். எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் (750) இயற்கை வளம், அரண் நலம் ஆகியவற்றுடன் செய் பொருள் வளமும் ஒரு நாட்டுக்கு வேண்டும். அணையா விளக்கு பொருளே. பொருள் உடைமை மலைமேல் இருந்து யானைப்போர் பார்ப்பது போல் எளிது. ஆதலால் பொருளாக்கம் மிகவும் வேண்டும். அப்பொரு ளாக்கமே பகைவர் செருக்கை அழிக்கும் கூரிய படைக் கருவி (753, 758, 759) ஒரு நாட்டுக்குப் படை என்பது தலையாய செல்வம். காலக் கோளே சீற்றத்துடன் வரினும் ஆற்றலொடு எதிர்க்கும் திறன் வாய்ந்ததே படையாகும். படையின் வீறு கண்ட அளவானே பகை மாறு கொண்டோட வைக்கும் மாண்பினது படை. போரில் நிலைபெற நிற்கும் பழமையான வீரர் பலரை யுடையதாக இருப்பினும், தகுதி வாய்ந்த படைத் தலைமை உடையதே படைமாட்சியாகும். நிலைமக்கள் சால உடைத்தெளினும் தானை தலைமக்கள் இல்வழி இல் (770) போர்க்குப் போகாத நாளெல்லாம் வீண்போன நாள் என்பது படைச் செருக்கு. அவர் புகழ் வேண்டி உயிரையும் பொருட்டாக எண்ணாத வீரர் (776, 777) நல்ல ஆட்சியராக விரும்புவார்க்குத் தம் செம்மையுடன் தொண்டுள்ளமும் வேண்டும். எவ்வகையானும் சீர்கேட்டுக்கு இடந் தருதல் ஆகாது. தூது ஒற்று என்பவற்றைத் தேர்ந்து பயன்படுத்துதல் வேண்டும். நாட்டு வளத்தில் அக்கறையும், பாதுகாப்பில் தனித் திறமும் வேண்டும். தம் நலம் ஒழித்துப் பொது நல நோக்கம் கொள்ளுதலே நல்ல ஆட்சியராதற்குரிய அடிப்படைப் பொருளாகும்.  இளங்குமரனார் தமிழ் வளம் அகராதிகள் தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி (அணியமாக உள்ளது) தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி தொகுதி - 3 1. சொற்பொருள் நுண்மை விளக்கம் தொகுதி - 4 1. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற்றுக் கதைகள் தொகுதி - 5 1.. புறநானூற்றுக் கதை 1 2. புறநானூற்றுக் கதை 2 3. புறநானூற்றுக் கதை 3 4. புறநானூற்றுக் கதை 4 5. புறநானூற்றுக் கதை 5 6. புறநானூற்றுக் கதை 6 7. புறநானூற்றுக் கதை 7 8. புறநானூற்றுக் கதை 8 9. புறநானூற்றுக் கதை 9 10. புறநானூற்றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைத் தமிழ் மன்றங்கள் 13. பெரும்புலவர் மூவர் தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற்றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறத்தராக 8.வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் ஊழ் தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 10. வள்ளுவர் வழியில் குறளாயத் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 14. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 15. வள்ளுவர் வழியில் நல்ல சான்றோராக 16. வள்ளுவர் வழியில் வினை 17. வள்ளுவர் வழியில் பிறப்பு 18. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 19. வள்ளுவர் வழியில் தவம் 20. மங்கல மனையறம் 1. ஒரு குறள் ஒரு நூல் 1 2. ஒரு குறள் ஒரு நூல் 2 3. ஒரு குறள் ஒரு நூல் 3 4. ஒரு குறள் ஒரு நூல் 4 5. நினைக்கும் நெஞ்சம் தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் தொகுதி - 10 1. காக்கை பாடினியம் தொகுதி - 11 1. களவியற் காரிகை தொகுதி - 12 1. தகடூர் யாத்திரை தொகுதி - 13 1. யாப்பருங்கல விருத்தி தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களஞ்சியம் தொகுதி - 15 1. தமிழ் வளம் - சொல் தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் தொகுதி - 17 1. புறத்திரட்டு தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் தொகுதி - 20 1. கல்விச்செல்வம் 2. இருசொல் அழகு 3. தனிப்பாடல் கனிச்சுவை 4. பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி