இளங்குமரனார் தமிழ்வளம் 1 வழக்குச்சொல் அகராதி வட்டார வழக்குச் சொல் அகராதி இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ் வளம் -1 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 416 = 432 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 405/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் வழக்குச்சொல் அகராதி தொகுப்பாளன் தொகையுரை 1 வழக்குச்சொல் அகராதி 5-174 வட்டார வழக்குச் சொல் அகராதி நூல்வரவு 176 வட்டாரங்கள் 184 தொழில் - இன - வகை 186 வட்டார வழக்குச் சொல் அகராதி 187-413 வழக்குச் சொல் அகராதி தொகுப்பாளன் தொகையுரை வழக்கு என்றால், உலகியல் வழக்கையே குறித்த தொல்காலம் ஓன்று இருந்தது. அதன் பின்னரே, நூல் வழக்கு என்னும் ஒரு வழக்கு உண்டாயிற்று. இந் நுண்ணிய இயலை வெளிப்பட விளக்குவது போல், நம் பழந்த தமிழ் மரபைக் காக்கும் வழிநூலாக அமைந்துள்ள தொல்காப்பியப் பாயிர ஆட்சியுள்ளது. வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் என்பது அது. வழக்குச் சொல் அகராதி என்னும் பெயரிய இத்தொகை விளக்கநூல். மிகப்பெரிதும் உலகியல் வழக்குத் தொகுப் பேயாகும். இத் தொகுப்பு முடிவடைந்த ஒன்று என எவரும் கருதார். எத்தகு பெருந் தொகுப்பே எனினும், காலந்தொறும் இடந்தொறும் ஆள்தொறும் பெருகிவரும் பேராறு அன்ன உலகியல் வழக்கை, இவ்வளவே என அறுதிகட்டிவிட இயலாது. அவ்வகையில் இஃதோர் சிறு தொகுப்பு என்னத் தகும். இத் தொகுப்பு, காலந்தொறும் பெருகுதல் வேண்டும்; தமிழ்த் தொண்டர்களால் பெருக்கப் படுதலும் வேண்டும். சொற்பொருள் அகரமுதலிகள் இருக்கவும், இவ்வகர முதலிப் பயனென்னை எனின், ஓரிரு சொற்களைப் பார்த்த அளவானே இவ்வினவுதலுக்குரிய விடை வெளிப்பட விளங்கும். அகப்பை என்பதற்குச் சோறு என்னும் பொருள் வழக்கு உண்மை, அவர் என்பதற்குக் கணவர் என்னும் பொருள் உண்மை, அழுதல் என்பதற்குக் கொடைப் பொருள் உண்மை, இக்கன்னாப்போடுதல் என்பதற்குத் தடைப்படுத்தல் அல்லது தடுத்தல் என்னும் பொருள் உண்மை அகர முதலிகளில் காணற்கு அரியவை; இல்லாதவையும் கூட! கொண்டை போடுதல் நாகரிகம் இல்லாமையையும் கொசு விரட்டல் வணிகச் சீர் கெடுதலையும், தூசி தட்டல் விலையாகாமையையும், மூட்டை கட்டல் புறப்படுதலையும், வேகாமை நடைபெறாமையையும் குறித்தலும் அத்தகையவே.) இணைச்சொல் அகராதி என்னும் பெயரிய நூல் கழகத்தின் வழி முன்னே வெளிவந்தது. உலக வழக்குக் கொடையால் வெளிப் பட்டது அது என்றால், அதனினும் முற்றாக உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும். பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், பழமையான கழியவும், புதியன புகவும் ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். ஆதலால், அத் தொகை. மொழிவளம் காட்டுவதுடன், வரலாறு வாழ்வியல், படிப்பினை இன்னவற்றுக்கும் பயன்பாடு மிகச் செய்தவை எண்ணித் தொகுக்கப்பட்டது இத் தொகையாம். பல்துறையாய்வாளர்களுக்கும் கருவிநூல்களைப் படைத்துத் தருதலைக் கடப்பாடாகக் கொண்டவர் மேலை நாள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் அவர்கள். தமிழ்த் துறைகள் பலப் பலவற்றைத் தூண்டியும் துலக்கியும் கருவி நூல்கள் தோற்றுவித்தும் படைப்பித்தும் பல்லபல நல்லபணி செய்தவர்கள் அவர்கள். தமிழ் ஆட்சி மொழி சட்டம் தோற்றுதற்கு முன்னரே ஆட்சி மொழிநூல்கள், பயிற்று மொழி பைந்தமிழே என்பதை உருவாக்குதற்கு அறுபான் ஆண்டுகளின் முன்னரே கலைச் சொல்லாக்க மாநாடுகள் கூட்டிப் பல்துறை நூல்கள் வெளியிடல், தமிழில் சட்டத்துறை முதலாம் துறைகளை நடாத்து தற்குச் சட்டத்துறை முதலாம் நூல்கள் வெளியீடு, தமிழ் வழிபாட்டுக்கு ஏந்தாம் மலர் வழிபாட்டு நூல்கள், போற்றி நூல்கள் படைத்தல், தனித் தமிழ் வளர்ச்சிக்கும் திருக்குறள் பரப்புதற்கும் ஏந்தாம் வழிதுறைகளைக் கண்டு கண்டு களப்பணியாளிபோல் கடனாற்றல் இன்ன வெல்லாம் செய்தார்கள். புலவர் அகராதி, சிறப்புப் பெயர் அகராதி, தமிழ் ஆங்கில அகராதி எனப்பல அகராதிகளும் ஆக்கித் தொண்டாற்றினார்கள். அவ்வகையில் தொடர்ந்து முன்னே இணைச்சொல் அகராதியையும் இதுகால் வழக்குச்சொல் அகராதியையும் அவர்கள் அருமை மருகரும் இந்நாள் கழக ஆட்சியாளரும் ஆகிய திருமிகு இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் எம்.ஏ.பிலிட். கழக வழியே வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றிபெரிதுடையேன். கழகப் பதிப்பில் காண்டற்கரியது அச்சுப்பிழை என்பது தமிழுலகம் அறிந்தது. ஆனால், இந்நூலில் அச்சுப் பிழைகள் பல நேர்ந்துள. இக்கருவி நூலைப் பயன்படுத்தும் திறவோர்க்கும் இப்பிழைகளைக் கண்டு கொள்ளவும் திருத்தம் பெறவும் இயல்பாக வாய்க்கக்கூடியவே. ஆதலால் பிழை பாட்டால் அன்னார்க்குப் பொருள் காண்பதில் இடர் ஏற்படாது என நம்புகின்றேன்! பல்ல பல தமிழ்த்துறைகளில் படியச் செய்து, பயன் நூல்கள் படைக்கத் தூண்டித்துலக்கும், தண்டமிழ் அன்னையின் தளிரடியை வாழ்த்தி வணங்குகின்றேன்! பாவாணர் ஆராய்ச்சி நூலகம், தமிழ்த் தொண்டன், திருநகர், மதுரை - 6 இரா. இளங்குமரன். 625006. 26.11.89 வழக்குச் சொல் அகராதி அகப்பை - சோறு அகப்பை, சோறு எடுத்துப் போடும் கருவி. அதனை ஆப்பை எனவும் வழங்குகின்றனர். அகப்பை, கருவியைக் குறியாமல் சோற்றைக் குறிப்பது வழக்கில் உள்ளது. அகப்பையடி என்பது சோற்றுக்கு இல்லாமை; அகப்பை நோய் என்பது வறுமை. வறுமை எனின் எளிய வறுமையன்று; சோற்றுக்கு இல்லாக் கொடிய வறுமை. அகப்பை (அகம்+பை) வயிற்றைக் குறித்தல் இலக்கிய நெறி : அகப் பைக்கு அள்ளியிடும் கருவியை அகப்பை என்றதும் அதனைச் சோற்றுக்கு ஆக்கி யதும் வழக்கியல் நெறி. அகம் - செருக்கு அகம், மனம், மனை, பாவம், இடம், உள் முதலிய பொருள் தரும் சொல். ஆயினும் வழக்கில் அகம் உனக்கு மிஞ்சி விட்டது அகம் பிடித்தவன் என வருவனவற்றால் அதற்குச் செருக்கு என்னும் பொருள் உண்மை விளங்கும். இதனை அகம் பாவம் எனக் கூறுவதும் உண்டு. அவன் அகம் பாவத்திற்கு ஒரு நாள் அழிவு வராமல் போகாது என்பதில் அகம் என்பதன் பொருளே அகம்பாவத்திற்கும் உள்ளமை விளங்கும். உள்ளுள் தன்னைப் பெருமிதமாக நினைத்துக் கொண்டு பேசுவதாலும். செய லாற்றுவதாலும், அகம் என்பதற்குச் செருக்கு என்னும் பொருள் ஏற்பட்டதாகலாம். அகராதி - ஆணவன், செருக்கன் அகர முதலாகச் சொற்களை அமைத்துப் பொருள் கூறப்பட்டுள்ள நூல் அகராதி என்பது அனைவரும் அறிந்தது. அகராதி வீரமா முனிவரால் முதற்கண் செய்யப்பட்டது. எனினும் அகராதி நிகண்டு என ஒரு நூல் அவர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்னரே வந்து விட்டது. ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் முதலியவை அகர முறையில் அமைந்தவை. அகராதி என்பது நூற்பெயராக இருக்க வும் அகராதிக்கு எப்படி ஆணவப் பொருள் வந்தது? அகராதி படித்தவன் சொல்லாற்றலுடன் விளங்கினான். அவனை வெல்லல் அரிதாக இருந்தது. அதனால் அகராதி படித்தவனோடு சொல்லாடலை விரும்பாமல் ஒதுங்கினர். பின்னர் அகராதி படித்தவன் என்பது அகராதி பிடித்தவனாக ஆகி ஆணவப் பொருளில் வழங்கலாயிற்று. அவன் பெரிய அகராதி எனப் பழிப்பாரும் உளர். பெருமைக்கு நேரிட்ட சிறுமை இது ! அகவிலை - மிகுவிலை அக்கம் என்பதற்குத் தவசம் என ஒரு பொருள் உண்டு. எப்பொருளினும் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது தவசம் ஆதலால் அத் தவசப் பயிர் பயிரிடுதலைக் குறைக்கவோ அத் தவச விலையைப் பெருக்கி அளவைக் குறைக்கவோ கூடாது என்பதால் அக்கம் (அஃகம்) சுருக்கேல் என்றனர். மற்றை மற்றைப் பொருள்களின் விலையை அக்க விலை கொண்டே மதித்தனர். ஆதலால் அஃக விலை அக்கவிலை என வழங்கி அகவிலையாயிற்று. அவ்வக விலையும் தாறுமாறாக ஏறிய நிலையில் மிகு விலைப் பொருள் தருவதாயிற்று. இந்நாளில் D.A எனப்படும் பஞ்சப்படியை அகவிலைப் படி (Dearness Allowance) என வழங்குதல் நேரிதெனப் பாவாணர் குறித்தார். அருந்தற்படி என்பதும் அதுவே. அருந்தல் பொருள்விலை ஏற்றத்தால் வாங்குதற்கு அரிய தட்டுப்பாடு. அச்சொடிதல்: பெருஞ்தேசம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல்; ஆகிய வற்றால் எதிர்பாரா வகையில் சொத்தையெல்லாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டால் அச்சை ஒடித்து விட்டது என்றோ அச்சொடிந்து விட்டது என்றோ சொல்வது வழக்கம். வண்டியில் உள்ள ஓர் உறுப்பு அச்சு. அவ்வச்சு திரண்ட இரும்பால் ஆயது. அது ஒடிந்து விட்டால் ஒடிந்த இடத்தை விட்டு வண்டி நகராது. அதுபோல் ஒருவர் செயலொழிந்து போகுமாறு திடுமென்று ஏற்படும் பொருள் இழப்பு அச்சொடி தல் எனப்படும். அசப்பில் தெரிதல் - ஒரு பார்வையில் தெரிதல் ஒருவரைப் போலவே ஒருவர் தோற்றம் அமைந்திருத்தல் உண்டு. அதிலும் கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாக நோக்கினால், அவரைப் போலவே இவரும் தோன்றுவார். அத் தகையரை அவராகப்பார்த்து ஏதோ சொல்ல வாயெடுப்பர். சொல்லியும் விடுவர். அவர்க்கோ இவர் யாரெனத் தெரியாமல் திகைப்புண்டாம். அந்நிலையை அறிந்து இவர் வேறொருவர் என்பதை அசப்பிலே பார்த்தால் என் நண்பர் இன்னாரைப் போலத் தோற்றம் இருந்தது. அவரென்று நினைத்துக் கொண்டேன்; பொறுத்துக் கொள்ளுங்கள் என்பர். இதில் அசப்பில் என்பது ஒரு பார்வையில் (ஒரு தோற்றத்தில்) என்னும் பொருள் தருகிறது. அசைபோடல் - உண்ணுதல், எண்ணுதல். ஆடு மாடுகள் அசைபோடுதல் உடையவை. அவை அசை போட்டுத் தீனி தின்னும், அவற்றைப் போல் சிலர் எப்பொழுதும் எதையாவது மென்று கொண்டேயிருப்பர். அவர்களிடம் என்ன, அசைபோடுகிறீர்களா? என்ன பஞ்சமானாலும் உங்களுக்கு அசைபோடல் நில்லாது என்பதுண்டு. புல் கண்ட இடத்தில் மேய்ந்து, நீர் கண்ட இடத்திலே குடித்து, நிழல் கண்ட இடத்திலே படுத்து அசை போடும் மாடுகளைக் காண்பார் அசைபோடல் விளக்கம் பெறுவார். இனி எண்ணுதலை அசை போடுதல் என்பது அறிவாளர் வழக்கம். மீள மீளக் கொண்டு வந்தும் புரட்டியும் மாற்றியும் எண்ணுதல் அசையிடுவது போன்றதாகலின் அப்பொருளுக்கும் ஆயிற்று. அஞ்சடித்தல் - தொழில் படுத்து விடுதல். அவர் கடை அஞ்சடிக்கிறது என்றால், ஈயோட்டு கிறார் என்பது போன்ற வழக்காகும் : கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள். தொழில் சீராக இல்லை அஞ்சடித்து விட்டது என்பதும் கேட்கக் கூடியது. அஞ்சு என்பது ஐந்து என்னும் பொருளது. இங்கு ஐந்து, மெய் வாய் கண் மூக்கு செவியாகிய ஐந்து உறுப்புகளையுடைய உடலைக் குறித்து நிற்கிறது. அடித்துப் போட்ட உடல் அசையாமல் கிடப்பது போலக் கடை வணிகமும், தொழில் இயக்கமும் படுத்து விட்டன என்பது விளக்கப் பொருளாம். சுறுசுறுப்பு இல்லாதவனைப் பார்த்தும் என்ன அஞ்சடித்துப்போய் இருக் கிறாய் என்பதும் உண்டு. இது இப்பொருளை மேலும் தெளி வாக்கும். அடக்கம் - அடக்கம் செய்யப்பட்ட இடம் மூச்சு, அடக்கி அப்படியே இயக்கமறச் செய்வது அடக்கம் எனப்படும். மூச்சுப் பயிற்சியில் தேர்ந்த ஓகியர் தம் மூச்சை இயங்காமல் அடக்கி இயற்கை எய்திவிடலுண்டு. அத்தகைய நிலை அடக்கம் எனப்படும். இஃது இன்னார் அடக்கமான இடம் என்பது வழக்காறு. ஐம்புலன்களை அடக்கும் அடக்கத்தில் இருந்து, மூச்சையே அடக்கி நிறுத்தி விடும் இவ்வடக்கத்திற்குப் பொருள் விரிவாகியது. அடக்கம் செய்தல் எனப் புதைத்தலைக் கூறும் வழக்குள்ளதை அறிக. ஒடுக்கம் என்பது காண்க. அடித்தல் - கிடைத்தல், உண்ணல், வெதுப்பல், அசைத்தல் அடித்தல் என்பது அடித்தலாம் வினையைக் குறியாமல் பரிசு அடித்தது என்பதில் கிடைத்தல் பொருளில் வருகிறது. வயிறு நிறைய அடித்து விட்டேன் என்பதில் உண்ணற் பொருள் அடித்தலுக்கு உண்டாகின்றது. காய்ச்சல் அடித்தல் போன்றனவற்றில் அடியாத அடி அடியாகின்றது. அங்கு வெயிலடித்தல் போல் வெப்பப் பொருள் தந்தது. வயிற்றில் அடித்தல் என்பதிலோ பட்டுணி போடுதலைக் குறிப்பதாயிற்று. எதில் அடித்தாலும் வயிற்றிலடித்தலாகாது. கண்ணடித்தலோ அசைத்தல் பொருளது. அடிப்பொடி - தொண்டர் அடி - காலடி; பொடி - தூசி தூள். காலடியில் பட்ட தூள்; எனப் பொருள் குறித்தாலும், அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை எடுத்து வழிபடும் பொருள்போலப் பூசிக் கொள்ளுவாரை அடிப்பொடி என்பர். சிவனியர்க்குப் பொடி - திருநீறு; மாலியர்க்குப் பொடி - திருமண். தொண்டரடிப்பொடி யாழ்வார் நாலாயிரப்பனுவலார். கம்பன் அடிப்பொடி கணேசனார் அணித்தே வாழ்ந்தவர். அடிவிலை - ஊன்விலை மாடு விற்பதற்காகத் தாம்பணிக்குக் கொண்டு செல்வர். அங்குக் குறைந்த விலைக்குக் கேட்டால், அடிவிலைக்குக் கேட்கிறாயா? வேலை செய்யும் மாடு இது என்பர். அடிவிலை என்பது கறியின் விலையைக் கணக்கிட்டு ஊன் உணவுப் பொரு ளுக்காகக் கொண்டு செல்லப்படும் மாடாகும். அடிவிலை என்பது மாடடித்துக் கொன்று கூறு போட்டு விலைக்கு விற்பார், வாங்கும் விலையாகும். அத்தகு மாடுகள் அடிமாடுகள் எனப்படும். அடித்தல் - கொல்லுதல். அடுக்கு - ஐந்து அடுக்குப் பாறை, அடுக்குப்பானை, அடுக்கு மொழி, அடுக்கு மல்லிகை என்பவற்றிலுள்ள அடுக்கு என்பது அடுக்கு தலைக் குறித்தது. எண்ணைக் குறித்தது இல்லை. ஆனால், வாழையிலையை ஒன்றனுள் ஒன்றாக அடுக்கி வைப்பது வழக்கம். அவ்வடுக்கு ஒன்றில் ஐந்து இலைகள் எண்ணி வைக்கப்படும். அடுக்குச் சட்டி என்பது ஒன்றனுள் ஒன்று அடங்கும் ஐந்து சட்டி களையுடையதாம். ஆதலால் அடுக்கு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறித்தது. கை, பூட்டு என்பவை காண்க. அடுப்பில் காளான் பூத்தல் - சமைக்கவும் இயலா வறுமை ஆம்பி, காளாம்பி, காளான் என்பன ஒரு பொருளன. காளான் குப்பையில் பெரிதும் உண்டாகும். ஆதலால் குப்பைக் காளான் எனவும் படும். நல்ல மண்பதத்தில் மழைக் காலத்தில் தோன்றக் கூடியகாளான் சமையல் செய்யும் அடுப்பில் முளைத்ததென்றால் என்ன காரணம்? பல நாள்கள் அடுப்பில் நெருப்புமூட்டவில்லை. நெருப்பு எரிந்த கரியை அள்ளவில்லை. கூரை முகடு சிதைந்திருப்பதால் மழைநீர் வழிந்திருக்கிறது. ஆகவே ஆங்குக் காளான் தோன்றியிருக்கிறது என வறுமையின் உச்சத்தை காட்டுவதாம். அடுப்பில் பூனை கிண்டுதல் என்பதுவும் இது. அடுப்பில் பூனை கிண்டுதல் - சமைக்கவும் இயலா வறுமை பூனை அழகு உயிரியாக மேலை நாட்டில் வளர்ப்பது உண்டாயினும், அப்பழக்கத்தை மேற்கொள்ளும் நம்நாட்டாரும் அதற்காக வளர்ப்பது உண்டாயினும், எலி பிடிப்பதற்காக வளர்ப்பதே பெரும்பான்மையாம். எலி சுவரைத் துளைத்துக் குடியிருக்கும். ஆனால் அடுப்பில் வளையமைத்துக் குடியிருக்குமா? பல நாள்கள் அடுப்பு மூட்டாமையால் அதையும் மற்ற மண்பகுதி போலவே கொண்டு எலி வளை தோண்டிக் குடியிருக்கின்றதாம். அதனைப் பிடிப்பதற்காகப் பூனை அடுப்பைக் கிண்டுகின்றதாம். வறுமைக் கொடுமையைச் சொல்லுவது இது. அடைகாத்தல் - வெளிப்போகாதுவீட்டுள் இருத்தல் கோழி முட்டையிட்டு இருபத்தொருநாள் அடை கிடக்கும். அடைவைத்த நாளில் இருந்து எண்ணிக் கொள்ளலாம். குஞ்சுபொரித்து வெளிப்படும் வரை அடை காக்கும் கோழி, தீனி நீர் ஆகியவற்றையும் கருதுவது இல்லை. அடையைவிட்டு வெளிப்படவும் எளிதில் விரும்புவதில்லை. அடை கிடக்கத் தடையொன்று வருவதாயின் அதனை எதிர்த்துப் போரிடவும் துணியும். அவ்வடைகாக்கும் வழக்கத்தில் இருந்து, கிடந்த கிடப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல் என்னும் பொருள் அதற்குப் பிறந்தது. வீட்டை விட்டு வெளிப் போகாத பிள்ளைகளை ஏன் அடைகிடக்கிறாய்? வெளியே போய் வாயேன்என்பது வழக்காயிற்று. அடைத்துக் கொள்ளல் - இருமலமும் வெளிப்படாமை வெளிப்படாமல் மூடிவைப்பதை அடைத்தல் என்பது வழக்கு, கதவடைப்பு, சிறையடைப்பு, தட்டியடைப்பு, பெட்டியடைப்பு என்பவற்றைக் கருதுக. ஒருவர் அடைக்காமல், தானே அடைத்துக் கொள்ளும் சிறுநீர்க் கட்டு, மலக்கட்டு என்பவையும் அடைத்துக் கொள்ளலாகக் கூறப்படும். முன்னும் பின்னும் அடைத்துக் கொண்டது என்பதும் வழக்கே. குருதியோட்டத் தடைப்பாடு, மூச்சோட்டத் தடைப்பாடு என்பனவும் அடைத்துக் கொள்ளல் எனவும் வழங்கும் மார்படைப்பு நோய் மிகப் பெருகிவருவது கண்கூடு. மார்பு அடைப்பு - மாரடைப்பு. அம்போ என விடுதல் - தனித்துக் கைவிடல் அம்போ என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல், துணை என்று நின்றவன், தீரா இடையூறு அல்லது தாங்காத்துயர் நேர்ந்த காலையில் குறிப்பாகக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் ஒதுங்கிவிடுதல் (கைவிடுதல்) அம்போ என விடுதலாம். துணை என நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இல்லா திருந்தால், தன் நிலைக்கு ஏற்றவாறு செயலில் இறங்கியிருக்கக் கூடியவனை, நம்பிக்கையூட்டி உரிய இக்கட்டான பொழுதில் தனித்து விடுதல் ஒன்றுக்குப் பத்தாம் அல்லலை விளைக்கும் அன்றோ! அவ்விரங்கத் தக்க நிலையே அம்போ எனக் கைவிடலாயிற்று. அரவணைத்தல் - அன்பு சொரிதல். அரவு - பாம்பு, பாம்புகள் இணைந்து பின்னிக்கிடத்தல் அரவணைப்பு ஆகும். ஆனால், அப்பாம்பைப் குறியாமல் தாயும் சேயும், அன்பும் நண்பும் கொண்டாடுதல், போற்றுதல், அன்பு செலுத்துதல் அரவணைப்பு என வழங்கப்படும் வழக்கம் உண்டு. வேறுபாடற அப்பாம்புகள் பின்னிக்கிடக்கும் நிலையில் உள மொத்து அன்பு பாராட்டலே அரவணைப்பென உவமை வழக்காக வழங்குகின்றதாம். மாசுணப் புணர்ச்சி என்பது சிந்தா மணி. மாசுணம் என்பது பாம்பு. அரித்தெடுத்தல் - முயன்று வாங்குதல் அரிப்பெடுத்தல் வேறு; அரித்தெடுத்தல் வேறு. பொற்கொல்லர் பணிக்குப் பயன்படுத்திய கரித்துகளைக் கூடைக் கணக்கில் விலைக்கு விற்பது வழக்கம். அதனை வாங்கி யவர்கள் கரியைச் சல்லடையில் போட்டு அலசி எடுத்து தூளை நீரில் இட்டுக் கரைத்துப் பொற்றுகள் இருப்பின் எடுப்பது வழக்கம். அரும்பாடுபட்டுச் சலிப்பில்லாமல் அரித்தால் வீண் போகாது. அதுபோல் பலகால் விடாது கேட்டுக் கேட்டு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார் உளர். அவர் செயலை அரித்தெடுத்தல் என்பது வழக்காயிற்று. அரிப்பெடுத்தல் - சினமுண்டாதல், பால்வெறியுண்டாதல். அரிப்பு என்பது ஊறல், வியர்க்குறு, வெப்பு இவற்றால் தோலில் பொரியுண்டாகும் போது, அதனால் தினவுண்டாவது அரிப்பு எனப்படும். செந்தட்டி, தட்டுப்பலா முதலிய செடிகள் படினும் அரிப்பு உண்டாகும். ஆனால் இவ்வரிப்பு அதனைக் குறியாமல் மன அரிப்பு அல்லது மன எரிச்சலாம் சினத்தையும், பாலுறவு தேடும் வெறியையும் குறிப்பதாக வழங்குகின்றது. அரிசினம் என்பது ஆழ்வார் ஆட்சி. அரிப்பெடுத்துத் திரிகிறான் என இகழ்வது பின்னதாம் பொருளது; அரி என்பதற்கு எரி என்னும் பொருளுண்டென்பது அறியத்தக்கது. அரைத்தல் - தின்னுதல் ஓயாமல் ஒழியாமல் தின்று கொண்டிருப்பதை அரைத் தல் என்பது வழக்கு. அரைவை நடக்கிறது போலிருக்கிறதே என்பதும் அரைவையாளியிடம் நகைப்பாகக் கேட்கும் கேள்வி. அரைத்தல் அம்மியில் நிகழும். அரைவை ஆலைகளும் இப்பொழுது எங்கும் காண்பன. அம்மியும், அரைவைப் பொறியும் இல்லாமலே அரைக்கவல்லான், குடியை அரைக்காமல் விடுவானா? மெல்லெனச் சுருங்கத் தின்பானைக் குறிப்பதன்று அரைவை. அவனுக்கு எதிரிடையானைக் குறிப்பது. அரைவேக்காடு - பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை. வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். சமையல் என்ப தும், சமயம் என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக் காடு முழுமையாக இருத்தல், வேண்டும் பக்குவமாகக் கருதப் படும். அரைவேக்காடு என்பது வெந்ததும் அன்று ; வேகாததும் அன்று, ஆதலால் இரண்டுங் கெட்ட நிலையதாம். இப்பொழுது அரசியல், சமயம் முதலியவற்றிலும் கல்வியிலும் கூட அரை வேக்காடு, என்னும் வழக்கு பெருகிக் கொண்டு வருகின்றது. அது ஓர் அரை வேக்காடு; பேசிப் பயனில்லை ; விடு என்பது அரை வேக்காட்டு மதிப்பீட்டுரை. அலைபாய்தல் - தொடர் தொடராக நினைவு வருதல். அலை வரிசை வரிசையாக வருவதுபோலப் பலப்பல எண்ணங்கள் தொடர்தல் அலைபாய்தலாம். அலைபாயும் எண் ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிமுட்டி அலைக்கழிவு செய்யும். இவ்வெண்ணங்கள் இன்பமூட்டுவனவும் நலம் செய் வனவுமாம் எண்ணங்கள் அல்ல என்பதும் துன்பமூட்டுவனவும் தீமை செய்வனவுமாம் எண்ணங்கள் என்பதும் அறியத்தக்கன வாம். எனக்குள் அலைபாய்கின்றது; என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன் என்பவர் உரையில் அலைபாய்தல் பொருளும் விளைவும் புலனாம். அவர் - கணவர் அவர், பன்மைப் பெயரும், ஒருமைச் சிறப்புப் பெயருமாம். ஆயின் அவர் என்பது பொதுமையில் நீங்கிக் கணவரைச் சுட்டும் சுட்டாக அமைந்து பெருக வழங்குகின்றது. அவர் இல்லை ; அவரைக் கூப்பிடுங்கள்; அவர் இருந்தால் இந்தப்பாடு உண்டா? என்பவற்றில் எல்லாம் உள்ள அவர், ஒரு மனைவியின் அல்லது பெண்ணின் வாயில் இருந்து வரும்போதெல்லாம், கணவரைக் குறித்தல் அறிக. அவிழ்சாரி - மானமிலி அவிழ் - அவிழ்த்தல் ; இவண் உடையை அவிழ்த்தல் ; சாரி- திரிதல், உடையை அவிழ்த்தல். அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன் அவிழ்த்துப் போட்டு ஆடவா செய்கிறேன் என்னும் வழக்குகளில் உண்மை அறிக. திரிதலும், ஆடலும் இந்நாள் நச்சு நாகரிகத்தின் இச்சை விளையாடல்களாகத் திகழ்கின்றன. சாரி என்பது திரிதல் பொருளது. எறும்புச் சாரி புதுமுறை ; குதிரைச்சாரி பழமுறை ; சாரி போதல் ஒழுங்குறப்போதல், அவிழ்சாரியோ ஒழுங்கறப் போதல் அவிழ்சாரி (அவுசாரி) பேச்சை என்னிடம் எடுக்காதீர்கள் என்பது வழக்குரை. அவிழ்த்து விடுதல் - இல்லாததும் பொல்லாததும் கூறுதல். கட்டில் இருந்து விலக்கி விடுதல் அவிழ்த்து விடுதல் எனப்படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் புலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை. கன்றுகளை அவிழ்த்து விட்டுத் தாயிடம் பாலூட்டுதலும் கறத்தலும் எங்கும் காணுவது. தாய் குழந்தைக்குப் பாலூட்டல் அவிழ்த்து விடுதல் எனவும் சொல்லப்படும். கச்சு, மாரார்ப்பு என்னும் மார்க்கட்டு என்பவற்றை அவிழ்த்து விட்டு பாலூட்டலால் அதனையும் அவிழ்த்து விடுதல் என்று குறிப்பது உண்டு. ஆனால் ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாம் செய்திகளை இட்டுக்கட்டி உண்மைபோல் திரித்துக் கூறுதலை அவிழ்த்து விடுதல் என்பதும் உண்டு. என்ன அவிழ்த்து விடுகிறாய்; எனக்குத் தெரியாதா? எனின் நீ பொய் கூறுகிறாய் என்பது பொருளாம். அழுதல் - கொடுத்தல் அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது, அவனுக்கு வன்படியாக அழுதேன் என்னும் வழக்கில், அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாக இருப்பது இருபாலும் இன்பம். அதுவே ஈத்துவக்கும் இன்பம் எனப்படும். பெறுபவர் தரு பவரை வாட்டி வருத்திப் பெறுவது, கொடுப்பதாக இல்லாமல் அழுவதாக அமைந்து விடுகின்றது. அழுவதிலும் (கொடுப்பதிலும்) பயனுக்கு அழுவதினும், பாழுக்கு அழுவதே மிகுதி என்பது வெளிப்படை. அழுது அடம்பிடித்தல் - நிறைவேற்றல். குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம் பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய வழியாகக் கொள்வதாம். அடம் பிடிப்பது என்பது தொடர்ந்து செய்வது ; அடை மழை என்பது போல. அடம்பிடிக்கும் பயன், நிறைவேற்றல். ஆதலால் அப்பொருள் தந்தது. அறுத்துக் கட்டல் - தீர்த்துக் கட்டுதல். நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டுபோய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத் தொழிற் சொல், வேறொரு வகையில் குறிப்பு மொழியாக வாழ்வில் பயன் படுத்தப்படுகின்றது. வாழ்க்கைத் துணையாக இருந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றி இனி இணைந்து வாழ முடியாது என்னும் நிலைமை உண்டாகியபோது அவர்கள் மணவிலக்குப் பெறுதலும், விரும்பும் வேறொருவரை மணந்து வாழ்தலும் உண்டு. அதனை அறுத்துக் கட்டல் என்பர். அறுத்தல் மணவிலக்கு, கட்டல் மீள்மணம். தாலிகட்டுதல், தாலியறுத்தல் என்பவை அறிக. அறுவடை - வருவாய் அறுவடை வேளாண் தொழிலில் இடம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள்கள். கடுமையான உழைப்பு நாள் அஃதெனினும். அவ்வறுவடைக்காலமே எதிர் நோக்கியிருக்கும் இன்பநாளாம். அவ்வறுவடைக்கால வருவாயைக் கொண்டது தானே அவர்கள் வாழ்வு. வணிகர்கள் அலுவலர்கள் முதலிய பிறர்க்கும் பெருவருவாய் ஏற்படும் வாய்ப்பு உண்டானால் நல்ல அறுவடை, என்னும் வழக்கு உண்டாயிற்று. இங்கே அறுத்து மணி குவிக்கும் செயல் இல்லையாயினும், வருவாய் கருதி இவ்வாட்சி ஏற் பட்டதாம். மேலும் நேர்வழியல்லா வழியில் வரும் வருவாய்க் கும் அறுவடை என்பது இந்நாள் வழக்கிலுள்ளதாம். அறுவை - காதுவெறுக்க உரைத்தல் அறுத்தல் வேலை அறுவை எனப்படும். மர அறுவை அறிந்தது. நெடும்பாவில், வேண்டும் அளவு அறுத்தெடுக்கும் துணி அறுவை எனப்படும். இவற்றின் மாறானது இவ்வறுவை. கத்தி, அரம்பம் இல்லாமல் நாவால் அறுக்கும் சொல்லே அறுவை எனப்படுகிறதாம். அறுவை என்பது இப்பொழுது படித்தவர்களிடையே பெருவழக்காகவுள்ளது. தங்களுக்குப் புரியாததும், நுண்ணிய செய்தியும் கூட அறுவையாகச் சொல்லப்படுவதாயின. கேலி கிண்டல் வேடிக்கை ஆகியவை அறுவையாகி விட்டன. அறுவை, பொழுதை வீணாக்குவது பாழாக்குவது. காதுக்கு வெறுப்பூட்டுவது என்னும் பொருள்களில் வழக்கூன்றியுள்ளது. ஆகாவழி - கூடாவழியில் செல்பவன் ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகிறாய் என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறியாமல் ஆகாத வழியில் செல்லும் ஆளைக்குறித்தல் வழக்கில் உள்ளதாம். அவன் ஆகாவழி என்றாலே, ஆகாத செயலை செய்தற்கு ஆகாத வழியில் செல்பவன் என்பது பொருளாம். கூடா ஒழுக்கம் என்பது போல, ஆகாவழி என்க. ஆகா வழியே ஆக்க வழியாகக் கொண்டவர் பெருகினால் நாட்டு நிலை என்னாம்? ஆட்டங் கொடுத்தல் - உறுதிப்பாடில்லாமை. பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு. ஆடுதல், அசைதல் ஆகியவை காற்றால் நிகழ்பவை அவ்வாறு காற்றால் ஆடுதல் இன்றிப் பற்றுக்கோடு உறுதியாக இல்லாமையால் நேர்வதையே ஆட்டங் கொடுத்தல் என்பர். ஆடக் கூடாதது ஆடுவதே ஆட்டங்கொடுத்தல் எனலாம். இவ் வழக்கில் இருந்து, அவர் பதவி ஆட்டங்கொடுத்து விட்டது. அவர் நிலைமை ஆட்டங் கொடுத்துவிட்டது என்பனபோல வழக்கில் வந்துவிட்டன குடும்பமே ஆட்டங் கொடுத்து விட்டது என்பது பேரிழப்பு அல்லது பேரதிர்ச்சியால் நிகழ்வதாம். ஆட்டம் போடல் - தவறான நடக்கை ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான் என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழந்தைகள் ஆடல், கலை யாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வாடல், இதனை விளக்கவே ஆடாத ஆட்டம் எனப்பட்டது. பண்புடையவர் ஆடாத ஆட்டம் இவ்வாட்டம். சூதாட்டம், களியாட்டம், பாலாட்டம் முதலாய ஆட்டம் ஆடாத ஆட்டம். நளன்கதை, தருமன் கதை நாடறிந்த கேடாக இருந்தும் அவ்வாட்டத்தை அரசே ஊக்கு கின்றது. இன்றேல் சூதாட்டு களியாட்டு நிகழுமா? பரிசுச் சீட்டு என்பது என்ன? மதுக்கடை அனுமதி என்பது என்ன? பொதுமக்களை ஆடாத ஆட்டத்திற்கு ஆளாக்கி விட்டால், அரசின் ஆடாத ஆட்டங்கள் அரங்குக்கு வாராது என்னும் அடிப் படையா? ஆடாத ஆட்டம் அழிவின் தொடக்கம் என்க. ஆட்டிவைத்தல் - துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல் ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால் அத்துன்பத்தைச் சொல்வானேன்? இன்ப துன்பங்களுக்குப் பொதுவான ஆட்டுதல் சொன்னபடியெல் லாம் செய்ய வைத்தல் பொருளில் வருவது வழக்கு, அவள் ஆட்டி வைக்க அவன் ஆடுகிறான்! அவனாகவா இந்த ஆட்டம் போடுகிறான் என்பர். இதில் ஆட்டுதற்கு ஆடுதல் விளங்கும் அவனைப் பிடித்த நோய்முகன் (சனி) ஆட்டுகிறது அவன் என்ன செய்வான் என்பதில் கோளாட்டம் குறிக்கப்படுகிறது. ஆடு தலுக்கு நடுக்கம், அச்சம் முதலிய பொருள்கள் உண்மையால் அவ்வழி வந்தது ஆட்டி வைத்தலாம். ஆட்டுதல் - அலைக்கழித்தல். மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான ஆட்டுதல் வழிப்பட்டவை. மாவு ஆட்டுதல் போன்ற ஆட்டுதல் வழியில் வருவதே அலைக் கழித்தல் பொருள் தரும் ஆட்டுதலாம். ஆட்டப்படும் பொருளின் தோற்றம் முழுவதாக மாற, அரைத்தோ கசக்கிப் பிழிந்தோ உருச்சிதைப்பதே ஆட்டுதல் எனப்படும். அவ்வாறு நிலைமாறச் செய்வது முதல் வகை ஆட்டுதல். சொன்ன சொன்னவாறெல்லாம் செய்ய வைப்பதும் ஆட்டுதலே. அது பின்னுள்ள வகையைச் சேர்ந்தது. ஆட்டி வைத்தல் என்பதும் அது. ஆட்டுமந்தை - சிந்திக்காத கூட்டம் ஆட்டுமந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார்களா? என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பி நடந்து விட்டால் எங்கே போகிறது ஏன் போகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலே ஒன்றை ஒன்று தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும். இவ்வாறே ஒருவர் சொல்வதைக் கேட்டு அதைச் சிந்திக்காமலேயே ஆமாம் எனத் தலையாட்டும் கூட்டம் ஆட்டு மந்தையாகச் சொல்லப்படுவது வழக்கமாயிற்றாம். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் - முறைகெடச் செலவிடல் ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட லும், குட்டியைத் தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டு தற்காகச் செய்யும் வேலை இது. இவ்வழக்கில் இருந்து வந்தது இத்தொடர். ஒருவகைக்கென உரிய ஒரு தொகையை வேறொரு வகைக்குச் செலவிடலும்; வேறொரு வகைக்கென உரிய தொகையை இன்னொரு வகைக்குச் செலவிடலும் பிறகு மாற்றிச் சரிக்கட்டலுமாக இருப்பவரை இப்பழமொழியால் குறிப்பர். இன்னது இன்னதற்கென இல்லாமல் எதையும் எதற்கும் செலவிடும் வழக்கம் உள்ளவர்களை இவ்வாறு குறிப்பர். இம்முறை சமாளித்தல் எனவும் படும். ஆடவிடல் - அரங்கேற்றல் ஆட்டத்திற்குப் பயிற்சி தந்து அரங்கேற்றுதல் வழக்கம். அறையில் ஆடி அம்பலத்தில் ஆடல் என்னும் பழமொழியே இதனைத் தெளிவாக்கும். இந்நாளில் ஆடவிடலாம் அரங் கேற்றம் வெள்ளமெனப் பெருக்கெடுக்கின்றன. பாட்டரங்கம் ஆட்டரங்கம், பழமைய. முன்னதற்குச் சங்க நாள் அரங்கேற்றம் சான்று. பின்னதற்குச் சிலப்பதிகார அரங்கேற்று காதை சான்று. இந்நாள் அரங்கேற்றங்கள் அவைக் களந்தோறும் நிகழ்தலை இன்றைய நிகழ்ச்சிப் பகுதி காட்டும். கிழமை இதழ்கள், நாளி தழ்கள் ஆகியவற்றின் கலைப் பகுதி காட்டும். ஆடி அடங்கல் - அமைதல் ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டு பொருள் சுண்டவும் உடலின் உரம் சுண்டவும், குருதி சுண்டவும், நாடி நரம்புகள் சுண்டி இழுக்கவும் பழைய ஆட்டம் போடமுடியாமல் வேறு வழியின்றி அடங்குதல் உண்டு. இதனை ஆடி அடங்கல் என்பர். ஆடி அடங்கிய பின்னராவது தெளிவு ஏற்படுமா? பெரும் பாலோர்க்கு இல்லை. மூதா (கிழப்பசு) இளம் புல்லைத்தின்ன முடியாமல் (பல்போய் விட்டமையால்) நாவால் நக்கி இன்புறல் போல மனம் அசை போட்டுக் கிளு கிளுப்பதை விடுவது இல்லை. ஆடிய ஆட்டத்தின் முதிர்ச்சி எளிதாகப் போகுமா? ஆடிப்போதல் - அஞ்சி நடுங்கல் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச் செய்தியைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்பது அப்பொருள் தருவதாம். நடுக்கம் உண்டாகும் போது தலைகால் கை நாடி நரம்பு பேச்சு எல்லாமும் ஆடுதல் உண்மையால் ஆடிப் போதல் அல்லது ஆடிவிடுதல் என்பது அஞ்சி நடுங்குதலைக் குறிப்பதாயிற்று. செய்தியை அன்றிக் கொடிய விலங்குகளைக் கண்ட போதும் அஞ்சி நடுங்கல் இயற்கையே. அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்றார் தொல்காப்பியர்; ஆடிவிடுவார் என்பதை அறிந்து கொண்டால், அவ்வாட்டம் கண்டு மகிழ்தற்கே ஆட்டி வைக்கும் ஆட்களும் இல்லாமல் இல்லையே என்பது விளங்கும். ஆண்டிகூடி மடங்கட்டுதல் - செயல் நிறைவேறாமை திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர், தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆகியோர் இவ்வாண்டியரல்லர், உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலியாண்டியர். அவர்கள் சிலர் கூடி. இப்படி ஒரு மடம், இப்படியொரு கிணறு. இப்படியொரு தோட்டம் எனப் பலப் பல திட்டமிட்டுப் பேசி, பசி வந்ததும் சட்டி தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கப் போகின்றவர். கூடும் போது தாடியசைப்பாலே திட்ட மிட்டு, பசி வந்ததும் மறப்பவர். ஆகலின் நிறைவேறாத் திட்டம் இவ்வாண்டியர்திட்டம். செயலூக்கமில்லார் கூடித் திட்டம் போடுவதை அறிந்தவர். ஆண்டி கூடி மடங் கட்டியதுபோல் தான் உங்கள் திட்டம் இருக்கும் என்பர். ஆண்டுமாறி - வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன் ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது அவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை வசை கூறு முகத்தான் இவ்வழக்கு உள்ளது. ஆண்டுமாறி நீ தொட்டது எது விளங்கும் என்பர். ஆண்டுமாறி நீ பார்த்தாலே பச்சைமரமும் பட்டுப்போகுமே என்பது இன்னும் உச்சப்பழமொழி. வாழ்ந்து கெட்டவன் என்பதால் எந்த ஒன்றையும் வாழ விடமாட்டான் என்னும் பொருள் தருவதாக வழக்கில் அமைந்துள்ளது. ஆயிரங்காலத்துப் பயிர் - திருமணம் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு, பத்தாண்டு எனப் பயன் பயிர்கள் உண்டு. அக்காலவெல்லையில் பயன்தந்து நின்று விடும் அப்பயிர்கள். ஆனால் திருமணம் வழிவழியாகக் கொண்டும் கொடுத்தும் பெருக்கத்தோடேயே வருவது. ஆகலின், ஆயிரங் காலத்துப் பயிர் எனப்படுவதாயிற்று. பயிர் என்பது உயிர்ப்பொருள். அவ்வுயிர்ப்பொருளொடு உணர்வு அறிவு இயக்கம் ஆகியவெல்லாம் கூடிய பயிர் மக்களாம் பயிர். அப்பயிர்த்தொடர்பு, காலமெல்லாம் செழித்து வளரக் கருதிய, வழக்கில் இருந்து வந்தது ஆயிரங்காலத்துப் பயிர் என்பது. ஆலைச்சரக்கு - அரும் பொருள் ஆலை, தொழிற்சாலை ; கலைநலமும் கவினும் அமைந்தது லைப்பொருள். அப்பொருட்கவர்ச்சியால் விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமையால் சீமைச் சரக்கு எனவும் படும். சீமை எண்ணெய் என மண்ணெண்ணெய் குறிக்கப்படுதலும் அறியத்தக்கது. சிலர் தங்கள் பொருளை உயர்த்தியும் விலையைக் கூட்டியும் சொன்னால் ஆமாம் ; ஆலைச்சரக்கு ; இந்த விலை சொல்ல வேண்டியதுதான் என்று ஒதுக்குவர். ஆலைச் சரக்கு என்பதற்குக் கிடைத்தற்கரிய அரும் பொருள் என்பது பொருளாம். ஆளான ஆள் - பெரிய ஆள் ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே! எத்தனை ஆள் என்பதில் ஆண் பெண் பாற்பாகுபாடு இல்லை என்பது அறிக. ஆள் இயல் பாலுக்குத் தக அமையும் அவ்வளவே. அவ்வப்பாலின் இயலில் மிக ஆளுமை உடையார் ஆளான ஆள் எனப்படுவார். ஆள்களில் ஆள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் என்னும் பொருளதாம். ஆனானப் பட்ட ஆள் என்பதும் இத்தகையதே. ஆனானப்பட்டவன் - மிகப் பெரியவன் ஆனவன் என்பது பெரியவன் என்னும் பொருளது. ஆகிவந்தவன் என்பது போன்ற வழக்கு அது. ஆளாதல், பெரியவளாதல் என்பவற்றில் வரும் ஆக்கப் பொருள் ஆதல் போல ஆனவன் என்பது வந்ததாம். ஆனவன் என்பது இரு முறை யடுக்கி ஆனானப்பட்டவன் என்றாகியது. ஆனானப்பட்டவனெல்லாம். ஆலாகப் பறக்கும் போது இவனெல்லாம் எந்த மட்டு என்பது வழக்கு. அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மட்டு? என்பது போன்ற வழக்குத் தொடர் ஈதாம். இக்கன்னாப்போடல் - தடைப்படுத்தல், நிறுத்திவிடல் ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று, அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவதுண்டு. அந்நிலையில் உதவிபெறாது ஒழிந்தவர் அவர் இக்கன்னாப் போட்டு விட்டார். அவர் இக்கன்னாப் போட வில்லை யானால் எப்பொழுதோ நடந்திருக்கும் என்பார். இக்கன்னா என்பது தடுத்தல் பொருளில் வருவது, முற்றுப் புள்ளி வைத்தல் என்பது நிறுத்துதலைக் குறிப்பதுபோல் இக்கன்னாவும் நிறுத்துதலேயாம், இக்கன்னா என்பது மெய்யெழுத்து. அதிலும் வல்லினப் புள்ளியில் முதல் எழுத்து. அதனால் அவ்வெழுத்தைச் சுட்டி நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் வழக்கம் உண்டாயிற்றாம். க் முதலிய வல்லினம் சொல்லின் இறுதியில் வராது ; வரக் கூடாது என்பது அறிக. இச்சிடல் - முத்தம் தருதல் இச் என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலியெழுப்புவதால் உண்டாவது, ஓர் இச்சுக் கொடு என்று குழந்தைகளைத் தாய்மார் கேட்பது உண்டு. இப்பொழுது இச் ஒலி இல்லாமல் கதை வருவதில்லை. திரைப்படம் வருவதில்லை. இச் : காதல் பொருளாயிற்று. இச்சை, இச்சித்தல் என்பவை விருப்பம் என்னும் பொதுப் பொருளில் இருந்து காதல் சிறப்புப் பொருளுக்கும் இடமாகி இறுக்கமாகப் பற்றிக் கொண்டது. இடித்துரைத்தல் - கண்டித்துரைத்தல் இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே இவ்விடி. ஒரு குறை கண்டால் அன்பு, நட்பு, பதவி, செல்வம். செல்வாக்கு இவற்றைக் கருதிச் சிலர் அமைதியாக இருப்பர். சிலர் ஆமாம் போடுவர் ; சிலர் தூண்டியும் விடுவர். இவற்றால் ஒன்றன்மேல் ஒன்றாகக் கேடே உண்டாம். ஆனால், அறிவறிந்த சான்றோர் இடித்துரைக்க வேண்டியதை வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் செய்யத்தவறார். இடிப்பார் இல்லையா? கெடுப்பார் வேறொருவர் வேண்டுவதில்லை என்பார் திருவள்ளுவர், குத்திக்காட்டல் காண்க. நண்பனுக்கு இடிக்கும் கேளிர் என்பது ஒரு பெயர். இடிபடுதல் - வசைக்கு ஆட்படுதல் ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத் திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும் அவர்க்கு இல்லை. அதனால் கண்டபடி வசை மொழிதல் கண்கூடு. அவரிடம் அதைச் சொல்லிவிட்டு நம்மால் இடிபட முடியாது அவரிடம் அதைச் செய்தால் அவ்வளவுதான் ; நம்மால் இடிபட்டு முடியாது என்பர். இடிபடுதல் என்பது கம்பியால் குத்துதல் போலவும், உலக்கையால் இடித்தல் போல வும் செய்வதாம். இடி என்பது இடித்துக் கூறும் வசை! இடித்துக் கூறும் அறிஞர் உரைபோல்வதன்று. இது உணர்ச்சி வயப்பட்டவர் வசைமொழி. இடிவிழுதல் - கொடுந்துயர்ச் செய்தி கேட்டல் முகில் மோதுங்கால் மின் வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது, இடி தாக்காமல் இருப்பதற்காக இடிதாங்கி அமைப்பதும் காணத்தக்கதே. இங்கே இடிவிழுதல் என்பது, அவ்விடியால் அடையும் துன்பம் போன்ற துன்பம் அடைவதே கூறப்படுகிறது. குடும்பத்தின் பாதுகாப்பாம் தந்தையோ, தாயோ திடுமென இயற்கை எய்திவிட்டால், குடும்பம் இடிவிழுந்ததுபோல் மீளாத்துயருக்கு ஆளாகும். அதனை இந்த இடியைத் தாங்க முடியுமா? பேரிடி இதற்குமேல் என்ன இருக்கிறது எனக்குடும்ப நிலை அறிந்தோர் வருந்திக் கூறும் உரையால் இடி விழுதல் என்பதன் பொருள் புலப்படும். இடுதேள் இடுதல் - பொய்க்குற்றம் கூறல், பொய்யச்சமூட்டல். தேள் நச்சுயிரி : அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண்டாகும் அச்சம் அது. கடிபட்டோர், வாய்நுரை தள்ளி இறப்பின் எல்லைக்குப் போய்விடுவாரும் உளர். அத்தேள் அச் சத்தினைப் பயன்படுத்தி, ஏதோ ஓர், இலை, சருகு தாள் எடுத்துத் தேள்தேள் என இடுவது போல அச்ச மூட்டுதல் இடுதேள் இடுதல் என்பதாம். இடுதேள் இடும் வழக்குப் பழமையானது என்பது சிலப்பதிகாரத்தின் வழியே அறியக் கிடக்கிறது. இடுதேளிட்டு என்றன் மேல் பொய்ப்பழி சூட்டினர் எனக் கண்ணகி வாக்காக இடம் பெறுகின்றது. நடுங்க வைக்க நாயென்றும் பேயென்றும் ஒன்றரைக் கண்ணன் என்றும் கூறும் வழக்குப்போல, இடுதேள் இடுதல் செய்வகை அச்சுறுத்தலாக உள்ளதாம். இயற்கை எய்துதல் - இறத்தல் இயற்கை ஐவகை மூலப் பொருள்களையுடையது. அவை வெளி, வளி, தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது உலகம். அவ்வைம் பூதங்களாலும் அமைந்தவையே உலகப் பொருள்கள். அவற்றுள் ஒன்றாகிய மூச்சுக் காற்று வெளிக் காற்றொடு சேரவும். உடல் தீயுண்டோ, மண்ணுள் புதையுண்டோ மண்ணோடு மண்ணாகி விடவும் நேரும் நிலை, இயற்கையோடு இயற்கை ஒன்றிவிடுவதாக இருத்தலால் இயற்கை எய்துதல் என்பது வழக்கமாயிற்று. இயற்கை எய்துதல் என்பது இறத்தல் என்பதாம். இலக்கணர் இறத்தல் என்னாமல் இவ்வாறு கூறுதலை மங்கல வழக்கு என்பர். இறத்தல் என்பதும் கூட மங்கல வழக்காம். இறத்தல், கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவை அறிக. இராமம் போடல் - ஏமாற்றுதல். இராமன் தெய்வப் பிறப்பு என்றும், திருமால் தோற்றரவு (அவதாரம்) என்றும் கூறப்படுபவன். அவனை வழிபடும் அடியார்கள் அவன் திருப்பெயர் நினைந்தும் சொல்லிக் கொண்டும் போடும் திருமண்காப்பு இராமம் என வழக்கில் ஊன்றியது. இராமனுக்கு அடையாளம் இராமம் என்க. இராமம் நாமம் எனப் பிழையாக வழங்கவும் ஆயிற்று. இராமம் போடுவதை நாமம் போடுதல் என்றும், நாமம் சாத்துதல் என்றும் சொல்லப்படுவதாயிற்று. பட்டை நாமம், எனவும் அடையாளம் காட்டப்பட்டது. தனக்கு இராமம் சாத்துதல் வழிபாட்டு அடையாளம், ஆனால் அடுத்தவர்க்கு இராமம் சாத்துதல் என்பது ஏமாற்றுதல் ஆயிற்று. எனக்கு நாமம் போட்டுவிட்டான் என்று ஏமாந்தவன் ஏமாற்றியவனைச் சொல்வது வழக்கம். நான் விழிப்பான ஆள் என்றவன் அறியாமல் உறங்கும்போதில் போடப்பட்ட நாமத்தால் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இருதலைமணியன் - ஒரு நிலைப் படாதவர் இருதலை மணியன் என்னும் பெயரே ஒருவகைப் பாம்பின் தன்மையைத் தெளிவாக்கும் இருபக்கமும் தலைபோல் தோற்றம் அமைந்தது அப்பாம்பு, அன்றியும் இப்பாலும் அப்பாலும் செல்வதும் உண்டு என்பதுவழக்கு. அதன்வழி எழுந்தது இது. எதிரிடையானவராக இருவர் இருந்தாலும் அவ்விருவர்க்கும் தகத்தகப் பேசியும் செய்தும் இருபக்கமும் நன்மைபெறுபவர் இருதலை மணியன் எனப்பழிக்கப்படுவர். அவர் ஒரு நிலைப் படாதவர் என்பது குறிப்பாம். இருநூறு - இருநூறாண்டு வாழ்க ஒருவர் தும்முங்கால் நூறு என்று வாழ்த்துவர். நூறாண்டு வாழ்க என்பதன் சுருக்கம் நூறு என்பதாம். தும்மல் கேடு என்னும் கருத்தால், அந்நிலையின்றி நலம் பெறுக என்னும் வாழ்த்தாக மாற்றிக் கூறுவது வழக்காயிற்று. அத்தும்மல் மீளவும் உடனே வருங்கால் இருநூறு என்பர். இரு நூறாண்டுகள் வாழ்க என்பது அவ்வாழ்த்தின் உட்கிடையாம். இருநூறு என்னும் எண்ணுப்பெயர் வாழ்த்தாக அமைதல் வழக்காதலின் இங்கு எண்ணத் தக்கதாம். தும்முதல் பிறர் நினைப்பதன் குறி என்னும் எண்ணம் பண்டேயுண்டு என்பதற்குத் திருக்குறளில் வரும் ஊடற் குறிப்புகள் சான்றாம். இரும்புக்கடலை - கடினம் கடலை விரும்பியுண்ணும் உண்டியாம் நிலக்கடலை, (மணிலாக் கொட்டை) என்பது. கொண்டைக்கடலை வடிவிலே செய்யப்பட்டது இரும்புக் கடலை. அதனை வாயிலிட்டு மென்றால் பல் என்னாம்? பல்லை உடைக்கும் இரும்புக் கடலை செய்வார் இல்லை. அப்படி ஒருவர் செய்து தின்னச் சொன் னால் எப்படி இருக்கும்? இனியதும் எளியதும் பொருள் நயம் மிக்கதுமாம் பாடல்கள் பாடுவதை விடுத்து பொருட்பயன் இல்லாமல் கடுமையாக அமைந்த பாக்களை இயற்றுவது இரும்புக் கடலை செய்து விற்பது போன்றதாம். பயனற்ற செயல் மட்டுமன்றி மொழியைப் பாழாக்கும் செயலுமாம் என்பதைச் சொல்வது இரும்புக் கடலை. இலஞ்சியம் - அருமை , அழகு இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்ந்தது இலஞ்சி. ஆகலின் தேவர்களால் அமைக்கப்பட்டது எனப்புனைந்து கூறும் தொன்மக்கதைகள்உளவாயின. இலஞ்சியின் அழகும் அருமையும் இலஞ்சியம் என்னும் சொல்லை உண்டாக்கி அதற்கு அப்பொருள்களையுண்டாக்கின. ‘இலஞ்சியமாக ஒரே ஒரு பிள்ளை; ‘நீ ஒருவன் தான் இலஞ்சிய மாக இருக்கிறாயா?என்னும் வழக்குகளால் இலஞ்சியத்தின் அருமை விளங்கும். அரியது அழகியதுமே யன்றோ! இலஞ்சியம் எனப் பெயருடையார் உளர். இலைவயம்-அறக்கொடை மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின்வயமாக வழங்கப் படுதலின் இலைவயமாய்ப் பின்னர் இலவயமாய் அதன் பின்னர் இலவசமாய் வழங்கலாயிற்றாம். இப்பொழுது காசில்லாமல் கொடுக்கும் எதுவும் இலவசம் என வழங்கப்படுகின்றது. பெரியவர்களுக்குத் தருதல், காணிக்கை, கையுறை, அடியுறை, தட்சணை என இது கால் வழங்குகின்றது. இலவசம் என்பது தன் பொருளில் இழிந்து விட்டதால் ஏற்பட்ட இறக்கம் இஃதாம். ஈமொய்த்தல் - அடித்தல். சொல்வதைக் கேள் ; இல்லையானால் உன்முதுகில் ஈமொய்க்கப் போகிறது என்பர். கேளாவிட்டால் அடிப்பாராம்; அடித்தால் புண்ணாகுமாம் ; புண்ணானால் ஈமொய்க்குமாம். இவற்றையெல்லாம் அடக்கி ஈ மொய்க்கும் ஈமொய்க்கப் போகிறது என்கிறார். இஃது எச்சரிக்கைக் குறிப்பாம். அந்நிலை ஏற்படாமல் ஒழுங்காக நடந்து கொள்; எனக்குச் சினமூட்டாதே; சிறுமைப் படாதே என்பது எச்சரிக்கையாம். ஈயோட்டல் - விலையாகாமை. ஈயோட்டல் நலப்பாடு (சுகாதாரம்) கருதிய செயல், அத னினும் ஈக்கு இடம் கொடாமல் இருப்பது மிக நலப்பாடு. நீர்ப்பொருள் இனிப்புப் பொருள் ஆகியவற்றையே ஈ நாடித் தேடிவரும். அவற்றை ஓட்டாவிட்டால் மொய்த்துக்கிடக்கும். அதனைக் காண்பவர் அப்பொருளை வாங்க மாட்டார். விலை போகா அப்பொருளை ஈவிட்டு வைக்குமோ? ஈயோட்டுவதே விற்பவர்க்கு வேலையாகிப்போகும் ; அதனால் வணிகம் நன்றாக நடைபெறாத கடைக்காரரை ஈயோட்டுகிறார் என்பது வழக்கமாயிற்று. பின்னர் விற்பனை நடைபெறாமல் படுத்துவிட்ட எந்தக் கடையும் ஈயோட்டலாயிற்று. உச்சுக் கொட்டல் - கேட்டல், ஒப்புக்கொள்ளல், வருத்தம் தெரிவித்தல் உச் உச் என்பது வாயின் ஒலிக்குறிப்பு, ஒருவர் வருந்தத் தக்க அல்லது உணர்வூட்டத் தக்க ஒரு செய்தியைச் சொல்லும்போது அதனைக் கேட்பவர் வாயால் உச்சிட்டுக் கொண்டு கேட்பது வழக்கம். அவ்வாறு கேட்பதை உச்சுக் கொட்டல் என்பர். உச்சுக் கொட்டுதல் என்பது ஏற்றுக் கொள்ளுதல். ஒப்புக் கொள்ளுதல், வருத்தம் தெரிவித்தல் முதலிய பொருள்களைத் தருவதாய் வழக்கில் உள்ளது. உச்சு உச்சு என்று சொல்லும் போது கேட்டு விட்டு இப்பொழுது சொல்வதைப் பாரேன்; செய்வதைப் பாரேன் என்று மாறுபட நடக்கும்போது இடித்துக் காட்டுவதும் வழக்கே. ஊம் போடல் காண்க. உசுப்பல் - எழுப்பல், ஏவிவிடல் நாயை ஊச் ஊச் எனக் கூப்பிடல் உண்டு. உச்சுக்காட்டல், உச்சுக் காட்டல் - அழைத்தல்; அது படுத்திருந்தால் எழுப்புதலும், ஒன்றன்மேல் ஏவுதலும் உச்சுக்காட்டல் என்று வழங்கும். அவ்வழக்கத்தில் இருந்து உறங்குபவரை எழுப்புதல் உசுப்பல் என ஆயிற்று. எப்படி உசுப்பியும் எழும்பவில்லை என்பது கும்பகன்ன உறக்கத்தாரை எழுப்புவார் குறை. உசும்பல் -எழும்புதல். அணிலைப் பிடிக்க நாயை உசுக்காட்டுவார் மிகப்பலர். வேட்டை வேலை உசுக்காட்டல் தானே! உடைப்பில் போடல் - தள்ளிவிடல் உடைப்பை அடைக்க மண்ணையும் கல்லையும் போடுவர். சிலர் எரிச்சலால் உதவாக் கரைப்பிள்ளைகளையும் வேலைக்காரரையும் உன்னை உடைப்பில் வைக்கலாம்; உடைப்பில்தான் போட வேண்டும் என்பர். சில வேலைகளைச் செய்யாது தவிர்த்தலைக் கிடப்பில் போடல் என்பதுடன் உடைப்பில் போடல் என்பதும் உண்டு. முன்னது பள்ளத்தில் தள்ளல். பின்னது காலத்தைத் தள்ளல். உடைப்பில் போட்டு மூடப்பட்டது வெளிப்படுமா? புதைபொருள் ஆய்வார்க்கு ஒரு காலத்துப் புலப்படலாம். உதவாக்கரை - பயனற்றவன் நீரை நெறிப்படுத்தி நிறுத்துவதற்கும் ஓடச் செய்வதற்கும் பயன்படுவது கரை. அக்கரை உதவும் கரையாகும். அச்செயலைச் செய்யப் பயன்படாத கரைகளும் உண்டு. அவை நீர் வந்தவுடனே கசிந்தும் கரைந்தும் உடைப்பெடுத்தும் போய்விடும். அவை உதவாக்கரை. அப்படியே குடும்பத்துக்கு உதவும் மகன். உதவும் கரைபோன்று நலம் செய்வான். உதவாத மகன், உதவாக் கரையாக இருந்து, இருப்பதையெல்லாம் கெடுத்தொழிவான். உதவாத கரைபோல்வானை உதவாக் கரை என்பது வழக்கு. உதிர்த்தல் - மானங்கெடல் அவள் உதுத்துப்போட்டவள், எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள் என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை. உதிர்த்தல் என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல இருப்பதை இழந்து விட்டதை உணர்த்துவதாம். பெண்மைக்கு உரியதெனக் கருதும் பண்புகளை இல்லாமல் செய்து விட்டவள் என்பதே உதிர்த்தவள் என்பதன் பொருளாம். ஆண்பாலுக்கும் இவ்வசை மொழியுண்டு அவன் உதுத்துப் போட்டவன் என்பதும் வழக்கே. பருப்பொருள் உதிர்தலைக் குறித்த இது, பண்பு இழப்பைக் குறிப்பதாக வழக்கிற்கு வந்தது. உரித்தல் - வைதல் தோலை உரித்தல் என்பது வழக்கு. அதனால் தோலுக்கு உரி என்றும் உரிவை என்றும் பெயருண்டு. இவ்வுரித்தல் உடையை உரித்தல் என்பதிலும் உண்டு. இவற்றைக் கடந்தது மானத்தை உரித்தல் என்பது. மானம் ஒரு மூடுதிரை. அதனைக் கிழிப்பது, அகற்றுவது போல உரித்தல் வழக்கு வந்தது. இன்னும் மூக்கை உரித்தல் என்பதும் வழக்கு. மூக்கை உரித்தல் நாறவைத்தல் என்னும் பொருளது. இது வசை மொழியாதல் அறிக. நாறினவன்(ள்) என்பது வசைப் பட்டம். உரித்துக் காட்டல் - வெளிப்படப் பேசல் ஏனையா மூடிமூடிப் பேசுகிறாய்? உரித்துக் காட்ட வேண்டியது தானே! மானம் இருப்பவனுக்கு அல்லவா மறைத்துப் பேசவேண்டும். இவனை உரித்துக் காட்டினால் தான் தைக்கும் என்பது வெளிப்படுத்தும் வேட்கையுரை. தோலை உரிப்பது போல உரித்துக் காட்டல்; உடையை உரிப்பது போல உரித்துக் காட்டல் என்பவை வெட்ட வெளியாகச் சொல்லல் என்பதாம். உருட்டுப்புரட்டு - ஏமாற்றுதல் ஒருபொருளை உருளச் செய்தல் உருட்டு; அதனை நிலை மாறத்திருப்பிப் போடுதல் புரட்டு, உருளை இயல்பாக உருளும். அதனை உருளச் செய்தல் உருட்டு. தூண் உருளாது - அதனைக் கம்பியால் கோலிப் புரளச் செய்தல் புரட்டு. பொருள்களை உருட்டுதல் பூனை நாய் முதலியவை செய்யும். திருடர்களும் உருட்டிப் புரட்டி எடுத்துக் கொண்டு போவர். சில செய்தி களைத் திரித்துச் சொல்பவரை உன் உருட்டுப் புரட்டை இங்கே வைத்துக் கொள்ளாதே என விழிப்பாக எச்சரிப்பாரும் உண்டு. உருமல் - முணகுதல், வைதல் உருமுதல் இயற்கையுடையது உருமு எனப்படும் இடி. ஆனால் அதனை உருமு என்பதையன்றி உருமல் என்பது இல்லை. உருமல் என்பது நாய் குரைத்தலைச் சுட்டுவதே வழக்கு. இக்கால இளைஞன் அல்லது சிறுவன் வெளியேயிருந்து வருவான். அவன் ஊர் சுற்றி அலைவதை விரும்பாத தாத்தாவோ தந்தையோ வெறுப்பாகச் சொன்னாலும் முணகினாலும் தனக்குத்தானே, உருமலுக்கு ஒன்றும் குறைவு இல்லை என்பதும் அதைச் சொல்லிச் சிரிப்பதும் பருவச் செயலாகப் போய்விட்டது. உருவுதல் - பறித்தல், தடவல் மொச்சைக்காய் உருவுதல் ஒரு பறிப்பு முறை. ஒவ் வொன்றாக எடுக்காமல் ஒரு கையை மடக்கிக் கூட்டிப் பிடித்துக் கொத்தாகப் பறித்தல் உருவுதலாம். கட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்தல் உருவித் தருதல் எனப்படும். உருவி உருவித் தந்தவன்; பேச மாட்டாய் என்பது இகழ்வுரை. சுளுக்கு ஏற்படு மானால் விளக்கெண்ணெய் தேய்த்து உருவுதல் தடவுதல் என்பது. உருவுதல். வினைக்கு முன் வினை. தடவி உருவல் என்பது இணை முறை. இடக்கரடக்காகவும் இவ்வுருவல் வழங்கும். உலக்கைக் கழுந்து - கூர்மையில்லாமை உலக்கைகளுள் கழுந்துலக்கை என்பதொன்று. அது பூண் தேய்ந்ததாகும். மழுங்கிய கூருடைய அது கழுந்து எனப்படும். அதைப் போல் அறிவுக் கூர்மையில்லாத மடவரைக் கழுந்துலக்கை என்றோ உலக்கைக் கழுந்து என்றோ சொல்வது வழக்கில் உள்ளது. கழுந்து இடிப்பதற்கு உதவாது, இடித்ததை அதன் பின் தீட்டுதற்குப் பயன்படுவது. அதுபோல் சொல்லிய அளவில் புரியாமல் மீண்டும் சொல்லிச் சொல்லி விளக்கினால் புரியும் நிலையில் இருப்பவரே கழுந்தராம். கழுந்தராய் உனகழல் பணியாதவர் என்றார் கம்பர். உலக்கை கொழுந்துவிடல் - நடவாதது நடத்தல் உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தாலும் உலக்கை தளிர்க்கப்போவதில்லை. கொடாக்கையன் ஒருவன் ஒன்றைக் கொடுக்கக் கண்டால் உலக்கை கொழுந்துவிட்டது போல என்பர். குந்தாணி வேர் விட்டது, போல என்பதும் இத்தகையதே. குந்தாணி என்பது மரத்து உரல். உலுப்புதல் - பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல் மரத்தில் உள்ள காய்களை விழத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. புளியம்பழம் உலுப்புதல் என்பது பெருவழக்கு. உலுப்பிய பின் மரத்தில் பூம்பிஞ்சு, பிஞ்சு, ஊதுகாய் அல்லது ஊதைக்காய், செங்காய், காய், கனி என்பன வெல்லாமும் இல்லையாய் உதிர்ந்து போம். கிளையை ஆட்டியோ கோல் கொண்டு அடித்தோ அலைக்கும் பேரலைப்பில் எல்லா மும் உதிர்ந்து மரம் வெறுமையாகிப் போம். அதுபோல் ஒரே வீட்டில் முதியவர் இளையவர் என்று இல்லாமல் பலர் ஒரு நோயில் மாண்டு போனால் குடும்பத்தையே உலுப்பிவிட்டது என்பர். கொள்ளை நோய் விளைவு, பல குடும்பங்கள் உலுப்பப்படுதலாம். உள்ளாளி - நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன் உள்ளாள் மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம். ஆளம் ஆளின் தன்மை. எந்தத் திருட்டுக்கும் உள்ளாள் இல்லாமல் முடியாது என்பது, உள்ளாள் ஒருவன் துப்புத் தந்தால்தான் வெளியாள் துணிந்து புகுவான், வெளி யாள் புகுந்து திருடும் போது உள்ளாள் குறிப்புத் தருவான்; பாதுகாப்பு தருவான். கள்ளாளியை விடு ஐயா. உள்ளாளியைக் கண்டுபிடி தானே துப்புத்துலங்கும் என்பது வழக்கு. ஊதிவிடல் - தோற்கடித்தல் பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். மணி பிடியாச் சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால் அப்பால் போவது மெல்லுமியாகும். ஊதப் போகும் உமிபோல் வார் எனத் தோற்றவர் இயலாமையும், ஊதியவர் வலிமையும் புலப்பட ஊதிவிடல் ஆட்சியில் உள்ளதாம். ஊதுதல் - பருத்தல் முன்னைக்கு இப்பொழுது ஊதிவிட்டார் என்பதும் ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை என்பதும் வழக்கும் பழமொழியுமாம். ஊதுதல் காற்றடைத்தல் காற்றடைக்கப்பட்ட தேய்வை (இரப்பர்)ப் பை ஊதுவது போல ஊதி விட்டார் என்பது பொருளாம். துருத்தி ஊதுதல் என்னும் தொழிலை அறிக ஊதை என்பது காற்று அதனை வளி என்பதும் உண்டு. அதுவே வாதம் எனப்படும். வளி முதலா எண்ணிய மூன்று என்பார் வள்ளுவர். ஊதுதல் என்பது ஊதும் தொழிலைக் குறியாமல் ஊதிப் பருத்தலாம் நிலையைக் குறித்தலால் வழக்குச் சொல்லாயிற்று. ஊம் போடல் - ஒப்பிக்கேட்டல் ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாளமாக வாயால் ஊம் கொட்டல் வழக்கம். படுத்துக் கொண்டுபேசும்போது ஊம் கொட்டவில்லை என்றால் உறங்கி விட்ட தாகப் பொருள். விருப்பமில்லாத செய்தியைத் தவிர்ப்பதற்காகச் சொல்பவர் உறங்குவதாக எண்ணிக் கொள்ளுமாறு கேட்பவர் ஊம் போடாமல் விட்டு விடுவதும் உண்டு. ஊம் என்பது ஙூம் என்றும் ஒலிக்கும், ஓர் ஊம் ஒப்புக் கொள்ளல் அடையாளம் ஈர் ஊம் போடல் மறுப்பின் குறிப்பு ஊம் என்பது காரம். சாரியையோடு ஊங்காரம் எனப்படும். ஊமைக் குறும்பு - வெளியே தெரியாமல் குறும்பு செய்தல் சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித்திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்து விடுவர். அத்தகையவரையே ஊமைக் குறும்பு என்பர். குறும்பு குசும்பு என வழக்கில் உள்ளது. இங்கு ஊமை என்பது ஊமைத் தன்மையைக் குறியாமல், மிகுதியாக வெளிப்படப் பேசாமல் என்னும் பொருள் தருவதாம். ஊமைக் குறும்பன் ஊரைக் கெடுப்பான் என்பது பழமொழி. எடுத்தாட்டல் - பிறருக்குரியதை முன்னின்று செய்தல் நம்மால் என்ன செய்ய முடியும் எனச்சில செயல்களைச் சிலர் கைவிட்டுவிடுவர். அவர்க்கு வேண்டியவர் அல்லது வேண்டியவராக முன் வருபவர். நாம் என்ன அப்படி விட்டு விடுவது; நீங்கள் பாட்டுக்கு என் பின்னால் வாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் எனத் தலைப்பட்டுச் செய்வர். இத் தகையவர்கள் செயலை எடுத்தாட்டுதல் என்பது வழக்கு. அவர் செயலைப் படுக்கப் போட்டுவிட்டார். இவர் அதனை எடுத்து ஆட விடுகிறார். ஆதலால் இவ்வாறு கூறப்படுகிறதாம். எடுத்தேறி - தனியே முயன்று செய்ய வேண்டிய வேலை ஒட்டி ஒட்டி நிலம் இருந்தால் வேலை செய்தல், காவல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பாக இருக்கும். ஒரு நிலத்திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடைவெளி மிக்கு இருந்தால் போய் வரவே பொழுது மிகுதியும் செலவாகும். அதனால், எடுத்தேறிப் போய் வேலை செய்ய வேண்டியிருத்தலால் வேலை அரைபாதிதான் முடிந்தது என்பர். எடுத்தேறுதல் என்பது இடைவெளிப்பட்டு முயன்று நிலத்தைச் சேர்ந்து வேலை செய்தல் என்னும் பொருள் தருதல் அறிக. எடுத்தேறப் பார்க்க வேண்டியிருப்பதால் அதனை விற்றுவிட்டு சேர்ந்தரணை நிலத்தை வாங்கிவிட்டேன் என்பதில் இது மேலும் தெளிவாம். சேர்ந்தரணை - ஒட்டியுள்ள இடம். எடுத்துவிட்டுக் குரைத்தல் - தூண்டித் தூண்டிச் செய்தல் நாய்க்கு இயற்கை குரைப்பு. புதுவதாகத் தெரியும் காட்சி யும், புதுவதாகக் கேட்கும் ஒலியும் நாயை எழுப்பிவிட்டுக் குரைக்க வைக்கும். இனத்தைக் கண்டால் குரைக்கமாட்டா நாயும் குரைத்தல் பிறப்போடேயே வந்து விட்டது போலும். சில நாய்கள் குரைத்து அச்சங் காட்டவேண்டிய இடத்தில் குரைக்காமல் கிடக்கும். அவற்றை உசுப்பிவிட்டு அல்லது தூக்கி விட்டுக் குரைத்தால் எப்படி இருக்கும்? ஒரு செயலைத் தானே விரும்பி உணர்வோடு செய்யாமல் தூண்டித் தூண்டிச் செய்பவன் செயலைப் பார்த்து, ‘எடுத்து விட்டுக் குரைப்பது என்னதான் செய்துவிடும்? என்று எள்ளுவது உண்டு. எடுத்துவிடல் - புனைந்து கூறுதல் உள்ளதை உள்ளபடி கூறாமல் இட்டுக்கட்டியும் பொய்யும் புளுகும் புனைந்தும் கூறுவது சிலர்க்கு மாறா இயற்கையாக இருப்பது உண்டு. அத்தகையவர், அவ்வாறு சொல்வதில் தமக்குள்ள தேர்ச்சியை எண்ணித் தாமே பூரிப்பதும் உண்டு. அதனைப் பாராட்டிக் கேட்பவரும் புகழ்ந்து பேசுபவரும் இருந்து விட்டால் கேட்க வேண்டியதில்லை. சுண்டைக்காயே அண்டத்தை அசைக்கும் கதையாகிவிடும், அத்தகையவன் செயலை எடுத்துவிட்டான் பாருங்கள் என்பவரும், நீ சும்மா எடுத்துவிடு என்பவரும் அவனைப் புகழ்பவர் போல் பழிப்பவர் என்பதை அவன் உணர்வானா? எடுப்பு - வைப்பாள், வைத்தகுறி எடுப்பு - எடுத்தல், தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளல் எடுப்பாகும். தவறானச் செயலும் எடுப்பே; தவறான தொடர்பும் எடுப்பே, இரண்டையும் குறிக்க நீ எடுத்த எடுப்புச் சரியில்லை என்பர். எடுத்துக் கொண்ட ஒருத்தியைத் தன் பொறுப்பில் வைப்பதால் வைப்பு, வைப்பாள், வைப்பாட்டி ஆகிறாள். அவள் அவனுக்கு வைப்பாக இருப்பதுபோல அவள் வைத்ததெல்லாம் வரிசையாய் அவன் வைப்பெல்லாம் அவள் வைப்பாக ஆட்டி வைக்கிறாள். மூதாள்- மூதாட்டியாவது போல வைப்பாள் வைப்பாட்டியாவது நெறியே. எடைபோடுதல் - மதிப்பிடுதல் எடுத்தல் என்பது நிறுத்தல், எடுத்தலளவை, அறிக. நிறுக்க வேண்டுமானால் தூக்குதல் வேண்டும். ஆதலால் தூக்குதலும் ஆராய்தல் பொருள் தருவதாயிற்று. எடை போடுதலில் இவ்வளவு எனச் சரியான மதிப்பீடே முடிவு. அவ்வழக்கில் இருந்து, கொஞ்சம் பேசினால் போதுமே! அவனை எடைபோட்டு விடலாம் என வழக்கு மொழி தோன்றியது. எடைபோடுதலில் மிகுந்த தேர்ச்சியாளன் எனச் சிலர்க்குத் தனிப்பேர் உண்டு. எலியும் பூனையும் - பகை எலியும் பூனையும் பகையானவை. பூனையைப் பெரிதும் வளர்ப்பதே, எலித் தொல்லையை ஒழிப்பதற்கே. ஆகலின் இரையாம் எலியைப் பூனை பற்றுதல் அதன் இயற்கைத் தேவை. ஆயினும் எலி அழிகின்றதே. இதனைப் பார்த்தவர் எலியும் பூனையும் பகையானவை எனக் கருதினர். பகை என்பது ஒன் றொடு ஒன்று மாறுபடலும், போரிடலும் ஆனால் அன்றோ!, ஒன்று தாக்குகிறது, மற்றொன்று, தப்பியோட முயல்கிறது. இதில் பகையென்ன உள்ளது? ஆயினும் பகைக் கருத்தால் இணையாத இருவரைக் குறிக்கும்போது அவர்கள் எலியும் பூனையும் போல இருக்கின்றனர் என்கின்றனர். இவ்வழக்குச் சொல் பகைமைப் பொருள் தருவதாம். என்னங்க - கணவர் என்ன அவர்களே என்பது முடிந்த அளவும் தேய்ந்து என்னங்க என வழங்குகின்றது. அவர்கள்- அவன்கள்- அவங்க எனமாறும். என்னங்க என்பது, பெரியவர்களை மதித்து வினவும் வினாப் பொதுமையுடையது எனினும் அப்பொதுமை நீங்கி, மனைவி ஒருத்தி தன் கணவனைக் கூப்பிடும் கூப்பீடாக அமை கின்றது. ‘என்னங்க உங்களைத்தானே’ ‘என்னங்க, போகலாமா? என்பவற்றை அறிக. அவங்க என்ன சொல்லுவாங்களோ என்பதில் அவங்க என்பதும் கணவனைக் குறிப்பதே. அவர் காண்க. ஏரான் - முதலாக வந்தவன் சற்றே முற்காலம்வரை திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை அல்லது வீட்டின் பகுதியே பெரும்பாலும் பள்ளியாக இருப்பதுண்டு. ஆதலால் நேரம் காலம் என்னும் மணிக்கணக்கில்லாப் பணியாளர் அவர், முதலாவதாக வருபவன் ஏரான். அவனுக்கு மட்டும் அடியில்லை, பின்னே வர வர அடிபெருகும். ஏரான் என்பது உழவின் வழிவந்த வழக்கமாகும். முன்னேர்க்காரன் ஏரான் எனப்படுவான், இவனோ முன் வந்ததால் ஏரான். ஏரானாக வருவதற்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். நானே ஏரான் என ஒருவன் மகிழ்வோடு வர அவனுக்கு முன்னாக வந்த ஏரான் இருமிக் காட்டுவான்! அது இருமலா, இடியன்றோ! ஏலம் - மணம், இயலும் விலை ஏலம், மணப் பொருள். அப்பொருளைக் குறியாமல் குழந்தையின் வாயை ஏலவாய் என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு இனிப்பு, வேம்பு கசப்பு எனப் பொருள் தருவது, போல ஏலம் மணப் பொருள் தருகின்றதாம். இனி ஏலம் போடுதல் என்பது வேறு. இயலும் என்னும் சொல் ஏலும் என்றாகி ஏலமாகியது. இயலுமட்டும் என்பது ஏலுமட்டும் என்றும், இயலாது என்பது ஏலாது என்றும் வருதல் அறிக. இயலும் விலைக்குக் கேட்டல் ஏலம் எனப்படுகின்றதாம். ஏலத்தை எவ்வளவு குறைவாகவும் கேட்கலாம்; கூட்டியும் கேட்கலாம். பொருள் மதிப்பீடு கேட்பவர் இயலுமானதைப் பொறுத்ததே; போட்டி நிலையைப் பொறுத்ததே. ஏனென்று கேட்டல் - தடுத்தல், தட்டிக் கேட்டல் ஏன் என்பது வினா, எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந்துள்ளது. ஏன் என்பதற்கு ஆள் இல்லாமல் போனதால் எதுவும் செய்யலாம் எனத் துணிந்து விட்டான் ஊரில் அவன் இல்லை; ஏனென்று கேட்க ஆளில்லை; எது எதுவோ தலைகால் தெரி யாமல் ஆடுகின்றது என்பன போன்றவற்றில் ஏன் என்பது தடுத்தல் பொருளில் வருவது தெளிவாகும். தட்டிக்கேட்டல் என்பது தடுத்து நிறுத்திக் கேட்டல் என்பதாம். ஒட்டப்போடல் - பட்டுணி போடல் ஒட்ட-வயிறு ஒட்ட. வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக் கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒருவேளை - ஒரு நாள் - பட்டுணி என்பதின்றிப் பலநாள் பட்டுணி என்றால் முதுகு எலும்பொடு வயிற்றுத் தோலும் ஒட்டிப் போனது போல் குடை பட்டுப் போகும். அதனை ஒட்டப் போடுதல் என்பர். உன்னை ஒட்டப் போட்டால்தான் ஒழுங்குக்கு வருவாய்; வேளை தவறாமல் வயிறு முட்டப் போட்டால் சரிப்படமாட்டாய் எனத் திட்டுவர். பட்டு என்பது இடை இடை விட்டு, உணி - உண்பது. இடை இடைவிட்டு - பல வேளைகள், சில நாள்கள் இடைவிட்டு உண்பதே பட்டுணியாம். ஒடுக்கம் - துறவியர் அடக்கமாகிய இடம் ஒடுக்கமான - குறுகலான இடம் ஒடுக்கம் என்று சொல்லப்படும். அடக்கத்தின் பின்னர் நிகழ்வது ஒடுக்கம். அதனால் அடக்க ஒடுக்கம் என வழக்கம் உண்டாயிற்று. அடக்கம் அடங்கும் தன்மையைக் குறியாமல் மூச்சை முழுவதாக நிறுத்திவிடுவதைக் குறிப்பதுபோல், ஒடுக்கம் ஒடுங்கிய இடத்தைக் குறியாமல் அடங்கிவிட்டவர்களை ஒடுக்கி வைக்கப்பட்ட புதை குழி மேடையையும், அதனைச் சூழ எழுந்த கட்டடப்பகுதியையும் குறித்து வழங்குவதாயிற்று. துறவியர் களின் ஒடுக்கங்கள் தமிழகத்தில் பலப்பல இடங்களில் இருப்ப தும், ஆங்கு வழிபாடுகள் நிகழ்வதும் கண்கூடு. ஒத்தூதுதல் - ஆமாம் ஆமாம் எனல் நெடுவங்கியம் (நாத சுரம்) ஊதுவார் ஒருவர். அவர்க்கு ஊதல் நிறுத்தல் மாறல் ஆகிய இசை முறைகள் பல உண்டு. ஆனால் பின்னே ஒருவர் ஒத்து ஊதிக் கொண்டே இருப்பார். முன்னவர் என்ன ஊதினாலும் ஒத்து ஊதுபவர் ஒரு போக்கிலேயே ஊதிக் கொண்டிருப்பார். இவ்வழக்கைக் குறித்து, ஒருவர் பேசுவதைப் பற்றிக் கருதாமல் எல்லாமும் ஆமாம் ஆமாம் என்பது போல ஒத்துப் பேசுபவரைக் குறித்து வழங்குவதாயிற்று. ஒதுக்கம் - ஒதுங்கும் இடம் ஒதுங்கிய இடம் - ஒதுக்கமான இடம் - ஒதுக்கம் எனப்படும். ஒதுக்கப்பட்ட இடம் என்பதும் ஒதுக்கிடம் என இந்நாள் வழக்கிலும் உள்ளது. இங்குச் சொல்லப்படும் ஒதுக்கம் வேறு. அயற்பாலினர் அரவம் இல்லாமல் ஆடவரும் மகளிரும் தனித் தனியே கழிப்பிடம் நாடுதல் இந்நாட்டில் பெருவழக்கு. சிற் றூர்களில் இன்றும் அந்நிலை மாறிற்றில்லை. அப்படி ஒதுங்கும் இடத்திற்கு ஒதுக்கம் என்பது பெயர். ஒதுங்குதல் என்பது நீர் கழித்தலுக்கும், மலங்கழித்தலுக்கும் ஒதுங்கி மறைதலைக் குறித்து வந்ததாம். ஒப்பேற்றுதல் - காலம் தள்ளல், சரிக்கட்டல், உயிரோடு இருத்தல் பிறர் பிறருக்கு ஒத்தபடி உண்ணவோ உடுக்கவோ வாய்ப்புப் பெறவோ முடியாத நிலையில் இருப்பவர்கள். தங்கள் நிலைமை வெளியாருக்கு வெளிப்படாத வண்ணம் பிறருக்கு ஒப்பாகத் தாமும் வாழ்வது போலக் காட்டிக் கொள்வர். இருப்பதை உண்டு உடுத்தாலும் வெளியாருக்குப் புலப்படாவண்ணம் திறமையாக நடந்து கொள்வர். இதற்கு ஒப்பேற்றுதல் என்பது பெயர். ஏதோ ஒப்பேற்றி வந்தால் இப்படியோ காலம் போய்விடும்! காலம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கையோடு இருப்பர். ஒப்பேற மாட்டான் எனின் பிழைக்க மாட்டான் என்னும் பொருளும் உண்டு. அது உயிரோடு இருத்தல் பொருளது. ஒய்யாரம் - பொய்ப்புனைவு செருக்கு சின்மலர் சூடல் என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப்பன்மலரும் சுமையெனக் காட்சியளிப்பதும் உண்டு. அத்தகு பன்மலர்க் கொண்டை ஒய்யாரக் கொண்டை எனப்படும். அக் கொண்டை ஒப்பனையும், அதனையுடையார் நடையுடையும் எவரையும் புதுப்பார்வை பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கும். அந்த்தகையவரை ஒய்யாரி என்பர். ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்; உள்ளே இருக்கும் ஈரும் பேனும் என்பது பழமொழி. சிங்காரி ஒய்யாரி என்பது நாடகப் பாட்டு. ஒருவன் - இறைவன் ஒருவன் ஆண்பாற் பெயர், படர்க்கைப் பெயர், பொதுமைத்தன்மையமைந்த பெயர். ஆனால் எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவனொருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே குறித்து வருமிடமும் வழக்கில் உண்டு. அவன் ஒருவன் இறைவன். அவனன்றி அணுவும் அசையாது: அவன் ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஒருவன் துணை; அந்த ஒருவனை எவரும் ஏமாற்ற முடியாது என்பவற்றில் வரும் அவன், அவனொருவன் என்பவை இறைவனுக்காதல் அறிக. ஒருவபோற்றி, என்பதொரு போற்றி. ஒற்றடம்வைத்தல் - அடித்தல் ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால் ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்! வீங்குமாம். அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம். இவற்றை உள்ளடக்கிய குறிப்பு ஒற்றடம் வைத்தலாம். ஒற்றி ஒற்றி எடுப்ப தால் ஒற்றடம், அடம்-ஈறு; கட்டடம் என்பதில் வருவதுபோல சாணி ஒற்றடம், சாம்பல் ஒற்றடம், துணி ஒற்றடம், மண் ஒற்றடம், வெந்நீர் ஒற்றடம், உப்பு ஒற்றடம் என அதன் வகை பல. ஒன்பது - பேடு, (அலி) ஒன்பது உருபா நோட்டு என்பதன் சுருக்கமே ஒன்பது என்பதாம். ஒன்று இரண்டு ஐந்து பத்து என பணத்தாள் நோட்டு உண்டேயன்றி ஒன்பது இல்லை. ஆதலால் ஒன்பது என்பது இல்லாதது என்னும் குறிப்பினது. ஆண்மை இழந்த பேடியின் தோற்றம் பெண்மைக் கோலமாகத் தோற்றம் தரும். கொண்டை வைத்தல் பூச்சூடல் மஞ்சட் குளிப்பு ஆயவும் உண்டு. பேச்சும் நடையும் பெண்மைச் சாயலாயமையும். இத்தகையரை ஒன்பது என்பர். இது செல்லுபடியாகாதது என்பது குறிப்பாம். இத்தகையர் சுண்டல், கடலை வணிகம் செய்தல் காணக்கூடியது. ஓட்டமில்லாமை - வறுமை ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை ஓட்டங்களுக்கு அடிப்படை. பணமிருந்தால் சமையல் சாப்பாடு கொண்டாட்டமாக இருக்கும். நடையுடை சிறப்பாக இருக்கும். போக்கு வரவும் நிகழும். தொழில் தட்டின்றி விளங்கும். பணவோட்ட மில்லாவிட்டால் எல்லாமும் படுத்துவிடும். ஆதலால் ஓட்டமில்லை என்பது கையில் காசு போக்குவரத்து இல்லை என்பதைக் குறிக்கும். பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. பொருளானாம் எல்லாம் என்பது திருக்குறள். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும்போது ஓட்டமென்ன இருக்க முடியும்? ஓட்டைக்கை - சிக்கனமில்லாத கை ஓட்டைப் பானையோ சட்டியோ, உள்ள பொருளை ஒழுக விட்டுவிடும். ஓட்டைப் பானையைப், பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர் இலக்கணர். நீரோடுவதற்கு வழியாக இருப்பது ஓடு. அதில் ஓட்டை விழுந் தால் ஒழுக விட்டு விடுமல்லவா! சிலர் கையைக் காட்டு என்பர். கூட்டுக்கை வைத்துக் காட்டு என்பர். கை விரல்களைக் கூட்டி நீட்டினால் விரலுக்கு விரல் ஓட்டை - இடைவெளி - இருந்தால், உனக்கு ஓட்டைக் கை காசு தங்காது என்று சொல்லி விடுவர். இது குழந்தைகள் விளை யாட்டிலும் உண்டு. செலவாளிகள் என்பதற்கு அல்லது சிக்கன மில்லாதவர் என்பதற்கு ஓட்டைக்கை என்பது வழக்கு. ஓடவில்லை - தெளிவாகவில்லை; செயல்பட முடியவில்லை திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்து விடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்து விடலாம். அந் நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும் ஓடவில்லை என்பர். என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதே ஓடவில்லை என்பதன் பொருளாம். இங்கு ஓடுதல் என்பது எண்ணத் தின் ஓட்டத்தையே குறித்தது. செயலற்றுப்போன நிலையையே ஓடவில்லை என்பது குறிக்கின்றதாம். சிக்கலான வினாவை எழுப்பி விடை கேட்கும்போதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை; நீங்களே மறுமொழி சொல்லுங்கள் என்பதும் வழக்கில் கேட்பதே. ஓடெடுத்தல் - இரந்துண்ணல் துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு, தேங்காய் ஓடு போன்ற தாகிய ஒரு மரத்தின் காயோடேயாகும். துறவுமேற்கொள்ளாத பிச்சையர் மண்சட்டியை எடுத்து இரந்துண்பதும் உண்டு. அதுவும் ஓடு எனவே படும். வறுப்பதற்கு உரிய ஓடு வறை யோடு என்றும் கட்டடத்து மேற்தளத்தில் பரப்பும் சிற்றோடு தட்டோடு என்றும் வழங்கப்படுதல் அறிக. ஓடெடுத்துக் கொண்டு பிச்சையேற்று உண்பதே ஓடெடுத்தல் என வழக்காயிற்று. தமக்கு ஏழ்மையுண்டு என்பதை ஏற்க மனமில்லாதவர், நானென்ன ஓடெடுத்துக் கொண்டா திரிகிறேன் என்பர். ஓலுப்படல் - அல்லலுறல் ஓலுறுத்தல் விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ் வுறுத்தல் பொருளது. செல்வக்குழந்தைகளை வளர்க்கும் தாய்மார் களுள் ஒருத்தி ஓலுறுத்தும் தாய் அவ்வோலுறுத்தல் குழந்தை யின் அழுகை அமர்த்தி இன்புறுத்துபவள். இவ்வோலுப்படல் என்பது மகிழ்வு இழத்தல் மட்டுமின்றி அல்லலுறுதலுமாம். படல் என்பது இழப்புச் சுட்டும் சொல். உண்டாதல் பொருளிலும் படல் வரும். அழிதல் கெடுதல் பொருளிலும் வரும். பயிர் படுகிறது, பயிர்பட்டுப் போனது என்பவற்றிலுள்ள படுதல் அறிக. பட்ட மரம் என்பதும் அறிக. ஓவியம் - அழகு, அருமை ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம் எனப்படுகின்றதாம். ஓவியம் கண்டார் கண்ணையும் கருத்தையும் வயப்படுத்துதலால் அதனை வரையும் ஓவியரைக் கண்ணுள் வினைஞர் என முன்னை யோர் குறித்தனர். காண்பார் கண்ணிடத்தே தம் கலைத்திறம் காட்டவல்லார் என்பது அதன் பொருள். ஓவியம் அழகாக இருத்தலின் அழகுக்கே ஓவியம் என்னும் ஒரு சொல்லும் உண்டா யிற்று, நீ பெரிய ஓவியம் என்பதில் அழகு அருமை என்னும் இரண்டும் சுட்டிய எள்ளல் உண்மை அறிக. கச்சை கட்டல் - ஏவிவிடல் கச்சை என்பது இடுப்பில் கட்டும் உடையையும், இடை வாரையும் குறிக்கும். கச்சை கட்டுதல் போர்க்குப் புகுவார் செயல். அதனால் கச்சை கட்டுதல் என்பது ஏவிவிடல் பொருளுக்கு உரியதாயிற்று. ஒருவர் எதிர்பாரா எதிர்ப்பின்போதோ தடுப்பின் போதோ அமைந்திருப்பார். அவரைச் சில சில சொல்லி எதிர்த்து எழுதற்கும், தாக்குதற்கும் ஏவிவிட்டு விடுவர் சிலர். இதனைக் கச்சைகட்டுதல் என்பது வழக்கு. கசக்கிப் பிழிதல் - கடுமையாய் வேலை வாங்கல் பழங்களைக் கசக்குதலும், கசக்கியதைப் பிழிந்து சாறு எடுத்தலும் நடைமுறைச் செய்தி. அதுபோல் சிலரை வாட்டி வேலை வாங்கி அவ்வேலையால் கிடைக்கும் பயனைத்தாமே எடுத்துக் கொள்ளுதல் செல்வர்கள் அல்லது அச்செல்வார்க்குத் துணை நிற்பார் செயல். இச் செயலை உவமையால் குறிப்பதே கசக்கிப் பிழிதல் என்பதாம். கசக்குதல் என்பது இடக்கரடக் காகவும் வரும். பழங்களையன்றிக் கரும்பை ஆட்டிச் சாறு கொள்வதும் அச்சாற்றால் கட்டியாக்கிக் கொள்ளலும் ஆட்டிப் படைத்தல் எனப்படும். மாவாட்டல் எண்ணெய் ஆட்டல் என்பனவெல்லாம் இவ்வகை சார்ந்தன. கசிதல் - அன்புறுதல் புது மண் பானையில் நீர்வைத்தால் கசிவு உண்டாகும். அதுபோல் குளக்கரை, வயற்கரை, வரப்பு ஆகியவற்றிலும் நீர் உள்ளபோது கசிவுண்டாம். கசிதல் என்பது நீர் சிறிதளவாய் ஊறி வெளிப்படுதலாம். இனி இக் கசிதல் அன்புடையார்க்கும் உண்மை, அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்னும் குறளால் விளங்கும். ஒருவனிடத்தே அன்பு உள்ளது என்பதற்கு அடையாளமாக இருப்பது கண்ணீர் எனப்படுத லால் அக் கண்ணீர்க் கசிவே இங்குக் குறிக்கப்படுவதாம். உனக்குக் கசிவே இல்லை; உன்மனம் என்ன கல்லா; இரும்பா எனவெதும்பி உரைப்பார். உரையில் கசிவு அன்பாதல் விளங்கும். கஞ்சி காய்ச்சல் - கிண்டல் செய்தல் கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய புல்லிய தவசங்களை இடித்து அரைத்து மாவாக்கி ஊறவைத்தும் புளிப்பாக்கி உலை யிட்டுத் துடுப்பால் கிண்டிக் கிண்டிக் கஞ்சி காய்ச்சுதல் வழக்கம். கஞ்சியாவதற்குள் அதுபடும் பாடு பெரும்பாடு. அப்பாடுகள் எல்லாம் ஒருவனைப்படுத்துதல் கஞ்சி காய்ச்சலாக வழங்கு கின்றதாம். கிண்டல், கேலி, நகையாண்டி படுத்துதலே இங்குக் கஞ்சி காய்ச்சல். கிண்டல் என்பது கீழ்மேலாகவும் மேல் கீழா கவும் புரட்டிப் புரட்டி எடுத்தல். உப்புமா கிண்டல்; கோழி கிண்டல் அறிக. கேளிக்கை, கேளியாய்க் கேலியாய் உள்ளது. நகையாண்டி நையாண்டியாயிற்று. கட்டிக் கொடுத்த சோறு - கற்றுக்கொடுத்த கல்வி கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அதுபோல், கற்றுக் கொடுத்த அளவிலேயே அமையும் கல்வி கட்டிக் கொடுத்த சோறாகச் சொல்லப்படும். கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த கல்வியும் எந்த மட்டோ அந்த மட்டே என்னும் பழமொழி இவ்வழக்குத் தொடரின் பொருளை விளக்கும். கட்டிக் கொடுத்த சோறு கட்டுசோறு தோளில் அதனைப் போட்டுக் கொண்டு போன வழக்கத்தால் தோட் கோப்பு என்பதும் அது. கட்டிக் கொள்ளல் - திருமணம் செய்தல் திருமணம் செய்தலைத் தாலிகட்டு என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம்பெறுவது, தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப் பந்தியில் உட்காரும் வழக்கமே அதனைத் தெரிவிக்கும். ‘thœ¤âdhš v‹d? வாழ்த்து திருமண மாவதில்லை! தாலிகட்டுதலே திரு மணமாகக் கொள்ளப்படுகிறது. மற்றை மற்றைச் சடங்கு களும் கூட முதன்மையில்லை. அதனால்தான் திருமண விரை வில் தாலிகட்ட மறந்ததுபோல, என்னும் பழமொழி எழுந்தது. தாலிகட்ட மறந்தால் திருமணமே நடந்ததாகாது என்பது தெளிவு. ஆதலால் தாலி காட்டல் இல்லாமலும் தாலி கட்டல் உண்டு என்பதே பொருளாம். முடிச்சுப் போடுதல் கட்டுதல் தானே. மூணுமுடிச்சுப் போடு என்பர். அவிழக்கூடாது என்னும் அக்கறை. கட்டிப்போடுதல் - அடங்கச் செய்தல் கயிற்றால் கட்டுதல்தான் கட்டுதல் என்பது இல்லை. சொல்லால் கட்டுதலும் கட்டே. கட்டளை, கட்டுரை, கட்டுப் பாடு, கட்டுப்படுத்தல், கட்டுமானம் என்பனவெல்லாம் கயிற் றொடு தொடர்பில்லாக் கட்டுகளே. சிலர் கொதித்து எழும் நிலையிலும் ஒரு சொல்லால், ஒரு விரலசைப்பால், ஒரு கண் ணிமைப்பால் கொதியாது அடங்கியிருக்கச் செய்து விடுவது உண்டு. அவ்வாறு அடங்கியவர், என்னைக் கட்டிப் போட்டு விட்டீர்கள்; இல்லாவிட்டால் என்ன நடக்கும் நடந் திருக்கும், என்பது எனக்கே தெரியாது என்பது உண்டு. பாரதக் கதையில் தருமன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்ற வீமன் முத லானோர் கொதிப்படைய கட்டுண்டோம் பொறுத்திருப் போம்; காலம் மாறும், என்று தருமன் கூறியது கருதத்தக்கது. கட்டுப்படுதல் - கட்டளைக்கு உட்படுதல் பெற்றவர்கள் பெரியவர்கள் என்பதால் அவர்கள் சொல்வது மனத்திற்கு ஒவ்வவில்லை எனினும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு நடப்பதுண்டு. அதற்குக் கட்டுப்படுதல் என்பது பெயர். நன்றியறிதல் காரணமாகவும் நன்றி செய்தாரை நினைந்து கட்டுப்பட்டு நடத்தலும் உண்டு. ஊர்க்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலைமை அண்மைக் காலம் வரை இருந்தது. இதில் வரும் கட்டு ஆணை என்னும் பொருள் தருவதாம். ஊர்க்கட்டு மீறலாமா என்பது வழங்கு மொழி. தலைவன் சொற்படி நிற்கும் குடும்ப ஆட்சியைத் தலைக் கட்டு என்பது வழக்கு. கட்டை - உடல் உயிரற்ற உடலைக்கட்டை எனல் வழக்கம். உயிருள்ளவரும் துறவு நிலையில் தம்மைக் கட்டை என்பதும், வெறுப்பு நிலைக்கு ஆட்பட்டோர் தம் உடலைக் கட்டை என்பதும், வழக்காம். இந்தக் கட்டை இங்கே போகிறது. இந்தக் கட்டை இன்ன சொல்கிறது என்பது வேடத்துறவோர் உரை. வெறுப்புற்றோரும் இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டிக்கிடக்கிறது. என்பதும் உண்டு. இவர் கூற்றிலும் கட்டை என்பது உடலையே குறித்தது, இனி, கட்டையிலேபோவான் என்னும் வசை மொழியில் உள்ள கட்டை இடுகாட்டில் இக்கட்டையை எறிக்க உதவும் விறகுக் கட்டையைக் குறிப்பதாம். கட்டு அழிந்ததைக் கட்டை என்றனர் போலும். கட்டு நீர், வளம், இலை, தழை முதலியன. கடித்தல் - சண்டையிடல் நாய் பூனை முதலியவை ஒன்றையொன்று பகைத்தால் கடிப்பாலேயே தம் பகையைத் தீர்க்கும். கடித்தல் அவற்றின் சண்டைக்கு அறிகுறி. ஆனால் அந்நாயும் பூனையும் நட்பாக இருக்கும்போதும் கடிக்கும். அதனைச் சண்டைக் கடியாகக் கொள்வதில்லை. பொய்க்கடி, அன்புக்கடி எனப்படும். அவ்வாறே நெருங்கிப் பழகிய இருவர் தங்களுக்குள் சண்டையிடும்போது, என்ன இருவரும் இந்தக் கடி கடிக்கிறீர்கள்! இந்தக் கசிவும் வேண்டாம்; இந்தக் கடியும் வேண்டாம் என்று அவர்களை அறிந்தோர் அறிவுரை கூறுவது வழக்கம் போதும்; கடியாதே எனச் சண்டையிடுபவர் தங்களுக்குள் கூறுவதும் உண்டு. கடிப் பவர் அடுத்த நேரமே கடி மறந்து கசிபவர் என்க. கடுவாய் நோட்டு - நூறு உரூபாத்தாள் கடுவாய் என்பது பெரும்புலி! பதினாறு அடி தாவும் வேங்கையைக் கடுவாய் என்பர். அதன் பிளந்த பெருவாயை யும் அதன் கொடுங்காட்சியையும் கண்டு கடுவாய் என்றனர். கடுவாய் எளிமையாகக் காணக் கூடிய விலங்கில்லை. செறிந்த காடுகளின் இடையே அரிதில் வாழ்வது. அதனைத்தேடி முயன்றே காணமுடியும். அதுபோல் அரிதில் காணக்கூடிய பெரிய பணத்தாள் கடுவா நோட்டு எனப்படுகிறது. முன்பு நூறு மட்டும் தேடு; நூற்றுக்கு மேல் ஊற்று என்பது பழமொழி. இப்பொழுது நூறு உருபா என்பது பழைய சல்லிக் காசு நூறுக்கு ஒப்பு. கடுவா நோட்டு என்பது பழநாள் பணத்தாள் மதிப்பை விளக்கும் வரலாற்று வழக்காறாம். கடைகோடி - ஆகக் கடைசி கடை என்பது கடைசி என்னும் பொருளது, கோடி என்பது கடைசி என்னும் எண்ணுப் பெயர். அது தெருக்கோடி தெற்குக் கோடி என இடத்தின் கடைசியைக் குறிப்பதுமாயிற்று. இவ் விரண்டுஞ் சேர்ந்து ஆகக் கடைசி என்னும் பொருள் தருவதாக வழக்கில் ஊன்றியுள்ளது. கடைகோடி வீடு, வயல் என்பன வழக்குகள். கடைந்தெடுத்தல் - அகவையை மீறிய அறிவு தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்ததிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காயவைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக் கடைந்தால் வெண்ணெய் திரளும். அத்திரள் சிறிதாயினும் அப்பாலின் ஊட்டம் அனைத்தும் அத்திரளில் அடங்கிவிடுகிறது. அது போல் சிறிய அகவையில் பெரிய ஆளுக்குரிய அறிவு ஆற்றல் வினாவுதல் இருப்பின் கடைந்தெடுத்தவன் அவன் என்பர். ஆனால் பாராட்டுதலாக அஃது அமையாமல் இகழ்தலாக வழங்குகின்றது. ஏனெனில் அகவைக்கு விஞ்சியதும் பொருந் தாததும் ஆகிய அறிவுக்கூர்ப்பே அவ்வெளிப்பாடாக இருத்தலால் சிறந்ததாக இருந்தால் சிறுப்பெருமை என்றும் சிறு முதுக்குறைவு என்றும் சொல்லப்படும். கண்ணசைத்தல் - குறிப்புக் காட்டல் கண்ணசைத்தல் என்பது, அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். கண் சாடை காட்டுதல் என வழக்கில் உள்ளது இக்கண்ணசைப்பாம். காரிகையார் கடைக் கண் காட்டல் காதலர் கண்ணடித்தல் என்பவை வேறு வேறு. அவ்வழக்கில் அவற்றைக் காண்க. தலைமையுடைய ஒருவர் பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தம் பணியாளர்க்கு அல்லது தம் குடும்பத் தவர்க்குக் கண்ணசைப்பால் காட்டுவதே இக்கண்ணசைப்பாம். கண்ணசைத்தும் உனக்குத் தெரியவில்லையே! நீ எப்படிப் பிழைக்கப்போகிறாய்? என்பது குறிப்பறிந்து செயலாற்றா தவர்மேல் சொல்லப்படும் குறைமொழி. கண்ணடித்தல் - காதல் குறிப்புக் காட்டல் இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப் புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்ணில் தெரியும்; அக்கண்ணின் முதிர்வு கண்ணின் கடைமணியிற் புலனாம் என்பது மெய்ப்பாட்டுக் கூறு. கண்ணடித்தல் காதலைப் புலப்படுத்துவதுடன் பிறர் வரவு, கூறத்தக்கது தகாதது, புறப்படலாம், புறப்படவேண்டா முதலான கெழுதகைக் காதற் பேச்சுகளையும் கண்ணடித்தலே பேசிடும். ஆதலால் கண்ணடித்தல் படிப்பு, காதலில் பெரும் படிப்பு என்பர். ஏனெனின் அதனைப் படியாக்கால் வேண்டா இடருக்கெல்லாம் வித்தாகிவிடும் என்பது அவர்கள் தெளிவு. கண்ணாம் பூச்சி காட்டல் - அங்கும் இங்குமாக ஏமாற்றல் கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு; கண்ணைக்கட்டி எங்கேயோ விட்டு விட்டு மறைந்து கொள்வதும் தேடிப் பிடிப்பதும் விளையாட்டாக உள்ளது. இச்சிறுவர் விளையாட்டுக்கு ஒப்பச் சிலர் இப்படி அப்படி என மாற்றி மறைத்து ஓட்டங்காட்டி ஏமாற்றித் திரிவர். அத்தகையரை என்னிடம் கண்ணாம் பூச்சி காட்டுகிறாயா? என்பது வழக்கு. கண்பார்த்தல் - அருளல் கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத்திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவன வல்ல, ஒருவர் நோயுற்றபோது கடவுள்தான் கண்பார்க்க வேண்டும் என்பர். பண்டுவரையா நீங்கள் கண்பார்த்தால் தான் ஆகும் என்பர். கண்பார்வை படவேண்டும் என்பதற்காகவே பெருஞ்செல்வர் பெரும்பதவியர் ஆகியோர் திருமுன் காத்துக் கிடப்பவர் பலர். கண்பார்த்தல் என்பது பொதுப் பொருளில் நீங்கிக் கண்ணோட்டம் என்னும் சிறப்புப் பொருளில் வரும் வழக்கு ஈதாம். கண்மூடல் - சாதல் கண்ணைமூடல் உறங்குதலுக்கும் உண்டே, கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண்மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது. இறப்பைக் குறிக்கும் வழக்கு மொழிகள் மிகப்பல. இறப்பு என்பதும் கூட நேர் சொல் அன்று. வழக்குச் சொல்லே. இறத்தல் கடத்தல் என்னும் பொருட்டது. வீட்டைக் கடந்து நன்காட்டை அடைதல் இறப்பு எனப்பட்டது. சாவின்மேல் கொண்ட அச்சம் அச்சொல்லைச் சொல்லவும் விரும்பாமல் குறிப்பாலும், மங்கல வழக்காலும், உறுப்புச் செயலறுதலாட்சியாலும் சொல்ல வைத்ததாம். கண்மூடல் என்பது உறுப்புச் செயலறுதலாட்சியால் சாவை உணர்த்திற்று. பேச மறத்தல் மூச்சு விடமறத்தல் என்பவையும், இவ்வகைய. கண்மூடி - மூடன் ; அறிவிலி கண் என்பது கண் என்னும் உறுப்பைக் குறித்து அதன் மேல் அறிவு என்னும் பொருளும் தரும். கண்ணுடையர் என்பவர் கற்றோர் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும், கற்றறறிவில்லாமாந்தர் கண்கெட்ட மாடேயாவர் என்பன போன்றவற்றால் கண் என்பதற்கு அறிவுப் பொருள் உள்ளமை தெளிவாம், மற்றும் கண்ணை மூடிக் கொண்டு ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பவனும் முட்டாததில் முட்டி, தட்டாததில் தட்டி, பிடிக்காததைப் பிடித்துப் பெரும்பாடுபடுவது போல் அறிவின்றிப் பலப்பலவும் செய்பவனும் கண்மூடி எனப்பட்டான் என்க. கண் மூடிவழக்கம் மண் மூடிப்போக முயன்றார் வள்ளலார். கடைக்கண் காட்டல் - குறிப்பால் கட்டளையிடல் கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெனின் இக் கடைக்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல் வினையின்றிக் காட்டல் அளவில் நின்றதாம். காரிகையார் கடைக்கண் காட்டிவிட்டால் மைந்தர்க்கு மாமலையும் சிறு கடுகாகும் என்பார் பாவேந்தர். அவ்வளவு எளிமையாகப் புரட்ட வைத்து விடுமாம் அக்காதற் கண்காட்டல்! இந்த வில் என்ன, எந்த வில்லையும் முரிக்க முடியுமாம் சீதையைக் கண்ட ராமனுக்கு குறிப்பறிதல், என்னும் ஓரதிகாரப் பெயர் ஈரிடத்து வள்ளுவத்தில் இயைந்தமையே இதன் நுண்மையைக் காட்டும். கத்தரிப்பு - பிளப்பு ; பிரிப்பு கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவிகள். கத்தரித்தல் தொழிற்பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது செய்யும் தொழிலை உட்கொண்டு. எங்கள் நட்பை அல்லது உறவை அவன் கத்தரித்து விட்டான் என்பது வழக்கில் உள்ளது. கத்தரிக்கவும் அவனுக்குத் தெரியவும்; மூட்டவும் தெரியும் என்பது பிளக்கவும், பிளந் தாரைக் கூட்டவும் வல்லாரைக் குறிக்கும் வழக்குச் சொல். ஒருவருக்குத் தம் முயற்சியால் கிடைக்க இருந்த வேலை மற் றொருவர் கத்தரியிட்டதால் கிடையாது போனதைச் சுட்டுவார் திரு.வி.க. (வாழ்க்கைக் குறிப்புகள்) கத்தி கட்டல் - சண்டைக்கு ஏவி விடல் சேவற்போர் ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து அவற்றை மோதவிட்டுப் பார்த்து மகிழ்ந்தவர்கள், அவற்றின் கால்களில் கத்தி கட்டிவிட்டுப் போருக்கு விட்டனர். சேவல்கள் ஏவிவிட்டவுடன் எதிரிட்டுத் தாக்கிக் கத்தி பிளக்கக் குருதி கொட்டினாலும் உயிர் போனாலும் பின் வாங்காது தாக்கும். வெல்லும்; அல்லது வீழும். இவ்வழக்கில் இருந்து இருவரை ஏவிவிட்டுச் சண்டை போட அல்லது பகைத்துத் தாக்க வைப்பது கத்திகட்டலாக வந்தது. கதைவிடல் - புனைந்து கூறல் கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு, கட்டுமானத்தால் விரித்துக் கூறுவதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச் சொன்னதாகவும் இட்டுக்கட்டிக் கூறுபவரைக் கதைவிடுகிறார் என்றும், கதைவிடுதலில் பெரிய ஆள் என்றும் கூறுவதுண்டு. கயிறு திரித்தல், சரடுவிடல் என்பனவும் கதை விடல் போல்வனவே. கமுக்கம் - வெளிப்படுத்தாமை தோளின் உள் வாய்க் குடைவுப் பகுதி வெளிப்படாமல் மூடப்பட்டு இருப்பது. கையின் மறைவுக்கு உள்ளடங்கி இருக்கும் அப்பகுதி கமுக்கம் என்றும், கமுக்கக்கூடு (கம்புக்கூடு) என்றும் வழங்கப்படும். அது மறைவாக இருப்பதுபோல வெளிப்படாது மறைக்கப்படும் செய்தி அல்லது மறக்கப்படவேண்டிய செய்தி கமுக்கம் எனப்படும். இரகசியம் என்னும் வேற்றுச்சொல்லாட்சி பெரிதும் வழக்கில் ஊன்றியமையால் கமுக்கம் எனும் தமிழ்ச் சொல் வழக்கில் அருகியது. பாவாணர் அதனைப் பெரிதும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி நமக்குள் கமுக்கமாக இருக்கட்டும் என்பது வழக்கு. கயிறு உருட்டல் - புனைந்துரைத்தல் பஞ்சு, நூல், நார் முதலிய மூலப் பொருள் கொண்டு - நொய்தாகவும் தும்பு துகளாகவும் இருக்கும். அவற்றால் - வலிய கயிறு உருட்டுதல் வழக்கு. பல நுண்ணிழைகள் கூடுதலால் வலிய கயிறு உண்டாக்கப்படுதல் போல் ஆங்கும் ஈங்கும் கண்டு கேட்ட சில சிறிய செய்திகளைத் திரட்டி மனம் போலச் சேர்க்க வேண்டு வன சேர்த்து ஒன்றாக்கிப் பலரும் அறிய உருட்டி விடுவதைக் கயிறு உருட்டல் என்பது வழக்கம். தாமரைத் தண்டின் நூலே பல்லாயிரம் சேருங்கால் பருங்கயிறாகி யானையையும் கட்டிவிடும் என்பர். கயிறு உருட்டுபவரால் வலிமையானவரும் ஒரு கால் வீழ்ச்சியுறல் காணக் கூடியதே. சரடு விடுதல், கதைவிடல் காண்க. கயிறு கட்டல் - திருமணம் தாலி கட்டல், மஞ்சள் கயிறு கட்டல், முடிச்சுப் போடல் மூன்று முடிச்சுப் போடல் என்பனவெல்லாம் இதுவே. மங்கலம், தாலி என்பவற்றைத் திருப்பூட்டெனப் பூட்டி னாலும் அதனைக் கயிற்றில் நுழைத்துக் கழுத்தில் கட்டுவதே வழக்கம். வெறுங்கயிற்றை மஞ்சள் துண்டு கட்டிப் போடுவதும் கூட வழக்கில் இருந்தது. கயிறு மட்டுமே அடையாளமாக இருப்பதும் உண்டு. ஆதலால் தங்கத்தில் இருந்தாலும் தாலிக் கயிறு, தாலிச்சரடு என்னும் வழக்கம் மாறாமல் இன்றும் உள்ளது. கயிறு திரித்தல் - புனைந்துரைத்தல் உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு. உருட்டுவார், தொடையில் உருட்டுவர். திரிப்பார் கையால் திரிப்பர். விளைவு ஒன்றாக இருப்பினும் வினையாற்றும் முறையால் சிறிது வேறுபாடு மட்டுமேயுண்டு. கயிறு திரித்தல் போல் சில செய்திகளைப் புனைந்து கூறுதல் உண்மையால் அப் பெயர் பெற்றது. கரியாக்கல் - அழித்தல், சுட்டெரித்தல் கரியாக்குவோர் அக்கரிக்காக எரிக்கக்கூடாத உயர் மரத்தை யும் தீ மூட்டி எரிப்பதுண்டு. அவர்களுக்குத் தேக்கானால் என்ன, சந்தனம் ஆனால் என்ன, வேண்டுவது கரி. அவ்வளவே. அது போல் சிலர் எளியதும் வேண்டாததுமாகிய தம் செலவுக்காக விற்கக் கூடாத அரிய பொருள்களையும் விற்றுவிடுவது உண்டு. அதனைக் குறிப்பது கரியாக்கல் என்னும் வழக்கம். போன இடத்தைக் கரியாக்காமல் போகமாட்டானே என்பது கரி யாக்குவானுக்குத் தரும் சான்றுரை. கல்லும் கரைதல் - இரக்கமில்லானும் இரங்கல் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது பழ மொழி. கல்லையும் கரைய வைக்க முடியும் என்பதை அது காட்டும். ஆனால் இக்கல் கரைதல், கல் போன்ற உள்ளம் கரைந்து - இரங்கி - உதவுதலாம். சிலர் கையை அறுத்துக்கொண்டாலும், தொட்டுத் தடவச் சுண்ணாம்பும் தாரார் எனப் பேர் பெற்றிருப்பர். அத்தகையரும் சில வேளைகளில் ஏதோ உதவக் கண்டால், அந்தக் கல்லுமா கரைகிறது. அந்தக் கல்லுக்குள்ளுமா ஈரம் இருக்கிறது என்பர். இரங்காதவர் இரங்கல் என்பது பொருளாம். கழற்றிவிடுதல் - பிரித்தல் ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் கழற்றல் எனப்படும். அணிகலங்களைத் திருகுவாய், பூட்டு வாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகைய பருப்பொருளாம் கழற்றுதல், ஒரு நிகழ்ச்சியில் இருந்தோ, கூட்டத்தில் இருந்தோ, சிக்கலில் இருந்தோ உறவு நட்பு ஆகிய வற்றில் இருந்தோ தம்மைப் பிரித்துக் கொள்ளுதலும் கழற்றுத லாக வழக்கில் ஊன்றியது. அவன் முழுதாகத் தன்னை நம்மிட மிருந்து கழற்றிக் கொண்டு விட்டான் என்பது பேச்சு வழக்கு. காரியம் முடிந்தவுடன் கழற்றிக் கொண்டான் என்பது பெரு வழக்கு. கழன்றது - பயனற்றது தொடர்பற்றது பொருத்துவாய் கழன்று விட்டால் அக் கருவி பயன்படுதல் இல்லை. கழன்ற அகப்பை எனச்சிலரைச் சொல்வது உண்டு. தேங்காய் ஓடும், கைபிடிக் காம்பும் உடையது மர அகப்பை. இதன் காம்பு கழன்றுவிட்டால் தேங்காய் ஓட்டை வைத்துப் பயன் கொள்ள முடியாது. காம்பை வைத்தும் பயன் கொள்ள முடியாது. முன்னது ஒழுகிப்போம்; பின்னது அள்ள வாராது. இதனைக் கருத்தில் கொண்டு கழன்ற அகப்பை என்றால் பயனின்மைப் பொருள் வழக்கில் உண்டாயிற்று. cd¡F மரை கழன்றுவிட்டதா என்றால் ‘மூளைக் கோளாறா? என்பது பொருளாம். இங்குக் கழற்றுதல் என்பது தொடர்பின்மைப் பொருளது. கழிசடை - ஒதுக்கத்தக்கது தலையில் இருந்து மயிர் உதிர்வது உண்டு. சிலர்க்குச் சில காலங்களில் மிக உதிரும். அதனை மயிர் கொட்டுகிறது என்பர். ஆனால் தலையைச் சீவிச் சடை கட்டும்போது எவருக்கும் உதிர்வது காணக் கூடியது. தலையில் இருக்கும் அளவும் அதன் பெருமையென்ன? உதிர்ந்ததும் அது தன் மேலேயோ துணி யிலேயோ பட்டால் அடையும் அருவெறுப்பென்ன? உணவில் கிடந்தால்? கழிசடை என்பது உதிர்ந்த மயிர்! தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை என்பது வள்ளு வம். கழிசடை என்பது ஒதுக்கத்தக்கது ஒழிக்கத் தக்கது என்ப துடன் அவ்வாறு கீழானது என்பதையும் காட்டுவதாம். கழித்தல் - கருக்கலைப்பு கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல். ஒதுக்கி விடல் தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர். அப்பொழுது கழிப்பது, பழிப்பதற்கு இடமான செயலாக இருந்தது. கருச் சிதைத்தல் கடும்பாவம் என்னும் கருத்தும் இருந்தது. இதுகால் மலச்சிக்கல் நீக்க மருத்துவம் போல இயல்பாகிவிட்டது. இப்பொழுதே கழித்துவிட்டால் எளிது கழிக்க நாட்பட்டால் வெளிப்பட்டுவிடும் கழிக்க ஒன்றும் சுணக்கம் இல்லை, எவருக்கும் ஐயம் வராது என்பனவெல்லாம் எங்கும் கேட்கும் செய்திகள். எவரும் அறியார் என அறிந்து அறியச் செய்யும் செயல்கள். கழுத்து ஒடிதல் - அளவில்லாத பொறுப்பு தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்கமாட்டாமல் வளையும்; குழையும்; சுளுக்கும் உண்டாம். தலைமேல் உள்ள பொருளை அப்படியே தள்ளி விடவும் நேரும். அந்நிலையில் அத் தாங்கமாட்டாச் சுமையைக் கழுத்தை ஒடிக்கும் சுமை என்பர். அது போல் ஒருவர் குடும்பம் பெரிதாகி விட்டாலோ, பொறுப்பு அளவு கடந்து மிகுந்துவிட்டாலோ கழுத்து ஒடிகிறது என்பது வழக்கு. தாங்க முடியாத அளவில்லாத பொறுப்பு என்பது பொருளாம். கழுதைப்பிறவி - சுமை சுமத்தல் கழுதை யென்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. அது போல் சிலர்க்கும் தாங்க மாட்டாக் குடும்பச் சுமை அமைந்துவிடும்போது கழுதைப் பிறவியாகி விட்டது சுமந்து தானே ஆகவேண்டும்; வேண்டா எனத் தள்ளினால் நம்மை விட்டு போகுமா; என்று நொந் துரைக்கும் வழக்கு உண்டாயிற்று. சரி; சுமை தாங்க முடியாதென ஓடிவிடவேனும் முடியுமோ? அதுதான் காலில் தளை போடப்பட்டுள்ளதே! இவனுக்குத் தளை மனைவி மக்களாமே! தளை போடல் கால் கட்டு ஆதலைக்காண்க. களமாக்கல் - இல்லாமை அல்லது வெறுமையாக்கல் களம், போர்க்களம். சூடடிக்கும் நெற்களம், உழவர்களது. போர் புரியும் செங்களம், வீரர்களது. பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப் படுத்துவது நெற்களமாம். இல்லாக்கால் அதில் கதிரடிப்பு, பிணையலிடல் என்பவற்றைச் செய்வதற்கு வாய்க்காது. ஏர்க்களமாக்கல் இது. போர்க்களமாக்கினால் என்ன ஆகும்; எல்லாக் கொடுமைகளுக்கும் இடமாகும். வாழ்வா ரெல்லாம் வன் சாவுக்கு இரையாவர். ஆதலால் களமாக்கல் அழிப்பு வேலையாகவே அமைந்துவிடும். தம் குடியைக் கெடுக்கும் மக்களை, நீ களமாக்கி விடுவாய் எனப்பழிப்பது முதியவர்கள் வழக்கு. களவு - உள்ளத்தைக் கவர்தல் களவு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது. பிறர்க்கு உரிமைப்பட்ட ஒன்றை அவரறியாமல் வஞ்சித்துக் கவர்ந்து கொள்வதே களவாம். இப்பொல்லாக் களவினைத் தவிர்த்து உலகில் பெருக வழங்கும் களவும் உண்டு. அது நல்ல களவென நாடு கொள்வது. அதனையே தொல்காப்பியம் திருக் குறள் முதலியன களவியல் எனக் கூறும். அக்களவு, ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்தலாம். பால் ஒன்று பட்டால் நட்பாகவும், பால் வேறுபட்டால் காதலாகவும் கொள்ளப்படும். கற்புக்கு முற்பட்டது களவு என்பது தமிழ் நெறி. இறைவனை அடியார்கள் உள்ளங் கவர் கள்வன். என்பது களவே. அக்களவே இறை யன்பாம். களையெடுத்தல் - தீயரை அல்லது வேண்டாரை விலக்கல் உழவுத் தொழிலின் ஒரு பகுதி களையெடுத்தலாகும். களை கட்டல், களை பறித்தல் என்பனவும் அதுவே. கட்டல், கருவியால் வெட்டல், எடுத்தல் பறித்தல் என்பவை கையால் செயலாற்றல், களையெடுத்தல் வினைக்குப் பிறபிற சொற்களும் உள. களையெடுத்தல் பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம். அதுபோல் தீயவர்களையும் கேடர்களையும் சுரண்டுபவர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் தேர்ந்தறிந்து தம் கூட்டில் இருந்து விலக்கிவிடும் தேர்ச்சி சிலர்க்கு உண்டு. அவர் செயல் களையெடுத்தல் எனப்படும். களையெடுக்கா விட்டால் சீராகாது என்பது வழக்கம். அடர்ந்து நீண்டுபோன முடிவெட்டுதலைக் களை வெட்டுதல் என்பது இந்நாள் நகர்ப்புற வழக்கில் உண்டு. கறத்தல் - பறித்தல் மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை; தெரியாமல் கவர்வது திருட்டு. இது நயமாகப் பல் கால் சிறுகச் சிறுகப் பறித்துக் கொண்டேயிருப்பது கறத்தலாகும். என்னை அவன் கறவை மாடாகவைத்துக் கொண்டிருக்கிறான். கறவை நின்று போனால் ஏறிட்டுப் பார்க்க மாட்டான் என்பதில் கறவைப் பொருள் தெளிவாம். கறிவேப்பிலை - பயன்கொண்டு தள்ளல் கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்டச் சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும் அதனை எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு உண்பதே வழக்கமாக உள்ளது. அதில் இருந்து என்னைக் கறிவேப்பிலையாகப் பயன் படுத்திக் கொண்டார் என்று பழி கூறுவது உண்டாயிற்று. தங்கள் பயனே குறியாகக் கொண்டவர்கள் எப்படி எப்படி யெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்குப வற்றுள் கறிவேப்பிலைக்கும் தனி இடம் உண்டாகி விட்டது. கறுப்பு (கருப்பு) - பேய் கறுப்பு, கருநிறத்தைக் குறியாமல் கரு நிறத்தால் அச் சுறுத்தும் பொய்த்தோற்றத்தைக் குறித்து வருவது. சிலர் இரவில் தனித்துச் சென்றால் நிழலசைவு, இருள், சலசலப்பு இவற்றால் அஞ்சி நடுங்குவர், இத்தகையரைக் கருப்பு அச்சுறுத்திவிட்டது எனக் கூறிக் கருப்போட்டும் முயற்சியில் ஈடுபடுவது நாட்டுப்புறக் காட்சி. அதிலும் பெண்களுக்கே இக் கருப்புக் கோளாறு காட்டு தலும் பேயாடவைத்தலும் உடுக்கடித்தலும் கல் சுமக்க வைத்தலு மாகிய நிகழ்ச்சி இந்நாளிலும் தொடர்கிறது. ஓராளும் கறுப் புடையும் பேய் என்றார் பாவேந்தர். காக்காக்கடி - பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல் குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற் காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை அலகால் கொத்தித் தருவது போலத் தருவது கொண்டு இப்பெயர் ஏற்பட்டதாகலாம். காக்காக் கடிக்கு எச்சிலும் இல்லை. தீட்டும் இல்லை என்பது வழக்கம். அணில் கடித்த பழம் சுவையானது எனத் தின்பர். ஆனால் எலி, பேரெலி கடித்ததைத் தின்னார். அதுபோல் காக்கை கடித்தது குற்றமற்றது என்னும் கருத்திலும் இவ்வழக்கு வந்திருக்கலாம். காடாக்கல் - அழித்தல், கெடுத்தல் காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழையின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு அழிவாலேயாம். ஆதலால் காடாக்கல் நல்லதே எனினும், இக்காடு ஆக்கக் காடன்று; அழிகாடு! ஆம்! சுடுகாடு. சோலையாக இருப்பதை யும் பாலையாக மாற்றுவார் உண்மையில் அத்தகையரைக் காடாக்குவார் என்பது வழக்கமாயிற்றாம். கல்லுழி மங்கான் போன வழி காடுமேடு என்பது பழ மொழி. காணாக்கடி - இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல் கண்ணால் தெரியவராத கடி ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத் தெரியாது எனின் அதனைக் காணாக் கடி என்பது வழக்கு. காணாக்கடி கடித்துவிட்டது; தீர்த்தம் குடிக்கவேண்டும் என்று மஞ்சள் நீர் குடித்தல் வழக்கம். இத்தீர்த்தம் எல்லா வீட்டிலும் தருவதோ குடிப்பதோ இல்லை. நாக வழிபாடு, சக்கம்மாள் வழிபாடு செய்வார் வீட்டிலேயே வழங்குவர். காதில் பூச்சுற்றல் - அறிவறியாமை மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலி யிலோ கயிற்றிலோ பெண்கள் பூச்சரம் சுற்றிக் கொள்ளல் நாட்டுப்புறங்களில் உண்டு. காதில் ஒற்றைப் பூவைச் சிலர் வைத்துக் கொள்ளலும் அரிதாகக் காணலாம். முற்காலத்தில் ஆண்களும் குடுமி வளர்த்தனர்; கொண்டை போட்டனர்; பூவும் சூடினர். தலையில் பூச்சூடியதுடன் காதிலும் பூச்சரத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டனர். mJ ‘gH§fhy«’ ‘go¥g¿Éšyhj fhy«’ Ãfœªjit v‹D« fU¤jhš j‰fhy¡ fšÉ f‰wt®, ‘v‹id v‹d fhâš ó¢R‰¿dt‹ v‹wh Ãid¤J¡ bfh©lhŒ? என்பது வழக்கமாயிற்று. கொண்டை முடித்தவன், சிண்டு முடித்தவன் என்பதும் இது. காதுகுத்தல் - ஏமாற்றல் காது குத்துதல் பெருவிழாவாக இந்நாளிலும் நிகழ் கின்றது. இது பழமையான வழக்கம். காது குத்துதல் படிப்பறி வில்லார் செயல் எனப் படித்தவர்கள் எண்ணிய நிலையில் என்ன காது குத்துகிறாயா? அதற்கெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள் என்பது வழக்காயிற்று. காது குத்துதல் குழந்தைப் பருவத்தில் நிகழ்த்தப்படும் செயல். அதனைக் குழந்தை விரும்பாது. அதனைச் செய்வதற்குப் பெற்றோர்க்கு விருப்பம். ஆதலால் குழந்தைக்குப் பண்டம் தருதல் விளையாட்டு காட்டுதல் பொம்மை தருதல் ஆகியவை செய்து ஏமாற்றித் தங்கள் விருப்பை நிறைவேற்றிக் கொள்வர். ஆதலால் காது குத்துதலுக்கு ஏமாற்றுதல் பொருள் ஏற்பட்டது. காது கொடுத்தல் - கேட்டல் காது உறுப்புப் பொருள். முதலொடு கழற்றக்கூடாத உறவு (தற்கிழமை)ப் பொருள். கொடுத்தல் என்பது கொடுக்கும் உறவு (பிறிதின் கிழமை)ப் பொருள் - கொடாப் பொருளைக் கொடுக்கும் பொருளாகக் கூறப்படுதல் அறிக. இங்குக் காது என்பது அப்பொறியைக் குறியாமல், அதன் புலனைக் குறிப்ப தாக அமைகின்றது. அதாவது கொடுத்தல் என்பது கேட் டலைக் குறித்தது. நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளேன் காதைக் கொடுப்பதே இல்லை; பிறகு எப்படி விளங்கும் என்பவை வழக்குச் செய்திகள். சருக்கரைப் புலவர் என்பார் காசு கொடுத்துக் கேளாவிட்டாலும், காது கொடுத் தாவது கேட்கக் கூடாதா? என்பார். காய்தல் - பட்டுணியாதல். பசித்துக் கிடத்தல் வெயில் காய்தல்; குளிர்காய்தல்; காயப் போடுதல் என்பவை எல்லாம் வெதுப்புதல் பொருளன. இக் காய்தல், கதிரோன், தீ, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படுபவை. இவற்றை விடுத்துப் பசியும் தீயாகவும்; எரியாகவும், வழங்கப்படும். பசியைத் தீப்பிணி என்பதும் வழக்கே. தீ எரிப்பதுபோல் பசித்தீயும் எரிக்கக் கூடியது தானே உன்னைக் காயப்போட்டால்தான் சீராகும் என்பதில் காயப்போடல் பட்டுணி போடலைக் குறித்தல் அறிக. காய்ந்த மாடு, கம்பில் விழுந்தாற்போல் என்னும் பழமொழியும் காய்தல் பசித்தலைச் சுட்டும். காயப் போடல் பொருளை ஒட்டக்காயப் போடல் என்பது நன்கு தெளிவிக்கும் ஒட்டுதல் குடலுள் ஒன்றும் இன்றி ஒட்டிப்போதல், ஒட்டகம் ஒட்டிப்போன அகத்தையுடையது-பட்டுணி பன்னாள் கிடக்க வல்லது-என்னும் பொருளதாம் அது. காயா? - பழமா? தோல்வியா? வெற்றியா? காய் முதிரா நிலை; பழம் முதிர்நிலை; ஒரு செயல் நிறை வேறலைப் பழுத்தல் என்பது குறித்தது. தானே பழுக்காததைக் தடிகொண்டு பழுக்கவைத்தது போல என்னும் பழமொழி பழத்திற்கு நிறைவேற்றல் பொருளுண்மை தெளிவிக்கும். காயைப் பழுக்க வைக்கப் பலவகை முயற்சிகள் வேண்டும்; காத்திருக்கவும் வேண்டும். காலத்தால் பயன் கொள்ள நேரா மலும் போய்விடும். ஆனால் பழமென்றால் உடனே பயனாகி விடுமே! அக் கருத்திலேயே செயல் நிறைவேறி உடன் பயன் படுதலைப் பழம் என்றும், நிறைவேறாமல் தடைப்பட்டு நிற்பதைக் காயென்றும் சொல்லும் வழக்கமாயிற்று. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தலைக் கூறும் திருக்குறளை அறிக. கால்கட்டை போடுதல் - திருமணம் செய்வித்தல் பள்ளிக்கு வராமல் தப்பியோடும் மாணவர்களுக்கு முன்பு கட்டைபோடும் வழக்கம் இருந்தது. குட்டை போடும் வழக்கமும் இருந்தது. கட்டை என்பது ஒரு சங்கிலி வளையத்தில் மாட்டப் பட்ட கட்டை, சங்கிலி காலில் மாட்டப்பட, கட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்கவேண்டியது. குட்டை என்பது இரு கால்களையும் உள்ளடக்கி உட்கார்ந்து கால் நீட்டிய நிலையிலே வைக்கும் துளைக் கட்டையாகும். ஓடும் மாடுகளுக்குத் தொங்கு கட்டை கழுத்தில் கட்டிவிடுவது இன்றும் வழக்கமே. இவ்வழக்கத்தில் இருந்து கட்டைபோடுதல் என்பது வந்ததாகலாம். கட்டை போட்டால் நினைத்தபடி திரியவோ ஓடவோ முடியாது. அதுபோல் திருமணம் செய்து விட்டால், கட்டின்றிக் திரிந்த காளைபோல்வான் கட்டுக்குள் அமைவான் என்னும் கருத்தில் திருமணத்தைக் கால் கட்டை போடுதல் என்பது வழக்கமாயிற்று. தளைபோடுதல் என்பதும் அது. கால்வழி - மக்கள் கான்முளை என்பதும் இப்பொருளதே. கால்வழி என்பது வாழையடி வாழையென வரும் மரபுத் தொடர்ச்சியாகும். கால் என்பதற்கு ஊன்றுதல் முளைத்தல் எனப் பலபொருள்கள் உண்டு. இங்குக் கால் குடும்பத்திற்கு ஊன்றுதலாக வாய்த்த மக்களைக் குறித்து நின்றது. ஆலமரத்தில் அடி மரம் இருந்தாலும் கிளைகளில் இருந்து இறங்கும் வீழ்த்தும் கால் ஆகி மரத்திற்கு உதவும். அதுபோல் கால் முளையும் குடியைத் தாங்கும். குடும்பத்தை வழி வழி நிலை பெறுத்தி வருபவர் மக்கள். ஆதலால் அவர்கள் கால்வழி கான்முளை எனப்பட்டனர் என்க. கால் வைத்தல் - வருதல், குடிபுகுதல் கால் வைத்தல்; காலை நிலத்தில் அல்லது ஓரிடத்தில் வைத்தல் என்னும் பொருளில் விரிந்து வருதல் என்னும் பொருளில் வருவது வழக்காகும். என்றைக்காவது எங்கள் வீட்டில் நீங்கள் கால் வைத்ததுண்டா? என்று வினாவினால் வந்ததுண்டா என்பது பொருளாம். கால் வைத்த நேரம் என்பது குடிபுகுந்த நேரம் என்பதையும் குறிக்கும். அவள் கால் வைத்த நேரம் நல்ல நேரம். செல்வம் கொழிக்கிறது அவள் கால் வைத்த நேரம் இப்படித் தொட்ட தெல்லாம் கரியாகிறது என்பது போன்றவற்றில் கால் வைத்தல் என்பது குடி புகுதல் என்னும் பொருளைக் காட்டுவது. காலி - ஊர்சுற்றி, போக்கடிப்பு பொழுதை வீணடித்து ஊர்சுற்றித் திரிபவன் காலி. அவ னினும் மிகக் காலி, படு காலி எனப்படுவான். கால்நடை காலி எனப்படும், ஊர் ஆடு மாடுகள், ஊர்க் காலி என வழக்குறும். மாந்தரெல்லாம் காலால் நடப்பவரே எனினும் வெட்டித்தனமாகச் சுற்றுபவரே காலியாகச் சொல்லப் படுவராம். காலித்தனம், காலிப்பயல் என்பவை பொழுதை வீணாக்குவதுடன் பொருளையும் வீணாக்குபவனைக் குறிப்ப தாகலாம். காலியாதல் போக்கடிப்பாக உள்ளதும் அறியத் தக்கதே. மேல் வீடு (மூளை) காலி; வாடகைக்கு விடப்படும் என்பது எள்ளற் பழமொழி. காலைக்கட்டுதல் - கவலைப்படுதல் காலைக் கட்டுதல். அயலார் கட்டுதல் அன்று. தானே தன் காலைக் கட்டுதல் ஆகும்? கப்பல் கவிழ்ந்தாலும் காலைக் கட்ட லாமா? கன்னத்தில் கை வைக்கலாமா? என்பவை பழமொழிகள். கவலைப்பட்டோர் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கால் முட்டிகளுக்கு ஊடே தலையை வைத்துக் கைகளால் காலைக் கட்டிக்கொண்டு இருத்தலே காலைக் கட்டுதல் எனப்படுகிறது. கவலைக்குரிய தன்மை வெளிப்பாடு காலைக் கட்டுதல் ஆகும். தாயைப் பிரியமாட்டாத சேய் தாயின் காலைக்கட்டுதல் கவலை யோடு கூடிய அன்பு வெளிப்பாடாம். அக்கால் தன் கால் அன்றாம். காலைச் சுற்றல் - நெருக்கி வளைத்தல் கொடி காலைச் சுற்றும்; வைக்கோற் புரி, கயிறு ஆகியவை யும் காலைச் சுற்றும். சில வகைப் பாம்புகளும் தீண்டிவிட்டு ஓடாமல் காலைச் சுற்றிக்கொள்ளுதல் உண்டு. காலைச் சுற்றி யது கடியாமல் விடாது என்பது பழமொழி. காலைச் சுற்றுதல் என்பது நெருங்கி வருதலையும், சுற்றி வளைத்தலையும் குறிப்பதாக விரிவடைந்தது. சிலர்க்கு இரக்கத் தால் உதவினால் அவ்வுதவியளவில் நில்லாமல் மேலும் மேலும் எதிர்பார்த்தும், தங்களுக்கு உதவுதல் அவர்கட்குக் கட்டாயக் கடமை போலவும் வலியுறுத்திப் பெறுவர். இத்தகையவர்கள் உறவினைக் காலைச் சுற்றியது என்பது வழக்காயிற்று. சுற்றம் என்னும் சொல்லும் எண்ணத் தக்கதாம். காலைப் பிடித்தல் - பணிந்து வேண்டுதல் இறைவன் திருவடியை வணங்கல் பழஞ்செய்தி. அவ்வாறே தோற்றுப் போன வீரர்கள் தங்கள் கருவிகளை வெற்றி பெற்றவர் காலடியில் வைத்து அடைக்கலம் அடைதலும் மரபு. இவற்றைப் போல் குற்றம் செய்தவர்கள் தம் குற்றத்தைப் பொறுக்க வேண்டு மென்று ஊர் மன்றத்தில் விழுந்து வணங்கலும் வழக்கு. இவற்றி லிருந்து காலைப் பிடிக்கும் வழக்கம் உண்டாயிற்று. பணிவோடு ஒன்றை வேண்டுவோர் வேண்டுதற்கு உதவுவார், காலைப் பிடித் தலும் வணங்கலும் நடைமுறையாயிற்று. காரியம் ஆகக் காலைப் பிடித்தல் எனப் பழமொழியும் உண்டாயிற்று. காலை வாரல் - கொடுத்தல், நம்பிக்கை இழப்பு காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலைவாரல். காலை வாருதல் என்பது வீழ்த்துதல் பொருளது. அவனை நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என் காலை வாரிவிட்டான் என்பதில் நம்பிக்கைக் கேடும், கெடுதலும் விளக்கும். சண்டையில் காலை வாரி விடுதலும் வீழ்ந்தவன் மேல் ஏறிக் கொள்ளலும் என நிகழ்ந்த நடைமுறை உறுதி சொல்லி அவ்வுறுதியைக் காப் பாற்றாமல் ஒதுங்குதலைக் காலை வாருதலாகச் சொல்ல வாய்த்ததாம். காவணம் - திருமணக்கொட்டகை திருமணம் திருவிழாக்கள் நிகழுகின்றன என்றால் அதற்கு முன்னறிவிப்பு பந்தலாக விளங்குகின்றது. விரித்த பந்தர் பிரித் ததாமென எனக் கம்பரால் குறிக்கப்படுகிறது பந்தல். எனினும், பந்தல், துன்ப நிகழ்வுக்கு உரிதெனக் கருதப்படுவதும் உண்டு. இறப்புக்குப் போடுவது பந்தர் எனவும் சிறப்புக்குப் போடுவது காவணம் எனவும் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. காவாவது பூங்கா; வணம் ஆவது வண்ணம். வாழை முதலிய மரங்களும் பூக்களும் பொதுளியது காவணம் என்க. பந்தர் பார்க்க. காளி - சீற்ற மிக்கவள் சீற்றம் மிக்குப்பேசுபவள், தலைவிரி கோலமாகத் திரிபவள், மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க் கூச்சல் போட்டு ஊரைக்கூட்டுபவள் ஆகியவளைக் காளி என்பது வழக்கு. சீற்றத்திற்கு வடிவமாகக் காளியைக் கருதுபவர் வழியே வந்த வழக்கம், இவ்வாறு நிலைத்துவிட்டது. காளி என்பதற்குக் கரியவள் என்பதே சொன் முறைப் பொருளாம். காளன் - கரியன்; ஆண்பால். காற்றாடல் - வணிகம் நடவாமை உலாவப் போதல் காற்றாடல் எனப்படும். வேலையொன் றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக்காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது. ஓய்வு பெற்ற முதியவர் காலார நடப்பதே அக்காற்றாடலாகும். ஆனால், சிலர் கடையில் பொழுதெல்லாம் போனாலும் வணிகம் ஒன்றும் நடவாது. பொருள்கள் கடையில் இருந்தும் வாங்குவார் இல்லாமல் வராமல் - காத்துக்கொண்டிருப்பதே கடைக்காரர் பணியாக இருக்கும். அக்கடையைக் காற்றாடுவ தாகக் கூறுவது வழக்கு. கடை காற்றாடுகிறது என்பர். கடை ஓடாது என்பதற்கு முன்னிலை காற்றாடலாம். காற்றுப்பிரிதல் - அடைப்பு அகலல் மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை. உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் இவை. இவை வெளிப்படாமை பலப்பல துயர்க்கு இடனாம். இவை பிரிதலைக் காற்றுப் பிரிதல் என்றும், காற்றுப்பரிதல் என்றும் கூறுவர். காற்றுப் பிரிந்தால், அடைப்பு விலகியது என்னும் குறிப்பாம். காற்று மூச்சுக்காற்றைக் குறியாமல் வெளிப்படுத்தவேண்டிய தீக்காற்றைக் குறித்தலால் வழக்கு வழிப்பட்டதாயிற்றாம். கிண்டிக்கிழங்கெடுத்தல் - மற்றவை வெளிப்படுத்தல், கடுந்துன்புக்காளாக்கல் கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் - எட்டடி பத்தடி ஆழத்திற்கு மேலும் இருப்பது. அதனைத் தோண்டி யெடுத்தல் அரும்பாடாம். இவற்றில் இருந்து கிண்டிக்கிழங் கெடுத்தல் வழக்கு உண்டாயது. கிண்டல் என்பது இருக்கு மிடம் காண்டல்; தடவித் தெரிதல். பின்னர் அதன் வழியே அகழ்ந்து கிழங்கெடுத்தல். அதுபோல ஒரு மறைவுச் செய்தியைத் தெரிவதற்குத் துப்புத் துலக்குதலும் அதன் தடம்பற்றி ஆய் தலும் உண்மை கண்டுபிடிக்கும் வழிகளாம் காவல் நிலையம் போனான், கிண்டிக்கிழங்கு எடுத்துவிட்டனர். என்பதில் கமுக்க வெளிப்பாடும் வெளிப்படுத்திய வகையும் வெளிப்படுவனவாம். கிண்டிக்கிளறுதல் - துருவித் துருவிக் கேட்டல் கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத் தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக்கோழிவிடுவது இல்லை. பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும் என்பது பழமொழி. சிலரிடம் சில செய்திகளை வாங்குவதற்காகக் கிண்டிக் கிளறுவது உண்டு. சினமூட்டியும். சிறுமைப்படுத்தியும், துன் புறுத்தியும் செய்திகளைப் பெறத்துடிப்பர். காவல் துறையினர், துப்பறிவாளர், வழக்கறிஞர் ஆகியோர் பிறரைக் கிண்டிக் கிளறுதலில் தேர்ச்சி மிக்கவர்கள். தன்னைத்தானே கேட்டுக் கொள்ளலும், பிறரை அறிவுடையராக்க வினாவுதலும் கிண்டிக் கிளறல் ஆகாது. குறை காண்பதற்காகக் கேட்பதே கிண்டிக் கிளறல் என்க. உண்மையறியவும் இது துணையாவதுமுண்டு. கிழிகிழியென்று கிழித்தல் - வசை கூறல் கிழி என்பது துணி. கிழியஞ்சட்டி என்பதும், பொற்கிழி என்பதும் துணியென்னும் பொருள் தரும் கிழி வழிப்பட்டனவே. கிழிப்பதால் கிழி எனப்பட்டது. அறுவை, துணி என்னும் சொற் களையும் எண்ணுக. துணியைக் கிழிப்பதுபோல், மானம் கெடப் பேசுதலைக் கிழித்தல் என்பது குறித்தது. மானம் போர்வை, சட்டை போல் வது. போர்த்து மூடும் அதனைக் கிழிப்பதுபோல மானப் போர் வையை அல்லது சட்டையைக் கிழித்து ஊருக்கு இழிவு வெளிப் படச் செய்வது கிழி யாயிற்று. கிழித்தலும் ஆயிற்று, பல்கால், பல்வகையில் மானங்கெடப் பேசுதல் கிழி கிழி என அடுக்காயிற்று. கிழித்தல் - வைதல், மாட்டாமை. கிழித்தல் துணி. தாள், தோல் முதலியவற்றைக் கிழித்தலை விடுத்து வசைப் பொருளில் வருவது இக்கிழித்தலாம். கிழி கிழி என்று கிழித்துவிட்டார் என்றால் சொல்ல மாட்டாத, வாயில் வராத சொற்களையெல்லாம் சொல்லி வைதார் என்பது பொருள். மறைத்து வைத்திருந்த செய்திகளை யெல்லாம் வெளிப்படுத்த வசை கூறலால் முகத்திரையைக் கிழித்தல் போல வழக்கில் வந்ததாகலாம். கிழித்தல் என்பது செய்யமாட்டாமைப் பொருளிலும் வழங்குகின்றது நீ செய்து கிழிப்பது எனக்குத் தெரியாது? என்பதில் செய்யமாட்டாய் என்பது கருத்தாகும். கிழித்துக் கொண்டிருத்தல் - கிறுக்காதல் கிறுக்குப் பிடித்தவர்களுள் சிலர் தாள், துணி ஆகியவை கிடைத்தால் அவற்றைக் கிழித்துக் கிழித்து ஏதோ பெருஞ் செயல் செய்வதாக மகிழ்வர். அதனைக் கண்டவர்கள், கிழித்துக் கிழித்துப் போடுதலைக் கிறுக்குத் தன்மை எனக் கூறினர். அவ்வகையால், கிழித்துக் கொண்டிருத்தல் என்பதற்குக் கிறுக்குப் பொருள் ஏற்பட்டது. துணிக்கடையில் கிழிப்பதைக் கிறுக்கு என்பவரார்? பயனின்றிக் கிழித்தலே சுட்டப்படுவதாம். சிலருக்கு ஏதேனும் அறிவுரைத்தால், அவ்வறிவுரை அவர்கள் ஏற்கத்தக்கதாக இல்லாவிடில் நான் என்ன கிழித்துக் கொண்டா இருக்கிறேன்; இதையெல்லாம் உன்னிடம் கேட்க என்பது வழக்கம். குட்டியைத் தூக்கி ஆட்டில் போடல் - முறைகெடச் செலவிடல் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் என்பதைக் காண்க. குட்டுப்படுதல் - தோல்வியுறல்; இழிவுறல் தவறுக்குத் தரும் தண்டனையாகப் பள்ளிகளில் தரப் படுவது குட்டு. ஆசிரியர் குட்டுதல், பிற மாணவர் குட்டுதல். தானே குட்டிக் கொள்ளுதல் என மூவகையால் நிகழ்வதுண்டு, குட்டுப்படுதல் குறைவு என எண்ணம் உண்டாகி அதனைத் தவிர்க்க முயலவேண்டும் என்பதே அதன் நோக்கு. குட்டுபவன் தகுதியுடையவனாக இருத்தலாவது வேண்டும் என்னும் நினை வால் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்னும் பழமொழி எழுந்தது. இது தோல்விப் பொருளது. இனிக் குட்டுதல் இப்பொருளில் இருந்து இழிவுபடுத்துதல் என்னும் பொருளுக்கு மாறியபோது குட்டக் குட்டக் குனி பவனும் கோழை; குனியக் குனியக் குட்டுபவனும் கோழை எனப்பழமொழி எழுந்தது. குட்டுதல் என்பது குட்டுதலால் உண்டாகும் இழிவுப் பொருளுக்கு உண்டாயிற்று. குட்டை உடைத்தல் - கமுக்கத்தை வெளிப்படுத்தல் குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் இடித்தல் ஆகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு பொருள் இருப்பின் வெளியே தெரியாது. ஆதலால் குட்டு என்பது மூடிவைத்தலைக் குறித்துப் பின்னர் மூடிவைக்கப்பட்ட அல்லது கமுக்கமான செய்தியைக் குறிப்ப தாக வளர்ந்தது. இருவர் நட்பாக இருந்தகாலையில் உரிமையால் என் னென்னவோ பேசியிருப்பர்; செய்திருப்பர். அவர்களுக்குள் ஒரு பகைமை உண்டாகி விட்டால் பழைய பேச்சு செய்கை ஆகிய வற்றில் உள்ள கேடுகளைச் சுட்டிக் காட்டப்போவதாக அச் சுறுத்தும் முகத்தான் உன் குட்டை உடைத்து விடுவேன்; ஒழுங் காக இரு என்பர். உன் குட்டு என்கைக்குள் இருக்கிறது; பார்த்துக் கொள்கிறேன் என்பதும் உண்டு. குடலை உருவல் - படாத்துயர்படுத்தல், வசையால் வாட்டல், நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும் குடலை உருவி மாலை போட்டுவிடுவார் என்பதில் உள்ள குடலை உருவல் அச்செயல் செய்வதைக் குறிப்பதில்லை. குடலை உருவுவது போலக் கொடுமைப்படுத்துவார் என்றும் தன்குடலைத் தானே உருவுமாறு வசை பொழிவர் என்றும் கொள்ள வேண்டிய வழக்காம். குடலை உருவுதல் புலவூணியர் செய்வன. இக்குடலை உருவுதலோ சீற்றமிக்கார் எவரும் செய்வன. குடியர் - மதுக்குடியர் குடிப்பது எல்லாம் குடியே எனினும், குடி என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக் குடி என்பது வழக்கத்தில் உள்ளதாம். குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு என்னும் பழ மொழியில் வரும் குடிகாரன் குடியனாதல் அறிக. குடியிருப்ப வன் என்னும் பொருளை விலக்கிக் குடிப்பவன் என்னும் பொரு ளில் வருதல் அறிக. குடுமிப்பிடி - கெடுபிடி என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்து விட்டான் என்ன செய்வேன்? வில்லாததை விற்றாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்? என்பது கடன் நெருக்கடிப்பட்டார் சொல்லும் வழக்கு. குடுமியைப் பிடித்து விட்டால் தப்புதல் அரிது. சிக்கம் என்பது குடுமி. சிக்கெனப் பிடித்தல் என்பதும் அது. குடுமியில் சிக்கு உண்டாகும். அதனை விலக்குவது பக்குவமாகச் செய் தாலேயே துன்பின்றி இயலும். இல்லாக்கால் வலியும் உண்டாம்; அழிவும் உண்டாம். ஆதலால் குடுமிப்பிடி நெருக்கடி செய்து வைத்துவிட்டுப்போ என்ற நிலையில் அமைவதாம். குடுமியைப் பிடித்தல் - அகப்படுத்தல் சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாப்பாடு படுத்தி விடமுடியும். ஆதலால் குடுமியைப் பிடிக்க இடந்தருதல் இல்லை. குடுமியைப் பிடித்தல் ஆகாது என்பதும், குடுமி அவிழ்ந்தவன் அதனைக் கட்டும் வரை அவனொடு போரிடக் கூடாது என்பதும் முன்னையோர் போர் முறை. குடுமியைப் பிடித்துக் கொண்டவன் விரும்பியபடியெல் லாம் ஆட்டி அலைக்கழிப்பது போலச் சிலவகை எழுத்துகள், கமுக்கச் செய்திகள் கிடைத்துவிட்டால் அவற்றைக் கொண்டு அலைக்கழிக்கும் கொடுமை நிகழ்த்துவர். அத்தகையவர். உன் குடுமி என் கையில் இருக்கிறது. அங்கே இங்கே திமிர முடியாது என்பர். குத்திக்காட்டல் - பழங்குறையை எடுத்தல் கூறல் குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்திக்குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத்தனமும் உடையது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும். அதனைக் காலங் காலமாக சொல்லிச் சொல்லிப் புண்படுத்துதல் குத்திக் காட்டலாம். அதன் கடுமையைக் காட்ட ஒருபக்கம் குத்தி ஒரு பக்கம் வாங்குவான் என்பர். இடித்துரைத்தல் என்பதற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. ஆங்குக் காண்க. குதிர் - சுற்றுப் பருத்தல். குதிர் என்பது தவசம் போட்டு வைக்கும் குலுக்கை ஆகும். இதனைப் பழங்காலத்தவர் கூடு என வழங்கினர். தவசம் போட்டு வைக்கும் குதிர் அடி சிறுத்து இடை பெருத்து முடி சிறுத்துத் தோன்றும், அதுபோல் இடை சுருங்க வேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் குதிர் போல இருக்கிறாள் என்றும், குந்தாணி போல இருக்கிறாள் என்றும் உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். குதிர் என்பது இவண் இடுப்பு விரிவைக் குறித்ததென்க. குதிர்தல் - ஆளாகியிருத்தல். குதிர் ஓரிடத்திலேயே இருக்கும். அதனை வேறிடத்திற்கு அகற்றி வைப்பதோ மாற்றி வைப்பதோ இல்லை. அதுபோல் வீட்டின் ஒரு பகுதியில் அதற்கென அமைக்கப்பட்ட ஓரிடத்தில் பூப்பு அடைந்த பெண்ணை வைத்திருப்பது அண்மைக்காலம் வரை நிகழ்ந்த வழக்கம். அதனால் அவ்வோரிடத்திலேயே நீராட்டு நிறைவுவரை வைக்கப்பட்டிருத்தல் குதிர்தல் எனப் பட்டது. குதிர்ந்திருக்கிறாள் எனின் ஆளாகியிருக்கிறாள் என்பது பொருளாம். குதிரையில் வருதல் - குடிமயக்கில் தள்ளாடிவருதல். கள் வெண்ணிறமானது. அதனால் வெள்ளை எனப் படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் தண்ணீர் என்றும் வழங்கப்படும்; குடித்தவன் தள்ளாடித் தள்ளாடி நடப்பான். அந்நிலையில் உயர்ந்தும் தாழ்ந்தும் அவன் வரும் தோற்றம் குதிரைமேல் வருபவன் தோற்றத்தை விளக்கும். ஆதலால் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வருபவனை வெள்ளைக் குதிரையில் வருகிறான் என்றோ குதிரையில் வரு கிறான் என்றோ கூறுவது வழக்காயிற்று. குதிரையில் வருதல், தள்ளாடிக் குலுங்கி வருதல் என்னும் பொருளுக்கு உரிய தாகியது. குந்தாணி வேர்விடல் - நடவாதது நடத்தல் குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன் படுத்துவர். குந்தாணி, சிந்தாமல் சிதறாமல் இடிக்கப்பயன்படும். இரும்பால் ஆகிய அது, கல்லின்மேல் இருந்து இடிபட அமைந்த அது வேர் விட்டுத் துளிர்த்தலுண்டா? ஈயாக்கருமி ஒருவன் ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து கொடுப்பானெனின் அவன் கொடை குந்தாணி வேர் விட்டது போல என்பர். நடவாதது நடத்தல் குறியாம் அது. குப்பை கொட்டல் - சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல் உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன். என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி. குப்பை கொட்டல் என்பது உரம்போடல், பயிர் ஊட்ட மாக வளர்தற்கு வேண்டியது குப்பை. அக்குப்பை கொட்டாக் கால் பயிர் வளமாக வளராது; வாய்த்த பயன்தராது. அப்படியே, நான் இக்குடும்பத்துக்கு உரமாகவும் ஊட்டமாகவும் இருந்து பாடுபட்டேன். அதற்குப் பயன் என்ன? உன் வசையும் திட்டும் அடியும் தடியும் அல்லாமல் கண்டதென்ன? என்னும் உவர்ப்பின் வழி வந்த வழக்குச் சொல் குப்பை கொட்டலாம். கும்புதல் - அடிப்பிடித்தல் சோறு கறி வேகுங்கால் நீர் இன்மையாலும் கிண்டி விடாமையாலும் அடிப்பிடித்து விடுவது உண்டு. அடிப்பிடித் தலைக் கும்புதல் என்பர். அதனால் ஏற்படும் நெடியைக் கும்பி மணக்கிறது எனக் கூறுவர். கும்பிப்போய் விட்டது; கும்பிக்கு ஆகாது என்பர். பின்வரும் கும்பியாவது வயிறு உடலுக்கு ஒவ்வாது என்பதாம். குப்பல், குப்புதல், குப்பை, குப்பென்று முளைத்தல், குப்பென்று வியர்த்தல் என்பனவெல்லாம் செறிவுப் பொருளன. ஓரிடத்துத் திரண்டு பற்றிக் கொண்டது கும்புதலாம். கும்மிய கருப்புக் கட்டி இனிப்பும் கெட்டு, சுவையும் கெட்டுச் சேர்ந்ததையும் கெடுத்துவிடும். குலுங்காமல் - நாணமில்லாமல் மானங் கெடுமாறு ஒரு சொல்லைச் சொன்னால் உடனே தலை தாழும்; மனம் நடுங்கும்; கால்கைகள் உதறும்; இது தாங்கிக் கொள்ள முடியாமல், இப்படியாகி விட்டதே என்னும் மானவுணர்வால் ஏற்படும் நிலை. இன்னும் சிலர்க்கு இத்தகு மானக்கேடாம் நிலை உண்டாகும்போது தாங்கிக் கொள்ள மாட்டாத சீற்றம் உண்டாம். என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தானும் அறியாமல் ஏதேதோ செய்துவிடுவர். இவ்விரு நிலைகளிலும் உடல் குலுங்கும். மானங்கெடுக்கும் போதும் குலுங்காமல் ஒருவர் இருந்தால் வெட்கங் கெட்டவன் எனப்பழிப்பர். எவ்வளவு பேசினேன்; குலுங்காமல் இருக்கிறான். மானம் வெட்கம் இருந்தால் அப்படி இருப்பானா? என்பர். ஆதலால் குலுங்குதலுக்கு நாணுதல் பொருள் உண்மை விளங்கும். குழைதல் - அன்புளதுபோல் நடித்தல் சோறு குழைதல் மண்குழைத்தல் என்பவை வழக்கில் உள்ளவை. நாய் வாலைக் குழைத்தல் கண்கூடு. மரத்தில் குழைகள் எழுந்தும் வீழ்ந்தும் பிரிந்தும் சேர்ந்தும் ஆடும். அவ்வாறு கூத்து ஆடுதல் குழைந்தாடுதல் எனப்படும். இளக்கமாதல், நெகிழ்தல், வளைதல், தழுவி ஆடுதல் என்பனவெல்லாம் குழைதல் பொருளாக அமைந்தன. என்ன குழைவு பெரிதாக இருக்கிறது; ஏதோ ஆக வேண்டும் போல் இருக்கிறது என, குழைபவரைக் கண்டு அதனைப் புரிந்தவர்கள் கூறுவதுண்டு. குழைதல் மெய்யன்பால் நிகழ்வது அன்று. பொய் யான நடிப்பு என்பதால்தான் இகழ்ச்சிக்கு உரியதாயிற்று. குழையடித்தல் - ஏமாற்றல். நோய் நொடி என்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மந்திரிப்பவர்கள் வேப்பங்குழையை எடுத்து வீசித் தண்ணீர் தெளிப்பதுண்டு. நம்பிக்கையால் நோய் நீங்கியதாகச் சொல் வதும் உண்டு. ஆனால் எல்லார்க்கும் அம்மந்திரிப்பு பயன்படுவ தில்லை. அதனால் பயன்படாதவர் அம்மந்திரிப்பை அல்லது குழையடிப்பை ஏமாற்றுதல் எனக் கூறினர். அதிலிருந்து அப் பொருள் தருவதாயிற்று. பனிக்கட்டி வைத்தல், குளிப்பாட்டல், தலைதடவல் என்பனவெல்லாம் குழையடித்தல் போன்ற ஏமாற்றே எனினும் நுண்ணிய வேறுபாடுள்ளவை என்பதை ஆங்காங்கு அறிக. குளிப்பாட்டல் - வயப்படுத்துதல், புகழ்தல். நீரால் குளிப்பாட்டல் காணக் கூடியது. குழந்தை, முதியர், நோயர் ஆகியோரைத்தாம் குளிப்பாட்டல் என்பது இல்லாமல் செல்வர்களையும் குளிப்பாட்ட ஆட்கள் உண்டு. இக்குளிப் பாட்டுதல் மகிழ்வளிப்பது! குழந்தைகள் குளிப்பாட்டலை வெறுத்தாலும் தானே குளிக்க விரும்புவது வெளிப்படை. குளிப் பாட்டலிலும் மிகுந்த இன்பம் தருவது புகழ்க் குளிப்பாட்டல். அத்தகையர், இத்தகையவர் என்று வாய் குளிரப்பாராட்டினால் மனங்குளிர்ந்து போகின்றவர்கள் மிகுதி. அம்மிகுதியை அறிந்து கொண்டவர்கள். தங்களுக்கு வேண்டுவதை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புகழ்க் குளிப்பாட்டுதலில் கைதேர்ந்த கலை வல்லராக விளங்குகின்றனர். குளிப்பாட்டல், மனம் கிளு கிளுக்கப் பாராட்டுதலாகப் பொருள் படுவதாயிற்று. குறுக்கே விழுதல் - தடுத்தல் ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து என் வாக்கைக் கேட்டுவிட்டுப்போ என்ப தற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல் வழக்கம். பேருந்து நிறுத்தம், தொடர் நிறுத்தம், சாலை மறிப்பு, தொழிலக மறிப்பு எல்லாம் இவ்வகைப்படுவனவே. இவ்வழக்கம் குறுக்கே வந்து விழாமலும், ஆள் நேரே கூட வராமலும் கூட எழுத்து வகையாலோ, சொல்வகையாலோ ஏற்படும் குறுக் கீட்டையும் குறுக்கே விழுதலாகக் குறிக்கும் வழக்கு உள்ளது. குறுக்கே விழுந்து தடுக்காதே ; தடுத்தால் பிறகு பார் என வஞ்சினம் கூறலும் உண்டு. கூகம் - மறைவு கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப் படுவது இல்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும் ; இரை தேடித் தின்னும் ஆதலால் கூகை பகலில் மறைந்தே இருப்பதை அறிந்தவர்கள், மறைத்து வைக்கும் அல்லது மறை வான செய்தியைக் கூகம் என்றனர். கூகை போல் மறைந்து கிடக்கும் செய்தி என்பது பொருள். சிலர் தங்கள் மனக் கருத்தை வெளியிடவே மாட்டார். அத்தகையவரைக் கூகமானவர் என்பர். நான் சொல்வது கூகமாக இருக்கட்டும் என்று எச்சரிப்ப தும் உண்டு. கூகமாக இருந்து ஊரைக் கெடுத்து விட்டான் என்பது ஒரு சிலர்க்கு ஊரவர் கொடை. கூகை மறைவு, கூக மறைவாகியது. கூட்டிக் கொடுத்தல் - இணைசேர்த்து விடல் களத்தில் பொலிபோடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் கொடுப்பது நடைமுறை. கணவன் மனனவியர் மனத்தாங்கல் கொண்டு பிரிந்துவிட்டால் அவர்கள் வாழ்வில் அக்கறை யுடையவர்கள் அவர்களைக் கூட்டிவைத்தல் உண்டு. ஆனால் இக்கூட்டிக் கொடுத்தல் அவற்றில் வேறுபட்டதும் இழி வுடையதுமாம். ஒருவன் பாலுணர்வுக்கு இரையாக ஒருத்தியைத் தம் பயன் கருதிக் கூட்டிக் கொடுத்து இன்பப்படுத்துவது கூட்டிக் கொடுத்தலாகப் பழிக்கப்படும். அத்தொழிலால் பொருள் ஈட்டி அப்பொருளால் பழியை மறைக்கத் தேர்ந்தாரும் உளர். கூட்டிக் கொண்டு போதல் - உடன்போக்கு. குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதலுண்டு. கண்டறிந்தவர்கள், கண்டறியாதவர்க்கு வழி காட்டியாக இருந்து சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டு போத லும் உண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக் கொண்டு போதல் என்னும் அளவால் கருதுவது இல்லை. ஒருகாதலன் தன் காதலியைப் பெற்றவரும் மற்றவரும் அறியாவகையில் வேறிடத்திற்கு அழைத்துக் கொண்டு போதலே கூட்டிக்கொண்டு போதலாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பழங்கால இலக்கண இலக்கியங்கள் உடன் போக்கு என்று கூறும். கூட்டுதல் - திருமண முடித்தல் உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய் என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல் என்பது திருமணம் முடித்தலைக் குறிக்கும். முதலாவது மணமகள் மேடைக்கு வருவான். அதன் பின், பெண்ணை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்து அவ னுக்குப் பக்கத்தில் அமர்த்தித் திருமணம் நிகழ்த்துவது நடை முறை. அதனால் ஆண்மகனோடு, பெண்மகளைக் கூட இருக்கச் செய்யும் நிகழ்ச்சி கூட்டுதல் எனப்பட்டதாம். இக்கூட்டுதல் முறைவழி ; நிறை வழி. ஆனால் கூட்டிக் கொடுத்தல் என்பது முறைகேட்டு வழி ; இழி வழி. கூடாரம் போடல் - தங்கிவிடுதல் கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடு மாடுகளை மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்குக் கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி பாசி விற்பவர்கள், கூத்து நிகழ்த்துபவர். சர்க்கசு எனப்படும் வளைய ஆட்டம் நிகழ்த்துநர், படை வீரர், பாடி தங்காளர் ஆயோர் கூடாரம் அடித்துத் தங்குதல் இதுகால் பெருகிவரும் காட்சியாம். புறம் போக்கு நிலத்தில் திடுமெனக் கூடாரங்கள் தோன்றிப் பின்னர் வீடாதலும் புற் றீசலான நகர்ப் புறங்களில் காண்பதே. கூடாரம் அடித்தவர்கள் ஆங்கே தங்குதல் உண்மையால், பல நாள் தங்கும் விருந்தாளரைக் கூடாரம் போட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கமாயிற்று. என்ன, உங்கள் வீட்டில் கூடாரம் போட்டு விட்டார்களா? என விருந்தாளிகள் தங்கிவிடக் கண்ட பக்கத்து வீட்டார் கேட்பது வழக்கம். கெடுபிடி - நெருக்குதல் கெடுவாவது தவணை. இன்னகாலம் என வரையறுக்கப் பட்டது கெடுபிடியாகும். அந்நாளில் செலுத்தவேண்டியதைச் செலுத்தாவிட்டாலும், வந்து சேரவேண்டிய ஆணை நடை முறைப்படுத்தத் தவறிவிட்டாலும் பிடிப்பாணை பிறப்பிப்பது அரசாணை; நடுமன்ற ஆணையுமாம். அவ்வாணையே கெடுபிடி எனப்பட்டு, அங்கும் இங்கும் நகராமல் கட்டாயம் உட்பட்டே தீரவேண்டிய நெருக்குதலைக் குறிப்பதாகப் பொதுமக்களால் குறிக்கப்படுவது கெடுபிடியாகும். அவன் கெடுபிடியைத் தப்ப முடியாது; இந்தக் கெடுபிடி செய்தால் என் செய்வது என்பவை வழக்குகள். கை - ஐந்து கை என்பது கையென்னும் உறுப்பையோ, ஒழுக்கத் தையோ, கைப்புச் சுவையையோ குறிப்பதை அன்றி ஐந்து என்னும் பொருளில் வழங்குவதும் உண்டு. ஒரு கைவிரல்கள் ஐந்து தானே! கைவிரலைக் கொண்டே மாந்தன் எண்ணிப் பழகினான். அதனை எண்ணிக்கை என்றும் சொன்னான். ஒரு கைவிரல் ஐந்து. இருகை விரலும் சேர பத்து. அதனாலே எண்கள் பதின் மடங்காக வழங்குகின்றன. இனிக்கால் விரலையும் கூட்டி எண்ண இருபது விரல்கள் ஆகின்ற வகையில் இருபதுவரை எண்ணுதலும் உண்டாயிற்று. ஆங்கில எண்களை அறிக. ஒரு கை இலை என்றால் ஐந்திலை என்பது பொருள். அடுக்கு, பூட்டு என்பதும் ஐந்தே. அவற்றைக் காண்க. கைகாரன் - திறமையாளன். சூழ்ச்சியாளன், ஏமாற்றாளன். அவன் பெரிய கைகாரன் என்றால் திறமையாளன் என்பது பொருள். ஆனால் அத்திறமை பாராட்டுக்குரிய பொது நலத் திறமையைக் குறியாமல் தன்னலச் சூழ்ச்சியைக் குறிக்கும். அவன் பின்னால் போகாதே; அவன் பெரிய கைகாரன்; உன்னை ஐயோ என்று விட்டுவிடுவான் என்பதில் அவன் சூழ்ச்சித் திறமும் செயல்விளைவும் விளங்கும். கைகாரன் முதல்வேலை நம்பவைத்தல்; அடுத்து நம்பிய வனே சுற்றி வளையவரச் செய்தல்; அதன்பின் வலையுள் படும் மான் போலவும், மீன்போலவும் அவனே வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளவைத்தல் இவையெல்லாம் கைகாரன் வேலை. கை என்பது செயல் திறம் என்னும் பொருளது. அதன் எதிர்மறையாவது இது. கைகொடுத்தல் - உதவுதல் ஏறமாட்டாதவரைக் கைதந்து மேடேற உதவுதல் உண்டு. வெள்ளத்துள் வீழ்வாரைக் கை கொடுத்துக் கரையேற்றுதல் உண்டு. அக் கைகொடுத்துத் துயர் தீர்க்கும் நடைமுறையில் இருந்து கைகொடுத்தல் என்பது, உதவுதல் பொருள் தருவ தாயிற்று. நீங்கள் கொஞ்சம் கைகொடுத்தால் மேடேறிவிடுவேன் என்பதில் கைகொடுத்தல் என்பதன் உதவிப் பொருளும், மேடேறி விடுவேன் என்பதன் உதவிப்பேற்றின் விளைவும் வெளிப்படும் கழகம் கைகொடுத்தால் நூலெழுதுதற்கே பொழுதெலாம் செலவிடுவேன் என்று பாவாணர் குறிப்பிடுகிறார். கை தூக்கல் - உதவுதல், ஒப்புகை தருதல் கைகொடுத்தல் போல்வதே கைதூக்கலுமாம், கைதூக்கி விடுதல் என்பது பள்ளத்துள் இருப்பாரை மேட்டில் சேர்த்தல். அது போல், கடன்துயர், வறுமை முதலியவற்றுக்கு ஆட்பட்டு இடர்ப்படுவார்க்கு உதவுவதால் அவர்கள் அவ்விடர் நீங்குவர். அந்நிலையில் நீங்கள் கைதூக்கி விட்டதால் தான் கவலை யில்லாமல் வாழ்கிறேன் என நன்றி பாராட்டுதல் உண்டு. இனி, கைதூக்கல் என்பது ஒப்புகை தருதலையும் குறிக்கும். கைதூக்கச் சொல்லி வாக்கெடுப்பு நடத்துவதும் நடைமுறையே. என் கருத்தைச் சரி என்று ஏற்பவர்கள் கைதூக்குங்கள் என்பதில் ஒப்புகைப் பொருள் உள்ளமை தெளிவாம். கைதூக்கி - சொன்னபடி கேட்டல் கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால் அது, உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும். இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக் காமல் இருத்தலுண்டு. இக் கைதூக்கி அத்தகைத்தன்று. சரி யானது, தவறானது என்று பார்த்துக் கைதூக்காமல், என்ன சொன்னாலும் சொன்னவர் கருத்தை ஏற்பதாகத் தூக்குவதாம். தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை என்பது இலக்கியக்காட்சி. அதற்கு உலகியல் காட்சி கைதூக்கியாம். முன்னால் இருப்பவன் கையைத் தூக்கிக்காட்டினால் கண்ணாடி அப்படியே காட்டு மன்றோ. அதற்கு மாறாகக் காட்டாதே. அத்தகையனே கைதூக்கி என்க. கைத்தூய்மை - களவு திருட்டுச் செய்யாமை கைசுத்தம் என்பர். கைசுத்தம் நீரால் கழுவுவதால் ஏற் படும். இது, களவு, திருட்டு எனக்கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் சுத்தமாக இருந்தால் எங்கும் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்பர். கைசுத்தம் வாய் சுத்த மான ஆளா எனப்பலரிடம் கேட்டுப்பார்க்காமல் எடுபிடி வேலை வீட்டு வேலைக்குக் கூட அமர்த்துவது இல்லை. நம்ப விடவேண்டும் அன்றோ! சிலர் செய்கின்ற கருமித்தனத்தால் கையும் வாயும் தூயதாக இருக்கவேண்டும் என எண்ணுபவரும் தன்நிலைமாறிப்போக இடமாவதும் கண்கூடு. கைந்நீளல் - தாராளம், அடித்தல் , திருடல் கைந்நீட்டல் கொடை என வழங்கப்படுகிறது. அவன் கைநீட்ட மாட்டான் என்பது கொடான் என்னும் குறிப்பின தாம். கைந்நீளம் என்பது கையின் நெடுமையைக் குறியாமல் நீட்டிக் கொடுக்கும் கொடையைக் குறிப்பதாயிற்று தருகை நீண்ட தயதரன் என்றார் கம்பரும். கைநீட்டல் என்பது அடித்தல் பொருளும் தரும். இனிக் கண்டபடி கையை நீட்டாதே என்று கண்டிப்பது உண்டு. தன்னிற் சிறுவனை அடிக்கும் சிறுவனை இவ்வாறு கண்டிப் பதைப் பார்த்தால் கைந்நீட்டலுக்கு அடித்தல் பொருளுண்மை விளங்கும். கைநீளல் திருடுதல் பொருளில் வழங்குவதும் உண்டு. நீட்டி எடுப்பதுதானே திருட்டு. கைப்பிடித்தல் - மணமுடித்தல் கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திரு மணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளை யின் கையில் பெண் கையைப் பிடித்துத் தருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மணமேடையை விடுத்துச் செல்லும் கணவன் பின்னே அவன் கையைப் பற்றிக் கொண்டே மனைவியும் செல்லு தல் வழக்கம். கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் என்பது ஆண்டாளார் மொழி. அகத்திட்ட கையை அகலாதே என்பதாகக் கவவுக்கை நெகிழாமல் வாழ்க வென்னும் வாழ்த்து சிலம்பில் இடம் பெற்றுள்ளது. கைபோடல் - தழுவுதல் உரிமையல்லா ஒருத்தியைத் தழுவுதல் கைபோடலாகக் குறிக்கும் வழக்குண்டு. கைபோடுதல் என்பது பாலுறவைச் சுட்டலும் வழக்கே. உரிமையிலா இழிவுப் பொருளில் அன்றி, உரிமையாம் உயர் பொருளில் இது வழங்குமாறு இல்லை. என் மேல் கைபோட்டுவிட்டாய்; அந்தக் கையை ஒடிக்கவில்லை பிறகு பார் என்பது ஒவ்வாக் கைபோடலை ஒழித்துக்கட்ட வெழும் வஞ்சினம். மாடு பிடிக்கும் தரகர் விலைபேசத் துணியைப் போட்டுக் கையை மறைத்துப் பேசுதலும் கை போடலாம். கையடித்தல் - உறுதி செய்தல். ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் கையடித்துத் தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து எடுப்பதே கையடித்தலாம். உறுதி (சத்தியம்) சொல்வார் தலையில் கைவைத்தல். துணி மேல் கைவைத்தல், புத்தகத்தின்மேல் கைவைத்தல், தாங்கள் மதிக்கும் பொருள்மேல் கைவைத்தல் எனப் பல வகையால் சொல்வதுண்டு. பரங்குன்றம் அடி தொட்டேன் என மலையின் தாழ்வரையைத் தொட்டு உறுதி மொழிந்ததைப் பரிபாடல் சொல்லும். மாடுபிடிப்பவர் கையடித்தல் உண்டு. சக்கை வைத்தல், நீர்வார்த்தல் என்பனவும் கையடித்தல் போல்வனவே. கையாலாகாதவன் - செயலற்றவன் கையிருக்கும். எடுப்பான் ; கொடுப்பான் ; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறு வான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ தொழிற் சாலைக்கோ பொறுப்பாளனாக இருப்பான். தான் திட்ட வட்டமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் சொல்வார் சொற்படி செய்வான் ; அதிலும் நாளும் பொழுதும் புதுப்புது ஆள்களை நம்பி நிலைப்படாச் செயல் செய்வான். இத்தகையனைக் கையாலாகாதவன் என்பர். தன் மூப்பாகச் செய்ய மாட்டாதவனே கையாலாகாதவன் என்க. அவனை நம்ப வேண்டா; அவன் கையாலாகாதவன் என்பது வழக்கு. கை என்பது செயல் என்னும் பொருளதாம். கையாள் - குறிப்பறிந்து செய்பவன். கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந் நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான். அவன் எதிர்காலத்தில் கைகாரனாக விளங்கத்தக்கவ னாவான். கையாள் ஏவலன் அல்லன். அவன் ஏவிச் செய்பவன், முறையான பணியாளன், இவன் சூழ்ச்சியாளனுக்கும் வன்படி யாளனுக்கும் துணையாக நிற்பவன். எச்சிறு செயலும். எத்தீச் செயலும் உடன்படும் உள்ளத்தனே இக் கையாளனாம். கையோங்குதல் - வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல் கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இரு பக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலிய வற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும் இந்தக்கை ஓங்கிவிட்டது என்பது வெற்றி முகத்தைக் குறிப்பதாம், ஒருவன் செல்வப் பெருக்கு அடைந்தால் அவன்கை ஓங்கிவிட்டதாகக் கூறுவதும் வழக்கு. ஓங்குதல் - தூக்குதல். அப்பொருளில் இருந்து ஆட்டம், போர், பொருள் முதலியவற்றின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் இடமாகச் சொல்லப்படுவதால் வழக்குச் சொல்லாயிற்றாம். கொட்டுதல் - வசைமொழிதல், கொடுத்தல், கொட்டுதல் என்பது ஒரு பொருளை ஒழுக விடல், சிதற விடல் என்னும் பொருளில் வருவது. தேள் கொட்டுதல் என்பதும் நச்சைக் கொட்டுவதாலும், மத்தளம் கொட்டுவது போல கொட்டுவதாலும் பெற்ற பெயராம். மழைக் கொட்டு கொட்டு என்று கொட்டியது என்பது ஒழுக விடுதல் அல்லது பொழிதலைக் குறித்தது. அதுபோல் வசைமொழிதலையும் வாரி வழங்குதலையும் கொட்டுதல் என்பது குறிக்கும். கொட்டாதே கொட்டி விட்டால் அள்ள முடியாது என்பது கூறிய வசை மாறாது என்பதைக் குறிப்ப தாம். அள்ளிக் கொட்டி விட்டான் ; அவனல்லனோ வள்ளல் என்பது கொடை. கொடித் தடுக்கல் - பாம்புதீண்டல். கொடி என்பது கொடிபோல் சுருண்ட பாம்பைக் குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது என்பது நாட்டுப்புற வழக்காகும். பாம்பு நெளிந்து செல்வதும், கொடிபோல் சுருண்டு கிடப் பதும் கொடியென உவமைப்படுத்தத் தூண்டியதாம். கொடு, கொடுக்கு என்பன வளைவு என்னும் பொருள் தருவன என் பதையும் கருதுக. கொடித் தடுக்கியது என்பதும் மங்கல வழக்காகக் கருதப் படுகிறது. கொடித் தடுக்கியவர்க்கு மஞ்சள் நீர் (தீர்த்தம்) மந்திரித்துத் தருவார் வழிவழியாக உளர். கொடுத்து வைத்தல் - எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல் அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடைய முடி யாமல் தவிப்பர். ஆனால் சிலர் சிலவாய்ப்புகளால் எளிமை யாக அதனை வரப்பெற்று விடுவர். அத்தகையரைக் கொடுத்து வைத்தவர் என்பது பெறமுடியாதவர் பேசும் உரை. கொடுக்க மாட்டாதவனும் சிலவேளைகளில் கொடுத்து விடுவான், தகுதி யில்லாதவனுக்கும் சில வேளைகளில் எதிர்பார்த்தது கிடைத்து விடும். அத்தகையவனும் கொடுத்து வைத்தவன் எனப்படுவான். முன்னமே கொடுத்து வைத்திருக்கிறான். இப்பொழுது மீளப் பெறுகிறான் என்பது பொருளாம். பெறுவான் தவம் என்னும் திருக்குறள் குறிப்பு நோக்கத் தக்கதாம். அவன் தவக்கோலமே பிறரைக் கொடுக்க வைத்தது என்பதாம். கொடைமானம் - பழித்தல் கொடையும் மானமும் நற்பொருள் தரும் சொற்களே எனினும் சில இடங்களில், இவ்விரண்டையும் சேர்த்துச் சொன் னால் வசைப் பொருளாக வருதலுண்டாம். அவள் கொடுத்த கொடைமானத்தை அள்ளி முடியாது என்பதில் கொடைமானம் வசவாகின்றது. கொடைப் பெருமையுடையது, நேர் எதிரிடைப் பொருளில் வழங்குகின்றது. தப்பு இல்லாதவன் என்னும் பொருளில் தப்பிலி வழங்குகின்றது. அது தப்புச் செய்பவரைக் குறித்து நிற்றல் போன்ற வழக்கு இது. கொண்டைபோடுதல் - நாகரிகமின்மை. மகளிர் கொண்டைபோடுதல் நம் நாட்டில் கண்கூடு. முன்னர் ஆடவரும் கொண்டை போட்டனர். கல்வியறிவு பெற்ற வரும், நகர நாகரிகம் வாய்ந்தவரும் கொண்டைபோடுவதை நாட்டுப்புறத்தாரின் நாகரிக மில்லாச் செயலாகக்கருதினர். அதனால், எவராவது ஏதாவது இடக்காகச் சொன்னாலும், குறைத்து மதிப்பிட்டாலும் கொண்டை போட்ட ஆளைப் பார்த்துக்கொள் என்று தலையைத் தட்டிக் காட்டுவர். இவ் வழக்கால், கொண்டை போடுதல் என்பது அறியாமை, நாகரிக மின்மை என அவர்கள் கருதும் பொருள் தருவதாயிற்றாம். கொசுவிரட்டல் - வணிகம் படுத்து விடுதல் ஈ விரட்டுதல் போன்றது இக்கொசு விரட்டுதலும். வெருட்டுதல் - அஞ்சி ஓடச் செய்தல். அது விரட்டுதலாக வழக்கில் உள்ளது. வணிகம் சிறப்பாக நடந்தால் வேலையாள், வாங்குவார், போவார் வருவார் எனப் பலர் இருப்பர். அந்நிலை இல்லாத போது கடைக்காரர் கை ஈயையும் கொசுவையும் ஓட்டுமே அன்றி, அளக்க, நிறுக்க வேண்டியிராதே. கொம்பு சீவல் - சினமுண்டாக்கி விடுதல் மாடுகளின் கொம்புகளைச் சீவுதல் வழக்கம் அதிலும் முட்டும் மாடுகளின் கொம்பைச் சீவி அதன்மீது குப்பிமாட்டி, அக்குப்பியில் சதங்கையும் போட்டிருப்பர் மாடு வருகிறது, தலையசைக்கிறது என்பவை அறியாமல் நெருங்கிச் செல்ல நேர்பவர்க்கும் அறிவுறுத்தித் தீமையில் இருந்து அதுவிலக்கும். ஆனால் அம்மாட்டின் கொம்பைச் சீவிவிட்ட அளவில் நின்று விட்டால், என்ன நிகழும்? மழுக்கைக் கொம்பிலும் கூரான கொம்பால் கொடுமையாகக் குத்திக் கொலைப்பழியும் புரியும். அவ்வாறே சிலர், சிலர்க்குச் சில செய்திகளைச் சொல்லிச் சூடேற்றிக் குத்துவெட்டு கொலைப் பழிகளுக்கும் ஆளாக்கி விடுவர். அது கொம்பு சீவி விட்டது போன்றதாம். கொழுத்தவன் - பணக்காரன், அடங்காதவன் கொழுப்பு என்பது கொழுமைப் பொருள்; ஊட்டம் தேங்கியுள்ள பொருள் கொழுப்பு. அக்கொழுப்பைக் குறியாமல், பணப்பெருக்கத்தைக் குறிப்பதாகவும் வழங்கும். அதனை விளக்க மாகக் கொழுத்த பணம் என்றும் கொழுத்த பணக்காரன் என்றும் கூறுவது உண்டு. உடல் வலிமை காட்டி அடிதடிகளில் முறைகேடாக ஈடுபடு பவனைக் கொழுத்தவன் என்பதும் வழக்கே. கொழுப்பு அடங்கி னால்தான் சரிக்கு வருவான் என்பதால் கொழுப்பு தடிச் செயலுக்கு இடமாக இருத்தல் அறிக. கொழுத்தவன் எல்லாம் ஒரு நாள் புழுத்து நாறும்போதுதான் உணர்வான் என்பதன் கொழுப்பு அடாவடித்தனத்தைக் குறிப்பதே. கொள்ளி முடிவான் - ஓயாது தீமையாக்குபவன் கொள்ளி - நெருப்பு; முடிவான் - முடிந்து வைப்பவன், தனக்கு முடிந்து வைப்பவன். சிலபேர் எப்போதும் ஏதாவது தீமையைக் குடும்பத்துக்கு ஆக்கிக் கொண்டே இருப்பர். அவரைக் கண்டாலே பெற்றவர் உடன் பிறந்தவர் கொண்டவர் கொடுத்தவர் ஆகிய அனைவ ருக்கும் என்ன செய்வாரோ என்னும் அச்சம் உண்டாகும். அத் தகையரைக் கொள்ளி முடிவான் என்பர். கொள்ளி முடி வானுக்கு எப்போது போக்காடு வருமோ, நமக்கு நிம்மதி வருமோ எனப் பெற்றவரையும் மற்றவரையும் படுத்தும் பேய்ப் பிறப்பனே கொள்ளி முடிவானாம். கொள்ளையில் போதல் - கொள்ளை நோயில் இறத்தல் கொள்ளை என்பது பெருங்களவை - ஊரெல்லாம் திரட்டியடித்துக் கொண்டுபோன பெருங்களவைக் குறிக்கும். கொள்ளை என்பது மிகுதிப் பொருளது. கொள்ளை விலை கொள்ளை கொள்ளையாய் விளையும். என்பவற்றில் கொள்ளை மிகுதிப் பொருளாதல் அறிக. அது போல், பலரை ஒருங்கே கொல்லும் கொடிய கழிச்சல் நோய் (காலரா) கொள்ளை நோய் எனப்படும். பெரியம்மை நோயும் ஒரு காலத்தில் (Chicken pox) கொள்ளை நோயாக இருந்தது. எலி வழியே பற்றும் பிளேக் (Plague) என்பதோ பெருங்கோள்ளை நோய். இந்நோய்கள் மக்களைப் பெரிய அளவில் வாட்டிய நாளில் கொள்ளையில் போதல் என்னும் வழக்கு எழுந்தது என்க. கொள்ளையில் போவான் என்பது வசையுரை. கொன்னுதல் - திக்குவாய் இயல்பாகப் பேசமுடியாமல் திக்கித்திக்கிப் பேசுபவரை நாம் காண்கிறோம். அவர் பேசும்போது அவர்படும் இடரால் நாம் வருந்தவும் செய்கிறோம். அவர் திக்குதல் நகைப்பை உண்டாக்குவதில்லை. அவர் மேல் பரிவையே உண்டாக்குகிறது. அவ்வாறு திக்குதலைக் கொன்னுதல் என்பதிலுள்ள முதற் சொல் கொன் என்பதாம். கொன்னுதல் உறுப்புக்குறையால் ஏற்படுவது. ஒருவகை, அச்சத்தால் ஏற்படுவதும் ஒருவகை அஞ்சும் நிலையில் கொன்னைச் சொல் இடைநிலையாகப் பயன்படுதலைக் குறிப்பார் தொல்காப்பியர் (739), முன்னோர் அதனை அப்பொருளில் வழங்கியுள்ளமை வியப்பாம். கோடி மண்வெட்டி - நிரம்பத்தின்னல் கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண் வெட்டி தேயாதது; கூரானது; நிரம்ப ஆழத்துச்சென்றும் அக லத்துச் சென்றும் மண்ணைப்பெருக அள்ளிவருவது. அம்மண் வெட்டிபோல் அள்ளி அள்ளித் தின்பவனைக் கோடி மண் வெட்டி என்பர். பெருந்தீனியன் என்பது பொருளாம். சோற்றுப்பானை, சோற்றுவண்டி, குப்பை வண்டி என்பன வும் பெருந்தீனியனைக் குறிப்பதே. சோற்றுத் துருத்தி என்றார் பட்டினத்தார். இத்தகையவர்களைக் கொண்டே சோறு கண்ட இடம் சுவர்க்கம் என்னும் புது மொழி எழுந்துள்ளதாம். குண்டோதரன் என்பது தொன்மவழக்கு. குண்டு = குழி, பள்ளம்; உதரன் = வயிறன். கோவிந்தா! கோவிந்தா! - எல்லாமும் போயிற்று இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது கோவிந்தா கோவிந்தா என்று சேர்ந்து சொல்லுவர். கோவிந்தன் தன் திருவடிப் பேற்றை அல்லது வைகுண்டத்தை அருளவேண்டும் என்பதற்காக வேண்டுவதாகக் குறிப்பர். ஆனால் கோவிந்தா கோவிந்தா என்பது இழப்பைக் குறித்தலால், அவர் கோவிந்தா ஆகிவிட்டார் என்றால் பொருளை எல்லாம் இழந்துவிட்டார் என்னும் பொருள் தருவதாக வழக்கில் வந்து விட்டது. பிள்ளைகள் விளையாடலில் அடுத்தவர்க்குத் தோல்வி வர வேண்டும் என்று கோவிந்தாப்போடுவதும் உண்டு. கோவிந்தனுக்கு உரிய விளி, கோவிந்தா! கோழிகிண்டல் - காப்பின்மை, செயற்பாடின்மை. வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடை முறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை தெளித்துக் காக்காவிட்டால் அவ்விதையைக் கோழி கிண்டிக் கிளறித் தின்றுவிடும். முளைவிட்டு ஒன்றிரண்டு வருமாயின் அதுவும் அதன் கிண்டிக் கிளறலால் வேரழிந்து முளையழிந்து கெட்டுவிடும். ஆதலால் கோழிகிண்டல் என்பது காவாமையால் ஏற்படுவது என்பதைக் கண்ட அறிவு, அதற்குக் காப்பிலாத் தன்மையை வழங்குகின்றது. அவன் வாழ்வில் கோழி கிண்டுகிறது என்றால், செயற்பாடற்ற வறுமையைக் காட்டுவ தாக விரிந்தது. கோழியாகக்கூவல் - ஓயாமல் அழைத்தல் கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி வைகறையில் எழுந்து தனக்கியல்பான சுறுசுறுப்பாலும் விழித்த குறிப்பாலும் கூவும். அதனைக்கேட்டு அண்டை வீடு அடுத்த வீட்டுக் கோழிகளும் கூவும். மாறி மாறி அவை கூவிக் கொண்டிருக்கும். அதில் இருந்து கோழியாகக் கூவல் என்பதற்குப் பன்முறை அழைத்தல், கூப்பாடு போட்டுக் கூப்பிடல் என்னும் பொருள்கள் எழுந்தன. கோழியாகக் கூவுகிறேன்; என்ன என்று கேட்டாயா? என்பது இடிப்புரை. சக்கட்டி - நொண்டி ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச் சக்கட்டி என்பர். அச்சக்கட்டி நடை, அந்நடையுடையாரைக் குறிக்கும் நிலையில் வழக்குண்டு. அதனால் சக்கட்டி என்பதற்கு நொண்டி என்னும் பொருள் உண்டாயிற்று. என்ன சக்கட்டி போடுகிறாய் என நொண்டுவாரைக் கேட்பது வழக்கு. சக்கைவைத்தல் - உறுதிசெய்தல் மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் சக்கை வைத்தல் நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று இல்லை; என்பதற்கு அடையாளமாகத் தரகர்கள் சக்கை வைப்பர். சக்கை என்பது வைக்கோல்; சக்கை செத்தை எனவும் படும். சில இடங் களில் புல்லைப் பறித்துக் கையில் தருதலும் உண்டு. அதனை வாங்கிவிட்டால் பேச்சு மாறக் கூடாது என்பது இரு பக்கத் துக்கும் உறுதியாகும். சக்கை வாங்கிவிட்டால் கட்டுப்பட்டு நடத்தலைக் கடமையாகக் கொள்வர். சக்கை வைத்துவிட்டு மாறுதல் இழிவாக எண்ணப்படும். சங்கு ஊதுதல் - சாதல் இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், சேகண்டி அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் சங்குஊதிவிட்டார்கள் என்றால், சாவாகிவிட்டது; தூக்கப்போகிறார்கள் என்பதற்கு அடை யாளமாக விளங்குகிறது. ஆதலால், சங்கு ஊதுதல் சாவின் அடையாளப் பொருளாகிவிட்டது. சங்கு ஊதுமளவும் அவன் குணம் மாறாது என்றும் உனக்குச் சங்கு எப்போது ஊது வார்களோ, எங்கள் சங்கடம் தீருமோ என்றும் தீமையில் ஊறி நிற்பவர்களைப்பற்றி அவர்கள் செய்யும் தீமைக்கு ஆட்பட்ட வர்கள் நினைப்பது இயல்பாயிற்று. சங்கைப்பிடித்தல் - நெருக்குதல் சங்கு உயிர்ப்பான இடம்; மூச்சுக் காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்வளிப் போக்கைத் தடுப்பதாம். சங்கை ஒதுக்குதல் என்பதும் இதுவே. சங்கை அழுத்திப் பிடித்தாலே மூச்சுத் திணறி விழிபிதுங்கும். எத்தகைய வலியவனையும் சங்கைப் பிடித்துவிட்டால் செயலறவே நேர்ந்து விடும். ஆதலால் ஒருவர் வாங்கிய கடனை நெருக்கும் போதோ, கடன் நெருக்கடி அவருக்கு உண்டாகும்போதோ, கடன் என்னைச் சங்கைப் பிடிக்கிறது என்பர். தப்ப முடியாத நெருக்கடி என்பதன் பொருளாம். சட்டியெடுத்தல் - இரந்துண்ணல் ஓடெடுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி - மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும் திருவோடு எடுப்பதே வழக்கு. இதுவே வேற்றுமை. நான் வறியவன் இல்லை என்பதைக் காட்ட நான் என்ன சட்டியா எடுக்கிறேன் என்பர். சதங்கை கட்டல் - ஆடவிடல் ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ் வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து சொல்ல மாட்டார்; அத் துணிவு அவர்க்கு இல்லை; எண்ணமும் கூட இல்லை. அத் தகையரைச் சிலர் தூண்டிவிட்டும் ஏவிவிட்டும் கிளப்பி விடுவர். அவர் வந்து துணிவுடன் பேசுவர்; சொல்லிக் கொடுத்த சொற்களையெல்லாம் சொல்வர். அத்தகையவர் செயலைக் கண்டு வியப்படைந்தவர். உனக்குச் சதங்கை கட்டி ஆட விட்டிருக்கிறார்கள்; நீயாகவா ஆடுகிறாய்? உன்னைத் தெரி யாதா எனக்கு என நகையாடுவர். இதனால் சதங்கை கட்டல் ஆட விடற் பொருளாதல் தெளிவாம். சரக்கு - சாராயம் சரக்கு என்பது காய்ந்த பொருளாம். பல சரக்குக் கடையில் உள்ளவை உலர்ந்து காய்ந்த பொருள்களே என்பதை அறிக. உலர்ந்த பட்டைகளைத் தட்டிப்போட்டு ஊறவைத்து வடித்துக் காய்ச்சுவது சாராயம். ஆதலால் அதனைச் சரக்கு என்பது வழக்காயிற்று. பட்டைச் சாராயம் என்பதும் அதன் மூலப் பொருளை விளக்குவதாம். சரக்கு முறுக்கா? வணிகர் முறுக்கா? என்பதிலுள்ள சரக்கு என்னும் பொருளது. சரக்குப் போட்டிருக்கிறான் போலிருக்கிறது; நடையும் பேச்சும் தெரிகிறதே என்பதில் சரக்கின் பொருள் விளக்கமாம். அது, கள் சாராயம். சருகுபோடுதல் - வெற்றிலை போடுதல், உவப்புறுதல் சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு சருகு கொடுங்கள் என இலவயமாகக் கேட்டுப் பெறுவர். சருகு, வெற்றிலைப் பொருள் தருவதால், சருகு போடுதல் வெற்றிலை போடுதல் என வழக்கில் அமைந்தது. அது பாலுறவுக் குறிப்பாகவும் சலசலப்பு - அச்சுறுத்தல் இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்? என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால் சலசலப்பு அச்சமற்றது அது. இந்தச் சல சலப்புக்கெல்லாம் இந்த நரி அஞ்சுமா? என்றும் தம்மை நரியாகக் கூறுவர். சலசலப்பு ஒலிக்குறிப்பு. நீரோட்டம், இலை யசைவு, கலம் கருவியொலிகள் ஆயவை சலசலப்பாம். இச்சல சலப்பு, அச்சப் பொருளில் வருதல் வழக்கு வழிப்பட்டதாம். அந்தச் சலசலப்பை இங்கே வைத்துக்கொள்ளாதே என்பது எச்சரிப்பாம். சாடிக்கு ஏற்றமூடி - கணவனுக்கு ஏற்ற மனைவி கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தி யமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்றமூடி எனல் வழக்கு. செப்பின் புணர்ச்சி என நட்பியலைக் கூறுவார் திரு வள்ளுவர். குடும்பத்தில் கணவன் கருத்துக்கு ஒப்பி நடக்கும் மனைவி வாய்த்துவிட்டால் அவளைச் சாடிக்கு ஏற்ற மூடி எனச் சொல்வது வழக்கமாம். நல்ல கருத்தா அல்ல கருத்தா என்பது பற்றியதன்று செய்தி. இருவர் கருத்தும் ஒத்த கருத்து என்பதே குறிப்பு. பிறர்க்கு அவர்கள் செயற்பாடு எத்தகைத்தானாலும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருத்தல் அவர்கள் வாழ்வுக்குத் தக்க ஒன்றுதானே. சாப்பாடு போடல் - திருமணம் செய்தல் நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவையுடையவர்களெனின், என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்? போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா? என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம். திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், கண்ணமுது, பாயசம், அப்பளம் வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ் சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று. தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்! அவ்வளவு பாடு, சாப்பாடு! வாழ்த் தென்ன, வரவேற்பென்ன, ஓடியாபோகும்! சாய்தல் - படுத்தல், உறங்குதல், இறத்தல் மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் சாய்தல் எனப் படுவதாயிற்று. சிலர், கொஞ்சம் பொழுதேனும் கட்டையைச் சாய்த்தால் தான் தாங்கும்; உடலுக்கு ஒரே அலுப்பு என்பர். திண்டு முதலியவற்றில் சாய்ந்திருத்தலும் சாய்தலே. முழு துடலும் கிடத்திப் படுத்தலும் சாய்தலே. பறவைகளுக்குக் கூடுண்டு; விலங்குகளுக்குக் குகையுண்டு; மனித குமரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்பது கிறித்தவ மறைக் குறிப்பு. இனி ஆள் சாய்ந்து விட்டது என்பதில், இறப்புப் பொருளும் இடம் பெறும். படு கட்டை சாய்ந்து விட்டது என்பர். சிக்கெடுத்தாற் போலிருத்தல் - தொல்லை தீர்தல் தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் இல்லாக்கால் சிக்கு உண்டாம். கற்றை கற்றை யாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு ஆகியவை நீளச் செல்லும்போது சிக்கல் பட்டு விடுவதும் உண்டாம். தொண்டை, பல்லிடுக்கு ஆகியவற்றில் ஏதாவது பொருள் சிக்கி இடர் தருவதும் உண்மையே. இச் சிக்கலுள் எவையாயினும் எடுக்கப் பட்டால் அன்றி ஒழுங்காவதில்லை. நலம் செய்வதில்லை. இச் சிக்கல்கள் போலவே வாழ்வியற் சிக்கலும் ஏற்படுவது மிகுதி. அச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு அல்லல் பட்டவர்கள் அவை தீர்ந்த மகிழ்வில் இப்பொழுதுதான் சிக்கெடுத்தாற் போலுள்ளது என்பர். சிக்கல் - தொல்லை, சங்கடம். சிக்கலை ஆக்குவதே சிலர் வேலை. அவரைச் சிக்கல் சிங்கார வேலர் என்று உள் நகைப்பர். சிங்கி தட்டல் (சாலராப்போடல்) - ஒத்துப்பேசுதல். சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவியிசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய நுட்பமான தேர்ச்சி வேண்டுவதில்லை. அவர்கள் விடாமல் தாளம் போடுவதே கடமையாக உள்ளது. அவர்களுக்கெனத் தனிப்பட இசைப்பும் இல்லை. பிறர்க்கு ஒத்துப் பின் தாளம் போடுவதே வேலையாதலால், தமக்கென ஒரு கருத்து இல்லாது, எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒத்துப் பேசுவதைச் சிங்கிப் போடல் என்பதும் இது. ஒத்தூதல் என்பதும் வழக்கே. சிங்கியடித்தல் - வறுமைப்படல் வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கியடித்தலாம். இசை நிகழ்ச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர், ஆகியவர்க்கு உரிய மதிப்பும் பொருள் வருவாயும் சிங்கியடிப்பவர்க்கு வருவதில்லை. ஆதலால் அவர் வறுமையி லேயே தவிப்பார். அதனைக் கொண்டே வறுமைப்படுதலைச் சிங்கியடித்தலாகச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அவர் சாப்பாட்டுக்குச் சிங்கியடிக்கிறார் என்பது வழக்கு. சிண்டு முடிதல் - (இருவருக்குள்) பகையாக்கல் சிண்டு, சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதில்லை இது. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடு வதைக் குறிப்பதாகவுள்ளது. இருவர் சிண்டையும் முடிந்தால் முட்டாமல் மோதாமல் முடியாதே! சிண்டு முடிதல் என்பது சிக்கலையுண்டாக்கிப் பகை ஏற்படுத்துவதாக அமைகின்றது. தலையிரண்டை ஒன்றாய் முடித்துப் போட்டு ஒட்டுதல் அல்லது அறுத்தல் ஆகியவை ஒரு காலத்தில் தண்டனை வகைகளுள் ஒன்றாக இருந்து, இவ்வழக்கு உண்டாகியிருக்க வேண்டும். ஒட்டக்கூத்தர் தந்த தண்டனையாகத் தனிப்பாட்டு ஒன்று கூறும் இதனை. சிண்டு வைத்தல் - ஏமாறுதல் கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு, சிறுகுடுமி, என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார் என்பதும், சிண்டு முடிந்து பூச்சுற்றிய வனைப்பார். என்பதும், நான் ஏமாற மாட்டேன்; ஏமாறுகிற ஆளைப்பார் என்பதாம். சிண்டு முடிந்தவர்கள், கல்வி சூழ்ச்சித் திறம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் எழுந்துள்ள வழக்கு இது. சாணக்கியன் சிண்டு என்ன எளிய சிண்டா? காதில் பூச்சுற்றலும் இத்தகைத்தே, சிண்டு முடிந்தவன் நாடாள்பவன் முடியையே பிடித்து ஆட்டியது இந்திய - தமிழக - வரலராறு. சிண்டைப் பிடித்தல் - செயலற்றுப்போக நெருக்குதல் சிண்டாவது உச்சிக்குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச் செயலில் இருந்து பலவகையாலும் நெருக் கடியுண்டாக்கி வருந்தச் செய்தலும் சிண்டைப் பிடித்த லாக வழங்கலாயிற்று. சரியாக சிண்டு அவனிடம் மாட்டிக் கொண்டது; இனித் தப்புவது கடினம்தான் என்பது நெருங்குதல் அல்லது செயலற்றுப் போகச் செய்தல் வழி வரும் சிண்டாம். சிண்டைப் பிய்த்தல் தன்துயர் நிலை. சிண்டைப் பிடித்தல் பிறரைத் துயருத்தும் நிலை. சிணுங்குதல் - வேண்டி நிற்றல், மழை தூறுதல் சிணுங்குதல் - என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது, அச்சிணுங்குதல். அதனால், தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படுவது. அழுது அடம் பிடித்தல் என்பது வன்மைப்பட்டது. இது இயலாமைப்பட்டது. கேட்டது உடனே கிடைக்கத் தடையோ மறுப்போ உண் டாயின் குழந்தைகள் சிணுங்கியும் கண்ணைக் கசக்கியும் இரக் கத்தை உண்டாக்கிப் பெற்றுவிடுவர். அதனால் வேண்டுதற் பொருள் உண்டாயிற்று. சிணுங்கும்போது சில சில துளி கண்ணீர் வருவதுண்டா கலின் அம்மாதிரி துளிர்க்கும் மழையைச் சிணுங்குதல் என்பதும் வழக்கமாயிற்று. சில்வாரி - சின்னத் தனமானவன் சில் என்பது சிறுமைப் பொருளது, வாரி என்பது மானவாரி என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வான வாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம் வான வாரியாம். வாரியாவது வருவாய். புன்செய் நிலத்திலும் கிணறு இல்லாக் கால் வானவாரி என்றும் வானம் பார்த்தது என்றும் கூறப்படும். சின்னத்தனமான வழிகளில் பொருள்தேடிக் காலங் கழிப்பவன் சில்வாரி, சில்லவாரி எனப்படுவான். இதனைச் சல்ல வாரி என்பதும் வழக்கு. சல்ல என்பது சள்ளை என்பதன் திரிபாம். பிறர்க்குச் சள்ளை - ஓயாத் தொல்லை - தந்து பொருள் தேடுவது சள்ளைவாரித் தன்மையாம். அவன் சில்வாரி, எப்பொழுதும் காலைவாரிவிடுவான் என்பது எச்சரிக்கை வழக்கம். சிலுக்கட்டி - சிறியது மிகக் குள்ளமானவர் - கனமுமில்லாதவர் - சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக் கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில் ஆக்கப்படுவது. அச்சுக் கட்டி அதனிற் பெரியது. வட்டு அதனினும் பெரியது தேங்காயை உடைத்துக் கீற்றுப் போட்டது. சில்லு எனப்படும். சிறு குருவி சில்லை எனப்படும். இவையெல்லாம் சிறியது (சின்னது) என்னும் பொருள். என் சில்லைக்குடில் என்பது சிலப்பதிகாரம். சில், சிலு சில்லை என்பவையெல்லாம் ஒருவழிய. சிலுக்கட்டி வண்டி சிலுக்கட்டியாள் சிலுக்கட்டிப் பிள்ளை என்பவை வழக்குகள். மிகச்சிறிய உந்தினைச் சிலுக்கட்டிக்கார் என்பதும் கேட்கக் கூடியதே. சிலுப்புதல் - மறுத்தல், மறுத்து ஒதுங்குதல் மாடு சினம் சீற்றம் உடையது எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். என்ன சிலுப்புகிறாய்; பூசை வேண்டுமா? என்று அடிப்பர், ஆயினும் சிலுப்புதலை அத்தகைய மாடுகள் விடா, கொம்பை ஆட்டி அசைத்துத் திருப்புதலே சிலுப்புதலாம். மோர் கடைதலை மோர் சிலுப்புதல் என்னும் வழக்கமும் உண்டு. இவ்வழக்கங்களில் இருந்து ஒருவர் ஒன்றைக் கூறும்போது அதனை ஏற்றுச் செய்யா மல் போ, பார்க்கலாம் என ஏவியவர்கள் இரைவர். இங்குச் சிலுப்புதல் மறுத்தல் பொருளது. சிவப்புக்கொடி காட்டல் - தடுத்தல் சிவப்புக்கொடி காட்டினால் தொடர் வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால் சிவப்பு தடைப்படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக்கொடி மாறிப் பச்சைக் கொடி காட்டுவார்களோ தெரியவில்லை. அது வரையிலும் திருமணப் பேச்சை எடுக்க முடியாது எனத் தவிக்கின்றவர் பலர். சிவப்பு தடையாவது, எங்கெங்கும் விளம்பரப் பொருளாகி விட்டது! சிவப்பு முக்கோண மில்லாத ஓரிடம் உண்டா? இரண்டுக்கு மேல் வேண்டா என்பதும் வேண்டாததாய், ஒன்றே போதும் என்றன்றோ விளம்பரப்படுகிறது. ஆயினும் குறைக்க முடிகிறதா நினைப்பவர் மனமே கோயில் என்பது சிவப்புக்கும் தான். சிவப்பு விளக்குப் பகுதி எனச் சீரழிவுப் பகுதி ஒன்று பெருநகர்களிலெல்லாம் இருந்தது உண்டு. அது நாட்டின் சீர்கேடு! சிறை - அழகு இச் சிறை என்பது சிறைச்சாலைப் பொருளது அன்று சிறுமைப்படுத்தி அடக்கி வைப்பது எல்லாம் சிறையெனப்படும். அவ்வகையில் பழங்கால அரண்மனைகளின் உட்பகுதியாம் அந்தப்புரம் சிறையெனப்பட்டது. வேற்று நாட்டு மகளிரைப் பற்றிக் கொண்டு வந்தும் சிறைப்படுத்தினர். அவர்கள் தங்கல் வேளம் எனப்பட்டது. வேளகம் (விருப்பம்மிக்க இடம்) என்பதே வேளம் ஆயிற்றாம். அந்தப்புரம், வேளகம் ஆகிய வற்றில் இருந்த மகளிர் அழகுமிக்கவராக இருந்தமையால் அழகிய பெண்களைச் சிறை, என்னும் வழக்காயிற்று. அவள் பெரிய சிறை; அவளைத்தேடி ஆளுக்கு ஆள் போட்டி போடு வார்கள் என்பதில் சிறை அழகிய பெண் எனப்பொருள் தருதல் அறியலாம். அழகைத் தன்னகத்துச் சிறைப்படுத்திக் கொண்டவள் சிறையெனப்பட்டாள் என்பதுமாம். சீண்டுதல் - தொல்லை தருதல் சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொரு ளிலும் இத்தொடுதல் எரிச்சலையூட்டுகின்ற அல்லது அரு வறுப்பை உண்டாக்குகின்ற தொடுதலாம். சினத்தில் அரிசினம் என்பதொன்று, அஃது ஓயாமல் தொல்லை தருதலால் உண்டாகும்சினம். அச்சினம் உண்டாகு மாறு பாடாகப்படுத்துதலே சீண்டுதலாம். என்னதான் பொறுத்தாலும், என்னதான் உதவி செய்தாலும் அவன் சீண்டு வதை விடமாட்டான் என்பது வழங்குமொழி. சீலையைக் கிழித்தல் - கிறுக்காதல் துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே. மூளைக்கோளாறில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக் கிழிப்பதும், அக்கிழிந்த துணியை உடலில் நினைத்த இடங்களி லெல்லாம் கட்டிக் கொள்வதும் ஆகும். அவ்வழக்கில் இருந்தே சீலையைக் கிழித்தல் என்பதற்குக் கிறுக்கு என்னும் பொருள் வந்தது. எனக்கு அறிவு சொல்கிறாய்! நான் சீலையைக் கிழித்துக் கொண்டா இருக்கிறேன் என்பது புரியாது பேசுவார்க்குச் சொல்லும் மறுப்புரை. சுக்காதல் - உலர்ந்து போதல், மாவாதல் சுக்கு நீரை அறவே இழந்தது, நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு உரியதாயிற்று. சுக்காக நொறுக்குதல் என்பதில் சுக்கு என்பதற்கு மாவு என்னும் பொருள் உள்ளமை வெளிப்படும். சுக்காக நொறுங்கி விட்டது என்பது வழக்காட்சி. சுக்குச் சுக்காக நொறுங்கிவிட்டது என்பது மிக நொறுங்குதலைக் குறிப்பதாம். வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? என்பது ஒரு தனிப்பாட்டு. பாறை வகையுள் ஒன்று சுக்காம் பாறை. சுக்காம் பாறை ஓர் ஊர், சுக்காலியூர் சுக்கு திரிகடுகத்தில் முதலாவது. சுட்டி, செய்யக்கூடாத செயல்களைச் செய்து துயரூட்டுபவன். சுட்டி, என்பது சுட்டெரிப்பவன் என்னும் பொருளில் வருவதாம். அதிலும் படுசுட்டி என்பது அவனுக்கும் பெரிய சுட்டி அல்லது சுட்டியில் தேர்ந்த சுட்டி, என்பிள்ளைகளுள் நல்லவன் கூரைமேல் கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே; அவன்தான் என்றானாம் ஒரு தந்தை. அத்தகையன் செயல் சுட்டி விளக்கமாம். சுடக்குப்போடல் - இழிவுபடுத்தல் சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலைக் கூட்டி ஒலி யுண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலியுண்டாக்கி நாயைக் கூப்பிடல் எவரும் அறிந்தது. சுடக்குப் போட்டுக் கூப்பிடு என்றால், நாயைக் கூப்பிடுவது போலக் கூப்பிடு என்பது குறிப்புப் பொருளாம். நீ பார்! நான் சொன்னபடி செய்யத் தவறினால் சுடக்குப் போட்டுக் கூப்பிடு என்பது பல்கால் கேட்கும் வஞ்சினச் செய்தியாம். ஒருவருக்கொருவர் உண்டாம் போட்டி, தருக்கம், பகை இவற்றால் சொல்வது இது. வஞ்சினக் காஞ்சி புறத்துறையுள் ஒன்று. சுண்டப் போடல் - பட்டுணி போடல் சுண்டுதல், காய்தல், நீர் வற்றிப் போகக் காய்தல் சுண்டுதல் எனப்படும். சுண்டை வற்றல், காய்தலாலும், சிறிதாதலாலும் பெற்ற பெயர். சுண்டக் காய்ச்சிய பாலில் சுவை மிகுதியாம். வயிற்றுள் ஒன்றும் இல்லாமல் போமாறு பட்டுணி போடலும், நரம்புகள் சுண்டி இழுக்குமாறு பட்டுணி போடலும் சுண்டப் போடல் எனப்படும். வயிற்றைச் சுண்டப் போட்டால் தான் வழிக்கு வருவாய் என்பது வழக்குமொழி. சுண்டல் விற்பனை கடற்கரைப் பகுதியில் காணவேண்டுமே. சுமைதாங்கி - பொறுப்பாளி கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து மகவு தங்காமல் போனவர்க்கும் மகவு தங்கு மென நம்பிக்கை ஊட்டியமையால் அத்தகையவரும் இவ்வறச் செயலைத் தலைப்பட்டுச் செய்தனர். அச்சுமைதாங்கி எப்படித் தாங்க முடியாச் சுமையைத் தாங்கி உதவுவதுடன், அப் பொருளை வைத்தது வைத்தபடி எடுத்துக்கொண்டு போதற்கும் வாய்ப்பாக உதவுகிறதோ அப்படி, தலைமையாள் இல்லாத குடும்பத்திற்குத் தலைமையாக இருந்து தாங்குவாரைச் சுமை தாங்கி என்பது வழக்காயிற்று. அதனால் சுமைதாங்கி என்ப தற்குப் பொறுப்பாளி என்னும் பொருள் வந்தது. குடிதாங்கி என்பவன் ஒரு வள்ளல்! பாடுபுகழ்பெற்றவன்! அவன் பாவம்! இடிதாங்கியாவான்! சுரண்டுதல் - சிறிது சிறிதாகக் கவர்தல், உதவி கேட்டல் சொறி சிறங்குக்காகக் கையால் சுரண்டல் உண்டு, களை சுரண்டல், சட்டி பானை சுரண்டல் என்பவையும் சுரண்டுதல் என்பதன் நேர் பொருளன, சுரண்டுதற்குரிய கருவி சுரண்டி எனப்படும். ஒருவர் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அப்பொறுப்பால் வரும் வருவாயைச் சுருங்கச் சுருங்க எடுத்துத் தனக்காக்கிக் கொள்ளல் சுரண்டல் எனப்படும். உழைப்பைச் சுரண்டலும் சுரண்டலே. இச்சுரண்டலில் வேறானது உதவி கேட்டல் பொருள்தரும் சுரண்டல். என்ன கையைச் சுரண்டு கிறான் தலையைச் சுரண்டுகிறானே என்ன என்பவை எத்த னையோ எதிர்பார்த்து நிற்பதைச் சுட்டும் குறிப்புகளாம். என்ன வேண்டும் என்று கேட்டு வழங்குவதுண்டு. சுருட்டி மடக்கல் - அடங்கிப்போதல் பூனையையோ பன்றியையோ கண்டு சீறிப்பாய்ந்து குரைக்கும் நாய், தன்னில் வலிய நாய்வந்தால் வாலைச் சுருட்டி மடக்கி இரண்டு கால்களுக்கும் இடையே வைத்துக் கொண்டு ஓடும். அதுபோல் ஏழை எளியவரைப் பாடாப்பாடுபடுத்தும் சிலர், வலிமையானவர்களைக் கண்ட அளவில் தமது வாயை மூடி, கைபொத்தி, குனிந்து வளைந்து சொன்னதைக் கேட்டு நடப்பர். இத்தகையவரை அடாவடிக்காரனைப் பார்த்தால் வாலைச் சுருட்டிக் கொள்வான்; ஆளைப்பார் ஆளை; இப்பொழுது அவனை மருட்டட்டுமே என்பர். சுருட்டி மடக்கல் வலிமையைக் கண்டு நிமிருமா? மெலிமைக்கன்றோ நிமிரும்? சுருள் வைத்தல் - பணம் தருதல் சுருள் வைத்தல், சுருள் வைத்து அழைத்தல் என்பனவும் வழக்கில் உள்ளனவே. சுருள் என்பது பணத்தைக் குறிக்கிறது. சுருள்பணம் எவ்வளவு வந்தது என்பதில் பொருள் தெளிவாக உள்ளது. ஆனால் சுருளுக்கும் பணத்திற்கும் என்ன தொடர்பு? வெற்றிலையைச் சுருள் என்பது வழக்கு. சுருட்டி மடக்கித் தருதல் என்னும் வழக்கில் இருந்து அது வந்தது. அதில் பணம் வைத்து வழங்குதல் உண்மையாதல் சுருள் என்பதற்குப் பணம் என்னும் பொருள் உண்டாயிற்றாம். இலைவயம் காண்க. சுரைக்குடுக்கை - ஓயாப் பேசி சுரைக்குடுக்கை என்பது முற்றிக் காய்ந்து போனதாகும். அதனைக் குலுக்கினால் சலசல என ஒலியுண்டாகும். மெல்ல அசைத்தாலும் ஆளசைக்காமல் காற்றால் உருண்டாலும்கூட ஒலிக்கும். அதனால், சளசள என ஓயாமல் பேசுபவனைச் சுரைக் குடுக்கை என்னும் வழக்கு உண்டாயிற்று. வாகை நெற்று சலசலப்பதை சங்கப்பாடல் காட்டும். கிலுகிலுப்பைக்கு உவமையும் படுத்தும், மக்கள் வழக்கோ ஓயாப் பேசியைச் சுரைக்குடுக்கையாகச் சொல்கிறது. சுள்ளாப்பு - தொடுகறி சுள்ளென்று வெயிலடித்தல், சுள்ளென்று உழைத்தல் எனச் சொல்வது வழக்கு. சுள்ளென்று உறைப்பது மிளகு, மிளகாய் என்பவை. அவ்வாறு உறைப்புமிக்க கறியும் சுள்ளாப்பு எனப்படும். கள் சாராயம் குடிப்பவர் குடிக்குத் துணைப் பொரு ளாகப் பயன்படுத்தும் உறைப்பான கறிகள் சுள்ளாப்பு என வழங்கப்படுகிறது. ஆனால் வீட்டில் தொடுகறியாகப் பயன் படுத்தப்படுவன அவ்வாறு அழைக்கப்படுவது இல்லை. இது குடியர் வழக்காம். சில இடங்களில் அடித்தல் பொருள் அதற்கு உண்டு. சுள்ளாப்பு வைத்தால்தான் சொன்னது கேட்பாய் என்பர். சுற்றிவளைத்தல் - நேரல்லாவழி வட்டம் சுற்றி வழியேபோ என்பது பழமொழி. உரிய வழிப்படி போதல்வேண்டும் என்பதைக் குறிப்பது அது. இச் சுற்றி வளைப்பு அத்தகையதன்று. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து, அதற்குச் சார்பான மற்றவற்றைப் பேசித் தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலே சுற்றி வளைத்தலாம். சுற்றி வளைத்தல் வேட்டைத் தொழிலில் காணக் கூடியது. குறிவைத்துக் கொண்டு ஒருவர் ஓரிடத்து இருப்பார். பிறர் வேட்டை விலங்குகளைச் சுற்றி வளைத்துக் குறிக்குக் கொண்டு வந்து சேர்ப்பர். வேட்டையர் நோக்கு வெற்றியாக நிறைவேறிவிடும். ஆகலின் நேரல்லா வழி என்னும் பொருளது ஆயிற்று. நேரல்லாமை நேர்மை அல்லாமை தானே. வட்டம் சுற்றி வழியே போ என்பது பழமொழி. சூடாகப்பேசுதல் - சினந்து பேசுதல் உள்ளம் வெதும்பிப் பேசுவதால் சூடாகப் பேசுதல் எனப் படும். வன்மையாகச் சொல்லும் சொல் சுடு சொல் எனப்படும். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்பதும் வில்லம்பு சொல்லம்பு எனவரும் வழக்கும், நின் குலத்தைச் சுட்டதடா என் வாயிற் சொல் எனவரும் கம்பர் தனிப்பாட்டும் சூடாகப் பேசுதல் சுடு சொல் என்பவற்றை விளக்கும். உள்ளத்தின் சூடு, சொல்லின் சூடாகக் குறிக்கப்படு கிறதாம். தண்ணிய நாட்டில் சூடாகப் பேசுதல் இனிமைப் பொருளாம். வெப்ப நாட்டில் சூடாகப் பேசுதல் தீமைப் பொருளாம். இவற்றைக் கருதுக. சூடுபடுதல் - அஞ்சுதல் சூடுகண்ட பூனை பாலைப் பார்த்ததும் ஓடுதல் விகட ராமன் கதை, பன்றி வேட்டையில் வெகுண்டு வந்த நாய் சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டம் பிடித்தது என்பது பழமொழி. நாயால் கடியுண்டவன் நாயைக் கண்டாலே கடி யுண்ட உணர்வினனாதல் உளவியல். இவற்றைப் போல்வதே சூடுபடுதலாம். விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் கையை எடுப்பதைப்போல் என உவமை காட்டினார் பாவேந்தர். சூடு பட்ட பட்டறிவு இருந்தால் சுடு பொருளைக் கண்ட அளவானே அஞ்சுதல் கண்கூடு. இவ்வகையால் சூடுபடுதல் என்பற்கு அச்சப் பொருள் உண்டாயிற்றாம். சூடுபிடித்தல் - கிளர்ச்சியுண்டாதல் பச்சை விறகில் பற்றிய தீ உடனே சூடுபிடித்து எரிவது இல்லை. பற்றிப் பற்றி எரிந்து சூடுபிடித்துவிட்டால் பின்னர் அனல் கக்கி எரியும். அவ்வாறு சிலர் உள்ளமும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும். ஆனால் அவ்வமைதியும் அடக்கமும் வேளைவரும்போது இருந்த இடமும் தெரியாமல் மறைந்து போம். கிளர்ச்சியுண்டாகிய அந்நிலையைச் சூடுபிடித்தல் என்பது வழக்கு. இப்பொழுதுதான் வேலை சூடுபிடித்திருக் கிறது; விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது என்பது நடைமுறை. சுறுசுறுப்பு அல்லது கிளர்ச்சி உண்டாகிவிட்டது என்பது பொருளாம். செங்கல் சுமத்தல் - சீரழிதல் செங்கல் சுமந்து சீரழிந்தேன் என்னும் மரபுத் தொடர் செங்கல் சுமத்தல் வழக்கையும் அதன் சீரழிவுப் பொருளையும் ஒருங்கே விளக்குவதாம். செங்கற்சுமை, கடுஞ்சுமை, ஏற்றல் இறக்கல் தூக்கல் சுமத்தல் எடுத்தல் கொடுத்தல் எல்லாம் கனத்தல். அலுப்பு உண்டாகும் தொழிலில் செங்கற் சுமை குறிப்பிடும் ஒன்றே. செங்கற்சுமையர். எவ்வளவு உண்டாலும் உடல் தேறார். கூலி எப்படி? சிற்றாள் கூலி! சிற்றாள் வேலை எட்டாள் வேலை என்னும் சிறப்பு போதுமே! சம்பளம் என்ன சம்பளம்! செடி - நாற்றம் செடி, இலை, வேர், பட்டை இவற்றுக்கு வெவ்வேறு மணம் உண்டு. பூக்களோ, மணம் பரப்புதல் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. நன்னாரி வேர், வெட்டிவேர் நறுமையான மரு, மருதோன்றி, பச்சை, துளசி இலைகள் மணமுள்ளவை வேம்பு, அதிமதுரம், கடுக்காய் முதலிய பட்டைகளும் மண முள்ளவை. ஆனால் சில செடிகள் மிகத் தொலைவுக்குக்கூட மூக்கை வருத்தும் நாற்றம் உடையவையாக உள்ள அவற்றால் செடி என்பதற்கு, நாற்றப் பொருள் உண்டாயிற்று செடி என்பது நூறு பவுனைக் குறிக்கும் வசைச் சொல்லும் ஆயிற்று. செடிப்பயல் என்பர். சேகரம் - நட்பு சேகரம், சேர்ந்திருத்தல் என்னும் பொருளது இவனுக்கும் அவனுக்கும் சேகரம் என்பர் இதனால் நட்புப் பொருள் இதற் குண்மை விளங்கும். சேர்ந்த வீடுகள், சேர்ந்த நிலங்கள் ஆகியவை ஒரே சேகர மாக உள்ளன எனப்படும். சேர்ந்திருத்தல் என்னும் பொரு ளுடைய சேரகம் என்னும் சொல்லின் எழுத்துகளாகிய ரகர கரகங்கள் இடமாறிச் சேகரம் ஆயின. எனினும் பொருள் மாற்றமின்றி வழங்குகின்றது. சிவிறி என்பது விசிறியாகவும், கொப்புளம் என்பது பொக்களமாகவும் வழங்குவதுபோல என்க. சேர்க்கை - நட்பு, தொடர்பு சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை. சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப் பனவே. சேக்கை என்பது குச்சி பஞ்சு நார் முதலியவை சேர்த் தமைக்கப்பட்ட கூடாகும். கடற்கரையைச் சேர்ந்துள்ள இடம் சேர்ப்பு எனப்படும். அதற்குரிய தலைவன் சேர்ப்பன் எனப் பட்டான். சேரன், சேரல் சேரலன் என்பனவெல்லாம் கடற் கரையைச் சார்ந்த நாட்டினன் என்னும் குறிப்புடையதேயாகும். இச்சேர்த்தல் என்பது நட்பைக் குறித்து வருதல் வழக்காயிற்று. உன் சேர்க்கைதான் உனக்குக் கேடு பார்த்துக் கொண்டிரு என்பது எச்சரிப்புரை. சூடேற்றல் - வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல் (குளம்பி, தேநீர் முதலியன குடித்தல்) 1. குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடி வகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர், குளம்பி (காஃபி) கோகோ, சுவை நீர் (போன்விட்டா) முதலிய வாம். இவற்றுள் முன்னவை இரண்டும் பெருவழக்கில் உள் ளவை. எங்கும் கிடைப்பவை, அடிக்கடி குடிப்பவை. அவற்றைக் குடிப்பது சூடேற்றலாக வழக்கில் உள்ளது. சூடுபோடுதல், சூடுவைத்தல், சுடுதல் என்பவை இல்லாமல் சுடு நீர்க்குடிகளைக் குடிப்பது சூடேற்றலாக வழங்கப்படுவது வழக்குச் சொல்லாம். சூடேற்றி விட்டு வந்து பார்க்கலாம் வாருங்கள் என்பது அலுவலக உரையாடற் செய்தி. சொங்கி - உள்ளீடு இல்லாமை, வெறுமை. சோளத்தின் மணியை ஒட்டிக் கொண்டிருக்கும் மூடியைச் சொங்கு என்பது வழக்கம். மணியொடு பிரியாமல் சொங்கு இருப்பது, சொங்குச் சோளமாம். பால் பிடிக்காமல் மூடித ழோடு ஒட்டியிருக்கும் சோளமும் சொங்கு எனப்படும். அச் சொங்கு உள்ளீடு இன்மையால் சோற்றுக்குப் பயன்படாது. தூற்றும்போதே காற்றில் அப்பால் போய் விழும். சிலரை அவர்தம் சோம்பல் செயற்பாடு பயன் ஆகியவை கருதிச் சொங்கி என்பது வழக்கு. சொங்கிப் பயல் சொங்கித்தனம் என்பவை சொங்கியின் வழக்கினைத் தெரிவிக்கும். சொங்கில் இருந்து வந்ததே சொங்கி என்க. சொல்விளம்பி - கள், சாராயம் குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது இலக்கண நூல்களில் சொல்லப்படும் குழுஉக்குறி குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள் தங்கள் குடிப்புப் பொருளுக்குச் சொல்விளம்பி எனப் பெயரிடுவானேன்? குடித்தவன் தன் மனத்திலுள்ளதையெல்லாம் தன் மதி மயக்கத்தில் கொட்டித் தீர்த்து விடுவான். அவன் அவ்வாறு சொல்ல இடமாக இருப்பது மதுவே ஆதலால் அதனை அப்பெயரால் குறித்தானாம். குடித்தவனுக்கு மதிமயக்கம் இருக்கும்போதுதான் சொல்வதை அறிய மாட்டானே எனின், குடித்து மயங்குபவனை அவன் பாராதவனா என்ன? சோங்கு - உயர்தல் இந்த மரம் சோங்காக இருக்கிறது என்பதும், நல்ல சோங்கான ஆள் என்பதும் வழக்கில் உள்ளவை. சோங்கு என்பது ஓங்குதாங்கு என்னும் இணைமொழிப் பொருளை ஒருங்கு கொண்டதாம். உயரம் அதற்கு ஏற்ற உடற்கட்டு ஓங்கு தாங்கு எனப்படும். அத்தன்மையுடையதே சோங்கு என்க. வளர்ந் தவர், நெட்டை, கொக்கு, கனத்தவர், குதிர், உரல் இரண்டும் ஒருங்கமைந்தவர் சோங்கானவர், தேக்கு, தோதகத்தி மரங்களில் சோங்குக்குத் தனிச் சிறப்பு. பாரி சோங்கான ஆள் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. சோங்கு ஆண்மைக் குறைவைச் சுட்டுவ தாகவும் உண்டு. அது சொங்கு வழியது. சோடை - உள்ளீடு இல்லாமை நிலக்கடலையுள் சோடையுண்டு. சோடை எனப்படுவது பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலையாகும். கடலையில் சோடை மிகுதி என்றும், சோடை போகவில்லை என்றும் கூறுவது வழக்கம். அவ்வழக்கில் இருந்து அவன் ஒன்றும் சோடையில்லை என்றும் அவன் சோடை என்றும் வழக்கூன்றின. அறிவாற்றல் செயல் தேர்ச்சி இன்மை சோடை யாகவும், அவையுண்மை சோடை இன்மையாகவும் வழங்கு கின்றன. சொங்கு சோடை எனச் சிலர் தன்மையைச் சுட்டுவது உண்டு. சொங்கும் சோடையும் என்பது ஒரு பொருள். சொங்கு காண்க. சோதா - உரமிலாப் பருமை நடக்கமாட்டாமல் உடல் பருத்துச் சுறுசுறுப்பு இல்லாத குழந்தையைச் சோதா என்பர். பெரியவருள் சோதாவும் உண்டு. சொன்னால் சோதா ஏற்பாரா? சண்டைக்கு வந்து விடுவாரே. அதனால் குழந்தைச் சோதாவே நிலைபெற்றது. சொதசொத என்பது அளற்று நிலத்தன்மை. மழை சிறிது பெய்து நின்று விட்டபின் நடைவழி சொதசொதப்பாகச் சேறுபட்டுக் கிடக்கும். சொதசொத என்று கிடக்கிறது என்பர். எருமைத் தொழுவமும் சொதசொதப்பாக இருக்கும். இச் சொதசொதப்பாம் தன்மை போல் தசை கொழகொழ என இருப்பது சோதா வாம், இன்னும் எட்டு வைக்காத சோதாப்பயல் என்பது சோதாச் செயன்மையுரை. தகைதல் - விலை தீர்மானித்தல் தகைதல் கட்டுதல் என்னும் பொருளது. கட்டுப்பாடான நல்ல குணம் தகை எனப்படும். தகைதல் கட்டொழுங்கும் ஆகும். ஒன்றை விலைபேசி ஒப்புக்கொண்டு விட்டால், அவ்வொப்புக் கொள்ளலில் இருந்து எவ்வளவு கூடியதொகை கிடைப்பினும் மாற்றாத கட்டொழுங்கு உடைமையே தகைதல் எனப்படும். விலை தகைந்து மாறிவிட்டான் அவன், மனிதப் பிறப்புத் தானா? என்பர். தகைமையை (பண்பை)க் காட்டுவது தகைதல் ஆயிற்றாம். அதனைத் திகைதல் எனவும் வழங்குவர். தட்டிக் கழித்தல் - சொல்லியதைக் கேளாமல் ஒதுங்குதல் (மழுப்புதல்) ஒன்றைச் சொன்னால் அதற்குத்தக்கவாறான ஒரு மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு என்ன, தட்டிக் கழிக்கி றாயா? என்பது வழக்கு, தட்டிக் கழிப்பதில் பெரிய ஆள். எதைச் சொல்லுங்களேன் அதற்கு ஒன்று அவன் வைத்திருப் பான் என்பதும் கேட்பதே. இங்கே தட்டுதல், கழித்தல் என்னும் சொற்களுக்கு நேர் பொருள் இல்லை. இரண்டும் சேரும்பொழுது மழுப்புதல் என்னும் பொருள் தருதல் கண்டு கொள்க. தட்டிக் கொடுத்தல் - பாராட்டல், அடித்தல் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத்தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ்வேளையில் தட்டிக் கொடுத்தல், தழுவிக் கொள்ளல் ஆகியவை நிகழ்த்துவர். ஆதலால் தட்டிக் கொடுத்தல் என்பதற்குப் பாராட்டுதல் என்னும் பொருள் உண்டாயிற்றாம். இனிச்சில வேளைகளில் இதற்கு எதிரிடைப் பொருளும் உண்டாவதுண்டு. உன்னைத் தட்டிக் கொடுத்தால்தான் ஒழுங்காக வேலைபார்ப்பாய் என்பதில் தட்டிக் கொடுத்தல் என்பது அடித்தல் பொருளில் வருகின்றதாம். ஒரு தட்டுத் தட்டு சரியாகும் என்பார். தட்டு = அடி தடம் மாறல் - ஒழுங்கற்ற வழியில் நடத்தல். தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர் வழி அல்லது திட்டப் படுத்திய வழி. அத்தடத்தை மாறி வேறு தடத்தில் போவது என்பது முறைகேடு ஒழுங்கின்மை என்னும் பொருள் தருவதாம். ஓட்டப்பந்தயத்தில், கோடு போடுவதும் அவரவர் கோட்டில் ஓடவேண்டும் என்பதும் ஒழுங்குமுறை. சிலர் புறப் படுமிடம் சரியாக இருக்கும். ஓடும்போது தடம்மாறிவிடுவர். இறுதியில் உரிய தடத்திற்குப்போய் வெற்றி பெற்றுவிடுவர். இது, தடுமாறலை விளக்கும். தட்டுக்கெடுதல், தட்டழிதல் என்பனவும் இப்பொருளவே, தட்டு என்பது வரைகோடு. தடவல் - இல்லாமை, தடவை பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறை வாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி வரும். அவ்வாறு தடவி எடுக்கும் அளவு சுருங்கிப் போவதே தடவல் எனப்படுவதாம். இப்பொழுது தடவலாக இருக்கிறது; பிறகு பார்க்கலாம் என்பதில் இல்லாமைக் குறிப்புண்மை அறிக. சோறுதடவல், கறிதடவல் என்பதும் இது. இனித் தடவை என்பதும் தடவல் என வழங்கும். மூன்று தடவல் கேட்டான் என்றால் மூன்றுமுறை கேட்டான் என்பதாம். தண்ணீர் காட்டுதல் - தப்பிவிடுதல் ஒரு கொள்ளைக்கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது உனக்கு ஒரு நாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும் என்பன போன்ற வழக்குகள் தண்ணீர் காட்டுதல் என்பதற்குத் தப்பிவிடுதல் என்னும் பொருள் உள்ளதை விளக்கும். தப்பி விடுதலும், நயவஞ்சகமாக ஏமாற்றித் தப்பிவிடுதலாம். தண்ணீர் தெளித்தல் என்பது தாரைவார்த்தல் என்பது போன்றதே. தாரை வார்த்தல் கொடைப் பொருள். தண்ணீர் தெளித்தல் என்பது கழித்துக் கட்டல் என்னும் பொருளதாம். உன்னைத் தண்ணீர் தெளித்து விட்டார்கள் என்றால் உன்னைக் கைவிட்டுவிட்டார்கள். புறக்கணித்துவிட்டார்கள். ஒதுக்கி விட்டார்கள் என்னும் பொருள் தருவதாம். கொடுத்த பொருள், கொடுத்தவர் உரிமையை விட்டு நீங்கி விடுவதேயன்றோ! அப்பொருளில் வருவது தண்ணீர் தெளித்தலாம். தந்தனாப்பாடல் - வறுமைப்படல் துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே. பிச்சைக்கு வருபவர் பாட்டுப்பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின் பாட்டுப்பாடுதல் என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல், துந்தனாப்பாடுதல் என வந்த தாம். பஞ்சப்பாட்டுப்பாடுதல் வறுமைப்பாட்டுப் பாடுதல் என்பனவும் வறுமை நிலைமையைக் குறிப்பனவே. தந்தனா என்பது இசைமெட்டு; வண்ணப்பாடல் களிலும் இடம் பெறுவது; தாளம்போடல் காண்க. தமுக்கடித்தல் - பலரறியச் சொல்லல் ஊர் சாற்றுதல் என்பது இன்னும் வழக்கில் உள்ளது கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்துக்கொண்டு அடித்து இடை இடையே நிறுத்தி ஊரவர் அறியவேண்டும் செய்தியைக் கூறும் வழக்கத்தில் இருந்து தமுக்கடித்தல் என்பதும் பலரறியச் செய்தல் என்னும் பொருள் தருவதாயிற்று. உன்னிடம் ஒன்று சொன்னால் போதும்; தமுக்கடித்து விடுவாயே என்பது இப்பொருளை விளக்கும். இந்நாளிலும் ஊராட்சிமன்ற அறிவிப்பு ஏலம் விடுதல் ஆகியன தமுக்கடித்து அறிவிக்கப் பெறுவது உண்மையே. முன்னாளில் யானை மேல் இருந்து பறையறைந்தறிவித்தல் வழக்கமாக இருந்தது. அறைபறை அன்னர் கயவர் என்பது வள்ளுவம். தலைக்கட்டல் - சீர்செய்தல் தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர் செய்தல், சரி செய்தல் என்னும் பொருளில் வருவது உண்டு. நீங்கள் தலைக்கட்டாவிட்டால் பெரிய பெரிய விளைவுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதில் இப்பொருள் உண்மை விளங்கும். தலைப்படுதல் என்பது முன்னின்று செய்தலையும், தலைக் கட்டல் என்பது முன்னின்று காத்தலையும் குறித்தலை நோக்கத் தலை என்பதன் முதன்மை தலைமைப் பொருள்கள் விளங்கும். தலைக்கட்டு - குடும்பம் தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைகட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி, வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு கணவன், மனைவி அவர்களின் குழந்தைதான் என்னும் அளவே தலைக்கட்டு எனப்படுகிறது. ஆகலின் பொதுக் குடும்பம் என்னும் அளவில் குறைந்து பொதுக் குடும்பத்தின் ஓர் உறுப் பாகிய சிறு குடும்பத்தின் அளவே தலைக்கட்டாகும். இந்த ஊரில் ஐந்நூறு தலைக்கட்டு இருக்கிறது எனக் கணக்கிடுவர். ஆனால் முந்நூறு வீடுகள் கூட அவ்வூரில் இரா. இரண்டு மூன்று தலைக்கட்டுகளும் ஒரு குடும்பத்தில் இருத்தலுண்டு. தலைகவிழ்தல் - இழிவுறுதல் ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவ தாயிற்று. புகழமைந்த மனையாள் இல்லாதவனுக்கு ஏறுபோல் பெருமிதமாக நடக்கும் நடை இல்லை என்றார் திருவள்ளுவர். ஏறுபோல் நடையாவது தலையெடுத்து நிமிர்ந்து செல்லும் நடையாம். களவு கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளியாக ஊர் மன்றத்தில் நிறுத்தப்பட்டவன் தலைகவிழ்ந்து காலால் நிலங் கிளைத்தலைக் குறித்துக் காட்டும் கலித் தொகை. தலைகவிழ வைத்துவிட்டாயே! என்று தம் தொடர்பாளர் செய்த குறைக் காகப் புண்படுவார்கூறுவரெனின் தலைகவிழல் இழிவு நன்கு புலனாம். ஒரு செயலைச் செய்யும் வகையால் செய்யாது கெடுத் தால், தலைகீழ் ஆக்கிவிட்டான் என்பதும், மாறாக நடத்தல் தலைகீழாக நடத்தல் என்பதும் வழக்கு. தலைகாட்டாமை - முன்வராமை தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல நாள் பார்க்காதிருந்த ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் தலையைக் காணவில்லையே; வெளியூர் போயிருந்தீர்களா? என வினவுதல் பெரும்பான்மை. நீ செய்த செயலுக்கு என் முன் தலைகாட்ட எப்படித்தான் முடிகிறது? என்று வருந்துவதோ, தலைகாட்டினாயோ பார் என எச்சரிப்பதோ வழக்கில் உள்ளவையே. தலைதடவல் - சுரண்டுதல், முழுவதும் பறித்தல் தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்ட நேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால் சொறிந்து தினவைப்போக்கிக் கொள்ளல் காணக்கூடியதே. இத்தலை தடவலில் சுரண்டுவதும் உண்டாகலின் பிறர் செல்வத்தைச் சுரண்டுவதைத் தலைதடவலாகக் கூறும் வழக்கம் உண்டாயிற்று. இனித் தலையைத்தடவல் அன்பின் அடையாளம். அவ்வாறு தலையைத் தடவி அன்பை வெளிப்படுத்துவதுபோல் மயக்கித் தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலும் தலை தடவலாக வழங்குவதாம். தலை தடவல் என்பதில் மற்றொரு பொருளும் உண்டு. தலையை முழுக்கத் தடவி மழிப்பதுபோல உள்ளவற்றை யெல்லாம் பறித்துக் கொள்வதாம். தலை முழுகல் - தீர்த்துவிடல், ஒழித்துவிடல் சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயமெனவும் திட்டப் படுத்தியுள்ளனர். இத்தலை முழுகல், முழுகுதலைக் குறியாமல் தலை முழுகுதலால் உண்டாகும் (அழுக்குப்) போக்குதல் விலக்குதல் - பொருளைக் கொண்டு வழக்கத்தில் உள்ளதாம். உன்னைத் தலைமுழுகிவிட்டேன் என்று ஒரு கணவன் மனைவியைச் சொன்னால் உன்னைத் தீர்த்துவிட்டேன் என்பது பொருளாகும். இனி, ஒருவர் இறந்தால் நீரினில் மூழ்கி நினைப் பொழிதல் உண்மையால் ஒழித்துவிடல் பொருளும் அதற்கு உண்டாம். தலையாட்டிப் பிழைப்பு - ஆமாம் ஆமாம் என்று சொல்லிப் பிழைத்தல் தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் ஆமாம் ஆமாம் என்று சொல்வதை அன்றி மறுப்பதே இல்லை. ஆமாம் என்பதை வாயால் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தலையாட்டலை மறவார். அதனால் அத்தகையவர் தலையாட்டி எனவே பட்டப்பெயர் பெறலும் உண்டு. கோயில் மாடுகளுக்குத் தலையாட்டும் பயிற்சி தந்து என்ன சொன்னாலும் தலையாட்ட வைப்பார் உளர். அம்மாடு போலத் தலையாட்டு வாரைத் தலையாட்டிப் பொம்மை, ஆமாம்சாமி என்பதும் வழக்கே. தஞ்சாவூர்ப் பொம்மை, தலையாட்டிப் பொம்மைச் சான்று. தலையிடுதல் - பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல் எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக வேண்டா என்னும் பொருளாக அமையும். நீங்கள் தலை யிட்டால் அல்லாமல் சீராகாது என்பதில் தலையிடுதல், தீர்த்து வைத்தல் பொருளதாக அமைகின்றது. தலையிடுதல் தலையீடு என்றுமாம். தலையீடும் இப்பொருள் கொள்வதே. தலையில் அடித்தல் - உறுதி கூறல் தலையில் அடித்துச் சொல்கிறேன் என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின் மேல் ஆணை கூறல், கையடித்தல், தலையில் அடித்துக் கூறல் நெஞ்சில் கை வைத்துக் கூறல் என்பனவெல்லாம் வழக்கில் உள்ளவை. வாக்கை மட்டும் உறுதியாக்காமல், மற்றோர் உறுதியையும் கொண்டது இது. தலைதொட்டேன் எனவரும் இலக்கிய ஆட்சி தலையில் அடித்து உறுதிகூறல் பழமையை உரைக்கும். தலையில் அடித்துச் சொல்லவா என்றால் உறுதி சொல்லவா என்று வினாவுதலாம். தலையைக் குலுக்கல் - மறுத்தல் தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்கு தலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு முறை தலையசைத்த லாக அமையும். குலுக்கல் பல்கால் அசைத்தலாக இருக்கும். ஊம் என்பது ஏற்றுக்கொள்ளலையும் ஊகூம் என்பது ஏற்றுக் கொள்ளாது மறுத்தலாக இருப்பதையும் அறிக. தலையாட்டிக்கெட்ட நீ இப்பொழுது ஏன் குலுக்கு கிறாய் என்பதில் ஆட்டல் குலுக்கல் இரண்டன் பொருளும் தெளிவாம். தள்ளமாட்டாமை - அகற்ற முடியாத நெருக்கம் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய நிலையை உண்டாக்கி இருக்கும். தள்ளிவிட நினைத்தாலும் அவ்வாறு தள்ளிவிட முடியா நிலைமை இருத்தல், தள்ளமாட்டாமை ஆயிற்று. தள்ளிவிட்டால் கெட்டழிந்து போகவேண்டிய கட் டாயம் ஏற்படும் என்னும் உறுதியால் தள்ளாதிருக்க நேர் கின்றதாம். தள்ளிவைத்தல் - ஒதுக்கிவைத்தல் தள்ளிவைத்தல் என்பது இருவகையாக வழக்கில் உள்ளது. ஊரொடு ஒத்துப்போகாதவரை அல்லது ஊரை எதிர்த்து நிற்பவரை ஊரவர் தள்ளிவைப்பது ஒரு வகை. அவரும் அவர் குடும்பத்தவரும் ஊரொடு தொடர்பு கொடுக்கல் வாங்கல் எதுவும் செய்யமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுவர் என்பது அது. கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு உண்டா னால் ஒருவரை ஒருவர் தள்ளிவைப்பதும் உண்டு. இது, இந் நாளில் சற்றே பெருகிவருவது புலப்படுகின்றது. மகளிர் ஆட வரைத் தள்ளிவைப்பதும் அரிதாகத் தோன்றுகின்றது. தளுக்குதல் - நடிப்பால் மயக்குதல் தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர். இந்தத் தளுக்குடன் அணிகலம் ஆடை பூச்சு புனைவு எல்லாம் காட்டிப் பசப்புபவரும் உண்டு. அதனை மினுக்குதல் என்பர். இந்தத் தளுக்கும் மினுக்கும் எவரைக் கெடுக்கவோ? எனப் பார்த்த அளவானே கூறுவது உண்டு. அதற்கு மயங்கி அழிபவர் களும் பலப்பலர். தளுக்குதலும் மினுக்குதலும் உடையவர் மயங்க வைத்துத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வஞ்சகர் என்க. இவைபாற் பொதுவின எனினும், பெண்டிரைப் பற்றியே பெருவழக்காக உள்ளது. தளைபோடுதல் - திருமணம் செய்வித்தல் கழுதைக்குத் தளைபோடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைத்து விட்டால் அது ஓடிப் போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளை யாவது கட்டு. ஒருவன் வீட்டில் கட்டுப்பட்டு இருப்பதற்கு வழி தாலி கட்டி திருமணம் செய்துவிடுவது என்ற கருத்தால் தளை போடுதல் என்பது திருமணத்திற்கு ஆகியது. கட்டிக் கொள்ளு தல், தாலி கட்டுதல், கட்டிய மனைவி என்பவற்றில் வரும் கட்டுதல் திருமணத்தைக் குறிப்பதாம். மனைவியை நினைத்து ஊர்வழி சுற்றாமல் வீடு தேடிவருவதற்கு உதவியாகத் திருமணம் இருப்பதைக் கருதித் தளைபோடுதல் என்பது வழக்காயிற்று. தறிகெட்டவன் - நிலைத்து ஓரிடத்து அமையாதவன் தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி கட்டுத்தறி. கட்டுத்துறை எனவும் வழங்கும். தறி போடுவதற்கும் அடிப்படை தறியே. அப்பெயரே அத்தொழிற்பெயராக அமைந்தது. தறி நிலைபெறுதல் பெற்றமையால், நிலை பெறாமல் திரிபவனைத் தறி கெட்டவன் என்பது வழக்காயிற்று. பாவு, மிதி, அசை ஆகியவை தறியில் அசையும். தறி அசையாது நிற்கும். தன் காலில் நிற்றல் - பிறர் உதவி கருதாதிருத்தல் ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன் துணிவால், தன் பொருளால் வாழ்வதே, அல்லது பிறரை எதிர் நோக்காமல் வாழ்வதே தன் காலில் நிற்றலாகக் கூறப்படுவதாம். ஆதலால் தன் காலில் நிற்றல் என்பது பிறரை எதிர்பாராது வாழும் வாழ்வைக் குறிப்பது அறிக. கால் என்பது ஊன்றுதல். ஊன்றி நிற்கத் தன் கால் உதவுமே யன்றி ஒட்டுக்கால் உதவி எப்படியும் ஒட்டுக் காலாகத்தானே இருக்கும்? ஒட்டுக்காலில் நிற்கவே ஆகிவிட்டால் தன் காலில் நிற்கவே முடியாதே! தாட்டிகம் - வலிமை, வல்லாண்மை தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய தன்மை குறித்து வழங்கும் சொல்லாக உள்ளது. அவன் தாட்டிகமானவன் என்பதில் வலிமைப் பொருளும், அந்தத் தாட்டிகன் போய்விட்டான் ஊரே வைத்த வன் வரிசையாகிவிட்டது என்பதில் வல்லாண்மைப் பொரு ளும் உண்மை புலப்படும். இவ் வல்லாண்மை வழிப்பட்டதே தாட்டிகம் ஆகும். வன் கொடுமை வழிப்பட்டது அன்று. சிலர் அடாவடித்தனம் செய்வது தாட்டிகம் எனப்படாது என்க. தாடியைத் தடவல் - கவலைப்படல் சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவ லாம். தாடி இல்லாதவர் தாடையைத் தடவல் அவ்வகைத்தே. இழப்புக்கு ஆட்பட்டவர் செயலோடாத நிலையில் இருந்து தலையைப் பிடித்தல், நாடியைத் தடவல் ஆகிய செயல்களைச் செய்வர். அதனால் எவரேனும் காலைக்கட்டி உட்கார்ந்தாலும், தாடியைத் தடவினாலும் என்ன கப்பல் கவிழ்ந்துவிட்டதா? என்பர். தாங்காத இழப்புக்கு ஆட்பட்டவர் செயலை ஏன் செய்கிறாய் என்பது வினவற் பொருளாம். தாயமாட்டல் - காலங்கடத்தல் தாயமாவது சூது. அது, இழக்க இழக்க மேலும் ஆர்வத்தை ஊட்டி ஆடவைப்பது. இழந்ததை மீட்டுவிடலாம் மீட்டு விடலாம் என்றே மேலும் மேலும் இழக்கச் செய்வது சூதா கலின், அதில் ஈடுபட்டவர் பசியறியார்; தொழிலறியார்; குடும்ப நிலையறியார்; வீட்டில் நோயார் இருப்பினும், இறப்பே நேரி னும் எண்ணிப்பாரார்; அத்தகைக் கொடுமை வாய்ந்தது சூது. ஆதலால் குடியைக் கெடுக்கவேண்டுமாயின் தாயம் ஆட வைத்து விட்டால் போதும், தாமே தம் குடியைக் கெடுப்பார். தாயம் ஆடவைத்தல் தாயமாட்டல் என்க. ஆடல் வேறு; ஆட்டல் வேறு; அறிக. தார்போடல் - தூண்டிச் சுறுசுறுப்பாக்கல் தார் என்பது இரும்பாலாய கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல், தார் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக் குத்தி அச்சுறுத்தி மாட்டை ஓட்டுவது வழக்கம். ஆதலால் தன்னியல்பாக நடக்கும் மாட்டை விரைந்தோட்ட உதவுவது தார் ஆகும். அத்தார் போலச் சிலரைச் செயலாற்ற வைக்கும் சொல்லும் தார் போடல் என்னும் வழக்கில் வந்தது. அவனைத் தார் போடாமல் கிளப்ப முடியாது; தார் போட்டாலே என்ன என்று கேட்காதவன், இப்படி நயமாகச் சொல்வதைத் தானா கேட்கப் போகின்றான் என்பர். தார்க்குத்தையும் பார்த்துவிடுவோம் என மாடுகள் இருப்பது போல இருப்பவரும் இருத்தல் கண் கூடே. தாளம்போடல் - அடித்தல் தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர் கால் தாளம், கைத் தாளம் என இரண்டாக விரிந்த தாம். கால் தாளம் உதைத்தலால் உண்டாவது. கைத்தாளம் குட்டுதல், அடித்தல், அறைதல், இழுத்தல் ஆகியவற்றால் உண்டாவது. ஒழுங்காக இருக்கிறாயா? தாளம் போடவா? என்றால், அடிக்கவா மிதிக்கவா என்னும் பொருளில் வருவதாம். அத்தாளம் என்பது வேறொரு வகையது. அல் - இரவு, தாலம் - சோறு. அற்றாலம், இரவுணவு. தாளம் என்பதற்கு அடி என்னும் பொருள் வந்த பின் அத்தாளம் எனச் சிதைவடைந்த சொல்லுக்கும் அப்பொருளே வழக்கில் வந்துவிட்டது. அத் தாளம் என்பது அடி. தாளம் போடல் - வறுமைப்படல் தந்தனாப் போடல் போல்வது தாளம் போடல் என்பது. தாளம் போட்டுக்கொண்டு பிச்சை எடுப்பாரைப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும். சிலர் தங்கள் வயிற்றிலும் மார்பிலும் தாளிலும் தாளம் போட்டுக் கொண்டு இரப்பது கண்கூடு. தாள் என்பது காலடி. காலடியால் அளவிட்டு உண்டாக்கியது தாள மாயிற்றாம். திண்டில் இருந்து ஆடிப்பாடி இரத்தல் திண் டாட்டம் ஆகும். தான்தோன்றி - சொல்வார் சொற்கேட்டு நடவாதவன் தான்தோன்றி யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்துவைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ, கல்லின் அமை தியே இலிங்க வடிவு உடையதாகவோ இருந்தால் இப்பெயர் அதற்கு வழங்கப்படும். அது தான்தோன்றி எனப்படுவதுபோலத் தனக்குத் தோன்றியதே சரி; பிறர் சொல்வதைப் பற்றிக் கருதுவது இல்லை என வாழ்பவரும் உளர். அவரைத் தான்தோன்றி என்பது வழக்கு. தனக்குத் தோன்றுவதே தோற்றமாகக் கொண்ட வன் தான்தோன்றி. தான்தோன்றித்தனம் என்பது அறி வின்மையைக் குறிக்கும் வசையாகவும் வழங்குகின்றது. திண்டு - வஞ்சம் திண்டு என்பது தலையணை, திண்ணை போன்றதைக் குறிக்கும். திண்டு தலையணை என்பதில் திண்டு மெத்தையைக் குறிக்கும். திண்ணையில் சாய்ந்துகொள்வதற்காகத் திண்டு அமைப்பதும் வழக்கு. திண்டுக்கு முண்டு என்பதில் எதிரிடைப் பொருள் தரும். ஆனால் இத்திண்டு வேறுபட்டது. அவன் மனத்தில் ஒரு திண்டு இருக்கிறது. அதனால் கலகலப்பாகப் பேசுகிறானா பாருங்கள் என்பதில் திண்டு என்பதற்கு வஞ்சம் அல்லது கரவு என்னும் பொருளுண்மை வெளிப்படும். திருநீறு பூசுதல் - உணவு முடித்தல் சிவநெறியர், உணவு கொள்ளுமுன் திருநீறுபூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப் பொருள் செய்வது வழக்கம். இதனால் வாயாலேயே விருந்து செய்துவிடும் தேர்ச்சியுடையவர்கள். திருநீறு பூசியிருக்கிறீர்கள். சாப்பாடு முடிந்துவிட்டது போலும் என்று பேச்சை முடித்துக் கொள்வர். இல்லை இல்லை நீறில்லா நெற்றிபாழென்பதறிந்து பூசினேன்; உண்டேனில்லை; உணவு வேண்டும் என்பாரா அப்படிவேண்டுமென்றாலும் வாய் விருந்தர்க்கு வேறு வழியில்லாமல் போய்விடுமா? திரையைக் கிழித்தல் - வெளிப்படுத்துதல் திரையாவது மறைப்பு, வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவு களும் மறைப்புகளுமாம். ஆள்களுக்கும் துணித்திரை (முகத் திரை) உண்டு. அதனைக் குறியாமல், உள்ளத்தே மறைத்துள்ள தீய செய்திகளை வெளிப்படுத்துதல் இத் திரையைக் கிழித்த லாம். பொய்யை மெய்யாக நடிப்பதையும் ஏமாற்றுவதையும் வெளிப்படுத்திக் காட்ட விரும்புவர். எவ்வளவுதான் உன்னால் மறைக்க முடியும்? கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள்! பார் உன் திரையைக் கிழித்துக் காட்டுகிறேன் என்று எச்சரிக்கை விடுப் பர். இவண் திரை கிழித்தல் என்பது வெளிப்படுத்துதல் பொருள தாம். முகத்திரையை விலகுதல் என்பதும் இப்பொருளதே. தினவெடுத்தல் - அடங்காது திரிதல் தினவெடுத்துத் திரிகிறான் என்னும் சொல்லின் பொருட் குறிப்பு ஆழமானது. படக்கூடாதது பட்டால் தோலில் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல் தின வுக்கு (காமவெறிக்கு) ஆட்பட்டு அவ்வெறியாலேயே திரிபவன் என்னும் பொருளில் வழங்குவதாம். தினவு அரிப்பு எனவும் படும். அரிப்பெடுத்து அலை கிறான் என்பதும் இப்பொருளதே. பொறாமை, பிறர்க்கு உண் டாகும் தீமையால் மகிழ்தல் முதலியவும் இத்தினவு வகைப் பட்டதே. அடங்காத்தனம் சுட்டும் சொல்லாகத் தினவு வழக்கில் உள்ளது. இப்பொழுது எழுதும் சிறுகதை, பேசும் அரசியல் ஆகியவற்றில் தினவும் அரிப்பும் மிக இடம் பெறுகின்றன. தீயாற்றல் - குழிமெழுகுதல் இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை நீர்விட்டு அணைத்துப் பாலூற்றல் தேன் சொரிதல் எலும்பை எடுத்து உருவமைத்து வழிபடல் ஆகியவெல்லாம் நிகழும். நீர் கொணர்ந்து நிலம் மெழுகி அறுகு நடல், பிரண்டை நடல் என்பனவும் செய்வர். இறந்தவரை எரியூட்டிய மறு நாள், அல்லது புதைத்த மறுநாள் நன் காட்டில் செய்யும் கடன்கள் இவையாம். மற்றையிடங்களில் எரியும் தீயை ஆற்றல் அணைத்தலாம். தீயணைப்பு என்பது அறிக. துடைத்தல் - இல்லாது செய்தல் துடைத்தல் என்பது தடவுதல் பொருளைவிடுத்து துடைத்து எடுத்தலைக் குறித்து வழக்கில் உள்ளது. தண்ணீரைத் துடை என்றால் ஈரப்பதமும் இல்லாமல் ஆக்கலைக் குறித்தல் தெளிவு. அவன் சாப்பிட்டால் பானையைத் துடைத்து அல்லது கழுவி வைத்து விட வேண்டியதுதான் என்பதில் முழுவதும் தீர்த்து விடுதல் என்னும் பொருளில் துடைத்தல் ஆளப்படுதல் வெளிப்படை. திருடன் வந்து வீட்டைத் துடைத்து வைத்தது போல் ஆக்கிவிட்டான் என்பதும், உன்னை ஒரு நாள் கடையில் வைத்தால் போதும் துடைத்து வைத்தது போலத்தான் என்பதும் மொத்தமாக இல்லாது ஆக்கிவிடும் பொருளவாம். துணியைத் தாண்டல் - உறுதி மொழிதல் மெய்கூறல் (சத்தியம் செய்தல்) என்பதன் முறைகளுள் ஒன்று துணியைத் தாண்டல், பிள்ளையைப் போட்டுத் தாண்டலும் இத்தகைத்தே. பிள்ளையைப் போட்டுத் தாண்ட லாகக் கருதப்படும் உறுதியே துணியைப் போட்டுத் தாண்டலு மாம். துணி மானப் பொருள். அதனை எடுத்துப் போட்டுத் தாண்டல் மானத்தின் அடையாளம் எனப்பட்டதாம். நான் சொல்வது பொய் என்றால் இத் தாண்டு பிள்ளை ஐயோ என்று போய்விடும் என்பதுபோல, நான் சொல்வது பொய் என்றால் கட்டத் துணியில்லாமல் போய்விடும் என உறுதி மொழிவது இவ்வழக்கின் பொருளாம். துணி கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. துணியைக் கிழித்தல் - கிறுக்காதல் சீலையைக் கிழித்தல் என்னும் வழக்குப் போல்வது. துணி என்பது துண்டித்தல் என்னும் பொருளில் வருவது எனினும், அதனை முழுமையான சீலை, வேட்டி, துண்டு என்னும் பொருளாகக் கொண்டு அதனைக் கிழித்தலைக் குறித்ததாம். நான் என்ன துணியைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன் என்பதில் நான் கிறுக்கா? என்னும் வினாவுண்மை காண்க. துருவல் - தேடல், ஆராய்தல் துருவுதல் நுண்ணிதாகத் துளைத்தல் பொருளது. தேங்காய் துருவுதல், துரப்பணம் செய்தல், துரவு (கிணறு) என்பவற்றை நோக்கின் நுணுக்கமாகத் துளைத்தல் பொருள தென்பது துலங்கும். இந்நுணுக்கத் துளைப்பு அடர்காட்டின் ஊடுநோக்கிப் பார்க்கும் பார்வைக்கும், பருப்பொருளின் ஊடே நுணுகியாராயும் ஆய்வுக்கும் பொருளாதல் வழக்காயிற்றாம். எதையும் மேலாகப் பாராமல் துருவித் துருவிப் பார்ப்பான் என்பதில் இப்பொருள் விளக்கமாம். தூசிதட்டல் - விலைபோகாதிருத்தல் ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசி தட்டல். காலையில் கடைதிறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தலும், பெருக்குதலும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத் தட்டலுமே வேலை; விற்கும் வேலை இல்லை என்பதைக் குறிப்பது தூசி தட்டல். நாள்தோறும் தூசி தட்டிக் கொண்டிருக்குமாறு நேர்வது எப்படி? பழைய பொருள்கள் போகவில்லை; புதுப்பொருள்கள் வரவில்லை என்பதே பொருள். ஆதலால் விற்பனை இல்லை வேலை மட்டும் தீராத வேலை என்பதே குறிப்பாம். தூண்டில் போடல் - சிக்கவைத்தல் தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக் கவர்வதும் சிக்க வைப்பதும் தூண்டில் போடலாகச் சொல்லப்படுகிறதாம். வலைபோடுதல் வலைவீசுதல் என்பனவும் இப்பொருளவே. தூர்த்து மெழுகல் - ஒன்றும் இல்லாது அழித்தல் தூர்த்தல் - பெருக்குதல்; மெழுகல் - துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து மெழுகப்பட்ட இடத்தில் ஒரு சிறு தூசியும் தும்பும் கூட இல்லாமல்போகும் அல்லவா; அவ்வாறு எந்த ஒன்றும் இல்லாமல் வெறுமையாக்குவது தூர்த்து மெழுகலாக வழங்குகின்றதாம். ஒரு வாரம் வீட்டில் இருந்தான்(ள்) தூர்த்து மெழுகி விட்டுப் போய் விட்டான்(ள்) என்பது இப்பொருளை விளக்கும். தெரிப்பெடுத்தல் - கண்டுபிடித்தல் ஒரு பொருள் களவு போய்விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்து காணலும் நாட்டுப்புறத்தில் இன்று மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய் மறைவைக் கண்டெடுத்தல் தெரிப்பெடுத்தல் என வழங்குகின்றது. இனிச் சாமியாடிகள் சொல்வது கொண்டும் தெரிப்பெடுத்தல் உண்டு. தெரிவிக்கப்பட்ட அடையாளப்படி தெரிவிக்கப்பட்ட இடத்தில் தெரிவிக்கப்பட்ட பொருளை எடுத்தலே தெரிப்பெடுத்தலாக வழக்கில் உள்ளதாம். பலவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு ஏதோ ஒருவகையான் சரியாக இருப்பின் அதனைக்கொண்டே காலத்தை ஓட்டல் கண்டறியும் செய்தி. தெளியக்கடைந்தவன் - தேர்ந்தவன் சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடி னாலும் தெளியக்கடைந்தவன் என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த மோரை மீளக் கடைந்து வெண்ணெ யெடுப்பது போல்வதாம். கடைந்தமோரில் வெண்ணெய் எடுப்பவன் எனவும் கூறுவர். தெளிவு என்பது தெளிந்த மோர். கட்டிமோர் கீழே படிய, தெளிவானது மேலே நீராக நிற்கும். அதில் மோரின் இயல்பும் இல்லை. அவ்வாறாக அதில் வெண்ணெய் எடுப்பது அருமை ஆகலின், அதனை எடுக்கவும் வல்லவன் எனக் கூறுவதாம். இது, இசை வழிப்பட்டதன்று எள்ளல் வழிப்பட்டது. தெற்று - எழும்புதல், தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில மட்டத்திற்கு மேலே திண்ணிதாய் அமைக்கப்பட்டதே திண்ணை என்பதாம். தெற்றுப்பல் என்றால் இயல்பான பல் வரிசையை விடுத்துமேலே எழும்பி நிற்கும் பல்லைக் குறிப்பதாம். தெற்று தென் என்பதன் வழிவந்ததாம். தென், தென்னை, தென்னுதல் என்பவை வளைதல் பொருளுடையதாகி, அவை நிரம்ப வளர்ந்த திக்கிற்குப் பெயராயிற்று. தெற்கு தென் தெங்கு என்பவை அறிக. தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல் காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டு விட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடை முறை. அத் தேய்த்தலுக்கும் எல்லாக் கல்லையும் பயன்படுத்த முடியாது. கேட்பாரற்றதும் கருதுவாரற்றதுமாகிய கல்லிலேயே தேய்ப்பர். அத்தகைய கல்லைப் போலச் சிலரை இழிவு படுத்தினால், என்னைத் தேய்த்துப் போட்ட கல்லைப்போல நினைக்கிறான்; அவனை மதித்து நானென்ன பார்ப்பது என வெறுத்துரைத்தல் வழக்கு. தேய்த்துவிடுதல் - ஏமாற்றி இல்லையெனல் இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலைய விட்டு அவர்களே உண்மையறிந்துகொண்டு ஒதுங்க விடுதல் தேய்த்து விடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல் போல்வ தென்க. எண்ணெய் தேய்த்தல் தேய்த்து குளிப்பாட்டல் என்ப வற்றைக் கருதினால் தேய்த்து விடுதல் இன்பப்படுத்துதலும், அப்படியே குளிப்பாட்டுதல் ஏமாற்றுதலும் ஆகிய பொருள் களைத் தருவதாக அமையும். குளிப்பாட்டல், என்னும் வழக்கை அறிக. பேச்சிலேயே குளிப்பாட்டி விடுவானே அவனுக்குத் தண்ணீர் எதற்கு? என்பதும் இப்பொருளை விளக்கும். தேனாக ஒழுகுதல் - (வஞ்சமாக) இனிக்க இனிக்கக் கூறல் வாய் கருப்புக்கட்டி; கை கடுக்காய் என்பதும், உள்ளத்தி லே வேம்பு உதட்டிலே கரும்பு என்பதும் பழமொழிகள். தேன் ஒழுகுதல் போல இனிக்க இனிக்கப் பேசுதலைக் குறித் தாலும், உள்ளே வஞ்சகம் உண்மையால் பெருந்தீமை பயப்பதே யாம். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்னும் வள்ளலார் வாக்கு தேனாக ஒழுக விடுவாரின் தேர்ச்சி நிலையைத் தெளிவிக்கும். தொட்டாற் சுருங்கி - அழுகுணி, சொல்லப் பொறாதவன் தொட்டவுணர்வால், தானே சுருங்கும் செடி, தொட்டாற் சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒரு சொல்லைச் சொல்லப் பொறுக்காமலும், தொட்டால் தொடப்பொறுக்காமலும் அழும் குழந்தையைத் தொட்டாற் சுருங்கி என்பர். அந்நிலையில் வளர்ந்தவர்களும் இருப்பதுண்டு. விளையாட்டுக்கு ஒன்றைச் சொன்னாலும் விளை யாட்டாகக் கொள்ளாமல் சண்டைக்கு வந்து விடுவர். அப்படி அவர்கள் இயல்பு இருப்பதை அறிந்து பலரும் அதே விளை யாட்டுக் காட்டி அத்தன்மையே இயல்பாகப் போய்விட ஆவ தும் உண்டு. அது தொட்டாற் சுருங்கி, உன்னிடம் வராது என்பது வழக்கு. தொடர்பு - நட்பு, பாலுறவு தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும் வழக்கில் உள்ளது. அவனுக்கும் அவளுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு என்னும் வழக்கு அதனைக் காட்டும். ஆனால் இத்தொடர்பு முறையல் முறையாய் ஏற்பட்டது என்பது அறியத்தக்கது. சான்றோர் தொடர்பு நட்பாம் தொடர்பு என்ப வற்றுக்கும் விலக்காம். இத்தொடர்புக்கும் உள்ள எதிரிடைப் பொருள் பெரிதாம். தொடுதல் - அயற்பால்மேல் கைபடல், வஞ்சினம் கூறல் தொடுதல் என்பது இயல் நிலையில் குறைவற்றது. ஆனால் தொடுதற்கு உரிமையில்லாரைத் தொடுதல் என்னும் வழக்குப் பொருளில் இடம் பெறும்போது பழிப்புக்குரியதாகின்றது. தொடுப்பு என்பதும் பாலுறவுச் சொல்லாக வழக்கில் உண்டு. இனிப் பகையுடையார் என்னைத் தொடு பார்க்கலாம்; தொட்டுவிட்டு உயிரோடு போய்விடுவாயா? என வஞ்சினங் கூற இடமாக இருப்பதும் தொடுதலாக அமைகின்றது. தொவித்தல் - தோல் போக்கல், இடித்தல், அடித்தல் தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித் தல் என்பது வழக்கு. அவ் வழக்கில் இருந்து அடித்தல் பொரு ளும் உண்டாயிற்று. சண்டையில் தொலித்து விட்டான் என்பது கடுமையாக அடித்துவிட்டான் என்னும் பொருளுடன், தோல் உரியக் காயங்கள் உண்டாக்கி விட்டான் என்னும் பொரு ளும் உண்டாயிற்று. அடித்தல், தொலித்தல், குற்றுதல் என்பன வெல்லாம் இடித்தல் சார்புடைய சொற்களே. நக்கிக் குடித்தல் - உழையாமல் உண்ணல் ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும் என்பது பழமொழி. நாய் நீரை நக்கிக் குடிக்கும் அவ்வாறே கஞ்சி சோறு ஆயவற்றை நாய் உண்பதும் நக்குதல் எனவே சொல்லப்படும். நக்குதல் என்பது இழிவுப் பொருள் தருவதாக அமைந்துவிட்டது. அதுபோல் உழை யாமலோ, உழைப்புக் கிட்டாமலோ இரந்து உண்பதை நக்கிக் குடித்தல் என்பது வழக்காக ஊன்றி விட்டது. நகை என்பதும் உயர் பொருளை விடுத்து இழி பொருளுக்கு இடமாகியதும் உண்டு. நகையாண்டி என்பதே நையாண்டியாதல் அறிக. நட்டாற்றில் விடுதல் - ஒரு பணியின் நடுவே கை விடுதல் நட்டாற்று (நடு ஆற்று) வரை வெள்ளத்தில் படகில் ஏற்றிக் கொண்டு போய் இடையே உன்பாடு எனத் தள்ளி விட்டால் அவன் பாடு என்னாம்? கரையிலேயே இருந்திருப் பான்; வெள்ளம் வடித்தபின் வந்திருப்பான்; நீந்திக் கடக்க முடியுமா என எதிர்நோக்கியிருப்பான். இவற்றுக்கு வாய்ப் பெதுவும் இல்லாமல் வெள்ளத்தோடு வெள்ளமாகப் போக விடுதல் வெங்கொடுமையாம். இப்படி ஓர் இடரான செயலைத் தொடங்கி அதன் இடையே உதவாமலும் எதிரிட்டும் இருத்தல் நட்டாற்றில் விடுதலாம். இது நட்டாற்றில் தள்ளல், கைவிடல் எனவும் வழங்கும். நடப்பு - நடக்கும் செய்தி, ஆண்டு இப்பொழுது செய்ய முடியாது; நடப்புக்குப் பார்க்க லாம் என்பது வழக்கு. நடப்பு என்பது எதிர்வரும் ஆண்டு என்பதாம். இதில் நடக்கும் ஆண்டை நடப்பு என்பது வழக் கில்லை. ஆனால், நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதில் நடப்பு என்பது நடைமுறை என்றும் நிகழ்ச்சி என்றும் பொருள் தருவதாய் அமைகின்றது. இதற்கு மேல், அவன் நடப்புச் சரியில்லை என்பதில் நடப்பு ஒழுங்குப் பொருள் தருதல் வெளிப்படை. ஆயினும் நடப்பு நடை என்பதன் வழியாகவே வருகின்றது. நடுச்செங்கலை உருவல் - ஒரு தீமையால் பல தீமைக்கு ஆளாக்கல் ஒரு தளத்தின் நடுவேயுள்ள செங்கல்லை உருவினால் அதன் பக்கங்களில் உள்ள செங்கற்களும் ஒவ்வொன்றாகச் சரிந்து தளமே பாழ்பட நேரும். அவ்வாறே ஓர் அரிய செயலில் ஈடுபட்டுள்ளபோது அதற்கு அச்சாணியாக இருக்கும் ஒரு செயலைத் தடைப்படுத்தி விடுவது முழுத் தடையும் செய்த தாகவே முடியும். அன்றியும் முழுப்பயன் இழப்புடன், வீண் முயற்சியும், செலவும், மனத்துயரும் உண்டாகவே இடமாம். நன்றாகத் தொழில் ஓடிக்கொண்டிருந்தபோது நடுச் செங்கலை உருவுவது போல உருவி விட்டாளே என்பது வழக்குரை. நருள் - மக்கள், கூட்டம் நரலுதல் என்பது ஒலித்தல். மக்கள் கூட்டமாகக் கூடிய இடத்தில் ஒலி மிக்கிருத்தல் வெளிப்படை. ஆதலால் ஒலித்தல் பொருள் தரும் நரல் அவ் வொலிக்கு அடிப்படையாக அமைந்த கூட்டத்தை நரல் எனக் குறித்து, நருள் என்றா கியது. நருள் பெருத்துப் போனது என்பதில், மக்கள் பெருகி விட்டனர் என்னும் குறிப்புளது. இவ்வளவு பதவலா? என்பதும் மக்களின் கூட்டம் என்னும் பொருளே தருதலும் வழக்கே. பதவல் பார்க்க. நாக்கோணல் - சொல் மாறல் நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது. கோடானு கோடி, கொடுப்பினும் தன்னுடைநாக் கோணாமை கோடியுறும் என்னும் ஔவையார் தனிப்பாடல் நாக்கோணாமை என்ன என்பதையும் அதனைப் போற்றுதலின் அருமையையும் தெளிவிக்கும். நாக்கு மாறி, சொற்புரட்டன், பேச்சுமாறி என்பன வெல்லாம் நாக்கோணல் பற்றினவே, சொன்னதை மாற்றிப் பேசுதல் வாந்தியெடுத்ததை உண்டல் என உவமை வகையில் வசை மொழியாக வழங்குகின்றது. நாடகமாடல் - இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல் நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் நாடகக்காட்சி நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று நிகழ்ந்ததாக எவரும் கொள்ளார். அது நடிப்புத்திறம் காட்ட வல்லகலை; அது கலையே அன்றி வாழ் வன்று நாடகமே வாழ்வாகி விட்டால், வாழ்வு என்னாகும்? இவ்வளவு தெரிந்தும் என்னிடமே நாடகமாடுகின்றான் என்றும், என்ன நடிப்பு நடிக்கின்றான் என்றும் உவர்ப்பால் சொல்லுவது உண்டு. பசப்புதல் என்பதும் ஒருவகையில் நாடக மாடுதல் போன்றதே. நாடல் - நெருங்குதல் நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக் கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும், அவர்கள் விரும்புவன செய்தலும் எல்லாம் நெருக்கத்தின் மேல் நெருக்கமாக அமைவன. ஆரிருந்தால் என்ன அவனுக்கு அவள் மேல்தான் நாட்டம்; பாரேன் குழைவதை! என்பதில் நாட்டம் விருப்பத்தின் வழியாக வந்த நெருக்கத்தைக் காட்டுவதாம். என்னை நாடினான் என்பதில் நெருங்கினான் என்பதே பொருளாதல் அறிக. நாடிபார்த்தல் - ஆராய்தல் அவன் ஆளென்ன, பேரென்ன! என்னை நாடி பார்க்கி றான்! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும். நாடிபார்த்து நோய் இன்னதென அறிதல் மருத்துவ நெறி. அந்நெறியைத் தழுவிவந்த வழக்கு நாடி பார்த்தலாம். பதம் பார்த்தல் என்பதும் அது. நாடி பார்த்தல், நாடிப் பார்த்தலும் (துப்பறிதலும்) கொண்டதே. நாடியைப் பிடித்தல் - கெஞ்சல் உதவிவேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம் என்னும் பொருட்டது. இந்நாடியைப் பிடித்தல் கெஞ்சிக் கேட்டல் வழிப் பட்டது. நாடியைப் பிடித்தல் உரிமைப்பட்டவர் செய்கை. காலைப்பிடித்தல் அவ்வுரிமை கருதாத பொதுமைத் தன்மை யுடையது. நாடியைப் பிடிக்கிறேன்; நான் கேட்டதை இல்லை என்று சொல்லிவிடாதே என்பது வழக்கு. நாய்ப்பிழைப்பு - இழிவு, ஓயாதலைதல் நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப் படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படி யாக இருந்துவிடுவதும் அதற்கு வழக்கமே. அதனால்தான் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ என நன்றி மறப்புச் சான்றாக நாயைக் குகன் வழியே கம்பர் குறித்தார். மற்றும், நாய் எத்துணைப் பொருள் கிடைப்பினும் இழி பொருள் எச்சில் இலை தேடலை விடுதல் இல்லை; வேலையின்றி ஓயாதலை தலை ஒழிதலில்லை; தன்னினத்தைக் கண்டால் காரணம் இல்லாமலே குரைத்தல் கடித்துக் குதறுதல், உண் டதைக் கக்கி அதனைப் பின் உண்டல் ஆகியவற்றைச் செய்யா மல் இருப்பதில்லை. ஆகலின், இவற்றைக் குறித்தே இழிவுப் பொருள் ஏற்பட்டதாம். அதனால், இது என்ன நாய்ப் பிழைப்பு என வழக்கு மொழி உண்டாயிற்று. நாவசைத்தல் - ஆணையிடல் நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொரு ளிலும் வழங்குகின்றது. அவன் நாவசைத்தால் போதும்; நாடே அசையும் என்பது நாவசைத்தல் - ஆணை என்னும் பொருளாதலை விளக்கும். நீங்கள் நாவை அசைத்தால் போதும்; நான் முடித்துவிடுவேன் என்பது ஆணை கேட்டு உட்படுவார் வேண்டுகை உரை. நாறிப்போதல் - அருவறுப்பான குணம், இழிமை நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்கமுடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும் வெறுக்கத்தக்க மணமும் நாறுதலே. பீநாறி என்பதொரு செடிப் பெயர். அதன் தன்மையை இனி விளக்கவேண்டிய தில்லையே. இந்நாறுதல் மூக்கை நாறச் செய்யாமல் மனத்தில் நாறுதலை உண்டாக்கும் இழிசெயல் செய்வதைக் குறிப்பதாக வழங்குகின்றது. அவன் பிழைப்பு நாறிப் போயிற்று. அவன் நாறின பயல்; பீநாறிப்பயல் என்பனவெல்லாம் நாறிப்போதல் பொருளை நவில்வன. நீட்டல் - தருதல், அடித்தல், பெருகப்பேசல் கைந்நீட்டல் தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றி யும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் என்பது கைந்நீட்டல் போல வந்தது. நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பது கொடைப் பொருள் தரும் நீட்டல். இனி நீட்டினால் என்கையும் நீளும் என்பது அடித்தல் பொருள் தரும் நீட்டல். உனக்கு வாய் நீண்டுவிட்டது என்பது வாய் என்பது நாவைக் குறித்து நாவு பேச்சைக் குறித்து வந்ததாம். உனக்கு நாக்கு நீளம் என்பதும் இப்பொருளதே. நீட்டிக் குறைத்தல் - தந்து நிறுத்துதல் நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு குறைத்துக் கொடுத்த நிலையையும் குறித்து வழங்குகின்றது. நீட்டுதல் குறைத்தல் என்பவை தம் சொற்பொருளை விடுத்து வேறு பொருள் தருதலால் வழக்குச் சொல்லாயிற்றாம். நீட்டுதல் என்பதைப் பார்க்க, கைந் நீட்டலும் காண்க. நீர்வார்த்தல் - தருவதை உறுதிசெய்தல் தாரைவார்த்தல் என்பதும் இதுவே. இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன் என்பதற்கு அடையாள மாக நீர் வார்த்தல் அல்லது தாரைவார்த்தல் நிகழும். தாரை - நீர், நீண்டு ஓடுதலால் பெற்ற பெயர். தார் என்பதும் நீர் என்பதும் ஒன்றே. தார் நீண்டு செல்வது என்னும் பொருளது; நீள்வதால் நீள் என்பது நீரே. குறள் வடிவில் வந்த திருமாலுக்கு மாவலி மன்னன் தாரை வார்த்த கதையும், குறள் நெடுமாலாக வளர்ந்து நிலமளந்த கதையும் நாடறிந்தது. வேதியச் சடங்கில் திருமணம் முடித்துத் தருதலில் தாரைவார்த்தல் உண்டு. பெண்ணை உன்னிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டேன் என்பதற்குரிய சடங்காக அது நிகழ்த்தப் படுகின்றது. நீர் தொட்டு உறுதி செய்தல், நிலந் தொட்டு உறுதி செய்தல் போல இது நீர் விட்டு உறுதி செய்தலாம். நூறு நூறு-நூறாண்டு வாழ்க தும்மல் உண்டானால் அருகில் இருப்பவர் நூறு என்றும் நூறு நூறு என்றும் சொல்வர். நூறாண்டு வாழ்க என்பதே வாழ்த்துப் பொருளாம். நூறாண்டு நூறாண்டு என்ப தன் அடுக்கே நூறுநூறு என்பதாம். இருநூறு காண்க. நெட்டியைப் பிடித்தல் - ஏவுதல், கடினமான வேலை நெட்டியாவது பிடர். குப்புற வீழ்த்த நினைவார், பிடரைப் பிடித்துத் தள்ளுவர். அவ்வழக்கம் பிடர் பிடித்துத் தள்ளாமலே, ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்கு வந்தது. வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்ய ஏவுதலே நெட்டியைப் பிடித்தலாகச் சொல்லப் படும். இனித் தாங்க இயலாச் சுமையைத் தலையில் வைத்துச் சுமப்பவர் தம் கழுத்தைப் பிடித்து விடுவது வழக்கு. அதுபோல் கடினமான வேலையில் ஈடுபட்டிருப்பவர் நெட்டியைப் பிடிக்கிறது என்றும், நெட்டியைப் பிதுக்குகிறது என்றும் கூறுவது உண்டு. நெடுங்கை - தாராளக்கை நெடியகை என்பது நீண்டகை என்பதைக் குறியாமல் தாராளமாக அள்ளித் தரும் கை, மிகச் செலவு செய்யும் கை என்னும் பொருளில் வரும்போது வழக்குச் சொல்லாம். அவளுக்கு நெடுங்கை. ஒரு மாதச் செலவுக்கு இருந்ததை ஒரு நாளையில் தீர்த்து விடுவாள்; ஆறுநாள் அரைவைச் செலவு அவளுக்கு ஒரு நாளுக்குப்போதாது; அவள் கை அவ்வளவு நெடுங்கை; ஒருவர் என்ன இருவருக்குமே நெடுங்கை; குடும்பத்துக்கு எப்படி கட்டுப்படியாகும் என்பவை வழக்கு மொழிகள், நீட்டல், கைநீட்டல் காண்க. நெருக்கம் - நட்பு, உறவு நெருங்கி நெருங்கி அல்லது அடுத்தடுத்து இருப்பதே நெருக்கம். பயிர்கள் நெருக்கம், களைநெருக்கம் என வழங்குவர். மக்கள் நெருக்கம் மிகுதி நெரிசல்மிகுதி என மக்களுக்கும் நெருக்க ஆட்சியுண்டு. ஆனால், இந்நெருக்கம் உள்ளநெருக்கம்; உறவு நெருக்கம், ஆதலால், வழக்குச் சொல் வகையைச் சேர்ந்தது. எனக்கு நெருக்கமான உறவு; எனக்கு நெருக்கமான நண்பர் என்பவற்றில் நெருக்கப் பொருள் அறிக. இதே பொருள், எனக்கு நெருக்கமானவர் என்பதிலும் உள்ளதறிக. அது நட்புப் பொருளது. நெருங்கிய நண்பர் என்பதாம். நெருக்குதல் - மலநீர் கழித்தல் நெருக்கம் என்பது செறிவுப் பொருளது. பயிர் நெருக்கம், களை நெருக்கம் என்பவை அதனைக் காட்டும். எனக்கு நெருக்க மானவர் என்பது உறவினர் நண்பர் என்பதைக் காட்டும் செறிவுப்பொருளேதரும். அடிக்கடி துன்புறுத்தலும் நெருக்கல் என்றும் நெருக்கடி என்றும் சொல்லப்படும். அவன் செய்யும் நெருக்குதலுக்கு அளவேயில்லை என்பது அதனைக் காட்டும். ஒன்றுக்கு இரண்டுக்கு என்பவை நெருக்குதலாகச் சொல்லப் படுதல் உண்டு. உடனே செய்யவேண்டிய நெருக்கடிகள் தாமே அவை. இயற்கையின் அறைகூவல் அல்லவா அவை? நெற்றிப்பணம் - விரும்பாது தரும் காசு இறந்தவர்கள் நெற்றியில் நாலணாக் காசு ஒன்றைப் பசை வைத்துப் பொட்டுப் போல ஒட்டுவர். அதற்கு நெற்றிப் பணம் என்பது பெயர். அப்பணம் இடுகாட்டில் புதைவினை அல்லது எரிவினை புரிவார் எடுத்துக் கொள்ளற்குரியது. இழவுக் குறியாக அமைந்த அப்பணம், கட்டாயமாகத் துன்புறுத்தி வாங்குப வரிடம் உனக்கு நெற்றிப்பணம் அழுதிருக்கிறேன். இனிமேலும் வந்துவிடாதே என்பர். நெற்றிப் பணம் வைக்கப்பட்டவர் மீள் வரோ? அப்படி நீ மீளாதே என வெறுத்துத் தரும் பணம் நெற்றிப்பணம் எனப்பட்டதாம். நொள்ளை - குருடு கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படுகின்றது. நொள்ளைக் கண் என்பது குருட்டுக் கண்ணாம் இல்லை என்று சொன்னாலும், சின்னபிள்ளை என்று சொன்னாலும் என்ன நொள்ளை என்றும், சின்ன நொள்ளை என்றும் எதிரிட்டுரைப்பது வழக்கு. நொள்குதல், ஒழுகுதல், குறைதல் பொருளது. இது நொள்ளையென மாறி இல்லாமைப் பொருள் தருவதாயிற்றாம். நொள்ளை விழிக்கொரு நோன்புண்ணும் வந்தாற்போல் என்பதோர் உவமையாட்சி. நொறுக்குதல் - எல்லாமும் தின்றுவிடல் அடித்தல் பெட்டி நிறையப் பண்டம் வைத்துவிட்டுப் போனேன்; ஒன்றும் காணவில்லை; எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டாயா? என்பதில் நொறுக்குதல் தின்னுதல் பொருளில் வருதல் காண்க. நொறுக்குத் தீனி நொறுங்கத் தின்று நோயகற்று என்பவற்றில் நொறுக்குதல் தீனியொடு தொடர்பு கொண்டமை அறிக. நொறுக்குதல் என்பது அரைத்தல், பொடியாக்கல் ஆகிய பொருளில் இருந்து தின்னுதல் பொருளுக்கு வந்துள்ளதாம். இனி நொறுக்கிவிடுதல் என்பது அடித்தல், அடித்துச் சிதைத்தல் எனத் தாக்குதல் பொருளிலும் இடம்பெற்றுள்ளதும் அறிக. வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். அவனையும் நொறுக்கி விட்டனர் என்பர். நொறுநாட்டியம் - ஆகாதன செய்தல் நொறுநாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடு களை (உணர்வுகளை)க் காட்டி நடிக்கும் நடிப்பாகும், அது நொற நாட்டியம் என்றும், நொறு நாட்டியம் பிடித்தவன் என்றும் வழங்குகின்றது. செய்தற்கு அரியகலை நுணுக்கங்களைப் பொதுமக்கள் அவ்வளவாக அறிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களால் நுணுக்கம் உணர முடியாத அது வெட்டித் தனமானதாக அவர் களுக்குத் தோன்றுகின்றது. அதனால் வந்த பொருள் இது. நொறு நாட்டியம் அடாவடிச் செயலாகக்கூட (அக்கிரமமாகக் கூட) அவர்களுக்குத் தோன்றிப் பழிப்புக்கு ஆளாகிறது. நோட்டம் - உள்ளாய்வு போகிறவர்கள் வருகிறவர்களை நோட்டம் பார்க்கி றானே என்ன? இவன் யார்? எந்த ஊரான்? என்பது சிற்றூர் களில் கேட்கப்படும் செய்தி. களவு திருட்டு முதலிய குற்றங்கள் ஊரில் நடந்துவிட்டால் ஊரவர்களே நோட்டம் பார்ப்பர். தங்கம், முத்து, மணி முதலியவற்றின் தரம் காண்பதற்கு முற் காலங்களில் நோட்டகாரர் என்பார் இருந்தனர். ஒற்றர்கள் என்பாரும் நோட்டகாரரே. இத்தகைய நோட்டம் பருப் பொருள் ஆய்வில் இருந்து நுண்பொருள் ஆய்வுக்கும், வெளிப் படும் ஆய்வில் இருந்து உள்ளாய்வுக்கும் மாறிவந்துள்ளதை வழக்கால் அறிய முடிகின்றது. பக்கப்பாட்டுப்பாடுதல் - இணைந்து பேசுதல் இருவர் இணைந்து பாடினாலும் பலர் இணைந்து பாடி னாலும் ஒருவர் பாடியதாகவே ஆகும். ஆனால், பக்கப்பாட்டு என்பது அவர்கள் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுவதாம். பின் பாட்டுப்பாடுதல் என்பது காண்க. ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போது அவர்க்குத் தொடர்புடைய ஒருவர், தொடர்பிலாதவர்போல வந்து நின்று அவர் கூறிய கருத்தை அழுத்தமாக வரவேற்பார்; சான்றும் காட்டுவார். அதனால் அதனைக் கேட்பவர் ஒப்புக்கொள்ள நேர்ந்துவிடும். இதனைப் பக்கப்பாட்டுப் பாடுதல் என்பதும் வழக்கே. பகுமானம் - தனிப்பெருமை தற்பெருமை மானம் என்பது பெருமை, பகு என்பது பகுக்கப்பட்டது அல்லது பிரிக்கப்பட்டது. பெரிது என்பதுமாம். பிறரினும் தன்னைப் பெரிதாக எண்ணிக்கொள்வது பகுமானமாகும். உனக்கிருக்கும் பகுமானத்தில் எங்களை நினைக்க முடியுமா? உன் பகுமானம் உன்னோடு; எங்களுக்கென்ன ஆகப்போகிறது உன் பகுமானத்தை வேறுயாரிடமும் வைத்துக்கொள் என்பன வெல்லாம் பகுமானச் செய்திகள், பகுமானம் என்பது தற் பெருமை, செருக்கு ஆணவம் என்றெல்லாம் சொல்லப்படுவ தற்குப் பொதுமக்கள் சொல்லும் வழக்குச் சொல்லாம். பச்சை காட்டல் - வழி பிறத்தல் பச்சைக்கொடி காட்டல் என்பதும் இது. தொடரி (Train) புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக்கொடி காட்டிவிட்டால் தடையில்லை; போகலாம் என்பதற்கு அடையாளம். அதுபோல், பெற்றோர் சம்மதித்து விட்டாலும், தனக்கு மூத்த ஆணோ, மணப்பருவம் வாய்ந்த பெண்ணோ உடன் பிறந்தாருள் இல்லாவிடினும், இனி என்ன பச்சைக்கொடி காட்டியாயிற்று; மண ஏற்பாடு செய்ய வேண்டி யதுதானே என்பர். பச்சைக் கொடிகாட்டல் தடையில்லை என்னும் பொருளின் வழி, வழி பிறத்தலைக் காட்டுவதாம். வீட்டில் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் என ஒப்புதலால் உவப்பார் மிகப் பலர். பச்சை நோட்டு - நூறு உரூபாத்தாள் ஒருவர் மாட்டை விற்க - வாங்கத் தாம்பணிக்குப் போகுங் கால், இடைத் தரகர் வாங்குவார் விற்போர் இடையே, வாயால் பேசாது கை விரலால் பேசுவது வழக்கம். அவர்கள் அதற்கெனச் சில குறியீடுகள் வைத்துளர். சில விரல்களைப் பிடித்து இத்தனை பச்சை நோட்டு என்பர். பச்சை நோட்டு என்பது நூறு உருபா என்பதாம். கடுவாய் நோட்டு என்றாலும் நூறு உருபாவேயாம். மற்றை உருபா நோட்டுகளினும், நூறு உருபா நோட்டு வண்ணம் வேறுபட்டுப் பச்சையாக இருந்திருத்தல் வேண்டும். இல்லை யேல் பச்சை செழிப்பு ஆதலால் வளமான பெரிய தொகை. நோட்டைக் குறித்திருத்தல் வேண்டும். நோட்டு = பணத்தாள். பசப்புதல் - நயமாகப் பேசி ஏய்த்தல் இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகை யெல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்கு கிறது. நினைவு சொல் செயல் ஆகிய முந்நிலைகளிலும் ஏமாறச் செய்தல் பசப்புதலாக வழங்குகின்றது. அந்தப் பசப்பெல்லாம் இங்கு வேகாது என்பது ஒரு மரபுத் தொடர். வேகாது என்பதும் வழக்குச் சொல்லே, நிறைவேறாது என்பது பொருள். அவனோடு அவனாகிப் பசைபோல் ஒட்டிப் பசப்பினாலும் வெற்றிபெற முடியாது போகும் இடமும் உண்டு. அத்தகையர் பசுப்புதலைக் குறிப்பால் உணரும் திறமிக்கவராம். பசுமை - செழிப்பு, செழுமை பசுமை வண்ணத்தைக் குறியாமல் அதன் செழுமையைக் குறிப்பதாக அமைகின்றது. அந்த நிகழ்ச்சி அல்லது நினைவு பசுமையாக இருக்கிறது என்பது இதனை விளக்கும். பசுமையான இயற்கைச் செடி கொடி மரங்கள், ஊட்டமும் கொழுமையும் மிக்கவை. அதன் வளமை பசுமையாலேயே அறியப்படும். பச்சை இலை பிடிப்போடு இருக்கும். பழுத்தது உதிரும். தோலுக்குப் பச்சை என்பதொருபொருள். அது வளமையாம் கொழுமையைச் சேர்த்து வைக்கும் இடமாக இருத்தலால் பெற்ற பெயராம். பசை - ஒட்டிக் கொள்ளல், பசுமை, வளமை பசை ஒட்டிக் கொள்ளும் தன்மையது என்பது வெளிப் படை. பசை பிசின் எனவும் வழங்குகிறது. பயின் என்பது பழஞ்சொல். பசை பச்சை என்பதன் இடைக்குறையாக வழங்குதல் ஆயிற்று. பச்சை அல்லது நீர்மைப் பொருள் ஒட்டிக் கொள்ளும் தன்மையது. அவர் பசையான ஆள் என்னும் பொழுது பணக்காரர் என்பதைச் சுட்டுகிறது. பசை இருந்தால் பக்கம் பத்துப்பேர் என்பதில் பசை என்பது பண வளமையுடன், கொடை வளமையும் சேர்தல் அறிக. பச்சைப் பிள்ளை என்பதில் பச்சை பசைத் தன்மையொடு ஒட்டிக்கொள்ளும் குறிப் புள்ளமை அறிக. பட்டணம் - நாகரிகம் பட்டணம், பெருநகர். ஆங்கு ஆள்வோர்; செல்வர், கற்றோர் ஆகியோர் வாழ்ந்தமையாலும், அவர்கள் வளமான வாழ்வும், பொழுதுபோக்கும், கலைத்திறமும் சிறக்க வாய்ப்பு களை அமைத்துக் கொண்டமையாலும் பட்டணம் என்பது நாகரிகக் களமாக மதிப்புப் பெற்றது. பட்டணத்தான் உடைநலத்தோடும், பூச்சுப் புனைவு களோடும், பட்டிக்காட்டார் புரியாத மொழியோடும் சென்ற போது அவர்களைக் கண்ட சிற்றூரார் பெருத்த நாகரிக முடையவரெனவும், வேறோர் உலகத்தில் இருந்து வந்தவர் எனவும் அறியாமையால் மதிப்பாராயினர். அதனால் பட்டணம் நாகரிகம் எனப்பட்டது. பட்டிக்காடு - நாகரிகம் இல்லாமை நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலைநாட்டு முறை. சிற்றிசன் என்னும் ஆங்கிலச் சொல்லும் சிற்றி என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால் பழங்காலத் தமிழ் நாகரிகம், புறப்பொருள் வளர்ச்சி கருதாமல் அகவுணர்வு கருதியே வழங்கப் பெற்றதாம். படித்தவர்களும், செல்வச் செழிப்பானவர்களும், ஆளும் பொறுப்பாளர்களும் நகரத்தில் வாழ்ந்ததாலும் அல்லும் பகலும் உழைப்பவரும் நிலத்தை நம்பி வாழ்பவர்களும் பட்டிகளில் வாழ்ந்தமையாலும், அவர்களுக்குக் கல்வி என்பது கைக்கு எட்டாப்பொருளாகப் படித்தவர்களும், பதவியாளர்களும் மேட்டுக் குடியினரும் செய்துவிட்டமையாலும் பட்டிக்காடு என்பது நாகரிகம் இல்லாமைப் பொருள் தருவதாயிற்று. பட்டை கட்டல் - இழிவுபடுத்துதல் பட்டை என்பது மட்டையின் திரிபு, பனைமட்டை, தென்னைமட்டை என்பனவற்றையும், மடல் என்பனவற்றையும் நினைக. பதனீர் பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை விரித்து மடித்துக் குடையாக்கிக் குடித்தல் நடைமுறை - முன் னாளில். இந்நாளில் கூடக் காட்டுவேலை செய்வார் பனையின் பட்டையில் கஞ்சி குடித்தல் உண்டு. பனங்குடையில் (பட்டை யில்) ஊனூண் வழங்கிய செய்தி புறப்பாடல்களில் உண்டு. பதனீர் குடித்துப் போடப்பட்ட பட்டையை எடுத்துக் கழுதை வாலில் கட்டி வெருட்டல். சிறு பிள்ளையர் விளையாட்டு, அதன் வழியே பட்டைகட்டல் இழிவுப் பொருளுக்கு ஆளாயிற்று. பட்டை தீட்டல் - ஏமாற்றுதல், ஒளியூட்டல் அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி விட்டான் என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். பட்டை நாமம் பரக்கச் சார்த்தல்; கொட்டை நாமம் குழைச்சிச்சார்த்தல் என்னும் பழமொழியும் ஏமாற்றை விளக்கு வதாம். வயிரத்திற்குப் பட்டை தீட்டல் ஒளியூட்டுவதாம். சிலர் நல்ல ஆசிரியரை அல்லது பெருமக்களை அடுத்து அறிவன அறிந்து கொண்டால் அவரைப் பட்டை தீட்டப்பட்ட ஆள் எனப்பாராட்டல் உண்டு. இப்பட்டை ஒளியுடைமையாம். அறிவுடைமையைச் சுட்டுவதாம் பட்டை போடல் - மதுக் குடித்தல் பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டைகட்டல் பார்க்க. ஆனால்அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப் பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து வழங்குவதாயிற்று. இனிப் பட்டைபோட்டுக் காய்ச்சும் சாராயம் பட்டை எனப் படுவதால் அதனைக் குடித்தலையும், குறிக்கும். போடல் என்பது உட்கொளல் பொருளது. வெற்றிலை போடல் வாயில் போடல் என்பவற்றால் அப்பொருள் விளங்கும். படங்காட்டல்-பகட்டுதல் நடித்தல் கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னாக நின்று மேலலுவலர் பாராட்டைப் பெற்று விடுவதுண்டு. அத் தகையரைப் படங் காட்டுகிற ஆளுக்குத் தான் காலம்; என்ன உழைத்து என்ன பயன் எனப் பிறர் வெளிப்படுத்தும் ஏக்க வுரையால் பகட்டுதல், நடித்தல் பொருள் விளங்கும். படங் காட்டினால் மயங்காதவர் உண்டா? குழந்தைகள் தானா, படங் காட்ட மயங்குகின்றனர்? எவ்வளவு பெரியவர்கள், படங்காட்ட மயங்கும் குழந்தை நிலையில் உள்ளனர்! படபடத்தல் - கோபப்படல் கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித்துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய் உதடு துடிதுடித்தல் இவை யெல்லாம் சீற்றத்தின் குறிகள் பித்தப் படபடப்பென ஒரு நோயுண்டு. அப்படபடப்பு மயக்கத்தை உண்டாக்கி வீழ்த்துவது. அதனினும் கொடுமையானது இப்படபடப்பு. ஏனெனில் சிலர் படபடப்பு குடும்பத்தையே கெடுத்ததுண்டு. சினம் சீற்றம் வெகுளி எனப் படபடத்து, குடியையே படபடக்க வைப்பர். படிதாண்டாமை - கற்புடைமை படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையென்றால் படியைத் தாண் டாமல் யாரால் தான் இருக்க முடியும்? வாயிற்படி மட்டும் தானா படி? ஏணிப்படி, வண்டிகளில் படிக்கட்டு இவற்றை யெல்லாம் தாண்டாமல் ஒருவர் வாழ முடியுமா? படி என்பது வழிவழி வந்த ஒழுக்கம். படிமை, படிவம் என்பவை ஒழுக்கம் குறித்தல் அறிக. ஆதலால், ஒழுக்கம் தவறாமை என்னும் பொரு ளில் வழங்குவதாம். அடுத்தவர் வீட்டுப்படி தாண்டாமை என விளக்குவது பொருந்தாது என்பதை அறிக. அது சிறை காக்கும் காப்பு, நிறை காக்கும் காவல் ஆகாதாம். படியளத்தல் - உதவுதல் கூலிவேலை செய்வார் வேலைமுடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக்கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத் தவசம் உதவி யாதலால் உழைப்புக்கு உரிய கூலியே என்னும் கொடைபோலக் கருதுவாராயினர். அதனால் படியளத்தல் இறைவன் கொடை போலக் கொண்டனர். திட்டிக் கொண்டு கொடுத்தாலும் படியளக்கிற நாயன் திட்டினால் திட்டி விட்டுப் போகிறான்; திட்டென்ன அடிக்கவா செய்கிறது என்பது படியின் இன்றி யமையாமையைத் தெரிவிப்பதுடன், வறுமை சிந்திப்பதையும் கெடுத்துவிட்ட கொடுமையையும் அறியலாம். படுக்காளி - ஒழுக்கக்கேடன் படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு மூஞ்சித்தனத்தைக் குறிப்பதன்று. பால் விழைச்சால் நாளும் பொழுதும் எங்கெங்கும் தேடிக் கிடப்பானைக் குறிப்பதாம் இச்சொல். அவனைக் குறிக்க மட்டும் வழங்குவதன்று; அவளைக் குறிக்கவும் இடம் பெறும். பெரிய படுக்காளி; எப்படி உருப்படும் என்பது இருபாலுக்கும் இயை வதே. படுத்துவிடுதல் - செயலற்றுப் போதல் ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றன் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது. சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது; தொழில் படுத்துவிட்டது என்பவை படிப்படி இறக்க நிலையாம். படுத்தல் என்பது உறக்கப் பொருளது. உறங்குவது போலும் சாக்காடு என்பதுபோல் முழுதாகப்படுத்துவிடுவதும் உண்டு. செயலற்றுபோய் முற்றாக முடிந்துவிட்ட நிலையாம் அது. படையல் போடல் - தெய்வப் படையல், உழையாத் தீனி படைத்துவைப்பது படையல் ஆகும். சோறு கறி பண்டம் ஆகியவற்றைத்தெய்வப் படையலாகப்படைப்பது வழக்கம். அது படைப்பு என்றும் படைப்புப்போடல் என்றும் இறந்தவர் நினைவு நிகழ்வில் இடம் பெறும். இத்தெய்வப் படையலும், இறந்தார் படைப்பும் விரும்பாமல் போடும் சோற்றுக்கும் குறியாக வந்தது. உழையாமல் இருந்து வெட்டிச் சோறு தின் பார்க்கு, உனக்குப் படையல் போட்டிருக்கிறது; போ என்று இகழ் வாகச் சொல்லி உண்ணச் செய்தலைக் காணலுண்டு. இதுகால் நூல்களை நினைவுப் படையலாக்குவது வழக்கில் உள்ளது. படையெடுத்தல் - கூட்டமாக வருதல் வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக்கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவதுண்டு. எறும்பு படையெடுத்துப் போகிறது; ஈ படையெடுத்துப் போகிறது என்பவை கூட்டமாகப் போதலைக் குறிக்கும் படையெடுப்பு. குழந்தைகள் கூட்டமாக வருதலைக் குழந்தைகள் படையெடுத்து எங்கே வருகின்றன என்பதும் வழக்கே. படை திரண்டு வருதல் என்பதும் இதுவே. பண்ணையடித்தல் - அக்கறையாக வேலை செய்தல் பண்ணை என்பது உழவர் பெருங்குடி; அக்குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர் பண்ணையில் வேலை மிகுதி யாக இருக்கும். வேலைக்கு அஞ்சியவர் பண்ணையில் வேலை செய்ய முடியாது. ஆதலால் பண்ணையடித்தல் என்பது கடுமை யாக உழைத்தல் என்னும் பொருளில் வழங்குவதாயிற்று. சிலர் வேலை செய்வதாக நடிப்பர்; இன்னும் சிலர் ஏய்ப்பர்; அத் தகையரை நீ பண்ணையடித்தது போதும்; போய்வா என அனுப்பி விடுவர். நீ பண்ணையடிக்கும் சீரைப்பார்த்தால் விதைத்தவசமும் வீட்டுக்குவராதே என்பர். இதனால் அக்கறை யாக வேலை செய்தல் பண்ணையடித்தல் எனப்படுவது என அறியலாம். பதம்பார்த்தல் - ஆராய்தல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம். அவ்வழக்கத்தில் இருந்து பதம் பார்த்தல் என்பது ஆராய்தல் பொருளில் வழங்குகின்றது . கொஞ்ச நேரம் பேசினால் போதும் அவர் பதம்பார்த்து விடுவார் என்பர். பதவல் - கூட்டம் பதம் என்பது பக்குவம், ஈரம், பருவம் எனப் பல பொருள் தரும் சொல். பதவலாக இருக்கிறது எனின் இன்னும் உலரப் போடவேண்டும் என்பர். ஆனால் இவற்றையன்றிக் கூட்டம் என்னும் பொருளிலும் பதவல் வழங்குகின்றது. எறும்புப் பதவல் ஈப் பதவல் என்பனவற்றுடன் பிள்ளை குட்டிப் பதவல் என்பதும் வழக்காம். பதவல் என்பது கூட்டப் பொருளதாம். குழந்தைப் பதவல் படுத்துகிற பாடு இவ்வளவு, அவ்வளவா? என்னும் சலிப்பு பெரியவர்கள் வாக்கில் பெருக வழங்கும். பந்தல் - (சாவுக்) கொட்டகை கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது திருமணப் பந்தல். ஆனால் நகரத்தார் நாட்டில், பந்தல் என்பது இறப்பு வீட்டில் போடப்படுவது என்னும் வழக்குண்டு. திருமண வீட்டில் போடப்படுவது காவணம் எனப்படும். இறப்பு வீட்டுப் பந்தலில் வாழை முத லியவை நடுதலோ, தொங்கல் விடுதலோ இல்லை. சிறப்பு நிகழ்ச்சிப் பந்தலுக்கு இவையுண்டு. இதனைக் கொண்டே காவணம் என வேறுபடுத்திக் காட்டும் வழக்கு உண் டாயிற்றாம். பந்தாடுதல் - அடித்து நொறுக்குதல் உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லா மலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப் பந்தாடுதல் அடித்து நொறுக்குதல் பொருளதாம். சும்மா இருக்கிறேன் என்று நினைக்காதே; எழுந்தேன் உன்னைப் பந்தாடி விடுவேன் என்று வீராப்புப் பேசுவோரும், பேசியபடி செய்வாரும் உளர். அப் பந்தாட்டக் காரர், அவரையும் பந்தாட வல்லாரைக் கண்டு சுருக்கி மடக்கிக் கொண்டு போய்விடுவதும் கண்கூடு. ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குத் தொக்கு என்பது பழமொழி. பயறுபோடல் - இறுதி கடன் கழித்தல் பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், மாரடித்தல் என்பன வெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை மற்றை மற்றை வழிகளில் வழங்குமாயினும் அவை நேர் பொருளன்றி வழக்குப் பொருள் தருவனவல்ல. பயிறு போடல் என்பது பயற்றை விதைத்தலையோ, பானையில் போட்டு வைத்த லையோ, கறிக்குப் பயன்படுத்தலையோ குறியாமல் இறந் தார்க்குச் செய்யும் இறுதிக் கடனாகச் சொல்லப்படுதலே வழக்கு சொல்லாட்சியாம். இறந்தவர் புதைகுழியை மெழுகிப் பயறு போடுதலும், மாரடிப்பார்க்குப் பயறு போடுதலும் வழக்கு. பல்லாடல் - உண்ணல் விடிந்ததில் இருந்து இந்நேரம் வரை பல்லாடவே இல்லை எனின் உண்ணவில்லை என்பது பொருளாம். பல்லாடுதல் ஆகிய பல்லசைவு பல் மருத்துவரைத் தேடுதற்குரியது. இப் பல்லாடுதல் உணவு தேடி உண்பதற்குரியது. உண்ணுதற்கு அசை போடுதல் என்பதொரு பெயர். அசைத்தல் என்பதும் உண்ணுதலே. பல்லை அசைக்க மெல்ல - வகையின்றி இருப்பது உண்ணா வறுமையை உரைப்பதாம். பல்லில் பச்சைத் தண்ணீர் படவில்லை என்பதும் அத்தகையதொரு வழக்கே. பல்லைக் காட்டல் - கெஞ்சுதல், சிரித்தல் எண்ணான்கு முப்பத்திரண்டு பற்களையும் திறந்து காட்டி என ஒரு புலவர் பாடினார். பல்லைக் காட்டல் கெஞ்சுதல் பொருளில் வருவதாம். பல்லைக் காட்டுதல் வாயைத் திறந்து கொண்டிருத்தல். சிரித்தல் என்னும் பொருள்களையும் தரும். சொல்வதைக் கேளாமல் பல்லைக் காட்டிக்கொண்டிருக்கிறாயே எனக் கடிவது உண்டு. எவ்வளவு மறுத்தாலும், வெறுத்துரைத்தாலும் தன் வேண்டுகையை விடாமல் சொல்லிக் கொண்டிருப்பதே கெஞ்சுதல் பொருள்தரும் பல்லைக்காட்டுதலாம். பல்லைப் பிடித்துப் பார்த்தல் - ஆராய்தல் மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ் வகையால் பல்லைப் பிடித் தல் ஆராய்தல் பொருள் பெற்றது. அதனால் ஒருவரைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் பலப்பலவற்றைக் கேட்டறிந்தாலும், நேரில் வினவியறியத் தலைப்பட்டாலும், என்னையே பல்லைப் பிடித்துப் பார்க்கிறான்? என இகழ்வது உண்டு. இலவசமாகக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம் எனவரும் பழமொழி விலையில்லாப் பொருளை எத்தகையதாயினும் ஓரளவு பயன்படுமெனினும் கொள்க என்னும் பொருளில் வருவதாம். பல்லைப் பிடுங்கல் - அடக்குதல் நச்சுப் பாம்புக்குப் பல்லில் நஞ்சுண்டு. அதனால் பாம் பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம் பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப் பல் ஒழிந்த பல்லால் கடித்தால், அதனால் உயிர்க் கேடு வராது. ஆதலால் நச்சுப் பல்லைப் பிடுங்குதல் அதனை அடக்குவதாக அமைந்தது. அவ்வழக்கில் இருந்து பல்லைப் பிடுங்குதல் என்பது ஆற்றலைக் குறைத்து அடக்குதலைக் குறிப்பதாயிற்று. அவன் பல்லைப் பிடுங்கியாயிற்று; இனி என்ன செய்வான் என்பது வழக்குரை. பல்லைப்பிடுங்கல் செல்வம் வலிமை முதலியவற்றை அழித்து அடக்குதலாம். வாயைப் பிடுங்குதல் வேறு என்பதை ஆங்குக் காண்க. பலுகுதல் - பெருகுதல், கூடுதல் பல்குதல் பெருகுதல் பொருளது, அது பலுகுதல் என்றும் வழங்கும். ஒரே ஆடு வாங்கினோம் நன்றாகப் பலுகி நாலாண் டில் நாற்பது உருப்படிக்கு மேல் ஆகிவிட்டது என்பதில் பலுகுதல் என்பது பெருகுதல் பொருளில் வருதல் அறியலாம். பெருகுதல் கூடுதல்தானே, வீடெல்லாம் எலி பலுகி விட்டது; பூனை வளர்த்தால்தான் சரிப்படும் என்பதும் வழக்கே. ஆடு மாடுகள் கருக்கொள்ளல் பலப்படுதல் என்றும், குட்டி கன்று போடுதல் பலுகுதல் என்றும், பூவில் பலன் பிடித்தல் என்றும் வழங்கும் வழக்குகள் ஒப்பிட்டறியத் தக்கன. பழுத்துப்போதல் - தோல்வி, உதவாமை இலை பழுத்துப் போனால் கட்டு விட்டு உதிர்த்துவிடும். ஆதலால் பழுத்தல் என்பது உதிர்ந்து விழுதல் அல்லது உதிர் தலைக் குறித்தது. உன் ஆட்டம் பழுத்துப்போயிற்று என்று விளையாட்டில் சொல்வது தோற்றுப் போயிற்று என்னும் பொருளதாம். சில காய்கள் பழுத்தால் பயன் தராது. பாகற்காய் பழுத் தாலும் கத்தரிக்காய் பழுத்தாலும் பயன்படாது. அதிலும் பிஞ்சிலே பாகல் பழுத்தால் வெம்பி உதிர்ந்துவிடும். அந் நிலையில் பழுத்தல் என்பது பயனின்மைப் பொருளதாம். பிஞ்சிலே பழுத்தவன் எனப் பழித்தலும் வழக்கில் உள்ளதே. பழையது - பழஞ்சோறு பழையது பழைமையானது எனப் பொதுப் பொருள் தருவது. ஆனால் பழையது உண்டேன் என்னும்போது ஆறிப் போய் நீர்விட்டுவைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம். பழையதில் வெந்நீர்ப் பழையது, வடிநீர்ப் பழையது. தண்ணீர்ப்பழையது என மூவகை. எனினும் அவை யெல்லாம் மறுநாள் அளவிலேயே பழையதாக முடிகின்றது. இறைவியைப் பழையோள் என்பதும், பாண்டியரைப் பழையர் என்பதும், வழிவழி நட்பைப் பழைமை என்பதும், வழிவழி வீரக் குடியைப் பழங்குடி, முதுகுடி என்பதும் காலப்பழமையில் சால முந்தியவாம். பள்ளி எழுச்சி - வசை திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சிபாடல் உண்டு அஃது இறைவர் புகழ்பாடுவது. அரசர்தம் அரண்மனைகளில் பள்ளி எழுச்சிபாடும் வழக்குப் பண்டு இருந்தது. அவ்வழக்கில் இருந்து இறைவர்க்கு ஏற்படுவதாயிற்று! கோயில், அரண்மனை, இறை என்பவை பொதுமை சுட்டுவன அல்லவோ! இசைப் பொருள் தரும் பள்ளி எழுச்சி வசைப் பொருளில் வழங்குவதும் வழக்காம். காலையில் உறக்கம் நீங்காமல் படுத்திருப்பவரைத் திட்டி எழுப்புவது வழக்கம். திட்டலோடு விடாமல் தண்ணீர் தெளித்து எழுப்ப நேர்வதும் உண்டு. திட்டி எழுப்புவதைப் பள்ளி எழுச்சி பாடுவதாகக் கூறுவர். விடிந்தால் பள்ளி யெழுச்சி பாடாமல் இருக்கமாட்டீர்களே என்பது வைகறை எழாதான் வைவுரை. பளிச்சிடல் - புகழ் பெறல் பள பளப்பு பளிச்சு என்பன ஒளிப் பொருள். பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும் மதிக்கத் தக்கதாகவும் அமை கின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் புகழ் என்னும் பொருள் உண்டாயிற்று. அவர்கள் அப்பா பெயரைச் சொன் னால் பளிச்சென்று யாருக்கும் தெரியும் என்பதில் பளிச்சிற்குப் புகழ் பொருள் உண்மை விளங்கும். இனிப்பளிச்சிடல் இல்லாப் புகழை இருப்பதாகக் காட்டுவதாக அல்லது போலிப்புகழாக அமைவதும் உண்டு. அது வெளிச்சம் போடல் எனப்படும். வெளிச்சம் காட்டுவதில் பெரிய ஆள் அவன் என்பது அவ் வெளிச்சப் போலியை விளக்கும். பற்ற வைத்தல் - இல்லாததும் பொல்லாததும் சொல்லல் அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண் சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்றவைப்பது புது நாகரிகப்பாடு. தொழில் துறையில் பற்றவைப்பது நாடறிந்த செய்தி. ஒன்றை ஒன்றில் பற்றுமாறு வைப்பதே பற்றவைப்பு. பற்றவைத்தது என்பது தெரியா வண்ணம் செய்ய வல்ல தேர்ச்சி மிக்கவர்களும் உளர். பற்றவைக்கும் அதனைப்போல ஒருவரைப் பற்றிய செய்தியை மற்றொருவரிடம் சென்று பற்றவைப்பாரும் உளர். அவர் தம் செயலும் பற்றவைத்தல் எனவே வழங்கும். பற்றவைத்தது என்பது தெரிந்துகொள்ள முடியாமலே பற்ற வைப்பதில் தேர்ந்த ஆள் எனப் பாராட்டுப் பெற விரும்புவாரும் உளர். ஆனால் அவருக்கும் தேர்ந்த ஒருவர் அவரைப் பற்ற வைக்கும்போது தான் அவர் செய்த செயற் கொடுமை உணர்வாரோ என்னவோ? பற்றுப் போடல்- அடித்தல் வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப்போடல் இயற்கை. சொல்லியதைக் கேட் காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல் பவர்கள் ஒழுங்காக வேலை பார்க்கிறாயா? பற்றுப் போட வைக்க வேண்டுமா? என்பர். பற்றுப்போட வைத்தல் என்பது அடித்து வீக்கம் உண்டாக்குதலும், வலியுண்டாக்குதலும் நிகழும் என்பதாம். ஈ மொய்த்தல், பிடித்து விடல் என்பன காண்க. பறி-பொன், மீன் தெல்லி பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி என்பர் என்பது இலக்கண உரைகளில் வரும் செய்தி. தொழில் வழி வழக்கு அது. திருடர் பறிப்பதற்குத் தங்கம் இடமாக இருத்தலின் அப்பெயர் பெற்றதாகலாம். மகளிர் மனத்தைப் பறிப்பது என்பது உண்மையாயினும் உயிரே பறிபோதற்கும் இடமாம். திருட்டுக்குக் காரணமாக இருப்பதே பெரிதும் பொருந்தியதாம். மீன் பிடிப்பதற்காக பறி போடுவது உண்டு. நீரோட்டத் திற்கு எதிரோட்டம் ஓடுவது. ஆதலின் அவ்வாறு மேலேறும் மீன் துள்ளி விழஅமைக்கப்படுவதும் பறியாம். மீன் பறி போடல் என்பது வழக்கு. மீனின் உயிரைப்பறிக்க இடமாவது மீன்பறி தானே! பறையறைதல்-விளம்பரமாகச் சொல்லல். அவனிடம் ஒன்றைச் சொன்னால் போதும்; பறை யறைந்து விடுவான் என்பது, பலருக்கும் தெரியப்படுத்தும் விளம்பரப் பொருளாகப் பறையறைதலைக் குறிக்கிறதாம். தமுக்கடித்தல் என்பதும் இத்தகையதே. முந்தித் தருவதாகப் பறையறையும் செய்தித் தாள்களினும் முந்திப் பரப்பவல்ல திருவாயர்கள் பலர். அவர் பழங்காலந் தொட்டே இருந்து வருகின்றனர். அவர்கள் பறையறைபவர் போலக் கருதப்பட்டனர் என்பது அறை பறையன்னர் கயவர் எனவரும் குறளால் வெளியாம். பனிக்கட்டி வைத்தல்-புகழுரைத்தல் ஆங்கில மரபில் வந்து வழங்குவது இவ்வழக்கம். தமிழில் பன்னீர் தெளித்தல் என்பது இத்தகையது. ‘Ice’ என்பது பனிக் கட்டி. சிலர் புகழ்ந்துரைக்கக் கேட்டவுடன் போதும் போதும்; தலைகனத்துப் போகும்; தடிமம் பிடித்து விடும்; இதற்குமேல் தாங்காது எனத் தம் தலைமேல், கைவைத்துப் பனிக்கட்டி வைத்தலைத் தவிர்க்க முயல்வோர் எனினும் அவருக்கும் தம் புகழ் கேட்கும் அளவில் உள்ள ஒரு கிளுகிளுப்பு இருக்கவே செய்யும். தாம் விரும்புவதை நிறைவேற்றிக் கொள்ளப் பனிக் கட்டி வைத்தல் போலச் செலவிலா எளிய வழி ஒன்றும் இல்லை எனலாம். பாக்கு வைத்தல் - அழைத்தல் திருமண அழைப்பிதழ் அடித்து வழங்கும் வழக்கம் புதியது. முன்பு பாக்கு வைத்தல் என்பதே அழைப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கு வைத்தல் என்பதன் சுருக்கமே பாக்கு வைத்தலாம். பாக்குவைத்தல் என்பது அழைப்புப் பொருள் தருதலானமையால், உங்களைப் பாக்கு வைத்து அழைத்தேனா என்னும் பொருளில் பாக்கா வைத்தேன் என்பது உண்டு. அழையாமல் வந்துவிட்டு, அடாவடித்தனம் வேறா என்பது போல் இழிவுறுத்தும் பொருளில் வழங்கு கின்றதாம். பாசம் - அன்பு, பற்று பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப் பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் தாய்ப் பாசம் என்ப தால் புலப்படும். பாசம் - கட்டு, கட்டும் கயிறு என்னும் பொருள் களிலும் வழங்கும், பாசக் கயிறு என்பது இருசொல் ஒரு பொருள். கயிற்றால் கட்டுவது போல் அன்பாலும் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கும் சொல்லாட்சி இது. பாசம் சமய உலகில் பற்று என வழங்கும்; பதி பசு பாசம் எனவரும் முப்பொருளுள் ஒன்றாதல் காண்க, பாசம் பற்று எதுவும் இல்லை என்பதும் வழக்கில் உள்ளதே. பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல் பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் - பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப் பாடுவதாகக் குறித்து வருகின்றதாம். பழம் புலவர்கள் பாடிய புறப்பாடல்களுள் சில வறுமைப் பாட்டாக வெளிப்பட்டு உள்ளது. வறுமையில் பஞ்சாகத் தாம் பறப்பதாகப் பிற்காலப் புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் உண்டு. அவ்வழக்குகளில் இருந்து பாட்டுப் பாடுதல் பஞ்சப் பாட்டுப் பாடுதல் என்பவை வறுமைப் பொருள் குறித்து வந்ததாகலாம். பாய்ச்சல் நடக்காது - சூழ்ச்சி நிறைவேறாது ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை, பாய்ச்சல் காட்டலாம். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொள்ளவும் தீராப்பகையாய் முட்டிக் கொள்ளவும் செய்தலின் மாறா இன்பங் காணும் மனத்தர் அவர், அவர்தம் இயல்பைப் பாய்ச்சல் காட்டப் படுவாருள் எவரேனும் ஒருவர் தெளிந்து காண்பவராக இருந்தால் அந்தப் பாய்ச்சலை இங்கே காட் டாதே; உன்பாய்ச்சல் இங்கே நடக்காது என வெளியாக்கி விடுவர். பாய்ச்சல் காட்டாமலே பாய்ச்சல் நடத்துவது பாச்சை! அதன் வாழ்வே பாய்ச்சல்; இப்பாய்ச்சல் கேடு போன்ற கேட்டை ஆக்குவதன்று அப்பாய்ச்சல் அங்கே முட்டு இல்லையே. பாலூற்றல் - இறுதிக்கடன் செய்தல் பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும் பாலூற்றல் உண்டு. பால் இறங்குகிறதா இல்லையா என்று பார்த்து உயிர் நிலை அறியும் வழிப்பட்டதாம். இறுதிக் கடன் பால்தெளிப்பு, இறந்தவர் உயிர் அமைதி யுறுக என்பதன் அடையாளமாகலாம். பால் மங்கலப் பொரு ளாகவும், தெய்வப் பொருளாகவும் தூய்மைப் பொருளாகவும் கொள்ளப்படுவதை வழக்குகளால் அறியலாம். பாறை-தடை,வல்லுள்ளம். நீர் ஓட்டத்தைத் தடுக்கும் தடையாகப் பாறை அமை கின்றது. ஒரு வீரன் தாக்கும் போது தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒருவன் ஒரு பாறையைக் கவசம் (மெய்மறை) போலக் கொண்டான். நீ மலையையே மறைப்பாகக் கொண்டாலும் தப்பமாட்டாய் என்று வஞ்சினம் மொழிந்தான் வீரன் என்பது தகடூர்யாத்திரை. பாறையின் இத்தடுப்பினால் அதற்குத் தடை என்னும் பொருள் வழக்கில் உண்டாயிற்றாம். பாறையாக அவர் நிற்கும் போது நாம் என்ன செய்வது என்பது இயலார் ஏக்கம். அவரோர் பாறை என்பது வல்லுள்ளமாம் கல்லுள்ளம் குறிப்பது. பிசைந்தெடுத்தல் - வலுவாக அடித்தல், அலைக்கழிவு செய்தல் பிசைதல், கையால் கூழாக்கல்,மாவாக்கல் குறிக்கும். அடி நன்றாகப் பிசைந்து எடுத்து விட்டான் என்பது பல்கால் வலுவாக அடித்தல், மாவாகக் கூழாகச் செய்தல் போல் அடித்தல் குறிப்பது. பிசைதல் வாட்டி வருத்துதல் பொருளில் வருவதால் அலைக்கழிவும் குறிப்பதாயிற்று. இல்லை என்றால் விட்டானா? பிசைந்து எடுத்து விட்டான்; கொடுத்துத்தான் ஒழித்தேன் என்பதில் பிசைதல் பலகாலும் வந்து உதவி கேட்டுப் பெறுதலைக் குறித்தது. பிட்டுப்பிட்டு வைத்தல்-ஒன்று விடாமல் சொல்லல் பிள் என்னும் வேரில் இருந்து பிறக்கும் சொல், பிட்டு. பிள் என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில் வரும் பிட்டு என்னும் பண்டம் கைபட்ட அளவில் பொலபொல என உதிர்தலாம், அப்பிட்டு உதிர்தல் போலச் சொல்லை உதிர்ப்பது - பாக்கி ஒன்றும் இல்லாமல் - சொல்லை உதிர்ப்பது - பிட்டுப் பிட்டு வைத்தல் எனப்படும். அவனிடம் ஒளிவு மறைவு ஒன்றும் செய்ய முடியாது. அவன்தான் உள்ளதை உள்ளபடி பிட்டுப் பிட்டுவைத்து விடுகிறானே என்பது பிட்டு வைப்பவன் தேர்ச் சியைத் தெரிவிப்பதாம். பிடித்தம் - பற்றுமை, இறுக்குதல் கையால் பிடிப்பது பிடித்தல். பிடியளவு என்பது கையளவே. களிறு கையால் பிடிக்க வாய்த்த பெண் யானையே பிடியாகிப் பெண்பெயர் ஆகியிது. கையால் பிடிக்கும் பிடிப்பு மனத்தால் பிடிப்பதாகவும் வழக்கில் உள்ளது. அது பிடித்த மாகும். பிடித்தம் என்பது பற்றுமையுடையது. எனக்குப் பிடித் தால் உண்பேன், போவேன் என்பதும், எனக்குப் பிடித்தமானது அது, அவர் என்பதும் பிடித்தப் பற்றுமை காட்டும். இடுப்புப் பிடிப்பு, பிடிப்பான உடை, நீர்ப்பிடிப்பு இடம் என்பவை இறுக்கப் பொருள் தருவன. பிடித்தாட்டல் - துன்புறுத்தல், சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வைத்தல் பிடித்தல் - கையால் பிடித்தல்; குடுமியைப்பிடித்து ஆட்டு தல் என்பது செயலற்றுப் போகவைத்துக் கட்டுப்படச் செய்வ தாம். உடுக்கடியில் குடுமியைப் பிடித்து ஆட்டி அலைக்கழிப்பர். பேயோட்டுதல் என்பது அதன் பெயர். ஆதலால் பிடித்தாட்டல் என்பது துன்புறுத்தலுக்கு ஆயது. சிலருக்கு சிறு பிடி கிடைத்து விட்டால் போதும். அதனைக் கொண்டு பெரும்பாடு படுத்தி விடுவர். தம் சொற்படியெல்லாம் நடக்க வைப்பர். அவன் பிடிகொடுப்பானென்று பார்க்கின்றேன்; எப்படியோ தப்பித்துக் கொள்கிறான் என்பதில் பிடித்தாட்டல் வேட்கை வெளியாகும். பிடித்துவிடல் - அடித்தல் மூட்டுவலி தசைவலி இருந்தால் பிடித்துவிடுவார்; எண்ணெய் மருந்து தேய்த்தல், உருவிவிடல், சுழுக்கு எடுத்தல் ஆகியவும் செய்வர். அதுபோல், ஒருவன் சொன்ன சொல் கேளாவிட்டால் உன்னைப் பிடித்துவிடவேண்டுமா? என்பர். பிடித்துவிடல் என்பதால் அடித்து வீங்கவைத்தல், நரம்பைச் சுண்டிவிடல் ஆகியன செய்வாராம். அதனால், சொன்னதைக் கேட்டு ஒழுங்காக நட என எச்சரித்து விடுகிறாராம். ஈமொய்த்தல், பற்றுப்போடல், தடவிக்கொடுத்தல், தட்டுதல் என்பன இவ்வழிப்பட்டனவே. பிடிமானம் - சிக்கனம் வருமானம், பெறுமானம் என்பவற்றில் வரும் மானம் அளவுப் பொருளது. அதுபோல் பிடிமானம் என்பதும் அளவுப் பொருளதே. பிடிமானமானவன் பிடிமானமாகச் செல விடல் என்பவற்றில் பிடிமானம் என்பதற்குச் சிக்கனப் பொருள் உள்ளமை காண்க. பிடிமானம் என்பது வந்ததையெல்லாம் செலவிட்டு விடா மல்; இறுக்கிப் பற்றி அல்லது சேமித்து வைப்பதாம். ஆன முதலில் அதிகம் செலவாகி மானமழிதல் பிடிமானக்காரர்க்கு இல்லையாம். பிடுங்குதல் - இழிவுறுத்தல் பயிரைப் பிடுங்குதல், நடுதல், களைபிடுங்குதல் என்பவை உழவர் பணிகள். ஒருவர் வைத்திருக்கும் பொருளைப் பிடுங்குதல் பறித்தல் என்றும் பொருள்தரும். இப்பிடுங்குதல் பலவகையில் வழக்கில் இருந்தாலும் அவையெல்லாம் நாற்றுப்பிடுங்கல், களை பிடுங்கல், கடலைபிடுங்கல் எனப் பெயர் சுட்டியேவரும். அச் சுட்டு இல்லாமல் பிடுங்குதல் என்று மட்டும் வரின், மயிர் பிடுங்குதல் என்பதையே குறிக்கும். செய்யமாட்டாத ஒருவன் ஒன்றைச் செய்வேன் என்றால் ஆமாம்; நீ பிடுங்குவாய்; போ என்பது வழக்கு. உன்னால் முடியாது என இழிவுறுத்தலாக அமைவது இப்பிடுங்குதலாம். நான் என்ன பிடுங்குகிற வேலையா செய்கிறேன் என்பதிலும் இழிபாடே புலப்பாடாம். பிதுக்குதல் - துன்புறுத்தல் கட்டி ஒன்று ஏற்பட்டால் அதனைப் பழுத்த நிலை பார்த்து பிதுக்கி எடுத்தல் உண்டு. ஆணியும் சீழும் வெளிப்பட்டால் புண் ஆறும். மொச்சைப் பயற்றை ஊறவைத்துத் தோலைப் பிதுக்கி எடுத்து அப்புறப்படுத்தல் உண்டு. அதற்குப் பிதுக்குப் பயறு என்பது பெயர். அப்பிதுக்குதல் போலத் துன்புறுத்திப் பறிப்பது பிதுக்குதல் எனப்படும். பிதுக்குதலில் வெறுமையாகப் பிதுக்கி இன்புறுவதும் உண்டு. உள்ளதைப் பறிப்பதற்காகப் பிதுக்கித் துன்பூட்டுவதும் உண்டு. அந்நிலைகளில் பிதுக்குதல் துன்புப் பொருளதாம். பிய்த்தெடுத்தல் - பறித்தல் வாழைத் தாரில் இருந்து சீப்பையும், சீப்பில் இருந்து பழத்தையும் பிய்த்து எடுப்பது நடைமுறை. பழத்தைப் பிய்ப்பதுபோல உள்ளதைப் பறித்துக் கொள்ளலும் பிய்த் தெடுத்தலாயிற்று. பிச்சுக் கொடு கொடு எனத் தின்பான் என்பது பாரதியார் பாவின் ஓரடி. தலையைப் பிய்த்துக் கொள்ளுதல் என்பதொரு வழக்குத் தொடர். கவலைப்படுதல் என்பது அதன் பொருள். அது தலையைக் கோதும்போது முடி சிக்குப் பட்டுப் பிய்க்கும் துன்பம் வழியாகத் துன்பப் பொருளும், சிக்கல் நீங்காது பறித்துக் கொண்டு வருதலால் பறித்தல் பொருளும் ஒருங்கு பெறுவ தாயிற்று. பலமுறை அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்டலும் பிய்த்தெடுத்தலே. பின்பாட்டுப்பாடுதல் - ஒத்துப் பேசுதல் முன்பாட்டின் போக்குக்கு ஏற்பப் பின்பாட்டுப் பாடுதலே பொருந்திய இசையாகும். அஃது இசைத்துறை நடைமுறை. இவண் முன்பாட்டு என்பத முதற்கண் பாடுபவரைக் குறியாமல் முதற்கண் ஒரு செய்தியைக் கூறுவாரைக் குறிக்கிறது. பின்பாட்டு என்பது முதற்கண் செய்தியைக் கூறுபவர் குறிப்புக்குத் தகத் தகப் பின்னே பேசுவாரைக் குறித்தது. ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி அணைத்துப் புளுகடா அயலூர்க் கோடாங்கி என்னும் பழமொழிக்கு ஒப்ப ஒட்டியும் அணைத்தும் பேசுவது பின்பாட்டும் முன்பாட்டுமாம். பின்னுதல் - தொடுத்துக் கூறுதல்; வலுவாக அடித்தல் ஒரு செய்தியைச் சொல்லி அதனைத் தொடர்ந்து, அவனைத் தொடர்ந்து தொடராகச் செய்தி அல்லது கதை கூறுவது பின்னுதல் எனப்படும், பன்னுதலும் பலகாலும் சொல்வதேனும் அதில் தொடர்புறுதல் இல்லை. பின்னுதல் தொடர்புறு செய்தியாக அமையும், பின்னி எடுத்துவிட்டான் பின்னி என்பதில் கடுமையாக அடித்தல் பொருள் உண்டு. ஒரு செய்தியை ஒருவர் சொல்லும்போது அவருக்குத்தோதான குறிப்புகளை ஊடே ஊடே எடுத்துத் தருதலும் பின்னுதலாகச் சொல்லப்படும். கயிறு பின்னுதல் என்பது கயிறு திரித்தல். கயிறுதிரித்தல், சரடு உருட்டல் காண்க. பீடம் தெரியாமல் ஆடல் - இடம் தெரியாமல் பேசல் சாமி வைக்கின்ற மேடான சதுக்கம் பீடம் எனப்படும். பீடு - உயர்வு, பீடம் உயர்ந்த தளம். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு பீடம் உண்டு. அவ்வப் பீடத்துக்குத் தக்கவாறு சாமியாடல் வேண்டும். மருளாடி அப்படித் தக்கவகையில் அருள் வாக்குக் கொடுக்கும் தேர்ச்சி பெற்றிருப்பான். அப்பயிற்சி இல்லான் அல்லது புதுவன், பீடம் தெரியாமல் சாமியாடி அருள் வாக்குத் தந்தால் கேட்பவர்க்கு உண்மை புலப்பட்டு விடும். அவ்வழக்கில் இருந்து பீடம் தெரியாமல் சாமியாடல் என்பது உண்டாயிற்று. யாரிடமோ சொல்ல வேண்டியதை யாரிடமோ சொல்லல் என்பது அத் தொடரின் பொருளாம். பீற்றுதல் - தற்பொருமை பேசல் பீறுதல் என்பது கிழிதல், பீச்சுதல் என்னும் பொருளது. கிழித்துக் கொண்டு பீச்சுதல் பழுத்துப்போன புண்ணில் இருந்து வெளிப்படும். அதுபோல் வெளிப்படும் சொல்லே பீற்றுதல் என்பதாம். ஒருவர் தம் மனத்துள் தம்மைப் பற்றித் தாம் பெருமையாகக் கொண்டுள்ளவற்றைப் பேச்சுக்குப் பேச்சு விடாமல் பேசிக் கேட்பவர் வெறுக்கச் செய்வர். அதனையும் காணும் போதெல்லாம் விடாமல் கூறுவர். அதனால் உன் பீற்றுதல் தெரியும்; அது என்ன கேளாததா? எங்களுக்குக் கேட்டுக் கேட்டுப் புளிக்கிறது; உனக்கு புளிக்கவே புளிக்காதா? என்பர். புடைத்தெடுத்தாற் போலிருத்தல் - நலமாயிருத்தல் புடைத்தல் சுளகில் (முறத்தில்) இட்டு நொய்யும் நொறுங் கும், தூசியும், தும்பும், கல்லும் கட்டியும் விலக்குதல் ஆகும். புடைத்தெடுத்ததில் இவையெல்லாம் இராமல், தூயதும் நல்லதுமாகவே இருக்கும். அதனால், இப்பொழுதுதான் உடல் புடைத்து எடுத்தாற் போலிருக்கிறது எனப்படும் வழக்குண்டாயிற்று. நோய் நொடி, பிச்சுப்பிடுங்கல், அல்லு செல்லு இல்லாமல் நலமாகவும் அமைதியாகவும் இருக்கிறது என்னும் பொருளில் புடைத்து எடுத்தாற்போல் இருக்கிறது என்னும் வழக்கு உண்டாயிற்று. புழுத்துப்போதல் - யாருமே அறியாமல் இறந்து கிடத்தல் புழுப்பற்றுதல் புழுத்தல். மரம் புழுத்துப் போயிற்று என்பது அதனைத் தெளிவாக்கும். வாய்க்கு வராததைப் பேசுபவனை, நீ பேசுவதற்கு உன் வாய் புழுத்துப்போகும் என்பது வசை மொழி. சிலர் வாழ்நாளெல்லாம் பிறர்க்குக் கேடே செய்து வந்தால், கேட்பாரற்றுப் புழுத்துத்தான் போவாய் எனப்பழிப்பர். புழுத்துப்போதல் என்பது இறந்து நாறிப் புழுக்கள் உண்டாகி பக்கத்தே வரும் முடை நாற்றத்தால் பிறர் அருவறுக்கும் நிலைமை யாகும். போதல் என்பது சுடுகாட்டுக்குக் கொண்டுபோதல். புள்ளிவைத்தல் - நிறுத்துதல், குறைப்படுத்தல் நிறுத்தக் குறிகளில் ஒன்று முற்றுப்புள்ளி. வினை முற்றின் அடையாளமாவது முற்றுப்புள்ளி. இவன் புள்ளி வைத்தல் என்பது முற்றுப்புள்ளி வைத்தலைக் குறித்தது. அதன் பொருள் நிறுத்துதல் அல்லது தடை என்பதாம். குற்றம் செய்தவர்க்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதலும் கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் செய்யவைத்தலும் முன்னாள் வழுக்கு. அவ்வழக்கில் இருந்து புள்ளிவைத்தல், புள்ளிகுத்தல் என்பவை குற்றப்படுத்துதல் என்னும் பொருளில் வழங்குவ தாயிற்று. புளித்தல் - வெறுத்தல் புளிப்பு ஒரு சுவை. புளியில் இருந்து புளிப்பு வருதல் வெளிப்படை. புளியமரம் பழமையானது. புளி ஆயிரம் பொந்து ஆயிரம் என ஈராயிர ஆண்டு வாழ்வுக்கு உரியதாகப் பழமொழி கூறும். இப்புளி, புளிச்சுவையைத் தருவதுடன் வெறுப்யும் தருவதாயிற்று. உன் பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது என்பதும், அந்தப் புளியை இங்கே கரைக் காதே என்பதும் வெறுப்பின் வழிப்பட்ட வழக்குகள். இவ் வாறே கசப்பு, கைப்பு, துவர்ப்பு என்பனவும் வெறுப்புப் பொருள் தருவனவாக வழங்குகின்றன. இச்சுவைகள் சற்றேமிகுவ தாயினும் வெறுப்புண்டாக்கலின் அப்பொருள் வந்திருக்க வேண்டும். பூசுணை - பருத்தவர் பூசுணைக்காய் பெரியது. பூசணி எனவும் வழங்கப்படும். சுணை என்பது வெண்ணிறமாகப் படர்ந்திருக்கும் ஒருபொடி, அது மெல்லியது. ஆதலால் பூசுணை எனப்பட்டது. ஒருவர் பருத்தவராக இருப்பின் அவர்தம் பருமைத் தோற்றம் காயிற்பரிய பூசுணைக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தூண்டியிருக்கிறது. அவ்வகையில் வந்ததே, அவர் ஒரு பூசுணைப்பழம் என்பது பூசுணைப்பழம் உருண்டு புரண்டு வருவதைப் பாருங்களேன் என்று மென்னகை புரிவதும் காணக் கூடியதே. பூட்டு - ஐந்து பூட்டுதற்குப் பயன்படும் ஒன்று பூட்டு எனப்படும். அது தாழ், தாழ்ப்பாள் எனவும் வழங்கும். ஒன்றோடு ஒன்று இணைத்துப் பூட்டுவதற்கு உரியது பூட்டு எனப்படுகிறது. இலக்கணத்தில் விற்பூட்டு, அல்லது பூட்டுவில் எனப் பொருள் கோள் ஒன்றுவரும், இரண்டு கைகளையும் கோத்துக் கொள்ளல் பூட்டியகை அல்லது கைப்பூட்டு எனப்படும். இங்குப் பூட்டு என்பது அடுக்கிவைக்கப்பட்ட ஐந்து இலையை குறிக்கும். ஐந்து உருபா எனக்குறிப்பதும் உண்டு. அடுக்கு, கை என்பவை காண்க. பூச்சி - பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல் பூச்சி என்பது புழுப்பூச்சி என்னும் இணைச் சொல்லில் வருவது, புழு முதல் நிலையும், அதன் வளர்ச்சி பூச்சியுமாம். பூச்சி தாவும்போது அதன் நிழலைக் கண்டவன் அந் நிழலைப் பூச்சி என்று சொல்லிப் பின்னே எல்லா நிழலையும் குறித்ததாகலாம். பாம்பைக் கொடி என்பதுபோலப் பூச்சி என்பதும் உண்டு. நச்சுயிரியின் கடியைப் பூச்சிக்கடி என்பதும் வழக்கே. கண் பொத்தி ஆடும் ஆட்டம் கண்ணாம் பூச்சி எனப்படுகிறது. குழந்தைகளை அல்லது அஞ்சுபவரை அஞ்சி நடுங்கவைக்கப் பூச்சி காட்டல் உண்டு. அது அச்சுறுத்தல் பொருளதாம் அப் பூச்சி எனவரும் நாலாயிரப்பனுவல் பகுதி குழந்தைகளைப் பெற்றவர்கள் அச்சுறுத்தல் தொடர்பை விளக்கும். பூச்சு வேலை - ஏமாற்று வேலை சுவர்க்குப் பூசுதல், ஈயம் பூசுதல் என்பவை பூசும் வேலையைக் குறிக்கும். பூசுதல், முகம் பூசுதல் (முகம் கழுவுதல்) எனவும் வரும். பூசுபவர் பூசகர். தெய்வப் படிவத்தை நீரிட்டுக் கழுவி வழிபாடு செய்பவர் அவராகலின், இனிச் சில போலி மாழை (உலோகங்)களை உயர் மாழைகளாகக் காட்ட விரும்பு வர். பூச்சுவேலை செய்வர். அணிகலங்களில் பெரிய அளவில் பூச்சு (கவரிங்) வேலை நிகழ்கிறது. இவ்வேலை போலியானது. ஆதலால் பூச்சு வேலை என்பது ஏமாற்று வேலை என்னும் பொருளுக்கு உரிமையேற்று வழங்குவதாயிற்று. பூசி மெழுகல் காண்க. பூசி மெழுகல் - மறைத்தல் தளத்தில் வெடிப்பு ஏற்படுமானால் பூசி மெழுகுவது வழக்கம், அடுப்பு முன்னாளில் மண்ணால் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. சுடு மண் அடுப்பை வைத்து அதனைப் பூசி மெழுகுவர். அம்மெழுகுதல் வெள்ளி செவ்வாய் என இரு நாள்களிலும் செய்வர். பூசி மெழுகுவதால் அடுப்பில் ஏற் பட்டிருக்கும் விரிசல், வெடிப்பு, கீறல் ஆயவை மறைந்துபோம். அவ்வழக்கில் இருந்து குற்றம் குறை கேடு ஆயவற்றைப் புலப் படா வண்ணம் மறைத்தல் பூசி மெழுகுதலாக வழங்கலாயிற்று. அவன் பூசி மெழுகுவதில் தேர்ந்த ஆள் என்பதில் அவன் மறைப்புத்திறம் மறைவின்றி விளங்கும். பூசை வைத்தல் - அடித்தல் வழிபாட்டில்சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம் கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால்இக்கால்தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது. சாமியாடுவான் சாமியாடி. அவன் கையில் சாட்டைக்கயிறு இருக்கும். அதனைச் சுழற்றிப் பேரொலியுண்டாகத் தன் மேல் அறைந்துகொண்டு ஆவேச மாகி ஆடுவான். தெய்வ வாக்குச் சொல்வான். அவ்வழக்கில் இருந்து பூசைவைத்தல் என்பதற்கு அடித்தல் பொருள் வந்தது. பூசைபோடுதல் என்பதும் அதுவே, உனக்குப் பூசை போட்டால் தான் குனிய நிமிர முடியும் என்பதில் கட்டளைக்குப் படி யாததை அடியால் படியவைக்கும் முனைப்பு வெளிப்படும். பூத்துப்போதல் - கண் ஒளி மழுங்கிப் போதல் பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். உன்னைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போய்விட்டது என்பதில் பூத்துப் போதல் ஒளி மழுங்கி அல்லது மங்கிப் போதல் புலப்படும். கண்ணில் உண்டாகும் ஒரு நோய். பூ விழுதல் கண்ணின் பாவையில் வெள்ளை விழுந்து விரிந்து படரு மானால் பூவிழுந்ததாகக் கூறுவர். பூவிழுந்தால் பார்வைபோய் விட்டது என்பது பொருள். அதன் வழியாக உண்டாகிய பூத்துப்போதல் என்பதற்கு ஒளி மழுங்கிப் போதல் பொருளாம். பெரிய ஆள் - சின்னவன் பெரியஆள் என்பது பெருமாள். பெருமகள் என்பதும் பெருமாள் ஆம். திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது, ஓங்கி உயர்ந்த உத்தமன் நீர்செல் நிமிர்ந்த மா அல் எனப் பாராட்டப்படுகிறது. இவண், பெரிய என்பது சொல்லளவில் பெருமை சுட்டப்படினும் பொருளளவில் சிறுமை சுட்டுவதாக எள்ளற் பொருளில் வழங்குகின்றது. வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை; நீ பெரிய ஆள்தான் நீ பெரிய ஆள்தான் பேசும்போது என்ன பேசினாய்; இப்போது என்ன செய்கிறாய் என்பவற்றில் சிறுமைக் குறிப்புண்மை அறிக. கல்லைக் கடித்துக்கொண்டு நல்ல சமையல் எனின் பாராட்டாகுமா? அத்தகையது இப்பெரிய ஆள்! பேச்சில்லாமை - பகைமை பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால் பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்த லால் அதனை இல்லாமை மற்றைத்தொடர்புகளெல்லாம் இல்லை என்பதை வெளிப்படுத்தும். இதனைப் பேச்சு வார்த்தை எங்களுக்குள் இல்லை எனச் சொல்லும் வழக்கால் தெரிந்து கொள்ளலாம். பேச்சில்லாமை அமைதிப் பொருளை இழந்து, உறவின்மைப் பொருளுக்கு ஆயிற்று. அவ்வுறவு உடலுற விற்கும் கூட உண்டாவதாயிற்று. பேசுதல் உடல் தொடர்பும், பேசாமை அஃதின்மையும் குறித்தல் வழக்கு. பேசமறத்தல் - சாதல் பேசமறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கலவழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்கு கின்றது எனலாம். அவர் பேச மறந்து போனார். என இறந்த வரைக் குறிப்பர். மூச்சுவிட மறந்து விட்டார் வாயைப் பிளந்து விட்டார். கண்ணை மூடி விட்டார் வானத்தை நோக்கி விட்டார் மூச்சை அடக்கி விட்டார் ஒடுங்கி விட்டார் அடங்கி விட்டார் என்பனவெல்லாம் இப் பொருளவே. பேசுதல் - பாலுறவாடல் பேசுதல் வாய்ப்பேச்சைக் குறிக்கும். கையால் சொல்லு தலும் (கைக் குறியால் காட்டுதலும்) ஒரு வகைப் பேச்சே. முகக் குறி வெளிப்பாடு அகக் குறி வெளிப்பாடே என்பது வள்ளுவர் கூறாமை நோக்கிக் குறிப்பறிதல் குறிப்பார் அவர். இவ்வாறு சொல்லாமல் செய்தியறிதலும் குறிப்புப் பேச்சே. அஃது அற்ற இடமும் உண்டு. அது, கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல என்னும் இடம். பேச்சற்ற அவ்வின்ப இடம் பேசுதல் என்பதால் பொதுமக்கள் வாக்கிலே பயிலுதல் வியப்பே. பேச்சில்லாமை காண்க. பேசுதல் - திட்டுதல் உரையாடல் பொருளில் வழங்கும் பேசுதல், திட்டுதல் பொருளிலும் வழங்குகின்றது. என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நன்றாகப் பேசிவிட்டேன் என்பதில் பேச்சு திட்டுதல் பொருளில் வந்தது, என்ன பேச்சுப் பேசி என்ன? தைக்கிற வனுக்குத் தானே தைக்கும் என்பதில் பேச்சுத் தைக்க வேண்டும் என்று கருதும் கருத்தால் வசைமொழி என்பது வெளிப்படை. நீபேசி விட்டாய், நான் பதிலுக்குப் பேசினால் நீதாங்க மாட்டாய் என்பதில் வசைக்கு வசையும் பேச்சாக இசைதல் விளங்கும். பொங்கல் வைத்தல் - கொலைபுரிதல், அழித்தல் பொங்கலுள் தைப்பொங்கல் உயிர்ப்பலியற்றது. மற்றைப் பொங்கல்கள் அதிலும் குறிப்பாகச் சிற்றூர்ச் சிறு தெய்வப் பொங்கல்கள் உயிர்க் கொலைக்குப் பேரிடமாக இருந்தவை. உயிர்ப்பலித் தடைச்சட்டம் வந்த பின்னரும் கூட முற்றாகத் தடுத்துவிட முடியாத அளவு வெறிக்கொலைக்கு இடமாக இருப்பவை. இவ்வழக்கில் இருந்தே பொங்கல் வைத்தல் என்ப தற்குக் கொலைபுரிதல் பொருள் வந்தது. மனிதரைப் பலியூட்டிய வரலாறும் உண்டு என்பது இந்நூற்றாண்டிலும் கூட ஆங்காங்கு நடக்கும் கயமைகளால் அறியப்படுவதே. உன்னைப் பொங்கல் போடுவோமா? என்பது கொலை வினா. பொட்டலாக்கல் - பயனைக் கெடுத்தல் பொட்டல் என்பது மேட்டு நிலம்: நீர்வளமற்று வான் மழையை நோக்கிப் புன் பயிர் செய்ய உதவுவது. அப்பயிர்க்கும் ஆகாத மேடும் உண்டு. அது வறும் பொட்டல், வெறும் பொட்டல், களத்துப் பொட்டல் எனப்படும். தலையில் விழும் வழுக்கையைப் பொட்டல் என்பதும் உண்டு. அப்பொட்டல் மயிர்வளம் இன்மை காட்டும் என்றால், இப்பொட்டல் பயிர் வளம் இன்மை காட்டுவது தெளிவு. இப்பொட்டலில் இருந்து பிறந்தது தானே தலைப்பொட்டல். வளமான நிலத்தையும் உழைத்துப் பாடுபடாமையால் பொட்டலாக்கிவிடுவார் உண்டு. அதுபோல் வளமான குடும்பத்தில் பிறந்தவருள் சிலரும் தம் குடியைப் பொட்டலாக்கிவிடுவர். அவரைப் பொட்டலாக்கப் பிறந்தவன் எனப் பழிப்பது வழக்கிடைச் செய்தி. போக்காடு - சாவு நோக்காடு நோவு, சாக்காடு சாவு என வருதல் போலப் போக்காடு போவு என வழக்கில் இல்லை. போக்காடு சாவு என்னும் பொருளில் வழங்குகின்றது. இந்தப்பாடுபட்டுக் கேவலப்படுவதற்குப் போக்காடு வந்தாலும் ஒரே போக்காகப் போய்ச் சேரலாம் என்பதில் போக்காட்டின் பொருள் நன்கு வெளிப்படும். போனகாடு, போகின்ற காடு, போகுங்காடு என்னும் பொருளில் போங்காடாக வர வேண்டியது வல் லொற்றாகி போக்காடு என நின்றது போலும். காடு என்பது இடுகாடு, சுடுகாடு, முதுகாடு, நன்காடு என்பவற்றில் வருதல் அறிக. அனைவரும் போங்காடு போக்காடாம். போக்கு வரவு-நட்பு, தொடர்பு போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது பின்னே, இருக்கும் இடம் தேடியும் போக்குவரவு புரியத் தூண்டி நிலைப்படுத்துவதால் போக்கு வரவுக்கு நட்புப் பொருள் உண்டாயிற்றாம். மதியார் இல்லத்து மிதியாமை கோடி பெறும் என்பதால், மதிப்புள்ள இடத்து மிதித்தல் வெளிப்படையாம். போக்குவரவு எங்களுக்குள் இல்லை என்றால் நட்பில்லை என்பதுடன் பகையுண்டு என்பதும் கூடக் காட்டுவதாக வழங்குகின்றது. போதல் - சாவு போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். போனார் தமக்கோர் புக்கில் உண்டு என்பது மணி மேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே போக்காகப் போதல் திரும்பாமையைக் குறிக்கும். போய்ப் போய் இப்படி வருவதற்கு ஒரே போக்காகப் போய்விட்டாலும் தலையை முழுகலாம். அதற்கும் வழியில்லை என்பதில் ஓடிப்போனவர்களைத் தேடித் தவித்த துயர் வெளிப்படும். போதல் உயிர் போதல், வீட்டை விட்டுப்போதல் என்பவற்றுடன் மீளாத இடத்திற்குப் போதல் பொருளும் தந்து சாவு ஆயிற்றாம். மக்கு - குப்பை, அறிவிலி மண்+கு - மட்கு - மக்கு என வந்ததாம். மண்ணோடு மண்ணாகிவிட்டது என்பது மக்குதலாக வழங்குகின்றதாம். மட்குதல் அறிந்தே குப்பையை எடுத்து நிலத்தில் பரப்புவர். இம்மக்குச் சொல் அவன் மக்கு என்பதில் கூர்த்த அறி வில்லான் என்னும் பொருளில் வழங்குகின்றது. மண்டையில் மண்ணா இருக்கிறது? என்றும் களிமண்ணா இருக்கிறது தலையில்? என்றும் கூறுவதில் மண் இருத்தல் மக்கு வழிபட்டதாகலாம். அணிகலங்களில் சேரும் அழுக்கும் மக்கு எனப்படும். தச்சுத் தொழிலில் மக்கு வைத்தல் என்பது உடைவு, வெடிவுகளைப் பசை ஒட்டால் ஒட்டல். மசக்கை - உண்டாகியிருத்தல் மயல், மயர்வு, மயக்கம், மசக்கை என்பனவெல்லாம் ஒரு பொருட் சொற்களே எனினும் இவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. மயல் - காதல்; மையல் என்பதும் அது; மயர்வு - மதிமருட்சி, மயக்கம்- பொறிபுலன் தடுமாறல்; மசக்கை - வயிறு வாய்த்திருத்தலால் உண்டாகும் சோர்வு. வாந்தி, சோம்பு ஆகியவை. அவளுக்கு மூன்றுமாதம்; மசக்கையாக இருக்கிறாள் என்பது வழக்கு. மசக்கை உண்டாதற்குக் காரணம் வயிறு வாய்த்திருத்தல் ஆதலால் வயிறு வாய்த்தல் மசக்கை எனப்படுகிறதாம். மஞ்சள் நீராட்டு - பூப்பு நீராட்டு மஞ்சள் தேய்த்து நீராடல் தமிழ் நாட்டு மகளிர் வழக்கு. ஆனால் அந்நீராட்டைக் குறியாமல் ஆளான அல்லது பூப்படைந்தவளுக்கு மஞ்சள் கலந்த நீர் கொண்டு நீராட்டுதலே மஞ்சள் நீராட்டாகும். பூப்படைதல் மஞ்சள் நீராட்டு எனப் பல இடங்களில் பெரு வழக்காக உள்ளது. பூவை நீரில் போட்டு வைத்து முழுக்காட்டுவதும் உண்டு. அதனால் பூ நீராட்டு என்பது அதுவே. மட்டம் - குறைவு மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சுமட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள். இப்பொருளை விடுத்துக், குறைவு என்னும் பொருள் தருதலும் வழக்கில் உண்டு. அவன் மட்டமானவன் என்றால் சமநிலையாளன், ஒப்புரவாளன் எனப் பொருள் தராமல், கீழானவன். குறைவானவன் என்னும் பொருள் தருவதாம். மட்டமாகப் பேசிவிட்டான் என்றால் இழிவாகப் பேசிவிட்டான் என்பது பொருளாம். மட்டை - கூரற்றவன் கூர் தேய்ந்தது மட்டை எனப்படும். முழுதாகக் கூர் அழிந் தது முழு மட்டை, மழுமட்டை எனப்படும். கரிக்கோலைச் சீவ வேண்டும் (Pencil) மட்டையாக இருக்கிறது என்பது வழக்கு. இம்மட்டை மழுங்கிய பொருளைக் குறிப்பது நீங்கி, கூர்மையில்லாதவனைக் குறிக்கும் வகையில் வழக்கில் உண்டு. குட்டையில் ஊறிய மட்டை, நாறுதல், அழுகல் பொருள்தரும். மடியில் மாங்காயிடல் - திட்டமிட்டுக் குற்றப்படுத்தல் மாந்தோப்புப் பக்கம்போனான் ஒருவன். அவன் மேல் குற்றம் சாட்டித் தண்டனை வாங்கித் தரவேண்டும் எனத் தோட்டக்காரன் நினைத்தான். உடனே மரத்தின் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்து, வழியே போனவன் மடியில் வைத்துவிட்டு அவன் கையைப் பின்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊர் மன்றுக்கு அழைத்துச் சென்று குற்றம் சாற்றினான். குற்றம் சாற்ற வேண்டு மென்றால் குற்றமா கிடையாது? வல்லடிக்காரனுக்குக் குற்றமொன்றைப் படைத்துச் சான்றுடன் உறுதிப்படுத்துவது தானா கடினம். மடியில் மாங்காயிட்டது போல மாட்டிவைத்து விட்டானே என்பது வழங்குமொழி. மடியைப் பிடித்தல் - இழிவுபடுத்தல்; கடனைக் கேட்டல் மடி என்பது வேட்டி என்னும் பொருளது. மடி என்பது வயிற்றையும் குறிப்பது. வயிற்றுப் பகுதியில் வேட்டிச் சுற்றில் பணம் வைப்பதும் பணப்பை வைப்பதும் வழக்கம். மடியைப் பிடித்தல் என்பது கடனைக் கேட்டல் என்னும் பொருளிலும், இழிவுபடுத்தல் என்னும் பொருளிலும் வந்தது. வேட்டியைப் பிடித்தல் என்பது அவிழ்த்தலின் முற்பாடு, உடுக்கை இழக்க நேர்வது - அதனைக் குறிப்பால் குறித்தல் கூட இழிவாவது. அதற்கு மடி வேட்டி; மடியில் வைத்த பணம் மடி ஆயது இடவாகுபெயர். இரண்டு நிலைகளாலும் இருபொருள்கள் கிளர்ந்தன. மண்டி - கசடன் எண்ணெய் வைக்கப்பட்ட கலத்தில் அவவெண்ணெய் தீர்ந்த பின்னர்ப் பார்த்தால் அடியில் மண்டி கிடக்கும். எண்ணெயில் இருந்த கசடு படிவதே மண்டியாம். சிலரை வெளிப்பட மண்டி விளக்கெண்ணெய் என்று எள்ளுவது வழக்கே. எண்ணெய் ஆட்டுங்கால் போட்ட பொருள்களின் கசடுகளும் பின்னே விழுந்த தூசி தும்புகளும் சேர்ந்து மண்டிக் கிடக்கும். அம்மண்டி, போன்றவனை மண்டி என்றது ஒப்பினாகிய பெயராம். வேண்டியவற்றை விடுத்து வேண்டாத வற்றைத் தேக்கிக் கொள்பவன் மண்டி எனப்பட்டான் என்க. பொருள்கள் மண்டி (செறித்து)க் கிடக்கும் இடம் மண்டி எனப்படும் அது புகைமண்டல், புகழ்மண்டல் போன்ற செறிவு. மண்ணடித்தல்-கெடுத்தல் கையில் இருப்பது தேன். அதனை மண்ணில் கொட்டி னால் என்னாம் அங்கணத்துள் சொரிந்த அமிழ்து என உவமைப்படுத்தினார் திருவள்ளுர். மண் உயர்ந்ததே, எனினும். உண்ணும் உணவுக்கு உறைவுடையதே எனினும் அதனை உண்ணலாமா? உண்பனவற்றோடு கலந்து உண்ணலாமா? உண்ண ஆகாத அதனை உணவில் கலந்து விற்கும் கயமையரைப் போலக் குமுகாயக் கேடர் ஒருவர் உளரா? பொன்னாம் வாழ்வை மண்ணாக்கும் பேதையர் எத்துணையர்? என் நினைவில் எல்லாம் மண்ணடித்து விட்டான். மண்ணைப் போட்டு விட்டான் என்பதில் என் நினைவைக் குழிக்குள் தள்ளி மண் ணால் மூடிப் புதைத்து விட்டான் எனச் சாக்காட்டுத் துயர் அன்றோ ஓலமிடுகின்றது? மண்ணைக்கவ்வல் - தோற்றல் போரில் குப்புற வீழ்தல் மண்ணைக் கவ்வலாம். மற்போரில் மல்லாக்க வீழ்தலும் முதுகில் மண்படலும் தோல்வியாக வழங்குகின்றது. முன்பு குப்புற வீழ்த்திக் குதிரை ஏறல் வெற்றிச் சின்னம். குதிரை குப்புற வீழ்த்தியது மன்றிக் குழியையும் பறித்தது என்பதும் வீழ்ச்சி விளக்கம், கீழே விழுந்ததும் முதுகில் மண்பட வில்லை எனவரும் மரபுத் தொடராலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் மரபுத்தொடராலும் கீழே வீழ்தல் மண்படுதல் என இழிவுப் பொருளாதல் தெளிவாம். மண்போடல்- இறந்தவரைக் குழிக்குள் வைத்து புதைகுழியை மூடல் மண்போடல் பொதுச் செயல், அதனைவிலக்கி இறந்த வரைப்புதைத்த புதைகுழியை மூடுதற்குப் போடுவதே மண் போடலாகவும், மண் தள்ளலாகவும் வழங்குகின்றது. இடுகாட்டுக்கு வந்த அனைவரையும் அழைத்து மூன்று மூன்று கைம்மண் தள்ளச் சொல்வர். கடைசியில் மண் தள்ளிய பேற்றில் பங்குகொள்ளல் பெரும்பேறு எனவும் கருதுதல் உண்டு. வாழ்ந்த நாளில் அவருக்கு மண்போட்டவரும், இந்த மண்போடுதலால் கடன் தீர்த்துக் கொள்வதாகக் கூடக் கருதுவதும் உண்டு. மணியம்செய்தல் - அதிகாரம் பண்ணல் அம்பலம், மன்றாடி, நாட்டாண்மை, ஊராளி, மணியக்காரர் என்பனவெல்லாம் ஊராட்சி மேற்கொண்டிருந்தவர்களின் தகுதிப்பட்டங்கள். ஆங்கில அரசின் காலத்தில் ஊராட்சி கிராம மணியம் (Village Munsif) என்னும் அரசுப் பதவிப் பெயராக வாய்த்தது. ஊர் நடவடிக்கை எல்லாமும் மணியத்தைச் சார்ந்தே இருந்தது. அதனால் அதிகாரம் செய்தல் என்னும் பொருள் மணியத்திற்கு உண்டாயிற்று. அவ்வழக்கால் உன் மணியம் பெரிய மணியமாக இருக்கிறது நீ யெல்லாம் மணியம் செய்தால் ஊர் என்னாவது? என்றெல்லாம் வழக்குகள் உண்டாயின. மதார் பிடித்தல் - தன்நினைவு அற்றிருத்தல் இருந்தது இருந்தபடியே, எது நடந்தாலும் அறியாதபடியே மூச்சுவிடுதல் பார்த்தல் ஆயவையன்றி உணர்வு வெளிப்படுத்த மாட்டாத நிலையில் இருப்பதை மதார் பிடித்தல் என்பர். மதம் பிடித்தல் காம வெறிகொள்ளல் இது செயலற்று உயிர்ப் பொ(ய்)ம்மைபோல் இருத்தலாம். இதனைப் பேயறைந் தாற்போலிருத்தல் எனவும் கூறுவார். மதமதப்பு என்பது மதர்த்தலாம். மதர்த்தல் என்பது மரத்துப்போதல் என்பதைக் குறிக்கும். மரத்தின் இயல்பு என்னவோ அந்நிலையடைதல் என்பதைக் காட்டும் வழக்குச் சொல்லாம் இது. மதார் பிடித்த வன் போல் இருக்கிறான் மதார் பிடித்து விட்டதா உனக்கு? சொன்னது காதில் விழுகிறதா? என்பவற்றிலிருந்து மதார்ப் பொருள் விளங்கும். மருந்து குடித்தல் - நஞ்சுண்ணல் மருந்து என்பது நோய் நீக்கப் பொருள். அதுவே உயிர் காக்கும் பொருள். ஆனால் உயிர் போக்கும் நஞ்சும் மருந்து எனப்படுவது வழக்கு. அவள் மருந்து குடித்துவிட்டாள் எனின் நஞ்சுண்டு விட்டாள் என்பது பொருளாம். இப்படியே நீ துயரப்படுத்தினால் நான் ஒரு நாளைக்கு மருந்து குடித்துச் சாகத்தான் போகிறேன் என்பதும் மனச்சுமை தாங்காமையால் வெளிப்படும் செய்தியாம். அவர்கள் துன்ப நீக்கத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அதனையும் மருந்து என்பர் போலும் சாவா மருந்து என்னும் குறளுக்கு நஞ்சுப் பொருள் தருவதும் கருதத்தக்கது. மல்லாத்தல் - தோற்கச் செய்தல் குப்புறத்தள்ளல், மண்ணைக் கவ்வவைத்தல் என்பவை தோற்கச் செய்வதன் அடையாளமாக இருப்பதுபோல, மல்லாக்கக் கிடத்துதலும் தோற்க வைத்ததன் அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஆமையை மல்லாக்கக் கிடத்தினால் அரும் பாடுபட்டே திரும்பி ஊர முடிவது எண்ணத்தக்கது. முதுகில் மண்படல் குத்துச் சண்டையில் தோல்விப்புள்ளியாகக் கருதப்படுதலும் எண்ணத்தக்கது. குப்புறத்தள்ளிக் குதிரை ஏறல் போல, மல்லாக்கக் கிடத்தி மானங் கெடுத்தலும் வழக்கிடை அறியக் கூடியதே. என்னை மல்லாத்தி விட்டு நீ போகவா பார்க்கிறாய்? என்னும் வஞ்சின மொழி இதன் பொருள் விளக்கும். மழுக்கட்டை - அறிவுக்கூர்மையில்லாதவன், மானமற்றவன் மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பன வெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. கூர்மை இரண்டு வகையாம். ஒன்று அறிவுக் கூர்மை; மற்றொன்று மானக் கூர்மை. இருவகைக் கூர்மை இல்லாமை மழுக்கட்டையாக வழங்கப்படுகின்றது. அவன் மழுக்கட்டை எதைச் சொன்னாலும் அவனுக்கு ஏறாது என்பது அறிவுக் கூர்ப்பின்மை சூடு சொரணை இல்லாத மழுக்கட்டை என்பது மானக் கூர்ப்பு அன்மை. மழுங்குணி - மழுங்கிய தன்மை, அறிவுக் கூர்ப்பும் மான வுணர்வும் மழுங்கியதன்மை அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான் சொன்னதும் தெரியாது; சொரணையும் கிடையாது என்பதில் இரு தன்மைகளும் அறிய வருதல் அறிக. மழுக்கட்டை காண்க. மழுமட்டை - அறிவின்மை, வழுக்கலான தன்மை மழுமழுப்பு என்பது வழுக்கல், மட்டை என்பது மடல். தென்னை பனை ஆகியவற்றின் மட்டை. குட்டையில் ஊறப்போட்ட மட்டை மழுமட்டை எனப்படும். மழுமழு அல்லது வழுவழுத் தன்மையுடையதாக அஃதிருக்கும். ஊறிய மட்டை போன்ற தன்மையுடையவன் மழுமட்டை என்க. ஊறப்போட்டு நார் உரிக்கப் பயன்படுவது புளிச்சைமட்டை. ஊறிய நீரையும் மழுமழுக்க வைத்துவிடும். கையால் தொடவே வழுக்கலும் நாற்றமும் உடையதாக இருக்கும் அவன் மழுமட்டை; அவனை வைத்துக்கொண்டு எப்படி மாரடிப்பது? என்பது வழக்குச் செய்தி. மழைபெய்தல் - செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல் உங்கள் காட்டில் மழைபெய்கிறது; பெய்யட்டும்; பெய்யட்டும் என்பது மழையைக் குறியாமல் பணவருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு. பல நாள்கள் தொடர்ந்து பெய்வது அது. அதுபோல் தொடர் தொடராய் வருமானம் வருவதையே மழைபெய்வதாகக் குறிக்கப்படு கிறது. மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை என்றால், மழை வருவாய்க் குறியானது சரியானதே. மறுத்து - திரும்ப, மீள, மற்றும் ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப்பாகக் கொள்ளப்படும். ஆனால் நான் சொன்னேன்; மறுத்து என்ன சொல்வது என்பதில் மறுப்புப் பொருள் இல்லை. திரும்பவும், மீளவும் என்னும் பொருளேயுண்டு. இலக்கியம் வல்லார் மற்றும் என்பது போல மறுத்து என்னும் ஆட்சி பொதுமக்கள் வாழ்வில் உள்ளதாம். நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மறுத்து நீ என்ன செய்கிறாய்? என்பதிலும் மறுத்து இப்பொருளதாதல் அறிக. மாட்டிவிடல் - சிக்கலுண்டாக்கல் ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச்சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை இணைத்தலாம். இது மாட்டிவிடக் கூடாத வகையில் மாட்டிவிட்டு சிக்கலுக்கு ஆளாக்கி அதனால் மகிழ்வதில் விருப்பமுடையவர் செய்யும் சிறு செயலாகும். இணைத்து விடுதல், இசைத்து விடுதல் என்பவற்றுக்கு எதிரிடையானது மாட்டி விடுதல், சொல்லால் அவ்வெதிரிடை வெளிப்படுவதில்லையாயினும் குறிப்புப் பொருளால் வெளிப்படுவதாம். மாரடித்தல் - சேர்ந்து செயலாற்றல் இறந்தாரை நினைத்து மகளிர் சிலர் பலர் கூடி மாரடிப்பது நம் நாட்டில் அண்மைக்காலம் வரை இருந்த வழக்கே. மாரடித்த கூலி மடிமேலே என்பதும் கூலிக்கு மாரடித்தல் என்பதுவும் மாரடித்தல் நிலையை விளக்கும். ஒப்புக்காக அழும் ஒப்பாரி கூலிக்கு அன்று மாரடிப்பு கூலிக்கு உரியது. மாரடிப்பில் ஒருவர் முன்னே பாடி மாரடிக்கப் பின்னே பலர் பின்பாட்டோடு மாரடிப்பர். அப் பின்பாட்டும் முன்பாட்டும் தொடர்பு கொண்டு முழுமையாகும். தொடர்பு அமையா மாரடி அவலத்திற்கு மாறாக, நகைப்புக்கு இடமாகி விடும். அதனால், உன்னோடு மாரடிக்கமுடியாது; நீ கெடுத்து விடுவாய் என்பது வழக்கில் ஊன்றியது. மாறல் - ஏற்பாடு மாறுதல், மாறலாம். இம் மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத ஒருவர் அதனை வாங்கித் தரமுடிந்தவரிடம் உங்கள் மாறலாகவாவது கிடைக்கும் என நம்புகிறேன் என்பர். இவண் மாறல், ஏற்பாடாகும். உங்கள் மாறல் என்பது உங்கள் கைம்மாற்று ஏற்பாட்டு வகையால் என்பதை உள்ளடக்கி வருகின்ற வழக்காகும். மினுக்குதல் - அணிகளால் மயக்கல் மின் - மினுகு - மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப்போக்கத் தேய்ப்பதைக் குறிப்பிடுதல் அறிக. அம்மினுக்குதல் போலவே அணிகலம் அணிந்தும் பூச்சும் புனைவும் செய்தும் தம்மை வெளிச்சம் காட்டுபவர் மினுக்குபவர் எனப்படுவர். அம்மினுக்குதலுக்கு வயப்பட்டோர் தம்மை இழந்து தகாத வகையில் சிக்கி அழிந்து போவர். மீளா உறக்கம் - இறப்பு உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆத லால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும். எனினும் அவற்றை மீள் என்னும் அடையின்றி வழங்குதல் அளவே அமைந்தது. ஆனால், இறப்பு பின்னே விழிப்பாக அமையாமல் மீளா உறக்கமாகவே அமைந்து விடுவதால் இறப்புப் பொருள் கொண்டது. போர்க் களம் சென்று மீளல் மீட்சியாம். களத்தில் மடிந்தவர்க்கு மீட்சி இல்லையே, ஆதலால் மீளா உறக்கம், மீளாச் செலவு, திரும்பாப்பயணம் என்பவை இறப்புப் பொருளில் உண்டாயின. முக்காடு போடல் - இழிவுறுதல் முக்காடுபோடுதல் சமயக் கோட்பாடாகக் கொண்டார் உளர். கைம்மைக் குறியாகக் கொண்டாரும் உளர். அவரை விலக்கிய முக்காடு இது. இந்நாளில் முக்காட்டு வழக்கெனக் காவல் துறையார் காட்டும் முக்காட்டினும் இம்முக்காடு வேறு பட்டது. உன்னைப் பெற்றதற்கு முக்காடு போட வைத்துவிட்டாய் என்பதில் முகங்காட்ட முடியாத இழிவுக்கு ஆட்படுத்திவிட்டாய் என்னும் குறை மானக் கொடுமைக் குறிப்பு உண்மை அறிக. இழிவுக்கு ஆட்பட்டு அதனை உணரும் மான முடையார் தம் முகம் காட்ட நாணி முக்காடு போடல் காணக் கூடியதே. நான்குபேர் முன் தலைகாட்ட நாணி, தலைமறைந்து செல்லலும் காணக் கூடியதே. ஆதலின் முக்காடு இழிவுக்குறியாக இவ்வழியில் இயல்கின்றதாம். முகங்கொடுத்தல் - பார்த்தல் செவிகொடுத்தல், கேட்டல் பொருள் தருவது போல முகங்கொடுத்தல் என்பது பார்த்தல் பொருளதாம். முகங்கொடுத்துப் பார்க்கிறானா? என்பதோர் ஏக்க வினா முகங் கொடுத்தே பாராதவன் தானா/ அகங் கொடுத்துப் பார்க்கப் போகிறான் என்பது தெளிவு விடை. முகத்துக்கு முகம்கண்ணாடி என்பது பழமொழி. என் முகத்தை நான் கண்ணாடியால் காணலாம். அது போலவே என் முன்னால் இருப்பவர் முகத்தின் வழியேயும் என் முகத்தைக் காணலாம். அவர் முகம் நகைப்புடன் இருந்தால் என் முகமும் அத்தகையது என்றும் அவர் முகம் கடுகடுத்திருந்தால் என் முகமும் அத்தகைத்து என்றும் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்துக் கொள்ளலாம் என்பதே அது. முகமூடியை உடைத்தல் - மறைப்பை வெளிப்படுத்தல் முகத்திரையைக் கிழித்தல், மூடு திரையைக் கிழித்தல் என்பவும் இப்பொருளவே. திரையைக் கிழித்தற்கும் இவ்வுடைத்தற்கும் வினை வேறுபாடு உண்டு. அது துணியைச் கிழித்தற்கும் தகட்டை உடைத்தற்கும் உள்ள வேறுபாடாம். வன்மையாக மூடி மறைத்து விட்ட செய்தியையும் ஆழத்துள் ஆழமாகப் புதையுண்ட செய்தியையும் வெளிப்படுத்திக் காட்டல் இதுவாம். இவ்வுடைத்தல் தீமை, கொடுமை ஆகியவை பற்றிய மறைப்பை விலக்குதலேயன்றிப் புகழ் விரும்பார் மறைத்துவிட்ட ஆக்கச் செய்தியை வெளிப்படுத்துதல் அன்றாம். முட்டிக் குனிதல் - பட்டறிவு இல்லாமை உயரங்குறைந்த வாயில்களைக் கடப்பார் புதுவராயின் முட்டிக் கொள்வர். பின்னர்க் குனிந்து செல்லப் பழகிப் போவர். இது முட்டிக் குனிதலாம். இவ்வாறே தீச்சுடும் என்பதை அறியாத குழந்தை தீயைத் தொட்டுச் சுட்டுக் கொண்ட பின்னர் தீச்சுடும் என்றும், அதனைத் தொடுதல் ஆகாது என்றும் தெரிந்து கொள்கிறது. இது பட்டறிவு. குழந்தை நிலையில் சரி. வளர்ந்த நிலையில் இதனால் இன்னது நேரும் என்னும் தெளிவு வேண்டும். அத்தெளிவு இல்லார் முட்டிக்குனிவர்; முட்டிக்குனிதலே வாழ்வாக அவர்களுக்கு இருக்கும். ஒன்றைக் கொண்டேனும் ஒன்றைத் தெளிவாரா? அதுவும் செய்யார். அத்தகையரே முட்டிக் குனிபவருள் முதல்வர் என்க. முட்டுப்படுதல் - வறுமை முட்டுப்படுதல் வறுமை, முட்டுப்பாடு என்பதும் அது. தட்டுப்பாடு என்பது சிற்றளவு வறுமை, முட்டுப்பாடு பேரளவு வறுமையாம். எங்கெங்கும் கேட்டும் எதுவும் பெறமுடியாமல் என்செய்வோம் எனத்தவிக்கும் வறுமையாம் இது. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என்னும் வறுமையும் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடரிது என்னும் வறுமையும் முட்டுப்பாடாம். முட்டு வீடு என்பது தாய் மகப்பேறு பெற்ற அறை. அதனைப் பெற என்ன பாடு படுவாளோ அப்பாடு முட்டுப்பாடு. அவ்வுயிர்ப் போராட்டத்துடிப்பை ஆக்குவது முட்டுப்பாடாம் வறுமை என்க. முட்டுமாடு - முன் சீற்றத்தன் (முன்கோபி) முட்டும் மாட்டின் தலையசைவு, கொம்பசைவு கண்டே ஒதுங்கிவிடுவர். கொம்புளதற்கு ஐந்து முழம் விலக வேண்டும் என்பது ஒரு பாட்டு. கொம்புள்ள மாடு முட்டுதலுக்கு அஞ்சி ஒதுங்குவது போல முன் சீற்றத்தரைக் கண்டும் அஞ்சுதல் உண்டு. ஆதலால் அவரை முட்டுமாடு என்பர். அதனை அவர் முன்னர்க் கூற முடியுமா? அவர் காது கேட்கவும் கூற முடியுமா? பிறர்க்கு வெளிப்படாத வகையில் முட்டுமாடு என்று பெயர் சூட்டிக் கொள்வர். எத்தனை சிறப்புகள் இருப்பினும் முன் சினத்தர் நிலை மதிப்பைக் கெடுத்து விடுதல் வெளிப்படை. கோபம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்பது ஒப்பேற்றிச் சொல்லாம். முட்டையிடல் - அடங்கிக் கிடத்தல் அடைகாத்தல் என்பது போன்றது முட்டையிடல். முட்டைக்கோழி அடையை விட்டு வெளிப்படாது. தீனியும் நீரும் கூடக் கருதாமல் கிடந்த கிடையாய்க் கிடக்கும். அப்படிக் கிடத்தலையோ, தீனும் நீரும் கொள்ளாதிருத்தலையோ குறியாமல் வீட்டுள் அடைந்து கிடத்தலைக் குறிப்பதாக வழங்கு வது முட்டையிடலாம். முட்டையிட்ட கோழிபோல வீட்டை விட்டு வெளிப்போகாமல் கிடக்கிறான் என்பது பொருளாம். அவன் முட்டைக்கோழி; விளையாட வரமாட்டான் என்பதில் வீட்டுள் அடங்கிக் கிடக்கும் பொருளிருத்தல் அறிக. முடிச்சுப்போடல் - இல்லாததும் பொல்லாததும் கூறல், திருமணம் செய்தல் மூட்டி விடுதல், மாட்டி விடுதல் போல்வது இம் முடிச்சுப் போடுதல். ஒருவரோடு ஒருவருக்குச் சிக்கல் உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல் முடிச்சுப் போடலாகும். முடிச்சு அவிழ்க்க வல்லவரிடம், முடிச்சுப் போட முடியாத விழிப்பரிடம் முடிச்சாளர் வேலை நடைபெறாது. எங்களுக்கு முடிச்சுப் போடவா பார்க்கிறாய்? அந்தப் பாய்ச்சல் நடக்காது என்று முகத்தில் கரிபூசிவிடுவர். திருமணம் முடிச்சுப் போடுதல் என்பது தாலிகட்டல், கட்டுக் கழுத்தி, கட்டிக் கொள்ளல் என்பவற்றால் புலப்படும். மூன்று முடிச்சுப் போடல் என்பது முன்பொருளுக்கும் பின் பொருளுக்கும் தொடர்பில்லாது விளக்கிக் காட்டும். முணங்கக் கொடுத்தல் - தாங்கமாட்டாத அளவு அடி தருதல் கொடுத்தல் என்பது கொடைமானம் என்பதால் திட்டுதலையும், கொடை என்பதால் அடித்தலையும் குறிக்கும். அடிபட்டவன் வலி தாங்க முடியாமல் முணங்குதல் கண்கூடு. அதனால் முணங்குதல் என்பது வலி தாங்க முடியாத அரற்றாக அமைந்தது. அவ்வரற்று அமையுமாறு அடித்தல் முணங்கக் கொடுத்தல் ஆயிற்றாம். இன்னும் இதனிற் கடியது முக்க முணங்கக் கொடுத்தல் எனப்படும். முணகுதல் சலித்தல், முணங்குதல் அரற்றுதல் என்னும் வேறுபாடு அறிக. நன்றாக முணங்கக் கொடுத்து விட்டான்; இனி மற்றவர் வழியில் தலை யிட்டு வரமாட்டான் என்பது முணங்கப் பெற்றான் பெற்ற முணகலுக்கு முடிவுரை. முயலுக்கு மூன்றுகால் - சொன்னதை நிலைநாட்டல் முயலின் கால் நாலே, கால் ஒன்றை இழந்த ஒரு முயலைப் பார்த்தவன் முயலுக்கு மூன்று கால் என்றான். எத்தனை பேர் மறுத்து நான்கு கால் எனக் கூறினும் தான் கூறியதே கூறினான். அதனால் சொன்னதையே நிலைநாட்ட நினைவாரை முயலுக்கு மூன்றுகால் எனக் கூறுதல் வழக்காயிற்று. வாதத்திற்கு மருந்து உண்டு; பிடிவாதத்திற்கு மருந்து உண்டா? என்பது பிடிவாத ரின் மாறாத் தன்மையைக் காட்டுவதாம். நான் என்னென் னவோ சொன்னேன்; அவன், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பேசுகிறான்; அவனை எப்படித் திருத்துவது என்பதில் பிடிவாதப் பொருள் புலப்படும். முருங்கைக்காய் - மெலிவு முருங்கைக்காய் நீளமானது; கனமில்லாதது; எளிதில் ஒடிவது. மரமும் எளிதில் நெடுநெடு என வளரும்; வலுவிராது; எளிய காற்றின் சுழற்சிக்கும் கிளையோடு ஓடியும்; அடியோடு சாயும். இத்தன்மைகளை அறிந்தவர்கள் உடல் வலுவின்றி வளர்ந்தவர்களை முருங்கைக்காய் என்பது வழக்கு. முருங்கைக் காய் பிஞ்சாக இருக்கும்போது நீண்டிருத்தலும், காற்றில் ஆடலும் காண்பார். இவ்வுடைமையை மிகத் தெளிவாக உணர்வர். உடல் சதையில்லாமல் முருங்கைக்காய் போல நெடுநெடு என வளர்ந்து விட்டான் என்பது வழக்கு. முல்லைமாறி - களமாக்கி விடுபவன் முல்லை என்பது வளமிக்க காட்டு நிலம். அக்காட்டு வளநிலை மாறி மழையற்று வறண்டு போனால் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து, நல்லியல் பழிந்து போனால் பாலை எனப்படும் என்பார் இளங்கோவடிகளார். அவர்தம் இலக்கணக் குறிப்பைப் பொது மக்கள் மிக எளிமையாக முல்லை மாறி என்பதால் வழங்குகின்றனர். வளமான வாழ்வைப் பாலையாக்குபவனை முல்லைமாறி என்று வசை கூறுவர். முல்லை மாறி மொல்லை மாறி என உலக வழக்கில் இக்காலத்தில் வழங்குகின்றது. முழுகாதிருத்தல் - கருக்கொண்டு இருத்தல் திங்கள் தோறும் மகளிர்க்கு வரும் முழுக்கு, விலக்கின் வழியே வருவது. அம்முழுக்கு நின்று விடுதலைக் குறிப்பது முழுகா திருத்தல் என்பதாம். முழுகாதிருப்பின் கருக்கொண்டு வயிறு வாய்த்துளாள் என்பது குறிப்பாம். ஆகவே முழுகுதல் என்பது பொது நீராடலையும், ஆடவர் நீராடலையும் விலக்கி மாதவிலக்கு முழுகுதலைக் குறித்ததாயிற்றாம். அம்முழுக்குக் கொள்ளாமையே முழுகாதிருத்தலாம். முழுகாதிருக்கிறேன் என்ற செய்தியைக் கேட்ட அளவில் உன்னை முழுகி விட்டேன் என்னும் உட்கோளரும் உளர். அவர் முழுகிக் குளித்தவர்; அதனால் நடுக்கம் இல்லை! மூக்குடைபடுதல் - இழிவுபடுதல் மூக்கறுபடல் போல்வதோர் வழக்கு இது. மூக்கை உடைக் காமலே உடைத்தது போன்ற இழிவுக்கு ஆட்படுத்துதல் மூக்குடை படுதலாம். உடைபடுதல் என்பதால் எலும்பை உடைத்தல் என்பது தெளிவாம். அறுத்தல் தோலுக்கு ஆம். அதனினும் வன்மை எலும்பை உடைத்தல். குளம் உடைந்தால் நீர் வழியும்; இவண் குருதிவழியும். மூக்குடைபட்டுக் குருதியொழுகச் செய் வது போல இழிவுறச் செய்தலாம். நன்றாக மூக்கை உடைத் தாய்; அதற்குப் பின்னர் அவன் வாயைத் திறந்தானா? என்பதில் இழிவுறுத்தல் பொருள் உள்ளதாம். மூக்குச் சீந்தல் - கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல் அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல், கவலை ஆகிய பொருள்களுக்கு உள்ளாயிற்று. தகுமம் பற்றலாலும் மூக்குச் சீந்தல் நேரும். எனினும் அதனை விலக்கிக் கவலைப் பொருளாதல் வழக்குச் சொல்லாயிற்று. அழுத கண்ணும் சீந்திய மூக்குமாக என்பது மரபுத் தொடராக உள்ளமை இப்பொருளை வலியுறுத்தும். ஒன்றைச் சொன்னால் உடனே மூக்கைச் சீந்துவாயே என்பதில் இப்பொருண்மை உண்மை தெளிவாம். மூக்கறுத்தல் - இழிவுறுத்தல் இடைக்காலப் போராட்டங்களுள் மூக்கறுப்புப் போராட்டம் ஒன்று. மைசூர் மன்னர் படைஞர் மூக்கை முகவை அரசர் படைஞர் திருமலை மன்னருக்காக அறுத்த செய்தி வரலாற்றில் உண்டு. இராமகாதையில் மூக்கறுப்புப் போர் தொடங்கிவிட்டமை உலகறிந்த செய்தி. மூக்கை அறுத்தல் இழிவுபடுத்துதல் பொருளது. காதறை, மூக்கறை என ஆக்குவது வாழ்நாளெல் லாம் காணுவார் கண்ணுக் கெல்லாம் காட்சி தருவன வல்லவோ! சொல்லாற்படுத்தும் இழிவு தன் மனத்து வடுவாம். இவ் விழிவோ காண்பார்க்கெல்லாம் இழிவைப் பரப்பும் விளம்பரப் பறையாம் அன்றோ! இவ் வழக்கால் மூக்கறுத்தல் என்பதற்கு இழிவுறுத்தல் பொருள் தோன்றிற்றாம். மூச்சு - பேசாதே மூச்சு என்றாலே அழுகையை அடக்கு; வாயைத்திறவாதே; பேசாதே என்னும் பொருளைத் தரும் வழக்குகள் உள. அழும் குழந்தை, ஓயாது பேசும் குழந்தை ஆகியவற்றை அடக்க மூச்சு என்பர்! அக்குறிப்பை அறிந்த குழந்தை வாயை ஒடுக்கும் அழுகையை நிறுத்தும். அச்சப்பொருள் தரும் கட்டளைச் சொல் மூச்சு என்பதாம். ஓர் அரற்று அரற்றியதும், காச்சு மூச்செல்லாம் அடங்கிப் போயிற்று என்பதில் ஆரவாரத்தை அடக்குதல் பொருள் உள்ளது. மூச்சு என்பதில் மூச்சு விடாமைப் பொருள் இல்லை என்பதை அறிக. மூச்சுவிட மறத்தல் - சாதல் பேச மறத்தல் என்பது போன்ற வழக்கே மூச்சுவிட மறத்தல் என்பதாம். மூச்சே உயிர், மூச்சு அடங்குதல் உயிர்போதலாம். ஒடுக்கம் அடக்கம் என்பவும் இறப்பை உணர்த்துதல் அறிக. மூச்சு நின்று போனது என்பதை அவர் செயலாக்கி மூச்சுவிட மறந்து விட்டார் என வழக்கில் உள்ளதாம். மூச்சையடக்கிப் பயிற்சி செய்தல், மூச்சை அடக்கி மூழ்குதல் என்பன போல்வதன்றி முற்றாக மூச்சு நின்று போதலே இது என்க. காயமே பொய்யடா, காற்றடைத்த பையடா என்பது மூச்சுக் காற்றால் இயலும் உடலியல் கூறுகின்றதாம். மூட்டிவிடுதல் - கோள் கூறல் இரு பக்கத்தை இணைத்து ஒன்றாக்கல் இயைத்தல், இசைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான்காக்கிப் பிரித்து வைப்பதாம். அடுப்பு மூட்டல், நெருப்பு மூட்டல், தீ மூட்டல், எரி மூட்டல் என்பன போல இம் மூட்டல் சினத்தையும் மூண்டெழச் செய்து அதனால் பலப்பல சிதைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆட்படுத்துதலாம். மூட்டி விடுதல் மாட்டிவிடுதல் என்பன வெல்லாம் கெடுவழிப் பிறந்த கேடர் கைப்பொருள்கள். மாட்டுவதில் பெரிய ஆள் என்னும் வழக்கில் உள்ள பெருமையின் சிறுமை வெளிப்படை. மூட்டை கட்டல் - புறப்படல் ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு கட்டுசோறு எனவும் வழங்கும். சோற்று மூட்டை என்பதும் அது. சோற்று மூட்டை கட்டினால் வேற்றூர்ச் செலவுண்டு என்பது வெளிப்படை. இனி வேற்றூரில் நிலையாகத் தங்கச் செல்வார் தம் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு போதல் உண்டு. பெட்டியில் போட்டாலும், உந்துகளில், தொடரிகளில் கொண்டு சென்றாலும் மூட்டை முடிச்சுகளே அவை. ஆதலால் மூட்டை கட்டல் என்பது இடம் விட்டுப் புறப்படல் பொருளில் வழங்குகின்றது. ஓயாது இடமாறிச் செல்வார். மூட்டை கட்டுவதே என் பிழைப்பாகிவிட்டது என்பதுண்டு. மூடம் - கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல் மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறியாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால் மூடப்பட்டிருப்பதாம். மூட்டம் என்பது மாந்தரால் போடப்படுவதாம். வாழைக் காயைப் பழுக்க வைக்கப் புகை மூட்டம் போடுவது வழக்கு. பாலடுப்பிற்கு உமிமூட்டம்போட்டுக் கொழுந்துவிட்டு எரியாமல் மூடுவதும், பானை சட்டி வேகவைக்க மூட்டம் போடுவதும் உண்டு. மெச்சக் கொட்டல் - பாராட்டல் ஒன்றைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது பாராட்டுவதற்கு அடையாளமாக இச், இச் என நாவால் ஒலி எழுப்புவதை மெச்சக் கொட்டல் என்பது வழக்கு. மெச்ச பாராட்ட; கொட்டல் - ஒலித்தல். பாராட்டுதலுக்குக் குறியாக ஒலி செய்தல் மெச்சக் கொட்டல் என்க. மெச்சக் கொட்டுதல் என்பது தின்பதற்கு இல்லாமல் வெறும் வாயை மென்று கொண்டிருப்பதாம். மெச்சு மெச்செனக் கொட்டல் என்க. மெச்சு - ஒலிக் குறிப்பு. மெச்சு மெச்செனத் தின்னல் என்பதில் இவ்வொலிக் குறிப்புண்மை அறிக. மெச்சட்ட மிடுதல் என்பதும் தின்னலே. மேட்டிமை - பெருமை மேடு, உயர்வு; மேட்டிமை என்பது மேடாம் தன்மையைக் குறியாமல் தன்னை மேலாக நினைக்கும் செருக்கைச் சுட்டுவ தாம். அவன் மேட்டிமைக்காரன்; எவரையும் மதித்துப் பேசான் என்பதில் அவனுக்குள்ள செருக்குப் புலப்படுதல் வெளிப் படையாம். உனக்கு மேட்டிமை இருந்தால் இருக்கட்டுமே! எங்களுக்கு ஆவதென்ன என்று மேட்டிமைக்காரனை நெருங் காது விலகுவதும் மானத்தர் உணர்வாம். மேடேறுதல் - மேனிலையடைதல், கடன் தீர்தல் பள்ளத்தில் இருந்து மேடேறுதல் பெரும்பாடு. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு வருதல் எளிமை. மேடேறப் பெருமுயற்சி வேண்டும். முயற்சியில்லாமல் இருந்தாலே போதும். பள்ளத் திற்கு உருண்டு வந்துவிடலாம். ஆதலால் மேடேறுதல் அருமை புலப்படும். மேட்டைக் குறியாமல் தொழில் பதவி படிப்பு ஆகிய வற்றில் மேனிலையடைதல், பட்ட கடன் குழியில் இருந்து தீர்த்து மேனிலையடைதல் என்பவை மேடேறலாகக் கொள்ளப் படும்போது வழக்குச் சொல்லாம். ஏதாவது நெருக்கடிச் செலவு நேருங்கால் இந்த ஆண்டு போகட்டும்; அடுத்த ஆண்டு மேடேறிக் கொண்டு பார்க்கலாம் என்பதில் மேடேறல், வளமை பெறல் பொருள் உள்ளதாம். மேய்ச்சல் - வருவாய் ஆடு மாடு, மேய்தல் உடையவை; மேய்ப்புத் தொழிலும், மேய்ப்பரும், மேய்ச்சல் புலமும் உண்மை அறிந்தவை. இவ்வாடு மாடு மேய்தலை விடுத்துப் போனபோன இடங்களிலெல்லாம் வருவாய் தேடிக்கொண்டு வருவதை மேய்ச்சல் என்பதும் நல்ல மேய்ச்சல் என்பதும் வழக்கு. அவனுக்கு என்ன எங்கே போனாலும் மேய்ச்சலுக்குக் குறைவு இல்லை; நமக்குத்தான் காய்ச்சல் என்பர். மேய்ச்சல் என்பது வருவாய்ப் பொருளும், காய்ச்சல் என்பது வருவாயின்மைப் பொருளும் தருவனவாம். மேனித்து - உழையாமை குனியாமல் வளையாமல் (வேலையின்றித்) திரிவதை மேனித்தாகத் திரிதல் என்பர். மேல் வலிக்காமல் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான் வேலை என்பது மேனித்தரைப் பற்றிச் சொல்லும் வசையுரை. மேனிற்றல் மேனிற்று மேனித்து என ஆகியிருக்கலாம். மேனிற்றலாவது மிதத்தல் என்பதாம். அவன் மிதப்பில் திரிகிறான் என்னும் வழக்குச் சொல் இதனை விளக்கும். மிதப்பில் திரிதல் என்பது ஆங்கும் இங்கும் அலை தல், ஆழ்ந்து ஒன்றிலும் ஈடுபடாதிருத்தல் என்பவற்றைக் குறிப்ப தாம். மேனி குலுங்காமல் இருக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம் என்பதும் இவ்வழிப்பட்டதே. மொட்டைச்சி - கைம்மையாட்டி கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு காலத்தில் மொட்டை போடுதல் வழக்காக இருந்தது. அவ்வழக்கம் அண்மைக்காலம் வரை கூட இருந்தது. அவ்வழக்கமும், குறித்த இன வழக்காகவே இருந்தது. பொது வழக்கன்று. மொட்டைபோடும் வழக்கில் இருந்து, மொட்டை போட்டவளைக் காண்பது செயற் பாட்டுத்தடை (சகுனத்தடை) என்னும் இழிவுக்கு ஆட்படுத் தவும் இடமாயிற்று. சமய வழக்கமாக மொட்டை போடுதல் பல்வேறு சமயங்களில் இடம் பெற்று இந்நாள்வரை கூட நடை முறையில் உள்ளது. ஆனால் அவை பழிப்பின்பாற்படுத்தப் படுவன அல்ல. மொட்டையடித்தல் - வெறுமையாக்கல் மரங்களை மொட்டைதட்டல், மொட்டையடித்தல் போல் செல்வத்தை மொட்டை தட்டலாக வழங்குகின்றது. தலையை மொட்டை போட்டால் மழுக்கையாதல் போல உள்ளவை உரியவை எல்லாம் இல்லாமல் செய்வதே மொட்டை யடித்தலாகின்றது. மொட்டையன், மொட்டைச்சி என்னும் வழக்கு வேறு. அது தலையைக் குறித்த வழக்கு இங்குச் செல்வத்தைக் குறித்த வழக்கு. மொண்ணை - கூர்மை இல்லாமை மொட்டை, மழுக்கை என்பவை போன்ற பொருளதே மொண்ணை. முனைஅல்லது நுனை மழுங்கிய கருவி மொண்ணை எனப்படும். அவ்வாறே கூர்ப்பில்லாதவன் (மூடன்) மொண்ணை யன் எனப்படுவான். இனி ஆண்மைத் திறம் இல்லாதவனும் மொண்ணை எனப்படுவான். அவன் சரியான மொண்ணைப் பயல். அவனுக்கு எதற்குக் குடியும் குடித்தனமும் என ஒதுக்கும் உரையால் அப்பொருள் வெளிப்படும். பேச்சாற்றல் இல்லாத மூங்கையன் மொண்ணையன் எனப்படுதலும் அருகிய வழக்காம். மொய்வைத்தல் - பணம் தருதல் மொய்த்தல் என்பது பலவாக நெருங்குதல், ஈமொய்த்தல் எறும்பு மொய்த்தல் என்பன வழக்குகள். ஒரே வேளையில் பலரும் கூடிச் சேர்ந்து கொடை தருவதால் மொய் எனப்பட்டது. இப்பொழுது மொய்ப் பணம் எழுத்தாக இருப்பதால் மொய் எழுதுதல் என்னும் வழக்கு உண்டாகியுள்ளது. மொய் என்பது இரங்கல் நிகழ்ச்சித் தொடர்பாகவே நிகழும் பணக் கொடையாம். சுருள் மங்கல நிகழ்ச்சித் தொடர் பாகவே நிகழும் பணக் கொடையாம். இவ்வியல்பு மாறி இரண் டற்கும் இரண்டும் வழங்குவதும் சில இடங்களில் உண்டு. வடிப்பம் - அழகு, கூர்மை வடிவு - அழகு; வடிக்கப்பட்ட சிற்பம் வடிப்பமாம். கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உள் நிறுத்தத் தக்க வடிவு வடிப்பம் எனப்படும். அவ்வடிவு வடிவைக் குறியாமல் வடிவின் அமைதியாய் அழகைக் குறிப்பது வழக்காயிற்றாம். சிலர் பெயரே வடிவென வழங்குதல் அறிக. வடிவான் மருட்டுதல் என்பது வடிவழகால் மயக்குதல் என்பதாம். வடிக்கப்பட்ட வேல் அழகாக விளங்குவதுடன் கூர்மையும் கொண்டிருப்பதால் அதற்குக் கூர்மைப் பொருளும் உண்டாயிற்றாம். வடிவேல் என்பதும் வழங்கு பெயரே. வண்டவாளம் - தன்மை கெட்ட செயல்கள் உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்று கிறேனா; இல்லையா! பார்! என்பது எரிச்சல் வெளிப் பாடு. இதில் வண்டவாளம் என்பது தகுதியில்லாத செயல்கள் தண்டவாளத்தில் ஏற்றல் என்பது ஊரறியப் பரப்புதல். தண்ட வாளத்தில் என்பது தொடர்வண்டியில் செய்தித்தாள் அனுப்பு வது போல அனுப்புவதாம். இன்றும் அஞ்சல்கள் உள் நாட் டளவில் தொடர் வண்டியில் போதலே நடைமுறை. பேருந்து வாராக் காலத்தில் தொடர் வண்டி வழியாகவே செய்தித் தாள்கள் அனுப்பப்பட்டன. அந்நாளை வழக்குச் சொல் ஈதாம். வண் - வண்ட - என்பவை வளமான செய்திகள். அவை தகுதி கெட்ட செய்திகள். வாளம் - நெடுமை வாலம் என்பதும் அதுவே. வண்ணங்கொடுத்தல் - பொய்யை மெய்யாக்கல் பூசுதல் போல்வது வண்ணங் கொடுத்தல். வண்ணங் குலைந்த பொருள்களை வண்ணமேற்றிப் புதிதுபோல் காட்டி ஏமாற்றி வருதல் இந்நாளில் பெருக்கமாம். வண்ணங் கொடுத்த லால் நல்ல எண்ணங் கொடுத்து ஏமாறச் செய்வது ஒரு கலைத் தொழிலாகவே போகி விட்டது. அது குற்றச் செயல் என்னும் எண்ணமே இல்லாத நிலையில் பெருக்கத்தை அன்றிச் சுருக்கத்தை அடையாதே! புலவர் வண்ணங் கொடுக்கும் வண்ணிப்பு பொழுது போக் காக அமையும். இவ் வண்ணங் கொடுப்பு, பொருள் போக்காக மட்டுமா அமைகின்றது? உயிர்ப்போக்காகவும் கூட அமைந்து விடல் உண்டு. வண்ணங் கொடுத்தல் பாலிசு செய்தல் என்னும் ஆங்கில வழிப்பட்டதாம். வந்தேறி - அயல்நாட்டில் இருந்து வந்தவர் வந்து ஏறுபவர் வந்தேறி எனப்படுவர். வருதல் நாடு தாண்டி நாடு வருதல். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டிற்கு உரிமை பெறாமல் வருவதும், வந்து நிலைமக்களாகத் தங்கி விடுவதும் வந்தேறி எனப்படுகின்றதாம். நிலைமக்களாக இருப்பவரையும் வந்தேறிகளாக அலைமக்கள் ஆக்கி விடுவர் என்பதற்கு ஈழ நாட்டு நிலை எடுத்துக்காட்டாம். வந்தேறிகள் நிலை மக்களாவ தற்கு அமெரிக்க, ஆபிரிக்க, ஆதிரேலிய நாட்டு ஆட்சி யுடையாளர் சான்றாவர். வருதல் இருத்தல் ஆகியது, வந் தேறுதல் எனப்படுவது குடியேறுதல், குடியேற்றம் போன்ற வழக்காம். குடியேற்றம் ஓர் ஊர்ப் பெயர். வயிற்றைக்கட்டுதல் - உணவைக் குறைத்தல் வயிற்றுப் பாடு பெரிது. மூவேளை யுண்டாலும் இடை யிடை வேண்டியும் கிடப்பது. ஒரு வேளை உணவுக்கும் வழி யில்லாதவர் நிலைமை என்னாம்? அத்தகையவர்க்கும் வேறு வேறு கட்டாயச் செலவுகள் இருந்தால் என்ன செய்வர்? அந்நிலையில் வயிற்றொடு போராடி, பசியைக் கட்டாயத்தால் கட்டிப்போட்டே காலந் தள்ள நேரும். இதுவே வயிற்றைக் கட்டுதலாம். வயிற்றில் ஈரத்துணியைப் போடுதல் என்பதும் இத்தகு வழக்கே. வாயைக் கட்டுதற்கும் இதற்கும் சிறிய வேறுபாடு உண்டு. வாயைக் கட்டுதல் பார்க்க. வர்த்திவைத்தல் - மூட்டிவிடல், இல்லாததும் பொல்லாததும் சொல்லல் வர்த்தி, மெழுகுவர்த்தி, தீவர்த்தி முதலியவை. ஒன்றைப் பற்ற வைத்து அவ்வொன்றால் பலப்பலவற்றைப் பற்ற வைப்பது போன்றது வர்த்தி வைத்தல். ஒரு செய்தி ஆங்காங்குச் சென்று பலப்பலருக்கும் சொல்லப்பட்டு, அவ்வவரை எரியச் செய்தல் வர்த்தி வைத்தலாக வழங்குகின்றதாம். மெழுகுதிரி, விளக்கு ஆகியவை சுடரொளி பரப்பி இருட்பகை ஒழிப்பது போல் வதோ இவ்வர்த்தி! அமைதியாகவும், ஒன்று பட்டும் இருந்த வரை உள்ளெரிவுக் காளாக்கி உருக்குலைக்கும் தீமையுடைய தாம் இவ்வர்த்தி வைத்தல், வர்த்திவைக்க வில்லையானால் உனக்கு வயிறு எரியுமே என்பது வழக்கு. பிறரை எரிய வைக்கா விட்டால் தனக்கு எரிவு எனின் வர்த்தியான் எத்தகையன்? வரிசை - ஒழுக்கம் எறும்பு வரிசை ஓர் ஒழுங்கு முறையாக உலகமெல்லாம் பரவியிருத்தல் அறியக் கூடியது; ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் எறும்பு வரிசை எறும்பின் ஒழுக்கு எனச் சங்க நாளிலேயே சொல்லப்பட்டது. ஆயினும் பொருள் தட்டுப்பாடு, போக்குவரவு நெருக்கடி, காட்சிச்சாலை ஆகியவற்றால் அண்மைக்காலத்தே தான் வரிசை வழக்கில் கொணரப்பட்ட தாம். கியூ Kiw(q system) என்பது எறும்புச்சாரி முறையே. நீர் ஒழுக்கு, எறும்பொழுக்கு, ஒழுக்கம் என்பவை யெல்லாம் ஒழுங்கு முறைப்பட்டதாம். உன் வரிசை தெரியுமே என்பதில் வரிசை ஒழுக்கமாதல் அறிக. வரிசை கெட்டவன் ஒழுக்கமற்றவன் என்பதாம். வரிதல் - எழுதுதல், கட்டுதல் வரி என்பது கோடு, வரிதல் எழுதுதல் பொருளது. என்ன வரிகிறாய்? வரிந்து தள்ளுகிறாயே எதை? என்பவற்றில் வரிதல் எழுதுதல் பொருளாதல் அறிக. வரிந்துகட்டு, வரி என்றால் இறுக்கிக் கட்டுதல், இறுக்கு என்பவை பொருள். வேட்டியை வரிந்து கட்டுதல் வரிதல் எனப்படும். வரிதல் இறுக்கிக் கட்டுதல் என்னும் பொருளதே. கட்டாயம் என்பது கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய வரி என்பதே. அதில் இருந்தே தீரா நிலை யில் நிறைவேற்றியாக வேண்டிய செயல் கட்டாயம் எனப் பட்டதாம். அரசிறை எனப்படும் வரியைத் தவிர்த்தலாகாது என்பதை விளக்குவது கட்டாயச் சொல்லாம். கட்டு + ஆயம் = கட்டாயம். கட்ட வேண்டும் வரிப்பணம். வலைவீசுதல் - அகப்படுத்துதல் வலைவீசுதல் என்பது மீன்பிடிப்பதற்காகச் செய்யப் படுவது. வலைவீசல், வலைபோடல், தூண்டில் போடல் என்பன வும் மீனை அகப்படுத்துவதற்கு அல்லது சிக்கவைப்பதற்குச் செய் யும் செயலேயாம். அதே போல் ஒருவர் தாம் விரும்பிய ஒருவரை அகப்படுத்துதற்குச் செய்யும் முயற்சி சூழ்ச்சி - பேச்சு- கண் ணோக்கு என்பவை வலைவீசுதலாக வழக்கில் சொல்லப்படும். வலைவிரித்தல் என்பதும் அகப்படுத்தி எடுத்துக்கொள்ளும் முயற்சியையே குறிக்கும். நேரிய வழியால் அகப்படுத்துதலை, வலைவீசுதல் என்னும் வழக்கம் இல்லை. வழிக்குவராமை - ஒருவர் செயலில் குறுக்கிடாமை வழிக்கு வருதல், நெறிப்படல், ஒழுங்குறல் என்னும் பொருள. அவ்வழிக்கு வராதவனைப் பார்த்து எங்கள் வழிக்கு நீ வராதே என ஒதுக்கி விடுவது வழக்காம். இவண் வழிக்கு வருதல் என்பது அவர்கள் செயல்களில் பங்குகொள்ளல், ஊடாடுதல் என்பனவாம். வழியே ஏகுக; வழியே மீளுக என்பது வழியறிந்தோர் வழி. இவ்வழி கெட்டோர் வழி. வழியை அழிப்பதே. எப்படி இணையும் இருவர் வழியும்? ஆதலால்; வழிக்கு வராதே என விலக்குதலே தற்காப்பாம். வழுக்குதல் - ஒழுக்கம் தவறல் வழுக்கி விழுதல் என்பதும் அது. வழுக்கி விழுந்தவள் எனப் பெண்ணைப் பழிக்கும் ஆணுலகம் - ஏன் பெண்ணுலகமும் கூட, ஆணை வழுக்கி விழுந்தவனாகச் சொல்வது இல்லை. வழுக்கி விழுந்தவர்கள் கடைத்தேறவென்றே அரும்பாடுபட்டார் முத்துலக்குமி அம்மையார். காந்தியடிகள் தம் தொண்டில் ஒரு பகுதி வழுக்கி விழுந்தவர் கடைத்தேற்றத்திற்கு உரிமை கொண்டது. ஒருவர் வழுக்கினால், இன்னொருவரும் வழுக்குதலுக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டுமே! அவரைத் தப்பவிட்ட வழுக்குதலே வழுக்குதலாம். அவள் வழுக்கி விழுந்தவளாமே எனப் பார்வை பார்ப்பது பரிவாக இருந்தால் நலம்! எரிவாக இருந்தால்? எய்தவன் இருக்க அம்பை நோவதாம் பழியே. வழுக்கி விழுதல், வழிதவறல், கைவிடல் என்பனவும் இச்சார்புடையனவே. வழுக்கை - வழுக்கிக்கொண்டு செல்லல் வழுக்கும் இடமும், வழுக்கும் பொருளும் வழுக்கையாம். முன்னது வரப்பு வழுக்கல்; பின்னது இளநீரில் வழுக்கை. தலை வழுக்கை வழுக்கையுமாம் மழுக்கையுமாம். முழுக்க வழித்தது மழுக்கை; மயிர் உதிர்ந்து முளைக்காதது வழுக்கை. வழுக்கைக் கல் போல, பொருள்போல அமைந்தது என உவமைப் பொருள தாம். இங்குக் காணும் வழுக்கை அப் பருப்பொருள் நீங்கிய நுண் பொருள் வழுக்கையாம். ஒன்றைச் சொன்னால் ஆம் என ஏற்காமல், அன்று எனவும் மறுக்காமல் வழுக்கிக் கொண்டு போய்விடலாம். அவனே வழுக்கை; அவன் எப்படி எள்ளுக்காய் பிளந்தது போலத் தீர்த்து வைக்கப் போகிறான் என்னும் தெளிவு வழுக்கைப் பொருள் விளக்கும். வள்ளல் - கருமி இல்லை என்னாமல் எல்லை இன்றி வழங்குவது வள் ளன்மை எனப்படும். நீயே என் கொடைப் பொருள் என ஒரு கோடு போட்டால் அக் கோட்டைக் கடந்து வரமாட்டானாம் பாரி. வாரேன் என்னான் அவர் வரையன்னே என்பது புறப் பாடல். அத்தகைய வள்ளன்மையைக் குறியாமல் அதற்கு எதி ரிடைப் பொருளையும் வள்ளல் என்பது தருதல் வழக்கில் உண்டு. நீ பெரிய வள்ளல்; தெரியாதா? என்பதில் கருமி என்பது வள்ளற் பொருளாம், உன் வள்ளல் ஊரறியுமே என்பது எள்ள லென எளிதில் புரியுமே. நீ பிறந்ததால்தானே பாரி செத்தான் என்பது இனிக் கொடையால் புகழ்பெற முடியாதென இறந் தான் என்பதைக் குறித்துப் புகழ்வது போலப் பழிப்பதாம். வளைகாப்புப் போடல் - மகப்பேற்றுக்கு அழைப்பு விழா வளையலும் காப்பும் போடுதல் பிறந்த குழந்தைப் பருவந் தொட்டே நடக்கத் தொடங்குவது. அதனைக் குறியாமல் வளைகாப்புப் போடல் கருக்கொண்ட மகளை ஏழாம் மாதத் திலோ ஒன்பதாம் மாதத்திலோ தாய் வீட்டுக்கு மகப்பேற்றுக் காக அழைக்கும்போது விழாவாக நிகழ்த்தப் படுகின்றது. அன்று பலவகைச் சோறுகள் பண்டங்கள் ஆக்கிப் படைத்தலும், அவ் விழாவுக்கு வந்த மங்கல மகளிர் கன்னியர் குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் வளையல்போடுதலும் வழக்காம். வளையல் மகளிர் அணி; காப்பு ஆடவர் அணி. ஆனால் வளைகாப்பி லுள்ள காப்பு அணி குறியாமல் காவல் பொருள் தருவதாம். காப்புக் கட்டல் என்னும் ஊர் வழக்கை அறிக. வளைதல் - பயன்கருதிச் சுற்றிவருதல் தனக்கு ஆகவேண்டிய ஒன்றைக் கருதிப் பன்முறை வந்து பார்த்தலும் பேசுதலும் வளைதல் என்றும் வளைய வருதல் என்றும் சொல்லப்படும். வீட்டைச் சுற்றுதலும் ஆளைச் சுற்றுதலும் வளைதல்; அவ்வளைதலும் பல்கால் வருதல் தற்பயன் கருதியதேயன்றிப் பிறிதன்றாம். வாலைக் குழைக்கும் நாய் வளையவரும். வாயைக் குழைக்கும் இவரும், வளைய வருவர். இத்தகையவரே. சுடக்குப் போட்டால் வருவார் என்று சொல்லப்படும் இழிவுடையவ ராம். அன்பால் தாய், சேயையும்; சேய், தாயையும் வளைய வருதல் ஈதன்றாம். வளையவருகிறானே என்ன புது நாடகம் என்பது வளைய வருதலை விளக்கும். வற்றல் - மெலிவு ஈரப்பசை வற்றிப் போதலால் வற்றல் ஆகும். மிளகாய் வற்றல், மிதுக்கு வற்றல், கொத்தவரை வற்றல் எனப் பல வகை. வற்றலைக் கொண்டு வைக்கும் குழம்பும் வற்றக் குழம்பு எனப் பட்டது. பின்னர் காய்கறிகளைப் போட்டு வற்றக் காய்ச்சப் பட்ட குழம்பும் வற்றக் குழம்பு ஆயிற்று. காயப்போடுமுன் இருந்த அளவிலும் எடையிலும் காய்ந்த பின் உள்ள அளவும் எடையும் குறைந்து போதலால் வற்றலுக்கு மெலிவு என்னும் பொருள் உண்டாயிற்று. மெலிந்தவனை வற்றல் என்பது வழக்கு. மெலிபவரை வற்றுகிறார் என்பதும் வழக்கே. அது ஒரு வற்றல்; என்ன சாப்பிட்டாலும் அதன் உடம்பு அதுதான் என்பது உடலாய்வுக் குறிப்பு. வாட்டம் - செழிப்பின்மை, வருந்துதல், வழிதல் பயிர் வாட்டமாக இருக்கிறது என்றால் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது என்பது பொருள். முட்டுப்பாடும் தட்டுப் பாடும் நோய் நொடியாக வருந்துபவனை வாடி விட்டான் என்றும், வாட்டி எடுத்து விட்டது என்றும் சொல்வது வழக்கு. வருந்துதல் பொருளது இவ்வாட்டம். நீர் வாட்டம் பார்க்கா விட்டால் ஒழுகிவிடும் என வீட்டு முகடுகளை ஒழுங்கு படுத்துவது கட்டட இயல். இது வழிதல் பொருளது. முதல் ஒன்றும் தவிர்ந்தவை வழக்குப் பொருள்களாம். வாய்க்கரிசி போடல் - தின்னல் இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது. இறந்தவர் பயன்படுத்திய பொருள்களைக் கடைசி முறையாகப் படைப்பது என்னும் வகையில் நேர்ந்த வழக்கு அது. ஆனால் உழையாமல் உண்பவர்க்கோ வெறுப்புடன் சோறு படைக்கப்படுபவர்க்கோ தரும் சோற்றைச் சோறு எனச் சொல்வது இல்லை. வெறுப்பினால், உனக்கு வாய்க்கரிசி போடுகிறேன் என்பர். வாய்க்கரிசி, கடைசிச்சோறு, ஒவ்வொரு நாளும் வைதுகொண்டே வாய்க்கரிசி போட்டால் முதலேது முடிவேது? வாய்த்தூய்மை - பொய்புரட்டுப் பேசாமை பல் விளக்கல், கழுவுதல் ஆகியவை வெளிப்படையான வாய்த்தூய்மையாம். நாளைக்கு மூன்று வேளை பல் விளக்கு வாரும், பத்து முறை வாய் கொப்பளிப்பாரும் கூட வாய்த் தூய்மையற்றவராகச் சொல்லப்படுதல் உண்டு. அது வாயழுக்கு. நாற்றம் ஆகியவற்றைக் குறியாமல் பொய் கூறும் நாற்றம் குறிப்பதாம். வாயும் கையும் தூய்மையாக இருந்தால் எங்கும் பிழைத்துக் கொள்ளலாம் என்னும் வழக்கில் வாய்த் தூய்மை பொய் கூறாமையும், கைத் தூய்மை களவு செய்யாமையுமாதல் அறிக. வாய் சுத்தம் இல்லாதவன் என ஒருவனை எளிமையாகத் தள்ளிவிட இடமாவது இக்குறையாம். வாய்திறத்தல் - பேசல் என்னதான் சொன்னாலும் வாயைத் திறந்தால் தானே என்பது பேசினால் தானே என்னும் பொருளதாம். வாயைத் திற என மருந்து ஊட்டவோ உணவு ஊட்டவோ கட்டளை யிடுவதல்லாமல் பேசக்கட்டளையிடுவதாய் அமைந்தது வாயைத்திற என்பதாம். காவல் நிலையங்களில் உண்மையை வருவிக்க என்னென்னவோ பாடுபடுத்துவர். ஆயினும் சிலர் வாயைத்திறப்பதே இல்லை. வாயைத் திறக்க மறுக்கிறான்; உயிரைக் கூட விட்டுவிடுவான்; ஒரு சொல்லை விடமாட்டான் போலிருக்கிறது என்பதில் வாய்திறத்தல் என்பது பேசுதல் பொருளில் வருதல் அறிக. வாயாடி - ஓயாப்பேசி வாயாடுதல் உண்ணுதலுக்கும் ஆம் ஆயினும் அதனைக் குறியாமல் பேசுதல் பொருளில் வழங்குவது வழக்குச் சொல்லாம். ஓயாமல் பேசுபவரை வாயாடி என்பதும் பெரிய வாயாடி என்ப தும் வழக்கம். குழந்தை நிலையில் வாயாடி என்பது பெருமை யாகப் பெற்றோராலும் மற்றோராலும் புகழப்படும். ஆனால் சற்றே வயதாகிவிட்டால் குறையாகவும், பழியாகவும் ஆகிவிடும். குழந்தைப் பருவத்திற்கு ஒரு தனிச் சிறப்பு. செய்யும் குறை களுக்கும் தனிமதிப்பு. வாயாடல், என்பதினும், இழிவும் கொடுமையும் உடையது கையாடல். கையாடலால் தலை யெடுத்து வாழ்ந்தவரும் உண்டு; தலை மறைவானவரும் உண்டு. முற்றாகத் தலைமறைந்தவரும் இல்லாமல் இல்லை. வாயும் வயிறும் - பிள்ளைகள் அவள் இப்பொழுது வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்றால் வாய்க்கு எடுத்து ஊட்டும் பிள்ளையொன்றும் வயிற்றுப்பிள்ளை யொன்றுமாக இருக்கிறாள் என்பது விளக்க மாம். அதனால், அவளால் வேறு வேலை என்ன செய்ய முடியும் என்பது பரிவு கூர்தலாம். சில குடும்பங்களில் படுத்தும் பாட்டைப் பார்த்து வாயும் வயிறுமாக இருப்பவளுக்கு இனியது செய்ய வில்லையானாலும் இடைஞ்சலாவது செய்யாமல் இருக்க வேண்டாமா? என்பது பட்டறிவு வாய்ந்த மூதாட்டியர் உரையாம். வாயைக்கட்டுதல் - பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்; மானம் கருதாது அடங்கியிருத்தல். வயிற்றைக் கட்டுதல், சோற்றுப் பஞ்சத்தின் பாற்பட்டது. வாயைக் கட்டுதல் சோற்றளவுக்கு வாய்ப்பு இருந்தாலும் சுவை சுவையான பண்டங்கள் குடிநீர்கள் ஆயவற்றைக் கருதாமல் அடக்கி வாழ்வதாம். வயிறு வயிற்றுப் பசியையும், வாய், நாச்சுவையையும் குறிப்பன எனலாம். இனித் தங்கள் சூழ் நிலை குடும்ப நிலை கருதி மானக்கேடான சொல்லை ஒருவர் சொல்லும்போதும் அடக்கிக் கொண்டு இருந்துவிடல் உண்டு. மறுமொழி சொல்ல உணர்ச்சியுண்டாகியும் அடக்கிக் கொள்ளுதல் வாயைக் கட்டுதல் எனப்படுவதாம். வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி இருந்தாலும் நினைத்துப் பார்க்கிறீர்களா? என்பதோர் ஏசலுரை. நாயின் வாயைக் கட்டுதல் என்பது குரையாது ஆக்கல் என்னும் கருவினையாகச் சொல்லப் படுவதும் அறிக. வாயைப்பிடுங்குதல் - சொல்லை வருவித்தல் பல்லைப் பிடுங்குதல் தெளிவாக உள்ளது. வாயைப் பிடுங்குதல் எப்படி? வாய் என்பது வாய்ச் சொல்லைக் குறிக்கிறது. என்னென்னவோ சொல்லி வாயை மூடியிருப்பவரிடமிருந்தும் சில செய்திகளை வாங்கிவிடக் கூடிய திறமையாளர்கள் உளர். வாயை வலிந்து பிடுங்குவது எதற்காக? அதனைப் பல பேரிடம் பரப்புதலுக்கும், அச் சொல்லைக் கொண்டே சொல்லியவர் களை மடக்கித் தாம் இன்பப்படுவதற்குமாம். சும்மா இருந்த என் வாயைப் பிடுங்கி என்னையே குத்திக் காட்டுகிறாய். உன்னை வெற்றிலை வைத்து அழைத்துக் கேள் என்றேனா என்று குத்திக் காட்டுதல் குத்துண்டவர் செய்வதாம். வால் - குரங்குத்தனம் விலங்குகளின் பொது உறுப்பு வால்; ஊர்வனவற் றுள்ளும் பல, வால் உடையன. வால் என்பது நீண்டிருப்பதால் நெடுமைப் பொருளும் உண்டாயிற்று. வாலி நீண்டு ஒடுங்கிய நிலம். வாலம் நெடுங்கிழிவு இனி இவ்வால் வாலைக் குறியாமல், வாலுடைய எல்லாவற்றையும் குறியாமல் குரங்கு வாலையே குறித்து நின்று, பின்னர் அதன் குறும்புச் செயலைக் குறிப்ப தாக வளர்ந்தது. அந்நிலையில் வால் என்பது குரங்குத்தனம் எனப்பட்டதாம். நீ செய்கிற குறும்புத் தனத்திற்கு எல்லை இல்லை என்றும் உனக்கு வால் மட்டும் தானே இல்லை என்றும் வருவன அறிக. வாலாட்டல் - தலைப்படுதல்; செருக்குதல் என்னிடம் வாலாட்டினால் ஒட்ட வெட்டிவிடுவேன் என்பது வழக்குச் சொல். வால் இல்லாதவன் வாலாட்டுவானா? இல்லாத வாலை வெட்டுவதுதான் எப்படி? வாலாட்டுதல் நாய் வேலை. வால் நீட்டல் நரிவேலை. குரங்கும் வாலையாட்டும். இங்கே வால் நாய், நரி வால்களை நீக்கிக் குரங்கு வாலைக் குறித்ததாம். குரங்கின் இயல்பு குறும்பு. அதன் வாலாட்டம் என்பது குறும்பு செய்தலே. என்னிடம் குறும்பு செய்தால் அதனை அறுக்க எனக்குத் தெரியும் என்பதே வாலாட்டினால் ஒட்டத் தரிப்பேன் என்பதாம். பெரிய வால் என்று ஒருவரைச் சுட்டினால் அவர் செருக்கானவர் என்பது குறிப்பு. என்னிடம் வாலாட்டாதே என்றால் என் செயலில் தலையிடாதே என்பது பொருளாம். தலையும் வாலும் மாறிக் கிடக்கும் நிலை இது. வாழ்க்கைப்படல் - மணம் செய்தல், மனைவியாதல் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்பது புது வழக்கு. வாழ்க்கைத் துணை என மனைவியைத் திருக்குறள் கூறும். அதன் வழிவந்த படைப்பு அது, உனக்கு வாழ்க்கைப் படுகிறேன் என்று முதிய பெண்கள் சிறு குழந்தைகளிடம் விளையாட்டாகக் கேட்பதும் உண்டு. உனக்கு வாழ்க்கைப் பட்டு வந்து என்ன கண்டேன் என்று ஏக்கம் தெரிவிப்பாரும் உண்டு. வாழ்க்கைப் படுதல் என்பது மனைவியாதல் என்னும் பொருளதாம். கணவன் உனக்கு வாழ்க்கைப் படுகிறேன் என்னும் வழக்கு - இல்லை. உன்னைக் கட்டிக் கொள்கிறேன் என்பதே வழக்கு. வாழ்க்கை என்பது பொதுமை நீங்கி மணவாழ்வைக் குறிப்பதால் வழக்குச் சொல்லாயிற்றாம். வாழாக்குடி - மணந்து தனித்தவள் திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள். கணவனை இழந்தவள் வாழாக் குடி யல்லள். அவள் கைம்பெண். அறுதாலி எனப்படுவாள். கணவ னால் விலக்கி வைக்கப்பட்டோ, தானே விலகியோ தனித்து வாழ்பவளே வாழாக்குடியாம். இங்கும் வாழ்க்கை பொதுமை நிலையில் நீங்கி இல்வாழ்க்கைப் பொருளுக்கு ஆவது வழக்காம். அவள் வாழாக் குடியாள்; அவளிடமா குழந்தையைத் தரு கிறாய் என்பது வாழாக்குடிக்குப் பெண்களும் தரும் பரிசு. விடியாமூஞ்சி - கிளர்ச்சியில்லா முகம் விடியாமை, பொழுது புறப்படாமை. பொழுது புறப்படாப் பொழுதில் இருள் கப்பிக்கிடக்கும். அப்பொழுதில் முகமும் இருள்படிந்து கிடக்கும். விடியாப் பொழுதில் பார்க்கும் முகத்தைப் போல, விடிந்து வெளிச்சமான பொழுதிலும் ஒருவர் முகம் இருந்தால் அதனை விடியாமூஞ்சி என்பர். இங்கு விடிதல் என்பது சுறுசுறுப்பு, மலர்ச்சி, கிளர்ச்சி ஆகிய பொருள்களைக் குறிப்பதாம். அழுமூஞ்சிக்குத் திருமணமாம் அன்று பிடித்ததாம் அடைமழை; விடியா மூஞ்சிக்கு திருமணமாம் விளக்கணைந்த தாம் அந்நேரம் என்பது வழக்குமொழி. விடிவுக் காலம் - நற்காலம் விடிகாலம், விடிபொழுது, வைகறை, காலை என்பன கதிரோன் எழுந்து இருளகல ஒளிபரவும் பொழுதாம். அவ் விடிகாலம் மகிழ்ச்சி சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும். பொழுது இருள் நீங்கி ஒளி சூழும். அப்பொழுதை விரும்புவது இயற்கை. அதுபோல் வறுமையும் நோயும் அல்லலும் வாட்ட வாழும் ஒருவர் அவற்றை நீங்கும் பொழுதை விடிபொழுது போல எண்ணுகிறார். இனிக்கவலைப்பட ஒன்றுமில்லை. கவலைக்கு விடிவு காலம் வந்து விட்டது என்று சொல்லி மகிழ்கிறார். வெயிலில் வாடுபவர் நிழலை நோக்கி, அது கிடைத்தால் விடிவு தானே! விரல் வைத்தல் - தலையிடுதல், தொடுதல், எச்சரித்தல் என்னைத் தொடு பார்க்கலாம் என ஓட்டப் பந்தயம் ஓடுவது விளையாட்டு. என்னைத் தொடு பார்க்கலாம்; உயி ரோடு திரும்பி விடுவாயோ? என்பது வினையாட்டு. சீற்றம் மிக்க பொழுதில் விரலை வை என்றோ தொடு என்றோ சொன்னால், நீ தொலைந்தாய் என்னும் எச்சரிக்கையாம். எச்சரிக்கைப்படுத்துதற்கு ஒரு விரலை நீட்டுதலும், நீட்டி ஆட்டுதலும் காணுங்கால் விரல் வைத்தல் என்பதன் பொருள் விளக்கமாம். உதட்டின் மேல் விரல் வைத்தால் பேசாதே என்னும் எச்சரிக்கையாம். விருந்து வைத்தல் - திருமணம் முடித்தல் திருமண நிகழ்ச்சியில் முதன்மையானது தாலிகட்டல். திருமணச் சிறப்பில் முதன்மையானது விருந்து. ஆதலால் திரு மணமாக வேண்டிய அகவையினரைக் காணுங்கால் எப் பொழுது விருந்து வைக்கப்போகிறீர்? என வினவுவது வழக்கம். திருமணம் பல்கால் தட்டிப்போகின்றவர்கள், இப்படிக் கேட்டுக் கேட்டுச் சலிப்புற்றுக் கேட்பவர்களைக் காணுமுன்னே தலை மறைந்து ஒதுங்கி விடுவதும் உண்டு. விழாக்கள் என்றாலே, விருந்துதானே பேசப்படுகின்றன. சாப்பாட்டுப் பேச்சே சலிப் பிலாப் பேச்சாகப் பலர்க்கு இருத்தல் கண்கூடு. அவர்கள் சாப்பாட்டைப் பற்றிப் பேசுங்கால் அதில் மூழ்கி மூழ்கி முத் தெடுப்பது போலவே சுவைத்துப் பேசுவதும் ஒரு சுவையேயாம். விலாங்கு (மலங்கு) - ஏமாற்று விலாங்கு ஒருவகை மீன். அது பார்வையில் மீன்போலவும் தோன்றும்; பாம்புபோலவும் தோன்றும். அதனால், விலாங்கைப் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் என்னும் நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று. பாம்மையும் மீனையும், அவ்வவ்வினம் போலக் காட்டி ஏமாற்றும் என்பது கருத்தாம். அவ்வாறு ஆளுக்குத் தகப் பேசியும் நடித்தும் வாழுபவரை விலாங்கு என்பர். அவன் ஒரு விலாங்கு; எங்கும் பிழைத்துக் கொள்வான் என்பர். ஆளுக்குத்தகத் தன்னியல்பைக் காட்டுவது ஏமாற்றுவதுதானே! விலைபோகாது - ஏற்கப்படாது அந்தச் சரக்கெல்லாம் இங்கு விலைபோகாது அல்லது விலையாகாது என்பது சொன்முறை. சரக்கு என்பதால் வணிகம் என்பதும், விலை என்பதால் கொடுக்கல் வாங்கல் என்பதும் தெளிவு. ஆனால் இவண் அப்பொருள் குறியாமல் சிலர் ஏய்ப் புரை ஏமாற்றுரை சிலரிடம் எடுபடுவது இல்லை. அவர்கள் ஏய்க்க வருவாரின் ஏய்ப்பை எளிதாய் எடைபோட வல்லவர், அதனால் அவர்களிடம் ஏமாற்றுதல் தோற்றுப் போகின்றதாம். விலைபோதல் - திறமையால் பெருமையடைதல் திறமையான சிலர் எங்கே போனாலும் செல்வாக்குடன் விளங்குவர். அவரை விலைபோகின்ற சரக்கு அது எனப் பாராட்டுவர். நல்ல சரக்காக இருந்தால் தேடி வந்து வாங்கிக் கொள்வது போலத் திறமைக்கு எங்கும் மதிப்பிருக்கும் என்னும் தெளிவில் கூறும் உரை இதுவாம். நல்லமாடு உள்ளூரிலேயே விலைபோகும் என்பர். ஏனெனில் உழைப்பை நேரில் கண்டவர் கேட்கும் விலையைத் தந்து பிடித்துக் கொள்வர் என்பதாம். ஆதலால் விலை போதல் என்பது திறமைக்கு மதிப்புண்டு என்பதை விளக்கும் வழக்காகும். விழுந்து எழுதல் - வறுமைப்பட்டு வளமையாதல் கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில் வீழ்ச்சியடைதல் விழுதலாகவும், பின்னர் அரிதின் முயன்று தேடி நிலை பெறுதல் எழுதலாகவும் சொல்லப்பட்டனவாம். விழுந்தவன்தான்; மேலும் மேலும் விழுந்தானே அன்றி எழுந்த பாட்டைக் காணோம் என்பது ஏக்கவுரை. விழுந்தானா? எழுந் தானா? மாயமாக நடந்துவிட்டது என்பது வியப்புரை. விளக்கெண்ணெய் - வழுக்குதல், சறுக்குதல் விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெயாம். விளக்கு எரிக்கப் பயன்பட்ட பழங்கால நிலையில் பெற்ற பெயர் அது. விளக்கெரிக்க வேறு எண்ணெய்கள் வந்த பின்னரும், எண் ணெய் இல்லாமலே விளக்கெரியக் கண்ட பின்னரும் விளக் கெண்ணெய்ப் பெயர் விளக்கெண்ணெயே! விளக்கெண்ணெய் பிசு பிசுப்புடையது; வழுக்கல் தன்மை வாய்ந்தது. வழுக்கு மரம் என்னும் போட்டி விளையாட்டுக்கு மரத்தில் தடவப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயே. அதனால் விளக்கெண்ணெய் என்பதற்கு வழுக்குதல் சறுக்குதல் என்னும் பொருள்கள் உண் டாயின. இனி, பிடி கொடாமல் வழுக்குபவனும் விளக் கெண்ணெய் எனப்படுவான். உரத்துச் சொல்லாத சொல்லை விளக்கெண்ணெய் என்பதும் வழுக்கல் வழியதே. விளக்கேற்றல் - குடித்தனமாக்கல் புதுமனை புகுவிழாவில் விளக்கேற்றல் சிறப்பிடம் பெறும் நிகழ்சியாகும். சில நிறுவனத் தொடக்க விழாக்களிலும் விளக் கேற்றல் முதல் நிகழ்ச்சியாக நிகழ்கின்றன. திருமணமாகி மண மகன் வீடு புகுந்த மணப்பெண்ணை விளக்கேற்ற வந்தவள் என்பதும், அவளை விளக்கேற்றச் சொல்வதும் நிகழ்வுகள் எனினும் அந் நிகழ்வுகளைக் கடந்த பொருளும் உண்டு. குடும் பத்திற்கு வளஞ்சேர்க்க வந்தவள் என்னும் பொருளில் விளக் கேற்ற வந்தவள் என்பது வழங்குகின்றது. குடும்ப வாழ்வுக்கு உதவுபவரையும் எங்கள் குடும்பத்துக்கு விளக்கேற்றியவர் இவர் என நயந்து பாராட்டலும் வழக்கே. வீச்சு - ஐந்து ரூபா வீசுவது வீச்சு எனப்படும். கை வீசுதல்; கயிறு வீசுதல்; சாட்டை வீசுதல்; வலை வீசுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இவற்றையன்றி வீச்சு என்று ஐந்து என்னும் பொருளில் வழங்கு வதும் உண்டு. மாட்டுச் சந்தை எனப்படும் தாம்பணியில் மாடு பிடிப்ப வரும் வாங்குபவரும் கையில் துணி போட்டு மறைத்துப் பேசுவது வழக்கம். அவர்கள் பச்சை, கடுவாய், வீச்சு எனச் சில குறிப்பு மொழிகளில் கூறுவர். இவற்றுள் வீச்சு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறிக்கும். கை வீசுதல் வழியே கை விரல் எண்ணிக்கை கொண்டு வந்ததாகலாம். கை காண்க. வெங்கன் - வறியன் வெம்மை என்பது வெங்கு எனப்படும். வெம்மை என்பது பசி வெம்மை. தீப்பசி, காய்பசி, கொல்பசி, எனப்பசி குறிக்கப் படுவது கொண்டு பசியின் வெப்பம் புலப்படும். நெருப்பினுள் கண் மூடினாலும் நிரப்பினுள் (வறுமையுள்) கண் மூட முடி யாது என்னும் திருக்குறள் வறுமையின் வெம்மையை வளமாக உரைக்கும். அவன் வெங்கன் என்ன வைத்திருக்கிறான் என்பதில் வெங்கன் வறுமை புலப்படும். இல்லானை எல்லாரும் எள்ளுவர் என்பதற்கு ஏற்ப வெங்கன் என்பது வசைச் சொல்லாகவும் ஆகிவிட்டது. வெங்கன் - வெறுங்கையன். வெங்காயம் (வெண்காயம்) - ஒன்றும் இல்லாதது வெங்காயம் என்பது வசைமொழி அவன் கிடக்கிறான் வெங்காயம் அந்த வெங்காயம் என்னதான் செய்துவிடுவான் என்பன போல வெங்காயம் வழக்கில் உள்ளன. உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது - தோலாகவே இருப் பது - வெண்காயமாம். அதனால் ஒன்றும் இல்லாதது என்னும் பொருளில் வழங்கிற்றாம். உள்ளி என்பது அதன் பெயர். உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாதது உள்ளில் என்றாய் உள்ளி என வழக்கிலுள்ளதாம். வெட்டி முரித்தல் - கடிய வேலை செய்தல் குச்சியாக இருக்கும்போது கையால் ஒடித்து விடலாம். முளையாக இருக்கும்போது கிள்ளி எடுத்து விடலாம். மர மாகிய பின்னர் வெட்டியே ஆகவேண்டும். கோடரி, வெட்டரி வாள், கம்பி, அரம்பம் ஆகியவெல்லாம் வேண்டும். ஆதலால் வெட்டிமுரித்தல், கடும்வேலை செய்தல் பொருளதாம். இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கை கொல்லும் காழ்த்த விடத்து என்பதில் வெட்டி முரித்தற் கடுமை புல னாம். உழையாத சோம்பர் சிலர் உடல் அலுப்பாக இருக்கிறது என்றால் வெட்டி முரித்தவன்; அலுப்பு இருக்கத்தான் செய்யும் என ஏற்பது போல் எள்ளுவர். வெட்டி விடுதல் - நட்பைப் பிரித்தல் வெட்டி விடுதல் துண்டித்தல் பொருளது. கத்தரிக்கோல் கத்தரிப்பாலேயே பெற்ற பெயர். வெட்டரிவாள், வெட்டறு வாள், பாக்குவெட்டி, மண்வெட்டி என்பனவெல்லாம் வெட்டு தலால் பெற்ற பெயர்கள். வெட்டி விடுதலுக்குரிய துண்டித்தல் பொருள் நட்பைப் பிரித்தலுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. நீ தலையிட்டாய்; எங்களை வெட்டி விட்டாய் என்பதில் உயிர்க் கொலையை வெட்டுதல் சுட்டாமல் நட்புக் கொலையைச் சுட்டிற்றாம். கத்தரியிடுதல் என்பதும் துண்டித்தல் பொருளதே. கிடைக்க இருந்த அந்த வேலை அவரால் கத்தரியிடப்பட்டது என்றால் துண்டிக்கப்பட்டது கிடைக்காமல் செய்யப்பட்டது என்பதே பொருளாம். வெடிப்பு - எழுச்சி வெடி, வெடித்தல், என்பவற்றில் வெடிப்பு என்பது தோன்றிற்றாம். அவன் வெடிப்பான பிள்ளை அந்த மாடு நல்ல வெடிப்பு என்றால் சுறுசுறுப்பு எழுச்சி விரைப்பு உடையது என்பதே பொருளாம். வெடி, வெடித்து எழும்புவது காரண மாகப் பெற்ற பெயர். நிலம் வெடிப்பு, பித்த வெடிப்பு, பக்கு வெடிப்பு என்பனவெல்லாம் எழும்புதலால் பெற்ற பெயரே.வெடிசெய்தல் பெருந்தொழிலாகத் திகழ்கிறது. அவ் வெடியால் விளையாட்டும் வினையாதலும் கண்கூடு. வெடிப்பு எழுச்சி ஆக்கத்திற்கு இருந்தால் நல்லதே. அழிவுக்குத் தலைப் படும் போது அரற்ற வேண்டியுள்ளது. வெடி வைத்தல் - அழித்தல் பாறையுடைத்தற்கு வெடி வைத்தல் பழங்காலச் செய்தி. இப்பொழுது வெடி வைத்தல் விளையாட்டுச் செயல் போலச் செய்தித் தாள்களில் விளம்பரப்படுகின்றன. விளைவுகளும் கொடுமையானவையாக உள. வானூர்தியையும், கப்பலையும், மக்கள் நெருக்கமிக்க அலுவலகம் தொழிலகம் ஆயவற்றையும் வெடி வைக்கும் கொடுமை நினைக்கவும் அச்சமிக்கவை. போர் பாலத்தை வெடி வைக்கும் என்றால், வெறித்தனம் வைக்கும் வெடி அதனினும் மிக மிகக் கொடுமையானதாம். வெடி வைத்தல் அழித்தலுக்காகத்தானே நிகழ்கின்றது. ஆதலால், எனக்கே வெடி வைத்து விட்டான் என்பதில், என்னை அதிர்ச்சிக்கும் அழிவுக்கும் ஆளாக்கி விட்டான் என்னும் பொருள் வெளிப்படுகின்றதாம். வெண்டைக்காய் - வழவழா வெனப்பேசல் வெண்டைக்காய், வழு வழுப்புடையது. அத்தன்மை, அத்தன்மையையுடைய பேச்சுக்கு ஆகி வருதல் வழக்காயிற்று. யாராவது வழவழா எனப்பேசினால் வெண்டைக்காய் நிறையப் பிடிக்குமா? என்றோ, விளக்கெண்ணெய் அளவுக்கு மேல் போட்டுவிட்டார்களோ? என்றோ கேட்பது வழக்கம். விளக் கெண்ணெய் விட்டு ஆக்கிய வெண்டைக்காய்க் குழம்பிலே தொட்டெழுதிய எழுத்து என்பது எவ்வளவு வழுவழுப்பு. ஆனால் அதனைப் புரட்சி, விறுவிறுப்பு நடைக்கு ஒருவர் சொன்னால் சொன்னவர் புரட்சிப் போக்கின் அழுத்தம் புல னாம்; அல்லது வெறுப்புணர்வு புலனாம். வெந்நீரைக் காலில் விடல் - தங்காது புறப்படல் வெந்நீர் வெதும்பிய நீர். அதனைத் தண்ணீர் போல் விட்டுக் கொண்டிருக்க முடியாது. குறைவாகவும் விரைவாகவும் வெந்நீரை விடுவதே வழக்கம். ஏன் வெந்நீர் விடுகின்றனர்? கட்டி, புண் உண்டாகியிருந்தால் கழுவவும், காய்ச்சியடிக்கவும் வெந் நீர் பயன்படுத்துவர். அதனை மொத்தமாக வைக்காமல் ஒற்றி ஒற்றி எடுப்பார். அவ்வழக்கில் இருந்து, விருந்தாக வந்தவர் ஆர அமர இல்லாமல் புறப்பட்டால் எப்பொழுது வந்தாலும் வெந்நீரைக் காலில் விட்டுக் கொண்டு தான் வருவது என்னும் வழக்கு உண்டாயிற்று. வெள்ளென - விடிய வெள் என என்பது வெளிச்சம் உண்டாக என்பதாம். காலையில் கதிரோன் எழுந்ததும் கப்பியிருந்த இருள் அகலு தலால் வெள்ளெனத் தோன்றும். அத்தோற்றத்தின் வெள் ளெனல் வைகறைப் பொழுதைக் குறிப்பதாக வழக்கில் வந்தது. வெள்ளென வா அப்பொழுதுதான் நாம் வேலையை முடித்து இருட்டுவதற்கு முன் திரும்ப முடியும் என்பதில் வெள்ளெனல் வைகறைப் பொழுதாம். வைகறை என்பதும் (வைகு அறை) கப்பிய இருளை அகற்றுதல் என்னும் பொருளதே. வெள்ளை - கள் வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளை யான ஆள், வெள்ளைச் சீலை என்பனவெல்லாம் வெளிப் படைப் பொருளே. வெள், வெளிப்படை, வெள்ளி என்பனவும் வெள் வழி வந்தனவே. ஆனால் கள்ளுக்கு வெள்ளை என்பது வியப்பானதே. கள், கருமைப் பொருளது. மதியை மயக்குவதால் அதனைக் கள் என்றனர். காரறிவுக்கு இடமாவது என்பது அது. ஆனால் கள்ளின் நிறம் வெள்ளையாதலால் கட்குடியர் கள்ளை வெள்ளை என்றும், வெள்ளைத் தண்ணீர் என்றும் குறிப்பர். வெள்ளைக் குதிரையில் வருதல் என்பதும் அதுவே. காரறிவு ஆக்குவது கள் என்பது தெரிந்தாலும் குடியர் ஒப்புவது இல்லையே. அதனால் வெள்ளை என்பதே அவர்கள் விருப்பு. வெளிச்சம் போடல் - பகட்டுதல். விளம்பரப்படுத்துதல் சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். அதி லேயே பேரின்பங்காண்பர். அத்தகையரை வெளிச்சம் போடுபவ ராகக் கூறுவர். இருட்டில் இருக்கும் ஒன்றோ, மூடி வைக்கப் பட்ட ஒன்றோ பிறரால் அறியப்படுவது அருமையாம். அத னால் அவர்கள் தன்மையையும் செய்கையையும் பரபரப்பு மிக்க உலகம் அறிந்து கொள்வது இல்லை. ஆனால் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வேட்கையுடையவர்களை உலகம் வெளிப்பட அறிகிறது. தான் விரும்பாவிட்டாலும் கூட உலகம், அத்தகையரைப் பொருட்டாக எண்ணவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடுகிறது. வெளிச்சம் போடல் விளக் கேற்றலைக் குறியாமல் விளம்பரப்படுதலைக் குறித்தல் வழக்குச் சொல்லாம். வெளுத்துக்கட்டல் - வெற்றி பெறல் வெளுத்தல், அழுக்குப் போக்கல், வெள்ளையாக்கல் என்னும் பொருள. இருளகற்றல் என்பது வெளிச்சப் பொருள. இவ்வெளுத்துக்கட்டல் பளிச்சிடக் காட்டலாம். பத்துப்பேர்கள் ஒரு மேடையில் உரையாற்ற அவர்களில் ஒருவர் சொல்லாலும் கருத்தாலும் உயர்ந்து நின்றால் நீங்கள் வெளுத்துக் கட்டி விட்டீர்கள் என்பர். இதில் வெளுத்துக் கட்டல் பிறர் குறை களையும் கறைகளும் வெளிப்படக்காட்டி உண்மையை வெளிப் படுத்தலாம். ஆதலால் வெளுத்துக் கட்டல் வெற்றிப் பொருள் தருவதாயிற்றாம். வெற்றிலை போடுதல் - உவப்புறுதல் வெற்றிலை மங்கலப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. வெற்றிலை வைத்து அழைத்தல் திருமண அழைப்பாகும். வெற் றிலை தருதல் உறுதி மொழிதல், அமைதிப்படுதல் ஆய வற்றுக்கும் அடையாளமாம். இம் மங்கலப் பொருளாம் வெற் றிலை உவமைப் பொருளாகவும் வழங்குகின்றது. மகிழ்ச்சியின் அடையாளமாகவும், முழு நிறைவாக உண்ட அடையாள மாகவும் வழக்கில் உள்ளது. இவற்றினும் உயர்ந்து பாலுறவுக் குறிப்பாகவும் வெற்றிலை போட வேண்டும் என்பதுள்ளது. சருகு போடுதல் காண்க. வெற்றிலைவைத்தல் - அழைத்தல் மங்கல நிகழ்வுக்கு அழைப்பார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் வழக்கு. முன்னாளில் திருமண அழைப்பு வெற்றிலை வைத்தலாகவே இருந்தது. இன்றைக்கும் தேடிவந்த ஒருவர் ஏதா வது அடாவடியாகப் பேசி எனக்கு அது செய்யவில்லை இது செய்யவில்லை என்றால், உங்களை வெற்றிலை வைத்தா அழைத்தோம் என்பர். வெற்றிலை வைத்து அழைத்து வருதலும், அவ்வாறு வந்தாரை மதித்து ஆவன செய்தலும் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வழக்கு இஃதாகும். இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்காமல் இருந்ததைக் கண்ட பேருந்து ஓட்டுநர் வெற்றிலை பாக்குக் கொண்டுவரவேண்டுமா? என்றார். இதில் அழைப்பு முறைச்சுட்டு அறிக. வேகாது - நடைபெறாது அந்தப் பருப்பெல்லாம் இங்கு வேகாது என்பதொரு மரபுத் தொடர். பருப்பு சில வகைத் தண்ணீரில் வேகும். சில வகைத் தண்ணீரில் வேகாது. கடுந்தண்ணீர், பருப்பு வேவதற்கு உதவாது. அதுபோல் சிலர் ஏமாற்று அல்லது பசப்புதல் சிலரிடம் எடுபடுவதோ ஏற்கப்படுவதோ இல்லை. அத்தகையர் மேற்சொன்ன மரபுத் தொடரை வழங்குவர். புரிந்து கொண்டவர்க்கு - நாலும் தெளிந்தவர்க்கு - ஏமாற்றுவார் இயல்பு வெட்ட வெளி யாதலால் அவர்களிடம் செல்லாது என்பதாம். வேகாரி - வெட்டிச்சோறு தின்னி வேகு ஆரி என்பவை சேர்ந்தது வேகாரி; வெந்ததை உண் பதை அன்றி வேறொரு வேலை செய்யாதவனை வேகாரி என்பர். வெட்டி என்றும், தண்டச்சோறு என்றும் கூறுவதுண்டு. வெட்டியினும் வேகாரிக்கு வேறொரு சிறப்பும் உண்டு. வெட்டி சோற்றைத் தின்னும் கேட்டுடன் அமைவான். வேகாரியோ வேறுவேறு கேடுகளும் செய்வான். சண்டைபோடல், இழுத்து விடல், கோள்மூட்டல் இன்னவெல்லாம் அவன் செய்யும் சிறுமைகளாம். வெட்டிப் பயலைக் கட்டி அழுதாலும் வேகாரிப் பயலை ஒட்டக் கூடாது என்பது வழக்குமொழி. வேட்டி துண்டு கட்டல் - இறுதிக் கடன் கழித்தல் வேட்டி துண்டு கட்டல் என்பது நீத்தார் கடனில் நிறை வாகச் செய்யப்படுவதாம். மகளிர்க்குக் கோடி போடுதல் என்பதும், ஆடவர்க்கு வேட்டி துண்டு கட்டுதல் என்பதும் வழக்கு. பெண் கொண்டு கொடுத்தவர்கள் இதனைச் செய்வர். இழப்புக்கு ஆட்பட்டவர்களுக்கு மொட்டையடித்து நீராட்டி வேட்டி துண்டு கட்டுதல் வழக்கம். சில இடங்களில் தலையில் துண்டைக் கட்டுதல் உண்டு. அதனால் லேஞ்சி கட்டு என்றும் வழங்கப்படுகிறது. லேஞ்சி என்பது தலைப்பாகையாம். வேட்டை - வாய்ப்பு, வாய்ப்பாகக் கிடைத்தல், இன்பு வேட்டையாடுவது ஆடுபவர்க்கு இன்புப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆடப்படும் உயிர்க்குத் தீராத் துன்பாதல் வெளிப்படை. சுட்ட சுட்ட குறியெல்லாம் வாய்த்துவிட்டால் வேட்டையர் கொண்டாட்டத்தில் தலைகால் தெரியாமல் மகிழ்வர். அதில் இருந்து வேட்டை என்பதற்கு வாய்ப்புப் பொருளும் இன்புப் பொருளும் வாய்த்தன. வணிகர் செல்வம் ஈட்டுதல் வேட்டை! அரசியலார் பொருளீட்டல் பெரு வேட்டை! பதவியால் வேண்டியவெல்லாம் தேடிக் கொள்ளல் தனிவேட்டை! காமுகர் நினைத்தவை நிறைவேறல் கொள்ளை வேட்டை! இப்படி வேட்டைக் காடாகக் குமுகாயம் அமைவதும், அறிவுடையோரும் உணர்வுடையோரும் கூட வேட்டையராகத் திரிவதும் நல்ல அடையாளம் ஆகாது! * * * வட்டார வழக்குச் சொல் அகராதி நூல்வரவு சென்னையைக் காண்பதற்கு ஒருவர் சென்றார். தொடர் வண்டியில் இருந்து இறங்கிப் பேருந்தில் ஏறினார். அது விடிகாலைப் பொழுது. அவர் போகவேண்டிய இடம் சொல்லிப் பத்து உரூபாத் தாளை நீட்டினார். நடத்துநர், சில்லறையாகக் கொடு; என்னிடம் சில்லறை இல்லை என்றார். பரவாயில்லை; பையக் கொடு என்றார் வண்டியேறி. நடத்துநர், என்னை நம்பாமல் பையக் கொடு என்கிறாயே! கீழே இறங்கு என்று சீட்டியடித்தார். நான் என்ன சொல்லிவிட்டேன்; சண்டைக்கு வருகிறாய்; பையக் கொடு என்று தானே சொன்னேன் என்றார். நானும் அதைத்தான் சொல்கிறேன். சில்லறை இல்லை என்னும் என் சொல்லை நம்பாமல் பையைக் கேட்கிறாயே; உனக்கு எவ்வளவு? என்றார். வண்டியேறி நெல்லையார்! வண்டி நடத்துநர் சென்னையார். வண்டியில் இருந்த ஒருவர், இருவர் சிக்கலையும் புரிந்து கொண்டார். உங்களை நம்பாமல் உங்கள் பையை அவர் கேட்கவில்லை. பைய என்றால் மெதுவாக - சில்லறை வந்த பிறகு - தாருங்கள் என்று தான் அவர் கேட்டார் என்றார். இருவரும் அமைதியாயினர். வட்டார வழக்கு இவ்வளவுடன் நிற்கவில்லை. தியாகராய நகர் சென்றார் நெல்லையார். கடைக்காரரிடம், ஐயா இது என்ன விலை? என ஒருபொருளைச் சுட்டிக் காட்டினார். கடைக்காரர்க்கு மூக்குக்குமேல் சினம் ஏறியது. மதிப்பாகப் பேசு அப்பா என்றார். நெல்லையார், என்ன மதிப்புக் குறையாக நான் பேசி விட்டேன். நீங்கள் தான் என்னை மதிப்புக் குறையாகப் பேசினீர்கள் என்றார். பின்னரேதான், நெல்லையில் ஐயாவுக்கு மதிப்பு; சென்னையில் அப்பாவுக்கு மதிப்பு என்பது புலப்பட்டது. நெல்லையில் ஒருவரை, நீர் என்று சொல்லலாம். ஆனால் கொங்கு நாட்டில் நீங்கள் என்று சொல்லா விட்டால்...? ஓய் என்றும் வேய் என்றும் தென்னகத்தில் அழைப்பது உண்டு. திண்டுக்கல் வழக்குமன்றத்தில் எதிர் வழக்கறிஞர் ஓய் என்றதும் சாட்சி வாய்திறக்கவில்லை. நடுவர் பதில் ஏன் சொல்லவில்லை என்றார். சாட்சி, வழக்கறிஞர் ஓய் என்றார்; ஓய்ந்து விட்டேன் என்றார். இது நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் ஓய் என்பாரைத் திருத்திய வழி. வட்டார வழக்குச் சொற்கள், மொழிவளம் உடையவை. அவற்றை அறிந்து கொள்ளலும், தொகுத்துப்போற்றலும் தேவை என்பதை அறிந்து கொள்வதற்காகச் சுட்டியவை இவை. இப்பொழுது எழுத்தாளர் சிலர் தம் புனைகதைகளில் வட்டார வழக்குச் சொற்களை ஊடாடவிடுதல் வழியாக மொழி நலப்பணியும் சிறிது செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுள் பலரும், வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்து அடைவு செய்து நூலாக்கியவர்களும்கூட வட்டார வழக்கு என்பது கொச்சை என்றும் வழு என்றும் நிலைநாட்டும் வகையிலேயே, பயன்படுத்துகின் றனர்; தொகுத்து அடைவும் ஆக்கியுள்ளனர். அது வளமாக வாய்த்த செல்வத்தை விட்டுவிட்டு, மொழிச் சிதைவுக்கு மூலமாவது என்பதை நிலைநாட்டுவதற்கு உதவும் தொகுப்பாகவே பெரும்பாலும் அமைந்துளது. 1. மொழித்தூய்மை, 2. மொழிவளம், 3. பண்பாட்டுச் சீர்மை, 4. வரலாற்றுப் பெருமை, 5. இலக்கணக் கொழுமை, 6. இலக்கிய நயம், 7. அணி நேர்த்தி, 8. படைப்பாற்றல் திறம், 9. எளிமையில் அருமை, 10. சுருக்கத்தில் பெருக்கம், 11. சுவைத் தேர்ச்சி, 12. அறிவியல் ஆழம், 13. பட்டறிவுச் செழுமை என்பன வற்றுக் கெல்லாம் மூலவைப்பகமாக இருப்பவை வட்டார வழக்குச் சொற்கள் என்பதை உணர்தல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய வழக்கும் செய்யுளும் என்னும் இரண்டனுள் முற்பட்டதாம் வழக்கு, மக்கள் உரை வழக்கில் உள்ளவையே என்பதைத் தெளிதல் வேண்டும். மொழியின் உயிர்ப்பிடம் மக்கள் வழக்கில், அவர்கள் வாயில் விளங்கி உணர்வாக நிற்கும் வளமான சொல் ஆட்சியே என்பதைத் தேர்தல் வேண்டும். இத்தொகுப்பைக் காண்பார், மொழிவள மூலம் காண்பார். மேலும் ஊக்கம் பெற்று இதனினும் மேம் பட்டதும், பல்வேறு வட்டாரங்களில் பயில வழங்குவதுமாம் வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்துத் தமிழ்வள மாக்குவார். அதற்குத் தூண்டலாக இச் சொற்களுக்கு எழுதப் பட்ட விளக்கம், ஒப்புமை, எடுத்துக்காட்டு என்பவை உதவும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற் புலத்தில் 1985 சனவரி 11 முதல் 1989 சனவரி 10 முடிய நான்கு ஆண்டுகள் ஆய்வாளனாகப் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். அதற்கு மூலவராக இருந்தவர் மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார். துணை நின்றவர் பெருமுனைவர் தமிழண்ணல். அந்த ஆய்வுப் பணியில் பின் இரண்டு ஆண்டுகள் வட்டார வழக்குச் சொல்லாய்வுப் பணியை எனக்கு வழங்கினார் தமிழண்ணல். அன்றியும், ஓர் அரிய தொகுப்புத் தொகுதியையும் வழங்கினார். முதுகலை, இள முனைவர், முனைவர் எனத் தமிழில் பட்டப் படிப்பு மேற்கொள்வார், தத்தம் வட்டார வழக்குச் சொற்களாக ஒரு நூறு சொற்களைத் திரட்டித் தருதல் வேண்டும் என்பதும், அதனை ஆய்வேட்டுடன் வழங்குதல் வேண்டும் என்பதுமாம் அது. அதனால் நூற்றுக்கு மேற் பட்ட ஆய்வாளர் ஏடுகள் என்கைவயமாயின. அவற்றுள் தேர்ந்த சொற்களுக்குப் பொருள் விளக்கம் எழுதி, என் ஆய்வுத் திரட்டைப் பல்கலைக் கழகத்தில் படைத்தேன். அத்திரட்டின் அருந்திரட்டாக என் குறிப்பேட்டில், அக்கம் - தண்ணீர் - தஞ்சை; அக்கானீர் - பதனீர் - குமரி, நெல்லை; அச்சசல் - ஒரே தோற்றம் - நெல்லை; - என அகரப் படி பதிவு செய்து வைத்தேன். அவற்றின் விளக்கம் இத் தொகைக்கு அரிய வகை ஆயிற்றாம். பிறப்பால் நெல்லைக்கும் முகவைக்கும் உரியன் யான். எங்கள் வீடு முகவை; வீட்டின் தெரு நெல்லை. யான் முகவை யனா, நெல்லையனா? நிலங்கள் சில இங்கும் அங்கும்; கடையும் பள்ளியும் நெல்லை; அஞ்சலகமும் தொடர்வண்டி நிலையமும் முகவை. இம்மாவட்ட அமைப்பும், தொடக்கப் பள்ளிப்பணி உள்ளூரிலும் உயர்நிலைப் பள்ளிப்பணி கரிவலம் வந்த நல்லூரிலும் கூடியமையும், சங்கரன்கோயில், திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, கோயில்பட்டி இன்னவையெல்லாம் பெருந் தொடர்பிள ஆதலாலும் நெல்லை வளம் எனக்கு இயல்பாக அமைந்தது. தளவாய்புரம் ஆறாண்டுப்பணி (1952-1958) முகவை வளம் சேர்த்தது. சென்னைத் தொடர்பு 1960 முதல் பெருகியது. 1970இல் முதிர்ந்து நின்றது. தென்னகம் என்னும் அளவு கடந்து தமிழகம் முழுவதும் தழுவும் பொழிவு நிகழ்வுகளும் கரண நிகழ்வுகளும் வளர் நிலையில், 1985 முதல் ஈரோடு, கோவை, சேலம், குழித்தலை, திருச்சி, நெய்வேலி, புதுவை, வேலூர், தஞ்சை, குடந்தை எனக் கூடின. 1994இல் திருச்சிக் காவிரித் தென்கரை அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை என் வாழ்விடமாக மாறியது. இன்னவை வட்டார வழக்குச் சொற்றொகுப்புக்கும் விளக்கம் வரைதற்கும் உதவின. இவ்வட்டார வழக்குச் சொற்கள் பெரும்பயன் செய்வன. தமிழ் நிகண்டு, அகரமுதலி, படைப்பிலக்கியம் இன்னவற்றில் இதுகாறும் இடம் பெறாத சொற்கள் பெரும்பாலனவாகக் கிட்டுகின்றன. பாவாணர் துறையில் எனக்குத் தொகுப்பாளன் நிலையில் வழங்கப்பட்டபணி, அகரமுதலியில் இடம் பெறாத இலக்கிய இலக்கணச் சொற்களையும் பிறதுறைச் சொற்களையும் வட்டார வழக்குச் சொற்களையும் தொகுத்துப்பொருள் விளக்கம் வரைதலேயாம். ஆதலால் இப்பணி, அப்பணியின் தொடர் பணியாய் இன்புறச் செய்யப்பட்டது என்க. இன்னும் கொங்குமண்டலம், தொண்டை மண்டலம், தில்லை கடலூர் புதுவை இன்னபகுதி வழக்குச் சொற்களைக் கேட்டும் விளக்கம் அறிந்தும் பெருக்கவேண்டிய பணி இதுவாம். இங்குக் குறிக்கப்பட்ட வட்டார விளக்கச் சொற்களையன்றிப் பிற இல்லையோ எனின், நல்ல ஆர்வலர் மொழித் தொண்டர் ஆங்காங்கு இருந்து தொகுப்பின் இதனினும் பன்மடங்கு விரிவாக்கம் பெறும் என்பது தெளிவாம். இன்னொரு தெளிவு கைம்மேல் கனியாகப் புலப்படுவது. தமிழ் தோன்றி வளர்ந்து முதிர்ந்து வளம் பெருக்கிய மண் குமரிக் கண்டமே என்பதற்கு ஒப்பிலாச் சான்றாக விளங்கும் கருவூலம் இவ்வட்டார வழக்குச் சொற்றொகுதியாகும். குமரி மாவட்டத் தமிழ்வளமும் ஆட்சியும் அருமையும் நெல்லை மதுரை திருச்சி என வடக்கே நகர நகரக் குன்றுதலும் குறைதலும் புலப்படுகின்றதாம். இதனை இம் முன்னுரையைக் கொண்டு முடிவு செய்யாமல் நூல் முழு துறக் காண்பார் திட்டவட்டமாகத் தாமே தெரிந்து கொள்வர். திரட்டப்பட்ட பகுதிகள் இவை என்பதால் இம்முடிபு செய்வதன்று. திரட்டப்பட்ட சொல்லின் வளம் மாற்றுக் குறையா ஆணிப்பொன், ஆணிமுத்து என்பன போன்றன என்பதால் உறுதியுறும். முன்னே ஓராற்றான் எண்ணிய பதின்மூன்று வகைகளுக்கும் சில எடுத்துக்காட்டுகளை நோக்குக. இவற்றைப் போன்ற பிற நலங்களையும் அவற்றை மெய்ப்பிக்கும் சான்றுகளையும் ஆய்ந்து கண்டு கொள்க. சொற்கள் இங்கே! விளக்கம் நூலுள்ளே: 1. மொழித் தூய்மை: அல்லது செம்மை: அறிவியல், உருவாரம், பருக்குதல், பீலி, புதிசை, பூட்டை. 2. மொழிவளம்: அழிகதை, ஆடை, இலக்கு, உளி, கமுக்கம், கீறி, கோலியான், மரவை, முதல். 3. பண்பாட்டுச் சீர்மை: அருமைக்காரர், உம்மா, கூட்டான், சபைக் கிருத்தல், பூதியாக, பொங்கடி, பொன்னையா, போற்றி, முத்துமுடி. 4. வரலாற்றுப் பெருமை: இசைகுடிமானம், உண்டுமுறி, உய்யக் கொண்டான், எழுதில்லக்காரி, ஓலை எழுதுதல், கல்லுமுறி, காயலாங்கடை, குறிஞ்சி, கொச்சிக்காய். 5. இலக்கணக் கொழுமை: ஆய்தல், ஆயான், தவ, கலவித்து, கவ்வக்கல், காமாரம், குருச்சி. 6. இலக்கிய நயம்: ஆரச்சுவர், இஞ்சநிலம், இனிமம், உய்தம், உருமால், ஊடம், கயந்தலை, குறியெதிர்ப்பு, முதுசொம். 7. அணி நேர்த்தி: ஆள்காந்தி, உப்புநீர், ஓடியான், ஓவிதி, காண்டு. 8. படைப்பாற்றல்: அகணிநார், அடிகொடி, அவதி, இலைக்கீரை, ஒத்துமா, கணிசம், வழலை, வேம்பா. 9. எளிமையில் அருமை: இடிஞ்சில், இடுக்கான், ஓணி, காசலை, தோசை. 10. சுருக்கத்தில் பெருக்கம்: அப்பி, இட்டாலி, கண்ணுக்கடி, வழிக்காசு, வலசை, வாழிபாடல், விடிலி. 11. சுவைத் தேர்ச்சி: இஞ்சி, இழுமிச் சேவு, ஈப்புலி, கடுப்பான், கண்ணப் பச்சி, கழுதைக்கால் கட்டில், கால்கட்டு. 12. அறிவியல் ஆழம்: இறக்கம், ஈச்சி, ஈத்தை, கருப்பம்புல், காலி, குடல் காய்ச்சல். 13. பட்டறிவுச் செழுமை: உலுப்பை, ஏவக்கேள்வி, ஐயம்பிடுங்கி, ஒதுக்கு மருந்து, பொடித்தூவல். ஆளாதல், வழி, குதிர், வாரியல் முதலியவற்றுக்கு வட்டாரந்தோறும் வழங்கும் சொற்களைத் தனியே எடுத்துப் பார்ப்பவர்க்குத் தமிழின் சொல்வளமும், சொல்லாக்க வகையும், பொதுமக்கள் படைப்புத் திறமும் நன்கு புலப்படும். பொதுவழக்காக வழங்கும் சொற்கள் இங்கே தொகுக் கப்படவில்லை. வட்டார வழக்காக வழங்கும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்படவில்லை; அனைத்து வட்டாரங் களும் தொகுக்கப்படவுமில்லை. அவ்வாறு செய்யத் தூண்டும் முன்னெடுப்பே இதுவாம். வட்டார வழக்குச் சொற்களின் மூலம், பொருள் பொருத்தம், ஒப்பு அன்னவை, அவற்றை வழங்குவார் அறியார். பொருள் அறிந்து கூறுவாரும் அதன் ஆழநீள மரபுகளை அறியார். ஆதலால் அச் சொற்களை அறிந்து இலக்கிய இலக்கண வாழ்வியல் பட்டறிவு ஆயவற்றொடு உராய்ந்து உராய்ந்து தங்கத்தின் மாற்றறியும் நோட்டகர் அன்ன முயற்சியொடு செய்யத்தக்கது இவ்வாக்கப் பணி என்பதை உணர்ந்து கொள்ளலும், உணர்த்துதலும் கடமையாம். அவ்வாறாகாக் கால், வெறும் சொல்லாய் கொச்சையாய், வழுவாய், பொருள் திரிவாய் அமையவே துணையாம். படித்தவர் அளவு - மெத்தப்படித்தவர் அளவு - தாய் மொழிக் கேடர் அல்லர் பொதுமக்கள்; புலமக்களினும் மொழிக்காவலில் - தாம் செய்வது மொழிக்காவல் என்பதை உணராமலே காலமெல்லாம் போற்றிக் கொண்டு வருபவர் அன்னார் என்பதை உணர்வார், தலையாய மொழிக்காவலராம் அவரைத் தலைமேல் கொண்டாடி ஏற்றுப் போற்றுவார். மேலே பல தொகுதிகளாக வெளிவர இருக்கும் சொற் பொருட் களஞ்சியத்தின், ஊடுபயிர்கள் அன்னவை இவை என்பதைக் கூறி அமைதல் தகும். இத் தொகுதியை எழுதிவரும்போதே வெளியீட்டை அவாவி, உடனே அச்சிட்டுத் தமிழுலாக் கொள்ளச் செய்யும் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழியாக்க முனைப்பு மிக்கார் திருமிகு கோ. இளவழகனார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். அன்புடன், இரா. இளங்குமரன். வட்டாரங்கள் அகத்தீசுவரம் அந்தியூர் அம்பா சமுத்திரம் அரிய குளம் அருப்புக் கோட்டை அலங்கா நல்லூர் அறந்தாங்கி ஆண்டிபட்டி ஆலங்குளம் இரணியல் இராசபாளையம் இலந்தைக்குளம் இலவங்கோடு இலவுவிளை உசிலம்பட்டி எழுமலை எறையூர் (இறையூர்) ஒட்டன் சத்திரம் கண்டமனூர் கம்பம் கருங்கல் கருவூர் கல்குறிச்சி கல்வளை கல்லிடைக் குறிச்சி கள்ளிக்குடி கன்னங்குறிச்சி காரியா பட்டி காரைக்குடி கிணற்றுக்கடவு கிள்ளியூர் கீழச்செவல்பட்டி கீழப்பாவூர் கும்பகோணம் (குடந்தை) குமரி குழித்தலை குற்றாலம் கொங்குநாடு கோட்டாறு கோட்டூர் கோட்டையூர் கோடைக்கானல் கோவை சங்கரன் கோயில் சிங்கம்புணரி சிவகாசி சீர்காழி செட்டிநாடு செம்பட்டி சென்னை சேரன்மாதேவி தக்கலை தஞ்சை தருமபுரி தலக்குளம் திட்டுவிளை திண்டுக்கல் திருச்செங்கோடு திருச்செந்தூர் திருநயினார் குறிச்சி திருநெல்வேலி (நெல்லை) திருப்பரங்குன்றம் திருப்பாச் சேத்தி திருப்பூர் திருமங்கலம் திருவாதவூர் திருவில்லிப்புத்தூர் தூத்துக்குடி தென்காசி நட்டாலை நடைக்காவு நாகர்கோயில் நாஞ்சில்நாடு நிலக்கோட்டை நெடுவிளை பரமக்குடி பழனி பாலமேடு புத்தனேரி புதுக்கடை புதுக்கோட்டை புதூர் பெட்டவாய்த்தலை பெரியகுளம் பெருவிளை பேராவூரணி பேரையூர் மதுக்கூர் மதுரை மானாமதுரை முகவை முஞ்சிறை முதுகுளத்தூர் மூக்குப்பீரி மூவலூர் மேல்புரம் மேலூர் யாழ்ப்பாணம் வடமதுரை வத்தலக்குண்டு வாத்தியார் விளை விருதுநகர் வில்லுக்குறி விளங்கோடு வேடசந்தூர் வேலூர் தொழில் - இன - வகை: ஆயர் இழுவை வண்டியர் (ரிக்சா) உழவர் ஏலக்காய்த் தோட்டத்தர் கிறித்தவர் குயத்தொழிலர் கொடிக்கால்காரர் கொத்தர் கொல்லர் சலவையர் சிவனியர் செங்கல் சூளையர் தச்சர் தரகர் நாட்டுக் கோட்டையார் நெயவர் பரதவர் பார்ப்பனர் புலவுக் கடையினர் பொதுவழக்கு பொற்கொல்லர் மாலியர் அ அக்கம்: புறத்தே புலப்படாமல் அகத்தே அமைந்துள்ள நீர் அக்கம் எனப்படும். தென்னை, பனை ஆகியவற்றின் உள்ளே இருந்து பாளையைச் சீவிவிடச் சொட்டுச் சொட்டாக உள்ளிருந்து வழியும் நீர் அக்கானீர் என்று குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. அக்கம் என்பதைத் தண்ணீர் என்பது தஞ்சை வழக்கு. அகணி: பனை மடலின் உள்தோல் அல்லது பட்டை. அதனை எடுத்துக் கட்டுதற்குப் பயன்படுத்துவர். அதற்கு அகணிநார் என்பது பெயர். சுக்கில் புறணி நஞ்சு; கடுக்காயில் அகணி நஞ்சு என்னும் பழமொழியால் கடுக்காயின் விதை அகணி (உள்ளுள்ளது) என்பது புலப்படும். பனைத்தொழில் வழக்கு இது. அகப்புரை தாழ்வாரம் நடுப்பகுதி கடந்து உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதியை அகப்புரை என்பர் நாகர் கோயில் வட்டாரத்தார். புரை=உயர்வு; உயர்வாக அமைந்த இடம். அச்சசல் அச்சு அசல்; அச்சடித்தது ஒன்றைப்போல் ஒன்று இருக்கும். அதுபோல் வேறுபாடு காணமுடியாத ஒப்பான அமைப்பு அச்சசல் எனப்படும். இது நெல்லை வழக்குச் சொல். எ-டு: இவர் அவரைப் போல் அச்சசலாக இருக்கிறார் இதுவும் அதுவும் அச்சசல் தாம். அச்சாறு ஊறுகாய் என்பதை அச்சாறு என்பது தஞ்சை வழக்கு. சாறு, பழம் முதலியவற்றின் பிழிவு. மிளகுசாறு, புளிச்சாறு என்பதுடன் சாறு என்பதும் பொதுவழக்குச் சொல்லே. இச்சாறு உடனுக்குடன் வைத்துப் பயன்படுத்துவது.. அதனினும் வேறுபட்டது அல் சாறு > அச்சாறு. நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது. ஒ.நோ. நல் செள்ளை = நச் செள்ளை. அச்சி அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால் அச்சி என்பது. அச்சி பெண்பால் இறுதியாக (ஈறாக) இருப்பதுடன் (தமிழச்சி), அம்மா என்றும், தலைவி என்றும் பொருள் தரும். அது காதலியைக் குறிப்பதாகக் குமரிமாவட்டத்தில் வழங்கு கின்றது. அச்சு வண்டி அச்சினையோ, அச்சிடுவதையோ குறியாத அச்சு என ஒன்று பொதுமக்கள் வழக்கில் உண்டு. அச்சடிச் சீலை (சேலை) என்பது, சுங்கடிச் சீலை. நெற்பயிர் நடுகைக்கு முன் சமனிலையாய் - ஓரம் சாரம் வெட்டி ஒழுங்குற்றதாய் நிலத்தைப் பண்படுத்துதலை அச்சுத்திரட்டல் என்பது உழவர் வழக்கு. அச்சு என்பது வார்ப்படக் காசு என்னும் பொருளில் கல்வெட்டு உண்டு. அசங்கு ஆசை என்னும் பொருளில் அசங்கு என்னும் சொல் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகிறது. ஒன்றை அடைந்ததும் அதனை விடுத்து அடுத்த ஒன்றன்மேல் அசைந்து செல்லும் ஆசையை அசங்கு என்றனர். அசை முகட்டில் இருந்து கயிறு தொங்கவிட்டுப் பலகை கட்டப் பட்டது அசை எனப்படும். அசைவதால் பெற்ற பெயர் அது. ஊஞ்சல் வேறு; அசை வேறு. அசையில் படுக்கை தலையணை முதலியவற்றை வைப்பது வழக்கம். அட்டளை சுவரில் நிலை பெற்ற தாங்குபலகை; இது தொங்க விட்ட பலகை. முகவை, நெல்லை வழக்கு இது. அசைப்பு அசைப்பு = தோற்றம்; ஓர் அசைப்பில் இவன் அவனைப் போலுள்ளான் என்று கூறுவது முகவை வழக்கு. அசைப்பு என்பது கண்ணிமை அசைவதால் உண்டாகும் பார்வை. முழுமை ஒப்பு இன்றி ஓரளவு அல்லது ஒரு பகுதி ஒப்பு இது. அச்சு, அச்சசல் என்பவை முழுதொப்பு. அட்டம் வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம். அட்டம் சுழிக்காமல் என்பது ஊடு அல்லது குறுக்கே போகாமல் என்பதாம். விளையாட்டில் பயன்படுத்தும் சொல் இது. நெல்லை வழக்கு. அட்டாலி மதில்மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை. அதில் இருந்து காக்கும் வீரர் அட்டாலைச் சேவகர் எனப்படுவர். அட்டளை என்பது சுவரில் பொருந்தும் தாங்கு சட்டம் அல்லது பலகை. கொங்கு நாட்டில் அட்டாலி என்பது பரண் என்னும் காவல் அமைப்பைக் குறித்து வழங்குகின்றது. பரணை என்பதும் அது. அட்டி நீங்கள் நாளைக்கு வந்து அட்டியில்லாமல் வாங்கிக் கொண்டு போகலாம் என்பது தென்னக வழக்குச் சொல். அட்டி = தடை. அடுத்து வைக்கும் முட்டு - முண்டு - அடை. அது, நகரவிடாமல் தடுப்பது. தடை இல்லாமல் = தடுப்பு இல்லாமல். அதுபோல் அடை இல்லாமல், அடுத்துள்ள தடையில்லாமல் என்பது அட்டி ஆயிற்றாம். அடு > அட்டு > அட்டி. அட்டுக்குஞ்சு பொரித்த கோழிக் குஞ்சை அட்டுக்குஞ்சு என்பது கருவூர் வட்டார வழக்கு. அட்டு என்பது நெருக்கப் பொருளது. பிறந்த கால நெருக்கம் கருதிய சொல் அட்டு என்பதாயிற்று. அடு > அட்டு = நெருங்கி. அடம் பிடித்தல் அடம்பிடித்தல் என்பது சொன்னதைக் கேளாமல், தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல் ஆகும். கலங்களில் பிடிக்கும் கரி அழுக்கு ஆகியவை அகலாமல் பற்றிக்கொள்ளுவதை அட்டுப் பிடித்தல் என்பர். அட்டுப் பிடித்தல் போல் தன் எண்ணத்தை விடாது பற்றுதல் அடம் ஆகும். இது நெல்லை, முகவை வழக்கு. அடவியான் அடவி என்பது காடு. அடர்ந்து - செறிந்து - விளங்குவ தால் அடவி ஆயிற்று. வெளிப்படாமல் வீட்டுள் அடங்கிச் செறிந்து கிடப்பவனை அடவியான் என்பது வேலூர் வழக்கு. அடி கொடி அடி என்பது வேர்; கொடி என்பது வேரில் இருந்து தளிர்த்துப் படரும் கொடி. கொடியாவது அடியின் முடி. அந்தாதி என்பதை அடி கொடி என்பது யாழ்ப்பாண வழக்கு; இயற்கையொடும் இணைந்த இனிய அமைப்பினது அது. அடிப்பாவாடை பாவாடைக்கு உள்ளாக உடுத்திய பாவாடையை அடிப்பாவாடை (உட்பாவாடை) என்பது குமரி வட்டார வழக்கு. அடி, மரம் செடி கொடிகளின் வேரும் தூருமாம் பகுதி. மண்ணுள் இருந்து வருவதால் உள் என்னும் பொருள் கொண்டது. அடிப்பிடித்தல் என்பது சோறு குழம்பு ஆயவை கலத்துடன் ஒட்டிப் பிடித்தல் ஆகும் பற்று என்பது அது. அடி திரும்பல் அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் பொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். அடித்திரும்பி விட்டது; வீட்டுக்குப் போகலாம் என்பர். அடியைச் சார்ந்த நிழலைக் குறித்து, நேரம் குறிப்பது இது. இது தென்னக வழக்காகும். அடுக்குள் சமையலறையை அடுக்குள் என்பது உண்டு. கலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்படுவதும், வீட்டின் உள்பகுதியாக இருப்பதும் கருதிய பெயர் அடுக்குள் ஆகும். இது பார்ப்பனர் வழக்கு. அண்ணாக்கு அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப் படுமாறு தூக்கிக் குடித்தல் அண்ணாக்கக் குடித்தல் என வழங்கும். நாக்கைப் போல் மேல்நாக்கு வெளிப்பட வராமையாலும் தெரியாமையாலும் உண்ணாக்கு (உள்நாக்கு) எனவும் படும். இது தென்மாவட்ட வழக்கு. அண்ணி அண்ணன் துணைவியார் அண்ணி எனப்படுவார். இப்பொருளுடன், அண்ணி என்பது அணிலைக் குறித்தல் விளங்கோடு வட்டார வழக்கு. அணில் ஏதாவது தின்னும் போது முன்னங்காலை மேலே கைபோல் தூக்கி அதில் தீனியை வைத்துத் தின்னுதல் கண்டு வழங்கிய பெயராகலாம் இது. அண் = மேல்; அணல்= மேல்வாய்; அண்ணாத்தல் = வாய் திறத்தல். அணியம் தயார் என்னும் அயற் சொல்லுக்கு அணியம்என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கி யிருப்பது அணியம் ஆகும். இனி அண்மை இடம் அணிமை எனப்படுவதுடன் அணியம் எனவும் வழங்குதல் நெல்லை வழக்கு. அணியம் = பக்கம். அத்தவனக்காடு இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம் என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும் வழியே. அத்தம் > அற்றம் = முடிவு. மீமிசைச் சொல் இரு சொல் ஒரு பொருளுடையது. இது முச்சொல் ஒருபொருள் தரும் அருவழக்காகும். இது பொது வழக்காகும். தென்னகக் கதைகளில் மிகுவழக்குடையது இது. அத்தாச்சி அத்தையைப் பெற்றதாய் அத்தை ஆச்சி, அத்தாச்சி எனப்படுதல் மதுரை வழக்கு. ஆய்ச்சி = ஆயர் மகளிர். ஆச்சி அம்மை, அம்மையைப் பெற்றவள். அப்பாச்சி அப்பாவைப் பெற்றதாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவதுபோல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு. அப்பச்சி என அப்பாவைக் குறித்தலும் சில குலப்பிரிவுகளில் உண்டு. இது முகவை வழக்கு. அம்பாரம் கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது முகவை வழக்கு. அம்பரம் என்பது உயரம், வானம், அம்பரம் > அம்பாரம். உழவர் வழிச் சொல் இது. மாட்டுத் தீனியாம் படப்பையின் மேல் முகடு கூட்டுதலை அம்பாரம் என்பதும் வழக்கே. கூரைக்கு மேல் முகடு போடுதலும் அவ்வாறு வழங்கும். அம்மம் பாலூட்டும் தாயின் மார்பு, அம்மம் எனப்படும். சிறு குழந்தையின் உணவு பாலாக இருத்தலால் அம்மம் என்பதற்குச் சோறு என்னும் பொருள் கொண்டது தஞ்சை வட்டம். அம்மம் = பால். பாலூட்டலை அம்மம் ஊட்டல் என்பது நாலாயிரப்பனுவல். அம் என்பது மார்பை அமுக்கிப் பால் அருந்துதல் வழியாக உண்டாகிய பெயர். அம் + அம் = அம்மம். அம் தருபவர் அம்மு, அம்மா, அம்மை என விரிவுறும். அம்மார் மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை அம்மார் என்பர். மார் என்பது புளிய வளார், கருவேல் வளார், பனை நார், தென்னை நார், கற்றாழை நார் ஆகியவற்றைக் குறிக்கும். அவற்றுள் வளமான நல்ல நாரை எடுத்துக் கயிறாகத் திரிப்பதால் அம்மார் எனப்பட்டது. அப்பி தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு ஆகும். அப்புதல் ஒட்டுதல். சேற்றை அப்புதல் சந்தனத்தை அப்புதல் போல்வது. தாயை விடாமல் திரியும் இளமையான ஆட்டுக்குட்டி அப்புக் குட்டி எனப்படும். இன்னும், தாயில்லாமல் வேறொரு தாயாட்டில் விட்டுப் பால் குடிக்கச் செய்யும் ஆட்டுக்குட்டி அப்புக்குட்டி எனப்படுதலும் உண்டு. அப்புதல் பூசுதல் என்னும் பொருளது. சுவரில் கலவையை அப்புதல். மார்பில் சந்தனம் அப்புதலும் உண்டு. கன்னத்திலோ முதுகிலோ கையால் அடிக்கும் அடியை அப்புதல் என்பதும் வழக்கு. இரண்டு அப்பு அப்பினால் தான் சொன்னது கேட்பான் என்பதில் இப்பொருள் உள்ளமை காண்க. நெல்லை, முகவை வழக்கு இது. அம்மி பாட்டி; அம்மாவின் தாயை அம்மி என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும் அம்மாத்தா என்றும் தென்னக வழக்கில் உண்டு. அம்மி என்பது வியப்பான வழக்கு. அமைப்பு ஒரு நிறுவனம் அல்லது ஒரு கூட்டம் அமைத்தலை அமைப்பு என்பது பொது வழக்கு. ஒவ்வோர் அமைப்பின் சார்பிலும் ஓரிருவர் பேராளராக வந்து கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுதல் நடைமுறை. ஆனால், அமைப்பு என்பது தன் துணை அல்லாமல் (வைப்பாட்டி) வைத்துக் கொள்ளப்பட்ட பால் தொடர்பாளரை அமைப்பு எனப்படுதல் மதுரை வட்டார வழக்கு. வைப்பு என்பது பொதுவழக்கு. அரங்க வைத்தல் வெண்ணெயை நெய்யாக்குதலை உருக்குதல் என்பது பொதுவழக்கு. உருகச் செய்து ஆக்கப்படும் இரும்பு உருக்கு எனப்படுதலும் உருக்குதல் வழிப்பட்டது. ஆனால் நெல்லைப் பகுதியில் நெய் உருக்குதலை அரங்க வைத்தல் என்பர். இளக வைத்தல் என்னும் பொருளது அது. அரசாணிக்காய் திருமணங்களில் அரசாணிக்கால் நடல் உண்டு. அது அரச மரத்தின் கிளையாகும். அரசுபோல் தளிர்த்து என்னும் வாழ்த்து வகையால் அரசு நடுவதன் நோக்கு புலப்படும். ஆனால், கொங்கு நாட்டில் பறங்கி அல்லது பூ சுணைக்காய் (பூசணிக்காய்) அரசாணிக்காய் எனப்படுகின்றது. புது மனை விழாவில் கண்ணேறு படாமைக் கருத்தில் மனையில் வைத்தலும் கண் காது வாய் முதலியவை வரைதலும் தெருவில் உடைத்தலும் வழக்காக உள்ளமை நாட்டுப் பொதுவழக்கு. அரசு ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர், குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஆண்மகளைக் குறிப்பதாக வழங்குவது நகரத்தார் வழக்காகும். ஆண்குழந்தை பிறந்தால் அரசு பிறந்தது என்பர். அரி அரி; நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி எனப்படும்; பின்னர் நெல்லுக்கும், நெல்லின் அரிசிக்கும் ஆகியது. அரியப்பட்டது அரி; அரிய அமைந்த வாள் கருவி அரிவாள்; அரிவாளும் கட்டையும் அமைந்தது அரிவாள்மணை. அரி = அரிசி (குமரிநாட்டு வழக்கு) அரிக்கண்சட்டி சோறு கறியாக்கி வடிக்க, வடிதட்டாகப் பயன்படும் ஏனத்தை அரிக்கஞ்சட்டி என்பது நெல்லை, முகவை வழக்கு. அரி = சிறியது. சிறிய கண்களையுடைய வடிசட்டி அரிக்கண் சட்டி எனப்பட்டது. அது வடிப்பதற்குப் பயன்பட்டதால் அரிக்கஞ்சட்டி எனப்பட்டது. பொற்கொல்லர் பட்டடைக் கரியை அரித்தெடுத்தல் இன்றும் உண்டு. கரந்தையில் ஒரு தெருவின் பெயர் அரிக்காரத் தெரு. அரிப்பு நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை அரிப்பு எனப்படுதல் பொதுவழக்கு. அரிப்பு என்பது ஓயாது அனற்றுதல், வந்து வந்து கேட்டுப் பறித்தல், அரித்தெடுக்கப்பட்ட கள் என்பவை மக்கள் வழக்கில் உள்ளவை. இவை தென்னகப் பொது வழக்காகும். அரி என்பது சிறுமையளவினது ஆதலால் மொத்தமாக - பெரிதாக - அமைவன அல்ல. அரிதலைப் பாளை என்பார் கம்பர். அரி, செவ்வரி (கண்வரி) ஆதல் உண்டு. அரி = அரிசி; அரிந்து வைத்த அரிதாள். அரிம்பி, அரிப்பு மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை அரித்தல் என்பதும் பொதுவழக்கே. அரிப்புத் தொழிலர் அரிக்காரர். அரியா தூக்குச் சட்டியை அரியா என்பது பரதவர் (வலைஞர்) வழக்கமாகும். அரி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறிய தூக்குச் சட்டியை அரியா என வழங்கிப் பொதுப் பெயராகி யிருக்க வேண்டும். அரியாடு அர், அரத்தம், அரி, அரு என்னும் அடிச்சொற்களின் வழியாக வரும் சொற்கள் செவ்வண்ணம் குறித்து வரும். அம் முறைப்படியே அரியாடு என்று, சிவப்புநிற ஆட்டைக் குறிப்பது ஆயர் வழக்கமாம். இலக்கிய வளமுடைய ஆட்சி இது. அருமைக்காரர் திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா. அவ்விழாவின் அருமையை - சிறப்பை - நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர் என்பது கருவூர் வட்டார வழக்கு. கொங்கு நாட்டு வழக்குமாம். அருவாதல் கடையில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென்னக வழக்கு. அருவாதல் x உருவாதல். உரு = உள்ளது. அரு = இல்லாதது. அருவுரு = அருவமும் உருவமும் ஆயது. அலக்கு முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில் கொண்டுவந்து வெள்ளா விக்குப் பயன்படுத்துதலால் வெளுப்பவர் அல்லது சலவை செய்பவர் அலக்குக்காரர் எனப்படுதல் குமரிமாவட்ட வழக்கு. அலத்தம் அலத்தகம் என்பது செம்பஞ்சுக் குழம்பு. இது, இலக்கிய வழக்கு. நாகர் கோயில் வட்டாரத்தில் அலத்தம் என்பது மஞ்சள் நீரைக் குறிக்கிறது. அரத்தகம் அரத்தம் என்பதே அலத்தம் ஆகிச் சிவப்பு என்னும் பொருள் தந்தது. பின்னர் மஞ்சளுக்கு வந்துளது. இரண்டும் விழாக் களின்போது தெளிக்கும் தெளி நீர்களே யாம். அலப்பு ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி அலைக் கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கிலும் உள்ளமை, பேராசை பிடித்து அலைவாரை அலப்பு என்னும் பட்டப் பெயரிட்டு அழைப்பதால் விளங்கும். அலைப்பு > அலப்பு. ஒ.நோ: மலைப்பு > மலப்பு; கலையம் > கலயம். அலவு காய்க்காத பனை ஆண்பனை. அதனை அலவு என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது. காய்த்தலை அற்றுப்போனது அலவு ஆயிற்று. அலுக்கி அலுக்குதல் என்பது அசைத்தல், துன்பப்படுத்துதல் என்னும் பொருள் தருவது. வலுவாகக் கடிக்கும் கட்டெறும்பை அலுக்கி என்பது பெட்டவாய்த்தலைப் பகுதியில் வழங்கும் வழக்கமாகும். அலுங்கு(1) அலுங்குதல் அசைதல். தட்டாங்கல் ஆட்டத்தில் எடுக்கும் கல்லை அன்றி வேறுகல் அசைதல் ஆகாமல் எடுத்து ஆடவேண்டும். அசைந்தால் அலுங்கிவிட்டது என ஆட்டத்தை விடச் செய்வர். அலுங்காமல் கொண்டு போ என்பது என்ணெய், தண்ணீர், கண்ணாடி கொண்டு போவார்க்குச் சொல்லும் அறிவுரை. பனையின் பாளையை அசைத்து மிதித்து விடுவது கருதி அலுங்கு என்பது நெல்லை வழக்கு. அலுங்கு(2) அலுங்கு என்பது ஓர் உயிரியின் பெயர். அது, ஊரும் உயிரி. எறும்பைத் தின்னும் அதனை அலுங்கு என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. அலுக்கி என்பது கட்டெறும்பு எனப்படுவதால் அதனைத் தின்பது அலுங்கி எனப்பட்ட தாகலாம். அலைவாக்காக (அலாக்காக) ஒன்றைத் தூக்குவதை அலாக்காக - கால், மார்பு, தோள் முதலியவற்றில் படாமல் தலைக்குமேல் - தூக்கு என்பர். அலை என்படி மேலே துள்ளி எழும்புகிறதோ அதுபோல் என்னும் உவமை வழிப்பட்ட ஆட்சியாகும். இது. தென்னகப் பொது வழக்கு. அவக்காச்சி தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு. ஆவல் என்பதன் வழியாக ஏற்பட்டிருக்கலாம். ஆவல் ஆசை என்பவை மனத்தால் பற்றுதலாம். அவதி வேலையோ கல்வியோ இல்லாமல் விடப்படும் விடுமுறையை அவதி என்பது நெல்லை வழக்கு. அவம் என்பது தம் கடமை செய்யாது இருக்கும் நிலை. தவம் என்பது தம் கடமை செய்யும் நிலை. தவம் செய் வார் தம் கருமம் செய்வார் என்பது திருக்குறள். பணியிலாப் பொழுதை அவப்பொழுதாகக் கருதிச் சொல்லப்பட்டது இது. இனி, அவதி என்பதற்குத் துயரப்பொருள் உண்டு. அது அவலம் என்பதன் வழிவந்தது. அவயான் ஆசைப்பெருக்கு என்பது வழக்கு. அது கட்டில் நில்லாமல் பெருகுவதால் ஆசைக்கோர் அளவில்லை; ஆரா இயற்கை அவா எனப்பட்டது. ஆசைப்பெருக்கம் போல் பெருத்த உடலுடைய தாகிய பேரெலி (பெருச்சாளி, பெருக்கான், பொண்டான்) என்பதை அவயான் என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. இவண் ஆசை என்பது பெரிய பெருகிய என்னும் பொருளுடைய தாயிற்று. அவியல் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை. இது பொதுவழக்கு. அவியல் என்பது இட்டவியைக் குறிப்பது கண்டமனுர் வழக்கு. இட்டவி (இட்டிலி) அழிகதை பிசிர் எனப்படுவது புதிர் என்றும் விடுகதை என்றும் வழங்கப்படும். விடுகதையை அழிகதை என்பது பெரியகுள வட்டார வழக்கு. அழிப்பான் கதை என்பது முகவை மாவட்ட வழக்கு. அளித்தல் = கொடுத்தல்; அழித்தல் = இல்லாது ஆக்குதல். தக்கவிடை தந்துவிட்டால் வினாவுக்குரிய விடை பெற்று நீக்கப்படுவதால் அழிகதை ஆயது. அழுவங்காட்டல் இது கேளி செய்தல் (கேலிசெய்தல்) என்பது அரியகுளம் வட்டார வழக்கு. எள்ளுதலால் அழுமாறு படுத்துதல். இது வலிச்சக் காட்டல் எனவும் படும். இயல்பாக இல்லாமல் கால் கை வாய் முதலியவற்றை வலித்துக் காட்டலால் இப்பெயர் பெற்றது. அதனைப் பொறாதவர் வெருளவோ, வெருட்டவோ ஆதலால் வலிச்சக் காட்டலுமாம். கிருத்துவம் காட்டல் என்பதும் இது. அறுதி ஒரு நிலத்தை அளந்து அளவுக்குத் தகவோ மரம் கிணறு முதலியவை கணக்கிட்டோ பாராமல் அப்பொழுது தீர்மானித்துத் தருதலை அன்றிப் பின் தொடர்ச்சி இல்லாமல் விலை முடிவு செய்து நிலத்தைப் பதிவு செய்து தருதல் அறுதிக்கிரையம் எனப்படும். அறுதி என்பது முடிந்த முடிபு என்னும் பொருளதாம். இது நெல்லை, முகவை வழக்கு. அனப்பு அனல் = சூடு, வெப்பம்; அனப்பு என்பதை வெப்பம் அல்லது சூடு என்னும் பொருளில் குமரிமாவட்ட மேல்புரம் பகுதியில் வழங்குகின்றனர். சுடுபடுங்கால் ஒலி உண்டாதல் இயற்கை. ஆதலால் அனக்கம் என்பதை ஒலி என்னும் பொருளில் அகத்தீசு வரம் வட்டாரத்தார் வழங்குவர். அனத்தல் என்பது காய்ச்சல் தாங்காமல் புலம்புதலைக் குறிப்பது முகவை வழக்கு. ஆ ஆ சோறு; பண்டம். வாயைத் திறந்து இதனை வாங்கிக் கொள் என்பதை, ஆவாங்கிக் கொள் என்பது வழக்கு. ஆசொல்லு என்று சொல்வதும் வாயைத் திற என்பதற்கே யாம். ஆ வாயைத் திறத்தலையும், வாயைத் திறந்து உண்ணும் உணவையும் குறிப்ப தாயிற்று. இது மதுரை வட்டார வழக்கும் பொதுவழக்குமாம். ஆகம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான் ஆகமாக எதையாவது செய்யேன் என்பவை வழக்கில் சொல்லப்படுவன. உருப்படியான - ஆக்கமான என்பது இதன் பொருளாம். இது முகவை வட்டார வழக்கு. ஆகியிருத்தல் உண்டாகியிருத்தல் அல்லது கருக்கொண்டிருத்தல் என்பது பொதுவழக்கு. ஆகியிருப்பவள் ஆய் எனப் பட்டாள். ஆய் = தாய். தம் + ஆய் = தாய். வயிறுவாய்த்தல் என்பதும் அது. கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்பது நாலாயிரப் பனுவல். ஆட்சை ஆளுகை, ஆளுமை என்னும் பொருளது ஆட்சை என்பது. ஞாயிறு திங்கள் முதலியவற்றின் கிழமை (உரிமை) பொருள் போல, ஆட்சை என்பதும் ஆளுரிமைப் பொருள தாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஆட்சி > ஆட்சை. ஆடை உடை, பாலாடை, பன்னாடை என்பவற்றைக் குறியாமல் ஆடை கோடை எனக்காலப் பெயர் குறிப்பதாக மக்கள் வழக்கில் உள்ளது. இவ்விணைச் சொல்லில் வரும் ஆடை, கார் காலம், என்னும் பொருளில் வழங்குகின்றது. நீலவான் ஆடை என்னும் பாவேந்தர் பாடலடி நினைவில் எழச் செய்யும் வழக்கு இது. கார்காலம் தொட்டு அடுத்த கார்காலத் தொடக்கம் வரை ஆட்டை (ஆண்டு) எனவருவதும் விளையாட்டில் ஓர் ஆட்டை முடிந்தது என்பதும் எண்ணலாம். ஆணி நுகக்கோலின் ஊடே ஓர் ஆணி இருக்கும். இது இருபக்கச் சமன்மை அடையாளம். ஆதலால் ஆணி என்பது நடு, நடுவு நிலை எனப்பட்டது. நுகத்துப் பகலாணி என்பது தஞ்சை வாணன் கோவை. நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினர் என்பது பட்டினப்பாலை. இனி ஆணிப்பொன், ஆணிமுத்து என்பவை தரப்பாடு செய்யப்பட்டதன் அடையாளமமைந்த பொன்னும் முத்துமாம். துளைப் பொன் என்பதும் அது. ஆமக்கன் அகம் > ஆம் + அக்கன் = ஆமக்கன். வீட்டுக்குத் தலைவனானவனை ஆமக்கன் என்பது முகவை வட்டார வழக்கு. அகம் = வீடு; அக்கன், தவசம் காசு பொருள் ஆகியவற்றை உடையவனாகிய தலைவன் அல்லது கணவன். ஆய் குழந்தை தொடக்கூடாத அருவறுப்புப் பொருளை ஆய் என ஒலியால் காட்டுவது வழக்கம். ஆ உணவு ஆதலால், அது செரித்து அற்றுப் போனது ஆய் எனப்பட்டதாம். ஆய் என்பது பொதுவழக்கு. ஆய்தல் கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்பன பொது வழக்கு. கொள்ளத் தக்கதைக் கொண்டு, கொள்ள வேண்டா ததைத் தள்ளுதல் ஆய்தல் எனப்படும். ஆய்தல், ஆராய்தல் என்பவற்றின் அடிமூலமும் பொருளுமாக விளங்குவது இச் சொல்லாட்சியாம். தொல்காப்பியர்க்கு முன்னைத் தொல் வழக்குச் சொல் இது. மீன் ஆய்கிறது என்பது, மேலே மிதக்கிறது என்னும் பொருளுடையது. தட்டான் ஆய்கிறது என்பதும் அது. மேலே பறக்கிறது என்பது பொருளாம். ஆய்தல் மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது இது. ஆயான் ஆயன் ஆக்களை வளர்ப்பவன். மேய்ப்பன் என்பானும் அவன். புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ நிலையில் வாழ்ந்தவர். ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர். மற்றும் ஆய்ந்தறிதலும் அறிந்ததை எடுத்துரைத்தலும் கடமையாக உடைய ஆசிரியன் ஆயான் எனப்பட்டான் எனலுமாம். ஆயான் என்பதற்குக் குரு என்னும் பொருள் வழக்கு கல்லிடைக் குறிச்சி வட்டாரத்ததாகும். ஆர் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் வேந்தர் மலைந்த பூவும் என்னும் தொல்காப்பிய வழியில் வாய்த்த ஊர் ஆர்க்காடு. அதுமட்டுமா? ஆரணி ஆர்ப்பாக்கம் என்பனவும் செற்கற் பட்டு மாவட்டம் சார்ந்தவை. ஆர் என்பது ஆத்தி என்ப தாம். பேர் > பேர்த்தி; ஆர் > ஆர்த்தி. பேத்தியும் ஆத்தியும் எண்ணலாம். ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால் அன்று. தெளிவாகக் கூடாது என்னும் தெளிவான முடிவில் எழுதுவதாம். ஆரச் சுவர் ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு. ஆரம் = வட்டம், வளையம். மாலை. ஆரை பழமையான இலக்கிய வழக்குச் சொல். ஆரியம் கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப் பூட்டிய அமைப்பில் இருத்தலால் பூட்டை எனப்படும். பூட்டையாவது கட்டமைப்புடைய கதிர். ஆர் என்பதன் பொருள்களுள் ஒன்று, கட்டு என்பது. ஆர்த்த பேரன்பு ஆர்த்த சபை என்பவற்றில் வரும் ஆர்த்தல் அப்பொருளது. ஆதலால் கட்டமைந்த கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். சேலம் தருமபுரிப் பகுதி வழக்கு இது. ஆரியம் என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு. ஆள் காந்தி வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது எரிந்து விழுபவளை ஆள் காந்தி என்பது கோட்டாறு வட்டார வழக்கு. காந்தல் = வெப்பம், எரிவு. காந்துதல் = சுடுதல். ஆளைக் கண்டு எரிதல் ஆளல்லாப் பிறவி இயல்பு போலும்! ஆள்வீடு முன்பகுதியும் குறியாமல் பின்பகுதியும் குறியாமல் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக் கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும் பழகியும் இருக்கும் வீடு ஆள்வீடு. இல்லாள், மனையாள் என்பவற்றில் வரும் ஆள் ஆளுமைப் பொருளதாதல் கருதுக. ஆள் கணவன் மனைவியர் இருவரையும் குறித்தல், ஆளில் பெண்டிர் என்னும் வழக்கால் அறியலாம். ஆளன் = கணவன்; ஆட்டி = மனைவி. ஆளாதல் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு. அதுவரை சிறுபிள்ளை புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும் அடையாளப் படுத்தும் சொல் இது. மணத் தகுதி உடையவள் என்பதன் சான்று ஆதலால் ஆள் எனப்பட்டாள். இல்லாள், மனையாள். அகத்தாள் (ஆத்தாள்) என்பவற்றை நினைக. ஆற்றமாட்டாதவன் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டா தவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர். ஆற்றுதல், செயலாற்றுதல். ஒன்றுக்கும் உதவாதவன், உழையாதவன் என்பது பொருளாம். ஆத்தமாட்டாதவனுக்கு ஐம்பத்திரண்டு அறுவாள் என்பது பழமொழி. இது பொது வழக்கு; பெருவழக்கு. ஆற்றி (அகற்றி) ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும். திறந்த வெளியில் கழித்தலும் அதனை உண்டு கழித்தலும் (அகற்றலும்) கருதி இட்டு வழங்கப்பட்ட பெயர் இது. வெளியே வந்தால் உள்ளே போ என்னும் நிலைமை இல்லாமையால், ஏற்பட்ட இழிமையும், அடைத்து உணவு இட்டு வளர்க்காத இழிமையும் விளக்கும் பெயர் இது. இ இசித்தல் ஈரப்பொருள் தரும் இசித்தல் என்பது, அதன் நீரை இழுக்கப்பட்ட நிலையில் உலர்தல் என்னும் பொருள் தந்தது. அப்பொருளில் பரமக்குடி வட்டாரத்தார் இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர். இசிபதம் ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். குளிரால் வரும் நோய் இழுவை; அது, இசிவு என வழங்கப் படும். இசிவு குளிரால் வருவதால் குளிர்பதம் இசிபதம் எனப்படு கின்றது. இசைகுடிமானம் திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடி மானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. குடும்பமாக ஆகும் ஏற்பாடு குடிமானம் ஆயிற்று. இரு சாராரும் (கொடுப்பார் கொள்வார்) இசைதல் இசைவாயிற்று. இஞ்சநிலம் மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. இஞ்சுதல் நீரை இழுத்தல். இஞ்சி என்னும் பயிரின் பெயரும், இஞ்சி என்னும் மதிலின் பெயரும் நீரை உள் வாங்குதலால் கொண்ட பெயர்களாம். செம்பிட்டுச் செய்த இஞ்சி என்பது கம்பர் வாக்கு. இஞ்சி (1) கடுகடுப்பான முகமும் வெடுவெடுப்பான சொல்லும் உடையவரை இஞ்சி எனப் பட்டப் பெயரிட்டு வழங்குவது பொதுவழக்கு. இஞ்சியின் எரிச்சலை வெளிப்படுத்துவது இது. இஞ்சி தின்ற குரங்குபோல என்பது பழமொழி. இஞ்சி (2) மணலில் நீர்விட்டால் உடனே நீர் உறிஞ்சப்பட்டு உள்ளே போய்விடும். இஞ்சி என்பது உறிஞ்சுதல் பொருளது. இது உறிஞ்சுதலைக் குறியாமல் வந்ததை வெளிவிடாமல் உள்வாங்கிக் கொள்ளும் கொடாக்கண்டனாம் கருமியைக் குறிப்பது செட்டி நாட்டு வழக்கு. இட்டாலி நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர். இது இடுமுள் வேலி என்பதன் சிதைவாகலாம். வேல முள்ளால் அமைக்கப்பட்ட காவல் வேலி எனப்பட்டது. நிலத்திற்கு வேலிபோலக் கடல் சூழ்ந்திருப்ப தால் கடலுக்கு வேலி என்பதன் அடியாக வேலை என்னும் பெயர் உண்டாயிற்று. இட்டு நீர் மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை இட்டுநீர் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மணவிழாவைக் கொடைவிழா என்பது பழவழக்கம். இடுதல் என்பதும் கொடுத்தலேயாம். இட்டார் பெரியோர்: இட்டு உண்க என்பவை கொடுத்தல். பொருள் தரும் பொதுவழக்கு. இவ்விடுதல் சிறப்பு வழக்கு. இட்டுறை இடு > இட்டு = சிறியது. இடுப்பு இடை இடுக்கண் இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும் பொருள் வழிச் சொற்கள். இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு. உறை என்பது வழி என்னும் பொருள் தருகின்றது. உறுவது வருவது என்னும் பொருளதாதல் அறிக. இடிகல் பாக்கினை மெல்லும் பல்வலிமையில்லாதார் அப் பாக்கை இடித்துப் பொடியாக்கி, வெற்றிலையோடும் சேர்த்து இடித்து மெல்லுவர். அவ்வாறு பாக்கை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை இடிகல் என்பது குமரி வட்டார வழக்கு. கல் பின்னே இரும்பு, எல்லியம் ஆயவற்றால் ஆயது; உரல் உலக்கை ஒப்பவை அவை. இடிஞ்சில் கிழிஞ்சில் போன்ற நீர்வாழ் உயிரி ஒன்றனை இடிஞ்சில் என்று வழங்குதல் தலைக்குளம் என்னும் வட்டார வழக்காகும். இடுதல் = சிறிதாக இருத்தல். இப்பொருளால், கிழிஞ்சில் வகையில் அதற்குச் சிறிதாக உள்ளது இடிஞ்சில் என அறியலாம். இடுக்கான் இடுக்கு என்பது நெருக்கம், சிறிது என்னும் பொருளது. கிழியஞ்சட்டியில் சிற்றளவினதாக இருப்பதை இடுக்கான் என வழங்குவது தலைக்குள வட்டார வழக்காகும். இடுவை இடு என்பது நெருக்கம். சிறு என்னும் பொருளது. இடுக்கான தெருவையோ வழியையோ இடுவை என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும். இணுங்குதல் காதை அறுத்து விடுவேன் என்பதை, காதை இணுங்கி விடுவேன் என வைவது தென்னக வழக்கு. மரத்தில் அல்லது செடி கொடியில் இருந்து ஓர் இலையைப் பறிப்பதை இணுங்குதல் என்பதும் வழக்கு. இலையை இணுக்கு என்பதும் உண்டு. பறிக்கப்பட்டது என்னும் பொருளது. துணிக்கப்பட்டது துண்டிக்கப்பட்டது துணுக்கு ஆவது போல. இணுங்கப்பட்டது இணுக்கு ஆயது. இராப்பாடி இரவுப் பொழுதில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று அவ்வீட்டுக்கு வரும் நல்லவை பொல்லவை இவை எனக் கூறிச் செல்லும் குறிகாரனை இராப்பாடி என்பது தென்னக வழக்காகும். இவ்வாறு இராப்பாடியாக வருபவர் சக்கம்மாள் என்றும் தாய்வழிபாட்டினராகிய கம்பளத்தார் (காம்பிலி தேயத்திருந்து வந்தவர்) ஆவர். அவர்கள் பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியர். இருசி வயது வந்தது என்றாலே பூப்படைந்தாள் என்பதன் பொருள் ஆகும். ஆனால் சிலர் வயது வந்தும் பூப்படையா திருத்தல் உண்டு. அத்தகையவரை இருசி என்பது புதுக்கடை வட்டார வழக்கு. மகப்பேறு இல்லாதவரை இருசி என்பதும் உண்டு. அது பொது வழக்கு. பூப்படையாதவள் மகப் பேறு வாய்த்தல் இல்லாமையால் இருபொருளுக்கும் உரியதாயிற்று. இருள் இருள் என்பது இருட்டு ஆவது பொது வழக்கு. ஆனால் இருள் என்பது பேய் என்னும் பொருளில் தென்னகப் பொது வழக்காக உள்ளது. இருளடித்து விட்டது என்பர். ஓர் ஆளும் கறுப்பு உடையும் பேய் என்பது பாண்டியன் பரிசு. இருட்டு, இருளன், இருளாண்டி இவ்வழிச் சொற்கள். பேயாழ்வார் ஓர் ஆழ்வார். பே = அச்சம். பே > பேய். இரைப் பெட்டி கோழி தின்னும் தீனி இரை எனப்படும். அதன் வழியாக இரைபோடுதல் என்பது தின்பது, உண்பது என்னும் பொருளில் வழங்கலாயிற்று. உண்பது வயிற்றைச் சேர்வதால் அதனை இரைப்பெட்டி என்பது புதுக்கடை வட்டார வழக்கு இரைப் பெட்டி என்பது. இறைப்பெட்டி என்றால், நீர் இறைக்கும் இறைவைப் பெட்டி, சால், கூடை, கூனை என்பவற்றைக் குறிக்கும். இல்லி மிகச்சிறிய ஓட்டையை இல்லி என்பது நெல்லை வழக்கு. இல்லிக்குடம் என்பது, நீர் ஒழுக்குடைய குடம் என்று கூறும் நன்னூல். கண்ணுக்கு வெளிப்படலில்லாத் துளையைக் கருதி இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். இல்லையோ என்னும் இடை என்பதை நினைக்கலாம். இலக்கு அம்பு எய்து பழக இடமாக இருந்ததால் இலை என்பதை இலக்கு என்பது வழக்கு. இலக்கம் என்பதும் இலக்கிய வழக்கு என்பது இலக்கம் உடம்பு இடும்பைக்கே என்னும் வள்ளுவத் தால் விளங்கும். இலக்கம் எண் என்னும் பொருள் தருவதும் இடப்பொருளேயாம். நான்கு இலக்க எண், ஐந்திலக்க எண் என்பவை போல்வன அது. நூறாயிரம் என்னும் பொருள்தரும் இலக்கம் விளங்குதல் வழிப்பட்டது. அது, எல்லே இலக்கம் என்னும் தொல்காப்பியத்தால் அறியப் பெறும். இலக்கம், விளக்கம், ஒளி. இலைக்கீரை முட்டை போன்ற வடிவும் நிறமும் உடைய வெளி நாட்டுக் கீரையைக் கண்டபோது முட்டைக் கோசு என்றனர். கோசுக் கீரை என்றும் கூறினர். இலைக்கீரை என்பது நெல்லை வட்டார வழக்கு. பொதுமக்கள் ஆட்சியே புலமை மிக்கோர் ஆட்சியினும் பொருந்தியதாக அமையும் என்பது மிதிவண்டி என்னும் ஆட்சியால் விளங்கும். அதுபோன்றது இலைக்கீரை என்பதுமாம். இலையான் இலை வைத்திருப்பவனையோ, இல்லாதவனையோ குறியாமல் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. ஈ பெரிதும் இலையில் ஒட்டி உறையும் இயல்பு கண்டு இட்ட பெயராகும் இது. இழுமிச் சேவு இழுமென் மொழியால் விழுமியது பயிலல் என்பது தொல்காப்பியம். இழும் என்பதற்கு இனிமை என்பது பொருள். இப்பொருளில் இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும். தமக்கு இன்பம் தரும் மொழியைத் தம் + இமிழ் = தமிழ் என வழங்கியது எண்ணத்தக்கது. இதன் விரிவான விளக்கமாக அமைந்தது தமிழ் என்னும் எம் நூலாகும். இழை நூல் இழையே இழையெனப்படும். நூலிழைபோல் இழைத்துச் செய்யப்படும் பொன்னணிகலம் இழை எனவும் படும். அவ்விழையை அணிவதால் அணியிழை, ஆயிழை முதலாகப் பல பெயர்கள் அன்மொழித் தொகையாய் வழங்கலாயின. நூல் இழைபோல் நீண்டமைந்த குடரை இழை என்பது மதுரையை அடுத்த திருமங்கல வட்டார வழக்கு. இடைவிடாது ஒழுகும் நெய் இழுது எனப்படுவது எண்ணத்தக்கது. விழுது என்பது வெண்ணெயும் இழுது என்பது நெய்யுமாம். இழைவாங்கி இழை = நூலிழை. நூலிழையைத் தன் காதில் வாங்கித் தையற்பணிக்கு உதவும் ஊசியை இழைவாங்கி என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. இழை = இழுத்து ஆக்கப்படும் நூல். பஞ்சிதன் சொல்லா பனுவல் இழையாக என்பது நன்னூல். இழை நக்கி நூல் நெருடும் என்பது திருவள்ளுவ மாலை. இளங்குடி இளங்குடியை இரண்டாம் தாரம் என்பது பொது வழக்கு. இளைய குடியாள் என்பது வெளிப்படை. உரிய பொழுதுகளில் அல்லாமல் ஊடு ஊடு உண்ணல் பருகல் என்பவற்றை இளங்குடி என்பது குமரி மாவட்ட வழக்கு. இளங்கொடி இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும். இது தென்னக வழக்கு. இறக்கம் இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். ஏற்ற இறக்கம் என்பது முரண் இணைகள். உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது. இறக்கான் எலிவளைகள் பெரும்பாலும் நிலமட்டத்திற்குக் கீழாகவே இருக்கும். மேட்டிற்கு அல்லது நிலத்திற்கு அடியாக இறங்கலான இடத்தில் இருப்பதால் எலிவளைக்கு இறக்கான் என்னும் பெயரை வழங்குதல் கருங்கல் வட்டாரத்தில் உள்ளது. இறுங்கு பல்லின் ஒரு பெயர் எயிறு என்பது. அதன் அடிப்பகுதியாகிய ஈறும் எயிறு எனவழங்கப்படும். கோட்டாறு வட்டாரத்தில் இறுங்கு என்பது ஈறு என்னும் பொருளில் வழங்குகிறது. இறுங்கு என்பது கருஞ்சோளத்தின் பெயராதல் பொது வழக்கு. இறுங்குச் சோளம் என்பது கருஞ்சோளம்; வெள்ளைச் சோளம், முத்துச் சோளம், செஞ்சோளம் என்பவற்றின் வண்ணவகை. இறைசல் மழைத்துளி வீட்டுள் வருவதை இறைசல் என்பது தென்னக வழக்கு. இறைவாரம் என்பது தாழ்வாரம் ஆகும். அது மழை நீர் உள்ளே வராமல் காப்பதாகும். ஏட்டைக் கட்டி இறைவாரத்தில் வை என்பது பழமொழி. தாழ்வாரத்தின் வளையில் பொருள்களைச் செருகி வைத்தல் வழியாக வந்தது. இறைபட்டறை கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக் கேணி நீரால் பாய்ச்சப்படுவதைச் செங்கற்பட்டு வட்டாரத் தார் இறைபட்டறை என்கின்றனர். மற்றைத் தென்னகப் பகுதியில் இறைவை எனப்படுவது கமலை ஆகும். கேணியில் இறைப்பது இறைபெட்டி எனப்படுகிறது. இனிமம் இனிப்பான உணவு இனிமம் எனத்தக்கது. ஆனால் இனிமை கருதாமல் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட்டாறு வழக்கமாகும். இன்பம் செய்வது என்னும் பொருளது அது. ஈ ஈச்சி ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈ என்பது நாடு தழுவிய வழக்கு. அதனை ஈச்சி என்பது குமரிமாவட்ட வழக்கு. அச்சி இச்சி அத்தி இத்தி என்பவை பெயரீறுகளாக இருக்கும் வழக்குத் தழுவியது ஈச்சி என்பது. ஈ(இ)ச்சி = ஈச்சி. ஈப்புலி மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையர் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார். மாட்டீ பெரியது. ஒட்டிக் கொண்டு குருதியை உறிஞ்சி எடுப்பது. அவ்வாறு உறிஞ்சு வாழ்வு, ஈப்புலி வாழ்வாம். ஈசு மாளம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஈசுரன், ஈச்சுரம், ஈசுவரன், ஈசுவரி, என்பவை பெருமைக்குரிய இறைவன் இறைவியரைக் குறிப்பது கருதலாம். மானம் என்பது பெருமை என்னும் பொருளில் வருதல் அறிந்ததே. ஈத்தை உள்வயிரம் இல்லாத புல்லினப் பயிர்களின் அடியை ஈத்தை என்பர். மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு. வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு. மெலிந்தவனை ஈத்தை என எள்ளலும் இவ்விழிப்பட்டதே. கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை வழக்கு. ஈரலித்தல் ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். உ உக்கல் மீனவர் அல்லது பரதவர் வழக்குச் சொல் இது. அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர். உ என்பது உயர்வு, உயரம், உச்சம் என்னும் பொருளில் வருவது. அது, உயர்ந்தெழும் அலையைச் சுட்டியது. மேடான ஓரிடப் பெயர் உக்கல் எனப்படுதல் அறியலாம். உக்காரை இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது. அக்கார அடிசில் என்பது கற்கண்டு முதலிய இனிப்புச் சோறு. உ என்பது உயர்வுப் பொருள் தருதலால் உயர்ந்த - விருப்புடைய - இனிப்புணவு குறித்து உக்காரை வழங்குகின்றது. உச்சை கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும். உச்சிப் பொழுது, உச்சி வேளை என்பது பொதுவழக் காகும். உச்சியார்த்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. தலையின் மேற்பகுதியை உச்சந்தலை என்பது பொது வழக்கே. உசத்து உயர்த்து என்பது போலியாய் (ய - ச) உசத்து எனப்படும். அயர்ச்சி - அசத்தி எனப்படுவது போல. உசத்து என்பது உயரமாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும். உசத்தி என்பது உயர்த்தி என்னும் பொருளில் வருதல் பொது வழக்காகும். உசுப்புதல் உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை - கிடப்பதை - எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும். உசுப்பிப் பார்த்தேன்; அசையாமல் கிடக்கின்றான் என்பது ஏச்சு மொழி. நாயை உசுப்பி விடு என்பது ஆயர் வழக்கு. உசு உசு என்று நாயை ஏவுவதை, உசுக்காட்டுதல் என்பதும் பெருவழக்கே. உடக்கு சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு. உடற்றுதல் (போரிடுதல்) என்பது இலக்கிய வழக்கு. உடற்று என்பது உடக்கு என மக்கள் வழக்கில் உள்ளது. உண்டுறுதி நிலபுலங்களையோ குடியிருப்பிடத்தையோ போக்கிய மாக எழுதி வைப்பது உண்டு. ஒற்றி (ஒத்தி) என்பது அது. உரிய காலத்தில் உரிய தொகையை வழங்கி மீட்டுக் கொள்ளும் உரிமையது அது. அதனை உண்டுறுதி என்பது கம்பம் வட்டார வழக்கு. ஒற்றிக் கலம் என்பது கல்வெட்டு வழக்கு. உண்டைக் கோல் கவண், கவணை, கவட்டை என்பவை ஒருபொருள் சொற்கள். உருண்டையான கல் அல்லது உருட்டித் திரட்டிய மண் கொண்டு குறிவைத்து அடிக்கும் எய்கருவி அது. அதனை உண்டைக் கோல் என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு ஆகும். உணர்ந்தோர் உலர்தல் என்பது காய்தல். உலர்தல் உணர்தல் எனப் பொதுமக்கள் வழக்கில் உள்ளது. உலர்ந்து போன இஞ்சியைச் சுக்கு என்பது பொதுவழக்கு. அதனை உணர்ந்தோர் என்பது நெல்லை வட்டார வழக்காகும். உத்திகட்டல் இது விளையாட்டில் கலந்து கொள்பவர்களை இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஒத்தவராகத் தேர்ந்து கொள்ளுதல் உத்திகட்டலாகும். உத்திக்கு உத்தி என்பது ஒப்புத் தரம் காட்டும். உழவுத் தொழிலில் உத்தி கட்டல் என்பது தண்ணீர் ஓடிப்பாய்ந்து பரவலாக நிற்பதற்குத் தக ஒப்புரவாக்கி வரப்புக் கட்டுதல் உத்திகட்டுதல் அல்லது உத்தி நிரட்டல் எனப்பதும். இது தென்னக வழக்கு. உந்தி தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு. அதன் வடிவமைப்பு நடுமேடும் சுற்றிலும் பள்ளமும் உடையதாக இருக்கும். இதனைக் கருதிய கருத்தால் சுற்றுப் பள்ளத்திடையே உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட வழக்காக உள்ளது. உந்தித்தள்ளல், உந்தீபற என்பவையும், உந்துபந்து என்னும் ஆடல்கள ஆட்சியும் எண்ணத் தக்கவை. உப்பங்காற்று கடலில் இருந்து வரும் காற்று உப்பங் காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு. உவர்த் தன்மை அமைந்ததும், நிலம் சுவர் ஆயவற்றை உவர்த் தன்மையால் உப்பி உயரச் செய்வதுமாம் அக்காற்று உப்பங்காற்று ஆயது. வயிற்றுப் பொறுமல், உப்புசம் என்பது எண்ணத் தக்கது. தென்கிழக்கு மூலையை உப்பு மூலை என்பதும் தென்னக வழக்காம். உப்பங்காற்று பயிர்களை நன்கு வளரச் செய்யும் என்பர். உப்பிலி தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊறவைப்பதே வழக்கம். அதற்கு உப்பிலி (உப்பு இல்லா தது) என்பது முரணாக உள்ளது. தப்புச் செய்வாரைத் தப்பிலி என்பது போன்ற மங்கல வழக்கெனக் கொள்ளலாம். எனினும் அப்படிக் கொள்ள வேண்டியதில்லை. மோர், தயிர் உணவுக்கு வேறு எத்தொடுகறிகள் இருப்பினும் ஊறுகாய் வைத்தலே நாடறி வழக்கு. அவ்வுணவுக்கு ஒப்பில்லாத தொடுகறியாக இருப்பதால் ஒப்பிலி எனப்பட்டு, உப்பிலி யாகியிருக்க வேண்டும். ஒப்பிலி யப்பனையே உப்பிலியப்பன் ஆக்கவல்லார் ஊறுகாயைத் தானா மாற்றிவிட மாட்டார்? உப்புக்குத்தி முகவை வட்டார வழக்கில் குதிங்காலை, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்; குந்துதல், குத்த வைத்தல் என்பவை காலைமடிக்காமல் நிறுத்தி அமரும் நிலை யாகும். குத்துக்கால் என்பது கமலைக்கிணற்றின் இறைவைச் சால் வடம் தாங்கும் மரத்தூண்களாம். அதற்கு, மேற்குத்துக் கால் என்பதும் உண்டு. குத்துதல் குற்றுதலாம்; அதாவது ஊன்றுதல். குத்தி, குதியாகத் தொகுத்தது. உப்புசம் வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ வழக்கில் உப்புசம் என்பர். ஆனால், காற்றுப்பிசிறாமல் வெப்பு மிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும். உப்புநீர் உப்புத் தன்மை அமைந்த அல்லது உப்புக் கரைசலாய நீர் உப்பு நீர் எனப்படுதல் பொதுவழக்கு. உப்பு நீர் என்பதைக் கண்ணீர் என்னும் பொருளில் வழங்குதல் தென் தமிழ்நாட்டு வழக்காகும். கண்ணீர் உப்புத் தன்மை உடையைக் குறிக்கும் ஆட்சி இது. உம்மா குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படு கிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது யாய் என்றும், நின் தாய் என்பது ஞாய் என்றும் வழங்கப்பட்ட பண்டையோர் வழக்கை எண்ணலாம். என் அம்மா என்பதை எம்மா, எம்மோ என்பது நெல்லை, முகவை வழக்கே. எம்மோய் என்பது கம்பர் சொல். உமல் மீனவர் தம் மீன் கூடையை உமல் என்பது வழக்கம். மற்றைக் கூடைகளினும் மீன் அள்ளி வரும் கூடை - வலையில் இருந்து மீனைக் கொட்டும் வகையில் அகலமும் உயரமும் உடையதாக இருப்பதால் உமல் எனப்பட்டதாம். ஓங்கியும் ஏங்கியும் ஒலியெழுப்பி அழும் அழுகை ஓமலிப்பு என்பது தென்னக வழக்கு. உய்தம் உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது. உன் உய்தக் காரன் உன்னைத் தேடி வந்தான் என்பர். உராய்வு இல்லாமல், செல்ல வண்டி அச்சில் தடவும் நெய்க்கு - உயவு நெய் என்பது பெயர். உயவு > உய்வு > உய்தம் ஆயது. உயவு நெய் பசை மசை எனவும் வழங்குதல் உண்டு. பசை என்பது ஒட்டும் தன்மையது ஆதலால் நட்புக்கும் கொள்ளப் படும். அது பொருள் கருதிச் சேரும் நட்புக்கும் ஆயிற்று. உய்யக் கொண்டான் பழஞ்சோறு எனப் பொதுமக்கள் வழங்குவதை மாலியர் (வைணவர்) உய்யக் கொண்டான் என்பார். உயிர் உய்ந்து இருப்பதற்காக உண்ணப்படும் சோற்றை உய்யக் கொண்டான் என்றனர். அப்பெயரால் திருச்சி மாநகரை ஒட்டி ஓடும் கால்வாய் ஒன்று உண்டு. கடலைக்காய் காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே கூறுவர். ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர். உயிர்க்காரர் உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும். உயிர் பகுத்தன்ன (உயிரைப் பகுத்து வைத்தாற்போன்ற), ஈருடல் ஓருயிர், இருதலை ஒருபுறா, கவைமகவு என்பனவெல்லாம் உயிரொன்றிய காதலையும் நட்பையும் குறிப்பனவாம். உரக்குண்டு குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும். எ - கா: வெற்றிலைக் குண்டு (வத்தலக்குண்டு). கூத்தியார் குண்டு. (நட்டுவாங்கம் பிடித்தார்க்கு வழங்கப்பட்ட ஊர்) தழை இலை மட்கி உரமாவதற்காக இட்டுவைக்கும் இடம் குழியாக இருப்பதால், அதனைக் குண்டு என்னும் ஆட்சி உண்டாகி, உரக்குழியை உரக்குண்டு என வழங்குதல் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. உரட்டான்கை உரம் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான்; வலக் கையினும் இடக்கை வலிமையைப் பழகாமையால் வலிமை குறைந்ததாக உள்ளது அல்லது ஆக்கப்பட்டது. இடக்கைப் பழக்கம் உடையார்க்கு அக்கை வலிமை வலக்கையினும் மிக்கதாக இருத்தல் அறியத்தக்கது. உரட்டான்கை என்பது இடக்கையைக் குறித்தல் கருவூர் வட்டார வழக்காகும். சென்னைப் பகுதியிலும் அவ்வழக் குண்டாம். அது சென்றடைந்த தாகலாம். ஆ என்பது எதிர்மறை இடைநிலை. உரவி உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது. இடைவெளி மிகப்படப் பாய்ந்து செல்லும் பாய்ச்சையை (பாச்சையை) உரவி என்பது திருவில்லிப் புத்தூர் வட்டார வழக்காகும். உரம், உரன் என்பவற்றின் வழிவந்த பெயரீடு இது. உரிஞ்சல் உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி. செறிவுடைய செடி கொடி மரம் நிறைந்த காட்டில் சென்றால் அவை உரிஞ்சுதலும் குருதி வடியச் செய்தலும் அறியலாம். புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும். உருத்து அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது. என்மேல் அவன் மிக உருத்தானவன் என்பர். உருத்தானவன் உருத்தில்லாதவன் என்பது நல்லது பொல்லதில் வெளிப்பட்டுவிடும் என்றும் வழங்குவர். உரிமை மிக்க அன்பு உருத்து ஆகும். உரித்து என்னும் சொல் வழிப்பட்டது. உயிர் உரிமைச் சான்று அன்பே என்பது, அன்பின் வழியது உயிர்நிலை அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பவற்றால் விளங்கும். உருமால் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும், தலையை மிக உயரமாக்கிக் காட்டுவதாகவும் உள்ளமையால் இலக்கிய நலம் விளங்க உருமால் எனப்பட்டது. உரு = ஒளி; மால் = உயரம். இலக்கிய வழக்கும் பொது வழக்கும் இணைந்து நடையிடும் சொற்களுள் ஈதொன்று. இதனைப் பொதுவழக்கெனல் தகும். உருமிப்பு உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம். உருமம் > உருமிப்பு. ஒருமிப்பு என்றும் கூறுவர். உருமநிலை உண்டாயின் மழை பெய்யும் என்பர். உரும் = இடி. இதனைக் கருதலாம். இது தென்னகப் பொது வழக்கு. உருவாரம் பொ(ய்)ம்மை மண்ணால் செய்வதுண்டு. அவர்கள் மண்ணீட்டாளர், குயவர், வேளார் (வேள் = மண்) என வழங்கப் படுவர். குலாலர் என்பது பின்வழக்கு. வெண்ணிக் குயத்தியார் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர். குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை உருவாரம் என்பது தொழில் வழிவழக்கு ஆகும். ஆரம், வாரம் வளைதல் பொருள். வனைதல் என்பதும் வளைதல் பொருளதே. கலங்களும் பொம்மைகளும் வளைவமைப்பு உடையனவையே. உருவால் அரிசி வெந்தயம் என்பது மசாலைக்கும், மருந்துக்கும் பயன்படும் கடைச் சரக்குப் பொருள். அதன் வடிவமைப்புக் கருதித் தக்கலை வட்டாரத்தார் அதனை உருவால் அரிசி என்பர். உரு அழகாகும். வால் மிளகு, வால்பேரி - என்பவற்றை எண்ணலாம். உருளை ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது பணம் என்னும் பொருளில் வழங்கப்படு கிறது. சில இடங்களில் இதனை வட்டம், என்றும் சக்கரம் என்றும் வழங்குதல் உண்டு. காசு, பணம் என்பவற்றின் வடிவு கருதி வழங்கும் வழக்கம் ஈதாம். உருளோசு குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர். கடிகார வடிவும், முள்கள் சுழலும் வடிவும், சக்கரங்களின் வடிவும் உருளை யாதலால் இவ்வழக்கு ஏற்பட்டது. உலுப்பை பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு, ஈமொய்த்தல், எறும்பு மொய்த்தல் என்பவற்றை எண்ணுக. இனி நெல்லி, புளி முதலியவற்றை உதிர்த்தலை உலுப்புதல் என்பது வழக்கு. உலுப்பினால் கிளைகளைப் பற்றி அசைத்தால் கூட்டி அள்ளும் அளவுக்கு பொது பொதுவென உதிரும். அதுபோல் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும். உவச்சர் உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழுக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை உவச்சக்காணி என வழங்கப்படுதல் கல்வெட்டுச் செய்தி. குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார். உவை கள் என்பது பல என்பதன் இறுதி (ஈறு) எ - டு: அவர்கள், பூரியர்கள், மரங்கள். பயிருக்கு இடையூறாகச் செறிந்து கிடக்கும் புல் பூண்டுகள் களை எனப்படும். களைக்கொட்டு ஒரு கருவி. களை கட்டல் - தொழில்; அது களை வெட்டுதலாம். குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும். உவை செறிவு என்னும் பொருளில் வருதல் இது. உழவு உழுதல் தொழிலை உழவு என்பது பொது வழக்கு. ஆனால் மாட்டுத் தரகர், உழவர் ஆயோரிடை உழவு என்பது வயது என்னும் பொருளில் வழங்குகின்றது. உழுவதற்கு ஏற்ற வயது என்பது கொண்டு அதன் அடிப்படையில் இரண்டு உழவு, மூன்று உழவு என வயது மதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேந்தர் களின் ஆட்சியாண்டும், துறவோரின் ஆட்சியாண்டும் கணக்கிடப்படுவதை எண்ணலாம். உள்ளிங்கம் இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல் என்னும் பொருளன. உள்ளாக இழுக்கும் ஒன்று உயரம் தணிதல் வெளிப்படை. நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும் நல்லோர் இயல்பு. இது, கருமத்தால் நாணுதல் ஆகும். இத்தகு நாணத்தை உள்ளிங்கம் என்பது மதுரை வட்டார வழக்காகும். உளி ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப் படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். அவனை உளி என்றால் அவனைக் கூப்பிடு என்னும் பொருளதாம். உறக்காட்டுதல் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்கவைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென்னக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல், குருவி பொம்மை நிலா முதலியவை காட்டி அழுகையை நிறுத்திச் சோறூட்டி உறங்கச் செய்தல் என்பவை தழுவியது உறக்காட்டுதலாம். உறை உறைப்பெட்டி, உறைக்கிணறு, உறையாணி, தலையணை உறை முதலியவை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. அனைத்தும் வட்ட வடிவில் அமைந்தவை. உரலைச் சுற்றியமைந்த மேல் வட்டம் உறைப்பெட்டியாம். வட்டக் கிணறு உறைக்கிணறு ஆகும். இவ்வாறே பிறவும். உறைக் கிணறு இலக்கிய ஆட்சி பெற்றது. உறைபோடுதல், பூண் பிடித்தலாம். இவை தென்னகப்பொது வழக்குகள். உன்னம் வருங்குறி காட்டும் மரமொன்று உன்னம் என வழங்கப்படுதல் புறத்திணையில் உண்டு. உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு, திருச்செந்தில் வட்டார வழக்காகும். அவர் வளக்குறி காட்டுவதாக அதனைக் கொண்டு மீனவர் வழங்கிப் பொது வழக்காகியிருக்கலாம். ஊ ஊச்சுப்பிள்ளை ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகி விட்டால் இடம் சூழல் எண்ணாமல் பால் குடிக்க அடம் செய்யும். என்ன வகையில் ஏமாற்றினும் தன் எண்ணத்தை மாற்றாது. அவ்வாறு சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். ஊசன் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும். ஊசு - ஊச்சு = உள்வாங்குதல். உள்வாங்குதலை அன்றி வெயியிடாது வைப்பவன் ஊசன் எனப்பட்டான். ஊசிக்கால் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். கமலையிலும் குத்துக்கால் உண்டு. இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு. ஊட்டி அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது, உண்டு கழித்தலை உண்பது கொண்டு வழங்கப்பட்டதாகலாம். பாட்டி என்னும் சொல்லுக்குத் தொல்பழ நாளில் பன்றி என்னும் பொருள் இருந்ததைத் தொல் காப்பிய வழியே அறிய வாய்க்கின்றது. இனி ஊட்டி என்பது பூட்டியைப் பெற்ற ஓட்டியைக் குறிப்பதாகிய வழக்கு உரல் ஒரல், உலக்கை ஒலக்கை என்பவை போல உகர ஒகரத் திரிபாகலாம். ஊட்டு முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்; நெல்லை வழக்கும் அது. உண்ணச் செய்தல் ஊட்டுதல் ஆகும். ஊட்டுத்தாய், ஊட்டுப் புரை, ஊட்டி என்பவை நினைக. ஊடம் ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும். ஊடு புகுந்து (உள்புகுந்து) அறிவது ஊடம் ஆயிற்று. ஊத்தி ஊற்றி என்பது ஊத்தி என மக்கள் வழக்கில் உள்ளது. ஊற்றப்படும் பொருள் சேரும் இடம் வயிறு ஆதலால் அதனை ஊத்தி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். ஊர் சுற்றி ஊர் சுற்றி வருவாரை ஊர் சுற்றி என்பது வழக்கம். உலகம் சுற்றி, தெருச் சுற்றி என்பவையும் இவ்வழக்கினவே. கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர் சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது. ஊழையாடு மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம். ஒட்டாத சதை ஊழைச் சதை எனப்படும். ஆட்டு வகையுள் ஒன்றாகிய செம்மறியாட்டை ஊழையாடு என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு ஆகும். ஒழுகும் மூக்குக் குறித்தது இது. ஊழை என்பது சிலர்க்குப் பட்டப் பெயர். ஊற்றாங்கால் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ஊற்றாங்கால் என்பது கொங்கு நாட்டு வழக்கு. ஊற்று ஆம் கால்; கால் என்பது நீர்வரத்தாகும் வழியாகும். ஊறு ஊறு என்பது தொடுதல் உணர்வையும், இடையூறு என்பதையும் குறிக்கும். ஊறுதலால் மணற்கேணி ஊற்று எனப்படும். ஊறுகின்ற எச்சிலை ஊறு என்பது ஊறு என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. ஊறுகாய் ஊறுதலால் அமைந்தது. ஊன் தசை, புலால் என்னும் பொருள் தருவது ஊன். அது, எரியும் விறகில் இருக்கும் நீர் வடிவைக் குறித்தல் காரைக்குடி வட்டார வழக்கு ஆகும். ஊனீர் என்பதும் அது. எ எக்கச்சக்கம் எக்கம் = எக்குதல், மேலெழும்புதல். சக்கம் கீழே தாழ்ந்து குனிதல். இவ்விரண்டிற்கும் முடியாத அளவு நெருக்க மிக்க - அடைசலான - ஏராளமான நிலைக்கு எக்க சக்கம் என்பது தென்னக வழக்கு. எக்க சக்கமான கூட்டம் எக்க சக்கமான செலவு என்பவை வழங்குத் தொடர்கள். எக்கல் மார்பை மேலே தூக்குதல் எக்குதல்; எக்கல் எனப்படும். அதுபோல் அலை கரைமேல் ஏறித்தள்ளும் மணல் மேடு எக்கர் எனப்படுதல் இலக்கியப்பழ வழக்கு - எக்கர் என்பதன் போலியாக (ர் - ல்) எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது. எக்கு எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசு வர வட்டாரத்தின் வழக்காக உள்ளது. ஒக்கலை என்பது இடுப்பு என்னும் பொருளில் நாலாயிரப் பனுவலில் இடம் பெற்றுள்ளது. சுருங்கிய இடுப்பு அல்கு, அஃகு, அக்கு என் றாகும். அகர எகரத் திரிபாகவோ, ஒகர எகரத் திரிபாகவோ இஃது இருக்க வேண்டும். ஒக்கல் என்பது இடுப்பு என்னும் பொருளில் வருதல் நெல்லை மாவட்ட வழக்கு. எச்சு எச்சம் என்பது மிகுதி (மீதி)யாக வைத்துச் செல்வது என்னும் பொருளது. எஞ்சுதல் என்பதும் மிகுதல் பொருளதே. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் என்னும் குறளில் எஞ்சுதல் (மிகுதல்) என்னும் பொருளிலேயே வந்துளது. எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. சடுகுடு (கபடி) விளையாட்டில் எச்சுப்போதல் இளைத்துப் போதல் மூச்சுவிடுதல் என்னும் பொருளில் வரும். அது எய்ப்பு - இளைப்பு வழிப்பட்டது. எசனை இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக (இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு. இசைவு > எசைவு > எசனை ஆகியிருக்கலாம். ஒரு பலகையை மற்றொரு பலகையுடன் இசைப்பதை இசைவு என்பது எண்ணத்தக்கது. எட்டாக்கை எட்டாத நீண்ட கையைக் குறிக்காமல், மிகத் தொலை வான இடத்தைக் குறிப்பது வட்டார வழக்குச் சொல் லாகும். மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலிய வற்றை அது எட்டாக்கையில் உள்ளது; நமக்குப் போய்வர வாய்க்காது என்று கூறுவர். கை = இடம். எட்டுதல் = நெருக்கம். எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல் இறப்புச் சடங்குகளுள் எட்டு என்பது எட்டாம் நாள் நிகழும் பங்காளிகள் நிகழ்ச்சி. எழவு என்பது (இழவு) பதினாறாம் நாள், கொண்டு கொடுத்தவர் நிகழ்ச்சி. ஒன்றில் பங்கு கொண்டவர் மற்றொன்றில் பங்கு கொள்ளல் முறை யாகாது. ஆதலால் முறை கேடாகச் செயலாற்றுபவரை, எட்டுக்கும் கூடுவான்; எழவுக்கும் கூடுவான் என்பது தென்னக வழக்கு. இது பழமொழித் தன்மையும் அடைந்து விட்டது. எடுப்புத் தண்ணீர் நடவு போட்ட பயிர் மேலே நிமிர்வதற்கு விடப்படும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அதனைக் கங்களவு என்பதும் உண்டு. பயிர் நட்ட நிலையில் வாடிச் சாய்ந்து விடும். அது நிமிர விடும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர். இது நெல்லை, முகவை வழக்கு. எரிச்சல் இது எரிதல் பொருளது. எரிச்சல் எனவும் வயிற் றெரிச்சல் எனவும் வரும். ஆனால் அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரி பொருளாம். விறகைக் குறிக்கிறது. எரிப்பு என்பது விறகைக் குறித்தல் முகவை, நெல்லை வட்டார வழக்காகும். எரிசேரி எரி சேரி என்பது நாஞ்சில் வட்டார வழக்கில் குழம்பைக் குறிக்கிறது. எரிப்புச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி. அது காரக் குழம்பு என்பது. வற்றல் குழம்பு, சுண்டக்குழம்பு என்பவை முகவை, நெல்லை மாவட்ட வழக்குகள். அன்றியும் பொதுவழக்குமாகும். எருகுணி அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு. எருகுதல் அஞ்சுதல். அஞ்சுவார்க்கு நீரும் மலமும் அச்சமுற்றபோதில் பல் கால் வரும். எருகுதல் என்பது கழிதல். எரு என்பது மலம். அழுகுணி என்பதை எண்ணலாம். எல்லு எல் என்பது உரிச் சொல் எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். ஒளி என்னும் பொருள் தருவது. எல் = கதிரோன். பகல்பொழுது. நெல் - நெல்லு என்றும், பல் - பல்லு என்றும் சொல்லப் படுவதுபோல் எல் - எல்லு எனப்படும். எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது. எலும்பு வெண்ணிறமானது. எழுத்து எழுதப்படுவது எழுத்து என்பது பொதுவழக்கு. எழுத்து என்பது எழுதப்பட்ட கடிதத்தைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்காகும். என் எழுத்து வந்ததா? நீங்கள் போனதும் ஓர் எழுத்து எழுதுங்கள் என்பது உரையாடலில் வருவது. எழுதம் சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல் சுவரை விட்டுச் சொட்டுமாறு அமைக்கப்பட்ட நீட்டிய செங்கலை எழுதம் என்பது கொத்தர் வழக்கு. சுவர் முழுவதும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அமைப்பு அது. எழுதில்லக் காரி திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக் காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. திருமணச் சடங்கு கரணம் எனப்பட்டதும், கரணம் செய்வார் கரணத்தியலார் எனப்பட்டதும், மகளிர் நடத்தும் கரணச் சடங்கே நம் பண்டை மணச்சடங்கு என்பதை அகநானூறு (86) குறிப்பதாலும் இவ்வழக்கத்தின் மூலங்கள் அறியவரும். மேலும் பூப்பு நீராட்டு, திருமணச் சடங்கு என்பவை இந்நாள்வரை தொல்குடி வழியரிடத் தெல்லாம் மகளிர் நடத்துவதாகவே இருத்தலும் அறியத்தக்கது. ஏ ஏச்சல் ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு. இது ஏய்த்தல் என்பதன் கொச்சை வடிவு ஆகும். ஏச்சப் போட்டேன் ஏச்சுப் போட்டேன் என்பது கூத்துப்பாட்டு. ஏட்டை ஏ அடி என்பது ஏட்டி எனப் பெண்பால் விளியாவது பொது வழக்கு. ஏ அடா என்பது ஏடா என்பதும் பொது வழக்கே. ஏட்டைப் பருவம் என்பது இளமைப் பருவம் குறித்தல் இலக்கிய வழக்கு. ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும். ஏணை ஏண் என்பது உயரம். ஏணி உயரச் செல்வதற்கு உதவும் கருவி. ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும் தொட்டிலைக் குறித்தல் வட்டார வழக்காகும். ஏந்தல் கையில் எடுத்துத் தருதல், தூக்கித் தருதல் என்பவை ஏந்துதல் ஆகும். இது பொதுவழக்கு. உயரமான இடத் தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு. எ-டு: முத்தரசனேந்தல், முடிவைத்தானேந்தல், கொம்புக்காரனேந்தல். ஏமாசடை ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன் ஏமத்துக்கு வருகிறான் என்பது முகவை மாவட்ட வழக்கு. ஏமம் என்பது பாதுகாப்பு, பரிந்துவருதல் பரிந்து பேசுதல் என்பவை பாதுகாப்புக்கு உரியவையே. ஏமப் புணை என்பது திருக்குறள். ஏய்த்துவாழி (எத்துவாழி) பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர். ஏய்த்து வாழி என்பதன் பிழைவடிவு அது. வாழி = வாழ்பவன்(ள்). தட்டிக் கழித்தல், சாக்குப் போக்குச் சொல்லுதல் என்பவை எத்துவாழியர் கைம்முதல் சரக்காகும். இது தென்னக வழக்கு. ஏராளம் ஏர் உழவர்கள் களத்திற்கு வந்து உழைத்தவர் உழையா தவர் ஏழை பாழை எனப்பாராமல் இயன்ற வகையால் உதவுதல் வழியாக ஏற்பட்ட கொடைப் பெருக்கச் சொல் ஏராளம் என்பதாம். இது பொதுவழக்கு. ஏவக்கேள்வி விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ஏவக்கேள்வி என வழங்குகிறது. இன்ன வேலை என்பதற்கு இவ்வளவு எனக் கேட்டு அல்லது எழுதித் தந்து பெறுவது ஏவக்கேள்வியாகும். ஏவம் = ஏவப்பட்ட வேலை. கேள்வி = கேட்டு எடுத்தல். ஏறல் ஏறல் என்பது ஏறுதல் என்னும் பொதுப்பொருளில் வழங்குதல் எங்கும் உள்ளது. முறை மன்றத்தின் தீர்ப்பை ஒப்பாமல் மேல் முறையீடு செய்வதை ஏறல் என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. ஐ ஐந்தடித்தல் அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம் பொறி. அடித்தல் = அடித்துப் போட்டது போல் செயலற்றுக் கிடத்தல். சோம்பிக் கிடப்பவனை அஞ்சடிச்சுக் கிடக்கிறான் என்பது நெல்லை வழக்கு ஐயம் பிடுங்கி குறிகூறுதல் என்பது வருபவர் முகக்குறி சொற்குறி கொண்டு கூறுவதே வழக்கம். குறிகண்டு கூறுவார் கூறிகூறுவார் ஆவர். குறிப்பறிதல், குறிப்பறிவுறுத்தல் என்பவை திருக்குறள் அதிகாரத் தலைப்புகள். கொண்டுவரும் செய்தியறிந்து அதற்குத் தகக் கூறுபவர் கோள் + தாங்கி = கோடாங்கி எனப்படுவார். குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ஐயம் பிடுங்கி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஐயர் கொங்கு நாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர் ஐயர் என்றும் ஐயார் என்றும் மிக இயல்பாக வழங்கப் படுகிறது. ஐயன் என்பது தந்தையின் பெயர். அவனுக்குப் பின் குடும்பப் பொறுப்புடையவன் அண்ணன் தம் ஐயன் (தமையன்) என்பதால் அறியலாம். முன்னின்று மொய்யவிந்தார் என் ஐயர் என்பது தந்தையைக் குறிக்கும் இலக்கிய ஆட்சி. ஐயா ஐயா என்னும் விளிச்சொல் தென்னகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல். ஆனால் சென்னைப் பகுதியில் அப்பா என்னும் சொல்லே மதிப்புமிக்க சொல். இச்சொல்வழக்கு அறியாமல் பேசுவதால் இடர்ப்பாடு உண்டாதலும் கண்கூடு. ஐவணை ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. திருமணத்தின் போது பூட்டப்படுவது அது. வணை என்பது வளைவு (மோதிரம்) குறித்தது. வணங்குதல் = வளைதல். ஐவாந்தழை மகிழ்வாக வாழும் வாழ்வின் அடையாளங்களுள் ஒன்று மருதோன்றி அரைவை பூசி கால், கைகளைச் சிவப் பேற்றல். இனிய வாழ்வின் அடையாளமாகக் கொள்வதால் மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப்படுகின்றது. ஐ = அழகு. வாழும் என்பதில் ழு மறைந்து விட்டது. வீழ்வு - வீவு என்றும், வாழ்வரசி, வாவரசி என்றும் வழங்கப்படுவதை நோக்கலாம். ஒ ஒச்சம் ஒச்சம் = குற்றம். மாடுபிடிப்பவர் மாட்டில் சுண்டு, சுழி, பல், நடை, கொம்பு, வால் முதலியவற்றைப் பார்வையிட்டு, ஒன்றும் குறை இல்லை என்றால் ஒச்சம் எதுவும் இல்லை; வாங்கலாம் என்பர். ஒச்சம், குறை என்னும் பொருளதாம். உழவர், தரகர் வழக்கு இது. ஒட்டு ஒன்றோடு ஒன்று அல்லது ஒருவரோடு ஒருவர் ஒட்டுவது ஒட்டு ஆகும். செவியில் அணியப்படும் தோடு என்னும் அணிகலத்தை ஒட்டு என்பது செட்டிநாட்டு வழக்கு. ஒட்டியது போல் அணிவதால் ஒட்டு ஆகச் சொல்லப் பட்டிருக்கும். இனிப் பொன்னோடு மணியை ஒட்டிச் செய்யப்படும் அணிதோடு ஆதலால் அது கொண்டும் அப்பெயர் பெற்றிருக்கலாம். ஒடக்கான் ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பாறை மரம் ஆகியவற்றை ஒட்டிக் கிடப்பதால் ஒடக்கான் எனப்பெயர் பெற்ற தாகலாம். ஒடு, ஓடு என்பவை ஒன்றோடு ஒன்று இணைக்கும் இணைப்புச் சொற்கள். ஒடு - ஒடக்கு - ஒடக்கான். ஒடம்படி (1) மாடியில் ஏறுவதற்கு, படிக்கட்டு அமைக்காமல், ஏணிப்படி அமைத்து, அவ்வேணியை மாடித்தளத்தில் சார்த்தி, அதன் வழியாக ஏறும் வாயில் ஒடம்படி வாயில் என்றும், படி, ஒடம்படி என்றும் வழங்குதல் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள். அவ் வாயில் அடைப்பு, பூட்டு உடையதாக இருத்தலும் உண்டு. மாடியுடன் பொருந்திய படி உடன்படி என வழங்கி ஒகரத்திரிபு பெற்றிருக்கும். இது நாஞ்சில் நாட்டு வழக்கிலும் இருத்தலால் தென்னக வழக்கு எனலாம். ஒடம்படி (2) மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உடன்பட்டு ஏற்றுக் கொண்ட தொகை உடம்படி எனப்பட்டு, ஒடம்படி என உகர ஒகரத்திரிபாகி இருக்கும். உடன்படிக்கை - உடம்படிக்கை - ஒடம்படிக்கை என்பவற்றை நினைக. உடன்பாடு என்பது உடம்பாடு எனவருதல் வள்ளுவம். ஒடியன் ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது. கிழக்கை ஒடித்துத் துண் டாக்கிப் பயன்படுத்துவதால் ஒடியன் என்பதாம். ஒடுக்கம் துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும். ஒடுங்கி என்பது இறைமைப் பெயராகச் சுட்டும் சிவ ஞான போதம். தமிழகத் தென்பகுதிகளில் ஒடுக்கங்கள் பல திருக்கோயில் திருச்சுற்று பூந்தோட்டம் முதலியவற்றுடன் காணலாம். ஒடுக் கெடுத்தல் சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக் கென ஒலிவரச் செய்வது சுடக்கு - சொடக்கு - என்பது. அது ஒடுங்கிய அல்லது சுருங்கிய நரம்பு எலும்பு ஆயவற்றை இழுத்து நீட்டி விடுதல் ஒடுக்கு (சுடக்கு) எடுத்தல் எனப்படுகின்றது. ஒண்டிக்கட்டை ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக் கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. அதனை ஒற்றைப் பேரன் என்பதும் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி என்பது உத்திக்கு உத்தி என்பது போன்றதாம். ஒத்துமா ஒன்றோடு ஒன்று ஒன்ற - ஒட்ட - ச் செய்வது ஒற்றடம் - ஒற்று எனப்படும். இவை ஒத்தடம் (ஒத்தணம்) ஒத்து எனவும் வழங்கும். முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. மணப்பொடியை ஒத்துபஞ்சில் ஒத்தி எடுத்து முகத்தில் ஒத்துதலால் ஒத்துமா எனப்படுகின்றதாம். ஒதுக்கு மருந்து குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு மருந்து என்பது நாகர் கோயில் வட்டார வழக்கு. வேண்டாதவற்றை ஒதுக்கித் தள்ளுவதால் ஒதுக்கு எனப்பட்டது. பொங்கல் நாளில் பழையன கழித்தலும், தாறுமாறாகக் கிடக்கும் பொருள்களை ஒதுக்கி ஒழுங்கு படுத்துவதும் எண்ணத்தக்கன. ஒலுங்கு ஒல் என்பது ஒலி. ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி கேட்டவர், அவ் வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம். காதருகே வந்து பறக்கும்போது அதன் ஒலி மிக நன்றாகக் கேட்கும். காதுள்ளும் புகுந்தும் ஒலிக்கும். இது தென்னக வழக்கு. ஒழுங்கை வரிசையாகச் செல்லும் வண்டிகளை ஒழுகை என்ப தும், வரிசையாகச் செல்லும் எறும்புகளை ஒழுக்கு என்பதும் பழமையான இலக்கிய வழக்கு. ஒழுங்காக அமைந்த தெருவை ஒழுங்கை என்பது யாழ்ப்பாண வழக்கு. இவ்வாட்சியால் தெருவமைப்பு விளங்கும். ஒறுத்துவாய் ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண் வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறு வாய் ஆகிவிட்டது என்பர். அது பழங்காலத்தில் கதுவாய் எனப்படுதல் இலக்கிய இலக்கண ஆட்சிகள். மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்பவை தொடை வகை. அக்கதுவாய் கொறுவாய் எனப்பட்டதுடன் ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும். ஓ ஓக்காளம் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை வட்டார வழக்கு. ஓ என்னும் ஒலியுடன் வாந்தி எடுத்தலால் அவ்வொலிக் குறிப்பு அடிப்படையில் ஆயவை இவை. ஓசைவற்றல் காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு. காய்ந்த வற்றில் விதை ஒட்டாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். குரங்கு தன் குட்டியின் அழுகையை நிறுத்த வாகை நெற்றை அசைத்துக் கிலுகிலுப்பைபோல் ஒலித்துக் காட்டி அழுகையை அமர்த்துதலைச் சங்கச் சான்றோர் பாட்டில் காணலாம். ஓட்டன் பூட்டனுக்குத் தந்தையை ஓட்டன் என்பது முறை மரபு. ஓட்டனுக்குமேல் உறவில்லை என்பது பழமொழி. இவ்வோட்டன் என்னும் பெயர் தரகன் என்னும் பொரு ளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஓய்வில்லாமல் இங்கும் அங்கும் திரிந்து தரகு வேலை பார்ப்பதால் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஓடு வளை நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன. வளை என்பது மூங்கிலின் பெயர்களுள் ஒன்று. ஓடு என்பது நெடுமை குறிக்கும் ஒட்டு ஆகியது. ஓடை நீரோடை, யானை நெற்றி யோடை என்பவற்றையும் நெடிது ஓடுகின்ற ஒரு கொடியையும் குறித்தல் யாப்பருங்கல விருத்திச் செய்தி. ஓடையே ஓடையே ஓடையே ஓடை என்னும் பாடல் அது. ஓடை என்பது ஒடுங்கிய பாதையாகிய ஒற்றையடிப்பாதை நடைபாதை என்பவற்றைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்கு. ஆறு, வழியாதலை நினைக. ஓணி ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது. ஒன்றி, ஒண்டி, ஓரி என்பவைபோல ஓணி என்பது ஒற்றை என்னும் பொருளில் வழக்குப் பெற்றிருக்கலாம். ஒற்றையடிப் பாதையை ஓனி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. ஓம் ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு. அவ்வழக்கு குமரி மாவட்டத்திலும் உண்டு. நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; நீ ஓம் போட வில்லையே எனல் உண்டு. பாரதி அறுபத்தாறில் ஓம் என்பதுவே ஆமெனலாய் எனவரும். ஓமலிப்பு ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். மறுதலிப்பு என்பது போல, ஓமலிப்பு என்பது ஒப்புக் கொள்ளாமைப் பொருளில் வருகின்றது. பேதலிப்பு என்பது அச்சப் பொருளது. பொது வழக்கு. ஓர்சு ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது. களத்து வேலை ஓர்சு ஆகிவிட்டது. நெல் தூற்றி ஓர்சு ஆகிவிட்டது என்பவை வழக்குத் தொடர்கள். ஓர் ஒழுங்குபடுதல் ஓர்சு எனப்படு கின்றது. ஓரி ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை ஆகியவற்றை ஓரி எனல் இலக்கிய வழக்கு. ஓரி என்பது ஒற்றைப்பெரும் பேய் எனக் குற்றால வட்டாரத்திலும், நீளம் என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்திலும், ஒல்லி என்னும் பொருளில் மதுரை வட்டாரத்திலும் வழக்கில் உள்ளது. ஓலை எழுதுதல் திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு. இருவீட்டாரும் இசைந்து எழுதிய எழுத்து அது. இருவரும் ஊர்ப்பெரியவர் முன்னிலையில் அவர்கள் சான்றுடன் எழுதி அதன்படி மண நிகழ்வு நடத்துதல் வழியாக ஏற்பட்டது. கிறித்தவ சமயச் சடங்கிலும் ஓலை எழுதுதல், ஓலை வாசித்தல் என்பவை உண்டு. ஓலை என்பது திருமணக்கரணம். ஓலை வருதல் சாவுச் செய்தி வருதல் ஓலை வருதல் என்றும், சாவு வரும் என்பதை ஓலைகிழிந்து போகும் என்பதும் நெல்லை முகவை மாவட்ட வழக்கு. இறப்புச் செய்தி ஓலை வழியே அறிவிக்கப்பட்ட அடையாளம் இது. ஓவாய் பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு. ஓ என்பது ஏரி, குளம் ஆகியவற்றின் மடைநீர்த் தடுப்பாகிய பலகை. மதகு நீர் தாங்கும் பலகை என்பது அது. அப்பலகை எல்லாம் அகற்றப்பட்டது போன்ற வாய் ஓவாய். பொழுவாய் எனவும் வழங்கும். பொள்ளல் என்பது ஓட்டை. பொள் - பொளு - பொழு என ஆகியிருக்க வேண்டும். இதுவும் நெல்லை மாவட்ட வழக்கே. ஓவிதி ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை ஒழிவாக இருத்தல் என்பது தஞ்சை வட்டார வழக்கு. ஒழிவு பிற ஒழிந்து போதல். ஓவியம் ஓவியம் பொது வழக்கில் சித்திரத்தைக் குறிக்கும். நீதானா ஓவியம் அது என்ன ஓவியமாய்ப் போய் விட்டது என்னும் பேச்சு வழக்கில் அஃது அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. ஓவு கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல் நெல்லை மாவட்ட வழக்கு. ஒழிவு - ஒழிந்திருத்தல் - ஓவு ஆகலாம். நீங்குதல் ஆகிய ஒரூஉ என்பது ஓவு ஆவதும் சொல்லியல் முறையே. பல் போய ஓட்டை வாயை ஓவாய் என்பது எண்ணத்தக்கது. க கங்களவு: கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையின் தீத்துண்டைக் கங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. கங்கு + அளவு = கங்களவு. நடவு நிலத்தில் பயிர், நில வெப்பத்தால் வாடிப்போகாமல் இருப்பதற்காக நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு. எடுப்புத் தண்ணீர் என்பதும் அது. கங்கு: கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு. பொற்கொல்லர், கொல்லர் ஆயோர் கங்குகொண்டே பணி செய்வர். கரித் துண்டுகளில் தீப்பற்ற வைத்து ஊதி, அவர்கள் அதனைக் கொண்டு தம் பணி செய்வர். முன்னாளில் கங்கு கொண்டே தீப்பற்ற வைத்துச் சமைத்தல் வழக்கம், சிற்றூர்களில் இருந்தது. அதற்கெனத் தீக் கரண்டியும் இருந்தது. இது தென்னக வழக்கு. கங்களவு காண்க. கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு. கங்கு கரையில்லாமல் என்பது வழக்குத் தொடர். கச்சக்காய்: கச்சல் என்பது சிறு என்னும் பொருளது. சிறிய வாழைப் பழம் கதலி எனப்படுவதும், சிறிய மீன் கசலி எனப்படுவதும் பொதுவழக்கு. கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு. வடு என்பது மாம்பிஞ்சின் பொதுவழக்கு. கச்சாங் காற்று: தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்னக - குறிப்பாக - குமரி மாவட்ட வழக்கு. கச்சாங் காற்று வீசினால் மழைவரும் என்பர். கச்சு என்பது இறுக்கம், செறிவு. மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று. கச்சான்: சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள் வழியாக அமைந்த சொல். கச்சு என்பது சிறிதாய துணியால் அமைந்த மார்புக் கட்டு என்பதும், கச்சணம் என்பது ஆண்பால் அரையில் கட்டும் துணி என்பதும் கச்சு என்பதன் சிறுமைப் பொருள் காட்டும். இறுக்கப் பொருளும் உண்டு. கச்சக்காய் காண்க. கச்சம்மாள்: அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல் சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம் பட்டி வட்டார வழக்கு. இங்குக் கச்சு என்பது சிறு மக்களைக் குறித்து வருகின்றது. கச்சாடை: கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது. கச்சணம், கச்சணத் துணி தாய்ச்சீலை என்பவை நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள். கசண்டி: முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும். கசகசக்கும் வியர்வை யற்றது என்னும் பொருளில் வந்திருக்கலாம். வழு வழு என்று இருப்பதால் தலை வழுக்கைக்கும் தேங்காய் வழுக்கைக்கும் பெயராயிற்று. வழுவழுப்பு வழியாகப் பெற்ற பெயரே வாழை என்பது. கசம்: கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால் இருட்டுக் கசம் என்பர். ஒரு செறிந்த காடோ, வெளிச்சமிலா வீடோ இருண்டிருத்தல் இருட்டுக் கசமாக இருக்கிறது என வழக்கில் ஊன்றியது. இது முகவை, நெல்லை வழக்கு. கசவாளி: கயமை என்பது கயம் என்னும் இருண்மைப் பொரு ளது. இருண்மையுள்ளத்தான் கயவன்; கயத்தன்மையுடைய வன் கயவாளி (கசவாளி). கருமி எனப்படும் தன்மையானை அவன் ஈயாக் கசவாளி என்றும், கசவாளி என்பதும் தென்னக வழக்கு. கசாலை: மாடு கட்டும் தொழுவைக் கசாலை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். அது, அஃக சாலை (அக்கசாலை) என்பதன் முதற்குறையாகும். தவசம் கொட்டும் கொட்டி லும், காசு அடிக்கும் கொல்லுலையும் அமைந்த இடம் அஃக சாலை எனப்பட்டது. அக்கம் = தவசம், காசு வழங்கும். எ-டு: கசாலைத் தெரு (சேற்றூர்). மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று. கொற்கையை அடுத்துள்ள அக்காசாலை, பழைய அஃக சாலையாம். கசிப்பு: கசிதல் வழிதல், அன்பு செலுத்துதல் என்னும் பொரு ளது. கசிய மாட்டான் என்றால் இரக்கம் காட்டமாட்டான் என்பது. நீர் சொட்டுதல் இன்றி சிறிது பதப்படுத்தும் நிலையைக் கசிதல் (கண்ணீர்) என்பர். புன்கணீர் என்பது வள்ளுவம். பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளிதுளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப் பாண வழக்கு. கசிம்பு: தண்ணீர் ஒழுகுதல், வழிதல் வடிதல், கொட்டுதல், சொட்டுதல், துளித்தல், பொசிதல், கசிதல் என அளவுமிகுதி சுருக்கம் என்பவை பற்றிய பல பெயர்களைப் பெறும். கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு. கட்சி: விலங்கு தங்கும் இடம் கட்சி எனப்படுதல் பழமையான இலக்கிய வழக்கு. குகை என்பதும் அது. கண் மறைவான இடம் கட்சி. பின்னாளில் கட்சி என்பது பகை என்னும் பொருளில் வழங்கலாயிற்று. விளையாட்டில் எதிர்த்து ஆடுபவரைக் குறித்து, பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று. இக்காலத்தில் கட்சி; அரசியல், சாதிக் கூட்டுகளுக்குப் பெயராய்ப் பொது வழக்கிலுள்ளது. கட்சிகளைக் காட்ட வண்ணங்களே போதாத காலம் இது. கட்டக் கால்: குட்டைக் கால் என்பது கட்டைக்கால் ஆகிக் கட்டக்கால் என வழங்கப்படுவது இது. குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிபுத்தூர் வட்டார வழக்கு. கட்டப்பிள்ளை நெட்டப்பிள்ளை என்பது நாட்டுப்புறப் பாட்டு. கட்டணம்: வண்டிச் சீட்டுக்குத் தரும் காசு கட்டணம் எனப்படும். சரக்குக் கட்டணம், அஞ்சல் கட்டணம் என்பவை வழக்கில் உள்ளவை. கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பாடு என்பது படுதல்; கண்ணிமை மூடுதல்; உறங்குதல்; செத்தாரை எடுத்துச் செல்லும் படுக்கை அமைப்பு. கண்பாடு = உறக்கம். பாடிவீடு = படுக்கை இடம். கட்டைகளை வைத்துக் கட்டுதல் வழி வந்த பெயர் இது. கட்டளை: ஆணை என்னும் பொருளில் கட்டளை வருதல் பொது வழக்கு. கட்டளைக்கல் என்பது இலக்கிய வழக்கு. மக்கள் வழக்கில் கட்டளை என்பது வரம்பு செய்யப்பட்ட அளவு, பரப்பு என்னும் பொருளில் செங்கல் கட்டளை, கட்டளைக்கல் எனக் கட்டளை ஆட்சி உள்ளது. கட்டளை என்பது அளவிடப் பட்டது என்னும் பொருளது. கட்டாடி: கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு. கட்டு என்பது பொதி; பொதியைத் தோளில் முதுகில் கொண்டு செல்வதும், கழுதைமேல் ஏற்றிச் செல்வதும் இன்றும் அரிதாகக் காணும் காட்சிகளாம். நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை என்பது சங்கத் தொடர். கட்டாப்பு: தோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி கட்டாப்பு என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும். பொதுவில் தென்னக வழக்குமாகும். கட்டு ஆர்ப்பு > கட்டாப்பு = நெருக்கமாகக் கட்டுதல். கட்டான்: நரம்பு நார் ஆகியவற்றால் கட்டப்பட்டது உடல். ஆதலால் யாக்கை (ஆக்கை) எனவழங்கும். யாத்தல், யாப்பு என்பவை கட்டு என்னும் பொருளன. கட்டான உடல் என்பதை விளங்கச் செய்வது எலும்பு ஆகும். எலும்பைக் கட்டான் என்பது மதுரை வழக்கு. கட்டுக்கணி: இயற்கையான முடி இல்லாதவர் செயற்கையாக முடி செய்து கட்டுதல் உண்டு. அச் செயற்கை முடியைக் கட்டுக்கணி என்பது கொங்கு நாட்டு வழக்கு. கட்டுக்கணி = ஒட்டு முடி. கணி = கண்ணி. தொடுக்கப்படும் கயிறு, மாலை ஆகியவை கண்ணி எனப்படும். கட்டு சீலை: குளிசீலை என்பதும் தாய்ச்சீலை என்பதும் கோவணப் பொருளன. சீலை (சீரை) யில் இருந்து (கிழிந்த சீலையில் இருந்து) கிழித்து எடுக்கப்பட்ட துணியைக் கோவணமாகக் கொண்டதால் உண்டாகிய பெயர்கள் இவை. கோவணத்தைக் கட்டு சீலை என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கட்டை: மரத்துண்டம், குட்டை என்பவற்றைக் குறிக்கும் கட்டை, பொதுவழக்குப் பொருளது. ஆனால் அது துறவர் வழக்கில் உடலைக் குறித்து வழங்கியது. இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டும்? இந்தக் கட்டை சொல்கிறது என்பர். இது பொதுமக்கள் வழக்கிலும் வழங்கலாயிற்று. உடல் வேவதைக் கட்டை வேகிறது என்பது அது. கட்டைக் காலன்: கட்டை > குட்டை = உயரக் குறைவு. கட்டைக்காலன் என்பது கால் உயரம் குறைந்தவனைக் குறித்தல் பொது வழக்கு. நெட்டைக் காலனுக்கு மாறு. ஆனால், கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை மாவட்ட வழக்காக உள்ளது. கடகம்: கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், கடகக்கை புடைத்து என்று குறிப்பார். கடகம் வளைவு உடையது. பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும். கடகால்: நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற இறைபெட்டி போட்டு அள்ளி விடுவர். அது இருவர், நால்வர் செய்யும் பணி. நீரை ஒருவர் அள்ளி விடும் அளவில் அமைந்தது கடகால் (கடை கால்) எனப்பட்டது. அது, கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது. கடம்பால்: கடம் என்பது காடு, செறிவு என்னும் பொருளது. எ-டு: கடமா தொலைச்சிய கானுறை வேங்கை தலை காடாகக் கிடக்கிறது என்பது பேச்சு வழக்கு. செறிவுடைய அல்லது கெட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டாரவழக்கு. கடிப்பான்: முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு. மூட்டைக் கடி தாங்க வில்லை என்பது பேச்சு வழக்கு. கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு. கறித்தல் = கடித்தல். இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று என்பது குமரகுருபரர் வாக்கு. கடிப்பு: கடிப்பதும், கடித்துத் தின்னும் பொருளும் கடிப்பு எனப்படும். கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு குடிக்கும் தேநீர் கடிவெள்ளம் எனப்படுதல் மலையாள வழக்கு. இரு முனைகளும் கௌவிப் பிடிக்கும் இடுக்கி என்னும் கருவியைக் கடிப்பான் என்பது மதுரை, நெல்லை மாவட்ட வழக்காகும். கடுக்கன்: கடுக்கை என்பது கொன்றை. அதன் பூப் போன்றதும் ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப்படுதல் நெல்லை வழக்கு. முக்கட்டில் கல் உண்டு. கடுக்கனில் கல் இல்லை. இவை வேறுபாடு. கடுக்காய்: விரலால் குடைந்து எடுத்தலும், அதனை உண்ணலும் நுங்குதல் எனப்படும். நுங்கினான் பசிகள் ஆற என்பது இரட்சணிய யாத்திரிகம். அவ்வாறு விரலால் பதிக்க முடியாவாறு கெட்டிப்பட்ட நுங்கைக் கடுக்காய் என்பது நெல்லை வழக்கு. இனி, கடுக்காய் என்று வழங்கப்படும் மருந்துப்பொருள் கருமை என்னும் நிறப்பெயர் வழியது. கடுப்பான்: தயிர்மோர் விட்டு உண்பதற்கு ஊறுகாய் போன்ற மற்றொன்று துவையல் ஆகும். அது மற்றைத் தொடுகறி விடுகறி ஆகியவற்றினும் உறைப்பு தூக்குதலாக இருக்கும். அக் கடுமை கருதிக் கடுப்பான் என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு. வெற்று வற்றலை அரைத்தே காரத் துவையல் எனத் தொடலும் உண்டு. அதன் கடுப்பு கண்ணீர் வரவைக்கவும் வல்லது. கடுப்பு: கடுமை என்னும் பொருளில் கடுப்பு என்று வழங்குவது பொதுப் பொருள். அது கடுஞ்சினம், உள்வேக்காடு என்னும் பொருளில் வழங்குதல் வட்டார வழக்காகும். அவன் கடுப்பு இன்னும் தீரவில்லை என்பர். உன் கடுப்பு என்னை என்ன செய்துவிடும்? என்பதும் உண்டு. நீர்க் கடுப்பு என்பது வெப்பு மிகையால் ஏற்படும் துயர். இது தென்னக வழக்கு. கடைக் கட்டில்: வாழ்வின் முடிவில் கடைசியாகப் படுக்க வைக்கும் கட்டில் பாடை ஆகும். பாடையைக் கடைக் கட்டில் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். பாடைக்கட்டில் கால் இல்லாததாக இருக்கும். ஆதலால் அதனைக் கால் கழி கட்டில் என்பது சங்க நூல் வழக்கு. கண்டம்: துண்டு துண்டாய பெரு நிலப்பரப்பும், ஒரு பெரும் பொருளைத் துண்டு துண்டாக்கிய சிற்றளவும் கண்டம் எனப்படுதல் பொது வழக்கு. கணக்கிட்டுத் துண்டாக்குதல் கண்டிவைத்துத் தறித்தல் என்பர். சோதிடர் கணக்கிட்டு இந்த வயதில் உனக்குக் கண்டம் இருக்கிறது என்பதும் பொதுமக்கள் அவ்வாறு சொல்வதும் வட்டார வழக்காகும். கண்டம் என்பதற்கு முள் என்னும் பொருள் மருத்துவ வழக்கு. எ-டு: கண்டங்கத்திரி: பொது இலக்கிய வழக்கும் உண்டு. எ-டு: கண்டல் வேலி (சிலப்பதிகாரம்) கண்டல் = தாழை. குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும். கண்டு: உருட்டித் திரட்டப்படுவதைக் கண்டு என்பது வழக்கு. எ-டு: நூற்கண்டு, கற்கண்டு. இனி விளையாட்டுகளில் ஒன்று ஒளிந்து விளையாடல். அதனைக் கண்டுபிடித்தல் என்பர். கண்டு என்பது கண்ணால் கண்டு என்பது. கண்டுபிடித்தல் என்னாது கண்டு என்று அதனைக் கூறுவது குமரி மாவட்ட வாத்தியார் விளை வட்டார வழக்காகும். கண்ணப்பச்சி: அப்பச்சி என்பதுஅம்மை அப்பன் ஆகிய இருவரை யும் குறிப்பதாக இருந்து பின்னர் அப்பனை மட்டும் குறித்து வழங்குவதாயிற்று. அப்பு அப்பா; ஆண்பால்; அச்சன்: அதன் பெண்பால் அச்சி. அப்பு என்பதும் அப்பா என்னும் பொருளது. என்ன அப்பு என்பது இன்றும் வழக்கு. இக் கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும். அதுபோல் கண்ணம்மா என்பது அம்மாவின் அம்மாவைக் குறிப்பதாகவும் நெல்லை வட்டாரத்தில் உண்டு. கண்ணமுது: பாயசம் என்பது கன்னலமுது ஆகும். கன்னல் கரும்பு இனிப்பு. ஆழ்வார்கள் வழக்கில் கண்ணமுது என்பது பாயசக் குறிப்பினது. பெருமாள் கோயில்களின் விளம்பரப் பலகை களில் கண்ணமுது இடம்பெறும். சாற்றமுது (இரசம்) மிளகுசாறு முதலியவை. கண்ணி: கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும். எ-டு: கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி. கண்கள் போல் இணையாகத் தொடுக்கப்படும் மாலை கண்ணி எனப்படும். கண்ணி கார்நறுங் கொன்றை அகம். வெற்றிலைக் கொடிக் காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடி வரிசை கண்ணி என்று வழங்கப்படுதல் வெற்றிலைக் கொடிக்கால் வழக்கமாகும். கண்ணுக்கடி: பாம்பு கடித்தல், தேள்கடித்தல் என்பவை பாம்பு தீண்டுதல், தேள் கொட்டுதல் எனப்படும். கண்ணால் கடிப்பதுண்டா? பொறாமையால் பார்க்கும் பார்வையைக் கண்ணுக் கடி என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். வாயில்லாமல் செருப்பு கடிப்பது இல்லையா? பல் இல்லாமலே கண்ணின் கடியாகப் பொறாமை சொல்லப்படுகிறது. கணிசம்: அளந்து கொடுக்காமல் கண்ணால் அளவிட்டுத் தருவதைக் கணிசம் என்பர். இதற்கு ஏன் அளந்து கொண்டு; ஒரு கணிசமாகக் கொடுங்கள் என்பர். பின்னர் கையால் ஓர் அளவாகத் தருதல் கைக்கணிசம் எனப்பட்டது. கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும். இது நெல்லை வழக்கு. கத்து: கற்றவர் எழுதுவதும், கற்றவர் படிப்பதும் உள்ளமை யால் கடிதத்தைக் கற்று என்று வழங்கி, அது கத்து ஆகி யிருக்கலாம். குமரி மாவட்ட வழக்கில் கத்து, கடிதம் என்னும் பொருளில் வழங்குகின்றது. கதம்பை: தேங்காயின் மேல் அதன் பாதுகாப்புப் போல் நாரும், மட்டையும் உள்ளன. அவற்றில் நாரைக் கதம்பை என வழங்குதல் நாஞ்சில் நாட்டு வழக்கமாகும். கதம்பை என்பது வெப்பமானது, வெதுப்பம் தருவது என்னும் பொருளது. கதிரை: நான்கு காலுடையதை நாற்காலி என்பது போல் ஆறுகால் உடைய இருக்கைப் பலகையை அறுகாலி என்றார் பாவாணர். அறுகாலியைக் கதிரை என்பது யாழ்ப்பாண வழக்கும், தமிழகப் பரதவர் வழக்குமாகும். கந்து: கட்டுத் தறியைக் கந்து (தூண்) என்பர். கட்டற்ற ஒன்றைக் கந்தழி என்பது பண்டை வழக்கு. ஒரு பெருந்துணி கிழிந்து போனால் கந்தல் ஆகிவிட்டது என்பர். கஞ்சிக்கும் கந்தைக்கும் படும்பாடு, என்னபாடு? என்பர் வறியவர். இவை பொது வழக்குகள். மேகம் பிரிந்து தனித்தனியே திரண்டு நிற்றலை கந்து கந்தாக நிற்கிறது என்றும் கூட்டம் கந்துகந்தாகக் கலைந்தோடியது என்றும். துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம். கம்பக் கட்டு: கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடியைக் கம்புக்கட்டு என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், கம்பத்தில் (பெரிய கம்பு) கட்டி விடுவதால் கம்பக்கட்டு என்று குமரி மாவட்டத் திலும் வழங்குகின்றது. நிலத்தில் ஊன்றியோ, கிடத்தியோ வெடிக்கும் வெடியன்று ஈது. கமத்தல்: துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு. இது மதுரை மாவட்டம் பாலமேடு வட்டார வழக்காகும். ஈர நைப்பால் வரும் வாடையைக் கமத்து மணக்கிறது என்பது மதுரை, முகவை வழக்கம் ஆகும். கம்புக் கிழங்கு: குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக் கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். இதற்கு வட்டார வழக்காக ஏழிலைக் கிழக்கு, ஆல்வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கவலைக் கிழங்கு, மாவுக் கிழங்கு முதலிய பெயர்களும் உண்டு. கமலுதல்: ஒலித்தல் என்னும் பொருளில் பாலமேட்டுப் பகுதி யில் வழங்குகின்றது. அமலுதல், ஞமலுதல் கஞலுதல் போலக் கமலுதல் ஒலித்தல் பொருளில் வருகின்றது. கமலை என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற்பெயராகும். கமுக்கம்: வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு. கமுக்கக் கூடு (கம்புக்கூடு) என்பது தோள் பட்டையின் கீழ்வாய்க் குடைவு. அது பிறர் பார்வையில் படாத மறை - கமுக்கப் - பகுதி. அதுபோன்றது என்ற உவமை இஃதாம். கமுக்கல்: மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. அதுகாற்றுக்கு இயல்பாக வளைந்து நிமிர்தலால் அப்பெயர் பெற்றதாம். வளை என்னும் மூங்கில் பெயரும் அப் பொருளதே. கயந்தலை: யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு. கன்று கயந்தலை மீமிசைச் சொல். அல்லது ஒரு பொருள் பன்மொழி. கயந்தலை என்பது நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. கரண்டகம்: நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். கரகம் என்பது பழ வழக்கு. கமண்டலம், கமண்டலு என்பவை கம்பர் கால வழக்கு. சுண்ணாம்புக் கூட்டைக் கரண்டகம் என்பது பிற்கால இலக்கிய வழக்கு; தனிப்பாடல், காளமேகர். கரண்டு: நல்ல உடலுடன் இருந்தவன் - இருக்க வேண்டியவன் - வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பர். கர் என்னும் வேர்வழிவந்த இச்சொல் முதலாவதாக வண்ணம் குறித்து, அதன்பின் வளக்குறைவு குறித்து ஆயது. எ-டு: கரடு, குருதி சுண்டினால் சிவந்த உடலரும் கரியர் ஆதல் கண்கூடு. கரண்டு போனான்(ள்) என்பது முகவை வழக்கு. கரணம்: பொழுது என்னும் பொருளில் கரணம் என்னும் சொல் கருங்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. கரணம் என்பது திருமணச் சடங்கு ஆதலால், அது நிகழ்த்தப்படும் பொழுது கரணம் எனப்பட்டதாகும். கரப்பு: கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது கரவேல் என்பது ஆத்திசூடி. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறை யும் நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்; கரவிலார் தம்மைக் கரவார் ஒருபாடலில் இத்தனை கரப்புச் சான்று. கரப்பெண்: மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தரும் கொடைவிழாவாக மணவிழா நடந்தமையாலும் அதனை மணமக்களின் தாதா செய்தமையாலும் தாதா என்பதற்குக் கொடையாளர் என்னும் பொருள் உண்டாயது. அவ்வழிப்பட்டது கரப் பெண் என்பது. கரைப்பெண் என்பது கரப்பெண் எனவும் ஆகியிருக்கலாம். கரைப்பெண்டு காண்க. கரியாமணக்கு: ஆமணக்குப் போலும் இலையுடையதும், ஆமணக்கு இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் கரியாமணக்கு என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும். கரிக்கால்: வெள்ளையாட்டைப் பார்த்தால் கரிய ஆடுகளையும் காணலாம். ஆனால் வெள்ளையாடு என்பதே வழக்கு. இதனால் காராட்டை வெள்ளையாடு எனல் மங்கல வழக்கு என்றனர் இலக்கணர். ஆனால் கருவூர் வட்டார வழக்கில் வெள்ளையாட்டைக் கரிக்கால் என வழங்குகின்றனர். கரியிலை: காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங் கோடு வட்டார வழக்கு. காயும் ஒன்று கருநிறம் அடைதலும், சருகு ஆதலும் உண்மையால் கரியிலை சருகு இலையைக் குறித்து வழங்குகின்றது. கருக்கடை: பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மை யான முள் உடையது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும்வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு. கருக்கடை = அக்கறை. கரிசனை என்பதும் அக்கறைப் பொருளதாக வழங்கும். கருக்கு: குளம்பி(காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்ப தால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு. இனி இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்ப தாகக் குறிப்பிடுதல் உண்டு. அது முன்னது போல் பொருந்தி வரவில்லை. ஏனெனில் பொதுமக்கள் வழக்கு புனைவோ சிக்கலோ அற்றதாகவும் வெளிப்படையாகப் பொருந்திய பொருள் தருவதாகவும் இருக்கும். கருப்பம்புல்: கரும்பு புல்லினப் பயிராகும். அது கருப்பு என வருதல் மெல்லினம் வல்லினமாதல் என்னும் திரிபாக்க முறையால் வருவது. கருப்பம்புல் என்பது பொது வகையில் கரும்பைக் குறியாமல் விதைக் கரும்பைக் குறிப்பதாக எறையூர் (இறையூர்) வட்டார வழக்கில் உள்ளது. கருமத்த மாடு: இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர், எர், கர் என்னும் வேரடிச் சொற்கள் கருமைப் பொருளில் வருவனவே. கரைசோறு: மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும். கரைத்துக் குடிக்கும் கஞ்சி கரைகஞ்சி என்பது முகவை வழக்கு. கரைத்தல் = கூழாக்குதல். கரைப்பெண்டு: சிலதொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப் பட்டு வந்தன. அவற்றுள் கரை காவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை முறையால் வரும் அத்தொழில் போல் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப் பட்டிருக்கலாம். இது திருவில்லிப்புத்தூர் வட்டாரவழக்கு. கரப்பெண் என்பது காண்க. கல்மழை: மழைநீர் மிகு குளிர்ச்சியால் கல்லாகிப் பொழிவதை, ஆலங்கட்டிமழை என்பர். ஆலம் என்பது நீர். பனிக்கட்டி என்பது போல வழங்குவது ஆலங்கட்டி. அதனைக் கல்மழை என்பது மதுரை வழக்காகும். கல்லக்காரம்: அக்காரம் இனிப்பு: அக்கார அடிசில் என்பது கற்கண்டுச் சோறு. கல்லக்காரம் எனப் பனங்கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும். கல்லுமுறி: கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும். இது திருப்பரங்குன்ற வட்டாரவழக்கு. முறி என்பது எழுத்து ஓலை. கல்லே எழுத்து முறியாகக் கொள்ளப்பட்ட கல்வெட்டை நோக்கலாம். முறியில் எழுதப்பட்டதே கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட பழவரலாற்றுச் சான்றும் ஆகலாம். கலவடை: கலங்கள் ஏனங்கள் வைப்பதற்குக் கட்டும் மேடையைக் கலவடை என்பது கட்டடத் தொழிலாளர் வழக்கு. சுமை அடை என்பது போன்றது, கல அடை. கலவன்: பயிர் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி மிகுதியாக இருப்பதைப் பயிர் கலவனாக இருக்கிறது என்பது உழவுத் தொழில் வழக்காகும். நெருக்கமாகப் பயிர் இருந்தால் பயிர் கலப்புக்காகப் பறிப்பது வழக்கம். அதற்குக் கலைப்பு (கலப்பு) என்பது பெயர். கலவித்து விட்டு: சண்டை போட்டு விட்டுப் போவதைக் கலவித்து விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது கிள்ளியூர் வட்டார வழக்கு. கலகம் செய்தல் என்பது சண்டை போடுதலைக் குறிக்கும் பொது வழக்கு. கலகம் செய்து என்பது கலவித்து என ஆயது. கலகம் கலவு ஆயது இது. கலுசம்: கால் சட்டை என்பதைக் கலுசம் என வழங்குதல் விளவங் கோடு வட்டார வழக்காகும். கால் சராய் என்பது தென்னகப் பொது வழக்காகும். இன்னும் அரைக்கால் சட்டை என்பதும் மக்கள் வழக்கே. கவ்வாங்கல்: கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும். கவ்வக் கலந்து என்பார் வள்ளலார். இரண்டறக் கலத்தல் அது. கல் கவட்டையில் இறுக்கமாக இருப்பது குறிக்கும் இது வில்லை இறுக்கிப் பிடிக்கும் கை (வில்லக விரல்) என்னும் சங்கத் தொடரை நினைவூட்டும். புலவர் வில்லக விரலினார் கவட்டை என்பது இருதலைக் கட்டை. கவை = இரண்டு கவட்டையைக் கவண்டி என்பது பேராவூரணி வட்டார வழக்கு. கவுட்டை என்பது கோவை வழக்கு. கவட்டை: மாட்டுத் தரகர் குழுமொழியாகக் கவட்டை என்பர். இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும். கவைத்தலை = இரட்டைத்தலை. கவைமகன் என்பார் ஒரு சங்கப் புலவர். கவைமகன் என்று கூறியதால் பெற்ற பெயர் அது. கவணி: தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. கவணுக்குப் பயன்படும் துண்டுத் தோல், பின்னர் மற்றைத் துண்டையும் குறிப்பதாகலாம். கவர்: ஒரு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலைக் கவர் என்பது உழவர் வழக்கம். ஒரு பனை மேலே இரண்டாகப் பிரிந்து செல்லுதலால் கவர்பனை என்னும் பேரும் ஊரும் பெரம்பலூர் வட்டாரத்தில் உண்டு. கவர்த்தல், பிரிதல். கவுல்: இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது. யானை தனக்குத் தீமை செய்த வரைப் பழிவாங்குவதற்குக் கன்னத்துள் கல்லை வைத்துக் கொண்டிருக்கும் என்னும் நம்பிக்கை வழி இப் பொருள் உண்டாகியிருக்கலாம். கவுள் = கன்னம். கவுளி: கைப்பிடி அளவாம் வெற்றிலையைக் கவுளி என்பது வெற்றிலைக் கொடிக்கால் காரர் வழக்கம். கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம். கவவுக்கை - சிலப். கழுத்திரு: கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார வழக் காகும். கழுத்தில் அணியும் திரு என்பதாம். மங்கலம், மங்கல நாண், மங்கல அணி என்பவை மங்கல மடந்தை என்பதன் அடையாளம் ஆதலின் அவ்வாறு கொள்ளப் பட்டது. கழுத்தேர்: கழுத்து ஏர்; முன் ஏரை அடுத்துப் பின்னே செல்லும் ஏரைக் கழுத்தேர் என்பது நெல்லைப் பகுதி வழக்காகும். ஈற்றடியை அடுத்த முன் அடியை எருத்தடி என யாப்பிலக்கணம் கூறுவதை எண்ணலாம். எருத்து = கழுத்து. கழுதைக்கால் கட்டில்: மடக்குக் கட்டிலின் கால் வளைந்து, ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பதால் ஒப்பு வகை கண்டு அதனைக் கழுதைக் கால் கட்டில் என்பது விருதுநகர் வட்டாரவழக்காக உள்ளது. கூரிய ஒப்புப் பார்வையும் நகைச்சுவையுணர்வும் கூடிய சொல்லாட்சி இது. களம்: மணலுக்கு அடியில் உள்ள கருமண்ணைக் களம் என்பது நெல்லை வட்டார வழக்காகும். களம் = கருமை. களர்மண் என்பது கருநிறச் சேற்றுமண்; அளறு என்பதும் அது. காலாழ்களர் என்பது வள்ளுவம். களித்தல்: கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச் சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும். களித்தல் என்பது விளையாடுதல் என்னும் பொருளில் முன்சிறை (முஞ்சிறை) வட்டார வழக்கில் உள்ளது. சிறை = காடு, அணை. களிம்புப் பால்: கட்டிபட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது. தடவு களிம்புகள் கட்டியாகவும் நீராகவும் இல்லாமல் இடை நிகர்த்த நிலையில் இருப்பதை அறியலாம். களிவெருட்டு: மஞ்சு வெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டராத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது. மகிழ்வாக வெருட்டிப் பிடிப்பதால் களிவெருட்டு ஆயது. ஏறு தழுவுதல் என்பது பழவழக்கு. மாடுபிடி என்பது வெட்சிப்போர். அது போர்த் தொடக்கம் இது வீரவிளையாட்டு என்பதுவேறுபாடு. கறங்குதல்: கறங்கு என்பது வட்டம், வளையம் என்னும் பொருளது. கண்களின் வடிவம் வட்டம்; அக்கண் வடிவாகச் செய்யப்பட்டது பலகணி; மான் கண் மாளிகை என்பது சிலம்பு. வட்ட வளையக் கண்களாக அமைத்த அதனைக் கறங்கு என்பார் கம்பர். கறங்கு கால் புகா என்பது அது. கறங்குதல் சுற்றி வருதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. கறி: காய்கறி, இணைச்சொல். மரக்கறி, ஊன்கறி என வழக்கு உண்டாயினும் கறி என்பது ஊனைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவும் வழங்குகின்றது. கறிக் குழம்பு கறி வைத்தல் என்பவை ஊன் வழியாகச் சொல்லப்படுவனவே. கறி என்பது உடல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கு. உங்களுக்கு உதவாமல் இந்தக் கறி இருந்து என்ன செய்ய என நெய்வேலியார் ஒருவர் வினாவிய வினாவுதலால் பொது வழக்கெனக் கொள்ள வாய்க்கின்றது. கறிக்காலி: கால் நடையைக் காலி என்பது பொது வழக்கு. ஊர் காலி மாடு, கன்று காலி என்பனவும் பெரு வழக்குகளே. ஊன் தேவை கருதி வளர்க்கப்படும் ஆட்டைக் கறிக்காலி என்பது ஒட்டன் சத்திர வட்டாரவழக்கு. கறிச்சை: கறங்கு என்பது, சுற்றுதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்குச் சொல்லாக இருப்பதால், அப்பொருள் அடியாகவே கறிச்சை என்பது வண்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. வண்டு என்பது வளைந்து செல்வது என்னும் பொருளதே. வண்டு கட்டுதல் என்பதை அறிக. ஒரு கால் முதற்கண் கறிச்சை என்பது கருநிற வண்டைக் குறித்து, பின்னர்ப் பொது வகையில் வண்டுக்கு ஆகியிருக்கலாம். கறுப்பு: கறுப்பு என்பது வெறுப்பு. கடுஞ்சினம் என்னும் பொருளில் வரும் சொல். கறுப்பு சிவப்பும் வெகுளிப் பொருள என்பது தொல்காப்பியம். சாராயம் என்பது மதி மருள - இருள - ச் செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது. கள் என்பது கருநிறப் பொருளில் வந்ததையும் அறிக. கன்றுத் தோட்டம்: நர்சரி எனப் பல இடங்களில் பூச்செடி, பழச்செடி ஆகியவை உண்டாக்கி விற்கப்படுகின்றன. ஏலத்தோட்ட வழக்காக ஏலப் பயிர் உண்டாக்கும் இடத்தைக் கன்றுத் தோட்டம் என்று வழங்குகின்றனர். கன்னக் கிடாரி: கிடாரி என்பது மாட்டில் பெண்; பசு, எருமை ஆகிய வற்றின் பெண்பால் கிடாரி எனப்படும். ஆண்பால் கடா எனப்படும். உறங்கியவன் கன்று கடாக் கன்று என்பது பழமொழி. பசு எருமை வளர்த்துப் பால் விற்பவர் கன்று போட்டுப் பெருகுதலைக் கருதுவார். ஆனால் உரிய பருவம் வந்தும் ஈனாக்கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது. கன்னிக் கிடாரி ஈனும். ஆனால் கன்னக் கிடாரி ஈனாதது. ஈனா வாழை என்பது போன்றது. கன்னல்: காலம் காட்டும் கருவிப் பெயராகவும் காலப் பெயராகவும் கன்னல் என்பது முன்னரே வழக்கில் இருந்தது. அக் கன்னல் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது. அது, மற்றைப் பெருவிழாக்களைப் போல் திங்கள், கிழமை, நாள் என்னும் அளவு பெறாமல் சிற்றளவுப் பொழுதில் நிகழும் விழாவுக்கு ஏற்பட்டு அதன் பின்னர்ச் சிறுவிழாப் பொருளில் ஆட்சி பெற்றிருக்கும். கன்னியாப் பெண்: கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு பேச்சில் வழங்கு கின்றது. என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். அவள் பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு வடமதுரை வட்டார வழக்காகும். கனைத்தான்: கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். உன்னை என்ன செய்கிறேன் பார்? என்பர். ஆனால், எதுவும் செய்யார் அத்தகைய சொல்வீரனைக் கனைத்தான் போ! எனல் நெல்லை வழக்கு. காக்கல்: குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு ஆகும். காங்கை: கங்கு என்பது தீ எரிந்து சூடுள்ள கட்டைத் துண்டு ஆகும். தீக்கங்கு என்பர். கங்கு > காங்கு ஆகிக் காங்கையும் ஆகி அவ் வெப்பப் பொருளில் காங்கை போதாது துணி தேய்ப்பதற்கு என்று வழங்குதல் சலவைத் தொழிலர் வழக்கமாகும். காசலை: காசலை = அக்கறை. இன்றைக்கு என்னவோ காசலையா வந்து பேசுகிறான்; நேற்றெல்லாம் கண் தெரியவில்லை என்பதில் புதிதாக வந்த அக்கறை புலப்படும். இது முகவை, மதுரை, நெல்லை வழக்கு. காசின்மேல் உள்ள பற்றால் அலையாக அலைந்து தேடுவது போன்ற அக்கறை இதுவாம். காண்டு: நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு என்பது மதுரை வட்டார வழக்காகும். காண்டு போலக் காந்தி என்பதும் (வயிறு எரிபவன், கண்ணெரிபவன், எரிச்சல்காரன்) வழக்கே. காணக்காடு: சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு. அதனைக் காணாமல் தப்ப எவருக்கும் முடியாது. அனைவரும் கண்டேயாக வேண்டிய காடு, சுடுகாடு அல்லது இடுகாடு (புதைகாடு) ஆதலால் காணக் காடு என்பது மெய்யியல் வழக்காக உள்ளது. கட்டைச் செலவு முதலியவற்றுக்குக் காசு (காணம்) வழங்குதலால் காணக்காடு ஆகும் என்பதனினும் இப் பொருளே சிறப்பினதாகும். காணல்: மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. குன்றேறி யானைப் போர் காணல் எளி தாவது போல் தடையறக் காண வாய்க்கும் மலையுச்சியைக் காணல் என்பது பட்டறிவின் வழிப்பட்ட சொற்படைப் பாகும். காடி: புளிப்புப் பொருளில் காடி வருதல் பொதுவழக்கு. உப்புக்கும் காடிக்கும் கூற்று என்பது வள்ளுவம். காடிக் கஞ்சி யானாலும் மூடிக்குடி என்பது பழமொழி. இனி, மாடு தின்பதற்காகப் போடப்படும் வைக்கோல் தடுப்புப் பலகையைக் காடி என்பதும், வண்டியில் மண், மணல் முதலியவை கொண்டு வரவைக்கப்படும் அணைப்பு காடி எனப்படுதலும் உழவர் வழக்கு. இது தென்னக வழக்காகும். காடி என்பதற்கு வண்டி என்னும் பொருள் கொள்வது மலையகத் தமிழர் வழக்கு. காது வடிதல்: காது வடிதல் என்பது காதில் இருந்து நீர், சீழ் ஆகியவை வடிதல் எனல் பொதுவழக்கு. ஆனால் காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு. கண்ணகியார் காதினை வடிந்து வீழ் காதினள் என்று இளங்கோவடிகள் கூறுவது எண்ணத்தக்கது. மதுரை, சிம்மக்கல்லை அடுத்துள்ள செல்வத்தம்மன் (கண்ணகி) சிலையைக் காண்பார் வடிந்து வீழ்காது காண்பார். காப்பாண்டி: பொருளைக் காப்பதில் எவருக்கும் அக்கறை யுண்டு. அப்படிக் காத்தாலும் அதனைக் களவு கொள்ளும் கள்வர்க்கு அதனைக் கொள்வதில் மிகவும் அக்கறையுண்டு. அதனால், காப்பான் பெரிதா? கள்வன் பெரிதா? என்றொரு பழமொழி உண்டாயிற்று. விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் காப்பானில் காப்பான் கள்வன் என்பதைக் காட்டுகின்றது. காம்புதல்: வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்னக வழக்கு. இறுகியும் சுவைமாறியும் கும்பிப்போன மணம் கொண்டும் இருக்கும் அதனைக் கும்புதல் என்பதும் உண்டு. கருப்புக் கட்டி காம்புகிறது கும்பிப் போய்விட்டது என்பர். காமாரம்: பொறாமையை அழுக்காறு என்பது இலக்கிய வழக்கு. அதனை வத்தலக்குண்டு (வெற்றிலைக் குண்டு) வட்டாரத் தார் காமாரம் என்கின்றனர். கா என்பது காய்தல்; வெதும்பல். உள் வெதுப்பால் சண்டைக்கு நிற்றல் காமாரம் எனப்பட்டிருக்கலாம். மாராயம் என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்று. அது மாரம் ஆகியிருக்கக் கூடும். காய்ச்சு வீடு: சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே. அட்டில் என்பது இலக்கிய வழக்கு. அடுமனை என்பதும் இலக்கிய வழக்கே. ஆக்குப்புரை என்பதும் அதன் பெயரே. காயடிகம்பு: ஆயர்கள் ஆடு தின்பதற்காக கருவேலங்காயை அடித்தும் பறித்தும் வளைத்தும் ஆட்டுக்கு ஊட்டுவர். அதற்கு உதவும் கம்பு ஆகிய தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும். இது, ஆயர் தொழில் வழக்கு. காயல் : காயல் என்னும் பெயருடைய ஊர்கள் தென்னகத்தில் பல உண்டு. புன்னைக் காயல், மஞ்சள் நீர்க் காயல்; இனி காயல் பட்டினம் உண்டு. அது முன் அடையாகக் காயல் கொண்டது. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால் ஏரி, குளம் என்பவை காயல் எனப்பட்டு, அவற்றையுடைய ஊர்க்கு ஆயன. காயல் என்பதற்கு ஏரி என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. சென்னையில் காயலாங்கடை என வழங்குகிறதே. காயல் என்னும் ஊரில் இருந்து சென்னையில் குடியேறிய வணிகர் கடை அது. பழைய இரும்பு வணிகம் செய்ததால் அவ் வணிகம் காயலாங்கடை எனப்பட்டது. காயலாங்கடை: பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ் வணிகத்திற்கும் அப் பெயர்க்கும் என்ன தொடர்பு எனின், அவ் வணிகம் முதற்கண் செய்தவர் காயல் பட்டினம் காயல் என்னும் பெயர்களைக் கொண்ட ஊரவராக இருந்தமையால் காயலான்கடை எனப்பட்டதாம். காரணவர்: மழையின்றி உலகில் எதுவும் இல்லை ஆதலால் உயிர் வாழ்வுக்கு மழைபெய்தலே (கார் + அணம் = காரணம் (மூலம்) என்றனர். அம்மழைபோல் குடும்ப வாழ்வுக்கு மூலமாக இருப்பவர் தாய் மாமன் எனப்படுவார். அவரைக் காரணவர் என்பது நாஞ்சில்-குமரி மாவட்ட வழக்காகும். சேரலர் நாட்டுப் பெருவழக்கும் அது. காரத் தோசை: பல்வேறு பருப்புகளும் அரிசியும் மல்லி, கறிவேப் பிலை, உள்ளி முதலியவும் ஆட்டி ஆக்கும் கெட்டியான தோசையை அடைத்தோசை என்பது பொது வழக்கு. அதனைக் காரத் தோசை என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு. காராட்டம்: போராட்டம் போர்; ஆட்டம் என்பது விளையாட்டு, போராட்டு என்பனவற்றின் பொது. ஆடு என்பது வெற்றி. புதுக்கடை வட்டாரத்தார் காராட்டம் என ஓர் ஆட்டம், வட்டார வழக்கில் கொண்டுள்ளனர். அது பொய்ச் சண்டை குறிப்பது. கார் அறிவு என்பார் வள்ளுவர். கார் ஆட்டம் என்பது பிறர் சண்டை என நினைக்கத் தாம் பொய்யாகச் சண்டை யிடுவதைக் காராட்டம் என்பது தேர்ந்த பார்வை யாம். காரை: மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் காரை என வழங்குகின்றனர். கார்காலத்தில் விளையும் நெல் கார்ச் சம்பா. கார்காலத்தில் விளைவதால் காரை என வழங்கி அதன் வைக்கோலை(தாளை)க் குறிப்பதாயிற்று. கால்: கால் என்பது சக்கரம், வட்டம், உருள் முதலிய பொருள் தரும் சொல். சகடக்கால் என்பது வண்டிச் சக்கரம். சக்கர - வட்ட - வடிவில் ஆக்கப்பட்ட இனிப்பு சக்கரை. பணம் அல்லது காசு வட்டவடிவில் செய்யப்பட்டதால் அதைச் சக்கரம், வட்டம், உருள் என்றும் வட்டார வழக்காகக் கூறுவர். குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்கு கின்றது. கால்கட்டு: வீட்டில் தங்காமல் அலைந்து திரிபவனையும், கட்டுப்பாடு இல்லாமல் பொறுப்பற்று இருப்பவனையும் உனக்குக் கால் கட்டுப் போட்டால்தான் சரியாகும் என்பது தென்னக வழக்கு. காலில் போடும் கட்டு, கால்கட்டு அன்று. ஒரு பெண் கழுத்தில் தாலிகட்ட வைத்து விட்டால், காலில் கட்டுப்போட்டது போல் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக் கொள்வான் என்பதாம். கால்கட்டு = திருமணம். கால் குத்தல்: திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால் குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கடலில் சென்றவர்கள் ஆங்கிருந்து திரும்பிக் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் ஆதலால், வருதல் என்னும் பொருள் தருவதாயிற்று. காலி: காலால் நடந்து செல்லும் பசு முதலியவற்றைக் காலி என்பது பொதுவழக்கு. கன்றுடன் கூடிய பசு, கன்று காலி எனப்படும். காலி என்பது இல்லை என்னும் பொருளில் வழங்குதலும் பெறும். வீடு காலி; கடை காலி; தட்டம் காலி என்பர். இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது. ஆனால், அவற்றில் உள்ளவை இல்லை என்பது இல்லை. காற்று(கால்) உள்ளது வேறொன்றும் இல்லை என்பது பொருளாம். இது அறிவியல் திறம் வாய்ந்த சொல்லாம். காவடி: காவுதடி = காவடி; காவுகின்ற (தாங்குகின்ற) அடி யுடைய தாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர் வழக்கில் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது. காவடி தாங்குவது போல் சமமான அளவில் ஊடு ஆணி ஒன்று மையமாக அமையத் தாங்கும் கோல் நுகக்கோல் என்பது எண்ணத் தக்கது. நுகத்தில் பகல் (நடு) ஆணி அன்னான் தஞ்சைவாணன் என்பது தஞ்சைவாணன் கோவை. காவணம்: பந்தல் என்பது பொதுச்சொல். பொலிவுறுத்துதல், தொங்கல் ஒப்பனை அற்றது. ஆனால் காவணம் பொலி வுற்றது. தொங்கல் ஒப்பனை உற்றது. காவணம் என்பது திரு மண மேடை குறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு. மணப்பந்தல் என்பது வெளிப்பட மங்கல விழா நிகழிடம் காட்டும். பந்தல் அவ்வாறு காட்டாது தண்ணீர்ப்பந்தல், கொடிப்பந்தல் என்பனவும் உண்டு. காவுதல்: காவினேம் கலமே என்பது புறநானூறு. ஔவையார் சொல் காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது. காவட்டு, காவடி, காவி என்பவை தாங்குதல் பொருள் உடையவை. பிறர் துயர் தாங்குதல் அடையாளச் சான்றாகக் கொண்ட காவி, எண்ணம் இலாரால் வண்ண அளவில் பொருள் அமைந்து விட்டது. எண்ணத்தொடு கூடிய வண்ணம் தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்று பாராட்டப்படும். காளாஞ்சி: வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. காளாஞ்சி ஏந்துவார் என்பது ஒரு பணிவிடையர். காளாஞ்சி என்பதற்குத் தளுகை என்பது நெல்லை மாவட்ட வழக்கு. காளம் என்பது கருமை, காகம் என்னும் பொருளது. காகளம் என்பதும் அது. காக்கைக்கு முதற்கண் தெய்வப் படையலாக உணவைப் படைத்து வழங்கும் வழக்கத்தால் தளுகைப் பொருள் ஏற்பட்டிருக்கும் கோயில் திருப்பொருள் தளுகை ஆகும். தளி = கோயில்; தளிகை (தளுகை) கோயில் உணவு. கல் தளி, மண் தளி; கோயில் கட்டடம் கல்லால் ஆயதும், மண்ணால் ஆயதும் பற்றியது. கான்: ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக் கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு ஆகும். காண்டு என்பது கொடிக்கால் இடைவெளிப் பெயராக இருப்பதை அறியலாம். கால் என்பது வாய்க்கால். இரண்டு வரிசைக்கும் இடையே உள்ள கால் கான் ஆகும். பால் மொழி, பான் மொழி என்றாவது போல் கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது. கானக்கரை: கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. சுடலைக் கானம் என்பது மணிமேகலை. சுடுகாட்டுக் கோட்டம் என்பதால் அது கோயிலாகக் கொள்ளப் பட்டமை புலப்படும். காடும் கரையும் என்பது இணைச்சொல். கிச்சடி: பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு. பச்சடி கிச்சடி என்னும் வழக்குக் கொண்டு பின்னதை எடுத்திருக்கலாம். கிச்சடி என்பது நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய சட்டினியைக் குறிப்பதாக உள்ளது. கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை; மெல்லிய அரிசியுடையது. கிச்சு: கிச்சு என்பது தீ என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. கிச்சுக் காட்டுதல், கிச்சங்காட்டுதல் என்பவை நகைப்பூட்டல். தீயை உராய்ந்து பற்ற வைத்து ஒளியூட்டச் செய்தலால் கிச்சு என வந்திருக்கலாம். கிச்சு முச்சு என்பது இணைச்சொல். கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சு முச்சு ஆகும். கிச்சு முச்சு இல்லாமல் விளையாடுங்கள் என்பது பெரியவர்கள் விளையாடும் சிறுவர்க்கு இடும் கட்டளை. கிட்டணி: கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு. கிட்டத்தில் = பக்கத்தில். அணி - அண்மையான இடம் இரண்டும் ஒரு பொருள் பன்மொழியாய் - மீமிசைச் சொல்லாய் - வழங்குகின்றது. மிகப் பக்கம் எனக் குறிப்பது அது. கிடுகிடுப்பான்: குடுகுடு என ஒலிக்கும் கருவியும், கருவியுடையவனும், குடுகுடுப்பை, குடுகுடுப்பைக்காரன் எனப்படுதல் வழக்கம் கிடுகிடு என நிலமதிர்ந்து, கட்டடங்கள் சரிந்து சாய்ந்து இடிந்து போகச் செய்யும் நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. சொல்லாலே நிகழ்நிலை காட்டும் செறிவுடைய சொல்லாட்சி இது. கிடை: நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும். நிலத்தில் உரத்திற்காக ஆடுகளைக் கிடைபோடுதல் உழவர்கள் - ஆடு மாடு மேய்ப்பவர்கள் வழக்கமாகும். ஆட்டுக்கிடை போலவே மாட்டுக்கிடையும் உண்டு. கிடக்க வைப்பது என்பது கிடையாய், ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும். இது தென்னக வழக்கு. கிண்ணுதல்: கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும். நின்றவன்தான்; எங்கோ கிண்ணி விட்டான் என்பது வழக்கு. ஓட்டத்தில் கால் இடுப்பு ஆயவற்றின் கிண்ண மூட்டுகள் விரைந்து செயல் படுதல் வேண்டும். அச் செயல் குறித்து எழுந்த சொல் வழக்கு இதுவாம். இது முகவை, நெல்லை வழக்கு. கிந்துதல்: நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு. என்ன கிந்திக் கிந்தி நடக்கிறாய்? காலில் அடிபட்டு விட்டதா? முள் தைத்து விட்டதா? என்பர். கிண்ணுதலுக்கு எதிரிடை கிந்துதல் ஆயிற்றுப் போலும். கிள்ளுதல்; விளையாட்டாகவும், தண்டிப்பாகவும் கிள்ளுதல் உண்டு. கிள்ளுதல் நகத்தால் கிள்ளுதல் (தோண்டுதல், வலிவரச் செய்தல்) கிள்ளி உண்பது கிள்ளை, கிளி. இங்கே கூறப்படும் கிள்ளுதல் கொடிக்கால் வழக்காகும். வெற்றிலை பறித்தலை அது குறிக்கும். கிள்ளி எடுக்கும் ஓலையும் ஓலைக் கடிதமும் கிள்ளாக்கு எனப்படுதல் கடந்த கால வழக்கு. திருப்பூர் வட்டார வழக்கில் இவ்வாட்சி மிக உள்ளது. கிளிக்கால்: கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக் காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற் குத்துக்காலை, கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. உவமை வழியால் ஆளப்பட்ட வழக்கு இது. கிளித்தல்: கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை என்பது பழிப்புச் சொல். கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல். கிளி சொல்லியதைத் திரும்பச் சொல்லுதல் போல் பல்கால் சொன்ன வசையைச் சொல்லல். கிளத்தல் = பேசுதல். கிளித்தல், வைதல். இது நெல்லை, முகவை வழக்கு. கிளையல்: கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்கு கின்றது. கிண்டுதல் கிளறுதல் என்பவை தோண்டாமல் பரவ இழுத்தல். பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண் வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும். கீரி: கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர். கீர் கீர் என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது கீர்வாணம் எனப்பட்டது. சங்கு அறுக்கும் அறுவை கீர் எனப்படுவதால், கீரு கீரு என அறுத்தல் என வழங்கப்பட்டது. இது பொது வழக்குச் சொல். கீறி: விறகைக் கீறுதல் - பிளத்தல் - பொதுவழக்கு. கீறல் என விரல் வரி வைப்பதும் பொது வழக்கு. கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும். கீறுதல் - கிண்டுதல் - கிளறுதல் செய்யும் கோழியைக் கீறி என்பது அரிய வட்டார வழக்காகும். பொது வழக்காகக் கொள்ளத் தக்கதும் ஆகும். குக்கு: உட்கார் என்பதைக் குந்து என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது நெல்லை முகவை வழக்கு. குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும். குச்சரி: கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக் கிராமம் குக்கல் முடங்கிக் கிடக்கும் நாய்க்கும், கோழிக்கு வரும் ஒடுக்க நோய்க்கும் பெயர். குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது. குச்சு அரி, குச்சரி. குச்சு = சிறியது; அரி = அரிசி. குச்சு வீடு என்பது காண்பது. குச்சுக்காரி என்பதும் கேட்பது. குச்சிக் காலி: குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் பெயராகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. குச்சி(தடி)யைக் கொண்டு சுற்றி வருவதால் அவர் பெற்ற வட்டார வழக்குச் சொல் இது. தடியான காவல்காரர் இதனைக் கேட்டு நகைப்பார். தடியுடைய காவல்காரர் கேட்டால் பகைப்பார். குசல்: குசல் என்பது கோள் என்னும் பொருளில் வழங்கும் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் குசலம் என்பது திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்கு. என்ன குசலம் பேசுகிறீர்கள் என்பர். குசலம் என்பது செய்தி என்னும் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு. குஞ்சாலம்: குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திரு. நயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. குஞ்சம் ஆடுதல் பொருள் அமைந்த ஊஞ்சலைக் குறிப்பதாயிற்று. அஞ்சல குஞ்சலம் என்பது தமிழ்நாட்டு விளையாட்டுகளில் ஒன்று. குஞ்சப்பா: குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக் குஞ்சிப்பல் என்பதும் உண்டு. இவை யாழ்ப்பாண வழக்காகும். குஞ்சப்பா குஞ்சியப்பா எனவும் வழங்கும். குட்டம்: நிலைக்கால் ஊன்றுதற்குரிய பள்ளத்தைக் குட்டம் என்பது கொற்றர் வழக்கம். கொற்றர் = கொத்தர். குட்டம் = சிறு, பள்ளம்; குளம் குட்டை இணைச்சொல் நீர்நிலைக் குட்டம் (ஆழநீர்) பழமையான ஆட்சியுடையது. குட்டை: குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப் பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப் பின்னலுடைய சிறு பெட்டி என்பதை எண்ணலாம். கொட்டு மண்வெட்டி, தேய்ந்த சிறு மண்வெட்டி. குடல் காய்ச்சல்: இது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல். டைபாய்டு என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது. இதனை பாவாணர் வழக்கில் கொண்டு வந்து பொதுமைப்படுத்தினார். வட்டார வழக்குச் சொற்களைப் பொதுப்பயன்படுத்தமாக ஆக்கும்போது அது மொழிவளம் ஆகின்றது. குடுமை: சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு அலைக்கழிக்க வாய்ப்பது கூந்தல் ஆகும். கூந்தல் பெண்களுக்குரியது. ஆண்கள் குடுமிக்குரியர் குடுமி பொதுமை குறித்து வருவதுடன் மதில் முதலியவற்றின் உச்சியும் குடுமியாகக் கூறப்படும். குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்பது ஒரு புறத்துறை. குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் சண்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. குடுவை: குறுகிய வாயையுடைய கலம் குடுவை எனப்படும். குடுவை என்பது வயிறு என்னும் பொருளில் கன்னியா குமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது. குறுகிய குடல் வழியாகப் பெருங்குடல் வயிறு என உணவு செல்வதால் குடுவைப் பொருள் கொள்ள வாய்த்துள்ளது. வைப்புழி (வைக்கும் இடம்) என்றும் வள்ளுவத்தை எண்ணலாம். இனி, குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம். குடை: குடை என்பது கைக்குடை, தாழங்குடை, ஓலைக் குடை எனப் பழமை தொட்டுப் புதுமை வாய்ந்தது. பதனீர் குடிக்கும் மடலும், ஊன் கொண்டு செல்லும் மடலும் குடையெனலும் பழமை வழக்கே. மலையைக் குடையாகப் பிடித்த தொன்ம (புராண)ச் செய்தியும் உண்டு. மலையில் குடைந்து படுக்கை (பள்ளி) அமைத்த குடைவரைகள் தமிழகத்தில் காணக்கூடியது. இக்குடை, உள்ளே தோண்டுதல் பொருளது. மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது. குடை வண்டி: மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்னக வழக்கு. பரியதொந்தியுடையவர்களைக் குடை வண்டி என்பது கல்குளம் வட்டார வழக்காகும். வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு. குடை வரை: குடை வரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது. தொல்பழ வாழ்வுக் குறிப்பினது அது. குத்தடி: சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி என வழங்கப்படு கின்றது. குத்தப்பட்ட அடிநேராக இருந்தால் அன்றி, அதில் ஊன்றப்படுவதும் நேராக இராது. ஆதலால் இப்பொருள் கொண்டது. தானம் = இடம். குத்தானம் = நேர். இது கொத்தர் வழக்கு. குதம்பி: சேவு ஓமப்பொடி ஆயவை தேய்க்கும் கரண்டியைக் கண் கரண்டி என்பது பொது வழக்கு. அக்கரண்டியில் மாவை வைத்துக் குதப்புவதுபோல் இங்கும் அங்கும் தேய்த்து எண்ணெய் காயும் எரிசட்டியில் விடுவதால் அக் கரண்டிக்குக் குதம்பி என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும். குதம்பை: தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு. குதம்பை, காதணி எனப்படுவது பொது வழக்கு. காதணி அணிந்தவளை விளித்துப் பாடிய சித்தர் குதம்பைச் சித்தர். வெப்பத் தன்மையுடைமையால் தேங்காய் நார் குதம்பை ஆயதாம். குதுகுதுப்பு = குளிர்காய்ச்சல். கதம்பை என்னும் நாஞ்சில் நாட்டு வழக்கைக் காண்க. குதிர்தல்: பூப்படைதல் என்பதைக் குதிர்தல் என்பது பார்ப் பனர் வழக்கு. குதிர் என்பது நெற்கூடு. அது அசைவின்றி அமைந்திருப்பது போல ஓரிடத்திருக்கச் செய்தலைக் குதிர்தல் என்கின்றனர். குதிரை: குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது கொற்றர் (கொத்தர்) வழக்காகும். குதிரையின் கால்கள் உயர மிக்கவை. ஓட்டத்திற்கு வாய்ப்பானவை. குதை: வில்லில் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை என வழங்குதல் இலக்கிய வழக்கு. பூட்டுவாய் என்னும் அப் பொருளில் தச்ச நல்லூர் வட்டார வழக்காக இன்றும் உள்ளது. குந்தம்: குத்து கருவியுள் ஒன்று குந்தம். குந்தம் வாள் ஈட்டி என்பார் கவிமணி. குந்தம் என்னும் சொல் குவியல் என்னும் பொருளில் முதுகுளத்தூர் வட்டார வழக்கில் உள்ளது. உப்புக் குந்தம் எனக் கூறப்படும் விளையாட்டும் உண்டு. கும்பல், குப்பை என்பவை போலக் குந்தம் என்பதும் குவியல் பொருள் தருதல் சொல்லியல் நெறியதாம். குந்துணி: குந்துதற்குரியது என்னும் பொருளில் குந்துணி என்பது நாற்காலியைக் குறிப்பதாகக் திட்டு விளை வட்டார வழக்கில் உள்ளது. குந்தாணி என்பது உரலில் மேல்வாய் மேல் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற வட்டத் தகடாகும். குடலும் குந்தாணியும் என்பது இணைமொழி. குப்பம்: குப்பம் ஊர்ப் பெயர்ப் பின்னொட்டாக வருதல் பெருவழக்கும் பொது வழக்குமாம். புகழ்மிக்க மேட்டுக் குப்பம் முதலாக எண்ணிலாக் குப்பங்கள் உண்டு. இக் குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண் டது ஒரு குப்பம் என்பது அது. முடிகளை ஒருங்கே கூட்டி அடுக்கி வைத்தலால் பெற்றபெயர். குப்பா: காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம், சின்னமனூர் வட்டார வழக்குகள் ஆகும். குவிந்து தொங்கும் வட்டவடிவால் பெற்ற பெயர் அது. கும்பா என்னும் உண்கலம் எண்ணத்தக்கது. குப்பாயம்: சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும். இதனைத் தென்னக வழக்கில் கேட்கலாம். குப்பி என்பது கொம்புப் பூண் கூந்தல் இறுக்கி. இவற்றைப் போல் உடலை இறுக்கிப் பிடித்து மூடுவது குப்பாயம் ஆகும். முன்னாளில் நாடக உடையாகப் பயன் படுத்தினர் நம்மவர். குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது. கும்பா: கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து வாய் அகன்று அமைந்த உண்கலம் - வெண் கலத்தால் ஆயது - கும்பா எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. சந்தனக்கும்பா என்பதும் உண்டு. கும்பு x கும்பா. கும்புக்குமாறு கும்பா. கும்பாட்டம் (கும்ப ஆட்டம்): கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல். சிலப்பதிகாரத்தில் வரும் பதினோராடல்களில் ஒன்று அது. இந்நாளில் கரகாட்டம் என்பதைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும். கும்பிடுசுவர்: கூரை, ஓடு வேயப்பட்ட கட்டடங்களின் குறுஞ் சுவர்கள் இரண்டும் முகடுவரை முக்கோண வடிவில் எழுப்பப்படுவது ஆதலால் அச் சுவர் அமைதியும் கும்பிடுவார் கை அமைதியும் ஒப்பு நோக்கிக் கும்பிடு சுவர் என்பது கொற்றர் வழக்காகும். கும்புதல்: கும்பி என்பது வயிறு. அது பொது வழக்குச் சொல் கும்பி கொதிக்கிறது என்பர். இனிக் கும்பி மணக்கிறது கருப்புக்கட்டி என்றும், அடுப்பில் இருந்து கும்புதல் வாடையடிக்கிறது என்றும் கூறுதல் உண்டு. கெட்டிபடுதலும் அடிப்பிடித்தலும் சுவை மாறலும் கும்புதலாம். கும்மாயம்: உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு, கும்முதல் திரட்டுதல். துணியைச் சலவை செய்ய அடிப்பர்; அதனைப் பின்னர்க் கும்முவர்; கும்முதல் திரட்டுதல் பொருளது ஆகும். கும்முதல்: துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர். கும்பல், கும்மி, குப்பல், குப்பை என்பனவெல்லாம் திரளல் கூடுதல் பொருளவேயாம். கும்முதல் நெல்லைச் சொல்வழக்கு. கும்மித் தப்பினால் அழுக்குப் போகும் என்பர். குமரி இருட்டு: கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும். அது விடியுங்கால் சற்றே இருட் செறிவு நீங்கும் நிலையைக் குமரி இருட்டு என்பது சீர்காழி வட்டார மீனவர் வழக்காகும். கடலுள் சென்றவர் மீண்டு விட்டதும், கடலில் செல்வார் புகாததும் ஆகிய கருக்கல் அல்லது வைகறைப் பொழுதின் இருட்டே குமரி இருட்டு. கன்னிமதில், மதில் குமரி என்பவை பகைவரால் தீண்டப்படாத மதில் என்பதைக் கருதுக. குரக்கன்: குரங்கின் கை போன்ற கதிர் உடையது கேழ்வரகு. அக் கதிரையும் அத்தவசத்தையும் குரக்கன் என்பது யாழ்ப்பாண வழக்காகும். குரக்குவலி: நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது. இனி கெண்டை வலி என்றும் கெண்டை புரட்டல் என்பதும் நரம்பு சுண்டி இழுப்பதாம். குரங்கு மட்டை: மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. இருபக்கமும் பற்றிப் பிடித்த கைபோல் தோன்றிய தோற்றத்தின் வழியாக ஏற்பட்ட வட்டார வழக்குச் சொல் இது. எனினும் அகரமுதலிகளிலும் இவ்வாட்சி பொது வழக்காகி யுள்ளது. குரால்: ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது இடையர் வழக்கம். வெடிப்பாகவும் எடுப்பாகவும் துள்ளித் திரிதல் குறித்த பெயர் இது. குர் > குரு > குருத்து > குருவி இவற்றை எண்ணினால் இதன் அடிப் பொருள் விளக்கமாம். இது தென்னகப் பொதுவழக்கு. குரு: பெரிய அம்மையைக் குரு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். வெப்பும் குருவும் தொடர என்பது சிலப்பதிகாரத் தொடர். நீர் கோத்த பெரிய அம்மைக் கட்டி வெண்ணிறமாகத் தோற்றம் தருதலால் இப் பெயர் பெற்றது. குருவும் கெழுவும் நிறனாகும்மே என்பது தொல்காப்பியம். குருச்சி: குரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பெறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒளி என்னும் பொருள் தருவது குரு. அது தொல் காப்பிய வழியது. விதையை முளைக்க வைத்தால் முளை ஒளியொடு வெளிப்படுதல் கண்கூடு. இதனைக் கொண்டு குருச்சி எனப் பெயரீடு செய்துள்ள வட்டார வழக்கு பொது மக்களும் புலமைப் பெருமக்களை ஒப்பவர் என்னும் எண்ணத்தை உண்டாக்கத் தவறாது. முளையைப் பாவை என்னும் பழந்தமிழ் ஆட்சியும் பாவை என்பது பார்வை வழி வந்தது என்பதும் கருதுக. பயிரின் குருத்தைக் காணின் அதன் ஒளிப்பொருள் வெளிப்படும். குல்லம்: வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும். பழகிக் கொண்டே பாழும் எண்ணம் வைத்து வீழ்த்துதற்குக் காலம் நோக்கியிருப்பவர் குல்லகமானவர் எனப்படுதல் பொது வழக்காகும். எனைத்தும் குறுகுதல் ஓம்பல், வினை வேறு, சொல்வேறுபட்டார் தொடர்பு என்பது வள்ளுவம். குழிசை: மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. மாத்திரை பெரிதும் உருண்டை வடிவில் இருப்பது. அதனால் முகிழம் என்பார் பாவாணர். முகிழ் என்பது மலரின் மொக்கு (மொட்டு) நிலை. மருந்து இடிக்கும் கல் குழியுள்ளது. அதில் இடித்துச் செய்வதால் - குழிக்கல்லில் இடித்துச் செய்வதால் - குழிசை எனப்பட்டது. குழிமாடு: குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது. இறந்தாரை அடக்கம் செய்ய, குழி தோண்டுவர் ஆதலால் அது புதைகுழி எனப்படும். இடுகாடு என்பதும் அது. மாடு என்பது பக்கம் என்னும் பொருளது இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் இடப் பொருள் உண்டு. மாடு நின்ற மணிமலர்ச்சோலை; அரசன் மாடு அணுகினான் இலக்கிய வழக்கு. கால்மாடு, தலைமாடு - மக்கள் வழக்கு. குழிவாசல் என இடுகாட்டை வழங்குதல் ஆண்டிபட்டி வட்டார வழக்கு. குழியல்: உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர். கும்பாவின் வட்டவடிவும், அது குழிவாக இருப்பதும் எண்ணியமைக்கப் பட்ட வட்டாரவழக்கு இது. கும்பு > கும்பல் > கும்பம் = குடம். கும்பு > கூம்பு; கூப்பு. குறடு: வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர். பற்றுக்குறடு, பாதக்குறடு என்பவை எடுத்துக்காட்டு. சுருண்டு ஒலிக்கும் வகையால் பெயர்பெற்றது குறட்டை. குறண்டி முள் வளைவினது. இவ்வட்டார வழக்குக் குறடு கடன் என்னும் பொருள்தருவது. கடன் கொடுத்தவர் படுத்தும்பாடும், கடன் கொண்டவர் படும் பாடும், அதிலிருந்து மீளமுடியா இறுக்கமும் நெருக்கலும் நோக்கினால் கடனைக் குறடு என்று வழங்கிய படைப்பாளியைப் பாராட்டலாம். சொல்லாலேயே வாழ்வியல் காட்டிய பண்பாடு இது. நெல்லை வட்டார வழக்காகும். குறிஞ்சி: அமர்வு இருக்கையாகிய நாற்காலியைக் குறிச்சி என்பது பொதுவழக்காகும். குறிஞ்சியில் இருந்து வந்த பெயரீடு இது. குறிச்சி புக்கமான் என்பது இலக்கிய ஆட்சி. குறிச்சி வேட்டுவர் குடியிருப்பு. மூங்கில் பிளாச்சு தப்பை ஆயவற்றால் பெரும் பாலும் இருக்கை செய்யப்பட்டமையால், அம்மூங்கில் தோன்றிய குறிஞ்சி நிலத்தின் வழியாக ஏற்பட்ட பெயர் ஆகும். குறி, குறம், குறவஞ்சி என்பவை கருதுக. மதம் கொண்ட யானையையும் மயக்கும் பண் குறிஞ்சிப்பண் என்பது அகப்பாடல். குறிஞ்சியைக் குறிச்சி என்பதும் உண்டு. குறிச்சிப் பெயர் ஊர்கள் பல; பாஞ்சாலங் குறிச்சி, கல்லிடைக் குறிச்சி. குறியமுண்டு: முண்டு என்பது துண்டு. முண்டும் முடிச்சுமாகக் கட்டை இருக்கிறது உடைப்பது அரிது என்பது வழக்கம். முண்டு என்பது சிறிய துணியைக் குறிப்பது சேரல வழக்கு. குறி என்பது மறைப்பிடம். அதனை மறைக்கக் கட்டும் துணியைக் குறிய முண்டு (கோவணம்) என்பது அகத் தீசுவர வட்டார வழக்காகும். குறிய என்பதும் சிறிய என்னும் பொருள் தருவதாயின் ஒருபொருள் பன்மொழியாம். சின்னஞ்சிறுதுணி என்னும் பொருளில் வரும். குறியெதிர்ப்பு: கொடுத்த பொருள் அளவுக்கு மீளக் கைம்மாற்றாகக் கொடுப்பது குறிஎதிர்ப்பு எனப்படுவது பழவழக்கு. புறநானூற்றுக் கால ஆட்சியது அது. அச்சொல் அப்பொருளில் அச்சுமாறாமல் கொங்குநாட்டு வழக்காக உள்ளமை, பயில வழங்கினால் மக்கள் வழக்கு இலக்கிய வழக்கு என இரண்டு இல்லை, ஒன்றே என்பதை மெய்ப்பிக்கும். குறியெதிர்ப்பை நீரது என்பது வள்ளுவம். குறுக்கம்: நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது. 100 செண்டு ஓர் ஏக்கர் என்பது நில அளவைக் கணக்கு. இடுப்பைக் குறுக்கு என்பதை எண்ணினால் தெளிவாம். குறுக்கும் மறுக்கும் என்பது இணைமொழி. சிலுவையைக் (+) குறுக்கை என்றார் பாவாணர். குறுங்கட்டு: நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர் பலகை (பெஞ்சு) என்னும் பொருளிலும், பெருவிளை வட்டாரத்தில் நாற்காலி என்னும் பொருளிலும் வழங்குகின்றது. கட்டுதல் அமைந்தது கட்டு, குறுங்கட்டு என்பது குறுங்கட்டி எனப்படுவதும் உண்டு. கட்டில் அளவில் சிறியது என்பது குறிப்பது, குறுமை ஒட்டு. குறும்பை: குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப் படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்குகின்றனர். குறுமை, சிறுமைப் பொருள் முன்ஒட்டு; குட்டி குறுமான்; குறுநொய். குன்னி: குன்னி என்பது சிறியது என்னும் பொருளது. குன்னியும் நன்னியும் என்பது இணைச்சொல். மலையில் சிறியது குன்று. குன்னி என்பது பேனின் முட்டையாகிய ஈர் என்பதைக் குறித்தல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். ஈர் சிறிதாதல் வெளிப்படை. குனித்தல்: குனித்தல் வளைதல் பொருளது. குனிதல் வழியாக அமைந்தது கூன். கூனி என்பதொரு பட்டப் பெயர்; நீர்வாழி ஒன்றும் கூனி எனப்படும். கல்குளம் வட்டாரத்தில் குனித்தல் என்பது நடமிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. குனித்த புருவமும் என்பது அப்பரடிகள் தேவாரம். கூட்டக்குரல்: கூவுதல், கூவிளி, கூக்குரல் கூப்பாடு என்பனவெல்லாம் கூவுதல் குரலெடுத்தல் வழியாக வழங்கும் வழக்குச் சொற்கள். நாகர்கோயில் வட்டாரத்தில் கூக்குரல் பொருளில் கூட்டக் குரல் என்பது வழங்குகின்றது. கூக்குரல் கேட்ட அளவில் கூட்டம் கூடிவிடல் கண்டு ஏற்பட்ட வழக்குச் சொல் இது. கூட்டான்: கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர். பலவகைப் பொருள்களையும் கூட்டி உணவாக்கும் இடமாதலால் அப் பெயர்க்கு உரியது ஆயிற்று. கூட்டாஞ் சோறு என்பது சிறுவர் சிறுமியர் சேர்ந்துண்ணும் நிலாச்சோறு ஆகும். கூட்டு அல்லது கூட்டுக்கறி என்பது தொடு கறி வகையுள் ஒன்று. கூட்டுக்காரி: தலைவி/தலைவன் சந்திப்பு கூட்டம் எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக் கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை நினைவில் கொள்ளுமாறு தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும். கூந்தல்: கூந்தல் = மகளிர் முடி. குடுமி = ஆடவர் முடி. கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனை யாகும். நுங்குக் காயைச் சீவித் தள்ளும் சிதறு சிப்பியைக் கூந்தல் என்பது பனைத்தொழிலர் வழக்கு. சீவுதல் வழியாக ஏற்பட்ட பெயர் இது. தலை சீவுதல் போல! கூமாச்சி: கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி என்பது சேற்றூர் வட்டார வழக்கு. ஆங்குள்ள உயரமான மலைக்குப் பெயர் கூமாச்சி என்பது. கூரக் காய்தல்: குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர் காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது. காலங்கள் காரே, கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் எனப் பகுக்கப்பட்டன. அவற்றுள் கூதிர் காலம் குளிர் நடுக்கக் காலமாகும். அக் கூதிர் என்பது தொகுத்துக் கூர் என்று நின்று குளிர் பொருள் தந்தது. கூர் > கூரம். கூராப்பு: மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு. கூர் ஆர்ப்பு கூராப்பு ஆயது. கூர்தல் என்பது மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல். ஆர்த்தல், கட்டுதல். எ-டு: மாரார்ப்பு (மாராப்பு) செறிந்து நிற்கும் மழைமுகிலைக் கூராப்பு என்பது இலக்கிய நயமுடையது. கூரை வேய்தலையும் எண்ணலாம். கூழன்: குட்டையான பலாமரத்தைக் குறும்பலா என்பர். கூழைப் பலா என்றார் ஔவையார். இக் குறும்பலாவைக் குமரி மாவட்டத்தார் கூழன் என்பர். கூழையன் = குட்டை யானவன்; கூழிக்கார் என்பது இந்நாள் வழக்கு. கூறை நாடு: கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது. ஊருக்கு நாடு என்னும் பெயரும் உண்டு. எ-டு: ஆண்மறைநாடு என்பது ஊர்ப்பெயர். கூறை நாட்டுப் புடவை திருமணத்திற்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டதால் கூறைப் புடவை என்பது கூறை நாட்டுப் புடவை என்பதுடன் திருமணப் புடவை என்னும் பொருளும் தருவதாயிற்று. கூறைச் சீலை என்பதும் அது. கூறோடி: நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு (கூறுவைத்து)த் தந்து அறுவடையை மேற்பார்க்கும் கண்காணியைக் கூறோடி என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும். கூறுவைத்தல் பிரித்துத் தருதல். அங்கும் இங்கும் சென்று கண்காணிப்பதால் ஓடி எனப்பட்டார். ஆளோடி, பாம்போடி என்பவை கிணற்றுச் சுற்றின் உள்வாய்த் திட்டு ஆகும். கூனிப்பானை: கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வளையப் பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு. பெரிய பானையை மிடாப் பானை என்பதை நோக்கலாம். கெடும்பு: குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. கெட்டுப்போன கரிய அரிசியைக் குறித்து, பின்னர் நொறுங்குக்குப் பொதுப் பெயராகியிருக்கும். கெத்து: கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடை யது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. முட்டைக்குக் கெத்துகிறது என்றும், முட்டைக்குக் கேறுகிறது என்றும் கூறுவர். இது முகவை, நெல்லை வழக்கு. அடைக் கத்துக் கத்துதல் என்பது தென்னக வழக்காம். கேறு = ஒலிக்குறிப்பு. கெத்தை: தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு. கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமைகுறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது. அதுபோல் ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும் சிறுமெத்தை கெத்தை என வழக்குப் பெற்றிருக்கலாம். கேதம்: ஏதம் என்பது இடையூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப் பெற்று கேதம் என்றாகி இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது. பொது வழக்கு என்பது மாவட்டம் வட்டம் தழுவிநில்லாமல் தமிழ்வழங்கு பரப்பெல்லாம் தழுவி நிற்பதாகும். கேறுதல்: கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும். இதுவும், பொது வழக்கே ஆகும். கூவுதல், கத்துதல் என்பது விலக்கிய ஒலி, கேறுதல் ஆகும். கை: கை என்பது ஐந்து என்னும் பொருளில் தரகுத் தொழில் வழக்காக உள்ளது. ஐந்து விரல் கருதியது அது. பூட்டு என்பதும் இலை விற்பாரிடம் ஐந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. கை என்பது இரண்டு என்னும் பொருளில் செட்டிநாட்டில் வழங்குகின்றது. அது, கைவிரல் கருதாமல் கையிரண்டு கருதிய வழக்கு ஆகும். கைத்துப்போதல்: ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள் கைத்துப் போகும். கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை முகவை மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு. செவி கைப்பச் சொற்பொறுக்கும் என்பது வள்ளுவம். கைப்பாணி: கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை என்பது நெடியது; பூச்சுப் பலகை வட்டவடிவில் சுவர், தளம் ஆயவை தேய்க்கப் பயன்படுவது. கைப்பிடி: மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு. திருமணச் சடங்கில் மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தருதல் தொல் பழநாள் தொட்ட வழக்கு ஆதலால் கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. பிடித்துக் கொடுக்கும் கொடையே திருமணம் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. நாகர்கோயில் வட்டாரத்திலும் இவ்வழக்குச் சொல் உண்டு. கைபோடல்: மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு. அது விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது. கையின் மேல் துணியைப் போட்டுப் பிறர் அறியாவாறு விரல்குறி வழியாகக் குழூஉக் குறியாகப் பேசுவர். அவர்கள் விலைத் தொகையாகக் குறிப்பவை அவர்கள் மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும். பச்சை நோட்டு, கடுவாய் நோட்டு என்றால் நூறு உருபா ஆகும். கை மடக்கு: கையூட்டு என்பது வெளிப்படு பொது வழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு). கோட்டாறு வட்டாரத்தில் கைமடக்கு என்றும், திண்டுக்கல் வட்டாரத்தில் கையரிப்பு என்றும் வழங்குகின்றது. கையமர்த்துதல்: கையசைத்தல் வழியனுப்புவார் வழக்கமாக உள்ளது. நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார வழக்காக உள்ளது. அமர்த்துதல்; பசியமர்த்துதல் (பசியாறச் செய்தல்) என்பது போன்றது கையமர்த்துதல். பழநாளில் கையடை என்னும் வழக்கம் உண்டு. கம்பரில் கையடைப் படலம் உள்ளது. கையால்: கை என்பது ஒழுக்கம் என்னும் பொருளது. அது கட்டமை ஒழுக்கம் எனப்படும். அக்கட்டுதல் வழியாக நிலத்திற்கு அமைக்கப்படும். வேலியைக் கட்டார்ப்பு(கட்டாப்பு) என்பது தென்னகவழக்கு. கட்டுதல் ஆர்த்தல் ஒருபொருள் பன்மொழி. கட்டார்ப்பு என்பது கையால் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. வேலி, சுவர் என்னும் பொருளில் வழங்கு கின்றது. கையேடு: கையேடு என்பது கையில் உள்ள ஏடு என்பதைக் குறி யாமல், கையில் ஏடு வைத்துப் படிப்பாரைக் குறிப்பதாகும். சில அரிய பெரிய நூல்களை விரிவுரை சொல்லியும் கதையுரைத்தும் பாராயணம் செய்தல் அண்மை வரை சிற்றூர்களில் நிகழ்ந்தன. பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப்பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு. கையேடு படிப்பவர் பழகிப்பழகி விரிவுரை கூறுபவராகி விடுவது வழக்கம். இந்நிகழ்ச்சி இரவில் ஊர்ப்பொது இடங்களில் நிகழும். கொக்காணி: சிரிப்பு, சிரிப்பாணி என வழங்கப்படுதல் நெல்லை, முகவை வழக்கு. கொக்காணி என்பது கேலி, கேலிச் சிரிப்பு என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்காக உள்ளது. கெக்கலி என்பது கேலிச்சிரிப்புப் பொருளிலும் வெற்றி மகிழ்ச்சிப் பொருளிலும் (கைகொட்டிச் சிரித்தல்) முகவை மாவட்டத்தில் வழங்குவதை எண்ணலாம். கொக்கணை: கொக்கு, கொக்கி என்பவை வளைவுப் பொருளவை. கொக்கணை என்பது பேராவூரணி வட்டாரவழக்கில் தொரட்டி என்பதையும், கருங்கல் வட்டாரத்தில் கழுத்து என்பதையும் குறிக்கின்றது. இச்சொல் கருவூர் வட்டாரத்தில் கருமித்தனம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வளைத்துப் பறித்தது போல் பறித்துச் செலவிடாமல் வைத்துக் கொள்ளல் குறிப்பாக இவ்வாட்சி ஏற்பட்டிருக்கக் கூடும். சொற்பிழையும் ஆகலாம். கொக்கி: கழுத்துச் சங்கிலி, திறவுகோல் (சாவிக்) கொத்து ஆயவற்றுக்கு உள்ள கொக்கி பொது வழக்கு. நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது. கொக்கிக் கழை என்பது சென்னை வழக்கு. கொக்கியும் கழையும் ஆகிய அவ்வழக்கு தொரட்டிக்கழை என்பது போன்றது. கொக்கு முக்காடு: முக்காடு, முடக்கம் என்பவையெல்லாம் சோர்ந்து கிடத்தல் பொருளவை. மூதேவி எனப்படும் பொதுமக்கள் வழக்கு முற்பட வள்ளுவரால் முகடி எனப்பட்டது; மூடிக் கிடப்பவள் முகடி ஆவள். கொக்கு, வளைதல், தலைகவிழ்தல் பொருளில் வரும். ஆதலால் கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வாட்டம், வாட்டமாக இருத்தல் என்னும் பொருளது அது. கொங்கு: கொங்கு என்பது தேன் என்னும் பொருளிலும் கொங்கு நாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக்குடையது. அது, குமரிப் பெண் என்னும் பொருளில் ஒட்டன் சத்திர வட்டார வழக்கில் உள்ளது. துய்ப்பினிமை கருதிய பெயரீடு ஆகலாம். கொங்கை: கொங்கை என்பது மார்பகத்தைக் குறித்தல் பொது வழக்கு. மரத்தில் இருந்து பக்கங்களில் தாழ்ந்து வளையும் கிளையைக் கொங்கை என்பது நெல்லை வழக்கு. கிளை, மரத்தின் கைபோல் நீண்டு வளைதல் கருதிய வழக்காகும் இது. கொச்சி: கொச்சி என்னும் ஊரைக் குறிப்பது பொதுவழக்கு. குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஊரின் பெயரிலுள்ளபற்றால் - அங்குக் கோயில் கொண்ட தெய்வப் பெயரால் - பெயரிடுதலும் வழக்கு ஆதலால், கொச்சி என்னும் பெயர் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது ஒரு குழந்தை பெயராக இல்லாமல் பொதுவில் குழந்தை என்னும் பொருளில் வருதலால் வேறு பொருள் இருத்தல் கூடும். கொஞ்சுதல் வழியாகவோ, கொச்சிமஞ்சள் வழியாகவோ ஏற்பட்டதோ வேறோ எண்ணவேண்டும். இனி, ஆட்டுக்கு எனவும், பாலுக்கு எனவும் ஒரு வாடை உண்டு. அது கொச்சை எனப்படும். குழந்தைக்கென அமைந்த தனி வாடை - மணம் - கருதியதாகுமோ எனவும் எண்ணலாம். கொச்சிக்காய்: நாம் வழங்கும் மிளகாய் வருமுன், அச்சுவை தருவதாக இருந்தது மிளகு. அது மும்மருந்துள் ஒன்றாகச் சிறப்புற்றது. மிளகுச் சுவையுடைய காய், மிளகாய் எனப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்து கொச்சி வழியாக இறக்குமதியாகியது போலும். அதனால் கொச்சிக்காய் என்பது மிளகாயைக் குறிக்கும் வட்டார வழக்காகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. கொசுக்கை: கொசு ஒரு சிற்றுயிரி. அதனால் மெலியவை, சிறியவை, எளியவை என்பவற்றைக் கொசுவுக்கு ஒப்பிடல் உண்டு. அவ் வகையில் கொசுக்கை என்பது சிறிது என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்காக உள்ளது. கை என்பது சொல்லீறு; யாக்கை, வேட்கை. கொட்டடித்தல்: ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார் உளர். அவர் செயலைத் தமுக்கடித்தல் என்பர். திருவள்ளுவர் அறைபறை அன்னர் என்பார். அதனை, கொட்டடித்தல் என்பது நெல்லை வழக்காகும். கொட்டம்: வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது. அங்கே மாடும் கட்டும் வழக்கத்தால் மாட்டுக் கொட்டம் என்றும் வழங்கும். இனி, மாடுகள் சில தண்ணீர் குடிக்கமாட்டா. அவற்றுக்குத் தண்ணீரைப் புகட்டும் ஏனத்திற்கு (தகரத்தால் ஆயது) கொட்டம் என்பது பெயர். கொட்டுவதால் பெற்ற பெயரே அது. போகணி என்பது மக்கள் குடிநீர்க் குவளை. இவை தென்னக வழக்குகள். கொட்டாய்: காடுகளில் கூரை, கீற்று வேய்ந்த வீடுகளைக் கொங்குப் பகுதியில் காணலாம். மற்றை மாவட்டங்களில் கொட்டகை எனப்படும் குடிசை வீடுகள், கொங்கு நாட்டில் கொட்டாய் என வழங்குகின்றது. கொட்டுதல் விளை நிலத்தில் இருந்து வந்தவற்றைக் கொட்டுவதற்கு இடமாக இருந்த அது, பின்னே குடியிருப்புக்கும் ஆகியது என்னும் அதன் வரலாற்றை விளக்கும் சொல்லாகியது. கொட்டாரம், கொட்டாரக்கரை நினைக. கொடி: படர்கொடியை அல்லாமல் செய்பொருள்கள் சில கொடி என வழங்கப்படுகின்றன. ஊர்வனவாம் பாம்பு கொடி என வழங்கப்படும். மின்னற் கொடி, மீன் கொடி அன்ன இயற்கையும் செயற்கையுமாம் கொடிகளும் உண்டு. ஆனால் வளையமாய் - சங்கிலியாய்-த் தொடரும் கொடியும் உண்டு. அவை தாலிக் கொடி, அரைஞாண் கொடி என்பன. கொடி என்பது சங்கிலி என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காகும். கொடுக்கன்: கொடுக்கு என்பது வளைவுப் பொருளது. தேளின் கடிவாய் கொடுக்கு எனப்படும். தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில் என்பது தனிப்பாடல். கொடுக்கு உடைய தேளைக் கொடுக்கன் என்பது குமரி மாவட்ட வழக்கு விருச்சிகம் என்பது கொடுக்கன் எனப்படுதல் இலக்கிய வழக்கு. கொடுக்கு: வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக் கிணற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வரப் பயன்படும் தோலைக் கொடுக்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. தேளின் கொடுக்கு வளைவாக இருப்பது போன்ற அமைப்பினது அது. கொடு, கொடி, கோடு, குவடு, கொடுமை என்பனவெல்லாம் வளைவு வழிச் சொற் களாம். கொடுங்கை: வளைவான கை கொடுங்கை. தோளில் இருந்து முன் கைவரை வளைத்து அள்ளுதலைக் கொடுங்கை - குடங்கை - என்பது தென்னக வழக்கு. ஒரு கொடங்கை வைக்கோல் அள்ளிக் கொண்டு வா என்பர். கொடுங்கை என்பது வளைவான இடம், குழாய் ஆயவற்றைக் குறித்தல் பொது வழக்கு. கொடுங்கை ஆண்டான் ஒரு புலவன் பெயர். கொடுத்தான் வீடு: இதன்பொருள் வெளிப்படை. மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும். ஆகவே மணமகளைக் கொண்டவன் வீடு, கொண்டான் வீடு எனப்படுவதும் வழக்கே. கொடை கல்: குடைகல் என்பது கொடை கல் என உகர ஒகரத் திரிபாக வழங்குகின்றது. குடைகல் என்பதற்கு உரல் என்னும் பொருள் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. குடைதல் = துளைத்தல், குழியாக்கல். கொடை: கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. பெருவளமாகத் தெய்வத்திற்குப் படையல் செய்யும் வழக்காலும் உற்றார் உறவு விருந்தினர்க்குக் கொடை புரிதல் வழக்காலும் இப் பெயர் ஏற்பட்டது. மேலும் பலி (நீர், சோறு, பூ ஊன் முதலியவை, தருதலும் கொடை என வழங்கப்பட்டதை நினைவு கொள்ளலாம். கொண்டு மாறி: ஆண்டு மாறி என்பது வசைச் சொல். வாய்ப்பாக இருந்து கெட்டுப் போவது ஆண்டுமாறி. கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். பெண் கொடுத்து, பெண் எடுப்பது என்பது அது. இது முகவை வழக்கு. கொதி: கொதி என்பதற்கு ஆசை என்னும் பொருள் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. அனலில் கொதித்து எழும் உலைநீர் மேலும் மேலும் எழுவது போல மேலே மேலே எழும் ஆசையைக் கொதி என்றது எண்ணச் சிறப்பின் இயல்பான விளைவாம். கொதுக்கு: இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர். கொதுக்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. இலக்கிய வழக்கில் பிழிந்து எடுக்கப்பட்ட எச்சத்தைக் கோது எனல் உண்டு. திப்பி என்பதும் தென்னக வட்டார வழக்கே. கொந்தல்: குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டுவரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட வழக்காக உள்ளது. ஆனி ஆடிமாதக் கொந்தலிலே, குளிர் ஆடுகள்போல் கொடுகி நிற்போம் என்பது நாஞ்சில் கவிமணி பாடல் அடி. கொப்பாடு: செம்மறியாட்டுக் கடாவிற்குக் கொம்பு உண்டு. பெண் ஆட்டுக்குக் கொம்பு இல்லை. அரிதாக, கொம்பு பெண் ஆட்டுக்கு இருந்தால் அதனைக் கொப்பு(கொம்பு)ஆடு என்பது ஆயர்வழக்கு. கொப்பி: பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு. கொம்மை = திரட்சி. கொப்பி, குப்பி இன்னவும் கொம்மி, கும்மி, கும்பல், குப்பல் இன்னவும் ஒருவழிப்பட்ட திரட்சிப் பொருளவை. கொம்படி : வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம். அத் திசையைக் கொம்படி என்பது தலைக்குளம் வட்டார செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும். ஆற்று வெள்ளம் என்னும் முக்கூடற் பள்ளுப் பாடலில் நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி என்னும் ஆட்சி உண்டு. காற்று இயல்பாகச் சூளையில் மூட்டப்பட்ட தீயைத் தள்ளிக்கொண்டு செல்லவாய்க்கும் தலைக்கால் அது ஆதலால் கொம்படி எனப்பட்டதாம். கொம்பன்; கொம்பி : இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும். கொம்பன் என்பதற்கு ஏற்பப் பெண்பால் கொம்பி ஆயதாம். இனி, கொம்பு என்பது கிளை; அக்கிளை போன்றவன் ஆண் என்றும், கிளையில் படரும் கொடியாக இருப்பவள் கொம்பி என்றும் கொள்ள வாய்க்கும். பெண் கொடி என்பது திருமந்திரம். கொல்லை : முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது. வீட்டின் பின்புறத் தோட்டம், வாயில் ஆகியவற்றைக் கொல்லை எனல் தென்னக வழக்கு. காடு கொன்று நாடாக்கி என்னும் மெய்க்கீர்த்தித் தொடரை நினைக்கலாம். கொள்ளாம்: கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம் என்னும் சொல். கொள்ள ஆம் என்பதன் புணர்ப்பு கொள்ளாம் ஆயது. கொள்ளாம் என்னும் எதிர்மறை வழக்குக்கு மாறான உடன் பாட்டுப் பொருள் வழக்கு இது. கொள்ளி: இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு வழக்கு உள்ளது. பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை என்னும் மரபுத்தொடரில் பிள்ளை, கொள்ளி என்பவை பெண் பிள்ளை, ஆண்பிள்ளை குறிப்பன. கொள்ளி = எரிமூட்டல். கொளஞ்சி: பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொள்ளத்தக்கதான தோல். இதனை இணைத்து மூட்டும் வார் கொளஞ்சி வார் என்பது பரம்பர் (சக்கிலியர், தோல் தையலர், துன்னகாரர்) வழக்கில் உள்ளது. கொளுத்திக் கொடுத்தல்: தூண்டுதல் என்னும் பொருளில் இச் சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில் எண்ணெய் திரி இருந்தாலும் சுடர் குறையும் போது திரியைச் சற்றே தூண்டி (மேலேற்றி) விட்டால் பளிச்சிட்டு எரியும். அதுபோல் சிலர்தாமே செயலாற்ற மாட்டார். அவரைத் தூண்டிவிட்டால் சிறந்த பணி செய்வார். இதனைச் சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும் என்னும் பழமொழி விளக்கும். கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பது மடம் என்பதன் பொருளாக உரையாசிரியர் கூறுவர். கொளுத்து: சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு நயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும். கொக்கியை வளையத்துள் மாட்டுதலே பூட்டுதல் ஆகும். ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளுமாறு வைப்பது கொளுத்து ஆயிற்று. தீயும் திரியும் அல்லது பற்று பொருளும் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ள வைப்பதே கொளுத்துதல் என்பதை ஒப்பிட்டுக் காணலாம். கொள்ளி, கொள்ளை என்பனவும் கொள்ளுதல் வகையால் அமைந்தவையே. கொளுத்தோட்டி: வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும். கொக்கி அல்லது அரிவாளைக் கொண்ட கழையைக் கொளுத்தோட்டி என்பது அத்தீசுவர வட்டார வழக்காகும். கொறி: கொறிப்பு என்பது மெல்லுதல்; சற்றே கடுமையாக மெல்லுதலே கொறித்தல் எனப்படும். மெல்லுதல் போல அழியச் செய்யும் கண்ணேறு என்னும் நம்பிக்கையால் கொறி என்பதைக் கண்ணேறு என்னும் பொருளில் தூத்துக்குடி வட்டாரத்தார் வழங்குகின்றனர். கோக்கதவு: கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால் தலைவாயில் கதவு பெரிதாகவும் (அகல நீளம் கூடியது) வேலைப்பாடு உடையதாகவும் இருக்கும். அதன் உயர்வு கருதி அதனைக் கோக்கதவு என வழங்குதல் நாகர் கோயில் வட்டார வழக்காகும். கோக்காலி: இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும். கோ என்பதற்கு உயரப் பொருள் கொள்ள கோபுரம் துணையாகிறது. அரசன் நகராக இருந்ததுடன், மாநகர்க்குக் கோபுரம் என்னும் உயர்வும் காட்டுவது அது. கோவேறு கழுதை மற்றைக் கழுதையினும் உயரமாதல் வெளிப்படை. கோங்கமார்: கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். கோங்கறை காண்க. கோ > கோன் > கோனார் > கோனாக்கமார் > கோங்கமார் என வரலாம் எனினும் கோங்கு என்பதற்குப் பொருள் உண்டாகலின் அது கொள்ளப்பட்டது. கோங்கறை: நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை = அறுக்கப் பட்டது; அறுப்பது. கோங்கு = நீண்டது. ஒரு மரத்தின் பெயர் கோங்கு. நெடிது வளர்வதால் பெற்ற பெயர் அது. கோங்கறை குமரி வட்டார வழக்குச் சொல். கோங்கு + அறை = கோங்கறை. கோச்சை: சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு. கோ = தலைமை, உயர்வு, உயரம் முதலாய பொருள் தரும் சொல். கோபுரம், கோங்கு என்பவை அறிக. கோட்டி: கோள்+தி = கோட்டி. கொள்வது. உண்ணும் உணவைக் கொள்ளும் இடம் குடல் ஆதலால், குடலுக்குக் கோட்டி என்னும் பெயரைப் புலவு வணிகர் கொள்கின்றனர். குடல் அன்றிக் குடற்கறியையும் கோட்டி என்பராம். கோடாங்கி: போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலிய வற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர். கொட்டும் தட்டிக் கூறுவதால் கொட்டங்கி என்று வழங்குகிறது களவியல் காரிகை. குறிகாரர் இருந்த ஊர், கோடாங்கி பட்டி என வழங்கப்படுகின்றது. சிலர்க்குக் கோடாங்கி என்னும் பெயரும் உண்டு. இவை தென்னக வழக்கு. கோணக்கன்: மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப் பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர். கோணக்கால், கோணக்கை, கோணன், கோணையன் என்பவை எல்லாம் வளைவுப் பொருளில் வழக்கிலுள்ள தென்னகச் சொற்களாம். கோந்து: பழநாளில் பயின் என வழங்கப்பட்ட பசைப் பொருள் பிசின் என வழங்குகின்றது. கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு. ஒன்று சேர்தல் கொந்து > கோந்து. பிரிதல் கந்து > கந்தை (கிழிந்த உடை). கோந்தை: உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். கோது என்பது பயனற்றது. கோதென்று கொள்ளாதாம் கூற்று என்பது நாலடி. உள்ளீடு இல்லாதது பயனற்றது. கோது > கோத்து > கோத்தை > கோந்தை. கோப்பு: (1) கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை - மணிகளை - மலர்களை - இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும். இந்நாள் அலுவலகக் கோப்புகளையும் அந்நாள் கோவைகளையும் எண்ணுக. இக்கோப்பு மக்கள் வழக்கில் உடை, அணி, ஒப்பனை முதலியவற்றைக் கொண்டு பொலிவாக இருப்பவரை அவர் கோப்பானவர் என்று பாராட்டாக உள்ளது. கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன். இது தென்னக வழக்கு. கோப்பு: (2) கோப்பு உழவர் வழிச் சொல்லாகும். கல்வெட்டிலும் கோப்பு ஆட்சி உண்டு. ஏரிநீர், வயல்சென்று பாய்வதற்குப் பகுத்து விடுவதைக் கோப்பு என்பது வழக்கு. கட்டுக் கோப்பு என்பது, ஓர் ஒழுங்குபட்ட அமைப்பு ஆகும். இப்பகுதியில் பாய்நிலம் இவ்வளவு எனக் கணக்கு வைத்து அதற்குத் தக்க அளவு, பொழுது ஆயவை வரம்பு செய்து நீர்விடுவது கோப்பு ஆகின்றது. கோப்பு: (3) செப்பமாகவும் பொருந்தவும் செய்யப்படும் செய் நேர்த்தி கோப்பு எனப்படும். அதனால் கோப்பு என்பது அழகு என்னும் பொருளமைந்த வழக்காகச் சோழவந்தான் வட்டாரத்தில் வழங்குகின்றது. கோத்தல், கோவை என்பவை ஒழுங்குறத் தொடுத்தல் அறிக. கோம்பை: மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது. கூம்பு > கோம்பு > கோம்பை. கூம்பு வடிவில் உயர்ந்த மலையின் அடிவாரம் கோம்பை என வழங்கியதாகலாம். ஆங்குள்ள ஊருக்கும் அப் பெயர் வழங்குதல் இயல்பு. கோல்தாங்கி: ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர். தாங்கும் ஒன்று தாங்கி ஆகும். சுவரில் பதித்து நீண்ட கம்பும் அதன்மேல் உள்ள பொருள் வைக்கும் பலகையும் இணைந்த அமைப்பை மண்தாங்கி என்பர். குடிசைவீடுகளில் எல்லாம் மண்தாங்கி உண்டு. சுமைதாங்கி அமைப்பது முன்னை வழக்கு. கோல், தாங்குவதாக இருத்தலால் கோல் தாங்கி என்பர். கோலியான்: ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர். ஒட்டறை என்பது பிழை. ஒட்டியுள்ளவற்றைக் கோலி வரும் கருவியாகிய அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. கோலுதல் = அள்ளுதல், எடுத்தல். கோழி: கோழி என்பது பொதுப்பெயர். சேவற்கோழி, பெட்டைக் கோழி என்பவை பால்பிரி பெயர்கள். ஆனால் கோழி என்பது பெட்டையின் சிறப்புச் சொல்லாகவும், சேவலின் சிறப்புச் சொல்லாகவும் அமையும். கோழி அடைக்கத்து கத்துக்கிறது - என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப் பெண்பிள்ளை என்னும் பெயரால் வழங்குவர். கோள்: கொள்ளப்படுவது கோள். எ-டு: குறிக்கோள், விழாக் கோள். கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொரு ளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. காவடி, பாற் குடம், வேல், முளைப்பாலிகை ஆகியவற்றைத் தலையிலும் தோளிலும் கொள்ளுதல் குறித்து வந்த சொல்லாட்சி இது. கொண்டாட்டம் என்பதும் மேற்குறித்தவற்றைக் கொண்டு ஆடுதல் வழியாக ஏற்பட்ட வழக்குச் சொல்லேயாம். கோளடைச்சி: குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப் பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. மருமகனிடம் தன் மகளைக் கொள்ளுமாறு ஒப்படைப்பவள் ஆதலால் கோள் (கொள்ளுமாறு) அடைச்சி (ஒப்படைப்பவள்) எனப்பட்டாள். கோளி: பிறர்மனை விரும்பித் திரிபவன் பரத்தன் என வள்ளுவரால் குறிக்கப்படுவான். அத்தகையன் பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது. கோளியாமுடை: நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன் பொருள். நூலாம்படையைக் கோளியா முடை என்பது விருதுநகர் வட்டார வழக்காகும். கோளி = கொள்ளப்படுவது; பற்றிக் கொள்ளப்படுவது. கோளோடை: கோள் = கொள்ளுதல். ஓடை = வழி. மணங்கொள்ளு வதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட்டாரத்தார் கோளோடை என வழங்குகின் றனர். கோளோடையான் என்பவன் மணவினை நடத்தி வைப்பவன். இது புதுக்கடை வட்டார வழக்கு மாகும். கௌவிவெல்லம்: கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும் பாகைக் கொளவிவெல்லம் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கௌவுதல் பல்லால் பற்றுதல்போல் பற்றிக் கிடப்பது. பற்றுத் தேய்த்தல், கரிப்பற்று என்பவற்றை நினைக்கலாம். கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் என்பது நாலடியார். ச சக்கரம்: சக்கரம் வண்டிகளுக்கு உரியது. சக்கரமாகிய வட்ட வடிவில் ஆக்கிய சக்கரம் என்னும் பணம் சேரலத்தில் வழங்கியது. வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும். சக்கரை (சருக்கரை) பொது வழக்கு. சக்கை: மேலே, முள்தோல்; அதனுள்ளே, வழுக்கைத்தோல்; அதனுள், பசைத்தோல்; அதனுள்ளே, சுளை; அதன் உள்ளே, விதை அல்லது கொட்டை. அதற்கும் மேல்தோல்; இவ்வாறு விலக்கி ஒதுக்கப்படும் கோது (சக்கை) மிகப் பலவாக இருத்தலால் பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு. சக்கைப்போடு: சக்கைப்போடு போட்டான், மழை சக்கைப் போடு போட்டு விட்டது என்பது தென்னக மக்கள் வழக்கு. இது மிகுதி என்னும் பொருள் தருவது. கரும்பை ஆட்டிச் சாறெடுத்த எச்சம் சக்கை. பலாப்பழத்தின் சுளை நீங்கிய தோல் மூடு முதலியவை சக்கை. இவற்றில் பயன் பொருளிலும், சக்கை மிகுதியாதல் கண்கூடு. இதனால் சக்கை என்பதற்கு மிகுதிப் பொருள் உண்டாயிற்று. சாரம், சாறு ஆயவற்றினும் சக்கையே மிகுதியாதல் பெரும்பாலும அறியத் தக்கது. இது தென்னக வழக்கு. சகடை: நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. மேட்டில் இருந்து கீழே சக்கரம் உருள்வது போல் நீரும் உருண்டு ஓடுதல் கண்டு வைக்கப்பட்ட ஒப்புப் பெயர் இது. சகடை = சக்கரம். சகடு - வண்டி. சாகாடு என்பதும் அது. சகடு, சாகாடு என்பவை தொல்பழ இலக்கிய வழக்குச் சொற்கள். சகடக்கால் போலாம் செல்வம் என்பது நாலடியார். சங்காயம்: சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை ஒதுக்குவது, ஒட்டிய தூசியையும் அழுக்கையும் தட்டுவதும் துடைப்பதும் போன்றதாகலின் உன் சங்காயம் வேண்டா என்பது மதுரை வழக்கு. உன் சங்காயத்தே வேண்டா என்பதும் அது. சங்கு முட்டை: முத்து உடையது சங்கு; ஒலியுடையதும் அது. முட்டைகளில் கெட்டுப் போனவை கெடாதவை என நீரில் மிதக்க விட்டுக் காண்பது வழக்கம். கெட்டுப் போகாத முட்டை மேலே மிதக்கும். மற்றவை தாழும். கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு. சட்டிமாற்றல்: ஒரு சட்டியில் குழம்போ; காய்கறியோ வைத்திருப்பர். அதில் தாளித்துக் கொட்டுவதற்குப் பிறிதொரு சட்டியில் எண்ணெய் சுடவைத்து, கடுகு பருப்பு கறிவேப்பிலை முதலியவற்றைப் போட்டுப் பொரியச் செய்வர். தாளிப்புச் சட்டியில் உள்ளதைக் குழம்பு காய்கறிச் சட்டிகளில் விட்டு வைப்பர். தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு. சதாசிவம்: சதாசிவம் என்னும் பெயர் பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம் செட்டிநாட்டில் உண்டு. எண்குணம் என்பது போன்ற ஒரு குறிப்பு வழி ஏற்பட்ட வழக்காக இஃது இருக்கவேண்டும். இறைவற்குக் கோச் செங்கட்சோழன் எடுத்த கோயில்களைப் போன்றதொரு எண் வழிப்பட்டதாகும். மருது பாண்டியர் மதுரைக் கோயில் வாயிலில் 1008 சரவிளக்கு அமைத்து, 1008 திருக்கோயில்களுக்கு விளக்கேற்றிய கருத்துப் போன்றது இத்தகையவை. சந்தம்: சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் ஒருவகை. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது. தளிரின் நிறமும் மென்மையும் கவர்ச்சிமிக்கவை. மாநிறம் என்பது மாந்தளிர் நிறமாகும். பல்லவத்தின் (தளிரின்) சந்தம் (அழகு) மடிய (அழிய) வடிவால் மருட்டிய தாழ்குழலே என்பது யாப்பருங்கலக் காரிகையில் கடவுள் வாழ்த்துப் பாட்டு அரிய இலக்கிய ஆட்சியும், எளிமையாக மக்களாட்சியில் இடம் பெறும் என்பதன் சான்றுகளுள் ஒன்று சந்தம். சபைக் கிருத்தல்: அவை > சவை > சபை; சபைக்கு இருத்தல் என்பது ஊரவை கூடியுள்ள போது; அவையில் கால்மடக்கி அமரும் நிலை சபைக்கு இருத்தல் ஆகும். கால்மேல் கால் போட்டு இருத்தலோ குத்துக் கால் போல் நட்டுக்காலில் இருத்தலோ, கால் பின்மடிப்பாகி இருத்தலோ இல்லாமல் சம்மணம் கூட்டி இருப்பதாகும். தவநிலை இருக்கையாகச் சமணத் துறவர் (சிரமணர்) இருக்கும் நிலை சம்மணம் ஆகும். கடுந் துறவறம் திகம்பரர் (திக்கு ஆடையர்) போல் உடையின்றி இருத்தல் அம்மணம் என்பதாம் அமணர் (சமணர்) சபைக் கிருத்தல் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. சம்பந்தி: கிளை என்பதும் உறவு என்பதும் கொடுப்பவர் உறவுப் பெயராகவும் கேள் என்பதும் உற்றார் என்பதும் கொள்பவர் உறவுப் பெயராகவும் இருந்தநாள் உண்டு. கேள், உற்றார் என்பவை தந்தை வழியர். கிளை, உறவு என்பவை தாய் வழியர் உறவுப் பெயர். இவை மாறிப் பொதுமையாயன. சம்பந்தி என்னும் வேற்றுச் சொல் அவ் விடத்தைப் பற்றிக் கொண்டது. சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகும் துவையல் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. சம்பல்: (1) சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில் வழங்கும் தென்னக வணிக வழக்குச் சொல். வற்றல் விலை சம்பல்; வெங்காய விலை சம்பல் என்பர். பொருள் மிகுதியாவதைச் சவத்துப் போதல் என்பர். வதியழிதல் என்றும் கூறுவர். மலிவு என்பதும் அது. சம்பல், சாம்புதல். வாடுதல் என்னும் பொருளது. காய்கள் சாம்பிப் போனால் - சம்பிப் போனால் - சிறுத்துப் போய்விடும். இதனால் ஏற்பட்ட வழக்குச் சொல் இது. சம்பல்: (2) சம்பல் என்பது விலை மலிவு என்னும் பொருளது. அது பொது வழக்கு. ஆனால் விருந்து என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. விருந்துக்கு வருவார்க்குக் கொடுக்கும் உணவு நெல்லுச் சோறே. சோளம், கேழ் வரகு, கம்பு ஆயவை இருப்பினும் நெற்சோறு ஆக்கிப் படைத்தலே வழக்கம். அதனால் சம்பு (சம்பா) ஆக்கிப் படைக்கும் விருந்தாளர் சம்பல் எனப்பட்டிருக்கலாம். இதனினும் பொருந்திய பொருளமைதி உண்டாயின் எண்ண லாம். இனி அடிக்கடி வரும் விருந்தினரை நோக்கியும் வழங்கிய தாகலாம். சமதை: சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும். யார் என்றாலும் அவரிடம் சமதையாகப் பேசுவார்; சமதையாக உட்கார வைப்பார் என்பது வழக்கு. சமமாக என்பது சமதை எனப்படுதல் நல்ல சொற் சுருக்கம். சரக்கு: பலசரக்கு என்பவற்றுள் பலவும் உசிலை எனப்படும் மசாலைப் பொருள்களேயாம். சரக்கு என்பவை உலர் பொருள்களானவை. பல என்பதை விலக்கிச் சரக்கு என்றாலே மசாலையைக் குறிப்பதாக யாழ்ப்பாண வழக்கு உண்டு. சரடு கட்டுதல்: சரடு என்பது கயிறு. இனி, கழுத்திலே பூட்டும் சரடு என்பதொரு பொன்னணிகலமும் உண்டு. மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துக் கட்டுதல் திருமணச் சடங்கு ஆகும். சரடு கட்டுதல் என்பது உசிலம்பட்டி வட்டாரத்தில் திருமணம் செய்தல் என்னும் பொருளில் வழங்குகின்றது. தாலிகட்டுதல் என்பது பொது வழக்கு. சரணை: ஓரம் சாரம் என்பது இணை மொழி; ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரம் சாரம் ஆகும். சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது. மலைச் சாரல், மலை சார்ந்தது மழைச்சாரல் மழையைச் சார்ந்து பெய்யும் சிறு தூறல். சாரல் நாடன், சாரலன், சேரலன், சேரன் ஆனான். சல் தண்ணீர்: பயிருக்கு நீர்பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல் தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு. ஈரம் இருப்பதால் சலசலத்து ஓடும் நீரைச் சல் தண்ணீர் என்பது ஒலிக்குறிப்பு வழிப்பட்டது. சலசல, சலசலப்பு, சலவை, சலதாரை, சலவன், சல் பிடித்தல் என்பனவெல்லாம் ஒலிக் குறிப்புத் தோற்ற வழிவந்தவை. சலுப்புத் தண்ணீர் என்பது வட மதுரை வட்டார வழக்கு. சல்லை: தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது. முள் மரத்தில் ஏறிப் பறிக்க இயலாது. பிடித்து உலுப்பவும் இயலாது. ஆனால் தொரட்டி கொண்டு வளைக்கவோ, பறிக்கவோ, உலுப்பவோ எளிதாக இயலும். ஆதலால் சல்லை என்னும் வழக்கு உண்டாயிற்று. சல்லிது(சு) என்பது எளிது, குறைந்தது என்னும் பொருளில் வழங்கும் வழக்குச் சொல்லாக இருப்பதால் அறியலாம். சல்லிசாகப் பறிக்கலாம்; சல்லிசாக வாங்கலாம் என்பவை வழங்கு மொழிகள். சவட்டு மெத்தை: சவட்டுதல் சவளுமாறு அடித்தல் மிதித்தல் ஆகியவை செய்தலாம். மழை பெருகக் கொட்டலும், போர்க்கள அழி பாடும் சவட்டுதல் எனப்படுவது பழநாள் வழக்கு. பல்கால் பல்லிடங்களில் அடித்துவரும் மண் சவட்டு மண். சவட்டு மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் கால்மிதியின் பெயராக உள்ளது. சவத்தல்: ஈரப்பதமாக இருப்பதைச் சவத்தல் என்பது அறந் தாங்கி வட்டார வழக்கு. ஈரப்பதமாக இருப்பது விரைவில் கெட்டுப் போகுமாதலால் அதனை விலை குறைத்து மலிவாக விற்பர். ஆதலால் சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு. சவத்தல் என்பது போலவே பதத்தல் என்பது ஈரப்பதம் குறித்தல் பொது வழக்காகும். மழையால் பதப்பட்டுப் போனது என்பர். சவர்: சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங் கோடு வட்டாரவழக்காக உள்ளது. சவர் > சவல் > சவள் > சவடு. சவண்டு போய்க் கிடப்பதும் வளைந்து வளைந்து செல்வதுமாம் பாம்பைச் சவர் என்பது சவள் என்பதன் வழிவந்ததே யாம். சவட்டுதல் காண்க. சன்னம்: பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர். பொடி அல்லது தூள் என்னும் சிறுமைப் பொருள் தருவது அது, குறையோ முயற்சி இன்மையோ இருந்தால் சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம். சாக்கோட்டி: கருக் கொண்ட மகளிர் தலை சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை மசக்கை என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர். நாவறட்சி, தலைசுற்று, கண்மயக்கு, நிற்கமுடியாமை ஆகியவை கண்டு அவலமாக இருக்கும் நிலையை இவ்வாறு வழங்கு கின்றனர் எனலாம். சாங்கியம்: சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது. சாங்கியம் பெரும் பாலும் மகளிர் முன்னின்று செய்யும் சடங்கையே ஆகும். சடங்கியம் என்பது சாங்கியம் என்றாகியது எனலாம். இனி, அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. சடங்குகளில் வழிவழியாகச் சொல்லப்படும் தொடர்களை முதற்கண் குறித்து, பின்னர் பழமொழியைக் குறித்ததாகலாம். சாட்டுக் கூடை: பிரம்புக் கூடை என்பது நெல்லை வட்டார வழக்கில் சாட்டுக் கூடை எனப்படுகின்றது. உழவர் பயன்படுத்தும் தார்க் கோல், சாட்டைக் கோல் எனப்படல் உண்டு. சாட்டைக் கோல் என்பது மூங்கில் பிரம்பே ஆகும். ஆதலால், மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது. சாட்டை: சாட்டைக் கம்பு அல்லது சாட்டைக் கோல் நீளத்தினும் அதில் கட்டப்பட்ட வார் நீண்டிருக்கும். வார் = நீளம். ஆதலால் சாட்டை என்பதற்கு நீளம் என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். கம்பில் இருந்து தொங்கும் வாரின் தொங்குதல் நீளம் ஆயவை குறித்து ஒப்புமைப் பொருள் வகையால், சடை என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்கு கின்றனர். சாடா: நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் சாடா என வழங்குகின்றனர். இது, இயக்க வகையால் ஏற்பட்ட உவமை வழியது ஆகும். பூரான் ஊர்ந்து செல்லுதல் வண்டி செல்லும் செலவு போன்றதாகும். சகடு > சாடு = வண்டி. சாடு > சாடா. இதனைச் சாரா என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், சாராடி எனத் திருமங்கல வட்டாரத்திலும் வழங்குகின்றனர். சாடி: வாட்ட சாட்டம் என்பவை இணை மொழிகள். வாட்டம் வாடி என்றும், சாட்டம் சாடி என்றும் வழங்கும். மர அறுவை வாடி எனப்பட்டது (மரவாடி) போல் அமைந்தது சாடி. சாடுதல், ஓடுதல், புகுதல். நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் சாடி என்பர். இவ்வாட்சி கூரிய பார்வையும் கொள்ளும் பொருளமைதியும் உடையதாகும். சாடை: இவரைப் பார்த்தால் அவர் சாடையாக இருக்கிறார் இல்லையா? என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது. இது நெல்லை, குமரி, முகவை ஆகிய தென்னக வழக்காகும். சாடை என்பது உவமை உருபொடு ஒட்டக்கூடியது. சாடையம்: சாடை என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் சாடையம் என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது. ஒருவர் நடையுடை ஒப்பக் கொண்டு மேடை யேற்றுவது நாடகம் (கூத்து) ஆகும். திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் சாடையம் என்பது வழக்காகும். ஒப்ப அமைந்த உடைக்கோலமே கண்டதும் அடையாளம் காண வைக்கும். அரிய சொல்வழக்கு ஈதாம். சாணை: வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு. சாலை பன்னசாலை என்பவை இலை தழைகளால் ஆக்கப்படுபவை. சாலை > சாளை > சாணை ஆகிய வடிவம் இது. சாய்ப்பாங்கரை, சாய்ப்பு: சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப் பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய் வைத்தால் தூசி தும்பு விழும். பூச்சி பொட்டு அடையும். நலக்கேடு ஆக்கும். ஆதலால், கலங்கள் கவிழ்த்தி வைக்கப்படுதல் அறிவுசார் நடைமுறை. இது தொல் பழநாள் தொட்ட நடைமுறை என்பது, என் மண்டை (கலம்) திறக்குநர் யார் என்னும் புறநானூற்றால் புலப்படும். கலங்கள் சாய்த்து வைக்கப்பட்ட திண்டு (கரை) உடைய சமையலறையைச் சாய்ப்பாங்கரை என்பது அருமைமிக்கது. சாய்ப்பு என்னும் அளவில் கூறுவது திருச்செந்தூர் வட்டார வழக்கு. சார்த்து: பனை ஓலை வெண்மைக் குருத்தாக வெளிப்படும். பின்னர்ப் பசுமைக் காட்சி வழங்கும். அதன்பின் மஞ்சள் வண்ணம் கொள்ளும். மஞ்சள் வண்ண ஓலை சாரோலை. வெள்ளை வண்ண ஓலை குருத்தோலை. சாரோலைக் கண்டு குருத்தோலை சிரித்ததாம் என்பது பழமொழி. திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் சார்த்து என்பது திருமண உறுதி எழுதும் ஓலையைக் குறித்து வழங்குகின்றது. குருத்தோலை தலைநிமிர்ந்திருத்தலும், சாரோலை சரிந்து சாய்ந்து தாழ்தலும் கண்டறிக. அறிந்தால் மேற்சுட்டிய பழமொழி விளக்கமாம். சாரங்கம்: மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர். அதுபோல் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும். வெதுப்பான உட்புறம் சுரங்கம் (சுர் அங்கம்) எனப்படுவது போலச் சாரங்கம் (சார் அங்கம்) எனப்பட்டது. அங்கு >m§f« = அங்கவியல். திருக்குறளில் ஓரியல். அங்கம் = உறுப்பு, உடல். சால்: நீர் வைக்கும் பெருங்கலமும், நீர் இறைக்கும் பெருங் கூனையும் சால் எனப்படும். சால் போல் பெரியதாகவும் தவசம் போட்டு வைப்பதற்கு உரியதாகவும் உள்ள குதிரைச் சால் என்பது பழனி வட்டார வழக்கு. சாலகம்: சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் சாலகம் எனப்படும். நீர்ப்பிறை பழமையானது என்பது அங்கணத்துள் உக்க அமிழ்து என்னும் திருக்குறளால் வெளிப்படும். ஊர் வடிகால், ஊரங்கண நீர் என்று நாலடியாரில் கூறப்படும். சாலாணிமாறு: நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. கூட்டுமாறு, விளக்குமாறு, பெருக்குமாறு என்பவற்றில் உள்ளது போன்றது. மாறு கொண்டு (வைக்கோல், வளார், கொடி) செய்யப்பட்டவை மாறு ஆகும். ஆணி = தாங்குதல். தாங்கிப்பிடி என்பதை ஆணிப் பிடி எனல் நெல்லை வழக்கு. சாலி: நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர். சால என்னும் உரிச்சொல் வழியாகப் பெற்றபெயர். நெல்லின் கூர் நுனை கிழிக்கவல்ல கூர்மை பெற்றது. முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன. சால உறு தவ நனி கூர் கழி மிகல் என்பது நன்னூல். சாவட்டை: பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு. சாக அடிக்கப்பட்டது, சாகடிக்கப்பட்ட நோய் உடையது என்னும் பொருளில் வழங்கு கின்றது. அட்டை என்பது சொல்லீறு. எ-டு; சப் பட்டை, சில்லட்டை. பதர், பதடி என்பவற்றை எண்ணலாம். சாவி என்பது செத்துப் போனது என்னும் பொருளில் வழங்குவது பொது வழக்கு. சாற்றமுது: சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு. அவ் வழிபாடுடையார் குடிவழக்குமாம். அமுது என்பது பாலமுது, கண்ணமுது எனப் பொதுமை குறித்து வரும். சாறு: சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல். அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித் தரும் பாட்டு சாற்றுக் கவி எனப்பட்டது. சாத்துக் கவி, சார்த்துக் கவி என்பவை பிழை வழக்கு. இனிச் சாறு என்பது விடுகறியாக மிளகுசாறு, புளிச்சாறு, பருப்புச் சாறு என வரும். ஆனால் சாறு என்பது எண்ணெய் என்னும் பொருளில் உசிலம் பட்டி வட்டாரத்தில் வழங்குகின்றது. எள், கடலை, தேங்காய் முதலியவற்றின் சாறு என்பது கொண்ட வழக்கம் அது. சிக்கடி: சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்கு கின்றனர். அவரை வகைகளைப் பார்த்த அளவால் கொத்த வரையே சிறியது என்பது புலப்படும். அகலம் நீளம் கனம் ஆயவை சிறிதாதல் கருதிய பெயரீடு ஆகலாம். சிகடு: கசடு என்பது குற்றம் என்னும் பொருளில் இலக்கிய வழக்கு மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளுக்கும் உரிய சொல். அழுக்கு என்னும் பொருளும் அதற்கு உண்டு. செங்கற்பட்டு மாவட்ட வழக்கில் கசடு என்னும் பொருள் தருவதாகச் சிகடு என்னும் சொல் வழங்குகின்றது. இவ் வழக்கு, சகடர் என்னும் பெயர் (கசடர்) வழக்கை நினைவுபடுத்துகிறது. சகடர் மனோன்மணீய ஆட்சிச் சொல். சிட்டிக்கல்: தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர். மேலே தட்டான் போல் பறப்பதால் தட்டான் பறவையைக் குறித்து வந்த பெயர், சிட்டுக்குருவிக்கு ஒப்பிட்டுக் காட்டிய வழக்காகும். சிட்டுக்கல் >á£o¡fš. சிட்டி, சிறிதுமாம். சித்திரை விடுதல்: கோடை விடுமுறை என்பது பள்ளிக் கூடங்களில் வழங்கும் பொது வழக்கு. அவ் விடுமுறை சித்திரை, வைகாசி மாதங்களில் வருதலால் (ஏப்ரல், மே) அதனைச் சித்திரை விடுதல் என உசிலம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். விடுதல் = விடுமுறை விடுதல். சிப்பிலி: சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு. பிலிற்றுதல் என்பது ஒழுகவிடுதல், வடிய - வழிய - விடுதல் என்னும் பொருளில் இலக்கிய ஆட்சியுடையது. எ-டு: தேன் பிலிற்றும். சிறிது சிறிதாக வடிக்கும் தட்டு சிப்பிலியாயது. யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது. தொங்குதல் வழியாக ஏற்பட்ட வழக்கு ஆகலாம். சில்லாட்டை: பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சிறிய வடிகட்டி என்னும் பொருளது. பன்னாடை பனைமடலில் உள்ள வலைப் பின்னல். அட்டை என்னும் சொல்லீறு ஆட்டை என்றும் வழங்கும் சான்று இது. சில் = சிறிது; சில்லுக் கருப்புக் கட்டி, சில்லான், சில்லைக் குடில் என இருவகை வழக்கிலும் உள்ளது. சில்லாப்பு: சில்லிடுதல் = சில்லாப்பு (சில்லார்ப்பு); குளிர்தல். சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. குளிர் காய்ச்சல் கண்டவரைத் தொட்டுப் பார்த்து உடல் சில்லிட்டுப் போய் விட்டது என்பது தென்னக வழக்கமாகும். சில்லென்று குளிர்கிறது என்பர். சில்லான்: ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு. சில் = சிறியது. சில்லாட்டை காண்க. சில்லு = சிறிய துண்டு; சில்லுண்டி = சிற்றுண்டி. இவையும் வட்டார வழக்காக வழங்கப்படுவனவே. சிறு நெருஞ்சிப்பூ பூத்தல் சில்லென்று பூத்தல் எனப்படும். சில்லுக்காப் பாதை: சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு = சிறிது. கால் பாதை, காப்பாதை ஆயிற்று. காலடி என்பது போல. குறுநடையைச் சிலுக்கட்டி என்பது முகவை வழக்கு. சிலுப்பி: சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு. சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும். மோர் கடைதலைச் சிலுப்புதல் என்பது நெல்லை வழக்கு. சிலம்புதல் ஒலித்தல் என்னும் பொருளில் இருவகை வழக்கிலும் உண்டு. சிலம்பாட்டம்; மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே கம்பர். சிலும்பல்: சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு. சிறிதாகத் துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள். சிவீர்: சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள். உன் முகம் என்ன சிவீர் என்று சிவந்திருக்கிறது? என்பது வழக்கு. சிவீர் என்பது மதுரை முகவை, நெல்லை வழக்கில் உள்ளது. சிவப்பு என்னும் பொருளது. வானம் சிவீர் என இருக்கிறது என்பர். சிறகு: சிறகு, சிறை என்பவை பக்கம் என்னும் பொருளும் தருவன. அஃது இடப் பொருளது. அது சினைப் பெயராகவும் இருப்பதே பறவைச் சிறகுகள். கட்டை வண்டிகளில் பட்டடைப் பலகை அல்லது பட்டடைச் சட்டம் என்ப தோர் உறுப்பு உண்டு. அது, அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும். சிறப்பு: சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது. சிறப்பு விருந்து என்றும், சிறந்த அக்கறையான வேலை என்றும் பொருள் தருதல் உண்டு. அதுவும் பொது வழக்கே. பொதுநாள், திருநாள் அல்லது கடி நாள் (விழா நாள்) என்னும் கருத்து பண்டே உண்டு. சிறுபாடு: இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும். பாடு என்பது உழைப்பு. பெரும்பாடு, அரும்பாடு என்பவற்றில் பாடு வருதல் நோக்குக. பாடுபடுதல் என்பதையும் எண்ணலாம். சிறு தனம், சீதனம், சீர்தனம் என்பதும் உண்டு. கல்வெட்டுகளில் சிறுதனம் என அலுவல் பதவிப் பெயரும் உண்டு. சின்னம் பேசல்: சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது. சின்னம் பட வருத்தம் செய்தாலும் சந்தனம் மணம் குன்றாது என்பது இலக்கிய ஆட்சி. சின்னவீட்டுப் பொழுது: திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக இருந்து பின் வட்டார வழக்கு ஆகியிருக்க வேண்டும். சின்ன வீடு என்பது பொருள் வெளிப்படை. சினையிட்டிலி: கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது. பொது வழக்காகாமல் குறித்த இட - இன - வழக்காக இருக்கலாம். சினைத்தல்: சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டை யிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. சினை = முட்டை; சினையாகு பெயர், ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. சீந்தி: ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது. சிந்தி >Óªâ; வழிந்து ஒழுகுவது என்னும் பொருளது. சீந்துதல்: வாங்குதல், பெறுதல், கேட்டல் என்னும் பொருளமைந்த பெருவழக்குச் சொல். அவளைச் சீந்துவார் இல்லை என்பது பெண் கேட்டுவருவார் இல்லை என்னும் பழிப்புச் சொல். காய்கறி சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது என்பது விலைக்கு வாங்குதல் பொருளது, இவை முகவை மாவட்ட வழக்கு. சீந்தை: மூக்குச் சிந்திக் கொண்டிருப்பானை(ளை)ச் சீந்தை என்பது பொருந்துவது. சீந்தை என்பது சிந்தும் சளியைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் உள்ளது. மூக்குச் சீந்தி என்பது சிலர்க்குப் பட்டப் பெயர். அழுபவள் என்பது பொருள். சீமாறு: கூட்டுமாறு, பெருக்குமாறு என வழங்கப்படும் வாரியல் பெரிய குளம் வட்டாரத்தில் சீமாறு என வழங்கப்படுகின்றது. சீத்தல் என்பது துடைத்தல், நீக்கல் என்னும் பொருளது. சீத்தலுக்கு உரியமாறு சீமாறு ஆயது. கால் சீக்கும் என்பது இலக்கிய ஆட்சி. துடைப்பக் கட்டை என்பது போலச் சீவக் கட்டை என்பது கொங்கு நாட்டு வழக்கு. சீமாறு எனவும் வழங்கும். சீர் தூக்கி: தெய்வத் திருவுருவைத் தூக்கிச் செல்பவரைச் சீர் தூக்கி என்பது புதுக்கோட்டை வட்டார வழக்கு. சீர் என்பது சீர் பாதம் என்பது போலத் தெய்வம் குறித்து நிற்கிறது. சீர் >Ó >$. எ-டு: ஸ்ரீ பண்டாரம். சீரக்கம்: மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது. சீராட்டு என்பது போன்றது இது. சீரை: சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை சுற்றித் திருமகள் பின்செல என்பது கம்பர் வாக்கு. சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது. ஆனால் குமரி மாவட்ட வழக்கில் சீரை என்பது அச்சுமாறாமல் அப்படியே வழங்குகின்றது. மக்கள் வழக்கு, மாறா இலக்கிய வழக்காக இருத்தற்குச் சான்று இன்னவை. சீலை: சீலை என்பது துணிவகையுள் ஒன்றைக் குறிப்பிடும் பொது வழக்கினது எனினும் அது, தரகு என்னும் பொருளில் பொற் கொல்லர் வழக்கில் உள்ளதாம். ஆடுமாடு விற்று வாங்கும் தரகர்கள் கைமேல் துணிபோட்டு மறைத்து விரல் பிடித்துப் பேசும் வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சீவாந்தி: பூவரசம் பூ மஞ்சள் நிறத்தது. மற்றை அரசு பூவாது இது பூத்தலால் பெற்ற பெயர் பூவரசு என்பது. அப் பூ வண்ணமும் அந்தி மாலை வண்ணமும் ஒப்ப இருத்தலைக் கண்டு வழங்கிய சொல் சீவாந்தி. சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது. பொதுமக்கள் போற்றும் புலமைத் தோன்றலாகிய தோற்றம் காட்டுவன இன்னவை. இது குமரி மாவட்ட வழக்கு. செவ்வந்தி என்பதைக் கருதுக. சீனி: படகை நிறுத்துவதற்கு நங்கூரம் பாய்ச்சுவர். நங்கூரம் பாய்ச்சிவிட்டால் படகு துறை சேர்ந்ததுமட்டுமன்று. பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப் பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி = சீனநாட்டுப் பொருள். சுட்டி: சுட்டித் தனம் என்பது சுட்டி எனப்படுதல் பொது வழக்கு. ஆனால் சுட்டு அடிப்படையில் சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது. அதைச் சுட்டி இப்படியா பேசுவது? அடிப்பது? என்பது வழக்கு தென் வட்டாரங்களிலும் இப் பொருள் வழக்கு உண்டு. சுண்டான்: சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு. சிறு விரல் சுண்டுவிரல் என்பதும் கருதலாம். சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும். அண்டா, குண்டா என வரும் ஏனவகைகளை எண்ணலாம். பொண்டான் என்பது பேரெலி அல்லது பெருச்சாளி. சுண்டு: சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு. உழவர் வழக்கில் சுண்டு கயிறு உண்டு. சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது. உதட்டுக்கு எப்படி இப்பெயர் வந்தது. பீடியை இரண்டு சுண்டு சுண்டினால் என்பது பேச்சு வழக்கு. பீடி குடித்தல் அல்லது பிடித்தலைச் சுண்டு என்பது உண்டு ஆதலால், அதனைச் சுண்டும் உதடு சுண்டு எனப்படுதாயிற்று. சுணக்கு: ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. அதனை நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு. சொணக்கு என்றும், சோணை என்றும் வழங்குவது முகவை வழக்கு. முடங்கி ஒட்டியுள்ள காதைச் சோணை என்பதும், அக் காதுடையவரைச் சோணைக் காதினர் என்று பட்டப் பெயரிட்டு வழங்குவதும் முகவை வழக்கு. ஆதலால் வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது பொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது எனலாம். சிவனி: செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச் சிவந்த வண்ணம் குறிப்பதே. விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது. சுரக்கட்டை: தவளை பல்வேறு நிலைகளில் பல்வேறு ஒலிகளை எழுப்பும்; பல தவளைகள் சேர்ந்தும் ஒலிக்கும். பலர் கூடிப்பாடுதல் தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு. சுரம் = இசை; பாசுரம் = பாடல். சுரயம்: சுர் என்பது சூடு, சுடர் என்பவற்றின் அடிச்சொல் வெப்பப் பொருள் தருவது. சுரம், காய்ச்சல் எனப்படுதலும், பாலைவனம் எனப்படுதலும் இதனை விளக்கும். சுரம் என்னும் பொது வழக்குச் சொல் நாகர்கோயில் வட்டாரத்தில் சுரயம் என்று வழங்குகிறது. சுடுதல் பொருளும் தருகிறது. சுருணை: சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு. ஓலைச் சுருள் என்பது பின்னது. இச் சுருள் என்னும் பொதுச்சொல் சுருணை எனத் தென்னக வட்டார வழக்காக உள்ளது. சுருத்து: சுரிதல் என்பது சுழல்தல். சுரிதகம் என்பது கலிப்பா உறுப்புகளின் முடிநிலை. சுரிந்து என்பதும் அது. ஒன்றைச் சுற்றிச் சூழ்ந்து வருதல் அதன்மேல் உள்ள அன்பு அக்கறை ஆயவற்றால் ஏற்படும். சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது. அவன் என்மேல் சுருத்தானவன் என்பர். சுருள்: சுருள் என்பது கஞ்சா என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. அதனைச் சுருட்டிப் புகைத்தல் வழியால் சுருட்டு என்னும் பெயர் ஒப்பப் பெயர் கொண்டு வழங்கப்பட்டதாகும். சுழற்றி: துளையிடப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். துளைத்துத் தோண்டப்பட்ட கிணறு துரவு ஆகும். தோட்டம் துரவு என்பது இணைச்சொல். சுற்றித் திருகுதலே துரப்பணத்தின் செயற்படுத்தம் ஆதலால், அதனை ஒப்பச் சுழற்றுதல் என்னும் சொல்லால் வழங்குதல் சிவகாசி வட்டாரத்தில் தச்சுத் தொழிலர் வழக்கில் உள்ளது. சுழலி: சுழல்வது சுழலி; சுழல வைப்பதும் சுழலி. கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந் நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச் சுழலி என வழங்குவர். ரிவால்வர் என்பதைச் சுழலி என்றார் பாவாணர். சுழைதல்: சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. குழல் என்பது குழையாவது போல் சுழல் என்பது சுழையாயது. சுள்ளான்: சுள் என்று வெயில் அடிக்கிறது. சுள் என்று தேள் கடித்தது என்பது பொது வழக்கு. சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும். சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு. சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை வட்டார வழக்காகும். சுள்ளி: சுள்ளி என்பது சிறுவிறகு; குச்சி. அதன் சிறுமை கருதிச் சிறுமியைச் சுள்ளி என்பது மதுரை வட்டார மிதி இழுவையர், குதிரை வண்டியர் வழக்காக உள்ளது. சுளுக்கி: சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுறுக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வட மதுரை வட்டார வழக்காகும். சுளுக்கி பொது வழக்கு என்னுமாறும் பெருவழக்கினதாகும். சூட்டு: உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது இலக்கிய வழக்கு. தலையில் முடி வைப்பது முடி சூட்டு ஆகும். சுடுதல் வழியாகச் சூட்டுக் கோல் என்பது வரும். தீப்பற்ற வைக்க உதவும் ஓலையைச் சூட்டு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். சூண்டை: தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது. சுழற்றிப் போடுதலாலும், சுழற்றி எடுத்தலாலும் ஏற்பட்ட பெயராகலாம் அது. சூல்காப்பு: மகப்பேற்று அழைப்பு வளை காப்பு விழா என வழங்குதல் பொது வழக்கு. கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர் கோயில் வட்டார வழக்காக உள்ளது. சூழம்: நாவைச் சுழற்றி அடிப்பதால் உண்டாகும் ஒலியைச் சீட்டி என்பர். சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். சூழ் > சூழல் = சுழற்றல். சூழம் = சுழற்றியடித்தல். சீழ்க்கை > சீட்டி. சூழ்க்கை > சூழம். சூன்: உள்ளே துளைத்தல் சூலல் ஆகும். சுழன்று துளைத்தல் அது. சூல்நோய், சூலை நோய் என்பவை அவ்வாறு குடரைச் சுழற்றி வலியூட்டுவதால் பெயர் கொண்டவை. சூலம் என்பது கருவிப் பெயர். சூல் > சூன் ஆகும். உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும். இது தென்னக வழக்குச் சொல். சூத்தை என்பதும் அதன் வழி ஏற்பட்ட சொல்லாம். செடி: செடி என்பது நாற்றம் என்னும் பொருளில் வழங்கும். மரம் செடி கொடி என்னும் இயற்கையுள் ஒன்றாகிய செடி இருட் போதில் ஆடுதலும் அதன் நிழலசைவும் அச்சம் உண்டாக்கக் கண்டவர்கள் செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும். ஓராளும் கறுப்பு உடையும் பேய் என்று அஞ்சுதலைப் பாவேந்தர், பாண்டியன் பரிசில் குறிப்பிடுவார். செதுக்கி: களை கொத்தி, களை சுரண்டி களைக் கொட்டு என் பவை புல் அல்லது களை செதுக்குவதால் பெயர் பெற்றவை. செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்கு கின்றது. செப்பு: சொல்லுதல், செம்பால் ஆகியது என்னும் பொதுப் பொருளில் நீங்கிச் செப்பு என்பது, செப்பம் செய்யும் கருவிப் பொருளாகக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பம் என்பது அதன் பொருள். செப்பம் = செம்மை, தூய்மை. செம்பன்: செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக் காவிளை வட்டார வழக்காகும். செம்பு காய்ச்சி உருக்கிச் செய்யப்பட்ட காசு உடைமையும், செம்பொன் என்று வழங்கும் வழக்குடைமையும் செல்வமாக வளர்க்கும் பிள்ளைக்கு ஆயது. செம்மல் என்பதும் நிரம்புதல் பொருள தாம். செருவை: செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப் பீரி வட்டார வழக்காகும். செருகி வைக்கப்படும் ஓலைக்குச் செருவை என்பதும் பெயர். அப் பெயரை வேலி என்னும் பொருளில் வழங்குவது தூர்த்துக்குடி (மேடாக்கிச் செய்த குடி) வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது. செலவுப் பெட்டி: கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு. செலவு என்பது அரை செலவு ஆகும். அரை செலவு என்பது அரை பொருள் செலவு என்பதாம். அம்மியை அரைசிலை என்பார் வீரமா முனிவர் (சதுரகராதி). செலுக்கு: செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன் இடையெழுத்துகள் விடுப்பட்ட வடிவம் இது. ஓரிடத்துக் கூறப்பட்ட சொல் பல்வேறு இடங்களுக்குச் சென்று வழங்கு வதே செல்வாக்கு. அது தன்பொருள் இழந்து செல்வத் தொடர்பு கொண்டதாயிற்று. செவியன்: பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால் அதன் செவி நீளம் தனி அடையாளமாகிவிடும். செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார். செழி: செழுமை செழிப்பு, செழிமை, செழி என ஆகும். செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சேற்றுமண் தொழிமண் எனப்படுவது பொது வழக்கு. தொழி உழவு நெல் நடவுக்கு உரியமண். செழிப்பான பயிர், செழிம்பான வாழ்வு என்பனவும் இவ்வழிப்பட்டனவே. செறு: செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள் செறு என வழங்கினர். அது ஒரு குறித்த நில அளவையும் ஆயது. நூறு செறு என்பது புறநானூறு. செறுவாய் என்னும் பெயரொடு ஊர்கள் உள்ளமை தொழுதூர், திட்டக்குடி வட்டாரங்களில் காணலாம். சேக்காய்: குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. குழந்தையை விரும்பி அரவணைத்து அது விரும்புவதைத் தந்து வந்தால் எந்தப் பிள்ளையும் உறவாகிவிடும். வெள்ளை நிறத்தில் எந்த நிறமும் படிவது போல் பிள்ளை மனமும் விரும்புபவர் மேல் படியும். அதனால் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் - ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள். சேக்காளி: சேர்ந்து பேசிப் பழகி இருப்பவன் சேக்காளி என்பது பொது வழக்கு. நட்பு உடையவர் என்பது பொருள். சேர்க்கை, சேர்ப்பு என்பவற்றில் உள்ளதுபோல் சேர்க்காளி, சேர்த்தாளி என்பது ரகர ஒற்று இல்லாமல் உள்ளது. இது தென்னக வழக்காகும். சேந்தி: தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது புரையில் அதனை அள்ளியெடுத்தற்கென வைக்கப்பட்ட வழிக்குச் சேந்தி என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சேந்துதல் = அள்ளுதல்; நீர் முகத்தல் சில இடங்களில் நீர் சேந்துதல் என வழங்கும். சேப்பான்: சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன் சேர்த்து மெல்ல, வாய் சிவப்பேறும். சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும். வெற்றிலை பாக்குப் போடுதல் என்றாலே சுண்ணாம்பும் சேர்ந்ததே. சேரா: நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது. பூரல் = துளைத்தல், மூக்குப்பூரல் = மூக்குக் குத்தல். பூரான் நிறம் சிவந்தது. சேரா என்பது சிவப்பானது என்னும் பொருளில் வழங்குகின்றது. சேவை: தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு. ஆனால் இடப்பொருளில் பக்கம் என வழங் குதல் நெல்லை வட்டார வழக்காகும். மடத்துச் சேவை, காட்டுக்குச் சேவை என்பவை மடத்துப் பக்கம், காட்டுக்குப் பக்கம் என்னும் பொருளவை. இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு. செவ்விய ஊண் என்னும் பொருளது. சையல்: சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர். இது சாய்ந்து சரிதல் என்பதன் தொகுத்தல் ஆகும். சொக்கப்பனை: கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி, அதன் மட்டை ஓலை முதலியவற்றால் சுற்றும் சூழ மூடி, தீமூட்டி எரிப்பது சொக்கப்பனையாகும். இது முகவை நெல்லை வழக்கு. சொக்கன்: சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது - சொக்குதல், வளைந்து கூனியிருத்தல் பொருள தாகும். அதனால் குரங்குக்கு ஆகியது. சொங்கல்: ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது. சுரங்கம் என்னும் துளைத்தல் பொருட் சொல் சொங்கம், சொங்கல் என்றாகி யிருக்கலாம். சொங்கி: உள்ளீடு அற்றதைப் பதர் என்பது பொது வழக்கு. உள்ளீடு இல்லாத கதிரைச் சொங்கு என்பது நெல்லை வழக்கு. சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது. சோளத்தின் மேலொட்டிய தோல் சொங்கு எனப்படும். அதனால் சொங்குச் சோளம் என்றொரு சோள வகையும் உண்டு. சொட்டை: சொட்டுதல், துளிதுளியாக நீர் விடுதல் ஆகும். சொட்டுச் சொட்டாக எண்ணி நான்கு சொட்டு விட்டுக் குடி என்பது மருத்துவ வழக்கு. பயிர் நிலத்தின் ஒருபகுதியில் முளை யாமலோ, கருகியோ போய் விட்டால் என்ன சொட்டையா? என்பர். முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை. மயிர் சொட்டி விட்டதால் ஏற்பட்ட பெயர். இது பொது வழக்காகும். சொடி: வெடிப்பு என்பது சுறுசுறுப்பு எனப்படும். இது பொது வழக்கு. சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது. சொடிதல் என்பது கதிர் காய்ந்து வளைதல் பொருளில் முகவை, நெல்லை வழக்கு களில் உண்டு. சொதி: நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பான இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ சாறாகவோ நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக - இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவை யுணவு - கண்ணமுது போன்றது - சொதியாகும். சொதியில்லாமலா விருந்து என்பது பழிப்புச் சொல். சொம்: சொம் என்பது பழஞ்சொத்து என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அப் பொருளில் மாறாமல் கோட்டூர் வட்டார வழக்கில் சொம் என்பது வழங்கு கின்றது. சொருகுசட்டி: ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை உள்ளடக்கி வைப்பதும், அதைத் தூக்காகப் பயன்படுத்துவதும் வழக்கம். அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும். சொலுசு: முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும் நீர் விழும் இடத்தைச் சொலுசு என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சலசல, சளசள, என்பவை போலச் சொல சொல என ஒலிக்குறிப்பாகிச் சொலிசு சொலுசு என வழக்கில் வந்திருக்கலாம். சொள்: சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. சொள் சொள்ளென அரிப்புத் தாங்க முடியவில்லை என்பது நெல்லை, முகவை வழக்குகளாம். சொள் சொள் இரட்டைச் சொல். சோங்கண்: சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. ஓரக்கண் என்பது கடைக்கண். பால் வழிப்பட்ட பார்வையைக் குறிப்பது அது. சோரக்கண் என்பது சோங்கண் என ஆகி வழக்குப் பெற்றிருக்கக் கூடும். சோரம் போதல், இடக்கரடக்கு. சோங்கு: சொங்கு > சோங்கு. உள்ளீடு இல்லாததை, இருந்தும் வலிமை இல்லாததைச் சோங்கு என்பது பொது வழக்கு. மதுரை மாவட்டத்தில் சோங்கு என்பது கொடுமை என்னும் பொருளில் வழங்குகின்றது. கோண், கோணல் என்னும் பொருளில் நெல்லை வழக்கு உள்ளது. சோதா: சொத சொதப்பான - கெட்டியற்ற - தடிப்பானவனைச் சோதா என்று பழிப்பர். அத்தகையவன் பிறர் போல் ஓட நடக்க வேலை செய்ய முடியாமையால் சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று. சோதாக் கடா என்றும் கூறுவர். இது முகவை நெல்லை வழக்கு. சோழக் கொண்டல்: சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும். வட கிழக்குப் பருவக் காற்றைக் குறிப்பது அது. கொண்டல் = நீர் கொண்டு வரும் மேகம். ஞாறு: ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு என்பது நாற்று. எ-டு: ஞான் > நான்; ஞாறு > நாறு. ஞாறு என்பது தொல்பழ வழக்கு. யாறு > ஆறு; யானை > ஆனை என்பவை போல. நாறுதல் = முளைத்தல். த தக்கம்: தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு, தடுக்கம் என்பவை தடுத்தல், நிறுத்துதல் பொருள் தருவனவாம். தட்டுத் தடங்கல் என்பது இணைச்சொல். இனித் தருக்கம் என்பதும் தடுத்து நிறுத்துதல் பொருளில் தொகுத்துத் தக்கமாகி யிருக்கவும் கூடும். தக்கை: கனமற்ற பழுப்பு என்பது தக்கை என வழங்கும். காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம். புட்டிகளின் மூடி தக்கையாகும். இனி விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது. தேய்வை=தேய்ப்பான். தகண்: முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணை யாக வழங்குதல் தவணை. ஒரு பாறையைப் பெயர்த்தல் வரை வைத்துப் பிளத்தல் தகணையாம். பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு. தகணை: ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு. தகணையைப் பத்தி என்பது திருமங்கல வட்டார வழக்கு. ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை எனப்படும் வழக்கத்தை எண்ணலாம். தவணை > தகணை. கரும்புத் துண்டைத் தகணை என்பதும் வழக்கு. தகுணி: தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய இசைக் கருவி ஒன்று தகுணிச்சம் என வழங்கப் பெறுதலை நோக்கின் தகுணி என்பதன் தணிவுப் பொருள் விளக்கமாகும். தகை: தகைப்பு=களைப்பு, சோர்வு. ஓடி வந்தால் தகைப்பு ஏற்படும். மாடு வேலை செய்து வேலை விடுதலை தகைப் பாறுதல் (தைப்பாறுதல்) என்பர். தகைப்பின் மூலம் தகை. தகை என்பது நீர் வேட்கையாகும். தகையாக இருக்கிறது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தென்னக வட்டார வழக்கு. பெருந்தகை, தகையோர் என்பவை உயரிய தன்மை என்பதன் வழிப்பட்ட இலக்கிய வழக்குச் சொல். தங்கரித்தல்: தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. நெல்லைப் பகுதியிலும் கேட்கலாம். தங்குதல் பொருளது இது. அவன் ஓரிடத்தில் தங்கரிக்க மாட்டான் என்பர். தங்கரிக்க முடியாது என்பது காத்தல் என்னும் பொருளில் வழங்கலும் உண்டு. தங்கரித்தல்=தடுத்து நிறுத்துதல். தங்காலம்: காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம் எனவும் வழங்கும். தன் என்பது மழையைக் குறிப்பது பழவழக்கு. தற்பாடிய தளியுணவிற் புள் என்பது வானம்பாடி பற்றிய பட்டினப்பாலை அடி. தற் காலம் > தன்காலம் > தங்காலம் எனப்படும். திருச்செந்தூர், நெல்லை வட்டாரங் களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது. தஞ்சி: தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது தஞ்சி என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது. தஞ்சி என்பது பை என்னும் பொருளது. பொருட்பாதுகாப்பாகிய பையைத் தஞ்சி என்பது பொருள் பொதிந்த வழக்காகும். தட்டி: தட்டி என்பது தடுப்பு என்னும் பொருளில் பொது வழக்கு. தட்டி பின்னல், தட்டி யடித்தல் என்பவை வழங்கு சொற்கள். தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும். இனித் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும். தடுக்கு, தடுப்பு, தடை, தட்டு என்பன வெல்லாம் ஒருவழிச் சொற்கள். தட்டு: தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. தட்டுத்தடை என்பது இணைச் சொல். தட்டுப்படுதல் தோன்றுதல் பொருளது. கண்ணில் தட்டுப்பட்டாள் - என்பது பாவேந்தர் பாடிய அழகின் சிரிப்பு. தட்டுதல் என்பது கிடைத்தல் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. தட்ட மாட்டேன் எனப் போகிறது என்பது முகவை வழக்கு. அதுவும் கிடைத்தல் பொருளதேயாம். தட்டூடி: தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். வாயாடுவது வாயாடி ஆவதுபோல, ஊடாடுவது ஊடியாயது. பலகைக் கட்டில் ஊடும் பாவும் பலகையாக இருத்தலைக் காண்க. தடச்சட்டி: தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும். தட என்பது அகன்ற பெரிய உயர்ந்த என்னும் பொருள் தரும் உரிச்சொல் தடந்தாள் நாரை என்பது குறுந்தொகை. அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம். தடி: தடி என்பது தடித்தது, வெட்டுதல், தசை முதலிய பல பொருள்தரும் இருவகை வழக்குமுடைய சொல். அப் பொதுப் பொருள் அன்றி, தடி என்பது ஏர்க்கால் என்னும் பொருளில் சிங்கம் புணரி வட்டார வழக்காக உள்ளது. ஏர்த்தடி என்பது முகவை வழக்கு. தடிவிளையாட்டு: சிலம்பு விளையாட்டு பழமையானது. அது சிலம் பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. தடிக்கம்பு, ஊன்றுதடி என்பன கம்பு என்னும் பொருளில் வருதல் அறியலாம். தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன் என்பது கொடுங்கோல் குறித்த பழமொழி. தடைச்சட்டி: உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். தடுத்து நிறுத்தும் சட்டி தடைச் சட்டியாம். பொதுமக்கள் பார்வையில் விளங்கும் பட்டறிவுச் செயல் அறிவியல் கூறு அமைந்தது என்பதை விளக்கும் ஆட்சிகளுள் ஈதொன்று. தண்டயம்: சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில் உலா ஊர்தி. இவ்வூர்தி களுக்குப் பயன்படுத்தப்படும் கம்பு வளைய வேண்டுமாறெல்லாம் வளைந்து தருவதும் வளை என்னும் பெயருடையதுமாகிய மூங்கில் ஆகும். தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும். தட்டு வண்டி: மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். அவ் வழக்கம், பின்னர்க் குதிரை இழுக்கும் மூடு வண்டிக்கும் பெயராயிற்று. மேல் தடுப்பும் உடையது மூடு அல்லது கூண்டு வண்டி. தண்ணீர்க்கால்: அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் கால்; ஓடாமல் கிடக்கும் நீர் கிடை; இவ் விருவகையிலும் (ஓட்டமும் தேக்கமும்) உள்ளமை கண்கூடு. தண்ணீர்ப் பழம்: தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது. தென்னகப் பகுதியில் தண்ணீர்க் காய் எனக் கறியாக்கியுண்ணத் தக்க காய் உண்டு. சுரைக்காய் (குண்டுச் சுரைக்காய்) போன்றது அது. தற்பூசுணை என்பதில் உள்ள தன் என்பது தண்ணீர்ப் பொருளது. தற்காலம் = கார்காலம், மழைக் காலம். தற்பூ என்பது கொச்சையும் வழுவுமாம். தத்தம்: தம் தம் என்பது தத்தம் ஆகின்றது. கொடுத்தல் என்னும் பொருளது. வந்தவர்களுக்கெல்லாம் தத்தம் பண்ணி விட்டான் என்பது பழமொழி. தம் பொருளை வந்தவர் தம் பொருளாகக் கொள்ளுமாறு தருதல் தத்தம் ஆகும். தத்து என்பதும் அத்தகு மக்கட் கொடையே. ஒரு வயல் நீர், அதனை அடுத்த வயலுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மடையைத் தத்துவாய் மடை என்பது உழவர் வழக்கு. தத்துவான்: நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் மடை என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச் செல்லும் விட்டில் தத்துக்கிளி என்றும் வழங்குதல் பொது வழக்கு. தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும். தம்பலத்தார்: வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை தம்பலம் எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சி யொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன் கூட்டால் அமையும் தம்பலம் போன்ற ஒட்டுடையவர் - உறவினர் - தம்மை, தம்பலம் என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். தயநாத்து: உன் தயநாத்துக்கெல்லாம் நான்மசிய மாட்டேன் என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் - மன்றாடுதல் - பொருளது. நாற்று - நாத்து என்றாதல் வழக்கு. தயை - தயவு - தய என நின்றது. நாறுதல் என்பது முளைத்தல்; வெளிப்படுதல் தயவு ஏற்பட நீ கெஞ்சினாலும் நான் உதவ மாட்டேன் என்பது பொருளாம். மசிதல் என்பது குழைவு கொள்ளல் பொருளது. மசித்தல்=கடைதல். தரங்கு: அரங்குதல் = தேய்த்தல், தடவுதல், வருடல், அரங்கு > தரங்கு. தகர ஒற்று மிகல். புல் செதுக்கும் அல்லது களை செதுக்கும் கருவியைக் களைக் கொட்டு, களை சுரண்டி, களை கொத்தி, சுரண்டி எனல் பொது வழக்கு. தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி, எளிமையாய் மக்கள் வழக்கில் இடம்பெற்ற சான்றாம். தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது. தரைதல் = ஊன்றுதல்; என்னும் வழியது அது. தரவு: ஒருபொருளைப் பெற்றுக் கொண்டு - வரவு வைத்துக் கொண்டு - அதற்குச் சான்றாகத் தரும் எழுத்தைத் தரவு என்பது மக்கள் வழக்காக இருந்து கல்வெட்டிலும் இடம் கொண்டது. கலிப்பாவின் உறுப்புகளுள் முதற்கண் தருவ தாகிய உறுப்பைத் தரவு என்பதும், குறவஞ்சிப் பாடல்களில் வரும் தரு என்பதும் எண்ணத்தக்கன. தரவை: தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது. பரவை என்பது கடற் பெயர். பரவை > தரவை. வல்லொற்று மாற்றம் இது. தருவை: கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன. தருவது பெற்றுத் தருவதாம் நீர்நிலைக்குத் தருவை என்னும் பெயரீடு இருப்பது சிறப்புமிக்க ஆட்சியதாம். எ-டு: புத்தன் தருவை. தலசு: தலைசு என்பது ஐகாரம் அகரமாதல் முறைப்படி வந்தது. தலைமையானது, தலைமை என்னும் பொருளது அது. பெரிய குளம் வட்டாரத்தில் தலசு என்பது தலைவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. தலைமை பொது வழக்கும், பெரு வழக்குமாம். தலை: தலை என்பது தலையைக் குறித்தல் பொது வழக்கு. அது தலையைக் குறியாமல் ஆள், ஆளுக்கு எனக் குறித்தல் உண்டு. அதுவும் பொது வழக்காகிவிட்டது. தலைக்கு ஐந்து கொடு என்பதில் ஆளுக்கு என்பதே பொருள். இது பெரும் பிழைப் பொது வழக்காகத் தலா என வழங்குகின்றது. துலை என்னும் ஏற்ற இறைவைப் பொறியும் தலாக் கிணறு, தலா எனப் பிழை வழக்குக் கொண்டுள்ளது. தலைப்பிணி விலக்கு: தலையில் முடி சேர்ந்து கற்றையாகி விடாமல் - சடை யாகி விடாமல் - தனித் தனி முடியாகப் பயன்படுத்தும் காய் சீயக்காய் ஆகும். சீத்தல் = அழுக்கு நீக்குதல். தலைப்பிணி விலக்கு என்பது முடிசேர்தலை மட்டுமன்றிச் சொண்டு, சொறி, ஈர், பேன் என்பனவும் பற்றாமல் செய்வது என்பதை எண்ணினால் மேலும் இவ் வழக்கின் சிறப்பு விளங்கும். இது நெல்லை வழக்கு. தவ்வாண்டை: தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடு தலைத் திருவில்லிப்புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர். விளையாட்டு விளையாண்டோம் என்பதில் ஆட்டு ஆண்டு ஆயது போல ஆயது இது. தவ்வுதல்=தாவுதல். மேலெழும்புதல் பொருளது தாவுதல். சோர்வுறுதல் பொரு ளது தவ் என்பது இது மதுரை வட்டார வழக்குமாம். தவசி: தவத் தன்மை வாய்ந்த துறவியரைத் துறவி என்பது பொது வழக்கு. இப் பெயருடையார் உளர். தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொது வகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று. இது தென் மாவட்ட வழக்கு. தவளைக் குரங்கு: நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர். வளை கம்பியைப் பெறும் வளைவு கொண்டி எனப்படும். ஒன்றைத் தன்னிடம் கொள்வது கொண்டி எனப்பட்டது. கொள்ளையடிப்பது கொண்டி எனப்படுதல் பண்டை வழக்கு. முகவை, நெல்லை வட்டார வழக்கில் தவளைக் குரங்கும் கொண்டியும் உள. தவளை நோய்: தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச் செடியின் நோய் தவளை நோய் எனத் தோட்டத் தொழில் புரிபவர் வழக்கில் உள்ளது. தேரை, யானை என்பவை நோய்ப் பெயராக இருப்பது போன்றது இத் தவளை என்னும் நோய்ப் பெயருமாம். தவி: தவிசு என்பது பலகை. இருப்புப் பலகை, தட்டுப் பலகை எனப்படும். அகப்பை வகையில் தட்டகப்பை என்பதும் ஒன்று. குமரி மாவட்டத்தில் தவி என்பது அகப்பை என்னும் பொருள் தருதலை நோக்கச் சோற்றுச் சட்டுவம் மரத்தால் ஒரு காலத்தில் இருந்தமையை உணரலாம். தவுள்: பனங்கொட்டையின் உள்ளீடாக இருக்கும் பருப்பைத் தவுள் என்பது தூத்துக்குடி வட்டாரத்தார் வழக்கு. கரும்பின் கணுவூடு துண்டு தவணை தவண் எனப்படுவது போல வழங்கும் வழக்கு இது. தவண், தவுள் என்பவை கவளம் என்பது போல் உட்கொள்ளல் பொருளில் வழங்குதலை அறியலாம். தழுகை: வழுவழுப்பு என்பதன் வழிவந்தபெயர் வாழை. அது தழு தழுப்பு என்பதன் வழியாகக் ஏலக்காய்த் தோட்டத்தார் வழக்கில் அறிய வருகின்றது. வாழை இலையைத் தழுகை என்கின்றனர். இனித் தழுகை என்பது இறந்தார்க்குப் பன்னிரண்டாம் நாள் செய்யும் கடனாகக் கம்பம் வட்டாரத்தில் வழங்குதல், வாழையிலையில் படைத்தல் வழியாக ஏற்பட்டிருக்கலாம். தள்ளிவைத்தல்: ஒதுக்கிவைத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, பூப்புற்ற பிள்ளையைத் தனித்திருக்க வைத்தலை உசிலம்பட்டி வட்டார வழக்கில் கேட்க முடிகின்றது. ஒதுக்கம், ஒதுக்கி வைத்தல் போல்வது இது. குச்சிலுள் வைத்தல் என்பது முகவை வழக்கு. தள்ளை: தள்ளை என்பதைத் திசைச் சொல்லாகப் பழைய உரையாசிரியர்கள் உரைப்பர். தள்ளை என்பது தாயைக் குறிப்பது. குலை தள்ளும் வாழையைத் தள்ளை என்பது இலக்கிய வழக்கு. அவ்வாறே ஈன்ற தாயை வாழைப் பெயரால் குறிப்பது ஈனுதல் பொருளிலேயே யாம். வாழை குலை தள்ளுதல் ஈனல் எனப்படும். வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் என்பது இலக்கியச் சான்று. ஈனா வாழை மக்கள் வழக்கு தள்ளையைத் தாய் என்னும் பொருளில் வழங்குதல் குமரி மாவட்ட வழக்கு. தளிகை: தளி = கோயில்; தளிகை = கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு. இது ஐயங்கார் வகையினரால் சமையல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. தறிகெடுதல்: தறி என்பது நிலைபெறல், ஊன்றுதூண். தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது. இது அவித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது. நிலைமாறுதல் கருத்து வழியாகக் கிளர்ந்ததாகலாம். தன்னக் கட்டுதல்: மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள். வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக்கட்டுதல் ஆகும். தாங்கல்: சுமை தாங்குதல் பொறுத்தல் முதலிய பொருள்களில் தாங்கல் வருதல் பொதுவழக்கு. அவருக்கு என்மேல் கொஞ்சம் மனத்தாங்கல் என்னும் வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும் பொருளது. மனத்தில் துயர் தங்குவதாம் நிலை தாங்கலாயது. தாங்கல் என்பது தங்குதல். > தாங்குதல். இவ்வகையால் தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. ஏந்தல், தாங்கல் என்பவை இனி ஏங்கல் தாங்கல்என்பது ஏங்கி வருவார்க்குத் தாங்கலாக இருப்பது ஏங்கல் தாங்கலாம். இவை முகவை வழக்கு. தாச்சி: தா(ய்)ச்சி என்பது தலைமை என்னும் பொருளில் திருப்பாச்சேத்தி வட்டார வழக்காக உள்ளது. தாயே குடும்ப - இன - த் தலைமை, தாய்த் தெய்வத் தலைமை என்ப வற்றின் வழிவந்த ஆட்சி ஆகலாம். தாய்மொழி, தாய்நாடு, தாயம் என்பவற்றின் தலைமைத் தகுதியைக் கருதலாம். தாட்டி: தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு. தாட்டு ஓட்டு என்பது இணைமொழி. தாட்டு தடை. தட்டு > தாட்டு. தட்டோர் = தடுத்து நிறுத்தினோர். (புறம் ) தடுத்து நிறுத்துதல் வலியர்க்கே ஆகுமாதலால் வலிமைப் பொருள் கொண்டது. தடுத்தல், கிளித்தட்டு, தட்டுத்தடுமாறி என்பவை எண்ணுக. தாத்து: தாழ்ந்து பள்ளமாக உள்ள இடத்தைத் தாத்து (தாழ்த்து) என்பது தென்னக வழக்காகும். தாழ்த்து = தாழ்வான இடம். தாதாரி: தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகும். தாய்தாரி > தாதாரி. பட்டம் தாங்கியவர் பட்டதாரி எனப்படுவது போன்றது. தாரம் = தன்னுடைமையானது. தாம்படிப்பு: களத்தில் மாடுகட்டிப் போரடித்தல் பிணையல் எனப்படும். பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு தாம்பு ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல ) தாம்படிப்பு என்பது கம்பம் வட்டார வழக்காகும். தாம்பு + அணி = தாம்பணி, (தாவணி) எனல் அறிக. தாய மாட்டுதல்: தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன் என்பது வழங்குமொழி. இது நெல்லை வழக்கு. தாயம் என்பது தாயவிளையாட்டு. அவ்விளையாட்டில் ஈடுபட்டவர் எழுந்து வருதல் அருமை. ஆதலால் அதன் வழி உண்டாகிய வழக்குச் சொல்லும் ஆகலாம். தாராளம்: தார் என்பது படை. பகைவர் நாட்டில் செல்லும் படைஞர் தமக்கு அகப்பட்ட பொருள்களை எல்லாம் தமக்காக அள்ளிக் கொள்வதுடன் தம்மொடு வருவார்க்கும் கேட்பார்க்கு மெல்லாம் வழங்குதல் தாராளம் ஆகும். இது பொது வழக்கு. தாரி: தார் என்பது நீண்டு குறுகிய நிலம். நெடும் போக்காக இருப்பது. அதன் வரப்பும் அதற்குத்தக நெடிது செல்லும். தாரி என்பது தாரியாம் நிலத்து வரப்புக்கு ஆகி, அது நடைவழி ஆதலால், நடைவழி என்னும் பொருளும் தருதல் மதுரை வழக்காகும். தாலி: மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல். செம்மறி யாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி என்பது ஆயர்வழக்கு. தாலி என்பது தொங்குவது என்னும் பொருளது. தால் - நாக்கு. தாலம் = பனை. தாவடி: தாழ்ந்த அடி என்பது தாவடி எனல் பொது வழக்கு. மரத்தின் தாழ்ந்த கிளையைத் தாவடி என்பது மதுரை மாவட்ட வழக்காகும். தாழ்வு > தாவு. எ-டு: வீழ்வு > வீவு. தாவு: வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது வாவு என்றும் வழங்குவது போல் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு. தாழ்வு = பள்ளத்தாக்கு, கிடங்கு. மேடு தாவு பார்த்து வண்டியோட்டு என்பது வேளாண் தொழில் வழக்கு. கழுத்தின் கண்டத்தின் கீழேயுள்ள குழியைத் தாவு என்றும் கூறுதல் உண்டு. தாவைப் பிடித்து நெரித்து விட்டான் என்பர். இவை தென்னக வழக்குகள். தாளி: தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல் என்பர் பழைய உரைகாரர். பலகடித்தல் என்பது பல்லியாடல் என்பது பழ வழக்கு. நெல்லை வழக்கு இது. தான்: குழம்பிலே போட்ட காயைத் தான் என்பது பார்ப்பனர் வழக்கம். எதனைக் கொண்டு - மூலமாகக் கொண்டு - செய்யப் பட்டதோ அதற்கு அப் பெயரிடல் வழக்கம். பூண்டு போட்டது பூண்டுக் குழம்பு. கத்தரிக்காய் போட்டது கத்தரிக்காய்க் குழம்பு. ஆதலால் தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் தான் எனல் வழக்காயிற்று. திடாரிக்கம்: திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. நோக்குக; ஆரவாரிக்கும் தங்களிடம் உண்மையில்லாதும் இவ்வளவு திடாரிக்கமாக அயலார் பேசும் போது, தமிழர் தங்களிடம் உண்மை இருந்தும் வாய்மூடிக் கிடக்கிறார்களே என்று வருந்துவார் பாவாணர். â£l«>âl«. திட்டம் உறுதிப் பாடானது. இது நெல்லை வழக்கு. திப்பி: புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும். அவ்வாறே கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் திப்பி எனல் தென்னக வழக்கு. கரும்புச் சக்கை; சோளச் சக்கை என்பவையும் திப்பி போன்ற வழக்கே. திரட்டி: ஒரு பெண் பூப்படைதலைத் திரட்டி என்பது பார்ப்பனர் வழக்கு. திரளுதல் என்பது பருவமாதல் ஆகும். திரட்டி விழா பூப்பு நீராட்டு விழா. வட்டாரம் தோறும் இனம் தோறும் இதற்கு வழங்கும் சொற்கள் மிகப்பலவாம். திரவக்கொடி: கொடியைத் திரட்டி வளைத்து பானை குடம் ஆயவை வைக்கப் பயன்படுத்தும் புரிமணை (பிரிமணை)யைத் திரவக் கொடி என்பது கொங்கு நாட்டு வழக்கு. திரட்டப்பட்ட கொடி என்னும் முறையில் திரளக்கொடி எனப்பட்டு, திரவக் கொடியாகத் திரிந்திருக்கலாம். திராணி: திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது. வலிமையற்றவனைத் திராணி கெட்டவன் என்பர். திரன் வலிமை. திரனை உடைமை திரனி > திரானி > திராணி. திரிமணை: மணை என்பது அடிக்கட்டை, துண்டுப்பலகை எனப் பொருள் தரும் சொல். திரிகை, மரத்தினால் முற்காலத்தில் செய்யப்பட்டு வழக்கில் இருந்தமையால் அதனைத் திரிமணை (திரிகை) என்பது ஒட்டன்சத்திர வழக்கு ஆயிற்று. மணை எ-டு: அரிவான்மணை. திரிகால்: கால் என்பதற்குச் சக்கரம் என்பது ஒரு பொதுப் பொருள். சக்கரம் சுழல்வது கொண்டு திரிகால் என வழங்குதல் தலக்குள வட்டார வழக்காக உள்ளது. தலைக்குளம் தலக்குளம் எனப்பட்டது. திருமாளிகை: அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும். திருமாளிகைத் தேவர் என்னும் இசைப்பா வல்ல சிவனிய அடியார் பெயரால் திருமாளிகை சிவனியச் சார்புடைமையும் புலப்படும். திரு = தெய்வத் தன்மை. திருவலகு: திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை. அலகிடுதல் = பெருக்குதல். அலகு = பெருக்குமாறு. திருக்கோயில் வழக்கில் இருந்த இது பார்ப்பனருள் மாலிய வழிபாட்டார் (ஐயங்கார்) வீட்டு வழக்காகக் கொண்டுள்ளனர். திருவாதல்: பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் பேராசிரியர் (தொல்காப்பியம்) உரையைக் கருதலாம். அதன் பொருள் அழகு. இனிச் செல்வம் என்பதும் அது. அதனைப் பெறாளை இருசி என்பது பொது வழக்கு. தீ: தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு. தீ என்பது அழகு என்னும் பொருளில் அம்பா சமுத்திர வட்டார வழக்காக உள்ளது. தீவாக = அழகாக. இதனை நோக்க, நீர் சூழ்ந்த நிலப்பகுதியாம் தீர்வு (தீவு) தரும் காட்சியின்பம் துய்த்த பேற்றால் தீவு அழகு என்னும் பொருளில் வழங்கித் தீ என அமைந்திருக்கலாம். தீவாக என்னும் சொற்றொடர் வழக்கும் இதனை விளக்கும். தீயாக என வராமை அறிய வேண்டும். தீசல்: எரிதல், எரிந்து கருகல், வாடை என்பவை பொது வழக்குப் பொருள். ஆனால் பார்ப்பனர் வழக்கில் தீசல் என்பது பொறாமை என்னும் பொருளில் வழங்குகின்றது. உள்ளெரிவே பொறாமை ஆதலால் அதன் வெளிப்படு விளக்கம் இதுவாம். தீத்தாங்கி: பயன்படுத்தி முடித்த பொருள்களை - அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம். கூரை வீடுகளில் இதற்கெனப் பரணை அமைப்பது உண்டு. பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது. பயன்படுத்தித் தீர்ந்த பொருள் களைத் தாங்குவதால் இப் பெயர் பெற்றிருக்கும். தீந்து: வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க மை போடுவது வழக்கம். மசகு என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். வைக்கோலை எரித்துக் கரியாக்கி அக் கரியில் எண்ணெய் விட்டக் குழப்பிப் பயன்படுத்துவர். ஆதலால், அவ் வினைப்பாடு கொண்டு தீந்து என வழங்கப்படுவதாயிற்று. தீயல்: தீப்போல் எரிவு உண்டாக்குவதைத் தீயல் என்று நாஞ்சில் நாட்டில் வழங்குகின்றனர். எரிக்கும் குழம்பு காரக் குழம்பு ஆகும். எரிதல் வேதல் என்பதை வயிறு எரிதல் (வயிற்றெரிச்சல்) வயிறுவேதல் என வேதனைப்படுத்துதல் பற்றிய வழக்கு உண்டு. தீயல் என்பது எரிதல் பொருளில் காரக் குழம்பைக் குறித்தல் அருகிய வழக்காக அறியத் தக்கதாம். தீயாட்டு: துணியைப் பந்தாகச் சுருட்டி எண்ணெயில் ஊற வைத்துத் தீமூட்டிச் சுழற்றுதல் சூ(ழ்)ந்து எனப்படுதல் பொது வழக்கு. அதனைத் தீயாட்டு என்பது குற்றால வழக்கு. தீப்பந்தம் கொண்டு சுற்றி ஆடுதலால் பெற்ற பெயர் இது. தீற்றி: திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு. துற்றுதல் என்பதும் தின்னுதல் பொருளில் வரும். துற்றுதல் > திற்றுதல் > தீற்றி. துக்காணி: துண்டு துக்காணி, என்றும் துட்டு துக்காணி என்றும்; வழங்கும் இணைச் சொல்லுள் ஒன்று துக்காணி. துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம். துக்கடி என்பது நில அளவைப் பெயர்களுள் ஒன்று. மிகச்சிறிய நிலப்பரப்பு. முகவை, நெல்லை வழக்கு இது. துண்டம்: ஒரு பெரும் பொருளைப் பகுத்துத் துண்டு போடுவது துண்டு என்றும் துண்டம் என்றும் வழங்கப்பெறும். துண்டு துண்டாக ஆக்கு என்பது ஏவல். துண்டம் துண்டம் செயும் அரி என்பார் அருணகிரியார். துண்டம் என்பது ஆட்டுத் தரகர் வழக்கில் 60 ஆடுகளைக் குறிப்பதாக வழங்குகின்றது. துணித்து: துணித்து என்பதற்குத் துண்டாக்கி என்பது பொதுப் பொருள். துணிக்கப்பட்ட துண்டுக்குத் துணித்து என்பது குமரி வட்டார வழக்கு. தனித்தாக அமைந்தது தனித்து என்றும், தனியன் என்றும் வழங்கப்படும் வழக்குப் போல்வது இது. துப்பு: துப்புக் கெட்டவன் என்பது அறிவு கெட்டவன் என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. துப்பு வலிமை; அது துய்க்கும் உணவால் உண்டாவது பற்றிய ஆட்சி. அறிவு கெட்டவன் என்பது, பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பதன் வழியதாகலாம். மானம், தவம், குலம், கல்வி எனப் பலவும் பசிவந்திடப் போம் என்பதொரு தனிப்பாடல். துப்புணி: துப்பும் நீர் எனபதைத் துப்புணி என விளவங் கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். தண்ணீர் தண்ணி எனப்படுவது போல், ணீர் ணியாகிவிட்டது. துப்புணி = எச்சில் (துப்பு நீர்). உமிழ் நீர் என்பதும் அது. துப்பு என்பது துய்ப்பு என்பதன் தொகுத்தல். அதன் செவ்விய வடிவம் அந் நீரின் துய்ப்புச் சிறப்பைக் காட்டுவது. அதன் எழுத்துக் குறையோ (துப்பு) இழிமை ஆகிவிட்டது. உண்டது அறச் செய்யும் அருமைநீர் அறியாமையால் பாழாக்கப்படுவது சொல்லால் தெளிவாகின்றது. தும்பைக் காலி: தும்பைப் பூ நல்ல வெண்ணிறமானது. சலவை தும்பைப் பூப் போல உள்ளது என்பது பாராட்டு மொழி. உவமை வகையால் சலவையைக் குறித்த தும்பை சலவை செய்வாரைக் குறிப்பதாகத் தும்பைக் காலி எனப்பட்டது. இது, திண்டுக்கல் வட்டார வழக்கு. ஏகாலி எனச் சலவையரைச் சொல்லுவதில் உள்ள காலி தும்பையொடு ஒட்டப்பட்டுள்ளது. ஏகாலி என்பது எழுகாலி என்பதன் பிழைவடிவு. அவர்கால் இரண்டு; கழுதைகால் நான்கு; கவைக் கொம்பின் கால் ஒன்று; ஆக ஏழுகால் என்பர். ஏகாலி நெல்லை, முகவை வழக்கு. துமித்தல்: துளித்தல், துமித்தல் எனப்படல் கம்பராமாயண வழக்கு. மோர்த்துளி மோர்த்துமி என்றாகும் என்பது கம்பர் பற்றிய ஒருகட்டுக் கதை. துமித்தல் என்பது துளித்தல் ஆகிய தூவுதல் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது. துமிதம் ஊர்புக என்பது இராமாயணம். துரப்பு: துடைப்பு துடைப்பம் என்பவை வாரியலைக் குறிக்கும், பொது வழக்குச் சொல். துரப்பு என்பது துடைப்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் குமரி வட்டார வழக்கில் உள்ளது. தூர்த்தல் (தூர்ப்பு) என்பது பெருக்குதலைக் குறிக்கும். தூர்ப்பு > துரப்பு. ஆகியிருக்கும். துடைப்பு துரப்பு ஆகாது. துடப்பு, தொடர்பு என்றே ஆகும். தூர்த்துக்குடி (தூத்துக்குடி) மேடாக்கப் பட்டு அமைந்த ஊர். தூர்தல். காது தூர்தல் = காதுத் துளை மூடிப்போதல். தூர்வை அள்ளல் உழவர் பணிகளுள் ஒன்று. துல்லியம்: இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத் துல்லியமாக என்பது தென்னக வழக்கு. துல்லியம் என்பது துலைக் கோலால் (தராசால்) நிறுத்துச் சொல்லப் படுவது போன்றது என்பதாம். துவ்வல்: தூவி என்பது இறகு. பறவைகளின் இறகு காற்றில் பறத்தல் கண்டு தூவி எனப்பட்டது. தூவுதல் என்பது துவ்வல் ஆகிப் பறவை இறகைக் குறித்தது. இது விளவங் கோடு வட்டார வழக்கு ஆகும். துவக்கு: துப்பாக்கி என்பதைத் துமுக்கி என்றார் பாவாணர். தும் டும் துமீல் டுமீல் என்பவை ஒலிக்குறிப்புகள். துமுக்கி என்பதற்கு முற்படத் துவக்கு என்னும் சொல் துப்பாக்கி என்னும் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது. துவரம்: துவர்த் தன்மை உடையது துவரம் ஆகும். துவர்ப்பு, துவர்த் தன்மை யுடைமையால் பெற்ற பெயர். துவரங் குறிச்சி செம்மண் மலையாக அமைந்ததால் பெற்ற பெயர். துவரம் பயறு வண்ணத்தாலும் சுவையாலும் பெற்ற பெயர். பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொறியல் கறியைத் துவரம் என்பது தென்னக வழக்கு. துளைக்கால்: வாய்க்கால் என வழங்கப்படும் பொது வழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர் தேங்கிய குளம், ஏரி முதலியவற்றில் இருந்து நீரை வெளி யேற்றிப் பயிருக்குப் பாய்ச்சுதல் வழக்கம். நீர் வெளியேறும் மடையில் துளைகள் உண்டு. அதனை அடைக்கவும் திறக்கவும் துடுப்பு அல்லது அடைப்பு உண்டு. துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர். துளை, கண் எனப்படும் ஆதலால், கண்வாய் என்பதும் அது. தூக்கம்: உறக்கம் என்னும் பொருளில் தூக்கம் என வழங்குதல் உண்டு. தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு. தூக்குவது மேலெடுத்தலாதல் உயரப் பொருள் தந்தது. உரிய அளவிலும் மிகுதியாதலைத் தூக்கு என்பர் அது, இனிப்பு தூக்காக உள்ளது என்பது போன்றவற்றில் வழங்கும். அது தூக்கம் எனப்படாமல் தூக்கு என நிற்கும். தூக்கு என்பது துணிகாயப்போடும் கொடிக் கயிற்றுக்குப் பெயராகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது. தூச்சம்: தேள்கடி பாம்புக்கடி முதலியவற்றுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டே, துணியை வீசுதல் பார்வை பார்த்தல் எனப்படும். தூசு என்பது துணி. துணி வீசிப் பார்வை பாத்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். தூட்டம்: தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது. துட்டின் வழியாக ஏற்படும் சிக்கல் துட்டம் ஆகி, தூட்டமாகலாம். தூதை: தூதை என்பது தொல்பழங்கால முகத்தலளவைப் பெயர் களுள் ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தூதை என்பதைக் காட்டுவர். கலம் என்பதும் அளவைப் பெயரே. தூதை, சிறுபானைக்குப் பெயராகக் கருங்கல் வட்டார வழக்கில் இருப்பது, தென்னகத் தமிழின் தொல் பழஞ் சான்றையும், பழமை போற்றும் வெளிப்படுத்தும். தூப்பான்: தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பத்திற்குரிய பெயர்கள் வட்டாரம் தோறும் அருமை அருமையாக விளங்குகின்றன. அதுபோல் பூப்பு பற்றிய சொற்களும் வட்டாரம் தோறும் அரிய அரிய வழக்குகளைக் கொண்டுள. தூம்பாக்குழி: அங்கணம் என இருவகை வழக்கிலும் வழங்கும் சொல், மதுரை வட்டாரத்தில் தூம்பாக்குழி என வழங்குகின்றது. தூம்பு என்பது துளை. தூம்பொடு கூடியமைந்த குழி என்பது நல்ல விளக்கமாகும். தூரி: ஊஞ்சல் (ஊசல்) என்பது வரிப்பாடலாக இளங்கோ வடிகளாரால் பாடுபுகழ் பெற்றது. ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படு கின்றது. ஊஞ்சலாடல் தூரியாடல் எனப்படும். அது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும். இனிக் கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின் அடிப்பகுதியை (தூர்) தூரி என்பது சீர்காழி வட்டார வழக்கு. தூவல்: தூவல் என்பது மழைப் பொழிவு. இது, தொன்மையான இலக்கிய வழக்கு. தூவல் என்பது எழுதுகோல். இது புதுவழக்கு; பாவாணர் கொடை. தூவல் என்பது உணவு என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின் றது. தூவல் பயிர்க்கும் (உயிர்க்கும்) உணவாவதுடன், உணவு ஆக்கித் தருதல், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்னும் குறளால் விளக்கமுறும். அவ் விளக்கம் பொது மக்கள் வெளிப்பாடு, தூவல் என்பதற்கு உணவுப் பொருள் கண்டதாம். தெட்டுதல்: தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. தெட்டாதிரான் பணி செய்திரான் என்னும் தனிப்பாடல் திருடாமல் வேலை செய்யான் என்னும் பொருளது. தெட்டுதல் வழியாகச் சேர்க்கப்படுவதே தேட்டு என்னும் கருத்து? மக்களுக்கு இருந்தமை வெளிப்படுத்தும். வழக்கு என்பது சொல்லால் விளக்கம் பெறல் ஆகும். தெண்டல்: தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான். திண்டல் என்பது திண்டு போன்ற பாறை; சான்று திண்டுக்கல். திண்டு > தெண்டு. தெண்டில் இருப்பது தெண்டல் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. தெண்டல், பச்சோந்தி. தெம்பாளி: திடமானவர் என்பதைத் தெம்பாளி என்பது தென்னக வழக்கு. தெம்பு + ஆளி. தெம்பு = திடம். தெம்மாடி என்பது இதற்கு மாறான சொல். தெம்பு அற்றவர் என்னும் பொருளது. தெம்பு ஆடிப்போனவன்(ர், ள்) தெம்மாடியாம். தெரிப்பு: காதில் குழந்தைப் பருவத்தில் அணியும் அணிகளுள் ஒன்று தெரிப்பு. அது, ஒரு குண்டு, சுரை, ஓடாணி என்னும் மூன்று பிரிவுகளையுடைய சிறிய அணிகலமாகும். சற்றே வயது வந்ததும் தெரிப்பைக் கழற்றிக் கடுக்கன் போடுவர். தெரிப்புக்கு முன்னே அணியப்படுவது வாளி எனப்படும் வளையம் ஆகும். இவை தென்னக வழக்கு. தெரிப்புக் கட்டுதல்: மாரியம்மன் வழிபாட்டில் பூக்குழி இறங்குதல் என்பது ஒன்று. தீயையும் பூவாக எண்ணி இறங்குவது அது. அதற்கு நோன்பு கொண்டு கயிறு கட்டுதல் வழக்கமாதலால், பூக்குழி இறங்குதல் தெரிப்புக் கட்டுதல் என மேலூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. காதில் போடும் அணி ஒன்று தெரிப்பு. காது குத்தி முதற்கண் போடும் சிறு காதணி. அதனைக் குத்தத் தக்க இடம் தேர்ந்து குத்துதல் பற்றி வந்த பெயர். தெரிப்பு, நெல்லை, முகவை வழக்குகள். தெல்லி: மீன்பிடி கூடையைத் தெல்லி என்பது நெல்லை வழக்கு. உருண்டைச் சுரைக்காய் போன்ற வட்ட வடிவினது அது. மீன் ஒழுகிப் போகாமல் நீர் ஒழுகிப் போகும் அமைப்பினது. இல்லி, என்பது ஓட்டை. இல்லிக்குடம் = ஓட்டைக் குடம் (நன்னூல்). கேட்டதைக் கேட்டவுடன் போகவிடும் மாணவன் இயல்புக்கு உவமையாவது அது. இல்லி > தெல்லி ஆயது தகரப்பேறு ஆகும். தெல்லிச்சட்டி: தெல்லி ஓட்டை என்னும் பொருள் தருவது தெல்லியில் சொல்லப்பட்டது. தெல்லி = துளை, கண். துளைச் சட்டி, கண் சட்டி என்று பொது வழக்காக உள்ள வடி சட்டியைத் தெல்லிச் சட்டி என்பது பானை வனைபவர் வழக்காகும். தெள்ளுத்தண்ணீர்: தெள் = தெளிவு. தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு. கஞ்சித் தண்ணீர் சோற்றுத் தண்ணீர், நீர்க் கஞ்சி எனப்படுதல் (நீராகாரம்) உண்டு. நீற்றுத் தண்ணீர் (நீச்சுத் தண்ணீர்) என்பதும் வழக்குகளே. தெளியக் கடைந்தவன்: கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்க்கு தெளிவு என்பது பெயர். அதில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட பின்னரும் ஏதேனும் இருக்குமெனக் கடைந்து பார்த்தல் தெளியக் கடைதல் ஆகும். இல்லை என்று சொல்லியும் இருக்கும் எனத் தேடுபவனைத் தெளியக் கடைந்தவன் என்பது நெல்லை வழக்கு. தெளிவு: வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்னக வழக்கு. தெளிவு கருத்துப் பொருளில் தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் எனவரும்; (திருக்குறள்). தெளிகணன்: தெளிகணன் என்பது தெளிந்த பார்வையன் எனப் பொருள் கொள்ளத்தக்கது. ஆனால் செட்டி நாட்டு வழக்கில் அவையறிந்து - ஆளறிந்து - பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது. இவ் வெதிரிடைப் பொருள் மங்கல வழக்கு ஆகலாம். தென்னு: தென்னுதல் தென்னு என்பவை வளைதற் பொருளவை. பல் கோணியிருத்தலைப் பல் தென்னியிருக்கிறது என்பதும், தேங்காயைத் தென்னி எடு என்பதும் வழக்கு தொடர்கள். தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. தேக்குதல்: நீரைத் தேக்குதல் என்பது தடுத்து நிறுத்துதல் ஆகும். நீர்த் தேக்கம், தேக்கடி, தேக்கு என்பவை தேக்க வழிப்பட்ட சொற்கள். ஒருவரை ஏதேனும் ஒரு வகையால் வராமலோ செல்லாமலோ தடுத்து நிறுத்துதலைத் தேக்குதல் என்பது பெட்டைவாய்த்தலை வட்டார வழக்காகும். தேசிக்காய்: தேசி என்பது தேசத்தான் தேசத்தது என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தமையால் வேறு தேசத்தில் இருந்து வந்தது என்னும் பொருளில் தேசி எனப்பட்டது. தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும். அயல் தேசத்தான் பரதேசி எனப்படுதலும், மண்ணெண்ணெய் சீமை எண்ணெய் எனப்படுதலும் கருதத்தக்கவை. தேரி: காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். கடற்கரை சார்ந்த கள்ளி, தாழை என்பவற்றை யன்றித் தென்னை, பனை மரங்களின் உச்சியைத் தொடவும் ஏன் மறைக்கவும் கூட தேரிகள் உண்டு. தேர்போன்று உயர்ந்து தோன்றும் மணற் குவியலைத் தேரி என்பது அரிய உவமை ஆட்சியாம். தேரிப் பெயரால் ஊர்ப் பெயர்களும் நெல்லைப் பகுதியில் உண்டு. தை: தைத்தல் ஊன்றுதல் பொருளது. துணி, தோல் முதலிய வற்றில் ஊசியை ஊன்றித் துளைத்தல் தைத்தல், தையல் எனப்படும். அதுபோல் நிலத்தில் ஊன்றி நடுவதாம் நாற்று ஊன்றுதல் பொருளில் தை என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. தைப்பாறுதல்: இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், களை ஆறுதல் என்று வழங்குதல் தஞ்சை வழக்கு. தைப்பாறுதல் நெல்லை, முகவை வழக்கு. தகைப்பு = நீர்வேட்கை. தகைப்பு நீக்குதல் (தாகம் நீக்குதல்) தெம்பாக்கிவிடும். தொக்கு: (1) ஒன்றோடு ஒன்று இணைவது தொடக்கு, தொடுக்கு ஆகும். இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும் துவையலைத் தொக்கு என்பது தென்னக வழக்கு. உனக்கு நான் என்ன தொக்கா? என்பது இளைத்தவனா என்னும் பொருளது. சோறு உண்ணத் தொட்டுக் கொள்வது (தொக்கு, துவையல்) போன்றவனா? என்னும் பொருளது. நெல்லை வழக்கு. இது கறிவேப்பிலை போன்றது. தொக்கு: (2) கேழ்வரகு மாவில் நீர்விட்டுக் கரைத்து போட வேண்டும் அளவு உப்புப் போட்டு வெயிலில் காயவைத்துப் புளிக்கச் செய்யும் கூழ்மாவைத் தொக்கு என்பது கம்பம் வட்டார வழக்கு. பலவும் தொகுத்துப் புளிக்க வைத்தலால் தொக்கு எனப் பெயர் பெற்றதாகும். தொக்கக்கால் = கூடினால்; தொக்கு, கூட்டப் பட்டது. தொஞ்சை: தொய்தல் = வளைதல். தொய்வு = வளைவு. துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக் கம்பைத் தொஞ்சை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். தொடு வளைவுப் பொருள் தருவதுபோல், தொய்வும் வளைவுப் பொருள் தருவதே. தொட்டப்பா: அப்பாவாகிய தந்தைக்குப்பின் அறிவுத் தந்தையாக (ஞானத் தந்தையாக) விளங்கும் கிறித்தவக் குருவராம் தந்தையைத் தொட்டப்பா என்பது நெல்லைக் கிறித்தவர் வழக்காகும். தொட்டு வாழ்த்துரைக்கும் அப்பா என்னும் பொருளில் தொட்டப்பா எனப்பட்டாராம். தொட்டப் பாட்டு: தொட்டில் கட்டுதலைத் தொடுத்தல் என்பர். தொட்டிலில் குழந்தையை இட்டுப் பாடும் தாலாட்டுப் பாடலை, ஒட்டன் சத்திர வட்டாரத்தார் தொட்டப்பாட்டு என்பர். தொடுக்கப் பட்டது தொட்டம் என்க. தொட்டி: தொடுதல் = தோண்டுதல். தொட்டி = தோண்டப்பட்ட பள்ளம், பள்ளம் போன்ற நீர்த் தொட்டி. தொட்டிப் பள்ளமாகத் தளம் கிடக்கிறது; நீர் வாட்டம் பார்க்க வில்லையா? என்பது கொத்தர் வழக்கம். தொடங்கட்டுதல்: புறப்பட்டு ஒருவர் செல்லும் போது குழந்தையோ பிறர் ஒருவரோ உடன் தாமும் வருவதாகப் புறப்படுதல் தொடங் கட்டுதல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொடங்கும் வேளையில் தடையாதல் என்னும் பொருளது இது. தொடல்: தொடுத்த வளையங்களால் அமைந்த பின்னல் சங்கிலி. அது தொடர் என்பது. தொடர்தலால் பெற்ற பெயர் அது. தொடுதல் என்பதும் தொடர்தலே ஆதலால் தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. தொடர்ப்படு ஞமலி (சங்கலியில் கட்டப்பட்ட நாய்) என்பது புறநானூறு. தொடாம் பழம்: தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளை யுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப் பேட்டை வட்டார வழக்காகும். தொடராம் என்பது தொடாம் எனப் பேச்சு வழக்குப் பெற்றதாகலாம். தொடு கோல்: வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடு கோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது. தொடுத்தடி, தொடுக்கம்பு எனவும் வழங்கும். தொடுவைக் கம்பு என்பது பொது வழக்கு. தொடுதல்: காலில் அணியும் மிதியடி போடுதல் தொடுதல் எனப்படும். மிதியடி தொட்டார் என்பர். கையால் தொடுதல் அன்றிக் காலால் தொடுதலுக்கும் ஆயது. கையில் தொடுக்கும் தொடி (வளையல்) என்பதை எண்ணலாம். மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். தொடு தோல் (செருப்பு) என்பது இலக்கிய ஆட்சி. தொடும்பு: தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது தசைப் பொருளது. தொடுதோல் என்பது செருப்பு. ஆதலால் தொடு என்பது தோல் ஆகித் தொடும்பு எனப்பட்டிருக்க வேண்டும். தொடுத்து அமைந்தவை தொடர், தொடக்கு, தொடும்பு என்பனவாம். தொண்டான்: தோண்டிக், குழி அல்லது பள்ளம் செய்தல் தொண்டு எனப்படும். அக் குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப் பையையும் தோல் பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும். தொண்டு: தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும். அது, அடைப்பின் ஊடு புகுந்து செல்லும் வழி அல்லது பாதைக்குப் பெயராக நெல்லை வழக்கில் உள்ளது. தொண்டுவழி என்பதும் அது. தொண்டு = துளை. தொத்தல்: தொத்துதல் என்பது ஒன்றைச் சார்ந்து இருத்தல், மேலே ஏறி இருத்தல் ஆகும். தன் வலிமைக் குறைவால் பிறரைச் சார்ந்து இருத்தல் தொத்தல் ஆதலால், அது தாமே ஒன்றைச் செய்ய இயலாதவரைக் குறிப்பதாக நெல்லை வழக்கில் உள்ளது. அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம். தொத்தா: தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் தொடுத்த தாய் ஆவர். சின்னம்மை, சிற்றாத்தாள், சின்னாத்தா என்னும் முறைப் பெயர்கள் தெற்கு வழக்கில் உண்டு. காஞ்சி, செங்கற்பட்டு வட்டாரத்தில் தொத்தா வழக்கு உண்டு. தொப்பி: பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. முற்காலத் தில் தோப்பி என்பதொரு மதுவகை சொல்லப்பட்டது. நெல்லரிசியில் இருந்து எடுத்த மதுப்போலப் பனம்பழச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்டது தோப்பி எனப்பட்டதாகலாம் என்பதை நினைவூட்டும் ஆட்சி இது. காற்றுப் புகுந்து நீர்க்குமிழாதலும், துணி குமிழாதலும் தொப்பி எனப்படுதல் கொண்டு தொப்பி உருண்டைப் பொருளதாதல் அறியலாம். தொப்பை: தொப்பி உருண்டைப் பொருள் தருவது போல உருட்டப் பட்ட சாண உருண்டையைத் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொது வழக்கு. தொம்பை: நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல, உவமை வகையால் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம். நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர். தொம்பையா எனப் பெயரும் உண்டு. பெருவயிறர் என்னும் பொருளில் பிள்ளையாரைக் குறிப்பது அது. தொமுக்கு: தொம் > தொம்பு > தொமுக்கு. தொமுக்கு என்பது வயிறு பெருத்து ஓங்கு தாங்காக இருப்பவரைத் தொமுக்கு என்பது திருப்பூர் வட்டார வழக்கு. அத்தகையவரைத் தொமுக்கடா என்பது நெல்லை வழக்கு. தொமுக்கு = பெரியது, பருத்தது. தொயில்: பழ நாளில் மகளிர் மார்பில் எழுதப்படும் தொய்யில் என்பது இலைச்சாறு - பச்சிலைச் சாறு - கொண்டு எழுதப் பட்டதாம். அதற்குப் பயன்பட்ட கீரைப் பெயர் சாறு மிக்க தொயில் கீரை என்பதாம். அக் கீரை அதனை நினைவூட்டும் வகையில் இன்றும் முகவை மாவட்ட வழக்கத்தில் உள்ளது. தொரட்டு: உன்னோட தொரட்டுத்தான் எப்போதும் என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு தொரட்டு எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை என உவமை வழக்கு ஆகும். தொலித்தல்: தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். தொலி என்பது தோல். தோலை நீக்குதல் தொலிப்பு. இவற்றால் தொலித்தல் என்பது உரித்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பழனி வட்டார வழக்குமாம். தோக்கு: துப்பாக்கி என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் தோக்கு என்பது வழங்குகின்றது. தோசை: (1) தோய்ந்த (புளிப்புடைய) மாவால் செய்யப்படுவது தோயை (தோசை) எனப்பட்டது. தோயும் வெண்தயிர் என்பது பால் தோய்தலை (புளித்தலை)த் தெரிவிக்கும். தோசை என்னும் வழுவழக்கின் செவ்விய வழக்காகிய தோயை என்பது குமரி மாவட்டத்தின் வழக்காக உள்ளது. தோசை:(2) தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது. அதன் வடிவம் வட்டம். அவ் வடிவப் பெயர், ஆழ்வார்களுள் ஒருவராம் சக்கரத்தாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்வது மாலியர் வழக்கு. வியப்பான வழக்கு இல்லையா? தோட்டி: தோட்டி என்பது அங்குசம் எனப்படும் வளைகருவி. தொடு, தோடு என்பவை வளைவுப் பொருளவை. தோட்டி என்பது வளை கத்தி என்னும் பொருளில் குமரி மாவட்டத்திலும், தோட்டை, துரண்டு என்பவை அப் பொருளில் நடைக்காவு வட்டாரத்திலும் வழங்குகின்றன. தோட்டி என்பது அங்குசம் என்னும் வளை கருவியாம். அதனையுடையவன் யானைப் பாகன். அதனால் தோட்டி முதல் தொண்டைமான் வரை எனப்பழமொழி ஆயிற்று. தொண்டைமான், தொண்டை நாட்டரசன். தோடு: விளவங்கோடு வட்டாரத்தில் தோடு என்பது ஓடை என்னும் பொருளில் வழங்கும். தொடப்பட்டது (தோண்டப் பட்டது) தோடு ஆகும். நீரால் தோண்டப்பட்டோ, மக்களால் தோண்டப்பட்டோ அமைந்தவையே ஓடை ஆகும். ஆதலால் அப் பொருள் குறிக்க அமைந்த வழக்கு இது. தோடு என்பது துளை, பொந்து என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. அதுவும் துளைத்துத் தோண்டல் வழியதே. தோது: தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் தோது எனக் குறிப்பது நெல்லை வழக்கு. நமக்குத் தோதான நான்குபேர் போனால் பாரம் போட்டுக் கொண்டு வந்து விடலாம் என்பர். நீங்கள் இங்கு வந்தது தோதாயிற்று என்பது உதவி என்னும் பொருளதே. தோப்பைக் கிழங்கு: செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. வயிற்றுக் குழந்தை போன்ற இளமை வழிப்பட்ட ஆட்சி ஆகலாம். தோழத்தன்: கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர். அத்தன் அப்பன் அச்சன் அனைத்தும் தலைவன், மணவாளன் என்னும் பொருளன. தோழன் + அத்தன் = தோழத்தன் என்பது அத்தனுக்குத் தோழன் என வழங்கு கின்றது. அத்தன் தோழன் என்பது முன்பின் மாற்றமாம். ந நக்கல்: நகுதல், நகைத்தல், நகை என்பன எள்ளுதல் பொருளில் வருவன. எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகை நான் கென்ப என்னும் தொல்காப்பிய முன்வைப்பு எள்ளல் என்பதே. கேலிசெய்தல் என்னும் பொருளில் விளவங் கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது. நகிச்சை என்னும் நக்கல் பொருள் தரும் சொல் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. நங்கு: நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. நல்லது என்னும் பொருளமைந்த நன்கு என்பது நங்கு ஆகியிருக்கலாம். நல்லது இல்லாததை நல்லது என்பது மங்கல வழக்காகக் கொள்ளக்கூடியது. வேறு வகையாகப் பொருள் கொள்ளவும் இடந்தரும் சொல் இது. நங்கை: பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது. நாத்தூண் நங்கை என்று சிலப்பதிகாரத்து வரும் மதுரை ஆயர்குடி வழக்கு இன்றும் ஆவினன்குடி வட்டார வழக்காக இருத்தல் பழம்பொருட் புதையலாய்த் திகழ்கின்றது. கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு. நட்டணை: சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும். நிமிர்ந்து நிற்கும் அணைபோல் ஆட்ட அசைவின்றி நிற்கும் நிலையைச் சுட்டியது அது. நட்டணைக் காரன் நட்டணை செய்யாதே என்பவை தென்னக வழக்கு. நட்டணைக்கால் என்பது கால்மேல் கால் போட்டிருத்தல். பிறரை மதியா திருத்தலுமாம். நடுக்கூறு: நடுப்பகுதி, நடுப்பாகம் என்னும் பொருளமைந்த நடுக்கூறு என்னும் சொல்லுக்கு நள்ளிரவு என்னும் பொருள் உசிலம் பட்டி வட்டார வழக்காக உள்ளது. நடுப்பகல், நண்பகல். நடு இரவு, நள்ளிரவு. பகல் இரவு ஆகிய இரண்டன் நடுவுக்கும் பொதுவாகியது இரவு மட்டும் குறிப்பது அவ் வட்டார வழக்காக்குகின்றது. கூறு = பகுதி. நடையன்: நடப்பவன் நடையன் எனப்படல் பொதுவழக்கு. நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு. ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல் லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு. நத்துதல்: நத்தை ஓய்வு ஒழிவு இல்லாமல் மண்ணை உண்டு கொள்ளுவ கொண்டு தள்ளும் இயல்பினது போல் ஓயாது விரும்பி உண்பதும் வாய்த்ததை எல்லாம் துய்ப்பதுமாக இருத்தலை நத்துதல் என்பது தென்னக வழக்கு. நத்துவாய் என்பார் பாரதியார். நத்தைமண்: நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது. ஆதலால், நத்தைமண் எனப்படும் கருஞ் சேற்று மண்ணைப் பழநாளில் கட்டடப் பணிக்குப் பயன்படுத்தினர். இன்றும் மதுரை மாவட்ட உசிலம்பட்டிப் பகுதியில் அத்தகு மண்வீடுகளைக் காணலாம். நத்தமண் என்பது மக்கள் வழக்கு. நப்பி: ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல் = விரும்பிக் கிடத்தல் இவற்றைப் போன்ற சொல்லமைப்பு, நப்புதல் ஆகும். தனக்கே எல்லாமும் என்னும் தற்பற்றே அது. ஆதலால் ஈயாக் கருமியாய் எச்சில் கை உதிரானாய் இருப்பானை நப்பி என்பது வழக்காயிற்று. பொதுவழக்கு இலக்கிய வழக்கில் இழந்துபோன வளத்தை மீட்டெடுக்க உதவுமெனக் காட்டும் சான்றாம். நம்மட்டி: மண்வெட்டி என்பது, கொச்சை வழக்கில் மம்பெட்டி, மம்பட்டி என வழங்குதல் பொது வழக்காகும். அது நம்மட்டி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். இது, கொச்சையிலும் கொச்சையாகும். நமரி: கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு பேம் நாம் உரும் அச்சம் என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா. நாம் என்பது நம்மாதல் சொல்லியல் முறை. நம் ஆகி அச்சப் பொருள்தரும் கத்தியைக் குறிக்கும் வழக்காகி இருக்கலாம். அமரி, சமரி என்பவற்றை நமரியுடன் வைத்து எண்ணிப் பார்க்கலாம். நயப்பரம்: நயப்பரம் என்பது கொழுப்பு என்னும் பொருளில் சிலைமான் வட்டார வழக்காக உள்ளது. தோற்றப் பொலிவு தருவதால் கொழுப்புக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். நருள்: மக்கள் என்னும் பொருளில் நருள் பெருத்துவிட்டது என்பது நெல்லை வழக்கு. நரலுதல் = ஒலித்தல். மக்கள் பெருக்கம் வீட்டிலும் வெளியிலும் ஒலிப்பெருக்காக நரலுதல் இலக்கிய வழக்கு. சனம் என்னும் சொல் வந்ததால் நருள் ஒழிந்துவிட்டது. நறுக்கை: திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு அப் பெயர் பெற்றிருக்கும். மரக்கட்டையைப் பயன்படுத்துதலும் அப்படி நறுக்கி அமைக்கப்பட்டதேயாம். நறுங்கல்: பயிர் நறுங்கிப் போய்விட்டது என்பது நெல்லை வழக்கு. நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும். நறுக்கப்பட்டது குறுகும். அவ்வாறு குறுகிய தாக்கப்படாமல் வளர்ச்சியின்றிக் குறுகியது நறுங்குதல் எனப்படுகிறது. நறுக்குதல் = வெட்டித் தறித்தல். நறுவுதல்: நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் என்னும் ஔவையார் தனிப்பாடல் நறுவிது என்பதை ஆள்கிறது. நல்ல மணமும் சுவையும் உடையது நறுவிது ஆகும். குறைவாகவும் சுவையானதாகத் தேர்ந்தும் உண்பவரை நறுவி சாகச் சாப்பிடுவார் என்பது நெல்லை வழக்கு. நன்னயம்: நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும். இச் சொல் சிவகாசி வட்டாரத்தில் தாலி என்னும் பொருளில் வழங்குதல் கொண்டு இதன் மதிப்புப் புலப்படும். மங்கலம் நன்கலம் என்னும் வள்ளுவம் எண்ணத் தக்கது. நன்னி: நன்றி என்னும் பொருளில் பெரியகுளம் வட்டாரத்தில் நன்னி என்பது வழங்குகின்றது. நன்னர் என்பது போல் நன்னி கிளர்ந்தது போலும். நன்னர் என்பது போனசு என்பதற்குப் பாவாணரால் தரப்பட்ட சொல். நன்னர் நன்மொழி என்பது புறப்பொருள் வெண்பாமாலை. நன்னியும் குன்னியும் என்பது இணைச் சொல். சின்னதும் சிறியதும் போல்வது. இது நெல்லை வழக்கு. நனவுதல்: அகலத் தடவி வருடுதலை நனவுதல் என்பது நெல்லை வழக்கு. நனந்தலை உலகம் என்பது, அகன்ற விரிந்த உலகம் என்னும் பொருளது. அது போல் அகலத் தடவுதல் - குத்தல் கிள்ளல் பிடித்தல் இல்லாமல் - வருடுதல் நனவுதல் ஆயது. நன என்னும் உரிச்சொல் வழியது இது. நாக்கணாம் பூச்சி: மண்புழு, நாங்கூழ்ப் புழு என்பவற்றை நாக்கணாம் பூச்சி என்பது முகவை வழக்கு. நாவால் பதப்படுத்தி மண்ணில் உணவு பெற்று உரமும் ஆக்கும் செயலால் பெற்ற பெயர் இது. காக்கணம் செடி என்பதுபோல் கணம் என்னும் சொல்லீறு பெற்றது. நாச்சியார் மகன்: நாயகன் = தலைவன்; நாயகியின் பெயர் நாச்சியார். குடும்பத் தலைவி. அவர் பிள்ளையை அல்லது கணவனை நாச்சியார் மகன் என்பது செட்டி நாட்டு வழக்கு. கணவன் பெயர் சொல்லாமை வழக்கால் ஏற்பட்டது இவ்வழக்கு. நாலீடு: நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும். நால்+ஈடு=நாலீடு. ஈடு=இடப்பட்டது. நால்வராலும் இட (விட)ப் பட்ட முற்றம் நாலீடு ஆயது. நாவாடுதல்: நாவு+ஆடுதல்=நாவாடுதல். பேசுதல் என்பதை நாவாடுதல் என்பது மதுரை வட்டாரக் குதிரை வண்டிக்காரர் வழக்காகும். சொல்லாடுதல் என்பது போன்றது நாவாடுதல். நிலையாளம்: சொல்லிய சொல் காற்றில் போய்விடும். கைத் தீட்டில் தா என்பது பொது வழக்கு. அதற்கு விளக்கம் போல் நிலையாளம் என்பது கடிதம் என்னும் பொருளில் சிவகாசி வட்டார வழக்காக உள்ளது. நீக்கம்பு: குமரி மாவட்ட வழக்கில் நீக்கம்பு என்பது நோய் என்னும் பொருளில் வழங்குகின்றது. அம்பு=நீர். அப்பு என்பதும் அது. நீர் தெளித்து நீக்கும் மந்திரிப்பு முறை கருதி நோய் நீக்கம்பு எனப்பட்டது போலும். நீம்பல்: பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல், நீங்குதல், நீச்சு, நீஞ்சு, நீப்பு என்பவை போல் நீங்குதல் பொருளில் வருவது நீம்பல். இது முற்றிலும் நீங்காமலும், முற்றிலும் மூடியும் இல்லாத நிலையைக் குறித்தல் தனித் தன்மையது. நீறுதல்: நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுபூத்த நெருப்பு என்பது பழமொழி. நீறுதல் என்னும் இச் சொல் மனம் புழுங்குதல் என்னும் பொருளில் மூக்குப்பீரி வட்டார வழக்காக உள்ளது. புழுங்குதல் பொறாமைப்படுதல் ஆகும். உடையவனை வெதுப்பும் அது, அவனை நீறாக்கும் என்பது குறிப்புப் பொருளாம். நுளம்பு: EŸ>Eis=nrW. சேற்றில் உறைந்து முட்டையிட்டுப் பெருகும் கொசு நுளம்பு என யாழ்ப்பாண வழக்கில் உள்ளமை அறிவியல் பார்வையொடு கூடிய படைப்பு வழக்காகும். நூல்: நூல் என்பது பஞ்சு நூல், படிப்பு நூல் என்பவை அன்றிப் பல்வேறு பொருள்களில் இடம் பெறலுண்டு. அவற்றுள் ஒன்று நேர் என்பது. மரத்தை அறுப்பதற்கோ, கல்லை உடைப் பதற்கோ, மனையிடம் வகுப்பதற்கோ நூலடிப்பது வழக்கம். நேராக்க உதவுவது அது. அதன் நேராக்கும் கருத்துப் பொருள் கொண்டு நூல் என்பதற்கு யாழ்ப்பாணத்தார் நேர் என்னும் பொருள் கூறுகின்றனர். நூல் குச்சி: தாளில் எழுத உதவும் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர். நூல் எழுது தாளைக் குறிப்பதாக உள்ளது. கரி அல்லது மருந்து ஊடு வைத்துக் குச்சியால் பொதியப்பட்டது ஆதலால் நூல் குச்சி எனப்படுவதாயிற்று. நூல் பிட்டு: கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல் பிட்டு என்கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிள் + து =பிட்டு. பிதிர்வது பிட்டு. குழாய்ப் பிட்டு மாவும் இதுவும் ஒப்புடையதே. நெட்டு: நெட்டு என்பது நீளம். நெட்டை மரம் என்பார் பாரதியார். நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. நீண்டு இழுத்துக் கயிறாக்க உதவும் தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது. அது வழுக்கி விட்டு நீளச் செய்தல் பற்றியதாகலாம். நெடுகல்: நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. நெடுகலும் இப்படியே செய்தால் ஒருவேளை இல்லாமல் ஒருவேளை அகப்பட்டுக் கொள்வாய் என்பர். நெடுப்பம்: நெடுப்பம் என்பது நீளம் என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. நிலம் நெடுப்பமாக இருப்பதால் வாய்க்காலும் வரப்புமாகவே போய்விட்டது என்பது வழக்கு. நெடுவாலி: உடும்பு என்னும் ஊர் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு. வாலை எடுத்து உடும்பின் வாயில் தந்து விட்டால் சக்கரம் போலக் கிடக்கும். வாயில் இருந்து வாலையும் எடாது. ஐந்தாறு உடும்புகளைக் கோலில் போட்டு, தோளில் கொண்டு வருவர். உடும்புப் பிடி தன்வாய் அயல்வாய் என்பதும் தெரியாத பிடி என்பது வியப்பாம். நெல்லுச் சேர்: நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை, நெல்லுச் சேர் என்பது நாகர்கோயிலொடும் ஒன்றிய புத்தனேரி வழக்காகும். சேர்க்கத் தக்க இடம் சேர் ஆயது. நெளிப்பான்: ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஆடல்=கூத்து, நட்டுவம். நெறிமுகம்: நெறி=வழி. இவண் நீர்வழி. கடலில் கப்பல் படகு ஆயவை வந்து செல்லும் துறை, முகம் எனப்படும். துறைமுகம் என்பது அது. ஆறு கடலோடு கலக்கும் இடம் நெறிமுகம் எனப்படுதல் புதுக்கடை வழக்காகும். நேரி: தெய்வத்திற்கு முன்னாக நின்று உண்மை சொல்வதை நேரி என்பது குமரி மாவட்ட வழக்கு. நேரில் நின்று கூறுவ துடன் நேரிய நெஞ்சத்துடன் கூறுவதுமாம். நேரி என்பதற்கு மக்களாட்சி முறையில் செலுத்தப்படும் வாக்குரிமையை நேரி என்பார் பாவாணர். நைப்பு: நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால், மடித்துப் போகும் என்பர். மடித்துப் போதல் உதவாமல் கெட்டுப் போதல். நொச்சு: நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல். நொடிப்பு என்பது வறுமை, பள்ளம் என்னும் பொருளுடையது. நொட்டை: எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகி விட்டது என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது. நொடி: நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச் சொல். நொடித்தல் பதில் கூறுதலாகும். நொடி என்பது பள்ளம் என்னும் பொருளில் தென்னக வட்டார வழக்காகும். வண்டியை நொடியில் விட்டுவிடாதே; நொடிப் பள்ளம் இருக்கிறது; பார்த்து வண்டியை ஓட்டு என்பது பெரியவர்கள் இளையவர்க்குக் கூறும் அறிவுரை. நொய்யல்: பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின் பயன் என்ன? அணைகள், கால்கள் அமைகின்றன. வேளாண்மைப் பயன் குடிநீர்ப் பயன் ஆகியவை ஆகி அளவால் சுருங்கிச் சிறுகி ஓடு கின்றது. அரிசியில் குறுநொய்யும், நொய்யும் உள்ளமை போலச் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர். கோவையார் கொண்டதும் கண்டதுமாம் ஆறு நொய்யலாறு. நொய்யினிப்பு: இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ரவாலாடு என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை இலட்டுகம் குறிப்பதாம். ப பக்கப் பயிர்: விதைக்கப்பட்ட பயிரின் ஊடுபயிராக ஊன்றப்பட்ட பயிரைப் பக்கப்பயிர் என்பது சங்கரன்கோயில் வட்டார வழக்கு. ஊடுபயிர் என்பது பொது வழக்கு. ஒரு பயிரின் ஊடுபயிராக மூன்று நான்கு போடுவது கொடுமுடி உழவர் வழக்கமாகும். மஞ்சள் பயிரின் ஊடு, துவரை, அகத்தி, உள்ளி என்றும், வெண்டை, கொத்தவரை என்றும் போடுவர். அத்தனைக்கும் ஈடுதர உரமும், நீரும், களையெடுப்பும், காவலும் புரிவர். பக்கப்பயறு (பக்கப்பயிர்) பாசிப்பயறு என்பது பச்சைப் பயறு ஆகும். பச்சை பாசியாகும். பச்சைப் பாசி என மணிப் பெயர் உண்டு. கிணற்றில் குளத்தில் உள்ள பாசி பசுமை என்பதை அறியலாம். முதன்மைப் பயிரோடு பாசிப் பயிரை ஊடுபயிராகப் போடுவது உண்டு. அதனால் பாசிப் பயிரைப் பக்கப்பயிர் என்றே பழனி வட்டாரத்தில் வழங்குகின்றனர். பகர்ப்புச் சுருள்: மூலப்படி எழுத்தினைப் படியெடுப்பதை பகர்ப்புச் சுருள் என்பது குமரி மாவட்ட வழக்கு. உண்மைப்படி, நகல் என்னும் பொது வழக்கு மற்றை இடங்களில் வழங்கும். பகர்ப்பு என்பது உள்ளது உள்ளவாறு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. பகர்தல்=சொல்லுதல். சுருள் என்பது ஓலைச் சுருள் வழியாக வந்தது. பகரம்: பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும் இலவுவிளை வட்டார வழக்காகும். இவ் வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும் கொண்டு வந்தார். பகர்தல் = கூறுதல்; பதில் கூறுதல் என வந்தது. பச்சரி: அரி என்பது பழந்தமிழ் வழக்கு. நெல்லையும், நெல் அரிந்த தாளையும், அரிசியையும் குறிப்பது அது. பச்சரிசி என்னும் பொது வழக்கைப் பச்சரி என விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். பசளை: பசுந்தாள் உரமே பயிர்க்கு உயிர் உரம் ஆகும். இயற்கை உரமே இயைந்தது எனச் செயற்கை உரம் செய்த அறிவாளிகள் திரும்பி அல்லது திருந்தியுள்ளது நலமே. ஆனால் பசுந்தாள் உரம் பயிருரம் என்பதைப் பட்டறி வுடைய உழவர் கண்டு பசளை என உரத்திற்குப் பெயர் சூட்டியுளர். இது யாழ்ப்பாண வழக்கு. யாழ்ப்பாண வழக்கு என்பது என்ன? குமரிக்கண்ட ஏழ்பனை நாட்டு வழக்குத்தானே! பசுமை: பொற்கொல்லர் வழக்கில் பசுமை என்பது வெள்ளியைக் குறிக்கிறது. நிறத்தால் பொருந்தவில்லை. பசுமை வளமைப் பொருளது. அப் பசுமை வெள்ளிக் காசின் பசுமை (வளமை) குறித்ததாகலாம். பட்டசாமி: போரில் இறந்து பட்டாரைப் பழநாளில் பட்டோன் என்பது வழக்கம். பட்டோனுக்குக் கல்லெடுத்து வழிபடுதலும் வழக்கம். இவ் வழக்கம் மேலூர் வட்டார வழக்காகப்பட்ட சாமி என வழங்குகின்றது. பட்டம்: மேலே விடும் பட்டமோ, படிப்பால், பெருமையால் பெறும் பட்டமோ இல்லாத பட்டம் இது. பட்டம் என்பது பருவம். பட்டம் தவறின் நட்டம் என்பது பழமொழி. நெற்றியில் பட்டம் கட்டுதல் திருமணக் கரணமாக உள்ளது. பயிரின் ஊடே பட்டமடித்தல் (ஊடடித்தல்) உழவர் வழக்கம். இவை பொது வழக்காயவை. பட்டவாளி: ஒருவரைப் பாராட்டும் உரையாகப் பட்டவாளி என்பது சிவகாசி வட்டார வழக்கு. வில்லாளி, வேலாளி, அறிவாளி என்பவை போலப் பட்ட ஆளி பட்டவாளியாம். பட்டம் பெற்றான் போன்ற அறிவாளன் என்பதாம். பட்டவாளி எனின் கெட்டிக்காரன் என்பது பொருள். பட்டாரியர்: ஆரியர் என்பார் பார்ப்பனர். அவரைப் போல் நூல் அணிந்த சௌராட்டிரர் (பட்டுநூல்காரர்) தம்மைச் சௌராட்டிரா பிராமணர் என்பர். அவரை விளங்கோடு வட்டாரத்தில் பட்டாரியர் என வழங்குகின்றனர். பட்டி: பட்டி=சிற்றூர், மடித்துத் தைத்தல். இவை பொதுப் பொருள். பட்டி என்பதற்கு நாய் என்னும் பொருள் விளவங் கோடு வட்டார வழக்கில் உள்ளது. பட்டி என்பது ஆடு அடைக்கும் அடைப்பு. அது வைக்கப்பட்டு ஆட்டை அடைத் தாலும் மேலும் காவலாக நாயை வைப்பதால் அதுவும் பட்டி எனப்பட்டது. பட்டியைக் காத்தலால் பெற்றபெயர். பட்டியல் கல்: வீட்டு முற்றங்களில் பட்டியல் கல் போட்டு, இருத்தலும் படுத்தலும் நாட்டுப்புற வழக்கு. பட்டையான கல், பட்டியல் கல். அகலமும் நீளமும் உடையது. திண்ணைக்கு ஒப்பாக அமைக்கப்படுவது. பட்டி, பட்டை, பட்டயம், பட்டம் பட்டியல் என்பனவெல்லாம் ஒருவழிச் சொற்களே. இது நெல்லை, முகவை வழக்கு. பின்னவை, பொது வழக்குச் சொற்கள். பட்டியாள் நேரம்: இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்குநாட்டு வழக்கு. பட்டி ஆள் என்பது கிடை போட்டுக் காக்கும் ஆயர். அவர்கள் ஆடுகளைப் பட்டியில் விட்டுவிட்டுச் சமைத்துண்ணச் செல்வர். சென்று சமைத்து உண்டு பின்னே காவல் பார்க்கப் பட்டிக்கு வருவர். அந் நேரம் குறித்த சொல்லாட்சி இது. படக்கு: வெடி வெடித்தல், வெடி போடுதல் என்பது பொது வழக்கு. வெடியை வேட்டு என்பதும் பொது வழக்கே. ஆனால் வேட்டு தீப் பற்றிய அளவில் பட்டென வெடிப்பதால் அவ் வொலிக் குறிப்பைக் கருதிப் படக்கு என்பது குமரி மாவட்ட வழக்காகும். படலை: படலை என்பது சீப்பு என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முடி காற்றில் எழும்பாமல் படிவாக இருக்க மகளிர் தம் கூந்தலில் சீப்பைச் சொருகுதல் வழக்கம். அவ் வழக்கத்தில் இருந்த படலை என்பது ஏற்பட்டிருக்கும். படர்ந்து அமைந்தது, படலை. படித்தம்: படிப்பு என்பது கல்வி கற்பதைக் குறிக்கும். அது பொது வழக்கு. குமரி மாவட்டத்தில் கல்வி கற்பதைப் படித்தம் என்கின்றனர். படி என்பது வகுப்பு என்னும் பொருளில் 6 ஆம் படி, 7 ஆம் படி என்பது நெல்லை வழக்கு. படித்தல் படித்தம் எனப்படுதல் சொல்லியல் முறையேயாம். பிடித்தல் பிடித்தம் ஆவது போல். படிப்புரை: படி என்பது வாயில் நுழைவில் இருப்பது. அதற்கு இருபாலும் திண்ணை அமைப்பது பெருவழக்கு. குடிசை வீடு எனினும்கூட அவ் வழக்கம் சிற்றூர்களில் உண்டு. படியின் உயரத்தைக் கொண்டு அதற்கு மேலே உயர்த்திப் போடுவதே திண்ணை அமைப்பாகும். புரை என்பது உயர்வு என்னும் பொருளமைந்த பழஞ்சொல். புரை உயர்வாகும் என்பது தொல்காப்பியம். அப் படி வடிவு மாறாத வட்டார வழக்கு படிப்புரை என்பதாம். இது கல்குள வட்டார வழக்கு. ஒட்டுத் திண்ணை என்பது பொருள். படிவால்: கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படிவால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. படிதல் பள்ளமாக அமைதல். படுக்கை: தெய்வத்திற்கு இடும் படையல் வகையுள் ஒன்றாகச் சீர்காழி வட்டாரத்தில் படுக்கை என்பது வழங்குகின்றது. படுக்கை என்பது புலால் கலவாத படையல் என்பதாம். படுக்கை பரப்பிவைத்தல் பொருளது. அகன்ற இலைகளில் பரப்பி வைப்பது. ஆனால் குருதிப்பலி என்பதோ கொட்டிப் போவது. ஆதலால் படுக்கை அஃதில்லாத படையல் பொருள் கொண்டது. படுகை: நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகை யாகும். படிப்படியாகப் படிவதே படிகை. படுகை என மக்கள் வழக்கில் ஆயது. படுக்கை, படுத்தல் என்பவையும் படிதல் வழிப்பட்ட சொற்களே. தெற்குப் படுகை, வடக்குப் படுகை என நிலப்பகுதிகள் குறிக்கப்படல் உண்டு. மணற்கல் படுகைகள் நெல்லைக் கடற்பகுதிகளில் உண்டு. படுசாவு: படுகிடை என்பது நெடுங்காலம் படுத்துக் கிடக்க வைக்கும் நோய் ஆகும். அவ்வாறு சாவும் சாவு திடுமென்று குத்து, வெட்டு, நேர்ச்சி, வீழ்ச்சி, சுருக்கிடல் என்பவை இல்லாமல், இயல்பாகச் சாவும் சாவாம். ஆதலால், சீர்காழி வட்டாரச் சொல்லாகப் படுசாவு என்பது இயல்பாக இறக்கும் இறப்பைக் குறித்து வழங்குகின்றது. படுப்பனை: படுக்கும் இடம் என்னும் பொருளில் திட்டுவிளை வட்டாரத்தில் படுப்பனை என்னும் சொல் வழங்குகின்றது. கொள்வது கொள்வனை எனவும், கொடுப்பது கொடுப்பனை எனவும் வழங்குவது போலப் படுப்பது படுப்பனை ஆகியதாக இருக்கும். படைக்கால்: உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால் அடிப்பது (ஆழமாக உழுவது) உண்டு. அது படைச் சால் எனப்படும். அப் படைச் சால் ஒன்றன் இருபக்கங்களிலும் வரப்பு அமைத்து நீரோடும் வாய்க்கால் ஆக்குவது வழக்கம். அவ் வாய்க்கால் சாலுக்கு இருப்பக்கமும் உள்ள சால்களை வரப்புகள் ஆக்கிப் பாத்திகட்டி நீர்விடுவர். அந் நீரோடும் படை வாய்க்காலை படைக்கால் என்பது திருமங்கல வட்டார வழக்கு. பண்டடை: பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும். எ-டு : வெங்காயப் பண்டடை. பறித்தவுடன் விற்றால் விலை, வேண்டு மளவு கிட்டாது என்பதால் இருப்பு வைத்து விலை கூடும்போது விற்பது உழவர் வழக்கம். அதற்குப் பண்டடை போடுதல் நெல்லை, முகவை வழக்கு. பண்டக சாலை மூலம் அது. பண்டுவர்: பண்டுவம், பண்டுவர் என்னும் சொற்களை மிகுதியாக ஆட்சிக்குக் கொண்டு வந்தார் பாவாணர். பண்டுவர் என்பது மருத்துவர் எனவும், பண்டுவம் என்பது மருத்துவம் எனவும் பொருள் கொண்டு குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. பத்தடப்பு: பிரிந்து போன இருவரை அல்லது இரு கூட்டங்களை இணைத்து வைப்பது பத்தடப்பு என மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. பத்து அடப்பு என்பவை பற்று அடைப்பு என்பதாம். ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி வைப்பது பற்ற வைப்பது ஆகும். அப் பொருளில் பொருந்தச் செய்தலாகப் பத்தடப்பு வழங்குகின்றது. ஒப்படைப்பு என்பதில் உள்ள அடைப்பு அடைத்தல் பொருளது. பத்தல்: இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால் பத்தல் எனப்படல் பொது வழக்கு. பனையின் அடிமட்டை பத்தல் எனப்படுதல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். பத்தல் அமைப்பும் பனை மட்டை அடியமைப்பும் கொண்ட ஒப்புமைப் பெயரீடு இஃதாம். பத்தல் மடை: கிணற்றில் கமலை பூட்டி இறைத்து எடுக்கும் நீர் பத்தல் வழியாக வந்து, மடையில் பாய்ந்து வெளிப்படும் பத்தல் மடை என்பவற்றை இணைத்த சொல் பத்தல் மடை. இப் பெயரொடு கூடிய ஊர் நெல்லை மாவட்டத்தில் உண்டு. அது குளத்துப் பத்தல் மடையாகும். ஊமத்தை என்னும் (ஊவும் மத்தும் இணைந்தமை போன்ற) சொல்லமைதி இது. பன்றிக்கு உணவு வைக்கும் ஏனம் பன்றிப் பத்தலாம். பதப்பு: தலையின் உச்சியில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பள்ளம் உண்டு. குழந்தை நிலையில் அப்பள்ளம் நன்றாகப் புலப்படும். அதனைப் பதப்பு என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அப் பள்ளத்தில் கை வைத்தால் நாடி துடிப்பதை நன்றாக அறியலாம். gij¥ò>gj¥ò; நாடித்துடிப்பு. மற்றொன்று: அவ்விடம் வெப்பம் மிகாமல் இருக்கக் குழந்தைப் பருவத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தல் வழக்கம். பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம். பதவல்: பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர் கோத்து நிற்பதாம். அது எடையாலும் அளவாலும் அளவில் மிகுதியாக இருக்கும். பச்சை மிளகாய்க்கும் வற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் போது புலப்படும். பதத்தது மிகுதியாதல் கொண்டு பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. இது நெல்லை வழக்கு. மக்கட் பெருக்கமும் பதவல் எனப்படும். பதனங்காய்; வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல் நலத்திற்கு ஊறு செய்யாது அதனை அறிந்து பயன் கொள்ளும் வகையில் பதனங்காய் என்னும் பெயர் சென்னை வட்டார வழக்காக உள்ளது. பதனம்: பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப் பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாகவை, பதனமாக எடு என்பது முகவை, நெல்லை வழக்குகள். பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகின்றது. பந்தற் பருக்கை: பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில் இல்லாமல் இறப்பு வீட்டுக்கு அடையாளம் காட்டவும் அமரவும் தக்கதாக வாழை நட்டாமல், மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்புக்குப் பந்தல் என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. அப் பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை அரிசிச் சோறு. பப்பப்பா: அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை பொது வழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து அகரம் பகரமாகிப் பப்பப்பா ஆகிவிட்டது. அப்பப்பா என்பது பொது வழக்கு. இது சிதைவு. பயிராதல்: விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொது வழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென்னகப் பொது வழக்கு. பழைய இலக்கியங்களில் துணையை விரும்பி அழைத்தல் பயிர்தல் எனப்படுதலை அறிந்தால் அதன் நடைச் சொல் இது என உணரலாம். பரக்களி: கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொது வழக்குச் சொற்கள். உரிமை விடுத்து அயலாரால் மகிழல் பரக்களி ஆயிற்று. பரம்பு: அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் பரம்புச் சட்டம் உண்டு. இங்கே பரம்பு என்னும் சொல் பாய் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பாய் என்பதும் பரம்புதல் பொருளதே யாகும். பராளம்: பராளம் என்பது பரபரப்பு (படபடப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர்+ஆளம்=பராளம். பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு கட்டுக்குள் நில்லாமல் அகலப்படுதல் வழி ஏற்பட்ட சொல்லாகும். ஏராளம், தாராளம் என்பவை போல் ஆளம் சொல்லீறு. ஆளப்படுதல் ஆளம். பரி: இறைவைச் சால் சதுரமானது. பரி என்பது இறைவைக்கூனை எனப்படும் வட்டவடிவினது. பரி என்பது வட்டம் என்னும் பொருளில் வரும் முதனிலை. பரிவட்டம், பரிவேடம் என்பவை அறிக. பரி என்பது இறைவைக் கூனைப் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பரிதல்: கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது மழை பெய்தால் பொட்டு உதிர்ந்து போகும் என்பர். பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல். பருக்குதல்: ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால் குடியாக் குட்டியைப் பால் குடிக்கவைப்பது பருக்குதல் ஆகும். பருகச் செய்தல் பருக்குதல். இவ் வழக்கு பொதுவழக்காகவும் கூறும் அளவில் அறிய வாய்க்கின்றது. முகவை, மதுரை வட்டாரங் களுடன் திருச்சி வட்டாரத்திலும் கேட்கும் சொல்லாக உள்ளது. பருப்பு: பருப்பு, பயற்றை உடைத்துச் செய்யப்பட்டது. தோல் உரித்து ஆக்கப்பட்டது. பருப்பு என்னும் சொல், பருப்புக் கொண்டு அரைக்கப்படும் துவையலைக் குறித்து, பின்னர்த் துவையல் என்னும் பொதுப் பொருளில் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகின்றது. பருப்புக் குழம்பு: சாம்பார் இல்லாச் சாப்பாடா? பருப்பு இல்லாத் திருமணமா? என்னும் பழமொழியும் பொய்த்துப் போனது. சாம்பார்தான் உண்டேயன்றிப் பருப்பும் இல்லை; குழம்பும் இல்லை. இன்னும் புளிக் குழம்பு, காரக் குழம்பு, வற்றல் குழம்பு, சுண்டக் குழம்பு எத்தனை வகை. மோர்க் குழம்பை விட முடியுமா? ஒரு சாம்பார் என்ன வேலை செய்கின்றது! பருமல்: படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் - மூங்கில் கழை - பருமல் என்று மீனவர்களால் வழங்கப்படுகிறது. பழநாள் மரக்கால், நாளி என்பவை மூங்கிலால் அமைந்தவை என்பதை அறிந்தால் அதன் தடிப்பு ஆகிய பருமை புலப்படும். பல்லம்: பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும் தடுப்புகள் அமைந்த கட்டுக்கொடிப் பின்னல் தட்டுகளைப் பல்லம் என்பது எழுமலை வட்டார வழக்காகும். ஐந்தறைப் பெட்டியைப் போலப் பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது. பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது. பல்லுச் சோளம்: சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொது வழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச் சோளம் என வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். பலகையடைப்பு: வீட்டிலும் காட்டிலும் பொருள்கள் போட்டு வைக்கவும் காவல் கருதி அமர்ந்திருக்கவும் அமைக்கப்படுவது பரண் ஆகும். பரண் என்பதும் பரணை என்பதும் பொது வழக்கு. அதனைப் பலகை அடைப்பு என்பது அருப்புக் கோட்டை வட்டார வழக்கு. பலகையால் அடைத்துப் பரப்பப்படுவதால் பெற்ற பெயர். மற்றைப் பரண் கம்புகளைப் பரப்பி அமைக்கப் பட்டதாகும். பலம்: பலம் என ஒரு நிறைகல் (எடைக்கல்) இருந்தது. பலம் வலிமைப் பொருளிலும் வழங்கும். அது வலம் என்பதன் திரிபாகும். இனி மாடு பலப்பட்டிருக்கிறது என்பதும் பயிர் பலன்(ம்) பிடித்திருக்கிறது என்பதும் உழவர் வழக்கு ஆகும். மாட்டுத் தரகர் வழக்கிலும் முன்னது உண்டு. பலிசை: பலிசை என்பது வட்டி என்னும் பொருளில் நாகர் கோயில் வட்டார வழக்காக உள்ளது. கல்வெட்டுகளிலும் இச் சொல் இப் பொருளில் ஆளப்படும். பலிசை என்பது இலேசு (ஊதியம்) என்னும் பொருளில் சிந்தாமணியில் வழங்குகின்றது. வட்டி எனினும், ஊதியம் எனினும் எளிமையாக இருக்க வேண்டும் என்னும் கருத்தினது அது. பழுது: பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொது வழக்கு. பழுது பயமின்றே என்பது தொல்காப்பியம். இனி வைக்கோல் புரியைப் பழுது என்பது முகவை, மதுரை மாவட்ட வழக்காகும். பழு என்பது சுமை. அதனைக் கட்ட உதவுவது பழுது ஆயது. பழுப்பு: சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது வழக்கு. மகளிர் காது குத்திய நாளில் காதுத் துளையை அகலப்படுத்தப் பழுப்பு வைத்தல் வழக்கம். இங்கே பழுப்பு என்பது சீழ் என்னும் பொருளில் வட்டார வழக்காக உள்ளது. பழுத்து வழியும் சீழைப் பழுப்பு என்றனர் போலும். இது விளவங்கோடு வட்டார வழக்கு. பள்ளக்கல்: ஒரு காலத்தில் ஏதாவது ஒரு தவசத்தை இடிக்கப் பள்ளமான கல்லைப் பயன்படுத்தினர். அப் பழைய வரலாற்றை விளக்குவது போல முதுகுளத்தூர் வட்டாரத்தார் பள்ளக்கல் என இடிக்கப் பயன்படுத்தும் உரலைக் குறிப்பிடுகின்றனர். பள்ளம்+கல்=பள்ளக்கல். பள்ளயம்: வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து அகலமாகப் படையல் செய்வதைப் பள்ளயம் என்பது பேராவூரணி வட்டார வழக்காகும். இவ் வழக்கம் கொங்கு நாட்டிலும் உள்ளது. பள்ளம் தோண்டிப் பரப்பி வைத்த வழக்கத்தில் இருந்து இப் பெயரீடு ஏற்பட்டிருக்கும். பள்ளை: விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம் என வழங்கப்படுதல் அகத்தீசுவர வட்டார வழக்காகும். பள்ளை = பள்ளம். ஆட்டுவகையுள் ஒன்று பள்ளையாடு. பற்றுக்காடு: நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும். பாலமேட்டுப் பகுதியில் வயற்காடு என்பது பற்றுக்காடு என வழங்கப்படுகிறது. பற்றுக்கு வரும் மடை பற்றுவாய் மடை என்பது அறியத் தக்கது. பறவைக்கப்பல்: ஒரு காலத்தில் வானக் கப்பல் என வழங்கப்பட்டது, பின்னர் வான ஊர்தி ஆயது. வான ஊர்தி என்பது புற நானூற்றுச் சொல். இதனைச் செட்டிநாட்டு வட்டாரத்தினர் பறவைக் கப்பல் என்கின்றனர். பனி: பனி என்பது குளிரா, வெதுப்பா? பனிகுளிர் என்போம். ஆனால் அது வெப்பமானதே. எப் பொருள் எத்தன்மைத் தாயினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு, என்பதன்படி தோற்றம் ஒன்றாகவும் உண்மை ஒன்றாகவும் இருத்தல் உண்டு. பனி என்பதற்குக் காய்ச்சல் என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளமை எண்ணத்தக்கது. குளிர்காய்ச்சல் இல்லையா! பாஞ்சிப் பழம்: முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை முன் JU>KªâÇ” என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு. பாய்தல் என்பது வெளிவருதல், வெளித்தள்ளுதல். பாய்ந்தது போல் வெளிப்பட்டுக் கொட்டை தோன்றும் பழம் பாய்ந்த பழம் எனப்பட்டுப் பாஞ்சிப் பழமாகி உள்ளது. பாய்ந்தது > பாஞ்சது. பாடி: ஆயர்பாடி என்பது பழமையான ஆட்சி. பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில் மாடுகளைக் கட்டுதல் வழக்கத்தால் அகன்ற தெரு அமைத்தனர். அவ்வாறே தறி நெய்வோர் பாவு போடுதற்கு நீண்டதும் அகன்றதுமாம் தெரு அமைத்துக் கொண்டனர். அத் தெருவைப் பாடி என வழங்கினர். பாவு போடும் இடத்தைப் பாடி எனல் நெசவுத் தொழிலோர் வழக்காகும். பாடிப்பால்: கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறும் தொடர். அருவி முழக்கம் என்பது மக்கள் வழக்கு. ஒலியெழுப்பி வெள்ளென வீழும் அருவி நீரைப் பாடிப்பால் என்பது குற்றால வட்டார வழக்கு. அருவி தந்த அறிவுக் கொடை இவ் வாட்சி பொது மக்கள் புலமை வளம் அல்லவோ இத்தகைய சொற்படைப்பு! பாந்தம்: குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும் பொருளில் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகளில் உள்ளது. பா என்னும் முதனிலை விரிவுப் பொருள் தருவது. அகன்ற குழி, பள்ளம், பாத்தி என்பதை விளக்கும். பாம் பிஞ்சு: பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம். பூம் பிஞ்சு என்பது செட்டி நாட்டு வழக்கில் பாம்பிஞ்சு எனப்படுகிறது. பாவுதல் என்பது ஒன்றி அல்லது பரவி இருத்தல். பூவொடு ஒன்றி இருக்கும் பிஞ்சு பாம் பிஞ்சு எனப்பட்டிருக்கலாம். பாம் பிஞ்சு=மிகப் பிஞ்சு. பாம்பேறி: கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச் சுவர் எழுப்புவது வழக்கம் அச் சுற்றுவெளிக்கு ஆளோடி என்பது பெயர். இது கல்வெட்டுகளிலும் உண்டு. பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர். பாம்பின் சட்டை அப் பகுதியில் கிடத்தல் கண்டு அப் பெயரீடு உண்டாகியதாம். பாலாடை: பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது. பாலடை என்பது பாலாடை எனப்பட்டிருக்கலாம். பால் விட்டுப் புகட்டும் (ஊட்டும்) சங்கு. சங்கை, ஊட்டி என்பர். பாவாடை: இடை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை எனப் படுதல் பொதுவழக்கு. பாகடை (பாகால் செய்யப்பட்ட படையல்) என்பது திருக்கோயில்களில் பாவாடை எனவழுவாக வழங்கப்படுகின்றது. கோடைக்கானல் வட்டாரத்தார் கத்தரிக் காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமைநயம் சிறக்க வழங்குகின்றனர். பாவடை (பா+அடை) என்பது பகுக்கப்பட்ட கூந்தல் வகிடு என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்கு உள்ளது. பாவி: பாவி என்பது பொது வழக்கு வசைச் சொல். அழுக்காறு என ஒரு பாவி என வள்ளுவம் வழங்கும். பாவி என்பதற்குப் பாய் என்னும் பொருளை ஒட்டன்சத்திர வட்டாரத்தினர் வழங்கு கின்றனர். பரவிய அமைப்பினது என்னும் பொருளில் வருவது. நாற்றுப் பாவுதல், பாவு போடுதல் என்பவை பரவுதல் பொருளவை. பாவுள்: நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறையைப் பாவுள் என்பது பார்ப்பனர் வழக்கு. பரவிய மனையின் உள்ளிடமாக அமைந்தது என்னும் பொருளது அது. பாறை: பாறை என்பது கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது. மட்பாறை, மணற்பாறை, கற்பாறை என்பவை அவை. இப் பாறை குளம் என்னும் பொருளில் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காக உள்ளது. பாறையின் ஊடு அமைந்த குளம் பாறை ஆயது. கல் குளம் குமரி மாவட்ட ஊர்களுள் ஒன்று. பாறை, மலை ஆயவற்றின் இடையே யமைந்த நீர்நிலை சுனை எனப்படுதல் பொது வழக்கும், இலக்கிய வழக்குமாம். பிசிர்: பிசிர் ஆந்தையார் என்னும் புகழ்மிகு பழம்புலவர் ஊர் பிசிர். அது கடலின் அருகே அமைந்தது. அப் பிசிர்க்குடி முகவை மாவட்டம் சார்ந்தது. பிசு பிசுப்பு என்பது உவர்த்தன்மையால் உண்டாவது. அகத்தீசுவர வட்டாரத்தில் சிறுநீரைப் பிசிர் என்பது அவ்வுவர்ப் பொருள் வழியதாம். பிசின்: பழநாளில் பயின் என வழங்கப்பட்ட அரிய சொல் பிசின் என வழுவாக வழங்குகின்றது. பயின் என்பது பெருங்கதை ஆட்சி. பிசின், கோந்து என்றும் பசை என்றும் வழங்கப் படுதலும் உண்டு. நெல்லையார் அல்வா என்னும் இனிப்புப் பண்டத்தைப் பிசின் என வழங்குவது உவமை வழிப்பட்டதாம். பிசினி: பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித் தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. பிசினாரி என்பதும் அது. கருமித் தனம் என்னும் பொருளது. கொண்டதை விடாமல் (பிறர்க்குக் கொடாமல்) வைத்துக் கொள்ளும் குணத்தால் பெற்ற பெயர் இது. பிட்டு: பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. பிட்டு என்பது பொது வழக்கு. பிட்டு என்பதற்கு இட்டவி என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். வேகும் வகை கருதிய பெயரீடாக இருக்கக் கூடும். பிடித்துக் கொடுத்தல்: திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும். தாதா என்பது மணக்கொடை புரிதலால் பெற்ற பெயர். பெண்ணைக் கொடுத்தல் கொள்ளல் என்பவை தொல்பழ வழக்கு. அவ் வழக்கை வெளிப்படுத்தும் ஆட்சி பிடித்துக் கொடுத்தல் ஆகும். இது பழனி வட்டார வழக்கு. பிணம்: தீ நாற்றம் தருவதைப் பிணவாடை என்பது பொது வழக்கு. பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும். வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும். பிணம் எனப் பூண்டு பெயர் பெற்று, அது விளையும் இடம் குறிப்பது. வியப்பான வழக்கம் இது. பிப்பு: பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக் கடியைக் கொசு பிச்சுப் பிடுங்குகிறது என்பது பொது வழக்கு. பிய்ப்பு பிப்பு ஆயது. பிக்கல் (பிய்க்கல்) பிடுங்கல் இல்லை என்பது இணைமொழி. பிரி கழறுதல்: தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு. மூளைக் கோளாறு, கிறுக்கு என்பது பொருளாம். பிரி என்பது கிறுக்கு என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பிரி என்பதன் மூலப் பொருள் (கழறுதல்) அளவில் அமைந்த ஆட்சி அது. பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. பில்லணை: ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள் ஒன்று. Éšiy>ãšiy. ãšiy>ãš. மேலே வட்ட அமைப்பு உடைமையால் கொண்ட பெயர். பிறப்பு: இது பிறப்பினைக் கூறுவது பொது வழக்கு. ஆனால் உடன் பிறந்தவர்களை உடன் பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள். உசிலம்பட்டி வட்டாரத்திலோ இது பெரு வழக்கு. பிறை: பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப் படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று. சுவரில் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்குப் பிறையைப் பிறை என்பது நெல்லை வழக்கு. மாடக்குழி என்பது பொது வழக்கு. பீச்சுதல்: பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள். இவை பொது வழக்கானவை. வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும். குறிப்பாகக் குமரி மாவட்டப் பெருவழக்காகும். பீலி: (1) பீலி=மயில் தோகை; மயில் தோகைபோல் அமைந்த காலணிகலம் பீலி எனப்படுகின்றது. கட்டுகம் பீலி மிஞ்சி என்பவற்றுள் ஒன்று அது. கடலைச் செடியின் விழுதைப் பீலி என்பது பேராவூரணி வழக்கு. பனங்கிழங்கு முளையைப் பீலி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சுறாமீனின் சிறகை அல்லது செதிலைப் பீலி என்பது சீர்காழி வட்டார வழக்கு. வாழையின் பக்கக் கன்றைப் பீலிக் கன்று என்பது நெல்லை வழக்கு. பெருவிரலுக்கு அடுத்த விரலைப், பீலிவிரல் என்பது நாகர்கோயில் வழக்கு. பீலி: (2) குழாயைப் பீலி என்பது செட்டி நாட்டு வழக்கு. பீலி என்பது மயில் தோகை போன்ற காலணிகலப் பெயராகத் தென்னக வழக்கில் உள்ளது. மிஞ்சி, கட்டுகம், பீலி என்பர். பீலி பெய்சாகாடும் என்பது குறள். பீலியின் காம்பு துளையாக இருப்பது கொண்டு குழாய்க்குப் பெயராயது. புகையறை (புகையடை) புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட வழங்கு கின்றது. விளக்கு, சமையல் ஆகியவற்றின் வழியாக எழுந்த புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை. புகைசாரை என்பதும் அது. சார்ந்தது சாரை. இவை நெல்லை வழக்குகள். புங்கன்: புன்கன் என்பது புங்கன் என வழங்குகின்றது. சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல் என்பது நெல்லை வழக்கு. புன்கன் என்பது புன்மை - சிறுமை - குறித்த சொல். புட்டான்: தும்பி என்றும் தட்டாரப் பறவை என்றும் கூறுவதைப் புட்டான் என்பது, மூக்குப் பீரி வட்டார வழக்காகும். புள்ளி குத்திய சுங்கடிச் சீலையைப் புட்டா என்பது நெசவாளர், துணிக்கடையாளர் வழக்கமாதலை எண்ணலாம். புட்டான்= புள்ளிகளையுடையது. புட்டி: புட்டி, புட்டில் என்பவை கணை வைக்கும் தோள் தூக்கியைக் குறிப்பது பொது வழக்கு. புட்டி என்பது இடுப்பைக் குறிப்பதும் பொது வழக்கே. ஆனால், உட்காரும் நாற்காலியைப் புட்டி என்பது பரதவர் வழக்கமாகும். புதிசை: புதிதாக விளைந்து வந்த தவசத்தை சோறாக்குவது புதிசை எனப்படுதல், திருமங்கல வட்டார வழக்கு. இதனைப் புதிரி என்பதும் வழக்கில் உண்டு. பொங்கல் வேறு; புதிசை வேறு. புதிசை அவ்வக் குடும்ப விளைவு நுகர்வு பற்றியது. புதைகடை: கடைகால், வாணம் என்பவை பொது வழக்குகள். கடை கால் தோண்டுதல் புதை கடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும். புதை என்பது அகழ் பள்ளம். கடை= இடம். புதைப்பு: ஒன்றை மூடுதல் - குறிப்பாக மண்போட்டு மூடுதல் - புதைப்பு எனப்படும். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து என்பதே பின்னே புதையல் ஆயது. புதைப்பு என்பது மூடும் போர்வையைக் குறிப்பதாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. புரிமணை: குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி திரித்துச் சுருணையாகக் கட்டி வைப்பதைப் புரிமணை (பிரிமணை) என வழங்கினர். இதுகால் கலங்கள் மாறியது போல் புரி மணையும் மாழையால் (உலோகத்தால்) ஆகி விட்டது. மோர் கடைதலுக்குப் புரிமணை மிகப் பயன் பட்டது. புரிமணை தென்னக வழக்கு. புரை: உயரப் பொருளது புரை என்பது. உயரமான வீடு புரை எனப்படும். இப் புரை என்பது பந்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. புரை உயர்வாகும் என்பது தொல்காப்பியம். பந்தல் உயரமானது என்பது வெளிப்படை. புள்ளடி: புள் அடி என்பது பறவையின் கால்பதிவு. அப் பதிவு போல் பதியச் செய்யும் முத்திரையைப் புள்ளடி என்பது யாழ்ப்பாண நாட்டு வழக்கு. புள்ளடி என்பது தமிழ்க் கல்வெட்டுகளில் ஆளப்படும் சொல். எல்லைக்கல் அது. அதில் பொறிக்கப்பட்ட அடையாளம் பற்றிப் புள்ளடி எனப்பட்டது. காக பாதம் என்பதும் அது. அரைப் புள்ளி அடையாளம் அன்னது. (;) புள்ளி: புள்ளின் தடம் புள்ளி எனப்பட்டது. பின்னர் அடை யாளம், நிறுத்தக்குறி என்பவற்றுக்கு ஆயது. புள்ளிகுத்துதல் புள்ளிக்கு இரண்டு (ஆளுக்கு இரண்டு) என்பவை வழக்கில் உள்ளவை. திருமணமானவர்கள் தலைக்கட்டு எண்ணிக்கை என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்கு உள்ளது. புளிகுடித்திருத்தல்: புளி குடித்திருத்தல் என்பது மகப்பேறு வாய்த்திருத் தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது. புளி விருப்பு கருவாய்த்தார்க்கு இயல்பாதல் கொண்டு ஏற்பட்ட வழக்குச் சொல்லாகும் இது. புளிக்கும் மாங்காய் இனிப்பு ஆகும் காலம் அது என்பர். புளியந்தோடு: நட்டுவாய்க்காலி என்பது நச்சுயிரி. அதனை விளவங் கோடு வட்டாரத்தார் புளியந்தோடு என்பது வியப்பு மிக்கது. புளியம் பூவொடு (உதிர்ந்து காய்ந்த பூ) ஒப்பிட்டுக் கண்ட உவமைக் காட்சியாகலாம் அது. புறவடை: பூப்பு அடைந்தவளை வீட்டுக்குப் புறத்தே சில நாள்கள் வைத்திருந்து பின்னர் விழா எடுத்து வீட்டுக்குள் வைத்தல் வழக்கம். இப் பூப்புக்கு வட்டாரம் தோறும் வழங்கப்படும் சொற்கள் தனித்தனியே பற்பல. திருப்பூர் வட்டாரத்தார் பூப்பினைப் புறவடை என்கின்றனர். பூ: இவ் வோரெழுத்து ஒரு சொல் ஒரு விளைவு அல்லது போகம் என்னும் உழவர் வழக்குச் சொல்லாக நெல்லை வழக்கில் உள்ளது. ஓராண்டில் ஒருமுறை விளைதல், இருமுறை விளைதல் என்பவற்றை ஒரு போகம், இருபோகம் என்பர், தஞ்சையை முப்போகம் என்றும் முப் பூ என்றும் சுட்டுவர். பூ என்பது, ஒரு விளைவு. பூச்சி: பூச்சி என்பது நிழல்,வண்ணத்துப் பூச்சி, குடற் பூச்சி எனப் பல பொருள் குறித்தல் பொது வழக்கு. நாக்குப் பூச்சி என நாங்கூழ் குறிக்கப்படும். விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர். நாக்குப் பூச்சி போன்றது என்னும் வடிவொப்புக் கருதிய வழக்கு இஃதாம். பூச்சை: பூனையைப் பூசை என்பதும் பூச்சை என்பதும் வழக்கு, ஏன்? ஒன்றைத் தின்றதும் கால்களால் வாயைத் தடவுதல் பூனை வழக்கம். முகம் கழுவுதலை, முகம் பூசுதல் என்பது அறியின் புலப்படும். சுவர் பூசுதல், ஈயம் பூசுதல், பூசி மெழுகுதல் என்பவை பூசுதல் பொருள் விளங்கச் செய்வன. பூச்சை எனப் பொருள் விளங்க வழங்குதல் குமரி மாவட்ட வழக்காகும். பூஞ்சாறு: தேன் எனப்படும் பொது வழக்குச் சொல், பார்ப்பன வழக்கில் பூஞ்சாறு எனப்படுகின்றது. பழங்காலத்துப் புலவர் வரிசையில் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன் என்பான் பெயர் உண்டு. தேனூர் என்பது பூஞ்சாற்றூர் என வழக்குப் பெற்றதாகலாம். பூஞ்சை: பூ என்பது மென்மையானது. பூப்போல என்பது மென்மை மலர்ச்சி மெது என்னும் பல பொருள் தருவது. பூவின் மென்மை யுடையவரைப் பூஞ்சை என்பது வழக்கம். அளவு கடந்த மென்மை உரிய நலமாகாது என்பதால் அது பெருமை கூறாமல் சிறுமை கருதிப் பூஞ்சை உடம்பு என மெலிவு, நோய்மை காட்டுவதாயிற்று. குமரி மாவட்டத்தில் பலாச்சுளையை மூடியிருக்கும் தோலைப் பூஞ்சை என்பது வழக்கம். அத்தோல் மிக மெல்லியது எளிதில் கிழிவது. பூட்டு: இறுக்கிப் பிடித்தல் இணைதல் ஆகிய பொருளில் பூட்டு என்பது பொது வழக்குச் சொல். இது, உடலுறவுச் சொல்லாக மதுரை இழுவை வண்டித் தொழிலாளர் (ரிக்சா) வழக்காக உள்ளது. பூட்டுவில் பொருள் கோள், பூட்டு என்பவற்றை நோக்கும். ஐந்து என்னும் எண்ணிக்கை காட்டுவது வணிக வழக்கு. பூட்டை: நீர் இறைவைப் பொறிகளுள் ஒன்று பூட்டை. இதனைப் பூட்டைப் பொறி என்பர். கால், ஆறு இல்லாத வானம் பார்த்த நிலத்தில் கிணறு வெட்டி, பூட்டைப் பொறியிடல் வழக்கம். இனி, கேழ்வரகு, சோளக் கதிர்களைப் பூட்டை என்பது நெல்லை முகவை வழக்கம். பூட்டை திருடி என்பது பழிச்சொல். பேரையூர் வட்டார வழக்கில் பூட்டை எனப்படும் இலக்கிய வழக்குச் சொல் ஆளப்படுகிறது. பூட்டை என்பது சால் என்னும் நீர் இறை பொறி. பூதியாக: சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதலை மறுத்துக் கூறுபவர் இப்படிப் பூதியாகச் சொன்னால் ஒப்ப முடியுமா? அதற்குச் சான்று என்ன என்பர். பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல். பூதி=புழுதி. இவ் வழக்கு நெல்லை, முகவை வழக்குகளாக மட்டுமன்றித் திருப்பூர் வட்டார வழக்காகவும் உள்ளது. பூவோடு: தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப் படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஓடு=சட்டி, மண்சட்டி. அதன் வெம்மை வெளிப்படாவகையில் வழங்கும் வழக்கம் இது. தீக்குழி என்பதைப் பூக்குழி என்பது எண்ணத்தக்கது. பெட்டைப் பக்கம்: கதவின் பின்பக்கத்தைப் பெட்டைப் பக்கம் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஆடவர் முன் முகம் காட்டாமல் கதவின் பின்பக்கம் இருந்து பேசும் பெண்களின் வழக்கத்தைக் கொண்டு இப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் வழியே குமுகாய வரலாறு புலப்படுதல் எண்ணத்தக்கது. பெண்தூக்குதல்: திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்னும் சடங்குகள் நிகழ்த்தப்படும். பெண் அழைப்பை, மதுக்கூர் வட்டாரத்தார் பெண் தூக்குதல் என வழங்கும் வழக்கத்தால் குமுகாயத்தில் நிகழ்ந்த நிகழ்வு வெளிப்படுகின்றது. சிறை கொண்டு போதல், கடத்திக் கொண்டு போதல் முதலியவை இலக்கியத்திலும் வழக்கிலும் உள்ளமை அறிவனவே. பெரிய வீட்டுப் பொழுது: வைப்பு சின்னவீடு என்று வைத்திருப்பார் இரவுப் பொழுதில் அவண் தங்கி, தம் மனை மக்கள் இருப்பார் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது விடியல் ஆதலால், அதனைப் பெரிய வீட்டுப் பொழுது என்பது மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. பெருக்கான்: எலியில் பெரியது பேரெலி. அதனைப் பெருச்சாளி என்பதும் பொண்டான் என்பதும் உண்டு. பேரெலியைப் பெருக்கான் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பெருக்கான்=பெரியது. கொங்குப் பொது வழக்கு எனவும் கூறலாம். பெரும் பயறு: சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப் பயறு, தட்டாம் பயறு எனல் பொது வழக்கு. அதன் பூ, தட்டான் பறவை போல இருப்பது பார்க்கத் தக்கது. பேடு: நண்டு குடியிருக்கும் வளையைப் பேடு என்பது உசிலம் பட்டி வட்டார வழக்காகும். பேடு என்பது பெட்டி போலும் முதுகு உடைய நண்டு. நண்டின் கரு முதிர்ந்து குஞ்சு வெளிப் படும்போது மூடு பெட்டி போன்ற அதன் மேல் பகுதி வெடித்துக் குஞ்சுகள் வெளிப்படும். அது திறவைப்பெட்டி போலவே இருக்கும். அந் நண்டு தங்குமிடம் பேடு எனப்பட்டதாம். பேட்டுத் தேங்காய்: தேங்காய் போன்ற தோற்றம் இருக்கும். ஆனால், அதனை உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இராது; வெறுங் கூடாக மட்டுமே இருக்கும். இதனைப் பேட்டுத் தேங்காய் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. மட்டை பெரிதாகி உள்ளீடு சிறுத்து இருப்பதைப் பேட்டுத் தேங்காய் என்பது குமரி மாவட்ட கன்னங்குறிச்சி வட்டார வழக்கு. பைய: பைய என்பது மெதுவாக, மெல்ல என்னும் பொருளில் வழங்கும் தென்னக வழக்குச் சொல். திருச்சி புதுவை முதலாய இடங்களில் பொறுமையாக என வழங்கும் சொல், மெல்ல மெதுவாக எனப் பொருள்கொண்டு வழங்குகின்றது. மற்றை இடங்களில் பொறுமை பொறுத்துக் கொள்வதாம் பண்புப் பெயர் ஆகும். பொக்கம்: பொக்கு என்பது உள்ளீடு அற்ற - மணியற்ற - தவசம், பயறு ஆயவை. அதனைக் காற்றில் தூற்றினாலும், நீரில் போட்டாலும் கீழே படியாமல் மேலே பறக்கவோ மிதக்கவோ செய்யும். அப் போக்கின் தன்மை அதற்கு உயரப் பொருள் தந்தது. பொக்கம் என்பதற்கு உயரம் என்பது கல்குள வட்டார வழக்கு. பொங்கு: பொங்கு என்பது மேலெழுதல் ஆகும். பொங்கி வழிதல், பொங்கல் என்பவை எண்ணுக. உள்ளம் கிளர்ந்து மகிழ்வதும் பொங்குதல் எனப்படும். பொங்குமாகடல் என்பது குற்றால அருவி மேல் நீர் நிலை. கருவூர் வட்டாரத்தார் கோழி இறகைப் பொங்கு என்கின்றனர். சோளத்தின் மேல் உள்ள தோட்டைச் சொங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. இதனை எண்ணலாம். பொங்கடி: கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு பூட்டப்படும் அணிக லமாக இருப்பது தாலி என்பதும் எண்ணின் இவ் வழக்கின் மூலம் தெளிவாகும். மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி என்க. பொங்கை: பொங்கு (இறகு) என்பது போலப் பொங்கை என்பதும் வலுவின்மை மென்மை என்னும் பொருள்களில் வழங்கும் சொல்லாகும். ஒல்லியானவன் என்னும் பொருளில் பொங்கை என்பது கொங்கு நாட்டு வழக்காக உள்ளது. பொட்டன்: காது கேளாதவனை விளவங்கோடு வட்டாரத்தார் பொட்டன் என்கின்றனர். செவிடன் என்பது பொருளாம். நீர் உள்ளே புகாமல் கெட்டிப்பட்ட மேட்டு நிலம் பொட்டல் எனப்படும். பயிரீட்டுக்குப் பயன் செய்யாது. அந்நிலம் நீர் உட்கொள்ளாமை போல, இவன், உட் கொள்ளாதவன் என்னும் பொருளில் பொட்டன் எனப்பட்டானாம். பொட்டித்தல்: பொட்டித்தல் என்பது திறத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பொட்டுப் பொட் டெனக் கண்ணை இமைத்தல்; பொட்டென்று கண்ணை மூடப் பொழுது இல்லாமல் தவிக்கிறேன் என்னும் தொடர் களை நோக்கினால் மூடித் திறத்தல் என்பதற்கும் பொட்டு தலுக்கும் உள்ள தொடர்பு புலப்படும். பொட்டென்று போய் விட்டார் என்பதும் கண்ணை மூடுதலை (இறத்தலை)க் குறிப்பதே. பொட்டு: பூக்களின் இதழ்கள், பொட்டு என வழங்கப்படும். அப் பொட்டுகளைப் போலச் செய்யப்பட்ட அணிகலங்களுள் ஒன்று தாலி. அதற்குப் பொட்டு என்று வழங்குவது குமரி மாவட்ட வழக்காகும். பொட்டுத் தாலி என்று இணைத்துச் சொல்வதும் வழக்கே. தோடு என்னும் அணிகலப் பெயரும் பொட்டு என்னும் இயற்கை வழிப்பெயராதல் கருதுக. பொடித் தூவல்: பொரியல் எனப்படும் பொது வழக்கு, திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் பொடித் தூவல் எனப்படுகின்றது. அவியல், துவையல் போன்றது அல்லாமல் பொரியல் கறி செய்து முடித்து, பின்னர் அதன்மேல் அதற்கு வேண்டும் உப்பு, உறைப்பு, மசாலை (உசிலை) ஆயவற்றைத் தூவும் செய்முறையால் பெற்ற பெயராகும் இது. பொதும இலை: வாழைக்காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பவர் வைக்கோலால் மூடல், புகை போடல் ஆகியவை செய்வர். வேப்பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில் வேப்பிலையைப் பொதும இலை என வழங்குகின்றனர். மூடி வைத்தல் என்பது பொதிதல் என்பதாம். பொதி என்பது பொதிந்து வைக்கப் பட்ட மூடையாகும். பொதி என்பது பழங்கால நிறைப் பெயர்களுள் ஒன்று. பொதியல்: பொதியல் என்பது மூடுதல் பொருளது. வெயில் மழை புகாமல் காப்பாக அமைந்த குடையை-ஓலைக் குடையை-ப் பொதியல் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். நுங்கு, ஊன் முதலியவை பனை ஓலையைக் குடையாகச் செய்த தூக்கில் கொண்டு போதல் பண்டு தொட்டே வழங்கிய வழக்காகும். ஓலைக் குடை என்பது அதன்பெயர். மூடி வைப்பதால் பொதியல் ஆயது. பொதிசோறு தேவாரச் செய்தி. பொதிமூடை - பட்டினப்பாலை. பொருத்திச் சக்கை: ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய செறிவு நோக்கி வழக்கூன்றிய பெயர் இது. பொல்லம்: பொல் என்பது துளை. முறம் பெட்டி முதலியவற்றில் ஓட்டை விழுமானால் பொல்லம் பொத்துதல் (துளையை நாரால் தைத்து மூட்டுதல்) அண்மைக்காலம் வரை வழக்கு. பொல்லம் பொத்தலையோ பொல்லம் எனத் தெருவில் கூவி வருவார் இருந்தனர். பொல்லாப் பிள்ளையார் மெய்கண்டார் வரலாற்றில் இடம் பெற்றவர். பொல்லல், உளிகொண்டு வேலை செய்தல். பொல்லாமை துளையாமல் தன்னிலையில் அமைந்த பிள்ளையார். பொல்லம் துளைப் பொருளில் வழங்குதல் தென்னகப் பெருவழக்கு. பொலி: உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர். வாழ்வின் பொலிவுக்கு மூலமாக இருப்பது அது. அதனால் பெற்ற பெயர் அது. கழனியில் போட்ட வித்து களத்தில் மணிக்குவியலாகக் குவிந்தால் தான் களஞ்சியத்தில் சேர்ந்து காலந்தள்ள உதவும். ஆதலால் பொலி பொலி எனக் கூவி அள்ளுதல் பொலி எனப்பட்டது. அதில் இருந்து பொலிவு என்னும் சொல் ஆயது. பொள்ளுதல்: நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலிய வற்றைத் துளையிடுவதற்குக் கம்பியைக் காயவைத்துச் சுடுதலும் துளைத்தலும் வழக்கமாதல் கொண்ட செய்முறை வழிப் பொருளாம் இது. பொளி: ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு. கடலின் ஊடும் அலைப்பகுதி, அலை இல்லாப் பகுதி இவற்றின் ஊடிடத்தைப் பொளி என்பதும், மீன்பிடி பகுதி களைப் பிரித்துப் பொளி என்பதும் மீனவர் வழக்கு. இது குமரி மாவட்ட வழக்கு. பொறுதி: கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச் சிறந்ததாம். பொறுமை பேணல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல் (பொறுத்தல்) வீட்டு வாழ்வில் பேணிக் கொள்ளத்தக்க கடப்பாடுகள் என்பதை வலியுறுத்தும் ஆட்சியாம். அமர்க்களத்தில் தாங்குவார் போலத் தமர்க் களத்திலும் தாங்குதல் வேண்டும் என்பதை ஆற்றுவார் மேற்றே பொறை என்னும் வள்ளுவம் கொண்டு தெளியலாம். பொன்னையா: அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர் அவர் என்பதாம். போச்சி: நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. புவ்வா என்னும் உணவுப் பெயரும் புகுவாய் என்பதன் வழிவந்த சொல். நீர் கொள்ளவும் வெளியே விடவும் அமைந்த குவளை அல்லது நீர்ச் செம்பைப் போச்சி (போகச் செய்வது) என்று வழங்கினர் ஆகலாம். போச்சுது: பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட உணவு அற்றுப் போயது என்பதை வெளிப்படுத்தும் அரிய ஆட்சி அது. ஆனால் ஆயிற்று ஆச்சுது ஆனது போலப் போயிற்று என்பது போச்சுது எனக் கொச்சை வடிவுற்றது. உறுதியாயிற்று என்பது உறுதி யாச்சு என ஏட்டுவழக்கு ஆயதை இவண் எண்ணலாம். அற்றது என்னும் வள்ளுவ வழக்கை எண்ணலாம். போச்சை: புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக் குள்ளும் புக வல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில் வழங்கு கின்றது. போச்சை=போதலுடையது. போஞ்சி: நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு - பேஞ்சி - போஞ்சி ஆகியிருக்கலாம். (மழை) பொழிந்தது, பெய்தது, பேஞ்சது என்றவாறு வழங்குவது நினையத்தக்கது. போட்டி: குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும் தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாயது (சங்கு) போலப் போட்டும் உணவு போய்ச் சேரும் இடம் போட்டி என வழங்கப் பட்டது. போடு: திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையதாதலால் இப் பெயர் பெற்றது. போத்தி: போற்றி (போற்றத்தக்கவர்) என்னும் அருமைப் பெயர் போத்தி என மக்கள் வழக்கில் ஊன்றியுள்ளது. தாத்தா என்னும் முறைப்பெயரே போத்தி என்பதாம். இது நெல்லை வழக்கு. போரிடுதல்: போரிடுதல் என்பது வெளிப்படைப் பொருள் தருவது. ஆனால் செட்டிநாட்டு வழக்கில் போரிடுதல் என்பது மகப்பேறு பார்த்தலைக் குறிப்பது அதன் அரும்பாடும் துயரும் விளக்கும் ஆட்சியாகும். ம மகத்துப் பிள்ளை: நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளையை மகத்துப் பிள்ளை என்பது முகவை வழக்கு. அவ்வழக்கு பின்னே, தலைப் பிள்ளை என்னும் பொருள் தருவதாக வழங்குகின்றது. மகம்+அத்து= மகத்து. மகம்=விழா. மங்கட்டை: மங்கல மகள், மங்கல விழா, மங்கல மனை என்பவை திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன்+கலம்=மன்கலம் > மங்கலம். மங்கலம் என்ப மனை மாட்சி (திருக்.) மங்கல வாழ்வு இழந்தவள் மங்கட்டை என வழங்கப்படுதல் நயினார் குறிச்சி வட்டார வழக்காகும். மச்சம்: மச்சம் என்பது அடையாளக்குறி என்பது பொது வழக்கு. பருத்தி தவசம் வாங்கும் வணிகர் மச்சம் பார்ப்பது என்பது விளைவு - விலை - தரம் - மதிப்பீடு குறித்துப் பார்ப்பது. ஒரு பானை சோற்றுக்கு ஓர் அவிழ் என்பது போன்றது அது. புலவை மச்சம் என்பது கொழுப் பூட்டம் கருதிய வழக்காகும். குறிகாரர் பார்க்கும் மச்சம் முதற்கண் கூறப்பட்டதில் அடங்கும். மச்சி: ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. மலடாதற்குரிய வழிகளில் ஒன்று வேண்டாத அளவுக்குக் கொழுப்பு அடைத்தல். மச்சி மச்சை என்பவை கொழுப்பு ஆதலால் கொழுப்பு என்னும் சொல்லை மலடு என்பதற்கு மக்கள் பயன்படுத்தினர். மச்சி என்னும் உறவுப்பெயர் பொதுவழக்கு. மசண்டை: விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுதை மசண்டை என்பது செட்டிநாட்டு வழக்கு. சோம்பேறியாக இருப்பவரை மசண்டை என்பது முகவை வழக்கு. ஒட்டிநின்று ஒன்றும் செய்யாதும், ஓயாது பேசுவதுமாக இருப்பதை மசமச என்பது பார்ப்பனர் வழக்கு. மசை: மசை என்பது திரட்சி, வனப்பு என்னும் பொருள் தரும் சொல். அது அப் பொருள் அமைந்த இளம்பருவப் பெண்ணைக் குறிப்பதாக மதுரை வட்டார இழுவை வண்டியாளர் வழக்கில் உள்ளது. மஞ்சி: தேங்காய் பனை முதலியவற்றின் நார்களை மஞ்சி என்பது சென்னை வழக்கம். முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு. முடிபோலும் நாரை மஞ்சி என்பது அவ் வழிப் பட்டது. மஞ்சு மேலெழும் முகில் என்பதை நினைவு கொள்ளலாம். மடிப்பெட்டி: வெற்றிலைக்குச் சுருள் என்பது ஒருபெயர். மொய் தருவார் வெற்றிலையில் வைத்துப் பணம் தரும் வழக்கத்தால் அது சுருள் எனப்பட்டது. இனி, சுருள் என்பதுபோல் மடி என்பதொரு சொல்லும் வெற்றிலைக்கு உண்டு என்பது பரதவர் வழக்கால் புலப்படுகின்றது. வெற்றிலையை வைக்கும் பெட்டியை மடிப் பெட்டி என்பர். மடித்து மெல்லுவது மடி, வலித்தல் பொருளிலும் மடியை அவர்கள் வழங்குதல் படகு வலித்தல் (ஓட்டுதல்) வழியதாகலாம். மடு: மாட்டின் பால்மடியை மடு என்பது பொதுவழக்கு. ஆறிடு மேடும் மடுவும் என்பதால் ஆற்றுப் போக்கால் ஏற்படும் மேடும் பள்ளமுமாகியவற்றுள் பள்ளத்தைக் குறிக்கின்றது, மடு என்பது, மடுத்தல் என்பது உண்ணல், பருகல், கேட்டல் என்னும் பொருளில் வருகின்றது. இது, உள்வாங்கல் ஆகும். மடு என்னும் பள்ளமான நீர்நிலையும் உள்வாங்கல் பொருளில் அமைந்துள்ளது. எ-டு: மணற்பாட்டு மடு. இது நெல்லை வழக்கு. மண்டாரம்: வீட்டு மாடிகளில் உள்ள வெளியை மண்டாரம் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மண்டை என்பது தலை என்றும் பெரிய என்றும் பொருள் தரும் முதனிலைச் சொல். பெரும் பானையை மண்டை என்பதும் உண்டு. மண்டைத்தாலி பெருந்தாலி. உயர்ந்த பெருவெளி மண்டாரம் எனப்பட்டுள்ளது. மண்டைக் கறி: மதுரை, இழுவை வண்டியோட்டியர் மண்டைக் கறி என ஒன்றை வழங்குகின்றனர். அதற்குப் பெயர் சுஞ்சா. அதனைப் பயன்படுத்துவார் பற்றுமை விளக்கும் செய்தி இது. மணற்காடை: தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். இங்கே மணற்காடை என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல் வாழ்வுடைமையால் இப் பெயர் சூட்டினர் போலும். மணிக் கூடு: காலம் பழங்காலத்தில் கணிக்கப்பட்டது. அதனைச் செய்தவர் காலக் கணியர் எனப்பட்டனர். காலத்துள் ஒன்று கடிகை. அதனைச் சார்ந்தே கடிகையாரம் (கடிகாரம்) எனப் புதுச் சொல்லாட்சி பெற்றது. காலங்காட்டி என்பதும் அது. கடிகாரத்தை மணிக்கூடு என்பது யாழ்ப்பாண வழக்கு. மணிக் கூண்டு எனக் காலம் காட்டும் கோபுரங்கள் தமிழகத்தில் பல ஊர்களில் உண்டு. மத்தை: மத்து என்பது திரண்டு உருண்டது. தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை கருவியையும் ஊமத்தைக் காயையும் ஒப்புமை காணலாம். மதகு: ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கியை மதகு என்பது பொது வழகுக்கு. அம் மதகு அமைப்பில் நீர் செல்லுமாறு அமைக்கப்பட்ட மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. மதகுபட்டி என ஊர்ப் பெயர் முகவை மாவட்டத்துள்ளது. மந்தணம்: பிறர்க்குச் சொல்லாமல் உள்ளடக்கமாக வைக்கத் தக்கதை மந்தணமாக என்பது இக் காலத் தமிழ்ப் பற்றாளர் எழுத்துமுறை. உள்ளடக்கமாக வைக்க வேண்டும் செய்தியை மந்தணம் என்பது நெல்லை வழக்கு. மந்தைக் குடம்: இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக் குடம் ஊரின் எல்லை வரை கொண்டு வரப்பட்டு ஊர் மந்தையில் உடைக்கப்படும். அவ்வளவுடன் மகளிர் திரும்புவர். அக் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது. மந்தை ஆடுமாடு அடையும் ஊர்ப் பொதுவிடம். k‹W>kªJ>kªij. மப்பு: மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில் மிதப்புச் சக்கையை மப்பு என்பது முகவை மாவட்ட வழக்காகும். மரத்தில் வெடிப்பு துளை இருக்குமானால் அதனை அடைக்க வைக்கும் மெழுகை மப்பு என்பது தச்சர் வழக்கு. மப்பு மந்தாரம் அவன் மப்பு அப்படிப்பேச வைக்கிறது என்பவை மக்கள் வழக்குகள். மரவை: உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற ஏனங்களிலோ போட்டு வைப்பது இல்லை. மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர். மரத்தால் செய்யப்பட்டது மரவை ஆகும். இது தென்னக வழக்கு. மரிச்சி: மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை மரியாதை என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும். மருந்து: மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக் குடித்துச் செத்து விட்டான்(ள்) என்பதில், மருந்து நஞ்சுப் பொருள் தருகிறது. இது தென்னக வழக்கு. சாவா மருந்து என்பது அமுது, நஞ்சு என்னும் இருபொருளும் தருதல் திருக்குறள் உரை வழியது. மலரணை: ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும். மலர்தல்=சொல்லுதல்; திருவாய் மலர்தல் என்பது பெரியவர்கள் சொல்லுதலைக் குறிக்கும். அணை என்பது சொல்லியதற்குச் சான்று. இது செட்டி நாட்டின் வழக்கு. மலையடி: மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொது வழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும் பொருளில் வழங்குகின்றது. கொசுவால் மலேரியா என்னும் தொற்றுக் காய்ச்சல் உண்டாவதும், காய்ச்சல் அடிக்கிறது என்னும் வழக்கும் நோக்கச் செய்கிறது இம் மலையடி. மழைத்தாள்: பால்தாள் எனப் பொதுமக்களால் வழங்கப்படும், பாலிதீன் நீர்க்காப்பாக இருப்பது. மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது. இப் பயன் விளங்கத் திருப்பூர் வட்டாரத்தார் மழைத்தாள் என வழங்குகின்றனர். மள்ளு: மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்கு நாட்டு வழக்கில் உள்ளது. கொள்ளும் கொண்ம் ஆவது போல மள்ளு, மண்டு ஆகும். மொள்ளுதல் மோளுதல் என்னும் வழக்கு தென்னகப் பெருவழக்கு. மள்ளு, மொள்ளு என வழக்குப் பெற்றிருக்கலாம். மறுமாற்றம்: பதில் சொல்லுதல் மறுமொழி என்றும், மறுமாற்றம் என்றும் சொல்லப்படும். அது பொதுவழக்கு. இலக்கிய வழக்கும் உடையது. உசிலம்பட்டி வட்டாரத்தில் சோற்றுடன் உண்ணும் தொடுகறி வகையை மறுமாற்றம் என்று வழங்கு கின்றனர். சோற்றுச் சுவைக்கு மாறுபட்ட சுவையினது என்பதாகலாம். தொடுகறியை மாற்றாணம் என்பது திருப்பூர் வட்டார வழக்கு. மன்னுதல்: தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடை வெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடை வெளியின்றிப் போட, இப்படி யும் அப்படியும் குலுக்குவர் கோணியை. அதற்கு மன்னுதல் என்பது பெயர். மன்னுதல் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் பொருளது. இது முகவை நெல்லை வழக்கு. மாக்கான்: குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது. மணல் தேரை என்னும் பெயரினது. மாங்காய்: மாவின் காய் என்னும் பொதுப் பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் சிறு நீரகத்தைக் குறிப்பதாகப் புலவுக் கடையினர் வழங்குகின்றனர். இது உவமை வழிவந்த சொல்லாட்சியாகலாம். மாங்கு: உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு மங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு என்பது மாங்கு என மாறி இரு பக்கமாகப் பிரிக்கப்படுதலைக் குறித்தது. மாச்சல்: சோம்பல் என்பது பொதுச் சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மாய்ச்சல்ழூமாச்சல். மாய்ந்து போன தாம் நிலை. எனக்கு அவனைப் பார்க்க மாச்சலாக இருக்கிறது என்று அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு. மாட்டுக்கால் விடல்: பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொது வழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல் என வழங்குகின்றது. நெற்கதிர் அடித்த தாளை வட்டமாகப் பரப்பி அதிலிருக்கும் மணியை எடுப்பதற்காக மாடுகட்டிப் போரடிப்பதே மாட்டுக்கால் விடல் எனப்படுகின்றதாம். மாம்மை: மாமாவின் அம்மையை மாம்மை என்பது விருதுநகர் வட்டார வழக்கு. மாமா அம்மை மாம்மை எனத் தொகுத்து நின்றது. அப்பாவின் அப்பா அப்பப்பா என்றும், அம்மாவின் அம்மா அம்மம்மாள் என்றும் வழங்குவது போன்றது இது. மாராயம்: வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் மாராயம் என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம் பெற்ற குடிகளின் பழம்புகழ் இன்றும் பேசப்படு கின்றது. இது செய்தி என்னும் பொருளிலும் ஊரழைப்பு என்னும் பொருளிலும் முகவை வட்டார வழக்கில் உள்ளது. மாரிமூலை: மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். அது, வடகிழக்கு மூலையாகும். அங்கே மேகம் திரண்டால் மழைவரும் என எவரும் அறிவர். உழவர் வழக்கு இது. மால்: திருமால், பெரிய கட்டடம், கருநிறம் மயக்கம் என்னும் பொருள்கள் மால் என்பதற்கு உள்ளமை பொதுவழக்கு. மால் என்பதற்கு எல்லை என்னும் பொருள் நெல்லை மாவட்டத்தில் உண்டு. மால் என்பதற்குச் சந்தை என்னும் பொருள் விருதுநகர் வட்டார வழக்கு. பெரிய வலையைக் குறிப்பது பரதவர் வழக்கு. மாலை பூத்தல்: திருமணம் என்பதற்குரிய வழக்குச் சொற்களும் வட்டார வழக்குச் சொற்களும் மிகப்பல. அவற்றுள் ஒன்று மாலை பூத்தல் என்பது. இது முகவை நெல்லை வழக்காகும். மாறிவருதல்: மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் மாறிவருவன் எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி மாவட்ட வழக்கில் மாறிவருதல் விற்றுவருதல் பொருளில் வழங்குகின்றது. பொருளைக் கொடுத்து வோறொரு பொருளை மாற்றி வாங்கி வருதல் என்பதாம். மாறுகாற்று: காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று மேல் காற்று. கோடைக் காற்று என்பது அது. ஆடை கோடை என்பதில் ஆடை கார்காலம்; கோடை, கோடை காலம். மேல் காற்றை மாறுகாற்று என்பது சீர்காழி வட்டார வழக்காகும். மிகை: மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் என்றும் வள்ளுவம் மிகுதி என்பது குற்றத்தையேயாம். அளவை விஞ்சுதல் குற்றமாம். எதிலும் அளவு வேண்டும் என்பது நெறிமுறை. மிதப்பு: மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக மானாமதுரை வட்டார வழக்காக உள்ளது. பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பதை மிதப்பு என்பது தென்னக வழக்கு. மிதிதும்பை: கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப் பொதுப் பொருள் பெற்றிருக்கும். மிளகாய்க் கல்: அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல சரக்கு என்பது தழுவி நின்றது. முக்கட்டு: மூன்று கட்டு என்னும் பொருளில் வருவது அன்று முக்கட்டு என்னும் அணிகலம். மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த காதணி முக்கட்டு ஆகும். இஃது ஆண்கள் அணிகலம். நெல்லை முகவை வழக்கு. முக்காணி: கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய பெயர் குரங்குக் கட்டை. வண்டியின் முகப்பில் அதன் பாதுகாப்பாக இருத்தலால் முற்காணி, முக்காணி ஆயது. முகக்காணி முக்காணி எனினுமாம். வண்டியின் பின்னாலும் தாங்கு கட்டை உண்டு. தேனி வட்டார வழக்கு முக்காணி என்பது. முக்குணி: அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற் புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடையது. அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பின் வடிவு நோக்கி, முக்குணி என்பது, நெல்லை வழக்கு. மூன்று கல்லை வைத்து அடுப்பு உண்டாக்குதல் நாட்டு வழக்கம். முக்கணியாக இருந்து முக்குணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். முட்டி: தட்டு முட்டு என்பது சமையலறைப் பொருள்கள். பிச்சை முட்டி என்பது இணைச் சொல். முட்டி என்பது வட்டி என்னும் பொருளில் சென்னை வட்டாரத்தில் வழங்குகின்றது. முட்டிக் குனியும் நிலையில் வாங்கப்படுவதும், கொடுக்கப்படுவதுமாம் வட்டியை உணர்ந்து பெயரிட்ட வழக்கு அது. முட்டை: பூ அரும்பு திரண்ட நிலையில் மொக்கு என்றும், மொட்டு என்றும் வழங்குதல் பொது வழக்கு. அதனை முட்டை என்பது கொங்கு நாட்டு வழக்கு. அது வடிவொப்புக் கருதியது. முடவாண்டி: கால் கை முடம்பட்டவர்கள் முடவாண்டி எனப்படுதல் கொங்கு நாட்டு வழக்கு. முடவாண்டியர்களைப் பேணுதற்கு அறச்சாலை அமைத்தனர். அவர்களைக் கண்காணித்து உதவி செய்பவர் காலாடி எனப்பட்டனர். கோவை ரங்கே கவுடர் தெருவில் முடவாண்டியர் மடம் உள்ளதாகக் கூறுவர். மிளகுசாறு: சிற்றூர் எனினும் பேரூர் எனினும் இரசம் இல்லாத விருந்து இன்று காணற்கு இல்லை. நெல்லை முகவை மாவட்டங்களில் மிளகு சாறும், மிளகு தண்ணீரும், சாறும் தூய தமிழாகக் கமழ்கின்றன. ஆங்கிலரைக்கூட மிளகு தண்ணீர் கவர்ந்து அப்படியே ஒலிபெயர்த்து வழங்கச் செய்தது! ஆனால் தமிழர் நிலை? முத்துமுடி: நரைத்தல் முதுமை அடையாளம் எனப்பட்ட காலமும், கவலைக்கு அடையாளம் எனப்பட்ட நிலையும் மாறிப் போயது வெளிப்படை. நரையை மாற்ற எடுக்கும் முயற்சிகளை நோக்கினால் கருமுடியின் பெருமை விளங்கும். நரைமுடிக்கு ஆண்டிபட்டி வட்டாரத்தார் ஓர் அருமையான முடிசூட்டு விழா எடுத்துள்ளனர். அது முத்து முடி என்பது. வெண்ணிறம் மட்டுமா முத்து! அது, எவ்வளவு விலை மானப் பெருமையது! முத்தெண்ணெய்: முத்து என்பது வேம்பு, புளி, ஆமணக்கு முதலியவற்றின் வித்துக்கும் பெயர். முத்தின் வடிவுநிலை கருதியதாகவும், பின் சார்பு கருதியதாகவும் வந்த பெயர் அது. ஆமணக்கு எண்ணெய், விளக்கு எரிக்கப் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் ஆயது. அதனை முத்தெண்ணெய் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. முதல்: முதன்மை, வேர், பழம், விதை, சொத்து எனப் பொருள் தரும் சொல் முதல் என்பது. அது நாற்று என்னும் பொருளில் உழவர் சொல்லாக வழங்குகின்றது. நெல் நாற்று ஒன்றுக்கு, ஆயிரமாய் விளைவது எண்ணத்தக்கது. விளைவைக் கண்டு முதல் என்பதும் எண்ணத்தக்கது. முதுசொம்: சொம் என்பது சொத்து என்னும் பொருள்தரும் பழஞ்சொல்; இலக்கியச் சொல். வழிவழியாக வரும் சொத்து முதுசொம் எனப்படுதல், யாழ்ப்பாண வழக்காக உள்ளது. பழஞ்சொத்து என்பது பொருளாம். R«>brh«. மிகத் திரண்டது. சும்மை, பல்வகை ஒலி. சுமை, பொதி. முதுவர்: முதியர் என்பது போல முதுவர் என்பதும் பொது வழக்கே. முதுமக்கள் தாழியை நினைவு கூறலாம். முதுவர் என்னும் பழங்குடி மக்கட் பெயரும் உண்டு. திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் முதுவர் என்பது பெருவழக்கு. முழுத்தம்: முழுத்தம் என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது. முழுத்தம்; முழுமதி, முழுத்தம் பின்னே முகூர்த்தம் எனப் பட்டது. 24 நிமிட அளவில் சுருங்கியும் போனது. நெல்லை முகவை வழக்காக முழுத்தம் வழங்கிவருகின்றது. முள்ளா: முள்ளம்பன்றி என்பதை முள்ளா என்று குமரி மாவட்டத்தார் வழங்குகின்றனர். நெடிய தொடரையும் சொல்லையும் பொருள் விளங்கச் சுருக்குதல் பொதுமக்கள் வழக்காகும். முள்ளா என்பது அதற்கொரு சான்று. முள்ளான் எனின் புல மக்கள் வழக்காகி விடும். முளை: முளைத்து வருவன எல்லாம் முளை எனப்படுவதேயாம். ஆனால் விளவங்கோடு வட்டாரத்தில் முளை என்பது மூங்கில் என்பதைக் குறித்து வழங்குகின்றது. முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்பது மங்கல விழா, திருவிழாக்களின் அடையாளமாக இருப்பதையும், முளை என்பது பாவை என வழங்கப்படுதலும் எண்ணலாம். முளைஞ்சு: முளை என்பது முளைத்து வருவனவற்றுக்கு எல்லாம் பொது வழக்கு. ஆனால் முளைத்து வந்த பயிரின் குருத்தினை முளைஞ்சு என வழங்குவது இறையூர் வட்டார வழக்காகும். முளைஞ்சு என்பதற்குக் குகை என்னும் பொதுப் பொருள் இலக்கிய வழக்காகும். முறி: (1) எழுதும் ஏட்டை முறி என்பது பொது வழக்கு. ஆனால் முறி என்பதற்குக் குமரி வட்டாரத்தார் அறை எனப் பொருள் வழங்குகின்றனர். நெடிய வீட்டுப் பரப்பைப் பகுதி பகுதியாக அறுப்பது அறை எனப்படுவது போல முறிப்பதால் முறி எனப்பட்டது. அறையும் முறியும் கை கோக்கின்றன அல்லவா! தறி என்பதும் தான் கூடி நிற்க வரவில்லையா? முறி: (2) தேங்காயை இரண்டாக உடைப்பர். உடைந்த பகுதியை முறி என்பது வழக்கு. கண்ணுள்ள பகுதியைப் பெண்முறி என்றும், கண்ணில்லாப் பகுதியை ஆண்முறி என்றும் கூறுவர். முறியின் உடைவில் கூட நலம் பொலம் பார்க்கும் நம்பிக்கை உண்டு. இவை தென்னகப் பொது வழக்கு. முறுக்கான்: முறு, முறுமுறுப்பு என்பவை முற்றல் வழிப்பட்ட சொற்கள். முறுக்கான் என்பது வெற்றிலை என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முற்றிய வெற்றியை முதற்கண் குறித்துப் பின்னர்ப் பொதுப் பொருள் கொண்டிருக்கும். வெற்றிலைக் கொடிக்காலில் இளங்கால், முதுகால் என்னும் வழக்கும் உண்டு. மூச்சி: முச்சி என்பது வகிடு. அது அகலம் இல்லாமல் நீண்டு எடுக்கப்படுவது. முச்சி என்பது நீண்டு மூச்சியாகி நீளப் பொருள் தருதல் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல்லின் நீட்சி, பொருளின் நீட்சியுமாதல் இரட்டைப் பொருத்தமாம். மூச்செடுப்பு: மூச்சு உள்வாங்கல், வெளியிடல் வழியாக மார்பு அளவெடுத்தல் வழக்கம். அம் மூச்செடுப்பு பொதுவழக்கு. கிள்ளியூர் வட்டார வழக்கில் மூச்செடுப்பு என்பது ஓய்வு என்னும் பொருளில் வழங்குகின்றது. மூச்சுவிட நேரமில்லை என்பது நெல்லை வழக்கு. மூச்சுவிடுதல் என்பதன் ஓய்வெடுத்தல் பொருளை நெல்லை வழக்கு தெளிவு செய்கின்றது. ஒருவட்டார வழக்கை இன்னொரு வட்டார வழக்கு தெளிவாக்குதல் சான்று ஈதாம். மூடு: மூடு என்பது பழமையான சொல். குட்டி என்னும் பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச் சொல் அப் பொருளில் திருச்சி, கருவூர் வட்டார வழக்குகளில் உள்ளது. வெள்ளாட்டுப் பெண்குட்டியின் பெயர் அது. மறி என்பது பாற் பொதுப் பெயர். ஆண்மறி, பெண் மறி எனப்படும். மறி=குட்டி; மான் மறி. மூணாரம்: இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை ஒன்று; அதன்மேற்காப்பாக ஒட்டியாணம் என்றும் இடைவார் என்றும் அணிவன மற்றொன்று இம் மூன்று ஆரம் (சுற்றுக்கட்டு, பாதுகாப்பு) இருப்பதால் மூணாரம் எனப்பட்டது. பொது மக்கள் பார்வை, புலமக்கள் பார்வையை வெல்லும் திறச் சான்றுகளுள் ஒன்று இஃதாம். மெதை: மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோயில் வட்டாரத் தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர். மிதப்பது மிதை என்பது இயல்பான ஆட்சி. மெய்யப்பெட்டி: அடக்கம் செய்வதற்குச் சவப்பெட்டி செய்கின்றனர். சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வது பெரிதும் கிறித்தவ வழக்கு. இரணியல் வட்டாரத்தார் சவப் பெட்டியை மெய்யப் பெட்டி என்பது அருமை மிக்க வழக்காகும். மெய்=உடல். உடலை வைக்கும் பெட்டி மெய்யப் பெட்டி. சவம் என்பதனினும் மெய் செவிக்கும் வாய்க்கும் மணப்பதாக அமைகின்றதே. மெனக்கி நாள்: வினைக்கேடு என்பது மெனக் கேடு என வழங்கும். வினை மெனை என ஒலிவகை வழுவாகின்றது. வேலை இன்றி இருப்பது வினைக்கேடு. திருச்செந்தூர் வட்டாரத்தார் விடுமுறை நாளை மெனக்கிநாள் என்கின்றனர். மெனக்கெட்ட (வினைகெட்ட) நாள் மெனக்கி நாளாயிற்று. மேசைக்காரர்: மிசை என்பது மேல். உயரமான பலகை என்னும் பொருளில் மேசை வழக்குப் பெற்றது. அதனை மேடை என்பார் பாவாணர். நெல்லை மாவட்டத்தில் மேசைக்காரர் என்று அலுவல் பார்ப்பவரை (அலுவலரை) வழங்குகின்றனர். அலுவல் அலுவலர் என்றால் மேசை கண்முன்னே வருகின்றதே. மேட்டிமை: மேடு=உயரம். மேட்டிமை=தன்னை உயர்வாக - தற்பெருமை யாகப் பேசும் இயல்பை மேட்டிமை என்பர். அத்தகையவனை மேட்டிமைக்காரன் எனப் பழிக்கவும் செய்வர். மேட்டுக்குடி என்பது செழிப்பான வாழ்வினர் குடியிருப்பு. இம் மேட்டிமை செருக்குத் தனமாகும். இது நெல்லை, முகவை வழக்கு. மேலாக்கு: பாவாடை கட்டும் சிறுமி மேலே தாவணி போடுவது வழக்கம். தாவணி சட்டையின் மேலே போடுவதால் அதனை மேலாக்கு என்பது நெல்லை வழக்காயது. காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று. மைக்குட்டி: குமரி மாவட்டத்தார் கம்பளிப் பூச்சியை மைக்குட்டி என்கின்றனர். கம்பளிப் பூச்சியின் கருவண்ணம் கருதிய பெயர் அது. ஓர் உயிரை மதிக்கும் மதிப்பீடாகக் குட்டி விளங்கி இனிமை செய்கின்றது. மொச்சை: மொச்சை குத்துச் செடி வகையைச் சேர்ந்தது. மொச்சைப் பயறு மற்றைப் பயறு வகைகளுள் பெரியது. அவரை வகையைச் சேர்ந்ததாகும். அதன் இலை கொடி காய்த் தோல் ஆகியவற்றில் ஒருமணம் (நாற்றம்) உண்டு. அதனால் வில்லுக்குழி வட்டாரத்தார் மொச்சை என்பதற்கு நாற்றம் எனப் பொருள் தந்துள்ளனர். மொட்டு: மொட்டு என்பது பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு. மொட்டு என்பதற்கு முட்டை என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். நீர்க் குமிழியை முட்டை என்பது முகவை, நெல்லை வழக்கு. மொடக்கிட்டி: படுப்பதும் புரள்வதும் ஓடி இளைப்பதும் படுப்பதுமாகிய நாயை, ஒட்டன்சத்திர வட்டாரத்தார் மொடக்கிட்டி என வழங்குகின்றனர். முடம், மொடம் ஆயது. போய் முடங்கு என்பது போய்ப் படு என்னும் பொருளில் முகவை, நெல்லை வழக்குகள் உண்டு. மொய்: கூடுதல் பெருகுதல் ஆகிய பொருளில் மொய் வழங்கப் படும். ஈ மொய்த்தல், எறும்பு மொய்த்தல், மொய் எழுதுதல் என்பவை அவை. ஆனால் ஆயர் வழக்கில் மொய் என்பது 20 ஆடுகளைக் குறிப்பதாக உள்ளது. நூறு, ஆயிரம், வெள்ளம் என்பவற்றை நினையலாம். மொலுங்கு: தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு என்பவற்றை மொலுங்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காகும். மொலு மொலு என்பது ஒலிக்குறிப்பு. தவசத்தைப் போட்டு அள்ளுதல் ஒலிக்குறிப்பு வழியாக ஏற்பட்ட பெயராக இருக்கலாம். மோட்டை: ஓட்டை என்பது நெல்லை வழக்கில் மோட்டை என வழங்குகின்றது. தண்ணீர் எல்லாம் ஓடிவிட்டது. வரப்பில் மோட்டை உள்ளதா என்பதைப் பார்த்து அடைக்க வேண்டும் என்பர். ஓட்டை, மோட்டை யாதல் மெய்யொட்டாகும். மோளையடுப்பு: மூன்று குமிழ்கள் அடுப்பில் இருக்கும். திண்டுக்கல் வட்டாரத்தில் இருகுமிழ் அடுப்புகளும் உண்டு. அவ் வடுப்பு மோளையடுப்பு எனப்படுகிறது. அடுப்புக் குமிழ்களுள் ஒன்று குறைவதால் அப்பெயரிட்டனர் போலும். கொம்பு இல்லாத கடா, மோளைக் கடா எனப்படுதலைக் கருதலாம். மோளை= குறைதல், இல்லாமை. வ வக்கட்டை: மெலிந்தவர், ஒல்லி (ஒல்கி) யானவர் என்பதை ஒச்சட்டை என்பர். ஒல்லி என்பதை வக்கட்டை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். இது, உயிரினத் திரிபும், வல்லினத் திரிபும் கூடியதாகும். வக்கா வக்கா என்பது பறவைப் பெயர்களுள் ஒன்று. அதனைக் குறவஞ்சி நூல்களால் அறியலாம். வக்கா என்பது கிளி என்று திருமங்கல வட்டார வழக்கால் அறிய வாய்க்கின்றது. அக்கா, அக்கா என்று சொல்லிப் பழக்குவதால் வக்கா ஆகியிருக்கக் கூடும். வங்கணம்: உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தலை வங்கணம் என்பது முகவை வட்டார வழக்காகும். அங்கணம், கழிசடை என்பவை போன்றதொரு வசை வழக்காக ஏற்பட்டிருக்கக் கூடும். வங்கு: தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு என்பது முகவை மாவட்ட வழக்கு. வங்கு பிடித்தவன் போல ஓயாமல் சொரிகிறாயே என்பது பேச்சு வழக்கு. சொரிநோய் பற்றுதலை வங்கு என்பர். சொண்டு, சொரி போல்வது வங்கு. வசி: கூர்மை, வயப்படுத்துதல், வாள் என்னும் பொருளில் வழங்கும் வசி என்னும் சொல், பரதவர் வழக்கில் சோற்றுத் தட்டு, தட்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. உழைப் பெல்லாம் ஊணுக்கே என்னும் பழமொழியை நோக்கினால், வசி என்பதற்குச் சோற்றுத் தட்டு என்பதன் பொருள் விளக்க மாகும். வட்டம்: வட்டம் என்பது வட்டப் பொருள் தருதல் பொது வழக்கு. அது வட்ட வடிவுடைய தோசைப் பொருளில் வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். வடிவு நோக்கிய பெயர் அது. வட்டம் என்பது வட்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்காக உள்ளது. வட்டி: வட்டி என்பது முதற்பொருளுக்கு ஊதியமாகக் கிடைக்கும் தொகையைக் குறிப்பது பொது வழக்கு. அது பெட்டி என்னும் பொருள் தருவது அகத்தீசுவர வட்டார வழக்காகும். முதற்கண் வட்டப் பெட்டியைக் குறித்து, பின்னர் பெட்டி என்னும் பொதுப் பொருளுக்கு ஆகியிருக்கும். வட்டு: வட்டு என்பது கமலை வண்டி என்னும் பொருளில் உழவர் வழக்காக வழங்கும். நூல்குண்டு என்னும் பொருளில் கொத்தர் வழக்காக உள்ளது. கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு. குமரி மாவட்டத்தில் வட்டு என்பது மாத்திரை என்னும் பொருளில் வழங்குகின்றது. இதுவும் வடிவு கருதிய வழக்கே. கிறுக்கு என்னும் பொருளில் இரணியல் வட்டாரத்தில் வழங்குதல். சுற்றிச் சுற்றி வருதல் கருதியது. வடலி: இளம்பனை என்றும் குறும்பனை என்றும் வடலி என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளல் நெல்லை வழக்காகும். குறும்பனை நாடு குமரிக் கண்டப் பழமையது. பனை வடலி என்னும் நெல்லை மாவட்ட ஊர்ப் பெயர் எண்ணலாம். ஆங்குள்ள குறும்பனைகளைக் கண்டு பொருள் தெளியலாம். வண்டு கட்டல்: வண்டு சுற்றிவருதல், வளையம், வளையமிடும் பூச்சி என வட்டப் பொருளிலே வருதல் பொதுவழக்கு. அப் பொருளிலே வரும் வண்டு கட்டுதல் என்பது உணவுக் கலத்தின் வாய்ப் பகுதியில், ஈ எறும்பு புகாமலும் தூசி தும்பு விழாமலும் பாதுகாப்பாகச் சுற்றிக் கட்டும் துணிக்கட்டினை வண்டு கட்டுதல் என்பது தென்னக வழக்கு. வண்ணம்: ஒருவர் உடல் பருத்துத் தோற்றப் பொலிவு அடைதலை வண்ணம் என்பது விளவங்கோடு வட்டார வழக் காகும். கோட்டுப் படத்திற்கும் வண்ணந்தீட்டிய படத்திற்கும் உள்ள நிலையை ஒப்பிட்டுக் காணலாம். வணக்குதல்: வணக்குதல் வாட்டுதல், உலரச் செய்தல் என்னும் பொருளது. வதக்குதல் என்பது அப்பொருள் தரும் மக்கள் வழக்குச் சொல். பொரியல் கறியை ஆக்கும் வகையை வணக்குதல் என்பது பழனி வட்டாரவழக்கு. நீர்ப்பதன் சுண்ட வறட்டுதல் வணக்குதல் என்க. வத்தை: வத்தை என்பது பரதவர் (மீனவர்) வழக்குச் சொல். மிதவை வகையுள் ஒன்று அது. வற்றிக் காய்ந்த வற்றல் வத்தல் என வழங்கப்படுவது போல, உலர்ந்த கட்டைகளை இணைத்து மிதவையாகச் செய்யப்பட்டது வத்தை எனப் பெயர் கொண்டு, பின்னர் மிதவை என்னும் பொருளில் படகுக்கு ஆகியிருக்கும். வத்தை=சிறுபடகு. வதியழிதல்: பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில் வாங்குவதுடன், மிக நல்லதாகப் பார்த்தே வாங்குவது வழக்கம். அந் நிலையில் குறையுடையவை அங்கும் இங்கும் கொட்டப்பட்டுக் கிடக்கும். வதியழிதல், வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும். பொருள் மிகுதி காட்டும் இச் சொல் தென்னக வழக்குச் சொல்லாகும். வந்தட்டி: நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும். அவன் என்றைக்கும் வந்தட்டி தான்! என்ன தொழிலைப் பார்க்கப் போகிறான் என்பது வழக்குத் தொடர். வயல்பயறு: நெல்விளை நிலத்திலே சிறுபயறு ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு என நெல்லை வட்டார வழக்காக உள்ளது. ஏனெனில் பயறு வகை புன் செய்ப் பயிராக வருவது. இப் பயறு வயலில் வருவதால் இப் பெயர் பெற்றது. வயா: வயிறு வாய்த்தல் (கருக் கொள்ளல்) வயா எனப்படும். வயாழூவயவு; புறாழூபுறவு ஆவது போல. மயக்கம் வாந்தி, புளிவேட்கை என்பவை வயாக்குறிகளாகும் கருக் கொள்ளுதல் வயா எனக் கருங்குளம் வட்டாரத்தில் வழங்கப்படுகிறது. வரி: அரி என்பது அரிசி என்னும் பொருள் தருவதுபோல், வரி என்பது வரிசை எனப் பொருள் தருதல் குயவர் வழக்காக உள்ளது. உழவர் வழக்கிலும் வரிசைப் பொருள் வரிக்கு உண்டு. படைப்புப் போடும் போது வரி வைப்பர். வரி மாறாமல் படைப்புப் போடுவர். வல்லளை: எலி வளை, நண்டு வளை என்பவை வழக்குச் சொற்கள். வளை என்பதை வல்லளை என்பது அலங்கா நல்லூர் வட்டார வழக்காகும். அளை என்பதும் வளை, புற்று என்னும் பொருளும் தரும் சொல்லேயாம். வலக்கை: வலப்புறக் கை வலக்கை என்பது பொது வழக்கு. அதற்கு உண்மை என்னும் பொருள் குற்றால வட்டார வழக்கில் உள்ளது. வலக்கையை அடித்து உண்மை கூறுதல் வழியாக உண்மை என்னும் பொருள் அதற்கு ஏற்பட் டுள்ளது. உண்மை கூறுதல்=சத்தியம் செய்தல். வலசை: ஒரு மொத்தமாகக் குடியேறிப் போதலை வலசை போதல் என்பது பொது வழக்கு. பறவைகள் நூற்றுக்கணக்கில் வண்ண மாலை போல் பறந்து போதலை வலசை போதல் என்பர். வலசை என்னும் பெயருடைய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாகக் குடியேறியுள்ள ஊர்களாகும். வலசை வருதல் என்பதற்குக் குடியேறுதல் என்னும் பொருள் செட்டி நாட்டு வழக்கில் உள்ளது. வலையான்: வலைபோட்டு மீன்பிடிப்பவன் வலையான் எனப்படுதல். பொது வழக்கு. வலை பின்னும் சிலந்தியை வலையான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். சிலந்தி வலை என்பது அவ் வலைக்குப் பெயர்தானே. சிலந்திக் கூட்டைச் சிலம்பி என்பார் ஔவையார். (தனிப்பாடல்) வழலை: சோப்புக் கட்டியைச் சவர்க்காரம் என்பது பொது வழக்கு. அது, வழ வழப்பாக இருப்பது கொண்டு வழலை என்பது குமரி மாவட்ட வழக்காகும். இதனை அரிய ஆட்சிச் சொல்லாகக் கொண்டார் பாவாணர். வழிக்காசு: போக்குவரவுக் காசு, வழிச் செலவுக் காசு என்பதை ஏலக்காய்த் தோட்டத்தார் வழிக்காசு என்கின்றனர். பயணப் படி என்பதை வழிக்காசு வழிச் செலவு என்று வழங்கலாமே! வள்ளிசு: அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட் டான் என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக - ஏராளமாக - என்பதன் வழிவந்த வழக்காகும். இது நெல்லை, முகவை வழக்கு. வளசு: வளைவு என்னும் வடிவப் பெயரால் ஏற்பட்ட பெயர் வளையல். அதனை வளசு என்பது பரதவர் வழக்காக உள்ளது. இளையதுழூஇளைசுழூஇளசு ஆவது போல வளைவானது வளைசுழூவளசு ஆயது. வளர்த்தம்மை: பெற்றோர் இருக்கும் போதும் அவரைப் பெற்றோர் இருப்பார் எனின் அவர் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதே பெரும்பாலான குடும்ப வழக்கம். இவ் வழக்கை விளக்குவது போல வளர்த்தம்மை என்னும் சொல்லாட்சி விளங்குகின்றது. வளர்த்தம்மை என்பது தாயைப் பெற்ற அல்லது தந்தையைப் பெற்ற பாட்டியாவார். இது தென்காசி வட்டார வழக்காகும். வளவு: மனை அல்லது நிலம் என்பவற்றின் எல்லை காட்டும் வகையில் வேலியிடுதல் வழக்கம். உயிர்வேலி எனினும் கல், மண் முதலிய சுவர் வேலியாயினும் இடுவர். வேலி என்னும் பொருளில் வளவு (வளைவு) என்பது நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. வளவு ஊர்ப் பெயராகவும் உண்டு. வளையம்: வளையம் என்பது வளைவான பொருளைக் குறித்தல் பொது வழக்கு. வளையம் (வட்டம்) சுற்றிவருதல் எண்ணிக் கணக்கிடுதல் போட்டி வகைகளுள் ஒன்று. அதன் வழியே வளையம் என்பதற்கு முறை, தடவை என்னும் பொருள்கள் உள்ளமை குமரி மாவட்ட வழக்காகக் காண்கின்றது. வற்றல்: உலர்ந்து போன மிளகாய், சுண்டை, மெதுக்கு, வெண்டை, அவரை வற்றல்கள் பொது வழக்கானவை. மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பவரை வற்றல் என்பது முகவை நெல்லை வழக்கு. ஈரம் வற்றிப் போனது - பசையாகிய வலிமை அற்றுப் போயது - வற்றல் என்க. வாங்கி: வாங்கி என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல் பொருளில் வாராமல் நிலையின் மேல் போடப்பட்ட பலகையைக் குறிப்பதாகத் திருச்செங்கோடு வட்டார வழக்கில் உள்ளது. கம்பால் அமைந்த அதனைக் கம்பை என்பது முகவை வழக்கு. தாங்குதலாக அமைதலால் தாங்கி என்பது நெல்லை வழக்கு. வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம். வாங்கியிருத்தல்: நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந் நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில் தள்ளி இருத்தலை வாங்கி யிருத்தல் என்பர். வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம். வாங்கு: வாங்கு என்பது வளைவுப் பொருளது. வாங்கு பிடித்தல் என்பது கணைகளுக்கு வளையம் போடுதலாகும். வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி)க் கம்பைக் குறிப்பதாக மதுக்கூர் வட்டார வழக்கில் உள்ளது. வாஞ்சனை: வாஞ்சனை, (வாஞ்சை) என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். அவனுக்கு என்மேல் வாஞ்சனை மிகுதி. அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான் என வாஞ்சனையை மதித்துக் கூறுவர். இது நெல்லை வழக்கு. வாட்டம் (1): வாடிப்போதல் எனப்படும் வாட்டம் வேறு. இது நீர் வழியும் சரிவு எனப்படும் வாட்டமாகும். மனையில் தளம் போடும் போது, அதனைக் கழுவி விடும் நீர், தானே வடிந்து வெளியேறும் வகையில் சாய்தளமாக அமைப்பது வாட்டம் எனப்படும். நீர்வாட்டம் என்பர். இது கொத்தர் வழக்கு. வாட்டம் (2): வாட்டம் வாடுதல், நீரோட்டம், சரிவு என்று பலவகைப் பொதுப் பொருள் தரும் சொல். அது பசி என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் உள்ளது. பசி தானே வாட்டத்தை உண்டாக்குவது. நீரில்லாப் பயிர் வாடுதலும் அதுதானே. வாட்டி: வாட்டுதல் பொருளிலோ வதைத்தல் பொருளிலோ வாராமல் தடவை, முறை என்னும் பொருளில் சேரன்மா தேவி வட்டாரத்தில் வழங்குகின்றது. எத்தனை வாட்டி சொல்லியும் அவன் கேட்க வில்லை என்பர். வட்டம் சுற்றும் எண்ணிக்கை வழி வந்த சொல் இது. வளையம் என்பது போல. வாடி: மரவாடி எனப்பல இடங்களில் பெயர்ப் பலகைகளை நாம் காண்கிறோம். வாடி என எப்படிப் பெயராயது? மரம் அறுக்க மேலே உயர்த்தி கீழே தாழ்த்தி மரத்தை அரம்பத்தால் அறுப்பர். உயரம் தணிந்து வருமாறு அறுவைப் பட்டடை அமைப்பதால் வாடி (வாட்டமானது, சரிவானது) எனப் பெயர் கொண்டது. மரக்கடை வழக்கு இது. வாடியம்: திண்டுக்கல் வட்டாரத்தில் வாடியம் என்னும் சொல் சம்பளம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வாடிக்கையாக (வாரந்தோறும், நாள்தோறும், மாதந்தோறும்) வாங்கும் சம்பளத்தைக் குறித்தது இது. வாடை: வாடை என்பது மணம் என்னும் பொருளது. காற்றைக் குறிப்பதை அன்றி மணத்தையும் குறிக்கும். என்ன ஏற்றிக் கொண்டு போகின்றான்; வாடை குடலைக் குமட்டுகிறது என்பர். வாடை என்பது மது, கள், சாராயம் என்பது மதுரை இழுவை வண்டியர் வழக்காகும். அவர்கள் பொருளில் நறுமணம். வாடைக் கொண்டல்: வடகிழக்கில் இருந்துவரும் காற்றை வாடைக் கொண்டல் என்பது இராமேசுவர வட்டார வழக்கு. வடக்குக் காற்று வாடை; கிழக்குக் காற்று கொண்டல். ஆதலால் வடகிழக்குக் காற்று வாடைக் கொண்டல் எனப்பட்டது மிகப் பொருந்திய பெயரீடாம். வாது: மரத்தின் தாழ் கிளையை வாது என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். வளைந்து தாழ்ந்த கிளையை வாது என வழங்கினர். அக் கிளையை வளைத்து ஆட்டைத் தின்னச் செய்தல் கண்டு, ஆயன் வெட்டு அறா வெட்டு என்பது பழமொழி. கிளை அற்றுப் போகாமல் வெட்டித் தாழ விடுதலால் வாது என்பது பொருந்துகின்றது. வாது = வளைவு ஆனது. வாய்ப்பாறு: புலப்பம் எடுத்தல், புலம்புதல் என்பவை ஆற்றாமை சொல்லி அழுதலாம். புலப்பம் எடுத்தலை வாய்ப்பாறு என்பது நெல்லை வழக்காகும். வாய்விட்டு ஆற்றிக் கொள்வது வாய்ப்பாறு ஆயது. வாயோடு: உரலில் ஒன்றைப் போட்டு உலக்கையால் குத்தும் போது, உள்ளிடுபொருள் வெளியே வந்து சிந்தாமல் இருப் பதற்காக உரலின் மேல் வாயில் வட்டத்தகடு போடுவது வழக்கம். அதற்கு வாயோடு என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும். உறைப்பெட்டி என்பது பொது வழக்கு. வாரங்கால்: வார்கால், வடிகால், சாய்க்கடை என்பன நீர்ப் போக்கிகள். வடிகாலை வாரங்கால் என்பது முகவை வட்டார வழக்கு. வார்தல் என்பது ஒழுகுதல் பொருளது. வாராடை: தென்னை, பனை, தாழை முதலியவற்றின் நாரைக் கிழிக்கப் பயன்படுத்தும் கத்தியை வாராடை என்பது குமரி மாவட்ட வழக்காகும். வார்தல் நெடுகக் கிழித்தலாம். வாரங்கால் காண்க. வாராவதி: பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை வருவழி வாராவதி என மக்கள் வழக்கில் ஏற்பட்டிருக்கலாம். பாலம் என்பது இப்பாலும் (இப் பக்கத்தையும்) அப்பாலும் (அப் பக்கத்தையும்) இணைப்பது என்னும் பொருளது. அது தமிழகப் பொது வழக்குச் சொல். வாரி: வாரி என்பது நெடுங்கம்பு, கடல், வருவாய் எனப் பொதுப் பொருள் பல கொண்ட சொல். இச் சொல் திண்டுக்கல் வட்டாரத்தில் வாய்க்காலையும் கமலைத் தடத்தையும் குறித்து வழங்குகின்றது. நெடுங்கம்பு வாரி எனப்படுதல் வண்டியில் பார மேற்றப் பயன்படுத்தும் வாரிக்கம்பு ஆகும். வாரியன்: வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் வினையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது. எடுத்துக் கொண்டுவந்து பரப்புதல் வழியால் வந்த பொருள். வாழிபாடல்: உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய் விடும். அதுபோல் எல்லாம் போயது என்னும் பொருளது. கூத்தாடும் இடத்தில் கூடிய கூட்டம், ஆட்டம் முடிந்ததும் ஒருங்கே போவது போல என்னும் குறளின் பொருளை விளக்கும் வழக்குச் சொல் வாழிபாடலாம். இது, ஏரல் வட்டார வழக்காகும். வாளி: தென்னை, பனை ஆயவற்றின் ஓலையின் ஊடுள்ள ஈர்க்கை வாளி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். மூக்கு, காது ஆகியவற்றைக் குத்தி அதன் துளை தூர்ந்து (மூடிப்) போகாமல் இருப்பதற்கு ஈர்க்குத் துணுக்கை இடும் வழக்கத்தில் இருந்து வாளி என்பது வந்திருக்கும். வாளி என்பது காதிலும் மூக்கிலும் போடும் அணி, வளையம். வாலோடி: ஒருநிலம் அகலம் இன்றி நெடு நெடு என நீண்டு குறுகிக் கொண்டு போனால் அதனை வாலோடி என்பது தென்னக உழவர் வழக்கு. வால் நெடுமை. வாலி என்பதும் வால் போன்ற கதிரையும் நிலத்தையும் குறிக்கும். எ-டு: குதிரை வாலி, தெற்கு வாலி. வானிவாடு: கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும் கடல் நீரோட்டத்தை வானிவாடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு ஆகும். வானி என்பது உயரம்; வாடு என்பது தணிவு. மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டத்தை வானிவாடு என்பது இலக்கிய வர்ணனை விஞ்சிய படைப்பாளர் பொதுமக்கள் என்பது காட்டுவதாம். விசைப்பு: முஞ்சிறை வட்டாரத்தில் விசைப்பு என்பது பசியைக் குறிக்கிறது. பசி படுத்தாத பாடுதான் என்ன? விருதுநகர் வட்டாரத்தில் விசைப்பு என்பது சீற்றம் என்னும் பொருளில் வழங்குகின்றது. நான் சொன்னதைக் கேளாமல் விசைத்துக் கொண்டு போய்விட்டான் என்பது வழக்குத் தொடர். விடலை: விடலை என்பது பருவமடைந்த வயதைக் குறிக்கும் சொல். விடலைப் பிள்ளை என்பது வழக்கு. விடலை என்பது கோயிலில் ஓங்கி அடித்து உடைக்கும் தேங்காய். இவற்றை அல்லாமல் நடைக்காவு வட்டாரத்தில் விடலை என்பது இளநீர் என்னும் பொருளில் வழங்குகின்றது. இளம்பருவம் குறித்ததாகும். விடவு: நீர் ஓடும் பகுதி, ஓடு என்றும், ஓடை என்றும் வழங்கும். சிறிய நீர் ஓடை முஞ்சிறை வட்டாரத்தில் விடவு என வழங்கு கின்றது. பயிரிடப்படாத விடு நிலத்தில் மேய்ச்சல் நிலத்தில் ஓடும் சிற்றோடை விடவு எனப்பட்டிருக்கும். விடிலி: பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலையை விடிலி என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். வடிக்கப்பட்ட பதனீரை விட்டுக் காய்ச்சப்படும் இடம் விடிலி எனப்பட் டிருக்கலாம். என நினைக்க வைக்கின்றது. விடுத்தான்: திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப் பொதுமை பெற்றிருக்கும். பெற்றோர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்து விடுக்கும் பிள்ளை என்னும் கருத்தில் எழுந்தது போலும். கொள்ளிக்குப் பிள்ளை என்பது, பிள்ளைக்கோ பெற்றோர்க்கோ பெருமை தாராச் செய்தி. மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிய மக்களைக் கருமக் கூண்டில் அடைத்த வழக்கு வழியது இது. விண்ணம்: விட்டு வெளியேறும் கழிவை (மலத்தை) விண்ணம் என்பது முகவை வட்டார வழக்காகச் சொல்லப்படுகிறது. விட்டு வெளியேறும் அதனை விட்டை என்பர். பிற விலங்கு களின் கழிவுக்கு அச் சொல் வழங்கலால் இது மனிதர்க்கு மாற்றுச் சொல் போலும். வித்துமூலை: வித்து=விதை. வித்து மூலை=விதைக்கத் தொடங்கும் மூலை. மழைக்குறி தோன்றும் வடகிழக்கு மூலையை வித்து மூலை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. அடுப்பு மூலை தென்கிழக்கு ஆகும். விரிசோலை: பனை ஓலையை நெடுகலாக விட்டு மழைக்குப் பயன் படுத்தும் கொங்காணியாகச் செய்வது நாட்டுப்புற வழக்கம். விரிசோலை என்பது கொங்காணியைக் குறிக்கும் நெல்லை மாவட்ட வழக்குச் சொல்லாம். விரிவாலை: பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். விரித்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை என்பதால் சுற்றுதல் பொருள் தருதல் விளங்கும். கரும்பாலையும் சுற்றாலையாகவே இருந்தது. திருச்சுற்றுடையதே ஆலயம் என்க. விருத்துக் கொள்ளல்: கை கால் மரத்துப் போதல், மரமரத்தல் என்பவை குருதி ஓட்டம் தடைப்பட்டு உணர்வு குன்றிய நிலையாகும். மரத்துப் போனது நீங்கும் நிலையில், குருதி பாய்ந்து செல்லுதல் விருவிருப்பாக இருக்கும். அதனை விருத்துக் கொள்ளல் என்பது பெட்டவாய்த்தலை வழக்காகும். விருதா: விருதா என்பது வீண் என்னும் பொருள்தரும் பொது வழக்குச் சொல். ஈனாத மலட்டு மாட்டை விருதா என்பது நெல்லை வழக்கு. கன்று என்னும் பயனோ, பால்முதலாம் பயனோ இல்லாமையால் பெற்ற பெயர் அது. விருதிவீடு: மணமகளார் வீட்டை விருதிவீடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். விருந்தாளியாக வைத்து மாப்பிள்ளையையும் அவர் வீட்டில் இருந்து வருவாரையும் போற்றுதல் வழக்கு வழிப்பட்ட ஆட்சி இது. விருவிட்டான் பயறு: திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு முட்செடி. வெட்டிய உடனே எரிக்கத்தக்கதாக வறண்டசெடி அது. இப்பயறு தன் கெட்டித் தன்மையால் விருவிட்டான் செடிபோல - நீர்ப்பசையற்றதாகக் கூறப்பட்டதாகலாம். விரைப்பு; விறைப்பு: விரைவாகச் செல்லுதல் விரைப்பு, சினத்தால் செல்வாரும் மெல்லெனச் செல்லார் ஆதலால், விரைப்பு என்பது சினந்து செல்லுதலையும் சுட்டும். விதை தெளிப்பவர் மெதுவாக நடவார்; விதை என்பது விரை எனவும் வழங்கும் ஆதலால் விரைப்பு என்பது விதைப்பு எனவும் பொருள் தரும். விரை= விதை, விரைவு. விறைப்பு என்பது தொய்வில்லாமல் என்னும் பொருளது. துணியையோ கயிற்றையோ துவளாமல் பிடிப்பதை விறைப் பாகப் பிடித்தல் என்பர். விலங்கு: விலங்கு என்பது குறுக்கிட்டுச் செல்வது, குறுக்கிட்டுக் கிடப்பது என்னும் பொருளில் வந்த சொல். அது விலகிக் கிடக்கும் நெடுந்தொலைவைக் குறிக்கும் சொல்லாகத் திருச்செந்தூர் வட்டார வழக்கில் உள்ளது. விழுப்பு: மகளிர்தம் மாத விலக்கு விழுப்பு எனப் பார்ப்பனர் வழக்கில் உள்ளது. தமிழர் வழக்கில் தூய்மை எனப்பட்ட உயர்வழக்கு பின்னே இடையெழுத்துக் குன்றி வசைச் சொல்லும் ஆயது. விளங்காடு: புன்செய் என்னும் பொருளில் விளங்காடு என்பது நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. நன்செய்ப் பரப்பினும் புன்செய்ப் பரப்பு மிகுதியால் விரிந்த நிலம் என்னும் பொருளில் விளங்காடு எனப்பட்டது. விளக்கம், விளத்தம் என்பவை விரிவுப் பொருளவை. இனி விளை என்பதும் காடு என்பதும் நிலப் பொருளதே. எ-டு: வயற்காடு, தோட்டக் காடு, கூப்புக்காடு. விளம்புதல்: விளம்புதல்=சொல்லுதல். இது பரப்புதல் என்னும் பொருளிலும், பரிமாறுதல் என்னும் பொருளிலும் வழங்கு கின்றது. விளம்பரம் பரப்புதல் தானே. விருந்தில் பரிமாறுதலை விளம்புதல் என்பது தென்னக வழக்கு. விற்சுளி (விச்சுளி): வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விற்சுளி என்பது. அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை மீன் குத்தி அல்லது மீன் கொத்தி. சுள் > சுளி = விரைவு. விரைந்து பாயும் பாய்ச்சல் விற்சுளி எனக் கழையாட்டில் ஓர் ஆட்டமாக நிகழும். விண்வெளி ஓடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்வெளி ஓடத்தில் தாவிப் பற்றுவது போன்ற தாவுதல் அது. முந்நீர் விழா. விச்சுளிப்பாய்ச்சல் (கி.வா.ச.) பக்கம். 38 வீட்டிலாய்விடல்: இரணியல் வட்டாரத்தில் பூப்புநீராட்டை வீட்டில் ஆய்விடல் என வழங்குகின்றனர். அதன்பின் அவள் வீட்டோடே இருப்பவள் என்னும் அக்கால வழக்கின் வெளிப்பாடு இது. வீணாய்ப் போதல்: கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு. ‘வீணாய் அவளா போனாள்? என்பதை எண்ணின் வீணாக்கியவர் பட்டியல் எண்ணத் தொலையாது. படித்த கூட்டமெல்லாம் அப்பழிக்கு விலக்கு ஆக முடியாதே! வீரமக்கள்: தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவரை வீரமக்கள் என்பது அந்தியூர் வட்டார வழக்கு. பூக்குழி இறங்கும் வீரமக்கள் நாங்களும் தாம் என்று நம்பாமதத்தரும் நாட்டி விட்ட நாள் இது. வெக்களித்தல்: வெக்கை என்பது வெப்பம், வெதுப்பம். ஈரம் காய்ந்த தன்மையைக் குறிப்பது அது. வேக்காடாக இருக்கும் பொழுதை வெக்களிப்பாக உள்ளது என்பதும் உண்டு. இது, ஈரலித்தல் என்பதற்கு எதிரிடைச் சொல்லாகும். தென்பகுதி வழக்குச் சொல் இது. வெண்டு: வெண்டு என்பது முகவை நெல்லை வழக்குகளில் நரம்பு என்னும் பொருளுடன் வழங்குகின்றது. சொன்ன படி கேட்க வில்லை வெண்டை எடுத்துவிடுவேன் என்பது அச்சுறுத்தல் மொழி. வெண்டு என்பது மேல்மிதக்கும் தக்கை என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. முன்னது விண் > விண்டு > வெண்டு எனவும், பின்னது வெண்ணிலை ( பழுஇன்மை ) எனவும் வழங்கும் வழக்குப்பட்டவையாம். வெதிர்: வெதிர் என்பது மூங்கிலைக் குறிக்கும் இலக்கியச் சொல். வெதிரின் நெல் என்னும் புறநானூறு. வெதிர் என்பது துளுநாட்டில் பெதிர் என வழங்குதல், வகரம் பகரமாகும் சொல்லியன் முறைப்படி அமைந்து விளங்குவதாம். வெந்த தண்ணீர்: வெந்நீர் என்பதை வெந்த தண்ணீர் என்பது பழனி வட்டார வழக்கு. இனி, வெந்நீர்த் தண்ணீர் சுடுதண்ணீர் என்பவை பிழை வழக்கு. பிழை வழக்கே பெருவழக்காய் நாட்டில் உள்ளது. வெம்பரம்: வெண்பரம் > வெம்பரம். வெண்மை, வெளிறு என்பவை உள்ளீடு அற்றவை. உள்ளவற்றை யெல்லாம் இழந்தமை வெம்பரம் என மதுரை முகவை மாவட்ட வழக்குகளாக உள்ளது. வெள்ளக்குடி: வெள்ளம் = தண்ணீர். வெள்ளக்குடி என்பது கஞ்சியைக் குறித்து வழங்கும் குமரி மாவட்ட வழக்காகும். வெள்ளம் பெருக்கு நீரையன்றி, ஒரு குவளையில் இருக்கும் நீரையும் குறித்தல் உண்டு. கஞ்சி வெள்ளம், கடி வெள்ளம் சேரல வழக்கு. வெளிச் செண்ணெய்: நல்லெண்ணெய் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றொடு தேங்காய் எண்ணெயை ஒப்பிட்டுப் பார்த்தால் இப் பெயரீட்டின் வெளிப்பாடு புலப்படும். வெளிச்ச (வெள்ளை) எண்ணெய் = தேங்காய் எண்ணெய். இது கொங்கு நாட்டு வழக்கு. வெளியே கிடத்தல்: செட்டி நாட்டு வழக்கில் வெளியே கிடத்தல் என்பது விலக்கு நாள் குறித்ததாம். வீட்டுப் பணியிலோ, வீட்டுள்ளோ சேரா ஒதுக்க நாள். வெளுத்துள்ளி: வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் = உள்ளி. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாமல் தோடாக இருப்பது. வெளுப்பாங்காலம்: விடிகாலையை வெள்ளென என்பது தென்னக வழக்கு. காரிருள் படிப்படியே குறைந்து கதிரொளி வரவால் விண்ணும் மண்ணும் வெளுப்பாகும் காலத்தை வெளுப்பாங்காலம் என்பது குமரி மாவட்ட மேல்புர வழக்கு. வெறுங்கறி: விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார். வெறுங்கறி என் கின்றனர். அதில் காய், கிழங்கு, கீரை என எதுவும் இல்லா மையால் பெற்ற பெயர் இது. வேம்பா: மதுக்கூர் வட்டாரத்தார் வெந்நீர் ஆக்கும் கலத்தை வேம்பா என்கின்றனர். பாய்லர், கீற்றர் என்பவற்றைக் குறிக்க நல்ல வழக்குச் சொல் வேம்பா. வெப்பமாக்குவது வேம்பா ஆயது. இது பொது வழக்கு எனவும் தக்கது. வேளம்: வேளம் என்பது செய்தி என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வேள் = விரும்பத்தக்கது. நல்ல செய்தியை வேளம் என்று பின்னர்ப் பொதுவில் செய்திப் பொருள் தந்திருக்கும். தாக்கல் என்னும் முகவை மாவட்ட வழக்குச் சொல் துக்கச் செய்தியை முன்னர்க் குறித்துப் பின்னர்ப் பொதுச் செய்திக்கு ஆனது போன்றது அது. வேறு விடுதல்: தனிக் குடித் தனமாக்குதல் என்பதை உசிலம்பட்டி வட்டாரத்தில் வேறு விடுதல் என்கின்றனர். செட்டி நாட்டு வட்டாரத்தில் வேறு வைத்தல் என வழங்குகின்றனர். மனையறம் படுத்தல் என்பது சிலப்பதிகாரம். வையிட்டு: வைகிருட்டு என்பது வைகு இருட்டுப் பொழுது; மாலைக் கருக்கல் என்பதும் அது. இது குமரி மாவட்ட வழக்கு. வைகறை என்பது வைகிய இருளை அகற்றும் விடிகாலை என்பது. வைகிற்று என்பது இருட்டாயிற்று என்னும் இலக்கிய ஆட்சியது. மாலையை வைகும் நேரம் என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. வைத்தூற்றி: புனல் எனக் கூறப்படும் கருவியை வைத்தூற்றி எனக் குமரி மாவட்ட முஞ்சிறை வட்டாரத்தார் வழங்குகின்றனர். புட்டிலில், தகரத்தில், குடத்தில் வைத்து ஊற்றும் வாயகல் குழலை வைத் தூற்றி என்பது இயல்பான பொருள் விளக்கப் படைப்பாகும். பாவாணர் அன்ன புலமக்களும் போற்றிய சிறப்பினதாம்.  இளங்குமரனார் தமிழ் வளம் அகராதிகள் தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி (அணியமாக உள்ளது) தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி தொகுதி - 3 1. சொற்பொருள் நுண்மை விளக்கம் தொகுதி - 4 1. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற்றுக் கதைகள் தொகுதி - 5 1.. புறநானூற்றுக் கதை 1 2. புறநானூற்றுக் கதை 2 3. புறநானூற்றுக் கதை 3 4. புறநானூற்றுக் கதை 4 5. புறநானூற்றுக் கதை 5 6. புறநானூற்றுக் கதை 6 7. புறநானூற்றுக் கதை 7 8. புறநானூற்றுக் கதை 8 9. புறநானூற்றுக் கதை 9 10. புறநானூற்றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைத் தமிழ் மன்றங்கள் 13. பெரும்புலவர் மூவர் தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற்றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறத்தராக 8.வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் ஊழ் தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 10. வள்ளுவர் வழியில் குறளாயத் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 14. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 15. வள்ளுவர் வழியில் நல்ல சான்றோராக 16. வள்ளுவர் வழியில் வினை 17. வள்ளுவர் வழியில் பிறப்பு 18. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 19. வள்ளுவர் வழியில் தவம் 20. மங்கல மனையறம் 1. ஒரு குறள் ஒரு நூல் 1 2. ஒரு குறள் ஒரு நூல் 2 3. ஒரு குறள் ஒரு நூல் 3 4. ஒரு குறள் ஒரு நூல் 4 5. நினைக்கும் நெஞ்சம் தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் தொகுதி - 10 1. காக்கை பாடினியம் தொகுதி - 11 1. களவியற் காரிகை தொகுதி - 12 1. தகடூர் யாத்திரை தொகுதி - 13 1. யாப்பருங்கல விருத்தி தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களஞ்சியம் தொகுதி - 15 1. தமிழ் வளம் - சொல் தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் தொகுதி - 17 1. புறத்திரட்டு தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் தொகுதி - 20 1. கல்விச்செல்வம் 2. இருசொல் அழகு 3. தனிப்பாடல் கனிச்சுவை 4. பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி