தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 12 தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 12 தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 16 + 432 = 448 படிகள் : 1000 விலை : உரு. 420/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் முதல் பதிப்புரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1935 முதல் 1937 வரை யான் தமிழாராய்ச்சி மாணவனாக இருந்தபொழுது இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் அதன் வழி நூலாகிய நன்னூலிலும் கூறப்பெற்றுள்ள எழுத்திலக்கண விதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து தொல்காப்பியம் - நன்னூல் - எழுத்ததிகாரம் என்னும் ஆராய்ச்சியுரையினை எழுதும் பணியினை என் பேராசிரியப் பெருந்தகை நாவலர் டாக்டர் ச.சோமசுந்தர பாரதியார் அவர்கள் எனக்கு அன்புடன் வழங் கினார்கள். அப்பொழுது எழுதப்பெற்ற தொல்காப்பியம் - நன்னூல் - எழுத்ததிகார வுரைப் பகுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துணரில் 1941-முதல் தொடர்ந்து வெளிவந்தது. அவ்வுரைப் பகுதி 1962-ல் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் நூலுருவாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத் தையும் நன்னூற் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து வெளியிடுதல் வேண்டும் என அன்பர் பலரும் விரும்பியதற்கு ஏற்ப அவ்வப்பொழுது தொகுத்த குறிப்புக்களை அடி யொற்றித் தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம் என்னும் இவ்வுரை நூல் வெளியிடப் பெறுகின்றது. அச்சிடுதற்கு ஏற்ற வண்ணம் இந்நூலைப் படியெடுக்கும் பணி என் மகள் செல்வி. திரு.மங்கையர்க்கரசியால் திருத்த முறச் செய்யப்பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை விரிவுரையாளர் டாக்டர் சோ.ந.கந்தசாமி M.A.,ph.D. அவர்கள் இந்நூலின் திருத்தப்படிகளை ஒப்பு நோக்கிக் திருத்தியுத வினார்கள். இவர்களுக்கு இறைவன் திருவருளால் எல்லா நலங்களும் உளவாதல் வேண்டும் என உளமார வாழ்த்து கின்றேன். மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தமக்குள்ள பல்வேறு அலுவல்களுக்கிடையே எனது வேண்டுகோளையும் அன்புடன் ஏற்று இந்நூலுக்கு அழகியதோர் அணிந்துரை அளித்தார்கள். தமிழ் நலம் வளர்க்கும் இப்பெருந்தகையார்க்கு எனது நன்றி யினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்றும் போதாச் சிறியேனை இத்தகைய செந்தமிழ்ப் பணிக்கு உரியவனாக்கிய வள்ளல் அண்ணாமலையரசரது பேரன்பின் திறத்தை எழுமையும் நினைந்து போற்றுங் கடமையுடையேன். இப்பணியினை இனிது நிறைவேற்றி யருளிய எனது வாழ்முதலாகிய முருகப்பெருமான் திருவடிகளை இறைஞ்சிப் போற்றுகின்றேன். இந்நூலினை அழகிய முறையில் ஆர்வமுடன் அச்சிட்டு தவிய அண்ணாமலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும். தமிழ் மாணவருலகம் இந்நூலினை விரும்பியேற்றுப் பயன் கொள்ளும் என நம்புகிறேன். 142, கனகசபைநகர் சிதம்பரம் க.வெள்ளைவாரணன் 12.09.71 துரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராஞிளீயர் டாக்டர் மு.வரதராசனார், எம்.ஏ., பிஎச்.டி, அவர்கள் அளித்த அணிந்துரை தொல்காப்பியம் - நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் இரண்டனுக்கு முன்னும் இடையிலும் பின்னும் வேறு இலக்கண நூல்கள் இருந்தன. எனினும், கற்றார் போற்றும் சிறப்புடை யனவாய் இன்றுவரை விளங்குவன இவ்விரண்டுமே ஆகும். இவற்றைப் பயில்வோர் இரண்டன் அமைப்பையும் ஒப்பு நோக்கிச் சீர்தூக்க விழைதல் இயல்பு. தொல்காப்பியத்தையும் அதன் உரையையும் ஒட்டியே பவணந்தியார், நன்னூலை இயற்றினார் என்பதில் ஐயமில்லை. ஆயினும், எவ்வெவ் வகையில் பவணந்தியார் தொல்காப்பியத்தையும் உரையையும் போற்றியுள்ளார் என்பதையும் எவ்வெவ்விடங்களில் மாற்றி யுள்ளார் என்பதையும் உணர்தல் ஆராய்ச்சியாளர்க்குக் கடமையாகின்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறிஞர் திரு. க.வெள்ளைவாரணர் இரு நூல்களையும் ஒப்பிட்டு நல்ல பல விளக்கங்களையும், குறிப்புகளையும் சேர்த்து இந்நூலை, தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம் என்ற தலைப்பில் இயற்றித் தந்துள்ளார். மேற்குறித்த ஆராய்ச்சிக்கு இந்நூல் பேருதவி புரிவதாகும். தொல்காப்பியத்தில் அமைந்துள்ள முறைப்படி இயல்களையும், நூற்பாக்களையும் தந்து, அவற்றிற்கு உரிய நன்னூலின் நூற்பாக்களை ஆங்காங்கு அமைத்துள்ளார். தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பழைய தமிழ் எண்களையும், நன்னூல் நூற்பாக்களுக்கு (அவற்றின் திரிபாகிய) உலக எண்களையு மிட்டு அச்சிட்டிருப்பது கற்போர்க்கு உதவியாக உள்ளது. அறிஞர் திரு.க.வெள்ளைவாரணரின் செந்தமிழ்ப் புலமையும் செய்வன திருந்தச் செய்யும் மாண்பும் மற்ற நூல்களில் விளங்குதல் போலவே, இந்நூலிலும் புலனா கின்றன. அவர்தம் சீரிய முயற்சி சிறந்து மிக்கோங்குக. மு.வரதராசன் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிர மணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986) பொருளடக்கம் 1. கிளவியாக்கம் 7 2. வேற்றுமையியல் 79 3. வேற்றுமை மயங்கியல் 114 4. விளிமரபு 148 5. பெயரியல் 167 6. வினையியல் 207 7. இடையியல் 271 8. உரியியல் 309 9. எச்சவியல் 346 தொல்காப்பியம் - நன்னூல்/ சொல்லதிகாரம் தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் `எழுத்துஞ் சொல்லும் பொருளும்நாடி என மேற் பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய தொல்காப்பியனார், இப்படலத்தாற் சொல்லிலக்கணங் கூறுகின்றார். அதனால் இது சொல்லதிகாரம் என்னும் பெயர்த் தாயிற்று. சொல் என்பது முற்கூறிய எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன் மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாகும். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினாலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடி யொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாதலின் இவை சொல்லெனப் படா. இவற்றை அரவம், ஒசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தினாலாக்கப்பட்டு இருதிணைப் பொருள் களையும் அறிவிக்கும் ஓசையென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிற பொருளையுணர்த்திய வழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் கூறுவர் உரையாசிரியர். ஒருவர் தாம் பொருளை உணர்தற்கும் பிறர்க்கு உணர்த்தற்கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதி யுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளையுணர்த்துவா னொருவன் சொல்லின் துணைகொண்டன்றிப் பொருளை யறிவுறுத்த லாகாமையின் அவனது தொழிலைச் சொல்லாகிய கருவிமேலேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தாவாகக் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர், இருதிணை, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறுவகைத் தொகை, மூன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்தினா ரென்பர் இளம்பூரணர். இவ்வெட்டினோடு சொல் நான்கு வகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங் கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந்துணர்த் தினாரென்பர் நச்சினார்க்கினியர். சொல் தனிமொழி, தொடர் மொழி என இருவகைப்படும். மொழிகள் யாங்கணுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக் கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலுண்டு. அதனால் தனி மொழியென்ற பிரிவும் கொள்ளப்படுவதாயிற்று. தனிமொழி, பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கொரு பயன்பட நிற்பதன்று. கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர் மொழிகளேயாம். ஆகவே தொடர் மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம் முறையினை யுளத்துட்கொண்ட தொல்காப்பியர், இப்படலத்துள் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி, அத்தொடர் மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக்கணங் களைப் பின்னர் உணர்த்துவர். சொற்கள் ஒன்றோடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகையானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்றாற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது `பயனிலைவகை எனப்படும். வேற்றுமை யுருபும் உவம உருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச் சொல்லீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல்லும் மறைந்து நிற்கத் தொடரும் சொல்லினது தொடர்ச்சி `தொகை நிலைவகை யெனப்படும். பொருள்களை ஒன்றோடொன்று சேர்த்து எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி `எண்ணுநிலைவகை யெனப்படும். இவ்வாறு மூவகையால் தொடரும் தொடர்மொழிகளெல்லாவற்றையும் பொருள் நிலைமை நோக்கி அல்வழித் தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இருவகையாகப் பகுத்துரைப்பர் தொல்லாசிரியர். பொருளையிடமாகக் கொண்டு நிகழ்வது சொல்லாகும். சொல்லிலக்கணங் கூறக்கருதிய ஆசிரியர், அச்சொல் நிகழ்ச்சிக்கு நிலைக்களனாகிய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை யெனவும் அஃறிணையெனவும் இருதிறனாக வரையறுத்து, அப்பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திணைச் சொல்லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இருவகையாகப் பகுத்துரைத்தார். திணையென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனாயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் பிரித்து மக்கட் குலத்தாரை உயர்திணையெனச் சிறப்பித்து உயர்த்துவது, மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சியடைதற்குக் காரணமாகிய இவ்வொழுக்க உணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களை உயர்திணையெனத் தனிச் சிறப்புடைய தொகுதி யாகவும், நன்றுந் தீதும் பகுத்துணர்ந்தொழுகும் நல்லறிவு வாய்க்கப் பெறாத மற்றைய உயிர்களையும் உயிரல் பொருள்களையும் ஒழுக்க வுணர்ச்சிக் குரியவல்லாத அஃறிணையெனச் சிறப்பில் தொகுதியாகவும் முன்னைத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ஙனம் உலகப் பொருள்ளெல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள் வேறுபாட்டினை விளங்க அறிந்து கொள்ளுதற்குரிய சொல்லமைப்பினையுடையதாக நம் முனனோர் தம் தாய் மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத் திணை பால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். சொல்லிலக்கண வகை முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியனார், சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி, தனிமொழி யென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித்தொடர், வேற்றுமைத் தொடர் என இருவகைப் படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலால் அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை, அஃறிணையென இருவகைப்படுத்தார். அவற்றுள் உயர்திணையுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ்சொல், ஒருத்தியை யறியுஞ்சொல், பலரை யறியுஞ்சொல் என மூவகைப்படுத்தார். அஃறிணை யுணர்த்துஞ் சொல் என இருவகைப்படுத்தார். இங்ஙனம் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமல் இருவகை வழக்கிலும் அமைக்க வேண்டுஞ் சொற்களை யெடுத்தோதினார். அதன்பின் வேற்றுமைத் தொடர் கூறுவார், மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமையுணர்த்தினார்; அதன்பின் எட்டாவதாகிய விளி வேற்றுமையுணர்த்தினார்; அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றின் பாகுபாடு உணர்த்தினார்; அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்தினார். எழுத்ததி காரத்துள் எழுவாய் வேற்றுமையையும் அதன் திரிபாகிய விளிவேற்றுமையையும் அல்வழிக் கண்ணே முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தே வேற்றுமை களுடன் இயைத்து இலக்கணங் கூறியுள்ளார். இச்சொல்லதிகாரம் ஒன்பது இயல்களால் இயன்றதாகும். கிளவியாக்கத்துள் அல்வழித்தொடரும், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் மூன்றியல்களிலும் வேற்றுமைத் தொடரும் உணர்த்தப்பெற்றன. பெயரியலில் பெயரிலக்கணமும், வினையியலில் வினையிலக்கணமும், இடையியலில் இடைச் சொல்லிலக்கணமும், உரியியலில் உரிச் சொல்லிலக்கணமும், எச்சவியலுள் எஞ்சியன பிறவும் உணர்த்தப் பட்டுள்ளன. இவ்வகையினால் இவ்வதிகாரத்தின் இயல்களும் ஒன்பதாயின. இனி, தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு நன்னூல் என்னும் வழிநூல் செய்த பவணந்தி முனிவர், தாம் கூற எடுத்துக் கொண்ட சொல்லிலக்கணத்தினைப் பெயரியல், வினையியல், பொதுவியல், இடைச் சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களாற் கூறுகின்றார். பெயர்ச்சொற்களது இயல்பு பெயரியலிலும், வினைச் சொற்களதியல்பு வினையியலிலும், பெயர், வினை, இடை, உரி, என்னும் நால்வகைச் சொற்களின் இயல்புகள் சிங்கநோக்காகப் பொதுவியலிலும், இடைச் சொற்களதியல்பு இடைச் சொல்லியலிலும், உரிச்சொற்களது இயல்பு உரிச்சொல்லியலிலும் உணர்த்தப்பட்டன என்பர் நன்னூலுரையாசிரியர் மயிலைநாதர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதலியலாகிய கிளவி யாக்கத்திலும் ஒன்பதாம் இயலாகிய எச்சவியலிலும் கூறப்பெற்ற சொல்லிலக்கணங்களை நால்வகைச் சொற்களுக்குரிய பொது விலக்கணமாத லொப்புமைபற்றி நன்னூலாசிரியராகிய பவணந்தியார் பொதுவியல் என ஒரியலாக அடக்கி, அதனைப் பெயரியல் வினையியல்களுக்கும் இடைச்சொல் உரிச் சொல்லியல் களுக்கும் நடுவே சிங்க நோக்காக அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என மூன்றியல் களால் விரித்துரைக்கப்பட்ட வேற்றுமை யிலக்கணங்களைப் பெயரிலக்கணமாதல் ஒப்புமைபற்றிப் பெயரியலோடு இணைத்துப் பெயரியல் என ஓரியலாகவும், வினைச் சொல்லிலக்கணத்தினை வினையியல் என ஓரியலாகவும் அமைத்துக் கூறியுள்ளார். இவ்வகையால் நன்னூலிற் சொல்லதி காரம் பெயரியல். வினையியல், பொதுவியல், இடைச் சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களையுடையதாயிற்று. அருகதேவனை வழிபடும் சமண சமயச் சான்றோராகிய பவணந்தி முனிவர், தம்மால் இயற்றப்பெறும் நூல் இனிது நிறை வேறுதல் வேண்டித் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்கும் தற்சிறப்புப் பாயிரமாக இவ்வதி காரத்தின் தொடக்கத்திற் கூறியது, முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. என்னும் நூற்பாவாகும். இது கடவுள் வணக்கமும் அதிகாரமும் உணர்த்துவது. இதன் பொருள் :- மூன்றுலகத்திலுமுள்ள உயிர்கட் கெல்லாம் நிழலைச் செய்யும் நிறைந்த மதியைப் போலும் மூன்று குடையையுடைய அழிவில்லாதவனுடைய அடிகளை வணங்கிச் சொல்லிலக்கணத்தை யான் கூறுவேன், என்றவாறு. எல்லாச் சமயத்தோரானும் வணங்கப்படும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களுக்குரிய எல்லாக் கடவுளாகியும் நின்றான் ஒருவனே என்னும் பொது நோக்குடன் அருகதேவனை வணங்கும் பவணந்தி முனிவர் அம்முதல்வனை எழுத்ததிகாரத்தில் பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. எனப் படைத்தற்றொழில் பற்றி நான்முகன் எனப் போற்றியது போன்று காத்தற்றொழில் பற்றி இவ்வதிகாரத்தில் அச்சுதன் என்ற பெயராற் போற்றியுள்ளமை ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். 1. கிளவியாக்கம் கிளவி - சொல். ஆக்கம் - ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்க மென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த் தாயிற்று எனத் தெய்வச் சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க் காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக் கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக் கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க் கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும் ஐம்பத் தொன்பதெனத் தெய்வச் சிலையாரும் பகுத்து உரை கூறி யுள்ளார்கள். 1. உயர்திணை மென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே. இது, சொல்லையும் பொருளையும் வரையறுத்துரைக்கின்றது. இதன் பொருள் :- உயர்திணையென்று சொல்லுவர், மக்களென்று சுட்டப்படும் பொருளை; அஃறிணையென்று சொல்லுவர் அவரல்லாத (உயிர்ப்) பொருளையும் பிற (உயிரல்) பொருளையும்; அவ்விருதிணைப் பொருள்களையும் சொற்கள் உணர்த்தும் என்றவாறு. உயர்திணையும் அஃறிணையும் எனப் பொருள்கள் இரு திறப்படுதலால், அவற்றை உணர்த்தும் சொற்களும் உயர் திணைச்சொல் அஃறிணைச் சொல் என இருவகைப்படும் என வரையறுத்தவாறு. உயர்திணை - உயர்ந்த ஒழுக்கம்; அஃது, ஆகுபெயராய், உயர்தற்கேற்ற ஒழுக்கமுடைய மக்களினத்தை யுணர்த்தி நின்றது. ஐம்புலவுணர்வாகிய ஐயறிவுடைய மாக்களின் வேறுபட்டுத் தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் மனவுணர்வாகிய ஆறாவதறி வினைப் பெற்று `மக்கள் தாமே யாறறிவுயிரே (தொல் - மரபு - 33.) என உயர்த்துக் கூறும் நன்கு மதிப்புப் பற்றி `உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே என்றார். உயர்திணை என்பது வினைத்தொகை. உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயரும் மக்கள் என முக் காலமும் விரித்துரைத்தற்கேற்ற வகையில் இத்தொடர் அமைந்துள்ளமை காண்க. என்மனார் என்பது ஆர் ஈற்று எதிர்கால வினைமுற்று மக்கட் சட்டு - மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள். சுட்டு - நன்கு மதிப்பு; அஃது ஆகபெயராய் நன்கு மதிக்கப்படும் பொருளை உணர்த்தி நின்றது. மக்கட் சுட்டு என்ற தொடரில் முன்னின்ற மக்கள் என்பது இயல்பெயர்ப் பொருளை யுணர்த்தப் பின்னின்ற சுட்டு என்னும் பெயரே ஆகுபெயர்ப் பொருளை யுணர்த்த இருபெயரும் ஒருபொருளையே உணர்த்தும் முறையில் ஒட்டி நின்றனவாதலால் இதனை இரு பெயரொட்டாகு பெயரென்பர் நச்சினார்க்கினியர். மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலி என்னும் வடிவுவேற்றுமை உடையராகலின், அவரெல்லாடரித்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன்மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாம் என்பதறி வித்தற்கு மக்கள் என்னாது மக்கட் சுட்டு என்றார் எனவும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில்லனவாகிய பிறவும் அஃறிணையாம் என்பதறிவித்தற்கு அவரலபிற என்றார் எனவும் கூறுவர் தெய்வச் சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயர்திணை அஃறிணை என்பன தம் காலத்துக்கு முற்பட்ட தொல்லாசிரியர் வழங்கிய இலக்கணக் குறியீட்டுச் சொற் களாதலின் உயர்திணை மக்கள், அஃறிணை அவரல்லாதனவும் பிறவும் என அச்சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்தார் தொல்காப்பியர். அவ் + இருதிணை = ஆயிருதிணை யெனச் சுட்டு நீண்டது. ஆயிரு திணையின் என்புழிச் சாரியையுள்வழி இரண்டாம் வேற்றுமை யுருபு மறைந்து நின்றது. இவ்வாறே `மறங்கடிந்த வருங்கற்பின் எனவும் `சில சொல்லிற் பல்கூந்தல் எனவும் பிற சான்றோர் செய்யுளகத்தும் இன்சாரியை உருபு பற்றாது நிற்றல் காண்க. இசைத்தல் - ஒலித்தல்; ஈண்டு இச்சொல் உணர்த்தல் என்னும் பொருளில் ஆளப்பெற்றது. `அவரலபிற என்புழி அவரலவும் பிறவும் என உம்மை விரித்துரைப்பர் தெய்வச்சிலையார். `அவரல பிற என்புழி அவரின் அல்லவாகிய பிற என நீக்கப் பொருள்தரும் இன்னுருபு விரித்துரைத்தலும் உண்டு. சொல்லதிகாரத் தொடக்கத்தில் சொல்லின் கூறுபாடும் அதன் இயல்பும் உணர்த்தப் போந்த நன்னூலாசிரியர், 259. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே. என்றார். (இ-ள்) ஒரு மொழியும் தொடர்மொழியும் பொது மொழியும் என மூன்று கூறுபாட்டினையுடையதாய், இருதிணை யாகிய ஐம்பாற் பொருளினையும் அப்பொருளை யன்றித் தன்னையும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத் தினும் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வெளிப்படையாலும் குறிப்பினாலும் விளக்குவது சொல்லாம் என்றவாறு. எனவே, எல்லாச் சொல்லும் ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்னும் மூன்றாயும், எல்லாப்பொருளும் இருதிணை ஐம்பாலாயும் அடங்குமென்பதும், உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல, ஒருவர்க்குச் சொல்கருவியாய் நின்று தன்னையும் இருதிணை யைம்பாற் பொருளையும் உணர்த்துமென்பதும் பெறப்படும். மேலைச் சூத்திரத்து நிறுத்த முறையானே மூவகை மொழிகள் ஆமாறு உணர்த்தப் போந்த பவணந்தியார், 260. ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி பலபொரு ளனபொது விருமையு மேற்பன. என்றார். (இ-ள்) பகாப்பதமேனும் பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒருபொருளைத் தருவன ஒருமொழிகளெனப்படும். அவ்விரு வகைப் பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று இரண்டு முதலிய பலபொருளைத் தருவன தொடர்மொழிகளெனப்படும். ஒன்றாய்நின்று ஒரு பொருள் தந்தும் அதுவே தொடர்ந்து நின்று பலபொருள் தந்தும் இவ் விரண்டற்கும் பொதுவாய் நிற்பன பொதுமொழிக ளெனப்படும் என்றவாறு. (உ-ம்) நம்பி, நங்கை, மாந்தர், சாத்தன், சாத்தி, நிலம், நீர், மண், பொன், வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, தில், மன், சால, தவ என்றற்றொடக்கத்தன ஒரு மொழி. நிலம் வலிது, அதுகொல், சாலப்பகை, நிலங் கடந்தான், நிலத்தைக் கடந்தான், நிலங்கடந்த நெடுமால் என்றற்றொடக்கத்தன தொடர்மொழி. எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாரா நின்றான், உரைத்திட் டான் என்றற்றொடக்கத்தன பொதுமொழி. இவை ஒரு மொழி களாய் ஒருபொருள் தருவதன்றி, எள்ளைத்து, கொள்ளைத்து, தாவுகின்ற மரை, வேகின்ற கை, எழுந்து பின் இருந்தான், வந்து நின்றான், உரைத்துப் பின் இட்டான் எனத் தொடர்மொழிகளாய்ப் பலபொருள் தருதலும் காண்க. ஈண்டுத் தொடர்மொழி பலபொருளன என்றது பல சொல்லிற் பல பொருளையென அறிக. சேனை, படை முதலிய ஒரு மொழிகள் யானை தேர் குதிரை, காலாள் ஆகிய பல பொருளை யுணர்த்து மேனும் பலபொருளீட்டமாகிய அவையனைத்தும் இயைந்து ஒன்றாயுள்ள நிலையில் ஒருபொருளெனவே கருதப்படும் என்பது, `பலவி னியைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் பொத்தகஞ் சேனை யமைந்த கதவ மாலை கம்பல மனைய. (அகத்தியம்) எனவரும் பழஞ் சூத்திரத்தாலறியப்படும். இருதிணையாமாறிதுவென விளக்கப் போந்த பவணந்தியார், `உயர்திணையென்மனார் மக்கட்சுட்டே எனவரும் தொல்காப்பிய நூற்பாவை யடியொற்றி, 261. மக்க டேவர் நரக ருயர்திணை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை. எனச் சூத்திரஞ் செய்தார். (இ-ள்) மக்களும் தேவரும் நரகரும் உயர்திணையாம்; அவரல்லாத (மாவும் புள்ளும் முதலிய) உயிருள்ளனவும் (நிலம், நீர், வளி முதலிய) உயிரில்லனவும் அஃறிணையாம் என்றவாறு. மக்கள், தேவர், நரகர் இவ்வாறு இனமுறையில் வைத்துப் பேசப்படுதல் அவ்வவ்வினத்துக்குரிய உடம்புடன் உயிர் கூடிநின்றவழியே யாதலின், அவ்வுடம்பும் உயிரும் வேறாகப் பிரிந்த நிலையிலும் அவற்றை வேறுபடவைத்து எண்ணிய நிலையிலும் அவை அஃறிணையாகவே கொள்ளப்படும். மக்களாகப் பிறந்து நல்வினை தீவினைகளைச் செய்து நல்வினை யாகிய புண்ணியத்தின் மிகுதியால் தேவராயும், தீவினையாகிய பாவத்தின் மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகர் எனச் சாதன சாத்திய முறையாற் கூறினார். மக்களென்று கருதப்படும் பொருளே உயர்திணை, அவரல்லாத பிறவெல்லாம் அஃறிணை என வரையறுத்துக்கூறிய தொல்காப்பியர், பின்னர் `இவ்வென அறியும் அந்தம் தமக்கில வாகிய தெய்வஞ்சுட்டிய பெயர் முதலியனவும் `உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும் எனக் கூறுதலாலும் `மக்கள் தாமேயாறறிவுயிரே (மரபியல் - 33) என வரையறுத்தோதிப் பின் மக்களினத்தோடு தொடர்புடைய கிளையெனப் படுவாராய் மனவுணர்வுடைய ஆறறிவுயிருள் வைத்துக் கருதுதற்குரிய தேவர் தானவர் முதலியோரையும் ஓராற்றான் உயர்திணையுட் சேர்த்து எண்ணுதற்குரிய முறையில் `பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே என மீண்டும் எடுத்தோதி முதலியோரையும் உயர்திணைவகையுட் சார்த்திக் கூறும் பிற்கால வழக்கிற்கு ஆசிரியர் தொல்காப்பியனார் இடந்தந்துள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். மரம் நாடொறும் உயர்ந்தமை கருதி உயர்மரம் என வழங்குமாறு போன்றும் கல்வியறிவு நாடொறும் உயர்ந்தமை கருதி அதனையுடையார் மேலேற்றி உயர்மக்கள் என வழங்குமாறு போன்றும் ஒழுக்கத்தால் நாளும் உயரும் புடை பெயர்ச்சி கருதி அவ்வுயர்ச்சியுடைய மக்கட்டொகுதியை உயர்திணை எனக் கூறினாராதலின், உயர்திணை என்பது வினைத்தொகை என இளம்பூரணர் முதலிய பண்டையுரையாசிரியர் கூறியது மிகவும் பொருத்தமுடையதாதல் காணலாம். 2. ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லோடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே. இஃது உயர்திணையுட் பால்வகையினை யுணர்த்துகின்றது. (இ-ள்) ஆண்மகனையறியும் சொல்லும் பெண்மகளை யறியுஞ் சொல்லும் பல்லோரையுஞ் சொல்லொடு பொருந்தி அம்மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையிடத்தனவாம். என்றவாறு. ஆடூஉ - ஆண்மகன். மகடூஉ - பெண்மகள். ஆடவர் என்றற் றொடக்கத்து ஆண்பன்மையும் பெண்டிர் என்றற் றொடக்கத்துப் பெண்பன்மையும் மக்கள் என்றற்றொடக்கத்து இருவர் பன்மையும் அடங்கப் பல்லோரறியுஞ் சொல் என்றார். அறிசொல் - அறிதற்குக் கருவியாகிய சொல். சிவணுதல் - பொருந்துதல். சிவணி என்னும் செய்தென் எச்சம் உயர்திணைய என்னும் வினைக்குறிப்புக் கொண்டு முடிந்தது. உயர்திணைச் சொற்கள் முப்பால்களாகப் பகுத்துரைக்கப் படும் என்பதனை, 262. ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை. எனவரும் சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இஃது அஃறிணையுட் பால்வகையினை உணர்த்துகின்றது. (இ-ள்) ஒன்றனையறியுஞ் சொல்லும் பலவற்றை யறியுஞ் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையிடத்தனவாம் என்றவாறு. அஃறிணைச் சொற்கள் ஒன்று, பல என்னும் இருபால் களாகப் பகுத்துரைக்கப்படுவன என்பதனை, 263. ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை. என்பதனாற் குறித்தார் நன்னூலார். அஃறிணைக் கண்ணும் சேவல், களிறு முதலிய ஆண்பாலும் பெடை பிடி முதலிய பெண்பாலும் உளவாயினும், அவ்வாண்மை பெண்மையாகிய வேறுபாடுகள் உயிருள்ளனவற்றுட் சிலவற்றுக்கும் உயிரில்லன வற்றுக்கும் இன்மையான் அப்பகுப்பொழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றன்பாலாகக் கூறினார். 4. பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியு மந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். இது, பாலுளடங்காத பேடியையும் திணையளடங்காத தெய்வத்தையும் பாலுள்ளுந் திணையுள்ளும் அடக்குதல் நுதலிற்று. (இ-ள்) உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மைகுறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும், இவையெனத் தம் பொருளை வேறறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்குடையவல்ல; உயர்திணை யிடத்திற் குரிய பாலாய் வேறுபட்டிசைப்பன. என்றவாறு. பால் வேறுபட்டிசைத்தலாவது, தாம் உயர்திணைப் பெயராய் ஆடூஉவறிசொல் முதலாயினவற்றுக்குரிய ஈற்றெழுத்தே தம் வினைக்கு ஈறாக இசைத்தல். ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாருள் தத்தமக்கு இயல்பாக அமைய வேண்டிய தன்மையில் மாறுபட்டுப் பெண் தன்மை மிக்கு ஆண்தன்மை குறைந்தாரைப் பேடி எனவும், ஆணுமின்றிப் பெண்ணுமின்றி இருதன்மையும் விரவிய நிலையிலுள்ளாரை அலி எனவும் வழங்குதல் தொன்றுதொட்டு வரும் தமிழ் மரபு. அவற்றுள் `உயர்திணை மருங்கிற் பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி என்றது பேடியை பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர்நிலைக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது பெயர் நிலைக்கிளவிக்கு அடைமொழியாய் இடை நின்றது. ஆண்மையும் பெண்மையும் அல்லாத அலியினைத் `தன்மை திரிபெயர் எனப் (தொல்-சொல்-கிளவி 56) பின்னர்க் குறிப்பிடுவர். அலிப்பெயரின் நீக்குதற்குப் பெண்மை சுட்டிய என்றும், மகடூஉப் பெயரின் நீக்குதற்கு ஆண்மை திரிந்த என்றும் கூறினார். பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாத நிலையிற் பேடு என்னும் சொல்லை வழங்குதல் தொல்காப்பியர் காலத்து இலக்கண மரபன்று என்பது பெறப்படும். பெண்மை திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மையாகலான் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியை இங்கு எடுத்தோதினார். பெண்மை திரிந்ததனை `மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி (தொல் - பெயரியல் - 194) எனப் பின்னர் எடுத்தோதுவர். பேடியர், பேடிமார், பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் `பேடியென்னும் பெயர்நிலைக் கிளவி என விதந்து கூறாது, `பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி எனப் பொதுப்படக் கூறினார். `பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ, கண்ணவாத்தக்க கலம் எனவரும் பழம் பாடலால் பெண்தன்மை மேற்பட்டு ஆண் தன்மை குறைந்ததனையே பேடி எனப் பெண்பாற் படுத்து வழங்கும் வழக்கம் இனிது புலனாதல் காணலாம். (உ-ம்) பேடி வந்தாள், பேடியர், வந்தார் எனவும், வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார் எனவும் வரும். அந்தம் என்றது ஈற்றெழுத்தாகிய விகுதியினை. அந்தம் தமக்கிலளே என்னும் இலேசினால் நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என்பன கொள்க என்பர் இளம்பூரணர். மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண் தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இரு தன்மைகளும் விரவியுள்ள பேட்டினைக் குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத் தெரிதற்குக் கருவியாகிய விகுதியினை உடையன வல்லவா தலின் அவை உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற் சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கு ஈறாகப் பெற்று இன்னபால் என விளங்கி நிற்பன என்பதனை இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளமை காணலாம். இந்நூல்பாவிற் கூறப்பட்டவற்றுள் தெய்வஞ் சுட்டிய பெயரை `மக்கள் தேவர் நரகர் உயர்திணை என உயர்திணை யுட்படுத்திக் கூறிய நன்னூலார், இச்சூத்திரத்திற் குறித்த பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயராகிய பேடியினையும் தன்மைதிரிபெயர் எனவும் மகடூஉ மருங்கிற் பால்திரிகிளவி யெனவும் பின்னர்க் கூறப்படும் அலி, மகண்மா முதலியவற்றையும் குறிக்கும் முறையிற் `பேடு என்னும் பொதுச் சொல்லைப் பயன்படுத்தி அவற்றுக்கு இலக்கணங் கூறி அவற்றைப் பாலுள்ளும் திணையுள்ளும் அடக்குகின்றார். அவ்வாறு அடக்குவதாக அமைந்தது, 264. பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால் ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால் இருமையும் அஃறிணை யன்னவு மாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். (இ-ள்) பெண் தன்மையினை விட்டு ஆண் தன்மையினை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணை யாண்பாலாம். ஆண் தன்மையினை விட்டுப் பெண் தன்மையினை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணைப் பெண்பாலாம்; இவ்விருவகைப் பேடுகளும் உயர்திணையா (ய்ப் பால் பிரிந்திசைத்) தலேயன்றி அஃறிணையை ஒப்பனவுமாம். என்றவாறு. ஈண்டு விடுதல் என்னும் சொல் குறைதலையும் அவாவுதல் என்னும் சொல் மிகுதலையும் உணர்த்தி நின்றன. ஆணி லக்கணமும் பெண்ணிலக்கணமும் விரவி ஒருவகையேனும் நிரம்பாது நிற்கும் பேட்டினைப் பாற்பொதுமையின் நீக்கிக் குறைந்ததினின்றும் பிரித்து மிக்கதனோடும் சேர்க்கும் முறையினை அறிவுறுத்துவார், பெண்மையிற் குறைந்து ஆண்மையின் மிக்கனவாகிய பேடு ஆண்பால் எனவும், ஆண்மையிற் குறைந்து பெண்மையின் மிக்கன வாகிய பேடு பெண்பால் எனவும் பகுத்துரைத்தார். இருதிறமும் விரவி நிற்கும் இப்பேடுகளை அத்தன்மைகளின் மிகுதி குறைவு நோக்காது பொதுப்பட நோக்கிய வழி ஆண் பெண் என்னும் ஒன்றன்பாற்படுத்தல் கூடாமையின் அப்பாலினவாம் உயர்தினையு மின்றி, அஃறிணை யிலக்கண மின்மையின் அஃறிணையுமன்றி, உயிருள்ளனவற்றுள் ஆண் பெண் என்னும் பகுப்பிலவாகி நின்ற அஃறிணையை யொக்கும் என்பார் `இருமையும் அஃறிணை யன்னவுமாகும் என்றார். இங்ஙனம் பொதுப்படக் கூறியவற்றுள் பெண்மைவிட்டு ஆண் அவாவுவனவாகிய பேட்டினை மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி எனவும், ஆண்மை விட்டு அல்லது அவாவுவனவாகிய பேட்டினை `பெண்மை சுட்டிய - ஆண்மை திரிந்த - பெயர்நிலைக் கிளவி, எனவும் ஆண்மை பெண்மையாகிய இவ்விருதன்மையும் அல்லாத அலியினைத் `தன்மை திரிபெயர் எனவும் தொல்காப்பியர் வேறுபிரித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை யிழந்ததூஉம் பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண் தன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண் போலத் திரிவதூஉம் என அலி மூவகைப்படும், என்பர் தெய்வச் சிலையார். அச்சத்தின் ஆண்மையிற் றிரிந்தாரைப் பேடி எனப் பெண்ணியல்பு மிக்காராக இழித்துக் கூறும் வழக்கும் ஈண்டுக் கருதற் குரியதாகும். 5. னஃகானொற்றே யாடூஉ வறிசொல். இஃது ஆடூஉ வறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) னகர வொற்றினை யீறாகவுடைய சொல் ஆண் மகனை யறியுஞ் சொல்லாம். என்றவாறு. ஆடூஉ - ஆண்மகன். ஆண்பால் உணர்த்தும் அன் ஆன் என்னும் இருவிகுதிகளையும் தொகுத்து னஃகானொற்று என்றார். (உ-ம்) உண்டனன், உண்டான், உண்ணாநின்றனன், உண்ணாநின்றான், உண்பன், உண்பான் எனவும் கரியன், கரியான் எனவும் வரும். இங்கெடுத்துக் காட்டிய சொற்களில் இறுதிக் கண்ணதாகிய னகர மொழிந்த பிறவெழுத்துக்கள் ஏனைப்பாற்கும் வருதலின் பாலுணர்த்துதற்கண் னகரத்தின் சிறப்பு நோக்கி னஃகா னொற்றே என்றார். ஏகாரம் அசைநிலை. `னஃகானொற்று ஆடுவறி சொல் என்றாராயினும் ஆடூஉவறி சொல்லாவது னஃகானொற்று என்பது கருத்தாகக் கொள்க. ளஃகானொற்று முதலாகப் பின்னர்க் கூறப்பட்டன வற்றிற்கும் இவையொக்கும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது, 324. அன்னா னிறுமொழி யாண்பாற் படர்க்கை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 6. ளஃகானொற்றே மகடூஉ வறிசொல். இது, மகடூஉ வறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ளஃகானாகிய ஒற்றினை யீறாக வுடைய சொல் பெண்மகளையறியும் சொல்லாம். என்றவாறு. மகடூஉ - பெண்மகள். (உ-ம்) உண்டனள், உண்டாள், உண்ணாநின்றனள், உண்ணாநின்றாள், உண்பள், உண்பாள் எனவும் கரியள், கரியாள் எனவும் வரும். இச் சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 326. அள் ஆள் இறுமொழி பெண்பாற் படர்க்கை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 7. ரஃகா னொற்றும் பகர விறுதியும் மாரைக் கிளவி யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. இது, பலரறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ரகர வொற்றினை ஈறாகவுடைய சொல்லும் பகர மாகிய இறுதியையுடைய சொல்லும் மார் என்னும் இடைச் சொல்லை இறுதியாகவுடைய சொல்லும் உட்பட இம்மூன்றும் இயையத் தோன்றும் பலரையறியும் சொல்லாகும். என்றவாறு. (உ-ம்) உண்டனர், உண்டார், உண்ணாநின்றனர், உண்ணாநின்றார், உண்பர், உண்பார், எனவும் கரியர் கரியார் எனவும் கூறுப, வருப எனவும் `ஆர்த்தார் கொண்மார் வந்தார் எனவும் வரும். ரகாரம் மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றிப் பெருவழக்கிற்றாய் வருதலின் முன்னரும், பகரவிகுதி எதிர்காலம் பற்றி வருதலின் அதன் பின்னரும், மார் பகர விகுதியிற் சிறு வழக்கிற்றாய் வினைகொண்டு முடியும் வேறுபாடுடைமையின் அதனை அடுத்தும் உரைக்கப் பட்டன. மூன்றும் பலரறிசொல் என்றாராயினும் பலரறி சொல்லாவது இம்மூன்றும் என்பது கருத்தாகக் கொள்க. ஆர் விகுதியாயின், உண்பார் வருவார் எனக் காலம் பற்றி வரும் எழுத்து முதனிலைக் கேற்றவாற்றான் வேறுபட்டு வரும். மார் விகுதியாயின் உண்மார், வருமார், சென்மார் என எல்லா முதனிலை மேலும் மார் எனவே வந்து வினைகொண்டு முடியும். இவ்வேறு பாடு கருதி ஆர்விகுதியின் வேறாக மார் என்பதனைக் தனியீறாகக் கொண்டார் வேறாக மார் என்பதனைத் தனியீறாகக் கொண்டார் தொல்காப்பியனார். இச்சூத்திரத்தை அடியொற்றியது, 327. அர் ஆர் பவ்வூ ரகர மாரீற்ற பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 8. ஒன்றறி கிளவி தடற வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது அஃறிணைக்கண் ஒன்றறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒன்றறி சொல்லாவது தறட என்னும் ஒற்றுக்களை ஊர்ந்து வந்த குற்றியலுகரத்தினை ஈறாகவுடைய சொல்லாம். என்றவாறு. ஒன்றறிகிளவி அஃறிணை ஒன்றன்பாற் சொல். தறட வூர்ந்த குன்றியலுகரம் என்பன குற்றிய லுகர வீறாகிய துறுடு என்னும் விகுதிகள். (உ-ம்) வந்தது, வாராநின்றது, வருவது, கரிது எனவும், கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவும், குண்டு கட்டு, குறுந்தாட்டு எனவும் வரும். குற்றியலுகரம் எனற்பாலது குன்றியலுகரம் என மெலிந்து நின்றது. டதற என நெடுங்கணக்கு முறையாற் கூறாது தறட எனச் சிறப்பு முறையாற் கூறினார். துவ்விகுதி மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும், றுவ்விகுதி இறந்தகாலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும், டுவ்விகுதி வினைக்குறிப்பே பற்றி வருதலுமாகிய வேறுபாடுடைமையின், துவ்விகுதி யொன்றே தன்முன்னின்ற எழுத்து நோக்கி றுவ்விகுதியாகவும் டுவ்விகுதி யாகவும் திரிந்ததெனக் கொள்ளாது துறுடு என மூவேறு விகுதி களாகக் கொண்டார் ஆசிரியர். இச் சூத்திரத்தை அடியொற்றியது, 328. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கை டுக் குறிப்பினாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 9. அஆவ என வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவறி சொல்லே. இஃது அஃறிணைக்கட் பலவறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பலவறி சொல்லாவன அஆவ என்னும் இறுதியை யுடைய அக்கூற்று மூன்று சொல்லாம். என்றவாறு. பலவறிசொல் - அஃறிணைப் பலவின்பாற் சொல். (உ-ம்) உண்டன, உண்ணாநின்றன, உண்பன, கரியன எனவும், உண்ணா, தின்னா எனவும், உண்குவ, தின்குவ எனவும் வரும். உண்டன, உண்ட என இறந்தகாலத்தும், உண்ணாநின்றன, உண்ணாநின்ற என நிகழ்காலத்தும் அகரவீறு முதனிலைக் கேற்றவற்றால் அக்காலத்திற்குரிய இடைநிலையைப் பெற்று அன்சாரியை பெற்றும் பெறாதும் முடிந்தாற் போன்று, எதிர் காலத்தும் முதனிலைக் கேற்றவாற்றால் அக்காலத்திற்குரிய இடைநிலையைப் பெற்று அன்சாரியை பெற்றும் பெறாதும் முடியும். எதிர்காலத்திற்குரிய இடைநிலைகளாவன பகரவொற்றும் வகரவொற்றுமாம். அவற்றுள் பகர விடைநிலைபெற்று அன் பெற்றும் பெறாதும் முடிவுழி உண்பன, உண்ப எனவரும். வகர விடைநிலை பெற்று அவ்வாறு முடிவுழி வருவன, வருவ, செல்வன, செல்வ எனவரும். இங்ஙனம் முதனிலைக் கேற்றவாற்றால் இடைநிலை வேறுபடாது அன்சாரியையின்றி உண்குவ, தின்குவ எனக் குகரச் சாரியை பெற்று வருவன வகரவீறாகக் கொள்ளப் படும். அஃறிணைப் பலவின்பாற்குரியதாக இங்குக் காட்டப் பெற்ற `உண்ப என்பது எதிர்காலம் குறிக்கும் பகர விடைநிலையை ஊர்ந்துவந்த அகரவீறெனவும், மேல் உயர் திணையிற் பல்லோ ரறியுஞ் சொல்லாகக் காட்டப்பெற்ற உண்ப என்பது பகர வீறெனவும் பகுத்துணர்தல் வேண்டும். இத் தொடக்கத்தன பல பொருளொரு சொல் எனப்படும். ஆகாரவீறு, உண்ணா, தின்னா என்றாங்கு மூன்று காலத்தை யும் எதிர்மறுக்கும் எதிர்மறைக்கண் அல்லது பால் விளங்கி நில்லா என்பர் இளம்பூரணர். அவரது உரையினை அடியொற்றி யமைந்தது, 328. அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். `ஆகவே எதிர்மறைக் கண்ணதாகும் என்றமையான், ஏனை விகுதிகள் உடன்பாட்டினும் எதிர்மறையினும் வருமென்பது பெற்றாம். தொல்காப்பியர் கூறிய வகர விகுதியினைப் பவணந்தியார் அகரவிகுதியுள் அடக்கி கூறியுள்ளார் என்பது, வவ்வீறு அகரவீறாயடங்குதலானும் கள்ளீறு தானேநின்று ஒருவினைக் கீறாய் வாராமையானும் ஈண்டுக் கொண்டிலர் என்னும் மயிலைநாதர் உரை விளக்கத்தாற்புலனாம். 10. இருதிணை மருங்கின் ஐம்பா லறிய ஈற்றினின்றிசைக்கும் பதினோ ரெழுத்துந் தோற்றந் தாமே வினையொடு வருமே. இது, மேற்குறித்த பாலுணர்த்தும் ஈறாகிய எழுத்து இனைத் தென்றும் அவை வினைக்கண் நின்றுணர்த்துமென்றும் கூறுகின்றது. (இ-ள்) (உயர்திணை அஃறிணையென்னும்) இருதிணைக் கண்ணும் உளவாகிய (ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும்) ஐந்து பாலையும் அறிய அவ்வச் சொல்லின் இறுதிக் கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் (பாலுணர்த்துதற்குத்) தோன்றுதற் கண் வினைச் சொற்கு ஈறாய்ப் புலப்படும். திணை இரண்டே, பால் ஐந்தே என வரையறுத்தற்கு `இருதிணைமருங்கின் ஐம்பால் என்றார். பதினோரெழுத்தும் என்றது, பாலுணர்த்தும் விகுதிகளாகிய ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்பவற்றை. இங்கு ஈற்று நின்று இசைக்குமென்றது னகாரமும் ளகாரமும், ரகாரமும், மாரும் இறுதி நின்றுணர்த்து மென்பதனை நினைவுபடுத்தும் முறையிலும், அல்லனவற்றிற்கு வழிமொழிதலளவிலும் அமைந்தது. தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. வினையெனப் பொதுப் படக் கூறினாராயினும் ஏற்புழிக் கோடலாற் படர்க்கை வினையென்று கொள்ளப்படும் எனவும், இவை பெயரொடு வருவழித் திரிபின்றிப் பால் விளக்காமையின் வினையொடுவரும் என்றார் எனவும் இச்சூத்திரப் பொருளை விளக்குவர் சேனாவரையர். இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் பதினோரெழுத்தும் வினைச்சொல்லிடத்தேதான் தெளிவாகப் பாலுணர்த்துவன என்றும், இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல என்றும் ஆசிரியர் இச்சூத்திரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் இருதிணை ஐம்பாலையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காணலாம். இச்சூத்திரப் பொருளையுளங்கொண்டு இருதிணை ஐம்பாலுணர்த்தும் விகுதிகளை வினையியலில் வைத்தோதிய பவணந்தி முனிவர், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தும் சொல் தன்னையும் இருதிணை ஐம்பாற் பொருள்களையும் உணர்த்தும் முறையினை, 265. படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படுந் திணைபா லனைத்தும் ஏனை யிடத்தவற் றொருமை பன்மைப் பாலே. எனவரும் சூத்திரத்தால் விளக்குவர். (இ-ள்) (வெளிப்படைச் சொல்லாயும் குறிப்புச் சொல்லாயும் வழக்கிலும் செய்யுளிலும் நிற்கும்) படர்க்கை வினைமுற்றுச் சொல்லையும் படர்க்கைப் பெயர்ச் சொல்லையும் முன் கருதி நோக்கினால், பின் அவ்விருவகைச் சொல்லுங் கருவியாக இருதிணையும் ஐம்பாலும் விளங்கித் தோன்றும். ஏனைய தன்மை முன்னிலை வினைமுற்றுச் சொல்லையும் பெயர்ச்சொல்லையும் முன் கருதி நோக்கினால், அந் நால்வகைச் சொல்லுங்கருவியாக இருதிணை ஐம்பாலுங் ஒருமைப் பாலும் பன்மைப் பாலுமே புலப்படும் என்பதாம். (உ-ம்) நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன எனவும், அவன், அவள், அவர், அது, அவை எனவும் படர்க்கை வினைமுற்றுச் சொல்லும் படர்க்கைப் பெயர்ச் சொல்லும் முன்பு தம்மையுணர்த்திப் பின்னர் இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களை யுணர்த்தின. நடந்தேன், நடந்தேம், யான், யாம், எனவும் நடந்தாய், நடந்தீர், நீ, நீர் எனவும் தன்மை வினைமுற்றுச் சொல்லும் தன்மைப் பெயர்ச் சொல்லும் முன்னிலை வினை முற்றுச் சொல்லும் முன்னிலைப் பெயர்ச் சொல்லும் முன்புதம்மை யுணர்த்திப் பின்பு இருதிணையைம்பாலுள் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தின. இருதிணை ஐம்பாற் பொருள்களை யுணர்த்தும் நெறியிற் பெயர்களைவிடச் சிறந்தன வினைமுற்று என்பார், படர்க்கை வினைமுற்று என வினைமுற்றை முற்கூறினார். ஒலி யெழுத்தை யுணர்தற்கு வரிவடிவு ஓர் அறிகுறியாய் நின்றாற் போலப் பொருளையுணர்தற்குச் சொல் அறிகுறியாய் நிற்றலின் அக்குறியினைக் குறித்து நோக்கினாலன்றி இருதிணைஐம் பாலாகிய பொருள் விளங்கித் தோன்றாதென்பார், `வினைமுற்று நாமம் குறிப்பின் திணைபால் அனைத்தும்பெறப்படும் என்றார். நாமம் - பெயர். குறிப்பின் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். குறித்தல் - கருதி நோக்குதல். பெறப்படுதல் - செவிப் புலனாகிய சொல் கருவியாக உள்ளத்திற் புலனாதல். செவிப் புலனாகிய சொல்லையொழிந்து கட்பொறி மாத்திரையின் இரு திணைஐம்பாற் பொருள்களை ஒருவன் உணரும்உணர்ச்சி விலங்குணர்ச்சி போல்வ தன்றி அது பொருட் பேறாகாதென்பது கருத்து. தன்மை முன்னிலை களின் ஒருமைப் பன்மைப்பாலே பெறப்படும் என்றதனால் அவ்விடங்களில் ஆண் பெண் பலர் ஒன்று பல என்னும் பால் விகற்பந் தோன்றா என்பது புலனாம். மூவிடங்களில் ஒன்றற்குரிய வினை முற்றும் பெயரும் தன்மையும் பொருளையும் உணர்த்துமாறு இவ்வாறெனவே, இவ்விடங்கட்குப் பொதுவாகிய வினைமுற்றுக் களும் பெயர்களும் பெயரெச்ச வினையெச்சங்களும் வினைத்தொகை முதலிய தொகைச் சொற்களும் இடைச்சொல் உரிச்சொற்களும் முன்னும் பின்னும் தம்மையடுத்துள்ள நிலைமொழி வருமொழி களோடு கூடிப் பொதுமை நீங்கி ஓரிடத்திற்குரிய வாகி இவ்வாறு தம்மையும் பொருளையும் உணர்த்தும் என்பதாம். இவ்வாறு எல்லாச் சொல்லையும் வினைமுற்றுள்ளும் பெயருள்ளும் அடக்கி மூவகை யிடத்தும் நின்ற சொல் இருதிணை ஐம்பாற் பொருளையும் தன்னையும் உணர்த்துஞ் சிறப்புவிதியினை நன்னூலாசிரியர் இச்சூத்திரத்தாற் கூறியுள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும். 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. இது, மேற்குறித்த இருதிணைஐம்பால் இயல்நெறியி னின்றும் சொற்கள் வழுவாமற் காக்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (மேற்குறித்த பதினோரீற்றவாய்) வினைபற்றி வரும் பாலறி சொல்லும் (அவன், அவள், அவர், அது, அவை என்பன முதலாகப்) பெயர்பற்றி வரும் பாலறி சொல்லும் தம்முள் தொடருங்கால் ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு மயங்கா; தம்பாற் சொல்லொடு தொடரும். என்றவாறு. (உ-ம்) உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை எனத் தம்மரபின் வழுவாது வந்தமை காண்க. சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனான் ஐம்பாலுணர்த்துதற் சிறப்புடைய படர்க்கை வினைபற்றி யோதினாரேனும், `தம்மைச் சொல்லே அஃறிணைக்கிளவி என்றும் `முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி என்றும் பெயர் வழுவமைப் பாராகலின் தன்மை முன்னிலைப் பாலறி கிளவியும் மயங்கற்க என்பது இங்குக் கொள்ளப்படும். (உ-ம்) நீ வந்தாய், நீயிர் வந்தீர், யான் வந்தேன், யாம் வந்தேம் எனவரும். இவ்வாறன்றித் திணையும் பாலும் இடமும் காலமும் மாறிவருவன வழுவாம். இனி, மயங்கல் கூடா எனவே மயக்கமும் உண்டென்பதும் அங்ஙனம் மயங்குதல் வழுவென்பதும் கூறினாராயிற்று. அங்ஙனம் மயங்கும் வழு எழுவகைப்படும்; திணைவழு, பால் வழு, இடவழு, மரபுவழு, செப்புவழு, வினாவழு என. இருதிணையுள் ஒரு திணைச் சொல் ஏனைத்திணைச் சொல்லொடு முடிவது திணைவழு. ஒரு திணையுள் ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு முடிவது இடவழு. இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச் சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்கு உரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒரு பொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள் மேற் சென்றது மரபு வழு. இவ்வெழுவகை வழுக்களையும், 375. திணையே பால் இடம் பொழுது வினா இறை மரபாம் ஏழும் மயங்கின் ஆம் வழுவே. எனவரும் சூத்திரத்தால் தொகுத்தோதினார் நன்னூலார். (உ-ம்) அவன் வந்தது, திணைவழு. அவன் வந்தாள், பால்வழு. யான் வந்தான், இடவழு. நாளை வந்தான், காலவழு. ஒரு விரலைக்காட்டி இது சிறிதோ பெரிதோ என வினவுவது வினா வழு. `fl«ó®¡F tÊ ahJ? என வினவினால் `இவ் வண்டியில் இடப்பக்கத்திற் பூட்டப்படுளது என் பசுவின் கன்றன்று என்று மறுமொழி கூறுவது இறை (செப்பு) வழு. யானை மேய்ப்பானை இடையன் என்றும் ஆடு மேய்ப்பானைப் பாகன் என்றும் சொல் வழக்கின் மரபுணராது கூறுவது மரபு வழு. இவ்வேழு வகையானும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்க என்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக் கொள்க என அமைதி கூறுதல் வழுவமைத்தலாகும். கிளவியாக்கத்தில் 11-ஆம் சூத்திரம் முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காக்கும் முறையில் அமைந்துள்ளன. `மயங்கல்கூடா தம்மரபினவே என்ற தொடரினை யோக விபாகம் (கூட்டிப்பிரித்தல்) என்னும் நூற்புணர்ப்பினால் மயங்கல் கூடா எனவும் தம்மரபினவே எனவும் பிரித்து இரு தொடராக்கிச் `சொற்கள் மரபு பிறழா தம்மரபினவே என மரபுவழுக் காத்ததாக வுரைப்பர் சேனாவரையர். 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை யறிசொற் காகிட னின்றே. இது, வழுவற்க என்கின்றது. (இ-ள்) (`உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும் என மேற்கூறிப்பட்ட) ஆண்மைதிரிந்த `பேடி என்னும் பெயர்ச்சொல் ஆண்பாற் சொல்லொடு புணர்தற்குப் பொருந்தும் இடனுடைத் தன்று என்றவாறு. `ஆண்மை யறிசொற்கு ஆகிடன் இன்று என்ற விலக்கு ஆண்மை யறிசொல்லொடு புணர்தல் எய்திநின்ற பேடிக்கு அல்லது ஏலாமையின் அலிமேற் செல்லாதென்பர் சேனாவரையர். இச்சூத்திரம் `பெண்மை சுட்டிய என்னும் சூத்திரத்தொடு தொடர்புடைமை பற்றி அதனையடுத்து வைக்கத்தக்கதாயினும், `இது வழுவற்க என்கின்றதாகலின் வழுக்காத்தல் அதிகாரம் பற்றி இங்கு வைக்கப்பட்டது என்பர் சேனாவரையர். ஆகிடனின்றே என்பதனாற் சிறுபான்மை பேடி வந்தான் எனவும் ஆண்பாற்கும் ஏற்கும் எனவரும் இளம்பூரணருரையிற் காணப்படும் குறிப்பு, வழுவற்க என வழுக்காக்கும் தொல்காப்பியர் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். இதுவும் அது. (இ-ள்) செப்பினையும் வினாவினையும் வழுவாமற் காக்க. என்றவாறு. ஒருவர் வினாய பொருளை அறிவுறுப்பது செப்பு எனப் படும். செப்பு இறை என்பன ஒரு பொருட் சொற்கள். செவ்வன் இறையும், இறைபயப்பதும் எனச் செப்பு இருவகைப்படும். உயிர் எத்தன்மைத்து என வினாய வழி `உணர்தற் றன்மைத்து எனக்கூறும் மறுமொழி செவ்வன் இறையாகும். `உண்டியோ என்று வினாயவழி `வயிறு நோகின்றது என்று கூறும் மறுமொழி `உண்ணேன் என்ற பொருளைப் பயந்தமையின் இறை பயப்பது ஆகும். வினாவெதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், உடம்படுதல் எனச் செப்பு அறுவகைப்படும் என்றும், அவற்றுள் மறுத்தலும் உடம்படுதலுமே செப்பிலக்கண மாவன வென்றும், ஒழிந்தனவற்றை முன் அமைத்துக் கூறுக என்றும் கூறுவர் உரையாசிரியர். `உயிர் எத்தன்மைத்து என்ற வழி உணர்தற் றன்மைத்து என்றல் முதலாயின அவற்றுள் அடங்காமை யானும் மறுத்தலும் உடம்படுதலும் ஏவப்பட்டார் கண்ண ஆகலானும் பிறர்மதமேற் கொண்டு கூறினார் (உரையாசிரியர்) என்பர் சேனாவரையர். உரையாசிரியர் குறித்த அறுவகைச் செப்புடன் சுட்டு, இனம் என்னும் இரண்டையும் சேர்த்து, 386. சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற துறைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும் எண்இறையுள், இறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. எனவரும் சூத்திரத்தில் எண்வகை விடையாகக் குறித்தார் நன்னூலார். இங்குச் சொல்லப்பட்ட எண்வகை இறையினுள் சுட்டு, மறை, நேர் என முன்னர்க் குறிக்கப்பட்ட மூன்றும் செவ்வனிறை யென்றும், பின்னர்க் குறிக்கப்பட்ட ஐந்தும் இறைப் பொருள் பயத்தலின் இறைபயப்பனவாகத் தழீஇக் கோடற் குரியன என்றும் பவணந்தி முனிவர் இச்சூத்திரத்திற் பகுத்துக் கூறியுள்ளமை, தொல்காப்பியமாகிய முதனூற் பொருளுடன் அதற்கு இளம்பூரணர் சேனாவரையர் முதலிய பண்டையுரை யாசிரியர்கள் கூறிய விளக்கத்தினையும் தழுவியமைந்தது வழி நூலாகிய நன்னூ லென்னும் உண்மையை வலியுறுத்தும் சான்றாதலறிக. (உ-ம்) `மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது? என வினாவிய வழி `வண்டுவீழ்ந்து தேனுண்ணும் நொச்சிப்பூ என அதனைச் சுட்டிக் கூறுதல் சுட்டு எனப்படும். `சாத்தா இது செய்வாயோ என்று வினாயவழி `செய்யேன் என மறுத்தல் மறை; `செய்வேன் என்று உடம்படுதல் நேர்தல்; `நீ செய் என்பது ஏவல்; `செய்வேனோ என்றல் எதிர்வினாதல்; உடம்பு நொந்தது என்றல், உற்றதுரைத்தல்; உடம்புநோம் என்றல் உறுவது கூறல்; `மற்றையது செய்வேன் என்றல் இனமொழி. `கங்கையாடிப் போந்தேன் சோறுதம்மின் என வினாவின்றியும் விடைநிகழ்தல் உண்டு. இஃது, ஒன்றனை அறியலுறுதலை யுணர்த்தாது ஒன்றனை அறிவுறுத்து நிற்றலிற் செப்பின்பாற்படும் என்பர் சேனாவரையர். வினாவாவது, அறிதல் வேண்டும் என்பதனை வெளிப் படுப்பது. அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவு தான் காண்டல், மெய்யவற்குக் காட்டல் என வினா ஐந்து வகைப்படும் என்பர் இளம்பூரணர். இவ் வைந்தினையும், `அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல் ஐயமறுத்தல் அவனறிவு தான் காண்டல் மெய்யவற்குக் காட்டலோ டைவகை வினாவே. (நேமி - சொல் - 5) எனத் தொகுத்துரைத்தார் குணவீர பண்டிதர். உரையாசிரியர் விரித்துக் கூறிய அறிவொப்புக்காண்டல், அவனறிவு தான் காண்டல், மெய்யவற்குக் காட்டல் என்னும் மூன்றனையும் அறிபொருள் வினா என ஒன்றாக அடக்கி, அறியான் வினாவும் ஐய வினாவும் அறிபொருள் வினாவும் என வினா மூவகைப்படும் என்றார் சேனாவரையர். ஒருதிறத்தானும் அறியப்படாத பொருள் வினாவப் படாமையின் பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையால் அறியப்படாமை நோக்கி அறியான் வினாவாயிற்று. `தோன்றுகின்ற உரு குற்றியோ மகனோ என இங்ஙனம் வினவுவது ஐயவினா. அறியப்பட்ட பொருளையே ஒரு பயனோக்கி வினவுவது அறிபொருள் வினா எனப்படும். இவ்வாறு வினவுவதன் பயன், அதுபற்றிய வேறு தன்மைகளை அறிந்துகொள்ளுதலும் அவற்றை அறியாதார்க்கு அறிவுறுத்தலுமாகும். சேனாவரையர் மூவகையாகத் தொகுத்துக் கூறிய அறிபொருள் வினா, அறியான் வினா, ஐயவினா என்னும் இம் மூன்றுடன் கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்னும் மூன்றையும் கூட்டி அறுவகை வினாவாகக் கொண்டார் பவணந்தி முனிவர். 385. அறிவறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார். என்பது நன்னூல். பொன் வாணிகரிடம் சென்று, `பொன் உளவோ மணியுளவோ வணிகீர் என வினவுதல் அவற்றை வாங்கிக் கொள்ளும் குறிப்பினதாயின் கொளல்வினா எனப்படும். `சாத்தற்கு ஆடையில்லையோ என வினாதல் அவ்வாடையைத் தரும் குறிப்பினதாயின் கொடை வினா எனப்படும் `சாத்தா உண்டாயோ என்ற வினா உண்க என்னும் குறிப்பினதாயின் ஏவல்வினா எனப்படும். செவ்வனிறையும் அறியான்வினாவும் ஐயவினாவும் இச்சூத்திரத்து `வழாஅ லோம்பல் என்பதனாற் கொள்ளப்படும். ஏனைய வழுவமைப்புழிக் கொள்ளப்படும். 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. இது வழுவமைக்கின்றது. (இ-ள்) வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்து வினாவிற்கு மறுமொழியாய் வரின், வினாவும் விடையாகக் கொள்ளப்படும். என்றவாறு. வினா எதிர் வரின் வினாவும் செப்பே என இயைத்துரைக்க. எதிர் வருதலாவது வினவிய வினாவுக்கு ஒத்த மறுமொழியாய் வருதல். `சாத்தா உண்டியோ என்று வினாயவழி, `உண்னேனோ என வரும் வினா, வினா வாய்ப்பாட்டால் வந்ததேனும் `உண்பேன் என்னும் பொருள்பட வருதலின், விடையாயிற்று. இது வினாவெதிர் வினாதல் எனப்படும். இதனை எண்வகை விடை களுள் ஒன்றாக நன்னூலார் கொண்டமை முன்னர்க் காட்டப்பட்டது. 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே யப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதுவும் அது. (இ-ள்) செப்பு (செவ்வன் இறையாகாது) வழுவி வரினும் கடியப்படாது; (வினாவிய) அப் பொருட்கு ஒருவாற்றான் தொடர்புடையதாய்ப் புணர்ந்த கிளவியாதற்கண். என்றவாறு. அல்வாறு வழீஇயமையுஞ் செப்பாவன: உற்றதுரைத் தலும் உறுவது கூறலும் ஏவுதலும் என இவை என்பர் இளம்பூரணர். `rh¤jh ciwô®¡F¢ bršyhnah? என வினவிய வழி, `காலின் முட்குத்திற்று; தலை நோகின்றது என்றல் உற்ற துரைத்தல்; `கடன் தந்தார் வளைப்பர் `பகைவர் எறிவர் என்றல் உறுவது கூறல்; `நீ செல் என்றல் ஏவுதல். இவை செவ்வன் இறை அல்லவேனும் வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்தலின் விடையாக அமைத்துக் கொள்ளப் பெற்றன. 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. இது, செப்புவாரொடு வினாவுவாரிடைக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) செப்புமிடத்தும் வினாவுமிடத்தும் சினைக்கிள விக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளும் துணைப் பொருளும் அவ்வப்பொருளுக்கு அவ்வப் பொருளேயாம். என்றவாறு. எனவே சினையும் முதலும் தம்முள் மயங்கிவருதல் வழுவென்பதாம். உறழ் பொருளாவது ஒப்புமை கூறாது ஒன்றின் மிக்கதாகக் கூறப்படுவது. துணைப் பொருளாவது, இதனைப் போல்வது இது என்றாங்கு இருபொருட்கும் ஒப்புமை கூறப் படுவது. (உ-ம்) இவள் கண்ணின் இவள் கண் பெரிய, நும் மரசரசனின் எம்மரசன் முறை செய்யும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ, எம்மரசனின் நும்மரசன் முறை செய்யுமோ என முறையே செப்பும் வினாவும் உறழ் பொருளின் கண் சினையும் முதலும் மயங்காமல் வந்தன. இவள் கண் ஒக்கும் இவள் கண், எம்மரசனை ஒக்கும் நும்மரசன், இவள் கண் ஒக்குமோ இவள் கண், எம்மரசனை ஒக்குமோ நும்மரசன் என முறையே செப்பும் வினாவும் துணைப் பொருளின்கண் சினையும் முதலும் மயங்காமல் வந்தன. தன்னின முடித்தல் என்பதனால் எண்ணுங்காலும் `பொன்னும் மணியும் முத்தும் பவளமும் என இனமொத்தனவே எண்ணப் படும் என்பர். வினாவிடத்தும் எதிர்மொழி செப்புமிடத்தும் சினையும் முதலும் மயங்காபெறா என்பதனை, 386. வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். என்னும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். 17. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. இதுவும் வழீஇயமையுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் பொருந்தி நடக்கும் இலக்கணத்திற் பக்கச் சொல் கடியப்படா. என்றவாறு. தகுதியென்பது, இப்பொருளையறிதற்கு அமைந்துகிடந்த இச் சொல்லாற் கூறுதல் தகுதியன்றென்று அச்சொல்லாற் கூறாது வேறு தக்கதோர் வாய்பாட்டாற் கூறுவது. மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின் வந்தகுறி நிலைவழக்கும் எனத் தகுதி மூன்று வகைப்படும். செத்தாரைத் துஞ்சினாரென்றலும் சுடுகாட்டை நன்காடென்றலும் மங்கல மரபினாற் கூறுதலாம். கால்கழீஇவருதும் கண்கழீஇ வருதும் என்றாற் போல்வன இடக்கரடக்கிக் கூறுதலாம். பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும் வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்காம். வழக்கென்பது எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளைக் குறித்து உலகவழக்கில் தன்னியல்பின் வழங்குவது. இலக்கண வழக்கும் இலக்கணத்தொடு பொருந்தின மரூஉ வழக்கும் என வழக்காறு இருவகைப்படும் எனவும், இல்முன் என்பதனை முன்றில் என்று முன்பின்னாகச் சொல்லுதல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு எனவும், சோழனாடு என்பதனைச் சோணாடு என்பது மரூஉ வழக்கு எனவும் கூறுவர் இளம்பூரணர். `தத்தமக்குரிய வாய்பாட்டானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறுதல் வழுவாயினும் அமைகவென மரபு வழுவமைத்தவாறு எனக் கருத்துரைப்பர் சேனாவரையர். உலக வழக்கில் சிதைந்தும் சிதையாதும் தன்னியல்பிற் பொருந்தி நடப்பன வெல்லாம் வழக்காறு எனக் கொண்ட இளம்பூரணர் கருத்தினை யுளங்கொண்ட பவணந்தி முனிவர், அவ் வழக்காற்றினை இலக்கண முடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூவகையாகப் பகுத்து இம்மூன்றுடன் முற்குறித்த தகுதி வழக்கின் பகுதிகளாகிய இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்னும் மூன்றினையும் கூட்டி, 267. இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉ வென்றாகும் மூவகை யியல்பும் இடக்க ரடக்கல் மங்கலங் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல். எனச் சூத்திரஞ் செய்தார். இலக்கண நெறியால் வருவதும், இலக்கண மன்றெனினும் இலக்கணமுடையது போல அடிப்பட்ட சான்றோரால் வழங்கப் பட்டு வருவதும், இலக்கணத்திற் சிதைந்து வருவதும் என இம்மூன்று வகையானும் வரும் இயல்பு வழக்கு,இடக்கரடக்கிச் சொல்லுவதும், மங்கல மரபினாற் சொல்வதும், ஒவ்வொரு குழுவிலுள்ளார் தத்தம் குறியாக இட்டுச் சொல்லுவதும் என்னும் இம் மூவ்கைத் தகுதி வழக்கினோடுங் கூட, வழக்கு நெறி ஆறுவகைப்படும் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். (உ-ம்) நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், மக்கள், மகன், மகள் என்றற் றொடக்கத்தன இலக்கணமுடையன. இல்முன் என்பதனை முன்றிலென்றும் கண்மீ என்பதனை மீகண் என்றும் யாவர் என்பதனை யார் என்றும் இப்பெற்றியான் இலக்கணமுடையன போன்று வருவன இலக்கணப் போலி. அருமருந்தன்னான் என்பதனை அருமந்தான் என்றும் மலையமானாடு என்பதனை மலாடு என்றம் இவ்வாறு சிதைந்து மருவி வருவன மரூஉவாகும். இம்மூன்றும் ஒரு காரணமின்றியே இயல்பாய் வருதலின் இயல்பு வழக்கு எனப்பட்டன. இடக்கர் - அவையல் கிளவி; அடக்கல் அதனை மறைத்துக் கூறுதல். `புலி நின்றிறந்த நீரல் லீரத்து, `கருமுக மந்தி `கருமுக மந்தி `செம்பினேற்றை என்றாற் போல்வன இடக்கரடக்கல். ஓலையைத் திருமுகமென்றும் காராட்டை வெள்ளாடென்றும் கூறுவன மங்கல மரபினான் வருவன. யானைப் பாகர் ஆடையைக் காரையென்றும் வேடர் கள்ளைச் சொல்விளம்பி யென்றும் இவ்வாறு ஒரு குழுவினர் தமக்குப் புலனாக இட்டு வழங்குவன குழூஉக் குறியெனப்படும். இவை மூன்றும் உயர்ந்தோரும் இழிந்தோரும் `இவ்வாறு மொழிவது தக்கது என்று கொண்டு வழங்குதலின் `தகுதி வழக்கு எனப்பட்டன. 18. இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. இது, செய்யுட்கு ஆவதோர் முடிபு கூறுகின்றது. (இ-ள்) இனப்பொருளைச் சுட்டுதலன்றிப் பண்படுத்து வழங்கப்படும் பெயரை (ஒரு பொருளுக்கு)க் கொடுத்து வழங்குதல் வழக்கு நெறியல்ல, செய்யுள் நெறியாகும். தாமரை, ஆம்பல் என்பன செம்மையும் வெண்மையு முடைய பூக்களைக் குறிக்கும் முறையிற் பொதுவாய் நின்ற நிலையிற் செந்தாமரை, சேதாம்பல் என அவற்றின்கண் அமைந்த பண்பினை அடைமொழியாக இயைத்துக் கூறும் நிலையிற் செம்மை என்னும் அவ் அடைமொழி அதனின் வேறாக வெண்மையுடைய வெண்டாமரை முதலிய இனமுண்டு என்பதனைச் சுட்டி நிற்றலால் அவை இனச்சுட்டுடைய பண்பு கொள் பெயராயின். அங்ஙனம் பல பொருட்குப் பொதுவாகாது ஞாயிறு, திங்கள், தீ என ஒவ்வொன்றற்கே யுரியவாய் வழங்கும் பெயரொடு அப்பொருளின் கண் அமைந்த செம்மை, வெண்மை, வெம்மையாகிய பண்பினை அடைமொழியாகக் கூட்டிச் செஞ்ஞாயிறு, வெண்டிங்கள், வெவ்வழல் என வழங்குதல் முற்குறித்த ஞாயிறு, திங்கள், தீயின் வேறாகக் கருஞாயிறும் கருந்திங்களும் தண்ணழலும் உளவாகச் சுட்டாமையின் அவை இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயராயின. இங்ஙனம் இனஞ் சுட்டாத பண்பினை அடை மொழியாகப் பெற்ற பெயர்கள் செய்யுள் நெறியிலன்றி வழக்கு நெறியில் வழங்கப் பெறுதல் இல்லை என்பது இந்நூற்பாவில் அறிவுறுத்தப்படும் விதியாகும். (உ-ம்) ` செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் (புறம் 38 : 7 - 8) என இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர் செய்யுளில் வழங்கப் பெறுதல் காணலாம். பண்பினை அடைமொழியாகக் கொள்ளாது, வடவேங்கடம் - தென்குமரி, முட்டாழை, கோட்சுறா எனத்திசையும் உறுப்பும் தொழிலுமுதலாய அடையடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றெனமுடித்த லென்பதனாற் செய்யுளாறென அமைத்துக் கொள்ளப்படும் எனவும், `பண்பு கொள் பெயர் இனங்குறித்து வருதல் மரபு; அம்மரபு வழக்கின் கண் வழுவற்க என்றும் செய்யுட்கண் வழுவமைக்கவென்றும் காத்தவாறாயிற்று எனவும் இச்சூத்திரப் பொருளை விளக்குவர் சேனாவரையர். இனி, ஒருவன் சொல்லுவது; `வழக்காறல்ல என்பதனை `வழக்காற்றின் அல்ல என ஐந்தாமுருபு விரித்து, `அல்ல என்பதனைப் பெயர்ப்படுத்துக் கூறும்; கூறவே, வழக்கிற்கும் இனமில் பண்புகொள் பெயர்கள் உள என்பது போந்ததாம் எனப் பிறர் கூறும் ஓர் உரையினைக் குறித்து, பெருங் கொற்றன், பெருங்கூத்தன் என்பன போல்வன, வழக்கிடைப் பண்புப் பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச் சொல்லுதற்கு வந்து நிற்கும் என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் இளம்பூரணர். `வழக்காற்றின் அல்ல என்ற தொடர் செய்யுளாறெனப் : பட்ட பண்புகொள் பெயர்கள் வழக்காற்றின் வாராதன, அல்ல, வருவனவே என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றிருத்தலையுங் கொண்ட பவணந்தி முனிவர், 400. பொருண் முதலாறாம் அடை சேர் மொழி, இனம் உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும். எனச் சூத்திரஞ் செய்தார். பொருளாதி ஆறனையும் அடையாக அடுத்து வருமொழிகள் இனத்தைக் காட்டுவனவும் காட்டாதனவு மாம் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) நெய்க்குடம், குளநெல், கார்த்திகைவிளக்கு, பூந்தோடு, செந்தாமரை, குறுங்கூலி எனப் பொருளாதியாறும் ஆகிய அடைமொழிகள் வழக்கிடத்து இனமுணர்த்தின; உப்பளம், ஊர்மன்று, கீழ்நோக்கிய கிணறு, மேல்நோக்கிய மரம், சிறுகாலை, கான்மாடு, செம்போத்து, தோய்தயிர் என வழக்கிடத்து இனமின்றி வந்தன. இவ்வாறே இவ்வடை மொழிகள் செய்யுளில் இன முள்ளனவும் இல்லனவுமாக வருதலை உதாரணங்காட்டி விளக்கிய மயிலைநாதர், இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை, வழக்காறல்ல செய்யுளாறே (தொல்-கிளவி- 18) என்பதனால் இவை முடியுமாறு அறிந்து கொள்க என இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு உரையாசிரியர் கூறிய இப் பொருளைச் சுட்டிக் கூறியுள்ளமை இங்குக் கருதியுணரத் தகுவதாகும். இனி, இனஞ்சுட்டி வரும் அடைமொழி அவ்விடத்திற்குப் பொருத்த முடைத்தாயின் இனமல்லதனையும் சுட்டுதல் உண்டு என்பதனை, 401. அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின். எனவரும் நூற்பாவிற் பவணந்தி முனிவர் குறிப்பிடுவர். (உ-ம் ) சுமந்தான் விழுந்தான், புதுப் புனல் வந்தது, இருள் புலர்ந்தது என்பன, சுமக்கப்பட்டது விழுந்தது, மழை பெய்தது, சுடர் தோன்றிற்று என முறையே விளக்கினவாறு காண்க என்பர் மயிலைநாதர். இனி, `பாவஞ் செய்தான் நரகம் புகும் என்ற துணையானே புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருதலே யன்றி, `அவன் இது செய்யின் இது வரும் என்னும் அறிவிலி என்னும் இன மல்லதனையும் தந்தது. மேலைச் சேரிச் சேவல் அலைத்தது என்ற துணையானே கீழைச் சேரிச் சேவல் அலைப்புண்டது என இனத்தைத் தருதலேயன்றி அச் சேவலுடையார்க்கு வெற்றியாயிற்று என இச்சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் கூறும் மற்றொரு விளக்கமும் இங்கு நினைக்கத் தகுவதாகும். விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும் என்றார் பரிமாணனார். 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். இயற்கைப் பொருள்மேல் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (தன்னியல்பில் திரியாது) இயல்பாகி வாரா நின்ற பொருளை (அதன் இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமுங் கொடாது) இத்தன்மைத்து என்று சொல்லுக. என்றவாறு. இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடனி கழுந்தன்மை. (உ-ம்) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி உளரும், உயிர் உணரும் எனவரும். இற்று என்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும் உளரும் உணரும் என்னும் தெரிநிலைவினையும் `இற்று என்னும் பொருள்பட வருதலின், இற்றெனக் கிளத்தலேயாம். `நிலம் வலிது ஆயிற்று என ஆக்கம் பெற்று வரின், அத் தொடரிற் குறிக்கப்பட்ட நிலம் என்பது இயற்கைப் பொருளாத லன்றிக் கல்லும் சுண்ணாம்பும் போல்வன பெய்து குற்றுச் செய்யப்பட்ட செயற்கைப் பொருளாதல் வேண்டும். இனி நீர் நிலமும் சேற்று நிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தானொருவன், `நிலம் வலிதாயிற்று என்றவழி, `முன் மெலிதாயது பின் வலிதாய் வேறுபட்டது என ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின், இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம் என விளக்கங் கூறுவர் சேனாவரையர். பவணந்தி முனிவர் இந்நூற்பாவினை, 403. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். எனத் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் நன்னூலில் எடுத்தாண்டுள்ளார். 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். செயற்கைப் பொருள்மேற் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) செயற்கையினாகிய பொருளை (த்திரிபு கூறுங்கால்) ஆக்கங் கொடுத்துச் சொல்லுக. என்றவாறு. செயற்கைப் பொருளாவது ஏதேனும் ஒரு காரணத்தால் தன் தன்மை திரிந்த பொருள். ஆக்கமொடு கூறல் என்பதனால் திரிபு கூறுதல் பெற்றாம். என்னை? அதன் கணல்லது வாராமையின். இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்பன இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. 21. ஆக்கந் தானே காரண முதற்றே. இது, மேலதற்கோர் புறனடை யுணர்த்துகின்றது. (இ-ள்) (அங்ஙனம் செயற்கைப் பொருளோடு இயைத்துரைக்கப் படும்) ஆக்கச் சொல் காரணத்தை முதலாகவுடையதாகும். என்றவாறு. (உ-ம்) எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் யாத்தமை யாற் பயிர் நல்லவாயின; கடுக்கலந்த கைபிழி யெண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லவாயின எனவரும். இயற்கைப் பொருள் ஆக்கமும் காரணமும் பெறாது வருதலும் செயற்கைப் பொருள் அவைபெற்று வருதலும் இலக்கணமெனவே, இவ்வாறன்றி வருவன மரபு வழுவென்பதாம். 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. இஃது எய்தியது விலக்கியது. (இ-ள்) (காரண முதற்று எனப்பட்ட) ஆக்கச் சொல் வழக்கினுள் காரணமின்றி வரினும் குற்றமின்று என்பர். என்றவாறு. போக்கு - குற்றம். (உ-ம்) பயிர் நல்லவாயின, மயிர் நல்லவாயின எனவரும். வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே செய்யுளுட் காரணம் பெற்றே வரும் என்பதாம். `செய்யுளுள் எனக் கிளந்தோதாதவழி அவ்விதி உலக வழக்கினையே நோக்குமாதலின், இச்சூத்திரத்தில் `வழக்கினுள் என விதந்துரைத்தல் வேண்டா. அம்மிகுதியான், செயற்கைப் பொருள் ஆக்கமும் காரணமும் இன்றி வருதலும் காரணம் கொடுத்து ஆக்கமின்றி வருதலும் என இரண்டுங் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். (உ-ம்) பைங்கூழ் நல்ல என ஆக்கமும் காரணமு மின்றியும், `எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் யாத்தமையாற் பைங்கூழ் நல்ல என ஆக்கமின்றியும் வந்தன. கிளவியாக்கத்தில் 20 முதல் 22 வரையுள்ள மூன்று சூத்திரங் களின் பொருளையும் 22-ஆம் சூத்திரத்திற்கு உரையாசிரியர் கூறிய விளக்கத்தினையும் வகைப்படுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 404. காரண முதலா ஆக்கம் பெற்றும் காரண மின்றி ஆக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியும் இயலுஞ் செயும்பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். காரணச் சொல்லை முன் கொண்டு ஆக்கச் சொல்லொடு வருவனவும், காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல்லொடு வருவனவும், ஆக்கச் சொல்லின்றிக் காரணச் சொல்லொடு வருவனவும், ஆக்கமும் காரணமுமின்றி வருவனவும் என்னும் இந்நான்கு திறத்தில் நடக்கும் செயற்கைப் பொருள்கள் என்பது இதன் பொருளாகும். செயும் பொருள் இயலும் என வினைமுடிபுசெய்க. செயும் பொருள் - செயற்கைப் பொருள். 23. பான் மயக்குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். இது திணையுணர்ந்து பால் ஐயந் தோன்றியவழி சொல் நிகழ்த்துவமாறு கூறுகின்றது. (இ-ள்) (திணைதுணிந்து) பால் துணியாது நின்ற ஐயப் பொருளைத் தானறிந்த அவ்வத் திணைப் பன்மையாற் கூறுக. என்றவாறு. கிளவி என்றது, ஈண்டுப் பொருளை. ஐயப் பொருளாவது சிறப்பியல்பால் தோன்றாது பொது வியல்பால் தோன்றிய பொருள். (உ-ம்) ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ ஆண்டுத் தோன்றுவார் எனவும், ஒன்றோ பலவோ செய்புக்கன எனவும் வரும். திணைவயின் என்னாது `தானறி பொருள் வயின் எனப் பொதுப்படக் கூறினமையால் `ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ கறவையுய்த்த கள்வர் எனவும், `ஒருத்தி கொல்லோ பலர் கொல்லோ இக் குருக்கத்தி நீழல் வண்டல யர்ந்தார் எனவும் திணையொடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மையொருமைப் பாலையமும் கொள்ளப்படும். ஒருமையாற் கூறின் வழுவாதல் கருதிப் பன்மை கூறல் என வழாநிலை போலக் கூறினாராயினும் ஒருமையைப் பன்மை யாற் கூறுதலும் வழுவாதலால் ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்த்துமாறு கூறிய முகத்தாற் பால் வழுவமைத்தது இச் சூத்திரம் என்பது சேனாவரையர் கருத்தாகும். 24. உருவென மொழியினு மஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலை. திணையையத்துக்கண்ணும் அஃறிணைப் பாலையத்துக் கண்ணும் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (தினையையந் தோன்றின வழி) வடிவு எனச் சொல்லக் கருதினும் ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணை யியற் பெயராகிய பொதுச் சொற்கண்ணும் இவ்விரு கூற்றினும் கருதியுணருங்கால் ஐயத்தைப் புலப்படுத்தும் பொதுவாகிய தன்மை உரித்து. என்றவாறு. உருவு - வடிவு. உருவினும் என்னாது உருவென மொழியினும் என்றமையால் அப்பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்பனவும் கொள்க. (உ-ம்) குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உருவு எனவரும். இது திணை ஐயம். ஒன்று கொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம் எனவரும். இஃது அஃறிணைப் பாலையம். ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ என்றற்றொடக்கத்து உயர்திணைப் பன்மை யொருமைப் பாலையத்திற்கு உருபு முதலாயின ஏலாமையும், திணையையத்திற்கும் ஏனைப் பாலை யத்திற்கும் ஏற்புடைமையும் சுட்டியுணர்க என்பது போதரச் சுட்டுங்காலை என்றார். என்பர் சேனாவரையர். சுட்டுதல் - கருதுதல். உருவென்பது உடலுயிர்க் கூட்டப் பொதுமை யாகிய மக்க ளென்னும் பொதுமைக்கு ஏலாது உடலையே உணர்த்து தலானும், பெற்றம் என்பது இயற்பெயராயினும் ஒருகாற் சொல்லுதற்கண் ஒரு பால் மேல் நில்லாது இருபால்மேல் நிற்றலானும் வழுவமைதியா யிற்று என்பர் நச்சினார்க்கினியர். 25. தன்மை சுட்டலு முரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. இஃது ஐயுற்ற பொருளைத் துணிந்த வழிச் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஐயத்திற்கு வேறாய்த் துணிபொருளிடத்து அன்மைச் சொல் அப்பொருளின் உண்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலும் உரித்து என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. வேறிடத்தான அன்மைக்கிளவி தன்மை சுட்டலும் உரித்து என மொழிப என இயைத்துப் பொருளுரைக்க. வேறிடம் என்றது, ஐயத்திற்கு வேறாய்த் துணிந்து தழீஇக் கொண்ட பொருளை. `குற்றியோமகனோ என ஐயந் தோன்றிய நிலையில் மகன் என்று துணிந்த வழி, குற்றியல்லன் மகன் எனவும், குற்றியென்று துணிந்த வழி மகனன்று குற்றி எனவும், ஒருவனோ ஒருத்தியோ இங்குத் தோன்றா நின்றார் என ஐயந் தோன்றிய நிலையில் ஒருவன் என்று துணிந்தவழி ஒருத்தி யல்லன் ஒருவன் எனவும், ஒருத்தியென்று துணிந்தவழி ஒருவனல்லள் ஒருத்தி எனவும், ஒன்றோ பலவோ செய்புக்க பெற்றம் என ஐயந் தோன்றிய நிலையில் ஒன்றென்று துணிந்த வழி பலவன்று ஒன்று எனவும், பலவென்று துணிந்த வழி, ஒன்றல்ல பல எனவும் துணியப்படும் பொருளின்கண்ணே அல்லாத தன்மையை வைத்துச் சொல்லுவர். `குற்றியல்லன் மகன் என்புழிக் `குற்றியின் அல்லன் என்று ஐந்தனுருபு விரித்துரைப்பர் இளம்பூரணர். ஐயுற்ற நிலையில் மறுக்கப்படு பொருளின் அன்மைத்தன்மையினைச் சுட்டுதற்குரிய அன்மைக் கிளவி, அதற்கு வேறாகிய துணியப் படு பொருள்மேல் நின்று அதன் மெய்த் தன்மையினைச் சுட்டி நிற்றலும் உண்டு என்பார், அன்மைக் கிளவி வேறிடத்தான தன்மை சுட்டலும் உரித்து என்றார். உம்மை இறந்தது தழீஇய எச்சமாதலால் குற்றியன்று மகன் என மறுக்கப்படு பொருளாகிய தன்னிடத்து அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலும் கொள்க. என்னை? அன்மைக் கிளவி வேறிடத்தான தன்மை சுட்டலும் உரித்து எனவே அன்மைக் கிளவி தன்னிடத்தான அன்மைத் தன்மையைச் சுட்டலும் உரித்து என்பதும் கொள்ளப் படுமாதலின் என்க. இனி `வேறிடம் என்பதனைத் துணியப் படும் பொருட்கு வேறாகிய மறுக்கப் படும் பொருள் எனக் கொண்டு, மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகன் எனவும் குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றி எனவும், ஆண் மகனென்று துணிந்தவழிப் பெண்டாட்டி யல்லள் ஆண்மகன் எனவும், பெண்டாட்டி யென்ற துணிந்தவழி ஆண்மகனல்லன் பெண்டாட்டி எனவும், ஒன்றென்று துணிந்தவழிப் பலவல்ல ஒன்றெனவும், பலவென்று துணிந்தவழி ஒன்றன்று பல எனவும் மறுக்கப்படும் பொருள்மேல் அன்மைக் கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றது என உதாரணங் காட்டுவர் சேனா வரையர். மறுக்கப்படும் பொருளின் அல்லாத தன்மையை யுடையது துணியப்படும் பொருளாதலால் அதன் மெய்த் தன்மையைச் சுட்டும் நிலையில் அதன் கண்ணே அன்மைக் களவியை வைத்துரைத்தலும் பொருந்தும் என்பதாம். திணை பால்களில் ஐயந்தோன்றிய வழியும் துணிந்த வழியும் சொல் நிகழுமாறு உணர்த்தும் இம்மூன்று சூத்திரப் பொருளையும் தொகுத்துக் கூறும் நிலையில் அமைந்தது, 375. ஐயந் திணைபால் அவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். திணைமேல் ஐயந்தோன்றியவழி அவ்விருதிணைக்கும் பொதுவாகிய சொல்லானும், பால்மேல் ஐயந்தோன்றியவழி அவ்வப் பால்களுக்குப் பொதுவாகிய சொல்லானும், இன்ன தென்று துணிந்த பொருள்மேல் அல்லாத தன்மையை வைத்தும் சொல்லுவர் ஆசிரியர் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) குற்றியோ மகனோ எனத் திணையையந் தோன்றிய வழிக் `குற்றியோ மகனோ அங்ஙனந் தோன்றா நின்றது - தோன்றா நின்றான் எனச் சிறப்புச் சொல்லாற் கூறின் திணை வழுவும் வினாவழுவுமாம். அவையொழித்துக் `குற்றியோ மகனோ அங்ஙனம் தோன்றா நின்றவுருவு எனப் பொதுச் சொல்லாற் கூறுக. அஃறிணையாகிய குற்றிக்கும் உயர்திணையாகிய மகனுக்கும் உருவு பொதுப்பட நின்றமையின் பொதுச் சொல்லாய் வழாநிலை யாயிற்று. ஆண் மகனோ பெண் மகளோ என உயர்திணைப் பாலையந் தோன்றியவழி `ஆண் மகனோ பெண் மகளோ அங்ஙனந் தோன்றா நின்றான் - தோன்றாநின்றாள் எனச் சிறப்புச் சொல்லாற் கூறிற் பால் வழுவும் வினாவழுவுமாம். அவை யொழித்து `ஆண்மகனோ பெண்மகளோ அங்ஙனந் தோன்றா நின்றார் எனப் பொதுச் சொல்லாற் கூறுக. ஆண் பெண் இரண்டல்லது பலர் பால் என வேறொன்றின்மையின் தோன்றா நின்றார் என்பது அவ்விரு பாற்கும் பொதுச் சொல்லாய் வழா நிலையாயிற்று. ஒன்றோ பலவோ என அஃறிணைப் பாலையந் தோன்றிய வழி `ஒன்றோ பலவோ இச்செய்புக்கது - புக்கன, எனச் சிறப்புச் சொல்லாற் கூறிற் பால்வழுவும் வினாவழுவுமாம். அவையொழித்து `ஒன்றோ பலவோ இச் செய்புக்க பெற்றம் எனப் பொதுச் சொல்லாற் கூறுக. மெய்தெரி பொருளாவது ஐயத்தினீங்கி இதுவெனத் துணிந்த பொருளாகும். குற்றியோ மகனோ என ஐயந்தோன்றிய நிலையில் மெய்தெரிந்த பொருள் குற்றியெனின் `மகனன்று எனவும், மகனெனிற் `குற்றியல்லன் எனவும், கூறுக. ஆண்மகனோ பெண்மகளோ என ஐயுற்ற நிலையில் துணிந்தபொருள் ஆண் மகன் எனிற் `பெண்மகளல்லன் எனவும், பெண்மகளெனின் `ஆண் மகனல்லள் எனவும் கூறுக. மெய் தெரியாப் பொருண்மேல் அல்லாத தன்மையினை வைத்து `மகனல்லன் குற்றி எனின் குற்றியென்னும் பயனிலைக்கு எழுவாய்தந்து `மகனல்லன் அவ்வுருக் குற்றி எனக் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறவே சொற்பல்குதல் என்னும் விடை வழுவாம். அவ்வழு வாராது `மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப என்றார். என விளக்குவர் சங்கர நமச்சிவாயர், `வேறிடத்தான எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு `ஐயத்திற்கு வேறாய்த்துணி பொருளிடத்து என இளம்பூரணர் கூறிய உரையினை `மெய் தெரி பொருள்மேல் எனப் பவணந்தி முனிவர் அவ்வாறே ஏற்றுப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். 24. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். இதுவும் ஒரு சொல்லுதல் வன்மை யுணர்த்துகின்றது. (இ-ள்) அடை, சினை, முதல் எனப்பட்ட மூன்றும் முறை மயங்காமல் வழக்கைப் பொருந்தி நடப்பன வண்ணச் சினைச் சொல். என்றவாறு. அடை என்பது ஒரு பொருளது குணம். சினை என்பது உறுப்பு. முதல் என்பது அவ்வுறுப்பினையுடை யழுதற்பொருள். வண்ணச் சினைச் சொல் - வண்ணச் சொல்லொடு தொடர்ந்த சினைச் சொல்லையுடைய முதற்சொல். வடிவு முதலாகிய பிற பண்புமுளவேனும் வண்ணப் பண்பினது வழக்குப் பயிற்சி நோக்கி வண்ணச் சினைச் சொல் என்றார். (உ-ம்) பெருந்தலைச் சாத்தன், செங்கால்நாரை எனவரும். தலைப்பெருஞ் சாத்தன்: கால்செந்நாரை என முறை மயங்கிவரின் மரபு வழுவாம். நடை - வழக்கு. வழக்கினுள் மயங்காது வருமெனவே செய்யுளுள் மயங்கி வரவும்பெறும் என்பதாம். அடை சினை முதல், என வரூஉம் மூன்றும் என்னாது, முறை என்றதனான் இருகுணம் அடுக்கி முதலொடு வருதலும், இருகுணம் அடுக்கிச் சினையொடு வருதலும் கொள்க. `முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல் சினையொ டடுக்கல் செய்யு ளாறே. என்பது புறச்சூத்திரம். (உ-ம்) இளம் பெருங்கூத்தன் எனவரும் வழக்கினுள், சிறுபைந்தூவிச் செங்காற்பேடை எனவரும் செய்யுட் கண். `இளம்பெருங் கூத்தன் என்றக் கால் இளமை பெருமையை நோக்கி நின்றதன்று, கூத்தன் என்னும் பெயரையே நோக்கி நின்ற தெனவுணர்க. என்பர் இளம்பூரணர். இச்சூத்திரப் பொருளையும் இவ்வுரை விளக்கத்தையும் அடியொற்றியமைந்தது, 402. அடைசினை முதல்முறை யடைதலும், ஈரடை முதலோ டாதலும் வழக்கியல்; ஈரடை சினையொடு செறிதலும் மயங்கலுஞ் செய்யுட்கே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றைச் சொல்லுங்கால், அடை, சினை, முதல் எனக் கிடந்த முறையே சொல்லுதலும், இரண்டு அடையை முதலுடனே சேர்த்துச் சொல்லுதலும் வழக்கினுள் இயல்பாம்; இரண்டு அடையைச் சினையொடு சேர்த்துச் சொல்லுதலும், வேண்டிய வாறு மயங்கச் சொல்லுதலும் செய்யுட்கண் இயல்பாம் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) பெருந்தலைச் சாத்தன், செங்கால், நாரை, நெட்டிலைத் தெங்கு எனவும், இளம் பெரு வழுதி, சிறுகருங் காக்கை எனவும் வழக்கினுள் வந்தவாறு. சிறு பைந்தூவியிற் செயிரறச் செய்த , கரு நெடுங்கண் தருங்காம நோயே எனவும், பெருந் தோட் சிறு மருங்குற் பேரமர்க்கட் பேதை எனவும் செய்யுளுள் மயங்கி வந்தன. இவற்றுள் அடைசினை முதல் முறையடைதலொன்றும் வழுவற்க எனக் காத்தலும் ஏனைய மூன்றும் அவ்வாறு நில்லாமையின் வழுவமைதியும் ஆகும். 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர் சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. இது, வழீஇ யமையுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (ஒருவன் ஒருத்தி என்னும்) ஒருவரைக் கூறும் பன்மைச் சொல்லும் (அஃறிணையுள்) ஒன்றனை உயர்திணைப் பன்மையாகச் சொல்லும் பன்மைச் சொல்லும் வழக்கினகத்து உயர்த்துச் சொல்லப்படுஞ் சொல்லாம். அவை இலக்கண முறையாற் சொல்லும் நெறியல்ல. என்றவாறு. உயர்சொல் - உயர்க்குஞ் சொல்; வினைத்தொகை. உயர் சொற்கிளவி என்பது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. ஒருவனையும் அவர் வந்தார் என்ப. ஒருத்தியையும் அவர் வந்தார் என்ப. ஒன்றனையும் அவர் வந்தார் என்ப. (உ-ம்) யாம் வந்தேம், நீயிர் வந்தீர், அவர் வந்தார் எனவரும். `இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்றதனான் இலக்கண மன்மையும், `வழக்கினாகிய உயர் சொற் கிளவி என்றதனான் வழுவன்மையும் கூறினார். கூறவே வழுவமைதி யென்றவாறாம். இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்றதனான் இலக்கணமையும், `வழக்கினாகிய உயர் சொற் கிளவி என்றதனான் வழுவன்மையும் கூறினார். கூறவே வழுவமைதி யென்றவாறாம். இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்ற மிகையால் உயர்திணையை அஃறிணை போலச் சொல்லுதலும், அஃறிணையை உயர்திணை போலச் சொல்லுதலும் உளவெனக் கொண்டு, (உ-ம்) `என் பாவை வந்தது, போயிற்று என ஒருத்தியையும், `என் அன்னை வந்தாள், போயினாள் என ஓர் ஆவினையும் காதன் மிகுதியான் இவ்வாறு கூறுதலுங் கொள்க. எனவும், இனி `வழக்கினாகிய என்றதனான், கன்னியெயில், கன்னிஞாழல் என்பன கொள்க எனவும் உதாரணங் காட்டி விளக்குவர் இளம்பூரணர். இவ்வாறு காதல் உயர்வு முதலியவற்றால் பாலும் திணையும் மயங்கி வழங்குதலை, 378. உவப்பினும் உயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பால்திணை யிழுக்கினும் இயல்பே. எனவரும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். உவப்பு, உயர்வு, சிறப்பு, செறல், இழிவு என்னும் இவ்வைந் திடத்தும் பாலும் திணையும் மயங்கி வருதலும் இயல்பாம் என்பது இதன் பொருள். (உ-ம்) தன் புதல்வனை `என் அம்மை வந்தாள் என்பது உவப்பின் ஆண்பால் பெண்பாலாயிற்று. ஒருவனை அவர் வந்தார் என்பது உயர்வின் ஒருமைப்பால் பலர்பாலாயிற்று. `தாயாகித் தலையளிக்கும் தண்டுறையூர என்பது சிறப்பின் ஆண்பால் பெண்பாலாயிற்று. `எனைத்துணையராயினும் என்னாந் தினைத் துணையுந், தேரான் பிறனில் புகல் என்பது செறலிற் பலர்பால் ஒருமைப் பாலாயிற்று. பெண்வழிச் செல்வானை நோக்கி `இவன் பெண் என்பது இழிவின் ஆண்பால் பெண் பாலாயிற்று. ஓர் ஆவினை `என் அம்மை வந்தாள் என்பது, உவப்பின் அஃறிணை உயர்திணையாயிற்று. `செந்தார்ப் பசுங் கிளியார் என்பது உயர்வினான் அஃறிணை உயர்திணையாயிற்று. `ஏவவுஞ் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர், போஓமளவு மோர் நோய் என்பது செறலின் உயர்திணை அஃறிணையாயிற்று. `இரவெதிர் கொள்ளா இருகாற் பசுவே, அரிய விரதம் அடங்கு தலில்லார் என்பது இழிப்பின் உயர்திணை அஃறிணையாயிற்று. 28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய வென்ப. இஃது, இட வழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்) செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல் ஆகிய நான்கு தொழிற்கண்ணும் நிலைபெறப் புலப்படாநின்ற அந்நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத் திற்கும் உரியவாய் வரும் என்றவாறு. இவ்வினைச் சொற்கள் நான்கும் விகுதியானன்றி முதனிலையாய் நின்ற நிலையிலேயே இடங்குறித்து நிற்றலுடைமையால் அம்மூவிடத்தும் உரிய என்றார் ஆசிரியர். அவை மூவிடத்திற்கும் உரியவாமாறு பின்வரும் இரண்டு நூற்பாக்களில் விரித்துரைக்கப்பெறும். 29. அவற்றுள் தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. இது, தருசொல் வருசொல் என்பன இடமுணர்த்துமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) தருசொல்லும் வருசொல்லுமாகிய இரண்டும் தன்மை முன்னிலையாகிய இரண்டிடத்திற்கும் உரிய என்றவாறு. எனவே இவை படர்க்கைக்கண் நிலைபெறத் தோன்றா என்பதாம். (உ-ம்) எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான் எனவும், என்னுழை வந்தான், நின்னுழை வந்தான் எனவும் இவை ஈரிடத்தும் வந்தன. தரப்படும் பொருளை யேற்பான் தானும் முன்னின்றானும் ஆகலானும், வரவுதொழில் தன்கண்ணும் முன்னின்றான் கண்ணுஞ் சென்று முடியதலானும், ஈற்றனன்றி முதனிலையால் இவ் விருசொல்லும் தன்மை முன்னிலைக் குரியவாயின. நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும், தன்மை, முன்னிலை படர்க்கை யென்னும், அம்மூவிடத்தும் உரிய; என மூன்றிடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவும் கொள்ளவைத்தமையான், பெருவிறல மரர்க்கு வென்றி தந்த எனவும், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது எனவும் மயங்கி வருவனவும் அமைக்கப்படும் என்பர் சேனாவரையர். 30. ஏனை யிரண்டும் ஏனை யிடத்தே இஃது ஏனையிரு சொற்களும் இடமுணர்த்துமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) செல்லுதலும் கொடுத்தலும் ஆகிய சொற்கள் படர்க்கையிடத்திற்கு உரியன என்றவாறு. (உ-ம்) அவன்கட் சென்றான்; அவற்குக் கொடுத்தான் எனவரும். செலவு தொழில் படர்க்கையான்கட் சென்றுறுதலானும், கொடைப் பொருள் ஏற்பான் படர்க்கையானாகலானும் ஈற்றான்னறி இவ்விரு சொல்லும் முதனிலையால் படர்க்கையிடத் திற்குரிய வாயின. இம்மூன்று சூத்திரப் பொருளையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 380. தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை எழுவா யிரண்டும் எஞ்சிய வேற்கும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். `தரல், வரல், கொடை, செலல் என்னும் இந்நான்கு சொல்லும் படர்க்கைக்கு ஆம். இவற்றுள் முற்கூறப்பட்ட தரல் வரல் என்னும் இரண்டும் எஞ்சி நின்ற தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆம் என்பது இதன் பொருளாகும். 31. யாதெவ னென்னு மாயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். இஃது, அறியாப் பொருள்மேற் சொல்நிகழ்த்தும் மரபு கூறுகின்றது. (இ-ள்) யாது எவன் என்னும் இரண்டு சொல்லும் (தெளிய) அறியப்படாத பொருளிடத்து வினவும் வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு. (உ-ம்) இச்சொற்குப் பொருள் யாது; இச்சொற்குப் பொருள் எவன் எனவரும். எவ்வகையாலும் அறியப்படாத பொருள்பற்றி வினாத் தோன்றாதாதலின், இங்கு அறியாப் பொருள் என்றது, பொது வகையால் அறியப்பட்டுச் சிறப்புவகையால் தெளிய அறியப் படாத பொருளை. யாவன், யாவள், யாவர், யா, யாவை, யாண்டு, யாங்கு என்பன திணையும் பாலும் இடமும் முதலாகிய சிறப்புவகை யாலும் சிறிதறியப்பட்ட பொருளன வாதலின், அவற்றைக் கூறாது, வழக்கினுள் பொதுவகையால் அறியாப் பொருள்வயின் வினாவாய் வரும் யாது எவன் என்னும் இவ்விரண்டினையே இங்கு எடுத்தோதினார் ஆசிரியர். 32. அவற்றுள் யாதென வரூஉம் வினாவின்கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலு முரித்தே. இஃது இறந்தது காத்தல் நுதலிற்று. (இ-ள்) மேற்குறித்த அவ்விரு சொற்களுள் யாது என்பது அறியப்ட்ட பொருட்கண் தோன்றிய ஐயத்தினை நீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து என்றவாறு. அறிந்த பொருள் - பொதுவகையானன்றிச் சிறப்பு வகையாலும் அறியப்பட்ட பொருள். (உ-ம்) நம் எருதைந்தனுள் யாது கெட்டது? எனவரும். உம்மை - எதிர்மறை; அறியாப் பொருள்வயின் செறியத் தோன்று தலே பெருவழக்கு என்பதாம். யாது எவன் என்னும் வினாச் சொற்களை ஆளுதல் பற்றிய இவ்விதி, சுருக்க நூலாதல்பற்றி நன்னூலில் இடம்பெற்றிலது. 33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். இது, வரையறையுடையது தொகை பெறுங்கால் வருவதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) (கேட்போரால்) இத்துணையென்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் வினைப்படு தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக. என்றவாறு. (உ-ம்) நம்பி கண்ணிரண்டும் சிவந்தன; தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் எனவரும். வினையோ அன்றிப் பெயரோ முடிக்குஞ் சொல்லொடு கூட்டி முடிக்கப்படுதலை ஈண்டு வினைப்படு தொகுதி யென்றாதாதலின், கண்ணிரண்டும் குருடு, எருதிரண்டும் மூரி என உம்மைபெற்றுப் பெயர் கொண்டு முடிவனவும் இச்சூத்திரவிதியின் பாற்படும். சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனாற் சினைமுதற் கிளவி யென்றாராயினும், சிறவாத பண்பு முதலா யினவும் இனைத்தென வறிந்தவழி உம்மைபெறுதல் கொள்ளப்படும். (உ-ம்) `சுவையாறும் உடைத்திவ் வடிசில் `கதியைந்து முடைத்திக் குதிரை எனவரும். 34. மன்னாப் பொருளும் அன்ன வியற்றே. இதுவும் ஒன்றற்கு வருவதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) இல்லாப் பொருளும் (இடமுங்காலமும் பொருளு முதலாயினவற்றுடன் சேர்த்து இன்மை கூறுதற்கண்) உம்மை கொடுத்துச் சொல்லப் பெறுதலாகிய அவ்வியல்பினை யுடையதாகும் என்றவாறு. (உ-ம்) `மன்னாப் பொருள் என்பதற்கு `இல்லாப் பொருள் எனப் பொருள் கொண்டு, பவளக் கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளுமில்லை என உதாரணங் காட்டுவர் இளம்பூரணரும் சேனாவரையரும். மன்னாமை நிலையாமையை உணர்த்துதலன்றி இல்லா மையை யாண்டும் உணர்த்தாமை கண்ட நாச்சினார்க்கினியர் மன்னாப் பொருள் - உலகத்து நிலையில்லாத பொருள் எனப் பொருள் கொண்டு `யாக்கையும் நிலையாது என உதாரணங் காட்டி, யாக்கையும் நிலையாது எனவே இளமையும் நிலையாது செல்வமும் நிலையாது என்னும் பொருள் உணர்த்தி எச்சவும்மை யாய் நிற்கும் எனவும், உம்மைபெறுத லொப் புமையான் முற்றும்மையோடு எச்சவும்மையை மாட்டெறிந்தார் எனவும் இச்சூத்திரப் பொருளை விளக்குவர். மன்னுதல் பொருத்தமும் மன்னாமை பொருந்தாமையும் எனப் பொருள் கொண்ட தெய்வச் சிலையார், `மன்னாப் பொருளும் அன்னவியற்றே எனவரும் இந்நூற்பாவுக்கு பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழ வேண்டுமிடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்ல வேண்டும் எனப் புதியதோர் பொருள் கூறியுள்ளார். வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும், பரமும் அனாதி, பதியும், பசுவும், பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும், பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க. `உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் எனவும், `நோயும் இன்பமும் எனவுங் கூறியவாறும் காண்க என்பது இந்நூற்பாவுக்குத் தெய்வச் சிலையார் காட்டிய எடுத்துக் காட்டும் விளக்கமும் ஆகும். 33, 34 ஆகிய இவ்விரு சூத்திரப்பொருளையும் இவற்றுக்கு அமைந்த இளம்பூரணர் உரையையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 398. இனைத்தென் றறிபொருள் உலகி னிலாப்பொருள் வினைப்படுத் துரைப்பின் உம்மை வேண்டும். என்னும் நன்னூற் சூத்திரமாகும். இத்துணைத் தென்று வரையறுத்து உணர்த்தப்படும் பொருளாதி எப்பொருள்களும் உலகின்கண் இல்லாத பொருள்களும் வினையொடு கூட்டிச் சொல்லுங்காலை உம்மை கொடுத்துச் சொல்லுக என்பது இதன் பொருளாகும். இச்சூத்திரத்தில் வரும் `உலகினிலாப் பொருள் என்னுந் தொடர் இளம்பூரணர் உரைக்குப் பொருந்த `உலகின் இல்லாப் பொருள் எனவும், நச்சினார்க்கினியர் உரைக்குப் பொருந்த `உலகின் நில்லாப் பொருள் எனவும் பிரித்தற்கேற்ற நிலையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தகுவதாகும். 35. எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். இது, மறித்துச் சொற்பல்காமைத் தொகுத்திறுக்கும் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) எவ்வகைப்பட்ட பொருளாயினும் தன்னுழையுள்ள தல்லனை இல்லையெனல் உறுமேயனின் அவன் கூறிய பொருளல்லாத (அதற்கினமாயுள்ள) பிறிதுபொருள் கூறி இல்லை என்க. என்றவாறு. தன்னுழை உள்ளதன் உண்மை கூறி, அவன் வினவிய பொருளின் இல்லாமையை யுணர்த்துக, என்பதாம். (உ-ம்) `பயறுளவோ வணிகீர் என வினவினால், அவன் வினவிய பயறு தன்பால் இல்லையாயின், அதற்கினமாய்த் தன் பாலுள்ள பிறிதாகிய உழுந்தினுண்மையைப் புலப்படுத்தும் முறையில் `உழுந்தல்லதில்லை என மறுமொழி கூறுக என்பதாம். `அல்லதில்லெனின் எனப் பொருள் பற்றி யோதினா ராகலின் அல்லதில்லெனும் வாய்பாடேயன்றி, உழுந்தன்றியில்லை. உழுந்தே யுள்ளது என அப்பொருள் படுவன எல்லாங் கொள்க `பிறிது பொருள் என்பதற்கு `யாதானும் ஒரு பொருள் என்றார் சேனாவரையர். `பயறுளவோ வணிகீர் என வினவினார்க்கு அஃதில்லை யென்பான், அப் பயற்றோடொத்த இனப் பொருளாகிய உழுந்து முதலிய தானியங்களைச் சுட்டி உழுந்தல்லதில்லை, கொள்ளல்ல தில்லை என இவ்வாறு கூறுதலே முறை. இவ்வாறன்றிப் `பயறுளவோ வணிகீர் என வினவினார்க்கு அதனொடு தொடர்பில்லாத வகையில் `பாம்புணிக் கருங்கல்லல்லதில்லை எனக் கூறின் பயற்றால் முடிக்குங்குறை அப் பாம்புணிக் கருங்கல்லால் முடித்தலாகாமையின் பொருந்தாது என்பர் நச்சினார்க்கினியர். 36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். இதுவும் ஓர் இறுத்தல் வகைமை உணர்த்துகின்றது. (இ-ள்) அல்லதில் லென்பான் ஒருவர் வினாயின் அப் பொருளையே சொல்லலுறுமே யெனின் (இன்ன தெனச்) சுட்டிக் கூறுக. என்றவாறு. (உ-ம்) இவையல்லது பயறில்லை; இப்பயறல்லதில்லை, எனவரும். வினாயினான் பயற்றின் நன்மையும் தீமையும் உணர்ந்து அதனைக் கோடற்கும் தவிர்தற்கும் வேண்டி, அவன் வினாய பொருளைச் சுட்டிக் கூறுக என்றார் ஆசிரியர். பண்டமாற்றின் கண் சொற்பல்காமைப் பொருட்டுச் சுருங்கக் கூறும் முறையினை அறிவுறுத்தும் இவ்விரு சூத்திரப் பொருளையும் தழுவி அமைந்தது, 405. தம்பா லில்ல தில்லெனின் இனனா உள்ளது கூறி மாற்றியும், உள்ளது சுட்டியும் உரைப்பர் சொற் சுருங்குதற்கே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருவன் ஒன்றை வினாவினால் அது தம்பக்கல் இல்லை யென்று உரைக்க வேண்டின், அவ்வினாயதற்கு இனமாய்த் தன்பக்கல் உள்ளதனைச் சொல்லி வினாயதனை இல்லையென்றும், உளதாயின் அதனை இத்துணையுண்டென்று சுட்டியும் சொல்லுவர் தொல்லோர், உரை பல்காமைக்கு என்பது இதன் பொருளாகும். 36. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள் வேறு படாஅ தொன்றா கும்மே. இதுவும் ஒரு சொல்லுதல் வகைமை உணர்த்துகின்றது. (இ-ள்) பொருளொடு புணராது நின்ற சுட்டுப் பெயராமே யெனினும், சுட்டுவதோர் பொருளிடத்து வேறுபட நில்லாமல் அப்பொருளையே உணர்த்தி நிற்கும். என்றவாறு. பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் என்றது, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்பனவற்றுள் ஒன்றை வரைந்துணர்த்தாது எல்லாப் பொருண்மேலும் செல்லும் தன்மையில் அமைந்த இது இவை முதலிய சுட்டுப் பெயர்களை. `இப்பயறு `இக்குதிரை என்றாற் போல்வன பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்களாம். (உ-ம்) `பயறுளவோ வணிகீர் என வினாயினார்க்கு, `இவையல்லது இல்லை என ஒருவன் சுட்டிக் கூறிய வழி `இவை என்னும் சுட்டு, பொருளொடு புணராச் சுட்டுப் பெயராகும். `இப்பயறல்லது இல்லை எனப் பொருளோடு புணர்த்திச் சுட்டிக் கூறவேண்டியவன் `இவையல்லது இல்லை எனச் சுட்டிய வழி, முன்கிடந்த பயறுகாட்டி, `இவை என்றானாகலின், இவை என்னும் சுட்டு `இப்பயறு என அப்பொருளை சுட்டி நிற்றல் காண்க. யானை நூல் வல்லானொருவன் காட்டுட் போந்தபொழுது ஓர் யானையின் அடிச்சுவட்டினைக் கண்டு, `இஃது பட்டத்து யானை யாதற் கேற்ற இலக்கணமுடைத்து என்ற நிலையில் `இஃது என்பது இன்ன பொருளெனப் பொருளொடு புணராத சுட்டாய்ப் பலவற்றுக்கும் பொதுவாய் நிற்பினும், சொல்லுவான் குறிப்பால் `இவ்வடிச் சுவட்டுக்குரிய யானை என்ற பொருளை யுணர்த்தி நிற்றலால், பொருள் வேறாகாது இவ்யானையெனச் சுட்டிக்கூறிய பொருளாய் அமைந்து நிற்றல் காண்க. 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க்கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். இஃது ஒரு பொருண்மேல் இரு பெயர் வருங்கால் வருவதொரு மரபு வழாநிலை யுணர்த்துகின்றது. (இ-ள்) இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினைகோடற்கு ஒருங்கு நிகழுங் காலந் தோன்றுமாயின் (உலகத்தார்) சுட்டுப் பெயரை முற்படக் கூறார் (சுட்டுப் பெயராகிய அச்சொற்கள்) இயற்பெயர்க்குப் பின்னாகக் கூறற்பாலன என்று சொல்லுவர் புலவர். என்றவாறு. இயற்பெயராவன கொற்றன் யானை என்றாங்கு இரு திணைக் கண்ணும் அவ்வப் பொருளைக்குறித்து இயல்பாய் வழங்கும் பெயர்கள். இயற்பெயரெனவே இருதிணைக்கண்ணும் இயன்று வரும் பெயரெல்லாம் அடங்கும். சுட்டுப் பெயராவன அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, வரும் சுட்டுப் பெயர்கள். வினையென்றது முடிக்குஞ்சொல்லை. வினைக்கு ஒருங்கு இயலுதலாவது, இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு பொருளையே குறித்த நிலையில் தனித்தனியாகவும் சேர்ந்தும் உருபேற்றும் வினைமுடிபினைப் பெற்றுவருதல். வழிய - பின்னிடத்தன. வழி- பின். இயற்பெயரும் சுட்டுப் பெயருமாகிய அவ்விரு பெயரும் ஒருங்கு வினைமுடிபினைப் பெற்றுவருங்காலந் தோன்றின் இயற்பெயரை முற்கூறிச் சுட்டுப்பெயரை அவ் வியற்பெயரின் பின்னர்க் கூறுக என்பது இந்நூற்பாவினால் அறிவுறுத்தப்பெறும் விதியாகும். (உ-ம்) சாத்தன் அவன் வந்தான்; சாத்தன் வந்தான் அவன் போயினான் எனவும், சாத்திவந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவும் வரும். இவ்வாறன்றி அவன் வந்தான் சாத்தன் போயினான் எனச் சுட்டுப் பெயரை இயற்பெயர்க்கு முற்கூறின், அவன் என்னுஞ் சுட்டு சாத்தனைச் சுட்டாது சாத்தனல்லாத மற்றொருவனைச் சுட்டியதாய் இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு பொருளைக் குறித்தன அல்லவாய் வேறுபடும் என்க. ஒரு பொருளைக் குறித்த இயற்பெயரும் சுட்டுப் பெயரும் பிறிது வினை கோடற்கண் இயற்பெயர் முன்னாக, அதன் பின் சுட்டுப்பெயர் வருதல் முறையெனவே, இவ்விரு பெயரும் அவன் சாத்தன், சாத்தன் அவன் என ஒன்றற்கொன்று பயனிலையாதற் கண்ணும், அவனும் சாத்தனும் வந்தார்; சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருளைக் குறித்தனவாய் வருதற் கண்ணும் இவற்றுள் எதனை முதற்கண் கூறினும் அமையும் என்பதாம். 39. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. இஃது எய்தியது விலக்குகின்றது. (இ-ள்) இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கு ஒருங்கு இயலும் வழிச் சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்து. என்றவாறு. (உ-ம்) அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல் பின்னை யதன் கண் விளைவு எனவரும் இதனுள் அவன் என்பது இயற்பெயர். இயற்பெயர்க்குமுன் சுட்டுப்பெயர் வருதல் வழுவாயினும் செய்யுளாதலின் அமைத்துக்கொள்ளப்பட்டது. 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். இது வழக்கின்கண் மரபுவழாநிலையும் செய்யுட்கண் வழுவமைதி யும் உணர்த்துகின்றது. (இ-ள்) சுட்டை முதலாகவுடைய காரணப் பொருண்மையை யுணர்த்துஞ் சொல்லும், சுட்டுப் பெயரையொத்துத் தன்னாற் சுட்டப்படும் பொருளையுணர்த்துஞ் சொற்குப் பின்னர்க் கூறப்படும். என்றவாறு. (உ-ம்) சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனாற் றந்தையுவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள், அதனாற் கொண்டானுவக்கும் எனவரும். முன் சுட்டுப் பெயர் என்றது, பொருள்வழி வந்த சுட்டினை எனவும், இங்குச் சுட்டு முதலாகிய காரணக் கிளவியென்றது பொருளது குணத்தின் வழிவந்த சுட்டினை எனவும் பகுத்துணர்த் துவர் இளம்பூரணர். இங்குச் சுட்டு முதலாகிய காரணக் கிளவி என்றது, சுட்டினை முதலாகக் கொண்டு ஏதுப்பொருளில் வந்த `அதனான் என்னும் சொல்லினை. இச்சொல் அதனை அதற்கு என்றாற்போன்று அதனான் என மூன்றாம்முருபு ஏற்று நின்ற சுட்டுப்பெயரோடொப்பதோர் இடைச் சொல்லாகும். இஃது இயற்பெயர் பொருளைச் சுட்டி நிற்கும் சுட்டுப் பெயர் போலாது, தொடர்மொழிப் பொருளைச் சுட்டி நிற்றலின், சுட்டுப் பெயரின் வேறெனவே கொள்ளப்படும் என்பார் `சுட்டுப் பெயரியற்கையிற் செறியத் தோன்றும் என்றார் ஆசிரியர். `செயற்கு என்னும் வினையெச்சம், (செயல் + கு = செயற்கு என) உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும், பகுப்பப் பிளவு பட்டிசையாது ஒன்று பட்டிசைத்தலான், அதனின் வேறாயினாற் போல, இதுவும் உருபேற்ற சுட்டுப் பெயரோடு ஒப்புமையுடைத் தாயினும் பிளவு பட்டிசையாது ஒன்று பட்டிசைத்தலான் வேறாகவே கொள்ளப்படும் என்பர் சேனாவரையர். சுட்டுப் பெயரியற்கை என்றது, வழக்கினத்துச் சுட்டப்படும் பொருளையுணர்த்துஞ் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளாயின் ஒரோவழி முன்னிற்றலும் ஆகிய அவ்வியல்பினை. தன்னின முடித்தல் என்பதனால் சுட்டு முதலாகிய காரணக் கிளவி போன்று தொடர்மொழிப் பொருளைச் சுட்டிவரும் சுட்டுப் பெயரும் வழக்கினகத்துச் சுட்டப்படும் பொருளை யுணர்த்துஞ் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளாயின் ஒரோவழி முன்னிற்றலும் கொள்ளப்படும். (உ-ம்) சாத்தன் வந்தான், அஃது அரசற்குத் துப்பாயிற்று என வழக்கின்கண் பின்னரும், `ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருக்குறள் - 642) எனச் செய்யுட்கண் முன்னரும் வந்தமை காண்க. மேற்குறித்த மூன்று சூத்திரப் பொருளையும் தொகுத்து வகைபெற விளக்கும் முறையில் அமைந்தது, 393. படர்க்கை முப்பெயரோ டணையிற் சுட்டுப் பெயர்பின் வரும் வினையெனிற் பெயர்க்கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். படர்க்கை யிடத்தனவாகிய உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப்பெயர் என்னும் மூவகைப் பெயரோடு சுட்டுப் பெயர் வினைக்கண் ஒருங்கு வருமாயின் அஃது அவ்வியற் பெயரின் பின்னே வரும்; பெயர்க் கண்ணாயிற் பின்னும் முன்னும் வரும் வழக்கினுள். செய்யுட் கண்ணாயின் இன்ன விடத்து என்னும் நியதியின்றி அப்பெயர்களுடனே பின்னும் முன்னும் வேண்டிய வாறு வரப்பெறும் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) நம்பி வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது, அதற்குப் புல் இடுக; சாத்தன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; சாத்தன் வந்தது, அதற்குப் புல் இடுக என வினைக்கட் சுட்டுப்பெயர் பின்னே வந்தது. சாத்தன் அவன், அவன் சாத்தன் எனப் பெயர்க்கண் ஈரிடத்தும் வந்தது. இவை வழக்கியல். செய்யுளாயின் `அவனணங்கு நோய் செய்தான் .......... சேந்தன் என இயற் பெயர்க்கு முன் வருதலும் அமையும். இவ்வாறன்றி நம்பியைச் சுட்டிய நிலையில் `அவன் வந்தான், நம்பிக்குச் சோறுகொடுக்க எனச் சுட்டுப் பெயரை வழக்கினுள் முற்கிளத்தல் வழு என்பதாம். 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதுவும், ஒருபொருள்மேல் இருபெயர் வருங்கால் வருவதொரு மரபுவழாநிலை யுணர்த்துகின்றது. (இ-ள்) வினைக்கு ஒருங்கு இயலும்வழிச் சிறப்பினாகிய பெயர்க்கும் இயற் பெயரை முற்படக் கூறார் பிற்படக் கூறுவர் உலகத்தார். என்றவாறு. வினைக்கு ஒருங்கு இயலுங்கால் என்பது அதிகாரத்தால் வருவித்துரைக்கப்பட்டது. ஈண்டுச் சிறப்பினாகிய பெயர் என்றது, மன்னர் முதலாயினாராற் பெறும் வரிசையினைக் குறித்த ஏனாதி, காவிதி முதலிய சிறப்புப் பெயர்களை. (உ-ம்) ஏனாதி சாத்தன், காவிதி கண்ணந்தை எனவரும். `பெயர் நிலைக் கிளவிக்கும் என்ற உம்மையால், தவம், கல்வி, உறுப்பு முதலாயினவற்றானாகிய பெயரும் இயற் பெயர்க்கு முன்னர்க் கிளத்தல் கொள்ளப்படும். (உ-ம்) முனிவன் அகத்தியன்; தெய்வப் புலவன் திருவள்ளுவன்; சோழன் நலங்கிள்ளி; குருடன் கொற்றன் எனவரும். இச்சூத்திரப் பொருளை அடியொற்றி யமைந்தது, 392. திணை நிலஞ் சாதி குடியே யுடைமை குணந் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். திணைப் பெயர் முதலான பெயர்களுடனே இயற்பெயரை இயைத்துச் சொல்லுங்கால், அவ்வியற் பெயரை முற் குறித்த பெயர்களுக்குப் பின்னே சொல்லுதல் சிறப்புடைத்து என்பது இதன் பொருளாகும். (உ-ம்) குன்றவன் குறவன், அருவாளன் அழகன், பார்ப்பான் மாடலன், கஞ்சாறூர்கிழான் கண்ணன், மெய்யன் வெண்காடன், நாடகி நம்பி என முறையே திணை, நிலம், சாதி, உடைமை, குணம், தொழில் பற்றிய பெயர்களின் பின்னாக இயற்பெயர் வந்தமை காண்க. ஏனையவற்றுக்கு உதாரணம் முன்னர்க் காட்டப் பெற்றன. 42. ஒரு பொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில் வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே. இஃது ஒருபொருள்மேற் பலபெயர் வருங்கால் மரபு வழாமைக் காக்கின்றது. (இ-ள்) ஒரு பொருளைக் குறித்துவந்த பலபெயர்ச் சொற்கள், ஒரு தொழிலே முடிபாகக் கூறாது, பெயர்தோறும் வேறுவேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒருபொருளவாய்ப் பொருந்தும் இடனுடைய அல்ல என்றவாறு. எனவே பல பெயர் அடுக்கிவரின் ஒருவினையான் முடித்தல் வேண்டும் என்பதாம். தொழில் வேறுகிளத்தலாவது, ஒரு பொருள் மேல் வரும் பல பெயர்களுக்கும் ஒருதொழிலே முடிபாகக் கூறாது வேறு வேறு முடிக்குஞ் சொல்லைத் தந்து கூறுதல், `ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என இவ்வாறு ஒரு தொழிலே முடிபாகக் கூறாது, `ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் உண்டான் செயிற்றியன் சென்றான் என வேறு வேறு தொழில் கிளந்தவழி, வந்தானும் உண்டானும் சென்றானும் ஒருவனாகாது வேறுவேறாவர் எனப் பொருள் வேறுபட்டு வழுவாம் ஆதலின் அவ்வாறு வழுவாமைக் காத்தது இச் சூத்திரம் எனவுணர்க. `எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக, மணாளன் வருக என்புழி, ஒருபொருள் குறித்த பலபெயர் தோறும் காதல் முதலியன பற்றி ஒரு தோழிலே பலகால் வந்த தல்லது வெவ்வேறு தொழில் வாராமையான், அத்தொடர் ஒரு தொழில் கிளந்ததெனவே கொள்ளப்படும். இச்சூத்திரப்பொருளை அடியொற்றி யமைந்தது, 391. ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒரு பொருளின்மேற் பலபெயர்கள் அடுக்கிவரின், அவற்றிற்கெல்லாம் ஈற்றிலே ஒரு வினையைக் கொடுப்பர். சிறுபான்மை பெயர் தோறும் ஒரு வினையைக் கொடுத்தும் வழங்குவர் பெரியோர் என்பது இதன் பொருள். எனவே பெயர்தோறும் வேறுவேறு வினையைச் கொடுத்தல் மரபன்று என்பதாம். ஒரோவழி - சிறுபான்மை. (உ-ம்) ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங் கண்ணன் சாத்தன் வந்தான் எனவும், `ஐயன் அணைந்தான் ஏனை ஆளும் அண்ணல் அணைந்தான், ஆரூரிற் சைவன் அணைந்தான், என் துணையாம் தலைவன் அணைந்தான் எனவும் வரும். இனி, `எந்தைவருக, எம்பெருமான் போக, மைந்தன் நிற்க, மதலை இருக்க எனப் பெயர்தோறும் வேறு வேறு வினை கொடுப்பின், அப்பெயர்கள் யாவும் ஒருபொருளவாய்ப் பொருந்தா என்பதாம். 43. தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். இது, திணைவழுக் காக்கின்றது. (இ-ள்) தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விரவி வருதலை நீக்கார் ஆசிரியர் என்றவாறு. தன்மைச்சொல் உயர்திணைச் சொல். தன்னைக் குறித்துச் சொல் நிகழ்த்தும் சொல்வன்மை உயர்திணை மாந்தர்க்கே யுரியதாதல்பற்றி உயர்திணைச் சொல்லைத் தன்மைச் சொல் என்றார். உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விரவி வந்து உயர்திணை முடிபு கொள்ளினும் அன்றி அஃறிணை முடிபு கொள்ளினும் வழுவா மாதலின் `மயங்கல் கூடா தம் மரபினவே என்னும் விதியால் அவ்விருதிணைச் சொற்களும் விரவியெண்ணப் படாமையும் உளப்படுத்தி முடித்தல் வழுவாமாகலால் தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி வந்து உயர்திணை முடிபு கொள்ளினும் அமையும் என இச்சூத்திரத்தால் ஆசிரியர் திணைவழுக் காத்தவாறு. (உ-ம்) யானும் என எஃகமுஞ் சாறும் எனவரும். இங்ஙனம் தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி யெண்ணுதற்கண் அவற்றை முடிக்குஞ்சொல்லாய் வருவது தன்மைப் பன்மைச் சொல் என்பது பன்மையுரைக்குந் தன்மைக் கிளவி, எண்ணியன்மருங்கிற் றிரிபவை யுளவே (தொல் - வினையியல் - 12) என மேல்வரும் சூத்திரத்தால் இனிது புலனாம். தன்மையாகிய உயர்திணையைச் சார்த்தி எண்ணப்படும் அஃறிணைச் சொல்லும் தன்மையாகிய உயர்திணை முடிபு பெறும் எனத் தொல்காப்பியர் கூறிய இவ்வழுவமைதி, தம்மைச் சொல் இருதிணைப் பொதுச் சொல்லாய் மாறிய தம் காலத்திற்கு இன்றியமையாததன்று எனக் கருதிய பவணந்தியார், உயர் திணையைச் சார்ந்துவரும் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய அஃறிணைச் சொற்கள் உயர்திணையொடு சார்த்தி யுரைக்குங்கால் உயர்திணை முடிபினவாய் வழங்கும் பிற்காலத்து வழக்கினை அமைத்துக் கொள்ளும் முறையில், 376. உயர்திணை தொடர்ந்த பொருண் முதலாறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின. எனச் சூத்திரஞ் செய்தார். உயர்திணையைச் சார்ந்து வரும் பொருளாதியாறும் அவ் வுயர்திணையொடு சார்த்தி முடிப்பின் உயர்திணை முடிபினவாம் என்பது இதன் பொருள். (உ-ம்) நம்பி பொன்பெரியன், நாடு பெரியன், வாழ்நாள் பெரியன், கண்பெரியன், குடிமை நல்லன், செலவு நல்லன் என உயர்திணை சார்ந்த பொருளாதியாறும் உயர்திணைமுடிபு பெற்றன. இவ்வாறு உயர்திணையைச் சார்த்தாது தனித்துக் கூறும் வழி, நம்பிக்குப் பொன் பெரிது, நாடு பெரிது, வாழ்நாள் பெரிது, கண் பெரிது, குடிமை நன்று, செலவு நன்று எனத் தமக்குரிய அஃறிணை முடிபே பெறும் என்பதாம். 44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. இது மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்) ஒருமையெண்ணினை யுணர்த்தும் பொதுமை யினின்றும் பிரிந்த பாற் சொற்களாகிய ஒருவன் ஒருத்தி என்னும் சொற்கள் இருமை முதலாகிய எண்ணு முறைக்கண் நில்லா. என்றவாறு. ஒருமையெண்ணினையுணர்த்தும் பொது என்றது, உயர்திணைக்கண் ஆணொருமையினையும் பொண்ணொருமை யினையும் உணர்த்துவதாய், அவ்விருபாற்கும் பொதுவாய் நின்ற ஒருவர் என்னும் சொல்லின் அர் விகுதி. பொதுப்பிரி பாற்சொல் என்றது ஒருவர் எனப் பலர்பாற்குரிய அர் ஈற்றதாய் நின்ற அப்பொதுமையினின்றும் பிரிந்து ஒருவன் என ஆண்பாலையும் ஒருத்தி எனப் பெண்பாலையும் சுட்டி நிற்கும் அன் விகுதியினையும் இகர விகுதியினையும் பொதுப்பிரி பாற்சொல்லாகிய இவற்றின் பாலுணர்த்தும் ஈறாகிய அர் விகுதி இருவர்மூவர் என எண்ணு முறைக்கண் நிற்கும் என்பதாம். மகன், மகள் என்னுந் தொடக்கத்துப் பெயர்ப் பொதுப் பிரி பாற்சொல்லின் நீக்குதற்கு `ஒருமையெண்ணின் என்றும், ஒருவர் ஒன்று என்பனவற்றின் நீக்குதற்குப் `பொதுப்பிரிபாற் சொல் என்றும் அடைபுணர்த்தோதினார். ஒருவன், ஒருத்தி என்பன ஒரு வர் என்னும் ஆண்மைப் பெண்மைப் பொதுவினின்றும் பிரிந்து நின்று ஆண்பாலையும் பெண்பாலையும் வரைந்துணர்த்துவன வாதலின் அவை பொதுப்பிரிபாற் சொல்லாயின. `பொதுப்பிரிபாற் சொல் எனச் சொல் என்னும் ஒற்றுமையால் `நில்லாது என ஒருமையாற் கூறினார். ஒருவன் ஒருத்தி என ஒருமைக்கண் நிற்றலும், இருவன், மூவன், இருத்தி, முத்தியென எண்ணு முறைக்கண் நில்லாமையும் கண்டு கொள்க என்றார் சேனாவரையர். இச்சூத்திரப் பொருளைத் தெளிய விளக்கும் முறையில் அமைந்தது, 287. ஒருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றென முடித்தல் என்பதனால் ஒருவேன், ஒருவை என்னுந் தன்மை முன்னிலையீறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க. 45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார் இது திணைவழு அமைக்கின்றது. (இ-ள்) வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர் திணைவிராய் வருதலை நீக்கார் (ஆசிரியர்). இங்கு எண்ணுப் பெயர் என்றது தொகைபெற்றே வரும் எண்ணல்லாத உம்மையெண்ணும் எனவென் எண்ணும் எனக் கொள்வர் இளம்பூரணர். (உ-ம்) ஆவும் ஆயனும் செல்க எனவரும். செல்க என்னும் வியங்கோள் இருதிணையினையும் முடித்தற்குரிய பொது வினையாய் வழுவற்றதாயினும் ஆவாகிய அஃறிணை செல்க என்னும் ஏவற்றொழிலை முற்றமுடியாமை கருதி வழுவமைத்தார் என்பர் நச்சினார்க்கினியர். இவ்விதி நன்னூலிற் கூறப்பெற்றிலது. 46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். இது மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்) வேறுபட்ட பல வினையினையுடைய பல பொருட்குப் பொதுவாகிய பெயரை ஒரு வினையாற்கூறார். எனவே அவற்றையுள்ளடக்கி நிற்கும் பொதுவினையாற் கூறுவர் என்றவறாம். வேறு வினைப் பொதுச் சொல்லாவன வேறுவேறு வினைகளையுடைய பல பொருட்கும் பொதுவாயமைந்த அடிசில், அணிகலம், இயம், படை முதலிய பொதுச் சொற்கள். அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும் நால்வகை வினைக்கும், அணியென்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னுந் தொடக்கத்தன வற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன ஊதுவன எழுப்புவன என்னுந் தொடக்கத்தன வற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும் பொதுவாகலின் அவ்வாறே அடிசில் அயின்றார், மிசைந்தார் எனவும் அணி அணிந்தார், மெய்ப்படுத்தினார் எனவும், இயம் இயம்பினார், படுத்தார் எனவும், படை வழங்கினார், தொட்டார் எனவும் பொது வினையாற் கூறுக என்பதாம். இவ்வாறன்றி அடிசில் தின்றார், பருகினார்; அணி கவித்தார், பூண்டார் என ஒரு சார்க்குரிய வேறு வினையாற் சொல்லின் மரபு வழுவாம் ஆதலின் இச்சூத்திரத்தால் மரபு வழாமைக் காத்தவாறு. 47. எண்ணுங் காலு மதுவதன் மரபே. இதுவும் அது. (இ-ள்) வேறுவினைப் பொருள்களைப் பொதுச்சொல்லாற் கூறாது பிரித்து எண்ணுமிடத்தும் அதன் இலக்கணம் வேறு வினையாற்கிளவாது பொதுவினையாற் கிளத்தலே யாம். என்றவாறு. எண்ணுங்காலும் அதன் மரபு அது என இயையும். (உ-ம்) சோறும் கறியும் உண்டார்; யாழுங் குழலும் இயம்பினார் எனவரும். இவ்விரு சூத்திரப் பொருளையும் தழுவியமைந்தது, 388. வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வெவ்வேறு வினைகட்குரிய பல பொருள்களையும் தழுவிநிற்கும் ஓர் பொதுச் சொல்லும், அவற்றின் சிறப்புச் சொற்களாய் எண்ணப்பட்டு நிற்கும் பல சொல்லும் ஒன்றற்குரிய சிறப்புவினை வேண்டாது எல்லாவற் றிற்கும் உரியதோர் பொதுவினை வேண்டுவனவாம் என்பது இதன் பொருள். உதாரணம் மேற்காட்டப்பட்டன. 48. இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந் திசையா. இதுவும் அது. (இ-ள்) இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலிற் பிரிந்து நில்லா. என்றவாறு. (உ-ம்) சுரு சுருத்தது; மொடு மொடுத்தது என இசை பற்றியும், கொறு கொறுத்தார்; மொறு மொறுத்தார் எனக் குறிப்புப் பற்றியும், குறுகுறுத்தது; கறுகறுத்தது எனப் பண்பு பற்றியும் இரட்டித்து வந்தன பிரிந்து நில்லாமை கண்டுகொள்க. கறுத்தது கறுத்தது; குறுத்தது குறுத்தது என்றாங்குச் சொல் முழுதும் வாராமையின் இவை அடுக்குத் தொடரன்மை யறிக. ஈண்டு இரட்டைக்கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கி ரட்டை போல வேற்றுமை யுடையன வற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையு முடையனவற்றை என விளக்கம் தருவர் சேனாவரையர். இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கல் மரபன்மையின், மரபு வழுக்காத்தவாறு. இந்நூற் பாவை, 395. இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா. என இவ்வாறே எடுத்தாளுவர் பவணந்தி முனிவர். 49. ஒரு பெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத் தெரிபு வேறுகிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். இதுவும் அது. (இ-ள்) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொற்களைச் சொல்லுங்கால், அங்குள்ள பொருளெல்லாம் எடுத்துச் சொல்லாது, தலைமையும் பன்மையும் பற்றி (அவற்றுள் ஒன்றை)த் தெரிந்து கொண்டு வேறாகச் சொல்லுக. என்றவாறு. சேரி என்பது பல குடும்பத்தார் சேர்ந்து வாழும் இடம். ஆயினும் அங்குப் பார்ப்பனக்குடிகள் சில முதன்மைபெற்று விளங்குதல் பற்றி அதனைப் பார்ப்பனச் சேரி என வழங்குவர். இது தலைமை பற்றிய வழக் கெனப்படும். இனி அங்குப் பெரும் பான்மையராக வாழ்வோர் வடுகராதல் பற்றி அதனை வடுகச் சேரி என வழங்குதல் உண்டு. இது பன்மை பற்றிய வழக்கெனப்படும். பலமரங்கள் தொக்கது தோட்டம். அதன்கண் பிற புல்லும் மரமும் உளவாயினும் அங்குக் கமுகு முதன்மையாக வளர்ந் துள்ளமை பற்றிக் கமுகந் தோட்டம் என வழங்குவர். இது தலைமை பற்றிய வழக்கெனப்படும். மாமரங்கள் நிறைந்துள்ள தோட்ட மாயின் மாந்தோட்டம் என வழங்குவர். இது பன்மை பற்றிய வழக்கெனப்படும். இனி, பார்ப்பார் பலராக வாழுமிடத்தைப் பார்ப்பனச்சேரி யெனவும், கமுகுகள் பலவாக வுள்ள தோட்டத்தைக் கமுகந் தோட்டம் எனவும் வழங்கின் அதுவும் பன்மை பற்றிய வழக்கெனப்படும். ஈண்டுப் பொதுச் சொல் என்றது பலபொரு ளொருசொல் லன்றிச் சேரி தோட்டம் என்றாற் போன்று ஒரு பொருள் குறித்த பெயரே என்பார், ஒரு பெயர்ப் பொதுச் சொல் என அடை கொடுத்தோதினார். ஒன்றென முடித்தல் என்பதனால் பொதுச் சொல் அல்லாதனவும் தெரிந்து வேறு கிளத்தல் கொள்ளப்படும். ஓரிடத்து உள்ள பொரு ளெல்லாம் எடுத்துரையாது அவற்றுள் ஒன்றை மட்டும் தெரிந்தெடுத்துரைத்தல் இலக்கண மன்றாயினும் மரபு பற்றி அமைத்துக் கொள்க எனக் கூறுதலின் இச்சூத்திரம் மரபுவழுக் காத்தலாயிற்று. 50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்கு வழிப் பட்டன. இதுவும் அது. (இ-ள்) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரினாலும் வினையினாலும் பொதுமையிற் பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய் வருவன வெல்லாம் வழு வாகா; வழக்கு வழிப்பட்டன வாகலான். என்றவாறு. மேற் சூத்திரத்திலுள்ள `உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. பெயரினாலும் தொழிலினாலும் பிரிபவை எனப்பட்டவை, இருதிணையிலும் ஆண் பெண் இருபால்களுள் பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும் என இருவகைப்படும். பெருந்தேவி கருவுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் பணிமக்கள் உளர் என்புழி மக்கள் என்பது பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். திருதராட்டிரன் மக்கள் நூற்றுவரையுடையன் என்புழி மக்கள் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். பதின்மர் இவ்வயலிற் களைபறித்தார் என்புழிக் களைபறித்தார் என்பது தொழிலிற் பிரிந்த ஆணொழிமிகுசொல். பதின்மர் இவ்வயலில் உழுதார் என்புழி உழுதார் என்பது தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். இவை உயர்திணைக்கண் பெயரினும் தொழிலினும் பிரிந்தன. இவ்வேந்தன் ஆயிரம் யானையுடையன் என்புழி யானை என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். கண்ணன் நூறு எருமையுடையன் என்புழி எருமை என்பது பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இப்பெற்றம் உழுதன என்புழி உழுதன என்பது தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். இப்பெற்றம் நிறையக் கறக்கும் என்புழிக் கறக்கும் என்பது தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இவை அஃறிணைக்கண் பெயரினும் தொழிலினும் பிரிந்தன. இங்குக் காட்டப்பட்ட பெயரும் தொழிலும் ஆண் பெண் இருபாற்கும் பொதுவாயினும் இவை பிறசொல்லானன்றித் தாமே பிரிந்து குறிப்பினான் ஒருபாற்கண் வழங்குதல் உலகவழக்கிற் காணப்படுதலின் `மயங்கல் கூடா வழக்கு வழிப்பட்டன என்றார் ஆசிரியர். இத்தொல்காப்பிய நூற்பாவின் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது, 351. இருதிணை யாண்பெணு ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். உயர்திணை அஃறிணை என்னும் இருதிணையிலும் ஆண் பெண் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் அவ்விருபாலுள் ஒருபாலைக் குறிப்பினால் ஒழிக்கும் என்பது இதன் பொருளாகும். 51. பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. இது திணை வழு அமைக்கின்றது. (இ-ள்) திணை விரவி எண்ணப்பட்ட பெயர் செய்யுள கத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும் என்றவாறு. எண்ணுத்திணை விரவுப் பெயர் - உயர்திணையும் அஃறிணையுமாக விரவி எண்ணப் பட்ட பெயர்கள்; செய்யுளுள் பலவயினானும் அஃறிணை முடிபின என இயையும். பல வயினானும் - பெரும் பான்மையும். (உ-ம்) வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய் எருமை என்றிவை யாறும் எனவும், கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ் பரிய கலிமாவும் நெடுங் கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும் என நான்குடன் மாண்டதாயினும் எனவும் திணைவிரவி அஃறிணை முடிபு பெற்றன. எண்ணுத் திணை விரவுப் பெயர் பெரும் பான்மையும் அஃறிணைச் சொற் கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை உயர்திணைச் சொற் கொண்டு முடியவும் பெறும் என்பதாம். (உ-ம்) பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் மூத்தோர்குழவி எனுமிவரைக் கைவிட்டு எனவும் பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப் பெண்டிர் என்றிவர்கட்கு எனவும் திணை விரவிச் சிறுபான்மை உயர்திணைச் சொற் கொண்டு முடிந்தன. திணை விரா யெண்ணி அஃறிணையானும் உயர்திணை யானும் முடிந்தது, தலைமை பற்றியும், பன்மை பற்றியும், இழிவு பற்றியுமென உணர்க என விளக்குவர் நச்சினார்க்கினியர். இந்நூற்பாவின் பொருளையும், `இதன்கண் பலவயினானும் என்ற சொல்லாற்றல் கொண்டு உரையாசிரியர்கள் உய்த்துணர்ந்து கூறியதனையும் தொகுத்து நோக்கி, அவை அங்ஙனம் ஒரு முடிபு கோடற்குச் சிறப்பும் மிகுதியும் இழிபும் காரணமாதலை விளக்கி, 377. திணை பால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே. என்ற சூத்திரத்தால் வகுத்துக் கூறினார் நன்னூலார். திணையும் பாலும் பல பொருளும் தம்முள் விரவி நின்றவழிச் சிறப்பினாலும் மிகுதியினாலும் இழிப்பினாலும் அவற்றுள் ஒன்றனைக் கொண்டு முடியும் என்பது இதன் பொருள். (உ-ம்) அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் எனத் திணைவிரவிச் சிறப்பினான் உயர்திணை முடிபேற்றன. நன்பாற் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை எனத்திணை விரவி மிகுதியினான் உயர்திணை முடிபேற்றன. நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல்...... .g நட்ட வியன்களம் பலகொல் யா . கொல்லோ பெரும (புறநா - 15) எனத் திணை விரவிச் சிறப்பினான் அஃறிணை முடிபேற்றன. `மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடா என இழிபினான்அஃறிணை முடிபேற்றன. `தொல்லைநால் வகைத்தோழருந் தூமணி நெடுந்தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன்தாதையுஞ் செழுநக ரொடுவளநாடும் வல்லை தொக்கது வளங்கெழு கோயிலு ளொருங்கே. எனத் திணைவிரவிச் சிறப்பினான் ஒருமை முடிபேற்றன. `நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் என ஆண்பாலும் பெண்பாலும் விரவிச் சிறப்பினான் ஒரு முடிபேற்றன. தானுந்தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் என்றாற் போல்வன தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் உடன் முடிந்ததோர் முறைமைபற்றி வந்தன என்பர் சேனாவரையர். 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலேன் றாயிரு வகைய பலபொரு ளொருசொல். இது, பல பொருளொரு சொல்லின் வகைமை உணர்த்துகின்றது. (இ-ள்) வினையால் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும் வினையால் வேறுபடாத பலபொருள் ஒருசொல்லும் என பல பொருள் ஒரு சொல் அவ்விருவகைப்படும் என்றவாறு. வேறுபடுத்தற்கண் வினையேயன்றி இனமும் சார்பும் உளவேனும் வினை சிறப்புடைமையின் அதனாற் பெயர் கொடுத்தார். அவற்றுள், 53. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. இது, வினை வேறுபடும் பல பொரு ளொரு சொல்லாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த அவ் விரண்டனுள்ளும் வினையால் வேறுபடும் பலபொரு ளொருசொல், பொருள் தெரியுங் காலத்து ஒரு பொருட்கே சிறந்த வினையாலும் இனத்தாலும் சார்பாலும் பொதுமை நீங்கிப் பொருள் தெளியத் தோன்றும், என்றவாறு. வேறுபடு வினை என்றது, ஒரு பொருட்கே சிறந்த வினையினை. இனம் என்றது, ஒரு சாதிக்கண் அணைந்த சாதியினை. சார்பு என்றது, ஒருவாற்றான் இயைபுடையதனை. மா, வேங்கை என்பன பல பொருளொரு சொல். மா காய்த்தது, வேங்கை பூத்தது என்ற வழி, காய்த்தல் பூத்தல் என்ற வினையால் மரம் என்பது அறியப்பட்டது. மா ஓடிற்று, வேங்கை பாய்ந்தது என்ற வழி ஓடுதல், பாய்தல் என்னும் வினையால் விலங்கு என்பது அறியப் பட்டது. மாவும் மருதும் ஓங்கின; வேங்கையும் ஞாழலும் வளர்ந்தன என்றவழி இனத்தினால் மரம் என்பது அறியப்பட்டது. இத் தோட்டத்தில் நூறு மா உள என்ற வழி மரம் என்பது சார்பினால் அறியப்பட்டது. இப் போர்க்களத்து நூறு மா உள என்றவழி விலங்கு என்பது சார்பினால் அறியப்பட்டது. `வேறு படுவினையினும் என்றாரேனும் ஒன்றென முடித்தல் என்பதனால் வேறு படுக்கும் பெயரும் கொள்ளப்படும். இம் மா வயிரம், இம் மா வெளிறு என்றவழி வயிரம் வெளிறு என்னும் பெயர்கள் மா என்னும் பல பொரு ளொரு சொல்லின் பொதுமை நீக்கி மரத்தினை வரைந்துணர்த்துதல் இங்கு அறியத் தகுவதாகும். 54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும். இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) வினையினால் வேறுபடும் பல பொருளொரு சொல் வேறுபடு வினையின்றிப் பொதுவினையைக் கொள்ளுங்கால் (இனம் சார்பு முதலிய) பிறிதொரு சொல்லொடு பொருந்திப் பொருள் தோன்றும் என்றவாறு. ஒன்றுவினை என்றது பல பொருள்களோடும் பொருந்துதற் கியைந்த பொதுவினையை. ஒன்றித் தோன்றுதலாவது பிறிதொரு சொல்லுடன் பொருந்திப் பொருள் புலனாதல். (உ-ம்) மா வீழ்ந்தது என்றவழி இன்ன மா என்பது அறியலா காமையின், யானை முறித்தலால் வீழ்ந்தது என்ற வழி மரம் என்பதும், அம்பு தைத்தலால் வீழ்ந்தது என்றவழி விலங்கு என்பதும் புலனாயினவாறு காண்க. இனி, இதனைத் தனிச் சூத்திரமாகக் கொள்ளாது வினை வேறுபடாப் பல பொருளொரு சொல்லின் இலக்கண முணர்த்திய தொடராகக் கொண்டு பின்வரும் அடுத்த சூத்திரத்துடன் இயைத்துப் பொருளுரைப்பர் சேனாவரையர். வினை வேறுபடாப் பல பொருளொரு சொல் என வேறு நிற்பன இல்லை; வேறுபடு வினை முதலாயினவற்றான் வேறுபடுவனதாமே பொதுவினை கொண்ட வழி வினைவேறுபடாப் பலபொருளொரு சொல்லாம் என்பது அறிவித்தற்கு `ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும் என்றார் என்பது சேனாவரையர் தரும் விளக்கமாகும். வேறுபடு வினையாகிய சிறப்பு வினையினால் பொருள் வாங்கித் தோன்றும் பலபொரு ளொருசொல்லே பல பொருட்கும் பொதுவாகிய பொதுவினை கொண்டவழி வினை வேறுபடாப் பலபொருளொரு சொல்லாம் என்பது இதனாற் பெறப்படும் என்பர் சேனாவரையர். 55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இது, வினை வேறுபடாப் பலபொரு ளொருசொல்லாமாறு கூறுகின்றது. (இ-ள்) வினையான் வேறுபடாத பல பொருளொரு சொல் ஆராயுமிடத்து இன்னது இது என எடுத்துக் கூறப்பட்டு நடக்கும் என்றவாறு. கன்று என்பது ஆவின் கன்று, எருமைக் கன்று, தென்னங் கன்று முதலியவற்றைக் குறித்து வழங்கும் பல பொருளொரு சொல்லாகும். கன்று நீரூட்டுக என்றவிடத்து ஆவின்கன்று எருமைக்கன்று தென்னங்கன்று என்பன ஆங்குளவாயின் கேட்டார் இன்ன கன்ற என்பதனை அறியவியலாத ஆராய்ச்சி நிலையில் இன்ன கன்று என அடைமொழியுடன் இயைத்து எடுத்துக் கூறுதல் வேண்டும் என்பதாம். நினையுங்காலை என்பதனால் கேட்டார் நினைய வேண்டாத தெளிவு நிலையில் கிளந்தோதுதல் வேண்டா என்பதாம். நினையுங்காலை என்பதனால் கேட்டார் நினைய வேண்டாத தெளிவு நிலையில் கிளந்தோதுதல் வேண்டா என்பதாம். நினைதல் - ஆராய்தல். கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறார் என்றவழிக் கிளத்தல் வேண்டாவாயினவாறு காண்க. ஆங்கு என்பது உரையசை. இனி இச்சூத்திரத்தினை மேலைச் சூத்திரத்தோடு இணைத்து ஒரு சூத்திரமாக்கி, வினைவேறுபாடும் பல பொருளொரு சொல்லாகிய `மா என்பதுதானே `வீழ்ந்தது என்னும் பொது வினை கொண்டவழி வினை வேறுபடாப் பல பொருளொரு சொல்லாம் எனவும், அதனை விளங்கக் கூறுதல் வேண்டின் மாமரம் வீழ்ந்தது எனக் கிளந்து கூறுதல் வேண்டும் எனவும் இச் சூத்திரத்துக்குச் சேனாவரையர் கூறும் உரை, வினை வேறுபடாப் பல பொருளொரு சொல் என்பதொன்று இல்லை எனப்பட்டு ஆயிரு வகைய பல பொருளொரு சொல் (தொல்- கிளவி - 52) என்னும் ஆசிரியர் கூற்றொடு மாறுபடும் என மறுப்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் வினையினாலும் சார்பினாலும் இனத்தினாலும் இடத்தினாலும் பொதுமை நீங்காப் பலபொரு ளொருசொற்களை அவற்றிற்கேற்ற சிறப்பொடுங் கூட்டிச் சொல்லுதல் வேண்டும் என அறிவுறுத்தும் இம்மூன்று சூத்திரப் பொருள்களையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 389. வினை சார் பின்மிட மேவி விளங்காப் பலபொருளொருசொற் பணிப்பர் சிறப்படுத்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 56. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி. இது மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்) ஒரு பொருளின் வேறுபாடு குறித்தோன் அஃது ஆற்றல் முதலாயினவற்றால் விளங்காதாயின் அதனைத் தெரித்துச் சொல்லுக. என்றவாறு. (உ-ம்) `அரிதாரச் சாந்தங் கலந்தது போல உருகெழத் தோன்றி வருமே - முரு குறழும் அன்பன் மலைப் பெய்த நீர் எனவும், `வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த நாண்மலரால் நாறு மருவி நளிமலை நன்னாட எனவும், அருவியின் நிறமும் மணமுமாகிய வேறுபாட்டினைக் குறிக்குமிடத்து அவற்றின் காரணத்தை முறையே தெரித்துச் சொல்லியவாறுணர்க. `வடநூலார் இதனை நேயம் என்ப எனக் குறிப்பிடுவர், சேனாவரையர். உலகினுள் ஒப்ப முடிந்த பொருளை ஒருவன் ஒவ்வாமை சொல்லுமே எனின், இது காரணத்தின் ஒவ்வாமை நோக்கிச் சொல்லினேன் என்று தெரித்துச் சொல்லுக என இச் சூத்திரத்திற்குப் பொருள் வரைந்து. `பல்லார் தோள் தோய்ந்து வருதலாற் பூம்பொய்கை நல்வய லூரநின் தார்புலாஅல் - புல்லொருக்கம் மாசின் மணிப் பூணெம் மைந்தன் மலைந்தமையாற் காதற்றாய் நாறும் எமக்கு என உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். இதனைக் `காரண முதலா ஆக்கம் பெற்றும் (நன்னூல் - பொது - 54) என்ற சூத்திரத்துள் அடக்குவர் மயிலைநாதர். 57. குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே. (இ-ள்) காலம் முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத் தன்மைய பிறவுமாகிய அவ்வுயர்திணைக்கண் வருஞ்சொல் லெல்லாம் உயர்திணைச் சொல்லாயினும் உயர்திணைக்கண் பால் பிரிந்து இசையா; அஃறிணைப் பாலாய் இசைக்கும் என்றவாறு. (உ-ம்) காலம் ஆயிற்று; உலகம் உணர்ந்தது; உயிர் பிழைத்தது; உடம்பு நுணுகிற்று; தெய்வம் செய்தது; வினை விளைந்தது; பூதம் புடைத்தது; ஞாயிறு மறைந்தது; திங்கள் தோன்றியது; சொல் நன்று எனவரும். பிறவும் என்றதனால் பொழுது நன்று; யாக்கை தீது, விதி வலிது; கனலி கடுகிற்று; மதி நிறைந்தது, வெள்ளி எழுந்தது, வியாழம் உறங்கிற்று என்பன போல்வன கொள்ளப்படும். காலம் என்பது உலகத் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நடுவுமாகி என்றும் உள்ளதோர் பொருள்; என்றது காலக் கடவுளை. உலகம் என்பது மேலும் கீழும் நடுவுமாகி எல்லா வுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள் என்பர் தெய்வச் சிலையார். மக்கட்டொகுதி என்பர் சேனாவரையர். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம் என்பர் தெய்வச்சிலையார். ஈண்டு உயிர் உடம்பு என்பன மக்களது உயிரையும் உடம்பினையும் உணர்த்தின என்பர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். பால்வரை தெய்வம் என்றது, எல்லா வுயிர்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இரு வினையையும் வகுத்து நுகர்விப்பதாகிய பரம் பொருளை. பால்வரை தெய்வம் என்னும் இத் தொடர்க்கு `ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள் எனப் பொருளுரைப்பர் தெய்வச் சிலையார். வினை என்பது இருவினைத் தெய்வம். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயமாகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள்செய்வது. சொல் என்பது நாமகளாகிய தெய்வம். இவையெல்லாம் பொருளால் உயர்திணையவாயினும் சொல்லால் அஃறிணையவாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளுமென்றார். காலம் உலகம் என்பன வட சொல்லன்று; ஆசிரியர் வட சொற்களை எடுத்தோதி இலக்கணங் கூறாராகலின். உலகம் என்பது மக்கட் டொகுதியை உணர்த்திய வழி உயர் திணையாயும் இடத்தை உணர்த்தியவழி அஃறிணையாயும் வருதலின் ஒருசொல் இரு பொருட் கண்ணும் சென்றதெனப் படாது இருசொல்லெனவே படும். அங்ஙனம் மக்கட் டொகுதியை யுணர்த்துங்கால் உரிப்பெயராயே உணர்த்திற்று. ஆகு பெயரன்று என விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். மேலென்பது ஏழாம் வேற்றுமைப் பொருணர்த்துவதோர் இடைச்சொல். அஃது ஈறுதிரிந்து `மேன என நின்றது. மேற்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட குடிமை ஆண்மை முதலியன இருதிணைக் கண்ணும் செல்லுந் தன்மையவாய் அஃறிணை முடிபு கொள்ளுதலும், இச்சூத்திரத்திற் குறிக்கப் பெறும் காலம் உலகம் முதலாயின உயர்திணைப் பொருளை யுணர்த்தி, அஃறிணை முடிபு கொள்ளுதலும் ஆகிய வேறு பாடுடைய என்பார், `உயர்திணை மருங்கின் நிலையினவாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் எனவும் பால்பிரிந் திசையா உயர்திணை மேன எனவும் இவற்றிடையே யமைந்த வேறுபாட்டினைத் தெரித்தோதினார் ஆசிரியர். 59. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. இது மேற் கூறியவற்றிற்கு ஓர் புறனடை உணர்த்துகின்றது. (இ-ள்) ஈறுதிரியாது நின்றபடியே நின்று உயர்திணையாய் இசைத்தல் (காலமுதலாக) இங்குச் சொல்லப் பட்டவற்றிற்கு இயல்பின்று என்றவாறு. இவண் - இங்கு; என்றது இங்குச் சொல்லப்பட்ட கால முதலாகிய சொற்களை. இசைத்தல் - பால் பிரிந்திசைத்தல். `இவண் இயல்பின்று எனவே இவற்றின் முன்னர்க் கூறப்பட்ட குடிமை ஆண்மை முதலாயின சொல்லின்கண், குடிமை நல்லன் வேந்து செங்கோலன் என நிலைமொழிப் பெயர் ஈறு திரியாது நின்றபடியே நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்புடைத் தென்பதாம். 60. இசைத்தலு முரிய வேறிடத் தான. இதுவும் அது. (இ-ள்) கால முதலாகிய சொல் உயர்திணையாய் இசைத்தலும் உரிய; ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்ட இடத்து என்றவாறு. காலன் கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறுபட்ட இடத்து உயர்திணையாய் இசைத்தல் காண்க. 61. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. இது, செப்பின்கண் கிடந்ததோர் குறிப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) எடுத்துச் சொல்லப்பட்ட சொல் தனக்கு இனமாகிய பொருளைச் சொல்லுதலும் உரித்து என்றவாறு. செப்பலும் என்ற உம்மையாற் செப்பாமையும் உரித்து என்பதாம். இஃது அருத்தாபத்தி பெற்றது என்க. `விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும் என்பது பரிமாணச் சூத்திரம். இதுவும் அப்பொருட்டு என்பர் இளம்பூரணர். (உ-ம்) `மேலைச் சேரிக் கோழி அலைத்தது எனக் `கீழைச் சேரிக் கோழி அலைப்புண்டமை சொல்லாமையே முடிந்ததாம். `குடங் கொண்டான் வீழ்ந்தான் என்றவழிக் குடம் வீழ்ந்தமை சொல்லாமையே முடிந்ததாம். இந்நிகரன இனஞ் செப்பின. ஆ வாழ்க, அந்தணர் வாழ்க என்றவழி ஒழிந்தனவும் ஒழிந்தாரும் சாக என்றவாறு அன்று ஆதலின் இந்நிகரன இனஞ் செப்பாதன. இனி, இச்சூத்திரத்திற்கு இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை வாங்கி (ப்பிரித்து)க் கூறியவழி அச்சொல் தன் பொருட்கு இனமாகிய பிறபொருளைக் குறிப்பான் உணர்த்தலு முரித்து எனப் பொருள் கொண்டு அறஞ் செய்தான் துறக்கவும் புகும் எனவும், இழிவறிந் துணபான்கண் இன்பமெய்தும் எனவும் வரும் இவை, சொல்லுவார்க்கு இனப்பொருளியல் புரைக்கும் குறிப்பு உள்வழி, மறஞ் செய்தான் துறக்கம் புகான், கழிபேரிரையான் இன்பம் எய்தான் என இனஞ்செப்புதலும், அக்குறிப்பு இல்வழி இனஞ் செப்பாமையும் கண்டுகொள்க என உதாரணங்காட்டி விளக்குவர் சேனாவரையர். எடுத்த பொருளை உணர்த்து மொழியை எடுத்தமொழி என்றார். இனன் அல்லாத பொருளின் நீக்குதற்கு இனம் என்றார். இந்நூற்பா கூறும் விதி வடநூலார் கூறும் அருத்தா பத்தியினை ஒத்ததாகும் என்பது இளம்பூரணர் நச்சினார்க் கினியராகிய உரையாசிரியர்களின் கருத்தாகும். அருத்தாபத்தி என்பது தன்னோடு மறுதலைப்பட்டு நிற்பது ஒன்றாக உள்வழியே இனஞ் செப்பும். பல உள்வழி இனஞ்செப்பாது. எடுத்துக் காட்டாக `அறஞ்செய்தான் துறக்கம்புகும் என்றவழி அறத்திற்கு அறுதலை `மறம் ஒன்றேயாதலின் `மறஞ்செய்தான் துறக்கம் புகான் என்பது இனமாகப் பெறப்பட்டது. `ஆ வாழ்க என்புழி ஆவிற்கு மறுதலை எருமை ஒட்டகம் எனப் பலவுள. `அந்தணர் வாழ்க என்புழி அந்தணர்க்கு மறுதலை அரசர் வணிகர் வேளாளர் எனப்பலரும் உளர், அங்ஙனம் பல மறுதலை உள்வழி இனஞ் செப்பாது என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் இங்குக் கூர்ந்துணரத் தகுவதாகும். இன்னும் இச்சூத்திரத்தின்கண் `இனஞ்செப்பலும் உரித்து என்றதனாலே `இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொண்டு, சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி, சுமவாதான் வீழ்ந்திலன் என்னும் பொருள் படுதலேயன்றிச் சுமக்கப்பட்டதும் வீழ்ந்தது என (இனமல்லாதது) செப்பியவாறுங் கண்டு கொள்க என்பர் தெய்வச்சிலையார். `எடுத்த மொழியினஞ் செப்பலுமுரித்தே எனவரும் இத் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியமைந்தது, 401. அடைமொழி யினமல்லதுந் தரும் ஆண்டுறின். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மேற்கூறிய அடைசேர் மொழி இனத்தைத் தருதலேயன்றி அதனோடு இனமல்லதனையும் தரும் அவ்விடத்திற்குப் பொருந்துமாயின் என்பது இதன் பொருள். `பாவஞ் செய்தான் நரகம் புகும் என்றவழி புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருதலேயன்றி, `அவன் இது செய்யின் இதுவிளையும் என்னும் அறிவிலி என்னும் இனமல்ல தனையுந் தந்தது. இனி 357. ஒரு மொழி யொழித்தன்னினங் கொளற்குரித்தே. என்னும் நன்னூற் சூத்திரமும் இங்கு ஒப்பவைத்து நோக்கத் தகுவதாகும். பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் ஒன்றே நின்று ஒழிந்த தன்னினங்களையும் தழுவுதற்குரித்தாம் என்பது இதன் பொருள். `நஞ்சுண்டான் சாம் என்றவழி நின்ற நஞ்சுண்டான் என்ற பெயரும் சாம் என்னும் வினையுமாகிய ஒருமொழிகள் நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டவை சாம் எனத் தமக்கு இனமானவற்றையும் தழுவின. நன்னூற் சூத்திரமாகிய இது, பொருள் வகையால் தொல்காப்பியத்தை அடியொற்றிய தென்பது, ஒரு பாற்கிளவி யேனைப் பாற்கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப (பொருளியல் - சூ-28) என்றார் மெய்ந்நூலார் தொல்காப்பியனார் என மயிலைநாதர் இச் சூத்திரவுரையுள் எடுத்துக்காட்டுதலால் இனிது புலனாம். 62. கண்ணுந் தோளு முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. இது, திணைவழுக் காக்கின்றது. (இ-ள்) கண்ணும் தோளும் முலையும் அவைபோல்வன பிறவும் பன்மையைக் குறித்து நின்ற சினை நிலையை யுணர்த்திய சொற்கள் தம் முதல் வினைக்கியலும் எழுத்தான முடியும் வழித்தமக்குரிய பன்மையாற் கூறப்படும் யாப்புறவுடையவல்ல என்றவாறு. பிறவும் என்றதனாற் புருவம், காது, கால், கை என்பனவும் கொள்ளப்படும். கண் தோள் முதலிய பன்மை சுட்டிய உறுப்புப் பெயர்கள் தம் வினைக்கியலும் எழுத்தான் முடிதலும் தம் முதல்வினைக் கியலும் எழுத்தான் முடிதலும் என இருமுடிபினை உடையன. அவற்றுள், முதல்வினைக்கியலும் எழுத்தான் முடிவுழியமைந்ததே இச் சூத்திரவிதி யென்பார், `தம் வினைக்கியலும் எழுத்தலங்கடையே என்றார். ஈண்டுத் `தம் வினைக்கியலும் எழுத்தலங்கடையே என்றார். ஈண்டுத் `தம் வினைக்கியலும் எழுத்து என்றது கண் முதலிய அஃறிணைப் பன்மைக்குரிய வினைக்கேற்ற ஈற்றெழுத் தாகிய அகரத்தினை. தம் முதல்வினைக் கியலும் எழுத்து என்றது, உயர்திணை ஒருமையீறுகளாகியனகர ளகரத்தினையும் அத்திணைப் பன்மை யீறாகிய ரகரத் தினையும். (உ-ம்) கண்ணல்லன், தோள்நல்லன் எனவும் கண்ணல்லள் தோள்நல்லள், முலை நல்லள் எனவும் கண்ணல்லர், தோள்நல்லர், முலை நல்லர் எனவும் தம் முதல்வினைக்குரிய எழுத்தான் முடிந்தன. கண்ணல்ல, தோள்நல்ல எனத் தம்வினைக்கு இயலும் எழுத்தான் முடிவுழித் தமக்குரிய அஃறிணைப் பன்மையீறாகிய எழுத்தான் முடியும் என்பதாம். மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப் பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங்கரியள், கவவுக்கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்திணை கொண்டனவும் தன்னின முடித்தல் என்பதனால் அமைக்கப்படும். அஃறிணைக்கண் சினைவினைக்குரிய எழுத்தோடு முதல் வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லாம் அஃறிணை யெழுத்தேயாகலின் `தம் வினைக்கியலும் எழுத்தலங்கடையே என வேறுபடுத்துரைத்தற்கு ஏலாமையின் இச் சூத்திரத்துக் `கண்ணுந் தோளும் முலையும் என எண்ணப்பட்டன உயர் திணைச் சினையே யாம் எனத் தெளிவுபடுத்துவர் சேனாவரையர். 2. வேற்றுமையியல் வேற்றுமையிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமையில் என்னும் பெயருடையதாயிற்று. கிளவியாக்கத்துள் பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங் கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமை என்பன ஒருசார் பெயரும் இடைச் சொல்லும் ஆதலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமெனப்படும். இந் நுட்பத்தினைக் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்கும் அடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக் கொண்டார். வேற்றுமை யிலக்கணம் உணர்த்தத எடுத்துக் கொண்டார். வேற்றுமை யிலக்கணம் என்பது பொருளால் ஒன்றாயினும், சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும், அவற்றது மயக்கமும் எட்டாவதெனப்படும் விளி வேற்றுமையும் தனித்தனி இயல்களால் உணர்த்தத் தகும் பொருள் வேறுபாடுடை மையின், அவற்றை வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனா வரையரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். வேற்றுமை என்பன பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகளாகும். இவ்வுருபுகள் செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும், செயப்படு பொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள்மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் பெயர்க் காரணங் கூறுவர் சேனாவரையர். பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ் சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று என்பர் நச்சினார்க் கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு தம்மை யேற்ற பெயர்ப் பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித் தொடர் கூறி, இனி வேற்றுமைத் தொடர் கூறுகின்றார் என்றும் கூறுவர் தெய்வச்சிலையர். 63. வேற்றுமை தாமே ஏழென மொழிப. இது, வேற்றுமை இனைத்தென்கின்றது. (இ-ள்) வேற்றுமை என்று சொல்லப்படுவன எழுவகைய என்றவாறு. 64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இது முன் கூறியதல்லாத மற்றொரு வேற்றுமையுங் கூறி வேற்றுமை களின் தொகை கூறுகின்றது. (இ-ள்) விளியேற்கும் பெயரின் கண்ணதாகிய விளியோடு முற்கூறியவற்றையுங் கூட்டியெண்ண வேற்றுமை எட்டாம் என்றவாறு. விளிகொள்வது என்றது, பெயரை. அதன்கண் விளி என்றது, பிறிதோர் இடைச்சொல்லை ஏலாது தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதியினை. வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். படர்க்கைச் சொல் லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளிவேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது தனிவேற்றுமையாகக் கொள்வதே தமது துணி பென்பார், `வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதங்கூறி, `விளிகொள் வதன்கண் விளியோடெட்டே எனத் தம் துணி புரைத்தார் தொல்காப்பியனார். இவ்விரு சூத்திரப் பொருளையும் தழுவியமைந்தது, 290. ஏற்கு மெய்வகைப் பெயர்க்கு மீறாய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தம்மை ஏற்றுக் கோடற்குரிய எவ்வகைப்பட்ட பெயர் கட்கும் இறுதியாய் அப்பெயர்ப் பொருளை வேற்றுமைப் படுத்துவனவான வேற்றுமைகள் எட்டேயாம் என்பது இதன் பொருள். வேற்றுமை செய்தலால் வேற்றுமையெனப்பட்டன. வேற்றுமை யென்னுங் காரியத்தைச் செய்யுங் கருத்தாவாகிய வேற்றுமையுருபிற்கு வேற்றுமையெனப் பெயர்போந்தது காரியவாகு பெயராகிய காரணக்குறி என்பர் நச்சினார்க்கினியர். 65. அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி என்னு மீற்ற. இது வேற்றுமைகளின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ-ள்) எட்டெனப்பட்ட வேறுமையாவன பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளியென்று சொல்லப்பட்ட ஈறுகளை யுடைய என்றவாறு. பெயர் தானே ஈறாகியும் பிற எழுத்தோடு கூடி ஈறாகியும் வருமென்பார் `பெயர்....... விளி என்னும் ஈற்ற என்றார். பெயர் என்றது, பெயர் தோன்றும் நிலையதாகிய எழுவாய் வேற்றுமை யினை. ஐ இரண்டாவதன் உருபு. ஒடு மூன்றாவதன் உருபு. கு நான்காவதன் உருபு. இன் ஐந்தாவதன் உருபு. அது ஆறாவதன் உருபு. கண் ஏழாவதன் உருபு. விளியீறாவன திரிந்தும் இயல்பாயும் விளிக்கண் வரும் எழுத்துக்கள். சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனால் இவை எடுத்து ஓதப்பட்டன. எடுத்தோதாதன மூன்றாம் வேற்றுமைக் கண் ஆன் ஆல் ஓடு என்பனவும் ஆறாம் வேற்றுமைக்கண் ஆது என்னும் ஒருமை யுருபும் அ என்னும் பன்மையுருபும் ஏழாம் வேற்றுமைக்கண் இடப் பொருண்மை யுணர்த்தும் கால் புறம் அகம் முதலிய சொற்களுமாகும். (உ-ம்) முருகன், முருகனை, முருகனொடு, முருகற்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா எனவரும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது, 291. பெயரே ஐஆல் குஇன் அதுகண் விளியென் றாகும் அவற்றின் பெயர்முறை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நிகழாது. ஆதலின் அதனைச் செய்து முடிக்கும் வினைமுதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்ற பெயர் எழுவாய்வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலால் தோன்றிய பொருள் செயப்படு பொருள் எனப்படும். (படுதல் - தோன்றுதல்.) இத்தகைய செயப்படு பொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது ஐயுரு பாதலின் அஃது இரண்டாம் வேற்றுமை யெனப்பட்டது. வினை முதல் ஒரு காரியத்தைச் செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப்படுவது கருவி. இத்தகைய கருவியாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது ஒடு உருபு ஆதலின் அது மூன்றாம் வேற்றுமையெனப்பட்டது. ஒருவர் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தமக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக் கொள்வதாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது குவ்வுரு பாதலின் அது நான்காம் வேற்றுமை எனப்பட்டது. ஒருவர் ஒரு பொருளைப் பிறர்க்குக் காண்கிறோம். இவ்வாறு நீங்கநிற்கும் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையா யிற்று. ஒருவரிடத்து நீங்கிய பொருளை ஏற்றுக் கொண்டவன் அப்பொருளைத் தன்னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டுதல் இயல்பு. இங்ஙனம் உரிமை பாராட்டுதற்குரிய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமை யாயிற்று. மேற்குறித்த எல்லா நிகழ்ச்சிக்கும் இன்றியமையாதது இடமாகும். தன்னை யேற்ற பெயர்பொருளை இடப் பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமையாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப் பொருளை எதிர்முகமாக்குவது விளியேற்றுமை யாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக்கண் வைக்கப்பட்டது. மேற்குறித்த வேற்றுமைகள் எட்டினையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐ முதல் கண் ஈறாகவுள்ள ஆறினையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரிட்டு வழங்குதலும் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்குமுன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமை யியற் சூத்திரங்களால் நன்கு புலனாம். இனி எழுவாய் வேற்றுமை முதலிய ஏழு வேற்றுமைகளின் உருபும் உருபுநிற்கும் இடமும், அதன் பொருளும், அப் பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலிற் பின்வரும் சூத்திரங்களால் ஆசிரியர் முறையே விளக்குகின்றார். 66. அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. இது, முறையானே எழுவாய்வேற்றுமை உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வேற்றுமை எட்டனுள் முதற்கண் பெயர் என்று கூறப்பட்ட எழுவாய் வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் என்றவாறு. `தோன்று நிலை என்றதனால் மேற்சூத்திரத்துக் கூறப்படும் அறுவகைப் பயனிலையும் தோன்ற நிற்கும் பெயர் எழுவாய் வேற்றுமையாவது என்றவாறாம் என்பர் இளம்பூரணர். பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது, உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை. எனவே, உருபும் விளியும் ஏற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்றபெயர் எழுவாய் வேற்றுமையாகாது என்றவாறாம். என்பர் சேனாவரையர். பெயர் - பொருள். பெயர் தோன்றம் நிலைமை யாவது, பொருண்மை சுட்டல் முதலிய அறுவகைப் பயனிலையும் தன்கண் தோன்றநிற்கும் நிலைமை எனவும், அஃது உருபும் விளியும் ஏலாது நிற்கும் நிலையது எனவும் விளக்குவர் நச்சினார்க்கினியர். ஈறுதிரியாது உருபேற்றல் எழுவாய் வேற்றுமையது இலக்கணம்; ஈறுதிரிந்து உருபேற்றல் விளிவேற்றுமையது இலக்கணம் என்பர் இளம்பூரணர். 67. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. இஃது எழுவாய் வேற்றுமையின் முடிபாகிய பொருள் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு பொருளினது பண்பு முதலியன சுட்டாது அப்பொருட்டன்மையது உண்மைத் தன்மையே சுட்டி நிற்க வருதல், தான் ஏவலைக் கொள்ளவருதல், தனது தொழிலைச் சொல்லவருதல், தான் வினாவிற்குப் பொருந்தவருதல், தனது பண்பினைத் தான் கொள்ளவருதல், தான் பெயரைக் கொண்டு எழுவாய் வேற்றுமையது பயனாகிய நிலைமை என்றவாறு. முடிக்குஞ் சொற்பொருள் அத்தொடர் மொழிக்குப் பயனாதலிற் பயனிலை என்றார் எனச் சேனாவரையரும், தன்னை முடித்தற்கும் பின்வருஞ் சொல்லின் பொருண்மையைத் தான் அவாவி நிற்கும் நிலைவேறுபாட்டைப் பயனிலையென்றார் என நச்சினார்க் கினியரும் விளக்கந்தருவர். (உ-ம்) அ உண்டு - பொருண்மை சுட்டல். ஆ செல்க - வியங்கொள வருதல். ஆ கிடந்தது - வினை நிலையுரைத்தல். ஆ எவன் - வினாவிற் கேற்றல். ஆ கரிது - பண்புகொள வருதல். ஆ பல - பெயர் கொள வருதல். இவை ஆறும் எழுவாய் வேற்றுமைப் பொருள்களாம். உண்டு என்பது பண்பு முதலாயின சுட்டாது பொருளின் உண்மையே சுட்டி நிற்றலின் வேறு கூறினார். பொய்ப் பொருளின் மெய்ப்பொருட்கு உளதாய வேற்றுமையாவது என்றும் கெடாது நிற்கும் உண்மைத் தன்மையாதலின் அவ் வுண்மையைப் பொருண்மை யெனக் குறித்தார். வியங்கொள வருதல் வினை நிலையுரைத்தற் கண்ணும், வினாவிற்கேற்றல் பெயர்கொள வருதற் கண்ணும் வினைக்குறிப்பாயவழிப் பண்புகொள வருதற் கண்ணும் அடங்கும். ஆயினும் வினையும் பெயரும் பண்பும் முடிக்குஞ் சொல்லாதலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாகியும் வருவன; வியங்கோளும் வினாவும் முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லாமையின் அவ்வேறுபாடறிவித்தற்கு வேறு கூறினார். `பெயர் தோன்ற நிலை என்றதனானும், `அன்றியனைத்தும் பெயர்ப் பயனிலையே என்றதனானும், பெயர் தோன்றிய துணையாய் நின்று பயனிலையையுடையதாதல் எழுவாய் வேற்றுமையது இலக்கணம் என்பது பெறப்படும். அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலை எனவே பயனிலை கோடல் பெயர்க்கிலக்கண மென்பதும் பெறப்படும். எழுவாய் வேற்றுமை குறித்துத் தொல்காப்பியர் கூறிய இவ்விரு சூத்திரப் பொருள்களையும் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்குவது, 294. அவற்றுள் எழுவாயுருபு திரிபில் பெயரே வினை பெயர் வினாக்கொளல் அதன்பயனிலையே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பொருண்மை சுட்டல் முதலாகத் தொல்காப்பியர் கூறிய ஆறும் வினை பெயர், வினாக்கொளல் என்னும் இம்மூன்றனுள் அடங்கும். வினைநிலை யுரைத்தலும் வினாவிற் கேற்றலும் பெயர்கொள வருதலும் பெயர்ப்பயனிலையே என்றார் ஆசிரியர் அகத்தியனாருமென்க என மேற்கோள் காட்டி விளக்குவர் மயிலைநாதர். 68. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. இது, தனிப்பெயரே யன்றித் தொகைச்சொல்லும் எழுவாயாய் நின்று பயனிலை ஏற்கும் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) பெயரும் பெயரும் தொக்க தொகையும் உள; அவையும் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு உரிய. என்றவாறு. (உ-ம்) யானைக்கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது, கொல்யானை நின்றது, கருங்குதிரை ஓடிற்று, உவாப் பதினான்கு கழிந்தன, பொற்றொடி வந்தாள் என அறுவகைத் தொகைச் சொல்லும் எழுவாயாய்ப் பயனிலை கொண்டன. பெயரினாகிய தொகையும் என்னும் உம்மையால் பெயரொடு பெயர் தொக்கனவேயன்றி, நிலங்கடந்தான், குன்றத்திருந்தான், எனப் பெயரொடு வினைவந்து தொக்க வினையினாகிய தொகையும் உளவென்பதாம். ஆகவே பெயரொடு பெயரும் பெயரொடு வினையும் தொக்கன தொகைச்சொல் என்பது பெற்றாம். அவ்வு முரிய எனப் பொதுவகையாற் கூறினாரேனும், ஏற்புழிக் கோடலால் பெயரினாகிய தொகையே எழுவாய் வேற்றுமையாதற் கேற்புடையன எனக் கொள்க. இவ்விதி நன்னூலில் இடம் பெற்றிலது. 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இஃது எழுவாய் வேற்றுமைக் குரியதோர் திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) மூன்றிடத்து எழுவாயும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விது என்பர் ஆசிரியர். எனவே அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலும் உண்டு, அது செவ்விதன்று. என்றவாறு. (உ-ம்) கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான் யாது செய்வல் என்றவழி இதுசெய் எனவும், இவன் யார் என்றவழிப் படைத்தலைவன் எனவும் செப்பியவழி யான், நீ, இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று செல்வல் இதுசெய், படைத்தலைவன் என்னும் பயனிலை கொண்டவாறு அறிக. பயனிலைக்க இருநிலைமையும் ஓதாது எழுவாய்க்கே ஓதுதலாற் பயனிலை வெளிப்பட்டே நிற்கும் என்பதாம். இனி, இச்சூத்திரத்திற்கு, மூன்றிடத்துப் பெயரும் செவிப் புலனாகத் தோன்றிப் பயனிலைப்பட நிற்றல் தன்மையில் திரியாமை செவ்விது என்பர் ஆசிரியர் எனப் பொருள் கொண்டு, அவ்வியல் நிலையலாவது பயனிலைகொள்ளுந் தன்மையில் திரியாமை. எவ்வயிற் பெயரும் பயனிலை கோடலிற்றிரியாமை செவ்விதெனவே, அவற்றுட்சில உரு பேற்றலாகிய இலக்கணத்திற் செவ்விதாகாமையும் உடைய எனக் கருத்துரைத்து `நீயிர் என்பது பெயராயினும் நீயிரை என உருபேலாது என விளக்கந் தருவர் இளம்பூரணர். இதனைப் போலியுரையென மறுப்பர் சேனாவரையர். இளம்பூரணர் உரையினைத் தழுவியமைந்தது, 293. நீயிர் நீவிர் நான் எழுவாயல பெறா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். `நீயிர் நீவிர் நான் என்னும் இம் மூன்று பெயரும் எழுவாயுருபினையொழிய ஏனையுருபுகளை ஏலா என்பது இதன் பொருளாகும். 70. கூறிய முறையின் உருபுநிலை திரியா தீறுபெயர்க் காகு மியற்கைய என்ப. இஃது உருபு நிற்கும் இடம் கூறுகின்றது. (இ-ள்) மேல், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறிய முறைமையையுடைய உருபுகள் தத்தம் நிலை திரியாது பெயர்க்கு ஈறாகும் இயல்புடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்) சாத்தானை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் எனவரும். வினைச் சொல்லின் இறுதிநிற்கும் விகுதிகளாகிய இடைச் சொற்கள் அச்சொற்கு உறுப்பாய் நிற்பது போன்று ஒரு சொற்றன்மைப் பட்டு ஒற்றித்து நில்லாமல் இவ்வேற்றுமை யுருபுகள் பெயர்க்கு உறுப்பாகாது வேறுபட்டு அவற்றின் இறுதியில் நிற்பன என்பார் `நிலைதிரியாது பெயர்க்கு ஈறாகும் என்றார். உருபு பெயர்க்கு ஈறாம் எனவே உருபேற்றலாகிய பெயரிலக்கணமும் பெறப்பட்டது. இவ்வாறு வேற்றுமையுருபுகள் பெயரின் இறுதியில் நிற்கும் என்னும் இச்சூத்திரப் பொருளை, ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும் ஈறாய் (290) எனவரும் தொடரில் பவணந்தியார் குறித்துள்ளமை காண்க. 71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே. இது பெயர்க்கு ஓரிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) பெயர்ச் சொல் காலந் தோன்றா, வினைச்சொல்லாம் நிலையொடு பொருந்தும் ஒரு கூறல்லாதவிடத்து என்றவாறு. `தொழில் நிலை யொட்டும் ஒன்றுஎன்றது, ஒரு பொருளது புடைபெயர்ச்சியாய்க் காலந்தோன்றும் ஒருகூற்றுத் தொழிற் பெயரை. ஒட்டுதல் - பொருந்துதல். உண்டான் + தின்றான் எனத் திணையும் பாலும் காலமும் இடனும் தோன்றும் வினை முற்றுச் சொல் படுத்தலோசைப்பட்டுப் பெயராய் நின்று பயனிலை கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்றுவித்தலும் பெயர்ப் பெயரும் பெயரது நிலையிலே நிற்றலையுடைய ஏனைத் தொழிற் பெயரும் காலத்தை யாண்டும் தோற்றுவியாமையும் இதனாற் கூறினார். (உ-ம்) சாத்தன், கொற்றன், உண்டல், தின்றல் எனப் பெயர் காலந் தோன்றாது நிற்றலும், உண்டான், தின்றான் எனத் தொழினிலை யொட்டுவன காலந்தோன்றி நிற்றலும் கண்டு கொள்க. தொழில்நிலை யொட்டுவனவாகிய இப்பெயர்களை வினையாலணையும் பெயர் என வழங்குவர் நன்னூலார். இனி இச்சூத்திரத்திற்கு தொழில் நிலைப் பெயர்ச்சொல் காலந்தோன்றா, காலம் ஒட்டும் தொழிற் பெயரல்லாதவிடத்து என மற்றொரு கருத்துரைத்து, காலந் தோன்றாதன; உண்டல், தின்றல் என்பன; இவை அத்தொழில் மேல் நின்ற பெயர். இனிக் காலம் ஒட்டும் தொழிற் பெயராவன; உண்டான், தின்றான் என்பன; இவை அத்தொழில் செய்வான் மேல் நின்ற பெயர் என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். இச்சூத்திரவுரையினை தொழிலல காலந் தோற்றா (நன்னூல் - 274) எனவருந் தொடராற் பவணந்தி முனிவர் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் ஈண்டுப் பெறப்படுதலின், அவற்றோடியையக் காலந்தோன்றாமை யாகிய பெயரிலக்கணமும் ஈண்டே கூறினார். பெரும்பான்மை பற்றிக் காலந்தோன்றாமை பெயரிலக்கணம் மாயிற்று என்பர் சேனாவரையர். 72. இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்று மதுவே. இது நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்து கின்றது. (இ-ள்) இரண்டாம் வேற்றுமையாவது, பெயர் ஐ ஒடு கு என்னுஞ் சூத்திரத்து ஐயெனப்பெயர் பெற்ற வேற்றுமைச் சொல்லாம். அஃது யாண்டு வரினும் வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணுந் தோன்றும் அவை பொருளாக வரும் என்றவாறு. எண்ணு முறைமைக்கண் இரண்டாம் வேற்றுமையென வழங்கப் பெறுவது ஐகார வேற்றுமை என்பார், `இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்றார். தம்மையுணர்த்து வனவும் பெயரெனப்படுதலின் `ஐயெனப்பெயரிய என்றார். பெயரிய என்பது பெயர் என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம். வினை என்றது தெரிநிலை வினையை. குறிப்பு என்றது காலத்தினைக் குறிப்பாகவுணர்த்தும் குறிப்பு வினையை. முதல் - காரணம். செயப்படு பொருள் முதலாயின தொழிற்குக் காரணமாதலானும், அவற்றைத் `தொழில் முதனிலை எனத் தொல்காப்பியர் வழங்குதலானும் ஈண்டு ஆசிரியரால் `வினையே வினைக்குறிப்பு அவ்விருமுதல் என்றது, வினையும் வினைக்குறிப்பு மாகிய அவற்றின் நிலைக்களமாகத் தோன்றும் செயப்படு பொருளை, வினைமுதல் செய்யும் தொழிலின் பயனையுறுவது செயப்படு பொருளாகும். (உ-ம்) குடத்தை வனைந்தான், குழையையுடையன் எனவரும். குறிப்புச்சொல் காலமொடு தோன்றித் தொழிற் சொல்லாதலும் கழை முதலாயின தொழிற் பயனுறுதலும் ஆசிரியர் துணிபாகலின் அவையும் செயப்படு பொருளாம். புகழை நிறுத்தான்; புகழை நிறுத்தல்; புகழையுடையான்; புகழையுடைமை என இரண்டாம் வேற்றுமை பெயரொடு தொடர்ந்த வழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படு பொருளும் பற்றியே நிற்கும் என்பார், எவ்வழி வரினும் என்றார். இயற்றப்படுவது, வேறுபடுக்கப்படுவது, எய்தப்படுவது எனச் செயப்படுபொருள் மூவகைப்படும். இயற்றுதலாவது முன்னில்லதனை யுண்டாக்கல். வேறு படுத்தலாவது முன்னுள்ள தனைத் திரித்தல். எய்தப் படுதலாவது இயற்றுதலும் வேறு படுத்தலுமின்றித் தொழிற் பயனுறுந் துணையாய் நிற்றல். இரண்டாம் வேற்றுமையுருபை முடித்தற்கு அடுத்துவரும் சூத்திரத்துக் கூறப்படும் காப்பு, ஒப்பு முதலிய வாய்பாடு பற்றிவரும் இம்மூவகையானும் பகுத்துரைப் பவர் ஈண்டு வினையும் வினைக் குறிப்பும் என அவற்றை இரண்டாக அடக்கிக் கூறினார். 73. காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஓப்பிற் புகழிற் பழியின் என்றா பெறலின் இழவிற் காதலின் வெகுளியிற் செறுத்தலின் உவத்தலிற் கற்பின் என்றா அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின் நோக்கலின் அஞ்சலிற் சிதைப்பின் என்றா அன்ன பிறவும் அம்முதற் பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனார். இஃது இரண்டாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) காப்பு முதல் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம்முதற் பொருள்மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமையால் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. `என்றா என்பன எண்ணிடைச் சொற்கள். ஈண்டு நின்ற இன் எல்லாம் சாரியை ஆயின என்பர் இளம்பூரணர். அம் முதற் பொருள் என்றது முற்குறித்த வினையும் வினைக் குறிப்பும் பற்றிவரும் செயப்படு பொருளை. (உ-ம்) எயிலை இழைத்தான் என்பது இயற்றப்படுபொருள். கிளியை ஓப்பும், பொருளை இழக்கும், நாணை அறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும் என்பன வேறுபடுக்கப்படு பொருள். ஊரைக் காக்கும், தந்தையை ஒக்கும், தேரை ஊரும், குரிசிலைப் புகழும், நாட்டைப் பழிக்கும் புதல்வரைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை உவக்கும், நூலைக் கற்கும், பொன்னைக் நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கணையை நோக்கும், கள்வரை அஞ்சும் என்பன எய்தப்படு பொருள். அன்ன பிறவும் என்றதனால், பகைவரைப் பணித்தான், சோற்றை அட்டான், குழையை உடையான், பொருளை இலன் என்னுந் தொடக்கத்தன கொள்ளப்படும். காப்பு முதலாயின பொருள்பற்றி ஓதப்பட்டமையால், அப் பொருள் பற்றிவரும் புரத்தல், அளித்தல், நிகர்த்தல், ஒட்டுதல், செலுத்துதல், கடாவுதல் என்பன போல்வன வெல்லாவற்றையும் இரண்டாம் வேற்றுமைப் பொருள்களாக அடக்கிக் கொள்க. இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் பற்றிய தொல்காப்பியச் சூத்திரங்களை அடியொற்றியமைந்தது, 295. இரண்டாவதனுரு பையே யதன்பொருள் ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல் ஒத்தல் உடைமை யாதியாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இரண்டாம் வேற்றுமையினது உருபு முற்கூறிய ஐகாரம் ஒன்றுமே. அதன் பொருள்களாவன தன்னையேற்ற பெயர்ப் பொருளை ஆக்கப்படு பொருளாகவும் அழிக்கப்படு பொருளாகவும் அடையப்படு பொருளாகவும் துறக்கப்படு பொருளாகவும் ஒக்கப்படு பொருளாகவும் உடைமைப் பொருளாகவும் இவை போல் வன பிறவாகவும் வேற்றுமை செய்தலாம் என்பது இதன் பொருள். (உ-ம்) குடத்தை வனைந்தான் - ஆக்கல் குடத்தை உடைத்தான் - அழித்தல் குடத்தை அடைந்தான் - அடைதல் குடத்தைத் துறந்தான் - நீத்தல் குடத்தை ஒத்தான் - ஒத்தல். ஆதி என்றமையால் இவ்வாறு செயப்படு பொருளாக வேற்றுமை செய்தலெல்லாம் கொள்க. ஒருவன் ஒரு வினைசெய்ய அதனால் தோன்றிய பொருள் யாது அது செயப்படு பொருள் என்பதாம். ஒருவன் ஓர் வினை செய்யத் தொழிற்படு பொருள் யாது அது செயப்படு பொருள் எனினும் அமையும். செயப்படு பொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரு பொருட் கிளவி. இச் செயப்படு பொருள் கருத்துண்டாதல், கருத்தின் றாதல், இருமையுமாதல், ஈருருபிணைதல், கருத்தாவாதல், அக நிலையாதல், தெரிநிலை என இவை முதலியனவாகியும் வரும். இவற்றுக்கு உதாரணம் : சோற்றையுண்டான், சோற்றைக் குழைத்தான், எறும்பைமிதித்து வழியைச் சென்றான், ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினாவினான், பசுவினைப் பாலினைக் கறந்தான், தன்னைப் புகழ்ந்தான், வருதலைச் செய்தான், மாடஞ் செய்யப்பட்டது என முறையே வந்தன. 74. மூன்றாகுவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. இது, மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மூன்றாம் வேற்றுமையாவது மேல் ஒடுவெனப் பெயர் கொடுத்தோதிய வேற்றுமைச் சொல்லாம். அது வினை முதலும் கருவியும் ஆகிய இரண்டு காரணத்தையும் பொருளாக வுடைத்து என்றவாறு. மேல், `கு ஐ ஆன் என வரூஉம் இறுதி (தொல் - சொல் -) என ஓதும்வழி ஆனுருபும் தழுவப்படுதலான் ஈண்டும் அவ்வாறே கொள்ளப்படும். மூன்றா முருபாதலும் வினைமுதல் கருவிப் பொருட்டாதலும் ஆனுருபிற்கும் எய்தும். ஒடு, ஓடு என நீண்டும் ஆன் ஆல் எனத்திரிந்தும் வழங்குதலால் பிற்காலத்தில் ஆல் ஆன் ஒடு ஓடு என்பன மூன்றாம் உருபுகளாகக் கொள்ளப் பெறுவன வாயின. இந்நுட்பம், ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும் சாலும் மூன்றாம் வேற்றுமைத் தநுவே செய்வோன் காரணஞ் செயத்தகு கிளவி எய்திய தொழின்முத லியைபுட னதன்பொருள் என வழங்கும் பிற்கால அகத்தியச் சூத்திரத்தாற் புலனாம். கருவி, காரணம், ஏது, நிமித்தம் என்பன வெவ்வேறு பொருளிலும் காரணம் என்னும் பொதுப் பொருளிலும் வழங்குவன. முதல், துணை, நிமித்தம் எனக் காரணம் மூவகைப்படும். அவற்றுள் முதற்காரணமாவது காரியத்தோடு ஒற்றுமையுடையது. துணைக் காரணமாவது, முதற்காரணம் காரியமாகும் வரையும் துணைநிற்பது. நிமித்த காரணமாவது மேற்குறித்த இருவகைக் காரணங்களைக் கொண்டு காரியத்தினை நிகழ்த்தும் கருத்தாவாகும். முதற்காரணம் துணைக்காரணம் என்னும் இரண்டனையும் கருவியென்றும், இயற்றுதற் கருத்தா, ஏவுதற் கருத்தா என்னும் நிமித்தகாரணம் இரண்டனையும் கருத்தா என்றும் வழங்குதல் மரபு. வனைந்தான் என்புழிக் குடமாகிய காரியத்திற்கு அதுவதுவாகிய மண் முதற் காரணம். குயவனது அறிவும் மனம் புத்தி முதலிய அகக்கருவிகளும் ஆகிய அறிதற் கருவியும் தண்டசக்கர முதலிய செயற்கருவியும் அம்முதற் காரணத்திற்குத் துணையாய் நின்று காரியத்தைத் தருதலின் துணைக் காரணமாகும். குயவன் நிமித்தமாகக் குடமாகிய காரியந் தோன்றுதலின் அவன் நிமித்தகாரணமாவன். அறிதற் கருவியினை ஞாபகக் கருவியெனவும் செயற் கருவியினைக் காரகக் கருவி எனவும் வழங்குவர் சிவஞானமுனிவர். இம் மூவகைக் காரணங்களையும் `முதல் என வழங்குவர் தொல்காப்பியர். இச் சூத்திரத்தில் வினைமுதல் என்பது, கருவி முதலிய காரணங்களைத் தொழிற்படுத்தும் கருத்தாவாகும். கருவி என்பது, வினைமுதலின் தொழிற்பயனைச் செயப்படு பொருளின் கண் செலுத்தும் முதற் காரணமும் துணைக்காரணமுமாகும். அனைமுதல் என்பது, `அத்தன்மையவாகிய முதல் என அவற்றது இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. (உ-ம்) கொடியொடு துவக்குண்டான்; ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் எனவும், அகத்தியனாற் றமிழுரைக்கப்பட்டது; வேலான் எறிந்தான் எனவும் வரும். மூன்றாம் வேற்றுமைக்கு உடனிகழ்ச்சி முதலிய பிறபொருளும் உளவேனும் அவற்றுள் வினைமுதல், கருவி என்பன சிறந்தமையான் முதற்கண் எடுத்துக் கூறினார். வினைமுதல் கருவியாகிய பொருள்களில் ஒடுஉருபு இக்காலத்து அருகியல்லது வாராதென்பர் சேனாவரையர். அரசனானாகிய திருக்கோயில், தச்சனானாகிய திருக் கோயில் என்புழி மூன்றாவதாகிய ஆனுருபு முறையே தானேற்ற பெயர்ப் பொருளை ஏதுப்பொருட்டாகிய ஏவுதற்கருத்தாவாகவும் இயற்றுதற் கருத்தாவாகவும் வேற்றுமைசெய்தது. அரசன் ஆக்கிய திருக்கோயில், தச்சன் ஆக்கிய திருக்கோயில் எனவரின் மூன்றா முருபு ஏலாவாய் அரசனும் தச்சனும் எழுவாயாகும். இஃது எழுவாய்க் கண் வரும் கருத்தாவுக்கும் இம்மூன்றாம் வேற்றுமைக் கண்வருங் கருத்தாவிற்கும் தம்முள் வேற்றுமையாகும். 75. அதனின் இயறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனின் ஆதல் அதனிற் கோடல் அதனொடு மயங்கல் அதனொ டியைந்த ஒருவினைக் கிளவி அதனொ டியைந்த ஒப்ப லொப்புரை இன்ஆன் ஏது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். இது, மூன்றாம் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) அதனின் இயறல் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈறாக எடுத்தோதப் பட்ட பொருண்மையும் இன் ஆன் ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிறவும் மூன்றாம் வேற்றுமைப் பாற்படுவன. என்றவாறு. இச்சூத்திரத்து அது என்றது உருபேற்கும் பெயர்ப் பொருளை. பின் வருவனவற்றிற்கும் அவ்வாறே கொள்க. அதனின் இயறல் - ஒன்றானான் இயன்றது என்னும் பொருண்மை. (உ-ம்) மண்ணானியன்ற குடம். மண் - முதற்காரணம். அதற்றகு கிளவி - ஒன்றனான் ஒன்று தகுதியுடையதாயிற்று என்னும் பொருண்மை. (உ-ம்) வாயாற்றக்கது வாய்ச்சி. அறிவான் அமைந்த சான்றோர் - இவையிரண்டும் கருவியின் பாற்படும். அதன் வினைப்படுதல் - ஒன்றானால் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை. (உ-ம்) நாயாற் கோட்பட்டான். சாத்தனான் இச்செயல் முடியும் என்பதும் அது. இது வினைமுதலின் பாற்படும். அதனின் ஆதல் - ஒன்றனான் ஒன்று ஆதல் என்னும் பொருண்மை. (உ-ம்) நாயாற் கோட்பட்டான். சாத்தனான் இச்செயல் முடியும் என்பதும் அது. இது வினைமுதலின் பாற்படும். அதனின் ஆதல் - ஒன்றனான் ஒன்ற ஆதல் என்னும் பொருண்மை. (உ-ம்) வாணிகத்தானாயினான். அதனிற்கோடல் - ஒன்றனான் ஒன்றைக் கொள்ளுதல் என்னும் பொருண்மை. (உ-ம்) காணத்தாற் கொண்ட அரிசி. (காணம் - பொன்) இவையும் கருவியின் பாற்படும். அதனொடு மயங்கல் - ஒன்ற எள்ளொடு விராய அரிசி. அதனொடியைந்த ஒருவினைக் கிளவி - ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒருவினையாகல் என்னும் பொருண்மை. (உ-ம்) சாத்தனொடு கொற்றன் வந்தான். வருதற் றொழில் இருவர்க்கும் ஒத்தலின் ஒருவினைக் கிளவியாயிற்று. அதனொடியைந்த வேறுவினைக்கிளவி - ஒன்றனோடு ஒன்று இயைந்த வேறு வினையாகல் என்னும் பொருண்மை. (உ-ம்:) விலங்கொடு மக்களனையர் இலங்குநூல் கற்றாரோ டேனையவர். ஒப்பல்லதனை ஒப்பாகக் கூறலின் ஒப்பலொப் புரையாயிற்று. இம்மூன்றும் உடனிகழ்ச்சிப் பொருளியல் வருவன. இன் ஆன் ஏது - இன்னும் ஆனுமாகிய அவற்றது ஏதுப்பொருண்மை. (உ-ம்) முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது. இதனுள் முயற்சியின் என்புழி இன் என்பது காரகவேது. பிறத்தலான் ஒலி நிலையாது என்பது ஞாபகவேது. ஐந்தாம் வேற்றுமைக்குரிய இன்னுருபுணர்த்தும் ஏதுவையும் ஈண்டு உடன் கூறியது ஏதுவை வரையறுத்தற்கு என்பர் நச்சினார்க்கினியர். அன்ன பிறவும் என்பதனாற் கண்ணாற் கொத்தை, தூங்கு கையான் ஓங்குநடைய, மதியொடொக்கு முகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது, மனத்தொடு வாய்மை மொழியின் என்பன போல்வனவும், காரணம் நிமித்தம் துணை மாறு என்பனவும் மூன்றாம் வேற்றுமைப் பொருளவாகவும் உருபுகளாகவும் தழுவிக் கொள்ளப்படும். கண்ணாற் கொத்தை என்பது சினை வினை முதற்கேறியது. தூங்குகையான் ஓங்கு நடைய என்புழி ஆன் ஒடுஉருபின் பொருள்பட வந்தது. மதியொடொக்கும் முகம் என்புழி ஒடு ஒப்பின் பொருள்பட வந்தது. சூலொடு கழுதை பாரஞ்சுமந்தது என்புழி ஒடு கட்புலனாக ஒருவினைக் கிளவியாயிற்று. மனத்தொடு வாய்மை மொழியின் என்புழி ஒடு ஆனுருபின் பொருள்பட வந்தது. மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும்பற்றித் தொல்காப் பியனார் கூறியதனையும் அவர்க்குப் பிற்காலத்தே தோன்றிய மாற்றங்களையும் அடியொற்றியமைந்தது, 296. மூன்றா வதனுரு பாலா னோடொடு கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மூன்றாம் வேற்றுமையின் உருபு முற்குறித்த ஆலேயன்றி ஆன் ஓடு ஒடு என்பனவும் ஆகும். அவற்றின் பொருள்களாவன தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவியாகவும் ஏதுப் பொருட்டாகிய கருத்தாவாகவும் உடனிகழ்வதாகவும் வேற்றுமை செய்தலாம் என்பது இதன் பொருளாகும். 76. நான்காகுவதே குவ்வெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. இது, நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது யாதாயினும் ஒரு பொருளாயினும் அதனையேற்கும் பொருண்மைத்தாகும். என்றவாறு. நான்காவதற்கு உம் : அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் எனவரும். `மாணாக்கர்க்கு நூற் பொருளுரைத்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறப்படுவனவும் `மாணாக்கர்க்கு அறிவு கொடுத்தான் எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கட் செல்லாது அவன்கண் தோன்றுவதும் ஆகிய பொருள்வகை யெல்லாம் அடங்குதற்க `எப்பொருளாயினும் என்றார். நட்பு, பகை முதலிய பிற பொருளுமுளவாயினும் அவை யெல்லாவற்றுள்ளும் கோடற்பொருள் சிறப்புடைமையின் `எப்பொருளாயினும் கொள்ளும் என்றார். 77. அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின் நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியும் அதன்பால வென்மனார். இது, நான்காம் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வரும் சொற்களும் உம்மையால் அந்நிகரன பிற பொருட்கண் வரும் சொற்களும் நான்காம் வேற்றுமைப் பாலன. என்றவாறு. உம்மை - எச்சவும்மை. அதற்கு வினையுடைமை - ஒன்றற்கு ஒன்று பயன்படுதல். வினை - ஈண்டு உபகாரம் என்பர் சேனாவரையர். உ-ம் : கரும்பிற்கு வேலி. இனி இத்தொடர்க்கு உருபேற்கும் பொருட்கு வினையாத லுடைமை எனப் பொருள் வரைந்து `அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு என உதாரணங் காட்டுவர் தெய்வச் சிலையார். அதற்க உடம்படுதல் - ஒன்றற்கு ஒருபொருளை மேற்கொடுப்பதாக இசைதல். உ-ம் : சாத்தற்கு மகளுடம் பட்டார். அதற்குப் படுபொருள் - ஒன்றற்குரிமையுடையதாகப் பொதுவாகிய பொருளிற் பகுக்கப்படும் பொருள். உ-ம் . சாத்தற்குக் கூறு கொற்றன். அதுவாகுகிளவி - உருபேற்கும் பொருள்தானேயாய்த் திரிவதோர் பொருண்மை. உ-ம் தாலிக்குப் பொன். பொன் தாலியாய்த் திரியுமாதலின் அது வாகுகிளவி எனப்பட்டது. கிளவி - பொருள். அதற்கு யாப்புடைமை - ஒன்றற்கு ஒன்று பொருத்த முடையதாதல். உ-ம் கைக்கு யாப்புடையது கடகம். அதற்பொருட்டாதல் - ஒரு பொருளைப் பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல். உ-ம் கூழிற்குக் குற்றேவல் செய்யும். நட்பு - ஒன்றற்கு ஒன்று நட்பாதல். உ-ம் கபிலர்க்குத் தோழர் பரணர். பகை - ஒன்றற்கு ஒன்று பகையாதல். உ-ம் காரிக்குப் பகைவன் ஓரி. காதல் - ஒன்றற்கு ஒன்று காதலுடையதாதல். உ-ம் . பரவையார்க்குக் காதலர் நம்பியாரூரர். சிறப்பு - ஒன்றற்கு ஒன்று இன்றியமை யாததாய்ச் சிறத்தல். உ-ம். வடுகரரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்; கற்பார்க்குச் சிறந்தது செவி என்பதும் அது. கிளவியும் என்ற உம்மையால், பிணிக்கு மருந்து, நட்டார்க்குத் தோற்கும், அவற்குத்தக்காள் இவள், உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர், இச்சொற்குப் பொருள் இது, மனைக்குப் பாழ் வாணுதலின்மை, போர்க்குப் புணை என்றாற்போல்வனவும் கொள்ளப்படும். நான்காம் வேற்றுமைக்குரிய உருபும் பொருள்களுமாகிய இவற்றை `இதற்கு இது எனத் தொகுத்து வகைப்படுத்துணர்த்தும் முறையில் அமைந்தது, 297. நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடை பகை நேர்ச்சி தகவது வாதல் பொருட்டுமுறை யாதியின் இதற்கிதெனல் பொருளே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். நான்காம் வேற்றுமைக்குக் குவ்வென்பது உருபாம். கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை முதலான பொருண்மைக்கண் `இதற்கு இது என நிற்றல் அதன் பொருளாம் என்பது இதன் பொருளாகும். நான்காம் வேற்றுமைக்குரிய ஏற்றுக் கோடற்பொருள் கேளாதேற்றல், கேட்டேயேற்றல், ஏலாதேற்றல், ஈவோனேற்றல், உயர்ந்தோனேற்றல், இழிந்தோனேற்றல், ஒப்போனேற்றல், உணர்வின்றேற்றல், விருப்பாயேற்றல், வெறுப்பாயேற்றல் என இவை முதலாகப்பலவுமாம் எனக்கூறி, இவற்றிற்கு முறையே ஆவிற்கு நீர் விட்டான், வறியார்க்கு ஈந்தான், மாணாக்கனுக்கு அறிவைக் கொடுத்தான், தனக்குச் சோறிட்டான், அரனுக்குக் கண்ணலர் கொடுத்தான் அரி, அரிக்கும் சக்கரங் கொடுத்தான் அரன், சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன், சோற்றிற்கு நெய்விட்டான், மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆசிரியன், கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன் என உதாரணங் காட்டுவர் சிவஞானமுனிவர். ஆதி என்றதனால் வழக்கு, உரிமை, அச்சம், பாவனை முதலியன பற்றியும் வருதல் கொள்க. மருமகனுக்கு மகட் கொடுத்தான் என்பது வழக்கு மகனுக்கு அரசு கொடுத்தான் என்பது உரிமை. அரசர்க்குத் திறை கொடுத்தான் என்பது அச்சம். தந்தை தாய்க்குத் திதி கொடுத்தான் என்பது பாவனை 78. ஐந்தாகுவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது வென்னு மதுவே. இது ஐந்தாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அஃது `இப் பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என்னும் பொருண்மையை உணர்த்தும். ஐந்தாம் வேற்றுமைப் பொருள் பொருவும் எல்லையும் ஏதுவும் நீக்கமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் பொரு வென்பது உறழ்பொருவும் உவமப்பொருவும் என இருவகைப்படும். உறழ்தல் - ஒன்றனான் ஒன்றை மிகுத்தல். ஏது ஞாபக வேது மூன்றாம் வேற்றுமையில் `இன் ஆன் ஏது என்புழிக் கூறப்பட்டது. காரகஏது பின்வரும் சூத்திரத்தில் அச்சம் ஆக்கம் என்பனவற்றாற் பெறப்படும். நீக்கப் பொருண்மை தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றாற் பெறப்படும். பொருவும் எல்லையும் `இதனின் இற்று இது என்பதனாற் கொள்ளப்படும் என்பர் சேனாவரையர். 79. வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழைமை ஆக்கம் என்றா இன்மை உடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் அதன்பால வென்மனார். இஃது ஐந்தாம் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) வண்ணம் முதலாகப் பற்றுவிடுதல் ஈறாக ஓதப் பட்டனவும் அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன என்று கூறுவர் புலவர். என்றவாறு. வண்ணம் வெண்மை கருமை முதலியன. வடிவு வட்டம் சதுரம் முதலியன. அளவு நெடுமை குறுமை முதலியன. சுவை கைப்பு புளிப்பு முதலியன. நாற்றம் நறுநாற்றம் தீ நாற்றம் முதலியன. (உ-ம்) காக்கையிற் கரிது களம்பழம். இதனின் என்பது காக்கை. இற்று என்பது கரிது. இது என்பது களம்பழம். `இதனின் இற்று இது என்னும் வாய்பாடு ஐந்தாம் வேற்றுமைப் பொருள் எல்லாவற்றிற்கும் பொதுவாய் அமைந்துள்ளமையறிக. இதனின் வட்டமிது, இதனின் நெடிதிது, இதனிற் றீவிதிது, இதனிற் றண்ணிது இது, இதனின் வெய்யதிது, இதனின் நன்றிது, இதனிற் றீதிது, இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனின் இளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனின் இலனிவன், இவனின் உடையனிவன், இதனின் நாறுமிது, இதனிற் பலவிவை, இதனிற் சிலவிவை, இவையெல்லாம் ஒத்த பண்பும் ஒவ்வா வேறுபாடும் பற்றி முறையே உவமப் பொருவும் உறழ்பொருவும் விரித்தற் கேற்றவாறு அமைந்துள்ளமை காண்க பொரூஉப் பொருள் வழக்கிற் பயின்று வருதல் பற்றி அதனை விரித்தார் ஆசிரியர். `கள்ளரின் அஞ்சும் என்பது அச்சம். `வாணிகத்தின் ஆயினான் என்பது ஆக்கம். ஊரிற் றீர்ந்தான் என்பது தீர்தல். `காமத்திற் பற்றுவிட்டான் என்பது பற்றுவிடுதல். இவை நான்கும் ஒழிந்த ஏனை இருபத்து நான்கும் பொரூஉப் பொருளவாம். அன்ன பிறவும் என்றதனால் எல்லைப் பொருளும் ஏதுவும் கொள்க. எல்லை: கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு என்பன. ஏது : முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது என்பது என்பர் இளம்பூரணர். மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரங்களையும் இளம்பூரண ருரையையும் அடியொற்றி யமைந்தது, 298. ஐந்தா வதனுரு பின்னு மில்லும் நீங்க லொப்பெல்லை யேதுப் பொருளே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஐந்தாம் வேற்றுமைக்கு இன்னென்பதும் இல்லென்பதும் உருபாம். நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருளாகத் தம்மையேற்ற பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தல் அவற்றின் பொருளாகும் என்பது இதன் பொருள். தொல்காப்பியத்திற் கூறப்படாமல் பிற்காலத்தில் இன்னின் திரிபாக அமைந்த இல்லுருபு புதியனபுகுதல் என்பதால் ஈண்டு ஐந்தாம் வேற்றுமையுருபாக இடம்பெற்றது. 80. ஆறாகுவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. இஃது ஆறாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஆறாம் வேற்றுமையாவது, அதுவெனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது உடைப் பொருளாகி நிற்குந் தன்னோடு ஒற்றுமையுடைய பொருளானும் தன்னின் வேறாகிய பொருளானும் `இதனது இது என்பது படவரும் அத்தன்மையனவாகிய கிழமையைப் பொருளாக உடையது. என்றவாறு. எனவே ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை, தன்னான் வந்த தற்கிழமையும், பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரண்டென்றுங் கூறியவாறாம். தன் என்றது தன்னோடு ஒற்றுமையுடைய பொருளை. பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை என்பர் சேனாவரையர். `இதன் இவை என்னும் பன்மையுருபும் ஆது என்னும் ஒருமையுருபும் அடங்க `அன்ன கிளவி எனப் பன்மையாற் கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். பொருட்கிழமையும் பண்புக்கிழமையும் தொழிற்கிழமையும் அவை போல்வனவும் எனக் கிழமை பலவகைப்படும். அவற்றுள் ஒன்றினை வரைந்து சுட்டாது `இதனது இது என்னும் சொல்லால் தோன்றும் கிழமை மாத்திரம் சுட்டுவது ஆறாம் வேற்றுமை என்பார், `இதனது இதுவெனும் அன்னகிளவிக் கிழமைத்ததுவே என்றார். ஒன்று பலகுழீஇய தற்கிழமையும், வேறுபலகுழீஇய, தற் கிழமையும், ஒன்றியற்கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய் திரிந்தாய் தற்கிழமையும் எனத் தற்கிழமை ஐந்து வகைப்படும். பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையும் எனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். எள்ளது குப்பை என்பது, ஒன்றுபலகுழீஇய தற்கிழமை. படையது குழாம் என்பது தானை, யானை, குதிரை ஆகிய வேறுபல குழீஇய தற்கிழமை. நிலத்தினது அகலம் என்பது ஒன்றியற்கிழமை. யானையது கோடு என்பது உறுப்பின்கிழமை எள்ளினது சாந்து என்பது, மெய்திரிந்தாய தற்கிழமை. இனி, இவ்விருகிழமைப் பொருள்களையும் விரித்துரைப்பது அடுத்துவரும் சூத்திரமாகும். 81. இயற்கையின் உடைமையின் முறைமையிற் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பிற் குழூஉவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். இஃது ஆறாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) இயற்கை முதலாக வாழ்ச்சியீறாகச் சொல்லப் பட்டனவும் திரிந்து வேறுபடும் அவை போல்வன பிறவுமாகிய முற்கூறிய கிழமைப் பொருளின்கண் தோன்றும் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைப் பாலன என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. திரிந்து வேறுபடுதல் அன்னபிறவும் என்றதனால் தழுவப் படுவனவற்றுள் ஒரு சாரனவற்றிற்கே கொள்க. (உ-ம்) எள்ளது குப்பை படையது குழாம் என்பன குழூஉக் கிழமை. அவை முறையானே ஒன்றுபலகுழீஇயதும் வேறுபல குழீஇயதுமாம். சாத்தனது இயற்கை, நிலத்த தகலம் என்பன இயற்கைக் கிழமை. சாத்தனது நிலைமை; சாத்தன தில்லாமை என்பன நிலைக்கிழமை. இயற்கையும் நிலையும் ஆகிய இவை ஒன்றிய்ற்கிழமையாம். யானையது கோடு, புலியதுகிர் என்பன உறுப்பின் கிழமை. உறுப்பாவது ஒரு பொருளின் ஏகதேசம் என்பது அறிவித்தற்கு `ஒருவழியுறுப்பு என்றார். சாத்தனது செயற்கை, சாத்தனது கல்வியறிவு என்பன செயற்கைக் கிழமை. அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை. முதுமை என்பது பிறிதோர் காரணம் பற்றாது காலம்பற்றி ஒருதலையாக அப்பொருளின்கண் தோன்றும் பருவமாகலின் செயற்கையுள் அடக்காது வேறுகூறப் பட்டது. சாத்தனது தொழில் சாத்தனது செலவு என்பன வினைக்கிழமை. உறுப்பு, செயற்கை, முதுமை, வினை என்னும் இவை மெய்திரிந்தாய தற்கிழமையாகும். சாத்தன துடைமை சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை. மறியது தாய், மறியது தந்தை என்பன முதற்கிழமை. ஈண்டு முதல் என்றது பொருளினை. கபிலரது பாட்டு பரணரது பாட்டியல் என்பன செய்யுட்கிழமை. தெரிந்து (ஆராய்ந்து) மொழியாற் செய்யப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தியாயின. மேற்குறித்த உடைமை, முறைமை, கருவி, துணை, கலம், முதல், செய்யுள் ஆகிய இவை பொருட் பிறிதின் கிழமையாகும். முருகனது குறிஞ்சி நிலம், வெள்ளிய தாட்சி என்பன கிழமைக் கிழமை. காட்டதியானை, யானையது காடு என்பன வாழ்ச்சிக்கிழமை. மேற்குறித்தவற்றுள் முருகனது குறிஞ்சி நிலம், யானையது காடு என்பன நிலப்பிறிதின் கிழமை. காட்டதியானை என்பது பொருட்பிறிதின் கிழமை வெள்ளிய தாட்சி என்பது காலப்பிறிதின் கிழமை. திரிந்து வேறுபடுவன எள்ளது சாந்து, கோட்டது நூறு என்பன. இவை முழுவதுந் திரிதலின் வேறு கூறினார். அன்னபிறவும் என்றதனால் சாத்தன தொப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்ல பொருள், ஆவினது பால், கரும்பினது சாறு என இந்நிகரன எல்லாங் கொள்ளப்படும். ஆறாம் வேற்றுமையுருபும் பொருள் வகையும் கூறும் இவ்விருசூத்திரப் பொருளையும் தொகுத்து விளக்கும் முறையில் அமைந்தது, 299. ஆற னொருமைக் கதுவு மாதுவும் பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னீட்டம் திரிபி னாக்க மாந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஆறாம் வேற்றுமையின் ஒருமைப் பொருண்மைக்கு அதுவும் ஆதுவும், பன்மைப் பொருண்மைக்கு அவ்வும் உருபாம். பண்பும், உறுப்பும், ஒரு பொருட் டிரட்சியும், பல பொருட் புரட்சியும், ஒன்று திரிந்து ஒன்றாதலும் ஆகும் ஐந்து தற்கிழமையும், பிறிதின் கிழமையும் போற்றுதல் அதற்குப் பொருளாம் என்பது இதன் பொருள். ஆற னுருபே யதுவா தவ்வும் வேறான் றுரியதைத் தனக்குரியதையென இருபாற் கிழமையின் மருவுற வருமே ஐம்பா லுரிமையும் அதன்தற் கிழமை. என்றார் அகத்தியனார் எனப் பிற்கால அகத்தியச் சூத்திரத்தை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர் மயிலைநாதர். `சாத்தனது ஆடை என்புழிச் `சாத்தனது கை என்றாற் போலாது, சாத்தனுக்குரிய ஆடை அவனிற் பிறிதாதலின் பிறிதாகிய கிழமை பிறிதின் கிழமையெனப்பட்டது. அஃறிணையொருமை பன்மைகட்கு இயைந்த அது, ஆது, அ என்னும் உருபுகளைக் கூறவே, இவை உயர்திணையொருமை பன்மைகளாகிய கிழமைப்பொருட்கு ஏற்றனவாகா என்பது பெறப்படும். அவை வருங்கால் அவனுடைய விறலி, அவனுடைய விறலியார் என மூன்று சொல்லாய் இரண்டு சந்தியாய், முன்னது எழுவாய்ச் சந்தியும் பின்னது பெயரெச்சக் குறிப்புச் சந்தியும் ஆம் என்பர் சிவஞான முனிவர். இவற்றை ஆறாம் வேற்றுமைச் சந்தி என்றும் `உடைய என்பதனைச் சொல்லுரு பென்றும் கூறுவாருமுளர். ஆறாம் வேற்றுமைப் பொருளைக் குறைப்பொருள் என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. 82. ஏழாகுவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின் அனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே. இஃது ஏழாம் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஏழாம் வேற்றுமையாவது, கண் என்று பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது வினை செய்யா நிற்றலாகிய இடமும் நிலமாகிய இடமும் காலமாகிய இடமும் என அம்மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும். என்றவாறு. எனவே ஏழாம் வேற்றுமை இடப் பொருண்மைத்து என்றவாறாம். `அனைவகைக் குறிப்பிற்றோன்றும் அது என்றது, வினை செய் இடம், நிலம், காலம் ஆகிய அவற்றை இடமாகக் குறித்த வழியே ஆண்டு ஏழனுருபு தோன்றுமென்றும் அல்லாதவழித் தோன்றா தென்றும் கூறியவாறு. தன்னின முடித்தல் என்பதனால் ஏனை வேற்றுமையுருபுகளும் அவ்வப் பொருட் குறிப்பில்வழி அப் பெயர்க்கண் தோன்றா என்பதாம். (உ-ம்) தட்டுப் புடைக்கண் வந்தான் - இது தட்டிப் புடைத்தலாகிய தொழில் நிகழ்ச்சிக்கண் வந்தான் எனப் பொருள் தருதலின் ஈண்டு வினையிடமாயிற்று. மாடத்தின்கண் இருந்தான் - நிலம் இடமாயிற்று. கூதிர்க்கண்வந்தான் - காலம் இடமாயிற்று. 83. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ அன்ன பிறவு மதன்பால வென்மனார். இஃது ஏழாம் வேற்றுமையுருபுகளை விரித்துரைக்கின்றது என் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஏழாம் வேற்றுமை பொருள் வேறுபாடு உணர்த்துகின்றது எனச் சேனாவரையரும் தெய்வச் சிலையாரும் கருத்துரைப்பர். (இ-ள்) கண் முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும் அத் தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப்பால என்று கூறுவர் புலவர். என்றவாறு. கண்ணென்னும் பொருளாவது `கண்ணின்று கூறுத லாற்றான் அவனாயின் (கலி. 37) எனவும், `கண்ணகன் ஞாலம் எனவும், கண்ணென்னு மிடைச்சொல்லா லுணர்த்தப் படும் பொருள். தேவகையென்பது திசைக்கூறு. கண்ணின்று சொல்லியானை என்கண் ணின்றிவை சொல்லற் பாலையல்லை என்றும், ஊர்க்காற் செய்யை ஊர்க்கட் செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க்கண்மரம் என்றும், எயிலகத்துப் புக்கானை எயிற்கட்புக்கான் என்றும், இல்லுளிருந் தானை இற்கணிருந்தான் என்றும், அரசனுழையிருந் தானை அரசன்கணிருந்தான் என்றும், ஆலின்கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கட் கிடந்தது என்றும், மரத்தின் மேலிருந்த குரங்கை மரத்தின்கணிருந்தது என்றும், ஏர்ப்பின் சென்றானை ஏர்க்கட் சென்றான் என்றும், காட்டுச்சா ரோடுவதனைக் காட்டின் கணோடும் என்றும், உறையூர்க் கயனின்ற சிராப்பள்ளிக்குன்றை உறையூர்க்கட் குன்று என்றும், எயிற்புடைநின்றாரை எயிற் கணின்றார் என்றும், வடபால் வேங்கடம் தென்பாற்குமரி என்பனவற்றை வடக்கண் வேங்கடம் தெற்கட்குமரி என்றும், புலிமுன் பட்டானைப் புலக்கப்பட்டான் என்றும், நூலி னிடையுங் கடையுந் தலையு நின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும், கை வலத்துள்ளதனைக் கைக்கணுள்ளது என்றும், தன்னிடத்து நிகழ்வதனைக் கைக் கணுள்ளது என்றும், தன்னிடத்து நிகழ் வதனைத் தன்கணிகழ்வது என்றும் அவ்விடப் பொருள் பற்றி ஏழாம் வேற்றுமை வந்தவாறு கண்டு கொள்க. ஏழாம் வேற்றுமைக்குக் கண் என்பது உருபாகும் என்பது மேலே கூறப்பட்டமையால் இச் சூத்திரத்து மீண்டும் `கண் கால் எனத் தொடங்குதல் கூறியது கூறலாம் ஆதலானும், இச் சூத்திரத்துவரும் புறம் அகம் வலம் என்பனவற்றுக்கு, ஊர்ப் புறத்திருந்தான், ஊரகத்திருந்தான், கைவலத்துள்ளது கொடுக்கும், என உரையாசிரியர் இளம்பூரணர் அவற்றின்பின் அத்துச் சாரியை கொடுத்து உதாரணங்காட்டினமையால் புறம் அகம் வலம் என்பனவற்றை உருபெனக் கொள்ளுதல் அவர்க்குக் கருத்தன் றென்பதும், ஆசிரியர் உருபேற்கும் பெயர்க்கும் உருபுக்கும் இடையே சாரியைப்பேறு கூறியதன்றி உருபின் பின்னர்ச் சாரியைப் பேறு கூறாமையானும் இச்சூத்திரத்துக் கூறப்படும் கண் கால் புறம் அகம் உள் என்பன முதலாயின உலக வழக்கில் பல்வேறு இடப் பொருள்களில் ஆளப்பெறுதலானும் இவற்றை ஏழாம் வேற்றுமையுருபுகளெனக் கொள்ளாது ஏழாம் வேற்றுமைப் பொருள்வேறுபாடுகளாகக் கொள்ளுதலே ஏற்புடைய தாகும் என்பதும் சேனாவரையர் கருத்தாகும். எனினும் கண் கால் முதலிய இவை இடத்தின் பொதுமையுணரவரும் கண்ணென்னும் உருபின் வழி வாராது அவ்வுருபு நின்ற நிலைக்களத்து நின்று இட வகைகளாகிய சிறப்புப் பொருண்மையுணர்த்தி நிற்றல் காணலாம். அன்றியும், இச்சூத்திரத்துக் குறிப்பிட்ட கண் கால் புறம் அகம் முதலியன, முன் இரண்டாம் வேற்றுமை முதலியவற்றுக்கு எடுத்தோதிய காப்பு முதலிய பொருள்களைப் போல உருபை முடித்து நிற்பனவாகாமல் இடப் பொருளின் பொதுமை யுணர்த்தும் கண் என்னும் உருபின் நிலைக்களத்து நின்று இடவகைகளாகிய பொருள் வகையினைப் புலப்படுத்துவன வாதலின் இவை உருபின் தன்மையும் பொருளின் தன்மையும் ஒருங்குடையன எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். இவை உருபின் தன்மை உடையவாதல் பற்றி `என்னுழை, என்முன் என நிலை மொழி உருபிற்கேற்ற செய்கை பெற்றும், பொருளின் பொதுமை யுணர்த்தும் கண் என்னும் உருபின் நிலைக்களத்து நின்று இட வகைகளாகிய பொருள் வகையினைப் புலப்படுத்து வனவாதலின் இவை உருபின் தன்மையும் பொருளின் தன்மையும் ஒருங்குடையன எனக் கொள்ளுதல் பொருத்த முடையதாகும். இவை உருவின் தன்மை உடையவாதல் பற்றி `என்னுழை, என்முன் என நிலை மொழி உருபிற்கேற்ற செய்கை பெற்றும், பொருளின் தன்மை பற்றி, `ஊரகத்திருந்தான் ஊர்ப்புறத் திருந்தான் என ஈற்றின் சாரியை பெற்றும் வந்தன எனக் கருத வேண்டியுளது. ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய ஏழாம் வேற்றுமை யுருபும் பொருளுமாகிய இவற்றின் தன்மையினை உய்த்துணர்ந்த பவணந்தி முனிவர், 300. ஏழ னுருபு கண்ணாதியாகும் பொருண் முதலாறும் ஓரிரு கிழமையின் இடனாய் நிற்றல் இதன்பொரு ளென்ப. எனவும், 301. கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொருளுருபே. எனவும் வரும் இரு சூத்திரங்களால் ஏழாம் வேற்றுமையுருபும் பொருளும் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். ஏழாம் வேற்றுமைக்கு உருபு கண் என்பது முதலானவை யாம். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பன ஆறும் தற்கிழமையாலும் பிறிதின் கிழமையாலும் ஒன்றற்கு இடனாய் நிற்றல் இதன் பொருள் என்று சொல்லுவர்; கண் முதலாக எண்ணப்பட்ட இருபத்தெட்டும் இடமாகிய பொருள் வகைகளைப் புலப்படுத்தும் உருபுகளாம் என்பது இவற்றின் பொருளாகும். 84. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லாறாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய வென்ப. இது, வேற்றுமைக்கண் கிடந்ததோர் இலக்கண முணர்த்துகின்றது. (இ-ள்) வேற்றுமைப் பொருளை விரிக்குமிடத்து, அன்மொழித் தொகையை விரிப்புழிப் பல்லாற்றான் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச் சொல்லும் விரிக்கப் படுதல் போன்று வேண்டும் சொல்லெல்லாம் விரித்துரைத்தற் குரியன என்பர் ஆசிரியர் எனச் சேனாவரையரும் நச்சினார்க் கினியரும் இச் சூத்திரத்துக்குப் பொருள் கூறினர். வேற்றுமைக்கண் உருபுதொகப் பொருள் புணர்ந்து நிற்பது வேற்றுமைத் தொகையாதலின் அத்தொகையினை `வேற்றுமைப் பொருள் எனக் குறித்தார் ஆசிர்யர். ஈற்று நின்றியலும் தொகை என்றது பண்புத்தொகை முதலிய தொகைகளின் இறுதியில் நின்றியலும் அன்மொழித் தொகையே (எச்சவியில் - 22) எனப் பின்னரும் ஆசிரியர் விளங்கக் கூறுதலால் இனிது புலனாதல் காணலாம். (உ-ம்) தாழ் குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகளை விரிப்புழி, தாழ் குழலையுடையாள், பொற்றொடியை யணிந்தாள், மண்ணாகிய காரணத்தான் இயன்றது என விரித்துரைக்கப் பெறும் உடைமையும் அணிதலும் இயறலும் ஆகிய சொற்கள், கருங்குழற்பேதை, பொற்றொடி யரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகளை விரிப்புழியும் கருங்குழலையுடைய பேதை, பொற்றொடியணிந்த அரிவை, மண்ணானியன்ற குடம் என முறையே விரித்துரைக்கும் நிலையில் அத்தொகைக்கண் அமைந்துள்ளமை காணலாம். உரையாசிரியர் இச்சூத்திரத்தினை, `வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை ஈற்று நின்றியலும் தொகை வயிற் பிரிந்தே எனவும், `பல்லாறாகப் பொருள் புணர்ந்த திசைக்கும் எல்லாச் சொல்லும் உரியவென்ப எனவும் இரண்டு சூத்திரங்களாகப் பகுத்து உரை கூறினர். தம்மதம் இதுவென்பது போதர `ஒன்றாக வுரைப்பாரும் உளர் என்றார் எனச் சேனாவரையர் கூறும் குறிப்பு இப்பொழுது அச்சிடப் பெற்று வழங்கும் இளம்பூரணருரையிற் காணப்படவில்லை. இனி, இதனை தொக்க வேற்றுமையுருபு விரியுங்கால் மொழியீற்றுக் கண்ணே புலப்படும் எனவும், உருபு தொக்கும் விரிந்தும் நிற்கும் ஆண்டு அவ்வுருபே போல வந்து ஒட்ட நிற்பன பிற சொற்களும் உள. அவையெல்லாம் அவ்வுருபே போல ஆண்டே தொகுத்தலும் விரித்தலும் உடையன எனவும் இரு சூத்திரங்களாகப் பகுத்துப் பொருள் கூறிய இளம்பூரணர், குதிரைத்தேர் என்பது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; ஆன் என்பது ஆண்டு உருபு; பூட்டப்பட்டது என ஆண்டு உருபல்லது, ஆண்டு உருபு தொக்கு நின்றாங்கே நிற்கவும் அமையும் விரித்துக் காட்டவும் அமையும் என்று விளக்கமும் கூறுவர். இனி, `வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலைஎன்னும் இச்சூத்திரம் அறுவகை வேற்றுமைக்கும் புறடை உணர்த்து கின்றதெனக் கருத்துரைத்த தெய்வச்சிலையார், `வேற்றுமைக்குரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக் கண் இயலும் தொகைச் சொல்லின்கண் தொகையாம் தன்மையிற் பிரிந்து பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர் என இச்சூத்திரத்திற்குப் பொருள் வரைந்து பின்வருமாறு உதாரணங் காட்டி விளக்குவர். படைக்கை என்றவழி படையைப் பிடித்த கை, எடுத்தகை, ஏந்திய கை எனவும்; குழைக்காது என்றவழி குழையையுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது எனவும்; தாய்மூவர் என்வழித் தாயொடு கூடி மூவர், கூடிய மூவர் எனவும்; குதிரைத்தேர் என்றவழிக் குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஓட்டப்பட்ட தேர் எனவும்; கரும்பு வேலி என்றவழிக் கம்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி எனவும்; வரையருவி என்றவழி வரையினின்றும் வீழாநின்ற அருவி, ஒழுகா நின்ற அருவி எனவும்; பாண்டியநாடு என்றவழிப் பாண்டியனது நாடு, உடையநாடு, எநிற்தநாடு, கொண்டநாடு எனவும்; குன்றக் கூகை என்றவழிக் குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை, இராநின்ற கூகை எனவும் இவ்வாறு வருவன இவை யெல்லாம் எடுத்தோதின் வரம்பில ஆதலின் எல்லாச் சொல்லும் உரிய எனப் புறநடை ஓதல் வேண்டிற்று. இவ்வாறு இச்சூத்திரத்திற்க உரையாசிரியர் பலரும் கூறிய உரைகள் ஒன்றற்கொன்று தம்முள் தொடர்பில்லாதன போற் காணப்பட்டாலும் அவர்கள் தம் உரையகத்துக் காட்டிய உதாரணங்களையும் விளக்கங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால், வேற்றுமைத் தொகைச் சொற்களை விரித்துப் பொருள் கொள்ளு மிடத்து உருபேயன்றி அவ்வுருபினை முடித்தற்கு இன்றியமை யாதனவாய்ப் பல்லாற்றானும் பொருள் தொடர் புடையவாய் வந்து இயையும் எல்லாச் சொல்லும் விரித்தற் குரியன என்பதே இவ்வுரைகளின் பொதுக் கருத்தாக அமைந்து வேற்றுமைத் தொகைகளில் உருபும் பொருளும் உடன் தொக்க தொகையின் இயல்பினை விளக்கி நிற்றல் காணலாம். பெயர்ப் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமையுருபு களையும் அவற்றின் பொருள் வகைகளையும் விரித்துரைக்கும் இவ்வேற்றுமை யியலின் புறநடையாக அமைந்த இச்சூத்திரம், வேற்றுமைத் தொகையின் மறைந்து நின்ற பிற சொற்களை விரிக்குமாறு கூறியதெனக் கொள்ளுதல் அத்துணைப் பொருத்த முடையதாகத் தோன்றவில்லை. அன்றியும் வேற்றுமைத் தொகையை விரிக்குமாறு கூறுதல் ஆசிரியர் கருத்தாயின் `வேற்றுமைத் தொகையை விரிக்குங்காலை எனப் பொருள் தெளிவுபடச் சூத்திரஞ் செய்திருப்பர். அங்ஙனமன்றி `வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை என ஆசிரியர் எடுத்துரைத்தலால் இச்சூத்திரம் இவ்வேற்றுமையியலில் ஐ முதலிய வேற்றுமைக்கு உரியனவாக அவற்றின் ஈற்றில் முறையே தொகுத்துரைக்கப்பட்ட வேற்றுமைப் பொருள் வகைகளைப் பற்றியதாகும் எனக் கருத வேண்டியுளது. எனவே மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள் வகையை விரித்துரைக்குங்கால், `காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் என்பன முதலாக ஒவ்வொரு வேற்றுமையின் ஈற்றில் தொகுத் துரைத்த பொருள்களேயன்றி, அத்தொகுதிகளினின்றும் பலவாறாகப் பிரிந்து அப்பொருளொடு பொருந்தித் தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என இச்சூத்திரத்திற்குப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. இதன்கண் `ஈற்று நின்றியலும் தொகை என்றது `காப்பின் ஒப்பின் என்பது முதலாகத் தொகுத்துரைக்கப்படும் வேற்றுமை பற்றிய பொருட் பகுதிகளை இரண்டாம் வேற்றுமைக்குரிய பொருள் வகைகளில் எடுத்துரைக்கப்பட்ட காத்தற் பொருட்கு உதாரணம் ஊரைக்காக்கும் என்பது இப்பொருளில் ஊரைப் புரக்கும், ஊரைப் பேணும், ஊரை ஓம்பும் என, புரத்தல், பேணுதல் ஓம்புதல் எனப்பலவாறாகத் தோன்றும் எல்லாச் சொல்லும் இவ்வேற்றுமையில் விரித்துரைக்கப்படும் இயைபுடைய வாதல் காண்க. வேற்றுமைப் பொருளை விரித்தல் பற்றிய இவ்விதி சுருக்க நூலாகிய நன்னூலில் இடம்பெறவில்லை. ஆயினும் வேற்றுமை யுருபுகளை முடிக்கும் சொன்முடிபு பற்றிய விதியினை, 318. எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளும் நான்கே ழிருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர். எனவரும் சூத்திரத்தில் எடுத்துரைப்பர் பவணந்தி முனிவர். எல்லைப் பொருண்மைக்கண் வரும் ஐந்தாம் வேற்றுமையுருபும் அது என்னும் ஆறாம் வேற்றுமையுருபும் பெயரைக் கொண்டு முடிவன. இவ்விரண்டுமல்லாத ஏனை வேற்றுமைகள் வினையை யும் வினைக்குறிப்பையும் கொண்டு முடிவன. அவற்றுள் நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையினையேயன்றி வினையொடு பொருந்தும் பெயரைக் கொண்டு முடியும், பெரும்பாலும் என்பது இதன் பொருளாகும். `பெரும்பாலும் என்றதனால் ஆறாது வினையும் வினைக் குறிப்புங்கொண்டும், அல்லன வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டும் பெறுமெனக் கொள்க என்பர் மயிலைநாதர். கருவூரின் கிழக்கு, சாத்தனது கை என எல்லைப் பொருட் டாகிய இன்னுருபும் அது என்னும் ஆறாம் வேற்றுமையுருபும் பெயர் கொண்டன. சாத்தன் வந்தான், சாத்தன் நல்லவன்; குடத்தை வனைந்தான், குடத்தையுடையன; வாளால் வெட்டினான், வாளால் வலியன்; சாத்தனுக்குக் கொடுத்தான், சாத்தனுக்கு நல்லன; நோயினீங்கினான், நோயிற்கொடியன்; அவையின்கண் இருந்தான், அவையின்கட் பெரியன்; கொற்றா கொள், கொற்றா வலியை என அல்லன வினைகொண்டன. பிணிக்கு மருந்து, மனையின்கண் ஒளி என நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையே யன்றிப் பெயர் கொண்டன. இப்பெயர்கள் பிணிக்குக் கொடுக்கு மருந்து, மணியின் கண் இருக்கும் ஒளி என வினை வேண்டி நிற்றலின் வினையொடு பொருந்தும் பெயர்களாயின என்பர் சிவஞானமுனிவர். 3. வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையொடு மயங்குவது உருபுமயக்கம். ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியலாதலின் இது வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக் கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையோடு தொடர் புடைய விதிகள் சில இவ்வியலிற் கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர் பன்மை நோக்கி யமைந்த பெய ரென்றும், இதன்கண், `யாதனுருபிற் கூறிற்றாயினும் என்ற சூத்திரத்தில் உருபு மயக்கமுணர்த்தி, ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினார் என்றும் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை இளம்பூரணர் 35-ஆகவும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையாரும் 34-ஆகவும் பகுத்து உரை கூறியுள்ளனர். பொருள் மயக்கமாவது, ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலாகவுள்ள அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின்கண்ணே சென்று மயங்குதல். இவ்வியலில் 1 முதல் 17 வரையுள்ள சூத்திரங்கள் வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்துவன. 84. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. இஃது இரண்டாம் வேற்றுமையோடு ஏழாம் வேற்றுமை மயங்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) கருமமல்லாத சார்பு பெருண்மைக்கு ஏழாம் வேற்றுமை உரித்தாய் வருதலும் உடைத்து. என்றவாறு. இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட `காப்பின் ஒப்பின் எனவரும் பொருட்பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச்சார்பும் கருமமல்லாச்சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது `தூணைச் சார்ந்தான் என்பது போல ஒன்றனையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது, `அரசரைச் சார்ந்தான் என்றாற் போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாச் சார்பு பொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமைச் செயப்படு பொருளின் நீங்காது `அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக் குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். தூண்பற்றாக ஒருவன் சார்ந்தாற்போல அரசர் பற்றாக ஒருவன் சார்ந்தொழுகுதலின் அது சார்பாயிற்று. 85. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினைநிலை யொக்கு மென்மனார் புலவர். இதுவும் அது. (இ-ள்) சினைமேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர் புலவர். என்றவாறு. (உ-ம்) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் எனவரும். இதன்கண் இரண்டாம் வேற்றுமைக்குரியதாகச் சொல்லப்பட்ட குறைத்தற் பொருள் ஏழாம் வேற்றுமைக் கண்ணும் ஒத்த நிலையிற் பயின்று வந்தமை காணலாம். வினைநிலையொக்கும் எனப் பொதுப்படக் கூறினா ராயினும், புகழ்தல் பழித்தல் என்னும் தொடக்கத்தனவொழித்து அறுத்தல், குறைத்தல் முதலாயின வினையே கொள்ளப்படும் என்பர் சேனாவரையர். 86. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. இதுவும் அது. (இ-ள்) கன்றற் பொருள்மேல் வருஞ் சொல்லும் செலவு பொருள்மேல் வருஞ்சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில் என்றவாறு. (உ-ம்) சூதினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான் எனவும், நெறியைச் சென்றான், நெறியின்கட் சென்றான் எனவும் வரும். பொருள்பற்றி யோதினமையால் சூதினை இவறினான், சூதின் கண் இவறினான்,நெறியை நடந்தான், நெறிக்கண் நடந்தான் என வருவனவுங் கொள்க. முற்கூறிய சினைநிலைக்கிளவி நிலைமொழி வரையறையாக லானும், இங்குக் குறித்த கன்றல், செலவு என்பன வருமொழி வரையறையாகலானும் இவற்றை ஒரு சூத்திரத்துள் அடக்காமல் இருவேறு சூத்திரங்களாக வேறு கூறினார். 87. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. இஃது இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒரு பொருட்கண் நிகழ்வதோர் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) முதலும் சினையும் தொடருங்கால் முதற்பொருளின் கண் ஆறாம் வேற்றுமை வருமாயின் சினைப்பொருட்கு இரண்டாம் வேற்றுமை வரும். என்றவாறு. (உ-ம்) யானையது கோட்டைக் குறைத்தான் எனவரும். மேல், சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும் வினை நிலைக்கண் ஒக்கும் எனக் கூறவே, முதலொடு தொடர்ந்த சினைக் கிளவிக்கும் அவ்வாறு ஐயும் கண்ணும் வரும் என எய்தியதனை விலக்கி, முதலுக்கு அதுவுருபும் சினைக்கு ஐயுருபும் வரும் என நியமித்தவாறு. 88. முதன்முன் ஐவரிங் கண்ணென வேற்றுமை சினைமுன் வருத றெள்ளி தென்ப. இதுவும் அது. (இ-ள்) முதலும் சினையும் தொடங்குகால் முதற்பொருட்கு இரண்டாவது வருமேயெனின் சினைப் பொருட்கு ஏழாவது வருதல் தெளிவுடையது. என்றவாறு. (உ-ம்) யானையைக் கோட்டின்கட் குறைத்தான் எனவரும். தெள்ளிது என்றதனால் யானையைக் கோட்டைக் குறைத்தான் என ஐகார வேற்றுமை ஈரிடத்தும் சிறுபான்மை வருமென்பதாம். 87, 88 ஆகிய இவ்விரு சூத்திரப் பொருளையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 314. முதலை ஐயுறிற் சினையைக் கண்ணுறும் அது முதற்காயிற் சினைக்கை யாகும். (சினையொடு முதற்பொருள் தொடருங்கால்) முதலினை ஐயுருபு பொருந்திற் சினையினைக் கண்ணுருபு பொருந்தும். அது வுருபு முதலுக்கு வரிற் சினைக்கு ஐயுருபு வரும் என்பது இதன் பொருள். உதாரணம் மேற்காட்டியனவே கொள்க. இனி, `இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் அது என்பதனைச் சுட்டாக்கிக் `கண்ணுருபு முதற்கு ஆயின் சினைக்கு ஐயாகும் எனப் பொருளுரைத்து `யானையின் கட்காலை வெட்டினான் எனவும் வரும். என உதாரணங் காட்டுவர் சிவஞான முனிவர். 89. முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. இது ஐயம் அகற்றுகின்றது. (இ-ள்) முதலும் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையேயாய்த் தம்முள் வேறு பொருளாகா சொல்லுங்கால் சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினால் முதலென்றும் சினையென்றும் வழங்கப்படும். என்றவாறு. சொற்குறிப்பின் என்றது, முதல் எனப்பட்ட பொருள் தானே தன்னைப் பிறிதொரு பொருட்கு ஏகதேசப் பொருளாகக் குறித்தவழிச் சினையுமாம் எனவும், சினை எனப்பட்ட பொருள் தானே தன்கண் ஏகதேசப் பொருளை நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாம் எனவும் கூறியவாறு. கோட்டது நுனியைக் குறைத்தான்; கோட்டை நுனிக்கட் குறைத்தான்; கோட்டை நுனியைக் குறைத்தான்; என முதலுக்கு ஓதப்பட்ட உருபு சினைக்கண்ணும் வந்துளதே என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஈண்டுக் கோடு என்பது சொல்லுவான் கருத்து வகையால் முதற்பொருளாய் நிற்றலின் முதலுக்கு ஓதிய உருபே முதலுக்கு வந்தது என ஐயமகற்றியவாறு. 90. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. இதுவும் அது. (இ-ள்) பிண்டத்தையுணர்த்தும் பெயரும், முதற்சினைப் பெயரியல்பில் திரியா; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் தொன்று தொட்டுப் பயின்று வாராநின்ற மரபு, என்றவாறு. பிண்டம் என்றது பலபொருட் டொகுதியை. இச்சூத்திரத்தில் ஆயியல் திரியாஎன. மாட்டெறிந்தது. முதற்சினைக் கிளவிக்குப்போலப் பிண்டப் பெயருக்கு முதற் அதுவுருபுவரிற் சினைக்கு ஐயுருபுவருதலும், முதற்கு ஐயுருபு வரிற் சினைக்குக் கண்ணுருபு வருதலும் சிறுபான்மை ஐயுருபு வருதலுமாம். உ-ம் குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கண் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான். எனவரும். குப்பை என்புழித் தொக்க பலபொருளல்லது அவற்றின் வேறாய், அவற்றான் இயன்று தான் ஒன்றெனப்படும் பொருளில்லை. எனவே அப் பலபொருட்டொகுதியை முதல் என வழங்குதல் மரபன்மையின் இதனை வேறு கூறினார் ஆசிரியர். 89,90 ஆகிய இவ்விரு சூத்திரப் பொருளையும் தொகுத் துணர்த்தும் முறையில் அமைந்தது, 315. முதலிவை சினையிவை யெனவே றுளவில உரைப்போர் குறிப்பின; அற்றே பிண்டமும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இவையே முதல், இவையேசினை எனத் தம்முள் வேறாக அறியக்கிடப்பன இல்லை; சொல்லுவோர் குறிப்பினால், முதலே சினையுமாம்; சினையே முதலுமாம்; பிண்டப்பொருளும் அத் தன்மையதாம் என்பது இதன் பொருளாகும். ஒரு பொருட்கண் முதலைக்கருதிச் சினையெனவும் சினையைக் கருதி முதலெனவுங் கூறுதல் போலப் பிண்டித்த பொருள்களைக் கருதியல்லது பிண்டமென வழங்குதல் கூடாமை யின், `பிண்டமுமற்றே என்ற துணையானே `பிண்டித்த பொருள் களும் அத் தன்மையனவே என்பது தாமே போதரும் எனக்கூறி, நெல்லைப் பொலியின்கண் வாரினான், நெல்லினது பொலியை வாரினான் என உதாரணங்காட்டுவர் சிவஞான முனிவர். 91. ஒருவினை யொடுச்சொல் உயர்பின் வழித்தே. இது, மூன்றாம் வேற்றுமைக்காவதோர் முறைமை புணர்த்து கின்றது. (இ-ள்) `அதனொடியைந்த ஒரு வினைக்கிளவி என மூன்றாவதற்கு ஓதிய உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஒடு வுருபு உயர்பொருளை யுணர்த்தும் பெயரின் பின்னதாகும். என்றவாறு. (உ-ம்) அரசனொடு அமைச்சர் வந்தார். ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார். எனவரும். உயர்பொருட் பெயர்வழி ஒடுக் கொடுக்க எனவே உயர்பில்வழிச் சாத்தனும் கொற்றனும் வந்தார் என இரு பெயரும் எழுவாயாய் நிற்கும் என்பதாம். `நாயொடு நம்பி வந்தான் என்பது `கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்குண்டாக வந்தான் எனப் பிறிது பொருள் படுவதோர் ஒடுவுருபாம் என்பர் சேனாவரையர். 92. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். இது, மூன்றாம் வேற்றுமைக்கும் ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏதுப் பொருள் ஒத்த வுரிமைய என்கின்றது. (இ-ள்) மூன்றாம் வேற்றுமைக்கண் `அதனினாதல் எனவும் ஐந்தாம் வேற்றுமைக்கண் `ஆக்கம் எனவும் விளங்கச் சொல்லப் பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல், அவ்வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒரு தன்மைய. என்றவாறு. (உ-ம்) வாணிகத்தானாயினான், வாணிகத்தானாகிய பொருள் எனவும், வாணிகத்தினாயினான், வாணிகத்தினாய பொருள் எனவும் வரும். வாணிகத்தான், வாணிகத்தின் என ஆன், இன் என்னும் உருபொடு தொடர்ந்த சொல்லை ஏதுக்கிளவி என்றார். ஏதுப்பொருண்மை மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் மேற் கூறப்பட்டதாயினும், மயக்கமாத லொப்புமையால் ஈண்டுக் கூறினார். ஒரு பொருட்கண் இரண்டு வேற்றுமைக்கட் சென்று மயங்குதலின் மயக்கமாயிற்று; இஃது அச்சக்கிளவி என்பதற்கும் ஒக்கும். 93. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் விரண்டன் மருங்கி னேதுவு மாகும். இஃது இரண்டாம் வேற்றுமையோடு மூன்றவதும் ஐந்தாவதும் மயங்குமாறுணர்த்துகின்றது. (இ-ள்) இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட நோக்கு அல் நோக்கமாகிய பொருள் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரிய ஏதுப் பொருண்மையுமாகும் என்றவாறு. இரண்டாம் வேற்றுமைக்குரிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும் நோக்கனோக்கமும் என இரண்டு வகைப்படும். நோக்கிய நோக்கம் என்பது, கண்ணால் நோக்குதல். நோக்கு அல் நோக்கம் என்பது நோக்கனோக்கம் என்றாயிற்று. நோக்கனோக்கம் - மனத்தால் ஒன்றனை நோக்குதல். நோக்கு அல் நோக்கத்தால் நோக்கப்படும் பொருளை நோக்கனோக்க மென்றார். நோக்கனோக்கம் அவ்விரண்டன் மருங்கின் ஏதுவுமாகும் எனவே மூன்றும் ஐந்துமாகிய அவ்விரண்டும் தன்பொருளி னீங்காது இரண்டாவதன் பொருட்கண் வரும் என்பதாம். (உ-ம் ) `வானோக்கி வாழு முயிரெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி என்புழி வானைநோக்கி வாழும், கோலை நோக்கிவாழும் என இரண்டாமுருபு வருதலேயன்றி, வானானோக்கி வாழும் வானின் நோக்கி வாழும், கோலானோக்கி வாழும், கோலினோக்கி வாழும் என மூன்றாமுருபும் ஐந்தாமுருபும் வந்தவாறு கண்டு கொள்க. 94. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின் அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. இஃது ஆறாவது நான்காவதனொடு மயங்குமாறுணர்த்துகின்றது. (இ-ள்) ஆறாம் வேற்றுமைப் பொருள்மேல் வரும் உயர்திணைத் தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னும் உருபு கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும். என்றவாறு. அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபு அங்கு வாராமை. உயர்திணைத் தொகைவயின் அதுவெனுருபு கெடக் குகரம் வரும் எனவே அதுவுருபு அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் பெறப்படும். (உ-ம்) நம்பி மகன், நங்கை கணவன் என்னும் உயர்திணைத் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன், நங்கைக்குக் கணவன் என நான்காம் வேற்றுமையுருபு வந்தவாறு காண்க. 95. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. இஃது இரண்டாவதும் மூன்றவதும் மயங்குமாறுணர்த்துகின்றது. (இ-ள்) தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்றாவதும் விலக்கப்படா; அவ்வேற்றுமை தொக அவற்றின் பொருள் நிற்கும் தொகையிடத்து. என்றவாறு. தடுமாறு தொழிலாவது, தனக்கு முன்னின்ற பெயர்க்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் தனக்குப் பின்னின்ற பெயரோடுஞ் சென்று இயையும் நிலையில் அமைந்த தொழில். அத்தொழிலொடு தொடர்ந்த பெயர் தடுமாறு தொழிற்பெயர் எனப்படும். (உ-ம்) புலி கொன்ற யானை, புலிகொல் யானை என்புழிக் கொல்லுதற்றொழில் முன்னின்ற புலிக்கேயுரியதன்றி ஒருகால் யானைக்கும் உரியதாய்த் தடுமாறும் நிலையில் அமைந்தமையின் அத்தொழில் தடுமாறு தொழிலாயிற்று. அத்தொழிலொடு நிலை மொழியாய்த் தொடர்ந்து நின்ற புலி என்னும் பெயர் தடுமாறு தொழிற்பெயர் எனப்பட்டது. புலி செயப்படுபொருளாயவழி `புலியைக் கொன்ற யானை, எனவும், புலி வினைமுதலாயவழி `புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் அப்பெயர்கள் இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் தடுமாறு தொழில்பற்றி மயங்கியவாறு காண்க. 96. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. இது, தடுமாறு தொழிற்பெயர்க்கண் வேற்றுமைப் பொருள் உணருமாறு கூறுகின்றது. (இ-ள்) தடுமாறு தொழிலின் இறுதிக்கண் நின்ற பெயர் முன் வரும் பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்லினால் அப்பொருள் வேற்றுமை தெரிவர் சொல்லின் பொருளை உணர்வோர். என்றவாறு. ஈற்றுப் பெயராவது, `புலிகொல் யானை என்புழிக் கொல் என்னும் தொழிலின் இறுதிக்கண் நின்ற பெயர். பெயர் முன்னர் மெய்யறிபனுவல் என்றது, யானை என்னும் பெயரின்பின் வந்து அதன் பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்லினை. (உ-ம்) `புலிகொல் யானைக்கோடு வந்தது எனின் புலியாற் கொல்லப்பட்டது யானை என்பது விளங்கும். `புலிகொல் யானை ஓடுகின்றது எனின், புலியைக் கொன்றது யானை என்பது விளங்கும். இனி, முன்னொரு நாளிற் புலியைக் கொன்ற யானை பிறிதொன்றால் இறந்த நிலையிலும் `புலிகொல் யானைக்கோடு வந்தது என அதன் கோட்டினைக் குறிப்பிடுதல் உண்டு. அந் நிலையிற் கொன்றது, கொல்லப்பட்டது என்னும் வேறுபாடு சொல்லாலன்றிக் குறிப்பினால் உணரப்படும் என்பார் `வேற்றுமை தெரிப உணருமோர் என்றார். 97. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. இஃது இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) ஓம்படைப் பொருண்மைக்கு ஐகார வுருபும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கு வருங்காலத்து. என்றவாறு. ஓம்படுத்தல் - பாதுகாத்தல். (உ-ம்) அறம்போற்றி வாழ்மின் என்புழி ஓம்படைக் கிளவி இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லிய காப்புப் பொருளின் அடங்குதலின், `அறத்தைப் போற்றி வாழ்மின் என ஐகார வுருபும், அறம் அவன் போற்றிவருதற்கு ஏதுவாதலுடைமையால் `அறத்தாற் போற்றி வாழ்மின் என ஆனுருபும் ஒத்தவுரிமையாய் வந்தன. இவை `பிரிவில் எனவே இன்னுருபு பிரிவுடைத்தாய், `புலியிற் போற்றிவா எனச் சிறுபான்மை வரும் என்பர் சேனாவரையர். 98. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகு முறைநிலத் தான. இஃது ஆறாவதும் ஏழாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆறாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட வாழ்ச்சிக் கிழமைக்கு உறைநிலமாயவழி ஏழாவதும் வரும். என்றவாறு. உறையும் நிலத்தின் கண் ஏழுமாகும் எனவே உறை நிலமல்லாத பெயர்க்கண் ஏழாமுருபு வாராது என்பதாம். (உ-ம்) காட்டியானை என்பது காட்டதியானை யென ஆறாவது வருதலேயன்றிக் காட்டின்கண் யானை எனச் சிறுபான்மை ஏழாவது வரினும் அமையும் என்றவாறு. யானைக்காடு, நம்பியூர் என உறைநிலமல்லாத பெயர்க் கண் ஆறாமுருபு விரிதலன்றி ஏழாமுருபு விரியாதென்பதாம். 99. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொரு ளாறற் குரித்து மாகும். இது நான்காவதன் பொருள் ஆறாவதற்குச் செல்லுமாறு கூறுகின்றது. (இ-ள்) குவ்வென்னும் உருபு தொகவரும் கொடையெதிர் கிளவியாகிய தொகையின் அப்பொருண்மை ஆறாம் வேற்று மைக்கு உரியதுமாகும். என்றவாறு. கொடை எதிர்தல் - கொடுத்தலை மேற்கோடல். (உ-ம்) நாகர் பலி என்பது, நாகர்க்கு நேர்ந்த பலி என விரிதலேயன்றி நாகரதுபலி என விரியினும் அமையும். நாகர்க்குக் கொடுத்தலை மேற்கொண்டவழி அங்ஙனம் கொடுக்கநேர்ந்த பொருள் பிறர்க்காகாது நாகர்க்கு உடைமையாம் ஆதலின் கிழமைப் பொருட்குரிய உருபாற் கூறினும் அமையும் என்றவாறு. 100. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான. இஃது ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்றவழி, அச்சப் பொருண்மைக்கு ஐந்தாமுருபும் ஏழாமுருபும் ஒத்த வுரிமைய. என்றவாறு. (உ-ம்) பழியஞ்சும் என்புழி பழியின் அஞ்சும், பழியை அஞ்சும் என இரண்டுருபும் ஒத்த கிழமையவாய் நிற்றல் அறிக. இவை ஏதுவும் செயப்படுபொருளுமாகிய வேறுபாடுடைய வேனும், ஈண்டு ஏதுவாதலே அஞ்சப்படுதலாய் வேறன்றி நிற்றலின், இவை அச்சப் பொருண்மையாகிய ஒரு பொருட் கண் வந்தனவாதலின் மயக்கமாய் என்பர் சேனாவரையர். 101. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. இது, வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை. (இ-ள்) மேல் வேற்றுமை மயக்கங் கூறப்பட்ட வேற்றுமை யேயன்றி அவைபோல்வன பிறவும், தொன்று தொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபாலும் பொருளாலும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளும் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாம் தெரிந்துணர்வோர்க்குப் பொருளால் திரிபுடையன அல்ல. என்றவாறு. இருவயின் நிலைதல் - தன் பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருட்கட் சேறல். அன்ன பிறவாவன: நோயினீங்கினான், நோயை நீங்கினான்; சாத்தனை வெகுண்டான், சாத்தனொடு வெகுண்டான்; முறையாற் குத்துங் குத்து; முறையிற் குத்துங்குத்து; கடலொடு காட் டொட்டாது, கடலைக் காடொட்டாது; தந்தையொடு சூளுற்றான், தந்தையைச் சூளுற்றான் எனவரும். இங்ஙனம் தொன்று தொட்டு வரும் வழக்குநெறியிற் பிழையாது தத்தம் பொருள்களில் திரிபின்றிச் சொல்லவல்ல அறிஞர்க்குப் பொருளினிது விளங்க வருவனவே வேற்றுமை மயக்கமாம் என அதனியல்பினை விளக்குவார், `தொன்னெறி பிழையாது..... இருவயினிலையும் வேற்றுமையெல்லாம் தெரியுமோர்க்குத் திரிபிடன் இல என்றார் தொல்காப்பியர். இவ்வியல் 91 முதல் 101 வரையுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்ட வேற்றுமை மயக்கம் பற்றிய விதிகள் சுருக்க நூலாகிய நன்னூலில் இடம்பெறவில்லை. 102. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே. இது, வேற்றுமையுருபு பல தொடர்ந்தடுக்கிய வழிப் படுவதோர் இலக்கணங் கூறுகிறது. (இ-ள்) உருபு பல தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைச் சொல் முடிக்குஞ்சொல் ஒன்றினால் முறறுப் பெற்று நடக்கும்; அவ்வொன்றினாற் பொருள் செல்லும் பக்கத்து. என்றவாறு. உருபு தொடர்ந்தடுக்குதல் என்பது ஓருருபு அடுக்கி வருதலும் பலவுருபு அடுக்கிவருதலும் என இருவகைப்படும். தேம் பைந்தார் மாறனைத் தென்னர்பெருமானை வேந்தனை வேந்தர்மண் கொண்டானை - யாஞ்சிறிதும் அங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ செங்கோல் சிறுமையுள. இதனுள் ஐகாரவுருபு பல அடுக்கி ஒருபொருட்கண் வந்து, `வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ என்பதனோடு முடிந்தது. `கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானால் வில்லிற் பகைகடிந்த வேந்தனால் - அல்லியந்தார் கோதையால் வையங் குளிர்தூங்க என்கொலோ பேதையார் எய்துவது பேது. இதனுள் மூன்றாமுருபு அடுக்கி வந்து `குளிர்தூங்க என்பதனோடு முடிந்தது. `அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன்கோல் என்புழி நான்கா முருபு அடுக்கிவந்து ஆதியாய் என்பதனோடு முடிந்தது. வீரப் புலியானின் வெல்போர் வளவனிற் கோரப் பரியுறந்தைக் கோமானின் - ஆரலங்கல் மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி வெற்பனிற் றீர்ந்துளவோ வேந்து. இதனுள் ஐந்தாமுருபு பல அடுக்கி வந்து `தீர்ந்து என்பதனோடு முடிந்தது. இவ்வாறே ஏனையுருபுகளும் ஒன்றாய் அடுக்கி ஒரு முடிபு பெறுதல் கொள்க. `யானையது கோட்டை நுனிக்கண் வாளாற் குறைத்தான் என்புழி இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் விரவியடுக்கி வந்து `குறைத்தான் என்னும் ஒருவினை கொண்டு முடிந்தவாறும், `கவணிற் கிளியைக் கடியும் என்புழி ஐந்தாம் உருபும் இரண்டா முருபும் விரவியடுக்கி வந்து `கடியும் என்னும் ஒருவினை கொண்டு முடிந்தவாறும் காண்க. இவ்வாறு ஓருருபு தொடர்ந்தடுக்கியும் பலவுருபுகள் விரவி யடுக்கியும் ஒரு சொல்லான் முடியும் இம்முடிபினை, வினைச் சொற்கள் பல அடுக்கி ஒரு சொல்லால் முடியும். முடிபுடன் இயைத்துக் கூறுவது, 354. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்சம் ஈறுற முடியும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வேற்றுமையுருபுகள் விரிந்துந் தொக்குந் தம்முள் விரவிப் பல அடுக்கிவரினும் வெவ்வேறு பல அடுக்கி வரினும், மூவகை வினைச் சொற்களும் வெவ்வேறு பல அடுக்கிவரினும், தத்தம் எச்சமாகிய முடிக்குஞ் சொல் ஒன்றுவர அதனோடு அனைத்தும் முடிவனவாம் என்பது இதன் பொருள். 103. இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார். இஃது வேற்றுமையுருபு நிற்கும் இடவேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) `ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனச் சொல்லப் பட்ட ஆறு வேற்றுமையுருபும் வேற்றுமைத் தொடரின் இறுதிக் கண்ணும் அத்தொடரின் இடையிலும் வழக்கு நெறிப்பட்ட பொருளின்கண் நிற்றலை நீக்காது கொள்வர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) கடந்தான் நிலத்தை; வந்தான் சாத்தனொடு; கொடுத்தான் சாத்தற்கு; வலியன் சாத்தனின்; ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக்கண் எனத் தொடரின் இறுதியில் ஆறுருபும் வந்தன. நிலத்தைக் கடந்தான்; சாத்தனொடு சாத்தனொடு வந்தான்; சாத்தற்குக் கொடுக்கும்; சாத்தனின் வலியன்; சாத்தனது ஆடை; குன்றத்துக்கண் இருந்தான் எனத்தொடரின் இடையில் ஆறுருபும் வந்தன. இனி, நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் எனவே அப்பொருளுணர்த்தாக்கால் அவ்வுருபுகள் அவ்விடத்து நிற்றல் வரையப்படும் எனக்கூறி, ஆறாமுருபும் ஏழாமுருபும் சாத்தனது ஆடை, குன்றத்துக்கட் கூகை என இடையில் நின்று தம் பொருளுணர்த்தினாற் போல, ஆடை சாத்தனது, கூகை குன்றத்துக்கண் என இறுதியில் நின்றவழி அப்பொருளுணர்த் தாமையான் அவ்வுருபுகள் இறுதிக்கண் நிற்றல் வரையப்படும் என விளக்குவர் சேனாவரையர். ஆறனுருபேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்கும் என்பது அவர் கருத்து. `சாத்தனது வந்தது என்புழி அது என்பது பெயராய் நின்று வந்தது என்னும் பயனிலை கொண்டது; ஆடை சாத்தனது என்புழி ஆடை என்னும் உடைமைப் பெயர் எழுவாயாய்ச் சாத்தனதாயிற்று என்னும் பயனிலையொடு முடிந்தமையின் சாத்தனது என்பது வினைக் குறிப்பாயிற்று. `ஈறு பெயர்க்காகும் என முன்னர்க் கூறியது வேற்றுமை யுருபு பெயரிறுதிக்கண் நிற்குமியல்பின என்னும் பொருளதாகும். இச்சூத்திரத்தில் இறுதி என்றது, வேற்றுமைத் தொடர் மொழியின் இறுதியினை. 104. பிறிது பிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இது, வேற்றமைத் தொடர்க்காவதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) ஓர் உருபு ஓர் உருபினை ஏற்றலும் உருபுகள் புலப்படாது மறைந்து நிற்றலும் முறைமைப்பட வழங்கிய வழக்கினைச் சார்ந்து வருமென்பர். என்றவாறு. பிறிது பிறிதேற்றல் என்பது, ஆறாம் வேற்றுமையுருபு தானல்லாத உருபுகளே ஏற்பது. உ-ம் சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதன்கண் எனவரும். சாத்தனதனது எனச் சிறுபான்மை தன்னையுமேற்றல் உரையிற் கோடலென்பதனாற் கொள்ளப்படும். உருபுதொக வருதலாவது, வேற்றுமையுருபு இடையிலும் இறுதியிலும் மறைந்து நிற்க வருவது. (உ-ம்) நிலங்கடந்தான், கடந்தான் நிலம், குன்றத்திருந்தான், இருந்தான் குன்றத்து என இடையிலும் இறுதியிலும் ஐயுருபும் கண்ணுருபும் தொக்கன. தாய் மூவர், கருப்பு வேலி, வரை வீழருவி, சாத்தன் கை என முறையே ஒடு, கு, இன், அது எனவரும் உருபுகள் இடையில் தொக்கன. இச்சூத்திரத்தில், பிறிது பிறிதேற்றல் என்பது ஆறாம் வேற்றுமையுருபு தானல்லாத உருபுகளை ஏற்பது என இளம்பூரணர் கூறிய உரையினைத் தழுவியமைந்தது, 292. ஆற னுருபும் ஏற்குமவ் வுருபே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஆறனுருபு - ஆறாம் வேற்றுமை யாகிய அதுவுருபு. அதுவும் ஐ முதலிய ஏனையுருபுகளை ஏற்கும். என்றவாறு. மேல், பெயர்கள் வேற்றுமையை ஏற்கும் என்றார், அவையேயன்றி ஆறனுருபும் அவ்வுருபுகளை யேற்கும் - என்றவாறு. அஃதேல், பெயரோடு இதற்கு வேற்றுமை யாதோ வெனின், உருபேற்புழியும் தன் இருகிழமைப் பொருளிலும் திரியாது நிற்றலென்க. உம்மை - எண்ணும்மை.... விளியேலாதெனினும் உருபேற்றலிற் குறை பட்டதாகாது; சில உறுப்பிற் குறை பட்டாரும் மக்களெனப்படுவர், அதுபோல என்பது என இச்சூத்திரத்திற்கு மயிலைநாதர் கூறும் உரைவிளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். இனி, ஆறனுருபு என்புழி அன் தவிர்வழிவந்த சாரியை யெனவும், அவ்வுருபு என்றது எழுவாயை யெனவும் கொண்டு, அவ்வெழுவாயாய் நின்ற உருபேயும் முதலிய ஆறு வேற்றுமை களின் உருபும் ஏற்கும் எனப் பொருள் கூறுவர் சிவஞான முனிவர். எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய் வேற்றுமைப்படுத்தும் வேற்றுமைகள் எட்டு எனக்கூறி எழுவாய் முதல் விளியீறாக அவற்றின் பெயர் முறைகளை உணர்த்திய பவணந்தியார், `அவ்வுருபே எனப் பொதுப்படச் சுட்டிய சுட்டு, எல்லா வேற்றுமை யுருபுகளையும் சுட்டுவதன்றி எட்டு வேற்றுமைகளுள் ஒன்றாகிய எழுவாயினை மட்டும் வரைந்து சுட்டுதல் பொருந்தாமையானும், ஆறனுருபு என்னுந் தொடர் ஆறாம் வேற்றுமை யுருபாகிய அது எனப் பொருள் தருவதன்றி ஐ முதலிய ஆறுருபுகள் எனப் பொருள் தருதல் கூடாமையானும், ஆறனுருபு என்புழி வந்த அன் சாரியை தவிர் வழிவந்த சாரியை யன்றென்பது, `ஆறனொருமைக்கு (நன்-300) `ஏழனுருபு (நன்- 301) `எட்டனுருபே (நன்-303) எனவரும் சூத்திரங்களின் சொல்லமைப்பினால் இனிது விளங்குதலானும், `பிறிது பிறிதேற்றல் என்னுந் தொல்காப்பியத் தொடர்க்கு இளம்பூரணர் கூறிய உரையைத் தழுவி யெழுந்தது இந்நன்னூற் சூத்திரமாதலானும் இதற்கு மயிலைநாதர் கூறிய உரையே பவணந்தியார் கருத்திற்கு ஏற்புடையதாதல் அறிக. 105. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதியான. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) ஐகார வேற்றுமைப் பொருளும் கண்ணென் வேற்றுமைப் பொருளும் அல்லாத பிறபொருள்மேல் நின்ற உருபுகள் தொடர்மொழியிறுதிக்கண் மறைந்து நில்லா. என்றவாறு. மேற் சூத்திரத்தால் எல்லா வேற்றுமை யுருபுகளும் தொடரிறுதிக்கண் தொகும் என எய்தியதனை விலக்கி இரண்டும் ஏழுமாகிய வேற்றுமை யுருபுகளே தொடரிறுதிக்கண் தொகுவன; அல்லன தொகா என வரையறுத்தவாறு. `அறங்கறக்கும் என இடைக்கண் மறைந்து நின்ற நான்கா முருபு கறக்கும் அறம் என இறுதிக்கண் மறைந்து நில்லாமை கண்டு கொள்க. இவ்வாறு தொடரிறுதிக்கண் தொகுதல் ஐயும் கண்ணு மாகிய இவ்விரண்டிற்குமன்றி ஏனைய உருபுகட்கு ஒவ்வாமை யானும் இடையிற்றொகுதல் ஆறுருபுகட்கும் பொருந்துதலானும் இறுதிக்கண் தொகுவன `தொகைச் சொல்லெல்லாம் ஒரு சொல் நடைய என்னும் தொகையிலக்கணத்திற்கு ஏலாமை யானும், 362. இரண்டு முதலா மிடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. என வேற்றுமையுருபுகள் இடையிற் றொகுதலொன்றையே வேற்றுமைத் தொகைக்குரிய இலக்கணமாகக் கூறினார் பவணந்தியார். `இரண்டாம் வேற்றுமையுருபாகிய ஐகார முதலாகக் கண் ஈறாக நின்ற ஆறுருபும் இடையே தோன்றாது தொக்கு நிற்பது வேற்றுமைத் தொகையாம். என்பது இதன் பொருள். 106. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். இஃது உருபு மயக்கமாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு தொடர் யாதானுமோர் வேற்றுமையின் உருபு கொடுத்துச் சொல்லப் பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளால் அத்தொடர்ப் பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும். என்றவாறு. பொருள் செல்லாமையாவது உருபேற்ற சொல்லாகிய நிலைமொழியும் உருபுநோக்கிய சொல்லாகிய வருமொழியும் தம்முள் இயையாமை. பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சார்தலாவது பொருளுக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ளப் பெறுதல். (உ-ம்) `கிளையரி நாணற் கிழங்கு மணற்கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் என்றவழி, `மணற்கு என்னும் குவ்வுருபேற்ற சொல்லும் `ஈன்ற என்னும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயையாமையின் மணற்கு என்னும் நான்காமுருபு மணற்கண் என ஏழாவதன் பொருளில் வந்தவாறு கண்டு கொள்க. இவ்வாறு உருபு தன் பொருளிற் றீர்ந்து பிறவுருபின் பொருட்டாய் நிற்றல் உருபு மயக்கம் எனப்படும். உருபுமயக்க முணர்த்திய இத்தொல்காப்பியச் சூத்திரத்தைப் பவணந்தி முனிவர், 316. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். எனத் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் நன்னூலில் எடுத்தாண்டுள்ளமை காணலாம். 107. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. இஃது எல்லா வேற்றுமைக்கும் உரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) உடன்பாட்டு முகத்தாற் கூறாது எதிர் மறுத்துக் கூறினாலும் வேற்றுமையுருபுகள் தத்தம் இலக்கணத்தால் வரும் பொருள் நிலைமையில் திரிபுபடா. என்றவாறு. (உ-ம்) மரத்தைக் குறையான்; வேலான் எறியான் எனவரும். இங்கும் குறைத்தல் எறிதல் ஆகிய வினை நிகழாமையின் முறையே மரமும் வேலும் செயப்படுபொருளும் கருவியும் ஆகாவாயினம், ஐயும் ஆனும் ஆகிய வேற்றுமையுருபுகள் செயப்படுபொருளாதற் குரிமையும் கருவியாதற் குரிமையும் உடையனவாகத் தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்துந் தம் பொருளியல்பில் திரிபின்றி நிற்றல் காண்க. இதனால் எதிர் மறையும் விதிவினையோடு ஒக்கும் என்பது நூன் முடிபாதல் பெறப்படும். இவ்வாறு வேற்றுமை யுருபும் வினையும் எதிர் மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் உருபினின்றும் ஈற்றினின்றும் வேறுபடா என்பதனை, 353. உருபும் வினையும் எதிர்மறுத் துரைப்பினுந் திரியா தத்தமீற் றுருபி னென்ப. எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் விளக்கியுள்ளார். எட்டு வேற்றுமையுருபுகளும் மூவகை வினைச் சொற்களும், எதிர் மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் ஈற்றினின்றும் அவ்வவ்வுரு பினின்றும் வேறுபடா என்பர் ஆசிரியர் என்பது இதன் பொருளாகும். `தத்தம் ஈற்றின் உருபின் திரியா என இன்னுருபினை ஈரிடத்துங் கூட்டி, `வினை ஈற்றிற் றிரியா, உருபு உருபிற்றிரியா என எதிர்நிரல் நிறையாகப் பொருள்கொள்க. உருபின்கண் எதிர்மறுத்தல் என்பது அவற்றின் பயனிலைகளை எதிர்மறை வாய்பாட்டாற் கூறுதல். (உ-ம்) சாத்தன் வாரான், குடத்தை வனையான், வாளால் எறியான், புல்லர்க்கு நல்கான், நிலையின் இழியான், பொருளினது இன்மை, தீயர்கட் சாரான், சாத்தா உண்ணேல் என எதிர்மறுத்துக் கூறும் வழியும் எழுவாய் முதலிய வேற்றுமைகள் வினைமுதலாதல் முதலிய தத்தம் பொருளிற்றிரியாவாயின. நடவான், நடவாத, நடவாது என மூவகை வினைச் சொற்களும் எதிர் மறுத்துக் கூறியவழியும் தத்தம் ஈற்றிற்றிரியா வாயின. ஓர்வினை நிகழ்வழி அவ்வினைக்குக் கருத்தாவுஞ் செயப்படு பொருளு முதலியவாகப் பெயர்ப்பொருளை வேற்றுமை செய்து நின்ற உருபுகள், அவ்வினை நிகழாவழியும் அவ்வாறு நிற்றலானும், வினைவிகுதிகளும் அவ்வினை நிகழ்வழி முற்றின்கட் கருத் தாவையும் எச்சங்களிற் பெயரொழியையும் வினையொழிபையுந் தந்து நின்றாற்போல வினை நிகழாவழியும் நிற்றலானும் இங்ஙனம் கூறப்பட்டது என இச்சூத்திரப் பொருளை விளக்குவர் சிவஞான முனிவர். 108. கு ஐ ஆனென வரூஉமிறுதி அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே. இது வேற்றுமையுருபுகளுட் சில செய்யுளுள் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) கு, ஐ, ஆன் என்னும் மூன்றாருபும் தொடரிறுதிக் கண் நின்றவழி, அகரத்தோடு பொருந்தி நிற்றலுமுடைய செய்யுளுள். என்றவாறு. (உ-ம்) `கடிநிலை யின்றே யாசிரியற்க `காவலோனக் களிறஞ் சும்மே `களிறு மஞ்சுமக் காவலோன `புரைதீர் கேள்விப் புலவரான எனவரும். ஆசிரியற்கு, காவலோனை, புலவரான் எனத் தொடரிறுதிக்கண் நின்ற கு, ஐ, ஆன் என்னும் உருபுகளுள் `கு என்பது ஈற்று உகரம் கெட அகரத்தொடு பொருந்திக் `க என அகரவீறாய் நிற்றலும், ஐகாரம் அகரமாகத்திரிந்து நிற்றலும், ஆன் என்னும் உருபின் னகரவீறு அகரம்பெற்று `ஆன என நிற்றலும் என்ற மூவகைத் திரிபுகளையும் உள்ளடக்கி `அவ்வொடு சிவணும் என்றார் ஆசிரியர். 109. அ எனப்பிறத்த லஃறிணை மருங்கிற் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) அஃறிணைப் பெயர்க்கண் வரும் குவ்வுருபும் ஐயுருபும் முற்கூறியவாறு அகரத்தொடு பொருந்தி ஈறுதிரிதல் இல்லை என்பர் புலவர். என்றவாறு. அ எனப்பிறத்தல் - அ எனத் திரிதல். குவ்வும் ஐயும் இல் எனவே அஃறிணைக்கண் வரும் ஆனுருபு அகரத்தொடு பொருந்திப் `புள்ளினான் எனவரும் என்றவாறு. இவ்விரு சூத்திரப் பொருளையும் தொகுத்துணர்த்தும் முறையில் அமைந்தது, 317. ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும் ஆகா வஃறிணைக் கானல்லாதன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஐ ஆன் கு என்னும் மூன்றுருபுஞ் செய்யுளகத்து ஒரோ வழி அகரமாகத் திரிந்து வரவும் பெறும். அஃறிணைக் கண் எனின் ஆனொன்றுமே திரியும்; ஐயுங் குவ்வுந் திரியா என்பது இதன் பொருள். உதாரணம் மேற் காட்டப்பட்டன. 110. இதன திதுவிற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள் வயினானும் அதனாற் செயற்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவு நான்க னுருபிற் னொன்னெறி மரபின தோன்ற லாறே. இது, நான்காம் வேற்றுமையுருபு ஏனையுருபுகளின் பொருள் களோடு மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) `இதனது இது இற்று என்பது முதல் தீர்ந்து மொழிக் கிளவியீறாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் நான்கனுருபில் தொன்றுதொட்டு வழங்கும் மரபினவாகித் தோன்றுதல் நெறி. என்றவாறு. `இதனது இது இற்று என்பது இதனது இது இத்தன்மைத்து என்னும் ஆறாம் வேற்றுமைப் பொருள். யானையது கோடு கூரிது என்னும் பொருளில் `யானைக்குக் கோடு கூரிது என வந்தது. `அதனைக் கொள்ளும் பொருள் என்பது, ஒன்றனை ஒன்று கொள்ளும் என்னும் இரண்டாம் வேற்றுமைப் பொருள். `இவளைக் கொள்ளும் இவ்வணி என்னும் பொருளில் `இவட்குக் கொள்ளும் இவ்வணி என வந்தது. அதனாற் செயற்படற்கு ஒத்தகிளவி என்பது, ஒன்றனான் ஒன்று தொழிற்படுதற்கு ஒக்கும் என்னும் மூன்றாம் வேற்றுமைப் பொருள். `அவராற் செய்யத்தகும் அக்காரியம் என்னும் பொருளில் `அவற்குச் செய்யத்தகும் அக்காரியம் என வந்தது. முறைக்கொண்டெழுந்த பெயர்ச் சொற்கிளவி என்பது, முறைப் பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச் சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருள். `ஆவினது கன்று என்னும் பொருளில் `ஆவிற்குக் கன்று என வந்தது. `பால் வரைகிளவி என்றது, நிலத்தை வரைந்து கூறும் எல்லைப் பொருண்மையாகிய ஐந்தாம் வேற்றுமைப் பொருள். `கருவூரின் கிழக்கு என்னும் பொருளில் `கருவூர்க்குக் கிழக்கு என வந்தது. வன்பால், மென்பால் என்னும் வழக்குப்பற்றி நிலத்தைப் பால் என்றார். பண்பின் ஆக்கம் என்பது, பண்புபற்றி வரும் பொருவுத லாகிய ஐந்தாம் வேற்றுமைப் பொருள். `சாத்தனின் நெடியன் என்னும் பொருளில் `சாத்தற்கு நெடியன் என வந்தது. சிறப்பு நலன் முதலிய உவமையின் நிலைக்களத்தைப் பண்பு என்பமாதலின் பொருவினைப் பண்பின் ஆக்கம் என்றார். காலத்தின் அறியும் வேற்றுமைக்கிளவி என்பது காலத்தின் கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருள். `மாலைக்கண் வருவான் என்னும் பொருளில் `மாலைக்கு வருவான் எனவரும். பற்றுவிடு பொருண்மையும் தீர்ந்து மொழிப் பொருண்மையும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்கள். `ஊரிற் பற்றுவிட்டான் என்னும் பொருளில் `ஊர்க்குப் பற்றுவிட்டான் எனவும், `ஊரிற்றீர்ந்தான் என்னும் பொருளில் `ஊர்க்குத்தீர்ந்தான்எனவும் வந்தன. அன்ன பிறவும் என்றதனான் ஊர்க்கட் சென்றான், ஊர்க் கண் உற்றது செய்வான் என்னும் ஏழாம் வேற்றுமைப் பொருளிலும், ஊரிற் சேயன் என்னும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளிலும் ஊர்க்குச் சென்றான், ஊர்க்குற்றது செய்வான், ஊர்க்குச்சேயன் என நான்கா முருபு வருதல் கொள்க. மேற்கூறிய தொகைவிரிப்ப மயங்கும் வேற்றுமைப் பொருள் மயக்கத்தின் வேறாக, தொகையல்லாத விடத்து வந்து மயங்கும் பொருள் மயக்கமாதலின் இவற்றை வேறு கூறினார் என்பர் சேனாவரையர். 111. ஏனை யுருபும் அன்ன மரபின மான மிலவே பொருள்வயி னான. இது, நான்கா முருபொழிந்த ஏனையுருபுகளும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) நான்கா முருபல்லாத ஏனையுருபுகளும் தொகை யல்லாத தொடர் மொழிக்கண் ஒன்றன் பொருளிற் சிதையாமல் ஒன்று சென்று மயங்குதற்கண் குற்றமில; வழக்கு முறைமையினான. என்றவாறு. (உ-ம்) நூலது குற்றங் கூறினான், நூலைக் குற்றங் கூறினான்; அவட்குக் குற்றேவல் செய்யும், அவளது குற்றேவல் செய்யும் எனவரும். பிறவும் இவ்வாறு வருவன கொள்க. 112. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முத னிலையே. இது, வினைச்சொல் இலக்கணம் உணர்த்துகின்றது என இளம் பூரணரும், வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடம் கூறுகின்றது என நச்சினார்க்கினியரும், `எழுவகை வேற்றுமை யினும் காரக வேற்றுமை வரையறுத் துணர்த்துகின்றது என தெய்வச் சிலையாரும் இதற்குக் கருத்துரை வரைந்தனர். (இ-ள்)வினையும், வினைமுதலும், செயப்படு பொருளும் நிலமும் காலமும் கருவியும் ஆகிய ஆறும், இன்னதற்கு இது பயனாக என்று சொல்லப்படும் இரண்டொடும் கூடி தொழிலது முதனிலை எட்டாம் என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. ஏதுப்பொருண்மை கருவியில் அடக்கப்பட்டது. தொழில் முதல்நிலை என்றது, தொழிலது காரணத்தை. காரியத்தின் முன்னிற்பது காரணம் ஆதலின் அது முதனிலை யென்னும் பெயர்த்தாயிற்று. காரணம் எனினும் காரகம் எனினும் ஒக்கும். `வனைந்தான் என்றவழி, வனைதற்றொழிலும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கு இடமாகிய நிலமும், அத்தொழில் நிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய தண்டசக்கர முதலயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும் வனைந்ததனான் ஆயபயனும் என்னும் எட்டுக் காரணத்தாலும் அத்தொழில் நிகழ்ந்தவாறு காண்க. வனைந்தான் என்பது, வனைதலைச் செய்தான் என்னும் பொருளதாதலின், செய்தற்கு வனைதல் செயப்படு பொருள் நீர்மைத்தாய்க் காரகமாயிற்று. இன்னதற்கு, இது பயனாக என்னும் இரண்டும் அருகியல்லது வாராமையின், `அன்னமரபின் இரண்டொடும் என அவ்விரண்டினையும் பிரித்துக் கூறினார். வேற்றுமையியலில் இரண்டாம் வேற்றுமைக்கு ஓதிய பொருளெல்லாவற்றையும் `செயப்படுபொருள் என ஒன்றாகத் தொகுத்து, அங்குக் கூறிய ஏதுவைக் கருவிக்கண்ணும், வினை செய்யிடத்தைக் காலத்தின்கண்ணும் அடக்கி வினைமுதல், செயப்படு பொருள், கருவி, நிலம், காலம், இன்னதற்கு, இது பயனாக என ஏழாகச் செய்து, அவ்வியலிற் பெறப்படாத வினை யென்னும் முதனிலையைக் கூட்டித் தொழின் முதனிலை எட்டென்றார். இதனாற்பயன் `நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் எனவும் `செயப்படு பொருளைச் செய்தது போல எனவும் வினைக்கிலக்கணங் கூறுதலும் பிறவுமாம் என்பர் சேனாவரையர். இனி, வனைந்தான் என்பதன்கட் செய்வது எழுவாயாயும், வினையும் செயப்படு பொருளும் இரண்டாவதாயும், வினை முதலும் கருவியும் மூன்றாவதாயும் ஒருவன் ஏற்றுக் கொண்ட வழி இன்னதற்கு இது பயன் நான்காவதாயும், நிலமும் காலமும் ஏழாவதாயுஞ் சேர்ந்தன. இன்னும் வனைந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்று நீங்குதல் ஐந்தாவதாயும், அதனை ஒருவன் ஏற்றுக் கொண்டவழி அஃது அவனுடைமையாதல் ஆறாவதாயும் சேருமாறு உணர்க. கருவிக்கண் அடங்கும் ஏதுவும் ஐந்தாவதற்கு வரும். இங்ஙனம் இவ்வுருபுகள் இவ்வினைச் சொற்கட்டோன்றுதல் பற்றி இச்சூத்திரத்தை வினையியலிற் கூறாது ஈண்டுக் கூறினார். என நச்சினார்க்கினியர் கூறிய விளக்கம், தொழின் முதனிலை களாகிய எட்டிற்கும் வேற்றுமைப் பொருள்கட்கும் இடையே யமைந்த தொடர்பினையும் இச்சூத்திரம் வேற்றுமைப் பொருள் மயக்கமுணர்த்தும் இவ்வியலில் இடம் பெறுதற்குரிய காரணத் தினையும் நன்க புலப்படுத்துதல் காணலாம். வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச்சொல்லால் அறியப்படுந் தொழிற் காரணங்களையும் பெயர்ச் சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் தொல்காப்பியர் இவ்வியலில் இயைத்துக் கூறியுள்ளார். 113. அவைதாம் வழங்கியன் மருங்கிற் குன்றவ குன்றும். இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்) மேற்கூறிப்பட்ட தொழில் முதனிலைகள்தாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வரும் என்னும் யாப்புறவில்லை. வழக்கின் கண் சிலதொழிலிற் குன்றத்தகுவன குன்றிவரும். என்றவாறு. குன்றுதல் - குறைதல். குறைந்து வருவன செயப்படு பொருளும் இன்னதற்கு இது பயன் என்பனவும் ஆம். (உ-ம்) கொடி ஆடிற்று; வளி வழங்கிற்று என்புழிச் செயப்படுபொருளும் ஏற்பதும் பயனுமாகிய காரணங்கள் இல்லை யாயினும் ஏனைய காரணங்களால் ஆடுதலும் வழங்கு தலுமாகிய தொழில் நிகழ்ந்தவாறு காணலாம். வினைச்சொல்லின் இலக்கணம் உணர்த்தப் போந்த பவணந்தி முனிவர், தொழிற் காரணங்களாகத் தொல்காப்பியனார் கூறிய எட்டனுள் கருத்தா, கருவி, நிலம், தொழில், காலம், செயப்படுபொருள் எனச் சிறப்புடைய ஆறு பொருளையும் விளக்குவது வினைச் சொல் என்பதனை, 319. செய்பவன் கருவி நிலஞ் செயல் காலம் செய்பொருளாறுந் தருவது வினையே. என்றார். இதன்கண் ஆறும் என்பதனை ` முற்றும்மை யொரோவழி எச்சமுமாகும் என்பதனால் எச்சவும்மையாக்கி, இத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொரு ளுரைத்துக் கொடியாடிற்று, கொடிதுஞ்சும் என்புழி முன்னையது செயப்படு பொருளும் பின்னையது செயப்படு பொருளோடு கருவியும் குறைந்துவரும் எனவும், இனி ஆறும் என்னும் உம்மையை உயர்வு சிறப்பும் மையாக்கி `இழிந்தன சிலவுள அவையும் வேண்டுமேற் கொள்க எனவுரைத்து, குடத்தைப் பிறர்க்கு வனைந்தான் என இன்னதற் கென்பதும் அற முதலிய பயன் கருதி வனைந்தான் என இது பயன் என்பதும் ஏதுவின் பாற்பட்டுக் கருவியுள் அடங்கவும் பெறுமாதலின் அவை இழிந்தனவாயின எனவும் சிவஞான முனிவர்தரும் விளக்கம் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும். 114. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி. இஃது ஆகுபெயராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) முதற்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் சினைப் பொருளை அறிவிக்குஞ் சொல்லும், சினைச்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் முதற் பொருளை அறிவிக்குஞ் சொல்லும், நிலத்துப் பிறந்த பொருள்மேல் அந்நிலத்துப் பெயர் கூறலும், பண்புப் பெயர் அப்பண்புடையதனை உணர்த்தி நிற்கும் சொல்லும், முதற்காரணப் பெயரான் அக் காரணத்தான் இயன்ற காரியத் தினைச் சொல்லுதலும், அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இருபெயரொட்டும், செய்யப்பட்ட பொருள்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லோடே கூடி அத்தன்மையினவாகிய இலக்கணத்தைப் பெறும் ஆகுபெயரான சொல். என்றவாறு. ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகு பெயராகும். (உ-ம்) தெங்கு தின்றான், கடுத்தின்றான் என்புழி தெங்கு, கடு என்னும் முதலுக்குரிய இயற்பெயர்கள் அவற்றின் காயாகிய பொருளுக்கு ஆயினமையால் முதலலகு பெயர். இலைநட்டு வாழும், பூ நட்டு வாழும் என்புழி இலை, பூ என்னும் சினைப் பெயர்கள் அவற்றின் முதற்பொருளாகிய கொடிக்கு ஆயினமை யால் சினையாகு பெயர். குழிப்பாடி நேரிது என்புழி குழிப்பாடி என்னும் இடப்பெயர் அந்நிலத்துப் பிறந்த பொருளாகிய ஆடைக்கு ஆயினமையால் இடவாகுபெயர். நீலஞ் சூடினாள் என்புழி நீலம் என்னும் பண்பின் பெயர் அப்பண்புகொள். பெயராகிய நீலமலருக்கு ஆயினமையாற் பண்பாகு பெயர். இது பொன் என்புழிப் பொன்னென்னுங் காரணப் பெயர். மக்கட் சுட்டு என இரண்டாய் ஒட்டி நின்றபெயர், மக்களென்று கருதப்படும் உணர்வுடையது மற்றொரு பொருள்மேல் வருதலின் இரு பெயரொட்டாகு பெயராகும். இவ்வாடை கோலிகன் என்புழிக் கோலிகன் என்னும் வினைமுதலை யுணர்த்தும் பெயர் அவனால் நெய்யப்பட்ட ஆடைக்கு ஆயினமையாற் கருத்தாவாகு பெயர். 115. அவைதாம் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலும் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது அவ்வாகுபெயர் பொருளுணர்த்தும் நெறியால் இருவகைய என்கின்றது. (இ-ள்) அவ்வாகு பெயர்கள் தாம் இயற்பெயரால் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளை விட்டுப் பிரியாத பொருளையுணர்த்துதலும் அவ்வாறு பொருத்த மில்லாத கூற்றால் நின்று அச்சொல்லோடு ஒருவாற்றால் தொடர்புடைய வேறு பொருளையுணர்த்துதலும் என அவ் விரண்டிலக்கணத்தையுடையன. சொல்லுங்காலத்து அவற்றின் வேறுபாட்டினைப் போற்றியுணர்க. என்றவாறு. (உ-ம்) கடுத்தின்றான் - தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல். குழிப்பாடி நேரிது - ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டல். ஒற்றுமையாகிய இயைபுள் வழி அது தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணிற்றென்றும், அவ்வியைபின்றி இடமும் இடத்து நிகழ் பொருளுமாதல் முதலாகிய இயைபேயாயவழி இஃது ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டிற்றென்றும் கருதி யுணரப்படுமென்பார், `வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்றார் என விளக்குவர் சேனாவரையர். இனி இச்சூத்திரத்தின் ஈற்றடியாகிய `வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்பதனை ஆகுபெயர்க்காவதோர் இலக்கணங் கூறும் தனிச் சூத்திரமாகக் கொண்டு ஆகுபெயர்க்கு ஆவதோர் வேறுபாடு தெரிந்துணர்க எனவும், அவ்வாகு பெயரெல்லாம் வேற்றுமை யோடு தொடர்ந்த பொருளைப் போற்றியறிக எனவும், ஆகு பெயர்கள் தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணின் என்றும், ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டின என்றும் போற்றியுணர்க எனவும் மூவகையாற் பொருள் கூறுவர் இளம்பூரணர். மேற்குறித்த மூன்று பொருள்களுள் முதலாவதனை விளக்கு மிடத்து, `ஆகுபெயர்க்கு ஆவதோர் வேறுபாடு என்னெனின், `தொல்காப்பியனாற் சொல்லப்பட்டது தொல் காப்பியம் என ஈறுதிரிந்தது என விளக்கங் கூறினார். வெற்பு, சேர்ப்பு என்னும் பெயரிறுதிதனை யுடையான் என்னும் பொருள் தோன்ற அன் என்பதோர் இடைச் சொல் வந்து வெற்பன் சேர்ப்பன் என நின்றாற்போல, தொல்காப்பியன் என்னும் பெயரிறுதி, இவனாற் செய்யப்பட்டதென்னும் பொருள் தோன்ற அம்என்பதோர் இடைச்சொல் வந்து அன் கெட்டுத் தொல் காப்பியம் என நின்றதாதலின் அஃது இயற்பெயராவதன்றி ஆகுபெயராகாது என மறுத்துரைப்பர் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும். இனி அவ்வாகுபெயரெல்லாம் வேற்றுமையொடு தொடர்ந்த மருங்கினைப் போற்றியறிக என இரண்டாவதாக இளம்பூரணர் கூறிய பொருளை அவ்வாகுபெயர்கள் ஐ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மையிடத்தும் இயைபுடை மையைப் பாதுகாத்து அறிதல் வேண்டும் எனச் சிறிதும் விளக்கினார் நச்சினார்க்கினியர். அவ்வுரையைத் தழுவி அவ்வாறு சொல்லுங் காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும் என உரைவரைந்த தெய்வச்சிலையார், ஆகுபெயர் என்பது வேண்டிய வாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட் கண்ணே வரப்பெறுவது என்றவாறு. அவை அப்பொருட்கண் வந்தவாறு: முதலிற் கூறுஞ் சினையறிகிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்புகொள் பெயரும், இரு பெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும் வினை முதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருண் மயக்கம் என அவ்வியைபினை உய்த்துணர்ந்து விளக்கிய திறம் ஊன்றி யுணரத் தகுவதாகும். இனி, ஆகு பெயர்கள் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணின் என்றும், ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டின் என்றும் போற்றியுணர்க என மூன்றாவதாக இளம்பூரணர் கூறிய பொருளைத் தழுவிச் சேனாவரையர் உரையமைந்துளது. 116. அளவு நிறையு மவற்றொடு கொள்வழி உளவென மொழிப வுணர்ந்தி சினோரே. இதுவும் ஆகுபெயர்க்காவதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளும் இடமும் உடைய என்று சொல்லுவர் உணர்ந்தோர். என்றவாறு. (உ-ம்) பதக்கு, தூணி, நாழி, உழக்கு முதலிய அளவுப் பெயர்களும் தொடி, துலாம் முதலிய நிறைப் பெயர்களும் முறையே அளக்கப்படு பொருளையும் நிறுக்கப்படு பொருளையும் உணர்த்தி ஆகுபெயராய் நின்றமையுணர்க. நெல்லை அளந்து பார்த்தும் பொன்னை நிறுத்துப் பார்த்தும் பின்னர் அவற்றிற்குப் பதக்க, தொடி என்று அளவும் நிறையுமாகிய பெயர் கூறப்படுதலின் அவற்றை ஆகு பெயரென்றார். ஒன்று என்னும் எண்ணுப் பெயரால் அவ்வெண்ணப்படும் பொருளைக் கூறுதற்கு முன்னும் அப்பொருள் ஒன்றாயே நிற்றலின் எண்ணுப் பெயரை ஆகுபெயரோடு கூறாராயினார் என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். 117. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இஃது ஆகு பெயர்க்குப் புறனடை. (இ-ள்) மேற்சொல்லப் பட்டனவன்றிப் பிறவும் ஆகு பெயருளவேல், அவையெல்லாம் சொல்லப்பட்ட வற்றது இயல்பான் உணர்ந்து கொள்க. என்றவாறு. (உ-ம்) யாழ், குழல் என்னும் கருவிப் பெயர், யாழ் கேட்டான், குழல் கேட்டான் என அவற்றினாகிய ஓசையை யுணர்த்தி ஆகுபெயராயின. யானை, பாவை என்னும் உவமைப் பெயர், யானை வந்தான், பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருள்மேல் ஆயின. பொங்கல், வற்றல் என்னுந் தொழிற்பெயர், அத்தொழிலானாய பொருள்மேல் ஆயின. நெல்லோ பொன்னோ பெற்றான் ஒருவன் சோறு பெற்றேன் என்ற வழிக் காரணப் பொருட்பெயர் காரியத்தின் மேலாயின. `ஆற்றியந்தணர் என்புழி ஆறு என்னும் வரையறையாகிய எண்ணின் பெயர், அவற்றாற் சுட்டப்படும் அங்கங்களாகிய நூல்களுக்காயிற்று. இவ்வாறு ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகுமிடத்து அவ்வாறு ஆதற்குரிய இயைபு ஓரிலக்கணத்ததன்றி வேறுபட்ட இலக்கணத்தை யுடையதாதலின் அவ்விலக்கண மெல்லாம் கடைப்பிடித்துணர்க என ஆகுபெயர்க்குப் புறனடை கூறியவாறு. இவ்வாறு 104 முதல் 107 முடியவுள்ள நூற் பாக்களாலும் உரைகளாலும் பல வேறியல்பினதாக விரித்துணர்த்தப்பெற்ற ஆகபெயரிலக்கணத்தினை, 289. பொருண்முத லாறோ டளவை சொல் தானி கருவி காரியங் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பான் ஆகுபெயரே எனவரும் ஒரு சூத்திரத்தால் விளக்கமுறக் கூறினார் பவணந்தி முனிவர். பொருள், இளம், காலம், சினை, குணம், தொழில், (எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை) அளவை, சொல், தானி, கருவீ, காரியம், கருத்தன் என்னும் இவை முதலானவற்றுள் ஒன்றற்குரிய பெயரானே அதற்கு இயைபுடைய பிறிதொரு பொருளைத் தொன்று தொட்டு வருமுறையே கூறி வருவன ஆகு பெயர்களாம் என்பது இதன் பொருள். (உ-ம்:) தாமரை புரையும் சேவடி - முதற் பொருளின் பெயர் சினைக்கு ஆயினமையின் முதலாகுபெயர். அகனமர்ந்து - இடப்பெயர் நெஞ்சத்திற்கு ஆயினமையின் இடவாகுபெயர். கார்த்திகை பூத்தது - காலப்பெயர். அக்காலத்திற் பூக்கும் செங்காந்தளுக்கு ஆயினமையின் காலவாகுபெயர். வெற்றிலை நட்டான் - சினைப்பெயர் முதலுக்கு ஆயின மையின் சினையாகு பெயர். புளி தின்றான் - புளி என்னும் சுவைப் பண்பின் பெயர் அதனையுடைய பழத்திற்கு ஆயினமையின் பண்பாகு பெயர். வற்றலோடு உண்டான் - தொழிற்பெயர் அதனையுடைய உணவிற்கு ஆயினமையின் தொழிலாகு பெயர். ஒன்று, இரண்டு, அரை, கால் எனவரும் எண்ணலளவைப் பெயர்கள் முறையே, அஃறிணையொருமைக்கும் பன்மைக்கும் யாக்கையின்கண் உறுப்பிற்கும் ஆயினமையின் எண்ணலளவை யாகுபெயர்களாகும். துலாக் கொணர்ந்தான் - துலா என்னும் எடுத்தலளவைப் பெயர் அவ்வளவினதாகிய பொருளையுணர்த்தினமையின் எடுத்தலளவையாகுபெயர். உழக்கே உண்பான் - உழக்கு என்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவினதாகிய உணவினையுணர்த்தினமையின் முகத்தலளவை யாகுபெயர். கீழைத்தடி விளைந்தது - தடி என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவுடைய விளைநிலத்தையுணர்த்தினமையின் நீட்டலளவை யாகுபெயர். நச்சினார்க்கினியர் உரையெழுதினார் - உரை என்னும் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆயினமையின் சொல்லாகு பெயர். விளக்கு முரிந்தது - விளக்கு என்னும் ஒளியின் பெயர் அதற்கு இடமாகிய தண்டினையுணர்த்தினமையின் தானியாகு பெயர். தானம் - இடம். தானி - இடத்தில் உள்ளது. இடத்திலுள்ள பொருளாகிய தானியின் பெயர் தானத்திற்கு ஆயினமையின் தானியாகு பெயர் என்றாயிற்று. திருவாசகம் - திரு என்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர் அதன் காரியமாகிய நூலுக்கு ஆயினமையின் கருவியாகு பெயர். இந்நூல் அலங்காரம் - அலங்காரம் என்னும் காரியத்தின் பெயர் அதனைத் தருதற்குக் கருவியாகிய நூலுக்கு ஆயினமையின் காரியவாகு பெயர். திருவள்ளுவர் படித்தான் - திருவள்ளுவர் என்னும் கருத்தாவின் பெயர் அவர் இயற்றிய திருக்குறளாகிய காரியத்திற்கு ஆயின மையின் கருத்தாவாகுபெயர். `ஆதி என்றமையால் உவமையாகுபெயர் முதலியனவும் கொள்ளப்படும். காளை வந்தான் - காளை என்னும் உவமையின் பெயர், அதனை யொத்தவனுக்கு ஆயினமையின் உவமையாகு பெயர். புளி முளைத்தது என்புழிப் புளியென்னும் சுவைப் பெயர் அதனையுடைய பழத்திற்கும், பழத்தின் பெயர் அதன் முதலாகிய மரத்திற்கும் ஆயினமையின் இருமடியாகு பெயராம். காரறுத்தது என்புழிக் கார் என்னும் நிறத்தின் பெயர் அதனையுடைய மேகத்திற்கும் மேகத்தின் பெயர் அது பொழியுங் காலத்திற்கும், காலத்தின் பெயர் அக்காலத்தில் விளையும் நெல்லுக்கும் ஆயினமையின் மும்மடியாகு பெயராம். தொல்காப்பியனார் கூறிய `இருபெயரொட்டு என்னும் ஆகுபெயர்க்குப் `பொற்றொடி என இளம்பூரணர் காட்டிய உதாரணத்தை அடியொற்றி அன்மொழித் தொகைமேல் வரும் இயபெயரொட்டு எனப் பொருள் கூறிய சேனாவரையர், தொகையாதலுடைமையால் எச்சவியலுள் உணர்த்தப்படும் அன்மொழித்தொகை இயற்பெயர் ஆகுபெயர் என்னும் இரு வகைப் பெயருள் ஆகுபெயர் என ஒன்றாய் அடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். `பொற்றொடி என்பது அன்மொழித் தொகையாகுமே யன்றி ஆகு பெயராகாது எனத் தெளிந்துணர்ந்த நச்சினார்க்கினியர், `இரு பெயரொட்டு என்பதற்கு `அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு எனப் பொருள்கூறி, `மக்கட் சுட்டு என உதாரணமுங் காட்டினார். மக்கள் + சுட்டு என்னும் இரு பெயரும் ஒட்டி நின்று `மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத் தந்தன. இதன்கண் பின்மொழியாகிய `சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்க, மக்கள் என்னும் முன்மொழி அவ்வாகு பெயர்ப் பொருளை விசேடித்து நிற்க, இங்ஙனம் இரு பெயரும் ஒட்டி நின்றனவாதலின் இதனை இருபெயரொட்டு என்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நிற்றலின் இதனைப் பின்மொழியாகு பெயர் என்பாரும் உளர். இனி, `பொற்றொடி என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப் பொருளை விசேடித்து நில்லாது தொடி என்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க. அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டு மல்லாத `உடையாள் என்னும் மற்றொரு மொழி அவற்றின் புறத்தே தொக்குநிற்கக் காண்கின்றோம். எனவே `மக்கட் சுட்டு என ஆகுபெயராய் வரும் இருபெயரொட்டும், `பொற்றொடி என அன்மொழித் தொகையாய் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். ஆகுபெயராவது, இடையே ஒருவரால் ஆக்கப்படாது இயற்பெயர்ப் பொருளோடு ஒற்றுமையுடையதாய்த் தொன்று தொட்டு வருவது என்பார் `ஒன்றன் பெயரான் அதற்கு இயைபிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே என்றார் நன்னூலார். அன்மொழித்தொகை என்பது இவ்வாறு ஒற்றமை வேண்டாது இத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது தொக்கு நின்ற இரு மொழிகளின் தொகையாற்றலால் புறத்தே வேறொரு பொருள் மறைந்து நிற்பது என்பது, அன்மொழி என்னும் காரணப் பெயராலும் `ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி எனவரும் அதன் இலக்கணத்தாலும் நன்கு புலனாம். ஆகுபெயரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறு வேறு இலக்கணமுடையனவாகத் தொல்காப்பியனாரும் பவணந்தியாரும் குறிப்பிடுதலால், அவ்விரண்டும் வேறாதல் ஒருதலை. ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம்பொரு ளுணர்த்தாது பிறிது பொருள் உணர்த்தலால் ஒத்தனவாயினும், ஆகுபெயர் என்பது ஒன்றற்குரிய இயற்பெயராய் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளுணர்த்தி ஒரு மொழிக் கண்ணதாய் வரும். அன்மொழித்தொகை என்பது அத்தகைய தொடர்பு வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வரும். இவையே இரண்டிற்கும் வேறுபாடு என்பர் சிவஞான முனிவர். இக்கொள்கையே தொல்காப்பியனார்க்கும் நன்னூலார்க்கும் உடன்பாடாமென்பது தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னூற் சூத்திரங்களையும் ஒப்பு நோக்கியுணருங்கால் இனிது விளங்கும். 4. விளிமரபு விளிவேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் இது விளி மரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36 ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். எட்டாவதெனப்படும் விளி வேற்றுமையாவது, படர்க்கைப் பெயர்ப் பொருளை முன்னிலைக் கண்ணதாக எதிர் முகமர்க்கு தலைப் பொருளாக வுடையதாகும். பெயரது ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமை யின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளிகொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்கள் இவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். 118. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப. இது, விளிவேற்றுமையின் பொதுவிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) விளியென்று சொல்லப்படுவன தம்மையேற்கும் பெயரொடு விளங்கத்தோன்றும் இயல்பினையுடைய என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும் இயல்பாதலும் என விளியுருபுகள் தாம் பல்வேறு வகைப்படும் என்பார், `விளியெனப்படும் எனப் பன்மையாற் குறித்தார். `கொள்ளும் பெயர் எனவே கொள்ளாப் பெயரும் உள என்பது பெற்றாம். எத்தகைய திரிபுமின்றி இயல்பாய் விளியேற்கும் பெயரும் அவை விளியாய் நிற்றல் தெற்றென விளங்கும் என்பார் தெளியத் தோன்றும் என்றார். 119. அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. இஃது இவ்வியலில் விரித்துரைக்கப்படும் விளியுருபுகட்குத் தோற்றுவாய் செய்கின்றது. (இ-ள்) `விளியெனப்படுப என மேற் சூத்திரத்துச் சுட்டப் பட்ட விளியுருபுகளாவன. இவையென மாணாக்கர் உணர்தற் பொருட்டு இவ்வியலில் வடிவு பொருந்தக் கூறப்படும். என்றவாறு. மெய் - வடிவு; ஈண்டு உருபு என்னும் பொருளில் ஆளப் பெற்றது. விளி வேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின் அவ்வே என்னும் சுட்டு விளியேற்கும் பெயர்களையும் அவற்றின் ஈறுகளாகிய உருபுகளையும் ஒருங்கு சுட்டி நின்றது என்பது சேனாவரையர் கருத்தாகும். இவ்விரு சூத்திரப் பொருளையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, 302. எட்ட னுருபே எய்துபெய ரீற்றின் திரிபு குன்றல் மிகுதல் இயல் பயற் றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எட்டாம் வேற்றுமையின் உருபாவது விளியேற்கும் பெயரின் ஈற்றது திரிபும் கேடும் மிகுதலும் இயல்பும் ஈற்றயல் நின்றதன் திரிபும் ஆகும். அதற்குப் பொருள் படர்க்கையிடத் தாரை ஒருவன் தனக்கு எதிர்முகமாக அழைத்தலாகும் என்பது இதன் பொருள். விளியேற்கும் பெயர்களை உயர்திணைப் பெயர், விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் என மூவகைப்படுத்து அவை முறையே உயிரீற்றிலும் மெய்யீற்றிலும் விளியேற்குங்கால், ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்னும் உருபுகளைப் பெற்று வருதலையும் விளியேலாப் பெயர்கள் இவை என்பதனையும் தொல்காப்பியர் ஈறுபற்றி இவ்வியலில் முறையே உணர்த்துகின்றார். 120. அவைதாம், இ உ ஐ ஒ வென்னு மிறுதி அப்பால் நான்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டி விளிகொள் பெயரே. இஃது, உயர்திணைப் பெயருள் விளியேற்பன இவையென்கின்றது. (இ-ள்) சொல்லப்படுவனவாகிய பெயர்தாம் இ, உ, ஐ, ஒ என்னும் இறுதியையுடைய அக்கூற்று நான்கு பெயரும் உயர்திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர். என்றவாறு. அஃறிணைப் பெயராய் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழியும், விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராம் என்றற்கு `உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய என்றார் என்பர் சேனாவரையர். அவைதாம் என்னும் எழுவாய் அப்பால் நான்கு என்னும் பயனிலை கொண்டது. மேற் கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு பின்வரும் சூத்திரங்களாற் கூறப்படும். 121. அவற்றுள், இ ஈ யாகும் ஐ யாயாகும். (இ-ள்) அந் நான்கீற்றினுள் இகரம் ஈகாரமாயும் ஐகாரம் ஆக ஆகியும் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) நம்பி, நம்பீ; நங்கை, நங்காய் எனவரும். 122. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். (இ-ள்) ஓகாரமும் உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) கோ, கோவே; வேந்து, வேந்தே எனவரும். 123. உகரந் தானே குற்றிய லுகரம். இஃது ஐயம் அறுக்கின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம். என்றவாறு. திரு, திருவே எனச் சிறுபான்மை முற்றியலுகரமும் விளியேற்கும். 124. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற் றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர். இஃது ஐய மகற்றுகின்றது. (இ-ள்) மேற் கூறப்பட்ட நான்கீறுமல்லா ஏனை உயிரீறு உயர்திணைக்கண் விளிகொள்ளாவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ஏனையுயிர் விளிகொள்ளா எனவே மேற்கூறப்பட்ட உயிர் முற்கூறியவாறன்றிப் பிறவாற்றானும் விளி கொள்வன உளவென்பதாம். (உ-ம்) முனி, முனியே, கணி, கணியே எனவரும். `ஏனையுயிர் தாம் விளி கொள்ளா எனவே அவை தம்மியல் பால் விளி கொள்ளா வாயினும் சொல்லுவான் குறிப்புவகையால் விளி கொள்ளுதலும் உண்டு என்பதும் கூறியவாறு. (உ-ம்) உயர்திணையில் அகரவீறு விளி கொள்ளாதாயினும் மக, மகவே என ஏகாரம் பெற்று விளியேற்றவாறு காண்க. 125. அளபெடை மிகூஉம் இகர விறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. (இ-ள்) தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்றுவரும் இகரவீற்று அளபெடைப் பெயர் இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையை யுடையனவாகும். என்றவாறு. (உ-ம்) செவிலீ இஇஇஇ, தோழீஇஇஇஇ என வரும். இகர விறுபெயர் - இகரத்தால் முடிந்த பெயர். இயற்கைய வாதல் - வேறு திரிபினைப் பெறாமை. செயற்கையவாதல் - அளபெடைக்குரிய மூன்று மாத்திரை யாகி மிக்கொலித்தல். 126. முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. (இ-ள்) முறைப் பெயரிடத்து ஐகாரவீறு (முற்கூறியவாறு ஆய் எனத் திரிதலேயன்றி) ஆ எனத் திரிந்து வருதற்க உரியனவும் உள. என்றவாறு. (உ-ம்:) அன்னை, அன்னா; அத்தை, அத்தா எனவரும். உயிரீற்றனவாகிய உயர்திணைப் பெயர்க்கும் அவ்வீற்று முறைப் பெயராகிய விரவுப் பெயர்க்கும் விளியேற்குந் திறத்தில் வேற்றுமையின்மையால் உயர்திணைப் பெயரொடு முறைப் பெயரையும் சாரவைத்தார். முறைப்பெயராகிய இப்பொதுப் பெயர்களின் ஈற்று ஐகாரம் ஆய் எனவும் ஆ எனவும் திரிந்து விளி யேற்றலையும், உயர்திணைக் கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஐகார வீற்றுப் பெயர் ஆய் எனத்திரிந்து விளியேற்றலையும், 305. ஐயிறு பொதுப் பெயர்க் காயுமாவும் உருபாம் அல்லவற்று ஆயுமாகும். என்ற சூத்திரத்தால் எடுத்துரைத்தார் பவணந்தியார். 127. அண்மைச் சொல்லே இயற்கையாகும். எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) முற்குறித்த நான்கீற்று அண்மைச் சொல்லும் இயற்கையாய் விளியேற்கும். என்றவாறு. அண்மைக்கண் விளிகொள்வதனை `அண்மைச் சொல் எனக் குறித்தார். (உ-ம்) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி எனவரும். 128. ன ர ல ள வென்னும் அந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. உயர்திணைக் கண் மெய்யீற்றுள் விளியேற்பன இவையென் கின்றது. (இ-ள்) மெய்யீற்று உயர்திணைப் பெயர்களுள் விளி கொள்வன ன ர ல ள என்னும் அந்நான்கீற்றன என்று சொல்லுவர் ஆசிரியர். என்றவாறு. ன ர ல ள என்னும் மெய்களை யீறாகவுடைய சொல்லை ன ர ல ள எனக் குறித்தார். 129. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. இஃது ஐயம் அகற்றியது. (இ-ள்) மேற் கொல்லப்பட்ட நான்கீறுமல்லாத ஏனை மெய்யீற்றுப் பெயர்கள் விளியேலா. என்றவாறு. சிறுபான்மை ஏனைப் புள்ளியீறு விளி கொள்ளுதலும், முற்கூறப்பட்ட மெய்யீறுட் சில பிறவாற்றான் விளிகொள்ளுதலும் கொள்ளப்படும். (உ-ம்:) `விளங்குமணிக் கொடும்பூண் ஆய் என ஏனைப் புள்ளியாகிய யகரவீறு சிறுபான்மை விளியேற்றது. பெண்டிர் பெண்டிரோ எனவும், தம்முன், தம்முனா எனவும் கூறப்பட்ட ரகர னகர வீறுகள் பிறவாற்றான் விளியேற்றன. இவ்வாறு உயர்திணைப் பெயர்களிலும் விரவுப் பெயர் களிலும் விளியேற்பனவாகத் தொல்காப்பியர் சுட்டிய பெயர்களின் ஈறுகளையும் அவராற் கூறப்படாத யகரவீற்று அஃறிணைப் பெயர்களின் விளியேற்கும் ஈறுகளையும் தொகுத்துரைப்பதாக அமைந்தது, 306. இ உ ஊவோ டையே ன ள ர ல யவ்வீற்றுயர்திணை யோனவல் லிவற்றொடு ணஃகா னாவீறாகும் பொதுப்பெயர் ஞந வொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இ, உ, ஊ, ஐ, ஒ, ன, ள, ர, ல, ய என்னும் பத்தீற்று உயர்திணைப் பெயரும், இவற்றுள் ஓகாரமும் னகாரமான இரண்டும் ஒழித்து மேற்கூறிய வீறுகளுடன் ணகாரத்தையும், ஆகாரத்தையும் சேர்க்க அமைந்த பத்தீற்றுப் பெயரும், ஞகாரநகாரங்களும் (மேல் எழுத்ததிகாரத்து ஈறாகாதென விலக்கிய எகாரமும்) ஒழித்து எஞ்சிய இருபத்தோரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்கும் பெயர்களாம் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். 130. அவற்றுள், அன்னெ னிறுதி யாவா கும்மே. னகரவீறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்தவற்றுள் `அன் என்னும் னகரவீறு `ஆ எனத் திரிந்துவரும். (உ-ம்) சோழன், சோழா; சேர்ப்பன், சேர்ப்பா எனவரும். 131. அண்மைச் சொல்லிற் ககரமாகும். இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்) அண்மை விளிக்கண் அன்ஈறு (னகரங் கெட்டு) அகரமாயும் வரும். (உ-ம்) முருகன், முருக; துறைவன், துறைவ எனவரும். இவ்விதியினை 312. `அண்மையின்..... ஈறழிவும் எனக் குறித்தார் நன்னூலார். 132. ஆனெ னிறுதி யாயா கும்மே. இதுவும் அது. (இ-ள்) ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) சேரமான்; மலையமான் என்பன சேய்மை விளிக் கண்ணும் இயல்பாய் நிற்றல் காணலாம். 133. தொழிலிற் கூறும் ஆனெ னிறுதி ஆயா கும்மே விளிவயி னான. இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்) தொழிலினால் ஒரு பொருளையறியச் சொல்லும் ஆனீற்றுப் பெயர் விளியேற்குமிடத்து ஆய் எனத் திரிந்து வரும். என்றவாறு. (உ-ம்) வந்தான், வந்தாய்; சென்றான் சென்றாய், எனவரும். 134. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்) ஆனீற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வீற்றுத் தொழிற்பெயர் போல ஆய் எனத்திரிந்து விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) கரியான், கரியாய்; தீயான், தீயாய் எனவரும். 135. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இதுவுமது. (இ-ள்) ஆனீற்று அளபெடைப் பெயர், இகரவீற்று அளபெடைப் பெயர்போல மூன்ற மாத்திரையின் நீண்டு இயல் பாய் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) பெருமாஅஅன், எம்மாஅஅன் எனவரும். 136. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. இதுவுமது. (இ-ள்) னகாரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) மகன், மகனே; மருமகன், மருமகனே எனவரும். விளியேற்குமிடத்து னகரவீற்றுப் பெயர்க்குச் சொல்லப்பட்ட எல்லா விதிகளையும் விளியேற்றலில் பிற்காலத்தெழுந்த மாற்றங் களையும் தொகுத்துரைப்பது, 306. ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ றழிவய னீட்சி யதனோ டீறு போத லவற்றோ டோவுறல் ஈறழிந் தோவுற லிறுதியவ் வாதல் அதனோ டயல்திரிந் தேயுற லீறழிந் தயலே யாதலும் விளியுரு பாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். னகரவீற்று உயர்திணைப் பெயர்களுட் சில அளபெழு தலும், சில ஈறுகெடுதலும், சில ஈற்றயலில் நின்ற குற்றெழுத்து நீளலும், சில ஈற்றயல் நீண்டு ஈறுகெடுதலும், சில ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டு ஓகார மிகுதலும், சில ஈறுகெட்டு ஓகாரமிகுதலும், சில இறுதியவ் வொற்றாதலும், சில இறுதியகரமாய் அயலில் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம் ஏற்றலும், சில ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாதலும் விளியுருபாம் என்பது இதன் பொருள். (உ-ம்) அம்பர்கிழா அன் - சேய்மைக்கண் அளபெழுந்தது. இறைவ கேள் - அண்மைக் கண் ஈறுகெட்டது. நம்பான் - ஈற்றயல் நீண்டது. இறைவா - ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டது. ஐயாவோ - புலம்பின்கண் அயல் நீண்டு ஈறழிந்து ஓகாரம் மிக்கது. திரையவோ - புலம்பின்கண் அயல் நீண்டு ஈறழிந்து ஓகாரம் மிக்கது. திரையவோ - புலம்பின்கண் ஈறழிந்து ஓகாரமிக்கது. ஆதிரையாய் - இறுதியவ் வொற்றாயிற்று. வாயிலோயே - ஈற்றயல் திரிந்து இறுதியகரம் ஏகாரம் ஏற்றது. முருகே - ஈறழிந்து அயலில் அகரம் ஏகார மாயிற்று. னகரவீற்றுயர்திணைப் பெயர்கட் குரியனவாகக் கூறிய விளியுருபுகளுள் இறுதியழிதலும் அதனோடு அயல்நீட்சியும் ஆகிய இவை னகரவீற்று அஃறிணைப் பெயர்க்கண்ணும் விரவுப் பெயர்க்கண்ணும் வருதலை, 310. னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண் இறுதி யழிவத னோடய னீட்சி. எனவரும் சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். னகாரவீற்று உயர்திணையல்லாத அஃறிணைப் பொதுப் பெயர் ஆகிய இருவகைப் பெயர்க்கண்ணும் இறுதியழிவும் அதனோடு அயலே நின்ற குற்றெழுத்து நீளுதலும் விளியுருபாகும் என்பது இதன் பொருள். (உ-ம்) அலவன், அலவ, அலவா எனவும், சாத்தன், சாத்த, சாத்தா எனவும் வரும். 137. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. இது, னகரவீற்றுள் விளியேலாதன இவையென்கின்றது. (இ-ள்) தான் என்னும் பெயரும் அவன் இவன் உவன் என்னுஞ் சுட்டுமுதற் பெயரும், யான் என்னும் பெயரும் யாவன் என்னும் வினாவின் பெயரும் ஆகிய அவ்வனைத்தும் னகரவீற்றுள் விளியேலாப் பெயர்களாம். என்றவாறு. 138. ஆரும் அருவும் ஈரொடு சிவணும். இது, ரகரவீறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) ரகாரவீற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும். (உ-ம்) சான்றார், சான்றீர் எனவும் கூத்தர், கூத்தீர் எனவும் வரும். 139. தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. இஃது எய்தியதன் மேற்கிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற் பெயரும் ஈரெனத் திரிதலோடு ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று என்பர் விளங்கிய அறிவினையுடையோர். என்றவாறு. (உ-ம்) வந்தார், வந்தீரே; சென்றார், சென்றிரே, எனவரும். அர்ஈறு வந்துழிக் கண்டு கொள்க. `வழுக்கின்று என்பதனால், தொழிற் பெயரல்லாத ஆரீறுகளும் ஈரோடு ஏகாரம் பெறுதலும், சிறுபான்மை அர்ஈறு ஈர் பெறாது ஏகாரம் பெற்றுவருதலும் கொள்ளப்படும். (உ-ம்) நம்பியார், நம்பியீரே; கணியார், கணியீரே எனவும் வந்தவர், வந்தவரே; சென்றவர், சென்றவரே எனவும் வரும். 140. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்) அவ்விரண்டீற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர் போல ஈரொடு சிவணியும் சிறுபான்மை ஈரொடு ஏகாரம்பெற்றும் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) கரியார், கரியீர், இளையார், இளையீர் எனவும், கரியீரே இளையீரே எனவும், கரியவரே, இளையவரே எனவும் வரும். இனித் தன்னின முடித்தல் என்பதனால், சீவகசாமி என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகை, சீவகசாமியார் என ஆரீறாய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல் கொள்க. 141. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) ரகாரவீற்று அளபெடைப்பெயர் னகார ஈற்று அளபெடைப் பெயர்போல மாத்திரைமிக்கு இயல்பாய் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) சிறாஅஅர், மகாஅஅர் எனவரும். ரகாரவீற்று உயர்திணைப் பெயர்கள் விளியேற்குங்கால் அடையும் இத்தகைய உருபு வேறுபாடுகளை, 308. ரவ்வீற் றுயர் பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனோ டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனயல் நீடல் ஈற்றின் ஈருறல் இவையுமீண் டுருபே. எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறியுள்ளார். ரகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழலும், ஈற்றயலில் அகரம் இகரமாதலும் ஈகாரமாதலும், ஆகாரம் ஈகாரமாய் ஏகார மேற்றலும், ஈற்றில் ஏகாரமிக்கு அயலில் யாக்கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாதலும் ஈற்றின் ஈர் ஆதலும் என்றிவையும் விளிபுருபாம் என்பது இதன் பொருள். (உ-ம்) சிறாஅர் - அளபெழுந்தது. தெவ்விர் - அகரம் இகரமாயிற்று. வேந்திர் - அகரம் ஈகாரமாயிற்று. மடவீர் - ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாயிற்று. கணியீரே - ஈற்றயலில் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் ஏற்றது. நம்பீரே - ஏகாரமிக்கு ஈற்றயலில் யாக்கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாயிற்று. எமரீர் - ஈர் ஏற்றது. `ஈண்டு என்ற மிகையானே, கடலீரே சாத்தியீரே என அஃறிணைப் பெயர்களும் விரவுப் பெயர்களும் இவ்வாறு வருவன கொள்ளப்படும். 142. சுட்டு முதற் பெயரே முற்கிளந் தன்ன. இது, ரகரவீற்றுள் விளியேலாதன இவையென்கின்றது. (இ-ள்) அவர், இவர், உவர் என்னும் ரகரவீற்றுச் சுட்டு முதற்பெயர் னகரவீற்றுச் சுட்டு முதற் பெயர் போல விளி கொள்ளா. என்றவாறு. 143. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை யிரண்டும் அவற்றியல் பியலும். இதுவும் அது. (இ-ள்) நும்மின் திரிபெயராகிய நீயிர் வினாவின் பெயராகிய யாவர் என்று சொல்லப்பட்ட அம் முறைமையினையுடைய இரண்டும் மேற்கூறிப் சுட்டுப் பெயர் போல விளியேலா. என்றவாறு. நீயிர் என்பது நும்மெனத்திரிந்தது என்னுங் கருத்தினை யுடன்படாது நும் என்பதே நீயிர் எனத் திரிந்தது எனத்தாம் எழுத்ததிகாரத்திற் கூறியதனை மீண்டும் வற்புறுத்தும் நோக்கத் துடன் ஈண்டு நீயிர் என்பதனை நும்மின் திரிபெயர் எனக் குறித்தார் தொல்காப்பியனார். ஏனைப்புள்ளியீறு என்னும் சூத்திரத்து விளிகொள்ளும் பெயரீறுகளுள் இர்ஈறும் அடங்குதலின் இச்சூத்திரத்து நீயிர் என்பதனை எடுத்தோதி விலக்கினார். 144. எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே நின்ற வீற்றயல் நீட்டம் வேண்டும். இது, லகர ளகர வீற்றுப் பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) கூறப்படாது எஞ்சிநின்ற லகாரளகார மென்னும் இரண்டு ஒற்றுக்களை இறுதியாகவுடைய பெயர்கள் ஈற்றய லெழுத்து நீண்டு விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) தோன்றல், தோன்றால், மக்கள், மக்காள் எனவரும். 145. அயல்நெடி தாயின் இயற்கை யாகும். இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) அவ்விரண்டீற்றுப் பெயரும் ஈற்றயலெழுத்து நெட்டெழுத்தாயின் இயல்பாய் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) திருமால் பெண்பால் எனவும் பெருமாள், கோமாள் எனவும் வரும். நமர்காள், நமரங்காள் எனப் பெயர்த்திரி சொல்லாய்த் திரிந்து விளியேற்றலுங் கொள்க. 146. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆளெனிறுதி ஆயா கும்மே விளிவயி னான. இது, ளகரவீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்) வினையின் கண்ணும் பண்பின் கண்ணும் ஆராயத் தோன்றும் ஆள் என்னும் ஈற்றினையுடைய பெயர் விளிக்கு மிடத்து ஆய் எனத் திரியும். (உ-ன்) உண்டாள், உண்டாய்; கரியாள், கரியாய் எனவரும். விளிவயினான என்பதனை எல்லாவிடத்தும் கூட்டுக. 147. முறைப் பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. இஃது எய்தியதுவிலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ-ள்) ளகாரவீற்று முறைப் பெயர் னகார வீற்று முறைப் பெயர் போல ஏகாரம் பெற்று விளியேற்கும். என்றவாறு. (உ-ம்) மகள், மகளே, மருமகள், மருமகளே எனவரும். 148. சுட்டு முதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இது ளகரவீற்றுள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்) அவள் இவள் உவள் என்னும் ளகாரவீற்றுச் சுட்டு முதற்பெயரும் யாவள் என்னும் வினாவின் பெயரும் முற்கூறிய சுட்டு முதற்பெயரும் வினாப்பெயரும் போல விளி கொள்ளா. என்றவாறு. 149. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) லகார ளகார ஈற்று அளபெடைப்பெயர் முற்கூறிய னகார ஈற்று அளபெடைப் பெயர்போல அளவு நீண்டு இயல்பாய் விளியேற்கும். என்றவாறு. (உ-ம்.) மாஅஅல், வேஎஎள் எனவரும். இங்ஙனம் ளகர லகர வீற்று உயர்திணைப் பெயர்கள் விளியேற்குமாறுணர்த்திய தொல்காப்பியச் சூத்திர விதிகளையடி யொற்றி அமைந்தன பின்வரும் நன்னூற் சூத்திரங்களாகும். 307. ளஃகா னுயர் பெயர்க் களபீ றழிவயல். நீட்சி யிறுதி யவ் வொற்றாதல் அயிலி லகரமே யாதலும் விளித்தனு. ளகாரவீற்று உயர்திணைப் பெயர்க் கண் அளபெழுதலும், ஈறு கெடுதலும், அயல் நீடலும், இறுதி ளகரம் யகரவொற்றாய்த் திரிதலும் அயலிலுள்ள அகரம் ஏகாரமாதலும் விளியுருபாம் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) வேஎள் - அளபெழுந்தது. எல்லா - ஈறுகெட்டது. நமர்காள் - ஈற்றயல் நீண்டது. குழையாய் - இறுதியகர வொற்றாய்த் திரிந்தது. அடிகேள் - ஈற்றயல் அகரம் ஏகாரமாயிற்று. 309. லகாரவீற் றுயர்பெயர்க் களபய னீட்சியும் யகார வீற்றிற் களபுமா முருபே. லகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழுதலும், யகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழுதலும், விளியுருபாம் என்பது இதன் பொருள். (உ-ம்) `வலம்புரிந்த தடக்கை மாஅல் எனவும், தோன்றால் எனவும், `விளங்குமணிக் கொடும் பூண் ஆஅய் எனவும் வரும். 311. லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண் ஈற்றய னீட்சியும் உருபாகும்மே. லகார ளகார வீற்று அஃறிணைப் பெயர்க்கண்ணும் பொதுப் பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீட்சியும் உருபாம் என்பது இதன் பொருள். (உ-ம்) முயல், முயால்; கிளிகள், கிளிகாள் எனவும் தூங்கல், தூங்கால்; மக்கள் மக்காள், எனவும் வரும். 150. கிளந்த விறுதி யஃறிணை விரவுப் பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. இது, விரவுப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மேல் உயர்திணைக்கண் விளியேற்கும் என்று கூறிப்பட்ட எட்டீற்றினையு முடைய (உயர்திணையொடு) அஃறிணை விரவும் விரவுப் பெயர்கள், விளியேற்குமிடத்து அவ்வீறுகளின் எடுத்தே திய முறைமையினையுடைய. என்றவாறு. கிளந்த இறுதியாவன இ உ ஐ ஓ என்னும் உயிரீறு நான்கும் ர ல ள என்னும் புள்ளியீறு நான்குமாகிய எட்டீறுகள். (உ-ம்) சாத்தி, சாத்தீ; பூண்டு, பூண்டே; தந்தை, தந்தாய்; சாத்தன், சாத்தா; கூந்தல், கூந்தால்; மக்கள், மக்காள் எனவரும். ஓகாரவீறும் ரகாரவீறுமாய் வருவன விரவுப் பெயருளவேற் கண்டு கொள்க என்பர் இளம்பூரணர். இனி, விளிக்குங்காலை என்றதனாற் பிணாவாராய், அழிதூவாராய் என எடுத்தோதாத ஆகார ஊகாரவீற்று விரவுப் பெயர் இயல்பாய் விளியேற்றலும், சாத்தன் வாராய், மகள் வாராய், தூங்கல் வாராய், என்று எடுத்தோதிய ஈறுகள் வறிய வாறன்றி இயல்பாய் விளியேற்றலும், இப்பெயர்கள் ஏகாரம் பெற்று விளியேற்றலுங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். 151. புள்ளியு முயிரு மிறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே. இஃது அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மெய்யீறும் உயிரீறுமாகிய அஃறிணையிடத்து வரும் எல்லாப் பெயர்களும், விளியேற்குங் காலந்தோன்றில் ஏகாரம் பெறுதலைத் தெளிவாகவுடையது. என்றவாறு. (உ-ம்) மரம், மரமே; அணில், அணிலே; புலி, புலியே; கிளி, கிளியே எனவரும். அஃறிணைப் பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும், விளி கேளாதனவற்றைக் கேட்பன போலச் சொல்லுவர் கருதியவாற்றான் விளியேற்பனவுமல்லது, ஒழிந்த பெயரெல்லாம் விளி ஏலாமையின், `விளிநிலை பெறூஉங் காலந்தோன்றின் என்றார். அதனானே சுட்டுப்பெயர் முதலாயின விளியேலாமையுங் கொள்க என விளக்கந் தருவர் சேனாவரையர். ஏகாரம் பெற்று விளியேற்றல் தெளிநிலையுடைய, எனவே, அந்நிலையின்றிச் சிறுபான்மை பிறவாற்றான் விளியேற்பனவும் உள என்பது பெறப்படும். அவையாவன: வருந்தினை வாழி யென் நெஞ்சம், கருங்கால் வெண்குருகு ஒன்று கேண்மதி, `காட்டுச் சாரோடுங் குறு முயால், `ஓண்டூவி நாராய் என்னுந் தொடக்கத்தன. உயர்திணைப் பெயர், விரவுப்பெயர், அஃறிணைப்பெயர் என்னும் மூவகைப் பெயர்க்கும் உரிய விளியுருபுகளை, 304. இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும் இகர நீட்சியும் உருபா மன்னே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். `உயர்திணைப்பெயர், பொதுப்பெயர், அஃறிணைப் பெயர் என்னும் மூவகைப் பெயர்க்கண்ணும் எல்லா ஈறும் இயல்பாதலும், அவற்றின்கண் ஏகார மிகுதலும், இகரவீறு ஈகார வீறாய்த் திரிதலும் விளிவேற்றுமைக்கு உருபுகளாம் என்பது இதன் பொருளாகும். 152. உளவெனப்பட்ட எல்லாப் பெயரும் அளபிறந்தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத்தான. இது மூவகைப் பெயர்க்கும் எய்திய விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) இருதிணைக் கண்ணும் விளியேற்பனவாகச் சொல் பட்ட எல்லாப் பெயரும் சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கின் கண் விளிக்குமிடத்துத் தம் மாத்திரையின் மிக்கு ஒலித்தலை யுடையனவாகும். என்றவாறு. (உ-ம்) நம்பீஇ, சாத்தாஅ எனவரும். ஈண்டு அளபிறத்தல் என்றது, நெட்டெழுத்து அளபெடை யாயும், அளபெடை மூன்று மாத்திரையின் மிக்கும் சேய்மைக்குத் தக்கவாறு நீட்டிசைத்தலை. சேரமான், மலையமான் என ஈற்றயல் எழுத்து மிக்கொலித்த வழி ஈற்றயல் நீண்டதாகக் கொள்ளப்படும். இச்சூத்திரப் பொருளுடன், 127. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். என்ற சூத்திரப் பொருளையும் இயைத்துக் கூறுவது, 312. அண்மையி னியல்பு மீறழிவுஞ் சேய்மையின் அளபும் புலம்பின் ஓவு மாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அண்மைக்கண் உள்ளவர்களை விளிக்குமிடத்து இயல்பும், ஈற்றினது அழிவும், சேய்மைக்கண் உள்ளவர்களை விளிக்குமிடத்து நெட்டெழுத்து அளபெழுதலும், புலம்புதற்கண் ஓகாரம் பெறுதலும் ஆம் என்பது இதன் பொருள். 153. அம்ம வென்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இது, அம்ம என்னும் இடைச்சொல் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) அம்ம என்னும் அசைச் சொல்லினது நீட்டமாகிய அம்மா என்னுஞ்சொல் விளிகொள்ளும் முறைமையினையுடைய பெயரொடு தோன்றாது இடைச் சொல்லோடு தோன்றிற்றா யினும் அதனையும் விளியாகக் கொள்வர் தெளிவோர். என்றவாறு. (உ-ம்) அம்மா சாத்தா எனவரும். சாத்தா என்பதே எதிர்முக மாக்குமாயினும் அம்ம என்பதும் அவ் எதிர்முகமே குறித்து நிற்றலின் விளியாகக் கொள்ளப்படும் என்பார் `விளியொடு கொள்ப என்றார் என்பர் இளம்பூரணர். 154. தநநு எயென வவைமுத லாகித் தன்மை குறித்த னளர வென்கிளவியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. இஃது உயர்திணைப் பெயருள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்) த, ந, நு என்னும் உயிர்மெய்யும் எ என்னும் உயிரையும் முதலாக உடையனவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்துநின்ற ன, ள, ர என்னும் ஒற்றுக்களை இறுதியாகவுடைய சொல்லும் அவைபோல்வன பிறவுமாகிய பெயராகிய நிலைமையுடைய சொற்கள் வரின் அவை விளியொடு பொருந்துதல் இல்லையாதல் வேண்டும். என்றவாறு. (உ-ம்) தமன், தமர், தமள்; நமன், நமர், நமள், நுமன், நுமர், நுமள்; எமன், எமர், எமள் எனவும், தம்மான், தம்மார், தம்மாள்; நம்மாள், நம்மாள்; நும்மான், நும்மார், நும்மாள்; எம்மான், எம்மார், எம்மாள் எனவும் வரும் இப்பெயர்கள் விளியேலாமை கண்டு கொள்க. அன்னபிறவும் என்றதனால், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என்பனவும் விளியேலாமை கொள்ளப்படும். ஆசிரியர் தொல்காப்பியனாரால் இவ்வியலில் 20, 25, 26, 31, 37-ஆம் சூத்திரங்களில் விளியேலாதனவாக எடுத்தோதப்பட்ட உயர்திணைப் பெயர்களையும் அவரால் எடுத்தோதப்படாத அஃறிணைப் பெயர்களையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 313. நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர வைதுத் தாந்தா னின்னன விளியா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். நுவ்வையும் எ, யா என்னும் முதல் வினாக்களையும், அ இ உ என்னும் சுட்டையும் முதலாகவுடைய னகர ளகர ரகரவீற்று உயர்திணைப் பெயர்களும் முற்குறித்த நுதலிய எழுத்துக்களை முதலாகக் கொண்டு வை, து என்பவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களும், தாம், தான், என்னும் பொதுப் பெயர்களும் இவை போல்வன பிறவும் விளியேலா என்பது இதன் பொருளாகும். 5. பெயரியல் கிளவியாக்கம் முதல் விளிமரபீறாக அல்வழி வேற்றுமை யாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத் தொடர்மொழிக் குறுப்பாகிய தனிமொழியிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கணம் உணர்த்துகின்றார். அதனால் இது வெயரியலென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார். 155. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. இது, நால்வகைச் சொற்கும் பொதுவிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் உணர்த்துதலைக் கருதியே நிற்கும்; பொருளுணர்த்தாது நில்லா. என்றவாறு. சொல் பொருள் குறித்தன என்றது, இவ்வாள் வெட்டியது என்றாற்போன்று கருவிக்கருத்தாவாய் நின்றது. `ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே என்புழி, `இருதிணைப் பொருள்களையும் சொற்கள் உணர்த்தும் என்பதன்றித் தமிழ்ச் சொல்லெல்லாம் பொருளுணர்த்தியே நிற்பன என்னும் வரையறை ஆண்டுப் பெறப்படாமையின் அதனை இச்சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவு படுத்தினார். தாம்சார்ந்த சொற்களின் பொருளை யுணர்த்தியும் அச்சொற்களை அசைத்தும் நிற்றலின் அசை நிலையும் பொருள் குறித்தனவேயாம். சொற்கள் ஓசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டுதலின் இசை நிறையும் பொருளுணர்த்திய தெனவே கொள்ளப்படும். முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்றாற் போல்வனவும் பொய்ப் பொருளாகிய அவற்றின் இன்மையைக் குறித்து நின்றன வாதலின் அவையும் பொருளுணர்த்தினவேயாம். இது முதல் ஐந்து சூத்திரங்கள் நால்வகைச் சொற்கும் பொது விலக்கணங் கூறுதலின் தொடர்மொழி யிலக்கணமாகிய வேற்றுமை யிலக்கணத்தை யடுத்துத் தனி மொழியிலக்கணம் கூறும் பெயரியலின் முன்னர் வைக்கப்பெற்றன. 156. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். இது, சொற்கள் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) சொல்லின் வேறாகிய பொருட்டன்மை அறியப் படுதலும், சொல்லின் தன்மையறியப்படுதலும் அச்சொல்லினால் ஆகும் என்று சொல்லுவர் புலவர். என்றவாறு. (உ-ம்) சாத்தன் வந்தான், பண்டு காடுமன், உறுகால் - இவை தம்மின் வேறாகிய பொருளை உணர்த்தின. செய்தெனெச்சம், தஞ்சக்கிளவி, வேறென் கிளவி, செய்தென் கிளவி, கடியென் கிளவி, - இவை வேறு பொருளுணர்த்தாது சொல்லாகிய தம்மையே யுணர்த்தின. 157. தெரிபு வேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. இது, மேற்குறித்த பொருண்மை தெரிதலின் பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட பொருட்டன்மை தெரிதல், சொன்மை மாத்திரத்தாற் பொருள் விளங்கி வேறு நிற்றலும் அவ்வாறு சொல்லாற் றோன்றாது சொல்லோடு கூடிய குறிப்பினாற் பொருள் தோன்றி நிற்றலும் ஆகிய இரண்டு பகுதிப்படுமென்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) அவன், இவன், உவன், வந்தான், சென்றான் என்புழி உயர்திணையாண்பாற்பொருள் சொல்லின் வேறாக விளங்கித் தோன்றியது. சொல்லுவான் குறிப்பினால் `ஒருவர் வந்தார் என்புழி வந்தவர் ஆணோ பெண்ணோ என்பது புலப்பட நிற்றலின் குறிப்பிற்றோன்றலாகும். இவ்விரு சூத்திரப் பொருளையும் விளக்கிச் சொல்லின் இலக்கணமுணர்த்துவனவாக அமைந்தன பின்வரும் நன்னூற் சூத்திரங்களாகும். 258. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழியென்றா இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகையிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படைக் குறிப்பின் விரிப்பது சொல்லே. ஒருமொழியும் தொடர்மொழியும் பொதுமொழியும் என மூன்று வகையினதாய் இருதிணையாகிய ஐம்பாற் பொருளையும் அப்பொருளேயன்றித் தன்னையும் மூன்றிடத்திலும் உலக வழக்கினும் செய்யுட்கண்ணும் வெளிப்படையாலும் குறிப்பினாலும் விளக்குவது சொல் என்பது இதன் பொருளாகும். எனவே எல்லாச் சொல்லும் ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்னும் மூன்றாயும் எல்லாப் பொருளும் இருதிணை ஐம்பாலாயும் அடங்குமென்பதூஉம், சொல்லும் பொருளுமாகிய அவை உயர்திணை, அஃறிணை, ஆண், பெண், பலர், ஒன்று, பல, தன்மை; முன்னிலை, படர்க்கை, வழக்கு செய்யுள், வெளிப்படை, குறிப்பு என்னும் காரணங்களால் உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல், உயர்திணைப் பொருள், அஃறிணைப் பொருள் என இவ்வாறு இயைத்து வழங்கப்படு மென்பதூஉம், உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல, ஒருவர்க்குச் சொற்கருவியாய் நின்று தன்னையும் இருதிணையைம்பாற் பொருளையும் உணர்த்துமென்பதூஉம் பெற்றாம். 259. ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையு மேற்பன. ஒருமொழிகளாவன பகாப்பதமேனும் பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒரு பொருளைத்தருவனவாம். தொடர் களாவன அவ்விருவகைப் பதங்களும் தன்னோடும் பிறிதோடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் இரண்டு முதலிய வாகத் தொடர்ந்து நின்று இரண்டு முதலிய பல பொருளைத் தருவனவாம். பொது மொழிகளாவன ஒன்றாய் நின்று ஒரு பொருள் தந்தும் அதுவே தொடர்ந்து நின்று பல பொருள் தந்தும் இவ் விரண்டிற்கும் பொதுவாய் நிற்பன என்பது இதன் பொருளாகும். (உ-ம்) ஒருமொழிகளாவன, நிலம், நிலத்தன், நட, நடந்தான், தில், மன், தவ, நனி என்பன முதலியன. தொடர் மொழிகளாவன, நிலம் வலிது, அதுகொல், சாலப் பகை, நிலங்கடந்தான், நிலத்தைக் கடந்த நெடுமால் என்பன முதலியன. பொது மொழிகளாவன, எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாராநின்றான், உரைத்திட்டான் என்பன முதலியன. இவை ஒரு மொழிகளாய் நின்று ஒரு பொருளைத் தருதலேயன்றி, எள்ளைத்து, கொள்ளைத்து, தாவுகின்ற மரை, வேகின்ற கை, எழுந்து பின் இருந்தான், வந்து, நின்றான், உரைத்துப் பின் இட்டான் எனத் தொடர்மொழிகளாய்ப் பல பொருள் தருதலின் பொது மொழிகளாயின. ஈண்டுத் தொடர்மொழி பல பொருளன என்றது பல சொல்லிற் பலபொருளை. மொழிகள் யாங்கணுந் தொடராது தனித்து நில்லாவேனும், இப்பொருட்கு இச்சொல் என இறைவனாலும் அறிவுடை யோராலும் படைக்கும் படைப்புக் காலத்தும் இரண்டு முதலிய தொடர் மொழிகளுள் ஒன்று நின்று மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலின் ஒருமொழி என்ற பாகுபாடும் உளதாயிற்று. இவ்வொரு மொழியைத் தனி மொழியெனவும் வழங்குவர். அது பெயர், வினை, இடை, உரி என நால்வகைப்படும். சொற்கள் தொடருங்காற் பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் தொடரும் என்பர் தமிழ் நூலார். சாத்தன் வந்தான், பயனிலைவகை. யானைக்கோடு, தொகைநிலை வகை. தீநீர், எண்ணுநிலைவகை. சொற்கள் தொடருங்கால் அவாய் நிலையானும் அண்மையானும் தகுதியானும் தொடரும் என்பர் வடநூலார். ஆவைக்கொணா, அவாய்நிலை. ஆற்றங்கரைக்கண் ஐந்து கனிகள் உளவாகின்றன, அண்மை. நீரால், நனை, தகுதி. தொடர்மொழி இரு மொழித் தொடரும் பன்மொழித் தொடரும் என இருவகைப்படும். அரசன் வந்தான், இருமொழித் தொடர். அறம் வேண்டி அரசன் உலகம் புரந்தான், பன்மொழித்தொடர். 268. ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி ஆக பெயரன் மொழிவினைக் குறிப்பே முதறொகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை. இருதிணை ஆண்பெண்களுள் ஒன்றனையொழிக்கும் பொதுச் சொல்லும், வலித்தல் முதலிய ஒன்பது விகாரச் சொல்லும், மூவகைத் தகுதி வழக்குச் சொல்லும், ஆகு பெயர்ச் சொல்லும், அன்மொழித்தொகைச் சொல்லும், வினைக்குறிப்புச் சொல்லும், முதற்குறிப்புச் சொல்லும், தொகைக் குறிப்புச் சொல்லும், இவையல்லாத பலவாற்றான் வருங் குறிப்புச் சொல் லும், இவை போல்வன பிறவும் குறிப்பினால் இருதிணையைம்பாற் பொருளைத் தருஞ் சொற்களாகும். இவையல்லாதன வெல்லாம் வெளிப்படையால் அப்பொருள்களைத்தரும் சொற்களாகும் என்பது இதன் பொருள். (உ-ம்) ஆயிரமக்கள் பொருதார், பெருந்தேவி கருவுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் பணிமக்கள் உளர் என்பன இருதிணை ஆண் பெண் பால்களுள் ஒன்றனையொழித்து ஒன்றனைக் குறிப்பால் உணர்த்தின. இப்பெற்றம் உழவொழிந்தன, இப்பெற்றம் கறக்கும் என்பன அஃறிணை ஆண்பெண்பால்களுள் ஒன்றனை யொழித்து ஒன்றனைக் குறிப்பால் உணர்த்தின. குறுத்தாட்பூதம், மரைமலர், குலிகமோடிகலிய வங்கை எனவரும் மூவகை விகாரச் சொற்களும் குறுந்தாள், தாமரை, இங்குலிகம் என்பவற்றைக் குறிப்பால் உணர்த்தின. கால்கழீஇ வருதும், நன்காடு, பறி என்னும் மூவகைத் தகுதி வழக்குச் சொற்கள் தத்தம் பொருளைக் குறிப்பால் உணர்த்தின. புளித்தின்றான் என்புழிப் புளி என்பது ஆகு பெயராய்ப் பழத்தினைக் குறிப்பாலுணர்த்திற்று. பொற்றொடி என்னும் அன்மொழித்தொகை அதனையுடையாளைக் குறிப் பாலுணர்த் தியது. `சொலல்வல்லன் என்புழி வல்லன் என்பது வினைக்குறிப்புப் பொருளைக் குறிப்பால் உணர்த்திற்று. `அறத்தாறிதுவென வெள்ளைக்கிழிபு என்புழி முதற் குறிப்பு அதனை முதலாகவுடைய திருக்குறளை யுணர்த்திற்று. `அலங்குளைப்புரவி ஐவரொடு சினைஇ என்புழி ஐவர் என்னும் தொகைக்குறிப்பு பாண்டவரைக் குறிப்பால் உணர்த்தியது. `கற்கறித்து நன்கு அட்டாய், நீயிர்பெரிதும் அறிதிர், பாயா வேங்கை, பறவாக்குளவி எனவும் `உவர்க்கடலன்ன செல்வரு முளரே, கிணற்றூற்றன்ன நீயுமாருளையே எனவும் இவ்வாறு பலவாற்றான் வரும் சொற்களும் எழுத்துப் பெருக்கம், எழுத்துச் சுருக்கம், மாத்திரைச் சுருக்கம், வினாவுத்தரம் என அணி நலம் பெற வருவன பிறவும் குறிப்பினால் தத்தம் பொருள்களை யுணர்த்துவனவாகும். இன்னபிறவும் என்றமையானே தெரிநிலை. குறிப்பு என்னும் வினையாலணையும் பெயர்களும், முற்றெச்சங்களும் செய்யு மென்னு முற்றும், அன்று, இன்று, என்னும் வினையெச்சக் குறிப்பும், கேட்குநபோலவும்....... அஃறிணை மருங்கிற் கூறப்படுதல் முதலிய இலக்கணைகளும் இவை போல்வன பிறவும் கொள்ளப்படும். இவ்வாறன்றி நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றற் றொடக்கத்தனவெல்லாம் வெளிப்படையிற் பொருளுணர்த்துவன வாகும். சொற்பொருளை, வாச்சியம், வியங்கியம், இலக்கணை என மூன்றாகப் பகுத்துரைப்பர் வடநூலார். வாச்சியம் என்பது வெளிப்படை. வியங்கியம் என்பது குறிப்பு. இலக்கணை என்பது, ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது. அது, விட்ட விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும் விடாதவிலக்கணை என மூவகைப்படும் என்பர். சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெருந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்துபின் சென்றவென் னெஞ்சு என்புழி மருங்கும் கையும் ஊன்றுதலும் முதலிய இலக்கணம் நெஞ்சிற்கு இங்ஙனம் கூறியது இல்லாமையால் விட்ட விலக்கணை எனப்படும். `கங்கையின்கண் இடைச்சேரி `புளித் தின்றான் என்புழி இடைச்சேரி கங்கைக் கரைக்கண் இருத்தலும் புளியினது பழத்தைத் தின்றலும் உண்மையான் இவை விடாத விலக்கணை யெனப்படும். ...................... பாயிருள் பருகிப் பகல்கான் றொழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண் - 1,2) என்புழி இருளைப் பருகுதலும் பகலைக் கக்குதலும் பரிதிக்கு இன்மையானும், இருளைப் போக்குதலும் பகலைத் தருதலும் பரிதிக்கு உண்மையானும் இது விட்டும் விடாத விலக்கணை எனப்படும். இவையெல்லாம் தெரிபு வேறுநிலை யிலும் குறிப்பிற் றோன்றலும், என்னும் தொல்காப்பிய நெறியின்படி குறிப்பிற் றோன்றலாயடங்குதலின், `வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே என இவ்வாறு வகுத்துரைத்தார் நன்னூலார். 158. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே. இது, சொற்களின் பாகுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) சொல்லென்று எடுத்துரைக்குஞ் சிறப்புடையன பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என இரண்டென்று சொல்லுவர் அறிந்தோர். என்றவாறு. பிறசொல்லும் உளவாயினும் இவற்றது சிறப்பு நோக்கிப் `பெயரே வினையென் றாயிரண்டென்ப என்றார். பெயர் என்பது பொருள். பொருளையுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொல்லெனப் பட்டது. வினை என்பது பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியமாகும். வினையையுணர்த்துஞ் சொல் வினைச்சொல் எனப்பட்டது. பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழில் பற்றாது அப்பொருள் பற்றிவரும் சிறப்புடைமையாற் பெயரை முற் கூறினார். 159. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. இதுவும் அது. (இ-ள்) இடைச் சொல்லும் உரிச் சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றினிடமாகத் தோன்றும். என்றவாறு. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச் சொற்களாம். இடை - நடு. குணப் பண்பும் தொழிற்பண்புமாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாகும். பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல் எனப்பட்டது என்பர் சிவஞானமுனிவர். இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய இவ்விரண் டினையும் முற்குறித்த பெயரும் வினையுமாகிய இரண்டுடன் சேர்த்தெண்ணச் சொல் நால்வகைப்படும் என்பது கருத்து. அவற்றுவழி மருங்கிற் றோன்றும் எனவே இவற்றது சிறப்பின்மை புலனாம். உரிச் சொல்லினும் வழக்குப் பயிற்சியுடைமை நோக்கி இடைச் சொல்லை அதற்கு முற்கூறினார். சொற்பாகுபாடுணர்த்தும் இவ்விரு சூத்திரப் பொருள் களோடு எச்சவியலிற் செய்யுளீட்டச் சொல்லாக வகுத்துணர்த்தப் பெறும் திசைச் சொல் வடசொல் என்பவற்றையும் இயைத்துக் கூறும் முறையில் அமைந்தது, 269. அதுவே, இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகும் இடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலணு காவழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மேற்காட்டிய சொல், இயற்சொல், திரிசொல் என்னும் இயல்பினையுடைய பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் என இரண்டாம். இவற்றுடன் இடைச் சொல்லும் உரிச் சொல்லும் அடுத்து நான்குமாம்; இவற்றுடன் திசைச் சொல்லும் வட சொல்லும் அணுகாவிடத்து என்பது இதன் பொருள். ஒருவன் ஒருத்தி என்ற அளவில் அவர்தம் கைகால் முதலிய அகத்துறுப்பும் ஆடையணி முதலிய புறத்துறுப்பும் அடங்குதல் போலப் பெயர் வினை என்ற மாத்திரையின் அவற்றின் அகத்துறுப் பாகிய விகுதி முதலிய இடைச்சொற்களும் புறத்துறுப்பாகிய வேற்றுமையுருபு முதலிய இடைச் சொற்களும் அடங்கதலானும், உரிச்சொல், `பல்வகைப் பண்பும் பகர் பெயராகி, என்றவாறு பெயருள் அடங்குதலானும், திசைச் சொல்லும் வடசொல்லும் இவற்றுள் யாதானுமொன்றாய் அடங்குதலானும் இவற்றையடக்கி நின்ற தலைமையும் சிறப்புந்தோன்றப் பெயர் வினை என இரண்டாக வரையறுத்தார். பெயர் வினையுள் அடங்கிய வற்றையே வேறுபாடறிதற்கு இடை, உரியெனப் பிரித்துத் தொகை கோடலின் அவற்றிற்கு அத் தலைமையும் சிறப்புமில்லை யென்பது தோன்ற `இடையுரியடுத்து நான்குமாம் என்றார். கொடுந்தமிழ் முதலிய சொல் செந்தமிழோடு விரவியவழி அவற்றைத் திசைச் சொல் என்றும், ஆரியச்சொல் தமிழ்நடை பெற்ற வழி வடசொல் என்றும் தமிழோடு தழுவப்படுமாயினும் தமிழ்ச் சொல்லோடு அவற்றை யியைத்துத் தொகை கோடல் ஒருதலையன்று என்பார் `திசை வடசொல் அணுகாவழி என்றார். 160. அவற்றுட் பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. இவ்வியல்முதலில் ஐந்து சூத்திரங்களால் நான்கு சொற்கும் பொதுவிலக்கண முணர்த்திய ஆசிரியர், இதனாற் பெயர்ச் சொற்கு இலக்கணம் உணர்த்துகின்றார். (இ-ள்) மேற்கூறப்பட்ட சொல் நான்கனுள், பெயர் என்று சொல்லப்படுவன, உயர்திணைக்குரியனவாய் வருவனவும், அஃறிணைக் குரியனவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையவாய் வருவனவும் என மூன்று வகையினவாம்; அவை தோன்று நெறிக்கண். என்றவாறு. 161. இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான. இதுவும் பெயர்க் குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்குப் பெயருள் - உரியன உரியவாம். என்றவாறு. (உ-ம்) அவன், பெண்மகன், சாத்தன், என னகரவீறு உயர்திணை ஆண்பால் பெண்பால்களுக்கும் அஃறிணையாண் பாற்கும் உரியதாய் வந்தது. அவள், மக்கள், மகள் என ளகர வீறு உயர்திணைப் பெண்பால் பலர்பால்களுக்கும் அஃறிணைப் பெண்பாற்கும் உரியதாய் வந்தது. நம்பி, பெண்டாட்டி எனவும் ஆடூஉ, மகடூஉ எனவும் இகரவீறும் உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பாலாகிய இருபாற்கும் உரியவாய் வந்தன. வினைச்சொல் இன்ன ஈறு இன்ன பாலுக்கு உரித்து என ஈறு பற்றித் தெளிவாக உணர்த்துமாறு போன்று பெயர்ச் சொல் ஈறுபற்றி இன்ன பாலுக் குரித்தென உணர்த்தலாகாமையின் வழக்கு நோக்கியுணர்க என்பார், `உரியவை உரிய என்றார். 162. அவ்வழி, அவனிவ னுவனென வரூஉம் பெயரும் அவளிவ ளுவளென வரூஉம் பெயரும் அவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான் யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. இஃது உயர்திணைப் பெயர்களுட் சிலவற்றை எடுத்துரைக்கின்றது. (இ-ள்) மூவகையால் மேற் சொல்லப்பட்ட பெயருள் அவன், இவன், உவன்; அவள், இவள்,உஉவள்; அவர், இவர், உவர்; யான், யாம், நாம்; யாவன், யாவள், யாவர் என்னும் இப்பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர்களாகும். (எ-று). இவற்றுள் யான் என்பது ஒருவன் ஒருத்தி யென்னும் பாலுணர்த்தாதாயினும் உயர்திணையொருமை உணர்த்தலின் பாலறிவந்த பெயராம். 162. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகரவை காரமும் முறைமை சுட்டா மகனு மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெரும் ஆடூஉ மகடூஉ வாயிரு கிளவியுஞ் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோரன்ன இதுவும் அது. (இ-ள்) இப்பெயர் பதினைந்தும் மேற்கூறப்பட்டன போல இன்னபால் என அறியவந்த உயர்திணைப் பெயர்களாம். என்றவாறு. ஆண்மையடுத்த மகனென் கிளவி, ஆண்மகன் ஆண்மகன் - ஆளும் மகன். பெண்மை யடுத்த மகளென் கிளவி, பெண் மகள் பெண்மகள் - பெண்ணாகிய மகள் எனவிரியும். பெண்மையடுத்த இகர இறுதி, பெண்டாட்டி பெண்டாட்டி - பெண்மையை ஆளுகின்றவள். நம்ஊர்ந்து வரும் இகரம், நம்பி. நம் ஊர்ந்து வரும் ஐகாரம், நங்கை. முறைமை சுட்டா மகன், மகள் என்பன மகன் மகள் என்னும் முறைமையைக் கருதாது ஆண் பெண் என்னும் பொருளில் வழங்குவன. மாந்தர், மக்கள் என்பன பலர்பாற் பெயர்கள். ஆடூஉ - ஆண் மகன். மகடூஉ - பெண்மகள். சுட்டு முதலிய அன்னும் ஆனும் ஆவன, அ, இ, உ, என்னும் சுட்டினை முதலாகக் கொண்டு அன் விகுதியாலும் ஆன் விகுதியாலும் முடியும் பெயர்கள். அவை, அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் எனவும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் எனவும் முறையே அன் விகுதியும் ஆன் விகுதியும் பெற்றுவந்தன. அவை முதலாகிய பெண்டென் கிளவியாவன, சுட்டெழுத்துக் களாகிய அவற்றை முதலாகவுடைய அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு என்பனவாம். பெண்தன் கிளவி எனப்பாடம் ஓதி, அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என எடுத்துக்காட்டு வாருமுளர். `பெண்டு என்பதே சங்கச் செய்யுட் களிற் பயின்று வருதலால் `பெண் டென்கிளவி என்பதே பொருந்திய பாடமாகும். ஒப்பொடு வரூஉங் கிளவியாவன, பொன்னன்னான், பொன்னன்னான் என ஒப்புப்பற்றி வழங்கும் பெயர்கள். ஆண்மகன் முதலாக இங்கு எடுத்தோதப்பட்ட பெயர்கள் மேற்சூத்திரத்திற் கூறப்பட்ட அவன் முதலிய பெயர்கள் போலப் பயின்று வாராமையின் இச்சூத்திரத்து வேறாக ஓதப்பட்டன. 164. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல வென்மனார் புலவர். இதுவும் உயர்திணை ஒருபாற் பெயருணர்த்துகின்றது. (இ-ள்) எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும் எல்லீரும் என்று சொல்லப்படுகின்ற முன்னிலைப் பெயர்ச் சொல்லும் பெண்மையைச் சார்ந்துவரும் மகன் என்னும் பெயர்ச் சொல்லும் மேற்கூறப்பட்டன போல பாலறிய வந்த உயர்திணைப் பெயராம். என்றவாறு. பெண்மையடுத்த மகனென்கிளவியாவது, பெண்மகன் என்னும் பெயர். புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் பெண்மகன் என்று வழங்குப என இளம் பூரணரும், புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மறோக்கத்தார் இக்காலத்தும் பெண் மகளென்று வழங்குப எனச் சேனாவரையரும் கூறும் விளக்கம் இங்கு நினைத்தற்குரியனவாகும். 165. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. இதுவுமது. (இ-ள்) நிலப்பெயர் முதலாகச் சொல்லப்பட்டனவும் மேலன போலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம். என்றவாறு. நிலப்பெயர் - பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்; அருவாளன், சோழியன் முதலியன. குடிப்பெயர் - பிறந்த குடியினாற் பெற்றபெயர்; மலைமான், சேரமான் முதலியன. குழுவின்பெயர் - ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர் கூறிய குழுவினைக் குறித்து வழங்கும் பெயர்; அவையத்தார், அத்திகோசத்தார் முதலியன. வினைப்பெயர் - செய்யுந்தொழில் காரணமாக வழங்கும் பெயர்; தச்சன், கொல்லன் முதலியன. உடைப்பெயர் - ஒன்றனை உடைமை காரணமாக வழங்கும் பெயர்; அம்பர் கிழான், பேரூர்கிழான், வெற்பன், சேர்ப்பன் முதலியன. பண்புகொள் பெயர் - குறித்ததோர் பண்புடைமை காரணமாக வழங்கும் பெயர்; கரியான் நெடியான் முதலியன. பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் - பல்லோரைக் கருதி முறைமை காரணமாக வழங்கும் பெயர்; தந்தையர், தாயர், மாமியர் முதலியன. பல்லோர்க் குறித்த சினை நிலைப்பெயர் - பல்லோரைக் கருதிச் சினை காரணமாக வழங்கும் பெயர்; பெருங்காவலர், பெருந்தோளர் முதலியன. பல்லோர்க் குறித்த என்று விசேடித்தலான் இம்மூவகைப் பெயருள் ஒருமைப் பெயர் இரண்டு திணைக்கும் உரியவாம் என்பர் இளம்பூரணர். பல்லோர்க்குறித்ததிணைநிலைப்பெயர் - பல்லோரைக் கருதித் திணை காரணமாக வழங்கும் பெயர்; ஆயர் வேட்டுவர் முதலியன. கூடிவரு வழக்கின் ஆடியற்பெயர் - இளையோர் பலர் கூடி விளையாடும் காலத்து ஆடல் குறித்துப் படைத்து இட்டு வழங்கும் பெயர்; பட்டி புத்திரர், கங்கை மாத்திரர் முதலியன. இவை ஆடல் குறித்து இளையோர் பகுதிப்படக் கூடிய வழியல்லது வழங்கப் படாமையிற் குழுவின் பெயரின் வேறாயின. குழுவின் பெயர் ஒரு துறைக்கண் உரிமைபூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் வழங்குவன. இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர் - இத்துணையர் என வரையறை யுணரநின்ற எண்ணாகிய இயல்புபற்றி வழங்கும் பெயர்; ஒருவர், இருவர், மூவர், முப்பத்துமூவர் முதலியன. இன்றிவர் - இத்துணையர் என்னும் பொருளது. அன்றியனைத்தும் - அவ்வனைத்தும். ஒரு நிமித்தம் பற்றிச் சேறலிற் பலபெயர் ஒரு பெயராக அடக்கப்பட்டமையான், நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினார் என்பர் சேனாவரையர். 166. அன்ன பிறவும் உயர்திணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் டாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. இஃது உயர்திணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட பெயர் போல்வன பிறவும் உயர்திணைக்கண்ணே பன்மையும் ஒருமையுமாகிய பாலறிய வந்த எல்லாப் பெயரும் உயர்திணைப் பெயராம். என்றவாறு. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் `முப்பாலறிய வந்த என்னாது, `பன்மையும் ஒருமையும் பாலறிவந்த என்றார்; யான் என்பது முதலிய ஒருமைப் பாலுணர்த்தும் பெயர்களும் அடங்குதற்கு. அன்ன பிறவுமாவன - ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர்; மற்றையான், மற்றையாள், மற்றையார், எல்லேம், வல்லேம், இருவேம் என்னுந் தொடக்கத்தன. ஆசிரியர் தொல்காப்பியனார் மேற்குறித்த ஐந்து சூத்திரங் களாலும் உயர்திணை முப்பாற்கும் உரியனவாகத் தொகுத்தோதிய எல்லாப் பெயர்களையும் ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பல்லோர் பெயர் என மூவகையாகப் பகுத்துப் பின் வருமாறு மூன்று சூத்திரங்களால் எடுத்தோதுவர் பவணந்தி முனிவர்:- 275. அவற்றுள், கிளையெண் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலம் ள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஓத லீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குருசி றோன்றல் இன்னன வாண்பெய ராகுமென்ப. எனவரும் நன்னூற் சூத்திரம் உயர்திணை யாண்பாற்குரிய பெயர் உணர்த்துகின்றது. மேற் பொதுவகையாற் சொல்லிய பெயர்களுள் கிளை, எண், குழூஉ முதலாகிய பல பொருளையும் குறிஞ்சி முதலிய ஐந்திணையும் தேசமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலாகிய நிலத்தையும், யாண்டு, பருவம், திங்கள், நாள் முதலாகிய காலத்தை யும், தோள், குழல், மார்பு, கண், காது முதலிய உறுப்பையும், அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சிறப்பு முதலிய பண்பையும், ஓதல் ஈதல் முதலிய பல தொழிலையும் (பொருள் முதலாகிய) இவற்றைப் பொருந்தி வருகின்ற மூன்று சுட்டையும், மூன்று முதல் வினாவையும், பிற மற்று என்பவற்றையும் பொருந்தி னகரத்தை ஈறாகக் கொண்டு வரும் பெயர்களும், நம்பி, ஆடூஉ, விடலை, கோ, வேள், குருசில், தோன்றல் என எடுத் தோதப்பட்டனவும் இவை போல்வன பிறவுமாகிய பெயர்களும் ஆண்பாற்குரிய பெயர்களாம் என்பது இதன் பொருள். தமன், நமன், நுமன் என்பன கிளைப்பெயர். கிளை- சுற்றம். தநநு எம் முதல் மகரமிடையிட்டு, னளரவாமீற்றன சுற்றப் பெயரே என்றார் பிறரும். சுட்டு, வீனா, பிற, மற்று எனவரும் இடைச்சொல் நான்கம் தமக்கென ஒரு பொருளின்றிப் பொருள் முதலாறனுள் யாதானுமொன்றைக் கூறுவான் குறிப்பின் வழி அடைந்துணர்த்துதலின் `இவையடை சுட்டு வினாப் பிற மற்று, என்றார். `வினாச் சுட்டுடனும் வேறுமாம் பொருளாதி என்பதும் அது. இன்னன என்றமையான், வில்லி, வாளி, மீளி, குடுமி, சென்னி, கிள்ளி, செட்டி, முதலி என்றற்றொடக்கத்து உயர்திணை ஆண்பாற்பொருள் குறித்து வருவன எல்லாங் கொள்ளப்படும். இவையடை சுட்டு வினாப் பிற மற்றோடு உற்றனவ்வீறு என்பவற்றிற்கு, அப்பொருளன், இப்பொருளன், உப்பொருளன், எப்பொருளன், பிறபொருளன், மற்றப்பொருளன் என உதாரணங் காட்டுவாருமுளர். இவ்வுதாரணங்களில் சுட்டு முதலிய நான்கனோடும் னகரவீறு உறுதலின்மையால் அவற்றிற்கு அவை உதாரணமாகா என்பர் சிவஞான முனிவர். 276. கிளை முதலாகக் கிளந்த பொருள்களுள் ளவ் வொற்றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே. எனவரும் நன்னூற் சூத்திரம், உயர்திணைப் பெண்பாற்குரிய பெயர் உணர்த்துவதாகும். மேலைச் சூத்திரத்தில் கிளை முதலாகப் பகுத்துக் கூறிய அறுவகைப் பெயர்களுள் ளகரவொற்றும் இகரவுயிரும் பொருந்துதற் கேற்ற அவ்விரண்டீற்றனவாய் வரும் பெயர்களும், தோழி, செவிலி, மகடூஉ, நங்கை, தையல் என எடுத்தோதிய பெயர்களோடு இவைபோல்வன பிறவும் உயர்திணைப் பெண்பாற் பெயர்களாம் என்பது இதன் பொருள். (உ-ம்) தமள், நமள், நுமள், எமள், அவையத்தாள், பொருளாள், பொன்னாள், முடியாள் என ளகரம் ஏற்றன. ஒருத்தி, குறத்தி, அருவாட்டி, சோழிச்சி, படைத்தலைவி என இகரம் ஏற்றன. செங்கண்ணாள், செங்கண்ணி, கூனாள், கூனி என இரண்டீறும் ஏற்றன. கிளைப்பெயர் இகர வீறேலாமையும் எண்ணுப்பெயர் ளகர வீறேலாமையும் கருதி `ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்ற என்றார். இன்னன என்றமையால் இகுளை முதலாயின கொள்க. 277. கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும். எனவரும் நன்னூற் சூத்திரம், உயர்திணைப் பலர்பாற் பெயர் உணர்த்துவதாகும். கிளை முதலாகச் சொல்லப்பட்ட பொருள் எல்லா வற்றோடும் பொருந்திவந்த ரகரவொற்றை ஈறாகவுடைய மொழிகளும், கள்ளென்னும் விகுதியை ஈறாகவுடைய பெயர்களுள் இவ்விடத்திற்குப் பொருந்தி வருவனவும், இவை போல்வன பிறவும் பலர் பாற்குரிய பெயர்களாம் என்பது இதன் பொருள். பல்லோர் பகுதியின் பெயராம் என இயைத்துரைக்க. பகுதி - பால். கள்ளீறு, கோக்கள், மனுக்கள் எனப் பகுதிப் பொருள் விகுதியாயும் தமர்கள், வேந்தர்கள் என விகுதிமேல் விகுதியாயும் வரும். கள்ளீறு அஃறிணைக்கண்ணும் வருதலின் இங்கு உயர்திணைக் கேற்பனவே கொள்ளப்படும் என்பார், `கள்ளென் ஈற்றின் ஏற்பவும் என்றார். பிறவும் என்றமையால், மாந்தர், மக்கள் என்றற் றொடக்கத்துப் பலர்பால் குறித்து வருவனவெல்லாங் கொள்க. 167. அது விது வுதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வாய்தப் பெயரும் அவையிவை யுவையென வரூஉம் பெயரும் அவைமுதலாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே. இஃது அஃறிணைப் பெயராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அது, இது, உது எனவரும் சுட்டுமுதற் பெயரும், அச்சுட்டுக்களை முதலாகக் கொண்டு ஆய்தத்தொடு கூடிவரும் அஃது இஃது உஃது எனவரும் பெயரும், அவை, இவை, உவை எனவரும் பெயரும், அச்சுட்டுக்களை முதலாகப் பெற்று வரும் அவ், இவ், உவ் என்னும் வகர ஈற்றுப் பெயரும், யாது, யா, யாவை என்னும் வினாப் பெயரும் என இப்பதினைந்து பெயரும் ஒருமைப் பன்மைப் பால் அறியவந்த அஃறிணைப் பெயராம். என்றவாறு. 168. பல்ல பலசில வென்னும் பெயரும் உள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரும் ஒப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட அப்பா லொன்பது மவற்றோ ரன்ன. இஃதும் ஒருசார் அஃறிணைப் பெயர்களைக் கூறுகின்றது. (இ-ள்) பல்ல என்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பது பெயர்களும் மேற்கூறிய அஃறிணைப் பெயர் போலப் பாலுணர நிற்கும். என்றவாறு. பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்னும் ஐந்து பெயரும் தம்மை யுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. வினைப் பெயர்க் கிளவியாவன வருவது, செல்வது, வருவன, செல்வன என வினைபற்றி வருவன. பண்புகொள் பெயராவன கரியது கரியன எனப் பண்புபற்றி வருவன. இனைத் தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப்பெயராவன, ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருள்மேல் நிற்பன. ஒப்பினாகிய பெயர்நிலையாவன, பொன்னன்னது, பொன்னன்னவை என ஒப்புப்பற்றி வருவன. இவை முன்னையவைபோல வழக்கின்கண் பயின்று வாராமையிற் பிற்கூறப்பட்டன. 169. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. இஃது, அஃறிணையியற் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) கள் என்னும் விகுதியொடு பொருந்தும் அஃறிணை இயற்பெயர் கள்ளீற்றோடு பொருந்துதற்கண் பலவறி சொல்லா தற்குக் கொள்ளும் இடம் உடைய. என்றவாறு. அஃறிணையியற் பெயராவன, ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலர், மலை, கடல் என்னுந் தொடக்கத்து இனப் பெயர்கள். சாதிப் பெயராகிய இவை அவ்வப் பொருளுக்குரிய இயற்பெயராய் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் அஃறிணையியற் பெயர் எனப்பட்டன. அஃறிணை யிருபாற்கும் பொதுவாகிய இவை கள் என்னும் விகுதிபெற்று, ஆக்கள் குதிரைகள் என நின்ற வழிப் பன்மை விளக்கலிற் பலவறி சொல்லாயின. 170. அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த என்ன பெயரு மத்திணை யவ்வே. இஃது அஃறிணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட பெயர் போல்வன பிறவும் அஃறிணைக்கண் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்குரிய. என்றவாறு. அன்னபிறவும் என்றதனால், பிறிது, பிற, மற்றையது, மற்றையன, பல்லவை, சில்லவை, உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன, அன்னது, அன்னன் என்பன கொள்ளப்படும். தொல்காப்பியனார் மேற்குறித்த நான்க சூத்திரங்களால் பாலறிய வந்த அஃறிணைப் பெயர்களாகத் தொகுத்துக் கூறிய வற்றைப் பவணந்தியார் ஒன்றன்பாற் பெயர், பலவின்பாற் பெயர் என இருவகையாகப் பகுத்து இரண்டு சூத்திரங்களால் உணர்த்துவர். 278. வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொரு ளாதி யுறுதுச் சுட்டணை யாய்தம் ஒன்றெனெண் ணின்னன வொன்றன் பெயரே. எனவரும் நன்னூற் சூத்திரம் அஃறிணையொருமைப் பெயராவன இவையென உணர்த்துவதாகும். வினாவின் கண்ணும் சுட்டின் கண்ணும் கலந்து உடனாகியும் வினாவவும் சுட்டவும் படாது அவற்றிற்கு வேறாகியும் வரும் பொருள் முதல் ஆறினையும் பொருந்திய துவ்விகுதியீற்றுப் பெயரும், சுட்டோடு கூடிய ஆய்தத்தைப் பொருந்திய துவ்விகுதியீற்றுப் பெயரும், ஒன்று என்னும் எண்ணாகுபெயரும் இவை போல்வன பிறவும் அஃறிணை யொன்றன்பாற் பெயராம் என்பது இதன் பொருள். இன்னன என்றமையால், பிறிது, மற்றையது என்றற் றொடக்கத்து அஃறிணையொருமைப் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்ளப்படும். 279. முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்ற லெண்ணும் உள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில இன்னவும் பலவின் பெயரா கும்மே. எனவரும் நன்னூற் சூத்திரம், அஃறிணைப் பன்மைப் பெயராவன இவையென உணர்த்துவதாகும். “K‹d®¡ T¿a `Édh¢ R£LlD« ntWkh« bghUshâ’ MwndhL« V‰w bg‰¿ ïiaªJtU« tfu Ifhu å‰W¥ bga®fS«, mfu å‰W¥ bga®fS«, tfu bth‰Ö‰W¢ R£L¥ bga®fS«, fŸ v‹D« gFâ¥bghUŸ ÉFâia ïWâahfîila bga®fS«, x‹W mšyhj ïu©L KjÈa v©zhF bga®fS«, cŸs, ïšy., பல்ல, சில்ல, உள, இல, பல, சில என எடுத்தோதப்பட்ட குறிப்பு வினையாலணையும் பெயர்களும், இவை போல்வன பிறவும் அஃறிணைப் பன்மைப் பெயர்களாம் என்பது இதன் பொருள். உண்மை, இன்மை முதலிய பண்பினை யடிப்படையாகக் கொண்டுவரும் அகரவீற்றுப் பெயர்கள் `முன்னரவ்வொடு வருவை அவ்வும் என்பவற்றுள் அடங்குதலால், உள்ள என்பது முதலாகச் சூத்திரத்துள் எடுத்தோதப்பட்ட எட்டுப் பெயர்களும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் எனக் கொள்வர் சிவஞானமுனிவர். இன்னவும் என்றமையால், யா, பிற, மற்றைய என்றற் றொடக்கத்து அஃறிணைப் பன்மைப்பொருள் குறித்து வருவன வெல்லாம் கொள்ளப்படும். 171. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. இது, பால் விளங்காத அஃறிணை யியற்பெயர் பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) கள்ளொடு சிவணாத அஃறிணை யியற்பெயர் ஏற்ற வினையொடு தொடர்ந்தவழி ஒருமையும் பன்மையும் விளங்கு நிலையுடையன. என்றவாறு. `கள்ளொடு சிவணும் என முற்கூறிய அடைமொழியின்றி, அஃறிணையியற்பெயர் எனக் கூறவே, கள்ளொடு சிவணாத அஃறிணையியற்பெயர் என்பது புலனாம். அஃறிணையியற் பெயர் வினையொடுவரின் ஒருமையும் பன்மையும் தெரிநிலை யுடைய என இயையும். தெரிநிலை - தெரியும் நிலை; பால்விளங்கும் நிலை. (உ-ம்) ஆ வந்தது, ஆ வந்தன; யானை வந்தது, யானை வந்தன; மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன. என ஏற்ற வினையால் ஒருமையும் பன்மையும் விளங்கியவாறு கண்டுகொள்க. வினையொடுவரின் என்றாராயினும் ஆ ஒன்று, ஆ பல என முடிக்குஞ் சொல்லாகிய பெயராற் பாலறியப் படுதலும் கொள்க. இவ்வாறு ஒருமையும் பன்மையும் பகுத்துரைத்தற்கியலாத வாறு அமைந்த அஃறிணையியற்பெயர்கள் ஒருமை வினையும் பன்மை வினையும் கொண்டு முடிதற்கேற்றவாறு அஃறிணையிரு பாற்கும் பொதுவாய் நிற்றலை, 280. பால்பகா அஃறிணைப் பெயர்கள் பாற்பொதுமைய. எனவரும் சூத்திரத்தால் உணர்த்துவர் நன்னூலார். அஃறிணைப் பெயர்களுள் மேற் பால்பகுத்துரைத்தவை யொழித்து ஒழிந்த இயற்பெயர்களனைத்தும் ஒருமை பன்மை கட்குப் பொதுவாய் நிற்பனவாம் என்பது இதன்பொருள். 172. இருதிணைச் சொற்கும் ஓரன்ன வுரிமையிற் றிரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. இது, நிறுத்த முறையானே விரவுப்பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமைய வாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட்ட சென்றுழி அஃறிணைப் பெயராயும் திரிந்து வேறுபடும் விரவுப் பெயரெல்லாம், ஆராயுங்காலத்து அவ்வத் திணையை யுணர்த்துதற்குரிய முறைமையினையுடைய வினைச் சொல்லோடு இயைந்தல்லது திணை விளங்க நில்லா. என்றவாறு. தத்தமரபின் வினையாவன, உயர்திணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினோரீற்றுப் படர்க்கைவினை. (உ-ம்) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; சாத்தி வந்தாள், சாத்தி வந்தது - எனவரும். சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனால் வினையோடல்லது பால் தெரிபில என்றாரேனும் சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று எனத் தத்தமரபிற் பெயரொடு வந்து பால் விளக்குலுங் கொள்க. இரு திணைக்கும் பொதுவாகிய சொல் வினையாற் பொதுமை நீங்கி ஒருதிணைச் சொல்லாம் என்பது கருத்தாகலின், ஈண்டுப் பால் என்றது திணையினை. 173. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணைப் யொருமை தோன்றலு முரித்தே அன்ன மரபின் வினைவயி னான. இது, விரவுப்பெயர் தத்தமரபின் வினையல்லாத விரவு வினையாலும் திணையறியப்படும் என்கின்றது. (இ-ள்) நிகழ்காலம் பற்றிவரும் பலர் வரைகிளவியால் உயர்திணை யொருமைப்பால் தோன்றுதலும் உரித்து; அவ் வொருமைப்பால் தோன்றுதற்கேற்ற வினையின்கண். என்றவாறு. `நிழகழூஉ நின்ற பலர்வரைகிளவி என்றது, படர்க்கை யிடத்துப் பலர்பாலை நீக்கி ஏனை நான்கு பாற்கும் பொதுவாய் நிகழ்காலம் உணத்திவரும் செய்யும் என்னும் முற்றினை. பல்லோர் படர்க்கை, முன்னிலை தன்மை, யவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச், செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா (தொல்- வினையியல் - 30) எனவரும் வினையியற் சூத்திரத்து `நிகழுங் காலத்துச் செய்யுமென்கிளவி என்றதும் அது. (உ-ம்) சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும், என்றவழி சாத்தன் சாத்தி என்னும் பொதுப்பெயரும், யாழ் எழூஉதலும் சாந்தரைத்தலும் ஆகிய வினையும், சொல்லமைப் பால் இரு திணைக்கும் பொதுவாயினும், முறையே யாழ் வாசித்தல் சந்தனத்தை அரைத்தல் என்னும் சிறப்பு வினையாகிய பொருளமைப்பால் உயர்திணை ஆணும் பெண்ணுமாகிய ஒருமைப்பால் விளங்கியவாறு காண்க. `தோன்றலும் உரித்தே என்னும் எதிர்மறையும்மையால், பலர்வரை கிளவியால் உயர் திணையொருமை தோன்றாமையும் உரித்து என்பது கொள்ளப்படும். இருதிணைக்கும் பொதுவாகிய நடத்தல், கிடத்தல் முதலாகிய பொதுவினை பற்றிவரும் பலர்வரை கிளவியாகிய செய்யுமென் முற்றால் உயர்திணை யொருமை தோன்றாமையின் `அன்ன மரபின் வினைவயினான் என அது தோன்றுமிடம் இதுவென வரைந்தோதினார். இனி, உயர்திணையொருமை தோன்றலும் உரித்தே என்ற உம்மையால், அஃறிணையொருமை தோன்றலும் உரித்து எனப் பொருள் கூறி, சாத்தன் புல்மேயும், சாத்தி புல்மேயும் என்ற வழி அஃறிணை என்பது பெறப்பட்டது என்பர் தெய்வச்சிலையார். 174. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. இஃது இருதிணைக்குமுரிய விரவுப்பெயர்கள் இவையெனத் தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) இயற்பெயர் முதலாக நீ என்பதீறாக எடுத்தோதப் பட்டனவும் அவையல்லாத அத்தன்மைய பிறவும் அவ்விரு திணைப் பொருண்மையினும் விரவித் தோன்றுமாயின் அவ் விருதிணைக்கு முரிய விரவுப் பெயராகக் கொள்க. என்றவாறு. இயற்பெயர் - சாத்தன், கொற்றன் என்றாற் போன்று பெயராக வழங்குதற்குரியனவாய்க் காரணமின்றிப் பொருளே பற்றிவரும் இடுகுறிப் பெயர். சினைப்பெயர் - பெருங்காலன், முடவன் என்றாற் போன்று சினையுடைமையாகிய காரணம்பற்றி முதற்பொருள்மேல் வழங்கும் பெயர். சினைமுதற்பெயர் சீத்தலைச்சாத்தன், கொடும்புற மருதி என்றாற்போன்று சினையொடு தொடர்ந்து வரும் முதற் பொருளின் பெயர். முறைப்பெயர்க்கிளவி - தந்தை, தாய் என்றாற் போன்று முறைபற்றி அம்முறையுடைய பொருள்மேல் வரும் பெயர். இங்கு முறை என்றது பிறப்பினால் ஒருவரோடு ஒருவர்க் குளதாகிய இயைபினை. தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்ற பெயர் ஐந்தும் தம்மை யுணர்த்தி நின்றன. பிறவும் என்றதனால், மக, குழவி போல்வன இருதிணைக்கு முரிய விரவுப் பெயராகக் கொள்ளப்படும். விரவுப் பெயராக இங்கு எண்ணப்பட்ட இவை ஒரு காரணத்தால் இருதிணைப் பொருளும் உணர்த்துவனவாதலால், பொருள் தோறும் வேறு வேறு காரணம் பற்றி வழங்கும் பல்பொருளொரு சொல்லின் வேறாயின என்பர் சேனாவரையர். 175. அவற்றுள், நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப் பெயர்க்கிளவி யிரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்த மரபின. இது, மேல் தொகுத்துரைக்கப்பட்ட விரவுப்பெயர்களை வகுத்து விரிக்கின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட விரவுப்பெயருள் இயற்பெயர் நான்கு வகைப்படும்; சினைப்பெயர் நான்கு வகைப்படும்; சினைமுதற்பெயர் நான்கு வகைப்படும்; முறைப்பெயர் இரண்டு வகைப்படும் ஏனைய தாம், தான், எல்லாம், நீயிர், நீ என ஓதிய ஐந்தும் தத்தம் இலக்கணத்தன. என்றவாறு. தத்தம் மரபின என்றது, பலபெயர்களைக் குறித்த தொகுதிப் பெயராகாது ஓரொன்றாய் நின்ற தம்மைக்குறித்து வழங்கும் தனிப்பெயர்களாம் என்றவாறு. தொகுதிப்பெயர் பதினான்கும் தனிப்பெயர் ஐந்துமாக விரவுப்பெயர் பத்தொன்பது என்பதாம். 176. அவைதாம், பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென் றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. இஃது இயற்பெயர் நான்கும் இவையென விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இயற்பெயர்தாம் இருதிணைக் கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும், ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும் என அவற்றது நிலைமை அந்நான்காம் என்பர் ஆசிரியர். என்றவாறு. `பன்மை இயற்பெயர் என்றாராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர், பால்தோன்றலின் அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும் என்பர் தெய்வச்சிலையார். (உ-ம்) சாத்தி, சாத்தன், யானை, கோதை எனவரும். 177. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப் பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. இது, சினைப்பெயர் நான்கும் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட சினைப்பெயரது நிலைமை யாவது, பெண்மைப் பொருண்மைக் கண்வரும் சினைப்பெயர், ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர், ஒருமைப் பொருண்மைக் கண் வரும் சினைப்பெயர் என அந்நான்காம். என்றவாறு. (உ-ம்) முடத்தி, முடவன், நெடுங்கழுத்தல், கண்ணிலி எனவரும். முடம், கழுத்தின் நீட்சி, கண்ணின் குருட்டுத் தன்மை முதலியன சினையது விகாரமாதலின் சினையாயின. 178. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. இது, சினைமுதற் பெயர் நான்கும் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) சினைமுதற் பெயரது நிலைமை பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற்பெயரும் ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற் பெயரும் பன்மைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற் பெயரும் ஒருமைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற் பெயரும் என அந்நான்காம் என்பர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) முடக்கொற்றி, முடக்கொற்றன், பெருங்கால் யானை, கொடும்புறமருதி எனவரும். 179. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. இது, முறைப்பெயர் இரண்டும் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப்பெயரது நிலைமை இரண்டாகும். என்றவாறு. (உ-ம்) தாய், தந்தை எனவரும். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் ஆறு சூத்திரங் களால் தொகுத்தும் வகுத்தும் உணர்த்திய இருதிணைக்கும் உரிய பொதுப் பெயர்களோடு, அவர் கூறாத தன்மைப் பெயர்களையும் முன்னிலையில் அவர் கூறாத எல்லீர் நீவிர் நீர் என்பவற்றையும் இருதிணைக்கும் உரிய பொதுப் பெயராகக் கொண்டு, 281. முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொடு நான்கும் முறையிரண்டும் தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும் எல்லாம் தாம்தான் இன்னன பொதுப்பெயர். எனவும், 282. ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் ஆமந் நான்மைகள்; ஆண்பெண் முறைப்பெயர். எனவும் வரும் இரண்டு சூத்திரங்களால் தொகுத்தும் வகுத்தும் உணர்த்தினார் பவணந்தி முனிவர். இங்கு முதற்பெயர் என்றது இயற்பெயரை. முதற்பெயர் நான்கும், சினைப்பெயர் நான்கும், சினை முதற்பெயர் நான்கும், முறைப்பெயர் இரண்டும், யான், நான், யாம், நாம் என்னும் தன்மைப் பெயர் நான்கும், எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ என்னும் முன்னிலைப் பெயர் ஐந்தும், எல்லாம், தாம், தான் எனவரும் ஒன்பதுவகைப் பெயர்களும் இருதிணைக்கும் பொதுவான பெயர்களாகும். இவற்றுள் முதற் பெயர், சினைப் பெயர், சினைமுதற்பெயர் என்பன ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை காரணமாக ஒவ்வொன்றும் நந்நான்காகும். முறைப்பெயர் ஆண் பெண் என இரண்டாகும் என்பது இந் நன்னூற் சூத்திரங்களின் பொருளாகும். 180. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. இது, பெண்மை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் தனக்குரிய பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) பெண்மை சுட்டிவரும் நான்கு பெயரும் அஃறிணைப் பெண்ணாகிய ஒன்றற்கும் உயர்திணை ஒருத்திக்கும் ஒத்த நிலைமைய. என்றவாறு. (உ-ம்) சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும், முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும், முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும் தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும் முறையே இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர், முறைப்பெயர் ஆகிய நான்கும் அஃறிணைப் பெண்ணொருமைக்கும் உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டு கொள்க. ஒன்றற்கும் எனப் பொதுப்படக் கூறினாரேனும் பெண்மை சுட்டிய பெயரென்றமையால் அஃறிணைப் பெண்ணாகிய ஒன்றையே குறிக்கும். இவ்வாறே ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் என அடுத்து வரும் சூத்திரத்தும் ஒன்று என்பது அஃறிணையாணாகிய ஒன்றையே குறிக்குமெனக் கொள்க. ஒன்றிய நிலை - ஒத்தநிலை. ஒன்றிய நிலையுடையவற்றை ஒன்றிய நிலை என்றார். 181. ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. இஃது, ஆண்மை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் தனக்குரிய பால் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆண்மை சுட்டிவரும் நான்குபெயரும் அஃறிணை ஆணாகிய ஒன்றற்கும் உயர்திணை ஒருவனுக்கும் ஒத்த நிலை மைய. என்றவாறு. (உ-ம்) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும், முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும், முடக் கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவும், தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவும் முறையே இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய நான்கும் அஃறிணை ஆணொருமைக்கும் உயர்திணையாண்மைக்கும் உரியவாய் வந்தமை காண்க. 182. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. இது, பன்மை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மை சுட்டிவரும் இயற்பெயர், சினைப்பெயர், சினை முதற்பெயர் என்னும் மூன்று பெயரும் அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை ஆண் பெண் என்னும் ஒருமையும் ஆகிய இப்பால்களுக்கும் ஒத்த நிலை மை. என்றவாறு. ஒன்று என்றது, அஃறிணை ஆணொருமை, பெண்ணொ ருமையினை, ஒருவர் என்றது உயர்திணை ஆணொருமை, பெண்ணொருமையினை. (உ-ம்) யானை வந்தது, யானை வந்தன, யானைவந்தான், யானை வந்தாள் எனவும், நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங்கழுத்தல் வந்தன, நெடுங்கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும், பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் முறையே பன்மை இயற்பெயர், பன்மைச் சினைப்பெயர், பன்மைச் சினைமுதற்பெயர் மூன்றும் அஃறிணை யொருமைக்கும் அத் திணைப் பன்மைக்கும் உயர்திணை ஆணொருமை பெண்ணொரு மைக்கும் உரியவாய் வந்தமை காண்க. பன்மைக்கேயன்றி ஒருமைக்கும் உரியவாய் வருவன வற்றைப் பன்மைப் பெயரென்றது என்னை? என வினா நிகழ்த்திக் கொண்டு, பன்மைப் பெயர் ஒருமையுணர்த்து மாயினும் பிறவாற்றான் உணர்த்தப்படாத பன்மையை ஒருகால் உணர்த்தலின் அப்பன்மை யான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப்பெயர வாயின என விடை கூறுவர் சேனாவரையர். அடைமொழிகள் இனமுள்ளதும் இனமில்லதும் என இரு வகைப்படும். செந்தாமரை என்புழிச் செம்மையாகிய அடை மொழி அத்தாமரைக்கு இனமாகிய வெண்டாமரையாகிய இனமுண்மை சுட்டி அதனோடுளதாகிய இயைபினை நீக்கி நிற்றலின் இது பிறிதினியைபு நீக்கிய விசேடணம் எனப்படும். செஞ்ஞாயிறு என்புழிச் செம்மையாகிய அடைமொழி கருமை முதலிய பிற நிறமுடைய பிற ஞாயிறுண்டென இனஞ் சுட்டாது, செம்மை நிறம் ஞாயிற்றோடு இயைபுடையது என்ற அளவில் ஞாயிற்றையே சுட்டி நிற்றலின், இனமில்லா அடைமொழியாகிய இது தன்னோடியை பின்மை நீக்கிய விசேடணம் எனப்படும். பன்மை சுட்டிய பெயரென்பது, `வெண்குடைப் பெருவிறல் என்பது போல, ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பது பட நின்றது என்பர் சேனா வரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டியபெயர் உயர்திணைப் பன்மையை யுணர்த்தா தொழிதலும் ஏனை யொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத் தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட `அவற்றுள் ஒன்றேயிருதிணைத் தன் பால் ஏற்கும் (நன்- 283) எனப் பவணந்தியார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர். இனி, பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயர் என்பதே பொருளாகும். இதுவே தொல்காப்பியனார் கருத்தென்பது, தாமென்கிளவி பன்மைக் குரித்தே (தொல்-சொல்- 181) எனவும் ஏனைக்கிளவி பன்மைக் குரித்தே (தொல்-சொல்- 187) எனவும் வருஞ் சூத்திரங்களில் உயர்திணைப் பலர் பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் `பன்மை என்ற சொல்லால் ஆசிரியர் சுட்டுதலால் நன்கு புலனாம். இங்ஙனம் பன்மை சுட்டிய பொதுப்பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும், அவற்றுள் ஒருசார் பெயர்கள், அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், `ஒன்றே பலவே ஒருவர் என்னும், என்றிப்பாற்கும் ஓரன்னவ்வே எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் `என்றிப் பாற்கும் என்ற எச்சவும்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்று வருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல் வேண்டும். இவ்வுண்மை, தன்பாலேற்றலை உம்மையாற் றழீஇயினார் எனவரும் சிவஞான முனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. (உ-ம்) தாம் வந்தார், தாம் வந்தன எனப் பன்மைப் பொதுப் பெயர் உயர்திணைப் பன்மையும் அஃறிணைப் பன்மையும் உணர்த்தி நின்றன. இனி, உயர்திணை ஆணொருமை, பெண்ணொருமை அஃறிணை ஒருமை பன்மை எனப் பல பால்களையும் சுட்டி நிற்றலிற் பன்மை சுட்டியபெயர் என்றும், ஆண்மை சுட்டிய பெயர், பெண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டியபெயர் என்பனவும் பல பால்களைச் சுட்டி நின்றனவாயினும், இரண்டு பால்களையும் மூன்று பால்களையும் சுட்டி நிற்கும் அப்பெயர்கள், ஒருவன், ஒருத்தி, ஒன்று, பல என்னும் நான்கு பால்களையும் சுட்டி நிற்கும் இவற்றை நோக்கச் சின்மை சுட்டிய பெயரெனப் படுவதல்லது பன்மை கட்டிய பெயராகா என்றும், அன்றியும் உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணை யொருமை என்ற மூன்றும் ஒருமைப்பால் என ஒன்றாயடங்குதலின் அவை பலபால்களையும் சுட்டி நின்றன அல்ல ஆகலான் அம்மூன்றொரு மையுஞ் சுட்டிய பெயர்கள் ஒருமை சுட்டிய பெயரென அடங்குமென்றும், இஃது ஒருமையும் பன்மையு மென்னும் இரு பால்களையும் சுட்டி நிற்றலாற் பன்மை சுட்டிய பெயராயிற் றென்றும் எவ்வகையால் நோக்கினும் பன்மை சுட்டிய என்னும் இவ்வடைமொழி இனமுள்ள அடைமொழியே என்றும் இதன் பெயர்க் காரணத்தை விளக்குவர் சிவஞானமுனிவர். 183. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. இஃது ஒருமை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் தனக்குரிய பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒருமை சுட்டி வரும் இயற்பெயர், சினைப்பெயர், சினை முதற் பெயராகிய மூன்றும், அஃறிணையொருமைக்கும் உயர்திணை ஆணொருமை பெண்ணொருமைக்கும் ஒப்பவுரியன. என்றவாறு. (உ-ம்) கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும், செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும், கொடும்புற மருதி வந்தது, கொடும்புற மருதி வந்தான், கொடும்புறமருதி வந்தாள் எனவும் முறையே ஒருமை யியற்பெயர், ஓருமைச்சினைப்பெயர், ஒருமைச் சினைமுதற் பெயர் இருதிணை முக்கூற்றொருமைக்கும் உரியவாய் வந்தவாறு காண்க. ஆண்மை சுட்டிய பெயர், பெண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என இனஞ் சுட்டும் அடைமொழிகளையுடைய விரவுப்பெயர்கள், இரு திணையிலும் தன்தன் பால்களை ஏற்றுநிற்றலை விளக்கும் இந்நான்கு சூத்திரப் பொருளையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 283. அவற்றுள், ஒன்றே யிருதிணைத் தன்பால் ஏற்கும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். முதற்பெயர் முதலாகக் கூறப்படும் இருபத்தாறும் பிறவுமாகிய பொதுப் பெயர்களுள் ஒவ்வொன்றும் இருதிணைக் கண்ணும் தன்தன் பால்களை ஏற்கும் என்பது இதன் பொருளாகும். எனவே, ஆண்மைப் பொதுப்பெயர் உயர்திணையாண் பாலையும் அஃறிணையாண்மையையும், பெண்மைப் பொதுப் பெயர் உயர்திணைப் பெண்பாலையும் அஃறிணைப் பெண்மை யையும், ஒருமைப் பொதுப்பெயர் உயர்திணை ஆணொருமை பெண்ணொருமையினையும் அஃறிணை யொருமையினையும், பன்மைப் பொதுப்பெயர் உயர்திணைப் பன்மையினையும் அஃறிணைப் பன்மையினையும் ஏற்கும் என்பதாயிற்று. ஆண்மைப் பொதுப்பெயர் பெண்மைப் பொதுப்பெயர் முதலிய இப்பெயர்கள் செஞ்ஞாயிறு என்றாற்போல இனமில்லாத அடைமொழியன்றிச் செந்தாமரை என்றாற்போல இனமுள்ள அடைமொழியாற் கூறப்படுதலின் இவை இருதிணையிலும் தன் தன் பாலை ஏற்கும் எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் நன்னூலார். 184. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. இது, தத்தமரபின என மேற்கூறப்பட்ட விரவுப்பெயர் பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) தாம் என்னும் பெயர் இருதிணையிலும் பன்மைப் பாற்கு உரித்து. என்றவாறு. (உ-ம்) தாம் வந்தார்; தாம் வந்தன எனவரும். 185. தானென் கிளவி யொருமைக் குரித்தே. இதுவும் அது. (இ-ள்) தான் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற் குரித்து என்றவாறு. (உ-ம்) தான் வந்தான்; தான் வந்தது எனவரும். 186. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. இதுவும் அது. (இ-ள்) எல்லாம் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மை குறித்துவரும். என்றவாறு. வழி என்றது இடம். பல்வழி ஈண்டுப் பன்மை என்னும் பொருளிற் பயின்றது. சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாதலின் பன்மைப் பொருளைப் பல்வழி எனக் குறித்தார் ஆசிரியர். (உ-ம்) எல்லாம் வந்தேம்; எல்லாம் வந்தீர்; எல்லாம் வந்தார்; எல்லாம் வந்தன எனவரும். எல்லாம் என்னும் சொல் `மேனியெல்லாம் பசலையாயிற்று என ஒரு பொருளின் பலவிடங் குறித்து நிற்றலையும் தழீஇக் கோடற்குப் பல்வழி நுதலிய நிலைத்தாகும் என்றார் எனவும், எல்லாம் என்னுஞ்சொல் எஞ்சாமைப் பொருளில் வருவதோர் உரிச்சொல் எனவும் கூறுவாருமுளர். 187. தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல துயர்திணை மருங்கின் ஆக்க மில்லை. இது, எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்) எல்லாம் என்னுஞ் சொல் உயர்திணைக்கண் ஆகுங்கால் தன்மைப் பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது. என்றவாறு. `ஆக்கமில்லை எனவே சிறுபான்மை வரப்பெறும் என்றார் இளம்பூரணர். ஆக்கம் - பெருக்கம்; பெரும்பான்மை. பெரும் பான்மையில்லை யெனவே சிறுபான்மை வரப்பெறும் என்பதாயிற்று. 188 நீயிர் நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. இது, விரவுப்பெயர் சிலவற்றிற்குரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) நீயிர், நீ என்னும் இரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி தெரியநில்லா; இருதிணையும் உடன்தோறும் பொருளன. என்றவாறு. பாலின்றித் திணையை மட்டும் உணர்த்துவதோர் சொல்லின் மையின் பால் எனவே திணையும் அடங்கும். உடன் மொழிப் பொருள என்றது, இருதிணைப் பொருளும் ஒருங்குவரத் தோன்றும்; பிரித்து ஒருதிணை விளக்கா என்றவாறு. (உ-ம்) நீயிர் வந்தீர்; நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருதிணைக்குமுரிய பொதுப் பெயரெல்லாம் தத்தம் மரபின் வினையொடுவந்து பிரித்து ஒரு திணையை விளக்குதல் போன்று இம்முன்னிலைப் பெயர்களும் ஒருதிணையைப் பிரித்துணர்த்துதற் குரிய வினையினைப் பெறாமையின் `பால்தெரிபிலவே உடன் மொழிப் பொருள என்றார். 189. அவற்றுள், நீயென் கிளவி யொருமைக் குரித்தே. இது, நீ என்பது பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய இரண்டு பெயருள் நீ யென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமை விளக்குதற்குரித்து. என்றவாறு. ஒருமையாவது, ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் பால் களுக்குப் பொதுவாகிய ஒருமை என்னும் எண். (உ-ம்) நீ வந்தாய் எனவரும். 190. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. இது, நீயிர் என்பது பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) நீயிர் என்னும் பெயர் பன்மைக்குரித்து. என்றவாறு. பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றுக்கும் பொதுவாகிய பன்மையென்னும் எண். (உ-ம்) நீயிர் வந்தீர் எனவரும். நீயிர் நீ என்பன இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந் துணர்த்தாவாயினும் ஒருமை பன்மை யென்னும் பொருள் வேறுபாடுடைய என வரையறுத்தவாறு. இருதிணைப் பொதுப் பெயராகிய மூவிடப் பெயர் களையும் தொகுத்து இருதிணைக்கண்ணும் அவற்றுக்குரிய பால்களை வகுத்துணர்த்தும் முறையிலமைந்தன, 284. தன்மை யானான் யாநா முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ அல்லன படர்க்கை யெல்லாமெனல் பொது. 286. தான்யா னானீ யொருமை பன்மைதாம் யாம் நா மெலா மெலீர் நீயிர்நீர் நீவிர். எனவரும் நன்னூற் சூத்திரங்களாகும். தன்மைக்குரிய பெயர்கள் யான், நான், யாம், நாம் என்னும் நான்குமாம். முன்னிலைப் பெயர்கள் எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ என்னும் ஐந்துமாம். இவ்வொன்பதுமல்லாத பெயர்கள் அனைத்து படர்க்கையிடத்திற் குரியனவாம். அவற்றுள் எல்லாம் என்னும் பெயரொன்றும் மூவிடத்திற்கும் உரியதாகும். தான், யான், நான், நீ, என்பன ஒருமைப் பாலுணர்த்துவன. ஒழிந்தன பன்மைப் பாலுணர்த்துவன என்பது இச்சூத்திரங்களின் பொருளாகும். (உ-ம்) தான் வந்தான், யான் வந்தேன், நான் வந்தேன், நீ வந்தாய் எனவும், தாம் வந்தார், யாம் வந்தேம், நாம் வந்தேம், யாமெல்லாம் வந்தேம், எல்லீரும் வந்தீர், நீயிர் வந்தீர், நீர் வந்தீர், நீவிர் வந்தீர் எனவும் இருதிணைக் கண்ணும் முறையே ஒருமையும் பன்மையும் உணர்த்திவந்தமை காண்க. 191. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கு முரித்தே தெரியுங் காலை. இஃது உயர்திணைப் பொருட்கண் வரும் விரவுப் பெயரொன்றற்க இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) ஒருவர் என்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும். (உ-ம்) ஒருவர் வந்தார் என்புழி ஒருவர் என்பது ஆண் பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. உயர்திணைக்கண் ஒருமைப்பால் இரண்டேயாதலின் இருபாற்கும் என முற்றும்மை கொடுத்தார். 192. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். இது, மேலதற்கோர் முடிபுணர்த்துகின்றது. (இ-ள்) ஒருவர் என்னும் பெயரது இயல்பு கருதின், அஃது ஒருமைப்பெயராயினும் பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கு ஏற்கும். என்றவாறு. ஈண்டுத் தன்மை என்றது பாலுணர்த்துமீறாகிய சொல்லின் தன்மையினை. (உ-ம்) ஒருவர் வந்தார்; ஒருவர் அவர் எனவரும். இவ்விரு சூத்திரப் பொருள்களையும் தழுவியமைந்தது, 288. ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருவர் என்னும் பெயர் உயர்திணை ஆண்பால் பெண்பால் இரண்டிற்கும் பொதுவாய் அத்திணைப் பன்மை வினைகொண்டு முடியும் இயல்பினையுடையது என்று சொல்லுவர் ஆசிரியர் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) ஆடவருள் ஒருவர் அறத்தின் வழிநிற்பார், பெண்டிருள் ஒருவர் கொழுநன் வழி நிற்பார் எனவரும். ஒருவர் என்னும் இப்பெயர் ஒருமையாகிய பகுதிக்கேற்ப இருபாற்கும் உரியதாம் எனவும், அர் என்னும் விகுதிக்கேற்பப் பன்மை வினைகொளும் எனவும், இச்சொல் ஒருமைப் பகுதியோடு பன்மை விகுதி மயங்கிப் பால் வழுவாய் நின்றதேனும் தன்னியல் பாய் நின்றமையின் வழாநிலை போலும் எனவும், பன்மைவினை என்றது சொல்மாத்திரையிற் பன்மைவினையன்றிப் பொருள் மாத்திரையின் ஒருமை வினையா மாதலின் இப்பயனிலையை ஒருவரென்னுஞ் சொற் கொள்ளுதல் வழுவன்றெனவும் உணர்த்தியவாறு. 193. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். இது, நீயிர், நீ, ஒருவர் என்பவற்றிற்கு ஓர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) நீயிர், நீ, ஒருவர் என்பவற்றை இன்னபாலுக்குரிய பெயரென்று அறியலுறின் சொல்லுவான் குறிப்பொடுங் கூட்டி முறையால் உணர்க. என்றவாறு. சாத்தனொருவன் தான் இருக்குமிடத்திற்கு ஒருவனோ ஒருத்தியோ பலரோ ஒன்றோ பலவோ சென்றவழி, `நீ வந்தாய்; நீயிர் வந்தீர் எனக் கூறுதலுண்டு. அங்ஙனம் கூறியது கேட்டோர் இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்பதனைக் குறிப்பினா லுணர்வர். இனி `ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகலாற்றின் எனக் கூறியவழி ஒருவர் என்பது ஒருவன் என்னும் ஆண்பாலைக் குறித்ததோ அன்றி ஒருத்தி என்னும் பெண்பாலைக் குறித்ததோ என்பது இடமுங் காலமும் பற்றிக் குறிப்பினால் உணரப்படும். இவ்வாறு, இருதிணைக்கண்ணும் ஆண்பால், பெண்பால் களைக் குறித்துப் பொதுவாக வழங்கும் பெயர்ச்சொற்களும் வினைச் சொற்களும் தம் பொதுமை நீங்கிக் குறிப்பினால் ஒன்றனை விலக்கி ஒன்றற்குரியவாய் வருதலை, 351. இருதிணை யாண்பெணு ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். உயர்திணை ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் அவ்விரு பாலுள் ஒருபாலையொழித்து ஒருபாலைக் குறிப்பினால் உணர்த்தும் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) வடுகரரசர் ஆயிரவர் மக்களையுடையார் எனவும், இச்சோலையுள் நால்வர் விளையாடினார் எனவும், இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவொழிந்தன எனவும், இப்பெற்றமெல்லாம் அறத்திற்கே கறக்கும் எனவும் இருதிணைப் பெயரும் வினையும் குறிப்பினாற் பாலுணர்த்தியவாறறிக. 194. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி மகடூஉ வியற்கை தொழில்வயி னான. இஃது உயர்திணைப் பெண்பாற் பெயரொன்றற்கு உரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர், வினைகொள்ளுமிடத்துப் பெண் பாற்குரிய வினைகொண்டு முடியும். என்றவாறு. (உ-ம்) பெண்மகன் வந்தாள் எனவரும். பாலுணர்த்தற் சிறப்புப்பற்றித் `தொழில் வயினான என்றாரேனும் முடிக்குஞ் சொல்லாகப் பெயர் கொள்ளுமிடத்தும் பெண்மகன் அவள் எனப் பெண்பாற் பெயரே கொள்ளும் என்பதாம். பெண்மகன் என்னும் இயற்பெயர் தானுணர்த்தும் பொருண்மை பற்றிப் பெண்பால்வினை கொண்டு முடியுமோ னகர வீறாகிய சொன்மை பற்றி ஆண்பால்வினை கொண்டு முடியுமோ என்று ஐயுற்றார்க்கும் ஐயம் அகற்றியவாறு. 195. ஆவோ வாகும் பெயருமா ருளவே ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே. இது பெயரீறு செய்யுளுள் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயர்களும் உள்ளன. அவை செய்யுளுள் திரியுமிடம் அறிக. என்றவாறு. (உ-ம்) வில்லோன் காலன கழலே; தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே; நல்லோர் யார்கொல் அளியர் தாமே வேய்பயி லழுவ முன்னி யோரே (குறுந் - ) எனவும், கழனி நல்லூர் மகிழ்நர்க் கென் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே எனவும் வில்லான், தொடியாள், நல்லார், முன்னியார், செப்பாதாய் எனவரும் சொற்களில் ஆன், ஆள், ஆர், ஆய் எனவரும் விகுதி களிலுள்ள ஆகாரம் செய்யுளில் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. சேரமான், மலையமான், என்னும் பெயர்களின் ஈற்றிலுள்ள விகுதியின் ஆகாரம் இவ்வாறு திரியாமையின் ஆயிடன் அறிதல் என்றார். `ஆவோவாகும் பெயரும் என்னம் எச்சவும்மையால் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள எனக் கூறிக் கிழவன் கிழவன் என்பன நாடு கிழவோன், கிழவோடேத்து எனவும் வரும் என உதாரணங்காட்டுவர் தெய்வச் சிலையார். இவ்வாறு பெயர் வினைகளின் ஈற்றில் நின்ற ஆன், ஆள், ஆர், ஆய் என்னும் விகுதிகளின் ஈற்றயல் ஆகாரம் செய்யுளில் ஓகாரமாகத் திரியவும்பெறும் என்பதனை, 352. பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளுளுரித்தே. எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார் நன்னூலார். 196. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. இஃது ஒருசார் இயற்பெயர்க் குரியதோர் மரபுணர்த்துகின்றது. எய்தியது விலக்கியதுமாம். (இ-ள்) செய்யுளுட் கருப்பொருள்மேற் கிளக்கப்படும் இருதிணைக்குமுரிய இயற்பெயர் உயர்திணையுணர்த்தா; அவ்வந் நிலத்துவழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருதலால். என்றவாறு. இறைச்சிப் பொருள் என்பது செய்யுளிற் கூறப்படும் அகனைந்திணைக்குரிய மாவும் புள்ளு முதலாகிய கருப்பொருள். இயற்பெயர்க் கிளவி என்றது, அக்கருப் பொருள்களைக் குறித்து இடுகுறியாகி வழங்கும் பெயரை. நிலமாவன முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. இயற்பெயர் என்பதனை இருதிணைக்கும் பொதுவென ஓதினாராயினும் செய்யுளகத்துக் கருப்பொருளாகி முல்லை முதலிய நிலத்துவழித் தொன்றும் மாவும் புள்ளும் மரமும் முதலாயினவற்றின்மேல் இடுகுறியாகிவரும் இயற்பெயர் அஃறிணைப் பொருளைச் சுட்டுவதல்லது உயர்திணைப் பொருண்மையைச் சுட்டமாட்டா என எய்தியது விலக்கியவாறு. (உ-ம்) `கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி என்புழி, கடுவன், மூலன், குமரி எனவரும் விரவுப்பெயராகிய இயற்பெயர்கள் அஃறிணைப் பொருளவாயல்லது அந்நிலத்து வழி வழங்காமையின் அவை உயர்திணை சுட்டாமை கண்டு கொள்க. கடுவன், மூலன் என்னும் பெயர்களில் ஆண் பாலுணர்த்தும் அன்னீறும் குமரி என்பதில் பெண்பாலுணர்த்தும் இகரவீறும் அமைந்திருத்தலானும் இங்ஙனம் ஆணையும் பெண்ணையும் வரைந்துணர்த்தும் தன்மை அஃறிணைக் கின்மை யானும் இவை அஃறிணைப் பெயராகாது இருதிணைக்குமுரிய பொதுப் பெயராதல் புலனாம். அலவன், கள்வன் என்பன னகரவீற்றனவாயினும் அவை ஆண்பாலுணர்த்தாது நண்டு என்னும் இனத்தையுணர்த்தி நிற்றலின் அஃறிணைப் பெயராவதன்றி விரவுப்பெயராகாமை யுணர்க. 197. திணையொடு பழகிய பெயரலங் கடையே. இஃது எய்தியது ஒருமருங்கு விலக்குகின்றது. (இ-ள்) கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணையைச் சுட்டுதல் அவ்வத்திணைக்குரியவாய் வழங்கப்பட்டுவரும் பெயரல்லாதவிடத்து. என்றவாறு. எனவே திணையொடு பழகி வழங்கப்பட்டு வரும் விரவுப்பெயர் இருதிணையுஞ் சுட்டிவரும் என்பதாம். (உ-ம்) செருமிகு முன்பிற் கூர்வேற் காளை எனவும் திருந்து வேல் விடலையொடு வருமெனதாயேஎனவும் உயர்திணை சுட்டிவந்தவாறு காண்க. காளை விடலை என்னுந் தொடக்கத்தன பொருள் வகையானன்றிப் பாலை முதலிய நிலத்துக்க உரிமைபூண்டு நிற்றலின் திணையொடு பழகிய பெயரெனப் பட்டன. 6. வினையியல் வினையென்பது பலபொரு ளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினை நிகழ்ச்சியையும் உணர்த்தும். தொழிற்பண்பை உணர்த்தும் சொல்லை உரிச் சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ் சொல்லை வினைச் சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச் சொல்லாவது வேற்றுமையுருபு ஏலாது வெளிப்படை யாகவும் குறிப்பாகவும் காலமுணர்த்தி நிற்பதாகும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். இறந்தகாலம் என்பது தொழில் முற்றுப்பெற்ற நிலை. நிகழ்காலம் என்பது தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும் நிலை. எதிர்காலம் என்பது தொழிலே தொடங்கப் பெறாத நிலை. இம்மூவகைக் காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுஞ் சொற்களை வினை என்றும், இக்காலங்களைக் குறிப்பாக உணர்த்துஞ் சொற்களைக் குறிப்பு என்றும் கூறுவர் தொல்காப்பியர். இவற்றை முறையே தெரிநிலைவினையென்றும் குறிப்புவினை யென்றும் வழங்குவர் பிற்கால ஆசிரியர்கள். இவ் வினைச் சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைப்படும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடு கூடிப்பொருள் முற்றி (நிறைந்து) நிற்குஞ் சொற்கள் வினைமுற்றுக் களாகும். ஐம்பாலாகிய வினை முதலை யுணர்த்தும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச் சொல் லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங் களாகும். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைந்த குறைச் சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச் சொற்கள் பெயரெச்சம் எனப்படும். இம்மூவகை வினைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச் சிலையாரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். எச்சவியலிலுள்ள `இறப்பின் நிகழ்வின் `எவ்வயின்வினையும், `அவைதாம், தத்தங்கிளவி, எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாத லொப்புமை பற்றி இவ்வியலின் இறுதியில் தெய்வச் சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54- ஆயின. வினைச் சொற்கள் எல்லா வற்றையும் உயர்திணைக் குரியன, அஃறிணைக் குரியன, இருதிணைக்குமுரியன என மூன்று வகையாகத் தொல்காப்பியர் இவ்வியலிற் பகுத்துணர்த்துகின்றார். 198. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் இது, வினைச் சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்து கின்றது. (இ-ள்) வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும். என்றவாறு. இங்கு வேற்றுமை என்றது, வேற்றுமையுருபினை. (உ-ம்) உண்டான், கரியன் என வேற்றுமை கொளாது காலமொடு தோன்றியவாறு கண்டு கொள்க. `வேற்றுமை கொள்ளாது என்னாது `காலமொடு தோன்றும் என்பதே கூறின், வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் வினைச் சொல் எனக் கொள்ளநேரும். `காலமொடு தோன்றும் என்னாது `வேற்றுமைகொள்ளாது என்று மட்டும் கூறின், இடைச் சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் எனக் கொள்ள வேண்டி வரும். ஆதலால் இவ்விருதிறமும் நீக்குதற்கு வேற்றுமை கொளாது காலமொடு தோன்றும் என்றார். வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடையன என்றற்கு நினையுங்காலை என்றார். இவ்வாறு பின்னுணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்தினார் என்பர் சேனாவரையர். வினையென்றது, உண், தின், கரு, செய் எனவரும் முதனிலையை எனவும், இஃது ஆகுபெயராய்த் தன்னாற் பிறக்கின்ற சொல்லையுணர்த்திற்று எனவும், உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பன அம்முதனிலையாற் பிறந்த வினைப்பெயர் எனவும், உண்டான், தின்றான், கரியன், செய்யன் என்பன அம் முதனிலையிற் பிறந்த வினைச்சொல் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை யொழியக் காலத்தோடு பொருந்தி நிற்குமது நம்மால் வினைச் சொல் என வேண்டப்பட்டது என்பது இச்சூத்திரத்தின் கருத்தாக விளக்குவர் தெய்வச்சிலையார். இங்ஙனம் வேற்றுமை கொள்ளாமையும் காலமொடு தோன்றுதலும் வினைச்சொற்கே யிலக்கணமாதலை நன்னூலார் `தொழிலல காலந்தோற்றா, வேற்றுமைக் கிடனாய் (நன்னூல் - 274) எனப் பெயரிலக்கணம் உணர்த்தும்வழி எதிர்மறை முகத்தால் உணரக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். வினைச் சொல்லாவது இதுவெனவுணர்த்துவது, 319. செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொரு ளாறுந் தருவது வினையே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். கருத்தாவும் கருவியும் நிலனும் தொழிலும் காலமும் செயப்படுபொருளும் என்னும் ஆறுபொருளையும் தருவது வினைச் சொல்லாகும் என்பது இதன்பொருள். வினை என்றது, ஆகுபெயராய் வினைச்சொல்லை யுணர்த்திற்று. செய்பவன் - கருத்தா; ஒருபாலமேல் வைத்தோதி னாரேனும் ஐம்பாலும் கொள்க. இயற்றுதற்கருத்தா, ஏவுதற் கருத்தா என்னும் இரண்டனையும் செய்பவன் என்றும், முதற் காரணம், துணைக் காரணம் என்னும் இரண்டனையும் கருவி என்றும் பொதுப்படக் கூறினார். (உ-ம்) வனைந்தான் என்றவழிக் குலாலனாகிய இயற்றுதற் கருத்தாவும், மண்ணாகிய முதற்காரணமும், தண்டசக்கர முதலிய துணைக்காரணங்களும், வனையும் இடமும், வனைதற்குச் செயலும், இறந்தகாலமும், குடம் முதலிய செயப்படு பொருளும் என ஆறும் தோன்றுதல் காண்க. ஆறும் என்னும் முற்றும்மையை எச்சமாக்கி இத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொருளுரைப்பர். `கொடி யாடிற்று என்புழிச் செயப்படு பொருளும், `கொடிதுஞ்சும் என்புழிச் செயப்படு பொருளோடு கருவியும் குறைந்து வந்தன. இனி, `ஆறும் என்னும் உம்மையை உயர்வு சிறப்பும்மை யாகக் கொண்டு இழிந்தன சிலவுள; அவையும் வேண்டுமேற் கொள்க எனப் பொருளுரைப்பர். வனைந்தான் என்புழிக் குடத்தைத் தனக்கு வனைந்தான் அல்லது பிறர்க்கு வனைந்தான் என `இன்னதற்கு என்பதும், அறம் முதலிய பயன் கருதி வனைந்தான் என `இதுபயன் என்பதும் தோன்றுதல் கொள்ளப் படும். இன்னதற்கு, இது பயன் என்னும் இரண்டும் ஏதுவின்பாற் பட்டுக் கருவியுள் அடங்குதலின் இச்சூத்திரத்துள் விதந்து எண்ணப் படாவாயின. முற்று வினைகளுள் பகுதியாற் செயலும், விகுதியாற் கருத்தாவும், இடைநிலை முதலியவற்றாற் காலமும், பெயரெச்ச வினையெச்சங்களில் இம்முறையே செயலும் காலமும் வெளிப்படத் தோன்றுவன. ஏனையவை குறிப்பிற்றோன்றுவன. செய்பவன் முதலிய இவை ஆறுங் காரணமாகக் கூடுங் கூட்டத்து இவற்றுள் செயல் என்னும் முதற்காரணத்தினின்றும் வினையாகிய காரியம் ஒன்று நிகழுமாதலின், இவை ஆறு காரணத்தையும் புலப்படுத்தும் காரியமாகிய வினையின் தொழிலை ஒற்றுமை நயங்கருதி அதன் சொல்மேலேற்றி `ஆறும் தருவது வினையே என்றார். காரணத்தைக் காரியம் தரும் என்பது, புகையாகிய காரியம் தனக்குக் காரணமாகிய தீயுண்மையைக் காட்டுதல் போல்வதாம். 199. காலந் தாமே மூன்றென மொழிப. இது முற்கூறிய காலம் இனைத்தென்கின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட காலம் மூன்றென்று சொல்லுவர் புலவர். என்றவாறு. தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. 200. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. இது, முற்குறித்த காலத்தின் வகையும் அதுதான் குறிப்பிற்கும் உண்டென்பதும் உணர்த்துகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று சொல்லப்படும் அம்மூன்று காலமும் குறிப்பொடும் பொருந்தும் பொருள் நிலைமையையுடையன; வினைச்சொல்லானவை தோன்று நெறிக்கண். என்றவாறு. எனவே, காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம், வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்புவினை என்பதூஉம் பெற்றாம். (உ-ம்) உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என்பன முறையே மூன்று காலமுந் தோன்ற நின்றன. கரியன், செய்யன் என்பன வினைக்குறிப்பு. இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழில் என்பது பொருளினது புடைபெயர்ச்சியாகலின் அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நீடித்து நில்லாமையின், நிகழ்ச்சி யென்பதொன்று அதற்கில்லை. எனினும், உண்டல் தின்றல் எனப் பலதொழிற் றொகுதியை ஒரு தொழிலாகக் கொள்ளுதலின், உண்ணாநின்றான், வாரா நின்றான் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பர் சேனாவரையர். வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டு கரியன், இது பொழுது கரியன் என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையே தோன்ற வருதலும், நாளைக் கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக. இங்குக் கூறப்பட்ட காலத்தின் பெயரும் முறையும் தொகையும் ஆகியவற்றை, 381. இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் பவணந்திமுனிவர். யாதொரு பொருளும், தோன்றமளவிற் றோன்றி, வளரு மளவின் வளர்ந்து, முதிருமளவின் முதிர்ந்து அழியுமளவின் அழியுமன்றி, உயிர்கள் வேண்டியவாறு ஆகாமையின், அவற்றை அவ்வளவின் அவ்வாறு இயற்றுவது காலம் என்னும் அருவப் பொருளாமெனவும், அதனால் இயலும் பொருள்களின் தொழில் இறந்ததும் எதிர்வதும் நிகழ்வதுமாதலின் அவ்வாறு இயற்றுங் காலமும் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணர்ந்துரைப்பார், காலம் இன்றென்றும் இரண்டென்றும் கூறுவார் கூற்றை விலக்கிக் `காலம் மூன்றே எனத் தெளிந்துரைத்தார். 201. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. இது, வினைச்சொற்களது பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்) குறிப்புப் பொருண்மைக்கண்ணும் தொழிற் பொருண்மைக் கண்ணுந் தோன்றிக் காலத்தொடு வரும் எல்லா வினைச்சொல்லும், உயர்திணைக் குரியனவும், அஃறிணைக் குரியனவும் அவ்விரண்டு திணைக்கும் ஒப்பவுரியனவும் என மூன்று பகுதியனவாம்; அவை தோன்றும் நெறிக்கண். என்றவாறு. கரியன், செய்யன் என்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலின் `குறிப்பு என்றார். (உ-ம்) உண்டான், கரியன் எனவும், சென்றது, செய்யது எனவும், வந்தனை, வெளியை எனவும் மூவகை வினையும் முறையே வந்தன. குறிப்பொடுங் கொள்ளும் என மேலைச் சூத்திரத்துக் குறிப்பு இயைபுபட்டு நிற்றலின் `குறிப்பினும் வினையினும் என்றார். பின்னர் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை, இஃது இறந்த காலத்திற் குரியது, இது நிகழ்காலத்திற் குரியது, இஃது எதிர்காலத்திற்குரியது என வழக்கு நோக்கி உணர்ந்து கொள்க என அறிவுறுத்துவார், `காலமொடு வரூஉம் வினைச்சொல் என்றார். வினைச்சொல் காலம் உணர்த்துங்கால் சில நெறிப் பாடுடையன என்பதுணர்த்துவார் `நெறிப்படத் தோன்றி என்றார். நெறிப்பாடாவது ஈற்றுமிசை (விகுதியின்மேல்) நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றுவுணர்த்தலாகாமையின் தொல்காப் பியத்தில் விரித்துரைக்கப் படாவாயின. எனினும் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் ஆங்காங்கே யுணர்த்திச் செல்வர். மேல் தெரிநிலை குறிப்பு எனத் தொகுத்துணர்த்திய வினைச் சொற்கள் முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என மூவகையாகித் திணை பால் இடங்களில் ஒன்றற்கு உரியனவாகவும் பொதுவாய் நிற்பனவாகவும் வருதலை, 321. அவைதாம், முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். என்னும் சூத்திரத்தால் உணர்த்தினார் நன்னூலார். 202. அவைதாம், அம்மா மெம்மே மென்னுங் கிளவியும் உம்மொடு வரூஉங் கடதற வென்னும் அந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. நிறுத்த முறையானே உயர்திணை வினையாமாறு உணர்த்த எடுத்துக் கொண்ட ஆசிரியர், உயர்திணைக்குரிய தன்மைவினையும் படர்க் கைவினையுமாகிய இருவகையுள் தன்மைவினையைக் கூறத் தொடங்கி இச்சூத்திரத்தால் பன்மைத் தன்மை உணர்த்துகின்றார். (இ-ள்) மேல் மூவகைய எனப்பட்ட வினைச்சொல், தாம், அம், ஆம், எம், ஏம் என்னும் இறுதியையுடைய சொல்லும், உம்மொடு வரூஉங் கடதறவாகிய கும் டும் தும் றும் என்னும் இறுதியையுடைய சொல்லும் என அவை எட்டும் பன்மை யுணர்த்தும் தன்மைச் சொல்லாம். என்றவாறு. உம்மொடு வரூஉங் கடதற - உம் ஊர்ந்து வரும் ககர, டகர, தகர, றகர வொற்றுக்கள்; அவையாவன கும், டும், தும், றும் என்பன. தன்மையிடத்திற் சொல் நிகழ்த்துவானாகிய தனக்கு ஒருமையல்லது இன்மையால், தன்மைப் பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்ததேயாகும். பேசுவோன் தன்னைக் குறித்துக் கூறும் ஒருமைத் தன்மையைத் தனித்தன்மை யென்றும் படர்க்கை யாரையும் முன்னிலையாரையும் அவ்விரு திறத்தாரையும் தன்னொடு உளப்படுத்திக்கூறும் பன்மைத் தன்மையை உளப்பாட்டுத்தன்மை என்றும் வழங்குதல் மரபு. அம், ஆம் என்பன முன்னின்றாரை உளப்படுக்கும். தமராய வழிப் படர்க்கையாரையும் உளப்படுக்கும். எம், ஏம், என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் கடதறவாகிய கும், டும், தும், றும் என்பன அவ்விரு வகையாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் தனித்தனி உளப்படுத்தலும் உடையன என்பர் இளம்பூரணரும் சேனா வரையரும். இவ்வுரைக் குறிப்பினை அடியொற்றி யமைந்தது, 331. அம்மா மென்பன முன்னிலை யாரையும் எம்மே மோமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையும் தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அம் ஆம் என்னும் இவ்விரு விகுதியினையும் இறுதியாக வுடைய சொற்கள் முன்னிலையிடத்தாரையும், எம், ஏம், ஒம் என்னும் இம்மூன்று விகுதியினையும் இறுதியாகவுடைய சொற்கள் படர்க்கையிடத்தாரையும், கும், டும், தும், றும் என்னும் இந்நான்கு விகுதியினையும் இறுதியாகவுடைய சொற்கள் முன்னிலை படர்க்கையென்னும் ஈரிடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்றுங் குறிப்புமுற்று மாகும் என்பது இதன்பொருள். ஓம் விகுதி புதியன புகுதலாக ஈண்டுக் கொள்ளப்பட்டமை காண்க. ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டார் என்பர் மயிலைநாதர். (உ-ம்) உண்டனம், உண்ணாநின்றனம், உண்பம், தாரினம், உண்பாம், தாரினாம், உண்டாம், உண்ணா நின்றாம் யானும் நீயும் எனவும், உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்பெம், உண்டேம், தாரினெம், உண்ணாநின்றேம், உண்பேம், தாரினேம், உண்டோம், உண்ணாநின்றோம், உண்போம், தாரினோம் யானும் அவனும் எனவும், உண்கும், உண்டும், வந்தும், வருதும், சென்றும் சேறும் யானும் அவனும் நீயும் எனவும், முன்னிலை யாரையும் படர்க்கை யாரையும் இருபாலாரையும் முறையே உளப்படுத்தி வந்தமை காண்க. இச்சூத்திரத்தில் முன்னிலையாரையும் படர்க்கையாரையும், என்னும் எண்ணும்மைகளையும், இருபாலாரையும் என்னும் முற்றும்மையினையும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாகக் கொண்டு இவ்விகுதிகள் யாவும் தன்னிலையில் நின்று தனித் தன்மைப் பன்மையினை யுணர்த்துமென வுரைப்பர் சிவஞான முனிவர். (உ-ம்) உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம், உண்டோம், தாரினோம் - யாம் எனவரும். `மேற் காலமொடு வரூஉம் வினைச்சொல் என்று ஓதிய தொல்காப்பியர், `அம் ஆம் எம் ஏம் எனவரும் இச்சூத்திர முதலாகப் பாலுணர்த்தும் சொற்களை ஓதினமையால், தொழில் உணர்த்தலும், காலங்காட்டலும், பால்காட்டலும் என வினைச் சொல் மூன்று கூறுகளையுடையன என்பது கொள்ளப்படும் என்பர் தெய்வச்சிலையார். உண்டனம், உண்கின்றனம், உண்பம் என்றவழி உண் என்பது தொழில் உணர்த்திற்று. டு, கின்று, பு என்பன காலங் காட்டின. அன் சாரியையாகி நின்றது. அம் பாலுணர்த்திற்று என்பது அவர்தரும் விளக்கமாகும். இங்ஙனம் வினைச்சொற்கள் தொழிலும் காலமும் பாலும் உணர்த்தும் மூவகை உறுப்புக்களையுடையவாகத் தொல்காப் பியனார் குறிப்பாகப் புலப்படவைத்தாராயினும் பாலுணர்த்தும் எழுத்துக்களாகிய விகுதிகளை எடுத்துரைத்தாற் போன்ற கால முணர்த்தும் எழுத்துக்களைத் தனியே எடுத்துரையாது வழக்கும் செய்யுளுமாகிய இலக்கியங்கண்டு உய்த்துணர வைத்துள்ளார். காலமுணர்த்தும் எழுத்துப்பற்றிச் சேனாவரையர் கூறுவன இங்கு நோக்கத்தக்கனவாகும். அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும். உம்மொடு வரூஉங் கடதற எதிர்காலம் பற்றிவரும்.K‹Å‹w நான்கீறும் இறந்தகாலம் பற்றி வருங்கால், அம்மும் எம்மும் கடதற என்னும் நான்கன்முன் அன் (சாரியை) பெற்றுவரும். ஏம் அன் (சாரியை) பெற்றும் பெறாதும் வரும். ஆம் அன் (சாரியை) பெறாதுவரும். (உ-ம்) நக்கனம், நக்கனெம்; உண்டனம், உண்டனெம், உரைத்தனம், உரைத்தனெம்; தின்றனம், தின்றனெம் எனவும்; நக்கனேம், நக்கேம்; உண்டனேம், உண்டேம்; உரைத்தனேம், உரைத்தேம்; தின்றனேம், தின்றேம் எனவும், நக்காம், உண்டாம், உரைத்தாம், தின்றாம் எனவும் வரும். (அம் ஆம் எம் ஏம் என்னும்) அந்நான்கீறும் (கடதற வல்லாத) ஏனையெழுத்தின்முன் ரகாரமும் ழகாரமும் ஒழித்து இன்பெற்றுவரும். (உ-ம்) அஞ்சினம், அஞ்சினாம், அஞ்சினெம், அஞ்சினேம்; உரிஞினம், உரிஞினாம், உரிஞினெம், உரிஞினேம் எனவரும். பிறவெழுத்தோடும் ஒட்டிக்கொள்க. கலக்கினம், தெருட்டினம் என்னுந் தொடக்கத்தன குற்றுகரவீறாகலான் அதுவும் ஏனை யெழுத்தேயாம் என்பது இறந்தகால எழுத்துக்களைக் குறித்துச் சேனாவரையர் தரும் விளக்கமாகும். இறந்தகால வினைச் சொற்களாக இங்கு எடுத்துக்காட்டிய உதாரணங்களைக் கூர்ந்து நோக்குங்கால் நகு + ஆம் = நக்காம் என்றாங்கு உகரவீற்றுக் குறிலிணைப் பகுதி யிரட்டித்து இறந்த காலம் உணர்த்துதலும், உரைத்தேம், உண்டேம், தின்றேம் எனவும் உரிஞினேம் எனவும் த, ட, ற என்னும் ஒற்றுக்களும் இன் என்பதும் இறந்த காலங்காட்டும் இடைநிலைகளாதலும், நக்கனெம், உண்டனெம் என்புழிக் கால எழுத்தையடுத்துப் பாலுணர்த்தும் ஈறாகிய விகுதியைச் சார்ந்துவரும் அன் என்பது சாரியையாதலும், உரைத்தேம் என்புழி உரை என்னும் முதனிலையையடுத்து நிற்கும் தகரவொற்றுக் காலவெழுத்தாகிய தகரம் பகுதியொடு கூடியவழித் தோன்றிய சந்தி எழுத்தென்பதும், நில் + ற் + ஏம் - நின்றேம் எனவரும்வழி பகுதியாகிய லகரவொற்று முன்வரும் கால எழுத்தாகிய றகரத்திற்கு இனமாய னகரவொற்றாகத் திரிந்தமை விகாரமாதலும் இனிது புலனாம். இவ்வாறு தனிமொழியின் அமைப்பினைக் கூர்ந்துணர்ந்த பவணந்தியார் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்பினுள்ளும் சொற் பொருளமைப் புக்கு ஏற்பனவற்றைக் கருதிக்கூட்டி முடிப்ப எவ்வகைப்பட்ட பகுபதங்களும் முடியும் என்பதனை, பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும் (133) எனவரும் சூத்திரத்தாற் பகுபதவுறுப்புணர்த்தி, 141. தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. எனவரும் சூத்திரத்தால் இறந்தகால இடைநிலை இவையென வரையறுத்துணர்த்தியுள்ளார். தகர டகர றகர மெய்களும், இன் என்னுங் குற்றொற்றும் ஐம்பால் மூவிடத்தும் இறந்த காலத்தை யுணர்த்தும் வினையிடை நிலைகளாம் என்பது இதன் பொருளாகும். இனி, அவை (அம், ஆம்; எம், ஏம் என்பன) நிகழ் காலம் பற்றிவருங்கால் நில், கின்று என்பனவற்றோடு வரும். நில் என்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும். (உ-ம்) உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணா நின்றாம், உண்கின்றாம்; உண்ணாநின்றனெம், உண்கின்றனெம்; உண்ணா நின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றனேம், உண்கின்றனேம். ஈண்டு அன் (சாரியை) பெற்ற விகற்பம் இறந்தகாலத்தற் கூறியவாறே கொள்க என நிகழ்கால முணர்த்தும் எழுத்துக்களை உதாரணங் காட்டி விளக்குவர் சேனாவரையர். அவர் காட்டிய எடுத்துக் காட்டுக்களில் நிகழ் காலமுணர்த்தும் `நில் என்பது `நின்ற என நில்லாது முதற் கண் ஆகாரமும் ஈற்றின்கண் உகரமும் பெற்று `ஆ நின்று என நிற்றலையும் `கின்று என்பதில் இடைநின்ற னகரவொற்றுக் கெட்டுக் `கிறு என நின்று `உண்கிறான் என வழங்குதலையும் கண்ட பவணந்தியார், 142. ஆநின்று கின்று கிறு மூவிடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. எனச் சூத்திரஞ் செய்தார். ஆநின்று, கின்று, கிறு என்பன ஐம்பால் மூவிடத்தும் நிகழ்காலத்தையுணர்த்தும் வினையிடை நிலைகளாம் என்பது இதன் பொருள். உண்ணா கிடந்தனம், உண்ணாவிருந்தனம் எனக் கிட இரு என்பனவும் சிறுபான்மை நிகழ்காலத்து வரும் என்பர் சேனாவரையர். உண் என்னும் பகுதியை நோக்கும்வழி ஆகிட, ஆவிரு என்பனவே காலமுணர்த்தும் இடைநிலையெனக் கொள்ள வேண்டியுளது. இவற்றைப் பவணந்தியார் நிகழ்கால இடைநிலை களாக எடுத்தாளாமை நினைத்தற்குரியதாகும். அவை (அம், ஆம், எம், ஏம் என்பன) எதிர்காலம் பற்றி வருங்காற் பகரமும் வகரமும் பெற்றுவரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் (ஆகிய சாரியைகள்) அடுத்து நிற்கும். (உ-ம்) உரைப்பம், செல்வம்; உண்குவம், உரிஞுவம் எனவரும். ஒழிந்தவீற்றொடும் ஒட்டிக்கொள்க. பாடுகம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலும் கொள்க என எதிர்கால முணர்த்தும் எழுத்துக்களை உதாரணங் காட்டி விளக்குவர் சேனாவரையர். அவர் கருத்துப்படி பகரமும் வகரமும் ககரமும் எதிர்காலம் உணர்த்தும் வினையிடைநிலைகளாயினும் அவற்றுட் பகரமும் வகரமுமே எதிர்கால இடைநிலைகளெனத் தெளிவாகக் கொள்ளத்தக்கன. 143. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. எனச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார். பகரவொற்றும் வகரவொற்றும் ஐம்பால் மூவிடத்தும் எதிர்காலத்தைத்தரும் வினையிடை நிலைகளாம். இங்குக் கூறிய முக்கால இடைநிலைகள் சிலமுற்றுவினை எச்சவினைகட்கு இலவாம் என்பது இதன்பொருள். இனி, `இனி சில இல எனவே, காலத்தை இறுதிநிலை தருமென்பதூஉம், முதனிலை தருமென்பதூஉம் பிறவிடைநிலை தருமென்பதூஉம் பெற்றாம். இவ்விகற்பமெல்லாம் (றவ்வொ டுகரவும்மை என) வருஞ் சூத்திரத்தாற் கூறுப என்பர் சிவஞானமுனிவர். உம்மொடு வரூஉங் கடதற - உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும், உரிஞுதும், திருமுதும் என ஏற்றவழி உகரம் (சாரியை) பெற்றும் வரும். இவை எதிர்காலம் பற்றிவரும் என்பர் இளம்பூரணர். கும்மீறு வினைகொண்டு முடிதலின் ஒழிந்த உம்மீற்றின் வேறெனவேபடும். ட, த, ற என்பன எதிர்காலத்திற்குரிய எழுத்து அன்மையாற் பாலுணர்த்தும் இடைச்சொற்கு (உம் என்னும் விகுதிக்கு) உறுப்பாய் வந்தன எனவேபடும். படவே அவற்றை உறுப்பாக உடைய ஈறு மூன்றாம். அதனான் உம் என ஓர் ஈறாக அடக்கலாகாமையின் அந்நாற்கிளவியொடு என்றார் எனக் கும் டும் தும் றும் என்னும் காலங்காட்டும் விகுதிகளைப்பற்றி விளக்கந்தருவர் சேனாவரையர். இவ்வாறே கடதற என்னும் நான்கு மெய்யை யூர்ந்து வரும் உகரத்தை யீறாகவுடைய கு டு து று என்னும் குற்றுகரம் நான்கும் அல் என்பதும் எதிர்காலம் பற்றிவரும் என்றார் சேனாவரையர். காலங்காட்டுவனவாக உரையாசிரியர்கள் குறித்த கும், டும், தும், றும், கு, டு, து, று என்னும் விகுதிகளோடு மின், ஏவல், வியங்கோள், இ, மார், ப, உம் என்னும் விகுதிகளையும் எதிர்மறை ஆகார விகுதியையும் சேர்த்துக் காலங்காட்டும் விகுதிகளாக, 144. றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிரிவுமின் னேவல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையும் ஏற்கு மீங்கே. எனவரும் சூத்திரத்தில் எடுத்தோதினார் பவணந்தியார். றகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் ஆகிய று, றும் என்பன இறந்தகாலமும் எதிர்காலமும், தகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் ஆகிய டு, டும் என்பன இறந்த காலமும் எதிர்காலமும், ககரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் ஆகிய கு, கும் என்பன எதிர்காலமும், மின் ஈறும் ஏனை ஏவலின்வரும் எல்லாவீறும் வியங் கோளீறாகிய க, இய, இயர் என்பனவும், இகரவீறும் மாரீறும் எதிர்காலமும், பகரவீறு இறந்தகாலமும் எதிர்காலமும் , செய்யும் என்னும் வாய்ப்பாட்டு முற்றீறு நிகழ் காலமும் எதிர்காலமும், முற்றுவிகுதி எச்சவிகுதிகளோடு புணர்தற்குரிய எதிர்மறை ஆகாரவீறு மூன்றுகாலமும் ஏற்கும்; மேலைச் சூத்திரத்து இவை சிலவில என்றவற்றுள் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) சென்று, சென்றும்; சேறு, சேறும் எனவும், வந்து, வந்தும்; வருது, வருதும் எனவும், உண்டு, உண்டும், உண்கு, உண்கும், உண்மின்; உண்ணாய்; உண்க, வாழிய; வாழியர்; சேறி; உண்மார்; உண்ப; உண்ணும்; எனவும், உண்ணான் எனவும் வரும். என்றிசினோர், என்மர், என்மனார் என்பவற்றுள் எடுத்தோதாத இசின், ம், மன் என்னும் பிறவிடைநிலைகள் வந்து முன்னையது ஒன்றும் இறந்தகாலமும், பின்னைய இரண்டும் எதிர்காலமும் காட்டின. 203. க ட தற வென்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ டென்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. இது, தனித்தன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்து கின்றது. (இ-ள்) க ட தற என்னும் நான்கு மெய்யையூர்ந்து வரும் குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லும், என், ஏன், அல் என்னும் ஈற்றவாகிய சொல்லும் என அவ்வேழும் தன் வினையைத் தானேயுரைக்கும் தன்மை யொருமைச் சொல்லாம். என்றவாறு. குற்றுகரம் நான்கும், அல்லும் எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம் காலவெழுத்துப் பெறுங்கால் உம்மீற்றோடு ஒக்கும். அல்லீறு பகரமும் வகரமும் (அகிய காலவெழுத்துப்) பெற்று வரும். என், ஏன் என்பன மூன்றுகாலமும் பற்றி (க்கால வெழுத்துப் பெற்று) வரும். காலவெழுத்து அடுத்தற்கண் எம் மீற்றோடு என்னீறும், ஏமீற்றோடு, ஏனீறும் ஒக்கும். ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிந்து ஒட்டிக் கொள்க என விளக்கம் தருவர் சேனாவரையர். (உ-ம்) உண்கு, உண்டு, வருது, சேறு எனவும், உரிஞுகு, திருமுகு எனவும், உண்டனென், உண்ணாநின்றனென், உண்கு வென் எனவும், உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் எனவும் உண்பல், வருவல் எனவும் வரும். உயர்திணைக்குரிய தனித்தன்மையொருமை விகுதிகளாகிய இவ்வேழுடன் புதியன புகுதலாக வந்த அன்விகுதியையும் கூட்டி, 330. குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ டல்லன் னென்னே னாகு மீற்ற இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். `கு, டு, து, று, அல், அன், என், ஏன் என்னும் இவை எட்டினையும் இறுதியாகவுடைய சொற்கள் உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை, அஃறிணையொருமையாகிய முக்கூற்றொருமைத் தன்மை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் என்பது இதன்பொருள். துறக்கப்படாத வுடலைத்துறந்து வெந் தூதுவரோ டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் தேவாரம் - 4-113-8. என அன்னீறு தன்மையொருமைக்கண் புதியனபுகுதலாகப் பயின்று வருதலால் அதனையும் தன்மையொருமை விகுதியாகக் கொண்டார் பவணந்தியார். 204. அவற்றுள், செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். இது மேற்கூறியவற்றுள் குவ்வீற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய ஒருமைத்தன்மை வினையேழனுள் செய்கு என்னும் வாய்பாட்டு முற்றுச்சொல் பெயரொடு முடிதலேயன்றி வினையொடு முடியினும், முற்றுச்சொல்லாம் அத்தன்மையில் திரியாதென்று கூறுவர் புலவர். என்றவாறு. செய்கு என்பது வினைமுதல் வினையல்லது பிறவினை கொள்ளாமையின் தன்மை யொருமையுணர்த்தும் முற்றுச் சொல்லாம் தன்மையில் திரியாது நின்றதெனவே கொள்ளப்படும் என்பார் அவ்வியல் திரியாது என்றார். (உ-ம்) காண்கு வந்தேன் எனவரும். காண்கு யான் எனப் பெயரொடு முடிதல் இலக்கணம் என்று கொள்க என்பர் தெய்வச்சிலையார். எதிர்காலம் பற்றி உலகவழக்கிற் பெருகப்பயிலாத குடுதுறு என்னும் விகுதிகளைப் பிற்கூறாது மூன்று காலமும் பற்றி உலக வழக்கிற் பெருக வழங்கும் என் ஏன் என்பவற்றின் முன் கும் டும் தும் றும் என்னும் விகுதிகளுடன் இயைய வைத்தது `செய்கு என்பது போலச் `செய்கும் என்பதும் `காண்கும் வந்தேம் என வினை கொண்டு முடியும் என்பது அறிவித்தற்கு என்பர் சேனாவரையர். செய்கென் கிளவி வினையொடு முடியினும் அமைக எனவே செய்கும் என் கிளவியும் வினையொடு முடியினும் அமைக என்பது போந்ததாம் என்பர் இளம்பூரணர். இவ்விதியினை, 332. செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும் வினையொடு முடியினும் விளம்பிய முற்றே. எனவரும் சூத்திரத்தால் விளக்கினார் நன்னூலார். செய்கு என்னும் தன்மையொருமை முற்றும் செய்கும் என்னும் தன்மைப்பன்மை முற்றும் பெயர்கொண்டு முடிதலே யன்றி வினைகொண்டு முடியினும் மேற்கூறிய முற்றுச் சொல்லேயாம் என்பது இதன் பொருளாகும். எச்சங்களைப் போலாது வினைமுதலைத்தரும் விகுதியுறுப் போடுகூடி முற்றி நிற்றலின் முற்றெனப் பட்டதன்றிப் பயனிலை கொண்டு முற்றலின் முற்றெனப்பட்டதன்று என்பார், பெயரே யன்றி வினையொடு முடியினும் விளம்பிய முற்றே யென்றார் என்பர் சிவஞானமுனிவர். முற்றுச் சொற்கும் வினையொடு முடியினும் முற்றுச் சொலென்னும் முறைமையிற் றிரியா எனவரும் பிற்கால அகத்தியச் சூத்திரம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 205. அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இஃது உயர்திணைப் படர்க்கை வினைச்சொல் உணர்த்துகின்றது. (இ-ள்) அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நான்கு சொல்லும் உயர்திணை ஆணொருமையும் பெண்ணொரு மையும் உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். என்றவாறு. அன் ஆன் என்பன உயர்திணை ஆணொருமையும், அள் ஆள் என்பன உயர்திணைப் பெண்ணொருமையும் உணர்த்துவன வாகும். இவை நான்கீறும் மூன்று காலமும்பற்றி வரும். காலத்துக்கேற்ற எழுத்துப் பெறுங்கால், அன்னும் அள்ளும் அம்மீற்றோடும், ஆனும் ஆளும் ஆமீற்றோடும் ஒக்கும். அவ்வேறு பாடறிந்து ஒட்டிக் கொள்க என்பர் சேனாவரையர். (உ-ம்) உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன் எனவும், உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும், உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள் எனவும், உண்டாள், உண்ணா நின்றாள், உண்பாள் எனவும் வரும். இச் சூத்திரப்பொருளை, 324. அன் ஆன் இறுமொழி ஆண்பாற் படர்க்கை. எனவும், 325. அள் ஆள் இறுமொழி பெண்பாற் படர்க்கை. எனவும் இரண்டு சூத்திரங்களாற் பகுத்தோதினார் நன்னூலாசிரியர். 206. அர் ஆர் ப வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இஃது உயர்திணைப் பன்மை வினைச்சொல் இவையென்பது உணர்த்துகின்றது. (இ-ள்) அர், ஆர், ப என்னும் ஈற்றையுடையவாய் வரும் மூன்று சொல்லும் பல்லோரையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். என்றவாறு. ரகரவீறு இரண்டும் மூன்று காலமும் பற்றிவரும். அன்னீற்றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும், ஆனிற்றிற்குரிய கால வெழுத்து ஆர் ஈற்றிற்கும் உரியன. பகரவீறு எதிர்கால முணர்த்தும். பகரவீறு உரிஞுப என உகரச்சாரியை பெற்றும், உண்ப எனச் சாரியை பெறாதும், உண்குப எனச் சிறுபான்மை குகரச் சாரியை பெற்றும் வரும். (உ-ம்) உண்ணடனர், உண்ணாநின்றனர், உண்பர் எனவும், உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவும் வரும். 207. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியு மென்ப. இதுவும் உயர்திணைப் பன்மைக்குரிய ஈறும் அதன் முடிபு வேற்றுமையுங் கூறுகின்றது. (இ-ள்) முன்னையனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல்லோர் படர்க்கையையுணர்த்தும். அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும். என்றவாறு. மார்விகுதி எதிர்காலம் உணர்த்தும். அது உகரச்சாரியை பெற்றும் பெறாதும் வரும். (உ-ம்) எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார் எனவரும். இனி, பாடன்மார் எமரே, காணன்மார் எமரே எனப் பெயர் கொண்டு முடிவன, பாடுவார், காண்பார் என்னும் ஆரீற்று முற்றுச் சொல்லின் எதிர்மறையாய், ஒருமொழிப் புணர்ச்சியால் மகரம் பெற்று நின்றன எனவும், அவை மாரீறாயின் பாடா தொழிவார், காணாதொழிவார் என ஏவற்பொருண்மையை யுணர்த்து மாறில்லை யெனவும் விளக்கந்தருவர் சேனாவரையர். மேற்குறித்த உயர்திணைப் பன்மைக்குரிய ஈறுணர்த்தும் இரு சூத்திரப் பொருள்களையும் ஒருங்கே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 326. அர் ஆர் பவ்வூரகர மாரீற்ற பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அர், ஆர், ப, மார் என்னும் நான்கு விகுதியினையும் இறுதியாகவுடைய மொழிகள் உயர்திணைப் பன்மைப் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாகும். இவற்றுள் மார் வினை கொண்டு முடிவதாம் என்பது இதன்பொருள். இதன்கண் `வினையொடு முடிமே என்புழி வினையொடும் என உம்மை விரித்துப் பொதுவிதியாற் பெயரொடு முடிதலேயன்றி வினை யுடனும் முடியும் எனப் பொருளுரைப்பர் சிவஞானமுனிவர். மாரீற்று வினைமுற்றிற்குப் பெயர்போல வினையும் இயைந்து வருதலின் முற்று எச்சமாயின்தன்று, முற்றேயாமென்பர். இந்நுட்பம், காலமொடு கருத வரினு மாரை மேலைக் கிளவியொடு வேறு பாடின்றே. எனவரும் பிற்கால அகத்தியச் சூத்திரத்திலும் இடம் பெற்றுள்ளமை காண்க. 208. பன்மையு மொருமையும் பாலறிவந்த அந்நா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. இது, மேல் உயர்திணைக் குரியவாக விரித்தோதிய வற்றை யெல்லாம் தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பாலுணரவந்த இருபத்து மூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக்கிளக்கப்பட்ட உயர்திணையிடத்தன. என்றவாறு. மூன்று தலையிட்ட அந்நாலைந்தும் என இயையும். இருபத்துமூன்றுமாவன: அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும், கு, டு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் என்பன. ஈண்டுக் கூறியன கிளவியாக்கத்துட் கூறப்பட்ட படர்க்கைவினையே வேறல்ல என்பார் முன்னுறக் கிளந்த என்றார். பாலுணர்த்தும் இடைச் சொற்பற்றி உயர்திணைப் படர்க்கை வினையுணர்த்துதல் ஈண்டுக் கூறியதனாற் பயன் எனவும், வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்து இலக்கண வழக்குணர்த் துதல் ஆண்டுக் கூறிய தனாற் பயன் எனவும் விளக்கந்தருவர் சேனாவரையர். 209. அவற்றுள், பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே. இஃது உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதோர் திரிபு உணர்த்து கின்றது. (இ-ள்) கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுள், பன்மை யுணர்த்தும் தன்மைச்சொல், எண் இயலும்வழி அஃறிணையை யுளப்படுத்துத் திரிவன உள. என்றவாறு. (உ-ம்) யானும் என் எஃகமும் சாறும் எனவரும். தன்மைப் பன்மை வினைச்சொல் உயர்திணையாகலின் உயர்திணையே உளப்படுத்தற்பாலன; அஃறிணையை உளப் படுத்தல் வழுவாயினும் அமைக என்பார், திரிபவையுள என்றார். அதனான் இச்சூத்திரத்தை `முன்னுறக்கிளந்த உயர் திணையவ்வே என்னுஞ்சூத்திரத்தின் பின் வைத்தார். திரியும் என்னாது, திரிபவையுளவே என்றதனான், எல்லாந்திரியா, சிலவேதிரிவன என்பர் சேனாவரையர். 210. யாஅ ரென்னும் வினாவின் கிளவி யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இஃது உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்று கூறுகின்றது. (இ-ள்) யார் என்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணைமருங்கின் மூன்றுபாற்கும் உரித்து. (உ-ம்) அவன் யார், அவள் யார், அவர் யார் எனவரும். இது வினைக்குறிப்பாயினும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும் ரகர ஈற்றால் மூன்று பாலையும் உணர்த்தும் வேறுபாடுடைமையின் மார் முதலிய ஈறுகளோடு வையாது வேறு கூறினார். இச்சூத்திரப் பொருளை விளக்குவது, 348. யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வினாப் பொருண்மையின் வரும் யார் என்னும் வினைக் குறிப்புச்சொல் உயர்திணை மூன்றுபாற்கும் பொது வினையாம் என்பது இதன் பொருள். `வண்டுதான் யார் என அஃறிணைக்கண் வருதல் வழு வமைதியெனப்படும். 211. பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. இஃது, உயர்திணைப் பாற்குப் படுவதோர் செய்யுள் முடிபு கூறுகின்றது. (இ-ள்) மேல் உணர்த்திப் போந்த உயர்திணைக்கண் பால் விளங்கவரும் இயல்புடைய ஆன், ஆள், ஆர் என்னும் அம் மூன்றீற்றின் கண்ணும் உள்ள ஆகாரம் செய்யுளுள் ஓகார மாகத்திரியும். என்றவாறு. (உ-ம்) வினவி நிற்றந்தான் என்பது `வினவி நிற்றந்தோன் (அகம்-48) எனவும், நகூஉப் பெயர்ந்தாள் என்பது `நகூஉப் பெயர்ந்தோள் (அகம் - 248) எனவும், சென்றா ரன்பிலர் என்பது, `சென்றோ ரன்பிலர் (அகம்-31) எனவும், செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு காண்க. வந்தோம், சென்றோம் என வழக்கினுள் வருவன ஏமீற்றின் சிதைவென்பர் சேனாவரையர். 212. ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும். இது, விரவுவினைச் சொல்லீறு செய்யுளுள் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) முன்னிலையிற்றுள் ஆய் என்னும் ஈறும் மேற் கூறப் பட்டனபோலச் செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரியும். என்றவாறு. (உ-ம்) வந்தாய் மன்ற தண்கடற் சேர்ப்ப என்பது `வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப (அகம். 80) எனச் செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்து வந்தது. கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற் பெயரும் ஆகாரம் ஓகாரமாதல் பெயரியலுட் கொள்ளப் படும் என்பர் சேனாவரையர். இவ்வாறு ன, ள, ர, ய என நான்கீற்று வினைச்சொற்களும் பெயர்களும் செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்து வரவும் பெறும் என்னும் இவ்விதிகளைத் தொகுத்துரைக்கும் முறையில மைந்தது, 352. பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளு ளுரித்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் னகார, ளகார, ரகார, யகார வீறுகளின் அயல்நின்ற விகுதிமுதல் ஆகாரம் ஓகார மாதலும் செய்யுளிடத்து உரியதாகும் என்பது இதன் பொருள். உம்மையை எதிர்மறை யும்மையாகக் கொண்டு, வில்லான், வில்லோன் என ஓகாரமாகத் திரிதலும் திரியாமையும், செக்கான், வண்ணான் எனத் திரியாதியல்பாதலும், ஆக்கவும்மையாகக் கொண்டு `பழமுதிர்சோலை மலைகிழவோன் என விகுதி அகரம் ஆகாரமாக நீண்டு ஓகாரமாதலும் கொள்வர் சிவஞானமுனிவர். 213. அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பினானும் பண்பி னானு மென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். இஃது உயர்திணை வினைக்குறிப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப் பொருட்கண்ணும் ஒப்பின் கண்ணும் பண்பின்கண்ணும் அப்பகுதிக்காலம் குறிப்பால் தோன்றும். என்றவாறு. அப்பகுதிக் காலமாவது அப்பொருட்பகுதி பற்றி வரும் சொல்லகத்துக் காலமாம். அப்பகுதிக்காலம் குறிப்பால் தோன்று மெனவே, அப்பொருள்பற்றி வினைக்குறிப்பு வரும் என்பதாம். அதுச் சொல்வேற்றுமை - ஆறாம் வேற்றுமை. உடைமை என்பது, உடைமைத் தன்மையையும் உடைமைப் பொருளையும் குறிக்கும். `இதனை இஃது உடைத்து என்பதுபட வரும் எல்லா வாய்பாடும் தழுவுதற்கு அதுச்சொல் வேற்றுமை யுடைமையானும் என்றார். கண்ணென் வேற்றுமை நிலத்தினானும் என்ற தொடர்க்கும் இவ்விளக்கம் பொருந்தும். (உ-ம்) கச்சினன், கழலினன் எனவும், இல்லத்தன், புறத்தன் எனவும், பொன்னன்னன், புலிபோல்வன் எனவும், கரியன், செய்யன் எனவும் வரும். வனைந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்றுச்சொல், செய்தான் என்னுங் காரியத்தினை நிகழ்த்துங் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறி நின்று, அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படு பொருள் முதலிய ஏழினையும் விரித்து நிற்குமாறு போல, உடையன் என்னும் வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், உடையனா யிருந்தான் என விரிந்துழி உணரப்படுங் காரியத்தினை நிகழ்த்துங் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு மாறி நின்று, அவாய் நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழினையும் விரித்து நிற்குமாதலான், உடையன் என்பதனுள் அடங்கி நின்ற செயப்படுபொருள் தோன்றக் குழையை என உருபை விரித்தல் அதற்கு இயல்பென்று உணர்க. இத்தெரி நிலையுங் குறிப்பும் இங்ஙனம் உருபை விரித்து நிற்றலினன்றே ஆசிரியர் ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி - எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற் றோன்று மதுவே என்றது. தெரிநிலைவினைத் தொழிற் பெயர் காலந்தோன்றி நின்றாற்போலக் கச்சினான் இல்லத்தான் என்றாற்போலுங் குறிப்புப் பெயரும் காலந்தோன்றி நிற்கும் என்பர் நச்சினார்க்கினியர். தன்னின முடித்தல் என்பதனால், ஐயாட்டையன், துணங்கையன் எனச் சிறுபான்மை காலமும் வினைசெய்யிடமும் பற்றி வினைக் குறிப்பு வருதலுங் கொள்க. காலம் குறிப்பொடு தோன்றலாவது, `இவன் திருவுடையன் என்றவழிச் சொல்வான் குறிப்புத் தொன்றுதொட்டுத் திருவுடையன் என்பதாயின், இறந்தகாலம் காட்டும். இப்பொழுது என்பதாயின் நிகழ்காலம் காட்டும். இனி என்பதாயின் எதிர்காலம் காட்டும் என விளக்குவர் தெய்வச்சிலையார். 214. அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையின் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியுங் குறிப்பே காலம். இதுவும் அது. (இ-ள்) அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்னும் பொருள் பற்றி வருவனவும் அவைபோல்வன பிறவுமாய்க் குறிப்புப் பொருண்மையொடு பொருந்தும் எல்லாச் சொல்லும் காலம் குறிப்பால் உணரப்படும் சொல்லாம். என்றவாறு. காலம் குறிப்பால் உணரப்படும் எனவே இவையும் வினைக் குறிப்பாம் என்றவாறு. (உ-ம்) அல்லன், அல்லள், அல்லர் எனவும், இலன், இலள், இலர் எனவும், உளன், உளள், உளர் எனவும், வல்லன், வல்லள், வல்லர் எனவும் வரும். இவை ஒருவாய்பாடேபற்றிப் பிறத்தலின் வேறு கூறினார். அன்ன பிறவும் என்றதனால், நல்லன், நல்லள், நல்லர்; தீயன், தீயள், தீயர்; உடையன், உடையள், உடையர் என்னும் தொடக்கத் தனவும் கொள்க. வினைக்குறிப்புச் சொற்கள் ஒப்புணர்த்தியும் பண்புணர்த்தி யும் குறிப்புணர்த்தியும் உடைமைக்கு மாறாயும் வருவன. ஒப்பாவது வினை பயன் மெய் உரு என்பனவற்றால் ஒன்றனை யொன்று ஒத்தல். பண்பாவது ஒரு பொருள் தோன்றுங் காலத்து உடன் தோன்றி அது கெடுமளவும் நிற்பது. உண்மையாவது ஒரு பொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்பது. குறிப்பாவது பொருட்குப் பின் தோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. வினைக்குறிப்பு இன்ன பொருள் பற்றி வரும் என இவ்விரு சூத்திரங்களாலும் ஆசிரியர் தொல்காப்பியர் கூறியதனை யுளங் கொண்ட பவணந்தியார், 320. பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னுறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. எனவரும் சூத்திரத்தால் குறிப்புவினைச் சொல்லினது பொது விலக்கணம் உணர்த்தினார். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரும் முதனிலையாக அவற்றின்கண் தோன்றி, மேல் கருத்தா முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைப் பொருள்களுள், கருத்தா ஒன்றையுமே விளக்குதல் வினைக் குறிப்புச் சொல்லினது இலக்கணமாம் என்பது இதன்பொருள். (உ-ம்) குழையினன், அகத்தினன், ஆதிரையான், குறுந்தாளன், கரியன், கடுநடையன் எனவரும். இவை பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்பவற்றால் ஒரு பொருளை வழங்குதற்குவரும் பெயராய் நில்லாது, இவன் குழையை யுடையனாயினான் என ஆறாம் வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும், அகத்தின்கண் இருந்தனன் என ஏழாம் வேற்றுமையது இடப்பொருட்கண்ணும், ஆதிரை நாளிற் பிறந்தான் என அவ்வேழாம் வேற்றுமையது காலப் பொருட்கண்ணும், குறுந்தாளையுடையன் என ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட்கண்ணும், கருவண்ண மாயிருப்பன் எனப் பண்பின்கண்ணும், கடுநடையாக நடப்பான் எனத் தொழிற் பண்பின்கண்ணும் வருதலின் வினைக்குறிப்புச் சொல்லாயின. இவை முன்பு வினைக்குறிப்பாய்ப் பின்பு பொருள் களை வழங்குதற்கு வரும் பெயராய் வரின், குறிப்பு வினையால ணையும் பெயராம். 215. பன்மையு மொருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இது, முற்கூறிய வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறியவந்த அத்தன்மைத்தாகிய குறிப்புப் பொருண்மை யுடையவாய் வரும் வினைச்சொல், உயர்திணையிடத்து மேற்கூறிய தெரிநிலை வினையோடு வேறுபாடின்றி ஒப்பன. என்றவாறு. தெரிநிலை வினையொடு ஒத்தலாவது, உயர்திணைத் தெரிநிலை வினைக்கு ஓதிய ஈறுகளுள் தமக்கு ஏற்பனவற்றோடு வினைக் குறிப்பு வந்தவழி, அவ்வவ் வீற்றால் அவ்வப்பாலும் இடமும் விளக்குதல். மேல், வினைக்குறிப்பு இன்ன பொருள்பற்றி வரும் என்றதல்லது இன்ன ஈற்றால் இன்னபால் விளக்கும் எனக் கூறாமையின் அதனை இங்குக் கூறினார் ஆசிரியர். தன்மையும் படர்க்கையும் உணர்த்தும் தெரிநிலைவினை யீறுகளுள் குறிப்புவினைக்கு ஏற்பன;- அம், ஆம், எம், ஏம், என், ஏன் என்னும் தன்மையீறு ஆறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர் என்னும் படர்க்கையீறு ஆறும் எனப் பன்னிரண்டாம். (உ-ம்) கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியென், கரியேன், எ-ம், கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எ-ம், அவ்வவ்வீறு அவ்வவ் இடமும் பாலும் விளக்கிய வாறறிக. ஒழிந்த பொருட்கண்ணும் ஒட்டுக. `ஆன், ஆள், ஆர், என்பன நிலப் பொருண்மைக்கண் அல்லது பிறபொருட்கண் பயின்று வாரா. வந்தனன் எனத் தெரிநிலைவினை, தொழின்மை மேற்படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்தியவாறு போல, உடையன் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்து தலுங் கொள்க. வந்தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்று மாறறிக. இஃது, அஃறிணை மருங்கின் - மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே என்பதற்கும் ஒக்கும். 216. அஆ வஎன வரூஉ மிறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. இது, முறையானே அஃறிணைத் தெரிநிலைவினையுள் பன்மை வினை கூறுகின்றது. (இ-ள்) அகரமும் ஆகாரமும் வகர வுயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றுசொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம். அகரம் மூன்று காலமும் பற்றிவரும். ஆகாரம், எதிர் மறை வினையாய் மூன்று காலத்திற்கும் உரித்தாயினும், எதிர் காலத்துப் பயின்றுவரும். அகரம், இறந்தகாலம் பற்றி வருங்கால் கடதற என்னும் (காலவெழுத்து) நான்கன்முன் அன் (சாரியை) பெற்றும், பெறாதும் வரும். ஏனை எழுத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி அன்பெற்றும் பெறாதும் வரும். நிகழ்காலத்தின்கண் நில், கின்று என்பவற்றோடு அன் (சாரியை) பெற்றும் பெறாதும் வரும். எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன் (சாரியை) பெற்றும் பெறாதும் வரும் என்பர் சேனாவரையர். இங்குக் கூறப்பட்ட காலவெழுத்துப் பற்றிய விளக்கமும் அவை பற்றிய நன்னூலார் விளக்கமும் முன்னர்க் கூறப்பட்டன. (உ-ம்) தொக்கன, தொக்க; உண்டன, உண்ட; வந்தன, வந்த; சென்றன, சென்ற. எ-ம், அஞ்சின எ-ம், போயின, போயன, போய எ-ம், உண்ணாநின்றன, உண்ணாநின்ற: உண்கின்றன, உண்கின்ற. எ-ம், உண்பன, உண்ப; வருவன, வருவ. எ-ம், வரும். வரிஞுவன வரிஞுவ என உகரத்தோடு ஏனையெழுத்துப் பேறும் ஏற்றவழிக் கொள்க. வருவ, செல்வ என்னுந் தொடக்கத்தன அகரவீறாதலும் வகரவீறாதலும் உடைய. ஆகாரம் காலவெழுத்துப் பெறாது, உண்ணா, தின்னா எனவரும். வகரம், உண்குவ, தின்குவ என எதிர்காலத்திற் குரித்தாய்க் குகரச்சாரியை பெற்றும், ஓடுவ, பாடுவ எனக் குகரம் பெறாதும் வரும். உரிஞுவ, திருமுவ என உகரச் சாரியை பெறுதலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்த எழுத்தோடும் இவ்வாறே ஒட்டுக. இச்சூத்திரத்தினை அடி யொற்றியமைந்தது, 328. அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே எதிர்மறைக் கண்ண தாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அஆ என்னும் இவ்விரு விகுதியினையும் இறுதியாக வுடைய மொழிகள் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினை முற்றும் குறிப்பு முற்றுமாகும். இவற்றுள் ஆகாரம் எதிர்மறை வினைக்கண் வரும்; (உடம்பாட்டுவினைக்கண் வாராது) என்பது இதன் பொருளாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் அஃறிணைப் பலவின்பாற் குரியனவாகக் கூறிய அ, ஆ, வ என்னும் மூன்றீறுகளுள் வகர வீற்றினை அகரவீற்றுள் அடக்கினார் நன்னூலார். வவ்வீறு அகர வீறாயடங்குதலானும், கள்ளீறு தானே நின்று ஒருவினைக் கீறாய் வாராமையானும் ஈண்டுக் கொண்டிலரென்க என மயிலைநாதர் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். 217. ஒன்றன் படர்க்கை தறட வூர்நத குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது அஃறிணை ஒருமைவினை கூறுகின்றது. (இ-ள்) ஒன்றனையுணர்த்தும் படர்க்கை வினையாவது, த, ற, ட என்னும் மெய்களையூர்ந்து நின்ற குற்றியலுகரத்தை ஈறாக வுடைய சொல்லாம். என்றவாறு. தகரவுகரம் மூன்றுகால வினைக்கண்ணும், றகரவுகரம் இறந்தகால வினைக்கண்ணும், டகரவுகரம் தெரிநிலை வினைக்கண் வாராது வினைக்குறிப்பின்கண்ணும் வருதலின் அம்முறையே வைக்கப்பட்டன. தகர வுகரம் இறந்தகால வினைக்கண் வருங்கால், புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞியது எனக் (கால எழுத்துக்களாய) கடதறவும் யகரமுமாகிய உயிர் மெய்ப்பின் வரும். (போனது என னகர வுயிர்மெய்ப்பின் வருதல் சிதை வெனப்படும்.) நிகழ் காலத்தின்கண் நடவா நின்றது, நடக்கின்றது, உண்ணா நின்றது, உண்கின்றது என நில், கின்று என்பனவற்றோடு (சாரியை) அகரம் பெற்றுவரும். எதிர்காலத்தின்கண் உண்பது, (செல்வது எனப் பகரமும் வகரமும் பெற்றுவரும். றகரவுகரம், புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென்றன்று எனக் (காலவெழுத்துக்களாகிய) கடதற என்பன வற்றின்முன் அன் (சாரியை) பெற்று வரும். கூயின்று, கூயிற்று; போயின்று, போயிற்று என ஏனையெழுத்தின்முன் இன்பெற்று வரும். ஆண்டு இன்னின் னகரம் திரிந்தும் திரியாதும் வருதல் கொள்க. `வந்தின்று என்பது, எதிர்மறுத்தலையுணர்த்துதற்கு வந்த இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை வினையாம். அஃது எதிர்மறையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் எனவரும் ஏனைப்பாற் சொல்லால் அறியப்படும் என்பர் சேனாவரையர். டகரவுகரம், குண்டு கட்டு, குறுந்தாட்டு எனவரும். இங்குக் கூறப்பட்ட அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை வினையினையுணர்த்துவது, 327. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கை டுக் குறிப்பினாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். து, று, டு, என்னும் இம்மூன்று குற்றியலுகர வீற்று விகுதி களையும் இறுதியாகவுடைய மொழிகள் அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாகும். இவற்றுள் டுவ்விகுதி குறிப்பின்கணன்றித் தெரிநிலைக்கண் வாராது என்பது இதன் பொருள். துவ்விகுதி தன்முன்னின்ற எழுத்துநோக்கி றுவ்விகுதி யாகவும் டுவ்விகுதியாகவும் திரிந்ததெனினும் அமையுமாதலின் றுவ் விகுதியும் டுவ்விகுதியும் துவ்விகுதியின்பிற் கூறப்பட்டன. குற்றியலுகர வீற்ற என்றமையான் எற்று என்றாற் போல ஏது, யாது என்பனவுங் காரணப் பெயராமன்றி வினைக் குறிப்புமாம் என்பதூஉம், அங்ஙனமாகவே ஒருமொழி யொழி தன்னினங் கொளற் குரித்தே என்பதனான் அது இது என்றற்றொடக்கத்து முற்றுகரவீற்றவும் வினைக்குறிப்பாம் என்பதூஉம் பெற்றாம் என்பர் சிவஞானமுனிவர். 218. பன்மையு மொருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டு மஃறிணை யவ்வே. இது, விரிந்தது தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பாலறிய வந்த அவ் ஆறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம். என்றவாறு. அ, ஆ, வ, து, று, டு என்னும் ஆறீறுகளே அஃறிணைக் கண் ஒருமையும் பன்மையும் உணர்த்துவன. இவையன்றிப் பிறிதில்லை என இச்சூத்திரத்தால் வரையறை செய்தவாறு. 219. அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும் ஒக்கு மென்ப எவனென் வினாவே. இஃது அஃறிணை இருபாற்கும் உரியதோர் வினைக்குறிப்புக் கூறுகின்றது. (இ-ள்) எவன் என்னும் வினாச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை இரண்டு பாற்கும் ஒப்பவுரியது என்று சொல்லுவர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) அஃதெவன், அவையெவன் எனவரும். னகரவீறாய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனை வேறுகூறினார். எவன் என்பதோர் பெயரும் உண்டு. அஃது இக்காலத்து `என் என்றும், `என்னை என்றும் நிற்கும் ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்பு முற்று என்பர் சேனாவரையர். எவன் என்பது பெயராயிற் படுத்த லோசையாற் கூறப்படும். 349. எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால். என்பது நன்னூல். வினாப் பொருண்மையைத் தரும் எவனென்னும் வினைக் குறிப்புமுற்று. அஃறிணையிருபாற்கும் பொது வினையாம் என்பது இதன் பொருள். 220. இன்றில வுடைய வென்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். இஃது அஃறிணை வினைக்குறிப்புக் கூறுகின்றது. (இ-ள்) இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள எனச் சொற்பற்றிவரும் ஏழும், பண்புகொள் கிளவி, பண்பினாகிய சினைமுதற் கிளவி, ஒப்பொடு வரூஉங் கிளவி எனப் பொருள்பற்றி வரும் மூன்றும் ஆகப் பத்தும் வினைக்குறிப்புச் சொல்லாம். என்றவாறு. இவற்றுள் பண்புகொள் கிளவி என்பது நிறமுதலிய பண்புணர்த்துஞ் சொல்லைத் தனக்கு முதனிலையாகக் கொண்டது. பண்பினாகிய சினைமுதற்கிளவி என்பது, மேற்குறித்த பண்பொடு பொருந்திய சினையொடு முதலையுணர்த்துஞ் சொல். ஒப்பொடு வரூஉங் கிளவி என்பது, உவமப் பொருள்பற்றி வரும் சொல். (உ-ம்) இன்று - கோடின்று, செவியின்று; இல - கோடில, செவியில; உடைய - கோடுடைய, செவியுடைய; அன்று - நாயன்று, நரியன்று; உடைத்து - கோடுடைத்து, செவியுடைத்து; அல்ல - உழுந்தல்ல, பயறல்ல; பண்புகொள்கிளவி - கரியது, கரிய; உள - உழுந்துள, பயறுள; பண்பினாகிய சினைமுதற்கிளவி - குறுங்கோட்டது, குறுங்கோட்டன; ஒப்பொடு வரூஉங்கிளவி - பொன்னன்னது, பொன்னன்ன; எனவரும். மேற்குறித்தவற்றுள் இன்று, இல; உடைத்து, உடைய; அன்று, அல்ல, உள என்பன ஒருமையும் பன்மையுமாகிய சொல்நிலையை யுணர்த்தின. அல்லன பொருள் நிலையை யுணர்த்தின. உள என்னும் பன்மைக்கு இல என்னும் பன்மை எதிர் மறையாம். இதற்கு `உளது என்னும் ஒருமையீறு சிறுபான்மையாதலிற் கூறிற்றிலர். `உடைத்து என்னும் ஒருமையும் `உடைய என்னும் பன்மையும் பெரும்பான்மை உறுப்பின் கிழமையும் பிறிதின் கிழமையும் பற்றி வரும். இன்று, இல என்பன இவ்வுடைமைக்கு மறுதலையாய் நிற்கும். அன்று, அல்ல என்பன முறையே ஒருமையும் பன்மையும் உணர்த்தும். ஒன்றென முடித்தலான் நன்று, தீது, நல்ல, தீய என்பனவுங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். 221. பன்மையு மொருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வருஉங் காலக் கிளவி யஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இஃது அவ் வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த அத்தன்மைத்தாகிய இலக்கணமுடைய வினைக்குறிப்புச் சொற்கள், அஃறிணையிடத்து மேற்கூறிய தெரிநிலை வினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல. என்றவாறு. வேறுபாடில என்றது, அஃறிணையிடத்துத் தெரிநிலை வினைக்கோதிய ஈற்றுட் பொருந்துவன வினைக்குறிப்பின் கண்ணும் வருங்கால் அவ்வவ்வீற்றால் இடமும் பாலும் உணர்த்துதலில் வேறுபாடில எனத் தெளிவித்தவாறாம். அகரவீறும், து, று என்னும் ஈறுகளும் அவ்வீறு பற்றிப் பாலும் இடமும் உணர்த்துதல் முற்காட்டியவற்றுட் காண்க. ஆகாரவீறு `இம்மணி பொல்லா என எதிர்மறைக்கண் வந்தது. `கதவ (கதத்தினையுடைய) என வகரவீறு பன்மைப் பாலுணர்த்தியது. 222. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் பிரிவு வேறுபடுஉஞ் செய்திய வாகி இருதிணைச் சொற்கும் ஓரன்ன வுரிமைய. இஃது இருதிணைக்கும் உரிய வினைச் சொற்களின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) முன்னிலை முதலாகச் செய்த என்பது ஈறாகக் கூறிய முறையால் நின்ற எண்வகைச் சொல்லும், (பொதுமையிற்) பிரிந்து (ஒருகால் உயர்திணையுணர்த்தியும் ஒருகால் அஃறிணை யுணர்த்தியும்) வேறுபடுந் தொழிலையுடையவாய், இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த வுரிமையுடையன. என்றவாறு. முன்னிலை வினைச்சொல்லாவது முன்னின்றான் தொழி லுணர்த்துவது. வியங்கோள் என்பது ஏவற்பொருளதாய் வருவது. வியம் - ஏவல். வியங்கோள் - ஏவற்பொருளைக் கொண்ட வினைச்சொல். வாழ்த்துதல் முதலிய பிற பொருளு முளவேனும் மிகுதிபற்றி வியங்கோள் எனப் பெயர்பெற்றது. வினையெஞ்சு கிளவி என்பது, வினைச்சொல்லை எச்சமாகவுடைய வினைச் சொல். இன்மை செப்பல், இல்லை இல் என வரும் வினைச் சொற்கள். வேறு என் கிளவி - வேறு என்னும் சொல். செய்ம்மன என்பது மனவீற்று முற்றாய் எதிர்கால முணர்த்தும் வினைச் சொற்களைக் குறிக்கும் வாய்பாடு. செய்யும் என்பது, முற்றும் எச்சமும் ஆகிய இருநிலைமையு முடைத்தாய் உம்மீற்றான் நிகழ்கால முணர்த்தும் வினைச்சொல் வாய்பாடு. செய்த என்பது அகரவீற்றுப் பெயரெச்சமாய் இறந்தகால முணர்த்தும் வினைச் சொல் வாய்பாடு, செய்ம்மன, செய்யும், செய்த என்னும் இம் மூன்று வாய்பாட்டானும், அவ்வீறுகளை யுடையனவாய்க் கால முணர்த்தும் உண்மன, உண்ணும், உண்ட என்னும் தொடக்கத்தன எல்லாம் தழுவப்பட்டன. எல்லாத் தொழிலும் செய்தல் வகையா யடங்குமாதலின் செய் என்னும் பொதுவாய்பாடு எல்லாத் தொழில்களையும் அகப்படுத்து நிற்கும் எனவே செய் என்னும் பொதுவாய்பாட்டால் நட வா முதலிய எல்லாவீற்று வினைப்பகுதிகளும் தழுவப்படுவனவாயின. இருதிணைப் பொதுவினைகளாகத் தொல்காப்பியனார் கூறிய இவற்றுடன் தன்மை வினைச்சொல்லையும் உள என்னும் அஃறிணைப் பன்மையினோடொத்த ஒருமை வினையாகிய உண்டு என்பதனையும் சேர்த்து, 329. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். தன்மைவினை வினைக்குறிப்பு முற்றும், முன்னிலை வினை வினைக்குறிப்பு முற்றும், வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும், பெயரெச்சவினை வினைக்குறிப்பும், வினை யெச்சவினை வினைக்குறிப்பும் இருதிணைக்கும் பொது வினையாம் என்பது இதன் பொருள். பெயரெச்சமாயும் முற்றாயும் வரும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொல் `ஈரெச்சம் என்பதனுள் பெயரெச்ச மாயடங்குதலானும், செய்ம்மன என்னும் வாய்பாட்டு வினைச் சொல் தம் காலத்துப் பெருகவழங்காமையானும் அவ்விரு வாய்பாடுகளையும் பவணந்தியார் இச் சூத்திரத்து எடுத்தோ தாராயினார். 223. அவற்றுள், முன்னிலைக்கிளவி இஐ ஆயென வரூஉ மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். இது, முன்னிலையொருமைச் சொற்கள் இருதிணைப் பால்களுக்கு உரியவாமாறு கூறுகின்றது. (இ-ள்) கூறப்பட்ட விரவு வினைகளுள் முன்னிலை வினைச் சொல்லாவது இகரவீறும் ஐகாரவீறும் ஆயீறுமாகிய மூன்றுமாம்; (அவை உயர்திணையுள்) ஒருவனுக்கும் ஒருத்திக்கும் (அஃறிணை யுள்) ஒன்றற்கும் ஒப்பவுரியன. என்றவாறு. இகரம் தடற வூர்ந்து எதிர்காலம் பற்றிவரும். ஐகாரம் அம்மீற்றிற்குரியனவாக முற்கூறிய எழுத்துப்பெற்றும், ஆயீறு ஆமீற்றிற் குரியனவாக முற்கூறிய எழுத்துப் பெற்றும் மூன்று காலமும் பற்றி வரும். (உ-ம்) உரைத்தி, உண்டி, தின்றி, எ-ம். உண்டனை, உண்ணா நின்றனை, உண்பை. எ-ம். உண்டாய், உண்ணா நின்றாய், உண்பாய். எ-ம். வரும். ஒழிந்த எழுத்தோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. `ஐய சிறிதென்னை ஊக்கி என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வந்தது. இனி, ஒரு காலத்திற்கேயேற்கும் இகரம் முற்கூறினமையின், உண், தின், கிட, நட, வா, போ என்னுந் தொடக்கத்தன கொள்க என்றார் இளம்பூரணர். இவ்வுரைக் குறிப்பினைக் கூர்ந்து நோக்குங் கால் நட, வா, போ எனவரும் வினைப் பகுதிகளே இ, ஐ, ஆய் முதலிய விகுதி வேண்டாது முன்னிலை யொருமையை யுணர்த்தி நிற்கும் என்பது இளம்பூரணர் கருத்தெனக் கொள்ள வேண்டியுளது. உண்ணாய், தின்றாய், நடவாய், கிடவாய், என ஆய் என்னும் ஒருமை விகுதியொடு புணர்ந்து நின்று ஒருமையுணர்த்தி யனவே ஆய் விகுதி கெட உண், தின், நட, கிட, என நின்றன என்பது, செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே (54) எனவரும் எச்சவியற் சூத்திரத்தாற் பெறப்படும் என்பது சேனா வரையர் கருத்தாகும். இவ்விருவேறு கருத்துக்களுள் இளம்பூரணர் கருத்தைத் தழுவியமைந்தது, 334. ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉம் எல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே. எனவரம் நன்னூற் சூத்திரமாகும். ஐ, ஆய், இ என்னும் இம்மூன்று விகுதியீற்றனவான முற்றுவினைகளும், ஏவற்பொருளில்வரும் இருபத்து மூன்றீற்றன வான வினைச்சொற்களும் (ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும்) முப்பாலொருமைகளையும் உணர்த்தும் முன்னிலை வினைச் சொற்களாம் என்பது இதன் பொருளாகும். இதன்கண் `ஏவலின்வரூஉம் எல்லாவீற்றவும் என்றது, நட என்பது முதல் அஃகு என்பதுவரை இருபத்துமூன்று ஈற்றனவாக முன் விரித்துரைக்கப்பட்ட செய்யென்னும் வாய்பாட்டு ஏவல்வினைப் பகுதிகளை, இந்நுட்பம், 136. நட வா மடி சீ விடுகூ வேவை நொப் போ வௌ வுரிஞ் உண்பொருந் திரும்தின் தேய் பார் செல் வவ் வாழ்கேள் அஃகு என்று செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. எனவரும் நன்னூற் சூத்திரத்தால் நன்கு புலனாதல் காணலாம். இவ்விரு சூத்திரங்களையும் ஒருங்கு வைத்துணருங்கால் நட, வா, உண், தின் என்றற்றொடக்கத்து முதனிலைகளே ஆய் முதலிய விகுதியோடு புணராது தனித்து நின்று ஓசை வேறுபாட்டால் முன்னிலை யேவலொருமை யெதிர்கால வினை முற்றுப் பொருண்மையுணர்த்துவன என்பது பவணந்தியார் கொள்கை யாதல் நன்கு விளங்கும். இம்மூன்று விகுதியீற்றனவான முற்றும், ஏவலின் வரும் இருபத்து மூன்றீற்றவான மொழிகளும் ஒருமை முப்பாலையும் உணர்த்தும் முன்னிலை வினைக்குறிப்பு முற்றுக்களாம் எனவரும் மயிலைநாதர் உரையினால் நன்னூலார் கொள்கை தெற்றெனப் புலனாதல் காணலாம். 224. இர் ஈர் மின் என வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனைய வென்மனார் புலவர். இது, முன்னிலைப் பன்மை வினைச்சொல் இவையென்று உணர்த்துகின்றது. (இ-ள்) இர், ஈர் மின் என்னும் ஈற்றையுடைய மூன்று சொல்லும் பல்லோர்கண்ணும் பலவற்றின்கண்ணும் சொல்லுதற் கண் ஒத்தவுரிமைய என்பர் ஆசிரியர். என்றவாறு. இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஈர் ஈறு ஆர் ஆற்றிற்குரிய எழுத்துப் பெற்றும் மூன்று காலமும் பற்றிவரும். மின் ஈறு பிறவெழுத்துப் பெறாது ஏற்றவழி உகரம் (சாரியை) பெற்று எதிர்காலம் பற்றிவரும் என்பர் சேனாவரையர். (உ-ம்) உண்டனிர், உண்ணா நின்றனிர், உண்குவிர், எ-ம். உண்டீர், உண்ணாநின்றீர், உண்குவீர் எ-ம். உண்மின், தின்மின், உரிஞுமின் எ-ம். வரும். முன்னிலை வினைக்குறிப்பு, உயர்திணை வினைக் குறிப்பிற்கு ஓதிய பொருள் பற்றி ஐ, ஆய், இர், ஈர் என்னும் நான்கீற்றவாய் வரும். (உ-ம்) கழலினை, கழலினாய், கழலினிர், கழலினீர் என வரும். ஏனையவற்றோடும் இவ்வாறேயொட்டிக் கொள்க. இகர வீறு குறிப்புவினைக்கு வாராது. முன்னிலைப் பன்மைவினையும் வினைக்குறிப்புமாகிய இவற்றை, 336. இர் ஈ ரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை முன்னிலை மின்னவற் றேவல். எனவரும் சூத்திரத்தித்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். மின் அவற்று ஏவல் என்றமையான் உண்ணும், தின்னும் நீர் என உம் ஈற்றவாய் வரும் பன்மையேவல் புதியன என்பதூஉம், அவை `புதியன புகுதலும் வழுவல என்பதனான் அமையு மென்பதூஉம் பெற்றாம் என்பர் சிவஞானமுனிவர். 225. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே. இது, முற்குறித்த விரவுவினைகளுள், முன்னிலை யொழித்து ஒழிந்தவற்றின் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) முன்னிலை வினையொழித்து ஒழிந்த ஏழு வினைச் சொல்லும் மூன்றிடத்தொடும் பொருந்தி ஐந்து பாலுக்கும் உரியனவாம்; தத்தம் பொருட்கண் தோன்றுமிடத்து. என்றவாறு. இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப் பாற்கும் உரியவாதலெய்தினும் பின்னர் விலக்கப்படுவன ஒழித்து ஒழிந்த இடமும் பாலும் கொள்க. (உ-ம்) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவைசெல்க எ-ம். உண்டு வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம் எ-ம். அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அஃது இல்லை, அவை இல்லை, யான் இல்லை, யாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை எ-ம். அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு, யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு எ-ம். அவன் உண்மன, அவள் உண்மன, அவர் உண்மன, அஃது உண்மன, அவை உண்மன, யான் உண்மன, யாம் உண்மன, நீ உண்மன, நீயிர் உண்மன எ-ம். அவன் உண்ணும் உணவு, அவள் உண்ணும் உணவு, அவர் உண்ணும் உணவு, அஃது உண்ணும் உணவு, அவை உண்ணும் உணவு, நீ உண்ணும் உணவு, நீயிர் உண்ணும் உணவு. எ-ம். அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எ-ம். அவன் உண்ட உணவு, அவள் உண்ட உணவு, அவர் உண்ட உணவு, அஃது உண்ட உணவு, அவை உண்ட உணவு, யான் உண்ட உணவு, யாம் உண்ட உணவு, நீ உண்ட உணவு, நீயிர் உண்ட உணவு எ-ம். வரும். தொல்காப்பியனார் குறித்த விரவு வினைக்குறிப்பாகிய வேறு இல்லை என்பவற்றுடன் உண்டு என்னும் வினைக் குறிப்பினையும் சேர்த்து, 338. வேறில்லை யுண்டைம் பால் மூவிடத்தன. என இவை மூன்றும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார். இவற்றுள் `உண்டு என்பது அஃறிணை யொருமைக்கேயுரியதாயினும் தம் காலத்தில் பொது வினையாக வழங்குதல் கண்ட பவணந்திமுனிவர் அதனை ஈண்டுப் புதியன புகுதலாகக் கொண்டுரைத்தார். 226. அவற்றுள், முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடும் மன்னா தாகும் வியங்கோட் கிளவி. இஃது எய்தியது. விலக்கிற்று. (இ-ள்) மேல் எஞ்சிய கிளவி எனப்பட்ட ஏழனுள், வியங்கோள்வினை, முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத் தோடு நிலைபெறாதாகும். என்றவாறு. மன்னுதல் என்றது, பெரும்பான்மையும் நிகழுதல் எனக் கொண்டு, முன்னிலை தன்மை என்னும் இரண்டிடத்தும் செல்வன வாகிய வியங்கோள் வினைச்சொல் சிறுவரவின என்பர் இளம்பூரணர். (உ-ம்) நீர் செல்க, நீ செல்க, யான் செல்க எனவரும். இவ்வாறு தன்மை முன்னிலையிடங்களில் சிறு வரவின எனக் குறித்த வியங்கோள் வினை, தம் காலத்துப் பெருவரவினவாய் வழங்குதல் கண்ட பவணந்தி முனிவர், 337. கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப. எனச் சூத்திரஞ் செய்தார். கயவென்னும் இரண்டு உயிர்மெய்யினையும் ரகர வொற்றினையும் இறுதியாகவுடையன வியங்கோள் வினை முற்றாம். அவை மூவிடத்தினும் ஐம்பாலினும் ஆக எங்கும் செல்லுமென்று கூறுவர் புலவர் என்பது இதன் பொருளாகும். வியம் - ஏவல். வியங்கோள் - ஏவற் பொருண்மையைக் கொண்ட வினை. `ஆ வாழ்க என வாழ்த்துதற் பொருளிலும் `யானும் நின்னோடு உடனுறைக என வேண்டிக் கோடற் பொருளிலும் வரும். தொல்காப்பியர் வியங்கோளீறு இவையென விளங்க எடுத்துரையாராயினும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் (தொல் - எழுத்து) என அகரவீறும் `சொல் வரைந் தறியப் பிரித்தனர் காட்டல் என அல்லீறும், மறைக்குங்காலை மரீஇய தொரால் என ஆலீறும் வியங்கோள் விகுதிகளாக உடம்பொடு புணர்த்துக் கூறியுள்ளமை காணலாம். எனினும், பவணந்திமுனிவர் காலத்து வியங்கோள் விகுதிகளாகப் பெருக வழங்கியவை க, இய, இயர் என்பனவாதலின் `கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் என இம்மூன்றையுமே வியங்கோள் விகுதிகளாகக் குறித்துள்ளார். 227. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா. இதுவும் அது. (இ-ள்) பல்லோர் படர்க்கையும், முன்னிலையும், தன்மையு மாகிய அப்பொருட்கண் வரும் மூன்றும் நிகழ்காலத்து வரும் செய்யும் என்னும் முற்றுச் சொல்லொடு பொருந்தா. என்றவாறு. எனவே படர்க்கையில் உயர்திணை ஆணொருமை பெண் ணொருமை, அஃறிணை ஒருமை பன்மை என்னும் நான்கு பால் களினும் வரும் என்பதாம். நிகழுங்காலத்துச் செய்யும் என்னும் கிளவி என அச்சொல்லால் தோன்றும் காலம் உணர்த்தியவாறு. செய்யுமென்னும் முற்றுச்சொல் உயர்திணைப் பன்மைப் படர்க்கையிடத்தும் முன்னிலையிடத்தும் தன்மையிடத்தும் வருதலில்லை என்னும் இவ்விதியினை, 347. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார் பவணந்திமுனிவர். 228. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி. இது வினையெச்ச வாய்பாடுகளைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என ஈற்றால் வகைப் படுத்தப் பட்ட அவ் ஒன்பது வாய்பாடுகளும் வினையெச்சச் சொல்லாம் என்றவாறு. அவ்வகை ஒன்பதும் என்றது, உ, ஊ, பு, என, இயர், இய, இன், அ, கு என இறுதிநின்ற இடைச்சொல்லால் வேறுபட்ட ஒன்பது வாய்பாடுகளம் என்றவாறு. வினையெச்சமாவது வினையை ஒழிபாகவுடைய சொல்; அது மற்றொரு வினைச் சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும் வினைச்சொல்லாதலிற் பாலுணர்த்தாது காலங்காட்டி நிற்கும். `செய்து என்னும் வாய்பாட்டில் வினையெச்ச விகுதியாகிய உகரம், நக்கு, உண்டு, வந்து, சென்று எனக் கடதற ஊர்ந்து இயல்பாயும், எஞ்சி, உரிஞி, ஓடி என ஏனையெழுத்தூர்ந்து இகரமாய்த் திரிந்தும், ஆய், போய் என நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான்கெட்டும் இறந்த காலம் பற்றி வரும். உகரம் ஒன்றாய்நின்று கடதறவூர்ந்து உடன்பாட்டு வினைக்கண் பயின்று வருதலானும், எதிர்மறை யெச்சமெல்லாம் பெரும் பான்மையும் உகரவீறாயல்லது வாராமையானும் உகரவீறே இயல்பெனவும் இகரமும் யகரமும் அதன் திரிபெனவும் விளக்குவர் சேனாவரையர். `செய்யூ என்னும் வாய்பாட்டில் ஊகாரம், உண்ணூஉ வந்தான், தின்னூஉவந்தான் எனப் பின்வருந் தொழிற்கு இடையின்றி, முன்வருந் தொழில்மேல் இறந்தகாலம் பற்றி வரும். செய்யாவென்னும் வினையெஞ்சு கிளவியும் என எழுத்ததி காரத்திற் கூறப்படும் `செய்யா என்னும் ஆகாரவீற்று வினை யெச்சமும் `செய்யூ என்னும் இவ்வாய்பாட்டில் அடங்கும். அது, உண்ணாவந்தான் என இறந்தகாலம் பற்றி வரும். `செய்பு என்னும் வாய்பாட்டில் பகரவுகரம் `நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகுபு வந்தான் - நகரநின்று வந்தான் என்பது பொருள் - `செய்தென என்னும் வாய்பாட்டில், எனவென்பது கடதற வூர்ந்து, முடிக்குஞ் சொல்லால் உணர்த்தப்படுந் தொழிற்குத் தான் காரணம் என்பதுபட இறந்தகாலம் பற்றி வரும். (உ-ம்) சோலை புக்கென வெப்பம் நீங்கிற்று; உண்டெனப் பசி கெட்டது; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று எனவரும். `செய்யியர், `செய்யிய என்னும் வாய்பாடுகளில் இயர், இய என்பன உண்ணியர் வந்தான், உண்ணிய வந்தான் என எதிர்காலம் பற்றி வரும். போகியர், போகிய என இவ்விகுதிகள் சிலவிடங்களில் ககரம் (சாரியை) பெற்று வருதலும் கொள்ளப்படும். `செயின் என்னும் வாய்பாட்டில் இன் என்பது `மழை பெய்யிற் குள நிறையும் என எதிர்காலம் பற்றிக் காரணப் பொருட்டாய் வரும். நடப்பின் உரைப்பின் என ஏற்ற வழிப் பகரம் பெற்றுவருதலும் கொள்க. `செய என்னும் வாய்பாட்டில் அகரம், `மழை பெய்யக் குளம் நிறைந்தது என இறந்த காலமும், `ஞாயிறு பட வந்தான் என நிகழ்காலமும், `உண்ணவந்தான் என எதிர் காலமும் ஆகிய மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப, உரைக்க என ஏற்றவழிப் பகரமும் ககரமும் பெறுதல் கொள்க. `செயற்கு என்னும் வாய்பாட்டில் குகரம், `உணற்கு வந்தான் என எதிர்காலம் பற்றிவரும். `செயற்கு என்னும் இவ்வினையெச்சம் செயல் + கு = செயற்கு என உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும் பெயரும் உருபும் பகுப்பப் பிளவு பட்டிசைத்தல் போன்று பிளவுபடாது ஒன்றுபட்டி சைத்தலால் உருபேற்ற தொழிற்பெயர் வேறெனவே கொள்ளப்படும். செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய என்னும் வினையெச்ச வாய்பாடுகள் ஐந்தும் இக்காலத்து வழக்கினுள் வாராவாயினும் சான்றோர் செய்யுளுள் அவற்றது வேற்றுமை யெல்லாம் கண்டுணர்ந்து கொள்ளலாம். 229. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியு மவற்றியல் பினவே. இதுவும் ஒருசார் வினையெச்ச வாய்பாடு உணர்த்துகின்றது. (இ-ள்) பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும் ஈற்றினையுடையவாய் வருவனவும், அவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைச்சொற்களாம். என்றவாறு. (உ-ம்) `நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார் என இறந்தகாலம் பற்றியும், `நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்ப துண்டோ என எதிர்காலம் பற்றியும் பின்னீறு வரும். `மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என் முன்னீறு இறந்தகாலம் பற்றிவரும். காலீறு `விடுத்தக்கால் என இறந்த காலமும், `நாடுங் கால் என நிகழ்காலமும் எதிர்காலமும் ஆகிய மூன்றுகாலமும் பற்றிவரும். `தூவாமை வந்தக்கடை எனக் கடையீறு இறந்தகாலம் பற்றிவரும். `உரைத்தவழி `உரைத்தவிடத்து என இறந்தகாலமும், `உரைக்கும் வழி `உரைக்குமிடத்து என நிகழ்காலமும் எதிர்காலமுமாகிய மூன்றுகாலமும் பற்றி வழியீறும் இடத்தீறும் வரும். இங்குக் கூறப்பட்ட பின் முன் முதலாயின காலங் கண்ணிய வினைச் சொல்லீறுகளாய்ப் பிளவுபடாது ஒன்று பட்டிசைத்த வழியே இவை வினையெச்ச வாய்பாடுகளாகக் கொள்ளப்படும். `கூதிர் போய வின் வந்தான், எனவும் `நின்ற விடத்து நின்றான் எனவும் இவை பிளவுபட்டிசைத்த வழிப் பெயரெச்சத் தொடர்களாகக் கொள்ளப்படும். `அன்ன மரபிற் காலங்கண்ணிய என்ன கிளவியும் என்றதனால் உண்பாக்கு, வேபாக்கு எனவரும் பாக்கீறும் உண்பான், வருவான் எனவரும் ஆனீறும், `நடக்கலும் எனவரும் உம்மீறும் `அற்றால் எனவரும் ஆலீறும், `அவா வுண்டேல் எனவரும் ஏலீறும், `கூறாமல் எனவரும் மல்லீறும், `கூறாமை எனவரும் மையீறும் வினையெச்ச விகுதிகளாகக் கொள்ளப்படும். `என்ன கிளவியும் என்றதனால், அன்றி, இன்றி, அல்லது, அல்லால் எனவரும் குறிப்பு வினையெச்சமும் கொள்க என்பர் சேனாவரையர். வினையெச்சமாவது இதுவென உணர்த்தப்போந்த நன்னூலார், 341. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே. என்றார். செயலையும் காலத்தையும் காட்டிப் பால் தோன்றாது வினையெஞ்ச நிற்பது வினையெச்சமாம். என்பது இதன் பொருள். தொல்காப்பியனார் முதற்கண்குறித்த வினை யெச்ச வாய்பாடுகள் ஒன்பதுள் செய்யூ என்பதனுள் அடங்கிய செய்யா என்பதனைத் தனி வாய்பாடாகக் கொண்டும், அவர் குறித்த செயற்கு என்னும் வாய்பாட்டினையும் பின்முன் முதலிய பிற வாய்பாடுகளும், `இன்ன என்பதனால் அடக்கியும், அவர் கூறாத வான், பான், பாக்கு என்பனவற்றைச் சேர்த்தும், 342. செய்து செய்யு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினையெச் சம்பிற ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும். எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் எனவரும் ஒன்பது வாய்பாடுகளும். வான், பான், பாக்கு என்பவற்றை ஈறாகவுடைய வினைப்பகுதி களும் இவை போல்வன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் ஐந்தும் இறந்தகாலமும், செய என்னும் வாய்பாடு ஒன்றும் நிகழ்காலமும், எஞ்சிய ஆறும் எதிர்காலமும் காட்டுவனவாம் என்பது இதன் பொருளாகும். பிறவென்ற மிகையானே செயவென்பது நிகழ்காலமே யன்றி எதிர்காலமுங் காட்டுமெனக் கொள்க என்பர் மயிலைநாதர். 230. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. இது, வினையெச்ச வாய்பாடுகளுள் முதல் நின்ற மூன்றற்கும் முடிபு கூறுகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட பதினைந்து வினை யெச்சத்துள், முதற்கண் நின்ற செய்து, செய்யூ, செய்பு என்னும் மூன்றும் தன் கருத்தாவின் வினையால் முடியும். என்றவாறு. வினைமுதல் - கருத்தா. `வினைமுதல் முடிபின என்றது, இம் மூன்றும் வாய்பாட்டு வினையெச்சங்களும் தம் தொழிலுக்குரிய வினைமுதலாகிய தன் கருத்தாவின் வினையைக் கொண்டே முடிவன என்பதாம். (உ-ம்) உண்டு வந்தான், உண்ணூ வந்தான், உண்குபு வந்தான் எனவரும். உண்ணூ வந்தான் என்பது இப்பொழுது வழக்கினுள் `உண்ணா வந்தான் என நடக்கும் என்பர் இளம்பூரணர். 231. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இதுவும், அம்மூன்றற்கும் முடிபு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) `வினைமுதல் முடிபின எனக் கூறப்பட்ட அம் மூன்று வாய்பாடும், சினை வினையாக நின்று சினைவினையோடு முடியாது முதல் வினையோடு முடியினும் வினையால் ஒரு தன்மைய என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. வினையால் ஒரு தன்மைய என்றது முதல்வினையோடு முடியினும் முதலொடு சினைக்கு ஒற்றுமையுண்மையால் பிற கருத்தாவின் வினையைக் கொண்டனவாகா; தன் கருத்தாவின் வினையைக் கொண்டனவேயாம் என்றவாறு. (உ-ம்) கையிற்று வீழ்ந்தான், கையிறூ வீழ்த்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். ஈண்டு இறுதல் கையாகிய சினையின் தோழில். வீழ்தல் கையினையுடையானாகிய முதலின் தொழிலாம். 232. ஏனை யெச்சம் வினைமுத லானும் ஆனவந் தியையும் வினைநிலை யானும் தாமியன் மருங்கின் முடியு மென்ப. இஃது ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய மூன்றுமல்லாத பிறவினையெச்சங்கள் தன் கருத்தாவின் வினையாலும் அவ்விடத்து வந்து பொருந்தும் பிற கருத்தாவின் வினையாலும் வரையரையின்றித் தாம் இயலும் வகையால் முடியும் என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. ஆன - அவ்விடத்து. ஆன் - அவ்விடம். (உ-ம்) மழை பெய்தெனப் புகழ்பெற்றது; மழை பெய்தென மரந் தளிர்த்தது எனவும், மழை பெய்யியர் எழுந்தது; மழை பெய்யியர் பலி வழங்கினார் எனவும், மழை பெய்யிய முழங்கும்; மழை பெய்யிய வானைப் போற்றுதும் எனவும், மழைபெய்யிற் புகழ்பெறும்; மழை பெய்யிற் குள நிறையும் எனவும், மழை பெய்யப் புகழ்பெற்றது; மழை பெய்ய மரந்தளிர்த்தது எனவும், மழை பெய்தற்கு முழங்கும்; மழைபெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும், இறந்தபின் இளமை வாராது; கணவன் இனிது உண்டபின் காதலி முக மலர்ந்தாள் எனவும் முதனிலை மூன்றுமல்லாத எனைய வினையெச்சங்கள் தன் கருத்தாவின் தொழிலையும் பிற கருத்தாவின் தொழிலையுங் கொண்டு முடிந்தவாறு கண்டு கொள்க. ஏனைய வற்றோடும் இவ்வாறே இருவகையும் இயைத்துக் காண்க. தொல்காப்பியர் கூறிய இம்மூன்று சூத்திரப் பொருள் களையும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தன, 343. அவற்றுள், முதலி னான்கும் ஈற்றின் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற. 344. சினைவினை சினையொடு முதலொடும் செறியும். எனவரும் நன்னூற் சூத்திரங்களாகும். முதற்கண் கூறப்பட்ட செய்து, செய்பு, செய்யா, செய்யூ, என்னும் நான்கு வாய்பாடுகளும், இறுதியிற் கூறப்பெற்ற வான், பான், பாக்கு, என்னும் மூன்றும் வினைமுதல் வினைகொண்டு முடியும்; இடைநின்ற ஐந்தும். `இன் என்றதனால் வருவன பிறவும் வினைமுதல் வினையையும் பிறிதின் வினையையும் கொண்டு முடியும் என்பதும், முதலின் நான்கும் என்ற வினையெச்சங்கள் சினைவினையாயின் அவை தம் முதல்வினையாகிய சினை வினையைக் கொண்டு முடிதலேயன்றி வினைமுதல் வினையைக் கொண்டு முடிதலும் உண்டு என்பதும் இவற்றின் பொருளாகும். 233. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. இது, வினையெச்சங்கள் அடுக்கியவழிப் படுவதொர் முறைமை கூறுகின்றது. (இ-ள்) வினையெச்சச் சொல்தாம், சொற்கள் தோறும் முற்றுப்பெறாது பலவாற்றானும் அடுக்கிவரினும், இறுதிக்கண் நின்றது முடிய அதனால் ஏனையவும் பொருள்முடிவு பெற்றனவாம். என்றவாறு. வினையெஞ்சு கிளவி சொல் முறை முடியாது பன்முறை யானும் அடுக்குந வரினும் முன்னது முடியப் பொருள் முடியும் என இயைத்துரைக்க. பன்முறையனும் - பலவாற்றானும். பலவாற்றானும் அடுககி வருதலாவது ஒரு வாய்பாட்டாலும் பல வாய்பாட்டானும் அடுக்கி வருதல். சொன்முறை முடியாமை யாவது தம்மொடு தாமும் பிறசொல்லும் பொருளால் முடியாமை. (உ-ம்) `உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் என்புழிச் செய்தென்னும் ஒரு வாய்பாட்டு எச்சம் பல அடுக்கிவந்து முன்னுள்ள `பாடி என்பது `வந்தான் என்னும் வினைகொண்டு முடிய அம்முடிபே பின்நின்ற எச்சங்களுக்கும் முடிபாயிற்று. எனவே அது முடியாக்கால் ஒழிந்த எச்சங்கள் முடியா என்பதாம். இவ்வாறே `உண்டு, பருகூத் தின்குபு வந்தான் எனப்பல வாய்பாட்டு எச்சங்கள் முறையே அடுக்கி வந்து, தின்குபு என்னும் முன்னது முடிய, பின்னின்ற ஏனையவும் அதனையே முடிபாகக் கொண்டு முடிந்தமை காண்க. உண்டு வந்தான், தின்று வந்தான் எனச் சொல்தோறும் வினையியைதல் மரபு. அவ்வாறு நில்லாது தம்முள் இயைபில் லாதன அடுக்கி வந்து இறுதியில் நின்ற வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல்லால் ஏனைய எச்சங்கள் எல்லாம் முடியினும் குற்றமாகாது என வழுவமைத்தவாறு. வினையெச்சம் பன்முறையானும் அடுக்கி ஒரு சொல்லால் முடியும் எனவே, பெயரெச்சம் ஒரு முறையான் அடுக்கி ஒரு சொல்லால் முடியும் என்பதாம். `நெல்லரியும் இருந்தொழுவர் (-புறம் - 24) என்னும் பாட்டினுள் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் பல அடுக்கி மிழலை என்னும் ஒருபொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வினையெச்சம் பல அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதல் போன்று, பெயரெச்சங்களும் தெரிநிலையும் குறிப்பு மாகிய வினைமுற்றுக்களும் வேற்றுமை யுருபுகளும் அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதலை அறிவுறுத்துவது, 354. உருபுபல அடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்ச மீறுற முடியும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். உருபு ஒன்றே அடுக்கியும் பல மயங்கி அடுக்கியும் வினைச் சொற்கள் மூன்றும் (தம்முள் விரவாது) வேறு வேறடுக்கியும் வந்தாலும், தத்தம் எச்சம் இறுதியிலே ஒன்றுவர அதனோடு அனைத்தும் முடிவனவாம் என்பது இதன்பொருள். `உருபுபல அடுக்கினும் என்னும் உம்மையால் உருபு ஒன்றேயடுக்கி வருதலும், கொள்ளப்படும். (உ-ம்) சாத்தன் யானையது கோட்டை நுனிக்கட் பொருட்கு வாளாற் குறைத்தான் என வேற்றுமையுருபுகள் பலவடுக்கிக் குறைத்தான் என்னும் ஒருமுடிபு கொண்டன. இவற்றுள் `யானையது கோட்டை என்புழி அதுவென்னும் ஆறனுருபு அடுக்கன்று. `சாத்தனைக் கொற்றனைத் தேவனைப் பூதனை வாழ்த்தினான் எனவும், சாத்தனுகுக் கொற்றனுக்குத் தேவனுக்குப் பூதனுக்குத் தந்தை எனவும் இரண்டாமுருபும் நான்காமுருபும் அடுக்கி வந்து முறையே வாழ்த்தினான் என்னும் ஒரு வினையும் தந்தை என்னும் ஒருபெயரும் கொண்டு முடிந்தன. `உண்டான், தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் எனவும், `வருதி பெயர்தி வருந்துதி துஞ்சாய் பொருதி புலம்புதி நீயும் எனவும், `இளையள் மெல்லியள் மடந்தை எனவும் `அரிய சேய பெருங்கான் யாறே எனவும் வினைமுற்றும் குறிப்பு முற்றும் வேறுபல அடுக்கி, முறையே சாத்தன், நீ, மடந்தை, யாறு என்னும் ஒரு பெயர் கொண்டன. `கற்ற கேட்ட பெரியோர் எனவும் `சிறிய பெரிய நிகர்மலர்க்கோதை எனவும் தெரிநிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புப் பெயரெச்சமும் அடுக்கிவந்து முறையே பெரியோர், மலர்க்கோதை என்னும் ஒருபெயர் கொண்டன. `கற்றுக் கேட்டு அறிந்தார், எனவும் `விருப்பின்றி வெறுப்பின்றி இருந்தார் எனவும் தெரிநிலைவினை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் அடுக்கிவந்து முறையே அறிந்தார், இருந்தார் என்னும் ஒருவினை கொண்டன. வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சமாகிய மூவகை வினைச்சொற்களும் வேறுவேறு அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதற்கு, எனைத்துமுற் றடுக்கினு மனைத்துமொரு பெயர்மேல் நினைத்துக்கொள நிகழு நிகழ்த்திய முற்றே, வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும் பலபல வடுக்கினு முற்று மொழிப்படிய என்பது அகத்தியம் என மேற்கோள் காட்டுவர் மயிலை நாதர். 234. நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. இது, பெயரெச்சம் உணர்த்துகின்றது. (இ-ள்) செய்யும், செய்த என்னும் சொற்கள் (தொழில் முதனிலை எட்டனுள் இன்னதற்கு, இது பயனாக என்னும் இரண்டும் நீங்கலாக) நிலம், பொருள், காலம், கருவி, வினைமுதல், வினை என்னும் இந்த ஆறுபொருட்கும் ஒத்தவுரிமைய. என்றவாறு. வினைமுதற் கிளவி என்றது வினைமுதற் பொருளை. தொழில் முதனிலை எட்டனுள் ஆறு பொருட்கும் ஒத்தவுரிமைய எனவே ஒழிந்த இரண்டற்கும் இவை ஒப்பவுரியவாகா, சிறுபான்மை உரியன என்றவாறாம். (உ-ம்) வாழும் இல், கற்கும் நூல், துயிலுங் காலம், வனையுங் கோல், ஓதும் பொர்ப்பான், உண்ணும் ஊண் எனச் செய்யும் என்னும் பெயரெச்சத்து உம்மீறு கால எழுத்துப் பெறாது நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்த்தி நிலன் முதலாய ஆறு பொருட்கும் உரித்தாய் வந்தது. புக்க வீடு, உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து இறுதி அகரம் க, ட, த, ற, ய, ன என்னும் எழுத்துக்களை ஊர்ந்து நிலன் முதலாய அறுபொருட்கும் உரித்தாய் வந்தது. நோய்தீரும் மருந்து, நோய் தீர்க்கும் மருந்து என்னும் ஏதுப்பொருண்மை கருவிக்கண் அடங்கும். அரசன் ஆகொடுக்கும் பார்ப்பான்; ஆ கொடுத்த பாப்பான் எனவும், ஆடை வெளுக்குங் கூலி; ஆடை வெளுத்த கூலி எனவும் இன்னதற்கு, இது பயனாக என்னும் இரண்டற்கும் இப் பெயரெச்சங்கள் சிறுபான்மையுரிய வாய் வந்தன. செய்த என்னும் தெரிநிலை வினைப் பெயரெச்சத்தின் குறிப்பாய் வரும் இன்ன, அன்ன, என்ன, கரிய, செய்ய என்பனவும் இங்குக் குறிப்புப் பெயரெச்சமாகக் கொள்ளப்படும். உண்டான்சாத்தன், மெழுகிற்றுத்திண்ணை என்புழி உண்டான் மெழுகிற்று என்னும் முற்றுச்சொல், முறையே வினை முதலும் செயப்படு பொருளுமாகிய சாத்தன், திண்ணை என்னும் பொருட்கு உரியவாமாறு போல, செய்யும், செய்த என்னும் இவ்விருவகைப் பெயரெச்சமும் நிலன் முதலாய அறுவகைப் பொருட்கும் உரியவாம் என இச்சூத்திரத்தால் அவற்றது அறு பொருட்குரிமையாகிய பொருண் முடிபு உணர்த்திய ஆசிரியர், பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே (எச்சவியல்) எனவருஞ் சூத்திரத்தால் இப்பெயரெச்சங்களின் சொன்முடிபு உணர்த்துகின்றார் என விளக்குவர் சேனாவரையர். பெயரெச்சத்திலக்கணமுணர்த்தும் இச்சூத்திரப் பொருளை யுளங்கொண்ட பவணந்திமுனிவர், 339. செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு செய்வ தாதி யறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. எனச் சூத்திரஞ் செய்தார். செய்த செய்கின்ற செய்யும் என்னும் வாய்பாட்டால் முக்காலமும் தொழிலும் தோன்றி (வினைமுற்றுதற்கு வேண்டும்) பால் ஒன்றும் தோன்றாது, செய்பவன் கருவி நிலம் செயல்காலம் செயப்படுபொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயரும் எஞ்ச நிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக்களாம் என்பது இதன் பொருள். பாட்டு என்றது வாய்பாட்டினை. நிற்பது என்பது தொகுதி யொருமை. செய்த என்னும் வாய்பாடு இறந்த காலத்தையும், செய்யும் என்னும் வாய்பாடு நிகழ்கால எதிர் காலங்களையும் குறிப்பன எனக்கொண்ட தொல்காப்பியனார், பெயரெச்சங்களை யெல்லாம் செய்யும், செய்த என்னும் இரண்டு வாய்பாடுகளில் அடக்கினார். பெயரெச்ச விகுதியாகிய அகரம் `வினைப் பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டு (திருவாசகம் - கண்ட பத்து - 2) என்றாற்போன்று நிகழ்காலத்திலும் பயின்று வழங்குவீற்று நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டினையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்த, செய்கின்ற, செய்யும் எனப் பெயரெச்ச வாய்பாடுகள் மூன்றெனக் குறித்தார். இதற்கு நிகழ்காலங் கொள்ளாதார் கோளும் அறிந்து கொள்க எனவரும் மயிலை நாதர் உரைக் குறிப்பு, `செய்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாடு புதியன புகுதல் என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தல் காண்க. (உ-ம்) நின்ற ஒருவன், நிற்கின்ற ஒருவன், நிற்கும் ஒருவன் எனவரும். இவ்வாறே எனையவற்றோடும் ஒட்டுக. கரிய கொற்றன், செய்ய கோல் என்பன பெயரெச்ச வினைக்குறிப்புக்களாம். ஓடாக்குதிரை, பாடாப் பாணன் என்புழி ஓடா, பாடா எனவரும் எதிர்மறைப் பெயரெச்சங்கள், ஓடாமையைச் செய்த, பாடாமையைச் வாய்பாடாகவே கொள்ளத்தக்கன என்பர் மயிலைநாதர். காலமும் வினையுந் தோன்றிப்பால் தோன்றாது பெயர் கொள்ளும்மது பெயரெ சம்மே என்றார் அகத்தியனார் எனப் பெயரெச்சத்திலக்கணமாகப் பழஞ்சூத்திரமொன்றை மேற்கோள் காட்டுவர் மயிலைநாதர். இப்பெயரெச்சங்கள் காரணப் பொருட்டாயும் காரியப் பொருட்டாயும் இவ்விருதிறத்தவாயும் வரும் என்பர் சிவஞான முனிவர். 235. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே. இது, செய்யும் என்பதற்கு ஓர் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) செய்யுமென்னுஞ்சொல், நிலமுதலாகிய அறுவகைப் பொருளோடுங் கூடி வருங்கால், முன்னர் விலக்கப் பட்ட பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை மூவகைக்கும் உரியதாய் வரும். என்றவாறு. (உ-ம்) உண்ணும் அவர், உண்ணும் நீ, உண்ணும் யான் என மூவகைக்கும் உரியதாய் வந்தவாறு காண்க. அவற்றொடு - நிலமுதலாக முற்கூறப்பட்ட அறுவகைப் பொருளொடு. செய்யுமென் கிளவி அவற்றொடு வருவழி எனவே செய்யுமென்கிளவி நிலமுதலாய அவற்றொடு வருதலும் வாரா மையுமாகிய இரு நிலைமையுமுடையதென்பது பெறப்படும். நில முதலாகிய அவற்றொடு வரும் நிலைமை பெயரெச்சம் எனவும், வாராநிலைமை முற்று எனவும், `பிறிதோர் சொல்லோடு இயையாது தாமே தொடராதற்கு ஏற்கும் வினைச்சொல் முற்றாம். பிறிதோர் சொற்பற்றியல்லது நிற்றலாற்றா நிலைமை எச்சமாம் எனவும் விளக்கம் தருவர் சேனாவரையர். 236. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இஃது இருவகை யெச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) பெயரெச்சமும் வினையெச்சமும் செய்தலாகிய பொருளினவன்றி அச் செய்தற் பொருண்மையை எதிர்மறுத்துச் சொல்லினும் தம் எச்சப் பொருண்மையில் திரியா. என்றவாறு. பொருணிலையாவது, தம் எச்சமாகிய பெயரையும் வினையையுங் கொண்டன்றி முடியாத நிலைமை. செய்யும், செய்த எனவும், செய்து, செய்யூ, செய்பு, எனவும் முறையே பெயரெச்சமும் வினையெச்சமும் உடன்பாட்டு வாய்பாட்டால் ஓதப்பட்டமை யால், `செய்யா என்னும் பெயரெச்ச எதிர் மறையும் `செய்யாது என்னும் வினையெச்ச எதிர்மறையும் ஆகிய வாய்பாடுகள் ஆண்டு அடங்காமையின் அவை எச்சமாதல் பெறப்படாது; அதனால் அவ்வெதிர்மறை வாய்பாடுகளும் தத்தம் எச்சப்பொருண்மையில் திரியாது முறையே பெயரும் வினையும் கொண்டு முடிவனவாம் என இச்சூத்திரத்தால் எய்தாதது எய்துவித்தார் ஆசிரியர். (உ-ம்) உண்ணா இல்லம், உண்ணாச் சோறு, உண்ணாக் காலம், வனையாக் கோல், ஓதாப் பார்ப்பான், உண்ணாஊண் எனவும், உண்ணாது வந்தான், உண்ணாமைக்குப் போயினான் எனவும் வரும். உண்ணா என்பதும், உண்ணாத என்பதும், உண்ணும் உண்ட என்னும் வாய்பாடுகளின் எதிர்மறையாம். உண்ணாது என்பது, உண்டு, உண்ணூ, உண்குபு என்பவற்றின் எதிர்மறை. உண்ணா மைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உணற்கு என்பன வற்றிற்கும், செயற்கு என்பதுபட வரும் உண்ண என்னும் செயவெ னெச்சத்திற்கும் எதிர்மறை. உண்ணாமை, உண்ணாமல் என்பனவும் அதற்கு எதிர்மறையாம். முற்றுச் சொற்களையெல்லாம் ஈறுபற்றி ஓதினாராகலின், உண்டிலன், உண்ணாநின்றிலன், உண்ணலன், உண்ணான் எனவரும் எதிர்மறையும் பொருள் நிலை திரியாமை ஆண்டு அடங்கும் என்பர் இளம்பூரணர். வினைச்சொற்கள் எதிர்மறுத்துரைத்தற்கண் தத்தம் பொருள் நிலை திரியாதவாறு போல, வேற்றுமையுருபுகளும் எதிர்மறுத்துச் சொல்லுமிடத்துத் தத்தம் உருவினின்றும் திரியாதனவாய் வரும். இவ்விரு விதிகளையும் இணைத்துக் கூறும் முறையில் அமைந்தது, 353. உருபும் வினையும் எதிர்மறுத் துரைப்பினும் திரியா தத்தமீற் றுருபி னென்ப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எட்டு வேற்றுமையுருபுகளும் மூவகை வினைச்சொற்களும், அவற்றின் பொருளை எதிர்மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் ஈற்றினின்றும் அவ்வவ்வுருபினின்றும் வேறுபடா என்று சொல்லுவர் புலவர் என்பது இதன் பொருள். உருபின் என்புழிவரும் இன்னுருபினை ஈற்று என்பதன் கண்ணும் கூட்டித் `தத்தம் உருபின் ஈற்றின் திரியா என எதிர் நிரனிறையாகப் பொருள் கொள்க. (உ-ம்) சாத்தன் வாரான், குடத்தை வனையான், வாளால் எறியான், புல்லர்க்கு நல்கான், நிலையின் இழியான், பொருளினது இன்மை, தீயர்கட் சாரான், சாத்தா சாயல் எனவும், நடவான், நடவாத, நடவாது எனவும் வரும். நடத்தல், நடவாமை என்பன தொழிற் பெயராதலின் ஈறுதிரிந்தன. ஓடாக் குதிரை ஆனாவறிவு என்றற்றொடக்கத்தன ஓடாத ஆனாத என்பவற்றைக் குறைத்து வழங்கினவன்றி ஈறு வேறுபட்டன அல்ல. ஓர் வினை நிகழுங்கால் அவ்வினைக்குக் கருத்தாவும் செயப்படுபொருளும் முதலியவாகப் பெயர்ப் பொருளை வேற்றுமை செய்துநின்ற உருபுகள், அவ்வினை நிகழாக் காலத்தும் அவ்வாறு பெயர்ப்பொருளை வேற்றுமை செய்து நிற்றலானும், வினைவிகுதிகளும் அவ்வினை நிகழுங்கால் முற்றின்கண் கருத்தாவையும் எச்சங்களிற் பெயரொழிபையும் வினையொழிபையும் தந்து நின்றாற்போல, வினை நிகழாக் காலத்தும் அவ்வாறு தந்து நிற்றலானும், உருபும் வினையும் எதிர்மறுத்துரைப்பினும் தத்தம் உருபின் திரியர், தத்தம் ஈற்றின் திரியா என இங்ஙனம் கூறப்பட்டன. 237. தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். இது பெயரெச்ச வினையெச்சங்களின் இடை நிகழும் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) தத்தம் எச்சமாகிய பெயரொடும் வினையோடும் இயையுங் குறிப்புடைய எந்தச் சொல்லாயினும் இவ்வெச்சத்திற்கும் அவற்றான் முடிவனவாகிய தமக்கும் இடையே நிற்றலை நீக்கார் ஆசிரியர், என்றவாறு. (உ-ம்) கொல்லுங் காட்டுள் யானை; கொன்ற காட்டுள் யானை எனவும், உழுது சாத்தன் வந்தான்; உழுது ஏரொடு வந்தான் எனவும் வரும். சிவணுதல் - இயைதல், வரைதல் - நீக்குதல். சிவனுங் குறிப்பின் நீக்கார் எனவே, சிவணாக் குறிப்பின் நீக்குவர் என்பதாம். சிவணாக் குறிப்பினவாவன, உறுதியாகப் பின் வரும் எச்சத்தோடு இயைந்து நில்லாது நிலைமொழியாக நின்ற சொல்லொடும் தாமே இயைந்து கவர்பொருள் தருவன. உண்டு விருந்தொடு வந்தான் என்ற வழி, விருந்தொடு உண்டு வந்தான் என்ற வழி, விருந்தொடு உண்டு என வினையெச்சத்தோடும் இயைதலிற் பொருள் கவர்க்கும். `வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல்யானைப் பெருவழுதி என்றவழி வல்லம் எறிதல் பெருவழுதிக்கேயன்றி நல்லிளங் கோசர்க்கும் ஏற்கமாகலின் பொருள் கவர்க்கும். இவ்வாறு கவர்படு பொருள்பட இடை நிற்பன சிவணாக்குறிப்பினவாகும். `எச்சொல் லாயினும் என்றதனால் `உழுது ஓடிவந்தான்; கவளங் கொள்ளாக் களித்த யானை என எச்சச்சொற்களும் இடைநிற்றல் கொள்ளப்படும். அறத்தை அரசன் விரும்பினான்; உண்டான் பசித்த சாத்தன் என ஏனைத் தொடர்க்கண்ணும் பிறசொல் இடை நிற்றல் ஒன்றென முடித்தலாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். இவ்வாறு பெயரெச்ச வினையெச்சங்களும் வேற்றுமை யுருபுகளும் முற்றுவினைகளும் கொண்டுமுடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையிலே, அவற்றொடு பொருந்துங் குறிப்பினை யுடைய பிறசொற்கள் நிற்றலை `இடைப்பிறவரல் என நீக்காது அறிஞர் ஏற்றுக்கொள்வர். இதனை விளக்குவது, 355. உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும் பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். உருபுகளும் முற்றுவினைகளும் பெயரெச்ச வினை யெச்சங்களும் தாம்தாம் கொள்ளும் பெயர்க்கும் வினைக்கும் நடுவே அவ்விடத்திற்குப் பொருந்துவனவாகிய பிறசொற்கள் வரவும் பெறும் என்பது இதன் பொருளாகும். உம்மை - எதிர்மறை. இடைப்பிறவருதல் ஒருதலையன்று என்பதாம். (உ-ம்) அறத்தை அழகுபெருகச் செய்தான்; வந்தான் அவ்வூர்க்குப்போன சாத்தான், வந்த அவ்வூர்ச் சாத்தன், வந்து சாத்தன் இற்றைநாள் அவனூர்க்குப் போயினான் எனவரும். 238. அவற்றுள், செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம் அவ்விட னறிதல் என்மனார் புலவர். இது, செய்யும் என்பதன் ஈறுகெடுமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திற்கு ஈற்றின் மேல் நின்ற உகரம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும். அவ்வாறு கெடுமிடம் அறிக என்பர் ஆசிரியர். என்றவாறு. கெடுமிடம் அறிக என்றது, செய்யும் என்பதன் ஈற்றின் மேல்நின்ற உகரம் எல்லாவிடத்தும் கெடாது; இன்ன இடத்தில் தான் கெடும் என வரையறுக்கவும் படாது; சான்றோர் வழக்கிலும் செய்யுளிலும் வந்தவழிக் கண்டுகொள்க என்பதாம். (உ-ம்) வாவும் புரவி, போகும் புழை என்பன, ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. `செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங்கெடும் எனவே, செய்யும் என்னும் முற்றுச் சொல்லுக்க ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும், மெய்யொழித்துங் கெடுமென்பதாம் என்பர் சேனாவரையர். (உ-ம்) `அம்பலூரும் அவனொடு மொழிமே `சாரல் நாட என் தோழியுங் கலுழ்மே எனவரும். மொழிமே என்புழி மொழியும் என்பதன் ஈற்றுமிசையுகரம் யகர மெய்யொடுங் கெட்டமையும், `கலுழ்மே என்புழி ஈற்றுமிசையுகரம் ழகரமெய் கெடாது நிற்பத் தான் கெட்டமையும் காண்க. செய்யுமென்னும் முற்றுக்குரிய இவ்வியல்பினை இச்சூத்திரத்திலுள்ள `அவ்விடனறிதல் என்பதனால் தழுவிக் கொள்வர் இளம்பூரணர். இச்சூத்திரத்தில் செய்யுமென்னும் பெயரெச்சத்திற் குரியதாகத் தொல்காப்பியர் கூறிய விதியையும், இது கொண்டு செய்யுமென்னும் முற்றுக்குரியனவாக உரையாசிரியர் உய்த் துணர்ந்து கூறிய விதியையும் இயைத்து விளக்கும் முறையில் அமைந்தது, 340. செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம்முந் தாகலும் முற்றேல் உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உளவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் இறுதி உயிர்மெய் கெடுதலும், செய்யுளகத்து அவ்வெச்சத்தின் இறுதி உம்மை `உந்து எனத் திரிதலும், செய்யும் என்பது முற்றாயின் அதனிறுதி உயிரேனும் உயிர்மெய்யேனும் கெடுதலும் உளவாம் என்பது இதன் பொருளாகும். `செய்யுளுள் உம் உந்து ஆம் எனவே, உயிர்மெய் கெடுதலும் செய்யுமென்னும் முற்றின் உயிர் கெடுதலும், உயிர்மெய் கெடுதலும் ஆகிய ஏனையவை, வழக்கு, செய்யுள் ஆகிய ஈரிடத்தும் ஆமென்பதும், `முற்றேல் எனவே, செய்யுமென்னும் பெயரெச்சமே செய்யுமென்னும் முற்றாம் என்பதும், சேறலும் ஆகலும் ஏகலும் எனவரும் இழிவுசிறப் பும்மைகளால் இத்திரிபுகள் ஒருதலையல்ல என்பதும் நன்கு பெறப்படும். 239. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். இஃது இறந்தகாலச்சொல் ஏனைக்காலச் சொல்லொடு இயையு மாறு கூறுகின்றது. (இ-ள்) செய்து என்னும் வினையெச்சத்தினது இறந்த காலம் வாராக்காலத்தை எய்தும் இடமுடைத்து. என்றவாறு. செய்து என் எச்சத்து இறந்தகாலம் என்றது, அவ்வெச்சத்தை முடிக்கும் சொல்லான் உணர்த்தப்படும் தொழிற்கு அவ்வெச்சத் தான் உணர்த்தப்படும் தொழில் முன்நிகழ்தலை. அது வாராக் காலத்தை எய்துதலாவது, அத்தகைய முன்னிகழ்வு சிதையாமல், செய்து என்னும் எச்சம் எதிர்காலத்து வருதல். வாராக்காலம் - எதிர்காலம். (உ-ம்) நீ உண்டு வருவாய்; உழுது வருவாய் எனச் `செய்து என்னும் வாய்பாட்டு எச்சம், தனக்குரிய இறந்தகாலம் சிதையாமல் எதிர்காலத்து வந்தமை காணலாம். `எய்திடனுடைத்தே வாராக்காலம் என்றதனான், `உண்டு வந்தான், உழுது வந்தான் எனச் செய்து என்னும் எச்சம் இறந்த காலத்து வருதலே அதன் இலக்கணம் என்பதாம். ஒன்றென முடித்தலாற் செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் ஒழிந்த எச்சங்கட்கும் இம்மயக்கங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். செய்து என்னும் வினையெச்சமுணர்த்தும் காலநுட்பம் பற்றிய இவ்விதி, சுருக்க நூலாகிய நன்னூலில் இடம் பெற்றிலது. 240. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொற் கிளத்தல்வேண்டும். இது நிகழ்காலச் சொல் ஏனைக் காலங்களையும் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) மூன்று வகைப்பட்ட நிலைமையினையுடைய காலங்களிலும் உளதாம் இயல்பினைப் பொருந்திய எவ்வகைப் பட்ட பொருள்களையும் நிகழ்காலத்திற்குரித்தாய் (ஏனைக் காலங்களையும் உள்ளடக்கி) நிற்கும் பொருள் நிலைமையை யுடைய செய்யும் என்னும் பொதுச் சொல்லாற் சொல்லுதல் வேண்டும் ஆசிரியன். என்றவாறு. `எம்முறைச் சொல்லும் என்புழிச் சொல் என்றது, பொருளை. நிகழ்காலமுணர்த்தும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச் சொல், முக்காலத்திற்கும் பொதுவாய், முற்றும் பெய ரெச்சமுமாய் நிற்றல் நோக்கி `நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் என்றார். முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைப் பொருளுமாவன, மலையது நிலையும் ஞாயிறு திங்களது இயக்கமும் முதலாயின. அவற்றை இறந்தகாலச் சொல்லானும் எதிர்காலச் சொல்லானும் ஏனை நிகழ்காலச் சொல்லானும் சொல்லாது இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யுமென்னுஞ் சொல்லாற் சொல்லுக என்றவாறு. பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் எனவே, செய்யுமென்னும் முற்றாலும் பெயரெச்சத்தாலும் கூறுக என்பதாம். (உ-ம்) மலை நிற்கும்; ஞாயிறு இயங்கும்; திங்கள் இயங்கும் எனவும், வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந் தண்கடல் வையத்து எனவும் வரும். இச்சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 332. முக் காலத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இங்கு `நிகழுங்காலம் என்றது நிகழ்காலமுணர்த்தும் செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல்லை. `நிகழுங் காலத்து மெய்ந்நிலைபொதுச்சொல் எனத் தொல்காப்பியனார் சுட்டியதும் இதுவே. யாறு ஒழுகும், மலை நிற்கும், நிலம் கிடக்கும், நீர் குளிரும், தீச்சுடும், வளியுளரும் - பண்டும் இன்றும் மேலும் என முக்காலப் பொதுவாக்குக. என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் மயிலைநாதர். 241. வாராக்காலத்தும் நிகழுங் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனார் புலவர். இது விரைவின்கண் நிகழ்காலமும் எதிர்காலமும் இறந்தகாலத் தொடு மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருதன்மையவாக வரும் வினைச்சொற் பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளையுடைய. என்றவாறு. சோறு உண்பதற்குக் காலந்தாழ்த்த நிலையில் உண்ணா திருந்தானை ஓரிடத்திற்குச் செல்ல வேண்டுங் குறையுடையா னொருவன் `இன்னும் உண்டிலையோ என வினவியவழி, உண்ணாதிருந்தானாகிய அவன் `உண்டேன் போந்தேன் என்பான்; உண்ணாநின்றானும் `உண்டேன் போந்தேன் என்பான். இவ்வாறு எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரிய பொருளை விரைவு பற்றி நிகழ்காலத்தாற் கூறுதல் உலக வழக்கில் இன்றும் காணலாம். தொழில் முடிந்தன அல்லவாயினும் சொல்லுவான் கருத்து வகையால் முடிந்தனபோல இறந்தகாலத்தில் வைத்துக் கூறப்படுதலின் `இறந்தகாலத்துக் குறிப்பொடு கிளத்தல் என்றார். நிகழ்காலப் பொருண்மையும் எதிர்காலப் பொருண்மையும் எனப் பொருள் இரண்டாகலான் `விரைந்த பொருள எனப் பன்மையாற் கூறினார். 242. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. இது, மிக்கது ஒன்றன்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ் காலத்தொடு மறுங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மிக்கதன்கண் நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம்மிக்கதனது பண்பைக் குறித்து வரும் வினைமுதற்சொல், சுட்டிச் சொல்லப் படுவதோர் வினைமுதல் இல்லாவிடத்து நிகழ்காலத்தான் உறுதிபெறத் தோன்றும் பொருளையுடையதாம். என்றவாறு. முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுள் தெய்வம் (ஊழ்) சிறந்தமையான், அதற்குக் காரணமாகிய தவஞ் செய்தல் தாயைக்கோறல் முதலாகிய தொழிலை `மிக்கது என்றார். தெய்வமாகிய இருவினை மிக்கதன்கண் வினைச்சொல்லாவன தவஞ் செய்தான், தாயைக் கொன்றான் என்னுந் தொடக்கத்தன. அப்பண்பு குறித்த வினைமுதற்கிளவியாவது, சுவர்க்கம் புகும், எனவும், ஒருவன் தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும் மிக்கதன் வினைச் சொல் நோக்கி, அம்மிக்கத்தான் வந்தவாறு கண்டு கொள்க என இச் சூத்திரப் பொருளை விளக்குவர் சேனாவரையர். மிக்கதன் மருங்கின் வினைச்சொல் என்றது, நன்மையும் தீமையும் ஆகிய பயன் விளைப்பதில் மிக்குத் தோன்றும் நன்றுந் தீதுமாகிய செயலினைக் குறித்த வினைச்சொல்லை. உலகிற் பெரும் பாலோரால் உடன்பட்டுரைக்கும் மிகுதியுடைமை பற்றி `மிக்கது எனப்பட்டது. அஃது அறம் பாவம் என்னும் வினைப் பாகுபாடு. அப்பண்பு குறித்த வினைமுதற்கிளவி என்றது, மிக்கதாகிய அத்தொழிற் பயனுறுதல் அவ்வினைமுதலுக்கு இயல்பாதலைக் குறித்த சொல். அவையாவன துறக்கம் புகுதல் நிரயம் புகுதல் முதலாயின. இத்தொழிற்கு வினைமுதல் இன்னார் என ஒருவரைக் குறித்துச் சுட்டப்படாத பொதுநிலையில் என்பார், `செய்வது இல்வழி என்றார். செய்வது - வினைமுதல். தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப்படுவதனை நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவாயினும் அமைகவென வழுவமைத்தவாறு. 243. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி இருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இது, ஒருசார் முற்றுச்சொற் பொருள்தரும் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) இந்தச் செயலைச் செய்தல் வேண்டும் என்று சொல்லப்படும் முற்றுச்சொல், அச்செயலைச் செய்வானாகிய தன்னிடத்தும் அவன் செயலை வேண்டியிருப்பானாகிய பிறனொரு வனிடத்தும் என இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மை யுடைத்தாம். என்றவாறு. (உ-ம்) முருகன் ஓதல் வேண்டும் என்புழி, வேண்டும் என்னும் முற்றுச்சொல், முருகன் என்பது எழுவாயாய் வேண்டும் என்னும் பயனிலையோடு முடிந்தவழி அவ்வேண்டுதல் முருகனது தொழிலாய்த் தன்பாலும், முருகன் என்னும் எழுவாய் ஓதல் என்னும் தொழிற்பெயர் கொண்டவழி இவ்வேண்டுதல் தந்தை தாய் தொழிலாய்ப் பிறன்பாலும் நின்றவாறு காண்க. 244. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்தற் குரிமையு முடைத்தே. இது ஒருசார் வினைச்சொல் தரும் பொருள்வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) வலியுறுத்தற்கு வரும் வினாவினையுடைய வினைச் சொல், வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத் துணர்த்துதற்கு உரித்தாதலுமுடைத்து. என்றவாறு. வினாவுடைய வினைச்சொல் - வினாவெழுத்தாகிய ஆ ஏ ஓ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகவுடைய வினைச்சொல். ஒருவன் வெகுளி காரணமாகவோ அன்றிக் கள்ளுண்டு களித்தல் காரணமாகவோ தெளிவின்றி ஒருவனை வைதான். அவன் தெளிவுபெற்ற நிலையில் அதனால் வையப்பட்ட மற்றொருவன் அவனை நோக்கி, `நேற்று நீ என்னை வைதாய் என்று கூறியபோது, அவன் தான் வைதவை யுணராமல் `வை தேனே என மற்றவனை நோக்கி வினவுதலுமுண்டு. `வைதேனே என்னும் வினாவுடை வினைச்சொல்லாகிய அது `வைதிலேன் என்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தவாறு காணலாம். வினாவுடை வினைச் சொல் லாகிய இது, சொல்லுவான் குறிப்பு வகையால் எதிர்மறைப் பொருளுணர்த்திற்று. வினை நிகழ்ச்சியை யுணர்த்த வேண்டிய வினைச்சொல் வினை நிகழாமையை யுணர்த்துதல் வழுவாயினும் அமைக என மரபுவழுவமைத்தவாறு. 245. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. இஃது எதிர்கால வினைச்சொல் இறந்தகாலத்தோடும் நிகழ் காலத்தோடும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) எதிர்காலத்திற்குரிய வினைச்சொற் பொருண்மை இயற்கையாதலையும் தெளியப்படுத்தலையும் சொல்லுமிடத்து இறந்தகாலச் சொல்லாலும் நிகழ்காலச் சொல்லாலும் விளங்கத் தோன்றும். என்றவாறு. வாராக்காலம் - எதிர்காலம். இயற்கை என்பது இயல்பாகிய தன்மை முதலாயினவற்றால் உணரப்படுவது, தெளிவு என்பது சான்றோர் தெளிந்துகூறிய நூற்பொருட்டெளிவால் வருவது. ஒரு காட்டின்கண் போவோர் அங்குக் கள்வரால் உடை முதலியன கவர்ந்து கொள்ளப்படுதல் அந்நிலத்தின் இயல்பு என்பதனைத் துணிந்தார், உடை முதலியன கவர்ந்து கொள்ளப் படா முன்னரே `இக்காட்டுட் போகிற் கூறை கோட்பட்டான், கூறை கோட்படும் என்று கூறுதல் உலகியல் வழக்கு. எறும்பு தன் முட்டையினைக் கொண்டு மேட்டு நிலத்திற்கு ஏறிச் செல்லின் மழை செய்யும் என்பதனை நூலால் தெளிந்துணர்ந்தார், எறும்பு முட்டைகொண்டு திட்டையேறியவழி, மழைபெய்யா முன்னும் மழை பெய்தது, பெய்யும் என்பர். இங்கு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்தகாலத்தாலும் நிகழ்காலத்தாலும் தோன்றியவாறு காண்க. `வாராக் காலத்தும் நிகழுங்காலத்தும் (241) எனவும் `மிக்கதன் மருங்கின் (242) எனவும் வாராக் காலத்து வினைச் சொற்கிளவி (245) எனவும் வரும் இம்மூன்று சூத்திரங்களாலும் தொல்காப்பியனார் குறித்த வினைச்சொற்களின் காலமயக்கம் பற்றிய விதிகளை முறையே தொகுத்துக் கூறும் நிலையில் அமைந்தது, 383. விரைவினு மிகவினுந் தெளிவினு யியல்பினும் பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். விரைவு, மிகுதி, தெளிவு, இயற்கை என்னும் இந்நான்கும் பற்றி முக்காலமும் தம்முள் மயங்கி வரவும்பெறும்; ஏற்குமிடத்து என்பது இதன் பொருளாகும். `உம்மையான் மயக்கம் ஒருதலையன்று என்பர் மயிலை நாதர். இவற்றுக்கு உதாரணம் மேற்காட்டியனவே. 246. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இது வினைச்சொற்கண் மரவுவழுவமைதி கூறுகின்றது. (இ-ள்) செயப்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்சொல் புணர்த்துச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலும் மரபாகும். என்றவாறு. (உ-ம்) திண்ணை மெழுகிற்று; கலம்கழீஇயிற்று எனவரும். திண்ணை மெழுகப்பட்டது, கலம் கழுவப்பட்டது என வரற்பாலது அவ்வாறன்றி வினைமுதல் வாய்பாட்டால் வருதலும் வழக்கினுள் உண்மையால் அமைக என மரவுவழு வமைத்தவாறு. இங்ஙனம் வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதின் அடப்பட்டமை நோக்கி `அரிசிதானே அட்டது எனச் செயப்படு பொருளை வினைமுதலாகக் கூறலும் வழக்கியல் மரபு என்றற்குத் `தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபு என்றார் இதனை வடநூல்வழித் தமிழாசிரியர் கருமக் கருத்தன் என்பர். இனி ஒன்றென முடித்தலால் `இவ்வாள் எறியும் எனக் கருவியைத் தானேசெய்வதாகக் கூறும் கருவிக் கருத்தாவும், `அரசன் எடுத்த ஆலயம் என ஏவினானை வினைக் கருத்தாவாகக் கூறும் ஏதுக்கருத்தாவும் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். இச்சூத்திரப் பொருளையேயன்றி இதன் சொல்லையும் பொன்னேபோற் போற்றியெடுத்தாளும் முறையில் அமைந்தது, 399. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தனக்கெனச் செயலின்றிப் பிறரது தொழிற்பயனுறுவதாகிய செயப்படு பொருளைத் தனக்கெனத் தொழிலுடைய கருத்தாவைப் போல வைத்துத் தொழில் நிகழ்த்தியதாகக் கூறுதலும் வழக்கின் கண் உரித்தாம் என்பது இதன் பொருள். எனவே, இலக்கணமன்றேனும் கருமத்தையும் கருவியையும் கருத்தாவாகச் சொல்லினும் அமைக வென்பதாயிற்று எனக்கூறிப் பின்வருமாறு உதாரணங்காட்டுவர் மயிலைநாதர். (உ-ம்) இல்லம் மெழுகிற்று, சோறு அடா நின்றது, பொன் வரும் எனவும், சுரிகை குத்தும், எழுத்தாயி எழுதா நின்றது, வாள் எறியும் எனவும் வரும். 247. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. இஃது ஓர் பொருண்மை குறியாது இறந்தகாலமும் எதிர் காலமும் மயங்கும் என்கின்றது. (இ-ள்) இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும் மயங்கு மொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும். என்றவாறு. (உ-ம்) இவர் பண்டு இப்பொழிலகத்து வினையாடுவர்; `நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என் செய்குவை எனவரும். பண்டு விளையாடினார், நாளை வருவன் எனவரற்பாலன அவ்வாறன்றித் தம்முள் காலம் மயங்கக் கூறினும் அமைக எனக் காலவழு அமைந்தவாறு. 248. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். இது நிகழ்காலம் ஏனையவற்றொடு யமங்குமென்கின்றது. (இ-ள்) இறந்தகாலமும் எதிர்காலமுமேயன்றி ஏனை நிகழ் காலமும் அவற்றொடு மயங்குதலை நீக்கார் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும் நாளைவரும் எனவும் வரும். இறந்தகாலமும் எதிர் காலமும் மயங்கும் மயக்கம் வழக்கிற் பயின்று வருதலானும் நிகழ்கால மயக்கம் அத்துணைப் பயின்று வாராமையானும் இவற்றை இரண்டு சூத்திரங்களாற் பிரித்துக் கூறினார் தொல்காப்பியர். மூன்று காலமும் தம்முள் மயங்கு மென்றாரேனும், ஏற்புழி யல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே, வந்தானை வரும் என்றலும், வருவானை வந்தான் என்றலும் இவை முதலாயின வெல்லாம் வழுவென்பதாம் எனச் சேனாவரையர் கூறும் விளக்கம் உளங்கொளத்தகுவதாகும். தொல்காப்பியர் குறித்த கால மயக்கங்கள் எல்லாவற்றையும் `பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி (நன் - 383) என்ற தொடரால் தழுவிக் கொண்டார் பவணந்தி முனிவர். 7. இடையியல் இடைச் சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இடையியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச் சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும் போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும், பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச் சொல்லாயிற்று என்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியை யும் தம்மாலன்றித் தத்தங் குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறு மாகாது இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞானமுனிவர். இவ்வியலிள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். 249. இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. இஃது, இடைச் சொற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) இடைச் சொல்லென்று சொல்லப்படுவன பெயரொடும் வினையொடும் வழக்கிற் பொருந்தி நடக்கும்; தாமாக நடக்கும் இயல்பில. என்றவாறு. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்று வழி மருங்கிற்றோன்றும் என்றதனால் இடைச்சொல் பெயரும் வினையும் சார்ந்து வரும் என்பது பெறப்பட்டது. `பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் என ஈண்டு மீண்டும் கூறியது, பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடைய அல்ல என்றவாறு என இதன் பொருளை விளக்குவர் சேனாவரையர். எனவே இடைச் சொற்கள் பொருளுணர்த்தும் வழித் தமக்கெனப் பொருளின்றிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப் பொருண்மை யுணர்த்தியும் அவற்றைச் சார்ந்தல்லது தனித்துவாரா என வலியுறுத்தவாறு. (உ-ம்) `அதுகொல் தோழி காமநோயே எ-ம் `வருகதில் லம்மவெஞ் சேரி சேர எ-ம். கொல், தில் என்னும் இடைச்சொற்கள் முறையே பெயரையும் வினையையும் சார்ந்து நின்று அப்பொருளை வெளிப்படுத்தவாறு காண்க. பெயரையும் வினையையும் சார்ந்துவருதல் இடைச்சொற்கும் உரிச்சொற்குமுரிய பொதுவிலக்கணம். தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாகும். பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் தமக்கியல்பில எனப் பொதுப்படக் கூறிவதனால் இடைச் சொற்கள் தம்மாற் சாரப்படுஞ் சொல்லின் வேறாய் வருதலேயன்றி, உண்டனன், உண்டான் எ-ம். என்மனார், என்றிசினோர், எ-ம். அருங்குரைத்து எ-ம். அச்சொற்களுக்கு உறுப்பாய் வருதலும் கொள்ளப்படும். 250. அவைதாம், புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. இஃது அவ்விடைச் சொற்களின் பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய இடைச்சொற்கள்தாம் இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைக்கு உதவிசெய்து வருவனவும், வினைச்சொற்களை முடிக்கு மிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியன வாய் நிற்பனவும், வேற்றுமைக்பொருட்கண் வேற்றுமையுருபு களாய் வருவனவும், தமக்கோர் பொருளின்றித் தாம்சார்ந்த பெயர் வினைகளை அசையப் பண்ணும் நிலைமையவாய் வருவனவும், செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும், ஒப்புமை தோன்றாத வழி அவ்வொப்புமைப் பொருண்மையை யுணர்த்தி வருவனவும் எனச் சொல்லப்பட்ட ஏழியல்பினையுடையன சொல்லுமிடத்து. என்றவாறு. `புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்குதவுந என்றது, அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதிற் பொருளுணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று முதலிய சாரியைகளை. இவை எழுத்ததிகாரத்திற் கூறப்பட்டன. `வினைசெயல் மருங்கிற் கால மொடு வருந என்றது, வினைச்சொல்லை முதனிலையும் இறுதி நிலையும் இடைநிலையுமாகப் பிரித்துச் செய்கை செய்யுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் அதனகத்து உறுப்பாய் நிற்பன வற்றை. இவை வினையிலுட் கூறப்பட்டன. வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுந என்றது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகளை. இவை வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை என்பது காரணப்பெயர். அசைநிலைக்கிளவியாகி வருவன மியா, இகும் முதலாயின. செய்யுட்கண் இசைநிறைத்து நிற்பன இசை நிறையாம். இசை நிறையாவன ஏ முதலாயின. தத்தங்குறிப்பிற் பொருள் செய்குந என்றது, தத்தங்குறிப்பினாற் பொருளுணர்த்தும் இடைச்சொற்களை. குறிப்பு என்பது சொல்லுவான் கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைச் சொற்கள் தாங்கி நிற்றலின் `தத்தங் குறிப்பின் பொருள் செய்குந என்றார். அசைநிலை, இசை நிறை, தத்தங்குறிப்பிற் பொருள் செய்குந ஆகிய இம்மூவகை இடைச் சொற்களும் இவ் இடையியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்பில் வழியாற் பொருள் செய்குந என்றது ஒப்புமை உணர்த்தும் ஒத்தல் என்னும் சொல் இல்லாத நிலையில் ஒப்புமைப் பொருளை யுணர்த்தும் அன்ன ஆங்க முதலிய உவமவுருபுகளை. பொருள் புலப்பாடாகிய உவமைக்குரிய இவ்வுருபுகள் பொருளதி காரத்தில் உவமவியலில் விரித்துரைக்கப்படும். இடைச்சொல் ஏழனுள் முதல் நின்ற மூன்றும் மேலே உணர்த்தப்பட்டமையால் முன் வைத்தார். ஒப்பில் வழியாற் பொருள் செய்குந பின்னர் உணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார். எஞ்சிய மூன்றும் இவ்வியலின் உணர்த்தப்படுதலின் இடை வைத்தார். 251. அவைதாம், முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும் அன்னவை யெல்லாம் உரிய வென்ப. இஃது இன்னும் அவ்விடைச்சொற் குரியதோர் பொதுவிதி கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள் தாம் இடை வருதலேயன்றித் தம்மாற் சாரப்படுஞ்சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோரிடைச்சொல் தம்முன் வந்து சாரப்பெறுதலும் ஆகிய அத்தன்மையவெல்லாம் உரிய வென்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) `அதுமன் எ-ம். `கேண்மியா எ-ம். சாரப்படு மொழியை முன்னடுத்து வந்தன. `கொன்னூர் எ-ம். `ஓஒவினிதே எ-ம் பின்னடுத்து வந்தன. (ஈண்டு முன்பின் என்பன இடப்பொருள.) `உடனுயிர் போகுகதில்ல என்புழித்தில் என்னும் இடைச்சொல் ஈறுதிரிந்து வந்தது. `வருகதில்லம்ம வெஞ்சேரிசேர என்புழி தில் என்னும் இடைச்சொல்முன்னர் அம்ம என்னும் இடைச்சொல் நிற்றலின் பிறிது அவண் நிலையலாயிற்று. அவைதாம் எனப் பொதுவகையான் நோக்கினாரேனும் இவ் விலக்கணம் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை, தத்தங் குறிப்பிற் பொருள்செய்வன ஆகிய மூன்றற்கு மெனக்கொள்க எனவும், `அன்னவையெல்லாம் என்றதனான், `மன்னைச்சொல் `கொன்னைச்சொல் எனத் தம்மையுணர நின்றவழி ஈறுதிரிதலும், `னகாரைமுன்னர் என எழுத்துச் சாரியை ஈறுதிரிதலுங் கொள்க எனவும் கூறுவர் சேனாவரையர். இடைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணமும் அவற்றின் பாகுபாடும் அவற்றுக்கோர் பொதுவிதியும் உணர்த்தும் இம் மூன்று சூத்திரப் பொருள்களையும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 419. வேற்றுமை வினைசாரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவதிடைச்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வேற்றுமையுருபு வினையுருபு சாரியையுருபு உவமைவுருபு இவைகளாகியும், தத்தம் பொருள் காட்டுவனவும் இசை நிறைப் பனவும் அசைநிலையாய் வருவனவும் குறிப்பின் வருவனவும் என்னும் எட்டுப்பகுதியவாய்த் தாமாகத் தனித்து நடத்த லின்றிப் பெயர் வினைகளாம் சொற்களின் பின்னாயினும் முன்னாயினும் ஓரிடத்து ஒன்றாகவோ பலவாகவோ வந்து நிற்பது இடைச் சொல்லாகும் என்பது இதன் பொருள். `தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன எனத் தொல்காப்பிய னார் கூறிய இடைச் சொற்களைத் `தத்தம் பொருள எனவும், `குறிப்பு எனவும் இருதிறத்தனவாகக் கொண்டு இடைச் சொற்கள் எட்டு வகைப்படும் என்றார் நன்னூலார். இவற்றுள் தத்தம் பொருள் ஆவன: ஏ ஓ முதலாய்ப் பிரிநிலை முதலாகிய பொருளைத் தோற்றி நிற்பன. குறிப்பாவன, விண்ணென, ஒல்லென, கல்லென முதலாயின என விளக்குவர் மயிலைநாதர். இவ்வியலில் தொல்காப்பியர் விரித்துக் கூறிய இடைச் சொற்களின் பொருளையெல்லாம், 420. தெரிநிலை தேற்றம் ஐயமுற் றெண்சிறப் பெதிர்மறை யெச்சம் வினாவிழை யொழியிசை பிரிப்புக் கழிவாக்கம் இன்னன இடைப்பொருள். என ஒரு சூத்திரத்தால் தொகுத்துணர்த்தினார் நன்னூலார். தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்ற, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம் என்னும் இப்பதினான்கும் இவை போல்வன பிறவும் இடைச் சொற்களின் பொருள்களாம் என்பது இதன் பொருளாகும். `இன்னன என்றதனால் தொறு, தோறு, ஞெரேர், அந்தோ, அன்னோ, கொல்லோ, ஆ, ஆவோ, அஆ, இனி, என், ஏன், ஏதில், ந, கல், ஒல், கொல், துடும், துண், பொள், கம், கொம் எனவரும் இடைச் சொற்களின் பொருள் வகைகளையும் தழுவிக்கொள்வர் மயிலைநாதர். இவற்றொடு சுட்டுப் பொருளும் வினாப்பொருளும் தழுவிக் கொள்வர் சிவஞான முனிவர். இடையியலில் உணர்த்தப்படும் இசைநிறை, அசைநிறை, தத்தம் குறிப்பிற் பொருள் செய்வன ஆகிய மூவகை இடைச் சொற்களுள், தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவாகிய இடைச் சொற்கள் பொருளுணர்த்தும் சிறப்புப் பரப்புடையன வாதலால் அவற்றை இவ்வியலின் முன்னர் உணர்த்துவர் தொல்காப்பியர். 252. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொற்களுள் ஒன்றன் பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்) மன் என்னும் இடைச்சொல் கழிவு குறித்து நிற்பதும் ஆக்கம் குறித்து நிற்பதும் ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதும் என மூன்றாம். என்றவாறு. கழிவு என்பது பயனின்றிக் கழிந்ததற்கு இரங்குதலாகும். ஆக்கம் என்பது, முன்னைநிலையினும் மிக்குளதாதல். ஒழியிசை என்பது சொல்லாதொழிந்து நின்ற சொற்களின் பொருளைத் தந்து நிற்றல். (உ-ம்) சிறியகட் பெறினே எமக்கீயுமன்னே என்புழி மன்னைச்சொல் `அதுகழிந்தது என்னும் பொருள் குறித்து நின்றது. பண்டு காடுமன், இன்று கயல் பிறழும் வயலாயிற்று என்புழி மன் ஆக்கங்குறித்து நின்றது. கூரியதோர் வாள்மன் என்புழி மன் என்பது `திட்பமின்று எனவோ `இலக்கணமின்று எனவோ எச்சமாய் ஒழிந்த சொற்பொருண்மையினை நோக்கி நின்றது. மன்னென்னும் இடைச்சொல் மேற்குறித்த மூவகைப் பொருளோடு அசைநிலையாகவும், மிகுதி, நிலைபேறு என்னும் பொருள் குறித்தும் இலக்கியங்களிற் பயிலக்கண்ட பவணந்தி முனிவர், 431. மன்னே யசைநிலை யொழியிசை யாக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும். எனச் சூத்திரஞ் செய்தார். மன் என்னும் இடைச்சொல் அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி, நிலைபேறு என்னும் ஆறுபொருளிலும் வரும் என்பதாம். (உ-ம்) `அதுமற் கொண்கன்தேரேஎன்பது அசைநிலை. `எந்தை எமக்கருளுமன் என்புழி `மிகுதியும் அருளும் எனப் பொருள் தந்து நிற்றலின் மன்மிகுதிப் பொருளில் வந்தது. `மன்னா வுலகத்து மன்னியது புரிமே என்புழி மன் `நிலைபேறு என்னும் பொருளில் வந்தது. 253. விழைவே காலம் ஒழிசையிசைக் கிளவியென் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்) தில் என்னும் இடைச்சொல் விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஒழிந்து நின்ற சொற் பொருளை நோக்கி நிற்பதும் என மூன்றாம். என்றவாறு. (உ-ம்) வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே என்புழித் தில் என்னும் சொல் அரிவையைப் பெறுதற்கண் உளதாகிய விழைவின்கண் வந்தது. விழைவு - விருப்பம். பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே என்புழிப் `பெற்றகாலத்து அறிக எனக் காலங் குறித்து நின்றது. வருகதில் லம்மவெஞ் சேரிசேர என்புழி `வந்தால் இன்னது செய்வேன் என ஒழியிசைப் பொருள் நோக்கி நின்றது. தில் என்னும் இடைச்சொற் பொருளை 430. விழைவே காலம் ஒழியிசை தில்லே. எனவரும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். 254. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னான்கே கொன்னைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்) கொன் என்னும் இடைச்சொல் அச்சப் பொருள், பயனின்மைப் பொருள், காலப்பொருள், பெருமைப்பொருள் என நான்கு பொருளில் வரும். என்றவாறு. (உ-ம்) கொன்முனை யிரவூர் போலச் சிலவாகுக நீ வாழு நாளே என்புழி, கொன்முனையிரவூர், என்புழி அஞ்சிவாழும் ஊர் என அச்சப் பொருளிலும், கொன்னே கழிந்தன்று இளமை என்புழிப் `பயினின்றிக் கழிந்தது இளமை எனப் பயனின்மைப் பொருளிலும், கொன்வரல்வாடை என்புழிக் `காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனக் காலப்பொருளிலும், `கொன்னூர் துஞ்சினும் என்புழிப் `பேரூர் துஞ்சினும் எனப் பெருமைப் பொருளிலும் கொன் என்னும் இடைச்சொல் வந்தது. கொன் என்னும் இடைச்சொல் சுருக்க நூலாகிய நன்னூலில் இடம் பெற்றிலது. 255. எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்) உம் என்னும் இடைச்சொல், எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள் குறித்து வருதல் பற்றி எட்டாம். என்றவாறு. தன்னையொழிந்த பொருளைக் குறித்து நிற்பது எச்சமாகும். அஃது இறந்தது தழீஇயது எதிரதுதழீஇயது என இருவகைப்படும். சிறப்பு - மிகுதி. அஃது உயர்பினால் மிகுதலும் இழிபினால் மிகுதலும் என இருவகைப்படும். ஐயம்- ஐயப்பட்ட பொருண்மை குறித்துவருவது. யாதானும் ஒரு தொழிலை எதிர்மறுத்துத் தொழிற் கண் வருவது எதிர்மறையாகும். மற்றெதனையும் நோக்காது முற்றி நிற்பது முற்றாகும். பலபொருளை எண்ணுதல் குறித்து வருவது எண் எனப்படும். ஒரு பொருளை ஐயப்படுதலும் துணி தலுமின்றி ஆராயும் நிலைமைக்கண் வருவது தெரிநிலை எனப்படும். மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வருவது ஆக்கமாகும். இவ்வெண் வகைப் பொருள்களிலும் உம்மையிடைச் சொல் வரும் என்பதாம். (உ-ம்) `சாத்தனும் வந்தான் என்புழி உம்மை கொற்றனும் வந்தான் என முன்னிகழ்ச்சியாகிய எச்சங்குறித்து நிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மை. `கொற்றனும் வந்தான் என்புழி உம்மை சாத்தனும் வருவான் என எதிர்நிகழ்ச்சியைக் குறித்து நிற்றலின் எதிரது தழீஇய எச்சவும்மையாகும். `குறவரும் மருளுங் குன்று என்புழி உம்மை குன்றத்து நிற்றலின் சிறப்பும்மையாகும். ஒன்று இரப்பான்போல் இளிவந்துஞ் சொல்லும், உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் (கலி-47) என்புழி உம்மை இன்னான் என்று துணியாநிலைமைக் கண் வருதலின் ஐயவும்மை யாகும். சாத்தன் வருதற்கும் உரியன் என்புழி உம்மை வாராமைக்கும் உரியன் என்னும் எதிர்மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின் எதிர்மறை யும்மையாகும். தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் என்புழி உம்மை எஞ்சாப் பொருண்மைக்கண் வருதலின் முற்றுமையாகும். நிலனும் நீருந் தீயும் வளியும் ஆகாயமுமெனப் பூதம் ஐந்து என்புழி உம்மை எண்ணுதற்கண் வருதலின் முற்றுமை யாகும். நிலனும் நீருந் தீயும் வளியும் ஆகாயமுமெனப் பூதம் ஐந்து என்புழி உம்மை எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மையாகும். இருநிலம் அடிதோய்தலின் திருமகளும் அல்லள் அரமகளும் அல்லள் இவள் யாராகும்? என்புழி உம்மை தெரிதற் பொருட்கண் வருதலின் தெரிநிலையும்மையாகும். திருமகளோ அரமகளோ என ஐயுறாது ஆராய்தற்கண் வருதலின் இவ்வும்மை ஐயவும்மை யின் வேறாத லறியலாம். நெடியனும் வலியனும் ஆயினான் என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்கவும்மை யெனப்படும். உம்மையிடைச் சொற்பொருள்களாகிய இவற்றை, 424. எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை ஆக்கம் என்னும் எட்டுப் பொருளையும் தரும் உம்மையிடைச் சொல் என்பது இதன் பொருள். இதன்கண் எண்ணுதற் பொருண்மை யினை `அளவு எனக் குறித்தார் நன்னூலார். 256. பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப வோகா ரம்மே. இதுவும் அது. (இ-ள்) பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை என்னும் இப்பொருள்களை மிகுதி என்னும் பொருளுடன் சேர்த்து ஓகாரவிடைச் சொல்லின் பொருண்மை ஆறாம் என்பர் ஆசிரியர். என்றவாறு. பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்றவருவது பிரிநிலை யெனப்படும். வினாவுதற் பொருளில் வருவது வினாவாகும். உ-ம். `யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே என்புழி ஓகாரம் தேறுவார் பிறரினின்றும் தன்னைப் பிரித்தலின் பிரிநிலை யோகாரமாகும். `சாத்தன் உண்டானோ என்புழி ஓகாரம் வினாப்பொருளில் வந்தது. `யானோ கொள்வேன் என்புழி ஓகாரம், யான் கொள்ளேன் என எதிர்மறை குறித்து நின்றது. `கொளலோ கொண்டான் என்புழி ஓகாரம், கொண்டுய்யப் போயினான் அல்லன் என்பது முதலாய ஒழிந்த சொற்களை நோக்கி நிற்றலின் ஒழியிசை யோகாரமாகும். `திருமகளோ அல்லள், அரமகளோ அல்லள் இவள்யார் என்புழி ஓகாரம் ஐயப் பொருள் குறியாது தெரிந்து ஆராய்தற்கண் வருதலின் தெரிநிலையே யாகாரமாகும். ஓஒ பெரியன் என்புழி ஓகாரம் பெருமையின் மிகுதி குறித்து நிற்றலின் சிறப்போகாரமாகும். ஐயமென்னும் ஓகாரம் தெரிநிலைக்கண் அடங்கும் என்பர் தெய்வச் சிலையார். ஓகாரவிடைச் சொற்குத் தொல்காப்பியனார் கூறிய மேற்குறித்து ஆறுபொருள்களுடன் கழிவும் அசைநிலையும் என்னும் இரண்டினையும் சேர்த்து எட்டாகக்கொண்டு, 422. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். ஒழியிசையும் வினாவும் சிறப்பும் எதிர்மறையும் தெரிநிலையும் கழிவும் அசைநிலையும் பிரிப்பும் என எட்டுப் பொருட் பகுதி களையுடையது ஓகாரவிடைச் சொல்லாம் என்பது இதன் பொருளாகும். கழிவு என்பது, ஒன்றைச் செய்யாது கழிந்தமைக்கு இரங்குதல். நைதலொன்றி நல்லறஞ் செய்கிலார் ஓஒ தமக்கோர் உறுதியுணராரோ என்புழி ஓகாரம் அசைநிலையாய் நின்றது. 257. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. இஃது ஏகார விடைச்சொற் பொருள் தருமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என இவ்வைந்தாகும் ஏகாரவிடைச்சொல். என்றவாறு. தேற்றம் - தெளிவு பொருண்மை. ஈற்றசையாவது செய்யுளின் இறுதிக்கண் அசைநிலையாய் நிற்பது. செய்யுளின் இடையிலும் வருதலின் ஈற்றசை என்பது மிகுதி நோக்கிச் சென்ற பெயர். (உ-ம்) `உண்டேஎ மறுமை என்றாங்குத் தெளிவின்கண் வருவது தேற்றேகாரம். `நீயே கொண்டாய் என்றாங்கு வினாப் பொருளுணர்த்துவது வினாவேகாரம். `அவருள் இவனே கள்வன் என்றாங்குப் பிரித்தல் பொருளில் வருவது பிரிநிலையே காரம். `நிலனே நீரே தீயே வளியே விசும்பே என்றாங்கு எண்ணுதற் பொருளில் வருவது எண்ணேகாரம். `கடல்போற்றோன்றல் காடிறந்தோரே என்றாங்குச் செய்யுளிறுதிக்கண் அசைநிலையாய் நிற்பது ஈற்றசையேகாரம். யானே கொண்டேன் என்புழி, `நீயே கொண்டாய் என்னும் எதிர்மறைப் பொருள் தருதல். `மாறு கொளெச்சமும் வினாவும் (தொல் - எழுத்து - உயிர்மயங் - 73) என்பதனாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். மாறுகொ ளெச்சம் வினாவினுள் அடங்கும் என்பர் தெய்வச்சிலையார். பிரிநிலை முதலாகிய ஐந்துடன் `ஏயுங் குரையும் இசை நிறையசை நிலை (தொல் - சொல்- 271) எனப் பின்னர்க் கூறப்படும் இசைநிறையையுங்கூட்டி ஏகார விடைச்சொல் ஆறாம் என்பர் பவணந்தி முனிவர். 421. பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம் இசைநிறை யென வாறேகா ரம்மே. என்பது நன்னூற் சூத்திரமாகும். இசை நிறைத்தற் பொருள் தரவருவது இசை நிறையெனப்படும். எயே யிவளொருத்தி பேடியோ வென்றார் என்புழி ஏகாரம் இசை நிறையாய் வந்தது. தேற்றப் பொருள் பிரி நிலைக் கண்ணேயுளதாதலின் இப்பொருளை வேறெடுத்துக் கூறுதல் ஏனையபோற் சிறப்புடைத்தன்றென்பார், இதனைப் பொருட் சிறப்பில்லா ஈற்றசைக்கும் இசைநிறைக்கும் இடையே கூறினார் என்பர் சிவஞானமுனிவர். `அவனே கொண்டான் என்பது ஒரோவழி `அவன் கொள்கிலன் என எதிர்மறைப் பொருள்தரின் அது செம்பொருளன்றி வலிந்து கொள்ளப்படுதலின், மாறுகொ ளெச்சமாகிய அவ்வேகாரத்தைப் பவணந்தியார் எடுத்துக் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுளது. 258. வினையே குறிப்பே யிசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. இஃது எனவென்னும் இடைச்சொற் பொருள்தருமாறு கூறுகின்றது. (இ-ள்) வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் என்னும் ஆறுபொருண்மையுங் குறித்து வருவது என என்னும் இடைச் சொல்லாம். என்றவாறு. (உ-ம்) `மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் என வினைப்பொருளிலும், `துண்ணெனத் துடித்தது எனக்குறிப்புப் பொருளிலும், `ஒல்லென வொலித்தது என இசைப்பொருளிலும், `வெள்ளென விளர்த்தது எனப் பண்புப்பொருளிலும், `நிலனென நீரெனத் தீயென வளியென விசும்பென என எண்ணுதற் பொருளிலும், `அழுக்காறெனவொரு பாவி எனப் பெயர்ப் பொருளிலும் எனவென்னும் இடைச்சொல் வந்தவாறு கண்டு கொள்க. எழுத்ததிகாரத்துள் `எனவென் எச்சம் (எழுத் - 204) என ஓதுதலான், இவையெல்லாம் வினையெச்சப் பொருண்மை யுணரவும் பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்பர் தெய்வச் சிலையார். 259. என்றென் கிளவியு மதனோ ரற்றே. இஃது என்றென்னும் இடைச்சொற் பொருள்தருமாறு கூறுகின்றது. (இ-ள்) `என்று என்னும் இடைச்சொல்லும் `என என்பது போல அவ் ஆறுபொருளும் குறித்துவரும். என்றவாறு. (உ-ம்) `நரைவரு மென்றெண்ணி எனவும், `விண்ணென்று விசைத்தது எனவும், `ஒல்லென்றொலிக்கும் ஒலி புனலூரற்கு எனவும், `பச்சென்றுபசுத்தது எனவும், `நிலனென்று நீரென்று தீயென்று வளியென்று விசும்பென்று எனவும், `பாரியென் றொருவனுளன் எனவும் என்றென்னும் இடைச்சொல் வினை, குறிப்பு இசை, பண்பு, எண், பெயர் என்னும் பொருளில் முறையே வந்தவாறு காண்க. இவ்விரு சூத்திரப் பொருளையும் தொகுத்துக்கூறும் முறையில் அமைந்தது, 423. வினை பெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரும் என்றும் அற்றே. என்னும் நன்னூற் சூத்திரமாகும். `வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு என்னும் ஆறுபொருளினும் எனவென்னும் இடைச்சொல் வரும். என்று என்னும் இடைச்சொல்லும் அவ் ஆறு பொருளினும் வரும். என்பது இதன் பொருளாகும். 260. விழைவின் றில்லை தன்னிடத் தியலும். இது, முற்கூறிய `தில் என்னும் இடைச்சொற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) (விழைவு, காலம், ஒழியிசை என்னும் மூவகைப் பொருள்களுள்) விழைவின்கண் வரும் தில்லென்னும் இடைச் சொல் தன்மையிடத்தில் வரும். என்றவாறு. தன்னிடம் - தன்மையிடம். தன்னிடத்தியலும் எனவே தில் என்பது ஏனைப் படர்க்கை முன்னிலையிடங்களில் வாராது என நியமித்தவாறாம். விழைவின் தில்லை தன்னிடத்தியலும் எனவே ஒழிந்த காலப் பொருளிலும் ஒழியிசைப் பொருளிலும் வரும் தில் என்பன மூவிடத்திற்கும் உரியன என்பதும் பெறப்படும். தில், தில்லை என ஈறுதிரிந்தது. உதாரணம் மேற்காட்டியவே கொள்க. 261. தெளிவி னேயுஞ் சிறப்பி னோவும் அளபி னெடுத்த விசைய வென்ப. இஃது ஏகார ஓகாரங்கள் மிக்கு ஒலிக்குமாறு கூறுகின்றது. (இ-ள்) தெளிவு பொருண்மைக்கண் வரும் ஏகாரமும், சிறப்புப் பொருண்மைக்கண் வரும் ஓகாரமும் இரண்டு மாத்திரையின் மிக்கு மூன்று மாத்திரையினையுடைய என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. ஏகார ஓகாரங்கள் அளபெடையாய் வருதல் மேற்காட்டப் பட்டவற்றுள்ளும் பிறவிடத்தும் கண்டுகொள்க. 262. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை யப்பா லிரண்டென மொழிமனார் புலவர். இது, மற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மற்று என்னுஞ்சொல், வினைமாற்றும் அசை நிலையும் என இரண்டாம் என்பர் ஆசிரியர். என்றவாறு. வினைமாற்று என்பது, ஒரு வினை நிகழ்ச்சியை மாற்றுதற் பொருள்பட வருவது. `மற்றறிவாம் நல்வினையாமிளையம் என்ற வழி, `அறஞ்செய்தல் பின் அறிவாம் என அக்காலத்து வினை மாற்றுதலான் மற்று என்பது வினைமாற்றின்கண் வந்தது. அதுமற் றவலங் கொள்ளாது, நொதுமற் கலுழுமிவ் வழுங்கலூரேஎன்புழி மற்று அசைநிலையாய் வந்தது. மற்று என்னும் இவ்விடைச்சொல் வினைமாற்றாகவும் அசை நிலையாகவும் வருதலேயன்றிச் சொல்கின்றது ஒழிய இனி வேறொன்று எனப் பிறிது என்னும் பொருளிலும் இலக்கியங்களிற் பயில்கின்றது. மற்று என்பது `பிறிது எனும் இப்பொருளில் வழங்குதற்கு `இனி மற்றொன்றுரை என உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர். மற்று என்பது வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும் மூன்று நிலையிலும் பயிலக்கண்ட பவணந்தியார், 432. வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. எனச் சூத்திரஞ்செய்தார். மற்று என்னும் இடைச்சொல் வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும் இம்மூன்று பொருளையும் தரும். என்பது இதன் பொருளாகும். (உ-ம்) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். என்புழி `மற்றொன்று என்பது `ஊழல்லாத பிறிது ஒன்று என்னும் பொருள் தந்தமை காண்க. 263. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இஃது எற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) எற்று என்னுஞ்சொல் கழிந்தது என்னும் இரங்கற் பொருண்மையினையுடையதாம். என்றவாறு. இறந்த பொருண்மையாவது, ஒன்றிடத்தினின்றும் ஒன்று போயிற்று எனக் கழிந்ததற்கிரங்குதலாகிய பொருண்மை. (உ-ம்) `எற்றென் னுடம்பி னெழினலம் என்புழி எற்று என்பது என்னுடம்பின் எழில்நலம் இறந்தது என இரங்குதற் பொருள்பட நின்றது. எற்று ஏற்றமில்லாருள் யான் ஏற்ற மில்லாதேன் என்புழியும் `இதுபொழுது துணிவில்லாருள் துணிவில்லாதேன் யான், என் துணிவு இறந்தது என எற்று என்னும் இடைச்சொல் கழிந்தது என இரங்குதற் பொருள்பட வந்தமை காண்க. ஏற்றம் - துணிவு. 264. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. இது, மற்றையது என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) `மற்றையது எனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் `மற்றை என்னும் ஐகாரவீற்று இடைச்சொல், சுட்டப்பட்டதனை ஒழித்து அதன் இனங் குறித்து நிற்கும். என்றவாறு. ஒருவர் ஆடையொன்றைக் கொணர்ந்தவழி அவ்வாடை யினை விரும்பாதவன் `மற்றையது கொணா என்பன். அந்நிலையில் மற்றையது என்னுஞ்சொல் அச்சுட்டிய ஆடையை யொழித்து அதற்கினமாகிய ஆடையினைக் குறித்து நிற்றல் காண்க. `மற்றை என்னும் ஐகாரவீற்றிடைச் சொல் பெரும்பாலும் மற்றையது, மற்றையவை, மற்றையவன் என்றாங்கு முதனிலையாய் நின்றல்லது பொருள் விளக்காமையின் `மற்றையது என விகுதி யொடு புணர்த்துக் கூறினார். சிறுபான்மை `மற்றையாடை என விகுதியின்றித் தானேயும் வரும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது, 433. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மற்றையது என்னும் இடைச்சொல் சுட்டியதனை யொழிய அதற்கு இனமானது ஒன்றைக் குறிக்கும் என்பது இதன் பொருளாகும். 265. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். இது, மன்ற என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மன்ற என்னுஞ் சொல் தெளிவு பொருண்மையை உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே என வரும் `மடவை மன்ற என்புழி மன்ற என்னும் இடைச்சொல் மடவையே எனத் தேற்றப்பொருளில் வந்தமை காண்க. 266. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. இது, தஞ்சம் என்னுங் சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) தஞ்சம் என்னும் இடைச்சொல் எளிது என்னும் பொருண்மையையுடையது. என்றவாறு. (உ-ம்) `முரசுகெழுதாயத் தரசோ தஞ்சம் (புறம்-73) எனத் தஞ்சக்கிளவி `அரசு கொடுத்தல் எளிது என எண்மைப் பொருளுணர்த்தியவாறு காண்க 267. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென் றாயிரண் டாகு மியற்கைத் தென்ப. இஃது அந்தில் என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) அந்தில் என்னுஞ்சொல் ஆங்க என்னும் இடப் பொருளுணர்த்துதலும், அசைநிலைச் சொல்லாதலும் என அவ்விரண்டு கூறாம் இயற்கையையுடையது என்று கூறுவர் புலவர். என்றவாறு. (உ-ம்) வருமே, சேயிழை அந்திற் கொழுநற் காணிய என இடஞ்சுட்டி வந்தது. அந்திற் கச்சினன் கழலினன் என அசைநிலையாய் நின்றது. இச்சூத்திரத்து `ஆங்க என்றது அவ்விடம் என்ற பொருளில் ஆங்கு என்பது ஆங்க எனத்திரிந்து நின்ற பெயர்ச் சொல்லாகும். இச்சூத்திரத்தில் வரும் அந்தில் என்பதோடு பிற்கூறப்படும் `ஆங்கவுரையசை (277) என்பதனையுங்கூட்டி, 436. அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டிடைச் சொல்லும் அசைநிலையாயும் இடப்பொருளுணர்த்தியும் வருவன என்பது இதன் பொருளாகும். இதன்கண் `ஆங்கு என்றது `ஆங்க உரையசை (277) எனத் தொல்காப்பியர் சுட்டிய ஆங்க என்னும் அகரவீற்றிடைச் சொல்லின் திரிபாகும். (உ-ம்) ஆங்கத், திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி - 86) என்புழி ஆங்க அசைநிலை. `ஆங்காங்காயினுமாக என்புழி ஆங்கு என்பது இடப்பொருட்டாய் நின்றது. 268. கொல்லே ஐயம். (இ-ள்) கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருளில் வரும். என்றவாறு. (உ-ம்) `இன்றும் வருங்கொல் (புறம் - 264) எனவரும். `குற்றிகொல்லோ, மகன் கொல்லோ என உரையாசிரியர் காட்டிய எடுத்துக்காட்டுள் ஓகாரம் வினாப்பொருளுணர்த்தக் `கொல் என்பது அசைநிலையாய் அமைதலைக் கண்ட பவணந்தியார், கொல் என்பது ஐயப்பொருளில் வருதலேயன்றி அசை நிலையாயும் வரும் என்பதனை, 434.கொல்லே யையம் அசைநிலைக் கூற்றே. எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார். (உ-ம்) `இவ்வுருக் குற்றிகொல் மகன்கொல் என்பது குற்றியோ மகனோ என்னும் பொருள்பட வருதலின் ஐயம். பிரிவெண்ணிப் பொருள்வயிற் பிரிந்தநங்காதலர் வருவர் கொல் வயங்கிழாய் (கலித் - 11) என்புழிக் கொல் அசைநிலை. 269. எல்லே யிலக்கம். (இ-ள்) எல் என்னும் சொல் இலக்கம் (விளக்கம்) என்னும் பொருள்பட வரும். என்றவாறு. (உ-ம்) எல்வளை, இலங்கும்வளை என்பது இதன் பொருள். இலக்கம் - விளக்கம். ஒளியாகிய பண்பினைத் தத்தங் குறிப்பானன்றி வெளிப்படையாக உணர்த்தும் இச்சொல்லை உரிச்சொல் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும் என்பது, எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான் இடைச்சொல்லென்று கோடும் எனவரும் சேனாவரையர் உரையால் இனிது விளங்கும். இடைச்சொல், உரிச்சொல் என்னும் பகுப்பினை நுனித் துணர்ந்து இலக்கண நூல் செய்த தொல்காப்பியர், இலக்கமெனப் பொருள்படும் `எல் என்னும் லகரவீற்று உரிச்சொல்லை இடையியலிற் கூறியிருத்தல் இயலாது என்பதும், இரங்குதற் பொருட்டாகிய எல்லே என்னும் ஏகாரவீற்று இடைச் சொல்லையே ஆசிரியர் இவ்வியலிற் கூறியிருத்தல் வேண்டும் என்பதும், எல்லேயிரக்கம் எனத் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தில் ரகரத்தை லகரமாகக் கொண்ட பிறழ்ச்சியே இம்மாற்றத்திற்குக் காரணமென்பதும் காலஞ்சென்ற இலக்கணங் கடலனாராகிய அரசஞ்சண்முகனார் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். (உ-ம்) `வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே (6-45-3) எனத் திருநாவுக்கரசரும், `எல்லே யிளங்கிளியே இன்னும் உறங்குதியோ (திருப்பாவை - 15) `எல்லே யீதென்ன இளமை எம்மனைமார் காணில் ஒட்டார் (நாச்சியார் திருமொழி - 3-3) என ஆண்டாளும் அருளிய திருப்பாடல்களில் எல்லே என்னும் இடைச்சொல் இரங்குதற் பொருள்பட வருதல் இங்கு நோக்கத் தகுவதாகும். 270. இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. இஃது ஆர் என்னும் இடைச்சொல்லின் முடிபு கூறுகின்றது. (இ-ள்) இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச் சொல் பலரறி சொல்லால் முடியும். என்றவாறு. இங்கு இயற்பெயர் என்றது, இருதிணைக்கும் அஃறிணையில் இருபாலுக்கும் உரியபெயரை. பலர்க்குரியெழுத்தின் வினை என்றது, உயர்திணைக்குரிய பலர்பால் வினையை. `முடியுமே என்னும் செய்யுமென்னும் முற்று உயிர்மெய் கெட முடிமே என வந்தது. (உ-ம்) பெருஞ்சேந்தனார் வந்தார்; முடவனார் வந்தார்; முடத்தாமக் கண்ணியார் வந்தார்; தந்தையார் வந்தார்; எனவும், நரியார் வந்தார் எனவும் வரும். நம்பியார் வந்தார்; நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப் பெயர்முன் ஆர் வருதல் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். சாத்தன், சாத்தி என்னும் ஓரமைப் பெயர் முன்வந்து ஒருமை சிதையாமல் சாத்தனார், சாத்தியார் என நிற்கும் ஆர் என்னும் இடைச்சொல், அப்பெயரொடு ஒற்றுமை யுடையதாய்ப் பலரறி சொல்லால் முடிதலின், ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேறாதல் உணர்க. 271. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். இது மேலதற்குப் புறனடை. (இ-ள்) ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலையாய் வரும் இடம் அறிக. என்றவாறு. வழி - இடம். அறிதல் - அறிக. அல்லீற்று வியங்கோள். ஆகுமிடம் அறிக என்றதனால், ஆர் அசைநிலையாகுமிடத்து உம்மை முன்னரும் உம்மீற்றுவினை முன்னரும் வரும் என்பர் சேனாவரையர். (உ-ம்) `பெயரினாகிய தொகையு ருளவே என்புழித் தொகையுமார் என உம்மைமுன் ஆர் அசைநிலை யாயிற்று. `எல்லாவுயிரொடுஞ் செல்லுமார் முதலே என்புழிச் செல்லுமார் என உம்மீற்று வினைமுன் ஆர் அசைநிலை யாயிற்று. 272. ஏயுங் குரையும் இசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைய வென்ப. இஃது, ஏ, குரை என்னும் இடைச்சொற்களின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) ஏயென்னும் இடைச்சொல்லும், குரையென்னும் இடைச்சொல்லும் இசைநிறையும் அசைநிலையும் என ஓரொன்று இரண்டாம். என்றவாறு. (உ-ம்) ஏஎ யிஃதொத்தன் என்பொறான் கேட்டைக் காண் என்புழி ஏ இசை நிறையாய் வந்தது. `ஏஎ யென் சொல்லுக என்புழி ஏ அசைநிலையாய் நின்றது. அளிதோதானே பெறலருங் குரைத்தே என்புழிக் குரைஇசை நிறையாய் வந்தது. பல் குரைத் துன்பங்கள் சென்றுபடும் (திருக்குறள் - 1045) என்புழிக் குரை அசைநிலையாய் நின்றது. இசைநிறையாயும் அசைநிலையாயும் வரும் ஏகாரம், பெரும்பாலும் தொடர்மொழி முதற்கண் பிரிந்து நின்றல்லது வாராமையின், சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டிசைத்து இடையும் இறுதியும் நிற்கும் தேற்றேகாரம் முதலியவற்றோடு ஒருங்கு கூறாது இதனை வேறு கூறினார் எனவும், ஏ, குரை என்பனவற்றுள் ஒரு சொல்லே இசைநிறையும் அசைநிலையு மாகலுடைமையான் இவற்றை ஒரு சூத்திரத்தில் இயைத்துக் கூறினார் எனவும் கூறுவர் சேனாவரையர். 273. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். இது, மா என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மா என்னும் இடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும். என்றவாறு. (உ-ம்) `புற்கை யுண்கமா கொற்கை ளசைச்சொல். எனவரும். இச்சூத்திரத்தை, இவ்வாறே 438. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். என நன்னூலில் எடுத்தாள்வர் பவணந்தி முனிவர். 274. மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும் ஆவயி னாறு முன்னிலை யசைச்சொல். இது, முன்னிலையசைச்சொல் இவையெனத் தொகுத் துரைக் கின்றது. (இ-ள்) மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் இடைச்சொற்கள் ஆறும் முன்னிலைமொழியைச் சார்ந்துவரும் அசைச் சொல்லாம். என்றவாறு. (உ-ம்) கேண்மியா, `கண்பனியான்றிக, `கண்டது மொழிமோ, `உரைமதி, `மெல்லம் புலம்ப கண்டிகும், `காப்பும் பூண்டிசின் என முறையே மியா முதலிய ஆறும் முன்னிலைக்கண் அசையாய் வந்தன. மேற்குறித்த ஆறினுள் ஆசிரியர் தொல்காப்பியனாரால் ஏனையிடத்தொடும் வரும் எனப் பின்வரும் சூத்திரத்தாற் பிரித்துரைக்கப்படும் இகும், சின் என்னும் இரண்டினையும் நீக்கி, அவராற் கூறப்படாத அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் ஆறிடைச் சொற்களையும் கூட்டி இப்பத்திடைச் சொல்லும் முன்னிலைக்கண் அசைநிலையாய் வரும் என்றார் பவணந்தி முனிவர். 439. மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவீ யாழமுன் னிலையசை. என்பது நன்னூற் சூத்திரம். மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் இப்பத்திடைச் சொல்லும் முன்னிலைக்கண் அசைநிலையாய் வரும் என்பதாம். (உ-ம்) `மெல்லியற் குறுமகள் உள்ளிச் செல்வ லத்தை (புறம் - 196) எனவும், `வேய்நரல் விடரகம் நீயொன்று பாடித்தை (கலி - 40) எனவும், `காணிய வா வாழிய மலைச்சாரல் எனவும், `சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார் எனவும், `சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ எனவும், `நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின், கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே (கலி -7) எனவும் அத்தை முதலியன முன்னிலைக்கண் அசையாய் வந்தமை காண்க. 275. அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட முன்னிலையசைச்சொல் ஆறனுள் இகும் சின் என்னும் இரண்டசைகளும் படர்க்கைச் சொல்லோடும் தன்மைச் சொல்லோடும் பொருந்தும் நிலையுடைய என்று கூறுவர் புலவர். என்றவாறு. (உ-ம்) `கண்டிகும் அல்லமோ எனவும் `கண்டிசின்யானே எனவும் தன்மைக்கண் வந்தன. `புகழ்ந்திகு மல்லரோ பெரிதே எனவும், `யாரஃதறிந்திசினோரே எனவும் படர்க்கைக்கண் வந்தன. 276. அம்ம கேட்பிக்கும். இஃது அம்ம என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) அம்ம என்னும் சொல், `யான் கூறுகின்றதனைக் கேள் என்று ஒருவர் மற்றவரை யழைத்துக் கேட்பிக்கும் பொருண்மையினை உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) அம்ம வாழி தோழி (ஐங்குறு - 31) எனவரும். இதனைத் தழுவியமைந்தது, 437. அம்ம வுரையசை கேண்மினென் றாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அம்ம என்னும் இடைச்சொல், உரையசையாயும் கேண்மின் என்னும் முன்னிலை ஏவற்பொருட்கண்ணதாயும் வரும் என்பது இதன் பொருள். (உ-ம்) `பயனின்று மன்றம்ம காமம் (கலி - 142) என்பது உரையசை. அம்ம வாழி தோழி (நற்- 158) என்பது கேளாய் என்னும் பொருட்கண் வந்தது. 277. ஆங்க வுரையசை. இஃது உரையசையாமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆங்க என்னும் இடைச்சொல் கட்டுரைக்கண் அசைநிலையாய் வரும். என்றவாறு. (உ-ம்) `ஆங்கக் குயிலு மயிலுங்காட்டி எனவரும். 278. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். இதுவும் அது. (இ-ள்) ஒப்புமையுணர்த்தாத போலும் என்னும் சொல்லும் ஆங்க என்பது போல உரையசையாம். என்றவாறு. போலும், போல்வது என்னுந் தொடக்கத்துப் பல வாய்பாடு களும் அடங்கப் போலி எனக் குறித்தார். (உ-ம்) `மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் எனவும், `நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் எனவும் வரும். அசை நிலையும் ஒரு பொருள் குறித்தல்லது நில்லாமையின் `அப் பொருட்டாகும் என அதனைப் பொருளெனக்குறித்தார் ஆசிரியர். 279. யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லும் அசை நிலைக்கிளவி. இஃது அசைநிலையாம் இடைச்சொற்கள் சிலவற்றைத் தொகுத் துரைக்கின்றது. (இ-ள்) யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது எனவரும் ஏழிடைச் சொல்லும் அசைநிலையாம். என்றவாறு. (உ-ம்) `யா பன்னிருவர் மாணாக்கர் உளர் அகத்தியனார்க்கு எனவும், `புறநிழற் பட்டாளோ இவளிவட்காண்டிகா எனவும், `தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந்தூக்கி எனவும், `அது பிறக்கு எனவும் `நோதக இருங்குயிலாலுமரோ எனவும், `பிரியின் வாழா தென்போ தெய்ய எனவும், `விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே எனவும் வரும். இடம் வரையறுக் காமையால் இவை மூன்றிடத்திற்கும் உரிய என்பர் சேனாவரையர். இங்குக் கூறப்பட்ட ஏழிடைச் சொற்களுடன், இகும், சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், கின்று, நின்று என்பவற்றையும் சேர்த்து, 440. யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின்குரை யோரும் போலு மிருந்திட் டன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி. எனச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார். (உ-ம்) `கண்டிகு மல்லமோ (ஐங்குறு - 121) எனவும், `சாந்தஞெகிழிகாட்டி, ஈங்காகியவால் என்றிசின்யானே (நற் - 55) எனவும், `அளிதோதானேயது பெலங்குரைத்தே (புறம் - 5) எனவும், `நனவென்றெழுந்திருந்தேன் (முத்தொள்) எனவும், `நெஞ்சம் பிளந்திட்டு (கலி - 101) எனவும், `தேவாதி தேவனவன் சேவடி சேர்துமன்றே (சீவக - 1) எனவும், `பணியுமாம் என்றும் பெருமை (திருக்- 978) எனவும், `அவர்தாம் வந்தார் எனவும், `நீதான் பெரியை எனவும், `ஆசைப்பட்டிருக்கின்றேனே (சீவக - 1487) எனவும், `ஊரினின்று வந்தார் எனவும் இகும் முதலியன அசைநிலையாய் வந்தவாறு காண்க. 280. ஆக வாக லென்ப தென்னும் ஆவயின் மூன்றும் பிரிவி லசைநிலை. இது, விரிவிலசை நிலையாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) ஆக, ஆகல், என்பது என்னும் மூன்றிடைச் சொல்லும் கூறுங்கால் பிரிவின்றி (இரட்டித்து) நிற்கும் அசைநிலைகளாம். என்றவாறு. பிரிவிலசைநிலை எனவே இவை தனித்து நின்று அசைநிலை யாகா என்பதாம். ஒருவன் மற்றவனை நோக்கி `யான் இது செய்தேன் என்றோ `அவன் இது செய்தான், என்றோ `நீ இது செய்தாய் என்றோ கூறிய போது அதனைக்கேட்கும் மற்றவன், `ஆக ஆக, `ஆகல் ஆகல் என்று கூறுதல் உலகியல். இவை அவன் கூறுவதனை உடம் படாமைக்கண்ணும் அதன்கண் தனக்கு விருப்பமில்லாத நிலை யிலும் வரும் சொற்களாகும். இவ்வாறே ஒருவன் ஒன்றைக் கூறக்கேட்ட மற்றவன் `என்பது என்பது எனக் கூறுதலுண்டு. இக் கூற்று அவன் கூறியதனை நன்கென்று பாராட்டுதற்கண்ணும் தீதென்று இழித்தற்கண்ணும் நிகழும் எனவும் இவ்வாறு வரும் அசைநிலைக் குறிப்பினை வழக்கு நோக்கியுணர்ந்து கொள்ளுதல் வேண்டும் எனவும் குறிப்பிடுவர் சேனாவரையர். 281. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே ஆயிய னிலையுங் காலத் தானும் அளபெடை நிலையுங் காலத் தானும் அளபெடை யின்றித் தான்வருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். இஃது ஔவென்னும் இடைச்சொற் பொருள் படுமாறு கூறுகின்றது. (இ-ள்) இரண்டு மாத்திரையுடைத்தாய் மொழிக்கு ஈறாகா தெனப்பட்ட ஔகாரம், பிரிவிலசைநிலை யென மேற்கூறப் பட்ட அவ்வியல்வில் `ஔ ஔ என இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டியாது `ஔஉ என அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெடையின்றி (ஔ என)த் தான் வருமிடத்தும் பொருள் வேறுபடுதல் உள என்பர். அப்பொருள் வேறுபாடு சொல்லுவான் குறிப்பிற்குத் தகும் ஓசை வேறுபாட்டிற் புலப்படும். என்றவாறு. பொருள் வேறுபடுதலாவது உலக வழக்கில் சிறப்பும் மாறுபாடுமாகிய வேற்றுமை புலப்பட நிற்றல். (உ-ம்) `ஔ ஔ ஒருவன் தவஞ் செய்தவாறு என்ற வழிச் சிறப்புத் தோன்றியது. ஒரு தொழில் செய்வானை நோக்கி `ஔ ஔ வினிச் சாலும் என்றவழி மாறுபாடு தோன்றியது. `ஔஉ ஒருவன் இரவலர்க்கீந்தவாறு; ஔஉ வினி வெகுளல். எனவும், `ஔ வவன் முயலுமாறு; ஔவினித்தட்டுப் புடையல் எனவும் அளபெடுத்தும் அளபெடாதும் வந்தவழியும் முறையே சிறப்பும் மாறுபாடுமாகிய அப்பொருள் தோன்றியவாறு காணலாம். இது தத்தங் குறிப்பிற் பொருள்படுமாயினும் அடுக்கி வருதலுடைமை யால் ஈண்டு வைக்கப்பட்டது. 282. நன்றீற் றேயும் அன்றீற் றேயும் அந்தீற் றோவும் அன்னீற் றோவும் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். இது, சொல்லுதற் குறிப்பினாற் பொருள் வேறுபடும் இடைச் சொற்க ளிவையெனக் கூறுகின்றது. (இ-ள்) நன்று ஈற்று ஏ ஆகிய நன்றே என்பதும், அன்று ஈற்று ஏ ஆகிய அன்றே என்பதும், அந்து ஈற்று ஓ ஆகிய அந்தோ என்பதும் அன் ஈற்று ஓ ஆகிய அன்னோ என்பதும் அவை போல்வன பிறவும் குறிப்போசையாற் பொருளுணர்த்தும் இடைச் சொற்களாம். என்றவாறு. நன்றீற்று. ஏ - நன்றினது ஈற்றின்கண் ஏ என விரியும். இவ்விரிவு ஏனையவற்றிற்கும் ஒக்கும். ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு இசையாதான் `நன்றே நன்றே, `அன்றே அன்றே என அடுக்கிக் கூறலும் உண்டு. அங்ஙனம் கூறிய நிலையில் அவ்வடுக்குமொழி இசைவின்மைக் குறிப்பு விளக்கும். `அவனன்றே இது செய்வான் என அடுக்காது கூறியவழி அன்றீற்றேவுக்குத் தெளிவு முதலிய பிற பொருளும் தோற்றும். அந்தோ, அன்னோ எனவரும் ஓகார வீற்றிடைச் சொற்கள் இரண்டும் இரங்கற் குறிப்பு வெளிப்படுத்தும். `அன்னபிறவும் என்றதனால், `அதோ அதோ, `சோ சோ, `ஒக்கும் ஒக்கும் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற் பொருள்படும் இடைச் சொற்களாகக் கொள்வர் சேனாவரையர். 283. எச்ச வும்மையும் எதிர்மறை யும்மையும் தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. இது, மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படும் இலக்கண வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) எச்சவும்மை நின்றநிலையில் எஞ்சு பொருட் கிளவியாகிய எதிர்மறையும்மைந் தொடர் வந்து தம்முள் மயங்குதல் இல. என்றவாறு. `சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் என்பது எச்சவும்மை. அதனைச் `சாத்தனும் வந்தான், கொற்றனும் வரலுமுரியன் என எதிர்மறையும்மையொடு கூட்டிச் சொல்லின், அவை எச்சமும் அதனை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியுமாய்த் தம்முள் இயையா என்பதாம். 284. எஞ்சுபொருட் கிளவி செஞ்சா லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இஃது எச்சவும்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. (இ-ள்) எச்சவும்மையால் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மையில்லாத சொல்லாயின் அவ்வும்மையில்லாத சொல்லை அவ்வும்மைத் தொடராகிய எச்சத்தின் பின்னே சொல்லார், முன்னே சொல்லுக. என்றவாறு. செஞ்சொல் - உம்மையின்றிச் செவ்விதாக அமைந்த சொல். (உ-ம்) `சாத்தன் வந்தான் - கொற்றனும் வந்தான் எனவரும். `கொற்றனும் வந்தான் - சாத்தன் வந்தான் எனப் பின்னே கூறின் முற் கூறியதனை விலக்குவது போன்று தம்முள் இயையாமை கண்டு கொள்க. உம்மையில்லாத செஞ்சொல்லாயின் முற்படக் கூறுக எனவே, உம்மையொடு வரிற் பிற்படக்கூறுக என்றவாறாம். உம்மையில்லாத சொல்லாகிய செவ்வெண்ணின் ஈற்றிலேயே எச்சவும்மை வரும் என்பதனை, 426. செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை. என்னுஞ் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். (உ-ம்) `அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் எனவரும். அடகும் புலாலும் பாகும் பாளிதமும் உண்ணான் என உம்மை விரித்துப் பொருள் கொள்க. 285. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கின் எச்சக் கிளவி யுரித்து மாகும். இது, முற்றும்மை ஒரோவழி எச்சப்பொருள்பட வரும் என்கின்றது. (இ-ள்) முற்றும்மை யடுத்து நின்ற தொகைச் சொல்லிடத்து எச்சச்சொல் உரித்துமாகும். என்றவாறு. முற்றுதல் என்னும் பொருட்பண்பு ஒற்றுமை நயத்தால் உம்மைச் சொல்மேல் ஏற்றப்பட்டது. தொகைச்சொல் என்றா ரேனும் முறறும்மையடுத்த பொருட்பெயரும் கொள்ளப்படும். முற்றும்மை எச்சப்படுதல் விதிவினைக்கண் அன்றி எதிர்மறை வினைக்கண்ணே என்பது ஏற்புழிக் கோடலாற் கொள்ளப்படும். உரித்தும் ஆகும் எனவே எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். (உ-ம்) ஐம்பதுங் கொடால்; எல்லாரும் வந்திலர் என்புழி முற்றும்மை தம்பொருளுணர்த்தாது, சில குறையக்கொடு, சிலர் வந்தார், என்னும் பொருள் தோன்றி நின்றவாறு காண்க. இச் சூத்திரப் பொருளை, 425. முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும். என்ற சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். 286. ஈற்றுநின் றிசைக்கும் ஏயெ னிறுதி கூற்றுவயி னோரள பாகலு முரித்தே. இஃது ஈற்றசை யேகாரத்திற்கு ஓரிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) செய்யுளின் இறுதிக்கண் நின்று இசைக்கும் ஈற்றசையேகாரம் பொருந்தக்கூறும் கூற்றிடத்து ஒரு மாத்திரைத் தாகக் குறுகலும் உரித்து. என்றவாறு. (உ-ம்). `கடல்போற் றோன்றல காடிறந் தோரே (அகம்-1) என்புழி ஏகாரம் ஒரு மாத்திரைத்தாக நின்றவாறு அறிக. ஈறறு நின்றிசைக்கும் ஏ என் இறுதி என்றது, ஈற்றசை யேகாரத்தை. ஓரளபாகலும் என்புழி உம்மை எதிர்மறை. எனவே ஓரளபாகாது தனக்குரிய இரண்டு மாத்திரைத்தாக நிற்றலே பெரும் பான்மை என்பதாம். 287. உம்மை யெண்ணுவேமெனவெனெண்ணுந் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. இஃது எண்களுக்குச் சொல் முடிபு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) உம்மையால் வரும் எண்ணும் எனவால் வரும் எண்ணும் தத்தம் இறுதிக்கண் தொகைச்சொற்பெறுதலை முறைமையாக வுடையஅல்ல. என்றவாறு. எனவே தொகை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம். (உ-ம்). உயர்திணைக்குரிமையும் அஃறிணைக்குரிமையும் ஆயிருதிணைக்கும் ஓரன்ன வுரிமையும் அம்மூவுருபின எனவும் இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி எனவும் உம்மையெண் தொகை பெற்றும் பெறாதும் வந்தது. நிலனென நீரெனத் துயென வளியென நான்கும் எனவும் உயிரென உடலென இன்றியமையா எனவும் எனவெண் தொகை பெற்றும் பெறாதும் வந்தது. தொகை எனப் பொதுப்படக் கூறியதனால் எண்ணுப் பெயரே யன்றி எஞ்சாமைப் பொருளில் வரும் அனைத்தும் எல்லாம் என்னுந் தொடக்கத்தனவும் தொகையாகக் கொள்ளப்படும். 288. எண்ணே கார மிடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். இஃது எண்ணிடத்து வருவதோர் வழுவமைக்கின்றது. (இ-ள்) எண்ணுதற் பொருளில் வரும் ஏகாரம் (எண்ணும் பொருள்தோறும் வாராது) இடையிட்டு வந்தாலும் (பொருள் தோறும் இயைந்து) எண்ணுதற் பொருளதாம். என்றவாறு. (உ-ம்) `மலை நிலம் பூவே துலாக் கோலென்றின்னர் எனவும், `தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, யுறலோ டாங்கைம் புலனென மொழிப எனவும் எண்ணேகாரம் இடை யிட்டு வந்ததாயினும், `மலையே நிலமே பூவே துலாக்கோலே என்று இன்னர் என எண்ணப்படும் பொருள்தோறுஞ் சென்றியைந்து எண்ணுதற்பொருள் தந்தவாறு கண்டு கொள்க. 289. உம்மை தொக்க வெனாவென் கிளவியும் ஆவீ றாகிய வென்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. இஃது எண்ணின்கண் வருவனசில இடைச்சொல் உணர்த்துகின்றது. (இ-ள்) தொக்க எனா என்னும் சொல்லும் ஆகாரத்தை யீற்றிலேயுடைய என்று (என்றா) என்னும் சொல்லுமாகிய அவ்விரண்டும் எண்ணுமிடத்து வரும். என்றவாறு. `எனவும் என்பது உம்மைதொக்கு அகரம் நீண்டு `எனா எனவும், `என்று என்பது ஆகாரம்பெற்று `என்றா எனவும் வரும் என்பதாம். `உம்மை தொக்க எனாவென் கிளவி எனவே அச்சொல் எனாவும் என உம்மொடு வருதலும் உடைத்து என்றும் உம்மொடு வந்தவழி அவ்வும்மை எண்ணுளடங்கும் என்றும் கூறுவர் சேனா வரையர். எனாவென்பதன்கண் உம்மை தொகும் எனவே என்றா என்பதன்கண் விரிந்து நிற்கும் என்பதாம். (உ-ம்) வளிநடந்தன்ன வாஅய்ச்செல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக் கடல் கண்டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்கும் களிற்றின் ரெனாஅ (புறம் - 197) என்பதனுள் எனவும் என்பது எனா என உம்மைதொக்கு நிற்க எண்ணுக் குறித்து நின்றது. ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா கற்பும் ஏரும் எழிலும் என்றா (தொல்- பொருளியல் 52) என்பதனுள் உம்மை விரிந்துநிற்க என்றா என்பது எண்ணுக் குறித்து நின்றது. `எண்ணுவழிப்பட்டன எனவே இவை சொற்றொறும் வருதலேயன்றி இடையிட்டும் வரும் என்பதாம். பின்சாரயல் புடை தேவகையெனாஅ எனவும், ஓப்பிற் புகழிற் பழியினென்றா எனவும் இடையிட்டு வந்தவாறு காண்க. 290. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் ஏயி னாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. இஃது எண்ணுதற் குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட எனா, என்றா என்பனவற்றால் வரும் எண்ணின் முடிவும், எண்ணிடைச் சொல்லாலன்றிப் பெயரால் எண்ணப்படும் செவ்வெண்ணின் முடிவும், ஏகாரத்தால் வரும் எண்ணின் முடிவும் எவ்விடத்து வரினும் தொகையின்றி நடவா. என்றவாறு. `இறுதி என்றது ஈண்டு அவற்றை முடித்தற்குரிய சொல் முடிபினை. (உ-ம்) நிலனெனா நீரெனா விரண்டும்; நிலனென்றா நீரென்றா விரண்டும்; நிலம் நீர் தீ வளி விசும்பு எனும் ஐந்தும்; ஞாயிறே திங்களே எனும் இருசுடரும் எனத்தொகை பெற்று வந்தன. எண்ணுங்கால் தொகைபெற்றே வருவனவாகிய இவ்விடைச் சொற்களையும் தொகையின்றியும் வருவனவாகிய உம், என, என்று, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்களையும் பகுத் துணர்த்தும் முறையில் அமைந்தது, 427. பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனாவெண் நான்குந் தொகைபெறும்; உம்மையென் றெனவொ டிந்நான் கெண்ணும்ஃ தின்றியு மியலும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயரிடத்து வரும் செவ்வெண்ணும், ஏகாரவெண்ணும் என்றா, எனா, என்னும் எண்ணிடைச் சொற்களும் ஆகிய நான்கும் இறுதியில் தொகைபெற்று நடக்கும். உம், என்று, என, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்கள் நான்கும் தொகை பெறாதும் நடக்கும் என்பது இதன் பொருளாகும். (உ-ம்). நிலனும் நீரும் தீயும் நல்ல; சாத்தனென்று கொற்றனென்று குறவனென்று சொன்னவர் வந்திலர்; நிலனென நீரெனத் தீயென வளியென விசும்பென அறியும் பூதம்; பொன்னொடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே என முறையே உம், என்று, என, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்கள் தொகையின்றி வந்தன. அஃது இன்றியும் இயலும் என்னும் உம்மையால் `உணவும் உடையும் உறையுளும் மூன்றும் வேண்டும் எனத்தொகை பெற்று வருதலும் கொள்க. 291. உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார். இஃது எண்ணும்மைக்கண் வருவதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) உம்மை எண்ணின்கண் வேற்றுமையுருபு தொகுதலை நீக்கார் ஆசிரியர். என்றவாறு. எனவே உம்மையல்லாத ஏனையெண்ணின்கண் வேற்றுமை யுருபு தொகுதல் நீக்கப்படும் என நியமித்தவாறாம். `உம்மை எண் என்றது உம்மை கொடுத்து எண்ணப்படும் தொடரினை. உருபு என்றது வேற்றுமையுருபினை. உருபு எனப் பொதுப் படக் கூறினாராயினும் ஏற்புழிக்கோடலால் அங்ஙனம் தொகுதற்குரிய ஐயுருபுங் கண்ணுருபுமே கொள்ளப்படும். (உ-ம்) பாட்டும் உரையும் பயிலா ஒருவன் என்ற வழி ஐயுருபும், `இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி என்றவழிக் கண்ணுருபும் தொக்கவாறு காண்க. 292. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. இஃது உம் என்னும் இடைச்சொல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) வினைசெயல் மருங்கிற் காலமொடு வரும் இடைச் சொற்களுள் உம் ஈறு உந்து எனத்திரியும் இடமும் உண்டு. என்றவாறு. ஈண்டு உம் என்றது, ஏற்புழிக் கோடலால் செய்யும் என்னும் வாய்பாட்டிற் காலமுணர்த்திவரும் உம்மீற்றினை எனக் கொள்வர் உரையாசிரியர். `இடனுமாருண்டே என்றதனால் இத்திரிபு செய்யுளிடத்துவரும் செய்யுமென்னும் பெயரெச்சத்தின் கண்ணதெனக் கொள்வர் பவணந்திமுனிவர். செய்யுமெ னெச்ச வீற்றுயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம் உந்தாகலும் (நன்னூல் - 340) எனவரும் தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். `செய்யும் என்பது வினைச் சொல்லாயினும் அதனீற்றிற் காலமுணர்த்தி நிற்கும் உம் என்பது இடைச்சொல்லாதலின் அதன் திரிபுகூறும் இச்சூத்திரம் இடையியலில் இடம்பெற்றது. (உ-ம்) `தண் குரவைச் சீர் தூங்குந்து எல்வளை மகளிர் தலைக்கே தரூஉந்து (புறம் - 24) எனவரும் தொடர்களில் சீர்தூங்கும் என்பது சீர்தூங்குந்து எனவும், தரூஉம் என்பது தரூஉந்து எனவும் உம் உந்தாய்த் திரிந்தமை காண்க. 293. வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. இஃது எண்ணிடைச் சொற்குஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) வினையொடு நிற்பினும் எண்ணிடைச்சொற்கள் தம் எண்ணுநிலையில் மாறுபடா; அவற்றொடு வருங்கால் அவற்ற வற்றியல்பு ஆராய்தல் வேண்டும். என்றவாறு. (உ-ம்) `உண்டுந் தின்றும் ஓடியும் பாடியும் வந்தான் எனவும், `உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வரும். ஒழிந்த எண்ணொடு வருவன வுளவேல் அவையும் இவ்வாறு எண்ணுநிலையிற் றிரியாமை கண்டு கொள்க. எண்ணிடைச்சொல் பெரும்பான்மையும் பெயரோடல்லது நில்லாமையின் அதனை முற்கூறிச் சிறுபான்மை வினையொடு நிற்றலுமுடைமையால் அதனை ஈண்டுக்கூறினார். எண்ணுதற் பொருளில் வரும் இவ்விடைச்சொற்கள் வினையெச்சங்களுள் ஏற்பனவற்றோடு வருதலன்றி ஏனைமுற்றுச்சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா என்பதூஉம், ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை என்பதூஉம் ஆராய்ந்துணர்க என அறிவுறுத்துவார், `நினையல் வேண்டும் அவற்றவற்றியல்பே என்றவார். இச்சூத்திரப் பொருளை அறிவுறுத்தும் முறையிலமைந்தது, 429. வினையொடு வரினு மெண்ணினைய வேற்பன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். `எண், வினையொடு வரினும் ஏற்பனைஇனைய என இயையும். எண்ணிடைச் சொற்கள் வினையொடு கூடி வருமிடத்தும் மேற்பெயரொடு கூடி வந்தாற் போலும் ஏற்பன என்பது இதன் பொருள். ஏற்பன எனவே, என்றும் எனவும் ஒடுவும் அருகியல்லது வாரா எனக் கொள்க என்பர் மயிலைநாதர். 294. என்று மெனவு மொடுவுந் தோன்றி யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. இதுவும் எண்ணின்கண் வருவதோர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) என்று, என, ஒடு என்னும் இடைச்சொற்கள் ஓரிடத்தே தோன்றி எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று பொருந்தும் இடமுடைய. என்றவாறு. என்றும் எனவும் ஒடுவும் (ஒருவழித்) தோன்றி எண்ணினுட் பிரிந்து ஒன்று வழியுடைய என இயைத்துப் பொருள் கொள்க. ஒன்றுதல் - பொருந்துதல். எண்ணுதற் பொருளில் வரும் ஒடு என்பதோர் இடைச்சொல் உண்டென்பது இச் சூத்திரத்தாற் புலனாம். (உ-ம்) `வினை பகை யென்றிரண்டின் எச்சம் (திருக்குறள் - 471) எனவும், `கண்ணிமை நொடியென (தொல் - எழுத்து - 7) எனவும், `பொருள் கருவிகாலம் வினையிட னொடைந்தும் (திருக் - 675) எனவும் வரும். இவ்விடைச் சொற்கள் `வினையென்று பகையென்று எனவும், `கண்ணிமையென நொடியென எனவும், `பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடத் தொடு எனவும் தாம் நின்ற இடத்தினின்றும் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு காண்க. இச்சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 428. என்று மெனவு மொடுவு மொரோவழி நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். என்று, என, ஒடு என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் எண்ணின்கண் ஓரிடத்தே நின்றனவேனும் அவ்விடத்தினின்றும் பிரிந்து சென்று எண்ணும் பொருள்தோறும் இயைவன என்பது இதன் பொருளாகும். 295. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்து வேறுபடினுந் தெரிந்தனர் கொளலே. இஃது எடுத்தோதப்பட்ட இடைச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள், `அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருள் என நிலைபெறச் சொல்லப் பட்ட இயல்பினையுடையன வாயினும், (அவை சார்ந்துநிற்கும்) வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத்தோன்றி வேறு பொருளினையுடையனவாகியும் அசைநிலையாயுந் திரிந்து வரினும் ஆராய்ந்து கொள்க. என்றவாறு. எனவே, முற்குறித்த இடைச்சொற்கள் கூறிய முறையால் வருதல் பெரும்பான்மையொன்றும், வேறுபட வருதல் சிறுபான்மை யென்றும் சொல்லியவாறாம் எனவும், வினையொடும் பெயரொடும் என்றது அவ்விடைச் சொற்கள் வேறு பொருள என்றுணர்தற்குச் சார்பு கூறியவாறு எனவும் விளக்கங் கூறுவர் சேனாவரையர். (உ-ம்). `சென்றீ பெரமநிற் றகைக்குநர் யாரோ என்புழி ஓகாரம் ஈற்றசையாய் வந்தது. `கலக்கொண்டேன் கள்ளென்கோ காழ்கொற்றன் சூடென்கோ என்புழி ஓகாரம் எண்ணுதற் பொருளில் வந்தது. `ஓர்கமா தோழியவர் தேர் மணிக்குரலே என மா முன்னிலையசைச் சொல்லாயிற்று. `அதுமற் கொண்கன்றேரே என் மன் அசைநிலையாயிற்று. பிறவும் இவ்வாறு பொருள் வேறுபடுவன இச்சூத்திரத்தால் தழுவிக் கொள்ளப்படும். 296. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இஃது இவ்வியலுக் கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்டனவன்றி அவை போல்வன பிறவரினும், அவற்றை முற்கூறிய சொல்லின் இயல்பினால் உணர்ந்து கொள்க. என்றவாறு. இவ்வியலிற் கூறுப்பட்ட இடைச்சொற்கள் வேறுபட வருதலை வழக்கினுட் சார்பும் இடமும் குறிப்பும் பற்றி அறிந்து கொள்ளுமாறு போலவே, கூறப்படாத இடைச் சொற்களின் பொருள் வேறுபாட்டையும் இடமும் சார்பும் குறிப்பும் பற்றி இஃது அசைநிலை, இஃது இசைநிறை, இது குறிப்பினால் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க என்பதாம். (உ-ம்)- சிறிது தவிர்ந்தீக மாள நின்பரி சிலருய்ம்மார் எனவும், பலரே தெய்ய வெம் மறையாதீமே (ஐங்குறு - 65) எனவும், அறிவார் யாரஃதிறுவுழியிறுகென எனவும், அஞ்சுவ தோரு மறனே எனவும், பணியுமா மென்றும் பெருமை எனவும் நிலீஇய ரத்தை நீயே (புறம் 375) எனவும், `வேய்நரல் விடரகம் நீயொன்று பாடித்தை எனவும், `செழுந் தேரோட்டியும் வென்றீ எனவும், `காதனன் மர நீ மற்றிசினே எனவும், `ஈங்காயினவால் என்றிசின் யானே எனவும், `புனற்கன்னி கொண்டிழிந்த தென்பவே எனவும், `சேவடி சேர்துமன்றே எனவும், மாள, தெய்ய, என, ஓரும், ஆம், அத்தை, இத்தை, ஈ, இசின், ஆல், என்ப, அன்றே என்பன அசைநிலையாய் வந்தன. குன்றுதொறாடலும் நின்றதன் பண்பே எனத் தொறு என்பது தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நின்றது. இது `நாடோறு நாடி என நீண்டும் நிற்கும். ஆ என்பது வியப்பு உள் வழியும் மறுத்தல் உள்வழியும் பொருளுணர்த்துதலும், ஐயென்பது இசை வுள் வழியும் வருத்தம் உள்வழியும் பொருளுணர்த்துதலும் கொள்க. பொம்மென, பொள்ளென, கதுமென இவை விரைவு உணர்த்தின. கொம்மென என்பது பெருக்கம் என்னும் குறிப் புணர்த்திற்று. ஆனம், ஏனம், ஓனம் என்பன எழுத்துச்சாரியை. `எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் எனவரும் எகர வினாவும், அங்கு, இங்கு, உங்கு, ஈங்கு, ஊங்கு என நீண்டு வருவனவும் பிறவாற்றான் வருவனவும் ஆகிய இடைச் சொல்லெல்லாம் இப்புறனடையாற் றரீஇக் கொள்ளப்படும். எண்ணிடைச் சொல்லாகக் கூறப்பட்ட ஒடுவும், கூறப்படாத தெய்ய என்னும் இடைச்சொல்லும் இசை நிறை மொழியாய் வரும் என்பதனை, 435. ஒடுவுந் தெய்யவும் இசைநிறை மொழியே. என்னும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். (உ-ம்) `முதைப் புனங்கொன்ற வார்கலி யுழவர், விதைக்குறு வட்டி போதொடு பொதுள (குறுந் - 155) எனவும், `சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்த்தே எனவும் ஒடுவும் தெய்யவும் இசை நிறையாய் வந்தன. 8. உரியியல் உரிச்சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இஃது உரியியலென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளையுடையவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை என்பது செவியால் உணரப்படுவது. குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணரப் படுவது. பண்பு என்பது ஐம்பொறிகளால் உணரப்படும் குணமாகும். தத்தமக்கியல்பில்லா இடைச் சொற்போலாது இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்றென்றும், பெரும்பான்மையும் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல்லா யிற்றென்பாரு முளரென்றும் கூறுவர் சேனாவரையர். ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து பொருட் குணத்தை விளக்கலின் உரிச் சொல் பெயரின் வேறு என்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், `ஒருசொல் பல பொருட்குரிமை தோன்றினும், பலசொல் ஒருபொருட்குரிமை தோன்றினும் என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனா மென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற்கிளவி என்று ஓதினமையால் வடநூலாசிரியர் `தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்துஞ் சொற்கள் யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின் கட் பயிற்சி யில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றன வென்றும், தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின் அவ்விரு வகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றன வென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச் சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடு மென்றும், அவை பெயர் வினைகளைச் சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்பும் தொழிற்பண்புமென இரண்டாயடங்குமென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல் லெனப்பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற்பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச் சொல்லேயாமென்றுங் கூறுவர் சிவஞானமுனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99 ஆக இளம்பூரணரும், 100 ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98 ஆக நச்சினார்க் கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியல் முதற்சூத்திரத்தால் உரிச்சொற்கு இலக்கணமுணர்த்திய தொல்காப்பியர், உரிச் சொற்களின் பொருளை யுணருங்கால் அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றி உணர்தலாகாமையின் பொருள் வெளிப்படாத உரிச்சொற்கள் பொருள் வெளிப்பட்ட சொல்லொடு சார்த்தி அச்சொற்களையே எடுத்தோதி ஈண்டுப் பொருளுணர்த்தப் படும் என இவ்வியல் இரண்டாஞ் சூத்திரத்துத் தோற்றுவாய் செய்து கொண்டு, இவ்வியலில் 3 முதல் 91 வரையுள்ள சூத்திரங்களால் `உறு என்பது முதல் `ஈறுழ் என்பது ஈறாக நூற்றிருபது உரிச்சொற்களை எடுத்தோதிப் பொருள் உணர்த்துகின்றார். 92 முதலாக இவ்வியலின் பின்னுள்ள சூத்திரங் களால் உரிச் சொற்களின் பொருளுணரும் முறையும் பொருளு ணர்த்தும் முறையு முதலாயின உணர்த்தப் பெறுகின்றன. 297. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். இச்சூத்திரம் உரிச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்து கின்றது. (இ-ள்) உரிச் சொல்லை விரித்துக்கூறுமிடத்து, இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்மேல் தோன்றி, பெயரிடத்தும் வினை யிடத்தும் தம்முருபு தடுமாறி, ஒருசொல் பல பொருட்கு உரித்தாய் வரினும், பலசொல் ஒருபொருட்கு உரித்தாய் வரினும், வழக்கிற் பெருகவழங்காத சொல்லைப் பயின்று வழங்கும் சொல்லொடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின் கண் யாதானும் ஒரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப் படும். என்றவாறு. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளையுடையனவாய் பெயரையும் வினையையும் போன்றும் அவற்றிற்கு முதனிலை யாகியும் தம்முருபு தடுமாறி, ஒருசொல் ஒரு பொருட்கு உரித்தாதலேயன்றி, ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லாம் என்றும், அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின், வெளிப்படப் பொருளுணர்த்தாதனவற்றை வெளிப்படப் பொருளுணர்த்தும் சொற்களோடு சார்த்தித் தம்மையே எடுத்தோதிப் பொருளுணர்த்தப்படும் என்றும் உரிச்சொற்கெல்லாம் பொது விலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்தும் முறையும் உணர்த்தியவாறு. மெய் என்பது பொருள். தடுமாறுதல் என்பது பெயர் பற்றியும் வினை பற்றியும் வரும் வரவினை நோக்கி. அவ்வாறு தடுமாறுங்கால் ஒருசொல் பலபொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறு தலும், பலசொல் ஒருபொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம் என்பர் இளம்பூரணர். மெய்தடு மாறுதல் - தம்முருபு தடுமாறுதல் எனவும், பெயரினும் வினையினும் பலசொல் ஒரு பொருளுணர்த்தலும் உரிச்சொல்லின்கண் அமைந்துள்ளமை பற்றி ஆசிரியர் அவற்றை இங்கு எடுத்தோதினா ராயினும், உரிச்சொற்கே யுரிய சிறப்பிலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரியவாய் வருதலேயாம் எனவும் விளக்குவர் சேனாவரையர். கறுப்பு, தவ என்னும் உரிச்சொற்கள் முறையே பெயராயும் வினையாயும் தம்முருபு தடுமாறின. துவைத்தல், துவைக்கும் என்பன முறையே பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாயின. இத்தொல்காப்பிய நூற்பாவையும் இதற்கு உரையாசிரியர்கள் கூறிய விளக்கங்களையும் அடியொற்றிச் சுருக்கமும் தெளிவும் பொருந்த உரிச்சொற்கு இலக்கணங் கூறுவது, 441. பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் அறிவிக்கும் பெயர்ச் சொல்லாகி, ஒரு குணத்திற்கே யுரியனவாயும் பல குணத்திற்கே யுரியனவாயும், ஏனைப் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் நீங்காதனவாய்ச் செய்யுட்கு உரியவாய் வரும் கிழமையுடையன உரிச்சொல்லாம் என்பது இதன் பொருளாகும். தொல்காப்பியர், `இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றி எனக் குறித்த உரிச்சொல்லின் இயல்பினையே பல்வகைப் பண்பும் பகர்பெயராகி என்ற தொடரிற் குறித்தார் பவணந்தி முனிவர். இசை - ஓசை. குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு - பொறிகளால் உணரப்படும் குணம். குணப்பண்பும் தொழிற் பண்பும் பொருள் எனவும் படும். ஆதலின் அவற்றை உணர்த்தும் உரிச்சொல்லும் பெயர்ச் சொல்லாம் என்பார், `பல்வகைப் பண்பும் பகர் பெயராகி என்றார். ஒருசொல் ஒரு குணத்தை யுணர்த்தலே யன்றி ஒருசொல் பல குணத்தையும் பலசொல் ஒரு குணத்தையும் உணர்த்திவருதல் உண்டென்பார், `ஒருகுணம் பலகுணந்தழுவி என்றார். இவையும் பண்புப் பெயராயினும் ஏனைப் பெயர் வினைகளைவிட்டு நீங்காமல் அவற்றைச் சார்ந்து, செய்யுட்கே சிறப்புரிமை யுடையவாய் வருவன உரிச்சொல் என்பார், `பெயர் வினை ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் என்றார். இவ்வாறு பண்புக்கு உரிமைபூண்டு வரும் உரிச்சொற்களின் பொருளை விளக்கவந்த நன்னூலார், அச்சொற்களாலுணர்த்தப் படும் பலவகைப் பண்புகளையும் உரிச்சொல்லியலில் 2 முதல் 14 வரையுள்ள 12 சூத்திரங்களால் விரித்துணர்த்துகிறார். பண்பாவது இதுவென விளக்கவந்த நன்னூலார், 442. `உயிருயி ரில்லாதாம் பொருட்குணம் பண்பே என்றார். உலகத்து உயிருள்ளதும் உயிரில்லதும் ஆகிய இருவகைப் பொருள்களின் குணம் பண்பு எனப்படும் என்பது இதன்பொருள். கண் முதலிய பொறிகளாற் கண்டுணர்தற்கியலாத அருவப் பொருளாகிய உயிர்களை அவை பெற்றுள்ள காணப்படும் உடம்புகளாற் கண்டுணர்ந்து அவற்றின் உடம்புகளிற் பொருந்திய மெய், நா, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளையும் அகக்கருவியாகிய மனத்தையும் வாயிலாகக் கொண்டு அவ் வுயிர்கள் பெறும் ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகவுள்ள அறிவின் வளர்ச்சிக்கேற்ப அவற்றை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை அறுவகையுயிர்களாகப் பண்டைத் தமிழ் நூலோர் பகுத்துரைப்பர். இப்பகுப்பு முறையினை விரித்துரைப்பது, ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (தொல் - மரபு - 27) எனவரும் மரபியற் சூத்திரமாகும். `தொட்டால் அறிவதாகிய ஊற்றுணர்ச்சி யொன்றை யுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனொடு சுவை யறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈரறிவுயிர். இவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய நாற்றவுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர். இம்மூவகை யுணர்வுடன் கண்களாற் கண்டறி தலாகிய ஒளியுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர். இந்நால்வகை யுணர்வுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப்பெற்றது ஐயறிவுயிராகும். மேற்குறித்த ஐம்பொறி யுணர்வுகளுடன் மனத்தால் எண்ணி யுணர்வதாகிய உய்த்துணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிராம் என இவ்வாறு உயிர்களின் இயல்பினை உள்ளவாறுணர்ந்தோர் அவற்றை அறுவகையுயிர்களாக முறைப்படுத்து உணர்த்தினார்கள் என்பது இச் சூத்திரத்தின் பொருளாகும். மனனுணர்வுடைய மக்களையும் தேவர் நரகர் என்பவர் களையும், விலங்கு பறவை முதலிய ஐயறிவுடைய உயிர் வகையுள் அடக்கி, ஐவகையுயிர்களாக வகைப் படுத்துதல் சமண்சமயக் கோட்பாடாகும். சமண முனிவராகிய பவணந்தி யார் தம் சமயச் சான்றோர் கூறிய ஐவகையுயிர்ப் பாகுபாட்டினையே தாமும் கொண்டு, 443. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஓரறி வாதியா உயிரைந் தாகும். எனச் சூத்திரஞ் செய்துள்ளார். மெய், நா, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளினுள்ளும் ஒன்று முதலாகக் கீழ் நின்ற தனையும் மேல்மேற் பெற்று அறிதலால் ஓரறிவுயிர் முதலாக உயிர் ஐவகைப்படும் என்பது இதன் பொருள். புல்லும் மரனும் ஓரறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள எனக் கூறுவது, `புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல்-மரபு-28) என்பதாகும். இதனை அடியொற்றியமைந்தது, 444. புன்மர முதல உற்றறியும் ஓரறிவுயிர். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வவகையைச் சார்ந்தன பிறவும் உளவெனக் கூறுவது, நந்து முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல் - மரபு - 29) என்பதாகும். இதனைப் பின்பற்றியமைந்தது, 445. முரள் நந் தாதி நாவறிவோ டீரறிவுயிர். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். முரள் - இப்பி. நந்து - நத்தை. சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவெனக் கூறுவது, சிதலும் எறும்பும் முவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல் - மரபு- 39) என்பதாகும். இதனை அடியொற்றியமைந்தது, 446. சிதலெறும் பாதிமூக் கறிவின் மூவறிவுயிர். என்னும் நன்னூற் சூத்திரமாகும். சிதல் - கறையான். நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள எனக் கூறுவது, நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல்-மரபு-31) என்பதாகும். இதனைப் பின்பற்றியமைந்தது, 447. தும்பிஞெண் டாதிகண் ணறிவின் நாலறிவுயிர். என்னும் நன்னூலாகும். நாற்கால் விலங்காகிய மாவும் பறவையும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள எனவும், மனவுணர்வுடைய ஆறறிவுயிர் எனச் சிறப்பித்துரைக்கப்படுவோர் மக்களே; அவ் வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம் எனவும் அறிவுறுத்துவன, மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல் - மரபு - 33) எனவும், மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல்-மரபு-34) எனவும் வரும் மரபியற் சூத்திரங்களாகும். புறத்தே காணப்படும் ஐம்பொறிகளின் வாயிலாக அறியும் ஐயறிவுயிர்களுடன் புறத்தேகாணப்படாத அகக் கருவியாகிய மனத்தால் உணரும் உணர்வு மிகுதியுடைய மக்கள் முதலியோரை யும் இயைத்து ஐயறிவுயிர்களாகக் கூறுவது, 448. வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதி செவியறிவோ டையறி வுயிரே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அஃதேல் அவர் (தொல்காப்பியனார்) ஆறறிவுயிரும் ஒன்றுண்டென்றாராலோ வெனின், அவர் மனத்தையும் ஒரு பொறியாக்கி, அதனான் உணரும் மக்களையும் விலங்கினுள் ஒரு சாரனவற்றையும் ஆறறிவுயிரென்றார்; இவர் (பவணந்தியார்) அம்மனக்காரியம் மிகுதி குறைவால் உள்ள வாசி (வேறுபாடு) அல்லது அஃது எல்லாவுயிர்க்கும் உண்டென்பார் மதம்பற்றி இவ்வாறு சொன்னாரென்க என மயிலைநாதர் கூறும் விளக்கம் இங்கு நினைத்தற்குரியதாகும். உயிரில் பொருள்களாவன இவையென உணர்த்தப் போந்த நன்னூலார், 449. உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடல்முத லனைத்தும் உயிரல் பொருளே. என்றார். அறிவு மயமாயுள்ள உயிரொன்றையும் ஒழிந்து நின்ற உடம்பு முதலாயுள்ள உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரில்லாத பொருள்களாகும் என்பது இதன் பொருள். புல் மரம் முதலியவற்றை ஓரறிவுயிர் முதலியவாக ஒற்றுமைப் பட வழக்கினும் அவற்றின் உடம்பும் உயிரும் தம்முள் வேறுபட்ட இருவேறு பொருள்களே என்பதனை அறிவுறுத்துவது, 450. ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றுபட்ட தன்மை யான் ஒன்றுபோலத் தோன்றுவனவாயினும் வேறுபட்ட தன்மையான் உடலும் உயிரும் தம்முள் வேறாம் என்பது இதன் பொருளாகும். `உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும் (தொல்-பொருள்-8) எனவரும் தொல்காப்பியத்தொடர் உடம்பும் உயிரும் வேறு வேறு பொருள் என்பதனைப் புலப்படுத்துதல் காண்க. உடலுடன் கூடிவாழும் உயிர்களின் குணப்பண்புகளாவன இவையென உணர்த்துவது, 451. அறிவரு ளாசை யச்ச மானம் நிறை பொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி துணிவழுக்காறன் பெளிமை யெய்த்தல் துன்ப மின்ப மிளமை மூப் பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமதம் மறவி யினைய உடல்கொ ளுயிர்க் குணம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு, வெறுப்பு, உவப்பு, இரக்கம், நாணம், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி என்னும் முப்பத்திரண்டும் இவை போல்வன பிறவும் உடலோடு கூடிவாழும் உயிரின் குணப் பண்புகளாகும். என்பது இதன்பொருள். உடலோடு கூடாவழி இக்குணங்கள் தோன்றா என்பார் `உடல் கொள் உயர்க்குணம் என்றார். உடலோடு கூடிவாழும் உயிரின் தொழிற் பண்புகளாவன இவையென விளக்குவது, 452. துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் உய்த்தல் ஆதி உடலுயிர்த் தொழிற்குணம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். துய்த்தல் முதலிய ஐந்தும் இவைபோல்வன பிறவும் உடலோடு கூடிய உயிரின் தொழிற் பண்புகளாம் என்பது இதன் பொருள். உயிர் உடலுடன் கூடாவழி இத்தொழிற்குணங்கள் நிகழா என்பார், `உடலுயிர்த் தொழிற்குணம் என்றார். இவற்றுள், துய்த்தலாவது, மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளானும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் ஐம்புலன்களையும் நுகர்தலாம். துஞ்சல் - உறங்குதல். தொழுதல் - வணங்குதல். அணிதல் - அழகு பெறப் புனைந்து கொள்ளுதல். உய்த்தலாவன - மடைத் தொழில், உழவு, வாணிகம், கல்வி, எழுத்து, சிற்பம் முதலிய பல தொழில்களையும் மேற்கொண்டு நிகழ்த்துதல். இனி உயிரில் பொருள்களின் பண்பாவன இவையென வுணர்த்துவது, 453. பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம் அறுசுவை யூறெட் டுயிரில் பொருட்குணம். என்னும் நன்னூற் சூத்திரமாகும். சதுரம், ஆயதம் வட்டம் முக்கோணம் சிலை துடி தோரை முழா எறும்பு கூன் குறள் முதலான பலவகை வடிவுகளும், நறுநாற்றம் தீயநாற்றம் என இருவகை நாற்றமும், வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமை என ஐவகை நிறங்களும், கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவைகளும், வெம்மை, தண்மை, மென்மை வன்மை திண்மை நொய்ம்மை இழுமெனல் சருச்சரை என்னும் எட்டு ஊறுகளும் உயிரில்லாத பொருளின் பண்புகளாம் என்பது இதன்பொருள். மேற்குறித்த உயிர்ப் பொருட்கும் உயிரில் பொருட்கும் உரிய பொதுவான தொழிற்பண்புகள் இவையென உணர்த்துவது, 454. தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் ஈதல் இன்ன அவ் விருபொருட் டொழிற்குணம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தோன்றல் முதல் ஈதல் ஈறாகவுள்ள ஒன்பதும் இவைபோல்வனபிறவும் மேற்கூறிய உயிர்ப் பொருட்கும் உயிரில் பொருட்கும் பொதுவாகவுரிய தொழிற் பண்புகளாம் என்பது இதன் பொருளாகும். நன்னூல் உரிச்சொல்லியலில் 2 முதல் 14 முடிய அமைந்த இச்சூத்திரங்கள் யாவும், உரிச்சொற்களால் உணர்த்தப்படும் `இசை குறிப்பு பண்பு எனத் தொல்காப்பியனாராற் குறிக்கப்பட்ட குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகியவற்றை விரித்துக் கூறும் விளக்கங்களாகும். 298. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. இஃது உரிச்சொற்களுள் இவ்வியலிற் கூறப்படுவன இவையென வுணர்த்துகின்றது. (இ-ள்) வழக்கின் எல்லாரானும் அறியப் பொருள் வெளிப்பட வழங்கும் உரிச்சொற்களை ஈண்டு எடுத்துக் கூறுதல் வேண்டா; எல்லாரானும் வெளிப்பட (ப்பொருள்) அறியப் படாத உரிச்சொல் மேலன பின்வரும் சூத்திரங்கள். என்றவாறு. வழக்கினுள் எல்லாரானும் அறிந்து பயிலப்படும் உரிச் சொற்களை மீண்டும் எடுத்துரைத்தலாற் பயனின்மையின் அச் சொற்கள் இவ்வியலில் எடுத்துரைக்கப்படமாட்டா; பலராலும் பயிலப்படாத உரிச்சொல்லே இவ்வியலில் எடுத்துரைக்கப்படும் என ஆசிரியர் வரையறை செய்து கொண்டவாறு. மேல என்பது மேன எனத் திரிந்து நின்றது. பொருள் வெளிப்பட வாரா உரிச்சொற்களைப் பின்வரும் நூற்பாக்களில் ஆசிரியர் கிளந்தோதி விரிக்கின்றார். 299. அவைதாம், உறுதவ நனியென வரூஉ மூன்றும் மிகுதி செய்யும் பொருள வென்ப. இது, குறிப்புப்பற்றி வரும் உரிச்சொல் பொருள்படுமாறு கூறு கின்றது. (இ-ள்) வெளிப்பட வாரா உரிச்சொற்கள்தாம், உறு, தவ, நனி, எனவரும் மூன்று சொற்களும் மிகுதி என்னும் சொல்லு ணர்த்தும் குறிப்புப் பொருளையுடையவென்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. குறிப்புப் பொருள்பற்றிய உரிச்சொல்லின் பரப்பு நோக்கி அவற்றை முற்கூறினார். (உ-ம்) உறுபுனல் தந்து உலகூட்டி எனவும், ஈயாது வீயும் உயிர் தவப்பலவே எனவும் வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே எனவும் உறு, தவ, நனி என்னும் மூன்று சொற்களும் மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த்தின. இம்மூன்றுடன் சால என்பதனையும், உள்ளது சிறத்தல் என்னும் பொருளுடைய கூர்ப்பு கழிவு என்னும் சொற்களையும் கூட்டி, 455. சால வுறுதவ நனிகூர் கழிமிகல். எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு சொற்களும் மிகுதி என்னும் பண்பை விளக்கும் உரிச்சொற்களாம் என்பது இதன் பொருளாகும். (உ-ம்) பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி எனவும், பொறை நில்லா நோய்கூரப் புல்லென்ற நுதலிவள் எனவும், சினனேகாமங் கழிகண்ணோட்டம் எனவும், சால, கூர், கழி என்பன மிகுதிப் பொருளிற் பயின்றமை காண்க. 300. உரு வுட்காகும் புரை யுயர்பாகும். (இ-ள்) உரு என்னும் உரிச்சொல் உட்கு என்னும் குறிப்பு உணர்த்தும். புரை என்னும் உரிச்சொல் உயர்பு என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `உருகெழு கடவுள் எனவும், `புரைய மன்ற புரையோர் கேண்மை எனவும் உருவும் புரையும் முறையே உட்கும் உயர்பும் உணர்த்தின. உட்கு - அச்சம். 301. குருவுங் கெழுவு நிறனா கும்மே. இது பண்பு பற்றி வரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. (இ-ள்) குரு என்னும் சொல்லும் கெழு என்னும் சொல்லும் நிறமென்னும் பண்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `குருமணித்தாலி எனவும் `செங்கேழ் மென்கொடி எனவும் வரும். குரு `குரூஉ என நீடலும், கெழு `கேழ் என நீடலும் ஈறுகெடலும் `எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே என்பதனாற் கொள்க எனவும், இக்கெழு பொருத்தத்தை உணர்த்து தலும் கெழுமுதல் என்னும் வழக்கிற்கு முதனிலையாய் நிற்றலும் `கூறிய கிளவி என்பதனாற் கொள்க எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். 302. செல்லல் இன்னல் இன்னாமையே. இது குறிப்பு பற்றி வரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. (இ-ள்) செல்லல், இன்னல் என்னும் உரிச்சொற்கள் இன்னாமையென்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் எனவும் `வெயில் புறந்தருஉம் இன்னலியக்கத்து எனவும் வரும். 303. மல்லல் வளனே. 304. ஏ பெற் றாகும். இவையும் குறிப்புப் பற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றன. (இ-ள்) மல்லல் என்னும் சொல் `வளமும் ஏ என்னுஞ் சொல் `பெருக்கமும் ஆகிய குறிப்புணர்த்துவன. என்றவாறு. பெற்று - பெருக்கம். (உ-ம்) `மல்லல் மால்வரை எனவும் `ஏகல்லடுக்கம் எனவும் மல்லல் ஏ என்பன முறையே வளமும் பெருக்கமும் ஆகிய குறிப்புணர்த்தின. 305. உகப்பே யுயர்தல் உவப்பே உவகை. இதுவும் அது. (இ-ள்) உகப்பு என்னும் சொல் உயர்தலும், உவப்பு என்னுஞ் சொல் உவகையும் ஆகிய குறிப்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `விசும்புகந்தாடாது என உகப்பு உயர்வுணர்த்தியது. `உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇய என உவப்பு உவகையுணர்த்தியது. 306. பயப்பே பயனாம். 307. பசப்பு நிற னாகும். (இ-ள்) பயப்பு என்னும் சொல் பயன் என்னும் குறிப் புணர்த்தும். பசப்பு என்னும் சொல் பசலைநிறமென்னும் பண்புணர்த்தும். (உ-ம்) `பயவாக் களரனையர் கல்லாதவர் (திருக் - 406) எனவும் `மையில் வாண்முகம் பசப்பூரும்மே எனவும் வரும். 308. இயைபே புணர்ச்சி. 309. இசைப்பிசை யாகும். (இ-ள்) இயைபு என்னும் சொல் புணர்ச்சி என்னும் குறிப்புணர்த்தும். இசைப்பு என்னுஞ் சொல் இசைப்பொருண்மை யுணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `இயைந்தொழுகும் எனவும், `யாழிசையூப் புக்கும் எனவும் வரும். 310. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி. (இ-ள்) அலமரல், தெருமரல் என்னும் இரண்டுரிச் சொற்களும் சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (உ-ம்) `அலமர லாயம் எனவும் `தெருமரலுள்ள மொடன்னை துஞ்சாள் எனவும் வரும். 311. மழவுங் குழவும் இளமைப் பொருள. (இ-ள்) மழ என்னும் சொல்லும் குழ என்னுஞ் சொல்லும் இளமையென்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) மழ களிறு, குழக் கன்று எனவரும். 312. சீர்த்தி மிகு புகழ். 313. மாலை இயல்பே. (இ-ள்) சீர்த்தி என்னும் சொல் பெரும்புகழ் என்னும் குறிப்புணர்த்தும். மாலை என்னும் சொல் இயல்பு என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `வயக்கல் சால் சீர்த்தி எனவும், `இரவரன் மாலையனே எனவும் சீர்த்தி, மாலை என்னும் சொற்கள் முறையே பெரும்புகழும் இயல்பும் ஆகிய குறிப்புணர்த்தின. 314. கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும். (இ-ள்) கூர்ப்பு, கழிவு என்னும் உரிச்சொற்கள் இரண்டும், முன் சிறவாது உள்ளது சிறத்தலாகிய குறிப்பு உணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `துனிகூர் எவ்வமொடு எனவும், `கழி கண்ணோட் டம் எனவும் கூர்ப்பு, கழிவு என்பன ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பையுணர்த்தின. உள்ளது சிறத்தல் என்றது, முன்சிறவாது சுருங்கியுள்ளது பின் சிறந்து பெருகுதல் என்னும் குறிப்பினதாகும். இதனை மிகுதியென்னும் பொருளில் அடக்குவர் நன்னூலார். (நன்னூல் உரி 455) 315. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள. (இ-ள்) கதழ்வு, துனைவு, என்னும் உரிச்சொற்கள் இரண்டும் விரைவாகிய குறிப்பினைப் பொருளாக உடையன. என்றவாறு. (உ-ம்) `கதழ் பரி நெடுந்தேர் எனவும், `துனைபரி நிவக்கும் புள்ளின்மான எனவும் கதழ்வும் துனைவும் விரைவென்னும் குறிப்புணர்த்தின. 316. அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும். (இ-ள்) அதிர்வு, விதிர்ப்பு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் நடுக்கமாகிய குறிப்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `அதிர வருவதோர் நோய் (திருக் - 429) எனவும் `விதிர்ப்புறவறியா ஏமக் காப்பினை (புறம் - 20) எனவும் நடுக்கமாகிய குறிப்புணர்த்தின. அதிழ்வென்று பாடம் ஓதி, `அதிழ்கண் முரசம் என்று உதாரணங்காட்டுவாரும் உளர் என்பர் சேனாவரையர். 317. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்வும் நெடுமையுஞ் செய்யும் பொருள. (இ-ள்) வார்தல், போகல், ஒழுகல் என்னும் மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்புணர்த்தும் என்றவாறு. (உ-ம்) `வார்ந்திலங்கும் வையெயிற்று எனவும், `வார் கயிற்றொழுகை எனவும் வார்தல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. `போகுகொடி மருங்கால் எனவும், `வெள்வேல் விடத்தரொடு காருடைய போகி எனவும் போகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. `ஒழுகு கொடி மருங்குல் எனவும் `மால்வரை யொழுகிய வாழை எனவும் ஒழுகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. 318. தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். (இ-ள்) தீர்தல், தீர்த்தல் என்னும் இரண்டுரிச் சொற்களும் விடுதலாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை எனவும், `நங்கையைச் செற்றதீங்கு தீர்த்தனர் கொண்மின் எனவும் தீர்தல், தீர்த்தல் என்பன விடுதலாகிய குறிப்புணர்த்தின. இவை தன்வினை பிறவினைகட்குப் பொதுவாய் நின்றன எனவும், இவை பிறவினை யாங்கால் தீர்வித்தல், தீர்ப்பித்தல் என வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்கும் எனவும், பிளத்தல், அணங்கல் என்றாற் போலத் தன்வினை பிறவினைக்குப் பொதுவாய் வருவனவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். 319. கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு. (இ-ள்) கெடவரல், பண்ணை என்னும் அவ்விரண்டு சொற் களும் விளையாட்டு என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `கெடவர லாயமொடு எனவும் `பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் எனவும் அவ்விரு சொற்களும் விளை யாட்டாகிய குறிப்புணர்த்தின. 320. தடவுங் கயவும் நளியும் பெருமை. (இ-ள்) தட, கய, நளி என்னும் மூன்றுரிச் சொற்களும் பெருமையென்னும் பண்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் எனவும், `கயவாய்ப் பெருங்கை யானை எனவும், `நளிமலை நாடன் நள்ளி (புறம் - 150) எனவும் பெருமையாகிய பண்புணர்த்தின. 321. அவற்றுள், தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். (இ-ள்) அம்மூன்றுரிச் சொற்களுள் தட என்னுஞ் சொல் பெருமையே யன்றிக் கோடுதல் என்னும் பண்பையும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `தடமருப் பெருமை எனவரும். 322. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும். (இ-ள்) கய என்னும் உரிச்சொல் பெருமையே யன்றி மென்மையாகிய பண்பையும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `கயந்தலை மடப்பிடி எனவரும். மெல்லியோர் என்ற பொருளிற் `கயவர் என்னுஞ் சொல் கீழோரைக் குறித்து வழங்குதலை உலக வழக்கிற் காணலாம். 323. நளியென் கிளவி செறிவு மாகும். (இ-ள்) நளி என்னும் உரிச்சொல் பெருமையே யன்றிச் செறிவு என்னும் குறிப்பினையும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `நளியிருள் எனவரும். 324. பழுது பயமின்றே. 325. சாயல் மென்மை. 326. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே. (இ-ள்) பழுது என்னுஞ் சொல் பயனின்மையாகிய குறிப் புணர்த்தும். சாயல் என்னுஞ் சொல் மென்மையாகிய பண்புணர்த்தும். முழுது என்னுஞ் சொல் எஞ்சாமையாகிய குறிப்பு ணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பழுது கழி வாழ்நாள் எனவும், `சாயல் மார்பு எனவும், `மண் முழுதாண்ட எனவும் அவை முறையே பயனின்மையும் மென்மையும் எஞ்சாமையும் உணர்த்தின. பயனின்மையைக் குறிக்கும் பழுது என்னுஞ்சொல் குற்றத்தை உணர்த்துதலை உலக வழக்கிற் காண்க. 327. வம்பு நிலையின்மை 328. மாதர் காதல். 329. நம்பு மேவு நசையா கும்மே. (இ-ள்) `வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மை என்னும் குறிப்புணர்த்தும். மாதர் என்னும் சொல் காதல் என்னும் குறிப்புணர்த்தும். நம்பு, மேவு என்பன இரண்டும் நசை என்னும் குறிப்புணர்த்தும், என்றவாறு. (உ-ம்) `வம்புமாரி எனவும், `மாதர் நோக்கு எனவும், `நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி எனவும், `பேரிசை நவிர மேவுறையும் எனவும் வரும். 330. ஓய்த லாய்த னிழத்தல் சாஅய் ஆவயி னான்கும் உள்ளதன் நுணுக்கம். (இ-ள்) ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் அந்நான்கு உரிச்சொற்களும் முன்நுணுகாதுள்ளதன் நுணுக்கம் என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `வேனில் உழந்த வறிதுயங்கோய்களிறு எனவும், `பாய்ந் தாய்ந்த தானை பரிந்தானா மைந்தினை எனவும், `நிழத்த யானை மேய் புலம்படர எனவும் `கயலறலெதிரக் கடும்புனல் சாஅய் எனவும் ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் உரிச்சொற்கள் முன்னுள்ளதன் நுணுக்கமாகிய குறிப்புணர்த்தின. ஆய்ந்த - தானை - பொங்குதல் விசித்தலால் நுணுகிய ஆடை. 331. புலம்பே தனிமை. 332. துவன்றுநின்ற வாகும். 333. முரஞ்சன் முதிர்வே. 334. வெம்மை வேண்டல். (இ-ள்) புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் குறிப்புணர்த்தும். துவன்று என்னுஞ் சொல் நிறைவு என்னும் குறிப்புணர்த்தும். முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் குறிப்புணர்த்தும். வெம்மை என்னுஞ் சொல் விரும்புதலாகிய பண்புணர்த்தும். (உ-ம்) `புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி எனவும், `ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் எனவும், `சூன் முரஞ் செழிலி எனவும், `எம் வெங் காமம் எனவும் வரும். 335. பொற்பே பொலிவு. 336. வறிது சிறிதாகும். 337. ஏற்ற நினைவுந் துணிவு மாகும். (இ-ள்) பொற்பு என்னுஞ்சொல் பொலிவு என்னும் குறிப் புணர்த்தும். வறிது என்னுஞ்சொல் சிறிது என்னும் குறிப்புணர்த்தும். ஏற்றம் என்னுஞ் சொல் நினைவும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பெருவரை யடுக்கம் பொற்ப எனவும், `வறிது வடக்கிறைஞ்சிய எனவும், `கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி எனவும், `எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன் எனவும் பொற்பு - பொலிவு என்னுங் குறிப்பிலும், வறிது - சிறிது என்னுங் குறிப்பிலும், ஏற்றி - நினைந்து, ஏற்றம் - துணிவு என்னுங் குறிப்பிலும் வந்தவாறு காண்க. 338. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (இ-ள்) பிணை, பேண் என்னும் உரிச்சொற்கள் பெட்பு என்னுஞ் சொல்லினது பொருளையுடைய, என்றவாறு. பெட்பு என்பது புறந்தருதலாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்பும் உணர்த்தும் என்பர் நச்சினார்க்கினியர். (உ-ம்) `அரும்பிணையகற்றி வேட்ட ஞாட்யினும் எனவும், யானும் பேணின னல்லனோ மகிழ்ந எனவும் முறையே பிணை, பேண் என்பன புறந்தருலாகிய குறிப் புணர்த்தின. பெற்றோற் பெட்கும் பிணையை யாகென எனவும், அமரர்ப் பேணியும் ஆகுதி யருத்தியும் எனவும் அவ்விரு சொற்களும் விருப்பம் என்னும் பண்புணர்த்தின. பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் (தொல் - களவு - 11) எனவும், காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் (தொல்-கற்பு-6) எனவும் ஆசிரியர் பெட்பின் பகுதியாகிய பெட்டென்னும் உரிச்சொல்லை உடம்பொடு புணர்த்து ஓதியதனை இச்சூத்திர வுரையில் எடுத்துக்காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர். 339. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். (இ-ள்) பணை என்னுஞ் சொல் பிழைத்தல் என்னும் குறிப்புணர்த்தும். அதுவேயுமன்றிப் பெருத்தலாகிய குறிப்பும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பணைத்து வீழ் பகழி என்புழிப் பணை என்பது பிழைத்தலாகிய குறிப்புணர்த்தியது; `வேய்மருள் பணைத்தோள் என்புழிப் பெருத்தலாகிய குறிப்புணர்த்தியது. பெருமையாகிய பண்பின் வேறாகப் பெருத்தலென்னும் குறிப்புணர்த்தும் மென்பார் `பெருப்பு எனக் குறித்தார். பணை என்பது மூங்கிலை உணர்த்திய வழிப் பெயர்ச்சொலெனப்படுமன்றி உரிச் சொலன்மை யுணர்க. 340. படரே யுள்ளல் செலவு மாகும், (இ-ள்) படர் என்னுஞ் சொல் உள்ளுதல் என்னும் குறிப் புணர்த்தும்; அதுவேயுமன்றிச் செல்லுதல் என்னும் குறிப்பும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி எனவும், கறவை கன்று வயிற் படர எனவும் படர் என்பது முறையே உள்ளுதல், செல்லுதல் என்னும் குறிப்புணர்த்திய வாறுணர்க. 341. பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள. (இ-ள்) பையுள், சிறுமை என்னும் உரிச்சொற்கள் நோய் என்னும் குறிப்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) பையுண் மாலை எனவும், சிறுமையுறுப செய்பறியலரே எனவும் வரும். 342. எய்யாமையே யறியாமையே. (இ-ள்) எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) எய்யாமை யல்லை நீயும் வருந்துதி எனவரும். அறிதற் பொருட்டாய் எய்தல் என்றானும் எய்த்த லென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறையன்மையறிக என்பர் சேனாவரையர். அறிதல் என்னும் உடம்பாட்டிற்கு (எதிர்) மறையாகிய அறியாமை என்னுஞ் சொல்லான் எய்யாமையை உணர்த்தவே அவ் எய்யாமை (எதிர்) மறைச்சொல் என்பதூஉம், அதற்கு `எய்த்தல் என்னும் உடம்பாட்டுச் சொல் உளதென்பதூஉம் பெற்றாம். அவ்வுடம்பாட்டை ஓதாது (எதிர்) மறையை ஓதினார் (எதிர்) மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும் என்றற்கு. எய்த்துநீர்ச் சிலம்பின் குரை மேகலை `என்புழி `எய்த்து என்பது அறிந்து என்னும் பொருளு ணர்த்திற்று; என்பர் நச்சினார்க்கினியர். 343. நன்று பெரிதாகும். (இ-ள்) நன்று என்பது பெரிது என்னும் குறிப்புணர்த்தும் என்றவாறு. (உ-ம்) `நன்று மரிதுற்றனையாற் பெரும எனவரும். `பெருமை யென்னாது பெரிது என்றதனான் நன்று என்பது வினையெச்சமாதல் கொள்க என்பர் சேனாவரையர். 344. தாவே வலியும் வருத்தமு மாகும். (இ-ள்) தாவென்னுஞ்சொல் வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) தாவினன்பொன்றைஇய பாவை எனவும் தாவாக் கொள்கை தகைசால் சிறப்பின் எனவும் தா என்னும் உரிச்சொல் முறையே வலியும் வருத்தமும் ஆகிய குறிப்புணர்த்தியது. தாஇல் நன்பொன் - வலியில்லாத நல்ல பசும் பொன். தாவாக் கொள்கை - வருத்தமில்லாத விரதம். இனி கருங்கட் டாக்கலை பெரும்பிறிதுற்றென எனத் தாவுதலும் `தாவாத வில்லைவலிகளும், எனக் கேடும் உணர்த்துதல் `கூறியகிளவி என்பதனாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். 345. தெவுக் கொளற் பொருட்டே. 346. தெவ்வுப் பகையாகும். (இ-ள்) தெவு என்னும் உரிச்சொல் கொள்ளுதலாகிய குறிப்புணர்த்தும். தெவ்வென்னுஞ்சொல் பகையாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு. (உ-ம்) `நீர் தெவு நிரைத் தொழுவர் எனவும், தெவ்வுப்புலம் சிதைய எய்கணை சிதறி எனவும் வரும். 347. விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே. (இ-ள்) விறப்பு, உறப்பு, வெறுப்பு என்னும் உரிச்சொற்கள் செறிவு என்னும் குறிப்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `விறந்தகாப் போடுண்ணின்று வலியுறுத்தும் எனவும், `உறந்த விஞ்சியுயர்நிலை மாடத்து எனவும், `வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் எனவும் வரும். 348. அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். (இ-ள்) அம்மூன்றுள் விறப்பு என்னுஞ் சொல் செறிவேயன்றி வெருவுதற்குறிப்பும் உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) அவலெறி யுலக்கைப்பாடு விறந்து எனவரும். 349. கம்பலை சும்மை கலியே யழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. (இ-ள்) கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்னும் நான்கு உரிச்சொற்களும் அரவமாகிய இசைப் பொருண்மையை யுணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `களிறுகவர் கம்பலை போல; `துளிமழை தோயுந் தண்பரங் குன்றிற், கலிகொள் சும்மை யொலிகொள் ஆயம்,; `கலிகொளாய மொடு மலிபு தொகுபெடுத்த; `உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்குலூரே எனவரும். `கலிகொள் சும்மை என்பதனுட் கலி செருக்கினையுணர்த்துதல் `கூறிய கிளவி என்பதனாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். இசைப் பொருண்மையுணர்த்தும் கம்பலை சும்மை கலி அழுங்கல் என்னும் உரிச் சொற்களோடு இப்பொருளிற் பயிலும் வேறு உரிச்சொற்கள் பதினெட்டினையும் கூட்டி 22 ஆகத் தொகுத்துரைப்பது, 458. முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை இரக்கழுங் கியம்பல் இமிழ்குளி றதிர்குரை கனைசிலை சும்மை கவ்வை கம்பலை அரவ மார்ப்போ டின்னன வோசை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கவ்வை, கம்பலை, அரவம், ஆர்ப்பு ஆகிய இருபத்திரண்டும் இவை போல்வன பிறவும் ஓசையென்னும் ஒரு குணத்தையுணர்த்தும் உரிச்சொற்களாம் என்பது இதன்பொருள். (உ-ம்) `முழங்க முந்நீர் முழுவதும் வளைஇ `குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை, `கலி கெழு மூதூர், `பறை யிசை யருவி, `தோல் துவைத்தல், `பிளிறு வார் முரசம், `இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள், `இரங்கு முரசின், `அழுங்கன் மூதூர், `கலைமுரசம தியம்ப, `இமிழ்கடல் வளைஇய, `குளிறு முரசங்குணில்பாய, `களிறு களித் ததிருங்கார், `குரைபுனற் கன்னி, `கனைகடற் சேர்ப்ப, `சிலைத்தார் முரசங் கறங்க, `தள்ளாத சும்மை மிகு தக்கிணநாடு, `கெளவை நீர்வேலி, `வினைக்கம்பலை மனைச் சிலம்பவும், `அறை கடலரவந்தானை, `ஆர்த்த பல்லியக்குழாம் என முழக்கு முதல் ஆர்ப்பு ஈறாகவுள்ள இருபத்திரண்டுரிச் சொற்களும் ஓசையென்னும் ஒரு குணத்தை யுணர்த்தினமை காண்க. 350. அவற்றுள், அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். (இ-ள்) அழுங்கல் என்னும் உரிச்சொல் அரவம் என்னும் இசைப்பொருண்மையே யன்றி இரக்கமுங்கேடுமாகிய குறிப் புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பழங்கண்ணோட்டமு நலிய அழுங்கினனல்லனோ எனவும், `குணனழுங்கக் குற்றம் உழை நின்று கூறுஞ் சிறியவர்க்கு எனவும் அழுங்கல் என்னும் சொல் இரக்கம், கேடு என்னும் குறிப்புணர்த்தியது. 351. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (இ-ள்) கழும் என்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `கழுமிய ஞாட்பு எனவரும். 352. செழுமை வளனுங் கொழுப்பு மாகும். (இ-ள்) செழுமை என்பது வளனுங் கொழுப்புமாகிய பண்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `செழும்பல் குன்றம் எனவும் `செழுந்தடிதின்ற செந்நாய் எனவும் முறையே வளமும் கொழுப்பும் உணர்த்தியது. 353. விழுமஞ் சீர்மையும் சிறப்பும் மிடும்பையும். (இ-ள்) விழுமம் என்னுஞ்சொல் சீர்மை, சிறப்பு, இடும்பை என்னும் குறிப்புணர்த்தும், என்றவாறு. (உ-ம்) `விழுமியோர்க் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு எனவும், `வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து எனவும், `நின்னுறு விழுமங் களைந்தோன் எனவும் முறையே சீர்மையும் சிறப்பும் இடும்பையும் உணர்த்தியது. 354. கருவி தொகுதி. 355. கமநிறைந் தியலும். (இ-ள்) கருவி என்னும் உரிச்சொல் தொகுதி என்னும் குறிப்புணர்த்தும். கமம் என்பது நிறைவாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `கருவிவானம் எனவும் `கருஞ்சூல் மாமழை எனவும் வரும். மின் இடி முதலாயவற்றின் தொகுதியாகிய மேகம் என்பார் கருவி வானம் என்றார். 356. அரியே யைம்மை. 357. கவவகத் திடுமே. (இ-ள்) அரி என்னுஞ்சொல் ஐம்மையாகிய குறிப் புணர்த்தும். கவவு என்பது அகத்திடுதலாகிய குறிப்புணர்த்தும். ஐம்மை - அழகுடைமை. (உ-ம்) `அரிமயிர்த் திரண் முன்கை எனவும், `கழு விளங்காரம் கவைஇய மார்பே எனவும் வரும். 358. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலும் இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். (இ-ள்) துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் என்னும் உரிச் சொற்கள் இசைப் பொருளுணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `வரிவளை துவைப்ப, `ஆமாநல்லேறு சிலைப்ப, `கடிமரந்தடியுமோசை தன்னூர், நெடுமதில் வரைப்பிற் கடிமனை இயம்ப, `ஏறிரங் கிருளிடை எனவரும். இச்சொற்களை, 458 - முழக்கிரட்டொலி எனவரும் சூத்திரத்தில் நன்னூலார் எடுத்தாண்டுள்ளமை முன்னர்க் குறிக்கப் பெற்றது. 359. அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். (இ-ள்) மேற்குறித்த உரிச் சொற்களுள் இரங்கல் என்பது இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்தும். என்றவாறு. கழிந்தபொருள் பற்றிவருங் கவலையைக் கழிந்தபொருள் எனக் குறித்தார். (உ-ம்) `செய்திரங்கா வினை எனவரும். 360. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. (இ-ள்) இலம்பாடு, ஒற்கம் என்னும் அவ்விரண்டு சொற்களும் வறுமை என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `இலம்படு புலவர் ஏற்றகை நிறைய எனவும் `ஒக்கல் ஒற்கம் சொலிய எனவும் வரும். இலம் என்னும் உரிச்சொல், பெரும்பான்மையும் பாடு என்னுந் தொழில் பற்றியல்லது வாராமையின் `இலம்பாடு என்றார் என்பர் சேனாவரையர். இலம்படு புலவர் என்பதற்கு, இல்லாமை உண்டாகின்ற புலவர் என அல்வழியாகப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். வறுமைப்படும் புலவர் என்பர் இளம்பூரணர். 361. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (இ-ள்) ஞெமிர்தல், பாய்தல் என்னும் உரிச்சொற்கள் பரத்தலாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து எனவும், `பாய்புனல் எனவும் வரும். 362. கவர்வு விருப்பாகும். 363. சேரே திரட்சி. 364. வியலென் கிளவி யகலப் பொருட்டே. (இ-ன்) கவர்வு என்பது விருப்பென்னும் குறிப்புணர்த்தும். சேர் என்பது திரட்சியென்னும் குறிப்புணர்த்தும். வியல் என்பது அகலமென்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `கவர்நடைப் புரவி எனவும் `சேர்ந்து செறி குறங்கு எனவும் `வியலுலகம் எனவும் கவர்வு, சேர், வியல் என்பன முறையே விருப்பு, திரட்சி, அகலம் என்னும் குறிப்புணர்த்தின. 365. பேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள. (இ-ள்) பே, நாம், உரும் என்னும் மூன்று சொற்களும் அச்சம் என்னும் குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் எனவும் `நாம நல்லரா எனவும், `உருமில் சுற்றம் எனவும் அச்சமாகிய குறிப் புணர்த்தின. நாம் நாம எனத் திரிந்து வழங்கிற்று. 366. வய வலி யாகும். 367. வாளொளியாகும். 368. துயவென் கிளவி யறிவின் றிரிபே. (இ-ள்) வய என்னும் சொல் வலியாகிய குறிப்புணர்த்தும். வாள் என்னும் சொல் ஒளியாகிய பண்புணர்த்தும். துயவென்னும் சொல் அறிவு வேறுபடுதலாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `துன்னருந் துப்பின் வயமான் எனவும், `வாண் முகம் எனவும், `துயவுற்றேம் யாமாக எனவும் வரும். 369. உயாவே யுயங்கல். 370. உசாவே சூழ்ச்சி. 371. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். (இ-ள்) உயா என்னு உரிச்சொல் உயங்கல் (வருந்துதல்) என்னும் குறிப்புணர்த்தும். உசா என்னும் சொல் சூழ்ச்சியாகிய குறிப்புணர்த்தும். வயா என்னுஞ்சொல் வேட்கைப் பெருக்கமாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பருந்திருந் துயா விளி பயிற்று மியாவுயர் நனந்தலை எனவும், `உசாத்துணை எனவும், `வயவுறுமகளிர் எனவும் வரும். 372. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. (இ-ள்) கறுப்பு, சிவப்பு என்னும் உரிச் சொற்கள் இரண்டும் வெகுளியாகிய குறிப்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்) `நிற் கறுப்பதோர் அருங்கடி முனையன் எனவும், `நீ சிவந்திறுத்த நீரழி பாக்கம் எனவும் வரும். கருமை செம்மை என்னாது கறுப்புச் சிவப்பு என்றதனான் தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளியுணர்த்தாமை கொள்க என்பர் சேனாவரையர். 373. நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. (இ-ள்) கறுப்பு, சிவப்பு என்பன வெகுளியேயன்றி நிறவேறுபாடுணர்த்தற்கும் உரிய. என்றவாறு. (உ-ம்) `கறுத்த காயா எனவும் `சிவந்த காந்தள் எனவும் வரும். இவை வெளிப்படு சொல்லாயினும் `கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள என்றதனால், கருங்கண், செவ்வாய் எனப் பண்பாய் வழியல்லது தொழிலாயவழி இவை நிற வேறுபாடு உணர்த்தா என்பது படுதலின், அதனைப் பாதுகாத்தற்கு `நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப என்றார் என்பது சேனாவரையர் தரும் விளக்கமாகும். 374. நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. (இ-ள்) நொசிவு, நுழைவு, நுணங்கு என்னும் உரிச்சொற்கள் நுண்மையாகிய பண்புணர்த்துவன. என்றவாறு. (உ-ம்). `நொசி மருங்குல் எனவும், `நுழைநூற்கலிங்கம் எனவும், `நுணங்கு துகில் நுடக்கம் போல, எனவும் வரும். 375. புனிறென் கிளவி யீன்றணிமைப் பொருட்டே. (இ-ள்) புனிறு என்னும் உரிச்சொல் ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்). `புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி எனவரும். புனிற்றா - ஈன்று அணிய கன்றினையுடைய பசு. 376. நனவே களனு மகலமுஞ் செய்யும். (இ-ள்) நனவு என்னும் உரிச்சொல் களன், அகலம் ஆகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `அகனமர்ந்து செய்யாள் உறையும் என அமர்தல் மேவுதல் என்னும் குறிப்புணர்த்தியது. `யாணது பசலை என `யாணு என்பது கவின் (அழகு) என்னுங் குறிப்புணர்த்தியது. 377. மதவே மடனும் வலியு மாகும். (இ-ள்) மதவென்னும் உரிச்சொல் மடன், வலி ஆகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்). `பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் எனவும், `கயிறிடு கதச் சேப்போல மதமிக்கு எனவும் மடனும் வலியு மாகிய குறிப்புணர்த்தியது. 378. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. (இ-ள்) மதவென்னுஞ்சொல் மடனும் வலியுமேயன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மை யுணர்த்துதற் குரியதாம் என்றவாறு. உ-ம். `மதவிடை எனவும், `மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே எனவும் மதவென்பது மிகுதியும் வனப்புமாகிய குறிப்புணர்த்தியது. `மதவிடை என்புழி மிகுதி என்றது உள்ள மிகுதியினை. 379. புதிது படற் பொருட்டே யாணர்க் கிளவி. (இ-ள்) யாணர் என்பது, வருவாய் புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) மீனொடு பெயரும் யாணரூர எனவரும். 380. அமர்தன் மேவல். 381. யாணுக் கவினாம். (இ-ள்) அமர்தல் என்னும் சொல் மேவுதல் என்னுங் குறிப்புணர்த்தும். யாணு என்னுஞ்சொல் கவின் என்னுங் குறிப் புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `அகனமர்ந்து செய்யாள் உறையும் என அமர்தல் மேவுதல் என்னும் குறிப்புணர்த்தியது. `யாணது பசலை என `யாணு என்பது கவின் (அழகு) என்னுங் குறிப்புணர்த்தியது. 382. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (இ-ள்) பரவு, பழிச்சு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் வழுத்துதலாகிய குறிப்புணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `நெல்லுகுத்துப் பரவுங் கடவுளுமிலமே எனவும், `கைதொழூஉப்பழிச்சி எனவும் வழுத்துதலாகிய குறிப்புணர்த்தின. 383. கடியென் கிளவி, வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே யச்ச முன்றேற் றாயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்) கடியென்னும் உரிச்சொல் வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், முன்தேற்று ஆகிய பத்துக்குறிப்பும் தன்கண் புலப்படத் தோன்றும் பொருண்மையினை யுடையதாகும். என்றவாறு. முன்தேற்று என்பது, புறத்தின்கண் அன்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னிலையில் றின்று தெளிவித்தல் ஆகும். (உ-ம்) `கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு என வரைவும், `கடிநுனைப்பகழி எனக் கூர்மையும், `கடிகா எனக் காப்பும், `கடிமலர் எனப் புதுமையும், `கடுமான் என விரைவும், `கடும்பகல் என விளக்கமும், `கடுங்கால் ஒற்றலின் என மிகுதியும், `கடுநட்பு எனச் சிறப்பும், `கடியையால் நெடுந்தகை செருவத்தானே என அச்சமும், `கொடுஞ் சுழிப் புகார்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே என முன்தேற்றும் பற்றிக் கடி என்னும் உரிச்சொல் வந்தவாறு காண்க. 384. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே. (இ-ள்) கடி என்னுஞ்சொல் மேற்குறித்த பொருளே யன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்பும் கரிப்பாகிய பண்பும் உணர்த்து தற்கும் உரியதாம். என்றவாறு. (உ-ம்) `கடுத்தனளல்லளோ அன்னை எனவும், `கடிமிளகு தின்ற கல்லா மந்தி எனவும் அடி என்னுஞ்சொல் முறையே ஐயமும் கரிப்பும் உணர்த்தியது. இவ்விரு சூத்திரப்பொருளையும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 446. கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்கம் அச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யாப்பு வரைவே மன்றல் கரிப்பி னாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இதன்கண் தொல்காப்பியத்திற் குறிக்கப்படாத விரை, யாப்பு, மன்றல் என்னும் மூன்றும் இடம் பெற்றுள்ளமையும் தொல்காப்பியத்திற் கூறப்பட்ட முன்தேற்று, ஐயம் என்பன இரண்டும் விடப்பெற்றுள்ளமையம் காணலாம். (உ-ம்) `கடிமாலை சூடி என்புழி, `கடி என்பது விரை நறுமணம் என்ற பொருளில் வந்தது. `அருங்கடிப்பெருங் காப்பின் (பட்டினப் - 133) என்புழி கடி என்பது `யாப்புடைய பெரிய காப்பு என யாப்பு என்னும் பொருளில் வந்தது. இவ்யாப்பு என்பதனை `ஆர்ப்பு எனப் பாடங்கொண்டு கடி முரசு - ஆர்ப்புடைய முரசு என உதாரணங்காட்டுவர் சிவஞானமுனிவர். `கடிவினை முடிகென நொடியினுள் எணிநனி என்புழி, கடிவினை - மணவினை எனக் கடி என்பது மன்றல் என்னும் பொருளில் வந்தது. 385. ஐ வியப் பாகும். 386. முனைவு முனிவாகும். 387. வையே கூர்மை. 388. எறுழ்வலி யாகும். (இ-ள்) ஐ என்பது வியப்பு உணர்த்தும். முனைவு என்பது முனிவு உணர்த்தும். வை என்பது கூர்மை உணர்த்தும். எறுழ் என்பது வலி உணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `ஐதே காமம் யானே எனவும், `சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் எனவும், `வைநுனைப் பகழி எனவும், `போரெறுழ்த் திணி தோள் எனவும், ஐ, முனைவு, வை, எறுழ் என்னும் உரிச்சொற்கள் முறையே வியப்பு, முனிவு, கூர்மை வலி ஆகிய குறிப்புணர்த்தின. 389. மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. இஃது இவ்வியலிற் கூறப்பட்ட உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) இச்சொல் இப்பொருளுக்கு உரித்து என மேற் பொருள்பெறக் கூறப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும், அவற்றின் முன்னும் பின்னும் வரும் மொழிகளே ஆராய்ந்து, அவற்றுள் பொருளுக்குத் தக்க மொழியாலே ஒரு பொரு ளுணர்த்துக; இவ்வாறு உணர்த்தவே, வரலாற்று முறைமையால் தத்தமக்குரிய பொருள் விளங்கும். என்றவாறு. ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியவாய் வரும் உரிச்சொற்களால் ஒரு பொருளை வரைந் துணர்த்துங்கால் அவற்றின் முன்னும் பின்னும் வருகின்ற சொற்களை நாடி வரலாற்று முறைமையால் அப்பொருளுணர்த்துக என்பதாம். (உ-ம்) `போகு கொடி மருங்குல் என்பதிற் போகல் என்பது கொடியென முன்வருஞ் சொல்லால் நேர்மையை உணர்த்திற்று. `திரிகாய் விடத்தரொடு கார் உடைபோகி என்பதிற் போகல் என்பது அதனையடுத்துள்ள உடை (மரம்) என்னும் சொல்லால் நெடுமையை உணர்த்தியது. `உறுகால் என்பதில் உறு என்னும் உரிச்சொல் அடுத்துள்ள கால் என்னுஞ் சொல்லால் மிகுதிப் பொருளுணர்த்தியது. `அணங்கிய சொல்லால் இன்னாமையை உணர்த்திற்று. இங்ஙனங் கூறவே `முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் என இடைச்சொற்கு ஓதிய விதி உரிச்சொற்குங் கூறினாராயிற்று என்பர் நச்சினார்க்கினியர். 390. கூறிய கிளவிப் பொருணிலை யல்ல வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே. இதுவும் அது. (இ-ள்) (உரிச்சொற்களின் முன்னும் பின்னும் வரும் சொற்களை நாடியவழி) முற்கூறிய உரிச்சொற்களின் பொருள் நிலைமையல்லாத வேறு பிறபொருள் தோன்றுமாயினும் முற் கூறப்பட்டவற்றோடு அவற்றையுங் கொள்க. என்றவாறு. (உ-ம்) `கடி நாறும் பூந்துணர் என்றவழிக் கடி என்பது நாறும் என்ற சொல்லின் சார்பால் முற்கூறப்பட்ட பொருள் பயவாது நறுமணம் என்ற பொருள் தந்தது. `மரம் புரை பட்டது என்புழிப் புரைபட்டது என்பது உயர்வு பொருள் தராது பொந்துபட்டது என்ற பொருள் தந்தது. இவ்வாறே இங்குக் கூறிய உரிச்சொற்கள் கூறப்படாத வேறு பொருளும் தருதலை இடம் நோக்கி யுணர்ந்து கொள்க. 391. பொருட்குப் பொருடெரியின் அது வரம்பின்றே. இது, பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களொடு சார்த்திப் பொருளுணர்த்துங்காற் படும் முறைமை யுணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளுணர்த்திய வழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது? எனப் பொருளுக்குப் பொருள் தெரிய வினவுமாயின் அவ்வினா, விடை கூறுதற்குரிய வரம்பின்றியோடும். ஆதலால் பொருட்குப் பொருள் தெரியற்க. என்றவாறு. உறு, தவ, நனி என்பவற்றை மிகுதிப் பொருள என்றார் ஆசிரியர். மிகுதியாவது யாது? என ஒருவன் வினவின், ஒன்றை விடப் பெரியது என்னலாம். அதனைக்கேட்டு அமையாது, பெரிது எனப்படுவது யாது? என அவன் மீண்டும் வினவின் அவனுக்கு மேலும் மேலும் சொற்களால் பொருள் விளக்குதல் வரையறை யில்லாமற்போம் என்பதாம். ஒரு சொற்கு ஒரு சொல்லாலும் பலசொல்லாலும் பொருளுணர்த்தினாலும் உணரும் உணர்வில்லாதனை உணர்த்து மாறு வருஞ்சூத்திரத்தாற் கூறப்படும். 392. பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின். இது சொற் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) மாணாக்கர் உணருமாறறிந்து ஆசிரியன் உணர்த்த வல்லனாயின் இச்சொல் இப்பொருளினது என்று தான் கூறிய பொருட்குத் திரிபில்லை. என்றவாறு. (உ-ம்) `உறுகால் என்புழி உறு என்பது மிகுதியென்றால் உணராதானைக் `கடுங்காற்றினது வலி கண்டாய், ஈண்டு உறு என்னும் உரிச் சொல்லால் உணர்த்தப்படுவது என்று தொடர் மொழி கூறியோ அல்லது கடுங்காற்று வீசுமிடத்து அவனைக் கொண்டு நிறுத்தியோ மாணாக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்தவல்லனாயின் அப்பொருள் திரிபுபடாமல் அவன் உணரும் என்பதாம். இங்ஙனம் அநுபவத்திற் காட்டியுணர்த்தவும் உணராதானுக்கு அறிவுறுத்த முயலுதல் பயனில் செயலாம் என வுணர்த்துவது வருஞ் சூத்திரமாகும். 393. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. இதுவும் இது. (இ-ள்) வெளிப்படத் தொடர்மொழி கூறியோ அல்லது பொருளை நேரிற் காட்டியோ உணர்த்தவும் உணராதானை உணர்த்தும் வழியில்லை; உணர்ச்சியது வாயில் உணர்வோரது உணர்வினை வலியாக வுடைத்தாகலான். என்றவாறு. யாதானும் ஒரு வழியானும் உணரும் தன்மை ஒருவர்க் கில்லையாயின் அவர்க்கு உணர்த்துதல் பயனில் செயல் என்பதாம். 394. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. இது, சொற்கள் காரணமுடையன என்பது கூறுகின்றது. (இ-ள்) உறு, தவ முதலாயின சொற்களுக்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வதல்லது அவை அப்பொருளினை யுடையவாதற்குரிய காரணம் விளங்கத் தோன்றா. என்றவாறு. பொருளொடு சொற்கு இயைபு இயற்கையாகலான், அவ்வியற்கையாகிய இயைபால், சொல் பொருள் உணர்த்தும் என்ப. ஒரு சாரார் பிற காரணத்தான் உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது நம்மனோர்க்குப் புலனாகாமையின், `மொழிப் பொருட் காரணம் இல்லை என்னாது, `விழிப்பத் தோன்றா என்றார். அக்காரணம் பொதுவகையான் ஒன்றாயினும் சொற்றொறும் (வேறுவேறு) உண்மையிற் சிறப்பு வகையாற் பலவாம். அதனான் (விழிப்பத் தோன்றாது என ஒருமையாற் கூறாது) `விழிப்பத்தோன்றா எனப் பன்மையாற் கூறினார் என விளக்குவர் சேனாவரையர். விழிப்பத் தோன்றுதல் - விளங்கத் தோன்றுதல். `உரிச்சொற்பற்றி யோதினாரேனும் ஏனைச் சொற் பொருட்கும் இஃது ஒக்கும் என இச் சூத்திரத்துச் சேனாவரையர் கூறும் உரைக்குறிப்பினை யுளங்கொண்ட நச்சினார்க்கினியர் மேற் கூறுகின்ற பொது விலக்கணமாகிய எச்சவியற்கு ஏற்ப அதிகாரப் பட்டமை நோக்கி இவ்வியலில் `பொருட்குப் பொருடெரியின், (391) என்பது முதல், `எழுத்துப் பிரிந்திசைத்தல் (395) என்பது வரையுள்ள ஐந்து சூத்திரங்களிலும் முற்கூறிய நால்வகைச் சொல்லையும் உணருமாறும் உணர்த்துமாறும் அவற்றின் தன்மையும் உணர்த்துகின்றார் என விளக்கியுள்ளார். 395. எழுத்துப் பிரிந்திசைத்த லிவணியல் பின்றே. இஃது உரிச்சொற்குரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) எழுத்துக்கள் முதனிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து வேறுவேறு பொருளுணர்த்துதல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இயல்புடைத்தன்று. என்றவாறு. முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துப் பிரிந்திசைத்தல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இல்லை எனவே வினையும் பெயருமாகிய பிறவிடத்து இயல்புடைத்து என்பதாம். அங்ஙனம் முதனிலையும் இறுதி நிலையுமெனப் பிரிந்திசைப்பன வினைச் சொல்லும் ஒட்டுப் பெயருமாகும். அவற்றுள் வினையிற் பிரிந் திசைப்பன வினையியலுள் ஈறுபற்றி ஓதிப் பிரித்துக் காட்டினார். பெயரிற் பிரிந்திசைப்பன `நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் என்பன முதலியவற்றாற் காட்டினார். வெற்பன், பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு + அன், பொருப்பு + அன் என முதனிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்திசைத்தமை காண்க. `தாமாகப் பொருளுணர்த்தாமையின் பிரிதலும் பிரியாமையும் இடைச்சொற்கு இன்று என்பர் நச்சினார்க்கினியர். 396. அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர். இஃது உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) (இங்குச் சொல்லப்பட்ட உரிச்சொற்களேயன்றி) அவை போல்வன பிறவும் பலநெறியானும் பரந்து வழங்கும் உரிச்சொல்லெல்லாம், பொருளொடு புணர்த்து உணர்த்த இசை குறிப்பு பண்புபற்றித் தாம் இயன்ற நிலத்து இன்ன அளவினவென வரையறுத்துணரும் எல்லை தமக்கு இல்லாமையால் முழுவதும் எடுத்துரைத்தல் அரிதாகலின் அவற்றை யறிதற்குச் சொல்லப்பட்ட வழிகளை நெகிழாமற் கடைப்பிடித்து என்னாற் கூறப்பட்ட பாதுகாவல் ஆணையாற் சொல்லியவற்றியல்போடும் சொல்லா தொழிந்தவற்றை முறைப்பட உணர்க. என்றவாறு. வழி என்றது, இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி எனவும், முன்னும் பின்னும் வருபவை நாடி எனவும் முன்னர்க் கூறப்பட்ட சொற்பொருளுணரும் நெறியை. ஓம்படை ஆணை என்றது, எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் எனவும் ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் எனவும் முன்னர்க் கூறப்பட்ட பாதுகாவலாணையினை. உரிச் சொல்லெல்லாம் கூட்ட வரம்பு தமக்கு இன்மையின் வழிகடைப்பிடித்து இயலான் உணர்தல் என வினைமுடிவு செய்க. இருமை என்பது, கருமையும் பெருமையும் உணர்த்து தலும், சேண் என்பது சேய்மை யுணர்த்துதலும், இவறல் என்பது உலோபம் உணர்த்துதலும், நொறில் என்பது, `நொறிலியற் புரவியதியர் கோமான் என நுடக்கமும், `நொறிலியற் புரவிக் கழற்காலிளையோர் என விரைவும் உணர்த்துதலும், தொன்மை என்பது பழமை யுணர்த்துதலும், தெவிட்டுதல் அடைதலும், மலிதல் நெருங்குதலும், மாலை குற்றமும் உணர்த்துதலும் பிறவும் இச்சூத்திரத்துக் `கிளந்த அல்ல என்பதனாற் கொள்ளப்படும். இது போன்று, நன்னூலில் உரியியலுக்குப் புறனடையா யமைந்தது, 459. இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணிகுணப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே. எனவரும் சூத்திரமாகும். இச்சொல் இவ்விடத்து இவ்வாறாகும் என்று இலக்கணம் சொல்லும் நூலுள், உலகிலுள்ள பொருள்கட்கும் குணங்கட்கும் இன்னதற்கு இன்னது பெயர் என்று தனித்தனியே கூறலுற்றால் அவை விரிந்து பெருகுதலின் அவற்றை யாம் இங்குச் சொல்லா தொழிந்தேம். அவற்றைப் பிங்கல முதலான புலவர்களாற் சொல்லப்பட்ட உரிச்சொற் பனுவலாகிய நிகண்டு நூல்களிலே விரும்பி அறிந்து கொள்க என்பது இதன் பொருளாகும். சொல்லியலுணர்த்தும் நூலுட் சொற்றொகுதிகளை விரிக்கின் மற்றொன்று விரித்தலாம் எனக்கருதிய பவணந்திமுனிவர் சுருங்கச் சொல்லுதல் என்னும் முறையில் உரியியலில் `சால என்பது முதல் `ஆர்ப்பு என்பது ஈறாக நாற்பத்தைந்து உரிச் சொற்களையே யெடுத்தோதினார். இங்ஙனம் சுருங்கச் சொல்லி யதனைக் குன்றக் கூறலாமென்பார் கருத்தைப் பரிகரித்தற்கு இச் சூத்திரத்தாற் புறனடை கூறினார். இங்ஙனம் கூறவே பெயரியலுட் பெயர்த் தொகுதியினையும், வினையியலுள் வினைத் தொகுதி யினையும் இடையியலுள் இடைத்தொகுதியினையும் விரியாது அவ் விலக்கணங் காட்டுதற்கு வேண்டிய அளவே கூறுதற்கும் இதுவே புறனடையாம் என்பர் சிவஞானமுனிவர். 9. எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல்களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணம் எல்லாவற்றையுந் தொகுத் துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியல் என்னும் பெயர்த் தாயிற்ற. பத்து வகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாரு முளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளாற் பெயரிடுங்கால் அத் தொகுதியுள் தலைமையான பொருள் பற்றியோ பெரும் பான்மையான பொருள் பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமைப் பொருளாகவோ பெரும்பான்மைப் பொருளாகவோ இவ்வெச்சங் களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாது என்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும் 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிள்ள `இறப்பின் நிகழ்வின் (31) `எவ்வயின் வினையும் (32) `அவைதாந், தத்தங் கிளவி (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்றாகும். இவ்வியலின்கண் 1 முதல் 15 வரையுள்ள சூத்திரங்கள் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட்பொருள் கோளும் உணர்த்துவன. 16 முதல் 25 வரையுள்ள சூத்திரங்கள் வேற்றுமைத்தொகை முதலிய அறுவகைத் தொகைச் சொற்களின் இயல்பினை விரித்துரைப்பன. 26 முதல் 30 வரையுள்ளவை சொல்மரபு பற்றிய வழுக்காப்பன. 31 முதல் 33 வாயுள்ளவை முற்றுச் சொற்கு இலக்கணங் கூறுவன. 34 முதல் 45 வரையுள்ளவை முன்னர்க் கூறப்படாது எஞ்சிய பிரிநிலை முதலிய பத்து வகையெச்சங்களின் முடிபு கூறுவன. 46 முதல் 65 வரையுள்ள சூத்திரங்கள் ஒருசார் மரபு வழுக் காத்தல், மரபிலக்கணம், விகாரம், வினையெச்சத்திரிபு, இரட்டைக் கிளவி, ஆற்றுப்படைச் செய்யுள் முடிபு என முன்னர்க் கூறாதெஞ்சிய சொல்லிலக்கணம் உணர்த்துவன. இறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச்சொல்லதி காரத்துக்குப் புறனடையாகும். 397. இயற்சொற் றிரிசொற் றிசைச் சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே. இது, செய்யுட்குரிய சொல் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) இயற்சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என அத்துணையே செய்யுள் செய்தற்குரிய சொல்லாவன. என்றவாறு. இயற்சொல்லாலும் செய்யுட் சொல்லாகிய திரி சொல்லாலு மேயன்றித் திசைச் சொல்லும் வடசொல்லும் விரவிச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனை மொழிச் சொற்களும் செய்யுள் செய்தற்குரியனவோ என்று ஐயுற்றார்க்கு, இயற்சொல் முதலிய இந்நான்குமே செய்யுட்குரியன; பிறமொழிச் சொற்கள் உரியன அல்ல என்று வரையறுத்தவாறாம். செய்யுள் செய்தலாவது, ஒருபொருள்மேற் பலசொற் கொணர்ந்து ஈட்டலாதலின் ஈட்டச்சொல் என்றார். இயற்சொல், பெயர்வினை இடை உரி என்னும் நான்கு வகையாலும் செய்யுட்குரித்து. திரிசொற் பெயராயல்லது வாரா. திசைசொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும், செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரியவாய் வாரா என்பர் சேனாவரையர். இச்சொற் பாகுபாட்டினை நன்னூல் 269-ஆம் சூத்திரத்திற் பவணந்தியார் குறித்துள்ளமை முன்னர் (ப்பெயரியலுள்) விளக்கப் பெற்றது. 398. அவற்றுள், இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. இஃது இயற்சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்குடன், பொருந்தித் தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். என்றவாறு. திரிபின்றி இயல்பாய்ப் பொருளுணர நிற்றலின் இயற்சொல் எனப்பட்டன. அவையாவன நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. `செந்தமிழ் நிலமாவன: வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு கொள்ளுதற் குத்தக்க ஆதாரமில்லாமையானும் வையை யாற்றின் தெற்காகிய மதுரையும் கருவூரின் மேற்காகிய வஞ்சியும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் அன்னோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வேங்கடத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் `தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் கூறுதலானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது வடக்கின் வேங்கடமும் தெற்கின் குமரியும் எல்லை கூறியதனால் வேங்கடத்தின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நான்கு பேரெல்லைக்குட்பட்ட தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ்மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாம் என்பது, தெய்வச்சிலையார் உரையாற் புலனாம். இச் சூத்திரத்தினைத் தழுவியமைந்தது, 270. செந்தமி ழாகித் திரியா தியார்க்குந் தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செந்தமிழ் நிலத்து மொழியாய்ச் சொல்லாலும் பொருளாலுந் திரிபின்றிக் கற்றார்க்கும் கல்லாதார்க்கும் ஒப்பத் தம் பொருள் விளக்கும் இயல்பினையுடையன இயற்சொல்லாம் என்பது இதன் பொருள். `மண், பொன் என்றற்றொடக்கத்தன பெயரியற்சொல். நடந்தான், வந்தான் என்றற்றொடக்கத்தன வினையியற்சொல். அவனை, அவனால் என்றற்றொடக்கத்துவரும் வேற்றுமையுருபு முதலியன இடையியற்சொல் என உதாரணங்காட்டுவர் சிவஞானமுனிவர். 399. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. இது, திரிசொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) ஒருபொருள் குறித்துவரும் பலசொல்லும் பல பொருள் குறித்துவரும் ஒருசொல்லும் என இரு வகையினை யுடையது திரிசொல் என்பர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) வெற்பு, விலங்கல், விண்டு என்பன மலை என்னும் ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல். எகினம் என்பது, அன்னம், கவரிமா, புளி, நீர்நாய் என்னும் பலபொருள் குறித்த ஒருபெயர்த் திரிசொல். படர்ந்தான், சென்றான் என்றற்றொடக் கத்தன ஒரு பொருள் குறித்த பல வினைத்திரி சொல். துஞ்சினார், ஒதுங்கினார், மாண்டது என்றற்றொடக்கத்தன பலதொழில் குறித்த ஒரு வினைத்திரிசொல். தில், மன், மற்று, கொல் என்னுந் தொடக்கத்தன பலபொருள் கருதிய ஓரிடைத்திரி சொல். கடியென் கிளவி முதலாயன பல குணந் தழுவிய ஓருரித்திரிசொல். திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதும் திரிதலும் என இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. திரிபுடைமையே திரிசொல்லிற் கிலக்கணமாதல் சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் என்பதனாற் பெறவைத்தார் என்பர் சேனாவரையர். இச் சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 271. ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒரு பொருளைக் கருதிய பலசொல்லாகியும் பல பொருளைக் கருதிய ஒரு சொல்லாகியும், கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளையுடையன திரிசொல்லாம் என்பது இதன் பொருள். இச் சொல்லிற்கு வேறோர் இயற்சொற் கொடுவத்து திரித்துச் சொல்ல வேண்டுதலால் திரிசொல்லெனக் கொள்க என்பர் மயிலைநாதர். ஈண்டு இயற்சொல் திரிசொல் என்றது, அவற்றின் எழுத்துக்கள் திரியாமையும் திரிந்தமையும் கருதியன்று; கல்வி யேதுவானன்றி இயல்பாகத் தம் பொருளையுணர நிற்றலின் இயற்சொலென்றும் அவ்வியல்புக்கு மறுதலைப் பட்டுக் கல்வியே துவால் தம் பொருளை யுணர நிற்றலின் திரிசொல் என்றும் கூறப்பட்டது என்பர் சிவஞானமுனிவர். பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொல் பல பொருட்குரியவாதலும் உரிச்சொல் முதலாகிய இயற் சொல்லுக்கும் உண்மையால், இயற்சொற் போன்று எல்லார்க்கும் எளிதிற் பொருளுணர நிற்றலன்றிக் கற்றாரல்லாத மற்றோர்க்கு அரிதிற் பொருளுணர நிற்றல் திரிசொற்குரிய இலக்கணமாம் என விளக்குவார், `அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் என்றார் பவணந்தியார். 400. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. இது, திசைச் சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங் களிலும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன திசைச் சொற்களாம். என்றவாறு. வட வேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப் பட்டிருந்த தென்பது `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்னும் இச்சூத்திரத் தொடராற் புலனாம். பன்னிரு நிலமாவன பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லிறுதியாக எண்ணிக் கொள்க என்பர் சேனாவரையர். `செத்தமிழ் சேர்ந்த என்னுந் தொடர்க்கு இளம்பூரணர் சேனாவரையர் முதலிய உரையாசிரியர்கள் `செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த எனப் பொருள்கொண்டு, செந்தமிழ் நாடு வேறு அதனைச் சேர்ந்த பன்னிரு நிலம் வேறு எனவும், செந்தமிழ் நிலமல்லாத ஏனைய பன்னிரு நிலத்தும் அவ்வந் நிலத்தார் குறிப்பின் வழி வழங்குவன திசைச் சொற்களாம் எனவும் கூறினர். குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், பூழிநாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி யென்றும் தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும் தம்மாமி என்பதனைத் தந்துவை யென்றும், குடநாட்டார் தந்தையை அச்சனென்றும், கற்பா நாட்டார் வஞ்சரைக் கையரென்றும், சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவனென்றும் தோழியை இகுளையென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும் சிறுகுளத்தைக் கேணியென்றும், அருவா வட தலையார் குறுணியைக் குட்டை யென்றும் வழங்குவன திசைச் சொற்களாம். செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தும் அவ்வந் நிலத்தார் தம் குறிப்பின் வழங்குவன திசைச் சொல்லாம் என்ற உரையாசிரியர் கருத்தை மேலும் விரிவுபடுத்தும் நிலையில் அப் பன்னிருநாடுகளுடன் அவற்றைச் சூழ்ந்துள்ள பதினெண் தேயங்களுள் தமிழல்லாத ஏனைய பதினேழ் மொழிகள் வழங்கும் பதினேழ் நாடுகளிலும் வாழ்வோர்தம் குறிப்பினவாய்ச் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்பார், 272. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்திலும் ஒன்பதிற் றிரண்டினிற் றமிமொழி நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தினும், பதினெண் தேயங்களுள் தமிழல்லாத ஏனைய மொழிகள் வழங்கும் பதினேழ் நிலத்தினும் வாழ்வார் தம் குறிப்பினவாய் (த்தமிழகத்தில் வந்து) வழங்குவனவற்றைத் திசைச்சொல் என்று கூறுவர் ஆசிரியர் என்பது இதன் பொருளாகும். செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலமாவன: தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன் வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண் எனவரும் பழம்பாடலிற் கூறப்பட்டன. தமிமொழி பதினேழ் நிலமாவன: `சிங்களஞ் கோனகஞ் சாவகஞ் சீனந் துளுக் குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலிங்கம் கலிங்கம் வங்கம் கங்க மகதங் கமாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே என்பன. அருமணம் காம்போசம் ஈழம் கூவிளம் பல்லவம் அங்கம் என்பன முதலானவை இவற்றின் பரியாயமும் இவற்றின் பேதமுமாய் இவற்றுள்ளேயடங்கும். இவற்றின் மொழிகளும் வந்தவழி அறிந்து கொள்க. கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லங் கூவிள மென்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம் கொங்கணந் துளுவங் குடகங் குன்றம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடு நிலவாட்சி அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும் என்றார் அகத்தியனார் எனவரும் மயிலைநாதர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். சிங்களம் அந்தோவென்பது; கருநடம் கரைய, சிக்க, குளிர என்பன; தெலுங்கு எருந்தைப் பாண்டில் என்பது; துளு மாமரத்தைக் கொக்கு என்பது. ஒழிந்த வற்றிற்கும் வந்துழிக் காண்க எனவரும் நச்சினார்க்கினியருரை, பதினெண்மொழிகளில் தமிழல்லாத ஏனைய பதினேழு மொழிகளிலிருந்தும் தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்னும் நன்னூலார் கருத்தை யொத்து அமைந்திருத்தல் அறியத்தகுவதாகும். 401. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. இது வடசொல்லாமாறிது வெனக் கூறுகின்றது. (இ-ள்) வடசொற் கிளவியாவது, வடசொற்கே யுரிய வெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். என்றவாறு. வடவெழுத்தாவன உரப்பியும் எடுத்தும் கனைத்துங் கூறத் தோன்றுவனவாகிய ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கு ஏலாமையின் `வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்தசொல் வடசொல் என்றார் ஆசிரியர். எழுத்தொடு புணர்தலாவது, தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்தினால் இயன்று வழங்குதல். அவை, வாரி, மேரு, குங்குமம், வீரம், காரணம், காரியம், நிமித்தம் என்றாற் போலச் சான்றோர் செய்யுட்கண் வருவன. `வடசொல் என்பது ஆரியச்சொற் போலுஞ் சொல் என்பர் இளம்பூரணர். வடவெழுத்தானமைந்த ஆரியச் சொற்களும் பொதுவெழுத்தானமைத்த தமிழ்திரி சொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே தொல்காப்பியர் வடசொல் எனத் தழுவிக் கொண்டார் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 402. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். இதுவும் அது. (இ-ள்) பொதுவெழுத்தான் இயன்றனவேயன்றி வட மொழிச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின் அவற்றையும் நீக்காது ஏற்றுக் கொள்வர் ஆசிரியர். என்றவாறு. `இயைந்தன வரையார் எனவே தமிழொலிக்கு இயையாதன நீக்கப்படும் என்பதாம். (உ-ம்) `அரமிய வியலகத்திரியம்பும், `தசநான்கெய்திய பணைமருள் நோன்றாள், `வாதிகையன்ன கவைக்கதிர், `கடுந்தேரிராமன் உடன்புணர் சீதையை வலித்தைகை யரக்கன் என்றாற்போல்வன சான்றோர் செய்யுட்கட் சிதைந்து வந்தன. `சிதைந்தன வரினும் எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆணை வட்டம் நட்டம் கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந் தனவும் கொள்ளப்படும். இவ்விரு சூத்திரப் பொருளையும் தழுவி வடசொற்கு இலக்கணங் கூறுவது, 273. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தாலும் ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்தாலும் இவ்விருவகை எழுத்தி னாலும் தமிழொலிக்கு இயைந்தனவாய் வருவன வடசொல்லாம் என்பது இதன்பொருள். `இயைந்தன என்ற சொல்லால் தொல்காப்பியர் சுட்டிய பொருளை `இயைவன எனப் பவணந்தி முனிவரும் குறித் துள்ளமை காண்க. ஈண்டு இயைதல் என்றது தமிழொலியுடன் பொருந்தி வருதலை. தமிழொலிக்கு இயையாத வட மொழிச் சொற்களைத் தமிழுக்கு இயையத் திரிந்து வழங்கும் முறையினைப் பவணந்தி முனிவர் பதவியலில் 19 முதல் 22 முடியவுள்ள சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளமை இங்கு நினைத்தற் குரியதாகும். (உ-ம்) அமலம், உருவம், கமலம் என்றற்றொடக்கத்தன பொதுவெழுத்தான் இயன்றன. சுகி, போகி, சுத்தி என்பன சிறப்பெழுத்துத் திரிந்து வந்தன. அரன், அரி, கடினம், சலம் என்பன பொதுவும் சிறப்புமாகிய இருவகை யெழுத்தாலும் இயன்று தமிழுக்கேற்பத் திரிந்தன. 403. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய வென்மனார் புலவர். இது, செய்யுள் விகாரம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் அந்நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்குங்கால் மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டுமிடத்து வல்லொற்றாக் கலும், வல்லொற்றை மெல்லொற்றாக்க வேண்டுமிடத்து மெல்லொற்றாக்கலும், குறைவதனை விரிக்கவேண்டுமிடத்து விரித்தலும், மிகுவதனைத் தொகுக்க வேண்டுமிடத்துத் தொகுத்தலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்க வேண்டுமிடத்து நீட்டலும், நெட்டெழுத்தைக் குறுக்க வேண்டுமிடத்துக் குறுக் கலும் ஆகிய அறுவகை விகாரமும் செய்யுளின்பம் பெறச்செய்யும் சான்றோர் அணிபெற நாட்டுதலை வலியாகவுடைய. என்றவாறு. நாட்டல் - நிலைபெறச் செய்தல். (உ-ம்) `குறுந்தாட் கோழி எனற்பாலது, `குறுத்தாட் கோழி என வருதல் வலிக்கும் வழி வலித்தல். `குற்றியலுகரம் என்பது `குன்றியலுகரம் என வருதல் மெலிக்கும்வழி மெலித்தல். தண்டுறைவன் எனற்பாலது `தண்ணந்துறைவன் என வருதல் விரிக்கும் வழி விரித்தல். மழவரை ஒட்டிய என உருபு விரிந்து வரற்பாலது `மழவரோட்டிய என வருதல் தொகுக்கும் வழித்தொகுத்தல். விடுமின் எனற்பாலது `வீடுமின் என வருதல் நீட்டும் வழி நீட்டல். `தீயேன் எனற்பாலது `தியேன் என வருதல் குறுக்கம் வழிக்குறுக்கல். செய்யுள் விகாரமாகிய இவ்வாறினையும், 154. வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. எனவரும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். வலித்தல் முதல் தொகுத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் செய்யுளகத்து அடிதொடை முதலிய நோக்கி அமைக்க வேண்டு மிடத்து வருவனவாம் என்பது இதன் பொருள். 404. நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே. இது, செய்யுளகத்து மொழிபுணரியல்பாகிய பொருள்கோள் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்த நான்க சொல்லும் செய்யுளிடத்துத் தம்முட் புணரும் முறைமை நிரனிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்றும் என நான்கென்று சொல்லுவர் ஆசிரியர். என்றவாறு. மொழிபுணரியல்பு நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று ஆகிய அவை நான்கு என்ப என இயையும். செய்யுளிடத்து என்பது அதிகாரத்தான் வந்து இயைந்தது. நிரல்நிறையும் சுண்ணமும் மொழிமாற்றென அடங்கு மாயினும் முடிவனவும், முடிப்பனவுமாய்த் தம்முள் இயையும் மொழிகள் நிரலே நிற்றலும், நாற்சீர் ஈரடியாய் நின்ற எண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையால் அவற்றை அவ்வேறுபாட்டாற் பெயர் கொடுத்து வேறு சிறப்பியல்பில்லாத மொழிமாற்றை மொழிமாற்று எனப் பொதுப் பெயராற் பெயர் கொடுத்தார் ஆசிரியர் என்பர் சேனாவரையர். தொல்காப்பியர் குறித்த பொருள்கோள் சுண்ணம் ஒழிய ஏனைய மூன்றுடன் யாற்றுநீர், விற்பூட்டு, தாப்பிசை, அளைமறி பாப்பு கொண்டுகூட்டு என ஐந்து கூட்டிப் பொருள்கோள் எட்டென்பர் பவணந்தி முனிவர். 410. யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை யளைமறி யாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே. என்பது நன்னூல். யாற்றுநீர், மொழிமாற்று, நிரல் நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறியாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோள் எட்டாகும் என்பது இதன் பொருள். 405. அவற்றுள், நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். இது நிரனிறைப் பொருள்கோளாமாறு கூறுகின்றது. (இ-ள்) அந் நால்வகைப் பொருள்கோளுள் நிரல் நிறை யாவது வினையாலும் பெயராலும் ஆராயத் தோன்றி முடிக்கப் படும் சொல் வேறுநிற்ப, முடிக்குஞ் சொல்லாகிய பொருள் வேறு நிற்றலாம். என்றவாறு. `வினையினும் பெயரினும் என்றதனால் வினைச் சொல்லால் வரும் வினை நிரனிறையும் பெயர்ச் சொல்லால் வரும் பெயர் நிரல் நிறையும் அவ்விரு சொல்லால்வரும் பொது நிரனிறையும் என நிரனிறை மூன்றாம். (உ-ம்) மாசு போகவுங் காய்பசி நீங்கவும் கடிபுனல் மூழ்கி அடிசில்கை தொட்டு என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிரலே நிற்றலின் வினை நிரனிறையாயிற்று. இது, மாசு போகப் புனல் மூழ்கிப் பசி நீங்க அடிசில் கை தொட்டு என இயையும். கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி என முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறுவேறு நிரலே நிற்றலின் பெயர் நிரனிறையாயிற்று. இது கொடிநுசுப்பு, குவளையுண்கண், கொட்டைமேனி என இயையும். உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடல்இருள் ஆம்பல் பாம்பென்ற - கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிரலே நிற்றலின் பொதுநிரனிறையாயிற்று. இது, திருமுகம் திங்களாக்கருதி, கடலும் உடலும், இருளும் உடைந் தோடும், ஆம்பலும் ஊழ்மலரும், பாம்பும் பார்க்கும் என இயையும். `நினையத்தோன்றி என்றதனால் முடிவனவாகிய சொல்லும் முடிப்பனவாகிய பொருளும் நேர்முறையில் நிரல்படநில்லாது, எதிர்முறையில் மயங்கிவருதலுங் கொள்வர். களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றும் எனவரும். இதன்கண், களிறும் கந்தும் போலக் `கலனும் கூம்பும் என வருதல் வேண்டும். அவ்வாறு கூறாது `கூம்பும் கலனும் என எதிர்மாற்றிக் கூறினமையால் `மயக்க நிரனிறை யாயிற்று. இதனை எதிர்நிரனிறையென வழங்குதலும் உண்டு. இச் சூத்திரப் பொருளை அடியொற்றியமைந்தது, 413. பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும் நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு வரிசையாக நிறுத்திக் கூறிய முறையாயேனும் அதற்கு எதிராயேனும் இதற்கு இது பயனிலை என்பது புலனாகக் கூறும் பொருள்கோள் நெறிப்பட்ட நிரல்நிறைப் பொருள்கோளாம் என்பது இதன் பொருளாகும். 406. சுண்ணந்தானே பட்டாங் கமைந்த வீரடி யெண்சீர் ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். இது, சுண்ணமாமாறு கூறுகின்றது. (இ-ள்) சுண்ணமாவது, இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரை இயையும் வழியறிந்து கூட்டி இயற்றப் படுவதாம். என்றவாறு. பட்டாங்கு - இயல்பு. இயல்பாக அமைந்த ஈரடி எண்சீர் எனவே நாற்சீரடியாக அமைந்த ஈரடி எண்சீர் என்பதாம். எனவே சுண்ணமாகிய பொருள்கோள் அளவடியிரண்டனுள் அல்லது பிறவிடத்து வாராது என்பதாயிற்று. (உ-ம்) சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப என்புழி முதல் இரண்டடிகளிலும் உள்ள சீர்களை சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத்துணித்துக் கூட்டத் தம்முள் இயைந்தவாறு கண்டு கொள்க. பொருள் கொண்டு முடியும் சொற்கள் சுண்ணம் (பொடி) போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலின் இதனைச் சுண்ணமென்றார் ஆசிரியர். இப்பொருள்கோள் அருகியல்லது வாராமையின் இதனை மொழி மாற்றினுள் அடக்கினார் பவணந்தியார். 407. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. இஃது அடிமறியாமாறு கூறுகின்றது. (இ-ள்) அடிமறிச் செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையிற்றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும். என்றவாறு. சீர்கள் கிடந்துழியே கிடப்பச் செய்யுளின் அடிகள் முதலும் இடையும் கடையும் மறிந்து பொருள் கொள்ளப் படுதலின் அடி மறியென்னும் பெயர்த்தாயிற்று. இப்பொருள்கோள் பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட் கண் அல்லது வாராது என்பர் சேனாவரையர். (உ-ம்) `மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே எனவரும். 408. பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற்றிரிபுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்) பொருள் ஆராயுங்கால், அடி மறிச் செய்யுட் கண் ஈற்றடியது இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயின் சென்று திரிந்து நிற்றலும் நீக்கார் ஆசிரியர். என்றவாறு. மேற் சூத்திரத்தில் சீர்நிலை திரியாது தடுமாறும் என்றார், ஈண்டு ஒரோவழிச் சீர்நிலைதிரிதலும் உண்டு எனத்தழுவினார். எருத்து - ஈற்றின் அயல்; ஈண்டு ஈற்றயற் சீரைக்குறித்தது. ஈற்றடி என அடியைக் குறித்த ஆசிரியர் `எருத்தடி, என்னாது `எருத்து எனப் பொதுப்படக் குறித்தலின் எருத்து என்பது ஈற்றடியின் எருத்தாகிய ஈற்றயற்சீரைக் குறித்ததெனக் கொண்டார் இளம்பூரணர். (உ-ம்) `சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ராரணங் கினரே சார னாட நீவரு தீயே வார லெனினே யானஞ் சுவலே என்புழி `அஞ்சுவல் என்னும் இறுதிச்சீர் `யான் என்னும் ஈற்றயற் சீராய எருத்து வயிற் சென்று, `அஞ்சுவல்யானே எனத்திரிந்து நின்றவாறு கண்டு கொள்க. இதன்கண் `எருத்து என்பதற்கு எருத்தடி எனப்பொருள் கொண்ட சேனா வரையர், தாம் கூறுமாறு ஈற்றடியிறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதற்கு இலக்கியங்காணாது `இலக்கியம் வந்த வழிக்கண்டு கொள்க என உதாரணங்காட்டாது சென்றமையைக் கூர்ந்து நோக்குங்கால் இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய பொருளே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடைய தென்பது உய்த்துணரப்படும். அடிமறிச் செய்யுளில் எல்லாவடியும் யாண்டும் செல்லுமா யினும் உரைப்போர் குறிப்பின் வழி அச்செய்யுளின் ஈற்றடியாக் குறிக்கத்தகும் அடியுண்மையால் `ஈற்றடி எனக் குறித்தார் ஆசிரியர். உரைப்போர் குறிப்பின் உணர்வகையன்றி இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதன மண்டில யாப்பே என்றார் பிறரும். அடிமறிமாற்றுப் பொருள்கோள் இதுவென விளக்கி யுரைப்பது, 418. ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும் யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை மாட்சியு மாறா வடியவும் அடிமறி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பொருளுக்கு ஏற்குமிடத்தே கொண்டு வந்து கூட்டுதற்குப் பொருந்தும் அடியினையுடையனவும், யாதானும் ஓரடியினை எடுத்து முதல் இடை ஈறுகளில் யாதானும் ஓரிடத்துக் கூட்டி யுரைத்தாலும் தம் பொருளும் ஓசையும் மாறாத அடியினை யுடையனவும் அடிமறி மாற்றுப் பொருள்கோளாம் என்பது இதன் பொருள். (உ-ம்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கா லீண்டும் இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால் (நாலடி - 93) எனவரும் இப்பாடல், `கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங் கால் ஈண்டும், விடுக்கும் வினையுலந்தக்கால், இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம், (இஃதறியார்) நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பந்துடையார் என ஏற்புழி எடுத்துக்கூட்டும் அடிகளை யுடையதாய் வந்தமையின் அடிமறிமாற்றுப் பொருள் கோளாம். மாறாக் காதலர்............. வாழு மாறே என்பதனுள் யாதானும் ஓரடியை யெடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொருளும் ஓசையும் வேறுபடாமை காண்க. அடியாக எடுத்துக் கூட்டிப் பொருள் கோடலின், இவை கொண்டு கூட்டுப் பொருள்கோளில் அடங்கா என்பர் மயிலைநாதர். 409. மொழி மாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். இது மொழிமாற்றாமாறு கூறுகின்றது. (இ-ள்) மொழி மாற்றினது இயல்பாவது பொருளெதிர் இயையுமாறு நின்ற சொல்லை இடம் மாற்றி முன்னும் பின்னும் பொருள் கொள்ளுமிடம் அறிந்து பொருத்துதலாகும். என்றவாறு. கொளாஅல் - கொளுவுதல்: பொருத்துதல். (உ-ம்.) குன்றத்து மேல குவளை குளத்துள செங்கோடு வேரி மலர் எனவரும். இதனைக் `குவளை குளத்துள, செங்கோடு வேரிமலர் குன்றத்து மேல என மொழி மாற்றுக. சுண்ணத்தோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், சுண்ணம் ஈரடி எண்சீருள் அவ்வாறு செய்யப்படும்; இதற்கு அன்னதோர் வரையறை யில்லை என்பர் இளம்பூரணர். சேனாவரையர். ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்யின்மேற் றண்ணுமை - காரி விறன் முள்ளூர் வேங்கைவீ தானுணுந் தோளாள் நிறனுள்ளூ ருள்ள தலர் என்ற பாடலை உதாரணமாகக் காட்டி, இதனுள், பாரி பறம்பின் மேல் தண்ணுமை தான் நாணுந் தோளாள் எனவும், நிறன் காரி விறன் முள்ளூர் வேங்கைவீ எனவும், உள்ளூருள்ள தாகிய அலர், ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் எனவும் முன்னும் பின்னும் பொருளெதிரியைந்தவாறு கண்டு கொள்க என விளக்குவர். மேல் அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ணமொழி மாற்று ஈரடியெண்சீர் என ஓதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றி எனப் பொதுப்பட ஓதினமையானும், ஓரடிக் கண் நின்ற சொல்லை அவ்வடிக்கண்ணும் பிறவடிக் கண்ணும் முன் பாயினும் பின்பாயினும் ஆகும் வழிக் கொளுவப் பெறும் எனவும், பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே என்றவழி, `மூன்றுதலையிட்ட அந்நாலைந்தும் என ஓரடிக்கண் மொழிமாறி நின்றது. ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு என்றவழி, `குரங்கு ஆலத்து மேல எனப் பிறவடிக்கண் மொழி மாறி நின்றது எனவும் இச் சூத்திரப் பொருளை விளக்குவர் தெய்வச் சிலையார். மொழிமாற்றுச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய உரையினையும் எடுத்துக்காட்டினையும் சேனாவரையர் கூறிய உரையினையும் எடுத்துக்காட்டினையும் கூர்ந்துணர்ந்த பவணந்தி முனிவர், மொழி மாற்றினை ஓரடிக் கண்ணே வருவதும் ஒன்றுக்கு மேற்பட்ட பல வடிக்கண்ணே வருவதும் என இரண்டாகப் பகுத்து, ஓரடிக்கண் வருவதனை `மொழிமாற்று எனவும், பலவடிக்கண் வருவதனைக் `கொண்டு கூட்டு எனவும் இருவகைப் பொருள் கோள்களாகக் கொண்டார். அவ்விரண்டனுள் மொழிமாற்றின் இலக்கணம் உணர்த்துவது, 412. ஏற்ற பொருளுக் கிளையு மொழிகளை மாற்றியோ ரடியுள் வழங்கல் மொழிமாற்றே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். கருதிய பொருளுக்குப் பொருந்திய மொழிகளை ஓரடி யுள்ளே மாற்றிச் சொல்வது மொழிமாற்றாகும் என்பது இதன் பொருள். இளம்பூரணர் முதலியோர் சுண்ணமொழிமாற்றுக்குக் காட்டிய `சரையாழ அம்மி மிதப்ப என்ற பாடலையே மொழி மாற்றுப் பொருள்கோளுக்கு உதாரணமாகக் காட்டுவர் மயிலை நாதரும் சிவஞான முனிவரும். தொல்காப்பியர் `சுண்ணமொழி மாற்று எனக் கூறிய பொருள்கோள், மொழி மாற்று என்பதிலேயே அடங்கும் என்பது அன்னோர் கருத்தெனத் தெரிகிறது. இனி, பலவடிக்கண்வரும் மொழிமாற்றாகிய கொண்டு கூட்டுப் பொருள் கோளின் இலக்கணம் உணர்த்துவது, 417. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளது பல அடிகளுள்ளும் கோத்துக் கிடந்த மொழிகளைப் பொருள் ஏற்குமிடத்தே பிரித்து இசைத்துப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாம் என்பது இதன் பொருள். (உ-ம்) ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு இஃது, ஆலத்து மேல குரங்கு, குளத்துளகுவளை என ஈரடியுட் பெயரையும் வினையையும் வேண்டுழிக் கொண்டு கூட்டிக் கொண்டமையான் ஈரடிக் கொண்டு கூட்டு. தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின் இஃது அஞ்சனத்தன்ன பைங்கூந்தால் எனவும், தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டையுடைத்தன்ன பசலை எனவும் பலவடியிற் சொற்களையுங் கூட்டிக் கொண்ட மையால் பலவடிக் கொண்டு கூட்டு என்பர் மயிலைநாதர். இனி, யாற்றுநீர்ப் பொருள்கோளின் இலக்கணம் உணர்த்துவது, 411. மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஏனை அடிகளை நோக்காது அடிதோறும் பொருள் அமைந்து ஒழுகுவது யாற்றுநீர்ப் பொருள் கோளாம் என்பது இதன் பொருள். `அலைப்பான் பிறிதுயிரை யாக்கலும் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமேயாம் (நான்மணி - 26) என அடிதோறும் பொருள் முடித்து வருவதனை ஆற்றுநீர்ப் பொருள்கோளுக்கு உதாரணமாகக் காட்டினார் மயிலைநாதர். யாற்று நீரொழுக்குக்கு இடையறுதலின்மையானும் அற்றதேல் அதனை ஒழுக்கென்றல் கூடாமையானும், அடிதொறும் பொருள் அற்றற்று ஒழுகுதலாவது மொழிமாற்றுப்போலப் பிறழ்ந்து செல்லுஞ் செலவற்று இடையறாதொழுகும் யாற்று நீரொழுக்குப் போன்று ஆங்காங்கமைந் தொழுகுதல் எனக்கூறி, சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சித் காய்த்தவே எனவரும் சீவகசிந்தாமணிப் பாடலை உதாரணங் காட்டுவர் சிவஞானமுனிவர். பூட்டுவிற் பொருள்கோளின் இலக்கணம் உணர்த்துவது, 414. எழுவா யிறுதி நிலைமொழி தம்முட் பொருள் நோக்குடையது பூட்டு வில்லாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பாவின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள் தம்மிற் பொருள் நோக்கி நிற்பது பூட்டுவிற் பொருள்கோளாம் என்பது இதன் பொருள். (உ-ம்) `திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு என்புழி ஈற்றில் நின்ற கதவு என்னும் சொல் முதற்கண் நின்ற `திறந்திடுமின் என்ற சொல்லுடன் பொருள் நோக்கமுடைய தாய்க் `கதவுதிறந்திடுமின் என இயைந்து நிற்றல் காண்க. வில்லின் இருதலையும் நாண்பூட்டப்பட்டு இயைந்தாற் போன்று செய்யுளின் முதற் சொல்லும் இறுதிச் சொல்லும் தம்முள் இயைந்து பொருள் கொள்ள நிற்றலின் இப்பொருள்கோள் `பூட்டுவிற் பொருள்கோள் எனப் பெயர் பெற்றது. தாப்பிசைப் பொருள்கோளுக்கு இலக்கணங்கூறுவது, 415. இடைநிலை மொழியே யேனையீரிடத்தும் நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளின் இடையில் நின்றசொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொள்வது தாப்பிசைப் பொருள் கோளாம் என்பது இதன் பொருள். தாம்பு - கயிறு; ஈண்டுக் கயிறாகிய ஊசல் என்னும் பொருளில் வந்தது. (உ-ம்) `உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யாதளறு எனவரும். இதனுள் ஊன் என இடைநின்ற சொல் ஊசல் போன்று ஊன் உண்ணாமை, ஊன் உண்ண என முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொண்டவாறு காண்க. அளைமறிபாப்புப் பொருள்கோளாவது இதுவென உணர்த்துவது, 416. செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளின் இறுதியில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்வது அளைமறிபாப்புப் பொருள் கோளாம் என்பது இதன் பொருள். அளை- புற்று. பாப்பு - பாம்பு. புற்றிடத்தே சுற்றிக்கிடக்கும் பாம்பின் வால் உடலொடும் தலையொடும் இயைந்து காணப்படுதல் போன்று செய்யுளின் இறுதியில் உள்ள சொல் இடையிலும் முதலிலும் சென்றியைந்து கொள்ள நிற்றலின் இஃது அளைமறி பாப்புப் பொருள்கோள் எனப்பட்டது. (உ-ம்) தாழ்ந்த வுணர்வினராய்த் தாளூடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையியற்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமு மூழ்ந்த பிணிநலிய முனசெய்த வினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே எனவரும். இதன் கண் `வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே எனவரும் ஈற்றடி இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொண்டமை காண்க. தொல்காப்பியனர்ராற் கூறப்படாத இப்பொருள்கோளுள், யாற்றொழுக்கும் அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள் படுதலின் இயல்பாம் என்றும், கொண்டு கூட்டு சுண்ண மொழி மாற்றுள் அடங்கும் என்றும், பூட்டுவிற் பொருள்கோள் மொழி மாற்றுள் அடங்கும் என்றும், தாப்பிசைப் பொருள் கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின் இது `பிரிநிலை வினையே என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும் என்றும் விளக்கங் கூறுவர் தெய்வச்சிலையார். 410. தநநு எஎனு மவை முதலாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. செய்யுட்குரிய சொல்லும், சொல் தொடுக்குங்காற்படும் விகாரமும் முதலிய செய்யுளொழிபு உணர்த்திய ஆசிரியர், இனி இச் சூத்திர முதலாக வழக்கிலக்கணத்தது ஒழிபு கூறுகின்றார். (இ-ள்) த ந நு எ - என்பனவற்றை முதலாகவுடையன வாய்ச் சுற்றமென்னும் உறவுப்பொருள் உணர்த்திவரும் பெயரும் பிரித்தாற் பிரிந்து நில்லா. என்றவாறு. கிளைநுதற் பெயராவன உறவுப் பொருளுணர்த்தி வரும் தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; தம்மாள், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் எனவரும். வெற்பன், பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு + அன், பொருப்பு + அன் எனப் பிரிக்கு மிடத்து முதனிலை யும் இறுதிநிலையுமாகப் பிரிந்துநின்று தம்பொருளு ணர்த்துமாறு போன்று கிளைநுதற் பெயராகிய இவை, தம் + அன் எனப் பிரிப்புழிப் பொருள் உணர்த்தாமையால் `பிரிப்பப் பிரியா என்றார். 411. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே. இஃது ஒரு சொல்லடுக்காவன இத்துணைய என்கின்றது. (இ-ள்) இசைநிறையும் அசைநிலையும் பொருள் வேறு பாட்டொடு புணர்வதும் என ஒரு சொல்லடுக்கு அம்மூன்று வகைப்படும். என்றவாறு. (உ-ம்) `ஏ ஏ ஏ ஏ யம்பல் மொழிந்தனள் என்பது இசை நிறை. மற்றோ மற்றோ; அன்றே அன்றே என்பன அசைநிலை. அவன் அவன்; வைதேன் வைதேன்; உண்டு உண்டு; போம் போம் என்பன முறையே விரைவும் துணிவும் உடன்பாடும் ஒரு தொழில் கால் நிகழ்தலும் ஆகிய பொருள் வேறுபாடுணர்த்தலின் பொருளொடு புணர்தலாம். அடுக்கு என்பது ஒரு சொல்லினது விகாரம் எனப்படும். அதனை இரண்டு சொல்லாகக் கொள்ளின் அஃது இரு பொருளுணர்த்துதல் வேண்டும். அவ்வாறுணர்த்தாமையின் அதனை ஒரு சொல்லெனவே கொள்ளுதல் வேண்டும். 412. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினையின் றொகையே பண்பின் றொகையே உம்மைத் தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே. இது தொகைச் சொற்களின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை எனத் தொகைச் சொற்கள் ஆறென்பர் ஆசிரியர். என்றவாறு. அறுவகைத் தொகைச் சொற்களின் இலக்கணம் உணர்த்துங்கால், வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச் சொல்லீறும் பண்புச் சொல்லீறும் தொகுதலின் தொகையாயின என்றும், அவ்வப்பொருள் மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவு படாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகையாயின் என்றும் உரையாசிரியர்கள் இருவேறு வகையாகப் பெயர்க் காணரங் கூறியுள்ளார்கள். `ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் எனவும் `செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின், மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும் எனவும் `உருபுதொகவருதலும் எனவும் `மெய்யுருபு தொகா விறுதியான எனவும் `பண்புதொக வரூஉங் கிளவியானும் எனவும் `உம்மை தொக்க பெயர் வயினானும் எனவும் `உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி எனவும் தொகைச் சொற்களின் இடையே உருபு முதலியன தொக்கே (மறைந்தே) நிற்கும் என ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவமஉருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்களின் புறத்தே இவையல்லாததோர் சொல்லும் தொக்குநிற்றலின் தொகைச் சொல்லாயின என்பதே அவர் கருத்தாயிற்று என நச்சினார்க் கினியர் தொகைமொழி பற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒருசொல் நீர்மைப் படாதனவுந் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக்கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கன இல்லையெனினும் தொகையென வேண்டப் படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலின் தொகையென்பார்க்கும் ஒட்டியொரு சொன்னீர் மைப்படுதலுந் தொகையிலக்கணமெனல் வேண்டும். அதனான் உருபு முதலாயின தொகுதல் எல்லாத் தொகையினுஞ் செல்லாமையான், எல்லாத் தொகைக் கண்ணுஞ் செல்லுமாறு ஒட்டியொரு சொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின் இவ்வாசிரியர்க்கு இதுவே துணிவெனப்படும்... அதனான் உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது, தம் பொருள் ஒட்டிய சொல்லால் தோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாதே நிற்றலேயாம் எனச் சேனாவரையர் பிளவுபடாது ஒன்று பட்டிசைத்தலே தொகையிலக்கணமாம் என்னும் தம் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். வேற்றுமையுருபு முதலாயின இடையே மறைந்து நிற்றலேயன்றி இரண்டு முதலிய சொற்கள் ஒட்டியொரு சொல்லாதலும் தொகையிலக்கணமாம் என்னும் இக்கருத்து `கல்லாத் தொகையும் ஒரு சொன்னடைய (தொல்-எச்ச-24) எனவரும் சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். வேற்றுமைத் தொகை என்பது வேற்றுமையுருபு தொக்க தொகையெனவும், வேற்றுமைப் பொருளையுடைய தொகை எனவும் விரியும். உவமத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்பனவும் அவ்வாறு விரியும். அன்மொழி - அல்மொழி - தொக்கதல்லாத மொழி. வினைத்தொகை - வினையினதொகை. பண்புத்தொகை - பண்பினது தொகை. ஈண்டு வினை பண்பு என்பன, அவற்றை யுணர்த்துஞ் சொற்களை. தொகைச் சொல்லாவன இவையெனவுணர்த்தும் இச்சூத்திரத்தை அடியெற்றியமைந்தது, 361. வேற்றுமை வினைபண் புவமை யும்மை அன்மொழி யெனவத் தொகையாறாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வேற்றுமைத்தொகை முதல் அன்மொழித்தொகை யீறாகத் தொகைநிலைத் தொடர்மொழி ஆறு வகைப்படும் என்பது இதன் பொருள். 413. அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. இது வேற்றுமைத் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமையுருபுகள் தொக்க தொகைச் சொல்லாவன அவ்வுருபுகள் விரிந்து நின்று பொருளுணர்த்தினாற் போலும் இயல்பினையுடையன. என்றவாறு. எனவே அவ்வியல்பில்லனவற்றின்கண் அவ்வுருபுகள் தொகா என்பதாம். சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கண் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கண் சாத்தன் கொடுத்தான் எனவும் உருபுதொடர்ப் பொருளுணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்ற லுடையனவே தொகுவன என்றார் சேனாவரையர். இரண்டாம் வேற்றுமைத் தொகை முதலாக வேற்றுமைத் தொகை அறுவகைப்படும். (உ-ம்) நிலங்கடந்தான், குழைக்காது எனவும் தாய் மூவர், பொற்குடம் எனவும் கருப்பு வேலி, தாலிப்பொன் எனவும் வரை பாய்தல், கருவூர்க் கிழக்கு எனவும் மன்றப் பெண்ணை, மாரி மா எனவும் வரும். இவை முறையே நிலத்தைக் கடந்தான், குழையையுடைய காது; தாயொடு மூவர், பொன்னான் இயன்ற குடம்; கரும்பிற்கு வேலி, தாலிக்குப் பொன்; வரையினின்றும் பாய்தல், கருவூரின் கிழக்கு; மன்றத்தின்கண் நிற்கும் பெண்ணை (பனை), மாரிக் கண் உளதாம் மா என உருபுகள் விரிந்து நின்றால் தரும் பொருளைத் தொகையாய் நின்ற நிலையிலும் இனிது விளக்கியவாறு காண்க. இப்பொருளை விரித்துக் கூறும் முறையில் அமைந்தது, 362. இரண்டு முதலா மிடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இரண்டாமுருபாகிய ஐ முதலாக வேற்றுமையுருபு ஆறும் இடையே தோன்றாது (அவற்றின் பொருள் தோன்ற) நிற்பது வேற்றுமைத் தொகையாம் என்பது இதன் பொருள். ஆறுருபும் என்னும் முற்றும்மையை எச்சவும்மையாக்கி, `பொற்குடம் என ஒரோவழி உருபும் பொருளும் உடன் தொக்க தூஉம் வேற்றுமைத் தொகையெனக் கொள்க என்பர் சிவஞான முனிவர். பொற்குடம் - பொன்னாற் செய்த குடம் என விரியும். 414. உவமத் தொகையே யுவம வியல. இஃது உவமத் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) உவமத் தொகையாவது உவமவுருபுத் தொடர்ப் பொருள் போன்று பொருள் உணர்த்துவதாம். என்றவாறு. எனவே அப்பொருள் உணர்த்தும் ஆற்றலில்லாதன தொகா என்பதாம். புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என்னும் உவம வுருபுத் தொடர்களை உருபு தொகுத்துப் புலிச் சாத்தன், மயின் மாதர் எனத் தொகையாக்கின் உவமப் பொருள் இனிது விளங்காமையின், இங்ஙனம் பொருள் விளக்கும் ஆற்றலில்லாதன தொகா; ஆற்றலுடையனவே தொகுவன என்பர் சேனாவரையர். (உ-ம்) புலிப் பாய்த்துள்; மழை வண்கை; துடி நடுவு; பொன்மேனி எனவரும். இத்தொகைச் சொற்கள் முறையே புலிப் பாய்த்துள் அன்ன பாய்த்துள்; மழையன்ன வண்கை; துடியன்ன நடுவு; பொன்னன்ன மேனி எனத் தம் விரியாக அமைந்த தொடர்களின் பொருளை உணர்த்தியவாறு காண்க. புலிப்பாய்த்துள் முதலிய உவமத்தொகைகளை விரிக்கு மிடத்துப் `புலிப்பாய்த்துளை யொக்கும் பாய்த்துள் என இரண்டா முருபு விரித்துரைத்தலும் உண்டு. அங்ஙனம் உவமவுருபுடன் வேற்றுமையுருபினையும் விரித்துரைக்குமிடத்துத் தொகையினை விரிப்பார் கருத்துக்கேற்ப அத்தொடர் வேற்றுமைத் தொகை யெனவும் உவமத்தொகையெனவும் இருதிறமாகக் கூறப்படும். இவ்வாறு உவமவுருபும் வேற்றுமையுருபும் என இரண்டுந் தொக்கனவேனும் புலிப்பாய்த்துள் என்னுந்தொகைக்கு உவமப் பொருளே சிறப்புடைத்தாகலின் உவமத்தொகை யென்றலே பொருத்த முடையதாம் என்பர் இளம்பூரணர். உவமத்தொகையின் இயல்பினை, 365. உவம வுருபில துவமத் தொகையே. எனவருஞ் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். பண்பு, பயன், வினை, மெய் என்பன பற்றி வரும் உவம வுருபு தோன்றாது உவமத்தொகையாம் என்பது இதன் பொருள். உவமவுருபுகளாவன இவையென விளக்கப் போந்த நன்னூலார், 366. போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே. எனவரும் சூத்திரத்தால் அவ்வுருபுகளிற் சிலவற்றை எடுத்தோதி யுள்ளார். 415. வினையின் றொகுதி காலத்தியலும். இது வினைத்தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) வினைச்சொல் தொகுங்கால் காலந்தோன்றத் தொகும். என்றவாறு. `காலத்தியலும் என்றது, எக்காலுங் காலமுடையவாய் இயலும் என்றவாறு. காலம் எனப் பொது வகையாற் கூறியவதனால் மூன்று காலமுங் கொள்ளப்படும். `தொகுதி காலத்தியலும் எனவே விரிந்துநின்ற வழிப்போன்று தொக்க வழியும் தொகை யாற்றலாற் காலந்தோன்றும் என்றவாறாம். ஈண்டு வினையென்றது, வினைச்சொற்கும் வினைப்பெயர்க்கும் முதனிலையாய், உண்தின் செல் கொல் என வினைமாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை. (உ-ம்) ஆடரங்கு; செய்குன்று; புணர்பொழுது; அரிவாள்; பொருகளிறு; செல்செலவு எனவரும். காலமுணர்த்தாது வினைமாத்திர முணர்த்தும் வினைப் பகுதி யாகிய இப்பெயர்கள், நிலமுதலாகிய பெயரொடு தொக்குழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று காலம் உணர்த்தும் என்பர் சேனாவரையர். செய்யும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்களுள் காலமுணர்த்தும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியுமாகிய இடைச்சொற்கள் மறைந்து நிற்க வினைப்பகுதிகள் மட்டும் நிலமுதலாகிய அறுவகைப் பெயரொடு ஒட்டி நிற்கும் தொகைச்சொல் வினைத்தொகையாம் என்பது, செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும். (தொல்-எழுத்து-482) எனத் தொல்காப்பியர் கூறுதலால், பெயரெச்சம் நின்று தொக்கதே வினைத்தொகை என்பது ஆசிரியர் கருத்தாதல் இனிது புலனாம். இக்கருத்தினை அடியொற்றியதே, 363. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். காலங்கள் தோன்றாது தன் எச்சமான பெயர் கொண்டு நிற்கும் பெயரெச்சம் வினைத்தொகையாம் என்பது இதன் பொருள். இங்குக் காலம் என்றது, முக்காலத்தையும் தோற்றுகைக்கும் இடைநிலைகள். `பொருகளிறு என்னும் வினைத்தொகை விரிவுழி, பொருதகளிறு, பொராநின்ற களிறு, பொருங் களிறு என விரியும். பிறவும் அன்ன. 416. வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென் றன்ன பிறவும் அதன்குண நுதலி இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும் பண்பின் றொகையே. இது, பண்புத்தொகை யாமாறு கூறுகின்றது. (இ-ள்) வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பவற்றினும் அத்தன்மைய பிறவற்றினும் ஆகி, ஒரு பொருளினது குணத்தைக் கருதி `இத்தன்மையது இப்பொருள் என ஒன்றை ஒன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எவ்வகைத் தொடர் மொழியும் பண்புத்தொகையாம். என்றவாறு. (உ-ம்) கருங்குதிரை என்பது வண்ணப் பண்பு. வட்டப்பலகை என்பது வடிவப் பண்பு. நெடுங்கோல் என்பது அளவு. தீங்கரும்பு என்பது சுவை. இவை விரியுங்கால், கரிதாகியது குதிரை, வட்டமாகியது பலகை, நெடியது கோல், தீவியது கரும்பு என விரியும். இத்தொகை மொழிக்கணுள்ள இருசொல்லும் ஒருபொருளவாய் `இன்னது இது என ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு காண்க. உயர்திணை அஃறிணை என்னும் அவ்விருதிணைக் கண்ணும் உளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலினையும் அறிதற்குக் காரணமாகிய பண்புகொள்பெய ரொடு தொகும் தொகைச் சொல் பண்புத்தொகையாம் என்பதனை, உயர்திணை யஃறிணையாயிரு மருங்கின் ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் (தொல்-குற்றியலுகரம் -77) என எழுத்ததிகாரத்தில் ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். பண்புத் தொகையிற் பண்புகொள் பெயரின் ஈற்றிலுள்ள ஐம்பாலீறுகள் தொக்கு நின்றே விரியும் என்பது உணர்த்துதற்கு அம்மொழியமைப்பு விளங்க இன்னது இது என அடைமொழி புணர்த்துக் கூறினார். எனவே கரும் பார்ப்பான், கரும் பார்ப்பனி, கரும் பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள் எனப் பண்புணர்த்தும் ஈறுகள் தொக்கனவற்றை விரிப்புழிக் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியன வாகிய குதிரைகள் என இவ்வாறு ஐம்பாலீறுகளையும் விரித்துரைப்பர், இளம்பூரணர், நச்சினார்க் கினியர், தெய்வச்சிலையார் ஆகிய உரையாசிரியர்கள். கரியன், செய்யன், கருமை, செம்மை என்பனவற்றிற் கெல்லாம் முதனிலையாய்ச் சொல் நிரம்பாது `கரு `செவ் எனப் பண்பு மாத்திரம் உணர்த்தி நிற்கும் பண்புச்சொற்கள் பெயருடன் தொக்குப் பண்புடைப் பொருளாகிய பண்பினையே குறித்தலால் இரு சொல்லும் ஒரு பொருளவாய் `இன்னது இது என ஒன்றை யொன்று பொதுமை நீக்கிவரும் என்பர் சேனாவரையர். `இன்னது இதுவென வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின் தொகையே என ஆசிரியர் குறித்தமையால் பண்பு தொகாது இன்னது இதுவெனப்பட வேழக்கரும்பு, கேழற் பன்றி, சாரைப்பாம்பு எனப் பெயர் தொக்கனவும் பண்புத் தொகையாதல் கொள்ளப்படும். குணப் பெயரொடு குணிப்பெயர் புணருங்கால் அக் குணியோடு குணத்துக்கு உண்டாகிய ஒற்றுமையினை விளக்குதற்கு வரும் `ஆகிய என்னும் மொழியாகிய பண்புருபு தொக்கு நிற்பனவும், அப்பண்புருபு தொக்கு நிற்பப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயருமாய் ஒருபொருட்கு இருபெயர் ஒட்டி நிற்பனவும் ஆகிய இவ்விரண்டும் பண்புத்தொகையாம் என்பர் பவணந்தி முனிவர். 364. பண்பை விளக்கு மொழிதொக் கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை. என்பது நன்னூல். பொருளின்கண் அமைந்த குணத்தைக் காட்டுதற்கு ஆண்டு வரும் பண்புருபு தொக்கு நிற்பனவும், ஒருபொருட்கு உரியனவாய் இருபெயர்கள் ஒட்டி நிற்பனவும் பண்புத் தொகையாம் என்பது இதன் பொருள். குணம் - பண்பு. குணத்தொகை - பண்புத்தொகை. குணத்தொகையென்றமையான் ஒரு பொருட்கு இருபெயர் வந்தன வற்றின் கண்ணும் பண்புருபு தொகும் என்பது பெற்றாம். செந்தாமரை என்பது, செம்மையாகிய தாமரை என விரியும். இது, செம்மை என்னும் குணப்பெயரும் தாமரை யென்னும் குணிப்பெயரும் ஒட்டி நின்ற பண்புத்தொகையாகும். `ஆயன் சாத்தன், `வேழக்கரும்பு என்பன பொதுவும் சிறப்புமாய் `ஆகிய என்னும் பண்புருபு இடையில் மறைந்து நிற்க ஒரு பொருட்கு இருபெயராய் ஒட்டி நிற்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை யெனப்படும். 417. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. இஃது உம்மைத் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) இருபெயர், பலபெயர், அளவுப்பெயர், எண்ணியற் பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என அறுவகைப்பட்ட சொல்லையும் கருதி எண்ணும் நிலையினது (எண்ணிடைச் சொல்லாகிய உம்மை தொக்கு நின்ற) உம்மைத் தொகையாம். என்றவாறு. `எண்ணின்கண்வரும் இடைச்சொற்கள் பலவேனும் தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப் பெயராகலான் உம்மைத் தொகையாயிற்று என்பர் சேனாவரையர். வேற்றுமைத் தொகை முதலாயின பலசொல்லாற் றொகுதல் சிறுபான்மை; அதனால் உம்மைத் தொகை இருசொல்லாலும் பல சொல்லாலும் தொகும் என்பதற்கு `இருபெயர் பலபெயர் என்றார். (உ-ம்) இருபெயர் : உவாப் பதினான்கு; உவாவும் பதி னான்கும் என விரியும். பலபெயர் : புலி ற் கெண்டை; புலியும் வில்லும் கெண்டையும் என விரியும். அளவின் பெயர் : தூணிப் பதக்கு; தூணியும் பதக்கும் என விரியும். எண்ணியற் பெயர் : மூப்பத்து மூவர்; முப்பதின்மரும் மூவரும் என விரியும். நிறைப்பெயர் : தொடியரை; தொடியும் அரையும் என விரியும். தொடி என்பது, பலம் என்னும் நிறையினைக் குறித்த பெயர். எண்ணின் பெயர் : பதினொன்று ; பத்தும் ஒன்றும் என விரியும். 367. எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல் எனனுநான் களவையு ளும்மில தத்தொகை. எனவரும் நன்னூற் சூத்திரம் உம்மைத்தொகையின் இலக்கணங் கூறுவதாகும். எண்ணியும் எடுத்தும் முகந்தும் நீட்டியும் அளப்படும் நால்வகை அளவையின் கண்ணும் எண்ணுதற்பொருளில் வரும் உம்மை தொக்கு நிற்பது உம்மைத் தொகையாம் என்பது இதன் பொருள். உம்மைத் தொகைக்கு இலக்கணங் கூறு முகத்தானே அத்தொகை பற்றிவரும் அளவைகளையும் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப் படுத்துணர்த்திய பவணந்தி யாரது மொழித்திறம் அறிந்து மகிழத் தகுவதாகும். 418. பண்பு தொகைவரூஉ கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே. இஃது அன்மொழித் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) பண்புத் சொல் தொக வரும் தொகையின் கண்ணும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க் கண்ணும் இறுதிச் சொற்கண் நின்று நடப்பது அன்மொழித் தொகையாம். என்றவாறு. பண்புத்தொகை படவும் உம்மைத்தொகை படவும் வேற்றுமைத் தொகை படவும் அச்சொல் தொக்கபின்பு அத்தொகை அன்மொழித்தொகை யாகாமையின் பண்புத்தொகை முதலியனவாக அச்சொற்கள் தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களனாகிய சொற்பற்றி வருவது அன்மொழித்தொகை என்பது விளக்குவார், பண்பு தொக வரூஉங் கிளவியானும் உம்மைதொக்க பெயர் வயினானும், வேற்றுமைத்தொக்க பெயர் வயினானும் என ஆசிரியர் விரித்துக்கூறினார் என்பர் சேனா வரையர். நின்ற சொல்முன் வருஞ்சொல்லாகி வெளிப்பட நிற்பது அல்லாத மொழியொன்று, வேற்றுமைத் தொகை முதலிய தொகை நிலைத் தொடர்மொழிகளின் ஆற்றலால் அத்தொகை மொழிகளின் புறத்தே மறைந்து நிற்றலின் இத்தொகைக்கு அன்மொழித் தொகையென்பது பெயராயிற்று. இச்சூத்திரத்தின்கண் சிறப்புடைய வேற்றுமைத் தொகையை முற்கூறாத முறையன்றிக் கூற்றினால், சொல்லா தொழிந்த உவமத்தொகையும் வினைத்தொகையும் பற்றி அன்மொழித் தொகை தோன்றும் எனக் கொள்வார் இளம்பூரணர். வினையின் றொகையினும் உவமத் தொகையினும் அன்மொழி தோன்றும் என்மனார் புலவர் என்றார் அவிநயனாரும். இவ்வாறு தொல்காப்பியர் குறித்த பண்புத்தொகை, உம்மைத் தொகை, வேற்றுமைத்தொகை ஆகிய மூன்றுடன் உரையாசிரியர் குறித்த உவமத்தொகையும் வினைத்தொகையும் சேர்ந்த ஐவகைத் தொகைச் சொற்களின் புறத்தே அவையல்லாத பிறசொற்கள் மறைந்துநிற்க வருவது அன்மொழித் தொகையாம் என்பார், 368. ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி. என்றார் பவணந்தியார். வேற்றுமை முதலான ஐவகையுருபுகளும் தொக்கு நின்ற மொழிகளின் புறத்தே அவற்றின் பொருள்களைத் தழுவிய பிற சொற்கள் மறைந்து நிற்க வருவது அன்மொழித் தொகையாம் என்பது இதன் பொருளாகும். பண்புத் தொகைப்பட அமைந்த வெள்ளாடை என்னுஞ் சொல்லைப் படுத்தலோசையாற் கூறிய வழி வெண்மையான ஆடையினை யுடுத்தாள் எனப் புறத்தே ஒருசொல் தொக்கு நிற்றலின், இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். உம்மைத் தொகைபட அமைந்த தகர ஞாழல் என்பது தகரமும் ஞாழலும் விரவியமைந்த சாந்து எனப் புறத்தே பிறசொல் தொக்கு நிற்றலின் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். உவமத் தொகைபட அமைந்த அறற் கூந்தல் என்பது, அறல் போலும் கூந்தலை யுடையாள் எனப் புறத்தே ஒருசொல் தொக்குநிற்றலின் உவமத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். வினைத் தொகைபட அமைந்த திரிதாடி என்பது திரிந்த தாடியினை யுடையான் என ஒருசொல் புறத்தே மறைந்து நிற்றலின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகும். 419. அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குட னிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் அந்நான் கென்ப பொருணிலை மரபே. இது, தொகைச் சொற்களிற் பொருள் நிற்கும் இடங்கள் இத் துணையவெனக் கூறுகின்றது. (இ-ள்) முன் மொழியில் நிற்றலும், பின்மொழியில் நிற்றலும், இரு மொழியிலும் நிற்றலும், அவற்றின்மேல் நில்லாது புறமொழி மேல் நிற்றலும் எனத் தொகைச் சொற்களின் பொருள் நிற்கும் மரபு அந்நான்காம் என்று கூறுவர் ஆசிரியர். என்றவாறு. ஈண்டுப் பொருள்நிலை என்றது, வினைகொண்டு முடியு மாற்றால் அச்சொல்லின் பொருள் மேற்பட்டுத் தோன்றுதலாகும். (உ-ம்) வேங்கைப்பூ என்புழி முன்மொழிக்கண் பொருள் சிறந்து நின்றது. அது நறிது என்னும் வினையோடு இயையு மாற்றால் மேற்பட்டுத் தோன்றியவாறு காண்க. இஃது இட வகையான் முன்மொழியாயிற்று. அடைகடல் என்புழி அடை யென்னும் பின்மொழிக்கண் பொருள் நின்றது. கடலுங் கடலடைந்த இடமும் கடலெனப்படுதலின், அடை கடல் என்பது அடையாகிய கடல் என இருபெயர்ப் பண்புத்தொகை. உவாப்பதினான்கு என்புழி இருமொழிக் கண்ணும் பொருள் சிறந்து நின்றது. வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழி மேலும் நில்லாது உடுத்தாள் என்னும் அன்மொழிமேல் நின்றது. வேற்றுமைத் தொகை முதல் நான்கு தொகையும் முன்மொழிப் பொருள; வேற்றுமைத் தொகையும் பண்புத் தொகையும் சிறுபான்மை பின் மொழிப் பொருளவும் ஆம். உம்மைத் தொகை இருமொழிப் பொருட்டு என்பர் சேனாவரையர். இச் சூத்திரப் பொருளைச் சுருங்க விளக்குவது, 369. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தொகை நிலைத் தொடர் மொழிகளின் முன்மொழியிலும் பின்மொழியிலும் அனைத்து மொழியாகிய பன்மொழிகளிலும் அவையல்லாத புறமொழியிலும் என இந்நான்கிடங்களிலும் தொகைநிலைத் தொடர்ப்பொருள் சிறந்து நிற்கும் என்பது இதன் பொருள். உதாரணம் முன்னர்க்காட்டியனவே. 420. எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய. இது தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) அறுவகைத் தொகைச் சொல்லும் ஒருமொழி போல் நடப்பன. என்றவாறு. ஒருசொல் நடைய எனப் பொதுப்படக் கூறிய அதனான், யானைக்கோடு, கொல்யானை என முன்மொழி பெயராகிய வழி ஒரு பெயர்ச்சொல் நடையவாதலும், நிலங்கடந்தான், குன்றத் திருந்தான் என முன்மொழி வினையாயவழி ஒரு வினைச்சொல் நடையவாதலும் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலை கோடலும் முதலாகிய பெயர்த்தன்மையும், பயனிலையாதலும் பெயர்கோடலு முதலாகிய வினைத்தன்மையும் உடையவாதல் அவ்வச் சொல்லோடு கூட்டிக் கண்டு கொள்க எனவும், நிலங்கடந்தான், குன்றிருந்தான் என வேற்றுமையுருபு தொகப் பெயருந்தொழிலும் ஒருங்கிசைத்தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின் அவை தொகையெனவேபடும் எனவும், கடந்தானிலம், இருந்தான் குன்றத்து என்பன ஒருங்கிசையாது பக்கு (பிளவுபட்டு) இசைத்தலின், அவை தொகையன்மையறிக, எனவும் விளக்கங் கூறுவர் சேனாவரையர். (உ-ம்) யானைக்கோடு கிடந்தது; துடியிடை நன்று; கொல் யானை ஓடிற்று; கருங்குதிரை வந்தது, கழஞ்சரை நிறைந்தது, பொற்றொடி வந்தாள் என எழுவாயும் பயனிலையுமாகியும், யானைக் கோட்டை, துடியிடையை, கொல் யானையை, கருங்கு திரையை, கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் வேற்றுமை முதலிய அறுவகைத்தொகையும் ஒருசொல் நடையவாகி வந்தவாறு காண்க. தொகைச் சொற்குரிய இவ்விலக்கணத்தினை விரித்துக் கூறும் முறையில் அமைந்தது, 360. பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்மொழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயர் சொல்லோடு பெயர்ச் சொல்லும், பெயர்ச் சொல்லோடு வினைச்சொல்லும், வேற்றுமை வினை பண்பு என்பன முதலாக வகுத்துக் கூறப்படும் அறுவகைப் பொருட் புணர்ச்சிக் கண், அவற்றின் உருபுகள் இடையே மறைந்துநிற்ப, இரண்டு முதலிய பல சொற்கள் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்மொழிகளாம் என்பது இதன் பொருள். வினையொடு வினை தொகைநிலைத் தொடர் ஆகாமையின் அதனை ஒழித்தும், நிலத்தைக் கடந்தான் என உருபுவிரியின் பிளவுபட்டு வேறாகப் பிரிந்தும், நிலங்கடந்தான் என உருபு தொக்கதேல் பிளவுபடாது ஒரு சொல்லாகியும் தொடருமாதலின், இரண்டு முதலாத் தொடர்ந்து ஒருமொழிபோல் நடப்பன வென்றும் கூறினார். ஒரு மொழிபோல் நடப்பன தொகை நிலைத் தொடர்மொழி என்னும் நன்னூற் சூத்திரத்தொடர், எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தை அவ்வாறே சொற்பொருள்திறத்தால் ஒத்தமைந் திருத்தல் உளங்கொளத்தகுவதாகும். 421. உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் னடைத்தென மொழிமனார் புலவர். இஃது உயர்திணை உம்மைத்தொகைக்கு எய்தாதது எய்து விக்கின்றது. (இ-ள்) உயர்திணைப் பெயரிடத்துத் தொக்க உம்மைத் தொகை பலர்பால் ஈற்றினதாய்ப் பன்மையுணர்த்தி நிற்கும் என்பர் ஆசிரியர். என்றவாறு. (உ-ம்) மாமூல பெருந்தலைச் சாத்தர்; கபில பரண நக்கீரர் எனவரும். பலர்சொல் நடைத்து என்றது, எண்ணப்பட்டார் பலர் மேலும் வினையேற்கும் வண்ணம் தமக்குரிய ஒருமைப்பாலீறு கெட்டுப் பலர்பாற்குரிய ஈற்றினதாகத்திரிதலை. இச்சூத்திரப் பொருளைச் சுருங்க விளக்குவது, 371. உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 422. வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின வெனக்கூ றுதலும் அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன வென்னுங் குறிப்புரையாகும். இஃது உலகியலில் வழங்கும் ஒருசார் தொடர்மொழிகள் பற்றிய வழுவமைக்கின்றது. (இ-ள்) வாராத இயல்புடையவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்று கூறாத இயல்புடையவற்றைக் கூறுவனவாகச் சொல்லுதலும் அத்தன்மையன எல்லாம் அவ்வப்பொருளின் இயல்பால் இத்தன்மையன என்று சொல்லுங் குறிப்பு மொழிகளாம். என்றவாறு. (உ-ம்) அவ்வழி இங்கு வந்து சேர்ந்தது, அம்மலை வந்து இதனோடு பொருந்திற்று எனவும், அவல் அவல் என்கின்றன நெல், மழை மழையென்கின்ற பயிர் எனவும் வரும் இவை, வருதலையும் சொல்லுதலையும் உணர்த்தாது இத்தன்மையன என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு காண்க. தொல்காப்பியனார் குறித்த இம்மொழி வழக்கினை யடியொற்றிக் கேட்டல், கிளத்தல், இயங்கல், இயற்றுதல் என்னும் இத் தொழிற்றிறமில்லாத அஃறிணைப் பொருளை அத்தொழில் நிகழ்த்துவனபோலக் கூறும் சொன்முறையினை எடுத்துரைப்பது, 408. கேட்குந போலவுங் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். கேளாதனவற்றைக் கேட்பன போலவும் சொல்லாதன வற்றைச் சொல்வன போலவும் நடவாதனவற்றை நடப்பன போலவும் செய்யாதனவற்றைச் செய்வன போலவும் அஃறிணை யிடத்துஞ் சொல்லப்படும் என்பது இதன் பொருள். (உ-ம்) நன்னீரை வாழி அனிச்சமே (திருக் - 1111) எனவும், பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் (திருக் - 709) எனவும், இவ்வரசன் ஆணை எங்குஞ் செல்லும் எனவும், தன்னெஞ்சே தன்னைச்சுடும் (திருக்- 293) எனவும் வரும். அஃறிணை மருங்கினும் என்ற உம்மையான் உயர்திணை மருங்கினும் இவ்வாறு சொல்லப்படுதல் புலம்பல் முதலியவற்றுட் காண்க என்பர் சிவஞானமுனிவர். 423. இசைபடு பொருளே நான்குவரம் பாகும். 424. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். இவற்றால் முற்குறித்த அடுக்குச் சொற்களுக்கு வரையறை கூறுகின்றார். (இ-ள்) முற்கூறிய ஒரு சொல்லடுக்கினுள் இசைநிறைத்தற்கு வரும் அடுக்கு நான்காகிய வரம்பையுடையது. பொருளொடு புணர்தற்கண் விரைவு பொருள்படவரும் அடுக்கு மூன்றாகிய வரம்பையுடையதாம். (உ-ம்) பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ என இசை நிறை நான்கடுக்கி வந்தது. தீத் தீத் தீ என விரைசொல் மூன்றடுக்கி வந்தது. அடுக்கு என்னும் பெயரே ஒருசொல் இருமுறையடுக்கி வருதலைக் குறிக்குமாதலின், இருமுறைக்கு மேலாக மூன்று நான்கு முறை அடுக்கி வருவனவற்றிற்கு மட்டும் ஆசிரியர் இச் சூத்திரங் களால் வரையறை கூறினார். இசைபடுபொருளும் விரைசொல் லடுக்கும் நான்கும் மூன்றுமாய் அடுக்குமெனவே அசைநிலை யடுக்கு இரண்டாய் வரும் என்பதுதானே பெறப்படும். இங்கு உணர்த்தப்பட்ட அடுக்குச் சொற்கள் பற்றிய இவ் வரையறையினைக் கூறுவது, 394. அசைநிலை பொருணிலை யிசை நிறைக் கொருசொல் இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அசை நிலைக்கும் விரைவு வெகுளி உவகை முதலிய பொருள் நிலைக்கும், இசை நிறைக்கும் ஒருசொல் அடுக்கிவருங் கால் முறையே இரண்டு, மூன்று, நான்கு என்னும் அளவில் அடுக்கிவரும் என்பது இதன் பொருள். எனவே அசை நிலைக்கு இரண்டும் பொருணிலைக்கு இரண்டும் மூன்றும், இசை நிறைக்க இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்குமென்பதாயிற்று. (உ-ம்) `ஒக்கும் ஒக்கும்; `அன்றே அன்றே என்பன அசைநிலையடுக்கு. `போ போ போ என்பன விரைவு பற்றிய பொருள் நிலையடுக்கு. பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிறையடுக்கு. 425. கண்டீ ரென்றா கொண்டீ ரென்றா சென்ற தென்றா போயிற் றென்றா அன்றி யனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப. இது, வினைச்சொற்களுள் சில அசைநிலையாம் என்கின்றது. (இ-ள்) கண்டீர் எனவும் கொண்டீர் எனவும் சென்றது எனவும் போயிற்று எனவும் வரும் அவ்வினைச் சொற்கள் நான்கும் வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலையடுக்காம். என்றவாறு. ஒருவன் ஒன்று கூறியவழி அதற்கு உடம்படாதான் `கண்டீரே, கண்டீரே என்னும். அவ்வழி அச்சொற்கு வினைப் பொருண்மையும் வினாப்பொருண்மையும் இன்மையின் அசைநிலையாயினவாறு கண்டு கொள்க. ஏனையவும் இவ்வாறே அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம். அன்றியனைத்தும் - அவ்வனைத்தும். 426. கேட்டை யென்றா நின்றை யென்றா காத்தை யென்றா கண்டை யென்றா அன்றி யனைத்தும் முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. இதுவும் அது. (இ-ள்) கேட்டை எனவும் நின்றை எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அந்நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாவழி மேற்சொல்லப்பட்ட அசைநிலையாம் என்றவாறு. இவையும் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்றவழி அசைநிலையாய் வருமாறு வழக்கிற் கண்டு கொள்க. நின்றை, காத்தை என்பன இக்காலத்துப் பயின்று வாரா என்பர் சேனாவரையர். முன்னர்க் கூறப்பட்ட `கண்டீரே முதலியன வினாவிற்கு அடையாக அடுக்கி வந்தவழி முன்னிலையசை நிலையேயாமன்றி வினைச்சொல்லாதலில்லை. இச்சூத்திரத்திற் கூறப்பட்ட கண்டை முதலியன அடுககியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாகவும் அசைநிலையாகவும் வருவன ஆதலின் அந்நிலைமை நீக்குதற்கு `முன்னிலையல்வழி என்றார் ஆசிரியர். இவ்விரு சூத்திரத்தானுங் கூறப்பட்டன வினைச் சொல்லா தலும் இடைச் சொல்லாதலும் உடைமையான் வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூறாது ஈண்டுக் கூறினார். 427. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றைச் சிறப்புடை மரபி னம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மிவ்விரண் டாகும் அவ்வா றென்ப முற்றியன் மொழியே. இது முற்றுச் சொற்களின் இலக்கணமும் அவற்றின் பாகுபாடும் உணர்த்துகின்றது. (இ-ள்) இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் சிறப்புடைய இயல்பினவாகிய அம் மூன்றுகாலமும் உடைய வாய்த் தன்மை முன்னிலை படர்க்கையென்னும் அம்மூவிடத்தும் உயர்திணையும் அஃறிணையும் இருதிணைப் பொதுவுமாகிய பொருள் தோறும் வினையும் வினைக்குறிப்பும் என இவ் விரண்டாய் வரும் அவ்வறுகூற்றுச்சொற்களையும் முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர் என்றவாறு. மூவிடத்தும் வினையும் குறிப்பும் பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. (உ-ம்) உண்டேன், கரியேன் எனவும், உண்டாய் கரியை எனவும், உண்டான், கரியன் எனவும் வினைச்சொற்கள் மூவிடத்தும் வினையும், வினைக்குறிப்புமென இவ்விரண்டாய், ஆறாய்வந்தன. இடமும் திணையும் பாலும் விளக்குதல் ஒருசார் வினைச் சொற்கே யுரியவாதல் போலாது காலமுணர்த்துதல் எல்லா முற்றுச் சொற்கும் முன்னர்ச் சிறத்தலின் `சிறப்புடை மரபின் அம்முக் காலமும் என்றார். வினையினும் குறிப்பினும் இவ் விரண்டாய் வருதலாவது, தெரிநிலை வினையால் தெளிவாகக் காலந்தோற்று தலும் குறிப்புவினையால் அவ்வாறு காலந் தெளியத் தோன்றாமையும் ஆகிய இருதிறத்தவாய் வருதல். மெய்ம்மை யானும் - பொருள் தோறும்; உயர்திணை, அஃறிணை, விரவுத் திணை என்னும் மூவகைப் பொருள்தோறும். ஆனுருபு தொறுப் பொருளில் வந்தது. முற்றிநிற்றல் முற்றுச்சொற்கு இலக்கண மாதல் `முற்றியன் மொழியே என்பதனாற் புலனாம். பாலும் காலமும் செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவைதம் எச்சம்பெற்று நின்றனவோ அப்பொழுதே பின்யாதும் வேண்டாது செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றிநிற்றலானும் முற்றாயின எனப் பெயர்க் காரணங் கூறுவர் உரையாசிரியர். உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என்னும் பொருண் மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல் பற்றி `அவ்வா றென்ப என்றார். காலமும் இடமும் முதலாயினவற்றோடு கூட்டிப் பகுப்பப் பலவாம். `பிரிநிலை வினையேபெயரே என இவ்வியலிற் பின்வரும் சூத்திரத்தால் பெயரெச்சமும் வினையெச்சமும் கூறும் ஆசிரியர், அவற்றோடியைய முற்றுவினைச் சொல்லையும் ஈண்டுக் கூறினமை யால், முற்றுச் சொல்லும் பெயரெச்சமும் வினை யெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணிரப்படும் என்பர் சேனாவரையர். வினையெச்சமும் பெயரெச்சமும் தொழிலும் காலமும் உணர்த்தினல்லது இடமும்பாலும் உணர்த்தா என்பதூஉம், முற்றுச் சொல் தொழிலும் காலமும் இடமும் உணர்த்து மென்பதூ உம் கண்டுகொள்க என்பர் தெய்வச்சிலையார். முற்றுவினையின் வகையும் தொகையும் ஆகியவற்றை உணர்த்தும் முறையில் அமைந்தது, 323. ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும் ஒருமை பன்மையைத் தன்மைமுன் னிலையினும் முக்கா லத்தினு முரண முறையே மூவைந் திருமூன் றாறாய் முற்று வினைப்பத மொன்றே மூவொன் பானாம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐம்பாலையும் படர்க்கையிடத்தும், ஒருமை பன்மைப் பால்களைத் தன்மை யிடத்தும் முன்னிலையிடத்தும் முக்காலங்களாலும் பெருக்க, முறையே படர்க்கை வினைமுற்றுப் பதினைந்தும், தன்மை வினைமுற்று ஆறும், முன்னிலை வினைமுற்று ஆறும் ஆக, வினை முற்று ஒன்றே இருபத்தேழு வகைப்படும் என்பது இதன் பொருளாகும். 428. எவ்வயின் வினையு மவ்விய னிலையும். இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்) தொழிலும் காலமும் இடமும் பாலும் உணரவரும் வினைச்சொலன்றி மூன்றிடத்திற்கும் பொதுவாகிவரும் வினைச் சொல்லும் முற்றி நிற்றலாகிய அவ்வியல்பினைப்பெற்று நிற்கும். என்றவாறு. மேற்குறித்த இடம் காலம் ஆகிய வரையறையுட்படாது யார், எவன், இல்லை, வேறு என மூன்றிடத்தும் பொதுவாகி வரும் வினைச்சொல்லும், குறிப்புவினைக் கீறாகாது தெரிநிலை வினைக்கீறாவனவும் தெரிநிலை வினைக்கீறாகாது குறிப்பு வினைக்கீறாவனவுமாய்ச் சிறப்பீற்றனவாய் முன் வினையியலில் எடுத்தோதப்பட்டனவும் அடங்க `எவ்வயின் வினையும் என்றார். அவ்வியல் நிலையலாவது முற்கூறிய முற்றாந்தன்மையில் நிற்றல். இனி, இச்சூத்திரத்திற்கு `எவ்விடத்து வினைமுதனிலை களும் முற்றுச் சொல்லாய் நிற்கும் என மற்றொரு பொருள் வரைந்து `எனவே அவை எச்சமாதல் ஒருதலையன்றென்பதாம். ஆகவே வினைச்சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச் சொல்லாகலும், கச்சினன் கழலினன் நிலத்தன் புறத்தன் என்னுந் தொடக்கத்து வினைக் குறிப்பின் முதனிலை எச்சமாய் நில்லாமையும் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க எனவும் `இவையிரண்டும் இச்சூத்திரத் துக்குப் பொருளாகக் கொள்க எனவும் கூறுவர் சேனாவரையர். முற்றுச் சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்துமென்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாகவுரைப்பர் இளம்பூரணர். ஈண்டு `அவ்வியல் நிலையும் என்னும் சுட்டு முற்றினியல்பினைச் சுட்டி நிற்றலானும் முன்னும் பின்னும் முற்றுச் சொற்களின் இலக்கணங்கூறும் சூத்திரங் களினிடையே அமைந்த இச்சூத்திரத்தில்வரும் வினையென்றது முற்று வினையாமன்றிப் பெயரெச்ச வினையெச்சங்களாகிய குறைச்சொல்லாதல் ஏலாமையானும் மூவிடத்திற்கும் பொது வாகிய அவை இடவேறுபாடு உணர்த்தாமையானும் அவ்வுரை ஆசிரியர் கருத்தொடு பொருந்துவதாகத் தோன்றவில்லை. 429. அவைதாந் தத்தங் கிளவி யடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. இது முற்றுச் சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்த முற்றுச் சொற்கள் தாம் தத்தம் பாற் சொல்லாகிய முற்றுச்சொற்களாய்ப் பல அடுக்கிவரினும் (தம் முள் முடியாது) எவ்வாற்றானும் பெயரொடு முடியும். என்றவாறு. (உ-ம்) உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் எனவும் நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் எனவும் வினையும் வினைக்குறிபுப்புமாகிய முற்றுச்சொற்கள் பல அடுக்கிவந்து பெயரொடு முடிந்தன. `என்மனார் புலவர் என வெளிப்பட்டும், `முப்பஃதென்ப என வெளிப்படாதும் பெயரொடு பெயர் முடிபாம் என்பார், `எத்திறத்தானும் பெயர் முடிபினவே என்றார். இன்னும் எத்திறத் தானும் என்றதனான் உண்டான் சாத்தன்,; சாத்தன் உண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்ளப்படும். மேற்குறித்த முற்றுச்சொற்களின் இலக்கணங்களைத் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 322. பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதலாறு பெயரல தேற்பில முற்றே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எல்லா வினைச்சொற்கும் பொதுவிலக்கணமாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையுந் தோற்றுவித்துப் பொருட்பெயர் முதலாகிய அறுவகைப் பெயரையும் பயனிலையாக ஏற்பனவாகிப் பெய ரல்லது ஒன்றனையும் ஏலாதன முற்றுவினை, வீனைக்குறிப்புக்களாம் என்பது இதன் பொருளாகும். `ஐம்பாலவாகிய வினைமுதலைத்தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச் சொற்களாகிய எச்சங்களைப் போலன்றி, அவ் வுறுப்பொடு கூடி நிறைந்து நிற்றலின் முற்றெனப்படும் என்பார் `பொதுவியல்பு ஆறையும் தோற்றி என்றார். `பெயரன்றி வினைச்சொல் முதலியவற்றுள் ஒன்றையும் ஏலாதனமுற்று எனவும், பெயர்ப்பின் வேறொன்றனையும் ஏலாதன முற்று எனவும் இருபொருள் தோன்றப் `பெயரலது ஏற்பில முற்றே என்றார். `பெயரலது ஏற்பில முற்றே என்னும் இத்தொடர் `எத்திறத் தானும் பெயர் முடிபினவே என்னுந் தொல்காப்பியத் தொடர்ப் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையில் அமைந்துள்ளமை காண்க. 430. பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயீ ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சபொருட் கிளவி. இஃது எச்சங்களாவன இவையெனத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் இப்பத்தும் முறைமைப்படத் தோன்றும் எச்சங்களாம். என்றவாறு. எஞ்சுபொருட்கிளவி - எஞ்சி நிற்பதோர் பொருளை யுடைய எச்சச்சொல். பெயர், வினை என்பன ஈண்டு அவற்றால் முடியும் பெயரெச்சத்தினையும் வினையெச்சத்தினையும் சுட்டி நின்றன; ஆகுபெயர். ஆயீரைந்தும் எஞ்சுபொருட்கிளவி என்றாரேனும் எஞ்சுபொருட்கிளவி ஈரைந்து என்பது கருத்தாகக் கொள்க. பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ்சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்சநிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை எஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை எஞ்ச நிற்பது எதிர்மறை எச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ் சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடியநிற்பது உம்மை யெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவை ஏழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடைய எச்சங்களாகும். சொல் லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம், என்னும் மூன்றும் ஒரு தொடர்க்கு ஒழிபாய் எஞ்சி நிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால், சொல்லப்படாது எஞ்சி நின்ற பொருளையுணர்த்துவனவாகும். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சம் என்றும், தொடராய் எஞ்சுவன இசை யெச்சமென்றும், இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறுபொருள் எஞ்ச நிற்பன குறிப்பெச்சம் என்றும் கூறுவர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச் சொல்லு மாதலின் பெயரியல் முதலிய இயல்களுள் இப்பத் தெச்சங் களையும் ஒருங்குணர்த்துதற்கு இடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்கூறும் இவ்வெச்சவியலின்கண்ணே இவற்றைத் தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இப்பத்தெச்சங்களையும், கூற்றெச்சம் குறிப்பெச்சம் என இருவகையாகப் பகுத்து, அவற்றின் முடிபினையும் உணர்த்துவதாக அமைந்தது. 359 பெயர்வினை யும்மை சொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசை யெனுஞ் சொல்லொழியென்பதும் குறிப்புந் தத்த மெச்சங் கொள்ளும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயரெச்சமும் வினையெச்சமும் உம்மையெச்சமும் சொல்லெச்சம் பிரிநிலையெச்சமும் எனவெச்சமும் ஒழியிசை யெச்சமும் எதிர்மறையெச்சமும் இசையெச்சமும் ஆகிய கூற் றெச்சம் ஒன்பதும் குறிப்பெச்சம் ஒன்றும் தத்தம் எச்சங்களைக் கொண்டு முடியும் என்பது இதன் பொருள். சொல்லொழிபு என்பதனைமுற்கூறிய ஒன்பதனோடும் ஒழிபு என்பதனைக் குறிப்பினோடும் கூட்டுக. சொல்லொழிபு - கூற்றெச்சம். குறிப்பொழிவு - குறிப்பெச்சம். எனவே எச்சங்கள் கூற்றெச்சம் குறிப்பெச்சம் என இருவகைய என்பதூஉம் கூற்றெச்சங்களுள் ஒன்றாகிய சொல்லெச்சம் என்பது சொல் விகற்பங்களின்றிச் சொல் என்னுஞ் சொல் எஞ்சி நிற்பதென்ப தூஉம் பெறப்படும். 431. அவற்றுள் பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. இது பிரிநிலையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஏகாரப் பிரிநிலை, ஓகாரப் பிரிநிலையாகிய இவ்விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்தும் சொல்லொடு முடியும். என்றவாறு. (உ-ம்) தானே கொண்டான், தானோ கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம், `பிறர் கொண்டிலர் எனப் பிரிக்கப் பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லால் முடிந்தது. தானெனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப் பிறரும், அவனிற் பிரிக்கப்பட்டமையான், `பிறர்கொண்டிலர் என்பது பிரிநிலைப் பொருளாயிற்று. 432. வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு நினையத் தோன்றிய முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. இது வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் முடிபாகும்; அவ்விடத்துக் குறிப்புவினை ஆக்கவினை யோடு வரும். என்றவாறு. (உ-ம்) உழுது வந்தான்; மருந்துண்டு நல்லனாயினான் எனவரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப் பெயரொடு முடிதல் `நினையத்தோன்றிய என்பதனாற் கொள்ளப் படும். குறிப்புவினை ஆக்கமொடு வரும் என்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் `கற்றுவல்லன், பெற்றுடையன் எனச் சிறுபான்மை ஆக்கமின்றியும் வரும் என்பர் சேனாவரையர். 433. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. இது பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) பெயரெச்சம் பெயரொடு முடியும். என்றவாறு. (உ-ம்) உண்ணுஞ் சாத்தன்; உண்ட சாத்தன் எனவரும். 434. ஒழியிசை யெச்சம் ஒழியிசை முடிபின. இஃது ஒழியிசை யெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஒழியிசை யெச்சம் ஒழிந்து நின்ற பொருளாகிய எச்சத்தினைக் கொண்டு முடியும். என்றவாறு. மன்னை ஒழியிசையும் தில்லையொழியிசையும் ஓகார வொழியிசையும் என ஒழியிசை மூன்றாகும். (உ-ம்) `கூரிய தோர் வாண்மன்; `வருக தில்லம்மவெஞ்சேரி சேர, `கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசையெச்சம் முறையே `திட்பமின்று `வந்தால் இன்னது செய்வல், `கொண்டுய்யப் போமாறறிந்திலன் எனத் தத்தம் ஒழியிசைப் பொருள் கொண்டு முடிந்தன. 435. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. இஃது எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) மாறுகொளெச்சம் எனப்பட்ட ஏகாரவெதிர் மறையும் ஓகாரவெதிர்மறையும் உம்மையெதிர்மறையும் ஆகிய எதிர்மறை யெச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளையுணர்த்தும் சொற்கொண்டு முடியும். என்றவாறு. (உ-ம்) `யானே கொள்வேன்; யானோ கள்வேன், வரலும் உரியன் என்னும் எதிர்மறை யெச்சங்கள் முறையே `கொள்ளேன்; கள்ளேன், வாராமையும் உரியன் என எதிர்மறைச் சொற்கொண்டு முடிந்தன. 436. உம்மை யெச்ச மிருவீற்றானுந் தன்வினை யொன்றிய முடிபா கும்மே. இஃது உம்மையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) உம்மையெச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும். என்றவாறு. இருவீறாவன, எஞ்சுபொருட் கிளவியாய் வந்து முடிப்பதும், அதனால் முடிவதும் ஆகிய உம்மையெச்ச வேறுபாடு இரண்டும். தன்வினையென்றது முடிவதும் முடிப்பதும் ஆகிய அவ்விரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும் எதிர்மறையாகியும் வரும் ஒத்த வினைச்சொல்லினை. அச்சொல் உம்மைக்கேற்ற வினைச் சொல்லாதலின் தன்வினையாயிற்று. எனவே உம்மை யொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினையொன்றேயாதல் வேண்டும் என எய்தாதது எய்துவித்தவாறு. (உ-ம்) `சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தனும் வந்தான் கொற்றனும் உண்டான் என வினை வேறுபட்டவழி உம்மையெச்சமும் எஞ்ச பொருட்கிளவியும் இயையாமை காண்க. வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன, நெடுவெண் திங்களும் ஊர்கொண்டன்றே (அகம்-2) என்புழி இணர்விரிதலும் ஊர்கோடலும் ஆகிய வினையிரண்டும் மணஞ்செய் காலம் இதுவென்றுணர்த்துலாகிய ஒருபொருள் குறித்து நின்றமையான் அவை ஒரு வினைப்பாற்படும் என்பர் சேனாவரையர். எதிர் மறையும்மை எதிர்மறையெச்சமாயடங்குதலின், ஈண்டு உம்மையெச்சம் என்றது எச்சவும்மையேயாம். 437 தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறை நிலையான. இதுவும் அவ்வெச்சவும்மையது காலமயக்கங் கூறுகின்றது. (இ-ள்) அவ் வும்மையெச்சத்தின் முன்னர் முடிக்குஞ் சொல் உம்மையில்லாத சொல்லாய் வருங்காலத்து நிகழ்காலத்தொடு எதிர்காலமும் இறந்தகாலத்தொடு எதிர்காலமும் முறையானே வந்து மயங்குதலை நீக்கார் ஆசிரியர். என்றவாறு. `முறை நிலையான என்றதனால் இங்குக் கூறிய முறை யானன்றி எதிர்காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின்வந்து மயங்குதல் இல்லை என்பதாம். (உ-ம்) `கூழுண்ணா நின்றான் சோறும் உண்பன் எனவும், `கூழுண்டான் சோறும் உண்பன் எனவும் நிகழ்காலத்தொடு எதிர்காலமும், இறந்த காலத்தொடு எதிர்காலமும் கூறிய முறையான் மயங்கி வந்தன. இவற்றொடு மயங்குதல் வரையார் எனவே இறந்தகாலத்தோடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் நீக்கப்படும் என்றவாறாம். இங்குத்`தன் என்றது, `சோறும் உண்பன் எனவரும் உம்மை யெச்சத்தை. செஞ்சொல் என்றது `கூழுண்ணா நின்றான் என உம்மையில்லாது வரும் சொல்லினை. உம்மையெச்சத்தொடு தொடர்ந்த சொல்லிரண்டிற்கும் வினை ஒன்றேயாதல் வேண்டும் என மேலைச் சூத்திரத்திற் கூறினார். அங்ஙனம் கூறப்பட்ட வினை காலம் வேறுபடுதலும் படாமையும் உடைமையான் இன்னவிடத்து இன்னவகையாலல்லது காலம் வேறுபடாது என இச்சூத்திரத்தால் வரையறை கூறினார். 438. எனவெ னெச்சம் வினையொடு முடிமே. இஃது எனவென்னெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) எனவென்னும் எச்சம் வினைகொண்டு முடியும் என்றவாறு. (உ-ம்) கொள்ளெனக் கொடுத்தான்; துண்ணெனத் துடித்தது; ஒல்லென வொலித்தது; காரெனக் கறுத்தது எனவரும். என்று என்னும் எச்சச்சொல்லின் முடிவும் பொருளும் என வென்பதனோடு ஒத்தலான் அதனை எனவென்னெச்சத்தில் அடக்கினார் ஆசிரியர் எனக்கருதுவர் சேனாவரையர். உ-ம். நன்றென்று கொண்டான்; தீதென்றிகழ்ந்தான் எனவரும். 439. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சு பொருட் கிளவி யிலவெனமொழிப. இஃது ஏனையெச்சங்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) முற்குறித்த பத்தெச்சங்களுள் கூறப்படாது எஞ்சியுள்ள சொல்லெச்சம் குறிப்பெச்சம் இசையெச்சம் ஆகிய மூன்றும் மேல்வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியை உடையன அல்லது என்று சொல்லுவர் ஆசிரியர். என்றவாறு. என்றது, அவ்வத்தொடர்க்குத் தாம் எச்சமாய் வந்து அவற்றது அவாய் நிலையை நீக்குதலின் முற்கூறிய பிரிநிலை யெச்சம் முதலாயின போலத் தம்மை முடித்தற்குப் பிறசொல்லை அவாவி நில்லா என்பதாம். 440. அவைதாம் தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். (இ-ள்) அவ்வெச்சம் மூன்றும் சொல்லுவார் குறிப்பினால் எஞ்சிநின்ற பொருளையுணர்த்தும். என்றவாறு. (உ-ம்) `பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன நிறத்தையே பீர மலர் என்புழி, `பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் என வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப் படுதலற் குறிப்செச்சமாயிற்று. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு என்றவழி நீத்தார்க்கே தவறு என எஞ்சிய பொருளுணர்த்தலான் இசையெச்சமாயிற்று. சொல்லெச்சத்திற்கு உதாரணம் அடுத்த சூத்திரத்திற் காட்டப்படும். ஒருசொல் அளவில் எஞ்சி நிற்பது சொல்லெச்சம் என அடுத்த சூத்திரத்திற் கூறப்படுதலின், இசையெச்சம் என்பது தொடர்ச் சொல்லா யெஞ்சுவதென்பது பெறப்படும். `சொல் என்னும் சொல் எஞ்சுவதே சொல்லெச்சம் என்போர், ஒருசொல் எஞ்சுதலும் தொடர்ச்சொல் எஞ்சுதலும் ஆகிய இருவகையினையும் இசையெச்சமென அடக்குவர். 441. சொல்லெ னெச்சம் முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. இது சொல்லெச்சம் ஆமாறு இதுவென விளக்குகின்றது. (இ-ள்) சொல்லெச்சம் ஒரு சொற்கு முன்னும் பின்னும் சொன்மாத்திரம் எஞ்சுவதல்லது தொடராயெஞ்சுதலின்று. என்றவாறு. `உயர்திணை என்மனார் என்புழி `ஆசிரியர் என்னும் சொல் முன்னரும், `மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே என்புழி `எமக்கு எனப் பின்னரும் ஒருசொல் எஞ்சி நின்றவாறு கண்டு கொள்க. ஒரு சாரார் இவற்றை இசை யெச்சமென்று கொண்டு, `சொல்லளவல்லது எஞ்சுதலின்றே என்பதற்குச் `சொல் என்னும் சொல்லளவல்லது பிறிதுசொல் எஞ்சுதலின்று எனப் பொருளுரைத்து, `பசித்தேன் பழஞ் சோறு தாவென்று நின்றாள் என்புழித் தாவெனச் சொல்லி யெனச் சொல்லென்னுஞ் சொல் எஞ்சி நின்றது என்பர். 442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இது மரபு வழுக்காக்கின்றது. (இ-ள்) அவைக்கண் உரைக்கப்படாத சொல்லை அவ்வாய் பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறுக. என்றவாறு. அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை `அவை எனக் குறித்தார். (உ-ம்) ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் எனவும் புலி நின்றிறந்த நீரல்லீரத்து எனவும் இடக்கர் வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறியவாறு. இங்ஙனம் அவைக்கண் வழங்கப்படாத இடக்கர்ச் சொல்லை மறைத்துக் கூறுதலை `இடக்கர் அடக்கல் (நன்னூல் - 266) எனக் கூறுவர் பவணந்தி முனிவர். 443. மறைக்குங் காலை மரீஇய தொராஅல். இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்) அவையல் கிளவியை மறைத்துச் சொல்லுங்கால் தொன்று தொட்டு மருவி வழங்கியதனை மறைத்தலை நீக்குக. என்றவாறு. (உ-ம்) `மெழுகும் ஆப்பிகண்கலுழ் நீரானே (புறம் ) `ஆப்பி நீரெங்குந் தெளித்துச் சிறுகாலை, `யானையிலண்டம், `யாட்டுப் பிழுக்கை எனவரும். 444. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைய. இஃது இரவின் கிளவியாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒன்றை இரத்தற்கண் வரும் சொல்லாகும் இடம் உடைய. என்றவாறு. இவை இரத்தற்பொருளில் மட்டுமின்றி ஈச்சிற்கு, கொடுங்கோல், தாவினன்பொன் எனப் பிறபொருண்மேலும் வருதலுலுடைமையால் `இரவின்கிளவி யாகிடன் உடைய என்றார். இவை மூன்றும் இல்லென இரப்போர்க்கும், இடனின்று இரப்போர்க்கும், தொலைவாகி இரப்போர்க்கும் உரிய என்று உணர்க என்பர் நச்சினார்க்கினியர். 445. அவற்றுள், ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. 446. தாவென் கிளவி யொப்போன் கூற்றே. 447. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே. (இ-ள்) முற்கூறிய மூன்றனுள், ஈயென்னுஞ்சொல் இரக்கப் படுவோனின் இழிந்த இரவலன் கூற்றாகும். தாவென்னுஞ் சொல் அவனோடு ஒப்போன் கூற்றாகும். கொடு வென்னுஞ் சொல் அவனின் உயர்ந்தவன் கூற்றாம். என்றவாறு. (உ-ம்) சோறு ஈ, ஆடை தா, சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையே இழிந்தோர், ஒப்போர், உயர்ந்தோர் ஆகிய மூவர்க்கும் உரியவாய் வந்தவாறு காண்க. இந்நான்கு சூத்திரப் பொருளையும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 406. ஈதா கொடுவெனு மூன்று முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத் தியலு மென்மனார் புலவர். இது, மேலதற்கோர் வழுவமைதி கூறுகின்றது. (இ-ள்) கொடு வென்னுஞ்சொல் முன்னிலை வகையாற் படர்க்கையாயினும், (இரப்பான்) தன்னைப் பிறனொருவன் போலக் கூறுங்கருத்து வகையால் தன்னிடத்தே செல்லும். என்றவாறு. தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய `தா என்னும் சொல்லினாலோ அன்றி `ஈ என்னுஞ் சொல்லினாலோ இரப்போன் ஒன்றைத் தன்பொருட்டுக் கேட்டல் வேண்டும். உயர்ந்தோன் அங்ஙனந் தான் ஏற்பானாகச் சொல்லாது `கொடு எனப் படர்க்கை வாய்பாட்டாற் கூறுவான். அந்நிலையில் தன்னையே பிறன் போலக் குறித்தானாகலின் அந்நிலையில் அச்சொல் தன்னிடத் தேயாம் என இடவழுவமைத்தவாறு என்பர் சேனாவரையர். 449. பெயர்நிலைக் கிளவியி னாஅகுநவுந் திசைநிலைக் கிளவியி னாஅ குநவுந் தொன்னெறி மொழிவயி னாஅகுநவு மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு மந்திரப் பொருள்வயி னாஅகுநவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே. இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. (இ-ள்) ஒருதிணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவனவும், திசைச் சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும், முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும், பொருண் மயக்காகிய பிசிச் செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவனவும், மந்திரப் பொருட்கண் அப்பொருட் குரித்தல்லாச் சொல் வருவனவும் அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத் தான் யாப்புறவுடைய அல்ல. என்றவாறு. பெயர்நிலைக் கிளவியின் ஆகுந :- ஓரெருத்தை நம்பி யென்றும் ஒருகிளியை நங்கையென்றும் வழங்குதலும் முதலாயின. திசைநிலைக்கிளவியின் ஆகுந:- புலியான், பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயின் ஆகுந :- `யாற்றுட் செத்த எருமை யீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின. மெய்ந்நிலை மயக்கின் ஆகுந:- எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது என்பது புத்தகம் என்னும் பொருண்மேல திணை திரிந்துவந்த பிசியென்னும் செய்யுள் என்பர் சேனாவரையர். மந்திரப் பொருள்வயின் ஆகுந:- என்பதற்கு, `திரிதிரி சுவாகா கன்று கொண்டு கறவையும் வத்திக்க சுவாகா என உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். 450. செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. இது வினையியலுள் கூறாதொழிந்து நின்ற ஒழிபு கூறுகின்றது. (இ-ள்) செய்யாய் என்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆய் என்னும் ஈறுகெடச் `செய் என்னுஞ் சொல்லால் நிற்றலும் உடைத்து. என்றவாறு. `ஆகிடனுடைத்து என்றதனால் `செய்யாய் என ஈறு கெடாது நிற்றலே பெரும்பான்மை என்பதாம். (உ-ம்) உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட, உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவியாயின. ஈண்டுச் செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் என்றது உடன்பாட்டு வினையை. எதிர்மறை வினையாயின் செய்யென் கிளவியாதல் ஏலாமையறிக. `செய்யாய் என்னும் எதிர்மறை வினையும் செய்யாய் என்னும் உடன்பாட்டு வினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும் எதிர்மறைக்கண் செய் + ஆ + ஆய் என எதிர்மறையுணர்த்தும் ஆகாரவிடை நிலையும் உண்மையான் இவ்விரு சொற்களும் தம்முள் வேறெனவே படும் என்பர் சேனாவரையர். தன்னின முடித்தல் என்பதனால் அழியலை, அலையலை என்னும் முன்னிலை எதிர்மறை ஐகாரங்கெட, அழியல், அலையல் என நிற்றலும் ஒன்றென முடித்தல் என்பதனால் `புகழ்ந்தார் என்னும் படர்க்கையினை ஆரீறுகெடப் `புகழ்ந்திகு மல்லரோ என நிற்றலும் கொள்ளப்படும். 451. முன்னிலை முன்ன ரீயு மேயு மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இது, முன்னிலை வினைச்சொற்கண் வருவதோர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) முன்னிலை வினைச்சொற்கண் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலைச் சொற்கேற்ற மெய்யூர்ந்துவரும். என்றவாறு. (உ-ம்) சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரே அட்டி லோலை தொட்டனை நின்மே என முறையே ஈகாரமும் ஏகாரமும் முன்னிலைக்கேற்ற மெய்யூர்ந்து நின்றன. முன்னிலை யென்றாரேனும், செய்யென் கிளவியாகிய முன்னிலை என்பது அதிகாரத்தாற் கொள்க. ஈகாரம் ஒன்றே யாயினும் புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன்னிலை வினையீற்று வேறுபாட்டிற்கேற்ப அஃது ஊர்ந்துவரும் மெய் வேறுபடுதலால் அந்நிலைமரபின் மெய்யூர்ந்து வரும் என்றார். `ஏகாரம் மகரம் ஊர்ந்தல்லது வாராது; ஈயென்பதோரிடைச் சொல் உண்டென்பது இச்சூத்திரத்தாற் புலனாம். ஈகாரமும் ஏகாரமும் ஆகிய இடைச்சொற்கள் இரண்டும் ஈண்டுப் புறத்துறவு (அயன்மைப்) பொருள்பட நின்றன. அசைநிலை என்பாரும் உளர் என்பர் சேனாவரையர். இதனை, 335. முன்னிலை முன்ன ரீயு மேயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இவ்வாறே தானெடுத்து மொழிதலாக எடுத்தாள்வர் பவணந்தி முனிவர். 452. கடிசொ லில்லைக் காலத்துப் படினே. இது காலந்தோறும் புதிதாகத் தோன்றிய சொற்களும் கொள்க என்கின்றது. (இ-ள்) இவை தொன்றுதொட்டு வந்தன அல்லவென்று கடியப்படுஞ் சொற்கள் இல்லை; அவ்வக்காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வருமாயின். என்றவாறு. (உ-ம்) சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வழங்கப்பட்டிருக்குமாயின் `சகரக்கிளவியும் அவற்றோரற்றே, அ ஐ ஔவெனு மூன்றலங்கடையே என ஆசிரியர் சூத்திரஞ் செய்யார். எனவே இச்சொற்கள் ஆசிரியர் காலத்திற்குப் பின்தோன்றிய பிற்காலச் சொல்லேயாம். `இனி, ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான் முதலியனவும் எழுத்திற்புணர்ந்த (எழுத்ததிகாரத்தில் எடுத்தோதப்பட்ட) சொற்கள் இக்காலத்து வழக்கிழந்தனவும் ஆம் என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்தினை அடியொற்றி யெழுந்ததே, 461. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே. என நன்னூலின் இறுதியில் அமைந்த புறநடைச் சூத்திரமாகும். 453. குறைச் சொற்கிளவி குறைக்கும்வழி யறிதல். இது, செய்யுள் விகாரங் கூறுகின்றது. (இ-ள்) குறைக்குஞ் சொல்லைக் குறைக்குமிடமறிந்து குறைக்க. என்றவாறு. `குறைக்கும் வழியறிதல் என்றது, ஒரு சொற்கு முதல் இடை கடை என மூன்றிடத்தினும் இச்சொல் இன்ன இடத்துக் குறைக்கத் தக்கது என அறிந்து குறைக்க என்றவாறு. (உ-ம்) தாமரை என்பது `மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி என முதலிலும், ஓந்தி என்பது `வேதின வெரிநின் ஓதி முதுபோத்து என இடையிலும், நீலம் என்பது `நீலுண்டு கிலிகை எனக் கடையிலும் குறைக்கப்பட்டவாறும், அச்சொற்கள் அவ் விடங்களிலன்றிப் பிறவிடங்களிற் குறைத்தற்கு ஏலாமையும் கண்டு கொள்க. குறைத்தலாவது ஒரு சொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல். எனவே முழுவதுங் கெடுத்தலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் இதுவேறாம் என்பர் சேனாவரையர். இச்சூத்திரப் பொருளைத் தழுவியமைந்தது, 155. ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருமொழி முதல் இடை கடை யென்னும் மூன்றிடத்துங் குறைந்து வருதலுஞ் செய்யுள் விகாரமாம் என்பது இதன் பொருள். 454. குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல. இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்) செய்யுளகத்துச் சொற்கள் குறைக்கப்பட்டன வாயினும் அவை பொருளுணர்த்துமிடத்து நிறைந்து நின்ற பெயரின் இயல்புடையனவாம். என்றவாறு. என்றது, முற்கூறிய உதாரணங்கள் மரை, ஓதி, நீல் எனக் குறைக்கப்பட்டனவாயினும் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்றல் காணலாம். இவ்வாறு செய்யுளிற் குறைக்கப்படுவன பெயரே யாகலின் `நிறைப்பெயரியல் என்றார். 455. இடைச் சொல்லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. இஃது இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினைகளின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச் சொல்லாம்; எனவே தாமாக நின்று பொருளுணர்த்துஞ் சொல்லாகா. என்றவாறு. என்றது, இடைச்சொற்கள் எல்லாம் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் போலப் பொருளையும் தொழிலையும் தாமாக நேரே உணர்த்தாது, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் வேற்றுமை யுருபு போலச் சொற்பொருளை வேறுபடுத்துவன என்பதாம். வேற்றுமை - வேறுபாடு. வேற்றுமைச் சொல் - வேற்றுமையைச் செய்யுஞ்சொல். மன் என்னும் இடைச்சொல் கழிவினும் ஆக்கத்தினும் ஒழியிசையினும் வந்தவழித் தான் இடைநின்று நிலைமொழியின் பொருள் வேறுபாட்டினைக் குறித்து நின்றதல்லது, தானே அப்பொருளை உணர்த்தாமை கண்டு கொள்க. பிறிதோர் சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுவனவும் எனச் சொல் இருவகைப் படும். பிறிதோர் சொல்லை வேறுபடுத்தலாவது விசேடித்தல். பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப் படுதலாவது விசேடிக்கப் படுதல். இடைச் சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லை வேறு படுக்குஞ் சொல்லாவதல்லது ஒரு ஞான்றும் வேறுபடுக்கப்படுஞ் சொல்லாகா என நியமிப்பது இச்சூத்திரம் என்பர் சேனாவரையர். இனி, இச்சூத்திரத்திற்கு இவ்வாறு நேரே பொருள் கொள்ளாது `வேற்றுமைச் சொல்லெல்லாம் இடைச்சொல் என இயைத்து, `முடிக்குஞ் சொல்லை விசேடித்து நிற்கும் சொற்களெல்லாம் முடிக்கப்படுஞ் சொற்கும் முடிக்குஞ் சொற்கும் நடுவே வருஞ் சொல்லாய் நிற்கும் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். (உ-ம்) கண்ணி கார்நறுங் கொன்றை.......... ஊர்தி வால் வெள்ளேறே (புறம்-1) என்புழிக் கொன்றையையும் ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன. `ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் (புறம் - ) என்புழி ஈர்ந்தையோன் என்னும் முற்றிற்கு முடிபாகிய பகைஞன் என்னும் பெயரை இடையினின்ற சொல் விசேடித்து நின்றது. இழி பிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கலனாக விலங்கு பலி மிசையும் (புறம் - ) என்புழிப் `பெற்று என்னுஞ் செய்தெனச்சத்திற்கு முடிபாகிய `மிசையும் என்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன. இவ்வாறு எழுவாயை முடிக்கும் பயனிலைக்கும் முற்றை முடிக்கும் பெயர்க்கும், வினையெச்சத்தை முடிக்கும் வினைக்கும், பெயரெச்சங்களை முடிக்கும் பெயர்கட்கும் இடையே வருதலின் இவை இடைச் சொல்லாயின என்பது அவர் கருத்தாகும். 456. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய. இஃது உரிச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருளுணர்ச்சி கூறுகின்றது. (இ-ள்) உரிச்சொற்கண்ணும் வேறுபடுத்துஞ் சொல்லாதற்கு உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா. என்றவாறு. எனவே உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப் பட்டும் இருநிலைமையும் உடையவாய் வருவனவே பெரும் பான்மையென்பதாம் என்பர் சேனாவரையர். (உ-ம்) உறுபொருள், தவப்பல, நனி சேய்த்து, ஏகல் லடுக்கம் என முறையே உறு, தவ, நனி, ஏ எனவரும் உரிச்சொற்கள் வேறுபடுக்குஞ் சொல்லேயாய் வந்தன. குருமணி, விளங்குகுரு; கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லல் நோய், அருஞ்செல்லல்; இன்னற் குறிப்பு, பேரின்னல் என்புழி முறையே குரு, கெழு, செல்லல், இன்னல் என்பன ஒன்றனை விசேடித்தும் ஒன்றனால் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய் வந்தன. 457. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. இது, வினையெச்சத்திற்குரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல விலக்கணத்தையுடையன. என்றவாறு. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக்கணமேயன்றிப் பிற இலக்கணமுடைய என்பது உணர்த்தினார். இனி அவையேயன்றி வினையெஞ்சு கிளவியும் பல இலக்கணத்தன என்பதுபட நின்றமையான் `வினையெஞ்சு கிளவியும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. வினையெச்சத்தின் இலக்கணம் ஓரியல்பினவன்றித் திரிதல், வேறு பொருளுணர்த்தல், விசேடித்தல் முதலாகப் பலவேறு திறத்தன வாதலின் `வேறு பல் குறிய என்றார். குறி - இலக்கணம். அவையாவன: செய்தெனெச்சம் வினைமுதல் வினை கொள்ளாது உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய யா ஞாயிறுபட்டு வந்தான் எனப் பிறிதின் வினை கோடலும், மோயினள் உயிர்த்த காலை என அஃது ஈறுதிரிதலும் `கண்ணியன் வில்லன் வரும் என முற்றுச் சொல்லது திரிபாய் வருதலும், ஓடிவந்தான், விரைந்து போயினான் எனவும், வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் எனவும், செவ்வன் தெரிகிற்பான், புதுவதின் இயன்ற அணியன் எனவும் தம்மை முடிக்கும் வினைக்கட்கிடந்த தொழிலும் பண்பும் குறிப்பும் உணர்த்தித் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையுமாய் முடிக்குஞ் சொல்லை விசேடித்தலும் பிறவுமாம் என்பர் சேனாவரையர். `ஒடித்துண்டெஞ்சிய என்பது முதலாயின செயவெனெச்சம் செய்தென் எச்சமாய்த் திரிந்தன என்றும், `பெயர்த்தனென் முயங்க முதலாயின செய்தெனெச்சம் முற்றாய்த் திரிந்தனவென்றும் கூறுவர் உரையாசிரியர். `உரற்கால் யானை யொடித்துண்டு எஞ்சிய யா எனவும் `ஞாயிறு பட்டு வந்தான் எனவும் வரும் தொடர்களில் உண்டு, பட்டு என்னும் செய்தெனெச்சங்கள் தமக்குரிய வினைமுதல்வினை கொள்ளாது பிறிதின்வினை கொண்டனவாயினும் செய் தெனெச்சத்திற்குரிய இறந்தகால முணர்த்துதலால் ஏனைக்காலத் திற்குரிய செயவெனெச்சத்தின் திரிபாகா. செயவெனெச்சம், `மழைபெய்ய மரந்தளிர்த்தது என்றாங்குக் காரண காரியப் பொருண்மையுணர்த்தும் வழியல்லது இறந்தகாலம் உணர்த்தாது. யானை ஒடித்து உண்ணுதலும் ஞாயிறுபடுதலும் யா மரம் எஞ்சுதற்கும் ஒருவன் வருதற்கும் காரணமன்மையால் ஈண்டு செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது. எனவே உண்டு, பட்டு என்பன செய்தெனெச்சமாய் நின்றே தமக்குரிய இறந்தகால முணர்த்தின எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். `ஞாயிறு பட்டு வந்தான் என்பது, ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்தகால முணர்த்துதலும், ஞாயிறுபட வந்தான் என்பது, ஞாயிறுபடாநிற்க வந்தான் என நிகழ்கால முணர்த்துதலும் வழக்குநோக்கி யுணரத்தக்கனவாம். `பெயர்த்தனென் முயங்க என்பது முதலாயின எச்சத்திரி பாயின் எச்சப்பொருளுணர்த்துவல்லது இடமும் பாலும் உணர்த்தற்பால அல்ல. எச்சப் பொருண்மையாவது, மூன்றிடத் திற்கும் ஐந்து பாற்கும் பொதுவாகிய வினைநிகழ்ச்சி. அவ்வாறன்றி முற்றுச் சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலும் உணர்த்தலின் அவை முற்றுத் திரிசொல்லெனவே படும் என்பர் சேனாவரையர். வினையெச்சத் திரிபாகிய இதனை, 345. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை. எனவரும் சூத்திரத்தால் உணர்த்துவர் நன்னூலார். வினையெச்சங்கள் தத்தம் வாய்பாடுகள் ஒன்று மற்றொன்றாய்த் திரிந்து வருவன உளவேனும் அவைதம் பொருளிற் றிரியாவாம் என்பது இதன் பொருள். வினைக்குறை - வினையெச்சம். இனி, `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய என்பதன் கண் குறி என்றது பெயர் எனக்கொண்டு வினையெச்சமாகிய சொற்களும் (உம்மையால்) பெயரெச்சமாகிய சொற்களும் முற்றுச் சொற்களும் முற்கூறிய பெயர்களோடு வேறு வேறாகப்பல பெயர்களையும் உடையவாம் எனப்பொருள் வரைந்து அவை பெறும் பெயர்களைப் பின் வருமாறு எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (உ-ம்) பெயர்த்தனென் முயங்க யானே - இது வினையெச்சத் தன்மைத் தெரிநிலை முற்று. வந்தனை சென்மோ - இது வினையெச்ச முன்னிலைத் தெரிநிலை முற்று. `முகந்தனர் கொடுப்ப - இது வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலை முற்று. `ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழி - இது வினை யெச்ச உளப்பாட்டுத் தன்மைத் தெரிநிலை முற்று. `வறுவியென் பெயர்கோ - இது, வினையெச்சத் தன்மை வினைக்குறிப்பு முற்று. `நறுநுதல் நயந்தனை நீவி `வெள்வேல் வலத்திர் இவை வினையெச்ச முன்னிலை வினைக்குறிப்பு முற்று. சுற்றமை வில்லர், சரிவளர் பித்தையர் அற்றம் பார்த்தல்கும் கடுங்கண் மறவர் இவை வினையெச்சப் படர்க்கை வினைமுற்று. `எல்வளை நெகிழ்த்தோர்க் கல்லலுறீஇயர், `உள்ளேன் தோழி படீஇயரென் கண்ணே என்பன வினையெச்ச வினைத் திரிசொல். `கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் `குவளையே யளவுள்ள கொழுங்கண்ணாள் அவளையே, `புரிமாலையர் பாடினியரும் இவை முறையே உயர்திணை முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. பெருவரை மிசையது பிறங்கு வெள்ளருவி, தெரிநடைய மாகளிறு - இவை அஃறிணை இருபாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. பெருவேட்கையேன் எற்பிரிந்து - இது பெயரெச்சத் தன்மை ஒருமை வினைக்குறிப்பு முற்று. `கண்புரை காதலேம் எம் உள்ளான்- இது பெயரெச்சத் தன்மை உளப்பாட்டுப்பான்மை வினைக்குறிப்பு முற்று. `உலங்கொள் தோளினை ஒரு நின்னால் இது பெயரெச்ச முன்னிலை ஒருமை வினைக்குறிப்பு முற்று. `வினை வேட்கையீர் வீரர் வம்மின் - இது பெயரெச்ச முன்னிலைப் பன்மை வினைக்குறிப்பு முற்று. பின்பு நூல் செய்தார் வினையெச்ச முற்று என்றுபெயர் கூறாமல், முற்றுவினையெச்சம் என்று பெயர் கூறினாரேனும், பெயரெச்ச வினைக்குறிப்பு முற்று என்று பெயரெச்சத்திற்குக் குறியிட்டு ஆளவேண்டுதலின், அதற்கும் (வினையெச்ச முற்று) என்னும் அப்பெயரே கொள்ள வேண்டும் என்றுணர்க என்றார் நச்சினார்க்கினியர். இங்ஙனம் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டும் இலக்கியத் தொடர்களையும் அவற்றிலாளப்படும் சொற்களுக்குக் கூறப்படும் வேறு வேறு இலக்கணக் குறியீட்டுப் பெயர்களையும் கூர்ந்து நோக்குங்கால் வினையெச்ச பெயரெச்சங்களே செய்யுளியற்றும் புலவனால் முற்றாகத் திரித்து வழங்கப்பெறுவன என்பது அவர் கருத்தாதல் இனிது விளங்கும். வினையெச்சம் முற்றாய்த் திரிந்து பின்னும் அதன் பொருளுணர்த்தி நிற்றல், இன்றி யென்னும் வினையெஞ்சிறுதி என்னுஞ் சூத்திரத்தானும் உணர்க எனத் தொல்காப்பியர் கருத்தும் அதுவே என அவர் உய்த்துணர்ந்து கூறும் முறை இங்கு நுணுகி நோக்கத் தகுவதாகும். பாயுந்து, தூங்குந்து என வருவன பெயரெச்ச வினைத் திரிசொல். `கண்ணும் படுமோ என்றிசின் யானே - இது தன்மை முற்றுவினைத் திரிசொல். `ஈங்குவந்தீத்தந்தாய் - இது முன்னிலை முற்றுவினைத் திரிசொல். புகழ்ந்திகுமல்லரோ- இது படர்க்கை முற்றுவினைத் திரிசொல். இனி, இச் சூத்திரத்திற்கு `வினையெச்சம் சொல்லானும் பொருளானும் வேறுபட்டுப் பல இலக்கணத்தையுடையவாய் வரும் எனப் பொருள் கொண்டு தெய்வச்சிலையார் கூறும் மேற்கோள் விளக்கங்கள் நச்சினார்க்கினியர் கருத்தினை அடியொற்றி யமைந்துள்ளன. 458. உரையிடத் தியலு முடனிலை யறிதல். இது, வழக்கின்கண் பயிலும் சொல்வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) வழக்கின்கண் உடன்நிற்கற் பாலன வல்லாத சொற்கள் உடன் நிற்றலை அறிந்து கொள்க. என்றவாறு. ஈண்டு உடனிலை என்றது தம்முள் மாறுபட்ட சொற்கள் ஒருங்கு நிற்றலை. (உ-ம்) `இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது எனவரும். உடனிற்றற்குரிய வல்லாத சிறுமையும் பெருமையும் உடனின்ற வாறு காண்க. 459. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே இன்ன வென்னுஞ் சொன்முறை யான. இது சொற்கண் வருவதோர் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) சொல்லாலன்றிச் சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப்படுஞ் சொற்களும் உள; இப்பொருள் இத் தன்மையன என்று சொல்லுதற்கண். என்றவாறு. (உ-ம்) செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னும் அணிந்த செவி என்றும், வெளியது உடுத்த சுற்றம் என்றும் குறிப்பால் உணரப்பட்டவாறு கண்டு கொள்க. `குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அத்தகைய பெருங்செல்வமுடையார் என்பதும் குறிப்பால் உணரப்படும். இச் சூத்திரப் பொருளை இதன் முதலடியாகிய ஓரடியால் உணர்த்துவது, 407. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். சொற்கிடந்தவாறன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருள்படவருஞ் சொற்களும் சிலவுளவாம் என்பது இதன் பொருள். 460. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். இது மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்) பொருள் வேறுபாடின்றி ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொல் பிரிவின்றிச் தொடர்ந்துவரின், அவற்றை நீக்கார் ஆசிரியர். என்றவாறு. `பிரிவில ஆவன வேறோர் சொல்லால் இடையிடப்படாது ஒட்டி நிற்பன. (உ-ம்) `நிவந்தோங்கு பெருமலை எனவும் `துறுகன் மீமிசை எனவும் வரும். இனி, `ஒரு பொருளிரு சொற் பிரிவில வரையா எனப் பாடங் கொண்டு, ஒரு பொருள் மேற்கிடந்த இரு சொற் பிரிவின்றி நின்றன வரையப்படா எனப் பொருள் கூறி, வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம் தையலா யின்று நீ நல்குதி நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியோ நாடறியக் கவ்வை யொருங்கு எனவரும் பாடலில் வையைக் கிழவன் எனப்பட்டானும் கூடலார் கோவும் ஒருவனாதலால் அவ்விரு சொல்லும் ஒரு பொருட் கண் பிரிவின்றி நின்றன எனவும், பிரிவில வரையப்படா எனவே பிரிவுடையன நீக்கப்படும் எனவும் கருத்துரைத்து `கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுதேன் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவென் சாலேகஞ் சார நட என்புழிக் `காலேகவண்ணன் என்பது காலேக வண்ணம் என்னும் சாந்து பூசினார்க்கெல்லாம் எய்தும் பெயராதலின் முற்குறித்த கூத்தப் பெருஞ் சேந்தனிற் பிரிந்து நிற்றலின் அவை ஒருபொருள் மேல் அமையா எனவும் உதாரணங்காட்டி விளக்குவர் இளம்பூரணர். இவ்வுரையைத் தழுவி அமைந்தது, 396. ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒரு பொருள் கருதிவரும் பலபெயர் பொருளின் நீங்கா வாயின், ஒரு பொருட்குப் பலபெயர் வந்தனவென்று கடியப்படா. என்றவாறு. `பிரிவில வரையா எனவே பிரிவன கடியப்படுமெனக் கொள்க என இதற்கு மயிலைநாதர் கூறும் உரையும் உதாரணங்களும் இத்தொடர்பினைப் புலப்படுத்தல் ஒப்பு நோக்கி யுணரத் தகுவதாகும். இனி, `ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் எனப் பாடங் கொண்டு சேனாவரையர் இச்சூத்திரத்திற் கெழுதிய உரையை அடியொற்றியமைந்தது, 397. ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பொருள் வேறின்றி ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள் அப்பொருளைச் சிறப்பித்தலின் வழுவென்று நீக்கப் படா என்பது இதன் பொருள். (உ-ம்) மீமிசை ஞாயிறு, உயர்ந்தோங்கு பெருவரை, புனிற்றிளங் கன்று, நாகிளங் கழுகு, இரும்பேரொக்கல், குழிந்தாழ்ந்தகண் என வரும். 461. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே. இது பால் வழுவமைக்கின்றது (இ-ள்) ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மைக்கு ஆகும் இடமும் உண்டு. எ-று. (உ-ம்) ஏவலிளையர் தாய் வயிறு கரிப்ப (புறம் ) என்புழித் `தாய் என்னும் ஒருமைப் பெயர் ஏவல் இளையர் (பலர்) என்பதனால் `தாயர் எனப் பன்மை உணர்த்தியது. பன்மைக்கும் இடனுமாருண்டே என்பது பன்மைச் சொல் ஒருமைச் சொல்லோடு தொடர்தற்குப் பொருந்தும் இடம் உண்டு என்ற பொருளும் தந்து நிற்றலால், `அஃதை தந்தை அண்ணல் யானை அடுப்போர்ச் சோழர் எனத் தந்தை என்னும் ஒருமைச்சொல் சோழர் என்னும் பன்மைச் சொல்லொடு தொடர்தலும் கொள்ளப்படும். ஏற்புழிக் கோடலால் இம் மயக்கம் உயர்திணைக்கண்ணது என்று கொள்க. தொல்காப்பியர் கூறிய இவ்வழுவமைதியுடன் இது போன்ற ஏனைய வழுவமைதியையும் இணைத்துக் கூறும் முறையில் அமைந்தது, 379. ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருமைச் சொல் பன்மை தழுவலும், பன்மைச் சொல் ஒருமை தழுவலும், ஓரிடத்துக்கு உரியசொல் பிறவிடங்கள் தழுவலும் உளவாம் என்பது இதன் பொருள். (உ-ம்) நீர் இருந்தன, பால் இருந்தன எனவும், நாடெல்லாம் வாழ்ந்தது, ஊரெல்லாம் உவந்தது எனவும் அஃறிணை ஒருமையுடன் பன்மையும் பன்மையுடன் ஒருமையும் மயங்கின. அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் எனவும் ஏவலிளையர் தாய் வயிறு கரிப்ப எனவும் உயர்திணை யொருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கின. இனி இடமயக்கமாவன:- `சாத்தன் தாய் இவை செய்வலோ; `நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு (அகநா-110) எனத்தன்மை படர்க்கை தழீஇயின. `எம்பியை யீங்குப் பெற்றேன் (சீவக - 1760) என்பது முன்னிலை படர்க்கை தழீஇயது. `நீயோ அவனோ யாரிது செய்தார், `யானே அவனோ யாரிது செய்தார் `அவனோ நீயோ யானோ யாரிது செய்தார் என்ன விரவியும் ஓரிடம் தழீஇயின. 462 முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இது செய்யுட் குரியதோர் முடிபு கூறுகின்றது. (இ-ள்) முன்னிலை குறித்து நின்ற ஒருமைச்சொல், பன்மை யொடு முடிந்ததாயினும், நீக்கப்படாது; அம்முடிபு ஆற்றுப் படைச் செய்யுளின்கண் போற்றியுணரப்படும். என்றவாறு. ஆற்றுப்படை மருங்கின் எனப் பொதுவகையாற் கூறினாராயினும், சுற்றத்தலைவன் ஒருவனை நோக்கி அவனது சுற்றத்துடன் ஆற்றுப்படுத்தற்கண் வருவது இவ் ஒருமை பன்மை மயக்கம் என்பதனைக் குறித்துணர்க என அறிவுறுத்துவார் `ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் என்றார். கூத்தராற்றுப் படையுள் `கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ என நின்ற முன்னிலையொருமைச் சொல், `இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் என்னும் பன்மைச் சொல்லொடு முடிந்தவாறு காண்க. ஒருவர் ஒருவரை ஆற்றுப் படுத்தற் கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல் செய்யுடகே யன்றி வழக்கிற்கும் ஒக்கும் ஆதலால் `ஆற்றுப்படை எனப் பொதுவகையாற் கூறினார். 463. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இஃது இவ்வதிகாரத்துள் ஓதப்பட்ட சொற்கெல்லாம் ஓர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின் கண் பொருள் விளங்கச் சொல்லப்பட்ட சொற்கள் எல்லா வற்றையும் பல்வேறு செய்கையையுடைய தொன்னூலின் நெறி முறையில் தவறாது சொல்லை வேறுபடுத்து உணருமாறு பிரித்துக் காட்டுக. என்றவாறு. நிலப்பெயர் குடிப்பெயர் எனவும், அம்மாமெம்மேம் எனவும் மேற்பொதுவகையாற் கூறப்பட்டன. அருவாளனிலத் தான் என்னும் பொருட்கண் அருவாளன் எனவும், சோழனிலத்தான் என்னும் பொருட்கண் சோழன் எனவும் நிலம்பற்றி வரும் பெயர்கள் எல்லாம் நிலப்பெயர் எனப் பிரித்துப் பொருளுணர்த்தப் படும். இவ்வாறே இறந்தகாலத்தின்கண் உண்டனம் உண்டாம் எனவும், நிகழ்காலத்தின்கண் உண்ணாநின்றனம், உண்ணா நின்றாம், உண்கின்றாம் எனவும், எதிர்காலத்தின் கண் உண்குவம், உண்பாம் எனவும் வரும் வேறுபாடெல்லாம் கூறிய பெருகு மென்றஞ்சிக் கூறிற்றிலனாயினும் அவ்வேறு பாடெல்லாம் உணர நூல்நெறி பிழையாது பிரித்துக் காட்டுதல் இந்நூலைக் கற்றுணர்வோர் கடமையாம் என அறிவுறுத்தியவாறாம். இதன்கண் `பல்வேறு செய்தியின் நூல் என்றது அகத்திய முதலிய தொன்னூல்களை; செய்தி - செய்கை + விதி. இனி இச்சூத்திரத்திற்கு, செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற் கிளக்கப்படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொற்கள் எல்லாவற்றையும் அவ்வத் தொன்னூல் நெறியிற் பிழையாமல் சொல்லை வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்காட்டுக என மற்றுமோர் உரை வரைந்து, இடைவழு வமைதி பலவற்றுக்கு எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் சேனாவரையர். சொல்லதிகாரப் புறனடையாகிய இதனைத் தழுவி யமைந்தது, 460. சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவும் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். சொற்றொறும் இத்தன்மைத்து இதன் இலக்கணம் என்று முற்ற மொழியப் புகின் வரம்பிலவாம் ஆதலின், எடுத்துக் கூறிய சொற்களின் இலக்கணங்களைக் கொண்டு சொல்லாதனவற்றின் இலக்கணங்களையும் ஒப்புமை கருதி இதுவும் அதுவென முற்ற விளங்கவுணர்தல் நூலோதித் தெளிதற்குரிய மாணாக்கர் திறனாம் என்பது இதன் பொருளாகும். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சூத்திர முதற்குறிப்பு அகராதி பக்க எண் அ அ ஆ வ என வரூ 19 அ ஆ வ என 232 அ எனப் பிறத்தல் 133 அசைநிலைக் கிளவி 290 அச்சக்கிளவிக் 124 அச்சம் பயமிலி 278 அடிமறிச்செய்தி 359 அடைசினை முதலென 42 அண்மைச் சொல்லிற் 154 அண்மைச் சொல்லே 152,164 அதற்கு வினையுடைமை 97 அதனின் இயறல் 94 அதிர்வும் விதிர்ப்பு 323 அதுச்சொல் வேற்றுமை 228 அதுவிதுவுதுவென 183 அதுவென் வேற்றுமை 121 அத்திணைமருங்கி 236 அந்திலாங்க 287 அந்நாற் சொல்லு 355 அப்பொருள் கூறிற் 51 அமர்தன்மேவல் 337 அம்மகேட்பிக்கு 293 அம்மவென்னு 165 அம்முக்கிளவி 250 அயல்நெடிதாயி 160 அரியேயைம்மை 333 அர் ஆர் ப என 223 அலமரறெருமர 322 அவற்றின் வரூஉ 301 அவற்றுள், அழுங்கல் 331 அவற்றுள், அன்னெனி 154 அவற்றுள், இ ஈ யாகு 150 அவற்றுள், இகுமுஞ்சி 293 அவற்றுள், இயற்சொ 348 அவற்றுள், இரங்கல் 353 அவற்றுள், ஈயென் 399 அவற்றுள், எழுவாய் 83 அவற்றுள், செய்கென் 221 அவற்றுள், செய்யு 261 அவற்றுள், தடவென் 324 அவற்றுள், தருசொல் 46 அவற்றுள், நான்கே 190 அவற்றுள், நிரனிறை 357 அவற்றுள், நீயென் 199 அவற்றுள், பன்மை 226 அவற்றுள், பிரிநிலை 393 அவற்றுள், பெயரெனப் 175 அவற்றுள், முதனிலை 250 அவற்றுள், முன்னிலைக் 240 அவற்றுள், முன்னிலைதன் 244 அவற்றுள், யாதென 47 அவற்றுள், விறப்பே 330 அவற்றுள், வினைவேறு 69 அவற்றுள், வேற்றுமைத் 371 அவற்றொடு வருவழி 257 அவைதாம், அம்மா 213 அவைதாம்,இ உ ஐ ஓ 150 அவைதாம், உறுதவ 319 அவைதாம், தத்தங்கிள 390 அவைதாம், தத்தங்குறிப் 397 அவைதாம், தத்தம்பொ 140 அவைதாம், புணரியனி 272 அவைதாம், பெண்மை 190 அவைதாம், பெயர் 81 அவைதாம், முன்மொழி 380 அவைதாம், முன்னும் 274 அவைதாம், வழங்கியல் 138 அவையல்கிளவி 398 அவ்வச்சொல்லிற் 306 அவ்வழி, அவனிவ 176 அவ்வே, இவ்வென 149 அளபெடைப் பெயரே 161 அளபெடைப் பெயரே 155,158 அளபெடை மிகூஉ 151 அளவு நிறையும் 142 அன் ஆன் அள் ஆள் 223 அன்மையினின்மை 230 அன்னபிறவுங்கிள 344 அன்ன பிறவுந்தொன் 124 அன்னபிறவுமஃறி 184 அன்னபிறவுமுயர் 179 ஆ ஆகவாகலென்ப 295 ஆக்கக்கிளவி 36 ஆக்கந்தானே 36 ஆங்கவுரையசை 294 ஆடூஉவறிசொல் 12 ஆண்மைசுட்டிய 193 ஆண்மைதிரிந்த 25 ஆண்மையடுத்த ஆயென்கிளவி 227 ஆருமருவும் 157 ஆவோவாகும் 203 ஆறன்மருங்கின் 123 ஆறாகுவதே, அதுவென 101 ஆனெனிறுதி 154 இ இசைத்தலுமுரிய 75 இசை நிறையசைநிலை 368 இசைபடு பொருளே 384 இசைப்பிசையாகும் 322 இடைச் சொல்லெல்லா 404 இடைச் சொற்கிளவி 173 இடையெனப்படுவ 271 இதனதிதுவிற்றென் 134 இதுசெயல்வேண்டு 266 இயற்கைப் பொருளை 35 இயற்கையினுடைமை 102 இயற்சொற்றிரிசொ 347 இயற்பெயர்க்கிளவி 53 இயற்பெயர்சினைப் 174 இயற்பெயர்முன் 290 இயைபே புணர்ச்சி 321 இரட்டைக்கிளவி 63 இரண்டன் மருங்கின் 120 இரண்டாகுவதே, ஐயெ 89 இருதிணைச் சொற்கு 187 இருதிணைப்பிரிந்த 175 இருதிணைமருங்கின் 20 இருபெயர் பலபெ 377 இர் ஈர்மின் 242 இலம்பாடொற்க 333 இறப்பினிகழ்வி மொழியே 387 இறப்பினிகழ்வி - னெதிர் 211 இறப்பேயெதிர் 269 இறுதியுமிடையு 127 இறைச்சிப் பொருள் 204 இனச்சுட்டில்லாப் 32 இனைத்தென 48 இன்றிலவுடைய 236 இன்னபெயரே 202 ஈ ஈதாகொடுவென 399 ஈரளபிசைக்கு 296 ஈற்றுநின்றிசை 299 ஈற்றுப்பெயர் 122 உ உகப்பேயுயர் 321 உகரந்தானே 150 உசாவேசூழ்ச்சி 335 உணர்ச்சிவாயி 342 உம்முந்தாகு 303 உம்மைதொக்க 300 உம்மையெச்ச 394 உம்மையெண்ணினுரு 303 உம்மையெண்ணுவேமென 300 உயர்திணை மருங்கினு 383 உயர்திணை மென்மனார் 7 உரிச்சொற் கிளவி 310 உரிச்சொன் 406 உருபுதொடர்ந் 125 உருவெனமொழியி 38 உருவுட்காகும் 320 உரையிடத்தியலு 410 உவமத்தொகையே 372 உளவெனப்பட்ட 164 எ எச்சஞ்சிறப்பே 278 எச்சவும்மை 297 எஞ்சியகிளவி 243 எஞ்சியமூன்று 396 எஞ்சிய விரண்டி 160 எஞ்சுபொருட்கிளவி 298 எடுத்தமொழி 75 எண்ணுங்காலும் 63 எண்ணேகார 300 எதிர்மறுத்து 131 எதிர்மறையெச்ச 394 எப்பொருளாயினு 50 எய்யாமையே 328 எல்லாச்சொல்லும் 167 எல்லாத் தொகையு 381 எல்லாமென்னும் 198 எல்லாருமென்னும் 177 எல்லேயிலக்கம் 288 எவ்வயிற் பெயரும் 86 எவ்வயின் வினையு 389 எழுத்துப்பிரிந்திசை 343 எறுழ்வலியாகும் 339 எற்றென்கிளவி 285 எனவெனெச்சம் 396 என்றுமெனவு 305 என்றென்கிளவி 283 ஏ ஏபெற்றாகும் 321 ஏயுங்குரையு 291 ஏழாகுவதே, கண்ணென 105 ஏற்றநினைவு 327 ஏனைக்காலமு 270 ஏனைக்கிளவி 200 ஏனைப்புள்ளி 153 ஏனையிரண்டும் 46 ஏனையுயிரே 151 ஏனையுருபுமன்ன 136 ஏனையெச்சம் 251 ஐ ஐந்தாகுவதே, இன் 99 ஐயமுங்கரிப்பு 338 ஐயுங்கண்ணு 130 ஐவியப்பாகும் 339 ஒ ஒப்பில் போலி 294 ஒரு பெயர்ப்பொதுச் 64 ஒருபொருளிரு 411 ஒருபொருள் குறித்த வேறு சொல் 349 ஒருபொருள் குறித்த 58 ஒருமைசுட்டிய பெயர் ஒருமை சுட்டிய வெல் 197 ஒருமையெண்ணின் 60 ஒருவரென்னும் 201 ஒருவரைக்கூறும் 43 ஒருவினையொடுச் 119 ஒழியிசையெச்ச 394 ஒன்றறிகிளவி 18 ஒன்றறி சொல்லே 12 ஒன்றன் படர்க்கை 234 ஒன்றுவினைமருங்கின் 70 ஓ ஓம்படைக்கிளவி 123 ஓய்தலாய்த 326 ஓவும் உவ்வும் 150 க 106 கடதறவென்னு 220 கடிசொல்லில்லை 403 கடியென்கிளவி 338 கண்கால் புறமக 106 கண்டீரென்றா 385 கண்ணுந்தோளும் 77 கதழ்வுந்துனைவு 323 கமநிறைந்திய 332 கம்பலைசும்மை 330 கயவென்கிளவி 325 கருமமல்லாச் 114 கருவிதொகுதி 332 கவவகத்திடுமே 333 கவர்வு விருப்பாகும் 334 கழிவேயாக்கம் 276 கழுமென் கிளவி 332 கள்ளொடு சிவணும் 184 கறுப்புஞ் சிவப்பும் 335 கன்றலுஞ் செலவு 115 கா காப்பினொப்பின் 90 காலந்தாமே 210 காலமுலக கி கிளந்தவல்ல 143,306 கிளந்தவிறுதி 162 கு கு ஐ ஆனென 133 குடிமையாண்மை 73 குத்தொகவரூஉ 124 குருவுங்கெழுவு 320 குறித்தோன்கூற்றம் 72 குறிப்பினும் வினையினு 212 குறைச்சொற்கிளவி 403 குறைத்தன வாயினு 404 கூ கூர்ப்புங்கழிவு 322 கூறிய கிளவி 340 கூறிய முறையி 87 கெ கெடவரல் பண்ணை 324 கே கேட்டை யென்றா 386 கொ கொடுவென் கிளவிபடர் 399 கொடுவென் கிளவியுயர் 399 கொல்லேயையம் 288 சா சாயன்மென்மை 325 சி சிதலும் எறும்பும் 315 சிதைந்தனவரினு 353 சிறப்பினாகிய 56 சினைநிலைக்கிளவி 115 சீ சீர்த்திமிகுபுகழ் 322 சு சுட்டுமுதலாகிய 54 சுட்டு முதற்பெயரும் 161 சுட்டுமுதற் பெயரே 159 சுண்ணந்தானே 358 செ செந்தமிழ் சேர்ந்த 350 செப்பினும் வினாவினும் 29 செப்பும் வினாவும் 26 செப்பேவழீஇயினும் 29 செயப்படு பொருளைச் 268 செயற்கைப்பொருளை 36 செய்துசெய்யூ 246 செய்தெனெச்சந் 262 செய்யாயென்னு 401 செய்யுண் மருங்கினு 414 செலவினும் வரவினும் 45 செல்லலின்ன 320 செழுமை வளனு 332 சே சேரேதிரட்சி 334 சொ சொல்லெனப்படுப 173 சொல்லெனெச்ச 397 ஞெ ஞெமிர்தலும் பாய்தலு 334 த தகுதியும் வழக்கு 30 தஞ்சக்கிளவி 287 தடவுங்கயவு 324 தடுமாறு தொழிற் 121 தத்தமெனச்சமொடு 259 த ந நு எ என 165 த ந நு எ எனு 367 தன்மேற் செஞ்சொல் 395 தன்மை சுட்டலு 39 தன்மைசுட்டிற் பன்மைக் 201 தன்மைச் சொல்லே 59 தன்னுளுறுத்த 199 தா தாமென்கிளவி 198 தாவென்கிளவி 399 தாவே வலியும் 344 தானென் கிளவி 198 தானென் பெயரும் 157 தி திணையொடு பழகிய 205 தீ தீர்தலுந் தீர்த்தலு 324 து துயவென் கிளவி 335 துவன்றுநிறை 326 துவைத்தலுஞ்சிலை 333 தெ தெவுக்கொளற் 330 தெவ்வுப் பகை 330 தெரிநிலையுடைய 186 தெரிபு வேறு 168 தெளிவினையு 284 தே தேற்றம் வினாவே 281 தொ தொழிலிற்கூறு 154 தொழிற்பெயராயின் 157 ந நண்டுந்தும்பி 315 நந்துமுரளு 314 நம்புமேவு 325 நளியென்கிளவி 325 நனவேகளனு 336 நன்றீற்றேயு 297 நன்றுபெரிதாகும் 329 நா நான்குவதே, கு என 96 நி நிகழூஉநின்ற 188 நிரனிறைசுண்ண 356 நிலப்பெயர் 177 நிலனும் பொருளும் 254 நிறத்துருவுணர் 336 நின்றாங்கிசைத்தல் 74 நீ நீயிர்நீயென 199 நு நும்மின்திரிபெயர் 159 நொ நொசிவுநுழைவு 336 ப பசப்புநிறனாகும் 321 படரேயுள்ளல் 328 பணையே பிழைத்தல் 328 பண்புகொள் பெயரு 154,158 பண்பு தொகைவரூஉ 378 பயப்பே பயனாம் 321 பரவும் பழிச்சும் 337 பலவாயினானும் 66 பல்ல பலசில 183 பல்லோர் படர்க்கை 245 பழுதுபயமின்றே 325 பன்முறையானும் 252 பன்மைசுட்டியவெல் 194 பன்மையும் ஒருமையும் 235 பன்மையு-உயர்திணை 231 வேறுபாடிலவே பன்மையு - யஃறிணை 238 வேறுபாடிலவே பன்மையு - வுயர்திணை 225 பா பாலறிமரபி 227 பான் மயக்குற்ற 37 பி பிணையும் பேணும் 337 பிண்டப்பெயரும் 118 பிரிநிலைவினாவே 280 பிரிநிலை வினையே 391 பிறிது பிறிதேற்றலும் 128 பின்முன்கால் 248 பு புதிது படற்பொருட் 337 புலம்பே தனிமை 326 புல்லு மரனும் 314 புள்ளியுமுயிரு 163 புனிறென்கிளவி 336 பெ பெண்மை சுட்டிய சினை 191 பெண்மை சுட்டியவுயர் 13 பெண்மை சுட்டியவெல்லாப் 193 பெண்மைச்சினைப் 191 பெண்மை முறைப் 191 பெயரினாகிய 85 பெயரினுந் தொழிலினும் 65 பெயரெஞ்சு கிளவி 397 பெயரெஞ்சு கிளவியும் 257 பெயர்நிலைக் கிளவிகாலந் 71 பெயர்நிலைக் கிளவியினா 400 பே பேநா முருமென 334 பை பையுளுஞ்சிறுமை 328 பொ பொருடெரிமருங்கி 360 பொருட்குத்திரிபில்லை 341 பொருட்குப் பொரு 341 பொருண்மை சுட்டல் 84 பொருண்மை தெரி 168 பொருளொடு புணராச் 52 பொற்பே பொலிவு 327 ம மகடூஉ மருங்கிற் 203 மக்கள் தாமே 315 மதவே மடனு 337 மல்லல் வளனே 321 மழவுங் குழவு 322 மறைக்குங்காலை 398 மற்றென்கிளவி 284 மற்றைய தென் 286 மன்றவென்கிளவி 286 மன்னாப்பொருளும் 49 மா மாதர் காதல் 325 மாரைக் கிளவி 224 மாலையியல்பே 322 (மாவும் புள்ளும் 315 மாவென்கிளவி 291 மி மிகுதியும் வனப்பு 378 மிக்கதன் மருங்கின் 266 மியாயிகமோ 292 மு முதலிற்கூறுஞ் 139 முதலுஞ்சினையும் 117 முதற்சினைக்கிளவி 116 முதன்முனைவரின் 116 முந்நிலைக்காலமு 263 முரஞ்சன்முதிர்வே 326 முழுதென்கிளவி 325 முறைப்பெயர் முறை 161 முறைப்பெயர்க்கிளவி 155 முறைப்பெயர் மருங் 151 முற்படக்கிளத்தல் 54 முற்றியவும்மைத் 299 முனைவுமுனிவாகும் 339 முன்னத்தினுணரு 410 முன்னிலைசுட்டிய 413 முன்னிலைமுன்ன 402 முன்னிலை வியங்கோள் 238 மூ மூன்றனுமைந்தனு 120 மூன்றாகுவதே, ஒடு 92 மெ மெய்பெறக்கிளந்த 339 மொ மொழிப்பொருட்கார 342 மொழி மாற்றியற்கை 362 யா யாஅரென்னும் 226 யாகாபிறபிற 294 யாணுக்கவினாம் 337 யாதனுருபிற் கூறிற் 131 யாதெவ னென்னும் 47 ர ரஃகானொற்றும் 17 வ வடசொற்கிளவி 353 வண்ணத்தின்வடிவி 374 வண்ணம் வடிவே 100 வம்பு நிலையின்மை 325 வயவலியாகும் 335 வயாவென்கிளவி 335 வறிது சிறிதாகும் 327 வன்புறவரூஉம் 267 வா வாராக்காலத்துநிக 264 வாராக்காலத்து வினை 267 வாராமரபின 383 வார்தல்போக 323 வாளொளியாகும் 335 வி வியங்கோளெண் 61 வியலென்கிளவி 334 விரைசொல்லடுக்கே 384 விழுமஞ்சீர்மை 332 விழைவின்றில்லை 284 விழைவேகால 277 விளிகொள்வதன் 80 விளியெனப்படுப 148 விறப்புமுறப்பு 330 வினாவுஞ்செப்பே 28 வினையிற்றோன்றும் 23 வினையினும் பண்பினும் 146 வினையின் றொகுதி 373 வினையெஞ்சுகிளவிக்கு 393 வினையெஞ்சுகிளவியும் 406 வினையெனப்படுவது 208 வினையேகுறிப்பே 282 வினையே செய்வது 136 வினையொடுநிலை 304 வினைவேறுபடாஅப் 71 வினைவேறுபடூஉம் 69 வெ வெம்மைவேண்டல் 326 வெளிப்படு சொல்லே 319 வே வேறுவினைப்பொதுச் 62 வேற்றுமைதாமே 80 வேற்றுமைத்தொகை 369 வேற்றுமைப்பொருளை 108 வை வையேகூர்மை 339 ள ளஃகானொற்றே 17 ன னஃகானொற்றே 16 னரலளவென்னு 152 நன்னூல் - சொல்லதிகாரம் சூத்திர முதற்குறிப்பகராதி - எண், பக்க எண் அஆ ஈற்ற 20,233 அசைநிலை 385 அடைசினை 43 அடைமொழி 34,77 அண்மையினியல் 165 அதுவே, இயற்சொல் 174 அந்திலாங் 287 அம்மவுரையசை 293 அம்மாமென்பன 214 அர் ஆர் பவ்வூர் 18,225 அவற்றுள், எழுவாய் 85 அவற்றுள், ஒன்றே 197 அவற்றுள், கிளையெண் 180 அவற்றுள் முதலினான்கு 251 அவைதாம், முற்றும் 213 அள் ஆள்இறு 17,223 அறிவருளாசை 317 அறிவறியாமை 28 அன்னானிறு 17,223 ஆண் பெண் 12 ஆண்மை பெண் 192 ஆ நின்று 218 ஆறனுருபும் 129 ஆறனொருமைக் 104 இஉஊவோ 153 இடைநிலை மொழியே 366 இம்முப்பெயர்க் 164 இயற்கைப் பொருளை 36 இர் ஈர் ஈற்ற 243 இரட்டைக் கிளவி 64 இரண்டாவதன்91 இரண்டு முதலா 130,371 இருதிணையாண் 66,202 இலக்கணமுடைய 31 இறப்பெதிர்வு 212 இன்னதின்னுழி 345 இணைத்தென் 50 ஈதாகொடு 399 உணர்வியலா 316 உயர்திணை தொடர்ந்த 60 உயர்திணையும்மைத் 383 உயிருயிரில்லதாம் 313 உருபு பல 127,253 உருபும் வினையு 132,353 உருபு முற்றீ 260 உவப்பினு 44 உவமவுருபில 373 எட்டனுருபே 149 எண்ணலெடுத்தல் 378 எதிர்மறை சிறப் 280 எல்லையின்னு 112 எவனென் 236 எழுவாயிறுதி 365 என்றுமெனவு 305 ஏழனுருபுகண் 108 ஏற்குமெவ்வகைப் 81 ஏற்புழியொடு 361 ஏற்றபொருளுக் 363 ஐ ஆயிகர 241 ஐந்தாவதனுரு ஐந்தொகை 378 ஐயந்திணைபால் 41 ஐயான்குச்செய் 134 ஐயிறுபொதுப்பெ 152 ஒடுவுந்தெய்ய 307 ஒருசார்னவ்வீற் 155 ஒரு பொருட் பல் 412 ஒரு பொருட் பன் 412 ஒரு பொருண் மேற் 58 ஒரு பொருள் குறி 350 ஒருமையிற் பன் 413 ஒரு மொழிதொடர் 9,169 ஒருமொழிமூ 404 ஒரு மொழியொரு 10,169 ஒரு மொழியொழி 77 ஒரு வரென்பதுய 201 ஒருவன் முதலைந் 388 ஒருவனொருத்திப் 61 ஒழியிசை வினாச் 281 ஒற்றுமை 316 ஒன்றேபலவென் 13 ஒன்றொழிபொதுச் 170 கடியென் கிளவி 339 கண் கால் கடை 108 கயவொடு 244 காரணமுதலா 37 காலங்கரந்த 374 கிளந்த கிளைமுத 182 கிளை முதலாகக் 181 குடுதுறுவென் 221 கேட்குநபோ 384 கொல்லேயைய 288 சாலவுறுதவ 320 சிதலெறும்பாதி 315 சினைவினை 251 சுட்டுமறைநேர் 26 செந்தமிழ்நிலஞ் 351 செந்தமிழாகி 348 செய்கெனொரு 222 செய்த செய்கின்ற 256 செய்து செய்பு செய்யாச் 249 செய்பவன் கருவி 139,209 செய்யுமெனெச்ச 262 செய்யுளிறுதி 366 செயப்படு பொருளைச் 269 செவ்வெணீற்றதா 298 சொற்றிரியினு 408 சொற்றொறுமிற் 415 தடறவொற் 217 தம்பாலில்ல 52 தரல்வரல் 47 தன்மைமுன்னிலை 240 தன்மையானான் 200 தான்யானானீ 200 திணை நிலஞ்சாதி 57 திணைபால் பொருள் 67 திணையே பாலிட 24 தும்பிஞெண்டாதி 315 துய்த்தறுஞ்ச 317 துறுடுக்குற்றிய 19,235 தெரிநிலைதேற்ற 275 தொழிலுங்கால 249 தோன்றன்மறை 318 நடவாமடி 241 நான்காவதற்குரு 98 நீயிர் நீவிர் நான் 87 நுவ்வொடுவினா 166 படர்க்கைமுப் 56 படர்க்கை வினைமுற்று 22 பண்பை விளக்கு 376 பல்லோர் படர்க் 246 பல்வகைப் பண்பு 315 பல்வகை வடிவிரு 318 பவ்வமூவிடத் 218 பழையன கழித 403 பால்பகா வஃறிணைப் 187 பிரிநிலைவினாவே 282 புன்மரமுதலவுற் 314 பெண்மைவிட் 15 பெயர்ச் செவ் 302 பெயர்வினையிடத்து 204,228 பெயர்வினையும்மை 392 பெயரும் வினையுமாஞ் 358 பெயரே ஐஆல் 82 பெயரொடு பெய 382 பொது வியல்பா 390 பொதுவெழுத் 354 பொருண்முதலாறா 34 பொருண் முதலாறினும் 231 பொருண் முதலாறோ 143 போலப்புரைய 373 மக்கடேவர் 11 மற்றையதென்ப 286 மற்றைய நோக் 364 மன்னேயசை 277 மாவென் கிளவி 292 மியாயிகமோ 292 முக்காலத்தினு 264 முச்சகநிழற்று 5 முதலிவைசினை 119 முதலை ஐயுறிற் 117 முதற் பெயர் நான் 192 முரணந்தாதிநா 315 முழக்கிரட்டு 331 முற்றும்மை 299 முன்மொழி 381 முன்னரவ்வொடு 185 முன்னத்தினுண 411 முன்னிலைமுன் 403 மூன்றாவதனுரு 96 மெய்ந்நாமூக்கு 314 யாகாபிறபிறக் 295 யாதனுருபிற் 316 யாப்படி பலவினு 364 யாரென் வினாவினைக் 227 யாற்றுநீர்மொழி 356 ரவ்வீற்றுயர் 158 லகாரவீற்றுயர் 162 லளவீற்றஃறிணைப் 162 வலித்தல்மெலித் 356 வானவர் மக்கள் 316 விரைவினுமிகவி 268 விழைவே கால 278 வினாச்சுட்டுடனும் 185 வினாவினுஞ்செப் 30 வினைசார்பினமிடம் 72 வினைபெயர் 283 வினைமாற்றசை 285 வினையொடு வரி 304 வேற்றமை வினைசா 275 வேற்றுமை வினை பண் 370 வேறில்லையுண்டு 244 வேறு வினைப் பல் 63 ளஃகா னுயர் 161 றவ்வொடுகர 219 னவ்வீற்றுயர் 156