தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 1 சங்ககாலத் தமிழ் மக்கள் பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். முகவுரை ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழ்மக்களின் வாழ்க்கையினை விளங்கத் தெரிவிப்பன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய செந்தமிழ் நூல்களாம். இந்நூல்களை அடிப்படையாகக்கொண்டு இவை தோன்றிய காலமாகிய சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையினைச் `சங்ககாலத் தமிழ் மக்கள் என்னும் இந்நூல் காட்டுகிறது. இந்நூலில் சங்ககாலத் தமிழகத்தின் பரப்பும், அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழரது குடிவாழ்க்கையும், ஆடவர் பெண்டிர்களுடைய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்னவெனச் சுருக்கமாக எளிய இனிய நடையில் விளக்கப் பெற்றுள்ளன. சங்ககாலத்தே வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்களின் உள்ளத் துணர்ச்சியினைக் கல்லூரி மாணவர்கள் சுருக்கமாக உணர்ந்து கொள்ளுதற்கு இந்நூல் துணை செய்யுமென்று கருதுகிறேன். 30-6-1948 ஆசிரியன். பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. அபதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் -மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986) கட்டுரைகள் சமயம் 1. தேவார ஆசிரியர்கள் மேற்கொண்டொழுகிய சமயக் கொள்கை - கரந்தை வெள்ளிவிழா மலர் - கரந்தைத் தமிழ்ச் சங்கம் -1938 2. கருவூர்த் தேவர் - கல்விக் கழகக் கட்டுரை வெள்ளிவிழா நினைவு மலர் - கல்விக் கழகம், புதுச்சேரி -1951 3. இளைஞர்மாநாட்டுத் தலைமையுரை - சைவ சித்தாந்த மகாசபை பொன்விழா (சித்தாந்தம்) - சைவசித்தாந்த மகாசமாசம், சென்னை - 1955 4. நகரத்தாரும் திருமுறைப் பணியும் - ஸ்ரீகாசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் நூற்றாண்டு விழா மலர் - 1963 5. சைவசித்தாந்த வளர்ச்சி - திரிபுவன வீரேச்சுரம் மகாகும்பாபிஷேக மலர் - தருமையாதீனம், மாயூரம் - 1963 6. திருநாவுக்கரசு தேவர் - திருவாமூர் மகா கும்பாபிஷேக மலர், விழாக் குழுவினர், திருவாமூர் - 1963 7. திருமுறை வழிபாடு - முரசு, தனுஷ்கோடி மணி விழா மலர், விழாக்குழுவினர்-1967 8. திருலிடைமருதூர் மும்மணிக்கோவை - திருவிடைமருதூர் மகாகும்பாபிஷேக மலர் - திருவாவடுதுறை ஆதீனம் - 1970 9. திருவையாறும் சுந்தரமூர்த்திகளும் - மகா கும்பாபிஷேக மலர் - பஞ்சநதீவரர் தேவதானம், திருவையாறு - 1971 10. அறந்தரு நாவுக்கரசு - வெள்ளிவிழா மலர் - மணிவாசகர் மன்றம், அரியலூர் - 1972 11. சிதம்பரம் சிவகாமியம்மன் திருக்கோயில், கடலையமாந்தார் கோயில், தில்லையில் திருப்பாற்கடல் தீர்த்தமும், திருப்பெருந்துறைத் தீர்த்தமும் - சிதம்பரம் சிவகாமியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் - திருப்பணிக்குழு - 1979 12. வெண்குன்று - கும்பாபிஷேக மலர் - சுவாமிநாத வாமி தேவதானம், சுவாமிமலை 13. சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் 68ம் ஆண்டின் நிறைவு விழா தலைமைப் பேருரை - சித்தாந்தம் - சைவசித்தாந்த சமாஜம் - 1973 14. திருமுறைகளும் சிவஞானபோதமும் - ஆய்வுக்கோவை - இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மூன்றாவது கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1971 15. மணிவாசரும் மூவர் தமிழும் - திருமுறைக் கருத்தரங்கம் - ஸ்ரீமகாலிங்கப் பெருமான் திருக்கோவில், திருவிடைமருதூர் - 1973 16. சைவ நெறி - தமிழ்மலர் -தமிழ்ச் சங்கம், காரைக்குடி - 1974 17. திருவருட்பயன் - வெள்ளிவிழா மலர் - சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண உயர்நிலைப் பள்ளி, சிதம்பரம் - 1975 18. தேவார, திருவாசகங்களில் திருவண்ணாமலை - அண்ணாமலையார் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் - திருப்பணிக் குழுவினர் - 1976 19. இளங்கோவடிகள் காலத்துச் சமய நிலை - பல்கலைக்கழக ஆண்டிதழ் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 20. இறைவன் தரும் இனிமை - தமிழ்ப்பொழில் - கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் 21. ஈங்கோய்மலை எழுபது - செந்தமிழ்ச் செல்வி - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 22. திருநின்ற செம்மை - சித்தாந்தம் - சைவசித்தாந்த மகாசமாசம், சென்னை. 23. அறுகயிறூசல் - சித்தாந்தம் - சைவசித்தாந்த மகாசமாசம், சென்னை. 24. ஐந்தவத்தை - தமிழ்த்துறைக் கருத்தரங்கு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1971 25. சிலம்பில் சைவம் - தமிழ்த்துறைக் கருத்தரங்கு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1973 26. மணிமேகலையில் சைவம் - தமிழ்த்துறைக் கருத்தரங்கு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1975 27. திருக்குறளில் சைவமும் வைணவமும் - தமிழ்த்துறைக் கருத்தரங்க - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1975 ஆ) இலக்கியம் 28. பாசறை - வெள்ளிவிழா மலர் - யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் - 1950 29. பகுத்தூண் தொகுத்த ஆண்மை - செந்தமிழ்ச் செல்வி - சை.சி.நூற்.கழகம், சென்னை. 30. கல்வி - மங்கலங்கிழார் நினைவு மலர் - மங்கலங்கிழார் மன்றம், குருவராயப்பேட்டை - 1962 31. தமிழர் கல்வி நிலை - சென்னைப் பல்கலைக்கழக புதுமுக வகுப்புத் தமிழ் உரைநடை பகுதி - 2- சென்னைப் பல்கலைக்கழகம் - 1966 32. திருவள்ளுவர் நெறியில் திருமுறை ஆசிரியர்கள் - செங்கம் திருவள்ளுவர் கழகச் சிறப்பு மாநாட்டு மலர் - திருவள்ளுவர் கழகம், செங்கம் - 1967 33. உலகப் பொதுச் சமய நூல் - திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த புஷ்கரமேளா இலட்சதீப மலர், விழாக்குழுவினர், திருக்கழுக்குன்றம் 1968 34. குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்- வெள்ளிவிழா மலர் - தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜனசங்கம் - 1970 35. அறிவுக்கருவி - முப்பால் மலர் - திருவள்ளுவர் கழகம் - 1970 36. திருக்குறள் கூறும் அறத்தின் அடிப்படை - திருவள்ளுவர் ஈராயிரமாண்டு சிறப்பு மலர் - தமிழ்நாடு தெய்வீகப் பேரவை, சென்னை - 1970 37. தலைசிறந்த உரையாசிரியர் - பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் திருவுருவச் சிலை திறப்பு - விழாக்குழுவினர் - 1970 38. திருக்குறளும் கீழ்க்கணக்கு நூல்களும் - கட்டுரைப் பொழில் - கரந்தைத் தமிழ்ச் சங்கம் - 1973 39. பண்புடைமை - சிதம்பரம் ஆர்.கனகசபைப் பிள்ளை மணிவிழா மலர் - மணிவிழாக்குழு - 1973 40. குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி - சிதம்பரம் பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் - சை.சி.நூற்.கழகம் - 1973 41. வானூர் மதியம் - தமிழ்ப் பொழில் - கரந்தைத் தமிழ்ச் சங்கம் இ) இலக்கணம் 42. தொல்காப்பியம் - மறைமலையடிகள் நினைவு மலர் - நாகைத் தமிழ்ச் சங்கம்-1969 43. இறையனார் களவியலுரை - தமிழ்த் துறைக் கருத்தரங்கு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -1970 44. தொல்காப்பியம் கூறும் மொழியமைப்பு - தொல்காப்பியம் மொழியியல் - மொழியியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் - 1970 45. சார்பெழுத்துக் கொள்கை - இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - மொ.துறை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1974 46. அசையும் சீரும் - தமிழ்த் துறைக் கருத்தரங்கு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -1972 47. தொல்காப்பியத்தில் சில நூற்பாக்களின் பொருள் விளக்கம் - தமிழ்த்துறைக் கருத்தரங்க - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1976 48. உத்திவகை - தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டு கட்டுரைப் பூங்கா - தஞ்சாவூர் - 1984 இசை 49. ஆடற்கலை - கழகத்தின் 1008வது வெளியீட்டு விழா மலர் - தி.தெ.சை.சி.நூற்.கழகம் சென்னை - 1961 50. தேவாரத்திற் பயின்ற பண்களும் இசைக்கருவிகளும் - தமிழ் இசை 22ஆம் விழா மலர் - இராஜா அண்ணாமலை மன்றம் - 1964-65 51. தேவாரம் ஓதும் முறையின் பழமை - பண்ணாராய்ச்சி வெள்ளிவிழா - தமிழிசைச் சங்கம், சென்னை. 52. யாழ்நூலின் அமைப்பும் சிறப்பும் - பண்ணாராய்ச்சி வெள்ளிவிழா - தமிழிசைச் சங்கம், 53. பண்ணார் தமிழ் - திருவானைக்கா திருக்கோயில் மகாகும்பாபிஷேக மலர் -திருப்பணிக் குழு - 1970 54. குரல், மத்திமமே - செந்தமிழ்ச் செல்வி - தி.தெ.சை.சி.நூற்.கழகம் சென்னை 55. சங்க காலத் தமிழ் வாணிபம் - வெள்ளிவிழா மலர் - அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டுறவு பண்டகசாலை -1956 56. சிதம்பர புராண ஆசிரியர் - வெள்ளிவிழா மலர் - ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம் - 1966 57. யாழ்நூல் ஆசிரியர் அருள்மிகு விபுலானந்த அடிகளார் - மணிவிழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை - 1973 58. பாண்டித்துரைத் தேவர் - தமிழ்ப் பொழில் - கரந்தைத்தமிழ்ச் சங்கம் , தஞ்சை 59. தொல்காப்பியர் காலம் - இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் - விழாக்குழுவினர் 60. திருவாசகம் வளர்த்த பெரியார் அண்ணாமலை ஐயா - வள்ளுவர் மன்றம் வெள்ளி விழா மலர் -1956 (ஊ) ஒப்பீடு 61. தொல்காப்பியமும் திருக்கோவையாரும் - தவத்திரு திருநாவுக்கரசு அவர்களின் 60வது ஆண்டு நிறைவு விழா மலர் - திருச்சிராப்பள்ளி-1981 62. பதிற்றுப்பத்தும் பாடாண் திணையும் - முத்துக்கோவை தமிழகப் புலவர் குழு வெளியீட்டு விழா மலர் - 1981 63. திருமுறைகளில் தில்லை - சைவசித்தாந்தப் பெருமன்றம் முத்துவிழா மலர் - சிதம்பரம் 1986 64. ஆளுடைய பிள்ளையார் மாலை (தனிப்பாடல் திருஞான சம்பந்தர் பற்றியது) - சுப்பையாபிள்ளை பவள விழா மலர் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - 1973 65. தொல்காப்பியத்தில் தத்துவ நெறிக்கொள்கைகள் - திருக்கோயில் - திருக்கோயில் - 1978 பொருளடக்கம் 1. தமிழகம் 3 2. தமிழர் வாழ்வியல் 19 3. ஆடவல் நிலை 49 4. பெண்டிர் நிலை 62 5. தமிழர் கல்வி நிலை 76 6. தமிழர் தொழில் நிலை 92 7. புலவர் கண்ட வருங்காலத் தமிழகம் 101 சங்ககாலத் தமிழ் மக்கள் சங்ககாலத் தமிழ் மக்கள் தோற்றுவாய் தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களை நிறுவிக் கல்விப் பணிபுரிந்த காலம் `சங்க காலம் என வழங்கப்பெறும். அக்காலப் பகுதி இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மக்கள் தங்கள் தாய்மொழி வழியாக எல்லாக் கலைகளையும் வளர்க்க எண்ணி, அரசியல் ஆதரவிற் புலவர் பேரவையைக் கூட்டி அறிவினைப் பரப்பும் முறை நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமை யாததாகும். இத்தகைய புலமைத் தொண்டினை நம் தமிழ் முன்னோர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தார்கள். அவர்களாற் போற்றப்பெற்று வளர்ந்த முச்சங்கங்களின் வரலாறு, இறையனார் களவியலுரை யிலும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிலும் விளக்கப் பெறுகின்றது. நுண்ணறிவுடைய புலவர் பலரும் தமக்குள் மாறு பாடில்லாமல் ஒருங்குகூடித் தமிழாராய்ந்த புலவர் பேரவையே சங்கம் என வழங்கப் பெறுவதாகும். இதனை முன்னுள்ளோர் `கூடல் 1 என்ற பெயரால் வழங்கினார்கள் மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான், பாண்டியர், நிறுவிய தமிழ்ச் சங்கத்தினை `நல்லாசிரியர் புணர்கூட்டு என்ற தொடராற் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தப் பிள்ளையார், மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தினை `மதுரைத் தொகை என ஒரு திருப்பாடலிற் குறிப்பிடுகின்றார். இத்தொடரில் வந்த தொகை யென்பது சங்கம் என்ற பொருளைத் தரும் தமிழ்ச் சொல்லாகும். தமிழ்க் கல்விச் சங்கமாகிய பாண்டியன் அவையம், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்திற்கு (2,500 ஆண்டுகளுக்கு) முன் தொடங்கிக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிய, நெடுங்காலம் நிலைபெற்றுத் தமிழ்ப் பணி சங்கத்தைப் போலவே தமிழ் நாட்டிலுள்ள பேரூர்தோறும் தமிழ் வளர்க்கும் புலவர் பேரவைகள் தமிழ் மக்களால் நிறுவப்பெற்றிருந்தன. சங்க காலத்தில் எத்துணையோ தமிழ் நூல்கள் புலவர் பெருமக்களால் இயற்றப்பட்டன. அவற்றுட் பெரும்பாலன கடல்கோளாலும், தமிழர்களின் விழிப்பின்மையினாலும் அழிந்து போயின. அவை போக, இப்போது எஞ்சியுள்ளன சிலவே. இடைச் சங்கத்தில் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப் பெற்ற இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும், கடைச் சங்கத்துச் சான்றோர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்பனவும், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியனவும் சங்ககாலத்தில் இயற்றப் பெற்றனவாக இப் பொழுதுள்ள தமிழ் நூல்களாம். இந்நூல்களை ஆராயுங்கால் சங்ககாலத் தமிழ்கத்தின் பரப்பும், அரசியலமைதியும், நாகரிக வாழ்வும் நன்கு புலனாம். அவை ஈண்டு உரைக்கப்படும். I தமிழகம் மக்களாற் பேசப்படும் மொழி வழக்கினைத் துணையாகக் கொண்டுதான் ஒரு நாட்டின் எல்லை வரையறுக்கப்படும். அவ்வாறே நம் தமிழ்நாடும் தமிழ் வழங்கும் நிலத்தை வரம்பாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட எல்லையினையுடையதாகும். தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர் `தமிழர் என வழங்கப் பெறுவர். தமிழர் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நிலப்பரப்புத் `தமிழகம் எனப்படும். தொல்காப்பியனார் காலத்தில் வடக்கே வேங்கடமலைத் தொடரும், தெற்கே குமரியாறும், மேற்கும் கிழக்கும் கடலும் தமிழ் நாட்டின் எல்லையாய் விளங்கின. இவ்வெல்லைகளை வரையறுக்கும் வேலியாய் விளங்கின. இவ்வெல்லைகளை வரையறுக்கும் வேலியாய் அமைந்தது, தமிழர்களாற்பேசப்பெற்றுவரும் தமிழ் மொழியேயாகும். தமிழ்மக்கள் பண்டைநாளில் நாவலந்தீவு முழுவதிலும், உலகில் வெளியிடங்களிலும் பரவி வாழ்ந்தார்கள். ஆயினும், அவர்தம் தமிழ்மொழி சிதையாது வளர்ந்து சிறத்தற்கு நிலைக் களமாய் விளங்கும் இடம், வடக்கே வேங்கடமலைத் தொடரையும் தெற்கே குமரியாற்றையும் எல்லையாகவுடைய தமிழகமேயாகும். வேங்கடத்தின் வடக்கேயுள்ள நிலப்பகுதிகளில் ஆங்காங்கே தமிழ்மொழி பேசப்பட்டதெனினும், அவ்விடங் களில் வழங்குந் தமிழ் சிதைந்து மாறுபட்டதனால், அந் நாடுகளைத் தமிழ் கூறும் நல்லுலகமாகத் தமிழ்ச் சான்றோர் கருதவில்லை. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட நிலப் பகுதியே தொன்றுதொட்டுத் தமிழகம் என வழங்கப் பெறுவதாகும். நிலத்தின் இயற்கைக்கு ஏற்பத் தமிழ்மொழி வளர்ந்து சிறத்தற்கு இந்நாடு நிலைக் களமாதலால், `செந்தமிழியற்கை சிவணிய நிலம் எனப் புலவர்களாற் பாராட்டப் பெறுவதாயிற்று. `நாட்டின் அமைதிக்கேற்ப அந்நாட்டில் தோன்றி வழங்கும் தாய் மொழியின் சொல் வழக்குகள் உருப்பெறுவன என்பர். தமிழர் நான்கு திசைகளையும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வழங்கினர். கீழ், கிழக்கு எனப் பள்ளத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு தோன்றும் திசைக்கும்; மேல், மேற்கு என மேட்டு நிலத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு மறையுந் திசைக்கும் வழங்குதல் தமிழ் வழக்காகும். இச்சொல் வழக்கினை நோக்கினால், தமிழ் மக்களின் தொன்மைப் பிறப்பிடம் கிழக்குப் பகுதி பள்ளமாகவும் மேற்குப் பகுதி மேடாகவும் அமைந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இம்முறையில் அமைந்த நாடு இத்தென்னாடேயென்பதனை நில நூல் வல்லார் ஏற்றுக் கொள்வர். ஆதலால், தமிழ் மக்களின் தாய்நாடு இத்தென்னாடே என்பதும், தமிழர் இத்தமிழ் நாட்டின் பழங்குடி மக்களே என்பதும் நன்கு துணியப்படும். தமிழ் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என நான்கு வகையாகப் பகுத்து, நானிலம் என்ற பெயரால் பண்டைத் தமிழாசிரியர்கள் வழங்கினார்கள். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். இந்நிலப்பகுதியிற் குறிஞ்சிச் செடி மிகுதியாகக் காணப்படுதல் பற்றி இதற்குக் குறிஞ்சியென்று பெயரிட்டனர். காடடர்ந்த நிலம் முல்லையாகும். முல்லைக் கொடி பெருகவுளதாதல் பற்றி இந்நிலம் முல்லையென வழங்கப்பெற்றது. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகும். மருதமென்னும் மரம் இந்நிலத்திற்பெருக வளர்தல் பற்றி இதனை மருதம் என வழங்கினார்கள். கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தலாகும். நெய்தல் என்னும் கொடி நிறையவுளதாதல் பற்றி இந்நிலப்பகுதிக்கு நெய்தல் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. மலைகளில் விலங்குகளை வேட்டையாடித் தினை முதலியன விதைத்து வாழ்ந்தவர்கள் குறிஞ்சி நில மக்கள். இவர்கள் குறவர் என வழங்கப்பெறுவார்கள். காடு அடர்ந்த நிலப்பகுதிகளிற் பசுநிரைகளை மேய்த்து வரகு முதலிய புன்புலப் பயிர் செய்து வாழ்ந்தவர்கள் முல்லை நிலமக்கள். இவர்களை ஆயர் என வழங்குதல் மரபு. காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி நிலந்திருத்தி நீர் பாய்ச்சி நெல் முதலிய நன்செய்ப் பயிர்களை விளைவித்து, அரசியலமைத்து வாழ்ந்தவர்கள் மருத நிலமக்கள். இவர்கள் உழவர் என வழங்கப் பெறுவார்கள். கடலோரத்திலே குடிலமைத்துக் கொண்டு கடலிற் படகுகளைச் செலுத்தி வலை வீசி மீன் பிடித்து, உப்பு விளைவித்து விலைப்படுத்தி வாழ்தலையே தொழிலாகக் கொண்டவர்கள் நெய்தல் நிலமக்கள். இவர்கள் பரதவர் என வழங்கப்பெறுவார்கள். மேற்கூறிய நான்கு நிலங்களின் வேறாகப் பேசப்படும் நிலப்பகுதி, நீரும் நிழலும் அற்ற பாலையாகும். எல்லாப் பருவத்திலும் பாலையாகவே விளங்கும் நிலப்பகுதி தமிழகத்தில் இல்லை. ஆதலால், பாலை நிலம் எனத் தனியே ஒரு பிரிவினைப் பண்டைத் தமிழர் வகுத்துக் கொள்ளவில்லை. வேனிற்காலத்து நண்பகற்பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் ஒருவரும் நடத்தற்கியலாதபடி காய்ந்து வெதும்பிய வழியே `சுரம் என்னும் பெயரால் தமிழிலக்கியங்களில் வழங்கப்படுகின்றது. தமிழ்மக்கள் இதனைத் தனி நிலமாக எண்ணுவதில்லை. நீரும் நிழலுமில்லாது வெதும்பிய சுரத்தில் எந்த உணவும் விளைவதில்லை. இங்கு வாழ்பவர் உழவு முதலிய தொழில்களுள் ஒன்றையும் செய்தற்கு வசதியில்லாமையால், வழிப்போவாரைத் துன்புறுத்திப் பொருள் பறிக்கும் கொடுந் தொழிலை மேற்கொள்வாராயினர். நானில மக்கள் தங்கள் ஊர்தோறும் தங்களுக்கேற்ற தலைவனொருவனது காவலின்கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். குறிஞ்சி நிலத் தலைவனை வெற்பன் என்றும், முல்லை நிலத் தலைவனைக் குறும்பொறை நாடன் என்றும், மருதநிலத் தலைவனை ஊரன் என்றும், நெய்தல் நிலத் தலைவனைத் துறைவன் என்றும் வழங்குதல் மரபு. இத்தலைமக்களால் ஆளப்படும் சிற்றூராட்சியே முதன்முதல் தோன்றியது. ஒவ்வொரு சிற்றூர் மக்களும், தங்களால் நன்கு மதிக்கப்படும் அறிவும் ஆற்றலும், உடைய தலைமகன் ஒருவனது சொல்லுக்கு அடங்கி, அவனது காவலில் அச்சமின்றி வாழ விரும்பினார்கள். இவ்விருப்பம் நாளடைவில் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இயற்கையில் விளைந்த உணவுப் பொருளைக்கொண்டு விலங்கு முதலியவற்றை வேட்டையாடி வாழ்ந்த வாழ்வு, மலைவாணர் வாழ்வாகும். உணவுக்குரிய விதைகளைப் புன்புலங்களில் விதைத்து, ஆடுமாடுகளை வளர்த்து, அவற்றாற் கிடைக்கும் பால் முதலிய பயன்களைப் பெற்று வாழும் வாழ்வு முல்லைநில வாழ்வாகும். காடுகளை அழித்து நாடாக்கிப் புன்புலன்களைத் திருத்தி நன்செய்களாக மாற்றி, எருது முதலிய விலங்குகளைத் தொழில்களிற் பழக்கி, உழவினால் உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவற்றை விளைவித்த செயல் மருதநில நாகரிகமாகும். கடற்பரப்பிலே கட்டு மரங்களையும் படகு களையும் செலுத்திச் சென்று மீன்களைப் பிடித்து அவற்றை உணவாகப் பயன்படுத்தி, உப்பினை விளைவித்துக் கடல் கடந்து பண்டமாற்றும் வாணிகத் தொழிலை வளர்த்தது நெய்தல் நிலவாழ்வாகும். மருதநிலத்தார் கண்ட உழவு முதலிய தொழில்களும், நெய்தல் நிலத்தார் கண்ட கடல்வழி வாணிகமும் பெருகப் பெருக, அவர்தம் சிற்றூர்களும் பேரூர்களாய் விரியத் தொடங்கின. அதனால், சிற்றூர்த் தலைவர் பலர்க்கும் பெருந்தலைவனாகப் பேரூர் மன்னனொருவனைத் தேர்ந்து அமைத்துக் கொள்ளும் பொறுப்புச் சிறப்பாக மருதநிலத்தார்க்க உரியதாயிற்று. உழவர் களால் தங்களுக்குரிய பேரூர்த் தலைவனாகத் தேர்ந்துகொள்ளப் பெற்றவனே வேந்தன் என வழங்கப் பெற்றான். உழவர்களுடைய முயற்சியால் நிலத்தில் விளையும் பொருள்களில் ஒரு பகுதியைக் கடமையாகக் கொண்டு சிற்றூர் பலவற்றையும் புரப்பது அவ் வேந்தனது இன்றியமையாக் கடமையாகக் கருதப் பெற்றது. நாளடைவில் கடலிற் கப்பல்களைச் செலுத்தி வாணிகம் செய்வதனைக் கண்காணிக்கும் பொறுப்பும் மன்னனுக்கு உரியதாய் அமைந்தது. உழவுக்கும் வாணிகம் முதலிய பிற தொழிலுக்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். நிலை பெறுதல் என்னும் பொருளுடைய `மன்னுதல் என்பதன் அடியாகப் பிறந்த பெயரே `மன்னன் என்பதாகும். மக்களுடைய வாழ்வு நிலைபெற அவர்கள் நாட்டினை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட பேரூர்த் தலைவன், மக்களால் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப் பெறுவானாயினன். அதனால் அவனுடைய குடும்பமும் படைப்புக் காலந்தொட்டு வழிவழியாக அழியாது நிலை பெற்று வருவதாயிற்று. வரையறுக்க முடியாத தொன்மைக் காலத்திலேயே தங்கள் நாட்டைப் பாதுகாத்தற்குரிய வேந்தர்களைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தார்கள். தமிழகம் பண்டைநாளில் மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மூன்று பகுதிகளையும் முறையே சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று குடும்பத்தவர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். தமிழகத்தின் மேலைக் கடற்கரையில் அமைந்த மலைநாட்டுப் பகுதியினை ஆண்டவர் சேரமன்னர். வடக்கே வேங்கட மலையினையும் தெற்கே திருச்சிராப்பள்ளி வளநாட்டையும் உள்ளிட்ட நிலப்பகுதியினை யாண்டவர் சோழமன்னர், இந்நாட்டின் தென்பால் அமைந்த நிலப்பகுதி முழுவதனையும் ஆண்டவர் பாண்டிய மன்னர். இம்மூவேந்தரும் படைப்புக் காலந்தொட்டு இத்தமிழகத்தை ஆட்சி புரிந்த பழங்குடியினர் எனப்படுவர். கொடையும் ஆற்றலும் நிரம்பிப் புகழால் மேம்பட்ட இவ்வேந்தர் மூவரையும், `வண்புகழ் மூவர் என ஆசிரியர் தொல்காப்பியனார் பாராட்டிப் போற்றுகின்றார். சேர மன்னர்க்குப் பனை மாலையும், சோழர்க்கு ஆத்தி மாலையும், பாண்டியர்க்கு வேப்பமாலையும் அடையாள மாலைகளாகக் கொள்ளப் பெற்றன. இவ்வடையாள மாலைகளை அணிந்த படை வீரர்களை மூவேந்தரும் பெற்றிருந்தனர் என்பது, போந்தை வேம்பே ஆர்என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் என்ற தொல்காப்பியத் தொடரால் நன்கு விளங்கும். சேர மன்னர்கள் வானளாவிய மலைகளில் வாழ்ந்தமையால், அங்குள்ள கொடிய விலங்குகளைத் தங்கள் வலிய வில் வேட்டையினாற்கொன்று போக்கினார்கள். வில்லாற் போர் செய்து வீரத்தை விளைவித்த இவ்வேந்தர்கள், வில் எழுதிய கொடியினைத் தங்களுக்க அடையாளமாகக் கொண்டார்கள். பாண்டியர்கள் கடல் சார்ந்த நாட்டினை ஆண்டு வந்தமையால், அவ்வப்போது அவ்வப்போது தங்கள் நாட்டிற்குக் கடல் பொங்கி ஊரை அழித்தலால் நேர்ந்த இடையூறுகளை எதிர் நோக்கி நின்று, தங்கள் குடிமக்களைக் கண்ணிமையாது காக்கும் உணர்வு மிகுதியுடையவர்களானார்கள். மீன் தன் கண்களால் நோக்கித் தன் குஞ்சுகளை வளர்க்குமாறு போலத் தம் குடிகளைக் கண்ணிமையாது நோக்கி நின்று கடல் கோளிற் காப்பாற்றிய பாண்டியர்க்குக் கயல் மீன் எழுதிய கொடி அடையாளமாயிற்று. சோழர்கள் ஆண்ட நிலப் பகுதி முன்னாளிற் காடாய் இருந் தமையால், அங்குள்ள புலி முதலிய விலங்குகளை வேட்டை யாற்கொன்று போக்கிக் காடு கெடுத்து நாடாக் கினார்கள். வலி மிக்க புலிகளை வென்று மக்களுக்கு நலஞ் செய்த சோழர்களின் வெற்றி வன்மைக்கு அறிகுறியாகப் புலி எழுதிய கொடி அவ்வேந்தர்க்கு அடையாளமாயிற்று. இம் மூவேந்தருடைய ஆட்சி, இன்ன நாளில் தமிழகத்தில் தோன்றியது என வரையறுத்துக் கூற முடியாத அத்துணைப் பழைமையானதாகும். தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வரும் பெரிய குடும்பத்திலே பிறந்தவர்களது தன்மையினை விளக்கக் கருதிய பரிமேலழகர், `தொன்று தொட்டு வருதல் - சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருதல், என இம்மூவேந்தர் குடும்பத்தின் பழைமையினை விரித்துரைக்கின்றார். சேர மன்னர்களின் வில்லாற்றலும், பாண்டியர்களின் கல்வித் திறனும், சோழர்களின் உணவால் விளைந்த அறத்தின் வழிப்பட்ட பெருஞ்செல்வமும் ஒன்று சேர்ந்து துணை செய்தமையால், தமிழ் மக்களது அரசியல் வாழ்வு திறம்பெற மேம்படுவதாயிற்று. தமிழ் வேந்தர்கள் தமிழகமாகிய உடம்புக்க உயிர்போன்று இன்றியமையாதவர்களாய் வினையாற்றி விளங்கினார்கள். அதனால், தமிழகம் இம்மூவர்க்கும் ஒப்ப உரியதாயிற்று. `வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என இத்தமிழகத்தை மூவேந்தர்க்கும் பொதுவாகத் தொல்காப்பியனார் உரிமை செய்து கூறுவர். மக்களை ஒரு நெறிமுறையில் வாழச் செய்யும் அரசிய லமைதியே ஒரு நாட்டிற்கு முதற்கண் வேண்டப்படுவதாகும். இவ்வமைதி பெறாத நாடு, வாழ்க்கை வளங்கள் எல்லாம் குறைவறப் பெற்றிருப்பினும், நாடாக நிலைபெறுதல் இயலாது. இந் நுட்பத்தினைப் பண்டைத் தமிழர் நன்குணர்ந்திருந்தனர். ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. என்றார் தெய்வப்புலவர். உடம்பை வளர்க்கும் உணவுப் பொருளாகிய நெல் முதலிய தானியங்களோ, அவை விளைதற்குக் காரணமாகிய நீரோ, இவ்வுலக வாழ்க்கையை நிலை பெறச் செய்வன அல்ல. மக்களை ஒருநெறிப்படுத்தி வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே இவ்வுலகிற்கு உயிர் ஆவான். ஆதலால், `இவ்வுலகிற்கு உயிர் யானே, என உணர்ந்து முறை செய்தல் வேந்தனது கடமையாகும், என மோசி கீரனார் என்னும் புலவர் கூறுகின்றார். 1 இக்கூற்றுக்கு இலக்கியமாகத் தமிழ் வேந்தர் மூவரும் தத்தம் கடமையினை உணர்ந்து செயலாற்றினர். தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்க முடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து நிகழ்த்தினர். தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப் பெற்றுச் செல்வது வழக்கம்.1 தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்றுகூடி அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு. இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், தமிழ் மக்களுடைய உள்ளத்திற்கு அளவில்லாத மகிழ்ச்சியை விளைவித்தது. பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒருங்கு நிகழ்த்தி வழியிடையே தங்கியிருக்கின்றான். இங்கே யாழினிடத்தே தோன்றும் இன்னிசையும் அதற்கியையப் பாடும் மிடற்றுப் பாடலும் ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார்.2 இவ்வுவமையால் தமிழரசர் மூவரும் தம்முள் ஒற்றுமையுடையவராய் அரசியலை நன்கு நிகழ்த்தித் தமிழ் மக்களை மகிழ்வித்தனரென்பது நன்கு புலனாகும். இங்ஙனம் தமிழ் வேந்தரிடையே காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடி புகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத்தவராய் வாழ்ந்த அம் மூவரையும் பேதித்துப் பிரித்து வைக்குந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அதனால், மூவேந்தரும் தொன்று தொட்டு வரும் தம் உறவினை மறந்து, தமக்குள் பகைமை பாராட்டு வாராயினர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விரு வருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் நேரிற்கண்டு மகிழ்ந்தார்; தாம் பெற்ற மகிழ்ச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் என்றும் நிலை பெற்றிருக்க வேண்டும் என விரும்பினார். அவ் விருப்பத்தால் தம் நாட்டுத் தலைவனாகிய சோழ மன்னனை நோக்கிக் கூறியதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் (புறம் 58) படிப்பார் உள்ளத்தை உருக்கும் நீர்மையதாம்: வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன், நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேரூராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண் அரசு வீற்றிருக்கும் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன். நீவிர் இருவீரும் கண்ணன், பலதேவன் என்னும் இரண்டு பெருந்தெய்வங்களும் கூடி நின்றாற்போலப் பகைவர்க்கு அச்சந்தரும் தோற்றத்துடன் நண்பு செய்து ஒழுகுகின்றீர். ஆதலால், இந்த நட்பைக்காட்டிலும் தமிழகத்திற்கு இனிமை தருஞ் செயல்கள் எவையேனும் உளவோ? இவ்வாறே ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து ஒழுகுவீராக! இப்பொழுதுள்ள நட்பினின்றும் வேறுபடாதிருப்பீரானால், கடல் சூழ்ந்த இவ்வுலகவுரிமை முழுவதும் உமது கையகத்தது ஆகும். உங்கள் ஒற்றுமைத் திறத்தைக்கண்டு பொறாமையுற்ற அயலார் சிலர், உங்களைத் தனித்தனியே அணுகி, நன்மை தருவன போலவும், நீதியொடு பொருந்தின போலவும், நும் முன்னோருடைய பழைய ஒழுக்கத்தை விரித்துரைப்பன போலவும் அமைந்த சொற்களை வஞ்சனையாகச் சொல்லி, உங்களை வேறுபடுத்தி, இகல் விளைத்தற்குச் சமயம் பார்த்துத் திரிகின்றார்கள். ஆதலால், அவர்களுடைய பொறாமை விளைக்கும் தீயசொற்களைக் கேளாது இன்றே போல என்றும் நண்பினாற் கூடி வாழ்வீராக! நும்முடைய வேல் போர்க்களத்தின்கண் வென்று மேம்படுக! நுமக்குப் பகையாயினாருடைய குன்றுகள் புலியும் கயலும் ஆகிய அடையாளங்களைச் சேரப் பொறிக்கப் பெற்ற சிகரங்களை யுடையன ஆகுக! என்பது, அப்பாடலால் புலவர் கூறிய அறிவுரையாகும். இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வறிவுரை பெரிதும் பயன் தருவதாகும். பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந் தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்ற வரல்லர்; தொன்று தொட்டு நாட்டினையாளும் வேந்தரது பழங்குடியிற்பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந் நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப் பிறப்பின் பயனாகத் தொடர்ந்து வரும் அறிவு திரு ஆற்றல்களினாலும், தம்மால் பயிற்றப்பெற்ற படை வீரர்களின் போர்த்திறத்தினாலும், மக்களது விருப்பத்திற்கேற்பத் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சேனைத்தலைவர் முதலிய உடன் கூட்டத்து அதிகாரிகளின் வினைத்திட்பத்தினாலும் தமிழ் வேந்தர் தமக்குரிய எல்லையினை அறநெறி பிறழாது ஆண்டு வருவாராயினர். இவ்வாட்சி முடியாட்சியே. நாட்டு மக்களைத் தன் குடும்பத் தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலைபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம் கீழ் வாழும் குடி மக்களின் கவலைகளை யெல்லாம் தம் உள்ளத்தடக்கி ஊணுறக்கமின்றி உழைக்கும் பொறுப்பு, தமிழ் நாட்டு முடிவேந்தர்க்கு உரியதாயிருந்தது. நாட்டில் உரிய காலத்தில் மழை பெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப் பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி குடி மக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக் கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்றும் நல்ல அரச குடும்பத்திலே பிறப்பதனை மகிழ்ச்சிக்குரிய செயலாகத் தமிழ் வேந்தர் எண்ணினாரல்லர். மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்! பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்! குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுகதவு இல். - சிலப். காட்சி 100-104. எனச் சேரர் பெருமான் செங்குட்டுவன் கூறியதாக அமைந்த அனுபவமொழி, முடிவேந்தர்கள் `குடி தழீஇக் கோலோச்சும் முறையின் அருமையையும், அதனால் அரசர்க்குண்டாகும் கவலைகளையும் நன்கு விளக்குவதாம். நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமை களாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் கனவிலுந் தெரியாத தொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும், தம் உள்ளக்கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் பேச்சுரிமையும், தாம் விரும்பிய முறையில் கடவுள் வழிபாட்டினை அமைத்துக் கொள்ளும் சமய உரிமையும், விரும்பிய இடங்களுக்குத் தடையின்றிச் செல்லும் போக்குவரத்துரிமையும், தமக்கு இயன்ற தொழில்களைச் செய்து பொருளீட்டுதற்குரிய தொழிலுரிமையும் ஆகிய இவையெல்லாம் குடி மக்களின் கிழமைகளாகவே கருதப்பட்டு, அக்காலத் தமிழ் வேந்தர்களாற் காக்கப் பெற்றன. நுணுகி நோக்குங்கால், அக்காலத் தமிழர் அரசியல், `முடியாட்சி என்ற பெயரால் நடைபெற்ற குடியாட்சியாகவே விளங்கினமை இனிது புலனாம். நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாது வேண்டப் படுவது சேனை. அரசியல் வரம்புக்கு உட்பட்ட மக்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு, அவ்வரம்பில் அடங்கி வாழுந்திறம் நாட்டு மக்கள் உள்ளத்தில் நிலைபெறுதல் வேண்டும். தங்கள் கடமை உணர்ந்து நடக்கும் இயல்புடையவர்களே உரிமை பெற்ற குடி மக்களாகக் கருதப்படுவார்கள். அரசியல் வேலியின் துணை கொண்டு ஒரு நாட்டில் முதற்கண் விளைவித்துக்கொள்ள வேண்டிய பொருள், அமைதி வழி நின்று உழைக்கும் உழைப்பே ஆகும். ஏனைய உணவு முதலாகவுள்ள நுகர்பொருள்கள்யாவும் இவ்வுழைப்பின் பயனாகத் தாமே உளவாவனவாம். நாட்டிற் கிடைக்கும் பொருள்களை மக்கள் பகிர்ந்து உண்டு வாழ்தற்கு அமைந்த நெறி முறைகளை வகுத்து நாளுங் கண்காணிக்குந் திறமுடையானே அமைச்சனாவான். தமக்குரிய நிலப்பகுதியை ஆளும் மன்னர், பிற நாட்டு அரசியலின் உதவியைப் பெறுதல் கருதி நண்பு செய் தொழுகுதல் தமது அரசியலை வளர்த்தற்குரிய வழியாகும். உலக வாழ்வின் பொது அமைதியைக் கருதாது ஒரு நாட்டின்மேற் போர் தொடங்குவார் யாவரேயாயினும், அவரை அஞ்சாது எதிர்த்து நின்ற பொருது வெல்லுதற்கப் பொருத்தமான இடமும் சார்பும் ஆகிய காவலைத் தேடி உருவாக்கும் நிலையே `அரண் எனப்படும். மேற்கூறிய அரசியல் உறுப்புக்கள் ஆறனையும் குறைவறப்பெற்றவனே அரசர்களுட்சிறந்தவன் ஆவன். அரசியல் அங்கங்களாகிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் இவற்றின் இயல்புகள் யாவும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் பொருட்பாலில் நன்கு விளக்கப்பெற்றுள்ளன.. திருவள்ளுவர் கூறும் அரசியல் நுட்பங் களெல்லாம் சங்ககாலத் தமிழ் வேந்தர் ஆட்சி முறையிலிருந்து நேரிற்கண்டுணர்ந்து வெளியிட்ட அனுபவ உண்மைகளேயாகும். தமிழரசர்கள் அரசியல் முறையிற்பிழையாது, அறனல் லாதன தங்கள் நாட்டின்கண் நிகழவொட்டாமல் தடுத்து, வீரத்தின் வழுவாத மேன்மையுடையவர்களாய் விளங்கினார்கள். மன்னனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது, அவ னுடைய படை வன்மையன்று; யாரிடத்தும் விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையில் நடந்துகொள்ளும் அரசியல் முறையேயாம். வேலன்று வென்றி தருவது; மன்னவன் கோல்; அதூஉம் கோடா தெனின். என வரும் வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாம். மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நோக்கி, அறத்தின் வழிப்பட்ட அரசியல் முறையினை ஒரு புறப்பாடலால் (புறம். 55) அறிவுறுத்துகின்றார்: வேந்தர் பெருமானே, யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகளாலும் மன்னர்களது சேனை சிறப்புற்றிருந்தாலும், அறநெறியை அடிப்படையாகக் கொண்டதே அரசர் பெறும் வெற்றியாகும். அதனால், `இவர் நமக்கு வேண்டியவர், எனக் கருதித் தம்மவர் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக் கொள்ளாமலும், `இவர் நமக்கு அயலார், எனக் கருதிப் பிறருடைய நற்குணங்களைப் போற்றாமலும், ஞாயிற்றை ஒத்து வெம்மை மிக்குத் தீயாரைக் கொல்லும் வீரமும், திங்களை யொத்து உளங்குளிர்ந்து நல்லாரைப் போற்றும் அருளுடை மையும், மழையைப்போன்று எல்லார்க்கும் வரையாது வழங்கும் வண்மையும் என இம்மூன்று குணங் களையும் உடைய வனாகி, வறுமையுற்றார் நின்னாட்டில் இல்லையாக, நீ நெடுங்காலம் வாழ்வாயாக! என மருதன் இளநாகனார் நன்மாறனுக்கு அரசியல் முறையினை அறிவுறுத்தினமை கருதத் தகுவதாம். அறத்தினை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றதே தமிழ் வேந்தரது அரசியல் நெறியாகும். 1 அக்காலத் தமிழ் மன்னர் மேற்கொண்ட போர் முறையும் அறத்தின் வழியமைந்ததேயாகும்.2 ஒரு நாட்டின் மேற் போர் தொடங்குதற்கு முன் அந்நாட்டிலுள்ள பசுக்களையும், பசுப்போன்று தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலற்றராகிய பார்ப்பார், பெண்டிர், பிணியாளர், மூத்தோர், குழந்தைகள், பிள்ளைப்பேறில்லாத ஆடவர் என்னும் இவர் களையும் இடர் நேராமற்போற்றிக் காத்துப் படை வீரர்களுடன் மட்டும் போர் செய்யும் முறை பண்டைத் தமிழ் மக்களின் போரறமாகக் கருதப்பட்டது.3 அறத்தின் வழியினைப் புலப்படுத்திப் பெரியார் சென்ற நெறிமுறையிலே தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வதாயிற்று. அதனால், தமிழர் எத்தகைய இடையூறுமின்றி இனிது வாழ்ந்தனர். `தொண்டைமான் இளந்திரையனால் ஆளப்பெற்ற நிலப் பகுதியிலே வழிப் போவாரைக் கதறும் படி தாக்கி அவர்கள் கையிலுள்ள பொருள்களைப் பறித்துக்கொண்டு களவு செய்வார் இல்லை; அந்நாட்டில் இடியும் வீழ்வதில்லை; பாம்பும் தீண்டி வருத்துவதில்லை; காட்டின்கண்ணுள்ள புலி முதலிய விலங்கு களும் பிறர்க்குத் துன்பஞ் செய்வதில்லை, எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் தொண்டைமானது செங்கோன்மையைப் பாராட்டுகின்றார். 4 அரசனுக்குப் படைவீரர் உடம்பாகக் கருதி வளர்க்கப் பெற்றனர். `நின்னுடன் பழையதாய் முதிர்ந்த உயிரினும் அவ் வுயிருடனே கூடி முதிர்ந்த நின் உடம்பை யொத்த வாட்படை வீரர் எனப் பாண்டியனை நோக்கி, அவனுடைய படை மறவர் களைப் புலவரொருவர் பாராட்டிப் போற்றுகின்றார். 1 ‘அரசர் பெருமானது திருமேனியாய் விளங்கும் சேனாமுகம் வாழ்க! எனப் பறையறைவோன் செங்குட்டுவனையும் அவனுக்கு உடம்பாய் விளங்கிய சேனையையும் வாழ்த்தியதாக இளங்கோவடிகள் கூறுவர்.2 மன்னனது உடம்பாய் விளங்கிய தமிழ்ப்படை வீரர்கள் கூற்றுவனே வெகுண்டு போருக்கு வந்தாலும் மனம் விரும்பி எதிர் நின்று பொருது வெல்லும் ஆற்றலுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள்.3 இத்தகைய தறுகண்மை மிக்க தமிழ் வீரர்களாற் சூழப்பெற்ற மன்னர் தாம் எண்ணியது முடிக்குந் திண்மை பெற்று விளங்கினர். தம் முன்னேற்றத்திற்க இயற்கையே தடையாய் நின்றாலும், அதனை மாற்றித் தாம் நினைத்தது முடிக்கும் ஆற்றல் தமிழ் வேந்தர்பால் நிலை பெற்றிருந்தது. சங்ககாலத்தில் வாழ்ந்த கரிகால் வளவன் எண்ணியது முடிக்குந் திண்ணியனாய் விளங்கிய திறத்தைப் பட்டினப்பாலைப் பாட்டு விரிவாக எடுத் துரைக்கின்றது: மலைஅகழ்க் குவனே! கடல்தூர்க் குவனே! வான்வீழ்க் குவனே! வளிமாற் றுவன்! எனத் தான்முன் னியதுறை போயினான் கரிகால் வளவன் என்றும், அவ்வாற்றலாற் குறுநிலமன்னர்களையும் பெருநில வேந்தர்களையும் வென்றடக் கினான் என்றும், காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கினான் என்றும், தன் தலைநகராகிய உரையூரைப் பெருக்கிக் கோயிலொடு குடிகளை நிலைபெற அமைத்தான் என்றும் கடியலூர் உருத்திரக் கண்ணனார் கரிகாலனது நினைத்தது முடிக்கந் திறத்தை வியந்து போற்றுகின்றார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவரை நோக்கி, ‘நீவிர் எம்மால் ஆளப்படும் நாட்டிலிருந்தும் எம்மை நினைப்பதில்லையே! என அன்பினால் வினாவினான். அது கேட்ட புலவர், பரந்த சேனைகளையுடைய அரசே, நீ சினந்து நோக்கும் பகைவர் நாடுகள் தீயாற்சுடப்பட்டு அழிகின்றன. நீ அருளுடன் நோக்கும் நண்பர் நாடுகள் பொன் விளையும் புது வளம் பெறுகின்றன. நீயோ, வெம்மை மிக்க ஞாயிற்றினால் நிலவை உண்டாக்கிக் கொள்ள விரும்பினாலும், குளிர்ச்சி மிக்க சந்திரனால் வெயிலைப் பெற வேண்டினாலும் நீ விரும்பியதைச் செயற்கையினால் விளைவித்துக் கொள்ளும் நுண்ணறிவுடையவனாய் விளங்கு கின்றாய் ஆதலால், பரிசிலர் பலர் வெளி நாட்டிலிருந்தும் நின்னையே நினைக் கின்றனர். நாங்களோ, நின்னாற் பாதுகாக்கப் பெறும் இச்சோழ நாட்டிற்பிறந்தமையால், என்றும் நினது அருள் நிழற்கண்ணே வளரும் இயல்புடையோம். இவ்வாறு நினது காவலில் வாழும் நாங்கள் நின்பால் வைத்த விருப்பத்தை வெளியிட்டுச் சொல்லவும் வேண்டுமோ! 1 என அன்பினால் உளமுருகிக் கூறிய மறுமொழி அக்காலத் தமிழ் வேந்தர்களது செயற்கரிய செய்யுந்திறனை நன்கு தெளிவிப்பதாகும். இவ்வாறே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனது போர்த் திறத்தை உணர்ந்து மகிழ்ந்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர், கூற்றுவெகுண்டு வரினும் மாற்றும்ஆற் றலையே. என அவ்வேந்தர் பெருமானை வியந்து போற்றுகின்றார். நட்டவர் குடியுயர்க்குவை; செற்றவர் அரசு பெயர்க்குவை. எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாராட்டிப் போற்றுகின்றார். இங்ஙனம் பேராற்றல் பெற்ற தமிழ் வேந்தர்கள், போர்க்களத்தின்கண்ணே படை வீரர்களுக்குக் கவசம் போலப் பகைவர் சேனையை எதிர்த்து நிற்கும் இயல்புடையவர்களாய் இருந்தார்கள். அதனால், அவர்களைச் `சான்றோர் மெய்ம்மறை (வீரர்க்குக் கவசம்) எனப் புலவர் பெருமக்கள் புகழ்ந்து போற்றினார்கள்.1 பகை வேந்தர் ஆட்சியுட்பட்டுக் கலங்கித் தளர்ந்து கெட்ட குடிகளை அச்சமின்றிப் போர் புரியும் வீரர்களாகப் பழக்கி உரிமையுடன் வெற்றி பெற உதவி செய்யுந் திறம் தமிழ் வேந்தர் கொண்டொழுகிய நாகரிக நிலையாகும். இம்முறையாற் பெறும் அரசியல் வெற்றியைத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி (பதிற். 37) எனவும், பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்றம் (பதிற். 69) எனவும் புலவர் பெருமக்கள் சிறப்பித்துள்ளார்கள். இவ்வாறு நாட்டு மக்களின் விருப்பத்தை நன்குணர்ந்து, அவர்களுக்கு வேண்டும் அறிவும் ஆற்றலும் படைப்பயிற்சியுந் தந்து ஆட்சி புரியும் செவ்விய முறை பண்டைத் தமிழ் மன்னர்பால் நிலை பெற்றிருந்ததனால், மக்கள் அவ்வேந்தர்களது ஆணையின்கீழ் அடங்கி வாழ்தலையே தங்களுக்குரிய பெரும்பேறாகக் கருதி மகிழ்ந்தார்கள். குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. என வருந் திருவள்ளுவர் வாய் மொழி தமிழ் நாட்டு அரசியலில் நிலைபெற்ற நற்பயனை விளக்குவதாயிற்று. வடபுலத்தில் வாழ்ந்த ஆரிய மன்னர், தமிழ் வேந்தர்களின் பேராற்றலையும், போரென்றால் விரும்பிச் செல்லும் தமிழ் வீரர்களின் ஊக்கத்தினையுங் கண்டு, தமிழர் சேனை தம் நாட்டின்மேல் வருதலும் கூடும் எனக்கருதி உறக்கமின்றி வருந்துவாராயினர். 2 வட நாட்டில் நிகழ்ந்த திருமண விருந்தொன்றிற் கலந்து கொண்ட கனகன், விசயன் என்னும் ஆரிய மன்னர் இருவரும் இமயம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி கொண்ட தமிழ் மூவேந்தர்களின் வன்மையினை இகழ்ந்து பேசினரெனவும், அச்செய்தியை முனிவர் சிலர் சொல்லக் கேட்டுச் சினந்தெழுந்த செங்குட்டுவன், வடநாட்டின் மேற்படையெடுத்துச் சென்று, கனக விசயர் இருவரையும் போரிற்பிடித்துக் கண்ணகியார் திருவுருவத்திற்குரிய கல்லினை அவர்தம் தலையில் ஏற்றிக் கொணர்ந்தானெனவும் வரும் வரலாறு இளங்கோவடிகளால் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் விரித்துரைக்கப் பெறுகின்றது. தனது சேனை வடநாட்டின் மேற் செல்லுதற்குரிய நோக்கத்தினைக் கூறக் கருதிய செங்குட்டுவன், காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றங் கொண்டு, இச் சேனை செல்வது எனக் காரணங் கூறும் பகுதி, அக்காலத் தமிழ் வேந்தர்களின் தமிழுணர்ச்சியையும் அதன் வழித் தோன்றிய நாட்டுப் பற்றினையும் நன்கு புலப்படுத்துவதாகும். சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் தமிழ்க் குலத்தாரது வளர்ச்சியைக் கருதி ஒற்றுமை உணர்ச்சியுடன் தமிழகத்தின் அரசியலை நிகழ்த்தினார்கள். அதனால், தமிழகம் `பூசல் அறியா ஏம நன்னாடாய்த் திகழ்வதாயிற்று. தமிழ் நாட்டில் அமைதியாய் வாழ்ந்த தமிழ் மக்கள், எப்பொருளையும் தடையின்றி எண்ணியறியவும், உள்ளக் கருத்துக்களை உரிமை யுடன் வெளியிட்டுரைக்கவும், எத்தொழில்களையும் தடையின்றிச் செய்து முடிக்கவும் வேண்டிய உரிமை உணர்வுடன் புகழ் பெற்று விளங்கினார்கள். II தமிழர் வாழ்வியல் சங்ககாலத் தமிழகத்தின் அரசியல், உரிமை வாழ்வினை வளர்த்தற்குரிய வேலியாய் விளங்கியது. அதனால், அக்காலத் தமிழ் மக்கள் பசியும் பிணியுமற்று, நல்வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையின் சிறப்பியல்புகளை ஒரு சிறிது நோக்குவோமாக: மக்களது நல்லறிவின் பயனாய் அமைவது ஒழுக்கமாகும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி அடைதற்குக் காரணமாகிய ஒழுக்கவுணர்வுடைய மக்கள் `உயர்திணை எனச் சிறப்பிக்கப் பெற்றார்கள். அவ்வொழுக்க வுணர்ச்சியில்லாத எனைய உயிர்களும் உயிரல் பொருள்களும் `அஃறிணை என வழங்கப் பெற்றன. உலகப் பொருள்களையெல்லாம் உயர்திணை அஃறிணையென இரண்டாக வகுத்தலும்; `ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என ஐம்பாலாகப் பகுத்து வழங்குதலும் தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்பியல்புகளாம். விலங்கு முதலிய தாழ்ந்த உயிர்களினின்றும் மக்களைப் பிரித்து உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமே. ஒழுக்கம் மேன்மேலும் உயர்வைத் தருதலால், அதனை உயிரினும் சிறந்ததாகப் போற்றுதல் வேண்டுமெனத் தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்துவாராயினர். ஒழுக்கமில்லாதார், மக்கள் வடிவிற் காணப்பட்டாலும், மாக்கள் (விலங்குகள்) என்றே இழித்துரைக்கப்படுவர். பண்டைத் தமிழர் மாந்தர் எல்லாரையும் ஒரு குலத்தவ ராகவே மதித்துப் போற்றினர். ஒத்த அறிவும் செயலும் உடைய மக்களைப் பல்வேறு சாதியினராகப் பிரித்து வேறுபாடு கற்பிக்கும் இருநிலை, சங்ககாலத் தமிழரிடையே காணப்படாததொன்றாம். `மக்கள் செய்யுந் தொழில் வேற்றுமை காரணமாகவே அவர் களிடையே உயர்வு தாழ்வுகள் உண்டாகும், என்பது தமிழர் துணிபு. தமிழ் மக்களுடைய பழைய இலக்கண நூலாய் விளங்குவது தொல்காப்பியம். அந்நூல் மக்கள் வாழ்க்கையினை `அகம், புறம் என இருவகையாகப் பகுத்து விளக்குகின்றது. ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கலந்து வாழும் குடும்ப வாழ்வினை அகவாழ்வென்றும், இங்ஙனம் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் ஒன்றி வாழ்தற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் தமிழர் மரபாகும். `அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்று பொருள் களையும் `மும்முதற்பொருள் எனத் தமிழர் பாராட்டிப் போற்றுவர். எல்லாவுயிர்களாலும் விரும்பப்படுவது இன்பம். அவ்வின்பத்திற்குக் காரணமாக மக்களால் ஈட்டப் பெறுவது பொருள்; நடுவு நிலையில் நின்று அப்பொருளையீட்டுதற்குரிய ஒழுங்கு முறை அறம். அறத்தினாற் பொருள் செய்து அப் பொருளால் இன்பம் நுகர்தல் மக்கள் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை ஆசிரியர் திருவள்ளுவனார் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பால்களாக வகுத்து விளக்குகின்றார். அகவொழுக்கத்தை ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகையாக விரித்து விளக்குவர். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவர், இல்லிருந்து நல்லறஞ்செய்தற்கு இன்றியமையாத அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணர்ச்சியே ஐந்திணை எனப்படும். தலைவன் தலைவி என்னுமிருவரும் தம்முட் கூடி மகிழ்தலும், உலகியற்கடமை நோக்கித் தலைவன் சில நாள் தலைவியைப் பிரிந்து செல்லுதலும், பிரிந்த தலைவன் குறித்த நாளளவும் தலைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும், கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் ஆற்றாமை மிக்கு மனைவி இரங்குதலும், பின் அவன் வந்த போது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக இவ்வகத்திணையினை விரித்துரைப்பர். இவ்வைந்து ஒழுகலாறுகளையும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பெயரிட்டு வழங்குவர். மேற்கூறிய அன்பினைந்திணையாகிய அகவொழுக்கம் `களவு, கற்பு என இரு வகைப்படும். உருவும் திருவும் உணர்வும் முதலியவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, அன்பினால் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய், உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல் களவாகும். `மறைவில் நிகழும் ஒழுகலாறு என்ற கருத்திலேயே `களவு என்னும் சொல் வழங்குகின்றது. இங்ஙனம் மறைந்தொழுகுதலைத் தவிர்ந்து, பெற்றோர் உடன்பாடு பெற்று, இருவரும் உலகத்தார் அறிய மணஞ்செய்து கொண்டு மனையறஞ்செய்தலே `கற்பு எனப்படும். கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற்கூடி வாழ்தலில் விருப்புடையராக, மற்றவர் அவர் உறவில் விருப்பின்றி ஒழுகுவது கைக்கிளையாகும். கைக்கிளை யென்பது, ஒருதலைக்காமம். ஒருவனும் ஒருத்தியும், தம்முள் அன்பில்லாதவராய் இருந்தும், கணவனும் மனைவியுமெனப் பிறராற்பிணைக்கப்பட்டு, அன்பின்றிக் குடும்பம் நடத்துதல் பெருந்திணையாகும். இவ்வாறு பொருத்தமில்லாத உறவு உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலான், இதனைப் பெருந்திணை என்ற பெயரால் வழங்குவாராயினர். பொன்னும் பொருளும் பிறவளங்களும் ஆகியவற்றை விரும்பி ஒருவரையொருவர் மணத்தற்கு ஒருப்படுதல் பொது மக்களின் இயல்பாகும். மணற்கேணியினைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போலக் கணவனும் மனைவியும் எனப் பன்னாள் பழகப் பழகச் சிறப்புடைய அன்பு தோன்றிப் பெருகுதல் இப்பொது வாழ்வின் பயனாகும். கணவனும் மனைவியுமாகப் பல பிறவிகளினும் ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடை யாரிருவர், மீண்டும் பிறந்து வளர்ந்து, நல்லூழின் செயலால் ஓரிடத்து எதிர்ப்படுவராயின், அன்பினால் நிறைந்த அவ் விருவருடைய நெஞ்சமும் செம்மண் நிலத்திற்பெய்த மழை நீரைப் போலக் கலந்து ஒன்றாகும் இயல்புடையனவாம். ஒருவரை யொருவர் முன் கண்டு பழகாத நிலையிலும் அவர்கள் உள்ளத்திற் பண்டைப் பிறப்பிற்பெருகித் தேங்கியிருந்த அன்பு வெள்ளம், அவ்விருவரும் ஒருவரையொருவர் கண்ட அளவிலேயே நாணமும் நிறையுமாகிய அணைகளைக் கடந்து, நிலமும் குலமுமாகிய தடைகளை அழித்து ஒன்றாகும் இயல்பே இயற்கைப் புணர்ச்சி எனத் தமிழ் மக்களாற் சிறப்பித்து உரைக்கப்படுவதாம். இவ்வாறு முதற்காட்சியிலேயே அன்பின் தொடர்புணர்ந்து, ஒருவரை யொருவர் இன்றியமையாதொழுகும் இயல்புடையாரை நல்வாழ்விற்சிறந்த தலைமக்கள் எனத் தமிழ் மக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இத்தகைய தலைமக்களது ஒழுகலாறே சங்க இலக்கியங்களில் விரிவாக விளக்கப் பெறுகின்றது. ஒருவர் வாழ்வில் மற்றவர் குறுக்கிட்டுப் பூசல் விளைக்கும் குழப்பநிலையைத் தடுத்து, மக்களுள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய குற்றமற்ற இன்பங்களை அடைதற்கு மேற்கொள்ளும் செயல் முறைகளே `புறத்திணை எனப் போற்றப் பெறுவன. இப்புறவொழுக்கங்களை மேற்கொள்ளுதற்குரிய வரம்பு, `அரசியல் எனப்படும். இவ்வரசியல் வாழ்வில் நன்கு மதிக்கத் தக்க தலைவன், மன்னனாவான். மன்னனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகிய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் எல்லாம் நாட்டு மக்களக்கும் இன்றியமையாதனவாம். நடுவு நிலையில் நின்று நாட்டினையாண்ட அரசன் மக்களால் இறைவனாக மதித்து வழிபடப் பெற்றான். கொடியவர்களால் துன்புறுத்தப்பட்டாரும், வறுமையால் வாட்டமுற்றாரும் ஆகிய பலரும் தம் குறைகளைச் சொல்லி நலம் பெறுதற்கு ஏற்ற முறையில் காட்சிக்கு எளியராகவும் இன் சொல்லுடையராகவும் பண்டைத் தமிழ் வேந்தர் விளங்கினார். அவர்கள் அரசியற்பாதுகாப்புக்காக நாட்டு மக்களிடமிருந்து பெறும் பொருள், விளைவதில் ஆறிலொன்றாகிய நிலவரியே யாகும். அதுவன்றி, நாடு காவலுக்கென மக்கள் தரும் சிறு தொகை `புரவு வரி என வழங்கப் பெறுவதாகும். வாணிபம் செய்பவர்பாற்பெறும் சுங்கப் பொருளும் பகைவர் தந்த நிறைப் பொருளும் அரசாங்கத்திற்குரியனவாம். இப்பொருள்கள் நாட்டின் காவலுக்குரிய படைகளுக்கும், அரண் முதலிய பிற சாதனங்களுக்கும், நீர்நிலை பெருக்கல், பெருவழியமைத்தல், மன்றங்களில் நீதி வழங்கல், இளமரச் சோலை அமைத்தல் முதலிய பொதுநல வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் பெற்றன. அரசனது செல்வம் அறனும் பொருளும் இன்பமும் என்ற மூன்று பொருளையும் நாட்டில் வளர்த்தற்கு உரியது. அரசியற்கு உறுதி கூறும் இயற்றமிழ் வல்ல புலவர்களும், இசையால் மக்களுடைய மனமாசு கழுவி மகிழ்விக்கும் இசைத்தமிழ் வல்ல பாணர்களும், உழைத்து அலுத்த மக்களுக்கு உயர்ந்த கதைகளை நடித்துக் காட்டி அவர்களை ஊக்கும் நாடகத்தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரும் தம் சிறந்த புலமைத் திறத்தால் மக்களால் வரிசை தந்து நன்கு மதிக்கும் உயர்ந்த பரிசுடையராதலின், இவர்களைப் `பரிசிலர் என்ற பெயரால் தமிழர் பாராட்டிப் போற்றுவாராயினர். பிணி முதலிய காரணங்களால் எத்தகைய தொழிலும் செய்து வாழ்தற் குரிய வசதி பெறாது வறுமையால் வாட்டமுற்றுப் பிறர்பால் இரந்துண்டு வாழும் எளியவர், `இரவலர் என்ற பெயரால் வழங்கப்படுவர். பகைவர் தந்த திறைப்பொருளைக் கலைச் செல்வராகிய பரிசிலர்க்கும் ஆற்றலற்ற எளியோராகிய இரவலர்க்கும் வரையாது கொடுத்தறித்தலைத் தமிழ் வேந்தர் தம் சிறப்பியல்பாகக் கொண்டிருந்தனர். பரிசிலர் தமக்குரிய கலைத் திறத்தில் திறமை பெற்று வந்தாலும், திறமையின்றி வந்தாலும், வறுமையான் வந்த அவர்தம் பசித் துன்பத்தை உணர்ந்து அருளுடன் பரிசில் தந்து பாராட்டுதல் தமிழ் வேந்தர்களின் கடமையாகக் கருதப்பட்டது. தீயாரை ஒறுத்தலும், நடுவு நிலைமையுடையார்க்கு அருள் புரிதலும் ஆகிய நீதி முறையில் சோம்பலின்றித் தமிழ் வேந்தர் இடைவிடா துழைப்பாராயினர். அதனால், மாந்தர் எல்லாராலும் வெறுப்பின்றிக் கண்டு போற்றும் இறைமை (தெய்வ)த் தன்மை யுடையவராக வேந்தர் நன்கு மதிக்கப் பெற்றனர். நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று கருதித் தம் மனம் போனபடி முறை பிறழ்ந்து நடக்கும் சிற்றினத்தாரைத் தம் ஆட்சிக் குழுவினின்றும் விலக்கினர்: நம் நாட்டிற்கெனப் போர்க் களத்தில் உயிர் வழங்குமியல்பினராகிய படை வீரர்களை வறுமையகற்றித் தம்மைப்போலப் பரிசிலர்க்கு வழங்கும் வண்மையுடையவராகப் பெரும் பொருள் தந்து ஆதரித்தனர். அதனால், அவ்வீரர்கள் போர் என்று கேட்பின் பகைவர் நாடுகள் எவ்வளவு தூரமாயிருந்தாலும் விரைந்து சென்று போரில் வெற்றி தந்தார்கள். போரில்லாது சும்மா இருத்தலில் வெறுப்படைந்த வீரர்கள், ‘எங்கள் வேந்தன் எங்களைப் போருக்கு ஏவாதிருத்தலால் யாங்கள் எங்களுக்குள்ளேயே போர் செய்து சாவேம்! எனக் கருதி நண்புடையர்களாகிய தங்களுள்ளே போர் செய்ய எண்ணுதலும் உண்டு. இவ்வாறு போரில் விருப்பமுடைய படைவீரர்களை யுடைய தமிழரசர்கள் தாங்கள் எண்ணிய படியே தங்கள் நாட்டை வளம்படுத்தி உருவாக்கும் ஆற்றல் பெற்று விளங்கினார்கள். பெரு வெள்ளத்தால் உண்டாகும் பூசல் அல்லது மக்கள் ஐயோ என முறையிடும் பூசல் - நேராதபடி தம் நாட்டு மக்கள் அமைதியாக வாழும் வண்ணம் முறை செய்தார்கள். புலி தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல வேந்தர்களும் தங்கள் குடிமக்களைப் போற்றிப் பாதுகாத்தார்கள். `கொல்லுந் தன்மை யுடைய யானைகளும், மனஞ் செருக்குற்ற குதிரைகளும், நெடுங்கொடி யுடைய பெரிய தேர்களும், உள்ளத் திண்மை படைத்த போர் வீரர்களும் எனும் நாற் பெரும்படைகளால் வேந்தர் சிறப்புற்றிருப்பினும், அறநெறியை முதலாகக் கொண்டு நிகழ்வதே அரசரது வெற்றியாகும், என்ற கருத்தினைப் புலவர்கள் வேந்தர்க்கு அறிவுறுத்தினார்கள். தமக்குரியார் என்று கருதி அவர் செய்யும் கொடுந் தொழிலைப் பொறுத்து முறை பிறழாமலும், அயலார் என்ற கருதி அவர்களுடைய நற்குணங்களைக் கெடாமலும், ஞாயிற்றையொத்த வீரமும் திங்களையொத்த அருளாற்குளிர்ந்த மென்மையும் மழையைப் போன்ற பெருவண்மையும் உடையவர்களாகி, வறுமை என்பதே தம் நாட்டில் இல்லையாக நெடுங்காலம் அரசு புரிந்தார்கள். தமிழ் வேந்தர் எல்லாரும் மக்களுக்குக் கண் என்று போற்றப் பெற்ற கல்வித் துறையிற் சிறந்த பயிற்சியுடையவராய் விளங்கினர். அற நூற்றுறையிலும், அவ்வறத்தின் வழிப்பட்ட அரசியல் நூலிலும், போர்த்துறையிலும் நிரம்பிய பயிற்சி யுடையவராய் விளங்கினர். அரசியற் கல்வியிலன்றி இலக்கியத் துறையிலும் நிரம்பிய அறிவுடையராய்ச் செய்யுள் பாடும் சிறப்பமைந்த செந்தமிழ்ப் புலவராயும் விளங்கினர் என்பது பண்டைத் தமிழ் வேந்தர்கள் பாடியனவாயுள்ள சங்கச் செய்யுட்களால் இனிது புலனாம். வேந்தராற் பாடப்பெற்ற செய்யுட்களெல்லாம் அவர்தம் உள்ளத்திலமைந்த விழுமிய எண்ணங்களை வெளிப்படுத்தி நாட்டு மக்களை உயர்த்தும் நலமுடையனவாய்த் திகழ்கின்றன. தமிழ் வேந்தர் சிறந்த கல்வியுடையராகவே, அவர்தம் கல்வி அவரால் ஆளப்பெறும் நாட்டு மக்கள் எல்லாருக்கும் பயன்படுவதாயிற்று. `ஒரு நாட்டு அரசியலுக்க இன்றியமையாது வேண்டப் பெறுவது கல்வியே, என்பதனைத் தமிழ் மக்கள் நெடுங்காலமாய் உணர்ந்திருந்தார்கள். ஆசிரியர் திருவள்ளுவனார் பொருட்பாலில் இறைமாட்சியினை அடுத்து அரசனுக்கு இன்றியமையாத கல்வியினை வற்புறுத் துரைத்தலால், இவ்வுண்மை நன்கு தெளியப்படும். கல்வி யுடையார் கருத்தின் வழியே அரசியலும் நடைபெறுதல் வேண்டும் என அக்காலத் தமிழ் வேந்தர் எண்ணினர். கற்ற தமிழ்ப் புலவர்களைப் போற்றி, அவர்கள் அஞ்சாது கூறும் அறிவுரைகளை வெறுக்காது ஏற்றுக் கொண்டு, தமிழ் மன்னர்கள் தங்கள் தவறுகளைப் போக்கித் திருந்தி வாழ்ந்தார்கள். அரசன் பால் தவறு கண்டவிடத்து அவனை அடித்துரைத்துத் திருத்தும் உரிமை, அந்நாட்டில் வாழும் சான்றோர்களுக்கு உரியதாயிருந்தது. அக்கருத்தினால் அரசியல் வினைக்குழுவில் நாட்டிலுள்ள பெருமக்களுட் சிலரும் இடம் பெற்றிருந்து, குடிமக்களுடைய குறைகளை அவ்வப்போது அறிவித்து வருவாராயினர். ஐம்பெருங் குழுவில் `மாசனம் எனக் குறிக்கப்பட்டார் இத்தகைய சான்றோரேயாவர். தமிழ் நாட்டில் தலைநகரங்கள் தோறும் அறங்கூறவையம் (நீதி மன்றம்) அரசர்களால் நிறுவப் பெற்றன. நாட்டிலுள்ள மக்களால் தீர்க்க முடியாத பெரிய வழக்குகளெல்லாம் இத்தகைய அறங்கூறவையத்தில் முடிவு செய்யப்படுவனவாம். இவ்வையில் நீதி வழங்குதற்குரிய திறம் பெற்ற தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பு வேந்தனைச் சார்ந்ததாகும். அரசர்கள் நடு நின்று நீதி வழங்குதற்குரிய திறனுடையவர் களையே தேர்ந்து நியமித்தல் வழக்கம். இதன்கண் அமர்ந்து நீதி வழங்கும் முதியோர், இவ்வவையில் நுழைவதற்கு முன்னரே தம் உள்ளத்தமைந்த பழைய பகைமையினையும் மாறுபாட்டினையும் நீக்கிப் புகுவர். இத்தகைய நீதி மன்றங்கள் சோழர் தலைநகராகிய உறையூரிலும், பாண்டியர் தலைநகராகிய மதுரையிலும் அரசர் ஆதரவில் நிகழ்ந்தன. இவையேயன்றி, முறை வழங்கும் அவைகள் சிற்றூர் களிலும் நிறுவப்பட்டிருந்தன. இவ்வவையின் இயல்பினை `எட்டு வகை நுதலிய அவையம் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எட்டுவகைப் பண்பு களாலும் நிரம்பிய தகுதியுடையவர்களே இவ்வவையில் நீதி வழங்கும் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்கள். ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர், குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். `கள்ளூர் என்ற ஊரில் அறனில்லாதான் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியோனை மரத்திற் பிணித்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்தித் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனார் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அகம். 256) குறிப்பிடுகின்றார். இந்நிகழ்ச்சியால் ஊர்ச் சபையார்க்குத் தம்மூரில் நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ் வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாம். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர் மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். இரவிற் கள்வர் முதலியவர்களால் மக்களுக்குத் தீங்கு நேராதபடி ஊர்தோறும் ஊர் காவலர் நியமிக்கப்பட்டிருந்தனர். நடுவு நிலைமையும் அருட்குணமும் வினையாண்மையு முடையவர்களையே அரசர்கள் தங்களுக்கு அமைச்சர்களாகத் தேர்ந்துகொண்டார்கள். நடுவு நிலைமையைக் கைவிட்டு நீங்கி, அருளில்லாத அமைச்சன் தான் விரும்பியதைச் சொல்ல, அது கேட்டு மன்னன் முறை பிறழ்ந்து நடப்பானானால், அவனது கொடுங்கோல் ஆட்சியின் வெம்மையினாற் குடிமக்கள் பெரிதும் வெதும்பித் துன்புறுவர் என்பதனை அக்காலத் தமிழ் வேந்தர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். தமிழ் வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும், அதனை அடுத்து ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும் அரண்களாகக் கொள்ளப் பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள், மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற் களாற் சுண்ணாம்புச் சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையுமுடையனவாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர் செய்தற்குரிய அறைகள் மதிலில் அமைக்கப் பட்டிருந்தன. `ஞாயில் என்னும் பெயரால் இலக்கியங்களிற் சொல்லப்படுவன இவ்வறைகளேயாம். இவ்வறைகளில் நின்று வீரர்கள் செலுத்தும் அம்புகள் புறத்தே பகைவர் மேற்படும் படியாகவும், வெளியே நின்ற பகைவர் செலுத்துவன உள்ளே புகாதபடியும் உள்ளே அகன்றும் உயர்ந்தும் வெளியே குறுகித் தாழ்ந்தும் அமைந்த துளைகள் மதிலின்கண் அமைக்கப்பட்டன. இவற்றை `ஏப்புழை என்பர். (ஏ-அம்பு; புழை - துளை. ஏப்புழை - அம்பு செலுத்தும் துளை) செய்து கொள்ளப்பட்ட இவ்வரண்களேயன்றி, இயற்கையாய் அமைந்த மலைகளையும், காடுகளையும், கடத்தற்கரிய நீர் நிலைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் நாட்டிற்குரிய அரண்களாகக் கருதினார்கள். வேந்தரால் நன்கு மதிக்கப்பட்டு `வேள் எனவும், `அரசு எனவும் சிறப்பெய்திய படைத் தலைவர்கள், தங்கள்பாற் பயிற்சி பெற்ற போர் வீரர்களுடன் போருக்குரிய இலக்குகளாகிய மலைப்பக்கங்களில் தங்கி, அந்நிலப் பகுதிகளைக் காவல் புரிந்தார்கள். பிற நாட்டார் தமிழகத்தின் மேற்படை யெடுத்து நுழையாத படி அவர்களைத் தடுத்துப் பொருதழித்தற் குரிய படை வீரர், இம்மலைப் பகுதிகளில் வேந்தர்களின் ஆணையால் தங்கியிருந்தனர். பாரியின் முன்னோர் பறம்பு மலையையும், பேகனுடைய முன்னோர் பொதினி மலையையும், நள்ளியின் முன்னோர் தோட்டி மலையையும், ஆய் அண்டிரன் குடியினர் பொதியமலையையும், காரியின் முன்னோர் முள்ளூர் மலையையும், ஓரியின் முன்னோர் கொல்லி மலையையும், அதியமான் குடியினர் குதிரை மலையையும். நன்னன் முன்னோர் நவிர மலையையும் தமக்குரிய தலைமை இடங்களாகக்கொண்டு படையொடு தங்கினமை உய்த்துணர்தற்கு உரியதாம். வேந்தரால் நன்கு மதிக்கப்பெற்ற இப்படைத்தலைவர்கள், வேந்தரது ஆணையால் தாங்கள் தங்கிய நிலப்பகுதிகளின் வருவாயைப் பெற்றுத் தங்களுக்குரிய சிறுநிலப் பகுதிகளை ஆளும் குறுநில மன்னர்களாய் அமைந்து, மூவேந்தர் ஆணையின் கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். தமிழ் வேந்தர்க்குப் போர்க்காலங் களில் படைத்துணையாய் நின்று உற்றுழியுதவுவதே இக்குறுநில மன்னர்களின் கடமையாகும். பெருநில வேந்தராகிய சேர, சோழ, பாண்டியர்களும், அவர்க்குப் படைத்துணை செய்யும் கடமை மேற்கொண்ட இக்குறுநில மன்னர்களும் ஒற்றுமை உடை யவர்களாய் நின்று தமிழகத்தைக் காவல் புரிந்து வந்தமையால், தமிழர் அரசியல் பிற நாட்டாரால் சிதைக்கப்படாது உரிமையோடு வளர்வதாயிற்று. தன்கண் வாழ்வார் அனைவரும் பசி நீங்கி வாழ்வதற்கேற்ற குறையாத உணவுகளை யுடையதே நாடெனச் சிறப்பிக்கப்படும். இவ்வுணவின் மூலமாக நிலை பெறுவதே உடம்பாகும். அதனால், பசித்தார்க்கு உணவளித்தார், உயிர் கொடுத்தார் எனப் போற்றப் பெறுவர். உணவென்பது நிலத்துடன் கூடிய நீரால் விளைவதாகும். பிற உணவுகளை விளைவித்தற்குக் காரணமாகித் தானும் உணவாய்ப் பயன்படுவது நீராகும். ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளிற் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நீர் நிலைகளிற் பாய்ச்சிப் பண்டைத் தமிழ் வேந்தர் நாட்டை வளம்படுத்தினர். சோழர் பெருமானாகிய கரிகால் வளவன் காவிரிக்குக் கரைகட்டி, அதன் நீர் பல கால்கள் வழியாக நாடெங்கும் பாய்தற்குரியதாக வளம்படுத்திய வரலாறு சிறப்பாகக் கருதற்குரியதாம். நெல் முதலிய விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து இருத்தலாற் பயனில்லையென உணர்ந்த சோழ மன்னர்கள், சிறப்பாகத் தங்கள் நாடு முழுவதும் ஏரி முதலிய நீர் நிலைகளை எங்கும் உண்டாக்கி உணவுப் பொருளை நிறைய விளைவித்து, தங்கள் நாட்டைச் செல்வம் நிறைந்த நாடாக்கி, `வளவர் என்னும் சிறப்புப் பெயரினைத் தங்களுக்கே உரியதாகப் பெற்றார்கள். ஆற்று வசதியின்றி மழை நீரையே எதிர்பார்த்திருக்கும் நிலப்பகுதிகளிற் பள்ளங்கண்ட இடங்களிலே ஏரிகளை வெட்டியமைத்து, மழை நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, அந்நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தினார்கள். உரிய காலத்தில் மழை பெய்யத் தவறி னாலும், முன்னர்ப் பெய்து நீர் நிலைகளில் தேங்கிய நீரால் பருவகாலத்தே பயிர் செய்யும் ஒழுங்கு முறை தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தது. பாண்டிநாடு மழையினை எதிர்பார்த்துப் செய்யும் இயல்புடையதாகும். இவ்வியல்பினையுணர்ந்த குடபுலவியனார் என்னும் புலவர், பாண்டியன் நெடுஞ்செழியனையடைந்து, நாடெங்கும் நீர் நிலைகளைப் பெருக்கவேண்டிய இன்றியமை யாமையைப் பின் வருமாறு அரசனுக்கு அறிவுறுத்தினார்: வேந்தே, நீ மறுமையுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினாலும், ஏனைய வேந்தரது தோள் வன்மையைக் கெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினாலும், இவ்வுலகத்தே நல்ல புகழை நிலைநிறுத்த விரும்பினாலும், அவ்விருப்பத்திற்குத் தகுந்த செயல் முறையினைச் சொல்கின்றேன்; கேட்பாயாக: நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவராவர். உடம்பு அவ்வுணவை முதலாகவுடையதாகும். உணவென்று சொல்லப்படுவது, நிலத்தொடு கூடிய நீர். நீரையும் நிலத்தையும் ஓரிடத்திற் கூட்டின வர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர் களாவார்கள். விதைகளை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் நாடு, விரிந்த நிலப்பரப்பை உடையதாயினும், தன்னை ஆளும் அரசனது முயற்சிக்குச் சிறிதும் பயன்படாது. ஆதலால், இதனைக் கடைப்பிடித்துப் பள்ளமாகிய இடங்களிலே விரைந்து நீர் நிலைகளை இயைவித்தவர், மறுமைச் செல்வமும் வெற்றித் திருவும் புகழும் ஆகிய மூன்றனையும் தம் பெயருடன் சேர்த்து நிலைபெறுத்தினாராவர். அவ்வாறு நீர்நிலைகளைத் தோண்டாது சோம்பியிருந்த மன்னர், இவ்வுலகத்துத் தம் பெயரை நிலை பெறுத்துதலில்லை. என்பது புலவர் கூறிய அறிவுரையாகும். இவ்வறிவுரை நீர் நிலை பெருக்குதலின் இன்றியமை யாமையை இனிது புலப்படுத்தல் காணலாம். வேந்தர் அரசு முறைக்கெனத் தம் குடி மக்களிடம் பெறுதற் குரிய வரிப் பொருளை மக்களது வருவாய் நிலைக்கேற்பப் பெற்று வந்தனர். நாட்டில் மழை முதலியன இன்றிப் பஞ்சம் நேர்ந்த காலத்துத் தாம் பெறுதற்குரிய பொருளை வலிந்து பெறாது, வறுமை நீங்கி நாடு செழித்த காலத்துப் பெற்றுக் கொண்டார்கள். அறிவுடைய வேந்தர் நெறியறிந்து வரி பெறும் முறை இதுவேயாம். இவ்வரிசை முறையினை உணராத அரசியல் அதிகாரிகளால் சில சமயங்களில் மக்களுக்குத் துன்பம் நேர்தலும் உண்டு. அத்துன்பக் காலத்தில் நாட்டிலுள்ள பெருமக்கள் அரசனை அடைந்து, நாட்டு மக்களது நிலைமையினை எடுத்துரைத்து, அரசன் உள்ளத்தை நன்னெறிக்கண் நிறுத்தினார்கள். பாண்டியன் அறிவுடை நம்பி ஆட்சியில் வரிசையுணராத அரசியல் அதிகாரிகளுள் சிலரது தூண்டுதலால் மக்களிடத்து அன்பு கெட வரிகொள்ளும் பழக்கம் ஆங்காங்கே தோன்றுவ தாயிற்று. அதனையுணர்ந்த பிசிராந்தையார் என்னும் பெரும் புலவர் பாண்டியனை அணுகினார். அறிவுடைய வேந்தன் நெறியறிந்து வரி பெறும் முறையினை மன்னனுக்கு விளங்க அறிவுறுத்தல் வேண்டுமென எண்ணிய அப்புலவர், அறிவுடை நம்பியை நோக்கிப் பின் வருமாறு கூறுவாராயினர்: நன்றாக முற்றி விளைந்த நெல்லையறுத்து யானைக்கு நாள்தோறும் இவ்வளவென்று அளவு செய்து கவளமாகக் கொடுத்து வந்தால், ஒருமாவிற் குறைந்த சிறிய நிலத்தின் நெற்கதிரும் ஒரு யானைக்குரிய பல நாளைய உணவாகப் பயன்படுவதாம். நூறு வேலியளவுள்ள பெருநிலப் பகுதியாயினும், அதன்கண் யானையானது இவ்வாறு முறையாகப் பெறும் கவளத்தை விரும்பாது தானே புகுந்து தனித்து உண்ணத் தொடங்குமானால், யானை வாயின்கண் உணவாய்ப் புகுந்த நெல்லைவிட, அதன் கால்களாற் சிதைவது பெரும்பகுதியாகும். அவ்வாறே அறிவுடைய அரசன் மக்கள்பால் வரிபெறும் முறையை அறிந்து வரிகொள்வானாயின், அவனுடைய நாடு அவனுக்குக் கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்துக் கொடுத்துத்தானும் செல்வச் செழிப்புடையதாய் வளர்ச்சி பெறும். வேந்தன் அறிவின் திண்மை இல்லாதவனாகித் தரம் அறியாத அமைச்சர் முதலிய சுற்றத்துடன் கூடி அன்புகெடக் கொள்ளும் வரிப்பொருளை விரும்பித் தவறு செய்வானாயின், யானை புகுந்த நிலம் அவ் யானைக்கும் நிலைத்த உணவினைத்தாராது தானும் அழிவது போல, அவனும் உண்ணப் பெறான்; குடிமக்கட்கும் வருத்தம் மிக, நாடு சிதையும். புலவர் கூறிய பொருளுரையினைக் கேட்ட பாண்டியன், நாட்டு மக்கள்பால் பொருள்பெறும் நெறியறிந்து வரிப்பொருளை வாங்கும் அறிவுடைய வேந்தனாய் விளங்கினான். சான்றோர் கூறும் அறநெறியினைக் கடைப்பிடித் தொழுகும் இயல்பினை நன்குணர்ந்த மாந்தர், `பாண்டியன் அறிவுடை நம்பி என அவனைப் பாராட்டிப் போற்றுவாராயினர். பாண்டியர் தென்கடற்கரையில் வாழும் நெய்தனில் மக்களாகிய பரதவர்களைப் போரிற்பயிற்றித் தமக்குரிய படை வீரர்களாக்கிக் கொண்டார்கள் என மதுரைக்காஞ்சி என்னும் பாட்டுக் கூறும். சேரமன்னர்கள் தளர்ந்த குடி மக்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து அவர்களைப் படை வீரர்களாக்கி வெற்றி கொண்டார்களென்பதைப் பதிற்றுப் பத்து என்னும் நூலால் அறியலாம். நுகர்தற்குரிய பொருளில்லாமை வறுமையாகும். இவ் வறுமையின் விளைவாக நாட்டிற் பசியும் பிணியும் தோன்றி மக்களை வருத்துவனவாம். பசியினால் விளையும் துன்பத் தினையும் அப்பசிப் பிணியைத் தணித்தற்குரிய வழிதுறை களையும் தமிழறிஞர்கள் இடைவிடாதாராய்ந்து, பசிப்பிணியை நீக்குதற்குரிய வழி துறைகளை வகுத்துக் கூறியுள்ளார்கள். நற்குடிப் பிறப்பினையும், நல்லொழுக்கத்தாற்பெறும் சிறப்பினையும், கல்வியறிவினையும், பழிபாவங்களுக்கு அஞ்சுதலாகிய நாணத் தினையும், உடம்பின் அழகினையும் சிதைத்தழிப்பது பசி நோயாகும். இவ்வாறு மக்களுடைய உணர்வொழுக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தல் இப்பசியின் இயல்பாதலின், இஃது `அழிபசி எனப்பட்டது. இப்பசித் துன்பம் நாட்டில் தோன்றாத படி காத்தல், அரசியலின் முதற்கடமையாகும். மிக்க பசியினால் உடலிற் பிணியும் உள்ளத்திற் பகைமை உணர்ச்சியும் தோன்றுத லியல்பு. பசியும் பிணியும் பகையும் நீங்கி, மக்களெல்லாரும் அன்பினாற்கூடி வாழ்வதற்கேற்ற வளமுடைமையே ஒரு நாட்டின் சிறப்பியல்பாகும். உணவினை நிறைய விளைவிக்கும் ஆற்றல் பெற்றார் உழவராவர். வாழ்க்கைக்கு வேண்டும் ஏனைய பொருள் களெல்லாவற்றையும் இயற்றித் தர வல்லவர் தொழிலாளராவர். தம் முயற்சியால் தம் நாட்டிலுள்ளவற்றைத் தம் நாட்டிற் கொண்டு வந்தும், கடல் வழியாகவும் தரை வழியாகவும் வாணிகஞ்செய்து பொருளீட்டுவார் வணிகர். மக்கள் தங்கள் உள்ளத்து நடுவு நிலைமையுடன் தங்களுக்குரிய தொழில்களைப் பெருக்கித் திருந்திய வாழ்வு நடத்தற்குரிய நல்லறிவு வழங்கும் அறிவான் நிறைந்த பெரியோர் `அறிவர் எனப் போற்றப் பெறுவர். இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் தொழில்களிற்றளராது உழைத்து வந்தமையால், தமிழர் வாழ்வு நாகரிக முறையில் நலம் பெற்று வளர்வதாயிற்று. மக்கள் எல்லாரும் தங்களுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழில் செய்து வாழ்தற்குரிய முறையில் ஆட்சி முறை நிகழ்தல் வேண்டுமென்பது தமிழறிஞர் உட்கோளாகும். ‘ஒரு தொழிலுமின்றிப் பிறரிடம் கையேந்திப் பிச்சையேற்றுண்பதே ஒரு சிலருடைய தலையெழுத்தாகக் கருதும்படி ஒரு நாட்டின் அரசு முறை அமையுமானால், அம்முறையற்ற செயலை வகுத்த வனாகிய அரசியற்றலைவன் அழிந்தொழிவானாக!1 என வையும் அறி வாற்றல் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலை பெற்றிருந்தது. தொழிற்றிறமே மக்களது உயிராற்றலாகும். ஒரு தொழிலும் செய்யாத சோம்பர், உயிரற்ற பிணம் போல இழித்துரைக்கப் பட்டனர்.பயிர்த்தொழிலும், நெசவு தச்சு முதலிய பிற கைத் தொழில் களும், வாணிகமும் ஆகிய இவையே பொருள் வருவாய்க் குரிய தொழில்களாம். உடல் உழைப்பினால் மேற்கொள்ளுதற்குரிய இத்தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் செய்ய விரும்பாது, உள்ளத்துணர்வால் மேற்கொள்ளுதற்குரிய அறிவுத் துறையில் ஈடுபட்டுழைப்பவர் புலவர், பாணர், பொருநர், விறலியர் முதலியோராவர். இயற்றமிழ் வல்லவர் புலவர்; இசைத்தமிழ் வல்லவர் பாணர்; ஒருவரையொத்து நடிப்பவர் பொருநர்; ஒரு வரலாற்றை நடித்துக்காட்டுபவர் கூத்தர்; உள்ளக்கருத்துக்கள் தம் உடம்பின்கண் நிகழும் மெய்ப்பாடுகளினால் விளங்கித் தோன்றும் வண்ணம் விறல்பட ஆடும் மகளிர் விறலியர். இவர் எல்லாரும் தாம் கற்றுவல்ல கலைத்திறத்தால் மக்களுடைய மனப் பண்புகளை வளர்ப்பதனையே தம்முடைய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தனர். மேற்குறித்த புலவர் பாணர் முதலியவர் கலைத்துறையிலே கருத்தைச் செலுத்த வேண்டியிருத்தலால், பொருளீட்டுதற்குரிய மெய்ம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்தற்குரிய ஆற்றலற்றவராயினர். இவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் வழங்கிப் போற்றுவது மக்களது கடமையாகக் கருதப்பட்டது. கலைவாணர் தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் முயற்சியிற் கருத்தினைச் செலுத்துவராயின், தமக்குரிய கலைத் துறையில் முழுதும் திறமையடைதல் இயலாது. ஆகவே, தெள்ளிய அறிவினராகிய இக்கலைவாணர்களுக்கும் பொருட் செல்வத் திற்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லாமையே உலகியலாய் அமைவதாயிற்று. அறிவுச் செல்வத்தை ஈட்டும் ஆர்வத்தால் பொருட்செல்வத்தை நெகிழ விடுதல் புலவர் முதலியோரியல் பாகும். பொருட்செல்வத்தைத் தேடும் முயற்சியால் அறிவுத் துறையில் கருத்தின்றி ஒழுகுவது பொது மக்கள் இயல்பாகும். இவ்விரு வகையான உலக இயல்பினைத் `திருவேறு; தெள்ளிய ராதலும் வேறு, என வரும் திருக்குறளால் அறிக. கலைவாணர்களின் கல்வியை மதித்துப் பரிசில் தந்து பாராட்டுதலைத் தமிழ்மக்கள் தங்கள் கடமையாக எண்ணினார்கள். செல்வனொருவனை அடைந்து, `எனக்கு ஒரு பொருளினை ஈவாயாக, என இரந்து நிற்றல் இழி செயலாகக் கருதப்பட்டது. இரவலர் தம்மைப் பணிந்து வேண்டுதற்கு முன்னரே அவர்தம் உள்ளக்குறிப்பறிந்து வேண்டுவன கொடுத்துச் சிறப்பித்தல் செல்வர்க்குரிய உயர்ந்த செயலாகப் போற்றப் பெற்றது. இல்லை யென்று இரப்பார்க்கு ஒரு பொருளையும் கொடாது அனுப்புதல் மிகவும் இழிந்ததென அறிஞர் அறிவுறுத்தினர். இரப்பார்க்கு இல்லையென்றுரைக்கும் இழிநிலை தம் வாழ்க்கையில் நேராதபடி தமிழர் பொருளீட்டுதலிற் கருத்தைச் செலுத்தினர்; அருஞ்சுரமும் பெருமலையும் கடலுங் கடந்து வேற்றுமொழி வழங்கும் நாடுகளிற் சென்றும் பெரும் பொருள் தொகுத்தனர்; `தம் முன்னோர் தொகுத்து வைத்த பொருளைச் செலவழித்து உண்டுடுத்துச் சோம்பியிருக்கும் உள்ளமுடையார் உயிருடையர் அல்லர், என்பது தமிழர் கொள்கை. தம் முயற்சியால் ஈட்டப்பெற்ற பொருளைக் கொண்டே மணஞ்செய்து கொள்ளுதல் தமிழர் வழக்கமாகும். இக்கருத்தினால் திருமணத்தை முன்னிட்டுப் பொருள் தேடச் செல்லுதல், `வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் எனக் குறிக்கப் பெறுகின்றது. மனைவி மக்கள் முதலியவர்களைப் பிரிந்து கணவன் பொருள் தேடச் செல்லுதலைப் `பொருள்வயிற்பிரிவு என இல்லறக் கடமைகளுள் ஒன்றாக அகப்பொருள் நூல்கள் சிறப்பித்துரைக்கின்றன. உலகினை ஆளும் பெருவேந்தனுக்கும் இரவும் பகலும் உறக்கமின்றி வேட்டை மேற்கொண்டு திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் உணவு நாழி அரசியே; உடுத்தற் குரிய ஆடைகள் இரண்டே; ஏனைய நுகர்ச்சி முறைகள் யாவும் இவ்வாறு ஒத்தனவேயாம். ஆகவே, ஒருவன் உலகத்தில் மற்றையவரினும் நிறையப் பொருளீட்டியதன் பயனாவது, இல்லையென்றிரப்பார்க்குத் தன்னலங்கருதாமல் கொடுத்து மகிழ்தலேயாம். செல்வத்தை யாமே நுகர்ந்து மகிழ்வேம் எனச் செல்வர் கருதுவாராயின், அதனால் வரும் தவறுகள் பலவாம்1 எனத் தமிழறிஞர் அறிவுறுத்துவாராயினர். அதனால், தமிழ் நாட்டில் வாழும் வேந்தர் முதல் தொழிலாளர் ஈறாக எல்லாரும் தம் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு, கலை வளர்க்கும் பரிசிலர்க்கும் வறுமையால் வாடும் இரவலர்க்கும் இல்லை யென்னாது ஈந்து மகிழ்தலையே வாழ்க்கையில் தாம் பெறும் பேரின்பமாகக் கருதினர். கலைவாணர் தாம் கற்ற கல்வியினை உணர்ந்து பாராட்டும் நல்லறிவுடைய செல்வர்களை நாடிச் சென்று தம் கலைத் திறத்தால் அவர்களை மகிழ்வித்தனர்; பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவையினைப் போன்று, அருளாற் கனிந்தவுள்ள முடைய செல்வர்களை அடைந்து, அவர்கள் தம் வரிசையறிந்து தரும் பரிசிற்பொருளைப் பெற்றுத் தம் சுற்றத்தாரைப் பாதுகாத்தனர். தாம் பரிசிலாகப் பெற்ற பொருளை இறுகச் சேர்த்துவைக்குமியல்பு அவர்கள்பால் இல்லை. வறுமையின் கொடுமையினை நன் குணர்ந்த அவர்கள், தம்மைப் போன்று பிறர்படுந் துயர்க்கிரங்கித் தம்பாலுள்ள பொருளை மனம் விரும்பி வழங்கும் இயல் புடையராயிருந்தனர். மக்களது நன்மதிப்பாகிய வரிசை பெறுதலையே வாழ்க்கைப் பேறாகக் கருதி வாழும் புலவர்கள், பிறர்க்கு எத்தகைய தீங்கும் எண்ணாத தூயவுள்ளம் படைத் தவர்களாவர். தாங்கள் கற்று வல்ல கலைத்துறைகளில் மாறு பட்டாரை வென்று தலை நிமிர்ந்து செல்லும் பெருமித முடைமையினையே புலவர்கள் தங்கள் பேறாகக் கருதினார்கள். அதனால், நாடாளும் பெருந்திருவெய்திய வேந்தரையொத்த தலைமையும் அவர்கள்பால் நிலைபெறுவதா யிற்று. வள்ளல்களால் ஆதிரிக்கப்பெற்ற புலவர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர் என்னுமிவர்கள், தங்களை ஆதரித்த பெருவள்ளல்கள்பால் தாங்கள் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தங்களைப் போன்ற ஏனைப் பரிசிலர்களும் பெற்று மகிழும்படி அவ்வள்ளல்களிடம் வழி கூறி அனுப்புவார்கள். இப்படி வழி கூறி அனுப்பும் முறை `ஆற்றுப்படை என வழங்கப் பெறும். ஊண், உடை, உறையுள் என்பவற்றை நாடிப் பெறும் முயற்சி, வாழ்க்கையின் முதற்படியாகும். வயிறார உண்டு மகிழ்தலே எல்லாருடைய விருப்பமுமாகும். அருளும் ஆற்றலும் நிரம்பிய பெருவள்ளல்கள் பசியால் துன்புறும் எளியவர்களுக்கு வேண்டும் உணவளித்து அவர்களை ஊக்கத்துடன் உழைக்கும் நல்லுணர் வுடையவர்களாகச் செய்தார்கள். தங்களை அடைந்த வர்களுடைய வயிற்றுப் பசியைத் தணித்தலே இவ்வள்ளல்களின் வாழ்க்கைக் குறிக்கோளாய் அமைந்தது. பரிசிலர் சுற்றத்துப் பசிப் பகையாகி விளங்கிய இவ்வள்ளல்களை நாடாளும் மன்னர்களும் பாராட்டிப் போற்றினார்கள். சோழன் குளுமுற்றத்துத் துஞ்சியகிள்ளி வளவன் ஆட்சியில் சோழ நாட்டிலுள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலை வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான்; பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயலைப் பாராட்டி மகிழ வேண்டுமென எண்ணித் தானும் ஒரு பரிசிலன்போல அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று, அவ்வூரின் எல்லையை அடைந்தான். புது வருவாயை யுடையதாகிப் பழுத்தமரத்தின் கண்ணே பறவைக்கூட்டம் ஒலித்தாற்போன்று பண்ணனது மனையிற் பெருந்திரளாகக் கூடியுண்ணும் மக்களின் ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலை விலேயே கேட்டது. மழை பெய்யுங் காலத்தை முன்னறிந்து தம் முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசையைப் போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளி வளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன், ‘யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக!’ என வாழ்த்தினான்.1 ஒருவருடைய இயல்புகளையெடுத்து வாழ்த்து வோர், ‘ஆயிரம் வெள்ளம் வாழ்க! என்றது போலத் தம் மனம் விரும்பிய அளவு வாழ்த்துதல் உலகியலிற் பெரும்பாலும் நிகழும் வாழ்த்தியல் முறையாம். மக்கள் கருவாய்ப் பதிகின்ற அன்றே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப்பெற்றதாதலின், அதற்கு மேலும் பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துதல் மெய்ம்மொ வாழ்த்தாகா தெனவுணர்ந்த புலவர் சிலர், ஊழால் நினக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக இருப்பாயாக! என வாழ்த்துதலும் உண்டு. இவ்விருவகை வாழ்த்துக்களிலும் வாழ்த்துவார்க்கு வரும் இழப்பெதுவு மில்லை. ஆனால், பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய பண்ணனை வாழ்த்தக் கருதி கிள்ளி வளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாட் பகுதியில் இதுகாறும் கழிந்தன போக, இனி எஞ்சியிருக்கின்ற நாளையும் பண்ணன் தன் வாழ்நாட்களுடன் சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்தினான். இச்செயல், தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாகிய பண்ணனது ஈகைத் திறத்தையும், அவன் அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளமுருகிய வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவனது விரிந்த உள்ளத்தின் உயர்வையும் நன்கு தெளிவிப்பதாகும். நாட்டிற்கு நலஞ்செய்து வரும் மக்களை அறிந்து பாராட்டுதல் அக்காலத்துத் தமிழ் மன்னர்களின் கடமையாய் அமைந்ததென்பதனை இவ்வரலாறு தெளிவுபடுத்துதல் காண்க. `இப்பிறப்பிற் செய்த அறங்கள் மறுமைக்குப் பயன்தரும், எனக் கருதி அறஞ் செய்யும் முறை ஒரு வகை வாணிக முறையாகவே கருதப்படுமென்பது அறிவுடையார் கொள்கை. பொருள் கொடுத்து அறத்தைப் பெறும் இந்நோக்கம் உயர்ந்த குறிக் கோளெனக் கருதப்படவில்லை. வறுமையான வருந்து வார்க்கு வேண்டுவன தந்து ஆதரிப்பதனையே அக்காலத் தமிழ்ச் செல்வர்கள் தங்கள் கடமையாக மேற்கொண்டிருந்தார்கள். குளிரால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை அளித்த பேகனும், தான் படர்தற்குரிய கொழுகொம்பில்லாது தளர்ந்த முல்லைக் கொடி படர்தற்குத் தன் தேரினை வழங்கிய பாரியும், இரவலர்க்குக் குதிரையும் நாடும் கொடுத்தளித்த மலையமான், திருமுடிக்காரியும், தனக்குக்கிடைத்த நீலநிறத்தையுடைய உடையினை ஆலமர் செல்வன் திருமேனிக்கணிந்து வழிபட்ட ஆய் என்பானும், யாவரானும் அணுகுதற்கரிய மலையின் உச்சியிலே அமைந்த கருநெல்லியினது அமிழ்தின் தன்மையுடைய பழத்தைத் தானே உண்டு நெடுநாள் வாழ விரும்பாது ஔவையாரை உண்பித்த அதியமான் நெடுமானஞ்சியும், தம்முள்ளத்து நிகழும் எண்ணங்களை மறையாது கூறி நட்புச் செய்யும் பரிசிலர்க்கு அவர் மனையறம் நிகழ்த்துதற்கு வேண்டும் பொருளை நாடோறும் கொடுத்து மகிழ்ந்த நள்ளியும், தன் நாட்டின் நிலங்களைக் கூத்தர் முதலிய இரவலர்க்குக் கொடுத்து மகிழ்ந்த ஓரியும் ஆகிய இவ்வேழு வள்ளல்களும், நல்லியக்கோடன், நன்னன் முதலிய பிறரும் இரவலர்க்கு அளித்தலாகிய கொடைப் பாரத்தைத் தம்மேற் கொண்டு புலவர் பாடும் புகழுடையவர் களாய் விளங்கினார்கள். அதனால், `இல்லோர் செம்மல் என்றும், `இல்லோர் ஒக்கற்ற லைவன் என்றும் மக்களால் வழங்கப் பெறும் மாண்பு இத்தகைய செந்தமிழ் வள்ளல்களுக்கே சிறப்பாக உரியதாயிற்று. பிறரை ஏவும் முறையில் நீண்ட ஆணை மொழிகளைப் பேசுதலும், தாம் விரும்பிய இடங்களுக்கு நினைத்த மாத்திரத்திலே விரைந்து செல்லுதற்குரிய ஊர்திகளை ஏறி நடத்துதலும் செல்வத்தின் சிறப்பென அறிவில்லாதார் எண்ணியொழுகுவர். தம்மையடைந்தார் படும் துன்பத்திற்கு அஞ்சி அவர்கட்கு வேண்டுவன அருளும் இரக்க முடைமையினையே பண்டைத் தமிழ்ப் புலவர் செல்வமெனப் பாராட்டினர். (நற்றிணை. 210) குறிஞ்சி மலை, சுரம், காடு, நாடு, கடற்கரை என்னும் நிலப் பகுதிகளுள் ஒன்றிற்பிறந்து, அங்கேயே தங்கியிருந்து வாழ்க்கை நிகழ்த்துபவர்கள் அவ்வந்நில மக்களாவார்கள். குறிஞ்சி நிலத்தவர் வழிபடும் தெய்வம் முருகன். மலைவாணர் மலை யிலுள்ள மரங்களை அழித்து அங்கே ஐவனம். (மலைநெல்), தினை முதலியவற்றை விதைத்து, அருவி நீர் பாய்ச்சி, விளைவிப் பார்கள். ஆடையின் பொருட்டுப் பருத்தியைப் பயிரிடும் பழக்கமும் மலைவாணர்க்கு உண்டு. தினைப்புனத்திற் கிளி முதலியன புகுந்து உண்ணாதபடி மலைவாணர் மகளிர் குளிர், தட்டை முதலிய கருவிகளைக் கொண்டு ஒட்டிப் பகற்பொழுதில் புனம் காப்பர். தாம் விதைத்த தினை முதலியவற்றை யானை முதலியன உண்ணாதபடி இரவில் பரண்மீதமர்ந்து கவண் கற்களால் ஒட்டிக் காத்தல் குறவருடைய இயல்பாகும். வள்ளிக்கிழங்கு முதலியவற்றை அகழ்ந்தெடுத்தலும், மரத்தின் உச்சியில் தொங்கும் தேனடைகளை அழித்துத் தேனெடுத்தலும், மான் முதலிய விலங்கினங்களை வேட்டையாடுதலும் இம் மலைவாணர்க்குரிய தொழில்களாகும். மழை வேண்டுங் காலத்து நிறையப் பெய்தற்கும், வேண்டாத காலத்துப் பெருமழையைத் தடுத்தற்கும் மலைவாணர் கடவுளை மலர் தூவி வழிபட்டனர்; புதிதாய் விளைந்த தினையைக் கடவுளுக்கு இட்டு வழிபட்ட பின்னர் உண்பர்; பன்றிகள் உழுத புழுதியின்கண்ணே நல்ல நாட்பார்த்து விதைத்த தினை முற்றி விளைந்ததனை அறுத்து, நல்ல நாளில் புதிதுண்ண வேண்டி மரையாவின் பாலை உலையாக அமைத்துச் சமைத்து, வாழையிலையிலே விருந்தினருடன் உடனமர்ந்து உண்பர். குன்றத்திலே வாழுங் குறவர்கள் மகப்பேறு கருதித் தங்கள் குலமுதலாகிய முருகக் கடவுளை வழிபடுவார்கள். அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டு நிலத்திலே விதைத்த தோரை நெல்லும், ஐவனம் என்னும் நெல்லும், மூங்கில் நெல்லும், மிளகும், அவரையும் வள்ளிக்கிழங்குகளும், பலா வாழை முதலிய பழங்களும் மலைநிலத்திற் பெருக விளைவன. மலைவாணர் தம் மகளிர் வேறுபாடு தீர முருக பூசை செய்யும் வேலன் என்பானை அழைத்து வெறியாடச் செய்வர். கடம்பமரத்தினை முருகன் விரும்பும் தெய்வ மரமாகக் கொண்டு, அதன் அடியில் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களைப் பூசி, மாலை சாற்றி, நறும்புகை தந்து வழிபடுதலும், அதன் அடியில் இளமகளிர் கைகோத்து நின்று முருகனை வாழ்த்திக் குரவை யாடுதலும், அருவி நீரைக் குடித்து முரகன் முன்னர்ச் சூளுரைத் தலும், மலைவாணர் வழக்கங்களாம். வேனில் வெப்பத்தால் நீரும் நிழலுமின்றி வளங் குறைந்து மக்கள் இயங்குதற்கரிய வெம்மை மிக்க சுரத்திலே வாழும் எயினர்கள் வழிப் போக்கர்களைத் துன்புறுத்தி அவர்கள் படும் துயர் கண்டு மகிழும் கொடியவர்களாய் இருந்தார்கள். இந் நிலத்தின் வழியாகப் பொருள் தேடச் செல்லும் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாகப் போர் வீரர் குழுவினையும் உடனழைத்துப் போதல் மரபு. வணிகர்க்குப் பாதுகாவலாகச் செல்லும் வீரர் படை `சாத்து என்ற பெயராற் குறிக்கப்பட்டது. இப்படையைச் சார்ந்தவன் `சாத்தன் என வழங்கப் பெற்றான். முல்லை முல்லை நிலத்து வாழ்வார் இடையர் என வழங்கப் பெறுவர். இந்நிலத்து ஆனிரைகள் மிகுதியாய் உண்மையால், அவற்றைப் பசுமை நிலங்களில் மேய்த்துக் காப்பாற்றும் தொழில் அவர்களுக்கு உரியதாயிற்று. ஆவினை மேய்ப்பார் `ஆயர் என வழங்கப் பெற்றனர். புனத்தை உழுது விளைக்கும் வரகு முதலியன இந்நிலத்தவர்க்குரிய உணவுகளாம். இவர்கள் திருமாலைத் தங்களுக்குரிய தெய்வமாக வழிபட்டார்கள்; வரகுக் கற்றைகளால் மேலே வேயப்பட்டிருக்கும் குடிலில் வாழ்ந்தார்கள்; தோல் களையே பாயலாகப் பயன்படுத்துவார்கள்; சிறு குடிலின் புறத்தே முள்வேலியிட்டுப் பசு முதலியவற்றைக் காவல் செய்வார்கள்; அரிசிச் சோற்றைப் பாலுடனே உண்பார்கள்; பசுக் கூட்டத்துடனே காட்டில் தங்கித் தீக்கடை கோலாலே துளையிட்டுச் செய்த புல்லாங்குழலையும் குமிழங் கொம்பினை மரல் நாரினாற்கட்டிச் செய்த வில் யாழினையும் இசைத்து மகிழ்வார்கள். மருதம் மருத நிலத்தார் உழவராவர். நிலத்தை ஏரால் உழுது, எருவிட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைக்கும் உழவுத் தொழில் இந்நிலமக்களது தொழிலாகும். இத்தொழில் ஊராண்மையாகிய ஆள்வினைத் திறத்தை வளர்த்தது. சிறிய நிலப் பகுதியில் நிறைந்த உணவுப் பொருள்களை விளைத்து மக்களைப் பசிப் பிணியின்றி வாழச் செய்தது இவ்வுழவேயாம். ஒரு பெண் யானை படுத்திருக்கும் அளவுடைய சிறிய நிலத்தில் ஆண்டொன்றுக்கு ஏழு ஆண் யானைகளை உண்பித்தற்குப் போதுமான நிறைந்த நெல்லை விளைவிக்கும் நிறமுடையவராகத் தமிழ் நாட்டில் வாழ்ந்த உழவர் தம் தொழிற்றிறத்திற் சிறந்திருந்தனர். புதுப் புனலாடுதல் இவர்களுக்குச் சிறந்த திருவிழாவாகும். நெய்தல் நெய்தல் நிலமக்களாகிய பரதவர், கடலிற் படகிற் சென்று மீன் பிடிப்பர்; திமிங்கிலம் என்னும் பெரிய மீனை எறியுளியால் எறிந்து கொல்வர்; பிடித்த மீன்களை உலர்த்திப் பக்குவஞ் செய்து பிற்பர்; கடல் நீரைப் புன்னிலங்களிற் பாய்ச்சி உப்பு விளைப்பர். நெய்தல் நிலமகளிர் உப்பை விற்று, அதற்கு மாறாக நெல்லை விலையாகப் பெறுவர். உப்பு விற்பார், `உமணர் எனப்பட்டனர். கடலில் பெரிய மரக்கலங்களைச் செலுத்தி வெளி நாடு சென்று வாணிகஞ்செய்யும் முறை இந்நெய்தல் நில மக்களால் வளர்க்கப்பெற்றதேயாம். மீன் பிடிக்கும் சிறு படகு களிலே சென்று கடலிலே வாழும் இயல்புடைமை கருதி இவர்களைக் கடல் வாழ்நர் என வழங்குதல் வழக்கம். கடலிற் கிடைக்கும் மீன்களையே இன்னார் பெரிதும் உணவாகப் பயன்படுத்துவர். கடலில் மீன் வேட்டையாடுதலையே தொழிலாகக் கொண்ட பரதவர், உவா நாளில் அத்தொழிலிற் செல்லாமல், தத்தம் மகளிரோடு சுறவுக் கோடு நட்டுத் தம் தெய்வத்தை வணங்கிப் புனல் விளையாடி உண்டு மகிழ்வர். இவ்வாறு நிலமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து தொழில் புரிந்து மகிழும் இவ்வாழ்வு, பின்னர் நாடு முழுதும் ஒரு குடும்பமாக எண்ணும் அரசியல் வாழ்வுக்கு அடிப்படையா யமைந்தமை கருதற்பாலதாம். கடற்கரை உள் நாட்டு வணிகர்க்குத் தீங்கு நேராதபடி தரைப் படையனுப்பிப் பாதுகாத்தலும், கடலிற்கலஞ் சிதைக்கும் கொள்ளைக் கூட்டத்தாரைக் கடற்படையால் பொரு தழித்தலும் அக்காலத் தமிழ் வேந்தர் காவல் முறையாகும். கடலில் நாவாய் செல்லுதற்குத் துணை செய்யும் காற்றின் பருவநிலையினை நன்குணர்ந்து அக்காற்றின் ஏவலாற் கடலிற் கப்பல்களைச் செலுத்தும் பயிற்சி முறையினைச் சோழர் குடியிற்றோன்றிய மன்னன் ஒருவன் உய்த்துணர்ந்தான். நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட உரவோன். என அம்மன்னனைப் புலவரொருவர் போற்றுகின்றார். கடலிற் கப்பலைச் செலுத்துவார், இரவில் துறையறிந்து சேர்தல் கருதிச் சிறந்த துறைமுகங்களில் கப்பலை அழைக்கும் பெரிய விளக்குகள் உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்டன. இவ்விளக் கிற்குக் `கலங்கரை விளக்கம் என்பது பெயர். `கப்பலை அழைக்கும் விளக்கு என்பது இத்தொடரின் பொருளாம். இத்தகைய கலங்கரை விளக்கங்கள் காவிரிப்பூம்பட்டினத்திலும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வணிகம் தம் நாட்டில் தமக்குப் பயன்பட்டு மிகுந்த பொருளை வெளி நாட்டிற்கனுப்பியும், வெளிநாட்டிலிருந்து தமக்குப் பயன்படும் பொருளை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தும் வாணிகஞ் செய்தற்கு இக்கடல் வழிப் போக்கு வரவு மிகவும் பயன்படுமுறையினை முதன் முதற்கண்டுணர்ந்தவர்கள் நம் தமிழ்மக்களே. யவனருடைய கப்பல்கள் தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையிலுள்ள முசிறி யில் பொன்னை நிறையக் கொண்டு வந்து இறக்கிவிட்டு, மிளகினை நிறைய ஏற்றிச் சென்றன என ஒரு புலவர் கூறுகின்றார். `காவிரிப் பூம்பட்டினத்தில் பல நாட்டு வணிகரும் ஒருங்கிருந்து வாணிகம் செய்தனர். நீரின் வந்த குதிரைகளும், தரை வழியாய் வந்த மிளகு மூடைகளும், இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள்களும், காழகத்திலிருந்து வந்த பொருள் களும், இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மணியும் பொன்னும், குடமலையிலிருந்து கொணர்ந்த சந்தனமும் அகிலும், கங்கை நீரால் விளைந்தனவும் காவிரியால் விளைந்தனவுமாகிய பல்வகை உணவுப் பொருள்களும் அந்நகரத்தில் வந்து குவிந்தன, எனவும், `உலகமாந்தர் ஒரு சேர வந்தாலும் கொடுக்கக் குறைபடா தனவாய் நிறைந்திருந்தன,எனவும் பட்டினப் பாலை என்னும் பாட்டுக் கூறுகின்றது. திருவிழா நாட்டில் ஊர்தோறும் திருவிழாக்கள் நிகழும். இவை பெரும்பாலும் ஒவ்வொரு திங்களிலும் நிறைமதி நாளை ஒட்டி நிகழ்வனவாம். இளவேனிற்காலத்து இன்பவுணர்ச்சியைத் தூண்டுந் தெய்வமாகிய காமனை வழிபட்டு உண்டாடி மகிழ்தல் காமவேள் விழாவாகும். இவ்விழா, `வேனில் விழா எனக் குறிக்கப் பெற்றது. இவ்விழாவின் போது மகளிரும் மைந்தரும் இளமரச் சோலையிலும் நீர்த் துறையிலும் தங்கி விளையாடி மகிழ்வர். பூக்கள் நிறைந்த பெருந்துறையிலே பகற் பொழுதிலே மைந்தரும் மகளிரும் கூடி ஆடலும் பாடலுங் கண்டும் கேட்டும் இளவேனிற் செவ்வியினை நுகர்ந்து மகிழ்வர்; இரவில் நிலா முற்றத்திலே வெண்ணிலவின் பயன் துய்த்து இன்துயில் கொள்வர்; காவிரி வையை முதலிய யாறுகளிற் புது வெள்ளம் வருங்காலத்துப் புதுப்புனல் விழாக் கொண்டாடுவது வழக்கம். இவ்விழாவில் புனல் தெய்வத்தை வழிபட்டு நீராடி மகிழ்தல் அரசரது இயல்பாகும். ஆறுகளில் மூங்கிலாற் கட்டப்பெற்ற புணைகளில் மகளிருடன் அமர்ந்து புனல் விளையாடுவர். இளவேனிற்காலத்துப் புலவர் பேரவை கூடும். அங்கு எல்லா மக்களும் வந்திருந்து புலவர் நாவிற் பிறந்த இலக்கியச் சுவை நலங்களை நுகர்ந்து மகிழ்வார்கள். இளமாணவர்களைப் போர் முறையில் பயிற்றும் வில்விழா ஊர் தோறும் கொண்டாடப் பெற்றது. முருகனை வணங்கி மக்கள் கொண்டாடும் வெறியாட்டு விழாவும், கொற்றவையை வழிபடும் வெற்றி விழாவும், திருமாலை வணங்கிச் செய்யும் திருவோண விழாவும், கார்த்திகை விளக்கீடும், பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானை வழிபடும் திருவாதிரை விழாவும், தைத்திங்களில் குளநீர் விளையாட்டும், மாசிக் கடலாட்டும், பங்குனி விழாவும் அக்காலத் தமிழ் மக்கள் கொண்டாடிய திங்கள் விழாக்களாம். இவையன்றி, அரசர்க்குப் பிறந்த நாள் விழாவும், முடி சூட்டு விழாவும், அறநெறியிற் போர் செய்து துறக்கம் புக்க வீரர்களுக்குக் கல் நிறுத்தி அதன்கண் அவர்தம் பெயரும் வெற்றிப் பெருமையும் எழுதி அவர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் நடுகல் விழாவும், இவ்வாறே கற்புடைப் பெண்டிரை வழிபடும் நடுகல் வழிபாடும் சிறப்புடைத் திருவிழாக்களாக மதிக்கப்பெற்றன. தெய்வம் மலை நாட்டு மக்கள் முருகனையும், முல்லை நிலத்துப் பொதுவர் திருமாலையும், பாலை நிலத்தவர் கொற்றவையையும், மருதநிலத்தவர் வேந்தனையும் (இந்திரன்), நெய்தல் நிலத்தவர் வருணனையும் சிறப்பு முறையில் தம் நிலத்திற்குரிய தெய்வங் களாக விரும்பி வழிபட்டனர். இவ்வாறு நிலவகையால் பல தெய்வங்கள் கொள்ளப்பட்டாலும், `வேறு வேறு பெயரால் வழிபடப் பெறும் எல்லாத் தெய்வங்களும் ஒன்றே, என்னும் உண்மையினைத் தமிழ் மக்கள் தெளிய விளக்கியுள்ளார்கள். ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரின் எவ்வயி னோயும் நீயே. என ஒரு புலவர் திருமாலைப் போற்றுகின்றார். ஆற்றிலும், குளத்திலும், நாற்றெருக்கள் கூடுமிடத்தும், இரண்டு மூன்று பெருவழிகள் சந்திக்குமிடத்தும், புதிய பூக்களை பூத்து மணங்கமழும் கடம்பு ஆல் முதலிய மரங்களின் நீழலிலும், மலைகளிலும், மக்களால் செய்யப்படும் பல திற வழிபாடுகளும் உலகப் பெருமுதல்வனாகிய ஒருவனையே குறித்து நிகழ்வன என்பது தமிழர் உட்கோளாகும். இக்கருத்தினால் நிலந்தோறும் தாம் கற்பித்துக் கொண்ட பெயர் வகையால் வேறுபடாது, ஆங்காங்கு நிகழும் வழிபாடுகள் எல்லாவற்றிலும் வேற்றுமை யின்றிக் கலந்து கொண்டார்கள். நிலமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேரூர்களில் வாழத் தொடங்கிய காலத்து எல்லா நிலத்துக்கும் பொதுவான ஒரு வழிபாட்டு முறை தோன்றுவ தாயிற்று. உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கி யிருத்தலால் `இறைவன் எனவும், உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்கதலால் `இயவுள் எனவும் பண்டை அறிஞர் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை விளங்க அறிவுறுத்தினர். இன்னவுரு, இன்னநிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற் பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்துணர்ந்து வழிபடுதல் வேண்டி, வேண்டுதல் வேண்டாமை யின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற அச்செம் பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர் மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் `கந்து என வழங்குவர். (கந்து- தறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்ற காலத்துக் கருங்கல்லால் அமைக்கப் பெற்று, இறைவனைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாகக் கொள்ளப்பட்டது. எல்லா நிலத்தார்க்கும் பொதுவாகிய கந்து வழிபாடே பின்னர்ச் சிவலிங்க வழிபாடாக வளர்ச்சி பெற்றி ருத்தல் வேண்டும். துறவுக் கொள்கை இப்பிறப்பிற்குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்பிற்பயன் தருவனவாகிய அறச்செயல்களும், பிறப்பற முயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் உயிர் வாழ்வுக்குரியனவெனத் தமிழ் மக்கள் எண்ணினார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தின்புறுவதே இம்மையின்பமாகும். `இப்பிறப்பிற் பலர்க்கும் வேண்டுவன வற்றை வரையாது கொடுத்து மகிழ்ந்தும் செயற்கருஞ்செயல் செய்து உயிர்கொடுத்தும் புகழ் கொண்டார், புலவர்பாடும் புகழுடையராய்த் துறக்கவுலகாகிய வானுலகிற் புகுந்து இன்பம் நுகர்வர், என்பது தமிழர் துணிபாகும். கணவனும் மனைவியும் அன்பினால் மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்து, நுகர வேண்டிய இன்பங்களையெல்லாம் நன்கு நுகர்ந்து, முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இவ்வாறு ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தல் `காமம் நீத்தபால் எனச் சிறப்பிக்கப்படும். மிக்க காமத்து வேட்கை நீங்கிய கணவனும் மனைவியும் வீடு பேற்றினை விரும்பிப் பற்றற வாழ்தல் துறவு நிலையாகும். இத்துறவினை `அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் தொல்காப்பியர். கணவனை யிழந்த மகளிர் உடனுயிர் நீத்தலும், அவ்வாறு இறவாதவர் தாபதநிலையினராய்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு உணவினைக் குறைத்துண்டு உயிர்வாழ்தலும் தமிழர் வழக்கமாகும். இவ்வாறே மனைவியை இழந்தவன் தவநிலை மேற்கொண்டு உணவினைக் குறைத்துண்டு உயிர்வாழ்தலும் தமிழர் வழக்க மாகும். இவ்வாறே மனைவியை இழந்தவன் தவநிலை மேற்கொண்டு துறவு நெறியில் நிற்றலும் உண்டு. `மனைவி மக்களைப் பிரிந்து காடடைதலே துறவு, என்னும் பிற்காலக் கொள்கை தமிழர்கட்கு உடன்பாடன்றாம். பற்றற முயன்று முழுமுதற் பொருளாகிய செம்பொருளை உண்மையானுணர்ந்து வழிபட்டுத் தெளிவு பெறுதலே தமிழர் சிறந்தது பயிற்றும் வாழ்க்கை நெறியாகும். இந்நெறியில் ஆடவர் மகளிர் இரு பாலாரும் ஈடுபட்டுப் பிறப்பறுத்தற்குரியரென்பது தமிழரது சமயக் கொள்கையாகும். இவ்வுயர்ந்த நெறியினை விரும்பித் தமிழ் வேந்தர்கள் தங்கள் அரச பதவியை விடுத்துத் துறவுமேற் கொண்டார்கள். இச்செய்தியினைக் `கட்டில் நீத்த பால் எனத் தொல்காப்பியர் சிறப்பித்துரைப்பர். உலக வாழ்க்கையில் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோள்களை நிலை பெறுத்தல் கருதிய சான்றோர், வடக்கு நோக்கியிருந்து, உண்ணா நிலையினை மேற்கொண்டு, உயிர் விடுவர். இம்முறை `வடக்கிருத்தல் என வழங்கப்பெறும். வெண்ணிப் போர்க்களத்திற் கரிகால் வளவனுடன் பொருத பெருஞ்சேரலாதன், தன் மார்பிற் சோழன் எய்த அம்பு புறத்தே ஊடுருவிச் சென்றமையால், முதுகில் உண்டாகிய புண்ணினைப் புறப்புண் எனக் கருதி, வடக்கிருந்து உயிர் துறந்தான். சிறந்த பொருளைச் சிந்தித்துக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த பொழுது அவனுடைய உயிர் நண்பராகிய பிசிராந்தையாரும் பொத்தியாரும் அவனுடன் ஒருங்கிருந்து உண்ணாது உயிர் துறந்தமையும், தன்னுடைய உயிர்த்தோழனாகிய பாரி வேளின் பிரிவிற்காற்றாது கபிலர் என்னும் புலவர் பெருமான் வடக்கிருந்து உயிர் துறந்தமையும் தமிழ் மக்களின் சிறந்த மனத்திட்பத்தை இனிது புலப்படுத்துவனவாம். `ஒரு வீட்டிலே சாப்பறையொலிக்க, மற்றொரு வீட்டிலே மணமுரசியம்ப, கணவனைக்கூடிய மகளிர் நறுமணப் பூக்களை அணிந்து மகிழ, கணவனை இழந்த மகளிருடைய கண்கள் துன்பநீர் சொரிய, இவ்வாறு இன்பமும் துன்பமும் ஒவ்வாதபடி இவ்வுலகியல் அமைந்துள்ளது. துன்பத்தையே தனக்குரிய இயல்பாகவுடைய இவ்வுலகினது இயல்பறிந்தார், இவ்வுலகி லிருந்தே நிறைந்த பேரின்பமாகிய வீட்டின்பத்தைத் தரும் இனிய செயல்களை அறிந்து செய்து கொள்வாராக, என அக்காலப் புலவர் பெருமக்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். `நீரிற்பலகால் முழுகுதல், நிலத்தில் பாய் முதலியன இன்றிப் படுத்தல், தோல் உடுத்தல், சடை புனைதல், தீயோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ளவற்றை உணவாகக் கொள்ளுதல், கடவுட்பூசை என்னும் இவ்வெண்வகைச் செயல்களும் தவத்தின்கண் முயல்வார்க்கு உரியனவாக விதிக்கப்பட்டன. மழை, பனி, வெயில் முதலிய இயற்கையின் காரணமாகத் தமக்குற்ற நோய்களைப் பொறுத்துக்கொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை யாகிய அருளுணர்வுடன் வாழ்தலே தவத்தின் இயல்பாகும் என்பர். பகலும் இரவும் இடைவிடாது வானத்தை நோக்கியிருந்து, அங்கு நிகழும் வானவில்லும், மின்னலும், விண் மீன் வீழவும், கோள் நிலையும் பார்த்து, மழை, பனி, வெயில் என்ற மூவகைக் காலத்தின் இயல்புகளையும் விளங்க அறிவுறுத்தும் வான நூற்புலவன் அறிவனாவான். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தியல்பினையும் கண்ணி (கருதி) உரைக்கும் இவனைக் கணிவன் என வழங்குதல் மரபு. தமிழ் மூவேந்தரும் தத்தம் நாட்டின் அரசியல் நிகழ்தற் குரிய தலைநகரங்களாகிய பேரூர்களைச் சிறந்த முறையில் அமைத்துக் கொண்டனர். சேரரது தலைநகர் வஞ்சி; பாண்டியரது தலைநகர் மதுரை; சோழரது தலைநகர் உறையூர் காவிரி கடலொடு கலக்குமிடத்தில் கடல் வாணிகத்திற்கேற்ற துறைமுகநகரமாகச் சோழர்களால் அமைக்கப்பட்ட பேரூர் காவிரிப்பூம்பட்டினம். காவிரி கடலொடு கலக்குமிடத்தில் அமைந்தமையால் இதனைப் `புகார் எனவும் வழங்குவர். இந்நகரத்தினை `மருவூர்ப்பாக்கம் `பட்டினப்பாக்கம் என இரு பகுதியாகப் பிரித்திருந்தார்கள். சோழர் வழியினராகிய திரையர் என்பவரால் ஆளப்பெற்ற தொண்டைநாட்டின் தலைநகர் காஞ்சி யாகும். அரசர்க்குரிய இத்தலைநகரங்கள் மதில் முதலிய அரண்களுடன் நகர அமைதிக்கேற்ப அரசர் வாழும் உயர்ந்த அரண்மனையினை நடுவே பெற்று, பெருஞ் செல்வர்களும் பல திறப்பட்ட தொழிலாளர்களும் படை வீரர்களும் தங்குதற்குரிய பல்வேறு தெருக்கள் வரிசையாகச் சூழப் பெற்றனவாய்க் கடவுளர் திருக்கோயில்களும் பொது மன்றங்களும் சோலைகளும் வாவிகளும் ஆகியவற்றைத் தம்மகத்தே கொண்டு விளங்கின. இந்நகரங்களில் மக்கள் உடல் நலத்துடன் வாழ்தற்கேற்றபடி அழுக்கு நீரினை வெளியே கொண்டு செல்லும் கால்வாய்கள் நிலத்தின்கண்ணே மறைவாக அமைக்கப் பட்டிருந்தன. இவ்வாறு அமைக்கப்பெற்ற கால்வாயினைக் `கரந்து படை என வழங்குவர். மதுரை நகர அமைப்பு `தாமரைப் பூவினையொத்த அமைப்புடையதாய் மதுரை நகரம் விளங்கியது. அப்பூவிலுள்ள இதழ்கள் அடுக்கடுக்காகச் சூழ்ந்திருத்தல்போல, மதுரை நகரத்தின் தெருக்கள் பல்வேறு வரிசைகளாய்ச் சூழ அமைக்கப்பட்டன. தாமரையின் நடுவேய மைந்த பொகுட்டினைப் போன்று பாண்டியனது அரண்மனை மதுரையின் நடுவே சிறந்து தோன்றியது. அவ்வூரில் வாழும் தமிழ் மக்கள் தாமரை மலரிலுள்ள மகரந்தப் பொடியினைப் போன்று தேனின் இன்சுவையும் நறுமணமும் உடையவர்களாய் விளங்கினார்கள். அங்கு வாழும் தமிழ் மக்களது புகழ் மணத்தால் ஈர்க்கப்பட்டு அந்நகரத்தையடைந்த புலவர் பாணர் முதலியோர், தாமரையின் மணத்தால் தேனுண்ண வந்த வண்டினத்தை யொத்து விளங்கினர், எனப் பரி பாடல் என்னும் நூலில் ஒரு புலவர் மதுரை நகரத்தின் இயல்பினை அழகாக எடுத்துரைத் துள்ளார். இந்நகரங்களில் வாழும் பெருஞ்செல்வர்கள், கடல் வழியாகவும் தரை வழியாகவும் வாணிகஞ் செய்து பெரும் பொருளீட்டி, `மன்னர் பின்னோர் என அரசனுடன் அடுத்துப் பாராட்டப் பெறும் சிறப்புடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். வடித்த கஞ்சி ஆறுபோலச் செல்லும் பெருஞ்சோற்று அறச்சாலைகள் இந்நகரங்களில் அமைந்து, ஏழை மக்களின் பசியை அகற்றின. உலகத்திலுள்ள பல்வேறு உணவுப் பொருள் களும் பொன்னும், நவமணிகளும், பட்டினும் பருத்தியிழையினும் நெய்த மெல்லிய ஆடைகளும், வாழ்க்கைக்குத் தேவையான பிற பொருள்களும் விற்றற்குரிய ஆவண வீதிகள் (கடை வீதிகள்) இந்நகரங்களில் மிகுந்திருந்தன. கடை வீதிகளில் விற்கும் பொருளையும் விலையையும் குறித்துக் கொடிகள் கட்டப் பட்டன. வாணிபங் கருதி இந்நாட்டிற் குடியேறிய யவனர் முதலிய வெளிநாட்டு வணிகர், வேற்றுமையின்றிக் கலந்திருந்து இந்நகரங்களில் தத்தம் தொழில் செய்து வாழ்ந்தனர். சமயவொற்றுமை பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கும், அறுமுகச் செவ்வேளாகிய முருகனுக்கும், நீலமேனி நெடியோ னாகிய திருமாலுக்கும், வெள்ளிய சங்கின் நிறத்தையுடைய வாலியோனாகிய பலதேவனுக்கும் உரிய திருக்கோயில்கள் இந்நகரங்களில் அமைந்திருந்தன. இவையன்றிக் கொற்றவை கோயிலும், காமவேள் கோட்டமும், சாத்தன் கோயிலும், சமணப்பள்ளியும், போதி அறவோனை வழிபடுதற்குரிய புத்த விகாரமும், இந்திரன் கோயிலும், காவற்பூதங்களின் கோயில்களும், இத்தலை நகரங்களில் அமைக்கப்பட்டன. இந்நகரத்தில் நிகழும் திருவிழாக்களில் பல சமய அறிஞர்களும் கலந்துகொண்டு, தம் சமய நுண்பொருள்களை இகலின்றி விரித்துரைத்தார்கள். நகரமக்கள் தங்களிடையே சமயப் பிணக்குத் தோன்றாதபடி எல்லாரிடத்தும் கருத்து வேற்றுமையின்றி அன்பினாற் பழகினார்கள். பெருஞ்செல்வர்கள் எழு நிலை மாடங்களில் இனிது வாழ்ந்து வந்தார்கள்; சவைக்கினிதாகிய அடிசிலை இரவலர்க் களித்துத் தாமும் உண்டு மகிழ்ந்தனர்; நிலாப் பயன் நுகரும் நெடுநிலை முற்றமும், தென்றல் வீசும் வேனிற்பள்ளியும், கூதிர்க் காலத்து வாடை புகாத கூதிர்ப்பள்ளியும் ஆகிய வாழ்க்கைச் சூழல்களைத் தம் மனையின்கண்ணே நன்கு அமைத்துப் பருவ நிலைகளுக்கேற்ற உறையுளும் உணவும் பிற வசதிகளையும் அமைத்துக் கொண்டு, தம் ஆள்வினைத் திறத்தால் இவ்வுலகத்தை இன்பமே நுகரும் தேவருலகாக மாற்றிவிட்டனர். தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப்போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்கு வரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து, அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படை மறவர்களை நிறுவிக் காத்தனர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி, `கவலை எனப்படும். இவ்வாறு பல வழிகள் கூடிய நெறியிற்செல்வார் தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னது எனத் தெரிந்து கொள்ள இயலாது மயங்குதலியல்பு. வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்ப்படுத லாகாதென றெண்ணிப் பண்டைத் தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசை காட்டும் கல்லை நிறுத்தி, அக்கல்லிலே அவ்வழி செல்லும் ஊர்ப்பெயரையும் எழுதியிருந்தனர். ஆங்கே பலவூர்க்குச் செல்வாரும் சிறிது நேரம் இளைப்பாறுதல் இயல்பாதலின், அவர் வழிபடுதற்குரிய கடவுள் அம்பலம் அமைக்கப் பெற்றது. செல்லுந் தேஎத்துப் பெயர்மருங்கு அறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த கடவு ளோங்கிய காடேசு கவலை.1 எனப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் கூறுவதனால் இவ்வுண்மை தெளியலாம். கடத்தற்கரிய பேராறுகளை எளியோரும் கடந்து செல்லுதல் கருதி, எல்லாரிடமும் கூலி பெறாது அறங்கருதி நீர்த்துறைகளில் ஓடங்கள் செலுத்தப் பெற்றன. `அறத்துறை அம்பி எனப் புறநானூற்றிற் குறிக்கப்படுவது (புறம். 381) இத்தரும ஓடமேயாகும். ஒரு நிலத்து மக்கள், தங்கள் நிலத்திற்கிடைக்கும் பொருள் களை மற்றவரிடம் கொடுத்து, அவர்கள்பால் உள்ளவற்றைப் பண்டமாற்று முறையில் வாங்கினார்கள். இளம்பருவத்து ஆடவர்களும் மகளிரும் தங்கள் உடல் அமைதிக்கேற்றபடி நன்றாக விளையாடினார்கள். இளைஞர்கள் விளையாடாது சோம்பியிருத்தல் அவர்களுடைய உடல் வளர்ச்சியினையும் உள்ளத் திண்மையினையும் சிதைக்கும் எனப் பெற்றோர் அறிவுறுத்தினர். இறந்தார் உடம்பினைத் தாழியிற்கவித்துப் புதைத்தலும், விறகிட்டு எரித்தலும் ஆகிய இருவகைப் பழக்கங்களும் தமிழரிடையே நிலவின. வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறத்தலையே தங்களுக்குரிய சிறப்பாக மதித்தார்கள். அரசர் போர்க்களத்தில் சாவாமல் நோயினால் முதிர்ந்து இறந்தன ராயினும், அவர் உடம்பினை வாளாற் பிளந்து பின்னரே அடக்கம் செய்வது வழக்கம். இதனால் தமிழர்கள் போர்த் துறையிற் கொண்ட பெருவிருப்பமும் அவர்களுடைய மற வுணர்ச்சியும் நன்கு புலனாதல் காணலாம். சங்ககாலத் தமிழர் அறிவு, ஆண்மை, பொருள், படை என்னும் நான்கு திறத்திலும் வன்மை பெற்றிருந்தனர்; தமது கல்வித்திறத்தால் அறிவை வளர்த்தனர்; படைத்திறத்தால் ஆண்மை பெற்றனர்; உழவு வாணிகம் முதலிய தொழில்களாற் பொருள் பெறும் வழி துறைகளைப் பெருக்கினர்; அறிவும் ஆண்மையும் உடையாரைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் துணை பெற்று நாட்டினைக் காத்து, அரசியலை வளர்த்தனர்; நட்பின் திறத்தால் உலகினர் எல்லாரையும் தம் சுற்றமாகக் கருதி, அன்பினை வளர்த்தனர்; அறனாற்றி மூத்த அறிவுடையராய், இறைவனை வழிபட்டு, எல்லார்க்கும் நல்லனவே செய்து மகிழ்ந்தனர். III ஆடவல் நிலை எத்தகைய செயலையும் தலைமை தாங்கிச் செய்து முடிக்கும் இயல்பு ஆண்மைத் தன்மையாகும். இவ்வியல்பு ஆடவர் பெண்டிர் இருபாலாருள் ஆடவருக்கே சிறப்பாக உரியதாம். தொடங்கிய வினைகளை இடையே நெகிழவிடாது செய்து முடிக்கும் வினையாண்மையுடையார் ஆடவர் என வழங்கப் பெற்றனர். வினைத்திறத்தில் வெற்றி பெற்று விளங்குதல் ஆண்மைத் தன்மையை மேலும் மேலும் வளர்ப்பதாகும். வாழ்க்கையில் நேரும் இடையூறுகளை எதிர்த்து நின்று வெற்றி காணுதலே ஆடவர்களின் குறிக்கோளாக அமைதல் வேண்டும். வலிய தொழில்களைச் செய்தற்கேற்ற உடலமைப்பும் உள்ளத்திண்மையும் பெற்றவர் ஆடவராவர். அவர்களாற் செய்தற்குரிய கடிய தொழில்களை மெல்லியலாராகிய பெண்டிர் செய்தற்குரியரல்லர். தீங்குதரும் உயிர்களை நோக்கி அஞ்சாமை ஆடவர் இயல்பு; அஞ்சியொதுங்குதல் பெண்மையின் இயல் பாகும். அஞ்சும் இயல்புடைய பெண்ணினத்தை அச்சமின்றிக் காத்தற்கு உதவுவது ஆண்மையின் ஆற்றலேயாகும். இவ் வாற்றலால் மனை வாழ்க்கைக்குரிய மகளிரை ஆதரித்து, அவர்கள் அச்சமின்றி வாழத் துணைசெய்தல் ஆடவர்களின் கடமையாகக் கருதப் பெற்றது. பெருமையும் உரனும் ஆடவர்களின் பண்புகளாம். ஒருவன் தன் வாழ்க்கையில் எல்லாரைக்காட்டிலும் தன்னை உயர் நிலையில் நிறுத்தல் பெருமையாகும். கல்விப் பயிற்சியினால் உண்டாகும் நல்லறிவினாலும், எத்தகைய இடையூறுகளையும் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரத்தினாலும், பலரும் தன்னைப் பாராட்ட வாழும் புகழினாலும், தானீட்டிய பொருளை இரவலர்க்கு வரையாது வழங்கும் வண்மையினாலும், ஒருவன் தன் வாழ்நாளில் எல்லாரையும் விட மேன்மேல் உயர்ந்து விளங்கும் பெருமையினைப் பெறுகின்றான். இவ்வுலகியலில் நேரும் பலவகை இடையூறுகளையும் தடுத்து நின்று உலகில் அமைதி நிலவப் பாடுபடும் உணர்வுமிக்க அவனது உள்ளத் திண்மையே `உரன் எனக் குறிக்கப்படுவதாம். தான் கொண்ட கொள்கையினை நெகிழ விடாத உறுதியும், மனத்தினை நன்னெறிக் கண் நிறுத்தும் கட்டுப்பாடும், எந்த வினையையும் மயங்காது எண்ணித் துணியும் துணிபும், திண்ணிய அறிவாகிய உரனுடைமையின் திறங்களாகும். மலையே வந்து வீழ்ந்தாலும் நிலைகலங்காத உள்ளத்திண்மை யுடையவனே `உரவோன் எனப் போற்றப் பெறுபவனாவன். உரவோர் வாழும் நாடே உரிமை வாழ்வு உடையதாகும். தான் செம்மையாக வாழ்தற்கும், தன்னாட்டு அரசியல் செம்மை யுறுதற்கும் உரனுடையாளனது உழைப்பே இன்றியமை யாததாகும். சங்க காலத்தில் வாழ்ந்த ஆடவர்கள் அரசியல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தலைவர்களாய் நின்று வினைசெய்தற்குரிய பெருமையும் உரனும் பெற்றிருந்தார்கள். மக்கள் பிற்காலத்தில் அடையும் பெருமைகளுக்கெல்லாம் அரண்செய்வன அவர்கள் இளமையிற் பழகும் விளையாட்டுக்க ளேயாம். தமிழிளைஞர்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியினை விளைக்கும் விளையாட்டினை மேற்கொண்டிருந்தார்கள். நீர்நிலையிலும் பேராறுகளிலும் கடலிலும் குதித்து நீந்துதலும், விற்போர் மற்போர் முதலிய போர்த் துறையில் பயிலுதலும் தமிழிளைஞர்களின் பண்டைக்கால விளையாட்டுக்களாய் அமைந்தன. ஆழமான நீர்நிலையின் அருகே ஓங்கி வளர்ந்த மரத்தின்மேல் ஏறிநின்று, கரையிலே நின்றவர் வியப்படையும்படி அந்நீர் நிலையிலே திடீரெனக் குதித்து, அதன் அடியிலேயுள்ள மண்ணைக் கையால் அள்ளிக்காட்டி விளையாடுதல், தமிழ் இளைஞர்களின் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். தளர்ந்த நடையினராய்த் தண்டூன்றிச் செல்லும் முதுமைப் பருவத்தின ராகிய புலவர் ஒருவர், கண்டார் வியக்கும்படி நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து அதன் அடியிலுள்ள மண்ணைக் கையால் எடுத்துக் காட்டிய தம் இளமைப் பருவச் செயலைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் மிகவும் சுவைபட எடுத்துக் கூறி, ‘அவ்விளமை இப்பொழுது இல்லை! என இரங்குகின்றார். `இளமையிற் சிறந்த வளமையில்லை, (நற்றிணை) என்றார் ஒரு புலவர். ஒருவனது வளர்ச்சிக்குரிய பருவம் இளமையே யாதலின், அவ்விளமைப் பருவத்தை ஒருவன் நிலைபெறப் போற்றிக்கொள்வதைக் காட்டிலும் அவன் பெறுதற்குரிய செல்வம் வேறு ஒன்றுமில்லை என்பது அப்புலவர் கருத்தாகும். இளமைப் பருவத்திற்குப் பொலிவினைத் தருவது பொருட் செல்வமாகும். பொருளில்லாதவனது இளமைப் பருவம் பொலி விழந்த நிலையினதாம். பொருளீட்டுதற்குரியார் வினைசெய்தற் கண் ஊக்கமுடையவராய் இருப்பர். மக்களால் பொருளென மதிக்கப்படும். உண்மையான செல்வம் உள்ளக் கிளர்ச்சியாகிய ஊக்கமுடைமையேயாகும். வினைசெய்தற்கண் தோன்றும் உள்ளக் கிளர்ச்சி ஆடவர்களுக்குச் சிறப்பாக உரித்தாகும். வினைசெய்தலில் உள்ள ஊக்கம் ஒருவன் உள்ளத்து நிலை பெற்றிருக்குமானால், அவனுக்கு உணவு முதலிய வளங்கள் குறைந்தாலும், அவன் உடம்பு திண்மையும் அழகும் பெற்றுத் திகழும். வினைத்திறமாகிய ஊக்கமுடையானொருவன். அற்ப உணவை உண்பானாயினும், அவனுடல் திண்மையாற் பொலிவு பெறும் என்பர். என் தலைவன் புல்லிய உணவினையுண்டும், மலையென வளர்ந்த பெரிய தோள்களை உடையவனாய் விளங்குகின்றான், எனத் தலைவி தன் தலைவனைப் பாராட்டு கின்றான். ஆகவே, உடம்பின் வளர்ச்சிக்கு உணவு முதலிய புறச் செல்வங்களைவிட வினை செய்தற்கண் தோன்றும் அகமகிழ்ச்சி யாகிய ஊக்கமே சிறந்த காரணமாகும் என்பது புலனாம். வினைத்திறமே ஆடவர்களுக்கு உயிராகும். `வினையே ஆடவர்க் குயிரே என்றார் ஒரு புலவர். உயிராற்றலாகிய இவ்வினைத் திறத்தைப் பெறுதற்கேற்ற வன்மையுடையதாகத் தம்முடம்பினை வளர்த்தல் தமிழிளைஞர் கடனாயிற்று. தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்வாழ்க்கையினை ஒரு பொருளாக மதியாது, எத்தகைய பகையினையும் எதிர்த்து நிற்குந் திண்மை பெற்றிருந்தார்கள். மெலியாரிடத்தே அவரினும் மென்மையுடையராகப் பணிந் தொழுகுதலும், வலியாரிடத்தே அவரினும் வன்மையுடையராகத் தலைநிமிர்ந்து நடத்தலும் ஆடவர்க்குரிய தலைமைப் பண்புகளாகும் எனத் தமிழ்மக்கள் எண்ணினார்கள். திண்மை இல்லாத ஆடவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் திறமை பெறுதலியலாது. தங்களையே காப்பாற்றிக் கொள்ளுந் திறமை பெறாத இவர்கள், தங்கள் குடும்பத்தினரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்? இடையூறுகளையெல்லாம் எதிர்த்து நின்று தங்கள் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஆண் மக்களுக்கே உரியதாகும். துன்பத்தால் தளர்ந்து சாயுந் தங்கள் குடியினைத் தளராமல் தாங்கி நிற்கும் ஆண்மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றியமையாதவர்களாகக் கருதப் பட்டார்கள். இளைஞர்களைப் போர்த் துறையில் பழக்கும் பயிற்சிக் கூடங்கள் தமிழ் நாட்டிற் சிற்றூர்தோறும் நிறுவப்பெற்றிருந்தன. ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போரிற் பழக்கும் அப்பயிற்சிக் கூடங்கள் `போரவை எனவும், `முரண் களரி எனவும் வழங்கப் பெற்றன. போரவையிற் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையினை உணர்தல் கருதி ஆண்டுதோறும் ஊர்மக்கள் போர்விழா நடத்தி வந்தார்கள். அவ்விழாவிற் கலந்து கொண்ட இளைஞர்கள் விற்போரிலும் மற்போரிலும் தாங்கள் பெற்ற திறமையினைப் போர்விளையாட்டிற் புலப்படுத்தினார்கள். இங்ஙனம் கொண்டாடப்படும் போர்விழா, `பூந்தொடை விழா என வழங்கப் பெற்றது. இந்நாளிற் கல்லூரியிற்பயிலும் மாணவர் களுக்குப் போர்ப்பயிற்சி தருதல் இன்றியமையாதது என அரசியலறிஞர்கள் பல முறையிலும் வற்புறுத்திப் பேசக் கேட்கின்றோம். இப்பயிற்சியின் இன்றியமையாமையை முன்னரே உணர்ந்த தமிழ்மக்கள், இளைஞர்கள் கல்வி பயிலும் பொழுது அவர்களுக்குப் பருவமறிந்து போர்த்தொழிலையும் கற்பித்தற்குரிய வாய்ப்பினை அளித்தார்கள். சோழர்குடித் தோன்றலாகிய பெருநற்கிள்ளி என்பான், தன்னாட்டிலுள்ள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி தருதல் கருதிப் போரவையினை நிறுவி, அவ்வவையில் இளைஞர்களைக் கூட்டிப் போர்த்துறையிற் பழக்கினான். போரவைக்குத் தலைவ னாய் விளங்கியது கருதிப் `போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்னும் பெயரால் அவன் வழங்கப் பெற்றான். அவனால் நடத்தப்பட்ட போர்ப்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்களுக்கு மற்போரும் விற்போரும் பயிற்றப்பட்டன. அங்குப் பயிலும் இளைஞர்கள் வெளியூர்களுக்குச் சென்று ஆங்காங்கே பயிலும் போர்வீரர்களுடன் போர்த்துறையில் போட்டியிடுவதனைத் தங்கள் விளையாட்டாகக் கொண்டார்கள். பெருநற்கிள்ளி இளைஞனாய் இருந்தபொழுது சோழ நாட்டின் புறத்தேயுள்ள ஓரூரிற் போர்விழா நிகழ்ந்தது. பெருநற்கிள்ளி அவ்விழாவிற் கலந்துகொண்டு தனது போர்த் திறத்தைப் புலப்படுத்தி, மக்களுக்கு அத்துறையில் ஆர்வ முண்டாக்க எண்ணினான்; தானும் போர் விழாவிற் கலந்து கொள்ள வருவதாக அவ்வூர் மக்களுக்கறிவித்தான். ஊர்மக்கள் அவனது வருகையைப் பெரும் பேறாகக் கருதி, அன்புடன் வரவேற்றார்கள். அவ்வூரில் `பெருங்கோழி நாய்கன் என்னும் வணிகன் மகளாராகிய `நக்கண்ணையார் என்னும் இள நங்கையார், கன்னிமைப் பருவத்திலேயே தமிழிற் பெரும்புலமை பெற்று விளங்கினார். நல்லிசைப் புலமை நிரம்பிய அந்நங்கையார், போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் பேராற்றலைக் கேள்வியுற்று அவன்பால் அன்பு மீதூரப் பெற்றவராதலின், தம்மூரில் நிகழும் போர்விழாவில் தம் வீட்டின் முன்றிலின் ஒருபால் ஒதுங்கி நின்று, விளையாட வந்த பெருநற்கிள்ளியைக் கண்டு மகிழ்ந்தார். நக்கண்ணையார் வாழும் வீட்டின் எதிரேயுள்ள அகன்ற மணல்வெயிலேதான் போர்விழா நிகழ்தற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உரிய காலத்தே இளைஞர்களும் பொது மக்களும் திரளாகக் கூடியிருந்தார்கள். பெருநற்கிள்ளியின் தோழர்களாகிய வீரர்கள் ஒருபுறமும் அவ்வூரில் வாழும் போர்வீரர்கள் மற்றொரு புறமும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றார்கள். இரு திறத்து வீரர்களும் தாங்கள் கற்று வல்ல போர்த்திறங்களை மேன்மேலும் விளங்கக் காட்டினார்கள். அவர்கள் எல்லாரைக் காட்டிலும் பெருநற்கிள்ளியே தன் போர்த்தொழிற்றிறனை மிகுதிப்படுத்தி விளையாடினான். அதனைக் கண்டு மகிழ்ந்த சான்றோர், ‘பெருநற்கிள்ளியே வென்றான்! எனப் பெருக ஆரவாரம் செய்தனர். எந்தவூரிலும் உண்மையை மறைத்துப்பேசும் மக்கள் இருப்பது இயல்புதானே? அத்தகைய மக்கள் அப்போர்விழாக் கூட்டத்திலும் இருந்தார்கள். வெளியூரினின்று வந்த பெருநற்கிள்ளியின் வெற்றியை வெளியிடாது மறைத்தல் வேண்டுமென்பது அவர்களது விருப்பம். அவ்விருப்பத்தால், `பெருநற்கிள்ளி வென்றானல்லன் என அன்னார் ஆரவாரஞ் செய்வாராயினர். இவ்வாறு ஒன்றுக் கொன்று மாறுபட நிகழும் ஆரவாரத்தைக் கேட்ட நக்கண்ணையார், காலிலணிந்த சிலம்புகளார்ப்ப வீட்டினின்றும் வெளிவந்து, தம் வீட்டு முகப்பிலே நின்ற பனையின் தூரிலே ஏறிநின்று, போர்விழா நிகழ்ச்சியை எட்டிப் பார்த்தார். தம்மால் அன்பு செய்யப்படும் பெரு நற்கிள்ளியே வென்றதை நேரிற்கண்டு தெளிந்தார். இம் மகிழ்ச்சியின் விளைவாகப் போரவைக் கோப்பெருநற் கிள்ளியை அவர் வியந்து போற்றிய பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது. (புறம். 85). கடற்கரையிலே வாழும் பரதவர்கள் தங்கள் உடல் வலியினைப் பெருக்கிக்கொள்ளக் கருதிப் போர்ப்பயிற்சிக்குரிய முரண்களரியினை அமைத்துக்கொண்டார்கள். அதன்கண் பழகிய வீரர்கள், மணல் பரந்த வெளியிலே நின்று, ஒருவர்க் கொருவர் முதுகு கொடாமல், கையாற் குத்தியும், படைக் கலங்களாலே வெட்டியும், ஒருவர் உடம்புடன் ஒருவருடம்பு தாக்கும்படி கலந்து பொருதார்கள் என்னும் செய்தி பட்டினப் பாலையிற் கூறப் பட்டுள்ளது. இவ்வாறு இளமைப் பருவத்திலேயே கல்விப்பயிற்சியும் போர்ப்பயிற்சியும் வாய்க்கப் பெற்ற குடும்பமானது எத்தகைய இன்னல்களாலும் சிதையாது வளரும் சிறப்புடையதாகும். குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய நல்ல ஆண்மக்களைப் `பொன் போற்புதல்வர் எனச் சான்றோர் பாராட்டுவர். அதனால், புதல்வர்களைப் பெறாதவர் நாட்டுக்குச் செய்யவேண்டிய கடமையினைச் செய்யாதவராகவே கருதப்பட்டனர். புதல்வரைப் பெறாதவருடன் வீரர்கள் போர்செய்வது கூடாதென்பது தமிழ் நாட்டுப் போரறமாகும். தம் முன்னோர் தொடங்கிய நற்செய்கை களைத் தமக்குப் பின்னும் தொடர்ந்து செய்தற்குரியவர்கள் தம் புதல்வர்களும், அவர்கள் வழிப் பிறக்கும் பேரர் முதலிய வருமாவர். ஆண் மக்களைப் பெற்றவர்களே தங்கள் முன்னோர்க் குரிய விருப்பத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றியவர்களா வார்கள். புதல்வர்ப் பேறு வாய்க்கப் பெறாதார், தமக்குப் பின் முன்னோர் வினைகளைத் தொடர்ந்து முடித்தற்குரிய சந்ததி இல்லாமையால், தம் கடமையினை நிறைவேற்றாதவராகவே கருதப்பட்டனர். தம் குடும்பத்தையும் நாட்டையும் காத்தற்பொருட்டுத் தம்முயிர் கொடுத்துச் செய்தற்குரிய ஆண்மைத் திறத்தைத் தம் வழியினர் பெறுதல் வேண்டுமென்பது தமிழ்க் குடியிற்றோன்றி மறைந்த முன்னோர்களின் விருப்பமாகும். முன்னோர் விரும்பிய இவ்விருப்பத்தினை நிறைவேற்றுதல் கருதி ஆடவர்களைப் பெற்றுக் கொடுத்தல் பின்னுள்ளார்க்குரிய கடமையாய் அமைந்தது (பதிற்றுப் பத்து, 70). தமிழ்நாட்டின் தென்பகுதி கடலாற் கொள்ளப் பட்டமை யால், அங்கிருந்து புகழுடம்பினை நிலைநிறுத்தி மறைந்த தம் முன்னோர்களைத் தென்புலத்தார் (தென்றிசையில் வாழ்வார்) எனத் தமிழர் வழிபடுவாராயினர். `தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர் 1 (புறம். 9) எனப் புலவரொருவர் ஆண்மக்களைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். மணஞ்செய்துகொள்வதற்கு முற்பட்ட பருவம் காளைப் பருவம் ஆகும். இவ்விளம்பருவ வீரர்கள் தங்கள் நாட்டின் நலங்கருதிப் போர்க்களத்தில் பகைவர் படைகளை எதிர்த்து நின்று, உயிர்வழங்கும் திறம் பெற்றிருந்தார்கள். இவ்வாறு ஆண்மை மிக்க வீரர் பலரும் போர்த்துறையில் ஈடுபட்டு இறந்தமையால், ஆள்வினைக்குரிய ஆடவர் தொகை மிகவும் குறைவதாயிற்று; தம்மைத்தாமே காத்துக் கொள்ளுதற்குரிய உடல் வலி பெறாத மெல்லியலாராகிய மகளிர் தொகை மிகுவதாயிற்று. அதனால், ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலாருள் ஆண் மக்களைப் பெறுதலே நற்பேறாகக் கருதும் வழக்கம் நாட்டில் நிலை பெறுவதாயிற்று. மணம் செய்து கொண்டாருள் புதல்வர்ப் பேறுடையார் தம் முன்னோர்க்குரிய அரிய கடமையினைச் செய்து முடித்து, வாழ்க்கை இன்பங்களை நுகர்ந்து முதிர்ந்தவராதலால், அவரைப் போரிற்கொல்லுதல் பழியுடைய செயலாகக் கருதப்படவில்லை. கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பு மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்விடக் கருதியபொழுது, அவனுடைய உயிர் நண்பராகிய பொத்தியார் என்னும் புலவர் தம் மனைவி பிள்ளைப் பேறடையும் நிலையிலிருந்தும் தாமும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட முயன்றார். அதனை உணர்ந்த கோப்பெருஞ்சோழன் புலவரை நோக்கி, புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா, எனப் பணித்துப் பொத்தியாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் என்பதும், அரசன் பணியினை மேற்கொண்டு வீடு சென்ற புலவர் தம் மனைவி புதல்வனைப் பெற்று உடல் நலம் பெற்ற பின்னர்த் திரும்பிச் சென்று வடக்கிருந்து நடுகல்லாகிய கோப்பெருஞ் சோழனையடைந்து, `இடந்தருக என வேண்டிப் பெற்ற, உண்ணாது வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் பொத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடலால் இனிது விளங்கும். இவ்வர லாற்றைச் சிறிது ஊன்றி ஆராய்ந்தால், தம் நாட்டில் மக்கள் தொகை பெருகுதல் வேண்டும் என்பதில் தமிழ்மன்னர் பேரார்வம் கொண்டிருந்தமை நன்கு புலனாகும். கடமை ஆண்மையும் ஆற்றலும் உடைய புதல்வர்களைப் பெற்று வளர்த்தலைத் தாய் தன் கடமையாக எண்ணினாள். தன் புதல்வர்களுக்கு நிறைந்த கல்வியைப் பயிற்றி அவைக்கண் எல்லாரினும் முந்தியிருக்கச் செய்தலையும் அவர்களைப் போர்த்துறையில் பயிற்சி நிரம்பிய அமைதி உடைய வீரராக்கித் தன் நாட்டிற்கு உழைக்கச் செய்தலையும் தந்தை தன் கடமையாக எண்ணினான். போர்த்துறையிற்சிறந்த அவ்வீரர் பகைவரை வென்று மேம்படுதற்குரிய வேலும் வாளும் முதலிய படைக் கலங்களையும் பிறவற்றையும் செய்துகொடுத்து நாட்டின் படைத்திறனைப் பெருக்குதலையே கொல்லர் முதலிய தொழி லாளர் தம் கடமையாகக் கொண்டிருந்தனர். அவ்வீரர்களுக்கு அரசியல் வழியொழுகும் ஒழுங்குமுறையினை அறிவுறுத்தி நிலமும் பொருளுந் தந்து ஆதரித்தலைத் தமிழ் வேந்தர் தம்முடைய கடமையாக மேற்கொண்டனர். வீரவாழ்வு வாழ்தற்குரிய சூழ்நிலையினையுடைய தமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்த மறவர்கள், போர்க்களத்திலே பகைவர் சேனைகளை அறவே சிதைத்து, யானைப் படையைக் கொன்று, வெற்றியுடன் மேம்படுதலையே தங்கள் கடமையாகக் கருதினார்கள். புதல்வர்களுக்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட போர்த் துறையில் தமிழ்நாட்டிற்பிறந்த எல்லா இளைஞர்களும் கலந்து பயின்றார்கள். இளைஞர்கள் தங்கள் நாட்டின் நலங்கருதிப் பகைவரை எதிர்த்தல் கடன் என்பது தமிழ்மக்களாற் கருதப் பெற்றது. ஆடவர் ஒவ்வொரு வரும் தத்தம் இளமைப் பருவத்தில் போர்ப்பயிற்சி பெற்றுத் தமிழ்ப்படை வீரராய் விளங்கினர். அவர் எல்லாரும் அமைதியான காலத்தில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்துவர்; போர்க் காலங்களிற் படையிற்சேர்ந்து பணியாற்றுவர்; தம் போர்த் திறமையொன்றே கருதி நாட்டு மக்களிடம் தவறாக நடந்து கொள்ளாமல், யாவரிடத்தும் பணிவாக நடந்து கொள்வர். பகைவேந்தரைப் போரிற் கொல்லும் பேராற்றல் பெற்ற வீரன் ஒருவன், போரில்லாத அமைதிக் காலத்தில் உழுது பயிர்செய்யுந் தொழிலை மேற்கொண்டிருந்தான். இத்தொழிலைச் செய்யுங்காலத்துத் தன் குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய உணவில்லாமையால், தன்னூர் மக்களிடம் உணவுக்குரிய தானியங்களைக் கடனாகப் பெற்றிருந்தான். அவனுடைய வரகு முற்றி விளைந்தது. வரகினை அறுத்த அரிதாள் குறைவாய் இருந்தபடியால், எருதுகளைக்கொண்டு, மிதிக்கவிடாமல், இளைஞர்கள் தங்கள் கைகளாலே அரிதாள்களை அடித்து வரகினைக் குவித்தார்கள். தன் நிலத்தில் விளைந்த வரகிற் பெரும்பகுதியினை அவ்வீரன் தன் கடன்காரர்களுக்குக் கொடுத்து விட்டு, எஞ்சியதனைப் பசிமிக்க பாணர்களுக்குக் கொடுத்தனுப்பினான்; தன் குடும்பத்தார் பசியினை நீக்குதற்குச் சிறிது கூட விளைபொருள் இல்லாமையால், மீண்டும் பிறர் பாற்சென்று வரகினைக் கடனாகப் பெற முயன்றான். இவ்வாறு உலக நடையினை உணர்ந்து நடந்துகொண்ட தமிழ் மறவனது பண்புடைமையினைப் புலவரொருவர் புறப் பாடலொன்றில் (327) சுவை மிக எடுத்துரைக்கின்றார். இதனால், அரசரை வெல்லும் பெருவன்மையுடைய வீரர்களும், தங்கள் மனம் போனபடி வரம்பு கடந்து ஒழுகாமல், உலகியல் வரம்புக்கு உட்பட்டு, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து, அறத்தின் வழியொழு கினார்கள் என்பது பெறப்படும். ஆடவர் தமக்கு எதிரில்லாதபடி தமது ஆண்மைத் தன்மையை மேன்மேலும் போர்க்களத்திற் புலப்படுத்துதலையே தம்முடைய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். காவற் பெண்டு எனக் குறிக்கப் பெற்ற பெண்பாற் புலவருடைய மகனொருவன், பெருவீரனாய் விளங்கினன். அவன் எப் பொழுதும் போர்செய்தலையே பொழுது போக்காகக் கொள்ளும் ஆண்மை மிக்கவனாவன். அவனைக் காணச் சென்ற நண்பனொருவன், அவன் தாயினைப் பார்த்து, ‘நின் மகன் எங்கேயுள்ளான்? என வினவி நின்றான். அதுகேட்ட அவ் வீரனுடைய தாய், அவனை நோக்கி, நின்மகன் எங்கேயுள்ளான் என்று என்னைக் கேட்கின்றாய். அவன் எவ்விடத்திருந்தாலும் அவனை அறியேன். புலி தங்கியிருந்து வெளியே சென்ற குகையினைப் போல, அவனைப் பெற்ற வயிறோ, இதுவாகும். அவன் போர்க்களத்தின் கண்ணே வெற்றியாற் பொலிவு பெற்றுத் தோன்றுவான். அங்கே போய்ப் பார்ப்பாயாக, (புறம். 86) எனக் கூறியனுப்புகின்றாள். ‘புலியிருந்து போனமையால் வெறுவிதாகிய குகைக்கும் வெளிச்சென்ற புலிக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமைபோல, எனக்கும் என் வயிற்றிற் பிறந்த மகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனக் காவற் பெண்டு அறிவுறுத்தின்மை ஆடவர்களது வீர வாழ்க்கையின் இயல்பினையும் அவர்களைப் பெற்ற தாயாரின் வீரத் திண்மையை இனிது விளக்குவதாம்.ஒரு நாளிலே எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தச்சனொருவன் ஒரு மாதம் முயன்று செய்த தேர்க்கால், விரைவும் திண்மையும் உடையதாதல்போலப் போர்த் தொழிலில் விரைவும் திண்மையும் உடைய வீரர் பலர் இத்தமிழகத்திலே வாழ்ந்தனர். திடீரெனப் போர் ஏற்படும்பொழுது ஊர்மக்கள் எல்லாரையும் முரசறைந்து அழைத்தற்காக ஊர் மன்றத்திலே முரசு தொங்கவிடப்பட்டிருத்தல் மரபு. அம்முரசு பிறரால் அடிக்கப்படாது பெருங்காற்றின் மோதுலால் அதன்கண் சிறிய ஓசை தோன்றுமானாலும், அதனைக் கேட்டுப் போர்ப் பறையென்று கருதிப் போருக்குப் புறப்படும் விரைவு உணர்ச்சி தமிழ் வீரர்கள்பால் விளங்கியது. `ஏறு தழுவுதல் என்னும் முறை அக்கால ஆண்மக்களது உடல் வலியையும் உள்ளத் திண்மையை யும் நன்கு விளக்குவதாகும். இங்ஙனம் செய்தற்கரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்ற ஆடவர், தம்மை அன்பினால் காதலித்த உளமொத்த மங்கையரையே மணந்து கொண்டனர். தம்மை விரும்பாத மகளிரைக் கூடுதல் தம்முடைய ஆண்மைத் தன்மைக்கு இழுக்காகுமென்பது அவர்தம் கருத்து. தனது உடல் வன்மை யொன்றனையே பற்றுக்கோடாகக் கொண்டு மெல்லியலாராகிய பெண்டிரது உள்ளத்து உணர்ச்சி யினை மதியாது உணர்வு கடந்து ஒழுகுபவன் ஆடவர்க்குரிய உரன் என்னும் திண்ணிய அறிவினைப் பெறாதவன் என இகழப்படுவான். விரும்பாத மகளிரை விரும்பி நிற்பவன் உரனில்லாதவன் என எல்லாராலும் இகழப்படுதல் உறுதி. என்னை இகழ்ந்த அறிவில்லாதவனை யானையின் காலில் அகப்பட்ட மூங்கில் முளையைப்போல வருந்தப் பொருதிலேனா யின், தீதிலாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத மகளிரது புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக! எனச் சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுகின்றான். விருப்பமில்லாத மகளிரைக் கூடுதலை நல்லாண்மைமிக்க ஆடவர் அருவருப்பாகக் கருதுவர் என்பது மேற்கூறிய நலங்கிள்ளியின் வஞ்சினத்தால் நன்கு புலனாம். தன்னை அன்பினால் காதலித்த மெல்லியலாளாகிய மகளிடத்து அவளைக்காட்டிலும் மென்மையாளனாய்ப் பணிந்தொழுகுதலும், வீரத்தின் வன்மையால் தன்னை யொத்த ஆடவர்களிடத்தில் அவர்களைக் காட்டிலும் பேராண்மை படைத்தவனாய் நின்று அவர்களை அடக்கி ஆளுதலும் நல்லாண்மை மிக்க வீரனுக்குரிய பண்புகளாகப் பண்டைத் தமிழர்கள் விளக்கியுள்ளார்கள். ஆடவர் தமக்கொத்த அன்புடைய மகளிரை நாடித் திருமணம் செய்துகொண்ட பின்னர், மனையில் இருந்து இல்லறம் நிகழ்த்தும் உரிமையினை வாழ்க்கைத் துணைவியராகிய மனைவியர்க்கு வழங்கினர். மனைவியுடன் மகிழ்ந்து இல்லிருந்து நல்லறம் செய்தற் கேற்ற பொருளை ஈட்டுதல் ஆடவர்களின் கடமையாகும். வறுமையின் கொடுமையால் பசி நீங்க வாழ முடியாத இரவலர் களுக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து ஆதரித்து அறம் செய்தலும், தமக்கடங்காத பகைவரை வென்றடக்குதலும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் நுகர்தலும் ஆகிய உலகியலில் நிகழும் எல்லாச் செயல்களும் பொருளால் நிகழ்தற்குரியனவே. `பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை, என்றார் திருவள்ளுவர். ஆகவே, தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளைத் தேடுதல் ஆடவரின் கடமையாயிற்று. தன் முயற்சியால் வந்த பொருளைக் கொண்டே ஒருவன் தன் வாழ்க்கையினை நிகழ்த்துதல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. ஒரு தொழிலும் செய்யாது தன் முன்னோர் தேடி வைத்த பொருளைக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவன் உயிருடையவனாகக் கருதப்படுவதில்லை. மணங்கொள்ளுமுன் பெற்றோரது ஆதரவின்கீழ் வாழ்ந்த, மகன், உரிய பருவம் வந்ததும் தன் மனத்திற்கினிய மங்கையை மணந்து வாழ விரும்புகின்றான். அவன் தான் விரும்பிய மங்கையை மணம் செய்துகொள்ளுதற்குரிய பொருளைப் பெற்றோரிடம் வேண்டிப் பெறுவதில்லை. தனது திருமணத்தை முன்னிட்டுப் பொருளீட்டக் கருதிய அவன் வேற்று நாடு செல்வது வழக்கம். இதனை `வரைவிடை வைத்துப பொருள் வயிற்பிரிதல் (பணத்தை ஒத்தி வைத்து விட்டு) என்பர். தலைவன் மணந்து கொண்ட பின்னரும் பொருளீட்டுதற்கென மனைவியைப் பிரிந்து செல்லுதல் உண்டு. `இரப்பார்க்கு இல்லையென்று சொல்வதைவிட இறத்தலே மேல், என்பது தமிழர்களது எண்ணமாகும். அறம்புரி நெஞ்சத்தவராய்த் தமிழ் நாட்டு ஆடவர் வாழ்ந்தனர். மனைக்கண் மனைவியுடனிருந்து வாழ்வதன் நோக்கம், விருந்தினர்க்களித்து, வறுமையாளர் எல்லார்க்கும் நல்லாற்றின் நின்ற துணையாய் உதவி செய்தலே என்பது அவர்தம் கொள்கையாய் அமைந்தது. ஆண்மையுடையார் வீடுகள், இரவலர்க்கும் பிறர்க்கும் அடையா வாயிலையுடை யனவாய் விளங்கின. மனைவியுடன் வாழ்க்கை நடத்துங்கால் ஆடவர் தம் நாட்டிற்கு வரும் இடையூறுகளை நீக்குதல் கருதி, அரசனுக்குத் துணையாய்ப் போர் செய்யப் பிரிந்து செல்லுதல் உண்டு. `போர்க்களத்திலே வீரத்திற்குத் தானே எல்லையாய் விளங்கும் வீரனொருவன், மனைக்கு விளக்கந்தரும் தன் மனைவி யொடு கூடி வாழ்ந்து, நாட்டுக் குடிகளுள் ஒருவனாய் விளங்கு கின்றான். அவனே பகைவர் தன் நாட்டிற் படையொடு புகுந்து தீங்கு செய்தவிடத்து, அவர்தம் சேனை வெள்ளத்தைத் தடுக்கும் அணையாகவும் விளங்குகின்றான், எனப் புலவர் ஒருவர் தமிழ்நாட்டு ஆடவரது இயல்பினைப் புறப்பாடல் ஒன்றில் (314) எடுத்துரைக்கின்றார். இதனால், தமிழ் நாட்டிலுள்ள ஆடவர்கள் இந்நாட்டின் குடி மக்களாய் விளங்கியதுடன், சமயம் நேர்ந்த பொழுது போர் செய்து நாட்டினைக் காக்க வல்ல படை வீரர் களாகவும் தொண்டு செய்தார்கள் என்பது நன்கு தெளியப்படும். ஆண் மக்கள் தாங்கள் வாழும் நிலப் பகுதியை எல்லாப் பொருள்களும் விளைவதற்குரிய நிலையில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வளமுடையதாக்கினார்கள். அவர் களுடைய இடைவிடாத உழைப்பினால் நீரில்லாத பாலையும் வளமுடையதாய் மாறிற்று. எல்லா வளங்களும் ஒருங்கு அமைந்த நாடாயினும், அந் நிலத்தில் வாழும் ஆடவர்கள் உழைப்பின்றிச் சோம்பி இருப்பார்களானால், அந்நாடு ஒரு பயனும் தருதலில்லை. ஆகவே, நிலத்தைப் பற்றிய முறையில் அதனை வளமுடைய தாகவும் வளமற்றதாகவும் பிரித்துப் பேசுதல் பொருந்தா தெனவும், நல்ல நினைவும் நல்ல உழைப்புமுடைய ஆடவர்கள் எந்த நிலத்தில் வாழ்கின்றார்களோ, அந்த நிலமே நற்பயன் தருமெனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உய்த்துணர்ந்தனர். நிலமானது, நீர் வளமுடைய நாடு, மரஞ்செறிந்த காடு, மேடு, பள்ளம் எனப் பல்வேறு இயல்புகளை உடையதாதல் கருதி அந்நிலப் பகுதியினை `நன்னிலம் எனப் பாராட்டியும், `புன்னிலம் எனப் பழித்தும் பொது மக்கள் பேசுவார்கள். வளமில்லாத நிலமாயிருந்தாலும், நல்ல நினைவும் உழைப்பும் உடைய ஆடவர்கள் வாழ்ந்தால், நல்ல பயன்களைத் தருமெனவும், வளமார்ந்த நன்னிலமாயினும், தீய நினைவும் சோம்பலுமுடைய தீயவர் வாழ்ந்தால், ஒரு சிறிதும் பயன்படாதெனவும் உய்த்துணர்ந்த ஔவையார், நிலமே, நீ நாடாய் இருந்தாலும், காடாய் இருந்தாலும், மேடாய் இருந்தாலும், பள்ளமாய் இருந்தாலும், நினக்கு என நன்மை தீமையினை உடையை அல்லை. நின்பால் வாழும் ஆடவர்கள் எங்கெங்கே நல்ல எண்ணமும் உழைப்பும் உடையவர்களாய் விளங்குகின்றார்களோ, அவ்வவ்விடங்களில் நீயும் நல்ல பயனைத் தருகின்றாய். ஆதலால், நீ இனிது வாழ்வாயாக! என ஒரு புறப்பாடலால் (187) நிலத்தை வாழ்த்துகின்றார். இவ்வாழ்த்து ஆடவர்களின் நன்முயற்சியால் நில இயல்பு வளம் பெறும் உண்மையினை நன்கு விளக்குதல் காணலாம். நல்ல வளமுடைய நாடாயினும், மனநலமில்லாது அறமல்லாதன செய்யும் ஆடவர்களைப் பெற்றிருக்குமானால், அது தன் வளம் கெட்டுச் சிதையுமென்பர். ஆற்றிலே நீந்தி விளையாடிய இளநங்கை ஒருத்தி கை தளர்ந்து வெள்ளத்தின் வழியே செல்ல, அது கண்ட இளைஞன் ஒருவன் துடுமென ஆற்றிற்குதித்து அவளைக் கரையேற்றிக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய ஆடவனையே தான் மணந்துகொள்ள வேண்டுமென்பது அந்நங்கையின் விருப்பம். அவ்விருப்பத்தை உணர்ந்துகொள்ளாத தந்தையும் தமையன்மாரும் அவளை வேறொருவர்க்கு மணஞ் செய்யக் கருதினர். தலைமகளது அன்புக்கு மாறாக அறம் அல்லன செய்யத் துணியும் அவர்கள் செயல் நாட்டின் இயற்கை வளத்தைச் சிதைத்துவிடும் என உணர்ந்த தோழி, இம்மலையில் வாழ்வார் தம் மகளை அன்பினால் காப்பாற்றிய தலைவனுக்குக் கொடுக்க நினையாது அயலான் ஒருவனுக்குக் கொடுக்க நினைந்து அறத்துக்கு மாறாக நடந்துகொள்ளுவதால், இனி இம்மலை நிலத்தில் வள்ளிக் கிழங்கும் நன்றாக விளையா; மலைமேல் தேனடைகளும் தொடுக்கப்படமாட்டா; புனங்களில் தினைகளும் நிறைந்த கதிர்களை ஈனாவாம்! எனச் செவிலித் தாயிடம் கூறி வருந்து கின்றாள்.1 நிலத்தில் வாழும் நல்ல ஆடவர்களின் நினைவும் செயலும் பற்றியே அந்நிலம் வளம் பெறுதல் கூடுமெனப் பண்டைத் தமிழ் மக்கள் எண்ணினமை தோழியின் கூற்றால் நன்கு புலனாம். எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! IV பெண்டிர் நிலை அழகினாலும், அன்பு அருள் முதலிய பண்பினாலும் விரும்பத் தக்க தன்மை பெண்மையாகும். ஆடவர்களால் விரும்பிப் போற்றத் தக்க அன்பு, அடக்கம், அமைதி முதலிய நற்பண்புகளும், அப்பண்புகளுக்கேற்ற உடல் வனப்பும் உடையவரே பெண்டிர் எனப் போற்றப் பெறுவர். கண்ணிறைந்த பேரழகினால் உளங்க வரும் நங்கையைக் `காரிகை என வழங்குதல் உலகியல். ஆடவர் களால் காதலிக்கத் தகுந்த காதல் மிக்க மகளிர் `மாதர் என வழங்கப் பெற்றனர். ஐம்பொறிகளால் நுகர்தற்கினிய மென்னீர்மை மகளிரின் சிறப்பியல்பாகும். மகளிர்பாற் காணப்பெறும் மென்னீர்மையினைச் `சாயல் என்பர். சாயலாகிய மென்மை யினைத் தம் இயல்பாகப் பெற்றமையால், `மெல்லியலார் என்ற பெயர் மகளிர்க்கு உரியதாயிற்று. ஆடவர் அச்சமின்றி நாடெங்குஞ் சுற்றித் திரிந்து இயற்கையாலுளவாகும் இடையூறகளை எதிர்த்து நின்று வினை செய்தல் போலப் புறத்தொழிலிற் கலந்து கொள்ளும் விருப்பம் பெண்டிர்க்கு இயல்பன்றாம். மகளிரது உடலமைப்பு வலிய தொழில்களைச் செய்தற்கு ஏற்றதன்று. உடலின் திண்மை பெறாத மெல்லியலார் விலங்கு முதலியவற்றால் உலகியலில் நிகழும் இடையூறுகளை எதிர்த்து நிற்றற்குப் போதிய ஆற்றலுடை யாரல்லர். துன்பந்தரும் இடர் நெறிகளிற்செல்லாது ஒதுங்கி நின்று தம் உள்ளத்து அமைதியால் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெண்டிரின் திறமையாகும். அச்சம், நாணம், மடம் என்பன பெண்டிர்க்குரிய குணங்களாம். மகளிரது உள்ளத்தில் குறிப்பின்றித் தோன்றும் நடுக்கம் அச்சமாகும். தம் பெண்மைத் தன்மைக்குப் பொருந்தாத புறச் செயல்களில் ஒதுங்கி ஒழுகுதல் நாணமாகும். உலகியற் பொருள்களின் இயல்பினைப் பிறர் அறிவிக்க அறிந்து தம் அறிவால் மேற்கொண்ட கொள்கையினை நெகிழ விடாது போற்றுதல் மடனாகும். பெண்களுக்கு இயல்பாக அமைந்த இக்குணங்கள் அவர்கள் வாழ்க்கையில் மேன்மேலும் உறுதிபெற்று வளர்வனவாம். தன்னை மணந்துகொண்ட தலைவனுக்கு எத்தகைய தீங்கும் நேர்தலாகாது எனத் தலைமகளிடத்தே தோன்றிய அச்சம், அவள் தன்கணவனிடத்தே வைத்த அன்பு காரணமாகப் பிறந்ததாகும். அறிவும் ஆண்மையும் சால்பும் பெற்ற ஆடவனொருவனைத் தன் ஆருயிர்த் தலைவனாகக் கருதி மணந்துகொள்ள விரும்பிய வழி, அவன்கண் உள்ளம் ஒன்றி அடங்கி யொழுகுதல், காமக் குறிப்பினால் தோன்றிய நாணமாகும். அவனொருவனையே வழிபடுதல் வேண்டும் எனத் தான்கொண்ட கொள்கையை நெகிழாது கடைப்பிடித்தல் கற்பாகும். தன் கணவனே தெய்வமெனக் கருதி மனஞ்சலியாது ஒழுகும் உள்ளத் திண்மையே கற்பெனப்படும். தனக்குச் சிறந்தான் ஒருவனையே தன் உயிர்த் துணைவனாகக் கடைப்பிடித்தொழுகும் உறுதி யுடையவளே `ஒருமை மகள் எனப் போற்றப் பெறுவள். அயலானொருவனது விருப்பிற்கிணங்கித் தன் உள்ளத் துறுதியினை நெகிழ விட நினைத்தல் கலக்கமாகும். இங்ஙனம் மாறுபட்டுக் கலங்கதல் உள்ளத்திண்மையில்லாத இழிந்த மகளிரின் செயலாகும். கலங்கா நிலையாகிய கற்பென்னும் திண்மை யுடைய மகளிரே பெண்டிர் என மதித்துப் போற்றுதற் குரியவராவர். தம் பெண்மைத் தன்மையின் இயல்பினை அழியாது காத்துக் கொள்ளுதலும், தம் கணவரைப் பேணி அவர் சொல்வழி அடங்கியொழுகுதலும், தம் இருவரிடத்தும் அமைதற்குரிய நன்மை நிறைந்த புகழினை நீங்காமற் பாதுகாத்தலும் பெண்டிர்க் குரிய கடமைகளாம். தமிழ் மக்கள் வீரத்தை விளைத்தற்கென ஆண்பிள்ளை களைப் பெற விரும்பியது போலவே, அன்பும் அருளும் ஆகிய மனப் பண்பினை வளர்த்தற்குரிய பெண்மக்களையும் பெற விரும்பினார்கள். அன்பும் அறிவும் அமைந்த பண்புடைய பெண்மக்களைப் பெறுதலை விரும்பிய மக்கள், அத்தகைய நன்மக்கட்பேற்றினை அருளுதல் வேண்டும் என இறைவனை வணங்கிப் போற்றினார்கள். இச்செய்தி, குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் 1 என வரும் கபிலர் பாடலால் இனிது புலனாம். தம் உடலமைப்பிற்கும் உள்ள இயல்புக்கும் ஏற்ற விளையாடல்களைச் சங்ககாலத் தமிழ் மகளிர் மேற்கொண் டிருந்தனர். மணலிற் சிறுவீடு கட்டுதல், கழற்சிக்காய் அம்மனைக் காய் முதலியவற்றைக் கையாற்பிடித்து ஆடுதல், பறவை உயர்ந்து பறக்குமாறு போல உந்தி பறத்தல், பந்தாடுதல், ஊசலில் ஏறியாடுதல், பூக்கொய்தல், புனல்விளையாடல் முதலியன மகளிரின் இளம்பருவ விளையாட்டுக்களாம். மேற்குறித்த விளையாடல்கள் யாவும் மகளிர்க்கு உடலில் திண்மையினையும் உள்ளத்து எழுச்சியினையும் தந்து, அவர்தம் உடல் நலத்தினை நன்கு பாதுகாப்பனவாம். இவ்விளையாடல்களின் இன்றியமை யாமையினை உணர்ந்த பெற்றோர் தம் மகளிரை நன்றாக விளையாடி மகிழும்படி வற்புறுத்தினர். விளையாடும் மகளிர் கூட்டம் `ஆயம் என்னும் சொல்லாற் குறிக்கப்பட்டது. `வீட்டின் புறத்தே போந்து விளையாடும் பருவத்து இளமகளிர், தம் தோழியர்களுடன் கூடி விளையாடி மகிழாது, வீட்டின் கண்ணே அடைப்பட்டிருத்தல் அறனும் ஆகாது; அவர்கள் உடலின் ஆக்கத்தையும் சிதைப்பதாகும், என அறிஞர் பலரும் அறிவுறுத் தினர். அதனால், இளமகளிர், தம் தோழியர்களுடன் கூடி விளையாடி மகிழாது, வீட்டின் கண்ணே அடைபட்டிருத்தல் அறனும் ஆகாது; அவர்கள் உடலின் ஆக்கத்தையும் சிதைப் பதாகும், என அறிஞர் பலரும் அறிவுறுத்தினர். அதனால், இளமகளிர் எல்லாரும் புதுப்புனலாடியும், பூக்கொய்தும், மாலை முதலியன தொடுத்தணிந்தும் விளையாடி மகிழ்ந்தனர். விலங்கினின்றும் மக்களை வேறு பிரித்து உயர்த்துவது கல்வி. அத்தகைய கல்வியை ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலரும் பயிலுதல் வேண்டும் என்பது பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையாகும். உருவும், திருவும், அறிவும் முதலியவற்றால் தம்மோடு ஒத்த தகுதி வாய்ந்த மகளிரையே தமிழிளைஞர் மணந்து கொண்டனர். பெண்டிர் கல்வி பயிலுதற்கு உரியரல்லர் என்னும் பிழைபட்ட கொள்கை தமிழறிஞர்க்கு உடன்பாடன்றாம். அடக்கமும், அமைதியும், மனங்கோடாமையும், நன்றும் தீதும் பகுத்துணரும் நல்லறிவும், ஆராய்ந்துணர்தற்கு அரிய அருமைப் பண்பும் பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகுமெனப் பண்டைத் தமிழாசிரியர் வரையறுத்துக் கூறியுள்ளனர். 1 இப்பண்புகள் யாவும், நிறைந்த கல்விப் பயிற்சியுடைய சன்றோர்கணல்லது ஏனைய பொது மக்களிடத்தே காணப்படாத அருமையுடையன வாகும். ஆகவே, மேற்குறித்த அருமைப் பண்புகளுக்கெல்லாம் நிலைக்களமாய் விளங்குதற்குரிய பெண்டிர், ஆடவர்களைப் போன்று நிறைந்த கல்வியுடையராதல் வேண்டுமென்பது தமிழ் முன்னோர் கொள்கையாதல் நன்கு விளங்கும். ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலர்க்கும் கல்வி பொதுவாயினும், ஆடவர் கல்வி பயிலும் முறை வேறாகவும், பெண்டிர் கல்வி பயிலும் முறை வேறாகவும் முன்னையோர் வகுத்திருந்தனர். பொருளீட்டலும், போர் செய்தலும், நாடு காத்தலும் முதலிய புறத்துறைக்குரிய முறையில் ஆடவர் கல்வி பயின்றனர். மனை வாழ்க்கையினை நடத்தலும், அன்பினால் மன அமைதியை வளர்த்தலும் ஆகிய குடும்பப் பணியினை நிகழ்த்தற்கு ஏற்ற முறையில் மகளிர் தம் வீட்டிலிருந்தே கல்வி பயின்றனர். அவர்கள் பயின்ற கல்வி வாழ்வாங்கு வாழும் பயனுள்ள கல்வியாய் அமைந்திருந்தது. உலகியற் பொருள்களின் இயல்பினையும் உயிர்களின் உள்ளத்துணர்ச்சிகளையும் உள்ளவாறு உய்த்துணரும் நுண்ணறிவு பெண்களின் தனியுரிமையாகும். சங்ககாலத் தமிழ் மகளிர், இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் துறையிலும் சிறந்த புலமை பெற்றுத் திகழ்ந்தனர். இளம் பருவத்திலேயே உயர்ந்த புலமை பெற்று விளங்கிய நல்லிசைப் புலமை மெல்லியலார் பலர், பண்டைநாளில் வாழ்ந்தனர். அவர்களுடைய அறிவுரைகளைச் செவிமடுத்த தமிழ் வேந்தர் களும் பொதுமக்களும் அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியிலே அடங்கியொழுகினார்கள். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள சங்கத்தொகை நூல்களில் ஐம்பதின்மர்க்குக் குறையாத பெண் பாற்புலவர்கள் பாடிய செய்யுட்கள் காணப்படுகின்றன. காக்கை பாடினியார் என்னும் பெயருடைய பெண்பாற் புலவர் இருவர் தமிழுக்குச் சிறந்த யாப்பிலக்கண நூல்களை இயற்றியுள்ளனர். 2 இசைப்பயிற்சி மகளிர்க்கு இன்றியமையாததாகக் கருதப் பெற்றது. இசை பாடுதற்கு இனிய குரல் படைத்தவர் பெண்டிரே யாவர். இசைத்தமிழை வளர்த்தலில் ஆடவரைக் காட்டிலும் பெண்டிரே முதலிடம் பெற்றனர். யாழ் இசைத்தல், குழலூதுதல், மிருதங்கம் வாசித்தல் முதலாகக் கருவியாற்செய்யும் இசைத் தொழிலிலேயே ஆடவர் பயிற்சி பெற்றிருந்தனர். ஆடவரின் மிடற்றோசையைக்காட்டிலும், மகளிரது குரலே செவிக்கு இனிமை தருவதாகும். ஆதலால், கண்டத்தாற்பாடுந் தொழிலிற் சிறந்த பயிற்சியினைப் பெறுதல் மகளிர்க்கு வாய்ப்புடைய செயலாயிற்று. இசைத்தமிழில் வல்ல மகளிர், தம் இசையின் இனிமையினால் யானை முதலிய வலிய விலங்குகளையும் அடக்கியாளும் திறம் பெற்றிருந்தனர். மலைவாணர் மகளிர், தினைப்புனத்திலே தங்கிக் கிளி முதலியவை தினையை உண்ணாதபடி ஒட்டுவது வழக்கம். இரவுப் பொழுதிலே பரண்மீதமர்ந்து புனம் காக்குங் கான வனொருவன், கள்ளுண்ட களிப்பால் மயங்கி உறங்கினான். அந்நிலையிலே இளங்களிறொன்று தினைப்புனத்திற் புகுந்தது. அதனையுணர்ந்த அவன் மனைவியாகிய கொடிச்சி தன் மணங்கமழுங் கூந்தலைக் கோதிநின்று இரவிலே பாடுதற்கு ஏற்ற குறிஞ்சிப் பண்ணினை மிகவும் இனிமையாகப் பாடினார். அமிழ்தென இனிக்கும் அவ்வின்னிசையினைச் செவி மடுத்த இளங்களிறு, தான் விரும்பி வந்த தினைக் கதிரையும் உண்ணாமல், தினைப் புனத்தினை விட்டுத் திரும்பிச் செல்லுதலையும் நினையாமல், எப்பொழுதும் எளிதில் மூடப்பெறாத தன் கண்கள் மூடுதலைப் பெற்று, நின்ற நிலையினின்றும் பெயராமல் உறங்கியது, என்ற செய்தி அகநானூற்றுப் பாடலொன்றிற் குறிக்கப்படுகின்றது. இக்குறிப்பினை உற்று நோக்குங்கால், பண்டைத் தமிழ் மகளிர் பாடிய இசை, கொடிய விலங்கு களையும் அமைதியுறச் செய்யுந் திறமுடைய தென்பது நன்கு தெளியப்படும். போரிற்புண்பட்ட தம் கணவரது நோயினைத் தாம் பயின்ற இன்னிசையாகிய மருந்தினால் மகளிர் தணிவித்த செய்தி புறப்பாடலொன்றிற் (281) கூறப்பட்டது. சங்ககாலத் தமிழ் மகளிர், நாடகத் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்று விளங்கினர். உள்ளக் குறிப்பினைத் தம் உடம்பிற் றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும் முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை `விறல் என்ற சொல்லாற் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந் திறம் மகளிர்க்கே உரியதாகும். விறல்பட ஆட வல்ல வள் `விறலி என வழங்கப் பெற்றாள். உள்ளத்திற்கு உவகையளிக்கும் நுட்பத் தொழில்களைக் கலையென்ற சொல்லால் வழங்குதல் மரபு. கவின் கலைகளைப் பயிலுதற்குச் சிறப்புரிமையுடையார் மகளிரேயாவர். ஆடலும் பாடலும் அழகும் அமைந்து, தாம் கற்று வல்ல கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி மகிழ்வளிக்கும் திறன் மகளிரது மதிநலமாகும். யாழும் குழலும் ஆகிய இசைக் கருவிகளை வாசித்தல், பந்தெறி களத்தில் நின்று திறம் பெறப் பந்தாடுதல், உமிழ்தனைய உணவமைக்கும் சமையற்றொழிலிற் பழகுதல், உடம்பிற் பூசுதற்குரிய நறுமணப் பொடியினை அமைத்தல், பருவநிலைக்குப் பொருந்த உணவு முதலியவற்றை அமைத் தொழுகுதல், பிறர் உள்ளக் கருத்தினைக் குறிப்பினாலறியும் திறம் பெறல், தாம் எண்ணிய கருத்துக்களை மொழிநடையிற் பிழையின்றித் தொகுத்துக் கூறும் சொல் வன்மை பெறுதல், கண்களைக் கவரும் ஓவியம் வரைதல், மலர் மாலை தொடுத்தல், கண்கும் சோதிடமும் முதலிய நூற்றுரைகளை அறிதல் என்பன மகளிர் சிறப்பாகப் பயிலுதற்குரிய கலை விகற்பங்களாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி விளைக்கும் கலைகள் பலவற்றையும் தமிழ் மகளிர் ஐந்தாம் வயது நிரம்பிப் பன்னிரண்டாம் வயது முடியவுள்ள ஏழாண்டுகளிலும் நன்றாகக் கற்றுணர்ந்தனர். கலை வளம் பெற்ற மாதர்கள், தாங்கள் இடைவிடாது போற்றுதற்குரிய நாணமும் கற்பும் அன்பும் அருளும் முதலிய நற்பண்புகளைத் தங்கள் உள்ளத்தில் நிலைபெற வளர்த்தும், தங்களை அணுகாது தடுத்தற்குரிய குற்றங்களை அறவே விலக்கியும், தங்களைத் தாங்களே நிறையினாற் காவல் செய்து ஒழுகினார்கள்; அரிய வினைகளைச் செய்து முடித்தற்கேற்ற வினைத்திறமும், அன்பும், அறிவும், வீரமும் முதலாகிய நற்பண்புகளும் நல் லொழுக்கமும் வாய்ந்த ஆண் மகனையே மணந்துகொண்டார்கள். முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள் தங்களால் வளர்க்கப் பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் ஆற்றலுடையானுக்கே தங்கள் மகளிரை மணஞ்செய்து கொடுத்தார்கள். `கொல்லுந் தொழிலையுடைய காளைகளின் கொம்பின் கொடுமையினை நினைந்து அஞ்சும் இயல்புடையானை ஆயர் குலப் பெண் மறுபிறப்பிலும் மணந்துகொள்ள விரும்பமாட்டாள்,1 எனச் சோழன் நல்லுருத்திரனார் என்னும் புலவர் பெருமான் கூறும் மொழி அக்காலத் தமிழ் மகளிரின் விருப்பத்தினை நன்கு வெளிப்படுத்துவதாகும். மகளிரை மணந்துகொள்பவர் அம் மகளிர் அணிதற்குரிய அணிகலன்களுக்கெனப் பெரும்பொருளைப் பரிசமாகக் கொடுப்பது அக்கால வழக்கமாகும். பரிசப் பொருளை விரும்பித் தகுதியில்லாதானை மணந்துகொள்ளும் வழக்கத்தினைத் தமிழ் மகளிர் வெறுத்து விலக்கினர். `நன்மை அமைந்த பெரும் பொருளைப் பரிசமாகக் கொடுப்பினும், உயர்ந்த தகுதி யில்லாதானை என் மகள் மணந்துகொள்ள மாட்டாள், என்று சொல்லித் தந்தையொருவன் பெண் கொடுக்க மறுத்த செய்தி புறநானூற்றுப் பாடலொன்றிற் கூறப்படுகின்றது. 1 கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழும் மகளிர், வாழ்க்கைத் துணை யெனப் பாராட்டப் பெற்றனர். மனையின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தும் உரிமை மகளிர்க்கே வழங்கப் பெற்றது. அதனால், `மனைவி, இல்லாள் என்ற பெயர்கள் பெண்களுக்கு உரியவாயின. இவ்வாறு மனையின் உரிமையினைக் குறித்தற்குரிய பெயர்கள் ஆண் பாலார்க்கு வழங்காமையால், மனையறக் கடமைகளில் மகளிரே பொறுப்புடையராய் விளங்கினர் என்பதை அறியலாம். பல்வேறு தொழில்களிற் கருத்துடையராய் இடைவிடாது வினை செய்து உழலும் ஆடவர்களை வினை முடிவின்கண் வீட்டில் அமைதியாகத் தங்கியிருக்கச் செய்து மனை வாழ்க்கைக்கு விளக்கம் தருவார் மகளிரேயாவர். இவ்வாறு மனை வாழ்க்கையிற் பொலிவினைத் தரும் மனைவியை மனைக்கு விளக்காகிய வாணுதல் 2 எனப் புலவரொருவர் பாராட்டிப் போற்றுகின்றார். தன்னால் தொழப்படும் தெய்வம் வேறு, தன் கணவன் வேறு என்று கருதாமல், கணவனையே வழிபடுதெய்வமாகக் கருதி, அன்பினால் அடங்கியொழுகுதல் பண்டைத் தமிழ் மகளிரின் பண்பாகும். உறக்கத்தினை விட்டு எழுதற்குரிய விடியற்காலையில் தெளிந்த சிந்தையுடன் வழிபடு கடவுளை வணங்கியெழுவது உலகியல், `தெய்வத்தை முதற்கண் தொழுது நின்று எழாது, தன் கணவனையே முதற்கண் வணங்கி நின்று துயிலெழுவாள், `பெய் என்று சொன்ன அளவிலே மழை பெய்யும், என்றார் தெய்வப் புலவர். தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. என்பது திருக்குறள் (55). இங்ஙனம் கூறுதலால், பெண்கள் கடவுளை வணங்கக் கூடாதென்பது ஆசிரியர் திருவள்ளு வனாருடைய கருத்தெனத் தவறாக எண்ணிவிடுதலாகாது; காலைப் பொழுதில் எழுந்து கடவுளை வழிபடுதற்கு முன் தமக்குக் கட்புலனாகுந் தெய்வமாகிய கணவனை முதற்கண் வழிபடுதல் வேண்டுமென்பதே ஆசிரியர் கருத்தாகும். தம்மாற் காதலிக்கப் பெற்ற தலைவனையே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தால் மகளிர் இறைவனை மலர் தூவி வழிபடுதல் மரபாகும். `மலைவாணர் மகளொருத்தி, தன்னால் விரும்பப்பட்ட தலைவனுக்குந் தனக்கும் விரைவில் மணம் நிகழ வேண்டுமென்ற பேரார்வத்தால், தம் குலமுதற் கடவுளாய் மலையில் எழுந்தருளியுள்ள இறைவனை நன்னீருடன் நறுமலர்களைக் கையிற்கொண்டு அருச்சித்து வழிபட்டனள், என ஐங்குறு நூற்றுப் பாட லொன்றிற் கபிலர் (259) கூறுகின்றார். `சிவபெருமான், மாயோன், முருகன் முதலாய தெய்வங் களுக்கு வழிபாடு செய்தற்கென அந்தியிற் செய்யத் தொடங்கிய திருவிழாவிலே மதுரை நகரத்தில் வாழும் பேரிளம்பெண்டிர் தாமரைப் பூவினைக் கையிலே பிடித்தாற்போன்று தாம் பெற்ற இளங்குழந்தைகளைக் கையினால் தழுவிக்கொண்டு, தம் கணவருடன் பூசைக்கு வேண்டும் பூவும் நறும்புகையுமாகிய பொருள்களோடு திருக்கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டனர், என மாங்குடி மருதனார் கூறுகின்றார்.1 திருப்பரங்குன்றத்தை அடைந்த மகளிர் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்ட இயல்பினைச் சங்க நூலாகிய பரிபாடல் இனிது விளக்குகின்றது. ‘யாம் எம் காதலரைக் கனவிலே மணந்தது பொய்யாகாமல், நனவின்கண் எம் திருமணத்தினை நிறைவேற்றியருளுக! என மணமாகாத மகளிர் முருகனை வேண்டிக் கொண்டனர். மணஞ்செய்துகொண்ட மகளிர், எம் வயிறு பிள்ளைப்பேறு வாய்ப்பதாகுக!’ எனவும், ‘எம் கணவர் செய்யும் செயல்கள் நன்கு நிறைவேறுக!’ எனவும், ‘எம் கணவர் போரில் வெற்றி பெறுவாராக! எனவும் வேண்டி நின்று முருகப் பெருமானை அன்புடன் வழிபட்டனர். மணந்துகொண்ட பெண்டிர் தம் கணவரது இனிது மகிழ்ச்சியுடன் கூடிய பேரன்பினைப் பெறுதல் கருதியும், மணமாகாத கன்னியர் அளிவு திரு ஆற்றல்களாற் குறைவற்ற மைந்தரை மணந்து கொள்ளுதல் கருதியும் இவ்வழிபாட்டிற் கலந்துகொண்டனர் எனப் பரிபாடலிற் புலவரொருவர் குறிப்பிடுகின்றார்.மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழா நடைபெற்றதெனவும், அவ்விழா முடிந்த பின்னர் மதுரை நகரத்து இளமகளிர், ‘இவ்வுலகம் மழையாற் குளிர்வதாக! எனத் தாயருக்கே நின்று கடவுளை வணங்கித் தைந்நீராடினர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலிற் கூறுகின்றார். இத் தைந் நீராடல் மகளிர் மேற்கொள்ளுதற்குரிய தவச் செயல்களுள் ஒன்றாகக் கலித்தொகையிற் குறிக்கப்படுகின்றது.1 ‘மனைவியுடனும் தாய் தந்தையருடனும் பிள்ளைகளுடனும் சுற்றத்தாருடனுங்கூடித் தெய்வத்தை வழிபட வேண்டும், எனப் பெரியோர் அறிவுறுத்தியபடி சங்க காலத் தமிழ் மக்கள் கடவுள் வழிபாட்டு முறையை அமைத்துக் கொண்டார்கள். அவ்வழி பாட்டில் நம்பிக்கையும் உறுதியுமுடையவர்களாய் முன்னின்று தம் கணவர்க்கும் புதல்வர் முதலியவர்க்கும் இன்றியமையாத நற்பொருள்களை வேண்டிப் பெறுதல் பெண்டிரது செயலாக அமைவதாயிற்று. கணவர் உலகியற்கடமை நோக்கித் தம்மைப் பிரிந்து சென்ற காலத்து, அவருடைய பிரிவிற்கு வருந்தாது குறித்த நாளளவும் ஆற்றியிருந்து மனையறம் நிகழ்த்துதல் பெண்ணியல்பு எனப் பாராட்டப்படுவதாம். தம் கணவரையே உயிராகக் கருதும் ஒருமை மகளிர், நிறையின் வழுவாமல் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் உறுதி யுடையாராவர். இத்தகைய உறுதியால் உள்ளத் திண்மை பெற்ற கற்புடை நங்கையை மனைவியாகப் பெறுதலைக் காட்டிலும் ஒருவன் அடைதற்குரிய சிறந்த பேறு வேறொன்றுமில்லையென ஆசிரியர் திருவள்ளுவர் வற்புறுத்திக் கூறுகின்றார். 2 கணவனை உணவு முதலியவற்றால் பேணிக் காத்தலும், அவனது வருவாய்க்குத் தக்கபடி ஆரவாரமற்ற நிலையிற் குடும்பச் செலவினை அமைத்துக் கொள்ளுதலும், பெற்றது கொண்டு உள்ளந்திருந்தும் அமைதியினை உடையளாதலும், பெரியார் களையும் விருந்தினர்களையும் பேணிப் போற்றுதலும், தன் அறிவின் திறத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைந்து ஒழுகுதலும், தன் குடும்பத்திற்குப் புகழுண்டாக்குதலும் மனைவியின் மாண்புகளெனப் பாராட்டப்டும் நற்குண நற் செய்கைகளாகும். ‘பிறந்த வீட்டிலிருந்து நுகரும் இனிய தேன் கலந்த பாலைக்காட்டிலும், என் தலைவனுடன் சென்ற காலத்துப் பருகிய மான் உண்டு எஞ்சிய கலங்கற் சின்னீர் எனக்குப் பெரிதும் சுவையுடையதாயிற்று! எனத் தமிழ் நங்கை யொருத்தி கூறுகின்றாள்.1 கணவன் குடும்பமோ, வறுமை நிலையடைந்தது. பெண்ணின் தந்தையோ, மிகப் பெரிய செல்வமுடையவன். தந்தை தன் மகள் வீட்டிற்கு வேண்டிய உணவு முதலிய பொருள்களை நிறையக் கொடுத்தனுப்பினான். தந்தையின் பொருளைப் பெற்றுத் தாம் இனிதாக வாழ்தல் தகுதியன்று எனவுணர்ந்த தலைவி அப்பொருளைக் கொள்ளாது, தன் கணவன் ஈட்டிய சிறு பொருளை வைத்துககொண்டு ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்டு தன் குடும்பத்தைப் போற்றி வரும் செம்மை பெற்றாள், என்ற அருமையான நிகழ்ச்சி நற்றிணைப் பாடலிற் (110) குறிக்கப் பெறுகின்றது. தம் குடும்பத்தின் வறுமையினைத் தந்தைக்கும் புலப்படுத்திக் கொள்ளாத செம்மனச் செல்வியராய்த் தமிழ் மகளிர் வாழ்ந்தமை மேற்காட்டிய குறிப்பினால் நன்கு புலனாம். தேவருல கத்தில் நுகரப் பெறும் இன்பத்தைவிடத் தம் கணவனுடனிருந்து நுகருந்துன்பம் மிகவும் இனியதென்பது தமிழ் மகளிர் கருத்து. குடும்ப வாழ்க்கையில் உண்டாகுந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு தம் கடமையைச் செய்யுந் திறம் தமிழ் மகளிரின் தனிச் சிறப்பாகும். தம்முடைய செல்வமனையை நீங்கி வெளியே நடந்தறியாத பேரெழில் வாழ்க்கையினராகிய கண்ணகியார், தம் கணவனாகிய கோவலன் ‘மதுரைக்குப் புறப்படுக, என்ற அளவில் உடனே புறப்பட்டுக் கால்கொப்புளங்கொள்ளும் படியாகக் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மதுரைக்கு நடந்து சென்ற வரலாறு, கேட்போரது உள்ளத்தையுருக்கும் தன்மையினதாகும். கண்ணகி யாருடைய சீறடிகளின் மென்மையினையறிந்து அவர்தம் மென்மைக் கேற்ப நிலமகள் நெகிழ்ந்து கொடுக்கவில்லையேயென அவருடன் சென்ற கவுந்தியடிகள் இரங்குகின்றார். வெயிலின் வெம்மையால் தம் கணவனது உடல்வாடியதே என்று நடுக்கமுற்று வருந்திய நிலையில் தம் துயரத்தினை ஒரு சிறிதும் உளங் கொள்ளாத பெருமை கண்ணகியாரிடம் அமைந்திருந்தது. ‘இவ்வாறு இனிய வாழ்க்கைத் துணையாகிய மகளிர்க்கு இன்றியமையாத கற்பு மாண்பினையுடைய கண்ணகியாகிய இத்தெய்வமல்லது இதனினும் சிறந்த அழகுமிக்க தெய்வத்தை யாம் கண்டிலேம்! எனக் கவுந்தியடிகளாகிய தவச் செல்வியார் கண்ணகியாரைப் புகழ்ந்து போற்றுகின்றார். ‘பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு கால மழை பொய்த்தறியாது; விளைவு குறைந்து வளம் பிழைத்தலை அறியாது; வேந்தரது வெற்றி சிதைந்தறியாது, என நல்லார் பலரும் பாராட்டியதற்கேற்பச் செங்குட்டுவன் என்னும் சேரமன்னன் பத்தினித்தெய்வமாகிய கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு நிகழ்த்திய செயலினையும் அதனை உணர்ந்த ஏனைய தமிழ் வேந்தர்களும் இலங்கை வேந்தனாகிய கயவாகுவும் தங்கள் தங்கள் நாட்டிற் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியாரை வழிபட்ட இயல்பினையும் சேரமுனிவராகிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகப் பாராட்டினமை இவண் கருதற்குரியதாம். அமிழ்தினும் இனிய உணவினைச் சுவை மிகச் சமைத்துத் தம் கணவனை உண்பித்தலிற் பேரார்வமுடையராதல் பெண்டிரின் இயல்பாகும். தான் அன்பினாற் சமைத்த நல்லுணவினை மிகவும் இனியது எனச் சொல்லித் தன் கணவன் உண்ணுதலைக் கண்டு மகிழ்தலைக்காட்டிலும் மனைவியொருத்தி பெறுதற்குரிய சிறந்த மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. தலைமகள் ஒருத்தி சுவை மிக்க புளிக் குழம்பினை அமைத்துத் தன் கணவனை உண்பித்த திறத்தினைக் குறுந்தொகைப் பாடலொன்றிற் (167) புலவர் நயம் பெற விளக்குகின்றார். தலைவனும் தலைவியும் மனையறம் நிகழ்த்தும் வீட்டிற்குச் சென்று வந்த செவிலித்தாய், தலைமகளது குடும்ப வாழ்க்கையின் சிறப்பினை நற்றாய்க்குக் கூறுவதாக அமைந்தது அச்செய்யுள். `அடுக்களையில் அலுவல் மிகுதியால் நெகிழ்ந்த ஆடையினைத் தயிர் பிசைந்த கையினால் விரைந்து இறுகவுடுத்துக்கொண்டு, தாளிப்பின் நறும்புகை தன் கண்ணிற் படிந்து மணங்கமழ் நன்றாகத் துழாவிச் சமைத்த புளிக்குழம் பினைத் தன் கணவன் மிகவும் சுவையுடையதென்று விரும்பி உண்ணுதலைக் கண்டு தலைவியின் முகம் மகிழ்ச்சிக் குறிப்புடன் விளங்கியது, என்பது அச்செய்யுளின் பொருளாகும். தமிழ்நாட்டு மகளிர் விருந்தினரை உபசரித்தலில் மிகவும் திறமுடையவராவர். தம்மிடம் உள்ள பொருள் மிகக் குறை வாயினும், வந்த விருந்தினர் பலர் என்று கருதாமல், எல்லாரையும் இன்முகத்துடன் உண்பிக்கும் இயல்பு அவர்கள்பால் அமைந் திருந்தது; அதனால், குறைந்த செலவிலே நிறைந்த பயன்களை உண்டாக்கும் ஆற்றல்பெற்றவர்களாய் விளங்கினார்கள். உண்மைக் காதல் வயப்பட்ட மகளிர், தம் கணவர் தம்முடன் அளவளாவு தலில் தவிர்ந்தொழுகுவராயினும், அவர்களிடத்துத் தாம் கொண்ட அன்பில் ஒரு சிறிதும் குறைந்தொழுகுவாரல்லர். சிறுபிள்ளைகள் தாங்கள் விளையாடுதற்குரிய சிறு வண்டியினை ஏறிச் செலுத்த முடியாவிட்டாலும், இழுத்து நடந்து இன்புறுதல் போல, என் கணவரை முயங்கி இன்புறேனாயினும், அவர்க்குரிய அடித்தொண்டுகளைச் செய்து இன்புற்றேன், எனத் தலைவி யொருத்தி கூறுகின்றாள்.1 பகைவர் முன்னே ஆண் சிங்கத்தினைப் போலத் தலை நிமிர்ந்து நடக்கும் ஆண்மையினைத் தம் கணவர்க்கு அளிக்க வல்லவர் கற்புடைப் பெண்டிரேயாவர். இவ்வாறு தாம் புகுந்த குடும்பத்திற்கு ஆக்கந் தருதல்போலத் தாம் பிறந்த குடி யிலுள்ளார்க்கு வெற்றியும் புகழும் விளைவிப்பாரும் அம்மகளிரே என்பது அறிஞர் கொள்கை. மலைவாணர் மகளிர் தம் கணவரைத் தெய்வமென்று வணங்கி எழுதலைத் தமது கடமையாகக் கொண்டமையால், அவருடன் பிறந்த ஆடவர் தாம் தொடுத்த அம்புகளை இலக்குத் தப்பாமல் எய்யும் ஆற்றல் பெற்றனர், எனக் கபிலர் குறிஞ்சிக்கலியிற் (39) குறிப்பிடுகின்றார். தமிழ் மகளிர் தம் கணவனைப் பிரியாது. வாழும் பெற்றி யினராவர். தம் ஆருயிர்த் தலைவன் இறக்க நேர்ந்தால், நெஞ்சு கலங்கி, அவனது பிரிவாற்றாது உடனுயிர் விடும் பெருங்கேண்மை செந்தமிழ்ப் பெண்களின் சிறந்த பண்பாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது அரசியல் பிழைத்தமைக்கு இரங்கி உயிர் துறந்தபொழுது அவன் மனைவியாகிய கோப்பெருந்தேவி தன்னுயிர் கொண்டு அவனுயிரைத் தேடிச் செல்வாள் போலத் தான் உடனே உயிர் துறந்தமை தமிழ் நாட்டுப் பெண்களின் தலையாய கற்பினை இனிது புலப்படுத்து வதாம். கணவன் இறந்தமைக்கு இரங்கிய மகளிர் தீ வளர்த்து அதன்கண் வீழ்ந்து இறத்தலும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்த பொழுது அவன் தேவியாகிய பெருங்கோப் பெண்டு, சான்றோர் பலர் விலக்கவும் கேளாது, தீப்பாய்ந்து உயிர் நீத்த செய்தி இதனை வலியுறுத்தும். கணவன் இறந்தமையால் புதல்வர் முதலிய குடும்பத்தவர் களை வளர்க்குங் கடமையினை மேற்கொண்ட மகளிர், ஒரு நாளைக்கு ஒரு வேளையே உணவருந்திக் கைம்மை நோன்பினை மேற்கொண்டனர். கணவனையிழந்த நிலையில் ஆதரவற்ற இம்மகளிர், பிறருடைய உதவியினை எதிர்பாராது பருத்திப் பஞ்சினை நூலாக நூற்றுத் தம் குடும்பத்தைப் பாதுகாத்தனர். இவர்கள் தம் குடும்ப வருவாய்க்குரிய தொழிலாக நூல் நூற்றலை மேற்கொண்டமையால், `பருத்திப் பெண்டிர் என்ற பெயரால் தமிழிலக்கியங்களிற் குறிக்கப் பெற்றனர். குழந்தைகளை வளர்த்தல் தாயின் கடமையாகும். தன் பிள்ளைகள் நல்ல உடல் திண்மையும் உள்ளத்திண்மையும் பெற்றுச் சான்றோராக விளங்க வேண்டுமென்பதே தாயின் பெருவிருப்பாகும். பிள்ளைகளின் இளம்பருவத்திலேயே அவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்தலில் தமிழ்த் தாயர் கருத்துடையராயிருந்தனர்; தம் உயிரனைய தமிழ் மொழியினைத் தம் பிள்ளைகளுக்குத் திருத்தமுறக் கற்பித்தனர்; தெருவில் நடை பழகும் குழவிப் பருவத்திலேயே தம் பிள்ளைகளுக்குச் செந்தமிழ் நடையினைத் தெளிவாகக் கற்பித்தனர்; தாம் கற்பித்த சொற்கள் சிலவற்றை மழலை நாவினாற் குழந்தைகள் கூறக் கேட்டுப் பெரிதும் இன்புற்றனர்; அறத்திற் போர் செய்து வெற்றி பெறுதலும், தம்மிடமுள்ள பொருளை இல்லாதார்க்கு வரையாது வழங்குதலும் ஆகிய நற்செயல்களையே விரும்பி மேற்கொள்ளும் படி தம்மைந்தர்களுக்கு அறிவுறுத்தினர்; குழந்தைகளின் உள்ளம் தீச்செயலிற் செல்லாதபடி தடுத்துக் காத்தனர். எல்லாப் பண்புகளும் நிரம்பப் பெற்றுச் சால்புடைய பெரு வீரர்களாய் விளங்குதற்குரிய நல்லுணர்ச்சியினைத் தமிழ் மக்களுக்கு ஊட்டிய பெருமை தமிழ் நாட்டுப் பெண்பாலார்க்கே சிறப்பாக உரியதாகும். வீரக்குடியிற் பிறந்த மகளிர் `மூதின் மகளிர் எனப் போற்றப் பெறுவர். இவர்தம் இயல்பினைப் புறநானூற்றுச் செய்யுளால் நன்குணரலாம். ‘நரம்புகள் எழுந்து தசையுலர்ந்த உடம்பினை உடைய முதுமகளொருத்தி, தன் மகன் போர்க்களத்தில் முதுகிற் புண்பட்டுத் தோற்றான். என்று சிலர் தவறாகக் கூறியதனைக் கேட்டாள். ‘போரிலே என் மகன் புறமுதுகிட்டிருப்பானானால், அவனுக்குப் பாலூட்டிய என் மார்பினை அறுத்திடுவேன்! எனச் சினங்கொண்டு போர்க் களத்திற்குச் சென்று அங்குள்ள பிணக்குவியலில் தன் மகன் உடம்பைத் தேடினாள். மார்பிற் புண்பட்டுச் சிதைந்த மகனுடம்பைக் கண்டு, அவனே சான்றோன் எனவுணர்ந்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி அடைந்தாள், என்று காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் கூறுகின்றார். மறக்குடியிற்பிறந்த மற்றொரு பெண், முதல் நாட்போரில் தன் தமையனும், அடுத்த நாட்போரில் தன் கணவனும் இறந்த நிலையில் தன் குடிக்கு ஒருவனாயுள்ள இளஞ்சிறுவனை வேல் கைக்கொடுத்துப் போர்க்களத்திற் கனுப்பினாள் என ஒக்கூர் மாசாத்தியார் கூறுகின்றார். மூதின்மகளிராகிய இவர்களுடைய வீரச் செயல்கள் தமிழ் மக்களின் மறவுணர்ச்சியினை வெளிப் படுத்துவனவாம். நாட்டில் அடிக்கடி போர் நிகழ்ந்தமையால், ஆடவர் தொகை சுருங்கி மகளிர் எண்ணிக்கை பெருகுவதாயிற்று. அதனால், மணந்துகொள்ளும் வாய்ப்பில்லாத மகளிர் ஆடலும் பாடலும் அழகும் என்ற மூன்றினும் குறைவின்றி மாந்தர் மனத்தைப் பிணிக்கும் இசை நாடகம் ஓவியம் முதலிய அழகுக் கலைகளிற் பொழுது போக்குவாராயினர். உள்ளத்திற்கு உவகையளிக்கும் அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு கற்றுத் துறை போகிய இவர்கள், ஒருவனுக்கே உரிமை பூண்டொழுகும் திறமின்றிப் பொது மக்கள் எல்லாரையும் இன்புறுத்தும் அழகுக் கலைகளை வளர்த்து வந்தார்கள்; ஆதலால், எண்ணென் கலையோர் 1 எனப் பாராட்டப் பெற்றார்கள். ஒருவனுக்கே உரியராய் வாழும் நியதியின்றி, அயலாராகப் பழகுதலின், இவர்கள் `பரத்தையர் என வழங்கப் பெற்றனர். இவர்கள் ஒருவனுக்கே உரிமை பூண்டு மனையறக் கடமைகளை நன்கு நிகழ்த்தி வாழ்தலும் உண்டு. கோவலனுடைய காதற்கிழத்தி மாதவியின் நிறையுடைமை இவண் நினைக்கத் தகுவதாம். V தமிழர் கல்வி நிலை கல்வியென்பது மக்கள் அறிய வேண்டுவனவற்றை அறிதற் குரிய மனப் பயிற்சியாகும். உட்கருவியாகிய மனமும் கண் முதலிய புறக் கருவிகளும் ஒன்றி நின்று இவ்வுலகியற் பொருள்களை நோக்கியுணரும் இப்பயிற்சி முறையினாலேயே மக்களது அறிவு வளர்ச்சியடைகின்றது. கல்வி வளர்ச்சிக்கு மொழியின் துணையே இன்றியமையாத தாகும். மக்கள் தாங்கள் எண்ணிய கருத்துக்களை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லுதற்கும், பிறர் எண்ணங்களைத் தாங்கள் கேட்டறிதற்கும் அவர்களாற் பேசப்படும் தாய்மொழியே இடைநின்று துணை செய்வதாம். ஆகவே, தமிழ் முன்னோர் களால் கல்வியெனக் குறிக்கப்பட்டது, அவர்தம் தாய்மொழி வழியாகப் பயிலும் தமிழ்க் கல்வியே என்பது புலனாம். மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றாக நிலைக்கள மாய் விளங்குவது அவர்கள் பேசும் மொழியேயாகும். அதன் உதவியினாலேயே அவர்தம் கல்வி உருவாகின்றது. மொழியின் துணையின்றிக் கல்வியை வளர்த்தல் என்பது இயலாத செயலாம். இவ்வுண்மையை நன்குணர்ந்த தமிழ் முன்னோர், தம் தாய் மொழியாகிய தமிழைக் கல்விப் பயிற்சிக்குரிய திறமுடையதாக அமைத்துக் கொண்டனர். உலகியற் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினையுடையது `இயற்றமிழ் எனப்படும். மக்கள் மனத்தில் அமைந்து கிடந்த எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறம் இயற்றமிழுக்குரியதாகும். தாம் சொல்லக் கருதிய கருத்துக்களைக் கேட்பார் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத் திறத்தாற் புலப்படுத்தும் மொழிநடை `இசைத் தமிழ் ஆகும். தன் எண்ணங்கள் தம் உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டுத் தோன்ற நடித்துக் காட்டுதற்கு அமைந்த மொழி நடை, `நாடகத் தமிழ் என வழங்கப்படும். எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத்தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற்றமிழ் என்றும், கேட்பார் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னோசை மிக்க உரையின் இயல்பினை இசைத் தமிழ் என்றும், மக்கள் சொல்வன அவர்கள் உடலிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும் முறையில் அமைந்த மொழி நடையினை நாடகத் தமிழ் என்றும் மிகப் பழைய காலத்திலேயே நம் தமிழ் முன்னோர் வகுத்துள்ளனர். மக்கள் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் அறிவுறுத்தவும், உரையினால் அறிவித்தவற்றை உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ் மொழி அமைந்தமையால், அதனை `முத்தமிழ் என்ற பெயரால் முன்னையோர் குறிப்பிடு வாராயினர். மக்கள் தங்கள் மனப் பயிற்சியின் பயனாக உணர்ந்து கொண்ட இயல்புகளை ஓர் ஒழுங்கு முறையிலே வைத்து ஏனையோர்க்கு எடுத்துரைப்பதே கல்விப் பயிற்சிக்குரிய நூலாகும். அறிய வேண்டுவனவற்றை அறிவிக்கும் கருவி, `நூல் எனப்படும். நுண்ணிய பஞ்சின் நுனிகளால் ஓரிழைப்படுத்தி நூற்கும் நூலைப் போன்று, ஆழ்ந்தகன்ற பொருளுடைய சொற்களால் முறைப்பட இயற்றப்பட்டதே `நூல் எனச் சிறப்பிக்கப்படும். முறைப்பட இயற்றப் பெற்றமை கருதி அதனை `முறை என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. கல்விப் பயிற்சிக்குரிய நூலினை `எண் எனவும் `எழுத்து எனவும் இரு பகுதியாகப் பண்டைத் தமிழ் மக்கள் வகைப் படுத்தினார்கள். காலம், இடம், பொருள் என்பவற்றின் அளவினை உள்ளத்தால் எண்ணிக் கூறுபடுத்தி அறிதற்குரிய பயிற்சியினை வளர்க்குங் கருவி `எண்ணூல் என வழங்கப் பெறும். எண் என்னும் சொல் இக்காலத்தில் `கணிதம் என்ற பொருளில் வழங்குகின்றது. மிகப் பெரிய அண்டங்களையும் மிகச் சிறிய அணுவினையும் எண்ணியறிதற்குரிய பேரெண்களையும் சிற்றெண் களையும் தமிழ் முன்னோர் முன்னரே கண்டறிந்திருந்தனர். அண்டம் முதலிய பொருள்களின் அகலம், நீளம், நிறை முதலியவற்றை அளந்து கூறுதற்குரிய கோடி, சங்கம், தாமரை, நெய்தல், வெள்ளம் முதலிய பேரெண்களும், ஒரு பொருளையே பன்னூறு கூறாகப் பகுத்துணர்தற்குரிய காணி, முந்திரி முதலிய சிற்றெண்களும் தமிழ் மக்களால் முன்னரே இயற்றப் பெற்றுள்ளன. கணக்கினைக் `கருவி `செய்கை என இருவகையாகப் பிரித்து விளக்கிய ஏரம்பம் முதலிய தமிழ்க் கணக்கு நூல்கள் தம் காலத்திலிருந்தன வெனப் பரிமேலழகர் கூறுகின்றார். சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட முதற்கடவுளாகிய இறைவன் ஒருவனைத் தவிர, ஏனைய எல்லாப் பொருள்களும் இவ் வெண்ணூலின் வரப்புக்குட்பட்டுத் தோற்றுவனவே என்பது தமிழ் மக்களின் துணிபாகும். 1 இனிக் கல்வியின் இரண்டாவது பிரிவாகச் சொல்லப்பட்ட எழுத்தென்பது, இயற்றமிழ் நூலாகும். உலகில் உள்ள பொருள் எல்லாவற்றையும் உயர்திணை அஃறிணை என இரண்டாகப் பகுத்து, அவற்றின் இயல்பினை உள்ளவாறு விளக்குவது, இயற்றமிழின் இயல்பாகும். உலகத்தார் செய்யும் வினைகள் யாவும் அறிவதும் செய்வதும் என இரண்டுள் அடங்கும். அவற்றுள் எண்ணி அறிவதற்குக் கருவியாவன எண் (அறிவியல்) நூல் எனவும், அறிந்து செய்வதற்குத் துணை செய்வன எழுத்து (இயல்) நூல் எனவும் பண்டைத் தமிழ் மக்களால் வழங்கப் பெற்றன. எண்ணூற்பயிற்சியால் எப்பொருளையும் தெளிய விளக்கும் உரைத் திறமும், இயல் நூற்பயிற்சியால் எத்தொழிலை யும் செய்து முடிக்கும் செயற்றிறமும் பெருகுமென்பது பண்டைத் தமிழாசிரியர்களின் கருத்தாகும். எண்ணூல்களின் இயல்புணர்ந்து ஓதும் முறையினை `வாயினால் வகுத்த பக்கம் எனவும், இயல் நூல்களின் கருத் துணர்ந்து அரிய வினைகளைக் கையால் இயற்றும் முறையினைக் `கையினால் வகுத்த பக்கம் எனவும் தமிழ்ச் சான்றோர் வகைப் படுத்தியுள்ளனர். எண்ணூலினை அறிவியல் (Science) நூல் எனவும், இயல் நூலினைக் கலை (Arts) நூல் எனவும் இக்காலை மேலை நாட்டாசிரியர்கள் வகுத்துரைப்பதனை ஒத்த முறை நம் தமிழ் மொழியில் தொன்று தொட்டுக் காணப்பட்டு வருவது, தமிழ் மக்களின் உயர்ந்த கல்வித் திறனைப் புலப்படுத்துவதாகும். எண்ணும் எழுத்துமாகிய இருவகைக் கல்வியினையும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய இரண்டு கண்களாகக் கருதிப் போற்றி வந்தார்கள். மக்கள் உடம்பிலே அமைந்த கண்கள் ஒரு காலத்தே ஓரிடத்தே அமைந்த புறப்பொருள்களையே காட்டுவன. எண்ணும் எழுத்துமாகிய இக்கண்களோ, இடத்தையும் காலத்தையும் ஊடுருவிச் சென்று, எல்லாப் பொருள்களையும் காண வல்ல சிறப்புடையனவாகும். ஆதலால், மக்கள் உயிர்க்கு இவ்விரண்டுமே சிறந்த கண்களாம் எனத் தமிழ்ச் சான்றோர் கருதினர். அறிவில்லா தார் இவ்விரு திறக் கல்வியையும் எண் என்றும் எழுத்தொன்றும் கூறித் தமக்குப் புறம்பாகக் கருதி வந்தாலும், அறிந்தவர் இவ்விரண்டனையும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்றே அறிவுறுத்தி வந்தனர். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு. என்ற திருக்குறளாலும் (392) அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையாலும் இவ்வுண்மை புலனாம். கல்லாதார் முகத்திற் கண்ணுடையராயினும், உலகியற் பொருள்களின் இயல்பினை உள்ளவாறுணரும் ஞானக் கண்ணைப் பெறாமையால், அவர்தம் முகத்திலுள்ள கண்கள் புண்களாகவே இழித்துரைக்கப்பட்டன. கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்று, கற்றபடி நன்னெறிக்கண் ஒழுகுதல் வேண்டுமெனவும், தோண்டத் தோண்டக் கிணற்றில் நீர் ஊறுவது போல, நூல்களை மேலும் மேலும் கற்றலால் அறிவு பெருகும் எனவும், அழிவில்லாத செல்வம் கல்வியே எனவும், தாம் கற்ற கல்வி தமக்கேயன்றி, உலகத்தார்க்கும் இன்பந்தருவதனைக் கண்டு, கற்றோர் மேலும் அக்கல்வியினையே விரும்புவர் எனவும், கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி. எந்நாடும் எவ்வூரும் தன்னாடும் தன்னூருமே யாகும் எனவும், ஒருபிறப்பிலே கற்றகல்வி ஒருவர்க்கு எழுபிறப்பி லும் உயிரோடு சென்று உதவும் இயல்புடையதாதலால், அக் கல்வியை ஒருவன் இறக்குமளவும் கற்றல் வேண்டுமெனவும் ஆசிரியர் திருவள்ளுவனார் அறிவுறுத்துகின்றார். திருக்குறளிலுள்ள கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, சொல் வன்மை என்னும் ஐந்ததிகாரங்களும் கல்விப் பயிற்சியின் முறையினையே இனிது விளக்குவனவாம். கல்வியின் முடிந்த எல்லையாக ஆசிரியரால் அறிவுறுத்தப் பெறுவது, `மெய்யுணர்தல் என்னும் அதிகாரமாகும். துறவறவியலிற் கூறப்பட்ட இவ்வதிகாரம், தமிழ் மக்களின் சமய நூற்பயிற்சியினை நன்கு தெளிவிப்பதாகும். தமிழ் மக்கள் இவ்வுலகியற் பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகையாகப் பகுத்து ஆராய்ந்தார்கள். அவற்றுள் முதற்பொருள் எனப்படுவன, இடமும் காலமுமாம். இவையிரண்டன் சார்பாகத் தோன்றும் புல் மரம் முதலிய நிலையியற் பொருள்களும், பறவை விலங்கு முதலிய இயங்கியற் பொருள்களும், உணவு தொழில் முதலியன வும் கருப் பொருள்களாம். இவை யாவும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின்கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலால், கருப்பொருள்களென வழங்கப் பெற்றன. மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள், உரிப்பொருள் என வழங்கப் பெற்றன. உலகியற் பொருள்களையெல்லாம் முதல், கரு, உரி என மூன்று திறமாகப் பகுத்துக்கொண்டு தமிழ் மக்கள் கண்டறிந்த நுட்பங்கள் யாவும் அவர்களது கல்விப் பயிற்சியை மிகுதிப் படுத்தின. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களால் ஆகியதே இவ்வுலகம் என்னும் உண்மையினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் உணர்ந்து வெளியிட்டுள்ளனர். இவ்வுலகனைத்தினையும், இதனைச் சூழ்ந்த வெளியாகிய வானத்தின் இயல்பினையும், வானத்தில் இயங்கும் ஒளிப் பொருள்களாகிய ஞாயிறு திங்கள் முதலியவற்றையும் ஆராய்ந் துணரும் ஆராய்ச்சியில் தமிழ் மக்கள் மிகப் பழைய காலத்திலேயே ஈடுபட்டு உழைத்துள்ளார்கள். அவ்வுழைப்பின் பயனாக அவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட உண்மைகள் பலவாகும். அவர்கள் பூதநூல் ஆராய்ச்சி பற்றி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிவுறுத்திய உண்மைகளிற் சில இப்பொழுது கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. தொன்மைக் காலத்திலேயே தமிழ் மக்கள் கண்டுணர்த்திய முடிவுகள் இக் காலத்துப் பல்வேறு கருவிகளின் துணை கொண்டு மேனாட்டார் கண்டுணர்த்திய முடிவுகளுடன் பெரிதும் ஒத்திருக்கக் காண்கின்றோம். ஞாயிறாகிய அனற்பிழம்பிலிருந்து தெறித்து விழுந்த ஒரு சிறு உருண்டையே உலகமென்றும், இந்நிலத்தினின்றும் தெறித்துச் சென்ற மற்றோர் உருண்டையே சந்திரனென்றும், ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த பூமி அதனது கவர்ச்சியால் இழுக்கப்பட்டு ஞாயிற்றைச் சுற்றிவருகிறதென்றும், அவ்வாறே பூமியிலிருந்து சிதறிய மற்றோர் உருண்டையாகிய சந்திரன் ஞாயிற்றையும் தனக்குப் பிறப்பிடமாகிய பூமியையும் ஒருங்கு சுற்றி வருகிற தென்றும் இக்கால ஆராச்சியாளர் கூறுவர். விசும்பில் மேன் மேற்சென்று பார்க்குங்கால், அங்குக் காற்றின் இயக்கம் குறைந்துள்ள தென்பதும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் காற்று அறவே இயங்குவதில்லை என்பதும் இக்காலத்தார் கண்ட ஆராய்ச்சி யினால் உறுதி செய்யப் பெற்ற உண்மைகளாகும். இவ்வுண்மையினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நுண்ணுணர்வால் அறிந்து வெளிப்படுத்திய பேரறிஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்கள். அப்பேரறிஞர் களின் கல்வித்திறத்தை நேரிற்கண்டு வியந்த உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்னும் புலவர் பெருமான், அவர்களது கல்வித் திறத்தின் உயர்வினைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைந்த பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. ஞாயிற்றினது இயக்கமும், அதனுடைய ஈர்ப்பாற்றலும், அவ்வாற்றலால் இழுக்கப்பட்டு அஞ் ஞாயிற்றைச் சுற்றி வரும் இப்பார் வட்டமும், இப்பூமியில் காற்று வீசும் திசையும், காற்றின்றி வறிதேயுள்ள ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று நேரிற்கண்டறிந்தவர்களைப் போலச் `சென்ற காலத்து இவ்வாறு இருந்தன; இப்பொழுது இன்ன நிலையில் உள்ளன; இனி எதிர் காலத்து இன்ன தன்மையை அடைவன; என்று மூன்று காலத்தும் அறுதியிட்டுச் சொல்லும் கல்வியை யுடைய பெரியார்களும் இந்நாட்டில் உள்ளார்கள், என்பார், செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை சென்றளந் தறிந்தோர் போல வென்றும் இனைத்தென் போரும் உளரே. (புறம். 30) எனக் கூறுகின்றார். ஞாயிற்றின் பரிப்பினால் (இழுப்பாற்றலால்) பூமி அதனைச் சூழ்ந்து வருதலும், வானம் காற்றின்றி இருத்தலும் ஆகிய உண்மைகள் இப்பாடலில் குறிக்கப்பட்டன. இக்கால ஆராய்ச்சி யாளர் நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டறிந்த இவ் வுண்மைகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளமை சங்ககாலத் தமிழ் மக்களின் வான நூற்பயிற்சியினை இனிது விளக்குவதாகும். வானத்தில் மின்னுகின்ற ஒளிப்பொருள்களை உற்று நோக்கி அவற்றிற்கு `மீன்கள் எனப் பெயரிட்டனர். இம்மீன்களை `நாள்மீன், கோள்மீன் என இருவகையாகப் பகுத்துரைப்பார். தம்பாலுள்ள இயற்கையொளியால் விட்டு விட்டு மின்னுவன நாள் மீன்கள் என்றும், பிறவற்றின் ஒளியைக் கொண்டு விளங்குவன கோள் மீன்கள் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு வழங்கினமை அவர்களது வானநூற் பயிற்சியை நன்கு விளக்கும். கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் திங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் உச்சியிலிருந்துசாய, மூலம்எழ, மிருகசீரிடம் மறைய, நட்சத்திரம் ஒன்று வடக்கும் கிழக்கும் போகாமல் இடைநடுவே எரிந்து வீழ்ந்ததென்றும்; அதனைக் கண்ட கூடலுர் கிழார் என்னும் இப்புலவர் தம் அரசனாகிய யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறைக்குத் தீங்குண்டாகுமென்று தெரிந்து உளந்திடுக்குற்றார் என்றும்; புலவர் அஞ்சியதற்கேற்பவே அன்றைக்கு ஏழாவது நாளில் அம்மன்னன் உயிர்நீத்தான் என்றும் அவர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்றால் (229) அறிகின்றோம். கூடலூர் கிழார் பாடிய புறப்பாட்டிலுள்ள வான நூற் குறியீட்டுச் சொற்கள் யாவும் தனித் தமிழ்த் சொற்களாகவே அமைந்துள்ளதனை நோக்குங்கால், அவர்காலத்து வான நூலைப் பற்றிய தமிழ் நூல்கள் பல இயற்றப்பட்டிருந்தமை நன்கு புலனாம். வான நூலிற் சிறந்த பயிற்சியுடையார் `கணி, என வழங்கப்படுவர். பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து, அங்கே நிகழும் வானவில், மின்னல், ஊர்கோள் (பரிவேடம்), தூமம், மீன் வீழ்வல், கோள் நிலை, மழை நிலை முதலியவற்றைக் கண்ணி (கருதி) ப் பயன் கூறுவார் கணி என வழங்கப்படுவர். கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் சோதிடத்தில் வல்லவர் என்பது அவர் `கணியன் என வழங்கப் படுதலால் விளங்கும். சங்கச் செய்யுட்களில் வான நூலைப்பற்றிய பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக் குறிப்புக்களைத் தொடர்ந்து ஆராய்ந்தால், வான நூல்பற்றிய புதிய உண்மைகள் பல வெளிப்படுதல் கூடும். தமிழ் மக்கள் நிலத்தின் தட்ப வெப்ப இயல்பினை நன்குணர்ந்து, அந்நிலத்தினைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என இவ்வாறு வகுத்து, அவற்றிற்கேற்ற கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும்பொழுதுகளும்; மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என அறுவகைச் சிறு பொழுதுகளும் வகுத்துரைத்தலால், நில நூல் பற்றிய கல்வி அக்காலத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றமை புலனாம். நிலங்களுக் கேற்றவாறு புல் மரம் முதலிய தாவரங்களும், பறவை விலங்கு முதலிய உயிர் வகைகளும் இன்னஇன்ன எனப் பிரித்து விளக்குதலால், தாவர நூலும் உயிர் நூலும் பற்றிய உண்மைகள் அக்காலத்துக் கற்பிக்கப்பட்டமை தெளியப்படும். நிலத்திற்கேற்ற உணவும் தொழிலும் வகுத்துரைத்தலால், நிலவியல்புக்கேற்ப மேற்கொள்ளும் பயிர்நூல் பயிற்றப்பட்டது என உயத்துணரலாம். குறிஞ்சி முதலிய நிலங்களுக்குத் தக்கபடி அவ்வந்நிலங்களிலே வாழும் மக்களுடைய உள்ளத்திலே சிறந்து தோன்றும் உள்ளத்துணர்ச்சிகள் இன்ன எனத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வாறு நிலத்திற்கும் அங்கு வாழும் மக்களின் உள்ளத்துணர்ச்சிக்குமுள்ள தொடர்பினைக் கண்டுணர்ந்தமையால், மக்களது உள்ளத்தின் இயல்பினை உணர்வதில் தமிழர் நிறைந்த தேர்ச்சியுடையார் என்பது நன்கு துணியப்படும். உலகத்தின் தோற்றம், உயிர்த்தோற்றம், உலக ஒடுக்கம், அரசர் வழிமுறை, காலவரையறை, மன்னர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் என்னும் இப்பொருள்களை விரித் துரைப்பது உலக வரலாறாகும். இவ்வரலாற்றினை உணர்ந்தவரே முன்னுள்ள பேரறிஞர்கள் அறிவுறுத்திய கலைச் செல்வத்தை நன்குரும் ஊக்கமும் ஆற்றலும் பெற்றவராவர். இத்தகைய உலக வரலாறு பண்டை நாளில் தமிழ்க் கல்வியில் இடம் பெற்றிருந்தது. இவ்வரலாறு உரைநடையில் அமைந்தால்தான் எல்லா மக்களுக்கும் பயன்படும் என்பது முன்னுள்ளோர் கருத்தாகும். இவ்வாறு உரைநடையில் அமைந்த பழைய வரலாறு `தொன்மை என்ற சொல்லால் வழங்கப்பட்டது. அறத்தின் முறை தவறாது தாம் செய்யும் தொழிலால் பொருளீட்டி இன்பம் நுகர்தற்குரிய வாழ்க்கையின் இயல்பினை அகம், புறம் என இரண்டு பிரிவாக வகுத்து விளக்குவதே தமிழுக்குச் சிறப்பாக உள்ள பொருளிலக்கண நூலாகும். மக்கள் வாழ்க்கையின் இயல்பினை உள்ளவாறு விளக்கியுரைக்கும் வாழ்வியல் நூலாகிய பொருளிலக்கணப் பகுதி, தமிழ் மொழியி லன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்புடையதாகும். மக்களுடைய வாழ்க்கைக்கு அரண் செய்வது அரசியல் நூற்கல்வியாகும். அரசியலின் இயல்பினை ஆசிரியர் திருவள்ளுவனார் திருக்குறள் பொருட்பாலில் தெளிவாக அறிவுறுத்துகின்றார். திருக்குறளை நன்கு கற்றுணர்வோர் சங்ககாலத் தமிழகத்தில் வழங்கிய அரசியல் முறையின் செம்மை யினை நன்குணர்வர். நாட்டினை ஆளும் அரசியற்றலைவன் தன்னாட்டுக்கு உண்டாகும் ஆக்கத்தையும், அதனைப் பெறுதற்குத் தடையாயுள்ள இடையூறு களையும் புறத்தார்க்குப் புலப்படாது தன் மனத்தேயடக்கிக் கொண்டு அமைதியாக அரசியலைச் செலுத்துதற்குரியவனாவன். சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன், யானை தன் மேல் ஒருவன் எறிந்த கல்லை யாருக்கும் புலப்படாமல் தன் கன்னத்தில் அடக்கிக் கொண்டிருந்தாற்போலக், காலமும் இடனும் கருதி அடங்கியிருந்தான். அவனது அரசியல் நுட்பத்தினை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் ஒரு செய்யுளிற் புகழ்ந்து போற்றுகின்றார்: ஐம்பெரும்பூதத்தின் இயல்பினையும், ஞாயிறு முதலிய வற்றின் இயக்கத்தையும் நேரே சென்று பார்த்தவர்களைப் போல நாளும் இன்ன தன்மையன எனச் சொல்கின்ற பேரறிஞர்களும் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். அவர்களாலும் அறிய முடியாத வன்மையினையுடையவனாக நீ அடங்கி வாழ்கின்றாய். ஆதலால், நின்னுடைய திறத்தை எவ்வாறு புலவர்கள் விளங்கப்பாடுவார்கள்? என அவனை அவர் போற்றும் முறை, அவ்வேந்தனது அரசியற் கல்வியின் நுட்பத்தைக் குறிப்பாக அறிவுறுத்துவதாதல் காணலாம். வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது பொருளாகும். `பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்வில் யாதொரு தொடர்பும் இல்லை எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். பொருள்கள் வருதற்குரிய வழி துறைகளை மேலும் மேலும் உண்டாக்கு தலிலும், அத்துறைகளிற் கிடைத்த பொருள்களை ஒரு வழித் தொகுத்தலிலும், அம் முதற்பொருள் அழியாது மேன்மேல் வளரக்கூடிய நிலையிற் பாதுகாத்தலிலும், அவ்வாறு காக்கப்பெற்ற பொருள்களை நாட்டு மக்களின் நலங்கருதி அறம் பொருள் இன்பங்களின்பொருட்டுச் செலவழித்தலிலும் வல்லவனே அரசனாவன், என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய பொருளுரை யாகும். இப்பொருளுரையினைச் சிறிது ஊன்றி நோக்கு வோமானால், சங்ககாலத்தில் பொருளாதார வாழ்வினைச் செம்மைப்படுத்தும் நூல்கள் பல வழங்கினமை நன்கு புலனாம். பொருளாதார நூல் அக்காலத்துப் `பொருள் புரிநூல் என்ற பெயரால் வழங்கப் பெற்றது. நாட்டில் உள்ள பொருள், சகடக்கால் போல யாவர்கண்ணும் சென்று பயன் தரும் ஆற்றலுடைய தாகும். அப்பொருளின் வளர்ச்சியினை உணர்ந்த அறிஞர்கள் அதனை முதலாகக் கொண்டு ஏதாவதொரு தொழிலைச் செய்து ஊதியம் பெருக்குவதில் கருத்தைச் செலுத்தினார்கள். `முதற் பொருளைப் பெற்றார்க்கே ஊதியம் உண்டு; முதலில்லார்க்கு ஊதியம் இல்லை என்றார் திருவள்ளுவர். தம்பால் உள்ள பொருளைப் பொன்னினும் மணியினும் ஆகிய அணிகலங் களுக்குச் செலவிடுவோர், அப்பொருளின் ஆற்றலையுணராது அதனை முடக்கி நோய் செய்பவராவர். இந்நுட்பத்தினைச் சங்ககாலத்துப் பொதுமக்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். `ஆயர்குலப் பெண்ணொருத்தி தான் மோர் விற்றதனால் வாங்கிய நெல் முதலிய உணவுப் பொருள் களைக் கொண்டு தன் சுற்றத்தாரெல்லாரையும் பாதுகாத்துப் பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைப் பொருளுக்குக் கட்டியாகப் பொன்னை வாங்கிக் கொள்ளாமல், தான் செய்யும் பால் மோர் வாணிகத்தை மேலும் பெருக்குதற்குரிய பாலெருமையையும், நல்ல பசுவையும், கரிய எருமை நாகினையும் வாங்கினாள், என்ற செய்தி பெரும்பாணாற்றுப் படையில் குறிக்கப்படுகின்றது. இதனை உய்த்துணருமிடத்து மகளிரும் ஏற்றுப் போற்றுதற்குரிய நிலையில் பொருள்புரிநூற் புலமை தமிழர் எல்லாரிடத்தும் அமைந் திருந்தமை புலனாம். இவ்வாறு பல துறையிலும் கல்வி வளர்ச்சியடையவே, கற்ற நூற்பொருள் பற்றிக் கற்றாரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அவரவரும் தாம் தாம் கருதியனவே உண்மையென நிலை நாட்ட முயன்றனர். இந்நிலையில் பலரும் உடன்பட்டு ஏற்றுக் கொள்ளுதற்குரிய நெறியில் பொருளின் துணிபுணர்த்தும் அளவை நூல்கள் வகுக்கப் பெற்றன. அவ்வளவை நூன்முறையைப் பின்பற்றிச் சான்றோர் பலரும் தம்முட் பொருள்வேற்றுமை கருதி உறழ்ந்து பேசித் தாம் கருதிய பொருளை விளக்க முயன்றனர். இவ்வாறு கல்வித் துறையில் தந்நிகரற்ற புலமை பெற்ற சான்றோர், தம் கருத்தினை நிலை நாட்டக் கருதி, ‘எம்மை உறழ்ந்து கூறுவாருளராயின் வருக! எனப் பேரவையிற் கொடி கட்டி அழைத்தலை வழக்கமாகக் கொண்டனர். காவிரிப்பூம் பட்டினத்தில் கல்வித்துறையில் பற்றி உறழ்ச்சி குறித்துச் சான்றோர் கொடி கட்டியிருந்தனர். `பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ்குறித் தெடுத்த உயர்கெழு கொடி என வரும் பட்டினப்பாலை அடிகளால் அத்தகைய கொடியின் இயல்பினை நன்குணரலாம். `பலவாகிய நூற்கேள்வியினையும், முற்றக் கற்றுச் சொல்லியபடி நடக்கும் பழைய ஆணைமொழி யினையுமுடைய நல்லாசிரியர்கள் வாது செய்யக் கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடி என்பது மேற்காட்டிய அடிகளின் பொருளாகும். இரட்டித்த கதிர்களையுடையதாகி விளைந்த திணையின் தோற்றத்தை விளக்க வந்த புலவரொருவர், தருக்க நெறியினைப் பின்பற்றிப் பொருளை விளக்கிக் காட்டுபவன் கையிடத்து இரு பிரிவாக இணைந்த விரல்களை உவமையாகக் கூறி விளக்கு கின்றார். (மலைபடு.) இவ்வாறு நூற் பொருள்களை விளக்குதற்குச் சொல்வன்மை இன்றியமையாததாகும். ஒருவன் தன் உள்ளக் கருத்துக்களைத் தங்கு தடையின்றிச் சொல்லால் வெளிப் படுத்தும் மொழிப் பயிற்சியே சொல்வன்மை எனப்படும். `தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் அறியும்படி விரித்துரைக்கும் சொல்வன்மை இல்லாதவர், நன்றாக மலர்ந்தும் மணங்கமழாத மலரைப் போன்று பயன்படாதவராவர், என அறிஞ்ர் கூறுவர். ஒருவன் தான் கூறக் கருதிய பொருள்கள் பிறரால் உணர்ந்து கொள்ளுதற்கு அரியன வாயினும், கேட்பார்க்கு எளிய பொருளாக மனத்திற் பதியும்படி தெளிவான சொற்களால் விளக்கி யுரைத்தல் வேண்டும். பிறர் கூறுகின்ற பொருள்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள இயலாத அரிய பொருள்களாயினும், அவர் கூறும் சொற்களின் நுண்ணிய பொருள்களை உய்த்துணர்ந்து காணுதல் வேண்டும். தான் கற்றவற்றைப் பிறர்க்கு விளங்க உணர்த்தும் முறையும், பிறர் கூறுவனவற்றைத்தான் விளங்க உணரும் முறையுமாகிய இவ்விரு திறனுமுடையதே அறிவு என ஆசிரியர் திருவள்ளுவர் இலக்கணங் கூறுகின்றார். `ஒருவருடைய அறிவின் மாட்சியினை விளங்க உணர்த்தும் கருவியாவன, அவர்தம் வாய்ச் சொற்களே, என அக்காலத் தமிழர் நன்கு துணிந்தனர். அவர்கள் சொல்வன்மையினை வளர்த்தற்குப் பயன்பட்டது `உரைநூல் என்பதாகும். வழக்கியல் நூல் சங்ககாலத் தமிழ் மகளிர்க்குப் பயிற்றப்பட்டது. காவிரிப் பூம்பட்டினத்திலமைந்த அறங் கூறவையத்திலே இவ்வுரை நூல் வழங்கப் பெற்றதெனவும் இவ்வுரை நூல் நெறிக்கு மாறுபடப் பேசுதல் ஆகாதெனவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். ஓவியம் எழுதும் முறையினைக் கற்பிக்கும் ஓவிய நூலும், மனை முதலியன அமைக்கும் சிற்ப நூலும், மக்களுடைய உடம்பிலுள்ள நோயினைத் தீர்க்கும் மருத்துவ நூலும், இவ்வாறே வேறு பல நுண்கலைகளை அறிவிக்கும் நூல்களும், சங்க காலத்தில் வழங்கின. ஆசிரியர் திருவள்ளுவனார் `மருந்து என்ற அதிகாரத்தில் அறிவுறுத்திய உண்மைகளை ஆராயுமிடத்து அவர் காலத்தில் உடம்பின் அமைதியினை உள்ளவாறு விளக்கிய உடல் நூலும், உடலிலுள்ள நோய்களைத் தீர்த்தற்குரிய மருத்துவ முறையினை விளக்கும் மருத்துவ நூலும் வழங்கியிருத்தல் வேண்டுமெனத் தெளிதல் எளிதாம். `நல்லொழுக்கத்தால் திருத்தமாகப் போற்றி வரப்பட்ட உடம்பில் மருத்துவன் கொடுத்த மருந்து விரைவிற்சென்று சேர்ந்து நல்ல பயனைத் தரும், எனப் பெருங்கடுங்கோ என்னும் புலவர் கூறுகின்றார். (பாலைக்கலி. 16) இதனால், உடம்பின் கூறுபாடுணர்ந்து மருந்து செய்யும் முறை சங்ககாலத்தில் வழங்கியது புலப்படும். இதுகாறும் கூறியவற்றால் எண்ணும் எழுத்துமாகிய இரு வகையிலடங்கும் பல்வேறு கல்வித் துறைகளைப் பற்றிய தமிழ் நூல்களும் சங்ககாலத்து வழங்கினமை ஒருவாறு தெளிந்து கொள்ளலாம். இசை தமிழ் மொழிக்கே உரியனவாகத் தமிழ் மக்கள் வகுத் துணர்த்தியவை இசையும் நாடகமும் ஆகும். இயற்கையில் எழுந்த இனிய ஒசையைப் பொருளுணர்த்தும் பாக்களோடு ஒன்றுபடுத்தி இசைத்துப் பாடுவது `இசை எனப்படும். மூலாதாரத்திற்றொடங்கிய எழுத்தின் ஒலி, நெஞ்சு, கண்டம், நாக்கு, மூக்கு, மேல்வாய், கீழ்வாய், உதடு, பல் என்னும் எட்டிடங் களிலும் பொருந்தி, எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்வு, கம்பிதம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைப்பட்ட தொழில்களால் உருவாகப் பண்ணிக் கொள்ளப்படுதலாற் `பண் என்பதும் காரணப் பெயராம். நானிலத்தவராகிய நிலமாந்தர் எல்லாரும், தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய யாழ், பண், பறை முதலிய இசைக் கூறுபாடுகளை வளர்த்து வந்தனர். கிளி, குரல் முதலியவற்றின் இன்குரலினைக் கேட்டுணர்ந்த மக்கள், இயற்கையில் தோன்றும் அவ்வின்னோசைகளை யொத்த ஓசைகளைத் தம்முள்ளிருந்து எழுப்பக் கற்றுக் கொண்டதுடன் படிப்படியாக மேன்மேல் உயர்ந்து செல்லும் அவ்வோசையினை ஏழு வகையாகப் பகுத்துக் கொண்டார்கள். ஆண் மக்களது கண்டத்தின் ஓசை காந்தார சுரத்தையொத்த தென்பர். அச்சுருத்தின் வழியோசையாக `உழை என்ற ஒசையும், அதன் வழியோசையாகக் `குரல் என்ற ஓசையும் அதன் வழியோசையாக `இளி என்ற ஓசையும், அதனையொட்டித் `துத்தம் என்ற ஓசையும், அதனையொட்டி `விளரி என்ற ஓசையும், அதன் வழியாகக் `கைக்கிளை என்ற ஓசையும் கிளைமுறையாகப் பிறக்கும் என முதன்முதற் கண்டுணர்ந்த பெருமை தமிழ் மக்களுக்கே உரியதாகும். இவ்வேழிசைகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களால் வளர்க்கப் பெற்றதே இசைத் தமிழாகும். இசைக் கலையைப் பிறழாத நிலையில் வளர்ப்பன, குழல் யாழ் முதலிய இசைக் கருவிகளே. மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத்துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினை மிகப் பழைய காலத்திலே கண்டு கேட்டுணர்ந்த தமிழ் முன்னோர், தம் உணர்வின் திறத்தால் முதன் முதல் அமைத்துக்கொண்ட இசைக் கருவி குழலாகும். வில்லின் கண்ணே வலிந்து கட்டப்பட்ட நாணோசையின் இனிமையை உணர்ந்து குமிழங்கொம்பில் மரல் நாரால் தொடுத்துக் கொண்ட பழைய இசைக் கருவி வில் யாழ் என்பதாகும். வரையறுக்க முடியாத தொன்மைக் காலத்திலே அமைந்த இவ்வில் யாழினை அடிப்படையாகக் கொண்டே `செம்முறைக் கேள்வி யென்னும் `சகோட யாழ் முதலாக ஆயிர நரம்புடைய `பெருங்கலம் என்னும் `பேரியாழ் ஈறாகவுள்ள சிறந்த இசைக் கருவிகளெல்லாம் உய்த்துணர்ந்து அமைத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நரம்பு கட்டப் பெற்றது தமிழர் கண்ட யாழ்க் கருவியாகும். ஒரு நரம்பிலே பல சுரங்களையும் வாசித்தற் கமைந்தது பிற்காலத்து வீணைக் கருவியாகும். இவ்வீணைக் கருவி ஒரே முறையில் தொடர்ந்து செல்லும் தொடரிசையினை மட்டுமே வாசித்தற் குரியது. தமிழரது யாழ்க் கருவியோ, தொடரிசையுடன் பலரும் சேர்ந்து பாடும் பண்ணாகிய ஒத்திசையினையும் வாசித்தற்கு ஏற்புடையதாகும். தொடரிசையினை மட்டும் வாசித்தற்குரிய வீணைக் கருவியைக் காட்டிலும், தொடரிசையினையும் ஒத்திசையினையும் ஒரு சேர வாசித்தற்கமைந்த யாழ்க்கருவி பெரிதும் சிறப்புடையதென்பது சொல்லாமலே விளங்கும். அக்காலத்து யாழுக்கு நரம்பு கட்டுதல் வழக்கம். நரம்பு வெயில் மழை முதலியவற்றால் ஏற்படும் நெகிழ்ச்சி இறுக்கம் காரணமாக இசை வேறுபடும் நீர்மையது. பண்டைத் தமிழர் குழலோசையின் துணைகொண்டே யாழ் நரம்புக்கு இசை கூட்டினர். குழல், யாழ் என்பன தனித்தமிழ்ச் சொற்களாம். தமிழ் மக்கள் குழலும் யாழுமாகிய இசைக் கருவிகளின் துணைகொண்டு பல்வேறு இசை நுட்பங்களை வெளியிட் டுள்ளார்கள் என்பது முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத் தினாலும், அதன் உரைகளாலும் நன்கு துணியப்படும். இடைக் காலத்தில் வழக்கற்று மறைந்த யாழ்க்கருவியின் இயல்பும், அதன்கண் இசைக்கப் பெற்ற பன்னிரு பாலைகளின் பயனும், குறிஞ்சி பாலை முல்லை மருதம் என்னும் நாற்பெரும்பண்களின் இயல்பும், அவற்றின் வழி அமைந்த நூற்று மூன்று பண்களின் திறனும் ஆகிய இசை நுட்பங்களை இக்காலத்திலும் பயன்படுத்தி மகிழும் வண்ணம் சேர முனிவராகிய இளங்கோவடிகள் அறிவுறுத்திய திறத்தினை அருண்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய இசைத் தமிழ் நூலாகிய யாழ்நூலில் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்கள். உலக இசைகள் எல்லாவற்றிற்கும் பழந்தமிழிசையே அடிப்படையாய் அமைந்த உண்மையினை யாழ்நூலிற்கண்டு தெளிதல் தமிழறிஞர் கடனாகும். ஒன்றோடொன்று தொடர்பில்லாத தனித்தனி வரலாற்று நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டுதல் `கூத்து என வழங்கப்படும். இறைவன், முருகன், மாயோன், கொற்றவை முதலிய தெய்வங்களின் வீரச் செயல்களை விளக்கிக் காட்டும் பதினோராடல்கள் கூத்து என்னும் இவ்வகையைச் சேர்ந்தனவாம். பதினோராடலின் இயல்பு சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டது. இத்தகைய கூத்தின் இயல்பினை விளக்கிய நூல் `கூத்தநூல் என வழங்கப்பெறும். மக்கள் ஒருவரைப் போன்று ஒருவர் ஒத்து நடித்தல் `பொருநுதல் என்ற சொல்லாற் குறிக்கப்படும். இத்தொழிலில் வல்ல ஆடவர் `பொருநர் என வழங்கப் பெற்றனர். மகளிர் தம் உள்ளக்குறிப்பு உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும் படி சுவைபட் நடித்தல் `நாட்டியம் என வழங்கப் பெற்றது. இதற்கு வேண்டும் ஆடல், பாடல், அழகு என்பவற்றை விளக்கி உரைக்கும் நூல் `நாட்டிய நன்னூல் என இளங்கோவடிகளாற் குறிக்கப்படுகின்றது. மாதவி சோழமன்னன் பேரவையில் ஆடிய ஆடற்கலைகள் யாவும் நாட்டிய நன்னூலை நன்கு கடைப்பிடித்துக் காட்டியனவாகுமென்று இளங்கோவடிகள் கூறுகின்றார். உள்ளதும் இல்லதுமாகிய ஏதாவதொரு கதை யினைத் தழுவி நடிக்கப் பெறுவது `நாடகம் என வழங்கப்படும். உரையும் பாட்டுமாய் அமைந்து நடித்தற்குப் பயன்படும் முறை யிலுள்ள காப்பியம் `நாடகக் காப்பியம் எனக் குறிக்கப்பட்டது. ஆடலைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியன் இயல்பும், இசையாசிரியன் இயல்பும், நாடகத்திற்கும் இசைக்கும் வேண்டிய இசைப்பாடல்களை இயற்றித் தரும் கவிஞன் இயல்பும், இசையினை வரம்பு பெற நிறுத்த வல்ல தண்ணுமை (மத்தள) ஆசிரியன் தொழிற்றிறனும், குழலிசைப்பான் அமைதியும், யாழாசிரியன் இயல்பும், நாடக அரங்கின் இலக்கணமும், அரங்கிலே புகுந்து ஆடுகின்ற முறையும், பிற நுட்பங்களும் சிலப்பதிகார அரங்கேற்று காதையிலே தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. இக்குறிப்புக்களையெல்லாம் நோக்கும் பொழுது சங்க காலத்திலே தமிழ் மக்கள் வளர்த்த இயலிசை நாடகம் என்ற முத்தமிழும் விரிந்த பல துறைகளையுடையவை என்பது இனிது புலனாதல் அறிக. தமிழ் நாட்டில் ஊர்தோறும் இளஞ்சிறார்கட்குத் தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் தெற்றிப் (திண்ணைப்) பள்ளிக்கூடங்கள் இருந்தன. அங்கே இளமாணவர் களுக்கு நெடுங்கணக்கு முதலிய அடிப்படைக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பலர் இருந்தனர். அங்குப் பயிலும் மாணவர்களை `மையாடலாடல் மழ புலவர் எனப் பரிபாடல் கூறுகின்றது. இளம்பருவ மாணவர்களைப் பயிற்றும் ஆசிரியர்கள் `இளம்பாலாசிரியர் (தொடக்கப்பள்ளி ஆசிரியர்) என வழங்கப்பெற்றார்கள். `மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் எனக் கடைச்சங்கப் புலவரொருவர்க்கு வழங்கும் பெயரால் இச்செய்தி உணரப்படும். நெடுங்கணக்கு முதலிய தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் `கணக்காயர் என்ற பெயரால் குறிக்கப் பெற்றனர். உயர்ந்த கல்வியைச் சொல்லிக் கொடுப்போர் `ஆசிரியர் என வழங்கப் பெற்றனர். சிறுவர்கட்குக் கல்வியினைக் கற்பிக்கும் பொறுப் பினையும் செலவினையும் பெற்றோர்களே ஏற்றுக் கொண்டார்கள். `தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள். 69) `சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே. (புறம். 312) என்பவை ஈண்டு நினைக்கற்பாலன. உயர்ந்த கல்வியினைப் பெறும் விருப்பமுடையவர், ஆசிரியர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்தும், பெரும்பொருள் கொடுத்தும், அவர்களிடத்துப் பணிவுடையவராய் ஒழுகி நற்பொருள்களை ஓதி உணர்ந்தனர். அக்காலத்துத் தமிழ் மக்கள் மாணவ நிலையில் மட்டுமன்றி, மணந்துகொண்ட பின்னரும், உயர்ந்த நூற்பொருள்களைக் கற்றற்கெனவே வேற்றூர்களுக்குப் பிரிந்து சென்றார்கள். இங்ஙனம் உயர்ந்த கல்வியின் பொருட்டுப் பிரியும் பிரிவு `ஓதற்பிரிவு என அகப் பொருள் நூல்களிற் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டிலுள்ளவர் பலரும் தாம் சாந்துணையும் அறிவு நூல்களைக் கற்றுக் கல்வியிற்கருத்துடையவராய் வாழ்ந்தமையால், தமிழ் மொழி பல கலைத் துறைகளிலும் சிறப்புற்று வளர்வதாயிற்று. VI தமிழர் தொழில் நிலை ஒரு நாட்டின் கல்வி நிலை உயருமானால், அதன் பயனாகப் பல்வேறு தொழில்களும் திருத்தம்பெற்று வளர்ச்சியுறுதல் எளிதாகும். கல்வியின் பயனாக அறிவும், அவ்வறிவின் பயனாகத் தொழில்களும் வளர்ச்சியடைதலே வாழ்க்கையின் வளர்ச்சி நிலையாகும். தமிழர் தம் அறிவின் திறத்தால் கண்டுணர்த்திய பல்வேறு கலைகள் இவையென முன்னர்க் குறிக்கப் பெற்றன. வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது உணவு. நிலமும் நீருங்கூடிய நிலையிலேதான் இவ்வுணவினை விளைவிக்க முடியும். நிலத்தை நன்றாக உழுது புழுதியாக்கி, நீர்பாய்ச்சி, நெல் முதலியவற்றை விளைவிக்கும் பயிர்த்தொழிலை மேற்கொள்வார் உழவர் என வழங்கப் பெறுவர். `உழத்தல் என்பது இடைவிடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக் குளவாகுந் தொல்லைகளை ஒரு சிறிதும் பொருட் படுத்தாது, நெற்றி வேர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப் பயிர்த் தொழிலுக்கு வேண்டப் படுவதாகலின், இத்தொழிலை `உழவு என்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் எல்லாத் தொழில்களிலும் இவ்வுழவே தலைச்சிறந்த தொழில் என்பது அறிஞர் கொள்கை. தமிழர் எல்லாத் தொழிலினும் இவ்வுழவினையே தலையாக வைத்துச் சிறப்பித்தனர். உலக மக்கள் தாங்கள் விரும்பிய பல்வேறு தொழில்களையுஞ்செய்து பொருளீட்டினார் களாயினும், தங்கள் பயிசினைத் தீர்த்தற்குரிய உணவினைப் பெறுதல் வேண்டி உழவரது கையினையே எதிர்பார்த்து நிற்பர். மெய்ம்முயற்சியுடைய இவ்வுழவினைச் செய்து உணவினை உண்டாக்கும் ஆற்றலின்றிப் பிற தொழிலை மேற்கொள்வார் எல்லாரையும் உணவளித்துப் பாதுகாத்தலால், உலகியல் வாழ்வாகிய தேர்க்கு அச்சாணி போன்று உதவி செய்பவர் இவ்வுழவரேயாவர். யாவரும் பசி நீங்க உண்ணும்படி உழுதலைச் செய்து, அதனால் தாமும் உண்டு, பிறர் கையை எதிர்பாராது உரிமையுணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்தும் திறமுடையார் உழவரே. ஏனைய தொழிலாளரெல்லாம் பிறரை யடுத்து அவர்தம் ஆதரவு பெற்று வாழ வேண்டிய எளிமை நிலையினரே என்பது அறிஞர் துணிபு. பிறர்பாற் கையேந்தி நில்லாத பெருமையும், இரப்பார்க்கு இல்லையென்னாது வழங்கும் வண்மையும் உழவர்க்கு இயல்பாக அமைந்த பண்புகளாகும். குறையாத விளையுளைச் செய்யும் உழவர்கள் வாழும் நிலப்பகுதியே நாடெனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் முயற்சியால் விளைந்த நெற்கதிர் நீழலில் வாழ்வாராகிய உழவர், தாம் விளைத்துக் கொடுத்த உணவின் ஆற்றலால் பல வேந்தர் ஆட்சியிலமைந்த நிலப்பரப்பு முழுவதையும் தம் வேந்தன் ஆட்சியில் அடங்கச் செய்வர் என்பர். `பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர், என இளங்கோவடிகள் சோழநாட்டு உழவர்களைப் பாராட்டு கின்றார். நீரின் துணைகொண்டு தொழில் செய்வார் உழவராதலின், அவர்களைப் `பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் என அடிகள் சிறப்பித்தார். பசியால் வருந்தியிரக்கும் எளியாருடைய சுற்றத்தையும், நாட்டினைக் காக்கும் அரசரது வெற்றியையும், தம் உழவினிடத்தே ஒரு சேர விளைவிக்குத் திறமையுடையவர் உழவராகலின், அவர்கள் வாழும் ஊர்களைப் `பழவிறல் ஊர்கள் எனச் சேர முனிவர் பாராட்டிப் போற்றினார். சங்ககாலத்தில் வாழ்ந்த உழவர், நிலத்தினைத் தம்முடையதாகக் கொண்ட காணியாளராய் விளங்கினமையால், எப்பொழுது பார்த்தாலும் தமக்குரிய நிலத்தினைப் பண்படுத்துந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பலம் நிறையுள்ள மண்ணானது காற்பலம் நிறையுள்ள தாகும்படி நிலத்தினை ஆழ உழுது புழுதியாக்கினால், ஒரு கைப்பிடி எருக்கூட நிலத்திற்கு இட்டனர். விளை நிலத்திலே பயிருக்குத் தடையாய் வளர்ந்த களைகளை அவ்வப்பொழுது களைந்தெறிந்தனர். சுருங்கக்கூறினால், பயிர்த்தொழிற்குரிய பலவகை நுட்பங்களையும் தம் தொழிற் பயிற்சியால் கண்டு பயன்படுத்திய பெருமை நம் தமிழ் நாட்டு உழவர்களுக்கு உரியதெனக் கூறலாம். நாட்டில் மக்கள் தொகை பெருகப் பெருகத் தமக்குள்ள சிறிய நிலத்திலே நிறைந்த உணவினை விளைக்க வேண்டிய பொறுப்பு உழவர்களுக்கு உரியதாயிற்று. எனவே, அவர்கள் தாங்கள் தொன்றுதொட்டுப் பயின்று வரும் அத்தொழிலை மேன்மேலும் திருத்தமுற வளர்த்து வரத் தொடங்கினார்கள். அதனால், ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கல நெல் விளைதற்கேற்ற வாய்ப்பு உண்டாயிற்று. தாழ்ந்த உணர்வுடைய விலங்குகளாகிய எருதுகளை உழவிற் பழக்கிப் பயிர் செய்து அவற்றுக்கு வேண்டும் வைக்கோல் முதலிய உணவினைத் தந்து பாதுகாக்கும் உழவர்களைப் `பகடு புறந்தருநர் எனப் புலவர் பெருமக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இங்ஙனம் தன்னலங்கருதாது பிறர்க்கு உதவி செய்தல் கருதி இடைவிடாது உழைக்கும் பண்பு இவ்வுழவர்களிடம் சிறப்பாகக் காணப்படுதல் பற்றி இவர்களை `வேளாளர் என்ற சொல்லாற் சான்றோர் வழங்கிப் போற்றினர் என்க (வேளாளர் - பிறர்க்கு உதவுபவர். வேளாண்மை - உபகாரம்.) மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவற்றுள் உடையும் ஒன்றாகும். `நாணுடைமை மாந்தர்சிறப்பு என்றார் வள்ளுவர். விலங்குகளைப்போலத் திரியாமல், அற்றம் மறைத்தற் குரிய உடையினையுடுத்து மானத்துடன் வாழும் முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். நாகரிகம் வளராத மிகப் பழங் காலத்தே தழையினையும், மான், புலி முதலியவற்றின் தோலினை யும் உடுத்து வாழ்ந்த மக்கள், தங்களுடைய நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று ஆடை நெய்து உடுத்துக் கொண்ட செயல், நாகரிகத்தின் தனிச்சிறப்பாகும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்கள் இந்நெசவுத் தொழிலினைக் கண்டுணர்ந்து, இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பது, பழைய தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். மகளிர் பருத்திப் பஞ்சினைக் கடைந்து செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்குந் தொழிலிற் கைத்திறம் பெற்று விளங்கினார்கள். அவர்கள் நூற்று இழைத்துத் தந்த நூலைப் பாவாக விரித்துத் தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் கடமை ஆடவர் தொழிலாய் அமைந்தது. பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், எலி மயிராலும் நுண்ணிய ஆடை களை நெய்பவர்கள் தமிழ் நாட்டுப் பேரூர்களில் ஆங்காங்கே நிறைபெற்றுத் தங்கள் தொழிற்றிறத்தைப் பெருக்கினார்கள். இவ்வாறு நெசவுத் தொழிலைச் செய்தவர் ` காருகர் என்ற பெயரால் அக்காலத்து வழங்கப்பெற்றனர். இக்காருகவினைத் தொழில் மிகவும் நுண்ணுணர்வுடன் செய்தற்குரிய தாதலின், இதனை `நுண்வினை என இளங்கோவடிகள் சிறப்பித்துள்ளார். அக்காலத்து நன்றாகத் தூய்மை செய்யப்பெற்ற மெல்லிய நூலாலும் பட்டினாலும் நெய்யப் பெற்ற ஆடைகள் ஆவியைப் போன்ற மென்மையும், கண்ணினால் நோக்கி இழைகளைப் பிரித்துணர முடியாத செறிவும், காண்பார் கண் கவரும் பூங்கரைகளும், ஒளியும் உடையனவாய், எல்லாராலும் விரும்பப் பெறும் அழகினைப் பெற்றுத் திகழ்ந்தமையால், `நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுயன்ன அறுவை, `ஆவியன்ன அவிர்நூற்கலிங்கம், `காம்பு சொலித்தன்ன அறுவை எனப் புலவர் பலரும் பாராட்டியுள்ளனர். தறியில் நெய்து அறுக்கப்பட்டமையால், `அறுவை என்ற பெயர் உடைக்கு உரியதாயிற்று. நெய்த உடையினைச் சுருக்கமின்றி நன்றாக மடித்து விற்று வந்தமையால், அதற்கு `மடி என்ற பெயரும் வழங்குவ தாயிற்று. நுண்ணிய நூலினாலும் பட்டினாலும் திறம்பட நெய்யப் பெற்ற பல்வேறு புடைவைகளை விற்றற்குரிய கடை வீதிகள் பேரூர் தோறும் அமைந்திருந்தன. `அறுவைவீதி எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்படுவது இத்தகைய வீதியேயாகும். நம் தமிழ் நாட்டில் நெய்த நுண்ணிய ஆடையினை வேற்றுநாட்டு மக்கள் விரும்பி வாங்கி உடுத்து மகிழ்ந்தார்கள் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் உணர்ந்த உண்மையாகும். மக்கள் வாழ்க்கைக்குத் தேவையாகத் தம்பால் உள்ள பொருள்களைக் கொடுத்து இல்லாத பொருளைப் பிறர்பால் பெறுதல் `பண்டமாற்று என வழங்கப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள், தத்தம் நிலத்திலுள்ள பொருளைக் கொண்டு சென்று மற்றை நிலங்களில் உள்ள உணவு முதலியவற்றைப் பண்டமாற்று முறையிற் பெற்று வந்தமை சங்க இலக்கியங்களிற் பேசப்படுகின்றது. இப்பண்ட மாற்று முறையே `வாணிகம் என ஒரு தனித் தொழிலாக வளர்ச்சி பெறுவதாயிற்று. கடற்கரையில் வாழ்ந்த பரதவர்கள், தங்கள் நிலத்திற்கிடைத்த மீன், உப்பு முதலியவற்றை மருத நிலத்தார் முதலியவர்க்குக் கொடுத்து, அவர்களிடமிருந்து நெல் முதலியன பெற்றார்கள். ஒரு நிலத்திலுள்ள பொருளை மற்றொரு நிலத்திற்குக் கொண்டு செல்லும் வணிகர்கள், அப் பொருள்களை வண்டிகளிலும், எருது முதலியவற்றின் மேலும் ஏற்றிக் கொண்டு கூட்டமாகச் சென்று விற்று வருவதுண்டு. இவர்கள் இடை வழியிற் கள்வர் முதலியவரால் நிகழும் இடையூறுகளை எதிர்த்தல் கருதிப் போரிற்பயின்ற வீரர்களைத் தங்களுக்கு வழித்துணையாக அழைத்துச் செல்வது வழக்கம். வணிகர்க்குத் துணையாகச் செல்லும் வீரர் திரளினைச் `சாத்து என வழங்குவர். அதனை நடத்திச் செல்லும் தலைவன் `சாத்தன் என வழங்கப் பெறுவன். இவ்வாறு உள் நாட்டின் படைத்துணை படைத்துணை கொண்டு வணிகத் தொழிலை வளர்த்த தமிழ்நாட்டு வணிகர்கள், கடல் கடந்து வெளி நாட்டுடன் தொடர்பு கொண்டு வாணிகத் தொழிலை வளம்படுத்தினார்கள். இவர்களுடைய நன்முயற்சியால் கடலிற் காற்றின் பருவநிலை யுணர்ந்து நாவாய் செலுத்தும் தொழிலில் தமிழ் நாடு முதலிடம் பெற்று விளங்கியது. புகார் நகரத்து வணிகர்கள் தரை வழியாகவும், நாவாயின் துணைகொண்டு கடல் வழியாகவும் பெரும்பொருளை ஈட்டித் தருதலால், எல்லாத் தேயங்களிலும் உள்ள பொருள்கள் ஒருங்கு சேர்ந்தாற்போன்ற பண்டங்கள் உலகம் முழுவதும் வந்தாலும் கொடுக்கக் கொடுக்கக் குறைவு படாத வண்ணம் நிறைந்திருந்தன எனச் சிலப்பதிகாரமும், பட்டினபாலையும் குறிப்பிடுகின்றன. இங்ஙனம் தங்கள் வினைத் திறத்தால் நாடெங்கும்சென்று வாணிகம் புரிந்து பெரும்பொருள் தொகுத்த வணிகர்கள் பெருஞ் செல்வத்தால் அரசரோடு ஒப்பவைத்து மதிக்கும் பெருஞ்சிறப்பினைப் பெற்று விளங்கினார்கள். `மன்னர் பின்னோர் என அரசரையடுத்துப் பாராட்டுஞ்சிறப்புத் தமிழ் நாட்டு வணிகர்களுக்கு உரியதாயிற்று. மக்கள் வாழ்க்கைக்கு உணவு, உடையினைப் போன்று சிறப்பாக வேண்டப்படுவது உறையுள் ஆகும். மழை, பனி, வெயில் என்பவற்றால் உளவாகும் இடர்களை விலக்கி, இன்புற்று வாழ்தற்குரிய வசதியினைத் தருவது இவ்வுறையுளேயாகும். வைக்கோல் முதலிய புல்லால் வேயப்பட்ட சிறு குடில் முதலாக, அண்ணாந்து நோக்க இயலாதபடி உயர்ந்து தோன்றும் எழுநிலை மாடம் ஈறாகப் பல திறப்பட்ட கட்டிடங்களையும் திறம்பட அமைக்கும் கட்டிடத் தொழிலிற் சங்ககாலத் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினார்கள். நக்கீரனார் என்னும் புலவர் தாம் பாடிய நெடுநல் வாடை என்னும் பாட்டில் கட்டிட நூலினை நன்குணர்ந்த சிற்பிகள் நிலத்தினைக் கயிறிட்டு அளந்து பெரும்பெயர் மன்னர்க்கு ஏற்ப மாளிகையினை அமைத்த தொழிற் றிறத்தை விரிவாக விளக்குகின்றார். மலையை நடுவிலே திறந்தாற்போன்ற உயர்ந்த கோபுர வாயில்களும், மக்கள் பருவ நிலைக்கேற்ப இன்பம் நுகர்தற்குரிய நிலா முற்றம், வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி முதலியனவும் தமிழ்நாட்டுக் கம்மியர்களால் சிறப்பாக அமைக்கப்பட்டன. கட்டிடத் தொழிலுக்கு இன்றிய மையாத தொழிலாளர், தச்சர் கொல்லர் முதலியவராவர். இவர்களுடைய உதவியின்றி மனை வகுத்தல் இயலாத செயலாம். மண்ணினாற் சுவரை எழுப்பிய செயலை விடுத்துச் சுட்ட செங்கற்களைக் கொண்டு செம்பினாற் செய்தாற்போன்ற திண்ணிய சுவர்களை அக்காலத் தொழிலாளர் எழுப்பிய தொழிற்றிறம் பெரிதும் பாராட்டுதற்குரியதொன்றாம். மரத்தினை அறுத்து வீடமைத்தற்கும், வண்டி தேர் முதலியன செய்தற்கும் வழி கண்ட பெருமை தச்சர் என்னுந் தொழிலாளர்க்கே உரியதாகும், மக்கள் சுமந்து செல்லுதற்குரிய பாரத்தை எளிதிலே உருட்டி இழுத்துச் செல்லுதற்கேற்ற சகடையை அமைத்துதவிய திறம் தச்சுத் தொழிலின் நுண்ணுணர் வாகும். மக்கள் விரைந்து ஊர்ந்து செல்லுதற்குரிய தேர் முதலிய ஊர்திகளை உண்டாக்கியது இத்தகைய தச்சுத் தொழிலேயாகும். நாளொன்றில் எட்டுத் தேர்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற தச்சர்கள் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். தச்சச் சிறுவர்கள் தங்கள் கையிலுள்ள உளி முதலிய கருவியினைக் கொண்டு காட்டிலுள்ள நல்ல மரங்களைச் செதுக்கி மக்கள் கையாளுதற் குரிய பொருள்களை இயற்றி வாழ்வு நடத்தினார்கள். வெண்கலம், செம்பு, இரும்பு முதலிய உலோகங்களையுருக்குந் திறம் பெற்று, அவற்றால் மக்கள் பயன்படுத்தற்குரிய பல்வகைப் பொருள்களையும் படைக்கலங்களையும் செய்ய வல்ல வன்தொழிலாளர்கள் ஊர்தோறும் தங்கித் தங்களுக்குரிய தொழில் வகைகளைப் பெருக்கி வந்தார்கள். வெண்கலத்தை யுருக்கிக் கலங்கள் முதலியன செய்பவர் `கஞ்சகாரர் என வழங்கப்பட்டனர். செம்பினால் கலம் செய்வார் `செம்பு கொட்டிகள் எனப்படுவர். இரும்பினைக் காய்ச்சி அடித்து வலிய தொழில் செய்வார் `கொல்லர் என வழங்கப்பட்டனர். கண் கவரும் ஓவியங்களை எழுதவல்லவர் `கண்ணுள் வினைஞர் எனக் குறிக்கப்பட்டனர். ஓவியத்தினை எழுதுதற்குரிய பல நிறங்களும், எழுதுகோலும், இலக்கியங்களிற் பேசப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் புராண வரலாறுகளைக் குறித்த ஓவியங்கள் பல எழுதப்பட்ட சித்திரமண்டபமொன்று `எழுதெழில் அம்பலம் என்ற பெயரால் பரிபாடலிற் பாராட்டப் பெறுகின்றது. சுதையினாலே பதுமை முதலியன செய்து வாழ்பவர் `மண்ணீட்டாளர் என வழங்கப்பெற்றனர். அருமைப் பாடுடைய வினைத்திறம் அமையப் பொன்னினால் பலவகை அணிகலங் களைச் செய்பவர் `பொற்கொல்லர் எனப்படுபவர். பொன்னிலே நல்ல மணிகளைப் பதிக்கும் இயல்பறிந்து அணிகலனமைக்கும் இரத்தினப் பணித் தட்டார்களும், தமிழ் நாட்டிற் பெருக வாழ்ந்தார்கள். `திருமணி குயிற்றுநர் என்பார் முத்துக் கோப்பவராவர். ஆடையினால் மெய்ப்பை (சட்டை) முதலாயின வற்றை அழகு பெறத் தைக்குந் தொழில் வல்லவர் `துன்னகாரர் என வழங்கப் பெற்றனர். தோலினாலே செருப்புத் தைத்தலும் கட்டில் முதலியன பின்னுதலும் ஆகிய தொழிலைச் செய்தவர் `தோலின் துன்னர் என்ற பெயரால் வழங்கப்பட்டனர். துணியினாலும், நெட்டியினாலும் பறவை, பூ, வாடா மாலை, கொண்டை முதலிய கண்கவர் பொருள்களைச் செய்யும் வனப்பமை சிறுதொழில்கள் தமிழ் மக்களால் ஆதரித்து வளர்க்கப் பெற்றன. துளைக்கருவியாகிய குழலினாலும், நரம்புக் கருவியாகிய யாழினாலும் எழிசையினையும் வழுவற இசைக்க வல்ல குழலர், பாணர் முதலிய இசைத் தொழிலாளர் தம் நுண் புலமையினால் இசைத் தமிழை வளர்த்து வந்தனர். அவர்களால் வளர்க்கப் பெற்ற இசைக்கலை மக்களுடைய மனமாசு கழுவி உடல் நோயினையும் அகற்றவல்ல திறம் பெற்று விளங்கியது. `போரிற் புண்பட்ட வீரர்களின் நோய் நீங்க, அவர்தம் மனைவிமார் இசைபாடினர், எனப் புறநானூற்றிற் குறிக்கப்பெறும் செய்தி இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும். இசைத் தொழிலாளராகிய பாணர்களைப் போன்று, நாடகக் கலையில் வல்ல பொருநர், கூத்தர் விறலியர் என்பாரும் தத்தமக்குரிய கலைத்திறத்தினை மேன்மேலும் நயம் பெற வளர்த்து வந்தனர். இவர்களால் வளர்க்கப் பெற்ற இசைநாடகக் கலைகள் இவர்தம் பரிசில் வாழ்க்கைக்குரிய தெழில்களாகவே பிற்காலத்தில் கருதப்படுவன வாயின. பொன்னும் மணியும் என்பவற்றின் இயல்புணர வல்லவர்களும், சங்கினை யறுத்து வளையல் செய்வாரும், நறுமணச் சுண்ணங்களை அமைக்க வல்லவர்களும், மாலை தொடுத்தல், பூ, வெற்றிலை முதலியன விற்றல் முதலிய தொழில் களில் ஈடுபட்டாரும், இன் சுவைப் பண்ணியம் (பலகாரம்) செய்து விற்கும் பெண்டிர்களும், கூலம் பகர் வாரும் என எண்ணற்ற தொழிலாளர்கள் சங்க இலக்கியங்களிற் குறிக்கப்படு கின்றார்கள். அக்காலத் தமிழ் மக்கள் தங்கள் பிழைப்புக்கென ஏதாவதொரு தொழிலினைத் தங்களுக்குரியதாக மேற் கொண்டு உழைத்து வந்தார்கள் என்பது பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களில் குறிக்கப்பட்ட, தலைநகரங்களின் செயல்முறைகளால் நன்குணரப்படும். மூவேந்தர்களின் பேரூர்களில் பலவகைத் தொழிலாளரும் ஒருங்கிருந்து தத்தம் தொழிற்றிறத்தில் கருத்துடையராய்ச் சோம்பலின்றி வினை செய்தனர். மனைக்கண் வாழும் பெண்டிர் தமக்குரிய குடும்பக் கடமைகளை முடித்து ஓய்வுபெற்ற பொழுது, ஓவியம் வரைதல், தடுக்கு முதலியன பின்னுதல் முதலாகத் தாம் கற்றறிந்த கவின் வினைகளுள் ஏதாவதொன்றனை மேற் கொண்டு செய்தனர். கோவலன் கண்ணகியாருடன் மாதரி என்னும் ஆயர் முதுமகள் வீட்டில் தங்கிய பொழுது, கண்ணகியார் நாட் காலையில் எழுந்து அடிசில் சமைத்துத் தம் கணவனை அன்புடன் உபசரித்து, பனையோலையினால் அழகாகப் பின்னப் பெற்ற தவிசில் அவனையமரச் செய்து உணவு படைக்கின்றார். உள்ளத்தையுருக்கும் இவ்வழகிய காட்சியினை விளக்க வந்த இளங்கோவடிகள், பொன்னினும் மணியினும் இழைக்கப் பெற்ற உயர்ந்த தவிசில் அமரும் செல்வச் சிறப்பமைந்த கோவலனுக்கு அன்று ஆயர் பாடியில் தவிசாகப் பயன்பட்ட அழகிய பனை யோலைத் தடுக்கினைத் `தாலப் புல்லின் வால்வெண்டோட்டுக் கைவினை மகடூஉ கவின் பெறப் புனைந்த செய்வினைத் தவிசு என வியந்து பாராட்டுகின்றார். தாலப்பனையின் வெள்ளிய குருத் தோலையினாலே கண் கவரும் முறைமையிற் பின்னும் கைத் திறமுடைய மகளொருத்தி அழகுபெறப் புனைந்து செய்த சித்திர வேலைப்பாடமைந்த தவிசு என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். ஓலையால் பின்னப்படும் தடுக்கு எளிய பொருளாயினும், அதன்கண் அமைந்த அழகிய வேலைப் பாடு அரச முனிவராகிய அடிகள் உள்ளத்தையும் கவர்ந்து நின்ற தன்மையினை இங்கே காண்கின்றோம். எனவே, எளிய தொழிலாயினும், அதனை வனப்புறச் செய்வதனால் பாராட்டத் தகும் சிறப்புடையதாகும் என்பது இனிது பெறப்படும். உயிர் வாழ்க்கைக்கு ஆக்கந்தரும் சமையற்றொழில் அக்காலத்து `அட்டிற்றொழில் என வழங்கப்பட்டது. இத் தொழிலில் தமிழர் நிரம்பிய தேர்ச்சியுடையராய்ச் சுவைக்கினிய அடிசிலை ஆக்கி விருந்தளித்தனர் என்பது சங்கச் செய்யுட்களிற் பாராட்டப்படும் பல்வேறு சுவைமிக்க உணவின் திறத்தால் இனிது புலனாம். புலால் கலந்த உணவினை அமைத்தலும், புலால் கலவா உணவினை அமைத்தலும் எனச் சமையல் முறை இருவகையாகக் கொள்ளப்பட்டது. இரும்பு முதலிய உலோகங்களைக் காய்ச்சியுருக்கும் தொழிற் றிறம் பெற்ற தமிழ் வினைஞர்கள், கரும்பின் எந்திரம் கத்தரிகை முதலிய வாழ்க்கைக்கு வேண்டும் சிறு தொழில் புரியும் பொறி களையும், அரண்களிலே பகைவரை வருத்துதற்குரிய பொறிகள் சிலவற்றையும் தங்கள் நுண்ணுணர்வால் ஆக்கிய மைத்தமை சங்க நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆடையினை நன்றாக ஒலித்துக் கஞ்சி பூசி மடித்துக் கொடுக்கும் தொழிலை அக்காலத்து வண்ணார மகளிர் செய்து வந்துள்ளனர். உணவு சமைத்தற்குரிய கலங்களை மண்ணினால் வளையும் புத்தி நுட்பத்தினையுணர்ந்தவர் வேட் கோவர் ஆகிய குயவராவர். செய்தற்கரிய இத்தொழிலில் வல்ல சிறுவர்களை `நன்மதி வேட்கோச்சிறார் என ஒரு புலவர் பாராட்டுகின்றார். இதுகாறும் கூறியவாற்றால் சங்ககாலத் தமிழ் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் வாழ்க்கை வளர்ச்சிக்கு இன்றியமையாத பல்வேறு தொழில்களையும் கண்டு வளர்த்து வந்தார்கள் என்பது ஒருவாறு விளங்குதல் காணலாம். VII புலவர் கண்ட வருங்காலத் தமிழகம் மக்கட்குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்குத் துணை செய்பவர் நல்லிசைப் புலவரே. இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப் புலவர் எல்லாரும் தமிழினத்தாரது நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவும் முயற்சியும் உடையராய் வாழ்ந்தமையால், தமிழ்நாடு கலைத் துறையிலும், நாகரிகப் பண்பாடுகளிலும் தலை சிறந்து விளங்கியது. சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்தினையும் எதிர்காலத்தின் சிறப்பினையும் தம் நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து நோக்கித் தம்மைச் சார்ந்த மக்களைக் கல்வித் துறைகளிலும் தொழிற் துறைகளிலும் உயர்த்தவல்ல பேரறிவு வாய்ந்தவரே புலவர் எனப் போற்றப் பெறுபவராவர். அறிவும் முயற்சியும் உடையார் தம்மில் ஒருங்கு கூடித் தம் அறிவின் திறத்தையும் செயற்றிறத்தையும் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து, எல்லா மக்களையும் அறிவிலும் முயற்சியிலும் முன்னேற்றுதற்குரிய அறிவுரைகளை வழங்கி நல்வழிப் படுத்துதலே புலவர்களின் தொழிலாகும். புலமைமக்குக் கருவியாய் விளங்குவது மொழி. நிலத்தின் வளர்த்தினை அதன்கண் தோன்றிய நெல்முளை காட்டுவது போல, மக்களது அறிவினைப் புலப்படுத்துவது அவர்களாற் பேசப்படும் தாய் மொழியாகும். எனவே, புலமைக்கு அடையாளமாய் விளங்கும் அம்மொழியினைக் கெடாது போற்றுதல் புலவர்களின் கடமை யாயிற்று. சங்ககாலத் தமிழ்ப் புலவர் எல்லாரும் தாம் பேசும் சொற்கள் திரிபடையாமலும், வேற்று மொழிக் கலப்பால் பழைய சொற்கள் வழக்கிழந்து மறையாமலும், இலக்கண இலக்கிய வரம்பு கோலித் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தனர். அறிவையும் தொழிலையும் புலப்படுத்தி மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது மொழியென்றும், அம்மொழி இலக்கண இலக்கிய வரம்பின்றி நாளுக்கொரு வகையாய்த் திரிபடைந்து மாறுமானால், முன்னுள்ளார் கருத்தைப் பின் வந்தாரும், அவர் தம் கருத்துக்களை இனி வருவாரும் உணர்ந்துகொள்ளுதற்கு வழியின்றி அம்மொழியின் வழக்கியல் சிதைந்து கெடுமென்றும் நன்குணர்ந்தனர். ஆகவே, புலவர் பெருமக்கள் தம்மாற் பேசப்படும் தமிழ் மொழியைப் பொருள் தூய்மையும் தெளிவும் உடையதாக உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நிலைபெற வளர்த்து வருவாராயினர். அதனால், தமிழ் மக்களுடைய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் யாவும் புலமைக் கருவூலமாய் அவர்களாற் போற்றப்படும் தமிழ் மொழியுடன் ஒன்றுபட்டு வளர்வனவாயின. ஒருவர் கருத்தை மற்றவர் உணர்ந்துகொண்டு வாழ்க்கையில் முன்னேறுதற்குக் கருவியாயமைவது தாய் மொழி என்றும், அம்மொழி வாயிலாக வாழ்க்கையினைச் செம்மைப் படுத்தும் உணர்வினை வழங்குவார் புலவர் என்றும், உலகியற் பொருள்களை நுண்ணுணர்வுடன் ஆராய்ந்து தாம் உணர்ந்த நற்பொருள்களைப் பாக்களாலும் உரைகளாலும் சுவை பெருக அமைத்துக் கேட்பார்க்கு அறிவுடன் இன்பத்தையும் வழங்க வல்லவர்களே நல்லிசைப் புலவர்கள் என்றும், அத்தகைய புலவர்களாற் பாடப் பெறும் புகழுடையார் இவ்வுலகிற் செய்யத்தகும் நல்வினைகளை முடித்து வானுலக இன்பத்தையும் பெற்று மகிழ்வர் என்றும் சங்ககாலத் தமிழ் மக்கள் உய்த் துணர்ந்தமை தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். வாழ்க்கையிற் காணப்படும் நலம் தீங்குகளைத் தெளியவுணர்ந்து தீ தொரீஇ நன்றின்பாற் செலுத்தும் நல்லறிவுடை யாரே பண்டை நாளிற் புலவரெனப் போற்றப் பெற்றனர். கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றுக் கற்ற அம்முறையிலே நல்வழிக்கண் `ஒழுகி உறுதியுடைய நற்பொருள்களைப் பிறர்க்கு அறிவுறுத்தி வாழ்க்கையைத் திருத்தமுடைய தாக்குதல் பழந்தமிழ்ப் புலவர்களின் தொழிலாய் அமைந்தது. செல்வ வறுமைகளாலும், உலகியலிற் பேசப்படும் பிற தொழில் வேற்றுமைகளாலும் அடக்கப்படாது, எல்லா வேற்றுமைகளையும் கடந்து விளங்குவது புலமையாகும். புலமையுடையார் அவ்வேற்றுமைகளை ஒரு பொருளாக எண்ணமாட்டார். `பகைவர் இவர்; நட்பினர் இவர், என்னும் வேற்றுமை இறைவனுக்கு இல்லாதவாறு போலப் புலவர்க்கும் அத்தகைய வேற்றுமை இல்லையெனபதனைச் செந்தமிழ்ப் புலவர் நன்குணர்ந்திருந்தனர். ஒருவரை விரும்புதலும் வெறுத்தலு மில்லாது தமிழகத்திற் புலமைத் தொண்டாற்றிய புலவர்களைத் தமிழரனைவரும் இகலிலராய் ஒருமித்துப் போற்றி வந்தனர். தம்முட் பகை கொண்ட தமிழ் வேந்தரிடையே ஒருபாற் படாது நடுநிலையிற் பழகுந்திறம் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலை பெற்றிருந்தது. இங்ஙனம் பக்கத்துள்ளார் இயல்பறிந்தொழுகும் பண்புடைமையை மக்கள் மனத்தே வளர்த்த பெருமை தமிழ்ப் புலவர்க்கே சிறப்பாக உரியதாகும். வயிற்றுப் பிழைப்பினைக் கருதிக் கல்வியைக் கற்றல் புலவர் செயலன்றாம். கல்வியிலே கருத்துடையராய்ப் பொருளைப் பேணாது வாழ்தல் புலவர்களின் மனவியல்பாதலின், வறுமை யுறுதலும் அவர்தம் இயல்பாயிற்று. புலவர் வறுமை நிலையில் வருத்தமுற்றாலும், அவர்தம் மதி நலமுணர்ந்த மன்னர்களாலும் நாட்டு மக்களாலும் வரிசையறிந்து பரிசில் தந்து பாராட்டப் பெற்றனர். தமது வறுமை நீங்க நிறைந்த பெரும் பொருளைப் பெற்று இன்புறுதல் வேண்டுமென்ற கருத்தால் பெருமை யில்லாத மக்களை உயர்த்துக் கூறும் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதனவற்றைச் செய்தனவாகப் பொய்யாகப் பாராட்டுதலைப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அறவே வெறுத்தார்கள். வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல், என்பது மருதனிள நாகனார் வாய் மொழியாகும். கல்வி, வீரம் ஈகை ஆகிய பெருமிதப் பண்புகளை உடைய நன்மக்களின் புகழைத் தமிழகம் எங்கணுஞ் சென்று உளமுவந்து பாராட்டிப் போற்றுதல் தமிழ்ப் புலவர்களின் திறனாய் அமைந்தது. வண்மையில்லாத வேந்தர் நாணக் கெடாது பரவிய நின் புகழைத் தமிழ் நாடு முழுவதும் கேட்பப் புலவர் பலரும் தமது பொய்யாத செவ்விய நாவினால் வாழ்த்திப் பாடுவர், எனக் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்னும் புலவர் பிட்டங் கொற்றன் என்னும் வள்ளலை நோக்கிக் கூறுதலால் இவ்வுண்மை புலனாம். அறிவுடையார் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையே மன்னர் பலரும் தாம் பெறுதற்குரிய நற்பேறாகக் கருதினர். சோழன் கிள்ளி வளவன் என்பான் குளமுற்றத்துத் துஞ்சினமை யறிந்து செயலற்று வருந்திய ஐயூர் முடவனார் என்னும் புலவர், நிலவரை உருட்டிய நீள்நெடுந்தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை உடையான் கிள்ளி வளவன், எனப் பாராட்டி இரங்குகின்றார். பழந்தமிழ்ப் புலவர் தாம் கற்ற பெருங்கல்வியைத் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தினர்; தம் அறிவுரைகளை மகிழ்ந்து கேட்பாரை மதித்தனர்; தாம் கூறும் அறிவுரைகளைக் கேட்டு ணரும் அறிவினைப் பெறாதார் மன்னராயினும், அவரை மதியாது இகழ்ந்தனர். நற்பொருள்களை விளங்க எடுத்துரைத் தாலும் ஒரு சிறிதும் விளங்கிக் கொள்ளமாட்டாத பெருமை யில்லாத மன்னர்களை எம் இனத்தவராகிய புலவர்கள் பாடமாட்டார்கள், (புறம் - 375) என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் கூறுகின்றார். தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை ஈட்டி இனிது வாழும் வசதி பெறாத புலவர், ஈகையிற்சிறந்த வள்ளல்கள் முதலிய வர்களை நாடிச் சென்று அவர்கள் மதித்தளித்த பரிசிற் பொருளைக்கொண்டு வாழ்க்கை நிகழ்த்த வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். எனது மனைக் கண் உண்ணுதற்குரிய உணவில்லா மையால், என் இளம் புதல்வன் தாய்ப்பாலும் பெறாது கூழையும் சோற்றையும் விரும்பி, அடுக்களையிலுள்ள கலங்களைத் திறந்து பார்த்து, ஒன்றுங்காணாது, அழுகின்றான். அவனுடைய அழுகையைத் தணிக்கக் கருதிய என் மனைவி, ‘அதோ புலி வருகின்றது!’ என அச்சுறுத்தியும், ‘வானத்தில் அம்புலியைப் பார்! என விளையாட்டுக் காட்டியும் அவன் அழுகை தணியாமைக்கு வருந்தி, ‘நின்னுடைய பசி வருத்தத்தை நின் தந்தைக்குக் காட்டு வாயாக, எனச் சொல்லி நின்று மனம் கவல்கின்றாள்,1 எனப் பெருஞ்சித்தனார் என்னும் புலவர் பெருமான் தமது வறுமைத் துன்பத்தைக் குமண வள்ளலிடம் எடுத்துரைக்கும் முறை, படிப்பார் உள்ளத்தை உருக்குவதாகும். பெருஞ்சித்தரனார் இங்ஙனம் வறுமையாற் பெரிதும் வருத்த முற்றவராயினும், தாம் குமணன் பாற்பெற்ற பரி சிற்பொருளைத் தமக்கென இறுக வைத்துக் கொள்ளாது, தம் போல வறுமையால் வருந்துவார் யாவராயினும் அவரெல்லார்க்கும் வரையாது வழங்குமாறு தம் மனைவிக்கு அறிவுறுத்துகின்றார். 2 இச்செயலால் அக்காலத் தமிழ்ப் புலவர்களின் வள்ளண்மை இனிது புலனாதல் காணலாம். எத்துணைத் துன்பமுற்றாலும் தங்களது பெருந்தன்மைக்குப் பொருந்தாத நிலையில் செல்வர்பாற் பணிந்தொழுகுதலைப் புலவர்கள் ஒரு சிறிதும் விரும்பமாட்டார்கள். தமக்குப் பிறர் தரும் பொருள் அளவாற்பெரிதாயினும், அன்பின்றியும் காலந் தாழ்த்தும் வரிசையறியாதும் வழங்கப்பெற்றால், அதனை வெறுத்து விலக்குதலும்; தினையளவிற்றாய சிறுபொருளாயினும், தம் புலமைத் திறமுணர்ந்து வரிசையறிந்து கொடுக்கப்பெற்றால் அப்பொருளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளுதலும் பெரும் புலவர்களின் இயல்பாகும். அரசர் முதல் வறியவர் வரை எல்லா மக்களையும் ஒப்ப மதித்து, அவர்தம் நல்லியல்புகளை எடுத் துரைத்துப் பாராட்டுதலும், தீமை கண்டால் இடித்துரைத்துத் திருத்துதலும், மக்கள் நலம் பேணும் தறுகண் வீரர்களையும் தமிழ் வள்ளல்களையும் உளமுவந்து பாராட்டி ஊக்குதலும், மனை வாழ்க்கையிலும் உலகியலிலும் மக்கள் பாற்காணப் பெறும் தவறுகளை அவ்வப்போது எடுத்துக்காட்டி அவர்களைத் திருந்திய வாழ்க்கையில் வாழச் செய்தலும் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் செயல்களாய் அமைந்தன. சங்ககாலத்தில் மன்னர் முதல் தொழிலாளர் ஈறாக ஆடவர் பெண்டிர் இருபாலாரும் தமிழறிவு நிரம்பப்பெற்றவராய்த் தாம் உலகியலிற்கண்டுணர்ந்த உண்மைகளை எல்லார்க்கும் அறி வுறுத்தும் நல்லிசைப் புலவராய் விளங்கினர். குடிப்பிறப்பு, செல்வநிலை முதலிய உயர்வு தாழ்வுகளை உள்ளத்துட் கொள் ளாது, கற்றறிவுடைய புலவர் பெருமக்கள் கருதிய வழியே தமிழ் வேந்தர்களும் தங்கள் ஆட்சி முறையினை அமைத்துக் கொண்டார்கள். மக்களெல்லார்க்கும் கல்வியின் இன்றியமை யாமையினை அறிவுறுத்த எண்ணிய மன்னர் பெருமானாகிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், என்பான், `அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும், என அறிவுறுத்திய சொற்றொடர், அரசியல் நெறியில் அறிவுடைய புலவர்க்கமைந்த பொறுப்பினை நன்கு வற் புறுத்துவதாகும். தமிழ் வல்ல பெரும்புலவர்களைப் பழைய தமிழ் வேந்தர்கள் தங்களோடு ஒப்ப வைத்து நண்பு செய்தும், தம்மினும் உயர் நிலையில் வைத்து வழிபட்டுப் போற்றியும் ஆதரித்த செய்திகள் புறநானூற்றுச் செய்யுட்களில் ஆங்காங்கே குறித்துப் பாராட்டப் பெறுகின்றன. புலவர் பெருமானாகிய பிசிராந்தையார்க்கும், வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ் சோழனுக்கும் அமைந்த உணர்ச்சியொத்த நட்பின் திறத்தினை அவ்விருவரும் பாடிய புறப்பாடல்களால் நன்குணரலாம். கோப்பெருஞ்சோழன் உலக இன்பத்தை வெறுத்து, நற்பொருளைச் சிந்தித்து, உண்ணாது வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணுகின்றான்; தான் வடக்கிருக்கும் பொழுது தன் உயிர்த் தோழராய்ப் பாண்டி நாட்டில் வாழும் பிசிராந்தையார்க்கெனத் தன் பக்கத்தில் ஓரிடம் அமைக்கும்படி தன்னைச் சூழ்ந்துள்ள சான்றோர்க்குச் சொல்லிவிட்டு வடக் கிருந்தான். சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கேள்வி வாயிலாக அறிந்து அன்பு செய்ததல்லது ஒரு முறையேனும் நேரிற்கண்டு பழகியவரல்லர். பல யாண்டுகள் உளமொத்துப் பழகிய பெருங்கேண்மையராயினும், நெடுந்தூரத் திலிருந்து நண்பர் நினைத்த மாத்திரத்தே வந்து சேர்தல் என்பது இயலாத செயலாம் என அங்குள்ள சான்றோர் ஐயுற்றிருக்கும் நிலையில் அவர்களெல்லாரும் வியந்து உள்ளம் உருகும்படி பிசிராந்தையார் வந்து சேர்ந்தார்; கோப்பெருஞ்சோழன் பக்கத்தில் தமக்கென அமைக்கப் பட்ட இடத்தில் மன்னனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு. இவ்வாறே பொத்தியார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழனொடு வடக்கிருந்து உயிர் நீத்தனர். பொய்யா நாவிற் புலவர் பெருமானாகிய கபிலர், தம்மையாதரித்த உயிர்த்தோழனாகிய பாரிவேள், வேந்தரது வஞ்சனையால் உயிரிழந்தமைக்கு ஆற்றாது, அவன் மகளிர் இருவரையும் தம் மகளிராகக் கருதி, அவர்களைப் பார்ப்பார் இல்லில் வளரப்பணித்துத் திருக்கோவலூரில் பெண்ணையாற்றின் நடுவே அமைந்த பாறையொன்றில் வடக்கிருந்து உயிர் துறந்தமை அப்பொழுது அவர் பாடிய புறப்பாடலாலும், திருக்கோவலூர்த் திருக்கோயிலிற் பொறிக்கப் பெற்ற சோழர்காலக் கல்வெட்டி னாலும் நன்கு புலனாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர் தம்மையா தரித்து நண்பு செய்த அரசர் வள்ளல் முதலியவரின் துன்பக் காலத்தில் அவர்தம் பிரிவாற்றாது அன்பினால் உடனுயிர் விடும் பெருங்கேண்மை யினராய் விளங்கினமை மேற்காட்டிய அருஞ்செயல்களால் நன்கு துணியப்படும். நாடாளும் மன்னர்கள் வெகுளியினால் மனந்திரிந்து பழி யுடைய செயல்களைச் செய்யத் துணிதலும் உண்டு. அந்நிலையிற் புலவர் பெருமக்கள் மன்னர்களின் வெகுளியைத் தணித்துத் தங்கள் அறவுரைகளால் அவர்களை நல் வழிப்படுத்தினார்கள். கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன் ஆணை வழியடங்காது அரசியலைக் கைப்பற்றிய பொழுது அவர்கள்மேற் சினங்கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். அந்நிலையிற் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் பெருமான் தம் அறவுரைகளால் கோப்பெருஞ் சோழனது சீற்றத்தைத் தணிவித்துத் தந்தைக்கும் மைந்தர்க்கும் போர் நிகழாதபடி தடுத்தனர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான், தன் பகைவனாகிய மலையமான் பெற்ற இளங்குழந்தைகளை யானையின் காலால் இடரச் செய்தற்கு முற்பட்டு நிற்கின்றான். அவ்விழி செயலைக் கண்டு உளம்பொறாத கோவூர் கிழார் என்னும் புலவர், செறுநரும்விழையும் சிறப்பமைந்த அவ்விளங் குழந்தைகளின் வனப்பினை இன்றமிழ்ச் செய்யுளால் எடுத் துரைத்து, மன்னனது உள்ளத்தினை உருக்கி அவ்விளங்குழந்தை களை உய்வித்தருளினார். ஒரு புறாவினைப் பாதுகாத்தல் வேண்டி அப்பறவையின் நிறைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையினை அறுத்துக் கொடுத்த அருளாளனாகிய சோழமன்னன் வழியிற் பிறந்த வேந்தர் பெருமானாகிய நீ, புலவர்களின் துயர்க்கிரங்கித் தம் பொருளைப் பகுதித்து வழங்க வல்ல அருள் மிக்க மலையமான் குழந்தைகளாகிய இவர்களைக் கொலை செய்ய முந்துதல் அருவருப்பினை விளைக்கும் அடாத செயலாகும். தங்களைக் கொல்லுதற்கமைந்த யானையினைக் கண்ட இக் குழந்தைகள், தங்கள் அழுகையினை மறந்து இங்குக் கூடிய மக்களைப் பார்த்து மருள்கின்றார்கள். இவர்களைக் கொல்லுதல் நினக்கு நீங்காத பெரும்பழியை விளைப்பதாகும், எனக் கோவூர் கிழார் கிள்ளி வளவனை நோக்கி இடித்துரைத்து, மலையமான் குழந்தைகளை உய்யக் கொள்ளுந்திறம் வியந்து போற்றுதற் குரியதாம். விருப்பு வெறுப்பின்றி எல்லா மக்களையும் ஒப்பக் கருதி அறிவுரை வழங்குதல் புலவர்களின் இயல்பாகும். தமிழரசர்கள் தங்களுக்குள் பகைகொண்டபொழுது அவர்களுள் ஒருவர்பாற் சார்ந்து ஒற்றாய் நின்று கோட்சொல்லுந் தீச்செயலைப் புலவர் பெருமக்கள் எஞ்ஞான்றும் மேற் கொண்டதில்லை. சோழன் நலங்கிள்ளியினால் ஆதரிக்கப் பெற்ற இளந்தத்தனார் என்னும் தமிழ்ப் புலவர், அவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியால் ஆளப் படும் உறையூர்க்குச் சென்றார். அப்புலவரை ஒற்றர் எனப் பிழைபடக் கருதிய நெடுங்கிள்ளி, அவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். இக்கொடுஞ் செயலையுணர்ந்த கோவூர் கிழார், அம்மன்னனை இடித்துரைத்துப் பிறரெவர்க்குந் தீமை கருதாத புலவர் பெருமக்களின் பெருந்தகவினை நன்கு விளக்கி, இளந்தத்தனாரை உய்யக் கொண்ட பாடலொன்று புறநாணூற்றில் உள்ளது. வரையாது வழங்கும் வள்ளல்களை நினைத்துப் பழுத்த மரங்களை நாடிச் செல்லும், பறவைகளைப்போல நெடுந்தூரங் கடந்து சென்று, பொய்யா நாவினால் அவர் தம் புகழினைப் பாடி, அவர் தரும் பரிசிற் பொருளால் தம் சுற்றத்தாரைப் பேணித் தம்பாலுள்ளதை வறுமையாளர்க்கு வரையாது வழங்கித் தாம் கற்று வல்ல கலைத்திறத்தாற் பெறும் பெருஞ்சிறப்பு ஒன்றினையே பொருளாக மதித்து வருந்தி முயலும் இப்புலவர் வாழ்க்கை, பிறர்க்குக் கடுகளவும் தீமை தருவதன்றாம். தாம் கற்ற கல்வித் திறத்தால் தம்முடன் மாறுபடுவார் நாணும்படி அவர்களை வென்று தலை நிமிர்ந்து நடப்பதல்லது, உலகினையாளும் பெருவேந்தர்களாகிய உங்களையொத்த பெருமிதத்தையும் உடையதாகும், எனக் கோவூர் கிழார் புலவர்களின் பண்பினை நெடுங்கிள்ளிக்கு அறிவுறுத்தி, இளந் தத்தனைக் காப்பாற்று கின்றார். புலவர்களின் சான்றாண்மையினையும், அதனை நன்குணர்ந்து அவர்கள் ஆணை வழி அடங்கி யொழுகிய தமிழ் வேந்தர்களின் செங்கோல் முறையினையும் மேற்காட்டிய நிகழ்ச்சிகளால் எளிதின் உய்த்துணரலாம். இங்ஙனம் தம் புலமைத் திறத்தால் தமிழகத்தை உய்விக்கத் தோன்றிய புலவர்களை அக்காலத் தமிழ் வேந்தர் தம் உயிரினும் சிறந்தாராக மதித்துப் போற்றினர். இவ்வாறு அரசர் பலரும் புலவர்களைப் போற்றுதற்கு அவ்வரசரும் பெரும்புலமை பெற்று விளங்கினமையே காரணமாகும். புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம்மிக்கவர்க்கே புலனாம், என்னும் வாய்மொழி இவண் கருதற்குரியதாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுட் பெரும்பாலார், பிறர்பாற் பெறும் பரிசிலை விரும்பாது, தாமே பெருஞ் செல்வர்களாகவும் நிலக்கிழார்களாகவும் வணிகம் முதலிய பல்வேறு தொழிலினராகவும் உரிமையுடன் வாழ்ந்தனர். வாழ்க்கையில் நுகர்தற்குரிய எல்லா நலங்களும் குறைவறப்பெற்ற அப்புலவர் பெருமக்களாற் பாடப் பெற்ற செய்யுட்கள்யாவும் வையத்துள்ள வாழ்வாங்குவாழும் தமிழர் நல்வாழ்க்கை முறையினைத் திறம் பெற விளக்குந் திட்பமுடையனவாய்த் திகழ்கின்றன. அரசர்களாலும் பொது மக்களாலும் நன்கு மதிக்கப் பெற்ற செந்தமிழ்ப் புலவர்கள் பெருகி வாழ்தற்கு நிலைக்களமாகிய தமிழகமானது தமிழ் வளம் கெழுமிப் புலமைத் துறையிலும் நாகரிகப் பண்புகளிலும் தலைசிறந்து திகழ்நதது. இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புலமை நலம் பெற்று அறிவிலும் வீரத்திலும் மேம்பட்டு விளங்கிய தமிழகத்தை இன்று நம் மனக்கண்முன்நிறுத்துவன பண்டைத் தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய செந்தமிழ் நூல்களேயாகும். இவற்றைத் தம் புலமைத் திறத்தால் ஆக்கியளித்த நல்லிசைப் புலவர்கள் தாங்கள் நேரிற் கண்ட தமிழகத்தைத் தங்கள் வழியினராகிய பிற்காலத் தமிழரும் உணர்ந்து போற்றும் முறையில் தங்கள் வாய்மொழிகளால் உருவாக்கிக் காட்டியுள்ளார்கள். இவர்களால் இயற்றப்பெற்ற சங்க நூல்களைக் கருவியாகக் கொண்டு ஆராயுங்கால் கற்பார் மனக்கண் முன்தோன்றும் தமிழகத்தின் பரப்பும் அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழரது குடி வாழ்க்கையும், ஆடவர் பெண்டிர் என்பவர்க்குரிய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்ன என முன்னர் ஒருவாறு சுருக்கமாக விளக்கப் பெற்றன. இனி, சங்க காலத்தே வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் உள்ளத்திலே எதிர்காலத் தமிழக வாழ்வினைப்பற்றி எங்ஙனம் எண்ணினார்கள் என்பதனை அவர்களாற் பாடப்பெற்ற செய்யுட்களால் உய்த்துணர்தல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவனார் தம் உள்ளத்திற்கருதிய எதிர் காலத் தமிழகத்தின் இயல்பு திருக்குறளில் `நாடு என்னும் அதிகாரத்தால் நன்கு விளக்கப் பெறுகின்றது. குறையாத உணவுப் பொருளை விளைவிக்கும் உழவர்களும், நடுவு நிலைமை வாய்ந்த சான்றோர்களும், முயற்சியுடைய பெருஞ்செல்வர்களும் ஒருங்கு வாழ்தற்கு நிலைக்களமாவதும், அளவிறந்த பொருளுடைமை யால் எல்லா நாட்டினராலும் விரும்பத் தக்கதும், கெடுதலில்லாத விளைவினை உடையதும், அரசியலுக்கு வேண்டும் வரிப் பொருளை நிரம்பக் கொடுக்கும் வளம் வாய்ந்ததும் ஆகிய நிலப்பகுதியே நாடு எனச் சிறப்பித்துரைக்கப்படுவதாம். மிக்க பசியும், நீங்காத நோயும், கலக்கத்தைத் தரும் பகைமையும் ஆகிய மூவகைத் தீமைகளும் சேராது இனிது நடப்பதே நாட்டின் சிறப்பியல்பாகும், என ஆசிரியர் திருவள்ளுவனார் நமக்கு அறிவுறுத்துகின்றார். அயல் நாட்டவர் தமிழ் நாட்டிற் குடி புகுந்தமையால் தமிழகத்தில் என்றுமில்லாத நிறவேற்றுமையும் சமய வேற்றுமை யுந் தோன்றி, மக்களைப் பல்வேறு குழுவினராகப் பிரித்து, மாறுபாட்டினை விளைவித்தன. அவற்றால் தமிழ்மக்களின் அரசியல் நெறியைச் சிதைக்கும் உட்பகைகளும் நாளடைவிற் றோன்றலாயின. நாட்டில் மக்களைத் துன்புறுத்தும் குறும்பர் களாகிய கொடியவர்களும் ஆங்காங்கே புகுந்து தீமை விளைக்கத் தொடங்கினார்கள். இத்தகைய இடர்நிலையினை யுணர்ந்த ஆசிரியர் இம்மூவகைத் தீமைகளையும் அடியோடு விலக்கிய நாடே மக்கள் அமைதியாக வாழ்தற்கேற்ற ஆக்கமளிப்பதென நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திப் போந்தார். * பசியும் பிணியும் பகையும் நீங்கி மக்கள் இசை பெருக இன்புற்றுவாழும் இடமாக இத் தமிழகம் அமைய வேண்டு மென்பதே பண்டைத் தமிழ் புலவர்களின் உட் கோளாகும். இக்கருத்தினால், அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட எண்ணங்கள் வருங்காலத் தமிழர் வாழ்வினை இனிமையும் எழிலும் பொருந் தியதாக உருவாக்கும் ஆற்றலுடையனவாய்த் திகழ்கின்றன. நல்லறிவுடைய புலவர்கள், தம் புலமையின் பயனாகிய அருட்பண்பினையுடையவர்களாதலால், இந்நாட்டிற் பசியால் வருந்தும் பிறர் துயர்க்கு இரங்கி, அவர்தம் பசிநோயினை அகற்றுதற்குரிய நெறி முறைகளைத் தேர்ந்துணர்ந்தார்கள்; வறுமையால் வருந்துவாரது பசியினைத் தணித்தல் செல்வ முடையார் கடன் எனத் தெளிய உணர்ந்தார்கள். இவ்வுலகத்தைத் தனக்கேயுரியதாகக் கொண்டு ஆட்சி புரியும் பெருவேந்தர்க்கும், இரவும் பகலும் விழித்திருந்து விலங்கு முதலியவற்றை வேட்டத்தாற் கொன்று திரியும் கல்வியில்லாத ஏழை வேடனுக்கும், உண்ணப்படும் உணவு நாழியளவினதே; உடுக்கப்படும் உடைகள் இரண்டே; பிற நுகர்ச்சிகளும் ஒரு தன்மையனவே; ஆதலால், செல்வ முடையார் செல்வத்தாற்பெறும் பயனாவது, வறியார்க்கு மனம் விரும்பிக் கொடுத்தலேயாம். `செல்வத்தை யாமே நுகர்ந்து மகிழ்வேம், எனக் கருதிச், செல்வர்கள் ஈயாது வாழ்வார்களானால், அதனால் அவர்களுக்கு விளையும் தவறுகள் மிகப்பலவாம், என நக்கீரனார் என்னும் புலவர் பெருமான் செல்வர்களுக்கு அறிவுறுத்துகின்றார். வறியாரது பசியை மக்கள் அறம் நோக்கித் தீர்ப்பாராக! பொருள் பெற்றான் ஒருவன் அப்பொருளைச் சேமித்து வைக்கு மிடம் அவ்வறச் செயலேயாகும், என்பர் தெய்வப்புலவர். மக்கள் தங்களுக்கு வகுக்கப்பட்ட வாழ்நாளளவும் நோயின்றி இன்புற்று வாழவேண்டுமெனக்கருதிய தமிழ்ச் சான்றோர், உடலிற் பிணிதோன்றாமைக்குரிய நல்லொழுக்க முறைகளையும், உடற்பிணியை அகற்ற வல்ல மருத்துவ முறைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ் மக்களது நல் வாழ்க்கையினை வளர்த்து வந்தார்கள். `மருந்து என்ற அதிகாரத்தினால் மக்கள் நோயின்றி நீடு வாழ்தற்குரிய இயற்கை முறைகளைப் பொய்யில் புலவர் நன்கு புலப்படுத்துகின்றார். `பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் சேர மன்னன், அரசியல் நெறிக்குத் தடையாகிய வெகுளி, காமம், அச்சம், பொய் முதலிய தீமைகளை அகற்றி, மாந்தர் ஒருவரையொருவர் நலியாமலும் பிறருடைய பொருளை விரும்பாமலும் தூய அறிவினையுடைய சான்றோர் செம்மை நெறியில் நின்று தம் வாழ்க்கைத் துணையைப் பிரியாமல் தம் இல்லிருந்து நல்லறஞ் செய்து முதிர்ந்த யாக்கையுடன் நோயின்றி வாழ ஆட்சி புரிந்தான், எனப் பாலைக் கௌதமனார் என்பார் பதிற்றுப்பத்திற் பாராட்டுகின்றார். அரசர்கள் முறை தவறாது ஆட்சி புரிதலால் வேண்டும் பொழுது மழை பெய்ய, நோயும் பசியும் நீங்கி நாடு பொலிவு பெற்றது எனப் புலவர் பலரும் பாராட்டியுரைக்கும் பாடல்கள் அக்காலத் தமிழகத்தின் அரசியற் செம்மையினை நன்கு விளக்குவனவாம். வேந்தர்களது போர்த்திறமையைப் பாராட்டப் போந்த புலவர்கள், அப்பாராட்டுதலுடன் போரினாற் பகைவர் நாடு பாழாயின செய்தியையும் எடுத்துக் கூறி வருந்துகின்றார்கள். வெற்றியால் மகிழ்ந்த வேந்தருள்ளத்தில் பகைவர் நாட்டின்பால் அருளினைத் தோற்றுவிக்கும் பொருளுடையனவாகப் புலவர்கள் பாடிய செய்யுட்கள், புலவர்களின் இரக்கவுணர்ச்சியினை இனிது விளக்குவனவாம். போரின்றி அமைதியாக வாழும் ஆட்சி முறையின் இனிமையினைத் தமிழ்ப் புலவர்கள் நன்குணர்ந் திருந்தார்கள். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையின் ஆட்சியினைக் குறுங்கோழியூர் கிழார் பின் வருமாறு பாராட்டுகின்றார்: `நினது குடை நிழற்கீழ் வாழும் மக்கள் சோறு சமைக்கும் நெருப்புடனே கதிரவனின் வெயில் வெம்மையைத் தவிர, வேறு வெம்மையை (கொடுந் துன்பத்தை) அறியார்; வான வில்லை யன்றிப் பகைவருடைய கொலை வில்லைப் பார்த்தறியார்; உழவுத் தொழிற்குரிய கலப்பையைத் தவிர, வேறு படைக் கலங்களைக் கண்டறியார். நின்னாட்டில் கருவுற்ற மகளிர் வேட்கையினால் விரும்பியுண்பதல்லது பகைவரால் உண்ணப் படாத மண்ணினையுடையாய் நீ என அப்புலவர் சேரமானைப் பாராட்டுகின்றார். `மாந்தரஞ்சேரல் பாதுகாத்த நாடு அமைதியான இன்ப நுகர்ச்சியால் தேவருலகத்தை யொக்கும், என மற்றொரு பாடலால் அம்மன்னன் போற்றப்படுவதனை நோக்கினால், அவனாட்சியின் அமைதி நிலை நன்கு புலனாம். போரின்றி அமைதியாக வாழ்தற்குரிய சூழ் நிலையினையும், அதற்குரிய அறிவாற்றல்களையும் வருங்காலத் தமிழ் மக்கள் உண்டாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தினைப் பழந்தமிழ்ப் புலவர் இடை விடாது ஆராய்ந்து அமைதி பெற முயன்றமை மேற்காட்டிய குறிப்புக்களால் நன்கு துணியப்படும். பழந்தமிழ்ப் புலவர்கள், ஒருவரோடொருவர் இகலின்றிக் கலந்து வாழ்ந்தார்கள்; தாங்கள் பெற்ற பெருஞ் செல்வத்தை ஏனைய கலைஞர்களும் பெற்று மகிழ்தல் கருதி, அவர்களை வள்ளல்களிடம் வழிப்படுத்தினார்கள். இசைத் தமிழில் வல்ல பாணர்களையும், நாடகத் தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரையும், தம்மை ஆதரித்த வள்ளல்களிடம் வழிப்படுத்தி வாழ்வித்த செய்யுட்கள் `ஆற்றுப்படை என்ற பெயரால் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. பரிசில் பெற வரும் கலைவாணர்கள் தங்கள் கல்வித் திறத்தில் நிறைந்த ஆற்றல் பெற்றவர்களாயினும், அன்றி அவ்வாற்றல் பெறாதவர் களாயினும், அவர்தம் குறைபாடுகளை மறைத்து, அவர்கள் அறியாத கலைத்திறத்தில் வேண்டும் நுட்பங்களை அவர்களுக்கு முன்னரே அறிவித்து நன்றாக நடத்தும் பண்பாடு தமிழ்ப் புலவர்பால் நிரம்ப அமைந்திருந்தது. பக்கத்தார் இயல்பறிந்து அவர்க்குத் தீங்கு செய்யாது நன்மையே புரிந்தொழுகும் பண்புடைமையே புலவர்களால் உருவாக்கப் பெற்ற தமிழகத்தின் நாகரிக வாழ்வாகும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பிய வண்ணம் நனி நாகரிக வாழ்வினை எதிர்காலத் தமிழ் மக்கள் எய்தி இன்புறுவார்களாக! 1. `தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறம். 58 : 13 `உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் டீந்தமிழ் - திருக்கோவையார். 1. `நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்; அதனால், `யான்உயிர், என்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. - புறம். 186. 1. `வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கென. - சிலப். காட்சி. 170-72. 2. ‘பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்றாள் முரசுமுழங்கு தானை மூவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய யெழாஅல் கோடியர் தலைவ!- பொருநராற்றுப்படை. 1. `அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் - பொருநராற்றுப்படை. 2. `அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் - புறம். 62. 3. புறம் .9. 4. `அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்; உருமும் உரறாது; அரவுந் தப்பாது; காட்டு மாவும் உறுகண் செய்யா. - பெரும்பாணாற்றுப்படை, 39-43. 1. `நின்னொடு தொன்று மூத்த வுயிரினும் உயிரொடு நின்று மூத்த யாக்கை யன்னநின் வாளின் வாழ்நர் - புறம். 2. `தாழ்கழல் மன்னன் தன்திருமேனி வாழ்க சேனா முகமென வாழ்த்தி...... அறைபறை யெழுந்ததால் அணிநகர் மருங்கென். - சிலப். காட்சி. 191-94. 3. `கூற்றுடன்று மேல்வரினும் கூடி யெதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. - குறள். 1. புறம். 38. 1. `நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை - பதிற். 14. `ஏந்தெழி லாகத்துச சான்றோர் மெய்ம்மறை - பதிற். 58. 2. ` ......................................... அலம் வந்து நெஞ்சம்நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. - புறம். 31. 1. `இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். - குறள். 1. புறம். 189 1. புறம். 173 1. மலைபடுகடாம். 394-96 1. புறம்.9 1. கலி. 39. புறம். 189. 1. ஐங்குறுநூறு, 257. 1. தொல்காப்பியம், பொருளியல். 14. 2. காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம் என வழங்கும் யாப்பியல் மேற்கோட் சூத்திரங்கள் இவ்வுண்மையினைப் புலப்படுத்தும். 1. கலி. 103. 1. புறம் 343. 2.புறம்.314 1. மதுரைக் காஞ்சி. 1. கலி. 59. 2. திருக்குறள், 54. 1. ஐங்குறுநூறு 203. 1. குறுந்தொகை 61 1. சிலப். ஊர்காண் - 167. 1. திருக்குறள் 392. பரிமேலழகர் உரை. புறம். 160 2. புறம். 163. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பும் இல்லது நாடு. - குறள். 735.