தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 9 திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் (விளக்கவுரை) ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 9 திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 200 =216 படிகள் : 1000 விலை : உரு. 205/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030. பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் முதல் பதிப்புரை ஆகமங்கள் எங்கே அறசமயம் தானெங்கே யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யார் அறிவார் பேசு. சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன. திருப்பனந்தாள்ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும். திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களின் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத்திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினார்கள், இதனை இதனால் இவன் முடிக்கும் என்னும் துணிவுகொண்டு செம்புலச் செல்வரான திரு க. வெள்ளை வாரணனாரிடம் ஓர் ஒப்பீட்டுரை எழுதுமாறு தமது திருவுளக் குறிப்பை வெளியிட்டார்கள். அவர்தாமும் அங்ஙனம் ஓர் உரை எழுதவேண்டுமென முன்னமே கருதியிருந்தமை திருவருட்குறிப்பால் நிறைவுறுவது கண்டு பேருவப்போடு உரை வரைந்தளித்தார்கள். உந்திக்கும் களிறுக்கும் உரிய ஒப்பீட்டுரையாகிய இந்நூல் ஸ்ரீ காசிமடத்தின் அடக்க விலைப் பதிப்பாக உருப்பெற்று, சைவ சித்தாந்த மகாசமாசம் 6-3-82-ல் ஸ்ரீ வாரணாசியில் நடத்தும் 76-ம் ஆண்டுவிழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. இந்நூலுக்கு ஒப்பீட்டுமுறையில் உரைவிளக்கம் எழுதித் தந்ததோடு, நூல் அச்சாகும்போது உடனிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுத்த எனது உழுவலன்பரும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துத் தமிழியற்புல இணைப்பாளரும், திருமுறை யாராய்ச்சிக் கலைஞருமாகிய திரு க. வெள்ளைவாரணனார் அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பர்கள் இவ்வரிய சித்தாந்த உரை நூலைப் பயின்று பொருளுணர்ந்து மெய்ஞ்ஞானமாம் நலம்பெறுவதே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும். 28-2-82 செந்தமிழ்க்கல்லூரி, இங்ஙனம், திருப்பனந்தாள். தா. ம. வெள்ளைவாரணன் உ திருச்செந்திலாண்டவன் துணை திருவுந்தியாரும் - திருக்களிற்றுப்படியாரும் முன்னுரை தமிழகத்துத் தோன்றி வளர்ந்த மெய்யறிவு நூல்களுள் சைவ சித்தாந்த உண்மையினை விரித்துரைக்கும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் முதலிய பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனச்சிறப்பு முறையில் போற்றிப் பயிலப்பெற்று வருவதை அறிஞர் பலரும் நன்குணர்வர். சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அவை தோன்றிய முறையே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, உந்தி களிறு வுயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் வந்தஅருட் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று. எனவரும் பழைய வெண்பாவாம். இப்பதினான்கு சாத்திரங்களையும் மெய்கண்ட சாத்திரமென வழங்குதலும் உண்டு. இங்குக் குறித்த மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது பேரறிஞர் பலரும் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். பதினான்கு சாத்திரங்களையும் தொகுத்துக்கூறும் உந்திகளிறு என்னும் இவ்வெண்பாவிலும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூலும் உயர்போதமாகிய சிவஞானபோதத்திற்கு முன் வைக்கப் பெற்றிருத்தல் காணலாம். மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தில் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் பொருள் முடிபுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டெனத் துணியப்படுதலால் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத் தெரிகிறது. திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனார் காலத்தை ஒட்டிக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவிய அருளாசிரியர்கள் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரஞ்சோதி மாமுனிவர் உபதேசத்தின் வழியே தோன்றி வளர்ந்த மெய்கண்டதேவர் சந்தானமாகிய உபதேச பரம்பரையின் தோற்றத்திற்கு முன்னரே திருவுந்தியார் இயற்றியருளிய உய்யவந்த தேவரைச் குருவாகக்கொண்ட சைவசிந்தாந்த சந்தான பரம்பரையும் தோன்றி வளர்ந்திருந்ததென்பது âUîªâah®_âU¡fˉW¥goah® வரலாற்றால் புலனாகின்றது. தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் வரலாறு எல்லாம் வல்ல சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் சிவாநுபவம் விளையும் நிமித்தமாக (மானிடத்திருமேனிகொண்டு) உய்யவந்த தேவ நாயனார் என்னுந் திருநாமத்தையும் சாத்திக்கொண்டு வடவேங்கடந் தென்குமரி யெல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒரு நாள் திருவியலூரிலே எழுந்தருளினார். அவ்வூரிலேயிருக்கிற ஆளுடைய தேவநாயனார் (அவரைக்) கண்டு தெரிசித்த போது அவருடை மலபரி பாகத்தையறிந்து தீக்கை பண்ணி ஞானோபதேசமும் பண்ணி, திருவுந்தியார் என்று பேரிட்டு நாற்பத்துநாலு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி, அந்த நூல் முடிவிலே தம்முடைய பெயர் தோன்ற ஒரு செய்யுளும் பண்ணி அந்த நூலினுடைய தாற்பரியத்தையும் உள்ளபடியறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார். பின்பு ஆளுடைய தேவநாயனார் முன் சொன்ன எல்லைக் குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒருநாள் திருக்கடவூரிலே எழுந்தருளினார். அவ்வூரிலே ஆட்டுவாணியக் குலத்திலே உற்பவித்தவரொருவர் (அவரைக்) கண்டு தெரிசித்த போது அவருடைய மலபரிபாகத்தையறிந்து தீக்கை பண்ணித் தம்முடைய ஆசாரியருடைய பெயரையுஞ் சாத்தித் திருவுந்தியார் என்கிற சாத்திரத்தையும் அறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பை யடைந்தார். பின்பு அந்தத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங் காலத்திலே ஒருநாள் சிதம்பரத்திலே எழுந்தருளினார். அவ்வூரிலே யொருவர் ஞானம் பெற வேண்டித் தலவாசம் பண்ணியிருந்து இவரைக்கண்டு தெரிசித்த போது இவர் அவரது மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் திருவுந்தியாருக்கு வழிநூலாகத் திருக்களிற்றுப்படியார் என்று நூறு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி யறிவித்துத் தன்னியல்பை யடைந்தார். திருக்களிற்றுப்படியார் என்பதற்குக் காரணம், இவர் நூல் பண்ணின காலத்து இவர் கீழ்ச்சாதியென்றும் இவருடைய நூல் கைக்கொள்ளலாகா தென்றுஞ் சிறிது பேர் சொல்ல, சிறிது பக்குவரா யுள்ளவர்கள் அந்த நூலைப் பஞ்சாக்கரப்படியிலே கொண்டுபோய் வைத்தார்கள். அந்தப்படியிலே செய்திருக்கின்ற கல்லானை (அந் நூலைத்) துதிக்கையாலே யெடுத்து எல்லாவற்றுக்கும் மேற்படியிலே கொண்டுபோய் வைத்தது. ஆகையால் (இந்நூல்) அப்பெயர் பெற்றது. இந்தச் சந்தான பரம்பரையை இப்படிக் கண்டுகொள்க என்பது இவ்விரு நூல்களின் பழைய உரையாசிரியராகிய தில்லை சிற்றம்பலவர் உரையிற் காணப்படும் பழைய வரலாறாகும். இவ் வரலாற்றினைக் கூர்ந்து நோக்கின் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி நிலைபெற்ற மெய்கண்ட சந்தானத்தினுங் காலத்தால் முந்தியது திருவுந்தியார் அருளிய திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார் உபதேச பரம்பரை என்பது நன்கு புலனாம். திருவுந்தியார் தோன்றிய காலம் கி. பி. 1147 என்றும், திருக் களிற்றுப்படியார் காலம் கி. பி. 1177 என்றும் கூறுவர் அனவரத விநாயகம் பிள்ளை முதலிய ஆராய்ச்சியாளர்கள். மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தால் முற்பட்டது திருவுந்தியார் ஆகும். உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக் களில் ஒன்று; விளையாடும் பருவத்து இளமகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றிச் செயல்களை வாயாற் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும் மகளிர் இருவர் சிவபெருமானுடைய வெற்றிச் செயல்களைச் சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் முறையில் திருவாதவூரடிகள் அருளிய திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது, திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் அருளிய திருவுந்தியார் என்னும் இச் சித்தாந்த சாத்திரமாகும். இந்நூல் எட்டாந் திருமுறையாகிய திருவாசகச் செழுமறையின் பிழிவாகத் தோன்றியதெனத் தெரிகிறது. உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா எனவும், உய்ய வல்லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்ய வல்லானுக்கே யுந்தீபற இளமுலை பங்கனென் றந்தீபற. எனவும் வரும் திருவாசகத்தொடரே இந்நூலாசிரியர் பெயராக அமைந்திருத்தலும், திருவாசகத்திலுள்ள திருவுந்தியார் என்னும் பதிகத்தின் யாப்பு இந்நூலின் யாப்பாக அமைந்திருத்தலும், இந்நூல் திருவாசகத்தின் சொற்பொருள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டிருத்தலும் இந்நூல் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகச் செழுமறையின் வழியில் தோன்றிய ஞானநூல் ஆதலை நன்கு புலப்படுத்துவனவாம். திருப்பெருந்துறையில் திருவாதவூரடி கட்கு இறைவன் குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்து மெய்ப் பொருளை அறிவுறுத்தியது போன்றே திருவியலூரில் உய்ய வந்த தேவ நாயனார் என்னும் பெயருடன் குருவாக எழுந்தருளித் திருவியலூர் ஆளுடைய தேவ நாயனார் என்பவர்க்கு திருவுந்தியார் என்னும் ஞான நூலை உபதேசித்தருளி அடிமைகொண்ட திறம் மணிவாசகப் பெருமான் வரலாற்றை நினைவு படுத்துவதாகும். மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தைப் போன்றே இத்திருவுந்தியாரிலும் சிவபெருமான் குருவாக எழுந்தருளி ஆன்மாக்களை உய்யக்கொண்டருளும் முறையும் அவனது அருமையின் எளிய அழகும், அம்முதல்வனால் உணர்த்தப்பெற்ற ஞான நுண்பொருள்களால் விளைந்த சிவாநுபவமும் அவ்வருள் அனுபவத்தைப்பெற்றார் அடையும் பேறும், அப்பெருமக்களால் உலகவுயிர்கள் அடையும் பெரு நலமும் நூல்நுதல் பொருள்களாக அமைந்துள்ளமை காணலாம். சைவசமய அருளாசிரியர்கள் அருளிய திருவருளிலக்கியமாகிய திருமுறைகளின் பொருளை உளங்கொண்டு தோன்றிய சைவ சித்தாந்த ஞான நூல்களில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விருநூல்களும் சைவத்திருமுறைகளுடன் நெருங்கிய தொடர் புடையனவாய்க் குருவின் உபதேசத்தாலன்றி உணரவொண்ணாத திருவருள் அநுபவ அரும்பொருள்களை அறிவுறுத்தும் அநுபூதி நூல்களாகத் திகழுதல் காணலாம். சைவத் திருமுறைகளாகிய தோத்திரங்களுக்கும், சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் காலத்தால் இடைப்பட்டுத் தோன்றிய இவ்விருநூல்களும், சைவசமய ஆசிரியர் நால்வர் அருளிய தோத்திர நூல்களுடன் சந்தான ஆசிரியர் நால்வர் அருளிய சாத்திரங்களையும் தொடர்பு படுத்தும் இடைநிலைப் பாலமாக அமைந்துள்ளமையும் இங்குக் கருதத்தகுவ தாகும். திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் அருளிச் செய்த திருவுந்தியாரின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் அருளிய திருக்களிற்றுப் படியார் என்பது இந்நூலாசிரியர்களின் வரலாற்றில் முன்னர் விளக்கப் பெற்றது. எனவே திருவுந்தியார் ஆகிய முதல் நூலும், அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் ஆகிய வழிநூலும் மூலமும் உரையும் போன்று நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு தெளியப்படும். திருக்களிற்றுப் படியாரில் சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கப் பெற்றுள்ளன. சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குந்திறத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்பாக்கள் இந்நூலிற் பொன்னே போல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப் பிடத்தகுவதாகும். இவ்விரு நூல்களும் பொருள்வகையால் ஒன்றே என்பது இவற்றுக்கு உரை எழுதிய தில்லைச் சிற்றம்பலவர் முதலிய முன்னைச் சான்றோரது துணிபாகும். ஆயினும் அப்பெருமக்கள் இவ்விருநூந்களுக்கும் தனித்தனியே உரை வரையும் பணியளவே செய்து போந்தனர். இந்நிலையில் திருவுந்தியாரையும், திருக்களிற்றுப் படியாரையும் இணைத்துப் பொருள் காணும் முயற்சி இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தே வாழ்ந்த அறிஞர் சிலரால் தொடங்கப் பெற்றது. இம்முயற்சி திருவுந்தியாரில் உள்ள பாடல்களின்பின் அப்பாடல்களை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்கள் இவை என இணைத்துக்காட்டும் அளவில் நின்று விட்டது. முதல் நூலாகிய திருவுந்தியாரில் உள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு, அவற்றின் பொருளை விளக்கும் முறையில் இயற்றப்பெற்றது திருக்களிற்றுப்படியார் எனத் தெரிதலால், திருவுந்தியாருக்கு உரை காணவிரும்புவோர் திருக்களிற்றுப்படி யாரைத் திருவுந்தியாரின் பழைய உரையாகக் கொண்டே உரை காணுதல் வேண்டும். என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக எழுதப் பெறுவதே திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் என்னும் இவ்வுரை விளக்கமாகும். இதன்கண் திருவுந்தியார் பாடலை முதலிற்றந்து உரை வரைந்தும், அதனை அடியொற்றிய திருக்களிற்றப்படியார் பாடல்களை அடுத்துத் தந்து உரை வரைந்தும், ஒன்றன் பின் ஒன்றாகத்தொடர்ந்து வரும் பாடற்பொருள்களின் இயல்பு காட்டியும் இச்சாத்திர நூல்களுக்கு மூலமாகிய திருக் குறளையும் திருமுறைத் தொடர்களையும் வேண்டுமிடங்களிற் சான்றாகத் தந்தும், இவ்வாறு உலகப்பொதுமறையாகிய திருக்குறளி லிருந்தும் திருமுறைகளாகிய திருவருளிலக்கியத்திலிருந்தும் சைவசித்தாந்தப் பனுவல்களாகிய மெய்ந்நூல்கள் தோன்றிய வரலாற்று முறைமையினைப் புலப்படுத்திச் செல்வதே இவ்வுரை விளக்கத்தின் நோக்கமாகும். திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் உரைத் திறன் சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் இவ்விரு நூல்களுக்கும் திருவாவடுதுறையா தீனத்தைச் சார்ந்த தவச்செல்வர் தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத்தம்பிரான் சுவாமிகள் சிறந்த முறையில் விரிவுரை இயற்றியுள்ளார்கள். இவ்வாதீனத்தைச் சேர்ந்த தவச்செல்வர் ஒருவர் சுருக்கமும் தெளிவும் பொருந்த எழுதிய பழையவுரையும் இவ்விரு நூல்களுக்கும் உண்டு. இவ்விரண்டு உரைகளையும் கருத்திற் கொண்டு முதல் நூலாகிய திருவுந்தியார்க்கும் அதன் வழிநூலாக அமைந்த திருக்களிற்றுப்படி யார்க்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் இலக்கணம் முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களிடமிருந்த பழைய உரைக்குறிப்பொன்று சிதம்பரம் சைவப் பேரன்பர் வைத்தியலிங்கஞ் செட்டியாரவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்விரு நூல்களின் பொருளை விரித்து விளக்கும் முறையில் சிவநெறிச் செல்வர் காஞ்சிபுரம் ஆலால சுந்தரம் பிள்ளை யவர்கள் எழுதிய விரிவுரையும் உண்டு. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந் நூல்களுக்கு நூலாசிரியர் கருத்தின்வழி உரைகாணும் திறத்தில் இந் நூல்களையருளிய உய்யவந்த தேவநாயனார் இருவராலும் மதித்துப் போற்றப் பெற்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக் குறளும் ஆளுடைய பிள்ளையார்முதல் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் வரையுள்ள அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய பன்னிரு திருமுறைகளும் முன்னூற் சான்றுகளாக நமக்குக் கிடைத்துள்ளமை நம் தமிழ்முன்னோர் செய்த நற்றவத்தின் பயனாகும். திருமுறையாசிரியர்கள் திருவடிகளை நெஞ்சத் திருத்திக் குருவருளின் துணைகொண்டு எழுதப் பெற்றது. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்க்கு அமைந்த இவ்வுரை விளக்கமாகும். நன்றியுரை இத் திருப்பணியில் அடியேனை ஈடுபடுத்திப் பணி கொண்ட ருளிய ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களின் பொன்னார் திருவடிகளை என் மனமொழி மெய்களால் வணங்கிப் போற்றுகின்றேன். இத்தகைய தமிழ்ப் பணிகளைச் செய்தற்குத் தோன்றாத் துணையாய்த் தண்டமிழ்ப் புலவர்க்கோர் அம்மானாய் மதிமலி புரிசைமாடக் கூடற் பதிமிசை நிலவு திருவாலவாய்த் திருக்கோயிலில் அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்தருளும் ஆலவாயண்ணல் திருவடிகளையிறைஞ்சிப் போற்று கின்றேன். முதல் நூலாகிய திருவுந்தியாரை மூலமாகவும் அதற்கு வழி நூலாகிய திருக்களிற்றுப்படியாரை அதன் உரையாகவும் கொண்டு ஒப்பியல் நோக்குடன் எழுதப் பெற்ற இவ்வுரைவிளக்கம் செந்தி லாண்டவன் திருவருளைப் பெற்றுச் செந்தமிழும் சிவநெறியும் வளர்ந்த பெருந்தவமுனிவர் குமரகுருபர சுவாமிகள் திருமரபில் திருப்பனந்தாளில் நிலைபெற்றுள்ள ஸ்ரீ காசிமடத்தின் வெளியீடாக வெளிவருவது மிகவும் சிறப்புடையதாகும். திருக்குறள் முதலிய செந்தமிழ்நூல்களையும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகிய மெய்கண்ட நூல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருமாறே இவ்வுரை விளக்க நூலையும் வெளியிட்டருளிச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்துவரும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபர் ஸ்ரீ ல ஸ்ரீ காவாசி சுவாமிகள் அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன். கண்ணும் கருத்துமாயிருந்து இந்நூல் வனப்புற வெளிவருதற்கு உறுதுணை புரிந்த என் கெழுதகை நண்பரும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியரும் ஆகிய திரு. தா.ம. வெள்ளை வாரணம் அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி உரியதாகும், ஞாலம் நின்புகழே மிகவேண்டும்தென் ஆல வாயி லுறையுமெம் ஆதியே க. வெள்ளைவாரணன், இணைப்பாளர், மதுரை தமிழியற்புலம், 26_2_82 மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம். சிவமயம் திருச்சிற்றம்பலம் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த திருவுந்தியார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த திருக்களிற்றுப்படியார் மூலமும் உரையும் உரைப்பாயிரம் சிவயோகியாராகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தாம் இயற்றியருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் ஆளுடைய தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். ஆளுடைய தேவநாயனார் தாம் கேட்ட மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்க்கு உபதேசித் தருளினார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் பெற்ற திருவுந்தியார் உபதேசப்பொருளைத் தில்லையில் வாழ்ந்த தம்முடைய மாணவர்க்கு விரித்துணர்த்தும் முறையில் திருவுந்தியாரின் விளக்கவுரையாகத் திருக்களிற்றுப்படியார் என்னும் மெய்ந்நூலை இயற்றியருளினார் என்பது வரலாறு. சிவநெறிப்பனுவல்களாகிய பன்னிரு திருமுறைகளின் பயனாகத் தோன்றிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தாலும் உபதேச வழிமுறையினாலும் முதற்கண் வைத்து எண்ணப்பெறுவன திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களே யாகும். இவற்றுள் திருவுந்தியார் என்னும் முதல்நூற் பொருளைப் பிறழாது விரித்து விளக்கும் முறையில் அந்நூலுக்குச் செய்யுள் வடிவில் இயன்ற விளக்கவுரையாகத் திகழ்வது திருக்களிற்றுப்படி யாராகும். வழிநூலாகிய அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் முதல் நூலாகிய திருவுந்தியாருக்கு உரை காணுதல் திருமூல நாயனார் கால முதலாக உபதேச வழிமுறையில் தொடர்ந்து வரும் சைவசித்தாந்த நுண்பொருள்களைப் பிறழாது உணர்தற்குரிய உரைநெறியாகும் எனக்கொண்டு திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களையும் மூலமும் உரையுமாக இயைத்துப் பொருள் காணும் முறையில் இயல்வது இவ்வுரையாகும். திருவுந்தியார் என்னும் முதல் நூற்பொருள் குருவின் அருளால் தமக்குக் கிடைத்த வரலாற்றினைக் கூறும் முறையில் அமைந்தல் திருக்களிற்றப்படியாரிலுள்ள முதல் மூன்று பாடல்களாகும். ஆகவே அவற்றை நூல்வந்த வரன்முறை என்ற அமைப்பில் முன்வைத்து இங்கு உரைவரையப் பெறுகின்றது. திருக்களிற்றுப்படியார் கடவுள் வாழ்த்து 1. அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர் எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல நிற்பர் அவர். திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலின் தொடக்கத்திலே மங்கல வாழ்த்தாக அமைந்த இம்முதற்பாடல் வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் என்னும் மூவகையுள் பொருளியல் புரைத்தலாகும். இதன் பொருள்:--தன்னிற்பிரிவிலா உமையம்மையைத் தன்னுள் அடக்கிய சிவபெருமானே உலகவுயிர்கள் எல்லாவற்றிற்கும் தாயுநீ தந்தையும் என்று அறிவாயாக. அம்மையும் அப்பனுமாகிய அவ்விறைவரே தம் அருளாகிய சத்தியுடன் எழுந்தருளிவந்து மன்னுயிர்களின் மலப்பிணிப்பினையகற்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அளித்தருளுவர். மாதொருபாகராகிய அம்முதல்வர் உலகுயிர்களுடன் பிரிவின்றிக் கலந்துள்ளாராயினும் அவற்றின் தன்மைகள் சிறிதும் தம்மைப் பற்றாதவாறு எல்லாவுலகுக்கும் அப்பாற்பட்டுள்ளார். அங்ஙனம் அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் இவ்வுலகங்களை இயக்குதற் பொருட்டு இவ்வுலகுயிர்களின் அகத்தும் கலவாதார் போன்று நீக்கமறக் கலந்து நிலைபெற்றுள்ளார். எ---று. ஒருவன் என்னும் ஒருவன்காண்க (திருவாசகம்) என்றவாறு ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்பொருள் ஒன்றே என்பது ஒருவனே தேவனும் எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொரு பொருளே தான் உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தனிநிலையிலே சிவம் எனவும், அதுவே உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் பொருட்டு அருளாய் விரிந்து இரண்டறக் கலந்து நின்று மன்னுயிர்களை உய்வித்தருளும் நிலையிலே சத்தி எனவும் இரு நிலையில் வைத்துப் போற்றப் பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், பெண்ணுரு ஒருதிறனாகின்று எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும், ஆதிபகவன் எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1--115--4) எனவும் உமைபாகந் தோய்பகவா (3--1--6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தன வாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, தன்னிற் பிரிவிலா எங்கோமான் (திருவெம்பாவை) எனவும் எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனி துணரப்படும். இவ்வாறு தனிமுதல் வனாகிய இறைவன் தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மையப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப் பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் அம்மையே யப்பா ஒப்பிலா மணியே என உளமுருகிப்போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினைத், தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலுமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும், சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, அம்மே அப்பா என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருந்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும். உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, பெண்ணுரு வொருதிறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும் (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான். உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துத் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மை யப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களை உலகு உடல் கருவி நுகர்பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார். அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக என்றார், இத்தொடரால் சங்காரகாரணனாகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ஙனம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானா கலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயா கலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன்னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம்மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார் என்பார், அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் என்றார். இங்ஙனம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளினா ராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாததென்பார், அம்மையப்பர் எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் என்றார். இங்ஙனம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின்வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் என்றார். தாயுந்தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனார் (7--53--3) எனவும், கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத்தகுந்தன வாகும். அம்மையப்பராகிய இறைவர், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு விரவி நின்று ஐந்தொழில் நிகழ்த்தி யருளுதலாகிய பொதுவியல்பும், இங்ஙனம் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் இவையெல்லாவற்றையுங் கடந்து சிந்தையாலும் அறியவொண்ணாதவாறு சிவம் எனத் தனித்து நிற்கும் தன்னுண்மை யாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவதாகிய இம்முதற்பாடல், பொருளியல் புரைத்தலாகிய மங்கலவாழ்த்தாமாறு கண்டுகொள்க. அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பரென்றறிக எனவரும் இத் திருக்களிற்றுப்படியார் பாடற்பொருளைத் தழுவி யமைந்தது, அறுவைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாங் குறியது வுடைத்தாய் வேதா கமங்களில் குறியிறந்தங் கறிவினி லருளான் மன்னி அம்மையோ டப்பனாகிச் செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம். (சித்தியார் - சுபக். 2) எனவருஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். 2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மில் தலைப்படுதல் தாமுணரில் மூதம்மில் நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாமத் தலை. இது சிவனுருவையுணர்ந்து அம்முதல்வனது திருவருளிற் கூடுமாறு இதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) தம்பால் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஆசிரியரிடத் திலே தாமும் கூடி வழிபட்டு ஆன்மா சிவத்தோடு பொருந்தும் முறையினைக் குருவின் அருளாலே தெளிந்துணரின் அந்நிலையிற் சத்தியும் சிவமுமாகிய அம்மையப்பர் இருவரும் ஆன்மாவாகிய தம்மிடத்திலே நிலைபெற்று இடங்கொள்வர். உடல் கருவி உலகு நுகர்பொருளாகிய பாசத்தொகுதியை நீக்கி, ஆன்மாவைத் திருவருளிலே நிலை நிறுத்திச் சிவஞானமும் அதனால் உணரப்படும் மெய்ப் பொருளுமாக அவ்விடத்தே தோன்றியருள்வர். எ - று. தம்மில் தலைப்பட்டார் என்றது, முற்செய்தவத்தால் அருளே திருமேனியாகக் கொண்டு தம்பால் எழுந்தருளிய குருமூர்த்தியை, இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற் பாதந் தந்தருளுஞ் சேவகனை என்னும் திருவாதவூரடிகள் வாய் மொழி இங்கு நினைக்கத்தகுவதாகும். அவர்பால் தலைப்படுதல் என்றது, ஆசிரியராக எழுந்தருளிய அவர்தம் திருவடிகளைத் தலையார வணங்கி மெய்யுணர்வுபதேசம் பெற்றுத் தம் உடல்பொருள் ஆவியனைத்தையும் அவரது உடைமையாக ஒப்படைத்தல். தம்மில் தலைப்படுதலாவது, சிவபரம்பொருள் ஆன்மாவின்கண்ணே பிரிவறப் பொருந்திப் பேரின்பம் நல்குதல். தாம் உணர்தலாவது, ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் முழுமுதற்பொருளின் திறங்களைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து ஒன்றுபட்டுணர்தல். நிலைப்படுதல் - நிலையாக எழுந்தருளியிருத்தல். ஓர் இருவர் என்றது, தனக்குவமையில்லாத் தனிமுதற்பொருள் என்னும் இறைமைத்திறத்தால் ஒருவராகவும், மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டும் என்னும் பேரருளால் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்றலும் அங்ஙனம் எல்லாப் பொருள்களோடும் ஒன்றாய்க் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி எல்லாவற்றுக்கும் அப்பாலாய்த் தனித்து நிற்றலும் ஆகிய இருதிறங்களால் முறையே சத்தியும் சிவமும் என இருவராகவும் உள்ள அம்மையப்பரை. உடையாளுன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி, அடியேன்நடுவுள் இருவீரும் இருப்பதானால் எனவரும் திருவாசகம் தம்மில் தலைப்படுவர் ஓரிருவர் என்பதனைப் புலப்படுத்தல் காணலாம். நீக்குதல் - உயிர்களின் பாசப் பிணிப்பினை அகற்றுதல். நிலையாக்குதல் - திருவருளின்கண்ணே நிலைத்து நிற்குமாறு செய்தல். ஓர் இருவர் (பாசங்களை) நீக்கி (த்திரு வருளில்) நிலையாக்கித் தாம் அத்தலை தலைப்படுவர் என இயைத்துப் பொருள்கொள்க. அத்தலை - அவ்விடம். தலைப்படுதல் - தம்மியல்பு புலனாக உயிருணர்வில் வெளிப்பட்டுத் தோன்றுதல். இத்திருக்களிற்றுப்படியார், தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர், என்று தலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்லை த்தன்னகத்தே கொண்டுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். இந்த நிலையினை அடியேனுக்கு விளங்க அருளிச் செய்தல் வேண்டும் என்ற மாணவனை நோக்கி இப்பொருளை விளக்கும் திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருள் தமக்குக் கிடைத்த வரலாற்றினை விரித் துரைப்பதாக அமைந்தது பின்வரும் திருக்களிற்றுப் படியார் பாடலாகும். 3 என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி என்னறிவி லாரறிக என்றொருவன்சொன்னபடி சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச் சொல்லக்கேள் யானுனக்குச் சொல். இஃது இந்நூற்பொருள் வந்த வரன்முறையினை விரித்துரைக்கின்றது; (இ-ள்) (குருவின் அருளால்) எனது ஆன்மபோதங்கெட்ட அளவிலே யான் (திருவருளில்) நிலைத்து நின்று (சிவபரம்பொருளை) அறிந்த முறைமையினை, எனதறிவு என்னும் ஆன்மபோதம் கெட்டுச் சிவஞானத்திலே வேட்கையுடையார் எல்லாரும் கேட்டுணர்வாராக என்று அருட்குருவாய் எழுந்தருளிய பெரியோன் ஒருவன் எனக்குச் சொன்னவண்ணம் யான் உனக்குச் சொல்ல மாணவனாகிய நீகேட்டுணர்வாயாக எனக் குருவாய் வந்தருளிய ஒருவன் எனது பக்குவ நிலைக்கேற்ப அதனை எனக்கு அறிவுறுத்தி யருளினான். எனதன்புக்குரிய மாணவனாகிய நீ அப்பொருளை யான் உனக்குச்சொல்ல அம்முறையே கேட்டுணர்வாயாக எ-று. என்னறிவு செல்லுதலாவது, எனது அறிவினால் நான்இதனை அறிந்தேன் என்னும் கட்டுணர்வுகெடுதல். என்னறிவு இலார்-ஆன்ம போதம் கெட்டவர்கள். இரண்டாமடியிலுள்ள ஒருவன் என்றது, ஒப்பற்ற குருவாய் வந்தருளிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரை. மூன்றாமடியிலுள்ள ஒருவன் என்றது, அவருடைய மாணவர் ஆளுடைய தேவநாயனாரை. திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாராகிய இந்நூலாசிரியர் தாம் இயற்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலால் அறிவுறத்தப் பெறும் ஞானநூற்பொருள் குருவின் வழிமுறையில் தமக்கு கிடைத்த வரலாற்றை விரித்துரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். இதன்கண், என்னறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி என்னறிவு இலார் அறிக, என்று ஒருவன் --- சொன்னபடி என்றது, திருவியலுர் உய்யவந்த தேவநாயனார் அருளிச் செய்த முதல் நூலாகிய திருவுந்தியாரையும், சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் என்றது, திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுத் திருக்கடவூர்க்கு எழுந்தருளிய ஆளுடைய தேவநாயனார் தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருளைத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் உணர்த்துவன. அச்சொல் உனக்கு யான் சொல்லக் கேள் என்றது என்னுடைய குருமுதல்வர் என்பொருட்டு அறிவுறுத்தியமெய்நூற் பொருளாகிய அதனை என் அன்புக்குரிய மாணவனாகிய உனக்கு விளங்க அறிவுறுத்தல்வேண்டி யான் வழிநூலாகச் சொல்ல, அதனை கேட்டுணர்வாயாக எனத் தம் மாணவரை நோக்கிக் கூறும் முறையில் திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூல் நுதல்பொருளையும் வழிநூல் செய்தற்குரிய காரணத்தையும் அறிவுறுத்துவதாகும். திருக்களிற்றுப்படியாரின் மூன்றாம் பாடலாகிய இது, இந் நூலாசிரியரது உபதேச பரம்பரையினையும் இந்நூலாசிரியரின் குருவாகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் தமதுகுருவாகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருவுந்தி யாரை (மாணவராகிய தமக்கு உபதேசித்தருளத் தாம் குருமுகமாகக்கேட்ட அப்பொருளையே விரித்துரைத்ததாகத்) தம் மாணவருக்குச் சொல்லுதலால் இத்திருக்களிற்றுப்படியார்க்கு முதல்நூல் திருவுந்தியார் என்பதனையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது. (இ-ள்) தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ-று. உந்தி பறத்தல்என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளை யாட்டு வகைகளுள் ஒன்று, மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன. மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கப் பெறும் உந்தீபற என்பது ஒருமைபன்மை மயக்கம் பற என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது எனவும், உம்முடைய தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர் எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்தி பற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ஆடேல் ஓர் எம்பாவாய் எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் உந்தீபற என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசையாகிய இப்பாடலில் இரண்டா மடியிலும் மூன்றாமடியிலும் முடிக்குஞ் சொல்லாகவருமெனவும், அங்ஙனம் வருங்கால் வினையெச்சத்துடன் கூடிய நிலையில் அவ்வெச்சத்தை வினைமுற்றின் தன்மையதாகச் செய்யும் விகுதிபோற்பயன்பட்டுவருமெனவும் திருவாசகத்துள் வரும் திருவுந்தியாரையும் இத்திருவுந்தியாரையும் ஒப்பு நோக்கியுணருங்கால் இனிது புலனாம். அகளம்--அருவம்; என்றது உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கின்ற பேரறிவினை. சகளம்--உருவம்; என்றது, குருவாகிவந்து அறிவிக்கின்ற திருமேனியை, யாரும் அறிவரிது அப்பொருள் என்றது, தன்னைக் கூடினவர்களாலும் கூடாதவர்களாலும் இன்னதன்மையதென்று அறியவொண்ணாத சிவபரம்பொருளை. தானாகத்தருதல் பிறிது காரணமின்றித் தன் அருளே காரணமாக எளிவந்து வலியக் கொடுத்தல். தானாக என்பதற்குச் சிவமேயாக எனப்பொருளுரைத் தலும் உண்டு. தருதல்-ஞானத்தைத்தருதல். அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ எனவும், பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் எனவும் வரும் திருவாசகச் செழும்பாடல்களை அடியொற்றியமைந்தது, இத்திருவுந்தியாராகும். இதன் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்களாகும். 4. அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன் சகளமயம் போலுலகில் தங்கி-நிகளமாம் ஆணவ மூல மலமகல ஆண்டான்காண் மாணவக என்னுடனாய் வந்து. இது குருவே சிவனென அறிவுறுத்துகின்றது. (இ-ள்) பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத்திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஓருருவமுடையவன்போல் குருவாக எழுந்தருளி என்னுடனே கூடியிருந்து என்னை அநாதியே பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு அடிமையாகக் கொண்டருளினான். மாணவனே இவ்வியல்புடைய நிகழ்ச்சியை அறிவாயாக. எ-று அகளமாயம் - களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு. சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம். இவ்வாறு உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பார். சகளமயம் போல் உலகில் தங்கி என்றார். மன்னுயிர்களைத் தோற்றமில் காலமாகச் செம்பிற்களிம்பு போல் பற்றியிருந்து ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை மறைத்து நிற்கும் அகவிருள் என்பார், நிகளமாம் ஆணவ மூலமலம் என்றார். நிகளம்--விலங்கு; உயிரைப் பிணித்துள்ள பிணிப்பு. மூலமலம் அகல ஆளுதலாவது, உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட்கொள்ளுதல். அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகியருளிய பெருமையைச் சிறுமையென்று இகழாது குருவே சிவன் எனத் தெளிந்து உணரும் திறத்தினை வற்புறுத்துவது இச்செய்யுள். 5. ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே யோகங்க ளெங்கே யுணர்வெங்கே-பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு. இஃது உயிர்க்குயிராய் அருவாய் நின்ற இறைவன் குருவாக உருவத் திருமேனிகொண்டு எழுந்தருளுதலின் இன்றியமையாமையை அறிவுறுத்துகின்றது. (இ-ள்) உயிர்களின் மலங்கள் நீங்கும்பக்குவ நிலையிலே எல்லாம் வல்ல இறைவன் தன்னிற் பிரிவிலா அருளாகிய அம்மையும் தானுமாகத் திருமேனி கொண்டு வந்து நம்மனோரை ஆட்கொள்ளாது விடுவானானால், அப்பாலைக் கப்பாலாக உள்ள அப்பெரும் பொருளை யார்தான் அறிந்து கூடவல்லவர்கள்? அம்முதல்வன் குருவாகித் திருமேனி கொண்டு வாரானாயின் மெய்ந்நூற்பொருளை யுணர்த்தும் ஆகமங்கள் எங்ஙனம் தோன்றி வழங்கமுடியும்? அவ்வாக மங்களால் உணர்த்தப்படும் ஆறு சமயங்களுடைய நெறிமுறைதான் உலகில் எங்ஙனம் நிலைபெற்று வழங்கமுடியும்? அச்சமய நெறிகளிலே முதல்வனைத் தம் அகத்துள் வைத்து ஒன்றிப் பயிலும் யோகப்பயிற்சி தான் எங்கே உண்டாகும்? சுட்டியுணரும் உயிருணர்வும், இருந்தாங்கு எல்லாவற்றையும் உணரும் சிவஞானமும் ஆகிய இவ்வுணர்வு பற்றிய விளக்கங்கள் தான் எவ்வாறு உண்டாகும்? எ-று. இறைவன் குருவாகத் திருமேனி கொண்டு எழுந்தருளும் திறத் தாலேயே உபதேசப்பரம்பரையினால் ஆகமப்பயிற்சியும் சமய வொழுகலாறுகளும், யோகம் முதலிய நெறிமுறைகளும் இவ் உலகத்து நிலைபெற்று வழங்கி வருவன என அம்முதல்வன் குருவாக எழுந்தருளி வருதலின் இன்றியமையாமையை விளக்கியவாறு. நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானும்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் எனவும், நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் எனவும் வரும் திருவாதவூரடிகள் அனுபவ மொழிகளை அடியொற்றி யமைந்தது, இத்திருக்களிற்றுப்படியார் பாடலாகும். இதனை அடியொற்றியமைந்தது, ஆரணம் ஆகமங்கள் அருளினா லுருவு கொண்டு காரணன் அருளானாகிற் கதிப்பவர் இல்லையாகும் நாரணன்முதலாயுள்ள சுரர் நரர் நாகர்க் கெல்லாம் சீரணி குருசந்தானச் செய்தியும் சென்றிடாவே. (சித்தியார் - சுபக் - 65) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். உ. பழக்கந் தவிரப் பழகுவ தன்றி யழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற. இது கருவின் அருள்வழி அடங்கியொழுகுமாறு கூறுகின்றது. (இ-ள்) உலகவாதனைகளிலே நெடுநாள் பழகிய பழக்கம் விட்டு நீங்கும்படி ஆசிரியன் அறிவுறுத்திய ஒப்பற்ற திருவருளாலே சரியை கிரியை யோகமாகிய நெறிகளிலே பழகுவதைவிட்டு உலகப் பொருள் நுகர்ச்சிக்காக உழன்று திரிவது என்ன பேதைமையோ பெண்ணே கூறுவாயாக. எ---று. இப்பாடலில் பெண் என்றது நெஞ்சத்தை என்று கருதுவர் தில்லைச்சிற்றம்பலவர் என்னும் உரையாசிரியர். இதில் நெஞ்சத்தைப் பெண்ணென்றத ஏனெனில், தன்னிடத்தில் நாயகரான தம்பிரானார் அநாதியாயிருக்க அவருடைய திருவடியைப் பேணாமல், ஐம்புல வேடர் வசத்திலொழுகி நாயகரால் முனியப்படும் மிக்க துயரமாகிய நரக சுவர்க்கங்களிலே உழன்று, அழிவில்லாத சுகத்தை அநுபவிக்கப் பெறாது போக்குவாருடனே திரிகையால் தன்னுடைய நெஞ்சத்தைப் பார்த்து என் பெண்ணே தகாதவற்றிற்கு உட்படுகின்றாய் என, பேதைமையதனால் நெஞ்சத்தைப் பெண்ணெனக் கூறியது என்பது தில்லைச்சிற்றம்பலவர் தரும் விளக்கமாகும். இங்குப் பெண் என ஆன்மாவை அழைத்தது சிவனாகிய தலைவனோடு கூடி இன்பத்தை நுகர்தல் ஒப்புமைபற்றி என்பர் பழைய உரையாசிரியர். இக் கருத்தே பொருத்தமுடையதாக அமைந்துள்ளது. இத்திருவுந்தியாரின் விளக்கமாக அமைந்தன பின்வரும்திருக் களிற்றுப்படியார் பாடல்களாகும். 6. சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ-ஆர்த்தகடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு. இதுகுருவின் உபதேமின்றிச் சாத்திரம் பயன்தராது என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) குருவின் உபதேசமின்றி மெய்ந் நூல்களைக் கற்றவர் களுக்கு ஞானாசிரியனது அருள் மொழியினாலே வாய்த்தற்குரிய எல்லா ஞானச் செல்வங்களும் வந்து அடையுமோ அடையமாட்டா: அஃது எதுபோலெனின்? அலைகளால் ஆரவாரிக்கின்ற கடலின்நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கையாகிய தாகம் தணியுமோ, தணியாதல்லவா? தெளிந்த அறிவின் நீர்மையுடைய மாணவனே இதில் ஐயம் உண்டாயின் சொல்வாயாக எ-று. சாத்திரங்கள் கடல் போன்றன. அவற்றின் நுண்பொருள்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் திறத்தில் சுவைபட உபதேசிப்போன் குருவாவான். அத்தகைய குருவின் உபதேசமின்றி ஒருவர் தன் முனைப்பாலே சாத்திரப் பொருளை ஓதியுணர்வோம் என்று முற்படுதல் அவர்க்கு மயக்கமாகிய உவர்ப்பினை உண்டாக்குவதல்லது தெளிந்த ஞானமாகிய சுவையினை நல்குதலாகிய நுகர்ச்சியைத் தாராது என்பார், ஆர்த்த கடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ என்றார். தாகம்-தண்ணீர்விடாய். தெண்ணீர்மை-தெளிந்த அறிவின் தன்மை. 7. இன்று பசுவின் மலமன்றே யிவ்வுலகில் நின்ற மலமனைத்தும் நீக்குவதிங்- கென்றால் உருவுடைய னன்றே வுருவழியப் பாயும் உருவருள வல்லான் உரை. இது, மாயையின் காரியமாகிய உடல்கருவிகரணங்களிற் கட்டுண்ட உருவுடையனாகிய குரு, ஆன்மாக்களைப் பற்றிய மலங்களைப் போற்றி மெய்யுணர்வளிக்கவல்லானே? என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயந்தீர எடுத்துக்காட்டுத்தந்து விளக்குகின்றது. (இ-ள்) இக்காலத்து இவ்வுலகில் வாழும் உயிர்களைப் பற்றிய மும்மலங்களையும் ஏனைப்புற அழுக்குகளையும் போக்குவது பசுவின் சாணமல்லவா? (இவ்வாறு கோமயமாகிய மலமே ஏனைய மலங்களையகற்றித் தூய்மைநல்கும்) என்றால் (அதுபோன்று) இங்கு உருவாகிய உடம்பொடு கூடிய ஆன்மாக்களுக்கு உடல் கருவிகரணங்களாகிய கட்டுக்கள் அற்றெழியத் தூய்மையேயுருவாகிய சிவஞானத்தை வழங்கியருள வல்லவன் மக்களைப் போன்று திருமேனி கொண்டெழுந்தருளிய ஆசிரியன் அல்லவா? இதற்குத் தடையேதுமுண்டாயிற் சொல்வாயாக எ-று. இன்று இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது பசுவின் மலமன்றே என்றால் (அதுபோன்று) இங்கு உரு அழியப்பாயும் உருஅருளவல்லான் உருவுடையான் அன்றே? உரை என இயையும். பசுவின் மலம்-ஆன்சாணம்; கோமயம் சாணமாய்ப் புறவழுக்கினைய கற்றித் தூய்மை செய்வதற்கும் பராவணமாகிய திருநீறாய் உயிர்களின் மும்மல அழுக்கினைக் களைதற்கும் பயன்படுவது போன்று, ஆசிரியன் மேற்கொண்ட பாசத்தன்மையதாகிய உருவும், மாணாக்கரது பாச வுருவினைக் களைந்து மெய்ஞ்ஞானமாகிய உருவினை வழங்க வல்லதாகும் என எடுத்துக்காட்டுத் தந்து விளக்கியவாறு. இப்பாடலில் உள்ள உரு மூன்றனுள் முன்னையது ஆசிரியன் திருமேனி; இரண்டாவது மக்களது பாசத்தொடர்பு; மூன்றாவது மெய்ஞ்ஞானமாகிய பொருள். இனி, இப்பாடலின் இரண்டாமடியில் நீக்கினது ஆங்கு எனப் பாடங்கொண்டும் மூன்றாமடியில் உருவுடையான்அன்றே என்பதற்குச் சிவன் நம்மைப்போலச் சரீரத்தையுடையவன் அல்லவே எனவும் உருவழியப்பாயும் உருவருளவல்லான் என்பதற்கு நம்முடைய பிறவியழியும்படிக்குத் தோன்றுந்திருவருளாகிய திருமேனியெடுக்க வல்லனே எனவும் பொருள் வரைந்தும் ஆசிரியர் திருமேனி இருமாயையிலேயுண்டான சரீரமல்லவென்பது கண்டுகொள்க என விளக்கம் தருவர் பழைய வுரையாசிரியர். ங. கண்டத்தைக் கொண்டு கருமமுடித்தவர் பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. இது, குருவின் திருவருளால் வினைத்தொடர்பு அறுத்தவர்களே பிறவா நிலை பெற்றவர்கள் என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) கட்புலம் காண எழுந்தருளிய ஆசிரியரைப் பற்றி நின்று தம்முடைய வினைத் தொடர்பு அறுத்தவர்கள் தாம் எடுத்துள்ள உடம்பின் வழிப்பட்டு ஐம்பொறிகளின்வழிச் செல்ல மாட்டார்கள் இத்தகையோர்க்கு மேலும் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லையென்றறிவாயாக, எ-று. கண்டது---காணப்பட்டதாகிய ஆசிரியத்திருமேனி. கண்டதை எனற்பாலது கண்டத்தை என ஒற்றிரட்டித்து நின்றது. இனி கண்டு அத்தைக் கொண்டு எனப்பிரித்து, மெய்யுணர்வளித்தற் பொருட்டு எழுந்தருளிய குருவின் அருளால் அறிவிக்க அறியும் ஆன்மாவாகிய தன்னையும் தன்னின்வேறாகிய பாசங்களையும் உயிர்க்குயிராய் உள் நின்றுணர்த்தும் இறைவனையும் உள்ளவாறு கண்டுணர்ந்து, அம்மெய்யுணர்வு உபதேசத்தினால் தம்முடைய பாசமாம் வினைப்பற்று அறுத்தவர்கள் எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அத்தைக் கொண்டு -அதனைக்கொண்டு; அதனால், கருமம் முடித்தலாவது, ஆசிரியன் செய்யும் தீக்கையினால் சஞ்சிதகன்மம் எனப்படும் பழவினையையும் தம் உடம்பினால் முகந்துகொள்ளப்பட்ட பிராரத்தகன்மமாகிய நுகர்வினையையும் ஆசிரியனது அருள்நோக்கினால் ஆகாமிய கன்மமாகிய வருவினை யையும் அறவே அகற்றுதல். பிண்டம்-- உடல். பிண்டத்தில் வாராமையாவது, தாம் எடுத்துள்ள உடம்பின் வாதனைவயப்பட்டுப் புலன்வழி போகாது ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் இறைவன் திருவருள்வழி நிலைத்து நிற்றல். இங்ஙனம் குருவினருளால் மெய்யுணர்வு கைவரப்பெற்றவர்கட்கு வினைத்தொடர்பு முற்றிலும் அற்றொழியவே பிறவாப் பெருநிலை யாகிய வீடுபேறு அடைதல் உறுதியென்பதுணர்த்துவார், பிறப்பிறப்பில்லை என்றருளிச் செய்தார். 8. கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே அண்டத்தின் அப்புறத்த தென்னாதே- அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும் எப்புறமும் கண்டவர்கள் இன்று. இது,மேற்குறித்த திருவுந்தியார் பாடற் பொருளை விரித்து விளக்குகின்றது. (இ-ள்) காணப்பட்ட திருமேனியாகிய ஆசிரியனது மெய்யுணர்வு பதேசத்தின் துணை கொண்டு தம்முடைய தற்போதங்கெடவினைத் தொடக்கு அறுத்தவர்களே, ஞானத்திரளாய் நின்ற பொருள் அண்டத்திற்கு உள்ளேயுள்ள தென்றும் புறம்பேயுள்ள தென்றுங் கொள்ளாமல் அது தத்துவங்கடந்து அவற்றைச் செயல்படுத்து நிலையில் தத்துவங்களுக்குத் தத்துவமாய்ப் உள்ளும் புறம்பும் நிற்கும் முறைமையும் உயிர்க் குயிராய் எல்லாரறிவுகளிலும் கலந்து அறிந்து அறிவித்து நிற்கும் முறைமையும் உணர்ந்து தாமும் இந்த நிறைவடைய அறிவாய் ஒன்றுபட்டு நிற்கவே அவர்களுக்கு இப்பேரறிவினோடு ஒற்றித்துநின்ற பெற்றியாலே அவர்களே இப்பொழுது எல்லாப் பொருள்களையும் உள்ளவாறு கண்டு குறைவிலா நிறைவாய் நிற்கின்ற ஞானப்பெருஞ்செல்வத்தினர் எ-று. இன்று-குருவினால் ஆட்கொள்ளப் பெற்ற இப்பொழுது அண்டத்தின் அப்புறத்த தென்னாதே என்பதனை அண்டத்தினது அப்புறத்தது என்னாது என இரு தொடராகப் பகுத்துரைக்க அண்டத்தினது- அண்டத்திற்கு உள்ளேயுள்ளது. அப்புறத்தது அண்டத்தின் புறத்தேயுள்ளது. என்றது, ஞானத்திரளாய் நின்ற பொருளை. இனி அண்டத்தினது என்றது சீவன் முத்தியையும் அப்புறத்தது என்றது பரமுத்தியையும், ஆரறிவும் சென்றறியும் எப்புறமும் என்றது ஞானிகள் பொருந்தியறிகின்ற பதிபசு பாசங்களாகிய முப்பொருள்களையும் குறித்தன எனக்கொண்டு, சீவன் முத்தித் தன்மையுடையது இது பரமுத்தித்தன்மையினையுடை யது இது என்று இரண்டு தன்மையினையும் இடையிட்டுக்காணாமல் பரமுத்தியையும் சீவன் முத்தியையும் எல்லா ஞானவான்களுடையை அறிவும் பொருந்தியறிகின்ற திரிபதார்த்தங்களையும் இப்பொழுதே மயக்கமற அறிந்தவர்கள் எனப்பொருள் வரைந்து ஆன்மபோதம் இறந்தாலொழியச் சுபாவதெரிசனம் உண்டாகாது என்பது கண்டுகொள்க எனக்கருத்துரை பகர்வர் பழையவுரையாசிரியர். கட்புலனாக எழுந்தருளிய ஆசிரியத்திருமேனியே உயிர்களின் வினைத் தொடக்காகிய பாசப்பிணிப்பினை அகற்றவல்லதென்பது, பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (சிவபுராணம்) பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே எனவும் வரும் திருவாசகத் தொடர்களால் இனிது புலனாம். ச, எங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறியும் அறிவதன் றுந்தீபற. இது, பிறப்பிறப் பில்லாப் பேரின்ப நிலையாகிய சிவாநுபவம், எத்தன்மையதாயிருக்கும் என வினவிய மாணாக்கர்க்கு அதன் இயல்பினை விளங்க அறிவுறுத்துகின்றது. (இ-ள்) குருவருளால் யான்பெற்ற பேரின்பம் எத்தன்மைய தாயிருந்ததென்ற எப்படிச் சொல்லவல்லேன்? அதற்கு அதுவே ஒப்பாகவிருந்ததென்று அறிவாயாக. அஃது உயிர்களின் சுட்டறிவினால் அறிந்து கூடத்தக்க அறிவின் எல்லையினதன்று என அறியவாயாக. எங்ஙன் - எத்தன்மை. இங்ஙன் என்பதும் பாடம். இங்ஙன்- இத்தன்மை எவ்வண்ணம் - எப்படி. அங்ஙன் இருந்தது - அப்படி யிருந்தது: ஓர் உவமை கூறி விளக்கவொண்ணாக ஒப்பற்ற அத்தன் மையதாய் இருந்தது என்பதாம். சிவாநுபவம் இன்னதன்மைத் தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்க வொண்ணாததென்பதனை. தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது தெரியேன் ................ என்னிற் கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமுதாக்கினன் (திருவாசகம் திருவண்டப்பகுதி) என உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க. 9. அன்றுமுத லாரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதிலை- இன்றிதனை எவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வா றிருந்த தது. இது, மேற்குறித்த திருவுந்தியார் பாடற்பொருளை விரித்து விளக்குகின்றது. (இ-ள்) தோற்றமில்காலமாகிய அன்று தொடங்கி யாவராயினும் இறைவனுக்கு ஆளாகி அம்முதல்வனது ஏவலாலே படைத்தல் காத்தல் ஆகிய தொழில்களுக்கு வினைமுதலாய் அம்முதல்வனோடு உடன் சென்ற அயன்மாலிருவர்க்கும் அம்முதல்வனுடைய உண்மையான இன்புருவம் இப்படியிருக்குமென்று இன்றளவும் தெரியச் சென்றதில்லை. அங்ஙனமாகவும் திருமால் பிரமன் முதலிய தேவர்களாலும் அறிதற்கரிய இந்தப் பொருளை எப்படியிருக்குமென்று எதனை உவமித்துச் சொல்லவல்லேன்? அப்பொருள் தம்பால் அன்புடைய மெய்யடியார்களுக்கு எப்படி இனிய நுகர்ச்சிப் பொருளாய் விளங்கியதோ அப்படியே ஒப்பற்ற பேரின்பப் பொருளாயிருந்தது எ---று சிவாநுபவமாகிய பேரின்பநிலை அதனைப் பெற்று இன்புறுவோர்க்குப் புலனாவதல்லது பிறர்க்கு இன்னதன்மைத்தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்குந் தரத்தன்று என்பதாம். இவ்வாறிருந்த தென்றெவ்வண்ணஞ் சொல்லுகேன்? என்பதும் பாடம். ரு. ஏகனு மாகி யநேகனு மானவன் நாதனு மானானென் றுந்தீபற நம்மையே யாண்டானென் றுந்தீபற. இஃது இறைவனது இலக்கணமும் அம்முதல்வனே குருவாக எழுந்தருளி மன்னுயிர்களை ஆட்கொண்டருளும் முறைமையும் அறிவுறுத்துகின்றது. (இ---ள்) தன்னியல்பால் தான் ஒருவனேயாகியும் உயிர்க் குயிராய்ப் பொருள் தோறும் கலந்து நிற்றலால் பலவாகியும் திகழும் இறைவன், நம்பொருட்டுத் தானே அறிந்தும் அறிவித்தும் உடனிருந்து உபகரிக்கும் நிலையில் குருவாக வும் எழுந்தருளி வந்தான் என்றுணர் வாயாக. எத்தனையும் அரிய பெரியோனாகிய அம்முதல்வன் எத்தனையும் எளிய சிறியோமாகிய நம்மையும் தன் பெருங்கருணைத் திறத்தால் ஆண்டு கொண்டருளினான் என்று மகிழ்வாயாக. எ---று. வேதத்துட்கூறப்படும் ஏகம் (ஒன்று) என்பதற்கு இறைவன் ஒருவன் என்பதே பொருள் என அறிவுறுத்துவார் இறைவனை ஏகன் எனக் குறித்தார். ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் (2104) என்பது திருமந்திரம். ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருவண்டப்பகுதி) என்பது திருவாசகம். ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேபதி (வெண்பா. 7) என்பது சிவஞானபோதம். இவ்வாறு இறைவனை ஏகன் (ஒருவன்) என மெய்ந்நூல்கள் குறிப்பதன் நோக்கம் அவனுக்கு ஒப்பாருமிக்காருமில்லை; தனக்குவடை யில்லாதான் (திருக்குறள்-7) அம்முதல்வன் என்னும் உண்மையினை அறிவுறுத்தற்பொருட்டேயாம். இங்ஙனம் தன்னியல்பால் ஒருவனாகிய இறைவன் உயிர்க்குயிராய்ப் பொருள்தோறும் நீக்கமறக் கலந்து நின்று உலகுயிர்களை இயக்கியருளுதலால் உலகிற் பலவேறு வடிவினனாகவும் திகழ்கின்றான் என்பார், அநேகனுமானவன் என்றார். நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகேழெனத்திசை பத்தெனத் தானொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ (திருத்தோணோக்கம் - 5) எனவரும் திருவாசகம் ஒருவனாகிய இறைவன் பலவேறு வடிவினனாக உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து விளங்குந் திறத்தை விரித்துரைப் பதாகும். முப்பத்தாறாந் தத்துவமாகிய நாததத்துவத்தின் முடிவில் திகழ்வோன் இறைவன் என்பது உணர்த்துவார் நாதன் என்றார். திருப்பெருந்துறையிற் குருந்தின்கீழ்க் குருவாய் எழுந்தருளித் தமக்கு மெய்யுணர்வுபதேசம் நல்கிய இறைவனை நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எனத் திருவாதவூரடிகள் போற்றிய வண்ணம் திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும் தமக்குக் குருவாய் எழுந்தருளிய இறைவனை நாதனும் ஆனான் எனப்போற்றிய திறம் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். எத்தனையும் அரியனாகிய அம்முதல்வன் எத்தனையும் எளியராகிய நம்மையும் தனது பெருங்கருணைத் திறத்தால் ஆட்கொண்டருளினன் என்பார் நம்மையே ஆண்டான் என உளமுருகிப் போற்றினார். நம்மையே என்புழி ஏகாரம், நம்மையும் என இழிவு சிறப்பும்மையின் பொருள் தந்து நின்றது. அத்தாவுன்னடியேனை அன்பாலார்த்தாய், அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய், எத்தனையும் அரியை நீ எளியையானாய். எனையாண்டு கொண்டிரங்கி யேன்றுகொண்டாய் (6---95---8) எனவரும் திருத் தாண்டகச் செழுமறை இங்கு உளங்கொளற் பாலதாகும். ஆகி, ஆனவன், ஆனான் என இத்திருவுந்தியாரிற் பயின்ற ஆக்கச்சொற்கள் செயற்கைப் பொருளுணர்த்தாது இயல்பாய செம்பொருளின் வேறு வேறு திறங்களைச் சுட்டி நின்றன. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க எனவரும் சிவபுராணத் தொடரை அடியொற்றியமைந்தது இத் திருவுந்தியாராகும். 10. ஒன்றுங் குறியே குறியாத லாலதனுக் கொன்றுங் குறியொன் றிலாமையினால்---ஒன்றோ டுவமிக்க லாவதுவுந் தானில்லை யோவாத் தவமிக்கா ரேயிதற்குச் சான்று, இது ஏகனுமாகி யநேகனுமாகிய இறைவனது இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) செம்பொருளாகிய சிவபரம் பொருளுக்கு உலகுயிர்களிற் பிரிவறக் கலந்து பொருந்தும் திருவருளாகிய சத்தியே திருமேனியாகிய அடையாளமாதலானும் அவ்வருட்சத்தியின் துணையின்றி அப்பரம் பொருளைப் பொருந்தியுணர்தற்குரிய அடையாளம் பிறிதொன்றில் லாமையினாலும் அம் முதல்வனுக்கு உலகில் உவமை காட்டிச் சொல்லுதற்குரிய பொருள் பிறிதொன்றுமில்லை. இங்ஙனம் யாவராலும் உணர்தற்கரிய முழுமுதற் பொருளொன்று உண்டெனவுணர்தற்குச் சான்றாவார் அம் முதற்பொருளொடு இடைவிடாது ஒன்றியுணரும் தவப்பெருஞ் செல்வர்களே எ---று. ஒன்றும் குறி-பொருந்தும் அடையாளம்; என்றது,பொருந்தி உலகுயிர்களை இயக்கி நிற்கும் சிவசத்தியினை. குறியாதல்-சிவபரம். பொருளையுணர்தற்குரிய அடையாளமாதல். சிந்தனைக்கரிய சிவபரம் பொருளையுணர்தற்குரிய அடையாளமாக (திருமேனியாக)த் திகழ்வது கதிரவனிற் கதிர்போன்று அம் முதல்வனிற் பிரிப்பின்றி உலகுயிர்கள் தோறும் விரிந்து பரவிநிற்கும் திருவருளாகிய சிவசத்தியே என்பார், ஒன்றுங்குறியே குறியாதலால் என்றார். மாற்ற மனங்கடந்த அம்முதல்வனை அருவம் உருவம் அருவுருவம் என முத்திறமாகப் பகுத்துரைக்கப்படும் உலகப்பொருட் கூற்றினுள் ஒன்றாகக் குறித்துணர்தல் இயலாதென்பார், அதனுக்கு ஒன்றுங்குறி ஒன்று இலாமையினால் என்றார். இங்ஙனம் உலகப் பொருள்களில் எதனையும் உவமை காட்டியுணர்த்தலாகாதவாறு தனக்குவமை யில்லாத தனி முதற்பொருளாகத் திகழ்வது சிவபரமபொருள் என்பார். தான் ஒன்றோடு உவமிக்கலாவதுவும் இல்லை என்றார். தனக்குவமை யில்லாதான் (திருக்குறள்-7) என்றார் தெய்வப்புலவரும். இங்ஙனம் யாவரானும் அறியவொண்ணாத முழுமுதற் பொருள் உண்டு என உலகத்தார் உணர்தற்குச் சான்றாகவுள்ளவர்கள் அவனருளாலே அவன்தாள் வணங்கி அன்பினால் நெஞ்சம் நெக்குருகிக் கண்ணீர் ததும்பி அம்முதல்வனை இடையறாது போற்றும் செம்புலச் செல்வர்களாகிய சிவஞானிகள் என்பார், ஓவாத்தவமிக் காரேயிதற்குச் சான்று என்றார். ஓவாமை-இடையறவின்மை. இதற்கு--இத்தகையபரம் பொருள் உண்டென் பதற்கு. சான்று-சாட்சி. ஓவாத் தவமிக்கார் என்றது இடையறாப் பேரன்பால் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சத்தராய் மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்ததும்பச் சிவபரம்பொருளோடு ஒட்டி வாழும் சிவாநுபவம் பெற்ற சிவஞானிகளை. இவர்தம் இயல்பினையும் இத்தகையோர்க்கு இறைவன் நல்கும் பேரின்ப நிலையினையும், உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி உயிர் ஆவணஞ் செய்திட்டு உன்கைத்தந்தார் உணாப் படுவாரோ டொட்டி வாழ்தி (6--25--1) எனவரும் திருத்தாண்டகத்தால் இனிதுணரலாம். இத்தகைய தவப்பெருஞ்செல்வர்கள் சிவபரம்பொருளை உலகத்தார் உணர்தற்குரிய சாட்சியாய் விளங்குந்திறத்தினை, தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத் தன்னுணரத் தன்னுள் இருத்தலால்-தன்னுணரும் நேசத்தார் தம்பால் நிகழுந் ததிநெய்போல் பாசத்தார்க் கின்றாம் பதி (சிவஞானபோதம்-வெண்பா 76) எனவரும் பாடலில் மெய்கண்டார் ஏதுக்களால் இனிது விளக்கி யுள்ளமை காணலாம். சிந்தனைக்கு எட்டாத சிவபரம்பொருள் உலகத்துள்ளார் தன்னையுணர்தல் வேண்டித் திருநீறு கண்டிகை முதலிய திருவேட மாகிய தனது வடிவத்தைத் தன்னடியார்க்குக் கொடுத்தலானும் சிவஞானிகளாகிய அன்பர்கள் தன்னைச் சிவோகம் பாவனையால் தன்னையறியச் செய்தலானும் அவ்வாறு ஒரு குறியின்கண் நின்றுணரும் அவ்வடியார்களைத் தனது திருவருட்பரப்பினுள் இருக்கும்படி செய்தலானும் தன்னை இடைவிடாதுணரும் அன்புடைய அடியார்களிடத்துத் தயிரின்கண் நெய்போன்று இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவன். அவ்வியல்பில்லாத பாசப்பிணிப்புடைய ஏனையோரிடத்துப் பாலின் கண்ணதாகிய நெய் போன்று விளங்காது மறைந்து நிற்பன் என்பது இதன் பொருளாகும். உயிர்க்குயிராகிய இறைவன் தன்னை அன்பினால் நினைந்துருகும் அடியார்களை இவ்வுலகில் உடம்பொடு நிலவச் செய்வதன் நோக்கம், காண்டற்கரிய கடவுளாகிய தன்னை அன்புநிறைந்த அடியார்வடிவில் உலகத்தார் கண்டு நெஞ்சம் உருகி வினைத்தொடர் பறுத்து உய்தற் பொருட்டே என்பார். நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் (6--14--1) என அருளிச் செய்தார் திருநாவுக்கரசர். எனவே தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும், தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்பு நீர்பொழி கண்ணும் உடைய தவப்பெருஞ் செல்வராகிய சிவஞானிகள், மெய்ப்பொரு ளுணர்ந்து நையாத மனத்தினராகிய உலகத்தாரைத் தமது சிவா நுபவத்தால் செம்பொருளுண்மை தெளிந்து நைந்துருகும் உள்ளத்தினராகத் திருத்திப் பணி கொள்ளுதலால் இத்தகைய சிவபரம்பொருளின் உண்மைக்கும் அம்மெய்ப்பொருளுணர்வாற் பெறும் பேரின்ப நிலைக்கும் சாட்சியாக விளங்குகின்றார்கள் என்பார், ஓவாத்தவமிக்காரே இதற்குச் சான்று என்றார். 11. ஆற்றல் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை மாற்றியவ் வாற்றான் மறித்தாற் போல்-தோற்றிப் புலன்களெனப் போதம் புறம்பொழியு நந்தம் மலங்களற மாற்றுவிக்கு வந்து. இது, சிவாநுப வுண்மைக்குத் தவமிக்கார் சான்றாதலை உவமை காட்டி விளக்குகின்றது. (இ-ள்) ஆற்றின் வழியே சென்று அலைகடலிற் பாய்ந்த நல்ல நீர், தன் தன்மை கெட்டுக் கடல் நீருடனே ஒன்றாகி மீண்டும் அவ்வாற்றின் வழியே எதிர்த்துச் செல்லுங்கால், கடல்நீராய் உவர்த் தன்மை பெற்றுச் சென்றாற்போன்று, ஆன்மடோதங் கெடச் சிவபரம் பொருளோடு ஒன்றிய சிவயோகிகளது உணர்வு, உலகின் புறத்தே வெளிப்படும் நிலையில் கண்டார்க்குப் பொறிகளின் வழி படரும் புலனுணர்வு போலத் தோன்றிப் பசுகரணங்கூடாமல் சிவ கரணமேயாகப் புறத்தே மிக்குச் செல்லும்; அவ்வுணர்வு அருளின் தன்மையதாய் நம்முடைய மும்மலப்பிணிப்பும் அறவே நீங்குமாறு நம்பால் வந்து நம்முடைய மாசகற்றி நம்மைக் காத்தருளும் எ--று. அலைகடற்கே பாய்ந்த ஆற்று நீர் அந்நீர்மை மாற்றி மறித்தாற் போல், (சிவயோகிகளது) போதம் (கண்டார்க்குப்) புலன்களெனத் தோற்றிப் புறம்பு ஒழியும்; நம்மலங்கள் அறவந்து மாற்றுவிக்கும் என இருதொடராக இயைத்துப் பொருள் கொள்வார் தில்லைச் சிற்றம்பலவர். புலன்களெனத் தோற்றுதலாவது, காண்பார்க்குப் புலன்வழிச் செல்லும் அறிவுபோல் தோற்றுதல். என என்பது உவமஉருபின் பொருள்பட வந்தது. புறம்பொழிதலாவது புறத்தே மிக்குச்செல்லுதல்; சிவஞானத்திற்குப் புறம்பாகிய பசுகரணங் கூடாமல் சிவகரணமேயாய் விளங்குதல் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். கடல் நீருடன் கலந்து அதன் உவர்த்தன்மையைப் பெற்ற ஆற்று நீர், மீண்டும் ஆற்றின் வழியே எதிர்த்து வந்தாலும் கடல்நீரேயாய் விளங்குதல் போன்று, சித்தத்தைச் சிவன்பாலேவைத்த மெய்த்தவச் செல்வர்களது உணர்வு; பசுபோதமாந்தன்மைகெட்டுச் சிவ போதமாகவே விளங்கி உலகமக்களின் மலப்பிணிப்பை நீக்கி உய்வித்தருளும் என்பதாம். இனி, புறம்பொழியின் எனப்பாடங்கொண்டு, திரையையுடைய சமுத்திரத்தினிடத்திலே ஆறென்கிற பூமிவழியாக வந்து பாய்ந்த இனிமைத் தன்மையுடைய நீரானது, அந்த இனிமைத் தன்மையை கூட்டு உவர்த்தன்மை பெற்று ஆற்றின் வழியே மீண்டாற் போல ஞானவான்கள் போதம் நேயத்திலே பொருந்திய பின்பு பெத்தான் மாக்கள் போதம் போலப் பிரபஞ்சத்திலே சென்றால் நம்மைப் பொருந்தியிருக்கிற மலமாயை கன்மங்கள் நீங்கும் படிக்குநீச்குவிக்கும் என உரைவரைந்தார் பழையவுரையாசிரியர். இங்கு ஒழியின் எனவரும் செயினென்வாய்பாட்டு வினையெச்சம் ஒழியாது என்பது தோன்ற நின்றது எனவும், பாசப்பிணிப்பினின்றும் விடுபட்ட சிவஞானிகளது உணர்வு பாசப்பிணிப்புடைய ஏனையோரது உணர் வினைப் போன்று புலன்வழிப்படரும் எளிமையுடையதன்று எனவும் இவ்வுரையாசிரியர்தரும் விளக்கம் உளங்கொளத்தகுவதாகும். சா. நஞ்செயலற்றிந்த நாமற்ற பின்நாதன் தன்செயல் தானேயென் றுந்தீபற தன்னையே தந்தானென் றுந் தீபற. இது, குருவின் அருளால் ஆன்மபோதங்கெட இறைவனது அருளில் அழுந்துமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) நான் என்னும் முனைப்பினாற் செய்யப்படும் நம்முடைய செயல்கள் அற்றுநீங்க இவ்வாறு செயலற்றோம் என்று எண்ணும் ஆன்மபோதமும் அற்றால், நம்முடைய செயல்களெல்லாம் அவன் செயலே நாம் அவனேயென்னும்படி நம்மொடு ஒட்டி வாழ்வான்; யாவராலும் முயன்று பெறுதற்கரிய பேரின்பப் பொருளாகிய தன்னையே நமக்குத் தந்தருளினான் என்று உவகை கொள்வாயாக எ-று. நம்செய லறுதலாவது, உலகினில் என்செயலெல்லாம் உன் விதியே, நீயே உள்நின்றுஞ் செய்வித்துச் செய்கின்றாயென்றும் நிலவுவதோர் செயல் எனக்கின் றுன்செயலேயென்றும் (சித்தியார்- சுபக். 300) இறைவனை நினைந்துபோற்றித் தன் செயலற இறைபணி நிற்றல். எல்லாத்துன்பங்கட்கும் காரணம் செயலுக்குரிய வினைமுதல் நாமே எனத் தருக்கி நிற்கும் தன்முனைப்பேயாதலால் இத்தகைய பெருங்குற்றம் நம்மைவிட்டகலுமானால் நம் செயலெல்லாவற்றையும் இறைவன் தன் செயலாகவே ஏற்றுக் கொண்டு தானே நாம் என்னும்படி நம்மோடு ஒட்டிவாழ்வான் என்பார், இந்த நாம் அற்றபின் நம்செயல் தன்செயலே, (நாம்) தானே என நிரல்நிறைப் பொருள்படக் கூறினார். தானே என்புழித் தேற்றப்பொருளில் வந்த ஏகாரம் தன்செயலே என முன்னரும் சென்றியைந்தது, அற்றபின் என்றது, அற்றால் என்னும் பொருள் படவந்த பின்னீற்று வினையெச்சம் இறந்தகாலங் குறித்து நின்றது. தன்னையே தருவான் என எதிர் காலத்தாற் கூறற்பாலது விரைவு பற்றி மலர்மிசையேகினான் என்றாற் போலத் தன்னையேதந்தான் என இறந்த காலத்தாற் கூறப்பட்டது. தன்னை முன்னம் நினைக்கத் தருவான் (தேவாரம்) எனவும், தன்னைத்தந்த என் ஆரமுதை (திருவாசகம்) எனவும், தந்ததுன்றன்னைக் கொண்டதென்றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீபெற்றதொன்றென்பால் () எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தக்கனவாகும். இத்திருவுந்தியாரின் பொருளை எடுத்துக் காட்டுத்தந்து விளக்குவது பின்வரும் திருக்களிற்றுப் படியாராகும். 12. பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன் றேவிக் கராங்கொண்ட---பாலன் மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங் கரணம்போ லல்லாமை காண். இது, தம்செயலற இறைபணி நிற்கும் செம்புலச் செல்வர்கள் நிகழ்த்தும் வியத்தகு செயல்களெல்லாம் அவர்களோடு ஒட்டிவாழும் இறைவன் செயல்களேஎன்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்கு கின்றது. (இ-ள்) சிவனுடைய அருளாலே சிவனைப்பெற்ற நாயன்மார் பாலைநிலம் நெய்தல் நிலமாகப் பாடியதும், பாம்புகடித்து இறந்தோர் பாம்பின்விடம் நீங்கி உயிர் பெற்றெழப்பாடியதும், ஊழால் வரைந்த காலம் பார்த்து உயிர்கவருந் தொழிலுடைய கூற்றுவனை இறந்த பிள்ளையைத் தரும்படி ஏவி அன்றொரு நாள் முதலையால் உண்ணப்பட்ட அந்தணச் சிறுவனது இறப்பினை நீக்கி உயிர்பெற்றெழச் செய்ததும் ஆகிய இவ்வியப்புடைய செயல்கள், அந்நாயன் மார்களுக்கு உரிய கருவிகரணங்கள் நம்மைப் போலப் பசுகரணமாக இல்லாமற் கிவகரணமாகவே இருத்தலால் நிகழ்ந்தன என்று அறிவாயாக எ-று பாலைநிலம் நெய்தல் நிலமாகும் வண்ணம் திருப்பதிகம் பாடியருளியவர் திருஞானசம்பந்தப் பிள்ளையார், மூவாண்டிற் சிவஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், தம் தந்தையார் தோளிலமர்ந்து தம் தாயார் பிறந்த பதியாகிய திருநனிபள்ளியை அணுகிய நிலையிற் பாலை நிலமாக இருந்த அந்திருத்தலத்தைக் குறித்துக் காரைகள் கூகைமுல்லை என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளிய போது பாலைநிலம் நெய்தல் நிலமாக மாறியது என்பதுவரலாறு. இவ்வற்புத நிகழ்ச்சியினை, ஞாலத்தினர் அறிய மன்னு நனிபள்ளியது பாலைதனை நெய்தலாக்கியும் (திருவுலாமாலை) என நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். பாம்பு ஒழியப் பாடுதலாவது, பாம்பினாற் கடிக்கப்பட்டார் பாம்பின்விடம் நீங்கி உயிர்பெற்றெழு மாறு திருப்பதிகம் பாடியருளல். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழையிலையரியச் சென்று பாம்பு கடித்து இறந்த நிலையில் ஒன்று கொலாம் என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிஅவனை உயிர் பெற்றெழச் செய்ததும், தன் மாமன்மகளை மணந்துகொள்ளும் விருப்புடன் வந்தவணிகனொருவன் வழியிடையே இரவுப் பொழுதில் திரு மருகலில் பொதுமடத்தில் துயிலும் போது பாம்பு தீண்டியிறந்தானாக, அவனுடன் வந்த காதலி மருகற்பெருமானை நோக்கி அழுதரற்றிய நிலையில், திருஞானசம்பந்தப் பிள்ளையார் சடையாயெனுமால் என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி விடம் நீக்கி வணிகன் உயிர்பெற்றெழுமாறு செய்தருளியதும் பாம்பொழியப் பாடிய அற்புத நிகழ்ச்சிகளாகும். கராம்--முதலை. கராம் கொண்ட பாலன் என்றது, கொங்குநாட்டுப் புக்கொளியூராகிய அவிநாசியில் உள்ள மடுவிற் குளிக்கச் சென்று முதலையால் விழுங்கப்பட்டு இறந்த ஆதிசைவ அந்தணச் சிறுவனைத் தம் கெழுதகை நண்பர் சேரமான் பெருமாளைக் காண விரும்பி மலைநாடு நோக்கிச் செல்லும் நம்பியாரூரர், திருப்புக் கொளியூர் அவிநாசியென்னுந் தலத்தையணுகி வீதிவழியாகச் செல்லும் பொழுது ஒரு வீட்டில் மங்கலவொலியும் அதற்கு எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக்கேட்டு, அதன் காரணம் வினவிய போது ஒத்தவயதினராகிய அந்தணச் சிறுவர் இருவர் புக்கொளியூர்க் குளத்தில் குளித்து விளையாடிய நிலையில் அவ்விருவருள் ஒருவன் முதலையால் விழுங்கப்பட்டு இறந்தானாக இறவாது தப்பிய வளர்ந்த சிறுவனுக்கு முப்புரி நூலணி விழா நிகழ்தலால் மங்கல ஒலியும், அவனொடு சென்ற தன் மகன் முதலை வாய்ப்பட்டு இறவாது பிழைத்திருந்தால் அவனுக்கும் முப்புரி நூலணி நிகழ்த்தலாமே என எண்ணிப் பெற்றோர் தம் மகனை நினைந்து அழுதலால் எதிர்வீட்டில் அழுகையொலியும் ஒப்ப நிகழ்ந்தன என்று அருகேயுள்ளார் சொல்ல அறிந்து சிந்தைகலங்கி நின்றார். அந்நிலையில் புதல்வன் இறந்தமை நினைந்து வருந்திய வேதியரும் அவர்தம் மனைவியாரும் நம்பியாரூரர் வருகையுணர்ந்து அழுகைநீங்கி முகமலர்ச்சியுடன் அங்கு ஓடிவந்து சுந்தரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். மகனையிழந்த துயரத்தையும் மறந்து தம்மை அன்புடன் எதிர்கொண்ட அவர்தம் பேரன்பினை நினைந்து நெஞ்சம் நெக்குருகி, இவர்களுடைய மைந்தனை முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்த பின்னரே அவிநாசியில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சுதல் வேண்டும் என்னுந் துணிவினராய், அவர்களோடு அங்குள்ள குளத்தின் கரையையடைந்து அவிநாசி யிறைவனை நினைந்து எற்றான் மறக்கேன் என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினைப் பாடத் தொடங்கி, உரைப்பாருரை யுகந் துள்க வல்லால் தங்கள் உச்சியாய் எனவரும் நான்காம் பாடலில் கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே எனப்பாடிய போது காலனாகிய இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றிலே முன்னர் விழுங்கப்பட்டு இறந்த சிறுவனது உடம்பை அவன் இறந்த காலம் முதல் இத்திருப்பதிசம் பாடும் காலம் வரை அடைதற்குரிய வளர்ச்சியுடையதாகச் செய்து அவ்வுடம்பினுள்ளே அப்புதல்வன் உயிரைச் கொண்டு புகுத்தினான் என்பதும் உடனே முதலையானது மடுவினின்றும் வெளிப்பட்டு வந்து முன் தான் விழுங்கிய அப்புதல்வனைக் கரையிற் கொண்டு வந்து உமிழ்ந்தது என்பதும் வரலாறு. முதலை தான் விழுங்கிய பிள்ளையைக் கரையின் கண்ணே கொண்டு வந்து உமிழும்படி அன்றொருநாள் காலனை ஏவிப்பணிகொண்டு பாலனது மரணத்தினை நீக்கி மறைச்சிறுவனை மீட்டுத் தந்தருளிய சுந்தரமூர்த்திநாயனாரது அற்புதச் செயலே இத்திருப்பாடலில் கராங்கொண்ட பாலன் மரணம் அன்று காலனை ஏவித் தவிர்த்ததுவும் எனவிரித்துரைக்கப் பெற்றது. இவ்வாறு நாதன் தன்செயலே விளங்கப் பெறும் நிலை எல்லார்க்குங் கிட்டுமோ என வினவிய மாணவனை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் வெண்பாவாகும். 13. தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின் தாங்களே சட்ட வுறங்குவர்கள் - ஆங்கதுபோல் ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதற்பின் அப்பொருளாய்ப் பைய விளையுமெனப் பார். இஃது, ஆன்மாவின்கண் தற்செயல்கெடச் சிவன் செயலே விளங்கப் பெறும் இந்நிலை குருவின் அருளாற் கைகூடும் என்கின்றது. (இ-ள்) உறக்கம் வந்தவர்களையெடுத்து மெல்லிய படுக்கையிலே கிடத்தியபின் அவர்கள் தாமே நன்றாகத் துயில்வார்கள். அது போலச் சரியைகிரியையோகங்களாகிய பணிகளைச் செய்து முற்றிய ஆன்மாக்கள் ஞானாசிரியனது திருவருள் நோக்கம் அடிமை கொண்ட பின்பு அவர்கள்பால் அந்தச் சிவபரம் பொருளின் திருவருள் ஞானமும் செயலுமே படிப்படியாக மெல்ல விளையும் என்று காண்பாயாக. எ---று. தூங்கினர் என்றது, உலகிற் பலவேறு தொழில்களைச் செய்த அயர்ச்சியால் கருவிகரணங்கள் செயலொடுங்கும் நிலையில் உறக்கம் வரப்பெற்றவர்களை. சயனம்-படுக்கை. கவலையின்றி நன்றாக வுறங் குதற்கேற்றவாறு தூய்மையும் மெத்தென்ற மென்மையும் வாய்ந்த படுக்கையென்பது புலப்படத் தூயசயனம் என்றார். விடுதல்-மெல்ல எடுத்துக் கொண்டுபோய்ப் படுக்கையிற் கிடத்துதல். உறங்குக எனப் பிறர் தூண்டுதலின்றி அவர்கள் தாமே நன்றாக உறங்கிவிடுவார்கள் என்பார், தாங்களே சட்ட உறங்குவர்கள் என்றார். சட்ட என்பது செப்பம் என்ற பொருளில் வழங்கும் திசைச்சொல். சட்ட உறங்குதலாவது எத்தகைய மனக்கலக்கமும் தோன்றாதபடி இனிய துயில் கொள்ளுதல். அந்த முறைமைபோலச் சரியைகிரியையோகங்களின் முதிர்ச்சியாலே திருவருட்பதிவு வாய்க்கப் பெற்றவர்கள் மெய்யுணர்வு பெறுதலிலே வேட்கையுடை யராய் அருட்குரவனை எங்கே சென்று அடையப் பெறுவோம் என்ற ஆர்வத்துடனே வந்த காலத்து இறைவனாகிய ஞானாசிரியனும் அவர்கள்மீது நிறைந்த அன்பை வைத்து ஞானதீக்கை முறையிலே அவர்களுடைய மலம் மாயை கன்மங்களைப் போக்கி அவர்களது அய்வு நீங்கத் திருவருளாகிய படுக்கையிலே கிடத்திய அளவிலே அவர்கள் தூய பரம் பொருளொடு ஒன்றித் துயிலுதலாகிய இன்றுயில் பெறுவார்கள். அந்நிலையில் அவர்தம் தற்செயல் கெடுதலால் துயிலும் பொழுது ஆடும் சோதியாகிய சிவன் செயலே அவர்பால் விளங்கித் தோன்றும் என்பதாம். இவ்வாறு ஆன்மா தற்சேட்டைகெட இறைவன் திருவருளிலே தோய்ந்து மனக்கவலையின்றிச் சிவபரம்பொருளோடு ஒன்றித் துயிலுதலாகிய இவ்வின்ப நிலையினையே தூங்காது தூங்குதல் எனவும் அறிதுயில் எனவும் கூறுவர் பெரியோர். இந்நிலையினை யெய்திய பெருமக்களது இயல்பினை விளக்குவதே, ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல் (91) எனவரும் திருவருட்பயனாகும். அருளோடு ஒன்றியுறங்குதலாகிய இதன் இயல்பினை, சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை (6--67--2) என எதிர்மறைமுகத்தால் அப்பரடிகளும், அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடுங் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில் (சித்தியார் சுபக். 28) என உடன்பாட்டு முகத்தால் அருணந்தி சிவனாரும் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். ஐயன் என்றது, குருவாய் எழுந்தருளிய இறைவனை அப்பொருள் என்றது, சிவபரம் பொருளை. அப்பொருளாதலாவது தற்செயல்கெட அதுவேயாக ஒன்றுதல். பையவிளைதலாவது, உல வாதனையாகிய ஆரவாரமின்றித் தூய ஆன்மாவின்கண் சிவன் செயல் அமைதியாக விளங்கித் தோன்றுதல். இவ்வுண்மையினை மாணவனாகிய நீ முற்குறித்த நாயன்மார்களாகிய திருவருட் சான்றோர்களது வாழ்க்கையிற் கண்டு தெளிவாயாக என்பார் பார் என்று அறிவுறுத்தியருளினார். எ. உள்ள முருகி லுடனாவ ரல்லது தெள்ள வரியரென் றுந்தீபற சிற்பரச் செல்வரென் றுந்தீபற. இஃது, உயிரினது தன்முனைப்பும் செயலும் கெட ஆன்மாவின் கண் இறைவன் தன் செயலும் தானுமேயாய் உடன் தோன்றுதற் குரிய உபாயம் உணர்த்துகின்றது. (இ-ள்) மேலான ஞானப் பெருஞ்செல்வத்தை வரையாது வழங்குமியல்புடைய அருள் வள்ளலாகிய இறைவர். ஆன்மாக்களது உள்ளம் (தீயிற்பட்ட மெழுகுபோன்று) உருகிய பக்குவ நிலையினைப் பெற்றால் உயிரியல்பு மறைந்து செம்பொருட்டன்மையாகிய தம் மியல்பே உயிரின்கண் புலப்பட்டுத் தோன்ற ஆன்மாவே சிவம் என்னும்படி ஆன்மாவோடு ஒட்டி உடனாவர். இங்ஙனம் நெஞ்சம் நெக்குருகி நிற்பாரோடு உடனாவதல்லது ஏனையோர் தமது சுட்டறிவினால் தெளிய ஆராய்ந்தறிந்து கூடுதற்குரிய எளிமை நிலையினரல்லர் என்று உணர்வாயாக. எ---று. அநாதியே தன்னைப்பற்றியுள்ள களிம்பு நீங்கக் குளிகையில் வைத்து உருக்கிய செம்பு பொன்னென்னும் பெயர் பெற்றாற்போல, அநாதியே ஆன்மாவைப் பற்றிய மலமாகிய மாசு நீங்க இறைவனது திருவருளாகிய தீயிற்பொருந்தித் தூய்மைபெற்று நெஞ்சம் நெக்குருகிய மெய்யடியார்களே ஆன்மவியல்பு மறைந்து சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற்ற செம்புலச் செல்வர் என்பார் உள்ளம் உருகின் சிற்பரச் செல்வர் உடனாவர் என்றார். உள்ளம் உருகில் உடனாவர் என்னும் இத்தொடர், பண்ணிற்பொலிந்த வீணையர் பதினெண்கணமும் உண்ணா நஞ்சுண்ணப்பொலிந்த மிடற்றினார் உள்ளமுருகில் உடனாவார் (2---111---4) எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்திலிருந்து பொன்னே போற் போற்றியெடுத்தாளப்பெற்ற சிறப்புடையதாதல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். அல்லது தெள்ள அரியர் என்றது, இங்ஙனம் உள்ளம் உருகப் பெற்ற மெய்யடியார்கள் வாயிலாகச் சிவபரம் பொருளைத் தெளிந்துணர்வதல்லது உள்ளம் உருகப்பெறாதாராகிய ஏனையோர். தம்சுட்டறிவினால் ஆராய்ந்தறிதற்கு அரியவர் இறைவர் என்பதாம். உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் (6---28---10) என்பது அப்பர் அருண்மொழி பாசப்பிணிப்புட்பட்டு உணர்வும் செயலும் இழந்த உயிர்த் தொகுதிகளுக்கு எல்லாவற்றையும் இருந்த படியே அறிந்தும் அறிவித்தும் பேரருள் ஞானமாகிய பெருஞ் செல்வத்தினை வரையாது வழங்கவல்ல ஞானவள்ளலே இறைவர் என்பது புலப்படுத்துவார், சிற்பரச் செல்வர் என்றார். சித்பரம் என்னும் சொற்றொடர் தமிழியல்புக்கு ஏற்பச் சிற்பரம் என ஆளப் பெற்றது. சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம்பலம் என்பது திருத்தொண்டர் புராணம். இத்திருவுந்தியார்க்குரிய உரைவிளக்கமாக அமைந்தது, பின் வரும் திருக்களிற்றுப்படியாராகும். 14. உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின் உள்ளம் உருகவந் துன்னுடனாம் - தெள்ளி உணமருவர் தாங்கள் உளராக என்றும் புணரவர நில்லா பொருள். இது யானென தென்னும் செருக்கற்ற உயிரின்கண் சிவம் விளங்கித் தோன்றுமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) மாணவனே (நிலமுதல் நாதமீறாக) உள்ள தத்துவங்கள் அனைத்தும் ஒருங்கே நின்னைவிட்டு நீங்குமாறு (நின்பால்) திருவருள்ஞானம் வந்த பதியுமானால் (அந்த ஞானத்தில் சேர்க்கையினாலே) நின்னுடைய உள்ளம் (தீயிற்பட்ட மெழுகு போன்று) உருகும் வண்ணம் (மெய்ப்பொருளாகிய சிவம்) நின்பால் எளிவந்து நின்னைத் தானாக்கிக்கொண்டு உடனாய் நிற்கும். இவ்வாறன்றிச் சிவனைத் தற்போதத்தால் ஆராய்ந்தறிய முற்படுவோர் தாம் என்னும் முனைப்பு சிறிதும் குலையாத நிலையில் உள்ளாராக அத்தகையோர் எக்காலத்தும் தன்னைவந்து கூடுதற்கு முயல அந்நிலையிற் சிவபரம்பொருள் அவர்முன் நில்லாது அகலும். எ-று. உள்ளமுதல் என்றது, உயிர்கள் உடல் கருவி உலகு நுகர் பொருள்களைப் பெற்றுவாழ்தற்கு அடிப்படையாகவுள்ள நிலமுதல் நாத மீறாகிய தத்துவங்களை. முதல்-தத்துவம். முதல் முப்பத்தாறே எனவரும் திருமந்திரத்தில் இச்சொல் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க. மாயையென்னும் சடப்பொருளின் காரியமாகிய இத்தத்து வங்கள் தோன்றியழியுந்தன்மையவாயினும் இவையனைத்தும் ஒடுங்கிய மாயையென்னும் காரணநிலையில் என்றும் உள்பொருள் களாகவே கொள்ளத்தக்கன என்பது புலப்பட உள்ள முதல் என்றார். ஒன்றாய் ஒருவுதல்-ஒருங்கே நீங்குதல். ஒன்றறாய்ஒருவ என்பது பாடம். வரின் - (திருவருள்ஞானம்) வருமானால்; வரின் என்னும் வினையெச்சம் ஞானம் வருதல் இன்றியமையாதது என்னும் குறிப்புணரநின்றது. இத்தகைய திருவருள்ஞானம் உயிரின் கண் தோன்றினாலல்லது யான்எனது என்னும் செருக்கு அற உள்ளம் உருகாதென்பதும் உள்ளம் உருகவே இறைவன் அத்தகைய தூய உள்ளத்திற்பொருந்தி அவ்வான்மாவே சிவமெனத்தோன்றும் வண்ணம் உடனாய்நிற்பன் என்பதும், யான்செய்தேன் பிறர் செய்தார் என்னதியான் என்னும் இக்கோணை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும் நான்செய் தேன் எனுமவர்க்குத் தான் அங்கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே. (சித்தியார் - சுபக் - 305) எனவரும் திருவிருத்தத்தால் இனிது விளங்கும். புணரவரநில்லா பொருள் என ஈற்றடியிலுள்ள பொருள் என்னும் எழுவாய் (பொருள்) வந்து உன்னுடன் ஆம் என முன்னரும் சென்றியைந்தது. இங்குப் பொருள் என்றது, மெய்ப்பொருளாகிய சிவத்தை. தெள்ளியுணருமவர் என்றது, தம்முடைய குறையறி வினாலே இறைவனை ஆராய்ந்தறிய முற்படுவோர். தாங்கள் உளராதல் என்றது, எப்பொருளையும் ஆராய்ந்தறிதற்கேற்ற அறிவுடையார் தாமே என்னும் தன்முனைப்புடையராயிருத்தல். அன்னோர் தம் குறையுணர்வினைத் துணையாகக்கொண்டு சிந்தனைக்கரிய சிவபரம் பொருளை ஆராய்ந்து கூடுதற்கு முற்பட்டாராக அவர்முன் அப்பொருள் நில்லாது மறையும் என்பார் புணரவரப் பொருள் நில்லா(து) என்றார். நில்லாது எனற்பாலது துவ்விகுதி கெட்டு நில்லா என்றாகியது; செய்யுள்விகாரம். என்றும் புணருவான் இல்லாப் பொருள் எனப்பாடங்கொண்டார் பழையவுரை யாசிரியர். என்றும் புணருவான் என்றது, எந்நிலையினும் மன்னுயிர்களைவிட்டு நீங்காமல் உயிர்க்குயிராய் நிற்கின்ற முதல்வனை. தன்னைத் தற்போதத்தாற் காணமுயல்வார்க்கு அம்முதல்வன் இல்லாதபொருள் போல மறைந்து நிற்பான் என்பார் இல்லாப்பொருள் என்றார். இறைவனருள் பெற்ற பெரியோர்கள் இறைவனை அன்புசெய்து உள்ளம் உருகப்பெறுதற்குரிய படிநிலைகளாகச் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளை வகுத்துள்ளார்கள். அவற்றுட் சரியை என்பது, சிவாகமங்களில் விதித்தவாறு திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருமேனியை வழிபடும் முறையில் திருக்கோயிலில் திருவலகிடுதல் மெழுகல் பூக்கொய்து மலர்மாலை தொடுத்தல் முதலாக உடம்பின் பணிகளாக நிகழ்வது. கிரியை என்பது சிவலிங்கமாகிய அருவுருவத்திருமேனியைப் புறத் தேயும் அகத்தேயும் பூசனைபுரிதலாகும். யோகம் என்பது பொறி புலன்களையடக்கி மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை அருவ நிலையில் அகத்தே வைத்து வழிபடுதல். ஞானமாவது உருவம் அருவுருவம் அருவம் எனும் முத்திறத்தினும் அடங்காது ஞானமே திருமேனியாக வுடையான் இறைவன் எனத்தெளிந்து ஞானத்திரளாய் நின்ற இறைவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல் ஆகிய அறிவுத்தொழிலால் வழிபடுதலாகும். இந்நால்வகை நெறிகளில் சரியை கிரியை என்னும் இரண்டினையும் சிவதன்மம் என ஒன்றாக அடக்கிச் சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என மூன்றாகக்கொண்டு இவற்றை மேற்கொள்ளும் உபாயங்களையும் இவற்றாற்பெறுதற்குரிய பேறுகளையும் திருக்களிற்றுப்படியார் பாடல்கள் பின்வருமாறு விரித்துக்கூறுகின்றன. 15. நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நானழிய---வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனும் காணா அரன். இது தற்போதங்கெட இறைவன்பால் அன்புசெய்தற்குரிய நெறிகள் மூன்றென்பதும் இந்நெறிகளில் ஒழுகினார்க்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதும் உணர்த்துகின்றது. (இ-ள்) நன்மையை விளைக்கும் சிவதன்மத்தாலும் நலந்தரும் சிவயோகத்தாலும் நன்மையைப்பெருக்கும் சிவஞானத்தாலும் நான் என்னும் தன்முனைப்புக்கெட இம்முத்திறங்களுள் அவரவர் பயின்று வல்ல நெறியால் யாரேனும் இறைவன்பால் அன்பு செய்வாராயின் யாராலும் காணமுடியாத சிவபெருமான் அவர்பால் வெளிப்பட்டுத் தோன்றுவன் எ - று. சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகைநெறி களையும் மேற்கொண்டொழுகுதலால் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே யென்பார், சிவதன்மத்தால், சிவயோகத்தால், சிவஞானத்தால் நான் அழிய என்றார். இம்மூன்றனுள் தமக்கு வல்லதொன்றனை மேற்கொண்டு உலகத்தார் யாரும் இறைவனிடத்து அன்பினைப் பெருக்கிக்கொள்ளலாம் என்பர்ர், வல்லதனால் ஆரேனும் அன்புசெய்யின் என்றார். ஆரேனும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. ஆரேனும் காணா அரன் என்புழி உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது. சரியை கிரியை இரண்டினையும் இத்திருக் களிற்றுப்படியார் சிவதன்மம் என ஒன்றாக அடக்கிக்கூறுகின்றது. சிவதன்மம் என்னும் இச்சொல், திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் (2-43-6) எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்திற் பயின்றுள்ளமை காணலாம், 16. மெல்லினையே யென்ன வியனுலகி லாற்றரிய வல்வினையே யென்ன வருமிரண்டும் --- சொல்லிற் சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே சேர்வாய் பவகன்மம் நீங்கும் படி. இது முற்கூறிய சிவதன்மத்தை மெல்வினை வல்வினைஎன இருவகைப் படுத்துரைக்கின்றது. (இ-ள்) (உலகத்தாராற் செய்தற்குரிய) மெல்வினையெனவும் இப்பரந்த உலகில் ஒருவராலும் செய்தற்கரிய வல்வினையெனவும் கூறப்பட்டுவரும் இவ்விரண்டும் சொல்லுமிடத்துச் சிவதன்மம் ஆதலால் மாணவனே அவ்விரண்டனுள் உனக்கு மனம் பற்றிய தொன்றிலே சென்று உனது பிறப்புக்குக் காரணமாகிய வினைத் தொடர்பு நீங்குமாறு அச்சிவபரம் பொருளில் அன்பினாற் சேர்வாயாக. எ-று. அவற்றிற்சென்று பவகன்மம் நீங்கும்படி அதிலே சேர்வாய் என இயைத்துப்பொருள் கொள்க. பவம் --- பிறப்பு. கன்மம் --- வினை. பவகன்மம் --- பிறப்பிற்குக் காரணமாகிய வினைத்தொடர்பு. அதிலே சேர்தலாவது, சிவமாகிய அப்பொருளின்கண்ணே அன்பு செய் தொழுகுதல். 17. ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே தீதில் திறம்பலவுஞ் செய்வனவும் --- வேதியனே நல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை மெல்வினையே யென்றதுநாம் வேறு. இது சிவதன்ம வகையிரண்டனுள் ஒன்றாகிய மெல்வினையின் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) வேதங்களைப்பயின்ற மாணவனே ஆகமங்களில் விதித்த வண்ணம் இறைவனை அருச்சித்து வழிபாடு செய்தற்குரிய உறுப்புக்களும் அவற்றைக்கொண்டு தீமையை ஒழிக்கும் பஞ்சசுத்தி முதலிய கூறுபாடுகளும் அவ்விடத்துச் செய்தற்குரிய கிரியைகளும் நல்வினையாம் ஆதலால் நம்போன்றவர்களும் எளிதிற்செய்தற்குரிய அந் நல்வினைகளை மெல்வினையாம் என்று நாம் வேறாக வைத்துக் கூறியது. எ-று. ஆதி - இறைவன். அருச்சித்தற்கு அங்கமாவன பூசைக்குரிய பூவும் நீரும் முதலாயின. தீது இல் திறம் - தீமையை இல்லையாக்கும் கூறுபாடு. செய்வன - செய்தற்குரிய கிரியைகள். அரிய செயல்களைச் செய்யும் ஆற்றலில்லா நம்மைப்போன்றவர்களாலும் எளிதில் மேற் கொண்டுசெய்தற்குரிய நல்வினைகளே மெல்வினை என நம்மால் வேறு வைத்துரைக்கப்பெற்றது என்பார் நமக்கும் எளிதானவற்றை நாம் வேறு மெல்வினையே என்றது என்றார். வேதியனே என்பதற்கு சித்து அசித்துக்களோடு கலந்திருக்கின்றவனே என உரைவரைந்தார் பழையவுரையாசிரியர். சரியை கிரியைகளிலே நின்று வழிபடுகிற அளவில் கொலை களவுகள் காமம் பொய் என்ற ஐந்தையும் விட்டு நிற்கையாலும், மனவாக்குக் காயங்களால் நினைப்பன சொல்வன செய்வனவெல்லாம் தெய்வகிருத்தியத்தினாலேயாகையாலும், அசுத்தத்திலே நின்றும் நீங்கிச் சுத்தனாய் நிற்கையாலும், சர்வான் மாக்களையுந் தன்னைப்போற் காண்கையாலும், வேதாகமங்களின் முறைமைகளிலே வழுவாமல் நிற்கையாலும் ஆசாரியனாலே வேதியனே என்றழைக்கப்பட்டது என விளக்கந்தருவர் தில்லைச் சிவப்பிரகாசர். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தம்மாணவனை வேதியனே என்றழைத் திருத்தலால் தில்லையில் தலவாசம் பண்ணிக்கொண்டிருந்த அம்மாணவர் பிறப்பால் வேதியாராக விருத்தலுங்கூடும். 18. வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினா லன்றுகறி யாக்க --- இரங்காதே கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை வல்வினையே யென்றதுநா மற்று. இது சிவதன்ம வகையுள் ஒன்றான வல்வினையாமாறிது வெனவுணர்த்துகின்றது. (இ-ள்) மேலான நற்பேற்றினை வழங்கும் சிவந்த திருமேனியை யுடைய பயிரவவேடத்தராகிய சிவனடியார்க்கு அக்காலத்திற் கறியமுது சமைத்தற்பொருட்டு (ச் சிறுத்தொண்ட நாயனாரும் அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் வெண்காட்டு நங்கையாரும் தம்முடைய அஞ்சுவயது பிள்ளை சீராளனை) த் தம்முடைய கைகளினாலே கொல்லுதலாகிய தொழிலைச் செய்தல்போன்ற கொடுமைவாய்ந்த செயல்களையே நாம் முன்னர் வல்வினையென வகைப்படுத்துரைத்தது எ-று. பயிரவ வேடமுடைய அடியார் வடிவில் எழுந்தருளியவன் எல்லாவுயிர்கட்கும் நல்ல பேற்றினை வழங்கும் செம்மேனியம் மானாகிய சிவருமானே என்பது புலப்பட வரங்கள் தரும் செய்யவயிரவர் என்றார். ஒருகுடிக்கு நல்ல சிறுவன் ஒருமகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனமுவந்தே ஏதமின்றி அட்டகறியாம் இட்டுண்பது எனப்பயிரவவேடங்கொண் ட அடியார் பணித்த வண்ணம் சிறிதும் வருத்தமின்றி அடியார் உண்ணப்பெற்றோம் என்னும் பெருமகிழ்ச்சியுடன் (தம்பிள்ளை சீராளனைத்) தம்கைகளாலே கொன்று தூய கறியமுதாக அக்காலத்திற் சமைத்தனர் என்பார் அன்று கறியாக்க, இரங்காதே தங்கள் கரங்களினாற் கொல்வினையே செய்த என்றார். அன்று-அக்காலத்தில் சிவனடியார்பாற்கொண்ட பேரன்பினாற் செய்த இச்செயற்கருஞ் செயல் உலகநடைக்கும் பொருந்தவாழும் மக்கட்குலத்தாரால் நினைப்பினும் நெஞ்சுசுடும் கொடுமையுடையது என்பார் கொடுவினையே என்றார். தற்போதமிழந்த நிலையில் இறைவனிடத்தும் அவனடியார்களிடத்தும் கொண்டுள்ள உறுதியும் பேரன்பும் காரணமாக நிகழும் இத்தகைய கொடுமையுடைய அருஞ்செயல்களையே நாம் முன்னர் வகுத்துரைத்த சிவதன்மவகையுள் ஒன்றாக வல்வினை என்ற பெயராற் குறிப்பிட்டோம் என்பார், கொல்வினையே செய்யுங்கொடுவினையே யானவற்றை நாம் வல்வினையே என்றது என்றார். மற்று - அசை; இங்கு இரங்காமை யாவது தம்புதல்வனையிழத்தல் பற்றிச் சிறிதும் மனம் வருந்தாமை. பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த் தன்மை யளித்தா னெப்பொலிந்து மருவு மகிழ்ச்சி யெய்தஅவர் மனைவி யாருங் கணவனார் அருமை யுயிரை யெனக்களித்தான் என்று மிகவும் அகமலர இருவர் மனமும் பேருவகை எய்தி யரிய வினைசெய்தார் (பெரிய. சிறுத்தொண்டர் புராணம் செய். 64) எனவரும் பாடல் அவ்விருவரும் தம்பிள்ளையை யரிந்து கறியாக்கி அடியாரை உண்பிக்குந் திறங்கொண்ட மனமகிழ்ச்சியினை நன்கு புலப்படுத்தல் காணலாம். 19. பாதக மென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும்-சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தன்செயலாற் றான். இதுவும் அது, (இ-ள்) சிவபூசனையில் ஈடுபட்டிருந்த சண்டீசப்பிள்ளையார் (சிவபூசைக்குரிய பாற்குடத்தைத் தனது காலாற் சிதைத்த எச்சதத்தனைக் கொல்லுதல்) ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றான கொலையென்றும் அதனைச்செய்தல் பழியுடையசெய்கையாம் என்றும் சிறிதும் எண்ணிப் பாராமல் தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையும் தனக்கு மறைஓதுவித்த வேதியனும் குருவும் ஆகிய அவனுடைய இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்திடக் கண்டு இறைவர் சண்டீசநாயனாரது வல்வினையின் திறத்தால் சிவமாந் தன்மைப் பெரும் பதத்தினை அவர்க்கு வழங்கியருளினார் என்னும் மெய்ம்மை நிகழ்ச்சியினை (மாணவனாகியநீ திருத்தொண்டர் வரலாறுகளிற்) கண்டுணர்ந்தனை யல்லவா? எ-று. பாதகம் என்பன கொலை முதலிய கொடும் பாவங்கள். பழியாவது அத்தீவினைகளைச் செய்தோரைக்குறித்து உலகத்தாராற் கூறப்படும் இகழ்ச்சியுரை. சண்டீசப்பிள்ளையார் சிவபூசனைக்கிடர் செய்த எச்சதத்தன் என்னும் தன்தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்திய ஒரு செயல், பிறப்பால் வேதியனைக் கொன்றதும் உறவால் தந்தையைக் கொன்றதும் உணர்வாற் குருவைக் கொன்றதும் ஆகிய முத்திறக் கொலைப்பாவங்கட்கும் அவைபற்றிய பழிப்புரைகட்கும் இடனாகிய செயல் என்பதனைத் தெரிந்த நிலையிலும் அதனைப்பொருட்படுத்தாமல் சிவகருமஞ் சிதைத்தானைக் கோறல் தீதில்லை என்ற துணிவுடன் நிகழ்த்திய அருஞ்செயலாம் என்பார். பாதகம் என்னும் பழியென்று பாராதே தாதையை வேதியனைச் சேதிப்ப என்றார். சேதித்தல் வெட்டி வீழ்த்தல். எச்சதத்தனுடைய கால்கள் இரண்டினுள் பூசனைக்குரிய பாற்குடத்தை உதைத்துச்சிதைத்தது ஒருகாலேயாயினும் அக்காலுக்கு உறுதுணையாய் நிலத்தில் ஊன்றி நின்றது மற்றொரு கால் ஆதலின், சிவபெருமான் பூசனைக்குத் தீங்கு செய்தது அதற்கு உறுதுணையாய் நின்றதுமாகிய இரு தாள்களும் தண்டனைக்குரியனவே என்னும் முறைமையினால் எச்சதத்தனுடைய இரண்டு கால்களையும் ஒருங்கே வெட்டி வீழ்த்தினார் என்பார், தாள் இரண்டுஞ் சேதிப்ப என்றார். இங்ஙனம் சண்டீசப்பிள்ளையார் இறைவன்பால் கொண்டபேரன்பினால் சுற்றத்தொடர்பறச் செய்த அரிய செயலை கண்டு சிவபெருமான் பத்திமுதிர்ந்த பாலகனாராகிய அவரைத் தம் மைந்தர் என அருளால் எடுத்து அணைத்து நம்பொருட்டால் ஈன்றிதாதை விழஎறிந்தாய்; இனி உனக்கு அடுத்ததாதை நாம்; சண்டீசனுமாம் பதந்தந்தோம் எனச் சிவமாந்தன்மைப் பெரும்பதத்தை வழங்கியருளிய திறம்புலப்பட, தாதையைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசர் கண்டு சண்டீசர் தன்செயலால் தாமாம்பரிசு அளித்தார் என்றார் கண்டாயே- (இச்செய்தியினைத் திருத்தொண்டர் வரலாறுகளிற்று கண்டுணர்ந்தனையல்லவா? கண்டாயே என்புழி ஏகாரவினா தேற்றப் பொருள் தந்து நின்றது. இத்திருக்களிற்றுப் படியார், தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளாற் றேவர் தொழப் பாதகமே சோறு பற்றியவா தோணோக்கம் எனவரும் திருவாசகப்பனுவலை யடியொற்றியமைந்துள்ளமை ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். 20. செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை ஐய இதுவமுது செய்கென்று---பையவிருந் தூட்டி யறுத்தவர்க்கே யூட்டி யறுத்தவரை நாட்டியுரை செய்வதென்னோ நாம் இதுவும் அது, (இ-ள்) தாம் பசியால் களைப்புற்று இடறி வீழ்ந்த நிலையில் வயல் வெடிப்பிற் சிதறிய செந்நெலரிசி, கீரை, மாவடு என்னும் படிக் கட்டளையாகிய இதனை ஐயனே திருவமுது செய்தருள்க என்று வேண்டி மெல்ல அமர்ந்திருந்து தம்முடைய குரல்வளையாகிய மிடற்றுத் தண்டினை அரிவாள் கொண்டு அறுத்து, (வயல்வெடிப்பிற் சிதறிய படிக்கட்டளைப் பொருள்களை) இறைவராகிய அவர்க்கே திருவமுதாம் படி உண்பித்து (த்தமது பிறவிவேரை) அறுத்தலாகிய வல்வினையைச் செய்த அரிவாட்டாய நாயனாரை இவ்வியல்பினரென நிலைநிறுத்தி நாம் புகழுமாறு எங்ஙனம்? (அவர்தம் புகழ்த்திறம் நமது உரையின் எல்லைக்குள் அடங்காது எ---று. செய்---வயல், உகுத்தல்---வீழ்ந்து சிதறுதல். திருப்படி மாற்று---திருக்கோயிலின் நாள் வழிபாட்டில் திருவமுதுக்குரிய படிக்கட்டளைப் பொருள்களாகிய செந்நெலரிசி முலியன. ஐய---இறைவனே. இது அமுது செய்க---வீழ்ந்து சிதறிய இதனைத் திருவமுது செய்தருள் வாயாக. பைய இருத்தல்---தளர்ந்து வீழ்ந்த மயக்கம் நீங்க மெல்ல அமர்தல். ஊட்டி---மிடற்றுத் தண்டு. ஊட்டி---உண்பித்து நாட்டுதல்---நிலை நிறுத்தல். சோழ நாட்டிற் கணமங்கலம் என்ற ஊரிலே வேளாண்குடியிலே தோன்றிய தாயனார் சிவபெருமானுக்குச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் ஆகியவற்றை நாடோறும் தருவதனைத் தமது நியமமாகக் கொண்டு வாழ்ந்தார். செல்வம் நீங்கிய வறுமை நிலையினும் கூலிக்கு வேலை செய்து இத்திருப்பணியினைத் தடையின்றிச் செய்துவரும் தாயனார் ஒரு நாள் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவுமாகிய திருவமுதினை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு முன் செல்ல இறைவரது திருமஞ்சனத்துக்குரிய பால் முதலியவற்றை அவர்தம் மனைவியார் எடுத்துக் கொண்டு பின் சென்றார். செல்லும் வழியில் தாயனார் பசியினாற்களைப்புற்று வயல் வெடிப்பில் இடறிவிழுந்தார். அவர் கொண்டு சென்ற உணவுப் பொருள்களும் வயல் வெடிப்பினுள் உக்கன. இறைவன் இவற்றைத் திருவமுது செய்தருளும் பேறு பெற்றிலேனே என வருத்தமுற்ற தாயனார் தம் கையிலுள்ள நெல்லுறுக்கும் கதிர்வாளால் தமது கழுத்தையரியத் தொடங்கினார். அந்நிலையிற் சிவபெருமானது திருக்கை வயல் வெடிப்பினின்றும் வெளிப்பட்டுத் தாயனார் கையைப் பற்றிப் பிடிக்க மாவடுவுடன் கூடிய திருவமுதினை இறைவன் அமுது செய்தமைக்குரிய அடையாளமாக விடேல் விடேல் என்னும் ஓசை வயல் வெடிப்பினின்றும் தோன்றியது. அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையுடன் விடை மீதுவிசும்பில் தோன்றித் தாயனார்க்கும் அவர் தம் மனைவியார்க்கும் திருவருள் புரிந்தார் என்பது வரலாறு. அட்கொள்ளும் ஐயர்தாமிங் கமுது செய்திலர்கொல் என்னப் பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்பு காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தி னோடே ஊட்டியும் அரியாநின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார் (பெரிய-அரிவாட்-17) எனவரும் பெரியபுராணப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தகு வதாகும். சிறுத்தொண்டர், சண்டீசர், அரிவாட்டாயர் ஆகிய நாயன் மார் மூவரும், சிவனடியார் திறத்தும் சிவபெருமான் திறத்தும் தாம் கொண்டுள்ள பேரன்பு காரணமாகப் பிள்ளைப்பாசமும் சுற்றத் தொடர்பும் தமது உடற்பற்றும் அற்றொழிய நிகழ்த்திய செயற்கரிய செயல்கள் சிவதன்மவகையுள் வல்வினைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளனவென்பதும், இவற்றின் தன்மையினையும் நிகழ்ந்த காரணங்களையும் இவற்றால் விளைந்த பயனையும் உலகியல்நோக்கில் வைத்து எத்தகைய நூலளவைகளாலும் ஆராய்ந்து வரையறுத் துரைத்தல் இயலாதென்பதும், இச்செயல்கள் உலகியல் நோக்கில் பெருங்குற்றங்களாகத் தோன்றுவனவாயினும் உயிருணர்வாகிய போதங்கெட்ட நிலையில் ஓங்குணர்வினுள் அடங்கிப் பசுகரணங்கள் சிவகரணங்களாந் தன்மையினைப் பெற்ற பெருமக்களாற் செய்யப் பெற்றனவாதலின் உணர்வியல் நோக்கில் இவை தவச் செயல்களாகவே கொள்ளத்தக்கன என்பதும் இம் மூன்று திருவெண்பாக்களாலும் முறையே உணர்த்தப் பெற்றன. 21. செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டார்-ஐயா உழவுந் தனிசும் ஒருமுகமே யானால் இழவுண்டோ சொல்லா யிது. இது தன்செயலற இறைவனது அருள்வழியடங்கிச் செயல் புரிவார்க்கு எத்தகைய வல்வினைத் தொடர்பும் இல்லையென் கின்றது. (இ-ள்) தாம் செய்யும் செயலே சிவன் செயலாக அமையும் படி (இறைவனது அருளின்வழிச்) சென்று தம் உடல் பொருள் ஆவியனைத்தையும் உடையானாகிய (இறைவனுக்கே யுரியவாக மெல்ல ஒப்படைத்தவர்கள் (இரு வினைத் தொடக்காகிய) சுமை தீர்ந்தோராவர். ஐயனே, உழவனொருவன் தொழில் புரியும் வயலும் அதன் பயிர்ச் செலவுக் கெனப் பெறும் கடனும் ஒருவரிடத்திலேயே அமையுமானல் அவ்வுழவனுக்கு இழப்பு (நட்டம்) ஏற்படுமோ கூறுவாயாக, அது போலவே (தன் செயலறச் சிவன் செயல் வழியடங்கிய பணிபுரிதலாகிய) இதுவும் வினைத் தொடக்காகிய சுமைநீங்க வீடுபேறாகிய விளைவினைக் கேடின்றி நல்கும் எ-று. செய்யும் செயல்-இச் செயலுக்குரிய வினைமுதல் நான் என்னும் உணர்வுடன் உயிர்கள் செய்யும்செயல், செயலாதல்-சிவன் செயலாகத் திருந்துதல். தமைப் பையக்கொடுத்தலாவது அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமுங், குன்றேயனையாய் என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ, இன்றோரிடையூ றெனக் குண்டோ எண்டோள்முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ விதற்கு நாயகமே எனத் தன் உடல் பொருள் ஆவியனைத்தையும் இறைவனது உடைமையாக ஒப்புவித்து இறைவனது அருளாணையின் வழியடங்கி நின்று செயல் புரிதல். பரம்-பாரம், சுமை. கெடுதல் - நீங்குதல். ஐயா என்றது இந்நூலாசிரியர் தம் மாணவனை நோக்கிக் கூறுமுறையில் அமைந்த விளியாகும். உழவு - உழுதற்றொழில். தனிசு - கடன் (நாலடியார்- 297) ஒருமுகமேயாதலாவது ஒருவர் இடமாக அமைதல்; என்றது உழவன் தான் செய்யும் பயிர்த்தொழிலும் அதற்கு உதவியாகப் பெறும் கடனும் ஒருவரது பொறுப்பில் அமைதல். இங்ஙனம் உழவும் கடனும் ஓரிடத்தேயமையுமானால் பருவமழையின்மை பெருவெள்ளம் முதலியனகாரணமாக விளைவு குறையநேர்ந்தாலும் அதனால் வரும் இழப்பு அவ்வுழவனைச் சாராது; செய்த தொழிலுக்கேற்ற ஊதியத்தை அவன் பெறுதல் உறுதி என்பதுணர்த்துவார் உழவுந்தனிகம் ஒருமுகமேயானால் இழவுண்டோ என வினவினார். இழவு-இழத்தல், நட்டம். இழவுண்டோ என்புழி ஓகாரம் எதிர்மறை. இழப்பு எதுவும் இல்லை என்பதாம். ஒருவனுக்கு உழவு ஓரிடத்திலும் தனிசு (கடன்) ஓரிடத்திலும் ஆனால் ஒன்றுக்கு ஒன்று உதவி கூடாது. அவையிரண்டும் ஓரிடத்திலேயானால் இவன் சூரனாய்விடுகை சந்தேகமில்லை; அதுபோலச் செய்கின்ற செயல்களில் அகிதம் (பிறர்க்கு இன்னா) வாராமற் சிவனைநோக்கியே செய்தும், இந்தச் செயல்களும் சிவன் செயலென்றே கொண்டு தம்மையும அவன் கையிலே கொடுத்துப் பரம் (சுமை) கெட்டு விடுகையாலே இவன் பெறுகின்றமுத்திக்கும் இழவுண்டாகுமோ? இதனை விசாரித்துச் சொல்லாய் எனத் தில்லைச் சிவப்பிரகாசர் தரும் உரைவிளக்கம் இங்கு உளங்கொளத் தகுவதாகும். உழவுந் தனிசும் ஓரிடத்திலே என வழங்கும் பழமொழி இத்திருக்களிற்றுப்படியாரில் இடம்பெற்றுள்ளமை காண்க. இதனுள், ஆன்மபோதமிறந்த அறுபத்துமூவர் முதலான பெரியோர்களைப் பொதுப்படக்கூறி வல்வினைக்கு விரிவுசொன்னது கண்டு கொள்க என்பது பழையவுரையாசிரியர் தரும் பொருட் குறிப்பாகும். அ. ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று மீதானத் தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற. இஃது ஆன்மா தற்போதங்கெடச் சிவபரம்பொருளோடு ஒரு நீர்மையாகக் கூடிநிற்றற்குரியதோர் உபாயம் உணர்த்துகின்றது. (இ-ள்) மனம் புறத்தேபலவற்றிலும் பரந்து விரியாமல் அகத்தே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆஞ்ஞை என்னும் ஆதாரங்களில் ஆறிலும் இறைவனுக்குரிய அந்தந்தத் திருவுருவங்களை முறையே தியானித்துப் பழகிய பயிற்சியினாலே அவ் ஆறு ஆதாரங்களுக்கும் மேலாய் நிராதாரமாகிய மனவகைவற்றவிடத்தே நீ சென்று மேலிடமாகிய திருவருளிடத்தே செல்வாயாக. தூயோனாகிய இறைவனைக் கூடுதற்குரிய இம் மேலிடமாகிய அத்திருவருளேயாம். எ-று. இத்திருவுந்தியார், ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனோடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே. (709) எனவருந்திருமந்திரத்தை அடியொற்றியமைந்ததாகும். ஆறு ஆதாரங்களிலும் வைத்து முறையே வழிபடுதற்குரிய அதிதெய்வங்களாகிய மூர்த்திகளின் திருவருளுடனே மேற்சென்று புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்திற்கு அப்பால் மேலான பிரம ரந்திரமாகிய வெளியில் (ஆயிரவிதழ்த்தாமரையில்) தற்பரையாகிய சத்தியும் கூடிய சிவபரம்பொருளோடு அறிவுத்தானமாகிய மேதை முதலிய பதினாறு கலைகளையுடைய மதிமண்டலத்தையடைய மேற்பட்டுத் தோன்றும் பேரொளிக் காட்சியில் ஓதுதற்கும் சிந்தித்தற்கும் அரிய நிலையில் ஒன்றி இன்புறுதலே சிவானந்த யோகமாம் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். ஆறு ஆதாரங்களாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன. இவ்விடங்களில் வைத்து வழிபடுதற்குரிய அதிதெய்வங்கள் முறையே விநாயகன், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்போராவர். மீதானம்---(ஆறு ஆதாரங்களுக்கும்) மேலாகவுள்ள இடம்; என்றது, புருவநடுவாகிய ஆஞ்ஞைத்தானத்திற்கு மேலாகவுள்ள பிரமரந்திர வெளியை. மேதை என்பது ஞானத்தீயாகிய கலை. இது தீப்பிழம்பின் நிறமுடையது என்பர். ஈரெண்கலை -- பதினாறு கலை நிலைகள். பிரமரந்திரத்திற்கு அப்பாலுள்ள பரைவெளியிலுள்ள பதினாறு கலை நிலைகளாவன : 1. அகாரம், 2. உகாரம், 3. மகாரம், 4. விந்து, 5. அரைமதி, 6. திரோதினி, 7. நாதம், 8. நாதாந்தம், 9. இடப்புறத்துச் சத்தி, 10. வியாபினி, 11. வியோமரூபை, 12. அனந்தை, 13. அநாதை, 14. அநாசிருதை, 15. சமனை, 16. உன்மனை இவை பதினாறும் பராசத்தியின் நிலைகள் எனவும், இவற்றுள் அகரம் முதல் நாதாந்தம் வரையுள்ள எட்டும் ஆதாரம் எனவும், சத்திமுதல் உன் மனைவரையுள்ள எட்டும் நிராதாரம் எனவும் கூறுவர், மனம் புறப்பொருள்களிற் செல்லாமல் உடம்பின் அகத்தேயுள்ள ஆறு ஆதாரங்களிலும் முறையே அவற்றிற்கு அதிதெய்வமாகிய மூர்த்தியைத் தியானித்த பயிற்சியாலே நிராதாரமாகிய மனத்துளக்கமற்ற மேலிடத்திலே பரம்பொருளை வழிபட்டு மகிழுமாறுணர்த்தும் இத் திருமந்திரப் பொருளை, வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே (6---12---1) எனத் திருநாவுக்கரசர் குறித்தருளியமை கூர்ந்துணரத் தகுவதாகும் ஆதாரங்கள் ஆறின் அமைப்பினை விளக்குவது, நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங் காலங்கண் டானடி காணலு மாமே. (திருமந்-1704) எனவருந் திருமந்திரமாகும். நாலிதழ்த்தாமரை வடிவாகிய மூலாதாரமும், ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டானமும், பத்திதழ்த்தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னீரிதழ்த்தாமரை வடிவாகிய அநாகதமும், அவற்றின் மேல் நின்ற பதினாறிதழ்த்தாமரை வடிவாகிய விசுத்தியும், ஆகிய இவற்றின் மூலத்தைத் தரிசித்து அங்கங்கே முடிந்த நிலையெய்தி இவற்றின் முதலாயுள்ள ஈரிதழ்த் தாமரை வடிவாகிய ஆஞ்ஞையில் காலத்தை வென்றவனாகிய சிவபெரு மானுடைய திருவடிகளைக் கண்டு வழிபடும் பேறும் உளதாம் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். ஆறு ஆதாரங்களையும் முறையே தரிசித்து ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) நிலைபெற்று மூலாதார முதல் ஆஞ்ஞை வரை இறைவனைச் சோதிவடிவாகக் கண்டு வழிபட்டால் திருவடி ஞானம் பிறக்கும் என்பதாம். நிராதாரம் என்பது, மேற்குறித்த ஆறாதாரங்களைப் பற்றாது மனம் அசைவற்று மெய்ப்பொருளோடு ஒன்றி நின்ற நிலை. மீதானம்-ஆறு ஆதாரங்களுக்கும் மேலே தலையில் உச்சியில்மேற் பன்னிரண்டங் குலம் உயர்ந்த இடம். இஃது ஆயிரவிதழ்த் தாமரை வடிவில் அமைந்துள்ளதெனவும் திருவருள்வடிவாகிய மீதானம் எனப்படும் இவ்விடம் சிவபரம் பொருள் விளங்கித் தோன்றுதற்குரிய சிறப்புடையது எனவும், ஆன்மா சிவயோக நிலையிற் சிவத்துடன் கூடி ஒன்றுதற்குல் உயர்ந்த நிலை இதுவேயெனவும் கூறுவர் பெரியோர். எமது உள்யாரே (2---26---1) என ஆளுடையபிள்ளை யாரும், மனத்தகத்தாதலை மேலான் (6---8---5) அப்பூதிகுஞ்சிப்பூவாய் நின்ற சேவடியா (4---12---10) என ஆளுடையவரகம் கூறியருளியது இம் மீதான எனக் கொள்ளுதல் பொருந்தும். ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று என்றதனால் இங்கு கூறப்படும் யோகம் ஆதாரயோகம் நிராதாரயோகம் என இரு திறபடும் என்பதும், ஆதாரயோகம் பயின்றார்க்கே நிராதாரயோக கைவரும் என்பதும் இனிது புலனாம். இத்திருவுந்தியார் பொருளை விளக்க எழுந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும். 22. ஆதார யோகம் நிராதார யோகமென மீதானத் தெய்தும் விதியிரண்டே---ஆதாரத் தாக்கும் பொருளாகி யாக்கும் பொருளாமொன் றாக்காப் பொருளேயொன் றாம். இஃது இருவகையோகத்தின் திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) ஆதாரயோகமென்றும் நிராதாரயோகமென்றும் மேலியமாகிய திருவடியிலே கூடுதற்குரிய நெறிமுறை இருவகைப்படும் அவற்றுள் ஒன்று முற்கூறிய ஆதாரங்களிலே குருவருளால் கற்பிக்க பெற்ற தெய்வத் திருவுருவங்களை மனம் ஒன்றித் தியானித்தலாலே கை கூடுவது. மற்றொன்று அங்ஙனங் கற்பித்துக் கொள்ளப் படாமல் திருவருளாலே கை கூடுவது எ---று. ஆதாரத்து ஆக்கும் பொருளாலே ஆக்கும்பொருள் ஆதாயோகம் எனவும் ஆக்காப்பொருள் நிராதாரயோகம் எனவும் நிரனிறையே பொருள்கொள்க. ஆதாரயோகத்தினைப் பின்வருமாறு தூலம், சூக்குமம், பரம் என மூவகைப்படுத்தி விளக்குவர் தில்லை சிவப்பிரகாசர். கூ. ஆக்கிலங் கேயுண்டாய் அல்லதங் கில்லையாய்ப் பார்க்கிற் பரமதன் றுந்தீபற பாவனைக் கெய்தாதென் றுந்தீபற. இஃது ஆதாரயோகத்தின் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) ஆறு ஆதாரங்களிலே தெய்வத்திருவுருவினைத் தியானிக்கும் பொழுது அவ்விடத்திலே உள்ளதாகத் தோன்றியும், தியானம் இடையீடுபட்ட காலத்து இல்லையாகியும், தியானத்தில் உண்டாய பொழுதும் அறிவினால் ஆராய்ந்து பார்க்குமிடத்துச் சார்பிற்றோன்றாது மறையும் என்றுணர்வாயாக. அப்பரம்பொருள் நம்முடைய தியான பாவனைக்கு எட்டாத பொருளென்றுணர்வாயாக எ-று. பார்க்கின் - ஆராய்ந்து பார்த்தால். பரமது அன்று - மேற்குறித்த ஆதாரங்களாகிய சர்ரபினால் தோன்றுவதன்று. பரம் - சார்பு; இத்தனையும் எம்பரமோ, என்புழி இச்சொல் சார்பென்னும் பொருளிற் பயின்றுள்ளமை காணலாம். இத்திருவுந்தியாரை யடியொற்றியது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும். 23. ஆக்கி யொரு பொருளை யாதாரத் தப்பொருளை நோக்கி யணுவி லணுநெகிழப் - பார்க்கில் இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத் தவனாகை யாதார மாம். இது, முன்னே கூறப்பட்ட ஆதாரயோகத்தைப் பருமைநிலையில் (தூல நிலையில்) வைத்து விளக்குகின்றது. (இ-ள்) உடம்பின் அகத்தே வகுத்துரைக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலே ஒப்பற்ற பரம்பொருளை ஆசிரியன் பணித்த திருவுருவத்திலே தன்மனம் புறத்தே செல்லாதவாறு கற்பித்துக் கொண்டு, அப்படிக் கற்பித்துக்கொண்ட திருவுருவம் மனத்திற்பதியும் படி நெடுநாள் தியானித்து அத்தியானம் கைகூடிய அளவில் அவ்வாதாரங்களை விட்டு அந்தத் தியானத்தின் முதிர்ச்சியாலே தியானித்தோம் என்ற தற்போதங்கெட்டு ஏகமாகிய அப்பரம்பொரு ளொன்றுமே இவன்பால் மிக்குத் தோன்றும். இவ்வாறு தியானிப்பானும் தியானிக்கப்படுபொருளும் என்னும் உயிருணர்வு கெட ஏகமாகிய அப்பரம்பொருளேயாய்க் கூடியொன்றுதல் ஆதாரயோகமாம் எ-று. ஆதாரத்து ஒருபொருளை ஆக்கி அப்பொருளை நோக்கி அணுநெகிழ அணுவிற் பார்க்கின் இவன் ஆகை தான் ஒழிந்திட்டு ஏகம் ஆம், ஏகத்து அவன் ஆகை ஆதாரமாம் என இரு தொடராக இயைத்துப் பொருள் கொள்க. ஒருபொருள் -ஒப்பற்ற பரம்பொருள். ஆக்குதல்-ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் திருவுருவுடையதாகக் கற்பித்துக் கொள்ளுதல். நோக்குதல்-மனம்புறப்பொருளிற் செல்லாமல் அகத்தே கற்பித்துக் கொண்ட திருவுருவத்தினை இடைவிடாது தியானித்தல். அணு-ஆன்மா. அணு நெகிழப் பார்த்தலாவது தற்போது கெடத் தியானித்தல். இவன்-ஆன்மா. அவன்-இறைவன். ஆகை ஆதல். ஏகம்-ஒன்றாகிய பரம்பொருள். இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றுந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும்நீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யுணரகிற் பாரே எனவரும் திருவாசகம், அணுவில் அணுநெகிழத் தியானிக்கு முறையினை அறிவுறுத்தும் திருவருளிலக்கியமாகத் திகழ்தல் உணரத் தகுவதாகும். 24. கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் --- கொண்ட இருபொருளு மன்றியே இன்னதிது வென்னா ஒருபொருளே யாயிருக்கும் உற்று. இஃது ஆதாரயோகத்தின் இயல்பினை நுண்மைநிலையில் வைத்து (ச்சூக்குமமாக) விளக்குகின்றது. (இ-ள்) தான் தன் அகத்தே தியானிப்பதாகக்கொண்ட பொருளை நுணுகநோக்கிப் பரமாணுவிலும் மிக நுண்ணியதாகக்கூறு படக்கூர்ந்து தியானிப்பானாயின் அங்ஙனம் தியானித்தலை மேற்கொண்ட அவனும் தன்னால் தியானிக்கப்பெறும் பொருளின் தன்மை போன்ற மிகவும் நுண்ணியனாவான். அந்நிலையில் தியானித்தலைக் கொண்ட ஆன்மாவும் தியானத்திற் கொள்ளப்பெற்ற பரம்பொருளும் ஆக இரு பொருளும் என வேறுபடக் தோன்றுதலன்றி, இன்னதன்மையது இதுவென்று உணரப்படாத ஒப்பற்ற பரம்பொரளொன்றுமேயாகி அங்குப் பொருந்தித் தோன்றும் எ-று. கொண்டது ஒருபொருள் என்றது தியானிப்பதாக அகத்துட் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளை. கோடிபடக் கூறுசெய்தலாவது, அதன் இயல்புகளைப் பலதிறத்தாலும் பலகூறுபடப்பகுத்து ஆராய்தல். கொண்டவன் என்றது, தியானத்தைமேற்கொண்ட ஆன்மாவை. உணர்ந்ததன்வண்ணமாந்தன்மையதாகிய ஆன்மா எந்தப்பொருளை இடைவிடாது நினைக்கின்றதோ அந்தப்பொருளின் தன்மையதாகும் என்பார், கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் என்றார். அஞ்சே யஞ்சாக அறிவே யறிவாகத் துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற துய்ய பொருளீதென் றுந்தீபற. இஃது ஆதாரயோகத்தின் முடித்த பயனாகிய மந்திரயோகம் உணர்த்துகின்றது. (இ-ள்) சிவாயநம என்னும் திருவைந்தெழுந்தே இறைவன். திருவருளாகிய சத்தி, ஆன்மா, எழில்மாயை, மலம் என்னும் ஐந்து பொருளின் இயல்பினைப் புலப்படுத்துவனவாக அவற்றை உள்ளவாறுணர்ந்த உயிரறிவு சிவஞானத்தோடு ஒன்றிப் பொருந்த மலவிருளிலே உறங்காமல் திருவருளாலே பரம்பொருளை இடைவிடாது தியானித்திருப்பாயாக. செம்பொருளாகிய இது தன்னையொன்றும் ஊடுருவவொண்ணத் தூய்மைவாய்ந்ததென்று உணர்வாயாக எ-று. அஞ்சு - திருவைந்தெழுத்து. அஞ்சு ஆதல் - அதனால் உணர்த்தப்பெறும் பொருளாகத் தோன்றுதல். அறிவு- உயிரறிவு. அறிவாதல்- சிவஞானத்தோடு பொருந்தி ஒன்றாதல். துஞ்சுதல்- மலவாதனையிலே உறங்குதல். துஞ்சாது உணர்ந்திருத்தலாவது, மலவிருளிற்பட்டு உறங்காது திருவருள்ஞானத்தால் மெய்ப்பொருளை ஒன்றியுணர்ந்து இன்புற்றிருத்தல். துய்ய - தூய. இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது பின்வருந் திருக்களிற்றுப் படியாராகும். 25. அஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டுதலால் அஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந் --- தஞ்செழுத்தை யோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன் கேதமற வந்தளிக்குங் கேள். இது திருவைந்தெழுத்தினை அறிவால் எண்ணுதலாகிய மந்திரயோகத்தை அறிவுறுத்துகின்றது. (இ-ள்) திருவைந்தெழுத்தே சத்தியையும் சிவனையுங்காட்டு கின்றபடியினாலே அத்திருவைந்தெழுத்தைப் பேரின்பத்திற்கு வழியென்று அறிந்துகொண்டு (அசைவற்று ஓரிடத்திலிருந்து) திருவைந்தெழுத்தை ஓதத் தொடங்கினால் ஆன்மபோதங்கெடும். கெட்டவுடனே எல்லாத் துன்பங்களும் கெட உமையொருபாகனான் இறைவன் உயிரோடு உடனாய் நின்று அருள்புரிவான். இவ்வுண் மையைக் கேட்டுணர்வாயாக. எ-று. திருவைந்தெழுத்தில் சிகரம் சிவத்தையும், வகரம் சத்தியையும் யகரம் சத்தி சிவத்தால் உய்விக்கப்பெறும் ஆன்மா இறைவனும் என்றும் அடிமை என்பதனையும், நகரம் ஆன்மாவைத் தோற்றம் காலமாகப் பற்றியுள்ள ஆணவமலம் கழலும்படி உயிரின்கள் மறைந்து நின்று செயற்படுத்தும் சத்தியின் கூறாகிய திரோதசத்தியையும், மகரம் அத்திரோத சத்தியாற் சுழலுதற்குரிய மலத்தையும் குறிப்பனவாதலால் இவற்றைத் தொகுத்து நோக்கும்வழிச் சிவமும் சத்தியுமே மேற்பட்டு விளங்கும் என்பார். அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக்காட்டுதலால் என்றார். அஞ்செழுத்தை ஆறாகப் பெறுதலாவது, குறையுடைய உயிரறிவினாலும் கலையறி வினாலும் உணரவொண்ணாத இறைவனை அம்முதல்வனது திருவருளேகண்ணாகக்கண்டு சிந்தையில் தெளிதற்குத் திருவைந் தெழுத்தே சாதனமாதலில் அதனைக் குருமுகமாகப்பெற்று அதன்பொருளையறிதல் வேண்டும் என்பார், அஞ்செழுத்தை ஆறாகப்பெற்று அறிந்து என்றார். ஆறு வழி; சாதனம். பெறுதல்-ஆசிரியனால் உபதேசிக்கப்பெறுதல். வேம்பாகிய கைப்புப்பொருளையே தின்று பழகிய புழு கரும்பினைத் தின்று அதன் சுவையில் ஈடுபட்ட நிலையிலும் பழைய பழக்கவாதனையால் வேம்பினையே மீண்டும் சுவைத்தற்கு எண்ணுமாறுபோல உலகப்பொருளை அசத்து எனக்கண்டு நீங்கிய உயிர், சிவஞானத்தால் மெய்ப்பொருட்காட்சி நேர்பட்டவிடத்தும் பழக்கவாதனையால் பண்டைச் சிற்றுணர்வைநோக்கி நிற்றல் இயல்பாதலின் அங்ஙனம் புறத்தே செல்ல நோக்குவதாகிய தன்னறிவைப் புறத்தே செல்லாதபடி மடக்கி அகத்தே ஒருகுறியின்கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்து ஓதுமுறைமையின்வைத்துச் சிந்திக்கச் சிந்திக்க அச்சிந்தனை, உலகவாதனையாகிய புறநோக்கத்தைப் பற்றறக்கெடுத்து ஞானத்திரளாகிய மெய்ப்பொருளை இனிது விளக்கித் தற்போதம் கெடக் குறைவிலா நிறைவாகிய அப்பொருளில் ஆன்மாவை ஒன்று படுத்தும் என்பார் அஞ்செழுத்தை ஓதப்புக்கு உள்ள மதியுங்கெடில் உமைகோன் கேதம் அறவந்து அளிக்கும் என்றார். ஓதப்புக்கு ஓதப்புகுதலால். உள்ளம்- ஆன்மா. மதி என்றது, குறையுணர்வாகிய உயிரறிவினை. கேதம்-பிறவித்துன்பம். அற-ஒழிய. இத்திருக்களிற்றுப்படியார் வெண்பாவை அடியொற்றித் திருவைந்தெழுத்தோதிப் பயன்பெறும் திறத்தினை விளக்குவது, அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில்- அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கின் அண்டனாம் சேடனாம் அங்கு. (சிவஞானபோதம் சூ 9. அதிகரணம் 3.) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். ஆன்மா சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன்னுடம்பினுள்ளே உந்தி, இதயம், புருவநடு என்னும் மூன்றனையும் முறையே பூசைத்தானம். வேள்வித்தானம் தியானத்தானமாகக் கருதிக்கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும்முறைப்படி இதயத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனையமைத்துக் கொல்லாமை, ஐம் பொறியடக்கல் , பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்மலர்களைச் சாத்தித் திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து, ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலே உந்தியில் ஓமஞ்செய்து ஞான அனலை எழுப்பி அதன்கண் விந்துத்தானத்து அமிழ்தமாகிய நெய்யினைச் சுழுமுனைநாடி, இடைநாடியாகிய சுருக்குசுருவங்களால் ஓமித்து விந்துத்தானமாகிய புருவநடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே பரம்பொருளாகிய அது, (தத்) தியானிப்போனாகிய நீ, (துவம்) அருளால் ஆகின்றாய் (அசி) என்னும் மகாவாக்கியப் பொருளாகும் முறைமை நோக்கி, அதனாற் சிவோகம் (சிவமேநான்) எனப் பாவிப்பானாயின், அப்பாவனைக்கண் அம்முதல்வனாகிய சிவன் விளங்கித் தோன்றுவான்; அங்ஙனம் தியானிக்கும் ஆன்மா அப்பரப் பொருளுக்கு அடிமையாவன் என்பது இவ்வெண்பாவினால் உணர்த்தப்பெறும் பொருளாகும். இனி, இத்திருக்களிற்றுப்படியார் பாடலில் அஞ்செழுத்து என்றது, திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலையாகிய ஓங்காரமாகிய பிரணவத்தைக் குறிக்குமெனக்கொண்டு தில்லைச்சிற்றம்பலவர் பின் வருமாறு உரை வரைந்துள்ளார். அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கிற பஞ்சாக்கர மான பிரணவத்துக்குப் பிரமா விஷ்ணு உருத்திரர் மகேசுரர் சதாசிவர் இவர்கள் அதிதேவதைகளுமாய், ஓங்காரமாயே நின்று நடத்துகின்ற இந்த ஐந்தெழுத்தே சத்தியையுடைய சிவன் திருமேனி கொண்டு நடத்துகின்ற முறைமையைக் காட்டுதலால் இந்த ஐந்தெழுத்தும் மூலாதாரத்திலே அகரமும் பிரமாவும், நாபிக்கமலத்திலே உகாரமும் விஷ்ணுவும், இருதய கமலத்திலே மகாரமும் உருத்திரனும், கண்டத்திலே விந்துவும் மகேசுவரனும், புருமத்தியிலே நாதமும் சதாசிவமும் இப்படிச் சுழுமுனைவழியாக நிற்கின்ற முறைமையைக் குரு உபதேசத்தாலே பெற்று, இந்த ஐந்தெழுத்தையும் மூலாதாரத்திலே, பிரமரந்திரத்திலே செல்ல உச்சரித்தால், இந்தப் பிரணவ சொரூப முங்கரைந்து விக்கிரகங்களும் ஒரு நீர்மையாய் உனக்கு ரூபமாய் நாதாந்தத்திலே அருளைப் பெறுவையென்று ஆசாரிய அருளிச் செய்ய அறிந்து, இந்த ஓங்காரமான ஐந்தெழுத்தும் உச்சார பேதத்திலே நாற்பத் தொன்பதாமெழுத்தும் பதினாலா மெழுத்தும் ஆறாமெழுத்தும் இவை கூடின விடத்திலே விந்துவும் நாதமும் இந்த முறைமையிலே ஐந்தெழுத்தாமென்றும் வேதாகமங்களிலே விதிக்கையால், இந்த ஐந்தெழுத்தையும் உன் தத்துவமான உச்சரிப்புக்கு வந்து நாதம் முடிந்தவிடத்திலே கிஞ்சிஞ்சமான (மெல்லி தாய்த் தோன்றும்) ஆன்மபோதமுங் கெடில் அப்பொழுதே சத்திக்குக் கர்த்தாவாகிய சிவன் குற்றமறத் தோன்றி உண்மையான சொர்ப்பத்திலே கூடி இரக்ஷிப்பன். (மாணாக்கனே) கேட்பாயாக என்க என்பது தில்லைச் சிற்றம்பலவர் எழுதிய உரைவிளக்கமாகும். உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா (திருவாசகம். சிவபுராணம்) எனத் திருவாதவூரடிகள் அருளிய தொடருக்கு அமைந்த விளக்கமாக இவ்வுரையமைந்துள்ளமை உணர்ந்து இன்புறத்தகுவதாகும். கக. தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம் நோக்கிற் குழையுமென் றுந்தீபற நோக்காமல் நோக்கவென் றுந்தீபற. இது, நிராதார யோகத்தின் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) உலகுயிர்கள் யாவும் தானேயாய் நீக்கமறக் கூடியிருக்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பொருந்தாதபடி அவற்றில் தோய்வற நின்ற ஒப்பற்ற மேலான முழுமுதற் பொருள், நீ நினதறிவினாற் பொருந்தி நோக்குவாயானால் உனக்குத் தன்னுண்மை புலனாகாதவாறு உருவற மறைந்து விடும். ஆகவே அதனை நாம் நம் மறிவினால் நோக்குகின்றோம் என்னுந் தன்முனைப்பினை விடுத்து அதன் அருளின் துணை கொண்டு நோக்குவாயாக. எ---று. தாக்குதல் - எல்லாப் பொருள்களிலுந் தோய்ந்து ஒன்றாய்ப் பிரிவற நிற்றல். தாக்காது நிற்றல் - அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தன்னியல்பு குன்றாமல் தனித்து நிற்றல், தற்பரம் - தனக்குத் தானே பரம்; என்றது, தனக்குவமையில்லாத இறைவன் என்றவாறு. நோக்குதல் - யான் ஆராய்கின்றேன் என்னும் உயிர்முனைப்புடன் ஆராய்ந்துகாணப் புகுதல், நோக்காமல் நோக்கல்-நோக்குதற்கருத்தா தானே என்னும் எண்ணத்தைவிட்டு அவனருளே கண்ணாகக்கொண்டு பார்த்தல். குழைதல் - மோப்பக்குழையும் அனிச்சம் என்புழிப்போல கருவறச் சிதைதல்; ஈண்டு புலப்படாது மறைதல் என்ற குறிப்பில் உளப்பெற்றது. ஆறாதாரங்களில் வைத்துக்காணும் அறிவுமுயற்சியையிட்டு அவனருளாலே அம்முதல்வனைக்கண்டு ஒன்றுபடும் யோகமே நிராதாரயோகமாம் என்றவாறு. இத்திருவுந்தியார்க்குரிய உரை விளக்கமாக அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்கள். 26. ஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந் தாக்கித்தா னொன்றொடுந் தாக்காதே-நீக்கியுட னிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய் நிற்கை நிராதார மாம். இது நிராதார யோகத்தின் இயல்பினை விரித்து விளக்குகின்றது. (இ-ள்) ஆன்மபோதத்தாற் கற்பனை செய்ய வொண்ணாத அரும்பொருளாய் எல்லாப் பொருள்களிலும் தான் கூடிநிற்கும் போதே அவையொன்றிலுந் தோயாமல் உயிர்கட்குளவாந் துயரங்களை யறிந்து நீக்கி உடனிருந்து உதவும் பரம்பொருளுடனே பிரியாது நிலைத்துள்ள திருவருளோடு ஒன்றிநிற்றல் நிராதார யோகமாம் எ-று. ஆக்குதல்- கற்பனையால் இன்னவுரு எனக்கற்பித்துக் கொள்ளுதல். இன்னவுரு இன்னநிறமுடைய பரம்பொருள் என ஒருவராலும் கற்பிக்க வொண்ணாத நிலையிற் கற்பனை கடந்த சோதியாகத் திகழ்வது சிவபரம்பொருள் என்பதுணர்த்துவார் ஆக்கப்படாத பொருள் என்றார். நீக்குதல் - உயிர்களின் துன்பங் களைப் போக்குதல். உடன் நிற்கும் பொருள் என்றது, உயிர்க்குயிரா யுடனிற்கும் முழுமுதற் பொருளை. உடனிற்கும் பொருளுடனே நிற்கும் பொருள் என்றது, தீயின் வெம்மையும் நீரின் தண்மையும் போன்று சிவபரம்பொருளோடு பிரிவின்றியுடனாய் நிற்கும் திருவருட் சத்தியை. அதனோடு உடனாய் நிற்கையாவது, அத்திருவருளே கண்ணாகக்கொண்டு முழுமுதற்பொருளைக் கண்டு கூடுதல். 27. காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக்- காண்கின்றார் காண்பானுங் காணப் படுபொருளு மின்றியே காண்கையினாற் கண்டனரே காண். இதுவும்அது. (இ-ள்) (திருவருள்காட்டக்) காணுந் தொழிலையுடைய ஆன்மாவின் இயல்பினை உள்ளவாறு கண்ட சிவயோகிகளே காண்கின்ற என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். அங்ஙனங் காண்கின்றவர்களே காண்பானாகிய ஆன்மாவும் காணப்படும் பொருளாக சிவமும் எனப் பிரித்துணரும் வேற்றுமையின்றித் தம்மை மறந்து நினைத்தற்குரிய சிவத்துடன் ஒன்றிவிடுதலால் அம்மெய்ப்பொருளை உள்ளவாறு கண்டு அநுபவிப்பவராவரென்று அறிவாயாக எ-று. காண்கின்றதோர் பொருள் என்றது, சத்து, அசத்து என்ற இருதிறப்பொருள்களையும் அறிவதாய், அறிவிக்க அறியுந்தன் மையதாய், அவ்விருதிறப்பொருளின்கண்ணும் நிலைபெற்ற அநுபவ வுடையதாய்ச் சதசத்தாயுள்ள ஆன்மாவை. கண்ணுதல் என்ற நுதல்விழி நாட்டத்திறையோனாகிய சிவபரம்பொருளை. காட்சிய கண்ணுதலைக்காண்கின்றார் என இயையும், காட்சியறக்காணுதலால் நாமே காண்கின்றோம் என்னும் தற்போதங் கெடத் திருவருளே உடனாய் ஒன்றியுணர்தல். கஉ. மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென் றுந்தீபற தவத்திற் றலைவரென் றுந்தீபற. இது சிவயோக நெறியினை அறிவுறுத்திய குருவின் பெருமை யினை வியந்து போற்றுகின்றது. (இ-ள்) அன்னையின் வயிறு, ஐம்பொறிகள், நனவு கனவு உறக்கம் பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகிய உணர்வு நிலைகள் முதலிய மூலைகளிலேயுண்டான இருளினாலே மறைந்து நினைப்பும் மறப்பும் உடையராய்ச் சுகதுக்கங்களாகிய மயக்கத்தில் அழுந்தின ஆன்மாக்களை கீழ்நோக்கின உணர்வையொழித்துப் பேரின்பத்தில் அழுந்தும்படி கூட்டுவித்த அருட்குருவானவர் மிகவும் அளவிடப் படாத பெருமையினையுடைய இறைவனாவர்; பண்டை நற்றவத்தின் பயனாக ஆன்மாவை மெய்யுணர்வளித்து ஆட்கொள்ள எழுந்தருளிய முதல்வர் என்றுணர்வாயாக எ-று. மாதாவிடத்துண்டான சுரோணிதத்தினிலே பிதாவினிடத் துண்டாகிய சுக்கிலம் பவளப் பையில் முத்தை வைத்தாற்போலப் படுகிற நாளில் சீவனானது, பிராணவாயு வாகனமாகவும், மனம் வழியாகவும், சிவனுடைய ஆஞ்ஞையாலே (ஆணையாலே) சென்று, சுக்கில சுரோணிதத்தின் தலையிலே பதிந்து, கன்மத்துக்கீடாக மூன்றரைக்கோடி யுரோமத்துவாரமும், எழுபத்தீராயிரம் நாடியும் வாயுவிற்பிரதானமான தசவாயுவும், நவத்துவாரமும், எண்சானு டம்பும் ஏழுதாதுவும் ஆறாதாரமும் ஐந்துபொறியும் நாலுகரண மூன்று மண்டலமும் இரண்டு வினையும் எனப் பெயர்பெற்று, அவற்றை ஒன்றெனப் போர்த்த புறத்தோலுமாக ரூபிகரித்து (உருவுகொண்டு) பிராரத்தமளவுந் தன்னுடைய தேகத்தில் உந்திச் சக்கரத்தின் மேலே, கிடந்து, ஆறுமாதமுதல் உந்திநாளத்தாலே மாதாவிடத்திலே அன்னரசமுங்கொண்டு, அவ்வன்னரசத்தின் மிகுதியாலே கீழ்முனை நாடி அடைபட்டு இடையும் பிங்கலை யுந்திறந்து, பிராணவாயு புகுந்து மேல்நோக்கி, நாசித்துவாரங்களாலே விட்ட எழுத்தாலே நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்தறுநூறு சுவாச உச்சானந்தோன்றி, முப்பத்திரண்டு நூறாயிரத்து நாற்பதினாயிரம் உருச் சென்றவாறே உதரகன்மந்தொலைந்து மாதாவிடத்துண்டான பிராண வாயுவிலே தம்பிரானுடைய காருண்ணியத்தாலே சத்தி அதிட்டித்துக் கொண்டு, இந்தச் சத்திபலத்துடனே வாயுவானது பிரஞ்ஞையை (உணர்வினை)ப் பூமியிலே பதிவிக்கவேண்டிய பிரஞ்ஞாபத்திய மென்னும் பெயர்பெற்று, இவனுடைய போதம் போலத் தேகமுங் கீழ்நோக்கி விழும்படி தன்னுடைய பலத்தாலே தலைகீழாகத்தள்ளிப் பூமியில் வந்தபின்பு, தேகத்துக்கு அடுத்த கன்மங்களாலே புசிப்புக்களைக்கருதி இந்திரியங்களாகிய மூலைகளிலேயிருந்து விட யங்களைப் புசித்துப் புசிப் பொழிந்தால், இவனுடைய போதமானது கீழ்நோக்கிச் சாக்கிரமுதல் அதீதம் அளவாக அவத்தைகளுக்கடுத்த தானங்களாகிய மூலைகளிலே அடைந்தும், இப்படி இரவுபகல் இந்த மூலைகளிலுண்டான இருளினாலே மறைந்து விகற்பித்து மயங்கியும் இப்படிப் பொய்ப்பிரகாசமான சுகதுக்கங்களில் அழுந்தாமல் கீழ்நோக்கிய போதத்தை ஒழித்து, உண்மையை யுணர்த்தி, மேலாகிய பிரகாசமான பரமாகாச வெளியிலே விழித்துப் பரபோகத்தில் அழுந்தும்படி கூட்டுவித்த உபாயகுரு மிகவும் அளவிடப்படாத பெருமையையுடைய தம்பிரானாவார். அரிய தவத்திலே நின்று வழிபட்டவர்க்கு வேண்டும் வரங்களைக் கொடுக்க வல்ல கர்த்தாவுமாவார். எனத் தில்லைச் சிற்றம்பலவர் இத்திருவுந்தியாருக்கு எழுதிய விளக்கவுரை உணர்ந்து இன்புறத்தகுவதாகும். தத்துவங்களாகிய மூலைகளிலே கிடந்த ஆன்மாக்களைச் சிவாநுபவமாகிய முற்றத்திலே கொண்டுவந்து விட்டவர் மிகவும் பெரியவர்; அந்தப் பெரியவருந் தவத்தினாலே காணப்பட்ட பெரியவர் எனச் சுருக்கமுந்தெளிவு முடையதாக அமைந்தது இதன் பழையவுரையாகும். தத்துவங்களாகிய மூலைகளிலே ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களைச் சிவாநந்தமாகிய முற்றத்திலே கொண்டுவந்து விட்ட குருவினது திருவருட்பெருமையினை விரித்துரைப்பது, பின்வருந் திருக்களிற்றுப் படியாராகும். 28. பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப் பேசாமை செய்யும் பெரும்பெருமான்---பேசாதே எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால் உண்ணின்றும் போகான் உளன். இது, நிராதாரயோகத்திற்குரிய மோனயோகம் ஆமா றிதுவெ உணர்த்துகின்றது. (இ - ள்) பேசாமையாகிய திருவருளைப்பெற்று அந்த அருளால் வாயாற்பேசவொண்ணாதசிவனைக் கண்டவர்களுக்கு வெளியிட்டுரை வொண்ணாத சிவாநுபவத்தை வழங்கி மோன நிலையினராகச் செய்தருளும் தன்னிகரற்றதலைவனாகிய இறைவன், புறத்தே உரையாடல் மனம் தன்கண் ஒன்றியடங்கும் வண்ணம், சிவயோகநிலையில் இயல்கின்ற யோகியரிடத்திலே அவர்தம் நெஞ்சத்துள்நின்றும் நீங்காது அவர்தம் நெஞ்சத்தே நிலைபெற்றுள்ளான் எ - று. இதன்கண் உள்ள பேசாமை மூன்றனுள் முன்னது. திருவருளையும் இரண்டாவது சொல்லின் எல்லையைக் கடந்து சிவபரம்பொருளையும் மூன்றாவது இவ்வாறிருந்ததென்று வெளியிட்டுரைக்கவொண்ணா சிவாநுபவமாகிய மோனநிலையையு ங் குறித்து நின்றன. இனி, முன்னது பேசாமையாகிய உபாயத்தையும், இரண்டாவது சிவபரம் பொருளையும், மூன்றாவது பின்பு ஓரு சரீரத்திற்புகுந்து பேசாமையகிய பிறப்பற்ற தன்மையினையும் குறிப்பன எனக்கொண்டார் தில்லை சிற்றம்பலவர். பேசாதே எண் ஒன்றும் வண்ணம் இருத்தலாவது புறத்தே யாவரோடும் உரையாடாது சித்தத்தைச் சிவன்பாலே வைத்து மோனநிலையில் இருத்தல். உளன் - உள்ளத்தின்கண் நீங்காது எழுந்தருளியுள்ளான். பெரும்பெருமான் -தன்னொப்பாரில்லாத சிவபரம்பொருள். பெரும்பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான் எனபது திருவாசகம். மூலையிருந்தாரை முற்றத்தேவிட்டவர் தவத்தில் தலைவர் என்னும் இத்திருவுந்தியாரை அடியொற்றிது, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே எனவரும் சிவஞான போத எட்டாஞ் சூத்திரமாகும். கங. ஓட்டற்று நினற வுணர்வு பதிமுட்டித் தேட்டற் றிடஞ்சிவம் உந்தீபற தேடும் இடமதன் றுந்தீபற. இது, சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத சிவபரம் பொருளைக் கூடுதற்குரிய இடம் இதுவென்கிறது. (இ - ள்) பலவிடத்தும் இடம்பெயர்ந்து ஓடுதலின்றி எங்கும் ஒருநீர்மையாய்ப் பரவி நிற்கின்ற திருவருளாகிய ஊரிலே சென்று நேர்பட்டு அப்பால் (ஆன்மா தனக்குறுபொருளாக) வேறெதனையும் தேடாமல் நின்ற இடமே சிவம் விளங்கித்தோன்றும் இடமாகும். அந்த இடம் ஆன்மபோதத்தால் தேடியடைதற்குரிய இடமன்று எ-று ஓடுதலாவது, ஓரிடத்தும் நிலைத்தலின்றி இடம்பெயர்தல். யாதோரசைவுமின்றி உலகுயிர்கள்தோறும் ஒருங்கே பரவிவிரிந்து நிற்பது ஞானமயமாகிய திருவருளாதலின், அதனை ஓட்டற்று நின்ற உணர்வு என்றார். பதி - ஊர். பொய்க்காட்சியான புவனத்தை விட்டு அருளாம் மெய்க்காட்சியாம் புவனம் மேவுநாள் எந்நாளோ என்றார் தாயுமானாரும். பதி ஞானம் எனினும் பொருந்தும். தண்ணிழலாம் பதி என்றார் மெய்கண்டாரும். முட்டுதல் - நேர் படுதல். தேட்டற்று - (ஆன்ம அறிவினால்) தேடுதல் அற்று, நின்ற இடம் - நிலைபெற்ற திருவருளாகிய இடம். இத்திருவுந்தியார்க்கு உரைவிளக்கமாக அமைந்தது. பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும். 29. ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடஞ்சிவமாய் --- நாட்டுற்று நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத் தேடுமிட மன்று சிவம். இது, திருவருள் ஞானம் ஒன்றினாலேயே சிவம் வெளிப்பட்டுத் தோன்றும் என்கிறது. (இ-ள்) அசைவற்று உலகுயிர்தோறும் விரிந்து நிலைபெற்றுள்ள திருவருள் ஞானமாகிய பதியுணர்வை நேர்பட்டு அப்பால் மற்றெந்தப் பொருளையும் தேடுதலற்றிருக்கிற அவாவற்ற தூய நிலையே சிவம் விளங்கித்தோன்றும் இடமாகும். ஆன்மவறிவினால் நாடுதலுற்றுச் சுட்டியுணர்தற்குரிய பொருள்கள் அனைத்தையும் பலவாறாக ஆராய்ந்து தேடிக் காணுதற்குரிய எல்லைக்கண் உள்ளது சிவபரம் பொருள் அன்று எ-று. ஓடு, தேடு, நாடு எனவரும் நெடிற்றொடர்க்குற்றியலுகர மாகிய வினைப்பகுதிகள் ஒற்றிரட்டித்துவந்தன. நாடும் பொருள் என்பது, உயிர்களாற்சுட்டியுணர்தற்குரிய நிலையில்லாத பொருள் களை, உயிர்களாற் சுட்டியுணரப்படும் பொருள்கள் யாவும் ஒரு காலத்தில் விளங்கித் தோன்றி நாளடைவில் மறைந்தொழியும் நிலையில்பொருள்களாம் ஆதலின் யாண்டும் மாறா வியல்பினதா தாகிய சிவம் அப்பொருள்களுள் ஒன்றாதல் இல்லை எனத் தெளிவிப்பார், நாட்டுற்று நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத் தேடும் இடம் சிவம் அன்று என்றார். சிவமாகிய பரம்பொருள் ஆன்மவறினாற் சுட்டியுணரத் தக்க பொருளாயிருக்குமானால், அங்ஙனம் உணரப்படும் உலகப் பொருள்கள் போல அழிபொருளாகிய அசத்தாகும், எவ்வாற்றானும் அறியப்படாத பொருளாயிருக்குமானால், முயற்கோடுபோல இல்பொருளாகும், இவ் விருபகுதியுமின்றிப்பாசஞான பசுஞானங் களால் அறியப்படாமையும் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படுதலுமாகிய இருதிறத்தாலும் சிவம் என்றும் ஒரு நிலையிலுள்ள உள்பொருளேயாம் என்பது புலப்படுத்துவார், நாடும் பொருளனைத்தும் நாட்டுற்று நானாவிதமாகக் தேடுமிடும் சிவமன்று எனவும் ஓட்டற்றுநின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவம் எனவும் இருதொடரால் விளக்கியுரைத்தார். இத் திருக்களிற்றுப்படியாரை அடியொற்றிப் பதிப் பொருளிலக்கணங் கூறுவது, உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே எனவரும் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும். கச. கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி உடந்தை யுடனேநின் றுந்தீபற உன்னையே கண்டதென் றுந்தீபற. இது, திருவருள்ஞானத்தைக் குருவருளால் அறிந்து தற்போதங் கெட நிற்றலே சிவம் பிரகாசித்தற்குரிய முறையாம் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) ஆன்மாவினுடனே தோற்றமில்காலமாக மறைந்து நிலைபெற்றுள்ள சிவசத்தியாகிய அன்னையை ஆசிரியன் ஒளியுடன் தோன்றுமாறு தூண்டி யெழுப்ப, அந்தச் சிவஞானத்துடனே கூடி அத்திருவருள் வழியே நிற்பாயாக. அங்ஙனம் திருவருளுடன் இசைந்து உடன் நிற்கவே சிவமானது உன்னையே கண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ளாநிற்கும் எ-று. கிடத்தல் - மறைந்துகிடத்தல். உயிர்க்குயிராயுள்ள சிவபரம் பொருளோடு பிரிவின்றியுள்ள கேண்மையுடையது திருவருளாகிய சத்தியென்பார், கிழவி என்றார். கிழவி-(சிவத்திற்பிரிவிலா) உரிமை யுடையாள். கிள்ளி எழுப்புதலாவது, ஆன்மாவின்கண்ணே சிவ சத்தி வெளிப்பட்டு ஞானம் வழங்குமாறு மாணவனை அருட் கண்ணால் நோக்கித் தீக்கை புரிதல். எழுப்பி-எழுப்ப; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்து நின்றது. உடந்தையுடனே நிற்றலாவது, திருவருளின் வழியடங்கி அத்திருவருளே கண்ணாக அதனுடன்கூடி மெய்ப்பொருளை நோக்கி நிற்றல். இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும். 30. உணராதே யாவும் உறங்காதே உன்னிப் புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய காலங்கள் செல்லாத காலத் துடனிருத்தி காலங்கள் மூன்றனையுங் கண்டு. இது திருவருளோடு உடந்தையாய் நிற்குமா றிதுவெனவுணர்த்து கின்றது. (இ-ள்) ஆன்மாவாகிய நீ பொருளல்லவென்று அறிந்து நீங்கின உடல் கருவி யுலகு நுகர்பொருள்களிலே வாதனைமிகுதியால் மீண்டும் கூடாதே; இந்த விகற்பங்கள் நீங்கின நிலையிலே மயக்கங்களில் அழுந்தாதே,; இன்புருவாகிய பரம்பொருளை நினது அறிவினால் அறிந்துகூடுதற்கு எண்ணாதே; இக்குற்றங்கள் நீங்கும்படி உனக்கு நடுவேநின்ற திருவருளாகிய ஞானத்துடன்கூடி அதுவேயாய் நிற்பாயானால் யாவராலும் உணர்தற்கரிய, காலத்துள் அடங்காததாய் உலகத்தை நடத்தும் காலத்தின் உருவாகவுள்ள சிவத்துடனே நீயும் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களையும் நினக்கு வேறாகக்கண்டு அழிவின்றியிருப்பாய் எ-று. நீ உன்னிப் புணராதே உறங்காதே, உணராதே பொதுவே நிற்கில், காலங்கள் செல்லாத காலத்துடன் காலங்கள் மூன்றினையும் கண்டு இருத்தி என இயையும். புணர்தல் - முன்னர்விட்டொழிந்த உலகவாழ்விலே மீண்டும் கூடுதல். உறங்குதல்-மயக்கங்களில் அழுந்துதல். உணர்தல்-தற்போதத்தால் அறிய முற்படுதல். பொதுவேநிற்றலாவது. திருவருளோடு உடனாய் நிற்றல். திருவுந்தியாரில் உடந்தையுடன் நிற்றல் என்றதும் இதுவே. காலங்கள் செல்லாத காலம் என்றது, காலதத்துவத்தினைக் கடந்து நிற்கும் காலகாலனாகிய கடவுளை. எவ்வுயிர்க்கும் பொதுவாய் நின்றுதவுந் திருவருளோடு உடனாய் நிற்பின் அம்முதற்பொருளோடு ஒன்றி மூன்றுகாலங்களையுங்கண்டு அழிவிலாப் பேரின்பத்தினை நுகர்ந்திருப்பாய் என்பார், நீ பொதுவாய் நிற்கில் காலங்கள் செல்லாத காலத்துடன் மூன்றனையுங் கண்டு இருத்தி. என்றார், இருத்தி - இருப்பாய். இனி, இப்பாடலின் மூன்றாமடிக்குக் காலங்கள் செல்லாத காதலுடனிருத்தி எனப்பாடங் கொண்டு, மூன்றின் காலங்களையுங் கண்டு காலங்கள் செல்லாத உணர்வரிய காதலுடன் இருத்தி எனக் கொண்டு கூட்டி, பாசம், ஆன்மா, அருள் இவை மூன்றினுடைய அதிகார காலங்களை விசாரித்தறிந்து இந்தக் காலங்கள் செல்லாத, பெத்தனால் அறிதற்கரிதாகிய விருப்பத் தோடுங் கூடியிருப்பை என உரைவரைவர் பழையவுரையாசிரியர். திருக்களிற்றுப் படியாரில் 30, 31 ஆம் பாடல்கள் பின் முன்னாக மாறி நின்றன எனக் கருதவேண்டியுளது. கரு. பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப் பற்றை யறுப்பரென் றுந்தீபற பாவிக்க வாராரென் றுந்தீபற. இஃது, மேற் கூறியவாறு உடந்தையுடனே யுணருமா றிதுவெனவுணர்த்துகின்றது. (இ---ள்) பற்றுக்களை யறுக்கத்தக்க திருவருளாகிய பற்றினை ஆன்மாப் பொருந்தி அந்த ஞானமயமாகியே நிற்கின். அப்பொழுதே ஞானமயமாய் நிற்கின்றோம் என்கிற உயிருணர்வுப் பற்றையும், அறுத்துச் சிவபெருமான் தானாக்கியே விடுவர்; கூடவேண்டுமென்று உயிருணர்வாற் பாவிக்கின் அப்பாவனைக் குட்பட்டு வரமாட்டார் என்றறிக. எ-று. இதன்கண் முதலிலுள்ள பற்று என்பது, உடல்கருவி முதலிய எனது என்னும் புறப்பற்றினையும். பற்றையறுப்பதோர்பற்று என்றது எல்லாவற்றுக்கும் பற்றுக் கோடாகிய திருவருளையும், அப்பற்று என்றது, திருவருளைப்பற்றினேன்யான் என எண்ணும் உயிருணர்வாகிய யான் என்னும் அகப்பற்றினையும் குறித்த நின்றன பாவித்தல் - மனத்தாற் கற்பித்துக் காணமுயலுதல். கற்பனை கடந்த சோதி என்பார், பாவிக்கவாரார் என்றார். இத்திருவுந்தியார் துறவு என்னும் அதிகாரத்திலுள்ள, பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (350) எனவரும் திருக்குறளை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம்; எல்லாப் பொருளையும் பற்றி நின்றே அவற்றில் தோய்வற நிற்கும் திருவருளைப் பற்றுக்கோடாக மனத்தட் கொள்க. தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள பாசத் தொடர்பு நின்னை விட்டு நீங்குதற் பொருட்டு அத்திருவருளாகிய பற்றினையே உறுதுணையாகப் பற்றி யொழுகுவாயாக என இத்திருக்குறளுக்கு உய்யவந்த தேவநாயனார் உரை கண்டார் எனக் கருத வேண்டியுளது. எல்லாப் பொருளையும் பற்றி நின்றே அவற்றுடன் சிறிதும் தோய்வின்றியுள்ள இறைவனைப் பற்றற்றான் எனக் குறித்தார் திருவள்ளுவர். பற்றற்றான் என்பதற்குரிய விளக்கமாக அமைந்ததே பாவிக்கில் வாரார் என்ற தொடராகும். பற்றற்றான் பற்று என்றது, பற்றற்றானாகிய இறைவனுடன் பிரிப்பின்றி நிற்பதாகிய திருவருளை. அப்பற்று என்றது, மேலே குறித்த திருவருளாகிய பற்றுக் கோட்டினை. பற்றையறுப்பதோர் எனவருந் திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வருந்திருக்களிற்றுப் படியாராகும். 31. பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற---பற்றதனைப் பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும் மற்றுமிது சொன்னேன் மதி. இஃது, உயிருணர்விற்சிவம் தோன்றுமாறிதுவெனவுணர்த்து கின்றது. (இ---ள்) உயிருக்கு வினைப்பயனை விளைவிக்கும் உடல் கருவி கரணம் நுகர்பொருள் ஆகியவற்றினுள்ளே கொண்டுள்ள ஆசையினை அறவே நீக்குதற்குரிய திருவருளாகிய சிவஞானத்தினை யறிந்து, கூடினோம் என்னும் விருப்புடனிருந்து அறிவதாகிய உயிருணர்வினைக் கைவிடின் அப்பொழுதே மேலாகிய சிவம் தானேசுடர்விட்டொளிரும்; மேலும் இதனை உறுதியாகச் சொன்னேன் இவ்வுயர்ந்தவுண்மையினைச் சிறப்புடையதாக நினது அறிவிற் கொள்வாயாக எ---று. பற்றினுட்பற்று என்றது, தநுகரணபுவன போகங்களில் உயிருக்கு இயல்பாகவுள்ள ஆசையினை. பற்றினைத்துடைப்பதொரு பற்று என்றது, அவ்வாசையினை யறவே நீக்குதற்குச் சாதனமாகிய திருவருளை. பற்றிப்பரிந்திருந்து பார்க்கின்ற பற்று என்றது, அத் திருவருளைப் பற்றினோம் என்ற விருப்புடன் அறிகின்ற உணர்வாகிய தற்போதத்தினை. பற்று விடுதலாவது, திருவருளேகண்ணாக அறிகின்றோம் யாம் என எண்ணும் உணர்வினையும் அறவே விடுதல்; என்றது, தற்போதமிழத்தலை. அந்நிலையே---அங்ஙனம் தற்போதம் அற்ற அப்பொழுதே. பரம் தானே ஆகும்-(உயிருணர்வு கீழ்ப்பட) சிவம் தானேயாய் மேற்பட்டு விளங்கும். மற்றும்-மேலும். இது-இவ்வுண்மையினை. மதி-மதிப்பாயாக மதித்தல்-சிறப்புடையதாகக் கருதுதல். பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங்கதுபற்றி நற்றாங்கதி யடைவோ மெனிற் கெடுவீர் ஓடிவம்மின் தெற்றார்சடை முடியான் முன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே எனவரும் திருவாசகம் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும் இதன்கண் பற்றும் பற்று ஆங்கது பற்றிப் பற்று ஆங்கவை யற்றீ நற்றாங்கதியடைவோமெனிற் கெடுவீர் என்றது, திருவருளைப் பற்றி உலகப்பற்றினையறுத்த நீவிர் உயிருணர்வாகிய தற்போதத்தினால் சிவபரம் பொருளையடைவோம் எனக் கருதுவீராயின் சிவபோகத் தினையிழப்பீர் என்றவாறாம். கசா. உழவா துணர்கின்ற யோகிகள் ஒன்றோடுந் தழுவாமல் நிற்பரென்றுந்தீபற தாழ்மணி நாவேபோல் உந்தீபற. இஃதுயோகிகள் ஒன்றினும் பற்றாமல் நிற்குமா றிதுவென உவமை காட்டி உணர்த்துகின்றது. (இ-ள்) (கருவிகளால் உணர்த்து முறைமையிலும் அவற்றால் உணரும் நிலையாகிய அவத்தைகளிலும்) அழுந்தி முயலாமல் திருவருளாலே சிவனைக்கண்டு வழிபடும் சிவயோகிள் (எடுத்தவுடம் பினால் முகந்து கொள்ளப்பட்ட நுகர்வினையாலே வினைப்பயன் தம்மைத் தாக்கிய நிலையினும் திருவடிஞானங்கண்ணாக நிற்கையாலே) உலகப் பொருள்களுள் ஒன்றிலுந்தோயாமல் நிற்பார்கள். (தரையில் வைக்கப்பட்ட) தாழ்ந்த நாவையுடைய மணிபோல அசைவும் ஆரவாரமும் அற்றுத்திருவருளோடு ஒன்றியிருப்பார்கள் எ-று. உழத்தல் - தம்முணர்வாற் பெரிதும் முயன்று உழைத்துப் பயனின்றி அயர்வடைதல். உணர்தல் - திருவருளேகண்ணாகக் கொண்டு உணரப்பெறுதல். தாழ்மணி நாவேபோல் ஒன்றோடுந் தழுவாமல் நிற்பர் என இயையும். தாழ்மணி நாவேபோல் - மேலே கட்டப்பெற்று அசைந்து ஒலிக்காமல் தரையிலே பொருந்தவைக்கப் பட்ட மணியின் நா அசைவற்று ஒலியெழுப்பாதிருத்தல் போல. இத்திருவுந்தியாரின் உரைவிளக்கமாக அமைந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும். 32. அறிவறிவாய் நிற்கின் அறிவுபல வாமென் றறிவி னறிவவிழ்த்துக் கொண்டவ் --- வறிவினராய் வாழ்ந்திருப்பர் நீத்தவர்கள் மானுடரின் மாணவகா தாழ்ந்தமணி நாவேபோல் தான். இஃது யானெனதென்னும் பற்றொழித்த சிவயோகிகள் ஒன்றோடுந் தழுவாமல் நிற்குமியல்பினை விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) ஆன்மா தனது அறிவினையே எல்லாவற்றையும் அறிதற்குரிய சாதனமாகக் கொண்டு நிற்பின், குறையுணர்வாகிய அதன் அறிவு தான் பற்றிய பொருள்தோறும் அழுந்தி அதுவதுவாய்ப் பலவாய்ச் சிதறிவேறுபடுவதே அதனியல்பென்று குருவின் அருளால் உணர்ந்து தற்போதப் பிணிப்பினின்றும் விடுபட்டு அங்ஙனம் விடுபடுதற்குரிய திருவருள்ஞானமேயாய் அதனோடு ஒற்றித்து நிற்றலாலே சிவனைப் பெற்றுத் தாமும் அச்சிவமேயாய் இருப்பார்கள் ; மானிடப் பிறப்பிலுள்ளாரில் யான் எனது என்னும் இருவகைப்பற்றுக்களையும் விட்டவர்கள். நிலத்திலே தாழவைத்த மணியினது நாவேபோல அசைவற்றிருக்கிற பெருமக்கள் எ - று. உழவாதுணர்தல் என்பதற்கு அமைந்த விளக்கமாக இதன் முதலிரண்டடிகள் அமைந்தன. மானுடரின் நீத்தவர்கள், தாழ்ந்த மணிநாவேபோல் வாழ்ந்திருப்பர் என இயையும். அறிவு - ஆன்மபோதம். அவ்வறிவு என்றது, திருவருள் ஞானத்தினை. மணிநா அசைவற்று ஒலியடங்குதற்கு நிலம் ஆதாரமாதல்போன்று நீத்தவர்கள் தற்போதங்கெட அசைவற்றித்தற்குத் திருவருள் ஆதார மாதல் இனிது புலனாம். கஎ திருச்சிலம்போசை யொலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற நேர்பட அங்கேநின் றுந்தீபற. இது, நிராதாரயோகத்தில் நிற்பார்க்கு நிகழும் திருவருள் அடையாளம் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) போதுசெய்யாநடமாகிய அனவரததாண்டவம் புரிந் தருளும் திருவடியில் உள்ள திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலி வழியே சென்று மீதானத்தே ஆடல் புரிந்தருளும் கூத்தப் பெருமானைக் கண்டு கும்பிடுவாயாக. அப்பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்ற ஐம்புலவழியாகிய சிறுநெறியிற் செல்லாது திருவருளாகிய செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக எ-று. இறைவன் திருவடியிலுள்ள சிலம்பும் அதன்கண் இருந்து தோன்றும் ஓசையொலியும் முறையே பரவிந்தும் பரநாதமும் என்பர் தில்லைச் சிற்றம்பலவர். திருவடிச் சிலம்பொலி அகஞ்செவிக்குப் புலனாம் நிலையில் ஓசையெனவும், உயிருணர்வுக்குப்புலனாம் நிலையில் ஒலியெனவும் பெயர்பெறும் என்பார், திருச்சிலம்போசை யொலி என்றார். ஓசை, ஒளியொலியெலாம் ஆனாய் நீயே என இறைவனைப் போற்றுவர்தாண்டவ வேந்தர். திருச்சிலம்போசை யொலிவழியே சென்று நிருத்தலை கும்பிடுதல் என்பது, உலக ஆரவாரத்தினின்றும் நீங்கி அகனமர் அன்பினராய் அறுபகைசெற்று ஐம்புலனும் அடக்கி ஞானனே வடிவாகத்திகழும் இறைவனைத் தமது நெஞ்சத்தாமரையிலே வைத்து வழிபடுதல், அங்ஙனம் வழிபடும் சிவயோகநிலையினராகி செம்புலச் செல்வர்க்குத் திருவருள் மயமாகிய பத்துவகை ஒலிகள் அவர்தம் அகத்தே தோன்றும் என்பதும், தற்போதங்கெட அத்தகைய திருவருளின் ஒலிவழியே சென்று கும்பிடுவார்க்குக் கூத்தப்பெருமான் நேர்படத் தோன்றியருள்புரிவன் என்பதும், இங்ஙனம் உலக ஆரவாரத்தினின்றும் நீங்கிச் சிவயோகநிலையினின்று இத்தகைய திருவருள் ஒலியினைத் தம் அகத்தே கேட்டலென்பது, அவனருளாலே அவன்தான் வணங்கும் இயல்பினர்க்கன்றி ஏனையோர்க்கு இயலாதென்பதும் ஆகிய யோக நுட்பங்களை, மணிகடல் யானை வார்குழல் மேகம் மணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கவொண் ணாதே (606) எனவரும் திருமந்திரப்பாடலில் திருமூலதேவநாயனார் தொகுத்துக் கூறியுள்ளமை காணலாம். மணி, கடல், யானை, இசைவளர்தற் கிடனாகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிறமுடைய வண்டு, (தேன்நுகரும்) தும்பி, வளை (சங்கு), பேரிகை, யாழ் என மிகவும் நுண்ணியவாய் மெல்லியவாய்த் தோன்றுகின்ற இப்பத்து வகையொலிகளும் இறைவனைப் பணிந்து போற்றும் தியானமுடைய செம்புலச்செல்வர்க்கல்லது ஏனையோரால் செவிப்புலனாற் கண்டுணர்தல் இயலாது என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே வீணைமுரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே சங்குதிரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன வாகாதே என மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத் தொடர்களும், தூங்கிருள் நடுநல்யாமத்தே, மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் எனக்கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாத்தொடரும் அப்பெரு மக்களது சிவயோகநிலையினை நன்கு புலப்படுத்துவன. இவ்வாறு இறைவன் திருவருளால் சிவயோகிகளின் அகத்தே தோன்றும் ஒலிகட்கெல்லாம் காரணமாகத் திகழ்வது துயிலும் பொழுதில் ஆடும் சோதியாகிய கூத்தப்பெருமானது திருவடியிலுள்ள திருவருள் மயமான சிலம்பொலியேயென்பதும் திருவடிச் சிலம்பொலியாகிய அதனைக்கேட்டு அமகிழ்வார்க்கு அம்பலக் கூத்தன் நேரே தோன்றி அருள்புரிவன் என்பதும், சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ் செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ. (18) எனவரும் திருவாசகத்தால் இனிது புலனாம். திருச்சிலம்போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக்கும்பிடும் சிவயோகநெறியில் ஒழுகியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்பது, வாசத்திருமஞ்சனம் பள்ளித்தாமம் சாந்தம் மணித்தூபம் தேசிற்பெருகுஞ்செழுந்தீபம் முதலாயினவுந்திருவமுதும் ஈசர்க்கேற்ற பரிசினால் அருச்சித்தருள எந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்சிலம்பினொலியளித்தார் (பெரிய-கழறிற் - 24) எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியால் இனிதுணரப்படும். நேர்பட நிற்றலாவது, மாறிநின்று மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியாகிய சிறு நெறியிற் செல்லாது திருவருள் வழியாகிய செந்நெறியினை மேற்கொண்டொழுகுதல். திருச்சிலம்போசை யொலிவழியே என்னும் இத்திருவுந்தியார்க் கமைந்த உரை விளக்கமாகத்திகழ்வது பின்வரும் திருக்களிற்றுப்படி யாராகும். 33. ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின் ஓசை வழியே சென்றொத்தொடுங்கில் - ஓசையினின் அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தே வந்தொத்தா னத்தான் மகிழ்ந்து. இது, நிருத்தனைக்கும்பிடும் நெறியிதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) (உடல் பொறி கருவிகளால் நேரும் உலகத்துழனிகளா யுள்ள) ஆரவாரங்கள் ஒடுங்கினால் இறைவன் திருவடியிற் பரவிந்து என்னும் சிலம்பிற் பரநாதமென்னும் ஓசை தோன்றும். அங்ஙனம் தோன்றும் சிலம்போசையின் வழியே திருவருளை நாடிச்சென்று கூடிதற்போதமும் ஒக்கமுடியில், அப்பொழுதே அந்த ஓசை முடிந்த விடமே இடமாகவுடைய இறைவன் அருட்சத்தியுடனே அம்பல மாகிய ஞானப் பெருவெளியிலே வந்து தோன்றி இவ்வான் மாவைப் பெருவிருப்புடனே மகிழ்ந்து பிரிவற ஒத்துக்கூடுவர் எ-று. ஓசையினின் அந்தத் தானத்தான் - ஓசைமுடிந்தவிடமாகிய திருவருளை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அந்தம் - முடிவு தானம் - இடம். ஓசையினின் அந்தத்தானத்தான், அரிவை யுடன் அம்பலத்தேவந்து, நத்தால் மகிழ்ந்து ஒத்தான் என இயைத்தும் பொருள் கொள்க. அரிவை - திருவருட் சத்தி. நத்தால் -பெருவிருப்புடன். நத்து - விருப்பம். ஒத்தல் - நேர்படக் கூடுதல். கஅ. மருளுந் தெருளும் மறக்கும் அவன்கண் அருளை மறவாதே யுந்தீபற அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற. இது, நிருத்தனைக்கும்பிட்டு நேர்பட விழைவோர் அவனது திருவருளை மறவாதிருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) இறைவன் திருவருள் வழிநிற்பாயானால் உன்னுடைய மயக்க விகற்பங்கள் (மறப்பும் நினைப்பும்) அற்றுப்போம். அந்நிலை பெற இறைவனது திருவருளை மறவா திருப்பாயாக. அத்திருவருளே இங்கு ஆன்மாவுக்குப் பற்றுக்கோடாக வுள்ளதென் றுணர்வாயாக எ-று. உயிர்கட்கு இறைவன் திருவருளே சார்பாயுள்ளது என்னும் இவ்வுண்மையினை, அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு (அற்புதத்திருவந்தாதி-6) எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலால் நன்குணரலாம். இத்திருவுந்தியாருடன் திருக்குறட்பொருளைத்தொடர்பு படுத்திக் காட்டும் உரைவிளக்கமாகத் திகழ்வது பின்வருந்திருக்களிற்றுப் படியாராகும். 34. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையாற் சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. (இ-ள்) தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவநாயனார், சார் புணர்ந்து சார்புகெட வொழுகின் என அருளிச் செய்தமையால் தோற்றிமில்காலமாக ஆன்மாவுக்குப் பற்றுக் கோடாகவுள்ள திருவடி ஞானத்தைத்திருவருளே கண்ணாக அறிந்து அதனுடன் ஒத்து நின்றுணர்தலே சித்தமதொருக்கிச் சிவனை நினைந்துபோற்றும் தியான முறையாகும். அந்நிலையில் தியானிப்பவன் நானே என எண்ணும் தற்சார்பாகிய சுட்டுணர்வு கெடச் சிவபரம் பொருளோடு ஒன்றி அசைவற்று நிற்பின் அப்பொழுதே இன்புருவாகிய சிவனைக்கூடிமகிழும் சமாதிநிலை உளதாகும். பின்பு ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய்நின்ற வல்வினைத் துன்பங்கள் (அவர்களுடைய உணர்வொழுக்கங்களையழித்துச் சாரும் வலியற்றனவாதலால்) அன்னோரைச் சார்ந்து வருத்துதல் இல்லை எ-று. இப்பாடலின் முதலடியில் முதற்கண் உள்ள சார்பு என்னுஞ் சொல், எவ்வுயிர்க்குஞ் சார்பாயுள்ள திருவருளையும், அடுத்துநின்ற சார்பு என்னுஞ்சொல், ஆன்மபோதத்தின் விளைவாகிய யான் எனது என்னும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளையும் குறித்தன. சார் புணர்தல் என்பது தியானத்தையும், சார்புகெடவொழுகல் என்பது சமாதியினையுங் குறித்து நின்றன. கேதப்பட வினைப்பற்று வருவது இல்லை என இயைத்துப் பொருள்கொள்க. கேதம்-துன்பம். எல்லாப்பொருட்குஞ் சார்பாயுள்ள இறைவனது திருவருளை யுணர்ந்து தம்மைச் சார்ந்துள்ள யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் தம்மைவிட்டு நீங்குமாறு திருவருள் வழி ஒத்துச் சிவ பரம்பொருளைச் சிவயோகநிலையிற் கூடியொழுகவல்லவராயின், அவர்களை ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங்களையழித்து அடரும் வலியற்றனவாய்க் கெட்டொழியும் என்பதாம். இறைவனது திருவருட் சார்பே மன்னுயிர்கட்குச் சார்பாய் (ஆதாரமாய்) விளங்குவது என்னும் இவ்வுண்மையினை, சைவனாரவர் சார்பலால் யாதுஞ்சார்பிலோம் நாங்களே என ஆளுடையபிள்ளையாரும், பற்றற்றார்சேர் பழம்பதியை (4-15-1) என ஆளுடையவரசரும் அறிவுறுத்தியருளியமை இங்கு நினைத்தற் குரியதாகும். ககூ. கருதுவ தன்முனங் கருத்தழியப் பாயும் ஒருமகள் கேள்வனென் றுந்தீபற உன்ன அரியனென் றுந்தீபற. இஃது இவ்வாறு திருவருளோடு இடையீடின்றி ஒத்தொழுகுவார்க்குச் சிவம் விரைந்து வெளிப்பட்டொளிரும் என அறிவுறத்துகின்றது. (இ---ள்) ஒப்பில்லாத திருவருளாகிய சத்திக்கு நாயகனாகிய சிவபெருமான், ஆன்மாவாகிய இவன் கருதிய அப்பொழுதே இவனுடைய சுட்டுணர்வாகிய கருத்தினையும் ஒழித்துத் தானுந் தன் கருத்துமாய் விரைந்து இவனைக்கடி நிற்பன். இவ்வாறன்றி ஆன்ம போதத்தால் எக்காலமும் நினைந்து கூடுதற்கு அரியவன் அம்முதல்வன் என்றுணர்வாயாக. எ-று. ஈண்டுக் கருதுதல் என்றது, திருவருளே சார்பாகக் கொண்டு இறைவனைத் தியானித்தலை. குகையில் உருக்கின செம்பிலே குளிகை பாய்ந்த அளவில், செம்பு தன்னை அநாதியே பற்றிய களிம்பு நீங்கிப் பொன்னும் ஒளியுமாய் நின்றாற் போல, இவ்வான்மா தற்போதம் கெடத் திருவருள்வழிநின்று சிவனைத் தியானித்த அப்பொழுதே சிவன் இவனுடைய கருத்தையும் ஒழித்துத் தானும் தன்னுடைய கருத்துமாய் இவனைத் தன்னகத்தடக்கிக் கொண்டு இவனே தானாய்ப் (பிரிவின்றி) விளங்கித் தோன்றுவன் என்பார், கருதுவதன்முனம் கருத்தழியப்பாயும் ஒருமகள் கேள்வன் என்றார். ஒருமகள் என்றது, கதிரவனும் ஒளியும் போல இறைவனைப் பிரிவின்றியுள்ள ஒப்பற்ற திருவருளாகிய சத்தியினை. கேள்வன்-நாயகன். உன்ன அரியன்- யாவராலும் தம் அறிவினால் நினைதற்கு எட்டாத நிலையில் சிந்தனைக் கரிய சிவமாய்த் திகழ்பவன். இந்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும். 35. அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே நின்றபடியேநிற்க முன்னிற்குஞ்---சென்று கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும் ஒருமகள்தன் கேள்வன் உனக்கு இது திருவருள் ஞானத்தாற் சிவனைக்கூட வேண்டுமென்று இறைவனது அருள் வழிநிற்பார்க்குச் சிவம் விரைந்து தோன்றுமாறு உணர்த்துகின்றது. (இ---ள்) நின்கருத்துக்கு மாறுபட்டு உன்னை மயக்க விகற்பங் களில் ஆழ்த்தி வரும் வஞ்சனை வாய்ந்த ஐம்புலன்களின் வழியே நீயும் உலகப்பொருள்களிற் கூடிநின்று சலிப்படையாதே. திருவருள் உன்னோடு கூடிநின்ற முறைமைபோல நீயும் அத்திருவருளை யுணர்ந்து, அந்த ஞானமேயாகி இரண்டற நிற்பாயாக. அங்ஙனம் நிற்பாயாயின் அப்பொழுதே இந்த ஞானத்திற்கு முதலாகிய சிவம் உனக்குமுன் தோன்றா நிற்கும் எ---று அன்றுதல் - மாறுபடுதல். நின்றபடியே நிற்றலாவது இறைவனது திருவருள் தோற்றமில் காலமாக உயிர்களோடுடனாயிருந்தும் தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது நின்றாற் போன்று, திருவருளோடு உடனாய்நின்று உணரும் ஆன்மாவும், தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது சுட்டுணர்வுகெடத் திருவருளின்வழியடங்கி நிற்றல். இங்ஙனம் நின்றபடி நிற்றலாகிய இத்தொடர்ப்பொருளையே, அவனே தானே யாகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க எனச் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரத்து மெய்கண்டார் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவ தாகும். அடியார்கள் தன்னை அன்பினாற் கருதத்தொடங்கிய அந்நிலையிலேயே விரைந்து முன்னின்றருளும் பேரருளாளன் இறைவன் என்பதனை, எம்பிரான் என்றதேகொண்டென்னுளே புகுந்துநின்றிங் கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே யுழிதர்வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்குமென்றால் எம்பிரான் என்னினல்லான் என்செய்கேன் ஏழையேனே (4---76---3) எனவருந் திருப்பாடலில் அப்பரடிகள் விளக்கியுள்ளமை இங்கு ஒப்ப வைத்து உணர்தற்பாலதாகும். உய. இரவு பகலில்லா இன்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற விரைய விரையநின் றுந்தீபற. இது, சிவாநுபவம் நினைப்பு மறப்புமாகிய இடையீடின்றி நுகர்தற் குரியது என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) கருவிகளோடுகூடி உணர்ந்தகாலத்துப்பகலாகிய மாயையும், கருவிகள் ஒடுங்கின காலத்து இருளாகிய ஆணவமும் கூடாமல் ஞானமும் ஆனந்தமுமே ஒளிரத்தக்க இன்பவெளியாகிய பரமாகா சத்திலே சிவனைக் கூடிப்பொருந்தி நின்று நுகர்வாயாக. (மீண்டும் பகல் இரவு என்னும் அறிவு அறியாமையாகிய உலகவாதனை உன்னைப் பற்றாதவாறு) திருவருள்வழி மிகவிரைந்து சிவபரம் பொருளைக் கூடிப் பிரிவின்றியுணர்வாயாக எ---று. பகல் இரவு இல்லா இன்பவெளி என மாறிக்கூட்டுக. பகல் என்றது, மாயா காரியமாகிய கருவிகரணங்களோடு கூடியுணரும் சுட்டறிவு நிலையாகிய சகல நிலையினை. இரவு என்றது, மாயேயமாகிய அக்கருவிகளோடு கூடாது ஒடுங்கிய நிலையில் உயிரைப்பற்றி நிற்கும் ஆணவ இருள் நிலையாகிய கேவல நிலையினை. விரவுதல்-கலந்து ஒன்றாதல். விரைதல் - விரைந்து செய்தல். விரவி விரவி என்னும் அடுக்கு திருவருளை விட்டுச் சிறிதும் பிரியாநிலையினையும், விரைய விரைய என்னும் அடுக்கு அறிவு அறியாமை யாகிய நினைப்பும் மறப்பும் மீண்டும் தன்னைப் பற்றுதற்கு இடங்கொடாதவாறு மிக விரைந்து கூடுதலின் இன்றியமையாமையினையும் உணர்த்தி நின்றன. இரவு பகலில்லா இன்பவெளி யென்னும் இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்குவது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும், 36. உண்டெனின் உண்டாகும் இல்லாமை, இல்லையெனின் உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம்---உண்டில்லை யென்னும் இவைதவிர்ந்த இன்பத்தை யெய்தும்வகை உன்னிலவன் உன்னுடனே யாம். இது, சிவன் ஆன்ம அறிவினால் அறியப்படும் பொருளுமன்று, எவ்வகையானும் அறியப்படாத இல்பொருளுமன்று என இறைவனது சிறப்பியல்பினை விரித்துரைக்கின்றது. (இ---ள்) கருவிகளைப்பெற்று அறியும் சுட்டறிவினால் அறிந்து கூடுதற்குரிய உள்பொருள் சிவம் எனக்கூறின், அங்ஙனம் சுட்டறிவினால் அறியப்படும் உலகப்பொருளனைத்தும் ஒரு காலத்துத் தோன்றி நின்று பின்னர் அழிந்து மறையும் இயல்பின வாதலால் அங்ஙனம் அறியப்படும் சிவமும் இல்பொருளாகிய அசத்தாய் முடியும், கருவிகள் இல்லாத நிலையிற் காணப்படுவது சிவபரம்பொருளென்றால் ஆன்ம அறிவிற்கு இன்றியமையாத அறிதற்கருவி எதுவுமில்லாமையால் அந்நிலையிலும் சிவத்தைக் காணுதல் இன்மையின் அவ்விடத்தும் சிவம் இல்பொருளாய் விடும். ஆதலால் உயிருணர்வினால் அறியப்படும் பொருளும் எவ்வகையாலும் அறியப்படாதபொருளும் முறையே அசத்து எனவும் பாழ் எனவும் கூறப்படும் இவ்விருவகையுட்படும். இங்ஙனம் ஆன்ம அறிவினால் உண்டு எனவும் இல்லையெனவும் பேசப்படும் இவ்விருதிறத்தினும் அடங்காது தனது திருவருளே துணையாகக் கூடி நுகர்தற்குரிய இன்புருவாய் உயிர்கட்குஇனிய அனுபவப் பொருளாகிய இறைவணைப் பேரன்பினால் இடைவிடாது நினைந்து போற்று வாயானால் பேரருளாளனாகிய அம்முதல்வன் தனது அருளால் உன்னை இரண்டறக்கூடி நிற்பன் எ---று. உண்டெனல்---ஆன்மா தன்னறிவினால் சிவத்தினையறிந்து உள் பொருள் எனக் கூறல். இல்லையெனல் அப்பொருள் உயிரறிவுக்கு அகப்படாமையின் அதனை இல்பொருளென்றல். சிவம் உயிரின் சுட்டறிவினால் உணரப்படும் பொருள் என்றால் சுட்டறிவினால் அறியப்படும் பொருளனைத்தும் ஒருகாலத்து உளதாய்த்தோன்றிப் பின்னொரு காலத்து இல்லையாய் மறையும் அழிபொருளாதல் போலச் சிவமும் அழியுமியல்பினதாகிய அசத்துப் பொருளாய் விடும். சிவம் உயிரறிவினால் அறியவொண்ணாத தாயின் முயற்கோடு ஆகாயப்பூப் போன்று இல்பொருளாய் விடும் என்பார், உண்டு எனின், இல்லாமை உண்டாகும், இல்லையெனின் இல்லாமை உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம் என்றார். இவ்வடியில் நடுநின்ற இல்லாமை என்பதனை முன்னும் பின்னும் இயைத்துப் பொருள்கொள்க. இது தாப்பிசைப் பொருள் கோள். இவை தவிர்ந்த இன்பம் என்றது, உயிருணர்வினால் உணரப்படும் அசத்தாந்தன்மையும் ஒருவாற்றானும் அறியப்படாத பாழாந்தன்மையும் நீங்கித் தனது திருவருளால் உயிர்கட்குப் பேரின்ப அநுபவப் பொருளாகத் தோன்றுமியல்புடைய என்றுமுள்ள சத்தாகிய சிவத்தினை. உன்னுதல்--அன்பினால் இடைவிடாது நினைந்து போற்றுதல். மாணவனாகிய நீயும் அம் முதற்பொருளைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயாயின் இன்புருவாகிய அம் முதற்பொருள் நின்னுடன் பிரிவின்றி இரண்டறக்கூடி நின்று பேரின்பத்தை வழங்கும் என அறிவுறுத்துவார்; உன்னில் அவன் உன்னுடனே ஆம் என்றார். இத்திருக்களிற்றுப் படியாரை அடியொற்றியமைந்தது, உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே எனவருஞ் சிவஞானபோத ஆறாஞ்சூத்திரமாகும். தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் உயிருணர்வான் அறியப்படும் இயல்பினையுடைய தென்றால், அங்ஙனம் உணரப்படும் உலகப்பொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் உணரப்படாத இயல்பினையுடைய தென்றால், முயற்கோடு போலச் சூனியப் பொருளாய்விடும். ஆதலால் அசத்தும் சூனியமுமாகிய இவ்விரு பகுதியுமன்றிப் பாசஞான பசுஞானங்களால் அறியப்படாமையும் பதி ஞானம் எனப்படும் திருவருள்ஞானம் ஒன்றினாலேயே யுணரப்படுதலும் ஆகிய இரண்டு வகையானும் சிவசத்தாம் எனக்கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர் என்பது இதன் பொருளாகும். நிராதார யோகத்தினை முடித்துக்கூறும் இத்திருக்களிற்றுப் படியாரிலுள்ள உண்டெனின் இல்லாமையுண்டாகும் என்பதனை யடியொற்றி உணராதெனின் அசத்து எனவும் இல்லையெனின் இல்லாமையுண்டாகும் என்பதனை யடியொற்றி உணராதெனின் இன்மையின் எனவும், உண்டு இல்லையென்ற இவைதவிர்ந்த இன்பம் என் பதனையடியொற்றி இருதிறன் அல்லது சிவசத்தாம் எனவும் மெய் கண்ட தேவநாயனார் பதிப்பொருளின் சொரூப இலக்கணம் எனப்படும் சிறப்பியல்பினை யுணர்த்தியதிறம் ஒப்புநோக்கியுணர்ந்து போற்றத்தகுவதாகும். உக. சொல்லும் பொருள்களும் சொல்லா தனவுமங் கல்லனாய் ஆனானென் றுந்தீபற அம்பிகை பாகனென் றுந்தீபற. இது, மேற்சொரூப இலக்கணமென்னுந் தன்னியல்புணர்த்தி இனித்தடத்த இலக்கணம் என்னும் பொதுவியல்பு உணர்த்துகின்றார். (இ-ள்) சொல்லால் அளவுபடுத்தி உரைக்கத்தக்க சொரூபாதி களாயுள்ள பொருள்களும், வாக்கால் உரைக்கப்படாத முயற்கோடு போன்ற இல்லாத பொருள்களும் ஆகிய இவையிரண்டும் அல்லாத வனுமாய், உரைமனங்கடந்த நிலையிலே நின்று உணரத்தக்க தன்னி யல்பினனாய் உள்ளான் ஒருவன். அவனே அருளாகிய அன்னையின் நாயகனாவன் எ-று. சொல்லும் பொருள்களாவன, ஆன்மபோதத்தாற் சுட்டிக் கூறப்படும் மாயாகாரியமாகிய அசத்துப்பொருள்கள். சொல்லாதன, முயற்கோடுபோலும். இல்பொருள்கள் அல்ல னாதல், இவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி நிலவுசீ ரமலனாகி எல்லாவற்றையுங் கடந்து அப்பாலாதல்; ஒன்றிலுந் தோய்வின்றிச் சிவமாய் நிற்றல். ஆனால் என்றது, சிவனது அருட்சத்தியாய் உலகுயிர்களோடு ஊடுருவிக் கலந்து தங்குதலை, இங்ஙனம் பொருள்தோறும் கலந்து நிற்றற்குத் துணையாகிய இறைவனது திருவருளே அம்பிகை என்பதுணர்த்துவார் அம்பிகை பாகன் என்றார். அவையே தானே யாயிரு வினையிற் போக்குவரவு புரிய வாணையின் நீக்கமின்றி நிற்குமன்றே. எனவரும் சிவஞானபோத இரண்டாஞ்சூத்திரம், இறைவன் கலப்பினால் உடலில் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன்போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் ஆன்மபோதம்போல உடனுமாய் நின்று, ஆணையென்னும் பரியாயப் பெயருடைய தனது சிற் சத்தியான் வரும் இருவினைகளால் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும்வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன், என இறைவனது தடத்தவிலக்கணம் (பொதுவியல்பு) உணர்த்துவதாகும். 37. தூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும் மூல வுடம்பாம் முதல்நான்கும்-மேலைச் சிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்தார் பவமாம் பரிசறுப்பார் பார். இஃது இறைவனது பொதுவியல்பினை விளக்குகின்றது. (இ-ள்) ஆன்மா, வினைப்பயனை நுகர்தற்பொருட்டுத் தனுகரண புவனபோங்களாய் அமைந்த ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், அவற்றைப் புசித்தற்குத் துணையாகிய கால நியதிகளும், உயிரின் விழைவு அறிவு செயல்களைத் தூண்டுகின்ற கலைவித்தை அராகங்களும் ஆன்மாக்களைப் போகங்களிலே யழுத்தும் மூலப்பகுதியும், மயக்கத்தைத் தரும் அசுத்தமாயையும் ஆகிய வித்தியாதத்துவங்கள் ஏழும் ஆகத் தூலவுடம்பிலே பொருந்தி நிற்கிற தத்துவம் முப்பத்தொன்றும் உள்ளே மூலவுடம்பாய் நின்று இம் மாயா தத்துவங்களைத் தூண்டிச் செலுத்துகின்ற விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை ஆகிய தத்துவம் நாலும், இத்தத்துவங்களுக்குக் காரணமுமாய் ஆன்மாவுகுப் பிராணனுமாய் நிற்கின்ற சிவதத்துவம் ஒன்றும் ஆகிய இத் தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா புசிக்கைக்குத் துணைக்காரணமாய்த தூல சூக்கும பரமாய் நிற்கையால், இந்த முறைமையை ஆசிரியன் அருளாலே உருவம், தரிசனம், சுத்திகளுடனே பார்த்து நீங்கித் தன்னையும் ஞானத்தையும் சிவனையும் உணர்ந்த ஞானிகளே அநாதியே தொடங்கி வருகிற பிறப்பிறப்புக்களைப் போக்காநின்றவர்கள். ஆதலால், இப்படிப் பார்த்துக் கூடுவாயாக எ-ற. 38. எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந் தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற் பாதிதனைக் கும்பிடலாம் பார். இப்படித் தத்துவ விசாரணை செய்ய இயலாதவர்களுக்கு வேறேயும் ஓர் உபாயம் அருளிச் செய்கிறார். (இ - ள்) சமயவாதிகள் கூறும் கோட்பாடுகளாகிய பல வேறு தத்துவங்களையும் பலசமயத்தார் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடுகளையும் ஆராயப்புகுந்து அவற்றில் மொத்துண்டழியாது சித்த விகாரத்தைப் போக்கிச் சென்று அருள்துணையாக ஞானசத்தியை ஒருபாகமாகவுடைய சிவன் திருவடியிலே அழுந்தி நிற்கலாம். இப்பத்தி நெறியினை விசாரித்துப்பார். எ - று. 39. சாம்பொழுதும் ஏதுஞ் சலமில்லை செத்தாற்போல் ஆம்பொழுதி லேயடைய வாசையறில் - சோம்புதற்குச் சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட் செல்லுந் துணையாகுஞ் சென்று. இஃது இங்ஙனம் திருவருளே துணையாகக் கொண்டொழுகும் நிலையில் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளிற் பற்றினை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது, (இ - ள்) சாவாது உடம்புடன் கூடியிருக்கும் பொழுதிலேயே இறந்தவர்களைப் போன்று உயிர்ச்சார்பு பொருட்சார்புகளில் வைத்த ஆசை முற்ற அற்றொழியுமாயின், அங்ஙனம் பற்றற்ற சிவஞானிகளுக்குச் சாக்காடு வந்தடுத்த காலத்தும் எல்லாஞ் சிவரூபமாவதன்றித் தத்துவங்களாலுள்ள மனக்கலக்கம் எதுவும் ஏற்படாது, இத்தகைய பற்றறுதி உயிர் தன்பணி நீத்தல் என்ற நிலையை யடைதற்குச் சொல்லப்பட்ட தொருதுணையாகும். இதுவுமன்றி வாக்கால் உரைக்கப்படாத தூய நெறியாகிய வீட்டுநெறிக்கண்ணே சென்று பொருந்துதற்குச் சிறந்த துணையு மாகும். எ - று. ஆம்பொழுதிலே செத்தாற்போல் அடைய ஆசை அறின், சாம் பொழுதும் ஏதும் சலமில்லை. (இந்நிலை) சோம்புதற்குச் சொல்லுந் துணையாகும். சொல்லாத தூய்நெறிக்கண் சென்று செல்லுந்துணையாகும்-என இயையும். சோம்பு-ஆன்மா தன்பணி நீத்து இறைவன் அருள்வழியடங்கி யிருத்தல். சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே (128) என்பது திருமந்திரம். தூய்நெறி என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்க அவா என்னும் மாசு நீங்குதலால் தூய்மையுடைய துறவாகிய வீட்டுநெறியினை. துறந்தார்தம் தூநெறி என்பர் ஆளுடைய அரசர். தூய்மை என்பது அவாவிண்மையை. இத்தகைய அவாவறுத்தல் மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறத்தக்கது என்பார், தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (364) என்றார் தெய்வப்புலவர். 40. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது --- வேண்டினது வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால். இஃது அவாவறுத்தற்கும் இறைவனது திருவருளே துணை புரிதல் வேண்டும் என்கின்றது. (இ-ள்) வேண்டுவார் வேண்டுவதே யீந்தருளும் இறைவன்பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறொன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாகும் எனத் தெய்வப் புலவர் அறிவுறுத் தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற் குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலப்பொருளில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமையினை வேண்டத் தானேவரும் எனவரும் திருவள்ளுவர் வாய்மொழி யினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாம் எ-று. இத்திருக்களிற்றுப்படியார், வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (திருக்குறள்-362) எனவரும் திருக்குறளுக்குப் பொருந்திய சிறந்த விளக்கவுரையாக அமைதுள்ளமை அறியத் தகுவதாகும். தோற்றமில் காலமாகப் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்குப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம் என்னும் உண்மையுணர்ந்து பிற வாமையாகிய இன்பத்தின்கண்ணே விருப்பந்தோன்றுதல் இயல்பாதலின், அவன் ஒன்றை வேண்டப்புகுவனாயின் பிறவாமை யொன்றனையுமே வேண்டிநிற்பான் என்பார், வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை என்றார். இவ்வுலகிற் சிற்றின்பங்கருதி ஒரு பொருளை அவாவுவனாயின் அத்தகைய அவா பிறப்பீனும் வித்தாய் மேலும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் அத்தகைய அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமாதலின் பிறவாமையாகிய அப்பேறும் வேண்டாமை வேண்டத் தானே வரும் என்பார், அது வேண்டாமை வேண்ட வரும் என்றார். அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (361) எனவரும் திருக்குறள் எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும் அத்தகைய அவா அறவே பிறவாமை தானே வரும் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். பிறவாமையே இறைவன் பால் வேண்டந்தக்கது என்பதனை, ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் (7 - 21 -2) எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மலர்ச் சேவடியானே -(திருவாசகம்) இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்துபாடி அறவாநீ யாடும்போதுன் னடியின்கீ ழிருக்கவென்றார். (-பெரிய. காரைக்காலம்மையார் புராணம்) எனவரும் ஆன்றோர் அருளிச் செயலால் உணரலாம். உஉ. காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினுள் ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற அல்லாத தல்ல வென் றுந்தீபற. இது, மெய்ப்பொருளைக்கூடுதற்கு வேறுமோ ருபாயம் சொல்கின்றது. (இ-ள்) இடைகலை பிங்கலைகளாற் பிராணவாயு நின்று சலிக்கும் வரையிலும் மனமும் ஆன்மாவும் ஒக்க நின்று சீவிக்கும். ஆகையால் இப்படிச் சலித்துப் புறப்படுகிற காற்று பன்னிரண்டங்குலமளவும் புறத்தே செல்லாமல் உள்ளே சுவறும்படி ஆசிரியன் உரைத்தபடி சாதிக்க மனஅசைவு அற்றுவிடும். இவ்வாறு அசைவற்ற நிலையிலே இவன் கருத்தானது திரிவற்ற செம்பொருளிலே செல்லும். ஆகவே தன்னுடைய கருத்துக்குக் கருத்தாயுள்ள தம்பிரானார் திருவடியிலே மனம் ஒன்றியிருந்து இளைப்பாறுவதே நொசிப்பு எனப்படும் நோற்றலின் ஆற்றலாகும். இவ்வாறு சித்தவிகாரக் கலக்கம் அறாத நிலையிற் கூடுகிறதெல்லாம் நொசிப்பு ஆற்றல் அன்று என்றவாறு 41. அரண வுணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றிற் கரணமுங் காலுங்கை கூடும் - புரணமது கூடாமையுங் கூடுங் கூடுதலுங் கூட்டினுக்கு வாடாமையுங் கூடும் வந்து. இது, சமாதிநிலை கூடுதற்கு உபாயம் கூறுகின்றது. (இ-ள்) திருவடி ஞானத்தினாலே தன்னுடைய போதத்தை யொழித்தால் அந்தக் கரணமும் வாயுக்களம் தன்வசமாய் அடங்கி நிற்கும். மீண்டும் ஏகதேச வறிவுகூடாமல் (பூரணம்) வந்து தலைப் படும். அங்ஙனம் கூடிய அளவிலே உயிர்நின்ற உடம்பினுக்கு வாட்ட மின்மையும் வந்து சேரும் எ-று. அரணவுணர்வு என்றது, ஐம்பொறிகளாகிய வேடர்கள் சென்று ஆன்மலாபத்தைக் கவரவொண்ணாது அரண் செய்யும் திருவடி ஞானத்தை. அவ்வுணர்வு என்றது, ஆன்மபோதத்தினை. மாற்று தலாவது ஒழித்தல். புரணம்- மீளவும். அது- அவ்வேகதேச அறிவு. கூடாமை- மீளத்தாக்காமை. கூடு- உடம்பு, கூட்டைவிட்டுயிர் போவதன் முன்னமே என்பது தேவாரம். வாடாமை- வாடியழியாமை. கூற்றங்குதித்தலும் கைகூடும். என்பது திருக்குறள். வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானமாயினதே என்பது திருவிசைப்பா. அளிதரும் ஆக்கை செய்தோன்போற்றி கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் -என்பது திருவாசகம். ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்துவார்க்கிட ரான கெடுப்பன வஞ்செழுத்துமே --- (3-22-3) புரணம் பூரணம் எனக் கொண்டு அவ்வேகதேச அறிவு கூடாமை பூரணம் வந்து கூடும் எனப் பொருள் கொள்ளுதலுமுண்டு. உங. கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில் வெள்ள வெளியாமென் றுந்தீபற வீடு மெளிதாமென் றுந்தீபற. இவ்வாறு சிவசமாதி கூடினார் சுத்தநிலையினராய் வீடும் எளிதாகப் பெறுவர் என்கின்றது. (இ-ள்) உள்ளங்கவர் கள்வராகிய தம்பிரானாருடன் தேகமாகிய இல்லத்தையுடைய ஆன்மாவும் பொருந்தி ஒருவழிப்பட்டால் ஆறு அத்துவாக்கள் வழியாகத் தேடிய வினைக்குவியலனைத்தும் கவரப்பட்டு இவனுடைய உள்ளமும் வெளிக்கு வெளியாய்ப் பரமாகாசமாகிவிடும். ஐம்புலவேடர்களாற் கவர்ந்து கொள்ளப்படாத வீடுபேறும் இவனுக்கு எளிதாகக் கிடைக்கும் எ-று. தோன்றாதுநிற்றல் பற்றிக் கள்வன் என்றார். கள்வனென்றது, கண்ணுக்கு உயிர் மறைந்து நின்றே காட்டுவதாகலான் அது தன்னையும் உயிரையும் அறியமாட்டாதாயிற்று; அதுபோல முதல்வன் இதுகாறும் மறைந்து நின்றே உணர்த்துதலின் உயிர் தன்னையும் முதல்வனையும் அறியமாட்டாதாயிற்று என்பதுபட நின்ற குறிப்பு மொழி. உள்ளத்திற் காணவல்லார்க்கு அக்கள்ளந் தீர்தலின் தம்மையும் முதல்வனையும் காண்டல் கூடுமென்பதாம். கள்ளரோடில்லம்... உந்தீபற என்றது இக்கருத்து நோக்கி என்பர் சிவஞானமுனிவர். வெள்ளநீர்ச் சடையினார்தாம் வினவுவார் போல வந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்கு நான் புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம்பிறையினாரே (4-75-9) எனவரும் அப்பர் அருள்மொழியின் பொருளை இத் திருவுந்தியார் தன்னகத்துக் கொண்டு திகழ்தல் காண்க. 42. இன்றிங் கசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும் சென்று தொடருமவன் சென்றிடத்தே-என்றுந்தான் தீதுறுவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூ றல்லனோ மற்று. இது, பேரருளாளனாகிய இறைவன் மன்னுயிர்களை என்றுங் கைவிடமாட்டான் என்கின்றது. (இ-ள்) இப்பொழுது இந்தத் தேகத்திலே நிற்கும்போதே கூடின உணர்வற்ற புண்ணிய பாவங்கள் இரண்டும் இவன் பின்னொரு தேகத்தை எடுத்த பொழுதே ஒக்கச் சென்று கூடாநிற்கும். இவ்வாறு இவ்வான்மா இருவினைகளால் துன்புறு வனாயின் உயிர்க்குயிராகிய சிவன்தான் எக்காலத்தும் இவ்வான்மாவைக் கைவிட்டுவிடுவானோ? இவனுக்குத் தன் திருவருட் சத்திபதியச் செய்து மலமாயை கன்மமாகிய பிணிப்பினை நீக்கி அருள்புரியும் சத்தியை ஒருபாகத்திற் கொண்டு திகழும் அம்மையப்பன் அல்லனோ? (அருளாளனாகிய சிவபதி ஆன்மாக்களை எந்நிலையிலும் கைவிடமாட்டான். ஆன்மாக்களின் வினைப்பயன்களை அருத்தித் தொலைப்பித்து நிட்டையிலே கூட்டி வீடு பேற்றினை அருள்வன்) எ-று. அசேதனமாம் வினைகள் ஆன்மாசென்ற இடத்தே தொடரும் எனவே, அவ்வினை தானே ஆன்மாவைச் சென்று பற்றுதல் இல்லை என்பது, அசேதனமாம் இவ்வினைகள் என்ற அடைமொழியால் உய்த்துணரப்படும். அசேதனம் - உணர்வில்லாதது. சென்று தொடருதல் அவனது ஆணையால். அவ்வினைப்பயனை ஆன்மா நுகரும்படி நியதி செய்து ஊட்டுபவனும் இறைவனே என்பதும் குறிப்பினாற் புலப்படுத்தியவாறு. ஆணையின் இருவினையிற் போக்குவரவு புரிய, நீக்கமின்றி நிற்கும் என்பது சிவஞானபோதம். இப்பாடற்கு மற்றொருவகையிற் பொருள் கொள்ளுதலும் உண்டு. இப்பொழுது இவ்விடத்தில் சீவன்முத்தனானவன் செய்யப் பட்ட சடமாகிய இருவினையும் அநாதிமுத்தன் எனப்பொருந்தின நேயத்திலே சென்று பொருந்தும்; எக்காலமுந் தன்னுடைய போதத்தையும் தன்னையும் இழப்பாகக் கண்டவனானால் சிவனாகியபதி கைவிடாமல் ஏற்றுக் கொள்ளுவன், ஒன்றினுந் தோய்வில்லாத கர்த்தா இவனோடு கலப்பானோவென்னில், அருளேயுருவாகிய அம்மையுடன் கலந்திருக்கிற வனல்லனோ? ஆகையால் இவனது வினைப்பயனைத் தானே ஏன்று கொள்வன் என்பதாம். தீது என்பது, இழப்பு என்ற பொருளில் ஆளப்பெற்றது. இப்பாடல், ஞானிக்கு வினையில்லை; அவனது வினைப்பயனை முதல்வனே ஏன்றுகொள்வன் என்பதனையுணர்த்திற்று என்பது இவ்வுரையாற் புலனாம். இவ்வினைகள் ஓரிரண்டும் அவன் சென்ற இடத்தே சென்று தொடரும் எனவும், என்றும் தான் தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூறல்லனோ எனவும், இருதொடராக இயைத்துப் பொருள்கொள்க. கைவிடுமோ என்புழி ஓகாரம் எதிர்மறையாய்க் கைவிடான் எனப் பொருள் தந்து நின்றது. கைவிடாமைக்கு அவன் அருளாளனாதலே காரணம் என்பார், மாதொரு கூறல்லனோ என்றார். 43. அநாதி சிவனுடைமை யாலெவையும் ஆங்கே அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும் காத்தல் அவன்கடனே காண். இஃது இறைவன் மாதொரு பாகனாகத் திகழ்தலால் மன்னுயிர்கள் பெறும் பயனை விரித்தருளிச் செய்கின்றது. (இ-ள்) உலகுயிர்கள் யாவும் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளாகிய சிவனுக்கு உடைமையும் அடிமையும் ஆதலால் அநாதியேயுள்ள உயிர்த்தொகுதியை அநாதியே பிணித்துள்ள பாசத் துயர் விட்டுநீங்கும்படி அம்மையப்பனாகக் கூடிநின்று கேவல சகல சுத்தமாகிய எவ்விடத்தும் காத்தருளுதல் அம்முதல்வனது கடமையே யென்று உணர்வாயாக எ-று. பதி பசு பாசம் என்னும் மூன்றும் அநாதியென்பது, பதியினைப் போற் பசு பாசம் அநாதி எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். முப்பொருளுண்மையாகிய இதனை, அநாதிசிவன், அநாதியெனப் பெற்ற அணு, அநாதியே ஆர்த்த துயர் என்னுந் தொடர்கள் தெளிவுபடுத்தல் காணலாம். இதனால் கட்டு நிலையினும் வீட்டு நிலையினும் ஆன்மாவுக்குச் செயலில்லையென்பது புலனாம். ஆர்த்தபிறவித்துயர் கெட நாமார்த்தாடுந் தீர்த்தன் என்பது திருவெம்பாவை. உச. எட்டுக் கொண்டார் தமைத்தொட்டுக்கொண்டே நின்றார் விட்டார் ருலகமென் றுந்தீபற வீடே வீடாகுமென் றுந்தீபற. இஃது, உள்ளங்கவர் கள்வனாகிய இறைவனது அருள்வழி நின்றவர்கள் உலகவாதனையிற்பட்டு வருந்தமாட்டார்கள் என்கின் து. (இ-ள்) ஐம்பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எட்டினையுந் தனது திருமேனியாகக் கொண்டு திகழும் முதல்வனை இடைவிடாது அன்பினாற் பற்றி நிட்டை கூடியிருப்பவர்கள் உலகப்பொருள்களோடு பொருந்தி நின்றார்களாயினும் அவற்றிலுள்ள பற்றை அறவே நீத்தவர்கள். அப்பற்று அறவே அழிவில்லாத திருவடியே அவர்கட்குப் புகலிடமாம். எ-று. 44. தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் -தம்மையொரு பூவாகப் பூவழியாதே கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே யுளன். இஃது அட்டமூர்த்தியாகிய இறைவனைத் தொட்டுக்கொண்டு நிற்குமா றிதுவென்கின்றது. (இ-ள்) தம்மிடத்திலே அருளாகிய சிவலிங்கத்தைக் கண்டு அந்தச் சிவலிங்கத்தைத் தாம் பணிந்து தம்முடைய பத்தியாகிய திருமஞ்சனத்தை அபிடேகம் பண்ணித் தம்மை ஒப்பற்ற திருப்பள்ளித் தாமமாக்கித் தாம் என்கின்ற முதலழியாமற் சாத்திப் பூசித்தால் அப்பொழுதே இடைவிடாமல் உன்னுள்ளத்தே முதல்வன் விளங்கித் தோன்றுவன் எ-று. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணியி லிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே. (4-76-4) என அப்பரடிகள் அருளிய வண்ணம் ஆவியைப் போற்றுதற் குரிய பூவாகக் கொண்டு அருச்சித்தோம் எனப் பொருள்கூறுதற்கும் இடமுண்டு. ஓவாமையன்றேயுடல் எனப் பாடங்கொண்டு பிராரந்நாசம் பிறந்து தேகம் விட்டபொழுதிலே திருவடியிலே இரண்டறவிடும தொழிந்து மீண்டுந் தேகம் எடுக்கமாட்டாதன்றேஎன பொருள் வரைந்தார் தில்லைச்சிற்றம்பலவர். 45. தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லை தானென்றுந் தன்னைத்தான் பெற்றவன்றான் ஆரென்னிற் - றன்னாலே எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே எல்லாமாய் நிற்கு மிவன். இது, சிவப்பேறாகிய வீடுபேற்றின் இயல்பினை விளக்குகின்றது. (இ-ள்) ஒருவன் பெறத்தக்க பேறுகளிலே தான் அழிந்து போகாமல் அருளாலே தன்னை உறுதியாகப் பெறுகின்ற பேற்றின் மேல் வேறு பேறில்லை. தானென்றும் தன்னைத்தான் பெற்றவனென்றும் இரண்டாக இவ்விடத்திற் சொன்னது யாராமென்னில் ஆன்மா தன்னையறியாமல் பாசமாய் நின்ற முறைமையொழிய, அருளாலே சிவத்தையும் அறிந்து பாசத்தையும் அறிந்து இந்தப்பாசத்தை நீங்கின தன்னையுங்கண்டு, எல்லாப்பொருளையும் தன்னகத்தே யுணர்ந்து பாசத்தை ஒழிந்ததுபோல, எல்லாவற்றையும் உணர்ந்தோம் என்னும் உணர்வையும் ஒழியவிட்டுத் தன்னுடைய போதஞ் சீவியாமற் பூரணனாய் நிற்கவே எல்லாவடிவுகளும் தன்னுடைய வடிவாய்த் தானே இந்த உலகங்கட்கெல்லாம் இறைவனாயுள்ள செம்பொருளோடு ஒட்டி நிற்பன் இவன் எ-று. பலபேறுகளுள்ளேயும் தன்னைப் பெறுவதற்கு மேற்பட்ட பேறு ஒன்றுமில்லை. தன்னைப் பெற்றவன் ஆரென்னில் தன்னாலே எல்லாமாகிய திருவருளைத் தன்னிடத்திலே பெற்று முன்னே கொண்ட ஆன்மபோதத்தைவிட்டுச் சிவபரம்பொருளோடு ஒன்றி நின்று எக்காலத்தும் எவ்விடத்தும் வியாபித்து நிற்பன். இப்படிப் பட்டவனே தன்னைப் பெற்றவன் என்பதாம். தன்னாலே-அருளாலே. கொண்டது-ஆன்மபோதம். இந்த நிலைமை ஆன்மாவுக்குள்ள தன்னியல்பென்பது, தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். (268) எனவரும் திருக்குறளாற் புலனாம். ஆன்மாவாகிய தனக்கு உயிராய் விளங்கும் முழுமுதற் பொருளை ஆன்மபோதம் நீங்கத் தனக்குரியதாகப் பெற்று எல்லாமாய் ஒன்றி நிற்குந் தவமுடையானை ஏனைய மன்னுயிர்கள் யாவும் பராவுசிவன் எனக் கொண்டு தொழும் என்பது இதன் பொருளாகும். தன்உயிர்-ஆன்மாவாகிய தனக்கு உயிராகிய பரம்பொருள். தான் அற - தான் என்னும் ஆன்மபோதம்கெட. பெறுதல் - சிவத்தோடு ஒட்டி வாழப்பெறுதல். உரு. சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே ஒத்ததே யொத்ததென் றுந்தீபற ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. இஃது இறைவன் திருவடியைத் தொட்டுக் கொண்டு நின்றவர்களே புண்ணிய பாவந் துலையொத்த ஆன்மாக்களாவர் என அருளிச் செய்கின்றது. (இ-ள்) திருவருளாலே உயிரானது பசுத்துவம் நீங்கிச் சிவத் துவமாகவுங் குற்றத்தைக் குணம் போல விளைவிக்கின்ற அந்தக் கரணங்கள் பசுகரணத்தன்மைகெட்டுச் சிவகரணமாகவும் இவ்வாறு திருவருளோடு ஒத்துச் சென்று கூடினவர்களே கன்மங்கள் பக்கு வத்தையடைந்து இருவினையொப்புப் பெற்ற ஆன்மாக்கள் ஆவர். இவ்வாறு வினைகள் துலையொவ்வாத ஆன்மாக்களுக்கு இறைவன் திருவடியினைக் கூடுதல் ஒவ்வாது எ-று. 46. துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில் இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கின் - என்பதனால் நின்வசனா யேயிருக்கி னின்னுடனாம் நேரிழையாள் தன்வசனா யேயிருப்பன் தான். இது, சித்திலேயொத்து ஒழுகுதலாகிய ஞானயோகமே சிவ யோகமாம்படி அருளிச் செய்கின்றது. (இ-ள்) ஆன்மா மலமாயை கன்மங்கள் வசப்பட்டு ஐம்பொறி வழியே அலைவானாயின் இவனுக்கு வருகிற நுகர்ச்சிகள் எல்லாம் துன்பமேயல்லாமல் இன்பஞ்சிறிதுமில்லை. பொறிவழிச் செல்லாது தன் வசத்தனாய் அடங்கியிருப்பானானால் இவனுக்கு வருகிற நுகர்ச்சிகள் எல்லாம் இன்பமேயல்லாமல் துன்பம் சிறிதுமில்லை என மெய்ந் நூல்கள் கூறுதலால், நீ பொறிகளின் வசத்தனாகாமல் உன்வசத்தனாய் அடங்கியொழுகுவாயானால் அருள் வசத்தனாகாமல் உன்வசத்தனாய் அடங்கியொழுகுவாயானால் அருள் வசத்தனாயுள்ள இறைவன் உன்னுடனே வந்து பொருந்துவன். எ-று. பரவசனாதலாவது, ஆன்மா தானே வினைமுதலாகஐம் பொறிகளின் வழி ஒழுகுதல். தன் வசனாதலாவது, ஐம்பொறிகளை அடக்கி இறைவன் அருள்வழி அடங்கி ஒழுகுதல். ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (426) அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் (121) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (6) எனவரும் திருவள்ளுவப் பயன் இங்கு நினைக்கத்தக்கன வாகும். நின்வசனாதல் என்றது, சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு (திருக் 422) என்றாங்குப் பொறிவழிச் செல்லாது அறிவின்வழிப்பட்டு நன்னெறியின் ஒழுகுதல். நின்னுடனாம் என்றது, ஆன்மபோதம் மேற்படாது சிவபோதமே மேற்பட்டு விளங்க உயிர்க்குயிராய் உடனாய் நிற்பன் என்பதாம். அங்ஙனம்நிற்றற்கு அருளே காரணம் என்பது புலப்படுத்துவார், தான் நேரிழையாள் தன்வசனாயே யிருப்பன் என்றார். நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு என்பது திருமுருகாற்றுப்படை. 47. செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ டொத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும் ஆராத அக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார் பேராமற் செல்வரதன் பின். இது, கருவி கரணங்கள் ஒருகாலமுங் கூடாதபடி அருளிலே யடங்கி நிற்கவல்லவர்கட்கே இந்தச் சிவயோகம் கைகூடும் என்று அருளிச் செய்கின்றது. (இ-ள்) தற்போதம் இழந்தவர்களே சித்தவிகாரக் கலக்கமாகிய கரணங்களின் சேட்டை கெட்டவர்கள். தற்போத மிழந்த நிலையில் அம்மெய்ப் பொருளாகிய சிவத்தோடு ஒன்றி அதன்வழி ஒத்து அடங்கி யொழுகியவர்களே மேலான சிவயோக நிலை கைவரப் பெற்றவர்கள்; இங்ஙனம் தற்போதல் கெடாதவர்கள் எதனாலும் நிறைவுபெறாத கருவிகரணங்களாலே பிணிப்புண்டு அவற்றின் பின்சென்று தப்பாமல் ஏவல் செய்து பிறப்பிறப்புக்களிலே உழல்வோராவர். எ-று செத்தலாவது, தற்போதம் இழத்தல்; தான் என்னும் முனைப்பு நீங்குதல், திருவாசகத்தில் வரும் செத்திலாப்பத்தின் திருப்பாடல்களில் செத்தல் இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காணலாம். அதனோடு சேர்ந்து ஒத்தலாவது, சிவத்தோடு ஒன்றியிருந்து அதன் அருளின் வழி ஒத்து அடங்கியொழுகுதல். ஒத்துச்சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம் என்பர் திருவாதவூரடிகள். யோகபரர், பரயோகர்-மேலான சிவயோகநிலை கைவரப் பெற்றவர்கள், எத்தாலும் --- எதனாலும். ஆராமை-விருப்பம் நிரம்பாமை. ஆர்ப்புண்டல்-பிணிக்கப்படுதல். அல்லாதார் என்றது, சிவயோக நிலை கைவரப்பெறாதவர்களை. அல்லாதார் எத்தாலும் ஆராத அக் கரணத்து ஆர்ப்புண்டு பேராமல் அதன்பின் செல்வர் என இயைத்துப் பொருள் கொள்க. இனி கரணங்கள் கெட்டார் செத்தாரே; சேர்ந்து அதனோடு ஒத்தாரே யோகபரர் ஆனவர்கள்; எத்தாலும் ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு இங்கு அல்லாதார் பேராமல் அதன்பின் செல்வர் என இயைத்து, கருவிகளை விடுகிறதே முத்தியென்னில் அவர்கள் அநுபவத்தை இழந்தவர்களே; கருவிகளுடனே பொருந்தியிருக்கச் செய்தே அந்த நேயத்திலே பொருந்தியிருக்கிறவர்களே அத்துவிதத்திலே மேம்பட்டவர்; எந்த விதத்தாலும் இவன் வசமாகப் பொருந்தாத கருவிகளினாலே கட்டப்பட்டு நேயத்திலே பொருந்தாதவர்கள், இடைவிடாமற் கருவிகளின் வழியே சென்று செனன மரணத் துக்கப்படுவர் எனப் பொருள் கூறுதலும் உண்டு. இப்பொருளிற் செத்தல் என்பது கருவிகளின் துணையின்றி உயிர் ஒன்றுஞ் செய்ய இயலாது செயலற்ற தன்மையினை. செத்தான் செயக்கிடந்ததில் (திருக்குறள் 1001) என்புழி செத்தல் என்பது இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காணலாம். சேர்ந்து அதனோடு ஒத்தலாவது, திருவருளால் திருந்திய கருவிகளுடனே பொருந்தி மெய்ப்பொருளோடு ஒன்றி ஒத்துணர்தல். ஐயுணர் வெய்தியதன் பயனாவது மெய்ப் பொருளை உணர்ந் தொன்றுதல் என்பதாம். இதனுள் பெத்தத்துக்கும் முத்திக்கும் கருத்து வேறுபாடு அல்லாமற் கருவியொன்றென்பது கண்டு கொள்க என இப் பொருட்குக் கருத்துரை வரைவர், பின்வந்த உரையாசிரியர். அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கில்லை அஞ்சும் அடக்கின் அசேதனமா மென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே (திருமந்திரம் -203) எனவரும் திருமூலர் வாய்மொழி இங்கு நோக்கத் தகுவதாகும். 48. கண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங் கண்ணுங் கருத்துங் களிகூர-நண்ணி வடமடக்கி நிற்கும் வடவித்தே போல வுடனடக்கி நிற்பர்கா ணுற்று. இது, கருவிகரணங்கள் ஒருகாலும் பொருந்தாதபடி சிவபரம் பொருளோடு ஒன்றியிருக்கும் சிவயோகிகளின் பெருமையினை விரித்துரைக்கின்றது. (இ-ள்) எத்தகையோர் கண்ணுக்கும் கருத்துக்கும் அளவு படாது அப்பாற்பட்டதாய்க் கடந்து நிற்கும் ஒப்பற்ற பொருள் சிவ மாயினும் (உலகப் பொருளை) நோக்காது பரம்பொருளையே நோக்கியிருக்கும் சிவயோகிகளின்) கண்ணும் கருத்தும் களிகூர அணுகித் தோன்றுதலால், விரிந்து பரவும் தன்மையதாகிய ஆலமரத்தினைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஆலின்விதை போன்று அளவிடப்படாத பெரும் பொருளாயினும் தங்கள் உள்ளத்தேயடக்கிக் கொண்டு தங்கள் பசுபோதத்தைவிட்டு இந்தச் சிவத்துடனே கூடியிருப்பார்கள் எ-று புறத்தேயும் அகத்தேயும் காணப்படும் உருவப்பொருள் அருவப் பொருள் ஆகிய பொருள்கள் அனைத்தையும் கடந்து அப்பாற்பட்டுத் திகழ்வது ஒப்பற்ற சிவம் என்பது புலப்படுத்துவார். கண்ணுங் கருத்துங் கடந்ததொருபேறு என்றார். நண்ணி-நண்ண; நண்ணுதலால். நண்ணுதலாவது, தன்னருளால் அடியார்க்கு அணுகித் தோன்றுதல். சிவாநுபவம் சிவஞானிக ளிடத்திலேயன்றி மற்றையோர்பால் விளங்கித் தோன்றாதென்பது, வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல என்பதனாற் புலனாம் வடம்-ஆலமரம் வடவித்து-ஆலின் விதை. இங்ஙனம் புறத்தும் அகத்தும் அளிவிடப்படாத பெரும் பொருளை ஒருடம்பிலே கட்டுப்பட்டிருக்கும் ஆன்மா தன்னுள் அடக்குமாறு எங்ஙனம்? என வினவிய மாணாக்கனை நோக்கி அருளிச் செய்வதாக அமைந்தது, 49. வானகமும் மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை ஊனகத்தே யுன்னுமதென் என்றனையேல்-ஏனகத்து வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம் ஆதனமே யன்றோ வதற்கு. எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். (இ-ள்) வான்முதல் மண்ணீறாவுகள்ள எல்லாப் பொருள்களும் தானேயாய் எங்கும் நீக்கமற நிறைந்த பெரும் பொருளாகிய சிவத்தை ஒருடம்புக்குள்ளே அடங்க நினைத்தல் எவ்வாறு? என வினவு வாயாயின், என்போல்வாரிடத்தும் அநாதியே கூடிப் போந்த மலவாதனையை அறவே மாற்றுந் திறனாயமைந்தது அம்மெய்ப் பொருளை உடம்பினகத்து நினைந்து போற்றும் அம்முறையே யாகும்; நிலமுதலாய தத்துவங்களும் உயிர்த்தொகுதியும் ஆகிய எல்லாம் சிவபரம் பொருளாய அதற்கு இருப்பிடமல்லவா? எ-று. அது என்றது, உன்னுதலை. உன்னும் முறைமையாவது. வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாருந் தாமென்க--ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தானென்பன் யான். எனக் காரைக்காலம்மையார் அருளியவாற்றான் இது வென அறிக. இந்த மெய்ப்பொருளை அகத்தே கண்டு மலவாதனை தீர்ந்திருப்பார் போல் புறத்தேயுங்கண்டு மலவாதனையைப் போக்குதல் கூடுமோ? என வினவிய மாணவனை நோக்கி அருளிச் செய்வதாக அமைந்தது பின்வருந் திருப்பாடலாகும். 50. கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணைதனில் வல்லுப் பலகையினில் வாதனையைச்---சொல்லும் அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா சகமார்க்கத் தாலன்றே தான். (இ---ள்) ஆடையினைத் துவைத்தற்குரிய கல்லின் கண்ணும், வயல்வெடிப்பினுள்ளும், ஒளியுடைய வாட்படையினும் சந்தனக் கல்லின்கண்ணும், சூதாடுகருவிப் பலகையின் கண்ணும், முறையே திருக்குறிப்புத் தொண்டர், அரிவாட்டாயர், ஏயர்கோன் கலிக்காமர், மூர்த்தியார், மூர்க்க நாயனார் ஆகிய பெருமக்கள் ஒவ்வொரு தொழிலைச் செய்யும்போதே சிறப்பித்துரைக்கப்படும் சிவனளவில் ஒருவழிப்பட்ட அகமார்க்க நெறியினையொட்டிப் புறத்தொழிலாக சரீரத் தொண்டினாலேயே அக்காலத்தே மலவாதனையை அற மாற்றினார்கள்; ஐயனே இந்த முறைமை சகமார்க்கமாகியயோக நெறியாலன்று எ---று. அகமார்க்கமாவது, நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரந்திருவாக்கினில் நிகழ்வது அஞ்செழுத்துமேயாக ஐம்புலவுணர்வினை யொடுக்கிச் செம்பொருளாகிய சிவத்தை இடையறாது நினைந்து போற்றுதலாகிய அன்பு நெறியாகும். சகமார்க்கத்தால் அன்று யோகநெறியால் அன்று. சகமார்க்கம்-தோழமை நெறியாகிய யோக நெறி. தான்-அசை. அகமார்க்கம் - அன்பின் வழிப்பட்ட உடம்பினால் செய்யத்தகும் திருத்தொண்டின் நெறி. சிவனடியார்கள் யோகநிலை கைவரப் பெற்றிருந்தாலும் சரியை கிரியையாகிய திருத்தொண்டு செய்தல் வேண்டும் என்பதாம். உசா. உள்ளும் புறம்பும் நினைப்பறி னின்னுள்ளே மொள்ளா அமுதாமென் றுந்தீபற முளையாது பந்தமென் றுந்தீபற. இது, திருவருட் பதிவினால் இருவினையொப்பும் மலத்தீர்வும் பெற்றுச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்து வழிபடும் அடியார்கட்கு உள்ளத்தே விளையும் பேரானந்தப்பயனை விரித்துரைக்கின்றது. (இ-ள்) சிவமாகிய பொருள் நெஞ்சத்தின் உள்ளே நுணுகி யுள்ள தென்றும் உலகின் புறத்தே விரிந்துள்ளதென்றும் காண்பானாகிய தானென்றும் காணுதற்குரிய பொருளாகிய அவனென்றும் அம் முதற்பொருளைக் கூடவேண்டுமென்றும் கூடினோமென்றும், அதன் விளைவாக நின்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப் படாத நுகர்ச்சித் தெளிவான சிவானந்தத் தேனாகிய அமுதம் ஊறிப்பெருகி உன்னையே அகத்திட்டுக் கொண்டு தானேயாய்விடும். இதன் பயனாகப் பின்பு பிறப்பிறப்புக்கள் முளைத்தற்கேதுவான பாச விகற் பங்களாகிய பிணிப்பு உண்டாகாது எ-று. சரியை கிரியை நெறிகளின் நிற்பாரைப் போல ஏகதேசப் படப் புறம்பே தியானிக்குந் தியானமும், யோகநெறி நிற்பாரைப்போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் ஆகிய ஏகதேச நினைவைப்போக்கி, உள்ளும் புறம்புமாகிய எவ்விடத்தும் அம்மெய்ப் பொருளே விரிந்து விளங்குகின்றது என்னும் பேருணர்வுடன் இறைவனை வழி பட்டால் ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத சிவாநுபவம் நின்பால் உண்டாகும். அஃது உண்டாகவே அதன் பின்னர்ப் பாச ஞானம் பசுஞானம் ஆகிய குறையுணர்வின் பிணிப்பு உன்னிடத்திலே ஒருகாலத்தும் அணுகி முளைக்காது என்பதாம். இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும். 51. உள்ளும் புறம்பு நினைப்பொழியி லுன்னிடையே வள்ளல் எழுந்தருளு மாதினொடுந்-தெள்ளி யறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற் செறிந்தொழிவா யேதேனுஞ் செய். இஃது இறைவனை உள்ளும் புறம்பும் ஒருபடித்தாக வைத்து அன்பினால் வழிபடுதல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. (இ-ள்) உயிர்க்குயிராகிய இறைவனைத் தனக்குள்ளே காண வேண்டும் என்றும் புறம்பே காண வேண்டுமென்றும் நீ எண்ணிய நிலையில் உன்னுடைய ஆன்ம போதத்தையும் உடம்பினையும் நீ கைவிடாமையால் அப்பரம்பொருள் உனக்கு இரண்டு பட்டுக் தோன்றின தொழிந்து, அப்பொருளுக்குத் தனித்ததோ ரிடமில்லையாம் ஆதலால், உடல் உலகுகளையும் தத்துவங்களையும் அவற்றின் உருவம் தரிசனம் சுத்தி ஆகியவற்றாலே அருளின் மயமாகச் செய்து, ஒருநீர்மையான சிவஞானமேயாகி உனது நினைவு அற்றொழிய ஞானயோகத்திலே நிற்பாயானால் அப்பொழுதே கைம்மாறு கருதாது வேண்டுவார்வேண்டு வதேயீந்தருளும் வள்ளலாகிய சிவபெருமான் தனது அருளாகிய சத்தியுடன் வந்து தோன்றி உன்னை அகத்திட்டுக் கொண்டு தானேயாய் விளங்குவான். இதனைச் சிவயோகத்தின்கண்ணே நின்று தெளிய ஆராய்ந்து, சிவனை நுகர்கின்றோம் என்கின்ற அறிவாகிய தற்போதத்தைக் கைவிட்டு நிற்பாயாக, இந்த முறைமை எளிதிற் கூடாதாயின் சிவனுடைய பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டல் நினைத்தல் தெளிந்து காணுதல் செய்த பொழுதே நினது உள்ளத்தை யுருக்குவ தாகிய பேரன்பினைப் பெற்றாயானால் அதனாலே உன்னுடைய தற்போதமானது அழிந்து சிவனுடனே ஒருநீர்மையாய்ச் செறிந்து பிரிவற நிற்கும் பத்தியோகத்தினைப் பெறுவாய். இங்குச் சொல்லப் பட்ட ஞானயோகம் பத்தியோகம் என்னும் இரண்டினுள்ளே நினக்குப் பொருந்தியதொன்றைச் செய்வாயாக எ-று. இனி, இறைவன் உள்ளும்புறம்பும் எங்கும் தானாய் ஆழ்ந்தும் அகன்றும் விரிந்து நிற்றலால் உள்ளென்றும் புறமென்றும் இடத்தாற் பகுத்து வேறுபட நினைக்கும் நினைவற எங்கும் எல்லாமாய் விளங்குகின்றான் என ஒருதன்மையாய் நினைந்து போற்றும் உணர்வினைப் பெறுவாயானால் உன்னிடத்திலே சிவன் திருவருளோடுங் கூடிப்பொருந்துவன். வேறுபட நினையாமைக்கு உபாயமாக ஞானசாத்திரங்கள் ஆராய்ந்தறிந்து ஆன்ம போதத்தை ஒழிப்பாயாக. அன்றி ஈசன்பால் நீங்காத பேரன்பு கைகூடினால் அறுபத்து மூவராகியதை ஒழிப்பாயாக. இவையிரண்டும் இயலாவாயின் உன்னால் இயன்ற அளவு சிவபணிவிடைகளைச் செய்வாயாக எனப் பொருள் கூறுவதும் உண்டு. இவ்வாறு பொருள் கொள்வோர் ஆன்ம விகாரமற்றி ருத்தற்கு மூவகையுபாயம் சொன்னது கண்டு கொள்க என இச்செய்யுட்குக் கருத்துரைப்பர். உஎ. அவிழ விருக்கும் அறிவுட னின்றவர்க் கவிழுமிவ் வல்லலென் றுந்தீபற அன்றி அவிழதென் றுந்தீபற. இது, சிவயோக நெறியில் ஒன்றியிருப்பார்க்குப் பசு பாசவிகற்பங்களாகிய அல்லல் தீரும் என அருளிச்செய்கின்றது. (இ-ள்) உலகு உயிர் என்னும் எல்லாப் பொருள்களிலும் பிரிவறக் கூடியிருப்பினும் அவற்றிற் பிணிப்பின்றி அப்பாற்பட்டு விளங்கும் பேரறிவுப் பொருளாகிய திருவருளின் வழியே யடங்கி நிற்பார்க்கு இவ்வுலகிற் பசு பாசப் பிணிப்பாகிய துன்பங்கள் யாவும் தன்னியல்பில் விட்டு நீங்கும். திருவருளின்வழி ஒத்து நின்றாலன்றி வேறெந்த வழிகளாலும் இத்துன்பம் நீங்காது எ-று. அவிழ இருக்கும் அறிவு என்றது, இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் இறைவனது திருவருள் ஞானத்தினை. உடன் நிற்றலாவது, தற்போதம் கெடத் திருவருள்வழி யமைந்து ஒழுகுதல். இவ்வல்லல் என்றது, இவ்வுலகியலிற் பல்வகையாலும் உயிர்கள் நுகர்தற்குரிய துன்பங்களெல்லாவற்றுக்கும் காரணமாகிய பாசப் பிணிப்பினை. உலகிற் புறவிருள் நீங்கத் தோன்றும் கதிரவன் முன்னிலையிலே கண்ணிருள் நீங்கி விலகுமாறுபோல, சிவமாகிய செஞ்ஞாயிற்றின் முன்னிலையிலே பசுபாச விகற்பங்களாகிய அகவிருள் நீங்கியொழியும் என்பார், அவிழ விருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு அவிழும் இவ்வல்லல் என்றார். அறிவுடன் நிற்றல்- ஆன்மா பேரறிவுப் பொருளுடன் ஒன்றியிருத்தல். இதுவே யோகம் எனப்படும். இது ஞானயோகம் பத்தியோகம் என இருதிறப்படும் என்பது மேலே விளக்கப்பெற்றது. பத்தியோகத்தில் உறைத்து நின்று இறைவனையடையப் பெற்றவர்களது பெருமையினை விரித்துக் கூறுவன பின்வரும் திருக்களிற்றுப் படியார் திருப்பாடல்களாகும். 52. கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் ---கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற் ருரறியு மன்பன் றது. இஃது அன்பின் திறத்தால் ஆன்மபோதம் ஒழியுமாறுணர்த்துகின்றது. (இ-ள்) கண்ணப்பனொப்பதோரன்பின்மை என மாணிக்க வாசகர் அருளிச் செய்தமையால் அத்தகைய பேரன்பின் தன்மை யினைக் கண்ணப்ப நாயனாரும் காளத்தியப்பரும் அறிவாரன்றி மற்று யாவராலும் அறியக்கூடிய எல்லையுள் அடங்கிய அன்பு அதுவன்றென்க எ-று. ஆரும் என முற்றும்மை விரித்துரைக்க. முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறு வேதகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத் தன்பரிசும் வினையிரண்டும் சாருமலமூன்றும் அற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ (பெரிய - கண்ணப்ப. 154) எனவியந்து போற்றுவர் சேக்கிழார் நாயனார். 53. அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க- அவிழ்ந்தசடை வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற் சேந்தனார் செய்த செயல். இதுவும் அது. (இ-ள்) நூல்கள் பிரிந்த விரிந்த கந்தைக் துணியில் குழைந்த களியமுதினை மலர்ந்த உள்ளத்தோடு அவிழ்த்து நிவேதிக்க அக்களியமுது விரிந்த சடையினையுடைய நடராசப் பெருமானுக்கு இனிய திருவமிர்தாயிற்று; மெய்யன்பினையுடைய சேந்தனார் ஆன்மபோதங்கெடச் செய்த அன்பின் செயல் அதுவன்றோ எ-று. பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிசடைமேல் ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச் சேந்தன் கொடுக்க அதுவுந் திருவமிர் தாகியதே (கோயில் திருப்பண்ணியர் விருத்தம்-26) எனவரும் நம்பியாண்டார் வாய்மொழியை அடியொற்றி யமைந்தது இத் திருக்களிற்றுப்படியாராகும். 54. சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ் சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச்- சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு. இதுவும் அது. (இ-ள்) பால்சுரத்தற்கிடமாகிய உமையம்மையார் தனத்தினின்றும் தூய சிவஞானமாகிய பாலைப் பொழிதலால் அதனைத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் பருகியருளினார், என்று அறிந்தார் சொல்லக் கேட்ட அளவிலேயே பிள்ளையார்பாற் கொண்ட மகன்மைக் கேண்மையால் பால்சுரக்கின்ற தனமுடையராயினார் தென்பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார். அன்புநிறைந்த உள்ளத்தராகிய பாண்டிமாதேவியாரது அன்பிருந்த முறைமை (அளவிடப்படாத) அத்தன்மையதாம். எ-று. எண்ணரிய சிவஞானமாகிய இனிய அமுதத்தை எவ்வுயிர்க்கும் என்றும் சுரத்தற்கிடனாயது உண்ணாமுலையம்மையாகிய இறைவி திருமுலையென்பார் சுரந்த திருமுலை என்றார். தூய என்னுஞ் சொல்துய்ய எனத்திரிந்தது. சுரந்து-சுரத்தலால். பிள்ளை என்றது காழிக்கவுணியப்பிள்ளையாரை. அம்மையேயப்பா என அழுத நிலையினைக் கண்டு பால்சுரந்த உமையம்மையாரினும் அம்மையே என அழுதார் எனக் கேட்ட அளவிலேயே பால்சுரந்த பாண்டிமா தேவியாரது தாயன் பின் திறம் மிகவும் சிறந்து விளங்குதலால் அது நம்மனோரால் அளவிட்டுரைக்கும் எளிமையதன்று என்பதாம். இத்திருக்களிற்றுப்படியார் திருப்பாடற்பொருளை இனிது விளக்கும் முறையில் அமைந்தது, இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக் கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தார் யார்சொல் எனக்கு. எனவரும் நால்வர் நான்மணிமாலை வெண்பாவாகும். இம்மூன்று பாடல்களானும் அன்பினாற் செறிந்தார் தம் அன்பின்மிகுதி அருவுருத்திருமேனியாகிய சிவலிங்கத்தினும் அன்புடைய அடி யாரிடத்தும் குருவிடத்தும் செறிந்து விளங்குந் திறம் முறையே கூறப்பட்டது. 55. அன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி அன்பேயன் பாக அறிவழியும்---அன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான். இஃது அன்பின் சிறப்பினை விரித்துரைக்கின்றது. (இ - ள்) அன்புருவாகிய சிவமே! என்னால் அன்பு செய்தற்குரிய பொருளே! என்று இவ்வாறு அன்பினால் அழுது அரற்றி இத்தகைய அன்பே இறைவனையடைதற்குரிய சாதனமாகக் கொண்டு தற்போதம் ஒழிதற்குக் காரணமாகிய அன்பே சிவமாகிய நற்பயனையளிப்ப தன்றி அன்பின்றித் தீர்த்தங்களில் நீராடுதல் தியானஞ் செய்தல் சிவனை மலர்தூவி வழிபடுதல் ஆகிய அப்புறச் செய்கைகள் மட்டும் உயர்த்துக் கூறப்படும் வீடுபேறாகிய பயனைத்தரவல்லன அல்ல எ-று. அன்பாலழுதரற்றி அறிவழியும் அன்பாவது, இன்பமே என் னுடை அன்பே எனவும் அன்பினாலடியேன் ஆவியோடாக்கை யானந்தமாய்க் கசிந்துருக, என்பரமல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர் கைம்மாறு எனவும் அன்பினால் ஆன்ம போதங்கெட அழுதடியடைந்த அன்பராகிய திருவாதவூரடிகள் இறைவன்பாற் கொண்ட பேரன்பாகும். தீர்த்தம் - கங்கை காவிரி முதலிய தூய நீர்த்துறைகளில் நீராடல். தியானம் - அந்தக்கரணங் களையொடுக்கி இறைவனைச் சிந்தையில் நினைத்தல். சிவார்ச்சனை - சிவலிங்கம் முதலிய திருமேனிகளை மலர்தூவி வழிபடுதல் பழம் - பயன்; முடிவிலா இன்பமாகிய வீடுபேறு. இவை பழமன்று எனவே அன்பொன்றே அன்பாகிய சிவத்தையடைதற்குச் சிறந்த சாதனமாம் எ - று. அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி என்பொன்மணியினை எய்தவொண்ணாதே (திருமந்திரம்) எனவும், கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக்கன்பில்லையேல் (திருக்குறுந் தொகை) எனவும் வரும் திருமுறைகள் இங்கு நினைத்தற்குரியன. வீடுபேற்றுக்குச் சாதனமாகவும் வீடுபேறாகிய பயனாகவும் திகழ்வது தூய அன்பொன்றே யென்பதாம். இதுபற்றியே இறவாத இன்ப அன்பு என அடை கொடுத்தோதினார் அருண்மொழித் தேவர். இறைவன்பாற் பத்தி செய்தல் என்பது கண்ணப்ப நாயனார்க்குப் போன்று முன்னைத்தவத்தால் இயல்பாகக் கைகூடுவதன்றிக் கல்வியறி வினாற் செய்துகொள்ளப்படுவ தன்றென்பதும், செல்வக்காலையில் மட்டுமன்றி நல்குரவிலும் அத்தகைய அன்பு வெளிப்பட்டு விளங்கும் என்பதும், தாயன்பின் வெளிப்பாட்டுக்கு முலைப்பால் அடையாள மென்பதும், வீடுபேற்றுக்குச் சாதனமாவது இத்தகைய அன்பேயென்பதும் இந்நான்கு வெண்பாக்களாலும் முறையே விரித்துரைக்கப் பெற்றமை காணலாம். 56. எல்லா ரறிவுகளின் தாற்பரியம் என்னறிவு செல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன்---வல்லபடி வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள் ஏதமறக் கண்ட விதம். இனி மேற்கூறியவாறு பத்தியோகம் என்பது யாவராலும் எளிதிற் கூடுதற்கு அரிது என்றும், படிகால் முறைமையிலே கூடுதற் குரியது ஞானயோகம் ஆதலின் அதுவே மலவாதனை தீர்ந்திருத்தற் குரிய ஏணிப்படி நெறியாம் என்றும் அருளிச் செய்கின்றது. (இ-ள்) எல்லாச் சமயங்களிலும் எல்லாச் சாத்திரங்களிலும் உண்டான கருத்துப்பொருள்களை என் அறிவினால் ஆராயத்தக்க அளவும் சென்று ஆராய்ந்தறிந்தேன். அவை எல்லாவற்றினும் துன்பங்கள் அறுகைக்குக் கண்ட முறைமையாவது குருவின் அருளால் பழகி வல்ல முறையில் ஆன்மபோதமாகிய வாதனையைப் போக்கிப் பேரறிவுடன் ஒன்றியிருத்தலாகிய இந்த ஞானயோகமே எ---று. எல்லார் அறிவுகள் என்றது, எல்லாச் சமயத்தார்களும் மெய் யெனக்கொண்ட தத்தம் சாத்திரங்களை. தாற்பரியம் - கருத்து, என்னறிவு என்றது, உலகப் பொருள்களை யாராய்தற்கு அளவுகருவி யாகிய ஆன்ம சிற்சத்தியை. செல்லுமிடமாவது, அவ்வறிவு சென்று ஆராய்ந்து துணிதற்குரிய பொருளெல்லையினை. சென்றறிதலாவது நீள நினைந்து நுணுகியுணர்தல். வல்லபடி - குருவின் உபதேசத்தாற் பழகியறிந்தபடி. வாதனையாவது, ஆன்மபோதப் பழக்கமாகிய வாசனையுணர்வு. மாற்றும் வகையாவது, தற்போதம் தோன்றாதவாறு சிவபோதத்துள் ஒன்றி அடங்கியொழுகுந் திறம். இதுவே ஞானயோகம் எனப்படும். மற்று - அசை, அவற்றுள் - அச்சமய நூல்களுள். ஏதம் - மல வாதனையாகிய குற்றம். அறுதல் - நீங்குதல். ஏதம் அறக் கண்ட விதம், வாதனையை மாற்றும் வகையிதுவே என முடிக்க. உஅ. வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர் பித்தேறினார்களென்றுந்தீபற பெறுவதங் கென்பெணே யுந்தீபற. இது, பிறப்பிறப்புக்குக் காரணமாகிய பாசவிகற்பங்களைக் களைந்து முத்திக்கு வித்தாகிய மெய்யுணர்வை விரும்பியவர்கள் பெறும் பேற்றின் உறுதிப்பாட்டை அருளிச் செய்கின்றது. (இ-ள்) முத்திக்கு வித்தாகிய திருவருளைக் குருவருளால் தேடிப் பெற்றுப், பிறப்பிற்குக் காரணமாக முளைக்குந் தன்மையாகிய பாச விகற்பங்களைக் கைவிட்ட நற்பேறுடையவர்கள் சுகதுக்க வாதனைகளைக் கைவிட்டு மேலாகிய ஞானம் பிரகாசிக்கத் தக்க பரமானந்த சொரூபத்திலே புகுந்தவர்கள். இவ்விடத்திலே இவ்வாறு பெறுதற்குரிய பேரின்பப் பேற்றை விட்டுப் பாச விகற்பங்களால் மயக்கமுறும் உலகியலாகிய அவ்விடத்து அவர்கள் பெறுதற்குரிய பேறு யாதுளது? நெஞ்சமே எ - று பித்து ஏறினார்-மயக்கமாகிய கடலினின்றும் தெளிவாகி கரையில் ஏறியவர்கள். பெண்ணே அங்குப் பெறுவது என்? என இயைத்துப் பொருள் கொள்க. அங்கு என்றது, பாசவிகற்பங்களாகிய முளையைக் கைவிடாத அவல நிலையினை. இனி வித்து என்றது, ஞானத்திற்கு முதலாகிய சிவபரம் பொருளை, முளை என்றது அதன்கணின்று வெளிப்பட்டு விரியும் திருவருள் ஞானத்தை யெனக்கொண்டு வெளிப்படவிரிந்த முளைப் பகுதியிலே அதற்குக் காரணமாகிய விதைவெளிப்படக் காணாமை கொண்டு ஞானத்திற்கு முதலாகிய சிவபரம் பொருளின் உண்மையினை யுணரப் பெறாது கைவிடுவாரும், திருவருள் ஞானத்தை ஒருவாறு பெற்றும் தற்போதமற அதனைப் பேணிப் போற்றாதாரும் நற்பேறற்றவர்களே என்பது இத்திருப்பாடலின் பொருளமைப்பாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு. அதனில் - அம்முளையிடத்தே. அதனை-அம்மெய்ப்பொருளை. முளையைக் கைவிடலாவது திருவருளைத் துணையாகப் பற்றாது ஆன்மபோதம் முற்பட நிற்றல். வயலில் விதை விதைக்கப்பெற்று முளைதோன்றிய நிலையில் அம்முளையைப் பேணி வளர்ப்பவர்களே உழவின் பயனைப் பெறுவர். அவ்வாறன்றி முளைக்குக் காரணமாகிய விதையைத் தேடிக் காணப்புகுந்து முளையைப் பேணாது கைவிட்டவர்கள் பித்தர்களே, அவர்கள் அங்கு நெல்விளைவாகிய பயனைப் பெறமாட்டார்கள். அதுபோலவே தமக்குத் தவத்தால் விளைந்த சிவஞானமாகிய முளையினைப்பேணி வளர்த்துச் சிவகதியாகிய விளைவினைப் பெறுவதொழிந்து சிவஞானத்திற்கு வித்தாகிய சிவம் எவ்வாறிருக்கும் எனத் தம் ஆன்ம போதத்தால் தேடத் தொடங்கித் தமக்குத் திருவருளாற் கிடைத்த சிவஞானமாகிய முளையினைப் பேணி வளர்க்காது நெகிழ விட்டவர் அறிவுகலங்கிய பித்தர்களே யாவர். தற்போதம் மிகுந்த அந்நிலையில் அவர்களாற் பெறுதற்குரிய பேறெதுவும் இல்லை எனப் பிறிது மொழிதல் என்னும் அணியமைய விரித்துரைப்பது இத்திருவுந்தியாராகும். கருதிய பொருள்தொகுத் ததுபுலப் படுத்தற் கொத்ததொன் றுரைப்பது ஒட்டென மொழிப என்றவாறு ஒட்டணியமைந்த இத்திருவுந்தியாரிற் கருதிய பொருளை உவமையணியமைய விரித்துரைக்கும் முறையிலமைந்தது, வித்து மதன் அங்குரமும் எனத் தொடங்கும் திருக்களிற்றுப்படியாராகும். இதனுள் நேயத்திலே பொருந்தியிருந்தாலும் தானென்றொரு முதலாகாமலிருக்க வேணுமென்பது உவமையாற் கண்டு கொள்க என்பது பழையவுரை. இனி, இத்திருப்பாடற்குப் பின்வருமாறு வேறுபொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு. வித்தாகிய ஞானாசிரியனைத் தேடிப் பாசஞானம் பசுஞானமாகிய மூளையையிழந்தவர்கள் திருவருளாகிய பித்துக் கொண்டவர்கள். இப்படியன்றி முன்சொன்ன இருவகை ஞானங்களாலும் பெறுகின்ற பிரயோசனம் ஏதிருக்கிறது? நெஞ்சமே சொல்வாய் எ-று. முத்தி முழுமுதல் பாதாளத்தார் வித்து என்பது திருவாசகம். முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே என்பது தாயுமானார் அநுபவ மொழி. பெறுவதிங்கென்பெணே --- என்பதும் பாடம். சிவமாகிய வித்தைத் தேடிப் பெற்றுழி அதன் முளையாகிய திருவருளைக் கைவிட்டவர்கள் மயக்கம் பிடித்தவரேயாவர்; அருளைக் கைவிட்டவர் அவ்விடத்து என்ன பெறுவது கருதியோ (ஒன்றுமில்லை) எ---று. பத்தியா யுணர்வோர் அருளைவாய் மடுத்து. .. ...... ... ... ... ... ... ... சத்தியாய்ச் சிவமா யுலகெலாம் படைத்த தனிமுழு முதலுமா யதற்கோர் வித்துமா யாரூ ராதியாய் வீதி விடங்கராய் நடங்குலாவினரே என்புழிச் சிவம் வித்தெனக் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. வித்தாகிய சிவத்தைத் தேடி அதனையுணர்வதற்குக் கருவியாகிய முளைபோன்ற சிவஞானத்தைக் கைவரப்பெற்றிருந்தும், நெகிழ விட்டவர்கள் பசுபாச விகற்பங்களாகிய மயக்கமுற்றவர்களேயாவர்; நெஞ்சமே சிவப்பேற்றுக்குச் சாதனமாகிய திருவருளையிழந்த அந்நிலையில் அவர்களாற் பெறுதற்குரிய பயன் யாதுளது? (ஒன்றும் இல்லை என்பதாம்.) இத்திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது, 57. வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம் வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில்-வித்ததனிற் காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமை யாலற்றார் பேறு. எனவரும் திருக்களிற்றுப்படியராகும். (இ - ள்) மெய்ப் பொருளாகிய இறைவனது திருவருள் ஞானம் விதையும் அதனிடத்தே முளைத்தெழுந்த முளையும் போன்று முறையே காரணமாகிய சிவம் முறைந்தும் காரியமாகிய ஞானம் வெளிப்பட்டும் இருக்கும். காரணமாகிய விதையினையும் அதன் காரியமாகிய முளையையும் மெய்ம்மையாக உணருமிடத்து அம்முளையிடத்தே விதை வெளிப்படத் தோன்றாமையால் அவ்விதையுண்மையினையுணராது அதனை நெகிழவிடுவர் ஒருசாரார். வெளிப்பட விரிந்த முளை யுண்மையைக் கண்டவர்களும் திருவருளாகிய அதனைப் பேணிப் போற்றாமையால் அதனாற் பெறுதற்குரிய சிவப் பேற்றை யிழந்தவர்களாவர் எ---று. மேற் குறிக்கப் பெற்ற திருவுந்தியார்க்கும் அதன் விளக்கமாக அமைந்த இத்திருக்களிற்றுப் படியார்க்கும் ஆதாரமாக அமைந்தது, வித்தினி லன்றி முளையில்லை யம்முளை வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல அத்தன்மைத் தாகும் அரனெறி தானே, (1932) எனவரும் திருமந்திரமாகும்; இத்திருமந்திரத்தில் அரனெறி என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டுஅரனாகிய சிவமும் அவன் அருளாகிய சிவஞானநெறியும் என விரித்துப் பொருள் கொள்ளு நிலையில் இத் திருமந்திரப் பொருளை யடியொற்றி யமைந்தது இது திருவுந்தியாராகும். வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல என்றது சிவமும் சத்தியும் பொருளான் ஒன்றேயாகியும் ஞாயிறும் அதன் ஒளியும் போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய் நீக்கமின்றி நிற்றலாகிய தாதான்மிய சம்பந்தமுடைமை யினைப் புலப்படுத்தியவாறாம். இச்சம்பந்தத்தை ஒருமையின் இருமை எனவும் அத்துவித சம்பந்தத்தை இருமையின் ஒருமை எனவும் ஆளுடைய பிள்ளையார் திருவெழுகூற்றிருக்கையிற் புலப்படுத்தியருளினமை இங்கு உளங்கொளத்தகவதாகும். பிணைபெணொ டொருமையின் இருமையும் உடையணல் (1---121---3) என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச்செயல்; உகூ. சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம் எல்லை சிவனுக்கென் றுந்தீபற என்றால் நாம் என்செய்கோம் உந்தீபற. இது, குருவின் துணையின்றிச் சிவத்தையுணர முடியாது என்கின்றது. (இ-ள்) சிவபரம் பொருளையுணர்ந்து கூடுதற்குரிய எல்லை ஆன்ம போதத்தால் உணர்ந்து உரையினால் இன்னதன்மைத் தென்று சொல்லுதற்குரிய இடமன்று; (அம்முதல்வனே குருவாக எழுந்தருளி உணர்த்தியருள (அவனது அருளே துணையாகச்) சென்று கூடும் இடமாகும் என்று அருளாளர் கூறுதலால் அம்முதல்வனை யடைதற்கு ஆன்மபோதமுடைய நாம் எத்தகைய உபாயத்தை மேற்கொள்ளவல்லேம். எ-று. அவனருளாலன்றி அவனையுணர்ந்து கூடுதல் ஆன்மாக்களால் ஒரு சிறிதும் இயலாதென்பதாம். சொல்லப்புகும் சார்பாகிய சிவமும் அதனைச் சார்ந்து இன்புறும் உயிரும் கூடிய அத்துவித நிலையினைத் திருக்களிற்றுப் படியார் ஆசிரியர் 58 முதல் 62 வரையுள்ள வெண்பாக்களால் விரித்துணர்த்துகின்றார். 58. ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று நன்றன்று தீதன்று நானன்று---நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று தலையன் றடியன்று தான். இது, இன்ன தன்மைத்தென உரையால் உணர்த்த வொண்ணாத் தன்மையது சிவபோகம் என்கின்றது. (இ-ள்) குருவுணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை, பெறுவானும் பேறும் ஆகிய நுகர்ச்சியுணர்வினால் ஒன்றுமன்று என்றும் மீளப் பிரிதலின்மையால் இரண்டுமன்று; சிவம் என்று தனித்ததொரு முதல் வேறு தோன்றாமையால் உள்ளதுமன்று; ஆன்மா சிவப்பேற்றினை நுகரும் நுகர்ச்சியுண்மையால் இல்லதும் அன்று; உலகியலில் நன்றென்றும் தீதென்றும் பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டமையால் நன்றும் அன்று தீதும் அன்று; தன்மை முன்னிலை படர்க்கையெனச் சுட்டியுணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற்பட்டுள்ளமையால் நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று; உலகின் தோற்ற வொடுக்கமாகிய காரண காரிய நிலைகட்கு அப்பாற்பட்டமையால் தலை (முடிவு) அன்று; அடி (முதல்) அன்று எ---று. இத்தகைய சிவாநுபவத்தைப் பெறுவது எவ்வாறு என வினவிய மாணாக்கனை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது, பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும். 59. செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச்1 செய்யாச் செயலிற் செலுத்தினால்---எய்யாதே மாணவக அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும் ஆணவமும் அற்றா லறி.2 (இ-ள்) யாராலும் செய்யவொண்ணாத ஐந்தொழில்களை அம் முதல்வன் கரணத்தாற் செய்யாமல் நினைவளவானே செய்தல்கண்டு ஆன்மாவாகிய தன்னுடைய செயலை அம்முதல்வனது நினைவாகிய திருவருளின் வழியடங்கி நிகழும்படி செலுத்தினால், அப்பொழுதே ஆசையை வளர்க்கும் ஆணவ மலமும் நின்னை வருத்தாது தேய்ந் தொழியும். எல்லாக் கேட்டிற்கும் காரணமாகிய அம்மலந்தேய்ந்தால் மாணவனே பாசப்பிணிப்பால் வரும் இளைப்பின்றிச் சிவாநுபவத்தை யறிந்து நுகர்வாயாக எ---று. செய்யாச் செயல் என்றது, இறைவனொருவனாலன்றி ஏனையுயிர்த் தொகுதிகளாற் செய்தற்கியலாத ஐந்தொழில். செய்யாமை கண்டு என்றது, இறைவன் கரணத்தாலன்றி நினைவளவால் ஆக்காதேயாக்கி நோக்காதே நோக்கி நொடியாது நொடித்தலாகிய திருவருளின் செயற்பாட்டினை யுணர்ந்து என்பதாம். செய்யாச் செயலிற் செலுத்து தலாவதுதன்பணி நீத்துத் திருவருள் வழியடங்கிநிற்றல். ஆணவமும் எய்யாதே என இயைத்து, ஆணவமலமும் தேய்ந்தொழியுமல்லவா? எனப் பொருளுரைக்க. எய்த்தல் - தேய்ந்து தன்வலிகுன்றுதல். வினா ஏகாரம் எய்க்கும் எனத் தேற்றப்பொருள் தந்தது. உயிர்க்கு ஆசையினை நீளவளர்க்குந் தன்மையது ஆணவமலம் என அறிவுறுத்துவார் வாஞ்சைக் கொடி வளர்க்கும் ஆணவம் என அடை புணர்த்தோதினார். அற்றால் என்ற இப்பாடத்திற்கு ஆணவம் அற்றொழியும், அஃதற்றால் சிவானந்தத்தில் அழுந்தியின்புறலாம் என்பார், ஆணவமும் அற்றால் அறி என்றார் எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். அறிதல் என்றது, அழுந்தியறிதலாகிய அநுபவவுணர்வினை. இத்தால் அறி என்ற பாடத்திற்கு இம்முறையினால் அறிவாயாக எனப் பொருள் கொள்க, 60. ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம் ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும் செய்தா லொருவலுமாம் செய்யாச் செயலதனைச் செய்யாமற் செய்யும் பொழுது. இது, தன்பணி நீத்து இறைவனது அருள்வழியடங்கி யொழுகுவார் செய்யும் பூசனைக்கு நூல்களிற் கூறப்படும் எந்த நியமமும் வேண்டா என்று அறிவுறுத்துகின்றது. (இ-ள்) ஒருவராலும் செய்யப்படாத முதல்வனது திருவருட் செயலுளடங்கி ஆன்மபோதத்தால் ஒன்றைச் செய்யாமல் முதல்வனது அருளின் வழி நின்று செய்யும்போது, எந்தக் காலமும் வழி பாட்டிற்குரிய காலமாகும். எந்த இடமும் அம்முதல்வனைப் பூசித்தற்குரிய இடமாம். எந்தத் திசையும் எந்தப்பொருளும் முதல்வனைப் பூசித்தற்குரிய திசையும் ஆசனமும் ஆகும். நன்று தீதாகிய எந்த வினைகளைச் செய்தாலும் அவ்வினைத் தொடர்பின் அகப்படாது நீங்கி நிற்றலும் கைகூடுவதாம் எ-று. சிவ பூசைக்குரிய தூய்மையுடையனவாகக் காலம், திக்கு, ஆசனம் என்பனவற்றை வகுத்துக் கொள்ளுதல் சிவபூசகர்க்குரிய நியமமாகும். இத்தகைய நியமமெதுவும் ஆன்மபோதம் நீங்கித் தன்பணி நீத்து இறைவனது அருள்வழி நிற்பார்க்கு வேண்டப்பெறா தென்பதாம். ஒருவல்-நீங்குதல். பாசம் ஒருவிய சீவன்முத்தரிடத்தே காணப்படும் இந்தமுறை பாசத்தொடுகூடி உலகியலில் நிற்பவர்கண் உண்டாகில் அன்னோர் நியமந்தவறிய குற்றமுடையராவர் என்பதாம். இவ்வெண்பாவின் பின்னிரண்டடிகள். செய்வானொருவனுமாஞ் செய்யாச் செயலதனைச் செய்யாமை செய்யும் பொழுது எனத் தில்லைச் சிற்றம்பலவ ருரையிற் பாடம் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆன்மபோதம் உள்ள அளவும் அறிதற்கு அரிதாகிய அந்த நிராலம்பமானவுண்மை ஒருவன் தன் செயலன்றியே கூடுமிடத்து, எல்லாக் காலமுமாய் எல்லாத் தேசமுமாய் எல்லாத்திக்குகளுமாய் எல்லாத் தொழில்களிலும் நிற்பானொருவனாம் என்க. என்பது தில்லைச்சிற்றம்பலவர் உரையாகும். 61. செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்துசிலர் எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்க செய்யாமை செய்யாத வாறு. இது, முன்னைத்தவத்தால் செயற்கரிய செய்து சிலர் வீடுபெற்றார் எனவும் பணிந்து இறைவன் அருள்வழி யடங்கி நிற்றலே சிவாநுபவத்தைப் பெறுதற்குரிய எளிய வழியாம் எனவும் அருளிச் செய்கின்றது. (இ-ள்) முன்னைத் தவமுடைய பெருமக்கள் சிலர் உலகில் யாவராலும் செய்தற்கரிய அருஞ்செயல்களாகிய வலிய தொண்டு களைச் செய்து உரையுணர்வுகளால் அடைதற்கரிய சிவபரம் பொருளையடைந்து இன்புற்றார்கள், அவ்வரிய தொண்டுகளைச் செய்யும் ஆற்றல் பெறாத நாம் தற்போதத்தால் எதனையும் செய்யாமையாகிய செயலைச் செய்து வினைத்தொடர்பினை யறுத்தற்குரிய எளிய வழியிருந்தும் தன்பணி நீத்து இறைபணி நிற்றலாகிய அச்செயலைச் செய்யாதிருப்பது அந்தோ மிகவும் இரங்கத்தகுவ தாகும் எ-று. செய்தற்கரிய செயல்களாவன, சிறுத்தொண்டர் சண்டீசர் அரிவாட்டாயர் முதலியநாயன்மார்கள் சிவனடியாரிடத்தும் சிவனிடத்தும் பேரன்புடையாராய் நிகழ்த்திய அருஞ்செயல்கள். மெல்வினை வல்வினையென இருவகைப்படும் சிவதன்மங்களுள், இச்செயல்களை வல்வினை என்றவகையில் திருக்களிற்றுப்படியார் 18, 19, 20 ஆம் பாடல்களில் இவ்வாசிரியர் விளக்கியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். இத்தகைய வலியதிருத்தொண்டுகளைத் துணிந்து செய்தவராகக் கூறுதற்குரியார் ஒருசிலரே என்பதுபடச் சிலர் என்றார். இப்பாடலில் எய்தற்கு அரியது என்றது, ஒருவராலும் சென்றடைதற்கரிய சிவபரம்பொருளை. இச்செய்யுள், எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல் (489) எனவும், செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார் (29) எனவும் வரும் திருக்குறட் சொல்லையும் பொருளையும் அடியொற்றி யமைந்துள்ளமை கூர்ந்து நோக்கத் தகுவதாகும். ஐயோ என்றது, உரிய செயல்களைச் செய்யாது வீணே வாழ் நாளைக் கழித்தோமே என இரங்குதற் பொருளில் வந்தது, செய்தற்கு அரிய ஆவன, புலன் வழி போகாது மனத்தை ஒரு வழிப்படுத்திச் செய்தற்குரிய இயமம் நியமம் முதலிய எண்வகை யோகவுறுப்புக்கள் எனினும் பொருந்தும். எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம் என மனைவியார் சொன்ன சூளால் இளமை துறந்த திருநீலகண்டக்குயவ நாயனார் முதலிய நாயன்மார் செயல்கள் செயற்கரிய செயல்களாகவே கொள்ளப்படும் என்பதும், ஆன்ம போதத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றையுஞ் செய்து திரு நீலகண்டக் குயவனார் முதலிய சிவ நாயன்மார்கள் பெறுதற்கரிய பேற்றைப் பெற்றார்கள் என வரும் பழைய வுரையாற்புலனாகும். செய்தற்கு அரிய செயல்பலவுஞ் செய்து எய்தற்கரியதனைச் சிலர் எய்தினர் எனவே, பலர் தங்களால் முறைப்படி செய்தற்குரிய திருத்தொண்டுகள் பலபுரிந்து சிவபரம்பொருளையெய்தினர் என்பது தானே பெறப்படும், செய்யாமை செய்து செயலறுத்தல் என்றது, செய்தற்கு அரியனவும் உரியனவும் ஆகியவற்றுள் எதனையும் செய்யாது திருவருளின் வழிநின்று தன்பணி நீத்தல். எனவே எய்தற்கரிய சிவா நுபவத்தை யடைதற்குரிய வழிகள் செயற்கரிய செய்தல், செயற்குரிய செய்தல், செய்யாமை செய்து செயலறுத்தல் என முத்திறப்படும் என்பதாம். இவ்வகைகளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, அடுத்து வரும் செய்யுளாகும். 62. இப்பொருள்கள் யாதேனு மேதெனினும் ஒன்று செய்தல் எப்பொருளுஞ் செய்யாதொழிந்திருத்தல், மெய்ப்பொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம் உண்டிருப்ப தென்னோ வுரை. இது, சிவபரம்பொருளை யடைதற்குரிய செயல்களை விரித்துரைக்கின்றது. (இ - ள்) பெறுதற்கரிய மனித்தப்பிறவியைப் பெற்ற மக்கள் சிவனையடைவதற்கு உரிய சிவதன்மங்களுள் செயற்கரிய வல்வினையும் செயற்குரிய மெல்வினையும் ஆகிய இப்பணிகளுள் ஏதேனும் ஒன்றைச் செய்தலும் இவற்றுள் எதனையு ஞ் செய்யாது தன் செயலற நிற்றலும் மெய்ப்பொருளைச் சிவயோக நெறியிற் கண்டு பூவலரும் இதயத்துப் பொருளோடு பொருந்தி யிருத்தலும் ஆகியவற்றுள் ஒன்றினைமேற் கொண்டு பெறுதற்கரிய சிவானந்தத்தைப் பெறாது நிலையாத இவ்வுலகிற் சுகதுக்கங்களாகிய அல்லல் விளைக்கும் போகங்களை நுகர்ந்து கொண்டு தம் வாழ்நாளை வீணாக்குவது என்ன பேதைமையோ? கூறுவாயாக எ-று. இப்பொருள்கள் என்றது, மேற்குறித்த சிவதன்மங்களாகிய வல்வினை மெல்வினைகளை. எப்பொருளுஞ் செய்யாதொழிந் திருத்தல் என்றது, செய்யாமை செய்து செயலறுத்தலை. மெய்ப்பொருளைக் கண்டிருத்தல் என்றது, செம்பொருளாகிய சிவத்தைச் சிந்தையிற் கொண்டு ஒன்றியிருத்தலாகிய சிவயோக நெறியினை. கண்ட மனிதர் என்றது, யாக்கை, இளமை, செல்வம் என்பன என்றும் நிலையாதன என்னும் உலகியல்பினைக் கண்டுணர்ந்த பகுத்தறிவுடைய மக்களை. உண்டிருத்தல் என்றது, தம்மைப் பிணித்துள்ள பாசப்பிணிப்பினை நீக்குதற்குரிய உபாயத்தினை மேற்கொள்ளாது உலக நுகர்ச்சிகளிற் சிக்குண்டு கிடத்தலை. என்னோ-என்ன பேதைமையோ? ஞானத்துக்குப் பக்குவரல்லாத ஆன்மாக்களை நோக்கி அருளிச் செய்த இதுவும் சர்வான்மாக்களுக்குங்கிட்டாதபொருள் உன்னுடைய பாக்கியத்தினாலேகிட்ட, இதனைக் கைவிட்டு, வாதனையைக் கைவிடாமல் நின்று, இந்திரிய அடிமையாய்ப் பேறிழந்து போகாதே; இந்தவுண்மையிலே இடைவிடாமல் நின்று சாதித்தற்பொருட்டு அந்நியோப தேசமாகப் (பிறரைக் குறித்துக் கூறவது போல) மாணவனை நோக்கி அருளிச்செய்த தெனக் கொள்க என இப்பாடற்பொருளைவிளக்குவர் தில்லைச் சிற்றம் பலவர். ஙய. வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென் கூட்டில்வாள் சாத்திநின் றுந்தீபற கூடப் படாததென் றுந்தீபற. இது, தற்போதத்தைவிட்டு அவனருள்வழி நின்று கூடும் உபாயத்தை இடைவிடா துணரப்பெறின் அம்முதல்வனைத் துறவறம் இல்லறமாகிய எல்லா நிலையிலும் கூடியின்புறலாம் என்கின்றது. (இ-ள்) திருவருள் ஞானத்தைத் துணையெனக் கொள்ளாது எல்லா வற்றையுந்துறந்துஒழுகுதலாகிய துறவறத்தில் நின்றால் என்ன துறவாது மனையறத்தில் நின்று நாடத்தக்க அருச்சனை முதலிய வற்றிலும் மூர்த்தி தலம் தீர்த்தமாகிய தரிசனங்களிலும் உழன்றாலென்ன? ஆன்மாவாகிய வுறையினுள்ளே திருவடி ஞானமாகிய வாளினைச் சாத்தி நிற்பாயாக. இவ்வாறு திருவருளைத் துணைக்கொண்டு நின்றாலன்றி வேறு எவ்வகையாலும் சிவாநுபவ மாகிய அந்நிலை கூடப் பெறாதென்றுணர்வாயாக. எ-று. வீடுபேற்றிற்குக் காரணமாகிய துறவறத்தினை வீடு என்றார். நாட்டு மக்கள் பெரும்பாலோர் மேற்கொள்ளும் மனையறத்தினை நாடு என்றார். கூடு- உடம்பு, வாள் என்றது. திருவருள் ஞானமாகிய வாட்படையின். ஞானவாள் ஏந்தும் ஐயர் என்பது திருவாசகம் திருவடி ஞானமாகிய திருவருளின் துணையின்றி இறைவனையடைதல் இயலாது என்பார். கூடப்படாது அது என்றார். உயிருணர்வாகிய உறையினுள்ளே திருவடி ஞானமாகிய வாட்படையினைச் செறித்து நிற்பார்க்கே துறவறம் இல்லறம் எனப் பகுத்து உரைக்கப்படும் எவ்வகை யறங்களும் நற்பயன் விளைவிக்கும் என்பதாம். இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது, பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும். 63. வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றிடிலென் நாட்டிலே நல்வினைகள் செய்திடிலென்-கூட்டில்வாள் சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த மாத்திரமே யாங்கண்டாய் வந்து. (இ-ள்) வீடுபேற்றுக்குக் காரணமாகிய துறவறத்திலே இரு வினையும் ஒழித்து நின்றாலும் நாட்டிற் பயிலும் இல்லறத்திலே யிருந்து நல்வினைகளைச் செய்தாலும் ஆன்மாவாகிய வுறையுள் திரு வடிஞானமாகிய வாட்படையினைத் தங்கி நில்லாயாயின் தக்கனார் ஆன்ம போதத்தாற் செய்த நல்வினையாகிய வேள்வி தீவினையாய் முடிந்தாற்போன்று தற்போதத்தாற் செய்தன யாவும் தீவினையாய் வந்து முடியும் என்று உணர்வாயாக. எ-று. இங்கு வாள் சாத்துதல் என்றது, வாட்படையைத் தாங்கி நிற்றலை. கூட்டில் வாள் சாத்தி எனவருந் திருவுந்தியார் தொடர்க்கு அனாதியே ஆன்மாவாகிய கூட்டிலே வாழ்ந்திருக்கப் பட்ட திருவருளை விட்டு என வரும் பழைய உரைப்பகுதி இத்திருக்களிற்றுப் படியார் விளக்கத்துடன் இயையாமை இங்கு நோக்கத் தகுவதாகும். ஆன்மா செயலற நின்று சாதிக்கும் உபாயத்தை உறுதிபிறக்கும் வண்ணம் அருளிச் செய்வது அடுத்துவரும் திருக்களிற்றுப்படியா ராகும். 64. சிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ் சிவனுடைய தென்னறிவ தென்றுஞ்---சிவனவான தென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத் தன்செயலாக் கொள்ளாமை தான். இது, மேற்குறித்த வண்ணம் கூட்டிவாள் சாத்தி நிற்றலாவது இதுவென விளக்குகின்றது. (இ-ள்) சிவனாகிய முதல்வனையன்றி நான் என எடுத்துரைத் தற்குரிய வினைமுதல் வேறு இல்லை யென்றும், யானே அறிந்தேன் என்னும் ஆன்மாவாகிய என்னுடைய அறிவெல்லாம் அம்முதல்வனது அறிவேயென்றும், யான் இதனைச் செய்தேன் எனக் கருதும் என்னுடைய செயலெல்லாம் கூர்ந்து நோக்கின் அம் முதல்வனுடைய செயலேயாகின்றதென்றும் இவ்வாறு அறிவன செய்வன எல்லாவற்றையும் தன்னுடைய செயலாகக் கொள்ளாமல் இறைவனுடைய செயலென்றே கொண்டொழுகுதல்தான் (மேற்குறித்த கூட்டில் வாள் சாத்தி நிற்றல்) எ-று. ஆன்மாவுக்ரு அறிவு செயல்கள் விளங்குதலும் நுகர்பொருள் களிற் சென்று பற்றுதலும் உயிர்க்குயிராய் உள் நின்று அறிந்து அறிவத்து உதவியருளும் இறைவனது திருவடியை யின்றி நிகழ்தல் இல்லை யென்பது, எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந்தொன்றை அறிந்தியற்றியிடாவுயிர்கள்; இறைவன்தானும் செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாமுணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் (சித்தியார்-சுபக்) எனவரும் திருவிருத்தத்தால் இனிது புலனாம். இவ்வாறு இறைவன் கட்டுநிலையிலும் வீட்டுநிலையிலும் உயிர்கட்குப் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு காட்டுதலும் உயிர்களுடனிருந்து காணுதலும் ஆகிய இருவகை யுதவிகளையும் புரிந்தருளுந் திறத்தினை யெண்ணித் தம்மை மாயப்படை வந்து தாக்காதவாறு அம்முதல்வனது திருவடிஞானமாகிய வாட்படையைத் தாங்கி நிற்றலே கூட்டில் வாள்சாத்தி நிற்றலாம் என்க. சலமிலனாய் எனவரும் சித்தியார் திருவிருத்தத்துள் உலகினின் என்செயலெல்லாம் உன்விதியே நீயே உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும், நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந் தானே எனவரும் பகுதி இங்குக் கருதத்தகுவதாகும். ஙக. சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின் றாவி யறாதேயென் றுந்தீபற அவ்வுரை கேளாதே யுந்தீபற. இஃது இறைவன் திருவருளாகிய உள்ளீட்டினைப் பெறாத சமயங்கள் உயிர்க்கு உறுதி பயப்பன அல்ல என்று அறிவுறுத்துகின்றது; (இ-ள்) திருவருள் ஞானத்தினால் அடைதற்குரிய சிவகதியாகிய விளைவின்றிப்பதராயொழியும் ஏனைப் புறச் சமயங்களிற் புகுந்து நின்று வீடுபேற்றின்பமாய் உயிர்க்குறுதி விளைப்பதாகிய நற்பயனை இழந்து போகாதே. அப் பயனற்ற சொற்களைப் பொருளெனக் கேட்டுக் காலத்தை வீணாக்காதே (சித்தாந்தச் செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக) எ---று. சாவி போதலாவது. நிலத்தில் விதைத்த பயிர் வளர்ந்தும் தன் பயனாகிய நெல் முதலிய மணிகள் முதிர்தலின்றிப் பதராய்ப் போதல். சைவ சித்தாந்தம் அல்லாத ஏனைச் சமயங்கள், தாம் கொண்டுள்ள தத்துவக் கொள்கைகளாலும் தருக்க நெறி முறைகளாலும் வளர்ந்த பயிர்களைப் போன்று தோற்றமளித்தாலும், கூர்ந்து நோக்குமிடத்து, மக்கள் தம் உயிரியல்பினையும் தம்மைப் பிணித்துள்ள பாசங்களின் இயல்பினையும் தனக்கேயுரிய பெருங்கருணைத் திறத்தால் மன்னுயிர்களின் பாசப்பிணிப்பினைப் படிகால்முறையாய் அகற்றி ஈறில்லாப் பேரின்ப நிலையாகிய வீடுபேற்றினையருளும் இறைவனது இயல்பினையும் அவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு உள்ளவாறுணர்ந்து தற்செயலற அம்முதற்பொருளுடன் இரண்டறக்கலந்து நுகரும் பேரின்ப விளைவாகிய நெல்மணியினை நல்குந்திறத்தனவாக விளைந்த பயிர்கள் அல்ல என அறிவுறுத்துவார், சாவிபோம் மற்றைச் சமயங்கள் என்றார். உழவனொருவன் மக்களின் பசிப்பிணியினை நீக்குதல் வேண்டிப் பெரிதும் முயன்று வளர்த்த பயிரானது, பயன்தருவதற்குரிய காலமளவும் வளர்ச்சி பெற்றுக் கருக்கொண்டு விளைதற்குரிய காலத்திலே மணியாகிய உள்ளீடு பெறாது பதராய்ப் போன தன்மை போல, பலவேறு தத்துவங்களைக்கொண்டு தழைத்து வளர்ந்த சமயங்கள் பல, உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று உயிர்கட்குப் பொருள்களை உள்ளிருந்து அறிவித்தும் அவ்வுயிர்களோடு உடனிருந்தும் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரிகின்ற இறைவனையும் அம் முதல்வனது திருவருளாற்றலையும் உள்ள வாறுணர்ந்து நன்றியுடன் போற்றும் மெய்யுணர்வாகிய உள்ளீடில்லாதனவாயின், அவையும் பதராய்ப் பயனற்றவையே யென்பது கருத்து. உயிர்கட்கு உறுதி பயக்கும் தெய்வங்கொள்கை யினை வற்புறுத்துந் தெளிவுபெறாத புறச் சமயங்களை நன்றியில் நெறி என்பர் சேக்கிழார் நாயனார். இங்கு ஆவி என்றது, உயிரின் அறிவாற்றலாகிய சிற்சத்தியினை. அறுதலாவது, பொருள்களை உள்ளவாறறிதற்குரிய ஆற்றல் தேய்தல். அவ்வுரை என்றது, புறச் சமயத்தார் கூறும் பயனில்லாத கூற்றுக்களை. கேளாதே என்றது, பயனில்லாத சொற்களைக் கேட்டுக் காலத்தை வீணே கழிக்காதே என்றவாறாம். சைவ சித்தாந்த நெறியாகிய இச்சமயத்திலேதான் உயிர்க்குயி ராகிய முதல்வன் அன்புடைய அடியார்கட்கு அருள் வழங்குதற் கென்றே அம்மையப்பனாகத் தோன்றித் தில்லைத் திருவம்பலத்திலே நின்று எக்காலத்தும் அருட்கூத்து ஆடியருள்கின்றான் என்பதும், தாழ் சடையானாகிய இறைவன் தானும் தன்னைவிட்டுப் பிரியாத சத்தியுமாய்நின்று ஒப்பற்ற அருள் மொழியினை வழங்குதலால், தன்செயலற்றுச் சிவமேதானாய் உலகம் உய்ய அருட்செயல்கள் பலவற்றை நிகழ்த்தியருளிய அருளாளர்கள் இந்தச் சமயத்திற்போன்று வேறு எங்கும் இல்லை யென்பதும், அத்தகைய அருட்செல்வர்களாகிய அடியார்களின் பெருமை அளவிடற்கு அரியது என்பதும் ஆகியவுண்மைகளை விரித்துணர்த்தும் முறையில் இந்திருவுந்தியார் பாடலின் விளக்கமாக அமைந்தவை, திருக்களிற்றுப்படியாரில் 65 முதல் 68 முடியவுள்ள திருப்பாடல்களாகும். 65. இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன் ஒன்றசொலி மன்றத்து நின்றவரார்-இன்றிங்கே அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார் எங்குமிலை கண்டா யிது. இது, சைவ சமயத்தார் போற்றும் இறைவனது பெருமை யினையும் அடியார் பெருமையினையும் விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) இந்தக் கலியுகத்திலே சைவ சமயமாகிய இந்தச் சமயத் திலன்றித் திருவருளாகிய பிராட்டியுடன் அம்மையப்பனாகத் தோன்றி ஒப்பற்ற மெய்யுணர்வுபதேச மாகிய அருளுரையினை அடியார்களுக்கு வழங்கி எல்லோரும் காணத் தில்லைப்பதியிலே பொன்னம் பலத்திலே அருட்கூத்தியற்றியருளும் இறைவரைப் போன்று வேறு எந்தச் சமயத்தில் யாருளர்? அன்றியும் இந்தப் பூமியிலே எலும்பு உயிர்பெறும் படி தெய்வத் தமிழ்பாடிய அடியார் வேறு எந்தச் சமயத்தில் உள்ளார்? (ஒருவரும் இல்லை) எ-று. ஏழை-பெண். ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவர் என்றது, தன் இடப்பாகத்தவளாகிய சிவகாமியுடன் கண்ட வழிபடுவோர் உய்யும் வண்ணம் ஒப்பற்ற திருவருட் குறிப்பைப் புலப்படுத்திப் பொன்மன்றில் ஆடல் புரிந்தருளும் அம்பலவாணராகிய இறைவரை. இங்கு ஒன்று என்றது, இறைவனது ஒப்பற்ற திருவருட் குறிப்பினை. சொலி-சொல்லி. சொல்லுதல்-புலப்படுத்தல். அஃதாவது உலகவுயிர்கள் உய்திபெறுதல் வேண்டித் தான் ஆடியருளும் திருக்கூத்தின் பயன் அனைத்தையும் தன் இடப்பக்கத்தவளாகிய சிவகாமி தானே ஏற்றுக் கொண்டு மன்னுயிர்களுக்கு வழங்கியருளும் படி புலப்படுத்தல். மன்றம் என்றது, உலகபுருடனுக்கு நெஞ்சத் தாமரையாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலத்தினை. இனி, ஏழையுடன் ஓன்று சொலி மன்றத்து நின்றவர் என்றது, தில்லையிற் பலரும் கூடிய சபையிலே இலங்கைப் புத்தருடன் நிகழ்த்திய வாதில் ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து புத்தரைவாதில் வென்றருளிய மாணிக்கவாசகரைக் குறித்தது எனினும் பொருந்தும். அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவர் என்றது, திருஞான சம்பந்தப்பிள்ளையாரை. திருமயிலையில் சிவநேசர் என்னும் வணிகர் தம் மகள் பூம்பாவை என்பவள் அரவு தீண்டியிறந்த நிலையில் அவளது எலும்பினை ஒரு குடத்திற் சேமித்து வைத்திருந்து, திருஞான சம்பந்தப் பிள்ளையார் அங்கு எழுந்தருளிய போது அவர் பணித்த வண்ணம் அக்குடத்தைக் கோயில்முற்றத்தே வைத்தாராக, ஆளுடைய பிள்ளையார், மட்டிட்ட புன்னையங்கானல் என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடியருளி, அக்குடத்திலுள்ள எலும்பு பூம்பாவையாக உயிர்பெற்றெழும்படி செய்தருளினார் என்பது வரலாறு. அங்கம்-எலும்பு. அங்கம் உயிர்பெறப் பாடியருளியவரை அடியவர் எனக் குறிப்பிடவே ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவர் அத்தகைய அடியவரை ஆட்கொண்டருளிய சிவபெருமானாகிய இறைவர் என்பது தானே பெறப்படும். 66. விரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந் தெரிந்துந் தெரியாது நிற்பர்-தெரிந்தும் தெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும் பிரியாது நின்றவனைப் பெற்று. இது, சைவமாம் சமயஞ்சார்ந்து சிவமாந்தன்மைப் பெருவாழ்வு பெற்ற மெய்யடியார்களின் சிறப்பினை விரித்துரைக்கின்றது. (இ-ள்) தோற்றமில் காலமாக உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து எல்லாவற்றையும் அறிந்தும் அறிவித்தும் இயக்கி நிற்கும் போதும் தான் ஒன்றிலும் தோய்வறநிற்கும் ஞானசத்தியாகிய தேவியை எக்காலத்தும் விட்டுநீங்காத சிவனைத் தங்களிடத்திலே உறுதியாகப் பெற்றமையால் (சிவஞானிகளாயினார்), சிவபெருமான் தம்மிடத்திற் போன்று எங்கும் விரிந்து பரவிய முறைமையினைக் கண்டு பேருணர்வாகிய சிவஞானத்தின் வழி யாண்டும் விரிந்தும், தாம் என்னும் உணர்வு மறையத் தம்மையும் உலகையும் மறந்து சிவாநு பவத்திலே யழுந்தியடங்கியும், இவ்வாறு ஈசன் எனுங் கனியினை விழுங்கிச் சுவைத்து இன்புறுவர். இங்ஙனம் இன்புறு நிலையில் பிராரத்த வாதனையால பிரபஞ்சம் மீண்டுந் தம்முன் தோன்றினாலும் தாம் சிவபரம் பொருளோடு ஒன்றிய தியானத் திறத்தாலே அவ்வாதனை தம்மைத் தாக்காதவாறு செம்பொருளில் அழுந்தி நிற்பார்கள் எ-று. தெரிந்துந் தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும் பிரியாது நின்றவனைப் பெற்று, விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள்; மீண்டும் தெரிந்தும் தெரியாது நிற்பர் என இயையும். நிற்பர் என்னும் பயனிலைக்கு எழுவாயாகச் சிவஞானிகளாகிய அடியவர்கள் என்பது மேற் செய்யுளினின்றும் வருவித்துரைக்கப் பெற்றது. தெரிந்தும் தெரியாது நிற்கின்ற சேயிழை என்றது, எக்காலத்தும் உலகுயிர்களோடு உடனாகி நின்று அறிந்தும் அறிவித்தும் இயக்கும் போதும் ஒன்றிலுந் தோய்வற நிற்கின்ற சிவசத்தியினை. கதிரவனும் கதிரும் போன்று சிவமும் சத்தியும் பிரிவற நிற்கும் ஒருபொருளேயாத லுணர்த்துவார் சேயிழைபாலென்றும் பிரியாது நின்றவன் என்றார். நந்தம்மையாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் எனவரும் திருவாசகப் பொருளை யடியொற்றியமைந்தது இத்தொடராகும். பிரியாது நின்றவனைப் பெறுதலாவது, யான் எனது என்னுஞ் செருக்கறச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப் பெறுதல். தனது உயிர்க்கு உயிர் என்றுணரும் தெளிவினைப் பெறுதல் எனினும் அமையும். பெற்று என்னும் செய்தென் வாய்பாட்டு வினையெச்சம், மழை பெய்து குளம் நிறைந்தது என்றாற்போன்று பெற்றமையால் என ஏதுப்பொருளில் வந்தது. விரிதலாவது, வியாபகப் பொருளாகிய சிவத்தோடு ஒன்றினமை யால் சுட்டறிவின் நீங்கி எவ்விடத்தும் எப்பொருள்களையும் இருந்தாங்கே யுணரும் பேருணர்வினராய்த் திகழ்தல். குவிதலாவது, தமது உணர்வு புறத்தே உலகப்பொருள்களிற் செல்லாது அகத்தே சிவத்திற் பொருந்தியடங்குதல். விழுங்குதலாவது, எங்கும் நீக்கமற நிறைந்த சிவபரம்பொருளை அன்பீனும் ஆர்வத்தாலே தன்னுள் அடங்கக்கொண்டு நுகர்தல். அழலார்வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே (4-15-7) மேலைவானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே (4-15-8) என அப்பரடிகளும், மெய்ம்மையார் விழுங்கும் அருளே (நீத்தல் - 17) எனத் திருவாதவூரடிகளும், கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை (திருவிசைப்பா-2) எனத் திருமாளிகைத்தேவரும் என் பொன் மணியை இறைவனை யீசனைத் தின்பன்கடிப்பன் திருத்துவன்நானே (2989) எனத் திருமூல நாயனாரும் அருளிய அநுபவ மொழிகள் இங்கு உளங்கொளத்தக்கனவாம். மீண்டும் தெரிந்துந் தெரியாது நிற்றல் என்றது, சிவத்தோடு ஒன்றியுணரும் சிவஞானிகள்பால் முன்னைப் பழக்கத்தால் ஒரோவழி ஆன்ம போதமும் அதுகாரண மாகப் பிரபஞ்ச வாதனையும் அதற்கு வாயிலாகிய உடம்பு முதலிய மாயாகாரியப் பொருள்களும் வாசனை மாத்திரத்தால் மெலிதாய் வந்து மூளுமாயினும் அவர்களது உள்ளம் என்றும் பிறழவொட்டாத சிவமாகிய அச்சினையே பற்றி நிற்றலால் தம்முன் அவை மீளவும் தோன்றித் தாக்காதவாறு நிற்பர் என்பார், தெரிந்துந் தெரியாது நிற்பர் என்றருளிச் செய்தார். சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பெற்ற சிவனடியார்களுக்குப் பிரபஞ்சவாதனை ஒருகால் தோன்றினாலும் மீளவந்து அவர்களைத் தாக்கும் ஆற்றலின்றிச் சிதைந்தொழியும் என்பதாம். விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். 67. ஆதனமும் ஆதனியு மாய்நிறைந்து நின்றவனைச் சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச் சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர் ஏதமறக் கண்டவர்க ளின்று. இது, சிவஞானிகளது திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) திரோதாயியென்னும் மறைப்பு ஒழிய இறைவனைத் தலைவனாகவும் தம்மை அவனுடைய உடைமைப் பொருளாகவும் கண்டுணர்ந்த சிவஞானிகள், பாசப்பிணிப்புற்ற உயிர்த் தொகுதி கட்கு இருப்பிடமாகிய தத்துவங்களும் அவற்றினிடமாக விளங்கும் உயிர்த் தொகுதிகளுமாக எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்து நிற்கும் இறைவனை அவனது திருவருளாலே ஞானமேதிருமேனியாகக் கொண்டுவந்தருளிய குருவினாலேதெளி யவுணர்ந்து பேருணர்வு பெற்றுத் தம்முயிரை ஞானத்திரளாய் நின்ற இறைவன் கையிலே ஒப்படைத்து ஞானத்தின் மேலாம் நிலையாகிய அந்தச் சிவமாகியே நிற்பார்கள் உடம்போடு கூடிய இம்மையிலும் எ-று. ஏதம் அறக் கண்டவர்கள், ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச் சேதனனைச் சேதனனிலே செலுத்திச் சிற்பரத்தரா யிருப்பர்; இன்றும் என இயைத்துப் பொருள் கொள்க. இங்கு ஏதம் என்றது, உயிர்களை அநாதியே பிணித்துள்ள ஆணவமலம் கழலும் பக்குவம் அடைதல் வேண்டி அம்மலத்தின்வழி மறைந்துநின்று உயிர்களை இருவினைகளிற் செலுத்தும் இறைவனது மறைப் பாற்றலாகிய திரோதான சத்தியை. ஏதம் அறுதலாவது, ஆன்மாவின் மலம் கழலும் பக்குவத்தைப் பெறுமாறு உயிர்களை இருவினைகளில் தூண்டித் தொழிற்படுத்தி இருவினைப்பயனாகிய புண்ணியபாவங்கட் கேற்ப அவ்வுயிர்களைத் துறக்க நிரயங்களிற் செலுத்தி நுகர்விக்கும் திரோதான சத்தியே, மலம் கழன்ற பக்குவநிலையிலே அருட்சத்தியாய் மாறி உயிர்கள் இறைவனை யுணர்ந்து கூடுதற்குத் துணையாய் நின்று அருளுதல். இதன் இயல்பினை முற்சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்திய சத்திநிபாதம் திகழுமன்றே (சிவப்பிரகாசம் - 48) என உமாபதி சிவனார் விரித்து விளக்கியுள்ளமை இங்கு எண்ணத்தகுவதாகும். ஆதனம்- இருத்தற்குரிய இடம்; என்றது தத்துவங்களை. ஆதனி- அவ்விடத்தில் இருக்கும் பொருள்; என்றது உயிர்த் தொகுதியினை. ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவன் என்றது, உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து யாண்டும் நீக்கமற நின்ற இறைவனை. இச்செய்யுளில் முதற்கண் உள்ள சேதனன் என்றது ஞானசிரியனாகிய குருவினையும், அடுத்துள்ள சேதனன் என்றது அறிவுடைப் பொருளாகிய ஆன்மாவையும், சேதனனிலே என்புழிச் சேதனன் என்பது, ஞானமேயுருவாகிய இறைவனையும் குறித்து நின்றன. சேதனனைச் சேதனனிலே செலுத்தலாவது, குரு வருளால் மெய்யுணர்வுபெற்ற ஆன்மா தன்னைச் சிவனுக்கு உடைமைப் பொருளாகச் சிவனிடத்தே ஒப்புவித்தல். இன்று என்பது, உயிர் உடம்போடு கூடி நிற்கும் இம்மைநிலையினைக் குறித்து நின்றது. இன்றும் என உம்மை வருவித்துப் பொருளுரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர். 68. தாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள் தாழுணரி னிந்தத் தலமுணரும்---தாமுனியிற் பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நில்லாள் நயந்து. இது, சிவஞானிகளாகிய தவச் செல்வர்களின் பெருமையினையும் அவர்களை இகழ்வதனால் உயிர்கட்கு உளவாம் சிறுமையினையும் விளங்க விரித்துரைக்கின்றது. (இ-ள்) சிவமாந்தன்மை பெற்ற தவச் செல்வர்கள், உலக மெலாம் உய்தல் வேண்டுமென்னும் பெருங்கருணையுடன் சிவனருளில் ஒன்றியிருப்பார்களாயின், இவ்வுலக மக்களும் தமது உள்ளம் புறத்தே பொறிவழிச் செல்லாது பரம்பொருளிடத்தே யொன்றி நிற்றற்கின்றிமையாத பொறியடக்கத்தினைப் பெறுவர். தவச் செல்வராகிய அவர்கள் உலகம் நலம்பெறுதல்வேண்டி ஏதேனும் ஒருபொருளை உள்ளவாறு எண்ணுவரானால் இவ்வுலகத் தவர்களும் அப்பொருளின் உண்மைத்தன்மையை உள்ளவாறு உணரப்பெறுவார்கள். இத்தகைய தவச் செல்வர்கள் வெகுளும்படி எவரேனும் இப்பெருமக்களை இகழ்வார்களாயின் அவர்தம் வாழ்விலே திருமகள் தங்க மாட்டாள்; புகழாகிய நங்கை அவரைவிட்டு அகல்வாள். ehkfsh»a fiy¢bršÉ mt®fŸghš eaªJ Éfkh£lhŸ v.---W. நற்குணச் செல்வராகிய சிவஞானிகள் தக்க காரணமின்றி யாரையும் வெகுள மாட்டார்கள். உலகோர் தம்மையிகழ்ந்ததன் காரணமாக ஒருகால் இவர்களிடத்தே வெகுளி தோன்றுமாயின் அவ்வெகுளியை இவர்தம் மெய்யுணர்வு மீதூர்ந்து விரைவில் அழித்து விடும் என்பார், தாம் முனியின் என்றும், இவ்வாறு இவர்கள்பால் வெகுளி தோன்றி நிற்குங்காலம் ஒருகணப் பொழுதேயாயினும் நிறைமொழி மாந்தராகிய இவர்களால் வெகுளப்பட்டார் யாவராயினும் இவர்களது வெகுளியின் வெம்மையினைத் தடுத்தல் அரிதாகலின் அவர்கள் பெற்றிருந்த செல்வமும் புகழும் கல்வியும் விரைந்து கெடுமென்பார், பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நயந்து நில்லாள் என்றும் கூறினார். குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது (திருக்குறள் - 29) எனத் தெய்வப்புலவரும், ஈச னடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகுமே நந்நந்தி யாணையே (திருமந்திரம் - 53) எனத் திருமூல நாயனாரும் அருளிய பொருளுரைகளின் விளக்கமாக அமைந்தது, இத்திருக்களிற்றுப்படியார் பாடலாகும். செம்புலச் செல்வர்களாகிய சிவஞானிகளின் அருளாலும் வெகுளி யாலும் இவ்வுலக மக்கள் அடையும் ஆக்கத்தினையும் அழிவினையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது இத்திருப்பாடலாகும். ஙஉ. துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரம் துரியமாய் நின்றதென் றுந்தீபற துறந்தா ரவர்களென் றுந்தீபற. இது, சீவன் முத்தர்களாகிய சிவஞானிகளை உலகவாதனை தாக்குதல் இல்லையென்கிறது. (இ-ள்) தற்போதத்தைவிட்டு இறைவன் திருவடியிலே பொருந்தி நிற்கும் மெய்யடியார்கட்குப் பிராரத்தமெனப்படும் நுகர்வினையினாலே உலகப் பொருள்களைக் காணும் விழிப்புநிலை வந்துகூடிற்றாயினும், மேலாகிய பரம்பொருளோடு ஒன்றி உயிர்ப்படங்கி நிற்றலாகிய ஞானமே மேற்பட்டு விளங்குவதன்றி ஒருகாலத்தும் உலக வாதனை வந்து பொருந்துதல் இல்லை. அத்தகைய பெருமக்களே யானென தென்னும் இருவகைப் பற்றுக்களையும் அறவே விடடொழித்த துறவறச் செல்வர்கள் என்று உணர்க எ-று. இதில் முற்படுந் துரியம் என்றது தற்போதத்தை; இரண்டாவது துரியம் என்றது, பரபோகத்தையெனக் காண்க என்பர் சிற்றம்பலவர் துரியங்கடத்தலாவது, ஆன்மா நிலம் முதல் நாதம் ஈறாகிய தத்துவங்களையும் ஐந்து மலங்களையும் அருளாலே கண்டு நீங்கித் தன்னையுணர்ந்து தன்னையும் பொருளன்றென்று கண்டு, தன் செயலற்று, இறைவன் திருவடியிலேபொருந்தி நிற்றல். சாக்கிரம் என்றது, ஆன்மா எல்லாக் கருவிகளோடுங் கூடி நுதற்கண் நிலைபெற்று உலகப்பொருள்களைச் சுட்டியறியும் விழிப்புநிலையினை. துரியமாய் நிற்றலாவது, இத்தகைய விழிப்பு நிலையிலும் உலக வாதனை வந்து தம்மைத் தாக்காதவாறு துரிய நடுவூடிருந்த பெரிய பொருளாகிய சிவத்துடன் ஒன்றிப் பேரின்பநிலையில் நிற்றல். அறவேநின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே எனத் திருவாதவூரடிகள் இத்தொண்டர்களின் தன்மையினை விளக்குதல் இங்குக்கருதத் தகுவதாகும். இத்தொண்டர் என்னும் அண்மைச் சுட்டு, நமக்கு அணுக்கமாகிய இந்தச் சைவசித்தாந்த மெய்ந்நெறியில் நின்று இறைவன் திருவருளால் பசுபோதங்கெட்டுச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப் பெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் முதலிய திருவருட் செல்வர்களை. யான் எனது என்னும் இருவகைப்பற்றும் நீங்கத் தன் செயலற்று எல்லாம் இறைவன் செயலே எனக் கொண்டுவாழ்ந்த அப்பெருமக்களே பாசப் பிணிப்பு அனைத்தையும் விட்டு நீங்கிய உண்மையான துறவறச் செல்வர்கள் என்பார் அவர்களே துறந்தார் என்றார். அவர்களே என்புழிப் பிரிநிலையேகாரம் வருவித்துரைக்கப்பட்டது. இவ்வாறு விழிப்பு நிலையிலேயே உலகப் பொருள்களின் தோய்வற்று மேல்நிலையில் நின்று தன்செயலறச் சிவமேதானாகத் திகழும் திருவருள்நலம் வாய்க்கப் பெற்ற இப்பெருமக்களை, சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சருவ சங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே யுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ (சித்தியார் சூ.8. விருத்தம் 35) எனப் போற்றுவர் அருணந்தி சிவாசாரியர். பராவுதல் - சஞ்சரித்தல். பராவுசிவர் என்றது, மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவபரம் பொருள் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயராகும். நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென் றிராவு மெதிராயது பராநிலை புராணனம ராதிபதியாம் (3-6-6) எனவரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளமை காணலாம். பராவுசிவர் எனப் போற்றப் பெறும் இப்பெருமக்களை நடமாடுங்கோயில் நம்பர் (திருமந்திரம் 1857) எனக் குறிப்பிடுவர் திருமூலதேவநாயனார். துரியங்கடந்த என்னும் முதற்குறிப்புடைய இத்திருவுந்தி யாரின் பொருளை விரித்து விளக்குவது, பின்வரும் திருக்களிற்றுப்படி யார் பாடலாகும். 69. துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன். இது, தம்மை மறந்து சிவனை நினைக்கின்ற செம்மை மனமுடைய மெய்யடியார்களைச் சிவபெருமான், தன்தன்மை அவர்கள்பால் விளங்கித் தோன்ற அவர்களைத் தானாக்கி அருள்புரிவன் என்கின்றது, (இ-ள்) உயிர்களின் சுட்டறிவுக்கு எட்டாத ஒளியான ஞானசத்தியுடன் என்றும் பிரிப்பின்றியுடனாய் நின்றருளும் சிவபெருமான், தன்பால் அன்புமீதூரப் பெற்ற அடியவர்களுக்குச் சிவபோகமாகிய பேரின்பத்தை நனவு நிலையிலேயே வழங்கியருளித் தான் செய்தற்குரிய திருவருட் செயல்களை அவர்களோடு உடனாய் நின்று அவர்களைக் கொண்டு செய்வித்து, அவர்களே செய்தார்கள் என்னும் வினைமுதற்றன்மையை அவர்களுக்கு உரியதாக்குவன் எ---று. திருவுந்தியார் ஙஉ ஆம் பாடலிற் போலவே அதனையடியொற்றி யமைந்த இத்திருக்களிற்றுப்படியார் பாடலிலும் துரியும் என்பது, முதற்கண் தற்போதத்தையும் பின்னர்ச் சிவபோகத்தையும் உணர்த்தி நின்றமை இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும். துரியங் கடந்த சுடரே போற்றி எனவருந் திருவாசகத் தொடரை அடியொற்றி யமைந்தது, துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். இவ்வாறு, சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப் பெற்ற செம்புலச் செல்வர்கள்பால் இறைவன் உடனாய் நின்று அவர்களைக் கொண்டு அருட்செயல்கள் பல நிகழ்த்தியருளுவன் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சைவசமய குரவர்கள் நால்வரும் செய்தருளிய அற்புதங்களை விரித்துரைப்பன பின்வரும் திருக்களிற்றுப்படியார் திருப்பாடல்களாகும். 70. ஓடம் சிவிகை உலவாக் கிழிஅடைக்கப் பாடல் பனைதாளம் பாலைநெய்தல்-ஏடெதிர்வெப் பென்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல். இது, சைவ சமய குரவர் நால்வருள் திருஞானசம்பந்தப் பிள்ளையார் நிகழ்த்தியருளிய அற்புதங்கள் பலவற்றைத் தொகுத்துரைக் கின்றது. (இ-ள்) முள்ளிவாய்க் கரையினின்று ஆற்றுப் பெருக்கிலே நாவலமே கோலாக ஓடஞ் செலுத்தித் திருக்கொள்ளம்பூதூர் சேர்ந்ததும், திருவரத்துறையிலே முத்துச் சிவிகை பெற்றதும், திருவாவடுதுறையிலே உலவாக்கிழி பெற்றதும், திருமறைக்காட்டிலே மறைக்கதவம் அடைக்கப்பாடியதும், திருக்கோலக்காவிலே பொற்றாளம் பெற்றதும் திருநனிபள்ளியிற் பாலைநெய்தலாகப் பாடியதும், மதுரையில் வைகையாற்றிலே திருப்பதிக ஏடு எதிரேறப் பாடியதும், கூன்பாண்டியனது வெப்புநோய் தீர்த்ததும், மயிலாப்பூரிலே எலும்பைப் பெண்ணாக்கியதும் ஆகிய இவை, அழகிய புகலிவேந்தராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவனருளால் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்களாம் எ---று. புகலி, என்பது சீகாழிப் பதிக்குரிய பன்னிரண்டு திருப் பெயர்களுள் ஒன்று. அவுணர்களால் இடர்ப்பட்டு அஞ்சிவந்த இந்திரன் முதலிய தேவர்களுக்கு அச்சமகலப் புகலிடம் ஆயினமையால் புகலியென்பது காரணப்பெயர். இத்தகைய புகலிப்பதியில் தோன்றினமையால் திருஞானசம்பந்தர்க்குப் புகலிவேந்தர் என்பது பெயராயிற்று. ஆளுடையபிள்ளையார் இறைவன் திருவருளால் நிகழ்த்தி யருளிய அற்புதச் செயல்களைத் திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்திற் காண்க. 71. கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல் கல்லே மிதப்பாய்க் கடனீந்தல்- நல்ல மருவார் மறைக்காட்டில் வாசல் திறப்பித்தல் திருவாமூ ராளி செயல். இது, திருநாவுக்கரசு நாயனார் செய்தருளிய அற்புதங்கள் பல வற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) பல்லவ மன்னன் ஆணை பெற்றுச் சமணர்கள் விடுத்த கொல்கின்ற மதயானையினின்றும் (அடைத்துத் தாளிட்ட) நீற்றறை யினின்றும், (வஞ்சனையாற் பாற்சோறொடுகலந்து கொடுத்த) கொடிய நஞ்சினின்றும் சொல்லுந் தன்மையினைப் போக்கியதும், (சமணர்கள் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளிய நிலையில்) தன்னொடு பிணிக்கப் பட்ட கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலினின்றும் கரையேறியதும், நல்ல மணம் பொருந்திய திருமறைக் காட்டிலே நெடுங்காலம் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவம் திறக்கும்படி திருப்பதிகம் பாடியருளியதும் ஆகிய இவை, திருவாமூரை ஆள்வோராகிய திருநாவுக்கரசு நாயனார் சிவபெருமான் திருவருளால் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்களாகும். எ-று. இவற்றின் விரிவினைத் திருத்தொண்டர் புராணத்தில் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திற் கண்டுணர்க. கொல்கரி-கொல்லும் இயல்பினதாகிய மதயானை. இதன்கண் அடைமொழியாக வந்த கொல் என்னுந் தொழிற் சொல்லை நீற்றறை, நஞ்சு என்னும் ஏனையஇரண்டினோடும் கூட்டுக. கரியின், நீற்றறையின் நஞ்சின் என்புழி ஐந்தாம் வேற்றுமை இன்னுருபு நீக்கப் பொருளில் வந்தது. திருவாமூரிற் றோன்றினமை பற்றித் திருவாமூராளி என்பது திருநாவுக்கரசர்க்குப் பெயராயிற்று. ஆளி-ஆள்பவன்;இ, வினைமுதல் விகுதி. 72. மோக மறுத்திடினா முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத்-தோகையர்பாற் றூதாகப் போகவிடும் வன்றொண்டன் றொண்டுகளை ஏதாகச் சொல்வே னியான். இது, சுந்தரமூர்த்தி நாயனார் சிவனருளால் நிகழ்த்திய அற்புதச் செயல்களுள் ஒன்றனைச் சுட்டி, அவரது தொண்டின் திறங்களை நினைந்து வியந்து போற்றுகின்றது. (இ-ள்) காமம் எனப்படும் மோகத்தை வேரறக் களைந்த மெய்ஞ்ஞானியர்க்கே நாம் வீடுபேற்றினை நல்குவது எனத் தாம் அருளிச்செய்த சிவாகமங்களிலே திட்பமுறக் கூறிய சிவபெருமானையே சங்கிலியார் பரவையார் ஆகிய நங்கையர் இருவர் பாலும் தம் விருப்பத்தினை நிறைவேற்றும் பணியினையுடைய தூதுராகப் போகவிடும் தோழமைத்திறம் வாய்ந்தன வன்றொண்டாகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்தருளிய தொண்டுகளை எளியேன் எத்துணைப் பெருமை வாய்ந்தன வென்று அளவிட்டுரைக்கவல்லேன். எ-று. நம்பியாரூரர் மணம்வந்த புத்தூரில் நிகழவிருந்த தம் திருமணத்தில் வெண்ணெய்நல்லூர்ப் பெருமான் கிழவேதியனாகி வந்து அற்புதப் பழ ஆவணங்காட்டி அத் திருமணத்தினைத் தடுத்து வெண்ணெய் நல்லூர்ச்சபையில் ஆரூரன் என்னடியான் என வழக்குரைத்து வலிய ஆட்கொண்டருளினமையால் வன்றொண்டன் எனப் பெயர் பெற்றார் என்பது வரலாறு. திருவாரூர் இறைவர் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் என்றருள்புரியத் தம்பிரான் தோழராகிய சுந்தரர் திருவாரூரிறைவர் திருவருளால் அடியார்க்குத் தொண்டு பட்டுத் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர் என்பது வரலாறு. தென்தமிழ்ப்பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை பாடிய வன்றொண்டர் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்கள் எல்லா வற்றையும் வன்றொண்டன் தொண்டுகள் எனத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் தொகுத்துக் கூறிய திறம் உணர்ந்து போற்றத் தகுவதாகும். நம்பியாரூரராகிய வன்றொண்டரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்ற வரலாற்றுக் காப்பியமாகிய திருக்தொண்டர் புராணத்தில் தொடக்கம் முதல் முடிவுவரை வன்றொண்டர்தொண்டு களாகிய அற்புதச் செயல்கள் இடம் பெற்றுள்ளமை காண்க. 73. பாய்பரியொன் றந்தப் பரமானந் தப்பரனைத் தூயதிரு வாய்மலராற் சொற்செய்து- மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாத வூராளுந் தேன். இது, திருவாதவூரடிகள் சிவனருளால் உலக மக்கள் உய்வித்தற் பொருட்டு வழங்கிய மெய்யுணர்வின் திறத்தினை வியந்து போற்றுகின்றது. (இ-ள்) வேதத்தினைத் தாவிவரும் குதிரையாகக் கொண்டு பொருந்திய பேரின் பவுருவினனாகிய அம்முதல்வனைத் தூய்மை பொருந்திய மலர் போலுந் திருவாயில் தோன்றிய சொன்மலர்களாற் பாமாலை பாடிப் போற்றி (அப்பனுவலை அன்பினால் ஓதுதலால்) வஞ்சனையைச் செய்யும் கருப்பத்திற்படும் கொடிய துன்பத்தினை எம்மனோர் அறியாதவாறு பிறவிப் பிணியை நீக்கியருளினான். அவன் யாரெனின் திருவாதவூரில் தோன்றி அதனையாண்டருளிய தலைவன், தன்னை நினைவாருள்ளத்தே தேன் போன்று இனித்தலைச் செய்யும் மாணிக்கவாசக மூர்த்தியென்று அறிவாயாக எ-று. உரையின் வரம்பும் பொருளின் எல்லையுங்கடத்து அப்பாலைக் கப்பாலான சிவபெருமான், மதுரையிற் பாண்டியன் கண்டு களிக்க மணிவாசகப்பெருமான் பொருட்டுத் தாவிவரும் குதிரையின்மேற் பொருந்தி யெழுந்தருளிப் பேரின்பம் நல்கினமையால் பாய் பரி ஒன்று அந்தப் பரமானந்தப் பரன் என்றார். ஒன்றுதல்- பொருந்தியமர்தல், திருவாதவூரடிகளது மலர்போலுந்திருவாய் வாய்மையே பயிலுந் தூய்மையும் மலர்போலும் அழகும் வாய்ந்தது என்பார். தூய திருவாய்மலர் என்றார். சொற்செய்தல்- சொன்மாலைபாடிப் போற்றுதல். இனி, சொற்செய்தல் என்பதற்கு மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்ட பேரின்பப்பொருளாகிய இறைவனைத் திருவாசகச் செழுமறையாகிய சொல்லுருவினனாக அமைத்துத்தந்து அதனை ஓதியும் கேட்டும் உணர்ந்தும் உலக மக்கள் விழுமிய பேரின்பத்தினை நுகரும்படி செய்தல் எனப் பொருளுரைத்தலும் உண்டு. மதுரைப் பெருநன் மாநக ரிருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும் எனவும், அரியொடு பிரமற் களவறியாதவன் பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் எனவும், நற்பாற்படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்க மாடாமோ எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நினைத்தற்குரியவாகும். மாயம்-வஞ்சனை. வாதை-துன்பம். கருவாதை -தாய்வயிற்றிற் கருவாக விருந்து உயிர்கள்படும் பிறவித்துன்பம். தமக்குக் குருவாக எழுந்தருளிவந்து மெய்யுணர்வு நல்கிய இறைவனைத் திருவாசகமாகிய தேனின் உருவமாக்கி உலகத்தார் ஓதியும் கேட்டும் உணர்ந்தும் சுவைத்து மகிழ்ந்து தம்முடைய பிறவிப் பிணியைப் போக்குதற்கு வழி செய்தருளினமை திருவாதவூரடிகள் இறைவனருளால் நிகழ்த்திய மேலான அற்புதச் செயல் என்றவாறு. என்னிற், கருணை வான் தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் எனவும். அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டுசெய்தனன் எனவும் திருவாதவூரடிகள் தம் திருமேனி இறைவனருளால் தேனான தன்மையினை எடுத்துரைத்தலால் திருவாதவூராளுந் தேன் எனப் போற்றியது மிகவும் பொருத்த முடையதேயாகும். இனி, இப்பாடலின் முதலடிக்கு பாய்பரியோன் றந்த பரமானந்தப் பயனை எனப் பாடங்கொண்டு, பரமேசுவரன் கொடுக்கப்பட்ட மேலாகிய ஆனந்தமாகிய பிரயோசனத்தைத் தூய தாமரை மலர் போன்ற திருவாக்கினாலே செய்யுளாக்கி மாயமாகிய கருக் குழித் துன்பத்தை நாம் அறியாதபடிக்கு அனுக்கிரகம் பண்ணினான்காண் தேன்போன்ற மாணிக்கவாசகன் என உரை கூறுதலும் உண்டு. இப் பாடத்திற்கு, சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தன்பரியப் பரிமேற்கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய் எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி துணைசெய்வதாக வுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். இவை நான்கு திருப்பாடல் களாலும் இறைவனருள் கைவரப்பெற்ற சைவசமயகுரவர்நால்வர் பெருமையும் முறையே விளக்கப் பெற்றுள்ளமை ஓதிமகிழ்தற் குரியதாகும். 74 அம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார் எம்மையுமா யெங்கு மியங்குதலான்---மெய்ம்மைச் சிவயோக மேயோக மல்லாத யோகம் அவயோக மென்றே யறி. இது, சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலாகிய சிவயோகமே முத்தியை வழங்குவதென்றும் சிவனையெண்ணாத யோகப் பயிற்சிகள்யாவும் பிறப்பிறப்புக்களை யுண்டாக்கும் அவயோக மென்றும் அறிவுறுத்துகின்றது. (இ-ள்) சிவனுடன் ஒன்றி வாழும் சிவஞானிகள் உலக மக்களுக்கு இனிவரும் பிறப்புக்களில் உண்டாகும் அச்சத்தினையும் இப்பிறப்பில் தோன்றும் அச்சத்தினையும் நீக்கித் தம்மைச் சார்ந்தார் அனைவர்க்கும் நற்பயன் அளிக்கும் முறையில் மெய்ப்பொருளாகிய சிவனருளில் ஒன்றுபட்டொழுகுந் தன்மைதாகிய சிவயோகமே சிவனை உள்ளவாறு கூடிய யோகமாகும். இதுவல்லாத புறக்கரண அகக்கரணங்களின் பயிற்சியளவிலுள்ள கன்மயோகங்ளெல்லாம் மேன்மேலும் பிறவிக்கு வித்தாய் இடர்விளைப்பனவாதலின் அவை யெல்லாம் அவயோகமென்று அறிவாயாக எ-று. அவம்- பயனின்மை. .அச்சந்தவிர்த்த சேவகபோற்றி என்பது திருவாசகம். 75. மன்னனருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக அன்ன வகைய தரனருளும்---என்னில் அடியவரே யெல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில் அடியவரே யெல்லாம் அறி. இஃது உலகமுதல்வனாகிய இறைவனுக்கு எல்லாரும் அடிமையாக விருக்கவும் அம்முதல்வன் சிவஞானிகளிடத்தில்மட்டும் பேரருள் புரிதல் நடுவுநிலை திறம்பிய செயலன்றோ? எனவினவிய மாணாக்கர்க்கு அம்முதல்வன் நடுவுநிலை திறம்பினான் அல்லன் என்பதனை உலகியலில் வைத்து அறிவுறுத்துகின்றது. (இ-ள்) மாணவனே, நாடாளும் வேந்தனது அருட்குணம் குடிமக்கள் எல்லோரிடத்தும் எவ்வாறு ஒப்பப் பயனளிக்கின்றதோ அவ்வாறே உலகமுதல்வனாகிய இறைவனது திருவருளும் மன்னுயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒப்பப் பயன்தருவதாகும்; என்றால் எல்லோரும் இறைவனுக்கு அடியவரேயாவர். ஆயினும் அவர்களில் யாவர் தற்செயல் கெட இறைவன் திருவருள்வழி ஒத்து ஒழுகுகின்றார்களோ அத்தகைய திருவருட் சார்புடையவர்களே எல்லா வகையாலும் இறைவனது திருவருளுக்கு அணுக்கராய் மிகவும் சிறப்புரிமையுடைய அடியார்கள் என்று அறிவாயாக எ-று. இதன் இரண்டாமடியில் அன்னவகையே யரனருளும் என்பதும் பாடம். நாடாளும் வேந்தனுக்குத் தனது ஆணைவழி யொழுகும் குடிமக்கள் அனைவரையும் ஒப்பக்காத்தல் வேண்டும் என்னும் பொதுமை நோக்கு எப்பொழுதும் உண்டாயினும்,தன்பாற் பேரன் புடையராய் ஒழுகும் நண்பர்களைத் தானாகப் பார்த்தும். தன் ஆணைக்கு அஞ்சியிருந்தவர்களை ஒவ்வோரிடங்களில் வைத்தும் நற்குடிக்குரிய பண்பின்றி மன்னுயிர்கட்கு இன்னல் செய்வோரைத் தண்டித்துத் திருத்தியும் இங்ஙனம் செய்கின்ற செயல்களெல்லாம் குடிமக்கள் மேல் வைத்து அருளின் திறமாதல் போன்றே, மன்னுயிர்களின் முதல்வனாகிய இறைவன் எல்லாவுயிர்களிடத்தும் ஒப்ப அருளுடையனாயினும் ஆன்மாக்களுக்கு ஆணவ மலங்கழலும் பக்குவம் உண்டாகும் வரையிலும் உயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களையும் வினைப்பயன்களையும் கூட்டி இன்ப துன்ப வாதனைகளிலே சிலரை நிறுத்தியும், திருவருட் பதிவின் மிகுதி குறைவுகட்கேற்பச் சிலரைப் பதமுத்திகளில் வைத்தும், திருவருட்பதிவு மிகுதியும் உடையவர்களைத் தன் திருவடியிற் சேர்த்தும் அவரவர்களின் பக்குவ நிலைகட்குத் தக்கவாறு படிமுறையே அருள்புரியும் உய்யக்கொள்ளுதல் இறைவனது பெருங்கருணைத் திறமாதலின், வேண்டுதல் வேண்டாமை யிலானாகிய அம் முதல்வன் நடுநிலையிற் பிறழாதவன் என்பதனை உள்ளவாறுணர்ந்து நீயும் ஆன்மபோதங்கெட இறைவனது திருவருள்வழி ஒத்துச் சென்று சிவயோகநிலை பெற்றுப் பேரின்பம் நுகர்வாயாக என அறிவுறுத்தி யருளியவாறு. இங்ஙனம் இறைவனோடு ஒத்து வாழும் அடியார்கட்கு எடுத்த உடம்பு உள்ளவரையிலும் தொடுத்த நுகர்வினைப் பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின் அங்ஙனம் பிராரத்த வினையினை நுகரும்போது கருவிகரணங்கள் கூட வேண்டுதலானும் இவற்றின் வசப்பட்டு நுகரும் உபாயமும், இங்ஙனம் நுகரும்போதே விருப்பு வெறுப்புக்களால் ஆகாமியம் வந்து ஏறாமல் நிற்கும் உபாயமும், அருள்வழி நின்றவர்க்குக் கட்டுநிலையில் நுகரப்படும் சிற்றின்பமே வீட்டு நிலையில் நுகரப்படும் பேரின்பமாக அமைதற்குரிய உபாயமும் அருளிச் செய்வதாக அமைந்தது. ஙங. பெற்றசிற் றின்பமே பேரின்ப மாமங்கே முற்ற வரும்பரி சுந்தீபற முளையாது மாயையென் றுந்தீபற. எனவரும் திருவுந்தியாராகும். இது சிவஞானிகளுக்கு உலகியலிற்பெறும் சிற்றின்பமே பேரின்பமாம் முறைமையினை யுணர்த்துகின்றது. (இ-ள்) திருவருளைப் பெற்றகாலத்து ஆன்மா மெய்ப் பொருளையே நோக்கி நிற்றலால் அவ்விடத்துண்டாகிய சிற்றின்பமும் சிவாநுபவமாகிய பேரின்பமாக வந்து முடியும். அந்நிலையில் ஆன்மா சிவத்துடன் ஒன்றித் தற்போதம் அற நிற்றலால் அவ்வான்மாவுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களாகிய மாயைப் பிணிப்பு ஒருகாலத்தும் வந்து முளைத்தல் இல்லை எ-று. குருவின் அருளாலே மெய்ப்பொருளையுணர்ந்த காலத்தும் எடுத்த இவ்வுடம்பினால் முகந்து கொள்ளப் பட்ட பிராரத்தவினை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின் அந்தப் பிராரத்தவினைகாரணமாகச் சுக துக்கங்களாகிய வினைப்பயன் ஆன்மாவைச் சார்தல் இயல்பு. அந்நிலையிற் சிவஞானிகள் உலகப்பொருள்களிற் கருத்தைச் செலுத்தாது உயிர்க்குயிராகிய இறைவனையே சார்ந்து நிற்றலின் இறைவனும் இவர்களுடைய வினைப்பயன்களைத் தானே ஏன்று கொள்வனாதலால் இவ்வடியார்களுடைய கருவிகரணங்களெல்லாம் சிவகரணங்களாக அமைய அந்நிலையில் அவர்கள் பெற்ற சிற்றின்பமும் பேரின்பமாக வந்து முடியும் என்பதாம். சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோட் டடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்துர் ஐயன் அருளதே (7-45-4) எனவரும் நம்பியாரூரர் அருளிச் செயலும், தென்னாவலூர் மன்னன் தேவர்பிரான் திருவருளால் மின்னாருங் கொடி மருங்குற் பரவையெனும் மெல்லியல் தன் பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார். (பெரிய-தடுத்- 181) எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியும் உலகப்பொருள்களைப் பாராது சிவபரம்பொருளையே நோக்கிய செம்புலச் செல்வர்களுடைய கருவிகரணங்கள் சிவகரணங்களாகித் தூய்மையுற்ற நிலையில், அவர்கள் இவ்வுலகில் துய்த்த சிற்றின்பமும் பேரின்பமாக நிறைவுபெற்ற தன்மைக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் காணலாம். இத்திருவுந்தியார் பாடற்பொருளை விளக்கும் முறையில் அமைந்தது, 76. உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம் அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்---தொடங்கி முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை இளைப்பதுமொன் றில்லை யிவர். (இ-ள்) உடம்போடு கூடிவாழும் சீவன்முத்தர்களாகிய சிவ யோகச் செல்வர்கள் தம்மைப் பொருந்தின நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் தமக்குரியவெனக் கருதாது தம்மை அகத்திட்டுக் கொண்ட பேரின்பமயமான சிவனிடத்திலே ஒப்படைத்தலினாலே அவர்கள் விருப்பு வெறுப்புக் காரணமாக வந்தேறும் ஆகாமிய வினையைப் பொருந்தி மேற் சரீரம் எடுத்துப் பிறப்பதுமில்லை. ஆணவ மலந் தீர்ந்தமையால் அழிவது மில்லை. பிறவிச் சூழவிற் சிக்கித் தத்துவச் சேட்டைகளால் இவர்கள் தளர்ச்சியடைதல் சிறிதும் இல்லை எ-று. எனவே பரமுத்தியெனப்படும் வீடுபேற்றின்பத்தினை இவ்வுலகில் உடம்புடன் கூடி நின்ற நிலையே பெற்று நுகருமியல்பினர் சீவன் முத்தர்கள் என்பதாம். முளைத்தல்-பிறத்தல். முடிதல்-அழிதல். இளைத்தல்-இறத்தல் பிறத்தல்களாகிய பிறவிச் சூழலில் அகப்பட்டுத் தளர்தல். ஒன்று என்பது சிறிது என்னும் பொருளில் வந்தது. ஒன்றும் (சிறிதும்) என உம்மை விரித்துரைக்க. இவ்வாறு அளவிட்டுரைக்கவொண்ணாத பேரின்பமாகிய சிவாநுபவம் கைகூடின காலத்துத் தூய்மை நிலையிலுள்ள இவ்வான்மாவினிடத்து மும்மலச் சார்பாக வேறொன்றும் வந்து கூடாதபடி இன்புருவினனான சிவன் தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியொடும் கூடி ஆண்டு கொண்டருளித் தன்னடியார்க்கு ஈறிலாப் பேரின்பத்தினை நல்கியருள்வான் என்பதனை அறிவுறுத்துவது, பின்வருந் திருவுந்தியாராகும். ஙச. பேரின்ப மான பிரமக் கிழத்தியோ டோரின்பத் துள்ளானென் றுந்தீபற உன்னையே யாண்டானென் றுந்தீபற. இஃது, இன்புருவாகிய சிவன், தன்னடியார்க்குப் பேரின்பம் அருளுமாறு இதுவெனவுணர்துகின்றது. (இ-ள்) பேரின்பமயமாகிய பிரமப் பொருளாகிய தனக்கு உரிமையுடையளாய சிவசத்தியுடன் கூடி ஒப்பற்ற இன்பநிலையில் உள்ளான் சிவனெனத் தெளிந்துணர்வாயாக. யாவர்க்கும் மேலாம் அம்மையப்பனாகிய அம்முதல்வன் யாவர்க்குங் கீழாம்உன்னையும் தன்னுடைய பேரருளால் ஆண்டு கொண்டு பேரானந்தம் பேராமை வைத்தருளினான் என்று மகிழ்வாயாக எ-று. தனது பேரின்பவளம் அனைத்துக்கும் முற்றுரிமை யுடைய அருட்சத்தியுடன் பிரிவின்றி ஒப்பற்ற பேரின்பவுருவினனாகத் திகழ்தல் இறைவனது இயல்பென்பார், பேரின்பமான பிரமக்கிழத்தி யுடன் ஓரின்பத்துள்ளான் என்றார். அத்தகைய முதல்வன், பொய்யாய செல்வத்தை மெய்யாகக் கருதிப் பாசப்பிணிப்புற்றுக் கிடந்த உன்னையும் தனது பெருங் கருணைத் திறத்தால் எளிவந்து ஆட்கொண்டு உலகில் யாவரும் பெற்றறியாத பேரின்பத்துள் வைத்தருளினான் எனத் தம் நெஞ்சத்துக்கு அறிவுறுத்துவார், உன்னையே ஆண்டான் என்றார். உன்னையே என்புழி ஏகாரம் உன்னையும் என இழிவு சிறப்பும்மையில் பொருள்பட நின்றது, சிவன் எம்பிரான் என்னையாண்டு கொண்டான் என்சிறுமை கண்டும் (திருவாசகம்- திருச்சதகம்-9) எனவும் நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் (திருவாசகம்-திருக்கோத்தும்பி-15) எனவும், யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும் பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை. (திருவாசகம்-திருவெண்பா-8) எனவும் வரும் திருவாதவூரடிகள் அருளநுபவ மொழிகள் இத்திருப் பாடற் பொருளுடன் ஒப்பு நோக்கி யுணரத்தக்கனவாகும். பேரின்பமான என்னும் பெயரெச்சம், பிரமம் என்னும் பெயர் கொண்டு முடிந்தது. பிரமக் கிழத்தி என்றது, பிரமப் பொருளாகிய கிழவனுக்கு (நாயகனுக்கு) உரியதேவியாய் அவனோடு பிரிப்பின்றி விளங்கும் பராசத்தியை, கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான் என்றது, நந்தம்மையாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் என்னும் திருவெம்பாவைத் தொடரை அடியொற்றியமைந்ததாகும். சிவபரம்பொருளாகிய முதல்வன், தன்னடைந்தார்க்கின்பங்கள் தந்தருளும் முறையில் ஒப்பற்ற இன்பமே தனது திருமேனியாகக் கொண்டுள்ளான் என்பார், ஓரின்பத்து உள்ளான் என்றார். தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை (2---40---11) எனவும் இன்பமே என்னுடை அன்பே (திருவாசகம்-கோயிற் றிருப்பதிகம்-1) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இறைவன் இன்புருவினனாதலை நன்கு புலப்படுத்துதல் காணலாம். இன்பதனை யெய்துவார்க் கீயும், அவர்க்குருவம் இன்பகனம் (73) என்பது திருவருட்பயன். பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான் என இறைவனது இயல்புரைப்பதாகிய இத்தொடரினை ஆன்மாவைக் குறித்ததாகக் கொண்டு பெரிய இன்பமான சிவசக்தியுடனே கூடி ஒப்பற்ற இன்பத்தையுடை யனானாய் என உரைவரைந்தாரு முளர். உள்ளான் என்னும் ஆண்பாற் படர்க்கைச் சொல்லை உடையனானாய் என முன்னிலை யிடத்ததாக மாற்றியுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்க. அன்றியும் இத்திருவுந்தியார் தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்துள்ள திருக்களிற்றுப்படியார் பாடற் பொருளோடும் இவ்வுரை முரண்பட்டுள்ளமையும் இங்குச் சிந்தித்தற்குரியதாகும். ஙரு. பெண்டிர் பிடிபோல வாண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற காணாதார் காணாரென் றுந்தீபற. இஃது ஆன்மா தன் செயலற்று இறைவனது அருளின் வழியடங்கிப் பெறும் இன்பநிலையினை உவமைவாயிலாக அறிவுறுத்துகின்றது. (இ-ள்) ஆன்மாவானது பேயாற் பிடியுண்டபெண்டிர் போலவும், நாயகரான தம்பிரானார் பெண்டிரைப் பிடித்துள்ள பேய்போலவும் தம் செயலற இறைவன் செயலே தம்பால் விளங்க இவ்வாறு தம் மையும் சிவபரம் பொருளையும் உள்ளபடி கண்டு அவனோடு ஒன்றி நின்றவர்களே அம்முதல்வனை உள்ளவாறு கண்டு கூடினவராவர் இங்ஙனம் காணாதார் எக்காலமும் விழியாத கண்ணினராகிய பிறவிக் குருடரை யொப்பர் எ---று. ஒருத்தியைப் பேய் பிடித்த காலத்து அவளது உடம்பு வேறாகா திருக்க மனமும் வாக்கும் செயலும் பேயின் வசத்தனவாய் மாற, அவள் தன்னை மறந்து பேயென நின்ற தன்மைபோல, இறைவனது அருள்வழிப்பட்ட ஆன்மாவும் தன்னை மறந்து தன்செயலற்று இறைவன்செயலே தன்பால்விளங்க இறைவனோடு ஒட்டிய பண்பினதாய் நிற்றலும், ஒருத்தியைப் பிடித்த பேயானது, அவளுடைய மன வாக்குச் செயல்களை மாற்றித் தன்னுடைய செயலே அவள்பால் விளங்கத் தானே அவளாய் ஒட்டி வாழ்ந்தாற் போலத் தம்பிரானாராகிய இறைவனும் உடம்போடு கூடிநின்ற உயிருக்குரிய கரணங்கள் சிவகரணங்களாக மாற உயிரின் செயலை மாற்றி அவ்வுயிரின்பால் தன்செயலே விளங்க அவ்வுயிர்தானேயாய் ஒட்டிநிற்றலும் ஆகிய இந்நிலையினைப் புலப்படுத்துவது, பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போல எனவரும் இவ்வுவமையாகும். இங்ஙனம் தம்மை மறந்து இறைவனைச் சிந்தித்துப் போற்றும் நற்பேறுடையவர்களே முதல்வனை உள்ளவாறு கண்டு பேரின்பம் நுகர்பவராவர்; இவ்வாறு கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய திருவருள்ஞானம் வாய்க்கப்பெறாதவர்கள் பிறவிக் குருடரைப் போன்று ஒன்றும் உணராதவர்களே என்பார் கண்டாரே கண்டா ரென்றுந்தீபற, காணாதார் காணாரென் றுந்தீபற என்றருளிச் செய்தார். பிடி என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய்ப் பேயாற் பிடியுண்டவர்களை யுணர்த்தி நின்றது. இப்பாடலிற் பெண்டிர் என்றது உயிர்த்தொகுதியினை. ஆண்மக்கள் என்றது, எவ்வுயிர்க்கும் இன்பம் அளித்தலால் சங்கரன் எனப்போற்றப் பெறும் ஆன்மநாயகனாகிய சிவனை. அன்புடைய அடியார்கள் பேயாற் பிடியுண்ட பெண்டிரைப் போன்று தம்செயலற்று இறைவன் செயலே தம்கண் விளங்க இறைவனோடு ஒட்டிய பண்பினராகவும், அவர்களை ஆட்கொண்டருளிய இறைவன் தன் திருவருட்பண்பும் செயல்களும் அவர்கள்பால் விளங்கித் தோன்ற ஒட்டி வாழ் பவனாகவும் இவ்வாறுணர்ந்து தம்மை மறந்து தம்பிரானைக் கண்டின்புறும் இயல்புடையவர்களே மேற்கூறிய சத்தி சிவங்களின் தன்மையினை உள்ளவாறு கண்டவர்கள்; பேயும் பேயாற் பிடியுண்டவரும் போல ஒன்றுபட்டு நின்று முதல்வனையும் தம்மையும் கண்டு ஏகனாகி இறைபணி நிற்கும் இயல்பினைப் பெறாதவர்கள் சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பர முத்தியான முழுமுதற் பொருளின் ஒருமையின் இருமையினை உள்ளவாறு உணரப்பெறுவாரல்லார் என்பதாம். பேரின்பமான பெண்டிர்பிடிபோல எனவரும் இத்திருவுந் தியார் பாடல்கள் இரண்டின் பொருள்களையும் ஒருங்கே தொடர்பு படுத்தி விளக்கும் முறையில் அமைந்தன, 77 முதல் 79 வரையுள்ள திருக்களிற்றுப்படியார் செய்யுட்களாகும். 77. பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன் ஓரின்பத் துள்ளானை யுள்ளபடி---பேரின்பங் கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம் உண்டவரே யுண்டார் சுவை. (இ-ள்) அளவிடப்படாத பேரானந்தமானபெரும்பொருளுக்கு உரிமையுடையவளாகிய பராசத்தியுடன் ஒப்பற்ற இன்பமே வடிவமாகத் திகழும் சிவபெருமானைப் பிரிவறக் கலந்து அம்முதல்வனது அருளாரின்பத்தை உள்ளவாறு நுகரப் பெற்றவர்களே பேரின்பத் தியல்பினை உள்ளவாறு உணரப் பெற்றவராவர். கடலிற் பிறந்த இனிய அமுதத்தைநுகர்ந்து அதன் சுவையில் அழுந்தினவர்களே அவ்வமுதத்தை உள்ளவாறு நுகர்ந்தோராவர் எ-று. கடலிற் பிறந்த இனிய அமுதத்தினை நுகர்ந்து அதன் சுவையில் உள்ளபடி ஆழ்ந்தவர்களே அதன் பயனான இறவாமையைப் பெற்று இன்புறுவதல்லது, ஏனையோர்க்கு அவ்வமுதத்தைக் கண்ணாற் கண்ட மாத்திரத்தில் அதன் சுவையும் தெரியாது; இறவாமையாகிய பேறுங்கிட்டாது. அதுபோல, ஆன்மாக்கள் மலமாயை கன்மங்களை நீங்கி ஞானத்தை யடைந்தாலும் அந்நெறியே சிவனைக்கூடி அம்முதல்வனது பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றாலல்லது ஞானத்தைப் பெற்ற மாத்திரத்திலேயே சிவனோடு இரண்டறக் கலந்து இன்புறுதலாகிய வீடுபேறு கிட்டாது என்பதாம். இதன்கண், பேரின்பமான பிரமக்கிழத்தியுடன் ஓரின்பத்துள் ளான் என்றதொடர், திருவுந்தியாரின் ஙச-ஆம் பாடற் பொருளையும், பேரின்பங் கண்டவரே கண்டார் என்ற தொடர் பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய் போலக் கண்டாரே கண்டார் என்னும் ஙரு-ஆம் பாடற் பொருளையும் அடியொற்றியமைந் துள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். 78. நங்கையினால் நாமனைத்துஞ் செய்தாற்போ னாடனைத்தும் நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்---நங்கையினும் நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண் எம்பெருமா னார்தம் இயல்பு. இஃது, ஒருவன் என்னும் ஒருவனாகிய முதல்வனைப் பிரமக் கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான் என இருமைப்படக் கூறியது என்னை? என வினவிய மாணாக்கனை நோக்கிப் பிரமக்கிழத்தியும் அவளோடு பிரிவறத்திகழும் முதல்வனும் ஒருபொருளே யென்பதனை வற்புறுத்துகின்றது. (இ-ள்) உயிர்களாகிய நாம் எண்ணிய செயல்கள் அனைத்தையும் நம்முடைய கை முதலிய அவயவங்களாற் செய்து நிறைவேற்றுதல் போலவே, உயிர்க்குயிராகிய இறைவனும் தன்னுடன் பிரிப்பின்றி யுள்ள திருவருட் சத்தியாகிய நங்கையைக் கொண்டே உலகங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்தருள்புரிவான். இவ்வாறு எல்லாவுலகங்களையும் ஈன்று காத்தளிக்கும் நங்கையாகிய பராசத்தியாலும் நடுவாய் விரும்பத்தக்க மணவாளனாகி மன்னுயிர்களின் உள்ளத்தோறும் அம்மையப்பனாய் நிலைநிறுத்தப் பெறுவன். இதுவே எம்முடைய தலைவனாகிய சிவபெருமானது உண்மை இயல்பாகும். எ-று. நங்கையினால் என்ற தொடர், முதலடியில் நம்கையினால் என இருசொற்களாய்ப் பிரிந்தும், இரண்டாமடியில் நங்கையினால் என ஒருசொல்லாய் நின்றும் இருபொருள் தந்தது. நாம் நம் கையினால் அனைத்தும் செய்தாற்போல், நாயகனும் நங்கையினால் நாடு அனைத்தும் செய்தளிக்கும் என இயையும். நம்முடம்பின் வேறுபடாத கை உடம்பின் செயல்வடிவாய் நின்று நம்முடம்பின் புறத்தேயும் விரிந்து செயலாற்றுதல் போன்று, சிவத்தின் வேறுபடாத பராசத்தியாகிய நங்கையும் இறைவனது செயலாற்றலாய்ப் புறத்தேயும் விரிந்து பரவி உலகங்களையெல்லாம் படைத்துக் காத் தருள்கின்றாளாதலின் சத்தியும் சிவமும் ஒருபொருளே என்பதாம். சிவத்தின் இயல்பு அதனிற் பிரிவறநின்ற திருவருளாகிய சத்தியின் துணைகொண்டே உயிர்களின் உள்ளந்தோறும் நாட்டப்பெறுவது என்பார், நங்கையினும் நம்பியாய்த் தான்நடுவே நாட்டப் பெறும் இதுகாண் எம்பெருமானார் தம் இயல்பு என்றார். உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள்நீயிருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் எனவரும் திருவாசகச் செழு மறையின் பொருளை விரித்துரைப்பதாக இத்திருக்களிற்றுப்படியார் அமைந்துள்ள நுட்பம் அறிஞர்களால் வியந்து போற்றுதற் குரியதாகும். சிவமாகிய பரம்பொருளினின்றும் அதனிற் பிரிவின்றித் திகழும் திருவருளாகிய சத்தி தோன்றுதலின், முழுமுதற் பொருளாகிய சிவம் அருளாகிய சத்திக்கு நிலைக்களமாகத் திகழ்வது என்பார், உடையாள் உன்றன் நடுவிருக்கும் என்றும், அத்தகைய திருவருளையே தனக்குரிய திருமேனியாகக் கொண்டு தோன்றி உயிர்களுக்கு எளி வந்து அருள்புரிதல் சிவபரம்பொருளின் இயல் பென்பார், உடையாள் நடுவுள் நீயிருத்தி என்றும், இங்ஙனம் முழுமுதற் பொருளொன்றே சத்தியும் சிவமுமாகிய தன்மையால் அம்மையோடு அப்பனாகி உயிர்கள்தோறும் உயிர்க்குயிராய் எழுந்தருளியுள்ளது என்பார், அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் என்றும் திருவாதவூரடிகள் எம்பெருமானார்தம் இயல்பு இது என விளக்கியருளியதிறம் இங்கு ஒப்புநோக்கியுணரத் தக்கதாகும். இங்ஙனம் முழு முதற்பொருளொன்றே சத்தியும் சிவமும் என ஒருமையின் இருமை நிலையினதாய் மன்னுயிர்க்கு அருள் வழங்குந் திறத்தினை, பத்தியா யுணர்வோ ரருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா விருக்குந் தேவர்காள் இவர்தந் திருவுரு விருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமா யதற்கோர் வித்துமா யாரூ ராதியாய் வீதி விடங்கராய் நடங்குலா வினரே எனவரும் திருவிசைப்பா இனிது புலப்படுத்தல் காண்க. 79. பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்---செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு. இது, சத்தியும் சிவமும் பிரிவின்றியியைந்த ஒருபொருளே என்பதனை மற்றுமோர் உவமை காட்டி வலியுறுத்துகின்றது. (இ-ள்) பொன்னின்கண் உள்ளநிறம், பொன் கட்டியாயிருந்த நிலைமையிலும் பொன்னாற் செய்யப்பெற்ற அணிகலனாயிருந்த நிலைமையிலும் ஒரே தன்மையாய்ப் பொருந்தி நின்றவாறு போலவே அத்தன்மையே சிவமும் சத்தியும் பொருந்தி நின்ற முறைமையாகும். பொன்னும் அதனிற் பிரிவிலா நிறமும் போன்று செம்பொருளாகிய சிவத்தின் ஆற்றலாகிய சிவசத்தி எவ்வுருவினளாகத் திகழ்கின்றாளோ எங்கள் சிவபெருமானும் அவ்வுருவினனாகவே ஆங்குத் தோன்றியருள்வன் எ-று. உருவ நிலைபெறாத கட்டிப்பொன்போலச் சிவமும், பொன்னிலிருந்து உருப்பெற்றுத் திகழும் அணிகலன் போலச் சத்தியும் முறையே முழுமையும் விரிவும் ஆகிய இருவேறு தன்மையுடைய ஒருபொருளே என்பது உணர்த்தியவாறு காண்க. ஙசா. நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின் நாலாம் நிலையாமென் றுந்தீபற நாதற் கிடமதென் றுந்தீபற. இது, சிவயோக நெறியின் சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) நிலமுதல் வானீறாகவுள்ள ஐம்பெரும்பூதங்களில் நாலாவது பூதமாகிய காற்றும் அதனால் உந்தப் பெறும் சூக்குமையாகிய வாக்கும் ஒன்றி நிற்கும் நிலையினைக் குருவருளால் அறிந்து மனத்தை ஒருமை நிலையில் வைத்துணரின், தூயவுணர்வு நிலைகள் ஐந்தனுள் நாலாவதாகிய நின்மல துரியம் என்னும் திருவருள்நிலை தானே வந்தெய்தும். நாத தத்துவவுருவினனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கத் தக்க இடமும் அம்முதல்வனை ஆன்மா கூடுதற்குரிய இடமும் அதுவேயாகும் எ-று. நாலாய பூதம் என்றது, ஐம்பெரும் பூதங்களுள் ஒடுக்க முறையில் நாலாவதாக வைத்து எண்ணப் பெறும் காற்றினை; இங்கு அத்தொடர் பிராணவாயுவெனப்படும் உயிர்வளியினை யுணர்த்தி நின்றது. நாதம் என்றது, மூலாதாரத்திலே பிரணவமாகப் பதிந்துள்ள சூக்குமை வாக்காகிய நாதத்தினை. நாலாம்பூதமாகிய உயிர்வளியும் நாதமும் சேர்ந்து ஒன்றுமிடம் பிரமரந்திரம் என்னும் உச்சிப் பெரு வெளியென்பர் உணர்ந்தோர். நாதவுருவினனாகிய இறைவன் எழுந் தருளியிருக்கும் மேலாகியஇடமும், அம்முதல்வனை ஆன்மா கூடுதற்குரிய இடமும் அதுவேயாகும். மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் எனவும் கழிப்பாலைமேய கபாலப்பனார் எனவும் எமது உச்சியாரே எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு நினைத்தற்குரியனவாகும். சுக்கில சுரோணிதத்தின் தலையிலே சீவன் பதிகின்ற அளவில் சிவனுடைய கிரியாசத்தியாலே நாலாம் பூதமாகிய வாயுவும் சத்தப் பிரமமான நாதமும் கூடப்பதிந்து சரீரம் பரிணமிக்க, வாயுவானது நாடிகள்தோறும் பூரணமாகப் பிரதானவாயுவான பிராணவாயுவும் பின்பு மரணமுண்டாக்குதற் பொருட்டு நாபிச் சக்கரத்தின்கீழே சென்று பொருந்தாநிற்கும். சத்தப் பிரமமான நாதம் தானந்தோறும் நிற்கும் எழுத்துக்களாகிச் சென்று பின்பு மரண முண்டாக்குகை காரணமாக மூலாதாரத்திலே பிரணவமாகப் பதிந்து கிடவா நிற்கும். இவற்றைத் தேசிகனருளாலேயறிந்து சத்திபீசத்தையும் சிவபீசத்தையும் கொடுத்துத் திருமந்திரப் பிராசாதமாக்கி மனத்தை ஒருமைப்படுத்தி இந்தத் திருமந்திரப் பிராசாதத்தைக் கொண்டே நாதத்தையெழுப்பி இந்த நாதத்தையும் பிராணவாயுவையுங்கூட்டிச் சுழுமுனை வழியே செலுத்தி முன்பு தோன்றின பிரமரந்திரத்திலே கூடித் தான் பரமாகாசத்தில் அழுந்தில், நாலாம் நிலையாகிய சாயுச்சியம் அப்பொழுதே கைகூடும்; கர்த்தா எழுந்தருளி யிருக்கத்தக்க இடமும் அதுவே. என இத்திருவுந்தியாரின் பொருளைத் தாம் பெற்ற சிவயோக அனுபவத்தின்படி தில்லைச்சிற்றம்பலலுர் விரித்துக் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி இத்திருப்பாடலில் நாலாம்நிலை யென்றது, உயிர்கள் பெறுதற்குரிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளுள் நாலாம்நிலையின தாகிய பரமுத்தியையெனக் கொள்ளவேண்டியுள்ளது. பீசம்-வித்தெழுத்து சத்தி பீசம் என்றது திருவைந்தெழுத்தில் திருவருளைக் குறிக்கும் வ எனவும், சிவபீசம் என்றது இறைவனைக் குறிக்கும் சி எனவும் கொண்டு வசி, சிவ என்னும் மந்திரத்தால் நாதத்தையும் பிராணவாயுவையும் சேர்த்துச் சுழுமுனை நாடி வழியே செலுத்திப் பிரமரந்திரம் என்னும் உச்சிப் பெருவெளியிலே அழுந்தும் சிவயோக நிலை கைவரப் பெற்றால் நாலாம் நிலையாகிய சாயுச்சியம் அப்பொழுதே வந்தெய்தும் என விளக்கங் கூறுவாருமுளர். இங்ஙனம் இத்திருவுந்தியார் பாடலிலுள்ள நாலாம் நிலை என்பதற்குச் சாயுச்சியம் எனப் பொருள் வரைந்த இவ்வாசிரியரே இத்திருவுந்தியார் பாடலை யடியொற்றியமைந்த தாரத்தோ டொன்றாவர் என்னும் திருக்களிற்றுப்படியார் பாடலில் நாற்றானத்தேயிருப்பர் என்னுந் தொடருக்கு நாலாந்தானமான திரோதான சத்தியிலே இராநிற்பர் என உரை வரைந்துள்ளார். திருவுந்தியார் பாடலில் நாலாம் நிலை என்றதும் திருக்களிற்றுப் படியாரில் நாற்றானம் என்றதும் ஒன்றேயாகவும் , இவ்விரண்டற்கும் இவ்வாறு வெவ்வேறு பொருள் வரைதல் பருந்தும் நிழலும் என அமைந்த திருவுந்தியார்க்கும் திருக்களிற்றுப்படியார்க்கும் உள்ள தொடர்பினை மறக்கச் செய்வதாகும். நாலாம் பூதமாகிய வாயுவையும் நாதமாகிய சத்தப் பிரமத் தையும் ஆசாரியர் உபதேசித்த முறையேயறிந்திடில் நாலாம் நிலையாகிய திருவருள் கைகூடும். சிவன் இருத்தற்கிடம் அந்தத் திரு வருளே. யோகப் பயிற்சி வேண்டுமென்பது கருத்து எனப் பழைய உரையாசிரியர் இப்பாடற் பொருளைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். இவ்வுரையாசிரியர் இதனையடியொற்றியமைந்த தாரத்தோ டொன்றாவர் என்ற பாடலில் நாற்றானத்தேயிருப்பர் என்ற தொடருக்குத் தில்லைச்சிற்றம்பலவர் கொண்டவுரை தமக்குப் பொருத்தமின்மையையுணர்ந்து, நற்றானத்தேயிருப்பர் எனப்பாடங் கொண்டு நல்லதானமாகிய ஆன்மாவினிடத்திலே கூடி நிற்பான் என உரைவரைந்துள்ளமையும் இங்கு நினைத்தற்குரியதாகும். நாலாம் நிலை என்பதற்கு நாலாம் நிலையாகிய திருவருள் என இவ்வுரையாசிரியர் இருவரும் கூறிய உரையினை யாதாரமாகக் கொண்டு நின்மலதுரியமாகிய நாலாம் அவத்தை நிலையாகிய திருவருளை எளிதிற்பெறலாம் எனப் பின்வந்தோரொருவர் எழுதிய உரைக்குறிப்பும் இங்கு நோக்கற்பாலதாகும். சிவயோக நெறியில் நிற்போர் பிராணவாயுவைப் புறத்தே போகாமல் ஒடுக்கி இறைவனது திருவருள் ஞானமாகிய விளக்கினை உள்ளே ஏற்றி நன்புலன் ஒன்றிப் புறத்தே செல்லும் இடைபிங்கலை களில் வழிகளையடைத்து அகத்தே செல்லும் சுழுமுனை வழியினைத் திறந்து திருவைந்தெழுத்தின் துணைகொண்டு நாத தத்துவத்தில் நிலைபெற்ற சிவபரம்பொருளை ஆறாதாரங்களுக்கும் மேலான மீதானத்திலே கூடி நின்று, உலகவாதனைகளால் வரும் இடர்கள் நீங்கி இன்புறுவர் என்பது, ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்துவார்க்கிட ரான கெடுப்பன அஞ்செழுத்துமே (3-22-3) எனவும், உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள விருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. (4-75-4) எனவும்வரும் திருப்பாடல்களாற் புலனாம், கழிப்பாலை மேய கபாலப்பனார் வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதுநாமே (3-22-3) எனவரும் திருத்தாண்டகத் தொடர் இச் சிவயோக நெறியினைக் குறித்து நிற்றலும், இதற்கு இலக்கணமாக, நாலு கரணங் களுமொன்றாய் நல்லஅறிவு மேற்கொண்டு காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு ஏலவேமுன் பயின்றநெறி எடுத்தமறைமூலந் திறப்ப மூலமுதல்வர் திருப்பாதம் அடைவார் கயிலை முன்னடைந்தார் (பெருமிழலை-10) எனப் பெருமிழலைக் குறும்பநாயனார் வரலாறு அமைந்துள்ளமையும், மனத்தகத்தான் தலைமேலான் (6-8-5) ஓங்கினாரெம துச்சியாரே (2-26-2) எனவரும் திருமுறைகளும் மீதானமாகிய நாலாம் நிலையினைக் குறித்தல் காண்க. 80. தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர் தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின் நாதாந்தத் தேயிருப்பர் நாற்றானத் தேயிருப்பர் வேதாந்தத் தேயிருப்பர் வேறு. இது, மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு இறைவன் நிகழ்த்தி யருளும் ஐந்தொழில்களுக்கும் அம்முதல்வனது ஆற்றலாகிய சிவசத்தி உடனாய் நிற்க அம்முதல்வன் தன் ஆணையாகிய சத்தியுடன் நீக்கமின்றி நிற்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) சிவபெருமான் தம் தேவியாகிய சிவசத்தியுடன் ஒன்றாகி யிருப்பர்; சத்தியைத் தனது ஒரு பாகத்தே கொண்டிருப்பர்; சத்தி யுடன் எவ்விடத்தும் முற்பட்டு நிற்பர்; சத்தியுடனே நாதமுடிவிலே யிருப்பர். நாலாம் நிலையாகிய நின்மல துரியநிலையில் திருவருட் சத்தியுடன் கூடியிருப்பர்; வேத முடிவிலே முடிந்த பொருளாய் இவற்றின் மேற்பட்டுச் சிறந்து விளங்கும் பராசத்தியிலே நிலைத் திருப்பர் எ-று. தாரம்-மனைவி; இங்குத் தாரம் என்றது. சிவபரம் பொருளை விட்டு நீங்காத அப்பொருளின் ஆற்றலாகிய சத்தியினை படைப்புக் காலத்தே உயிர்கள் நுண்ணுடம்பில் விழைவு அறிவு செயல்களோடு தங்குதற் பொருட்டு இறைவன் தன்னுடைய சத்தியைத் தோற்று வித்துத் தானும் அந்தச் சத்தியுடனே கூடி விழைவறிவு செயல்களின் உருவாய்த் திகழ்தலின், தாரத்தோடு ஒன்றாவர் என்றார். அவ் வுயிர்களது உடம்பு பருவுடலாய் ஆணும் பெண்ணுமாய்ப் பகுப்புண்ணுதல் வேண்டி மாதொரு பாகராகத் திகழ்தலின், தாரத்து ஓர் கூறு ஆவர் என்றார். அவ்வுயிர்களுக்கு மலப்பிணிப்பு கழலுதற்குரிய பக்குவம் உண்டாதற் பொருட்டுத் தன் சத்தியுருவான அயன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன், எனக் கூறப்படும் திருமேனிகளுடனே உள்ளுருவான ஓங்கார வடிவாய் உயிர்களிடத்திலே மாயாகாரியமான தத்துவங்களுடன் கூடி நடத்துதலின் தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் என்றார். தலைநிற்றலாவது, முற்பட நின்று செயல் புரிதல். உயிர்களையும் அவை பெற்றுள்ள தத்துவங்களையும் மீண்டும் பிரித்தல் வேண்டி விகாரமற்ற மாமாயையெனப்படும் சுத்தமாயை யினைத் தொழிற்படுத்தும் தனது ஆற்றலாகிய விந்து சத்தியுடன் நாத முடிவிலே தங்கியிருப்பர் என்பார், தாரத்தின் நாதாந்தத்தே யிருப்பர் என்றார். உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதித் தம்மை இறைவனுடைமையாகக் கொடுத்துத் தன் செயலற இறைவன் திருவருள் வழி ஒன்றி வாழும் அன்புடைய அடியார்கள் இறைவனைத் தம் உடம்பின் அகத்தே வைத்து வழிபாடு செய்யும்போது அவர்களது உந்தித் தாமரை ஓமத்தான மாகவும் நெஞ்சத்தாமரை பூசைத்தானமாகவும், நெற்றிக்கமலம் தியானத்தானமாகவும் அமைய, அகப்பூசையினை முறைப்படி செய்து இம்மூன்றிற்கும் மேலாய் மீதானம் எனப்படும் தலையின் உச்சியாகிய பிரமரந்திரப் பெருவெளியிலே தம் உயிரைச் செலுத்திக் கலந்து இன்புறும் நிலையில் அங்கு ஆயிரஇதழ்த் தாமரையிலே அம்மையப்பராக வீற்றிருந்தருள்வர் என்பார், தாரத்தின் நாற்றானத்தேயிருப்பர் என்றார். உடம்பினகத்தே இறைவனை வழிபாடு செய்தற்குரிய ஓமத்தானம் பூசைத்தானம் தியானத்தானம் எனப்படும் மூன்று மண்டலங்களையுங் கடந்து மேற்பட்டு விளங்குவது, சிவயோகிகள் அந்திவட்டத் தொளியான் அடிசேர்தற்குரிய மீதானமாகிய பிரமரந்தரம் எனப்படும் உச்சிப் பெருவெளியாதலின், அது நாற்றானம் என்னும் பெயர்த்தாயிற்று. இப்பெயர் வழக்கம், நாற்றானத் தொருவனை நானாய பரனை (7-38-4) எனச் சிறந்த சிவயோகியாராகிய நம்பியாரூரர் வாய்மொழியில் இடம் பெற்றுள்ளமையும் நாலா நிலத்தின் நடுவான அப்பொருள், (திருமந்திரம்-840) எனத் திருமூலநாயனார் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவனவாகும். ஞானத்தால் தொழும் சிவஞானிகளுக்கு ஈறிலாப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அருளுதல் வேண்டி வேதத்தின் முடிந்த பொருளாகிய பராசத்தியிலே இருப்பர் என்பார்; வேத அந்தத்தே இருப்பர் என்றார். இவ்வாறு சிவபெருமான் தன்னிற் பிரிவிலாச் சத்தியுடன் கூடி உலகுயிர்கள் எல்லாமாய்க் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தான் வேறாய்ச் சிவம் எனத் தன்னியல்பிலே தனித்து நிற்கும் இயல்பினர் என்னும் உண்மையினைப் புலப்படுத்துவார் வேறு எனப் பிரித்துக் கூறினார். வேறு இருத்தலாவது, தத்துவங்களையெல்லாங் கடந்து அப்பாலைக்கு அப்பாலாய்த் தனித்து நிற்றல். சிவபெருமானும் அம்முதல்வனது பிரிவிலா ஆற்றலாகிய சிவசத்தியும் பொருளால் ஒன்றேயாயினும் எவ்வகைப் பொருளினுந் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தன் உண்மைநிலையிற் சிவம் எனவும், உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் வழி நிற்குந்தன்மையிற் சத்தியெனவும் பெயர்பெற்று அம்மை யோடப்பனாகி நிற்பன் என்பதனை விளக்கும் முறையில் அமைந்தது இத்திருக்களிற்றுப்படியார் திருப்பாடலாகும். ஙஎ. சென்ற நெறியெல்லாம் செந்நெறி யாம்படி நின்ற பரிசறிந் துந்தீபற நீசெயல் செய்யாதே யுந்தீபற. இது, தற்போதம் கெடத் திருவருள்வழி யொழுகின் எல்லா நெறிகளும் நன்னெறியேயாம் என்கின்றது. (இ-ள்) உலகமக்கள் தத்தம் வினைக்கீடாகச் சென்ற வழிகள் எல்லாம் செவ்விய நன்னெறிகளாக அமையும்படி உயிர்களின் அகத்தும் புறத்தும் முதல்வன் நின்று அருள்புரியும் திருவருள் திறத்தினை அறிந்து தெளிக. நீயாக எதனையும் தன்முனைப்பினாற் செய்தலைத தவிர்வாயாக எ---று. இத்திருவுந்தியாரில் நெறி யென்றது, உலகமக்கள் தத்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகுகின்ற பல்வேறு சமயங்களை, சென்ற நெறியெல்லாம் செந்நெறியாம்படி நின்ற பரிசு என்றது, உலகில் மக்கள் கடைப்பிடித்தொழுகுகின்ற எல்லாச் சமய நெறிகளும் ஏணிப்படிகளாக அமைய, இவையனைத்தும் முடிவில் தன்கண் வந்து சேரும்படி எல்லோரையும் செந்நெறியாகிய சிவநெறிக்கேயுரியராகத் திருத்திப் பணிகொண்டு அருள்புரிய வல்ல இறைவன் தானொருவனே யென்னும்படி எச்சமயத்தார்க்கும் எவ்வுயிர்க்கும் ஒப்ப அருள் சுரக்கும் முதல்வனது பொதுமை நிலையினை. ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந்தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன இன்னம்பரான்றன் இணையடியே (4-100-7) எனவரும் அப்பரடிகள் அருள்மொழி இறைவனது இப் பொதுமை நிலையினை இனிது புலப்படுத்தல் அறிக. நின்ற பரிசு அறிதலாவது, எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கேயென் றருள் புரியும் எம்பெருமான் (2-40-6) எனவும், பாராழி வட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் (6-18-6) எனவும், ஆரொருவ ருள்குவா ருள்ளத்துள்ளே யவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும் (6-18-11) எனவும் அருளாசிரியர்கள் அறிவுறுத்திய வண்ணம் அறிந்து தெளிதல். நீ செயல் செய்யாதே என்றது, இவ்வாறு எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான் (1-4-10) ஆகிய இறைவனது திருக்குறிப்புக்குமாறாக நினது தற்போதத்தால் சில செயல்களைச் செய்யத் தொடங்கிப் பழிக்கு ஆளாகாதே என அறிவுறுத்தியவாறு. மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங் சிச்சித்த தெய்வம் போற்றிச் சினமுத லகற்றி வாழுஞ் செய லறமானால் யார்க்கும் முனமொரு தெய்வம் வந்து செயற்கு முன்னிலையாமன்றே (சிவஞானசித்தியார்) எனவரும் அருணந்திசிவனார் அறிவுரை எத்திறத்தார்க்கும் புகலிடமாய் நின்ற இறைவனது பொதுமை நிலையினை நன்கு புலப்படுத்தல் அறிந்து போற்றற் பாலதாகும். இத்திருவுந்தியார் பாடற்பொருளை யுளங்கொண்டு விளக்கும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள பின்வரும் பாடல்களாகும். 81. ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க என்னா லியன்றிடுமோ என்போல்வா ரேதேனுஞ் சொன்னாற்றா னேறுமோ சொல். இஃது இறைவனது இயல்பு சிற்றறிவினராகிய உயிர்களால் நூலுணர்வினால் உணர்ந்துரைக்கும் எளிமையுடையதன்று என்கின்றது. (இ-ள்) ஒரு நூல் கூறியதனை மற்றொரு நூல் உடன்பட்டுரையாத நிலையில் வேறுபட்டுள்ள பலவகைச் சமயநூல்களெல்லாம் தம்முள் ஒருங்கு வைத்து ஆராய்ந்து இதுதான் இறைவனது உண்மையியல்பு என்று துணிந்துரைக்க இயலாதனவாய் முரண்பட்டுள்ளன. இந்நிலையில் அம்முதல்வனதுஇயல்பு இத்தகையது என என்னைப் போன்ற ஒருவனால் மட்டுந் துணிந்து கூற இயலுமோ? என்னைப் போல்வார் சிலர் கருத்தொருமித்து ஏதேனும் கூறினாலும் அமமொழி உலக ஆரவாரத்தில் அழுந்திய மாந்தர் செவி வாயிலாகச் சென்று அவர்தம் சிந்தையில் ஏறி இடம்பெற வல்லதோ? சொல்வாயாக எ---று. இறுதியிலுள்ள சொல் என்பதனைச் சொல் ஏறுமோ என முன்னுங்கூட்டுக. இறைவனது உண்மையினை உள்ளவாறு அறிவுறுத்தும் திறனும் அதனைக் கேட்டுணரும் பக்குவ நிலையும் இறைவன் திருவருளாலன்றி நம்மனோர்க்கு வாய்த்தல் இல்லையாதலால் நாம் மேற்கொண்ட சமய நெறிகள் எல்லாம் சிவமே பெறுந் திருநெறியாகத் திருத்தியருள்புரிய வல்லவன் இறைவன் ஒருவனே யென்பது இத்திருப்பாடலாற் போந்த பொருளாகும். நுலுணர்வுணரா நுண்ணியனாகிய இறைவனது இயல்பு இதுதான் எனச் சாத்திரங்கள் பலவற்றாலும் உறுதிப்பட உரைகளால் விரித்துரைக்கும் எளிமையுடையதன்று. அம்முதல்வனது திருவருள்வ ழி நின்ற பெருமக்கள் தாம் உணர்ந்தவாறு நாதற்கு இடம் அது என்று உறுதியாக வரையறைப்படுத்து உபதேசிக்க முன் வந்தருளினாலும் அவர்தம் மெய்ம்மொழியினை அமைதியாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்துணரும் பக்குவமுடையார் இவ்வுலகில் மிகவும் அரியரா யுள்ளனரே என மக்கட்கலத்தார் உய்தல் வேண்டுமே என்னும் பெருங்கருணைத் திறத்தால் உள்ளம் இரங்கி மாணவனை நோக்கிக் கூறுவதாக உலகினர்க்கு அறிவுறுத்த வேண்டும் என்பதில் இந்நூலாசிரியராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் கொண்டுள்ள திருவருளார்வத்தை இப்பாடல் இனிது புலப்படுத்து வதாகும். 82. யாதேனுங் காரணத்தால் எவ்வுலகி லெத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே---யாதலினால் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபே தஞ்செய்வாய் பின். இது, கொள்கைகளால் வேறுபட்ட எல்லாச் சமயங்களாலும் வழிபடப்பெறும் இறைவன், மாதொருபாகனாகிய சிவனேயெனத் தெளிந்து சமய தத்துவ வேறுபாடுகளைக் கருதாமல் இறைவன் ஒருவனே யெனக் கொண்டு வழிபடுதலொன்றே உலகமக்கள் உய்தற்குரிய நன்னெறியாகும் என்று அறிவுறுத்துகின்றது. (இ-ள்) உலகப் பொருள்களில் யாதேனும் ஒன்றை ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டு அதனதன் அமைப்புக்கும் இயக்கத்திற்கும் உரியதனை ஏதுவாகக் கொண்டு நோக்கினாலும் எல்லாவுலகங்களிலும் உள்ள எவ்வகைப் பொருள்களும் சத்தியுடன் கூடிய சிவனுடைய அடையாளமாகவே யமைந்திருத்தலால் (கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருளுண்மையினையுணரப் பெற்ற நீ) அழிந்து மாறும் இயல்பினதாகிய உலகமும், என்றும் அழியாவியல்பினதாகிய சிவமும் வேறுவேறு பொருள்கள் எனப் பேதமாகக் கொண்டாலும் கொள்க; உலகுயிர்களாய்க் கலந்து இயங்கும் நிலையில் எல்லாம் பிரமமே என அபேதமாகக் கொண்டாலும் கொள்க; அன்றி இவை சொல்லும் பொருளும் போல் ஒருவாற்றால் ஒன்றாதலும் ஒருவாற்றால் வேறு ஆதலுமாகிய பேதாபேதப் பொருள் எனக் கொண்டாலும் கொள்க. (அதுபற்றிக் கவலையில்லை) எ---று. மேற்கூறிய பேதம், அபேதம், பேதாபேதம், என்னும் மூவகைகளுள் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்து இறைவனை நினைந்து வழிபாடு செய்வாயானால் எல்லாமாம் இறைவன் இம்மூவகையுள் ஒன்றில் நின்று உனக்கு அருள் சுரப்பதுடன் இம்மூவகையும் ஒருங்கமைய உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இங்ஙனம் இரண்டறக் கலந்து விளங்கும் இயல்பினை யுடையான் அவ்விறைவன் என்னும் அத்துவித வுண்மை பின்பு உனக்கு நன்கு புலனாகும் என்பார் பின் என்றார். பின் என்பது எச்சமாய் நின்று பின் உனக்கு எல்லாம் விளங்கும் என்னும் பொருளைத் தந்து நின்றது. பேதமாவது, பொருள்களைத் தனித்தனியே பிரித்தற் குரியவேறுபட்ட இயல்பினதாதல். அபேதமாவது அவையனைத்தும் தன் தன்மையாகிய இலக்கணத்தால் ஒன்றேயெனக் கொள்ளுதற்குரிய ஒற்றுமைப் பண்பினதாதல். பேதா பேதமாவது, ஒருவாற்றால் வேறுபடுதலும் ஒருவாற்றால் ஒன்றாதலுமாகிய இருவேறு தன்மைகளை ஒருங்குடைய தாதல். கடவுளும், அவன் அவள் அது வெனும் உலகத்தொகுதியும் இருவேறு தனிப்பொருள்கள் என்பர் பேதவாதிகள். பொன்னும் அதனாலியன்ற அணிகலனும் போன்று ஒருபொருளே யென்பர் அபேதவாதிகள், ஒருவர் ஒருசொல்லைச் சொன்ன நிலையில் அச்சொல்லே பொருளாக ஒன்றுபட்டுத் தோன்றியும், அப்பொருளைக் கண்ட நிலையில் அச்சொல்லே வேறாகப் பிரிந்துநின்றும் இவ்வாறு சொல்லும் பொருளும் ஒன்றாயும் வேறாயும் இருந்தாற்போன்று, இறைவனும் உலகுயிர்த்தொகுதியும் தம்முள் ஒன்றாகியும் வேறாகியும் நிற்கும் என்பர் பேதாபேதவாதிகள். இங்குக் கூறப்பட்ட பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் மூவகைக் கொள்கைகளையும் வற்புறுத்தும் நிலையில் அவர்களால் எடுத்துக்காட்டப் பெற்ற உவமைகள் இறைவனியல்பினை உள்ளவாறு புலப்படுத்த வல்லன அல்ல எனவுணர்ந்த சைவசித்தாந்தச் சான்றோர்கள் இம்மூவகை நிலைகளையும் ஓருங்குடைமையே இறைவனது இயல்பென்பதனை விளக்க இம்மூவகை நிலைகளுக்கும் பொருந்தத் தக்க உவமை காட்டி விளக்கந் தந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும், இறைவன் உடலும் உயிரும்போல் உலகெலாமாகி நிற்றலால் ஒன்றாகியும், கண்ணொளியும் கதிரவனொளியும் போல் பொருட்டன் மையால் வேறுபட்டு விளக்கந் தருதலின் அவற்றின் வேறாகியும், கண் ஒன்றைக் காணும் நிலையில் உயிர் அதனொளியுடன் கலந்து நின்று காணுமாறு போல, உயிர்கள் பொருள்களையறியும் நிலையில் இறைவன் உயிர்க்குயிராய் உடனிருந்து அறிந்து உதவி செய்தலால் உடனாகியும் இவ்வாறு மூவகை நிலையும் பொருந்த ஒன்றாய் வேறாய் உடனாய்ப் பொருள்கள் தோறும் கலந்து நின்று அருள்புரியும் அத்துவித நிலையினன் என்பது, சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் இறைவனது இயல்பாகும். 83. நின்றபடி நின்றவர்கட் கன்றி நிறந்தெரியான் மன்றினுணின் றாடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே யெண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின் றாடும் பிரான். இது நின்றபரிசறிந் துந்தீபற என்னுந் தொடர்ப்பொருளை விளக்குகின்றது. (இ-ள்) (உலகமெலாம் ஒடுங்கும் ஊழிக் காலத்திலே) தனது சத்தியும் தன்னுள் அடங்கி மறைய ஒருவனாய் நின்று ஆடுபவனும், (படைப்புக் காலத்திலே) ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறு திங்களும் ஆன்மாவும் என எண்பேருருவினனாகி உலகெலாமாகி நிற்பவனும், (உலகெலாம் நிலைபெறச் செய்து காத்தருளும் இக்காலத்திலே) தில்லைத் திருவம்பலத்திலே அற்புதத் தனிக் கூத்தினை ஆடியருள் கின்றவனும் ஆகிய சிவபெருமான், தன்னுடைய தன்மை புலனாகாது ஆன்மாவாய் நின்ற முறைமைபோலத் தம்முடைய உயிரறிவு தோன்றாதபடி தன்செயலற அம்முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு அவனது அருள்வழியடங்கி நிற்பார்க்கன்றி அம்முதல்வன் ஏனையோரால் இன்னதன்மையன் எனத் தெரிந்துணர வொண்ணான் எ-று. பெண்ணுறநின்றாடும் பிரான், எட்டுருவாய் நின்றானும், மன்றினுள் நின்றாடல் மகிழ்ந்தானும் நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம் தெரியான் என இயைத்துப் பொருள் கொள்க. பெண் உற நின்று ஆடுதல் என்பது, இறைவன் ஊழி முடிவில் தனது ஒரு கூற்றினளாகிய உமையம்மையும் தன்னுள் மறைந்தொடுங்கத் தான் ஒருவனாகவே நின்று ஆடும் ஊழிப்பெருங்கூத்து. இங்ஙனம், ஊழி முடிவில் உமையம்மையையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இறைவன் தான் ஒருவனாகவே நின்றாடுமியல்பினை, பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் எனவரும் புறநானுற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடல் தொடரும், ஒருகாலத்து ஒன்றாகி நின்றார்போலும் ஊழிதோறூழி படைத்தார் போலும் எனவரும் திருத்தாண்டகமும் இனிது புலப்படுத்துதல் காணலாம். நின்றபடி நிற்றலாவது, உயிரறிவாலும் நூலுணர்வாலும் உணரப்படாத இறைவன் உயிர்களோடு உடனாய் நின்று அறிவித்தும் அறிந்தும் இருவகை உதவிகளைப் புரிந்தருளும் நிலையிலும், யானே அறிந்தேன் என உயிர்கள் கருதும் படி தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது உயிரின் வழி நின்றாற் போன்று, உயிரும் அம்முதல்வனோடு உடனாய் நின்று அறிந்தாலும் நான் அறிந்தேன் என்னும் தற்போதம் தோன்றாது இறைவனது அருள்வழியடங்கி நிற்றலாகும். நின்றபடி நிற்றல் என்னும் இத்தொடர்ப் பொருளை அவனே தானேயாகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க என மெய்கண்டார் விளக்கியருளிய திறம் இங்கு உளங்கொளத்தகுவதாகும், நிறம்-இயல்பு, தன்மை. நிறந் தெரியா எனப் பாடங்கொண்டு, சிவனுடைய உண்மை தெரியாது எனப் பொருள் உரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர். இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது (3-71-4) என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். இறைவன் எண் பேருருவினனாகத் திகழும் நிலை படைத்தற் றொழிலையும், மன்றினுள் நின்றாடல் காத்தற் றொழிலையும், பெண்ணுற நின்றாடல் அழித்தற் றொழிலையும் குறித்து நின்றன. ஙஅ. பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென் அக்கொழு நீயறிந் துந்தீபற அறிந்தறி யாவண்ண முந்தீபற. இது, குருவருளாலே பெற்ற திருவருளை மீண்டும் பிறப்பிறப்புக் களிற் புக்குழலும் வீண்முயற்சிகளிலே பயன்படுத்தாமல் இறைவன் திருவடிகளையடைந்தின்புறும் நன்னெறிக்கே துணையாகக் கொள்க என்று அறிவுறுத்துகின்றது. (இ-ள்) பொன்னினால் இயன்ற கொழு என்னும் உழுபடை யினைக் கொண்டு வரகினை விளைத்தற் பொருட்டு வன்னிலத்தை யுழுவதனால் வரும் பயன் யாது? அத்தகைய பொன்னினாலியன்ற கொழுவினையொத்த திருவருளின் சிறப்பினை நன்குணர்ந்து அதனைப் பெரும் பொருளாகிய சிவவிளைவினை யடைதற்கே சாதனமாகக் கொள்வாயாக. உனக்குத்துணைபுரியவந்த திருவருளின் பெருமையறிந்து உனது உயிரறிவு முனைத்துத் தோன்றாத படி அத் திருவருளின்வழி யடங்கி நிற்பாயாக எ-று. பொன்னால் இயன்ற கொழுவினைப் பெற்றோன் அதனை நன்செய் நிலத்தினை உழுதற்குத் தொடங்குதலாகிய வழி பாட்டளவுக்குத் துணையென மதித்துப் போற்றுதலை விடுத்து, அதன் மதிப்புணராமல் வரகினை விதைத்தற் பொருட்டமைந்த புன்செய்நிலத்தினை உழுதற்குரிய உழுபடையாகப் பயன்படுத்தினால் கொழுவுந் தேய்ந்து உழுதொழிலும் நிறைவேறாதவாறு போலக், குருவின் அருளாலே பெற்ற திருவருளைப் பெற்றதுகொண்டு பிழையேபெருக்கி அன்பினைச் சுருக்கிப் பிறப்பிறப்புக்களிற் போக்கு வரவு புரிதற்குக் காரணமான ஐம்புல நுகர்ச்சிகளிற் செலுத்தி அழுந்துவாயாயின், உனக்குக் கிடைத்த திருவருட் செல்வமும் நீங்க, அதனாற் பெறுதற்குரிய வீடு பேறாகிய பேரானந்த விளைவினையும் இழக்கின்றாய் என அறிவுறுத்துவார், பொற்கொழுக்கொண்டு வரகுக்கு உழுவது என்? என்றார். கொழு வென்பது உழவர்கள் நிலத்தை யுழுதற்பொருட்டுக் கலப்பையின் அடி முனையிலே கீழே பொருத்தப் பெற்றிருக்கும் உழுபடை. வரகு என்பது புன்செய்நிலத்தில் விளைவித்தற்குரிய தானியம். இங்குப் பொற்கொழு என்றது. எளிதிற் கிடைத்தற்கரிய பெருமை வாய்ந்த திருவருளையும், வரகுக்கு உழுதல் என்றது அத்திருவருளைச் சிவபோகமாகிய பெரும்பயனை விளைவித்தற்குரிய சாதனமாகக் கொள்ளாது ஐம்புலநுகர்ச்சியாகிய இழிந்த போகத்தைப்பெறுதற் பொருட்டு வீணே செலவிட முயன்று அதனை யிழந்துபோதலையும் குறித்து நின்றன. இச் செய்யுள் நுவலாநுவற்சி யென்னும் அணியமைந்ததாகும். உழுவது என்? என்புழி எவன் என்னும் வினாப் பெயர் என் என்றாகி இன்மைப்பொருள் குறித்து நின்றது; ஒரு பயனும் இல்லையென்பதாம். அக்கொழு என்றது, அத்தகைய அருமையுடைய திருவருளைச் சுட்டி நின்றது. அறிதலாவது, அதன் சிறப்பினை நன்கு மதித்து உயர்ந்த சிவபோக விளைவினைப் பெறுதற்குரிய சிறந்த சாதனமெனத் தெளிந்துணர்தல். அறியா வண்ணம் என்றது, தன்னறிவின் முனைப்பு தோன்றாவண்ணம் திருவருளின்வழி ஒத்து ஒழுகுந்திறத்தினை. இனி முத்திக்கு ஏதுவாகிய மனவாக்குக் காயங்களைக் கொண்டு விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது என்ன பயன்? அக் கொழுப் போன்ற மனவாக்குக் காயங்களினுடைய அருமையையறிந்து அவற்றாலே சரியை கிரியா யோகங்களைச் செய்து பின்பு திருவருளையறிந்து வேறோன்றையும் அறியாவண்ணம் நில் என இத்திருப்பாட்டிற்குப் பொருள் உரைத்தலும் பொருத்த முடையதேயாகும். இவ்வுரையில் நில் என்னும் சொல் எச்சமாக வருவித்துரைக்கப்பட்டது. இங்ஙனம் உரை வரைதற்கு ஆதாரமாகத் திகழ்வன, கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக்குறள்-9) எனவும், தலையே நீவணங்காய் (திருஅங்கமாலை) எனவும், வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சுந் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையே னெடுங்காலமே (5-90-7) எனவும், வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத் திணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்தெம்பெருமான் அணங்கொ டணிதில்லை யம்பலத்தே யாடுகின்ற குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ (திருவாசகம்-திருப்பூவல்லி-7) எனவும் வரும் திருப்பாடல்களாகும். இத்திருவுந்தியாரின் விளக்கமாக அமைந்தது பின்வரும் திருக்களிற்றுப்படியார் திருப்பாடலாகும். 84. சிவமே சிவமாக யானினைந்தாற் போலச் சிவமாகி யேயிருத்த லன்றிச் - சிவமென் றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று புணர்வாரு முண்டோ புவி இது, திருவருளையுணர்ந்தோர் அத்திருவருளின் துணை கொண்டு தற்போதம் தோன்றாவண்ணம் சிவமாந்தன்மை பெற்றுய்யும் முறை இதுவென மாணவர்க்கு அறிவுறுத்துகின்றது. (இ-ள்) பேதம், அபேதம், பேதாபேதம், என்னும் இவை நீங்கிய பக்குவநிலையிலே விளங்கித் தோன்றும் சிவனது இயல்பே உயிரை அகத்திட்டுக் கொண்டு தன்னியல்பே மேற்பட்டுத் திகழ வேறொரு விகற்பமுங் கூடாமல் யான் நுகர்ந்த வண்ணமே மாணவனாகிய உன்னையும் நிறுத்த நினைந்தாற்போல, நீயும் ஒரு விகற்பமுங் கூடாமல் சிவமாக அதன் அருள்வழி யிருத்தலல்லது ஆன்மாவாகிய தானும் ஒரு முதலென்றும் சிவனும் தனித்ததொரு முதலென்றும் கொண்டு தன்னுடைய உயிரறிவினால் இந்தச் சிவனை உள்ளவாறு உணரவல்லவர்களும் அவ்வாறு உணர்ந்த உணர்வினைத் துணை கொண்டு தானே அம்மெய்ப்பொருளைக் கூடவல்லவர்களும் இவ்வுலகில் யாரேனும் உள்ளனரோ? (ஒரு வரும் இல்லை) எ-று. இனி, பாசங்களாற் பிணிப்புற்றிருக்கும் கட்டு நிலையிலே உயிருணர்வு ஒன்றுமே தோன்றினாற் போலப் பாசப்பிணிப்பு நீங்கிய இவ்வருள் நிலையிலே சிவம் ஒன்றுமே பொருளாக விளங்கித் தோன்றயான் சிவத்தோடொன்றிச் சிவாநுபவத்தினை நுகருமாறு போலவே மாணவனாகிய நீயும் ஆன்மபோதங்கெடச் சிவசொரூபமாகியே யிருத்தலல்லாமல், தற்போதத்தால் சிவமென்று ஒருபொருளைப் பாவிக்கின்றவர்களும் அப்பாவனையாற் சிவபரம் பொருளிலே சென்று பொருந்துகின்றவர்களும் இப்பூமியின்கண் உண்டோ? (இல்லை) எனவும், சிவபரம்பொருளே பக்குவமுள்ள ஆன்மாவைத் தன்னருளால் அகத்திட்டுக்கொண்டு சிவசொரூபமாக விளங்கித் தோன்ற அதன் அருட்டுணை கொண்டு யான் அப்பொருளை நினைந்து போற்றும் அருள்வாய்ப்பினைப் பெற்றாற் போல, மாணாக்கனாகிய நீயும் ஒரு விகற்பமுங் கூடாமல் சிவசொரூபமே சொரூபமாக இருத்தலன்றித் தன்னையும் ஒரு வினைமுதலாகக் கொண்டு தற்போதத்தால் சிவபரம் பொருளைஉள்ளவாறு உணரவல்லவர்களும் அவ்வாறுணர்ந்த ஆன்ம போதங்கெட அம்மெய்ப்பொருளிலே சென்று பொருந்து கின்றவர்களும் இப்புவியின்கண் உண்டோ எனவும் இப்பாடற்குப் பொருள்விரித்துரைத்தலும் உண்டு. உணர்தல்-உயிர் தன்னறிவினால உணர்தல். புணர்தல்-அம் மெய்ப்பொருளோடு தானே சென்று கலத்தல். உண்டோ என்புழி ஓகாரம் இல்லையென எதிர்மறைப்பொருள் தந்து நின்றது. தானே சிவத்தையுணர்ந்தற்கும் தற்போதங்கெடச் சிவத்துடன் கூடியின்புறுதற்கும் உரிய ஆற்றல் குறையுணர்வுடைய ஆன்மாவுக்கு இல்லை யென்பதும் ஆன்மா சிவத்துடன் கூடுதற்குத் திருவருளின் இன்றியமையாததென்பதும் கருத்து. மேற்காட்டிய திருவுந்தியாரில், அறிந்தறியா வண்ணம்உந்தீபற என்ற தொடர்க்கு அமைந்த பொருள் விளக்கமாக இத்திருக் களிற்றுப்படியர் பாடல் அமைந்திருத்தலறிக. ஙசா. அதுவிது வென்னா தனைத்தறி வாகும் அதுவிது வென்றறிந் துந்தீபற அவிழ்ந்த சடையானென் றுந்தீபற. இது, சிவமும் ஆன்மாவும் பொருட்டன்மையால் வேறாயினும் உலகுயிர்கள் எல்லாமாகி அவற்றைத் தனது விரிவுக்குள் அசத்திட்டுக் கொண்டு திகழும் பேரறிவுப் பொருள் சிவமாதலின் அன்மாவின் மலமாசு போக்க ஆன்மாவின்கண் தன்னியல்பு விளங்க அவையேயாய் விரிந்து அருள்சுரக்கும் சிறப்பியல்புடையது என விளக்குகின்றது. (இ-ள்) அதுவென்றும் இதுவென்றும் ஒருபொருளைச் சுட்டி யறிதலின்றி எல்லாவற்றையும் ஒருங்கேயறியும் பேரறிவுப் பொருளாகிய அதுவே, இவ்வாறுஆன்மாவின் பக்குவ காலத்து இத்தகைய மானிடவுருத்தாங்கிக் குருவாய் எழுந்தருளியது என்று அறிவாயாக. அப்பரம் பொருள் எங்கும் விரந்த ஞானமாகிய சடையினையுடைய சிவனே என்று உணர்வாயாக எ-று. அது இது என்னாது என்றது, உயிர்களாகிய நம்மைப்போன்று ஒருபொருளை ஏகதேசமாகச் சுட்டியறியாமல் என்றவாறு. அனைத்து அறிவாகும் அது என்றது, அனைத்துப் பொருள்களையும் இருந்தாங்கே யறியும் இயல்பினதாகிய சிவபரம் பொருளை. அனைத்தும் என்புழி முற்றும்மை தொக்குநின்றது; செய்யுளாதலின். இரண்டாமடியில் உள்ள அது இது என்பது, சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட சிவபரம்பொருளாகிய அதுவே குருவாகிய இத்திருமேனிகொண்டு எழுந்தருளி இவ்வான்மாவே சிவம் என்னும்படி பிரிவின்றி ஒன்றாகத் திகழ்கின்றது என்னுங் கருத்தினதாகும். அதுபழச் சுவையென அமுதென வறிதற் கரிதென வெளிதென அமரரும் அறியார் இதுவவன் திருவுரு இவனவ னெனவே எங்களையாண்டு கொண்டு இங்கெழுந்தருளும் எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைத்தற்குரிய தாகும். இதன்கண் அதுஇது என்னும் தொடரைக் கூர்ந்துணர்க. சடையென்பது ஞானத்தையுணர்த்தும் குறிப்பின தாதலின் ஞானத்திரளாய் நின்ற இறைவனுக்குச் சடையான் என்பது பெயராயிற்று. அவிழ்தல் என்றது, எல்லாத் திசைகளிலும் விரிந்து பரவுதல் என்னும் குறிப்பினதாகும். எனவே அவிழ்ந்த சடையான் என்னும் இத்தொடர் ஞானமே யுருவாய் எங்கும் விரிந்து பரவியுள்ள சிவபரம்பொருளே தன் பெருங்கருணைத்திறத்தால் ஆன்மாக்களைத் தன் அகத்திட்டுக் கொண்டு அவையேதானாய் விளங்கவல்ல வியாபகப் பொருளாதலைச் சுட்டி ஏதுப்பொருளதாய் நின்றது. இத்திருவுந்தியாரின் சொற்பொருட் கூறுகளை விளக்கும் முறையி லமைந்தது பின்வருந் திருக்களிற்றுப்படியார் பாடலாகும். அரு. அதுவிது வென்றும் அவன்நானே யென்றும் அதுநீயே யாகின்றா யென்றும்---அதுவானேன் என்றும் தமையுணர்ந்தோ ரெல்லாம் இரண்டாக ஒன்றாகச் சொல்லுவரோ வுற்று. இஃது ஆன்மா சிவமாகும் என்பது கொண்டு, ஆன்மாவும் சிவமும் பொருளால் ஒன்றேயெனக் கொள்ளலாகாதோ? என வினவிய மாணாக்கற்கு ஆன்மாவும் சிவமும் பொருட்டன்மையால் வேறாகிய இருவேறு பொருள்களே என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) பிரமப் பொருளாகிய அதுவென்றும் ஆன்மாவாகிய இது வென்றும், அவன் என்றும் நான் என்றும், அது நீயேயாகின்றாய் என்றும் அது நான் ஆனேன் என்றும் இவ்வாறு ஆன்மாவாகிய தம்மையும் பரம்பொருளாகிய இறைவனையும் உள்ளவாறுணரப் பெற்ற தவச்செல்வர்கள் எல்லோரும் தம்மையும் இறைவனையும் இவ்வாறு பொருட்டன்மையால் வேறாகிய இருபொருள்களாகக் கூறியிருக்கவும், அவ்வுண்மையையறிந்தோர் அன்னோர்கூறிய பெரும்பொருட் கிளவிகட்கு மாறாக ஆன்மாவும் சிவமும் ஒருபொருளே என மனம்பொருந்திக் கூறுவரோ (கூறமாட்டார்கள்) எ-று. தமையுணர்ந்தோரெல்லாம் அது இது என்றும் அவன் நானே யென்றும் அது நீயே யாகின்றாய் என்னும் அது ஆனேன் என்றும் (இவ்வாறு) இரண்டாகக் (கூறியிருக்கவும்) தமையுணர்ந்தோர் உற்று ஒன்றாகக் கூறுவரோ என வேண்டுஞ் சொற்களை எச்சமாக வருவித்துப் பொருள் கொள்க. உற்றுக் கூறுதலாவது. ஐயந்திரிபற மனம் பொருந்திக் கூறுதல். ஓகாரம் எதிர்மறை; கூறமாட்டார்கள் எனப்பொருள் தந்து நின்றது. தமையுணர்ந்தோர் என்றது, ஆன்மாக் களாகிய தம்மியல்பினையும் இறைவனது இயல்பினையும் உள்ளவாறு உணரப்பெற்ற செம்புலச் செல்வர்கள் என்றவாறு. தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் என்றார் மெய்கண்டாரும். ஆன்மாவும் சிவனும் எப்பொழுதும் இரண்டாயிருக்கு மென்றும், சிவமென்று ஒரு முதல் இல்லை ஆன்மாத்தானே சிவமென்றும், சிவம் நீ என்று வேறில்லை உன்னுடைய உபாதிகள் நீங்கினபோது நீதானே சிவமாகின்றாய் என்றும், நான் சிவனுடனே கூடிச் சிவமாய் விட்டேன் என்றும், தம்மை உள்ளபடி அறிந்திருக்கிற சிவயோகிகள் இப்படியே பேதமாகவும், அபேதமாகவும் பேதாபேதமாகவும் சொல்வார்களோ? மாணவகனே என்க என இப்பாட்டின் (பொருளை விரித்துரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர். இதன்கண் அதுவிது என்றதனைப் பேதவாதி கூற்றாகவும், அவன் நானே என்றதனை அபேதவாதி கூற்றாகவும். அது நீயேயாகின்றாய் அது ஆனேன் என்பதனைப் பேதாபேதவாதி கூற்றாகவும், இவ்வுரையாசிரியர்கொண்டுள்ளார் என்பது இவ்வுரையமைப்பினால் இனிது புலனாகும். இங்ஙனம் பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் முத்திறக் கொள்கையாளர்களையும் மறுத்துரைத்தலால், ஆன்மாவும் சிவமும் இருளும் வெளியும் போல் வேறாதலும், பொன்னும் அதனாலாய அணிகலனும் போல் ஓன்றாதலும், சொல்லும் பொருளும் போல் ஒன்றெனவும் இரண் டெனவும் இருதிறமும் ஒருங்குடையதாதலும் இன்றி, உடம்பும் உயிரும் போல் கலப்பினால் ஒன்றாதலும், கண்ணும் கதிரவனும் போல் பொருட்டன்மையால் ஒன்றாதலும், கண்ணும் கதிரவனும் போல் பொருட்டன்மையால் வேறாதலும், கண்ணொளியும் உயிரறிவும் போல் உயிர்க்குயிராதற் றன்மையால் உடனாதலும் ஆகிய அத்துவித சம்பந்த முடைய ஒரு பொருள்கள் எனக் கொள்ளுதலே ஏற்புடைய தென்றவாறாம். மேற்குறித்த திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடியொற்றியமைந்தது, அதுவிது வென்ற ததுவல்லான் கண்டார்க் கதுவிது வென்றதையும் அல்லான்- பொதுவதனில் அத்துவித மாதல் அகண்டமுந் தைவமே அத்துவிதி யன்பிற் றொழு. (78) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். முதல்வன் உயிர்ப்பொருள் உயிரில்பொருள் எல்லாவற்றினும் நிற்கும் நிலைமை அறியப் பெற்றார்க்குப் பரம்பொருளாகிய அதுவும் ஆன்மாவாகிய இதுவும் எனப் பிரித்துக் கூறப்படும் பேத நிலைமையனும் அல்லனாய். எல்லாம் பரம்பொருளாகிய அதுவே யெனக் கூறப்படும் அபேத நிலைமையனும் அல்லனாய், சொல்லும் பொருளும் போல அதுவேயிது எனக் கூறப்படும் பேதாபேத நிலைமையனும் அல்லனாய், அம்மூன்றற்கும் பொதுமையாக உயிரறிவும் கண்ணொளியும் போன்று இரண்டறக் கலந்த அத்துவித சம்பந்தம் உடையனாதலால் உலகெலாமாகி விரிந்துள்ள எல்லாப் பொருள்களும் அவன் வடிவேயாயினும் அவற்றுள்ளும் அன்பு விளையுமிடங்களாகிய குருலிங்க சங்கமத் திருமேனிகளைச் சிவனெனவே தெளிந்து வழிபடுவாயாக என்பது இதன் பொருளாகும். இச்சிவஞானபோத உதாரணவெண்பாவை அடியொற்றி யமைந்ததே மேற்குறித்த தில்லைச் சிற்றம்பலவர் உரையாகும். இனி இரண்டாக ஒன்றாக என்பதனை, நிரனிறையாகக் கொண்டு அதுவிது என்றும் அவன் நானே யென்றும் இரண்டாகவும் அதுநீயேயாகின்றாய் என்றும் அது ஆனேன் என்றும் ஒன்றாகவும் சொல்லுவரோ எனப் பொருள்கொள்ளுதற்கும் இட முண்டு. இங்ஙனம் கொள்ளுங்கால், அதுவிது வென்றும் அவன் நானேயென்றும் வருந்தொடர்கள் பேதவாதிகள் கூற்றாய், இறைவன் வேறு, உயிர் வேறு என்னும் இருபொருட் கொள்கையினையும், அது நீயேயாகின்றாய் என்றும் அது ஆனேன் என்றும் வருந்தொடர்கள் அபேதவாதிகள் கூற்றாய்ப் பிரமப்பொருளே ஆன்மா என்னும் ஒருபொருட் கொள்கையினையும் உணர்த்தின என்றல் பொருந்தும். இங்ஙனம் பொருள் கூறுங்கால் அவன் நானே என்புழி அவனே நானே என எண்ணேகாரம் வருவித்துரைத்தல் வேண்டும். இனி, இரண்டாக ஒன்றாக என்பதனை எதிர் நிரனிறையாக் கொண்டு அதுஇது அவன் நானே என்ற தொடர்கள் பிரம மாகிய அதுவே இவ்வான்மா அவ்விறைவனே நான் எனப் பிரமமே ஆன்மாவெனும் ஒரு பொருட் கொள்கையினையும், அது நீயேயாகின்றாய் அது ஆனேன் என ஆக்கச் சொற்புணர்த்துக் கூறப்படும் தொடர்கள், பிரமமும் ஆன்மாவும் இருவேறு பொருள்கள் என்னும் இருபொருட் கொள்கையினையும் உணர்த்தி நின்றன எனப் பொருளுரைத்தற்கும் இடமுண்டு. இரண்டாகவும், ஒன்றாகவும் சொல்லுவரோ என உம்மை விரித் துரைக்க. சொல்லுவரோ என்புழி ஓகாரம் சொல்ல மாட்டார்கள் என எதிர்மறைப் பொருள் தந்து நின்றது. எனவே ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல் (இருபா இருபஃது-20) சிவமும் ஆன்மாவும் பொருட்டன்மையால் வேறாகவும் கலப்பினால் ஒன்றாகவும் உயிர்க்குயிராதற் றன்மையால் உடனாகவும் அத்துவிதமாய் நிற்கும் எனத், தமையுணர்ந்தோர் உரைப்பார்கள் என்பதாம். தமையுணர்ந்தோர் என்றது, எல்லாம் வல்ல முதல்வனுக்குத் தாம் என்றும் அடிமையே என்னுந் தம்மியல்பினை உள்ளவாறு உணரப் பெற்ற சிவஞானிகள் என்பதாம். இத்திருக்களிற்றுப்படியார், அதுவிது என்றறிந்து உந்தீபற என்னுந் திருவுந்தியார் தொடரில் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்ததாகும். அதுவென்றும் இதுவென்றும் தற்போதத்தாற் சுட்டியறிதலன்றி அனைத்தையும் இருந்தாங்கே யறியவல்ல பேரறிவுப் பொருளாகிய அத்தகைய சிவபரம்பொருளே இவ்வான்மாவுடன் அத்துவிதமாய்க் கலந்து ஒன்றாய் விளங்குகின்றது என்னும் உண்மையினையறிந்து உய்திபெறுவாயாக என்பது இத்தொடரின் பொருளாகும். அதுவிது என்னாது அனைத்து அறிவாகும் அது எனப் பிரமமாகிய அதற்கு அடைமொழி புணர்த்துக் கூறி, இது என அடைமொழியின்றிச் சுட்டினமையால் இது எனச் சுட்டப்படும் ஆன்மா, அதுஇது என்று சுட்டியறியுந் தன்மையதாகிய சிற்றறிவின தென்பது தானேபெறப்படும். எனவே பேரறிவுப் பொருளாகிய சிவமும் சிற்றறிவுடைய உயிர்த் தொகுதியும் பொருட்டன்மையால் வேறுபட்ட இருவகைப் பொருள்கள் என்பதும், அனைத்து அறிவாகும் அது என்றமையால் அப்பேரறிவுப் பொருளாகிய சிவமே உலகுயிர்த் தொகுதிகளனைத்தையும் தனது விரிவுக்குள் அடக்கிக் கொண்டு அத்துவிதமாய்த் திகழவல்ல தனிமுதற்பொருள் என்பதும் உணர்த்தியவாறு. அசா. ஈறாகி யங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய் மாறத எண்வகையாய் மற்றிவற்றின்---வேறாய் உடனா யிருக்கும் உருவுடைமை யென்று கடனா யிருக்கின்றான் காண். இஃது அனைத்தறிவாகும் அது இது என்னுந் திருவுந்தியாரின் விளக்கமாய், இறைவன் உலகுயிர்த் தொகுதியாகிய அவையேயாய்த் தானேயாய் அவையேதானேயாய் முத்திறப்பட்டு விளங்கும் அத்து விதத் தொடர்பினை வகைபெற விரித்துரைக்கின்றது. (இ-ள்) உலகெலாம் ஒடுங்கிய காலமாகிய அவ்விடத்து முழு முதற் பொருளாகிய சிவம் ஒன்றுமேயாகியும், மீண்டும் படைப்புக் காலமாகிய இவ்விடத்துச் சத்தியும் சிவமும் என இரண்டாகியும், எல்லாவற்றையும் சத்தியிடமாய் நின்று மாறபடாத ஐம்பெரும் பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எண்பேருருவினனாகியும், இங்குச் சொல்லப்பட்ட உலகுயிர்த் தொகுதியுடன் பிரிவறக் கூடி யிருக்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றின் வேறாகியும், உயிர்க்குயிராய் உள்நின்று அறிவித்தும் அறிந்தும் உதவுதலால் உயிர்களோடு உடனாகியும்-இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனுமாயிருக்கும் தன் உண்மையினை எக் காலத்தும் தனக்குரிய முறைமையாகக் கொண்டிருக்கின்றான் அம்முதல்வன் என்னும் அவனது இயல்பினை (மாணவனே) கண்டுணர்வாயாக எ-று. இதன்கண் ஈறாய் முதல் ஒன்றாய் என்றது, பேதநிலை யினையும், மாறாத எண் வகையாய் என்றது, அபதே நிலையினையும், மற்றிவற்றின் வேறாய் என்றது, பேதாபேத நிலையினையும், உடனாயிருக்கும் உருவுடைமை என்றும் கடனாயிருக்கின்றான் காண் என்றது, இம்மூன்றின் வேறாய் மூன்றையும் உள்ளடக்கிய அத்துவித நிலையினையும் உணர்த்திநின்றன. உலகுயிர்த் தொகுதியுடன் இறைவனுக்குள்ள தொடர்பு பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் மூன்றிற்கும் அப்பாற்பட்டதாய், ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல் இரண்டறக் கலந்து நிற்பதாகிய அத்துவித சம்பந்தம் எனப்படும் என்னும் இவ்வுண்மையினை ஐயந்திரிபின்றித் தெளிவுபடுத்தும் நிலையில் அமைந்தது, ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய் வரு பூதம் மவை யைந்தாய் ஆறார் சுவை யேழோசையோ டெட்டுத் திசை தானாய் வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே (1---11---2) எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும். இத்திருப்பாடற் பொருளை யுளங்கொண்டுசைவசித்தாந்தங்கூறும் உயிர்நிலைக் கொள்கையாகிய சுத்தாத்துவித உண்மையினை விரித்து விளக்கும் முறையில் மேற்குறித்த திருக்களிற்றுப் படியார் அமைந்துள்ளமை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டின் பிழிவாகத் திகழ்வன திருவுந்தியார் முதலாகவுள்ள சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் பதினான்கும் என்னும் மெய்ம்மையினை நன்கு வலியுறுத்துதல் காண்க. நிலம் நீர் நெருப்பு வளி விசும்பு ஞாயிறு திங்கள் ஆன்மா ஆகிய எண்வகைப் பொருள்களையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டு எண்பேருருவினனாக இறைவன் விளங்குகின்றான் என்றால், உடலைப்பற்றி யுளவாம் துன்பங்கள் அதனகத்து வாழும் உயிர்களைப் பற்றுமாறு போல உயிர்கள் உறும் துன்பங்கள் யாவும் உயிர்க்குயிராகிய இறைவனைப் பற்றுவன அல்லவோ என வினவிய மாணாக்கனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும். அஎ. உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம் உன்னுடைய தென்னாய்நீ யுற்றனையோ--- மன்னுயிர்கள் அவ்வகையே காணிங் கழிவதுவும் ஆவதுவும் செவ்வகையே நின்றசிவன் பால். இஃது உயிர்களைப் பற்றி வருத்தும் வினைத்துன்பங்கள் உயிர்க்கு உயிராகிய முதல்வனைப் பற்ற வல்லன அல்ல என்கின்றது. (இ-ள்) மாணாக்கனே உன்னுடைய வயிற்றிலே பலவகையாய்க் கிடந்துழலுகின்ற புழுமுதலிய சிற்றுயிர்கள் அடைகின்ற சுகதுக்க வாதனைகள் எல்லாவற்றையும் உனக்குள்ள வினைபோலக் கூடி நுகர்ந்தனையோ? நுகர்ந்தாயல்லை. நுகராத இந்நிலையில் அவற்றை உன்னுடைய சுகதுக்கங்களாகக் கூறமாட்டாய். அதுபோலவே, உலகப் பொருள்கள் அனைத்திற்கும் ஆதாரமாய் அவற்றைப் பிரிவின்றிக் கூடிநிற்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு தூய செம்பொருளாய் அப்பாற்பட்டு நின்ற சிவனிடத்திலே நிலைபெற்றுள்ள ஆன்மாக்கள் சுகத்தால் உள்ளங் கிளர்தலும் துன்பத்தால் தளர்ச்சி யுறுதலுமாகிய வாதனைகள் யாவும் சிவனைப் பற்றுதல் இல்லையெனத் தெளிந்துணர்வாயாக எ---று. உயிர்கள் படும் வாதனைகள் இவ்வுயிர்களைத் தாக்குவனவே யன்றி அவ்வுயிர்கட்குச் சார்பாயுள்ள சிவனைச் சாரவல்லன அல்ல என்பது கருத்து. உதரம்---வயிறு. கீடம்---புழு. உன் உதரத்தே கிடந்த கீடம் உறுவதெல்லாம் நீ உற்றனையோ (உற்றாயல்லை) எனவே அத்துன்பங்களை உன்னுடைய துன்பங்களாகக் கூறமாட்டாய். செவ்வகையே நின்ற சிவன்பால் மன்னுயிர்கள் அழிவது அவ்வகையே காண் என இயைத்துப் பொருள்கொள்க. தோற்றக்கேடுக ளின்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னை யொன்றுங் கலத்த லின்மையின் தூய்தாய்த் தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள், விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி அதனைச் செம்பொருள் என்ற பெயராற் குறித்தார் திருவள்ளுவர். செம்பொருள் எனினும் சிவம் எனினும்பொருள் ஒன்றே யென்பது, செம்பொருளாய சிவமெனலாமே (திருமந்) எனவரும் திருமூலர் வாய்மொழியால் இனிது புலனாம். திருவள்ளுவ நாயனாரும் திருமூலரும் அருளிய செம்பொருள், சிவம் என்னும் திருப்பெயர்களாற் குறிக்கப் பெற்ற இறைவனது இயல்பினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, செவ்வகையே நின்ற சிவன் என்னும் இத்திருக்களிற்றுப்படியார் தொடராகும். அஅ. அவனே யவனி முதலாயி னானும் அவனே யறிவாய்நின் றானும் - அவனேகாண் ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானுங் காணாமை நின்றானுங் கண்டு. இஃது, அனைத்தறிவாகும் அது எனப் பெற்ற சிவபரம் பொருளின் இயல்பினை விரித்துரைக்கின்றது. (இ-ள்) நிலமுதல் நாதமீறாகிய தத்துவங்கள் தொழிற்படும்படி உலகின் நிமித்த காரணனாகவுள்ளவனும் சிவனாகிய அம்முதல்வனே உயிர்களின் அறிவினை விளக்கி உயிர்க்குயிராய்த் திகழ்பவனும் அவனே. உயிர்களின் வினைக்கீடாக அவன் அவள் அது எனப் பகுக்கப்பெற்ற அவ்வுயிர்களேயாய் நிற்பானும்இங்ஙனம் அவை யேயாய்க் கூடி நிற்கும்நிலையிலும் இந்த முறைமையெதனையும் அவ்வுயிர்கள் கண்டறியாதவாறு அப்பாற்பட்டு எல்லாவற்றையும் ஒருங்கே கண்டு நிற்பவனும் சிவபெருமானாகிய அம்முதல்வனே யென்றறிவாயாக எ-று இதன்கண், அவன் என்னும் சுட்டு எல்லாப்பொருள்கட்கும் அப்பாற்பட்டு விளங்கும் சிவன் என்னும் பொருளில் வழங்கப் பெற்றது. இயல்பாகவே பாசங்களின் நீங்குதலால் எல்லாப் பொருள்கட்கும் அப்பாற்பட்ட சிவபெருமானை அவன் எனச் சேய்மைச் சுட்டினாலும், பாசப்பிணிப்புற்று இவ்வுலகத்துப் போக்குவரவு புரியும் இயல்புடைய உயிர்களை இவன் என அண்மைச் சுட்டினாலும் சுட்டிக் கூறுதல் சைவ சித்தாந்த நூன் மரபாகும். அவனி-உலகம். முதல்-காரணம்; ஈண்டு நிமித்த காரணம் என்ற பொருளில் வழங்கப் பெற்றது. அவனி முதலா யினானும் அவனே, அறிவாகி நின்றானும் அவனே, ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் காணாமை கண்டு நின்றானும் அவனே காண் என மூன்று தொடர்களாகப் பகுத்துப் பொருள் கொள்க. காணுதல்-அறிதல். காணாமை - காணவொண்ணாமை. அவனே அவனி முதலாயினான் என்றது, பேரின்பத்திற்குக் காரணன் என்னும் பொருட்டாய்த் தனது முன்னிலைக்கண் உலகங்களை இயக்குவித்தற்குரிய தொடர்பினை உணர்த்தி நின்றது. அவனே அறிவாய் நின்றான் என்றது, முற்றுணர்வினன் என்னும் பொருட்டாய் உயிர்கட்கு அறிவித்தற்குரியதொடர்பினைஉணர்த்தி நின்றது. ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் கண்டு காணாமை நின்றானும் அவனேகாண் என்றது, தூயதன்மையன் என்னும் பொருளதாய் ஒன்றினுந் தோய்வின்றி நின்ற தொடர்பினை யுணர்த்தி நின்றது. இச்செய்யுள், அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம் அப்பொருளுந் தானே யவன். (அற்புதத் திருவந்தாதி-20) அவனே இருசுடர்தீ யாகாச மாவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து. (-21) எனக் காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருப்பாடல்களை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். இத்தகைய இறைவனை நம் கண்ணாலே காண வொண்ணாதோ என வினவிய மாணாக்கனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப் படியாராகும். 89. இன்றுதா னீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ அன்றுதா னானுன்னைக் கண்டேனோ-என்றால் அருமாயை யீன்றவள்தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து. இது, கடவுள் உயிரறிவாற் காணுதற்கு அரியன் என்கின்றது. (இ-ள்) இப்பொழுது நீ என்னைக் கண்டு இவையெல்லாம் அறிந்து கொள்ளும் இந்நிலையிலும் என்னுடைய சொரூபத்தை உன்னுடைய ஊனக்கண்ணால் கண்டனையோ? அன்றி இவற்றை யெல்லாம் அறிந்து உனக்கறிவிக்கின்ற நான்தான் உன்னுடைய ஆன்ம சொரூபத்தைக் கண்டேனோ? (ஓரெல்லையுட்பட்டு அணுகியுள்ள நாமிருவரும் ஒருவ ரொருவரது ஆன்ம சொரூபத்தைக் கண்டதில்லை) என்றால், யாவராலும் காணுதற்கரிய மாயையினின்றும் இவ்வுலகங்களையெல்லாம் ஈன்றளித்த அம்மையை ஒருபாகத்திலே யுடைய இறைவனை விரிந்து பெரியதாய்த் தம்மை மறைத்துக் கொண்டுள்ள மாயையாகிய சூழலினின்றும் நீங்கி ஊனக்கண்ணால் காணவல்லார் யாருளர்? (ஒருவரும் இல்லை) எ-று. உயிர்கட்கு இன்றியமையாத உடல் கருவி உலகுநுகர் பொருள்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய் இறைவனுக்கு உடைப்பொருளாய் அருவாய் உள்ளது மாயையாகிய சடசத்தி என்பார் அருமாயை என்றார். மாயையீன்றவாள்-மாயையாகிய முதற்காரணத்தினின்றும் மன்னுயிர்கட்கு இன்றியமையாத தனுகரண புவனபோகங்களைத் தோற்றுவித்தருளிய சத்தி. பங்கன்---மாதொரு பாகனாகிய சிவன். அருமாயை யீன்றவள்தன் பங்கனைப் பெருமாயைச்சூழல் பிழைத்துக் காண்பார் யார் என இயையும். 90. கடலலைக்கே யாடுதற்குக் கைவந்து நின்றுங் கடலளக்க வாராதாற் போலப்-படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவு மெல்லாங் கருத்துக்குச் சேயனாய்க் காண். இது, காண்டற்கரிய கடவுள் மன்னுயிர்களை ஆட்கொண்ட ருளுமாறு இதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) விரிந்து பரவிய கடலானது தன் அலைக்கைகளினாலே மக்கள் நீராடுதற்கு ஓர் எல்லையுட்பட்டு அணுகி வந்தாலும் அக் கடலின் அகலம் நீளம் ஆழம் என்பவற்றை ஆராய்வார்க்கு அளவுட்பட்டு வாராது அப்பாற்பட்டு நின்றாற் போன்று, இறைவன் இந்நிலவுலகத்திலே பேரன்பு செய்த அடியார்களை மானுடத்திருமேனி கொண்டு எழூந்தருளி வந்து ஆண்டருளியதும் சிந்தையாலும் அறிய வொண்ணாமல் சேயனாய் நின்ற அந்நிலை யிலேயே யென்று அறிவாயாக எ--று. கடல் தன்கண் நீராடுவார்க்கு அலைக்கைகளால் அணுகிய தாயினும் தனது அகலம் நீளம் ஆழம் ஆகியவற்றை அறிய முயல்வார்க்கு அரிதாய் அகன்று நின்றாற்போன்று இறைவனும் தன்பால் அன்புடையார்க்கு அருளுந் திறத்தில் எளியனாயினும் தன் ஆன்மபோதத்தால் தன்னை ஆராய முயல்வார் கருத்துக்குச் சேயனாம் அருமையுடையான் என்றவாறு. அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி யருளிய பெருமையை (போற்றித் திருவகவல்) எனவும், அருமையிலெளிய அழகேபோற்றி ( ) எனவும் வரும் திருவாசகத் தொடர்கள், இறைவன் அடியார்க் கருள் புரிதல் வேண்டிப் புவனியிற் சேவடிதீண்டக் குருவாய் எழுந்தருளும் எளிமையுடையனாயினும் அவனைத் தற்போதத்தால் அறிய முயல்வார் கருத்துக்கு மிகவும் சேய்மை நிலையில் நிற்கும் அருமைநிலையினன் என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தல் காணலாம். 91. சிவனெனவே தேறினன்யான் என்றமையா லின்றும் சிவனவனி வந்தபடிசெப்பின் - அவனிதனில் உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன். இது, மன்னுயிர்களுக்குக் குருவாக வந்தருள்புரிபவன் சிவனெனவே தெளிக என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) தமக்கு மெய்யுணர்வளித்த ஞானாசிரியனைச் சிவனென யானுந்தேறினன் காண்க எனத் திருவாதவூரடிகள் குருவே சிவனெனக் கூறிய முறைமையால், சிவபெருமான் நம்மை உய்வித்தருள் புரிதல் வேண்டி மானுடத்திருமேனி தாங்கிப் புவனியில் எழுந்தருளி வந்த முறைமை சொல்லுமிடத்து, உலகில் உவர் நீரிலுள்ள நுண்ணிய உவர்த்தன்மையானது உப்பென உருவங்கொண்ட தன்மையினைக் கண்டமையால் மாணவனே நூலுணர்வுணரா நுண்ணியோனாகிய அச்சிவபெருமானும் அருளாலே திருமேனி கொண்டெழுந்தருளியதும் அப்படியே யென்றறிவாயாக எ---று. அனைத்தறிவாகும் அது இது என்னுந் திருவுந்தியார் தொடருக்கு அமைந்த விளக்கவுரையாக அமைந்தது இத்திருக்களிற்றுப் படியாராகும். அனைத்தறிவாகும் அதுவே இது எனத் தேற்றேகாரம் விரித்துரைக்கப்பெற்றது. புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க அவனெனை யாட்கொண் டருளினன் காண்க (திருவண்டப்பகுதி) எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி அருபரத்தொருவனாகிய இறைவனே அன்புடைய அடியார்கள் பொருட்டுக் குருபரனாகி எழுந்தருளுகின்றான் என்னும் மெய்ம்மையினை வலியுறுத்தல் காணலாம். எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்பது பொதுநிலை. குருவே சிவன் என்றது சிறப்பு நிலை. சஅ. அவனி வனான தவனரு ளாலல்ல திவனவ னாகானென் றுந்தீபற என்று மிவனேயென் றுந்தீபற. இது, தூயோனாகிய சிவன் ஆன்மாவைச் சிவமயமாய் ஆக்குதற்குக் காரணம் அவனது பெருங்கருணையே யென்கின்றது. (இ-ள்) உரைமனங்கடந்த சிவனாகிய அவன், இவ்வான்மாவாக ஆகியது தன்னுடைய பெருங்கருணையாலல்லது இவ்வான்மா அச் சிவனாகமாட்டான் என்க. எக்காலத்தும் இவ்வான்மா சிவனுக்கு அடிமையென்றறிவாயாக எ-று. அவன்-சிவன். இவன்-ஆன்மா.ஆன்மா சிவமாதல் என்பது, சிவனருளால் நிகழ்வதன்றி ஆன்மாவின் முயற்சியால் அன்று என்பார், அவன் இவனானது அவனருளாலல்லது இவன் அவனாகான் என்றார். சிவமாதல் என்ற தொடரில் ஆதற்கு வினைமுதல், எல்லாம்வல்ல முதல்வனே யன்றிச் சிற்றறிவுஞ் சிறுதொழிலு முடைய ஆன்மா அன்று என அறிவுறுத்தியவாறு, இறைவன் உயிர்க்குயிராய் நிற்கவும் உயிர்கட்கு அநாதியே பற்றியுள்ள ஆணவ மாகிய குற்றமும் உண்டாதலால் பசுத்துவமாய் ஆன்மாவைப் பிணித்துள்ள மலம் படிப்படியாக ஆன்மாவை விட்டுக் கழலும் பக்குவத்தை யடைந்தபொழுது, உயிரினுள் நின்ற இறைவனும் உயிரினகத்தே ஒளிவிட்டு விளங்குதலால் அநாதியேயுள்ள களிம்பு நீங்கிய நிலையிற் செம்பிற் கிடந்தமாற்று ஒளிவிட்டுப் பொன்னென்னும் பெயர் பெற்றாற்போன்று, இறைவன் தூய்மையுற்ற ஆன்மாவைத் திருவடியிலே கூட்டிக் கொள்ளுதல் வேண்டித் தன்னுடைய பேரருளால் இவனையிடமாகக் கொண்டு எழுந்தருளி நின்றதன்றிச் சிவபெருமானே ஆன்மா அல்லன்; ஆன்மாக்களும் இறைவன் திருவடியிலே கூடிப் பேரின்பத்தை நுகர்வதொழிந்து சிவன் செய்யும் ஐந்தொழில்களை நிகழ்த்தவல்லன அல்ல சிவபெருமான் தன்பேரருளால் ஆன்மாவாகியும் சிவமாகியும் நிற்கவல்லர். ஆன்மா என்றுந் தன்உண்மை குன்றாமற் சார்ந்ததன் வண்ணமாய் அதுவதுவாய் நிற்கு மியல்புடையது. ஆகவே இவ்வான்மா சிவனுக்கு அடிமையாதல் என்பது பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள கட்டு நிலையில்மட்டுமன்றிப் பாசங்கழன்ற வீட்டு நிலையிலும் மாறாதுள்ளதே யென்பார் என்றும் இவனே என்றார். இத்திருவுந்தியார் பாடற்பொருளை விளக்கும் நிலை யிலமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும். 92. அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல தெவனவனாய் நிற்கின்ற தேழாய்---அவனிதனிற் றோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமா யீன்றிடுமோ சொல்லா யிது. (இ-ள்) மாற்றமனங்கழிய நின்ற சிவனாகிய அம்முதல்வன் இவ் வான்மாவைப்போல உடம்போடு கூடி நின்றது மும்மலத்தாரிற் பக்குவமுடைய உயிர்களுக்கு அவர்தம் திருவருட் பதிவுக்கு ஈடாக மலமாயை கன்மங்களைப் போக்கிப் பேரின்பம் வழங்கியருளுதற் பொருட்டுத் திருமேனிகொண்டு எழுந்தருளி வந்ததன்றி, இவ்வான் மாக்களுள் எவன்தான் அம்முதல்வனாகிய சிவனாய் நிற்கவல்லவன்? (தனக்குவமையில்லாதானாகிய சிவனது பெருமையினையும் ஏனைய மன்னுயிர்களின் சிறுமையினையும் உள்ளவாறறியும்) அறிவில்லா தவனே, புவியின்கண்ணே தோன்றி வளர்ந்த மரத்திலே ஒட்டி முளைத்த புல்லூரியென்னும் புதலானது நெடுங்காலமாக நிலைபெற்றுவரும் இவ்வுலகிலே அம்மரத்தோடு ஒன்றாகி அம்மரம்தரும் கனிகளை அளிக்கவல்லதோ? இவ்வினாவிற்கு மறுமொழி சொல்வாயாக எ--று. திருமுறைகளில் வழங்கும் சிவமாதல் என்ற தொடர்க்கு, எல்லாம்வல்ல சிவம் மன்னுயிர்கட்கு அருள்வழங்குதற் பொருட்டுத் தூய நிலைபெற்ற ஆன்மாவாகி ஒன்றித் தோன்றுதல் என்று பொருள் கொள்வதே சைவதித்தாந்த மரபாகும். இவ்வாறு கொள்ளாது மலமகன்று தூய நிலை பெற்ற ஆன்மாவே நான் அவனானேன் என்னுந் தனது பாவனையால் சிவமானது எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என வினவிய மாணாக்கனை நோக்கி அவனது அறியாமைக்கு இரங்கி அவனுக்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, அவன் இவனாய் நின்றது அவனருளால் அல்லது எவன் அவனாய் நிற்கின்றது? ஏழாய் என்ற தொடராகும். அவன் இவனாதற்கும் இவன் அவனாகாமைக்கும் எடுத்துக்காட்டும் முறையில் அமைந்தது, அவனிதனில் தோன்று மரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய் ஈன்றிடுமோ? இது சொல்லாய் என்பதாகும் அவனி - பூமி. ஏழை - அறிவிலி. ஏழை என்னும் ஐகார வீற்றுப்பெயர் ஏழாய் என விளியேற்றது. புல்லூரி என்பது, தானே நிலத்தில் விதையாய் ஊன்றி நின்று நீருண்டுவளரும் ஆற்றலின்றி மரங்களில் ஒட்டித்தோன்றி அம்மரம் தரும் சாரத்தையுண்டு வளரும் ஒருவகைத் தாவரமாகும். புல்லூரி மரத்திற் பொருந்தி மரத்தின் ஒருபகுதியாகவே ஒன்றாக வளர்ந்தாலும் அம்மரம் தரும் கனிமுதலிய பயன்களைத் தரும் தன்மை அதற்கு இல்லை. அது போன்றே ஆன்மா சிவனருளால் சிவத்தோடு ஒட்டிச் சிவமாந்தன்மை தன்கண் தோன்றப் பேரின்பத்தை நுகர்ந்தாலும் சிவ பரம்பொருளுக் குரிய ஐந்தொழில் புரிதல் முதலிய இறைமைத்தன்மை ஆன்மாவுக்கு இல்லை யென்பது இவ்வெடுத்துக் காட்டினால் இனிது புலனாதல் காண்க. 93. முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்ததென் றுந்தீபற அப்பழ முண்ணாதே யுந்தீபற. இஃது, ஆன்மா சிவபரம்பொருளோடு ஒன்றிப் பேரின்பம் நுகர்தற்குத் தடையாவது இதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) முத்திக்கனி விளைதற்குரிய ஆன்மாவென்னும் கொடியிலே அஞ்ஞானமென்னுங்கொடி பலவாறாகப் படர்ந்து மூடிக்கொண்டு அவாவென்னும் பழம் பழுத்தது. (பிறவிக்கு வித்தாகிய) அப்பழத்தினை உண்ணாது தவிர்வாயாக எ-று. முத்திமுதல் என்பதற்கு முத்தியைப் பெறுதற்கு முதன்மை யான ஆன்மா எனவும் முத்தியடைதற்கு ஏதுவாகிய ஆன்மா வென்னுங்கொடி எனவும் முன்னுள்ள உரையாசிரியர்கள் உரை வரைந்துள்ளார்கள். மோகக் கொடி-அஞ்ஞானமென்னும் கொடி மோகம்-அஞ்ஞானம். மோகக்கொடி படர்தலாவது ஆன்மாவாகிய கொடியில் முத்திக்கனி விளையவொட்டாது மூடிக்கொண்டு தானே மேற்பட்டுத் தளிர்த்து அரும்பிக் காய்த்துக் கனிதல். அத்தி பழுத்தலாவது அஞ்ஞானமென்னுங் கொடியில் சுகதுக்கங்கள் விளைந்து இவை காரணமாக மயக்கத்தைச் செய்கிற மாயையாலே பூதகாரியமான உடம்பு பிறப்புத்தோறுந் தோன்றி முதிர்தல் எனவும், அத்திப் பழம்போல இதாகிதங்கள் மிகுதியும் உளவாதல் எனவும் முன்னுரையாசிரியர்கள் விளக்கந்தருவர். இச்செய்யுளின் உருவக அணியினைக் கூர்ந்து நோக்குங்கால் மோகக்கொடி அத்திப்பழம் பழுத்தது எவ்வாறு என ஐயந்தோன்று தலியல்பு. இச்செய்யுளில் வந்துள்ள அத்தி பழுத்தது என்பதற்கு அத்திப்பழம் போல இதாகிதங்கள் மிகுதியும் உளவாதல் எனப் பொருள் கொள்வதனை விட அவாவென்னும் பழம்பழுத்தது எனப் பொருள் கொள்ளுதலே பொருத்தமுடையதாகுமெனத் தெரிகின்றது. இவ்வாறு பொருள் கூறுங்கால் அத்தி என்பதற்கு அருத்தி, அவா எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அருத்தியென்னும் சொல் அத்தி எனவும் இலக்கியங்களில் வழங்குதலுண்டென்பது, முத்தியாக வொருதவஞ் செய்திலை அத்தியாலடி யார்க் கொன் றளித்திலை (5-33-2) எனவரும் அப்பர் தேவாரத்தால் நன்கு விளங்கும். முத்திக்கனி பழுக்க வேண்டிய ஆன்மாவென்னும் முதற்கொடியிலே மோக மென்னும் கிளைக்கொடிபடர்ந்து மூடிமறைத்து அவாவென்னும் பழத்தைப் பழுத்தது; பிறவிக்கு வித்தாகிய அப்பழத்தினை யுண்ணாதே என மாணவர்க்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது, இந்திருவுந்தியார் பாடலாகும். இதற்கு விளக்கமாக அமைந்தது, 94. முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்த தருளென்னுங்-கத்தியினால் மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும் ஏகக் கொடியெழுங்காண் இன்று. எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். (இ-ள்) முத்தியாகிய கனி விளைதற்கு இடமான ஆன்மா வென்னுங் கொடியிலே (அநாதியே உயிரை மறைத்துள்ள ஆணவ மலத்தின் காரியமான) அஞ்ஞான மென்னும் கொடி பலவாறாகப் படர்ந்து மூடிக்கொண்டு ஆசையென்னும் பழத்தைப் பழுத்தது. இறைவனது திருவருளாகிய கத்தியினால் மோகக் கொடியினை வேருடன் அறுத்துப் போக்கவே சிவபோக விளைவாகிய முத்திப்பழம் ஆன்மாவாகிய கொடியிலே பழுத்துத் தோன்றும். அதன் பயனாகப் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்ட இந்நிலையில் ஆன்மாவும் சிவமும் ஒரு நீர்மையாய்ப் பிரிவறக் கூடியின்புறுதலாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு ஆன்மாவுக்கு வந்து தோன்றும். எ -று. முத்தி முதற்கொடி என்றது, முத்தியாகிய கனி விளைதற்கு முதலாகிய ஆன்மா என்னும் கொடியினை. மோகத்தைக் கொடியாக உருவகஞ் செய்த திருவுந்தியார் ஆசிரியர், அக்கொடியினால் மூடி மறைக்கப்பட்ட ஆன்மாவையும் கொடியாகக் கொண்டு முத்தி முதல் எனக் குறிப்புருவகஞ் செய்தார். இக்குறிப்பினை யுணர்ந்த திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் முத்தி முதற்கொடி என அவ் வுருவகத்தை வெளிப்படையாக விரித்துக்கூறினார். அத்தி - அவா; ஆசை. அவா என்னும் பழம் பிறப்பிறப்பாகிய துன்பங்களுக்கு வித்தாதலின் அப்பழம் உண்ணாதே என்று அறிவுறுத்தியருளினார். அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (திருக்குறள்---361) என்றார் தெய்வப்புலவரும். இத்திருவுந்தியார் இயைபுருவகம் என்னும் அணிநலம் அமைந்ததாகும். ஆசையாகிய பழம் பழுத்தது என்ற இத்திருவுந்தியார் தொடரினைத் திருக்களிற்றுப்படியார் ஆசிரியரும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார். அப்பழம் உண்ணாதே என முதல் நூலாசிரியர் அறிவுறுத்தினாராக, துன்பந் தரும் தன்மையதாய அப்பழம் பழுத்தற்கு இயலாதவாறு மோகக் கொடியினை முதலிலேயே அறுத்தெறிதல் வேண்டும் என்றும் அதனையறுத்தற்குத் திருவருள் ஞானமாகிய கத்தியுளதென்றும் அக்கத்தியினைக்கொண்டு ஆன்மாவை மூடியுள்ள அஞ்ஞானமாகிய கொடியினை வேருடன் அறுத்தொழித்தால் ஆன்மா வென்னும் முதற்கொடியிலே முத்தியாகிய பழம் பழுத்துத் தோன்றுமென்றும் மோகக் கொடியினையறுத்து முத்திக்கனியினைப் பெறுதற்குரிய உபாயத்தினையும் விளங்க அருளிச் செய்துள்ளமை காண்க. இத்திருக்களிற்றுப்படியார் முற்றுருவக அணியமைந்த தாகும். பாசவேரறுக்கும் பழம் பொருளாகிய இறைவன் தம்பொருட்டுக் குருவாய் எழுந்தருளி அருளென்னுங் கத்தியினைத் தந்து மோகக் கொடியறுத்து முத்திப் பழம் பெறவுதவிய பெருங்கருணைத் திறத்தை வியந்து போற்றும் முறையில் அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப் படியார் வெண்பாக்களாகும். 95. அகளத்தி லாநந்தத் தாநந்தி யாயே சகளத்திற் றையலுடன் றோன்றி---நிகளத்தைப் போக்குவதுஞ் செய்தான்தன் பொன்னடியேன் ஆக்குவதுஞ் செய்தான் அவன். [ò‹wiynkš இஃது இறைவன் குருவாகி யெழுந்தருளிச் செய்யும் தீக்கை முறையினை விளக்குகின்றது. (இ-ள்) குற்றமற்ற தூய நிலையில் இன்பத்துள் இன்பம் நல்கும் ஞானமேயுருவாகவும் திருமேனிகொண்டு எழுந்தருளுங்கால் அருளாகிய சத்தியுடன் தோன்றியும் அநாதியே என்னைப் பிணித்துள்ள மலமாயை கன்மங்களாகிய விலங்கினைத் தீக்கை முறையாற் போக்குவதுஞ் செய்து தன்னுடைய பொன்னார்திருவடிகளை என்னுடைய புல்லிய தலையின்மேல் நிலைபெறுமாறு ஆக்கு வதனையுஞ் செய்தருளினான் குருவாய் எழுந்தருளிய அம்முதல்வன் எ---று. அகளம்---குற்றமற்ற அருவநிலை. சகளம்---உருவநிலை, ஆநந்தத்து ஆநந்தி என்றது, இன்பமே யுருவாகத் தோன்றி மன்னுயிர்களுக்கு இன்பத்தை நல்குவோனாகிய இறைவனை, யாவராலுங் காண வொண்ணாத அருவநிலையினனாகிய இறைவன், உயிர்கள் உய்திபெறுதற் பொருட்டுத் திருமேனிகொள்ளுமிடத்த அருளே திருமேனியாகக் கொண்டு சத்தியுடன் தோன்றி அருள்புரிவன் என்பார், சகளத்தில் தையலுடன் தோன்றி என்றார். நானுமென் சிந்தையும் நாயகனுக்கெவ்விடத்தோம் தானுந் தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் (திருக்கோத்தும்பி) எனவரும் தருவாதவூரடிகள் வாய்மொழி சகளத்தில் தையலுடன் தோன்றியருள்புரியுந் திறத்தை இனிது புலப்படுத்துதல் காணலாம். நிகளம்---விலங்கு; என்றது, ஆன்மாக்களை அநாதியே பிணித்துள்ள மும்மலங்களாகிய கட்டினை. அவன் என்றது குருமேனி கொண் டெழுந் தருளிய அம்முதல்வனை. அகளமாயாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற, (1) எனவரும் திருவுந்தியாரை மீண்டும் நினைவுபடுத்திக் குருவே என்னும் உண்மையினைத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தம்முடைய வாழ்க்கை யநுபவத்தின் வைத்து வலியுறுத்தும் முறையில் அமைந்தது இத்திருக்களிற்றுப்படியாராகும். சஉ. அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற குறைவற்ற செல்வமென் றுந்தீபற. இது குரு அறிவுறுத்திய வண்ணம் குறைவிலா நிறைவாகிய பூரணப் பொருளோடு ஒன்றி நிற்கும் முறைமையினை உணர்த்து கின்றது. (இ-ள்) (நிலம் முதல் நாதமீறான தத்துவத்திரட்சியான) அண்ட முதலாகவுள்ள அனைத்துப்பொருள்களையும் தனது விரிவுக்குள் அடக்கிக்கொண்டு எங்கும் நிறைந்துள்ள பூரணப் பொருளாகிய சிவத்தை உனது நெஞ்சத்துட்கொண்டு, இதுகாறும் உன்னைப் பிணித்துக் கொண்டிருந்த பசு பாச வறிவினை நினக்குத் துணையாகக் கொள்ளுதலைத் தவிர்வாயாக. அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட குறைவிலா நிறைவாகிய பூரணப் பொருளை அகத்துட்கொண்டிருத்தலே நினக்குக் குறைவற்ற பெருஞ்செல்வமாம் எ-று. இங்கு அண்ட முதலாம் அனைத்தையும் என்றது, அண்டம் முதல் அணுவீறாகவுள்ள அனைத்துப் பொருள்களிலும் அதுவதுவாய்க் கலந்து நிற்கும் பரம்பொருளை. அதனை உட்கொள்ளுதலாவது பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்தபோர் பேரொளிப் பரப்பாக அம்முதல்வனது பெரியதிற் பெரிதாந் தன்மையினை இடைவிடாது எண்ணி அம்முதல்வனது விரிவில் தனது உயிருணர்வும் கலந்து விரிதல். கொண்டது என்றது, ஆன்மாவாகிய தன்னைப் பிணித்துக்கொண்டுள்ள உடல்கருவி உலகு நுகர்பொருள்களாகிய மாயா காரியத்தினை. கொண்டதை யெனற்பாலது கொண்டத்தை எனத் திரிந்துநின்றது. கொண்டதைக் கொள்ளாமையாவது, தன்னைப் பிணித்துக்கொண்டுள்ள மாயாகாரியங்களைப் பொருளென்று மதித்து அவற்றின் வழியே செல்லாமை. இங்ஙனம் முதற்பொருளைப் பற்றுதலும் ஏனைய மாயாகாரியங்களைப் பொருளன்றென விட்டொழிதலும் ஆகிய இதுவே உயிர்கள் பெறுதற்குரிய குறைவற்ற செல்வமாம் என்று அறிவுறுத்துவார், குறைவற்ற செல்வம் என்றார். அண்டம் என்று சொல்லப்பட்ட சக்கரவாளகிரியும் மகாமேருவும், அண்ட கோளகையும் அட்டகுல பருவதங்களும் திக்கயங்களும் அட்டநாகங்களும் சத்தசமுத்திரங்களும் சத்தமேகங் களும் பதினான்கு புவனங்களும் தேவர் அசுரர் சித்தர் வித்தியாதரர் கின்னரர் கிம்புருடர் மற்றும்உண்டான அண்டர் முதலாக உள்ளிட்டபேதங்களும் சந்திராதித்தரும் பஞ்சபூத பரிணாமங்களும் பேய்த்தேர் போன்ற வியாபாரங்களும் பொதிந்த திரட்சி ஓர் அண்டமாக வளர்ந்த கோடி அண்டங்களும், இப்படி ஒவ்வோர் அண்டங்களைத் தசமடங்கு பொதிந்த சலமும், இந்தச் சலத்தைத் தசமடங்கு பொதிந்த அக்கினியும், இந்த அக்கினியைத் தசமடங்கு பொதிந்த வாயுவும், இந்த வாயுவைத் தசமடங்கு பொதிந்த ஆகாசமும், இவையெல்லாவற்றையும் சேரப்பொதிந்த பேரண் டத்தையும், இவையெல்லாவற்றிலு மேற்பட்டு நின்மலமாய் நிற்கிற நாதசொரூபத்தையும், இதற்கும் அப்பாற்பட்ட நின்மலமாய் எல்லைப்படாத பரமாகாசமான பெருவெளியையும், உனக்கு உடம்பாகி நின்று உனக்கு நிலைநின்றவாறே உன்னையுணர்த்தின சொரூப உடம்பாகிநின்று.ஆன்ம போதத்தையும் இந்தப்பரிணாமங் களையும்சேர நினைவு அற விடுவாயாக. அப்பொழுதே நீ அகண்ட பரிபூரணனாய் விடுவை என்க என்பது இத்திருவுந்தியார்க்குத் தில்லைச்சிற்றம்பலவர் எழுதிய உரையாகும். பிருதிவியண்ட முதலாகிய ஆறத்துவாவையும் உனக்குச் சரீரமாகக் கொணடிருந்து இப்போது கொண்டிருக்கிற சரீரத்தைப் பொருளென்று கொள்ளாதே. இத்தன்மையே குறைவற்று நின்ற தன்மை என்பது பழைய உரையாகும். இவ்வுரைப் பகுதிகள் இத்திருவுந்தியாரின் பொருளை விளக்கும் முறையில் அமைந்த பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலுடன் ஒப்புநோக்கிச் சிந்தித்தற் குரியனவாகும். 95. குற்றமறுத் தென்னையாட் கொண்டருளித் தொண்டனேன் உற்ற தியானத்துட னுறைவர்-முற்றவரின் மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக் காட்சியுமாய் நிற்பார் கலந்து. இதுகுருவாய் எழுந்தருளித் தமக்குத் திருவடிசூட்டித் தீக்கை செய்தருளிய இறைவன் தீக்கைக்குப்பின் தியானிக்குந் தியானமும் தாமேயாய் உடனிற்குமாறும் இந்த நிலை முதிர ஞேயத்து அழுந்து மாறும் பிராரத்தம் தாக்காதபடி தாமே காண்பானுங் காணப்படு பொருளுமாய்க் கலந்து நிற்குமாறும் உணர்த்துகின்றது. (இ-ள்) (இறைவர் இவ்வாறு ஆசிரியத்திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து) என்னுடைய மலமாயா கன்மங்களாகிய குற்றங்களை வேரறக் களைந்து என்னை அடிமையாகக் கொண்டு திருவடி ஞானத்தை வழங்கியருளி யான் என்றும் அது என்றும் சொல்கின்ற வேறுபாட்டினையும் அறுத்துத் தொண்டனாகிய யான் திருவருளாற் பொருந்தப்பெற்ற தியானநிலையிலே தியானப்பொருளாகிய தாமும் தியானிப்பானாகிய யானும் தியானித்தலாகிய அறிவும் என்னும் வேற்றுமையற என்னோடு உடனுறைவர். இத்தகைய தியான நிலை முதிரவருகின்ற நிலையில் ஞேயத்தழுந்தல் (சிவபரம் பொருளில் இரண்டறக் கலந்தின்புறுதல்) ஆகிய பேரின்பவிளைவுமாய் நிற்பர். பிராரத்தவினையாலே எனது தியான ஒருமை சிறிது குலைய உலகப் பொருள்களுள் ஒன்றினைக் காண நேர்ந்தால், உலக வாதனை என்னைத் தாக்காதவாறு காண்பானுங் காணப்படுபொருளுந் தாமேயாய் எனது உள்ளும் புறம்புங் கலந்து நிற்பர் எ-று. இதன்கண் உற்றதியானத்துடனுறைவர் என்றதொடர், திருவுந்தியாரில் உள்ள அண்டமுதலாம் அனைத்தையும் உட்கொண்டு என்ற தொடர்ப் பொருளையும், முற்றவரின் மாட்சியுமாய் நிற்பர் என்ற தொடர் குறைவற்ற செல்வம் என்ற தொடர்ப்பொருளையும், யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்காட்சியுமாய் நிற்பர் என்ற தொடர் கொண்டதைக் கொள்ளாதே எனக் குருவாய் நின்று அறிவுறுத்தியதற்கேற்பக் கொண்டதைக் கொள்ளாதிருக்கும் படி உள்ளும்புறம்பும் உடனிருந்து உதவிசெய்தலாகிய அருளுபகாரத்தையும் விரித்து விளக்குதல் காண்க. இது தீக்கைக்குப் பின்பு (ஆசிரியன்) உண்மை நிலையிலே நிறுத்தின நிலைமையை அறிவித்தது என்பர் தில்லைச்சிற்றம்பலவர் 97. ஆளுடையா னெந்தரமும் ஆளுடையா னேயறியுந் தாளுடையான் தொண்டர் தலைக்காவல்---நாளுந் திருவியலூ ராளுஞ் சிவயோகி யின்றென் வருவிசையை மாற்றினான் வந்து. இது, தம்மை ஆட்கொண்டு மெய்யுணர்வுநல்கிய அருட்குரு வினது திருப்பெயரையும் அவரது திருவருட் பெருமையினையும் உணர்த்துகின்றது. (இ-ள்) பக்குவ ஆன்மாக்களை ஆட்கொள்ளும் இயல்பினனாகிய இறைவன், யாதொரு தகுதியுமில்லாத என்னளவும் ஆளுடைய தேவனாகவே எழுந்தருளினான். எல்லாவற்றையும் இருந்தாங்கே யறியவல்ல திருவருளையுடையனாகிய அம்முதல்வன், தன்பால் தொண்டுபூண்ட அடியார்களை இருவினைகளின் வாதனை வந்து தாக்காதவாறுபாதுகாத்தருளும் முதன்மையானகாவலனாகவுள்ளான். எக்காலமும் திருவியலூரைத் திருப்படை வீடாகக் கொண்டருளிய சிவயோகி என்பால் எழுந்தருளிவந்து இப்பொழுது என்னுடைய அறியாமை காரணமாகப் பிறப்பிறப்புக்களிலே பட்டுச் சுழன்று வருகின்ற வேகத்தையொழித்து அசைவற்ற நிலையாகிய தன் திருவடியிலே வைத்தருளினான் எ-று. இதன் முதற்கண் அமைந்த ஆளுடையான் என்றது, எல்லா வுயிர்களையும் அடிமையாகவுடைய இறைவனை. எந்தரமும் ஆளுடையானே என்றது, அவ்விறைவன் என்னளவிலும் ஆளுடைய தேவன் என்னுந் திருப்பெயருடைய குருவாகவே திருமேனிகொண்டு எழுந்தருளி என்னை ஆளாகக் கொண்டருளினான் என்பதாம். திருக் களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந்நூலை இயற்றியருளிய திருக்கடவூர் உய்யவந்த தேவனார்க்குக் குருவாக எழுந்தருளி மெய்யுணர்வு நல்கியவர், திருவியலூர் ஆளும் சிவயோகியார் ஆகிய ஆளுடைய தேவநாயனாரேயென்பது இதனால் நன்கு தெளியப்படும். அறியுந்தாளுடையான் என்றது, உலகவுயிர்கள் உய்தற்பொருட்டுப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் எல்லாவற்றையும் இருந்தாங்கே உயிர்கள் பொருட்டு அறிந்து அறிவிக்கும் திருவருளாகிய திருவடியினை யுடையான் என்பதாகும். தாளுடையான் தொண்டர் தலைக் காவல் என்றது, தன்னை வழிபாடு செய்யும் தொண்டர்களின் அறியாமையினைப் போக்கி அவர்களை உலகவாதனையாகிய மாயப் படை வந்து தாக்காமல் தன் திருவடியினாற் பாதுகாக்கவல்ல தலைமைக் காவலனாக வுள்ளான் என்பதாம். இத்தொடர் உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் என்னுந் திருமுருகாற்றுப்படை யடியினை யடியொற்றி யமைந்ததாகும். திருக்களிற்றுப்படியாரை அருளிச்செய்த, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய இவ்வாசிரியர் திருவியலூராளும் சிவயோகி யாராகிய ஆளுடைய தேவநாயனார் குருவாக எழுந்தருளித் தமக்கு மெய்யுணர்வருளித் திருவுந்தியாரை யுபதேசித்து உய்யக் கொண்டருளிய திறத்தை, திருவியலு ராளுஞ் சிவயோகி இன்றென் வருவிசையை மாற்றினான் வந்து என உளமுவந்து போற்றினார். வருவிசை என்றது, காரண காரியத் தொடர்ச்சியுடையதாய்க் கடலலைகள் போன்று தொடர்ந்து வருகின்ற பிறப்பிறப்புக்களாகிய சுழலில் அகப்பட்டு விரைதற்கு ஏதுவாகிய ஆன்ம போதத்தை, வந்து மாற்றினான் - தானே எளிவந்து நீக்கியருளினான். மாற்றுதல்-ஒழித்தல், வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க (சிவபுராணம்) எனவரும் திருவாசகத் தொடர் இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும். சங. காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற வறட்டுப் பசுக்களென் றுந்தீபற. இது, குருவின் அருளால் தன் செயலற இறைவன் திருவருள் வழி நில்லாது உலகச் சார்பினையே தமக்குச் சார்பாகக் கொண்டு நிற்பாரது நற்பேறின்மையை நினைந்து இரங்குகின்றது. (இ-ள்) உடம்பினுள்ளே கோயில் கொண்டருளிய இறை வருடைய உண்மை ஞானமான திருவடித் தாமரையில் ஊற்றெடுக் கும் பேரின்பத் தேனாகிய அமுதையுண்டு உலகத் தொடர்பறத் தாமும் சிவமும் வேறாகாமல் சிவமேயாய் இரண்டறக் கலந்து மகிழும் இன்பவாழ்வினைத் தலைப்படாது பொய்யாய் உள்ளிடில்லாத உலகத்தையும் உலகப்பொருள்களையும் மெய்யென நம்பி வஞ்சனையை விளைக்கும் நன்றுந் தீதுமாகிய கள்ளினையுண்டு மன மயக்கமுற்றார்கள், அத்தகையவர்கள் ஒரு காலத்திலும் தனக்கும் பிறர்க்கும் பயன்படப் பால்சுரவாத வறட்டுப் பசுக்களை யொப்பர் என்றறிவாயாக எ-று. உயிர்க்குயிராகிய இறைவன் அன்பினால் தன்னை வழிபடும் அடியார்களின் உடம்பினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்து அவர்தம் உள்ளத்தே தேனையும் பாலையுங் கன்னலையும் அமிழ்தத்தையும் ஒத்துத் தனது ஞான ஆனந்தமாகிய அருளாரின்பத்தேறலைச் சுரந்தருளுதலால் பரங்கருணையாகிய அவ்வமுதத்தை உருகிப்பெருகி யுளங்குளிர முகந்து கொண்டு பருகியின்புறாது உலகவாதனைகளிற் சிக்குண்டு பொய்மையே பெருக்கி வாழ்நாளை வீணாளாக்கு கின்றார்களே என இரங்கும் முறையில் அமைந்தது, இத் திருவுந்தியாராகும். அண்டங்கடந்த இறைவன் மன்னுயிர்களின் உடம்பினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய திறத்தை, இறைவனே நீயென் உடலிடங்கொண்டாய் (கோயிற்றிருப் பதிகம் - 5) எனவும், தினைத்தனையுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதே நினைத்தொறுங்காண்டொறும் பேசுந்தொறுமெப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (திருக்கோத்தும்பி) எனவும் வரும் திருவாசகத் திருமறையால் நன்குணரலாம். தேனும் இன்னமுதுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமானது திருவருட்குரியராய்த் தற்போதங்கெட அம்முதல்வனை இடைவிடாது நினைந்துருகும் அடியார்களின் உள்ளத்தே இறைவனது திருவடிஞானமாகிய அருளமுதம் இடைவிடாது ஊறிப்பெருகும் இயல்பினை ஞானாசிரியர் கள் தியான நெறியில் நாம் பெற்ற திருவருளநுபவத்தில் வைத்து மாணாக்கர்களுக்கு உணர்த்தியருள்வர். இவ்வியல்பினை, மாயவாழ்க்கையை மெய்யென்றெண்ணி கைநல்கினான் வேயதோளுமை பங்கனெங்கள் திருப்பெருந்துறை மேவினான் காயத்துள்ளமு துறவூறநீ கண்டுகொள்ளென்று காட்டிய சேயமாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே. (சென்னிப்பத்து-5) எனவருந் திருப்பாடலில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய இறைவன் செயலில் வைத்துப் புலப்படுத்தி யருளினமை இங்கு நினைக்கத்தக்கதாகும். மாயக்கள் உண்ணுதலாவது, பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடொறும் (அவற்றையே) மெய்யாகக் கருதிக் கிடந்துழலுதல், மாயம்-பொய்; நிலையிலாப் பொருள். வறட்டுப்பசு-பால்கறவாப் பசு; கன்றினையீன்று தன் கன்றுக்கும் பிறர்க்கும் பயன்படாத வறட்டுப்பசு. இத்தொடர் திருவருளின் திறம் உணர்ந்து தன் உயிரின் அநுபவத்துக்கும் ஏனைய மன்னுயிர்களின் நல்வாழ்வுக்கும் ஒருசிறிதும் பயன்படாத மருளுடைய மாந்தரைக் குறித்து நின்றது. இவ்வாறு காயத்துள் மெய்ஞ்ஞானத் கள்ளுண்ணலாகிய சிவா நுபவத்தை வழங்குதற் பொருட்டுத் தானே ஞானாசிரியனாக எழுந்தருளி மெய்யுணர்வளித்த பெருமானுக்கு என்றும் மீளாவடிமை செய்தலே நன்றியுடன் செய்தற்குரிய கைம்மாறாகும் என நெஞ்சம் நெக்குருகிப் போற்றுவதாக அமைந்தது, அடுத்து வரும் திருக்களிற்றுப் படியார் பாடலாகும். 98. தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத் தூலத்தே நின்று துளங்காமல் - காலத்தால் தாளைத்தந் தென்பிறவித்தாளை யறவிழித்தார்க் காளன்றி யென்மா றதற்கு. இஃது உயிர்கள்பால் வைத்த அருளே காரணமாகக் குருவாக எழுந்தருளித் தம்மை உய்வித்தருளிய முதல்வனது பெருங்கருணைத் திறத்தை நன்றியுடன் போற்றுகின்றது. (இ-ள்) பருப்பொருள்களைச்சார்ந்துள்ள படிகக்கல் தன்னையடுத்துள்ள பொருள்களின் பல நிறங்களால் தன்னியல்பு மறைக்கப்பட்டுக் கலக்கமுற்றாற்போன்று, ஆன்மாவாகிய யான் உலகப்பொருள்களாகிய பாசங்களின் சார்பிலே யகப்பட்டுக் கலக்கமுறாதபடி திருவருளால் இருவினையொப்பு உண்டாகி ஆணவமலம் கழலுதற்குரிய பக்குவ காலத்திலே எழுந்தருளிவந்து தம்முடைய திருவடியை (என்சிந்தையிலும் சென்னியிலும் பொருந்தும்படி) தந்தருளி எனது பிறவிவேரறும்படி அருட்கண்ணால் நோக்கி எளியே னை ஆட்கொண்டருளிய பெருமானுக்கு என்றும் மீளா அடிமையாகித் தொண்டு புரிவதன்றி அவ்வருளுதவிக்கு யான் செய்தற்குரிய கைம்மாறு யாதுஎது? (ஒன்றும் இல்லை) எ-று. தூலம்- பருப்பொருள்; இரண்டாமடியில் தூலம் என்றது. ஐம்புலநுகர்ச்சிக்குரியனவாகத் தோன்றும் உலகப் பொருள்களை. பளிங்கு-தனக்கென்று ஒரு நிறமில்லாத சார்ந்ததன் வண்ணமாம் படிகக்கல். அடுத்தல்- காரப்பெறுதல். துளக்கம்-அசைவு. கலக்கம்; பொருள்களின் பலவகை நிறங்களும் ஒருங்கு பதிந்தமையினாலே தனக்குரிய நிறம் இதுவெனப் புலனாதலின்றிக் கலக்கமுடையதாய்த் தோன்றுதல். பளிங்கானது தன்னது எனப் பிரித்துணரத்தக்க தனி நிறம்பெறாது தான் சார்ந்த பொருள்களின் வண்ணமாந்தன்மை யினையுடையதாதல் போன்று, ஆன்மாவும் தான் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினதாதலின், ஐம்புலநுகர்ச்சிக்குரிய உலகப் பொருள்களைச் சார்ந்த போது அவற்றின் தன்மை தன்கண் மீதூர் தலால் தன்னியல்பு இதுவென்றுணராது கலக்கமுறுந்தன்மையதான எனது ஆன்மா கலக்கமுறாதபடி மலங்கழலும் பக்குவகாலத்தை யுண்டாக்கித் தன்னுடைய திருவடியைத் தந்தருளி அருள் நோக்கினால் எனது பிறவிவேர் அறுத்தனன் என்பார், தூலத்து அடுத்த பளிங்கின் துளக்கம் எனத் தூலத்தே நின்று துளங்காமல், காலத்தால், தாளைத் தந்து என்பிறவித்தாளை அறவிழித்தார் என்றார். தாள்- திருவடி. பிறவித்தாள்-பிறவிவேர். அற-அற்றொழிய. விழித்தல்-அருட்கண்ணால் நோக்குதல். ஆள்-அடிமை; மீளாவடிமை. அதற்கு மாறு என்? என இயையும். அதற்கு -அருள்நோக்கினால் பிறவிவேர் அறுத்த அத்தகைய பேருதவிக்கு, மாறு-கைம்மாறு; மாற்றுதவி. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டான் டளவிலா ஆனந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா பெரியவெம் பொருளே (திருவாசகம்- பிடித்த பத்து) எனவும், மீளா ஆளலாற்கைம்மாறில்லை ஐயன் ஐயாறனார்கே (4-40-7) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன வாகும். இத்திருக்களிற்றுப்படியார் பாடற் பொருளை அடியொற்றி யமைந்தது. பன்னிறங் காட்டும்படிகம்போல் இந்திரியம் தன்னிறமே காட்டுந் தகைநினைந்து-பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு. எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். தன்னாற் சாரப்பட்ட பல நிறங்களின் இயல்பே தன்கண் காட்டி நிற்கும் பளிங்கின் தன்மைபோல ஆன்மாவும் தன்னாற் சாரப்பட்ட ஐம்பொறிகளின் இயல்பே தன்கண் விளங்க நிற்கும் தனது பொது வியல்பினை முன்னர்ச் சிந்தித்துணர்ந்து கொண்டு, அந்நிறங்கள் பளிங்கிற்கு வேறென் றுணருமாறுபோலப் பலவகையியல் புடைய பொது வியல்பைச் செய்யும் ஐம்பொறிகளைத் தன்னின் வேறெனத் தெளிந்து அவற்றாலாய பொதுவியல்பு தன்கண் நில்லாது பொய்யாய் ஒழியும்படி தன்சிறப்பியல்பாகிய மெய்ம்மையினைக் கருவினருளால் உணர்ந்தவன், நிலைநில்லாத அசத்துப் பொருளுக்கு வேறாய்த் திரிபின்றி என்றும் உளதாகிய சிவத்தின் இயல்பு தன்கண் விளங்கப் பெற்று அம்மெய்ப் பொருட்கு மீளாவடிமையாவன் என்பது இதன் பொருளாகும். 99. இக்கணமே முத்தியினை யெய்திடினும் யானினைந்த அக்கணமே யானந்தந் தந்திடினும் - நற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை யெப்பொழுது மாயிருத்த லன்றியிலே னியான். இது சிவஞானம் பெற்றதனாற் பயன் இறைவனுக்கு மீளா வடிமை செய்தலே என்கின்றது. (இ-ள்) சைவ சிந்தாந்தங்கூறும் முத்தியினை யான் இப்பொழுதே யெய்தப் பெற்றாலும் யான் எண்ணிய அப்பொழுதே இறைவன் விரைந்து பேரின்பத்தைத் தந்தருளினாலும் நல்ல அடியாராகிய திருக்கூட்டத்தார்க்குந் தலைவனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல் வனோடு பிரிவற விளங்கும் பராசத்திக்கும் நான் எப்பொழுதும் அடிமை யாயிருத்தலன்றிச் செய்யத்தகும் பணி வேறொன்றும் இல்லேன் எ-று சிவஞானம் பெற்ற திருத்தொண்டர்கள் கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் எனச் சேக்கிழார் அருளிய மெய்ம்மொழிக்குரிய விளக்கமாகத் திகழ்வது இத்திருக்களிற்றுப்படியாராகும். கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலக மேழினுக்குங் கண்ணாளா வீதென் கருத்து. (அற்புதத்திருவந்தாதி) எனவரும் அம்மையார் அருள்மொழி, சிவஞானச் செய்தியுடையோர் தொண்டின் வேட்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்தல் காணலாம். உயிர்கள் பாசப்பிணிப்புற்ற கட்டுநிலையிலன்றி விட்டு நிலையிலும் அடிமையேயென்னும் மெய்ம்மையினை விளக்கும் முறையி லமைந்தது நாற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் நான் எப்பொழுதும் அடிமையாயிருத்தலன்றி (மற்றொன்றும்) இலேன் என்னுந் தொடராகும். நாயகர்க்கும் நாயகிக்கும் நந்திக்கும் என்பதும் பாடம். 100. என்னை யுடையவன்வந் தென்னடனா யென்னளவில் என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை அறியப்பெற் றேனறிந்த அன்பருக்கே யாளாய்ச் செறியப்பெற் றேன்குழுவிற் சென்று. இறைவனுக்கு அடிமைப்பட்டோர் அடியார்க்குத் தொண்டு செய்தலாற் பெறும் பயனை இந்நூலாசிரியர் தமது அநுபவத்தில் வைத்துணர்த்தும் முறையில் அமைந்தது, இச்செய்யுளாகும். (இ-ள்) அநாதியே என்னை அடிமையாகவுடைய சிவபெருமான் ஞானகுருவாகத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து உனக்குள் நாம் நீங்காமல் என்றும் எழுந்தருளியிருப்போம் என்று உயிர்த் துணையாய் உடனிருந்து ஒன்றுக்கும் பற்றாத என்னையும் தன் அடியவனாகக் கொண்டருளினமையால் ஆன்மாவாகிய என் தன்மையினையும், உள்ளவாறு அறியப்பெற்றேன் (தம்மையும் தம்முயிர்த்தலைவனையும்) உள்ளவாறு அறியும் மெய்யுணர்வு கைவரப்பெற்ற சிவஞானச்செல்வர்களாகிய அன்பர்களுக்கே கொண்டுபட்டு ஏவற்பணி செய்து அம்மெய்த் தவத்தோர் கூட்டத்திற்சென்று அவர்களை யணுகியிருக்கும் நற்பேற்றினைப் பெற்றேன். இனி இதற்குமேல் யான் பெறுதற்குரிய பெரும்பேறு வேறு யாதுளது? எ---று. இறைவனது திருவருட் குறிப்பினாலன்றி ஆன்மா தன்னியல் பினை யுணர்தல் இயலாது; இறைவன் கருணையினால் ஆன்மாவை ஆட்கொண்டருளிய பின்பே ஆன்மாவின் இயல்பு இனிது புலனாகும் என்பார். என்னை நினைந்தடிமைகொண்டென் இடர் கெடுத்துத் தன்னை நினையத்தருகின்றான் என்பர் நம்பியாண்டார். இதை ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு என நம்பியாரூரர் அருளியவண்ணம் இறைவனுக்கு ஆட்பட்டதன் பயன் அடியார் குழுவிற் சார்ந்து அவர்கட்குத் தொண்டுபுரிதலே என்பார், அறிந்த அன்பருக்கே ஆளாய்க் குழுவிற் சென்று செறியப் பெற்றேன் என்றார். குழு அடியார் திருக்கூட்டம். செறிதல்-தொண்டு செய்து நெருங்கிப் பழகுதல். இத்திருக்களிற்றுப்படியார், செம்மலர் நோன்றாள் சேர லொட்டா அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே. (சூத்திரம் 12) எனவரும் சிவஞான போதத்திற்கும் அதன் விளக்கமாக, செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத் திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட் டங்கவர்தந் திருவேடம் ஆலயங்களெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப்பாடி எங்குமியாம் ஒருவர்க்கும் எளியோமல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப்பெய்தித் திங்கள் முடியாரடியார் அடியோமென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோரே (சித்தியார் - சுபக்.) எனவரும் சிவஞான சித்தியார்க்கும் மூலமாய் அமைந்துள்ளமை காணலாம் ஈசன் நேசரொடுஞ் செறிந்திட்டு எனவரும் சித்தியார் தொடர், அறிந்த அன்பருக்தே ஆளாய்ச் செறியப் பெற்றேன் குழுவிற் சென்று என்னும் இத்திருக்களிற்றுப்படியார் தொடரையும் பொருளையும் இவ்வாறே யெடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும். ச1ச1 சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர வந்தவர் வாழ்கவென் றுந்தீபற மடவா ளுடனேயென் றுந்தீபற. திருவுந்தியார் என்னும் இந்நூலினை அருளிச் செய்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தமக்கு ஞானாசிரியனாக எழுந்தருளி மெய்யுணர்வு நல்கிய ஆசிரியப் பெருமானை நன்றியுணர்வுடன் வாழ்த்திப் போற்றுவதாக அமைந்துது இத்திருப்பாடல். (இ-ள்) தன்னுடைய திருவடித்தாமரையானது என்னுடைய சிந்தையிலும் உச்சியிலும் சேரும்படி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிவந்தவர் எப்பொழுதும் என்போன்றோர்க்கு மெய்யுணர் வளித்து வாழ்வாராக, அருளாகிய சத்தியுடன் வாழ்வாராக எ---று. ஒழிவற நிறைந்த தம்பிரானார் அநாதியே அடியேனுக்கு உயிர்க் குயிராயிருக்க அநாதியே யுண்டான மலத்தின் மிகுதியாலே பிறப் பிறப்புக்களிலே உழன்று போக்குவரவு புரிதலையே பொருளாகக் கொண்டு திரிந்த அடியேனைத் தன்னுடைய பெருங்கருணைத் திறத்தாலே பொருந்திய திருமேனியுடனே யெழுந்தருளிவந்து மலமாயை கன்மங்களும் பிறப்பிறப்புக்களும் என்னைக் கூடாதபடி என்னுடைய பொல்லாப் புலால் தலையிலே யாவராலும் உணர்தற்கரிய திருவடித் தாமரைகளைச் சேரவைத்தும், அந்தத் திருவடி அடியேனுக்கு உயிர்க்குயிராய் உள்நின்ற முறைமையை யுணர்த்தியும் என்னுடைய சிந்தையானது சலிப்பற்று அந்தத் திருவடியிலே விட்டு நீங்காமல் ஒருவழிப்படக் கூடிப் பிரிவற ஒன்று பட்டு நிற்கும் உபாயத்தைத் தந்தும் இவ்வாறு துன்பக் கடலினின்றும் அடியேனைக்கரையேற்றின தம்பிரானார் காலங்கடந்த இன்பவுரு வினராய் வாழ்வார்; (எல்லாவுயிர்களும் ஈடேறுகைப் பொருட்டாக அநாதியே யுண்டான) திருவருளாகிய சத்தியுடனே என்றும் கூடி வாழ்வார் என்பது இத்திருப்பாடலுக்குத் தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசனார் தரும் விளக்கவுரையாகும். குருவாக எழுந்தருளிய பொருள் ஒன்றேயாயிருக்க அதுவும் சிந்தையும் சென்னியும் ஆகிய ஈரிடங்களிலும் சேரவந்தது என இரு வகையாகக் கூறுதல் ஏனெனின், தீக்கையில் ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிச் சென்னியிலே திருவடி சூட்டிய உருவத்திரு மேனியையும் தியானநிலையில் உயிர்க்குயிராய்ச் சிந்தையுள் நின்று உணர்த்தும் பேரறிவாகிய அருவத்திருமேனியையும் சுட்டி நின்றது எனவிளக்கம் தருவர் மதுரைச் சிவப்பிரகாசர். வது ஒன்றாயிருக்க சிரத்தின்மேலும் புந்தியிலும் (சிவப் பிரகாசம்) என்று இருவகையானது ஏதென்னில் தீக்கையிலுண்டான சகளத்தையும் தியானத்திலுண்டான நிட்களத்தையும் என அறிக. இதற்குப் பிரமாணம் சித்தியாரில் என்னை யிப்பவத்திற் சேராவகையெடுத் தென்சித்தத்தே தன்னைவைத் தருளினாலே தாளிணை தலைமேற் சூட்டும் (சித்தியார் - பாயிரம்) எனவும், திருக்களிற்றுப்படியாரில் சிந்தையிலு மென்றன் சிரத்திலுஞ் சேரும்வகை வந்தவனை மண்ணிடை நாம் வாராமல் தந்தவனை (திருக்களிற்றுப்படியார் - 100) எனவும் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க (சிவப்பிரகாசம்) எனவரும் மதுரைச் சிவப்பிரகாசர் உரை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்குரியதாகும். ஞானாசிரியர் வாழ்த்தாக அமைந்த இத்திருவுந்தியார் பாடல். நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க (திருவாசகம் - சிவபுராணம்) எனத் திருவாதவூரடிகள், தமக்குக் குருவாகத் தோன்றி மெய்யுணர் வளித்தருளிய ஞானாசிரியனை வாழ்த்திய திருவாசகச் செழுமறைப் பொருளைத் தன்னகத்தே கொண்டு திகழ்தலைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தியார் என்னும் இம்மெய்ந்நூலை அருளிச் செய்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் என்னும் சிவயோகியார், திருவாதவூரடி களைக் குருவாகக்கொண்டு தொடர்ந்து வரும் சைவாசிரியர் வழி முறையில் வந்தவர் என்னும் உண்மை நன்கு புலனாகும். இத்திருவுந்தியார் பாடலின் பொருளை விளக்கும் முறையிலும் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தமக்கு இந்நூலை யுபதேசித்தருளிய ஞானகுருவாகிய ஆளுடைய தேவநாயனாரைப் போற்றும் முறையிலும் அமைந்தது. 101. சிந்தையிலு மென்றன் சிரத்தினிலுஞ் சேரும்வகை வந்தவனை மண்ணிடை நாம் வாராமல்-தந்தவனை மாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால் ஏதுசொலி வாழ்த்துவே னின்று. எனவரும் திருக்களிற்றுப் படியாராகும். (இ-ள்) (தன்னுடைய அழகிய செந்தாமரை மலர் போலுந் திருவடிகள்) என்னுடைய நெஞ்சத் தாமரையிடத்தும் தலையின் மேலும் சேரப் பொருந்தும் வண்ணம் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து அடியேனை ஆண்டுகொண்டருளியவனும், நம்மனோர் மீண்டும் இந்நிலவுலகிலே வந்து பிறந்துழலாதவாறு மெய்யுணர்வு நல்கிச் சிவபோகமாகிய பேரின்பத்தைத் தந்தருளியவனும் ஆகிய அம்முதல்வனைத் தன்னிற் பிரிவிலாஎம்பிராட்டியாகிய அன்னையுடன் எவ்விடத்தும் எக்காலத்தும் மன்னுயிர்களை உய்வித்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என வேண்டிக் கொள்வதன்றிச் (சொல்லின் எல்லையைக் கடந்த அம்முதல்வனை) என்சொல்லி எவ்வாறு வாழ்த்துவேன் எ-று. உணர்ந்தார்க்குணர்வரியோனாகிய இறைவனை அடைந் தவர்கள். உரையுணர்விறந்த நிலையில் அம்முதல்வனது பேரானந்த வெள்ளத்தில திளைத்து மகிழ்வதல்லது எண்குணத்தானாகிய அம்முதல்வனுடைய பேரருட் பண்புகளைச் சொல்லித் துதிக்க வெண்ணின் உரையின் அளவாகிய எல்லையினைக் கடந்தமையின் அவனருளிற் பிரிவறக் கூடியிருக்கும் இந்நிலையில் அஃது இயல்வதன்று என்பார் ஏது சொல்லி வாழ்த்துவேன் இன்று என்றார். இன்று என்றது, அம்முதல் வனது பேரருளால் அம்முதல் வனைப் பிரிவறக்கூடி முயங்கி ஆனந்த வெள்ளத்தில் திளைத்து மகிழும் நிலையினை. வானாகி மண்ணாகி.......... கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே எனத் திருவாதவூரடிகளும், சொல்லு வதறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி எனச் சேக்கிழாரடிகளும் அருளிய பொருண் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கன வாகும். இந்தத் திருவுந்தியார் என்னும் சைவ சித்தாந்த உபதேசப் பனுவலை அருளிச் செய்த திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் இந்நூலின் பெருமையும் பயனும் தம்முடைய திருப்பெயரும் தோன்ற அருளிச் செய்தது திருவுந்தியாரின் முடிவில் உள்ள திருப்பாடலாகும். சரு. வைய முழுதும் மலக்கயங் கண்டிடும் உய்யவந் தானுரை யுந்தீபற உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற. இது, நூலாசிரியர் பெயரும் நூலின் பெருமையும் பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) உய்யவந்த தேவநாயனாரால் அருளிச் செய்யப்பெற்ற திருவுந்தியார் என்னும் இம்மெய்ந்நூலானது, (குருமுகத்தாற் கேட் டுணரும்) உலகத்தார் அனைவர்க்கும் மும்மல நீக்கத்தைச் செய்யும். இந்நூற்பொருளைக் கற்றுணர்ந்தோர் மெய்ப்பொருளின் உண்மை யினை யுணர்ந்து (பிறவிப்பெருங்கடல் நீந்தித்) திருவடி நெடுங்கரையிலே சேர்ந்து பேரின்பம் நுகர்ந்திருப்பார்கள் எ---று. உய்யவந்தான் உரை வையம் முழுவதும் மலக்கயம் கண்டிடும் எனவும், இதன் உண்மையுணர்ந்தார் (பிறவிப் பெருங்கடல் நீந்திப் பேரின்பம் நுகர்வர்) எனவும் இரு தொடராக்கி வேண்டுஞ் சொற்களை வருவித்துரைப்பர் முன்னையுரையாசிரியர்கள். வையம் - உலகம்; உலகமக்களையுணர்த்தி நின்றது; இடவாகுபெயர். மகக்ஷயம் என்னும் வடசொல் தமிழ்மொழிக்கேற்ப மலக்கயம் எனத் திரித்து வழங்கப் பெற்றது. மலக்ஷயம் - மலநீக்கம். கண்டிடும் என்புழிக் காண்டல் என்பது செய்தல் என்னும் பொருளினது. மலக்கயம் காணுதலாவது உலகமக்கள் அனைவர்க்கும் ஆணவம் கன்மம் மாயை யென்னும் மும்மலத்தொடர்பினை நீக்குதலைச் செய்தல். உண்மை என்றது பொதுவாக இந்நூலிற் கூறப்பட்ட முப்பொருளுண்மையினையும் இந்நூலாற் சிறப்பாக உணர்த்தப்பெற்ற செம்பொருளாகிய சிவத்தின் உண்மையினையுங் குறித்து நின்றது. இனி, வையமுழுதும் மலக்கயங்கண்டிடும் என்னும் இத்தொடரில், கயம் என்பது நீர்நிலை (கடல்) எனக்கொண்டு உய்யவந்த தேவநாயனார் செய்த திருவுந்தியாரென்னும் இந்நூலினுடைய உண்மையை யறிந்தவர்கள் பிரபஞ்ச முழுதையும் அஞ்ஞான சாகரமாகக் காணக்கடவது என இப்பாடற்குப் பொருள் வரைந்தார் பழைய உரையாசிரியர். கண்டிடும் என்னும் செய்யுமென்னும் முற்று காணக் கடவது என வியங்கோளாக இங்கு ஆளப் பெற்றது என்பது அவர் கருத்துப்போலும். உய்யவந்தானுரையினால் உண்மையுணர்ந்தார் வையம் முழுவதையும் மலக்கயம் எனக் காணக் கடவதாக என்பது இவ்வுரையின் பொருளமைப்பாகும். ஆக்கியோன் பெயரும் நூலின் பெருமையும் பயனும் கூறி இந்நூலினை நிறைவு செய்யுமுறையிலமைந்த இத் திருவுந்தியார் பாடலின் பொருளே அமையத் திருவுந்தியாரின் வழிநூலாகத் திருக் களிற்றுப்படியாரை இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரின் ஙச1-ஆம் பாடற் பொருளை விளக்கும் பகுதியில், ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேயறியுந் தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளுந் திருவியலூ ராளுஞ் சிவயோகி இன்றென் வருவிசையை மாற்றினான் வந்து எனவரும் திருக்களிற்றுப்படியார் 96- ஆம் பாடலில் குறித்துள்ளமை காணலாம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தமக்கு மெய்யுணர்வளித்த ஞானாசிரியர் ஆளுடைய தேவநாயனாரை ஆளுடையானே எனவும், அவர் தமக்கு ஞானாசிரியராய் எழுந்தருளி மெய்யுணர்வு நல்கிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றியருளிய திருவுந்தியாரைத் தமக்கு உபதேசித்தருளி வையமுழுதும் மலக்கயங்காணத் தம்மை உய்யக் கொண்டருளிய பேரருட்டிறத்தினை திருவியலூராளுஞ் சிவயோகி வந்து இன்று என் வருவிசையை மாற்றினான் எனவும் கூறியுள்ளமை இங்கு இணைத்து நோக்கத் தகுவதாகும். நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. திருச்சிற்றம்பலம் உய்யவந்த தேவநாயனார் திருவடி வாழ்க பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிர மணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற் பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில் 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986) 1. செய்யாமற் செய்ததனை (பா. வே) 2. ஆணவமிதுத்தாலறி ,,