மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் தமிழ் ஆவணங்கள் : மறைந்துபோன தமிழ் நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் பழைய தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெறத்தொடங்கியது. இந்நூல்களில் காணப்படும் பல்வேறு தகவல்கள் புதியனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் தமிழில் உருவான நூல்கள் பல பெயரளவில் மட்டும் பதிவாகி யிருப்பதையும் காணமுடிந்தது. இவ்வகைப் பதிவுகளைக் கண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் அவற்றைத் தொகுத்து உருவாக்கியதே மறைந்துபோன தமிழ்நூல்கள் எனும் இத்தொகுதியாகும். யாப்பருங்கல விருத்தி உரையில் பல நூல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்நூல்கள் புழக்கத்தில் இல்லை. அதைப்போலவே யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பல்வேறு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்கள். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பல நூல்களைக் குறிப்படுகிறார். அவை புழக்கத்தில் இல்லை. இவ்வகையில் காணப்படும் 333 நூல்களின் பட்டியலை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார். அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய நூல்கள் 87, காவியம் மற்றும் பிற இலக்கிய வடிவங்களில் அமைந்த நூல்கள் 96, இசைத் தமிழ் நூல்கள் 13, நாடகத் தமிழ் நூல்கள் 22, இலக்கண நூல்கள் 107 ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி மரபிலோ அல்லது சுவடியாகவோ இருந்த இந்நூல்கள் அழிந்துவிட்டன. ஆனால் அந்நூற்செய்திகளைப் பிற்கால நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் எடுத்துப் பயன்படுத்தி யுள்ளனர். சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழ்மொழி மற்றும் இலக்கிய மரபில் இவ்வகையான நிகழ்வு சாத்தியமே. ஆனால் மறைந்து போனவற்றில் எஞ்சியுள்ளவற்றை பதிவு செய்வது அவசியம். அப்பணியை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 தங்கள் ஏப்ரல் 2010 வீ. அரசு தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் முதற் பதிப்பின் முன்னுரை 18 இரண்டாம் பதிப்பின் முன்னுரை 20 இலக்கிய நூல்கள் 21 இசைத்தமிழ் நூல்கள் 171 நாடகத் தமிழ் நூல்கள் 181 இலக்கண நூல்கள் 204 இணைப்பு - I : பெயர் தெரியாத நூல்கள் 298 இணைப்பு - II : சிதைவுண்டதமிழ் நூல்கள் : 318 தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 324 இப்புத்தகத்தை எழுதத் துணையாக இருந்த நூல்கள் 333 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் குறிப்பு : இத்தலைப்பில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1959 இல் எழுதிய நூல். முதற் பதிப்பின் முன்னுரை வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் புத்தகம். அந்நிகழ்ச்சி இது: எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயதுச் சிறுவனும், தங்கமணி என்னும் பெயருள்ள ஒன்றரை வயதுச் சிறுமியும் அக் குழந்தைகளாவர். அக்குழந்தைகள், வீட்டுக்கு இரண்டு விளக்குகளாத் திகழ்ந்தனர். குடும்பச் செல்வங்களாக விளங்கினார்கள். காட்சிக்கினிய கண்மணிகளாக வளர்ந்தார்கள். ஆனால், அந்தோ! எதிர்பாராத விதமாக அக்குழந்தைகள் மறைந்தன! மக்கட்செல்வங்கள் மறைந்தன: ஒளி விளக்குகள் அணைந்தன: சின்னஞ்சிறிய அரும்புகள், மலர்ந்து மணம் கமழ்வதற்கு முன்னே பறிக்கப்பட்டன. அது காரணமாக எனது மனத்தில் துன்பம் சூழ்ந்தது; மனவேதனை பெருகிற்று. நிலையாமையைப்பற்றி நாலடியாரில் படித்த ஆணித்தரமான செய்யுள்கள் கூட என் மனத் துன்பத்தை அகற்றத் துணைபுரியவில்லை. காலம் என்னும் நூலினால் நெய்யப்பட்ட மறதி என்னும் திரை மூடினால்தான் மனத்துன்பம் மறையும். ஆனால், அந்தத் திரை விரைவில் மூடி மறைப்பதாக இல்லை. அது வரையில் என்ன செய்வது? துன்பத்தை அகற்ற முயன்றேன்; முடியவில்லை. ஏதேனும் நூலைப் படித்துக்கொண்டேயிருந்தால் அது மனத்துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று கருதி, எதிரிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அது யாப்பருங் கல விருத்தி என்னும் நூல். அதனைப் படிக்கத் தொடங்கினேன். அந் நூலின் பழைய உரையாசிரியர், தமது உரையில் பல நூல்களிலிருந்து சில செய்யுள்களை உதாரணம் காட்டியிருந்தார். மேற்கோள் காட்டப் பட்ட நூல்களில் சில இறந்து மறைந்துபோன நூல்களாக இருந்தன. என் குடும்பத்தில் இரண்டு அருமைக் குழந்தைகள் மறைந்துவிட்டதுபோல, தமிழிலக்கியக் குடும்பத்திலும் சில குழந்தைகள் மறைந்து போனதை அப்போது கண்டேன். என் மனத்தில் அப்போது புதியதோர் எண்ணம் தோன்றிற்று. தமிழன்னை எத்தனை குழந்தைகளை - தமிழ் நூல்களை இழந்துவிட்டாள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும் என்னும் எண்ணந்தான் அது. இந்தக் குறிக்கோளுடன் யாப்பருங்கலக் காரிகை விருத்தி யுரையையும், ஏனைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைநூல் களையும் படித்தேன். அவ்வுரையாசிரியர்கள் கூறுகிற நூல்களில் எவைஎவை மறைந்துபோயின என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன். மறைந்துபோன நூல்களிலிருந்து எஞ்சிநின்ற செய்யுள்களையும் தொகுத்து எழுதினேன். இது நிகழ்ந்தது 1952 ஆம் ஆண்டின் இறுதியில் ஆகும். ஆனால், இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ய முடிய வில்லை. இடையிடையே வேறு சில நூல்களை எழுதி முடிக்க வேண்டியிருந்தபடியாலும், வேறு அலுவல்களாலும் இந்த வேலை இடையிடையே தடைப்பட்டது. ஆயினும், சமயம் வாய்க்கும்போ தெல்லாம் இதனையும் ஒருவாறு செய்து முடித்தேன். இதில் சில நூல்கள் மட்டும், ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் திங்கள் வெளியீட்டில் மறைவுண்ட தமிழ் நூல்கள் என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. அதனைக் கண்ட சில அன்பர்கள், நூல் முழுவதும் வெளிவருவது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் என்று கூறினார்கள். ஆகவே, இந்நூல் இப்போது புத்தக வடிவமாக வெளிவருகிறது. மறைந்துபோன நூல்களின் முழுத் தொகுப்பல்ல இந்நூல்; விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன். இப்போது தொகுத்து முடிந்த வரையில் இந்நூல் முதன்முதலாக வெளி வருகிறது. இந்நூலுக்கு ஒரு முகவுரை எழுதியருளுமாறு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் அன்புடன் இசைந்து முகவுரை எழுதியருளினமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை புத்தகப் பதிப்பமாகிய பாரி நிலையத்தின் உரிமை யாளர் திரு. க. அ. செல்லப்பன் அவர்கள், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டமைக்கு, அவர்களுக்கு எனது நன்றி யுரியதாகும். இந்நூலை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டுக் கொடுத்த மங்கை அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரியது. மயிலாப்பூர், சென்னை-4 15.1.1959 சீனி. வேங்கடசாமி. இரண்டாம் பதிப்பின் முன்னுரை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் இந்நூல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சில ஆண்டுகளாக இந்நூல் கிடைக்காமையால் இதை மீண்டும் வெளியிட வேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த இரண்டாம் பதிப்பு வெளியிடப்படுகிறது. இந்தப் பதிப்பில் புதிய சில செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலை வெளியிடுவதில் தமது கருத்துரை களை வழங்கி உதவிய பேராசிரியர் மகாவித்துவான் திரு. மே. வீ. வேணுகோபால பிள்ளை அவர்களுக்கு எனது நன்றி உரியதாகும். இந்நூலை வெளியிட்ட சாந்தி நூலகத்தாருக்கும், அச்சுப் பிழைகளைத் திருத்தியுதவிய திரு. ஊ. ஜயராமன் அவர்களுக்கும் எனது நன்றி. மயிலாப்பூர், சென்னை-4 30.4.1967 சீனி. வேங்கடசாமி. மறைந்துபோன தமிழ் நூல்கள் இலக்கிய நூல்கள் 1. அகத்திணை இப்பெயருடைய நூலிலிருந்து களவியற் காரிகை உரையா சிரியரும், நம்பி அகப்பொருள் உரையாசிரியரும் சில செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இது அகப்பொருளைக் கூறும் நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இதனை இயற்றிய ஆசிரியர் யார், இயற்றப்பட்ட காலம் எது என்பன தெரியவில்லை. களவியற் காரிகை உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுள்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: நெடுவே றுடக்கியநீர் நீக்குமதி காதல் வடிவே றுடக்கியநீர் மாதோ-நெடுவேய் கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரல் மணநாறு நின்வரைமேல் வந்து.1 1 கொன்னிலையோர் யாக்கைக்குக் கூடுயிரோ வொன்றென்ப ரென்னுயி ரோரிரண்டா யான்கண்டேன் - மின்னுகலைப் பைம்மலைத்த வல்குற்றுப் பாடகக்காற் றொன்றொன்று வெம்முலைத்து வேல்போல் விழித்து. 2 கொண்டதோர் காதற் குணமுடியாக் கொள்கைத்தேற் குண்டுநீர் வேலைக் குவலயத்தோர்-வண்டின் கணங்காட்டுங் கூந்தலாய் ... ... ... ... மணங்காட்டுங் காந்தள் மலர்.2 3 2. அசதி கோவை அசதி என்னும் ஆயர்மகன்மேல் பாடப்பட்டது அசதி கோவை. இதனைப் பாடியவர் ஒளவையார் என்பவர். இவர், சங்ககாலத்திலிருந்த ஒளவையார் அல்லர்; இடைக்காலத்தில் இருந்த ஓர் ஒளவையார் ஆவர். இக்கோவையின் சில செய்யுள்கள்மட்டும் இப்போது வழங்கிவருகின்றன; மற்றச் செய்யுள்களெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது கிடைத்துள்ள அசதி கோவைச் செய்யுள்கள் இவை: அற்றாங் கியகரத் தைவே லசதி யணிவரைமேன் முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிணூற் கற்றார் பிரிவுங்கல் லாதவ ரிட்டமுங் கைப்பொருள்க ளற்றா ரிளமையும் போலே கொதிக்கு மருஞ்சுரமே. 1 அருஞ்சஞ் சலங்கொண்ட வைவே லசதி யகல்வரையி னிருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும் பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே. 2 அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி யணிவரைமே னிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றிள நீரினங்கள் குலையுண் டிடியுண்டென் கையினி லெற்றுண்டு குட்டுமுண்டு விலையுண் டடியுண்டு கண்ணீர் ததும்பவும் வெட்டுண்டவே. 3 அழற்கட்டுக் கட்டிய வைவே லசதி யணிவரையின் மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லா ளுழக்கிட் டுரியிட்டு முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டுக் குழற்கட் டவிழ்த்துட னங்களின் றேமயிர் கோதினளே. 4 அறங்காட் டியகரத் தைவே லசதி யகன்சிலப்பி னறங்காட்டுங் கஞ்சத் திருவனை யீர்முக நீண்டகுமிழ்த் திறங்காட்டும் வேலுஞ் சிலையுங்கொல் யானையுத் தேருங்கொண்டு புறங்காட்ட வுந்தகு மோசிலைக் காமன்றன் பூசலிலே. 5 ஆலவட் டப்பிறை யைவே லசதி யணிவரைமே னீலவட் டக்கண்க ணேரொக்கும் போதந்த நேரிழையாள் மாலையிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே. 6 ஆரா யிரங்கொண்ட வைவே லசதி யகன்கிரியி னீராடப் போகு னெறிதனியே யந்தி நேரத்திலே சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்ததொருபெண் போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே. 7 ஆய்ப்பாடி யாயர்தம் ஐவே லசதி யணிவரையில் கோப்பா மிவளெழிற் கொங்கைக்குத் தோற்றிளக் கோடிரண்டுஞ் சீப்பாய்ச் சிணுக்கரி யாய்ச்சிமி ழாய்ச்சின்ன மோதிரமாய்க் காப்பாய்ச் சதுரங்க மாய்பல்லக் காகிக் கடைப்பட்டவே. 8 ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமே னீடுங் கயற்கண்ணி யாடந்த வாசை நிகழ்த்தரிதாற் கோடுங் குளமுங் குளத்தரு கேநிற்குங் குன்றுகளுங் காடுஞ் செடியு மவளாகத் தோன்றுமென் கண்களுக்கே. 9 3. அண்ணாமலைக் கோவை திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அண்ணாமலை நாதர் பேரில் பாடப்பட்டது. அண்ணாமலைக் கோவை. இதனை இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர். இவர் இயற்றிய வேறு சில நூல்கள் இப்போதும் உள்ளன. ஆனால், அண்ணாமலைக் கோவை மறைந்து போயிற்று. இது கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. 4. அரையர் கோவை இந்நூலைக் களவியற் காரிகை உரையாசிரியர். தமது உரையில் குறிப்பிடுகிறார். இக்கோவையிலிருந்து ஒரு செய்யுளையும் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது: பாக்கத் திரவின்கட் பட்டதொன் றுண்டுபைங் கானலெங்கும் சேக்கைத் துணைத்தலை யோடொன்றுஞ் சேர்ந்தில சேர்ந்துசெங்கை தாக்கச் சிவந்த தடந்தோட் டயாபரன் றஞ்சையன்னாய் பூக்கட் கழித்தலைக் கெண்டைமுள் ளோடுண்ட புள்ளினமே. இச்செய்யுளில் கூறப்பட்ட தயாபரன் என்னும் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயர்தானா என்பது தெரியவில்லை. அவன் ஆண்ட தஞ்சை, சோழநாட்டுத் தஞ்சையா, அல்லது பாண்டி நாட்டிலிருந்த தஞ்சாக்கூர் என்னும் தஞ்சையா என்பதும் தெரியவில்லை. அரையர் கோவை என்னும் இந்நூலைப் பற்றியும். இதன் ஆசிரியரைப் பற்றியும். இதன் பாட்டுடைத் தலைவரைப் பற்றியும் யாதொரு செய்தியும் தெரியவில்லை. 5. அறம் வளர்த்த முதலியார் கலம்பகம் இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதைத் தமிழ் நாவலர் சரிதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ‘அறம் வளர்த்த முதலியாரைப் பாண்டியன் கலம்பகம் பாடலாமோ?’ என்று கேட்ட ஒரு புலவர்க்குப் பாண்டியன் கீழ்க்கண்ட செய்யுளைப் பாடி விடையிறுத்தான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது: “உங்கண் மனந்தெரியும் புலவீர், ஒருசீர் மரபோம் திங்கண் மரபினம் திங்களின் கூடச்செம் பூரறமா துங்கன் மரபிற் கங்கையுஞ் சூடினன் சோதியன்றோ? எங்கண் மரபுண் டெனக்கவி பாடினம் யாமவற்கே.” இச்செய்யுளில் செம்பூரறமாதுங்கன் என்பது செம்பூர் அறம் வளர்த்த முதலியாரைக் குறிக்கிறது. செம்பூர் அறம் வளர்த்த முதலியார் விஜய நகர அரசரின் அமைச்சராக ஹம்பி நகரத்தில் இருந்தவர். இவரை அம்பி (ஹம்பி) அறம் வளர்த்த முதலியார் என்றும் கூறுவர். இவர்மீது பிற்காலத்துப் பாண்டியர் ஒருவர் கலம்பகம் பாடினார். அதையறிந்த ஒரு புலவர், ‘அரசராகிய நீர் மற்றவரைப் பாடலாமோ?’ என்று வினவினார். அதற்கு விடையாக இந்தப் பாட்டைப் பாண்டியனார் பாடினார். இச்செய்யுளின் கருத்து இது: சிவபெருமான் திங்களையும் கங்கையையும் தமது திருச்சடையில் சூடினார். ஆகவே, திங்கள் மரபினராகிய பாண்டியருக்கும் கங்கைக் குலத்தவராகிய அறம் வளர்த்த முதலியாருக்கும் தொடர்பு உண்டு. இத்தொடர்பு பற்றித்தான் அவர்மீது கலம்பகம் பாடினேன் என்பது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சி இருந்த படியினாலே. இக்கலம்பகம் அந்நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். 6. இராமீசுரக் கோவை இக்கோவையை இயற்றியவர் கயாதர நிகண்டு செய்த கயாதரர் ஆவார். இதனைக் கயாதர நிகண்டுச் செய்யுனினால் அறியலாம். என்னை? “மேவு மரும்பொரு ளந்தாதி கேட்டிந்த மேதினியோர் தாவும் வினைகெடச் சாற்றிய தென்றமிழ்த் தேவைமன்னுங் கோவையி ராமீ சுரக் கோவை சொன்ன குருபரன்மற் றோவுத லின்றி யமைத்தான் பத்தாவ தொலியியலே” என்னும் செய்யுள் காண்க. தேவைநகரம் என்னும் பெயருள்ள இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது இக்கோவை பாடப்பட்டது. இக்கோவையை இய்றிய கயாதரர் தமது பெயரால் கயாதரம் என்னும் நிகண்டு நூலை இயற்றியுள்ளார். கயாதரம் இப்போது அச்சிடப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமீசுரக் கோவை கிடைக்க வில்லை: கயாதரர், அரும்பொருளந்தாதி என்னும் நூலையும் இயற்றினார். இராமீசுரக் கோவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டது. 7. இன்னிசை மாலை இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது களவியற் காரிகையுரையினால் தெரிகிறது. இவ்வுரையாசிரியர், இந்நூலினின்று இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். இவற்றில் ஒரு வெண்பாச் சிதைந்து காணப்படுகிறது. சிதையாத வெண்பா இது: தேனகு முல்லை சொரிய விடைநின்று மீனகு வாண்மதிபோல் வெண்கூதம்-தான்விரியும் கானக நாட கடனோ மடனோக்கி யான தினையு மெனல். இந்நூலாசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. பாட்டுடைத் தலைவன் பெயரும் தெரியவில்லை. இன்னிசை மாலை என்னும் பெயரை நோக்கும்போது, இது இசைத்தமிழ் பற்றிய நூலோ என்ற ஐயம் உண்டாகும். ஆனால், இது இசைத்தமிழ் நூல் அன்று: அகப் பொருளைக் கூறும் நூல். இன்னிசை என்பதற்கு ஈண்டு இனிய புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். கொடை, வீரம் முதலியவற்றில் இசை பெற்ற (புகழ் பெற்ற) ஒருவர்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பட்ட நூல் இது என்பது தெரிகிறது. செட்டிமார்களின் புகழைக் கூறும் நூல் ஒன்றிருந்தது. அதனை இயற்றியவர் செயங் கொண்டார் என்னும் புலவர்’ செட்டிமார்களின் புகழைக் கூறும் அந் நூலுக்கு இசையாயிரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அது போன்று, இன்னிசை மாலை என்னும் இந்நூலும் ஒருவருடைய புகழைக் கூறுவதாக இருத்தல் வேண்டும். 8. கச்சிக் கலம்பகம் காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர்மீது பாடப்பட்டது கச்சிக் கலம்பகம். இக்கலம்பகத்தைப் பாடியவர், காஞ்சீபுரம் ஞானப்பிரகாசர் மடத்தைச் சேர்ந்த தத்துவப்பிரகாச ஞானப்பிரகாசர் என்பவர். இவர் விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலே மடாதிபதியாய் இருந்தவர். கிருஷ்ணதேவராயர்மேல் மஞ்சரிப்பா என்னும் நூலையும் கச்சிக் கலம்பகத்தையும் இவர் இயற்றியிருக்கிறார். இச்செய்தியைத் தொண்டைமண்டல சதகச் செய்யுளினாலறியலாம். அச்செய்யுள்: வானப்ர காசப் புகழ்க்கிருஷ்ண ராயர்க்கு மஞ்சரிப் பா கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய் ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே. இந்த இரண்டு நூல்களும் இப்போது கிடைக்கவில்லை பூண்டி அரங்க நாத முதலியாரால் செய்யப்பட்ட கச்சிக் கலம்பகம் என்னும் வேறு ஒரு நூலுமுண்டு. 9. கண்டனலங்காரம் களவியற் காரிகை உரையாசிரியரும், நம்பி அகப்பொருள் உரை யாசிரியரும் கண்டனலங்காரம் என்னும் நூலிலிருந்து சில செய்யுள் களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இந்நூலாசிரியர் யார், எப்போது இந்நூல் இயற்றப்பட்டது என்னும் செய்திகள் தெரியவில்லை. அலங்காரம் என்னும் பெயர் பெற்றிருப்பதனால். இது அணி இலக்கண நூல் என்பது தெரிகிறது. ஆனால், உண்மையில் இது அணி யிலக்கண நூல் அன்று: அகப்பொருளைக் கூறுகிற நூலாகும். இந்நூலைப் பற்றிக் களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இவ்வாறு குறிப்பு எழுதுகிறார்: “கண்டனலங்காரம் எனக் குறிக்கப்பெற்றுள்ள நூல் பெரிதும் ஆராய்தற்குரியதொரு சிறந்த நூலாகும். ... ... ... சோழவரசர்களுள் இரண்டாம் இராஜராஜனுக்குக் ‘கண்டன்’ என்ற சிறப்புப் பெயருள் ளமை தக்கயாகப் பரணி யுரையாலும், இராஜராஜ சோழனுலாவாலும் விளங்குகின்றது. வீரசோழிய வுரையால் வீரராசேந்திரனுக்கும் கண்டன் என்னும் சிறப்புப் பெயருண்மை தெளியலாம். இப்பெயர் சோழர்க்குரிய பொதுப் பெயராகப் பிற்காலத்தோரால் வழங்கப்பெற்றிருத்தலும் கூடும். இப்பெயர் பற்றிச் சிலாசாஸன ஆராய்ச்சியாளர் அறுதியிடும்வரை ‘கண்டனலங்காரம்’ யாரைக் குறித்து இயற்றப் பெற்றதென ஒரு தலையாகத் துணிந்து கூறுதல் ஏலாது.” பிள்ளையவர்கள் கூறுகிறபடி இந்நூல் சோழர்களைப் பற்றியது என்பதில் தடையில்லை. ஏனென்றால், இந்நூற் செய்யுள்களில் சோழர்களின் புகார் நகரம் (காவிரிப்பூம்பட்டினம்) கூறப்படுகிறது. கண்டன் என்பது வீரன், ஆண்மகன், வலிமையுள்ளவன் என்னும் பொருளுடைய திராவிட மொழிச் சொல். இச்சொல் கன்னட மொழியில் வழங்குகிறது. நச்சினார்க்கினியர், தொல்காப்பிய (பொருளதிகாரம், புறத் திணை யியல், 91-ஆம் சூத்திர) உரையில் கீழ்க்காணும் வெண்பாவை மேற்கோள் காட்டுகிறார். இது, கண்டனலங்காரத்தைச் சேர்ந்தது போலும்: அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை. கண்டனலங்காரம் வெண்பாவினாலும் கலித்துறையினாலும் ஆன நூல். இந்நூலிலிருந்து கீழ்க்காணும் செய்யுள்களை களவியற் காரிகை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்: கொங்கை யரும்பாக் குழலளகம் வண்டாக அங்கை தளிரா வலர்விழியாத் - திங்கள் குளிருந் தரளக் குடைக் கண்டன் கொல்லி யொளிதருங் கொம்பொன் றளது. 1 குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால் விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம் புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரனைய நல்லாளே யாகு நமக்கு. 2 கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளுங் கார்வரைமேற் புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின் கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த வளையலம்பு செந்தா மரை. 3 சீத விரைக்களபச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி னிங்கோர் களிறு. 4 குருகு பெடையென்று கோலப் பணிலத் தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும் பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ யாந்தண்டா வாழு மிடம். 5 போகக் கடவன புள்ளென் றிருந்திலம் போந்துதுணை யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந் தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே. 6 ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் வாசந் தனையிழக்கும் வள்ளலே-தேசு பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க எழிலிழக்கு மந்தோ விதண். 7 பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்-பொன்னணியுந் தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப யான்சூழ வுண்டோ வினி. 8 நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணகைக்குக் கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே-வேல வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட மறியாடு கொல்லும் வழக்கு. 9 10. காரி கோவை காரி கோவை என்பது காரி என்பவரால் செய்யப்பட்டது. இந்தக் காரியார், பெரியபுராணத்தில் கூறப்படுகிற காரி நாயனார் ஆவார். இவர் திருக்கடவூரில் இருந்த சிவபத்தர்: தமிழ்ப் புலவர். இவர் சிவபெருமான் மீது செய்யுள் பாடினார் என்று நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறுகிறார்: “புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவுஞ் சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக் கானென்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே.3 இவர் சிவபெருமான்மேல் இயற்றிய செய்யுளுக்குக் காரிகோவை என்பது பெயர் என்றும், சொல் விளங்கிப் பொருள் விளங்காத முறையில் இது இயற்றப்பட்டதென்றும், சேரசோழ பாண்டிய அரசர்களிடம் இக் கோவையைக் கொண்டுபோய் ஓதிப் பொருள் உரைத்து அவர்கள் வழங்கிய பொருளைக் கொண்டு காரியார் சைவத்தொண்டு செய்து வந்தார் என்றும் சேக்கிழார் அடிகள் தமது பெரியபுராணத்தில் கூறுகிறார்: “மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின் துறையான பயன்தெரிந்து சொல்விளங்கிப் பொருள்மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயரால் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்.” “அங்கவர்தாம் மகிழும்வகை அடுத்தவுரை நயமாக்கிக் கொங்கலர்தார் மன்னவர்பால் பெற்றநிதிக் குவைகொண்டு வெங்கண் அரா வொடுகிடந்து விளங்கும்இளம் பிறைச்சென்னிச் சங்கரனார் இனிதமருத் தானங்கள் பலசமைத்தார்” என்பன பெரியபுராணம், காரிநாயனார் புராணச் செய்யுள்கள். காரிநாயனார் இயற்றிய காரிகோவை இப்போது கிடைக்க வில்லை. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத்தொகையில் காரிநாயனாரைக் குறிப்பிடுகிற படியி னாலே, இவர் காலம் 9-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலம் எனக் கொள்ளவேண்டும். 11. காரைக் குறவஞ்சி யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த சுப்பையர் என்பவர் இயற்றியது இந்நூல். இவர் கி.பி. 1795-இல் வாழ்ந்திருந்தவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி கிடைக்கவில்லை. 12. கிளவித் தெளிவு இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது. களவியற் காரிகையுரையினால் தெரிகிறது. இது அகப்பொருளைக் கூறுவது. இதன் ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை, இது பெரிதும் வெண்பாவினாலும் ஆசிரியப் பாவினாலும் அமைந்த நூல். இப்போது கிடைத்துள்ள இந்நூற் செய்யுள்கள் இவை: அணங்கென்ன லாமோ வடியிரண்டு மண்மே லிணங்குங் குழையுடனே யேறிப் - பிணங்கிக் குவளை வழியிமைக்குங் கொய்மலர்த்தார் வாடு மிவளை மடநெஞ்சே யாம். 1 உள்ள படியுரையும் வண்டினங்கா ளோடைதொறுந் தெள்ளி நறவத் திசைபரக்கும்-வெள்ள வயல்கிடந்த தாமரைமேல் மையெழுதுஞ் செய்ய கயல்கிடந்த துண்டாகிற் கண்டு. 2 நின்னிற் பிரிந்தியா னாற்றுவனோ நின்மேனி பொன்னிற் பசந்து புலம்புவதென்-தன்னின் மயிர்பிரிந்தா லென்னாகு மானமா மாயு முயிர்பிரிந்தா லென்னா முடம்பு. 3 நின்னுடைய கூந்த னிறத்தால் நிறைவளையா யென்னுடைய வூரு மிருளாகு - நின்னுடைய முத்தனைய வெள்ளை முறுவலா லென்மலைய மத்தனையும் வெள்ளைநில வாம். 4 தேயு மருங்குலாள் சேலனைய கண்கண்டு நீயு நெறிதளர்ந்து நிற்றியா-லாயு மறிவெங்கே யல்லா லருங்குணங்க ளான செறிவெங்கே திண்சிலம்பா செப்பு. 5 காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப் போதுடனே நின்று புடைபெயரத் - தாதுடனே வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து கொண்டாட நான்கண்டேன் கொம்பு. 6 முருக்கின் புதுமலரால் முல்லை நகையால் நெருக்கியெழுஞ் செவ்விள நீராற் - குருக்கொடியா னான்ற குழைமுகத்தா னானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில். 7 செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை யைய முறுகின்றே னல்லையே - லுய்ய வுரைதந் தருளாயுயிர் வருமோ போனால் விரைதந்த மேனியாய் மீண்டு. 8 வந்தெ னுடலி னுயிர்வாங்க வாணுதலாய் சந்த வனமுலையே சாலாதோ-பைந்தளிரால் நின்கண் புதைத்தனையே நின்வடிவெ லாம்புதைய வென்கண் புதைத்தருளா யின்று. 9 செய்யவாய் நுண்மருங்குற் சிற்றிடைப் பேரமைத்தோட் பையர வல்குற் பணைத்தேந்தும்-வெய்யமுலைக் காரே துவர்வாய்க் கருங்கூந்தற் காரிகையீர் ஊரேது சொல்லீர் உமக்கு. 10 நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப் புதுமை யாதலிற் கிளத்த னாணி நேரிறை வளைத்தோளுன் றோழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளியளோ மடந்தை யின்ப வாழ்க்கைய ளிவண்மன் னெமக்கே. 11 மாணெழி லண்ணல் வாங்கலம் யாமெஞ் சேணுயர் சிலம்பின் யாங்கணுங் காணல மன்னோ கமழ்பூந் தழையே. 12 மாமலைச் சிலம்ப மயிலேர் சாயற் றேமொழி நிலைமை தெரிந்தபின் பூமென் றண்டழை கொள்குவன் புரிந்தே. 13 காணாய் தோழிநம் மேனற் றண்புனம் பேணா மன்னர் போய்ப்புறங் கொடுத்தென வல்வேற் றானை வெள்வரிச் செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே. 14 தந்து நீயளித்த தண்டழை காண்டலும் வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம் மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதர னுண்ணிய றமிழி னுழைபொருள் துளித்த வாய்மொழி யமிழ்த மடுத்தவர் மனமென யானிலை பெற்றன் றியானறிந் திலனே. 15 கழைகெழு திண்சினைப் பன்மரந் துவன்றிய மழைதவழ் பூம்பொழில் யாவரும் விழைதகைத் தம்ம வியன்புன மருங்கே. 16 மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி ஞாயி றனையன் யானே யாவதும் வெஞ்சொல் யான்வியந் துரைப்பவு மெஞ்சாக் கவினிவ ளெய்த லானே. 17 அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற் கொடுங்கழி மருங்கின் வந்தருள் நெடுந்தோ ளண்ணல்பின் சென்றதென் னெஞ்சே. 18 ஆய்கதிர்ச் செல்வ னத்தஞ் சேர்ந்தென நோய்கூர் நெஞ்சி னுழப்பப் போயின மாதோ புள்ளினம் பிரிந்தே. 19 மாலை மணந்து காலை பிரியுங் காதல ருடையையோ கறையிலங்கு மதியே யிரவே யாயி னல்லை பகலே மெல்லியற் கொடிச்சி நுதலினும் புல்லென் றனையா னோகோ யானே. 20 இதற்கொண் டினியான் றெளிந்து மேனாண் மதிகோடு துஞ்சு மால்வரை வாழ்க்கைக் கடவுள ராக வல்லது மடவரன் மாதரை மதித்தன்று மிலமே. 21 அன்னை வாழி நெருநன் மாதர் மென்முலை யரும்பிய வாகமு மென்னும் பன்முறை நோக்கினள் பெரிதே. 22 பாங்கின ராகித் தீங்குதலைத் தருந ரீங்குப் பிரிவு சூழ்ந்தனர் யாங்கன மொழிமோ வேங்கையது நிலையே. 23 நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே பூவும் பொறைமலி காந்தளம் பூவே யாடிடஞ் சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே. 24 புள்ளுந் துயிற்புடை பெயர்ந்த புனலுள் வெள்ளிதழ்க் கைதை மணிக்காய் ததும்ப வந்தனள் கொல்லோ தானே வெந்திற லண்ண னினைந்தனன் விரைந்தே. 25 13. கிளவி மாலை இப்பெயருள்ள நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையினால் தெரிகிறது. இது வெண்பாவினால் ஆன நூல், அகப் பொருளைக் கூறுவது. இந்நூலிலிருந்து நான்கு செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் களவியற்காரிகை யுரையாசிரியர். அவற்றில் ஒன்று இப்பொழுது சிதைந்து காணப்படுகிறது. மற்ற மூன்று செய்யுள்கள் இவை: வெள்ளிய வள்ளத்து ளேந்தும் விரைச்சுண்ணத் துள்ளகத்தி னொண்பவளம் வைத்தாங்குத் - தெள்ளுநீர்க் கானலெல்லாம் பூக்குமே புன்னை களிவண்டு பானலெல்லாம் பாடும் துறை. 1 கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம். 2 தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையுந் தூய பெருவனமுஞ் சோலையுமா-மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின். 3 இந்நூலாசிரியர் பெயர், காலம் முதலிய வரலாறுகள் தெரியவில்லை. 14. கிளவி விளக்கம் களவியற் காரிகை உரையாசிரியர், கிளவி விளக்கம் என்னும் இந்நூலைக் குறிப்பிடுகிறார். வன்னாட்டு நெய்தல்வாய் என்னும் ஊரிலிருந்த ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வெண்பாவினால் இயற்றப்பட்டது இந்நூல். இது அகப்பொருள் சார்பான நூல். இந்நூலாசிரியரின் பெயர், காலம் முதலியன தெரிய வில்லை. இந்நூலிலிருந்து களவியற்காரிகை உரையாசிரியர் மூன்று செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை: என்னுயிர் நான்கண் டிளமுலையும் வேய்த்தோளும் பொன்னிறமுங் கொண்டு புனமயில்போல்-மன்னி வயங்குகின்ற நெய்தல்வாய் வன்னாடன் வெற்பி லியங்குகின்ற தாயத் திடை. 1 சேர்க்கு முலைமேற் சிறியோர் பெரும்பொருள்போல் பார்க்கு மறைக்கும் பலகாலும்-கார்க்கொடையால் வன்கைக் கலிகடந்த வன்னாட னெய்தல்வாய் நின்கைத் தழைவாங்கி நின்று. 2 அருக்கன் வருவதன்முன் னம்புயப்பூங் கோயிற் திருக்கதவ மாரோ திறந்தார்-மருக்கமழ்தார் வன்னாட னெய்தல்வாய் வல்லியிவ் வல்லிருளில் என்னாட னீவருவா னீங்கு. 3 15. குணநாற்பது இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது இளம் பூரணர், நச்சினர்க்கினியர் என்னும் உரையாசிரியர்களின் உரைகளி லிருந்து அறியப்படுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் 575ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் ‘குனிகா யெருக்கின்’ என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி, அது குண நாற்பது என்னும் நூலைச் சேர்ந்தது என்று கூறுகிறார். இளம்பூரணர் என்னும் உரையாசிரி யரும், தொல், பொருள்., கற்பியல், “கரத்தினைந்து முடிந்த காலை” என்று தொடங்கும் சூத்திரத்தின் உரையில் அந்தச் செய்யுளையே மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அந்தச் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை. நச்சினார்க்கினியர்மட்டும் அது குணநாற்பது என்னும் நூலைச் சேர்ந்தது என்று கூறியுள்ளார். குணநாற்பது அகப்பொருள் இலக்கிய நூல்; நாற்பது செய்யுள் களைக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. இந்நூல் ஆசிரியர் பெயர் என்ன, எக்காலத்தில் இயற்றப்பட்டது முதலிய செய்திகள் தெரியவில்லை. இளம்பூரணர் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட குணநாற்பது செய்யுள் பிழைகளுடன் காணப்படுகிறது. இந்தச் செய்யுளின் சுத்தமான பாடத்தை ஓர் ஏட்டுச்சுவடியில் கண்டு, திரு. ம. ஆ. நாகமணி பண்டிதர் அவர்கள், தாம் எழுதிய ‘தொல்காபியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன’ என்னும் நூலின் இறுதியில் பதிப்பித்துள்ளார் (சாது அச்சுக்கூடம், சென்னை, 1935). அந்தச் செய்யுளைக் கீழே தருகிறேன்: “குனிகா யெருக்கின் குவிமுகிழ் வண்டலொடு பனிவா ராவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட மூரு மடவோ னலர்வேன் கொல்லென நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினு 5 முணரா ளூர்தோ றணிமடற் கலிமா மற்றத் தேறித்தன் னணிநலம் பாடினு மறியா ளென்றி யாண பெருமலை நெடுங்கோ டேறிப் பெருகென் றுருமிடத் தீயி னுடம்புசுடர் வைத்த 10 வென்னுறு விழும நோக்கிப் பொன்னொடு திருமணி யிமைக்குங் கோடுயர் நனந்தலை விழவுடைப் பெண்டி ரிடும்பை நோக்கித் தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி வெளியன் வேண்மான் விளங்கு கரிபோல் 15 மலிகட லுடுத்த மணங்கெழு நனந்தலைப் பலபா ராட்டவும் படுவமோ வமர்தோ டைந்துகவித் தன்ன கால்வீங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்ப லஞ்சிக் காமர் நுழைநுண் ணுசுப்பிற் றாமரை முகத்தியைத் தந்த பாலே.” 20 16. குமாரசேனாசிரியர் கோவை இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. குமாரசேனாசிரியர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாருப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஒரடி பதினேனெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஒரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழிந்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.” இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் கலித் துறைச் செய்யுளை உதாரணமாக மேற்கொள் காட்டுகிறார்: “இருநெடுஞ் செஞ்சுட ரெஃகமொன் றேந்தி யிரவின்வந்த வருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால் கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே.” இந்தச் செய்யுளை இவ்வுரையாசிரியர், யாப்பருகலம், சீரோத்து 15ஆம் சூத்திர உரையிலும், ஒழிபியலில் இரண்டிடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால் இச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை என்றாலும். குமாரசேனாசிரியர் கோவையைச் சேர்ந்தது இந்தச் செய்யுள் என்று கருதப்படுகிறது. குமாரசேனாசிரியர் கோவையைப் பற்றி வேறு ஒரு செய்தியும் தெரியவில்லை. 17. கோயிலந்தாதி களவியற் காரிகை உரையாசிரியர், கோயிலந்தாதி என்னும் நூலிலிருந்து நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். கோயில் என்பது, திருவரங்கம் பெரியகோயில் எனப்படுகிற ஸ்ரீரங்கம். திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்காநாதர்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பட்ட அந்தாதி நூல் இது என்பது தெரிகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து, களவியற் காரிகை உரையாசிரியர் நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நான்கு செய்யுள்களில் இரண்டு செய்யுள்கள் செல்லரித்துச் சிதைந்து காணப்படுகிறபடியால், அவற்றை நீக்கி, மற்ற இரண்டு செய்யுள்களைக் காட்டுவோம். பிறவா ரணங்கு மணிக்குநை யார்கழல் பேணினரென் றறைவா ரணங்க ளரற்று மரங்க ரருளிலர்போன் மறவா ரணங்கள் மடங்கலுக் கோடும் வழிபழிவந் துறவா ரணங்கின் பொருட்டுர வோய்வர லோங்கிருளே. 1 சேர்ந்தசங் கத்த சிறுநுதற் காகச்செவ் வேள்முருகற் கீர்ந்தசங் கத்தையிட் டாலென் பயன்கட் டிலங்கைச்செந்தீக் கூர்ந்தசங் கத்துவிற் கோலிய கொற்றவன் வெற்றிச்செங்கை யார்ந்தசங் கத்தரங்கன் றிருத்தார்கொண் டணிமின்களே. 2 18. சிற்றெட்டகம் இப்பெயருடைய ஒரு நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையினால் தெரிகிறது. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் களவியற் காரிகை உரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்நூலைப் பற்றிக் களவியற் காரிகைப் பதிப்யாசிரியர் எழுதும் குறிப்பு கருதத்தக்கது. அக்குறிப்பு இது: “இவ் வரியவுரையுள் மேற்கோளாக வந்துள்ள நூல்களுள் ஒன்று இதுகாறும் மயக்கத்திற்கேதுவாய்க் கிடந்த நூற்பெயரொன்றினைத் தெளிய வுணர்த்துகின்றது. ‘சிற்றெட்டகம்’ என்ற நூலின் பெயரைச் ‘சிற்றடக்கம்’ எனவும், ‘சிற்றட்டகம்’ எனவும் பலவாறாகக் கொண்டு தமிழறிஞர் எழுதி வருகின்றனர். உதாரணமாக, மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப் பொருள் விளக்கவுரையில் (அகத்திணையியல், சூத்திரம் 6), ‘பத்துப்பாட்டும் கலித்தொகையும் ஐங்குறுநூறும் கீழ்க் கணக்கும் சிற்றட்டகமு முதலாகிய சான்றோர் செய்யுள்களெல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும்’ எனக் காணப்படுகின்றது. இதனடிக்குறிப்பிற் ‘சிற்றடக்கம்’ என்பது பிரதிபேதமாகக் காட்டப் பட்டுள்ளது. களவியற் காரிகையுரை ‘சிற்றெட்டகஅமம்’ எனவே நூற் பெயரை யாண்டும் வழங்குகின்றது. இதுவே நூற்பெயராதல் வேண்டு மென்பது பெயரை நோக்கிய வளவானே உணர்தல் கூடும். ஐந்திணை களுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச் செய்யுள்களாக நாற்பது செய்யுள்கள் கொண்ட சிறியதொரு நூலென்று இதனைக் கோடல் தகும். மேலே காட்டிய அகப்பொருள் விளக்கத்தின் உரைவாக்கியங் கொண்டும், அந்நூலின் ஒழிபியலில் (சூத்திரம் 251) ‘சிற்றட்டகத்துக் குறிஞ்சிப் பாட்டு’, ‘சிற்றட்டகத்துப் பாலைப்பாட்டு’ என்று வருங் குறிப்புகள் கொண்டும், இந்நூல் ஐந்திணையையுங் குறித்தவொரு முறையை மேற்கொண்டு விளங்குவதென்பது பெறப்படும். ஐங்குறு நூற்றின் அச்சுப் பிரதி யிறுதியிற் காணப்படுகின்ற 6 செய்யுள்களும் சிற்றெட்டகத்தைச் சார்ந்தவை யென்று அதன் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு முறையெனக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறனுள் ஒன்றாய் ‘எம்மூரல்ல தூர்நணித்தில்லை’ என்று வருவதனைச் சிற்றெட்டகச் செய்யுளாகவே களவியற் காரிகையுரையுங் காட்டியிருப்பது கண்டு மகிழத்தக்கது. இந்நூலின் செய்யுள்கள் பல தொல்காப்பிய வுரைகளிற் பலவிடத்தும் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன.” இது சங்க காலத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட நூல் என்பது தெரிகிறது. இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும், இளம் பூரண அடிகளும், நச்சினார்கினியரும், யாப்பருங் கலக்காரிகை உரையாசிரிய ரும், நம்பியகப்பொருள் உரையாசிரியரும், தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலின் உரையாசிரியரும் இந்நூற் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள். இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை; நூலாசிரியர் பெயரும் தெரியவில்லை. களவியற் காரிகை யுரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுள் சிற்றெட்டகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த பழனத் தாமரை கெழீஇ வண்டுநின் கண்ணென மலர்ந்த காமர் சுனைமலர் நறுங்கண்ணி நாளு நலனுக ரும்மே1. 1 இந்தச் சிற்றட்டகச் செய்யுள் ‘தமிழ்நெறிவிளக்க’ உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.’ இதன்கீழ் இன்னொரு செய்யுளின் முதல் இரண்டடிகள் செல்லரித்துப்போனமையால், அச்செய்யுளை இங்கு எழுதவில்லை. கண்ணுஞ் செவ்வரி பரந்தன்று நுதலு நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே. 2 இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல்., பொருள். களவியல் 24ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். நிலையிருங் குட்டத்தி னெடுந்திமி லியக்கி வலையிற் றந்த வாடுமீ னுணங்கல் விலையோ விலையென வேட்பக் கூறி நெல்லொடு பெயரு நிரம்பா வாழ்க்கை வேட்டக் கிளையொடு வினவுதி ரெனினே பூட்டுவிற் புரையும் புருவவாண் முகத்துப் பிறைகிடந் தன்ன நுதலிவ ளிறைவளைப் பணைத்தோ ளெய்தலோ வரிதே. 3 வாரா தீமோ சார னாட வுறுபுலி கொன்ற தறுகண் யானை யாறுகடி கொள்ளு மருஞ்சுர மூறுபெரி துடையது தமியை நீயே. 4 இந்தச் செய்யுள் ‘தமிழ்நெறி விளக்க’ உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. ஐய வாழியோ வைவா யேனப் புன்றலை மடப்பிடி புலியென வெரூஉம் பொன்மருள் வேங்கை யெம்மூர் போல ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும் வாடையு முளதோநின் பெருங்கன் னாட்டே. 5 முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னெள்வேற் கண்ணி முலையினம் வாரா முதுக்குறைந் தனளே. 9 எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை யரிய சேய பெருங்கல் லாறே. 7 இந்தச் செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். 40ஆம் சூ.) இளம்பூரணரும் (தொல். பொருள். அகத்திணை, 43ஆம் சூ.), இறையனாரகப்பொருளுரையாசியரும் (23ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளார்கள். கீழ்க்காணும் செய்யுள்களும் சிற்றெட்டகச் செய்யுள்களென்று கருதப்படுகின்றன: உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப் பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவங் காதறு கவண தேய்க்குந் தீதுறு கள்ளியங் காடிறந் தோரே. 8 உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கு மகில்படு கள்ளியங் காடிறந் தோரே. 9 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். சொல். 288ஆம் சூ.), யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (19ஆம் சூ.), யா. காரிகை உரையாசிரியரும் (11ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளனர். உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யிலவ மேறிய கலவ மஞ்ஞை யெரிபுகு மகளி ரேய்க்கு மரில்படு கள்ளியங் காடிறந் தோரே. 10 உள்ளார் கொல்லோ தோழி வெள்ளைப் புழுங்க னெல்லின் பொரிவீழ்த் தென்ன நுண்குழிப் புற்றின் மண்கா லீயல் கோல்பிடி குருட ரேய்க்கு மாலுறு கள்ளியங் காடிறந் தோரே. 11 அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயிறு மாக வவனே தோழியென் னுயிர்கா வலனே. 12 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111ஆம் சூ.), மேற்கோள் காட்டியுள்ளார். நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் ஒழிபியலில் (42ஆம் சூத்திரம்) கீழ்க்காணும் சிற்றெட்டகச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: “உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே4 13 என்னுஞ் சிற்றெட்டகத்துக் குறிஞ்சிப்பாட்டினுள் ஊடல் என்னும் உரிப்பொருள் கண்டுகொள்க.” தொல். பொருள். அகத்திணையியல் 24ஆம் சூத்திர உரையில் இளம்பூரண அடிகள் மேற்கோள் காட்டியுள்ளார். “நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிலிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென வொண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே5 14. என்பது இருத்தலென்னும் உரிப்பொருள் சிற்றெட்டகத்துப் பாலைப் பாட்டினுள் வந்தது.” இந்தச் செய்யுளை இளம்பூரணர் (தொல். பொருள். அகத்திணை. 42ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியுள்ளார். “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலு மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே 15 என்பது புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்த சிற்றெட்டகத்து நெய்தற் பாட்டு.” இச்செய்யுளை இளம்பூராண அடிகள் (தெல். பொருள். அகத்திணை. 24ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். 19. தமிழ் முத்தரையர் கோவை இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது, தண்டியலங்கார உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகிய இருவரும் கூறுவதிலிருந்து தெரிகிறது. தண்டியலங்காரம், பொதுவணியியல் 7ஆம் சூத்திர உரையில், அதன் உரையாசிரியர், ‘கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின’ என்று கூறுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில், அதன் விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாப்பருங்கலக் காரிகையும்போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா, அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.” இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுளை உதாரணங் காட்டுகிறார்: “காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே.” இதே செய்யுளை யாப்பருங்கலம், தொடையோத்து 53ஆம் சூத்திர உரையிலும் மேற்கோள் காட்டுகிறார். இச்செய்யுள் இன்ன நூலைச் சேர்ந்தது என்பதை இவர் குறிப்பிட வில்லையாயினும், இது தமிழ் முத்தரையர் கோவையைச் சேர்ந்த செய்யுள் என்று கருதப்படுகிறது. தமிழ் முத்தரையர் கோவை இப்போது கிடைக்கவில்லை யாகையினால், இது மறைந்துபோன தமிழ் நூல்களிலே ஒன்றாகும். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 20. திருவதிகைக் கலம்பகம் இந்தக் கலம்பகம், திருவதிகை வீரட்டானேசுவரர் பேரில் பாடப் பட்டது. திருவதிகை, தென்ஆர்க்காடுமாவட்டம், கூடலுர்த் தாலுகாவில் உள்ளது. திருவதிகைக் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று இந்நூலையும் இந்நூலாசிரியரையும் கூறுகிறது. இந்தச் சாசனம் சக ஆண்டு 1458, துன்முகி, ஆடி 10ஆம் நாள் எழுதப்பட்டது. அதாவது, கி.பி. 1536இல் இது எழுதப்பட்டது. உத்தர மேரூரில் மகிபால குலசேரி என்னும் தெருவில் வாழ்ந்துவந்த உத்தண்டவேலாயுத பாரதி என்பவர் இந்நூலை இயற்றினார் என்று இச்சாசனம் கூறுகிறது. தொண்டை மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து ராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலம் என்னும் உத்தரமேரூர் என்று இந்தச் சாசனம் இவர் ஊரைக் கூறுகிறது. மேலும், கௌண்டன்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்து வீரவல்லி தேவராச பட்டர் காசிநாத குப்பையன் என்னும் உத்தண்ட வேலாயுத பாரதி என்றும் இவர் பெயரைக் கூறுகிறது. இந்தக் கலம்பகம் பாடியதற்காக 2 மா நன்செய் நிலமும், 1மா புன் செய் நிலமும், திருவதிகை நகரத்துக் கோட்டைக்குள் இருந்த அக்கிர காரத்தில் ஒரு வீடும் இந்தப் புலவருக்குத்தானம் செய்யப்பட்டன. (376 of 1921., Annual Report of Epigraphy, Madras, 1922, page 99.) 21. திருமறைக் காட்டந்தாதி இந்த அந்தாதியைப் பாடியவர், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்தவரும், சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பருமான சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் கழறிற்றறிவார் என்னும் பெயரும் உண்டு. சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமறைக் காட்டுக்குச் சென்றார்கள். சுந்தரர் பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் நாயனார், திருமறைக்காட்டந்தாதியைப் பாடி அங்கு அரங்கேற்றினார். இச்செய்தியைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் கூறுகிறது: நிறைந்த மறைகள் அருச்சித்த நீடு மறைக்காட் டருமணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து போற்றி யாழைப் பழித்தென்னும் அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருட்சேரர் சிறந்த அந்தா தியிற்சிறப்பித் தனவே யோதித் திளைத்தெழுந்தார். (கழறிற்றறிவார் நாயனார் புராணம், 87) இந்த அந்தாதியைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 22. தில்லையந்தாதி சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது இயற்றப்பட்ட அந்தாதி நூல் இது. அகப்பொருள் துறையமைந்த செய்யுள்களைக் கொண்டது என்று தோன்றுகிறது. இந்நூல் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை யுரையாசிரியர் தமது உரையில் மேற் கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது: தொடிவா னரமங்கை யன்றிமைக் குங்கண்கள் தோயுநிலத் தடிவா னரந்த மலரும் புலரு மயன்றலையைத் தடிவா னரன் ... ... தாழ்சடை யோன்றில்லை யூசல்வல்லிக் கொடிவா னரம்புரி யும்பொழில் வாய்வந்த கோல்வளைக்கே. 23. நந்திகோவை இந்தக் கோவை, தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப் பட்டதென்று நந்தி கலம்பகச் செய்யுளினால் தெரிகிறது. இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம் அந்தக் குமுதமே அல்லவோ-நந்தி தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி அடங்காப்பூ பாலரா னார் என்பது அச்செய்யுள். இதனால், புலவர்கள் பலர் நந்திவர்மன் மேல் பல கோவைப் பிரபந்தங்கள் பாடிப் பரிசு பெற்றனர் என்பது தெரிகிறது. அந்தக் கோவைகளில் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. 24. நறையூரந்தாதி இதுவும் அகப்பொருள் துறையமையப் பாடப்பட்ட அந்தாதி நூல். இதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற்காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது: நல்லளந் தானு மமுதளந் தானு நகைக்குநல்ல வில்லளந் தானுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின் சொல்லளந் தானொரு பாவலர்க் காய்த்துறை யூர்நறையூர் நெல்லளந் தானளந் தானெடு நாட்டிற்கு நேர்நிற்குமே. துறையூரைச் சேர்ந்த நறையூரில் இருந்த ஒருவர்மீது இவ்வந்தாதி பாடப்பட்டதென்பது தெரிகிறது. 25. நாலாயிரக் கோவை இந்நூல், புதுவைக் காங்கயன் என்னும் செல்வச் சீமான்மீது கடவுட் புலவன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ஒட்டக் கூத்தரால் பாடப்பட்டது. இதனைச் சோழமண்டல சதகத்தினால் அறியலாம். அச்செய்யுள்: கோலா கலமன் னரிலவன்போற் கொடுத்தே புகழுங் கொண்டாரார் மேலார் கடவுட் புலவனெனும் விழுப்பேர் கூத்தன் முழுப்பேரா னாலா யிரக்கோ வையும்புனைய நவில்கென் றிசைத்து நாட்டுபுகழ் மாலா மெனுங்காங் கயன் வாழ்வு வளஞ்சேர் சோழ மண்டலமே. இந்நூலுக்கு நாலாயிரக் கோவை. என்று ஏன் பெயர் வாய்த்தது என்பது தெரியவில்லை. நாலாயிரம் பாடல்களால் ஆனது இக்கோவை என்று கருதுவது தவறு. கோவை நூல்கள் 4,000 செய்யுள்களால் பாடப்படுவது மரபன்று. நாலாயிரக் கோவை என்பதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். 26. பல்சந்தமாலை பல்சந்தமாலை என்னும் நூலிலிருந்து சில செய்யுள்களைக் களவியற் காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இதனால் இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தெரிகிறது. பாண்டிநாட்டிலே காயற்பட்டினத்திலே இருந்த ஒரு முகமதியப் பிரபுவின்மீது பாடப்பட்டது. இந்நூல். இது அகப்பொருள் இலக்கிய நூல். களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இந்நூலைப் பற்றிக் கூறுவது வருமாறு: “பல்சந்தமாலை யென்ற பெயரையுடைய நூல் சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலிற் பல்சந்த மாலை யென்றொரு பிரபந்தவகை கூறப்பட்டுள்ளது. இந்நூல் அப்பிரபந்த வகையைச் சார்ந்ததாக இருத்தல் கூடும். ஆனால், இதன் கண்ணின்று களவியற் காரிகை யுரையிற் காட்டப்படுவன வெல்லாம் கலித்துறைச் செய்யுள்களே. இந்நூல் வச்சிரநாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்துவந்த அஞ்சுவன்னத்தவர் மரபினனாகிய ஓர் முகமதிய மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரியை இக்கலாகாலத்திற் காயற்பட்டினம் என வழங்குவர் ... ... ... ... வகுதாபுரிக்கு ‘அந்துபார்’ என வொரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது ஒரு செய்யுளால் புலப்படுகின்றது.” பல்சந்தமாலை இயற்றிய ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. பல்சந்தமாலையிலிருந்து எட்டுச் செய்யுள்கள் களவியற் காரிகையுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அச்செய்யுள்கள் இவை: கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தோங்க மும்பெற்ற நநதசச மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதறன் முலையிணை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னுவனே. 1 நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே லீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும் வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே. 2 நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்ர நாடர்தங்கள் வகுதா புரியன்ன வாணுத லீர்மற்ற வார்தழையு மிகுநாண் மலர்களுங் கொண்மின்கள் கொள்ளாவிடின்மதுவந் தொகுகாம னைங்கணை யாலெம தாவி துவக்குண்ணுமே. 3 செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்சிறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர் மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போல்முழங்கிக் கைம்மலை தான் வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே. 4 இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ண வந்தோர் அயன்மிகு தானைய ரஞ்சுவன் னத்தவ ரஞ்சலென்னாக் கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம் பயன்விளை வாம்படி பூத்தது வேங்கை பணிமொழியே. 5 பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின் றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே. 6 வானது நாணக் கொடையா லுவகை வளர்த்தருளும் சோனகர் வாழுஞ் செழும்பொழில் சூழ்ந்தது பாரனையா டானணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே மானமி லாதிரை தேரும் பறவைக டாமகிழ்ந்தே. 7 வில்லார் நுதலியு நீயுமின் றேசென்று மேவுதிர்சூ தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தாங்கத் தியவனர்க ளல்லா வென வந்து சதிதியுந்தார வகைதொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே. 8 27. பொருளியல் அகப்பொருளைக் கூறும் இந்நூற் செய்யுள்கள் களவியற் காரிகை யுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் கீழே தருகிறோம்: நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும் பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே யன்ன தலையளி யுடைமையி னின்னுயிர்த் தோழி யேந்திழை யிவட்கே. 1 உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண் டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர் வழுத்தூர் காக்கு மாபுணை விழுத்துணைக் கான்ற மிகுபெருங் கிளையே. 2 பொருந்தா தம்ம புனையிழை மடந்தை முருந்தேர் முறுவ னோக்கிள் வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே, 3 ஆய்தளிர் பொதுளிய வீததை காய்கதிர் நுழையாக் கடிபொழில் யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே. 4 தனிமை நெஞ்சத்து முனிவுகண் டகற்றலின் வினைமாண் பாவை யன்ன புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே. 5 தெய்வ மாக வையுறு நெஞ்சம் பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து கிளிபுரை கிளவியாம் பெறுக வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே. 6 காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரிந் தன்ன கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெம்மே. 7 அம்புமுகங் கிழித்த புண்வாய்க் கலைமான் போந்தன வுளவோ வுரையீர் மாமட னோக்க மரீஇனம் படர்ந்தே. 8 புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும் நனைமயிர் ஞாழ லொள்வீ கொய்யவும் வருந்தினள் கொல்லோ மடந்தை பிரிந்தன்று மாதோ பண்புகெழு நிறனே. 9 பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே. 10 கையது செம்மலந் தழையே வினாவது தெய்ய புண்வாய் மாவே கைவிட் டகலா னம்மவிவ் வகன்புனந் தகையோ னுள்ளிய தறியோம் பெரிதே. 11 பொன்னியல் சுணங்கின் மென்முலை யரிவைக்கு மின்னிவ ரொளிவே லண்ணல் நின்னுறு விழுமங் கூறுமதி நீயே. 12 அலவனோ டாடலு மாடாண் மாடு மலர்ப்பூங் கானல் வண்டலு மயரா ளோவியப் பாவை யொத்தனள் யாதுகொ லண்ணல்யான் சொல்லு மாறே. 13 குன்றின் சுனையிற் குளித்தோ குளிர்காவி லொன்ற மலர் கொய்ய வோடியோ - வன்றாயின் மற்றின்றா துண்டோ மலர்வல்லி வாடியதின் றெற்றினா லாமா றிது. 14 வில்வேறு பட்ட படியே வினைவேறு சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க - மல்வேறு போகாத தோளும் பொலிவழிய நம்புனம்விட் டேகாத தென்கொ லிவர். 15 மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந் துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம் வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும் வந்தேறி யூர்வர் மடல். 16 செம்ம லொருவன் செறிபூந் தழையேந்தி மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற் றென்பூங் குழலா யியம்பு. 17 வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும் பொங்குந் திரையும் பொருகடலு - மிங்கிவை தேர்த்திரளுங் காலாளுந் திண்களிறும் வெம்பரியும் போர்க்களமும் போலும் பொலிந்து. 18 வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலிற் பட்ட படியைப் பகர்வதோ - மட்டுவிரி கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ தந்தநறுஞ் சாரற் றழை. 19 தாது விரிபொழிலுந் தண்டுறையும் புண்டரிகப் போது விரிகமழ்நீர்ப் பொய்கைகளு - மீது நெருங்குங் குருகினமு நெஞ்சுருக நம்மை யுருக்குந் தனியிடமொன் றுண்டு. 20 முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியா னொல்லை வருவ னொருபொருப்பன் - றில்லைநகர் ஆரணங்கே யிங்கேநி லங்கே வரின்மன்னுஞ் சூரணங்கே செய்யுந் தொடர்ந்து. 21 எவ்விடத் தென்செய்த தென்றறியே னிப்போதைக் கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே - வெவ்வினையேன் இன்னலே கூர வினிதளித்தார் தேரின்பின் நென்னலே போனவென் னெஞ்சு. 22 அன்னை நெருந லணியிழையாள் கொங்கையையும் என்னையும் நோக்கி யிருவரையும் - புன்னை வளையாடு கானல்வாய் மானனையீர் இன்று விளையாட லென்றாள் விரைந்து. 23 கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந் தள்ளி முடிமே லழகெழுதிப் - புள்ளுறங்கும் வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா நாங்கள் விளையாட நன்கு. 24 மொய்யிருளி னீரே முளரி யகந்திறந்து செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப் - பையவொரு மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா வென்வந்து சொல்லீ ரெமக்கு. 25 அன்னநடைப் பேதை யருமை யறியாதே என்னை வருத்துகின்ற தென்கொலோ - துன்னிருட்கண் வஞ்சமே யன்ன மலர்விழியா லீடழியும் நெஞ்சமே கட்டுரையாய் நீ. 26 ஊர்துயிலி னாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும் பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும் - நேர்துயிலா ளன்னை நெடுநிலா வல்லும் பகலாகு மென்னை வருவதுநீ யிங்கு. 27 கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும் கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து - வல்லிருளிற் சாரன் மலைநாட தன்னந் தனிவந்து சேரல் சிறியா டிறத்து. 28 வார லிருபொழுதும் வந்தால் மலைநாட வேரல் புனைதிருந்தோள் மெல்லியலாள் - சூரல் வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன பழியிடையூ றஞ்சும் பகல். 29 உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப் புன்னை கமழும் பொருகடலே - யென்னைப்போல் நெஞ்சா குலம் பெருகி நீயு மிரவெல்லாந் துஞ்சாத தென்கொலோ சொல்லு. 30 பந்தி யிளமிளகு பாராதே தின்றனைய மந்தி தளரு மலைநாட - முந்தருவி சோர வரிநெடுங்கண் சுற்றும் பனிவாடை யீர மெலிவா ளிவள். 31 அம்பல் பெருகி யலரான தல்லிதொறுந் தும்பி முரலுஞ் சுரிகூந்தற் - கொம்பனைய பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும் அண்ணறான் செய்யு மருள். 32 கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம் - மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம். 33 தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தரையுந் தூய பெருவனமுஞ் சோலையுமா - மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின். 34 கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெளியாட்டுச் - சால மடவார் மயின்முருக னன்றியே யண்ணல் தடமார்பு முண்ணுமோ தான். 35 தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ ராய வவர்வரவு மன்றாயின் - மேயசீ ரேலார்பூ வட்ட முறையிடவும் போதாது வேலா முலைக்கு விலை. 36 வஞ்சி யிடைமடவாய் வல்வினையே னுண்கண்ணு நெஞ்சு மகலாது நிற்றலாற் - செஞ்சுரும்பு பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன் றண்ணளிக்கு முண்டோ தவறு. 37 அன்ன நடைமடவா யாற்றி யமைவார் சொன்ன வரிய சுரங்கடந்தோ - முன்னமரர் தங்களூர் போலத் தனியே வடகொங்கிற் றிங்களூர் தோன்றுஞ் சிறந்து. 38 எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர் வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானு மொருதுணையா நாளைப்போ கும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து. 39 28. மழவை எழுபது மழவை என்பது மழபாடி என்னும் ஊர். அவ்வூரில் எழுந் தருளியுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட எழுபது பாக்களைக் கொண்ட மழவை யெழுபது என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது, களவியற்காரிகை உரையினால் தெரிகிறது. களவியற்காரிகை யுரையாசிரியர், மழவை யெழுபதிலிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார். அச் செய்யுள் இது: செருமலை தானவர் முப்புரந் தீயெழத் தேவர்கட்கும் வருமலை தீர்த்தவன் மாமழ பாடியில் வந்தெதிர்ந்த கருமலை வீட்டிய செம்மலை யன்றிக் கறங்குவதிம் மருமலை கூந்தலை யார்கொள்ள வேண்டி மணமுரசே. இந்நூல் அகப்பொருள் துறைகள் அமையப்பாடியது எனத் தெரிகிறது. இதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 29. வங்கர் கோவை வங்கர் கோவை என்னும் இந்நூலைக் களவியற் காரிகை உரையாசிரியர் தமது உரையில் கூறுகிறார். இது வங்கர் என்பவர் மீது அகப்பொருள் துறையமையப் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். வங்கர் என்பவர் யார் என்பது தெரியவில்லை. களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் வங்கர் கோவையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “வங்கர் கோவையைக் குறித்து யாதும் அறியக்கூடவில்லை. ‘வங்கர் குலோத்தமன் வண்கடந்தை’ என வருதலால் சோழர், பாண்டியர் என்பன போன்று வங்கர் என்பதும் அரசர்குலப் பெயராமென்பதும், அக்குலத்தினர் கடந்தை என்பதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றன. தலைநகர்ப் பெயர் தடந்தை எனவும் ஒரு செய்யுளிற் காணப்படுகிறது.” களவியற் காரிகை உரையாசிரியர், வங்கர் கோவையிலிருந்து மூன்று செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை: விந்தா சனிகொண்கண் வேந்தரி லாண்பிள்ளை வென்றிவெற்பிற் கொந்தார் தினைப்புனங் காவனிற் பீர்வழி கூறுமென்று வந்தார் சிலர்க்கு வழியறி வாரொடு வார்த்தைசொன்னாற் சிந்தாது காணும் பவழச்செவ் வாயிற் றிருமுத்தமே. 1 செங்கையில் வாங்கித் திருமுடி சேர்த்தி விழியிலொற்றிக் கொங்கையின் மேல்வைத்துக் கொண்டு நின்றாள் குமரித்துறையுங் கங்கையு மாடுங் கடகளிற் றான்வங்கர் காவலவன் பொங்கெயில் சூழ்தடந் தைபொருப் பர்தந்த பூந்தழையே. 2 மடலே சொரிதொங்கல் வங்கர் குலோத்தமன் வண்கடந்தை யடலே புரியு மரும்பனி வாடையை யஞ்சும்வஞ்சி யுடையேயு மன்றி யுயிருங் கிடந்ததென் றோரொருகாற் கடலே கருங்கழி யேயுரை யீரெங்கள் காதலர்க்கே. 3 இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 30. வச்சத் தொள்ளாயிரம் வீரசோழிய உரையாசிரியராகிய பெருந்தேவனார் தமது உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். வச்சத்திளங்கோ என்னும் சிற்றரசன்மீது அகப்பொருள்துறையமைத்துப் பாடப்பட்ட 900 வெண்பாக்களை யுடையது இந்நூல் என்பது தெரிகிறது. வீரசோழியம், அலங்காரப் படலம், 11ஆம் செய்யுள் உரையில் பெருந்தேவனார், இந்நூற் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது: வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுள் தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை இன்புறுத்த வல்லமோ யாம். இச்செய்யுளைப் பற்றி உரையாசிரியர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “இதனுட் சிறப்புடையளாகிய தலைமகளை இகழ்ந்தது தலைமகன் சிறப் பில்லாத பரத்தையர்மாட்டு நிகழா நின்றமையில் நாட்டுக் கடைஞர் உள்ளார். சிறப்பில்லாத நந்தையூன் துப்புடைய ஆமையின் புறத்து உடைத்துத் தின்பர் என்னு மிதனாற் றொடுத்து விளங்கச் சொன்னமை யால், தொகைமொழி யாயிற்று. வச்சத் தொள்ளாயிரம் முழுதும் தொகைமொழி எனக் கொள்க. தொகைமொழி எனினும் சுருக்கம் எனினும் ஒக்கும்.” கீழ்க்காணும் இரண்டு செய்யுள்களும் வச்சத் தொள்ளாயிரச் செய்யுள்கள்: உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றென்ப தின்றறிந்தேன் மன்னுபுகழ் வச்சத்தார் மன்னவா - உன்னுடைய பொன்னாகத் தெங்கையர்தம் பொற்கைநகச் சின்னங்கண் டென்னாகத் தேயெரிகை யால். 1 வாடை குளிர மருந்தறிவா ரில்லையோ கூட லினியொருகாற் கூடாதோ - ஓடை மதவாரணத் துதயன் வத்தவர்கோ னாட்டிற் கதவானதோ தமியேன் கண். 2 சோழ அரசனுடைய படைத்தலைவனாகவும் சிற்றரசனாகவும் இருந்த வச்சன் என்பவன் வச்சராயன் என்றும், வத்தராயன் என்றும் கூறப் படுகிறான் பேராசிரியர் திரு. டி. வி. சதாசிவ பண்டாரத்தாரவர்கள். தாம் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரத்தில் (பகுதி II. பக்கம் 62-63) வச்சராயனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இவன், கஞ்சாறன் பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன் எனப்படுவான். சோழநாட்டுக் கஞ்சாறு என்னும் ஊரின் பஞ்சநதி வாணன் என்பவனுடைய மகன் முடிகொண்டான் என்பது இவனது இயற்பெயர். முதலாங் குலோத்துங்கசோழனுடைய படைத்தலைவர் களில் ஒருவன், இச்சோழ அரசனால் வத்தராயன் (வச்சராயன்) என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டவன்.” முதலாங் குலோத்துங்கன் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யில் இருந்தவனாதலின், அவன் சேனாபதியாயிருந்த வச்சராயனும் அக்காலத்தவனே. வச்சத் தொள்ளாயிரமும் அக்காலத்தில் இயற்றப் பட்டதே. வச்சத் தொள்ளாயிரம் பாடிய புலவர் பெயர், அவர் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை. 31. வல்லையந்தாதி வல்லை என்பது வல்லம் என்னும் ஊர். இது, வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ளது. திருவல்லம் என்னும் இவ் வூரில் பில்வநாதேசுவரர் என்னும் பெயருள்ள சிவன் கோயில் உண்டு. இச் சிவபெருமான் மீது பாடப்பட்டது வல்லையந்தாதி. இந்நூலை இயற்றி யவர். குறட்டி வரதையன் என்பவர். வல்லையந்தாதி இயற்றிய குறட்டி வரதையனுக்கு இக்கோயில் அதிகாரிகள் 100 குழி நிலத்தைப் (தீக்காலி வல்லம் என்னும் ஊரில் உள்ளது) பரிசு அளித்தனர் என்று சாசனங் கூறுகிறது (M.E.R. 293 of 1921). இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 32. விஞ்சைக் கோவை இந்தக் கோவையைப் பாடியவர் பலபட்டரைச் சொக்கநாதக் கவி ராயர் அவர்கள். இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அரசர்மீது இந்நூல் பாடப்பட்டதென்பர். இரகுநாத சேதுபதியின் அமைச்சரான தெய்வகன்னி என்பவர்மீது பாடப்பட்டது என்றும் கூறுவர். தேவைமுத்து ராமலிங்க சேதுபதி மீதுவிஞ்சைக் கோவையென்ற பில்லிவைத்துக் கொன்றாயே - பாவிநீ இட்டகவி தான்வசையா யேன்சொன்னாய் சேர்ந்தபல பட்டரைச்சொக் காமுழுவம் பா. முத்துராமலிங்க சேதுபதிமீது இந்நூல் பாடப்பட்ட தென்பதற்கு இந்த வெண்பாவைக் காட்டுகிறார்கள். இந்த வெண்பாவைப் பாடினவர், சொக்கநாதக் கவிராயர் காலத்தவரான சுப்பிரதீபக் கவிராயர் அவர்கள்.6 தேவைரகு நாதன்மெச்சுந் தெய்வகன்னி மீதினிலே கோவையென்று பில்லிவைத்துக் கொன்றாயே - பாவியுன்றன் இட்டடைச்சொல் லார்பொறுப்பார் ஏண்டா மடயபல பட்டடைச்சொக் காமுழுவம் பா என்னும் இச்செய்யுளைக் காட்டி, இந்தக் கோவை தெய்வ கன்னி என்பவர் மீது பாடப்பட்டதென்பர். இவ்வெண்பாவைப் பாடியவரும் சுப்பிரதீபக் கவிராயர் என்பர். விஞ்சைக் கோவை அரங்கேற்றிய எட்டாம் நாளில் தெய்வகன்னி இறந்தார் என்று கூறுகிறார்கள். விஞ்சை என்பது இராம நாதபுரத்து நெட்டூர் என்பர். இந்தக் கோவை சேதுபதி அரசர்மீது பாடப்பட்டதா, அவர் அமைச்சர் தெய்வகன்னிமீது பாடப்பட்டதா என்பது தெரியவில்லை. நூலும் இறந்துபோயிற்று. இது கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இலக்கிய நூல்கள் II. புறப்பொருள் 1. ஆசிரியமாலை இப்பெயருள்ள நூல் ஒன்றிருந்ததென்று புறத்திரட்டினால் தெரிகிறது. ஆசிரியமாலையிலிருந்து பதினேழு செய்யுள்கள் புறத் திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியமாலை என்னும் பெயரி லிருந்து, இந்நூற் செய்யுள்கள் ஆசிரியப்பாவினால் அமையப்பெற்றன என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. ஆசிரியமாலை ஒரு தொகை நூல். உரையாசிரியர் இளம்பூராண அடிகள், தொல்காப்பிய உரையில், இந்நூலிலிருந்து, “குடிபிறப் புடுத்துப் பனுவல்சூடி” எனத் தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால், அச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்பதைக் கூறவில்லை. புறத்திரட்டிலிருந்து, அச் செய்யுள் ஆசிரியமாலையைச் சேர்ந்ததென்பது தெரிகிறது. ஆசிரிய மாலை புறப்பொருளைக் கூறும் நூல் எனத் தோன்றுகிறது. பழைய இராமாயணத்தைச் சேர்ந்த ஐந்து செய்யுள்கள் ஆசிரிய மாலையில் காணப்படுகின்றன. அச்செய்யுள்களை, இந்நூலில், ‘பழைய இராமாயணம்’ என்னும் தலைப்பின்கீழ்க் காண்க. ஆசிரியமாலையின் ஏனைய செய்யுள்களைக் கீழே காண்க: மூவிலை நெடுவே லாதி வானவன் இடமருங் கொளிக்கும் மிமையக் கிழவி தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர் மிகைப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின் வாள்பிடித் தாளி யேறித் தானவன் மாளக் கடும்போர் கடந்த குமரி மூவா மெல்லடித் திருநிழல் வாழி காக்கவிம் மலர்தலை யுலகே. 1 எளிதென விகழா தரிதென வுரையாது நுமக்குநீர் நல்குதி ராயின் மனத்திடை நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளருந் தொழிற்படிற் சினைவிடூஉப் பயக்கு முணர்த்தின் இவணு மும்பருந் துணையே யதனால் துறைதொறுந் துறைதொறு நோக்கி அறமே நிறுத்துமி னறிந்திசி னோரே. 2 வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவா ழொருசிறை நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல் மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப் படையுழா விளையுளி னுணவு மந்திரத்துச் சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற் காடுகைக் கொள்ளு முறையுளு மென்றிவ் வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை காக்கு மாற்றலோடு வென்றுவிளங்கு தவத்தி னரசியற் பெருமை மாக்கட லுடுத்த வரைப்பின் யார்க்கினி தன்றஃ தறியுநர்ப் பெறினே. 3 அரையது துகிலே மார்பின தாரம் முடியது முருகுநாறுந் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலை தாழ்ந்த மணிக்காற் றனிக்குடை முன்னது முரசுமுழங்கு தானை யிந்நிலை இனைய செல்வத் தீங்கிவர் யாரே தேவ ரல்ல ரிமைப்பதுஞ் செய்தனர் மாந்த ரேயென மயக்கம் நீங்கக் களிற்றுமிசை வந்தனர் நெருந லின்றிவர் பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையொடு தாமே யொருசிறை யிருந்தனர் மன்னே. 4 யாணர் வரவின் மேனா ளீங்கிவன் இளமைச் செவ்வி நயந்த பேதையர் காத லுண்கண் வருபனி நீங்கி இன்னுந் துயில்கொண் டிலவே யின்றிவன் போர்வை பசையற வுணங்கிப் பாணர் பழந்தலைச் சீறியாழ் போலக் குரலழிந்து நரம்புமடித் தியாத்த யாக்கை மூப்புறப் பதிகெழு மூதூர் மன்றத்துப் பொதியிற் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே. 5 உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை மேம்படு குற்ற மூன்றொடு வழங்கலின் உண்டிநல் லரசு தண்டத்தின் வகுத்த நோன்பிணி யகப்பட் டிருப்பினுந் தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே. 6 நெருந லென்பது சென்றது நின்ற இன்றுஞ்-செல்லா நின்றது முன்சென்று வருநாள் கண்டார் யாரே யதனால் ஒருநாள் கைப்படுத் துடையோ ரின்மையின் நல்லது நாடுமி னுள்ளது கொடுமின் வழாஅ வின்பமும் புணர்மி னதாஅன்று கீழது நீரகம் புகினு மேலது விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது நேமி மால்வரைக் கப்புறம் புகினுங் கோள்வாய்த்துக் கொட்டுங் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே. 7 தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூற் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுண் கொண்மூ மழைகா லூன்றா வளவயல் விளையா வாய்மையுஞ் சேட்சென்று காக்குந் தீதுதரப் பிறவு மெல்லா நெறிமாறு படுமே கடுஞ்சினங் கவைஇய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே. 8 1குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காத லின்பத்துட் டங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாவின்மை யென்றாங் கிருபெரு நிதியமு மொருதா மீட்டுத் தோலா நாவின் மேலோர் பேரவை யுடன்மரீஇ யிருக்கை யொருநாள் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே. 9 தாமரை வெண்கிழங்கு விரவி யோராங்குக் கருமலங்கு மிளிரக் கொழுமுகந் தியக்கி பழஞ்சேற்றுப் பரப்பிற் பருமுத லெடுத்து நெடுங்கதி ரிறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து வாளிற் றுமித்த சூடே மாவின் சினைகளைந்து பிறக்கிய போர்பே யெருத்தின் கவையடி(ய) வைத்த வுணாவே மருதின் கொழுநிழற் குவைஇய குப்பையொ டனைத்தினும் பலர்மகிழ் தூங்க வுலகுபுறந் தரூஉ மாவண் சோணாட் டூர்தொறும் ஏரோர் களவழி வாழிய நெடிதே. 10 சிறுபுன் சில்லி நெடுவிளி யானா மரம்பயில் கானத்துப் பரற்புறங் கண்ட வடியா நெடுநெறிச் செல்லாப் புடையது முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப் புன்றலை மகாஅர் தந்தை கன்றுசூழ் கடிமனைக் கவைஇய நிரையே. 11 சில்செவி யன்னே பெருங்கேள்வி யன்னே குறுங்கண் ணினனே நெடுங்காட்சி யன்னே இளைய னாயினு மறிவின்மூத் தனனே மகளி ரூடினும் பொய்யறி யலனே கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன் வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி மேனெறி படரும் பேரா ளன்னே ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர் பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழி காதலின் மேவலன் பிறர்பிறர்க் கீந்து தானு முண்ணும் விருந்துண்டு மிகினே. 12 2. தகடூர் யாத்திரை இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் (இவர் பெயர் தெரியவில்லை) முதலிய உரையாசிரியர் கூறுவதிலிருந்தும், புறத்திரட்டு என்னும் தொகை நூலிலிருந்தும் தெரிகிறது. இந்நூலைப் பற்றிப் பேராசிரியர் என்னும் உரையாசிரியர் கூறுவன இவை: “பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்குங் கருத்தினான் வருவன எனப்படும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மை யாகலின். அவை தகடூர் யாத்திரை போல்வன.” (தொல். பொருள். செய்யுளியல், “பாட்டிடை வைத்த குறிப்பினானும்” என்னும் சூத்திர உரை) “தொன்மை என்பது உரை விராய் பழைமையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன.” (தொல். பொருள். செய்யுளியல், “தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” என்னும் சூத்திர உரை) இந்நூலைப் பற்றி நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறுகிறார்: “இனி, யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவும் கொள்க, அஃது, அரசர்மேலும் படைத்தலைவர்மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலும் களிற்றின்மேலும் தேரின்மேலும் குதிரை சேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவுமாம்...... இவை தனித்து வாராது தொடர் நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க.” (தொல். பொருள். புறத்திணையியல், “தானை யானை குதிரை என்ற” என்னும் சூத்திர உரை) தக்கயாகப் பரணி உரையாசிரியர் (பேய்களைப் பாடியது, 12ஆம் தாழிசை), “மதிதுரந்து வரவொழிந்த” என்னும் தாழிசைக்கு உரை எழுதி, “இது தர்க்கவாதம். இது தமிழில் தகடூர் யாத்திரையிலும் உண்டு” என்று விளக்கம் கூறுகிறார். இவற்றிலிருந்து தகடூர் யாத்திரை என்னும் ஒரு நூல் உண்டு என்பது தெரிகிறது. தகடூர் யாத்திரையிலிருந்து 44 செய்யுள்கள் ‘புறத் திரட்டு’ என்னும் தொகைநூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புறத்திரட்டில் தொகுக்கப்படாத ஒரு செய்யுளைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவை தவிர வேறு மூன்று செய்யுள்களை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் மேற்கோள் காட்டு கிறார். இந்த மூன்று செய்யுள்களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்று இவர் குறிப்பிடவில்லை. ஆயினும், இவை மூன்றும், சில குறிப்புகளைக் கொண்டு தகடூர் யாத்திரைச் செய்யுள்களே என்று ஐயமின்றித் தெரிகின்றன. தகடூர் யாத்திரை என்னும் நூலுக்குத் தகடூர் மாலை என்னும் வேறு பெயரும் உண்டு. இது உரைநடையும் செய்யுள் நடையும் விரவிச் செய்யப்பட்டது. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரநாட்டரசன், தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன்மேல் பகை கொண்டு, படையெடுத்துச் சென்று, தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்து வென்றான். இதனால் இவன் சேரமான் தகடூர் எறித்த பெருஞ் சேரல் இரும்பொறை என்று பெயர்பெற்றான். பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து இவனைச் சிறப்பித்துக் கூறுகிறது. தகடூரில் நடந்த போர்ச்செய்தியை விளக்கமாகக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல். சேலம் மாவட்டம் தர்மபுரி தாலுகாவின் தலைநகரமாக இருக்கும் தர்மபுரியே பழைய தகடூர். தகடூர் என்னும் பழைய பெயர் மாறி இப்போது தர்மபுரி என்று வழங்குகிறது. தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் பெருஞ் சேரல் இரும்பொறையும் தமயன் - தம்பி முறையினர் என்று (தகடூர் யாத்திரை, 7ஆம் பாட்டினால்) விளங்குகிறது. சேரமன்னன் படை யெடுத்து வந்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிடுகிறவரையிலும், தகடூர் மன்னன் அதிகமான், கோட்டைக்குள்ளே இருந்தான் என்று தெரிகிறது. இதனை நச்சினார்க்கினியர் கூறுகிறார். “ஒருவன் மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம்” என்று தொல்காப்பியப் புறத்திணை யியல் உரையில் இவர் கூறுவதிலிருந்து அறியலாம். தகடூர்ப் போரில், சேரன், சோழன் பாண்டியன் என்னும் மூவேந்தரும் அதிகமான் நெடு மானஞ்சி (இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), இவன் மகன் அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மலையமான் திருமுடிக்காரி (இவனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன்), பெரும்பாக்கன், நெடுங் கோளாதன் முதலிய பல வீரர்களும் போர் செய்த செய்தி கூறப் படுகிறது. அரிசில்கிழார், பொன்முடியார் முதலிய புலவர்கள் பாடிய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்திலேயே, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. இப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பொன்முடியார், அரிசில் கிழார் (இவர் தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறையின் அமைச்சர்) முதலிய புலவர்கள் பாடிய செய்யுள்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகிறபடியினாலே, இந்த நூல் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், தகடூர் யாத்திரை மிகப் பிற்காலத்து நூல் என்று திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார். இவ்வாறு இவர் கருதுவதற்குக் காரணம், உரையாசிரியர் (இவர் சங்ககாலத்திற்கு மிக மிகப் பிற்பட்டவர்) கூறும் செய்தியே. அதாவது, “தொன்மை என்பது உரை விராய் பழைமையாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன” என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல். செய்யுளியல். “தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” என்னும் சூத்திர உரை) கூறுகிறார். இவ்வுரையாசிரியர் கூற்றை ஆதாராமாகக் கொண்டு தகடூர் யாத்திரை பிற்காலத்து எழுதப்பட்ட பழைய கதை என்று கூறுகிறார். என்னை? “இது (தகடூர் யாத்திரை) சரித்திர நிகழ்ச்சி பற்றிய நூலாயினும், அந்நிகழ்ச்சி நடைபெற்ற காலத்துத்தானே இயற்றப்பெற்றதன்று. மிகப் பிற்பட்ட காலத்திலே இது தோன்றியதெனக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால், இதனைப் பழையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுகின்ற தொன்மை என்பதற்கு இலக்கியமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர்” என்று ராவ்சாகிப் - திரு. எஸ் வையாபுரிப் பிள்ளை அவர்கள் புறத்திரட்டு நூன்முகத்தில் (பக்கம் XIV) கூறுகிறார். தகடூர் யாத்திரை என்னும் நூலில், நமக்கு இப்போது தெரிகிற வரையில், அரிசில் கிழாரும் பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில், பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல்களினால் தெரிகிறது. (தகடூர் யாத்திரை, செய்யுள் 9, 29, 47, 48 காண்க.) தகடூரை வென்றபிறகு, தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடிப் (பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து) பெரும் பொருள் பரிசு பெற்றதோடு, அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக, இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூறமுடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது, அதனைப் புறக்கணித்து, மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக்கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிறபோது அதனையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், வீரச்செய்திகளைக் கூறும் நூல்கள், அவ்வீர நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில், அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும். கட்டபொம்மன் கதை, தேசிங்கு ராஜன் கதை, முத்துப் பட்டன் கதை, கான்சாயபு சண்டை, பூதத்தம்பி நாடகம், மதுரைவீரன் கதை முதலிய வீரர்களைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவை அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே, அல்லது அவை நிகழ்ந்த அண்மைகாலத்துக் குள்ளே எழுதப்பட்டவை. அவை நிகழ்ந்த மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை அல்ல. (பாரதம், இராமாயணம் போன்ற மிகப் பழைய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றுவது விதிவிலக்கு.) மக்களின் மனத்திற்கு உணர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச்செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே பாட்டாகவும் கதையாகவும் இயற்றப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகிற உலக வழக்கம். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத்தைக் கவர்ந்ததும், உணர்ச்சியூட்டியதும் ஆகிய தகடூர்ப் போர் - இது. முடியுடை வேந்தர் மூவரும், குறுநில மன்னர்களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும்போர் என்பதை மறத்தல் ஆகாது - அந்நிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதையாய்ப் போனபிறகு, தகடூர் யாத்திரை என்னும் நூலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற்கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அன்று.2 புறநானூற்றில் கூறப்படும் வீரச்செய்திகள் எல்லாம், அவை நிகழ்ந்த அதே காலத்தில், புலவர்களால் நேரிற் கண்டு பாடப்பட்டவை அல்லவோ? அது போன்றே, தகடூர் யாத்திரை என்னும் நூல், அப்போர் நிகழ்ந்த காலத்திலேயே கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே - எழுதப்பட்ட நூல் என்பது அதன் அகச்சான்றினால் தெரிகின்றது. அக்காலத்து வழக்கப்படி, தகடூர்ப் போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீரச்செயல்களையும் ஏனைய செயல்களையும் புலவர்கள் செய்யுளாகப் பாடினார்கள். பிறகு, அப்பாடல்களைத் தொகுத்து, இடை யிடையே விளக்கம் எழுதி, தகடூர் யாத்திரை என்னும் பெயருடன் நூலாக அமைத்தார்கள் என்று கருதுவது தவறாகாது. தமிழ்நாட்டிலே, தகடூர் யாத்திரை நூல் பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. சென்ற 19ஆம் நூற்றாண்டுவரையில் ஏட்டுச்சுவடியாக இருந்த தகடூர் யாத்திரை, அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மறைந்து விட்டது. சங்க நூல்களை அச்சிடுவதற்காக ஏட்டுச்சுவடிகளைத் தேடிய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் சென்று ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தகடூர் யாத்திரை என்னும் ஏட்டுச்சுவடியைப் பற்றிய குறிப்பு அவருக்குக் கிடைத்தது. இது பற்றி அவர் தமது வரலாற்றில் இவ்வாறு எழுதுகிறார்: “அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகிறது. ஆதலால், அது பழைய நூலென்று உணர்ந்தேன்” என்றும், “பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல அந்த அருமை யான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்” என்றும் ஐயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.3 இதிலிருந்து தகடூர் யாத்திரையின் கடைசிப் பிரதி சென்ற நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்பது தெரிகிறது. இந்நூலின் மறைவினால் தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியே மறைந்துபோய்விட்டது. இப்போது நமக்கு இந்நூலிலிருந்து கிடைத் துள்ள செய்யுள்கள் நாற்பத்தெட்டு. அவற்றைக் கீழே தருகிறேன். முதல் நாற்பத்துநான்கு செய்யுள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டவை. வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார் வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது. 1 கிழிந்த சிதாஅ ருடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தார் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடி னருமறையர் நீடின் உருவந் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே. 2 நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ணர் ஆயிரவ ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றும் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை இரப்பாரை யெள்ளா மகன். 3 இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற் சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீங்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா விகல்மேல் மறமன்னர் ஒன்றார்க் குயர்த்த படை. 4 அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல் துறத்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு. 5 சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்டாமற் சொல்லும் விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேற் - பூக்குழலாய் நவ்வய லூரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது. 6 கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி. 7 ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே வினவுதி யாயிற் கேண்மதி சினவா தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றம் இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோலெய்தி நும்மூர்க்கு, நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்து மொருவ னதனைத் தாழ்த லன்றோ வரிது தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையி னடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே. 8 4மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட திவ்வழி யென்றி யியறார் மார்ப எவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யெறிந்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டற் காகாது வேந்துடை யரணே. 9 பெருநீரால் வாரி சிறக்க விருநிலத் திட்டவித் தெஞ்சாமை நாறுக நாறார முட்டாது வந்து மழைபெய்க பெய்தபி னொட்டாது வந்து கிளைபயில்க வக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன வக்கதிர் ஏர்கெழு செல்வர் களநிறைக வக்களத்துப் பேரெலாங் காவாது வைகுக போரின் உருகெழு மோதை வெரீஇப் பெடையொடு நாரை யிரியும் விளைவயல் யாணர்த் தாகவவ னகன்றலை நாடே. 10 அரும்பொனன் னார்கோட்டி யார்வுற்றக் கண்ணுங் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிப வொன்றோ துயில்மடிப வல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா விருந்து. 11 5நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ டெங்கோ னேயின னாதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய் மறிக்குரற் குறுதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்தல் வேண்டா எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. 12 6இருநில மருங்கி னெப்பிறப் பாயினும் மருவின் மாலையோ வினிதே யிரவின் ஆகோள் மள்ளரு மளவாக் கானத்து நாம்புறத் திறுத்தனெ மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே. 13 வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ - பாத்திப் புடைக்கல மான்றே ருடனீடத்தா னீத்த படைக்கலத்திற் சாலப் பல. 14 உண்டியின் முந்தா னுடனுண்டான்தண்டேறல் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா ரோர்ந்து. 15 குழிபல வாயினுஞ் சால்பானாதே முழைபடு முதுமரம் போலெவ் வாயு மடை நுழைந் தறுத்த விடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்ற லானாது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிநீர் கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப் படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே. 16 செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கௌவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து. 17 கலிமா னோயே கலிமா னோயே நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎ னாயி னுள்ள திரப்போ னின்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே. 18 கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றி யவனை யடுத லடாக்காலை ஏற்றுக் களத்தே விளிதல் விளியாக்கால் மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தந் தோற்றமுந் தேசு மிழந்து. 19 7தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற் பலரேத்துஞ் செம்ம லுடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை யியையுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ தாமேயும் போகு முயிர்க்கு. 20 நமையுள்ளு நல்லவை யெய்தார் பகைநலிய ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. வேற்றுக் களத்தி லொருவர்த மாறாகச் சென்றா லொருவர்மேற் புண்ணும் படுக்கலான் றான்படான் போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று. 21 வேற்றானை வெள்ள நெரிதர யாற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லா லெளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுந ரென்னுஞ் செருக்கு. 22 பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற் குற்றுழிக் காவா தவர். 23 பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா இரவே யெறியென்றா யென்னை - விரைவிரைந்து வேந்தனீ யாயினா யன்றிப் புகுவதோ போந்தென்னைச் சொல்லிய நா. 24 வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும் விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலங்காணே னாணுத் தரும். 25 காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின் மேலா ளெறியான் மிகநாணக் - காளை கருத்தினதே யென்று களிறெறியா னம்ம தருக்கினனே சான்றோர் மகன். 26 பல்சான் றீரே பல்சான் றீரே வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயிற் கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லன் மூதூர்ப் பல்சான் றீரே பலநாள் வருந்தி யிளையரு முதியரும் நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப யாமங் கொள்பரு மொழிய மேனாட் கொல்படை பொய்த்த குன்றுயர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த திருந்துவேல் விடலை காப்பமைந் தனனே. 27 இவனே, பொரிவரி யன்ன பொங்குளை வயமான் மேலோன் யாரென வினவிற் றோலா உரனுடை யுள்ளத் தொன்னா ருட்குஞ் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே அவனே யெம்மிறை யீதவன் மாவே கறுவுகொள் நெஞ்சங் கதுவவந் தனனே யாவருங், குறுக லோம்புமின் குறைநாண் மறவீர் நெருந லெல்லி நரைவரு கடுந்திறற் பருமத யானை பதைப்ப நூறி யடுகளத் தொழிந்தோன் றம்பி தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை அச்ச மறியா னாரணங் கினனே. 28 8கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி யேர்தருந் தோணோக்கித் - தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மானோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும். 29 இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவர் கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே. 30 அதிரா தற்ற நோக்கு ஞாயிலுட் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவி னிளையோ னின்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே அவன்கை யொண்படை யிகழ்த லோம்புமின் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகின னிவன்கைத் திண்கூ ரெஃகந் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டே. 31 கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவுங் களிறே யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. 32 அஞ்சுதக் கனளே யஞ்சுதக் கனளே யறுகா வலா பந்த ரென்ன வறுத்தலை முதியாள் அஞ்சுதக் கனளே வெஞ்சமத் தென்செய் கென்னும் வேந்தர்க் கஞ்ச லென்பதோர் களிறீன் றனளே. 33 வல்லோன் செய்த வகையமை வனப்பிற் கொல்வினை முடியக் கருதிக் கூரிலை வெல்வேல் கைவல னேந்திக் கொள்ளெனிற் கொள்ளுங் காலு மாவேண் டானே மேலோன் அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக் கழற்கா லிளையோ னழற்றிகழ் வெகுளி இகழ்த லோம்புமின் புகழ்சால் மன்னிர் தொல்லை ஞான்றைச் செருவினு ளிவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே அதனால் வல்லோர் பூழை நின்மின் கல்லென வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின் அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோ னிலையே. 34 உண்டது கள்ளு மன்று களிப்பட் டனனே ஊர்ந்தது புள்ளு மன்று பறந்தியங் கும்மே மேலோர் தெய்வ மல்லன் மகனே நொய்தாங்குத் தெரியல ரெடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோன்வேல் பைய நிமிர்ந்து பருந்தி னோடிக் கழிந்தார்த் தன்றவ னெறிந்ததை கழறொட் டேந்துவரை யிவரும் புலிபோல் வேந்தர்வந் தூரும் வெஞ்சினக் களிறே. 35 நிலையமை நெடுந்திணை யேறி நல்லோரி னிலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன செருபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கு மொருவே லோனே குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம் அணிநல் யானைக் கூறளக் கும்மே. 36 வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் உருவக் குதிரை யொருவே லோனே இருகை மாக்களை யானஞ் சலனே நாற்கை மாக்களின் நாட்பகத் தில்லை அவனும், தாரொடு துயல்வருந் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே யானும் கடிகம ழுவகைக் கைவல் காட்சியென் றுடியவற் கவனரை யறுவை யீந்தனனே அதனால், என்னெறிந்து பெயர்த லவர்க்குமாங் கரிதே அவனெறிந்து பெயர்த லெமக்குமாங் கரிதே அதனால், என்ன தாகிலு மாக முந்நீர் நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்றாய் மூழ்குவ ளொன்றோ வன்றே லென்யாய் மூழ்குவ ளொன்றோ வன்றியவன் றாயும் யாயும் முடன்மூழ் குபவே. 37 அடுதிறன் முன்பின னாற்ற முருக்கிப் படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவ னூர்ந்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்குத் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டுங் குளம்பு. 38 தருமமு மீதேயாந் தானமு மீதேயாங் கருமமுங் காணுங்கா லீதாஞ் - செருமுனையிற் கோள்வாள் மறவர் தலைதுமிய வென்மகன் வாள்வாய் முயங்கப் பெறின். 39 9இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மினோ அன்பி னுயிர்மறக்கு மாரணங்கு - தன்கணவன் அல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண். 40 10எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ என்மக னாத லெற்கண் டறிகோ கண்ணே கணைமூழ் கினவே தலையே வண்ண மாலை வாள்விடக் குறைந்தன வாயே, பொருநுனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந் தாவ நாழிகை யம்புசெறித் தற்றே நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பல்சர நிறைத்தன வதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே. 41 11வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோலா வதனகத் துன்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே எம்மில் செய்யா வரும்பழி செய்த கல்லாக் காளைநின் னீன்றே வயிறே. 42 12இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. 43 இழுமென முழங்கு முரசமொடு குழுமிய ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னூர்ச் சிறையில் விலங்கிச் செவ்வே லேந்தி யாண்டுபட் டனனே நெடுந்தகை ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே. 44 தக்கயாகப் பரணி, காளிக்கு கூளி கூறியது, 397ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது தகடூர் யாத்திரை என்று குறிப்பிடுகிறார். இவர் காட்டிய இச்செய்யுள் புறத்திரட்டில் காணப்படவில்லை. இவர் காட்டிய செய்யுள் இது: கனவே போலவு நனவே போலவு முன்னிய தன்றியென் னுள்ளக நடுக்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும் இருவகை யுயர்திணைக் கேந்திய கொடியொடும் வெருவந்த தோற்றத்தா லுருவின பலகூளிக் கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும் பறையன்ன விழித்தகண்ணாள் பிறையன்ன பேரெயிற்றாள் குவடன்ன பெருமுலையா ளிடைகரந்த பெருமோட்டாள் இடியன்ன பெருங்குரலாள் தடிவாயாற் றசைப்புறத்தாள் கடலன்னபெருமேனியாள்காண்பின்னக்கமழ்கோதையாள் சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய வகலல்குலாள் மழையு மஞ்சும் வளியும் போலுஞ் செலவினா ளொருபெண் டாட்டி தலைவிரித்துத் தடக்கைநாற்றி மறனெறிந்து மாறுகொண்டறியா வறிவுக்கிம் முறைநா னிவ்வள வன்றே பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன் கைகளா னிலனடித் தூரை யிடஞ்செய்து காடு புகுதல் கண்டே னென்னுங் கவலை நெஞ்சமொ டவல நீந்தினாள் அன்றது மன்றவ் வதிகமான் றாய்க்கு. 45 கீழ்க்கண்ட நான்கு செய்யுள்களை நச்சினார்க்கினியர், தொல் காப்பிய (பொருள், புறத்திணை, “இயங்குபடை யரவம்”, “கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்” என்னும் சூத்திரங்களின்) உரையில் மேற்கோள் காட்டு கிறார். ஆனால், அவர் இச்செய்யுள்கள் தகடூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று குறிக்கவில்லை. எனினும், இவை தகடூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று ஐயமறத் துணியலாம். “மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய நுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே. 46 இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.” “மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பி யெவ்வாயும் எந்திறப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும் என்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே. 47 இது பொன்முடியார் பாட்டு.” “கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுததைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க வூர்கொள் குவமே. 48 இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.”: “மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்ட றகாது வெந்துறை யானே. 49 இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.” 3. பெரும்பொருள் விளக்கம் இப்பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பதைப் புறத்திரட்டு என்னும் தொகை நூலிலிருந்தும், நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய (பொருள். புறத்திணையியல்) உரையிலிருந்தும் அறிகிறோம். பெரும்பொருள் விளக்கத்தின் ஆசிரியர் பெயர், அவர் இருந்த காலம், நூலியற்றிய காரணம் முதலிய செய்திகள் ஒன்றும் தெரிய வில்லை. கீழ்க்காணும் பெரும்பொருள் விளக்கத்துச் செய்யுள்களைப் புறத்திரட்டில் உள்ளபடியே தருகிறேன். இச்செய்யுள்களில் பலவற்றை நச்சினார்க்கினியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திரட்டுச் செய்யுள்களுக்குள்ளும் நச்சினார்க்கினியர் செய்யுள் களுக்கும் பாடபேதங்கள் உள்ளன. பாடபேதங்களை இங்குக் காட்டவில்லை. புறத்திரட்டில் காணப்படும் பெரும்பொருள் விளக்கச் செய்யுள்கள் வருமாறு: மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ தாங்கே அளிப்பாரும் மக்களாம் ஆறு.13 1 இளையர் முதியர் எனவிருபால் பற்றி விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தான் உளன்.14 2 யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு.15 3 நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம்.16 4 ஈட்டிய வெல்லா மிதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து. 5 வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியயொடு புக்கு.17 6 வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலால் தாய்வ லிளையவர் தாஞ்செல்லின் - நாளைக் கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர்.18 7 வந்த நிரையி னிருப்பு மணியுடன் எந்தலை நின்றலை யான்றருவன் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு.19 8 திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னேற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லையே சென்மின் வழி.20 9 பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானை படாஅ முகம்படுத் தாங்கு.21 10 அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளான் விறல்வெய்யோன் யாதாங்கொல் வாளார் துடியார் வலம். 11 கங்கை கவர்ந்தார்க்குக் கானப் பெருங்கவலை எங்கு மறவ ரிரைத்தெழுந்தார் - நுங்கிளைகள் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு. 12 கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதா ருள்ளத் துரந்து நிரைமீட்ட தோள்.22 13 கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையு நிரையென்னோ தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை.23 14 காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான் மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழும் என்னது பட்டாயோ என்று.24 15 யாமே பகர்ந்திட வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொல் - ஏமமுற் றன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச் சென்றீயு மாங்கவர்பாற் சேர்ந்து.25 16 விண்ணசைஇச் செல்கின்ற வேலிளைய ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் முள்ளம் இருபாற் படுவ தெவன். 17 போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது. 18 மூதில்வாய் தங்கிய முல்லைசால் கற்புடை மாதர்பாற் பெற்ற வலியுளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற வழிவு.26 19 மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி யமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னார் உடையன தாம்பெற் றுவந்து.27 20 தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்.28 21 பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவ ரெல்லாம் - அகலிய விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண்.29 22 தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வ ரன்னே - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைத்து.30 23 இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகங் கைக்கொள்ளான் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசிந் தீயா லுயிர்பருகி மாறா மறலி வயிறு. 24 தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு.31 25 வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால் ஆன்றோ ரடக்கம்போ லாங்கு.32 26 பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்.33 27 குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார் விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து.34 28 முகிற்றரண மென்னு முற்குருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - புற்றிழந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து.35 29 பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போ லஞ்சி - ஒருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கு மெல்லாங் கொடுத்து.36 30 மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை.37 31 தாக்கற்குப் பேருந்த தகர்போல் மதிலகத் தூக்க முடையா ரொதுங்கியுங் - கார்க்கீண் டிடிபுறப் பட்டாங் கெதிறேற்றார் மாற்றார் அடிப்புறத் தீடு மரிது.38 32 இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்ன ரிமையாக் கண்கண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு. 33 ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. 34 வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற் குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல. 35 வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச் செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்றத கை.39 36 மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந் தம்மிற் றடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற் போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை யன்றடர்த்த கை. 37 வான்றோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும் ஊன்றோய் நரியு முடன்றொக்க - மூன்றுங் கடமா நிலநனைக்குங் கார்யானைக் கிட்ட படமாறு நீப்பதனைப் பார்த்து.40 38 மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந் தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேல் மலையுறையுந் தெய்வம்போல் வந்து. 39 வென்று களங்கொண்ட வேந்தன்றே! சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து.41 40 கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க எண்ணிருந்தோ ளேந்திழையாள் தான்காக்கப் - பண்ணியநூற் சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே. 41 4 கூடல் சங்கமத்துப் பரணி சோழ அரசர்கள் மேலைச்சளுக்கிய அரசர்களுடன் பலமுறை போர்செய்தார்கள். அவ்வாறு போர்செய்த சோழ அரசர்களில் வீர ராசேந்திரன் (கி. பி. 1065-1070) என்பவனும் ஒருவன். வீரராசேந்திரனை வீரசோழன் என்றும் கூறுவார்கள். இவன் சளுக்கியருடன் மூன்று முறை போர் செய்து வென்றான். கிருஷ்ணை - துங்கபத்திரை என்னும் இரண்டு பேராறுகள் கூடுகிற இடமாகிய கூடல் சங்கமம் என்னும் இடத்தில் நடந்த போரிலே, இவன் பெரிய வெற்றியடைந்தான். சளுக்கிய அரசனான ஆகவமல்லனும் அவனுடைய படைத்தலைவர்களும், கடல்போன்ற சேனையும் வீரராசேந்திரனால் முறியடிக்கப்பட்டனர். வீரராசேந்திரன் காலத்தில் இருந்த புத்தமித்திரனார் என்னும் புலவர், அவ்வரசன் பெயரினால் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார். வீரசோழியத்திற்கு உரை எழுதிய பெருந்தேவனார், தமது உரையில் இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். அவ் வெண்பாக்களில் சோழன் பெற்ற கூடல சங்கமத்து வெற்றி கூறப்படுகிறது. “விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர் எண்கூ டலறு மிருங்கானிற் - கண்கூடப் பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக் கெண்ணினார் சேரும் இடம்.” “மின்னார் வடிவேற்கை வீரரா சேந்திரன்றன் பொன்னார் பதயுகளம் போற்றாது - கன்னாடர் புன்கூ டலசங்க மத்தினெடும் போருடைந்தார் நன்கூ டலசங்க மத்து.”42 இவ்வரசன் பெற்ற வெற்றியைச் சிறப்பித்து இவன் மேல் கூடலசங்கமத்துப் பரணி பாடப்பட்டது. என்னை? “... ... ... ... கூடல சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்.” என்று விக்கிரம சோழன் உலாவும். “பாட வாரிய பரணி பகட்டணிவீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்” என்று இராசராச சோழன் உலாவும் கூறுவது காண்க. இந்தப் பரணி இப்போது கிடைக்கவில்லை. இதைப் பாடிய புலவர் பெயர் முதலியனவும் தெரியவில்லை. 43 5. கொப்பத்துப் பரணி சோழ அரசன், கொப்பம் என்னும் ஊரில் சளுக்கிய அரசனுடன் போர்செய்து வென்ற வெற்றியைப் பாராட்டிக் கொப்பத்துப் பரணி இயற்றப்பட்டது. கொப்பம் என்னும் ஊர். கிருஷ்ணை ஆற்றங் கரையில் இருந்தது. முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044). மேலச் சளுக்கிய அரசனான ஆகவமல்லனுடன் கொப்பத்தில் பெரும் போர் செய்து வென்றான். இவனுடைய சேனைக்குப் படைத் தலைவனாக இருந்தவன், இவனுடைய மகனும் இளவரசனுமான இராசாதிராசன் என்பவன். வீரசோழியம், யாப்பதிகார உரையில், உரையாசிரியராகிய பெருந் தேவனார் மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள், சோழ அரசன் கொப்பத்துப் போரை வென்ற செய்தியைச் சிறப்பித்துக் கூறுகிறது. அந்தச் செய்யுள் இது: “துற்றுற் றின்றிவெம் போர்செய்த விற்கைப் பன்மன்முன் போடவோர் தத்திற் றுன்றுவன் பாய்பரி யுய்த்துத் தன்மைகொண் டோடிய வெற்றுச் செம்பியன் பார்புகழ் கொற்கைக் கண்டன்வன் பாரதம் வெற்புக் கொண்டுதிண் போர்புரி கொப்பத் தன்றெதிர்ந் தோர்வெறு கொற்றத் தொங்கல்சிங் காசன மொற்றைச் சங்குவெண் சாய்மரை குத்துப் பந்தர்முன் பாவிய முத்துப் பந்திமுன் றான்மகிழ் ஒற்றைப் பெண்டிர்பண் டாரமொ டொற்றைத் தன்பெருஞ் சேனையு மிட்டிட் டன்றுடைந் தான்வசைப் பட்டுக் கண்டவங் காரனே.” இராசேந்திரதேவர் கொப்பத்துப் போரை வென்ற செய்தியை அவருடைய சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது: “திருமருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னோன் சேனை பின்னதாக இரட்டைபாடி ஏழரையிலக்கமுங் கொண்டெதிரமர் பெறாது எண்டிசை நிகழப் பறையது கறங்கின வார்த்தை கேட்டுப் பேராற்றங் கரைக் கொப்பத்து வந்தெதிர் பொருத ஆகவமல்லன் அடற்சேனை யெல்லாம் பாரது நிகழப் பசும்பிண மாக்கி ஆங்கது கண் டாகவமல்லன் அஞ்சிப் புறகிட்டோட அவன் ஆனை குதிரையும் ஒட்டக நிரையும் பெண்டிர் பண்டாரமுங் கைக் கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி வீர சிம்மாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு ஆறாவது.” கொப்பத்துப் போரை வென்று புகழ்கொண்ட இராசேந்திர சோழன்மீது கொப்பத்துப் பரணி என்னும் நூல் இயற்றப்பட்டதாக இராசராச சோழன் உலா கூறுகிறது. இதனை, “... ... ... கொலையானை பப்பத் தொருபசிப்பேய் பெற்ற வொருபரணிக் கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்” என்னும் கண்ணியினால் அறியலாம். இராசேந்திர சோழன்மேல் பாடப் பட்ட கொப்பத்துப் பரணி இப்போது கிடைக்க வில்லை. இந்நூலை இயற்றினவர் பெயர் முதலியனவும் தெரியவில்லை. 6. தென்றமிழ் தெய்வப் பரணி இப்பெயருள்ள பரணி நூலைத் தக்கயாகப் பரணி கூறுகிறது. “செருத்தந் தரித்துக் கலிங்க ரோடத் தென்றமிழ் தெய்வப் பரணி கொண்டு வருத்தந் தவிர்த்துல காண்ட பிரான் மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே” என்னும் தாழிசையைத் தக்கயாகப் பரணி (776) கூறுகிறது. இதனால் இப் பெயருள்ள பரணி நூல் ஒன்றிருந்த தென்பது தெரிகிறது. இத் தாழிசைக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “இப்பரணி பாடினார் ஒட்டச்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணி பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்.” இதனால், கலிங்கப் போரைப் பாராட்டிச் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடியதுபோலவே, அதே கலிங்கப் போரைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது இந்தப் பரணியைப் பாடினார் என்பது தெரிகிறது. இந்தப் பரணியின் பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பரணி பாடிய ஒட்டக் கூத்தராலேயே “தென்றமிழ்த் தெய்வப் பரணி” என்று தக்கயாகப் பரணியில் கூறப்பட்டபடியால், அதுவே இந்தப் பரணிக்குப் பெயராக இருக்கலாம். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது விக்கிரம சோழன் உலா என்னும் நூலை இயற்றியிருப்பதும். அவர் அவ்வரச னுடைய அவைக்களப் புலவராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கன. ஒட்டக் கூத்தர் இயற்றிய தென்தமிழ்த் தெய்வப் பரணி கிடைக்கவில்லை. 7. வேறு பரணி நூல்கள் முதலாம் இராசேந்திர சோழனுடைய மகன் இராசாதிராசன், இளவரசனாக இருந்தபோது கொப்பத்துப் போரை வென்றதை மேலே கூறினோம். இராசாதிராசன் கி.பி. 1044 முதல் 1054 வரையில் அரசாண்டான் என்பர். இவன் முடிசூடிய பின்னர், மேலைச்சளுக்கிய அரசனுடன் மூன்று முறை போர்செய்தான். இரண்டு தடவை போர் வென்றான். மூன்றாவது முறை, போர்க்களத்தில் யானைமேலிருந்த படியே உயிர்விட்டான். ஆகவே, “கல்யாணபுரமும் கொல்லாபுரமும் எறிந்து யானைமேற் றுஞ்சின உடையார் விசய ராசேந்திர தேவர்” என்று புகழப்படுகிறான். மூன்றாவது முறை இவ்வரசன் போரில் இறந்த போதிலும், வெற்றி பெற்றவர் சோழரே. முன்பு இரண்டு தடவை இவன் சளுக்கியருடன் செய்த போரில் வெற்றிபெற்றதைப் பாராட்டி இவன் மீது ஒரு பரணி நூல் பாடப்பட்டது என்பதை ஒரு சாசனம் கூறுகிறது. அச்சாசன வாசகம் வருமாறு: “கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானக மிருவர்க்கருளிக் கானகம் ஒருவனுக் களித்துப் பொருசிலைச் சேரலன் வேலைகெழு காந்தளூர்ச் சாலைக் கலமறுப்பித்து இலங்கையற் கரைசையும் அலங்கல் வல்லபனையுங் கன்ன குருச்சியர் காவலனையும் பொன்னணி முடித்தலை தடிந்துதன் கொடிப்படை ஏவிக் கன்நாடகர் விடு கரிபுரளத் தந்நாடையிற்(?) தமிட்பரணி கொண்டொன்னார் வச்சிர நெடுவாள் விச்சயன் வெருவி நெளித் தஞ்சியோடத் தன் வஞ்சியம் படையால்” வென்ற கோவிராசகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கியாண்டு 33 ஆவது.44 இதனால், இவ்வரசன்மீது ஒரு பரணிநூல் இயற்றப்பட்ட தென்பது தெரிகிறது. இப்பரணியைத் தமிட் பரணி (தமிழ்ப் பரணி) என்று சாசனம் கூறுகிறது. இப்பரணியின் உண்மைப் பெயர் இதுதானா அல்லது வேறா என்பது தெரியவில்லை. இந்தப் பரணியைப் பாடியவர் யார் என்பதும் தெரியவில்லை. வடஆர்க்காட்டு மாவட்டம், குடியாத்தம் தாலூகா, அம்முண்டி கிராமத்தில் உள்ள முப்பனை ஈசுவரம் உடையார்கோவிலில் உள்ள சாசனம் ஒன்று, கோவிராஜகேசரி பன்மரான சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவரின் 14ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அந்தச் சாசனத்தில், பரணியிரண்டும் ஒருவிசை கைக்கொண்டு என்று கூறப்படுகிறது.45 இந்தப் பரணிகளின் பெயர் கூறப்படவில்லை. அப்பரணிகளைப் பாடியவர் பெயரும் தெரியவில்லை. இதனால், சில பரணி நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்து பின்னர் அழிந்துவிட்டன என்பது தெரிகின்றது. 8. வீரமாலை வீரமாலை என்னும் நூலைப் புலவர் பாண்டி கவிராசர் என்பவர் இயற்றினார் என்னும் செய்தி, புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல் லெழுத்துச் சாசனத்தினால் தெரிகிறது. இந்தச் சாசனம். புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா, ராங்கியம் என்னும் ஊரில் உள்ள பூமீசுவரர் கோவிலின் தென்புறச் சுவரில் இருக்கிறது. இந்தச் சாசனத்தின் வாசகம் இது. “ரொத்திரி வருஷம் தைய் மாதம் 302 ஸ்ரீமது வெங்கள நாயாக் கரய்யன் காரியத்துக்கு கர்த்தரான தீத்தாரியப்பரும் பொன்னமராபதி நாட்டுத் தென்பற்று இராசிமங்கலம் ஊரவரும் புலவர் பாண்டி கவிராசர் வீரமாலை பாடுகையில் இவற்கு இறையிலியாக விட்ட நிலம் மறவனேறி வயலில் வெம்படிப் புலவர் செய் அஞ்சாள் நடுகையும் சந்திராதித்தர் வரைக்குபற்றி அனுபவிக்க கடவராகவும் இதுக்கு யாதா மொருத்தர் இதுக்கு இரண்டு நினைத்தவன் கெங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற தோசத்திலே போகக் கடவராகவும். இப்படிக்கு ஏறக் குடையான் ஆன பொய்சொல்லா மெய்யன் எழுத்து.”46 இந்தச் சாசனத்தினால், வெங்கள நாயக்கரய்யன் மீது இந்த வீரமாலை பாடப்பட்டது என்பது தெரிகிறது. வெள்ள நாயக்கர் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்று தெரிகிறபடியால், இந்நூல் அக்காலத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 9. பேர்வஞ்சி புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா, பொன்னமராபதி என்னும் ஊரில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் சாசனம் ஒன்று பேர்வஞ்சி என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. மறமாணிக்கர் என்னும் வீரர்களின் சிறப்பை, திருவரங்குள முடையான் என்னும் புலவர் பேர்வஞ்சி என்னும் நூலில் பாடினார் என்றும், அந்நூலை அரங்கேற்றக் கேட்டு மகிழ்ந்த வீரர்கள் இப்புலவருக்கு மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்னும் சிறப்புப் பெயரைக் கொடுத்து, தூத்துக்குடியில் நன்செய் புன்செய் நிலங்களைப் பரிசிலாக வழங்கினார்கள் என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனத்தின் வாசகம். வருமாறு: “ஸ்வஸ்தி ஸ்ரீ. சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு பதினொன்றாவதி னெதிராமாண்டு: புறமலை நாட்டுப் பொன்னமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் பேர்வஞ்சி கேட்டுப் பரிசிலாக குடு(த்)த (வந்) திருவரங்குள முடையானுக்கு மறச் சக்கரவர்த்திப் பிள்ளையென்று பேருங்குடுத்து தூத்திக்குடி வயலில் வடபாகம் விளைநிலமும் இதுக்கெல்லையான புன்செய்களும் முன்பு எழுதி அணித்து குடத்த செ(ய்யி-ன்-படி-) சந்திராதித்தவரை இறையிலியே காணியாகக் குடுத்தொம். “இதுக்குப் பொன்னமராபதிப் பெருமான் திருநாமத்தும் இயல் விண்ணப்பஞ் செய்வாராகவும். “தான் வரி எப்பேற்பட்டனவும் இறுக்கக் கடவதல்லவாக. இப்படி சம்மதித்துக் கல் வெட்டிக் குடுத்தோம். “(பன்மாஹேஸ்வ)ரர் ரக்ஷை. இதில் தூத்திக்குடியில் நன்செய் புன்செய் உள்ளவை அடங்கலும் தேவன் திருவரங்குள முடையானான மறச்சக்கரவர்த்திய பிள்ளைக்கு நன்செய் புன்செய் பாதியும் தமிழரை யருள்ளிட்ட நால்வர்க்குப் பாதியுமாக இட்டோம். அவனி நாராயண தேவரும் பொன்னமராபதி முதல்லாகிய முதலிகளோம். வடகூறு இவர்களுக்கு சந்திராதித்தவரை செல்வதாகவும். திருநாளுங் ... ... செய்விப்பார். மஹேஸ்வர ராக்ஷை.”47 இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியதேவர் என்னும் பாண்டியன், கி.பி. 13-ஆவது நூற்றாண்டின் முற்பகுதியில் அரசாண்டவன். இந்தப் பாண்டியனுடைய படையின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர் மறமாணிக்கர் என்னும் பெயரினர் இவர்களுடைய வீரத்தையும் வெற்றியையும் கூறுவது. பேர்வஞ்சி என்னும் நூல். பேர்வஞ்சி. எனினும் பெருவஞ்சி எனினும் ஒக்கும். பேர்வஞ்சி பாடிய புலவருக்குத் தேவன் திருவரங்குளமுடையான் என்னும் பெயர் இருப்பதனாலும், மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்னும் சிறப்புப் பெயர் சூட்டப்பட்ட படியாலும், இவர் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருதத்தகும். இவர் இயற்றிய பேர்வஞ்சியைப் பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை. இந்நூல் சரித்திரச் செய்திகள் சிலவற்றை அறிவதற்குத் துணையாயிருக்கும் இந்நூல் கிடைக்கவில்லை. இலக்கிய நூல்கள் III. காவியம் 1. பழைய இராமாயணம் அகவற்பாவினால் இயற்றப்பட்ட பழைய இராமயணம் ஒன்று இருந்ததென்பது, ஆசிரியமாலை என்னும் தொகை நூலிலிருந்து தெரிகிறது. ஆசிரியமாலை, ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுளைக் கொண்ட நூல். ஆசிரிய மாலையும் இறந்துபோன நூலே. அதிலிருந்து சில செய்யுள்களைப் புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்துள்ளனர். ஆசிரியமாலையில் தொகுக்கப்பட்டிருந்த பழைய இராமாயணச் செய்யுள்களில் ஐந்து செய்யுள்கள் புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே தருகிறேன்: “மாமுது தாதை யேவலி னூர்துறந்து கானுறை வாழ்க்கையிற் கலந்த விராமன் மாஅ விரலை வேட்டம் போகித் தலைமகட் பிரிந்த தனிமையன் றனாது சுற்றமுஞ் சேணிடை யதுவே முற்றியது நஞ்சுகறை படுத்த புன்மிடற் றிறைவ னுலகுபொதி யுருவமொடு தொகைஇத் தலைநாள் வெண்கோட்டுக் குன்ற மெடுத்த மீளி வன்றோ ளாண்டகை யூரே யன்றே சொன்முறை மறந்தனம் வாழி வில்லு முண்டவற் கந்நா ளாங்கே. 1 மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக் குவளை நிறனும் பாழ்பட இலங்கை யகழி மூன்று மரக்கியர் கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து பெருநீ ருகுத்தன மாதோ வதுவக் குரங்குதொழி லாண்ட விராமன் அலங்குதட றொள்வா ளகன்ற ஞான்றே. 2 இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை எண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை எச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற் கடல்சூ ழரணம் போன்ற உடல்சின வேந்தன் முற்றிய வூரே.” 3 இந்தச் செய்யுள், தொல், புறத்திணை. 12ஆம் சூத்திரஉரையில் நச்சினார் கினியராலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “மேலது வானத்து மூவா நகருங் கீழது நாகர் நாடும் புடையன திசைகாப் பாளர் தேயக் குறும்புங் கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் றந்த பல்வேறு விழுநெறி யெல்லா மவ்வழிக் கண்ணுதல் வானவன் காதலி னிருந்த குன்றேந்து தடக்கை யனைத்துந் தொழிலுறத் தோலாத் துப்பிற் றாணிழல் வாழ்க்கை வலம்படு மள்ளர்க்கு வீசி யிலங்கையில் வாடா நொச்சி வகுத்தனன் மாலை வெண்குடை யரக்கர் கோவே. 4 இருபாற் சேனையும் நனிமருண்டு நோக்க முடுகியற் பெருவிசை யுரவுக்கடுங் கொட்பின் எண்டிசை மருங்கினு மெண்ணிறைந்து தோன்றிலும் ஒருதனி யனுமன் கையகன்று பரப்பிய வன்மரந் துணிபட வேறுபல நோன்படை வழங்கி யகம்பன்றோள் படையாக வோச்சி ஆங்க, அனும னங்கையி னழுத்தலிற் றனாது வன்றலை யுடல்புக்குக் குளிப்ப முகங்கரிந் துயிர்போகு செந்நெறி பெறாமையிற் பொருளகத்து நின்றன நெடுஞ்சேட் பொழுதே”. 5 “கடலு மலையுந் நேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் தம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே.” 6 இச்செய்யுளை நச்சினார்க்கினியர், தொல். பொருள். புறத்திணை, 21 ‘கட்டில் நீத்த பால்’ என்பதன் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். 2. ஜைன இராமாயணம் தமிழில் செய்யுள் நடையில் இயற்றப்பட்ட ஜைன இராமாயண நூல் ஒன்று இருந்தது. அந்த நூல் இப்போது இறந்துவிட்டது. ஆனால், அந்த நூலிலிருந்து சில செய்யுள்களை ஸ்ரீபுராண ஆசிரியர் தமது ஸ்ரீ புராணத் தில் (முநிஸுவ் ரத சுவாமி புராணத்தில்) மேற் கோள் காட்டியிருக்கிறார். முநிஸுவ்ரத சுவாமி என்னும் 20ஆவது தீர்த்தங்கரர் வாழ்ந் திருந்த காலத்தில், பலதேவ வசுதேவர்கள் இராம லக்ஷ்மணர்களாகவும், பிரதி வசுதேவர் இராவணனாகவும். பிறந்து தம்முள் போர்செய்த வரலாற்றைக் கூறுவது ஜைன இராமாயணமாகும். வால்மீகி இராமாயணத்துக்கும் ஜைன இராமாயணத்துக்கும் கதைப் போக்கில் சில வேறுபாடுகள் உண்டு. அவற்றில் முக்கிய மானவை: இராமனை ஒருவரும் 14 ஆண்டு காட்டுக்கு அனுப்பவில்லை: தசரதன் இறந்துவிடவில்லை. இராமனும் சீதையும் தாங்களாகவே இயற்கைக் காட்சியைக் காணச் சித்திரகூடம் என்னும் காட்டில் சென்றிருந்தபோது இராவணன் சீதையைச் சிறைப்படுத்தினான். சூர்ப்பனகை என்பவள் இராவணனுடைய தங்கையல்லள்: இராவணனுடைய பணிப் பெண்களில் ஒருத்தி. சூர்ப்பனகையை இலக்குமணன் மூக்கை அரிய வில்லை. இராமன் வாலியை மறைந்து கொல்லவில்லை. வாலி, போர்க் களத்தில் இலக்குமணனாலேயே கொல்லப்பட்டான். இவ்வாறு ஜைன இராமா யணம் கூறுகிறது. இனி, முநிஸுவ்ரத சுவாமி புராணத்தில் கூறப்படுகிற ஜைன இராமாயணத்தின் சில விஷயங்களை இங்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அவை என்னவென்றால்: இரத்தினபுரத்து அரசன் பிரஜாபதி: அரசி குணகாந்தை. இவர்களுக்கு சந்திரசூளன் என்னும் மகன் பிறந்தான். பிரஜாபதி அரசனுடைய அமைச்சன் நரபதி என்பவனுக்கு விஜயன் என்னும் மகன் பிறந்தான். அரச குமாரனாகிய சந்திரசூளனும் மந்திரி மகனாகிய விஜயனும் ஒருங்கே வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்தார்கள். அப்போது, அந்நகரத்து வணிகனாகிய கௌதமன் என்பவன் தன் மகனான ஸ்ரீதத்தனுக்கு, குபேரதத்தன் என்னும் வணிகன் மகளாகிய குபேரதத்தையை மணஞ் செய்வித்தான். சந்திரசூளனும் அமைச்சன் மகன் விஜயனும் திருமண வீட்டில் புகுந்து, மணமகளாகிய குபேரதத்தையைக் கவர்ந்து கொண்டு, அரண்மனைக்குக் கொண்டு போய்விட்டார்கள். உடனே மணமக்களின் சுற்றத்தார்களும் நகர மக்களும் அரசனிடம் சென்று அரசகுமாரன் செயலைக் கூறி முறை யிட்டார்கள். அரசன் தன் மகனை மிகவும் சினந்து, அவனையும் அவனுக்குத் துணையாயிருந்த அமைச்சன் மகனையும் காட்டிற்குக் கொண்டுபோய்க் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அங்கிருந்தவர், ‘இச்சிறுவர்களுக்கு இக்கொடிய தண்டனை விதிப்பது தகாது; தண்டனையைக் குறைக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டும் அரசன் இணங்காமல் கொலைத் தண்டனையே விதித்தான். அமைச்சன், அரசனை வணங்கி, ‘இந்தத் தண்டனையை நானே நிறைவேற்றுவேன்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டு. குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குப் போனான். காட்டிற்குப் போய், குமாரர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு மரணம் உறுதி’ என்று கூறினான். குமாரர்கள், ‘மரணத்துக்கு நாங்கள் அஞ்சவில்லை’ என்று கூறினார்கள். அப்போது, அங்கிருந்த மலையின் மேலே மகாபலர் என்னும் முனிவர் தவம் செய்வதைக் கண்டு, அமைச்சன் குமாரர்களை அவரிடம் அழைத்துப் போனான். அந்த முனிவர், குமாரர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்து, ‘இவர்கள் நல்ல புண்ணியம் செய்து பிற் பிறப்பிலே இராமர் இலக்குமணர் என்னும் பெயருள்ள பலதேவ வசுதேவர்களாகப் பிறப்பார்கள்” என்று நிமித்தம் கூறினார். அமைச்சன், குமாரர்களை முனிவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தான். முனிவர் அவர்களுக்குத் துறவு கொடுத்துத் தவம் செய்யச் சொன்னார். சிறுவர்கள் தவம் செய்து காலாந்தரத்தில் தேவலோகத்தில் தேவர்களாகப் பிறந்தார்கள். பின்னர் அத்தேவர்கள் தசரத மகா ராஜனுக்கு மக்களாகப் பிறந்து இராமன் என்றும் இலக்குமணன் என்றும் பெயர் பெற்று வளர்ந்தார்கள். இராமன் வெள்ளை நிறமும், இலக்கு மணன் நீல நிறமும் உடையவராக இருந்தார்கள். இராமனுக்கு மணம் செய்ய நினைத்துத் தசரதன் ஜனகராஜன் மகள் சீதையை மணம் பேசத் தூதுவர்களை அனுப்பினான். ஜனகராஜன் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, தான் ஒரு யாகம் செய்யப்போவ தாகவும், அந்த யாகத்துக்கு இராம இலக்குமணர்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும், யாகம் முடிந்தவுடனே இராமனுக்குச் சீதையை மணம் செய்விப்பதாகவும் விடையளித்தான். இச்செய்தியைத் தூதர்கள் வந்து தசரதனிடம் கூறினார்கள். அப்போது ஆகமசாரன் என்னும் அமைச்சன் தசரத அரசனைப் பார்த்துக் கூறினான்: “ஐனகராசன் செய்யப்போகிற பிராணி இம்சை யுள்ள யாகம் கொள்ளத்தக்கதன்று, முற்காலத்தில் சகரராசனைப் பிராணி இம்சை யாகம் செய்யும்படி மகாகாளன் என்பவன் சூழ்ச்சி செய்து சகர குடும்பத்தை நாசமாக்கினான்” என்று கூறி அந்த வரலாற்றைக் கூறினான்: சாரணயுகளம் என்னும் நகரத்தில் சுயோதனன் என்னும் அரசனும், அதிதி என்னும் அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குச் சுலசை என்னும் ஒரு மகள் பிறந்தாள். அந்த மகள் வளர்ந்து மணப்பருவம் உள்ள மங்கையானாள். அதனால், சுயோதன அரசன் அவளுக்குச் சுயம் வரத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான். திருமணத்திற்குப் பல நாட்டு அரசர்களும் வந்திருந்தார்கள். சுலசையின் மாமன் மகனான மது பிங்களன் என்னும் அரசகுமாரனும் வந்தான். அயோத்தியரசன் சகரன் என்பவனும் சுயம்வரத்துக்குப் போகப் புறப்பட்டான். அவன் தலைக்கு வாசனை எண்ணெய் பூசி அலங்கரித்த போது ஒரு நரைமயிரைக் கண்டு, பணியாளன் அதனை அரசனுக்குக் காட்டினான். தன்னுடைய நரைமயிரைக் கண்ட சகரராசன், சுலசை தனக்கு மாலையிடமாட்டாளே என்று கவலை கொண்டு, அவளைத் தந்திரத்தினால் அடைய விரும்பினான். தன் பணிப்பெண்ணாகிய மண்டோதரி என்பவளை அழைத்து, எப்படியாகிலும் சுலசையைத் தனக்கே மாலையிடும்படி செய்யவேண்டும் என்று கூறினான். அதற்கு அவள் அவ்விதமே சூழ்ச்சி செய்வதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டு, சாரணயுகள நகரம் சென்று சுலசையின தோழியாக அமர்ந்து, சகர மன்னனுடைய குணங்களைப் புகழ்ந்து பேசி, அவன்மேல் அவளுக்கு விருப்பம் உண்டாகும்படி செய்தாள். இதனையறிந்த சுலசையின் தாயாகிய அதிதி, சுலசையை அழைத்து இவ்வாறு கூறினாள்: “என்னுடைய தமயனும் உன்னுடைய மாமனுமாகிய திருணபிங்களன் மகன் மதுபிங்களன் உளன். அவன் நல்ல அழகும் இளமையும் உள்ளவன். உன்மீது மிக்க அன்புள்ளவன். அவனுக்கே மாலையிடுவது நன்மையாகும்” என்று கூறினாள். மணமக ளாகிய சுலசை அவ்வாறே தன் மாமன் மகனாகிய மதுபிங்களனுக்கு மாலையிட இசைந்தாள். இந்தச் செய்தியை மண்டோதரி அறிந்து, தன் யத்தனம் வீணானதை யுணர்ந்து, சகர அரசனிடம் சென்று நிலைமையை அவனுக்கு உரைத்தாள். அப்போது, அவன் அமைச்சனான விஸ்வபூ என்பவன், தான் அந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொன்னான். சகர அரசன் மனம் தேரினான். அமைச்சனான விஸ்வபூ, “வரலக்ஷணாதி சுயம்வர சாஸ்திரம்” என்னும் பெயருள்ள போலி நூல் ஒன்றைத் தானாகவே எழுதி, அதனைச் சுயோதன அரசனுடைய பூஞ்சோலையில் ஒருவருமறியாமல் புதைத்துவைத்தான். பிறகு, தோட்டக்காரனை அவ்விடத்தில் தோண்டச் செய்து, அந்தச் சுவடியை எடுத்து அரசனிடம் கொடுக்கும்படியும் சூழ்ச்சிகள் செய்தான். தோட்டக்காரன் தான் கண்டெடுத்த சுவடியைச் சுயோதன அரசனிடம் கொடுக்க, அரசன் சபையில் அதனைவாசிக்கச் சொன்னான். அதில் எழுதப்பட்டிருந்த பல விஷயங்களில் ஒன்று, எவ்வளவு அழகனாக இருந்தாலும் பிங்கள நிறம் உள்ள கண்ணுள்ளவனுக்கு மாலையிடக்கூடாது: அத்தகையவனுக்கு மாலையிட்டால் மணப்பெண் மரணமடைவாள் என்பது. இதைப் படித்த போது, சபையில் இருந்தவர், பிங்கள நிறமுள்ள கண்ணையுடையவனான மதுபிங்களன் என்னும் அரசகுமாரனைப் பார்த்தார்கள். மதுபிங்களன் வெட்கம் அடைந்தான். சபையில் உள்ளவர் எல்லோரும் அடிக்கடி தன்னையே பார்ப்பதனால், வெட்கமடைந்த மதுபிங்களன், இனி சுலசை தனக்கு மாலையிட மாட்டாள் என்று அறிந்து, அந்நகரத்தை விட்டுப் போய்விட்டான். பின்னர் நடைபெற்ற சுயம்வரத்தில், சுலசை சகரராசனுக்கு மாலையிட்டாள். ஆகவே, சகரன் சுலசையை மணந்து தன் நாடு சென்றான். மனமுடைந்து சென்ற மதுபிங்களன், வாழ்க்கையை வெறுத்தவனாய், ஹரிசேனர் என்னும் முனிவரிடம் சென்று துறவு பூண்டான். துறவு பூண்ட மதுபிங்களன் ஒரு நாள் ஓர் ஊரில் வீதியில் பிச்சைக்காகச் சென்றான். அப்போது அவனைக் கண்ட ஒரு சோதிட நூல் வல்லவன் அவனைக் கூர்ந்து பார்த்து, ‘இந்த அங்கலக்ஷணங்களையுடைய இவன் அரசபோகத்தில் இருக்கவேண்டியவன். இவன் பிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது. நான் கற்ற சோதிட நூல் பொய் போலும்’ என்று கூறித் தன்னிடமிருந்த சோதிட நூலைக் கிழிக்கத் தொடங்கினான். அப்போது அங்கிருந்த ஒருவன் சோதிடனைத் தடுத்து. “உன்னுடைய சோதிட நூல் பொய்யன்று: உண்மையில் இந்தத் துறவி அரசகுமாரன்தான். சுலசை என்னும் அரசகுமாரி இவனுக்கு மாலை யிடாதபடி தடுத்துத் தனக்கு மாலையிடும்படி சகரராசன் செய்த சூழ்ச்சி யினால் இந்த அரசகுமாரன் துறவு பூண்டு பிச்சை ஏற்கிறான்” என்று கூறி எல்லாச் செய்தியையும் ஆதியோடந்தமாகக் கூறினான். அவன் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துறவியாகிய மதுபிங்களன், சூழ்ச்சியிலே தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தான். தன்னை வஞ்சித்துத் தன் வாழ்க்கையைக் கெடுத்த சகரராசனை எப்படி யாகிலும் அடியோடு நாசம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டான். பிறகு மதுபிங்களன். உயிர்நீத்து, மகாகாளன் என்னும் அசுரனாகப் பிறந்து ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு. சகர அரசனை நாசம் செய்யச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, பர்வதன் என்னும் பெயருள்ள பிராமணன், பிறவியிலேயே மகாமூடனாய் தான் கற்ற கல்வியின் பொருளை நன்குணராதவனாய். பலராலும் இகழப்பட்டு அவமானம் அடைந்து காட்டு வழியே சென்றுகொண்டிருந்தவனை, கிழப் பிராமண வடிவத்துடன் வந்த மகாகாளன் கண்டு கைதட்டிக் கூப்பிட்டான். கூப்பிட்டு, பர்வதனுடைய வரலாறுகளை விசாரித்தான். பர்வதன் தன் வரலாற்றைக் கூறினான். பர்வதன் மகாமூடன் என்பதையும், தான் கொண்டதைச் சாதிக்கும் குணம் உள்ளவன் என்பதையும் தெரிந்து கொண்ட மகாகாளன், இவனே தன் எண்ணத்தை நிறைவேற்றத் தகுந்தவன் என்று தேர்ந்து, அவனைப் பலவாறு புகழ்ந்து பேசினான். பர்வதன், மகாகாளன் வயப்பட்டான். பிறகு மகாகாளன் பர்வதனைச் சகரனிடம் அனுப்பி, மிருக இம்சையுள்ள யாகத்தைச் செய்யும்படி செய்து, சுலசையையும் சகரனையும் கொன்று அக்குடும்பத்தையே நாசமாக்கினான். இந்தப் பழைய கதையை ஆகமராசன் சொல்லியதைக் கேட்ட தசரதன் வியப்படைந்தான். அப்போது, மகாபலன் என்னும் அமைச்சன் தசரதனுக்கு இவ்வாறு கூறினான்: “ஜனகராசன் எந்த யாகம் செய்தால் நமக்கென்ன? இராமலக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினால் அவர்களுடைய ஆற்றலை அங்குள்ளவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் நடைபெறும்” என்று கூறியதைக் கேட்ட தசரதன், இராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினான். ஜனகன் யாகத்தைச் செய்து முடித்து, சீதையை இராமனுக்குத் திருமணம் செய்வித்தான். பிறகு இராமலக்ஷமணர் சீதையுடன் அயோத்தித்குத் திரும்பிவந்தார்கள். தசரதன் தனது பழைய ராஜ்யமாகிய காசி தேசத்து வாரணாசி நகரத்துக்கு இராமனை அனுப்பி, அவனை அங்கு அரசனாக்கினான். இலக்ஷ்மணனும் இராமனுடன் வசித்து வந்தான். ஒரு நாள் நாரத முனிவன், இராமலக்ஷ்மணரின் சபைக்குச் சென்றான். நாடக நடனங்களில் மனத்தைச் செலுத்தியிருந்த இராம லக்ஷ்மணர்கள் நாரதனை வரவேற்கவில்லை. அதனால் சினமடைந்த நாரதன், ‘சீதையை இராமனிடமிருந்து பிரித்துவைத்து இவர்களை மான பங்கம் செய்வேன்’ என்று எண்ணினவனாய், நேரே இலங்கைக்குச் சென்று இராவணனைக் கண்டு, சீதாலக்ஷ்மியின் அழகை அவனிடம் புகழ்ந்து பேசினான். “இராமனுடன் ஆசனத்திலிருந்த சீதாலக்ஷ்மியைக் கண்டு வியப்படைந்தேன். இலங்கேசுவரனாகிய இராவணனுக்கு, இராமனைப் போன்று காமசுகம் இல்லையே என்று மனங்கவன்றேன்” என்று கூறினான். அப்போது இராவணனுக்குச் சீதையைத் தான் அடைய வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதனைத் தெரிந்து கொண்ட நாரதன். தனது சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, “இராமன், பல அரசர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டிருக்கிறான். அவனை யுத்தம் செய்து வெல்ல உன்னால் முடியாது. ஆகையால், சீதையை நீயடைய வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டுவிடு” என்று கூறி, அறிவுரை கூறுவதுபோல அவனுக்கு ஆவலை யுண்டாக்கினான். நாரதன் சென்ற பிறகு சீதாலக்ஷ்மியைத் தான் அடையவேண்டும் என்னும் எண்ணம் இராவணனுக்கு அதிகப்பட்டது. ஆகவே, அவன் சூழ்ச்சி செய்தான். கணவன் மனைவியைப் பிரித்துவைப்பதிலும் சேர்த்துவைப்பதிலும் கைதேர்ந்த வித்தைக்காரியான சூர்ப்பனகை என்னும் பணிப்பெண்ணை அழைத்து, அவளிடம் தன் கருத்தைக் கூறி அவளைச் சீதையிடம் அனுப்பினான். அவள் வாரணாசி சென்று சீதையிடம் பல சூழ்ச்சிகளைச் செய்துபார்த்தாள். கடைசியில் சீதை கற்புக்கரசி என்பதை அறிந்து, தன் சூழ்ச்சி பலிக்காமல் திரும்பிவந்து, இராவணனிடம் சீதையின் கற்பைப் புகழ்ந்துரைத்தாள். பிறகு, இராவணன் தனது அமைச்சனான மாரீசன் உதவியினால் சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டு போய் இலங்கையில் சிறைப்படுத்தினான். இதையறிந்த இராமன், சேனையுடன் சென்று இராவணனுடன் போர் செய்து, சீதையை மீட்டுக்கொண்டு வந்தான். இதுவே ஜைன இராமாயணத்தின் கதைச்சுருக்கம். இந்தக் கதையைத்தான் ஜைன இராமாயணம் என்னும் காவியம் கூறுகிறது. இந்த இராமாயணம் இப்போது இறந்து விட்டது. ஆனால், இதிலிருந்து சில செய்யுள்கள் ஸ்ரீபுராணம் என்னும் வசன நூலில் மேற் கோள் காட்டப்பட்டுள்ளன. ஜைன இராமாயணத்தைச் செய்யுளாகப் பாடிய ஆசிரியர் யார் என்பதும், அவர் எக்காலத்தில் இந்நூலை இயற்றினார் என்பதும், இந்நூலுக்கு அவர் என்ன பெயரிட்டிருந்தார் என்பதும் தெரியவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட இந்தச் செய்யுள் களை நோக்கும்போது, இந்த நூல் சிறந்த உயர்ந்த காவியமாகத்தான் இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. மணிப்பிரவாள வசனநடையில் உள்ள ஸ்ரீபுராணத்தில் மேற்கோள் காட்டப்பட் ஜைன இராமயாணச் செய்யுள்கள் இவை: “மழைலைவாய் மொழியின் மார்பின் வைத்துவா யமுத முண்டும் மழலையை விளித்து விஞ்சை யோதுநா ளஞ்சு வித்தும் உழையனார்ப் புணருங் காலைத் தோழரோ டொத்தும் இவ்வா றொழுகலா றொழிந்த நம்மால் உற்றதிக் குற்ற மென்றும்.” சந்திரசூளன், விஜயன் என்னும் வாலிபர் குபேரதத்தை என்னும் மணமகளைக் கவர்ந்து சென்றது பற்றி அவ்விளைஞர்களுக்கு அரசன் கொலைத்தண்டனை கொடுத்தபோது, அத்தண்டனை கடினமானது; அதனைக் குறைக்கவேண்டும் என்று அமைச்சர் முதலானோர் கேட்டுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கூறியது இச்செய்யுள். “பூகம்ப மாக நாகம் பொன்றின வுதிர ஒன்னார் நாகங்கள் மேகம் போல வீழநண் ணார்கள் சென்னி ஆகங்கள் காகங் கொள்ள அவரோடு மடிந்தி டாதே சாகின்ற சரகை எம்மைச் சாலவும் வருத்தும் என்றார்.” கொலைத்தண்டனை பெற்ற சந்திரசூளன், விஜயன் என்னும் வாலிபர்களை அமைச்சன் காட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், “உங்களுக்கு மரணம் உறுதி; அஞ்சாதீர்கள்” என்று கூறியபோது, அவர்கள் அமைச்சனுக்குக் கூறிது இச்செய்யுள். “கம்பித்த காலன் கோலன் கையன கறங்கு தண்டன் கம்பித்த சொல்லன் மெய்யைக் கரையழி நரையுஞ் சூடி வெம்பித்தன் னிளமை மண்மேல் விழுந்தது தேடுவான் போல் செம்பிற்சும் பிளித்த கண்ணன் சிறங்கணித் திரங்கிச் செல்வான்.” பர்வதன் என்னும் பிராமணன் காட்டு வழியாகச் சென்றபோது, மகா காளன் என்பவன் வயோதிகப் பிராமண வடிவம் கொண்டு எதிர்ப்பட்ட காட்சியைக் கூறுகிறது இச்செய்யுள். “அலைவட்டங் கிடந்த வல்குற் கதிபதி யாகும் பெற்றி கலைவட்டங் கிடந்த வல்குற் காரிகைக் கறிவித் தாயேல் முலைவட்டங் கிடந்த முத்த மாலைமென் முறுவ லாளென் சிலைவட்டங் கிடந்த தோளைச் செறிதற்கையுறவு முண்டோ” சீதையை வசப்படுத்தச் சென்ற சூர்ப்பனகை தன் முயற்சி கை கூடாமல் திரும்பிவந்து இராவணனிடம் சீதையின் கற்பின் உறுதியைக் கூறியபோது, இராவணன் அவளைச் சினந்து கூறியது இச்செய்யுள். “தொடர்த்தொடர்ப் படுவ தொக்கும் தொட்டிற் சுருக்கி மெய்யைக் கடக்கப்பாய்ந் திட இளைத்துக் கறுகினைக் கறித்துக் காதல் வடிக்கண்ணார் போல நோக்கும் ... .. ... .. ... .. ... .. ... .. ... அடுத்தடுத் தணுகும் நீங்கும் அணியது போன்று சேய்த்தாம்.” மாரீசன், மானுருவங் கொண்டு இராமனிடம் அகப்படாமல் அவனைத் தூரத்தில் அழைத்துச் சென்றதைக் கூறுகிறது. சிதைந்து போன இந்தச் செய்யுள். “உருமிடப் புண்ட வருமணி நாகமெனத் திருமணி நிலத்திற் றேவி சோர்ந்து செய்த பாவையின் மெய்திரி வின்றி மையலி னுயிர்த்து மடிந்துடன் கிடப்ப.” சீதாலக்ஷ்மியை இராவணன் அசோக வனத்தில் வைத்த பிறகு தனது உருவத்தைச் சீதைக்குக் காட்டியபோது அவள் சோர்ந்து மூர்ச்சை யடைந்த செய்தியைக் கூறுவது, இவ்வகவற்பா செய்யுட் பகுதி. “அறிவுற்றங் கெழுந்த பாவை யமருல கத்துச் சென்று பிறவிபெற் றவரைப் போல யாவிர்நீ ரிதுவென் என்ன அறிவித்தார் யாங்கள் விச்சா தரியரீ திலங்கை என்ன மறியத்தான் மயங்கி வீழ்ந்தாள் வழுத்தரு வாளை யொத்தாள்.” மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாலக்ஷ்மி தன் அருகிலிருந்த பணிப் பெண்களை ‘நீவிர் யார், இது எந்த ஊர்’ என்று கேட்டபோது, அவர்கள் இது இலங்கை, நாங்கள் விச்சாதரப் பெண்கள் என்று கூறக் கேட்டு, மீண்டும் மூர்ச்சை யடைந்ததைக் கூறுகிறது. இச்செய்யுள். “விம்முறு துயரிற் கொம்மென உயிரா விளைந்த தெல்லாம் உளங்கொள வுணரா எழுதுகண் ணருவி யினைந்தினைந் திரங்கலின் ஒழுகுபு பொழிய முழுகிய மேனியள் அழுதழு தலறி ஆ!ஓ! என்னும்; இணைபிரி யன்றிலின் ஏங்கி நீங்காத் துணைவனை நினைந்து சோகமீ தூர்தர வான்பழி சுமந்துநின் வளமலர்ச் சேவடி யான்பிரிந் தேதில னிடவயி னிடர்ப்பட மான்பின் ஏகிய மன்னவ னேயெனும்; மாயோன் செய்த மாய மானிடை மாயவன் செய்த மகிழ்ச்சிகண் டருளி ஆவதொன் றின்றி அதன்வழி யொழுகிய நாயக னேயெனை நணுகாய் வந்தெனும்; கொற்றவன் றுணையே குலவிளங் களிறே செற்றவர் செகுக்குஞ் சினத்தீ யுருமே மைத்துன மலையே மன்னவ னேயெனும்; நாற்கடற் பரந்தன வேற்படைத் தானையொடு கூற்றம் மொய்ம்பிற் கொடுஞ்சிலைத் தடக்கைத் தம்பித் துணைவனிற் றனிப்படப் பிரித்திட் டெம்பெரு மானை யென்வயி னிறுவி மற்றவன் செய்த மாய மானினை நோற்றி லாதேன் நோக்கிய நோக்கின் அருவினை யேனை அருளிய மனத்தால் மருவிய மாய வுருவுதாற் கெழுந்த வரிசிலைக் குரிசிலை மன்னர்பெரு மானை மான்மறி தொடர்ந்துசெல் வாளரி போலக் கானெறி விடுத்துக் கடுவனம் புகுத்தி மாயப் புணர்ப்பின் மன்ன வனைநினைந் தாயமுந் தாயருந் தோழியு மின்றியோர் நொதும லாளன் விதிவழி யொழுகி இடனிடை யிட்ட சேய்மைத் தன்றியுங் கடலிடை யிட்ட காப்பிற் றாகிய இலங்கை மூதூ ரிடுசிறைப் பட்டு மலங்கு விழிமான் வழிதொடர்ந் தருளிய மன்னவற் குற்றதும் இன்னதென் றறியா தின்னற் படவெனை இன்னண மிழைத்த வினையே வலிதே விளிதரல் புரிவாய் மனுவே யனையானை வார ணாசியில் தனியொரு மான்மறி தன்பின் விடுத்தே எனையுத் தனியே இவணிட் டதுவே.” “சுழல்விழித் தறுகண்வேழத் தடக்கைபோற்றிரண்ட தோளாய் உழைவிழி யார்சொற்கொண்டா ருறுவர்வெந் துயரமென்னும் பழமொழி யதனை யோர்ந்தும் பாவியேன் சொல்லைக் கேளா உழையின்பின் போன வேந்தே உனக்குற்ற தறிகி லேனே.” “அடலருந் திறலி னாயை வஞ்சித்திட் டஞ்ச வன்னப் பெடையுறு நடையி னாரிற் பெரியபா வஞ்செய் தேனைக் குடிலவாள் அவுணன் கொண்டு போயினா னென்ன ஒன்னா ருடைபுறங் காணல் நாணும் வீரனீ யுறுவ தென்னோ!” “எனவும் பலவும் புலம்பினள் புலம்பாக் கோம்பி கண்டு குலுங்குபு கலங்காச் சாம்பிய மஞ்ஞையிற் சாய்ந்தனள் கிடப்ப வித்யாதரிகள் விரும்பினர் சூழ்ந்து.” அசோகவனத்திலே சீதாலக்ஷ்மி தனது விதியை நினைத்தும், இராமனது நிலையை எண்ணியும் வருந்தியதைக் கூறுகின்றன இச்செய்யுள்கள். 3. சங்ககாலத்துப் பாரதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே மகாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. இந்தப் பாண்டிய சாசனம் சின்னமனூரில் கிடைத்தபடியால், சின்ன மனூர்ச் சாசனம் எனப்படுகிறது. சின்னமனூர் என்பது மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோவிலில் மடைப் பள்ளி கட்டுவதற்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிலத்தைத் தோண்டிய போது, இந்தச் செப்பேட்டுச் சாசனங்கள் கிடைத்தன. இவை பெரிய செப்பேடு, சின்ன செப்பேடு என இருவகைப்படும். இந்தச் சாசனங்கள் இப்போது சென்னை அரசாங்கக் காட்சிசாலையில் உள்ளன. இச்சாசனங்கள் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. சின்னமனூர் பெரிய செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில், பழைய பாண்டியரைப் பற்றிக் கூறும் பகுதியில், பாண்டியர் தமிழ்ச் சங்கம் வைத்தலும், அச்சங்கத்தில் மகாபாரதத்தைத் தமிழில் எழுதியதும் ஆகிய செய்தியும் கூறப் படுகிறது. அந்தப் பகுதி வருமாறு: “... ... ... ... பாக ஸாஸநனாரம் வவ்வியும் செம்மணிப் பூணொடு தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனை வேலொன்று விட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன்றாயிரம்மிசியும் பாழியம் பாயலி னிமிர்ந்தும் பஞ்சவ னென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர் கண்டும் மற்றதற்கு மதிள் வகுத்தும் உளமிக்க மதி அதனா லொண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர் தலைகளத் தவியப் பாரதத்திற் பகடோட்டியும் விஜயனை வசு சாப நீக்கியும் வந்தழியச் சுரம் போக்கியும் வசையில் மாக்கயல் புலிசிலை வடவரை நெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பல திருத்தி யும் அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க விருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும் மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மஹாராஜரும் ஸார்வபௌமரும் தம் மகிமண்டலங் காத்திகந்த பின், வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற் சங்கமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசப் பஞ்சவர் தோன்றலும் ... ... ... ... ...”1 இவ்வாறு சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டுச் சாசனம் கூறுகிறதி லிருந்து, சங்க காலத்தில் மகாபாரதம் தமிழில் எழுதிய செய்தி தெரிகிறது. இந்த மகாபாரதம் இப்போது கிடைக்கவில்லை. அதனைத் தமிழில் செய்த ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. 4. பெருந்தேவனார் பாரதம் கடைச்சங்க காலத்திலே இயற்றப்பட்ட பாரதம் மறைந்துவிட்ட தென்று கூறினோம். அதன்பிறகு, வேறு சிலபாரத நூல்கள் இயற்றப் பட்டன. பிற்காலத்து இயற்றப்பட்ட பாரதங்களில் பெருந்தேவனார் என்னும் பெயருள்ள இருவர் பாரதத்தைத் தமிழில் பாடினார்கள். இவ்விரு பெருந்தேவனார்களில் ஒருவர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் (மூன்றாம் நந்திவர்மன்) என்னும் பல்லவ மன்னன் காலத்தவர்: அந்த அரசனால் ஆதரிக்கப் பட்டவர். இவர் இயற்றிய பாரதம், பாரத வெண்பா என்னும் பெயர் பெற்று வழங்குகிறது. இடையிடையே ஒருசில ஆசிரியப் பாக்களைக் கொண்டு, பெரிதும் வெண்பாவினால் இயற்றப்பட்டது. இது, உத்தியோக பருவம், வீடும பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது. இந்தப் பெருந்தேவனாருக்கு முன்னர் வேறொரு பெருந் தேவனார் இருந்தார். அவரும் பாரதத்தைத் தமிழில் பாடியவர். ஆகவே, பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று கூறப்படுகிறார். இவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகிறார். இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச்சங்ககாலத்துப் புலவர்கள் இயற்றிய செய்யுள்களைத் தொகுத்த காலத்தில் இருந்தவராதல் வேண்டும். ஏனென்றால், இவர் அகநானூறு, புறநானூறு நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு முதலிய தொகைநூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய பாரதம் மறைந்து விட்டது.2 உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய (புறத் திணையியல், 17ஆம் சூத்திரம்) உரையில், பாரதச் செய்யுள்கள் சில வற்றை மேற்கோள் காட்டுகிறார், இச்செய்யுள் அகவற்பாக்களா லானவை. இச் செய்யுள்களை இயற்றியவர் பெயரையே நச்சினார்க் கினியர் குறிப்பிடவில்லை. ஆனால், இவை, பாரதம் பாடிய பெருந் தேவனார் (சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார்) இயற்றியதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றன. நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுகிற பாரதச் செய்யுள்கள் இவை: ஆதி சான்ற மேதகு வேட்கையின் நாளுங் கோளு மயங்கிய ஞாட்பின் மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர் செருக்கூர் தண்டி நெருக்கின ரெனவு மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியபடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கி வீழ்வன போல வொருவையின் வீழ்ந்தடு காலை யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே. 1 வானவர் போரிற் றானவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் றனாஅது பல்படை நெரிவு தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத்தறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடை பெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர் தலோ வரிதே. 2 நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்தியதுடன்றெதிர்த் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் தேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந் திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச் சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி யொன்னா மன்னரு மாடினர் துவன்றி யின்னா வின்ப மெய்தித் தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே. 3 மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி னைவகை வேந்தரோ டகும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியர் தனர் நயந்த விசும்பி னியன்றதலை யுலகமு மறிந்ததா லதுவே. 4 5. வத்தசராசன் பாரதம் திருவாலங்காட்டுக்கோவில் சாசனம் ஒன்று வத்சராசன் என்பவர் இயற்றிய ஒரு பாரதத்தைக் குறிப்பிடுகிறது.3 திரிபுவன தேவர் என்னும் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 32ஆவது ஆண்டில் எழுதப் பட்ட இந்தச் சாசனம் இதைக் கூறுகிறது. குன்றவர்த்தனக் கோட்டத்து இளத்தூர் நாட்டு அரும்பாக்கத்தில் வாழ்ந்திருந்த அறநிலை வாசகன் திரைலோக்ய மல்லன் வத்சராசன் என்பவர் தமிழில் பாரதத்தைப் பாடினார் என்று இச் சாசனம் கூறுகிறது. வத்சராசனுக்கு அருணிலை விசாகன் என்னும் பெயரும் உண்டு. இது இயற்றப்பட்ட காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இப்போது இந்தப் பாரதம் கிடைக்கவில்லை. 6. குண்டலகேசி சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளை யாபதி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் குண்டலகேசி கூறப்படுகிறது. இது குண்டலகேசி விருத்தம் எனவும் கூறப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் குண்டலகேசி கூறப்படுகிறது. இக்காவியத் தலைவியின் பெயர் குண்டலகேசி ஆகையால், அவள் பெயரே இந்நூலில் பெயராகச் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள், பகவன் கௌதமபுத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தவள். இவளுடைய வரலாறு பௌத்த நூல்களாகிய தேரிகாதை, தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும், நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூலிலும் கூறப்படுகின்றது. இராசகிருக நாட்டு அரசனுடைய அமைச்சனுக்குப் பத்திரை என்னும் பெயருள்ள கன்னிகை இருந்தாள். அவள் தனது மாளிகையில் இருந்தபோது ஒருநாள், அரசசேவகர் கள்ளன் ஒருவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அக் கள்ளனின் இளமை யையும் அழகையும் கண்ட பத்திரை அவன்மேல் காதல் கொண்டாள். இதனையறிந்த அவள் தந்தையாகிய அமைச்சன் கள்ளனை விடுவித்து, அவனுக்குத் தன் மகன் பத்திரையை மணஞ் செய்வித்தான். அவ்விரு வரும் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்து வருகிற காலத்து ஒருநாள் ஊடலின்போது, பத்திரை அவனை நோக்கி நீ கள்ளன் அல்லனோ’ என்று கூறினாள். அதைக் கேட்டுச் சினங்கொண்ட அவன், பின்பொரு நாள், பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். ஏறிய பின், அவளை மேலிருந்து உருட்டிக் தள்ளப்போவதாக கூறினான். நிலைமையை யுணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்கு முன்பு உம்மைவலம் வரவேண்டும்” என்று கூறி, அவனை வலம் வருவதுபோல் பின்சென்று அவனை ஊக்கித் தள்னினாள். அவன் மலையினின்று வீழ்ந்து இறந்தான். பிறகு பத்திரை வாழ்க்கையை வெறுத்தவளாய், அலைந்து திரிந்தவள், சமண சமயத்து ஆரியாங்கனைகள் வாழும் மடம் ஒன்றை அடைந்தாள். ஆரியாங்கனைகள், இவள் வரலாற்றையறிந்து, இவளைத் தமது பள்ளியில் சேர்த்துத் தமது சமய நூல்களையெல்லாம் கற்பித்தனர். சமணப் பள்ளியில் சேர்ந்தபோது, ஆரியாங் கனைகளின் வழக்கப்படி, பத்திரையின் தலைமயிர் மழிக்கப்பட்டது. மழிக்கப்பட்ட மயிர், பிறகு வளர்ந்து சுருண்டிருந்தது. ஆகவே, பத்திரை குண்டலகேசி என்று பெயர் பெற்றாள். கல்வியைக் கற்றுத் தேர்ந்த பத்திரை, சமயவாதம் செய்யப் புறப் பட்டு, சென்றவிடம் எல்லாம் நாவல் நட்டு, சமயவாதம் செய்துவந்தாள். ஒரு நாள் ஓர் ஊருக்குச் சென்று வழக்கம்போல் நாவற் கிளையை நட்டு வைத்து. ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றாள். அப்போது, கௌதம புத்தரின் மாணவராகிய சாரிபுத்தர் என்பவர் பிச்சைக்காக அவ்வூருக்கு வந்தவர், நாவற்கிளை நட்டிருப்பதைக் கண்டு. அதனைப் பிடுங்கி எறிந்துவிட்டு. ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றார். பிச்சை ஏற்று உணவு கொண்ட பின்னர், குண்டல கேசியும் சாரிபுத்தரும் நாவற்கிளை இருந்த இடத்திற்கு வந்தனர். நாவற்கிளையை வீழ்த்தியவர், வாதம் செய்யவேண்டுவது கடமையாகையால், இருவரும் சமயவாதம் செய்யத் தொடங்கினார்கள். நெடுநேரம் வாதப்போர் நடந்தது. குண்டலகேசி கேட்ட வினாக்களுக்கு சாரிபுத்தர் விடையளித்தார். பிறகு, சாரிபுத்தர் கேட்ட வினாக்களுக்கு விடையளித்துவந்த குண்டலகேசி, சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல், தனது தோல்வியை ஒப்புக்கொண்டாள், பிறகு, குண்டல கேசி, சாரிபுத்தரை வணங்கி, தன்னைப் பௌத்த மதத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாள். சாரிபுத்தர், குண்டலகேசியைப் பகவன் புத்தரிடம் அழைத்துச் சென்று, அவர் முன்னிலையில் பௌத்தத் துறவி யாக்கினார். பிறகு, குண்டலகேசி நெடுநாள் பௌத்தத் தேரியாக வாழ்ந்து கடைசியில் வீடுபேறடைந்தாள். குண்டலகேசியின் இந்த வரலாற்றினைக் கூறுவதுதான் குண்ட கேசி என்னும் பௌத்தக் காவியம். இக் காவியத்தை இயற்றியவர் நாத குத்தனார் என்னும் பௌத்தர் என்று நீலகேசி, 344ஆம் செய்யுள் உரை கூறுகிறது. சோழநாட்டில் இருந்த பௌத்த பிக்குவாகிய பேர்போன காசியப தோர், ‘விமதிவினோதனீ’ என்னும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையிலே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாகசேனரைக் கூறுகிறார். அவர் கூறுவது இது: “புப்பேகிர இமஸ்மின் தமிளாட்டே கோசிபின்ன லத்திகோ நாக சேனோ நாம தேரோ குண்டலகேசி வத்துன் பாவாத மதன நய தச்ச னத்தன் தமிள கப்ப ரூபேன கதராந்தோ.” இதன் பொருள்: “பழங்காலத்தில் இந்தத் தமிழ் நாட்டில் மாறுபட்ட கொள்கை யுடைய நகேசேனன் என்னும் ஒருதேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் ‘குண்டலகேசி’ என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.”4 இதனால், குண்டலகேசியின் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார் என்று நீலகேசியுரை கூறுவது தவறு என்பதும், நாகசேனர் என்பதே அவர் பெயர் என்பதும் தெரிகின்றன. நாகசேனர் வரலாறு முதலியன தெரியவில்லை. குண்டலகேசிச் செய்யுள்கள் வீரசோழிய உரையிலும் யாப்பருங்கல விருத்தியுரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதால், இந்நூல்களின் காலமாகிய கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குமுன் குண்டலகேசி இயற்றப்பட்டிருக்க வேண்டும். குண்டலகேசியில், சமண சமயக் கொள்கைகள் மறுக்கப்பட்டிருந்த படியால், அம் மறுப்புகளுக்கு விடையளிப்பதற்காகத் தோன்றியது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி என்னும் காவியம் இப்போது மறைந்து விட்டது. அக்காவியத்திலிருந்து சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள் ளன. புறத்திரட்டு, வீரசோழிய உரை, நீலகேசி உரை இவைகளில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன. குண்டலகேசியில் கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன. தெரியாத சொற்களும் அதில் இருந்தன. “குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்” என்றும், “குண்டல கேசி... ... முதலாக உடையவற்றிற் றெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதாகாதென்பது. அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருக்கும் என்றாலும் அமையும் எனக் கொள்க” என்றும், வீரசோழிய உரை இந்நூலைப் பற்றிக் கூறுகிறது. புறத்திரட்டு என்னும் நூலில் உள்ள குண்டலகேசிச் செய்யுள்கள் இவை: “உறுப்புகள் தாமுடன் கூடி யொன்றா யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக் குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ.” 1 “எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னது மாமோ.”5 2 “இறந்த நற்குணம் எய்தற் கரியவாய் உறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான் பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை அறங்கொள் கோலண்ணல் மும்மத யானையான்.” 3 “சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற் கூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துணை மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத் தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.” 4 “மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே யன்று வாய்மை நண்ணினார் திறத்துங் குற்றங் குற்றமே நல்ல வாகா மண்ணுளார் புகழ்தற் கொத்த விழுமியோ னெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டந் தன்மேற் கறையையார் கறையன் றென்பார்.” 5 “மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும் அறிவ தறிவா ரழுங்கா ருவவார் உறுவ துறுமென் றுரைப்பது நன்று.” 6 “முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று ஒன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா னன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே.”6 7 “நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார் போய்க்குற்ற மூன்று மறுத்தான் புகழ்கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல வன்றே.” 8 “வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.” 9 “போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள்மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலுள் நிற்றல் சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலையர் ஆதல் வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.” 10 “வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சி யென்றும் புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை தன்னால் தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்து மென்பார் அகையழ லழுவந் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ.” 11 “அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக் கனவினை யுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார் புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்.” 12 “போதர உயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும் ஊதியமென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரார் ஆதலா னழிதல் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா காதலா லழுது மென்பார் கண்ணணி களைய லுற்றார்.” 13 “அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மை மருவினாற் றீய வாகா வரம்பில்கா லத்து ளென்றும் பிரிவில மாகி தன்சொற் பேணியே யொழுகு நங்கட் கொருபொழு திரங்கமாட் டாக் கூற்றின்யா ருய்து மென்பார்.” 14 “பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங் காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும் மீளுவிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாட் சாகின் றாமல் நமக்குநா மழாத தென்னா.” 15 “கோள்வலைப் பட்டுச் சாவாங் கொலைக்களங் குறித்துச் சென்றே மீளினும் மீளக் காண்டும் மீட்சியொன் ருனு மில்லா நாளடி யிடுதல் தோன்று நம்முயிர்ப் பருகுங் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின் றாமே.” 16 “நன்கன நாறுமி தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயின் ஒன்பது வாயில்க டோறு முண்ணின் றழுக்குச் சொரியத் தின்பதொர் நாயு மிழுப்பத் திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தின் இன்பநன் னாற்ற மிதன்க ணெவ்வகை யாற்கொள்ள லாமே.” 17 “மாறுகொள் மந்தர மென்று மரகத வீங்கெழு வென்றுந் தேறிடத் தோள்க டிறத்தே திறத்துளிக் காமுற்ற தாயிற் பாறொடு நாய்க ளிசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய வித்தசை தன்மாட் டின்புற லாவதிங் கென்னோ.” 18 “வேரிக் கமழ்தா ரரசன் விடுகென்ற போழ்துந் தாரித்த லாகா வகையாற் கொலைசூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுத லென்றிவற் றாற்பொலி வின்றிநின்றான் பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான்.” 19 “‘துன்னார்க்கு மீர்ம்பால் சுரந்தான்’ இது குண்டல கேசி.”7 “‘மலைதோன்றப் பைத்தக மெரிப்பவும்’ ... ... ... இது குண்டல கேசி”8 என்று கூறுவர், தக்கயாகப் பரணி உரையாசிரியர். நீலகேசி நூலின் உரையாசிரியர். தமது உரையில் சில பௌத்த மதச் செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அச்செய்யுள் கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதைக் கூறவில்லை. அந்நூல் பதிப்பாசிரியர், அச்செய்யுள்கள் குண்டலகேசி நூலைச் சேர்ந்தவை என்று குறிப்பிடுகிறார். அச்செய்யுள்கள் இவை: “அற்றன் றாத லதுதா னறஞ்செய்தல் சொற்றன் மாட்டு நிகழ்த்தல்பின் னோர்த்தல் மற்றித் தன்மைப் படுமாயின் மாண்பிலார்க் குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார். 1 நிலைபெற வெல்லாரு நீத்தனக ளைந்தெனவுந் தலைவரு மிழுக்கெனத் தவிர்ந்தனவு மேனா ணிலைபெற வெல்லாரு நீத்தனயா வென்றான் கொலைகளவு கட்காமம் பொய்யெனாக் கூறினாள். 2 சென்றிறந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக டுன்றினன் பிறக்கன்ன னாயினன் மாமேருக் குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ. 3 இன்பஞ்சால் பெரும்பார மீரைந்து முடனிறைத்து நன்கென நிலைபெற்ற நாதன். 4 நலங்கிள ரொழுக்கந்தா னண்ணிய காலத்துக் கலங்குதற்குத் தக்கன கண்டன வுளவெனினுந் துலங்காது நிற்குந்தன் றுணிவுடைமை காணுங்கா னிலம்பூனை யாயொழியு நிறையினா னல்லனோ. 5 சென்றெய்து மவத்தையோ சிலவற்றாற் றரப்படுமோ வன்றியு மன்பொருள்தோ றவ்வத் தன்மையோ. 6 நின்றதூஉந் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ. 7 அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங் களையருந் துன்பத்துக் கற்பநூ றாயிரமும் விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியான் தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ. 8 நிலம்வலிது நீர்துவளும் தீத்தெறூஉங் காற்றுளரும் புலமாமா றிதுபொருள் வரையறுக்கு மாகாச நிலமாண்ட நாற்பூதஞ் சார்வாக வுவாதாக்கள் சொலமாண்ட வியற்கைதா னிறமுதலாச் சொலற்பாற்றே. 9 இறந்தது காரணமே வில்லதனாற் பிறப்பில்லை இறந்தின்று காரணமே லியைந்துள தென்றாளா விறந்ததற்கும் பிறந்ததற்கும் காலமொன் றாதலைச் சிறிதுணர்வு முறக்கத்தின் றீர்வுமே யுரையாதோ.” 10 சமண சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே குண்டலகேசி என்னும் பௌத்தக் காவியம் இயற்றப்பட்டது. குண்டலகேசியில் மறுத்துக் கூறப் பட்ட சமண சமயக் கொள்கைகளை மறுத்துத் தமது சமண சமயக் கொள் கைகளை நிலைநாட்டுவதற்காக நீலகேசி என்னும் சமண சமய நூல் பிற்காலத்தில் உண்டாக்கப்பட்டது. நீலகேசி, மொக்கலவாதச் சருக்கதத் தில், குண்டலகேசிச் செய்யுள்கள் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படுகிற குண்டலகேசிச் செய்யுள்களின் முதலடியின் முதற் சொற்களும் சொற்றொடர்களும் உரையாசிரியரால் தரப்படுகின்றன. இதிலிருந்து குண்டலகேசிச் செய்யுள்களின் முதற்சொற்களையும் சொற்றொடர்களையும் அறியலாம். அவற்றைக் கீழே தருகிறேன்:- 1. கருத்தினாற் பெற்றோமோ. 2. உடம்பளவிற்றுயிர். 3. பழுதை யாற் பாம்புண்டு. 4. கலப்பாடி. 5. எழும் பயிற்றி. 6. காலினாற் சுமந்துய் யப்பான். 7. மக்கட்பண் பழியாது. 8. இயற்றியவுடம்பு. 9. வினைநிற்க பயன். 10. தொல்லைக்கட் செய்யப்பட்ட. 11. அடுப்புத் துடைப்பம். 12. துடிக்கும் வண்ணத் தின்மையிலுயிர்களை. 13. துன்பந் தீவினையின் பயன். 14. நின்ற துன்பம். 15. ஓம்பல் வேட்கை. 16. போக வேட்கை. 17. வாயினல் வேட்கை களைவான். 18. தீவினையின் பயன் றுய்ப்பல். 19. கொல்லா வேட்கை. 20. பூமைத்தாள். 21. காமங்கூர். 22. துன்னவூசி. 23. பொய்யை யஞ்சியுரையாமை. 24. இவ்விடத் தோரலைக் கோட்சிறை. 25. இந்நிலத்துப் புகுந்திலன். 26. கோறலை யஞ்சி. 27. கொன்று தின்னான். 28. வாலிதி னூனுண். 28. புய்ந்துக்க பீலி. 29. ஊன்விற்ப கொள்வ. 30. விலைக்குக் கொள்வானை. 31. செய்வினை கொடுத்தார் நிற்ப. 32. விலைக்கு விற்பான் செய்ய வஞ்சமும் வேண்டி, விலைக்குக் கொள்வானே படவிதியாயோ. 33. செய்யவிலை கொடுத்தான். 34. பூவினைக் காட்டலென். 35. தின்ற புலால் கொலை நேர்விக்கும். 36. சுக்கில சோணிதம். 37. உள்ளங் கொள்ள. 38. ஓதின வுண்பராலது நன்னெறி. 39. ஜிவன் பரிணிமித்தம் 40. ஒழிந்தபடை பதித்தலென். 41. பேய்பெற்ற தாய்ப்பற்று. 42. காயந்தனை வருத்தல் தவமென்பாய். 43. வெயிலு ணிற்றல். 44. துன்பம் வேண்டில். 45. மற்ற மாமரங்களும். 46. உறங்குதலான். 47. நட்டுச்சோ றவாவுறு. 48. மெய் தீண்டவிலை. 49. தீயுற்றாற் கொடியரும்பு. 50. தோற்ற. 51, ஒப்பவற்றாலே. 52, சேர்த்திட. 53. நேரொத்து வாடுறு. 54 மண்களுங் கற்களும். 55. வந்திங்கு வைகுங்கள். 56 ஒரறிவா முயிர். 57. நின்றாகுந் திரிவாகும். 58. நின்னாற் பிரகாசமே போல். 59. நித்திய குணங்களால். 60. அநித்திய குணங்களால். 61. குணங்குணி. 62. பலகுணமா. 63. சொல்லேன் யானென்றியே. 64. பரிணமிக்கும் பொருள். 65. பிறந்த கும்மாயம். 66. பயற்றது திரிவாக. 67. தோன்றினவுங் கெட்டனவும். 68. குணியாய் புற்கல 69. புற்கல மிரண்டி 70. அங்கையுள் நெல்லிக்காய் 71. கந்திடத்துக் காணாதாயி. 72. கொல்லேற்றின் கூர்ங்கோடு 73. ஒரு வகையாற் குழக்கன்று மொரு வகையான் முயனாறும். 74. இடக்கை வகையாற். 75. காற்றிறத்தாள் கையில்லை. 76. நீயன்றென்றுரைப்ப. 77. உணராமை காரணத்தால். 78. ஒன்றின தியற்கையால். 79. பிறிதிடத்துள்ள. 80. ஒருகாலத் துளபொருள் 81. நூலிரும்பாய். 82. பிறிதொன்றி னியற்கை. 83. நீயுரைக்கும் வீட்டிடமும். 84, பேர்த்திங்கு வார. 85. உணர்வவர்க்குப் பிறக்குமேல். 86. கருவியால் பொருள்கள். 87. முறையுணரா னென்றியே. 88. உடனாகப் பொருள்களை யொருங்குணர்ந்தான். 89. பொதுவாய குணத்தினால். 90. வரம்பில்லாப் பொருள்களை. 91. எப்பொழுது மறியானேல். 92. யோனிமற் றவர்க்குரை. 7. வளையாபதி வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று, (ஐம்பெருங் காப்பியங்களாவன: சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி.) இந்நூல் இப்போது மறைந்து விட்டது. இதன் ஆசிரியர் யார்? எப்போது இயற்றப்பட்டது? இக் காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதை என்ன? என்பன யாதொன்றும் தெரியவில்லை. இக்காவியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத் துள்ளன. இது சமண சமய நூல் என்பதில் ஐயம் இல்லை. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் யாப்பருங்கல விருத்தியுரை காரரும், உரையாசிரியர் நச்சினார்க் கினியரும் இந்நூற் செய்யுள்களைத் தமது உரைகளில் மேற்கோள் காட்டுகின்றனர். புறத்திரட்டு என்னும் தொகைநூலில், இந்நூலிலிருந்து அறுபத்தாறு செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சென்ற 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வளையாபதி காவியத்தின் ஏட்டுப் பிரதி திருவாவடுதுறை மடத்தில் இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் அந்த ஏட்டுப் பிரதி எப்படியோ மறைந்து விட்டது. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள், திருவாவடுதுறை மடத்தில் சேர்ந்து, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடத்தில் பாடங்கேட்ட காலத்தில், மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியைக் கண்ட தாகவும், பிற்காலத்தில் அச்சிற் பதிப்பிப்பதற்காக அதனைத் தேடியபோது அந்தச் சுவடி கிடைக்க வில்லை என்றும் எழுதியிருக்கிறார்: “பிள்ளையவர்கள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள்) இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாக வில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராயவேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்தபோது, அந்தச் சுவடி மடத்துப் புத்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயின வென்று தெரிந்து அவற்றிற்காக வருத்த மடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணிலான் பெற்றிழந்தான் என வுழந்தான் கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிடவேண்டும்.”9 தக்கயாகப் பரணியின் (181ஆம் தாழிசை) பழைய உரையாசிரியர், வளையாபதி கவியழகுள்ள நூல் என்று கூறுகிறார். அவர் எழுதுவதாவது: “எங்ஙனம் அங்ஙனம் என்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் (தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக் கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி ... ... ... ... எங்ஙனமென்று இவ்வாறே வளையாபதியிலுமுண்டு.” வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: “உலக மூன்று மொருங்குட னேத்துமாண் டிலக மாய திலறறி வனடி வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந் தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்.” இச் செய்யுளை, இளம்பூரணர் தொல்காப்பிய (செய்யுளியல், 98ஆம் சூத்திரம்) உரையுள் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இது எந்த நூற் செய்யுளென்று கூறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் இச் செய்யுளை 37ஆம் சூத்திர உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவரும் இச்செய்யுள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டது என்பதைக் கூறவில்லை. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம், செய்யுளியல் 148ஆம் சூத்திர உரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டி. இதனை வளையாபதிச் செய்யுள் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, இது வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் என்பது தெரிகிறது. கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்கள், புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன: “விளைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லு யிர்க்கு மனிதரி னரிய தாகுந் தோன்றுதல், தோன்றி னாலும், இனியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்ன தேயாம். 1 உயர்குடி நனியுட் டோன்றல் ஊனமில் யாக்கை யாதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல் பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோடல் என்றாங் கரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார். 2 நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே.” 3 பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம் வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம் கள்ளவிழ் கோதையர் காமனொ டாயினும் உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ. 4 உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே. 5 எத்துணை யாற்று ளிடுமணல் நீர்த்துளி புற்பணி யுக்க மரத்திலை நுண்மயிர் அத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம் புக்கன மென்று பொதியறைப் பட்டார். 6 தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார்.” 7 பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வசன வாவி துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. 8 10ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநகரத் துய்ப்பிக்கும் காக்கப் படுவன விந்திரிய மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே. 9 தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின் ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை வீர வென்றி விறல்மிகு விண்ணவர் சீரின் ஏத்திச் சிறப்பெதிர் கொள்பவே. 10 பெண்ணி னாகிய பேரஞர் பூமியுள் எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார் பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினும் ஏதில்பெண் ணீக்குமின். 11 பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும் வையன் மின்வடி வல்லன சொல்லிநீர் உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட் செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின். 12 கள்ளன் மின்கள வாயின யாவையும் கொள்ளன் மீன்கொலை கூடி வருமறம் எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும் நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின். 13 துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம் அற்றமில் தானம் எனைப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே. 14 ஆற்று மின்னருள் ஆருயிர் மாட்டெலாம் தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின் மாற்று மின்கழி மாயமும் மானமும் போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர். 15 பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளியல் பெய்தாத தென்னோ நமரங்காள். 16 தகாதுயிர் கொல்வானின் மிகாமையிலை பாவம் அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும் புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற வூன்கொன் றவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும். 17 பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின் தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை அறவகை யோரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர். 18 உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்தொரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். 19 பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர் தெருள லுறினுந் தெருண்மி னதுவே. 20 தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல் உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க் கருளை நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. 21 எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லின்றாம் நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங் கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும். 22 சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்; ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார்; வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன் தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால். 23 மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்; பூவென் றெருக்கி னிணர்சூடுப; புன்மை கொண்டே பேயென் றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப; காம நோய்நன் கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயினக்கால். 24 நக்கே விலாவி றுவர்நாணுவர் நாணும் வேண்டார் புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர் துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார் நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும். 25 அரசொடு நட்டவ ராள்ப விருத்தி அரவொடு நட்டவ ராட்டியு முண்பர் புரிவளை முன்கைப் புனையிழை நல்லார் விரகில ரென்று விடுத்தனர் முன்னே. 26 பீடில் செய்திக ளாற்கள விற்பிறர் வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக் கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத் தோட லின்றி யுலையக் குறைக்குமே. 27 பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண் டைய மின்றி யறநெறி யாற்றுமின் வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக் கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே. 28 கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும் நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும் பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல் ஐய மில்லை யதுகடிந் தோம்புமின். 29 உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடுமாறும் அலகில்துய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமி னென்றுநனி கூறின ரறிந்தார். 30 வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங் கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவே. 31 ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே. 32 இன்மை யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மை யுறுக்கும் புரையி லரும் பொருளைத் துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே. 33 ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே. 34 இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற் கொல்வர் கயவர் கொளப்படும் வீடுவர் இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வது மன்றே. 35 வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா நாற்ப திகந்தாம் நரைத்தூதும் வந்ததினி நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. 36 இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். 37 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றா யுழலு மறுத்தற் கரிதே. 38 உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும் பற்றினா னாகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறும் ஆறே. 39 தானம் செய்திலம் தவமும் அன்னதே கானந் தோய்நில விற்கழி வெய்தினம் நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால். 40 பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி ஒருவந்த முள்ளத் துவத்த லொழிமின் வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன் ஒருவன் உலகிற் குளனென்னு மாறே. 41 உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும் மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட் கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே. 42 செந்நெலங் கரும்பினொ டிகலுந் தீஞ்சுவைக் கன்னல் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை காண்கிலன் என்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. 43 குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ. 44 கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண் நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம் பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும் எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே. 45 தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண் டீட்டற் கிவறுத லென்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பெ னென்னும் எண்ணில் ஒருவன் இயல்பெண்ணு மாறே. 46 நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற் பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய் தாணைப்பெண் ணைய வணைக்குறு மாறே. 47 அந்தகன் அந்தகற் காறு சொலலொக்கும் முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லான் அதுவறி யாதவற் கின்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. 48 யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை வேறோ ரிடத்து வெளிப்பட நன்றாம். 49 ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப. 50 வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி யறவறும் வார்புன லாற்றின் வகையும் புரைப. 51 எங்ஙன மாகிய திப்பொரு ளப்பொருட் கங்ஙன மாகிய வன்பின ராதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற் கங்ஙனம் ஆகிய யாழும் புரைப. 52 கரணம் பலசெய்து கையுற் றவர்கட் கரண மெனுமில ராற்றிற் கலந்து திரணி யுபாயத்திற் றிரண்பொருள் கோடற் கரணி ஞெலிகோ லமைவர வொப்ப. 53 நாடொறு நாடொறு நந்திய காதலை நாடொறு நாடொறு நைய வொழுகலின் நடடொறு நடடொறு நந்தி யுயர்வெய்தி நடடொறுந் தேயும் நகைமதி யொப்ப. 54 வனப்பில ராயினும் வன்மையி லோரை நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாங் கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி யொப்ப. 55 தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வண்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப. 56 ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற் பைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர் பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. 57 வீபொரு ளானை யகன்று பிறனுமோர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலரன்ன கண்ணார். 58 நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. 59 முருக்கலர் போற்சிவத் தொள்ளிய ரேனும் பருக்கர டில்லவர் பக்க நினையார் அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. 60 மக்கட் பயந்து மனையற மாற்றுதல் தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப பைத்தர வல்குற் படிற்றுரை யாரொடு துய்த்துக் கழிப்பது தோற்றமொன் நின்றே. 61 நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீயா ரோடும் இவைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே. 62 பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின் மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார். 63 சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர் கல்வியுங் கைப்பொரு ளில்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ. 64 தொழுமக னாயினுந் துற்றுடை யானைப் பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப. 65 பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் அருளி லறனும் அமைச்சில் அரசும் அருளினு ளிட்ட விருண்மையி தென்றே மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.” 66 கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்களை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய நிக்கந்த வேடத் திருடி கணங்களை யொக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி னக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி. 1 (சிலம்பு, கனாத்திறம், 13ஆம் அடி, உரை மேற்கோள்) பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன் விண்ணா றியங்கும் விறலவ ராயினுங் கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான். 2 (சிலம்பு, கனாத்திறம், 14ஆம் அடி, உரைமேற்கோள்.) அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற் கன்றின் குரலுங் கறவை மணிகறங்கக் கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலு மொன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்.” 3 (சிலம்பு, ஆய்ச்சியர், 3ஆம் அடி, உரைமேற்கோள்.) யாப்பருங்கல உரையாசிரியர், கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலுங் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே. 1 வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேற் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.” 2 (93ஆம் சூத்திர உரை மேற்கோள்) 8. புராண சாகரம் யாப்பருங்கல விருத்தியுரையினால், இப்பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. “இன்னும் பலவடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராணசாகரமும் முதலாக வுடைய செய்யுள்களிற் கண்டுகொள்க” என்று விருத்தியுரைகாரர் எழுதுகிறார். (யாப்பருங்கலம், செய்யுளியல், 9ஆம் சூத்திர உரை.) இதனால், புராண சாகரம் என்னும் நூல், வெண்பாவினால் அமைந்த நூல் என்பதும், பஃறொடை வெண்பாக்களும் இந்நூலில் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை. 9. விம்பசார கதை இப்பெயர் கொண்ட ஒரு நூல் இருந்ததென்பது, நீலகேசி என்னும் சமண சமய நூலுக்குச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையிலிருந்தும், சிவஞானசித்தியார் என்னும் சைவ சமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையிலிருந்தும் தெரிகிறது. நீலகேசியில் குண்டலகேசி வாதச் சருக்கத்தில், 41ஆவது செய்யுள் உரையில், உரையாசிரியர் வாமன முனிவர் இவ்வாறு கூறுகிறார்: “இவன் (புத்தர்) பிறக்கின்ற காலத்து மாதாவினது வலமருங்கு லாற் பிறந்தான்; அவளும் ஆறு நாட் குற்றுயிரோடு கிடந்து ஏழா நாளிறந்தாள். இது புத்த மாதாக்கள் யாவர்க்கு மொக்கும். என்னை? ‘உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோ யுறாம லான்றோ னவ்வழித் தோன்றின னாதலி னீன்றோ ளேழ்நா ளின்னுயிர் வைத்தாள்.’ என்பது விம்பசார கதை யென்னுங்; காவியம்; பௌத்தருடையது. அதன்கட் கண்டுகொள்க.” சிவஞானசித்தியார் பரபக்ஷம், சௌத்திராந்திகன் மதமறு தலை, 5ஆவது: செய்யுளுரையில், உரையாசிரியர் ஞானப்பிரகாசர் கூறுவது வருமாறு: “புத்தன் பிறக்கிற காலத்து மாதாவினுடைய வல மருங்குலாற் பிறந்தான்; அவளு மாறு நாள் குற்றுயிரோடே கிடந்தேழா நாளிறந்தாள். இது புத்த மாதாக்களிருபத்துநால்வர்க்கு மொக்கும். இதற்கு உதாரணம். ‘உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோ யுறாம லான்றோ னவ்வழித் தோன்றின னாதலி னீன்றோ ளேழ்நா ளின்னுயிர் வைத்தாள்.’ இது விம்பசார கதை யென்னுங் காவியம்; பௌத்தருடைய நூல். அதன்கட் கண்டுகொள்.” இவ்விரண்டு உரையாசிரியர்களும் கூறுவதிலிருந்து, விம்பசார கதை அல்லது பிம்பசார கதை என்னும் பெயருள்ள பௌத்த மத காவியம் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இதைப்ப பற்றி வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. இந்நூலாசிரியர் யார், அவர் இருந்த காலம் எது என்பனவும் தெரியவில்லை. பிம்பசாரன் என்னும் அரசன், புத்தர் உயிர்வாழ்ந்திருந்த காலத்தில் மகத தேசத்தை அரசாண்டுவந்தான். புத்தரிடம் நட்புகொண்டு அவருக்குச் சீடனாக இருந்ததோடு, புத்தருக்கும் பௌத்த மதத்துக்கும் பல தான தருமங்களைச் செய்தான். இந்த அரசன் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில் பல வகையிலும் தொடர்புடையவன். தன் மகன் அஜாத சத்துரு என்பவனால் இவன் சிறையிலிடப்பட்டு உயிர்நீத்தான். பௌத்தர்களினாலே பெரிதும் போற்றப்படுபவன் ஆவன். பிம்பசார காவியம் இவன் வரலாற்றைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டது போலும். மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தைப் போலவே இந்தக் காவியமும் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டதுபோலும். இலக்கிய நூல்கள் IV. ஏனைய நூல்கள் 1. அந்தாதி மாலை திவாகரம் என்னும் நிகண்டு நூலை இயற்றிய சேந்தன் என்னும் புலவர், தேவியின்மீது அந்தாதிமாலை என்னும் நூலை இயற்றினார். இதனைச் சேந்தன் திவாகரம், செயல் பற்றிய பெயர்த் தொகுதியின் ஈற்றுச் செய்யுளிலிருந்து அறிகிறோம். “அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப் பெண்ணங்கை மூவுலகும் பெற்ற வம்மையைச் செந்தமிழ் மாலை யந்தாதி புனைந்த நாவல னம்பற் காவலன் சேந்தன்” என்பது அச்செய்யுள் அடி. சேந்தன் இயற்றிய திவாகர நிகண்டு நமக்குக் கிடைத்திருக்க, அவர் இயற்றிய அந்தாதி மாலை மறைந்துபோனது வருந்தத்தக்கது. 2. அமிர்தபதி யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதற் பாட்டு வண்ணத்தால் வருவன. அவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடி பதினான் கெழுத்தாம். நிரையசை முதலாய் வரின் ஓரடி பதினைந்தெழுத்தாம்” என்று அவர் எழுதுகிறார், (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை). இதனால், அமிர்தபதியின் முதற் பாட்டு வண்ணச் செய்யுள் என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. 3. அந்தாதிக் கலம்பகம் அகோர முனிவர் என்றும், அகோரசிவத் தியாகராச பண்டாரம் என்னும் பெயருடைய புலவர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இவர், திருவாரூர் வன்மீகநாத தேசிகரிடம் தமிழ் பயின்றவர். தேசிகரின் மைந்தரான இலக்கண விளக்கம் வைத்திய நாத தேசிகருக்கு ஆசிரியர். அகோர முனிவர் கும்பகோணப் புராணம், திருக்கானப்போர் புராணம், குலதாரணியப் புராணம், முதலிய நூல்களை இயற்றினார். இவர் இயற்றிய அந்தாதிக் கலம்பகம் என்னும் நூலும் வேறு சில நூல்களும் மறைந்துவிட்டன. 4. அளவை நூல் தர்க்கத்தைப் பற்றிய அளவை நூல் என்னும் பெயருள்ள நூல் ஒன்றிருந்தது என்பதை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், தமது “சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது: “அளவை நூல் என்று ஒன்று தமிழிலிருந்ததாகப் பழைய உரைகளால் தெரியவருகின்றது: அதிலுள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறைகளாக உள்ளன: அந்நூலில் காண்டல் முதல் சம்பவ மிறுதி யாகவுள்ள பத்து அளவைகளின் இலக்கணங்கள் கூறப் பட்டிருத்தல் வேண்டுமென்று கிடைத்த பாடல்கள் தெரிவிக்கின்றன.” இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. 5., 6., 7. அவினந்தமாலை அரசசட்டம், வருத்தமானம். இவை கணித நூல்கள், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூல்களைத் தமது உரையில் (ஒழிபியல்) குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது: “இனி, எண் இரண்டு வகைய, கணிதமும் காரணமும் என. அவற்றுட் கணிதமாவன பதினாறு வரி கருமமும், ஆறு கலாச வருணமும், இரண்டு பிரகரணச் சாதியும், சதகுப்பையும், ஐங்குப்பையும் என்றிப் பரிகருமமும், மிச்சிரகமு முதலாகிய எட்டதிகாரம், அவை அவினந்த மாலையும், அரசசட்டமும், வருத்தமானமும் முதலியவற்றுட் காண்க.” இந்நூல்கள் எக்காலத்தில், யாரால் செய்யப்பட்டன என்பன யாதொன்றும் தெரியவில்லை. 8. அறிவுடைநம்பியார் சிந்தம் இந்நூலை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில் இவர் எழுதுவது இது: “அறிவுடைநம்பியார் செய்த சிந்தம் எப்பாற்படுமோ வெனின், தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத் தருகு தனிச் சொலின்றித் ‘தாழிரும் பிணர்த் தடக்கை’ என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையாற்றனிச் சொலில்லா வஞ்சிப்பா வென்று வழங்கா மோவெனின், வழங்காம்: செவியறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருளுறுப் பழிந் தமையால் உறுப்பழி செய்யுள் எனப்படும்: புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியுமாய் வரப்பெறா என்றாராகலின்.” இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 9. ஆயிரப்பாடல் இதனை இயற்றியவர், கமலை ஞானப்பிரகாசர். இது இப்போது மறைந்துவிட்டது. இப்பெயருள்ள நூல் இருந்த தென்பதைச் சோழமண்டல சதகத்தினால் அறிகிறோம். “பகர்ந்த கமலைத் தியாகே சர் பஞ்சாக் கிரத்தின் பயனறிந்த திகந்த குரு ஆயிரப்ரபந்தஞ் செய்த குரவன் திருவாரூ ருகந்த ஞானப் பிரகாச னுண்மைக் குருவி னுயர்குலத்தோன் மகிழ்ந்த வாழ்வு பன்னாளும் வளஞ்சேர் சோழ மண்டலமே” என்னும் செய்யுளினால் இச்செய்தி விளங்குகிறது. இது 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல். 10. ஆரிய படலம் இந்நூலின் பெயரை, மயிலைநாதர், நன்னூல்; உரையில் குறிப்பிடுகிறார். “முதனூலாற் பெயர் பெற்றன ஆரிய படலம், பாரதம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார். (நன்னூல், பாயிரம், 48 உரை). இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. 11. இசையாயிரம் தமிழ் நாவலர் சரிதையில் ஒரு தனிப்பாடல் காணப்படுகிறது. அதன் தலைப்பில், “செட்டிகள்மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் ‘புகார் ஊர்’ என்று பாடச் சொல்லியது” என்னும் குறிப்பு எழுதப் பட்டுள்ளது. எனவே. இசையாயிரம் என்னும் நூல் செட்டிகள் மேல் பாடப் பட்ட நூல் என்பது தெரிகிறது. இதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். இவர், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாராக இருக்கலாம். அப்படியானால், இந்நூல் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். இந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. 12. இராசராச விஜயம் இராசராசன் என்னும் சோழ அரசனின் வரலாற்றைக் கூறுகிற நூல் போலும் இது. இந்நூலை இயற்றியவர் நாராயண பட்டாதித்தியன் என்பவர். விசேட காலங்களில் இந்நூலைப் பொதுஜனங்களிடையே படிப்பதற்காக இவருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது.1 இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப்பற்றியும் வேறு செய்திகள் தெரிய வில்லை, இது நாடக நூலாக இருக்குமோ? 13. இராமாயண வெண்பா இராமாயண வெண்பா என்னும் பெயருள்ள நூல் ஒன்று கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இயற்றப்பட்டிருந்தது என்பது யாப்பருங் கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கலம், செய்யுளியல், 9ஆம் சூத்திர உரை இவ்வாறு கூறுகிறது: “இன்னும் பல வடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமும் முதலாக வுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க.” இந்த இராமாயணத்தில் பஃறொடை வெண்பாக்களும் இருந்தன என்பது இதனால் தெரிகிறது. ஆனால், இவ்வுரையாசிரியர் இந்த இராமாயணத்திலிருந்து ஒரு செய்யுளையேனும் மேற்கோள் காட்டவில்லை. வீரசோழியம் பொருட்படலம், ‘வேந்தன் சிறப்பு’ என்று தொடங்கும் 18ஆம் செய்யுள் உரையில் இரண்டு இராமாயண வெண்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை யாப் பருங்கல உரையில் கூறப்படுகிற இராமாயண நூலிலிருந்து மேற்கோள் காட்டப் பட்டவை என்று கருதப்படுகின்றன. அவைகளாவன: மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன் பெற்றி கருதுவதென் பேதையர்காள்-மற்றிவன்றன் கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை வண்டா ரரக்கன் வலி. 1 ஐயிருப தோசனையு மாங்கோ ரிடனின்றிக் கைபரந்த சேனைக் கடலொலிப்பத்-தையல் வழிவந் திராமன் வடகரையா னென்றான் வழிவந்து வேறாக மீட்டு. 2 சென்னை அரசாங்கக் கீழ்நாட்டுக் கையெழுத்து நூல் நிலையத்தில் உள்ள ‘பலதிரட்டு’ என்ற ஓலைச்சுவடியில் இராமாயண வெண்பா என்னுந் தலைப்பில் கீழ்க்காணும் நான்கு வெண்பாக்கள் காணப்படுகின்றன. இந்த இராமாயண வெண்பாக்கள் யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிற நூலைச் சேர்ந்தவையா இல்லையா என்பது தெரியவில்லை. அவ் வெண்பாக்களாவன: சனகன்மொழி கேட்டுத் தவமுனிவன் சொன்னான் தினகரனால் தெய்வக் குலத்தோன் - மனமகிழ வந்தசிறுச் சேவகனை மன்னா அறியீரோ இந்தவகை என்னினைந்தீ ரென்று. 1 தயரதனும் புத்திரருந் தாமரையோன் பெற்ற நயமுனியுந் தானையுட னண்ணச் - சுயமுடைய கோதமன்றன் புத்திரனைக் கொண்டு மிதிலேசன் ஏதமிலான் வந்தா னெதிர். 2 வசிட்டனுங் கோசிகனு மன்னவருங் கூடி விசித்திரமா மங்கலச்சொல் விண்டு - சகிக்குநிகர் மாமுகத்துச் சீதைக்கும் வாழு முருமிளைக்கும் மாமுகுர்த்த மிட்டார் மகிழ்ந்து. 3 சூரியனார் வம்சத் துதித்த தயரதனா மாரியனை யிங்கே யழைமினென்றான் - மூரி வளைக்குலங்கள் மூன்றினொரு மாமுத்த மீன்று திளைக்கு மிதிலையர்கோன் றேர்ந்து. 4 14. இரும்பல் காஞ்சி இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதைத் தக்கயாகப் பரணி உரையினாலும் புறத்திரட்டினாலும் அறிகிறோம். தக்கயாகப் பரணி உரையாசிரியர் இந்நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவை: “எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை மையறு கேள்வி கேளா தோர்க்கே.” 1 (தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடினது, 55ஆம் தாழிசை உரை மேற்கோள்) “பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற் பூமுத லிருந்த நான்முகத் தனிச்சுடர் வேதம் பாடிய மேதகப் படைத்தன எண்பெரு வேழம்.” 2 (தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 22ஆம் தாழிசை உரை மேற்கோள்) இரும்பல் காஞ்சியிலிருந்து மூன்று செய்யுள்களைப் புறத்திரட்டில் தொகுத்திருக்கிறார்கள். அச் செய்யுள்கள் பின்வருவன: “நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக் காலை யிருள்சீக்குங் காய்கதிர்போல்-கோல மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் அரண்.” 1 “ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த பேரருளி னாற்குப் பெறலருமை யாதரோ வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும் போர்மலைந்து வெல்லும் புகழ்.” 2 “கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம் இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற் பெரும்பெய ரேனத் தெயிறனைய வன்றே சுரும்பறை தொண்டையான் தோள்.” 3 இந்நூலைப் பற்றிய ஏனைய செய்திகள் தெரியவில்லை. 15. இளந்திரையம் இப்பெயருடைய நூலை, ஆசிரியர் மயிலைநாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்ற சாதவாகனம், இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார். (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித்தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென அவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியரும் கூறுகிறார். இளந்திரையன் என்னும் சோழ அரசன் பெயரினால் இது இயற்றப்பட்டது போலும், இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 16. இறைவானறையூர்ப் புராணம் தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலூகாவில் இறைவானறையூர் இருக்கிறது. இவ்வூர் இப்போது எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூர்ப் புராணத்தைப் பாடியவர் திருமலை நயினார் சந்திரசேகரர் என்பவர். இவர், திருவண்ணாமலை மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த சத்தியஞான தரிசனிகளின் மாணாக்கர். இந்தப் புராணத்தைப் பாடியதற்காக இவருக்கு, இவ்வூர் ஆனந்த தாண்டவன் வீதியில் வீடு கட்ட மனையும், நிலமும் தானம். செய்யப்பட்டதை இவ்வூரிலுள்ள சாசனம் கூறுகிறது.2 தானம் செய்யப்பட்ட காலம் சக ஆண்டு 1432 (கி.பி. 1510) பிரமோதூத ஆண்டு புரட்டாசி மாதம் 25 ஆம் நாள். 17. ஓவிய நூல் ஓவியம் எழுதுவது பற்றிய ஒவிய நூல் ஒன்று இருந்ததென்பதை அடியார்க்குநல்லார் என்னும் உரையாசிரியர் கூறுகிறார். சிலப்பதிகாரம், வேனிற்காதை (25ஆம் அடி) உரையில் அவர் கீழ்வருமாறு எழுதுகிறார்: “ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குத லென்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள; அவற்றுள் இருத்தல், திரிதரவுடையன வும் திரிதரவில்லனவுமென இருபகுதிய; அவற்றுள் திரிதரவுடையன; யானை, தேர், புரவி, பூனை (சேனை?) முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை; பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், புண்டிலம், ஏகபாதம் எனவிவை; என்னை? ‘பதுமுக முற்கட் டிதமே யொப்படி யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந் தனிப்புட மண்டில மேக பாதம் உட்பட வொன்பது மாகுந் திரிதர வில்லா விருக்கை யென்ப’ என்றார் ஆகலானும்.” இவ்வாறு கூறுவதனால், ஓவியக்கலை பற்றிய ஓவியநூல் என்னும் நூல் இருந்ததென்பதும். அது சூத்திரப்பாக்களினால் அமைந்த நூல் என்பதும் தெரிகின்றன. அதன் ஆசிரியர் யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை. 18. கன்னிவன புராணம் 19. அஷ்டதச புராணம் பூம்புலியூர் நாடகம் இயற்றிய வீரைத் தலைவன் பரசமய கோளரிமாமுனி என்பவரே இந்த இரண்டு புராணங்களையும் இயற்றினார். இந்தச் செய்தியைத் திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடலிபுரீசுரவரர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனங்கள் செய்யுள் நடையில் இயற்றப்பட்டுள்ளன. இக் கல்வெட்டு களில் இடையிடையே எழுத்துகள் சிதைந்தும் மறைந்தும் கிடப்பதால் நன்கு வாசிக்க முடியவில்லை. குலோத்துங்க சோழதேவர் என்னும் முதலாங் குலோத்துங்கனுடைய 41, 49ஆம் ஆட்சி ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. கன்னிவன புராணம், அஷ்டதச புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களை இயற்றியதற்காக இந்நூலாசிரியருக்குப் பாலையூரில் நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனக் கவிகள் கூறுகின்றன.: ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 49. தழைத்த திருப்பாதிரிப் ... ... னவீரைதலைவ னிருடைப் பரசமய கோளரி மாமுனிக்கு கொழித்த லஷ்டதச புராணங்க ... தானங் கன்னிவன புராணம்; வழுத்தடி காட்டு தயானந்தரு மவ்ருத்தி பாலையூறு ... ... யிருபூவிளையுநி ... ... எழுத்துமுறைத் தனமா யுள்ளளவு முண்ண விறையிலியாம் வகைதந்தோ மிரண்டு மாவே.3 ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 41. திருவாழுங் கறைஞாழற் சினை மருதம் ... ... சாசனந் தென்மருதம் பகைக் கருவாழ வருங்கம லாலயற்குக் கன்னிவன புராணம் பாடிப் பரிசி ... ... வாடுந் நாடகமுஞ் செய்தாற்கு சிறப்பாம் பாலை யூரினி லிருபூவும் விளையும் ஒருமாநன்னில பருங்கொழு கிளையினொடு மூழிதொறு மிறை யிலியே யுரைத்தா னேய்.4 சிதைந்து காணப்படுகிற இந்தச் செய்யுளினால் அறியப் படுவது என்ன வென்றால், வீரைத்தலைவன் பரசமய கோளரியார் என்பவர் கன்னிவன புராணம், அஷ்டதச புராணம், பூம் புலியூர் நாடகம் என்னும் மூன்று நூல்களை இயற்றினமைக்காகப் பாலையூரில் நிலம் இறையிலியாகத் தானம் பெற்றார் என்பது. இந்த நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. 20. கலைக்கோட்டுத் தண்டு “இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு முதலாயின” என்று மயிலைநாதரும் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை), “இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியரும் எழுதுவதிலிருந்து இப் பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் புலவர் சங்ககாலத்தில் இருந்தார். அவர்பாடிய செய்யுள் ஒன்று நற்றிணையில் 382ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந் நூலாசிரியரைப் பற்றிப் பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் அவர்கள் தாம் பதிப்பித்த நற்றிணை என்னும் நூலில், பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்: “மான்கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமை யால், இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டடொன்று செய்தாரென்று தெரிகிறது: அதுவே கலைக்கோட்டுத் தண்டமெனப்படுவது. இதனை இடுகுறிப் பெயரென்று கொண்டார் களவியலுரைகாரரும், நன்னூல் விருத்தியுரைகாரரும். அஃது இதுகாறும் வெளிவந்திலது.” நிகண்டுநூல் செய்தபடியால் நிகண்டன் என்று பெயர் பெற்றார் என்பது தவறு. அப்படியானால், நிகண்டாசிரியர் எனப்படுவாரேயன்றி நிகண்டன் எனப்படார். நிகண்டன் என்பது சமண சமயத்தவர் என்பது பொருள். கலைக்கோட்டுத் தண்டம் என்பது, மான்கொம்பைக் கைக் கோலாகக் கொண்டதால் பெற்ற பெயர் அன்று. அது ஓர் ஊரின் பெயர் எனத் தோன்றுகிறது. சமதண்டம் என்பதுபோல் கலைக்கோட்டுத் தண்டம் என்பது ஓர் ஊரின் பெயராதல் வேண்டும். ‘கலைக்கோட்டுத் தண்டு’ என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை. 21. காங்கேயன் பிள்ளைக்கவி இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் தாலூகா, பெரிச்சிக் கோவில் என்னும் ஊரில் உள்ள சுந்தரவனேசுவரர் கோவில் சாசனம் ஒன்று காங்கேயன் பிள்ளைக்கவி என்னும் நூலைக் குறிக்கிறது.5 பாண்டியன் மாறவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவரின் 14ஆவது ஆட்சி ஆண்டில் இந்தச் சாசனம் எழுதப்பட்டது. கந்தன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்னும் சிற்றரசன்மீது பிள்ளைக்கவி (பிள்ளைத் தமிழ்) நூலைக் கொடி கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்னும் புலவர் பாடியதையும், அதற்காக காங்கேயன் இப்புலவருக்குச் சாத்தனேரி என்னும் ஊரில் நிலம் பரிசளித்ததையும் இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனம் கூறுகிற பாண்டியன் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவன். ஆகவே, காங்கேயனும், அவனைப் பாடிய ஆதிச்சதேவரும் அதே காலத்தில் இருந்தவர் ஆவர். இப்பிள்ளைக்கவி இப்போது கிடைக்கவில்லை. 22. காசியாத்திரை விளக்கம் கி.பி. 18ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில்வாகனப் புலவர் இயற்றியது இந்நூல். மயில்வாகனப் புலவர், கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய காசியாத்திரை விளக்கமும் ஞானாலங்கார நாடகமும் மறைந்துவிட்டன. 23, 24. கிளிவிருத்தம், எலிவிருத்தம் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் இந்த இரண்டு நூல்களைக் குறிப்பிடுகிறார். “கூட்டி னார்கிளி யின்விருத்த முரைத்த தோரெலி யின்தொழிற் பாட்டு மெய்சொலிப் பக்கமேசெலு மெக்கர் தங்களை” என்று அவர் பாடுகிறார். அதாவது. கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்னும் இரண்டு நூல்கள் சமண சமய நூல்கள் என்று கூறுகிறார். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலும் கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்னும் நூல்கள் கூறப்படுகின்றன. வீரசோழிய உரையாசிரியரான பெருந் தேவனார் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவர். வீரசோழியம், யாப்பதிகாரம், 21ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்: “குண்டலகேசி விருத்தம், கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுட் கலித்துறைகளும் உளவாம்.” இவ்வுரையாசிரியர் கூறுகிற குண்டலகேசி விருத்தம் என்பது பௌத்தநூல்; இந்நூல் மறைந்துவிட்டது. இதன் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் என்பன: மூன்றும் சமண சமய நூல்கள், இவைகளில் நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது. கிளிவிருத்தம், எலிவிருத்தம் இரண்டும் கிடைக்கவில்லை. இந்நூல்கள் மறைந்துவிட்டன. (குறிப்பு: பவாநந்தர் கழகம் 1942இல் அச்சிட்ட வீர சோழியத்தில், கிளிவிருத்தம் என்பதைக் கலிவிருத்தம் என்று தவறாக அச் சிட்டுள்ளது. ஆனால், பழைய வீரசோழியப் பதிப்பில் கிளிவிருத்தம் என்றே இருக்கிறது. 1907ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் அச்சிட்ட நரிவிருத்தம் என்னும் நூலில், முகவுரை 4ஆம் பக்கத்தில் கிளிவிருத்தம் என்றே கூறப்படுகிறது. எனவே, பவாநந்தர் கழகம் 1942 ஆம் ஆண்டில் அச்சிட்ட வீரசோழியப் பதிப்பில் கலிவிருத்தம் என்றிருப்பது தவறாகும்.) 25. குலோத்துங்கசோழ சரிதை குலோத்துங்க சோழனுடைய வரலாற்றைக் கூறுகிற நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் பெயர் திருநாராயணபட்டன் என்பது. கவி குமுதசந்திர பண்டிதன் என்று இவருக்கு வேறுபெயர் உண்டென்றும் தெரிகிறது. இவர், குலோத்துங்க சோழ சரிதையை இயற்றித் திரிபுவனி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் அரங்கேற்றினார் என்றும், அதன்பொருட்டு இவருக்கு அவ்வூரில் நிலம் தானம் செய்யப்பட்டதென்றும் ஒரு சாசனம் கூறுகிறது.6 திரிபுவனி சதுர் வேதி மங்கலம், இப்போது திரிபுவனி என்னும் பெயருடன் புதுச்சேரிக்கு அருகில் இருக்கிறது. இந்நூலாசிரியரைப் பற்றியும் இந்நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 26. கோட்டீச்சர உலா கோட்டீச்சர உலாவிற்குக் கொட்டையூருலா என்றும் வேறு பெயர் உண்டு. கோட்டீச்சரம் என்பது கொட்டையூர். இவ்வூர் கும்ப கோணத்திற்கு அருகில் இருக்கிறது. கோட்டீச்சர உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர். இவர் முத்தமிழ்ப் புலவர். தஞ்சையை அரசாண்ட மகாராட்டிர அரசரான சரபோஜி மகாராஜாவின் (1798-1832) அரண்மனைப் புலவராக இருந்தவர். தஞ்சையில் சரஸ்வதிமகால் என்னும் பெயருடன் சரபோஜி மன்னர் அமைத்த புத்தகசாலைக்கு இவர் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக் கொடுத்தார். பின்னர், சென்னை அரசாங்கத்தார் அக்காலத்தில் நடாத்தி வந்த சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழாசிரியராக இருந்தார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கோட்டீச்சரக் கோவை, தஞ்சைப் பெருவுடையாருலா, சரபேந்திர பூபால குறவஞ்சி, திருவிடை மருதூர்ப் புராணம், பெருமண நல்லூர்ப் புராணம், பல தனிச் செய்யுள்கள் முதலியவைகளை இயற்றினார். இவர் இயற்றிய கோட்டீசர உலா இப்போது கிடைக்க வில்லை; மறைந்துவிட்டது. 27. “கோலநற்குழல்” பதிகம் தொண்டைநாட்டுத் திருமால்புரத்தில் எழுந்தருளியுள்ள கோவிந்தப்பாடி ஆழ்வார் என்னும் பெருமாள்மீது, “கோல நற்குழல்” எனத் தொடங்கும் பதிகத்தை ஒருவர் பாடினார். அவர் பெயர் தெரியவில்லை. அவருடைய மகன், மூவேந்தபடவூர் வேளார் என்னும் சிறப்புப் பெயருள்ள குளக்கடையான் அருநிலை ஸ்ரீ கிருஷ்ணன் என்பவன். மேற்படி பதிகத்தை மேற்படி கோவில் உற்சவ காலத்தில் ஓதுவதற்குப் பொன்னைத் தானம் செய்தான் என்று, இராஜராஜ கேசரி பன்மர் என்னும் சோழனுடைய 10 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகிறது.7 இந்தப் பதிகம் இப்போது மறைந்து விட்டது. 28. சதகண்ட சரித்திரம் சென்னமல்லையர் இயற்றிய சிவசிவ வெண்பாவுக்கு உரை எழுதியவர், தமது உரையில் ‘சதகண்ட சரித்திரம்’ என்னும் நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். சிவசிவ வெண்பா, சாலிசக ஆண்டு 1690ஆம் ஆண்டில் (கி.பி. 1768ஆம் ஆண்டில்) இயற்றப்பட்டது. இந்நூலின் உரையாசிரியர் இன்னார் என்பது தெரிய வில்லை. இவ்வுரையாசிரியர், மேற்படி நூல் 52ஆம் செய்யுளுரையில், ‘தெரிந்து விளையாடல்’ என்பதற்கு மேற்கோளாகச் சதகண்ட சரித்திரத்திலிருந்து கீழ்க்காணும் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார்: “பண்டையிலும் பதின்மடங்கிற் கண்டனுள னெனவானிற் பணிந்த வாய்மை கொண்டயில்வெங் கணையேந்தி வாருதியைமாருதிமேற் கொண்டு நீந்தி வண்டயிலு நறுங்கூந்தற் சானகியா லவனுயிரை மாய்த்த மாயோன் கண்டுயிலுங் கடலனைய கருணைமுகி லருணபதால் கருது வோமே.” 1 “ஊதா விசைவண் டறைமலர்ச்சில் லோதி யசுர னுயிர்செகுத்து நீதா விசைய மெனுமிறை சொற் றலைமேற் கொண்டு நெடுஞ்சமர்க்குப் போதா விசையம் பெய்துசத கண்டன் மடியப் பொருதியிட்ட சீதா விசையம் புகலவருள் புரிவ தவடன் றிறனாமால்.” 2 சிவசிவ வெண்பா 98ஆம் பாட்டு, ‘பெருமை’ என்பதற்கு இந்நூல் உரை யாசிரியர் சதகண்ட சரித்திரத்திலிருந்து மூன்று செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவை: நீதி சான்மனு நைமிசத் தருகினு நெடுநாள் மாத வம்புரி காலையின் வெண்டுழாய் மவுலி நாத னங்கெழுந் தருளவந் தடிதொழு நவிறி ஏது நின்னுளத் தெண்ணிய தெனமனு விசைப்பான். 1 ஊழி நான்குநீ மகவென வுதித்திட வேண்டி ஆழி யங்கையாய்; புரிந்ததித் தவமென வறைய வாழி மன்னவ வருதுநின் மனைவியு நீயும் பாழி மாநிலத் திம்முறை வருகெனப் பணித்தான். 2 இருந்த வச்சம தக்கினி ரேணுகை யிமையோர் மருந்தெ னத்தகு கோசலை தயரதன் மதிகால் திரிந்து நல்வசு தேவனற் றேவகி சுசீலை பொருந்து கோமக னெனவரு வீர்களிப் புவிமேல். 3 29. சாதவாகனம் இப்பெயரையுடைய நூலை, உரையாசிரியர் மயிலை நாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்றன, சாதவாகனம் இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித் தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியர் கூறுகிறார். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 30. சாந்தி புராணம் சாந்தி புராணம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதை, அப்புராணத்திலிருந்து ஒன்பது செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். இது சமண சமய நூல், இப்போது இந்நூல் மறைந்துவிட்டது. சாந்தி புராணம் என்பது சாந்திநாதர் என்பவருடைய வரலாற்றைக் கூறும் நூல், சாந்திநாதர், ஜைனருடைய இருபத்துநான்கு தீர்த்தங் கரர்களுள் பதினாறாவது தீர்த்தங்கரர் ஆவார். இவருடைய வரலாறு ஸ்ரீபுராணம் என்னும் மணிப்பிரவாள வசன நூலிலும், திரிசஷ்டி சலாகபுருஷ சரித்திரம் (அறுபத்துமூன்று பெரியார் சரித்திரம்) என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. அஸ்தினபுரத்துக் குருவம்சத்தில் அரச குமாரனாய்ப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கிப் பின்னர் துறவுபூண்டு கேவலஞானம் பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து ஜைன மதத்தை உலகத்திலே பரவச் செய்து இறுதியில் மோட்சமடைந்தார். சாந்திநாதர். இவருடைய சரித்திரத்திலே இவருடைய பதினொரு முற்பிறப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. பரத கண்டத்தில் இரத்தினபுரத்தின் அரசனாக ஸ்ரீசேனன் என்னும் பெயருடன் முதலில் பிறந்தார். பிறகு உத்தரகுருவில் பிறந்தார். அங்கிருந்து தேவலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். பிறகு இரதநூபுரத்து அரச குடும்பத்தில் அமிததேஜஸ் என்னும் அரசனாகப் பிறந்தார். பின்னர் நந்திதாவர்த்த தேவலோகத் திலே மீண்டும் தேவனாய்ப் பிறந்தார். பிறகு, மீண்டும் பரத கண்டத்திலே சுபா நகரத்து அரச குடும்பத்திலே அபராஜிதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். இந்தப் பிறப்புக்குப் பிறகு அச்சுத தேவலோகத்திலே இந்திரனாய்ப் பிறந்தார். பின்னர், மீண்டும் இரதன சஞ்சய நகரத்திலே வச்சிராயுதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். பிறகு ஒன்பதாவது பிறவி யிலே அகமிந்திர தேவனாய்த் தேவலோகத்திலே பிறந்தார். மீண்டும், பத்தாவது பிறவியிலே புண்டரீகினி நகரத்திலே அங்கிருந்து சர்வார்த்த சித்தி என்னும் தெய்வலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். கடைசியாக, முன்னமே கூறியதுபோல, அஸ்தினபுரத்திலே சாந்திநாதர் என்னும் பெயருள்ள அரசனாய்ப் பிறந்து, சக்கரவர்த்தியாய் விளங்கி, இறுதியில் தீர்த்தங்கரராய் வாழ்ந்து வீடுபேறடைந்தார். இவருடைய முற்பிறப்புச் செய்திகள் இவருடைய வரலாற்றில் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. சாந்தி புராணமும் இந்த வரலாறுகளைக் கூறுகிற நூலாக இருக்க வேண்டும். சாந்தி புராணத்தைப் பாடிய புலவர் யார், அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பன தெரியவில்லை. இப்புராணம் இப்போது மறைந்துவிட்டது. இந்நூலிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பவை ஒன்பது செய்யுள்களே. இச்செய்யுள்கள் புறத் திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன என்று முன்னமே கூறினோம். இச்செய்யுள்கள் இனிமையாக உள்ளன: ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடும் மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமோர் ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே. 1 நாயும் போல்வர்பல் லெச்சில் நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால் நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார். 2 தோளும் மென்முலை யும்மல்குற் பாரமும் நாளும் நாளும் நவின்று பருகிய கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார். 3 தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால ஈனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழப் பண்ணும் மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே. 4 கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலகு நரகில்வரு நவைபலவு மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே. 5 பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான். 6 கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார் மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும் சுணங்கனைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார். 7 ஆனை யூற்றின் மீன்சுவையின் அசுண மிசையின் அளிநாற்றத் தேனைப் பதங்க முருவங்கண் டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தலான் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே. 8 விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணில் இன்பமாம் ஈறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே 9 31. சித்தாந்தத் தொகை சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளி லிருந்து இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது தெரிகிறது. இது பௌத்த சமய நூல். ஞானப்பிரகாசர், சிவஞான சித்தியார் (பரபக்கம், சௌத்தி ராந்தகன் மதம், 2ஆம் செய்யுள்) உரையில் சித்தாந்தத் தொகையி லிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டுவது: “‘அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண் முழுதும் போதிநீழ னன்குணர்ந்த முனிவரன்றன்’ இஃதவர்கள் (பௌத்தர்கள்) சித்தாந்தத் தொகை.” சித்தாந்தத் தொகையிலிருந்து இந்த இரண்டடிகளை மட்டும் மேற்கொள் காட்டிய உரையாசிரியர், மேற்படி சித்தியார் (சௌத்திராந்தகன் மதம், 31ஆம் செய்யுள்( உரையில் இச்செய்யுள் முழுவதையும் மேற்கோள் காட்டுகிறார். அது: “அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்தன் அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ” என்பது. நீலகேசிக்கு உரையெழுதிய சமய திவாகர வாமன முனிவர் (புத்த வாதச் சருக்கம், 64ஆம் செய்யுள் உரை), சித்தாந்தத் தொகையிலிருந்து ஒரு பாட்டின் ஓர் அடியை மட்டும் மேற்கோள் காட்டுகிறார். அது, “மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே” என்பதாம். பௌத்த சமய சித்தாந்தங்களைத் தொகுத்துக் கூறுவது இந்நூல் என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 32. சூத்ரக சரிதம் சூத்ரக சரிதம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகின்றது.8 காஞ்சிபுரத்தில் இருந்த லலிதாலயர் என்பவர் எழுதியது. இந்நூல் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்த லலிதாலயர், பேர்போன சிற்பா சாரியரான மாந்தாதா என்பவரின் மகனார். லலிதாலயர் சிற்பக் கலைஞராகவும் நூலாசிரியராகவும் விளங்கினார். இவரும் இவருடைய தந்தையாரான மாந்தாதாவும் மாமல்ல புரத்தில் சிற்பங்களை யமைத்த சிற்பாசாரியர்களின் பரம்பரையினர் போலத் தெரிகின்றனர். இவர் காலத்தில் காஞ்சிபுரத்தில் தண்டி என்று பெயர் உள்ள பேர் போன வடமொழிப் புலவர் இருந்தார். தண்டியாசிரியர், காவியதரிசம், அவந்திசுந்தரி கதை என்னும் நூல்களை எழுதிப் புகழ் படைத்தவர். இவரும் லலிதாலயரும் நண்பர்களாக இருந்தார்கள். சிற்பக் கலைஞரான லலிதாலயர், மாமல்லபுரத்திலே அனந்த சயனமூர்த்தி என்னும் சிற்ப உருவத்தைக் கல்லில் செதுக்கிய மைத்தார். அதைச் செதுக்கும்போது அவ்வுருவத்தின் கைகளில் ஒன்று உடைந்து போயிற்றாம். லலிதாலயர், உடைந்து போன அந்தக் கையை அந்த உருவத்திலேயே பொருத்தி வைத்து, உடைந்த அடையாளத்தை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாதபடி அமைத்து விட்டாராம். ஒரு சமயம், பல்லவ அரசனின் சேனைத் தலைவனின் மகனான ரணமல்லன் என்னும் பெயருள்ள வீரபாதகன், கேரள நாட்டிலிருந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்க்க வந்திருந்த மாத்ருதத்தன், தேவ சர்மன் என்னும் நண்பர்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தபோது, அந் நகரத்தில் இருந்த லலிதாலயர், தண்டி யாசிரியரையும் கேரள நண்பர் களையும் வீரபாதகன் அழைத்துக் கொண்டு மாமல்லபுரஞ் சென்றான். மாமல்லபுரத்தில், லலிதாலயர் தாம் கல்லில் செதுக்கியமைத்த அனந்த சயனமூர்த்தியை அவர்களுக்குக் காட்டி, அதில் உடைந்த கை ஒட்டி யிருக்கும் இடத்தைக் காட்டும் படி கேட்டாராம். அவர்களால் கண்டு பிடிக்க முடியாமற்போகவே லலிதாலயரே அக்கையை அவர்களுக்குக் காட்டினாராம். அவ்வளவு திறமையாக, ஒருவரும் கண்டுபிடிக்க முடியாதபடி அந்தக் கை ஒட்டப்பட்டிருந்தது. தண்டியாசிரியருக்கு அவந்திசுந்தரி கதை எழுத வேண்டும் என்ற கருத்துத் தோன்றியது மாமல்லபுரத்தைப் பார்த்தபிறகுதான் என்று கூறப்படுகிறது. சிற்பக் கலைஞரான லலிதாலயர் தமிழில் எழுதிய சூத்ரக சரிதம் என்னும் நூல் மறைந்துவிட்டது. அந்நூலைப் பற்றிய செய்திகளும் தெரியவில்லை. 33. செஞ்சிக் கலம்பகம் தொண்டை நாட்டில் செஞ்சி என்னும் ஊரில் இருந்த ஒரு தலைவன் மேல் பாடப்பட்ட நூல் செஞ்சிக் கலம்பகம் என்பது. இதனைப் பாடியவர் புகழேந்திப் புலவர். இச்செய்திகளைத் தொண்டமண்டல சதகச் செய்யுளினால் அறியலாம். ‘காரார் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தின் நேரான நையும்படி யென்ற பாடலின் நேரியர்கோன் சீராகச் செப்பிய நற்பாடல் கொண்டவன் செஞ்சியர்கோன் மாராபி ராமனங் கொற்றந்தை யூர்தொண்டை மண்டலேமே’ செஞ்சிக் கலம்பகத்திலிருந்து ஒரு செய்யுளைத் தொண்ட மண்டல சதக ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது: ‘நையும் படியென் நாங்கொற்ற நங்கோன் செஞ்சிவரைமீதே ஐயம் பெறு நுண்ணிடைமடவாய் அகிலின் தூபமுகிலன்று பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே.’ இந்நூல் இப்போது கிடைத்திலது.9 34. சேயூர் முருகன் உலா சேயூர் முருகப்பெருமான்மீது கவிராசர் என்பவர் இயற்றிய ஓர் உலா உண்டென்பது, அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழினால் தெரிகிறது. அந்தகக் கவி வீரராகவ முதலியார், தாம் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், அம்புலிப் பருவம் 10ஆம் செய்யுளில் குறிப்பிடுகிறார். அச்செய்யுள் பின்வருவது: “தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறுந் தரித்தா றெழுத் தோதலாஞ் சந்நிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச் சந்தம் புகழ்ந் துய்யலாம். புவிராசன் வளவன் கழுக்குன்றன் வளமைபுரி புண்ணியந் தரிசிக் கலாம் பொருஞ்சூ ரனைப்பொருங் கதைமுதற் கந்தப் புராணக் கடற் காணலாம். கவிராச னிப்பிரான் மிசைசெய்த திருவுலாக் கவிவெள்ளை கற்றுருகலாம் கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி கலம்பகக் கவி வினவலாம். அவிராட கக்கோவில் புக்குவிளை யாடலாம் அம்புலீ யாட வாவே மயில்வனச் செய்கையின் மயில்வகைக் கந்தனுடன் அம்புலீ யாட வாவே.” அச்செய்யுள், கவிராசன் என்னும் புலவர் சேயூர் முருகன் உலா என்னும் நூலை இயற்றிய செய்தியைக் கூறுகிறது. கவிராசன் என்பவர், சேறைக் கவிராசபிள்ளை என்பவர். ஆசுகவிராயர் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர். சுன்னாகம் திரு. அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள், தாம் இயற்றிய தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் இவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “சேறைக் கவிராசபிள்ளை. இவரூர் சோழமண்டலத்துள்ள சேறை என்றும், குலம் கருணீகர் குலம் என்றும் கூறுவர். சமயம் சைவம். இவர் இலக்கிய இலக்கணங்கள் நன்கு கற்றவர். ஆசு கவிராயர் என்னும் பேரும் பெற்றவர் சேயூர் முருகனுலா, வாட் போக்கிநாதருலா, அண்ணா மலையார் வண்ணம், காளத்திநாதருலா முதலிய பிரபந்தங்கள் செய்தவர். இப்பிரபந்தங்கள் சிலவற்றிலே சிலேடை, மடக்கு, திருக்கு முதலிய அணிகளும் அமைத்தவர்.” சேயூர் முருகன் உலா இப்போது மறைந்து விட்டது. இந்நூல் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. 35. தசவிடுதூது திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876) அவர்கள் தானப்பாசாரியார் என்பவர்மீது இயற்றியது தசவிடுதூது. அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாய்ப்புள், பாங்கி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் பத்துப் பொருட்களைத் தூதுவிட்டதாகக் கூறப்படுகிற அகப்பொருள் இலக்கியநூல் இது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 36. தண்டகாரணிய மகிமை கி.பி. 1768ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிவசிவ வெண்பா என்னும் நூலின் 9ஆம் செய்யுள் ‘விருந்தோம்பல்’ என்பதற்கு அந்நூல் உரையாசிரியர், இந்நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவர் எழுதுவதாவது: “இதற்குப் பிரமாணம், தண்டகாருணிய மகிமையில் சுகேது வென்னும் ராசா அன்னமிடாமையின் தன் உடம்பைத் தானே தின்றானென்னுங் கதை: ‘அன்ன மீகலான் சுகேதுவென் பவன்விசும் படைத்தும் தன்ன தாகிய வுடறினு மதுதவிர்ந் திடயாம் மன்னி யன்னமீந் தனமவன் றருமணிக் கடகம் உன்ன தாகவென் றிராகவற் ககத்திய னுதவ. 1 வாங்கி மாதவன் சொற்றவை கேட்டக மகிழ்ந்து பூங்க ழற்றொழு தருள்விடை கொண்டனன் போந்து தேங்கு தண்புன லயோத்தியை நோக்கினன் சென்றான் பாங்கர் சேனையுந் தலைவருங் குழீஇயினர் பாவ.” 2 இதனால் இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகின்றது. 37. தன்னை யமகவந்தாதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரைத் தீவில் இருந்த முருகேசையர் (1774 - 1830) இயற்றியது தன்னை யமக வந்தாதி என்னும் நூல். இந்த நூலும், இவர் இவற்றிய குருக்ஷேத்திர நாடகம், தன்னை நாயகரூஞ்சல் என்னும் நூல்களும் மறைந்துவிட்டன. 38. திருக்காப்பலூர் குமரன் உலா வட ஆர்க்காடு மாவட்டத்தில் காப்பலூர் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூர் திருக்காமேசுவரர் கோவிலில் உள்ள கல்லெழுத்துச் சாசனம், திருக்காமி, அவதானியார் என்பவர் குமரக் கடவுள்மீது உலா பாடிய செய்தியைக் கூறுகிறது. திருக்காமி அவதானியார் உலா பாடியமைக் காகவும், திருக்காமீசுவரர் கோவிலில் விழா ஏற்படுத்தி யமைக்காகவும் அவருக்குக் கோயில் அதிகாரியும், அப்பையன் என்பவரின் காரியஸ்த ரான சொக்க பிள்ளை ஐயன் என்பவரும் சேர்ந்து நூறு குழிநிலத்தைத் தானமாகக் கொடுத்ததை இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசன எழுத்து கி.பி. 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்த உலாவின் பெயர் என்னவென்று இந்தச் சாசனம் கூறவில்லை. திருக்காடலூர் குமரன் உலா என்று பெயர் இருக்கக் கூடும் என்று யூகிக்கப் படுகிறது. திருக்காமி அவதானியாரின் வரலாறு தெரியவில்லை.10 39. திருப்பட்டீச்சுரப் புராணம் கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்த இரேவண சித்தர் என்பவர் இயற்றியது திருப்பட்டீச்சுரப் புராணம். பட்டீச்சுரம், கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள ஊர். இவ்வூரைப் பற்றிய புராணம் இது. இந்தப் புராணம் இப்போது கிடைக்கவில்லை. 40. திருப்பதிகம் இப்பெயருள்ள பௌத்த சமய நூல் ஒன்று இருந்ததென்பது சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளிலிருந்து தெரிகிறது. சிவஞான சித்தியார் (சௌத்திராந்தகன் மதம் 2ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் இந்நூலிலிருந்து இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். “எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழந்து மெண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்து மெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ.” இச்செய்யுளை மேற்கோள் காட்டிய பின்னர், ‘இது, திருப்பதிகமெனக் கொள்க’ என்று எழுதுகிறார். சிவஞான சித்தியார், சௌந்திராந்தகன் மத மறுதலை, 8ஆம் செய்யுள் உரையிலும் இதே செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். நீலகேசி கடவுள் வாழ்த்து உரையில், பௌத்த மதத்தைக் கண்டிக்கும் இடத்தில், சமய திவாகர வாமன முனிவர் இந்தச் செய் யுளையும் மற்றொரு செய்யுளையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதைக் கூற வில்லை. கூறவில்லையாயினும், இச் செய்யுள்கள், ஞானப் பிரகாசர் குறிப்பிடுகிற திருப்பதிகம் என்னும் நூலைச் சேர்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகின்றது. சமய திவாகர வாமன முனிவர் மேற்கோள் காட்டும் செய்யுள்கள் இவை: என்றுதா னுலகுய்யக்கோ ளெண்ணினா னதுமுதலாச் சென்றிரந் தார்க்கீந்தனன் பொருளுடம் புறுப்புக டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக் குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ. 1 எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழந்து மெண்ணிகந்த வுலோகங்க ளிருடீர வொருங்குணர்ந்து மெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி யெண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ. 2 திருப்பதிகம் என்னும் இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 41. திருப்பாலைப்பந்தல் மத்தியஸ்தநாத சுவாமி உலா இந்த உலாவைப் பாடியவர் காளிங்கராயர் உண்ணாமுலை நயினார் எல்லப்ப நயினார் என்பவர். இவரே அருணகிரிப் புராணம் பாடியவர். இவர் இயற்றிய இந்த உலா மறைந்து போயிற்று.11 இந்த உலாவைப் பாடியதற்காக இவருக்குக் கோயில் அதிகாரிகள் நிலமும் வீடும் உணவும் நன்கொடையாக அளித்தனர். திருப்பாலைப்பந்தல் என்பது தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகாவில் உள்ளது. இந்தப் புலவர் தஞ்சாவூரைக் கி. பி. 1572இல் அரசாண்ட செல்லப்ப நாயகரின் அவைப் புலவராக இருந்தவர்.12 42. திருமேற்றளிப் புராணம் இப்புராணத்தையும் இரேவண சித்தர் பாடினார். இவரது காலம் கி. பி. 16ஆம் நூற்றாண்டு. இவர் இவற்றிய பட்டீச்சுரப் புராணம் மறைந்து விட்டதுபோலவே, இப்புராணமும் மறைந்துவிட்டது. 43.திருவலஞ்சுழிப் புராணம் பட்டீச்சுரப் புராணம், திருமேற்றளிப் புராணம் பாடிய இரேவண சித்தரே திருவலஞ்சுழிப் புராணத்தையும் பாடினார். இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு. இவரது மற்ற நூல்கள் மறைந்துவிட்டதுபோலவே இந்தநூலும் மறைந்துவிட்டது. இவர் இயற்றிய அகராதி நிகண்டு மட்டும் கிடைத்திருக்கிறது. 44. திரையக்காணம் இது ஒரு சோதிட நூல் என்று தெரிகிறது. யாப்பருங்கல உரை யாசிரியர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். (யாப்பருங்கலம், ஒழியியல், 2ஆம் சூத்திர உரை) இந்நூலிலிருந்து கீழ்க்காணும் இரண்டு செய்யுள்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்: “பூமன் றெறுகதிரோன் பொன்காரி யொண்புகரோன் வாமப் புதன்வெளியோன் மாமந்தன்-சோமன்சேய் சந்திரனே செவ்வாய் சதமகன்றன் மந்திரியே யந்திரையைக் காணமாள் வார்.” 1 “ஆடரிவி லாகிநடு வந்தமுறை சேயிரவி யம்பொ னியலும் சேடிசுற வேறுசனி வெள்ளிபுத னள்ளுமெறி தேள்வ லவன்மீ னோடுமுயல் திங்களினொ டங்கிகுரு வுண்டலுணர் நண்டு துலைநீர் மூடுகுட மோடுபுகர் காரிபுத னேரிதனை யுண்ணு முறையே.” 2 “இவையு முய்த்துணர் நிரனிறை. இவ்விரண்டுந் திரையக் காணம். ஓரிராசி மும்மூன்றாக ஒட்டிக்கொள்க” என்று உரையாசிரியர் எழுதுகிறார். இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 45. துரியோதனன் கலம்பகம் டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த தக்கயாகப் பரணி 615 ஆம் தாழிசை, விசேடக் குறிப்புரையில், துரியோதனன் கலம்பகத்தி லிருந்து ஒரு செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அச்செய்யுள்: “விடாது விழுங்குவெண் டிங்களை யெங்களை வெண்ணிலாவாற் சுடாஅ விடில்விடுந் தொல்புவி வட்டமும் சூழ்கடலும் வடாதுந் தெனாதும் வலம்புரித் தாருமை தோய்வரையுங் குடாதுங் குணாது முடையான் கொடிமைக் கோளரவே? இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 46. தேசிகமாலை யாப்பருங்கலம், தொடையோத்து, 52ஆம் சூத்திர உரையில், விருத்தியுரைகாரர் தேசிகமாலை என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு: “பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் உதயணன் கதையும் தேசிகமாலையும் முதலாகவுடைய தொடர் நிலைச் செய்யுள் களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க.” இவர் கூறுகிற பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் எவை என்பது தெரியவில்லை. ஏனென்றால், இப்போது பல பன்மணி மாலைகளும் மும்மணிக்கோவைகளும் உள்ளன. இவை இப்போதுள் ளவைகளின் வேறுபட்ட நூல்களா என்பது தெரியவில்லை. உதயணன் கதை என்பது பெருங்கதை. அது இப்போதும் இருக்கிறது. தேசிகமாலை என்னும் அந்தாதித் தொடர்நிலைச் செய்யுள் இப்போது கிடைக்க வில்லை. 47. நல்லைநாயக நான்மணிமாலை யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த சுப்பையர் என்பவர் இதன் ஆசிரியர். இவர் கி.பி. 1795இல் வாழ்ந்தவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்துவிட்டது போலவே, இவர் இயற்றிய நல்லை நாயக நான்மணிமாலையும் மறைந்துவிட்டது. 48. நாரத சரிதை புறத்திரட்டு என்னும் தொகை நூலிலே, நாரத சரிதையி லிருந்து எட்டுச் செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாரத சரிதை என்பது நாரதன் என்பவனின் சரித்திரத்தைக் கூறுவது போலும். ஜைன நூலாகிய ஸ்ரீபுராணத்தில், நாரதன், பர்வதன் என்னும் இருவர் சரிதம் கூறப் படுகிறது. அந்த நாரதனின் சரிதமாக இந்த நாரத சரிதை என்னும் நூல் அமைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. நாரத சரிதை என்னும் இந்நூலினை இயற்றியவர் யார். அவர் எக்காலத்தில் இந்நூலை இயற்றினார் என்பன தெரியவில்லை. புறத்திரட்டில் தொகுக்கப் பட்டுள்ள இந்நூலின் செய்யுள்கள் வருமாறு: வெவ்விட மமுதென விளங்குங் கண்ணினார்க் கெவ்விட முடம்பினி லிழிக்கத் தக்கன அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால் உய்விடம் யாதினி யுரைக்கற் பாலையே. 1 பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும் மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத் திற்றைநாள் கழிந்தன மென்று கண்படூஉம் ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ. 2 புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் றேய்த்து விழுமவை குழவி யென்றும் விளங்கிய காளை யென்றும் பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக் குழுவினை யின்ப மாகக் கொள்வாரோ குருடு தீர்ந்தார். 3 அருந்திய குறையிற் றுன்ப மாங்கவை நிறையிற் றுன்பம் பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துன்பம் மருந்தினுக் குஞற்றல் துன்ப மற்றவை யருந்தல் துன்பம் இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்ப மில்லார். 4 வாழ்கின்ற மக்களுநம் வழிநின்றா ரெனவுள்ளந் தாழ்கின்றார் தாழ்கில்லார் தமநில்லா வானக்கால் ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ. 5 வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும் இல்லென்ற சொல்லு மிலனாகலின் யாவர் மாட்டுஞ் சொல்லுங் குறையின் மையிற்சோரரு மின்மையாலே கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான். 6 மன்னன் மேவு கோயில்மேரு மான மற்றி மண்ணெலா மென்ன லாய வூரிடத் திலங்கு மாளி கைக்குலம் பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந் துன்னு நேமி வெற்பையென்பர் சூழ் மதிற் பரப்பையே. 7 ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக் கூசு மொழியும் புருவமும் குடில மாகி யிருப்பாரை வாசக் குழலு மலர்க்கண்ணு மானமுங் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே. 8 49. பரமத திமிரபானு பரமதம் - பிற சமயம். திமிரம் - இருள். பானு - சூரியன். பிற மதங்களாகிய இருளைப் போக்கும் சூரியன் என்பது பொருள். இந் நூலை இயற்றியவர் மறைஞான சம்பந்தர் என்பவர். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. சைவ சமய நூல். 50. பரிப்பெருமாள் காமநூல் திருக்குறள் உரையாசிரியர்களில் ஒருவராகிய, பரிப்பெருமாள், காமநூல் ஒன்று இயற்றினார் என்று அவரது உரைப்பாயிரச் செய்யுள் கூறுகிறது: “தெள்ளி மொழியிலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார், ஒள்ளிய காமநூல் ஓர்ந்துரைத்து - வள்ளுவனார் பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவை தெய்வப் பரிபெருமாள் தேர்ந்து” என்பது அச்செய்யுள். இந்தக் காமநூலின் பெயர் என்னவென்று தெரிய வில்லை. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 51. பரிபாடை இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பதை, யாப்பருங் கலம் (1-ஆம் சூத்திரம்) விருத்தியுரையில், “பரி பாடைச் சூத்திரம் என்பனவும் உள. அவை, ஈண்டுத் தந்திர வுத்தியுட்பட்டங்கு மெனக் கொள்க” என்று எழுதியிருப்பதிலிருந்து அறியலாம். இது பரிபாடல் என்னும் நூலைச் சேர்ந்தது அன்று. பரிபாடல் என்பது பரிபாஷையாகும். வைத்தியம் சோதிடம், சமய சாத்திரம் முதலிய கலைகளுக்குப் பரிபாஷைகள் உண்டு. அத்தகைய பரிபாஷையைக் கூறுகிற நூலாக இருக்கக்கூடும் இந்நூல். இதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 52. பிங்கள சரிதை. 53 வாமன சரிதை நவநீதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் இவ்விரண்டு நூல்களைக் கூறுகிறார். “பாட்டுப் பொருளிடம்” என்னும் தொடக்கத்து 64-ஆம் செய்யுளுரையில் பழைய உரையாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “பாட்டாற் றொக்கது குறுந்தொகை: எண்ணாற்றொக்கது - பன்னிரு படலமும் பதிற்றுப் பத்தும்: செய்தானாற் பெயர்பெற்றது - திருவள்ளுவப் பயன்: செய்வித்தானால் பெயர்பெற்றன - பிங்கல சரிதை, வாமன சரிதை.” பிங்கலன், வாமனன் என்பவர்களைப்பற்றிய கதையைச் செய்யுளாகக் கூறும் இந்நூல்கள், ஜைன சமய நூல்கள் எனத் தோன்று கின்றன. இந்நூல்களைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. 54. பிங்கலகேசி, 55. அஞ்சனகேசி, 56. காலகேசி, 57. தத்துவ தரிசனம் இந்த நான்கு நூல்களை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில் அவர் எழுதுவது வருமாறு: “தருக்கமாவன: ஏகாந்தவாதமும் அநோகந்தவாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும், சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளுங் காண்க.” இதில், இவர் கூறுகிற குண்டலம் என்பது குண்டலகேசி என்னும் நூல். அது பௌத்த நூல். இந்நூலின் சில பாக்கள் மட்டும் கிடைத் துள்ளன. (இதைப்பற்றி இந்நூல் 114ஆம் பக்கம் காண்க.) நீலம் என்பது நீலகேசி. இது இப்போது அச்சிடப்பட்டிருக்கிறது. பிங்கலம் என்பது பிங்கலகேசி, அஞ்சனம் என்பது அஞ்சனகேசி. இந்நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அவ்வாறே தத்துவ தரிசனமும், காலகேசியும் கிடைக்கவில்லை. எனவே இந்நூல்கள் இறந்துபட்டன போலும். இந்த நூல்கள் எல்லாம் பௌத்தம் அல்லது ஜைனம் என்னும் மதங்களைச் சார்ந்தவை. யாப்பருங்கல உரையாசிரியர், பிங்கலகேசியைப் பற்றி மேலும் எழுதுகிறார்: “பிங்கலகேசியின் முதற்பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார்.” (ஒழியியல் உரை) “தளைசீர் வண்ணமாமாறு சொன்ன இலக்கணமும் தளைசீர் வண்ணம் எனப்படும் உபசார வழக்கினால். குண்டல நீல பிங்கல கேசிகளது தோற்றமும் தொழிலும் சொன்ன விலக்கணச் செய்யுள் களும் பிரித்து வேறோ ருபசாரத்தினாற் குண்டலகேசி நீலகேசி பிங்கல கேசி என்னும் பெயர் பெற்றாற்போல எனக்கொள்க.” (எழுத்தோத்து உரை) சமய வாதத்தைப்பற்றியே பௌத்த ஜைன நூல்களுக்குக் கேசி நூல்கள் என்பது பெயர். இந்த நூல்களைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 58. புட்கரனார் மந்திர நூல் இப்பெயருள்ள நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப் பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40 ஆம் சூத்திர உரையில், ஆரிடப்போலி அல்லது ஆரிட வாசகம் என்பதைக் கூறும்போது இவ்வாறு கூறுகிறார் :- “வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக்கர வட்டத் துட்புள்ளி யென்பதே புட்கரனார் கண்ட புணர்ப்பு.” இது மந்திர நூலுட் புட்கரனார் கண்ட வெழுத்துக்குறி வெண்பா. இஃ திரண்டாமடி குறைந்து வந்தது.” இதனை ஆரிட வாசகம் என்பதனாலே ரிஷிவாக்கு என்பது தெரிகிறது. ஆரிட வாசகம் - இருடி வாக்கு. இந்த மந்திர நூலை இயற்றிய புட்கரனார் யார், அவர் வரலாறு என்ன என்பது தெரியவில்லை. இந்நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 59. மஞ்சரிப்பா இப் பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பதைத் தொண்டை மண்டல சதகத்தினால் அறிகிறோம். ‘வானப்ர காசப் புகழ்க்கிருட்டின ராயர்க்கு மஞ்சரிப்பா கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய் ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே’ என்பது அப்பாடல். காஞ்சீபுரத்தில் ஞானப்பிரகாசர் மடத்தின் தலைவராய் இருந்த வரும், கச்சிக் கலம்பகம் இயற்றியவருமான ஞானப் பிரகாசர் என்னும் பெயருள்ள ஆசிரியர், கிருட்டினராயர் மீது மஞ்சரிப்பா என்னும் நூலை இயற்றினார் என்று தெரிகிறது. கிருட்டினராயர் என்பவர் கிருட்டின தேவராயர் என்னும் பெயருடைய விஜயநகரத்து அரசர் ஆவார். இவர் கி.பி. 1509 முதல் 1529 வரையில் அரசாண்டார். எனவே 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல் இயற்றப் பட்டது. மஞ்சரிப்பா, புறத்திணையும் அகத்திணையும் விரவி வந்த செய்யுள்களைக் கொண்டது என்பர். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 60. மல்லிநாதர் புராணம் இது ஒரு சமண சமய நூல். மணிப்பிரவாள வசனநடையில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்னும் நூலில், 19-ஆம் தீர்த்தங்கரராகிய மல்லிநாதசுவாமி புராணத்தில், பழைய இரண்டு செய்யுட் பகுதிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மேற்கோள் செய்யுள்களை நோக்கும்போது, மல்லிநாதர் புராணம் என்னும் ஒரு நூல் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்றும், அது பின்னர் மறைந்துவிட்டிருக்க வேண்டும் என்றும் கருதவேண்டியிருக்கிறது. மேற்கோள் காட்டப் பட்ட செய்யுட் பகுதிகளை இங்குக் காட்டுவதற்கு முன்பு, மல்லிநாதர் என்னும் தீர்த்தங்கரருடைய கதையை அறிந்துகொள்ளுவது அமைவுடைத்து. இந்தப் புராணத்தின் கதைச் சுருக்கம் இது: கச்சகாவதி நாட்டின் அரசன் வைசிரவணன் என்பவன் வீதசோக நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டு வந்தான். அந்த அரசன், கார்காலத்தில் ஒரு நாள் வனக் காட்சியைக் காணச் சென்றான். வனத்திலே மிகப் பெரியதோர் ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்தான். அந்த ஆலமரம் நூற்றுக்கணக்கான விழுதுகளால் தாங்கப்பெற்று, விண்ணுற ஓங்கி எண்டிசையும் பரவிக் கிளைத்துத் தழைத்துத் தளிர்த்துக் காண்பவர் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து நின்றது. அந்த ஆலமரத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்த அரசன், அதற்கு ‘வனஸ்பதி ராசன்’ என்று சிறப்பு பெயர் கொடுத்து, அந்த மரத்தைச் சுற்றிலும் மேடையும் கைப்பிடிச் சுவர்களும் அமைத்து, அதற்குக் காவலர்களையும் அமைத்துச் சென்றான். சில காலத்திற்குப் பின்னர், அரசன் அவ்வழியாக வந்தபோது, அந்த ஆலமரம் அங்குக் காணப்படவில்லை. இடி விழுந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இதனைக் கண்ட அரசன் மனம் துணுக்குற்றது. அப்போது அரசனுடைய மனத்திலே நிலையாமை நன்கு விளங்கியது. இதுபோலவே தனது வாழ்க்கையும் அரசபதவியும் நிலையற்றன என்பதையும், இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையற்றவை என்பதையும் உணர்ந்தான். அப்போதே அரசாட்சியைத் துறந்து, துறவு பூண்டு ஸ்ரீதர முனிவரிடத்தில் தீக்கை பெற்று, தவம் செய்து கடைசியில் இந்திரபதவியடைந்தான். இந்திர பதவியை யடைந்த அரசன், பிறகு மண்ணுலகத்திலே வங்க நாட்டு மிதிலாபுரத்தின் அரசனான கும்பன் என்வனுக்கு மகனாய்ப் பிறந்தான். பிறந்து, மல்லிநாதர் என்னும் பெயருடன் வளர்ந்து, பிறகு துறவு பூண்டு தீர்த்தங்கரர் பதவியை யடைந்து, சமண சமயத்தை உலகத்திலே பரவச் செய்து, பிறகு வீடு பேறடைந்தார். இந்த மல்லிநாதர் சரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூல் முற்காலத்தில் செய்யுளாக இயற்றப்பட்டிருந்தது. அந்த நூலுக்கு என்ன பெயர் இருந்தது என்பது தெரியவில்லை. ‘மல்லி நாதர் புராணம்’ என்னும் பெயரே இருந்திருக்கக்கூடும். அந்நூல் இப்போது மறைந்து விட்டது. அந்நூலிலிருந்து இரண்டு செய்யுட் பகுதிகள் ஸ்ரீபுராணத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்று கூறினோம். அவை கீழே தரப்படுகின்றன: “வாயில் மாடமும் மதிலும் அமைத்துக் காவ லாளரிற் காப்பு நடுபடுத் தரிதினிற் போகி யடவியினி லாடல் மருவியது விடுத்து மறித்துமந் நெறியே.” இச்செய்யுட் பகுதி, வைசிரவண அரசன் ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்ததைக் கூறுகிறது. “இதுஇதற் குற்ற திறைவ என்றலும் கதுமென மனநனி கலங்கின னாகி வெடிப்பட முழக்கத் திடியுரு மேற்றிற் பொடிப்பொடி யாகியது பொன்றினமை கண்டு நெடிது நினைந்து நெஞ்சு கலுழ்வெய்தி இருவினைப் பயத்திற் றிரிதரும் உயிர்கட் கருவலி யுடைமையும் ஆண்மையும் அழகும் திருமலி செல்வமும் தேசும் வென்றியும் இளமையும் எழிலும் இராச விபூதியும் வளமையும் கிளைமையும் மறித்து நோக்குதற்கு நிறுத்துதல் அருமையை நிறுத்திய திதுஎன வெறுத்துடன் விடுத்தனன் வினைப்பயன் யாவையும்.” இது வைசிரவண அரசன் ஆலமரம் அழிந்ததைக் கண்டு அதன் மூலம் நிலையாமை யுணர்ந்ததைக் கூறுகிறது. இது அகவற்பாவாலான நூல் எனத் தோன்றுகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 61. மாடலம் இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தக்கயாகப் பரணி உரையினால் தெரிகிறது. மாடலனார் என்பவர் இயற்றியபடியினாலே இந்நூலுக்கு இப்பெயர் வாய்த்தது என்று கருதலாம். தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது. 13ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் இந்நூற் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது: “கழிந்துவளர் கிழமையி லொழிந்த வூழி யொன்பதிற் றிரட்டி யொருமுறை செல்ல நன்கென மொழிவன நான்கே - நான்கிலு முதலது தொடங்கிய நுதல்விழிப் பெரியோன் கடகக் கங்கணப் படவரவு பூட்டு மச்சிலை வளைத்த பொழுதே.” இது, மாடலம்.” இந்த நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 62. மார்க்கண்டேயனார் காஞ்சி குணசாகரர் என்னும் உரையாசிரியர் யாப்பருங்கலக் காரிகை உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். குறிப்பிடுவதோடு, இந்நூற் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். குணசாகரர் மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்யுளையே இளம்பூரண அடிகளும் தமது தொல் காப்பிய உரையில் (பொருள், செய்யுளியல், 230ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர், இச்செய்யுள் எந்நூலைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடவில்லை. குணசாகரர் கூறியதிலிருந்து இச்செய்யுள் மார்க்கண்டேயனார் காஞ்சியில் உள்ளது என்பது தெரிகிறது. அச்செய்யுள் பின்வருவது: “பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின் இம்மை யில்லை மறுமை யில்லை நன்மை யில்லைத் தீமை யில்லைச் செய்வோ ரில்லைச் செய்பொரு ளில்லை யறிவோர் யாரஃ திறுவழி யிறுகென.” முதுமொழிக் காஞ்சி, இரும்பல் காஞ்சி என்னும் நூல்களைப் போன்று இந்த மார்க்கண்டேயனார் காஞ்சியும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளைக் கூறுகிற நூல் என்று கருதப்படுகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 63. மாறவர்மன் பிள்ளைக்கவி மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் அரண்மனைப் புலவர்கள் கொடிகொண்டான் பெரியான் ஆதிச்சதேவன், காரணை விழுப்பரையன் என்பவர்கள். இவர்களில் கொடிகொண்டான் பெரியான் ஆதிச்ச தேவர் இவ்வரசன்மேல் பிள்ளைக் கவியொன்று பாடினார். இச்செய்தியை, இராமநாதபுர மாவட்டம், திருப்புத்தூர் தாலுகா பெரிச்சிகோவில் என்னும் ஊரில் உள்ள சுகந்தவனேசுவரர் கோவிலில் உள்ள சாசனம் கூறுகிறது.13 இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 64. முப்பேட்டுச் செய்யுள் இப்பெயருள்ள நூலையும், இந்நூலிலிருந்து மூன்று செய்யுளையும் யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப் பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர உரையில் இவ்வுரை யாசிரியர் எழுதுவது பின்வருவது : “கல்வினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவர் கொல்லையிற் களிறேறி வெற்பே யாதே கொல்லையுட் களிறேறி வெற்பனிவ் வியனாட்டார் பல்புகழ் வானவன் றாளே யாதே பல்புகழ் வானவன் றாளொடுசார் மன்னர்க்கோர் நல்ல படாஅ பறையே யாதே” எனவும், ‘ஈரித ழிணர்நீல மிடைதெரியா தரிந்திடூஉம் ஆய்கதி ரழற்செந்நெ லரியே யாதே ஆய்கதி ரழற்செந்நெ லகன்செறுவி லரிந்திடூஉங் காவிரி வளநாடன் கழலே யாதே காவிரி வளநாடன் கழல்சேர் மன்னர்க் காரர ணிற்ற லரிதே யாதே’ எனவும், ‘நித்திலங் கழலாக நிரைதொடி மடநல்லார் எக்கர்வா னிடுமண லிணரே யாதே எக்கர்வா னிடுமண லிணர்புணர்ந் திசைந்தாடும் கொற்கையார் கோமானே கொடியே யாதே கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச் செற்றர ணிற்ற லரிதே யாதே’ எனவும் இத்தொடக்கத்தன முப்பேட்டுச் செய்யுளும் ஆறடியான் மிக்கன வேனும் ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்து வழங்கப்படும்.” முப்பேட்டுச் செய்யுள் சேர, சோழ, பாண்டியர்மீது இயற்றப்பட்ட நூலெனத் தோன்றுகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 65. மூவடி முப்பது மூவடி முப்பது என்னும் ஒரு நூல் இருந்ததென்பதைப் பேராசிரியர் உரையினால் அறிகிறோம். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 236ஆம் சூத்திர உரையில் பேராசிரியர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “மற்று மூவடி முப்பது முதலாயின அம்மையெனப்படுமோ அழகெனப்படுமோ வெனின், தாய பனுவலின்மையின் அம்மை யெனப்படாவென்பது. இவற்றுள்ளும் ஓரோர் செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்ற வகையான் வருவன அறிந்துகொள்க.”14 66. வாசுதேவனார் சிந்தம் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் இந்நூலைத் தமது உரையில் குறிக்கிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில் கீழ்க்காணுமாறு எழுதுகிறார் : “... ... ... இத்தொடக்கத்துப் பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்த முதலாகிய வொருசார் செய்யுள் களும் எப்பாற்படுமோ வெனின், ஆரிடச் செய்யுள் எனப்படும். ஆரிடமென்பது உலகியற் செய்யுள்கட் கோதிய உறுப்புகளின் மிக்கும், குறைந்துங் கிடப்பன எனக் கொள்க.” இதனால், இந்நூலை இயற்றியவர் குடமூக்கிற் பகவர் என்பது அறியப்படுகிறது. குடமூக்கு என்பது கும்பகோணம். கும்ப கோணத்தில் இருந்த பகவர் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இந்த நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 67. வீரணுக்க விசயம் வீரசோழ அணுக்கர் என்பவர்மீது இந்நூல் இயற்றப்பட்டது. இந் நூலை இயற்றியவர், பூங்கோயில் நம்பி என்பவர். இந்நூலை இயற்றிய தற்காக இவருக்கு நிலத்தைத் தானமாக வழங்கினான் சோழ அரசன் என்று திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் சாசனம் ஒன்று கூறுகிறது.15 இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இசைத்தமிழ் நூல்கள் 1. இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பது, குணசாகரரின் யாப்பருங்கலக் காரிகை உரைப் பாயிரத்தினால் தெரிகிறது. என்னை? “அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், ... ... ... இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே போலவும், அருமறை யகத்து அட்டக ஓத்தின் வருக்கக் கோவையே போலவும், உரூபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல்நினைப்பு உணர்த்திய இலக்கியத்த தாய்ச் ... ... ... செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து.” என்று அவர் கூறுவது காண்க. இதனால், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை என்னும் நூல், இசைத் தமிழ்ச் செய்யுளிலக்கணத்தைக் கூறுகிறது என்பதும், இந்நூலில் பாட்டுகளின் முதல் நினைப்பை உணர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை. 2. இசைநுணுக்கம் இந்நூலை இயற்றியவர் சிகண்டி என்னும் முனிவர். அநாகுலன் என்னும் பாண்டியனுக்கும் திலோத்தமை என்னும் தெய்வ மகளுக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவன் இசைநூல் அறிவதற்காக இவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இதனைச், சிலப்பதிகாரம், உரைப்பாயிரத்தில், அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து அறியலாம்: “இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவ முனி, இடைச்சங்கத்து அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசைநுணுக்கம்” என்று அவர் எழுதுவது காண்க. “அவர்க்கு (இடைச்சங்கத்தார்க்கு) நூல் அகத்தியமும், தொல் காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூத புராணமும் என இவை என்ப” என்பது இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரம். இந்நூலினின்று கீழ்க்காணும் செய்யுள்களை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் : “‘வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை தமிழது வழக்கே’ என்றார் சிகண்டியாருமாகலின்.” (சிலம்பு. வேனிற்காதை-வரி.1 உரை. மேற்கோள்.) “இடைபிங் கலையிரண்டு மேறும் பிராணன் புடைநின் றபானன்மலம் போக்கும் - தடையின்றி யுண்டனகீ ழாக்கு முதானன் சமானனெங்குங் கொண்டறியு மாறிரதக் கூறு. 1 எனவும், கூர்ம னிமைப்புவிழி கோணாகன் விக்கலாம் பேர்வில் வியானன் பெரிதியக்கும் - போர்மலியுங் கோபங் கிருகரனாங் கோப்பி னுடம்பெரிப்பத் தேவதத்த னாகுமென்று தேர். 2 எனவும், ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க் கழிந்தாலும் பின்னுடலைக் கட்டி - யழிந்தழிய முந்நா ளுதிப்பித்து முன்னியவான் மாவின்றிப் பின்னா வெடித்துவிடும் பேர்ந்து 3 எனவும் இசைநுணுக்கமுடைய சிகண்டியாரும் கூறினாராகலின்.” (சிலம்பு. அரங்கேற்று காதை, 26ஆம் அடி, உரை, மேற்கோள்) “அன்றி இசைப்பா, இசையளவுபா வென்னும் இரு பகுதியுள் இஃது இசைப்பாவின் பகுதியென்ப. அது பத்து வகைப்படும்: செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டில மென. என்னை? செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத் தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு” என்றார் இசைநுணுக்கமுடைய சிகண்டியாரென்க.” (சிலம்பு. கடலாடு காதை, 35ஆம் அடி, உரை. மேற்கோள்) சிகண்டி என்பவரைப் பற்றிப் பௌத்த சமய நூல்களில் ஒரு செய்தி காணப்படுகிறது. சக்கன் (இந்திரன்) உடைய தேர்ப்பாகனான மாதவியின் மகன் சிகண்டி என்பவன். இந்தச் சிகண்டியின் மீது, திம்பரு (தும்புரு?) என்னும் கந்தருவனுடைய மகளான பத்தா சூரிய வச்சசா என்னும் மங்கை காதல் கொண்டிருந்தாள். பஞ்சசிகா என்னும் கந்தருவன் பதினாறு வயதுடைய இளைஞன்; அழகன்; இசைக்கலையில் தேர்ந்தவன். சக்கனுடைய (இந்திரனுடைய) இசைப்புலவனாக இருந்தவன். பஞ்சசிகா பத்தவச்சசாலின்மேல் காதல்கொண்டு அக்காதலைப் பற்றி இசைப்பாட்டு ஒன்றை இயற்றினான். அவன் அப்பாடலை அவளிடம் பாடினான். அதனைக் கேட்ட அவள், அதில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் சிறப்புக் கூறப்பட்டிருந்தபடியால், தான் காதலித்திருந்த சிகண்டியை மணஞ்செய்துகொள்ளாமல், பஞ்ச சிகாவை மணஞ்செய்து கொண்டாள். இந்தக் கதையில் கூறப்பட்ட சிகண்டியும் இசைநுணுக்கம் செய்த சிகண்டியும் ஒருவரா, அல்லது வெவ்வேறு ஆண்களா என்பது ஆராய்ச்சிக்குரியது. 3. இந்திர காளியம் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத்தில், ‘இந்திர காளியம்’ என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று அவர் கூறுகிறார். எனவே, இந்நூலாசிரியர் பாரசவ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யாமளேந்திரர் என்பது அவர் பெயர் என்றும் கருதலாம். இது இசைத் தமிழ் நூல். பாரசவன் என்பது கொற்றவை (துர்க்கை)யைப் பூசை செய்கிற வர்களுக்குப் பெயர். என்னை? “தேவிக்குத் திருவுடையாக உபாசக பாரசவன் சார்த்துவன கௌசிகப் பட்டாடைகளேயோ? ... ... ... அன்றியும், தேவியைப் பூசிக்கும் பாரசவன் அமுது செய்விப்பன அறுசுவையடி சிலேயோ” எனவரும் தக்கயாகப் பரணி (தேவியைப் பாடியது - 15) உரையைக் காண்க. இனி, யாமளேந்திரர் என்னும் பெயரும் இவருடைய இயற் பெயர் அன்று; சிறப்புப் பெயர் ஆகும். என்னை? தேவியைப்பற்றிக் கூறும் நூல்களுக்கு யாமள நூல் என்பது பெயர். இதனை, தக்கயாகப் பரணி (கோயிலைப் பாடியது - 1) உரையினால் அறியலாம். “யாமள சாத்திரத்தினாற் சொல்லப்படுகின்ற ஈசுவரியின் பதிணெண் கண நாதராலும் விரும்பப்படுகின்ற கோயில்” என்று அவ்வுரை கூறுவதி லிருந்து அறியலாம். எனவே, இந்திரகாளியம் என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றிய பாரசவ முனிவராகிய யாமளேந்திரர் என்பவர் தேவியைப் பூசை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிகின்றது. இந்திரகாளியம், சிலப்பதிகார உரை எழுத அடியார்க்கு நல்லார்க்கு உதவியாயிருந்தது என்பதைத் தவிர அதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 4. குலோத்துங்கன் இசைநூல் குலோத்துங்க சோழன், சோழ அரசர்களில் பேர்பெற்றவன். இவனுக்கு விசயதரன், செயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. கலிங்கப் போரை வென்றவன் இவனே. அதனால், கலிங்கத்துப் பரணி என்னும் நூலைச் செயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப் பெற்றவன். இவன் இசைக் கலையில் வல்லவன் என்றும், இசைத்தமிழ் நூல் ஒன்றை இயற்றினான் என்றும் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. வாழி சோழகுல சேகரன் வகுத்த விசையின் மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா வேழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான் யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. (கலிங்கத்துப் பரணி, அவதாரம், 54 ஆம் தாழிசை). தாள முஞ்செல வும்பிழை யாவகை தான்வ குத்தன தன்னெதிர் பாடியே காள முங்களி றும்பெறும் பாணர்தங் கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே. (மேற்படி, காளிக்குக் கூளி கூறியது. 13ஆம் தாழிசை) இதனால், இவன் இசைக்கலையை நன்கறிந்தவன் என்பதும், இசைக் கலையில் வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழை கண்டவன் என்பதும், இசை நூல் ஒன்றை இவன் வகுத்தான் (இயற்றினான்) என்பதும், இவன் வகுத்த இசைநூல் முறைப்படி இசை பாடி, இவனிடம் பாணர்கள் பரிசு பெற்றார்கள் என்பதும் அறியப்படுகின்றன. இவ்வரசன் இயற்றிய இசைநூலின் பெயர் தெரிய வில்லை. அந்நூலைப்பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை. 5. சிற்றிசை, 5 A பேரிசை இப்பெயருள்ள இரண்டு நூல்களின் பெயரை இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் குறிப்பிடுகிறார்: “அவர்களால் (கடைச் சங்கத்தாரால்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத் தொடக்கத்தன” என்பது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம். இதில் கூறப்பட்ட நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் நூல்கள் இப்போதும் உள்ளன. புறநானூற்றில் சில பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்தில் முதல்பத்தும் கடைசிப்பத்தும் தவிர, ஏனைய எட்டுப் பத்து களும் கிடைத்துள்ளன. பரிபாடலில் சில பாடல்கள் மட்டும் கிடைத் துள்ளன. சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள் கிடைக்கவில்லை. சிற்றிசை பேரிசை என்பன இசைத்தமிழ் நூல்கள் என்பது இவற்றின் பெயரினால் தெரிகிறது. தொல், பொருள், செய்யுளியல், 158 ஆம் சூத்திர உரையில், பேராசிரியர், “கந்தருவ மார்க்கத்து (இசைத் தமிழ்) வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் செந்துறைப் பகுதிக்கே உரியவாகி வருவனவும் கூத்தநூலுள் வெண்டுறையும் அராகத்திற்கேயுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள் போல வேறு பாடப்பெறும் வழக்கின என்பது கருத்து” என்று எழுதுகிறார். தொல். பொருள். செய்யுளியல், 172ஆம் சூத்திர உரையில், இளம் பூரணர், “பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்றார். அவை யாவன, சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத்தமிழில் ஒதப்படுவன” என்று எழுதுகிறார். இவர்கள் கூறுகிற சிற்றிசை, பேரிசை, வரி என்பன இசையின் பகுதிகள். இவை சிற்றிசை பேரிசை என்னும் நூலின் பெயர்களைக் குறிப்பன அல்ல. ஆனால், மேலே இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட சிற்றிசை பேரிசை என்பன இசையைப் பற்றிய நூல்கள் என்பது ஐயமற விளங்குகிறது. இவ்வாறே, கூத்து, வரி என்று இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் குறிப்பது, நாடகத்தையும் வரிக் கூத்தையும் குறிக்கிற இரண்டு நூல்கள் என்பது தெரிகின்றது. 6. பஞ்ச பாரதீயம் இப்பெயருடைய நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையினால் தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் நாரதன் என்பவர். இந்த நூல் அடியார்க்குநல்லார் காலத்திலேயே மறைந்து விட்டது. இந்நூலிலிருந்து ஒரே ஒரு செய்யுளே அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டியிருக்கிறார். அடியார்க்குநல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் இந் நூலைப் பற்றி எழுதுவது: “இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன.” சிலப்பதிகாரம், வேனிற்காதை, ‘செம்பகை யார்ப்பே கூட மதிர்வே. வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து” என்னுய் அடிகளுக்கு உரைகூறிய அடியார்க்குநல்லார், இந்நூலிலிருந்து கீழ்க்காணும் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்: இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகுஞ் சொன்னமாத் திரையினோங்க விசைத்திடுஞ் சுருதியார்ப்பே மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகு நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே. 7. பஞ்சமரபு இஃதோர் இசைத்தமிழ் நூல். அறிவனார் என்பவர் இந் நூலாசிரியர். “அறிவனார் செய்த பஞ்சமரபு” என்று அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத்தில் கூறுகிறார். இந்நூலினின்று ஒரு சூத்திரத்தை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார்: “இன்னும் சுத்தம் சாளகம் தமிழென்னும் சாதி யோசைகள் மூன்றினுடனும் கிரியைக (தாளங்கள்)ளுடனும் பொருந்தும் இசைப் பாக்கள் ஒன்பதுவகை யென்ப. அவை: சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறுதேவ பாணி, வண்ணமென விவை. என்னை? ‘செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை தப்பொன்று மில்லாச் சமபாத - மெய்ப்படியுஞ் செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப பைந்தொடியா யின்னிசையின் பா’ என்றார் பஞ்சமரபுடைய அறிவனாரென்னு மாசிரிய ரென்க” (சிலம்பு, கடலாடுகாதை, அடியார்க்குநல்லார் உரை) 8. பதினாறு படலம் பதினாறு படலம் என்னும் பெயருள்ள இசைத்தமிழ் நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப்பதிகார அரும்பத உரையாசிரியரின் உரையிலிருந்து தெரிகிறது. பதினாறு படலம் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிகிறது. “தெருட்ட லென்றது செப்புங் காலை யுருட்டி வருவ தொன்றே மற்ற வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின் வல்லோ ராய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி என வரும். இவை இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துள் கரணவோத்துட் காண்க.” (சிலம்பு, கானல்வரி, அரும்பத உரையாசிரியர் உரை மேற்கோள்) 9. 9A. பெருநாரை, பெருங்குருகு இவை இசைத்தமிழ் நூல்கள். இவற்றை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிரவுரையில் குறிப்பிடுகிறார். “இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும், தேவனிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன” என்று அவர் எழுதுவது காண்க. இறையனார் அகப்பொருளுரை யாசிரியர் குறிப்பிடுகிற முதுநாரை முதுகுருகு என்னும் நூல்கள், பெருநாரை பெருங்குருகு போலும். “அவர்களால் (தலைச்சங்கத்தார்) பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலுடன் முதுநாரையும், முதுகுருகும், களரியா விரையுமென இத்தொடக்கத்தன” என்று அவ்வுரையாசிரியர் கூறுகிறார். இந்நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 10. வாய்ப்பியம் யாப்பருங்கல விருத்தியுரையில் வாய்ப்பியம் என்னும் நூல் கூறப்படுகிறது. இந்நூல் ஆசிரியரை வாய்ப்பியனார் என்றும், வாய்ப்பியமுடையார் என்றும் கூறுகிறார் யாப்பருங்கல விருத்தியுரை காரர். வாய்ப்பியம், இசைத்தமிழ் இலக்கணத்தைக் கூறுகிற நூல் என்று தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. “இவையெல்லா மொருபுடை யொப்பினாற் பெயர் பெற்றன எனக் கொள்க. ஒன்றுக்கொன்று சிறப்புடைமை நோக்கி வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சியென விம்முறையே பாற்படுத்துவைத்தாரென்க. வெள்ளை யென்றும் பாவென்றும் நின்று வெண்பாவென்று முடிந்தது. வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்று சாதிமேற் சார்த்தி வழங்குவாருமுளர். ‘வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நால்வகை வருணம் போலப் பாவினத் தியற்கையு மதனோ ரற்றே’ என்றார் வாய்ப்பியமுடையா ராகலின்.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 2) மன்னவ னென்ப தாசிரியம்மே வெண்பா முதலா நால்வகைப் பாவு மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய’ என்றார் வாய்ப்பியமுடையா ராகலின்.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 37) “இனிப் பண் நான்கு வகைய, அவை பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், செவ்வழி யாழ் என்பன. என்னை? ‘பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்’ என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோ டைந்து மென்ப. இனிப் பண் சார்பாகத் தோன்றியன திறமாம், என்னை? ‘பண்சார் வாகப் பரந்தன வெல்லாந் திண்டிற மென்ப திறனறிந் தோரே’ என்றாராகலின், அத்திறம் இருபத்தொரு வகைய. ‘அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.’ ‘நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை மருள்வியற் பாற்றுஞ் செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.’ ‘நவிர்படு குறிஞ்சி, செந்திற நான்கு மருதயாழ்த் திறனே’ ‘சாதாரி பியந்தை நேர்ந்த திறமே பெயர்திறம் யாமையாழ் சாதாரி நான்குஞ் செவ்வழியாழ்த் திறனே’ என்றார் வாய்ப்பியனார்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) “மதுவிரி வாகையும், பொதுவிறற் படலமும் புறமா கும்மே என்றார் வாய்ப்பியனார்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) “எப்பொரு ளேனு மொருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் லாகும். ‘வழுவின் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் லாகும்.’ ‘சுடுபொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப விடைநின் றிசைப்ப திடைச் சொல்லாகும்.’ ‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ப் துரிமையோ டியற்றுவ துரிச்சொல் லாகும்’ என்பது வாய்ப்பியம்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) ‘எப்பொரு ளேனு மொருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் லாகும்’ ‘வழுவின் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் லாகும்’ ‘சுடுபொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப விடைநின் றிசைப்ப திடைச் செல்லாகும்’ ‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ப் துரிமையோ டியற்றுவ துரிச்சொல் லாகும்’ என்பது வாய்ப்பியம்” (யாப்பருங்கல விருத்தியுரை, ஒழிபியல்) “இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு: நாற்பெரும் பண்ணும், இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை, ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்றிவையெல்லாம் வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) நாடகத் தமிழ் நூல்கள் 1. அகத்தியம் அகத்திய முனிவர் தமது பெயரால் அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் என்பர். அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தைக் கூறும் நூல் என்பர். “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்திய முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன.” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் கூறுகிறார். அகத்தியம் அக்காலத்திலேயே மறைந்து விட்டது. 2. இராஜஇராஜேசுவர நாடகம் இப்பெயருள்ள நாடகநூல் ஒன்று இருந்ததென்பதைக் தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுச் சாசனத்தினால் அறிகிறோம். கி.பி. 985 முதல் 1014 வரையில் அரசாண்ட இராசராசன் என்னும் சோழ அரசனைப் பற்றிய நாடகம் இது.1 தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்ற வைகாசித் திருவிழாவில் இந்த நாடகம் நடிக்கப் பட்டது. இந்த நாடகத்தை நடித்தவர் பெயர், விசயராசேந் திர ஆசாரியன் என்னும் சிறப்புப் பெயரையுடைய சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றன் என்பவர். இவருக்கு ஆண்டுதோறும் ஆடவல்லான் என்னும் மரக்காலினால் நூற்றிருபது கலம் நெல் அளிக்கப்பட்டது. இந்த நாடக நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. ஆனால், இந்த நாடகத்தை நடித்த திருவாலன் திருமுதுகுன்றன் என்பவரே இதனை இயற்றியிருத்தல் கூடும். இவருக்குரிய வீரராசேந்திர ஆசாரியன் என்னும் சிறப்புப் பெயரினாலும் இது உறுதியாகிறது. பண்டைக் காலத்தில் நாடகத்தை நடிப்பவரே நாடகநூலை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். இந்த நாடகத்தைப் பற்றிய சாசனம் இது: “... ... ... ... கோப்பரகேசரிவர்மரான உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர தேவற்கு யாண்டு ஆறாவது. உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலில் ராஜராஜேஸ்வர நாடகமாட நித்த நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம் வாய்க் கேழ்விப்படி சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கும் இவன் வர்க்கத் தார்க்கும் காணிக்கையாகக் குடத்தோமென்று ஸ்ரீ கார்யக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தார்களுக்கும் திருவாய்மொழிந்தருளித் திரு மந்திர வோலை உதாரவிடங்க விழுப்பரையர் எழுத்தினால் யாண்டு நாலாவது நாள் திருமுகம் பிரசாதம் செய்தருளி வந்தமையிலும் இவன் காணி அனுபவித்துவருகிற படியே ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலிலே கல்வெட்டுவித்துக் குடுக்கவென்று ... ... கல் வெட்டியது.” “திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார் வைய்காசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடகமாட இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் ராஜராஜேஸ்வரியோ டொக்கும் ஆடவலா னென்னும் மரக்காலால் நித்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கல நெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச் சந்திராதித்தவற் கல் வெட்டித்து ... ... ...”2 இராஜராஜ நாடகம் தொன்றுதொட்டுத் தொடர்ந்து நடிக்கப்பட்ட தென்பதும், பிற்காலத்தில் தஞ்சாவூரை மராட்டியர் ஆண்ட காலத்தில் இந்நாடகம் நிறுத்தப்பட்டு இதற்குப் பதிலாக சரபோஜி நாடகம் என்னும் ஒரு நாடகம் நடிக்கப்பட்டதென்பதும் தெரிகின்றன. 3. காரைக் குறவஞ்சி இந்நூலை இயற்றியவர், யாழ்ப்பாணத்துக் காரைத் தீவில் இருந்த சுப்பையர் என்பவர். இவர் கி.பி. 1795இல் இருந்தவர் என்பர். இவர் தமிழ், தெலுங்கு வடமொழிகளைக் கற்றவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்து போயிற்று. 4. குணநூல் இது ஒரு நாடகத்தமிழ் நூல். இதனை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார். “பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பன வற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்” என்று சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் எழுதுகிறார். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் 12ஆம் வரி, “இருவகைக் கூத்து” என்பதன் உரையில். “குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே” என்னும் குணநூற் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். குணநூல் ஆசிரியரின் பெயர் முதலியன தெரியவில்லை. அடியார்க்கு நல்லார் காலத்தில் சிதைந்துபோன இந்நூல் இக்காலத்தில் அடியோடு மறைந்து விட்டது. 5. குருக்ஷேத்திர நாடகம் யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த முருகேசையர் (கி.பி. 1774-1830) என்பவர் இந்நூலை இயற்றினார். இவர் தமிழ் வடமொழி இரண்டிலும் வல்லவர். இவர் இயற்றிய குருக்ஷேத்திர நாடகம் மறைந்து விட்டது. 6. கூத்தநூல் இது கூத்துப் பற்றிய நாடகநூல். இந்நூலை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்: “கூலம் எண்வகைத்து, அவை: நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி: பதினெண் வகைத் தென்பர் கூத்தநூலார். (சிலம்பு., பதிகம், உரை) “எண்வகைக் கூலமாவன: “நெல்லுப் புல்லு வரகுதினை சாமை இறுங்கு தோரையொடு, கழைவிளை நெல்லே’ எனவிவை. இனிக் கூலம் பதினெண் வகைத் தென்பர் கூத்தநூலாசிரியர்.” (சிலம்பு., இந்திர விழா, வரி 23 உரை) இந்நூலைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை. கூத்த நூலும் மதிவாணனார் நாடகத் தமிழ்நூலும் ஒரு நூல் என்று சிலர் கருதுகின்றனர். 7. சந்தம் இது கூத்து சம்பந்தமான ஒரு நாடகத்தமிழ் நூல். இந்த நூலை யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங் கலம், ஒழிபியலில், உரையாசிரியர் இந்நூலை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன; பதினோராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன ... ... ... இனி இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உறுப்பு 6, கொடுகொட்டி யுறுப்பு 4, குடையுறுப்பு 4, குடத்தினுறுப்பு 5, பாண்டரங்க உறுப்பு 6, மல்லாடலுறுப்பு 5, துடியாடலுறுப்பு 6, கடையத்துறுப்பு 6, பேட்டின் உறுப்பு 4, மரக்காலாடல் உறுப்பு 4, பாவையுறுப்பு 3 எனவிவை. இவற்றின் தன்மை செயிற்றியமும், சந்தமும், பொய்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.” இதனால், சந்தம் என்னும் இந்நூல், பதினோராடற்கும் ஏற்ற பாட்டுகளின் இலக்கணங்களைக் கூறும் நூல் என்பது தெரிகிறது. பதினாறு வகையான ஆடல்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும், அதன் உரையிலும் கண்டுகொள்க. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 8. சயந்தம் இதுவும் ஒரு நாடகத் தமிழ் நூல். இந்நூலைப் பற்றி அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்.” இவ்வாறு எழுதிய அடியார்க்குநல்லார், சிலப்பதிகாரம், அரங் கேற்று காதை, 12ஆம் அடி “இருவகைக் கூத்து” என்பதன் உரையில் சயந்த நூலிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார்: “அகத்தெழு சுவையா னகமெனப் படுமே என்றார் சயந்துநூ லுடையாருமெனக் கொள்க” என்று அவர் எழுதுகிறார். அடியார்க்கு நல்லார் காலத்திலேயே சிதைந்துபோன இந்நூல் இப்போது முழுவதும் மறைந்துவிட்டது. 9. செயன்முறை செயன்முறை என்பது நாடகத்தமிழ் இலக்கண நூல் எனத் தெரிகிறது. இந்நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். “கலியுறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும், செயிற்றியத் துள்ளுங் கண்டுகொள்க. அவை யீண்டுரைப்பிற் பெருகும்.” என்று மேற்படி உரையாசிரியர் (யாப்பருங்கலம், செய்யுளியல் 29ஆம் சூத்திர உரை) எழுதுகிறார். செயன்முறை என்னும் இந்நூலைச் செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூலுடன் சேர்த்து உரையாசிரியர் குறிப்பிடுகிறபடியினாலும், செயன்முறை என்னும் பெயரினாலும் இந்நூல் நாடகத்தமிழ் இலக்கண நூல் என்பது நன்கு தெரிகிறது. இந்நூலைப் பற்றியும், இந்நூலாசிரியரைப் பற்றியும் வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை. 10. செயிற்றியம் செயிற்றியம், என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளம் பூரண அடிகளும், பேராசிரியரும், யாப்பருங்கலவிருத்தி யுரைகாரரும் ஆகிய உரையாசிரியர்களின் உரைகளினால் தெரிகிறது. செயிற்றியனார் என்பவர் செய்த நூல் ஆகலின் இதற்குச் செயிற்றியம் என்னும் பெயர் வாய்த்தது. இந்நூல், அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்துவிட்டது. என்னை? “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்திய முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன, பின்னும் முறுவல் சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தனபோலும்” என்று சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் அவர் கூறுவது காண்க. செயிற்றியத்தைப் பற்றிப் பேராசிரியர் கூறுவதாவது: “இங்ஙனம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுப வோவெனின், சொல்லுபவாகலி னன்றே அதன் வழிநூல் செய்த செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாக வடக்கிச் சுவையுங் குறிப்புஞ்சத்துவமு மென மூன்றாக்கி வேறுவேறிலக்கணங் கூறிஅவற்றை, ‘எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப’ என்றோதினா ராயிற்றென்பது.” (தொல். பொருள். மெய்ப்பாட்டியல், 2ஆம் சூத்திர உரை) யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றிக் கூறுவது: “கலியுறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும், செயிற்றியத் துள்ளும், அகத்தியத்துள்ளும் கண்டுகொள்க, அவை யீண்டுரைப்பிற் பெருகும்.” (யாப்பருங்கலம், செய்யுளியல், 29ஆம் உரை) “மற்றையன விவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் ஓதிய விலக்கணந் தழுவிக் கிடந்தனவில்லை யென்பது.” (யாப்பருங்கலம், செய்யுளியல், 31 ஆம் உரை) “வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன: பதினோராடற்கு மேற்ற பாட்டு. அவை அல்லிய முதலியனவும், பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப் பாட்டாய் வருவன ... ... இனி, இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உ றுப்பு 6, கொட்டியுறுப்பு 4, துடையுறுப்பு 4, குடத்தினுறுப்பு 5, பாண்டரங்கு உறுப்பு 6 மல்லாடலுறுப்பு 5, துடியாடலுறுப்பு 6, கடையத்துறுப்பு 6, பேட்டின் உறுப்பு 4, மரக்காலாடல் உறுப்பு 4, பாவையுறுப்பு 3, எனவிவை, இவற்றின் றன்மை செயிற்றியமும், சந்தமும், பொய்கை யார் நூலும் முதலியவற்றுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலை மாற்றே” என்னும் சூத்திர உரை) அடியார்க்கு நல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரையில், செயிற்றிய நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு: ‘அறமுத னான்கு மொன்பான் சுவையு முறைமுன் நாடக முன்னோ னாகும்’ 1 எனவும், ‘அறம்பொரு ளின்ப மரசர் சாதி’ 2 எனவும், ‘அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப’ 3 எனவும், “அறமேற் சூத்திர ரங்க மாகும்’ 4 எனவும் சொன்னார் செயிற்றியனார்.” (சிலம்பு., அரங்கேற்று காதை. 13ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) அக்கோ லேழகன் றெட்டு நீண்டு மொப்பா லுயர்வு மொருகோ லாகு நற்கோல் வேந்த னயங்குறு வாயின் முக்கோ றானு முயரவு முரித்தே’ 5 என்றார் செயிற்றியனார்.” (சிலம்பு., அரங்கேற்று காதை. 101ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) “‘பிணியுங் கோளு நீங்கிய நாளா லணியுங் கவினு மாசற வியற்றித் தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான் மாசது தீர மண்ணுநீ ராட்டித் தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப் பிண்டமுண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக் கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து முரசு முருடு முன்முன் முழங்க வரசு முதலான வைம்பெருங் குழுவுந் தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப வூர்வலஞ் செய்து புகுந்த பின்றைத் தலைக்கோல் கோட றக்க தென்ப’ என்றார் செயிற்றியனார்.” இந்தச் சூத்திரத்தை அரும் பொருள் உரை யாசிரியரும் மேற்கோள் காட்டுகிறார். (சிலம்பு, அரங்கேற்று காதை, தலைக்கோலமைதி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) இளம்பூரண அடிகள் தாம் எழுதிய தொல்காப்பியம், மெய்ப் பாட்டியல் முதல் சூத்திர உரையில் செயிற்றிய நூலிலிருந்து கீழ்க் காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “‘மத்திம மென்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட வெல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப. 1 நயனுடை மரபி னிதன்பய மியாதெனிற் சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கு மொப்ப நிற்கு நிலையிற் றென்ப. 2 உய்ப்போ னிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவ ரறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்க நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரு மச்சுவை யெட்டு மவர்க்கில வாதலி னச்சுவை யொருதலை யாதலி னதனை மெய்த்தலைப் படுக்கவிதன் மிகவறிந் தோரே.’ 3 என்பது செயிற்றியச் சூத்திரம்.” “இருவகை நிலத்தி னியல்லது சுவையே என்றும், நின்ற சுவையே ... ... ... ஒன்றிய நிகழ்ச்சி சத்துவ மென்ப 4 என்றும், சத்துவ மென்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்த னடுக்கங் கடுத்தல் வியர்த்த றேற்றங் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிய சத்துவந் தானே 5 என்றும் சார்பொருள் உரைப்ப.” (தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல், 1ஆம் சூத்திரம், இளம்பூராண அடிகள் உரை மேற்கோள்) (மெய்ப்பாடு) “உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே. 6 (தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல், 3ஆம் சூத்திரம், இளம்பூரண அடிகள் உரை மேற்கோள்) நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே.” 7 (நகைச்சுவை) “உடனிவை தோன்று மிடமியா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணு மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணுங் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை யிகழ்ச்சிக் கண்ணு மற்று மொருவர்கட் பட்டோர் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணு மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணு மாண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணுங் களியின் கண்ணுங் காவாலி கண்ணுந் தெளிவிலா ரொழுகுங் கடவுளார் கண்ணு மாரியர் கூறுந் தமிழின் கண்ணுங் காரிகை யறியாக் காமுகர் கண்ணுங் கூனர் கண்ணுங் குறளர் கண்ணு மூமர் கண்ணுஞ் செவிடர் கண்ணு மான்ற மரபி னின்னுழி யெல்லாந் தோன்று மென்ப துணிந்திசி னோரே.” 8 (தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல், 4ஆம் சூத்திரம், இளம்பூராண அடிகள் உரை மேற்கோள்) (அழுகைச் சுவை) “கவலை கூர்ந்த கருணையது பெயரே யவலமென்ப வறிந்தோ ரதுதா னிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிற ரடியுறப் பணித லுளைப்பரி பெருங்க றூர்ந்த சேவடி தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை நிறங்கிள ரகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கோன்முனைக் கவற்சி யலைக்கண் மாறா வழுகுர லரவ மின்னோ ரன்னவை யியற்பட நாடித் துன்னின ருணர்க துணிவறிந் தோரே.” 9 “இதன்பய மிவ்வழி நோக்கி யசைந்தன ராகி யழுத லென்ப.” 10 (தொல்., பொருள்., மெய்ப்பாடு, 5ஆம் சூத்திரம், இளம்பூரண அடிகள் உரை மேற்கோள்) (உவகைச் சுவை) “ஒத்த காமத் தொருத்தனு மொருத்தியு மொத்த காமத் தொருவனொடு பலரு மாடலும் பாடலுங் கள்ளுங் களியு மூடலு முணர்தலுங் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புன லென்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கட லாடலும் நயனுடை மரபி னன்னகர்ப் பொலிதலுங் குளம்பரிந் தாடலுங் கோலஞ் செய்தலுங் கொடிநகர் புகுதலுங் கடிமனை விரும்பலுந் துயிற்க ணின்றி யின்பந் துய்த்தலு மயிற்கண் மடவா ராடலுண் மகிழ்தலு நிலாப்பயன் கோடலு நிலம்பெயர்ந் தறைதலுங் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலு மொருங்கா ராய்ந்த வின்னவை பிறவுஞ் சிருங்கா ரம்மென வேண்டுப விதன்பயன் றுன்ப நீங்கத் துகளறக் கிடந்த வின்பமொடு புணர்ந்த வேக்கழுத் தம்மே. 11 (தொல்., பொருள்., மெய்ப்பாடு, 11ஆம் சூத்திரம், இளம்பூரணர் உரை மேற்கோள்.) 11. சோமகேசரி நாடகம் இந்நாடக நூலை இயற்றியவர் மாப்பாண முதலியார் என்பவர் (கி.பி. 1777-1827). இவருக்கு, இருமரபும் துய்ய குலசேகரப் புதுநல்ல மாப்பாண முதலியார் என்னும் பெயரும் உண்டு. இவர் யாழ்ப் பாணத்துத் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த மட்டுவாள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தென்மராட்சியில் மணியகார உத்தியோகம் செய்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் கற்றவர். இவர் இயற்றிய சோமகேசரி நாடகம் மறைந்துபோயிற்று. 12. ஞானாலங்கார நாடகம் யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில் வாகனப் புலவர் இயற்றியது இந்நூலை. இவர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர். தமிழ் நாட்டிலிருந்து போய் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய ஞானாலங்கார நாடகம் இப்போது மறைந்துவிட்டது. 13. திருநாடகம் திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, ஆத்தூரில் உள்ள சோமநாதேசுவரர் கோவில் சாசனம் ஒன்று இந்நாடகத்தைக் கூறுகிறது. திருமேனி பிரியாதாள் என்னும் நாடக மகள், திருநாடகத்தை ஆவணி மாதத்துத் திருவிழாவில் ஒரு நாள் நடிப்பதற்காக 2மா நிலம் அவளுக்குத் தானம் வழங்கப்பட்டது. பாண்டியன் திரிபுவனச் சக்கர வர்த்தி கோனேரின்மைகொண்டான் என்னும் அரசனுடைய 5ஆம் ஆண்டில் எழுதப்பட்டது இந்தச் சாசனம்; கி.பி. 13ஆம் நூற்றாண்டு.3 திருவிழாவில் நடிக்கப்பட்ட இந்தத் திருநாடகம், யாரால் எழுதப்பட்டது. எந்தக் கதையைக் கூறுகிறது. என்பன தெரியவில்லை. சிலம்பு அரங்கேற்று காதை முதல் அடியாகிய “தெய்வமால் வளரத் திருமுனி யருள” என்பதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள்காட்டி “நூன் முகத்து” உள்ளது என்று கூறுகிறார். நூல் முகம் என்பது நூல் என்னும் இந்நூலின் பாயிரம் ஆக இருக்க வேண்டும். அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய இதே செய்யுளை, அரும்பதவுரை யாசிரியரும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அவர் இச் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை. அடியார்க்குநல்லார் மட்டும் இச் செய்யுள் நூன்முகத்தது என்று கூறுகிறார். இவர்கள் மேற்கோள் காட்டும் செய்யுள் இது:- “திருந்திய பொதியி லருந்திற லகத்தியன் சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை மாளு விறலோய் வேணு லாகென விட்ட சாபம் பட்ட சயந்தன் சாபவிடை யெமக்கரு டலத்தோ யென்று மேவினன் ஒருமுது மேதக வுரைப்ப வருந்தவ மாமுனி தமிழ்கூத் தியர்க்குந் திருந்திய தலைக்கோற் றானத் தீருமென் றவனினி துரைப்ப லாசிவந் தனனேன்” இச் செய்யுள் நூல் என்னும் நூலின் பாயிரச் செய்யுட் பகுதியாக இருக்கக்கூடும். 14. நூல் நூல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லார் உரை, மயிலைநாதர் உரை என்னும் உரைநூல்களினால் தெரிகிறது. இறையனார் அகப் பொருள் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் எழுதுவது வருமாறு: “நூற்பெயரென்பது நூலது பெயர் என்றவாறு. நூல் பெயர் பெறு மிடத்துப் பல்விகற்பத்தாற் பெயர் பெறும்: என்னை? செய் தானாற் பெயர் பெறுதலும், செய்வித்தானாற் பெயர் பெறுதலும், இடுகுறியாற் பெயர்பெறுதலும் அளவினாற் பெயர் பெறுதலும், சிறப்பினாற் பெயர் பெறுதலுமென. செய்தானாற் பெயர் பெற்றன, அகத்தியம், தொல்காப்பி யம் என இவை. செய்வித்தானாற் பெயர் பெற்றன, சாதவாகனம், இளந் திரையமென இவை. இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக் கோட்டுத் தண்டென இவை. அளவினாற் பெயர் பெற்றன பன்னிரு படலமென்பது. சிறப்பினாற் பெயர் பெற்றது களவிய லென்பது.” மயிலைநாதரும், நன்னூல் உரையில், “இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டு” என்று கூறுகிறார். இது நாடகத்தமிழ் நூல் என்பது அடியார்க்கு நல்லார் உரைப் பாயிரத்தினால், தெரிகிறது. அடியார்க்கு நல்லார் இந்நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்: “இறக்கவே வரும் பெருங்கல முதலிய பிறவுமாம், இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்: அது கோட்டின தளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தி யல்வது. என்னை? ‘ஆயிர நரம்பிற் றாதியா ழாகு மேனை யுறுப்பு மொப்பன கொளலே பத்தர தளவுங் கோட்டின தளவு மொத்த வென்ப விருமூன் றிரட்டி வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர்’ என நூலுள்ளும் ... ... ... ... கூறினாராகலாற் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தனவெனக் கொள்க.” (சிலம்பு, அடியார்க்கு நல்லார், உரைப்பாயிரம்) சிலம்பு., அரங்கேற்று காதை, 130ஆம் அடியாகிய “குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப” என்னும் அடியின் உரையில் அடியார்க்கு நல்லார், நூலினின்று மற்றொரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “முறைமையாவது:- ‘ஆடிட முக்கோ லாட்டுவார்க் கொருகோல் பாடுநர்க் கொருகோ லந்தர மொருகோல் குயிலுவர் நிலையிட மொருகோல்’ என்று நூலிற் கூறின முறையென்க.” சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, முதல் அடியாகிய “தெய்வமால் வரைத் திருமுனி” என்பதற்கு உரை எழுதுகிற அடியார்க்கு நல்லார் பின்வரும் செய்யுளை மேற்கோள் காட்டி’ இச்செய்யுள் நூன்முகத்துள் உள்ளது என்று கூறுகிறார். நூன்முகம் என்பது, நூல் என்னும் இசைத்தமிழ் நூலின் பாயிரம் என்பது தெளிவு. அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிற இச்செய்யுளையே அரும்பத உரையாசிரியரும் மேற்படி உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர் இந்த மேற்கோள் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூற வில்லை; அடியார்க்கு நல்லார்மட்டும் கூறியுள்ளார். இவர்கள் மேற்கோள் காட்டுகிற நூன்முகச் செய்யுள் இது: “திருந்திய பொதியி லருந்திற லகத்தியன் சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை மாணா விறலோய் வேணு வாகென விட்ட சாபம் பட்ட சயந்தன் சாபவிடை யெமக்கரு டவத்தோ யென்று மேவினன் றொழுது மேதக வுரைப்ப வருந்தவ மாமுனி தமிழ்க்கூத் தியர்க்குத் திருந்திய தலைக்கோற் றானந் தீருமென் றவளினி துரைப்ப வாகிவந் தனனென்.” இச்செய்யுள் நூல் என்னும் இசைத்தமிழ் நூலின் பாயிரம் என்று துணியலாம். இந்நூலை இயற்றியவர் பெயர், அவர் இருந்த காலம் முதலியவை தெரியவில்லை. 15. பரதம் இந்த நாடகத்தமிழ் நூல் தமது காலத்திற்கு முன்னரே மறைந்து போனதாக அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “நாடத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என்று அவர் எழுதுகிறார். இதனால், இது மிகப் பழைய நூல் என்று தெரிகிறது. 16. பரதசேனாபதீயம் இது நாடக இலக்கணத்தைக் கூறும் நூல். இதனை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். இதனை, “ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயம்” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைச் சிறப்புப் பாயிரத்தில் எழுதுவதனால் அறியலாம். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இந்நூலினின்று சில செய்யுள்களை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார். பரதநாட்டியத்தைப் பற்றிக் கூறுவது இந்நூல் என்று தெரிகிறது. “பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட் புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டிற் றண்டியஞ்சேர் விப்பதே சால்பு’ எனவும், ‘வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய வெட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்-கட்டளைய கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச் சோதித் தரங்கேறச் சூழ்’ எனவும், நன்னர் விருப்புடையோ ணற்குணமு மிக்குயர்ந்தோள் சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் - பன்னிரண்டாண் டேய்ந்ததற்பி னாடலுடன் பாடலழ கிம்மூன்றும் வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு’ எனவுங் கூறினார் பரதசேனாபதியார்.” (சிலம்பு., அரங்கேற்று., 10ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) மேற்காட்டிய செய்யுள்களில், “வட்டணையுத் தூசியும்” என்னும் இரண்டாவது செய்யுளை, சீவக சிந்தாமணி 673ஆம் செய்யுள் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ளார்: உவர்ப்பிற் கலக்கமாங் கைப்பின்வருங் கேடு துவர்ப்பிற் பயமாஞ் சுவைக - ளவற்றிற் புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப் பளிபெருகு மாவ தரங்கு. (சிலம்பு., அரங்கேற்று., அடி 95, 96, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) “... ... ... ... ... ... ... அரிதரங்கிற் செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையு மெய்த வெழுதி யியற்று’ என்றார் பரதசேனாபதியாரும்.” (சிலம்பு., அரற்கேற்று., 109ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) “‘புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரு-மெண்ணிய நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை நாளிற் றலைக்கோலை நாட்டு.’ ‘ஆவ தகத்தியனார் சாபத்தா னான்மூங்கில்’ என்றார் பரதசேனாபதியார்.” (சிலம்பு., அரங்கேற்று., 116ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்) குறிப்பு : ‘பரத சேனாபதீயம்’ என்னும் வேறொரு நூலும் உண்டு. இது, பழைய பரத சேனாபதீயத்திற்கு மிகப் பிற்பட்டது. இதுவும், பாயிரம்வரையில் கிடைக்கிறதல்லாமல் நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இது, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் வெளியீட்டின் முதல் நூலாக அச்சிடப்பட்டிருக்கிறது. 17. பரிமளகா நாடகம் இந்நாடகம் இயற்றியவர், சோமகேசரி நாடகம் இயற்றிய மாப்பாண முதலியார் (1777-1827) என்பவர். இவர், யாழ்ப்பாணத்துத் தென்ம ராட்சியைச் சேர்ந்த மட்டுவாள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவர் இயற்றிய பரிமளகா நாடகமும், சோமகேசரி நாடகமும், குறவஞ்சி நாடகமும் மறைந்துபோயின. 18. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் மதிவாணன் என்னும் பாண்டிய அரசன் இயற்றிய தாகலின் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது. சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இந்நூலைப்பற்றி. “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலை யாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத்தமிழ் நூல். என்று எழுதுகிறார். எனவே. இது கடைச்சங்க காலத்தில் இயற்றப் பட்ட நூலாகும். அடியார்க்கு நல்லார் தமது உரையிலே இந்நாடகத்தமிழ் நூலி லிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு: “அவைதாம் ‘நாடகம் பிரகரணப் பிரகரணம் ஆடிய பிரகரணம் அங்கம் என்றே ஒதுப நன்னூல் உணர்ந்திசி னோரே’ என்றார் மதிவாணரும்.” (சிலம்பு., அரங்கேற்று காதை, 13ஆவதுவரி, உரை மேற்கோள்) “முன்னிய வெழினிதான் மூன்று வகைப்படும்” என்றார் மதிவாணனார்.” (சிலம்பு., அரங்கேற்றுகாதை, 109ஆம் வரி, உரை மேற்கோள்) “பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலஞ் சீரா திரையவிட்டஞ் சித்திரையோ - டாருமுற மாசி யிடப மரிதுலை வான்கடகம் பேசிய தேள்மிதுளம் பேசு’ என்றார் மதிவாணனாரும்.” (சிலம்பு., அரங்கு, 123ஆம் வரி உரை மேற்கோள்) “திருவள ரரங்கிற் சென்றினை தேறிப் பரவுந் தேவரைப் பரவுங் காலை மணிதிகழ் நெடுமுடி மாணிபத் திரனை யணிதிகழ் பளிங்கி னொளியினை யென்றுங் கருந்தா துடுத்த கடவுளை யென்றும் இரும்பனைத் தனிக்கொடி யேந்தினை யென்றும் கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும் கடிமலர் பிணைந்த கண்ணியை யென்றும் சேவடி போற்றிற் சிலபல வாயினும் மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப’ என்றார் மதிவாணனாரென்க.” (சிலம்பு., கடலாடு., 35ஆம் வரி, உரை மேற்கோள்) “அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென் றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் சேவடி தேவரை யேத்திப் பூதரை மூவடி முக்கால் வெண்பா மொழிந்து செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன் கொடுப்பன கொடுப்ப அடுக்கு மென்ப என்றார் மதிவாணனாரென்க.” (சிலம்பு., கடலாடு காதை, மேற்படி) இந்நூல் இப்போது மறைந்து விட்டது. இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 19. முறுவல் இப்பெயரையுடைய நாடகத்தமிழ் நூல் ஒன்று இருந்தது என்பது அடியார்க்கு நல்லார் உரையினால் அறிகிறோம். “நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத் துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்” என்று அவர் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் எழுதுகிறார் அவர் காலத்தில் வழங்கிய முறுவல் சூத்திரங்கள் சிலவும் இப்போது மறைந்துவிட்டன: முறுவல் ஆசிரியரின் பெயரும் தெரியவில்லை. 20. பூம்புலியூர் நாடகம் தென் ஆர்க்காட்டு மாவட்டம், கூடலூர்த் தாலூகா, திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடலிபுரீசுவரர் கோவில் கல்வெட்டுச் சாசனங்க ளினால் இந்நூலின் பெயர் தெரியவருகிறது. வீரைத் தலைவன் பாசய கோளரி மாமுனி என்பவர் இந்நூலை எழுதியவர். குலோத்துங்க சோழவர் என்னும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவர் இருந்தார். இந்த அரசனுடைய 41, 49ஆம் ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. இந்தச் சாசனங்கள் செய்யுள் நடையில் எழுதப் பட்டுள்ளன. இந்த நூலாசிரியர், கன்னிவன புராணம், அஷ்டதச புராணம் என்னும் வேறு இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்நூல்களை எழுதியதற்காக இவர் பாலையூரில் நிலங்களை இறையிலியாகப் பெற்றார். மேற்படி கோயில் சாசனச் செய்யுள்களில் இது ஒன்று: “மாங்கொல்லை ... ... ரண்டு மாவொரு மாமுக்காணி யோங்க மறப்பெருஞ் செல்வி யொருகாணி ... ... பூவமர் காணியினிற் பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன் பெற்ற நிலம்.”4 இந்தச் சாசனச் செய்யுள்களில் இடையிடையே சில எழுத்துகள் மறைந்துவிட்டன. இந்த நாடகநூல் இப்போது கிடைக்கவில்லை. 21. கடகண்டு, 22. வஞ்சிப்பாட்டு 23. மோதிரப்பாட்டு பேராசிரியர், தொல்காப்பிய உரையில் இந்நூல்களைக் குறிப்பிடுகிறார். தொல்., பொருள்., செய்யுளியல், 180ஆம் சூத்திரத்தில், பண்ணத்தி என்பதை விளக்குகிற இடத்தில் பேராசிரியர் இந்நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது இது: “மெய்வழக் கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தியென்ப. இது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தியென்ப வென்பது. அவையாவன நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப்பாட்டும், மோதிரப்பாட்டும், கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினார். நோக்கு முதலாயின உறுப்பின்மையி னென்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க.” இதனால் மோதிரப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, கடகண்டு என்பன நாடகம் பற்றிய நூல்கள் எனத் தெரிகின்றன. 24. விளக்கத்தார் கூத்து விளக்கத்தார் கூத்து என்னும் நாடகத்தமிழ் நூலை பேராசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல். “சேரி மொழியாற் செவ்வி திற்கிளந் தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே” என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர் இவ்வாறு உரை எழுதுகிறார்:- “சேரிமொழி என்பது பாடிமாற்றங்கள், அவற்றானே செவ்வி தாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலன் என்று சொல்லுவர் புலனுணர்ந்தோர் என்றவாறு. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டு கொள்க.” இதனால், விளக்கத்தார் என்னும் புலவர் கூத்து நூல் ஒன்று செய்தார் என்பது தெரிகிறது. இந்த விளக்கத்தார் என்பவர் விளக்கத்தனார் என்றும் கூறப் படுகிறார். இவர் செய்த “கெடலரு மாமுனிவர்” என்று தொடங்கும் கலிப்பாச் செய்யுளை இளம்பூரண அடிகளும் பேராசிரியரும் தமது உரைகளில் மேற்கோள்காட்டுகிறார்கள். ஆனால், இச்செய்யுளை இயற்றிய ஆசிரியர் யார் என்று இவர்கள் கூறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்தச் செய்யுளை 30ஆம் சூத்திரவுரையில் மேற்கோள் காட்டி 40ஆம் சூத்திரவுரையில் இதனைப் பாடியவர் விளக்குகின்றார் என்று கூறுகிறார். அவர் எழுதுவது. “அஃதேயெனில், விளக்கத்தனார் பாடிய கெடலரு மாமுனிவர். என்னும் கலிப்பா புறநிலை வாழ்த்தாய் வந்தது பிறவெனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தான் வந்தமையாற் குற்றமின்றெனக் கொள்க.” இதனால், விளக்கத்தார் கூத்து என்னும் நூலை இயற்றியவரும், கெடலருமா முனிவர் என்னும் தொடக்கத்துப் பெருந்தேவபாணிச் செய்யுளை இயற்றியவரும் விளக்கத்தனார் என்னும் புலவர் என்பது தெரிகிறது. கெடலருமா முனிவர் எனத் தொடங்கும் அழகிய பெருந் தேவபாணிச் செய்யுள், இவர் இயற்றிய கூத்த நூலின் ஒரு செய்யுள் என்று கருதலாம். இந்தச் செய்யுளில் அச்சுதன் என்னும் அரசன் கூறப் படுகிறான். இந்த அச்சுதன், அச்சுத விக்கந்தன் என்று கூறப்படுகிற களபர அரசனாக இருக்கலாம். அப்படியானால், விளக்கத்தனாரும் கி.பி. 450-இல் வாழ்ந்தவராதல் வேண்டும். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்த மகாதேரர் என்னும் பௌத்த சமய ஆசாரியர், பாலிமொழி யில் சில நூல்களை எழுதியிருக்கிறார். அந் நூல்களில் வினயவினிச் சயம் என்பதும் ஒன்று. சோழநாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் என்பவர் அமைத்த பௌத்த விகாரையில் தங்கியிருந்து, அச்சுத விக்கந்தன் என்னும் அரசன் சோழ நாட்டை யரசாண்ட காலத்தில்) வினயவினிச்சய நூலை ஆசாரிய புத்ததத்தர் எழுதியதாகக் கூறுகிறார். எனவே, விளக்கத்தனார், அச்சுதன் அல்லது அச்சுதவிக்கந்தன் இருந்த கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் ஆவர். விளக்கத்தனார் இயற்றிய ‘கெடலருமாமுனிவர்’ எனத் தொடங்கும் செய்யுள் இது: தரவு கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய். தாழிசை முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ. கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்தலுநின் சினமாமோ. படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ. பேரெண் இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம் வரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரைவு நின்னுடை. அளவெண் கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை தண்சுட ருறுபகை தணித்த வாழியை ஒலியிய லுவண மோங்கிய கொடியினை. வலிமிகு கசட மாற்றிய வடியினை. இடையெண் போரவுணர்க் கடந்தோய் நீ. புணர்மருதம் பிறந்தோய் நீ. நீரகலம் அளந்தோய் நீ. நிழறிகழைம் படையோய் நீ. சிற்றெண் ஊழி நீஇ. உலகு நீஇ. உருவு நீஇ. அருவு நீஇ. ஆழி நீஇ. அருளு நீஇ. அறமு நீஇ. மறமு நீஇ. தனிச்சொல் என வாங்கு சுரிதகம் அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் ஒன்று கட லுலக முழுவதும் ஒன்றுபு திகிரி யுருட்டுவோ னெனவே. ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்னும் தொல் (பொருள் புறத்திணையியல்) சூத்திர உரையில் இளம்பூராண அடிகள், கொடிநிலை முதலிய மூன்றும், ‘பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்’ என்று கூறி உதாரணமாகக் ‘கெடலரு மாமுனிவர்’ எனத் தொடங்கும் இந்தக் கலிப் பாட்டின் சுரிதகப் பகுதியை மேற்கோள் காட்டி, ‘என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்திய வரலாறு காண்க’ என்று எழுதுகிறார். இலக்கண நூல்கள் 1. அகத்தியம் அகத்தியர் என்பவர் செய்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல். அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். சிவவெருமானிடத்தில் தமிழ் கற்றுத் தலைச்சங்கத்தில் புலவராகத் திகழ்ந்த அகத்தியர் ஒருவர் உளர். பௌத்தக் கடவுளாகிய அவ லோகிதர் என்னும் போதிசத்துவரிடத்தில் தமிழ் கற்ற ஓர் அகத்தியர் உளர். இவர் பௌத்தர்களால் போற்றப்படுகிறவர். இராமாயணத்தில் கூறப்படுகிற அகத்தியர் ஒருவர் உளர். பாரதத்தில் கூறப்படுகிற கண்ண பிரான் காலத்தில் இருந்த ஓர்` அகத்தியர் உளர். இந்த அகத்தியர், கண்ணபிரானிடம் சென்று அவர் அனுமதி பெற்று, துவாரகையி லிருந்து யதுகுலத்தைச் சேர்ந்த பதினெண்குடி வேளிரையும் அருவா ளரையும் அழைத்துவந்து, அவர்களைத் தமிழ் நாட்டிலே குடியேற்றி யவர் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இந்த அகத்தியர் ஜைனரால் போற்றப்படுகிறவர். இன்னும் ஜாவா, சுமாத்திரா முதலிய தீவுகளுக்குச் சென்று, அங்குச் சைவ சமயத்தைப் போதித்த சிவகுரு என்னும் அகத்தி யரும் ஒருவர் உளர். இவ்வாறு அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். இவர்களில் எந்த அகத்தியர் அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் என்பது தெரியவில்லை. வெவ்வேறு காலத்தி லிருந்த இந்த அகத்தியர்களில் சிலர் தத்தம் பெயரால் அகத்தியம் என்னும் சில நூல்களை இயற்றியிருத்தலும் கூடும். சிற்றகத்தியம், பேரகத் தியம் என்னும் நூல்கள் இருந்தன என்று கூறப்படுகின்றன. காக்கை பாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர் தத்தம் பெயரால் இயற்றிய ‘காக்கைபாடினியம்’ என்னும் நூல்களுக்குப் பெருங் காக்கைப் பாடினி யம், சிறுகாக்கைப்பாடினியம் என்று பெயர்கள் வழங்கப்படுவதுபோல, வெவ்வேறு காலத்திலிருந்த அகத்தியர்கள் தத்தம் பெயரால் இயற்றிய அகத்தியம் என்னும் நூல்களுக்குச் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்று பெயர் வழங்கினார்கள் போலும். தலைச்சங்கத்தில் இருந்தவரும், தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்று கூறப்படுகிறவருமாகிய அகத்தியனார் செய்த அகத்தியம் என்னும் நூல் இடைச்சங்க காலத்திலேயே மறைந்துவிட்டது என்பர். அதாவது, தொல்காப்பியம் தோன்றிய பிறகு அகத்தியம் இறந்துவிட்டது. என்பர். பிற்காலத்தில், அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கிவந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் ‘அகத்திய’ச் சூத்திரங்கள் இடந்தருகின்றன. உதாரணமாக இதைக் காட்டுவோம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர். (பெயரியல், 16ஆம் சூத்திர உரை) கீழ்க்காணும் அகத்தியச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். “கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களங் கொல்லங் கூவிள மென்னும் எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரு மிடுநில வாட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும் என்றார் அகத்தியனார்.” இதே அகத்தியச் சூத்திரத்தைச் சில வேறுபாடுகளுடன் தெய்வச் சிலையார் தமது தொல்காப்பிய உரையில் (சொல் எச்சம்., 4ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். அது: “கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபா விருபுறச் சையத் துடனுறையு புகூஉந் தமிழ்திரி நிலங்களும் முடிநிலை மூவர் இடுநில வாட்சியின் அரசுமேம் பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையில் சொன்னய முடையவும்’ என்பது அகத்தியச் சூத்திரம்.” இவ்வாறு இவர்கள் மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம், துளுவம், குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள், கடைச்சங்க காலத்தில், அதாவது, கி.பி. 300-க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும், தமிழ் மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில்; கி.பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே, இந்நிலங் களைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால். இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர், கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல்வேண்டும்: அல்லது, அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த புலவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும். மேலும் மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ் திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு1; அதாவது, பல்லவ அரசர்கள் அரசாண்ட நாடு. அது தொண்டைநாடு என்றும், தொண்டை மண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம், பல்லவ நாட்டை (தொண்டை நாட்டை)த் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. சிங்களம், கொங்கணம், துளுவம், குடகம் முதலிய நாடுகளைப்போன்று பல்லவ நாடு (தொண்டைமண்டலம்) தமிழ் திரிந்து மொழி வேறுபட்ட நிலமா? அல்லவே! தமிழ் நாடாகிய தொண்டைமண்டலத்தையும் (கொங்கணம், துளுவம், குடகம் முதலியவை போன்று) தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இவற்றையெல்லாம் ஆராயும் போது, இந்த “அகத்தியச் சூத்திரம்” போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டியிருக்கிறது. இவ்வாறு அகத்தியரைப் பற்றியும், அகத்தியத்தைப் பற்றியும் ஆராயும்போது பலப்பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகச் செல்லலாம். அகத்தியம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதும், அதனை உரையாசிரியர் களும் ஏனைய புலவர்களும் பயின்றுவந்தனர் என்பதும் உறுதி. தேவாரப் பாடல்கள் சிலவற்றை அகத்தியர் தொகுத்து வைத்தார் என்றும், அதற்கு “அகத்தியர் தேவராத் திரட்டு” என்பது பெயர் என்றும் சைவர் கூறுவர். ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், முதலில் அகத்தியர் ஆணை பெற்றுப் பிறகு நாலாயிரப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்று வைணவர் கூறுவர். இனி, அகத்தியத்தைப் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்தைக் காட்டுவோம்: “அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழ்.” (தொல்.,பொருள்.,உவமவியல், 37, பேராசிரியர் உரை) “இதன் (தொல்காப்பியத்தின்) முதனூல் செய்த ஆசிரியனால் (அகத்தியரால்) செய்யப்பட்ட யாழ்நூலுள்ளும் சாதியும் உவமத் துருவும் திருவிரியிசையும் எனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப்பாட்டுகளே.” (தொல்.,பொருள்.,செய்யுள், 51, பேராசிரியர் உரை) “அது முதனூலாகிய அகத்தியமே போலும். என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத் தினையும் அடக்கி நிற்றலின்.” (தொல்.,பொருள்.,செய்யுள், 172, பேராசிரியர் உரை) இதனால் அகத்திய முனிவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்திருந்தார் என்பது தெரிகிறது. மேலும், பேராசிரியர் கூறுகிறார்: “தலைவர் (சிவபெருமான்?) வழிநின்று தலைவனாகிய அகத்திய னாற் செய்யப்பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் (இறையனார் அகப் பொருள்) செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலென்பது அறிவித்தற்கும். அங்ஙனம் வினையினீங்கி விளங்கிய அறிவினான் முதனூல் செய்தா னென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம். அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம். “என்றார்க்கு முந்துநூ லெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தன வெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் அவற்று வழிநூல் செய்தார் என்றக் கால் இழுக்கென்னை யெனின், அது வேத வழக்கோடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிற பாசண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத் தொடு பட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச் சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர், ‘இடைச் சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல் காப்பியம்’ என்ற ராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினா ராகலானும், அவர் புலவுத் துறந்த நோன் புடையா ராகலாற் பொய்கூறா ராகலானு மென்பது. இங்ஙனங் கூறாக் கால், இதுவும் மரபுவழுவென்று அஞ்சி, அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்பது. எங்ஙனமோவெனின், ‘கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்ற னாணையின் றமிழறிந் தோர்க்குக் கடனே.’ இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். ‘வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்’ என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தை முதனூலெனவும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை யுடையா ரெனவும். அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனா ரெனவும், பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப் பட்டது. இனிப் பன்னிரு படலம் முதனூலாக, வழிநூல் செய்த வெண்பா மாலை ஐயனாரிதனாரும் இது கூறினார். என்னை? ‘மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த’ எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையி னென்பது. இவற்றா னெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூ லென்பதூஉந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் ... ... ... ... ... படுமென்பது.” (தொல்.,பொருள்.,மரபு, 94, பேராசிரியர் உரை) “தீயினன்ன ஒண்காந்தள்” என வரும் மலைபடுகடாம் 145ஆம் அடிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறுவது : “இதற்கு நன்ன னென்னும் பெயர் தீயோ டடுத்த தன்மையின், ஆனந்தமாய், பாடினாரும் பாடப்பட்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாரா லெனின், அவர் அறியாது கூறினார்: செய்யுட் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னும் குற்றமறியாமற் செய்யுட் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார். இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைய செய்யுள் களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙன நீக்காது கோத்த தற்குக் காரணம் ஆனந்தக் குற்ற மென்பதோர் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென்றுணர்க. ... ... ... ... நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே, ‘தன்னா னொருபொருள் கருதிக் கூறல்’ என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி’ அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக் குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளா ரென மறுக்க.” (பத்துப்பாட்டு, மலைபடுகடாம், நச்சினார்க்கினியர் உரை) தொல்காப்பிய (பொருள்., மரபு., 108ஆம் சூத்திரம்) உரையில் பேராசிரியர் எழுதுவதாவது : “தன்னா னொரு பொருள் கருதிக் கூற லென்பது மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற்காலத்தா னொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், பதமுடிப்பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் போல்வன.” “இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடு மெனின், அவைகள்தாம் அகத்துள்ளும் பிற்சான்றோர் செய்யு ளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்டது மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமும் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடா வென்பது.” (தொல்.,பொருள்.,உவமை, 37, பேராசிரியர் உரை) யாப்பருங்கல உரையாசிரியர் கூறுவதாவது: “சீருந் தளையுஞ் சிதைந்து செய்யுள் அழிய நிற்பதன்றாயினும், விளி முதலியவற்றுள் அளபெழுந்து செய்யுளிடத்தும் வந்து அவ்வாறே சொல்லப்படும் என்னும் கருத்தினானே அகத்தியனார் அறுவகை யானந்த ஓத்தினுள் இதனை, ‘இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே யிடியற்பா டில்லா வெழுத் தானந்தம்’ என்றார் என்க.” (யாப்பருங்கலம், எழுத்தோத்து, விருத்தியுரை) பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் அகத்தியர் செய்யுளில் ஆனந்தக் குற்றம் என்னும் இலக்கணத்தைக் கூறவில்லை என்று எழுதுகிறார்கள். யாப்பருங்கல உரையாசிரியர், அகத்தியர் ‘ஆனந்த ஓத்து’ என்னும் இலக்கணம் செய்துள்ளார் என்று கூறி, ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார். இது குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால், பிற்காலத்திலே அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. அகத்தியர் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களைக் கீழே தருகிறோம் : “மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும் முற்றி நிற்பது முற்றியன் மொழியே.” (தொல்.,சொல்.,வேற்றுமையியல், 63, தெய்வச் சிலையார் உரை மேற்கோள்) “அராகந் தாமே நான்கா யொரோவொன்று வீதலு முடைய மூவிரண் டடியே. 1 ஈரடி யாகு மிழிபிற் கெல்லை. 2 தரவே யெருத்த மராகங் கொச்சக மடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே. 3 கொச்சக வகையினெண்ணொடு விராஅ யடக்கிய லின்றி யடங்கவும் பெறுமே.” 4 (தொல், பொருள், செய்யுளியல், 117, இளம்பூரணர், உரைமேற்கோள்) “இருவயி னொத்து மொவ்வா வியலினுந் தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங் கலப்பே யாயினும் புலப்பே யாயினு மைந்திணை மரபி னறிவரத் தோன்றிப் பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும் என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும்.” (தொல்.,பொருள்.,செய்யுளியல், இளம்பூரணர் உரை மேற்கோள்) கீழ்க்காணும் அகத்தியச் சூத்திரங்களை மயிலை நாதர் தமது நன்னூல் உரையில் மேற்கோள் காட்டுகிறார் : “பெயரினும் வினையினு மொழிமுத லடங்கும் 1 வயிர வூசியு மயன்வினை யிரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியும் தமக்கமை கருவியுந் தாமா மவைபோல் உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே. 2 பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே அடிசில் பொத்தகஞ் சேனை யமைந்த கதவ மாலை கம்பல மனைய. 3 ஏழியன் முறைய தெதிர் முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன். 4 வினைநிலை யுரைத்தலும் வினாவிற் கேற்றலும் பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே. 5 ஆலு மானு மோடு மொடுவும் சாலு மூன்றாம் வேற்றுமைத் தனுவே செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி யெய்திய தொழின்முத லியைபுடைத் ததன்பொருள். 6 ஆற னுருபே யதுவா தவ்வும் வேறொன் றுரியதைத் தனக்குரி யதையென விருபாற் கிழமையின் மருவுற மருமே ஐம்பா லுரிமையு மதன்றற் கிழமை. 7 மற்றுச்சொன் னோக்கா மரபின வனைத்து முற்றி நிற்பன முற்றியன் மொழியே. 8 காலமொடு கருத வரினு மாரை மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே. 9 முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு முற்றுச்சொ லென்று முறைமையிற் றிரியா. 10 காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே. 11 காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே. 12 எனைத்துமுற் றடுக்கினு மனைத்துமொரு பெயர்மேல் நினைத்துக்கொள நிகழு நிகழ்த்திய முற்றே வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும் பலப்பல வடுக்கினு முற்றுமொழிப் படிய. 13 உலக வழக்கமு மொருமுக் காலமு நிலைபெற வுணர்தரு முதுமறை நெறியான். 14 அசைநிலை யிரண்டினும் பொருண்மொழி மூன்றினும் இசைநிறை நான்கினு மொருமொழி தொடரும். 15 கண்டுபான் மயங்கு மையக் கிளவி நின்றோர் வருவோ ரென்றுசொன் னிகழக் காணா வையமும் பல்லோர் படர்க்கை.” 16 “களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர். என்று எடுத்தோதினார் அகத்தியனார்.” (யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை) “இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே இயற்பா டில்லா எழுத்தா னந்தம்” என்னும் சூத்திரம் அகத்திய நூலில் ஆனந்த ஓத்தில் உள்ளதாக யாப்பருங்கலம் (உறுப்பியல் எழுத்தோத்து) உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆனந்தக் குற்றம் என்பது பற்றிப் பேராசிரியர் என்னும் உரை யாசிரியர் தொல்காப்பிய உரையில் இவ்வாறு எழுதுகிறார். “இனி ஆனந்த வுவமை என்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடு மெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினு மடங்காமை வேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யும் குற்றம் வேறுபடாவென்பது.” (தொல்., உவ., சூ. 37, பேராசிரியர் உரை) இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் மீது மலைபடுகடாம் பாடினார். அப்பாடலில் 145ஆம் அடியில், ‘தீயின்ன வொண்செங்காந்தள்’ என்னும் அடியில், பாட்டுடைத் தலைவன் பெயராகிய நன்னன் என்பது தீயொடு அடுத்து வந்தமை யான் ஆனந்தக் குற்றம் என்று பிற்காலத்தவர் சிலர் கூறியதை, மேற்படி மலைபடுகடாத்துக்கு உரை எழுதிய நச்சினார்க் கினியர் மறுக்கிறார். நச்சினார்க்கினியர் எழுதுவது வருமாறு: “இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடடுத்த தன்மையின், ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாராம். எனின், அவர் அறியாது கூறினார்; செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுள் களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவார்; அங்ஙனம் நீக்காது கோத்த தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உறாமையா னென்றுணர்க.” “இச்சொன்னிலை நோக்குமிடத்து ஒருகுற்றமுமின்று; என்னை? அன்னவென்னும் அகரவீற்றுப் பெயரெச்ச உவம உருபு தீயென்னும் பெயரைச் சேர்ந்து நின்று இன் சாரியை இடையே அடுத்து நிற்றலின், நன்னனென நகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லா யினன்றே அக்குற்றம் உளதாவதென மறுக்க. நன்னவென அண்மை விளியாய் நின்ற முன்னிலைப் பெயரென்று குற்றம் கூறுவார்க்கு இப்பாட்டுப் படர்க்கையேயாய் நிற்றலின் குற்றமின்றென்க.” 2. அகத்தியர் பாட்டியல் கி. பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகின்ற பரஞ்சோதியார் தாம் இயற்றிய சிதம்பரப் பாட்டியலில், “பாமேவு தமிழ்ப் பொதியக் குறுமுனிவன் கூறும் பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவேன் யானே.” என்று கூறுகிறபடியால், அகத்தியர் பாட்டியல் என்னும் ஒருநூல் இருந்த தென்பது தெரிகிறது. அன்றியும், பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும், ‘அகத்தியர் பாட்டியல்’ என்னும் பெயரினால் இரண்டு சூத்திரங்கள் காணப்படுகின்றன. எனவே, அகத்தியர் பாட்டியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது ஐயமற விளங்குகிறது. இது செய்யுளிலக்கணம் கூறுவது. அகத்தியர் தம் பெயரால் அகத்தியம் என்னும் விரிவான முத்தமிழ் இலக்கணநூலை இயற்றினார் என்று கூறப்படுகிறது. அத்தகைய பெரு நூலை இயற்றிய அகத்தியர், பாட்டியல் என்னும் இச்சிறுநூலை ஏன் இயற்றினார்? பிற்காலத்துப் புலவர் ஒருவர், அகத்தியர் பெயரால் இயற்றிவைத்த ஓர் நூல் போலும் இது. சங்க காலத்துப் புலவர்களின் பெயரால், பிற்காலத்திலிருந்த புலவர் சிலர் சில நூல்களை இயற்றி வைத்தனர் என்பது ஆராய்ச்சியினால் தெரிகிறது. அத்தகைய நூல்களில் இதுவும் ஒன்று என்று தோன்றுகிறது. ஆனால், அகத்தியர் பாட்டியல் என்னும் பெயரால் ஒரு நூல் வழங்கிவந்தது என்பதில் ஐயமில்லை. இந்நூலிலிருந்து இரண்டு சூத்திரங்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. அவை : குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற ஐ ஒள விரண்டும் இ உ வடக்கிப் பால குமார வரசு மூப்பு மரணமென் றைவகைத் தானம் வகுத்தனர். 1 முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப் பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொளலே. 2 3. அணியியல் அணியியல் என்பது தண்டியலங்காரத்திற்கு ஒரு பெயராக வழங்கிவந்தது. இங்குக் கூறுகிற இந்த அணியியல், தண்டியலங் காரத்தின் வேறுபட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரை யாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர். யாப்பருங்கல விருத்தியுரைகாரார் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுவன வருமாறு : “இனி அகவல் வெண்பாவாவது இன்னிசை வெண்பா என்னை? ‘அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச் சீர்நிலை தோறுந் தொடைநிலை திரியாது நடைவயி னோரடிநேய முடைத்தாய்ப் பொருளொடு புணர்ந்த வெழுத்தறி யாதே.’ என்றாராகலின். வரலாறு: ‘வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.’ இஃது அகவல்வெண்பாவென்று அணியியலுடையார் காட்டிய பாட்டு.” (யாப்பருங்கலம்., செய்யுளியல்., 4ஆம் சூத்திர உரை மேற்கோள்) யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழி குளம்” என்னும் சூத்திரத்தில் ‘உருவகமாதி விரவியலீறா வருமலங் காரமும்’ என்னும் பகுதிக்கு உரை கூறும்போது இவ்வாறு கூறுகிறார் : “உருவகமும், உவமையும், வழிமொழியும், மடக்கும், தீபகமும், வேற்றுமை நிலையும், வெளிப்படை நிலையும், நோக்கும், உட்கோளும், தொகைமொழியும், மிகைமொழியும், வாத்தையும், தன்மையும், பிற பொருள் வைப்பும், சிறப்பு மொழியும், சிலேடையும், மறுமொழியும், உடனிலைக் கூட்டமும், நுவலா நுவற்சியும், உயர் மொழியும், நிதரிசனமும், மாறாட்டும், ஒருங்கியன் மொழியும், ஐயமும், உயர்வும், விரவியலும், வாழ்த்தும் என்றோதப் பட்ட அலங்காரங்களும் என்றவாறு. அவை அணியியலுட் காண்க.” “இனிச் செய்யுளாவன : ‘செய்யு டாமே மெய்யுற விரிப்பிற் றனிநிலைச் செய்யுட் டொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள் உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் இசைநுவன் மரபி னியன்ற செய்யுள் நயநிலை மருங்கிற் சாதியொடு தொகைஇ யவையென மொழிப வறிந்திசி னோரே’ என்றோதப்பட்ட வெல்லாம் அணியியலுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், ‘மாலை மாற்றே’ என்னும் சூத்திர உரை மேற்கோள்.) “இனி, இருது ஆவன: ‘காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனி லென்றாங் கிருமூ வகைய பருவ மவைதாம் ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே.’ இந்த இருது வருணனை அணியியலுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், ‘மாலைமாற்றே’ என்னும் சூத்திர உரைமேற்கோள்’) “அணியியலுடையாரும். ‘இயன்ற செய்யுட் கியைந்த பொருளை யுயர்ந்த நடையா லுணரக் கூறலு மருங்கல மொழியா லரிதுபடக் காட்டலு மொருங்கிரண் டென்ப வுயர்நடைப் பொருளே’ என்னுஞ் சூத்திரத்துள் ‘ஒருங்கிரண்டு’ என்புழி யாற்றலாற் போந்த பொருளை, ‘என்ப’ வென்று முற்றுச் சொல்லோடு புலவர் என்னும் பெயர் கூட்டிப் பொருளுரைத்தாராகலின்.” இதனால், அணியியல் என்னும் நூலுக்கு ஒர் உரை இருந்தது என்பது தெரிகிறது. நேமிநாத உரையாசிரியர் அணியியலிலிருந்து காட்டும் சூத்திரங்கள் இவை: “புனையுறு செய்யுட் பொருளை யொருவழி வினைநின்று விளக்கின்று விளக்கெனப் படுமே.” “முதலிடை கடையென மூவகை யான.” (நேமி., எழுத்து., 4ஆம் செய்யுளுரை, 20 ஆம் செய்யுளுரை) 4 அவிநயம் அவிநயம் என்னும் பெயரையுடைய ஒருநூல் இருந்த தென்பது. தக்கயாகப் பரணி உரையினாலும், யாப்பருங்கல விருத்தியுரையி னாலும், யாப்பருங்கலக் காரிகை யுரையினாலும், வீரசோழிய உரையி னாலும், பன்னிரு பாட்டியலினாலும் தெரிகிறது. அவிநயனார் என்பவர் இயற்றியதாகலின் இதற்கு அவிநயம் என்னும் பெயர் ஏற்பட்டது. அவிநயனார் யாப்பு என்றும் இதற்கு வேறு பெயர் உண்டு. இது கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல். கி.பி. 5 அல்லது 6ஆவது நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக் கூடும். யாப்பருங்கலம், யாம்பருங்கலக் காரிகை, வீரசோழியம் என்னும் நூல்கள் இயற்றப்படு வதற்கு முன்னே, அதாவது, கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரையில் இந்நூல் பெரிதும் பயிலப்பட்டுவந்தது என்பது தெரிகிறது. இந்நூலுக்கு, இராசப் பவுத்திரப் பல்லவதரையன் என்பவர் உரை எழுதியிருந்தார் என்பது, மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையினின்று தெரிகிறது. அவிநய நூலாசிரியர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்பது. இவர் இயற்றிய அவிநயச் சூத்திரம் ஒன்றால் தெரிகிறது. இந்தச் சூத்திரத்தில், ஒலி அணுவினால் எழுந்து ஒலிகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கொள்கையைக் கூறுகிறார். அவிநய நூலுக்கு மிகப் பிற்பட்ட காலத்தவராகிய பவணந்தியாரும் தாம் இயற்றிய நன்னூலில், ஒலியணுத்திரளினாலே எழுத்துகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கருத்தைக் கூறியுள்ளார். அவிநய நூலாசிரியர், ஒலியணுவினால் எழுத்துகள் பிறக்கின்றன என்று கூறிய சூத்திரத்தை, மயிலைநாதர் என்னும் ஜைன சமய உரையாசிரியர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (எழுத்தியல், 13ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். “‘ஆற்ற லுடையுயிர் முயற்சியி னணுவியைந் தேற்றன வொலியாய்த் தோன்றுதல் பிறப்பே’ என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என்பது அவர் காட்டிய மேற்கோள். எனவே, அவிநய நூலாசிரியர், நன்னூலாசிரியரைப் போன்று சமண சமயத்தவர் என்பது தெளிவாக விளங்குகிறது. தக்கயாகப் பரணி உரையாசிரியர் (காளிக்குக் கூளி கூறியது. 153ஆம் தாழிசை உரை), அவிநய நூல் கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “நளினத்தை யுடையது நளினி; அவிநயத்தால் உடைப் பெயர்ச்சொல் ஈறு திரிந்தது.” வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் இந்நூலைப் பற்றி (சொல்லதிகாரம், திரியாபதப் படல இறுதியில்) இவ்வாறு தமது உரையில் எழுதுகிறார்: “திணைபால் மரபு வினாச்சொல் பிடஞ்சொல் இணையா வழுத்தொகையோ டெச்ச - மணையாக் கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண் டவிநயனார் ஆராய்ந்தார் சொல் எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.” வீரசோழிய உரையாசிரியர் தமது உரையிலே அவிநய நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அச் சூத்திரங்கள் இவை: “தொல்காப்பியனார், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றும் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார். ‘ஆலும் ஆனும் மூன்றே னுருபே’ என்றார் அவிநயனார்.” (சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம், 6 ஆம் காரிகை உரை) “ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு மிக்க வரினு மப்பாற் படுமே’ என்றார் அவிநயனார்.” (யாப்பதிகாரம், 19ஆம் காரிகை உரை) யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரர் தமது உரையிலே, அவிநய நூலிலிருந்து கீழ்க்காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும் ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற் பாத்தம் வண்ண மேலா வாகிற் பண்போல் விகற்பம் பாவினத் தாகும். குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையான் முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா என்றார் அவிநயனார்.” (யாப்பருங்கலக்காரிகை, 23ஆம் காரிகை உரை மேற்கோள்) “‘கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை தனையக் குடைதுங் குரைபுனல் ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.’ இஃது ஐந்தடியான் வந்ததாயினும், ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழக்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவிநயனார் காட்டியது.” (யா. காரிகை. 43ஆம் உரை) “முன்னிலை நெடிலு மாவு மாவும் னம்மிகப் புணரு மியங்குதிணை யான.” (யா., காரிகை, - 44ஆம் காரிகையுரை மேற்கோள்) யாப்பருங்கல உரையாசிரியர், தமது உரையிலே மேற்கோள் காட்டுகிற அவிநயச் சூத்திரங்கள் வருமாறு: “அஇஉஎ ஒவிவை குறிய மற்றையேழ் நெட்டெ ழுத்தா நேரப் படுமே. 1 குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும் நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம். 2 இருநூற் றிருபத் தெட்டுவிரிந் தன வுயிரே வன்மை மென்மை யிடைமை. 3 வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகரம் அரையாம் யகரமோ டியையின் இகரமுங் குறுகு மென்மனார் புலவர். 4 அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்து மிதற்கே. 5 2அளபெடை தனியிரண் டல்வரி ஐஒள வுளதா மொன்றரை தனியுமை யாகும். 6 ஆய்தமும் யவ்வு அவ்வொடு வரினே ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும். 7 உவ்வொடு வலவரி னௌவியல் பாகும். 8 நெடிய குறிய வுயிர்மெய் யுயிரும் வலிய மெலிய விடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே. 9 அளபெழி னல்லதை யாய்தமு மொற்று மலகியல் பெய்தா வென்மனார் புலவர். 10 உயிரள பெடையுங் குறுகிய உயிரின் இகர வுகரமுந் தளைதபி னொற்றம். 11 சீர்தப வரினு மொற்றியற் றாகும்.” 12 (யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்) “நேரசை யொன்றே நிரையசை யிரண்டல காகு மென்ப வறிந்திசி னோரே” 18 எனவும். “நேரோ ரலகு நிரையிரண் டலகு நேர்புமூன் றலகு நிரைபுதான் கலகென் றோதினார் புலவ ருணரு மாறே.” 14 எனவும் சொன்னார் அவிநயனார். “கடையு மிடையு மிணையும்ஐ யிரட்டியும்” 15 என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம், அசையோத்து உரை மேற்கோள்) “ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசை இயற்சீ ரெட்டனு ளல்லன விரவினு நேரிறின் வெள்ளை நிறையிறின் வஞ்சி. 16 ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து மாறியக்கா னாலசைச் சீர்பதி னாறாம். 17 நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி. 18 முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கிவை வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்.3 19 உரிமை யியற்சீர் மயங்கியும் பானான் கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சிக் கலியினே ரீற்ற வியற்சீ ராகா வென்மனார் புலவர். 20 நிரையிறு நாலசை வஞ்சி யுள்ளால் விரவினு தேரீற் றல்லவை யியலா. 21 நேர்நடு வியல வஞ்சி யுரிச்சீ ராசிரி யத்திய லுண்மையு முடைய.” 22 (யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்) “ஈரசை யியற்சீ ரொன்றுத லியல்பே.” 23 (யாப்பருங்கலம், தளையோத்து உரை மேற்கோள்) “இரண்டினும் மூன்றினும் வஞ்சி யாகும் நாற்சீ ரடியாற் பாப்பிற மூன்றே. 24 எல்லா வடியினு மினப்பா நாற்சீர் அல்லா மேலடிய பாவினுக் கியலா. 25 ஒன்று மிரண்டு மூன்றும் நான்கும் என்றிம் முறையே பாவின் சிறுமை தத்தங் குறிப்பினவே தொடையின் பெருமை.” 26 (யாப்பருங்கலம், அடியோத்து 10 உரை மேற்கோள்) “மறுதலை யுரைப்பினும் பகைத்தொடை யாகும் அளபெடை யினம்பெறத் தொடுப்ப தளபெடை. 27 ஒரூஉத் தொடை யிருசீ ரிடைவிடி லென்மனார் புலவர். 28 மாறல் தொவ்வா மரபின செந்தொடை. 29 ஒருசீ ரடிமுழு தாயி னிரட்டை. 30 மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரா லியங்கினுந் தளைவகை யின்னண மாகும்.” 31 (யாப்பருங்கலம், தொடையோத்து உரை மேற்கோள்) “வெண்பா தாழிசை வெண்டுறை விருத்தமென் றிந்நான் கல்லவு முந்நான் கென்ப. 32 ஏந்திசைச் செப்ப லிசையன வாகி வேண்டிய வுறுப்பின வெண்பா யாப்பே.” 33 என்றோசை கூறி, “முச்சீ ரடியா னிறுதலு நேர்நிரை யச்சீ ரியல்பி னசையி னிறுதியாம்.” 34 என்றீறு சொன்னார் அவிநயனார். “ஈரடி யியைந்தது குறள்வெண் பாவே. 35 குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய் முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா. 36 ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ லின்றி நடப்ப தின்னிசை வெண்பா. 37 தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா. 38 யீரடி யியைந்தது குறள்வெண் பாவே யொத்த வடித்தே செந்துறை வெள்ளை. 39 அடிமூன் றாகி வெண்பாப் போல விறுவ தாயின் வெள்ளொத் தாழிசை. 40 அடியைந் தாகியு மிக்கு மீற்றடி யொன்று மிரண்டுஞ் சீர்தபின் வெண்டுறை. 41 மூன்று நான்கு மடிதொறுந் தனிச்சொற் கொளீஇய வெல்லாம் வெளிவிருத் தம்மே. 42 தன்பா லுறுப்புத் தழுவிய மெல்லிய லின்பா வகவ விசையதை யின்னுயிர்க் கன்பா வரைந்த வாசிரிய மென்ப.” 43 என்றோசை சொல்லி. ‘ஏனைச் சொல்லி னாசிரிய மிறுமே ஓஈ ஆயு மொரோவழி யாகும். 44 என்னென் சொல்லும் பிறவு மென்றிவற் னுன்னவும் பெறூஉ நிலைமண் டிலமே.’ 45 என்றார் அவிநயனார்.” “ஈற்றதன் மேலடி யொருசீர் குறையடி நிற்பது நேரிசை யாசிரி யம்மே. 46 இடைபல குறைவ திணைக்குற ளாகும். 47 கொண்ட வடிமுத லாயொத் திறுவது மண்டில மொத்திறி னிலைமண் டிலமே. 48 ஒத்த வடித்தா யுலையா மண்டிலம் என்னென் கிளவியை யீறா கப்பெறும் அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே. 49 நாற்சீ ரடிநான் ககத்தொடை நடந்தவும் ஐஞ்சீ ரடிநடந் துறழடி குறைந்தவும் அறுசீ ரெழுசீர் வலிய நடந்தவும் எண்சீர் நாலடி யீற்றடி குறைந்தும் தன்சீர்ப் பாதியி னடிமுடி வுடைத்தாய் அந்தத் தொடையிவை யடியா நடப்பிற் குறையா வுறுப்பினது துறையெனப் படுமே. 50 அறுசீ ரெழுசீ ரடிமிக நின்றவும் குறைவி னான்கடி விருத்த மாகும். 51 ஆய்ந்த வுறுப்பி னகவுத லின்றி யேந்திய துள்ள லிசையது கலியே. 52 ஒத்தா ழிசைக்கலி வெண்கலிகொச் சகமென முத்திறத் தான்வருங் கலிப்பா வென்ப. 53 விட்டிசை முதற்பாத் தரவடி யொத்தாங் கொட்டிய மூன்றிடைத் தாழிசை யதன்பின் மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம் ஆசிரி யத்தொடு வெள்ளை யறுதலென் றோதின ரொத்தா ழிசைக்கலிக் குறுப்பே. 54 உரைத்த வுறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த வடியா னீர்த்திரை போல வசையடி பெறினவை யம்போ தரங்கம். 55 குறில்வயி னிரையசை கூட்டிய வாரா தடியவட் பெறினே வண்ணக மாகும். 56 கலியொடு கொண்டு தன்றளை விரவா விறுமடி வரினே வெண்கலி யாகும். 57 தரவே யாகியு மிரட்டியுந் தாழிசைச் சிலவும் பலவு மயங்கியும் பாவே றொத்தா ழிசைக்கலிக் கொவ்வா வுறுப்பின கொச்சகக் கலிப்பா வாகு மென்ப. 58 ஈற்றடி மிக்கள வொத்தன வாகிப் பலவுஞ் சிலவு மடியாய் வரினே கலிப்பா வினத்துத் தாழிசை யாகும். 59 ஐஞ்சீர் நான்கடி கலித்துறை யாகும். 60 நாற்சீர் நாலடி வருவ தாயி னொலியி னியைந்த கலிவிருத் தம்மே. 61 தூங்க லிசையாய்த் தனிச்சொற் சுரிதகந் தான்பெறு மடிதளை தழீஇவரை வின்றா யெஞ்சா வகையது வஞ்சிப் பாவே. 62 இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது வஞ்சித் தாழிசை தனிவரிற் றுறையே. 63 ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு மிக்கடி வரினு மப்பாற் படுமே.” 64 (யாப்பருங்கலம், செய்யுளியல் உரை மேற்கோள்) “தனியே யடிமுதற் பொருள்பெற வருவது தனிசொலஃ திறுதியும் வஞ்சியு மென்ப.” 65 “நிரனிறை, சுண்ணம், அடிமறி மொழிமாற்று, அடிமொழி மாற்று என்னும் இந் நான்கினோடும் பூட்டுவில், புனல்யாறு, தாப்பிசை, அளைமறி பாப்பு, கொண்டுகூட்டு இவ்வைந்தும் உறழ இருபதாம். அவை வந்த வழிக் கண்டுகொள்க. இருபது வகையானுங் காட்டினார் அவிநயனார் எனக் கொள்க.” “அவிநயனார் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம, மெல்லெழுத்து வண்ணம், இடை யெழுத்து வண்ணம் என்று இவ்வைந்தினையும் கூட்டி யுறழ நூறு வண்ணம் பிறக்கும் என்றார்.” “தனியே யடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ திறுதியும் வஞ்சியு ளியலு மென்ப. 66 எழுத்தல் கிளவியி னசையொடு சீர்நிறைத் தொழுக்கலு மடிதொடை தளையழி யாமை வழுக்கில் வகையுளி சேர்தலு முரித்தே. 67 நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும் பாவொடு பிறவு மாகு மொரோவழி. 68 உயிரள பெடையுங் குறுகிய உயிரி னிகர வுகரமுந் தளைதபி னொற்றாம் சீர்தப வரினு மொற்றியற் றாகும்.” 69 “இனி, ஒரு சாரார் அகத்திணை, புறத்திணை, அகப்புறத் திணை என மூன்றா யடங்குமென்ப. ஆமாறு அவிநயத்துட் காண்க” “முற்செய் வினையது முறையா வுண்மையி னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையந் தெரித றேற்றலென நான்கிறந் தவட்கு நாணு மடனும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் தடக்கிய வறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமு மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையுமுள் ளல்ல துடம்படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே.’ 70 என்றார் அவிநயனார்.” “இடைச்சொல்லும் உரிச்சொல்லுந் தொல்காப்பியம் தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், உரை மேற்கோள்) நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர், தமது உரையில் அவிநய நூல் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அச்சூத்திரங்கள் இவை: “‘வன்மையொடு ரஃகான் ழஃகா னொழிந்தாங் கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி. பதினெண் மெய்யு மதுவே மவ்வொ டாய்தமு மளபரை தேய்தலு முரித்தே.’ என்றார் ஆசிரியர் அவிநயனாருமெனக் கொளக்.” “ஙகரம் மொழிக்கு முதலாகுமோ வெனின். ‘கசதப நவ்வே யாதியு மிடையும் டறவிடை ணனரழ லளஇடை கடையே ஞநமய வவ்வே மூன்றிட மென்ப’ 3 என ஙகரம் ஈரிடத்தும் நிற்குமென்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க.” (நன்னூல், எழுத்தியல், மயிலைநாதர் உரை மேற்கோள்) “அவைதாம், ‘பெயர்ச்சொ லென்றா தொழிற்சொ லென்றா இரண்டின் பாலா யடங்குமன் பயின்றே.’ 4 என்று அளவறு புலமை அவிநயனார் உரைத்தார்.” (நன்., பதவியல் 4, மயிலைநாதர் உரை மேற்கோள்) “அழிதூஉ வகையு மவற்றின் பாலே கால மறிதொழில் கருத்தினோ பாலே.” 5 (நன்., பெயர்., 7, மயிலைநாதர் உரை மேற்கோள்) “கால மறிதொழில் கருத்தினோ டியையப் பால்வகை தோறும் படுமொழி வேறே.” 6 (நன்., வினை, 1, மயிலைநாதர் உரை மேற்கோள்) “கால்வாய், அடைகட லென்பன வாயையுடைய கால், கடலினது அடையென முன்மொழிப் பொருள் குறித்தன. வேங்கைப்பூ, கருங்கு திரை என்பன பின்மொழிப் பொருள் கருதின. இவை ஈரிடத்திற்கும் அவிநயத்திற் காட்டினவை.” (நன்., பொதுவியல், 19 உரை) பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்திரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு: “உணவே யமுதம் விடமு மாகும். 1 அந்தச் சாதிக் கந்தப் பாவே தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார். 2 வெள்ளையு மகவலும் விருத்தமுங் கலியும் வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும். 3 வெள்ளை யகவல் விருத்தங் கலியே வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே. 4 காட்டிய முறையே நாட்டிய வாண்பாற் கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. 5 பாலன் யாண்டே யேழென மொழிப. 6 மீளி யாண்டே பத்தியை காறும். 7 மறவோன் யாண்டே பதினான் காகும். 8 திறலோன் யாண்டே பதினைந் தாகும். 9 பதினா றெல்லை காளைக் கியாண்டே. 10 அத்திற மிறந்த முப்பதின் காறும் விடலைக் காகு மிகினே முதுமகன். 11 நீடிய நாற்பத் தெட்டி னளவு மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 12 சிற்றில் பாவை கழங்கம் மனையே பொற்புறு மூசல் பைங்கிளி யாழே பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே நன்மது நுகர்த லின்ன பிறவு மவரவர்க் குரிய வாகு மென்ப. 13 வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர் மாந்தர் கலிவெண் பாவிற் குரியர். 14 நாலு வருணமு மேவுத லுரிய வுலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர்.” 15 நேமிநாத உரையாசிரியர் (சொல்லதிகாரம், 4ஆம் சூத்திர உரை), கீழ்க்காணும் அவிநயச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே உயர்திணை மருங்கிற் படர்க்கைப் பாலே யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை யன்றி யனைத்தும் அஃறிணைப் பால.” நவநீதப் பாட்டியலின் பழைய உரை, (91 ஆம் செய்யுள் உரையில்), அவிநயனார் கலாவியல் என்னும் பெயருடன் இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறது. இதனால், அவிநய நூலுக்கு ‘அவிநயக் கலா வியல்’ என்னும் பெயர் வழங்கிய தென்பது தெரிகிறது. இவ்வுரைகாரர் மேற்கோள் காட்டிய சூத்திரங்கள் இவை: “செவித்திறங் கொள்ளாது தெரியுங் காலைத் தானே நம்பி மகனே மாணி யாசானென் றவரி லொருவ ரிழுக்கிலைக் குற்றம் வகுத்துடன் பாடாமற் சொல்லின் வென்றியும் பெறுமே.” 1 “அவைபுகு நெறியே யாயுங் காலை வாயிலி னிரைத்துக் கூறப்புகுங் காலை இருவரும் புகாஅ ரொருவர் முன்புகிற் புக்கவன் றொலையு முய்த்தெனு முண்மையின் இருவருங் கூடி யொருங்குடன் பட்ட தெரிவுட னுணர்ந்தோர் செப்பின ரென்ப.” 2 5. அவிநய உரை அவிநயனார் இயற்றிய அவிநயம் என்னும் நூலுக்கு ஒர் உரை இருந்தது என்றும், அதனை இயற்றியவர் தண்டலங்கிழவன் என்னும் இராசபவித்திரப் பல்லவதரையன் என்றும் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் கூறுகிறார். நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதர் (நன்., பொது வியல், 9ஆவது சூத்திர உரையில்) பத்து வகையான எச்சங்களை விளக்குகிறார். அவை பெயரெச்சம், வினையெச்சம், உம்மையெச்சம், சொல்லெச்சம், பிரிநிலையெச்சம், எனவெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறை, எச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் என்பன. இவற்றை விளக்கிய பின்னர் மயிலைநாதர். “இந்தப் பத்தெச்சமும் புவிபுகழ் புலமை யவிநய நூலுட் டண்டலங் கிழவன் றகைவரு நேமி யெண்டிசை நிறைபெய ரிராச பவித்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக” என்று கூறுகிறார். இதனால், தண்டலம் என்னும் ஊரின் தலைவனாகிய இராச பவித் திரப் பல்லவதரையன் என்பவர் அவிநய நூலுக்கு உரை எழுதினார் என்பது நன்கு தெரிகிறது. இவ்வுரையும் இப்போது மறைந்துவிட்டது. 6. இன்மணியாரம் இது செய்யுளிலக்கண நூல். இந்நூலைப் பற்றியும் இந்நூலாசி யரைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. யாப்பருங்கலம், ஒழிபியல், ‘மாலைமாற்றே’ எனத் தொடங்கும் சூத்திரப்பாவுரையில், உரையா சிரியர் குணசாகரர் இந்நூலிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார். அச்சூத்திரம், இது: “இனிச் செய்யுளாவன: ‘வரியே குரவை மதலை மேட முரியே தாழிசை முன்னிலை வாழ்த்தே தேவபாணி சிற்றிசை நேரிசை பாவை தனிநிலை பாங்கமை மடலே’ என்றோதப்பட்டன. இவை இன்மணியாரத்துள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.” 7. நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை அவிநயம் என்னும் நூலுக்கு அவிநயப் புறனடை என்னும் பெயருள்ள சார்பு நூல் இருந்தது என்பது மயிலைநாதர் என்னும் உரை யாசிரியரும், யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் எழுதுவதி லிருந்து தெரிகிறது. அவிநயப் புறனடைக்கு நாலடி நாற்பது என்னும் பெயரும் உண்டு. யாப்பருங்கலம் என்னும் நூலை இயற்றிய ஆசிரியரே யாப்பருங் கலக்காரிகை என்னும் ஒரு சார்பு நூலை இயற்றியுள்ளார். அதற்கு யாப் பருங்கலப் புறனடை என்பது பெயர். யாப்பருங்கல விருத்தியுரைகாரர், தமது உரையில் யாப்பருங்கலக் காரிகைச் செய்யுளை மேற்கோள் காட்டி, “இவ் வியாப்பருங்கலப் புறனடையை விரித்துரைத்துக் கொள்க” என்று எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். இதனால் யாப்பருங் கலத்துக்கு யாப்பருங் கலக்காரிகை புறனடை நூல் என்பது தெரிகிறது. இதுபோலவே அவிநய நூலுக்கு ‘அவிநயப் புறனடை’ என்னும் சார்பு நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. அவிநயப் புறனடையையும் அவிநயனாரே இயற்றினார். அது நாற்பது வெண்பாவினால் அமைந்த நூலாகையினாலே அதற்கு ‘நாலடி நாற்பது’ என்னும் பெயரும் வழங்கியது. (நானூறு வெண்பாக்களினால் அமைந்த நூலுக்கு நாலடி நானூறு என்று பெயர் வழங்கப்படுவது நினைவுகொள்ளத்தக்கது.) “அவிநயனார் யாப்பிற்கு நாலடி நாற்பது” என்று யாப்பருங்கலக்காரிகை யுரைப் பாயிரத்தில் குணசாகரர் எழுதுவது காண்க. யாப்பருங்கல உரையாசிரியர், அவிநயப் புறனடை என்னும் நூலைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “அவிநயத்துள்ளும், ‘முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கின் வன்மை முதலா மும்மையும் பிறக்கும்’ எனப் பொதுவகையாற் கூறி இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று கணக்கியலுட் புறனடை எடுத்தோதினார் அவிநயனாராகலானும் ... ... ... ... ‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி னாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர் ஈறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோர் குறித்து’ என்னும் புறனடையானும் பிறவாற்றானும் விளக்கங் கூறினாரா கலானும் என்க.” (யாப்பருங்கல லிருத்தி, சீரோத்து, 15 உரை.) யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடையாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்காணும் வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்: “‘குறினெடி லாய்த மளபெடையை காரக் குறில்குற் றிகர வுகர - மறுவில் உயிர்மெய் விராய்மெய்யோ டாறாறெழுத்தாஞ் செயிர்வன்மை மென்மை சமன்.’ 1 என்பது நாலடி நாற்பது என்னும் நூலின் எழுத்துப் புறனடை. “குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றகர வாதி குறுகிய ஐஒளமவ் வாய்த - நெறிமையா லாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா லேய்ந்தன நானான் கெழுத்து.’ 2 இது நாலடி நாற்பது என்னும் நூலின் அசைப் புறனடை.” (யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)’ “‘ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும் ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி னொண்பா வடிவிரவா வுற்று.’4 3 ‘சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சிவு ளூருங் கலிப்பா சிறுச்சிறிதே - பாவினுள் வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம் வெண்பா கலியுட் புகும்.’ என்றார் நாலாடி நாற்பதுடையாரெனக் கொள்க.” 4 (யாப்பருங்கலம், அடியோத்து உரை மேற்கோள்) “நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி நாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர் ஈறுநிரை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோர் குறித்து.” 5 (யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்) யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இவைபோன்று வேறு சில வெண்பாக்களையும் தமது உரையில் மேற்கோள் காட்டிச் செல்கிறார். அவையும் நாலடி நாற்பது என்னும் நூலைச் சேர்ந்தனவாயிருக்கக் கூடும் என்று தோன்றுகின்றது. ஆனால், அச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதை உரையாசிரியர் குறிக்காதபடியால், அவை நாலடி நாற்பதைச் சேர்ந்த வெண்பாக்கள்தாமா என்னும் ஐயம் உண்டாகிறது. நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர் நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை நூலிலிருந்து இரண்டு குறட்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். அவை : “‘தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்.’ 1 (நன்னூல், பதவியல், 1, உரை மேற்கோள்) ‘றனழஎ ஒவ்வுந் தனியு மகாரமுந் தன்மைத் தமிழ்பொது மற்று.’ 2 என்றார் ஆசிரிய ரவிநயனார்.” (நன்னூல், பதவியல், 23, உரை மேற்கோள்) 8. கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம் கடிய நன்னியார் என்னும் புலவர் கைக்கிளைச் சூத்திரம் என்னும் நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல விருத்தியுரை யினால் தெரிகிறது. யாப்பருங்கலம், செய்யுளியல், 2ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார் : “கைக்கிளையும், வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வருகின்றுழி ஆசிரியவடி இரண்டேயாய், அவற்று ளீற்றடி நாற்சீரா யீற்றயலடி முச்சீரானே வருவதெனக் கொள்க. என்னை? ‘இருதலைக் காம மன்றிக் கைக்கிளை யொருதலைக் காம மாகக் கூறிய விலக்கண மரபி னியல்புற நாடி யதர்ப்பட மொழிந்தனர் புலவ ரதுவே பெறுதி வெண்பா வுரித்தாய் மற்றதன் இறுதி யெழுசீ ராசிரி யம்மே.’ ‘வெண்பா வாசிரி யத்தாய் மற்றதன் இறுதி யெழுசீ ராசிரி யம்மே.’ ‘கைக்கிளை யாசிரியம் வருவ தாயின் முச்சீ ரெழுத்தின் றாகி முடிவடி யெச்சீ ரானு மேகாரத் திறுமே.’ இது கடிய நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம்.” யாப்பருங்கலம், செய்யுளியல் 18ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியாரை மேற்கோள் காட்டுகிறார். அது : “கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வரும்வழி எருத்தடி முச்சீரான் வரப்பெறா வென்பர் கடிய நன்னியார் எனக் கொள்க. என்னை? ‘கைக்கிளை மருட்பா வாகி வருகா லாசிரியம் வருவ தாயின் மேவா முச்சீ ரெருத்திற் றாகி முடியடி யெச்சீ ரானு மேகாரத் திறுமே.’ என்றாகலின்.” கடிய நன்னியாரைப் பற்றியும், அவர் இயற்றிய கைக்கிளைச் சூத்திரத்தைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 9. கவிமயக்கறை இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழிகுளம்” என்னும் சூத்திர உரையில், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்னும் நான்குவகைக் கவிகளைப் பற்றி எழுதியபின், “ஒழிந்த விகற்பங்கள் கவிமயக்கறையுள்ளும் பிற வற்றுள்ளுங் கண்டுகொள்க” என்று எழுதுகிறார் உரையாசிரியர். இதனால் கவிமயக்கறை என்னும் நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 10. காக்கைபாடினியம் காக்கைபாடினியார் என்பவர் இயற்றியது இந்நூல். இவருக்குப் பிற்காலத்தில் இவர் பெயரையுடைய மற்றொரு புலவர் தம் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அவருக்குச் சிறு என்னும் அடைமொழி கொடுத்துச் சிறுகாக்கைபாடினியார் என்றும், அவரது நூலுக்குச் சிறுகாக்கைபாடினியம் என்றும் பெயர் வழங்கினார்கள்.5 காக்கைபாடினியார் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர் என்பதையும், தொல்காப்பியர் விரித்துரைத்த இலக்கணத்தைக் காக்கை பாடினியார் தொகுத்து இயற்றினார் என்பதையும், யாப்பருங்கல விருத்தி யுரைகாரார் மேற்கோள் காட்டிய கீழ்காணும் வெண்பாவினால் அறியலாம் : தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலுட் டொகுத்து. உரையாசிரியர் இளம்பூரண அடிகள், தொல்காப்பிய (செய்யுளியல், 4ஆம் சூத்திரம்) உரையில் கீழ்வருமாறு எழுதுகிறார். “அஃதேல் நேர்பசை நிரைபசை யெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை யிரண்டசையாக்கி யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தராது, வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற் றியற்சீரைத் தேமா புளிமா என்னு முதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகர வீற்றா னுதாரணங் காட்டினமையானும், சீரும் தளையுங் கெடு வழிக் குற்றியலுகரம் அலகு பெறாதென்றமையானும், வெண்பா வீற்றிலு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமெனவுடன் பட்டமை யானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க.” காக்கைபாடினியத்தைப் பற்றி யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார்: “நேர்பசை நிரைபசை வேண்டாது நேரசை நிரையசை வேண்டி நாலசைப் பொதுச் சீர் வேண்டினார் காக்கைபாடினியார் முதலிய ஒருசாராசிரியர்.” (யாப்பருங்கலம், சீரோத்து, 1 உரை) “எல்லாம் என்பது சொல்லவேண்டிய தென்னையெனின், பெரு நூன் மருவா வொருசாராரும் சான்றோர் செய்யுட்டன்மை யறியாதோரும், நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் பிற தளையும் வெண்பாவினு ளருகி வரு மென்பா ருளராயினும், அவ்வாறு வரின் வெண்பா வழியும் செப்ப லோசை தழுவி நில்லாதகலினென்று மறுத்தார் காக்கைபாடினியார் முதலாகிய மாப்பெரும் புலவர்; அவரது துணிபே இந்நூலுள்ளும் (யாப் பருங்கலம்) துணிபு என்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்டதெனக் கொள்க.” (யாப்பருங்கலம், தளையோத்து, 22 உரை) “காக்கைபாடினியார் முதலாகிய வொருசாராசிரியர் மாப்பெரும் புலவர்தம் மதம்பற்றி நாலசைச்சீர் விரித்தோதினார் இந்நூலுடையார் (யாப்பருங்கல நூலுடையார்) எனக் கொள்க.” (யாப்பருங்கலம், ஒழியியல், விருத்தியுரை) யாப்பருங்கலத்தின் புறனடை நூலாகிய யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர் தமது உரையில் கீழ்க்காணும் காக்கைபாடினியார் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்செய் வலிய மெலிய விடைமையோ டாய்தம் இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும். 1 நாலசை யானு நடைபெறும் ஓரசை சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே. 2 கூறிய வஞ்சிக் குரியன வாகலும் ஆகுந வென்ப வறிந்திசி னோரே. 3 குன்று கூதிர் பண்பு தோழி விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாந் தெளிய வந்த செந்துறைச் செந்துறை.6 4 இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப வகையது வெண்டளை யாகும். 5 உரிச்சீ ரதனு ளுரைத்ததை யன்றிக் கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே. 6 இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப மிலவாய் விரவி நடப்பின் அதற்பெய ராசிரி யத்தளை யாகும். 7 வெண்சீ ரிறுதியி னேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை யாகு மென்ப. 8 வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக் கண்டன வெல்லாங் கலித்தளை யாகும். 9 தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத் தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின் பந்த மெனப்பெயர் பகரப் படுமே. 10 இருசீர் குறளடி சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி அறுசீர் கழிநெடி லாகு மென்ப. 11 எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற் கொன்றிய வென்ப வுணர்ந்திசி னோரே. 12 இரண்டு முதலா வெட்டீ றாகத் திரண்ட சீரா னடிமுடி வுடைய இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த வல்ல செய்யு ளுள்ளே. 13 ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை இருதொடை மூன்றா மடியி னிழிந்து வருவன வாசிரிய மில்லென மொழிப வஞ்சியு மப்பா வழக்கின வாகும். 14 நான்கா மடியினு மூன்றாந் தொடையினுந் தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே. 15 உரைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை யில்லென் றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே. 16 அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லாம் இசையா தாவது செந்தொடை தானே. 17 தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே. 18 இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி முரண்ட வெதுகைய தாகியு மாகா திரண்டு துணியா யிடைநனி போழ்ந்தும் நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா. 19 தொடையடி யித்துணை யென்னும் வழக்க முடையதை யன்றி யுறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே. 20 ஒருமூன் றொருநான் கடியடி தோறுந் தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே. 21 அளவடி யந்தமு மாதியு மாகிக் குறளடி சிந்தடி யென்றா விரண்டும் இடைவர நிற்ப திணைக்குற ளாகும். 22 ஒத்த வடித்தா யுலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே. 23 என்னென் கிளவி யீறாப் பெறுதலும் அன்னவை பிறவு மந்த நிலைபெற நிற்கவும் பெறூஉ நிலைமண் டிலமே. 24 உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி இடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே. 25 தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம் எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி. 26 நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாங்கித் தழுவும் தரவினோ டைந்தும் யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம். 27 வெண்டளை தன்றளை யென்றிரு தன்மையின் வெண்பா வியலது வெண்கலி யாகும். 28 அந்தடி மிக்குச் சிலபல வாயடி தந்தமு ளொப்பன தாழிசை யாகும். 29 எருத்திய லின்றி யிடைநிலை பெற்றும் இடைநிலை யின்றி யெருத்துடைத் தாகியும் எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையு மெருத்து மிரட்டுற வந்தும் எருத்த மிரட்டித் திடைநிலை யாறா அடக்கியல் காறு மமைந்த வுறுப்பிற் கிடக்கை முறையாள் கிழமைய தாயும் தரவொடு தாழிசை யம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை யெல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யன்றி இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன கொச்சக மென்னுங் குறியின வாகும். 30 ஐஞ்சீ ரடியி னடித்தொகை நான்மையோ டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை. 31 நாலொரு சீரா னடந்த வடித்தொகை ஈரிரண் டாகி யியன்றன யாவையுங் காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே. 32 குறளடி நான்கவை கூடின வாகி முறைமையி னவ்வகை மூன்றிணைந் தொன்றாய் வருவன வஞ்சித் தாழிசை யாகும். 33 வெள்ளை முதலா வாசிரிய மிறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும். 34 இஉ இரண்டின் குறுக்கற் தளைதப நிற்புழி யொற்றாம் நிலைமைய வாகும். 35 உயிரள பேழு முரைத்த முறையான் வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே. 36 ஆய்தமு மொற்று மளபெழ நின்றுழி வேறல கெய்தும் விதியின வாகும்.” 37 வீரசோழிய உரையில், பெருந்தேவனார் கீழ்க்காணும் காக்கைபாடினிய சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “உரைத்த பாவினுக் கொத்த வடிகள் வகுத்துரை பெற்றி யன்றிப் பிறவு நடக்கு மாண நடத்தை யுள்ளே.” 1 பேராசிரியர், தொல்காப்பிய உரையில் (பொருள் - செய்யுளியல்) கீழ்க்காணும் காக்கைபாடினிய சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல். 1 வெண்சீ ரொன்றிணும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான.” 2 யாப்பருங்கல விருத்தியுரைகாரர், கீழ்க்காணும் காக்கை பாடினிய சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய விடைமையொ டாய்தம் இஉ ஐயென மூன்றன் குறுக்கமொ டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும். 1 ஆய்தமு மொற்று மளபெழு நிற்புழி வேறலகெய்தும் விதியின வாகும். 2 இஉ இரண்டன்ன குறுக்கந் தளைதப நிற்புழி யொற்றா நிலையின வாகும். 3 உயிரள பேழு முரைத்த முறையான் வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே. 4 தனியசை யென்றா விணையசை யென்னா விரண்டென மொழிமனா ரியல்புணர்ந் தோரே. 5 நெடிலொடு நெடிலு நெடிலொடு குறிலும் இணையசை யாத லிலவென மொழிப. 6 ஐயென் நெடுஞ்சினை யாதி யொழித்தல கெய்து மிணையசை யென்றிசி னோரே.” 7 “நேர்பசை நிரைபசே வேண்டாது, நேரசை நிரையசை வேண்டி நாலசைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கை யாடினியார் முதலிய ஒருசாராசிரியர்.” (யாப்பருங்கல விருத்தி, சீரோத்து, 1 உரை) “ஒரோ வகையினா லாகிய வீரசைச் சீரியற் சீரெனச் செப்பினர் புலவர். 8 இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர். 9 மூவசை யான்முடி வெய்திய வெட்டனுள் அந்தந் தனியசை வெள்ளை யல்லன வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே. 10 இயற்சீ ருரிச்சீ ரெனவிரு சீரும் மயக்க முறைமையி னால்வகைப் பாவும் இனத்தின் மூன்றும் இனிதி னாகும். 11 உரிச்சீர் விரவ லாயு மியற்சீர் நடக்குன வாசிரி யத்தொடு வெள்ளை அந்தந் தனியா வியற்சீர் கலியொடு வஞ்சி மருங்கின் மயங்குத விலவே. 12 நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் றிணைதலும் ஏனுழி யொன்றுசென் றாகலு மந்தம் இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குரியன வாதலு 13 மாகுன வென்ப வறிந்திசி னோரே. இணைநடு வியலா வஞ்சி யுரிச்சீர் இணையுள வாசிரி யத்தன வாகா. 14 இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப வகையது வெண்டனை யாகும். 15 உரிச்சீ ரதனு ளுரைத்ததை யன்றிக் கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே. 16 இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப மிலவாய் விரவி நடப்பின் அதற்பெய ராசிரி யத்தனை யாகும். 17 வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக் கண்டன வெல்லாங் கலித்தளையாகும். 18 தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத் தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின் பந்த மெனப்பெயர் பகரப் படுமே. 19 குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென் றைவகை மரபின வடிவகை தானே. 20 இருசீர் குறளடி சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீ ரறுசீர் அதனின் இழிப நெடிலடி யென்றிசி னோரே. 21 சிந்தடி குறளடி யென்றா இரண்டும் வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே. 22 ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும் நாற்சீ ரடியா னடைபெற் றனவே. 23 சிந்துங் குறளும் வருதலு மவ்வழி யுண்டென் றறைய வுணர்ந்திசி னோரே. 24 விருத்தந் துறையொடு தாழிசை யென்றா இனச்செய்யு ளெல்லா வடியினு நடக்கும். 25 ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை யிருதொடை மூன்றா மடியி னிழிந்து வருவன வாசிரிய மில்லென மொழிப வஞ்சியு மப்பா வழக்கின வாகும். 26 நான்கா மடியினும் மூன்றாந் தொடையினும் தாழ்ந்த கலிப்பாத் தழுவுத லிலவே. 27 உரைப்போர் குறிப்பினை யன்றிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை யில்லென் றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே. 28 தொடையெனப் படுவ தடைவகை தெரியி னெழுத்தொடு சொற்பொரு ளென்றிவை மூன்றி னிரல்பட வந்த நெறிமைத் தாகி யடியோ டடியிடை யாப்புற நிற்கு முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே. 29 மொழியினும் பொருளினு முரணத் தொடுப்பி னிரணத் தொடையென் றெய்தும் பெயரே. 30 செம்பகை யல்லா மரபினதாந் தம்மு ளொன்றா நிலையது செந்தொடை யாகும். 31 தொடையடி யுட்பல வந்தா லெழுவா யுடைய தனாற்பெய ரொட்டப் படுமே. 32 வெண்பா விருத்தந் துறையொடு தாழிசை யென்றிம் முறையி னெண்ணிய மும்மையுந் தத்தம் பெயராற் றழுவும் பெயரே. 33 சிறந்துயர் செப்ப விசையன வாகி யறைந்த வுறுப்பி னகற லின்றி விளங்கக் கிடப்பது வெண்பா வாகும். 34 சிந்தடி யானே யிறுதலு மவ்வடி அந்த மசைச்சீர் வருதலும் யாப்புற வந்தது வெள்ளை வழக்கிய றானே. 35 தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே. 36 இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி முரண்ட வெதுகைய தாகியு மாகா திரண்டு துணியா யிடைநனி போழ்ந்து நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா. 37 தனிச்சொற் றழுவல வாகி விகற்பம் பலபல தோன்றினு மொன்றே வரினு மிதற்பெய ரின்னிசை யென்றிசி னோரே. 38 தொடையடி யித்துணை யென்னும் வழக்க முடையதை யன்றி யுறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே. 39 ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியு மிருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுத் தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந் தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியு மடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவு மெனவைந் தாகு மின்னிசை தானே. 40 அந்தங் குறையா தடியிரண் டாமெனிற் செந்துறை யென்னுஞ் சிறப்பிற் றாகும். 41 தன்பா வடித்தொகை மூன்றா யிறுமடி வெண்பாப் புரைய விறுவது வெள்ளையின் றன்பா வினங்களிற் றாழிசை யாகும். 42 ஐந்தா றடியி னடந்தவு மந்தடி யொன்று மிரண்டு மொழிசீர்ப் படுதவும் வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே. 43 ஒருமூன் றொருநான் கடியடி தோறும் தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே. 44 அளவடி யந்தமு மாதியு மாகிக் குறளடி சிந்தடி யென்றா யிரண்டு மிடைவர நிற்ப திணைக்குற ளாகும். 45 உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே. 46 அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற் கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி யெடுத்துரை பெற்ற விருநெடி லீற்றின் அடிப்பெறி னாசிரி யத்துறை யாகும். 47 அளவடி யைஞ்சீர் நெடிலடி தம்மு ளுறழத் தோன்றி யொத்த தொடையாய் விளைவது மப்பெயர் வேண்டப் படுமே. 48 அறுசீர் முதலா நெடியவை யெல்லா நெறிவயிற் றிரியா நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா வினத்துள விருத்தம். 49 வகுத்த வுறுப்பின் வழுவுத லின்றி யெடுத்துயர் துள்ள லிசையன வாகல் கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே. 50 வெண்கலி யொத்தா ழிசைக்கலி கொச்சக மென்றொரு மூன்றே கலியென மொழிப. 51 தரவே தாழிசை தனிநிலை சுரிதக மெனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி. 52 தன்னுடை யந்தமுந் தாழிசை யாதியுந் துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை தன்னொடு நிற்ற றரவிற் கியல்பே. 53 தத்தமி லொத்துத் தரவி னகப்பட நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை. 54 ஆங்கென் கிளவி யடையாத் தொடைபட நீங்கி யிசைக்கு நிலையது தனிச்சொல். 55 ஆசிரியம் வெண்பா வெனவிவை தம்முள் ஒன்றாகி யடிபெற் றிறுதி வருவது சுழிய மென்பெயர் சுரிதக மாகும். 56 நீர்த்திரை போல நிரலே முறைமுறை யாக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாக்கித் தழுவுந் தரவினோ டேனவும் யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம். 57 வெண்டனை தன்றளை யென்றிரு தன்மையின் வெண்பா வியலது வெண்கலி யாகும். 58 எருத்திய லின்றி யிடைநிலை பெற்றும் இடைநிலை யின்றி யெருத்துடைத் தாயும் எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையு மெருத்து மிரட்டுற வந்தும் எருத்த மிரட்டித் திமைநிலை யாறாய் அடக்கியல் காறு மமைந்த வுறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயுந் தரவொடு தாழிசை யம்போ தரங்கம் முடுகியல் போக்கிய லென்றிவை யெல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யன்றி யிடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன கொச்சக மென்னுங் குறியின வாகும். 59 அந்தடி மிக்குப் பலசில வாயடி தந்தமி லொன்றிய தாழிசை யாகும். 60 ஐஞ்சீர் முடிவி னடித்தொகை நான்மையொடு எஞ்சா மொழிந்தன வெல்லாங் கலித்துறை. 61 நாலொரு சீரா னடந்த வடித்தொகை யீரிரண் டாகி யியன்றவை யாவுங் காரிகை சான்ற கலிவிருத் தம்மே. 62 தன்றளை பாதந் தனிச்சொற் சுரிதக மென்றிவை நான்கு மடுக்கிய தூங்கிசை வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே. 63 ஒன்றின நான்மை யுடைத்தாய்க் குறளடி வந்தன வஞ்சித் துறையென லாகும். 64 குறளடி நான்கிவை கூடின வாயின் முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி வருவன வஞ்சித் தாழிசை யாகும். 65 உணர்த்திய பாவினு ளொத்த வடிகள் வகுத்துரை பெற்றியு மன்றிப் பிறவும் நடக்குன வாண்டை நடைவகை யுள்ளே. 66 உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும் மறுக்கப் படாத மரபின வாகியும் எழுவா யிடமா யடிப்பொரு ளெல்லாம் தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே. 67 வஞ்சி மருங்கி னிறுதியு மாமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே.” 68 காக்கைபாடினியார் தமிழ் நூல் வழங்கும் எல்லையைக் கூறும்போது. “வடக்குந் தெற்குங் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்” எனக் கூறியதாக, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் காக்கைபாடினியார் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அந்தச் சூத்திரத்தை முழுவதும் கூறவில்லை. 11., 12., 13. குறுவேட்டுவச் செய்யுள், லோகவிலாசனி, பெருவளநல்லூர்ப் பாசண்டம். இந்த மூன்று நூல்களின் பெயரை யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம். ஒழிபியலில் அவர் கூறுவது இது: “இனிப் பாவினங்களுட் சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிவந்தால் அவற்றையு மலகிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை, குறுவேட்டுவச் செய்யுளும், லோகவிலாசனியும், பெருவள நல்லூர்ப் பாசண்டமும் முதலாகவுடையன எனக் கொள்க.” இதனால் இவை யாப்பிலக்கண நூல்கள் என்பதும் இந்நூற் செய்யுள்களில் வேற்று பாஷைச் சொற்களும் கலந்திருந்தன என்பதும் தெரிகின்றன. இந்த நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 14. கையனார் யாப்பியல் கையனார் என்னும் பெயருள்ள ஆசிரியரை, யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரரும். யாப்பருங்கல உரையாசிரி யரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கூறுவதிலிருந்து கையனார் என்பவர் யாப்பிலக்கண நூல் ஒன்று செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், அந்த இலக்கண நூலின் பெயர் என்னென்பது தெரியவில்லை. இந்த உரையாசிரியர்கள், கையனார் என்னும் ஆசிரியரின் பெயரை மட்டும் கூறினரேயன்றி அந்நூலின் பெயரைக் கூறவில்லை. குணசாகரர், கையனார் நூலைப் பற்றி (யாப்பருங்கலக் காரிகை, 40 ஆம் காரிகை யுரையில்) எழுதுவது இது: “முதலயற் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்கதுவாய் என்றும் ஈற்றயற் சீர்க்கண் இல்லாததனை மேற்கதுவாய் என்றும் வேண்டினார் கையனார் முதலாய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, “மைதீர் கதுவாய்’ என்று விதப்புரைத்தாரெனக் கொள்க.” “இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பமும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியரெனக் கொள்க.” யாப்பருங்கலக் காரிகை, 41ஆம் காரிகை யுரையில் குணசாகரர், கையனார் நூலிலிருந்து ஒரு செய்யுளை உயிர் எதுகைக்கு மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு: “‘துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள் அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி வடியமை யெஃகம் வலவயி னேந்தித் தனியே வருதி நீயெனின் மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.’ இஃது இரண்டா மெழுத் தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய உயிர் ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனார் காட்டிய பாட்டு.” யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கையனாரைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “இஃது ஈறுபற்றி யறியுந் தன்மைத்தாகலின், இயைபுத் தொடைக் கிவ்வா றெட்டு விகற்பமும் சொன்னார், கையனார், தொல்கப்பியனார் முதலாகிய ஒருசாராசிரியர்.” (யாப்பருங்கலம், தொடையோத்து, 34ஆம் சூத்திர உரை) கடையிணை முரண், பின்முரண், இடைப்புணர் முரண் தொடை யிலக்கணத்திற்கு உதாரணமாகச் சில செய்யுள்களை மேற்கோள் காட்டிய பிறகு யாப்பருங்கல விருத்தியுரைகாரர், “இவ்வாறு கூறினார் கையனார் என்னும் ஆசிரியரெனக் கொள்க,” என்று எழுதுகிறார். (யாப்பருங்கலம், தொடையோத்து, 39ஆம் சூத்திர உரை) “இனமோனை மூன்று வகைப்படும், அவை வல்லின மோனையும், மெல்லின மோனையும், இடையின மோனையுமாம். அவற்றுள் வல்லின மோனை வருமாறு: கயலே ருண்கண் கலுழ நாளுஞ் சுடர்புரை திருநுதல் பசலை பாயத் திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப் போகல் வாழி பைய பூத்த கொழுங்கொடி யணிமலர் தயங்கப் பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே’ இஃதெல்லாவடியு முதற்கண் வல்லினமே வந்தமையின் வல்லின மோனை யென்று கையனார் காட்டிய பாட்டு.” (யாப்பருங்கலம், தொடையோத்து உரை) “கையனார் முதலாகிய வொருசாராசிரியர் இரண்டாஞ் சீர்க்க ணில்லாததனைக் கீழ்க்கதுவா யென்றும். ஈற்றயற் சீர்க்க ணில்லாததனை மேற்கதுவா யென்றும் வழங்கிய தறிவித்தற்கொரு தோற்ற முணர்த்திய தெனக் கொள்க.” (யாப்பருங்கலம், தொடையோத்து, 47ஆம் சூத்திர உரை) “இவ்வாறு வண்ண விகற்ப மெடுத்தோதினார் தொல்காப்பி யனாரும் கையனாரு முதலாக உடையார்.” (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை) இவ்வாறு இவ் வுரையாசிரியர்கள், எழுதுவதிலிருந்து கையனார் என்னும் ஆசிரியர் இயற்றிய யாப்பிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது ஐயமறத் தெரிகிறது. கையனார் யாப்பிலக்கண நூலிலிருந்து இவ்வுரையாசிரியர்கள் மூன்று சூத்திரங்களை மேற்கோள் காட்டி யிருக்கிறார்கள். அவை வருமாறு: “இருவா யொப்பினஃ தியைபென மொழிப.” 1 (யாப்பருங்கலக்காரிகை, 17 உரை மேற்கோள்) “உறுப்பி னளவே யொன்றரை யாகும்.” 2 “ஆய்தந் தானே குறியதன் கீழதாய் வலியதன் மேல்வந் தியலு மென்ப.” 3 (யாப்பருங்கலம், எழுத்தோத்து, 2ஆம் சூத்திர உரை மேற்கோள்) இவையன்றிக் கையனாரைப் பற்றியும், அவர் இயற்றிய யாப்பிலக்கண நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 15. சங்கயாப்பு சங்கயாப்பு என்னும் பெயருள்ள யாப்பிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது, யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல (அடியோத்து, 28ஆவது சூத்திரம்) விருத்தியுரையாசிரியர், பாவினங் களுக்குச் சில செய்யுள்களை உதாரணங் காட்டி, பிறவும் சங்கயாப்பிற் கண்டுகொள்க என்று எழுதுகிறார். சங்கயாப்பு என்னும் பெயருள்ள இந் நூலை யார் இயற்றினார், எந்தக் காலத்தில் இயற்றினார் என்பன தெரிய வில்லை. இந்நூற் சூத்திரங்கள் சிலவற்றை, யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு: “அகர முதலா ஒளகார மீறா யிசையொடு புணர்ந்தவீ ராறு முயிரே. 1 ககரம் முதலா னகரம் ஈறா விவையீ ரொன்பதும் மெய்யென மொழிப. 2 குறிலோ ரைந்தும் அறிவுறக் கிளப்பின் அஇ உஎ ஒவெனு மிவையே. 3 ஆஈ ஊஏ ஐஓ ஒளவெனும் ஏழும் நெட்டெழுத் தென்ற லியல்பே. 4 கண்ணிமை கைந்நொடி யென்றிவை யிரண்டும் மின்னிடை யளவே யெழுத்தின் மாத்திரை. 5 வன்மை யென்ப கசட தபற. 6 மென்மை யென்ப ஙஞண நமன 7 இடைமை யென்ப யரல வழள 8 அவைதாம், புள்ளியொடு நிற்ற லியல்பென மொழிப புள்ளியில் காலை யுயிர்மெய் யாகும். 9 அரைநொடி யளவின வறுமூ வுடம்பே. 10 அரைநொடி யென்ப தியாதென மொழியின் நொடிதரக் கூடிய விருவிர லியைபே. 11 குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே. 12 நேர்நால் வகையு நெறியுறக் கிளப்பின் நெடிலுங் குறிலுந் தனியே நிற்றலும் அவற்றின் முன்ன ரொற்றொடு நிற்றலும் இவைதாம் நேரசைக் கெழுத்தி னியல்பே. 13 இணைக்குறில் குறினெடி லிணைந்து மொற்றடுத்தும் நிலைக்குறி மரபி னிரையசைக் கெழுத்தே. 14 அகவ லென்ப தாசிரியப் பாவே. 15 “ஏழடி யிறுதி யீரடி முதலா வேறிய வெள்ளைக் கியைந்த வடியே மிக்கடி வருவது செய்யுட் குரித்தே மூவடிச் சிறுமை பெருமை யாயிரம் ஆகும் ஆசிரி யத்தின் அளவே. 16 என்றார் சங்கயாப்புடையார்.” (அடியோத்து, 32 உரை மேற்கோள்) முந்திய மோனை யெதுகை யளபெடை யந்தமின் முரணே செந்தொடை யியைபே பொழிப்பே ஒரூஉவ யிரட்டை யென்னும் மியற்படு தொடைக ளிவைமுத லாகப் பதின்மூ வாயிரத் தறுநூ றன்றியும் தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர். 17 வல்லொற்றுத் தொடர்ச்சியு மெல்லொற்றுத் தொடர்ச்சியு மிடையொற்றுத் தொடர்ச்சியு முறைபிறழ்ந் தியலும். 18 செப்பல் ஓசை வெண்பா வாகும். 19 ஏந்திசைச் செப்பலுந் தூங்கிசைச் செப்பலு மொழுகிசைச் செப்பலு முண்ணும் வெண்பா செப்ப லோசை வெண்பா வாகும். 20 வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை யேந்திசைச் செப்ப லென்மனார் புலவர். 21 இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர். 22 வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல். 23 கொச்சகம் வெண்கலி யொத்தா ழிசையென முத்திற மாகுங் கலியின் பகுதி. 24 16. சிறுகாக்கைபாடினியம் சிறுகாக்கைபாடினியம் என்பவர் இயற்றிய இந்நூலுக்குச் சிறு காக்கைபாடினியம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. இது செய்யுளி லக்கண நூல் என்பது தெரிகிறது. இவருக்கு முன்னர் காக்கை பாடினியார் என்பவர் ஒருவர் தமது பெயரால் காக்கை பாடினியம் என்னும் இலக்கண நூலைச் செய்திருத்தல் பற்றி. அவரின் இவர் வேறானவர் என்பது குறிப்பதற்காகச் சிறு என்னும் அடைமொழி கொடுத்துச் சிறுகாக்கைபாடினியார் என்று வழங்கப் பட்டார். தொல்காப்பியப் பொருளதிகாரம், செய்யுளியல், 1ஆம் சூத்திர உரையில், பேராசிரியர் இவரைப் பற்றி எழுதுவதாவது: ‘இணைநூல் முடிபு தன்னூன் மேற்றே’ என்பதனால் காக்கை பாடினியார் ஒதிய தளையிலக்கணம் ஈண்டுங் கோடல்வேண்டு மெனின், அஃதே கருத்தாயின் இவர்க்கும் அவர் முடிவே பற்றித் தளை தளையல் வேண்டும்; அல்லதூஉம், அவர்க்கு இளையாரான சிறு காக்கைபாடினியார் தளைகொண்டி லரென்பது இதனாற் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்தோராசிரிய ரென்பது. என்னை? ‘வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்’ எனக் கூறி வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவற்றானே எல்லை கண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து. ‘வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்’ எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தாரல்லாரென்பதுஉம், குறும்பணைநாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, அவர் இவரோடு ஒருசாலை மாணாக்கர் அல்லரென்பது எல்லாரும் உணரல் வேண்டுமென்பது.” மேலும் பேராசிரியர் கூறுகிறார்: “பிற்காலத்துக் காக்கைபாடினியாருந் தொல்காப்பியரோடு பொருந்தவே நூல் செய்தாரென்பது. மற்று, ‘வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’ எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறுகாக்கைபாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூ லென்னுமோவெனின், ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவு மாற்றாற் செய்தது, ஆராயின், அது வழிநூலாதற்கு இழுக்கென்னை என்க.” (தொல்., பொருள்., மரபு 95 ஆம் சூத்திர உரை.) இதனால், காக்கைபாடினியார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் தம் பெயரால் காக்கைபாடினியம் என்னும் பெயருள்ள இலக்கண நூல்களைச் செய்தனர் என்பதும், அவர்களில் ஒருவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தவர், மற்றவர் குமரியாறு கடல் கொள்ளப்பட்ட காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்குப் பின்) இருந்தவர் என்பதும் தெரிகின்றன. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம், செய்யுளியல், 3ஆவது சூத்திரமாகிய ‘தாழிசை துறையே விருந்த மென்றிவை பாவினம் பாவொடு பாற்பட் டியலும்’ என்பதற்கு உரையெழுதிய விருத்தியுரைகாரர், “பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவு நானான் காகும்” என்னும் சிறுகாக்கைபாடினியத்துச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். காட்டி, மேலும் எழுதுகிறார்: “விருத்தம், துறை, தாழிசையென்று காக்கைபாடினியார் வைத்த முறைமையின் வையாது தாழிசை துறை விருத்தமென்று தம் (அமிதசாகரர்) மதம்பட வைத்ததன்று; சிறு காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் வைத்த முறைமைபற்றி வைத்தாரென்க.” இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க்காணும் சிறுகாக்கை பாடினியச் சூத்திரங்களைத் தமது விருத்தியுரையில் மேற்கோள் காட்டுகிறார்: “குறிய நெடிய வுயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமு மாமசைக் கெழுத்தே. 1 தனிநெடி லாகியுந் தனிக்குறி லாகியு மொற்றொடு வந்தும் நேரசை யாகும். 2 குறிலிணை யாகியுங் குறிநெடி லாகியு மொற்றொடு வந்தும் நிரையசை யாகும். 3 இடையுங் கடையும் இணையும் ஐயெழுத்தே. 4 ஈரசை யாகிய மூவசைச் சீர்தான் நேரிறின் வெள்ளை நிரையிறின் வஞ்சி. 5 நடுவுரி நேயலா வஞ்சி யுரிச்சீ ருரிமை யுடைய வாசிரியத் துள்ளே. 6 இயற்சீ ரொன்றா நிலையது வெண்டளை உரிச்சீ ரதனி லொன்றுத லியல்பே. 7 ஈரசை யியற்சீ ரொன்றிய நிலைமை யாசிரி யத்தளை யாகு மென்ப. 8 வெண்சீ ரிறுதி நிரைவரிற் கலித்தனை வஞ்சி வகைமை வரைவின் றாகும். 9 வஞ்கி யல்லா மூவகைப் பாவும் எஞ்சுத லிலவே நாற்சீ ரடிவகை 10 முதலெழுத் தொன்றி முடிவது மோனை யேனைய தொன்றி னெதுகைத் தொடையே யுறுப்பி னொன்னிற் விகற்பமு மப்பா னெறிப்பட வந்தன நேரப் படுமே.7 11 சொல்லிசை யளபெழ நிற்பதை யளபெடை. 12 ஒன்றிய தொடைபொடும் விகற்பந் தன்னொடு மொன்றாது கிடப்பது செந்தொடை யாமே. 13 பல்வகைத் தொடையொரு பாலினிற் றொடுப்பிற் சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே. 14 பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவு நானான் காகும். 15 ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ லின்றி வருவன வின்னிசை வெண்பா. 16 தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா. 17 அடிமூன் றாகி வெண்பாப் போல விறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை. 18 நான்கு மூன்று மடிதொறுத் தனிச்சொற் றோன்ற வருவன வெளிவிருத்தம் மே. 19 இறுசீ ரடிமே லொருசீர் குறையடி பெறுவன நேரிசை யாசிரி யம்மே. 20 இடையிடை சீர்தபி னிணைக்குற ளாகும். 21 கொண்ட வடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர். 22 அடிமூன் றொத்திறி னொத்தா ழிசையே. 23 அறுசீ ரெழுசீ ரடிமிக வரூஉ முறைமைய நாலடி விருத்த மாகும். 24 தரவே தாழிசை தனிச்சொற் சுரிதகம் வருவன வெல்லாந் தாழிசைக் கலியே. 25 சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையிற் சுருங்கி மூவகை யெண்ணு முறைமையின் வழாஅ வளவின வெல்லா மம்போ தரங்கம். 26 அந்த வடிமிக் கல்லா வடியே தந்தமு ளொப்பன கலித்தா ழிசையே. 27 நாற்சீர் நாலடி கலிவிருத்த தம்மே. 28 எஞ்சா விருசீர் நாலடி மூன்றெனில் வஞ்சித் தாழிசை தனிவரிற் றுறையே. 29 முச்சீர் நாலடி யொத்தவை வரினே வஞ்சி விருத்த மென்றனர் கொளலே. 30 தனிச்சொல் லென்ப தடிமுதற் பொருளொடு தனித்தனி நடக்கும் வஞ்சியு ளீறே.” 31 17. செய்யுளியல் செய்யுளியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினாலும், யாப்பருங் கலக்காரிகைக்குக் குணசாகரர் எழுதிய உரையினாலும் தெரிகிறது. இவ்வுரையாசிரியர்கள், செய்யுளியல் ஆசிரியரின் பெயரைக் கூறாமல், செய்யுளியலுடையார் என்று கூறுகின்றனர். இவ்வுரையாசிரியர்கள் கூறுவன வருமாறு: “நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நேர்பசையாம்; நிரையசைக்கீழ் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நிரைபசையாம் என்றார் செய்யுளியலுடையார்.” (யாப்பருங்கலம், தளையோத்து, விருத்தியுரை.) “‘சொற்சீர்’ என்பது, ‘கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்து முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியிசை யாகியும் வழியசை புணர்ந்தும் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே.’ என்று செய்யுளியலுடையார் ஓதிய பெற்றியால் வருவனவெனக் கொள்க.” (யாப்பருங்கல விருத்தி, அடியோத்து) “ஒருசாராசிரியர் இரண்டாமெழுத்தின் மேலேறிய யுயிரொன்றி வந்தாலு மூன்றாமெழுத்து ஒன்றிவந்தாலும் ஏதுப்பாற்படுத்து வழங்குவர். வரலாறு: ‘துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநா ளணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி வடியமை யெஃகம் வலவயி னேந்தித் தனியே வருதி நீயெனின் மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.’ இஃதிரண்டாமெழுத்தின் மேலேறிய உயிரொன்றிய வெதுகை. இது செய்யுளியலுடையார் காட்டியது.” (யாப்பருங்கல விருத்தி, தொடையோத்து) “வெண்கூ வெண்பா வென்பது நேரசை வெண்பாவென வெழுத்து மிக்கிசைப்பது. அஃது ஆசுகவிகள் கூறுமாற்றாற் கூறப் பிறப்பது. என்னை? ‘வெண்கூ வெண்பா வெழுத்திறந் திசைக்கும்’ என்றாராகலின். வரலாறு:- ‘தண்டைந்த திண்டோளாய் தாங்கலாந் தன்மைத்தோ கண்டடையார் தம்மைக் கனற்றுமா-வண்டடைந்த நாணீல நாறுந்தார் நன்னன் கலைவாய வாணீலக் கண்ணார் வடிவு.’ எனவும் ‘அறந்தருதண் செங்கோலை யன்ன மடந்தை சிறந்தன சேவலோ டூடி - மறந்தொருகா றன்ன மகன்றாலுந் தன்னுயிர் வாழாவா லன்ன மகன்றி லிவை’ எனவும் இவை வெண்கூ வெண்பாவென்று செய்யுளிய லுடையார் காட்டிய பாட்டு.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரை மேற்கோள்.) “‘மனைக்குப்பாழ் வாணுத லின்மை தான்சென்ற திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா வுடம்பு.’ இஃது அகவல் வெண்பாவென்று செய்யுளியலுடையார் காட்டிய பாட்டு.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரைமேற்கோள்.) “‘மஞ்சு சூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவார்க் கருளு.’ இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா. ‘இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரலகம் புல்லு.’ இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா. இவை செய்யுளியலுடையார் காட்டிய வெண்பா வெனக் கொள்க.” (யாப்பருங்கலக்காரிகை, 25, குணசாகரர் உரை) “செய்யுளியலுடையார் நாற்சீரடி, தன்னையே நாலெழுத்து முதலா ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி என்றும், ஏழெழுத்து முதலா ஒன்பதெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதலாப் பதினான்கெழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி என்றும், பதினைந்து முதலாப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி என்றும் வேண்டுவர்.” (யாப்பருங்கலக்காரிகை, சூத், 43, குணசாகரர் உரை.) இந்நூலைப் பற்றியும் இந்நூலாசிரியரைப் பற்றியும் வேறு ஒன்றும் தெரியவில்லை. 18. செய்யுள் வகைமை இப்பெயருடைய நூல் ஒன்று இருந்ததென்பது, நவநீதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் கூறுவதிலிருந்து தெரிகிறது. இந் நூலிலிருந்து சில செய்யுள்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இந்நூல் யாரால், எக்காலத்தில் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. செய்யுள் வகைமை என்னும் பெயரைச் செய்யுள் வகை என்றும் உரையாசிரியர் சில இடங்களில் குறிக்கிறார். இந்நூலி லிருந்து இவர் மேற்கோள் காட்டியுள்ள செய்யுள்கள் வருமாறு: “ஈரெண் கலையினும் இயன்ற வண்ணமும் ஆசிரிய விருத்தமு மாதி யானவிச் சுற்றத் தளவாய்த் தோன்றும் பாட்டுச் சொற்றரப் பெறினைம் பானிற் சுருங்காது சிற்றில் சிறுபறை சிறுதே ருருட்டல் மற்ற மூன்றும் மிகாது நிற்கும்.” 1 “ஏனைய வரையறை யைம்பது திருந்தி வருத லாகா தென்பது புலவர் எடுத்துரை யாகும்... ... ...” 2 (நவநீதம், 30ஆம் செய்யுளுரை மேற்கோள்) “அன்னவன் றன்னைச் சாற்றிடனு மறையவர் முன்ன ரிடைநிலைப் பாட்டினு மொழிவர் சொன்ன கடவுட் டொழுதகப் பாவில்.” 3 (நவநீதம், 32ஆம் செய்யுளுரை மேற்கோள்) “ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப தாகி வருவது மும்மணிக் கோவை.” 4 “வெள்ளை கலித்துறை யாசிரிய விருத்தம் புல்லு முப்பது மும்மணி மாலை.” 5 “வெண்பா வாசிரியம் விருத்தம் கலித்துறை யொண்பா நான்குநான்மணி மாலை.” 6 (நவநீதம், 35ஆம் செய்யுளுரை மேற்கோள்) “மன்ன ரேவல் பெற்ற மாந்தர்க்குத் தொண்ணூ றெழுபது சொல்லில் வரையார்.” 7 “ஆங்கவை, யினமுறை யொன்றுமூன் றைந்தேழு முப்ப தோங்கிய வெண்பாச் சின்னப் பூவே.” 8 (நவநீதம், 39ஆம் செய்யுளுரை மேற்கோள்) “தானை பெற்ற தலைமை யோரையும் ஏனைமுன் னோரைச் செற்றன ராகத் தானினி துரைப்பினுந் தாழா தாகும்.” 9 (நவநீதம், 40ஆம் செய்யுளுரை மேற்கோள்) “கைக்கிளை தானே கருதும் விருத்தம் ஐந்து மூன்று மாகவும் பெறுமே.” 10 (நவநீதம், 41ஆம் செய்யுளுரை மேற்கோள்) “இசையினுட் பாக்க ளியலா வாயின் இசைத லின்றென வுரைக்கவும் படுமே.” 11 (நவநீதம், 66ஆம் செய்யுளுரை மேற்கோள்) “சாதி நோக்கியுந் தன்மை நோக்கியும் வாத மழித்துரை யுரைப்போன் வாது வென்ற நிலையினுஞ் சென்றிடி லரைசின் சிறப்புச் சிதைவே.” 12 (நவநீதம், 91ஆம் செய்யுளுரை மேற்கோள்) 19. தக்காணியம் இந்நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில், உரையாசிரியர், “இடைச் சொல்லும் உரிச் சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம். அவிநயம், நல்லாறன் மொழி வரி முதலியவற்றுட் காண்க” என்று எழுதுகிறார். இதனால், தக்காணியம் என்னும் பெயருள்ள இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 20. தத்தாதிரேயப் பாட்டியல் இப்பெயருள்ள நூல் ஒன்றிருந்ததென்பதைச் “சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்” என்னும் நூலில் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் எழுதியிருப்பதிலிருந்து அறிகிறோம். இந்நூலைப் பற்றி அவர்கள் எழுதுவதாவது: “தாத்தாதிரேயப் பாட்டியலென்பதை என்னுடைய தமிழாசிரியர் களுளொருவராகிய செங்கணம் ஸ்ரீ விருத்தாசல செட்டியாரவர்களிடம் பார்த்துப் பாடமும் கேட்டிருந்தேன். அது விருத்தங்களா லமைந்துள் ளது: புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை.” இந்நூலை இயற்றிய ஆசிரியர் யார், எப்போது இயற்றப்பட்டது என்னும் விவரங்கள் தெரியவில்லை. 21. நக்கீரர் அடிநூல் இப்பெயரையுடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங் கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில், “ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எவற்றாற் பெறுது மெனின், ‘ஐஞ்சீர் அடுக்கலும் மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல.’ என்று நக்கீரனார் அடிநூலுள் எடுத்தோதப்பட்டமையாற் பெறுதும்” என்று உரையாசிரியர் எழுதுகிறார். மேலும், யாப்பருங்கலம், ஒழிபியலில், விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார்: “தொல்காப்பியனார், நக்கீரனார் முதலாகவுள்ளார் ஒரு சாராசிரியர் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீரடியும் அருகிவரப் பெறுமென்று ... ... ... ... காட்டுவாராகலினென்பது: ‘ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல’7 என நக்கீரனார் அடிநூலுள், ‘வெண்பா யாப்பிற் குரியவல்ல’ வென்றமையால், ஆசிரியத்துக்கும் கலிக்கும் ஐஞ்சீரடி புகுதலும் மண்டலமாக்கலும் உரியவென்று விரித்துரைத்தார் எனக் கொள்க.” இவ்வாறு உரையாசிரியர் கூறுவதனால், நக்கீரனார் அடிநூல் என்னும் ஒரு செய்யுளிலக்கண நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இந்த அடிநூல் செய்த நக்கீரர் சங்ககாலத்து நக்கீரரா அல்லது பிற்காலத்திலிருந்த வேறு ஒருவரா என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது. இது பிற்காலத்து நூல்போலத் தோன்றுகிறது. 22. நக்கீரர் நாலடி நானூறு இப்பெயருடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. மேலே கூறப்பட்ட நக்கீரர் அடிநூலின் வேறானது இது. நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூல், நக்கீரர் அடிநூலுக்குப் புறனடை நூலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யாப்பருங்கலம், செய்யுளியல் 4ஆம் சூத்திர விருத்தியுரையில், வெண்பா இலக்கணத்தைக் கூறுகிற இடத்தில், சில வெண்பாக்களை மேற்கோள் காட்டிய விருத்தியுரைகாரர். “இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” என்று எழுதுகிறார். இதனால், நக்கீரர் நாலடி என்னும் நூல் வெண்பாவினால் ஆன நானூறு பாக்களையுடைய நூல் என்பதும், அப்பாக்கள் வண்ணத்தினால் தூங்கிசைச் செப்பலோசையோடு அமைந்திருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 23. நத்தத்தனார் இயற்றி நத்தத்தம் நத்தத்தனார் என்னும் பெயருள்ள புலவர் ஒருவர் தம் பெயரால் நத்தத்தம் என்னும் யாப்பிலக்கண நூல் ஒன்றைச் செய்தார் என்பதும், யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியர் குணசாகரரும், யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் தத்தம் உரைகளில் கூறுவதிலிருந்து தெரிகிறது. ‘ந’ என்னும் சிறப்பெழுத்தோடு இவர் பெயர் வழங்கப்படுவதனால், இவர் புலவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பதும் தெரிகிறது. இவர் பெயர் சில சமயங்களில் நற்றத்தனார் என்றும் கூறப்படுகிறது. இவர் இயற்றிய நந்தத்தம் என்னும் நூலுக்கு அடிநூல் என்னும் பெயரும் வழங்கியதுபோலும். என்னை? “‘ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல’8 என்று நத்தத்தனார் அடிநூலுள் எடுத்தோதினார்.” என்று உரையாசிரியர் குணசாகரர் (யா., காரிகை, 39 உரை) கூறுவது காண்க. மேலும், குணசாகரர், நத்தத்தனார் நூலைப் பற்றி (25ஆம் காரிகையுரை) இவ்வாறு கூறுகிறார்: “மாவாழ் சுரம், புலிவாழ் சுரம் என்னும் வஞ்சியுரிச்சீரி ரண்டும் உளவாக வைத்து, ஒருபயனோக்கி ஊஉமணி கெழூ உமணி என்றளபெடுத்து நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒருசாராசிரியர்.” நத்தத்த நூலிலிருந்து குணசாகரர் கீழ்க்காணும் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்: “அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும். 1 வெண்பா விரவினுங் கடிவரை யின்றே. 2 ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல.” 3 யாப்பருங்கல வுரையாசிரியர் பின்வரும் நத்தத்தச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “யாப்பெனப் படுவ தியாதென வினவிற் றூக்குந் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணங்கி யோரே. 1 பாவென மொழியினுந் தூக்கினது பெயரே. தனிநெடி றனிக்குறி லொற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேர யென்ப. 3 குறிலிணை குறிநெடி லொற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை யென்ப. 4 நேரீற் ரியற்சீர் கலிவயி னிலவ வஞ்சி மருங்கினு மிறுதியி னிலவே. 5 நாற்சீர் கொண்டது நேரடி யதுவே தூக்கொடுந் தொடையொடுஞ் சிவணு மென்ப. 6 ஆசிரி யப்பா வெண்பா கலியென மூவகைப் பாவு நேரடிக் குரிய. 7 வஞ்சி விரவ லாசிரிய முரித்தே வெண்பா விரவினுங் கலிவரை வின்றே. 8 ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும் பெருமை யாயிரம் ஈரடி முதலா வொன்று தலைசிறந் தேழடி காறும் வெண்பாட் டுரிய வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே கைக்கிளை அங்கதம் கலியியற் பாட்டே தத்தங் குறிப்பின வளவென மொழிப. 9 முதலெழுத் தொன்றின் மோனை யாகு மஃதொழித் தொன்றி னெதுகை யாகு அவ்விரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. 10 பொருளினு மொழியினு முரணுதன் முரணே. 11 இறுசீ ரொன்றி னியைபெனப் படுமே. 12 அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும். 13 ஒன்றா தாவது செந்தொடைக் கியல்பே. 14 சீர்முழு தொன்றி னிரட்டை யாகும். 15 முதற்சீர்த் தோற்ற மல்ல தேனை விகற்பங் கொள்ளா ரடியிறந்து வரினே. 16 ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும். 17 உரையு நூலு மடியின்றி நடப்பினும் வரைவில வென்ப வயங்கி யோரே. 18 வாய்மொழி பிசியே முதுசொல் லென்றாங் காமுரை மூன்று மன்ன வென்ப. 19 தானே யடிமுதற் பொருள்பெற வருவது கூனென மொழிப குறியுணர்ந் தோரே. 20 வஞ்சி யாயி னிறுதியும் வரையார். 21 கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா. 22 குன்றியுந் தோன்றியும் பிறிதுபிறி தாகியும் ஒன்றிய மருங்கினு மொருபுடை மகார மசையுஞ் சீரு மடியு மெல்லாம் வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே. 23 சீரா கிடனு முரியசை யுடைய நேரீற் றியற்சீ ரவ்வயி னான.” 24 24. நல்லாறன் மொழிவரி இப்பெயருள்ள செய்யுள் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல ஒழிபியலில், “இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காண்க.” என்று உரையாசிரியர் எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். மேலும், இந் நூலிலிருந்து நான்கு சூத்திரங்களை இவ்வுரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். நல்லாறன் என்னும் பெயர் நல்லாதன் என்றும் பாடபேதம் காணப்படுகிறது. ஆகவே, இந்நூலாசிரி யர் பெயர் நல்லாறனா அல்லது நல்லாதனா என்பது உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், நல்லாறன் என்றும் பெயரே பலமுறை கூறப் படுகிறபடியால், நல்லாறன் என்பதே சரியான பெயர் என்று கொள்ளலாம். நல்லாறன் மொழிவரி என்னும் இலக்கண நூலிலிருந்து யாப்பருங்கல விருத்தியுரைகாரர் காட்டும் மேற்கோள் சூத்திரங்கள் இவை: “‘அஆ ஐஒள வென்றிவை யெனாஅ இஈ எஏ யென்றிவை யெனாஅ உஊ ஒஓ வென்றிவை யெனாஅத் தசமவ ஞநவெனு மென்றிவை யெனாஅ முந்நா லுயிரு மூவிரு மெய்யுந் தம்முண் மயங்கினுந் தவறின் றென்ப.’ என்றிவை இனம் ஆமாறு எடுத்தோதினார் நல்லாறனார் எனக் கொள்க.” (யாப்பருங்கலம். தொடையோத்து, உரைமேற்கோள்.) “‘புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே யறநிலை வஞ்சியுங் கலியு மாகா வெண்பா வாசிரிய வியலான் வருமே வஞ்சி கலியவற் றியலா வவற்றுள் இடையுறு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும் கடையெழு சீரிரண் டகவியும் வருமே’ என்றார் நல்லாதனார்.” (நல்லாறனார் என்பதும் பாடம்). (யாப்பருங்கலம், செய்யுளியல், 2ஆம் சூத்திரம் உரை மேற்கோள்) “புறநிலை வாயுறை செவியறி வவையடக் கெனவிவை வஞ்சி கலியவற் றியலா என்றார் நல்லாறனார்.” (யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திரம் உரை மேற்கோள்) “உரியசைச் சீர்ப்பி னுகர நேராய்த் திரியுந் தளையில சேர்த லானே என்றார் நல்லாறனார்.” (யாப்பருங்கலம், ஒழிபியல், உரை மேற்கோள்) 25. பரிப்பெருமாள் இலக்கண நூல் திருக்குறளுக்கு உரைய எழுதிய பதின்மருள், பரிப்பெருமாள் என்பவரும் ஒருவர். இவர் ஓர் இலக்கண நூலையும் இயற்றினார் என்று அறிகிறோம். என்னை? தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரை த்துத் தேமொழியார் ஒள்ளிய காமநூ லோர்ந்துரைத்து-வள்ளுவனார் பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து என்று அவர் எழுதிய திருக்குறள் உரைப்பாயிரச் செய்யுள் கூறுவது காண்க. இவர் எழுதிய ‘காமநூலின்’ பெயரும் மற்றச் செய்திகளும் தெரியவில்லை. 26. பரிமாணனார் யாப்பிலக்கணம் பரிமாணனார் என்பவர் இயற்றிய ஒரு யாப்பிலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் மயிலை நாதரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். பரிமாணனார் நூலிலிருந்து சில சூத்திரங்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள். இந்தப் பரிமாணனார் என்பவர் யார், எந்தக் காலத்தில் இருந்தவர். இவர் செய்த யாப்பிலக்கண நூலின் பெயர் என்ன என்பவை ஒன்றும் தெரியவில்லை. இந்நூல் இப்போது கிடைக்க வில்லை. இந்நூலிலிருந்து, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க் காணும் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்: “வஞ்சீ யாசிரிய மென்றிரு பாட்டு மெஞ்சா மூவடி யிழிபுயர் பாயிரம். 1 அவற்றுள், ஆசிரிய மென்ப தகலின் வழாது கூறிய சீரொடுந் தளையொடுந் தழீஇ முச்சீ ரடியா யீற்றயல் நின்று மச்சீ ரடியிடை யொரோவழித் தோன்றியு மவ்வியல் பின்றி மண்டில மாகியும் மூவடி முதலா முறைசிறந் தேறித் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண் டெய்து மென்ப வியல்புணர்ந்த தோரே. 2 வஞ்சி தானே யடிவரம் பின்றி யெஞ்சா விசைநிலை தூங்க லெய்தியும் ஆசிரிய மாகியு முடியு மென்ப. 3 செப்ப லோசையிற் சீர்தளை சிதையாது மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற் குறணேர் நெடிலென மூன்றா யவற்றின் இறுதி வடியே முச்சீர்த் தாகி யதனீ றசைச்சீ ரெய்தி யடிவகை யோரிரண்டு முதலா முறைசிறந் தீரா றேறு மென்ப வியல்புணர்ந் தோரே.” 4 (யாப்பருங்கலம், அடியோத்து - 10. உரைமேற்கோள்.) “‘அவைதாம், முதலோ டயல்கொள்வ திணையய லின்றி மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட் டிறுதியொடு கொள்வ தொரூஉ விறுதிச் சீரொழித் தேனைய தொன்றிற் கூழை முதலீ றடைந்தவற் றின்மை யிருவகைக் கதுவாய் முற்று நிகழ்வது முற்றே முதலோடெட் டாகு மென்மனார் புலவர்’ 5 என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர். என்னை? ‘செந்தொடை யியைபிவை யல்லா நான்கு முதற்சீ ரடியால் விகற்பங் கொள்ப’ 6 என்றாராகலின்.” “அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை.” (யாப்பருங்கலம், தொடையோத்து, 17, உரை மேற்கோள்) மயிலைநாதர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (பொதுவியல், 51ஆம் சூத்திரம்) பரிமாணனார் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். அது: “‘விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்’ என்றார் பரிமாணனார்” என்பது. 27. பல்காப்பியம் பல்காப்பியனார் இயற்றிய பல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையினால் தெரிகிறது. பல் காப்பியம், தொல்காப்பியத்தின் வழி நூல். இது செய்யுளிலக்கணத்தை மட்டும் கூறுவது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. தொல். பொருள்., மரபு., “வழியெனப் படுவது அதன் வழித் தாகும்’ என்னும் சூத்திர உரையில் பேராசிரியர் இந்நூலைப் பற்றி எழுதுவது வருமாறு: “மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ வெனின், அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றினவென்பது. என்னை? ‘கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்ந்த றொல்காப் பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.’ என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காயனார் முதலாயி னாரை அவ்வாறு கூறாராகலானு மென்பது. என்றார்க்குத் தொல்காப்பி யங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல் செய்த தெற்றுக் கெனின்: அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளு மெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துட் பரந்து கிடந்த தனை இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) சுருங்கச் செய்தலின் அருமை நோக்கிப் பகுத்துக் கூறினாராகலானும். அவர் தந்திரத்துக் கேற்ப முதனூலோடு பொருந்த நூல் செய்தராகாலானும் அமையுமென்பது.” பல்காப்பியர் சூத்திரங்களுள் ஒன்றேனும் கிடைக்கவில்லை. 28. பல்காப்பியப் புறனடை பல்காப்பியனார் இயற்றிய பல்காப்பியம் என்னும் நூலுக்குப் பல் காப்பியப் புறனடை என்னும் சார்புநூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையினால் தெரிகிறது. பல்காப்பியப் புறனடையைப் பல்காப்பியனாரே இயற்றியிருக்க வேண்டும் என்று கருதலாம். தொல்., பொருள்., மரபு., “வினையி னீங்கி விளங்கியவறிவன், முனைவன் கண்டது முதனூலாகும்” என்னும் சூத்திரத்திற்கு உரை யெழுதிய பேராசிரியர், பல்காப்பியப் புறனடையிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு: “‘கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த் றொல்காப் பியன்றன் ஆணையின் றமிழறிந் தோர்க்குக் கடனே.’ இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.” இதனால், அவிநயம் என்னும் இலக்கண நூலுக்கு நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை நூல் இருந்ததுபோலவும் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலுக்கு யாப்பருங்கலக் காரிகை என்னும் புறனடை நூல் ஒன்று இருப்பது போலவும், பல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு பல்காப்பியப் புறனடை என்னும் ஒரு புறனடை நூல் இருந்தது என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை. 29. பல்காயம் பல்காயனார் இயற்றிய பல்காயம் என்னும் நூல், யாப்பிலக்கணத்தை உணர்த்துவது. தொல்காப்பியர் விரித்துரைத்தவற்றைப் பல்காயனார் பகுத்துரைத்தார் என்று கீழ்காணும் வெண்பா கூறுகிறது: “தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பலகாய னார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலுட் டொகுத்து.” இந்த வெண்பா, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (எழுத்தோத்து, 1ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியது. மேலும், யாப்பருங்கல விருத்தி யுரைகாரர், (சீரோத்து, 1ஆம் சூத்திர உரையில்) இவ்வாறு கூறுகிறார்: “நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசையும் நாலசைப் பொதுச்சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒருசாராசிரியர்.” யாப்பருங்கலக்காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில் பல்காயனார் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவை வருமாறு: “முதbத் தொன்றின் மோனை யெதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றி னாகு மென்ப. 1 இயற்சீர் நேரிற றன்றளை யுடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை வஞ்சி யுள்ளும் வாரா வாயினும் ஒரோவிடத் தாகு மென்மனார் புலவர். 2 வஞ்சி விரவ லாசிரிய முரித்தே வெண்பா விரவினுங் கடிவரை யிலவே. 3 அடிமுதற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூனென மொழிப. 4 வஞ்சி யிறுதியு மாகு மதுவே அசைகூ னாகு மென்மனார் புலவர்.” 5 யாப்பருங்கல விருத்தியுரைகாரர், தமது உரையில் கீழ்க்காணும் சூத்திரங்களைப் பல்காயனார் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இமிழ்கடல் வரைப்பி னெல்லையில் வழாஅத் தமிழியல் வரைப்பிற் றாமினிது விளங்கி யாப்பிய றானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை யடிதொடை தூக்கொ டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவு மொழுக்கல் வேண்டு முணர்ந்திசி னோரே. 1 தூக்கும் பாட்டும் பாவு மொன்றென நோக்கிற் றென்ப நுணங்கி யோரே. 2 உயிரீ ராறே மெய்ம்மூ வாறே அம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே. 3 குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை யளபெடை மூன்றென் றறையல் வேண்டும். 4 எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம் வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே. 5 யகரம் முதல்வரின் உகரம் ஒழிய இகரமுங் குறுகும் என்மனார் புலவர். 6 தற்சுட் டேவல் குறிப்பிவை யல்வழி முற்றத் தனிக்குறின் முதலசை யாகா. 7 நெடில்குறி றனியாய் நின்றுமொற் றடுத்துங் குறிலிணை குறினெடி றனித்துமொற் றடுத்து நடைபெறு மசைநேர் நிரைநா லிரண்டே. 8 அசையே யிரண்டு மூன்றுந் தம்முள் இசையே வருவன சீரெனப் படுமே. 9 ஈரிரண் டாகியு மொரோவிடத் தியலும். 10 நாலசை யானு நடைபெறு மோரசைச் சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே. 11 நாலசைச் சீரு மொரோவிடத் தியலும் பாவொடு பாவினம் பயிற லின்றி. 12 ஓசையி னொன்றி வரினும் வெண்சீரு மாசிரிய வடியுட் குறுகு மென்ப. 13 அகவலுட் டன்சீர் வெண்சீ ரொருங்கு புகலிற் கலியுடன் பொருந்து மென்ப. 14 வஞ்சியு ளாயி னெஞ்சுத லிலவே. 15 இயற்சீ ரிறுதிநே ரிற்ற காலை வஞ்சி யுள்ளும் வந்த நாகா; வாயினு மொரோவிடத் தாகு மென்ப. 16 ஆசிரி யத்தொடு வெள்ளையுங் கலியும் நேரடி தன்னா னிலைபெற நிற்கும். 17 வஞ்சி விரவல் ஆசிரிய உரித்தே வெண்பா விரவினுங் கடிவரை வின்றே. 18 ஆயிர மிறுதி மூவடி யிழிபா வாசிரியப் பாட்டி னடித்தொகை யறிப வீரடி முதலா வேழடி காறும் திரிபில வெள்ளைக் கடித்தொகை தானே. 19 முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை யதன்வழி யியையும் பெறுமே. 20 முதலெழுத் தொன்றுவ மோனை யெதுகை முதலெழுத்த தளவோ டொத்தது முதலா வதுவொழித் தொன்றினாகு மென்ப. 21 விவ்விரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. 22 சொல்லினும் பொருளினு மாறுகோண் முரணே. 23 இயையே யிறுசீ ரொன்று மென்ப. 24 அளபெடைத் தொடைக்கே யளபெடை யாகும். 25 மோனை யெதுகை முரணே யளபெடை யேனைச் செந்தொடை யியைபே பொழிப்பே யொரூஉவே யிரட்டை யொன்பதும் பிறவும் வருவன விரிப்பின் வரம்பில வென்ப. 26 அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லா மிசையா தாவது செந்தொடை தானே. 27 முழுவது மொன்றி னிரட்டை யாகும். 28 விகற்பங் கொள்ளா தோசையி னமைதியும் முதற்க ணடிவயின் முடிவ தாகும். 29 உரையொடு நூலிவை யடியில நடப்பினும் வரைவில வென்ப வாய்மொழிப் புலவர். 30 மொழிபிசி முதுசொன் மூன்று மன்ன. 31 செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை யடியி னீட்டத் தழகுபட் டியலும். 32 ஒரோவடி யானு மொரோவிடத் தியலும். 33 அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் லங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆக்கின வென்ப வறிந்திசி னோரே. 34 அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூனென மொழிப வஞ்சிக் கிறுதியு மாகு மதுவே யசைகூ னாகு மென்மனார் புலவர். 35 “பல்காயனார் நேரீற் றியற்சீர் வஞ்சியடியி னிறுதியும் அருகி வரப்பெறு மென்றார். அவர் கூறுமாறு: இயற்சீர் நேரிற றன்றளை யுடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை வஞ்சி யுள்ளும் வந்த தாகா வாயினு மொரோவிடத் தாகு மென்ப. 36 என்பது பல்காயம்.” (யாப்பருங்கலம் ஒழிபியல், விருத்தியுரை) நேரசசை யிறுதியாய் நிகழு மீரசைச் சீர்க்கடை வஞ்சியுட் செலவுங் கூறினார் நேர்நிரை நேர்பொடு நிரைபு நாலசைச் சீருநன் கெடுத்துடன் செப்பி னானரோ. பன்னிரு பாட்டியலில், பல்காயனார் இயற்றிய சூத்திரங்கள் நான்கு காணப்படுகின்றன. அவையாவன: இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச் சீரிய பாட்டே தாரகை மாலை. 1 எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை செப்பிய நெறியது செந்தமிழ் மாலை. 2 மூவிரண் டேனு மிருநான் கேனுஞ் சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று ளறுசீர்க் குறியது நெடியதெண் சீராம். 3 அறுசீர் ரெண்சீ ரடிநான் கொத்தங் கிறுவது தாண்டக மிருமுச் சீரடி குழியது திருநாற் சீரே. 4 30. பனம்பாரம் பனம்பாரம் என்னும் பெயருள்ள இலக்கண நூலை ஆசிரியர் பனம்பாரனார் இயற்றினார். யாப்பருங்கலம், அடியோத்து, 30-ஆம் சூத்திர உரையில், விருத்தியுரைகாரர் கீழ்க்காணும் பனம்பாரச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “அகத்திணை யல்வழி யாங்கதன் மருங்கின் வகுத்தன சொற்சீர் வஞ்சியொடு மயங்கும்.” நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், நன்னூல் சிறப்புப் பாயிரச் சூத்திரங்களில் இரண்டை, பனம்பாரச் சூத்திரங்கள் என்று குறிப்பிடுகிறார். “‘தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்றற் புகழ்த றகுதி யன்றே,’ 1 ‘மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. 2 இவ் விரண்டு சூத்திரமும் பனம்பாரம்” என்று எழுதுகிறார் மயிலைநாதர். எனவே. நன்னூலில் உள்ள இச் சூத்திரங்கள் பனம்பார இலக்கணத்துச் சூத்திரங்கள் என்று தெரிகின்றன. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 31. பன்னிருபடலம். புறப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிற பன்னிரு படலம் என்னும் பெயருள்ள நூலொன்று இருந்ததென்பது பேராசிரியர், இளம்பூரண அடிகள், நச்சினார்க்கினியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ஆகியோர் உரைகளினால் தெரிகிறது. “அளவினாற் பெயர்பெற்றது பன்னிருபடலம்” என்று கூறுகின்றார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். “ஒத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம்” என்று கூறுகிறார் இளம்பூராண அடிகள். (தொல். பொருள். செய்யுள் - 165-ஆம் சூத்திர உரை). இடைக்காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது பன்னிரு படலம் என்பது நன்கு தெரிகிறது. இந்நூலைப் பின்பற்றி இதற்கு வழி நூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை ஐயன் ஆரிதன் என்பவர் இயற்றினார். “பன்னிருபடலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்” என்று பேராசிரியர் (தொல். பொருள். மரபு), தமது உரையில் எழுதுகிறார். பன்னிருபடலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண் பாமாலை இப்போது முழுவதும் இருக்கிறது. ஆனால் முதனூலாகிய பன்னிருபடலம் மறைந்துவிட்டது. அகத்திய முனிவரின் மாணவர் பன்னிருவரும் சேர்ந்து புறப்பொருள் இலக்கணம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலம் இயற்றினார் என்றும், அவர்கள் இயற்றிய பன்னிரு படலங்களின் தொகுப்பே பன்னிரு படலம் என்னும் பெயர் பெற்ற நூலாயிற்று என்றும் கூறுவர். என்னை? “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம்” என்று புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் கூறுவது காண்க. பன்னிருப்படலத்துச் சூத்திரம் ஒன்றை இளம்பூராண அடிகள் (தொல். புறத்திணை, ‘அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்’ என்னும் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். அச்சூத்திரம் இது: “பனியும் வெயிலும் கூதிரும் யாவும் துனியின் கொள்கையொடு தொன்மை யெய்திய தணிவுற் றறிந்த கணிவன் முல்லை” நச்சினார்க்கினியர், சிந்தாமணி (கோவிந்தையார் - 20) உரையில். “பல்லாக் கொண்டார் ஒல்லா ரென்னும் பூசல் கேட்டு கையது மாற்றி” என்னும் பன்னிருபடலச் சூத்திர அடிகளை மேற்கோள் காட்டுகிறார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர், கீழ்க்காணும் பன்னிருபடலச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “அகத்திணை யகவலுள் வஞ்சி வாரா. என்னை? ‘அகத்திணை மருங்கி னளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி யடியின் யாத்திலர் வஞ்சி யகத்திணை மருங்கி னணையு மாறே’ என்பது பன்னிருபடலத்துப் பெருந்திணைச் சூத்திரமாகலின்.” (யாப்பருங்கலம், உறுப்பியல் அடியோத்து 9) “ஆன்ற சிறப்பி னறம்பொரு ளின்பமென மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள் அறமு மின்பமு மகலா தாகிப் புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே என்னும் பன்னிரு படலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்: அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் ‘கட்டில் நீத்த பால்’ முதலாகக் ‘காமம் நீத்த பால்’ ஈறாக அறங் கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.” (தொல். புறத்தினையியல், உரை) “ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டு மாயுங்கால் காந்தன் ... ... ... அமர்த்த லீரைந்தும் அகத்தின் புறமே” “கைக்கிள் யென்னா பெருந்திணை யென்றால் கத்திணை இரண்டும் அகத்திணை புறனே” (யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்) இவை பன்னிரு படலம். “‘பொருதல் தும்பை புணர்வ தென்ப’ (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை மேற்கோள்) இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்) இளம்பூரண அடிகள் கீழ்க்காணும் பன்னிருபடலச் சூத்திரத்தைத் தமது உரையில் (தொல். பொருளதிகாரம்) மேற்கோள் காட்டுகிறார். “தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி.” பன்னிருபடலத்திலே, தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப் படுகிற சூத்திரங்கள் உண்மையில் தொல்காப்பியர் இயற்றியன அல்ல என்று இளம்பூராண அடிகள் மறுக்கிறார், ஏனென்றால், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், தொல்காப்பியர் கூறியுள்ள கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகள், பன்னிருபடலத்தில் தொல்காப்பியர் இயற்றிய தாகக் கூறப்படுகிற சூத்திரங்களில் காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் எழுதுவது வருமாறு: “பன்னிருபடலத்துள் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி என, இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில் காத்தல், போர் செய்தல் என்பன, அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழிலெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசனது ஆணையை நீக்கினராவர் ஆதலால் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றால் பொருந்தாது. என்னை? ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்’ (தொல். பொருள். மரபு) எனவும், ‘சிதைவெனப் படுமவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில் கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கக் கூறல் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினு மனங்கோ ளின்மை அன்ன பிறவு மவற்றுவிரி வாகும்’ (தொல். பொருள். மரபு) எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக் கூறல். குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில கூறல். மயங்க கூறல், தன்னானொரு பொருள் கருதிக் கூறல்” என்னும் குற்றம் பயக்கக் கூறினாரென வருமாகலான்” (தொல். பொருள் புறத்திணை, வேந்து விடு முனைஞர்’ என்னும் சூத்திர உரை) தொல்காப்பியத்துக்கு மாறுபட்ட கருத்துகளையுடைய சூத்திரங்கள் பன்னிருபடலத்துள் கூறப்பட்டுள்ளதை இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டி, அப் பன்னிருபடலச் சூத்திரங்கள் தொல் காப்பியரால் இயற்றப் பட்டன. அல்ல என்பதை மேலும் விளக்குகிறார்: “பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு (தொல்காப்பியர்க்கு) மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாத லான் உய்த்துணர்ந்து கண்டு கொள்க.” (தொல். புறத்திணையியல், ‘வெறியறி சிறப்பின்’ என்னும் சூத்திர உரை). இதனால், சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, சிலர் புது வகையால் சில சூத்திரங்களைச் செய்து அவற்றைத் தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பெயரால் பன்னிருபடலம் என்னு பெயரிட்டு அமைத்துக்கொண்ட நூல் பன்னிரு படலம் என்பது தெரிகிறது. ஆனால், இந்நூல் இடைக் காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது என்பதும் தெரிகிறது. இப்போது இந்நூல் மறைந்து விட்டது. இதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை இப்போது வழங்கிவருகிறது. 32. பாடலம் பாடலனார் என்பவர் தமது பெயரால் பாடலம் என்னும் ஒரு இலக்கண நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியுரைகாரர் இந்நூற் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது:-“முப்பத்திரண்டு தந்திரவுத்தியாவன: நுதலிப் புகுத லோத்துமுறை வைத்தல்9 தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல் முடிவிடங் கூறல் முடித்துக் காட்டல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த லிரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்த லெடுத்த மொழியி னெய்த வைத்த லின்ன தல்ல திதுவென மொழிதல் தன்னின முடித்தல் எஞ்சிய சொல்லின் எய்தக் கூறன் மாட்டெறிந் தொழிதல் பிறநூன் முடிந்தது தானுடன் படுத றன்குறி வழக்க மிகவெடுத் துரைத்த லிறந்தது விலக்கல் எதிரது போற்றன் முன்மேற் கோடல் பின்னது நிறுத்த லெடுத்துக் காட்டல் முடிந்தது முடித்தல் சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்த றொடர்ச்சொற் புணர்த்தல் யாப்புறுத் தமைத்த லுரைத்து மென்றல் விகற்பத்து முடித்த றொகுத்துடன் முடித்தல் ஒருதலை துணித லுய்த்துணர வைத்தல் என விவை பாடலனாருரை.” (இது நன்னூல் 14-6-8 தொல். பொருள் 478-484 காண்க.) இந்நூலைப்பற்றியும் இதை இயற்றிய பாடலனாரைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 33. பாட்டியல் மரபு இந்த யாப்பிலக்கண நூலை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் யார், இது எந்தக் காலத்தில் இயற்றப்பட்டது என்பன தெரியவில்லை. இதற்குப் பாட்டியல் என்றும் பெயர் உண்டு. யாப்பருங்கல உரையாசிரியர் கீழ்க்காணும் சூத்திரங்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்:- “ஆரிடமென்பது உலகியற் செய்யுள்கட்கோதிய உறுப்புகளின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக் கொள்க. அவ் வாரிடச் செய்யுள் பாடுதற்குரியார் ஆக்குதற்கும் கெடுத்தற்கும் ஆற்றலுடையராகி இம்மை மறுமை முக்காலப் பண்பு முணர்ந்த விருடிகளெனக் கொள்க. என்னை? ‘உலகியற் செய்யுட் கோதிய வளவியற் குறையவும் விதப்பவுங் குறையா வாற்றல் இருடிகள் மொழிதலின் ஆரிட மென்ப’ எனவும், ‘ஆரிடச் செய்யுள் பாடுதற்குரியோர் கற்றோ ரறியா வறிவுமிக் குடையோர் மூவகைக் காலப் பண்புமுறை யுணரும் ஆற்றல் சான்ற வருந்தவத் தோரே’ எனவும் சொன்னார் பாட்டியன் மரபுடையாராகலின்.” “மனத்தது பாடு மாண்பி னோருஞ் சினத்திற் கெடப்பாடுஞ் செவ்வி யோரு முனிக்கணச் செய்யுண் மொழியவும் பெறுப என்பது பாட்டியன் மரபு ஆகலின்” (யாப்பருங்கலம், செய்யுளியல் 40-ஆம் சூத்திர உரை மேற்கோள்) “நான்கடி யொத்து வருவனவும், நான்கடியு மொவ்வாது வருவன வும், இரண்டடி யொத்து நான்கடியால் வருவனவும், பிற வற்றால் வருவனவும், மாராச்சையும் மாராச்சாக்கிருதியும் முதலாகிய சாதியும் ஆரிடமும் பிரத்தார முதலாய ஆறு பிரத்தியமும் ... ... ... பாட்டியன்மரபு, பூதபுராண முதலாகிய தமிழ்நூலுள்ளும் பகுதி யுடையார் வாய்க் கேட்டுக் கொள்க. அவை யீரண்டுரைக்கிற் பெருகும்.” (யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை) 34.புணர்ப்பாவை. 35.போக்கியம். 36.கிரணியம். 37. வதுவிச்சை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூல்களைக் குறிப்பிடு கிறார். யாப்பருங்கலம், ஒழிபியலில் சித்திரக் கவிகளைப் பற்றிக் கூறுகிற இடத்தில் இந்நூல்களைக் கூறுகிறார். உரையாசிரியர் எழுதுவது இது : “இதனுட் சக்கரம் என்றதனானே பூமி சக்கரமும், ஆகாயச் சக்கர மும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கர மும், சனிபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும் முதலாக வுடையன புணர்ப்பாவையுள்ளும் போக்கியத்துள்ளும் கிரணியத்துள்ளும் வது விச்சையுள்ளும் கண்டுகொள்க.” இதனால் இப்பெயருள்ள நூல்கள் இருந்தன என்பதும், இவை சித்திரக்கவியைச் சேர்ந்தவை என்பதும் தெரிகின்றன. இவற்றை இயற்றியவர் யாவர் என்பதும், இவை எக்காலத்தில் இயற்றப்பட்டன என்பதும் தெரியவில்லை. 38. பெரிய பம்மம் பெரிய பம்மம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. எழுத்தோத்து, 2-ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், பெரிய பம்மச்சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது இது: “உயிருறுப் புயிர்மெய் தனிநிலை யெனாஅக் குறினெடி லளபெடை மூவின மெனாஅ அஃகிய நாலுயிர் மஃகான் குறுக்கமோடு ஐந்துதலை யிட்ட ஐயீ ரெழுத்து அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத்தனரே. இது பெரிய பம்மம்.” இந்தப் பெரிய பம்மத்தைப் பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை. 39. பெரிய முப்பழம் இந்நூலின் பெயர் யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலை, மாற்றே சக்கரஞ் சுழிகுளம்” என்னும் சூத்திரத்தில் வருகிற பாடுதல் மரபு என்பதற்கு உரை கூறுகிற விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார்: “பாடுதன் மரபு : என்பது, குலனும் விச்சையும் ஒழுக்கமும் பருவமும் என்றிவற்றிற்குத் தக்கவகையாற் பாட்டுடைத் தலை மகனையும் அவன் சின்னங்களையுமே பாடுதலும், கிளவிப்பொரு ளல்லவற்றோடு பாட்டுடைத் தலைமகனைப் பெயரும் ஊரும் முதலியன உறுப்புகளைச் சார்த்திப் பாடுதலும், தீயனவற்றை அவன் பகைவரைச் சாத்திப் பாடுதலும் என இரண்டாம். அவை யெல்லாம் பெரிய முப்பழம் முதலாயினவற்றுட் கண்டுகொள்க.” இதனால், பெரிய முப்பழம் என்னும் பாட்டியல் நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. 40. பேராசிரியர் (மயேச்சுவரர்) இலக்கண நூல் மயேச்சுவரர் என்னும் பெயருள்ள ஆசிரியர் ஒருவர் இலக்கண நூல் (செய்யுளிலக்கண நூல்?) ஒன்று செய்திருந்தார் என்பது தெரிகிறது. மயேச்சுவரருக்குப் பேராசிரியர் என்னும் சிறப்புப்பெயரும் வழங்கி வந்தது போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மயேச்சுவரராகிய பேராசிரியரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து எழுதுகிறார். அவர் எழுதுவது வருமாறு:- பிறைநெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். நீர்மலி வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், வாம மேகலை மாதையோர் பாகனார் நாமமகிழ்ந்த நல்லாசிரியர், திரிபுர மெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், உயரும் புர நகரைச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுர மெரித்த விரிசடை நிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுரமெரித்த எரிசுடர்க் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர், பிறைமுடியோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், காமவேளைக் கறுத்த புத்தேள் நாமந்தாங்கிய நல்லாசிரியர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் திருப் பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர். இவ்வாறு பேராசிரியருக்குப் பல அடைமொழி கொடுத்து கூறுகிற யாப்பருங்கல விருத்தியுரைகாரர், பல இடங்களில் மயேச்சுவரர் என்னும் பெயரையும் குறிக்கிறார். இதனால் மயேச்சுவரர் என்னும் சிவபெருமான் திருப்பெயரைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவரே (மயேச்சுவரரே), பேராசிரியர் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர் என்பதும், இருவரும் ஒருவரே என்பதும் தெரிகின்றன. எனவே, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது விருத்தியுரையில், பேராசிரியர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும், மயேச்சுவரர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும் ஈண்டு ஒருங்கே தருகிறோம். இவை மயேச்சுவரர் பெயரால் காட்டப்பட்ட சூத்திரங்கள்:- சீர்தளை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமும் நேர்த லிலவே யுயிரள பெடையும். 1 நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடு வடிவாக விடுவா ருமுளர். 2 நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடுப் போல வொருவிர னேரே. 3 விரலிடை யிட்டன வசைச்சீர் நாலசை விரல்வரை யிடையினு மானமில்லை. 4 விரலிடை யிட்டன ரடருடு வாடரு வெடிவரி னிரல்பட வெழுதி யலகு பெறுமே. 5 ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையுந் தனிக்குறின் முதலசை யாகா; சுட்டினும் வினாவினு முயிர்வரு காலை ஒட்டி வரூஉம் ஒருசாரு முளவே. 6 இயற்சீ ருரிச்சீர் பொதுச்சீ ரென்னும் நிகழ்ச்சிய வென்ப நின்ற மூன்றும். 7 நேரு நிரையுஞ் சீராய் வருதலுஞ் சீருந் தளையுஞ் சிதைவுழிக் கொளலும் யாவரு மறிவர் நால்வகைப் பாவினும். 8 நேரீயற் றியற்சீர் கலிவயிற் சேரா; நிரையிற நிற்ற நாலசை யெல்லாம் வரைதல் வேண்டும் வஞ்சியில் வழியே. 9 நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர் வரைதல் வேண்டு மாசிரிய மருங்கின். 10 ஈரசை யியற்சீ ரொன்றிய வெல்லா மாசிரி யத்தளை யென்மனார் புலவர். 11 இயற்சீ ரொன்றா நிலையது வெண்டளை; யுரிச்சீ ரதனு ளொன்றுத லியல்பே. 12 நேரு நிரையுமா மியற்சீ ரொன்றின்; யாவரு மறிப வாசிரி யத்தளை. 13 வேறுபட வரினிது வெண்டளை;வெண்சீர் ஆறறி புலவர்க் கொன்றினு மதுவே. 14 வெண்சீர்ப் பின்னர் நிரைவருங் காலைக் கண்டனர் புலவர் கலித்தளை யாக. 15 வஞ்சி யுரிச்சீர் வந்தன வழிமுறை யெஞ்சிய வரினும் வஞ்சித் தளையே. 16 இருசீ ரடியும் முச்சீ ரடியும் வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே. 17 பொருளினுஞ் சொல்லினு முரணத் தொடுப்பின் முரணென மொழிப முந்தை யோரே. 18 பெற்றவடி யைந்தினும் பிறவினும் பாட்டாய் இற்ற வடியு மீற்றய லடியும் யொன்று மிரண்டு நின்ற வதன்சீர் கண்டன குறையின் வெண்டுறை யாகும். 19 ஈற்றயல் குறைந்த நேரசை யிணையா மேற்ற வடியி னிடைபல குறைந்தன. 20 எவ்வடி யானு முதனடு விறுதி அவ்வடி பொருள் கொளின் மண்டில யாப்பே. 21 ஒத்த வடியின நிலைமண் டிலமே. 22 என்னெனு மசைச்சொலும் பிறவு மொன்றித் துன்னவும் பெறூஉ நிலைமண் டிலமே என்னென் றிறுதல் வரைநிலை யின்றே அல்லா வொற்றினு மதனி னிறுதி நில்லா வல்ல நிற்பது வரையார். 23 ஒத்த வொருபொருண் மூவடி முடியினஃ தொத்தா ழிசையா முடன்மூன் றடுக்கின். 24 எண்சீ ரளபீற் றயலடி குறைநவும் ஐஞ்சீ ரடியினும் பிறவினு மிடையொன்ற வந்த தொடையா யடிநான் காகி யுறழக் குறைநவுந் துறையெனப் படுமே. 25 தளைகலி தட்டன தன்சீர் வெள்ளை களையுந வின்றிக் கடையடி குறையின விரவர லில்லா வெண்கலி யாகும். 26 கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித் தேறிய விரண்டு தேவ பாணியும் தரவே குறையினுந் தாழிசை யொழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப வுணர்ந்திசி னோரே. 27 ஐஞ்சீர் நாற்சீ ரடிநான் காயி னெஞ்சாக் கலியின் றுறையும் விருத்தமும். 28 இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி வருவது வஞ்சித் தாழிசை தனிநின் றொருபொருண் முடிந்தது துறையென மொழிப. 29 தன்சீர் நிலையிற் றளைதம தழீஇய வின்பா வென்ப வியல்புணர்ந் தோரே யேனையவை விரவி னிடையெனப் படுமே தானிடை யில்லது கடையெனப் படுமே. 30 “இரண்டடியால் வஞ்சி வரும் என்றெடுத்தோதினார். மயேச்சுவ ரர் முதலாகிய ஒருசாராசிரியர் எனக்கொள்க. என்னை? வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியென நுண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை இரண்டு மூன்று நான்கு மிரண்டுந் திரண்ட வடியின சிறுமைக் கெல்லை. 31 என்றாராகலின்” (யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திரம் விருத்தியுரை) நேரு நிரையுஞ் சீரா யிறுதலுஞ் சீருந் தளையுஞ் சிதைவுழிக் கொளலும் யாவரு முணர்வர் யாவகைப் பாவினும். 32 சீர்தளை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமு நேர்த லிலவே யுயிரள பெடையும். 33 இனி, பேராசிரியர் பெயரினால் மேற்கோள் காட்டப்பட்ட சூத்திரங்கள் வருமாறு: நெடிலுங் குறிலு மொற்றொடு வருதலுங் கடிவரை யிலவே நேரசைத் தோற்றம். 1 குறிலு நெடிலுங் குறின்மு னிற்பவு நெறியினொற் றடுத்து நிரையசை யாகும். 2 இருசீ ரடியும் முச்சீ ரடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே. 3 அல்லாப் பாவி னடிவகை தெரியின். 4 பேணுபொருண் முடிபே பெருமைக் கெல்லை காணுங் காலை கலியலங் கடையே. 5 கலியுறுப் பெல்லாங் கட்டளை யுடைமையின் நெறியின் வழி நிறுத்தல் வேண்டும் கொச்சகக்கலி வயிற் குறித்த பொருள் முடிவாந் தாழிசை பலவும் தழுவுதன் முடிபே. 6 அடுத்த வடியிரண் டியாவகைப் பாவினுந் தொடுத்து வழங்கலிற் றொடையெனப் படுமே. 7 அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே. 8 ஒருசீ ரடிமுழுதும் வருவ திரட்டை. 9 ஒத்தா ழிசை துறைவிருத்த மெனப்பெயர் வைத்தார் பா வினமென்ன வகுத்தே. 10 மூவடி யாகியு நாலடி யாகியும் பாவடி வீழ்ந்து பாடலு ணடந்தும் கடிவரை வில்லா வடிதொறுந் தனிச்சொற் றிருத்தகு நிலைய விருத்த மாகும். 11 இயற்சீர்த் தாகியு மயற்சீர் விரவியும் தன்றளை தழுவியும் பிறதளை தட்டும் அகவ லோசையதாசிரி யம்மே. 12 ஏயென் றிறுவத தாசிரியத் தியல்பே ஓஆ யிறுதியு முரியவா சிரியம். நின்ற தாதி நிலை மண் டிலத்துள் என்று மென்னென் றிறுதிவரை வின்றே அல்லா வொற்று மகவலினிறுதி நில்லா வல்ல நிற்பன வரையார். 13 ஆறு முதலா வெண்சீர் காறும் கூறு நான்கடி யாசிரிய விருத்தம் 14 சீரிற் கிளந்த தன்றளை தழுவி நேரீற் றியற்சீர் சேரா தாகி துள்ள லோசையிற் றள்ளா தாகி யோதப் பட்ட வுறுப்புவேறு பலவா யேத மில்லன கலியெனப் படுமே. 15 ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகம் முத்திறத் தடங்கு மெல்லாக் கலியும். 16 தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த் தனிச்சொ லிடைக்கிடந்து சுரிதகந் தழுவ வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி. 17 தரவி னளவிற் சுரிதக மயற்பா விரவு மென்ப ராசிரியம் வெள்ளை. 18 வண்ணகத் தியற்கை திண்ணிதிற் கிளப்பிற் றரவொடு தாழிசை தலையள வெய்தித் தாழிசைப் பின்னர்த் தனிநிலை யெய்திப் பேரெண் ணிட்ட வெண்ணுடைத் தாகிச் சிற்றெண் வழியா லராகவடி நான்கும் கீழள வாகப் பேரள வெட்டாச் சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட விடைநடு வெனைத்துஞ் சீர்வகை முறைமையி னராகம் பெற்று மம்போ தரங்கத் தராகவடி யின்றி மடக்கடி மேலே மூச்சீ ரெய்திக் குறிலிணை பயின்ற வசைமிசை முடுகி யடுக்கிசை முடுகிய லராக மென்னு விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணக மென்ப. 19 அந்தாதித் தொடையினு மடிநடை யுடைமையு முந்தையோர் கண்ட முறைமை யென்ப. 20 தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ வயற்பா மயங்கியும் தனிச்சொற் பலவா யிடையிடை நடந்தவும் ஒத்தா ழிசைக்கலி யுறுப்பினிற் பிறழ்ந்தவும் வைத்த வழிமுறையால் வண்ணக விறுவாய் மயங்கி வந்தவு மியங்குநெறி முறையிற் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர். 21 அடிபல வாகியுக் கடையடி சீர்மிகிற் கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே. 22 தூங்க லோசை நீங்கா தாகி நாற்சீர் நிரம்பா வடியிரண் டுடைத்தாய் மேற்சீ ரோதிய வைஞ்சீர் பெற்றுச் சுரிதக மாசிரிய முரியதனி னடுத்து வந்த தாயின் வஞ்சிப் பாவே. 23 பாவு மினமு மேவிய வன்றி வேறுபட நடந்துங் கூறுபட வரினு மாறறி புலவ ரறிந்தனர் கொளலே. 24 41. மாபுரணணம். 42. பூதபுராணம். இப்பெயருடைய நூல்கள் இருந்தன என்பது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினாலும், பேராசிரியர் உரையினாலும், மயிலை நாதர் உரையினாலும், யாப்பருங்கலக் காரிகை உரையினாலும் தெரிகிறது. “அவர்க்கு (இடைச்சங்கத்தாருக்கு) நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமும் என இவையென்ப.” (இறையனார் அகப்பொருள், உரைப்பாயிரம்) “இனிப் படர்ந்து பட்ட பொருண்மையவாகிய மாபுராணம் பூத புராணம் என்பன சிலவாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்றெனக் கொள்க.” (தொல். பொருள், “தொகுத்தல் விரித்தல்” என்னும் 96-ஆம் சூத்திரம், பேராசிரியர் உரை) ‘மதிநலங் கவின்ற மாபு ராணப் புதுநலங் கனிந்த பூத புராணம்’ என்று கூறுகிறது ஒரு பழைய தனிப்பாடல். “‘செய்யுட்க ணோசை சிதையுங்கா லீரளபு மையப்பா டின்றி யணையுமா - மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்குக் குன்றுமே லொற்றளபுங் கொள்.’10 என மாபுராணமுடையாரும் சொன்னாராகலின்.” (நன்னூல், எழுத்தியல் - 37ஆம் சூத்திரம், மயிலைநாதர் உரைமேற்கோள்) யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்காணும் மாபுராணச் செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “மகரக் குறுக்கத்துக்குப் பயன் மாபுராணமுடையார் எடுத்தோதி னார். என்னை? ‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்’ 1 என்றாராகலின், ‘ஆய்தமு மொற்றா யடங்கினு மாங்கதனை ஓதினார் தொன்னூ லுணர்வுடையோர் - நீதியால் ஒற்றா யடங்கினு முன்கால வேற்றுமையாற் சொற்றார் மகரச் சுருக்கு.’ 2 எனவும், ‘மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கு நனியென்னின் - ஐயென்ப தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத் தேய்விற்கு மஃதே திறம்.’ 3 எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மகரப் பிர கரணத்துங் காண்க. ஈண்டு உரைப்பிற் பெருகும். ‘உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலா லெனனிற் குணம்புரிந்தா ரௌவுந்தான் குன்றுதலாக் கூறப் படும்’ 4 எனவும், ‘கால விகப்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண் மூல வியனூன் முறைமையான் - ஞாலத்து ளெல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் சொல்லாதார்க் காகுமோ தோம்.’ 5 எனவும், ‘அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ டிசையாக்கு மேளையவுஞ் சொற்றார் - இசைதொடைதோ மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னா ரசைமுகத்தாற் றூக்கியநூற் கேற்பத் தொகுத்து.’ 6 எனவும், ‘குறிலு நெடிலு மளபெடையு மொற்று மறிஞ ரசைக்குறுப்பா மென்பர் - வறிதே யுயிர்மெய்யு மூவினமென் றோதினா ரென்று செயிரவர்க்கு நின்றதோ சென்று’ 7 எனவும், ‘வடாது தெனாதென்று வைத்ததனான் மற்றாண் டெடாதனவுஞ் சொற்றா ரினத்தாற் - கெடாததுபோன் மஃகான் குறுக்கம் வகுத்ததனான் மாட்டெறிந்தா ரஃகாய்தந் தானு மசைக்கு’ 8 எனவும், ‘ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா நையாது கார நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம் குற்றாய்தந் தானுங் கொளற்கு’ 9 எனவும், ‘சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப சிறப்புடைய வென்பவே சிந்தித் - துறுப்பசைக்கட் காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமாக நூலளவிற் சொற்றார் நுனித்து’ 10 எனவும், ‘ஐம்மூ வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண் உம்மைதா மெச்ச மெனவுரைப்பர் - ஐம்மூன்றின் மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன் பொருளை மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு.’ 11 எனவும், ‘மகரக் குறுக்கம் வகுத்ததுதா னாய்தற் கிகரக் குறுக்க முதலாப் - புகரற்ற நாலொன்று மெண்ணாதே நாட்டுதன் ஞாபகமாய் நூலொன்றி நிற்றற் பொருட்டு’ 12 எனவும் போந்த இவற்றை விரித்துரைத்துக்கொள்க, இன்னும் மகரக் குறுக்கத்திற்குப் பயன் மகரப் பிரகரணத்தும் கண்டுகொள்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.” யாப்பருங்கலம், அடியோத்து, விருத்தியுரையில் உரையாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “அதத்திணை யகவலுள் வஞ்சி வாரா ... ... ... அஃதே யெனிற் பட்டினப் பாலைத் தொடக்கத்தன அகத்திணை வஞ்சியாம் பிறவெனின், அகத்திணையகத்து வஞ்சி வருவது சிறப்பின்றாயினும், சிறுபான்மை வரப்பெறு மென்பாரு முளராகலின் அவையும் அமையுமென்பது. என்னை? ‘அகத்திணை யகவயி னிற்ப வஞ்சி சிறப்பில வெனினுஞ் சிலவிடத் துளவே’ 13 என்பது மாபுராணச் சூத்திரமாகலின்.” யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியுரைகாரர் மாபுராணத்தைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு: “நான்கடியும் எழுத்தொத்து வருவனவற்றைத் தலையாகு சந்தம் என்றும், ஓரெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றை இடையாகு சந்தம் என்றும், இரண்டெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றையும் பிறவாற்றான் மிக்குங் குறைந்து வருவனவற்றையும் கடையாகு சந்தம் என்றும் வழங்குவ ரொருசாராசிரியர். தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவார். இவற்றை யெல்லாம் ... ... ... மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் புகுதி யுடையார்வாய்க் கேட்டுக்கொள்க. இவை யெல்லாம் விகற்பித் தீண்டுரைப்பிற் பெருகும்.” “இனி மாபுராணமுடையார் கூறுமாறு : விகார மாத்திரையாகிய உயிரளபெடையும், கான் மாத்திரையாகிய வொற்றும் பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும் அவன் பெயர்க்கு அடையாகிய சொற்கண்ணும் புணர்ப்பிற் குற்ற மென்றார். என்னை? ‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்’ 14 மாபுராணம் இயற்றிய ஆசிரியர் யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை. மாபுராணம் வெண்பாவும் சூத்திரமும் கலந்து இயற்றப் பட்ட நூலெனத் தெரிகிறது. பூதபுராணத்திலிருந்து வேறு சூத்திரங்கள் கிடைக்கவில்லை. 43. முள்ளியார் கவித்தொகை நவநீதப் பாட்டியலின் பழைய உரை முள்ளியார் கவித் தொகை என்னும் பெயருள்ள பாட்டியல் நூலைக் குறிப்பிடுகிறது. முள்ளி யாரைப் பற்றியும் அவர் இயற்றிய கவித்தொகையைப் பற்றியும் யாதொரு செய்தியும் தெரியவில்லை. நவநீதப் பாட்டியல் பழைய உரை யாசிரியர், இந் நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டி யுள்ளார். அவை: “நான்கு பாவு மினமு மயங்கி யான்ற யமக மான பொருளினும் வருவது கலம்பகம்.” 1 (நவநீதம்-33-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “அமரர்க்கு நூறந் தணர்க்கிழி வைந்து அரசர்க்குத் தொண்Q று மூன்றாம் பட்ட முடிபுனையா மன்னர்க் கெண்பது வணிகர்க் கெழுபது மற்றவை யோர்க்குத் துணியிலறு பத்தைஞ்சு சொல்லும்.” 2 (நவநீதம்-34-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “சந்தத் தொருபது பல்சந்த மாலை, அந்த வெள்ளை யைம்பதா னெழுபதா னென்கவூர்ப் பேரோடுறுமா வியல்பே அகவற் றனையும் அவ்வழி வரையார்.” 2அ (நவநீதம்-37-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “உரைத்த தசாங்க மாவன பத்தாக நிரைத்து வருவது நேரிசை வெண்பா; செங்கோல் அமரரை வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்.” 3 “ஏனையோர்க்குத் தசாங்கம் அல்லா தனவென்ப இயல்புணர்ந் தோரே.” 4 (நவநீதம்-39-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின் மூன்றா மாண்டின் மொழிகுவ குழமகன்.” 5 (நவநீதம்-44-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “ஓதலும் பாடலு மூசலும் பிறவும் பதினெண் தேசத்துப் பலபல பேச்சின விறலும் அனைவர்க்கு முரித்தே ஆயுங் காலை.” 6 “மங்கை முதலா மாற்றவரும் ஆணுடை யுடுத்தலும் ஆடகம் புனையலும் அம்மனை கழங்கே ஊசல் பந்தொடு சூது பொருதலுங் காளையிற் பிரிதலும் பல்லோ ராயத்திலு மக்களுண வாக அனையவை பிறவுமவர்க் குரிய வென்ப.” 7 (நவநீதம்-45-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “அறம்பொருள் வீடெனு மூன்றையும் பழித்துக் காமமே பொருளா அரிவை யருள்பெற வேட்கையி னான்மட லூர்வனென் னும்பொருள் பாட்டுடைத் தலைமக னியற்பெயர்க் கியைந்த எதுகைவகுத் தாக்கிய கலிவெண் பாவை மடலென் றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர்.” 8 (நவநீதம்-46-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “அராகம் வெள்ளை யகவல் முதலின் ஆசிரியம் வஞ்சி மெல்லியற் புகழினும் வரைத லிலவென விரைசெய்வர் புலவர்.” 9 (நவநீதம்-47-ஆம் செய்யுளுரை மேற்கோள்). 44. யாப்பியல் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (ஒழிபியலில்) யாப்பியல் என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலினின்று இரண்டு சூத்திரங் களையும் மேற்கோள் காட்டுகிறார். யாப்பியல் நூலைப்பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் வேறொன்றும் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டிய யாப்பியல் சூத்திரங்கள் இவை: வெண்பா முதலா நால்வகைப் பரவு மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய பாவினத் தியற்கையு மதனோ ரற்றே சீரினுந் தளையினுஞ் சட்டக மாயினும் பேரா மரபின் பாட்டெனப் படுமே. 1 அவைதிரி பாகின் விசாதி யாகும். 2 45. வாருணப் பாட்டியல் இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாதையர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் நூலில் கூறுகிறார். அவர் கூறுவது: “வாருணப் பாட்டியல் என்னும் நூலிலிருந்து மேற்கோளாகச் சில சூத்திரங்கள் மட்டும் உரைகளில் காணப்படுகின்றன. நூல் கிடைத் திலது.” இந்நூலைப்பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. மேற்கோளாகக் காட்டப்பட்ட சூத்திரங்களும் கிடைக்கவில்லை. இணைப்பு - 1 பெயர் தெரியாத நூல்கள் இதுகாறும் மறைந்துபோன நூல்களைப் பற்றி ஆராய்ந்தோம். மறைந்துபோன நூல்களில் சிலவற்றின் பெயர்களும் மறைந்து போயின. உரையாசிரியர்களில் சிலர், தங்கள் உரையில் சில செய்யுட் களையும் சூத்திரங்களையும் மேற்கோள்காட்டி அவை இன்ன நூலைச் சேர்ந்தவை என்று கூறாமலே விட்டனர். அந்தச் செய்யுட்களும் சூத்திரங் களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. இங்கு அந்தச் செய்யுட்களையும் சூத்திரங்களையும் தொகுத்துக் கூறுகிறோம். அடியார்க்கு நல்லார் ஏன்னும் உரையாசிரியர், தாம் சிலப்பதிகாரக் காவியத்துக்கு எழுதிய உரையில் கீழ்க்கண்ட சூத்திரங்களைப் பரத நாட்டியத்திற்கு உரிய கைகளை (முத்திரைகளை) கூறுகிறார். இச்சூத்திரங்கள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவில்லை. கைதான் இரண்டு வகைப்படும்: இணையாவினைக்கையும், இணைக்கையுமென. இவை ஒற்றைக்கை இரட்டைக்கை யென்றும் வழங்கப்படும். மெய்பெறத் தெரிந்து மேலோ ராய்ந்த கைவகை தன்னைக் கருதுங் காலை யிணையா வினைக்கை இணைக்கை யென்ன வணைய மென்ப வறிந்திசி னோரோ. 1 ‘இணையா தியல்வ தினையா வினைக்கை இணைந்துடன் வருவ திணைக்கை யாகும்.’ இணையாவினைக்கை 33 வகை. 2 இணையா வினைக்கை யியம்புங் காலை யணைவுறு பதாகை திரிபதா கையே கத்தரிகை தூப மராள மிளம்பிறை சுகதுண் டம்மே முட்டி கடகஞ் சூசி பதும கோசிகந் துணித்த மாசில் காங்கூலம் வழுவறு கபித்தம் விற்பிடி குடங்கை யலாபத் திரமே பிரமாந் தன்னொடு தாம்பிர சூடம் பிகாச முகுளம் பிண்டி தெரிநிலை பேசிய மெய்ந்நிலை யுன்ன மண்டலஞ் சதுர மான்றலை சங்கே வண்டே யதிர்வி விலதை கபோத மகரமும் வலம்புரி தன்னொடு முப்பத்து மூன்றென் றிலங்கு மொழிப் புலவ ரிசைத்தன ரென்ப. 3 பதாகை பதாகை யென்பது மகருங் காலைப் பெருவிரல் குஞ்சித் தலாவிர னான்கு மருவி நிமிரு மரபிற் றென்ப. 4 எல்லா விரலு நிமிர்ந்திடை யின்றிப் பெருவிரல் குஞ்சித்தல் பதாதை யாகும்1 5 பெருவிரல் குஞ்சித் தேனைய நான்கு நிரலே நிமிர்த்தல் பதாகை யாகும்.2 6 திரிபதாகை திரிப தாகை தெரியுங் காலை யறைப தாகையி னணிவிரன் முடக்கினஃ தாமென மொழிப வறிந்திசி னோரே 7 கத்தரிகை கத்தரி கையே தாண்டக விரிப்பி னத்திரி பதாகையி னணியின் புறத்தைச் சுட்டக மொட்ட விட்டு நிமிர்ப் பதுவே. 8 தூபம் தூப மென்பது துணியுங் காலை விளங்குகத் தரிகை விரலகம் வளைந்து துளங்கு மென்ப துணிபறிந் தோரே. 9 அராளம் அராள மாவ தறிவாக் கிளப்பிற் பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன்முடக்கி விரல்கண் மூன்று நிமிர்த்தகம் வளைதற் குரிய தென்ப வுணர்ந்திசி னோரே. 10 இளம்பிறை சுட்டும் பேடு மநாமிகை சிறுவிர லொட்டி யகம்வளைய வொசித்த பெருவிரல் விட்டு நீங்கும் விதியிற் றென்ப. 11 சுகதுண்டம் சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளம்பிற் சுட்டு விரலும் பெருவிர ருனு மொட்டி யுகிர்நுனை கௌவி முன்வளைந் தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர றான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப. 12 முட்டி முட்டி யென்பது மொழியுங் காலைச் சுட்டு நடுவிர லநாமிகை சிறுவிர லிறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரன் முறுகப் பிடித்த முறைமைத் தென்ப. 13 கடகம் கடக முகமே கருதுங்காலைப் பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு பருவ வளைந்தவ் வுகிர்நுனி கெயவி யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே. 14 சூசி சூசி யென்பது துணியுங் காலை நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர வொழிந்தன வழிவழி முடங்கி நிற்ப மொழிந்தனர் மாதோ முடிபறிந் தோரே. 15 பதுமகோசிகம் பதும கோசிகம் பகருங் காலை யொப்பக் கைவளைந் தைந்து விரலு மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும். 16 காங்கூலம் 3 வகை. 1. குவிகாங் கூலம்: காங்கூ லம்மே கருதுங் காலைச் சுட்டும் பேடும் பெருவிரன் மூன்று மொட்டிமுன் குவிய வநாமிகை முடக்கிச் சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும். 17 2. முகிழ்காங் கூலம்: முகிழ்காங் கூல முந்துற மொழிந்த குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே. 18 3. மலர்காங் கூலம்: மலர்காங் கூல மதுமலர்ந் ததுவே. 19 கபித்தம் கபித்த மென்பது காணுங் காலைச் சுட்டுப் பெருவிர லொட்டிநுனி கௌவி மல்ல மூன்று மெல்லப்பிடிப் பதுவே. 20 விற்பிடி விற்பிடி யென்பது விரிக்குங் காலைச் சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல் விட்டு நிமிரும் விதியிற் றாகும். குடங்கை குடங்கை யென்பது கூடலுங் காலை யுடங்குவிரற் கூட்டி யுட்குழிப் பதுவே. 22 அலாபத்திரம் அலாபத் திரமே யாயுங் காலைப் புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா வருமுறை யைந்தும் வளைந்து மறிவதுவே. 23 பிரமரம் பிரமர மென்பது பேணுங் காலை யநாமிகை நடுவிர லறவுறப் பொருந்தித் தாம்வலஞ் சாயத் தகைசால் பெருவிர லொட்டிய நடுவுட் சேரச் சிறுவிரல் சுட்டு வளைந்துபின் றோன்றிய நிலையே. 24 தாம்பிர சூடம் தாம்பிர சூடமே சாற்றுங் காலைப் பேடே சுட்டுப் பெருவிர னுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிர லணிவிர லுடனதின் முடங்கி நிமிரநிற் பதுவே. 25 பசாசம் 3 வகை பசாச மென்பது பாற்படக் கிளப்பி கைநிலை முகநிலை யுகிர்நிலை யென்னத் தொகைநிலை பெற்ற மூன்றுமென மொழிப. அவைதாஞ் சுட்டுவிர னுனியிற் பெருவிர லகப்பட வொட்டி வளைந்த தகநிலை முகநிலை யவ்விர னுனிகள் கௌவிப் பிடித்தல் செவ்விதாகுஞ் சிறந்த வுகிர்நிலை யுகிர்நுனை கௌவிய தொழிந்த மூன்றுந் தகைமையி னிமிர்த்தலம் மூன்றற்குந் தகுமே. 26 முகுளம் முகுள மென்பது மொழியுங் காலை யைந்து விரலும் தலைகுவிந் தேற்ப வந்து நிகழு மாட்சித் தாகும். 27 பிண்டி பிண்டி யென்பது பேசுங் காலைச் சுட்டுப் பேடிய நாமிகை சிறுவிர லொட்டி நெகிழ முடங்க வவற்றின்மிசை விலங்குறப் பெருவிரல் விட்டுங் கட்டியு மிலங்குவிரல் வழிமுறை யொற்றலு மியல்பே. 28 தெரிநிலை தெரிநிலை யென்பது செப்புங் காலை யைந்து விரலு மலர்ந்துகுஞ் சித்த கைவகை யென்ப கற்றறிந் தோரே. 29 மெய்ந்நிலை மெய்ந்நிலை யென்பது விளம்புங்காலைச் சிறுவிர லநாமிகை பேடொரு சுட்டிவை யுறுத லின்றி நிமிரச் சுட்டின் மிசைப் பெருவிரல் சேரும் பெற்றித் தென்ப. 30 உன்னம் உன்ன நிலையே யுணருங் காலைப் பெருவிரல் சிறுவிர லென்றிவை யிணைய வருமுறை மூன்று மலர்த்துநிற் பதுவே. 31 மண்டலம் மண்டல மென்பது மாசறக் கிளப்பிற் பேடு நுனியும் பெருவிர னுனியுங் கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி யொழிந்த மூன்று மொக்க வளைவதென மொழிந்தன ரென்ப முழுதுணர்ந் தோரே. 32 சதுரம் சதுர மென்பது சாற்றுங் காலை மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப் பெருவிர லகமுறப் பொற்பச் சேர்த்திச் சிறுவிரல் பின்பே நிமிர்ந்த கெவ்வியி னிறுமுறைத் தென்பவியல் புணர்ந் தோரே. 33 மான்றலை மான்றலை யென்பது வகுக்குங் காலை மூன்றிடை விரலு நிமிர்ந்தக மிறைஞ்சிப் பெருவிரல் சிறுவிர லென்றிவை நிமிர்ந்து வருவ தென்ப வழக்கறிந் தோரே. 34 சங்கம் சங்கெனப் படுவது சாற்றுங் காலைச் சிறுவிரன் முதலாச் செறிவிர னான்கும் பெறுமுறை வளையப் பெருவிர னிமிர்ந்தாங் கிறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே. 35 வண்டு வண்டென் பதுவே வகுக்குங் காலை யநாமிகை பெருவிர னனிமிக வளைந்து தாநுனி யொன்றித் தகைசால் சிறுவிரல் வாலிநி னிமிர மற்றைய வளைந்த பாலின தென்ப பயன்றெரிந் தோரே. 36 இலதை இலதை யென்ப தியம்புங் காலைப் பேடியுஞ் சுட்டும் பிணைந்துட னிமிரிந்து கூடிய பெருவிரல் கீழ் வரை இறுகக் கடையிரு விரலும் பின்னர் நிமிர்ந்த நடையின தென்ப நன்னெறிப் புலவர். 37 கபோதம் காணுங் காலைக் கபோத மென்பது பேணிய பதாகையிற் பெருவிர னிமிரும். 38 மகர முகம் மகரமுக மென்பது வடிக்குங் காலைச் சுட்டொடு பெருவிரல் கூட வொழிந்தவை யொட்டி நிமிர்ந்தாங் கொன்றா வாகும். 39 வலம்புரி வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட னலந்திகழ் பெருவிர யைமுற நிமிர்ந்து சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல் விட்டு நிமிர்ந் திறைஞ்சும் விதியிற் றென்று கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந் தோரே. 40 பிணையல் (இணைக்கை) எஞ்சுத லில்லா விணைக்கை யியம்பி லஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம் நலமாஞ் சுவத்திகங் கடகா வருத்த நிடதந் தோரமுற் சுங்க மேம்பட வுறுபுட் பபுட மகரஞ் சயந்த மந்தமில் காட்சி யமய வத்த மெண்ணிய வருத்த மானந் தன்னொடு பண்ணுங் காலைப் பதினைந் தென்ப. 41 அஞ்சலி அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பி னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையால் வந்தகம் பொருந்து மாட்சித் தென்றன ரந்தமில் காட்சி யறிந்திசி னோரே. 42 புட்பாஞ்சலி புட்பாஞ் சலியே பொருத்தவிரு குடங்கையுங் கட்டி நிற்கும் காட்சிய தென்ப. 43 பதுமாஞ்சலி பதுமாஞ் சலியே பதும கோசிக மெனவிரு கையு மியைந்து நிற்பதுவே. 44 கபோதம் கருதுங்காலைக் கபோத விணைக்கை யிருகையுங் கபோத மிசைந்துநிற் பதுவே. 45 கற்கடகம் கருதுங் காலைக் கற்கட கம்மே தெரிநிலை யங்குலி யிருகையும் பிணையும். 46 சுவத்திகம் சுவத்திக மென்பது சொல்லுங் காலை மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு மணிக்கட் டேற்றி வைப்ப தாகும். 47 கடகாவருத்தம் கருதிய கடகா வருத்தக் கையே யிருகையும் கடக மணிக்கட் டியைவது. 48 நிடதம் நிடத மென்பது நெறிப்படக் கிளப்பின் முட்டி யிரண்டுகை யுஞ்சம மாகக் கட்டி நிற்குங் காட்சித் தென்ப. 49 தோரம் தோர மென்பது துணியுங் காலை யிருமையும் பதாகை யகம்புற மொன்ற மருவிமுன் றாழும் வழக்கிற் றென்ப. 50 உற்சங்கம் உற்சங்க மென்ப துணருங் காலை யொருகை பிறைக்கை யொருகை யராளந் தெரிய மணிக்கட்டி லேற்றிவைப் பதுவே. 51 புட்பபுடம் புட்பபுட மென்பது புகலுங் காலை யொத்த விரண்டு குடங்கையு மியைந்து பக்கங் காட்டும் பான்மைத் தென்ப. 52 மகரம் மகர மென்பது வாய்மையி னுரைப்பிற் கபோத மிரண்டு கையு மகம்புற மொன்ற வைப்பதன் றுரைத்தனர் புலவர். 53 சயந்தம் இதன் நூற்பா கிடைக்கவில்லை. 54 அபயவத்தம் அபயவத் தம்மே யறிவுறக் கிளப்பின் வஞ்சமில் சுகதுண்ட மிருகையு மாட்சியி னெஞ்சுற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே. 55 வருத்தமானம் வருத்த மானம் வகுக்குங் காலை முகுளக் கையிற் கபோதக் கையை நிகழச் சேர்த்து நெறியிற் றென்ப. அவைதாம் 56 எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே பொருட்கை கவியிற் பொருளா கும்மே. 57 இசை சிலம்பு, கானல்வரியின் பழைய அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூற்பாக்கள். பண்ணல் வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றிளிவழி கேட்டும் ... .. ... .. ... இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ண லாகும். 1 பரிவட்டணை பரிவட் டணையி னிலக்கணந் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ உடக்கை விரலி னியைவ தாகத் தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியு நடையொடு தோன்று நயத்த தாகும். 2 ஆராய்தல் ஆராய்த லென்ப தமைவாக் கிளப்பிற் குரன்முத லாக விணைவழி கேட்டு மிணையி லாவழிப் பயனொடு கேட்டுந் தாரமு முழையும் தம்மிற் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டுந் தளரா தாகிய தன்மைத் தாகும். 3 தைவரல் தைவர லென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியு நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி யோவாச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும் நீரவாகு நிறைய தென்ப. 4 செலவு செலவெனப் படுவதன் செய்கை தானே பாலை பண்முறை திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி யியக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப் பதினொ ராடலும் பாணியு மியல்பும் விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே. 5 விளையாட்டு விளையாட் டென்பது விரிக்குங் காலைக் கிளவிய வகையி னெழுவகை யெழாலு மளவிய தகைய தாகு மென்ப. 6 கையூழ் கையூ ழென்பது கருதுங் காலை யெவ்விடத் தானு மின்பமுஞ் சுவையுஞ் செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற்படத் தோன்றும் பகுதித் தாகும். 7 குறும்போக்கு துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும் தள்ளாதாகிய வுடனிலைப் புணர்ச்சி கொள்வன வெல்லாங் குறும்போக் காகும். 8 யாழ் வாசிக்கும் முறமை சிலம்பு, 8-26 அடி உரையில் அரும்பதவுரையாசிரியரும். அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியது: நல்லிசை மடந்தை நல்வேழில் காட்டி யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ் மெய்பெற வணங்கி மேலோடு கீழ்புணர்த் திருகையின் வாங்கி யிடவயி னிரீஇ மருவிய வினய மாட்டுதல் கடனே. (வினயம் - தேவபாணி) வரிப்பாட்டு சிலப்பதிகாரம், கானல்வரி உரையில் அரும்பதவுரையாசிரியர் காட்டிய நூற்பாக்கள். கூடைச் செய்யுள். கூடை யென்பது கூறுங் காலை நான்கடி யாகி யிடையடி மடக்கி நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே. 1 வாரச் செய்யுள். வார மென்பது வகுக்குங் காலை நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப. 2 முகமுடைவரி நிலமுத லாகிய வுலகியல் வரிக்கு முகமாய் நிற்றலின் முகமெனப் படுமே. 3 சிந்து நெடிலுஞ் சேரினும் வரையார். 4 சார்த்துவரி பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே. 5 முரிச்சார்த்து முரிந்தவற ... ... ... குற்றெழுத் தியலாற் குறுகிய நடையாற் யெற்ற வடித்தொகை மூன்று மிரண்டுங் குற்ற மில்லெனக் கூறினர் புலவர். 6 நிலைவரி முகமு முரியுந் தன்னோடு முடியு நிலையை யுடையது நிலையெனப் படுமே. 7 முரிவரி எழுத்த வியலு மிசையுந் தம்மின் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே. யாழ் மாடகம் ‘மாடக மென்பது வகுக்குங் காலைக் கருவிளங் காழ்ப்பினை நல்விரல் கொண்டு திருவயில் பாலிகை வடிவாக் கடைந்து சதுர மூன்றகத் துளையிடற் குரித்தே.3 1 இணைநரம்பு. இணையெனப் படுவ கீழு மேலு மணையத் தோன்று மளவின வென்ப.3 2 கிளைநரம்பு கிளையெனப் படுவ கிளக்குங் காலை குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப.3 3 பகை நரம்பு நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும்.3 4 கண்ணிய கீழ்மூன் றாகி மேலு நண்ணல் வேண்டு மீரிரண்டு நரம்பே.4 5 குரலே துத்த மிளியிவை நான்கும் விளரி கைக்கிளை மும்மூன் றாகித் தளராத் தார முழையிவை யீரிரண் டெனவெழு மென்ப வறிந்திசி னோரே.4 6 தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு.5 7 யாழ்வகை பேரியாழ் பின்னு மகரஞ் சகோட முடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முளவே பிற. 8 ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே நின்ற பதினான்கும் பின்னேழுங்-குன்றாத நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி. 9 கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியு மாட்டிய பத்தரின் வகையு மாடக முந் தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு மூந்திய நூலின் முடிந்த வகையே 10 குழல்-வங்கியம் ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே பாங்குறு செங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து. உயர்ந்த சமதலத் தோங்கிக் கானான்கின் மயங்காமை நின்ற மரத்தின் மயங்காமே முற்றிய மாமரந் தன்னை முதளடிந்த குற்றமிலோ ராண்டிற் கொளல் சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு நல்விரல்க ணாலரையா நன்னுதலாய்-மெல்லத் துணையளவு நெல்லரிசி தூபமிடமாய் தும்பிட மாய வளைவலமேல் வங்கிய மென். இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க ணாலங்சு கொள்க பரப்பென்ப, நன்னுதலாய்! கோலஞ்செய் வங்கியத்தின் கூறு. வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித் துளையோகழி னின்ற விரல்கள் - விளையாட் டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா, வடமாரு மென்முலையாய்! வைத்து. 5 சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானங் வரிபரந்த கண்ணினாய்! வைத்துத்-தெரிவரிய வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிற்கும் சூழ் முதலாஞ் சுத்தத் துளை. 6 சாரீர வீணை பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து நாதமுதலா மெழுத்து நாலாகி - வீதி வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட் டிருவாத்தாற் றோற்ற மிசைக்கு. 1 மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதா மெண்ணிய பூதங்க ளென்றறிந்து - நண்ணிய மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த தென்னவர் கோமாளே தெளி. 2 செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே யப்பரிசு மண்ணைந்து நீர்நாலா - மொப்பரிய தீயாகின் மூன்றிரண்ட காற்றம் பரமொன்று வேயாருந் தோளி விளம்பு. 3 மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற வைவாயு மாயவற்றின் மீதடுத்துத்-துய்ய சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தா லவைமுதற் புற்கல மாம். 4 (புற்கலம்-உடம்பு) பசிகோம்பு மைதுனங் காட்சிநீர் கேட்கை தெசிகின்ற தீக்குணமோ ரைந்து-மொசிகின்ற போக்கு, வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம் வாக்குடைய காற்றின் வகை. 5 ஓங்கும் வெகுளி மதமான மாங்கார நீங்கா வுலோப முட னிவ்வைந்தும்-பாங்காய வண்ண முலைமடலாய் வானகத்தின் கூறென்றா ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண். 6 ஒப்பார் பிராண னபான முதான னுடன் றப்பா வியானன் சமானனே-யிப்பாலு நாகன் றனஞ்செயன் கூர்மன் கிருகரன் றீதிலாத் தேவதத்த னே. 7 இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி யத்தி புடைநின்ற சிங்குவை சிங்கினி - பூடாவோ டங்குரு கன்னி யலம்புடை யென்றுரைத்தார் தங்குதச நாடிக டாம். 8 பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந் தாய் வாதனையோ ரைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப் பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே முத்திர்கு வித்தா முடம்பு. 9 இசைக்குப் பிறப்பிடம். துய்ய வுடம்பளவு தொண்ணுற்றா றங்குலியா மெய்யெழுத்து நின்றியங்க மெல்லத்தான்-வையத் திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக் கருவாகு மாதாரங் காண். 10 ஆதாரம் பற்றி யசைவ முதலெ ழுத்து மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால் வந்துமே லோசையாம் வைப்பு : 11 ஐவகைப் பூதமு மாய சரீரத்து மெய்பெறநின் றியங்கி மெய்யெழுத்தாற்-றுய்ய வொருநாடி நின்றியங்கி யுந்திமே லோங்கி வருமா லெழுத்து டம்பின் வந்து. 12 ஆளத்தி. மகரத்தி னொற்றாற் சுருதி விரவும் பகருங் குறினெடில் பாரித்து - நிகரிலாத் தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி மன்னாவிச் சொல்லின் வகை. 13 குன்றாக் குறிலைந்துங் கேடா நெடிலைந்து நின்றார்ந்த மந்நகரந் தவ்வோடு-நன்றாக நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க வாளத்தி யாமென் றறி. 14 பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார் மேவார் பெருத்தான மெட்டாறும் - பாவா யெடுத்தென் முதலா விருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்று பார். 15 தோற்கருவிகள் பேரிகை படக மிடக்கை யுடுக்கை சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை தமருகந் தண்ணுமை தாவி நடாரி யந்தரி முழவொடு சந்திர வளைய மொந்தை முரசே கண்விடு தூம்பு நிகாளந் துடுமை சிறுபறை யடக்க மாசி றகுணிச்சம் விரலேறு பாகந் தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென மிக்க நூலோர் வுரிந்துரைந் தனரே. மாதர் அணிகலன்கள் பரியகம். பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரந் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே. 1 அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுர மொய்ம்மணி நூலின் முல்லையங் கிண்கிணி கௌவிய வேனவுங் காலுக் கணிந்தாள். 2 குறங் செறியொடு கொய்யலங் கார நிறங்கிளர் பூந்துகி னீர்மையி னுடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகா ழறிந்த தமைவர வல்குற் கணிந்தாள். 3 ஆய்மணி கட்டி யமைந்தவிலைச் செய்கைக் காமர் கண்டிகைக் கண்டிரண் முத்திடைக் காமற்பொற் பாசங் கொளுத்திக் கவின்பெற வேய்மருண் மென்றோள் விளங்க வணிந்தாள். 4 புரைதபு சித்திரப் பொன்வளை போக்கி லெரியவிர் பொன்மணி யெல்லென் கடகம் பரியகம் வால்வளை பாத்தில் பவழ மரிமயிர் முன்கைக் கமைய வணிந்தாள். 5 சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்க லருந்தித் திருந்துங் கயிலணி தண்கடன் முத்தின் றகையொரு காழெனக் கண்ட பிளவுங் கழுத்துக் கணிந்தாள் 6 நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக் கோலங் குயின்ற குளஞ்செய் கடிப்பிணை மேலவ ராயினு மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெறப் பெய்தாள். 7 கேழ்கிளர் தொய்யகம் மாண்முகப் புல்லகஞ் சூளா மணியொடு பொன்னரி மாலையுந் தாழ்தரு கோதையுந் தாங்கி முடிமிசை யாழின் கிளவி யரம்பைய ரொத்தாள்.6 8 இணைப்பு II சிதைவுண்ட தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றி ஒருவாறு ஆராய்ந்தோம். உரைhயசிரியர் முதலியோரால் குறிப்பிடப்பட்டிருப்பதனால் அவற்றைப் பற்றி இவ்வளவாவது அறியமுடிகிறது. இதனால், எவ்வளவு இலக்கியச் செல்வங்களை இழந்துவிட்டோம் என்பதை ஒருவாறு அறியு முடிகிறது. உரையாசிரியர்களாலும் மற்றவர்களாலும் குறிப்பிடப்படாமலே, பெயர்கூடத் தெரியாமலே, மறைந்துபோன, நூல்கள் எத்துணையோ அறியோம். இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்ற நூல்களிலும் சில வற்றில் சில பகுதிகள், குறைந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் இங்குக் குறிப்பிட வேண்டியது முறையாகும். அவற்றை இங்கு ஆராய்வோம். ஐங்குறுநூறு: எட்டுத் தொகையில் ஒன்றாகிய இந்நூலில், நெய்தற்றிணையில், கிழவற்குரைத்த பத்தில் 9ஆம், 10ஆம் செய்யுள்கள் காணப்பட வில்லை. முல்லைத்திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் 6ஆம் செய்யுளில், இரண்டாம் அடியும், தேர் வியங்கொண்ட பத்தில் 10ஆம் செய்யுளின் 2 ஆம் அடியும் சிதைந்துள்ளன. ஐந்திணை எழுபது: பதினெண் கீழ்க்கணக்குகளைச் சேர்ந்தது இந்நூல். மூவாதியாரால் வெண்பாவினால் இயற்றப்பட்ட இந்நூலில், சில செய்யுள்கள் மறைந்து விட்டன. முல்லைத்திணையில் இரண்டு செய்யுள்களும் (25, 26), நெய்தற் றிணையில் கடைசி இரண்டு செய்யுள்களும் (69,70) காணப் படவில்லை. கைந்நிலை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று இது. மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய இந்நூலில், குறிஞ்சித் திணையில் 1ஆம் 8 ஆம் செய்யுள்களும், பாலைத்திணையில் 2 முதல் 8 வரையில் உள்ள செய்யுள்களும், முல்லைத் திணையில் 2 முதல் 11 ஆம் செய்யுள்வரையில் 10 செய்யுள் களும் காணப்படவில்லை. திணைமொழி ஐம்பது: பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார் என்பவர். இதில் முதல் செய்யுளின் முதல் இரண்டு அடிகள் மறைந்துவிட்டன. திருவீங்கோய்மலை எழுபது: பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை, இயற்றியவர் நக்கீரதேவநாயனார் என்னும் சிவனடியார், இவர் சங்ககாலத்து நக்கீரர் அல்லர். இந்நூலில் உள்ள 70 செய்யுள்களில் 48 முதல் 61 வரையில் உள்ள 13 செய்யுள்கள் மறைந்துவிட்டன. தேவாரம்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூன்று சைவ அடியார்கள் பாடி யருளிய தேவாரப் பதிகங்களில் பெருபான்மைப் பதிகங்கள் மறைந்து விட்டன. அவை, தில்லைச் சிற்றம்பலத்தில் ஓர் அறையில் வைத்துப் பூட்டப் பட்டிருந்தன. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறந்து பார்த்தபோது, சிதல் அரித்துப் பல ஏடுகள் மறைந்து கிடந்தன. மிகுந்தவை சிலவே. அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் நாற்பத்தொன்பதி னாயிரம் திருப்பதிகங்கள் பாடினார் என்ப. “குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைக் கொடுங்கூற்றா யினவென்ன வெடுத்துக் கோதில ஒருமானைத் தரிக்குமொரு வரையுங் காறும் ஒருநாற்பத் தொன்பதினா யிரம தாகப்” பாடினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. கூந்தர மூர்த்தி சுவாமிகளும் தமது தேவாரத்தில், திருநாவுக்கரசர் 49 ஆயிரம் பதிகங்கள் பாடினார் என்று கூறுகிறார். “இணைகொளேழேழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திரு நாவினுக்கரையன்” என்று திருநின்றியூர்ப் பதிகத்தில் கூறுகிறார். அவர் பாடிய 49,000 பதிகங்களில் செல்லரித்தவை போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்றேழு பதிகங்கள்தாம். திருஞானசம்பந்தர் பாடியவை பதினாறாயிரம் பதிகங்கள். “தோடுடைய செவியன்முதற் கல்லூ ரென்னும் தொடைமுடிவாப் பரசமயத் தொகைகண் மாயப் பாடினார் பதிகங்கள் பாவி லொன்றாம் பதினாறா யிரமுளதாம் பகரு மன்றே” என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. இந்தப் பதினாறா யிரத்தில் சிதல் தின்றது போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற் றெண்பத்துநான்கு பதிகங்களே! சுந்தர மூர்த்திசுவாமிகள் 38,000 பதிகங்கள் பாடினார் என்பர். “பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழி தோறும் ஈறாய் முப்பத் தெண்ணாயிர மதாக”ப் பாடினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது, 38,000-த்தில் மண் தின்றவை போக இப்போது எஞ்சியுள்ளவை நூறு பதிகங்களே. எனவே, மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்கு அதிகமாகவே மறைந்துபோயின. நற்றிணை: இது எட்டுத் தொகையுள் ஒன்று கடவுள் வாழ்த்துச் செய்யுளை நீக்கி 400 செய்யுள்களையுடையது. இதில் 234ஆம் செய்யுள் முழுவதும் காணப்படவில்லை. அன்றியும், 385ஆம் செய்யுளின் பிற்பகுதி அடிகளும் காணப்படவில்லை. நீலகேசி: இந்நூலின் ஒன்பதாவது பகுதியாகிய வேதவாதச் சருக்கத்தில் எட்டுச் செய்யுள்களும் (22 முதல் 29 வரை) உரையும் காணப்பட வில்லை. பதிற்றுப்பத்து: இது எட்டுத்தொகையுள் ஒன்று. இதில், முதற் பத்தும் பத்தாம் பத்தும் காணப்படவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளும், வேறு மூன்று செய்யுள்களும் உரைகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நான்கு செய்யுள்களும், சங்க இலக்கியம் என்னும் நூலில் (சைவ சித்தாந்த சமாஜப் பதிப்பு) சேர்க்கப்பட்டுள்ளன. இவை எந்தப் பத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. பரதசாஸ்திரம்: பரத சேனாபதீயம் என்னும் நூலின் உரையாசிரியர் தமது உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். மேற்படி நூல் 23ஆம் சூத்திரத்தின் உரையில் இவ்வுரைhயசிரியர், “என்னாற் சொல்லப்பட்ட முதனூல் பரத சாஸ்திரமும் மற்றை வேத வேதாந்த சாஸ்திரமும்” என்று எழுதுகிறார். இதனால், இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்கவேண்டும். பரத சேனாபதீயம்: இந்நூல், இப்பெயரையுடைய பழைய நூலின் வேறானது. அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறுகிற, ஆதிவாயிலார் இயற்றிய யாக சேனாபதீயம் அன்று இது. அதற்குப் பிற்பட்ட நூல். இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. நூலும் முழுவதும் கிடைக்க வில்லை. நூலின் பாயிரங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இதற்கு உரையும் உண்டு. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இது டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல்நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளது. பாரிபாடல்: இறையனார் அகப்பொருள்: உரையாசிரியர், முதல் சூத்திர உரையில் இவ்வாறு எழுதுகிறார்: “இனிக் கடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும் ... ... ... கணக் காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மரென்ப ... ... ... அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் ... ... எழுபது பரிபாடலும் ... ... ... என்று இத்தொடக்கத்தன.” பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல்., பொருள்., செய்யுள் 149). “இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தாரால் தொகுக்கப்படடவற்றுள்;’ என்று எழுதுகிறார். இதனால் பரிபாடலின் தொகை எழுபது என்பது தெரிகிறது. ஒரு பழைய வெண்பாவும், பரிபாடல் செய்யுள்கள் எழுபது என்று கூறுகிறது. ஆனால், இப்போது கிடைத்துள்ள பரிபாடல் செய்யுள்கள் இருபத்து நான்குதாம்: நாற்பத்தாறு செய்யுள்கள் காணப்படவில்லை. பாரத வெண்பா: தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில், பெருந்தேவனார் என்பவரால் இயற்றப்பட்டது இந்தப் பெருந் தேவனார், பாரதம் பாடிய பெருந்தேவனாருக்குப் பிற்காலத்தில் இருந்தவர். இந்நூல் உத்தியோக பருவம், வீடும பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது. துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாட்போர் வரையிலும் இருக்கிறது. இதிலும் பிற்பகுதிச் செய்யுள்கள் காணப்படவில்லை. மற்றப் பகுதிகளும் காணப்படவில்லை. புறநானூறு: இதில், கடவுள் வாழ்த்துச் செய்யுளோடு 400 செய்யுள்கள் உள்ளன. இவற்றுள் 267, 268 எண்ணுள்ள செய்யுள்கள் முழுவதும் காணப்படவில்லை. 282, 283, 285, 289, 290, 298 எண்ணுள்ள செய்யுள்களில் சில அடிகளில் எழுத்துகள் மறைந்து விட்டன. 300 முதல் 400 வரையில் உள்ள செய்யுள்களுள் 40 செய்யுள்களில் சில வரிகளில் எழுத்துகள் சிதைந்துவிட்டன. பெருங்கதை: உதயணன் கதை என்றும், மாக்கதை என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்குவேள் என்பவர். சிறந்த காவிய நூல், இவ்வருமையான நூலின் முதலும் இறுதியும் காணப்படவில்லை. இடையிலும் சில அடிகள் மறைந்து விட்டன. இந்நூல், உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்னும் ஐந்து காண்டங்களையுடையது. முதலாவது உஞ்சைக் காண்டத்தில் முப்பத்தொரு காதைகள் காணப்படவில்லை. முப்பத்திரண்டாவது காதையின் முற்பகுதியும் காணப்படவில்லை. இடையில் மகத காண்டத்தில் 10ஆம் காதையின் கடைசியில் சில அடிகளும், பதினோராம் காதை முழுவதும், 12 ஆம் காதையின் முற் பகுதியும் காணப்படவில்லை. 17 காதையின் சில பகுதியும் காணப்பட வில்லை. இறுதியாகிய நரவாண காண்டத்தில் ஒன்பது காதைகள் மட்டும் உள்ளன. 9ஆம் காதையின் பிற்பகுதியும் மற்றக் காதைகளும் காணப்படவில்லை. மாபரதம்: இதனை இயற்றியவர் சிங்காரசேகரர் என்பர். இது சார்பு நூல். பிற்காலத்து நூலாகிய பரத சேனாபதீயத்தின் நூலாசிரியர், மேற்படி நூல் பாயிரத்தின் 68ஆம் சூத்திரத்தில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். இதை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்க வேண்டும். மாபரத சூடாமணி: இது மேற்படி மாபரதம் என்னும் நூலைச் சுருக்கிச் செய்யப்பட்ட நூல் சோமநாதன் என்பவருக்காக இதைச் சிங்காரசேகரன் என்பவர் இயற்றினார் என்று பரதசேனாபதீயப் பாயிரச் செய்யுள் (63) கூறுகிறது. இதையும் மறைந்துபோன நூல்களுடன் சேர்க்க வேண்டும். முத்தொள்ளாயிரம்: சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று அரசர்பேரில் இயற்றப் பட்ட நூல். முத்தொள்ளாயிரம் என்னும் பெயரைக் கொண்டு (மூன்று தொள்ளாயிரம்) 2,700 செய்யுள்களை யுடைய நூல் என்று சிலர் கருது கின்றனர். மூன்று முந்நூறு ஆகத் தொள்ளாயிரம் செய்யுள்களைக் கொண்ட நூல் என்று கருதுவது பொருந்தும் எனத் தோன்றுகிறது. 900 செய்யுள் உள்ள இந்த நூலில் இப்போது கிடைத்துள்ளவை 110 செய்யுள்கள் மட்டுமே: மற்றவை மiநது விட்டன. மூத்தபிள்ளையார் மும்மணிக்கோவை: பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை இயற்றி யவர் அதிராவடிகள் என்பவர். முப்பது செய்யுள்களுடைய இந்நூலின் கடைசி ஏழு செய்யுள்கள் (24 முதல் 30 வரையில்) மறைந்துவிட்டன. தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன பல நூல்கள் மறைந்துபோனதை அறிந்தோம். அந்நூல்கள் மறைந்துபோனதற்குக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். தலைச்சங்க, இடைச்சங்க காலத்தில், பாண்டிநாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள் இரண்டு பெரிய கடல் கோள்களினால் மறைந்து விட்டன. அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச்சுவடிகளும் மறைந்துபோயின. ஏரண முருவம் யோகம்இசை கணக் கிரதம் சாரம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் செய்யுள், கடல் பெருக்கெடுத்துப் பாண்டிநாட்டின் பகுதியை அழித்தபோது, முதற்சங்க, இடைச்சங்க நூல்கள் மறைந்துபோனதைக் கூறுகிறது. ஆனால், அதன் பிறகு உண்டான பல நூல்களும் மறைந்து போனதைக் காண்கிறோம். இவை மறைந்துபோனமைக்குக் கடல் கோள்கள் காரணம் அல்ல; வேறு காரணங்களால் இவை மறைந்தன. அக்காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லாதது, பல நூல்கள் மறைந்து போனதற்கு முக்கியக் காரணமாகும். அச்சுப் புத்தகங்கள் அக்காலத்தில் இருந்திருந்தால், அப்புத்தகங்களின் பிரதிகள் பலரிடத்தில் பல ஊர்களில் இருந்திருக்கும். அப்போது, சில இடங்களில் உள்ள புத்தகங்கள் அழிந்துபோனாலும் வேறு இடங்களில் அந்தப் பிரதிகள் இருந்து, அந்நூல் மறைந்துபோகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத அக்காலத்தில், நூலின் பிரதிகள் மிகச் சிலவே இருந்தன. அச்சில பிரதிகள் நீர் நெருப்பு, சிதல் முதலிய காரணங்களால் அழிந்துவிடு மானால் அந்நூல்கள் அடியோடு அழிந்துபோகின்றன. இவ்வாறு மறைந்துபோன நூல்கள் பல. சமயப் பகை காரணமாகவும் பல ஏட்டுச் சுவடிகள் மறைந்துபோயின. நமது நாட்டிலே, முற்காலத்தில் செழித்துப் பரவியிருந்த பௌத்த ஜைன மதங்கள் பல சமய நூல்களைக் கொண்டிருந்தன. அந்த மதங்கள் பிற் காலத்தில் குன்றிப்போய் மறைந்தபோது அச்சமய நூல்களும் மறைந்து போயின. ஆதரிப்போர் இருந்தால்தானே அவை வாழ்ந்திருக்கமுடியும்? அம்மதங்கள் மறைந்த காரணத்தினால், ஆதரிப்போர் இல்லாமல், அந் நூல்கள் மறைந்துபோயின. அம் மதத்தவர் அல்லாத ஏனைய மதத்தார், சமயப் பகை காரணமாக அந்த வேறு மத நூல்களைப் போற்றாமல் விட்டனர். குண்டலகேசி, விம்பசார கதை. சித்தாந்தத் தொகை திருப்பதிகம், புத்த ஜாதகக் கதைகள் முதலிய பௌத்த நூல்களும், ஜைன இராம யணம், வளையாபதி, கிளிவிருத்தம், எலிவிருத்தம், சாந்தி புராணம், மல்லி நாதர் புராணம், நாரதசரிதை, பிங்கல கதை, வாமன கதை, பிங்கல கேசி அஞ்சனகேசி, காலகேசி, தத்துவ தரிசனம், முதலிய ஜைன சமய நூல் களும் இவ்வாறு மறைந்துபோன நூல்களாம். மணிமேகலை, சிலப் பதிகாரம், சிந்தாமணிபோன்ற பௌத்த சமண சமயக் காவியங்களைச் சைவவைணவ சமயத்தார் போற்றிக் காப்பாற்றி யதன் காரணம், அவை இலக்கிய வளம் படைத்த காவியங்கள் என்னும் காரணம் பற்றியே. இவ்வாறு ஒருசில பௌத்த சமண சமய நூல்கள், அவற்றின் இலக்கியச் சிறப்புப் பற்றிப் போற்றிக் காப்பாற்றப்பட்டன என்றாலும் பௌத்த ஜைன சமயங்களின் ஏனைய நூல்கள் எல்லாம் மறைந்துபோயின. மூடக்கொள்கை சமயப் பகைமையினால் சிலபல நூல்கள் அழிந்தது போலவே, மூடக்கொள்கையினாலும் பல நூல்கள் அழிந்தன. பதினெட்டாம் பெருக்கு, கலைமகள் விழாவாகிய சரசுவதி பூசை, மாசிமகம் போன்ற காலங்களில் ஏட்டுச்சுவடிகளைக் கடலிலும் ஆற்று வெள்ளத்திலும் போடுகிற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மூட வழக்கம் சமீபகாலம் வரையிலும் இருந்தது. கல்வி அறிவில்லாத வர்கள், தங்கள் வீடுகளில் தமது முன்னோர் சேமித்துவைத்த ஏட்டுச் சுவடிகளைக் கற்கும் ஆற்றல் இல்லாமல், அச்சுவடிகளை ஆற்று வெள்ளத்தில்விட்டனர். இதுபோன்ற மூடத்தனம் உலகத்திலே எந் நாட்டிலும் காணமுடியாது. சிலர் ஏட்டுச் சுவடிகளை அடுப்பில் இட்டு எரித்ததும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்தாற்போல, கல்வி யறிவற்றவர் கையில் கிடைத்த ஏட்டுச்சுவடிகள் இவ்வாறு அழிந்தன. “கற்பூர வாசனை கழுதைக்குத் தெரியுமா?” வித்துவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்குடும்பத்திலுள்ள பொருள்களையும் சொத்துகளையும் பாகம் செய்து கொள்ளும்போது, ஏட்டுச்சுவடிகளையும் பங்கிட்டுக்கொள்வது வழக்கம். பங்கிட்டுக் கொண்டவர்களில் கல்வி அறிவில்லாதவர்களும் இருப்பார்கள். படிக்கத் தெரியாமல் இருந்தாலும் சுவடிகளிலும் பங்கு கேட்டு வாங்கு வார்கள். அவர்களிடம் சென்று ஏடுகளின் கதி யாது? பதினெட்டாம் பெருக்குக்கும் , அடுப்புக்கும், சிதலுக்கும் அவை இரையாகிவிடும். தீயில் எரிந்த ஏடுகள் வரகுணராம பாண்டியன், அதிவீரராம பாண்டியன் என்பவர்கள் திருநெல்வேலியில் அரசாண்டிருந்த பாண்டிய அரசர்கள். இருவரும் தமையன்தம்பி முறையினர். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டி நாடு அயல் நாட்டவர் கையில் சிக்கியபோது, அவர்களின்கீழ்ச் சிற்றரசராக இருந்தவர்கள். இவர்களில் அதிவீரராம பாண்டியன் தமிழில் நைடதம் என்னும் காவியத்தையும், வேறு நூல்களையும் இயற்றிப் புகழ் படைத்தவர். இவர் இயற்றிய நைடதத்தைப் பற்றி ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ (ஒளடதம் - அமிர்தம்) என்னும் பழமொழி வழங்குகிறது. இவருடைய தமையனாரான வரகுணராம பாண்டியனும் கல்வியில் சிறந்த புலவர். வரகுணராமனின் மனைவியும் சிறந்த புலமை வாய்ந்தவர். அதிவீரராமன் நைடத்தை இயற்றி, அதனைத் தம் தமைய னிடம் அனுப்பி, அதைப் படித்துப் பார்த்து அது பற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டாராம். தமையனான வரகுணன் அந்நூலைத் தம் மனைவியிடம் கொடுத்து மதிப்புரை கூறும்படி சொன்னாராம். அரசியார் அதைப் படித்துப் பார்த்து, இதன் நடை, வேட்டை நாயின் ஒட்டம்போல் இருக்கிறது என்று கூறினாராம். வேட்டை நாய் வேகமாக ஒடி வேட்டைப் பொருள் சிக்கியவுடன் ஒட்டத்தின் வேகம் குறைவது போல, இந்நூலில் சுயம்வரகாண்டம் வரையில் இருக்கிற செய்யுள் நடைபோல் மற்றக் காண்டங்களில் இல்லை என்பது கருத்து. இத்தகைய புலமை வாய்ந்த அரசகுடும்பத்தில் அருமையான ஏட்டுச்சுவடிகள் ஏராளமாக இருந்தன. வரகுணராமன் காலமான பிறகு, அவருக்குச் சந்ததி இல்லாதபடியால், அவருடைய சொத்துகள் திரு நெல்வேலியில் கரிவலம்வந்த நல்லூரில் இருக்கும் பால்வண்ண நாதர் கோவிக்குச் சொந்தம் ஆயின. அவற்றுடன் அவருடைய நூல் நிலையத்திலிருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவிலுக்குச் சேர்ந்து விட்டன அவருடைய சொத்துகளைப் பெற்றுக்கொண்ட கோயில் அதிகாரிகள், வரகுணராமனுக்கு ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்துவருகின்றனராம். கோவிலுக்குக் கிடைத்த வரகுண பாண்டியனுடைய நூல் நிலையத்து ஏட்டுச்சுவடிகள் காலப்போக்கில் கவனிப்பார் அற்றுச் சிதிலமாய்ப் போயின. சில காலத்துக்குப் பிறகு அந்தச் சுவடிகள் கோவில் கணக்கு ஏட்டுச் சுவடிகளுடன் கலந்துவிட்டனவாம். பிற்காலத்தில் அந்த ஏட்டுக் குப்பையை ஒமத்தீயில் எண்ணெயில் தோய்த்துக் கொளுத்திவிட்டார் களாம். 1889ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதய்யர், பால் வண்ண நாதர் கோயில் ஏட்டுச்சுவடிகளைப் பார்ப்பதற்குக் கரிவலம்வந்த நல்லூருக்குப் போனாராம். போய்க் கோவில் தர்மகர்த்தாவைக் கண்டு பேசினாராம். அதற்குத் தர்மகர்த்தா சொன்ன விடை இது: “குப்பைகூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களையெல்லாம் ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள். பழைய ஏடுகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.” இது தெரிந்த செய்தி; தெரியாத செய்திகள் எத்தனையோ! மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூல்நிலையத்தில் இருந்த ஏட்டுச் சுவடிகளில் பல, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் தீப்பிடித்து எரிந்துபோயின. அவற்றில் அச்சில் வராத சிலபல ஏட்டுச்சுவடிகளும், இருந்தனவாம். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பத்து உரைகளும், அதில் இருந்தனவாம்: வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம். ஆற்று வெள்ளத்தில் ஏட்டுச்சுவடிகள் பதினெட்டாம் பெருக்கு ஆற்று வெள்ளத்தில் போடப்பட்ட ஏடுகள் எத்தனை என்று கணக்குச் சொல்லமுடியாது. கவிராயர்கள், புலவர்கள், வித்துவான்களின் வீடுகளில் இருந்த ஏட்டுச்சுவடிகள், அவர்கள் பரம்பரையில் வந்த படிப்பில்லாத முழுமக்களிடம் சிக்கி விடும். கல்வி வாசனையற்ற அவர்கள் அந்த நூல்களின் அருமை பெருமைகளை அறியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும், இடத்தை அடைத்துக்கொண்டு வீணாகக் கிடக்கிறதே என்ற கவலையுடன் அவற்றைக் கொண்டு போய் ஆற்று வெள்ளத்தில் போட்டுவிடுவார்கள். இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். 1890ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக்கொண்டு டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் திருநெல்வேலிக்குச் சென்றார். சென்று, திரிகூடராசப்பகவிராயரை உடன் அழைத்துக் கொண்டு, கவிராயரின் உறவினரான திருநெல்வேலி தெற்குப் புதுத் தெரு, வக்கீல் சுப்பையாபிள்ளை வீட்டுக்குப் போய் அவரைக் கண்டார். கண்டு, பரம்பரையாக அவர்கள் வீட்டில் இருந்துவந்த ஏட்டுச் சுவடிகளைக் காட்டும்படி கேட்டார். அதற்கு, ஆங்கிலம் படித்த, ஆனால், தமிழ் படிக்காத அந்த வக்கீல் கூறினாராம்: “எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோஜன மில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். ஆற்றிலே போட்டுவிடலா மென்றும் ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டி ஆற்றில் விடுவது சம்பிரதாயம் என்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஒர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்.” இச்செய்தியை வக்கீல் ஐயா கூறிமுடித்த பிறகு, உடன் வந்திருந்த திரிகூடராசப்பக் கவிராயர் சொன்னாரம்: “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச்சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டுபோன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை அறைந்து, அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின்மேல் வைத்தேன். அவர் பிடுங்கி பீரோவின்மேல் வைத்த கட்டிலிருந்துதான் சாமிநாதையருக்குத் திருப்பூவணநாதர் உலாவும், சிலப்பதிகாரத்தைச் சேர்ந்த சில ஏடுகளும் கிடைத்தனவாம். இதுபோன்ற பதினெட்டாம் வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் விடப்பட்ட ஏடுகளின் எண்ணிக்கை எத்தனையோ! அவற்றில் என்னென்ன நூல்கள் போயினவோ, யார் அறிவார்? செல் அரித்தல் நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்குமேல் செல்லரித்து விட்டன: இப்போதுள்ள தேவாரப் பாடல்கள் அவற்றில் எஞ்சி நின்ற சிறு பகுதியே. தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏட்டுச்சுவடிகள், தில்லைச் சிற்றம்பத்திலே ஓர் அறையிலே வைக்கப்பட்டிருந்ததை அநபாய சோழ மகாராசன் அறிந்து, அவ்வேடுகளை எடுக்கச் சென்றான். சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, வன்மீகம் (சிதல்) அரித்து மண்மூடிக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டு மனம் வருந்தினான். பிறகு, குடங்குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளறிப் பார்த்தபோது, சில ஏடுகள் மட்டும் எஞ்சியிருந்தன. இவ்வாறு எஞ்சி நின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப் பதிகங்கள், தேவாரத்தின் பெரும்பகுதி மறைந்துபோயின. தேவாரப் பதிகங்களைச் சிதல் தின்ற செய்தியைத் திருமுறை கண்ட புராணம் இவ்வாறு கூறுகிறது: ஐயர்நட மாடும்அம் பலத்தின் மேல்பால் அருள்பெற்ற மூவர்தம் அருள்சேர் செய்ய கையதுவே யிலச்சினையா யிருந்த காப்பைக் கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப் பொய்யுடையோர் அறிவுதனைப் புலன்கள் மூடும் பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன்னை நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப்பளவி னிற்சிந்தை நொந்த வேந்தன். பார்த்ததனைப் புறத்துய்ப்ப வுரைத்து மேலே படிந்திருந்த மண்மலையைச் சேரத் தள்ளிச் சீர்த்ததில தயிலமலி கும்பங் கொண்டு செல்லுநனை யச்சொரிந்து திருவே டெல்லாம் ஆர்த்தஅரு ளதனாலே யெடுத்து நோக்க அலகிலா ஏடுபழு தாகக் கண்டு தீர்த்தமுடிக் கணிபரனே பரனே என்னச் சிந்தைதளர்ந் திருகணீர் சோர நின்றான். இவ்வாறு செல்லரித்து அழிந்துபோன நூல்கள் இன்னும் பலப்பல. இக்கறையான்கள் இன்னும் தமது அழிவு வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அயலார் படையெடுப்பு அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைந் திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்க ளில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள். தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர் செய்து அரசைக் கைப்பற்றிய காலத்தில், தமிழ் நூல் நிலையங்கள் கவனிக்கப் படாமல் மறைந்தன. விஜயநகர அரசரால் அனுப்பப் பட்டு, தமிழ் நாட்டைப் பிற்காலத்தில் அரசாண்ட நாயக்க மன்னர்கள், பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் அரசாண்டனர், அவர்கள், சமயங் களையும் சமயப் புலவர்களையும் போற்றினார்களே தவிர, தமிழ் மொழிப் புலவரைப் போற்றவில்லை; பழைய தமிழ் நூல்நிலையங் களையும் போற்றவில்லை. பாண்டிய சோழ அரசர்களின் புத்தக நிலையங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. பிற்காலத்தில் தஞ்சாவூரை அரசாண்ட மராட்டிய அரசர்களும் பழந்தமிழ் நூல்களைப் போற்றினார்கள் என்று கூறமுடியாது. சரஸ்வதி மகால் புத்தகசாலையில் சில தமிழ் நூல்களும் இருந்தன என்றாலும், முக்கியமான சிறந்த தமிழ் நூல்கள் அங்கு இருந்ததாகத் தெரிய வில்லை. இலங்கையில், யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தமிழர்கள்: அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடையவர்கள். யாழ்ப்பாணத்தில் இவ் வரசர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள்; சரஸ்வதி மகாலயம் என்னும் புத்தகசாலையையும் வைத்திருந் தார்கள். பிற் காலத்தில் சிங்கள மன்னன் இம் மன்னர்களுடன் போர் செய்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்த இந்தப் புத்தகசாலையை அழித்துவிட்டான். அவன் தமிழனல்லாத சிங்களவன்: ஆகையால், தமிழ் நூல்களை அழிப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. சேரநாடு பிற்காலத்தில், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மலை யாள மொழியுள்ள நாடாக மாறிற்று. தமிழ் நூல்களைப் பற்றி மலையாளிகளில் பெரும்பான்மையோர் கவலைப்படவில்லை, அந்தச் சேரநாட்டுத் தமிழ் நூல்கள் போற்றுவார் அற்றுப்பையப்பைய மறைந்துபோயின. அந்நூல்களில் சில, மலையாள எழுத்தினால் எழுதப்பட்டுப் போற்றப்பட்டுவந்தன. வலைவீசு புராணம், பொன்னி புத்தான கதை முதலியவை அவற்றைச் சேர்ந்தவை. இவ்விரண்டு நூல்களும் மலை யாள எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் அறியாதவர் களால் பதிப்பிக்கப்பட்டபடியால் அவைகளில் பல செய்யுள்களின் சரியான உருவம் தெரியாமல் சிதைந்து காணப்படு கின்றன. மலையாள எழுத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் நூல்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மறைந்துபோகின்றன. மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருப்பதனால், அந்த எழுத்தை அறியாத தமிழர் அவை இன்ன நூலென்றும் அறிவதில்லை, மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி தமிழாக இருப்பதனால், தமிழ் அறியாத மலையாளிகள் அந்நூல்களைப் போற்றுவதில்லை: இவ்வாறு மலை யாள எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் மறைந்துபோகின்றன. தமிழ் நாட்டிலே கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், அரசியல் நிலை மிக மோசமாய்விட்டது. மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் வேற்று மொழிக்காரர்களும் நமது நாட்டிலே வந்து, அரசியற் குழப்பங் களையும் போர்களையும் உண்டாக்கி, நாட்டின் அமைதியைக் கெடுத்துப் பாதுகாப்பை அழித்தனர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், முகம் மதியர்களும், மராட்டி யரும் அந்த நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்த்திய அட்டூழி யங்கள் சொல்லிமுடியா. பெரிய நகரங்கள் முதல் சிறிய பட்டி தொட்டிகள் வரையில் அவர்களின் அட்டூழியம் மக்களைத் தாக்கியது. குழப்பங்களும், கொலையும், கொள்ளையும், போர்களும், கலங்களும், படையெடுப்புகளும் தென் இந்தியா முழுவதும் நிகழ்ந்தன. அந்தக் காலத்தில்தான் பெரும்பான்மையான பழைய நூல்கள் அழிந்து மறைந்தன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த மக்கள், நூல்களைப் போற்றிவைப்பதில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? சமயப் பகைமைகளுக்கும் செல்லுக்கும் சிதலுக்கும் உயிர் தப்பி எஞ்சியிருந்த அருமையான சில நூல்கள், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அரசியற் குழப்பத்திலே பெரிதும் மறைந்து விட்டன. இவ்வாறு சில முக்கியக் காரணங்களினாலே பல தமிழ் நூல்கள் மறைந்துபோயின. எத்தனை நூல்கள் மறைந்து போயின என்பதைக் கணக்கிட முடியாது. உரையாசிரியர்களும், நூலாசிரியர் களும், சாசனங்களும், குறிப்பிட்டுள்ள மறைந்துபோன நூல்களைப் பற்றிதான் அறிய முடியும்; குறிப்பிடப்படாமல் மறைந்துபோன நூல்களை நாம் அறிவதற்கு வழியில்லை. இப்பொழுதுங்கூடச் சில நூல்கள் ஏட்டுப் பிரதிகளாகவே உள்ளன. அவைகளைக் கண்டுபிடித்து விரைவில் அச்சிட்டு வெளிப்படுத்தா விட்டால், அவையும் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியா ளரும் நாட்டவரும் இதில் கருத்துச் செலுத்தி ஆவன செய்வார்களாக. *** இப்புத்தகத்தை எழுதத் துணையாக இருந்த நூல்கள் தமிழ் 1. இறையனார் அகப்பொருள் உரை. 2. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - வித்வான் சி. கணேசையர். 3. என் சரித்திரம் - டாக்டர் உ.வே. சாமிநாதையர். 4. ஐங்குறுநூறு - உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 5. ஐந்திணை எழுபது-மூவாதியார். 6. கயாதர நிகண்டு - கயாதரர். 7. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார். 8. களவியற்காரிகை பழைய உரை-எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பு. 9. கைந்நிலை - புல்லங்காடனார். 10. சிதம்பரப் பாட்டியல் - பரஞ்சோதியார். 11. சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரை. 12. சிலப்பதிகாரம், அரும்பத உரை. 13. சிவஞான சித்தியார், பரபக்கம் - ஞானப்பிரகாசர் உரை. 14. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்-அந்தகக் கவி வீரராகவ முதலியார். 15. சோழமண்டல சதகம்-ஆத்மநாத தேசிகர். 16. தக்கயாகப் பரணி பழைய உரை - ஒட்டக்கூத்தர். 17. தண்டியலங்காரம் பழைய உரை - தண்டி. 18. தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்) - T. V. சதாசிவ பண்டாரத்தார். 19. தமிழ் நாவலர் சரிதை. 20. தமிழ்ப் புலவர் சரித்திரம்-சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர். 21. தமிழ்நெறி விளக்கம் உரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 22. திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார். 23. திருக்குறள் - பரிப்பெருமாள் உரை. 24. திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி. 25. திருமுறை கண்ட புராணம் - உமாபதி சிவாசாரியார். 26. திருவீங்கோய்மலை எழுபது - நக்கீரதேவ நாயனார். 27. திவாகர நிகண்டு - திவாகரனார். 28. தேவாரம் - அப்பர் சுவாமிகள். 29. தேவாரம்-சுந்தரமூர்த்தி சுவாமிகள். 30. தொல்காப்பியம் - இளம்பூராண அடிகள் உரை. 31. மேற்படி - தெய்வச்சிலையார் உரை. 32. மேற்படி - நச்சினார்க்கினியர் உரை. 33. மேற்படி - பேராசிரியர் உரை. 34. நம்பியகப்பொருள் உரை - நாற்கவிராச நம்பி. 35. நந்திக் கலம்பகம். 36. நவநீதப் பாட்டியல் பழைய உரை - நவநீதனார். 37. நன்னூல் - மயிலைநாதர் உரை. 38. நற்றிணை - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு. 39. நீலகேசி - சமய திவாகர வாமன முனிவர் உரை. 40. நேமிநாதம் உரை - குணவீர பண்டிதர். 41. பரதசேனாபதீயம் - எஸ். கலியாணசுந்தரையர் பதிப்பு. 42. பரிபாடல் - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 43. பாரத வெண்பா - பண்டித அ. கோபாலையர் பதிப்பு. 44. பிற்காலச் சோழர் சரித்திரம் 2ஆம் பாகம் - பேராசிரியர் டி. வி. சதாசிவ பண்டாரத்தார். 45. புறநானூறு - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 46. பெருங்கதை - கொங்குவேள். 47. மூத்தநாயனார் மும்மணிக்கோவை - அதிராவடிகள். 48. வீரசோழியம் - பெருந்தேவனார் உரை. ஆங்கிலம் 1. Annual Report of Epigraphy. Madras: 1905. 1922. 1923-24, 1928-29, 1930-31, 1931-32, 1937-38 2. Inscriptions of the Pudukkottai State. 3. South Indian Incriptions, Vols. II, III, & VII. 4. “Tamil Historical Texts” V. Kanakasabhai pillai: Indian, Antiquary, Vol. XXII. அடிக்குறிப்புகள் 1. இச்செய்யுள் நம்பி அகப்பொருள் உரையிலும் மேற்கோள் காட்டப் பட்டுள்ளது. 2. மூன்றாவது அடியில் சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன. 3. திருத்தொண்டர் திருவந்தாதி. 4. இந்தச் செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். அகத்திணை. 51 ஆம் சூத்திரம்) தமது உரையில் பாடபேதத்துடன் மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டும் பாடம் இது: “ உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிரீ இயரென் னுயிரே. இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சி யாயிற்று.” 5. இச்செய்யுள் ‘தமிழ்நெறி விளக்கத்’ திலும் மேற்கோள் காட்டப் படுகிறது. 6. செந்தமிழ், மூன்றாந் தொகுதி அடிக்குறிப்புகள் 1. இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். புறத் திணையியல், “கூதிர் வேனில் என்றிரு பாசறை” என்னும் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். 2. இவ்வாறே, சிலப்பதிகாரத்தையும், கோவலன் வரலாறு நிகழ்ந்த மிகப் பிற்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டது என்று, அகச்சான்று புறச்சான்றுகளைப் பாராமல் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார். அதைப்பற்றி ஆராய்வதற்கு இது இடம் அன்று சமயம் வாய்ப்புழி ஆராய்வோம். 3. என் சரித்திரம், பக்கம் 876-877; 1950-ஆம் ஆண்டுப் பதிப்பு. 4. “மொய்வேற் கையர்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை, “கொள் ளார்தேஎங் குறித்த கொற்றமும்” என்னும் சூத்திரவுரை). “இது, பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என்று விளக்கம் எழுதுகிறார். 5. “நாளும் புள்ளும்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க் கினியர் தொல்காப்பிய (பொருள். புறத்திணை, “படையியங் கரவம்” என்னும் சூத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, “இது விருச்சி விலக்கிய வீரக்குறிப்பு” என்று விளக்கம் எழுதுகிறார். ஆனால், இது எந்த நூல் செய்யுளென்பதைக் குறிக்கவில்லை. இது தகடூர் யாத்திரை என்னும் நூலைச் சேர்ந்தது என்பது புறத்திரட்டி னால் அறியக் கிடக்கிறது. 6. “இருநில மருங்கின்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க் கினியர் தொல்காப்பிய (பொருள். புறத்திணை “படையியங்கரவம்” என்னும் சூத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, “இது மறவர் கூற்று” என்று எழுதுகிறார். ஆனால், இது எந்நூற் செய்யுளென்று கூறவில்லை. புறத்திரட்டினால், இது தகடூர் யாத்திரைச் செய்யுள் என்பது தெரிகிறது. 7. “தற்கொள் பெருவிறல்” என்னும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர் தொல். பொருள். புறத்திணை, “தானை யானை குதிரை என்ற” என்னும் சூத்திர உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இது எந்த நூற் செய்யுள் என்பதைக் கூறவில்லை. புறத் திரட்டிலிருந்து இது தகடூர் யாத்திரைச் செய்யுளென்று தெரிகிறது. இளம்பூரண அடிகளும் இச்செய்யுளை மேற்கோள் காட்டி, “இஃது ஓர் வீரன் கூற்று” என்று எழுதுகிறார். (தொல். புறத்திணை. “தானை யானை” உரை.) 8. “கார்த்தரும்” எனத் தொடங்கும் இச்செய்யுளை, நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை. ‘இங்கு படையரவம்’ சூத்திர உரை), “இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு (சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு) கூறியது” என்று விளக்கம் கூறுகிறார். 9. “இன்ப முடம்புகொண் டெய்துவீர்” எனத் தொடங்கும் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (பொருள். புறத் திணை. ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் என்னும் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், இச்செய்யுளின் கடைசி அடிக்குப் பாடபேதமும் காட்டுகிறார்: “இனி வேலிற் பெயர்ந்த மனைவி” என்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப் போக்கின மனைவி என்று பொருள் கூறுவாருமுளர்” என்று எழுதுகிறார். 10. “எற்கண்டறிகோ” என்னும் தொடக்கத்துச் செய்யுளை நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை. ‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்’ என்னும் சூத்திர உரை). “இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை” என்று விளக்கம் எழுதியுள்ளார். 11. “வாதுவல் வயிறே” என்னும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். புறத்திணை. ‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய’ பெருமையும் என்னும் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டி, “இத்தகடூர் யாத்திரை, கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய் தபவந்த தலைப் பெயனிலை” என்று விளக்கம் எழுதுகிறார். 12. “இரவலர் வம்மின்” என்னும் இச் செய்யுளினை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (தொல். பொருள். புறத்திணை. ‘மாற்றருங் கூற்றம்’ என்னும் சூத்திரவுரை) மேற்கோள் காட்டியுள்ளார். 13. தொல். பொருள். புறத்திணை. சூத். 35இன் உரையில் நச்சினார்க் கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 14. தொல். பொருள். புறத்திணை., 21இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 15. தொல். பொருள். புறத்திணை., 21இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 16. தொல். பொருள். புறத்திணை., 20இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 17. தொல். பொருள். புறத்திணை., 3இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 18. தொல். பொருள். புறத்திணை., 3இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். 19. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதனை மேற்கோள் காட்டுகிறார். 20. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதனை மேற்கோள் காட்டுகிறார். 21. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதனை மேற்கோள் காட்டுகிறார். 22. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதனை மேற்கோள் காட்டுகிறார். 23. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதை மேற்கோள் காட்டுகிறார். 24. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதை மேற்கோள் காட்டுகிறார். 25. தொல். பொருள். புறத்திணை., சூத் 3இன் உரையில், நச்சினார்க் கினியர் இதை மேற்கோள் காட்டுகிறார். 26. தொல். பொருள். புறத்திணை., 21ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 27. தொல். பொருள். புறத்திணை. 12ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 28. தொல். பொருள். புறத்திணை. 8ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 29. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 30. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 31. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 32. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 33. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 34. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 35. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 36. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 37. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 38. தொல். பொருள். புறத்திணை. 13ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 39. தொல். பொருள். புறத்திணை. 17ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 40. தொல். பொருள். புறத்திணை. 17ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 41. தொல். பொருள். புறத்திணை. 21ஆம் சூத். நச்சர் உரை மேற்கோள். 42. வீரசோழியம், அலங்காரப் படலம், உரை மேற்கோள். 43. இந்தப் பரணியின் பெயர் தெரியவில்லை. கூடல் சங்கமத்துப் போரை வென்றமை யால் இதற்குக் கூடல் சங்கமத்துப் பரணி என்று பெயர் சூட்டலாம். Tamil Historial Texts, V. Kanakasabhai Pillai, Indian Antiquary, vol. XXII. 44. S.I.I. Vol. VII No. 1046. 45. S.I.I. Vol. VII No. 551. 46. Inscriptions (Texts) of the Pudukkottai State, No. 966. 47. Inscriptions (Texts) of the Pudukkottai State, No. 278. அடிக்குறிப்புகள் 1. S.I.I. Vol. III, page 454. 2. இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனாரையும், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரையும் ஒரே ஆள்கள் என்று மயங்கி, ஆர்க்கியலாஜி இலாகா அறிக்கையில் தவறான செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். இத்தவற்றினை விளக்கி எனது “மூன்றாம் நந்திவர்மன்” என்னும் நூலில் எழுதியுள்ளேன். 3. EP. Collection 48 of 1905. Ep. Rep. 1906. P. 70 482 of 1905. A. D. 1210. திருவாலங்காடு N.A.Dt. “பாரதந்தன்னை அருந்தமிழ்ப் படுத்து சிவநெறி கண்ட 482 of 1905. 4. இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்தவர், இலங்கையில் உள்ள என்னுடைய நண்பர் அருள் திரு பண்டிதர் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரோ அவர்கள். 5. இச்செய்யள், நீலகேசி உரையில் (கடவுள் வாழ்த்து) மேற்கோள் காட்டப்பட்டது. 6. இது, குண்டலகேசி, கடவுள் வாழ்த்துச் செய்யுள். இச்செய்யுளை வீரசோழிய உரையாசிரியர், யாப்பதிகாரம், 3ஆம் காரிகை யுரையில் மேற்கோள் காட்டியுள்ளார். 7. தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 133 உரை. 8. தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 223 உரை. 9. டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள், ‘என் சரித்திரம்’, பக்கம் 858; 1950 ஆம் ஆண்டுப் பதிப்பு. 10. இச்செய்யுளை அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், நாடுகாண் காதை. 241ஆம் அடி உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். அடிக் குறிப்புகள் 1. EP. Rep., 1930-31, page 44. 2. EP. Rep., 1937-38, page 54. 109-110 3. No. 751, Page 382, South Indian Inscriptions, Vol. VII. 4. No 753, page 382, South Indian Inscriptions Vol. VII 5. 75 of 1924, 71 of 1927; Annual Report of South Indian Epigraphy 1923-24 page 107. 6. Ep. Coll. 198 of 1919; Ep. Rep. 1919 l.c. 98 (131 of 1918). 7. Ep. Coll. 333 of 1906. 8. Page 2,3, “Avantisundari Kathasara” by H. Harihari Sastri-Published by K.S.R. Institute, Mylapore, Madras, 1957: 9. தமிழ் இலக்கிய வரலாறு 13, 14, 15ஆம் நூற்றாண்டுகள். T. V. சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1955. 10. Epi. Collection No. 261 of 1938-1939, South Indian Epigraphy Annual Report for 1938-1939.) (Annual Report on S.I. Epigraphy 1943-44 and 44-45.) 11. Ep. Coll. 401 of 1937-38. 12. Ep. Rep. 1928-29, Part II, Para 69. Ep. Rep. 1931-32, Part III Para 43, Ep. Rep. 1937-38, page 109. 13. Epi. Collection. 71 of 1924 14. குறிப்பு: இந்நூல் சில ஆண்டுகளுக்குமுன் அச்சாகி வெளிப் போந்ததாம். இப்பொழுது கிடைக்கவில்லை. 15. Ep Rep. 1905, Page 24. Ep. Coll. 548 of 1904 l. c. அடிக் குறிப்புகள் 1. ஸ்ரீஇராஜராஜ விஜயம் என்னும் பெயருள்ள நூல் ஒன்றை சவர்ணன் நாரண பட்டாதித்தன் என்பவன் இயற்றினான் என்று திருப்பூந்துருத்திச் சாசனம் ஒன்று கூறுகிறது. (Annual Report on S.I. Epigraphy, 1930 - 31). ஆனால், இது வடமொழி நூலா, தமிழ்மொழி நூலா என்பது தெரியவில்லை இந்நூலும் கிடைக்கவில்லை. 2. S.I. Vol. II, Page 306 - 307; 120 of 1931; A.R.E. 1932 11 & 12 3. Ep. Coll. 444 of 1929-30. 4. No. 7563 page 382. South Indian Inscriptions, Vol. VII. அடிக்குறிப்புகள் 1. சீவக சிந்தாமணி கூறுவது இந்தப் பல்லவ நாடு அன்று; அது பஃல்லவ நாடு என்று பெயர் பெற்றிருந்த பழைய பாரசீக நாடாகும். பதுமையார் கலம்பகம், படுமறை பருவம், பொய்யா பல்லவ தேயம். 2. இந்த அவிநயச் சூத்திரத்தை மயிலைநாதர் தமது நன்னூல் உரையில் (எழுத்தியல், 5ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். 3. எனப் பொது வகையாற் கூறி, இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று விருத்தியுள் விளக்கிக் கூறினார். 4. யாப்பருங்கலக் காரிகைக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில் (39ஆம் காரிகை) இந்த வெண்பாவை மேற்கோள் காட்டியுள்ளார். 5. ‘சிறுகாக்கைபாடினியம்’ என்னும் தலைப்பு காண்க. 6. இச் சூத்திரத்துக்கு மயிலைநாதர், நன்னூல் 268 ஆம் சூத்திர வுரையில் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: “குன்று என்புழி, ‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான்’ என்னும் பாட்டும், கூதிர் என்புழி, ‘கூதிர் கொண்டிருடூங்கும்’ என்னும் பாட்டும், பண்பு என்புழி, ‘பண்பு கொள் செயன்மாலை’ என்னும் பாட்டும், தோழி என்புழி, ‘தோழி வாழி தோழி வாழி, வேழ மேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டும், விளியிசை என்புழி, ‘விளியிசைப்ப விண்ணக நடுங்க’ என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி, ‘முத்துற வந்தேங்கி’ என்னும் பாட்டும், குறிப்பினான் முதனின்ற மொழியான் அறியவந்தன. ” 7. இது காக்கைபாடினியார் சூத்திரம் என்றும் கூறப்படுகிறது. 8. இச்சூத்திரம் ‘நக்கிரர் அடிநூல்’ என்னும் நூலின் சூத்திரம் என்றும் கூறப்படுகிறது. 9. இது பாடலனாருரையின் மேற்கோள் என்பர். 10. மேற்படி வெண்பா பூதபுராணச் செய்யுள் என்றும் கூறப்படுகிறது. எனவே, இது மாபுராணச் சூத்திரமா அல்லது பூதபுராணச் சூத்திரமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அடிக்குறிப்புகள் 1. சிலம்பு 8-27 அடி உரை மேற்கோள் அடியார்க்கு நல்லார் 2. 8 - 27 அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் 3. இவை, சிலம்பு 8 : 33 - 34 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியவை. 4. இவை, சிலம்பு 8 : 31 - 32 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியர் மேற்கோள் காட்டியவை. 5. இச்செய்யுள் சிலம்பு: 8 31 - 32 அடிகளின் உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டியது. 6. இச்செய்யுள்களை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார 6: 64 - 108 உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.