மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12 தமிழகக் கலை வரலாறு சிற்பம் - கோயில் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அப்பார்ட்மெண்ட், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர் என்பது கடந்த காலவரலாறாகும். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை நடத்திச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1930-1980 இடைப்பட்ட காலங்களில் பல்வேறு துறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ், அந்ததுறை தொடர்பான அனைத்து விவரங்களையும் சேர்த்து வெளியிட்டார். மகேந்திர வர்மன் பற்றிய நூல் எனில், அம்மன்னனி வரலாறு, அவன் காலத்து இசை, சிற்பம், கட்டிடடக்கலை, கல்வெட்டுப் பதிவுகள் என்று அனைத்து விவரங்களையும் தொகுத்துக் கொடுத்திருப்பதைக் காண்கிறோம். பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப் படாமலும் இருந்தன. இந்நூலில் குறிப்பிட்ட பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு, அந்ததுறை தொடர்பான அனைத்து விவரங்களும் தொகுத்து கொடுக்கப்படுகின்றன. சிற்பம் மற்றும் கோயில் கலை தொடர்பாக மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியவை இத்தொகுதியில் இடம் பெறுகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் பின்காணும் வகையில் தொகுக்கலாம். - கலைகளைப் போற்றவேண்டியதன் தேவை - சிற்பக்கலைகள் எவ்விதம் உருவாக்கப்படுகின்றன? - சமய மரபுகளுக்கும் சிற்பக் கலைக்கும் உள்ள தொடர்பு - பல்வேறு தெய்வ உருவங்களின் அமைப்பு - கோயில்களில் சிற்பங்கள் அமைக்கப்படும் முறை - பல்லவ மன்னர்கள் காலத்து சிற்பங்கள் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கலை வடிவங்கள், இன்றைய சூழலில் சிதைந்து கொண்டிருப்பது குறித்து பெரிதும் கவலைப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்தப் பிண்புலத்தில் கலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விரிவான திட்டங்களை முன்வைப்பதைக் காணமுடிகிறது. தமிழகச் சூழலில் சிற்பங்கள் என்னென்ன பொருட்களில் உருவாக்கப்படுகின்றன? அவ்வகையான சிற்பங்களைக் குறித்து எவ்வகையில் புரிந்து கொள்வது? தெய்வ உருவங்கள் இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், பிரதிமை உருவங்கள் என்று நான்கு பிரிவுகளாக சிற்பங்கள் அமைந்திருக்கும் பாங்கு ஆகிய பிறவற்றைக் குறித்த விளக்கங்களை இந்நூலில் காண்கிறோம். தெய்வங்களின் வழிபாட்டு மரபு என்பது உருவங்களைக் கட்டவிழ்த்து அதனை வழிபடும் போக்கில் அமைந்திருப்பதாகும். தமிழ்ச்சூழலில் எவ்வெவ் வகையான தெய்வ உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டன. அவ்வுருவங்களின் அமைப்புகளை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உரையாடல் இந்நூலில் விரிவாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். சைவ மரபு சிற்பங்களுக்கும் வைணவ மரபு சிற்பங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் அறிய முடிகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கற்சிற்பங்கள் நமக்கு மிகுதியாக கிடைக்கின்றன. தொடக்க கால கற்சிற்பங்களை உருவாக்கியவர்கள் பல்லவ மன்னர்கள் ஆவர். எனவே ஒவ்வொரு பல்லவ மன்னன் காலத்திலும் உருவான சிற்ப மரபு குறித்து இந்நூல் மூலம் அறிய முடிகிறது. தமிழகக் கோயில் உருவாக்க வரலாற்றிற்கும் சிற்பக் கலைக்கும் நெருக்கமான உறவுண்டு. இத்தன்மை இந்நூலில் விரிவாக விவாதிக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது. குகைக் கோயில்களிலிருந்து தொடங்கி படிப்படியாக உருவான கோயில் மரபுகளை நாம் புரிந்து கொள்வது அவசியம். கோயில்களில் மாடங்கள் அமைக்கப்படுவதன் தன்மைகள் விரிவாகப் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆலக்கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொடுடிக்கோயில், மணிக்கோயில் எனப் பல்வேறு வகையான கோயில்கள் தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் பாங்கை அறிய முடிகிறது. இத்தன்மைகள் திராவிடக் கட்டிடக் கால வரலாற்றில் பெரும் பங்கு குறித்தும் நாம் அறிய முடியும். பழைய காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், விஜய நகர மன்னர்கள் காலம் என்ற விரிவான காலப் பாகுபாட்டில், சிற்பங்கள் உருவாக்கப் பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நூலில் காணப்படும் செய்திகள் மேற்குறித்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் தொடர்பான விவரங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். தமிழகச் சிற்ப வரலாறு; அவை உருவாக்கப்பட்ட காலம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சிற்ப உருவங்கள் கூறும் விளக்கங்கள் ஆகிய பிற அடிப்படையில் எழுதும் அவசியம் உண்டு. சமய மரபுக் கண்ணோட்டமின்றி, கலைமரபுக் கண்ணோட்டத்தில் இவ்வகையான வரலாறுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வகையான வரலாறு எழுதும் போது இந்நூல் அடிப்படையான ஆவணமாக அமையும். கட்டிடடக்கலை வரலாறு, சிற்ப வரலாறு ஆகியவை தம்முள் ஒன்றோடு ஒன்று இணைந்தே அமைந்திருப்பதாகக் கூறலாம். திராவிடக் கட்டிடக்கலை வரலாற்றில் இத்தன்மை ஆழமாகச் செயல்படுவதைக் காண்கிறோம். இப்பின்புலத்தில் கலை வரலாற்று மாணவர்களுக்கு இந்நூல் அறிய கையேடாக அமைய வாய்ப்புண்டு. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் கட்டிடடக் கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றை விரிவாக கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வகையான ஆய்வுகள் தமிழில் மிகவும் குறைவு. இதில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இடம் தனித்தே இருப்பதைக் காண்கிறோம். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96. வீ. அரசு ஏப்ரல் 2010 தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியதுறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் தமிழகக் கலை வரலாறு கலைகளைப் போற்றுக 18 சிற்பக் கலை 41 சிற்பக் கலையில் தாமரை 54 சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள் 57 சிவன் திருமால் உருவ அமைப்பு 64 கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம் 68 இலிங்கோத்பவ மூர்த்தம் 75 கோயில் சிற்பங்கள் 80 சிற்பங்கள் 87 கொற்றவை 94 வாள் வீரன் 100 சிற்பக்கலை 101 மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1950 என்ற குறுநூல் மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 144 சிற்ப காட்சியின் விளக்கம் 154 பிற கட்டுரைகள் கட்டிடக் கலை 170 கோயில்கள் 195 குகைக்கோயில்கள் 201 கோயில்கள் 244 கட்டடக்கலை 271 சங்கநிதி பதுமநிதி 276 யானைக்கோவில் 282 பௌத்தக்காலத்து யானைக்கோவில் 285 பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் 295 படவிளக்கம் 310 தமிழகக் கலை வரலாறு சிற்பம் - கோயில் கலைகளைப் போற்றுக* நமது மூதாதையர் வளர்த்த அழகுக்கலைகளைப் பற்றிய வரலாற்றை மேல் வாரியாகக் கூறினோம். இக்கலைகள் குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளன. இக்கலைகள் இப்போது அழிந்து கொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் வருவதை நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. ஏனென்றால், நம்மவரில் பெரும்பான்மையோருக்கு, நூற்றில் தொண்ணுற் றொன்பது பேருக்கு, கலைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இது வருந்தத் தக்க நிலையாகும். நமது முன்னோர் தலைமுறை தலைமுறையாக வளர்த்த கலைகளைப் போற்ற வேண்டுவது அவர் வழிவந்த நமது கடமை யாகும். கலைகளை அழித்துக் கொண்டும் அழிய விட்டுக் கொண்டும் இருப்பது, சமுதாயத்தின் வீழ்ச்சியை அல்லது பிற்போக்கைக் காட்டும் அறிகுறியாகும். ஏனென்றால், பழைய கலைகளுக்கும் சமுதாயத் திற்கும் தொடர்பு உண்டு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கலைகளும் அதனை யொட்டிய பண்பாடுகளும் சமுதாயத்தில் பரம்பரையாகத் தொடர்ந்து வந்துகொண்டே யிருக்கின்றன. ஆகவே, நமக்கு உரிமைப் பொருளாகிய நமது அழகுக் கலைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுவது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். தொன்றுதொட்டு, பல்லாண்டு, பல்லாண்டுகளாக வளர்ந்துள்ள இக்கலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். செங்கற் கட்டிடங்கள் விரைவில் அழிந்துவிடுவது இயற்கையே. கருங்கல்லினால் கட்டப்பட்ட கற்றளிகள் நெடுங்காலம் இருக்கு மானாலும், அவற்றைப் பேணிப்பாதுகாக்காமல் போனால், அவையும் காலப் போக்கில் அழிந்துவிடும். அவ்வாறு பல கற்றளிகள் அழிந்துவிட்டன; பல அழிந்துகொண்டு இருக்கின்றன. முதன் முதலாக அமைக்கப்பட்ட கல்கட்டிடங்களில் (கற்றளிகளில்) ஒன்று, மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிற மாமல்லபுரத்துக் கடற்கரை ஓரத்தில் இருக்கிற கோயில் ஆகும். இக் கோயில் ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதை அமைத்தவன் இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன். இவன் கி.பி. 695 முதல் 722 வரையில் அரசாண்டான். காஞ்சீபுரத்துக் கயிலாசநாதர் கோயிலைக் கட்டியவனும் இவனே. மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் இவன் கட்டிய மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், கடல் நீருக்கு அருகில் இருப்பதால், இக்கட்டிடத்து உள்புறத்திலும் மேல் புறத்திலும் ஈரமான உப்பங்காற்று இரவும் பகலும் வீசிக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக இக்கட்டிடத்தின் கருங்கற்கள் உளுத்துப் போய்விட்டதை இன்று காண்கிறோம். ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு, கடல் அலைகள் இக்கட்டிடத்தின் படிகளின் மேல் மோதிக் கொண்டிருந்தபோது, இக்கட்டிடம் சிறிது காலத்திற் குள்ளாக கடல் நீரினால் அழிந்துவிடும் என்று அஞ்சினோம். நற்காலமாக அரசாங்கத்துப் பழம்பொருள் ஆராய்ச்சித் துறையினர் (ஆர்க்கியாஜி இலாகா), இக் கோயிலில் கடல் அலைகள் மோதாதபடி கற்சுவர் அமைத்து அரண் செய்திருக்கிறார்கள். இதனால், இக் கோயிலுக்குக் கடல் நீரினால் ஏற்படவிருந்த ஆபத்து நீங்கிவிட்டது. ஆனால், தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தாவிட்டால், கடலில் இருந்து வீசுகிற நமிர்ப்பான உப்பங் காற்றினால் கற்கள் உளுத்து உதிர்ந்து பிறகு கட்டிடமே மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. பல்லவர், சோழர் காலத்துக் கோயில்கள் எல்லாக் கட்டிடங்களும் பழம் பொருள் பாதுகாப்பாளரின் மேற் பார்வையில் இல்லை. ஆகவே, பெரும்பான்மையான கட்டிடங்கள் சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. கடற்கரையிலுள்ள கற்றளிகள்தான் அழிந்து விடுகின்றன என்று கருத வேண்டாம். உள் நாட்டிலுள்ள கற்றளிகளும் அழிந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக உள்நாடாகிய காஞ்சீபுரத்து அயிராவதேசுவரர் கோயில், மதங்கேசுவரர் கோயில் இறவாஸ்தானக்கோயில் முதலியவைகளாகும். இக்கோயில் களை எல்லாம் அரசாங்கத்தார், அழியவிடாமல் தக்க முறையில் பாதுகாக்கவேண்டும். ஏனென்றால் பல்லவர் காலத்துக் கட்டிடங்கள் மிகச் சிலதான் இப்போது உள்ளன. இச் சிலவற்றையும் அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டுவது அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் கடமையாகும். பல்லவர் காலத்துக்குப் பிறகு கி. பி. 10ஆம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்ட சோழர் காலத்துக் கோயில் கட்டிடங்களும் சில அழிந்துபோயும் சில அழிந்துகொண்டும் இருக்கின்றன. புதுப்பிக்கும் திருப்பணி பழைய கோயில்களைப் புதுப்பிக்கிற திருப்பணியைச் செட்டி நாட்டுச் சீமான்கள் செய்து வந்தார்கள். அவர்களால் புதுப்பிக்கப் பட்ட பழைய கோயில்கள் பல. இதற்காக அவர்களைப் பாராட்டு கிறோம். ஆனால், அவர்கள் செய்த திருப்பணிகளில் சில குறைபாடுகளும் உள்ளன. குறைபாடு என்பதை விட அழிவு வேலை என்றே கூறலாம். அது என்னவென்றால் அந்தக் கோயில்களில் இருந்த பழைய சாசனக் கல்வெட்டுகளை அழித்துவிட்டது ஒன்று; பழைய சிற்பக் கலையைப் போற்றாதது மற்றொன்று. சாசனங்களைப் போற்றல் பழைய கோயில்களைப் புதுப்பிக்கும்போது அக்கோயில்களில் இருந்த பழைய சாசனங்களை இருந்த இடந்தெரியாமல் அழித்து விட்டார்கள். நமது நாட்டுச் சரித்திரம் எழுதுவதற்குச் சாசனங்கள் பேருதவியாக இருக்கின்றன. சாசனங்களை ஆராய்ந்து தான் நமது நாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. சாசனங்கள் சரித்திர ஆராய்ச்சிக்கு எவ்வளவு பேருதவியாய் இருக்கின்றன என்பது சரித்திர ஆராய்ச்சிக்காரருக்குத் தவிர மற்றப் பாமர மக்களுக்குச் சிறிதும் தெரியாது. மேலும் கோயில் சாசனங்களிலே, அக்கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலபுலங்களைப் பற்றியும் பொன் பொருள்களைப் பற்றியும் குறித்து வைப்பது வழக்கம். ஆகவே இந்தச் சாசனங்கள் அக்கோயில்களின் சொத்துக்களைப்பற்றிய ஆதாரங்களாகும். அவற்றை அழித்து விடுவது, அக்கோயிலுக்குரிய பத்திரங்களையும் ஆதாரங்களையும் அழித்துவிடுவதாகும் அல்லவா? கோயில்களைப் புதுப்பிக்கும் போது, பழைய சாசனங்களை அழிக்காமல் வைக்க வேண்டும். அல்லது அவற்றின் படி எடுத்து வேறு கற்களில் எழுதி வைக்க வேண்டும். சில சான்றுகள் பண்டைக் காலத்தில் கோயில்களைப் புதுப்பிக்கும் போது, அக்கோயில் சாசனங்களைப் படி எடுத்து எழுதி வைத்தார்கள். தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருக்கோடிகாவல் கோயிலைப் பண்டைக்காலத்தில் புதுப்பித்தவர் செம்பியன்மாதேவி யார் என்னும் சோழகுலத்து அரசியார். இவர் உத்தமச் சோழருடைய தாயார். இவ்வரசியார் இக்கோயிலைப் புதுப்பிப்பதற்கு முன்னர், இக் கோயிலில் இருந்த சாசனங்களையெல்லாம் படி எடுத்துக் கொண்டு, கோயில் வேலை முடிந்த பிறகு அப் படிச்சாசனங்களை இங்கு அமைத்திருக்கிறார். இவ்வாறு இருபத்தாறு சாசனங்களை இவர் படியெடுத்தமைத்திருக்கிறார். இதனால், இச் சாசனங்கள் அழியாமல் இருக்கின்றன. சாசனங்களைப் படி யெடுத்து அமைத்தார் என்பதற்குச் சான்று என்ன வென்றால், அச் சாசனங்களின் தொடக்கத்தில், “ஸ்வஸ்தி ஸ்ரீ. இதுவுமொரு பழங்கற்படி” என்று எழுதியிருப்பதுதான். இவ்வாறு பல சாசனங்கள் பாதுகாக்கப்பட்டதற்குப் பல சான்றுகளைக் கூறலாம். விரிவஞ்சிக் கூறாமல் விடுகிறோம். இக்காலத்தில் கோயில்களைப் புதுப்பிக்கிறவர் அவ்வாறு படி எடுத்துப் பாதுகாக்காமல் சாசனங்களை முழுவதும் அழித்துவிடு கிறார்கள். சாசன படிஎடுப்பாளர், பழம் பொருளாராய்ச்சி யாளர்கள் (எபிகிராபி, ஆர்க்கியாலாஜி இலாகா) கண்டுபிடித்துத் தமது அறிக்கை யில் கூறப்பட்ட சாசனங்களில் பல, இப்போது முழுவதும் அழிக்கப் பட்டுள்ளன. இதற்குக் காரணம், அவ்வறிக்கைகள் வெளிவந்த பிறகு, அச்சாசனம் உள்ள கோயிலைப் புதுப்பித்த “புண்ணியவான்கள்” சாசனங்களைப் படி எடுத்து அமைக்கவும் இல்லை; இருந்த சாசனங்களை அழியாமல் பாதுகாக்கவும் இல்லை. ஆகவே அச் சாசனங்கள் அழிந்துவிட்டன. அதனோடு சரித்திரச் செய்திகள் சிலவும் அழிந்துவிட்டன. இது நாட்டுக்குத் துரோகம் செய்தது ஆகாதா? நிற்க. பழஞ்சிற்பங்களைப் போற்றுக கோயிலைப் புதுப்பிக்கிறவர்கள் கோயிலின் தூண், சுவர் முதலியவைகளில் இருந்த பழைய சிற்ப உருவங்களையும் அழித்து விடுகிறார்கள். பழைய சிற்ப வேலைக்கும் இக்காலத்துப் புதுப்பிக் கிறவர்களின் சிற்ப வேலைக்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. பழைய சிற்ப உருவங்களில் கலையழகு காணப்படும். புதிய சிற்ப வேலைகளில் மட்டமான கலையழகு காணப்படுகிறது. இது மற்றொரு குறைபாடாகும். கோயில் அதிகாரிகள், கோயில்களில் இருக்கும் பழைய தூண்கள், சிற்ப உருவங்கள் முதலிய கற்களை, அவை பின்னப்பட்டு உடைந்துபோன காரணத்தினாலோ அல்லது அவை உதவாதவை என்னும் காரணத்தினாலோ, புறக்கணித்து எறிந்துவிடுகிறார்கள். இப்படிச் செய்வது பெருந்தவறு. பின்னம் அடைந்த அல்லது வேண்டியிராத சிற்பங்களை எறிந்துவிடக்கூடாது. அவற்றைப் பொதுமக்கள் பார்க்கத்தக்க இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அவையும் கலைச் செல்வங்களாகப் போற்றப்பட வேண்டும். சிலர் அத்தகைய கற்களைத் தனிப்பட்டவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வழக்கத்தையும் அரசாங்கத்தார் கவனித்து தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதைய தமிழன், தன் கலைப் பெருமையை யறியாத தன்மையன். தன் கண் முன்னே நாடெங்கும் காணப்படுகிற கலைச் செல்வங்களைக் கண்டு மகிழ இக்காலத்தமிழனுக்கு ஆற்றல் இல்லை என்றே கூறவேண்டும். கலைக்கண் இல்லாதபடியால் கலைச் செல்வங்களைக் கண்டு மகிழும் ஆற்றல் இல்லை. அதனோடு நின்றபாடில்லை. கலைச் செல்வங்களை அழிக்கவும் செய்கிறான். என்னே பேதமை! மேல் நாட்டாரின் கலை ஆர்வம் நமது கலைகளின் மேன்மையையும் சிறப்பையும் அழகையும் நம்மவர் அறிந்திராவிட்டாலும், அயல்நாட்டவராகிய மேல்நாட்டார் நன்குணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தமது நாட்டுக் கலைகளைப் போற்றுவதோடு நமது நாட்டுக்கலையையும் போற்றுகிறார்கள். இதனால், நமது நாட்டுக் கலைப்பொருள்கள் பலப் பல மேல் நாடுகளுக்குச் சென்றுவிட்டன. அவ்வாறு மேல் நாடு சென்ற நமது நாட்டுக் கலைச் செல்வங்களில், சிற்ப வேலைப்பாட்டில் சிறந்த கருங்கல் மண்டபமும் ஒன்று. நமது நாட்டு மதுரை மாவட்டத்தில் இருந்த அந்தச் சித்திர மண்டபம், இப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். நமது நாட்டுப் பெரிய கருங்கல் சித்திர மண்டபம் பல்லாயிர மைலுக்கப்பால் அமெரிக்கா கண்டம் சென்றுவிட்டது! அமெரிக்காவில் இந்திய மண்டபம் மதுரைக்கு அருகில் ஒரு பெருமாள் கோயிலில் இருந்த இந்த மண்டபம் பெரிய சிற்ப உருவங்களைக் கொண்டது. தருமன், அர்ச்சுனன், பீமன் முதலிய பஞ்சபாண்டவர் உருவங்களும் நாரதர், அகஸ்தியர், பதஞ்சலி முதலியவர்களின் உருவங்களும் ஒவ்வொரு தூணிலும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மண்டபத்தை, அடிலின் பெப்பர் கிப்ஸன்1 என்பவர் 1912-ஆம் ஆண்டில் வாங்கிக்கொண்டு போனார். இவர் பாரிஸ் நகரத்தில் இறந்தபிறகு, இவருடைய உறவினர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பிலெடெல்லிபியா நகரத்து கலைப் பொருள் காட்சிசாலைக்கு 1919-இல் இதனை நன்கொடையாக அளித்தார்கள். ஆகவே இந்த மண்டபம் இப்போது அக்காட்சி சாலையில் மண்டபமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தைப் பற்றி ஒரு நூலையும் அச்சிட்டிருக்கிறார்கள்.2 வேலூர் சித்திர மண்டபம் வேலூர் கோட்டையில் இருக்கிற, மிகச் சிறந்த சித்திர வேலையமைந்த கருங்கல் மண்டபம் சிற்ப சிலைக்குப் பேர் போனது. இதன் கலையழகைக் கண்டு வியப்படையாதவர் இலர். இந்த மண்டபத்தை அடியோடு பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் இங்கிலாந்து தேசத்தில் அமைக்க ஆங்கிலேயர் சென்ற நூற்றாண்டில் முயற்சி செய்தார்கள். ஆனால் நல்ல வேளையாக, இந்த மண்டபத் தைக் கொண்டு போக வந்த கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. ஆகவே மண்டபத்தைக் கொண்டுபோகும் முயற்சி கைவிடப்பட்டது. அந்தக் கப்பல் முழுகியிராவிட்டால், வேலூரில் உள்ள இந்த அழகான சிற்பக்கலை மண்டபம், இப்போது இலண்டன் மாநகரத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும். நமது நாட்டிலே இன்னும் ஏராளமான பழைய கோயில் கட்டிடங்கள் உள்ளன. அவைகளை அழியவிடாமல் பாதுகாக்க நாம் எல்லோரும் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டும். சிற்பக்கலை சிற்பக்கலையையும் நம்மவர் இக்காலத்தில் போற்றுவதில்லை. சிற்பக் கலையின் பெருமையையும் அழகையும் இனிமையையும் உணராததே இதற்குக் காரணம். கோயில்களுக்குத் தர்மகர்த்தராக அல்லது அறநிலைய அதிகாரியாக இருப்பவர்கள் பெரும்பாலும் அழகுக் கலையை உணராதவர்கள்; கலைகளின் சிறப்பையும் அருமைபெருமைகளையும் அறியாதவர்கள். அவர்களுக்குள்ள கவலையெல்லாம் கோயில் பூஜை முதலியவை சரியாக நடக்கின்றனவா என்பது பற்றியே. கோயில்கள் கலைக் கூடங்கள் என்பதை அவர்கள் அறவே மறந்துவிட்டார்கள். கோயிலும் கலைகளும் சமய வாழ்க்கையோடு கலைகளையும் இணைத்திருந்தனர் நமது பெரியோர். இக்காலத்தில் இசையரங்கங்கள் வேறாகவும், நாடகமேடைகள் வேறாகவும், பொருட்காட்சிசாலைகள் வேறாகவும், ஓவியக் கலைக்கூடங்கள் வேறாகவும் இருப்பது போல கலைச் சாலைகள் வெவ்வேறாக அக்காலத்தில் அமைக்கப்படவில்லை. கோயில்களே கலைக் கூடங்களாகவும், ஓவியக் காட்சிச் சாலை களாகவும், இசையரங்கங்களாவும், நாடக மேடைகளாகவும் விளங்கின. அதனால் தான் சிற்பங்களும் ஓவியப்படங்களும் நமது கோயில்களில் இடம்பெற்றன. ஒவ்வொரு பெரியகோயிலிலும் சங்கீத மண்டபங்கள் இருந்தன. அங்கு இசையும், இசைக் கருவிகளும், நர்த்தம் நாட்டியம் முதலியவை களும் பண்டைக்காலத்தில் நடைபெற்றன, ஏன்? இலக்கியக் கலைக் கூடமாகவும் கோயில்கள் திகழ்ந்தன. கோயில் களிலே சமயச் சார்பான காவியங்களையும் புராணங்களையும் புலவர் படித்துப் பொருள் கூறி விளக்கினார்கள். மகாபாரதம், இராமாயணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய இலக்கிய நூல்கள் கோயில் களிலே விளக்கப்பட்டதை ஊரார் கேட்டு இலக்கிய கலையறிவையும் சமய அறிவையும் அடைந்தார்கள். பௌத்தசமயம் ஓங்கியிருந்த காலத்தில், புத்த ஜாதகக் கதைகள் போன்ற பௌத்த சமய நூல்கள் பௌத்தக் கோயில்களில் ஓதப்பட்டன. ஜைன சமயம் ஓங்கியிருந்த காலத்தில் ஸ்ரீ புராணம் முதலிய ஜைன சமய நூல்கள் கோயில்களில் படிக்கப் பட்டன. சிற்பங்களைச் சிதைத்தல் இவ்வாறு, கோயில்கள் கலைக் கூடங்களாகவும் இருந்தன என்பதை யறியாத இப்போதைய தர்மகர்த்தர்கள், பெரும்பாலும் கலைச்சுவையும் கலையறிவும் இல்லாதவர்களாகையினாலே, கோயில்களில் உள்ள கலைப் பொருள்களைக் காப்பாற்றும் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்களாய் அவற்றை அழித்து விடுகிறார்கள். இராஜசிம்மன் என்னும் பெயருள்ள இரண்டாம் நரசிம்மவர் மனால் காஞ்சீபுரத்திலே அமைக்கப்பட்ட இராஜசிம்மேச்சுரம் என்னும் கயிலாசநாதர் கோயில், சிற்பக்கலையில் மிகச்சிறந்தது. அந்தச் சிற்பங்கள் கோயில் சுவர்களிலே புடைப்புச் சிற்பமாக3 அமைக்கப் பட்டுள்ளன. வெயிலிலும் மழையிலும் பல நூற்றாண்டாக இருந்த படியினாலே அவற்றில் பெரும்பாலான சிதைந்து போயின. சமீப காலத்திலே அச்சிற்பங்கள் புதுப்பிக்கப் பட்டன. சிற்பக்கலை யுணராத சாதாரண சிற்பிகளாலே அவை புதுப்பிக்கப்பட்ட படியினாலே, புதுப்பிக்கப்பட்ட சிற்பங்கள், பழைய அழகு கெட்டு விகாரமாகக் காணப்படுகின்றன. ஆனால், புதுப்பிக்கப்படாத பழைய சிற்ப வுருவங்கள் இன்றும் அழகுடன் காணப்படுகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் காஞ்சீபுரத்திலே அமைக்கப் பட்ட முச்சீசுரம் என்னும் முக்தீசுவரர் கோயில் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த புடைப்புச் சிற்பமாக சிற்ப உருவங்கள் மிகச் சிறந்தவை. அவையும் இப்போது மொத்தை மொத்தையாகச் சுதை பூசப்பெற்றுப் பழைய உருவம் தெரியாதபடி விகாரப்படுத்தப் பட்டுள்ளன. பல்லவர் காலத்துக் கலையழகு நிரம்பிய சிற்ப உருவங்கள் இவ்வாறு “கொலை” செய்யப்படுகின்றன. பழுதான சிற்பங்கள் நமது கோயில்களிலே இப்போது உள்ள சிற்பக் கலை யுருவங்கள் யாவும் கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும் செய்யப் பட்டவை. பின்னம் அடைந்த சிற்ப உருவங்களையும் உடைந்து போன சிற்ப வுருவங்களையும் வழிபடக் கூடாது என்பது முறை. அதனாலே, பின்னம் அடைந்த சிற்ப உருவங்களைக் கோயில் அதிகாரிகள் அப்புறப்படுத்தி எறிந்துவிடுகிறார்கள். இது தவறு. வழிபாட்டிற்கு உதவாமற்போனாலும் அவை சிற்பக் கலை யுருவங்கள் என்னும் முறையில் பாதுகாக்கப்படவேண்டும். கணக் கற்ற கற்சிலைகளும் பஞ்சலோகச் சிலைகளும் சிறிதும் சிதைவுபட்டு விட்டன என்னும் காரணத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. பூசைக்கு உதவாத சிற்பக்கலை யுருவங்களை எறிந்து விடாமல் கோயிலின் ஒருபுறத்திலே பாதுகாக்க வேண்டும். பழைய சிற்பங்களின் சிறப்பு சிதைந்துபோன சிற்ப உருவங்களை ஒரு மூலையில் போட்டு விட்டு, அதற்குப் பதிலாகப் புதிய உருவங்களை அமைத்து வழி படுகிற சில கோயில்களில், நான் கண்ட உண்மை என்ன வென்றால், சிதைந்துபோன உருவங்கள் கலையழகு நிரம்பப் பெற்று வெகு அழகாக இருப்பதும் அதைப்போலப் புதிதாக அமைக்கப்பட்ட உருவங்கள் கலையழகு இல்லாமல் இருப்பதும் ஆகும். இந்த உண்மையைக் கோயில் அதிகாரிகள் அறிந்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். சிதைந்துபோன சிற்ப உருவங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அழித்துவிடக் கூடாது; விற்றுவிடவும் கூடாது; அவற்றைக் கலையுணர்வு படைத்த பலரும் பார்க்கும்படி பொது இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். பூமியில் புதைத்தல் பின்னம் அடைந்து சிதைந்து போன சிற்ப உருவங்களைச் சில இடங்களில் பூமியில் புதைத்து விடுகிறார்கள். புதைக்கப்பட்டவை நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து விடுகின்றன. செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மணிமங்கலத்துப் பெருமாள் கோயிலில் முன்பு இருந்தவராகப் பெருமாள் கற்சிலை சிறிது சிதைந்து போன காரணத்திற்காக அது அக்கோயில் தோட்டத்தில் புதைக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு பல சிற்பங்கள் பூமியில் புதைந்துள்ளன. நீருக்குள் மறைத்தல் சில இடங்களில், பின்னம் அடைந்த சிற்பக்கலை உருவங்களை குளம் குட்டை கிணறுகளில் போட்டுவிடுகிறார்கள். பெரும்பாலும் கற்சிலைகளையே இவ்வாறு செய்கிறார்கள். ஏரிகளிலும் குளம் குட்டைகளிலும் இவ்வாறு போடப்பட்டுள்ள சிற்ப உருவங்களைக் கண்டிருக்கிறேன். நீரிலும், நிலத்திலும் மறைத்து அழித்துவிடுவதை விட அச்சிற்ப உருவங்களைக் கிராமத்தின் பொது மண்டபத்திலாவது கோயிலின் ஒருபுறத்திலாவது பாதுகாப்பது அன்றோ கலையைப் போற்றுவதாகும்? இனியேனும் கவனிப்பார்களா? உருக்கி அழித்தல் பொன் வெள்ளி முதலிய விலையுயர்ந்த உலோகங்களினாலே செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் பொருளாசையுள்ள கள்ளர் முதலியவர்களால் களவாடப்பட்டு அழிக்கப்பட்டு பணமாக்கப் பட்டன. கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த திருமங்கையாழ்வார் என்னும் வைணவபக்தர், அக்காலத்தில் நாகப்பட்டினத்துப் பௌத்தக் கோயிலிலிருந்த தங்கத்தினால் செய்யப்பட்ட புத்தர் உருவச் சிலையைக் களவாடிக் கொண்டு போய், அந்தப் பொன்னைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் திருமதில் கட்டுதல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்தார் என்று வைணவ நூல்கள் கூறுகின்றன. மாலிக்காபூர் கி. பி. 13 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் என்னும் சேனைத் தலைவன் டில்லியிலிருந்து தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்ததன் நோக்கம் தென்னாட்டுக் கோயில் விக்கிரகங்களை உடைப்பதும் கோயில் செல்வங்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும். அவன் தென்னாட்டில் உள்ள எல்லாப் பெரிய கோயில்களையும் கொள்ளையடித்தான். அந்தக் காலத்தில், அவன் கையில் அகப்படாதபடி உற்சவ மூர்த்தங்களான சிற்ப உருவங்களைப் பத்திரப்படுத்துவதற்காக, அவற்றைப் பெட்டி பேழைகளில் வைத்துப் பூமியில் புதைத்துவிட்டார்கள். அவ்வாறு புதைக்கப்பட்டவைகளில் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன. சில தோண்டி எடுக்கப்படாமலே மறக்கப்பட்டு மறைந்துவிட்டன. இவ்வாறு மறக்கப்பட்டு மறைந்துபோனவைதான் இப்போது பூமியிலிருந்து தற்செயலாகக் கிடைக்கிற சிற்ப உருவங்கள். திருவாலங்காட்டு நடராசர் இவ்வாறு பூமியிலிருந்து கிடைக்கப்பட்ட சிற்ப உருவங்களில் ஒன்று, திருவாலங்காட்டில் கண்டெடுக்கப்பட்டு இப்போது சென்னை பொருட்காட்சிசாலையில்4 உள்ள, உலகப் புகழ் பெற்ற நடராசர் திருவுருவம். நல்லகாலமாகப் பூமியிலிருந்து கிடைத்த இக்கலைச் செல்வம் இலண்டன் மாநகரம், டெல்லி முதலிய நகரங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருப்பதை யாவரும் அறிவர். இதை இலண்டனுக்கு எடுத்துப் போவதற்கு முன்னர் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் இதற்காக ஈடுகட்டி எடுத்துச் செல்லப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது. மாலிக்காபூர் காலத்தில் மட்டும் அல்லாமல், தென் இந்திய சரித்திரத்தில் மிகக் குழப்பகாலமாக இருந்த கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டுகளிலும், (ஐதராலி கலகம், திப்புசுல்தான் கலகம், பாளையக்காரர் கலகம், நவாப்பு காலத்துப் போர்கள், “கும்பினி” யார் சண்டை முதலியவை) பல சிற்பக்கலையுருவங்கள் நீரிலும், நிலத்திலும் தஞ்சம் புகுந்தன! அவற்றில் பல பிற்காலத்தில் மீட்கப் படாமல் மறைந்து விட்டன. விக்கிரகக் களவு கோயில்களில் ஊழியம் செய்யும் குருக்கள் முதலியோர்களில் சிலர் கோயில் விக்கிரகங்களைக் களவாடி விற்று விடுவதும் பண்டைக்காலத்தில் நிகழ்ந்துவந்தது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் கூறப்படுகிறது. திருவாரூர் கோயில் குருக்களில் ஒருவராயிருந்த நாகராசநம்பி என்பவர், அறுபத்து மூன்று நாயன்மாருடைய செப்பு விக்கிரகங்களில் இரண்டை களவாடி கன்னானுக்கு விற்றுவிட்டாராம். மற்றவர்கள் இதனை அறிந்தும் களவாடியவருக்கு அஞ்சி அரசரான கிருஷ்ண தேவராயருக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டனராம். இதனை அறிந்த புலவர் ஒருவர் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை வாங்கி அதற்கு ஒரு வெண்பாவைக் கற்றுக் கொடுத்து வைத்தாராம். கிருஷ்ணதேவராயர் கண்காணிப்புக்காகக் கோயிலுக்குக் கொண்டு வந்த போது அக்கிளியைப் புலவர் கோவிலுக்கு வந்து ஓரிடத்தில் கட்டி வைத்தா ராம். பஞ்ச வர்ணக் கிளியழகில் ஈடுபட்ட அரசர் அதனிடம் வந்தபோது அது. “முன்னாள் அறுபத்துமூவர் இருந்தார் அவரில் இன்னாள் இரண்டுபேர் ஏகினார்-கன்னான் நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராசநம்பி இருக்கின்றான் கிட்டின ராயா.” என்று கூறிற்றாம். பிறகு அரசர் விசாரித்து உண்மை அறிந்து களவாடியவரைத் தண்டித்தாராம். நிற்க. சமயப்பகையும் கலையழிவும் சமயப்பகை காரணமாகவும் பல சிற்பக்கலை யுருவங்கள் அழிக்கப்பட்டன. பௌத்த சிற்ப உருவங்களை ஜைனர் சைவர் வைணவர்கள் அழித்துவிட்டதும், ஜைன சிற்ப உருவங்களைப் பௌத்தர் சைவர் வைணவர் அழித்துவிட்டதும், சைவ சமய சிற்ப உருவங்களை வைணவர் அழித்து விட்டதும் வைணவ சிற்ப உருவங்களைச் சைவர் அழித்து விட்டதும் சமயப் பொறாமையால் விளைந்த சிற்பக்கலை அழிவுகளாம். மாமல்லபுரத்துச் சிற்பக்கலை யழிவு மகாபலிபுரத்தில் இராமாநுச மண்டபம் என்று இப்போது பெயர் வழங்குகிற குகைக் கோயில், ஆதிகாலத்தில் மும்மூர்த்திகளின் கோயிலாக இருந்தது. அது இராமாநுசர் பிறப்பதற்கு 500 ஆண்டு களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குகைக் கோயில். அத்யந்தகாம பல்லவேச்சரம் என்னும் பெயருடனிருந்த அந்தக் குகைக் கோயிலை, விஜயநகர அரசர் காலத்தில், வைணவர்கள் கைப்பற்றி இராமாநுச மண்டபம் என்று பெயர் கொடுத்து அதிலிருந்த சிற்பக்கலை உருவங்களை அடியோடு அழித்து விட்டார்கள். இந்தக் குகைக் கோயிலில் இருந்த துவாரபாலகர் உருவங்களையும் கருவறையின் சுவரில் இருந்த சோமஸ்கந்தர் உருவங்களையும் உளியினால் செதுக்கி அழித்துவிட்டதோடு மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் கற்பாறையில் பெரிய அளவில் புடைப்புச் சிற்பமாக5 அமைக்கப்பட்டிருந்த சிற்ப உருவங்களை உளிகொண்டு செதுக்கி அழித்துவிட்டார்கள். அழிக்கப்பட்ட அந்தச் சிற்பங்களின் உருவங்கள் எவை என்று இப்போது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவை சைவ சமய சம்பந்தமான சிற்ப உருவங்களாக இருந்திருக்க வேண்டும். அவை அழிக்கப்படாமல் இப்போது இருக்குமானால் மகாபலிபுரத்தில் இன்னொரு இடத்தில் மகிஷாசுர மண்டபத்தில், இப்போது இனிய அழகிய கலைச் செல்வங்களாகக் காட்சியளிக்கிற அநந்தசயன மூர்த்தி, மகிஷாசுரன் போர் என்னும் புடைப்புச் சிற்பங்களைப்போலவே இனிய அழகிய சிற்பக்கலைச் செல்வங்களாக இருக்கும். ஆனால், அந்தோ! சமய வெறியர்களால் அவை முழுவதும் அழிக்கப்பட்டன. இல்லை, கொலை செய்யப்பட்டன. அந்தச் சிற்ப உருவங்கள் அமைந்திருந்த இடங்களின் அடையாளங்கள் இப்போதும் கற்பாறையில் காணப்படுகின்றன. காஞ்சி சிற்பக்கலை யழிவு காஞ்சீபுரத்துக் காமாட்சியம்மன் கோயிலிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் சில புத்தர் உருவச் சிலைகள் இருந்ததைக் கண்டேன். அவைகளில் சில சிறிது உடைபட்டிருந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்று பார்த்தபோது அந்தப் புத்தர் உருவச்சிலைகள் எல்லாம் துண்டு துண்டாக உடைக்கப் பட்டுக் கற்குவியலாகப் போடப்பட்டிருந்ததைக் கண்டேன். சமயப் பொறாமை காரணமாக இவைகள் உடைத்து அழிக்கப்பட்டன. காமாட்சியம்மன் கோயில் குளத்துப் படித்துறைக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு புத்தர் உருவச் சிற்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன. அந்தப் புத்தர் உருவங்களைக் காமாட்சி லீலாப் பிரபாவம் என்னும் நூல் “பூதங்கள்” என்று கூறுகிறது. வெண்மையான சலவைக் கல்லினால் புடைப்புச் சிற்பமாகச் செய்யப் பட்டிருந்த அந்த இரண்டு உருவங்களும் உண்மையில் புத்தர் உருவங்களேயாகும். ஆனால், அந்தச் சலவைக் கல் புத்த உருவங்கள் இப்போது அங்கே காணப்படவில்லை. ஆனால், ‘சிமிட்’ டியால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விகாரமான பூத உருவங்கள் அங்கு வைக்கப் பட்டிருக்கின்றன. இதுவும் சமயப் பொறாமையினால் விளைந்த உருமாற்றங்களாகும். இவற்றை ஏன் இங்குக் கூறினேன் என்றால், சமயப் பொறாமையினாலே அழகிய இனிய சிற்பக்கலைகள் அழிக்கப் பட்டு மறைக்கப்படுகின்றன என்பதைக் கூறுவதற்கே. சமயப் பொறாமை ஏன்? நமது நாட்டுச் சிற்பக்கலைப் பொருள்கள் பெரும்பாலும் சமயத் தொடர்புடையவை. சைவ வைணவ பௌத்த ஜைன சமயத் தொடர்பான பல சிற்ப உருவங்கள் நமது நாட்டில் கல்லிலும் செம்பிலும் அமைந்து கிடக்கின்றன. சமயப் பகைமை பாராட்டாமல் அக்கலைப் பொருள்களையெல்லாம் செவ்வனே பாதுகாக்க வேண்டும். சமயப் பகையினால் அழிக்கப்பட்ட சிற்பக்கலைச் செல்வங்கள் பல. எல்லாச் சமயத்துச் சிற்பங்களிலும் கலையழகு உண்டு. ஆகவே, கலைச் செல்வங்களில் சமயப் பகையும் சமயப் பொறாமையும் காட்டாமல், அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அயல்நாடு சென்ற சிற்பங்கள் இவ்வாறு மதவெறியர்களால் அழிக்கப்பட்டது போக நீரிலும் நிலத்திலும் மறைக்கப்பட்டது போக, வேறு சில சிற்பக் கலைகள் அயல்நாடுகளுக்கு - அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களுக்கு - , ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பாவில் உள்ள ஆங்கிலேயர்களும், பிரான்ஸ் தேசத்தாரும், டச்சுக்காரர் முதலியவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டாரும் சிற்பக்கலைப் பிரியர்கள். அவர்கள் தங்கள் நாட்டுக் கலைகளைப் போற்றுவதோடு அயல்நாட்டுக் கலைகளையும் போற்றுகிறார்கள். ஆகவே, நமது நாட்டுச் சிற்பக்கலைப் பொருள்களையும் அவர்கள் இங்கிருந்து வாங்கிக் கொண்டு போனார்கள். இவ்வாறு மேல் நாடுகளுக்குச் சென்ற கலைச்செல்வங்களில் பெரும்பாலும் நமது நாட்டுக் கோயில்களிலிருந்து கொண்டு போகப்பட்டவையே. நமது நாட்டுத் தரகர்கள் (ஏஜெண்டுகள்), இச் சிற்பக் கலைகளை அவர்களுக்கு விற்றார்கள். எப்படியென்றால், கோயில் “பெருச்சாளிகள்” கோயில்களிலிருந்து சிற்ப உருவங்களைக் (இவை பெரும்பாலும் உலோகங்களினால் செய்யப் பட்டவை) களவாடிக் கொண்டுபோய் நமது நாட்டுத் தரகர்களுக்குச் சிறு தொகைக்கு விற்றுவிடுவார்கள். இவைகளை வாங்கிய தரகர்கள் யார் என்றால், நமது நாட்டில் பிறந்த “பெரிய மனிதர்கள்” தான். இவர்களுக்கு நாட்டுப் பற்றோ, கலைப் பற்றோ எதுவும் கிடையாது. இவர்களுக்கு உள்ள ஒரே பற்று என்னவென்றால் பணப்பற்றே. எப்படியாகிலும் பொருள் சேர்க்க வேண்டும் என்பதே இவர்கள் கருத்து. கலைத் துரோகிகள் நமது நாட்டுக் கலைப்பொருளைக் களவாடி ஐரோப்பியருக்கு விற்றுப் பதினாயிரக் கணக்காகவும் இலட்சக்கணக்காகவும் பொருள் தேடியவர்கள் இன்னும் நமது நாட்டில் இருக்கிறார்கள். நமது நாட்டுக் கோயில்களிலேயுள்ள கலைச் செல்வங்களைக் களவாடிய, அல்லது களவு செய்வதற்கு உடன்பட்டிருந்த, அல்லது களவாடிய பொருள்களை வாங்கிவிற்ற குற்றத்திற் குட்பட்டவர்களான இவர்கள், நாட்டின் கலைத் துரோகிகளாகிய இவர்கள், பெரிய மனிதர்களாகவும் பட்டம் பதவி பெற்றவர்களாகவும் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் மூலமாக நமது நாட்டிலிருந்து பழைய கலைச் செல்வங்கள் எத்தனையோ மேல் நாடுகளுக்குப் போய் விட்டன. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்றன. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்தியக் கலைப் பொருள்கள் அயல் நாட்டிற்கு அனுப்பப்படக் கூடாது என்னும் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இனி நமது கலைப் பொருள்கள் அயல் நாட்டிற்குப் போக வழியில்லை, ஆயினும் கள்ளத்தனமாகப் போகக்கூடும் அல்லவா? நமது கடமை கலைச் செல்வங்களை அயல்நாட்டுக்கு விற்கும் கலைத் துரோகிகள் - நாட்டுத் துரோகிகள் - இன்னும் கலைப் பொருள்களை அயல்நாடுகளுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த கலைப்பொருள்களை விற்றாலும் நாம் குறை கூறமாட்டோம். ஆனால், தேசத்திற்கும் நாட்டிற்கும் உரியதான கலைப்பொருள்களை வஞ்சகமாகவும் சூதாகவும் தமக்குச் சொந்தப் பொருளாக்கிக் கொண்டு அவற்றை வெளிநாடுகளில் விற்றுப் பணம் சேர்ப்பது என்றால், அதை மக்களும் அரசாங்கமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா என்பதே எமது கேள்வி. காஞ்சீபுரத்து நடராசர் காஞ்சீபுரம், தஞ்சாவூர் முதலிய இடங்களிலிருந்த பல கலைச்செல்வங்கள் இவ்வாறு அயல்நாடுகளுக்குப் போய்விட்டன. காஞ்சீபுரத்தில் பேர்போன பல்லவர் கோயில் ஒன்றில் இருந்த புராதன நடராஜர் விக்கிரகம் எவ்வாறு ஐரோப்பா கண்டத்துக்குப் போய்விட்டது என்பதை ஒருவர் கூறினார். அக்கோயிலில் இருந்த பழைய நடராஜர் விக்கிரகத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டுபோக விரும்பிய ஒரு ஐரோப்பியர், அக்கோயில் அதிகாரிக்குக் கைக்கூலி கொடுத்துச் சரிப்படுத்திக்கொண்டாராம். பிறகு, சிற்பியிடம் (ஸ்தபதியிடம்) அதைப்போலவே ஒரு வெண்கல நடராசர் உருவம் செய்யச் சொல்லி, புதிய நடராசர் உருவத்தை அக்கோயிலில் வைத்துவிட்டுப் பழைய நடராசர் உருவத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டாராம்! பழைய நடராசருக்குப் பதிலாகப் புதிய நடராசர் வந்துவிட்டார். ஆனால் புதிய நடராசரை எடுத்துக் கொண்டு போகாமல் பழைய நடராசரை அந்த ஐரோப்பியர் ஏன் கொண்டு போனார்? அதில்தான் சூட்சுமம் இருக்கிறது. பழைய நடராசர் உருவத்தில் கலையழகு நிரம்பியிருந்தபடியினால் அதை எடுத்துக்கொண்டு போனார்! அன்பர்களே, நமது சிற்பக்கலைகள் எப்படியெல்லாம் கொள்ளை போயின, போகின்றன பாருங்கள். சிற்ப உருவங்கள் இன்னும் உள மேல்நாட்டார் கள்ளத்தனமாகவும் நல்லத்தனமாகவும் கொண்டுபோன கலைச்செல்வங்கள் போகட்டும்; நமது நாட்டார், பழைய கோயில்களைப் புதுப்பித்தபோது அழிந்துபோன கலைச் செல்வங்கள் போகட்டும்; மண்ணிலும் குளங் குட்டைகளிலும் மறைந்து கிடக்கும் கலைச்செல்வங்கள் போகட்டும்; இவை யெல்லாம் போனாலுங்கூட, இன்னும் ஏராளமான கலைச் செல்வங்கள் நமது நாட்டில் இப்போதும் எஞ்சியுள்ளன. பல சிற்பக்கலைப் பொருள்கள், பற்பல கோயில்களில் கலைச்சிறப்பு உணராதவர்களால் புறக்கணிப்பட்டுக் கிடக்கின்றன. பல சிற்பக்கலைகள், இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன. இவைகளையேனும் போற்றிப் பாதுகாக்கவேண்டுவது நமது கடமையாகும். பல கற்சிற்பங்கள் வயல்களிலும் ஊர்ப்புறங்களிலும் நாதியற்றுக் கிடப்பதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். குளங்குட்டைகளின் ஓரத்தில் துணி தோய்க்கப் போட்டிருந்த சில கற்களைப் புரட்டிப் பார்த்தபோது அவற்றில் சிற்பங்கள் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் எதைத் தெரிவிக்கின்றன? நமது நாட்டில், சிற்பக்கலையுணர்வும் அவற்றைக் கொண்டு சுவைக்கும் அறிவும் மங்கி மழுங்கி மறைந்து விட்டன என்பதைக் காட்டுகின்றன வன்றோ? பாதுகாப்பு வேண்டும் கலை, கலை என்று தாள்களில் எழுதப்படுகின்றன. மேடைகளில் பேசப்படுகின்றன. கலை என்றால், சினிமாவும் நடனமும் இசையும் நாடகமும்தான் என்று பெரும்பாலோர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். சிற்பம் ஓவியம் முதலியவைகளும் கலைகள் அன்றோ? அவற்றையும் போற்றிப் பாதுகாக்க வேண்டுவது நமது கடமை அல்லவா? மிகப் புராதனமான ஒரு கோயிலிலே இருந்த, சோழ அரசனு டைய செப்புச் சிலை யுருவம் ஒன்று, தனிப்பட்ட ஒருவரிடம் இருப்பதைக்கண்டு வியப்படைந்தேன். சாதாரணமாகக் காணப் படாததும் மிக விசித்திரமானதும் அருமையானதும் ஆன ஒரு நடராச சிற்ப உருவம், பழமையான ஒரு கோயிலில் இருந்தது, இப்போது தனிப்பட்ட ஒருவரின் தனியுடைமையாக இருக்கிறது. இவ்வாறு பழைய கோயில்களிலே தமிழ் நாட்டவருக் குரிய பொதுச் செல்வங் களாக இருந்த அநேக கலைச் செல்வங்கள் பல, சுயநலமுடைய தனிப்பட்ட ஆட்களிடம் சிக்கிக் கொண்டுள்ளன. இவற்றைப்பற்றி, அறநிலையப் பாதுகாப்பாளரும் அரசாங்கத் தாரும் கவலைகொள்ளாமல் இருப்பது என்னே? இக்கலைச் செல்வங்கள் தமிழ் நாட்டின் பொதுச் சொத்துக்கள் அல்லவோ? இவற்றிற்குப் பாதுகாப்பளிப்பது இவர்களின் கடமையன்றோ? ஓவியக்கலை கட்டிடக்கலை, சிற்பக்கலை இவற்றைப்பற்றிச் சிறிதளவாவது பொதுமக்களுக்குத் தெரியும். இவை கோயில்களிலே அடிக்கடி காணப்படுவதால், இவற்றை அறியாமல் இருக்கமுடியாது. ஆனால், ஓவியக் கலையைப்பற்றிப் பொதுமக்களில் பெரும்பான்மை யோருக்குத் தெரியாது. அதாவது பண்டைக் காலத்துச் சித்திரங்களைப் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள், பண்டைக் காலத்து ஓவியங்கள் எல்லாம் சுவர் ஓவியங்களாக இருந்தன. அரசர், குறுநில மன்னர், செல்வர் முதலியோர் அரண்மனை களிலும் மாளிகைகளிலும் சுவர் ஓவியங்களை எழுதி வைத்தார்கள். கோயில்களிலும் சித்திரங்களை எழுதி வைத்தார்கள். கட்டிடக் கலை சிற்பக்கலைகளைவிட சித்திரக்கலை மிக நுட்பமானது; தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால் எளிதில் அழிந்துவிடக் கூடியது. நகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் வாழ்ந்த குடிமக்கள் அக்காலத்தில் ஓலை வீடுகளில் வசித்தார்கள். ஏன்? இக்காலத்தில் கூட பெரும்பாலும் ஓலை வீடுகளில்தான் வாழ்கிறார்கள். ஆகவே ஓலை வீடுகளில் சுவர் ஓவியங்களை எழுதி வைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஓவியங்கள் அக்காலத்தில் அரண்மனைகளிலும் மாளிகைகளிலுமே இடம் பெற்றன. அரண்மனைகளும் மாளிகை களும் அழிந்துவிட்ட போது, சித்திரக் கலைகளும் மறைந்து விட்டன. சேர சோழ பாண்டியர்களின் அரண்மனைகளும் சித்திர மாடங்களும் எங்கே? வள்ளல்கள் சிற்றரசர்களின் மாளிகைகள் எங்கே? அவை யெல்லாம் அழிந்துவிட்டன. அவற்றோடு நுட்ப நுண்கலையாகிய சுவர் ஓவியங்களும் மறைந்து விட்டன. பல்லவர் காலத்து ஓவியம் மகேந்திரவர்மனும் அவனுக்குப் பின்வந்த பல்லவ அரசர்களும் அமைத்த குகைக் கோயில் சுவர்களில் வர்ண ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவையும் காலப்பழமையினாலும் அழிவு வேலைகளினாலும் மறைந்துவிட்டன். மகேந்திரவர்மனுக்கு சித்திரக்காரப் புலி என்னும் சிறப்பு பெயரும் உண்டு. அன்றியும் தக்ஷிண சித்திரம் என்னும் தென் இந்திய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் என்றும் கூறுகிறார்கள். இவன் அமைத்த குகைக் கோயில்கள் சிலவற்றிலே சித்திரங்கள் எழுதப்பட்டிருந்த அடையாளங்களும் பச்சை மஞ்சள் சிவப்பு முதலிய வர்ணங்களும் அங்கங்கே காணப்படுகின்றன. இதனால் அக்குகைக் கோயில்களில் சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. நற்காலமாக எப்படியோ சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், மாட்டுக்காரப் பையன்களின் அட்டூழியங்களுக்கும் மற்றவர்களின் நாச வேலைக்கும் தப்பித் தவறி அரைகுறை யாகவேனும் இப்போதும் இருக்கிறது. நமது தமிழ்நாட்டிலே உள்ள மிகப் பழையகாலத்துச் சித்திரம் இதுவே. இவை, கி. பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப் பட்டவை. சிதைந்த ஓவியம் மறைந்துபோன சித்திரங்கள் போக, இப்போதும் சிற் சில கோயில்களிலும் மண்டபங்களிலும் சிதைந்துபோன ஓவியப் பகுதிகள் இன்றுங் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் கிடைத்த வரையில், அரைகுறையாக இருந்தபோதிலும், போற்றிப் பாதுகாக்க வேண்டும். பிரதிகள் எழுதி, அல்லது நிழல் (போட்டோ) படம் பிடித்து பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இதற்கு ஓவியக் கலைஞரும், நிழற் படம் பிடிப்போரும், அரசாங்கத்துப் பழம் பொருள் ஆராய்ச்சித் துறையினரும் (ஆர்க்கியாலஜி இலாகா) முன்வந்து உதவி செய்யவேண்டும். திருமலை ஓவியம் வட ஆர்க்காடு மாவட்டம் வடமாதிமங்கலம் இரயில் நிலையத் திற்கு அருகில் உள்ள போளூர் திருமலை என்னும் குன்றின்மேலே ஜைனக் கோயில் ஒன்று உண்டு. இதற்குச் சிகாமணிநாதர் கோயில் என்பது பெயர். இக்கோயில் குகையில் சோழர்காலத்து ஓவியங்கள் இப்போது சிதைந்து அழிந்து காணப்படுகின்றன. (புதிதாக எழுதப்பட்ட காலச் சித்திரங்களும் இங்கு உண்டு. இவற்றை நான் கூற வில்லை) இப்பழைய சித்திரங்களை அரசாங்கத்துப் பழம் பொருள் ஆராய்வோர் (ஆர்க்கியாலஜி இலாகா) சில ஆண்டுகளுக்கு முன்னர் படம் பிடித்தார்கள். அந்தப் படங்களின் நகல்கள் வேண்டுமென்று கேட்டபோது அவை கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள் காரணம் என்னவென்றால் படமெடுக்கப்பட்ட ‘போட்டோ நெகிடிவ்’ உடைந்து விட்டதாம். அதன் பிறகு அவர்கள் மீண்டும் படம் பிடிக்கவில்லை. இக்கோயில் ஓவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. காஞ்சி ஓவியம் காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவில் பௌர்ணமி மண்டபத்தில் அன்னப்பறவைகள் முதலியவற்றின் ஓவியங்கள் எழுதப்பட்ட சிதைவுகள் காணப்பட்டதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கண்டேன். காஞ்சி ஏகாம்பரேசுவரர் நூற்றுக்கால் மண்டபத்தின் மேல்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அளவில் பல ஓவியங்கள் இருந்ததைக் கண்டேன். அவை பார்வதி பரமேசுவரர், இலக்குமி, கலைமகள் முதலிய சித்திரங்களாகும். சிறிது அழிந்து போயிருந்தாலும் பெரிதும் நன்னிலையிலே யிருந்தன. வர்ணங்கள் அழிந்துபோன இடங்களில் கோடுகள் புனையா ஓவியமாக6 நிறைவு செய்திருந்தன. அவை பிற்காலத்து ஓவியங்கள்தான். 400, அல்லது 500 ஆண்டு பழைமையிருக்கலாம். அவற்றை நிழற்படம் ‘போட்டோ’ பிடிக்க வேண்டுமென்று அடுத்த ஆண்டு சென்றபோது, அந்தோ! அவை மறைந்து போனதைக் கண்டு துணுக்குற்றேன். கோயில் அதிகாரிகள் அந்தச் சித்திரங்களின் மேலே கோபி சுண்ணாம்பை நிறையப் பூசி மண்டபத்தை ‘அழகு’ செய்திருந்தார்கள்! அவர்கள் நீடூழி வாழ்க!! படிஎழுதி வைக்கலாம் இவ்வாறு எந்தெந்தக் கோயில்களில் எத்தனை எத்தனை ஓவியங்கள் அழிந்தனவோ! ஓவியத்துக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கோயில் “தர்மகர்த்தர்கள்” நினைக்கிறார்கள் போலும்! அதிலும் அரைகுறையாக உள்ள சித்திரங்கள், குற்றுயிராய்க் கிடந்து வேதனைப் பட்டுக் கொண்டிருப்பதைவிட அடியோடு அழிந்து சுகம் பெறட்டும் என்னும் கருணையினால் “கொன்று” விடுகிறார்கள் போலும். அரைகுறையான ஓவியங் களாக இருந்தாலும் அவற்றையும் போற்றவேண்டும். அவற்றை அழிக்க வேண்டியிருந்தால் முதலில் அவற்றைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு அல்லது படி எழுதிவைத்துக்கொண்டு பிறகு அழித்துவிடலாம். நமது நாட்டிலே பழைய கோயில்கள் பல உள்ளன. தேடிப் பார்த்தால் அவைகளிலும் சில ஓவியங்கள் காணப்படலாம். பிற்காலத்துச் சித்திரங்களாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். திருவலஞ்சுழி கோயில் மிகப் பழமையானது. அக் கோயிலிலும் ஓவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை நகல் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அன்பர்களை வணக்கமாக வேண்டிக்கொள்வது என்ன வென்றால், ஏதேனும் ஓவியங்கள் கோயில் முதலிய பழைய கட்டிடங்களில் இருக்கக் கண்டால், அவற்றை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே. கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள், அரைகுறையாக அழிந்து போயிருந்தாலும், அழியாத பகுதிகளை அழியவிடாமல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். அவற்றைப் படம் பிடித்தோ, தக்கவர்களைக் கொண்டு படி எழுதுவித்தோ பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வது நமது நாட்டு ஓவியக் கலைக்குச் செய்த பெருந்தொண்டாகும். இசைக்கலை இசைக்கலையைப் பாதுகாப்பது பற்றி ஒன்றும் சொல்ல வேண்டுவது இல்லை. ஏனென்றால், ஏனைய அழகுக் கலைகளை விட அதிகமாக இசைக் கலையை மக்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும், பேசும் படம் (சினிமா), வானொலி நிலையம், இசையரங்கம் முதலியவை பெருகியுள்ள இக்காலத்தில் இசைக் கலை எல்லோரும் அறிந்த நற்கலையாக விளங்குகிறது. யாழை உயிர்ப்பிக்கவேண்டும் பழைய கலைகளைப்பற்றிக் கூறுகிற இந்நூலிலே, இசைக் கலை சம்பந்தப்பட்டவரையில் ஒன்று கூற விரும்புகிறேன். அது யாழ் என்னும் இசைக் கருவியைப்பற்றியது. யாழ், பண்டைக் காலத்திலே இந்தியா தேசம் முழுவதும் பயிலப்பட்டிருந்த ஒரு சிறந்த இசைக் கருவியாகும். வட இந்தியாவில் இக்கருவி வழக் கொழிந்த பிறகும், தமிழ்நாட்டிலே இது நெடுங்காலம் பயிலப்பட்டுப் பின்னர் கி.பி. 11 - ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மறைந்துவிட்டது. யாழுடன் சம்பந்தப்பட்டவை பழைய பண்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருப்பாணாழ்வார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணபத்திரர் முதலியவர்கள் காலத்திலும், அவர்கள் காலத்துக்கு முற்பட்ட சங்ககாலத்திலும் தமிழ் நாட்டில் பயிலப்பட்ட பண்கள் யாழ் இசையுடன் சம்பந்தப்பட்டவை. மறைந்துபோன யாழ் இசைக் கருவியை மீண்டும் புதுப்பித்து, அதை வழக்கத்திலே கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். யாழ் நூல் என்னும் இசையாராய்ச்சி நூலை எழுதிய முத்தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு. விபுலாநந்த அடிகள் அரிதின் முயன்று ஆராய்ந்து யாழ்க் கருவியொன்றைச் செய்தார்கள். ஆனால், அக்கருவியை நாட்டில் பயன்படுத்துவதற்கு முன்பே அவர்கள் காலஞ் சென்றுவிட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்றதைத் தொடர்ந்து, முயன்று நிறை வேற்றி மறைந்துபோன அக்கருவியை மீண்டும் இசையரங்கிற்குக் கொண்டுவர வேண்டுவது தமிழ் இசைத் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர் கடமையாகும். இது மிகவும் அரிதான வேலை. ஆனால், வெற்றிபெறக் கூடியதே. பண் ஆராய்ச்சி தமிழ் இசைச் சங்கம், தேவாரப்பண் ஆராய்ச்சி செய்து வருவது போற்றத்தக்கது. இவ்வாராய்ச்சியினால் சில உண்மைகள் அறியப் படுகின்றன. உதாரணமாக யாழ்முரிப்பண்ணை எடுத்துக் கொள்வோம். சம்பந்த சுவாமிகள் பாடிய “மாதர்மடப் பிடியும்” எனத் தொடங்கும் இப்பாட்டு இக்காலத்தில் அடானா இராகத்தில் பாடப்படுகிறது. தேவார ஆராய்ச்சியின் காரணமாக, 50 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் பாட்டு அடானா இராகத்தில் குருசாமி தேசிகர் என்பவரால் பாடப்பட்டு அதனையே பின்பற்றி மற்றவர்களும் பாடி வருகிறார்கள் என்பதும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாட்டு மேகராகக் குறிஞ்சி என்னும் பண்ணினால் பாடப்பட்டதென்பதும் அறியப்பட்டன. இது போன்ற பல செய்திகளை இசை ஆராய்ச்சியினால் அறியக்கூடும். பழைய ஆடல்கள் பண்டைக் காலத்தில் ஆடப்பட்ட கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலிய ஆடல்களும் இப்போது மறைந்துவிட்டன. இவ்வாடல் களையும் மீண்டும் புதுப்பித்து அரங்கத்திற்குக் கொண்டுவர வேண்டுவது நட்டுவர்களாகிய ஆடலாசிரியர்களுடைய கடமை யாகும். இலக்கியக் கலை பழையகாலத்து அழகுக் கலைகளை ஆராய்வதை நோக்கமாக எழுதப்பட்ட இந்நூலிலே, இக்காலத்து இலக்கியக் கலையைப் பற்றிக் கூறவேண்டுவது இல்லை. பழைய இலக்கியங்களைப் போற்றுவது எப்படி என்பதைக் கூற வேண்டும். இசைக்கலையைப் போலவே இலக்கியக் கலையைப்பற்றியும் மக்கள் அதிகமாகத் தெரிந்திருக் கிறார்கள். ஆனால், பழைய இலக்கியக் கலைகளை இப்போது மக்கள் அதிகமாகப் போற்றுவது இல்லை. பழைய இலக்கியங்களின் பெயரைக் கூட மறந்துவிடுகிறார்கள். இலக்கியநூலைப் போற்றுக சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய நூல்களைப் படித்து அவற்றின் இலக்கியச் சுவைகளை அறிந்து இன்புறுதல் வேண்டும். அவற்றில் கூறப்படும் கதையையும், சமயச் சம்பந்தமான செய்திகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்பதில்லை. அவற்றிலுள்ள இலக்கிய அழகை, கலைச்சுவையை யறிந்து மகிழவேண்டும். பகுத்தறி வுடையவர், அந்நூல்களைப் படிப்பதனால் மூடக்கொள்கைகள் நிலைத்துவிடுமோ என்று அஞ்சவேண்டியதில்லை. திரைப்படம், நாடகம் முதலிய காட்சிகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். அவற்றைப் பார்ப்பதனாலே அறிவற்ற மூடர்கள் தீய வழியில் சென்றபோதிலும், பகுத்தறிவும் நல்லறிவுடையவர்கள் அத்தீமைகளைக்கொள்வதில்லை. அதுபோன்று, பழைய இலக்கியங் களில் இக்காலத்துக்கொவ்வாத விஷயங்கள் இருந்தாலும் அவற்றின் பொருட்டு இலக்கியத்தை இழந்துவிடுவது, அல்லது புறக்கணிப்பது அறிவுடைமையாகாது. மனிதன் பகுத்தறிவுடையவன்; அதிலும் காவியக் கலையைப் பயிலும் மனிதன் சிறந்த அறிவுடையவன். அவன் அவைகளைப் படிப்பதனாலே மூடக் கொள்கைகளுக்கு வசமாவான் என்று கூறுவது தவறு, நிற்க. அடிக்குறிப்புகள் 1 Adeline Pepper Gibson 2 A Pillard Hall from a Temple of Madura, India. In the Philadelphia Museum of Art. By Norman Brown. 1940 3 (Bas Relief) 4 Madras Museum 5 Bas relif 6 (Outline) சிற்பக் கலை* கட்டிடக் கலையைவிட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன் விலங்கு பறவை மரம் செடி மலை கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள் தெய்வம் அரக்கர் முதலிய கற்பனை உருவங்களையும், அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். காவியப் புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும் (ஓவியப் புலவருங்கூட) தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள். சிற்பக் கலைகள், கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து மனத்திற்கு இன்பங்கொடுக்கும் இனிய கலைகள். அவற்றின் அழகும் அமைப்பும் எல்லோருக்கும் உணர்ச்சி கொடுத்து மகிழ்வூட்டுகின்றன. ஆனால், அவற்றில் சிறிது கருத்தூன்றிக் காண வேண்டும். சற்றுக் கலைச்சுவையும் இருக்க வேண்டும். இக்கலையுணர்வு பெற்றோர், அழகிய கலைப் பொருள்களைக் காணுந்தோறும் புதியதோர் இன்ப உலகத்திலே வாழ்கிறார்கள். சிற்பம் அமைக்கும் பொருள்கள் மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன. “கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாவன” என்பது திவாகர நிகண்டு1 “வழுவறு மரனும் மண்ணுங் கல்லும் எழுதிய பாவையும்....” என்றும், “மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க” என்றும் “மணிமேகலை” கூறுகிறது2 நமது கோயில்களிலே சிற்பக்கலை பெரிதும் இடம் பெற்றிருக்கிறது. சிற்ப உருவங்கள் அமையாத கோயில் கட்டிடங்கள் இல்லை என்றே கூறலாம். கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம், தூண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டிடங்களின் எல்லா இடங்களிலும் சிற்ப உருவங்கள் அமைந்துள்ளன. காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்ததை, இந்திர விழாவின்போது அந் நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது. அப்பகுதி இது: “வம்ப மாக்கள் கம்பலை மூதூர் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்”3 இரண்டு வகை சிற்பம் சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச் சிற்பம் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் என்பது, பொருள்களின் முன் புறம் பின்புறம் முதலிய முழு உருவமும் தெரிய அமைக்கப் படுவது. புடைப்புச் சிற்பம்4 என்பது, பொருள்களின் ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும் அமைக்கப்படுவது. இவ் விரண்டுவித சிற்ப உருவங்களும் கோயில்களிலே அமைக்கப்படுகின்றன. தத்ரூப உருவங்கள் தமிழ்நாட்டுச் சிற்பக்கலை, பாரத நாட்டுச் சிற்பக்கலையைப் போலவே, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆகவே, தெய்வ உருவங்கள் நமது நாட்டுச் சிற்பக் கலையில் பெரிதும் முதன்மை பெற்றுள்ளன. கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளிலே மனித தத்ரூப சிற்ப உருவங்கள்5 சிறப்பாக வளர்ச்சி பெற்றதுபோல நமது நாட்டில் மனித தத்ரூப சிற்பக் கலை (ஓரளவு பயிலப்பட்டதே யல்லாமல்) முழுவளர்ச்சி யடையவில்லை. இதன் காரணம், நம்மவர் தத்ரூப உருவங்களைச் செய்து வைக்கும் வழக்கத்தை அதிகமாகக் கொள்ளாதது தான். ஆனால், நமது நாட்டில் கற்பனை உருவச் சிற்பங்கள் பெரிதும் வளர்ந்திருக்கின்றன. கல்லும் உலோகமும் நமது நாட்டுச் சிற்பக்கலை, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது என்று கூறினோம். சைவ வைணவச் சிற்ப உருவங்களை ஆதிகாலத்தில் மரத்தினாலும் சுதையினாலும் பஞ்ச லோகங்களினாலும் செய்து அமைத்தார்கள். இப்போதுங்கூட மரத்தினாலும் சுதையினாலும் செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் சில கோயில்களில் உள்ளன. உதாரணமாக, உத்தரமேரூர் சுந்தர வரதப்பெருமாள் கோயிலுள்ள தெய்வ உருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டவையே. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள், மகாபலிபுரத்துத் தவசயனப் பெருமாள், திருவிடந்தை வராகப் பெருமாள் முதலிய கோயிலில் உள்ள உருவங்கள் சுதையினால் ஆனவையே. கருங்கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும் சிற்ப உருவங்கள் உண்டாக்கப்பட்டது. கி. பி. 7 - ஆம் நூற்றாண்டிலே ஆகும். பல்லவ அரசரும் பிற்காலச் சோழரும் இவற்றில் சிற்பங்களை அமைத்தார்கள். சிவன் திருமால் முதலிய தெய்வ உருவங்கள் மனித உருவமாகக் கற்பிக்கப்பட்டு, மனித உருவம் போலவே செய்யப்படுகின்றன. ஆனால், அந்த உருவங்கள் எலும்பு சதை நரம்பு முதலியவை அமைந்த மானிட உறுப்புள்ள6 தெய்வ உருவங்களாக அமைக்கப் படுவதில்லை. யவன நாட்டுச் சிற்பமும் நமது நாட்டுச் சிற்பமும் அயல் நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் நமது நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை “எழுவகைத் தாண்டவம்” என்னும் நூலில் எழுதியிருப்பதை இங்குக் கூறுவது பொருந்தும். அது; “அயல்நாட்டுச் சிற்பங்கள், உருவங்களை உள்ளது உள்ளவாறே, கண்ணுக்குத் தோன்றுகிறபடியே அமைக்கப்படுவன. நமது நாட்டுச் சிற்பங்கள், உள்ளதை உள்ளபடியே காட்டும் நோக்கமுடையனவல்ல; சிற்ப உருவங்களின் மூலமாக ஏதேனும் கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கம் உடையன. இயற்கை உருவத்தை உள்ளது உள்ளபடியே விளக்குவது அயல் நாட்டுச் சிற்பம், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் காட்டுவதற்குக் கருவியாக உள்ளது நமது நாட்டுச் சிற்பம், மனித உருவத்தின் அழகையும் செவ்வியையும் சிற்பக்கலையில் நன்கு பொருந்தும்படி அக்கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகத்திலே பெரும் புகழ்படைத்த கிரேக்க நாட்டுச் சிற்பிகள், தமது நாட்டுக் கடவுளர்களின் உருவங் களைச் சிற்ப உருவமாக அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாக அமையக் கூடுமோ அவ்வளவு அழகையும் அமையப் பொருத்தி அத்தெய்வ உருவங்களை அமைத்தார்கள். அவர்கள் அமைத்த ஜூயஸ், வீனஸ் முதலிய கடவுளர்களின் சிற்ப உருவங்களைக் காணும் போது, மானிட உடல் அமைப்பின் சீரிய இயல்பு அவைகளில் அமையப் பெற்றிருப்பது, உண்மையிலேயே நமது கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து மகிழ்ச்சியளிக்கின்றன. “ஆனால், நமது கருத்து அச்சிற்பங்களின் உருவ அமைப்பின் அழகோடு தங்கி நிற்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதில்லை. அவை, மக்கள் நிலைக்கு மேம்பட்ட கடவுளின் உருவங்கள் என்கிற உணர்ச்சியைக் கூட உண்டாக்குவதில்லை. “நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்களோ அத்தகையன அல்ல. நமது நாட்டுச் சிற்ப உருவங் களில், கிரேக்க சிற்பங்களைப் போன்று, இயற்கையோடியைந்த அழகிய உடலமைப்பு காணப்படாதது உண்மைதான். ஆனால், இச்சிற்பங்களைக் காணும்போது நமது உள்ளமுங் கருத்தும் இவ் உருவங்களில் மட்டும் நின்றுவிடவில்லை; இவ் வுருவங்கள் நமது கருத்தை எங்கேயோ இழுத்துச் சென்று ஏதேனும் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் ஊட்டுகின்றன. ஆகவே, நமது சிற்பங்கள், அயல்நாட்டுச் சிற்பங்களைப் போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன. இந்த இயல்பு சிற்பக்கலைக்கு மட்டுமன்று; நமது நாட்டு ஓவியக் கலைக்கும் பொருந்தும். “எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே காட்டுவது அயல்நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்; உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் உருவங்கள் மூலமாக வெளிப் படுத்துவது நமது நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற்கொள்ள வேண்டும்.”7 சிற்பத்தில் மறைபொருள் நமது தெய்வத் திரு உருவங்கள் குறிப்புப் பொருளைப் புலப்படுத்துகின்றவை, (குறிப்புப் பொருள் - Symbolism அதாவது, மறைபொருளாகக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றவை. உதாரணமாக ஒன்றைக் காட்டுவோம். கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. இதனைச் சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் அமைத்துக்காட்டி யிருக்கிறார்கள். அதாவது, திசைகளை நான்காகவும் எட்டாகவும். கூறுவது மரபு. ஆகையினாலே, எல்லாத்திசைகளிலும் பரந்து இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மற்றக் குணங்களுக்கும், குறிப்புப் பொருளைக் கற்பித்துத் தெய்வ உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இக்குறிப்புப் பொருள்களை எல்லாம் விளக்கிக் கூறுவதற்கு இது இடமல்ல. காமிகாகமம் முதலிய நூல்களில் கண்டு கொள்க. பண்டைக் காலத்திலே தமிழர், கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை மட்டும் வைத்து வணங்கினார்கள். உதாரணமாக முருகனை வணங்கிய தமிழர், இப்போது வணங்கப்படுகிற முருகன் உருவத்தை வைத்து வணங்காமல், முருகனுடைய படையாகிய வேலைமட்டும் வைத்து வணங்கினார்கள். இந்திரனுடைய உருவத்தை வைத்து வணங்காமல் அவனுடைய வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள். அல்லது, அவனது வெள்ளை யானை, கற்பகத்தரு இவற்றின் உருவங்களை வைத்து வணங்கினார்கள். இதைத்தான் வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், அமரர்தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போது கோயில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வ உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக அமைக்கப்பட வில்லை என்பதும் அவை பிற்காலத்திலே அமைக்கப்பட்டன என்பதும் ஆகும். பலவகை மூர்த்தங்கள் சைவர், சிவபெருமானுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங் களாகக் கற்பித்தார்கள். வைணவர்களும் திருமாலுடைய திருவுரு வத்தைப் பல மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள். கடவுளின் பலவித ஆற்றல்களைக் காட்டுவதற்காகவே இவ்வாறு பல்வேறு மூர்த்தங் களைக் கற்பித்தார்கள். கடவுளின் சக்தியை அம்மன் தேவி என்னும் பெயரால் பெண் உருவமாகக் கற்பித்தார்கள். சிவபெருமானுடைய திருவுருவங்களை, இருந்த கோல மாகவும் நின்ற கோலமாகவும் ஆடுங்கோலமாகவும் கற்பித்தார்கள். இதனை நின்றான் இருந்தான் கிடந்தான், உருவம் என்பார். மற்றும் கணபதி, முருகன், அம்மன் முதலிய தெய்வ உருவங்களைப்பற்றி எழுதுவதற்கு இது இடமன்று. பௌத்த ஜைன சிற்பங்கள் நமது நாட்டிலே பண்டைக் காலத்திலே, (கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில்) பௌத்த மதம் நன்றாகச் செழித்திருந்தது.8 அக்காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள், புத்தர் உருவத்தையும் பௌத்தத் தெய்வ உருவங்களையும் வழிபட்டார்கள். அவர்களும், ஆதிகாலத்தில் புத்தர் திருவுருவத்தை வைத்து வணங்காமல், பாத பீடிகை தருமச்சக்கரம் ஆகிய அடையாளங்களை வைத்து வணங்கினார்கள். பிறகு. புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட காலத்தில், அவர்கள் புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள். மணிமேகலை சிலப்பதிகாரம் என்னும் நூல்கள் புத்தர் வணக்கத்தைக் கூறும்போது பாத பீடிகையையும் தரும பீடிகை யையும் கூறுகின்றன. ஏனென்றால் அந்தக் காலத்திலே புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்டு சிற்பிகளால் சிற்ப உருவங்களாகச் செய்யப் படவில்லை. இதனாலே மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் மிகப் பழமையானவை என்பது தெரிகிறது. புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்ட பிற்காலத்திலே அவ்வுருவத்தை நின்ற கோலமாகவும் இருந்த கோலமாகவும் கிடந்த (படுத்த) கோலமாகவும் சிற்பிகள் அமைத்தார்கள். வைணவர், திருமால் திருவுருவத்தை இவ்வாறே மூன்று விதமாக அமைத்ததை மேலே கூறினோம். பௌத்த மதத்தைப் போலவே ஜைன சமயமும் (சமண மதம்) பண்டைக் காலத்திலே நமது நாட்டிலே சிறப்படைந்திருந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த தமிழர், அருகக் கடவுளின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவத்தையும் வணங்கினார்கள். ஒரு நுட்பச் செய்தி பௌத்த ஜைன மதத்துக்கும் சைவ வைணவ சமயத்துக்கும், சிற்ப உருவ அமைப்பில் உள்ள ஒரு நுட்மான செய்தியைக் கூற விரும்புகிறேன். அந்த நுட்பம் இதுவாகும். பௌத்தரின் புத்த உருவத்துக்கும் ஜைனரின் தீர்த்தங்கரர், அருகர் உருவங்களுக்கும் இரண்டு கைகள் மட்டும் உண்டு. ஆனால், அவர்களின் சிறு தெய்வங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் உள்ளன. இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ வைணவ உருவங்களில் காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் இருக்கின்றன. ஆனால், சைவ வைணவ சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கின்றன. உதாரணமாக, பௌத்தர்களின் சிறு தெய்வமாகிய அவலோகிதர், புத்த பதவியடையும் நிலையை யடைந்திருந்தாலும், அப்பதவியை இன்னும் அடையாதபடியால், சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். ஆகையினாலே, அவருக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். அது போலவே தாரை முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். சமணரும் தமது உயர்ந்த தெய்வமாகிய அருகர் அல்லது தீர்த்தங்கரர் உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வணங்கும் இந்திரன், ஜுவாலாமாலினி முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பௌத்த சமணர்களுக்கு மாறாகச் சைவரும் வைணவரும், தமது பரம்பொருளான உயர்ந்த கடவுளுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்துத் தமது சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நுட்பம் இந்தச் சமயங்களின் சிற்ப உருவங்களைக் கூர்ந்து பார்த்தால் நன்கு விளங்கும். சைவ வைணவ சிற்ப உருவங்களைப்பற்றி இன்னொரு நுட்பத்தையும் வாசகர் உணர வேண்டும். சிவன் திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்து அவர்களின் சத்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பிக்கிறார்கள். ஆனால், அம்மன் தேவிகளுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவம் அமைக்கிறார்கள். சிற்பக் கலை ஆராயும் வாசகர் இந்த நுட்பத்தையும் உணரவேண்டும். நால் வகைப் பிரிவு உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப உருவங்களை தெய்வ உருவங்கள் என்றும், இயற்கை உருவங்கள் என்றும், கற்பனை உருவங்கள் என்றும், பிரதிமை உருவங்கள் என்றும் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தெய்வ உருவங்கள் என்பது, சிவபெருமான், பார்வதி, கணபதி, முருகன் முதலிய சைவ சமயத் தெய்வ உருவங்களும், திருமால், இலக்குமி, கண்ணன், இராமன் முதலிய வைணவ சமயத் தெய்வ உருவங்களும் ஆகும். இயற்கை உருவங்கள் என்பது மனிதன், மிருகம், பறவை முதலிய இயற்கை உருவங்கள் ஆகும். கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள், இலைக் கொடிகள்9 சரபப்பட்சி, இருதலைப்பட்சி, மகரம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர், பூதர் முதலியவை கற்பனை உருவங்களாகும். அன்றியும் கற்பனையாக அமைக்கப்பட்ட இலைக்கொடி பூக்கொடி உருவங்களுமாகும். பிரதிமை உருவங்கள் என்பவை ஒரு ஆளின் உருவத்தைத் தத்ரூபமாக அமைப்பது. இந்த நான்குவிதமான சிற்பங்களை நமது நாட்டுக் கோயில்களில் காணலாம். உதாரணத்திற்காக இச்சிற்பங்களில் சிலவற்றை இங்குக்காட்டுவோம். அவற்றையெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதற்கு இது இடம் அன்று ஆயினும், சுருக்கமாகச் சில கூறுவோம். தெய்வ உருவங்கள் தெய்வ உருவங்களில் சைவ சமயச் சிற்ப உருவங்களைக் கூறுவோம். சிவபெருமானுக்கு முக்கியமாக இருபத்தைந்து மூர்த்தங்களைக் கூறுவார்கள். அந்த மூர்த்தங்களைக் கல்லிலும் செம்பிலும் அழகாகச் சிற்பிகள் செய்திருக்கிறார்கள். அவையாவன:- 1. இலிங்கோத்பவ மூர்த்தம் 2. சுகாசன மூர்த்தம், 3. உமாமகேசம், 4. கலியாணசுந்தரம் 5. மாதொருபாகர் (அர்த்தநாரி) 6. சோமஸ்காந்தம், 7. சக்கரப்பிரசாதன மூர்த்தம் 8. திரிமூர்த்தி, 9. அரியரமூர்த்தம், 10. தக்ஷணாமூர்த்தம், 11. பிக்ஷாடனர், 12. கங்காளமூர்த்தி, 13. கால சம்மாரமூர்த்தி, 14. காமாந்தகர், 15. சலந்தர சம்மாரமூர்த்தி, 16. திரிபுராந்தகர், 17. சரபமூர்த்தி, 18, நீலகண்டர், 19. திரிபாதமூர்த்தி, 20. ஏகபாதமூர்த்தி, 21. பைரவமூர்த்தி, 22. இடபாரூடமூர்த்தி, 23. சந்திரசேகரமூர்த்தி, 24. நடராஜமூர்த்தி, 25, கங்காதரமூர்த்தி. இவற்றில், தக்ஷணாமூர்த்தி வுருவத்தில் வீணாதரதக்ஷணா மூர்த்தி என்றும் ஞான தக்ஷணாமூர்த்தி என்றும் யோக தக்ஷணா மூர்த்தி என்றும் பிரிவுகள் உள்ளன. நடராஜ மூர்த்தத்தில், சந்தியாதாண்டவ மூர்த்தி, காளிகா தாண்டவமூர்த்தி, புஜங்கத்திராசமூர்த்தி, புஜங்களிதமூர்த்தி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி முதலிய பிரிவுகள் உள்ளன. பைரவ மூர்த்தத்தில் பிக்ஷாடன பைரவர், லோக பைரவர் காளபைரவர், உக்கிரபைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன. அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்களும் உள்ளன. கணபதி உருவத்தில், பாலகணபதி, நிருத்த கணபதி, மகா கணபதி, வல்லபை கணபதி முதலிய பலவகையுண்டு. சுப்பிரமணியர் உருவத்தில், தண்டபாணி, பழனியாண்டவர், வேல் முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்திதேவர், நாயன்மார்கள் முதலியவர்களின் உருவங்களும் உள்ளன. வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன், கோவிந்தன், அநந்தசயனன், கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்ரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன. இலக்குமி, கஜலக்குமி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய உருவங்களும், ஆழ்வார்கள் முதலிய உருவங் களும் உள்ளன. பௌத்த, ஜைன சிற்பங்கள் பௌத்த சமயத்தில், பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும் தாரை முதலிய தேவி உருவங்களும் கணக்கற்றவை உள்ளன. ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் யக்ஷன் யக்ஷி சாத்தன் முதலிய உருவங்களும் உள்ளன. இவ்வுருவங்களைப் பற்றிய விளக்கங்களை யெல்லாம் விரிவாக இங்கு எழுதப் புகுந்தால் இடம் பெருகும் என்று அஞ்சி நிறுத்துகிறோம். இவ்வுருவங்களைப்பற்றித் தமிழில் நூல்கள் இல்லாதது குறைபாடு ஆகும். இயற்கை உருவங்களில், ஆண் பெண் உருவங்களின் அழகிய சிற்பங்களைப்பற்றியும், இலைக்கொடி முதலிய கற்பனைச் சிற்பங்களைப் பற்றியும், விலங்கு பறவை முதலிய சிற்ப உருவங்களைப் பற்றியும் விரிவஞ்சிக் கூறாது விடுகிறோம். சமயம் வாய்ப்பின் இவைகளைப் பற்றித் தனி நூல் எழுதுவோம். பிரதிமை சிற்பங்கள் பிரதிமை உருவங்களைப்பற்றிச் சிறிது கூறி சிற்பக் கலைச் செய்தியை முடிப்போம். பிரதிமை உருவங்கள்10 என்பது, தனிப் பட்ட ஆளின் உருவ அமைப்பை, உள்ளது உள்ளவாறு அமைப்பது. இந்தக்கலை, மேல்நாட்டு முறைப்படி நமது நாட்டில் வளர வில்லையாயினும், நமது நாட்டு முறைப்படி ஓரளவு வளர்ந்திருந்தது. பிரதிமை உருவங்களில் பல்லவ அரசர் உருவங்கள் பழைமை வாய்ந்தவை. மாமல்லபுரத்து (மகாபலிபுரம்) வராகப்பெருமாள் குகைக் கோயிலில் இருக்கிற சிம்ம விஷ்ணுவும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமை உருவங்களும், அதே இடத்தில் உள்ள மகேந்திர வர்மனும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமையுருவங்களும், தருமராச இரதம் என்று பெயர் வழங்கப்படுகிற அத்யந்தகாம பல்லவேசுவரக் கோயிலில் உள்ள நரசிம்மவர்மன் பிரதிமை யுருவமும், அர்ச்சுனன் இரதம் என்னும் பாறைக்கோயிலில் உள்ள சில பல்லவ அரசர் அரசிகளின் பிரதிமை யுருவங்களும் பல்லவ அரசர்களுடையவை. சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினாலே பிரதிமையுருவங்களைச் செய்யும் வழக்கம், பிற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயில் சாசனம் ஒன்று, மேற்படி கோயில் அதிகாரி யாயிருந்த ஆதித்தன் சூரியன் என்னும் தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் அக்கோயிலிலே ராஜ ராஜசோழன், அவன் அரசி உலக மாதேவி ஆகிய இருவருடைய செப்புப் பிரதிமை யுருவங்களைச் செய்து வைத்த செய்தியைக் கூறுகிறது. அது வருமாறு:- “ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார்க்கு ஸ்ரீ கார்யஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருளுவித்த செப்பு பிரதிமங்கள்................................................” “பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த பெரிய பெருமாள் பிரதிமன் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய்விரலே இரண்டுதோரை உசரத்து பத்மம் ஒன்று. இதனொடுங்கூடச் செய்த ஒன்பதிற்று விரற் சமசதுரத்து ஐய்விரலே ஆறுதோரை உசரத்து பீடம் ஒன்று.” “இருபத்து இருவிரலே இரண்டு தோரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த இவர் நம்பிராட்டியார் ஒலொகமா தேவியார் பிரதிமம் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய் விரல் உசரத்து பிரதிமம் ஒன்று. இதனோடுங் கூடச் செய்த ஒன்பத்திற்று விரற் சமசதுரத்து ஐய்விரலே இரண்டு தோரை உசரத்து பீடம் ஒன்று.”11 இச்சாசனத்தில் கூறப்படுகிற பெரிய பெருமாள் என்பது இராஜராஜ சோழரைக் குறிக்கிறது. ஒலோகமா தேவியார் என்பது இராஜராஜனுடைய அரசியின் பெயர். திருக்காளத்திக் கோயிலில் இருந்த மூன்றாங் குலோத்துங்கன் பிரதிமை யுருவம், செப்பினால் செய்யப்பட்டது. இது இவ்வரசன் இளைஞனாக இருந்தபோது செய்த பிரதிமை யுருவம். இவ்வரச னுடைய மற்றொரு பிரதிமை யுருவம் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் உள்ள கோபுரத்துக்கு அருகில் இருக்கிறது. இது கற்சிலை யால் செய்யப்பட்டது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த இவ்வரசனுடைய சுதை யுருவம் இப்போது அழிந்துவிட்டது. வேறு பிரதிமைகள் விஜயநகரத்து அரசர் கிருஷ்ண தேவராயரின் செப்புப் பிரதிமை யுருவம் திருப்பதி கோயிலில் இருக்கிறது. இவருடைய கற்சிலைப் பிரதிமை யுருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கிறது. தஞ்சாவூர், மதுரை இவ்விடங்களில் அரசாண்ட நாயக்க மன்னர்களின் பிரதிமை யுருவங்களும், கம்பநாடர், அப்பைய தீக்ஷிதர் முதலியவர்ளின் பிரதிமை யுருவங்களும் தமிழ் நாட்டு வெவ்வேறு கோயில்களில் காணப்படுகின்றன. தென்னாட்டுப் பிரதிமை யுருவங்களைப்பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால், அவையும் விரிவாகக் கூற வில்லை. தமிழ் நாட்டுப் பிரதிமையுருவங்களைப் பற்றித் தமிழிலே விரிவாக ஒரு நூலேனும் இதுவரையில் எழுதப்படாதது வருந்தத்தக்கது. அலங்காரம் ஏன்? கோயில்களிலே வணங்கப்படும் சிற்ப உருவங்களைப் பற்றி ஒரு செய்தி கூற வேண்டும். கல் சிற்ப உருவங்களும் செம்பு சிற்ப உருவங்களும் ஆன தெய்வத் திருவுருவங்களுக்கு வேஷ்டி, சேலை முதலிய துணிகளை யுடுத்தி வருகிறார்கள். இது அநாவசியமானதும் தவறானதும் ஆகும். வேஷ்டி சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்து இருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக - அம்மணமாக - அமைக்கவில்லை. அப்படியிருக்க அச்சிற்ப உருவங்கள் மேல் துணிகளை உடுத்தி விகாரப்படுத்துவது, அச்சிற்பங்களின் இயற்கையழகை மறைத்துவிடுவதாகும். நடராசர், சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், சிவகாமிசுந்தரி, பெருமாள், கணபதி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய சிற்பங்களை உள்ளது உள்ளவாறே காணும்போது எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றன! அவற்றிற்குத் துணிகளை உடுத்திப் பார்க்கும் போது அவற்றின் அழகு கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுகின்றன. இச்செயல், வேண்டுமென்றே அவற்றின் அழகை மறைத்து, அவற்றை விகாரப்படுத்துவதைப் போலக் காணப்படுகிறது. அடிக்குறிப்புகள் 1. 12-ஆவது பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி. 2. 21-ஆவது காதை. 3. மலர்வனம் புக்க காதை 126-131. 4. Bas relief. 5. Portrait Sculpture. 6. Anotomy. 7. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். பக்கம் 14,15, மயிலை சீனி. வேக்கடசாமி எழுதியது. 8. இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் என்னும் நூல்கள் காண்க. 9. Designs. 10. Portrait Images. 11. No. 38 P-P 154-155 S. I. I. Vol II. சிற்பக் கலையில் தாமரை* நமது நாட்டுப் பூக்களில் தாமரைப் பூவே தலை சிறந்தது. தாமரைப் பூவில் அழகு மட்டும் அல்ல; தெய்வத் தன்மையும் அமைந்திருக்கிறது. தாமரைப் பூவைக் கண்டு மகிழாத மக்கள் இலர். தாமரையைப் பாடாத புலவர் உளரோ? தாமரையை எழுதாத ஓவியர் உளரோ? தாமரையைச் சிற்பத்தில் அமைக்காத சிற்பிகள் உளரோ? காவியத்திலும் ஓவியத்திலும் தாமரை தனியிடம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டிலே கோவில்களுக்குக் குறைவில்லை. கோவில் கட்டடங்களிலே சிற்பக்கலைகள் சிறந்து விளங்குகின்றன. கோயில் களை அமைத்த சிற்பக் கலைஞர், கோயிற் சுவர்களிலும் தூண்களிலும் பல விதமான சிற்ப உருவங்களை அழகாக அமைத்திருக்கிறார்கள். கலைச்சுவை அறிந்தோர் அக் கலைச் சிற்பங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்கிறார்கள். சிற்பிகள் கோவில்களிலே கற்களைச் செதுக்கி அமைத்த கலையுருவங்களிலே தாமரைப் பூவும் இடம் பெற்றிருக்கிறது. நாட்டு வளத்தைப் பாடும்போதெல்லாம் காவியப் புலவர் தாமரைக் குளத்தைப் பாடாமலிரார். வெண்டாமரை செந்தாமரை நீலத்தாமரைகளையும், வெள்ளல்லி, செவ்வல்லி கருங்குவளை ஆம்பல் செங்கழும் முதலிய நீர்ப்பூக்களையும் அழகாகப் பாடுவார்கள். தாமரைக் குளத்திலே இருக்கிற கொக்கு, அன்னம் முதலிய பறவைகளையும் தாமரைப் பூக்களில் மொய்க்கும் வண்டுகளையும் பாடுவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் குகைக் கோயிலிலே ஓவியப்புலவன் அழகாக எழுதியமைத்த தாமரைக் குளத்து ஓவியத்தை கண்டு மகிழாதவர் யார்? “சாந்துநீர் நிறைந்த வாவி தயங்கு செங் குவளை வாவி பூச்சதுகள் அவிழ்ந்த பொற்றா மரைமலர் புனைந்த வாவி” என்று சொல் ஓவியமாக எழுதிக் காட்டுகிறார் தோலாமொழித் தேவர். பூந்தோட்டத்திலே ஒரு பொய்கை. அப்பொய்கையில் தாமரைப் பூக்கள் புத்தம் புதிதாகப் பூத்திருக்கின்றன. அப்பொய்கைக் கரையில் அடர்ந்து வளர்ந்துள்ள தாழம் புதர்களில் தாழம் பூக்கள் கமகமவென்று வாசனை வீசுகின்றன. அங்கு வீசிய காற்றினால், தாழம்பூவிலிருந்து துகள் காற்றில் பறந்து தாமரைப் பூக்களில் படிந்தன. இக் காட்சியைச் சீத்தலைச் சாத்தனார், “விரைமலர்த் தாமரை சுரைநின் றோங்கிய கோடுடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண்” என்று காட்டுகிறார். வானத்தில் வெண்ணிலா தோன்றுகிற மாலை நேரத்திலே ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. அப்போது மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் இதழ்களை மூடிக் கூம்பின. காலையில் சூரியன் தோன்றும் போது தாமரை மலர்கள் மலர்ந்தன; ஆம் பல் மலர்கள் குவிந்தன. இந்த இயற்கையைக் காட்டி உலகியல் முறையை விளக்குகிறார் சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர்: “அங்கொளி விசும்பில் தோன்றும் அந்திவான் அகட்டுக் கொண்ட திங்களங் குழவிப் பால்வாய்த் தீங்கதிர் அமுதம் மாந்தித் தங்கொளி விரிந்த ஆம்பல்; தாமரை குவிந்த, ஆங்கே எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரார்?” தாமரைப் பூக்களைப் புலவர்கள் பலவாறு புகழ்ந்துரைத் துள்ளனர். ஒருதனி ஓங்கிய விரை மலர்த் தாமரை, தேனுந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது, புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை, தாளுடைத் தடங்கொள் செவ்வித் தாமரைப் போது, தண்ணென்தாமரை, அலர்ந்த அத்தாமரை, தேனிமிர் தாமரை, வண்டலர் பூந்தாமரை என்று இவ்வாறெல்லாம் புகழ்கின்றனர். கற்பனை செய்யுந்திறமை காவியப் புலவருக்கு மட்டுந்தான் உண்டு என்று கருத வேண்டா. ஓவியப் புலவருக்கும் கற்பனை செய்யும் ஆற்றல் நிறைய உண்டு. சிற்பிகள் தமது கற்பளை யாகச் செய்தமைத்த தாமரைப் பூக்களில் பலவகை உண்டு. சிற்பக் கலைஞர்கள் தாமரைப் பூக்களை எவ்வாறெல்லாம் கற்பித்துக் கல்லில் அழகுறச் செதுக்கியிருக் கிறார்கள் என்பதைக் கோவில் களிலும் வேறு இடங்களிலும் காணலாம். இங்குத் தாமரைப் பூக்களின் ஓவியங்கள் சிலவற்றை மட்டும் காட்டுவோம். (1) 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு. கி. பி. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் ஒருமண்தட்டில் வரையப்பட்டுள்ள தாமரை. இது அண்மையில் புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்னும் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பொருள் களில் ஒன்று. (2) இது கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் குகைக் கோயில் தூண்களில் செதுக்கி யமைக்கப்பட்ட தாமரைப் பூ உருவம், (3) இவை மகேந்திரவர்மன் மகன் நரசிம்ம வர்மன் (மாமல்லன்) காலத்தில் மகாபலிபுரத்து வராக மண்டபத்தில் வரையப்பட்டுள்ள தாமரையின் ஓவியங்கள். (5) இது காஞ்சி காமாட்சியம்மன் கோவில், சுவர்கண காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் மண்டபத்தின் தரையில் உள்ள தாமரைப்பூவின் சிற்ப ஓவியம். (6) இது வைகைவூர் திருமலையில் குகையில் உள்ள தாமரைப் பூவின் வர்ண ஓவியப்படம். (7) இது காஞ்சிப் பௌத்த ஸ்தூபியில் உள்ள ஒரு கற் சிற்பம். (8) இது அமராவதி ஸ்தூபியில் உள்ள தாமரைப் பூ சிற்பங்களில் ஒன்று. சிற்பக் கலையில் மலர்ந்த தாமரைப் பூக்கள் இவ்வளவுதான் என்று எண்ண வேண்டா. நூற்றுக்கணக்கான தாமரைப் பூக்கள் வெவ்வேறு அமைப்பில் சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் காணப்படுகின்றன. அவற்றில் எட்டுச் சிற்பங்களை மட்டும் இங்குக் காட்டினோம். நீங்கள் ஏதேனும் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிற்ப உருவங்களை தேடிப் பாருங்கள். 1சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள்* சிற்ப உருவங்களின் அமைப்பு நமது நாட்டிலே சைவம் வைணவம் பௌத்தம் சமணம் என்னும் நான்கு மதங்களும் தொன்றுதொட்டுள்ள பழைய மதங்களாகும். இந்த நான்கு சமயத்தாரும் தத்தமக்கென்று கோயில்கள் அமைத்து அக் கோயில்களில் தத்தம் தெய்வ உருவங்களைச் சிற்பத்திலும் ஓவியத்திலும் அமைத்து வணங்கினார்கள். இந்தத் தெய்வங்களின் உருவ அமைப்பிலே சிறப்பாகச் சில வேறுபாடுகள் உண்டு. சிற்பக் கலைகளை ஆராய்வோர் அந்த வேறுபாடுகளை அறிய வேண்டும். இந்த நான்கு சமயங்களில், சைவ வைணவ சமயங்கள் ஒருவகையில் ஒத்த தன்மையுடையன; பௌத்த சமண சமயங்கள் ஒரு சார்புடையன. மற்றொரு வகையில், சைவ சமண சமயமும் வைணவ பௌத்த சமயமும் ஒற்றுமையுடையன. இக்காலத்தில் நமது நாட்டில் சிறப்பாக உள்ள சமயங்கள் சைவமும் வைணவமுமே, பௌத்த மதம் அடியோடு மறைந்து போயிற்று; சமண சமயம் (ஜைன மதம்) குன்றிக் குறைந்துவிட்டது. ஆயினும், பௌத்த ஜைன சமயத்து உருவச்சிலைகளையும் சிற்ப உருவங்களையும் நமது நாட்டில் ஆங்காங்கே கண்டு வருகிறோம். சைவ சமயத்தின் முதல் தெய்வமாகிய சிவபெருமான் திருவுருவம் நின்ற வண்ணமாகவும் இருந்த (அமர்ந்த) வண்ண மாகவும் அமைக்கப்படுகிறது. கிடந்த (படுத்த) வண்ணமாக அமைக்கப்படுவது இல்லை. அதுபோலவே சமண (ஜைன) சமயத்தின் தெய்வமாகிய அருகப்பெருமான் திருவுருவமும் நின்ற வண்ணமாகவும் இருந்த வண்ணமாகவும் அமைக்கப்படுகிறது. கிடந்த வண்ணமாக அமைக்கப்படுவது இல்லை. இதில் இவ்விரண்டு சமயங்களுக்கும் பொருத்தம் உண்டு. வைணவ சமயத்தின் முதல் தெய்வமாகிய திருமாலின் சிற்ப உருவம், நின்ற வண்ணமாகவும் இருந்த வண்ணமாகவும் கிடந்த வண்ணமாகவும் அமைக்கப்படுகின்றது. அதுபோலவே, பௌத்த சமயத் தெய்வமாகிய புத்தர் பிரானுடைய திருவுருவமும் நின்ற, இருந்த, கிடந்தவண்ணமாக அமைக்கப்படுகின்றது. இந்த மூவகையமைப்பை நின்றான் இருந்தான் கிடந்தான் என்று கூறுவர். இந்த அமைப்பு முறையில் வைணவ சமயமும் பௌத்த மதமும் பொருத்தம் உடையன. சிவபெருமான் திருவுருவமும் திருமால் திருவுருவம் கூத்தாடும் உருவமாக அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றை நடராசர் மூர்த்தத்திலும், குடக்கூத்து காளிங்கமர்த்தனம் முதலிய மூர்த்தத்திலும் காணலாம். ஆனால், அருகர் புத்தர் உருவங்கள் கூத்தாடும் கோலமாக அமைக்கப்படுவது இல்லை. நிற்க. இந்தக் கட்டுரையில் சிறப்பாகக் கூற வந்தது வேறு ஒன்றைப் பற்றியே. அது என்னவென்றால், இந்த நான்கு சமயத் தெய்வ உருவங்களின் கையமைப்பில் காணப்படும் சிறப்பியல்புகள்தாம். சிவபெருமான் திருவுருவத்திலும் திருமால் திருவுருவத்திலும் பொதுவாக நான்கு கைகள் அமைக்கப்படுகின்றன. சில சமயங்களில் எட்டு அல்லது பனினாறு கைகள் அமைக்கப்படுவதும் உண்டு இரண்டு கைகள் மட்டும் உள்ள சிவபெருமான் திருமால் திருவுருவங்களைக் காணமுடியாது.2 சிவபெருமானுக்கு உள்ள நான்கு திருக்கைகளில் இரண்டு கைகள் வரத அபயக்கைகளாகவும், மற்ற இரண்டு கைகள் மான் மழு ஏந்திய கைகளாகவும் அமைக்கப்படுகின்றன. எட்டு, பதினாறு கைகள் அமைத்திருந்தால் அக் கைகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு ஆயுதங்கள் ஏந்தியிருப்பன போல அமைக்கப்படுகின்றன. திரு மாலின் நான்கு திருக்கைகளில் இரண்டு வரத அபயக்கரங்களாகவும், மற்ற இரண்டு கைகள் சங்கு சக்கரம் ஏந்திய கைகளாகவும் அமைக்கப் படுகின்றன. எட்டு, பதினாறு கைகள் அமைக்கப்பட்டால், அக்கைகள் வெவ்வேறு ஆயுதங்களைத் தாங்கியிருப்பன போன்று அமைக்கப் படுகின்றன. சிவபெருமானின் சக்தியாகிய அம்மன் திருவுருவம் சிவ பெருமானுக்குப் பக்கத்தில் அமைக்கப்படுகின்றது, அம்மன் சிவபெருமானுக்கு ஆற்றலில் குறைந்தவர் என்பதைக் காட்டும் பொருட்டு, அவ்வுருவத்திற்கு இரண்டு கைகள் மட்டும் அமைக்கப் படுகின்றன. ஆனால், அம்மன் திருவுருவம் தனியாக அமைக்கப்படும் போது, நான்கு கைகளையுடையதாக அமைக்கப்படுகின்றது. அதுபோலவே, திருமாலின் சக்தியாகிய தாயார் (இலக்குமி) திருவுருவம் திருமாலுக்குப் பக்கத்தில் அமைக்கப்படும்போது, திருமாலின் ஆற்றலுக்குக் குறைந்த ஆற்றலுள்ளவர் என்பதைக் காட்டுவதற்காக, திருமகளுக்கு இரண்டு கைகள் மட்டும் அமைக்கப்படுகின்றன. திருமகள். திருவுருவம் தனிமையாக அமைக்கும்போது நான்கு கைகளையுடையதாக அமைக்கப் படுகிறது. சைவ வைணவ சமயத்துச் சிறு தெய்வங்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இரண்டு கைகளை மட்டும் உடையவர்களாக அமைக்கப்படுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, பௌத்த சமண சமயங்களின் முதல் தெய்வங்களாகிய புத்தர் அருகர் திருவுருவங் களுக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. அந்தத் தெய்வங்களுக்கு நான்கு கைகள் அமைக்கப்படுவது இல்லை. ஆனால், அந்தச் சமயங்களின் சிறு தெய்வங்களுக்கு மட்டும் நான்கு கைகளும் எட்டுக் கைகளும் அமைக்கப்படுகின்றன. உதாரணமாகப் பௌத்த மதத்தின் சிறு தெய்வமாகிய போதிசத்துவர் எனப்படும் அவலோகிதருக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளும், தாராதேவிக்கு நான்கு கைகளும் உள்ளன. ஜைன சமயத்துச் சிறு தெய்வமாகிய பிரமயக்ஷன், ஜுவாலாமாலினி முதலியவர்களுக்கு நான்கு, எட்டுக் கைகள் உள்ளன. எதிரிலுள்ள படத்தைக் காண்க. அஃதாவது, சைவ வைணவ சமயங்களின் பெரிய தெய்வங்களுக்கு நான்கு கைகளும் சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளும் சிற்ப உருவத்தில் அமைக்கப்படுகின்றன. இதற்கு நேர் மாறாகச் சமண பௌத்த சமயங்களின் பெரிய தெய்வங்களுக்கு இரண்டு கைகளும், சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளும் சிற்ப உருவத்தில் அமைக்கப்படுகின்றன. சைவ வைணவ சமண பௌத்த சமயங்களுக்கு எல்லாம் பொதுவான சிறு தெய்வம் இந்திரன். ஆனால், இந்திரன் உருவத்தைச் சிற்ப உருவமாக அமைக்கும் போது, சிவனுக்கும் திருமாலுக்கும் கீழ்ப்பட்டவன் இந்திரன் என்பதைக் காட்ட அவனுக்கு இரண்டு கைகளை அமைத்துக் காட்டுகிறார்கள் சைவ வைணவ சமயத்தார்கள். இதற்கு மாறாகப், புத்தருக்கும் ஜினனுக்கும் கீழ்ப்பட்டவன் இந்திரன் என்பதைக் காட்டுவதற்காகப் பௌத்தரும் சமணரும் இந்திரனுக்கு நான்கு கைகள் அமைத்துக் காட்டுகிறார்கள். திருமால் சிவபெருமான் திருவுருவங்களுக்கு இரண்டு கைகளை அமைக்காமல் ஏன் நான்கு அல்லது எட்டுக் கைகளை அமைக்கிறார்கள்? ஜினனுக்கும் புத்தனுக்கும் நான்கு கைகள் அமைக்காமல் ஏன் இரண்டு கைகளை மட்டும் அமைக்கிறார்கள்? இதற்குக் காரணம் என்ன? இந்தச் சமயங்களின் கொள்கைகளே, தத்துவங்களே இதற்குக் காரணமாகும். அப்படியானால் அந்தத் தத்துவங்கள் எவை? அவற்றை விளக்குவோம். சைவர் வணங்கும் சிவபெருமானும் வைணவர் வணங்கும் திருமாலும் உருவம் இல்லாத கடவுள்கள். உருவம் இல்லாத இந்தக் கடவுளர்க்கு, உருவத்தைக் கற்பித்தார்கள். எல்லாப் பிறப்புக்களிலும் மனிதப்பிறப்பே பலவகையிலும் சிறந்து காணப்படுகிறபடியால், கடவுளுக்கு உருவத்தைக் கற்பனை செய்தபோது, அவருக்கு மனித உடம்பையே கற்பித்தார்கள். மனித உடம்பைக் கற்பித்தபோதிலும் கடவுள் ஆகாயத்தையே உடலாகக் கொண்டவர் என்றும், திசைகளையே கைகளாக உடையவர் என்றும் கற்பனை செய்தார்கள். இதற்குச் சைவ வைணவ நூல்களே சான்று கூறுகின்றன. சிவபெருமானுக்கு உடம்பாக இருப்பது ஆகாசம் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. ஆகாசமாம் உடல் என்று திருமந்திரம் கூறுகிறது. விசும்பே உடம்பு என்று சேரமான் பெருமாள் தமது பொன்வண்ணத்தந்தாதியில் (19) கூறுகிறார். “விண்ணவர் முதலா வேறோர் இடமாக் கொண்டுறை விசும்பே, கோல! நின்ஆகம்” என்று பட்டினத்துப் பிள்ளையார் தமது ஒருபா ஒருபஃதில் கூறுகிறார். திசைகள் எட்டும் திருக்கைகள் என்று திருமந்திரம் கூறுகிறது. பத்துத் திசைகளும் பத்துக் கைகளாகும் என்று காமிகாகமம், அர்ச்சனாவிதிப் படலம் 335 ஆம் சுலோகம், கூறுகிறது. திசைதோள் என்று சேரமான் பெருமாள் நாயனார் தமது பொன்வண்ணத் தந்தாதியில் (19) கூறுகிறார். எண்டிசை எண்டோள் என்று பட்டினத் தடிகள் தமது ஒருபா ஒருபஃதில் கூறுகிறார், திருமாலின் திருவுருவத் தையும் இவ்வாறே மிக அழகாகப் பாடுகிறார், நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார். “மாநிலம் சேவடி யாகத், தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக, விசும்பு மெய்யாகத், திசை கை யாகப், பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே” என்று, உருவமற்ற திருமாலுக்குப் பண்டைக் காலத்துப் பெரியோர் உருவம் கற்பித்ததைச் சொல்லோவியமாகக் காட்டுகிறார். பெருந்தேவனார். இதனால், திருமாலும் சிவபெருமானும் ஆகாயத் தைத் திருமேனியாகவும் திசைகளைக் கைகளாகவும் கொண்டவர் என்பது தெரிகிறது. இவர்களுக்குத் திசைகள் கைகளாக அமைந்தன என்றால், இவர்களின் கைகள் நான்காகத்தானே இருக்கவேண்டும்? திசைகளை எட்டாகவும், பதினாறாகவும் கொள்ளும்போது கைகளும் இவர்களுக்கு எட்டும் பதினாறு மாகத்தானே அமைய வேண்டும்? திசைகளே கைகள் என்று கூறிவிட்டு, உருவம் அமைக்கும்போது இரண்டு கைகளை அமைத்தால் பொருந்தாதல்லவா? திசைகள் இரண்டல்லவே; நான்குதானே. இதனால்தான், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அமைக்கப்படும் திருவுருவங்களில் கைகள் நான் காகவும், எட்டாகவும் பதினாறாகவும் அமைக்கப்படுகின்றன. ஆனால், பௌத்த சமண சமயங்களின் தத்துவக்கொள்கை சைவ வைணவ சமயத்தைப் போன்றதல்ல. அருகப்பெருமானும் புத்தர் பெருமானும் மனிதராக இருந்து தமது தவத்தினாலும் ஒழுக்கத் தினாலும் அருகப் பதவியையும் புத்தப் பதவியையும் பெற்றவர்கள். மனிதப் பிறப்பில்தான் அருகநிலையையும் புத்த நிலையையும் அடையலாமே தவிர, மற்றத்தேவர் நரகர் விலங்கு முதலிய பிறவிகளில் அப்பதவிகளை அடைய முடியாது என்று அந்தமத நூல்கள் கூறுகின்றன. எனவே, மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலையடைந்த புத்த அருகத் தெய்வங்களுக்கு இரண்டு கைகள் தானே இருக்க வேண்டும்? மானசாரம் முதலிய சிற்பக்கலை நூல்களும், ஜினனுக்கும் (அருகக் கடவுளுக்கும்) புத்தனுக்கும் இரண்டு கைகளும் இரண்டு கண்களுத்தான் அமைக்க வேண்டும் என்று கூறுகின்றன. பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களுக்கு மட்டும், நான்கு எட்டுக் கைகளை ஏன் கற்பித்தார்கள் என்பது விளங்க வில்லை. புத்தர் அருகர்களைப் போலவே இச்சிறு தெய்வங்களுக்கும் இரண்டு கைகள் இருந்தால் பெரிய தெய்வங்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் வேற்றுமை தெரியாமற் போகும் என்பதைக் கருதிப், பிரித்தறிவதற்காக இவ்வாறு கற்பித்தார்கள் பேரலும். சைவ வைணவ பௌத்த சமண சமயங்களின் சிற்ப உருவங்களிலும் ஒவியப் படங்களிலும் இத்தகைய வேறுபாடுகள் காணப் படுகின்றன. நமது நாட்டுச் சிற்பக்கலை ஓவியக் கலைகளை ஆராய்வோர் இவற்றையெல்லாம் அறியவேண்டும். நமது நாட்டிலே கணக்கற்ற அழகான சைவ வைணவ பௌத்த ஜைன உருவச் சிலைகள் கல்லிலும் செம்பிலும் அமைக்கப்பட்டுள்ளன. அவை யெல்லாம் அங்கங்கே பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக் காணும்போது அவை நமது உள்ளத்திலே ஏதேதோ உணர்ச்சிகளை ஊட்டுகின்றன. சிற்பக் கலைச் செல்வங்களை பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். உடைத்து போன அல்லது சிதைந்துபோன சிற்பங்களாக இருந்தாலும் அவற்றைப் போற்றி வைக்க வேண்டும். இக்காலத்தில் சிற்பக்கலை ஆர்வமும், அக்கலை ஆராய்ச்சியும் பெரும்பான்மையோருக்கு இல்லை. நூற்றில் தொண்ணுற்றொன்பது பேருக்கு இல்லையென்று சொல்லலாம். சிற்பக்கலையைச் சிறப்பாக வளர்த்த நம் நாட்டின் இன்றைய நிலை இது! புத்த உருவச்சிலைக்கும் ஜைன உருவச்சிலைக்கும் வேற்றுமை தெரியாதவர்கள், கணக்கற்றவர் நமது நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்! படித்தவர்களிலேயே இப்படி என்றால், வரலாறே தெரியாத படிக்காத பாமரர்களைப் பற்றிக் கூற வேண்டிய தில்லையே. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஊரில் சில செம்புச் சிற்ப உருவங்கள் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவை நடராஜர் சிவகாம சுந்தரி, இராமர் இலக்குமணர் சீதாலக்ஷ்மி என்னும் உருவங்களாகும் இந்த அழகான செம்பு உருவங்களை ஒரு கோவிலில் வைத்து வணங்குகிறார்களாம். வைத்தவர்கள் நடராஜர் பக்கத்தில் சீதை உருவத்தையும் இராமர் பக்கத்தில் சிவகாமியின் உருவத்தையும் மாற்றிவைத் திருக்கிறார்களாம்! நடராசரின் தாண்ட வத்தைக் கண்டு மகிழவேண்டிய சிவகாமி இராமன் பக்கத்தில் சீதையின் இடத்திலிருப்பதும், இராமர் பக்கத்தில் இருக்க வேண்டிய சீதை நடராசர் பக்கத்தில் இருப்பதும் எதைக் காட்டு கின்றன? சீதையின் உருவத்துக்கும் சிவகாமியின் உருவத்துக்கும் வேறுபாடு அறியாதபடி சிற்பக்கலை அறிவு மழுங்கிப் போய் விட்டதைக் காட்டுகிறதல்லவா? சிற்பக்கலை சிறந்த அழகுக் கலை; அழகிய நுண்கலை. ஏனைய அழகுக்கலைகள் உள்ளத்திற்கு உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுவதுபோலவே இந்தச் சிற்பக்கலையும் உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. சிற்பக் கலையை நாம் கைவிடுவது பேதைமைத்தனமாகும். இந்தக் கலைச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். எத்தனையோ இடங்களில் எத்தனையோ சிற்ப உருவங்களைக் காண்கிறோம். எல்லாச் சிற்பங்களும் கலையழகு நிரம்பியவை என்று கூறமுடியாது. கலையழகுள்ளவற்றையும் அல்லாதவற்றையும் ஆராய்ந்து அறியவேண்டும். அடிக்குறிப்புகள் 1. கழக 1008 நூல் வெளியீட்டு விழா மலர் 1961 2. மிகப் பழைமையான சிவபெருமான் திருமால் திருவுருவங்களுக்கு, மிக அரிதாக இரண்டு திருக்கைகள் மட்டும் உள்ளன. அவை விதிவிலக்கானவை. சிவன் திருமால் உருவ அமைப்பு* சிவனும் திருமாலும் தொன்று தொட்டுத் தமிழர் வழிபட்டு வருகின்ற இரண்டு பழம்பெருந்தெய்வங்கள். தமிழருக்கு மட்டு மன்றி, இந்தியாவிலுள்ள இந்து சமயத்தவர் எல்லாராலும் இந்தத் தேவர்கள் வழிபடப்படுகின்றார்கள். மிகப் பழைய காலத்தில் இந்தத் தேவர்கள் இருவரும் வேற்றுமை இல்லாமல் ஒரே தேவராகக் கருதப்பட்டு வழிபடப்பட்டார்கள். சைவம் என்றும் வைணவம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரித்து, சிவபெருமான் சைவக் கடவுள் என்றும் திருமால் வைணவக் கடவுள் என்றும் இப்போது கருதப் படுவது போல, அக்காலத்தில் கருதப்படவில்லை. அக்காலத்தில் சிவனும் திருமாலும் ஒரே கோவிலில் வணங்கப்பட்டார்கள். இந்தத் தேவர்களின் உருவங்கள் இரண்டு கைகளையுடைய தெய்வங்களாக அமைக்கப்படவில்லை; நான்கு கைகள் அல்லது எட்டுக் கைகளை உடைய உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கைகள் மட்டும் உடைய சிவ, விஷ்ணு உருவங்கள் மிக மிக அருமை, ஆனால், நான்கு கைகளையுடைய உருவங்களையே பெரும்பாலும் காண்கிறோம். இந்துக்கள் அல்லாத வேறு மதத்தார் இந்த உருவங்களைப் பார்க்கும்போது, வியப்படைகின்றனர். இரண்டு கைகள் இல்லாமல், இயற்கைக்கு மாறாக, ஏன் நான்கு, எட்டு முதலான பலகைகளை இவ்வுருவங்கள் பெற்றுள்ளன என்று அவர்கள் மனத்தில் வினா எழுகின்றது. இந்த உருவங்கள் பல கைகளைப் பெற்றிருப்பதற்குத் தகுந்த காரணம் உண்டு. அதனை இங்கு விளக்கிக் கூறுவோம். மற்ற மதத்தாரைப் போலவே சைவரும் வைணவரும், ‘கடவுள் உருவம் இல்லாதவர்’ என்றும், ‘அவர் அருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆனால், அருவமாய் இருக்கிற கடவுளுக்கு உருவம் அமைத்தபோது. அவ்வுருவத்துக்கு இரண்டு கைகளை அமைக்காமல் பல கைகளை அமைத்தார்கள். ஏன் பல கைகளைக் கற்பித்தார்கள் என்பதே வினா. அதற்கு விடை கூறுவோம். உருவம் இல்லாத கடவுள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார் என்றும், உலகத்தைக் கடந்து அப்பாலும் பரவியிருக்கிறார் என்றும் கடவுளைப் பற்றிச் சைவரும் வைணவரும் நம்புகின்றனர். அப்படிப் பட்ட கடவுளை வணங்குவதற்காக குறியீட்டுடன் உருவங்கள் அமைக்கப்பட்டன. (குறியீடு = Symbolism) அந்தக் குறியீடு என்ன? உலகத்தைக் கடவுளின் பாதமாகவும், உலகத்துக்கு அப்பாற் பட்ட ஆகாயத்தைக் கடவுளின் உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும் ஆகாயத்துக்கு அப்பால் அவருடைய முகம் இருப்பதாகவும், சூரிய சந்திரர் அவருடைய கண்களாகவும் பெரியோர்கள் கற்பித்துக்கொண்டார்கள்; கற்பித்துக்கொண்ட படியே கடவுளுக்கு உருவத்தை அமைத்துக்கொண்டார்கள். மனித உருவம் போலவே கடவுள் உருவத்தையும் அமைத்துக்கொண்ட போதிலும், கடவுள், மனிதனுக்கும் மேம்பட்ட ஆற்றலுடையவராய் உலகத்தைக் கடந்தும் இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகவே, பல கைகளையுடையவராகக் கற்பிக்கப்பட்டார். ஆகாயத்தை உடம்பாகக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்குத் திசைகள் கைகளாகக் கற்பிக்கப்பட்டன. திசை நான்கு அல்லது எட்டு என்று அறியப்படுகிறபடியால், கடவுளுக்குத் திசையாகிய கைகள் நான்கு அல்லது எட்டு என்று கற்பிக்கப்பட்டன. சிவன் விஷ்ணு உருவங்களுக்குப் பல கைகள் அமைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம். எனவே, சிவன் உருவமும் விஷ்ணுவின் உருவமும் குறியீடுகளால் அமைக்கப் பட்ட உருவங்கள் (Symbolism) என்பது தெளிவாகின்றது. நற்றிணை என்னும் சங்கத் தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், இந்தத் தத்துவத்தை (உண்மையை) மனத்தில் கொண்டு, திருமாலுக்கு வணக்கங் கூறியுள்ளார். அச்செய்யுள் இது: “மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாம், விசும்புமெய் யாத் திசைகையாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே.” சக்கராயுதத்தை யுடைய மாயோனுக்கு (விஷ்ணுவுக்கு) நிலம் காலாகவும், கடல் உடையாகவும், ஆகாயம் உடம்பாகவும், திசைகள் கைகளாகவும், சூரியனும் சந்திரனும் கண்களாகவும் அமைந்துள்ளன என்பதை இச்செய்யுளிலிருந்து அறிகிறோம். திசைகள் நான்கே அன்றி இரண்டு அல்ல. ஆகவேதான், திசைகளைக் கையாகவுடைய உருவத்துக்கு நான்கு கைகள் கற்பிக்கப் பட்டன. திசையை எட்டாகவும் பதினாறாகவும் கொள்ளும்போது. எட்டு, பதினாறு கைகள் அமைக்கப்படுகின்றன. சிவனுடைய உருவமும் இவ்வாறுதான் கற்பிக்கப்பட்டது. இதற்கு அந்த மத நூல்களில் சான்றுகள் உள்ளன. சிவனுக்கு ஆகாயமே உடம்பாய் இருக்கிறது என்று சைவநூல்கள் கூறுகின்றன. “ஆகாசமே உடல்” என்று ‘திருமந்திரமும்’, “விசும்பே உடம்பு” என்று ‘பொன் வண்ணத்தந்தாதியும்’ ‘விசும்பே ஆகம்” என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் கூறியுள்ளன. ஆகாயத்தை உடம்பாகக் கொண்டுள்ள சிவபெருமான் திசைகளாக நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கொண்டிருக் கிறார் என்று கூறப்படுகிறது. ‘திசைகள் எட்டும் திருக்கைகள்” என்று ‘திருமந்திர’மும் “திசை தோள்” என்று ‘பொன்வண்ணத் தந்தாதி’யும், “எண்திசை எண்தோள்” என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் கூறியுள்ளன. “பத்துத் திசைகளும் பத்துக் கைகள்” என்று ‘காமி காகமம்’ என்னும் சைவாகமம் கூறுகின்றது, (எட்டுத்திசைகளுடன் மேல்கீழ் என்னும் இரண்டு திசைகளையும் சேர்த்துப் பத்து என்று கூறுகிறது.) சிவபெருமானுக்கு மூன்று கண்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்றும் சிவபெருமானின் கண்களாகக் கற்பிக்கப்பட்டன. “மோகாக முக்கண் மூன்றொளி” என்பது திருமந்திர வாசகம். சூரிய சோம அக்கினி சிவபெருமானின் மூன்று கண்கள் என்றும், இச்சா சத்தி கிரியா சத்தி ஞானா சத்தி என்னும் மூன்று சக்திகள் சிவபெருமானின் கண்கள் என்றும், ‘திக்ஷாவிதி’ என்னும் சைவநூல் கூறுகிறது. இச்சாசக்தி கிரியா சத்தி ஞானாசத்தி என்னும் மூன்று சத்திகளே சிவபெருமானின் மூன்று கண்கள் என்று ‘காரணாகமம்’ கூறுகிறது. உருவம் இல்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்த சைவ வைணவப் பெரியார்கள் அந்த உருவத்துக்குக் குறியீடு கொடுத்து உருவத்தைக் கற்பித்தார்கள். இதனால், இந்த உருவங்கள் மட்டுமே கடவுள் என்பது பொருள் அன்று. இந்த உருவங்கள் மூலமாகக் கடவுளின் அருவ உருவத்தை ஒருவாறு அறியலாம் என்பதே கருத்தாகும். ஆகாயத்தைக் கடவுளின் உடம்பாகக் கற்பித்தபடியால் பெரியோர்கள் அதற்கு ஏற்பத் திசைகளைக் கற்பித்தார்கள்; திசைகள் நான்கு அல்லது எட்டு இருப்பதால், அந்த உருவங்களுக்கு நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்தார்கள். இதையறிந்துகொண்டால், நான்கு எட்டுக் கைகள் இருப்பதைக் கண்டு அறிவுடையோர் குறை கூற மாட்டார். மாறாக, ஐயமுறுபவர்கள் அதில் பொதிந்துள்ள உண்மைக் கருத்தைக் கண்டு மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம்* சிவபெருமானுடைய திருவுருவங்களைப் பலவகையாக அமைத்திருக்கிறார்கள். அந்த வடிவங்களில் இருபத்தைந்தை மட்டும் சிறப்புமிக்கவையாகக் கருதுகின்றனர். சிற்பக்கலை நூல்களும் இருபத்தைந்து மூர்த்தங்களையே கூறுகின்றன. தமிழ் மச்சபுராணமும் சிவபெருமானுடைய இருபத்தைந்து மூர்த்தங்களைச் சிறப்பாகப் பேசுகிறது.1 மச்சபுராணத்தின் உத்தர காண்டத்தில் இருபத்தைந்து பேரமுரைத்த அதிகாரத் (30)தில், சிவபெருமானுடைய இருபத்தைந்து பேரங்கள் கூறப்படுகின்றன (பேரம் என்பது தெய்வங்களின் உருவம்). அவ்விருபத்தைந்து பேரங்களில் கங்காதர மூர்த்தமும் ஒன்று. ஐயைந்தாம் பேரப்பேர், நீரலை எறிந்துலட்டுங் கங்கை வையக முதல யாவும் வாய்மடுத் துண்ண வெண்ணி வெய்ய வெங் கோரஞ் செய்ய, மின்னார் செஞ்சடையிற் றாங்கிப் பையரவுடனே சுற்றும் பரன் கங்கா தரனே யாகும்.2 வானவெளியிலிருந்து பெருவெள்ளமாக நிலத்தில் பாய்ந்த கங்கையைச் சிவபெருமான், தம்முடைய சடையில் ஒரு சிறு நீர்த்துளியாகத் தாங்கிக் கொண்டதுதான் கங்காதர மூர்த்தம். மகாபாரதத்தில், இந்தக் கதை கூறப்படுகிறது. பகீரதன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து ஆகாய கங்கையைப் பெற்றான். கங்கை வானத்திலிருந்து மிக வேகமாக நிலத்தின்மேல் பாய்ந்து வந்தது. அதன் வேகத்தினாலே நிலவுலகம் அழிந்துவிடும்போலத் தோன்றிற்று. அதனைக் கண்ட தேவர்கள், நிலவுலகம் அழிந்துவிடும் என அஞ்சி, கங்கையைத் தாங்கிக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். சிவபெருமான் அந்தப் பெரிய வெள்ளத்தைத் தம்முடைய சடையின் ஒரு புரியிலே, சிறு துளியாக ஏந்திக்கொண்டார். ஆற்றல்மிக்க அந்தப் பெரிய வெள்ளம் அவருடைய சடையின் ஒரு புரியிலே சிறு துளியாக அடங்கிவிட்டது. இந்தப் புராணக் கதையைத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய தேவாரத்திலே அழகிய சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார்: மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கையென்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.3 அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அனேககாலம் வஞ்சமில் தவத்துள் நின்ற மன்னிய பகீரதற்கு வெஞ்சின முகங்களாகி விசையோடு பாயுங் கங்கை செஞ்சடை ஏற்றார் சேறைச் சென்னெறிச் செல்வனாரே.4 சிவபெருமான் வான்கங்கையைத் தம்முடைய சடையில் சிறுதுளியாக ஏற்றுக்கொண்டதை. மாணிக்கவாசகர் இரண்டு மகளிர் வாயிலாகக் கூறுகிறார்: மலைமகளை யொருபாகம் வைத்தலமே மற்றொருத்தி5 புலவர்கள் செய்யுள் வடிவிலே சொல்லோவியமாக அமைத்துக் காட்டிய கங்காதர மூர்த்தத்தைச், சிற்பக் கலைஞர், அழகான சிற்ப வடிவமாகக் கல்லிலே அமைத்துக் காட்டியுள்ளனர். கங்காதர மூர்த்தியின் சிற்ப வடிவம் மாமல்லபுரத்து வராகப்பெருமாள் குகைக் கோயிலிலும் திருச்சிராப்பள்ளி மலைக் கோயிலிலும் எல்லோரா குகைக் கோயில்களில் ஒரு குகையிலும் பாறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் சில கோயில்களிலும் இந்த உருவத்தை நாம் காணலாம். ஆனால், இங்கு நான் அறிமுகப்படுத்துவது புதுமையான, வேறெங்கும் காணமுடியாத கங்காதர மூர்த்தியாகும். புதுமையும் கலை நுட்பமும் வாய்ந்த இந்த மூர்த்தத்தை வாசகர் கண்டிருக்க மாட்டாரென நான் கருதுகிறேன். காஞ்சிபுரத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில். அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்ட ஒரு கோயிலில் இந்தச் சிற்ப உருவத்தை நான் கண்டேன். இச் சிற்பம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாகும். காலப் பழமையாலே, இது பழுதடைந்து சில இடங் களில் சிதைந்து விட்டது; சிதைந்து போன பகுதிகளை அண்மைக் காலத்தில் பழுது தீர்த்துச் செப்பனிட்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிற்பத்தின் பழைய அழகு மறைந்துவிட்டது. எனினும் பல அருமையான சிறப்புகளும், இதை வடித்த சிற்பியின் நுட்பமான குறிப்பு களும் அழியாமல் இருக்கின்றன. இனி இந்தச் சிற்பத்தைப் பார்ப்போம். இந்தச் சிற்பத்திலே சிவ பெருமான், உமாதேவியார், இரண்டு பூதகணங்கள், கங்கை ஆகி யோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் வலது காலை நிலத்தில் ஊன்றி, இடது காலைக் குறள் வடிவமுள்ள ஒரு பூதத்தின் தோளின்மேல் வைத்து நிற்கிறார். அவருக்கு இடப்பக்கத்தில் உமா தேவியார், தம்முடைய வலக்கையைச் சிவபெருமானுடைய தொடையின் மேல் வைத்த வண்ணம் நிற்கிறார். சிவபெருமானுடைய வலக்காலின் பக்கத்தில் குறள் வடிவமுள்ள இன்னொரு பூதம் வெண்சாமரையைத் தோளின்மேல் சுமந்து கொண்டு. ஒரு கையை உயர்த்திச் சிவபெருமானைச் சுட்டுகிறது. பூதங்கள் எப்போதும் சிவபெருமானைச் சூழ்ந்துகொண்டிருப்பது வழக்கம். இதனைப் ‘பாரிடம் சூழவருவார்’ என்னும் தேவார (பாரிடம்-பூதம்)ப் பகுதியால் அறியலாம். சிவபெருமானுக்கு, பக்கத்துக்கு நான்கு கைகளாக எட்டுக்- கைகள் இருக்கின்றன. சிவபெருமானின் சடைமுடியில் எப்போதும் இருக்கிற நீலாப் பிறை, ஊமத்தம்பூ, கொக்கிறகு, பாம்பு, இண்டை மாலை ஆகியவை இச்சிற்பத்தில் இடம் பெறவில்லை. ஏனென்றால், முடித்திருந்த சடையை இப்போது அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஆகையால், அந்தப் பொருள்கள் இப்போது சடையில் காணப்பட வில்லை. பிரித்துவிட்ட சடையிலிருந்து ஒரு புரியை எடுத்து இடது கையில் அவர் பிடித்திருக்கிறார்; இன்னொரு கை (இடக்கை)யால் சடையின்புரி கீழே அவிழ்ந்து தொங்காமல் அவர் தாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய மற்றொரு இடக்கை புரிசடையைச் சுட்டிக் காட்டுகிறது. நான்காவது இடக்கை உமாதேவிக்குப் பின்புறத்தில் மறைந்திருக்கிறது. இடக்கையினால் பிடித்திருக்கிற புரிசடையின்மேல், ஆகாய கங்கை வானிலிருந்து இறங்குகிறது. கங்கையைப் பெண்ணாகக் கூறுவது கவி மரபு. அந்த மரபுப்படி இந்த உருவத்தையமைத்த சிற்பியும், கங்கையைப் பெண் வடிவமாகக் காட்டியுள்ளார். கங்கை யாகிய பெண் கைகளைக் கூப்பித் தொழுது கொண்டே, மேலிருந்து சடைப்புரியில் இறங்குகிறாள். அவளுடைய அரைக்குக் கீழ்ப்பகுதி வெள்ளம்போல அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமான் கங்கை நீரைச் சடையில்கொண்டது ஒரு நொடி நேரத்திலாகும். மிக வேகமாக ஆற்றலோடு பாய்ந்து, உலகத்தை அழித்துவிட இருந்த வெள்ளத்தைச் சிவபெருமான் ஒரு சிறு சடைப்புரியில் ஒரு துளிநீராக அடக்கிக் கொண்டார். ஆகையால், நிலத்தை அழித்துவிடக் கருதிய கங்கையின் எண்ணம் நிறைவேறவில்லை. பூ விழுவதுபோலக் கங்கை நீர் அவருடைய சடையில் வீழ்ந்து மெல்லத் தங்கிவிட்டது. இந்தச் செயல் ஒரு நொடியில் முடிந்துவிட்டது. இனி, சடையை முன்னிருந்ததுபோலக் கட்டி முடிக்க வேண்டியதுதான். இங்குத்தான் சிற்பக் கலைஞனின் கூர்மையான அறிவும் கைத்திறனும் நன்றாக விளங்குகின்றன. சடையை முடித்துக் கட்டி அதில் புனையவேண்டிய பொருள் களையெல்லாம் சிவபெரு மானுடைய வலக் கைகளில் சிற்பக் கலைஞன் காட்டியிருக்கிறான். சடைமுடியில் அணியவேண்டிய நிலாப்பிறையைச் சிவபெருமான் வலக் கையில் ஏற்றிருக்கிறார். தலையைச் சுற்றி அணியவேண்டிய இண்டை மாலை6 இன்னொரு கையில் இருக்கிறது. இண்டை மாலைக்குக் கீழே, மற்றொரு கையிலே நாகப்பாம்பு காணப்படுகிறது. சிவபெருமான் தம்முடைய சடை முடியைச் சுட்டியிருப்பது வழக்கம். கங்கையை ஏற்றுக் கொள்ளச் சடையை அவிழ்த்தபோது சிவபெருமான் அந்தப் பாம்பை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டார். அந்தப் பாம்பு மூன்று தலைகளையுடையது. இது படம் எடுத்துச் சீறும் நிலையில் உள்ளதைக் காணலாம். நான்காவது வலக்கை மார்பின் பக்கமாக எதையோ விரல்களால் பிடித்திருப்பதுபோலக் காணப்படுகிறது. பிடித்திருக்கும் பொருள் இன்னதென்பதைச் சிற்பக் கலைஞன் இந்தச் சிற்ப உருவத்தில் காட்டவில்லை. சிற்ப உருவத்தைக் காண்பவரே உய்த்துணருமாறு விட்டுவிட்டார் சிற்பி. அந்தப் பொருள் கொக்கிறகாக இருக்கலாம்; அல்லது ஊமத்தம் பூவாகவும் இருக்கலாம்; அல்லது மயிற்பீலியாகவும் இருக்கலாம்; அல்லது இந்த மூன்று பொருள்களாகவும் இருக்கலாம். இந்த மூன்று பொருள்களையும் சிவபெருமாள் தம்முடைய சடைமுடியில் அணிந்திருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. கைவிரல்களின் அமைப்பு இந்தப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை அல்லது மூன்று பொருள்களையுமே பிடித்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது. இப்படி அமைத் திருப்பது. சிற்பக் கலைஞனின் அறிவுத் திறனைக் காட்டுகிறது. இவற்றைப் போன்ற நுட்பங்களையும், அழகையும் வேறு கங்காதர மூர்த்தச் சிற்பங்களில் காணமுடியவில்லை. ஆகவே, இந்தக் கங்காதர மூர்த்தியின். சிற்ப வடிவம் புதுமையும், சிறப்பும் வாய்ந்த வியக்கத்தக்க அரியதொரு சிற்பம் என்பதில் ஐயம் இல்லை! இதுமட்டுமா? இந்த மூர்த்தத்தில் இன்னொரு புதுமையும் காணப்படுகிறது. இந்தப் புதுமை வேறு கங்காதார மூர்த்தங்களில் காணப்படவில்லை, அது என்னவென்றால், சிவபெருமானுடைய வலப்பக்கத்திலே, சடாமூடிக்கு அருகில் சடாமுடியைப் பார்த்துக் கொண்டு ஒரு நாய் இருக்கிறது. இந்த நாய் எதையோ கௌவிக் கொள்ளக் காத்திருப்பதுபோலத் தோன்றுகிறது. வேறு கங்காதர மூர்த்தச் சிற்பங்களில் நாயின் உருவம் காணப்படவில்லை. சிற்பக் கலைஞன் இந்தச் சிற்ப உருவத்தில் நாயின் உருவத்தை ஏன் அமைத்தான்? கங்காதர மூர்த்தத்துக்கும் நாய்க்கும் என்ன தொடர்பு? புராணக் கதைக்கும் நாய்க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? அல்லது சிற்பக் கலைஞன் தன் மனம் போனபடி, இந்த நாய் உருவத்தை அமைத்தானா? நாயின் உருவம் இங்கு இடம் பெற்றிருப்பது ஏன்? இந்தக் கேள்விகள் என் மனத்தில் சில ஆண்டுகளாக நிலை பெற்றிருந்தன. எனக்கு விடை கிடைக்கவில்லை. புராணங்களில் இப்படி ஒரு மரபு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு எங்கே விடை கிடைக்கு மெனச் சில ஆண்டுகளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக, எதிர் பாராத இடத்தில் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. வரலாற்று ஆராய்ச்சிக்காக, நான் தென் இந்திய சாசனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஒரு சாசனத்தில் என்னுடைய கேள்விக்கு விடை கண்டேன்.7 வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் முதல் பிராகாரம், மேற்குப் பக்கத்துச் சுவரில் இந்தச் சாசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது அகவற் பாவாலான சாசனம். இதை என்னுடைய சாசனச் செய்யுள் மஞ்சரியில் அச்சிட்டிருக் கிறேன்.8 இந்த நீண்ட அகவற்பாவில் நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் இங்குக் காணலாம்: .............கண்ணுதற் பெருமான் ஆதிநாதன் நாய் வேடங் கொண்டு பாய்புனற் கங்கை ஆயிர முகங்கொண்டு ஆர்த்தெழு மன்னாள் ஏற்றுக் கொண்ட திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதரர். இந்தச் செய்யுளிலே, சிவபெருமான் கங்கையைத் தம்முடைய சடையில் ஏற்றுக்கொண்டபோது நாய் வேடமுங்கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, இந்த நாய் உருவம் கங்காதர மூர்த்ததின் ஒரு கூறு என்பது தெரிகிறது. கங்காதர மூர்த்தத்தில் நாய் இடம் பெற்றிருப்பதற்கு விடை தல சிவபெருமான் ஏன் நாய் உருவங் கொண்டார்? கங்கையை ஏந்திக் கொண்டதற்கும் நாய் உருவங் கொண்டதற்கும் என்ன பொருத்தம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. என்னுடைய உய்த்துணர்வின்படி இதற்குப் பொருள் கற்பிக்கிறேன். இந்தப் பொருள் பொருத்தமாக இருந்தால் வாசகர் ஏற்றுக்கொள்ளலாம். கங்கை பெருவெள்ளமாகப் பாய்ந்து, தன்னுடைய ஆற்றலி னாலும் வேகத்தினாலும் பூமியில் விழுந்து ‘தரணியைப் பெருங் கேடாக்க’ எண்ணிற்று. மனித ஆற்றலைப் பல்லாற்றானும் ஐம்பெரும் பூதங்களின் ஆற்றல் விஞ்சியதாகும். ஆனால், அவற்றின் ஆற்றலைக் கடவுளின் ஆற்றலோடு ஒப்பிடுகின்றபொழுது மிகச் சிறியதாகும். ஆகையினால்தான், கங்கையின் ஆற்றலைக் கடவுள் பொருட் படுத்தாமல் சிறு நீர்த்துளியாகத் தம்முடைய சடைமுடியின் ஒரு சிறு புரியில் ஏற்றுக்கொண்டார். ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றான அந்தப் பெருவெள்ளத்தின் ஆற்றலைக் கடவுளின் ஆற்றலோடு ஒப்பிடும் போது, அது ஒரு சிறு துளிதான். ஆனால், அந்தப் பெருவெள்ளம் சிவபெருமானுடைய சடைப் புரியில் இறங்காமல் மற்றப்புறமாக இறங்கினால், பூமிக்குக் கேடு விளையும் அன்றோ? ஆகவே, வெள்ளம் வேறுபக்கம் விழாமல் சடைப்புரியிலே விழும்படி செய்வதற்குச் சிவபெருமான் நாயின் வேடங்கொண்டு, கங்கை வேறுபக்கம் பாயாதபடியும் புரிசடையில் விழும்படியும் செய்தார். என்னை? கங்கை மிகத் தூய்மையானது; புனிதமானது. இந்து மதக் கொள்கைப்படி நாய் தூய்மையற்ற, தீண்டத்தகாத விலங்கு. நாய் நக்கிவிட்டால் கங்கையின் புனிதத்தன்மை கெட்டுப்போகும். அவ்வாறு நேராதபடி, நாய் தன்னைத் தீண்டாதபடி பார்த்துக் கொள்வது கங்கை யின் கடமை. நாயினால் தீண்டப்பட்டுப் புனிதத் தன்மை கெடுவதை தவிட, சிவபெருமானின் புனிதமான சடைப் புரியில் தங்கி மேலும் தூய்மையடைய கங்கை விரும்பியது. அதனால் சிவபெருமானின் புரிசடையில் அது தங்கிவிட்டது. கங்கை நிலத்தில் விழாதபடி தடுக்கவே. சிவபெருமான் கங்காதர மூர்த்தத்தின்போது நாய் வேடங்கொண்டார் என்பது இதனால் விளங்குகிறது எனலாம். இந்தக் கருத்து பொருந்துமானால் ஏற்றுக்கொள்ளலாம். எப்படியானாலும் இந்தக் கங்காதர சிற்ப வடிவம், ஏனைய கங்காதர மூர்த்தங்களைவிடப் புதுமையும், சிறப்பும் உடையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. காலப்பழமையினால் பிற்காலத்தில் பழுதடைந்த இந்தச் சிற்பத்தைத், திறமையாகப் பழுது பார்க்கவில்லை. அதனால், இந்தச் சிற்பம் பழைய அழகு கெட்டுக் காணப்படுகிறது, பழுதுபடாமலிருந்த காலத்தில், இந்தச் சிற்ப உருவம் எத்துணைப் பேரழகுடன் விளங்கியிருக்குமோ! அடிகுறிப்புகள் 1 வடமலையப்ப பிள்ளை : மச்சபுராணம். 2. ” ” : உத்தரகாண்டம், 30ஆவது இருபத்தஞ்சு பேரமுரைத்த அத்தியாயம், செய்யுள் 65. 3. திருநாவுக்கரசு நாயனார் : தேவாரம் 1, சிருச்சாய்க்காடு-7. 4. ” ” : தேவாரம் 1, திருசேறை-4. 5. மாணிக்கவாசகர் : திருவாசகம், திருச்சாழல்-7. 6. இண்டைமாலை என்பது : தலையச்சுற்றி அணியும் மாலை. 7. Archaeological Survey of India : South Indian Inscriptions, Vol, III. No. 69. 8. மயிலை சீனி. வேங்கடசாமி : சாசனச் செய்யுள் மஞ்சுரி, 1959, பக். 18. இலிங்கோத்பவ மூர்த்தம்* முழு முதற் கடவுளாகிய இறைவன் அருவமானவன். இறைவனுக்கு உருவம் இல்லை. கண்ணுக்குப் புலனாகாத இறைவனை வணங்குவதற்காக நம் முன்னோர் மூல உருவங்களைக் கற்பித்தார்கள். அந்தத் திருவுருவங்களை நாம் வணங்கி வழிபடுகிறோம். சிவபெருமா னுடைய திருவுருவங்களை எத்தனையோ விதமாக நமது முன்னோர் அமைத்திருக்கிறார்கள். அந்த மூர்த்தங்களில் மூக்கியமானவை இருபத்தைந்து மூர்த்தங்கள். இருபத்தைந்து மூர்த்தங்களில் முதன்மை யானது இலிங்கோத்பவ மூர்த்தம். இலிங்கோத்பவ மூர்த்தத்தைச் சிவன் கோவில்களில் காணலாம். கர்ப்பக்கிருகத்தின் (திருவுண்ணாழிகையின்) சுவரில் வெளிப் பக்கத்தில். கர்ப்பக்கிருகத்தின் நேர் பின்புறத்தில் இலிங்கோத்பவ மூர்த்தம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். விதிவிலக்காகச் சில சிவன் கோவில்களில், இலிங்கோத்பவ மூர்த்தம் இருக்க வேண்டிய இடத்தில் திருமால் (விஷ்ணு) திருவுருவம் இருப்பதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் இலிங்கோத்பவ மூர்த்தந்தான் இருப்பது வழக்கம். சிவன் கோயில் கர்ப்பக்கிருகத்தை வலம் வரும்போது கர்ப்பக்கிருகத்தின் நேர்ப்பின்புறத்தில் இந்த மூர்த்தத்தைக் கண்டு வருகிறோம். இலிங்கோத்பவ மூர்த்தத்தின் அமைப்பு: சிவலிங்க உருவமாக அமைத்து அதற்குள் சிவபெருமான் நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். மேற்புற இரண்டு திருக்கைகளில் மான்மழு ஏந்திக் கீழ் இரண்டு திருக்கைகளை அபயவாத முத்திரைகளாக அமைத்திருக் கிறார். அவருடைய திருமுடியின் உச்சியும் திருவடிகளின் பாதங் களும் காணப்படாமல் மறைந்திருக்கின்றன. திருமுடிப் பக்கத்தில் சிறு அன்னப்பறவை பதிப்பது போலவும் திருவடிப் பக்கத்தில் சிறு காட்டுப் பன்றி தன் கோரைப் பல்லினால் பூமியைக் கிளறிக் கொண்டிருப்பது போலவும் சிற்ப உருவத்தில் அமைக்கப்பட்டிருகின்றன. இவ்விதமாகக் காட்சியளிக்கிற சிற்ப உருவத்துக்கு (இலிங்கோத் பவ மூர்த்தத்துக்கு) ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. தேவர்களில் மிகப் பெரியவர்களாகிய பிரமனும் திருமாலும் தாங்கள் தாங்களே முழுமுதற்கடவுள் என்று சொல்லிக்கொண்டார்களாம். இவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டபோது அவர்களுக்குள் இதுபற்றி வாதம் ஏற்பட்டது. பிரமன் தானே முழுமுதற் கடவுள் என்று கூறினார். திருமாலும் தானே முதற்தெய்வம் என்று கூறினார். இவர்களில் யார் முழுமுதற் கடவுள் என்பதையறியாமல் மற்றத் தேவர்கள் எல்லோரும் திகைத்தார்கள். அந்தச் சமயத்தில் சிவபெருமான் அவர்களுக்கு முன்பு தோன்றினார். அவர் அவர்களுக்குக் கூறினார். “உங்களில் யார் என்னு டைய முடியையாவது அடியையாவது காண்கிறீர்களோ அவரே முழுமுதற் கடவுள் ஆவீர்கள்” என்று கூறி, அவர்களுக்கு எதிரே மிக நீண்டு உயர்ந்த அழல் சோதி வடிவமாக நின்றார். பிரமன் அன்னத்தின் உருவங்கொண்டு அந்த அழற்சோதியின் முடியைக் காண்பதற்கு ஆகாயத்தில் உயர உயரப்பறந்து சென்றார். எவ்வளவோ உயரம் பறந்து சென்றும் அழற் சோதியின் திருமுடியை அவரால் காண முடியவில்லை. கடைசியில் பிரமனாகிய அன்னப்பறவை களைத்துப் போய் இறங்கி வந்துவிட்டது. திருமால் காட்டுப் பன்றியின் உருவங்கொண்டு அழற்சோதியின் அடியைக் காண்பதற்காகத் தன்னுடைய கோரைப் பல்லினால் பூமியை அகழ்ந்துகொண்டு இறங்கிப் போனார். ஆழம் ஆழமாக அகழ்ந்து கொண்டே பாதாளம் வரையில் சென்றார். அங்கும் அழற்சோதியின் அடியைக் காண முடியவில்லை. கடைசியில் களைத்து இளைத்து இனி, மேலும் அகழ்வதில் பலனில்லை என்று கருதித் திரும்பி வந்துவிட்டார். பிரமனும் மாலும் சந்தித்துத் தாங்கள் இருவரும் முழுமுதற் கடவுள் அல்லர் என்றும் தங்களுக்கு மேற்பட்ட ஒழு முழு முதல் கடவுள் ஒன்று என்றும் அதுவே சோதி வடிவமாக நிற்கும் திருவுருவம் என்றும் ஒப்புக்கொண்டார்கள். இதுவே, இலிங்கோத்பவ மூர்த்தத்தைப் பற்றிய புராணக்கதை. இந்த புராணக்கதை தெரிவிக்கிற தத்துவம் (உண்மை) என்ன? முழுமுதற் கடவுளாகிய இறைவன் சோதி வடிவமானவன், ஆதியும் அந்தமும் இல்லாதவன், தோற்றமும் முடிவும் இல்லாதவன் என்பதும் அழியாப் பரம் பொருளாக இருக்கிறான் என்பதுதான் இந்தப் புராணக் கதையும் இலிங்கோத்பவ மூர்த்தமும் தெரிவிக்கிற உண்மையாகும். இந்த அழகான உண்மையை இனிமையான சிற்ப உருவ மாகவும் கதையாகவும் நமது முன்னோர்கள் அமைத்துத் தந்திருக் கிறார்கள். கைதேர்ந்த சிற்பிகள் இலிங்கோத்பவ மூர்த்தத்தின் உருவத்தை அழகான சிற்பவடிவமாக அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்ப உருவங்களைச் சிவன் கோயில்களிலே நாம் பார்த்து மகிழலாம். பார்த்து மகிழ்வதோடு அல்லாமல் இந்தச் சிற்ப உருவம் நமக்குக் கற்பிக்கிற, ‘கடவுள் அந்தமும் ஆதியும் இல்லாத சோதி வடிவ மானவன்’ என்னும் உண்மையையும் உணர்கிறோம். இந்த அழகான தத்துவ உண்மையைப் பெரியோர்கள் அழகான இனிமையுள்ள செய்யுள்களினால் விளக்கிக் கூறியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். திருநாவுக்கரசு சுவாமிகள், இலிங்கோத்பவ மூர்த்தத்துக்கு ‘இலிங்க புராணம்’ என்னும் தேவாரப் பதிகத்தைப் பாடியுள்ளார். திருமாலும் பிரமனும் அடிமுடிகளைக் காணச் சென்றதை வெகு அழகாகக் கூறுகிறார். அப்பதிகத்தை முழுவதும் படித்து இன்புறலாம். இங்கு அப்பதிகத்தின் சில அடிகளை மட்டும் மேற்கோள் காட்டுகிறோம். “சொக்கணைந்த சுடரொளி வண்ணனை மிக்ககாண லுற்றாரங்கிருவரே.” “உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச் செலவு காண லுற்றாரங் கிருவரே.” “ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற்றா ரங்கிருவரே.” “உரம் பெருந்திய ஒளிநிற லண்ணனை நிரம்பக் காணலுற்றா ரங்கிருவரே.” “அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் கிண்டிக் காணலுற்றா ரங்கிருவரே.” “செங்கணானும் பிரமனுந் தம்முளே எங்குத்தேடித் திரிந்தவர் காண்கிலர் “இலங்குற்றேன்” என்றிலிங்கத்தே தோன்றினான். பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.” பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலையில், இலிங்கோத்பவ மூர்த்தியைக் கூறுகிறார். “கடவுள் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனல் பிழம்பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி!” என்றும், “இனையன் ஆகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு வாகி ஆழத்து அடுக்கிய ஏழும் எடுத்தன னெடுத்தெடுத்து ஊழியூழி கீழுறக் கிளைந்துங் காண்பதற் கரியநின் கழலும்;” “நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்னமாகிக் காண்டி லாத நின்கதிர் நெடுமுடியும்.” என்றும், திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில். “வலம்புரி நெடுமால் ஏனம் ஆகி நிலம்புக்கு ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி யடியவர் பச்சிலை யிடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி.” “நான்முகம் கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணங் கருத்தையுங் கடந்து சேணிகத் துளதே, ஒருபால் திருமுடி.” என்றும் விளக்கிக் கூறுகிறார். மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிய திருவாசகத்தில் சோதிவடிவமான முழுமுதற் கடவுளை, “தேவர்கோ அறியாத தேவதேவன் செம்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவார் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான்.” என்று கூறுகிறார். இவ்வாறு கடவுளின் உண்மை தத்துவங்களைப் புராணக் கதைகளாகவும் சிற்ப வடிவங்களாகவும் நம்முடைய முன்னோர் அமைத்துக் காட்டியுள்ளனர். இந்தப் புராணக் கதைகளும் சிற்ப வடிவங்களும், மேற் போக்காகப் பார்க்கிறவர்களுக்கு, பொருத்த மற்ற பொய்க் கதைகளாகவும் விளங்காத விசித்திர உருவங்களாகவும் காணப்படுகின்றன. அவர்களுக்கு இவற்றின் உண்மைப் பொருள் விளங்குவதில்லை. ஆனால் இவற்றின் உண்மைத் தத்துவங்களை அறியும்போது இவை மிக உயர்ந்த சிறந்த கருத்துகளைத் தெரிவிக்கின்றன என்பதையுணர்கிறோம். இலிங்கோத்பவ மூர்த்தத்தில் எவ்வளவு உயர்ந்த தத்துவம் அடங்கியிருக்கிறது பாருங்கள். கோயில் சிற்பங்கள் நுண்கலைகளில் சிற்பக்கலையும் ஒன்று என்பதை அறிந்தோம். உலகத்தில் காணப்படுகிற இயற்கையான உருவங்களையும் செயற்கையாகக் கற்பிக்கப்பட்ட உருவங்களையும் சிற்பாச்சாரிகள், சுதை மரம் கல் பஞ்சலோகம் முதலான பொருள்களினால் செய்கிறார்கள். “கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன” என்று திவாகர நிகண்டு கூறுகிறது. நம்முடைய கோயில்களிலே சிற்ப உருவங்கள் அமைக்கப் படுகின்றன. கோயில் கட்டடத்தின் தரை, சுவர், தூண்கள், விமானம், கோபுரம் முதலான எல்லா இடங்களிலும் சிற்ப உருவங்களைப் பார்க்கிறோம். சிற்ப உருவங்கள் அமையப்பெறாத கோயில் கட்டடங்கள் இல்லை என்றே கூறலாம். கோயில் சிற்பங்களில் பெரும் பாலன தெய்வ உருவச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. தெய்வ வழிபாட்டுக்குரிய கோயில்களை நம்முடைய முன்னோர் கலைக்கூடங் களாகவும் அமைத்தார்கள். ஆகையினால்தான் கோயில்களிலே சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்கிறோம். கடவுள் வழிபாட்டுக்குரிய கோவில்களிலே ஆதி காலத்தில் கடவுளின் உருவங்களை வைத்து வணங்கவில்லை. கடவுளின் உருவத்துக்குப் பதிலாகக் குறிப்பிட்ட அடையாளங்கள் வைத்து வணங்கப்பட்டன. உதாரணமாகச் சிலவற்றைக் காண்போம். முருகக் கடவுளின் கோயிலில் பழங்காலத்தில் முருகன் உருவம் வைக்கப் படாமல் முருகனைக் குறிக்கும் அடையாளமாக வேலாயுதம் வைத்து வழிபடப்பட்டது. சிவபெருமான் கோயிலில் அக்காலத்தில் சிவ பெருமான் உருவம் வைக்கப்படாமல் அவருக்கு அடையாளமாகத் திரிசூலத்தை வழிபட்டார்கள். பிறகு இலிங்க உருவத்தை (உருவம் இல்லாத பொருளாக) வைத்து வழி பட்டார்கள். திருமால் திருக்கோயில் களில் திருமால் உருவத்தை வைத்து வழிபடாமல் அவருடைய அடையாளமாகிய திருவாழியை (சக்கரத்தை) வைத்து வழிபட்டார்கள். ஏனென்றால் கண்ணுக்குப் புலப்படாமல் அருவமாக இருக்கிற கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்துவைக்க அக்காலத்தவர் விரும்ப வில்லை. பிற்காலத்திலே கடவுளுக்கு உருவங்களைக் கற்பித்து அவ்வுரு வங்களைக் கோயில்களிலே வைத்து வழிபடத் தொடங்கினார்கள். கடவுளுக்கு உருவங்களைக் கற்பித்த போது, அவ்வுருவங்களை மனித உருவங்களாகக் கற்பித்தாலும், மனித உருவத்துக்கும் தெய்வ உருவத்துக்கும் வேற்றுமை தோன்றும்படி, தெய்வ உருவங்களுக்கு நான்கு கைகள், எட்டுக் கைகள், பத்துக் கைகள், பதினாறு கைகளைக் கற்பித்தார்கள். உருவம் இல்லாத - கண்ணுக்குத் தெரியாத, எங்கும் பரந்திருக்கிற கடவுளுக்கு உருவத்தைக் கற்பிக்கவேண்டுமானால், இவ்வாறு பல கைகளை அமைக்கவேண்டும் என்று பெரியவர்கள் கருதினார்கள். கண்ணுக்குத் தெரியாமல், உருவமும் இல்லாமல், அண்ட வெளியிலே கலந்திருக்கிற பரம்பொருளின் திருமேனி ஆகாயமே என்றும், திசைகளே அவருடைய திருக்கைகள் என்றும் அவர்கள் கற்பித்தார்கள். திசைகள் நான்காகையால் அவருடைய திருக்கைகள் நான்காகவும், திசைகளை எட்டாகவும் கூறப்படுவதால் திருக்கைகள் எட்டாகவும், திசைகள் பதினாறாகவும் கூறப்படுவதால் திருக்கைகளைப் பதினாறாகவும் கற்பித்தார்கள். எட்டுத் திசைகளோடு மேலுலகத்தையும் கீழுலகத்தையும் சேர்த்துத் திசைகள் பத்தாகவும் கூறப்பெறுவதால் கடவுளின் திருக்கைகளைப் பத்தாகவும் கற்பித் தார்கள். இதனால்தான் கடவுள் உருவங்களுக்குக் கைகள் நான்கு, எட்டுப், பத்து, பதினாறு எனக் கற்பிக்கப்பட்டு அவ்வாறே ஒவியத்திலும் சிற்பங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தெய்வச் சிற்ப உருவங்களைப்பற்றிச் சைவசமய நூல்களிலும் வைணவ சமய நூல்களிலும் அறியலாம். நற்றிணை என்னும் சங்க நூலுக்குப் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துப்பாடிய பெருந்தேவனார், திருமாலைப் பாடுகிறார். அப்பாடலில், திருமாலுடைய திருமேனியின் திருவுருவத்தை மேற் கூறியவண்ணமே கூறுகிறார். “மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே” என்பது அக்கடவுள் வாழ்த்து. இவ்வாறு கற்பிக்கப்பட்ட உருவந்தான் கடவுளின் உண்மை உருவம் என்பது இதன் கருத்தன்று. இந்த உருவம் கடவுள் உருவத்தைக் குறிப்பாகச் சுட்டுகிற குறிப்புமட்டுமே. மேலும், சிவபெருமான், திருமால் திருவுருவங்கள் பல கைகளை யுடைய மனித உருவமாகக் கற்பிக்கப்பட்டாலும், அவ்வுருவங்களில் மனித உடல் வளர்ச்சிப்படி உறுப்புக்களை அமைத்துக் காட்டுவது வழக்கமில்லை. அதாவது, முழு வளர்ச்சியடைந்த மனிதனின் உடம்பு கை கால்கள் முதலான உறுப்புக்கள், தசைக் கட்டுகளுடனும் வலிமையுடனும் காணப்படுவதுபோலக் கடவுள் உருவங்களில் அமைப்பது வழக்கம் இல்லை. அண்டங் களையும் ஆகாயத்தையும் திசைகளையும் கடந்தது கடவுளின் உருவம் என்பதைப்போலவே, மனித உருவத்துக்கும் அப்பாற்பட்டது அவ்வுருவம் என்பதைக் காட்டவே மனித உறுப்புக்களின் தசைக்கட்டுகள் தெய்வ உருவங் களில் காட்டப்படுவதில்லை. வேறு சமயத் தெய்வ உருவங்களுக்கும் நம்முடைய சமயத்தெய்வ உருவங்களுக்கும் உள்ளே வேற்றுமை இதுதான். இதனை விளக்கமாகக் கூறுவோம். யவன (கிரேக்க, ரோம) நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் நம்முடைய நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளைப் பார்ப்போம். மனித உருவத்தின் அழகையும் வளர்ச்சியையும் சிற்பக் கலையில் நன்றாகப் பொருத்தி, அந்தக் கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகத்திலே பெரும்புகழ் படைத்தவர் கிரேக்கரும் ரோமரும் ஆவர். அவர் தங்கள் நாட்டுக் கடவுளர்களின் உருவங்களைச் சிற்ப உருவங்களாக அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாகவும் இயற்கையாகவும் அமையக்கூடுமோ அவ்வளவுக்கவ்வளவு அழகையும் இயற்கை வளர்ச்சியையும் பொருத்தி அத்தெய்வ உருவங்களை அமைத்தார்கள். அவர்கள் படைத்த ஜுயஸ், வீனஸ் முதலான கடவுள்களின் சிற்ப உருவங்களைப் பார்க்கும்போது, மானிட உடலமைப்பின் சீரிய வளர்ச்சிகள் அவைகளில் அமையப் பெற்றுப் பார்ப்பவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால், அச்சிற்பங்களைப் பார்க்கிறவர்களின் கருத்து, அவற்றின் உருவ அமைப்பின் அழகில்மட்டும் தங்கி நிற்கிறதே யல்லாமல், அதற்கப்பால் செல்லுவது இல்லை. அந்தச் சிற்பங்கள், மனித நிலைக்கு அப்பாற் பட்ட கடவுளின் உருவங்கள் என்னும் எண்ணத்தைத் தருவதில்லை. ஆனால், நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் காணப்படுகிற தெய்வ உருவங்களோ அப்படிப்பட்டவையல்ல. நம்முடைய தெய்வச் சிற்ப உருவங்களில் கிரேக்க, ரோம நாட்டுச் சிற்ப உருவங்களைப்போல, மனித உடல் வளர்ச்சியோடு இயைந்த உடலமைப்பு இல்லாதது உண்மைதான். ஆனால், இந்தச் சிற்பங்களைப் பார்க்கிற போது நமது மனமும் உணர்ச்சியும் இந்தச் சிற்பங்களில்மட்டும் நின்றுவிடுவது இல்லை. இவ்வுருவங்கள் நம்முடைய மனத்தை அதற்கப்பால் எங்கேயோ அழைத்துச்சென்று, ஏதோ தெய்வீக உண்மையைக் காட்டுகின்றன. ஆகவே நமது நாட்டுத் தெய்வச் சிற்பங்கள், அயல்நாட்டுச் சிற்பங்களைப்போல வெறும் அழகான காட்சிப் பொருள்களாகமட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் ஈர்த்துச்சென்று கருத்துக்களை ஊட்டுகின்றன. எனவே, நம்முடைய தெய்வ உருவங்கள், உட்பொருளைச் சுட்டும் குறியீடுகளாகவும் உருவங்களுக்கு அப்பால் ஏதோ தத்துவத்தை உணர்த்துகிறவையாகவும் உள்ளன. கோயில்களில் காணப்படுகிற தெய்வச் சிற்ப உருவங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறினோம். சமண, பௌத்த சிற்பங்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. சிற்பக்கலை உருவங்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, தெய்வத் திருவுருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், பிரதிமை உருவங்கள் என்பவை. இவற்றை விளக்குவோம். தெய்வ உருவங்கள் இருவகைப்படும். அவை சைவ சமய உருவங்கள், வைணவ சமய உருவங்கள் என்பவை. சைவ சமயச் சிற்ப உருவங்கள் பலவகைப்படும். சிவபெருமான் பார்வதி உருவங்களைப் பல்வேறு சிற்பங்களாக அமைப்பது வழக்கம். இலிங்கோத்பவ மூர்த்தம், சுகாசண மூர்த்தம், உமாமகேசம், கலியாணசுந்தரம், அர்த்தநாரி, சோமாஸ்கந்தம், அரியாமூர்த்தம், தக்ஷிணாமூர்த்தம், பிட்சாடன மூர்த்தம், கங்காதரர், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தம், திரிபாத மூர்த்தம், பைரவ மூர்த்தம், இடபாரூட மூர்த்தம், சந்திரசேகரர், நடராசர் முதலான பல வகைகள் உள்ளன. பார்வதி, கணபதி, முருகன் உருவங்களும் சைவ சமயத் திருமேனிகளாம். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. அப்பிரிவுகளை யெல்லாம் விரிவஞ்சிக் கூறாமல் விடுகிறோம். வைணவ சமயச் சிற்ப உருவங்களில் திருமால், இலக்குமி, கண்ணன், இராமன், பலராமன், நாராயணன், கேசவன், மாதவன், அனந்தசயனன், திரிவிக்கிரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய விதங்கள் உண்டு. இலக்குமிகளில் எட்டு விதமான உருவங்கள் உள்ளன. சமண சமயச் சிற்பங்களில் இருபத்து நான்கு தீர்த்தங்கரரின் (அருகரின்) உருவங்களும், யட்சகன், யட்சிசாத்தன், சோமட்டேசுவர் முதலான உருவங்களும் உள்ளன. பௌத்த சமயச் சிற்பங்களில் புத்தருடைய உருவம் நின்ற உருவமாகவும் இருந்த உருவமாகவும் கிடந்த உருவமாகவும் (நின்றான், இருந்தான், கிடந்தான்) அமைக்கப்படு கின்றன, அவலோகிதர், தாரை, இடாகினி முதலான பல தெய்வ உருவங்களும் உள்ளன. நம்முடைய நாட்டுத் தெய்வச் சிற்பங்களைப் பற்றித் தனித்தனியே பல நூல்களை எழுதலாம். ஆனால், தமிழில் நூல்கள் இன்னும் எழுதப்படவில்லை. சிற்பக்கலையில் இரண்டாவது பிரிவு இயற்கை உருவங்கள் என்று கூறினோம். மனித உருவங்களில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர், குழந்தைகள், கிழவர் முதலான பலவகை உருவங்களும், ஆடு, மாடு, மான், யானை, புலி, சிங்கம், குரங்கு முதலான மிருகங்களின் உருவங்களும், வாத்து, கோழி, மயில், கருடன், புறா முதலான பறவைகளின் உருவங்களும் மரம், கொடி, செடி முதலான இயற்கைப் பொருள்களின் உருவங்களும் அடங்கும். கற்பனை உருவங்கள் என்பவை, இயற்கையில் இல்லாத கற்பனையாகக் கற்பிக்கப்பட்ட உருவங்கள். கற்பனையாக அமைக்கப் பட்ட பலவகைப் பூக்கள், வல்லிக்கொடிகள், இருதலைப்புள், சரபப்பட்சி மகரம், கின்னரம், குக்குடசர்ப்பம் (கோழிப்பாம்பு), நாகர், பூதர், புருஷா மிருகம், காமதேனு முதலானவை கற்பனை உருவங்களாகும். நான்காவதான பிரதிமை உருவங்கள் என்பது உண்மையில் வாழ்ந்திருந்தவர்களின் தத்ரூபமான உருவம். அரசர், அரசியர் மற்றும் பெரியவர்கள் எந்த உருவமாகக் காணப்பட்டார்களோ அதே தோற்றத்தோடு அமைக்கப்படுபவை. மற்ற சிற்பங்களைவிட இது அமைப்பது கடினமானது. கைதேர்ந்த சிற்பிகளால் மட்டும் பிரதிமை யுருவங்கள் செய்யமுடியும். நம்முடைய நாட்டிலே இந்தப் பிரதிமைக் கலை முழுமையாக வளரவில்லை. மேல் நாட்டவர் இந்தக் கலையைச் செம்மையாகவும் திறமையாகவும் வளர்த்து முழு வெற்றி கண்டிருக் கிறார்கள். ஆனாலும், நமது நாட்டுச் சிற்பிகள் பிரதிமை உருவங் களையும் செய்திருக்கிறார்கள். கல்லிலும் செம்பிலும் அவர்கள் செய்து வைத்துள்ள தத்ரூப உருவச் சிற்பங்கள் சில கோயில் கட்டடங்களில் காணப்படுகின்றன. மகாபலிபுரத்தில் வராகப்பெருமாள் குகைக் கோயிலில் நரசிம்மப் போத்தரையன், மகேந்திரப் போத்தரையன் என்னும் பல்லவ அரசர்களின் பிரதிமை உருவங்கள் அவர்களுடைய இராணிகளுடன் கல்லில் புடைப்புச் சிற்பங்களாக (Basrelief) அமைக்கப்பட்டுள்ளன. அர்ச்சுன இரதம், தர்மராஜ ரதம் என்னும் கற்கோயில்களின் சுவர்களிலும் சில பல்லவ அரசர்களின் பிரதிமை உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோவிலில் (பிருகதீஸ்வரர் கோவில்) அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்தவேளான் என்னும் சிற்ப்புப் பெயரையுடைய பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியன் என்பவன் சோழ அரசன், சோழ அரசி ஆகியவரின் செப்புப் பிரதிமைகளைச் செய்துவைத்தான் என்று அங்குள்ள சாசனம் கூறுகிறது. இந்த அதிகாரி, “பெரிய பெருமாள் பிரதிமம்” ஒன்றையும், “நம்பிராட்டியார் ஒலோகமா தேவியார் பிரதிமம்” ஒன்றையும் செய்துவைத்ததாக அந்தச் சாசன எழுத்துக் கூறுகிறது. இதில் கூறப்பட்ட “பெரிய பெருமாள்” என்பது இராஜராஜ சோழனாவன். “நம்பிராட்டியார் ஒலோகமா தேவியார்” என்பது இராஜராஜ சோழனுடைய அரசியின் பெயர். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோவில் மண்டபத்தில் கோயிலின் உள் வாயிலுக்குப் பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட கரிகாற்சோழன் (இவன் சங்ககாலத்துக் கரிகாற்சோழன் அல்லன், பிற்காலத்தவன்) பிரதிமை உருவம் நின்ற கோலமாகக் காணப்படுகிறது. திருக்காளத்திக் கோயிலில், குலோத்துங்க சோழன் இளவரசனாக இருந்தபோது அவன் உருவமாக அமைக்கப்பட்ட பஞ்சலோகப் பிரதிமையுருவம் இருந்தது. மதுரைக்கு அருகில் ஆனைமலையைச் சேர்ந்த நரசிங்க மங்கலத்தில், நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் ‘லாடமுனி கோயில்’ என்னும் குகைக் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் உண்ணாழிகையில் ஒரு பாண்டியனுடைய உருவமும் அவனுடைய இராணியின் உருவமும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இதை லாடமுனி கோயில் என்று தவறாக இக்காலத்தில் கூறுகிறார்கள். உண்மையில் இது பாண்டியன் உருவம் அமைக்கப்பட்ட கோயிலாகும். விசயநகரத்து அரசரான கிருஷ்ணதேவராயரின் உருவச்சிலை, இராணிகளோடு சிதம்பரம் கோவில்கோபுரத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கற்சிலையின் செப்பு உருவச்சிலை, திருப்பதிக் கோவிலில் இருக்கிறது. தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களை அரசாண்ட நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் சில, அங்குள்ள கோயில் மண்டபங்களில் இருக்கின்றன. சிற்பங்கள்* 1. கங்காதர மூர்த்தி மகேந்திரவர்மன் காலத்துச் சிற்பங்களைப்பற்றி ஆராய்வோம்: திருச்சி மலைப்பாறையில் மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயிலில் கங்காதரமூர்த்தியின் திருவுருவம் உள்ளது என்று கூறினோம். அதைப்பற்றி இங்கு விவரிப்போம். கருப்பக்கிருகத்தின் எதிரில் உள்ள பாறைச் சுவரில் கங்கா தரமூர்த்தியின் உருவம். புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம்சுமார் ஏழு சதுர அடிப்பரப்புடையது. இந்தச் சிற்பம், சிற்பக்கலை ரசிகர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வனப்பு வாய்ந்தது. உலகத்தை அழித்து விடுவேன் என்று பெருவெள்ளமாகப் பாய்ந்துவந்த கங்கை யைச் சிவபெருமான் ஒரு துளியளவாகத் தமது சடாமுடியில் ஏற்றுக்கொண்டதை இந்தச் சிற்பம் காட்டுகிறது. பகீரதன் தவங்கிடந்து ஆகாய கங்கையைப் பூமியில் வரும்படி வரம் வேண்டினான். ஆகாய கங்கை வேகமாகப் பாய்ந்து பூமியை - உலகத்தை, அழித்து நாசமாக்குவேன் என்று இறுமாந்து கூறியது. இதை யறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவ பெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பெருவெள்ள மாகப் பாய்ந்துவந்த கங்கையைத் தமது சடாமுடியில் ஒரு புரியை யவிழ்த்துப் பிடித்தார். பெருவெள்ளமாக வந்த கங்கை அவருடைய புரிசடையில் சிறு துளியாக அடங்கி விட்டது. அகம்பாவம் நீங்கிய கங்கையைச் சிவபெருமான் பூமியில் விட்டார். அது கங்கையாகப் பாய்ந்து ஒடியது. கங்கையின் இறுமாப்பு எத்தகையது என்பதையும் சிவபெருமான் அதன் இறுமாப்பை எப்படி அடக்கினார் எண்பதையும் மாணிக்கவாசகர் நன்கு விளக்குகிறார்: மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன் சடையில் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமூகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. கங்காதர மூர்த்தியின் வரலாற்றை மகேந்திரவர்மன் காலத்தவரான திருநாவுக்கரசர் இனிய பாக்களினாலே அழகாகக் கூறுகிறார்: “பகீரதற்கா வானோர் வேண்டப், பரந்திழியும் புனற் கங்கை பனிபோலாகச் செறுத்தான்,” என்று அவர் கூறுகிறார். மேலும், மையறு மனத்தி னாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகம தாகி வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே. என்றும், அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. என்றும் அவர் பாடியது காண்க. கங்கையின் வரலாற்றைச் சொல்லோவியமாகத் திருநாவுக்கரசர் பாடியதை, அவர் காலத்தில் இருந்த மகேந்திரவர்மன் தான் அமைத்த குகைக்கோயிலிலே கல் ஒவியமாக அமைத்துக் கொடுத்தான். இந்தச் சொல் ஒவியத்தைப் பாடிக்கொண்டே கல்லோவியத்தைக் காணும் சிற்பக்கலை ரசிகர்களுக்கு மனத்தில் தோன்றும் இன்பவுணர்ச்சி அனுபவித்தறியவேண்டியது தவிர எழுத்தில் படித்து அனுபவிப்ப தன்று. திருச்சிக் குகைக்கோயிலிலே, புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ள கங்காதர மூர்த்தியின் அமைப்பை விளக்குவோம்.1 இந்தச் சிற்பத்தில் நடுநாயகமாக விளங்குபவர் சிவபெருமான். குறள் உருவமுள்ள ஒரு பூதகணத்தின்மேல் தமது வலது காலை வைத்து இடது காலைத் தரையில் ஊன்றி நிற்கிறார். அவருடைய இடது கை இடுப்பில் ஊன்றி நிற்கிறது. வலது கையில் ஒரு பாம்பைப் பிடித்திருக்கிறார். அப்பாம்பு படமெடுத்து ஆடுகிறது. மற்றொரு வலது கையைத் தூக்கி விரல்களினாலே தமது சடாமுடியின் ஒரு புரியை அவிழ்த்துப் பிடித்திருக்கிறார். அந்தப் புரிசடையிலே ஆகாய கங்கை, ஒரு மகள் உருவமாக மேலிருந்து வந்து அமர்கிறாள். அவளுடைய செருக்கும் வேகமும் அடங்கி விட்டன. மற்றோர் இடது கையில் சிவபெருமான் எதையோ ஒரு பொருளை வைத்திருக்கிறார். இந்த இடது கைக்கு மேலே, கங்கைக்கு எதிர்ப்புறத்தில், ஓர் எலி காணப்படுகிறது. இது ஏன் இங்குக் காணப்படுகிறது? இதன் கருத்து யாது? சிவபெருமானுடைய காலடியில் இருபுறத்திலும் இரண்டிரண்டு பேர் தரையில் மண்டியிட்டு அமர்ந்து கையைத் தூக்கிச் சிவ பெருமானைக் காட்டியவண்ணம் அவரைத் துதிசெய்கிறார்கள். அதுபோலவே வேறு இரண்டுபேர், சிவபெருமானுக்கு இரு புறத்திலும் ஆகாயத்தில் பறந்தபடி தமது கையை உயர்த்தி அவரைப் போற்றுகிறார்கள். இவர்கள் தேவர்கள் போலும். வெள்ளப்பெருக்குடன் உலகத்தை யழிக்க வேகமாக வந்த கங்கையின் ஆற்றலை அடக்கி, உலகத்தை அழிக்க விடாமல் தமது சடையின் ஒரு சிறு புரியில் ஏற்றுக் கொண்ட சிவபெருமானை மனிதரும் தேவரும் புகழ்ந்து போற்றி வணங்குவதை இந்தச் சிற்பம் விளக்குகிறது. சிவபெருமான் வலது காலைப் பூதகணத்தின்மேல் வைத்து இடது கையை இடுப்பிலேயூன்றி உடம்பைச் சற்றுச் சாய்த்து நிற்கும் எழிலும், தமது சடாமுடியிலிருந்து ஒரு புரியை மட்டும் எடுத்து அதை விரல்களால் பிடித்துக் கங்கையைத் தாங்கும் எளிமையும், ஆற்றலும் செருக்கும் அடங்கிய கங்கையின் அமைதியும், தரையில் அமர்ந்தும் வானத்தில் இருந்தும் மக்களும் தேவரும் கடவுளை வாழ்த்தும் உருக்கமும் இந்தச் சிற்பத்தைக் காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. 2. சகர சாகரர் கதைச்சிற்பம் மகேந்திரவர்மன் காலத்தில் மகாபலிபுரத்தில் (மாமல்ல புரத்தில்) அமைக்கப்பட்ட அழகான பாறைச்சிற்பம் “அர்ச்சுனன் தபசு” என்பது. இந்த அழகான புடைப்புச் சிற்பம்2 மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்டு இவன் மகன் நரசிம்மன் (மாமல்லன்) காலத்தில் முடிவு பெற்றது என்று கருதப்படுகிறது. இந்தச் சிற்பம், ஏறக்குறைய தொண்ணூற்றாறு அடி அகலமும் நாற்பத்து மூன்றடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையிலே செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும் பாறையின் நடுப்பகுதி பிறவுபட்டு நீர் வீழ்ச்சிபோல அமைந் திருக்கிறது. இந்தப் பிளவுக்கு இரு புறத்திலும் தேவர், தேவமகளிர், கின்னரர், கிம்புருடர், குறள் உருவமுடைய பூதர்கள், நாகர், நாக கன்னியர்களின் உருவங்களும், மனிதர், முனிவர், யானைகள், குரங்குகள், பூனை எலி முதலிய உருவங்களும் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கண்ணையும் கருத்தையுங் கவர்கின்ற இந்தச் சிறந்த சிற்பத்தைக் காண்பவர் வியந்து மகிழ்ந்து பெருமைப்படாமல், இருக்கமுடியாது. இந்தச் சிற்பத்தைப் பாமர மக்கள் இப்போது அர்ச்சுனன் தபசு என்று கூறுகிறார்கள்.3 வேறு சிலர் பகீரதன் தபசு என்று கூறுகிறார்கள். பகீரதன் தபசு என்று கூறப்படுவது ஒரு சிறிது பொருந்தும். உண்மையில் இந்தச் சிற்ப உருவம் எந்தக் கதையைக் கூறுகிறது என்றால், பரதகண்டத்தை யரசாண்ட சகர சக்கரவர்த்தி, அவர் பிள்ளைகளான சாகர குமாரர்கள், அவர் பேரனான பகீரதன் ஆகியவர்களின் கதையைத்தான் இந்தச் சிற்பம் விளக்குகிறது. இந்தக் கதையை இங்குச் சுருக்கமாகக் கூறுவோம். சகர சக்கரவர்த்தி பாரதநாட்டை அரசாண்ட காலத்தில், அவர் ஒரு மலைக்குச்சென்று அங்கு இந்திரனை நோக்கித் தவஞ்செய்து நவநிதிகள் எனப்படும் ஒன்பது நிதிகளைப் பெற்றார். சக்கரவர்த்தி களுக்கு மட்டுந்தான் நவநிதிகள் கிடைப்பது வழக்கம். நவநிதிகளைப் பெற்றுச் செங்கோல் செலுத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்துவந்த சகர சக்கரவர்த்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இந்தப் பிள்ளைகளுக்குப் பொதுப்பெயர் சாகரகுமார் என்பது; அதாவது சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் என்பது பொருள்.4 சாகர குமரர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு தேச யாத்திரை செய்ய விரும்பிச் சகர சக்கரவர்த்தியின் உத்தரவு பெற்றுப் புறப்பட்டுச் சென்று பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தார்கள். கடைசியாக அவர்கள் கயிலாய மலைக்கு வந்தார்கள். கயிலாய மலையின் மேலே இவர்களின் முன்னோரான பரதச் சக்கரவர்த்தி ஒரு கோயில் கட்டியிருந்தார். அந்தக் கோயிலைக் கண்ட இவர்கள், அக்கோயிலைச் சூழ்ந்து அகழி தோண்ட வேண்டுமென்று விரும்பினார்கள். ஆகவே, தம்முடன் கொண்டு வந்திருந்த நவநிதிகளில் ஒன்றான தண்டரத்தினத்தினால் ஆழமான அகழி தோண்டினார்கள். அந்த அகழி நாகலோகம் வரையில் ஆழ்ந்து இருந்தது. பின்னர், தண்ட இரத்தினத்தின் உதவியினாலே கங்கையாற்றை இழுத்துவந்து அதனை இந்த அகழியிலே பாய்ச்சினார்கள். கங்கையாறு, வெள்ளம் புரண்டு வந்து அகழியில் பாய்ந்து அதை நிரப்பி வழிந்து ஓடியது. கங்கை அகழியில் பாதலம் வரையில் பாயவே, பாதலத்தில் இருந்த நாகர்கள் துன்புற்றார்கள். நாகராசன் சினங்கொண்டு மதயானைபோல வந்து தனது விஷக் கண்களினால் சகர குமாரர்களை நோக்கினான். அந்தப் பார்வையினால், சகர குமாரர்கள் மாய்ந்து சாம்பலாயினர். தன் மக்கள் மாண்டுபோனதையும், கங்கை வெள்ளப் பெருக் கால் நாடுகள் அழிக்கப்படுவதையும் அறிந்த சகர சக்கரவர்த்தி தன் பேரனான பகீரதனை அழைத்துத் தண்ட இரத்தினத்தின் உதவியினால் கங்கை வெள்ளத்தை இழுத்துக்கொண்டுபோய்க் கடலில் விடும்படி கூறினான். அதன் படியே பகீரதன் சென்று தண்டஇரத்தினத்தின் உதவியினால் கங்கை வெள்ளத்தை இழுத்துக்கொண்டுபோய் கடலில் பாய விட்டான். இந்தக் கதைதான் இந்தச்சிற்பத்தில் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை மேல்பகுதி கீழ்ப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். மேல்பகுதி, சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கித் தவங்கிடந்து நவநிதிகளைப் பெற்றதைக் காட்டுகிறது.5 தேவர் தேவமகளிர் போலவும், குள்ள உருவமான பூத உருவங்கள் போலவும், நவநிதிகள் இப்பகுதியில் குறிப்பிட்டப் பட்டுள்ள. கீழ்ப்பகுதி, சாகர குமாரர்கள் கயிலாய மலைக்கு வந்ததையும், அங்குக் கோயிலைக் கண்டு அதனைச் சூழ்ந்து அகழி தோண்டியதையும், அகழி நீர் பாதலத்திலுள்ள நாகர்களுக்குத் துன்பம் உண்டாக்கவே நாகர்களும் நாகராசனும் சகர குமாரர்களிடம் வந்ததையும், நாகராசன் பார்வையினால் சகர குமாரர்கள் இறந்துபட்டதையும் காட்டுகிறது. குரங்கு பூனை எலி முதலியவை இந்தச் சிற்பத்திற்கு அழகு செய்கின்றன.6 நாடு செழிப்புற வேண்டுமானால் நீர்வளம் இன்றியமை யாததாகும். இதையறிந்த மகேந்திரவர்மன் தனது நாட்டில் ஏரிகளை அமைத்தான். காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மாமண்டூர் ஏரியை அமைத்து அதற்குச் சித்திரமேகத் தடாகம் என்று தன் பெயரைச் சூட்டினான். மகேந்திர வாடியில் ஏரி அமைத்து அதற்கு மகேந்திர தடாகம் என்று பெயர் இட்டான். நீரைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது ஊரை அழிக்கும் என்பதையும் அதைக் கட்டுப்படுத்தினால் அதன் மூலமாக ஊர் செழிப்படையும் என்பதையும் விளக்குவதற் காக, மாமல்லபுரத்தில் சகரசாகரர் சிற்பத்தையும் திருச்சிக் குகைக் கோயிலில் கங்காதரமூர்த்தியின் சிற்பத்தையும் மகேந்திரவர்மன் அமைத்தான் போலும். வெள்ளத்தைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிடின், அது அழிவை யுண்டாக்கும் என்பதைக் குறிப்பது மாமல்லபுரத்துச் சகரசாகரர் சிற்பம். (அர்ச்சுனன் தபசு என்று தவறாகக்கூறப்படுகிற சிற்பம்) வெள்ளத்தைக் கட்டுப்படுத்தினால் அழிவு நேரிடாமல் தடுக்கலாம்; அன்றியும் அதனால் நன்மையும் பெறலாம் என்பதைக் குறிப்பது திருச்சிக் குகைக் கோயில் பாறையில் இவன் அமைத்துள்ள கங்காதரமூர்த்தியின் சிற்பம். மகேந்திரவர்மன் காலத்தவரான திருநாவுக்கரசு சுவாமிகளும், வெள்ளம் பெருகி நாடு அழியாதபடி சிவபெருமான் கங்கையின் வெள்ளத்தைத் தமது சடையில் ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது இங்குக் கருதத் தக்கது:- “ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும் பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்.” (திருவாரூர்த் திருத்தாண்டகம். 10.) “தாதுமலர் தண்டிக்குக் கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ.” (திருவாரூர்த் திருத்தாண்டகம். 10.) “வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே.” (திருப்பழனம் திருத்தாண்டகம். 2) அடிக்குறிப்புகள் 1. முகப்புப் படம் 3 பார்க்க. 2. Bas relief 3. மகாபலிபுரத்தில் மிகப் பிற்காலத்திலே, விஜய நகர அரசர் காலத்திலே, சைவ வைணவக் கலகம் நடைபெற்றதாகத் தெரிகிறது. வைணவர் மகாபலிபுரத்தை வைணவத்திருப்பதியாக்க முயன்றனர். இங்குள்ள, மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில் கருப்பக்கிருகங்களை உடைத்து அதற்கு தர்மராச மண்டபம் என்றும், மற்றொரு குகைக்கோயிலி லிருந்த அழகான புடைச் சிற்பங்களை உருத்தெரியாமல் செதுக்கிப்போட்டு அதற்கு இராமாநுச மண்டபம் என்றும், அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்று பெயரிருந்த கோயிலைத் தர்மராச இரதம் என்றும் அது போலவே, மற்றக் கோயில்களுக்கு அர்ச்சுனன் இரதம், பீமன் இரதம், நகுல சகாதேவ இரதங்கள் என்றும், கொற்றவைக் கோயிலுக்குத் தீரௌபதி இரதம் என்றும், வாமாங்குச என்னும் குகைக் கோயிலுக்குக் கொடிக்கால் மண்டபம் என்றும், அங்குள்ள சிறு எரிக்குக் கோனேரி என்றும் (திருவேங்கடத்தில் ஒரு கோனேரி இருப்பதுபோல) வைணவப் பெயர்களைச் சூட்டினார்கள். அது போலவே, சகரசாகரர் கதையைக் காட்டுகிற சிற்பத்துக்கு அர்ச்சுனன் தபசு என்று வைணவ பரமாகப் பெயர் சூட்டினார்கள். இந்தச் சரிதங்களை ஆராயாத பாமர மக்கள், பிற்காலத்தில் எற்பட்ட இப் பெயர்களையே இப்போதும் வழங்குகிறார்கள். இதில் அதிசயம் என்னவெனில், அரசினர் ஆர்க்கியாலஜி இலாகா அலுவலர்களில் சிலர், பிற்காலத்தில் ஏற்பட்ட இப்பெயர்களை ஆதிகாலத்திலிருந்தே ஏற்பட்ட பெயர்கள் என்று நம்பிச், சகரசாகரச் சிற்பத்தை அர்ச்சுனன் தபசு என்று நிலை நிறுத்து வதற்கு முயற்சி செய்வதுதான். மகேந்திரவர்மன் காலத்தில் சமணசமயம் நாடடெங்கும் பரவிச் சைவ வைணவ சமயங்கள் குன்றியிருந்தன என்பதை இந்நூலில் மற்றோர் இடத்தில் விளக்கியுள்ளோம். சமணசமயம் சிறப்புற்றிருந்த அந்தக் காலத்தில் அஜித நாதர் புராணத்தில் உள்ள சகரசாகரர் கதை உலகில் எல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அச் சிற்பத்தை மகேந்திரன் மாமல்லபுரத்தில் அமைத்ததில் வியப்பில்லை. 4. முகப்புப் படம் 9 பார்க்க. 5. முகப்புப் படம் 9 பார்க்க. 6. இந்தச் சிற்பத்தின் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள “மகாபலிபுரத்து ஜைன சிற்பம்” என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந்நூலை அச்சிட்டவர் வேதாரணியம் திரு. ஹ. து. அனந்தராஜய்யன் முதலியார் அவர்கள். கொற்றவை 1. மாமல்லபுரக் கொற்றவை மாமல்லபுரத்தில் கோடிக்கால் மண்டபம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற குகைக்கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட காளிகோயில் என்று கூறினோம். இக்கோயிலில் இருந்த காளியின் உருவச்சிலை ஊரிலேயுள்ள ஒரு மேடைமேல் மற்ற உருவச்சிலை களுடன் இப்போது வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினோம். இந்த உருவத்தின் இடதுகை ஒன்று காணப்பட வில்லை; உடையுண்டது போலும். உடைபட்ட உருவத்தை வழி படக்கூடாது ஆகையால் இந்தக் காளி உருவத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள் போலும்.1 இந்தக் காளி, கொற்றவை என்றும் காடுகிழாள் என்றும் கூறப்படுகிறாள். இந்தக் கொற்றவையின் உருவம் புதுமையானது; அருமையானது. இதுபோன்ற கொற்றவையின் உருவத்தை நமது நாட்டிலே-ஏன்? உலகத்திலேயே-, வேறெங்கும் காணமுடியாது. இது பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைய உருவம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கொற்றவை என்றால் வெற்றி மடந்தை என்பது பொருள். (கொற்றம் = வெற்றி, அவ்வை = உயர்ந்தவள்) பார்ப்பவரை அச்சுறுத்துகிற இதன் அமைப்பு போற்றத்தக்கது. வீரம், பெருமிதம், உறுதி, ஆற்றல், வெற்றி முதலிய இயல்புகள் எல்லாம் இவ் வுருவச் சிலையில் காட்சியளிக்கின்றன. இடதுகாலை மடக்கி வலதுகாலைத் தொங்கவிட்டுச் சுகாசன நிலையில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்து, வீரமும் வெற்றியும் கண்களில் விளங்கப் பெருமிதமும் உறுதியும் வாயின் அமைப்பிலே தோன்ற நடுத்தர வயதுள்ள வீர மங்கையாக அமர்ந்திருக்கிறாள் இக்கொற்றவை. இரண்டு கோரைப் பற்கள் வெளியே தெரிகின்றன. கட்டாரி தாங்கிய இரண்டு கைகளையும் தன் இரண்டு தொடைகளின் மேல் தாங்கியிருக்கிறாள். மற்றொரு வலது கையில் மணியொன்றை ஏந்தியிருக்கிறாள். (உடைந்துபோய் விட்ட மற்றொரு கையில் கபாலபாத்திரத்தை ஏந்தியிருந்தாள்.) இடது காதில் பொற்குழை விளங்க வலது காதில் பிணம் ஒன்று தொங்குகிறது. இடது தோளிலிருந்து மார்பின் வழியாகத் தொங்குகிற பூQலிலும் தலையோடுகள் காணப்படுகின்றன. தலைமுடியிலும் தலையோடு ஒன்றை அணிந் திருக்கிறாள். கடலிலிருந்து உப்பங்காற்றினால் மோதுண்டு வெயிலிலும் பனியிலும் மழையிலும் பல ஆண்டுகளாகக் கிடந்து வருகிற இந்தக் கருங்கல் சிற்பம், நாளுக்குநாள் தேய்ந்து மழுங்கிலருகிற நிலையிலும், வீரச் சுவையை வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கிறது. ஒரு பாறைக் கல்லைச் செதுக்கி அதில் வீரச் சுவையை அமைத்துக் காட்டிய அந்தச் சிற்பாசாரியர் யார்? அவர் பெயர் என்ன? அவர் வரலாறு யாது? ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவர் அமைத்துக் கொடுத்த இந்தச் சிற்ப உருவம் நமது கண்ணையும் மனத்தையும் கவர்ந்து உணர்ச்சி யளிக்கிறது. அரசாங்கக் காட்சிச்சாலையில் பாதுகாக்கப்பட வேண்டிய கலைச் செல்வமன்றோ இது? காட்சிச்சாலையில் இடம்பெற வேண்டி இந்தச் சிற்பம் ஏன் ஊரின் ஒதுக்கிடத்தில் புறக்கணிக்கப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்து அழிந் துவருகிறது? இந்த உருவம் ஒருகாலத்தில் பூசைசெய்து வணங்கப்பட்ட தென்பதில் ஐயமில்லை. இவ்வுருவம் கருக்கிலமர்ந்தாள் என்னும் பெயர் பெற்றிருந்தது எப்படி என்றால், கூறுவேன். மகாபலிபுரத்தில் ஊரையடுத்துக் கருக்கிலமர்ந்தாள் என்னும் சிறிய கோயில் இருக்கிறது. இது கிராமதேவதையின் கோயில் இந்தக் கோயிலில் இருக்கிற கருக்கிலமர்ந்தாள் உருவமும் மேலே கூறப்பட்ட கொற்ற வையின் உருவமும் ஒரேமாதிரியாக உள்ளன. இரண்டுக்கும் காணப்படுகிற வேறுபாடு என்னவென்றால், கொற்றவையின் வலதுபுறத்துக் கையொன்று உடைந்துபோய் விட்டது. கோயிலில் உள்ள கொற்ற வையின் வலதுகை உடைபடாமல் கபால பாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறது. நமது கொற்றவை ஏறக்குறைய இரண்டரையடி உயரம் உள்ளது. கோயிலிலுள்ள உருவம் சுமார் ஒர் அடி உயரம் உள்ளது. இந்த வேறுபாடுதவிர மற்றப்படி எல்லா அமைப்புக்களும் இரண்டு உருவங்களிலும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. ஆனால், நமது சிற்பத்தில் காணப்படுகிற வீரச்சுவை முகபாவம் கோயிலிலுள்ள சிற்பத்தில் காணப்படவில்லை. எட்டு வகைச் சுவைகளில் ஒன்றாகிய வீரச்சுவையைக் கல்லிலே அமைத்துக் காட்டுவது அருமையிலும் அருமையன்றோ? சைவ வைணவ சமயக் கலகங்கள் உண்டான பிற்காலத்திலே “கோடிக்கால் மண்டபம்.” என்னும் குகைக் கோயிலிலே இருந்த இந்த உருவம் பின்னப்படுத்தப்பட்டது. கபாலமேந்திய வலதுகை உடைபட்டுப்போன படியினாலே, பின்னப்பட்ட இவ்வுருவம் வழிபாட்டிற்குத் தகாததாயிற்று. ஆகவே, இதைக் கொண்டுவந்து ஊரின் ஒருபுறத்தில் வைத்துவிட்டுப், புதிய உருவத்தை அமைத்துப் புதியகோயிலில் வழிபடுகின்றனர். அதுதான் இப்போது மகாபலிபுரத்தில் உள்ள கருக்கில் அமர்ந்தாள் கோயில் என்பது. பின்னப்பட்ட கொற்றவை இருந்த குகைக்கோயில் இப்போது வெறுங்கோயிலாக இருக்கிறது. காஞ்சிபுரத்திலும் கருக்கில் அமர்ந்தாள் கோயில் ஒன்று உண்டு.2 பல்லவர் தலைநகரமான காஞ்சியிலும் துறைமுகப் பட்டினமான மாமல்லபுரத்திலும் கருக்கில் அமர்ந்தாள் கோயில்கள் இருப்பதை நோக்கும்போது, கருக்கில் அமர்ந்தாள் என்னும் பெயருடைய கொற்றவை பல்லவர்களின் குலதெய்வம் என்று கருதவேண்டி யிருக்கிறது. அடிக்கடி போர்செய்துவந்த பல்லவ அரசர்கள், வீரத்திற்கும் வெற்றிக்கும் கடவுளாகிய கொற்றவையை வழிபட்டு வந்தனர் என்பதற்கு அடையாளமாக, அவ் அரசர் அமைத்த கோயில்களில் கொற்றவையின் உருவங்களைக் காண்கிறோம். ஆனால், மற்றக் கொற்றவையின் உருவ அமைப்புக்கும் இங்குக் குறிப்பிட்ட கொற்றவையின் உருவத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இங்குக் கூறப்பட்ட கொற்றவையின் உருவம் மிகப் பழைமையானது. மகேந்திரவர்மன் காலத்தில் இது அமைக்கப் பட்டது என்பதில் ஐயமில்லை. II. சிங்கவரத்துக் கொற்றவை தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் (சிங்கபுரம்) என்னும் ஊரில் இருக்கும் குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக் குகைக்கோயில் இப்போது அரங்கநாதர் கோயில் என்று வழங்கப்படுகிறது. ஆனால், இது முதலில் வராகப்பெருமாள் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று இங்குள்ள ஒரு சாசனத்தைக்கொண்டு கருதவேண்டியிருக்கிறது. இந்தக் குகையின் பாறைச்சுவரில், கொற்றவையின் உருவம் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பாறையில் 5’x 5’ சதுர அமைப்புள்ள சிற்பமாக இது காணப்படுகிறது. கொற்றவை, மகிடாசுரனாகிய எருமையின் தலைமேல் வலதுகாலை வைத்து, இடதுகாலைத் தரைமேல் வைத்து நிற்கிறாள். தலையில் மகுடமும் காதுகளில் பெரிய பொற்றோடுகளும் அணிந்துள்ள கொற்றவையின் கண்களில் அச்சந்தரும் வீரஒளி மிளிர்கிறது. வலது கையில் சக்கரமும் இடதுகையில் சங்கமும் ஏந்தி, மற்ற இரண்டு கைகளையும் இடுப்பின் மேலும் தொடையின்மேலும் வைத்துக்கொண்டு, சற்றுச் சாய்ந்து நிற்கும் கொற்றவையின் அமைப்பு இனிய காட்சியாக இருக்கிறது. கழுத்தில் பொன்னரிமாலைகளும் கைகளில் சுடகங்களும் வளைகளும் இடுப்பில் மேகலையும் கால்களில் சிலம்பு சதங்கைகளும் அணிந்து தெய்வத் திருவுருவத்துடன் காட்சியளிக் கிறாள் இக்கொற்றவை. மகிடாசுரமர்த்தனியாகிய கொற்றவையின் உருவங்கள் பல பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் எருமைத் (மகிடாசுரன்) தலைமேல் நிற்பதுபோல அமைந்துள்ளன. ஆனால், இந்தக் கொற்றவையின் சிற்பமோ, அவ்வாறில்லாமல் ஒருகாலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின்மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இதுவும் பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது.3 கொற்றவையின் வலப்புறத்தில் ஒர் ஆள் மண்டியிட்டு முழங்காலின்மேல் உட்கார்ந்திருக்கிறான். காதில் தோடு அணிந்து நீண்ட தலைமுடியைச் சடைபோலக் கட்டியிருக்கிறான். மீசை அழகாக வளர்ந்திருக்கிறது. இடது கையினால் இடது கால் தொடையின் சதையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் கட்டாரி பிடித்துச் சதையை அறுக்கிறான். இவனுடைய அடர்ந்த தலைமயிரும் மீசையும் இவன் போர்வீரன் என்பதைத் தெரிவிக்கின்றன. இந்தப் போர்வீரனுக்கு எதிரிலே கொற்றவையின் இடப்புறத்தில் மற்றும் ஒர் ஆள், தரையில் முழங்கால் மண்டியிட்டு அமர்ந்திருக் கிறான். இந்த ஆள் தலையில் நீண்ட மயிர் இல்லை; முகத்தில் மீசையும் இல்லை. மார்பில் யோகப்பட்டை அணிந்திருக்கிறான். நீண்டு தொங்கும் காதுகளில் அணிந்துள்ள சிறிய குண்டலங்கள் தோளின் மேல் தங்கியுள்ளன. வலது கையைச் சின் முத்திரையாகப் பிடித்து இடது கையை இடுப்பின்மேல் வைத்திருக்கிறான். இவன் கொற்ற வைக்குப் பூசை செய்கிற பாரசிவன் போலக் காணப்படுகிறான். கொற்றவையாகிய காளியைப் பூசை செய்கிறவர்களுக்குப் பாரசிவர் என்பது பெயர். கொற்றவையின் திருவடிகளின் கீழே அமர்ந்துள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள்? போர்வீரன் கொற்றவைக்கு நவகண்டம் கொடுக்கிறான் போலத் தெரிகிறது. போருக்கும் வெற்றிக்கும் தெய்வமாகிய கொற்றவையை (கொற்றம் = வெற்றி, அவ்வை = உயர்ந்தவள்) போர் வீரர்களும் மறக்குடி மக்களும் வழிபடுவார்கள். வெற்றி மடந்தையை வெற்றி வீரர்கள் வழிபடுவது இயற்கைதானே. வெற்றி மடந்தையாகிய கொற்றவையை வழிபடுகிற வெற்றி வீரர்கள், சில சமயங்களில், தம் உடல் உறுப்புக்களை அரிந்து கொற்றவைக்கு இரத்தக் காணிக்கை கொடுப்பதுண்டு. இதற்கு நலகண்டம் கொடுத்தல் என்பது பெயர். இன்னும், சில வீரர்கள் தங்கள் தலையைத் தாங்களே அரிந்து கொற்றவைக்குத் தலைப்பலி கொடுப்பதும் உண்டு. உடம்பின் உறுப்புக்களை அரிந்து நவகண்டம் கொடுப்பதையும் தங்கள் தலையைத் தாங்களே அரிந்து தலைப்பலி கொடுப்பதையும் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் கூறுகிறது:- சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் “தருகவரம், வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக வுறுப்பரிந்து தருதும்” என்று பரவுமொலி கடலொலியிற் பரக்குமாலோ. அடிக்கழுத்தி னொடுஞ்சிரத்தை யரிவ ராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ.4 இவ்வாறு தமிழ் நூல்களில் கூறப்படுவது வெறுங் கற்பனையல்ல. நடைமுறையில் உண்மையாக நடந்துவந்த செய்கைகளே. கொற்ற வைக்கு நவகண்டங் கொடுத்துத் தலையரிந்து பலிகொடுத்த செய்தி கல்வெட்டுச் சாசனத்திலும் கூறப்படுகிறது. கம்பவர்மன் என்னும் அரச னுடைய 20 ஆவது ஆண்டில், ஓக்கொண்ட நாகன் ஒக்கதீந்தன் பட்டைப்பொத்தன் என்னும் வீரன் கொற்றவைக்கு நவ கண்டம் கொடுத்துத் தலையரிந்து பலி கொடுத்ததற்காக, அவனுடைய மகன் பட்டைப்பொத்தனுக்கு திருவான்மூர் ஊரார் நிலம் தானம் செய்ததை ஒரு சாசனம் கூறுகிறது.5 இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற போர்வீரன், கட்டாரியினால் தொடைச் சதையை யறுப்பதிலிருந்து இவன் கொற்றவைக்கு நவகண்டம் கொடுக்கிறான் என்று கருதலாம். அருகிலிருக்கும் பாரசிவன், வீரன் உறுப்பரிந்து இரத்தக் காணிக்கை கொடுக்கும் போது, மந்திரம் ஒதிச்சடங்கு செய்கிறான் போலும். சங்ககாலத்து நூல்களிலே கொற்றவை வணக்கங் கூறப்படுகிறது. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் கொற்றவை வணக்கம் கூறப்படுகிறது. பிற்காலத்துத் தக்கயாகப்பரணி, கலிங்கத்துப்பரணி முதலிய நூல்களிலும் இவ் வணக்கம் கூறப்படுகிறது. தமிழரின் இப் பழைய வழக்கத்தைப் பல்லவ அரசரும் மேற்கொண்டிருந்தனர். அடிக்குறிப்புகள் 1. முகப்புப் படம் 10 பார்க்க. 2. காஞ்சிபுரத்தில் உள்ள கருக்கிலமர்ந்தாள் கோயிலிலுள்ள கொற்றவையின் உருவ அமைப்பு, மகாபலிபுரத்துக் கருக்கிலமர்ந்தாள் உருவ அமைப்புப் போன்றதா என்பது தெரியவில்லை. நேரிற் சென்று பார்த்து ஆராய்வதற்கு இயல்வில்லை. வசதியுள்ளவர் ஆராய்ந்து காண்பாராக. 3. முகப்புப் படம் 11 பார்க்க. 4. கலிங்கத்துப்பரணி, கோயில் பாடியது: 13, 15, கொற்றவைக்குத் தலைப் பலியிடுவதைக் காளிகா புராணத்திலுங் கூறப்படுகிறது என்பார். 5. இந்தச் சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டம் கூடூர்த் தாலுகா மல்லம் என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு முன்புறத்தில் உள்ள கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போதைய நெல்லூர் மாவட்டத்தின் மத்தியில் பாய்கிற வடபெண்ணையாற்றின் தென்பகுதிகள் முற்காலத்தில் தமிழ்நாடாக இருந்தன. இந்தத் தமிழ்ச் சாசனம் உள்ள, மல்லம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற ஊரின் பழைய தமிழ்ப்பெயர் திருவான்மூர் என்பது. இந்தச் சாசனம் எழுதப்பட்ட கல்லில், ஒர் ஆள் தலையை அரிந்து எடுத்து அதை ஒரு கையினால் தலைமயிரைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும் சிற்பம் சித்திரிக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்ப உருவம் நவகண்டம் கொடுத்துத் தலையரிந்து பலிகொடுத்த ஒக்கொண்டநாகனைக் குறிக்கிறது போலும். இந்த உருவத்துக்கு மேலே மேற்படி சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. அதன் வாசகம் இது:- 6. ஸ்ரீ கம்பபருமற்கு யாண்டு இருபதாவது பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதீந்தன் பட்டைபொத்தன் மெ (தவம்) புரிந்ததென்று படாரிக்கு நவகண்டங் குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிடலிகைமேல் வைத்தானுக்கு திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது: எமூர்ப்பறை கொட்டிக் கல்மெடு செய்தாராவிக்குக் குடுப்பாரானார். பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலங் குடுத்தார்கள். இது அன்றென்றார் கங்கையிடை குமரியிடை எழுநூற்றுக் காவதமும் செய்தான் செய்த பாவத்துப் படுவார். அன்றென்றார் அன்றாள் கோவுக்கு காற்பொன் றண்டப்படுவார்.” S.I.I. Vol. XII. No. 106. வாள் வீரன் சீயமங்கலத்துக் குகைக்கோயிலின் வெளிப்புறத்தில், இரண்டு பக்கத்திலும் இரண்டு வீரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இச் சிற்பங்களில் இடது பக்கத்துள்ள ஒரு வாள்வீரன் சிற்பத்தைப் படத்தில் காண்க. இந்த வாள்வீரன் மீசையுள்ள ஆண்பிள்ளை. இடது கையில் கேடயந் தாங்கி வலது கையில் வாள் ஏந்தி எதிரியைத் தாக்குகிறான். கேடயம் பிடித்த இடது கை, வலது புறம் திரும்பியிருக்கிறது. வாள் பிடித்த வலது கை தலைக்கு மேலே உயர்ந்து வாளை ஒங்குகிறது. கால்கள் இருக்கும் நிலை இந்த வீரன் எதிரியின்மேல் பாயும் சுறு சுறுப்பை நன்கு புலப்படுத்துகிறது. அரையில் அணிந்துள்ள ஆடை துடைவரையில் சல்லடம்போல் அமைந்திருக்கிறது. ஆனால், அதிலும் ஒர் அழகு புலனாகிறது. போர்வீரனின் வழக்கப்படி தலைமுடியைத் துணியினால் பொதிந்து கட்டிக் குஞ்சக்கயிற்றினால் பிணித்திருக் கிறான். போர்வீரரின் தலைமுடி போர்க்களத்தில் அவிழ்ந்து விட்டால் அவ் வீரனுடன் மற்ற வீரர்கள் போர் செய்யக் கூடாது என்பது பண்டைக்காலத்துத் தமிழ்வீரரின் மரபு. ஆகவே தலைமுடி அவிழாதபடி கட்டியிருக்கிறான். காதில் அணிந்துள்ள கனமான குண்டலம் அசைந்து ஆடுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்பும் கடகமும் வீரக்கழலும் அணிந்திருக்கிறான். முகத்தில் மீசை நன்கு அமைந்திருக்கிறது. எதிரியின் வாள்வீச்சிலிருந்து கேடயத்தினால் தற்காத்துக்கொண்டு, அதேசமயத்தில் எதிரியை வாளினால் வீசப்பார்க்கிறான். கைகால்களின் நிலை, உடம் பின் சாயல், விழிப்புள்ள பார்வை இவையெல்லாம் வாட் போர்க்காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கி. பி. 7 ஆம் நூற்றாண்டில், மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த போர்வீரனுடைய போர்க்காட்சியின் சிற்பவுருவம் இது. சிற்பக்கலை* மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் பாறைக்கோயில்களையும் சில அடையாளங்களைக் கொண்டு நன்கு தெரிந்துகொள்ளலாம். அந்த அடையாளங்களைக் கீழே தருகிறேன். 1. தூண்கள் : மாமல்லன் காலத்துக் குகைகளிலும், பாறைக் கோயில்களிலும் தூண்கள் உயரமாகவும், சற்று மெலிந்தும் இருக்கும். இன்னொரு முக்கியமான அடையாளம் என்னவென்றால், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துத் தூண்கள் சிங்கத்தூண்கள். அஃதாவது நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கங்கள் தூண்களைத் தாங்குவது போல இருக்கும். சிங்கத்தூண்களை முதன்முதல் உண்டாக்கினவன் மாமல்லன் நரசிம்மவர்மனே. இவனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்களும், சோழ அரசர்களுங்கூட, இவ்விதச் சிங்கத் தூண்களைத் தமது கோயில் கட்டிடங்களில் உபயோகித் திருக்கிறார்கள். ஆனால், நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கத்தூண்களை முதல் முதலாக அமைத்தவன் மாமல்லன் நரசிம்மவர்மனே. சிங்கத் தூண்களைத் தவிர சாதாரணத் தூண்களையும் மாமல்லன் உபயோகித்தான். இத் தூண்களைப் படத்தில் காண்க. 2. துவாரபாலகர் : கருவறை வாயிலுக்கு இருபுறத்திலும் துவார பாலகர் உருவம் அமைப்பது வழக்கம். மாமல்லனுடைய தந்தையான மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில்களில் துவார பாலகரின் உருவங்கள் உள்ளன. அவை முன்புறப் பார்வையாக (எதிர் நோக்கியவண்ணம்) அமைக்கப்பட்டிருக்கும். அன்றியும் துவார பாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கும். மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துக் குகைக்கோயில்களிலும், பாறைக்கோயில்களிலும் துவார பாலகருக்கு இரண்டு கைகள்தான் உள்ளன. ஆனால், துவார பாலகர் எதிர் பார்வையாக இராமல், கருவறை வாயிலை நோக்கியபடி பக்கவாட்டமாகத் திரும்பி நிற்கிறார்கள். இவர்கள் உருவங்களைப் படத்தில் காண்க. 3. சோமஸ்கந்தர் உருவம் : மகேந்திர வர்மனுடைய குகைக் கோயில் கருவறைச் சுவரில் சோமஸ்கந்த உருவம் இராமல் வெறுஞ் சுவராக இருக்கும் அவன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த குகைக் கோயில்களிலும், பாறைக் கோயில்களிலும் கருவறையின் பின்புறச் சுவரில் சோமஸ்கந்தர் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். கருவறைச் சுவரில் சோமஸ்கந்தர் திருவுருவத்தை முதன்முதலாக அமைத்தவன் மாமல்லனே. இவனுக்குப் பிறகு வந்த அரசர்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றிச் சோமஸ்கந்தர் உருவத்தைக் கருவறைச்சுவரில் அமைத்தார்கள். சோமஸ்கந்த மூர்த்தத்தின் அமைப்பு இது: கட்டில் போன்ற ஒர் ஆசனத்தில் சிவபெருமானும் பார்வதியம்மையாரும் சுகாசன மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார்கள். சிவபெருமான் நீண்ட சடாமூடியுடன் வலது காலை மடக்கி இடதுகாலைத் தொங்க விட்டுச் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். அவருடைய நான்கு கைகளில் இரண்டு கைகளைத் தொடையின்மேல் வைத்திருக்கிறார். மற்ற இரண்டு கைகளில் மான்மழு ஏந்தியிருக்கிறார். சிவபெருமானுக்கு இடதுபுறத்தில் பார்வதியம்மையார் அதே ஆசனத்தில் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். அவர் இடது காலைத் தொங்கவிட்டு வலதுகாலை மடக்கி அமர்ந்திருக்கிறார். இடதுகையை ஊன்றியிருக்கிறார். தலையில் கரண்டக மகுடம் தரித்துக் காதுகளில் குழைகளை அணிந்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் சிறு குழந்தை உருவமாகக் கந்தப்பெருமான் காட்சி யளிக்கிறார். இவர்களுக்குமேலே கொற்றக்குடை காணப்படுகிறது. சோமஸ்கந்த மூர்த்தத்தின் பின்புறத்தில் வலதுபுறம் பிரமனின் உருவமும் இடதுபுறம் திருமால் திருவுருவமும் காணப்படுகின்றன. சில சோமஸ்கந்த மூர்த்தத்தின் காலடியில் ஏறு (எருது) படுத்திருப்பதுபோல் அமைக்கப்படுவதும் உண்டு, மாமல்லபுரத்து கயிலாசநாதர் குகைக் கோயிலில் (இதை இப்போது மகிஷாசுரக் குகைக்கோயில் என்கிறார்கள்) உள்ள சோமஸ்கந்த மூர்த்தத்தின் காலடியில் நந்தி (எருது) உருவம் காணப்படுகிறது. இனி, மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த குகைக் கோயில்களிலும் பாறைக் கோயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்ப உருவங்களை விளக்குவோம். 4. கொற்றவை : வீரத்துக்கும் வெற்றிக்கும் தெய்வம் கொற்றவை. கொற்றம் - வெற்றி, அவ்வை - உயர்ந்தவள். கொற்றவை வணக்கம் தமிழ்நாட்டிலே மிகப் பழைய காலந்தொட்டு நடைபெற்று வந்தது. பல்லவ அரசர்களும் கொற்றவையை வழிபட்டனர். கொற்றவைக்குக் கோயில் அமைத்தும், கொற்றவை உருவத்தைச் சிற்பங்களாக அமைத்தும் சிறப்புச் செய்தார்கள். பல்லவர்காலத்துக் கொற்றவை உருவங்கள் அழகுள்ளவை. மாமல்லன் நரசிம்மவர் மனுடைய தந்தையான மகேந்திர வர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கொற்றவைத் திருவுருவங் களுக்கும், மாமல்லன் காலத்துக் கொற்றவைத் திருவுருவங்களுக்கும் சிறிது வேறுபாடுகள் உள்ளன. மகேந்திரவர்மன் காலத்துக் கொற்றவைத் திருவுருவங்களைப்பற்றிய விபரங்களை எனது மகேந்திரவர்மன் என்னும் நூலில் கூறியுள்ளேன். அக் காலத்துச் சிற்ப உருவப் படங்களையும் அந் நூலில் வெளியிட்டுள்ளேன். 5. திரிமூர்த்தி கொற்றவை : இங்கு மாமல்லன் காலத்துக் கொற்றவை உருவங்களை விளக்குவேன். மாமல்லபுரத்தில் திரிமூர்த்தி குகைக்கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பாறையில் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்ட கொற்றவையின் உருவம் ஒன்று உண்டு. இந்த உருவத்தைத் துர்க்கா லஷ்மி என்றுங் கூறுவர். இக் கொற்றவையின் திருவுருவம், எருமைத் தலையின் மேலே நின்ற கோலமாக அமைந்துள்ளது. தலையில் மகுடம் மிளிர்கிறது. காதுகளில் பத்திர குண்டலங்கள் மின்னுகின்றன. எட்டுக் கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். இரண்டு கைகள் அபயவரத முத்திரை காட்டுகின்றன. மற்றக் கைகள் கேடயம், வில், அம்பு, மணி முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளன. அரையில் மணிமேகலை அணிந்துள்ளார். காலடியில் இரண்டு வீரர்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர். 6. வராகமண்டபக் கொற்றவை : கொற்றவையின் இன்னொரு சிற்ப உருவம், மாமல்லபுரத்து வராகமண்டபத்தின் சுவரில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. இந்தக் கொற்றவை ஒரு பீடத்தின் மேல் நின்றவண்ணமாகக் காட்சியளிக்கிறார். தலையில் மணிமுடி யணிந்து காதுகளில் பொற்குழைகள் மின்ன, வீரமும் வெற்றியும் முகத்தில் விளங்கக் கொற்றவை எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு நான்கு கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு சக்கரங்கள் ஏந்தி ஒர் இடது கையைத் தொடையின்மேல் ஊன்றி ஒரு வலக்கையில் அபய முத்திரை காட்டுகிறார். கழுத்து கை கால்களில் அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. தலைக்கு மேல் கொற்றக் குடை காட்சியளிக்கிறது. வலப்புறத்திலும் இடப்புறத்திலும், கொற்றவையின் ஊர்திகளான சிங்கமும் மானும் காணப்படுகின்றன. ஏவற்றொழில் புரியும் நான்கு பூதங்களின் குறள் உருவங்கள், கொற்றவையின் இருபுற்த்திலும் அந்தரத்தில் இருப்பதுபோல காட்சியளிக்கின்றன. காலடியில், இருபுறத்திலும் இரண்டு ஆட்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர். கொற்றவைக்கு வலப்புறத்தில் இருப்பவன் இடது கையினால் தன் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு வலக்கையினால் தன் கழுத்தை அரிந்து கொள்கிறான். 7. இளங்கோயில் கொற்றவை : மாமல்லபுரத்திலே, இப்போது “துரௌபதை இரதம்” என்று பெயர் கூறப்படுகிற பாறைக்கோயில் கொற்றவைக் கோயிலாகும். இளங்கோயில் அமைப்பாக உள்ள இக் கோயிலின் சுவர்களில் கொற்றவையின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் திருவுண்ணாழிகை (கருவறை)யின் சுவரில் கொற்றவையின் திருவுருவம் தாமரைப்பூவின்மேல் நின்றவண்ணம் காட்சியளிக்கிறது. தலையில் காண்டக மகுடமும் காதுகளில் பத்திர குண்டலங்களும் கழுத்திலும் மார்பிலும் கை கால்களிலும் அணிகலன்களும் அணிந்து, அரையில் மணிமேகலை விளங்கக் கொற்றவை காட்சியளிக்கிறார். மேல் இரண்டு கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்தி ஒரு வலது கையை அபய முத்திரையாகவும் ஒரு இடது கையைத் தொடைமீது சார்த்தியும் சம்பீரமாக எழுந்தருளி யிருக்கிறார். குறள் உருவமுள்ள நான்கு பூதகணங்கள் ஆகாயத்தில் நிற்பதுபோல இருக்கின்றன. காலடியில், தரையின்மேலே இரண்டு ஆட்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். வலதுபுறத்தில் உள்ள ஆள், தன் இடது கையினால் தன்னுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு வலது கையினால் கத்திகொண்டு தலையை அறுக்கிறான். மற்ற ஆள், கைகூப்பி வணங்கிக்கொண்டே தியானம் செய்கிறான். 8. துவார பாலிகை : கருவறையின் வாயிலின் வெளிப்புறத்தில் துவாரபாலிகையர் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளன. வலதுபுரத்துத் துவார பாலிகை எதிர்பார்வையாக நிற்கிறாள். தலையில் மகுட மணிந்து, காதுகளில் பெரியபத்திர குண்டலங்கள் அணிந்து, இடதுகையை இடுப்பில் ஊன்றி, வலது கையில் வாளேந்தி நிற்கிறாள். பக்கத்தில் கேடயம் இருக்கிறது. இடதுபுறத்துத் துவாரபாலிகை சற்றுப் பக்கவாட்டமாக நிற்கிறாள். தலையில் மகுடமணிந்து, காதுகளில் பத்திர குண்டலங்கள் மின்ன, இடதுகையை இடுப்பில் ஊன்றி வலது கையில் பிடித்த வில்லைத் தரையில் ஊன்றி இருக்கிறாள். இடதுகாலை ஊன்றி வலதுகாலை மடக்கி நிற்கும் காட்சி காணத்தக்கது. வாயிலின் மேலே மகரதோரணம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலின் வெளிப்புறத்திலும் சுவர்களில் இதுபோன்ற கொற்றவையின் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின் புறச் சுவரில் (வெளிப் பக்கத்தில்) செதுக்கியமைக்கப் பட்டுள்ள கொற்றவை எருமைத் தலையின்மேல் நிற்பது போன்று அமைந்திருக்கின்றது. இன்னொரு கொற்றவையின் சிற்ப உருவம் மாமல்ல புரத்து வராகப்பெருமான் குகைக்கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்ப உருவம், மாமல்லபுரத்து வராக மண்டபத்துக் கொற்றவை சிற்பம்போலவே (மேலே கூறப்பட்டது போலவே) உள்ளது. எட்டுக் கைகளுள்ள இந்தச் சிற்பம், எருமைத் தலையின்மேல் (மகிடாசுரன் தலை) நிற்பது போல அமைந்துள்ளது. இரண்டு புறத்திலும் இரண்டு பூதகணங்கள் அந்தரத்தில் நிற்கின்றனர். அவற்றிற்கு மேலே இரண்டு மூலையிலும் ஊர்திகளான சிங்கமும் கலை மானும் நிற்கின்றன. கொற்றவையின் காலடியில் இரண்டு ஆட்கள் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். 9. திருச்சி கொற்றவை : மாமல்லன் காலத்தில் அமைக்கப் பட்ட மற்றொரு கொற்றவையின் திருவுருவம், திருச்சிராப்பள்ளி மலையில் உள்ள குகைக்கோயில் சிற்பமாகும். திருச்சிராப்பள்ளி மலையில் இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. மேல் குகைக் கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. கீழ்க் குகைக் கோயில் மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்தக் குகைக்கோயில் முழுதும் செம்மையாக அமைக்கப் படவில்லை. இக் குகைக்கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் கொற்றவையின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் நான்கு கைகளுள்ள சிற்பம். பீடத்தின் மேல் கொற்றவை நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் காலடியில் இரண்டு மனிதர் தரைமேல் மண்டியிட்டமர்ந்து இருக்கின்றனர். அவர்களில் வலப்புறத்தில் இருப்பவன், வழக்கம்போலத் தன் தலையைத் தானே வாளினால் அறுத்துக்கொள்கிறான். இந்தச் சிற்ப உருவம், முக்கியமாக அடிப்பகுதி, செம்மையாகப் பூர்த்தி செய்யப்படாமலே விடப்பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்ட கொற்றவைகளின் சிற்ப உருவங்களில், ஒரு ஆள் தன் கையினாலே தன் தலையை வாள் கொண்டு அரிந்து கொள்கிறதுபோல் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இதன் கருத்து என்ன? வீரன் ஒருவன் தன் வழிபடு தெய்வமாகிய கொற்றவைக்குத் தன் தலையைப் பலியிடுவதை இச் சிற்பங்கள் காட்டுகின்றன. உயிரைப் பொருளென மதியாமல், வெற்றியையே உயிராகக் கருதும் வீரர்கள், கொற்றவைக் கோயிலில் சென்று, தங்கள் அரசன் வெற்றிபெறுவானாக என்று வரம் கேட்டுத் தங்கள் தலையைத் தாங்களே அறுத்துக் கொற்றவையின் திருவடிகளில் வைப்பது பண்டைக் காலத்து வழக்கம். இதனை. “மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகெனக் கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்புறத் தீண்டி யார்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துக் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றிவேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி” என்னும் சிலப்பதிகாரச் செய்யுளால் அறியலாம்.1 கலிங்கத்துப் பரணியும் இதனைக் கூறுகிறது: “அடிக்கழுத்தி னுடன்சிரத்தை அரிவ ராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ.” என்னும் செய்யுள், 2வீரர்கள் கொற்றவைக்குத் தலைப்பலி கொடுக்கும் வழக்கத்தை நன்கு விளக்குகிறது. தக்கயாகப் பரணியிலும் இச் செய்தி கூறப்படுகிறது. எனவே, கொற்றவையின் உருவச் சிற்பங்களில் காணப்படுகிற தலையை அறுக்கும் உருவம், வீரர்களின் உருவம் என்பதும் அவ் வீரர்கள் தமது அரசன் வெற்றி பெறுவதற்காகத் தமது தலையைத் தாங்களே அறுத்துக் கொற்றவைக்குப் பலி கொடுக்கிறார்கள் என்பதும் அறியத்தக்கன. 10. போர் மடந்தை : மாமல்லன் காலத்தில் அமைக்கப் பட்ட கொற்றவையின் மற்றொரு உருவச்சிற்பம் மகிஷாசுரமர்த்தனி குகைக்கோயிலில் இருக்கிறது. பாறைச்சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய சிற்பம், கொற்றவை, மகிஷா சுரனுடன் போர் செய்வது போல அமைந்திருக்கிறது. இதில், வெற்றிமடந்தையாகிய கொற்றவை மகிஷாசுரனுடன் போர் செய்கிற போர்க்களக் காட்சி சிற்ப உருவமாக அமைக்கப் பட்டிருக்கிறது. கொற்றவை, தன் ஊர்தியாகிய சிங்கத்தின் முதுகில் அமர்ந்து வில்லை வளைத்து நாணை வலித்து அம்பு எய்கிறார். இக் கொற்ற வைக்கு எட்டுக் கைகள் உள்ளன. இடது கையில் வில்லைப் பிடித்து வலதுகையில் நாணைவலித்து அம்பு எய்கிறார். மற்ற ஆறு கைகளில் கேடயம், கட்டாரி, வாள், சங்கு, சக்கரம், பாசம், மணி முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். தலையில் மகுடமும், காதில் குண்டலங்களும் மின்னுகின்றன. முகத்தில் வீரமும் வெற்றியும் உறுதியும் மிளிர்கின்றன. ஊர்தியாகிய சிங்கம், மகிஷாசுரன் பக்கமாகப் பாய்கிறது. கொற்றவையின் பரிவாரங்களாகிய குறள் உருவம் உள்ள பூதகணங்கள் கத்தி கேடயம் முதலிய ஆயுதங்களைத் தாங்கி மகிஷாசுரனுடைய படையுடன் போர் செய்கின்றன. ஒரு பூதம் கொற்றவைக்குக்குடை பிடிக்கிறது. கொற்றவையின் தோழியாகிய ஒரு பெண்தெய்வம், மண்டியிட்டவண்ணம் பகைவனை உடைவாளினால் ஒங்கி வெட்டுகிறது. கொற்றவைக்கு எதிரே எருமை முகம் உள்ள மகிஷாசுரன் கனமுள்ள தண்டாயுதத்தை ஏந்தி இரண்டு கைகளினாலும் ஒங்கி அடிக்கப் பார்க்கிறான். ஆனால், கொற்றவைக்கு முன் அவன் ஆற்றல் நிற்கமுடியவில்லை. அவன் மனந் தளர்ந்து பின்னடைகிறான். அவன் தலைக்கு மேலே காணப்படுகிற குடை அவன் அசுரர்களின் அரசன் என்பதைக் காட்டுகிறது. மகிஷாசுரனுடைய கால்களுக்குக் கீழே ஒரு வீரன் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறான். ஒரு வீரன் சிங்கத்துக்கு எதிரில் தலை கீழாகக் குதிக்கிறான். இரண்டு அசுரர்கள் கத்தியும் கேடயமும் தாங்கி நிற்கிறார்கள். ஒரு அசுரன் ஒரு பூதத்துடன் போர் செய்கிறான். காதில் குண்டலங்களை யணிந்து சடைமுடியுடன் ஒருவர் (முனிவர்?) தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து இடது கையைத் தரையில் ஊன்றி வலது கை விரவினால் மகிஷாசுரனைச் சுட்டிக் காட்டுகிறார். போர்க்களக் காட்சி நம் கண்முன்னே நிற்கிறது. போரின் கடைசி கட்டம்; அடுத்த நிமிஷத்தில் முடியப்போகிற போரிலே, கொற்றவையின் வெற்றியும் மகிஷாசுரனின் தோல்வியும் இப்போதே காணக் கிடக்கின்றன! இந்தச் சிற்பத்தின் அழகும் செவ்வியும் என்னே, என்னே! இந்தச் சிற்ப உருவத்தை அமைத்து வைத்த கலைச் செல்வன் யாரோ? அவன் பெயர் மறைந்து விட்டது. ஆனால், அவன் அமைத்து வைத்த இச்சிற்பக் கலை அவன் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது! இச்சிற்பத்தின் செவ்விய அமைப்பைக் காணும்போது நம்முடைய மனம் பெருமை கொண்டு இறுமாப்புடன் துள்ளிக் குதிக்கிறது. தமிழ்நாடு, காவியப் புலவரைப் பெற்றிருந்தது போலவே சிறந்த சிற்பக் கலைஞரையும் பெற்றிருந்தது என்பதை நினைக்கும்போது நம்மை யறியாமலே நமக்குப் பெருமிதம் தோன்றுகிறது. 11. வராகப் பெருமாள் : வராகப் பெருமாள் என்பது திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகிய பன்றியின் உருவம். வராகப் பெருமாளைத் திருப்பன்றி யாழ்வார் என்றும் கூறுவர். திருமால் காட்டுப் பன்றியாகத் திருவவதாரம் செய்து, நீரிலே மூழ்கிக்கிடந்த நிலமகளை வெளியில் கொண்டுவந்தார் என்பது புராணக் கதை. வராகப் பெருமாளுக்குப் பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டிலே பல இடங்களில் கோவில்கள் இருந்தன. ஆமை, மீன், பன்றி, நரசிங்கம் முதலிய திருமாலின் அவதாரங்களில் ஆமைக்கும் மீனுக்கும் தனியே கோயில்கள் கிடையா. நரசிங்க மூர்த்திக்குப் பிற்காலத்திலே கோயில்கள் தனியாக ஏற்பட்டன. ஆனால், நரசிங்கமூர்த்திக்குக் கோயில் உண்டாவதற்கு முன்னரே, மிகப் பழைய காலத்திலேயே வராகப் பெருமாளுக்குக் கோயில்கள் ஏற்பட்டிருந்தன. திருமால் அடியாரான ஆழ்வார்களும், திருமால் திருவவ தாரங்கள் எல்லாவற்றையும் போற்றுகிறார்களானாலும், வராகப் பெருமாளைச் சிறப்பாகப் போற்றியிருக்கிறார்கள். மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலே வராகப் பெருமாளின் திருவுருவங்கள் மாமல்லபுரத்துக் குகைக் கோயில்களிலே புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டன. அவை, வராக மண்டபம் என்று வழங்கப்படுகிற குகைக்கோயிலின் சுவரில் உள்ள சிற்பமும், வராகப் பெருமாள் குகைக் கோயிலில் உள்ள சிற்பமும் ஆகும். வராக மண்டபத்தில் பாறைச் சுவரில் உள்ள புடைப்புச் சிற்பம் வெகு அழகானது. இதில், வராகப் பெருமாள் இடது காலை ஊன்றி வலது காலை மடக்கித் தூக்கியிருக்கிறார். அவரது தூக்கிய பாதம் நாக அரசனின் தலைமேல் வைக்கப்பட்டிருக்கிறது. நாகராசன் மனைவி கைகூப்பி வணங்குகிறார். நாகராசனும் அவன் மனைவியும் தலைக்கு மேல் பாம்பின் உருவம் உடையவர்களாய் உள்ளனர். அவர்களின் இடுப்புக்குக் கீழே தண்ணீர் இருக்கிறது. வராகப்பெருமாளின் மடக்கிய காலின் தொடையின் மேலே, நீரிலிருந்து எடுத்த நிலமகளை உட்கார வைத்திருக்கிறார். தொடையின் மேல் அமர்ந்த நிலமகள் கரண்டக மகுடம் தலையில் அணிந்து, காதில் பத்திர குண்டலங்கள் விளங்க, அழகிய தோற்றத்தோடு காணப்படுகிறார். தொடைமேல் அமர்ந்திருக்கும் நிலமகளின் (பூதேவின்) கால்களை வராகப் பெருமாள் இடது கைகளால் பிடித்துக்கொண்டு வலது கையினால் அவர் முதுகைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். வராகப் பெருமாளின் மற்ற இரண்டு கைகளில் சங்கு சக்கரங்கள் இருக்கின்றன. வராகப் பெருமாளின் திருமுகம் காட்டுப் பன்றியின் உருவமாக அமைந்து ஒற்றை மருப்புடன் காணப்படுகிறது. தலையில் கிரீடமகுடம் விளங்குகிறது. நீரிலே அழுந்திக் கிடந்த நிலமகளைத் திருமால், வராகப் பெருமாள் உருவங்கொண்டு வெளியே எடுத்துத் தொடையின்மேல் வைத்த வண்ணம் நிற்கிறார். அவருடைய காலின்கீழ் நீரும் நீரில் வாழும் நாகனும் காணப்படுகின்றனர். நாரதர் வீணை வாசித்துத் திருமாலைப் புகழ்ந்து பாடுகிறார். தேவர்களும் துதித்துப் போற்றுகிறார்கள். “சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றியாகி இலங்குபுவி மடந்தைதனை இடத்துப் புல்கி எயிற்றினிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்” என்று திருமங்கை யாழ்வார் பாடியதற்கேற்ப, வராகப் பெருமாள் இச் சிற்பத்தில் காட்சியளிக்கிறார். வராகப்பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற வராகப் பெருமாள் உருவமும் மேலே கூறப்பட்ட உருவம் போன்றதே. ஆனால், இது கருங்கல் சிற்பம் அன்று; சுதையினால் அமைந்த உருவம். இது இன்றும் வழிபடப்படுகிறது. இந்த வராக மூர்த்தியின் பக்கத்தில் முனிவர் தேவர்கள் முதலியவர்களின் உருவங்கள் காணப்படவில்லை. 12. திருமகள் (கஜலக்ஷ்மி) : வராக மண்டபத்தில் உள்ள இன்னொரு சிற்ப உருவம் திருமகளின் உருவமாகும். இச் சிற்ப உருவத்தில், திருமகள் தாமரைப் பூவின்மேல் அமர்ந்திருக்கிறார். திருமகளுக்குச் சற்றுப் பின்னால் இரண்டு யானைகள் நிற்கின்றன. வலப்புறத்தில் இருக்கிற யானை, தன் தும்பிக்கையினால் பொற் குடத்திலிருந்து திருமஞ்சன நீரைத் திருமகளின் திருமுடிமேல் பொழிகிறது. திருமகளுக்கு முன்புறத்தில், பக்கத்திற்கு இருவராக நான்கு தெய்வ மகளிர் நிற்கின்றனர். இவர்களில் இருவர், தமது தோளின்மேல் நீர்க்குடத்தை ஏந்தி நிற்கின்றனர். இதே மாதிரி, திருமகளின் மற்றொரு சிற்ப உருவம் மகாபலி புரத்து வராகப் பெருமாள் குகைக் கோயிலிலும் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்தச் சிற்பத்திலும் இந்தச் சிற்பம் போன்றே எல்லா அமைப்புக்களும் காணப்படுகின்றன. 13. கங்காதரமூர்த்தி : கங்காதர மூர்த்தியின் உருவம் வராகப் பெருமாள் குகைக் கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமான் சடா முடியுடன் இடதுகையை இடுப்பில் ஊன்றி, வலது கையை அபயம் காட்டி நிற்கிறார். மற்றொரு இடது கையில் மணி மாலை (?) வைத்திருக்கிறார். மற்றொரு வலது கையில் சடைமுடியிலிருந்து ஒரு புரிசடையைப் பிரித்துப் பிடித்திருக்கிறார். அந்தப் புரிசடையில் கங்கை, பெண்மகள் உருவமாக வந்து தங்குகிறாள். “வையக நெளியப்பாய்வான் வந்திழி கங்கையென்னும் தையலைச் சடையிலேற்றார் சாய்க்காடு மேவினாரே” என்றும், “வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் சென்னெறிச் செல்வனாரே” என்றும், “கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானிற்றோன்றும் புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே” என்றும் திருநாவுக்கரசர் கூறியதற் கேற்ப, இந்தச் சிற்பம் எழில்பெற அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று இன்னொரு கங்காதர மூர்த்தியின் உருவம், “தர்மராஜரதத்தின்” சுவரில் இருக்கிறது. 14. நான்முகன் : வராகப் பெருமாள் குகைக் கோயிலிலும் நான்முகனாகிய பிரமனுடைய உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், பிரமனுக்கு மூன்று முகங்கள் காட்டப்பட்டுள்ளன மற்றொரு முகம் பின்புறம் இருப்பதாகக் கருதவேண்டும். தருமராஜன் இரதத்திலும் நான்முகனுடைய ஒரு சிற்ப உருவம் இருக்கிறது. 15. திரிவிக்கிரம மூர்த்தி (உலகளந்த பெருமாள்) : வராக மண்டபத்துத் தென்புறச் சுவரில் திரிவிக்கிரமனின் உருவச் சிற்பம் காணப்படுகிறது. திரிவிக்கிரமன் நீண்டு நிமிர்ந்த உருவத்தோடு வலதுகாலைத் தரையில் ஊன்றி நின்று, இடதுகாலைத் தோள் வரையில் உயர்த்தித் தூக்கி நிற்கிறார். தலையில் நீண்டமுடி தரித்திருக்கிறார். பக்கத்துக்கு நான்காக எட்டுக் கைகள் உள்ளன. வலது பக்கத்து நான்கு கைகளில், வாள் குற்றுடைவாள் சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு ஒரு கையைத் தலைக்குமேல் தூக்கி ஆகாயத்தைத் தாங்குவது போலக் காணப்படுகிறார். இடது பக்கத்து நான்குகைகளில், ஒரு கையில் வில்லை ஏந்தி மார்போடு சேர்த்து வைத்திருக்கிறார். மற்றக் கைகளில் கேடயமும் சங்கும் ஏந்தியிருக்கிறார். ஒரு கையை நீட்டி அந்தத் திசையை இரண்டு விரல்களினால் சுட்டிக் காட்டுகிறார். நிலங்கடந்த நெடுமுடி யண்ணலாகிய இவரின் தோற்றம் கம்பீரத்துடன் காணப்படுகிறது. இவருக்கு வலப் பக்கத்தின் மேல் புறத்தில், நாய்த் தலையுடைய ஒரு ஆள் அந்தரத்தில் நிற்பதுபோல இருக்கிறான். இது எதைக் குறிக்கிறது என்பது தெரியவில்லை. இவ் வுருவத்துக்குப் பக்கத்தில் பிரமன் தாமரைப் பூவில் அமர்ந்து இருக்கிறார். வலது பக்கத்தின் மேல்புறத்தில் ஒரு தேவன் உட்கார்ந் திருக்கிறான். திருமாலின் தோளுக்குக் கீழே, வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் சூரிய சந்திரர்கள் ஆகாயத்தில் நின்ற வண்ணமாகத் தமது கைகளினாலே திருமாலைச் சுட்டிக் காட்டுகிறார்கள். சந்திரனுக்குப் பக்கத்தில், ஒரு ஆள் கையில் கட்டாரி ஏந்திக் குனிந்த வண்ணம் ஆகாயத்தில் பறப்பது போலக் காணப்படுகிறான். திருமாலின் காலடியில் தரையிலே பக்கத்துக்கு இரண்டு பேராக நான்கு ஆட்கள் தலையில் மகுடம் அணிந்து உட்கார்ந் திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பலிச்சக்கரவர்த்தி; ஒருவர் சுக்கிராசாரியார். மற்ற இருவரும் அமைச்சரும் சேனாபதியும் போலும். கம்பீரமாகவும் மிடுக்காகவும் உள்ள இந்தச் சிற்ப உருவம். பலிச்சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனன் (குள்ளன்) உருவமாகச் சென்று மூன்றடி மண் கேட்டுப் பெற்று, திரிவிக்கிரம மூர்த்தியாக ஒங்கி வளர்ந்து நிலமளந்த கதையைத் தெரிவிக்கிறது. “பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடு திருமா நீள்கழல் ஏழுலகும் தொழ ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கருமாணிக்கம் எண்கண் ணுளதாகுமே” என்று நம்மாழ்வாரும், “கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவின்மிகு சிறுகுறளாய் மூவடியென்று இரந்திட்டு அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளு மெல்லாம் அளந்தபிரான் அமரும்இடம் அரிமேய விண்ணகரம்” என்று திருமங்கையாழ்வாரும் அருளியபடி, இந்தச் சிற்ப உருவம் மிக எழில்பட அமைந்திருக்கிறது. 16. அநந்தசயனமூர்த்தி : அநந்தசயன மூர்த்தியின் கம்பீரமான அழகிய சிற்பம், மகிஷாசுரமண்டபம் என்னும் குகைக்கோயிலின் பாறைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. உயரமான மஞ்சம்போல் அமைந்திருக்கிற ஆதிசேஷன்மேல் திருமால் காலைநீட்டி மல்லாந்துபடுத்து அறிதுயில் (யோகநித்திரை) செய்கிறார். ஆதிசேஷனுடைய ஐந்து தலையுடைய படம் குடை போல நிழல் செய்கிறது. அறிதுயில் கொள்ளும் திருமால் இரண்டு கைகளுடன் காணப்படுகிறார். வலது கையைப் படுக்கைமேல் நீட்டி இடது கையின் முழங்கையைத் தூக்கி, பாம்புப்பாயலின்மேல் சுகமாகப்படுத்திருக்கும் செவ்வி அழகாயிருக்கிறது. மணி மகுடம் தரித்த திருமுடியும் ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியாக இருக்கிற முகமும் இனிய காட்சியாக இருக்கின்றன. அரையில் வேட்டி தரித்துக் கால்களை நீட்டிப் படுத்திருக்கிறார். இவ்விதமாக அறிதுயில் கொள்ளும் மாயோனுடைய சிற்ப உருவம் பார்ப்பவர் மனத்தைக் கவர்கிறது. இவருடைய கால்பக்கத்தில் இரண்டு வீரர்கள் கனமான ஆயுதத்தைக் கையில் தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் மிடுக்கும் முரட்டுத்தனமும் வன்கண்மையும் உடையவராகத் தோன்றுகின்றனர். இவர்கள் கனமான கதாயுதத்தைத் தமது இரண்டு கைகளாலும் தூக்கி, திருமாலை அடித்துக் கொல்லப்பார்க்கிறார்கள். இந்த வீரர்கள் மது, கைடபன் என்னும் பெயருள்ள அசுரர்கள், திருமால்துயில் கொண்டிருக்கும்போது, அவருடைய காதுகளிலிருந்து இவர்கள் தோன்றினார்கள் என்று புராணக்கதை கூறுகிறது. பள்ளிகொண்டிருக்கிற திருமாலுக்குமேலே, ஆகாயத்தில் இரண்டு உருவங்கள் பறந்துசெல்வதுபோன்று காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அழகான உடலையுடைய பெண் உருவம். இது துர்க்கையின் உருவம். இத்தெய்வம், திருமாலுடைய உடம்பின் ஒளியிலிருந்து உண்டாயிற்று என்று புராணக்கதை கூறுகிறது. இதற்குப் பக்கத்தில் உள்ள உருவம் பருத்துக் குறுகிய உடலை யுடையது. இது துர்க்கையின் பரிவாரமாகிய பூதகணமாகும். திருமாலின் கால்பக்கத்தில், ஆதிசேஷ மஞ்சத்துக்குக் கீழே, திருமகள் மண்டியிட்டுத் திருமாலை நோக்கிக் கைகூப்பித்தலை வணங்குகிறார். திருமகள் உருவச் சிற்பம் அழகாக இருக்கிறது. திருமகள் உருவத்துக்கு அருகில், ஒரு தேவன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார். மற்றொரு தெய்வ உருவம் நின்று கொண்டிருக்கிறது. இந்த உருவத்தின் தொடைக்குக் கீழ்ப்பகுதி தண்ணீரில் மறைந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. இந்த இரண்டு தெய்வ உருவங்களும் யார் என்பது தெரியவில்லை. “காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள் ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப - வாய்ந்த மதுகை டவரும் வயிறுருகி மாண்டார் அதுகே டவர்க்கிறுதி யாங்கு”3 என்று பேயாழ்வார் கூறுவதுபோன்று, திருமால் காதுகளிலிருந்து தோன்றிய மது கைடபர்கள், அவரைக் கொல்ல முயன்று கடைசியில் அவர்களே இறந்து அழிந்தார்கள் என்னும் புராணக்கதை இந்தச் சிற்பத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது 17. திரிமூர்த்தி குகைக்கோயில் சிற்பங்கள் : திரிமூர்த்தி குகைக்கோயிலில், வடபுறத்தில் உள்ளது பிரமனுக்கு ஏற்பட்ட கோயில். இங்குள்ள துவாரபாலகர் தாடிமீசை யுடையவர்களாப் முனிவர்களை போன்று காணப்படுகிறார்கள். கருவறைக்குள் பிரமன் உருவம் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இச் சிற்பத்தின் சிறப்பு என்னவென்றால், பிரமனுக்கு ஒரே முகம் இருப்பதுதான். தர்மராஜ இரதத்திலும் வராகப்பெருமாள் குகைக்கோயிலிலும் உள்ள பிரமன் உருவத்தில் மூன்று முகம் காணப்படுகிறது. நான்காவது முகம் பின்புறத்தில் மறைந்திருக்கிறதாகக் கருதவேண்டும். இவ்வாறு நான்கு முகமுடையபிரமனை, இந்த மும்மூர்த்தி குகைக்கோயிலில் ஒரே முகமுடையவராக அமைத்திருப்பது, கருதத்தக்கது. மேலும், இவ்வுருவம் இளமை பொருந்திய உருவமாகக் காணப்படுகிறது. குமரக்கடவுள் பிரமனைச் சிறையிட்டுத் தாமே பிரமனுடைய படைப்புத் தொழிலை நடத்தினார் என்று புராணம் கூறுகிறது. அந்தக் கதையை யுட்கொண்டு, இந்தப் பிரமனுடைய உருவம் குமரக்கடவுள் உருவம் போன்று அமைத்தனர்போலும். நின்ற கோலமாகக் காணப்படுகிற இவ்வுருவம், நான்கு கைகளை யுடையது. வலது மேல்கையில் வட்டமான ஒரு பொருளை (கிண்டி?) ஏந்தி, இடது மேல்கையில் உருத்தி ராக்கமாலை பிடித்திருக்கிறார். வலது கீழ்க்கை அபயமுத்திரை காட்ட, இடது கீழ்க்கை இடுப்பில் ஊன்றியிருக்கிறது. பிரமனுக்கு இருபக்கத்திலும், காலடியில், இரண்டு பேர் மண்டியிட்டு அமர்ந்து கையைத் தூக்கி பிரமனைக் காட்டிய வண்ணம் தோத்திரம் செய்கிறார்கள். இவர்களுக்குமேலே, குறள் உருவமுள்ள இரண்டு பூதகணங்கள் ஆகாயத்தில் நின்று கையை உயர்த்திக்காட்டித் தோத்திரம் செய்கின்றன. 18. சிவன் : பிரமன் கோயிலுக்கு அடுத்து நடுக்கோயிலாக அமைத்திருப்பது சிவபெருமான்கோயில். இக்கோயில் மற்ற இரண்டு கோயில்களைவிடச் சற்று முன் வளர்ந்திருப்பதனால், சிவபெரு மானுக்கு முதன்மையளிக்கிறது. இந்தக் கோயிலுக்குள் செல்ல படிகள் உள்ளன. வாயிலில் துவார பாலகர் உருவங்கள் உள்ளன. கருவறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாகச் சிவபெருமான் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்குள்ள நான்கு கைகளில், மேல் வலது வகையில் பரசு (கோடரி) தாங்கி, மேல் இடது கையில் ஜபமாலை ஏந்தியிருக்கிறார். கீழ் வலது கையை அபய முத்திரையாகவும் கீழ் இடது கையை இடுப்பில் ஊன்றியும் இருக்கிறார். சிவபெருமானுக்கு இருபுறத்திலும் காலடியில் இரண்டு பேர் மண்டியிட் டமர்ந்திருக்கிறார்கள். சிவனுக்கு வலது புறத்திலுள்ளவர் இடது கையைத் தொடையில் ஊன்றி வலது கையை மார்பில் வைத்துத் தியானத்தில் இருக்கிறார். இடதுபக்கத்தில் இருப்பவர் இரண்டு கையையும் சேர்த்துக் கூப்பி மார்பில் வைத்துக்கொண்டு தியானிக்கிறார். இவர்களுக்குமேலே, குறள் உருவம் உள்ள இரண்டு பூதகணங்கள், ஆகாயத்தில் நின்று சிவவெருமானைச் சுட்டிக் காட்டித் தோத்திரம் செய்கிறார்கள். 19. திருமால் : இக் கோயிலுக்கு இடதுபக்கத்தில் இருப்பது, திருமால் கோயில். இக் கோயில் வாயிலிலும் துவார பாலகர் உள்ளனர். கருவறைக்குள்ளே சுவரில் புடைப்புச் சிற்பமாக நிற்கும் திருமால், தமதுமேல் இரண்டு கைகளில் சங்குசக்கரம் ஏந்தியிருக்கிறார். கீழ் வலதுகையை அபய முத்திரையாகவும் கீழ் இடது கையை இடுப்பில் தாங்கியும் காட்சியளிக்கிறார். இவருக்குக் காலடியில் இரண்டு பக்கத்திலும் இரண்டு பேர், மண்டியிட்டு அமர்ந்து கையை உயர்த்திக்காட்டித் தோத்திரம் செய்கிறார்கள். இவர்களுக்குமேலே, குறள் உருவமுடைய இரண்டு பூதகணங்கள் ஆகாயத்தில் நின்று கையைநீட்டிக் காட்டித் தோத்திரம் செய்கிறார்கள். மும்மூர்த்தி வணக்கம் மும்மூர்த்தி வணக்கம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்தது. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் மும்மூர்த்தியைத் தம்முடைய பாசுரங்களில் கூறுகிறார்கள். சைவர்கள் மும்மூர்த்திகளில் சிவபெருமானை முதல்வராகக் கூறுவார்கள். வைணவர்கள், திருமாலை முதல்வராகக் கூறுவார்கள். அவரிவ ரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி ஏத்தாதா ரெண்ணில் - பலரும் செழுங்கதிரோன் ஒண்மலரோன் கண்ணுதலோ னன்றே தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.4 என்றும், தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் - யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாம் கடை.5 என்றும் ஆழ்வார்கள் பாடுகின்றனர். “கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங் காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் புண்ணியனைப் புள்ளிருக்கும் வேளூ ரானைப் போற்றாதே யாற்றநாள் போக்கி னேனே”6 என்றும், “மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூ ருடையார் போலும்.”7 என்றும், “மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண் முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்.”8 என்றும் சைவ அடியார் கூறுவது காண்க. மும்மூர்த்தி குகைக் கோயிலைச் சார்ந்து, அதன் பக்கத்தில் உள்ள பாறையில் கொற்றவையின் (துர்க்கையின்) உருவம் அழகான புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கிறது. இதைப்பற்றிக் “கொற்றவை” என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். “அர்ச்சுனன் இரத”த்தில் உள்ள சிற்பங்கள் மேற்குப்புறம் பார்த்த இந்தக் கோயிலின் திருவுண்ணாழிகையில் (கருவறையில்) சிற்ப உருவங்கள் இல்லை. வெளிப்புறச் சுவரில் அழகான சிற்ப உருவங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. வடக்கு கிழக்கு தெற்குப் புறச்சுவர்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளன. இச் சிற்பங்களைப் பார்ப்போம். 20. கருடவாகனப் பெருமாள் : வடபுறச் சுவரில் நடுநாயக மாக இருக்கும் சிற்ப உருவம் கருடவாகனப் பெருமாள். இந்தச் சிற்பம் அழகாகவும் புதுமையாகவும் இருக்கிறது. கருடாழ்வான் குனிந்து நின்று பெருமாளைத் தாங்குகிறான். வலது காலைப் பின்னால் மடக்கி, இடது காலை முன்புறம் ஊன்றி, இடது கையை இடது கால் முட்டி மேல் தாங்கிக் குனிந்து நின்று, வலக்கை விரலால் வாயைப் பொத்திக் கொண்டு பயபக்தியோடு தாழ்ந்து நிற்கும் கருடாழ்வானின் காட்சி இனிய காட்சியே. பிற்காலத்துக் கருடாழ்வான் உருவச் சிற்பத்தை இக்காலத்தில் பார்க்கிறோம். மனித உடம்பும் கருடப் பறவையின் வளைந்த கூர்மையான மூக்கும் இரண்டு இறக்கைகளும் உடைய கருடாழ்வான் உருவத்தைப் பெருமாள் கோயில்களில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கருடாழ்வானைப் பாருங்கள், இவனுக்குச் சிறகுகள் இல்லை; கருடப்பறவையின் கூரிய வளைந்த மூக்கும் இல்லை. முழுவதும் மனித உருவம் உடைய கருடாழ்வான். இந்தக் கருடன், பெருமாளுக்குப்பின்புறம் அடக்க ஒடுக்கமாகப் பயபக்தி யோடு நிற்கிற அமைப்பை வேறு எந்தச் சிற்பத்திலும் நீங்கள் கண்டிருக்க முடியாது. பயபக்தியையும் அடக்க ஒடுக்கத்தையும் இந்தக் கருடாழ்வான் உருவத்தில் அமைத்துக் காட்டிய அந்தச் சிற்பியின் திறனே திறன்! கருடாழ்வானுக்கு அருகில் பெருமாள் நிற்கிறார். நீண்ட முடிதரித்து அரையிலிருந்து கணுக்கால் வரையில் வேட்டியணிந்து குண்டலம் முதலிய ஆபரணங்கள் விளங்கத் திருமால் காட்சி யளிக்கிறார். அவரது வலதுகை அபயங்கொடுக்கிறது. இடது கையைக் கருடாழ்வான் தோளின் மேல் தாங்கியிருக்கிறார். மற்ற வலதுகை இடது கைகளில் சக்கரமும் சங்கும் ஏந்தியிருக்கிறார். 21. அரசனும் அரசியும்: நடுநாயகமாக அமைந்துள்ள கருடவாகனப் பெருமாளுக்கு வலதுபுறத்துக் கோட்டத்தில், ஒரு அரசனும் அரசியும் நிற்பது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இந்தச் சிற்பம் பல்லவ அரசனும் அவன் மனைவியாகிய அரசியும் என்று கருதப்படுகின்றது. இவர்களின் உருவ அமைப்பு காட்சிக்கு இன்பமளிக்கிறது. இதற்குப் பக்கத்துக் கோட்டத்தில் துவாரபாலகன் உருவம் அமைந்திருக்கிறது. அழித்த சிற்பம் கருடவாகனப் பெருமாளுக்கு இடது பக்கத்தில் உள்ள கோட்டத்திலும் ஆதிகாலத்தில் அரசன் அரசியின் உருவச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது இந்தக் கோட்டத்தில் சிற்ப உருவம் இல்லை. இருந்த சிற்ப உருவங்கள் முழுவதும் செதுக்கி அழிக்கப்பட்டடுள்ளன. இந்தக் கோட்டத்தின் அடிப்புறத்தில், கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளிவருவதற்காக ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கிறது. துளை அமைக்கப்பட்டதும் இந்தக் கோட்டத்துச் சிற்பங்கள் அழிக்கப்பட்டதும் பிற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகும். யாரால் எப்போது ஏன் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கு அடுத்த கோட்டத்தில் துவார பாலகரின் உருவச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. 22. இந்திரன்: இனி, இதை யடுத்துள்ள கிழக்குப் புறச் சுவருக்குப் போவோம். இந்தச் சுவரிலும் ஐந்து கோட்டம் வகுக்கப் பட்டு ஒவ்வொரு கோட்டத்திலும் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ள. இந்தச் சிற்பங்களில் நடுநாயகமாக இருப்பது யானைமேல் அமர்ந்துள்ள இந்திரன் உருவம். இந்திரன் தன் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானையின் மேல் அமர்ந்திருக்கிறான். சிற்பத்தில் யானையின் முன்பக்கம் மட்டும் தெரிகிறது. முன் கால்கள் இரண்டும் நீண்டு தொங்கும் தும்பிக்கையும் தலையும் முகமும் அகன்ற காது களும் தெரிகின்றன. யானை நிற்கும் இயற்கைத் தோற்றம் நமக்கு எதிரில் காணப்படுகிறது. யானையின் கழுத்தின் மேல், இந்திரன் தலையில் மகுடம் அணிந்து காதுகளில் குழை விளங்க அமர்ந்தி ருக்கிறான். 23. முனிவர் : இந்திரனுக்கு இடதுபுறக் கோட்டத்தில், தலையில் சடா முடியும் முகத்தில் தாடி மீசைகளும் உள்ள ஒரு முனிவர் நிற்பது போலச் சிற்பம் அமைந்திருக்கிறது. முனிவர் தனது வலது தோளின் மேல் எதையோ (வீணை?) வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த முனிவர் நாரதராக இருக்கக் கூடும். இவர் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார். 24. துவாரபாலகன் : இதற்கு அடுத்த கோட்டத்தில் துவார பாலகன் உருவம் காணப்படுகிறது. இவன் இடது கையைத் தொடை மேல் வைத்து வலது கைவிரலால் முனிவரையும் இந்திரனையும் சுட்டிக் காட்டுகிறான். 25. இராணிகள் : இந்திரனுக்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இரண்டு இராணிகளின் உருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதில், இராணி ஒருத்தி தலையில் மகுடம் தரித்து வலது காதில் பருத்த குழையையும் இடது காதில் கனமான குண்டலத்தையும் அணிந்திருக் கிறாள். கழுத்தில் அணிந்த மணிமாலைகள் மார்பில் தொங்குகின்றன. வலது கையை இடுப்பில் ஊன்றி இடது கையை மடக்கித் தோளின் மேல் வைத்து, இடது புறமாகச் சிறிது தலைசாய்த்து எழில்பெற நிற்கிறாள். இவள் இந்திரன் மனைவியான இந்திராணி போலும். இந்த அரசியின் பக்கத்தில் நின்று தனது இடது கையினால் இராணியின் வலது தோளைப் பிடித்துக் கொண்டு இன்னொருத்தி நிற்கிறாள். இவளும் தலையில் மகுடம் அணிந்து காதுகளில் பருத்த குழைகள் தொங்க எழிலுடன் நிற்கிறாள். இவள் அரசியின் தோழியோ? இதற்கு அடுத்த கோட்டத்தில் உள்ளது துவார பாலகன் உருவம். இடது கையினால் வாயில் நிலையைப் பிடித்துக் கொண்டு வலது கையை இடுப்பில் ஊன்றிக்கொண்டு நிற்கிறான். 26. இடபாரூடர் : இனி, தெற்குப்புறச் சுவருக்கு வருவோம். இங்குள்ள ஐந்து கோட்டங்களில் நடுவில் உள்ள கோட்டத்தில் இடபாரூட மூர்த்தம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், சிவபெருமான் எருதின் கழுத்தின் மேல் வலது கையை யூன்றி, முசுப்பின் மேல் சாய்ந்து நிற்கிறார். இடது கை அபயங்காட்டுகிறது. மற்ற இரண்டு கைகளில் ஏதோ (மான்மழு?) ஏந்தியிருக்கிறார். காலைக் கத்திரிபோலக் குறுக்காக வைத்து, சடாமகுடமணிந்த தலையைச் சற்றுச் சாய்த்து நிற்கும் இவர் அமைப்பு எழிலாக விளங்குகிறது. இவரைத் தாங்கி நிற்கும் காளை எருது இளமையுடையது என்பதை இதன் கொம்புகள் தெரிவிக்கின்றன. இதன் முன்கால்களும் கழுத்தும் முகமும் சிற்பத்தில் காணப்படுகின்றன. மற்றப் பகுதிகள் மறைந்துள்ளன. 27. அரசனும் அரசியும் : இடபாரூட மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் அரசனும் அரசியும் நின்றிருப்பதுபோன்ற சிற்பம் அமைந்திருக்கிறது. அரசன் தன் கையினால் இடபாரூட மூர்த்தியைச் சுட்டிக்காட்டுகிறான். இவர்களின் உருவ அமைப்பு கண்ணையும் மனத்தையும் கவரும் மாண்புடையது. மன்னர் குலத்துப் பெருமிதம் இவர்களின் முகத்தில் நன்கு புலப்படுகிறது. இவை பல்லவ அரசன் அரசியின் தோற்றத்தையுடையன. 28. துவாரபாலகர் : இதற்கு அடுத்த கோட்டத்தில் உள்ளது துவார பாலகரின் உருவம். இவன் வலது கையை இடுப்பில் ஊன்றி நின்று, இடது கை விரலினால் அரசன் அரசியரையும் இடபாரூட மூர்த்தியையும் சுட்டிக் காட்டுகிறான். 29. அரசன் அரசியர் : இடபாரூட மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் இன்னொரு அரசன் அரசியர் நிற்பதுபோன்ற சிற்பம் அமைந்திருக்கிறது. இவர்களின் உருவ அமைப்பும் எழில் பெற விளங்குகின்றன. அரச குலத்துக் கம்பீரமும் பெருமிதமும் இவர்கள் முகத்தில் மிளிர்கின்றன. இந்தச் சிற்பமும் பல்லவ அரசன் அரசியரின் தோற்றத்தைக் காட்டுகின்றன. இந்த அரசனும் தன் கையினால் சிவபெருமானைச் சுட்டிக் காட்டுகிறான். 30. துவாரபாலகன் : அடுத்த கோட்டத்தில் இருப்பது துவார பாலகன் உருவம். இவன் இடது கையை இடுப்பில் வைத்து நின்று வலது கையினால் அரசன் அரசியையும் சிவபெருமானையும் சுட்டிக் காட்டுகிறான். இவன் தோளின்மேல் சாமரையை வைத்திருக்கிறான். இந்தக் கருவறைக்கு மேலே மாடியில் இருக்கவேண்டிய திருவுண்ணாழிகை அறை, குடைந்து அமைக்கப்படவில்லை. ஆனால், அக் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் நன்கு அமைக்கப் பட்டு வாயில்கள் நான்கு பக்கங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாயிலின் இரண்டு பக்கத்திலும் அரசன் அரசியரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மராச இரதத்துச் சிற்பங்கள் இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். மேற்கு நோக்கியுள்ள இந்தக் கோயிலின் தரைப்பகுதியை முதலில் கவனிப்போம். திருவுண்ணாழிகை (கருவறை) அமைக்கப்படவில்லை. அர்த்த மண்டபம் அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ளது; கருவறையைச் சுற்றி வலம்வருவதற்கு அமைக்கப்படவேண்டிய இடைகழியும் அமைக்கப்படவில்லை. ஆனால், இடைகழியின் நான்கு பக்கங் களிலும் இருக்க வேண்டிய தூண்கள் - இவை சிங்கத் தூண்கள் - அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயிலின் அடிப்புறம் சரிவர அமைக்கப்படவில்லை ஆனால், இப்பகுதியின் நான்கு பக்கங்களின் கோடிகளிலும் கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு, அப் பஞ்சரங்களில் தெய்வ உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருபக்கத்தின் இருகோடியிலும் இரண்டு சிற்பம் வீதம் நான்குபக்கத்துக்கு எட்டுச் சிற்ப உருவங்கள் உள்ளன. அவற்றை விளக்குவோம். 31. சிவபெருமான் : மேற்குப்புறத்து இருகோடியிலும் உள்ள சிற்பங்களை :- தென்கோடியில் உள்ளது: சிவபெருமான் திருவுருவம்; நின்ற கோலம்; நான்கு கைகள்; வலது மேல் கை ஏதோ ஆயுதம் தாங்கியிருக்கிறது. மற்றொரு வலதுகை பாம்பைப் பிடித்திருக்கிறது. இடது மேல்கை ஏதோ ஆயுதம் தாங்கியிருக்கிறது. மற்றொரு இடதுகை இடுப்பில் தாங்கி யிருக்கிறது. வடகோடியில் உள்ள உருவம் : சிவபெருமான் உருவம்; நின்ற கோலம் : தலைமயிர் பின்புறம் தாழ்ந்து தொங்குகிறது. வலதுகை அபய முத்திரை, இடது கை இடுப்பில் ஊன்றியிருக்கிறது. மற்ற இரண்டு கைகளில் ஏதோ ஆயுதங்கள் இருக்கின்றன. 32. பிரமன் : வடக்குப் பக்கத்து இருகோடியில் உள்ள சிற்பங்கள்:- மேற்குக் கோடியில் உள்ளது : பிரமன் நின்றவண்ணம். எதிர்ப்புறத்திலும் இரண்டு பக்கங்களிலும் ஆக மூன்று முகங்கள். மற்றொரு முகம் பின்புறத்தில் இருப்பதாகக் கருதவேண்டும். வலதுகையில் அபய முத்திரை, இடதுகை இடுப்பில் தாங்குகிறது. மற்றொரு வலதுகையில் ஜெபமாலையும் இன்னொரு இடது கையில் கெண்டியும் உள்ளன. 33. சிவன் : கீழ்க்கோடியில் உள்ளது : சிவபெருமான் நின்ற கோலம். காதுகளில் உள்ள குண்டலங்கள் தோள்மேல் தொங்குகின்றன. வலது கை அபய முத்திரை, இடதுகை இடுப்பின்மேல். இன்னொரு வலது கையில் மழு, மற்றொரு இடது கையில் ஏதோ ஆயுதம் ஏந்தியிருக்கிறார். 34 அர்த்தநாரி : கிழக்குப் பக்கத்தில் இருகோடிகளில் உள்ளவை: வடகோடிச் சிற்பம்: - அர்த்தநாரீசுவரர் எனப்படும் மாதொருபாகர். நின்றகோலம். வலப்புறம் ஆண்வடிவமும் இடப்புறம் பெண் வடிவமும் உள்ள ஒரே உருவம்; இடது புறத்து மார்பில் ஒற்றைக் கொங்கையுள்ளது. வலது புறக்கைகள் இரண்டில் ஒன்று அபய முத்திரையும் மற்றொன்றில் மழு (கோடரி)வும் அமைந்துள்ளன. இடது புறக்கைகள் இரண்டில் ஒருகை எழில் பெறத் தொங்குகிறது. மற்றொரு கையில் பூச்செண்டு (கண்ணாடி?) ஏந்தியிருக்கிறது. வலது காதில் குண்டலமும், இடது காதில் குழையும் விளங்குகின்றன. வலது புறத்து இடுப்பின்கீழ் பாம்பு ஒன்று படமெடுத்தாடுகிறது. 35. சிவன் : தென்கோடிச் சிற்பம் சிவபெருமான், நின்றகோலம். தலைப்பாகை போன்ற தலையணி. வலதுகை அபய முத்திரை, இடதுகை இடுப்பில் தாங்கியுள்ளது. மற்ற இரண்டு வலது இடது கைகள் ஏதோ ஆயுதங்களைத் தாங்கியிருக்கின்றன. 36. சிவபெருமான் : தெற்குப் பக்கத்து இருகோடிகளிலும் உள்ளவை : - சிழக்குக் கோடி: சிவபெருமான. நின்ற கோலம். வலதுகை அபய முத்திரை; இடதுகை இடுப்பில் ஊன்றியுள்ளது. மற்றொரு வலது கையில் மழுவும் இடதுகையில் மானும் (?) இருக்கின்றன. காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தோள்களின் மேல் தாழ்ந்துள்ளன. 37. நரசிம்மவர்மன் : மேற்குக்கோடி : அரசன் உருவம்; நின்ற கோலம். மாமல்லன் நரசிம்மவர்மனுடைய உருவம் என்று கருதப்படுகிறது. கழுத்தில் மணிமாலைகள். தலையில் உயர்ந்து நீண்ட கிரீடம். இரண்டு கைகள். வலது கையைத் தொங்கவிட்டு இடதுகையை இடுப்பில் வைத்திருக்கிறது. இந்த உருவத்தைப் பற்றி 10-ஆம் பக்கத்தில் கூறியுள்ளேன். இரண்டாவது நிலை இனி, இந்த மாடக்கோயிலின் இரண்டாவது நிலைக்குச் செல்வோம். மேலே ஏறிச் செல்லப் படிகள் இல்லை. ஆனால், ஆர்க்கியாலஜி இலாகா மரப்படிகளை அமைத்திருக்கிறது. இப்படிகளை ஏறி இரண்டாவது மாடியை யடைவோம். முதலில் திருவுண்ணாழிகையாகிய கருவறைக்குச் செல்வோம். கருவறை இரண்டாவது மாடியில் மேற்குப்பார்த்த திருவுண்ணாழிகை (கருவறை) சிறியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் சிவலிங்கம் இல்லை. கருவறைச் சுவரில் சோமஸ்கந்த மூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறைக்கு வெளியே துவார பாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடதுபுறத்து உருவம் சரியாக அமையவில்லை. வலதுபுறத்து உருவம் நன்கு அமைந்திருக்கிறது. கருவறைக்கு வெளியே சிறிய அர்த்த மண்டபம் இருக்கிறது. இந்தக் கருவறையை வலமாகச் சுற்றி வருவதற்கு, ஒருவர்மட்டும் போகக்கூடிய குறுகிய இடம் இருக்கிறது. திருவுண்ணாழிகையைச் சுற்றிலும் வெளிப்பக்கத்தில் பல சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைச் சுற்றி வலம்வருவோர், மிகக் குறுகிய வழியாக வரவேண்டியிருப்பதால், இங்குள்ள சிற்ப உருவங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பது இல்லை. பார்ப்பார்களானால், பல தெய்வ உருவங்களின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்வார்கள். இங்குள்ள சிற்ப உருவங்களை விளக்கிக் கூறுவோம். கருவறையைச் சுற்றி வலமாக வரும்போது முதலில் வடக்குப் பக்கச்சுவரில் உள்ள சிற்ப உருவங்களைக் காண்கிறோம். இந்தச் சுவரை ஏழு கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உருவம் புடைப்புச் சிற்பமாக9 அமைக்கப்ட்டிருக்கிறது. 38. கங்காதர மூர்த்தி : இந்தச் சிற்பங்களில் நடுநாயகமாக இருப்பது கங்காரமூர்த்தி. இதில் சிவபெருமான் நின்றவண்ணம் காட்சியளிக்கிறார். அவருடைய வலது கையில் ஏதோ ஆயுதந் தாங்கியிருக்கிறார். இடதுகையில், தமது சடா மகுடத்திலிருந்து ஒரு புரிசடையை எடுத்துப் பிடித்திருக்கிறார். அந்தச் சடையிலே வானத்தி லிருந்து ஆகாயகங்கை வந்து தங்குகிறது. கங்கையின் உருவம் பெண்ணின் உருவம்போலச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கங்கா தர மூர்த்தியின் உருவம் வராகப் பெருமாள் குகைக்கோயிலிலும் இருக்கிறது. 39. கருடவாகனப் பெருமாள் : கங்காதர மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் இருப்பது கருடவாகனப்பெருமாள். இது “அர்ச்சுனன் இரதம்” என்னும் கோயிலின் வடபுறச் சுவரில் காணப்படுகிறதுபோன்ற உருவம். திருமால் நின்றவண்ணம் வலதுகையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு வலது கையை அபயங்காட்டி, இன்னொரு இடதுகையைப் பக்கத்தில் தாழ்ந்து குனிந்து நிற்கும் கருடனுடைய தோளின் மேல் வைத்திருக்கிறார். கருடனுக்கு இறக்கையில்லை. கருடப்பறவையின் அலகுபோன்ற மூக்கும் இல்லை. முழு மனித உருவத்தோடு திருமாலின் பக்கத்தில் பயபக்தியோடு தாழ்ந்து குனிந்து மண்டியிட்டு நின்று, இடதுகால் தொடையின்மேல் இடதுகையை யூன்றி நிற்கிறான். 40. காலசம்மார மூர்த்தி : இதற்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது காலசம்மார மூர்த்தி. சிவபெருமானுடைய காலடியில் காலன் (எமன்) விழுந்து செயலற்றுக்கிடக்கிறான். சிவபெருமான் சடாமுடியில் மண்டையோட்டை அணிந்து, காலைத்தூக்கி நடனம் ஆடுகிறார். அவருடைய வலதுகை, விரல்களை விரித்து வியப்புக்குறி காட்டுகிறது. இடதுகை விரல்களை நீட்டிக் காலனைச் சுட்டிக் காட்டுகிறது. மற்ற இரண்டு இடது வலது கைகளில் ஏதோ ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். 41. இடபாரூடர் : இதற்கு வலது பக்கத்தில் கடைசி கோட்டத்தில் உள்ளது இடபாரூடமூர்த்தி என்னும் ஏறு கந்த பெருமான். தலைதாழ்த்தி இயற்கை யழகுடன் நிற்கிற எருதின் பக்கத்தில் சிவபெருமான் சாய்ந்து நிற்கிறார். வலது கையை எருதின் முசுப்பின்மேலும் இடதுகையை அதன் முதுகின்மேலும் வைத்துச் சாய்ந்து நிற்கும் எழில் அழகுடையது. அவருடைய மற்ற இரண்டு வலது இடதுகைகளில் கோடரியையும் மானையும் ஏந்தியிருக்கிறார். அவருடைய புரிசடை, தலைப்பாகை யைப் போலச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. வலது காதில் ஒன்றும் இல்லை. இடது காதில் குழை இருக்கிறது. இது, “அர்ச்சுனன் இரதம்” என்னும் கோயிலின் தென்புறச் சுவரில் காணப்படுகிற இடபாரூட மூர்த்தியின் உருவம் போன்றது. 42. பார்வதி பரமசிவன் : மத்திய கோட்டமாகிய கங்காதர மூர்த்திக் கோட்டத்தின் இடது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது சிவன் பார்வதி திருவுருவங்கள். 43. பார்வதி நடனம் : இதற்கு இடது புறத்துக் கோட்டத்தில் இருப்பது சிவன் பார்வதி திருவுருவங்கள். பார்வதி இடது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். சிவபெருமான், புரிசடையைத் தலைப்பாகை போன்று சுற்றிக் கட்டியிருக்கிறார். நான்கு கைகள். இரண்டு கைகளில் கோடரியையும் திரிசூலத்தையும் ஏந்தி நிற்கிறார். 44. வீணாதர மூர்த்தி : இதற்கு இடது புறத்தில் கடைசி கோட்டத்தில் வீணாதர மூர்த்தி உருவம் இருக்கிறது. நின்ற வண்ணம் இருக்கிற சிவபெருமான், தண்டு என்னும் வீணையை வலது கையினாலும் இடது கையினாலும் இடது மார்பின் மேல் சாய்த்துப் பிடித்து வீணை வாசிக்கிறார். வீணையின் இசையில் ஈடுபட்டுச் செவிசாய்திதிருக்கிறார். இசையின்பத்தை வியப்பதுபோல, மற்றொரு வலது கையைத் தூக்கி விரல்களை விரித்து வியப்புக் குறியைக் காட்டுகிறார். இன்னொரு இடது கைவிரல்கள் தாளம் அமைப்பது போலக் காணப்படுகின்றன. சிவபெருமான் வீணை வாசித்துக்கொண்டு அந்த வீணை இன்பத்தில் முழுவதும் ஈடுபட்டிருக்கிற காட்சி இது. 45. முனிவர், அடியார் : இனி கிழக்குப்புறச் சுவருக்குச் செல்வோம். கிழக்குச் சுவரின் மத்திய பகுதியில் மூன்றாம் மாடிக்குப் போகப் படிகள் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தச் சுவரில் நான்கு சிற்ப உருவங்கள் மட்டும் உள்ளன. படிகளுக்கு வடக்குப் புறத்தில் உள்ளவை இரண்டு சிற்பங்கள். இவற்றில் ஒன்று துறவியின் உருவம். இந்த உருவம் ஆடை அணிகள் இல்லாமல் கோமணத்தோடு இருக்கிறது. தலைமயிர் பின்புறமாக அடர்த்தியாகத் தொங்குகிறது. இதற்கு அடுத்த சிற்பம், ஒர் ஆள் பூக்கூடையைத் தோளின்மேல் வைத்துக்கொண்டு வளைந்த கோல் ஒன்றை இடது கையில் தாங்கித் தோளின்மேல் வைத்திருப்பது போன்ற உருவம். படிகளுக்குத் தெற்குப் பக்கத்திலும் இரண்டு சிற்ப உருவங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்று மீசை தாடிகளுடைய ஒரு முனிவர் உருவம். இதற்கு அடுத்தது இன்னொரு ஆள் உருவம். கருவறையின் தெற்குப் பக்கத்துச் சுவருக்கு வருவோம். 46. திருமால் : இச் சுவரின் மத்தியில் உள்ள கோட்டத்தில் நடுநாயகமாக இருக்கிற சிற்பம் திருமால் திருவுருவம். நீண்ட மகுடம் தரித்த திருமால், நின்ற கோலமாகக் காட்சியளிக்கிறார். வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் ஏந்தி, மற்றொரு வலது கையில் அபயமுத்திரை அறித்து இன்னொரு இடது கையை இடுப்பில் ஊன்றி இருக்கிறார். 47. சிவன் : இதற்கு இடது பக்கத்துக் கோட்டத்தில் சிவபெரு மான் திருவுருவம் காணப்படுகிறது. நான்கு கைகள். ஒர் இடது கையை இடது பக்கத்தில் நிற்கும் குள்ளமான பூதகணத்தின் மேல் தாங்கி நிற்கிறார். 48. காலசம்மார மூர்த்தி : இதற்கு இடது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது கால சம்மார மூர்த்தி. காலன் (எமன்), சிவபெருமான் காலடியில் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறான். சிவபெருமான், வலது கையில் கோடரியையும் இடது கையில் பாம்பையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு இடது கையில் சூலத்தைத் தலைகீழாகப் பிடித்திருக்கிறார். இன்னொரு வலதுகை உடையுண்டிருக்கிறது. 49. சிவன் : இதற்கு இடது பக்கத்தில் கடைசிக் கோட்டத்தில் இருப்பது சிவபெருமான் திருவுருவம். நின்ற நிலை. வலது கையில் செபமாலையும் இடது கையில் சாமரையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு வலது கை உபதேச முத்திரை காட்டுகிறது. இன்னொரு இடது கையைத் தொங்கவிட்டிருக்கிறார். 50. கருடவாகனன் : மத்திய கோட்டத்தில் உள்ள திருமால் உருவத்திற்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது கருடவாகன மூர்த்தி. முன்பு கூறிய வடக்குச் சுவரில் உள்ள கருடவாகன மூர்த்தி உருவம் போன்றது. 51. காளிங்கமர்த்தனன் : இதற்கு வலது பக்கத்தில் இருப்பது கண்ணன் காளிங்கமர்த்தனக் காட்சி. காளிங்கன் உருவம் இதில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேல் பகுதி மனித உருவமும் வயிற்றுக்குக் கீழ்ப்பகுதி பாம்பின் உடலும் அமைந்து காளிங்கன் காணப்படுகிறான். காளிங்கன் தலைக்குமேல் மூன்றுதலை நாகம் படம் எடுத்து நிற்கிறது. வருத்தத்தைக் காட்டும் முகத்துடன் தரையில் கைகளையூன்றிக் காளிங்கன் களைப்புடன் காணப்படுகிறான். கண்ணன் அவன்மேல் ஒரு காலை யூன்றி நின்று, இரண்டு கைகளினாலும் அவனது நீண்டு பருத்த பாம்புடலைத் தூக்கிப் பிடித்திருக்கிறார். இவ்வளவு அழகான காளிங்கமர்த்தனச் சிற்பத்தை வேறு எங்கும் காணமுடியாது. 52. சிவன் : இதற்கு வலது பக்கத்தில் உள்ள கடைசி கோட்டத்தில் உள்ளது. சிவபெருமான் உருவம். வலது கையில் கோடரியும் இடது கையில் சூலமும் ஏந்தி மற்றொரு வலது கையை அபயம் காட்டி இன்னொரு இடது கையில் பாம்பைப் பிடித்திருக்கிறார். சடையில் மண்டையோடும் நிலாப்பிறையும் அணிந்திருக்கிறார். 53. சோமஸ்கந்தர் : இனி மூன்றாவது மாடிக்குச் செல்வோம். இங்கும், மேற்கு நோக்கிய சிறிய திருவுண்ணாழிகை இருக்கிறது. திருவுண்ணாழிகையில் முன்பு இருந்த சிவலிங்கத் திருவுருவம் இப்போது இல்லை. ஆனால், சுவரில் சோமஸ்கந்த உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிவபெருமான், கட்டில் போன்ற ஆசனத்தில் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். திருமுடியில் பிறைச் சந்திரனை அணிந்திருக்கிறார். நான்கு திருக்கைகள் உள்ளன. இவருக்கு இடது பக்கத்தில் பார்வதியும் சுகாசன மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார். பார்வதிக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. இருவருக்கும் இடையில் கந்தப் பெருமான் குழந்தை உருவமாகக் காணப்படுகிறார். இவர்களுக்குப் பின்புறம் பூதகணங்கள் சாமரை வீசுகின்றன. இந்தச் சோமஸ்கந்த உருவத்திற்கு வலதுபுறத்திலும் இடது புறத்திலும் நான்முகன் திருமால் திருவுருவங்கள் நிற்பதுபோல் அமைந்திருக்கின்றன. கருவறைக்கு வெளியே நான்கு துவாரபாலகர் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளன. இவை இரண்டு கைகளை யுடையவை. இவற்றில் ஒன்று அரசன் உருவம்போலக் காணப் படுகிறது. 54. சூரியன் : இந்தக் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்துக்கு ஐந்தாகப் பதினைந்து உருவங்கள் உள்ளன. வடபுறச் சுவரில் நடுநாயகமாக அமைந்திருப்பது சூரிய மூர்த்தியின் உருவம். நான்கு கைகளுடன் சூரியமூர்த்தி நின்ற வண்ணம் காட்சியளிக்கிறார். தலையைச்சுற்றி வட்டமான ஒளிப்பிழம்பு காணப்படுகிறது. காதுகளில் அணிந்துள்ள தோடுகள் தோள்களின்மேல் தொங்குகின்றன. இனிய முகத்துடன் கையில் பூ பிடித்து நிற்கிறார். சூரியனுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் நான்கு உருவங்கள், துவாரபாலகர் முனிவர் உருவம் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன. 55. சந்திரன் : கருவறையின் தெற்குப் பக்கத்துச் சுவரிலும் ஐந்து உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. இதில் நடுநாயகமாக நிற்பது சந்திரன் திருவுருவம். தலையின் இடது பக்கத்தில் அரைவட்டம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் காதுகளில் குண்டலம் அணிந்து இருக்கிறார். சந்திரனுக்கு இடது புறத்தில் இரண்டும் வலது புறத்தில் இரண்டும் ஆக நான்கு துவாரபாலகர் முனிவர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின்புறச் சுவராகிய கிழக்குப் பக்கத்துச் சுவரில் துவார பாலகர் தெய்வங்களின் உருவங்கள். ஐந்து புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. வராகப்பெருமாள் குகைக்கோயில் சிற்பங்கள் இக் குகைக்கோயிலில் இரண்டு அரசரின் சிற்ப உருவங்கள் இருக்கின்றன. இக் கோயிலின் வலது பக்கத்துச் சுவரிலும் இடது பக்கத்துச் சுவரிலும் எதிரெதிராக இந்தச் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேற் புறத்தில் இந்த அரசர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. 56. நரசிம்மவர்மன் : முதலாவது சிற்பம், வடபுறச்சுவரில் தெற்கு நோக்கி யிருப்பது. ஓர் அரசன் வட்டமான முக்காலிபோன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான். இடது காலை மடக்கி ஆசனத்தின் மேல் வைத்து, வலது காலைக் கீழே தொங்கவிட்டுச் சுகாசனமாக அமர்ந்திருக்கிறான். தலையில், நீண்ட குல்லாய்போன்ற மகுடம் அணிந்திருக்கிறான். காதுகளில் குண்டலங்களும் கழுத்தில் மணி மாலையும் அணிந்திருக்கிறான். அறையில்மட்டும் வேட்டியணிந்து வெற்றுடம்போடு இருக்கிறான். இடதுகையை இடது தொடை மேல் வைத்து, வலதுகையில் ஏதோ (பூ) பிடித்திருப்பதுபோலக் காணப் படுகிறான். இவனுக்கு வலது இடது புறங்களில் இவனுடைய மனைவியரான இராணிகள் நிற்கிறார்கள். காதுகளில் மிகப்பெரிய பொற்குழைகளையும் தலையில் மகுடமும் அணிந்திருக்கிறார்கள். இந்த உருவத்துக்கு மேற்புறத்தில், பல்லவர்காலத்து எழுத்தினால் ஸ்ரீ சிம்ம விண்ண போத்ராதிராஜன் என்று கல்லில் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஸ்ரீ சிம்மவிஷ்ணு போத்ராதிராஜன் என்னும் அரசன் இவன் என்பதை இந்த எழுத்துக்களினால் அறியலாம். போத்ராதி ராஜன் என்றால் போத்தராசன் என்பது பொருள். பல்லவர்களுக்குப் போத்தராசன், போத்தரசன் என்னும் பொதுப் பெயர் உண்டு. 57. மகேந்திரவர்மன் : இதற்கு எதிர்ப்புறத்தில் வடக்கு நோக்கியிருக்கும் சிற்ப உருவத்தில், ஒர் அரசன் தன்னுடைய இரண்டு மனைவியரான இராணிகளுடன் நின்றுகொண்டிருக்கிறான். பக்கத்தில் நிற்கும் அரசியின் வலதுகையைத் தன்னுடைய இடது கையினால் பிடித்துக் கொண்டு, தனது வலது கைவிரலினால் (வராகப் பெருமாளைச்) சுட்டிக்காட்டுகிறான் இவன், தலையில் குல்லாய் போன்ற நீண்ட மகுடம் அணிந்திருக்கிறான். காதுகளில் அணிந்துள்ள பொற்குண்டலங்கள் தோள்களின் மேல் தொங்க, கழுத்தில் மணிமாலை தரித்திருக்கிறான். அறையில் மட்டும் வேட்டியுடுத்து வெற்றுடம்பாக இருக்கிறான். இவனுக்கு இடது பக்கத்தில் நிற்கிற இரண்டு இராணிகளும் தலையில் மகுடம் அணிந்து இருக்கிறார்கள். ஒர் இராணிக்கு வலதுகாதில் கனமான குண்டலமும் இடதுகாதில் மிகப் பெரிய பொன் ஒலையும் காணப்படுகின்றன. மற்றோர் இராணியின் வலக்காதில் மிகப் பெரிய பொன் ஒலையும் இடதுகாதில் கனமான குண்டலமும் காணப்படுகின்றன. இந்தச் சிற்ப உருவத்துக்குமேலே பல்லவர் காலத்து எழுத்தினால் ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதிராஜன் என்று கல்லில் எழுதப் பட்டிருக்கிறது. அஃதாவது இந்த உருவம் மகேந்திர வர்மனுடைய உருவம் என்று எழுதப் பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சிற்ப உருவங்கள் முறையே சிம்ம விஷ்ணுவையும் அவன் மகன் (முதலாம்) மகேந்திரவர்மனையும் குறிக்கின்றன என்பது தெரிகிறது. சில அபிப்பிராயங்கள் ஆனால், அரசாங்கத்துச் சாசன இலாகாவில் இருந்த காலஞ் சென்ற ராவ்பகதூர் H.கிருஷ்ண சாஸ்திரி என்பவர் இச்சிற்பங்களைப் பற்றி வேறு விதமாகக் கூறிச்சென்றார். உட்கார்ந்திருக்கும் அரசன் நரசிம்மவர்மன் I (வாதாபி கொண்டவன்) என்றும், எதிரில் நிற்கும் அரசன், அவனுடைய தகப்பனான மகேந்திரவர்மன் I என்றும் எழுதினார். இதற்குக் காரணம் இந்த எழுத்துக்கள் நரசிம்மவர்மன் I மகனான பரமேசுவரவர்மன் I காலத்து எழுத்துக்களைப் போல இருக்கின்றனவாம். ஆகையால், பரமேசுவரவர்மன் தன் தகப்பனான நரசிம்மவர்மனையும் தன் பாட்டனான மகேந்திரவர்மனையும் சிற்ப உருவமாக அமைத்தானாம். இதில் இவர் பெரியதவறு செய்கிறார். சிற்பத்தின் மேற்புறம் எழுதப்பட்டிருப்பது ஸ்ரீ சிம்மவிண்ணபோத்ராதிராசன் என்பது. சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனை இது குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், கிருஷ்ண சாஸ்திரி, சிம்மவிஷ்ணு என்னும் பெயரை நரசிம்மவிஷ்ணு என்று மாற்றுகிறார். மாமல்லனாகிய முதலாம் நரசிம்ம வர்மனுக்கும், ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்ம வர்மனுக்கும் நரசிம்மவிஷ்ணு என்னும் பெயர்கள் உண்டாம். நரசிம்மவிஷ்ணு என்னும் பெயர் சுருக்கமாக சிம்மவிஷ்ணு என்றும் கூறப்படுமாம். ஆகவே இந்தச் சிற்பத்தின் மேற் புறத்தில் எழுதப் பட்டுள்ள சிம்மவிஷ்ணு என்பது நரசிம்ம விஷ்ணு என்பவனை, அஃதாவது வாதாபிகொண்ட நரசிம்ம வர்மனைக் குறிக்கிறது. என்று எழுதுகிறார். இவர், சிம்ம விஷ்ணுவை நரசிம்ம விஷ்ணுவாக்குகிறார். பல்லவ சாசனங்களில் சிம்மவிஷ்ணுவை நரசிம்ம விஷ்ணு என்றும், நரசிம்மனை சிம்மவிஷ்ணு என்றும் கூறப்படவில்லை. இந்தச் சிற்பத்துக்கு எதிரில் நிற்பதுபோல அமைத்துள்ள சிற்பம், வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் தந்தை முதலாம் மகேந்திரவர்மன் உருவம் என்றும் கூறுகிறார்.10 வேறுசில ஆராய்ச்சிக்காரர்கள், உட்கார்ந்திருக்கும் சிற்பம் சிம்மவிஷ்ணு (வாதாபிகொண்ட நரசிம்மவர்மனுடையபாட்டன்) என்றும், நிற்கும் உருவம் சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் என்றும் சான்று காட்டி எழுதினார்கள். கிருஷ்ண சாஸ்திரி சொல்லுவதுபோல, உட்கார்ந்திருக்கும் உருவம் நரசிம்ம வர்மனும் நிற்கும் உருவம் அவன் தகப்பனான மகேந்திரவர்மனு மானால் மகனை உட்காரவைத்தும் தகப்பனை நிற்கவைத்தும் சிற்ப உருவங்களை அமைக்கமாட்டார்கள்; அது இந்திய நாட்டு வழக்கம் அல்ல; ஆகவே, சாஸ்திரி கூறுவதுபோல் உட்கார்ந்த உருவம் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் உருவம் அல்ல, அவன் பாட்டனான சிம்மவிஷ்ணுவின் உருவம். நின்றுகொண்டிருப்பது சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் உருவம் என்பதைச்சுட்டிக் காட்டினார்கள். இதற்குள் கிருஷ்ணசாஸ்திரி காலஞ்சென்று விட்டார். பிறகு, அரசாங்கத்துச் சாசன இலாகாவைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. ஆர். கிருஷ்ணமாசார்லு அவர்களும் வி. வெங்கடசுப்ப அய்யர் அவர்களும் சேர்ந்து வெளியிட்ட தென்னிந்திய சாசனங்கள் பன்னிரண்டாம் பகுதியில்11 இந்தச் சிற்பங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். இவர்கள், உட்கார்ந்திருக்கும் சிற்ப உருவம் நரசிம்மவிஷ்ணு (நரசிம்மவர்மன் I) என்றும், நிற்கும் உருவம் அவன்மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் (கிருஷ்ண சாஸ்திரி கூறுவதுபோல முதலாம் மகேந்திரவர்மன் அல்லன்) என்றும் எழுதியிருக்கிறார்கள். அஃதாவது, தகப்பனாகிய முதலாம் மகேந்திரவர்மனை நிற்பதுபோலவும், அவன் மகன் முதலாம் நரசிம்மவர்மனை உட்கார்ந்திருப்பது போலவும், சிற்பம் அமைத்திருக்கமாட்டார்கள் என்பதற்கு விடைகூறுவதுபோல இவர்கள், உட்கார்ந்திருப்பவன் வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் தான், ஆனால், நின்றுகொண்டிருப்பவன். அவன் தகப்பனான நரசிம்ம வர்மன் அல்லன் அவன் மகனான இரண்டாம் நரசிம்மவர்மன் என்று எழுதியிருக்கிறார்கள்.12 அன்றியும் நிற்பது போன்ற சிற்பத்தின் போட்டோ படத்தை இந்Eலில் அமைத்து அதன்கீழ் “இரண்டாம் மகேந்திரவர்மனும் அவனுடைய இராணி களும்” என்று எழுதி வைத்துவிட்டார்கள். முடிவு என்ன? வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு காலத்தை ஆராய்வது பல தவறுகளுக்கு இடமாகிறது. சாசனத்தில் சிம்மவிஷ்ணு என்றிருப்பதை இவர்கள் தங்கள் விருப்பம் போல நரசிம்மவிஷ்ணு என்று மாற்றுவது ஏன்? பிறகு நரசிம்மவிஷ்ணுவை நரசிம்மவர்மன் என்று மாற்றுவது ஏன்? இவர்களுக்கு முன்பு சிம்மவிஷ்ணு என்னும் அரசன் பல்லவ பரம்பரையில் இருந்ததை இவர்கள் ஏன் கருதவில்லை? இந்தக் குகைக்கோயிலில் உள்ள இந்த உருவங்களில் உட்கார்ந்திருப்பது சிம்மவிஷ்ணுவையும் நின்றிருப்பது அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் காட்டுகின்றன என்பதே அறிஞர்கள் கண்ட முடிபு மேலும், இந்தக் குகைக்கோயிலை அமைத்தவன் முதலாம் பரமேசுவரவர்மன் என்றும், இதற்குச் சான்று பிற்காலத்துச் சோழனாகிய இராஜேந்திரதேவன் காலத்துச் சாசனம் இந்தக் குகைக்கோயிலை பரமேசுவர மகாவராக விஷ்ணுக்கிருகம் என்று கூறுவதையும் காட்டு கிறார்கள். பரமேசுவர மகாவராகம் என்பதற்குப் பரமேசுவரனாகிய மகாவராகம் என்று பொருள் கொள்ள வேண்டும். பரமேசுவரவர்மனால் ஏற்படுத்தப்பட்டதா யிருந்தால் பரமேசுவர வர்ம மகாவராக விஷ்ணு கிருகம் என்று பெயர் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு பெயர் இல்லை. எனவே ஐயத்திற்கும் மறுப்புக்கும் இடமான சிலவற்றை ஆதாரமாகக் கொண்ட இவர்கள் இவ்வாறு எல்லாம் எழுதுவது குழப்பத்துக்குக் காரணமே தவிர தெளிவையும் உண்மையையும் தெரிவிப்பதாக இல்லை. இந்தக் கோயிலில் இருக்கிற ஏனைய சிற்ப உருவங்களைப் பற்றி (வராகப்பெருமாள், கொற்றவை, கஜலக்ஷ்மி, திருமால், நான்முகன், கங்காதரமூர்த்தி) முன்னமே கூறியுள்ளேன். அடிக்குறிப்புகள் 1. சிலம்பு -5ஆம் காதை 76-88 2. க. பரணி, 13 கோயில்: 15. 3. இயற்பா : 3 ஆந்திருவந்தாதி, 66. 4. பூதத்தாழ்வார் : 2. ஆந்திருவந்நாதி: 12. 5. திருமழிசை. நான்முகன் திருவந்தாதி: 54. 6. அப்பர் புள்ளிருக்கும்வேளூர்: 1. 7. அப்பர். திருச்சாய்க்காடு: 6. 8. அப்பர். திருமுண் டீச்சுரம்: 4. 9. Bas Relief. 10. P P 3 and 4. Two Statues of Pallava Kings and Five Pallava Inscriptions in a Rock-temple at Mahabalipuram. H. Krishna Sastri, M.A.S. No. 26. 11. S. I. I. Vol. XII, The Pallavas. 12. do. Introduction, Vol. III and Page 16. மகாபலிபுரத்து ஜைன சிற்பம் (1950) என்ற குறுநூல் முதற் பதிப்பின் முகவுரை நமது நாட்டிலே முற்காலத்திலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்று இருந்தது. ஜைன மதம் சிறப்புற்றிருந்த அந்தக் காலத்திலே, ஜைனர் கலைகளையும் காவியங்களையும் வளர்த்தார்கள். காவிய இலக்கியங்களை எழுதியதோடு அமையாமல் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் முதலிய கலைகளை வளம்பட வளர்த்தார்கள். பிற்காலத்திலே சமயப்பூசல்கள் கிளம்பி குழப்பங்கள் உண்டானபோது, ஜைன மதம், தான் இருந்த உயர் நிலையிலிருந்து பின்னடைந்து, காலஞ் செல்லச் செல்லக் குன்றிக் குறைந்துவிட்டது. ஜைனர்கள் வளர்த்த கலைகள் மறைக்கப்பட்டன. அல்லது மாற்றப் பட்டன. ஆனாலும் தமிழ் நாட்டிலே ஆங்காங்கே காணப்படுகிற சிற்பங்களும் ஓவியங்களும் குகைக் கோயில்களும் கற்கோயில்களும் பண்டைக் காலத்திலே ஜைனர் வளர்த்த கலைப்பண்புகளை இப்போதும் வெளிப்படுத்து கின்றன. ஆனால், அக்கலைப் பொருள்களின் காட்சியைக்கண்டு அக்கலையின்பங்களைத் துய்க்கிறவர் இக்காலத்தில் எத்தனைபேர் உளர்? அந்தோ! நமது நாடு - கலைகளை வளர்த்துக் கலையின் பத்தைத் துய்த்து வளர்த்த நமது நாடு, இப்போது கலைப்பெருமையை உணராமல் கலையின்பத்தை துய்க்காமல் காலங்கழிக்கிறது! இப்போது சிலகாலமாகக் கலை கலை என்னும் கூக்குரல் நாட்டிலும் ஏட்டிலும் கேட்கப்படுகிறது. எனினும் நமது பழங்கலையில், இன்னும் நமது மக்களுக்கு ஆர்வம் பிறக்கவில்லை. ஜைனர் அமைத்துக் கொடுத்த பல கலைச் செல்வங்களிலே ஒன்று, மகாபலிபுரத்திலே கற்பாறையில் அழகுறச் செதுக்கி யமைக்கப்பட்டுள்ள புடைப்புச்சிற்பம் (Bas Relief Sculpture) இச்சிறந்த சிற்பம் இப்போது, அர்ச்சுனன் தபசு என்று பாமர மக்களாலும், பகீரதன் தபசு என்று வேறு சிலராலும் பெயர் கூறப்படுகிறது. ஆனால், இக்கதைகளுக்கும் இச்சிற்பத்திற்கும் யாதொரு பொருத்தமும் காணப்படவில்லை. ஜைனரின் அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை இச்சிற்பத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஜைனக் கதை இப்போது மறக்கப்பட்டு, இச்சிற்பத்திற்குப் பொருத்த மற்ற வேறு கதைகள் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே, இச்சிற்பத்தின் உண்மைக் கருத்தை விளக்கி இச்சிறு நூலை எழுதினேன். இதை எழுதிச் சில ஆண்டுகளாயினும், இதனை அச்சிட்டு வெளிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு வேதாரணியம், திரு.A.J.அனந்தராஜய்யன் முதலியார் அவர்களைத் தோழர் திரு. T.S. ஸ்ரீபால் அவர்களுடன் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. அச்சமயம், இந்தச் சிற்பத்தைப் பற்றிய செய்தியை முதலியார் அவர்கள் அறிந்தார்கள். உடனே, தமது சொந்தச் செலவில் இந்நூலை அச்சிட்டு, வெளியிடுவதாகக் கூறி அவ்வாறே இதனை வெளியிட்டு தவினார்கள். முதலியார் அவர்கள் இதனை வெளியிட்டிராவிட்டால், இந்நூல் வெளிவராமலே மறைந்திருக்கும். இதன் பொருட்டு, கலை யார்வம் உள்ள இப்பெரியாரைப் பாராட்டுவதோடு, எனது வணக்கத் தையும் நன்றியையும் செலுத்துகிறேன். தமிழுலகம் இப்பெரியாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. மகாபலிபுரத்துச் சிற்பக்கலைபோன்று, வேறுபல சிற்பங்களும் ஒவியங்களும் நமதுநாட்டில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் கலைச் செல்வத்திற்கு அளவில்லை. அவற்றின் அருமை பெருமை வெளிப்படும் நாள் என்னாளோ? அக்கலைக் காட்சிகளைக் கண்டு நமது நாட்டு மக்கள் இன்புறும் நாள் எந்நாளோ? பழைய கலைச் செல்வங்களை அழியவிட்டுப் புதிய புதிய கலைச் செல்வங்களை உண்டாக்குவது அறிவுடைமையாகாது. பழைய கலைச் செல்வங்களைக் காப்பாற்ற வேண்டும், போற்ற வேண்டும், அதோடு புதிய புதிய நவீன கலைச் செல்வங்களையும் உண்டாக்க வேண்டும். பழைய கலைப் பொக்கிஷங்களை நாம் போற்றிப் பாதுகாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இனியேனும் போற்றிப் பாதுகாப்போமாக. மலரகம் மயிலாப்பூர், சீனி.வேங்கடசாமி, சென்னை. 10-6-1950 முதற் பதிப்பின் பதிப்புரை “வடமொழி தென்மொழி என்னும் இரண்டு மொழிகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச்சீராக்கி அமிழ்தினும் இனிய சுவையும், ஆழ்ந்த கருத்தும், தெளிவும், தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும் மேன்மையுடையதாக்கி அவைகளிற் பல காவியங்களையும் நீதி நூல்களையும் செய்து வைத்தவர்கள் ஜைன சமயப் பேரறிஞர்களேயாவர்” என, யசோதர காவியத்தை முதன் முதலில் பதிப்பித்த தில்லையம்பூதூர் உயர்திரு. வெங்கடராம அய்யங் கார் அவர்கள் அக்காவியத்தின் முகவுரையில் புகழ்ந்துள்ளார்கள். உண்மையில் ஜைனப் பேரறிஞர்கள் உலகம் உய்ய வேண்டி காலைப்பொழுதும் மாலைப் பொழுதும் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கொண்டு அறிவுக்கலைகளை, அன்பு நெறிகளை ஆர்வத்தோடு வளர்த்துள்ளனர். அதுமட்டுமன்று! அத்தகைய அறிவுக் கலைகளில் தோன்றும் கருத்துக்களையும் வரலாற்றுச் செய்திகளையும் கல்லிலேயும் செதுக்கி வைத்தனர். ஓவியங்களின் வாயிலாகவும் தீட்டி வைத்தனர். இவ்வுண்மைகளை இந்தியா முழுவதுங் காணப்படும் மலைகள், குகைகள், கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் முதலிய வற்றால் அறியலாம். அவற்றினுள் ஒன்றே நமது மாமல்லபுரத்துச் சிற்பக்கலை. இச்சிற்பங்களின் உண்மை வரலாறுகளை அறிந்தோ அறியா மலோ அச்சிற்பங்களை “அர்ச்சுனன் தவம்” என்றும் “பகீரதன் தவம்” என்றும் பலவாறாக எழுதி வெளியிட்டுள்ளனர். ஆனால் மாமல்லபுரச் சிற்பங்களை நேரே சென்று பார்த்தால் ஏதோ சமயவெறி இங்கு நடனம்புரிந்துள்ளதென்பதை ஆங்காங்குள்ள சிறு சிறு கோயில்களின் மத்தியில் உள்ள உருவங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ள வற்றினின்றும் தெளிவாகும். காய்தல் உவத்தலின்றி நடுநிலைமை யோடு ஆராயும் புலவர்களும், கல்வெட்டு நிபுணர்களும், புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் இந்த நாட்டிற்குத் தேவை தேவை யென்பதை அங்கே அழிக்கப் பட்டிருக்கும் சிற்பங்கள் அபயக்குரலால் அழைப்பன போன்று தோன்றுகின்றன! நமது தமிழகத்தில் ஆராய்ச்சியின் பெயரால் தமிழ்த் தொண்டின் பெயரால் எத்துணைக் கலைக்கொலைகள் நடந்து வருகின்றன வென்பதை எடுத்துக்கூறவும் வெட்கமாயிருக்கிறது. ஒரு சமயத்திற் குரிய நூல்களையும் வரலாற்றையும் திருத்தியும் கூட்டியும், குறைத்தும் மறைத்தும் எழுதி வெளியிடுவது சகஜமாகி விட்டது. இவைகளை யெல்லாம்விட பண்டைய நூலாசிரியர்களை மதமாற்றும் தொண்டுதான் தலைசிறந்து விளங்குகின்றது! அந்தோ! இதைவிட ஒரு நாட்டிற்கும், அந்நாட்டின் கலை களுக்கும், வரலாற்றுண்மைகளுக்கும் கேடு விளைவிக்க வேறு என்ன வேண்டும்? “சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்ற தேவர் திருவாய் மொழியைச் சிரமேற்றாங்கி “கிறிஸ்த வமும் தமிழும்” “பௌத்தமும் தமிழும்” என்ற இரு அரும் பெரும் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுப் பேரும் புகழும் பெற்ற உயர்திரு மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களே மாமல்லப்புரத்துச் சிற்பங்களை நடு நிலைமையோடு ஆராய்ந்து அவை ஜைன சார்புடையவை எனப் பல ஆதாராங்களுடன் இந்நூலில் எடுத்து விளக்கியுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியராகிய இளம்பூரணரை “புலவுத் துறந்த நோன்பியராதலாற் பொய் கூறார்” என நக்கீரர் போன்ற புலவர் பெருமக்கள் அவருரையைப் போற்றிப் புகழ்ந்து ஏற்றது போல அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இவ்வாராய்ச்சி உரையையும் சென்னை, ஆர்க்கியாலஜி கழகத்தில் நடந்த ஆராய்ச்சிக் கூட்டத்தில் அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டதால் இதன் உயர்வையும் உண்மையையும் கருதி யானும் ஆவலோடு அச்சிட்டு வழங்க முன் வந்தேன். அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் சிறந்த தமிழ்த்தொண்டை இத்தமிழகம் என்றும் மறவாதது போலவே ஜைன பெருமக்களும் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ் அறிஞர் எழுதியுள்ள “சமணமும் தமிழும்” என்ற அரிய ஆராய்ச்சி நூலினையும் விரைவில் அச்சிட்டு வெளியிட முயற்சிக் கின்றோம் என்பதையும், அப்பெரியாருக்கும் தமிழகத்திற்கும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.1 10-06-50 இங்ஙனம் வேதாரணியம். அ.ஜீ. அனந்தராஜய்யன் முதலியார் அடிக்குறிப்புகள் 1 ‘சமணமும் தமிழும்’ என்னும் நூல் அச்சாகிவிட்டது. இரண்டாம் பதிப்பின் முகவுரை மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்னும் நூலின் மறுபதிப்பு இப்போது வெளிவருகிறது. அதில் சிற்சில மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. அர்ச்சுனன் தபசு என்று இந்தச் சிற்பத்தைத் தவறாகச் சிலர் கூறுகிறார்கள். உண்மை அதுவன்று. பகீரதன், கங்கையைக் கொண்டுவந்த புராணக்கதையை இச்சிற்பம் கூறுகிறது. பகீரதன் கதை சைவசமயத்தவருக்கும் ஜைன சமயத்தவருக்கும் பொதுவாக ‘இந்து’ சமயத்தவருக்கும் உரியது. ஆனால், மகாபலிபுரத்துச் சிற்பம் ஜைன சமயத்துக்கு உரியது என்பதை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்நூலை அச்சிடுகிற தமிழ்நாடு ஜைன சங்கத்துக்கு எனது நன்றி. மயிலாப்பூர், சென்னை - 4 4-4-1974 மயிலை சீனி. வேங்கடசாமி இரண்டாம் பதிப்பின் பதிப்புரை தமிழ் இலக்கியத்தின் வளமைக்கும் தமிழர் பண்பாட்டின் மேன்மைக்கும் வித்திட்ட ஜைன சமயத்தினர் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் முதலிய கலைகளையும் வளம்பட வளர்த்தார்கள். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தங்களது பணியினைச் செயல் படுத்தியுள்ளனர். பின்னர் ஏற்பட்ட பூசல்கள் ஜைன சமயத்தினரின் தொண்டினை மறைக்கவும் மாற்றவும் வழி கோலின. ஜைன சமயத்தினர் சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளில் மேம்பட்டிருந்த தற்கான சான்றுகளாக இன்றும் பல இடங்கள் திகழ்கின்றன. இவைகளில் ஒன்று “மகாபலிபுரம்” ஆகும். இங்குக் காணப்படும் சிற்பங்களிலே சிறந்து விளங்குவது “அர்ச்சுனன் தபசு” எனக் குறிப்பிடப்படும் புடைப்புச் சிற்பமாகும். இச்சிற்பக் காட்சி இரண்டாம் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் புராணத்தில் கூறப்படுகிற சகர, சாகரர்களின் கதையினைத் தெரிவிக்கிறது. தமிழ்நாடு ஜைன சங்கத்தின் இரண்டாம் வெளியீடாக வெளிவரும் “மகாபலிபுரத்து ஜைன சிற்பம்” எனும் இந்நூலில், ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் நடுநிலை மையோடு ஆய்ந்தறிந்த உண்மைகளின் அடிப்படையில், இச்சிற்பம் ஜைனக் கதையினையே விளக்குகிறது என விவரிக்கிறார். இவர் 1947 ஆம் ஆண்டில் தென் இந்திய புதை பொருள் ஆராய்ச்சி சங்கத்தில் ராவ் சாகிப், பேராசிரியர் ஏ. சக்ரவர்த்திநயினார் அவர்கள் தலைமையில் இச்சிற்பக் காட்சியின் விளக்கம் பற்றிய கட்டுரையினைப் படித்துள்ளார். இதனைப் பலரும் ஏற்றுப் போற்றி இருக்கின்றனர். பின்னர் 1950ஆம் ஆண்டில் வேதாரணியம் திரு அ. ஜீ. அனந்தராஜய்யன் முதலியார் அவர்கள் இக்கட்டுரையினைப் படங்களுடன் தனி நூலாக தம் சொந்தச் செலவிலே வெளியீட்டு சிற்பக் காட்சியின் உண்மை விளக்கம் பரவ உதவினார்கள். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். இருபத்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று மகாபலிபுரம் பல்வேறு காரணங்களுக்காக அதிக முக்கியத்துவம் அடைந்துள்ளது. இந்நிலையில் புடைப்புச் சிற்பம் பற்றிய உண்மை விளக்கம் வெளிவருவது ஏற்புடையது என தமிழ்நாடு ஜைன சங்கம் விரும்பியது. இவ்விருப்பத்தினை ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் அன்புடன் மறுபதிப்பிற்கு இசைவு தந்தார்கள். எல்லாவித எதிர்ப்புகளுக்கிடையில் உண்மையினை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ள மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நடுநிலைமை பிறழா ஆய்வுத்திறனைப் போற்றி நன்றிகலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் நிதிநிலைமையினை விளக்கிய பொழுது மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தன்னலம் கருதாது எவ்வித ஊதியமும் பெறாமல் தமிழ்நாடு ஜைன சங்கத்திற்கு வெளியிடும் உரிமை யினைத் தந்துள்ளார்கள். மகாபலிபுரத்துச் சிற்பக் காட்சியின் உண்மை விளக்கம் வெளிவர வேண்டும் என்ற உயரிய நோக்கோடு விளங்கும் அவருக்கு ஜைன சமயத்தினர் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். இவர் “சமணமும் தமிழும்” எனும் நூலினையும் எழுதி ஜைன சமயத்தின் தொண்டினை விளக்கியுள்ளார்கள். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் தன்னலமற்ற பணிக்கு தமிழ்நாடு ஜைன சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த ஸ்ரீமதி அச்சகத் தினருக்கு எங்கள் நன்றி. தமிழகத்து ஜைனப் பெருமக்களும் ஆராய்ச்சித் துறையினரும் மற்றும் வரலாற்று அன்பர்களும் பிறரும் இந்நூலினைப் பெற்று கற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். சென்னை தமிழ்நாடு ஜைன சங்கம் 4-4-1974 சென்னை மகாபலிபுரத்து ஜைன சிற்பம் முன்னுரை மகாபலிபுரம் என்பது சென்னைப் பட்டினத்துக்குத் தெற்கே 30 மைலில், கடற்கரை ஓரத்தில் இருக்கிற சிறு கிராமம். இது செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே பதினெட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. இக் கிராமத்திற்குச் சென்னையிலிருந்தும், செங்கற்பட்டிலிருந்தும் பஸ் வண்டிகள் போகின்றன. மாவலிவரம் என்றும் மகாபலிபுரம் என்றும் இதற்கு இப்போது பெயர் வழங்கப்படுகிறது. இப் பெயரைக் கேட்டவுடனே மகாபலிச் சக்கரவர்த்தி கதை நினைவுக்கு வருகிறது. ஆனால், மகாபலிச் சக்கரவர்த்திக்கும் மகாபலிபுரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பல்லவ அரசர்களுக்கு இந்தப் பட்டினம் முற்காலத்திலே துறைமுகப் பட்டினமாக இருந்தது. பல்லவ அரசர்களில் ஒருவனான நரசிம்ம வர்மன் என்னும் அரசன், தன்னுடைய சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இந்த ஊருக்குச் சூட்டினான். ஆகவே இது மாமல்லபுரம் என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தப் பெயர் சிதைந்து மகாபலிபுரம் என்றும் மாவலிவரம் என்றும் வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, பல்லவ அரச காலத்தில் பெரிய துறைமுகப் பட்டினமாகச் சிறப்புடன் இருந்த இப் பட்டினம் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. சிறிய கிராமமாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் பேர் பெற்றிருக்கிறது. அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களிலிருந்தும், சீனா, பர்மா, ஜப்பான், இலங்கை, ஜாவா, சுமாத்ரா முதலிய நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வருகிற யாத்திரிகர்கள் மகாபலிபுரத்திற்கு வந்து இங்குள்ள குகைக் கோயில்களையும் கற்றேர்களையும், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் கண்ணாரக்கண்டு மனமார மகிழ்ந்து செல்கிறார்கள். இந்தியா தேசத்தில், சிற்பக்கலைப் பெருமையினால் சிறப்படைந்துள்ள பல இடங்களில் மகாபலிபுரமும் ஒன்று. சென்னை அரசாங்கத்தார் ஞாயிற்றுக்கிழமைதோறும் மகாபலிபுரத்திற்கென்று தனி பஸ் வண்டி விடுகிறார்கள் என்றால், இங்குள்ள சிற்பக் கலைகளின் சிறப்பையும் அழகையும் விளக்கிக் கூறவேண்டுமோ? இந்தச் சிறு நூலிலே, நாம் ஆராயப்புகுவது, மகாபலி புரத்திலே இருக்கிற அர்ச்சுனன் தபசு என்று பெயர் வழங்கப்படுகிற ஒரு சிற்பத்தைப் பற்றித் தான். இந்தச் சிற்பம் ஒரு கற்பாறைக் குன்றில் வெகு அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இக் கற்பாறைக் குன்றின் கிழக்குப் பக்கம், நெடுஞ்சுவர்போன்று செங்குத்தாக அமைந்திருக்கிறது. சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள இந்தச் செங்குத்தான பாறையிலே, கைதேர்ந்த சிற்பிகள் பல அழகான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பம், பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவர்ந்து மிகக் கம்பீரமாகவும் அழகாகவும் காணப் படுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டிலே, அதாவது இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே அமைக்கப்பட்ட இந்தச் சிற்பம், கடற் காற்றினாலும் மழை வெயிலினாலும் தாக்குண்டு சிறிது மழுங்கிவிட்ட போதிலும், இன்னும் இதன் அழகும் கம்பீரமும் குறையாமல் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. (படம் 1 காண்க) இந்தச் சிற்ப உருவம், அர்ச்சுனன் தபசு என்னும் கதையைக் குறிக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது மகாபாரதத்திலே வன பர்வத்தில் கூறப்படுகிறது, அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையைக் காட்டுகிறது இந்தச் சிற்பக் காட்சி என்று சொல்லுகிறார்கள். 1914-ஆம் ஆண்டில், பிரான்சு தேசத்து அறிஞரான M. Victor Goloubeaw என்பவர், இந்தச் சிற்பக்காட்சியை நேரில் வந்து பார்த்தபோது, இது அர்ச்சுனன் தபசு அல்ல என்றும், இராமாயணம் பாலகாண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை இது காட்டுகிறது என்றும் தமது கருத்தை வெளியிட்டார். அதன் பிறகு இவர் கூறிய கருத்துதான் உண்மை என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால், இந்தச் சிற்பக் காட்சியை நேரில்போய் ஊன்றிப் பார்த்துக் கூர்ந்து கவனித்தால், இது அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையும் அல்ல, பகீதரன் தபசு செய்து கங்கையைப் பூலோகத்துக்குக் கொண்டு வந்த கதையும் அல்ல என்று தெரிய வருகிறது. ஏனென்றால் இதில் காணப்படும் சிற்ப உருவங்களுக்கும் இக் கதைகளுக்கும் பொருத்தம் காணப்படவில்லை. இந்தச் சிற்பத்தில், ஒற்றைக் காலில் நின்று கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தித் தவம் செய்கிற உருவம் அர்ச்சுனன் என்றும், அதற்கு எதிரில் நான்கு கைகளுடன் நிற்கும் தெய்வம் சிவபெருமான் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் சொல்வதை ஒப்புக் கொண்டால், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற மற்ற உருவங்கள் எதைக் குறிக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாக குமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள், கங்கை ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள், மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன? மேலும், தபசு செய்கிற அர்ச்சுனனிடத்திற்குச் சிவபெருமான், வேடன் உருவங் கொண்டு போனார் என்றும் உமையம்மையார் வேடுவச்சி உருவம் எடுத்து உடன் சென்றார் என்றும் புராணம் கூறுகிறது. வேடன் வேடுவச்சி உருவங்கள் இதில் காணப்படவில்லை. ஆனால் கதைக்குத் தொடர்பு இல்லாத அநாவசியமான உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அன்றியும் இந்தியச் சிற்ப முறைப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைத் தலைவர்களான அர்ச்சுனைனையும் சிவபெருமானையும் பெரிய உருவமாக அமைத்து, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மற்ற உருவங்களைச் சிறிய உருவமாக அமைத்திருக்கவேண்டும். இந்தச் சிற்பத்தில் அப்படி அமைக்கப்படவில்லை. நாகர்கள், தெய்வ கணங்கள், யானை, கோயில் தலையற்ற உருவங்கள் முதலியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும் போது, இந்தச் சிற்பக்காட்சி, அர்ச்சுனன் தபசைக் குறிப்பதல்ல என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறது என்றும் கருத வேண்டியிருக்கிறது. இனி, மற்றொரு சாரார் கருதுகிறபடி இந்தச் சிற்பக் காட்சி பகீரதன் தபசைக் குறிக்கிறதா என்று பார்ப்போம். M. Victor Goloubeaw அவர்கள் கருதுகிறபடி, இச் சிற்பத்தின் நடுவில் காணப்படுகிற, கங்கை ஆறு இழிந்து ஒடுவது போன்ற காட்சி, முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கங்கையில் நாக அரசனும் அவன் மனைவியும் ஏன் காணப்படுகிறார்கள்? மேலும் அவர் கூறுவதுபோல, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிற உருவம் பகீரதனைக் குறிக்கிறது என்று ஒப்புக் கொள்வோமானால், அவனுக்கு எதிரில் நான்கு கைகளுடன் காணப்படுகிற உருவத்தைச் சிவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், இந்த உருவத்துக்குத் தலையில் கிரீட மகுடம் காணப்படுகிறது. சிவன் ஜடா மகுடம் உடையவர். அல்லாமலும் இவ்வுருவத்தின் கையில் கதாயுதம் போன்ற ஆயுதம் காணப்படுகிறது. சிவனுக்குச் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் உண்டேயன்றிக் கதாயுதம் கிடையாது. எனவே இந்த உருவம் சிவனைக் குறிப்பது அன்று. முக்கியமான இன்னொரு விஷயத்தை இங்குக் கவனிக்க வேண்டும். அதாவது பகீரதன் தபசு என்னும் கதையில், கங்கை ஆகாயத்திலிருந்து பூமியில் மிக வேகமாக இறங்கியபோது சிவபெருமான் அக் கங்கையைத் தமது ஜடையில் தாங்கிக் கொண்டார் என்பது. அந்தக்காட்சி, இந்தச் சிற்பத்தில் காணப்படவில்லை. இந்தச் சிற்பம் பகீரன் தபசு என்னும் காட்சியைக் குறிப்பதாக இருந்தால், கங்காதரமூர்த்தியின் உருவம் இதில் இடம் பெற வேண்டும் அல்லவா? கங்காதரமூர்த்தியின் அழகான சிற்ப உருவங்கள், பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை, இன்றும் பல இடங்களில் காணப்படுகின்றன. மகாபலிபுரத்திலே தருமராஜ ரதத்தின் மேல் நிலைச் சுவரிலே கங்காதரமூர்த்தியின் சிற்பம் அமைக்கபட்டிருக்கிறது. கங்காதரமூர்த்தியின் உருவம் இந்தச் சிற்பத்தில் ஏன் இடம் பெறவில்லை? கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், பூதர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம், கோயில் இவைகள் ஏன் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன? இவைகளை எல்லாம் யோசிக்கும்போது இந்தச் சிற்பக்காட்சி, சிலர் கருதுவதுபோல பகீரதன் தபசைக் குறிக்கவில்லை என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறதென்றும் தெரிகிறது. அப்படியானால் இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக் குறிக்கிறது? இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என் மனத்தில் குடிகொண்டி ருந்தது. நெடுநாட்களாகச் சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக, ஜைன நூல்களைப் படித்தபோது இக் கேள்விக்கு விடை கிடைத்தது! இந்தச் சிற்பம் ஒரு ஜைனக் கதையைக் குறிக்கிறது என்பதை அறிந்தேன். அந்த ஜைனக்கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் பலவகையில் நல்ல பொருத்தங்கள் இருப்பதைக் கண்டேன். மேலும் ஊன்றி நன்றாக ஆராய்ந்து பார்த்தபோது நிச்சயமாக இந்தச் சிற்பம் அந்த ஜைனக் கதையைத்தான் குறிக்கிறது என்னும் உண்மையைக் கண்டேன். என் கருத்தை, தென் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological Society) (1947-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி) பேராசிரியர் இராவ்சாகிப் A. சக்கரவர்த்தி நயினார் M.A. அவர்கள் தலைமையில் சுருக்கமாகப் படித்தேன். அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதை இந்தச் சிற்பக் காட்சியில் அமைந்திருக்கிறது என்று விளக்கினேன். இந்தச் சகர சக்கரவர்த்திக் கதை இராமாயணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதையல்ல. ஜைன புராணங்களில் கூறப்படுகிற ஒரு ஜைனக் கதையாகும். இந்தக் கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் பொருத்தங் காட்டுவதற்கு முன்பு, இந்தக் கதையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழில் ஸ்ரீ புராணத்திலும், ஜீவசம்போதனை என்னும் நூலிலும் சுருக்கமாகக் காணப்படுகிறது. இந்தியில் உள்ள திரிஸஷ்டி ஸலாகா புருஷ சரித்திரம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த இந்தி நூலை Helen M. Johnson அம்மையார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். Gaekwad’s Oriental Series ஆக இது அச்சிடப்பட்டிருக்கிறது. அக்கதையைச் சுருக்கமாகக் கூறுகிறேன். சகர, சாகரர் கதை ஜீத-சத்துரு என்னும் அரசன் பரத கண்டத்தை அரசாண்ட காலத்தில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு அஜிதன் என்றும் இளைய குழந்தைக்குச் சகரன் என்றும் அரசன் பெயரிட்டு வளர்த்தான். மூத்த குழந்தை வளர்ந்து வயதடைந்த பிறகு அஜிதநாதர் என்னும் தீர்த்தங்கரராக விளங்கி உலகத்திலே ஜைன மதத்தைப் பரவச்செய்து இறுதியில் வீடுபேறடைந்தார். இளைய பிள்ளையாகிய சகரன், பெரியவனாக வளர்ந்தது, தனது தந்தைக்குப் பிறகு அரசாட்சியை ஏற்றுப் பரத கண்டத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினார். இந்தச் சகரசக்கரவர்த்தி அரசாட்சி செய்துவருங் காலத்தில், ஒரு சமயம் கண்டப் பிரபாத மலைக்குத் தன் மந்திரி முதலியவர்களுடன் சென்று நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து மூன்று நாள் நோன்பிருந்தார். இவர் நோன்பிருப் பதைத் தன்னுடைய சிம்மாசனம் துளங்கியதனால் அறிந்த நாட்டிய மாலகன் என்னும் தெய்வம் சகரசக்கரவர்த்தியின் முன்பு தோன்றி, எண்ணிறந்த செல்வங்களைக் கொடுத்து சக்கரவர்த்திக்கு வேண்டிய உதவிகளை எந்த நேரத்திலும் செய்யச் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தது. அந்த வரத்தை ஏற்றுக்கொண்ட சகரசக்கரவர்த்தி, தனது மந்திரிகளைக் கொண்டு அந்தத் தெய்வத்திற்குச் சிறப்பு செய்வித்து அனுப்பினார். பிறகு சக்கரவர்த்தி கங்கைக்கரையை யடைந்து, நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப் பெறுவதற்காக மூன்று நாள் கடுநோன்பிருந்தார். நோன்பின் முடிவில் நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அந்த ஒன்பது வகையான நிதிகளாவன : 1. நைசர்ப்பம் 2. பாண்டுகம் 3. பிங்கலம் 4. மகாபத்மம் 5. காலம் 6. மகாகாளம் 7. மானவம் 8. சங்கம் 9. சர்வரத்னம் என்பன. இந்த நவநிதிகள் ஒவ்வொன்றுக்கும் தலைமையாக ஒவ்வொரு தேவகுமாரனும், காவலாக ஆயிரம் ஆயிரம் பூதங்களும் இருந்தனர். ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும் அந்தந்த நிதியின் பெயரைக் கொண்டவர்கள். நவநிதியோடு தோன்றிய இவர்கள், சகரசக்கரவர்த்தியைப்பார்த்து, “உமது நல்வினையால், நாங்கள் உமது ஊழியர்களானோம். நவ நிதிகளாகிய எங்கள் துணையைக் கொண்டு உமது விருப்பப்படி எல்லா இன்பங்களையும் துய்ப்பீராக. பெரியதாகிய கடல் நீர் வரண்டாலும் வரண்டுவிடும். எங்கள் நிதிச்செல்வம் ஒருபோதும் குறையாது. சக்கரவர்த்தியாகிய தங்களது கட்டளைப்படி ஏவல் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று பணிந்து கூறின. இவ்வாறு பெறுதற்கரிய நவநிதிகளைச் சகரசக்கரவர்த்தி தமது புண்ணிய வசத்தினால் அடையப்பெற்றார். இந்த ஒன்பது வகையான செல்வங்களின் இயல்பாவன: நைசர்ப்பநிதி, வீடுகள் பாசறைகள் கிராமங்கள் அரண்பொருந்திய நகரங்கள் முதலியவற்றை அமைத்துக்கொடுக்கும். பாண்டுகம் என்னும் நிதி நெல், கோதுமை, பருப்புவகைகள் முதலிய தானியங் களையும் உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு உண்டாக்கிக் கொடுக்கும். பிங்கலநிதி, ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் யானை குதிரை முதலிய பரிவராங்களுக்கும் உரிய அணிகலன்களை அமைத்துக் கொடுக்கும். மகாபதுமம் என்னும் நிதி, வெண்மை கருமை செம்மை முதலிய பலவித நிறங்களையுடைய பட்டினாலும் பருத்தியினாலும் ஆன உடைகளைப் பலப்பல உருவத்தில் அமைத்துக் கொடுக்க வல்லது. காலம் என்னும் நிதியானது. இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்னும் முக்கால நிகழ்ச்சி களையும் அறிவிப்பதோடு, உழவு கைத்தொழில் முதலியவற்றின் பலாபலன்களையும் முன்னதாகவே தெரிவிக்க வல்லது. மகாகாளம் என்னும் நிதியானது முத்து. பவழம், பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோகச் செல்வங்களை வேண்டிய அளவு அளிக்க வல்லது. மானவம் என்னும் நிதியானது, போருக்குரிய சேனை களையும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படைகளையும் ஆயுத தளவாடங்களையும் குறைவற அளிக்கவல்லது. சங்கநிதி குழல், யாழ் முதலிய இசைகளையும் நாடகம், பாட்டு, சிற்பம் ஒவியம், காவியம் முதலிய கலையின்பங்களையும் அளிக்கவல்லது. சர்வ ரத்தின நிதியானது ஜீவரத்தினம் ஏழையும், அஜீவ ரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. (ஜீவரத்தினம் ஏழாவன: - கிரகபதி, சேனாதிபதி, விஸ்வகர்மன், புரோகிதன், குதிரை, யானை, ஸ்திரீ என்பன. அஜீவரத்தினம் ஏழாவன : - சக்கரம், குடை, வாள், தண்டம், சூடாமணி, தோல், காசிணி என்பன.) நவநிதிகளின் இயல்புகளையும் ஜீவ அஜீவரத்தினங்களின் இயல்பையும் ஜீவசம்போதனை என்னும் ஜைன நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு, நவநிதிகளையும் அடைந்து சக்கரவர்த்தியாகச் செங்கோல் நடத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்து வருகிற சகர சக்கரவாத்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளுக்கு சாகரர் என்பது பொதுப்பெயர். அதாவது சகரன் பிள்ளைகள் என்பது கருத்து. இவர்களில் மூத்த மகன் பெயர் ஜானு என்பது. தக்க வயதடைந்த பிறகு, சாகர குமாரர்கள் அறுபதினாயிரவரும், தேசத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினார்கள். விரும்பியபடியே அவர்கள் சக்கரவர்த்தியிடம் போய் உத்தரவு கேட்டார்கள். அவர்கள் விருப்பத்திற்கு இணங்கிய சக்கரவர்த்தி, ஸ்திரீ ரத்தினம் ஒன்று தவிர ஏனைய ஆறு ஜீவரத்தினங்களையும் ஏழு அஜீவரத்தினங்களையும் அவர்களுக்குத் துணையாகக்கொடுத்து விடை கொடுத்து அனுப்பி னார். பிறகு, சகர குமாரர்கள் புறப்பட்டுச்சென்று பலநாடு நகரங்களைச் சுற்றிப்பார்த்த பிறகு கடைசியாக அஷ்டாபதமலைக்கு வந்து சேர்ந்தார்கள். அஷ்டாபதமலை என்பது கயிலாயமலை. இதற்கு ஹரார்த்திரி என்னும் ஸ்படி காத்திரி என்றும் வேறு பெயர்கள் உண்டு. (இந்தக் கயிலாய மலையில், சகர குமாரர்களின் முன்னோரான ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்தார். ரிஷப தீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி, ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடமாகிய இந்தமலையிலே விலைமதிக்க முடியாத செல்வங்களைக்கொண்டு சிறந்ததோர் திருக்கோயில் அமைத்திருந்தார். இத்திருக்கோயிலுக்கு எதிரில், ரிஷப தீர்த்தங்கராரின் உபதேசங்களைச் செவிசாய்த்துக் கேட்பது போன்று தன்னுடைய (பரதச் சக்கரவர்த்தியுடைய) உருவத்தையும் அவர் அமைத்திருந்தார்.) கயிலாயமலைக்கு வந்த சகரகுமாரர்கள், பரத சக்கரவர்த்தி கட்டிய இக்கோயிலுக்குள் சென்று வணங்கினார்கள். பிறகு, மிக்க அழகுள்ளதும் விலை மதிக்கப்படாததுமான இப் பொற் கோயிலைப் பாதுகாக்காவிட்டால், வரப்போகிற துஷ்மயுகத்தில் மக்கள் இக்கோயிலி லுள்ள இரத்தினங்களையும் பொன்னையும் கொள்ளையடிப்பார்கள் என்று நினைத்து, அக் கோயிலுக்குப் பாதுகாப்பு அமைக்க முயன் றார்கள். கோயிலைச் சுற்றிலும் அகழிதோண்டி அதில் நீரை நிரப்பி விட்டால் ஒருவரும் கோயிலுக்குள் சென்று கொள்ளையிடமுடியாது என்று கருதினார்கள். கருதினபடியே, தம்மிடம் இருந்த அஜீவரத்தினங் களில் ஒன்றான, தண்ட ரத்தினத்தினால் கோயிலைச் சுற்றிலும் அகழி தோண்டினார்கள். ஆற்றல் மிக்க அந்த தண்ட ரத்தினம் ஆயிரம் யோசனை ஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. அதைக்கண்ட நாகர்கள் அஞ்சினார்கள். ஜுவலனப் பிரபன் என்னும் நாகராசன் அவ்வகழியின் வழியாகப் பூலோகத்துக்கு வந்து கடுங்கோபத்துடன் சகர குமாரர் களைப்பார்த்து, “பவன லோத்தை ஏன் அழிக்கிறீர்கள். அஜிதநாத சுவாமியின் தம்பியாகிய சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகளாகிய நீங்கள் இத்தகாத செயலை ஏன் செய்கிறீர்கள்?” என்று வினவினான். நாகராசன் கோபத்தோடு வினவியத்தைக் கேட்ட, சாகரில் மூத்தவனான ஜானு. “உமது நாகலோத்தை அழிக்க நாங்கள் நினைக்கவில்லை. ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைச் சூழ்ந்து அகழி தோண்டினோம். தண்டரத்தினத்தின் ஆற்றலினால், அகழி நாகலோகம் வரையில் ஆழமாக அகழப்பட்டது. இனி உங்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி பார்த்துக் கொள்கிறோம்” என்று விடையளித்தான். நாகராசன் கோபம் தணிந்து, ‘எங்களுக்குத் தொந்தரவு கொடுக் காதீர்கள்’ என்று கூறி, நாகலோகம் போயி விட்டான். பிறகு சகர குமாரர்கள், தம்மிடமிருந்த தண்ட ரத்தினத்தின் உதவியினால், கங்கையின் நீரைத் திருப்பிக் கொண்டு வந்து தாங்கள் தோண்டிய அகழியில் பாய்ச்சினார்கள். கடல் நீர் பெருக்கெடுத்தது போன்று கங்கைநீர் புரண்டோடி வந்து ஆயிரம் யோசனை ஆழ முள்ள அகழியை நிறப்பிற்று. கங்கை, பாதாளம் வரையில் சென்று பாயவே, நாகலோகம் வெள்ளக்காடாயிற்று. நாகர்கள் அஞ்சி நடுங்கினார்கள். நாக ராசனாகிய ஜுவலனப்பிரபன், அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டதுபோல, கடுஞ்சினங் கொண்டு நாககுமாரருடன் புறப்பட்டுச் சாகரர் இடம்வந்து தீப்பொறி பறக்கும் தன் விஷக் கண்களினால், அறுபதினாயிரவரையும் விழித்துப்பார்த்தான். திருஷ்டி விஷப் பார்வையினால், சாகரர் அறுபதினாயிரவரும் எரிந்து சாம்பலாயினர். குமாரர்கள் இறந்த செய்தியைக்கேட்ட சகர சக்கரவர்த்தி ஆற்றொணாத்துயரம் அடைந்தார். இதற்குள், அரண்மனை வாயிலில் பெருங்கூட்டமாக மக்கள் கூடி பெருங்கூச்சலிட்டழு வதைக் கேட்டு, அவர்களை அழைத்து விசாரித்தார். “சகர குமாரர்கள் கங்கையை அகழியில் திருப்பி பாய்ச்சியபடியால் அந்நீர் அகழியை நிரப்பிய தோடு மேலும் மேலும் வெள்ளப் பெருக் கெடுத்து வந்து சுற்றுப்புற நாடுகளையும் ஊர்களையும் அழித்து விட்டது. மேன் மேலும் வெள்ளம் பெருகிவருகின்றது. எங்களைக் காப்பாற்றவேண்டும்” என்று அவர்கள் முறையிட்டார்கள். இதைக் கேட்ட சகர சக்கரவர்த்தி, தன்னுடைய பேரனான பகீரதனை அழைத்து, “நீ போய் தண்டரத் தினத்தின் உதவியினால், ஊரை அழிக்கும் கங்கையைக் கொண்டு போய் கடலிற் பாய்ச்சிவிட்டு வா” என்று கட்டளையிட்டார். பாட்டன் கட்டளைப்படி, பகீரதன் கயிலாய மலைக்குச் சென்று தண்ட இரத்தினத் தின் உதவியினால் கங்கையை இழுத்துக் கொண்டுபோய் கடலில் பாயச்செய்தான். இதுதான், திரிசஷ்டி சலாகாபுருஷர் (அறுபத்து மூன்று பெரியார்) சரித்திரம் என்னும் ஜைன நூலிலே அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை. இந்தக் கதையைத்தான், மகாபலிபுரத்தில் உள்ள. சிற்ப உருவத்தில் விளக்கமாகக் காட்டப் பட்டிருக்கிறது. இனி, இந்தக்கதைக்கும் மகாபலிபுரச்துச், சிற்பத்துக்கும் உள்ள பொருத்தங்களை ஆராய்வோம். சிற்பக் காட்சியின் விளக்கம் படம் 2 காண்க. இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர்நின்று பார்ப்பவருக்கு இடது புறத்தின் மேல்பகுதித் தோற்றம். இந்தப் பகுதியின் வலது புறத்தில், ஒடுங்கிய வயிறும் வளர்ந்த தாடியும் உள்ள ஒருவர், தனது இரண்டு கைகளையும் தலைமேல் தூக்கி ஒற்றைக்காலில் நின்று தபசு செய்கிறார். இது சகர சக்கரவர்த்தியின் உருவம்; கண்டப்பிரபாத மலையில் தபசு செய்கிறதைக் குறிக்கிறது. இவருக்கு எதிரில் தண்டாயுதத்துடனும் நான்கு கைகளோடும் ஒரு தெய்வம் நிற்கிறது. இது நாட்யமாலகன் (இந்திரன்) உடைய உருவம். இந்திரனுக்குரிய தண்டாயுதம் கையில் காணப்படுகிறது. இங்கு ஒரு ஐயம் ஏற்படக்கூடும். அதாவது, இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டா என்கிற கேள்வியுண்டாகும். சைவ வைணவ சிற்ப சாஸ்திரப்படி இந்திரனுக்கு இரண்டு கைகள் தான் உண்டு. ஆனால், ஜைன சிற்ப சாஸ்திரக் கருத்துபடி இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டு. நான்கு கைகளுடைய இந்திரனுடைய சிற்ப உருவம். வேறு ஜைனக் கோயில்களில் இன்றும் காணப்படுகிறது. ஆகையால் இந்த உருவம் நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. (இது பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘சைவ வைணவ பௌத்த ஜைன சிற்பங்கள்’ என்னும் கட்டுரை காண்க. பக்கம் 101-105. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத் தெட்டாவது வெளியீட்டு விழாமலர் 1961.) இந்தச் சகர சக்கரவர்த்தி, நாட்யமாலகன் உருவங்களுக்குப் பக்கத்தில் மிகக்குறுகிய குறள் உருவங்கள் குறுகிய கை கால்களுடன் காணப்படுகின்றன. இவ்வாறு ஆறு குறள் உருவங்கள் காணப்படு கின்றன. இந்தச் சிற்பப் பகுதியின் இடது கோடியில் இன்னும் இரண்டு குறள் உருவங்கள் காணப்படுவதை நேரில் காணலாம். படத்தில் மறைந்திருக்கின்றன. ஆக மொத்தம் 8 குறள் உருவங்கள் இதில் காணப்படுகின்றன. இவை 8 பூதங்கள் ஆகும். அன்றியும், கிரீடமகுடம் உடையனவாய் ஆகாயத்தில் பறப்பது போல ஆண் பெண் ஆகிய எட்டு ஜதை தேவர்கள் இதில் காணப்படுகிறார்கள். இந்த எட்டு ஜதை தெய்வ உருவங்களும் எட்டு பூதங்களும் எதைக் குறிக்கின்றன என்றால், சகர சக்கரவர்த்திக்குக் கிடைத்த ஒன்பது நிதிகளில், எட்டு நிதிகளைக் குறிக்கின்றன. (ஒன்பதாவது நிதியைப் பற்றிப் பிறகு விளக்குவேன்.) எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டுத் தேவர்களும் காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி குறிக்கிறது. இதில், எட்டு நிதிகளின் தலைவர்களான எட்டுத் தேவர்களும் மனைவியரோடு எட்டு ஜோடியாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெயரும் எட்டு நிதிகளின் பெயரேயாகும். அதாவது, நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன், மகாபத்மன், காலன், மகாகாலன், மானவன், சங்கன் என்னும் எட்டு தெய்வங்களாகும். இவ்வாறு, கலையறிஞர்களாகிய சிற்பிகள், எட்டு தெய்வ உருவங்களையும் எட்டு பூதங்களையும் சிற்பத்தில் சித்தரித்து எட்டு நிதிகளைக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு நிதிக்கும் ஆயிரம் பூதம் வீதம் எட்டு நிதிகளுக்கு எட்டாயிரம் பூதம் காவலாக இருந்தன. ஆனால், சிற்பத்தில் எட்டாயிரம் பூதங்களைக் காட்டினால் நன்றாக இருக்குமா? இராது. ஆகையினால், 8 நிதிக்கு 8 பூதங்களை மட்டும் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு 8 நிதிகளை 8 பூத உருவத்துடனும் 8 ஜதை தெய்வ உருவத்துடனும் சிற்பிகள் அழகாகக் காட்டி யிருக்கிறார்கள். இப்படியில்லாமல் வேறு எப்படி நிதிகளைக் காட்ட முடியும்? எட்டு நிதிகளின் தலைவர்கள் சிற்பத்தில் ஆகாயத்தில் பறப்பதுபோல ஏன் காட்டப்பட்டனர் என்றால், அவர்கள் மானிடர் அல்லர், மானிடருக்கு மேற்பட்ட தெய்வச் சத்தியுள்ள தேவர்கள் என்பதைக் காட்ட இவ்வாறு சிற்பத்தில் அமைக்கப்பட்டனர். இந்தச் சிற்பத்திலேயே வேறு நான்கு உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள், ஆகாயத்தில் பறப்பதுபோன்று இல்லாமல் தரையில் நிற்பதுபோன்றும், கையில் சில ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. தரையில் நிற்பதுபோல் காணப்படுவதால், இவை மனித உருவங்களாகும். இவை எதனைக் குறிக்கின்றன? சகர சக்கரவர்த்தி கண்டப்பிரபாத மலைக்குச் சென்று நோன்பு நோற்றபோது அவருடன் போயிருந்த மந்திரிகளைக் குறிக்கின்றன. இங்குக் காணப்படுகிற சிங்கம், புலி, மான் முதலிய உருவங்கள் கண்டப்பிரபாத மலையைச் சேர்ந்த காடுகளை நினைவூட்டுகின்றன. படம 3 காண்க. இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர்நின்று பார்ப்பவருக்கு வலக்கைப்புறத்தின் மேற்புறக் காட்சியாகும். இது ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும் நிதியைக் குறிக்கிறது. இந்நிதியிலிருந்து கிடைக்கிற ஜீவரத்தினங்கள் ஏழு அஜீவரத்தினங்கள் ஏழு ஆக பதினான்கு இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக்காட்டுகிறது. மற்றும் இசைப்பாட்டு முதலியவற்றையும் கின்னர உருவங்கள் முதலிய வற்றால் வெளிப்படுத்துகின்றது. கின்னரர் என்பது அறைக்கு மேல் தெய்வ உருவமும் அறைக்குக் கீழே பறவையின் உருவமும் உள்ளவை. எனவே 2-ஆவது 3-ஆவது படங்கள் சகரசக்கரவர்த்தி நோன்பிருந்து நோற்றதையும் அவர் அடைந்த ஒன்பது வகையான நிதிகளையும் உருவகவாயிலாக இச் சிற்பங்கள் வெளிப்படுத்துகின்றன. படம் 4 காண்க. இதில் ஒரு கோயிலும் அதன் எதிரில் ஒரு முனிவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பதுபோன்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கயிலாயமலையில் பரதச் சக்கர வர்த்தி அமைத்த ரிஷப தேவர் கோயிலையும், அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவாத்தி தமது உருவத்தை. ரிஷபர் செய்யும் உபதேசத்தைச் செவி சாய்த்துக் கேட்பதுபோல அமைத்திருந்ததையும் (பரதச் சக்கரவர்த்தி யின் உருவத்தையும்) குறிக்கின்றன. (கோயிலுக்கு எதிரில் உள்ள பரதச் சக்கரவர்த்தியின் உருவத்தை யாரோ ரிஷி என்று தவறாகத் தற்காலத்தில் கருதுகிறவர்கள் உண்டு. பண்டைக் காலத்தில் அரசர் களும் சக்கரவர்த்திகளும் தாடி மீசை தலைமயிர் களை நீட்டி வளர்த்திருந்தனர். இதற்கு பௌத்த நூல்களிலும் ஜைன நூல்களிலும் சான்றுகள் உண்டு. சிற்ப உருவங்களின் சான்றுகளும் உள்ளன.) இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஆறு போன்ற காட்சியும் அதில் நாகர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இதைக் கங்கையாறு என்று சிலர் தவறாகக் கருதுகிறார்கள். இது ஆறு அன்று. சகர குமாரர்கள், கோயிலைச் சுற்றிலும் தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இதில் காணப்படுகிறவர்கள், ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனும் அவனுடன் வந்த அவன் மனைவி, மந்திரி முதலியவர்களும் ஆவர். பாதாளம் வரையில் அகழிதோண்ட அதனால், நாகர்களுக்குத் துன்பம் உண்டாக, அப்போது சினங்கொண்ட நாகராசன் சாகரிடம் வந்து அவர்களை எச்சரித்த செய்தியை இப்பகுதி குறிக்கிறது. இனி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற மூன்று மனித உருவங்களும், அதற்கு எதிர்ப்புறத்தில் யானைகளின் உருவங்களும் பார்ப்போம். தலையற்ற மூன்று உருவங்கள், நாகராசனின் கோபப் பார்வையினால் இறந்து போன சகரக் குமாரர்களைக் குறிக்கிறது. சகரகுமாரர்கள் அறுபதினாயிரவரையும் சிற்பத்தில் அமைத்துக் காட்ட முடியாதாகையினால், மூன்று தலையற்ற உருவங் களாகச் சிற்பிகள் காட்டியுள்ளார்கள். தலையற்ற உடலாக அமைத்து இறந்து போனவர்கள் என்பதைச் சிற்பிகள் காட்டுவது அவர்களின் நுண் அறிவைப் புலப்படுத்துகிறது. தமிழில் ஒருமை பன்மை என்று இரண்டு பெண்கள் மட்டும் இலக்கண நூலில் கூறப்படுகின்றன. வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் இலக்கண நூலில் கூறப்படுகின்றன. வடமொழி முறையைப்பின்பற்றி, சகர குமாரர்கள் பலர் என்பதைக்குறிக்க மூன்று உருவங்களாக அமைத்தனர் போலும். சிற்பத்தில் இவ்வளவு நுட்பமாகவும் விளக்கமாகவும் காட்டப் பட்டிருப்பது பாராட்டத்தக்கது இச்சிற்பத்தில் காணப்படும் யானைகள் ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனையும் அவனுடன் வந்த நாக பரிவாரங்களையும் குறிக்கிறது. பெரிய யானை (நாகராசன்) கோபித்துப் பார்ப்பது போலக் காணப்படுகிறது. இதன் பார்வை யினால், சகர குமாரர்கள் இறந்து மாண்ட செய்தி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற உடலோடு உள்ள (மூன்று உருவங்களில்) காட்டப் பட்டிருக்கிறது. நாகராசன், பாம்பரசன் ஆகையால், (அகழியில் நாகராசன் காட்டப்பட்டிருப்பது போல) பாம்பு உருவத்துடன் காட்டப் படாமல், யானை உருவத்துடன் ஏன்காட்டப்பட்டான் என்கிற கேள்வி உண்டாகிறது. நாகலோகத்தில், கங்கை நீர் பாய்ந்து வெள்ளக் காடாகியபோது நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், “அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டது போல” கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து எழுதியிருக்கிறார். நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும், பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் இருக்கிறபடியால், இக்காவியப் புலவன் இரண்டு பொருளிலும் சிலேடையாக இச்சொல்லை அமைத்து எழுதியிருக்கிறார். காவியப்புலவர் இவ்வாறு சிலேடையாகக் கூறிய கருத்தை ஒவியப்புலவராகிய சிற்பிகளும், சிலேடையையும் உபமானத்தையும் தமது சிற்பக்கலையில் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். காவியப் புலவர்களை ஒவியப்புலவர்கள் எவ்வளவு நுட்பமாகப் பின்பற்றிச் சிற்பத்தைச் செய்திருக்கிறார்கள். என்பது இதனால் நன்கு விளங்கும். அன்றியும் சிற்பிகள் யானையை அமைத்திருக்கிற இடத்தில், நாகராசன் உருவத்தைப் பாம்பு உருவமாக அமைத்திருந்தால் இந்தச்சிற்பம் இவ்வளவு கம்பீரமாகவும் இவ்வளவு அழகாகவும் விளங்குமா என்பதை யோசித்துப் பார்த்தால் இதன் சிறப்பு நன்கு விளங்கும். யானையின் உருவம் நாகராசனின் உருவத்தைக் குறிக்கிறது. (நாகம்-, பாம்பு, யானை.) படம் 5 காண்க. இந்தப் பகுதியில் மனிதர் சிலர் காணப்படு கின்றனர். இவர்களில் ஒரு ஆள், தனது இடது தோளின்மேல் குடம் ஒன்றை வைத்துக்கொண்டு வலது கையினால் எதையோ தண்ணீரில் எறிவது போன்று காணப்படுகிறது. இந்த உருவத்தைச் சிலர். சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் கொண்டு போகிற அர்ச்சகன் என்று கருதுகிறார்கள். அது தவறு, குடத்தில் இருப்பது இறந்தவர் எலும்பு. அதை இந்த ஆள் நீரில் போடுகிறார். அதாவது இறந்தவர் எலும்புகளை ஆற்றில் போடுகிற வழக்கத்தை அந்தச்சிற்பம் காட்டுகிறது. பகீரதன் கங்கையைக் கடலுக்கு இழுத்துச் சென்றபோது, இறந்துபோன சாகரர்களுடைய எலும்புகளைக் கங்கை அடித்துக்கொண்டு போயிற்று என்றும், அது முதல் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் ஜிதநாத தீர்த்தங்கரர் புராணம் கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டுகிறது. இந்த உருவத்தின் பக்கத்தில் இன்னொரு ஆள் எதையோ ஒரு பொருளைக் கையில் தூக்கி வைத்திருப்பது போல் காணப்படுகிறது. இதை, கங்கையில் குளித்து துணியைப் பிழிகிறான் என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறு. தோய்த்த துணியைப் பிழிவது போல் இல்லாது, இது. கனமான பொருளாகக் காணப்படுகிறது. சிலர் இப்பொருளை Cornucopia என்று கூறுகிறார்கள் Cornucopia என்பது கிரேக்க உரோம தேசங்கள் உணவுப் பொருள்களின் அபரிமிதமான விளைச்சலைக் காட்டுவதற்காகச் சிற்பிகளும் ஒவியர்களும் காட்டும் ஒரு அடையாளம். இது, மாட்டுக் கொம்பின் உள்ளே பழங்களையும் பூக்களையும் வைத்திருப்பது போல காட்டப்படுவது வழக்கம். இந்த மேல்நாட்டுச் சிற்பம் நமது நாட்டுச்சிற்பங்களில் அமைக்கப்படுவது இல்லை. ஆகவே இது Cornucopia அன்று. அதில் இருப்பது போன்று இந்தப்பொருளில் பூக்களும் பழங்களும் காணப்படவில்லை. ஆனால், இது எதைக் காட்டுகிறது என்றால், தண்ட ரத்தினத்தைக் காட்டுகிறது. தண்டரத்தினத்தினால் சாகரர் அகழி தோண்டி, அதனால்தான் கங்கையைக் கொண்டுவந்தார்கள் என்று கதை கூறுகிறது. அந்த தண்ட ரத்தினத்தைத்தான் ஒரு ஆள் கையில் வைத்திருப்பதுபோன்று இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அது கனமாக இருப்பதால் இந்த இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கிக் கொண்டிருக்கிறான். தண்ட இரத்தினத்தினாலே அகழி ஆழமாகத் தோண்டப்பட்டது என்பதையும், தண்ட ரத்தினத்தினாலே கங்கையாறு அகழிக்குக் கொண்டு வரப்பட்டது என்பதையும், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய கங்கையைப் பகீரதன் தண்ட இரத்தினத்தினால்தான் கடலில் கொண்டு போய் விட்டான் என்பதையும் காட்டுவதற்கு இங்குத் தண்ட இரத்தினம் சிற்பத்தில் காட்டப்பட்டிருப்பது பொருத்தம் அல்லவா? கடைசியாக இந்தச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கிற உருவத்தைப்பற்றி விளக்கவேண்டுவது அவசியம் ஆகிறது. இந்தக்கோயில், கயிலாய மலையில் அமைக்கப்பட்டிருந்த ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைக் குறிக்கிறது என்று கூறினேன். அப்படி யானால். இதில் காணப்படும் உருவம் ரிஷபதீர்த்தங்கரர் உருவமாக இருக்க வேண்டும். ஆனால், இதில் காணப்படுவது திருமால் (விஷ்ணு) உருவமாகக் காணப்படுகிறது. இதன் காரணம் என்ன? ஜைன தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்க வேண்டிய இடத்தில் பெருமாள் உருவம் இருக்கக் காரணம் என்ன? இதற்குக் காரணம்: திருமால் (விஷ்ணு) ரிஷப தீர்த்தங்கரராக அவராதம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. அதாவது ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்று கூறுகிறது. ஆகவே, சிற்பிகள் ரிஷபதீர்த்தங்கரருக்குப் பதிலாகத் திருமால் திரு உருவத்தை அமைத்தார்கள் போலும். (இதுகாறும் விளக்கிக் கூறப்பட்ட சிற்பங்கள் தவிர, ஏனைய சில சிற்ப உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அவை பூனை ஒன்று தபசு செய்துகொண்டிருக்க அதனைச் சூழ்ந்து எலிகள் விளையாடுவது போன்றும் குரங்குகள், புலி முதலிய உருவங்களும் இச்சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இச்சிற்பத்தை அழகுபடுத்துவதற்காகச் சிற்பிகள் அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.) அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் இருப்பதும், இச்சிற்பம் சகர சக்கரவர்த்தியின் கதையைக் குறிக்கிறதென்பதும் இதனால் விளக்கப்பட்டது. இந்தக் கதை, தமிழ்நாட்டிலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் அடைந்திருந்த அந்தக் காலத்தில் (கி. பி. 7-ஆம் நூற்றாண்டில்), எல்லோரும் அறிந்திருந்த கதையாக இருக்கவேண்டும். ஆகை யினால் தான். இக்கதையின் சிற்பத்தைச் சிற்பிகள் இப்பாறையில் செதுக்கிக் காட்டினார்கள் என்று கருதவேண்டியிருக்கிறது. இனி, இப்பெரிய அழகிய கம்பீரமான சிற்பத்தை அமைத்ததின் நோக்கம் யாது? என்பதை ஆராய்வோம். முக்கியமான நோக்கம் இல்லாமல் இச்சிற்பத்தை அமைத்திருக்கமாட்டார்கள். இதில் ஒரு நீதி அமைந்திருக்கிறது. அது யாது? எத்தகைய பேராற்றல் உடையவராக இருந்தாலும், பெறுவதற்கு அரிய நவநிதிகளைப் பெற்றுத் தெய்வங்களின் உதவியை யடைந்திருந்தாலும், சக்கரச் செல்வனாக விளங்கிய சகர சக்கரவர்த்தியின் புதல்வராக விருந்தாலும் ஊழ்வினைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்று தோன்றுகிறது. இக்கருத்தை உட்கொண்டு இக்கதையைச் சிற்பத்தில் நோக்குவோர்க்கு வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. என்னும் திருக்குறளின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிகின்றது. வற்றாத நவநிதிகளைப் படைத்துச் சக்கரச் செல்வராக வாழ்ந்த சகர சக்கரவர்த்தியின் மக்களாகப் பிறந்தும் அப்பெருஞ் செல்வ இன்பங்களை நுகர முடியாமல் இளமையிலேயே மாண்டுபோனது அவர்களுடைய ஊழ்வினைப்பயன் அல்லவா? (குறிப்பு: இந்தக் கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர், Tri’sashti Salaka Purusha Charitra Vol. II. Translated by Helen M. Johnson. Gaekwad’s Oriental Series) என்னும் இந்நூலில் கூறப்பட்ட கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. தமிழில் உள்ள ஸ்ரீ புராணம், ஜீவசம் போதனை என்னும் நூல்கள், சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன.) தொடர்பு : I ஜீவ சம்போதனை என்னும் ஜைன சமய நூலிலே சகரச் சக்கரவர்த்தியின் கதை கூறுகிற பகுதியிலே, நவநிதிகளின் இயல்பு கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. இருநாற் புகையுயர்ந் தீராறு நீண்டே ஒருநான் கொன் பானகன்று ஓவாதே - பெருநீர்மை பின்றா நவநிதிகள் பெய்யும் பெருமுகில் போல் வென்றாழி வேந்தற்கோர் வித்து. இருக்குமிடத்தில் அற்ப நிலத்திலே அடங்கிப் போமிடத்து எட்டு யோசனை உயரமும் பன்னிரண்டு யோசனை நிகளமும் ஒன்பது யோசனை அகலமும் உடையவாய் ஒவாதே கொளினும் தவாத நவநிதிகளின் பெயர் யாவையோ எனின், வண்டோகை மானோகை பிங்கலிகையே பதுமை விண்டோயுஞ் சங்கையே வேசங்கை - தண்டாச் சீர்க் காளையே மாகாளை சவ்வாதனம் பெயர்கள் ஆகுமாம் என்றுரைப்பார் ஆய்ந்து. வண்டோகை என்றும் மானோகை என்றும் பிங்கலிகை என்றும் பதுமை என்றும் சங்கை என்றும் வேசங்கை என்றும், காளை என்றும், மகாகாளை என்றும் சவ்வாதம் என்றும் நவநிதிகளின் பெயர் சொன்னவாறு. இவற்றின் செய்கை யாதோ எனின்; சாலிமுத லாகிய தானியம் அனைத்தும் ஏலமின் கோடெழில் திகழ மருந்து தண்டுத லின்றி வண்டோகை கொடுக்கும், கத்தித் தோமரத் தண்டெழு நாஞ்சில் வித்தக வாள்வளை விற்கணை பிறவும் மிக்க வாயுதம் விரலங் கரக்கை பக்கரை யினையன மானோகை கொடுக்கும், பெரியோர் சிறியோர் பேதையர் தமக்கும் கரிபரி தேர்க்கும் கவினுடை மணிப்பூண் சிங்குதல் இன்றி பிங்கலிகை கொடுக்கும், துகிலொடு நூலுங் கவரியுஞ் சவரியும் தகவதின் ஈயுந் தான்பது மையே, தண்ணிய காற்றும் சந்தனக் குழம்பும் புண்ணிய நறுநீர்த் திவலையும் நிழலும் என்றிவை முதலாச் சங்கை பயக்கும், தாளமுஞ் சங்கும் சகண்டையுந் திமிலையும் காளமும் குழலும் கரடியுந் துடியும் வீணையும் யாழும் விளங்கு சூளிகையும் இனையன பிறவும் வேசங்கை கொடுக்கும், எழுத்தும் சொல்லும் பதமும் சுகலோகமும் விழுத்தகு நூலும் புராணமும் விருத்தமும் சோதிட நிமித்தமும் சொல்லிய பிறவும் காளை என்னும் கனநிதி கொடுக்கும், உழவும் தொழிலும் வரைவும் வாணிகமும் செழுமிசை விச்சையும் சீலமும் பிறவும் ஒழிவுதல் இன்றி மாகாளை கொடுக்கும், மரகதம் வச்சிரம் வயிடூ ரியமும் பரவிய நீலமும் பதும ராகமும் கோமே தகமும் கொழும்புருட ராகமும் தாமமும் முத்தும் தடமா ணிக்கமும் சந்திர காந்தமும் சூரிய காந்தமும் இந்திர நீலமோ டெழுவகை லோகமும் தவ்வுத லின்றிச் சவ்வாதம் ஈயும், இன்னன முதலா பன்னிய பிறவும் வணியோர்க் கடவச் சக்கர வர்த்தி பணியி னின்றும் அருளும் என்ப நவநிதி எல்லாம் நன்கொடு சிறந்தே. மாவானைத் தச்சன்பெண் மன்னுசே னாபதியும் காவாளன் சோதிடனும் காகணியும் - தாவாத சக்கரம் தோல் குளா மணிதண்டு தண்குடைவாள் இக்கிரமத் தேழிரண்டாம் ஈங்கு. இச்சொல்லப்பட்ட பதினான்கு இரத்தினங்களுள் ஜீவரத்தினம் ஏழு. யானைதேர் குதிரை கருவி காலாள் எத்தனை சூழினும் அத்தனைக்கு மத்தனையாகி உழிதரு மரகதமேனி மாவென்னு மிரத்தினமும், அண்டமுற நிமிர்வரைபோ ரானைகளுக் கரியேயாய் எண்டிசையும் படையிரிய விடியுருமா வெனமுழக்கிக் காற்றுத்தீ எனக்கடுகிக் காலத் துயிருண்ணும் கூற்றுப்போல் கொடியதொரு கொலைக்களிறாம் இரத்தினமும், பரிப்பந்தி தேர்க்கூட்டம் பாய்களிற்றின் ஒலிகளுடன் பெருத்துயர்ந்த திண்மதிலும் பீடார்ந்த மண்டபமும் அம்பலங் களுமறச் சாலையுங்கூ டங்களும் கோபுரங்களும் குறைவின்றி நிறைவெய்தப் பன்னிரண்டோ சனைவிரிவாம் பதியமைக்கும் பெருந் தச்சனும், சீதகாலத்தி லுஷ்ணமாய்ச் செழுங்கோடையில் குளிர்சிறந்து காதல் பெருகும் கவின் இளமையும் வேந்தர்களால் விருப்புடைய விரைகுழலா ரனைவரிலும் ஆய்ந்ததோர் குணமுடைய அருங்கலப்பெண் இரத்தினமும், போர்த்தொழிற்கண் நிலையுடைமையும் பொருபடையின் வித்தகமும் ஆர்த்தமைந்த வாகனங்களின் அழகமைந்த பெருங்கல்வியும் யூகங்களை வகுக்க வன்மையும் உற்றிடத்துப் பேராண்மை வேரங்களால் செயிர்த்துவந்த வேற்றரசை வெல்திறமும் செப்பியவும் பிறகுணமும் செய்துதன் நலங்காட்டும் அப்படித்தாய் அரசுவக்கும் சேனாபதி ரத்தினமும், எப்பொருளும் அறநெறியால் ஈண்டியபண் டாரங்களை தப்பாமை யடைத்துவைத்து அவை தகைபெறமுன் வழங்குதலும் கண்டார்க்கே யருளுடைமையும் கனவிலும்பொய் யுரையாத பண்டாரியாய்ச் சிறந்த பரிசமைந்த இரத்தினமும், நிகழ்ந்ததுவும் போனதுவும் வருவதுவும் மனவேகம் புகழ்ந்துரைக்கும் நிமித்திகனாம் பொய்தீர்ந்த இரத்தினமும், அஜீவ இரத்தினம் ஏழு. துன்னிருளை அறத்துறக்கும் சூரிய சந்திரர் போல மின்னொளியால் மனம் வேண்டும் வெளியெல்லாம் வரவிரிக்கும் மன்னியகா கணியென்னும் மாண்பமைந்த இரத்தினமும் வேந்தனது பணியாலே விரிதிரை சூழ் மேதினியில் காய்ந்தவரை உயிர்செகுக்கும் கதிராழி இரத்தினமும், நரபதிதன் பணியென்று நாற்பத்தெண் காதம் வளர் திரைபோல்நீர் மேல்விரியும் சரும மகா இரத்தினமும், நஞ்சினொடு மாயங்கள் நணுகாமல் காக்க வல்ல எஞ்சலில் திகழ் சூளா மணி என்னும் இரத்தினமும், மேடுகளும் வரையிடங்களும் விழு குழியும் வியத்தக்க காடுகளும் நிரவ வல்ல கடுந்தண்டா ரத்தினமும், கன்மழையும் கார்மழையும் கனன்மழையும் மாயத்தால் மன்னவரும் வானவரும் பொழிந்தாலும் வழிந்தோட விடை நின்ற தந்திரத்தால் எய்தாமை காத்துய்க்கும் குடை என்னும் பெயருடைய கொள்கைமிக்க இரத்தினமும், குழுவாகிய கம்பலையும் குதிரைகளும் கொடி படையும் வழுவாமல் கொல்லவல்ல வாள் என்னும் இரத்தினமும், இத் தன்மைத்தாகிய ஈரேழிரத்தினமும் முன்னுரைத்த தன்மை நவநிதியும் அமைவுற உடையனாகிய சக்கரவர்த்தி சகராஜன் என்பவனுக்கு ஸ்ரீ இன்னும் எவ்வகைத்தோ எனின், திருவுருவும் திட்பமும் திறலுடைமைத் தேவர் மருவி யுடன்காத்தல் காட்சி - முருகுடைய தார்வேந்தர் எல்லாந் தனக்குநேர் இன்மையால் ஆர் வேந்தர் ஒப்பார் அவற்கு ! தொடர்பு: II இருபத்தினான்கு தீர்த்தங்கரரின் சரிதங்களைக் கூறுகிற ஸ்ரீ புராணம் என்னும் ஜைன சமய நூலிலே, ஆதிநாதர் புராணத்திலே, நவநிதிகளின் இயல்பும் ஜீவ அஜீவ ரத்தினங்களின் இயல்பும் இவ்வாறு கூறப்படுகின்றன:- “இவனுக்கு நிதிகள் ஒன்பது. அவையாவன - காளம், மஹாகாளம், நைஸர்ப்பம், பாண்டுகம், பத்மம், மாணவம், பிங்கலம், சங்கம், சர்வரத்தினம் என. அவற்றுள், காளம் என்னும் நிதி, வீணா வேணு மிருதங்கம் முதலாகிய வாத்தியங்களைக் கொடுக்கும். மஹாகாளம் என்பது உழவு தொழில் வரைவு வாணிஜ்யம் வித்யா சில்பங்களை முடிக்குங் கருவிகளைக் கொடுக்கும். நைசர்ப்பம் என்பது ஆசன சயனாதிகளைக் கொடுக்கும். பாண்டுகம் என்பது சர்வ தான்யங்களையும் ஷட்ரசங்களையும் கொடுக்கும். பத்மம் என்பது, பட்டுந்துகிலும் முதலானவற்றைக் கொடுக்கும். மாணவம் என்பது, ஸஸ்த்ரங்களையும் அஸ்த்திரங் களையும் கொடுக்கும். பிங்கலம் என்பது திவ்யாபரணங்களைக் கொடுக்கும். சங்கம் என்பது, படகமத்தளாதிகளைக் கொடுக்கும். சர்வரத்னம் என்பது நானாவித சர்வரத்தினங்களையும் கொடுக்கும். இவனுக்கு இரத்தினங்கள் பதினாலு. அவற்றுள் ஜீவரத்னம் ஏழாவன - ஸ்திரீயும் புரோகிதனும் சேனாபதியும் கிருகபதியும் ஸ்தபரியும் கஜமும் அஸ்வமும் என. அஜீவரத்னம் ஏழாவன - சக்கரமும் தண்டமும் சத்ரமும் மணியும் காகிணியும் வாளும் சர்மமும்என. கட்டிடக் கலை* அழகுக் கலைகளில் முதலாவதாகிய கட்டிடக் கலையை ஆராய்வோம். வீடுகள் மாளிகைகள் அரண்மனைகள் முதலியவை கட்டிடங்களே. ஆனால், நாம் இங்கு ஆராயப்புகுவது கோயில் கட்டிடங்களை மட்டுமே. முதலில் கோயில் கட்டிடங்கள் நமது நாட்டில் எந்தெந்தப் பொருள்களால் அமைக்கப்பட்டன என்பதை ஆராய்வோம். மிகப் பழைய காலத்திலே நமது நாட்டுக் கோயில் கட்டங்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. அதன் பிறகு செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குப் பின்னர் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள்1 அமைக்கப் பட்டன. கடைசியாகக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள் அமைக்கப்பட்டன. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும். மரக்கோயில்கள் பழங்காலத்திலே கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன என்று கூறினோம். மரத்தைத் தகுந்தபடி செதுக்கிக் கட்டிடம் அமைப்பது எளிமையானது, பண்டைத் தமிழகமான இப்போதைய மலையாள நாட்டின் சில இடங்களில், இன்னும் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். சிதம்பரத்தின் சபாநாதர் மண்டபம் இப்போதும் மரத்தினாலேயே அமைக்கப் பெற்றிருக்கிறது. சிதம்பரத்தில் ஊர்த்துவத்தாண்ட மூர்த்தி ஆலயம், பிற்காலத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்டது. கல்லினால் கட்டப்பட்டாலும், அதன் தூண்கள், கூரை (விதானம்) முதலிய அமைப்புகள் மரத்தினால் அமைக்கப்பட்டது போலவே காணப்படுகின்றன. சிதம்பரக் கோயிலின் பழைய கட்டிடங்கள் எல்லாம் மரத்தினாலே அமைக்கப்பட்டிருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. முற்காலத்தில் மரத்தினாலே கோயில் கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பதற்குச் சான்று. பிற்காலத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட கோயில் கட்டிடங்களிலே, மரத்தைச் செதுக்கி யமைக்கப்பட்டது போன்ற அமைப்புகள் காணப்படுவதுதான். மரக்கட்டிடங்கள் வெயிலினாலும் மழையினாலும் தாக்குண்டு விரைவில் பழுதுபட்டு அழிந்துவிடும் தன்மையன முக்கியமாக மேல் பகுதியாகிய கூரை விரைவில் பழுதடைந்தன. ஆகவே, மரக் கூரைகள் பழுது படாதபடி அவற்றின்மேல் செம்புத் தகடுகளை வேய்வது பண்டைக்காலத்து வழக்கம். செம்புத் தகடு வேய்ந்த கூரை விரைவில் பழுதடையாது. முற்காலத்தில், சிதம்பரம் முதலிய கோயில்களின் கூரைகளில் சில அரசர்கள் செம்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் வேய்ந்தார்கள் என்று கூறப்படுகின்றனர். அக்காலத்தில் மரத்தினால் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்த படியினால், அவை விரைவில் பழுதாகாதபடி செம்புத் தகடுகளையும் பொற்ற கடுகளையும் அரசர்கள் கூரையாக வேய்ந்தார்கள். செங்கல் கட்டிடங்கள் மரக் கட்டிடம் விரைவில் பழுதடைவதோடு எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும். ஆகவே, பிற்காலத்தில், செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கோயில்களைக் கட்டத் தொடங்கினார்கள். செங்கற் கோயில்கள், மரக் கோயில்களைவிட உறுதியாகவும் நெடுநாள் நீடித்திருக்கக் கூடியனவுமாக இருந்தன. இவைகளும் சில நூற்றாண்டு வரையில்தான் நீடித்திருந்தன செங்கற் கட்டிடங்கள் ஏறக்குறைய 200 அல்லது 300 ஆண்டுகளுக்குமேல் நிலைபெறுவ தில்லை. கி.பி. 600-க்கு முற்பட்ட காலத்திலே இருந்த நமது நாட்டுக் கோயில் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் கட்டிடங்களே. சங்க காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கல் கட்டிடங் களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு, சுவர்மேல் சுண்ணம் பூசப் பெற்றிருந்தன. இத்தகைய செங்கல் கட்டிடக் கோயில்கள் அவ்வப்போது செப்பனிடாமற் போனால் அவை சிதைந்து அழிந்துவிடும். கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் சங்கப் புலவர், இடிந்து சிதைந்துபோன செங்கற் கட்டிடக் கோயில் ஒன்றைக் கூறுகிறார். அச் செய்யுள் பகுதி இது: “இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை2 கடைச் சங்க காலத்தின் பிறகு இருந்த சோழன் செங்கணான், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டினான். இதனை. “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச் சோழன் ..................” என்று செங்கட் சோழனைப்பற்றித் திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும், “பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்”3ஙீ என்று திருநாவுக்கரசர் கூறுவதும் சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்களையே யாகும். சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்கள் எழுபத்தெட்டும் செங்கற் கட்டிடங் களே. ஏனென்றால், கற்றளிகள் - அதாவது கருங்கற் கட்டிடங்கள் கட்டும் முறை, அக்காலத்தில் ஏற்படவில்லை. செங்கற் கட்டிடங்கள் ஆகையினாலே அவை இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நிலை பெற்றிருக்க இடமில்லை. “குகைக் கோயில்கள்” கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி.பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் இருந்தார். இவ்வரசன் கோயில் கட்டிட அமைப்பில் புதிய முறையை ஏற்படுத்தினான். பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான “குகைக் கோயில்”களை (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன் மண்டபத் தையும் அதற்குள் கருவறையையும் (கருப்பக் கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான். மகேந்திரவர்மன் கற்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைக் கோயில்களில் ஒன்று மண்டகப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது. இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் தாலுகாவில் உள்ள விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து, வடமேற்கே 13-மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கில் 1/2 மைல் தூரத்தில் சிறு பாறைக் குன்றின் வடக்குப் பக்கத்தில் இந்தக் குகைக் கோயில் அமைந்திருக்கிறது. இக்குகைக் கோயிலில் இருக்கிற வடமொழி சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது. “செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன்4 என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது.” இந்தச் சாசனத்தின் கருத்து என்னவென்றால், செங்கல், சுண்ணாம்பு மரம் உலோகம் முதலியவற்றைக் கொண்டு கோயில் கட்டிடங்களை அமைக்கும் பழைய முறையை மாற்றி, அப்பொருள்கள் இல்லாமலே மும் மூர்த்திகளுக்குப் பாறையில் கோயிலை அமைத்தான். விசித்திர சித்தன் என்னும் அரசன் என்பது. மகேந்திரவர்மன் காலத்துக்கு முன்னே, நமது நாட்டுக் கோயில் கட்டிடங்கள் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலிய பொருள் களைக்கொண்டு உண்டாக்கப்பட்டன என்பதும், இவ்வரசன் காலத்தில் தான் பாறைகளைச் செதுக்கி உண்டாக்கப்படும் குகைக் கோயில்கள் புதிதாகச் சமைக்கப்பட்டன என்பதும் இதனால் தெரிகிறது. குகைக் கோயிலை அமைக்கும் புதிய முறையை ஏற்படுத்திக் கட்டிடக் கலையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய மகேந்திரவர்மன். பல குகைக் கோயில்களை அமைத்திருக்கிறான். ‘சென்னைக்கு அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சீபுரத்துக்கு அடுத்த பல்லாவரத்திலும், திருச்சிராப்பள்ளி மலையிலும், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம், மாமண்டூர், தளவானூர், சித்தன்னவாசல் முதலிய ஊர்களிலும் இவ்வரசன் அமைத்த குகைக்கோயில்கள் உள்ளன.5 மகேந்திரவர்மனுக்குப் பிறகு, அவன் மகன் மாமல்லனான நரசிம்மவர்மனும், அவனுக்குப் பின்னர் பரமேசுவரவர்மன் முதலியவர்களும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோயில்களையும் “இரதக்” கோயில்களையும் பாறைகளில் அமைத்தார்கள். கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக் கோயில்களில், மரத்தில் செய்யப்பட்ட மரவேலை போன்ற சில அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள், பண்டைக் காலத்தில் மரங்களினால் கோயில்கள் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன. கற்றளிகள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. கற்றளி என்றால் கற்கோயில் என்பது பொருள். கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டிடங்களுக்குக் கற்றளி என்பது பெயர். சுண்ணம் சேர்க்காமலே இக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும் காஞ்சீபுரத்தில் கயிலாசநாதர் கோயில் என்று இப்போது பெயர் வழங்கப்படும் இராஜசிம்மேச்சரம் என்னும் கற்றளியும் பனமலை என்னும் ஊரிலுள்ள கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக் கற்றளிகள் உண்டாக்கப்பட்டு ஏறக்குறைய 1200 ஆண்டுகளாகியும் அவை இப்போதும் உள்ளன. செங்கற் கோயில்களைவிட கற்றளிகள் பல காலம் நிலை நிற்பவை. ஆகையினாலே, கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்து பல அரசர்கள் கட்டியகோயில்களில் பெரும்பாலனவும் கற்றளிகளே. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பல்லவ அரசரை வென்று சிறப்படைந்தார்கள். இச் சோழர்களுக்குப் பிற்காலச் சோழர் என்பது பெயர். இச் சோழர்கள் புதிதாகப் பல கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். மேலும், பழைய செங்கற் கட்டிடக் கோயில்களை இடித்துவிட்டு அக்கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். இச் செய்திகள் நாம் சாசனங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இதுவரையில் கோயில் கட்டிடங்களை எந்தெந்தப் பொருள் களால் அமைத்தார்கள் என்பதைக் கண்டோம். இனி, நமது நாட்டுக் கோயில் அமைப்புகளையும் அவற்றின் விதங்களைப் பற்றியும் ஆராய்வோம். . மூன்று வகைப் பிரிவுகள் பாரத (இந்திய) நாட்டுக் கட்டிடங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை நாகரம், வேசரம், திராவிடம் என்பன. இவற்றில் நாகரம் என்பது வட இந்திய கட்டிடக் கலை. இவை நருமதை ஆற்றுக்கு வடக்கே அமைக்கப்பட்டவை. அடி முதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரமாக) அமைக்கப்படுவது இது. இது தமிழ் நாட்டில் இடம்பெறவில்லை. ஆகவே இது நமது ஆராய்ச்சிக்கு உட்படவில்லை. இரண்டாவதான வேசரம் என்னும் பெயருள்ள கட்டிடவகை, பண்டைக் காலத்தில் பெரிதும் பௌத்த மதத்தாரால் வளர்ச்சி யடைந்ததாகத் தோன்றுகிறது. இந்த வேசரக் கட்டிடங்கள், தரை அமைப்பிலும் (Plan) உடல் (கட்டிட) அமைப்பிலும், விமான (கூரை) அமைப்பிலும் வட்டவடிவமாக அல்லது நீண்ட அரைவட்ட வடிவமாக இருக்கும். இந்தக் கட்டிட அமைப்பு முறை, தமிழ் நாட்டுக் கோயில் கட்டிட அமைப்பு சிலவற்றில் இடம் பெற்றுள்ளன. இதைப் பற்றிப் பின்னர் அதற்குரிய இடத்தில் கூறுவோம். மூன்றாவது பிரிவான திராவிடம் என்னும் பிரிவு தென் இந்திய கோயில் கட்டிடங்களாகும். இவை வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் காணப்படுகின்றன. திராவிடக் கோயில் கட்டிட வகையில் தமிழர் சளுக்கியர் ஹொய்சளர் முதலிய பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளை விடுத்து தமிழ் நாட்டுக் கோயில்களை மட்டும் ஆராய்வோம். தமிழ் நாட்டுக் கோயில்களிலும் பல்லவர் காலத்துக் கோயில்கள். (பிற்காலச்) சோழர் காலத்துக் கோயில்கள், பாண்டியர் காலத்துக் கோயில்கள், விஜய நகர அரசர்காலத்துக் கோயில்கள் என்று உட்பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளைத் தூண்கள் கூடுகள் முதலிய அமைப்புகளிலிருந்து கண்டு கொள்ளலாம். நாம் இங்கு ஆராயப்புகுவது எல்லாம் தமிழ் நாட்டுக் கோயில்களைப்பற்றிய பொதுவான அமைப்புப்பற்றிய மேல் போக்கான செய்திகளையே யாகும். கோயில்களின் தரையமைப்பு பொதுவாகப் பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் எப்போதும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியிருக்கும். சிலகோயில்கள் தெற்கு நோக்கியும் இருப்பதுண்டு. பொதுவாகக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே கோயில்களை அமைப்பது வழக்கம். கோயில் கட்டிடத்தின் தரையமைப்பு, கருவறையை (கருப்பக் கிருகத்தை)யும் அதன் முன்புறத்தில் சிறு மண்டபத்தையும் உடையது. கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபத்திற்கு அர்த்த மண்டபம் என்பது பெயர். கருவறை (கருப்பக் கிருகம்) பெரும்பாலும் சதுரமான அமைப்புடையது. சில கருவறைகள் நீண்ட சதுரமாக இருப்பதும் உண்டு. சில கருவறைகள் நீண்ட அரை வட்டமாக அமைந்திருக்கும். மிகச் சில வட்ட வடிவமாக இருக்கும். காஞ்சீபுரத்துக் கயிலாச நாதர் கோயிலிலும், பனமலைக் கோயிலிலும், கருவறையைச் சார்ந்து வேறு சில கருவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் விதிவிலக்காக, அபூர்வமாக ஏற்பட்டவை. பல்லவ அரசர் காலம் வரையில், கருவறையும் அர்த்த மண்டபமும் ஆகிய கட்டிடங்களே அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் அமைக்கப்படவில்லை. கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்தனர். அன்றியும் அர்த்த மண்டபத்துக்கு முன்பு, இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு கோயிலைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்தபடியினாலே அம் மண்டபங்கள், மத்திய கோயிலின் பார்வையையும் அழகையும் மறைத்துவிட்டன. சில இடங்களில் மத்திய கோயிலின் விமானம் தெரியாத படி மறைத்து விட்டன. அன்றியும், கோவிலுக்குள் வெளிச்சம் புகாதபடிச் செய்து, பட்டப் பகலிலும் கோயிலில் இருள் நிறைந்துவிட்டது! நமது கோயில்களில் பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்திருப்பதன் காரணம், இந்த மண்டபங்களே ஆகும். மாடக் கோயில்கள் மாடக் கோயில்கள் என்றால், மாடிபோல் அமைந்த கோயில்கள் என்பது பொருள். ஒன்றின்மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக்கோயில்களைச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இக் காலத்தில் இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக் கோயில்கள்தான் இருக்கின்றன. மாடக் கோயில்கள், பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தன. ஆனால், அக்காலத்து மாடக்கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. ஆகவே அவை இக் காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. அக்காலத்திலேயே அழிந்து விட்டன. சீகாழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள திருநாங்கூர் திருமணி மாடக் கோயிலைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் கூறுகிறார். இன்னொரு மாடக் கோயிலாகிய திருநறையூர் மாடக் கோயிலையும் திருமங்கை ஆர்வார் குறிப்பிடு கிறார். அதனைச் சோழன் செங்கணான் கட்டியதாகவும் கூறுகிறார். “செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.” என்று அவர் கூறியது காண்க. திருநறையூருக்கு இப்போது நாச்சியார் கோயில் என்று பெயர் கூறுகிறார்கள். திருவைகல் என்னும் ஊரில் இருந்த ஒரு மாடக்கோயிலைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார். திருவைகல் மாடக்கோயில் என்பதே அக் கோயிலின் பெயராக இருந்தது. அதனைக் கட்டியவரும் செங்கட் சோழன் என்று ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகிறார். இந்த மாடக் கோயில்களைச் சோழன் செங்கணான் கட்டியதாக ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே இவை கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்றும் இவை செங்கல்லினால் கட்டப்பட்டவை என்றும் தெரிகின்றன. ஆனால், இந்த மாடக் கோயில்கள் எத்தனை நிலைய (மாடிகளைக்) கொண்டிருந்தன என்பது தெரியவில்லை. மூன்று நிலை மாடக் கோயில்களாகத்ததான் இருந்திருக்க வேண்டும். மாமல்லபுரத்து மாடக் கோயில்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த செங்கற் கட்டிடங்களாலான மாடக் கோயில்களின் மாதிரியைப் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் (மாமல்லன்) மாமல்லபுரமாகிய மகாபலிபுரத்திலே கருங்கல்லினால் அமைத்திருக்கிறான். அவை இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக் கோயில்களின் மாதிரி6 ஆகும். அர்ச்சுனன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கோயில், (இரண்டு நிலை (இரண்டடுக்கு) மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். தருமராஜ இரதம் என்று தவறாகப் பெயர் வழங்குகிற இன்னொரு மாடக்கோயில், மூன்று நிலையுள்ள மாடக் கோயிலின் அமைப்பு ஆகும்.7 சகாதேவ இரதம் என்பதும் மூன்று நிலையுடைய மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். இந்த மாடக்கோயிலின் அமைப்பைக் கருங்கற் பாறையில் அமைத்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் ஆம். இவை பழைய செங்கற் கட்டிடங்களாலாய மாடக் கோயில்களின் மாதிரி உருவ அமைப்பாகும். வேறு மாடக் கோயில்கள் கற்றளியாக அமைக்கப்பட்டு இப்போதும் வழி பாட்டில் உள்ள மாடக் கோயில்கள் இரண்டு உள்ளன. அவை காஞ்சீபுரத்தில் உள்ள பரமேச்சுர விண்ணகரமும், உத்திரமேரூர் சுந்தர வரதப் பெருமாள் ஆலயமும் ஆகும். காஞ்சீபுரத்துப் பரமேச்சுர விண்ணகரத்தை இப்போது வைகுண்டப் பெருமாள் கோயில் என்று கூறுவார்கள். இக் கோயிலைப் பரமேசுவர வர்மன் என்னும் பல்லவ அரசன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டினான். இதனைத் திருமங்கை யாழ்வார் பாடியிருக்கிறார். இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். ஆனால் இரண்டாவது மாடிக்கு மட்டும் படிகள் உள்ளன; மூன்றாவது மாடிக்குப் படிகள் இல்லை. பண்டைக் காலத்தில் மரப் படிகள் அமைந்திருந்தன போலும். இப்போது மரப்படிகளும் இல்லை. இது மூன்று நிலை மாடக்கோயில் ஆகும். உத்தரமேரூர் மாடக் கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்மன் பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி. 717 முதல் 779 வரையில் அரசாண்டான். எனவே, இக்கோயில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலைக் கட்டிய பல்லவனுடை உருவச் சிற்பமும் இக் கோயிலில் இருக்கிறது. கோயில் அமைப்பும் உறுப்புகளும். கோயில் கட்டிட அமைப்பைப் பற்றியும் அவற்றின் உறுப்புக்களைப் பற்றியும் ஆகம நூல்களிலும் சிற்ப சாஸ்திரங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கட்டிடக் கலையின் பொதுவான செய்திகளை மேலோட்டமாகக் கூறுகிறபடியால், அவற்றைப்பற்றிய விரிவான செய்திகளை இங்குக் கூறவில்லை. முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். கோயில் கட்டிடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு. அவையாவன:- 1. அடி 2. உடல் 3. தோள். 4. கழுத்து, 5. தலை 6. முடி இந்தப் பெயர்களுக்குச் சிற்ப நூலில் வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. அப் பெயர்களாவன:- 1. அதிஷ்டானம், 2, பாரம், 3. மஞ்சம், 4, கண்டம், 5. பண்டிகை, 6. ஸ்தூபி. இவற்றை விளக்குவோம். 1. அடி அல்லது தரைஅமைப்பு. இதற்கு அதிஷ்டானம் மசூரகம், ஆதாரம், தலம், பூமி முதலிய பெயர்கள் உண்டு. 2. உடல் அல்லது கருவறை, இதற்குக் கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் முதலிய பெயர்கள் சிற்ப நூலில் கூறப்படுகின்றன: இப் பெயர்கள் கருவறையின் சுவர்களைக் குறிக்கின்றன.8 3. தோள் அல்லது தளவரிசை. இதற்குப் பிரஸ்தரம். மஞ்சம், கபோதம் முதலிய பெயர்கள் உள்ளன. 4. கழுத்து. இதற்குக் கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள் உண்டு. 5. தலை அல்லது கூரை. இதற்குப் பண்டிகை, சிகரம், மஸ்தகம், சிரம் முதலிய பெயர்கள் உள்ளன. 6. முடி அல்லது கலசம். இதற்கு ஸ்தூபி, சிகை, சூளம் முதலிய பெயர்கள் உண்டு. கோயில் கட்டிடத்தில் அமைய வேண்டிய இந்த ஆறு உறுப்புகளுக்கும் சில அளவுகள் உள்ளன. அந்த அளவுகளை யெல்லாம் தீர ஆராய வேண்டியதில்லை. ஆனால், பொதுவான அளவைமட்டும் தெரிந்துகொள்வோம். அந்த அளவுகளாவன: 1. அடி அல்லது அதிஷ்டானத்தின் உயரம் 1 பங்கு. 2. உடல் அல்லது பாதத்தின் உயரம் 2 பங்கு 3. தோள் அல்லது மஞ்சத்தின் உயரம் 1 பங்கு 4. கழுத்து அல்லது கண்டத்தின் உயரம் 1 பங்கு 5. தலை அல்லது பண்டிகையின் உயரம் 2 பங்கு. 6. முடி அல்லது ஸ்தூபியின் உயரம் 1 பங்கு. இந்த அளவு ஒரு நிலையையுடைய சாதாரணக் கோயில் களுக்காகும். இதுவன்றி வேறு சில அளவுகளும் ஒரு நிலைக் கோயிலுக்கு உண்டு. இரண்டு நிலைக்கோயிலின் அமைப்பு 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. கழுத்து, 7, கூரை, 8. கலசம் என அமையும். மூன்று நிலை மாடக் கோயிலின் அமைப்பு: 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை, 8, கழுத்து, 9. கூரை, 10, கலசம் என இவ்வாறு அமையும். கோயில் கட்டிடத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சிற்ப நூலில் கண்டு கொள்க. கோயில் கட்டிடங்கள் கட்டப்படும் பொருள்களைக் கொண்டு அவை மூன்று பெயர்களைப் பெறுகின்றன. அவை சுத்தம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பன. முழுவதும் மரத்தினாலோ செங்கல்லினாலோ அல்லது கருங்கல்லினாலோ கட்டப்பட்ட கோயில்களுக்குச் சுத்த கட்டிடம் என்றும், இரண்டு பொருள்களைக் கலந்து அமைக்கப்பட்ட கோயில்களுக்கு மிஸ்ர கட்டிடம் என்றும், இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குச் சங்கீர்ணம் என்றும் பெயர்கள் கூறப்படுகின்றன. கோயிலின் வகைகள் திராவிடக் கோயில் கட்டிடங்களின் (தலையின்) கூரையின் அமைப்பைக்கொண்டு அவைகளுக்கு வெவ்வேறு பெயர்களைச் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் தமது திரு அடைவு திருத்தாண்டகத்தின் 5-ஆம் செய்யுளில், கோயில் கட்டிட வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது. “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற் கோயில் கருப்பறில் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே” இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டு கோயில்களைக் கூறிய பின்னர், கரக் கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்று ஆறு வகையான கோயில்களைக் கூறுகிறார். சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிலாசம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழுவித மான கோயில்களைக் கூறுகின்றன. காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப நூல்கள் வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிர பொருள் வேற்றுமை யில்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்தெந்தப்பெயர் என்பதற்குச் சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாதபடியினாலே, அவை எந்தெந்தக் கோயிலின் பெயர்கள் என்பது தெரியவில்லை. இதைக் கண்டறிய வேண்டியது நமது நாட்டுச் சிற்பக் கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், எம்மால் இயன்ற அளவு இதனை ஆராய்வோம். ஆலக்கோயில் முதலில், ஆலக்கோயில் என்று திருநாவுக்கரசர் கூறிய கோயிலை ஆராய்வோம். ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்று கருதுகிறார்கள். இது தவறு, ஆலமரம், கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற உறுதியான மரம் அல்ல. அதனால் கட்டிடம் கட்டும் வழக்கம் இல்லை. வேறு சிலர், ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் என்று கருதுகிறார்கள். இதுவும் தவறு. ஆலக் கோயில் என்பது கோயில் கட்டிட வகைகளில் ஒன்றென்பது தெளிவானது. ஆலக் கோயில் கட்டிடம், மேலே கூறியது போல ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாத்திரங்களில் இக்கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும் ஹஸ்தி பிருஷ்டவிமானக் கோவில் என்றும் கூறப்படுகிறது. கஜம், ஹஸ்தி என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகுபோன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு ஆலக் கோயில் என்று மருவிற்று.9 திருவெற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்து பக்தவத்சலஈசுவரர் கோயில் முதலியவை ஆலக் கோயில் எனப்படும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும். இளங்கோயில் இளங் கோயில் சிலர் இதனைப் பாலாலயம் என்று கூறுவர். பழைய கோயிலைப் புதுப்பிக்கிறபோது, கோயில் திருப்பணி முடிகிறவரையில், அக்கோயில் மூல விக்கிரகத்தைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கட்டிடத்தில் வைத்திருப்பார்கள். இந்தத் தற்காலிகமான ஆலயத்திற்குப் பாலாயம் என்பது பெயர். ஆனால், திருநாவுக்கரசு கூறுகிற இளங் கோயில் பாலாலயம் அல்ல. கோயில் கட்டிட வகைகளில் ஒன்றைத்தான் இளங் கோயில் என்று கூறுகிறார். சிலர், இளங்கோயில் என்பது முருகன் கோயிலுக்குப் பெயர் என்று கூறுவர். இதுவும் சரியன்று. இளங் கோயில் பற்றித் தேவாரத்திலும் சாசனங்களிலும் கூறப்படுகிறது. சோழ நாட்டு மீயச்சூர் கோயில் இளங்கோயில் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். மீயச்சூர் என்பது இப்போது பேரளம் என்று வழங்கப்படுகிறது. “கடம்பூர் இளங்கோயிலும் கயிலாய நாதனையே காணலாமே” என்று கூறுகிறார். ஆகவே, கடம்பூர் கோயிலும் இளங்கோயில் எனத் தெரிகிறது. (கடம்பூர்க் கோயிலில் கரக்கோயிலும் உண்டு. கடம்பூர் கரக் கோயிலைத் திருநாவுக்கரசரே வேறு இடத்தில் கூறுகிறார். கடம்பூர் கோயிலிலே கரக்கோயில், இளங் கோயில் என்னும் இரண்டு வகையான கட்டிடங்களும் உள்ளன.) பூதத்தாழ்வார் தமது இரண்டாத்திருவந்தாதியில்10 வெள்ளத்திளங் கோயிலைக் கூறுகிறார். இராஜராஜன் I காலத்துச் சாசனம் ஒன்று கடம்பூர் இளங் கோயிலைக் குறிப்பிடுகிறது.11 திருச்சி மாவட்டம் குளித்தலை தாலுகா இரத்தினகிரி என்னும் ஊரில் உள்ள சாசனம், பாண்டியன் ஜடாவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டிய தேவர் I (கி.பி. 1254 - 1264) காலத்தில் எழுதப்பட்டது. இதில், திருவாலீசுரமுடைய நாயனார், திருக்கயிலாய முடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும் இளங்கோயில்கள் என்று கூறப்படுகின்றன.12 சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுகா திருச்சோகினூரில் இருந்த ஒரு கோயில் இளங்கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக் கோயிலில் இருந்த கடவுளுக்குத் திரு இளங்கோயில் பெருமானடிகள் என்று பெயர் இருந்தது. 13இக்கோயில் சில காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்டது. நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங் கோயிலைத்தான் இந்த வடமொழிச் சாசனம் எளங் கோயில் என்று கூறுகிறது14. சிலர் கருதுவது போல் இளங் கோயில் பாலாலயமாக இருந்தால் இந்த வட மொழிச் சாசனம் வட மொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையே கூறியிருக்கும். ஆனால், இளங்கோயில் என்று கூறுகிறபடியால், இளங்கோயில் பாலாலயம் அன்று என்பதும், கோயில் அமைப்பில் ஒருவகையானது என்றும் ஐயமறத் தெரிகிறது. தமிழில் இளங்கோயில் என்று கூறப்படுவதும், சிற்ப நூல்களில் ஸ்ரீகரக் கோயில் என்று கூறப்படுவதும் ஒரே விதமான கட்டிடம் என்று தோன்றுகிறது. ஸ்ரீகரம் என்னும் கட்டிடம் நான்கு பட்டையான விமானத்தை (சிகரத்தை) உடையது என்று காமிகாகமமும் சிற்ப நூல்களும் கூறுகின்றன. மகாபலிபுரத்து திரௌபதையம்மன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கொற்றவை கோயில் அமைப்பு, ஸ்ரீகரம் என்னும் அமைப்பையுடையது. இளங்கோயில் என்பதும் இதுவாக இருக்கக்கூடும். கரக்கோயில் திருக்கடம்பூர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். (திருக்கடம்பூர் கோயிலில் இளங்கோயிலும் ஒன்று உண்டு.) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடம்பூர் கரக் கோயிலைக் குறிப்பிடுகிறார்.15 கரக்கோயிலைக் கற்கோயில் என்னும் சொல்லின் திரிபு என்று சிலர் கருதுவது தவறு. கரக் கோயில் என்பது கோயில் வகையில் ஒரு விதத்தைக் குறிக்கிறது. விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டிட அமைப்பு, கரக்கோயிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. வட்டமான விமானத்தை (சிகரத்தை) உடைய கோயில் கட்டிடத்திற்கு விஜயம் என்று சிற்ப நூல்கள் பெயர் கூறுகின்றன. ஞாழற் கோயில் ஞாழற் கோயில் என்பதைக் குங்கும மரத்தினால் அமைக்கப் பட்ட கோயில் என்று சிலர் கூறுவர். இது தவறு. ஞாழல் என்று குங்கும மரத்திற்கும் பெயர் உண்டு. ஆனால், ஞாழல் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயிலுக்கு ஞாழற்கோயில் என்று கூறுவது தவறு. அப்படியானால், ஏனைய மரங்களினாலே அமைக்கப்பட்ட கோயில் களுக்கு அந்தந்த மரங்களின் பெயர் அமைய வேண்டுமல்லவா? அப்படிப் பெயர் இல்லாதபடியினாலே ஞாழல் மரத்தினாலே கட்டப்பட்ட என்று கூறுவது தவறு. ஞாழற் கோயில் என்பது கோயில் வகையில் ஒருவகை யாகும். இந்தக் கோயிலின் அமைப்பு எப்படியிருக்கும் என்று இப்போது கண்டறிய முடியவில்லை. கொகுடிக் கோயில் கொகுடி என்பது ஒரு மரத்தின் பெயர் என்றும் அம் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர் உண்டாயிற்றென்றும் சிலர் கூறுவர். இதுவும் தவறு. “கருப்பரியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்” என்று கூறுகிறார் திருநாவுக்கரசர். சுந்தரரும் திருக்கருப்பறியலூர் பதிகத்தில் இக் கொகுடிக் கோயிலைக் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தரும், “குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயிற் கற்றென விருப்பது கருப்பறிய லூரே.” என்று கூறுகிறார். இந்தக் கோயிலின் விமான (சிகர) அமைப்பு எப்படியிருந்த தென்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டிடங்களில் ஒன்றாகக் கொகுடிக் கோயில் இருக்கக்கூடும் என்று ஊகிக்கலாம். வட்டமான சிகரத்தையுடையது விஜயம் என்று பெயர் பெறும் என்பதை மேலே (கரக் கோயில்) கூறினோம். அந்த வட்டமான சிகரம் கர்ண கூடத்துடன் அமையப்பெற்றால் ஸ்ரீபோகம் எனப் பெயர் பெறும் என்றும் அதுவே நடுவில் பத்ரவரிசையுடன் கூடியதனால் ஸ்ரீவிசாலம் எனப் பெயர் பெறும் என்றும் காமிகாமம்16 கூறுகிறது. கொகுடிக் கோயில் என்பது ஸ்ரீபோகம், அல்லது ஸ்ரீவிலாசமாக இருக்கக்கூடும் என்று கருதலாம். மணிக்கோயில் மணிக்கோயிலின் அமைப்பைப்பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், எட்டுப் பட்டை அல்லது ஆறு பட்டையான சிகரத்தையுடைய கோயிலாக இருக்கக் கூடும் என்று யூகிக்கலாம். சிற்ப நூல்கள் ஸ்கந்த காந்தம் என்று கூறுகிற விமானக் கோயிலே மணிக் கோயில் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது. எட்டுப் பட்டத்தையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்தகாந்தம் என்று காமிகாகமம் கூறுகிறது. ஆறு பட்டத்தையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று வேறு பாடபேதத்தையும் காமி காகமம் கூறுகிறது.17 நமது நாட்டில் ஆறுபட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு, அல்லது எட்டுப்பட்டையான சிகரமுள்ள கோயிலாக இருக்கக்கூடும். திருநாவுக்கரசர் கூறிய கரக்கோயில்; ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்னும் கோயில் வகைகளையும், சிற்ப நூல்களில் வடமொழிப் பெயராகக் கூறப்படுகிற விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம் என்னும் கோயில் வகைகளையும் ஒருவாறு பொருத்திக் கூறினோம். இவற்றில் ஆலக் கோயிலும் ஹஸ்தி பிருஷ்டமும் ஒன்றே என்பதிலும், ஐயப்பாடு ஒன்றும் இல்லை. ஆனால் ஏனைய பொருத்தங்கள் என்னுடைய ஊகமேயொழிய முடிந்த முடிபு அல்ல. இவற்றைப் பற்றி சிற்ப சாஸ்திரிகள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும். உயரமான கோயில்கள் மிக உயரமான விமானத்தை யுடையது தஞ்சாவூர் பெரிய கோயில். இராஜராஜ சோழன் I இதைக் கி. பி. 1000-இல் கட்டினான். இது 190 அடி உயரம் உள்ளது. இதைப் போன்ற அமைப்பும் உயரமும் உடையது, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில். இது கி.பி. 1025-இல் கட்டப்பட்டது. மற்றொரு உயரமான கோயில் திரிபுவனத்துக் கம்பகரேஸ்வரர் கோயில். இவை சோழர்களால் கட்டப்பட்டன. இவையே மிக உயரமான கோயில்கள், பிற்காலத்துக் கோயில்கள் இவ்வளவு உயரமாகக் கட்டப்படவில்லை. காலப் பகுப்பு திராவிடக் கட்டிடக் கலையைப் பழைய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகர அரசர் காலம் என்று ஐந்து காலப் பகுதியாகப் பிரித்துக் கூறுவர். பழைய காலம் என்பது கி. பி. 600-க்கு முற்பட்ட காலம். இந்தக் காலத்தில், கோயில் கட்டிட அமைப்புகள் முழுவதும் அமையப்பெற்று, மரத்தினாலும் செங்கற்களினாலும் அமைக்கப் பட்டன. பல்லவர் காலக் கட்டிடம் என்பது கி. பி. 600 முதல் 900 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் கற்றளிகள் (செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோயில் கட்டிடங்கள்) ஏற்பட்டன. சோழர் காலம் என்பது, பிற்காலச் சோழர் காலம். இது கி. பி. 900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு பழைய செங்கற் கோயில்களை இடித்து அக்கோயில்களைக் கற்றளியாகப் புதுப்பித் தார்கள். அன்றியும் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்ட காலமும் இதுவே. மேலும், சிவன் கோயில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப் பட்ட காலமும் இதுவே. சோழர் காலத்துக்கு முன்பு, சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனியாகக் கோயில் இல்லை. இச்செய்தியைச் சோழர் காலத்துச் சாசனங்களில் இருந்து அறிகிறோம். பாண்டியர் கட்டிடக் காலம் என்பது கி. பி. 1300 முதல் 1500 வரையில் உள்ள காலம். விஜயநகர அரசர் கட்டிடக் காலம் என்பது கி. பி. 1500 முதல் 1700 வரையில் உள்ள காலம். கட்டிடக் கலையைப் பற்றி பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர காலம் என்று சொல்லும்போது, இந்தக் காலங்களில் கோயில் கட்டிடங்களில் வெவ்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன என்று கருதக்கூடாது. பெரிய மாறுதல்கள் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், தூண்கள், கர்ணகூடு, கோஷ்டபஞ்சரம் முதலிய உறுப்புகளில் அந்தந்தக் காலத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்களைக் கொண்டுதான் மேற்சொன்னபடி காலத்தைப் பிரித்திருக்கிறார்கள். குகைக் கோயில்களும் பாறைக் கோயில்களும் கி. பி. 600 - இல் இருந்து 850 வரையில் தமிழ்நாட்டிலே அமைக்கப்பட்டன. குகைக் கோயிலைத் தமிழ் நாட்டிலே முதல் முதல் அமைத்தவன், முன்னர் சொல்லியபடி, மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன். அவனுக்குப் பிறகு அவன் மகன் நரசிம்ம வர்மனான மாமல்லன், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரத்தில்) குகைக் கோயில்களையும் இரதக் கோயில்கள் என்னும் பாறைக் கோயில்களையும் அமைத் தான். அவனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்கள் சாளுவன்குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோயில் அமைத்தார்கள். பிறகு புதுக்கோட்டையிலும் பாண்டிய நாட்டிலும் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கி. பி. 850 - க்குப் பிறகு குகைக் கோயில்கள் அமைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. கி. பி. 1000க்குப் பிறகு அரசாண்ட சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்கள் குகைக் கோயிலை அமைக்கவில்லை. அவர்கள் கற்றளிகளைத்தான் அமைத்தார்கள். சுவர் உறுப்புகள் இனி, திருவுண்ணாழிகை (கருவறை) யின் சுவரில் வெளிப் புறத்தில் அமைக்கப்படும் உறுப்புகளைப் பற்றிக் கூறுவோம். கருவறைக்கு முன்புறத்தில் அதைச் சார்ந்து சிறு மண்டபம் ஒன்று உண்டு. இதற்கு அர்த்த மண்டபம் என்பது பெயர். அர்த்த மண்டபம் கருவறையின் ஒரு பகுதியேயாகும். அர்த்த மண்டபத்தின் வாயிலில் இருபுறத்திலும் துவார பாலகர் உருவங்கள் அமைக்கப் பட்டிருக்கும். திருவுண்ணாழிகை என்னும் கருவறை சுவரின் வெளிப் புறத்திலும், அர்த்த மண்டபச் சுவரின் வெளிப் புறத்திலும் கோஷ்ட பஞ்சரம், கும்ப பஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். கருவறையின் வெளிப் புறச் சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றும் ஆக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களும் ஆக ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும். கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்பவேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சணாமூர்த்தி, இலிங்கோத்பவமூர்த்தி, பிரமன், நாராயணி (கொற்றவை) உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோஷ்ட பஞ்சரங்களிலே இந்தத் தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம் சோழர் காலத்திலே கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், பல்லவர் காலத்துக் கோயில்களிலே கோஷ்ட பஞ்சரங்களில் இத்தெய்வ உருவங்கள் அமைக்கப்பட வில்லை. கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம் என்னும் சிற்ப உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். கும்ப பஞ்சரம் என்பது, அடியில் குடம் போன்றும் மேலே கொடிச் சிற்ப வேலை யமைந்தும் ஆன சிற்பவேலையாகும். தோள் உறுப்புகள் தோள் என்னும் பிரஸ்தரத்தின் மேலே, கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் உண்டு. கர்ணகூடு என்பது பிரஸ்தரத்தின் கடைசி மூலையில் அமைக்கப்படும் உறுப்பு. சாலை என்பது பிரஸ்தரத்தின் மத்தியில் அமைக்கப்படும். பஞ்சரம் என்பது, கர்ண கூட்டுக்கும் சாலைக்கும் இடையில் அமைக்கப்படுகிற சிறு உறுப்பு. இனி, பண்டைக் காலத்திலிருந்து நாளடைவில் கோயில்கள் கட்டிட வகையில் எப்படி வளர்ச்சி யடைந்தன என்பதைக் கூறுவோம். பண்டைக் காலத்திலே, அதாவது பல்லவர் காலம் வரையில் (கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு), திருமால், சிலபெருமான், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. திருவுண்ணாழிகை (கருவறை)யும் அதைச் சார்ந்து அர்த்த மண்டபமும் மட்டும் அக்காலத்தில் இருந்தன. வேறு மண்டபங்களோ துணைக் கோயில்களோ அக்காலத்தில் இல்லை. பிற்காலத்திலே, அர்த்த மண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோயில் முன்புறத்திலே முகமண்டபம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பரிவார ஆலயங்கள் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பிற்காலச் சோழர் ஆட்சியில், சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டன. இக்காலத்துக்கு முன்பு சிவன் கோயில்களிலே அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் இருந்ததில்லை. தேவாரத்திலே, அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகிய நாயன்மார்கள் சிவபெருமானையும் தேவியையும் பாடியது உண்மையே, ஆனால், அக்காலத்தில் தேவிக்கென்று சிவன் கோயிலில் தனியாக ஆலயம் இருந்ததில்லை. தேவிக்கென்று தனி ஆலயம் இருந்தால், அது சிவபெருமான் ஆலயத்துடன் சேர்ந்து இராமல் தனியாக இருந்தது. உதாரணமாகக் காஞ்சீபுரத்துக் காமாட்சியம்மை ஆலயத்தைக் கூறலாம். நாயன்மார்கள் இந்தத் தேவி ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த ஆலயம் சிவன் கோயிலில் சேராத தனி ஆலயம் என்பதை நினைவில் வைக்கவேண்டும். கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சோழ அரசரால் அம்மன் ஆலயங்கள், சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் அறியலாம். சோழர்கள் காலத்திலே அடியார், நாயன்மார்களுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டன. இந்த அடியார், நாயன்மார் உருவங்கள் கருவறைக்கு வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுக் கருவறையைச் சூழ்ந்து மூன்று பக்கத்திலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கருவறையைச் சுற்றிலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால், மூலக் கோவிலின் கட்டிட அமைப்பு முழுவதும் மறைக்கப்பட்டுவிட்டது. அன்றியும் மண்டபத்தில் சாளரம் அமைக்காதபடியால் பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்து கொண்டது. மூலக்கோயிலின் விமானம் மட்டும் தூரப்பார்வைக்குத் தெரியும். மூலக் கோயிலின் அதிஷ்டானத்திலும் (அடிப்புறம்), சுவரிலும் சிற்ப வேலைகள் அமைந்து அப் பகுதிகளே கட்டிடத்தின் அழகான பகுதிகளாக விளங்குபவை. அப்பகுதியைச் சுற்றிலும் மண்டபம் அமைத்து மறைத்துவிட்டதல்லாமல் இருள் சூழும்படியும் செய்து விட்டார்கள். இப்படிச் செய்தது மூலக்கோயிலின் அழகையே கெடுத்துவிட்டது. இப்போதுள்ள கோயில்களில் பெரும்பான்மையும் மூலக்கோயிலின் கட்டிட அழகை மறைக்கப்பட்டவையே. சுற்று மண்டபங்களால் மறைக்கப்படாத மூலக்கோயில்கள் மிகச் சிலவே இக் காலத்தில் உள்ளன. அண்மையில், மிகப் பழைமை வாய்ந்த பாடல் பெற்ற ஒரு கோயிலுக்கு, அக் கோயிலின் அமைப்பை ஆராய்வதற்காகச் சென்றேன். மூலக் கோயிலின் முன்புறத்தில் மிகப்பெரிய முக மண்டபமும் அதனைச் சார்ந்து மூலக்கோயிலைச் சுற்றிலும் மண்டபங்களும் அமைந்து அக்கோயிலை மிகவும் இருளுடைய தாக்கிவிட்டது. இது எல்லாக் கோயில்களிலும் உள்ள சாதாரண நிலை. நான் இக்கோயிலுக்குச் சென்றது பகல் வேளை. அந்த நேரத்திலும் இக்கோயில் மிக மிக இருளடைந்து காணப்பட்டது. மீண்டும் வெளியே வந்த போது மறுபிறப்புப் பிறந்தவன்போல உணர்ந்தேன். அவ்வளவு இருள் அடர்ந்து அச்சமாக இருந்தது. பெரிய சிவன் கோயில்களிலே, பிள்ளையார் கோயிலும் முருகன் கோயிலும் இப்போது காணப்படுகின்றன. இக் கோயில்களும் பிற்காலத்திலே ஏற்பட்டவை. முருகனுக்கும் கணபதிக்கும் தனித் தனியாகப் பண்டைக் காலத்தில் கோயில்கள் இருந்தது உண்மையே. ஆனால், சிவன் கோயிலுக்குள் பரிவார ஆலயங்களாக, முருகன், கணபதி, அம்பிகை முதலியவர்களுக்குத் தனித் தனியே பண்டைக் காலத்தில் ஆலயங்கள் இல்லை. பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் முதலிய மண்டபங்களும் சோழர் காலத்திலும் அதற்குப் பிற்காலத்தில் ஏற்பட்டவையே. கோயில்களின் வாயில்களில் இப்போதுள்ள முகப்புக் கோபுரங்கள் பண்டைக் காலத்தில் இல்லை. இக் கோபுரங்கள் பிற்காலத்திலே, விஜயநகர அரசனான கிருஷ்ணதேவர் காலத்திலே ஏற்பட்டவை. இவற்றிற்கு இராயகோபுரம் என்று பெயர் உண்டு. சிவன் கோயில்களிலே சனீசுவரன் கோயில், நவக்கிரகக்கோயில் என்பவை மிகப் பிற்காலத்திலே புதிதாகச் சேர்க்கப்பட்டவை. வைணவக் கோயில் பெருமாள் கோயில்களிலும் கி. பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு “தாயார் சந்நிதி” இருந்ததில்லை. சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனி மதமாகப் பிரிந்த பிறகு, சைவர்கள் சிவன் கோயிலில் அம்மனுக்குத் தனியாக ஆலயம் அமைத்துக் கொண்டது போல, வைணவர்களும் திருமகளுக்குத் “தாயார் சந்நிதி” அமைத்துக் கொண்டார்கள். அன்றியும் ஆழ்வார்களுக்கும் ஆசாரியார்களுக்கும் மற்றும் தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைத்து வழிபட்டார்கள். ஆகவே, பெருமாள் கோயில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. திருமால் கோயில்களில், ஆண்டாள் சந்நிதி என்று ஒரு கோயில் உண்டு. ஆண்டாள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஆனால், இவருக்கு மட்டும் சிறப்பாக ஒவ்வொரு பெருமாள் கோயிலும் தனியே ஆலயம் உண்டு. விஜயநகரத்து அரசனான கிருஷ்ண தேவராயன், மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தான். அவன் காலத்திலும் அதற்குப் பிறகும் ஏற்பட்டவையே ஆண்டாள் சந்நிதிகள். இதுவே கோயில் கட்டிடங்களின் வரலாறு. மூலக் கோயிலைச் சூழ்ந்து மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால் மூலக் கோயிலை அடிமுதல் முடிவரையில் ஒரே சமயத்தில் பார்த்து மகிழ முடியாமலிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். கோயிலுக்கு வெளியே சற்றுத் தூரத்தில் சென்று மூலக் கோயிலின் சுவர் சிற்ப அமைப்பைப் பார்த்து மகிழ வேண்டியிருக்கிறது. இரண்டையும் ஒருமிக்க பார்த்தால்தான் அக்கட்டிடக் கலையின் அழகை நன்கு உணரலாம். மேற்பகுதி அடிப்பகுதி இரண்டையும் ஒருமிக்கப் பார்த்து மகிழும் வாய்ப்பு வெகு சில கோயில்களிலேதான் அமைந்துள்ளது. ஆனால், பல்லவர் காலத்துக் கோயில்களில் இந்த அழகை முழுவதும் காணலாம். சிற்பாசாரியர் கோயில் கட்டிடங்களையும் சிற்பங்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பெயர் மறைந்துவிட்டன். ஆயினும் சில பெயர்கள்மட்டும் தெரிகின்றன. மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்துக் கோயில்களையும் பாறைக் கோயில்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் சில. மகாபலிபுரத்துக்கடுத்த பூஞ்சேரிக் கிராமத்துக்கு அருகில், நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன.18 இப்பெயர்கள் மாமல்லபுரத்துச் சிற்பங்களை அமைத்த சிற்பாசாரிகளின் பெயர்கள் என்று கருதப்படுகின்றன. அவை:- 1. கேவாத பெருந்தச்சன், 2. குணமல்லன். 3. பய்யமிழிப்பான். 4. சாதமுக்கியன். 5. கலியாணி. 6. திருவொற்றியூர் அபாஜர். 7. கொல்லன் ஸேமகன். கி. பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தண்டி என்னும் ஆசிரியர், தாம் எழுதிய அவந்தி சுந்தரி கதை என்னும் வடமொழி நூலில் லலிதாலயர் என்னும் சிற்பக் கலைஞரைக் குறிப்பிடுகிறார். தண்டி ஆசிரியர் காலத்தில், லலிதாலயர் மாமல்ல புரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார் என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத் தமிழில் எழுதினார் என்றும் தண்டியாசிரியர் கூறுகிறார். இரண்டாம் விக்கிரமாதித்யன் (733-745), காஞ்சீபுரத்தை வென்ற பிறகு, அந்நகரிலிருந்த குண்டன் என்னும் சிற்பியை அழைத்துக் கொண்டு போய், அச்சிற்பியைக் கொண்டு பட்டடக்கல் என்னும் ஊரில் ஒரு கோயிலைக் கட்டினான். இக் கோயில் இப்போது விரூபாக்ஷ ஈசுவரர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இந்த அரசன், இச்சிற்பக் கலைஞருக்கு திரிபுவனாசார்யர் என்னும் சிறப்புப் பெயரை வழங்கினான். இந்தச் சிற்பிக்கு அநிவாரி தாசாரியார் என்னும் பெயரும் உண்டு. முதலாங்குலோத்துங்க சோழன் காலத்தில், புரிசையில் திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பாசாரியின் பெயர், சந்திரசேகரன் ரவி என்னும் சோழேந்திர சிம்ம ஆசாரி என்பது.19 திருவொற்றியூர் மூலக்கோயில், இராஜேந்திர சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய சிற்பியின் பெயர் வீரசோழ தச்சன் ஏன்னும் சிறப்புப் பெயருடைய ரவி என்பவர்.20 சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக் கட்டிய சிற்பியர் உருவங்களும் பெயர்களும் வடக்குக் கோபுரத்து உள் சுவரில் எழுதப்பட்டுள்ளன. அப் பெயர்களாவன:- விருத்தகிரியில் கேசவப் பெருமாள், அவர் மகன் விசு முத்து, திருப்பிறைக் கோடை ஆசாரி திருமருங்கன் அவருடைய தம்பி காரணாச்சாரி........... அடிக்குறிப்புகள் 1. Rockcut cave Temples. 2. அகநானூறு 167. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. 3. திருஅடைவு திருத்தாண்டகம் 5. 4. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயராகும். 5. இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூல் காண்க. 6. மாதிரி - Model 7. தருமராஜ இரதம் என்பதற்குப் பழைய பெயர் அத்யந்தகாம பல்லவேச்சரம் என்பது. 8. கருவறைக்கு திருவுண்ணாழிகை என்பது பழைய பெயர். 9. இதைப்பற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள ஆனைக்கோயில்கள் என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம் 10. செய்யுள் 54. 11. S.I.I. Vol. II No. 66 12. 172 of 1914. 13. 368 of 1908; S.I.I. Vol. XII. No. 43. 14. Epi. Indi.Vol.III P. 136-146 15. திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும் 5-ஆம் பாட்டு 16. ஏகபூமியாதிவிதி படலம். 17. 60-ஆவது ஏகபூமியாதி விதி படலம். 18. S. I. I. Vol. XII. No. 23A. 19. Eni Rep. 1911. P. 72. 20. S. I. I. Vol. IV. P. 185. கோயில்கள்* மகேந்திரவர்கமன் காலத்துக் கோயில் கட்டிடங்1களைப் பற்றி ஆராய்வோம். மகேந்திரவர்மன் காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டிலே கோயில் களே கிடையாது என்றும், அவனுக்குப் பிறகு தான் கோயில்கள் ஏற்பட்டன என்றும் ஐரோப்பியரில் சிலர் தவறாகக் கருதியிருந்தார்கள். அவ்வாறு கருதியவர்களில், பல்லவ சரித்திர ஆராய்ச்சியில் வல்லவரான பிரான்ஸ் தேசத்து ஜோவி டூப்ரேல் என்பாரும் ஒருவராவர். ஆனால், ஜோவி டூப்ரேல் அவர்கள், காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவில் பௌர்ணமி மண்டபத் தூண்களைக் கண்டபிறகு, மகேந்திரவர்மன் காலத்திலும் அவனுக்கு முற்பட்ட காலத்திலும் கோயில் கட்டிடங்கள் தமிழ்நாட்டிலே இருந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அதுபற்றி ஒரு சிறு நூலையும் எழுதினார்.2 1. மண்டளியும் கற்றளியும் மகேந்திரவர்மன் காலத்திலும் அவனுக்கு முற்பட்ட காலத்திலும் கணக்கற்ற கோயில்கள் (கோயில் கட்டிடங்கள்) தமிழ்நாட்டிலே இருந்தன. ஆனால் அவை கற்றளிகள் அல்ல. அஃதாவது கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப் பட்ட கோயில்கள் அல்ல. அவை செங்கல் சுண்ணாம்பு மரம் முதலிய பொருள்களினால் கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். மகேந்திர வர்மனுக்கு முன்பு இருந்த அரசர்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவைகளைக் கொண்டுதான் கோயில்களைக் கட்டினார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல்லவனீச்சரம் என்னும் கோயில், மகேந்திரவர்மனுடைய முன்னோர்களால் கட்டப்பட்ட செங்கற் கோயில் ஆகும். குகைக் கோயில் கோயில் அமைப்பதில் தமிழ்நாட்டில் முன்பு இல்லாத புதிய முறையை மகேந்திரவர்மன் முதன் முதல் உண்டாக்கினான். அஃதென்னவென்றால், ஒரே கருங்கற் பாறையைக் குடைந்து, மண்டபத்தையும் கருப்பக்கிருகத்தையும் அமைக்கிற் புதிய முறையை இந்த அரசன் புதியன புகுதலாக அமைத்தான். இவ்வாறு பாறைகளில் அமைக்கப்பட்ட கோயில்களுக்குக் “குகைக் கோயில்கள்” என்பது பெயர். ஆனால், மகேந்திரவர்மன் காலத்தில் கற்றளிகள் ஏற்பட வில்லை. கருங்கற்களினால் சுவர் எழுப்பிக் கோயில் கட்டும் கற்கோயில்களை - கற்றளிகள் - மகேந்திரவர்மனுடைய பேரன் காலத்தில் ஏற்பட்டன. மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில் களை உண்டாக்கும் புதிய முறையை முதன் முதலாகத் தமிழ் நாட்டிலே ஏற்படுத்தினான் என்று கூறினோம். ஆகவே அவனுக்குச் சேதகாரி என்னும் பெயர் ஏற்பட்டது. சேதகாரி என்றால் சேதியங் களை அமைப்பவன் என்பது பொருள். (சேதம், சேதியம் = கோயில்.) மகேந்திரன் அமைத்த மண்டளிகள் மகேந்திரவர்மன் குகைக் கோயில்களை மட்டும் அமைத்தான் என்று கருதவேண்டா. சில கோயில்களைச் செங்கற் கட்டிடங் களாகவும் அமைத்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவ்வாறு இவன் அமைத்த செங்கற் கட்டிடக் கோயில்கள் பிற்காலத்தில் அழிந்துவிட்டன். காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயில் பௌர்ணமி மண்டபத்தில் ஒரு கருங்கல் தூணில் மகேந்திரனுடைய சிறப்புப் பெயர்கள் சில பொறிக்கப்பட்டுள்ளன. அபிமுக, சித்ரகார புலி, கூற்றம்பு முதலிய மகேந்திரனுடைய சிறப்புப் பெயர்கள் அத்தூணில் எழுதப்பட்டுள்ளன. இதனால் என்ன தெரிகிற தென்றால், மகேந்திரவர்மன் குகைக்கோயில் அல்லாமல் வேறு கோயிலையும் கட்டினான் என்பதும், அக்கோயில் பிற்காலத்தில் அழிந்து விட்டிருக்கவேண்டும் என்பதும். அந்த அழிந்துபோன கோயிலிலிருந்து இந்தத் தூணைக் கொண்டுவந்து பிற்காலத்தவர் இந்த மண்டபத்தில் வைத்துக் கட்டியிருக்க வேண்டும் என்பதே. அன்றியும் சோழநாட்டிலே மயேந்திரப்பள்ளி என்னும் ஊரில் இருந்த சிவன் கோயிலை ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் தேவாரப்பதிகத்தில் காணப்படுகிறது. மயேந்திரப்பள்ளி என்பது மகேந்திரப்பள்ளி என்பதன் திரிபு. மகேந்திரன் சோழநாட்டிலும் தன் பெயரால் மகேந்திரபள்ளியை உண்டாக்கி அங்குச் சிவ பெருமானுக்கு ஒரு கோயிலை, ஒரு மண்டளியைக் கட்டினான் என்பது இதனால் தெரிகிறது. இந்த மயேந்திரப்பள்ளிக் கோயிலை, இவன் காலத்திற்குப் பிறகு மிக அண்மைக்காலத்தில் இருந்த ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். மயேந்திரப்பள்ளி கடற்கரையை யடுத்திருந்த ஊர் என்பது தெரிகிறது. என்னை? “திரை தரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமும் கரைதரு மகிலொடு கனவளை புகுதரும் வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்.” என்றும், “கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை கண்டலுங் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலநம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்.” என்றும், “நித்திலத் தொகைபல நிறைதரு மலரெனச் சித்திரப் புணரி சேர்த்திடத் திகழ்ந்தவன் மைத்திகழ் கண்டன் மயேந்திரப் பள்ளியுள்.” என்றும் ஞானசம்பந்தர் கூறுவது காண்க. 2. மகேந்திரனுக்கு முற்பட்ட கோயில்கள் மகேந்திரவர்மன் அமைத்த இந்த மகேந்திரபள்ளிக் கோயில் மிக அழகாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், கலைச் செல்வனாகிய மகேந்திரவர்மன் கட்டிய கோயில் அழகாகத்தானே இருக்கவேண்டும்? இக்கோயிற்சுவர்களில் இவன் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தியிருந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை. மகேந்திரவர்மன் காலத்தில் இருந்து வேறு கட்டிடக் கோயில் களைப்பற்றியும் இங்குக் சிறிது கூறவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த நாவுக்கரசர் இக்கோயில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கி. பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கருதப்படுகிற சோழன் செங்கணான் கட்டிய கோயில்கள், அப்பர் காலத்தில் இருந்தன என்றும், சோழன் செங்கணான் எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்றும் நாவுக்கரசர் கூறுகிறார். “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடெட்டும்”3 இவன் அமைத்தான் என்று கூறுகிறார். நாவுக்கரசருக்குப் பின்னர் இருந்தவரான திருமங்கையாழ்வார், இந்தச் செங்கட் சோழன் திருநறையூர் மணிமாடக் கோயில் உட்பட எழுபது கோயில்களைக் கட்டினான் என்று கூறுகிறார். “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.” (பெரிய திருமொழி. 6 ஆம் பத்து 6 ஆம் திருமொழி. 8) செங்கட் சோழன் கட்டிய கோயில்களைப் பெருங் கோயில் என்று திருநாவுக்கரசரும், எழில் மாடம் என்று திருமங்கை ஆழ்வாரும் கூறுகிறபடியினாலே, அவை பெரிய கட்டிடங்களாக இருந்தன என்று அறிகிறோம். ஆனால் அக்கோயில் கட்டிடங்கள் செங்கல்லினால் கட்டப்பட்டவையாகையினாலே அவை திருநாவுக்கரசர் காலத்திலே பழுதுபட்ட நிலையில் இருந்தன என்பது தெரிகிறது. அப்பர் கூறுகிற சிலவகைக் கோயில்கள் செங்கற்களினாலே அமைக்கப்பட்ட அந்தக்காலத்துக் கோயில் விமானங்களின் அமைப்பு, பலவிதமாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அக்காலத்துக் கோயில் விமான அமைப்புகள் சிலவற்றின் பெயரைத் திருநாவுக்கரசர் கூறுகிறார். “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும், மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில், கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில், இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.” என்பது அவர் பாடல். இப்பாடலில் கூறப்படுகிற பெருங் கோயில், சுரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்பன கோயில் விமான வகையில் வெவ்வேறு விதங்கள் என்று தெரிகின்றன. திருக்குடவாயில், கீழ்வேளுர், திருப்பூந்தராய், திருஅம்பர், சிவபுரம், தலைச்சங்கை முதலிய ஊர்களில் இருந்த கோயில்கள் பெருங்கோயில்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம். திருக்கடம்பூரில் இருந்த கோயில் சுரக்கோயில் என்பது தெரிகிறது. சுரக்கோயிலைச் சிலர் கற்கோயிலென்று கூறுகிறார்கள். கற்கோயில்கள் அஃதாவது கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளிகள் மகேந்திரவர்ம பல்லவன் இருந்த கி. பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை. ஆகவே, மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் கூறுகிற சுரக்கோயில் கற்கோயில் அன்று; இது கோயில் விமான அமைப்பில் ஒருவகையானது என்று கருதுவதே சரியானது. திருமீயச்சூரில் இருந்தது இளங்கோயில். திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூர் (திருச்சோகினூர்) என்னும் ஊரில் இருந்து இப்போது அழிந்துபோன ஒரு கோயிலும் இளங்கோயில் என்று ஒரு கல்லெழுத்துச் சாசனம் கூறுகிறது. கடம்பை, திருக்கருப்பறியலூர் முதலிய ஊர்க்கோயில்கள் கொகுடிக் கோயில்கள். கொகுடிக் கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில் என்பவைகளைப் பற்றிச் சிலர் பொருத்தமற்ற சில கருத்துக்களைக் கூறுகிறார்கள். அக் கருத்துக்களை எல்லாம் இங்கு ஆராய்வது நம் கருத்தன்று. நாவுக்கரசர் கூறுகிற இந்தக் கோயில் களைப் பற்றி நாம் எழுதிவருகிற மாமல்லன்-நரசிம்மவர்மன் என்னும் நூலில் விளக்கமாக ஆராய்வோம். நிற்க. மகேந்திரவர்மன் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் அமைந்திருந்த பழைய செங்கற் கட்டிடக் கோயில்கள், காலப் பழைமையினாலே பழுதடைந்தபோது பிற்காலத்தவர் அக் கட்டிடங்களைக் கற்றளியாகக் கருங்கல்லினால் புதுப்பித்துக் கட்டினார்கள். இச் செய்தியைச் சாசனங்களினால் அறிகிறோம். ஆனால், கருங்கல்லினால் கற்றளி அமைக்கும் முறை மகேந்திர வர்மன் காலத்தில் ஏற்படவில்லை. மகோந்திர வர்மனுடைய பேரனான இராசசிம்மன் காலத்தில் கி. பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கற்றளிகள் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மகேந்திரவர்மன் காலத்தில் செங்கல்லால் அமைக்கப்பட்ட கோயில்கள் இப்போது இல்லை. சோழநாட்டில் இவனால் கட்டப்பட்டதென்று கருதப்படு கின்ற மயேந்திரப்பள்ளிக் கோயில் (இது இப்போது கோயிலடிப் பாளையம் என்று வழங்கப்படுகின்றது.) சில தடவையாவது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் செங்கற்கோயில் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக நிலைபெற்றிருக்காது அல்லவா? ஆகவே, மகேந்திர வர்மன் அமைத்த செங்கற் கட்டிடக் கோயில் களில், இப்போது ஒன்றேனும் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால், மகேந்திரவர்மன் தன் காலத்தில் புதிதாக அமைத்த குகைக்கோயில்கள் இப்போதும் உள்ளன. அக்குகைக் கோயில்களை ஆராய்வோம். அடிக்குறிப்புகள் 1. Architecture. 2. Conjeevaram Inscriptions of Mahendravarman I. by G. Jouveou Dubreuil of Pondicherry College 1919. 3. அப்பர், திருஅடைவு திருத்தாண்டகம்-5. குகைக்கோயில்கள்* இப்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட குகைக் கோயில்கள் உள்ளன. முதன் முதலாகத் தமிழ்நாட்டிலே குகைக்கோயில்களை அமைத்தவன் மகேந்திரவர்மனே. இவனுக்குப் பிறகு இவன் சந்ததியார் சில குகைக்கோயில்களை அமைத்தார்கள். பிறகு பாண்டியன் முதலிய வேறு அரசர்களும் சில குகைக்கோயில் களை அமைத்தார்கள். மகேந்திர வர்மன் காலத்துக் குகைக்கோயிலுக்கும் மற்றவர் காலத்துக் குகைக்கோயிலுக்கும் சில வேறுபாடுகள் காணப்படு கின்றன. இந்த வேறுபாடுகளைக் கொண்டு மகேந்திர வர்மன் அமைத்த குகைக்கோயில்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். முன்னே மண்டபமும், மண்டபத்தில் மத்திய பாகத்தில் கர்ப்பக் கிருகமும் அமைக்கப்படுவது எல்லாக் குகைக்கோயிலின் பொதுத் தன்மையாக இருந்தபோதிலும், மண்டபத் தூண்களின் அமைப்பு, துவாரபாலகரின் அமைப்பு, மகர தோரண அமைப்பு, முதலிய வற்றைக் கொண்டு இந்தக் கோயில்கள் எந்தெந்தக் காலத்தில் அமைக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட அடையாளங்களைக் கொண்டு மகேந்திர வர்மன் காலத்துக் குகைக்கோயில்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள். தூண்கள்:- குகைக்கோயிலின் மண்டபத்தைத் தாங்கியுள்ள தூண்கள், மேற்பகுதி நடுப்பகுதி அடிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மேற்பகுதியும் அடிப்பகுதியும் நான்கு பக்கமுள்ள சதுரமாகவும் நடுப்பகுதி எட்டுப்பட்டையாகவும் இருக்கும். சில குகைகளில் இத் தூண்களின் சதுரப்பகுதியில் தாமரைப்பூவின் சிற்பம் பொறித்திருக்கும். தூண்களின் மேலேயுள்ள போதிகை, சிலவற்றில் அரைவட்டமாக வளைந்தும் சிலவற்றில் வளைவில்லாமலும் இருக்கும். துவார பாலகர்: மகேந்திரவர்மன் காலத்துக் குi கோயிலில் உள்ள துவாரபாலகர் உருவங்கள் எல்லாம் எதிர்பார்வையாக (எதிர்நோக்கி நிற்பதுபோல) அமைந்துள்ளன. பக்கவாட்டமாகத் திரும்பியிரா. இவை பெரிய பளுவான தண்டாயுதத்தைத் தரையில் ஊன்றி அதன்மேல் கைகளைத் தாங்கி நிற்கும். சில குகைக் கோயில்களின் துவாரபாலகர் கையைத் தலைக்குமேல் உயர்த் தியிருப்பது போல அமைந்திருக்கும். சில துவாரபாலகரின் தலையில் மாட்டுக் கொம்புகளை அணிந்திருப்பது போல இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்கள் இரண்டு கைகளை மட்டும் உடையவர்கள்.சில துவாரபாலகர் ஒரு காலை யூன்றி மற்றொரு காலைக் குறுக்காக மடக்கி நிற்பர்.1 மகரதோரணம்: மகேந்திரவர்மன் குகைக் கோயிலுள்ள மகரதோரணங்கள் அல்லது திருவாசிகள் இரண்டு வளைவுள்ளன வாக இருக்கும். ஒரே வளைவுள்ளதாக இராது. திருநிலையறை: (கருப்பக் கிருகம்) குழவிக்கல் போன்ற உருண்டையான இலிங்கம் கருப்பக் கிருகத்தில் காணப்படுகின்றன. பட்டை தீட்டப்பட்ட இலிங்க உருவங்கள் காணப்படா. இலிங்கத்தின் பின்புறச் சுவரில் சோமஸ்கந்த மூர்த்தியின் உருவம் இராது. வெறும் சுவராகத்தான் இருக்கும். கூடு: கோயில் கட்டிடத்தில் கூடு எனப்படும் ஒரு பகுதியுண்டு. இக் கூடுகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான சித்திர அமைப்புடன் காணப்படுகின்றன. மகேந்திரவர்மன் குகைக் கோயல்கள் சிலவற்றில் கூடுகளும் காணப்படுகின்றன. அந்தக் கூடுகளின் அமைப்பைக் கொண்டும் அந்தக் குகைகள் மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை அறியலாம். மகேந்திரவர்மன் காலத்துக் கூடுகளுக்குள் மனிதன் தலையுருவம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்புகளைக் கொண்டு மகேந்திரவர்மன் காலத்துக் குகைக் கோயில்களை நன்கு அறியலாம். மகேந்திரவர்மன் திருமாலுக்கு மூன்றும், சிவ பெருமானுக்கு ஆறும், மும்மூர்த்திக்கு இரண்டும், பஞ்ச மூர்த்திக்கு இரண்டும், கொற்றவைக்கு (துர்க்கை) ஒன்றும், அருகக் கடவுளுக்கு ஒன்றும், ஏழு மூர்த்திகளுக்கு(?) ஒன்றும் ஆகப் பதினேழு குகைக் கோயில்களை அமைத்தான். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம். 1. திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயில் திருச்சிராப்பள்ளி மலையில் இரண்டு குiகோயில்கள் உள்ளன. இவ்விரண்டில், மேலே இருப்பது மகேந்திர வர்மன் அமைத்த குகைக்கோயில் ஆகும். கீழே இருப்பது மகேந்திரவர்மன் மகன் மாமல்லன் அமைத்த குகைக்கோயில். இங்குக் கூறப்படுவது மேல் குகையாகும். பல்லவ அரச குடும்பத்தினர் வாழ்ந்த பல்லாவரம் என்னும் பெயருள்ள மூன்று ஊர்களில் அமைந்துள்ள குகைக் கோயில்களில் இது ஒன்று. திருச்சிக்கு அருகே “பல்லாபுரம்” என்னும் ஊர் உளது. பல்லாபுரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு. இக் குகைக்கோயில் தெற்குப் பார்த்தது. வழக்கம் போல முன்மண்டபமும் அதற்குள் கருப்பக்கிருகமும் அமைந்துள்ளன. மண்டபம் முப்பது அடி நீளமும், பதினைந்து அடி அகலமும், ஒன்பது அடி உயரமும் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் கருப்பக்கிருகம் மேற்குப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலமும் நீளமும் 7 அடி 10 அங்குலம் உள்ள சதுரமாயும், உயரம் 7 அடி உள்ளதாயும் அமைந்துள்ளது. இந்தக் கருப்பக்கிருகத்தின் தரையில் 2 அடிச் சதுரமுள்ள குழியொன்று காணப்படுகிறது. இது, இங்கு முன்பு சிவலிங்கம் இருந்த அடையாளம் ஆகும். இதன் பக்கத்தில் ஒரு அடிச் சதுரம் உள்ள இன்னொரு குழி இருக்கிறது. இது மகேந்திரவர்மனுடைய உருவம் சிவலிங்கத்தின் பக்கத்தில் அமைந்திருந்தது என்பதை இங்குள்ள சாசனம் கூறுகிறது. இப்போது சிவலிங்கமும் மகேந்திவர்மன் உருவமும் இங்கு இல்லை.2 திருநிலையறையின் (கருப்பக்கிருகத்தின்) வாயிலில் இரண்டு துவாரபாலகரின் உருவங்கள் பாறையில் செதுக்கியமைக்கப் பட்டுள்ளன. ஒருகாலை யூன்றி இன்னொரு காலை மடக்கி நின்று கதாயுதத்தைத் தரையில் ஊன்றி அதன் மேல் இரண்டு கைகளையும் தாங்கிக்கொண்டு துவாரபாலகர் உருவங்கள் நிற்கின்றன.3 கருப்பக்கிருகத்துக்கு எதிரேயுள்ள மேற்குப்புறப் பாறையில், மண்டபச் சுவரிலே, சுமார் ஏழு அடிச் சதுரத்தில் கங்காதர மூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பத்தைப்பற்றி இந் நூலில் மற்றோரிடத்தில் காண்க. பல்லாவரத்துக் குகைக்கோயிலில் காணப்படுவது போலவே இங்கும், மண்டபத்தின் தூலத்திலும் தூண்களிலும் மகேந்திரவர்ம னுடைய சிறப்புப் பெயர்களும் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இச் சாசனங்களில் ஒன்று, நான்கு வடமொழிச் செய்யுட்களாக அமைந்துள்ளது.4 இச் சாசனம் கீழ்வரும் கருத்தைக் கூறுகிறது. “வயல்களாகிய மாலையை யணிந்தவளும் விரும்பத் தக்க தன்மையையும் இனிய நீரையும் உடையவளுமாகிய காவிரியைக் கண்டு, ஆறுகளைத் தமது முடியிலே சூடுகிற சிவபெருமான் எங்கே இவள்மேல் விருப்பங்கொண்டு விடுவானோ என்று அச்சங் கொண்ட மலைமகள், தன்னுடைய தந்தையின் இல்லத்தைவிட்டு வந்து இந்த மலையிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ‘இந்தக் காவிரி யானவள் பல்லவன் காதலி’ என்று கூறிக்கொண்டேயிருக்கிறாள்.” “விபக்ஷ ஒழுக்கத்தைவிட்டுத் திரும்பி இலிங்கத்தை வழிபடுகின்ற குணபரன் என்னும் அரசன் இந்த லிங்கமாகிய உலகத்தில் நெடுங்காலம் வாழ்வானாக.”5 “சோழநாட்டின் முடிபோல விளங்குகிறது இந்த மலை. முடியில் அமைந்த மணிபோன்று இருக்கிறது இந்தக் (குகைக்) கோயில். மணியின் ஒளிபோன்று பிரகாசிக்கிறது சங்கரனுடைய (அருள்) ஒளி.” “சத்திய சந்தனுடைய பருவுடம்பு கல்லில் செதுக்கியமைக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து அழியாப் புகழுடம்பு தோன்றியுள்ளது.”2 இக்குகையின் வலப்புறத் தூண் ஒன்றில் வடமொழிச்சாசனம் எழுதப்பட்டுள்ளது. நான்கு செய்யுட்களாக அமைந்துள்ளது இந்தச் சாசனம்.6 இச் சாசனத்தின் கருத்து இது: “மலைகளில் சிறந்ததான இந்த மலையின் உச்சியிலே, வியக்கத்தக்க இந்தக் கற்கோயிலிலே, குணபரன் என்னும் அரசன் கல்லினால் திருமேனி அமைத்து ஸ்தானுவை ஸ்தானுவாக்கி7 அவனுடன் தன்னையும் உலகத்திலே அழியாப் பொருளாக்கிக் கொண்டான்.”8 “கிரீசன் (மலையில் வாழ்பவன்) என்னும் பெயரை மெய்ப்பிக்கும் பொருட்டு மலைமகள் கணவனாகிய கிரீசனுக்கு (சிவனுக்கு) சத்துருமல்லன் என்னும் மன்னன் இந்த மலைமேலே ஒரு கோயிலை அமைத்தான்.” “தரையிலே அமைக்கப்பட்ட கோயிலிலே இருந்து கொண்டு சோழர். காவிரி இவர்களின் பேராற்றலை நான் எவ்வாறு காண முடியும் என்று அரன் (சிவன்) கேட்ட படியினாலே, தன்னுடைய நீதியான ஆட்சியினாலே மநுவை ஒத்த குணபர மன்னன், மேகங்கள் தவழ்கின்ற இந்த மலைக்கோயிலைச் சிவனுக்கு அமைத்துக் கொடுத்தான்.” “தன் உள்ளத்திலே சிவபெருமானை எப்போதும் நிலை நிறுத்தியுள்ள புருஷோத்தமன் இந்த மலையிலே அரனுக்கு ஒப்பற்ற திருமேனியைக் கல்லினால் விருப்பத்தோடு அமைத்து மேன்மையான இந்த மலையை அழகுபடுத்தினான்.” இக் குகையின் உட்புறத் தூண்களின் மேல் உள்ள தூலத்தில் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சாசனம் ஒரு செய்யுள் வடிவாக அமைந்திருக்கிறது.9 அதன் கருத்து இது: “லலிதாங்குரன் என்னும் பல்லவ மன்னனால் அமைக்கப் பட்ட லலிதாங்குர பல்லவேஸ்வரக் கிருகம்.” மேலே கண்ட சாசனங்களிலே குணபரன், சத்துருமல்லன், புருஷோத்தமன், லலிதாங்குரன் என்னும் பெயர்கள் கூறப்படு கின்றன. இப் பெயர்கள் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் ஆகும். சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரத்துக் குகைக் கோயிலில் காணப்படுவது போலவே இந்தக் குகைக் கோயிலிலும், தூண்களிலும் தூலங்களிலும் பல்லவக் கிரந்த எழுத்துக்களினால் எழுதப்பட்ட மகேந்திரவர்மனுடைய சிறப்புப்பெயர்கள் காணப்படுகின்றன. இப் பெயர்களில் ஸ்ரீ மகேந்திரவிக்ரமன், குணபரன், பிணபிணக்கு, சித்திரகாரப்புலி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களைத் தென் இந்தியச் சாசனம் பன்னிரண்டாம் தொகுதியில்10 காண்க. 2. பல்லாவரத்துக் குகைக்கோயில் இது, செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை தாலுகா பல்லாவரம் என்னும் ஊருக்கு அருகில் இருக்கிறது. பல்லாவரம், தென் இந்திய இருப்புப்பாதையில் ஒரு இரயில் நிலையம். சென்னையில் இருந்து பஸ் வண்டியிலும் செல்லலாம். இக்குகை உள்ள இடம், பழைய பல்லாவரம் என்னும் இடத்தில் பஞ்ச பாண்டவமலை என்று வழங்கப்படுகிறது பல்லாவரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு. பல்லவ அரச குடும்பத்தவர் வாழ்ந்திருந்ததும் குகைக் கோயில்களையுடையதுமான மூன்று பல்லாவரங்களில் இது ஒன்று. இப்போது இந்தக் குகைக்கோயில் முகம்மதியரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அவர்கள் இதை முகம்மதிய தர்க்காவாக உபயோகப் படுத்தி வருகிறார்கள். குகையில் சுண்ணாம்பு பூசி வெள்ளை யடித்திருக்கிறார்கள். இந்தக் குகைக்கோயிலின் அமைப்பு, மண்டகப்பட்டு குகைக் கோயிலின் அமைப்பை ஒத்திருக்கிறது. பல்லாவரத்துக் குகைக் கோயிலில் துவாரபாலகர் உருவம் முதலிய ஒன்றும் கிடையாது. முன்பக்கத்தில் மண்டபமும் மண்ட பத்திற்குள் ஐந்து திருநிலையறை களும் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிருகத்திற்குள் உருவங்கள் ஒன்றும் இல்லை. இக்குகையின் முன் மண்டபம் 32 அடி நீளமும் 121/2 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. மண்டபத்தை இரண்டு வரிசைத் தூண்கள் தாங்குகின்றன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள ஐந்து கரு ப்பக் கிருகங்களும் 21/2 அடிச் கதுரமாக அமைந்த மாடங்கள்போல் உள்ளன. மண்டபத்தின் மேற்புறப் பாறையிலும் உட்புறத் தூண்களிலும் பல்லவக் கிரந்த எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை மகேந்திர விக்ரமவர்மனின் சிறப்புப் பெயர்களாக உள்ளன. இந்தப் பெயர்களில் முதல் முதலாகத் தொடங்குவது “ஸ்ரீ மகேந்திர விக்ரமன்” என்பது. இதைப்போலவே திருச்சி குகைக்கோயிலிலும் இந்த அரசனுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது கருதத்தக்கது. ஸ்ரீ மகேந்திரவிக்ரமன், மத்தவிலாசன், சேத்தகாரி, விசித்திர சித்தன், பகாப்பிடுகு, லலிதாங்குரன், சித்ரகாரப் புலி என்னும் பெயர்கள் இச்சாசனத்தில் காணப்படுகின்றன. இப் பெயர்கள் மகேந்திர வர்மனுடைய விருதுப்பெயர்கள் ஆகும். 3. வல்லத்துக் குகைக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா செங்கல் பட்டுக்கு ஒன்றரை மைல் தூரத்தில், திருக்கழுக்குன்றத்துக்குப் போகிற சாலையில் வல்லம் கிராமம் இருக்கிறது. “களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு வல்லம்” என்று இவ்வூர், பழைய சாசனங்களில் கூறப் படுகிறது. இவ்வூர்க் குன்றின்மேல் பாறையிலே மூன்று குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு குகைகள் முற்றுப்பெற வில்லை. நன்றாக அமைக்கப்பட்டது மூன்றாவது குகைக்கோயில். இது சிவன் கோயில். இக்கோயிலுக்குத் திருவயந்தீசுவரமுடைய நாயனார் கோயில் என்பது பெயர். இந்நாட்டை, மகேந்திரவர்மன் காலத்தில், அவன் கீழ்ச் சிற்றரசனாக இருந்து அரசாண்ட வயந்தப் பிரியன் என்னும் அரசன் பெயரால் இக்குகைக்கோயில் அமைக்கப் பட்டபடியினால் இக்கோயிலுக்கு இப்பெயர் வந்தது. இக்கோயிலில் இன்றும் பூசை வழிபாடுகள் நடை பெறுகின்றன. இக்கோயிலின் முன் மண்டபத்தைப் பிற்காலத்தில் செங்கல் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள். இதனால், இக் கோயிலின் பார்வையும் அழகும் கெட்டுவிட்டன. திருநிலையறையின் வாயிற்புறத்தில் வழக்கம்போலத் துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களின் உருவ அமைப்பும் தூண்களின் உருவ அமைப்பும் மகேந்திரவர்மன் காலத்து அமைப்பையே ஒத்திருக்கின்றன. இங்கு இரண்டு பழைய சாசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மிகப் பழமையானது இக் குகைக்கோயிலைச் செய்வித்தவர் யார் என்பதைக் கூறுகிறது. இது பல்லவத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்டது. மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப்பட்ட தமிழ்ச் சாசனங்கள் மிகச்சில. அவற்றில் ஒன்று இந்தச் சாசனம். (இந்தப் பல்லவத் தமிழ் எழுத்தின் அமைப்பை 60 ஆம் பக்கத்திள்ள படத்தில் காண்க.) இந்தத் தமிழ்ச் சாசனத்தின் வாசகம் இது: “பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துரும்மல்லன் குணபரன் மயேந்திரப் போத்தரெசரு அடியான் வயந்தப்பிரி அரெசரு மகந் கந்தசேனன் செயிவித்த தேவகுலம்.” இந்தச் சாசனத்தின் கருத்து என்னவென்றால், பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்துருமல்லன், குணபரன் என்னும் சிறப்புப் பெயர்களையுடைய மயேந்திரப்போத்தரன் கீழ்ச் சிற்றரசனாக இருந்த வயந்தப்பிரிய அரசன் மகன் கந்தசேனன் என்பவன் இந்தக் கோயிலை அமைத்தான் என்பது.11 இதில் குறிப்பிட்ட மயேந்திரன் என்பவன் மகேந்திரவர்மன் முதலாம் ஆவன். இந்தச் சாசனம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் எழுதப்பட்டதாகும். இந்தக் குகைக்கோயிலில் உள்ள மற்றொரு சாசனம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டில், கோப்பெருஞ்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது; இக்கோயிலுக்கு நுந்தாவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது. “சலபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 14-வது களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு வல்லத்து உடையார் திருவயந்தீசுரமுடைய நாயனார்க்கு” என்று இந்தச் சாசனம் தொடங்குகிறது. இக்குகைக்கோயிலின் வெளியே குன்றின் பாறையில் ஜேஷ்டா தேவியின் உருவமும் பிள்ளையார் (கணபதி) உருவமும் செதுக்கப் பட்டுள்ளன. ஜேஷ்டாதேவியின் வணக்கம் பல்லவர் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்தது. பிற்காலத்தில் இந்தத் தெய்வ வணக்கம் மறக்கப்பட்டது. இங்குச் செதுக்கப்பட்டுள்ள கணபதியின் உருவம் வெகு அழகானது. இளங்குழந்தை யொன்று உட்கார்ந்திருப்பதுபோலக் காணப்படுகிறது. இது வலம்புரி விநாயகர்; இந்தக் கணபதியின் உருவத்தைப் பிற்காலத்தில் செதுக்கியிருக்கவேண்டும் என்று சிலர் கருதுவது தவறு. இது இக்குகை அமைக்கப்பட்ட அதே காலத்தில் அமைக்கப்பட்டதாதல் வேண்டும். மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கணபதி உருவங்கள் புதுக்கோட்டையிலும் காணப்படுகின்றன. 4. மண்டகப்பட்டுக் குகைக்கோயில் இவ்வூர், தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 12 மைலில் இருக்கிறது. தளவானூருக்குத் தென்மேற்கே 6 மைலில் உள்ளது. இந்த ஊருக்கு மேற்கே அரை மைலில் உள்ள சிறு பாறைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் ஒரு குகைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தளவானூர்க் குகைக்கோயிலைப் போன்றது. தளவானூர்க் கோயிலைப் போன்றே, மண்டபத்தின் வெளிப்புறத்தில், இரண்டு கோடியிலும் துவாரபாலகர் உருவங்கள் அமைக்கப்பட் டுள்ளன.12 மண்டபம் 22 அடி நீளம்; 24 அடி அகலம்; 9 அடி உயரம் உள்ளது. மண்டபத்தின் தென்புறப் பாறையில் மூன்று திருநிலையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மூன்று திருநிலையறைகளின் தரையில் மூன்று சதுரமான சிறு குழிகள் காணப்படுகின்றன. இந்தக் குழிகள், முற்காலத்தில் இங்கு மூன்று தெய்வத் திருமேனிகள் வைக்கப் பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இப்போது இங்குத் தெய்வ உருவங்கள் காணப்படவில்லை. இக்குழிகளில் இருந்த உருவங்கள் பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் உருவங்களாக இருந்திருக்கவேண்டும் என்றும் நினைக்க வேண்டியிருக்கிறது. இங்குள்ள பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனமும் இது மும்மூர்த்தி ஆலயம் என்றே கூறுகிறது. நடுவில் உள்ள கருப்பக்கிருகத்தில் சிவன் உருவம் இருந்தது என்பதை, இக்கருப் பக்கிருகத்தின் வாயிலில் உள்ள துவாரபாலகர், பாம்பு அணிந்திருப்பதிலிருந்து அறியலாம். இக்குகைக்கோயிலில் உள்ள ஒரு தூணில் எழுதப்பட்டுள்ள சாசனம், இக்கோயிலை அமைத்த அரசன் பெயர் விசித்திர சித்தன் என்று கூறுகிறது. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று. ஆகையால், இக்கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட தாகும். இந்தச் சாசனத்தின் வாசகம் இது:- ஏத தநிஷ்டக மத்ருமமலோஹ மசுத விசித்ரசித் தேன நிர்மா பிதம் ந்ருபேண ப்ரமேஸ்வர விஷ்ணுலக்ஷிதாய தனம். இதன் பொருள்: “செங்கல் இல்லாமலும் மரமில்லாமலும் உலோகம் இல்லாமலும் சுண்ணாம்பு இல்லாமலும் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது.”13 இதனால், மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்களை முதன் முதலாக அமைத்தான் என்பதும், அவன் காலத்துக்குமுன்னே அமைக்கப்பட்ட கோயில்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் இரும்பு முதலிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டன என்பதும் தெரிகின்றன. விரைவில் அழிந்து விடக்கூடிய செங்கல் சுண்ணாம்பு முதலிய பொருள்களைக் கொண்டு கட்டப்பட்ட பண்டைக் காலத்துக்கோயில்கள் இப்போது காணப்பட வில்லை. சங்க காலத்தின் பிறகு கி. பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்த சோழன் செங்கணான் எழுபத்தெட்டுப் பெரிய கோயில்களைக் கட்டினான் என்று நூல்களினால் அறிகிறோம். அவன் கட்டிய கோயில்கள் யாவும் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவைகளைக் கொண்டு கட்டியவையே. அவன் கட்டிய கோயில்கள், அப்பர் சம்பந்தர் காலத்தில் (கி. பி. 7 ஆம் நூற்றாண்டிலேயே) அழியும் நிலையில் இருந்தன என்பது தெரிகிறது. கருங்கற்களைக் கொண்டு கற்றளி (கற்கோயில்) அமைக்கும் வழக்கம் மகேந்திரன் காலத்திற்குப் பிறகு, கி. பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது என்பது சாசன ஆராய்ச்சியினால் விளங்குகிறது. 5. தளவானூர்க் குகைக்கோயில் தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் உள்ளது தளவானூர்க் கிராமம். இது பேரணி இரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து மைலில் இருக்கிறது; செஞ்சிக்குத் தென்கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு வடக்கேயுள்ள பாறைக்குன்றின் தெற்குப் பக்கத்தில் இக்குகைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரார் இக்குகைக் கோயிலைப் பஞ்சபாண்டவர் மலை என்று கூறுகிறார்கள். சத்துருமல்லேஸ்வராலயம் என்பது இதன் பழைய பெயர். சத்துருமல்லன் என்பது முதலாம் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. எனவே சத்துருமல்லன் என்னும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்குகைக்கோயில். இப்போது இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. இக் குகைக் கோயிலில், முன்மண்டபமும் ஒரு திருநிலையறையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் நீளம் 21 அடி 10 அங்குலம். அகலம் 19 அடி. உயரம் 8 அடி 10 அங்குலம். இந்த மண்டபத்தின் இருகோடியிலும் வெளிப்புறப் பாறையில் இரண்டு துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் மகேந்திரவர்மன் காலத்துத் தாமரைப்பூச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறத்துள்ள நடுத் தூண்களுக்கு மேலே மகர தோரணம் அழகாகப் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.14 இந்த மண்டபத்தின் மேற்குப்புறத்தில் பாறைச் சுவரில் கிழக்கு முகமாகத் திருநிலையறை செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வறையின் நீளம் 8 அடி 6 அங்குலம்; அகலம் 7 அடி 10 அங்குலம்; உயரம் 6 அடி 10 அங்குலம். இதில் சிவலிங்கத்தின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநிலையறையின் வாயிலில் இரண்டு துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தூண் ஒன்றிலே பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு வெண்பா காணப்படுகிறது. அதனை இப்போதைய தமிழ் எழுத்தினால் எழுதிக் காட்டுவோம்: “ஸ்ரீ தொண் டையந்தார் வேந்தன் நரேந்திரப் போத்தரையன், வெண்பேட்டின் றென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்துருமல் லேஸ்வராலயமென் றானுக் கிடமாக வாங்கு.” இவ்வூர் ப்ரம்மங்கலவன் செல்லன் சிவதாசன் சொல்லியது.” மண்டபத்தின் வெளிப்புறத் தூண்களில் இடது பக்கத்துத் தூண் ஒன்றிலே பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் செய்யுள் காணப்படுகிறது. அதன் வாசகம் இது: “தண்டாநத நரேந்த்ரேண நரேந்த்ரனைஷ காரித: ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின் ஸத்ருமல்லேஸ்வ ராலய:” இதன் கருத்து இது:- “தனது போர்வீரர்களால் பகைவரை அடக்கிய நரேந்திரனாகிய சத்துருமல்லன் என்னும் அரசனாலே, இந்த மலையின் மேலே சத்துரு மல்லேஸ்வராலயம் என்னும் கோயில் அமைக்கப்பட்டது.” 6. மகேந்திரவாடி குகைக்கோயில் மகேந்திரவாடி, வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை தாலுகா சோளிங்கூர் இரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே மூன்று மைலில் இருக்கிறது. மகேந்திரவாடி என்பது மகேந்திரபாடி என்பதன் மரூஉ. முதல் மகேந்திரவர்மன் காலத்தில் உண்டாக்கப்பட்டது இந்த ஊர் என்பது இதன் பெயரினாலே அறியலாம். இவ்வூருக்கு அருகில் ஒர் ஏரியுண்டு. ஏரிக்கு அருகிலே பழைய காலத்திலே கோட்டை இருந்த அடையாளங்கள் தரையில் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் குகைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கப்படி முன் மண்டபமும் கர்ப்பக் கிருகமும் உள்ளன.15 இது திருமால் கோயில். கிழக்கு முகமாக அமைந்துள்ள இக் கோயில் மண்டபம் பதினெட்டு அடி நீளம் உடையது. அகலம் 13 அடி 6 அங்குலம், உயரம் 9 அடி. மண்டபத் தூண்கள், மகேந்திர பல்லவன் தூண்கள் போன்ற அமைப்புள்ளவை; தாமரைப் பூவின் உருவம் பொறிக்கப் பட்டவை. திருநிலையறையின் வாயிலில் துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. சாந்தமாகக் காணப்படுகிற இந்த உருவங்கள் இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நிற்கின்றன. திருநிலையறைக்குள் நரசிங்கப் பெருமாள் உருவம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இது பழைய காலத்து உருவம் அன்று; பிற்காலத்தது. இங்கு மண்டபத் தூண் ஒன்றில், பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாசகம் இது: மஹிததமம் ஸதாமுப மஹேந்த்ர தடாகமித ஸ்திரமுருகாரிதம் குணபரேண விதார்ய ஸிலாம் ஜனநயனாபிரம குணதாமி மஹேந்த்ர புரே மஹதி மஹேந்த்ர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ: இதன் கருத்து:- “மகேந்திரபுரத்தில் மகேந்திர தடாகக் கரையின் மேல், உலகத்தாரால் புகழ்ந்துரைக்கப் பட்டதும் மக்கள் கண்டு களிக்கும்படி அழகுக்கு உறைவிடமானதுமான முராரி (திருமால்) கிருஹத்தை மகேந்திர விஷ்ணுக்கிருகம் என்னும் பெயரினால் குணபரன் என்னும் அரசன் செய்வித்தான்.” இங்குள்ள ஏரிக்கு மகேந்திர தடாகம் என்றும், இக்குகைக் கோயிலுக்கு மகேந்திர விஷ்ணுக் கிருஹம் என்றும் பெயர் வழங்கின என்பதும், இவற்றை அமைத்தவன் குணபரன் என்னும் பெயரை யுடைய மகேந்திர விக்கிரமன் என்பதும் இதனால் அறியப்படு கின்றன. 7. மாமண்டூர்க் குகைக்கோயில் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே ஆறுகல் தொலைவில் உள்ளது மாமண்டூர். இவ்வூர் ஏரிக்கரையில் உள்ள கற்பாறைக் குன்றில் இரண்டு குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மகேந்திர வர்மனால், அல்லது மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டவை, இந்தக் குகைக் கோயில்களுக்குத் தெற்கே, நரசபாளையம் அல்லது நரசபுரம் என்னும் ஊரைச் சார்ந்து வேறு இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. அவை மகேந்திரன் காலத்திற்குப் பிற்காலத்தில் அமைக்கப் பட்டவை. ஆகவே, அவற்றைப் பற்றி இங்கு எழுதவில்லை. காஞ்சிபுரத்திற்குத் தெற்கே மூன்று கல்லில் பல்லாவரம் என்னும் ஊரும், (இந்த ஊருக்கு அருகில் ஒரு குகைக் கோயில் உண்டு. குரங்கணின் முட்டத்துக் குகைக் கோயில் என்பது காண்க) அவ்வூருக்கு அருகில் தூசி என்னும் ஊரும். தூசிக்கு அருகில் மாமண்டூர் என்னும் ஊரும் உள்ளன. இந்த ஊர்களின் பெயர்களை ஆராய்வோம். பல்லாவரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு. இவ்வூரில் பல்லவ அரச குடும்பத்தார் வசித்தார்கள் போலும் அதனால்தான் இப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில் உள்ள ஊரின் பெயர் தூசி என்பது. இது பல்லவர்களின் தூசிப்படை இருந்த ஊர் என்று கருதலாம் இதற்கு அப்பால் இருப்பது மாமண்டூர் என்பது. இவ்வூரில் பல்லவர்களின் யானைப்படை குதிரைப்படைகள் இருந்தனபோலும். மா என்றால் மிருகம் என்றும் குதிரை, யானை என்றும் பொருள்படும். மாமண்டூர் ஏரிக்கரையில் உள்ள கற்பாறைக் குன்றில் அமைந்துள்ள இக் குகைக் கோயில்களில் வலது புறத்தில் இருப்பது திருமாலுக்கும் இடது புறத்தில் இருப்பது சிவபெருமானுக்கும் அமைந்தவை. மாமண்டூரின் ஒரு பகுதி மகேந்திரமங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. மகேந்திரமங்கலம் என்பது மகேந்திரவர்மன் பெயரால் ஏற்பட்ட ஊர். மாமண்டூர் ஏரிக்கு சித்ரமேகத் தடாகம் என்பது பழைய பெயர். வலது புறத்துக் குகையின் பாறைச் சுவரில் பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. ஆனால், இந்தச் சாசனம் உள்ள பாறை வெடித்துப் பிளவுபட்டிருக்கிறபடியால் ஆங்காங்கே எழுத்துக்கள் மறைந்து சாசனத்தை முழுவதும் படிக்க முடியாமல் செய்துவிட்டது. என்றாலும் சிற்சில இடங்களில் காணப் படுகிற சொற்றொடர்களைக் கொண்டு மகேந்திரவர்மனைப் பற்றிய செய்திகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முதல் வரியில்............... கந்தர்வ சாஸ்த்ர........... 6ஆவது வரியில்..........மத்தவிலாசாதிபதம் ப்ரஹனோத்தமம்.......... 7ஆவது வரியில்...................சத்ரு மல்லஸ்ய........... 11ஆவது வரியில்...............கல்பாத் ப்ரவிபஜ்ய.......வ்ருத்திம் தக்ஷிண சித்ராக்யம் (கார) யித்வா யதாவிதிஹி................. 12ஆவது வரியில்,.............ஸ்ச விவிதை ஹ க்ருத்வா வர்ண சதுர்த்த............ என்னும் சொற்களும் தொடர்களும் காணப்படுகின்றன. இதனால், சத்துருமல்லன் என்னும் சிறப்புப் பெயரையுடைய மகேந்திரவிக்கிரவர்மன் கந்தர்வ சாஸ்திரத்தில் (இசைநூலில்) வல்லவன் என்பதும், மத்த விலாசம் என்னும் நூலை இயற்றினவன் என்பதும், தக்ஷிண சித்ரம் என்னும் பெயருள்ள தென் இந்திய ஒவிய நூலுக்கு ஒர் உரை எழுதினான் என்பதும் தெரிகின்றன. இவ் விஷயங்களைப் பற்றி இந் நூலில் வேறு இடங்களில் காண்க. இதனால் இக் குகைக்கோயில்கள் இவ்வரசனால் அமைக்கப் பட்டவை என்பது ஐயமற விளங்குகிறது. இக் குகைக்கோயிலின் அமைப்பும் தூண்களின் அமைப்பும் சிற்பங்களின் அமைப்பும் இதை உறுதிப் படுத்துகின்றன. இக் குகைகளில் முற்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இங்கு ஆங்காங்கே வண்ணங்கள் காணப் படுகின்றன. ஆனால், உருவான ஓவியம் ஒன்றேனும் காணப்பட வில்லை. 8. மேலைச்சேரிக் குகைக்கோயில் தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சித் தாலுகா செஞ்சிக்கு வடக்கே மூன்று மைலில் உள்ளது மேலைச்சேரி என்னும் கிராமம். இந்தக் கிராமம் சிவசெஞ்சி என்றும் கூறப்படுவது உண்டு. இந்த ஊருக்கு வடக்கே பாறைக்குன்று ஒன்று உண்டு. இந்தப் பாறையைக் குடைந்து, குகைக் கோயில் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குகைக்கோயிலுக்கு முன்புறத்தில் செங்கல்லினால் மண்டபம் கட்டப்பட்டிருப்பதனாலே, வெளிப்பார்வைக்கு இது குகைக் கோயிலாகத் தோன்றாது. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும். இவ்வூரார் இந்தக் கோயிலை மத்திளேசுவரர் தூண் ஒன்றில் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சாசனம் இச்கோயிலை, ஸ்ரீசிகாரி பல்லவேசுவரம் என்று கூறுகிறது. செங்கற் சுவர்கொண்டு பிற்காலத்தில் அமைக்கப்பட்ட முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், பாறையில் அமைக்கப் பட்ட குகைக்கோயிலைக் காணலாம். இது ஒரு மண்டபத்தையும் அந்த மண்டபத்தின் நடுவில் ஒரு கர்ப்பக் கிருகத்தையும் கொண்டுள்ளது. பாறையைச் செதுக்கி அமைக்கப் பட்டுள்ள இந்த மண்டபத்தின் நீளம் 19 அடி 9 அங்குலம்: அகலம் 8 அடி 9 அங்குலம். உயரம் 6 அடி 8 அங்குலம். இந்த மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திருநிலையறை ஏறக்குறையச் சதுரமான அமைப்புள்ளது. இதன் அகலம் 8 அடி 7 அங்குலம். நீளம் 8 அடி 4 அங்குலம். உயரம், மண்டபத்தின் உயரத்தைப்போலவே 6 அடி 8 அங்குலம். இந்தத் திருநிலையறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் பீடத்துடன் 4 அடி 9 அங்குலம் உள்ளது. பீடமும் சிவலிங்கமும் அதே பாறையில் அமைக்கப்பட்ட “சுயம்பு” உருவங்கள். இந்தக் குகைக்கோயிலில் வேறு சிற்பங்கள் காணப்படவில்லை. இந்தக் கோவிலில் இப்போதும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலின் தூண் ஒன்றில் வடமொழிச் சாசனம் பல்லவக்கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. காரிதம் இதம் ந்ருபதினா சந்த்ரா தித்யேன ஸார்வபௌமேன ஸ்ரீஹிகாரி பல்லவேஸ்வரமிதி ஸைவங்தாம ஹித்திர் அஷ்டுக்ர. “ஸ்ரீசிகாரி பல்லவேஸ்வரம் என்னும் பெயருள்ள இந்தக் கோயில் சிங்கபுரத்தில் சந்திராதித்யன் என்னும் அரசனால் அமைக்கப் பட்டது”16 என்பது இதன் பொருள். சாசனத்தில் சிங்கபுரம் என்று கூறப்படுகிற ஊர் இப்போது சிங்கவரம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. சிங்கவரம் மேலைச்சேரிக்குத் தெற்கே ஒரு மைலில் உள்ளது. பண்டைக் காலத்தில் மேலைச்சேரியும் சிங்கவரத்துடன் சேர்ந்த ஊராக இருந்ததுபோலும். மேற்படி சாசனத்தில் கூறப்படுகிற சந்திராதித்யன் என்னும் அரசன் யார் என்பது தெரியவில்லை. சந்திராதித்யன் என்பது சிறப்புப் பெயரா இயற்பெயரா என்பதும் தெரியவில்லை. இவன் பல்லவ குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசனாக இருக்கக்கூடும் என்றும், இவன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள். இந்தக் குகைக்கோயிலின் அமைப்பும் இதில் எழுதப்பட்டுள்ள சாசன எழுத்தின் அமைப்பும் கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்து அமைப்பைப் போன்றிருக்கிறபடியினால், இந்தக் குகைக் கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 9. சித்தன்னவாசல் குகைக்கோயில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுகா சித்தன்ன வாசல் என்னும் கிராமத்துக்குக் கிழக்கே அரைமைல் தூரத்தில் உள்ள குன்றின்மேல், கற்பாறையைக் குடைந்து அமைக்கப் பட்ட ஒரு குகைக்கோயில் உண்டு. இது சமணசமயக் கோயில். இக் குகைக்குள் எழுதப்பட்டுள்ள பழைய ஓவியங்களினாலே இக்கோயில் உலக மெங்கும் பேர்பெற்றிருக்கிறது. இந்தக் குகைக்கோயிலை அமைத்த வன் மகேந்திரவர்மனே. இவன் அமைத்த சமணசமயக் கோயில் இது ஒன்றே. மகேந்திரவர்மன் அமைத்த ஏனைய குகைக்கோயிலைப் போலவே இக்கோயிலும் முன்மண்டபத்தையும் அதன் மத்தியில் ஒரு கருப்பக்கிருகத்தையும் உடையது. மண்டபத்தின் நீளம் 22 அடி 10 அங்குலம்; அகலம் 11 அடி 6 அங்குலம். இந்த மண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் மத்தியில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள திருநிலையறை 10 1/2 அடி சதுரமாக அமைந் துள்ளது. இவ்வறையின் வாயிலின் உயரம் 5 அடி 7 அங்குலமும், அகலம் 2 1/2 அடியும் உள்ளது. திருநிலையறையின் உள்ளே அருகக் கடவுளின் மூன்று திருமேனிகள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் இரண்டு கோடிகளிலும் இரண்டு ஜைன உருவங்கள் ஒன்றுக் கொன்று எதிராக அமைக்கப்பட்டுள்ளன. வடபுறத்தில் உள்ளது குடையுடனும், தென்புறத்தில் உள்ளது ஐந்தலை நாகத்துடனும் காணப்படுகின்றன. இக்குகையின் பாறைச்சுவரில் சுண்ணம் பூசப்பட்டு அழகான வண்ண ஒவியங்கள் எழுதப்பட்டுள்ளன. கருப்பக் கிருகத்தின் எதிரே மண்டபத்தின் மேற்புறத்தில், தாமரையும் அல்லியும் அரும்பிப் பூத்துத் தழைத்துள்ள தாமரைக்குளத்தின் ஓவியம் அழகாகக் காட்சி யளிக்கிறது. இரண்டு தூண்களிலும் அரம்பையர் இரண்டு பேர் நடனம் ஆடுவது போன்ற காட்சி எழுதப்பட்டுள்ளது. மேலும், இக் குகைக் கோயிலை அமைத்த மகேந்திரவர்மன், அவன் பட்டத்தரசி ஆகிய இவர்களின் வண்ண ஓவியமும் இங்குக் காணப்படுகின்றன. மகேந்திரவிக்ரமன் காலத்தில் எழுதப்பட்ட இந்த வண்ணச் சித்திரங்கள், அஜந்தா மலைக்குகை ஓவியங்களைப் போன்று ஓவியக்கலைஞர்களால் புகழப்படுகின்றன. இந்த ஓவியங்களின் விளக்கத்தை இந்நூலில் “ஓவியங்கள்” என்னும் தலைப்பின்கீழ்க் காண்க. பிற்காலத்திலே, கி. பி. 862இல் அவனிபசேகரன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட இங்குள்ள ஒரு சாசனம் மதுரையாசிரியன் இளங்கௌதமன் என்பவன் இங்கு ஒரு மண்ட பத்தைக் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால், அப்படிப்பட்ட மண்டபம் இப்போது இங்கு இல்லை. இந்தச் சாசனம் இந்தக் குகைக்கோயிலை “அறிவன் கோயில்” என்று கூறுகிறது. எனவே, இக் குகைக்கோயிலின் பழைய பெயர். அறிவன் கோயில் என்று அறியப்படுகிறது. ஜைனக் கடவுளுக்கு அருகன் என்பது பெயராகலின் அருகன்கோயில் என்று இதற்குப் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும், அருகன்கோயில் என்பதைத் தான் தமிழில் அறிவன்கோயில் என்று வழங்கினார்கள். என்றும் சிலர் கருதுகின்றனர். அல்லது கருதுவதற்குக் காரணம் இல்லை. ஏனென்றால் அருகக்கடவுளுக்கு அறிவன் என்றே பெயர் உண்டு. இதனைச் சிலப்பதிகாரம், “அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன்” (சிலம்பு, 10; 176 - 180) என்று கூறுவதினால் அறியலாம். கும்பகோணம் தஞ்சாவூர் முதலிய ஊர்களிலுள்ள ஜைனர்கள் அவ்வப்போது இக்குகைக் கோயிலுக்கு வந்து அருகக் கடவுளை வழிபட்டுச் செல்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது. சித்தன்னவாசல் குகையின் வடகிழக்குப் புறத்தில் மழமழப் பான பாறையில் இயற்கையாக அமைந்துள்ள குடகில் பதினோழு கற்படுக்கைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இக் கற்படுக்கை களின் தலைப்புறம் தலையணை போன்று சற்று உயரமாக அமைக்கப் பட்டுள்ளன. ஜைன முனிவர்கள் இக்கற்பாறைப் படுக்கையில் படுத்து உறங்குவது வழக்கம். இங்கு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட சாசனங்கள் உள்ளன. இவை கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. (மகேந்திரன் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களும் இங்கு உள்ளன.) இவை இக்கற்படுக்கைகளை உபயோகித்துவந்த சமண முனிவர்களின் பெயர்களாகத் தெரிகின்றன. “தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன், திருப்பூரணன் திட்டைச் சாணன், திருச்சாத்தன் ஸ்ரீபூரணச்சந்திரன், நியத்கரன்பட்டக் காழி,.......த்தூர்க் கடவுளன்” என்னும் பெயர்கள் காணப் படுகின்றன. (கடவுளன் என்றால் முனிவன் என்பது பொருள்.) கற்படுக்கைகள் உள்ள குடகிற்குச் செல்லும் இக்கட்டான வழிக்கு ஏழடிப்பட்டம் என்பது பெயர். சித்தன்னவாசல் கிராமத்தில் “நவச்சுனை” என்னும் பெயருள்ள குளம் ஒன்று உண்டு. இக்குளத்தருகில் நாவல்மரம் இருப்பதனால் நாவல்சுனை என்று பெயர் ஏற்பட்டு அப்பெயர் நவச்சுனை என்று மாறிற்று. இக்குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். 1911 இல் இக்குளத்து நீர் இறைக்கப்பட்டபோது, இதற்குள் பாறையிலே முட்டை வடிவமுள்ளதாகக் குடைந்து அமைக்கப்பட்ட சிறு குகையும் அதில் ஒரு சிவலிங்கமும் காணப்பட்டதாம். ஓர் ஆள் இக் குகைக்குள் நுழைந்து லிங்கத்தை வலம் வரக் கூடிய அளவு இடம் இருக்கிறதாம். 10. சீயமங்கலக் குகைக்கோயில் வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசித் தாலுகா தேசூரில் இருந்து தெற்கே ஒரு மைலில் உள்ளது சீயமங்கலம். சீயம் என்றால் சிங்கம் என்பது பொருள். சீயமங்கலம் என்பது சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்பதன் திரிபாக இருக்கக்கூடும் என்றும், முதல் மகேந்திர வர்மனுடைய தந்தையாகிய சிம்மவிஷ்ணுவின் பெயரால் இந்தக் கிராமம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும் கருதுகிறார்கள். இவ்வூர்ப் பாறைக்குன்றில் அமைக்கப்பட்டது. இக்குகைக் கோயில். சிவன் கோயிலாகிய இது இன்றும் வழிபடப்படுகிறது. இக் குகைக்கோயிலின் முன்புறத்தில், பிற்காலத்தில் அமைக்கப் பட்ட செங்கல் சுவர் மண்டபம் இக் கோயிலுக்குள் வெளிச்சம் புகாதபடி தடுத்துவிடுகிறது. ஆகையால், பட்டப் பகலிலும் இக்கோயில் இருள் அடைந்துள்ளது. இந்தக் குகைக்கோயிலும், ஏனைய குகைக்கோயில்களைப் போலவே முன் மண்டபத்தையும் ஒரு திருநிலையறையையும் கொண்டுள்ளது. திருநிலையறையில் சிவலிங்க உருவமும், வாயிலில் இரண்டு துவாரபாலகர் உருவங்களும் உள்ளன. முன் மண்டபத்தின் இரண்டு கோடிகளிலும் இரண்டு போர்வீரர்களுடைய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நீண்ட மீசையுடைய இந்த உருவங்கள் இடது கையில் கேடயத்தைத் தாங்கி வலது கையில் வாளைப் பிடித்து ஓங்கி வீசுவதுபோன்று அமைந்துள்ளன. இப்படிப்பட்ட சிற்ப உருவங்கள் வேறு குகைக்கோயில்களில் காணப்படவில்லை. மண்டபத் தூணில் சிங்கம் ஒன்று நின்றுகொண்டு ஒரு முன்காலைத் தூக்கி நிற்பது போன்று சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. தூண்களில் தாமரைப் பூவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனம், இக்கோயிலை அமைத்த அரசன் பெயர் லலிதாங்குரன் என்றும், இக்கோயிலின் பெயர் அவனிபாஜன பல்லவேசுவரம் என்றும் கூறுகின்றது. அந்தச் சாசனத்தின் வாசகம் இது: “லலிதாங்குரேண ராஜ்ஞாவ நிபாஜன பல்லவேஸ்வரந்நாம காரிதமேதத்ஸவேதா கரண்ட மிவபுண்ய ரத்நாநம்.” இதன் கருத்து இது: “புண்ணியமாகிய இரத்தினங்களை வைக்கும் செப்புப்போல (அருங்கலச் செப்புபோல), அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்னும் பெயருள்ள இக் கோவிலை லலிதாங்குரன் என்னும் அரசன் அமைத்தான்.” சீயமங்கலம் குகைக்கோயிலும் தளவானூர்க் குகைக் கோயிலும் ஒன்றுக்கொன்று அண்மையில் உள்ளன. சீயமங்கலக் குகைக்கோயில், மகேந்திரவர்மனுடைய தந்தை யான சிம்மவிஷ்ணுவின் காலத்தில் தொடங்கப்பட்டு. மகேந்திரவர்மன் காலத்தில் முற்றுப்பெற்றிருக்கக்கூடும் என்று கருதப் படுகிறது. 11. குரங்கணின் முட்டத்துக் குகைக்கோயில் வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு தாலுகாவில் குரங்கணின் முட்டம் இருக்கிறது. இவ்வூர் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே மூன்று மைல். குரங்கணின் முட்டத்தில் பாடல்பெற்ற சிவன் கேயில் உண்டு. ஆனால், அது குகைக்கோயில் அன்று. குரங்கணின் முட்டத்திற்கு அருகில் பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் பெயருள்ள ஒர் ஊர் இருக்கிறது. இந்தப் பல்லவபுரத்திற்கு அருகில் ஒரு குகைக்கோயில் உண்டு. இக் குகைக்கேயிலை இவ்வூரார் பாண்டவர் மலை, பஞ்சபாண்டவர் மலை என்றும் கூறுகிறார்கள். பல்லவபுரம் என்னும் பெயருள்ள மூன்று இடங்களில் இது ஒன்று. இங்குள்ள ஒரு பெரும்பாறையைக் குடைந்து இக்குகைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றக் குகைக்கோயில்களைவிட இக் குகைக்கோயில் அமைப்புமுறை புதுமையானது. மண்டபமும் மண்டபத்தின் எதிரில் மூன்று திருநிலையறைகளும் மண்டபத்தின் வலது பக்கம் இடது பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு திருநிலையறைகளும் ஆக ஏழு திருநிலையறைகள் உள்ளன. இவ்வறைகளில் இப்போது உருவங்கள் இல்லை. ஆனால், முற்காலத்தில் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு அறையிலும் சிறுகுழிகள் பாறையில் காணப்படுகின்றன. இங்கு இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்துச் சாசனம் ஒன்று காணப்படுகிறது. தஞ்சையையும் காஞ்சியையும் வென்று கொண்ட கன்னர தேவரின் (இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன்) 24-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் ஏரிகீழநாட்டுக் காலியூர்க் கோட்டத்துப் பல்லவபுரம் கல்மடை காத்த ஆழ்வாரின் ஸ்ரீபலிக்காக இவ்வூரார் நிலம் தானம் செய்ததை இந்தச் சாசனம் கூறுகிறது.17 இந்த ஆதாரத்தைக் கொண்டுபோலும், இக் கோயிலை வைணவக் கோயில் என்று எபிகிராபி அறிக்கை18 கூறுகிறது. பிற்காலத்து அரசனான இராஷ்டிரகூட அரசன் காலத்தில் இக்கோயில் இப்பெயருடன் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இக் குகைக் கோயிலில் உள்ள சிற்பங்கள் இதனை ஆதரிக்கவில்லை. உண்மையில் இக்குகைக்கோயில் மும்மூர்த்திகளுக்கும் உரிய கோயிலாகும். எப்படி என்றால், மண்டபத்துக்கு எதிர்ப்புறத்திலுள்ள மூன்று கருப்பக் கிருகங்களில் தெற்கில் உள்ள திருநிலை யறைவாயிலில் மீசை தாடியுள்ள துவாபாலகர்களும் நடுவில் உள்ள திருநிலையறையின் வாயிலில், தலையில் மாட்டுக் கொம்பு போன்ற அணியையுடைய துவாரபாலகர் உருவங்களும், வடக்குப்புறத் திருநிலையறையில் தாடி மீசையில்லாத துவாரபாலகர் உருவங்களும் காணப்படுகின்றன. ஆகவே, இந்தக் குகைக் கோயில் பிரம்மா, சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு ஏற்பட்ட மும்மூர்த்திக் கோயிலாகும். ஆனால், மண்டபத்தில் இடப்புறம் வலப்புறங்களில் உள்ள நான்கு திருநிலையறைகளில் எந்தெந்தத் தெய்வ உருவங்கள் அமைக்கப் பட்டிருந்தன என்பது தெரியவில்லை. இந்தக் குகைக்கோயில் மண்டபத்தின் நீளம் 28 அடி 4 அங்குலம்; அகலம் 14 அடி; உயரம் 8 அடி 4 அங்குலம். இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. இவை மகேந்திரன் காலத்துச் சதுரத் தூண்கள் போன்றவை.19 இந்தக் குகை, முதல் மகேந்திரவர்மன் காலத்தது அன்று; பிற்காலத்தது என்று எபிகிராபி அறிக்கை கூறுகிறது. ஆனால், தூண்களின் அமைப்பு, துவாரபாலகர் உருவ அமைப்பு முதலியவை, மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோயில் என்பதைத் தெரிவிக்கின்றன. இதில் பல்லவ அரசனுடைய சாசனங்கள் காணப்படவில்லை. ஆனால், குகையின் மண்டபத்தின் முன்பக்கத்தில், மேற்புறப்பாறையில் பல்லவக் கிரந்த எழுத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கிற அடையாளம் காணப்படுகிறது. குறிப்பு:- இந்தக் குகைக்கோயில் உள்ள பல்லவபுரத்தில் பல்லவ அரச குடும்பத்தார் வாழ்ந்திருக்கக்கூடும். பல்லாவரத்திற்கு (பல்லவபுரத்திற்கு) அருகில் கணிகிலுப்பை என்னும் சிறு கிராமம் இருக்கிறது. இங்குப் பல்லவரின் நிமித்திகர் (நிமித்திகர் = கணிகள்) இருந்தனர் போலும். கணிகிலுப்பையில் ஒரு பௌத்தக்கோயில் இருந்தது. இக்கோயில் இப்போது மறைந்துவிட்டது. இதிலிருந்த புத்த உருவம் (தியானத்தில் அமர்ந்திருப்பது போன்றது) இவ்வூர் ஏரிக்கரைக்கருகில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கிறது. கோயில் இருந்த இடத்தில் கருங்கல் பீடம் மட்டும் காணப் படுகிறது. இக்கோயில் இருந்த இடத்தில் ஒரு பிள்ளையார்கோயில் கட்டியிருக்கிறார்கள். இக்கோயில் தெருக்கோடியில் ஒரு கருங்கல் நடப்பட்டிருக்கிறது. இக்கல்லில் பௌத்தரின் தருமச்சக்கரம் முதலிய சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தப் பௌத்தக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடும். ஏனென்றால், பல்லவ அரசர்களில் சிலர் புத்தவர்மன் என்னும் பெயருடன் பௌத்தர்களாக இருந்தனர். பல்லவபுரத்திற்கு அருகில் தூசி, மாமண்டூர் என்னும் ஊர்கள் உள்ளன. தூசி என்பது தூசிப்படையிருந்த ஊர். மாமண்டூர் என்பது யானைப்படை குதிரைப்படையிருந்த ஊர். (மா=மிருகம், யானை, குதிரையைக் குறிக்கிறது.) பல்லவபுரம் கணிகிலுப்பை, தூசி, மாமண்டூர் என்னும் இவை ஒன்றையொன் றடுத்திருப்பதும், காஞ்சி புரத்துக்கு அருகில் இருப்பதும் இங்குப் பல்லவர் காலத்தில் பல்லவ அரச குடும்பத்தினர் வாழ்ந்திருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன. 12. சிங்கரத்துக் குகைக்கோயில் தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சித் தாலுகா செஞ்சிக்கு வடக்கே இரண்டு மைலில் சிங்கவரம் என்னும் கிராமம் இருக்கிறது. சிங்கவரம் என்பது சிங்கபுரம் என்பதன் மரூஉ. இது சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் தந்தையாகிய சிம்மவிஷ்ணுவின் காலத்தில் அந்த அரசன் பெயரால் இந்நகரம் உண்டாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். இந்த ஊருக்கு விஷ்ணு செஞ்சி என்றும் பெயர் கூறப் படுகிறது. இவ்வூரில் உள்ள அரங்கநாதர் கோயில், பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில் ஆகும். இது முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட முன் மண்டபமும் அதற்குப் பின்னால் திருநிலையறையும் அதில் அனந்த சயன மூர்த்தியின் உருவமும் உள்ளன. மகாபலிபுரத்துக் கடற்கரைக் கோயிலில் உள்ள அநந்தசயன மூர்த்தியைப் போல, இங்குள்ள அரங்கநாதரும் வலது கையை நீட்டித் தொங்க விட்டிருக்கிறார். இந்த உருவம், பிற்காலத்தில், சிற்பிகளால் செப்பனிடப்பட்டாதகத் தெரிகிறது. மண்டபத் தூண்களில், மகேந்திர வர்மன் தூண்களில் காண்ப்படுகிற தாமரைப்பூவின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தளவானூர்க் குகைக்கோயிலில் உள்ள துவாரபாலகர் போன்ற உருவங்களும் இங்கு உள்ளன. இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பல்லவக் குகைக்கோயில்களில் காணப்படுகிறபடி இக் கோயிலிலும் சாசன எழுத்துகள் இருக்கவேண்டும். ஆனால், இதுவரையில் இங்குச் சாசன எழுத்துக்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால் பாறைத் தூண்களுக்கு இடையில், பிற்காலத்தில் செங்கற் சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதினால், சாசன எழுத்துகள் மறைந்திருக் கக்கூடும், ஆர்க்கியாலஜி இலாகா, இங்குள்ள சாசன எழுத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தது. ஆனால், கோயில் அதிகாரிகள் செங்கல் சுவரை எடுத்துவிட மறுக்கிறபடியால் அவர்கள் முயற்சி நிறைவேறவில்லை. இங்குள்ள பிற்காலத்துச் சாசனம் ஒன்று “சகல புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு” 4வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் இக்கோயில் “திருப்பன்றிக்குன்று எம் பெருமான்” என்று கூறப்படுகிறது. எனவே, இக் குகைக்கோயில், ஆதிகாலத்தில் வராகப்பெருமாள் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்றும், பிற்காலத்திலே இக் கோயில் அரங்கநாதர் கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் நினைக்க வேண்டியதாக இருக்கிறது. சிங்கவரம் குகைக்கோயில், மகேந்திர வர்மன் தந்தையான சிம்மவிஷ்ணு காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பு:- முகம்மது துக்லாக் என்பவன் டெல்லியை அரசாண்ட காலத்தில் அவனுடைய சேனாதிபதி மாலிக்காபூர் என்பவனைத் தென்னாட்டிற்கு அனுப்பிக் கோயில்களைக் கொள்ளையிட்டான். தென்னாட்டுக் கோயில்களைக் கொள்ளையடித்த மாலிக்காபூர் ஸ்ரீரங்கத்துக்கு வந்து அக் கோயிலைக் கொள்ளையிட்டான். அவன் வருவதையறிந்த ஸ்ரீரங்கத்துக் கோயில் அதிகாரிகள் ஸ்ரீரங்கநாதரைக் கொண்டுவந்து, சிங்கவரம் குகைக்கோயிலில் வைத்துவிட்டார்கள் என்றும் அந்த ஸ்ரீரங்கநாதர் உருவந்தான் இப்போது இங்குள்ளது என்றும் கூறுகிறார்கள். இப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் உருவத்தை விட சிங்கவரத்தில் உள்ள அரங்கநாதர் உருவம் சற்றுப் பெரிது என்றும் கூறுகிறார்கள். கி. பி. 1327 - 28-ல் நடைபெற்ற மாலிக்கா பூர் கோயில் கொள்ளையைக் கோயில் ஒழுகு, குருபரம்பரைப் பிரபாவம் என்னும் வைணவநூல்கள் கூறுகின்றன. அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த பிள்ளை லோகாசார்யரும் வேதாந்த தேசிகரும் முறையே, தென்னாட்டிற்கும் மைசூர்நாட்டிற்கும் ஓடி மறைந்தார்கள் என்றும் அந்நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்க நாதரை முதலில் திருப்பதிக்குக் கொண்டுபோனார்கள் என்றும், பிறகு அங்கிருந்து செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும், பின்னர்ச் செஞ்சியை அரசாண்ட துபாகி கிருஷ்ணப்ப நாயகர் என்னும் அரசரின் குருவாக இருந்த நல்லான் சக்ரவர்த்தி சத்ரயாகம் சேஷாத்திரி மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு போகப்பட்டுக் கோபனார்யர் என்பவரால் பிரிதிஷ்டை செய்யப்பட்டது என்றும் அனந்தார்யர் இயற்றிய பிரபன்னாம்ருதம் என்னும் நூல் கூறுகிறது. தேசிங்குராசன் செஞ்சியை அரசாண்டகாலத்தில், சிங்கவரத்து அரங்கநாதரை உபாசக மூர்த்தியாகக் கொண்டிருந்தான் என்றும், கி. பி. 1714 இல் ஆர்க்காட்டு நவாபுடன் தேசிங்கு போரிட்டபோது, தேசிங்கு அரங்கநாதரிடம் போருக்குச் செல்ல உத்தரவு கேட்டார் என்றும், அரங்கநாதர், போருக்குப் போக வேண்டாம் என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டதாகவும் கதை கூறுவர் சுமார் 14 அடி நீளமுள்ள அரங்கநாதர் உருவம் தலையைத் திருப்பிக் கொண்டி ருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. 13 திருக்கழுக்குன்றத்துக் குகைக்கோயில் செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்பதுகல் தூரத்தில் திருக்கழுக்குன்றம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊரில் திருக்கழுக்குன்றம் என்னும் மலை இருக்கிறது. மலையின் உச்சியில் வேதகிரீசுவரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் போகவேண்டுமானால், மலையின் தெற்குப் புறத்திலிருந்து படி ஏறவேண்டும். இந்த மலைப்படியில் ஏறிச் சென்றால் பாதி வழியில் கிழக்கு மேற்காகப் பிரிந்து செல்கிறது. கிழக்கு வழியாகச் சென்றால் ஒரு பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயிலைக் காணலாம். இந்தக் குகைக்கோயிலை ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறுகிறார்கள். இந்தக் குகைக்கோயில், மலையுச்சியில் உள்ள வேதகிரி ஈசுவரர் கோயிலுக்கு ஐம்பதடி கீழே இருக்கிறது. இந்தக் குகைக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தரை மட்டத்திற்கு ஐந்து அடி உயரத்தில் இக் குகைக்கோயில் அமைந்திருப்பதினாலே, குகைக்குச் செல்லப் பாறையில் படிகள் அமைந்துள்ளன. படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய மண்டபமும் அதன் மத்தியில் ஒரு திருநிலையறையும் பாறையைக் குடைந் தமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த மண்டபத்தில் நீளம் 22 1/2 அடி, அகலம் 17 அடி, உயரம் 9 அடி. திருநிலையறையின் நீளம் 8 அடி, அகலம் 7 அடி. மண்டபத்தின் தரையைவிட மூன்று அடி உயரத்தில் திருநிலையறையின் தரை அமைந்திருப்பதனால் திருநிலையறையின் தரை அமைந்துள்ள அறையின் வாயிலில் துவாரபாலகர்களின் உருவங்கள் மகேந்திரன் காலத்து உருவ அமைப்புடன் காணப்படுகின்றன. இரண்டு கைகள் உள்ள இத் துவாரபாலகர் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மற்றொரு கையைப் பெரிய தண்டாயுதத்தின்மேல் தாங்கி நிற்கின்றனர். கருப்பக் கிருகத்தினுள்ளே பெரிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருக்கிறது. பூஜை நடைபெறுவது இல்லை. கருப்பககிருகத்திற்கு வெளிப்புறத்தில் மண்டபத்தின் இருகோடியில் தெற்குப்புறத்தில் பிரம்மனுடைய உருவமும் கிழக்குப் புறத்தில் திருமாலுடைய உருவமும் பாறைச் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு உருவங்களைத் தவிர, இந்த மண்டபத்தின் வடபுறச் சுவரிலும் தென்புறச் சுவரிலும் இரண்டு துவார பாலகர் உருவங்கள் ஒன்றையொன்று பார்த்தாற்போலப் பெரிய உருவத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பட்டுள்ளன. இவை, கருப்பக்கிருகத்துத் துவாரபாலகரைப் போலல்லாமல், கடவுளைப் போற்றுவதுபோல ஒரு கையை உயரத் தூக்கிக்கொண்டும் மற்றொரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டும் நிற்கின்றன. இங்குள்ள தூண்களுக்கு மேலே தூலம்போல் அமைந்துள்ள பாறையில் மகேந்திரவர்மனுடைய மகன் “வாதாபிகொண்ட நரசிம்மவர்ம” னுடைய சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சாசனம் எக்காரணத்தினாலோ முடிவுற எழுதப் பெறாமல் அரைகுறையாகக் காணப்படுகிறது. மகேந்திரவர்மன் குகைக்கோயில் அமைப்புப்படி காணப் படுகிற இந்தக் குகைக்கோயில், மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்டு அவன் மகன் முதல் நரசிம்மவர்மன் காலத்தில் முடிவு பெற்றது என்று கருதவேண்டியிருக்கிறது. நரசிம்மவர்மன் கி. பி. 642-இல் சாளுக்கிய அரசனின் தலைநகரமான வாதாவியை (பாதாமியை) வென்றுகொண்டான். நரசிம்மவர்மன் சேனைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிறுத்தொண்ட நாயனார் என்னும் அடியார் என்று தெரிகிறது. இந்த வாதாவிப் போரில் சிறுத்தொண்டரும் சென்று போர்செய்தார் என்று பெரியபுராணத்தில் அறியக்கிடக்கிறது. “ஈசனடி யார்க்கென்றும் இயல்பான பணிசெய்தே ஆசில்புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்காகப் பூசல்முனைக் களிறுகைத்துப் போர்வென்று பொரும்அரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார். மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.” (பெரிய. சிறுத்தொண்டர், 5,6) என்று கூறுகிறபடியினாலே, நரசிம்மவர்மன் வாதாவியை வென்ற போது அப் படையில் சிறுத்தொண்டரும் போர் புரிந்தார் என்று அறிந்து கொள்ளலாம். இந்தக் குகைச் சாசனத்திலே “வாதாவிகொண்ட நரசிம்மன்” பெயர் எழுதப்பட்டிருப்பதனாலே, அவருடைய தந்தையான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் இக்குகைக்கோயில் முற்றுப் பெறவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், இக் குகைக்கோயில், மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பெற்ற படியினாலும், மகேந்திரவர்மன் காலத்து மரபுப்படி அமைந்திருப்பதனாலும் இப் பகுதியில் சேர்க்க வேண்டிய தாயிற்று. கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் சதுரங்கப்பட்டினத்தில் இருந்து டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) சிலர் திருக்கழுக்குன்றத்தில் வந்து தங்கியிருந்தபோது, அவர்கள் தங்கள் பெயர்களை இக் குகையில் பல இடங்களிலும் செதுக்கிவைத்தார்கள். அப்பெயர்கள் இங்குப் பல இடங்களில் காணப்படுகின்றன. மலைமேல் உள்ள வேதகிரிஈசுவரர் கோவில் சாசனம் ஒன்று, மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு ஸ்கந்த சிஷ்யர் என்பவர் தானம் செய்திருந்ததையும், பிற்காலத்தில் நரசிம்மவர்மன் அந்தத் தானத்தை உறுதிப்படுத்தியதையும், இன்னும் பிற்காலத்தில் முதலாம் ராஜகேசரி வர்மன் ஆதித்தியன் அதனையே மீண்டும் உறுதிப்படுத்தி யதையும் கூறுகிறது.20 இதனால், இக் குகைக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கமூர்த்திக்கு மூலஸ்தானத்துப் பெருமான் எனும் பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. 14. திருக்கோகர்ணத்துக் குகைக்கோயில் புதுக்கோட்டை ஆலங்குடித் தாலுகாவில் திருக்கோகர்ணம் இருக்கிறது. இங்குள்ள பாறையில் குகைக்கோயில் அமைக்கப் பட்டிருக்கிறது. இது சித்தன்னவாசல் குகைக்கோயிலைப் போன்றது. திருநிலையறையில் சிவலிங்கம் இருக்கிறது. மண்டபச் சுவரின் ஒருபுறத்தில் புடைப்புச் சிற்பமாக21 பிள்ளையாரின் (கணேசர்) பெரிய உருவமும், இன்னொருபுறத்தில் கங்காதரமூர்த்தியின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் மகேந்திரவர்மன் காலத்துத் தூண்கள் போன்றுள்ளன. 22இக்குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டதென்று கருதப்படுகிறது. புதுக்கோட்டையும், மகேந்திர வர்மன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது இதனால் தெரிகிறது. 15. மகாபலிபுரத்துக் குகைக்கோயில்கள் மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரம் சென்னைப்பட்டினத்திற்கு தெற்கே நாற்பது மைலில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல்மல்லை என்னும் பெயரு டனிருந்த இந்தப் பட்டினம் பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. மல்லை அல்லது கடல்மல்லை என்னும் பழைய பெயரை மாற்றி, மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இதற்குச் சூட்டி மாமல்லபுரம் என்று பெயரிட்டான். மாமல்லபுரம் பிற்காலத்தில் மகாபலிபுரம் என்று வழங்கப்பட்டது. மாமல்லபுரத்திலே பல குகைக்கோயில்களும், “இரதக்” கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை நரசிம்ம வர்மன் (மாமல்லன்) காலத்திலும் அவன் பேரனான பரமேசுவரவர்மன் காலத்திலும் அமைக்கப்பட்டவை. ஆனால், “அர்ச்சுனன் தபசு” என்று கூறப்படுகிற சிற்பப்பாறையும் வேறு மூன்று குகைக்கோயில்களும் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டன. இவற்றில் “அர்ச்சுனன் தபசு” என்று தவறாகக் கூறப்படுகிற சகரசக்ர வர்த்தி சிற்பத்தைப்பற்றி மகேந்திரன் காலத்துச் சிற்பங்கள் என்னும் தலைப்பில் கூறியுள்ளோம். இங்கு மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மன் அமைத்த மூன்று குகைக்கோயில்களை மட்டும் ஆராய்வோம். I. கோடிக்கால் மண்டபம் கோடிக்கால் மண்டபம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற குகைக்கோயில், மகாபலிபுரத்துப் பாறைக் குன்றின்மேல் அமைக்கப் பட்டுள்ளது. இது மேற்குப் பார்த்த குகைக்கோயில். இதில் சாசனங்கள் காணப்படவில்லை. இது கொற்றவை(துர்க்கை)க்காக அமைக்கப் பட்டது. மகேந்திரவாடிக் குகைக்கோயிலைப் போன்ற அமைப்பு டையது. முன்மண்டபத்தையும் அதற்குள் திருநிலையறை யையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் நீளம் 21 அடி 10 அங்குலம்; அகலம் 8 அடி; உயரம் 8 அடி 3 அங்குலம். மண்டபத்தின் முன்புறத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. அவை மேலும் கீழும் சதுரமாகவும் நடுப்பகுதிப் பாகம் எட்டுப்பட்டையுடையதாகவும் உள்ளன. கொற்றவைகோயில் ஆகையினால் கருப்பக்கிருகத்தின் வாயிற்புறத்தில் பெண்துவார பாலகர்களின் உருவங்கள் காணப்படு கின்றன. இவை மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்களைப் போலவே எதிர்ப்பார்வையில் அமைந்துள்ளன.23 மண்டபத்தின் தரைமட்டத்துக்குமேல் இரண்டடி உயரத்தில் திருநிலையறை அமைந்திருப்பதனால், அதற்குள் போக இரண்டு படிகள் அமைந்துள்ளன. இவற்றில் முதல் படி அரைவட்டமாக அமைந்திருக்கிறது. திருநிலையறையிலும் மண்டபத்தின் வெளிப் புறத்திலும் முற்காலத்தில் மரக்கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதற்கு அடையாளமாக சிறுகுழிகள் பாறையில் காணப்படு கின்றன. திருநிலையறையில் இப்போது துர்க்கை உருவம் இல்லை. ஆயினும் முற்காலத்தில் துர்க்கையின் உருவம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது என்பதில் ஐயம் இல்லை. இப்போது இவ்வூர்ப்புறத்தில் சப்தமாதர்களுடன் வைக்கப்பட்டிருக்கிற சிதைந்துள்ள கொற்றவையின் உருவந்தான் முன்பு இக் குகைக் கோயிலில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுவது தவறாகாது. ‘இவ் வுருவத்தைப் பற்றிச் சிற்பங்கள் என்னும் பகுதியில் காண்க. II. பஞ்சமூர்த்தி குகைக்கோயில் மேலே சொன்ன கோடிக்கால் மண்டபம் என்னும் துர்க்கை குகைக்கோயிலுக்குத் தெற்கே ஒரு குகைக் கோயில் உண்டு. இதில் ஐந்து திருநிலையறைகள் காணப்படுவதால் பஞ்சமூர்த்தி குகைக் கோயில் என்று பெயர் கொடுத்தோம். இதன் பழைய பெயர் தெரியவில்லை. இங்குச் சாசன எழுத்துக்கள் காணப்படவில்லை. இந்தக் குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டது என்பதை இதன் அமைப்புகளைக் கொண்டு உறுதிப் படுத்தலாம். இதுவும் மேற்குப் பார்த்த கோயிலே. இதன் அமைப்பு பல்லாவரத்துக் குகைக்கோயிலைப் போன்றதே. இதிலும் ஐந்து திருநிலையறைகள் உள்ளன. நடுவில் உள்ளது சற்றுப்பெரியது. திருநிலையறைக்குச் செல்வதற்குப் படிகள் உள்ளன. ஆனால், இவை செம்மையாக அமைக்கப்படாமல் கரடுமுரடாக உள்ளன. கருப்பக்கிருகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிவலிங்கம் அமைந்திருந்தது என்பதற்கு அடையாள மாக ஒவ்வோர் அறையிலும் மூன்றங்குல ஆழமுள்ள சிறு குழிகள் காணப்படுகின்றன. திருநிலையறை வாயில்களில் துவாரபாலகர் உருவங்கள் அமைந்துள்ளன. இவை யாவும் மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்களின் உருவங்களைப் போலவே காணப் படுகின்றன. முன்மண்டபம் 35 அடி 2 அங்குல நீளமும், 12 1/2அடி அகலமும் உடையது. முன்மண்டபத்திலே இரண்டுவரிசையுள்ள நான்கு தூண்கள் உள்ளன. முன்வரிசையில் உள்ள நான்கு தூண்களும் வழக்கம்போல் மேற்புறமும் அடிப்புறமும் சதுரமாகவும் மத்தியில் எண்கோணப் பட்டையாகவும் அமைந்துள்ளன. உள்வரிசைத் தூண்கள் பட்டையாக இல்லாமல் உருண்டும் அடிமுதல் நுனிவரையில் குழைவான பட்டைகள் உடையனவாகவும் இடையிடையே கொடிப்பட்டைகளால் கட்டப்பட்டும் மிக அழகாகக் காணப் படுகின்றன. இந்தக் குகைக்கோயிலும் முற்காலத்தில் வழிபடப்பட்டு வந்தது எனத் தோன்றுகிறது. பிற்காலத்திலே நிகழ்ந்த சைவ வைணவச் சச்சரவுக் காலத்தில் இக் குகைக் கோயிலிலிருந்த சிவலிங்கங்கள் அப்புறப்படுத்தப்பட்டன போலும். ஏனென்றால் மண்டபத்துக்கு வெளியேயுள்ள பாறைச்சுவரில் பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட வைணவர்களின் சங்கு சக்கரங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. III. தர்மராச மண்டபம் இது கலங்கரை விளக்கம் கட்டியுள்ள பாறையின் தென் கோடியில் இருக்கிறது. இக் குகைக் கோயில், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மண்டகப்பட்டு என்னும் இடத்தில் மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயிலின் அமைப்புப் போன்றது. கிழக்குப் பார்த்த குகைக்கோயில், இதன் மண்டபத்தில் நீளம் இருபத்தோரடி இரண்டங் குலம். அகலம் ஏறக்குறைய பதினான்கரை அடி மண்டபத்துக்குப் பின்னால் மூன்று திருநிலையறைகள் அமைந்துள்ளன. நடுவிலுள்ள திருநிலையறை மற்ற இரண்டையும் விடச் சற்றுப் பெரியது. மண்டபத் தரையைவிட திருநிலையறைகளின் தரை இரண்டடி உயரம் உள்ளது. ஆகவே, அறைகளுக்குள் செல்ல மும்மூன்று படிகள் அமைக்கப் பட்டுள்ளன. 24 சைவ வைணவ சமயக்கலகங்கள் நடைபெற்ற பிற்காலத்திலே, வைணவ சமயத்தவர் இக் குகைக் கோயிலைக் கைப்பற்றி, இதிலிருந்த திருமேனிகளை அப்புறப்படுத்தி, திருநிலையறை வாயில்களில் இருந்த துவாரபாலகர்களின் உருவங்களை உருத்தெரியாமல் செதுக்கிச் சிதைத்து அழித்து, தூண்களில் சங்கு சக்கர உருவத்தை அமைத்து வைத்து, இதற்கு தர்மராச மண்டபம் என்னும் புதிய பெயரையும் கொடுத்தார்கள். இந்தப் புதிய பெயர் தான் இப்போதும் வழங்கி வருகிறது. இந்தக் குகைக்கோயிலைப்பற்றி இரண்டுபட்ட கருத்துகள் உள்ளன. அவை என்னவென்றால்:- இந்தக் குகையின் தூண்கள் முதலிய அமைப்புக்கள் இது மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில் என்று தெரிவிக்கிறபடியால் இது மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோயில் என்பது ஒரு கொள்கை, இக் குகைக் கோயிலின் மண்டபச் சுவரில் பதினொரு வடமொழிச் சுலோகங்கள் பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. இந்தச் சாசனத்தின்படி இக் கோயில் பெயர் அத்யந்தகாம பல்லவேஸ்வரக் கிருகம் என்பது. அத்யந்தகாமன் என்னும் பெயர் மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மனுக்கும் அவன் பேரனான பரமேசுவரவர்மனுக்கும் உண்டு. ஆகவே, இந்தக் குகைக் கோயில், நரசிம்மவர்மன் காலத்தி லாவது அவனுடைய பேரன் பரமேசுவர்மன் காலத்திலாவது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தச் சாசன எழுத்து நரசிம்ம வர்மன் காலத்து எழுத்தாக இல்லாமல் பரமேசுவர வர்மன் காலத்து எழுத்துப்போல இருப்பதால் இக் குகைக் கோயிலைப் பரமேசுவர வர்மன் அமைத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு கருத்து. சாசன எழுத்துக்களின் அமைப்பை மட்டும் கொண்டு காலத்தை முடிவு செய்வது தவறான முறையென்றும், இதனுடன் மற்ற ஆதாரங்களையும் ஒத்திட்டுப் பார்த்துக் காலத்தை முடிவு செய்யவேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். எழுத்தின் அமைப்பு அத்யந்தகாமன் காலத்ததாக இருந்தாலும் குகையின் தூண்கள் முதலிய அமைப்பு முதல் மகேந்திரவர்மன் காலத்தன வாகத் தோன்றுகின்றன. மேலும், அத்யந்தகாம பல்லவேசுவரம் என்னும் பெயர் வேறு இரண்டு கோயில்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மகாபலிபுரத்திலுள்ள “கணேச ரதம்” என்னும் பெயர் வழங்குகிற பாறைக் கோயிலுக்கும் அத்யந்த காம பல்லவேசுவரம் என்னும் பெயர் வழங்கியது என்பது அங்குள்ள சாசனத்தினால் தெரிகிறது. அங்குள்ள சாசனம், இந்தக் குகைக்கோயிலில் எழுதப்பட்டுள்ள அதே எழுத்தினால் அதே சுலோகங்களைக் கூறுகின்றன. “தர்மராச ரதம்” என்று பெயர் கூறப்படுகிற பாறைக் கோயிலும் அத்யந்த காம பல்லவேசுவரக்ருகம் என்னும் பெயர் இதே பல்லவகிரந்த எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் கருதும் போது, நரசிம்மவர்மன் காலத்திற்குப் பிறகு ஒரு பல்லவ அரசனால் இந்தச் சாசனங்கள் மேலே கூறிய இந்த மூன்று இடங்களிலும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். “தர்மராச மண்டபம்” என்று பெயர் கூறப்படுகிற இந்தக் குகைக் கோயில், இங்குள்ள சாசனம் கூறுகிறபடி தனிப்பட்ட சிவன் கோயில் அன்று. மும்மூர்த்திகளுக்காக ஏற்பட்ட மும்மூர்த்திக் கோயில் என்பது இதிலுள்ள திருநிலையறைகளினால் அறியலாம். எனவே, இங்குள்ள சாசனத்தினால் காணப்படுகிறபடி இது அத்யந்த காம பல்லவேசு வரக்கிருகம், அஃதாவது சிவனுக்காகமட்டும் ஏற்பட்ட தனிக்கோயில் அன்று. அன்றியும், இக் குகைக்கோயிலின் அமைப்பு தூண்களின் அமைப்பும் பிற்காலத்துப் பல்லவர் குகைக்கோயில் அமைப்புப்போல் இல்லாமல் மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில் அமைப் பையே ஒத்திருக்கின்றன. ஆகவே, இக் குகைக்கோயில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இங்குக் காணப்படுகிற வடமொழிச் சாசன சுலோகம் பிற்காலத்தில் எழுதப் பட்டது.26 (இந்தச் சாசனம், கணேச ரதத்தில் எழுதப்பட்டுள்ள அதே சாசன சுலோகத்தின் பிரதியாகும்.) இந்தக் குகைக் கோயிலில் பிற்காலத்தில் எழுதப்பட்ட இச் சாசனத்தின் கருத்து இது:- 1. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முச்செயல்களுக்கும் காரணமாயும் ஆதிநாயகராயும் இருக்கிற காமாந்தகமூர்த்தி மானிடரின் அத்யந்தகாமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றி யருள்வாராக. 2. மாயைகளோடு கலந்திருக்கும் மாயையில்லாதவராயும் பல குணங்களைக் கொண்டிருந்தும் குணங்கள் இல்லாதராயும் தமக்குத் தாமே காரணராயிருப்பவரும் எல்லாருக்கும் தலைவராக இருப்ப வரும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாக இருப்ப வரும் ஆகிய அவருடைய வெற்றி வாழ்வதாக. 3, கயிலாய மலையையும் அதைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால்விரலால் அழுத்திய, அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவபெருமானை ஸ்ரீநிதி தமது தலையில் தாங்கியிருக்கிறார். 4. நிலமகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்திலே பவனை (சிவனை) வைத்துக்கொண்டு இருக்கிற ஸ்ரீபரன் வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக. 5. பகை மன்னரின் நாடுகளைத் தன் அடிப்படுத்தி கணஜயன் என்னும் பெயர்படைத்த அத்யந்தகாம அரசன், அம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான். 6. காற்றும் தீயுமாகவும் பீமனும் சிவனுமாகவும் சங்கரனும் காமாந்தகனுமாகவும் உள்ள அவன் வெற்றயுடன் விளங்குவானாக. 7. மகாராஜனுக்கும் (குபேரனுக்கும்) மகாராஜனும், ஆனால், குரூபியாயில்லாதவனும், மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன் காக்கும் சக்கரவர்த்தியும், சந்திரனைப் போன்றவனும், ஆனால், நலிந்த உடம்பில்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக. 8, 9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப் போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனும் ஆகிய அத்யந்தகாமனுடைய, தாமரை மலர்கள் அலரப் பெற்று நீராடுவதற்கு ஏற்ற நறுநீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தினமணி முடியினாலும் விளங்குகின்ற திருமுடியில் சங்கரன் எழுந்தருளியிருக்கிறான். 10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும், சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும், தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான். 11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறு மடங்கு சபிக்கத் தக்கவர் ஆவர். அத்யந்தகாம பல்லவேஸ்வரக் கிருகம். அடிக்குறிப்புகள் 1. முகப்புப் படம் 1 பார்க்க. 2. கர்நாடக நவாப்புகள் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் இக் குகையை வெடிமருந்துக் கிடங்காக உபயோகித்தார்கள் என்று தெரிகிறது. 3. முகப்புப் படம் 1 பார்க்க. 4. S. I. I. Vol. I. No. 33. Page. 29. Nos. 777, 778 Top List. Vol. III. 5. இந்தச் செய்யுள், லிங்கானுலிங்கி, விபக்ஷம் முதலான தர்க்கப் பரிபாஷைச் சொற்களை அமைத்து இரண்டு பொருள் படும்படி சிலேடையாக அமைந்துள்ளது. இந்தச் சாசனத்தைக் கொண்டு, இக் குகைக்கோயிலை அமைத்த குணபரன் என்னும் அரசன் சமணமதத்திலிருந்து சைவமதத்திற்கு வந்து இலிங்கவழிபாடு செய்தான் என்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். 6. இதில் கூறப்படுகிற சத்தியசந்தன் என்னும் பெயர் மகேந்திரவர்மனுடைய சிறப்புப்பெயர். இந்த அரசனுடைய உருவச்சிலை இங்கு அமைக்கப்பட்டிருந்திருந்ததென்பது இச்செய்யுளினால் அறியப்படுகிறது. 7. S.I.I. Vol. I. No. 34. Page 30. 8. ஸ்தானு - அழிவில்லாதவன், சிவன், ஸ்தானுவை ஸ்தானுவாக்கி என்பதற்கு அழியாப் பொருளை அழியாப் பொருளாகச் செய்து என்பது பொருள். 9. இதனால் குணபரனுடைய (மகேந்திரனுடைய) உருவமும் இக் கோயிலில் அமைக்கப் பட்டிருந்ததென்பது தெரிகிறது. 10. S. I. I. Vol. XII. No. 8. 11. S. I. I. Vol. XII. No. 8. 12. வல்லத்துக் குகைக்கோயிலை அமைத்த கந்தசேனன் (ஸ்கந்தசேனன்) என்பவரும், திருக்கழுக்குன்றத்து மலையில் வேதகிரீசுவார் கோயிலில் உள்ள சாசனம் கூறுகிற ஸ்கந்த சிஷ்யன் என்பவரும் ஒருவரே என்று கருதுகின்றனர். (S. I. I. Vol. XII. Introduction Page 2, 3 and 9) இந்தக் கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. இருவரும் வெவ்வேறு ஆட்களே. 13. முகப்புப் படம் 2 பார்க்க. 14. Ep. Ind. Vol. XVII. P: 14. 15. முகப்புப் படம் 3 பார்க்க. 16. முகப்புப் படம் 4 பார்க்க. 17. 284 of 1916. Epi. Rep. 1916; P. 114 Para 6. 18. 295 of 1912, Epi. Rep. 1913. Page 84. Para 2. 19. Epi. Rep. 1915, Page. 84. 20. முகப்புப் படம் 5 பார்க்க. 21. Epigraphia Indica, Vol. III. Pages, 277-280. 22. Bas relief. 23. M. P. S. Vol. II. Part II, Pages, 980-81 24. முகப்புப் படம் 6 பார்க்க. 25. முகப்புப் படம் 7 பார்க்க. 26. இந்தச் சாசனம் S. I. I. Vol. I. P. 6-இல் அச்சிடப்பட்டிருக்கிறது. கோயில்கள்* மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்துக்கட்டிடக் கலையைப் பற்றி ஆராய்வோம். கட்டிடக்கலை என்று கூறுவது கோயில் கட்டிடக்கலையையே. கி. பி. 600-க்கு முன்னே, கோயில் கட்டிடங்கள் மரத்தினாலும், செங்கல் சுண்ணாம்பு முதலியவற்றினாலும் அமைக்கப்பட்டன. கி.பி. 700 க்குப் பிறகு, கோயில் கட்டிடங்கள் கருங்கற்களினால் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. அஃதாவது, கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. கி. பி. 600-க்கும் 700-க்கும் இடைப்பட்ட காலத்திலே, இந்த இரண்டு வகையிலும் சேராத புதியமாதிரிக் கோயில்கள் அமைக்கப்பட்டன அவை குகைக்கோயில்களும் பாறைக்கோயில் களும் ஆகும். குகைக்கோயில் என்பது, பாறையைக் குடைந்து முன்மண்டபத்தையும் கருவறையையும் அமைப்பது. குiகோயில் களை முதன்முதலாக அமைத்தவன் மாமல்லனுடைய தந்தையான முதலாம் மகேந்திரவர்மன். மகேந்திரவர்மனைப் பின்பற்றி அவன் மகனாக மாமல்லனும் சில குகைக்கோயில்களை அமைத்தான். அக் குகைக் கோயில், இப்போது நாம் அறிந்த வரையில், திருச்சிராப்பள்ளி மலையில் ஒன்றும், மாமல்லபுரத்தில் உள்ள மும்மூர்த்தி குகைக்கோயில், மகிஷாசுர மர்த்தினி குகைக் கோயில், வராகப்பெருமாள் மண்டபம், வராசுப் பெருமாள் குகைக்கோயில், இராமாநுசர் மண்டபம் எனப்படும் குகைக்கோயில்களும் ஆகும். இந்தக் குகைக்கோயில்கள் அல்லாமல், நரசிம்மவர்மன் இரதங்கள் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற பாறைக் கோயில் களையும் புத்தம் புதிதாக அமைத்தான். நரசிம்மவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் பாறைக் கோயில்களையும் இங்கு ஆராய்வோம். முதலில் குகைக்கோயில் களைப் பார்ப்போம். குகைக்கோயில்கள் திரிமூர்த்தி குiகோயில் : மகாபலிபுரத்தில் உள்ள இது, ஒரே கற்பாறையில் மேற்குப்பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் இக் குகைக்கோயில் அமைக்கப்பட்டது. ஆகவே, மும்மூர்த்தி கோயில் என்றும் திரிமூர்த்தி கோயில் என்றும் கூறப்படுகிறது. வடக்குப்புறத்தில் பிரமனுக்கும் தெற்குப்புறத்தில் திருமாலுக்கும் நடுவில் சிபெருமானுக்கும் இதில் கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைச் கோயிலின் கருவறைகள், தரைமட்டத்திற்கு மேலே மூன்றடி உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதனால், உள்ளே செல்ல படிகள் அமைத்துள்ளன. பிரமாவின் கருவறை வாயிற் படியின்மேலே, பல்லவக்கிரந்த எழுத்தினாலே மல்ல என்னும் சொற்கள் எழுதப்பட்டிருக்கிறபடியினால் இக்குகைக்கோயிலை அமைத்தவன் மாமல்லனான நரசிம்மவர்மன் என்பது தெரிகிறது.1 ஏனைய குகைக்கோயில்களுக்கு உள்ளதுபோல் இதற்கு முகமண்டபம் இல்லை. கோயிலின் மேற்புறத்தின் முகப்பில், பல்லவர்கால முறைப்படி, கர்ணகூடு பஞ்சரம் சாலை முதலியவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்ப உருவங்களைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம். இக்குகைக்கோயிலைச் சேர்ந்தாற் போல, இதன் தெற்குப்புறத்தில், கற்பாறையிலே கொற்றவையின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றியும் பின்னர்க் கூறுவோம். வராகமண்டபம்: இந்த மண்டபமும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. மேற்குப்பார்த்த இந்த மண்டபத்தைச் சிங்கத்தூண்கள் தாங்குகின்றன. இந்த மண்டபம் 20 1/2 அடி நீளமும் 8 1/2 அடி அகலமும் 10 1/2 அடி உயரமும் உடையது. மண்டபத்தின் பின்புறத்தில், திருவுண்ணாழிகை அமைந்திருக்கிறது. திருவுண்ணா ழிகை வாயிற்புறத்தில் துவார பாலகர் உருவங்கள் அமைத்திருக் கின்றன. பாறைச் சுவர்களில், வராகப்பெருமாள், கஜலஷ்மி, கொற்றவை, திரிவிக்ரமமூர்த்தி இவர்களின் உருவங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேல் விதானத்தில் தாமரைப் பூக்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களைப் பற்றி இந்நூலின் மற்றோர் இடத்தில் காண்க. கருவறையில் இப்போது மூர்த்தி இல்லை. ஆகையால் இந்தக்கோயில் எந்தக் கடவுளுக்கு அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், வைணவ சம்பந்தமான சிற்பங்கள் இங்குக் காணப்படுவதனாலே இக்கோயில் திருமாலுக்கு அமைக்கப்பட்ட தென்று கருதலாம். இராமாநுச மண்டபம் : “இராமாநுச மண்டபம்” என்று இப்போது பெயர் கூறப்படுகிற இக் குகைக்கோயில், மாமல்ல புரத்துக் கலங்கரை விளக்கு2 உத்தியோகஸ்தரின் விடுதிக்குப் பின்புறத்தில் இருக்கிறது. வைணவ ஆசாரியரான இராமாநுசர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே, மாமல்லன் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட இக் குகைக் கோயிலுக்கு, இராமாதுச மண்டபம் என்று பிற்காலத்து வைணவர்கள் பெயர் சூட்டியிருப்பது வியப்பாக இருக்கிறது. கிழக்குப்பார்த்தபடி ஒரே பெரும் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட இக் குகைக்கோயில் ஒரு பெரிய முகமண்டபத் தையும் அதற்குப்பின்னால் மூன்று கருவறைகளையும் உடையது. முகமண்டபத்தின் தூண்களை நிமிர்ந்து உட்கார்ந்துள்ள சிங்கங்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சிங்கங்களின் கம்பீரமும் அழகும் இறுமாந்து உட்கார்ந்துள்ள நிலையும் இந்த மண்டபத்திற்கு அழகைத்தருகின்றன. இக்கோயிலின் முகமண்டபத்தின் இரண்டு கோடியிலும் இளங்கோயில் என்னும் கோயிலின் சிற்ப அமைப்புக்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இளங்கோயில் உருவம், மாமல்லபுரத்திலேயே அர்ச்சுன தபசு என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற சகரசாகரர் சிற்ப உருவத்திலும் காணப்படுகிறது. இக்குகைக்கோயில் தனித்தனியாக இருந்த மூன்று கருவறை களும் பிற்காலத்தில் சமய வெறியர்களினால் சிதைக்கப் பட்டுள்ளன. அன்றியும் இங்கிருந்த சிற்ப உருவங்களை உளிகொண்டு செதுக்கி அழித்துவிட்டனர். கருவறைகளில் இருந்த சிவலிங்கங்களைப் பெயர்த்தெடுத்துப் போட்டுவிட்டனர். இங்கிருந்து அழிக்கப்பட்ட சிற்பங்களைப்பற்றி இந் நூலில் வேறு இடத்தில் காண்க. இங்குள்ள முகமண்டபத்தின் தரைப்பாறையில் அழகு வாய்ந்த பல்லவக்கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் சுலோகம் ஒன்று காணப்படுகிறது. இது தருமராஜமண்டபத்திலும், கணேச இரதத்திலும் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சுலோகங்களின் கடைசி சுலோகமாகக் காணப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் கருத்து இது:- “தீயவழியில் செல்லாமல் தடுத்தருளுகிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனத்தையுடையவர்கள் ஆறுமடங்கு சபிக்கத்தக்கவர் ஆவர்.”3 இந்தச் சுலோகம், இங்கிருந்த சிற்பங்களை அழித்து, சிவலிங்கங்களைப் பெயர்த்தெறிந்து, கருவறைகளைச் சிதைத்து அழிவு செய்தவர்களைச் சபித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்று கிறதல்லவா? மகிஷாசுரமண்டபம் மகிஷாசுரமண்டபம் என்றுபெயர் கூறப்படுகிற இக்கோயிலை மாமல்லபுரத்துக் கிராமத்தார் கயிலாசநாதர் கோயில் என்று கூறுகிறார்கள். மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்குக்கு அருகில் இருக்கிற இக் குகைக்கோயில் வெகு அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. இதன் சில பகுதிகள் முற்றுப்பெற அமைக்கப் படாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. முற்றுப்பெற்ற பகுதிகள் வெகு அழகாகக் கண்ணுக்கினிய காட்சியாக இருக்கின்றன. தரைமட்டத்துக்கு நான்குஅடி உயரத்துக்குமேலே அமைக்கப் பட்டுள்ள இக்குகைக்கோயில், முகமண்டபத்தையும் அதற்குப் பின்னால் மூன்று கருவறைகளையும் கொண்டிருக்கிறது. முகமண்டபம் 32 அடி நீளமும் 15 அடி அகலமும் 121/2 அடி உயரமும் உள்ளது. மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் உருண்டு திரண்டு பதினாறு பட்டையுடையனவாக உள்ளன. இத் தூண்களில் ஒன்றை எடுத்துக்கொண்டுபோய், இதற்குப் பின்புறத்தில் இருக்கிற வராகப்பெருமாள் குகைக்கோயிலில் பிற்காலத்தவர் யாரோ வைத்திருக்கிறார்கள். மற்றொரு தூணையும் பெயர்த்துக் கொண்டு போக முயற்சி செய்ததை அத்தூணின் உச்சியில் உளியினால்செதுக்கி யிருப்பது கொண்டு அறியலாம். ஆனால் நற்காலமாக அத்தூணை எடுக்கமுடியவில்லை. பெயர்த்துக் கொண்டுபோகப் பட்ட தூண் இருந்த இடத்தில் இப்போது, ஆர்க்கியாலஜி இலாகாவால் விகாரமான ஒரு நீண்ட கல்தூண் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தின் பின்புறத்தில் மூன்று கருவறைகள் உள்ளன. நடுவில் உள்ள கருவறை நன்கு அமைந்து முன்பக்கத்தில் சிறு மண்டபத்தைக் கொண்டிருக்கிறது. இந்த மண்டபத்தை இரண்டு அழகிய சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்தச் சிங்கத் தூண்கள் பார்வைக்கு இனிய காட்சியாக இருக்கின்றன. கருவறையின் தரையில் சிவலிங்கம் இருந்த துளையொன்று காணப்படுகிறது. இந்தக் கருவறைக்கு இருபுறத்திலும் இரண்டு கருவறைகள் சற்று உள்ளடங்கியுள்ளன. இவை முற்றுப்பெறாமல் அரைகுறையாக உள்ளன. நடுகருவறையில் பின்புறச்சுவரில் சோமஸ் கந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கிறது. முகமண்டபத்தின் தென்புற வடபுறச் சுவர்களில் பாறையைச் செதுக்கியமைக்கப்பட்ட இரண்டு சிற்ப உருவக்காட்சிகள், காண்பவரின் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து அழகிய இனிய காட்சியாக விளங்குகின்றன. இவற்றில் தெற்கிலிருப்பது அநந்தசயன மூர்த்தி; வடக்கிலிருப்பது கொற்றவையின் மகிஷாசுரப்போர். இச் சிற்பக்கலைகளைப்பற்றி இந் நூலில் வேறு இடத்தில் காண்க. வராகப்பெருமான் குகைக்கோயில் மாகபலிபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துக் கோயில்களில் இப்போதும் வழிபாட்டில் உள்ள கோயில் இவ் வராகப்பெருமாள் குகைக்கோயில் ஒன்றே. இக் குகைக் கோயிலை இடைக்காலத்தில் வைணவர்கள் கைப்பற்றிக் கொண்டு இன்றும் வழிபாடுசெய்து வருகிறார்கள். இக் குகைக்கோயில் இருப்பது பலருக்குத் தெரியாது. வழி பாட்டில் உள்ளபடியினால், “இந்துக்களை”த் தவிர மற்றவர்கள் இதனுள் செல்வதில்லை. இக் குகைக்கோயிலில், முதலாம் மகேந்திரவர்மன் உருவமும் அவன் தந்தையான சிம்மவிஷ்ணுவின் உருவமும் பாறைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டிருப்பதனாலே, இக் குகைக் கோயில் சிறப்புடையது. இது வராகமண்டபத்தைப் போன்ற அமைப்புடையது. பெரிய மண்டபமும், மண்டபத்தின் பின்புறச் சுவரின் மத்தியில் சிறிய மாடம்போன்ற கருவறையும் உடையது. மண்டபத்தை இரண்டு வரிசைத்தூண்கள் தாங்குகின்றன. முன் வரிசையில் உள்ளவை சிங்கத் தூண்கள். பின் வரிசையில் உள்ளவை சாதாரணத் தூண்கள். இக் குகைக் கோயில் மண்டபம் 33 அடி நீளமும் 14 அடி அகலமும் 11 1/2 அடி உயரமும் உள்ளது. ஒரே பாறைக்கல்லைக் குடைந்து அமைக்கப்பட்ட இக் குகைக்கோயில் மேற்குப் புறம் பார்த்திருக்கிறது. வராக மண்டபம்போன்றே இக் குகைக்கோயிலும் முன்புறம் அடைபடாமல் திறந்த வெளியாக இருந்தது. ஆனால், வைணவர்கள் கைப்பற்றிக் கொண்ட பிற்காலத்தில் (விஜயநகர அரசர் காலத்தில்) இக் கோயிலின் முன்புறத்தைக் கற்களினால் அடைத்து மூடி உள்ளே செல்ல சிறு கதவு ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகையினாலே இப்போது இக் குகைக்கோயிலில் இருள் சூழ்ந்திருக்கிறது. மண்டபத்தின் பின்புறச்சுவரின் மத்தியில் உள்ள சிறிய கருவறையில் வராகப்பெருமாள் திருவுருவம் சுதை மூர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக் கருவறை, வராக மண்டபத்தின் கருவறையைப் போன்று சற்று முன் வளர்ந்திருக்கிறது. கருவறை தரைமட்டத்திற்கு மேல் இரண்டடி உயரத்தில் இருக்கிறது. வராகப்பெருமாள் கருவறைக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் சுவரில் பெரிய உருவங்களாக கஜலக்குமி, கொற்றவை முதலிய உருவங்கள் சிற்பவுருமாகச் செய்யப்பட்டுள்ளன. மண்டபத்தின் வடபுறச் சுவரில், மாமல்லனுடைய பாட்டனான சிம்மவிஷ்ணுவின் உருவமும் தென்புறச் சுவரில், மாமல்லனுடைய தந்தையான மகேந்திரவர்மன் உருவமும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி குகைக்கோயில் திருச்சிராப்பள்ளி மலையிலே இரண்டு குகைக்கோயில்கள் இருக்கின்றன. அவை மேல் குகைக்கோயில் கீழ்க் குகைக்கோயில் என்பவை. மேல் குகைக்கோயில், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தகப்பனான மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. கீழ்க் குகைக்கோயில், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டது. ஆனால், இக் குகைக்கோயில் முழுவதும் சரிவர அமைக்கப் படாமல் அரைகுறையாக விடப்பட்டிருக்கிறது. 2. பாறைக் கோயில்கள் மாமல்லன் நரசிம்மவர்மனுடைய குகைக்கோயில்களைப் பற்றி இதுகாறும் கூறினோம். இனி, அவன் அமைத்த இரதங்கள் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற பாறைக் கோயில்களைப் பற்றி ஆராய்வோம். மாமல்லபுரத்தில் ஒன்பது பாறைக் கோயில்கள் உள்ளன. அவையாவன:- பஞ்சபாண்டவர் இரதம் என்று தவறாகக் கூறப்படுகிற ஐந்து பாறைக்கோயில்களும், கணேச இரதம் என்று கூறப்படுகிற அத்தியந்தகாம பல்லவேசுரக்கோயிலும், ஊருக்கு அருகில் பக்கிங்காம் கால்வாய்ப் பகுதியில் வலயங்குட்டைக்கு அருகில் இருக்கிற மூன்று பாறைக் கோயில்களும் ஆகும். இந்தப் பாறைக்கோயிலகள் எல்லாம் மாமல்லன் காலத்திலே அமைக்கப் பட்டவை. இவைகளில் திரௌபதை இரதம் என்னும் கொற்றவைக் கோயிலும், கணேசர் இரதம் என்னும் அத்யந்தகாம ஈசுவரக் கோயிலும் முழுக் கோயில்கள் ஆகும். அஃதாவது, கருவறையும் கூட கோஷ்ட பஞ்சரங்களும் விமானமும் ஆகிய கோயிலின் எல்லா உறுப்புகளும் முறைப்படி அமைந்த கோயில்களாகும். மற்றப் பாறைக்கோயில்கள் எல்லாம், கருவறைகள் அமைக்கப்பெறாத வெளிப்புறத்தோற்றம் மட்டும் நன்கு அமைந்த கோயில்கள் ஆகும். இந்தப் பாறைக்கோயில்களை அமைத்த நோக்கம் என்ன? இதுபற்றி இதுவரையில் ஒருவரும் ஆராயவில்லை. முதன்முதலாக இக் கேள்விகளுக்கு விடையை ஆராய்வோம். மாமல்லனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன் முதன் முதலாகப் பாறைகளைக் குடைந்து முகமண்டபத்தையும் கருவறை யையும் மட்டும் உடைய குகைக்கோயில்களை அமைத்தான். ஆனால், அக் குகைக்கோயில்களுக்குமேலே விமானங்களை அவன் அமைக்கவில்லை. விமானங்கள் இல்லாத, கருவறையை மட்டும் உடைய குகைக்கோயில்களாக அவை அமைக்கப்பட்டன. அவன் மகனான நரசிம்மவர்மன், பாறைகளைக் குடைந்து மண்டபத்தையும், கருவறையையும் உண்டாக்கி, அதனுடன் அவற்றின் மேல்புறத்தில் விமானங்களையும் அமைத்து வைத்தான். அஃதாவது, தொன்றுதொட்டு செங்கல் மரம் சுண்ணம் முதலியவைகளினாலே அமைக்கப்பட்ட கோயில்களின் முழு உருவத்தையும் - விமானம், கருவறை ஆகிய உட்புற அமைப்பு வெளிப்புற அமைப்பு இரண்டையும், பாறைக்கல்லிலே அமைத்து வைத்தான். தமிழ்நாட்டிலே நெடுங்காலமாகச் செங்கல்லினால் கோயில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. அக் கட்டிடங்களின் விமானங்கள் வெவ்வேறு தோற்றத்துடன் அமைக்கப்பட்டன. அந்த விமான அமைப்புகளையெல்லாம் பாறைகளிலே அமைத்துக் காட்ட நரசிம்மவர்மன் எண்ணினான். எண்ணியபடியே முயன்றான். அந்த முயற்சியில் ஒரு பகுதி வெற்றியையும் ஒருபகுதி தோல்வி யையும் கண்டான். அஃதாவது, பழைய செங்கற் கோயில்களின் விதவிதமான விமான அமைப்பின் வெளிப்புறத் தோற்றத்தைப் பாறைக்கல்லில் அமைத்துக் காட்டியதில் வெற்றி கண்டான். ஆனால், உள்புறத்தில் கருவறைகளை அமைப்பதில் முழு வெற்றிக் காணவில்லை. ஏனென்றால், பாறையைக் குடைந்து கருவறையை அமைத்தால், மேலேயுள்ள கல் விமானத்தின் பாரம் தாங்க முடியாமல், பாறைக்கோயில் சிதைந்து போகும். ஆகவே, “திரௌபதை இரதம்” “கணேசர் இரதம்” என்னும் பாறைக் கோயில்களில் கருவறைகளையும் அமைத்ததுபோல் மற்ற பாறைக் கோயில்களில் கருவறைகளை அமைக்காமல், விமானங்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அமைத்து வைத்தான். பாறைக் கோயில்களை அமைத்த நோக்கம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலே செங்கற் கட்டிடங்களாக இருந்த கோயில்களின் உருவ அமைப்புகளின் மாதிரிகளை, நரசிம்மவர்மன் கருங்கற் பாறைகளில் அமைத்து வைத்ததை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும். அக் காலத்துச் செங்கல் கட்டிடக் கோயில்கள் நெடுங்காலம் நிலைபெறாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டன. ஆனால், அவற்றின் மாதிரிகளாக அமைந்த இந்தக் கற்பாறைக் கோயில்கள் அழியாமல் அவற்றின் பழைய உருவ அமைப்புகளை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு சிறப்பு என்னவென்றால், இப் பாறைக்கோயில்கள் எல்லாம் ஓர் இடத்திலேயே - மகாபலிபுரத்திலேயே - அமைந்திருப்பது தான். ஒரே இடத்திலே அமைந்திருப்பதனாலே, இந்த விமானங்களின் வெவ்வேறு விதமான அமைப்பை, ஒருமிக்க ஒரே இடத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. பழைய செங்கற் கட்டிடங்களின் மாதிரி அமைப்பான இந்தப் பாறைக் கோயில்களை நம்மால் இயன்றவரையில் ஆராய்வோம். இப் பாறைக் கோயில்களை, மாடக்கோயில்கள் என்றும் சாதாரணக் கோயில்கள் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். மீண்டும் இவற்றைத் திராவிடக் கோயில்கள் என்றும் வேசாக் கோயில்கள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றை விளக்குவோம். “அர்ச்சுனன் இரதம்,” “தர்மராச இரதம்,” “சகா தேவ இரதம்” என்னும் பாறைக் கோயில்கள் மாடக் கோயில்களின் அமைப்பாகும். மற்றவை எல்லாம் சாதாரணக் கோயில்களின் அமைப்பாகும். “அர்ச்சுனன் இரதம்” என்னும் பாறைக் கோயில், இரண்டு நிலை உடைய மாடக் கோயில். “தர்மராச இரதம்” என்னும் பாறைக்கோயில் மூன்று நிலைகளையுடைய மாடக்கோயில். “சகாதேவ இரதம்” என்பதும் மூன்று நிலையுடைய மாடக் கோயிலாகும். “அர்ச்சுனன் இரதம்,” “தர்மராச இரதம்” என்னும் கோயில்கள் திராவிட வகையைச் சேர்ந்த மாடக் கோயில்கள். “சகாதேவ இரதம்” என்பது வேசர வகையைச் சேர்ந்த மாடக் கோயில். நரசிம்மவர்மன் மாடக் கோயில்களைக் கற்பாறைகளில் அமைப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பல மாடக் கோயில்கள் நமது நாட்டில் இருந்தன. ஆனால், அம் மாடக் கோயில்களை ஏனைய சாதாரணக் கோயில்களைப் போலவே, செங்கல்மரம் சுண்ணம் முதலிய பொருள்களினால் கட்டப் பட்டவை. நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகளும், திருஞான சம்பந்தரும், இவர்களுக்குப் பின்னர் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருமங்கை ஆழ்வாரும், தமது பாசுரங்களிலே சில மாடக்கோயில்களைக் கூறுகிறார்கள். திருவைகல் மாடக் கோயிலைச் சைவ நாயன்மார்களும், திருமணி மாடக் கோயிலைத் திருமங்கை யாழ்வாரும் தமது பாசுரங்களில் கூறுகிறார்கள். இந்த மாடக் கோயில்கள் பல்லவர் காலத்துக்கு முன்னரே, சோழன் செங்கணான் என்னும் அரசனால் கட்டப்பட்ட செங்கற் கட்டிடங்கள். செங்கற் கட்டிடங்களாக இருந்த மாடக்கோயில் அமைப்புகளைப் பின்பற்றி, நரசிம்மவர்மன் மாமல்லபுரத்திலே பாறைகளிலே இம் மாடக்கோயில்களை அமைத்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை. “பீம ரதம்,” “சகாதேவ ரதம்” “கணேச ரதம்” என்னும் மூன்று பாறைக் கோயில்களும் வேசரம் என்னும் பிரிவைச் சேர்ந்த கோயில்கள். மற்றப் பாறைக்கோயில்கள் எல்லாம் திராவிடம் என்னும் பிரிவைச் சேர்ந்தவை. கோவில் கட்டிடங்களின் மேலேயுள்ள விமான அமைப்பு களைப்பற்றிக் கோயில்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. தமிழிலே வழங்கிவந்த சில பெயர்களைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரத்தில் கூறுகிறார். அப் பெயர்களாவன:- சுரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்பன4. இவற்றின் விளக்கத்தை இந் நூலாசிரியர் எழுதிய “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்” என்னும் நூலில் கண்டுகொள்க. வடமொழி சிற்ப நூல்களும் திராவிட விமானக் கோயில் களுக்குச் சில பெயர்களை வடமொழியில் கூறுகின்றன. அவை: விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம் என்பன.5 “திரௌபதை இரதம்” இனி மாமல்லனால் மாமல்லபுரத்திலே அமைக்கப்பட்ட இந்தப் பாறைக் கோயில்களின் அமைப்பை விளக்குவோம். முதலில் திரௌபதை “இரதம்” என்னும் கோயிலை எடுத்துக் கொள்வோம். திரௌபதை இரதம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இக் கோயில் உண்மையில் திரௌபதிக்காக ஏற்பட்ட கோவில் அல்ல. துர்க்கை என்னும் கொற்றவைக்காக ஏற்பட்ட கோயில் இது. ஒரே பாறைக்கல்லைச் செதுக்கி யமைக்கப்பட்ட அழகிய, சிறிய, கச்சிதமான, காட்சிக்கினியது இக் கோயில் அமைப்பு. 1300 ஆண்டு ஆகியும் இன்னும் புத்தம் புதியதாகக் காணப்படுகிறது. ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த இரண்டு மேடைகளின் மேலே இந்தக் கோயில் எழில்பெற விளங்குகிறது. அடிப்புறத்து மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடையிலிருந்து மேல் மேடைக்குப் போக மூன்று படிகள் அமைத்துள்ளன. விசாலமான இரண்டாவது மேடையின்மேல் இக் கோயில் அமைத்திருக்கிறது. இது மேற்குப் பார்த்த கோயில். கோயிலுக்குள் போக மூன்று படிகள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. இக் கோயிலுக்கு அர்த்த மண்டபமும் முகமண்டபமும் இல்லை; கருவறை மட்டும் அமைந்துள்ளது. கருவறை சதுர அமைப்புள்ளது. கோயிலின் வாயில் 6 அடி 7 அங்குலம் உயரமும் 2 அடி 10 அங்குலம் அகலமும் உள்ளது. வாயிலுக்கு மேலே இரண்டு வளைவுள்ள மகரதோரணம் இருக்கிறது. வாயிலின் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலிகையர் உருவங்கள் உள்ளன. கோயிலுக்குள் இப்போது கொற்றவையின் உருவம் இல்லை. கருவறைச் சுவரில் கொற்றவையின் உருவம் புடைப்புச் சிற்பமாகப் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. சுவரின் வெளிப்புறத்தில் மூன்று பக்கங்களிலும் கொற்றவையின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்ப உருவங்களின் விளக்கத்தை இந் நூலின் மற்றொர் இடத்தில் காண்க. இந்தக் கோயிலின் விமானம் நான்கு பட்டையாக அமைந்திருக்கிறது. விமானத்தின் நான்கு மூலைகளிலும் சுருள் கொடி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மற்றப்படி இவ் விமானத்தில் கர்ணகூடு, பஞ்சரம், காலை முதலிய உறுப்புகள் இல்லை. விமானத்தின் உச்சியில் இருக்க வேண்டிய கும்பகலசம், இக் கோவிலுக்கு அருகாமையில் மேடையின் மேல் இருக்கிறது. இந்தக் கலசத்தை வேறு தனிக் கல்லினால் செய்து இதன் உச்சியில் வைக்க எண்ணினார் போலும் இக் கோயிலை அமைத்த சிற்பாசாரி. இந்தக் கட்டிடத்திற்குத் தமிழில் இளங்கோயில் என்றும் வடமொழியில் ஸ்ரீசுரக்கோயில் என்றும் பெயர்.6 இது திராவிட கட்டிடப் பிரிவைச் சேர்ந்தது. சிலர், இளங்கோயில் என்பதைப் பாலாலயம் என்று மொழி பெயர்த்துக் கொண்டு, பழைய கோயிலைப் புதுப்பிக்கும் போது, அந்த வேலை முடியும் வரையில் தற்காலிகமாகக் கோயில் மூர்த்தியை வைத்திருக்கும் இடத்திற்குப் பாலாலயம் என்பது பெயர் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூற்று தவறானது. பாலாலயம் வேறு; இளங்கோயில் வேறு. திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் இளங் கோயிலைக் குறிக்கிறார். மீயச்சூர் கோயிலை இளங்கோயில் என்று கூறுகிறார். திருவேங்கடத்து அருகில் திருச்சானூர் (திருச்சோகினூர்) பத்மாவதி அம்மனுக்கு முற்காலத்தில் இருந்த கோயில் இளங்கோயில் என்று ஒரு கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. திராவிடக் கோயில் விமான வகையில் சேர்ந்தது இளங்கோயில். இளங்கோயில் உருவங்கள், மகாபலிபுரத்திலேயே வேறு இடங்களில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவை, அருச்சுனன் தபசு என்று இப்போது தவறாகப் பெயர் கூறப்படுகிற சகரசாகரர் கதைச் சிற்பத்திலும், இராமாநுச மண்டபம் என்னும் குகைக் கோயிலின் முன்புறத்து இரு கோடியிலும் காணப்படுகின்றன. இளங்கோயில் அமைப்புள்ள வேறு கட்டிடங்கள் கொடும்பாளுர் முதலிய பல இடங்களிலும் உள்ளன. மகாபலிபுரத்தில் வலயங்குட்டைக்கருகில் உள்ள “இரதம்” என்னும் கோயிலும், பிடாரி கோயிலுக்கு அருகில் இருக்கிற இன்னொரு “இரதம்” என்னும் கோயிலும் இளங்கோயில் விமானங்களையுடையன. எனவே, “திரௌபதை இரதம்” என்று பெயர் கூறப்படுகிற கோயில், திராவிடப் பிரிவைச் சேர்ந்த கோயில் வகைகளில் ஒன்று என்பதும், இது தமிழ்நாட்டில் மிகப் பழையகாலந்தொட்டு இருந்து வருகிறதென்பதும், பழமையான இக்கோயில் அமைப்பை மாமல்லன் பாறைக்கல்லில் செதுக்கி வைத்தான் என்பதும் அறியத்தக்கன. “அர்ச்சுனன் இரதம்” இது “திரௌபதி இரதம்” எனப்படும் கொற்றவைக் கோயிலாகிய இளங்கோயிலுக்கு அருகில் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது. அர்ச்சுனன் இரதம் என்பது தவறான பெயர். இதற்கும் அர்ச்சுனனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உண்மையில் இது இரண்டு நிலை மாடக் கோயிலாகும். இதற்குப் பக்கத்தில் இருக்கிற “தர்மராஜ இரதம்” எனப்படும் அத்தியந்தகாம பல்லவேச்சரம் மூன்று நிலை மாடக் கோயிலாகும். பண்டைக் காலத்தில், பல்லவர் காலத்துக்கு முன்னரே, இரண்டுநிலை, மூன்றுநிலையுடைய மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தன. அவை மரத்தினாலும் செங்கல்லினாலும் அமைக்கப் பட்டிருந்தன. அந்த மாடக் கோயில்களின் உருவ அமைப்புதான் மாமல்லபுரத்து “அர்ச்சுனன் இரதமும்” “தர்மராஜ இரதமும்.” அர்ச்சுனன் இரதம் எனப்படும் இந்த இரண்டுநிலை மாடக் கோயில், சதுரமான அமைப்புடையது. இந்தக் கோயிலைச் சிங்கங்களும், யானைகளும் சுமப்பதுபோல, சிங்க உருவங்களும், யானை உருவங்களும் இதன் அடிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் முன்புறத்தில் சிறு அர்த்த மண்டபம் இரண்டு சிங்கத் தூண்களுடன் இருந்தது. அந்தத் தூண்கi பிற்காலத்தில், உடைத்து அழித்து விட்டார்கள். ஆகவே இப்போது, ஆர்க்கியாலஜி இலாகா அந்தத் தூண்களுக்குப் பதிலாக இரண்டு கல்லை நாட்டி வைத்திருக்கிறார்கள். கருவறையில் இப்போது மூர்த்தி இல்லை. முற்காலத்தில் இருந்ததைப் பிற்காலத்தவர் எடுத்தெறிந்து விட்டார்கள். இக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில், வடக்கு கிழக்கு தெற்குப் புறங்களில், அழகான தூண்கள் அமைந்துள்ளன. இத் தூண்கள் மரத்தூண்களின் அமைப்பை ஒத்திருக்கின்றன. தூண்களுக்கு இடையேயுள்ள கோஷ்ட பஞ்சரங்களில் வெகு அழகான சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருக்கின்றன. இச் சிற்பங்களைப்பற்றி வேறு இடத்தில் விளக்கமாகக் கூறியுள்ளேன். இந்த நிலைக்கு மேலே, கர்ண கூடுகளும் சாலைகளும், பஞ்சரங்களும் பல்லவர்காலச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளது. அதற்கு மேலே, சற்று உள்ளடங்கி இரண்டாவது நிலை இருக்கிறது. இந்த நிலைக்குச் செல்ல படிகள் இல்லை. இரண்டாவது நிலையில் கருவறையும் இல்லை. ஆயினும் கருவறை வாயில் போல நாற் புறத்திலும் வாயில்கள் சிற்ப உருவமாகக் காட்டப்பட்டுள்ளன. இரண் டாவது நிலைக்கு மேலே, கர்ணகூடு சாலை பஞ்சரங்களும், அதற்கு மேலே கழுத்தும், அதன் மேலே எட்டுப்பட்டையுள்ள விமானமும் சிற்ப அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் மேலே இருந்த கல்லால் அமைத்த கும்பகலசம் கீழே விழுந்து தரையில் கிடக்கிறது. இந்த அழகான கோயிலின் மேலிருக்கும் விமானத்தைப், பிற்காலத்தில் நிகழ்ந்த சமயப் போரில், யாரோ உடைத்துப் பின்னப்படுத்தி விட்டார்கள். இப்போது, அந்த உடைப்பைப் பழுது பார்த்து முழு உருவமாக அமைத்திருக்கிறது ஆர்க்கியாலாஜி இலாகா. எழிலோடு கச்சிதமாக அமைந்துள்ள இந்த இரண்டு நிலைமாடக் கோயில், இப்போதும் வெகு அழகாகக் காணப்படுகிறது. அடிமுதல் முடிவரையில் ஒரே பாறைக்கல்லைச் செதுக்கி யமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலும், இதிலுள்ள சிற்ப உருவங்களும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துச் சிற்பிகளின் கைவல்லமையைக் காட்டு கின்றன. “பீமன் இரதம்” “அர்ச்சுனன் இரதம்” என வழங்கப்படும் இரண்டு நிலை மாடக்கோயிலுக்குத் தெற்கில் “பீமரதம்” எனப்படும் நீண்ட சதுரமுள்ள பெரிய கோயில் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப் பட்டிருக்கிறது. இது, சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயில் அமைப்பைக் கொண்டது. நீண்ட சதுரமான மண்டபத்தையும், அதன் மேல் படகைக் கவிழ்த்து வைத்ததுபோன்ற கூரையையும் (விமானத் தையும்,) நான்கு புறத்திலும் தாழ்வாரத்தையும் உடையது. இதன் தூண்கள் நரசிம்மவர்மன் காலத்துச் சிங்கத் தூண்கள். இந்தக் கட்டிடத்தின் விமானமும், கர்ணகூடு கோஷ்ட பஞ்சரங்களும் ஆகிய மேல்பகுதி மட்டும் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன. கட்டிடத்தின் கீழ்ப்பகுதிகள் முற்றுப்பெறாமல் அரை குறையாகவே விடப்பட்டிருக்கின்றன. இது முற்றுப் பெறுவதற்குள் பாறை வெடித்துவிட்டபடியால் இப்பகுதிகள் முற்றுப்பெற அமைக்கப் படவில்லை. இது வேசரம் என்னும் சிற்பப்பகுதியைச் சேர்ந்த கட்டிடம். இவ்விதக் கட்டிடத்தை ஆதியில் பௌத்தர்கள் அமைத்தார்கள். பிறகு, இத்தகைய கட்டிடங்கள், தமிழ் நாட்டிலும் இடம்பெற்றன. பௌத்தர் களின் விகாரைகள் (பௌத்தமடங்கள்) இந்த அமைப்பில் அமைக்கப் பட்டன. ஆதியில், இந்தக் கட்டிடங்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. சிதம்பரத்திலே இந்தக் கட்டிட அமைப்பு இருப்பதையும், அது மரத்தினால் அமைந்திருப்பதையும் இன்றும் காணலாம். மகாபலி புரத்திலுள்ள இந்த “பீம ரதம்”, பண்டைக்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்ட விகாரையின் (அம்பலத்தின்) அமைப்பைக், கல்லில் செதுக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் துவாரபாலகர், தோரணங்கள், தெய்வ உருவங்கள் முதலிய சிற்பங்கள் இல்லை. இதன் விமானத்தில் (கூரையில்) கலசங்கள் காணப்பட வில்லை. ஆனால், அவை வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் காணப் படுகின்றன. கூரைபோன்ற இந்த விமானத்தின் முகசாலை களில் பௌத்த சேதியங்கள் போன்ற சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சகாதேவ இரதம் எனப்படும் யானைக்கோயில் விமானத்தின் நெற்றி முகத்திலும், கணேச இரதம் எனப்படும் கோயில் விமானத்தின் நெற்றி முகத்திலும் உள்ளது போன்ற சேதிய அமைப்புப் போல இவை காணப்படுகின்றன. “தர்மராஜ இரதம்” “தர்மராஜ இரதம்” என்று கூறப்படுகிற இந்தப் பாறைக் கோயிலின் பழைய பெயர் “அத்யந்தகாம பல்லவேசுவரக்கிருகம்” என்பது. இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். இதன் தரையமைப்பு, அகலமும் நீளமும் 28 அடியுள்ள சதுர அமைப்பாகும். உயரம் 39 அடி அதன் உச்சியில் இருக்கவேண்டிய கும்பகலசம் இக்கோயிலின் அருகே தரையில் இருக்கிறது. இக் கலசம் உச்சியில் இருக்குமானால் இக்கோயில் உயரம் ஏறக்குறைய 41 அடி இருக்கும். மேற்குப்புறம் பார்த்த இக் கோயிலின் முன்புறத்தில் சிங்கத் தூண்கள் உள்ளன. அர்த்த மண்டபமும் இருக்கிறது. இரண்டாவது நிலைக்குப் போகப் படிகள் இல்லை. ஆகவே மரப்படி அமைத்திருக் கிறார்கள். இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது நிலைக்குப் போகப் பாறையிலேயே கற்படிகள் உள்ளன. மூன்றாம் நிலைக்கு மேலே எட்டுப்பட்டையுள்ள விமானம் இருக்கிறது. அர்ச்சுன இரதம் என்னும் கோயிலிலும் இதுபோன்ற எட்டுப் பட்டையுள்ள விமானத்தைக் கண்டோம். ஆகவே இது திராவிட வகையைச் சேர்ந்த கட்டிடம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட விமானத்தையுடைய கோயிலுக்கு ஸ்கந்தகாந்தம் என்று காமிகாகமம் பெயர் கூறுகிறது. எட்டுப்பட்டையுள்ள இந்த விமானத்தின் மேலே கலசம் இல்லை. இங்கு வைப்பதற்காக அமைக்கப்பட்ட கலசம், மேலே வைக்கப்படாமலே இக் கோயிலின் பக்கத்தில் தரையில் இருக்கிறது. இந்தக் கோயிலின் சுவர்களிலே, மூன்று நிலைகளிலும் பல சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக7 அமைக்கப்பட்டுள்ளன. அன்றியும், நரசிம்மவர்மனுடைய சிறப்புப் பெயர்களும் பல்லவக் கிரந்த எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளன. இப் பெயர்களை இந் நூலில் முதல் அத்தியாத்தில் கூறியுள்ளேன். இங்குள்ள சிற்பங்களைப் பற்றி இந்நூலில் சிற்பக்கலை என்னும் பகுதியில் காண்க. இக் கோயிலில் “ஸ்ரீ அத்யந்த காம பல்லவேசுவரக் கிருகம்” என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று மூன்று நிலையுள்ள மாடக்கோயில், கருங்கல் கட்டிடமாக அமைக்கப்பட்டது வேறு ஒன்று உண்டு. அது காஞ்சீபுரத்து வைகுந்தப்பெருமாள் கோயில் ஆகும். காஞ்சீபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிலுக்கு பரமேச்சுர விண்ணகரம் என்பது பழைய பெயர். அதனைக் கட்டியவன் பிற்காலத்தவனான பல்லவ மல்லன் நந்திவர்மன் என்பவன். “சகாதேவ இரதம்” “சகாதேவ இரதம்” என்று பாமரமக்களால் பெயர் கூறப்படுகிற இந்தக்கோயில், உண்மையில் யானைக்கோயில் ஆகும். யானைக் கோயிலை ஆலக்கோயில் என்றும் கூறுவர், வடமொழியில் கஜபிருஷ்ட விமானம் என்பர். இந்தக் கோயிலின் மேற்புறமுள்ள விமானம், யானை முதுகுபோன்று அமைந்திருப்பதனாலே, இதற்கு யானைக்கோவில் என்று பெயர் கூறப்படுகிறது.8 தெற்குமுகமாக நோக்கியமைந்துள்ள இந்த யானைக்கோயில் மூன்று நிலையுள்ள மாடக்கோயில் ஆகும். மாமல்லன் காலத்திலும் அவன் காலத்துக்கு முன்பும் செங்கல், மரம், சுண்ணம் முதலியவை களினால் அமைக்கப்பட்டிருந்த யானைக் கோயிலின் அமைப்பைக் கருங்கல்லினால் அமைத்துக் காட்டுவது இக்கோயில். மூன்று நிலையுள்ள யானைக் கோயிலின் வெளிப்புறத்தோற்றம், எப்படிப் பண்டைக் காலத்தில் அமைந்திருந்தது என்பதை, இந்தப் பாறைக் கோயிலின் அமைப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலின் உட்புறமாகவே கருவறைகள் அமைக்கப்படாமல் வெறும் பாறையாகவே இருக்கிறது. இந்த யானைக்கோயிலின் தரையமைப்பு 18அடி நீளமும் 11 அடி அகலமும் உள்ளது. அடிமுதல் உச்சிவரையில் பதினாறடி உயரம் உள்ளது. இக் கோயிலின் முன்புறத்தில் சிறிய அர்த்த மண்டபம் அழகுற அமைத்திருக்கிறது. அர்த்தமண்டபத்தை இரண்டு சிங்கத் தூண்கள் தாங்குகின்றன. அர்த்த மண்டபத்துக்குப் பின்னால் கருவறையின் வாயில் அமைந்திருக்கிறது. வாயிலின் இரண்டு பக்கத்திலும், யானையின் முன்புற உருவம் (தலையும் தும்பிக்கையும்) சிற்ப உருவமாக அமைக்கப்பட்டுள்ளன. வாயிலுக்குள் கருவறை அமைக்கப்படவில்லை. கோயிலின் அமைப்பு, நீண்ட அரைவட்டமாக இருக்கிறது. சுவருக்கு இடையிடையே தூண்கள் அமைந்து கட்டிடத்தை அழகு செய்கின்றன. இவ்வாறமைந்த சுவருக்குமேலே, மஞ்சம் (பிரஸ்தம்) இருக்கிறது. மஞ்சத்தில் கூடு என்னும் உறுப்புகள் அமைந்திருக் கின்றன. மஞ்சத்திற்குமேலே கர்ணகூடு, கூடம், கோஷ்டம், பஞ்சம் என்னும் உறுப்புகளும் பல்லவர்கால முறைப்படி அமைந்துள்ளன. மஞ்சத்தின்மேல் இரண்டாவது நிலையிருக்கிறது. இரண்டாவது நிலையின் சுவர்கள் சற்று உள்ளடங்கி, முதல் நிலையைப்போலவே நீண்ட அரைவட்டமாக அமைந்திருக்கின்றன. இந்தச் சுவர்களிலும் இடையிடையே தூண்கள் அமைந்துள்ளன. இச் சுவருக்குமேலே கூடுகள் அமைந்த மஞ்சமும், மஞ்சத்துக்குமேலே கூட கோஷ்ட பஞ்சர கர்ணகூடுகளும் உள்ளன. இரண்டாவது நிலைக்குமேலே மூன்றாவது நிலை இருக்கிறது. இது. இரண்டாவது நிலையைவிடச் சற்று உள்ளடங்கியிருக்கிறது. மூன்றாவது நிலையும் நீண்ட அரை வட்ட வடிவமாகவும் இடை யிடையே தூண்களையுடையதாகவும் அமைந்திருக்கிறது. மூன்றாவது நிலைக்குமேலே விமானம், யானைமுதுகு போன்ற வடிவமாக அமைந்திருக்கிறது. விமானத்தின் உச்சியில் ஐந்து கும்ப கலசங்கள் முற்காலத்தில் இருந்திருக்க வேண்டும். அவை இப்போது காணப்படவில்லை. ஆனால், அவை இருந்த அடை யாளங்கள் தெரிகின்றன. விமானத்தின் பின்பக்கம், யானையின் பின்பக்கம் போன்று, வட்டமாக இருக்கிறது. விமானத்தின் முன்பக்கமாகிய “நெற்றிமுகம்” அரச இலைவடிவமாக அமைந்திருக்கிறது. நெற்றி முகத்தின்மேலே, மூன்று கொம்புள்ள மனிதன் தலையுருவம் முற்காலத்தில் இருந்தது. இப்போது அந்தத்தலை உடைந்து விழுந்துவிட்டபடியால், மொட்டையாகத் தெரிகிறது. நெற்றி முகத்தில் பௌத்த சைத்தியம் போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சைத்திய உருவங்களும் மூன்று கொம்புள்ள மனிதமும் உருவமும் கணேச இரதம், பீம இரதங்களின் நெற்றிமுகங்களில் உள்ளதுபோல அமைந்துள்ளன. இந்த யானைக்கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு யானை நின்று கொண்டிருப்பதுபோன்று ஓர் உருவம் பாறையில் செதுக்கப் பட்டிருக்கிறது. யானையின் உருவம் பக்கத்தில் இருப்பதனால், இக் கோயில் இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று லாங்ஹர்ஸ்ட் முதலிய சிலர் கருதுகிறார்கள். ஐராவதம் என்னும் யானையின் உருவத்தை அமைத்து இந்திரனை வழிபடுவது கி. பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த வழக்கம் என்றாலும், அவ் வழக்கம், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே வழக்கொழிந்து விட்டது. ஆகவே, இக் கோயில் இந்திரனுக்காக ஏற்பட்டதல்ல. இந்த யானைக்கோயில், யானையின் உருவம் போன்று அமைக்கப்பட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கு இவ் யானையின் உருவம் அமைக்கப்பட்டது போலும். இக் கட்டிட அமைப்பில் வேறு சிற்ப உருவங்கள் இல்லை. “கணேச இரதம்” “கணேச ரதம்” என்று கூறப்படுகிற இஃது உண்மையில் இரதமும் அன்று; கணேசருக்காக ஏற்பட்டதும் அன்று. இங்கு எழுதப்பட்டிருக்கிற சாசனத்தின்படி, அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்பது இதன் பெயர். எனவே, இது சிவபெருமானுக்காக அமைக்கப் பட்ட கோயிலாகும். அத்யந்தகாமன் என்பது முதலாம் பரமேசுவர வர்மனுடைய சிறப்புப் பெயர். இவன், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய பேரன். மாமல்லன் காலத்தில் தொடங்கப் பட்ட இந்தக் கோயில், அவனுடைய பேரன் காலத்தில் முற்றுப் பெற்று, அவன் பெயர் சூட்டப்பட்டது போலும். இக் கோயிலில் இருந்த சிவலிங்கம் பிற்காலத்தில் எக்காரணத்தினாலோ எடுபட்டுப் போயிற்று. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்துக் கலெக்டருடைய உத்தரவு பெற்று, இவ்வூரார் இக் கோயிலில் கணேசர் உருவம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். இந்தக் கணேசர் பெயரினால்தான் இப் பாறைக்கோயில் இப்போது “கணேச ரதம்” என்று பாமரர்களால் பெயர் கூறப்படுகிறது. ஆர்க்கியாலாஜி இலாகாக்காரரும் இக் கோயிலுக்குக் “கணேச ரதம்” என்றே பெயர் எழுதிவைத்திருக் கிறார்கள். அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்னும் பழைய பெயரையுடைய இப் பாறைக்கோயில் 20 அடி நீளமும், 11 1/2 அடி அகலமும், 28 அடி உயரமும் உள்ளது. மேற்குப் பக்கம் பார்த்த இந்தக் கோயிலின் முன்பக்கத்தில் ஏறக்குறைய 20 அடி நீளமுள்ள அர்த்த மண்டபம் இருக்கிறது. அர்த்த மண்டபத்தின் இரண்டு கோடியிலும் இரண்டு சிங்கத் தூண்களும் மத்தியில் இரண்டு சிங்கத் தூண்களும் ஆக நான்கு தூண்கள் இந்த மண்டபத்தைத் தாங்குகின்றன. மண்டபத்தின் இருகோடியிலும் இரண்டு மனித உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக (Bas relief) அமைக்கப்பட்டுள்ளன. இவை துவாரபாலகர் உருவங்கள் அல்ல. அரசர் உருவம் போலக் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் நடுவில், திருவுண்ணாழிகை (கருவறை) அமைத்திருக்கிறது. இக் கருவறை 6 அடி 11 அங்குலம் நீளமும், 3 அடி 9 அங்குலம் அகலமும், 6 அடி 8 அங்குலம் உயரமும் உடையது. இப் பாறைக்கோயிலின் வெளிப்புறச் சுவர், இடையிடையே தூண்களைப் பெற்று அழகாகக் காணப்படுகிறது. சுவருக்கு மேலே மஞ்சமும் (பிரஸதரம்), அதன் மேல் கூட கோஷ்ட பஞ்சரம் கர்ணகூடு முதலான உறுப்புகளும் பல்லவர்கால முறைப்படி அமைந்துள்ளன. மஞ்சத்திற்கு மேல் சற்று உள்ளடங்கி இரண்டாவது பூமி (நிலை) இருக்கிறது. இரண்டாவது நிலையின் சுவருக்குமேல் மஞ்சமும், மஞ்சத்தின் மேல் கூட கோஷ்ட பஞ்சர கர்ண கூடுகளும் உள்ளன. இரண்டாவது நிலைக்குமேல் “கழுத்து” என்னும் உறுப்பும், அதற்கு மேல் படகைக் கவிழ்த்து வைத்தது போன்ற சாலகார விமானமும் இருக்கின்றன. இந்த விமானம் “பீமரதம்” என்னும் கோயிலின் விமானம் போன்றது. நீண்டுகிடக்கும் இந்தச் சாலாகார விமானத்தின் உச்சியில் ஒன்பது கும்பகலசங்கள் உள்ளன. விமானத்தின் இரண்டு கோடியிலும், அஃதாவது வடக்குத் தெற்குப் புறங்களில், முக சாலைகள் (நெற்றிமுகம்) உள்ளன. இம் முக சாலைகளில், “பீமரதத்தின்” முகசாலைகளில் காணப்படுவது போன்று, பௌத்தச் சேதிய சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. இந்தச் சாலாகார விமானக் கோயில், கோயில் கட்டிடப் பிரிவுகளில் வேசரம் என்னும் பிரிவைச் சேர்ந்தது. பீமரதம் என்னும் கோயிலும் வேசரப் பிரிவைச் சேர்ந்த சாலாகாரக் கோயிலே, பீமரதம், நான்கு பக்கங்களிலும் வாயில்களையும் தாழ்வாரம் போன்ற அர்த்த மண்டபங்களையும் உடையது. கணேச ரதமோ ஒரே அர்த்த மண்டபத்தையும் ஒரே வாயிலையும் உடையது. கணேச ரதமாகிய சாலாகார விமானக் கோயிலைப்போல் பிற்காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்ட கோயில், காஞ்சீபுரத்துக் கயிலாச நாதர்கோயில் முற்றத்தில் உள்ள மகேந்திரவர்மேசுவரக் கிருகம் என்னும் கோயில். அது மூன்றாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. கணேசரதம் என்னும் அத்யந்தகாம பல்லவேச்சுரக் கிருகத்தின் அர்த்த மண்டபத்தில், தென்புறச் சுவரில், பல்லவக்கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் சுலோகங்கள் காணப்படு கின்றன. அந்தச் சுலோகங்கள் மாமல்லனுடைய பேரனான பரமேசுவரவர்மன் காலத்தில் எழுதப்பட்டன. அச் சுலோகங்களின் தமிழாக்கம் வருமாறு: 1. ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முச் செயல்களுக்கும் காரணராகவும், ஆதிநாயகராகவும் இருக்கிற காமாந்தக மூர்த்தி மானிடரின் அத்தியந்த காமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றி யருள்வாராக. 2. மாயையோடு கலந்திருக்கும் மாயையில்லாமலும், பல குணங்களைக் கொண்டிருந்தும் குணமில்லாமலும், தமக்குத்தாமே காரணராகவும், எல்லோருக்கும் தலைவராகவும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாகவும் இருக்கிற அவருடைய வெற்றி வாழ்வதாக. 3. கயிலாய மலையையும் அதனைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால்விரலால் அழுத்திய, அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவபெருமானை ஸ்ரீநிதி தமது தலையில் தாங்கியிருக்கிறார். 4. நிலமகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்தில் பவனை (சிவனை) வைத்துக்கொண்டு இருக்கிற ஸ்ரீபரன், வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக. 5. பகை மன்னரின் நாடுகளைத் தனக்கு அடிப்படுத்தி ரணஜயன் என்று பெயர்படைத்த அத்யந்தகாம அரசன், சம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான். 6. காற்றுந்தீயுமாயும் பீமனும் சிவனுமாயும் சங்கரனும் காமாந்தகனாயும் உள்ள அவன் வெற்றியுடன் விளங்குவானாக. 7. மகாராஜனுக்கு (குபேரனுக்கு) மகாராஜனும், ஆனால் குரூபியா யில்லாதவனும், மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன் காக்கும் சக்கரவர்த்தியும், சந்திரனைப் போன்றவனும், ஆனால் நலிந்த உடம்பு இல்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக. 8,9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப்போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனுமாகிய அத்யந்தகாமனுடைய, தாமரை மலர்கள் மலரப்பெற்று நீராடுதற்கு ஏற்ற நறுநீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தின மணிமுடியினாலும் விளங்குகின்ற திருமுடியில், சங்கரன் எழுந்தருளியிருக்கிறான். 10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற் காகவும், சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும் தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான். 11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறுமடங்கு சபிக்கத்தக்கவர் ஆவார்கள். அத்யந்தகாம பல்லவேசுவரக் கிருகம்.9 “வலயன் குட்டை இரதம்” இது மகாபலிபுரத்து ஊருக்கு அருகே, பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்குப் பக்கத்தில் (பாலத்துக்கு அருகில்) இருக்கிறது. வலயன் குட்டை என்னும் குட்டைக்கு அருகில் இருப்பதனால் இதற்கு இப் பெயர் வழங்குகிறது. “இரதங்கள்” என்று கூறப்படுகிற மற்றப் பாறைக் கோயில் களைப் போலவே இதுவும் ஒரே பாறையில் அமைக்கப்பட்ட கோயில். இதனையும் இதற்கு அடுத்துள்ள “பிடாரி இரதங் களையும்” மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காண வருகிறவர்கள் பெரும்பாலோர் பார்ப்பதில்லை. காரணம், இவை தனியே ஒருபுறமாக ஒதுங்கியிருப்பது தான். வலயன் குட்டைப் பாறைக்கோயிலின் அடிப்புறமும் கருவறையும் நன்கு அமைக்கப்படாமல் வெறும் பாறையாகவே விடப்பட்டிருக்கின்றன. இக் கோயிலின் மேற்பகுதிகள் மட்டும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் மேற்புற அமைப்பை மட்டும் காட்டுதற்காக இப் பாறைக்கோயில் அமைக்கப்பட்டதென்பது நன்கு தெரிகிறது. கிழக்கு நோக்கியுள்ள இந்தப் பாறைக்கோயில், அர்த்த மண்டபமுடையது. ஆனால், மேலே கூறியபடி அர்த்த மண்டபம், கருவறை முதலிய பகுதிகள் இதில் நன்கு அமைக்கப்படவில்லை. மேல்பகுதிகளாகிய மஞ்சமும் கழுத்தும் விமானமும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைந்து கண்ணுக்கினிய காட்சியாக இருக்கிறது. இது இளங்கோயிலின் மற்றொரு அமைப்பு, திரௌபதை இரதம் என்னும் இளங்கோயிலின் விமான அமைப்பு நான்கு பட்டையுள்ள தென்பதை முன்னமே அறிந்தோம். அதே இளங்கோயில் விமானந்தான் இந்தப் பாறைக்கோயிலுக்கும் அமைந்திருக்கிறது. திரௌபதை இரதத்திற்கு மஞ்சம், கழுத்து, கூட கோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகள் இல்லை. இந்த இளங்கோயில், அவ்வுறுப்புகள் எல்லாம் அமையப்பெற்ற மூன்று நிலை (பூமி) யுள்ள இளங்கோயில். கருவறைக்கு மேலேயுள்ள மஞ்சம் (தோள்) என்னும் உறுப்பில் கூடுகள் அமைந்துள்ளன. மஞ்சத்தின் மேலே கூடகோஷ்ட பஞ்சரங் களும் மூலைகளில் கர்ணகூடுகளும் பல்லவர் காலத்து அமைப்புப் படி செம்மையாக அமைக்கப் பட்டுள்ளன. இதற்குமேலே சற்று உள்ளடங்கி இரண்டாவது நிலை பூமி) கூடகோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகளுடன் அமைக்கப்பட்டு அதற்குமேலே, சற்று உள்ளடங்கி மூன்றாவது நிலை (பூமி) மேற்படி உறுப்புகளோடு அமைந்திருக்கிறது. இதற்கு மேல் இளங்கோயில் விமானம் நான்கு பட்டையாக அமைந்து இனிது விளங்குகிறது. இந்த விமானத்தின் மேலே இருக்கவேண்டிய கலசம் காணப்படவில்லை. “பிடாரி இரதங்கள்” வலயங்குட்டை இரதத்திற்கு வடக்கே சிறிது தூரத்தில் வேறு இரண்டு பாறைக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றிற்கும் பிடாரி இரதங்கள் என்று பெயர் கூறப்படுகிறது. மகாபலிபுரத்தின் கிராம தேவதையாகிய பிடாரியின் கோயில் அருகில் இருப்பதனாலே, பிடாரி இரதங்கள் என்று பெயர் கூறப்படுகிறது.10 இவ்விரண்டு பாறைக் கோயில்களில் வடக்கு நோக்கிய பாறைக்கோயில், வலயங்குட்டைப் பாறைக்கோயிலைப் போலவே மூன்று நிலையுள்ள இளங்கோயில் ஆகும். இக்கோயிலும் அடிப் பக்கமும் கருவறையும் அமைக்கப்படாமல், மேல் பகுதிகள் மட்டும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், மூன்றுநிலை (பூமி)களும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்து, கூடகோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகள் அமையப்பெற்று, உச்சியில் நான்கு பட்டையான இளங்கோயில் விமானத்தைக் கொண்டிருக்கிறது. வலயங்குட்டைக் கோயிலும், பிடாரி கோயிலும் மூன்று நிலையுள்ள இளங்கோயில்களே. என்றாலும் கழுத்து முதலிய உறுப்புகளில் இவற்றிற்குச் சிறு வேறுபாடுகள் உண்டு. சிற்ப நூல்களில் கூறப்படுகிற இளங் கோயில்களில் மூன்று விதமாக அமைப்புகள், மாமல்லபுரத்தில் அமைந்துள்ளன. “பிடாரி இரத”ங்களில் மற்றொன்று, கிழக்கு நோக்கியிருக்கிறது. இதுவும் கருவறைப் பகுதிவரையில் செம்மையாக அமைக்கப்படாமல், மேல்புறம் மட்டும் நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றப் பாறைக் கோயில்களைப் போலவே இதுவும், மேற்புறம் மட்டும் செம்மையாக அமைக்கப்பட்டிருப்பதால் இக் கோயில்களின் விமானங்களைமட்டும் காட்டுவதற்காக இவை அமைக்கப் பட்டன என்று தோன்றுகிறது. இந்தக் கோயிலின் விமானம் “அர்ச்சுனன் இரதம்,” “தருமராசன் இரதம்” என்னும் கோயில்களின் விமானத்தைப்போலவே எட்டுப்பட்டையுள்ள ஸ்கந்தகாந்தம் என்னும் விமானம் ஆகும். ஆனால் அர்ச்சுனன் இரதமும், தருமராசன் இரதமும் முறையே இரண்டு மூன்று கருவறைகளையுடைய மாடக் கோயில்கள். இந்தக்கோயிலோ, மாடக் கோயில் அல்லாத ஒரே கருவறையுள்ள சாதாரணக்கோயில். ஆனால். இதன் விமானம் மூன்றுநிலை (பூமி)களுடன் அமைந்திருக்கிறது. மஞ்சத்தின்மேல் கூடகோஷ்ட பஞ்சரங்களும், அதற்கு மேலே உள்ளடங்கிய மற்றொரு நிலையில் கூட கோஷ்ட பஞ்சரங்களும், அதற்கும் உள்ளடங்கி மற்றொரு நிலையில் கூடகோஷ்டபஞ்சரங்களும் அதற்குமேல் கழுத்தும் அதற்குமேல் எண்கோண விமானமும் அமைந்து இந்தக் கோயில் எழில்பெற விளங்குகிறது. மாடக் கோயிலாகவும் சாதாரணக் கோயிலாகவும் எவ்வாறெல்லாம் எண்கோண விமானமாகிய ஸ்கந்தகாந்தக் கோயில்களை அமைக்கலாம் என்பதைக் காட்டுவதற்காகவே சிற்பிகள் மாமல்லபுரத்தில் இந்த மூன்று கோயில்களையும் அமைத்தார்கள் போலும். ஒருமுறை : சிற்ப நூல்களிலே கூறப்பட்ட திராவிட அமைப்புக் கோயில்கள் மாமல்லபுரத்தில் பாறையில் அமைத்துக் காட்டப் பட்டுள்ளன. ஆனால், ஸ்ரீவிஜயம் என்னும் பெயருள்ள வட்ட வடிவமான விமானக்கோயில் அமைப்பு மாமல்லபுரத்தில் காணப் படவில்லை. ஏன் அந்தக் கோயிலின் அமைப்பு இங்கு அமைத்துக் காட்டப்படவில்லை இங்கிருக்குமானால், திராவிடக்கோயில் அமைப்புகளை யெல்லாம் மாமல்லபுரத்திலே ஒருசேரக் காணக் கூடியதாக இருக்கும். அடிக்குறிப்புகள் 1. இந்த எழுத்தைக் கண்டுபிடித்தவர், பிரெஞ்சுக்காரரான முவோதுப்ராய் அவர்கள். 2. Light House. 3. Epi. Indi. Vol. X. P. II. 4. திரு அடைவு திருத்தாண்டகம் 5. 5. காமிகாகமம் 50-ஆவது, 71 பூமியாதி விதிபடலம். 6. இந் நூலாசிரியர் எழுதிய தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலைக் காண்க. 7. Bas relief. 8. இத்தகைய அமைப்புள்ள கோயில் கட்டிடங்களைப்பற்றிய வரலாற்றை இந் நூலாசிரியர் எழுதியுள்ள யானைக்கோயில்கள் என்னும் நூலில் காண்க. 9. S. I. I. Vol. I, P. 6., Epi. Indi. Vol. X. 10. இந்தக் கிராமதேவதைக்குக் கருக்காத்தாள் என்றும் கருக்கிலமர்ந்தாள் என்றும் பெயர் கூறுவர். கருக்கிலமர்ந்தாள், வீரர்களின் தெய்வமாகிய கொற்றவை. இத் தெய்வத்தின் அழகிய உருவ அமைப்பையும் அதனைப்பற்றிய விபரத்தையும் இந் நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூலில் காணலாம். கட்டடக் கலை* கோவில் வகைகள் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்துக் கோயில் கட்டடங் களைப் பற்றிக் கூறுவோம். கோயில் கட்டட வகைகளில், கரக்கோயில், கொகுடிக் கோயில், ஆலக்கோயில், பெருங்கோயில் என்பவைகளை இவ்வரசன் காலத்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுகிறார். “கல்லால் நிழற்கீழ் ஒருநாள் கண்டதும் கடம்பூர்கரக் கோயில் முன்கண்டதும்”1 என்று, கடம்பூர்கரக் கோயிலைக் கூறுகிறார். திருக்கருப்பரியலூர் சிவன் கோயில் கொகுடிக் கோயில் அமைப்பாக இருந்ததென்று கூறுகிறார். கொகுடிக்கோயில் என்னும் பெயரை அப்பதிகத்தின் பதினொரு செய்யுளிலும் கூறுகிறர். திருக்கச்சூரில் உள்ள கோயில் ஆலக்கோயில் என்று கூறுகிறார். ஆலக்கோயில் என்பது ஆனைக் கோயில். அதனை கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறவார்.2 நன்னிலத்துக் கோயிலும், திருக்கலைய நல்லூர் கோயிலும் பெரும் கோயில் என்று கூறுகிறார். “தண்கமலப் பொய்கை புடைசூழந் தழகார் தலத்தில் தடங்கொள் பெருங்கோயில்தனில் தக்கவகையாலே’ என்றும், “மண்டபமும் கோபுரமும் மாளிகையும் சூளிகையும்”3 என்றும் கூறுகிறார் நன்னிலத்துப் பெருங்கோயிலை. இக்கோயில்கள் பழைய காலம் முதல் உள்ளன. இக்கட்டிடப் பெயர்களையும் வேறு சில கட்டிடப் பெயர்களையும் இவருக்கு முன்பிருந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந் திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே. என்று அவர் பாடியிருப்பது காண்க. இவை கோயில் கட்டிட வகைகள் ஆகும். இவற்றின் விரிவை இந்நூலாசிரியர் எழுதியுள்ள, “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்” என்னும் நூலில் காண்க. சாலாகார விமானம் சிதம்பரத்துச் சிற்றம்பலத்தை அப்பரும சம்பந்தரும், பாடியது போலவே, மூன்றாம் நந்திவர்மன், முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவரான மாணிக்கவாசகரும் சுந்தரரும் பாடியிருக்கிறார்கள். இங்கு இக்கோயில் கட்டிட அமைப்பைப்பற்றிக் கூறவேண்டும். அது வென்னவென்றால் : 1.சிதம்பரம் கோயில், ஆதிகாலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தது. 2. அக்கோயில், பௌத்த விகாரையின் அமைப்பைப் போன்றது என்பதே. இதனை விளக்குவோம். இக்கோயில் ஆதிகாலத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்ததை இப்போதுள்ள அமைப்பினாலும் அறியலாம். இப்போதுள்ள சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிடங்களே. இவற்றின் கூரை (விமானம்) பொற்றகடு வேயப்பட்டிருக்கிறது. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை, முற்காலத்தில் மரக்கட்டிடமாக இருந்தது. அது, பிற்காலத்தில் கருங்கல் கட்டிடமாகக் (கற்றளியாகக்) கட்டப்பட்டிருக்கிறது. ஆயினும், இக்கருங்கல் கட்டிடம், பழைய மரக்கட்டிட அமைப்பைப் போலவே அமைக்கப்பட்டிருப்பது காணத்தக்கது. மண்டபத்தின் தூண்களும் கூரையும் மரக்கட்டிட அமைப்பைப் போன்றே அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணலாம். இக்கட்டிடங்கள், பௌத்த விகாரையின் அமைப்பைப்போன்று, “சாலாகார” விமான முள்ளனவாக இருக்கின்றன. இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. ஏறக்குறைய இதே அமைப்பைக் கொண்டதுதான் மாமல்லரத்தில் (மகாபுலிபுரத்தில்) உள்ள “பீமரதம்” என்னும் சாலாகார விமானக் கட்டிடம். “பீமரதம்” பௌத்தச் சார்பான கட்டிடம் என்பதை எல்லோரும் அறிவர். சிதம்பரக்கோயில் பௌத்தச் சார்புடையது என்பதை, முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவரான (மூன்றாம் நந்திவர்மன் காலத்தவரான) மாணிக்கவாசகர், வரலாற்றினாலும் குறிப்பாக அறியலாம். மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும், தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தைவிட்டு இலங்கைக்குப் போய்விட்டார்கள் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவ்வரலாற்றிலிருந்து, சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதும், அவர்களின் விகாரைகளும் அங்கு இருந்தன என்பதும் தெரிகின்றன. ஆகவே, பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு இக்கோயிலிலும் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. சிதம்பரத்திலே அக்காலத்தில் பௌத்தர்களோடு ஜைனர்களும் இருந்தார்கள். இப்போதும் சிதம்பரத்தில் ஒரு ஜைனத்தெரு இருப்பதே இதற்குச் சான்றாகும். ஆனால், சிதம்பரத்தில் அக்காலத்தில் ஜைனர்களைவிட பௌத்தர்களே அதிகமாக ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பது மாணிக்கவாசகர் வரலாற்றிலிருந்து விளங்குகிறது. காட்டுப்பள்ளி நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட புதிய கோயில் களைப் பார்ப்போம். செங்கற்பட்டு மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் காட்டுப்பள்ளி என்னும் ஊரில் கட்டப்பட்டது இந்தச் சிவன் கோயில். இக்கோயில், “புழற்கோட்டத்து நாயறு நாட்டுத் திருக்காட்டுப்பள்ளி.” என்று சாசனத்தில் கூறப்படுகிறது. இக்கோயிலைக் கட்டியவன் யஜ்ஞபட்டன் என்றும், இக் கோயிலுக்கு நிலபுலங்களை நந்திவர்மன் தானம் செய்தான் என்றும் வேலூர்ப் பாளைய செப்பேட்டுச் சாசனங் கூறுகிறது. இக் கோயில் இப்போது, இடிந்து பழுதடைந்து கிடக்கிறது. கிளியனூர் இவன் காலத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு கோயில், திகைத்திறல் விஷ்ணுக் கிருகம் என்பது. இதற்கு இப்போது வைகுண்டவாசப் பெருமாள் கோயில் என்று பெயர் கூறப்படுகிறது. இது, தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா கிளியனூரில் இருக்கிறது. “ஒய்மா நாட்டுக் கிளிஞலூர் திகைத்திறல் விஷ்ணுக் கிருகம்” என்று சாசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. திகைத்திறலார் என்பவர் இக்கோயிலை அமைத்து. நிலபுலங்களைத் தானம் செய்தார் என்று சாசனம் கூறுகிறது. படுவூர் இவ்வூர், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவைச் சேர்ந்தது. ஆமூர் கோட்டத்துப் படுவூர்நாட்டுப் படுவூர் என்பது இவ்வூரின் பழைய முகவரி. இவ்வூர் குளத்து மேட்டின்மேல் ஐந்தடி உயரம் உள்ள பெருமாள் உருவம் நின்று கொண்டி ருக்கிறது. கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. இவ்வூர் மேட்டுத் தெருவில் உள்ள ஒருகல் எழுத்துச் சாசனம், இந்தப் பெருமாளின் பெயரைக் கூறுகிறது. “விழுப்பெருந்தாய் விஷ்ணுக்கிருகத்து நின்றருளிய பெருமாள்” என்று அந்தச் சாசனம் கூறுகிறது. எனவே, விழுப்பெருந்தாயன், என்பவன் நின்றருளிய பெருமாள் கோயிலைக் கட்டினான் என்பது தெரிகிறது. மேலும், இந்தக் கோயில் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட தென்று மேற்படி சாசனத்தினால் தெரிகிறது இந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய விழுப் பெருந்தாயன் என்பவர், மூன்றாம் நந்திவர்ம னின் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் போலும். இந்தக் கோயில் முழுவதும் மறைந்து விட்டபோதிலும், பெருமாளின் திருவுருவம் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வுருவத் தை இந்நூலின் தொடக்கத்தில் காண்க. இப்பெருமாளுக்குப் பக்கத்தில் முழுவதும் அழிந்து போன மணிகண்டேசுவரர் கோயிலும் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம். அடிக்குறிப்புகள் 1. திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும். 6. 2. சிற்ப நூலில் கூறப்படுகிற யானைக் கோயில் கட்டிட வரலாற்றை, இந்நூலாசிரியர் எழுதி வருகிற “யானைக் கோயில்கள்” என்னும் நூலில் காண்க. 3. திருக்கலையநல்லூர் 10, 3. சங்கநிதி பதுமநிதி* மனிதரின் நல்வாழ்வுக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவது அறம் பொருள் இன்பம் வீடு என்பவை. இவை நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படுகின்றன. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் இம்மைக்கு - இவ்வுலக வாழ்க்கைக்கு உரியவை. வீடு என்பது மறுமைக்கு உரியது. இம்மை வாழ்க்கைக்கு உரிய அறம் பொருள் இன்பம் என்பவற்றில் முக்கியமானது பொருள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருட் செல்வம் உள்ளவர் இவ்வுலகத்தில் சிறந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால், பொருள் எல்லோரி டத்திலும் ஒரே அளவாக இருப்பதில்லை. பெரும் செல்வம் உள்ளவர் இலட்சாதிபதிகள் என்று கூறப்படுகின்றனர். பல இலட்சம் பொருளுள் ளவர் கோடீசுவரர் என்று கூறப்படுகின்றனர். நவகோடி நாராயணர் களைப் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறோம். உலகத்திலே உண்மையிலேயே பல கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். நமது தமிழ்நாட்டிலும் கோடீசுவரர்கள் சிலர் இருக்கிறார்கள். பாரதநாட்டுக் காவியப் புலவர்கள் செல்வத்தைப்பற்றிக் கற்பனை செய்திருக்கிறார்கள். கோடி, கோடி, கோடி, கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி என்று கற்பனை செய்துகொண்டே போகிறார்கள். இப்படிக் கோடி கோடியாகக் கற்பனை செய்து கொண்டே போனால் இதைப் படிப்பவர் விளங்கிக்கொள்வது அருமை, ஆகவே இந்தக் கணக்கு களை விளங்கிக்கொள்வதற்குக் குறியீடுகளையும் பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். இவற்றில் இரண்டு எண்களை மட்டும் இங்கு ஆராய்வோம், அவை சங்கம், பதுமம் என்னும் இரண்டு எண்கள். கோடி X கோடி கொண்ட எண்ணுக்குச் சங்கம் என்பது பெயர். அதாவது கோடி, பத்துக்கோடி நூறு கோடி ஆயிரகோடி, இலட்ச கோடி, பத்துலட்சகோடி, சங்கம். இதை எண்ணால் எழுதும் போது ஒன்றுடன் பதினான்கு சுன்னம் சேர்த்து எழுத வேண்டும்; 100000000000000. இவ்வளவு எண்ணிக்கையுள்ள செல்வத்துக்குச் சங்க நிதி என்பது பெயர். இதற்குச் சங்கின் உருவத்தை எழுதிக் காட்டுவார்கள். தக்கயாகப் பரணி என்னும் நூலிலே, காளிக்குக் கூளி கூறியது என்னும் பகுதியில் “கொண்டகோடி” என்று தொடங்கும் தாழிசையின் உரையில், உரைகாரர் இதனை நன்றாக விளக்கிக் கூறுகிறார். அவ்வுரைகாரர். எழுதுவது வருமாறு “கொண்டகோடி” என்றது. ஒரு கோடி ஒன்றாகக் கொண்டு எண்ணப்பட்ட ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம் நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி என்றவாறு. கோடி x கோடி x கோடி x கோடி x கோடி கொண்ட எண்ணுக்குப் பதுமம் என்பது பெயர். இந்த எண் முப்பத்தாறு இடங்களைக் கொண்டது. இதை எண்ணால் எழுதவேண்டு மானால் ஒன்றுடன் முப்பத்தைந்து சுன்னம் சேர்த்து எழுதவேண்டும் 100000000000000000000000000000000000. இவ்வளவு எண்ணிக் கையுள்ள செல்வத்துக்குப் பதுமநிதி என்று பெயர் கூறுவார்கள். இதற்குத் தாமரைப் பூவின் உருவத்தை அமைத்துக் காட்டுவார்கள். சங்கநிதி, பதுமநிதிகளைப் பற்றிப் புராணங்களிலும் காவியங் களிலும் காணலாம். சக்கரவர்த்திகள் உலகத்திலே எப்பொழுதோ ஒருமுறை அரிதாகத் தோன்றுகிறார்கள் என்பதும் அவர்கள் சக்கரச் செல்வம் படைத்தவர்கள் என்பதும் அவர்களிடத்திலே சங்கநிதிகள் பதுமநிதிகள் இருந்தன என்பதும் காவியப்புலவர்களின் கற்பனை. திவிட்டன் என்னும் சக்கரவர்த்தியிடம் சங்கநிதி பதுமநிதிகளும் இருந்தன என்று சூளாமணி காவியம் கூறுகிறது. “சென்றுயர் வலம்புரி செம் பொற்றாமரை என்றியல் பெயரின இரண்டு மாநிதி ஒன்றல் மணிகளும் ஒண்பொருள் மாழையும் நின்றிவை சொரிந்தொளி நிதற்று கின்றவே” (சூளாமணி - அரசியல், 373) “தேவர்கள், திசைமுகங் காப்ப மாநிதி ஓவல இரண்டு நின்று ஒருங்குவீழ்தர மேவிய அருங்கலம் விளங்க நோக்கிய காவலன் செல்வநீர்க் கடலுள் மூழ்கினான்” (சூளாமணி - அரசியல் 423) “தேங்கமழ் தெய்வச் செம்பொற்றாமரை சுரிவெண் சங்கம் நீங்கியவை நெறிகளாக ஏழரதனங்கள் எய்தி ஆங்கமர் செல்வந் தம்மால் அற்றைக்கன்றமர்ந்த மாதோ ஓங்கினன் உருவத்தாலும் வில்ஒன்ப துயர்ந்த தோளான்” (சூளாமணி சுயம்வரம் 4) இவ்வாறு சங்கநிதி பதுமநிதிகளைக் கற்பனை செய்த காவியப் புலவர்கள் அம்மட்டும் நின்றுவிடவில்லை. இந்த நிதிகள் உயிரற்ற வெறும் சடப்பொருள்கள் தானே. இந்த நிதிகளுக்கு அதிபதியாகத் தெய்வங்களைக் கற்பித்தார்கள். சங்கநிதிக்கும் பதும நிதிக்கும் தலைவர்களாக இரண்டு பூதங்களை (தெய்வங்களைக்) கற்பித்தார்கள். அந்தப் பூதங்களைக் குறள் உருவமாகவும் குடம் போன்ற வயிறும் குறுகிய கைகால்களும் உடையனவாகவும் கற்பித்தனர். மேலும் இரண்டு நிதிகளுக்கும் பெருத்தலைவனாக குபேரன் என்னும் தெய்வத்தையும் கற்பித்தார்கள். குபேரன் என்றால் அழகில்லாதவன் என்பது பொருள். பேரம் என்றால் உருவம் என்பது பொருள். குபேரன் என்றால் விகாரமான உருவமுடையவன் என்பது பொருள். குபேரனை நிதியின் கிழவன் என்றும் வைசிரவணன் என்றும் கூறுவார்கள். பௌத்த மதத்தார் குபேரனை ஜம்பாலி என்று கூறுவர். ஜம்பாலியின் கையில் கீரிப்பிள்ளையின் தோலினால் செய்யப்பட்ட பணப்பை உண்டு. நிதியின் கிழவனைக் குள்ளமாகவும் குறுகின கைகால்களை யுடையவனாகவும் கற்பித்துக் குபேரனாக்கிய புலவர்கள், அவன் விரும்பும் இடங்களுக்கு அவனைத் தூக்கிச் செல்ல ஒரு இயக்கனை ஊர்தியாக கற்பித்தார்கள். அந்த இயக்கனுடைய பெயர் நான் என்பது. ஆகவே குபேரனுக்கு நரவாகனன் என்னும் பெயரும் உண்டு. குபேரன் திக்கு பாலகர்களில் ஒருவன். “இருநிதிக் கிழவன் இயக்கர் வேந்தன் வடதிசைத் தலைவன் நரவாகனனே” என்று பிங்கல நிகண்டு குபேரனைக் கூறுகிறது. குபேரனுடைய நிதிகளுக்கு அளவில்லை. அவனுடைய நிதிகள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றனவாம். நெல் வயலில் ஆண்டு தோறும் நெல் விளைவது போல. குபேரனுடைய தோட்டத்தில் சங்க நிதியும் பதுமநிதியும் விளைகிற கொடிகள் உள்ளனவாம்! சங்கும் தாமரையும் நீரில் விளையும் பொருள்கள் அல்லவா? குபேரனுடைய தோட்டத்துக் குளங்களில் சங்க நிதிகளும் பதும (தாமரை) நிதிகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றனவாம்! (இச்செய்தியைத் தக்கயாகப்பரணி (காளிக்குக் கூளி 195) கூறுகிறது). நிதியின் கிழவனான குபேரன். சிவபெருமானின் தோழன் என்று திருநாவுக்கரசர் கூறுகிறார். “நதியாருஞ் சடையானை நல்லூரானை தள்ளாற்றின் மேயானை நல்லத்தானை மதுவாரும் பொழில் புடைசூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை யாக்கூரானை நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை யாரூ ரென்னும் பதியானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.” (திருப்பள்ளியின் முக்கூடல் - திருத்தாண்டகம் 7) “முத்தனைய முகிழ் முறுவனுடையார் போலும் மொய்பவளக் கொடியனைய சடையார்போலும் எத்தனையும் பத்தி செய்வார்க் கினியர் போலும் இருநான்கு மூர்த்திகளு மானார் போலும் மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அத்தனொடு மம்மையெனக் கானார் போலும் அடியேனை யாளுடைய அடிகள் தாமே’ (திருவீழிமிழலை திருத்தாண்டகம் 9) சில சிவன்கோவில்களில் குபேரனுக்கும் கோயில் அமைக்கப் பட்டுள்ளன. கீழ் வேளுர்க் கோயில் கட்டுமலைமேல் உள்ளகோயில். இது திருவாரூருக்குக் கிழக்கே ஏழு மைல் தூரத்தில் உள்ள இருப்புப் பாதை நிலையத்துக்கு அருகில் உள்ளது. இக்கோயிலில் குபேரனுக்கு ஒரு கோயிலும் குபேரனுடைய உருவமும் இருக்கின்றன. திருநாகேச்சரக்கோயிலிலும் சங்கநிதி பதுமநிதி உருவங்கள் உள்ளன. திருநாகேச்சரக்கோயில் திருவிடைமருதூர் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது. வேறு பல பழைய சிவன் கோயில்களில் கோபுரவாயில் முதலான வாயில்களின் இரு புறங்களிலும் சங்கநிதி பதுமநிதி உருவங்களைக் காணலாம். இதன் கருத்து என்ன? ஏன் சங்கநிதி பதுமநிதிகளின் உருவங்கள் கோயில் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ளன? சங்கநிதி பதுமநிதி முதலான பெரிய செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அந்தச் செல்வங்கள் கடவுளின் திருவருட் செல்வத்துக்கு (கருணாநிதிக்கு) இணையாகா என்பதைக் கோயிலுக்கு வருபவர்களுக்கு நினைவூட்டு வதற்காகவே இவை அங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயிலுக்குச் செல்பவரில் ஒருசிலராவது இந்தப் பதுமநிதி சங்கநிதி உருவங்களைக் கண்டு அவற்றின் கருத்தை உணர்கிறார்களா? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன் இராமலிங்க வள்ளலாரும், சங்கநிதி பதுமநிதிகளை வேண்டாமல், ‘நின்கருணை நிதி வேண்டும்’ என்று கடவுளின் திருவருள் நிதியைத்தானே வேண்டினார்.! இறைவனுடைய அருட்செல்வமாகிய கருணாநிதியை மிக நிறையப் பெற்றவர் திருநாவுக்கரசுப்பெருமான் அவர், திருக்கோயில் களில் உழவாரத் திருப்பணி செய்வது வழக்கம். ஒருசமயம் பூம்புகலூர் திருக்கோயிலில் சுற்றுப்பிரகாரத்தில் இருந்த புல்லையும் கல்லையும் உழவாரப் படையினால் களைந்து செப்பனிட்டுக் கொண்டிருந்தபோது பருக்கைக் கற்களுடன் செம்பொன்னும் நவமணிகளும் வெளிப்பட்டன. கடவுளின் திருவருளாகிய கிடைத்தற்கரிய பெருநிதியைப் பெற்றிருந்த அவருக்கு இந்த நிதிகள் பருக்கைக் கற்களும் கூழாங்கற்களும் போலத் தோன்றின. அவர் அவற்றைக் கையினால் தொடாமல் உழவாரத்தினால் எடுத்து அருகிலிருந்த குளத்தில் வீசி எறிந்தார். “செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கெவையும் உம்பர் பிரான் திருமூன்றில் உருள்பருக்கை யுடன் ஒக்க எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி வம்பலர் வெண்பூங்கமல வாவியினிற் புக எறிந்தார்.” (திருநாவுக்கரசர்புராணம் - 417) சங்கநிதி பதுமநிதி போன்ற பெருஞ் செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவர் கடவுளின் திருவருட் செல்வத்தைப் பெறாதவர்களானால் அவர்களுக்கு மன நிறைவு நிறைமனம் - உண்டா? இல்லையே. ஆகவே, கடவுளின் திருவருட் செல்வத்தைப் பெற்றவர், பெரு நிதிகளைப் பெறாதவராக இருந்தாலும் அவர்களே செல்வராவர். கடவுளின் திருவருட் செல்வத்தைக் குறைவறப்பெற்ற அருட்பெருஞ் செல்வராகிய திருநாவுக்கரசர் இதுபற்றி அருளிச் செய்த சங்கநிதிபதுமநிதிச்செய்யுளைக் கூறி அமர்வோம். “சங்கநிதி பதுமதி இரண்டுந் தந்து தாணியொடு வானாளத் தருவாரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்லராகில் அங்கமெலாம் குறைத்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார்சடைக் கரத்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.” யானைக்கோவில்* பாரதநாட்டுக் கோவில்கள் பாரத நாட்டிலே பழைய காலம் முதல் பலவகையான கோவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடங்கள் நாகரம். திராவிடம் வேசரம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிற்ப சாஸ்திர நூல்கள், கூறுகின்றன. நாகர அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்கு வடக்கேயும் திராவிட அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்குத் தெற்கேயும் அமைக்கப்பட்டன என்று சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. வேசர அமைப்புக் கோவில்கள் பாரத நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டன. வேசர அமைப்புக் கட்டடங்களை ஆதிகாலத்தில் பௌத்த மதத்தார் அதிகமாகக் கட்டினார்கள். வேசரக் கட்டடங்களில் சில உட்பிரிவு களும் உண்டு. ஆனால், பொதுவாகப் பார்க்கும்போது வேசரக் கட்டடங்கள் தரையமைப்பிலும் கட்டட அமைப்பிலும் விமான(கூரை) அமைப்பிலும் வட்ட வடிவம் அல்லது அரைவட்ட வடிவம் உடையவை என்பது தெரியவரும். இவற்றில் சில முழு வட்டமாகவும் சில அரைவட்ட வடிவமாகவும் சில விமானம் மட்டும் வளைந்த (அரை வட்ட) அமைப்புள்ளனவாகவும் இருக்கின்றன. வேசரக் கோவில் கட்டட அமைப்புகளில் யானைக்கோவில் என்றும் கஜபிருஷ்டம் என்றும் கூறப்படுகிற ஒருவகைக் கோவிலைப்பற்றி இங்கு ஆராய்வோம். கஜபிருஷ்டக் கோவில்கள் கஜபிருஷ்டக் கோவில் அமைப்பைக் சேதியகிருஹம் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது ‘சேதியகர’ என்று கூறப்படுகிறது. தமிழில் இது யானைக் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. சிற்ப சாஸ்திரநூல் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம் என்றும் ஹத்திபிருஷ்டம் என்றும் குஞ்சரபிருஷ்டம் என்றும் கூறுகின்றன. கஜம், உருஸ்தி, குஞ்சரம் என்றும் சொற்களில் பொருள் யானை என்பது. யானைப் பக்கங்களிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் பார்த்தால் எவ்விதமான தோற்றமாகக் கானப்படுகிறதோ அப்படிப் பட்ட வடிவமுடையது இந்தக் கட்டடங்கள். ஆகவேதான் இக்கட்டடங்களுக்கு கஜபிருஷ்டக் கோவில், உழஸ்தி பிருஷ்டக் கோவில். குஞ்சரக்கோவில் என்று பெயர்கள் கூறப்படுகின்றன. குஞ்சரக்கோவில் என்பதை மணிமேகலை காவியத்தில் குச்சரக் குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக் கோவிலாகிய சம்பாபதிக்கோவில் இந்த அமைப்பாக இருந்தது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர்பெற்றிருந்தது. தமிழ் நாட்டுக் கோவில் கட்டடங்களின் பெயர்களால் கூறுகிற அப்பர் (திருநாவுக்கரசு) சுவாமிகள் யானைக்கோவில் ஆலக்கோவில் என்று கூறுகிறார். அவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களில் திருத்தாண்டகம் ஒன்றில் இப்பெயரைக் கூறுகிறார். “பெருக்காறு சடைக்கவிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்ப னைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில்சூழ்ந்து தாழ்த்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.” (திருஅடைவு திருத்தாண்டகம் 5) இதில் ஆலக்கோயில் கூறப்படுவது கான்க. சிலர் ‘ஆலக்கோயில்’ என்பதை ஆலமரத்தின்கீழே அமைந்த கோயில் என்று தவறாகக் சிலர் கருதுகிறார்கள். அப்படியாகும், புன்னைமரம் மகிழமரம், வேப்பமரம், அரசமரங்களின் கீழிருக்கும் ‘கோவில்கள் முறையே புன்னைக்கோயில் மகிழக்கோயில், வேப்பங்கோவில், அரசங்கோவில் என்று பெயர்கள் கூறப்பட வேண்டுமன்றோ? அவ்வாறு கூறப்படுவது இல்லையாகையால், ஆலக்கோயில் என்பது யானைக்கோயில் என்பதன் மரூஉ. என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஆலக்கோயில் என்பதற்கு ஆலமரத்தின் கீழிருக்கும் கோவில் என்று கூறுவது தவறு. (தொடர்புரை காண்க.) ஆனைக்கோயிலை ‘ஆனைமாடம்’ என்றும் அப்பர் சுவாமிகள் கூறுகிறார். திருக்கடந்தைத் தூங்கானை மாடத் திருப்பதிகம் காண்க. (அப்பர் தேவாரம் முதற்றிருமுறை) ‘பெண்னாகடத்துப் பெருந்தூங்கா னைமாடத்தை‘யும் கூறுகிறார். (அப்பர் தேவாரம், 3 ஆந் திருமுறை, திருவீழிமிழலை. 3.) திருஞானசம்பந்தரும் தூங்கானை மாடம் திருக்கோயிலைக் கூறுகிறார். (சம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை) இவ்வாறு, ஆனைக்கோயில் கட்டடங்கள் தேவாரத்திலும் கூறப்படுகின்றன. அதன் வளர்ச்சி யானைக்கோயில் கட்டடங்கள் ஆதிகாலத்தில், அதற்குரிய சாதாரண அமைப்பாகக் கட்டப்பட்டன. பிறகு காலஞ்செல்லச் செல்ல யானைக்கோயில் கட்டட அமைப்பில் சில சிறு அமைப்புகள் தோன்றலாயின. ஆகவே ஆனைக்கோயில் கட்டட வரலாற்றில் மூன்றுவித வளர்ச்சியைக் காண்கிறோம். அவற்றை ஆதிகாலம், இடைக்காலம், பிற்காலம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆதிகாலம் என்பது ஏறத்தாழ கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம். இக்காலத்து யானைக்கோயில் கட்டடங்களைப் பௌத்தக் காலத்து யானைக் கோயில் என்று கூறலாம். ஏனென்றால், அக்காலத்தில் பௌத்த மதத்தார்களால் இக்கோவில் கட்டடங்கள் பெரும்பாலும் கட்டப் பட்டன. இடைக்கால யானைக்கோயில் கட்டடங்கள் ஏறத்தாழக் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையில் அமைக்கப் பட்டவை. இவற்றைப் பல்லவர் காலத்து யானைக் கோயில்கள் என்று கூறலாம். ஏனென்றால், இவை பெரும்பாலும் பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை. பிற்காலத்து யானைக்கோவில்கள் ஏறத்தாழக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையில் அமைக்கப்பட்டவை. இக்கால யானைக்கோவில்களுக்குச் சோழ பாண்டியர் காலத்து யானைக் கோயில் என்று பெயர் கூறலாம். ஏனென்றால், பிற்காலச் சோழரும் பாண்டியரும் இக்கோவில்களை அமைத்தார்கள். சோழ பாண்டியருக்குப் பிறகு விஜயநகர அரசர் காலத்திலும் சில யானைக் கோயில் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். இந்த முறைப்படி யானைக்கோயில் கட்டட அமைப்பையும் அதன் வளர்ச்சியையும் ஆராய்வோம். பௌத்தக் காலத்து யானைக் கோவில்கள் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை) பௌத்தர் தொன்றுதொட்டு சைத்தியாலயம் (சைத்தியக் கிருஹம்) என்னும் கோவில்களை அமைத்தார்கள் என்றும் அக்கோயில் கள் கஜபிருஷ்டக்கோவில்கள் என்றும் யானைக்கோவில்கள் என்றும் பெயர்பெற்றன என்றும் கூறினோம். பௌத்தமதம், தென் இந்தியா விலும் தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவிற்று. (தமிழ் நாட்டுப் பௌத்த வரலாற்றினை. இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் நூலில் காண்க.) எனவே. தமிழ் நாட்டில், பௌத்தக்கால யானைக் கோவில் கட்டடங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்று கொள்ளலாம். பௌத்தக் காலத்து யானைக்கோவில்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவை மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட யானைக் கோயில்கள். செங்கற்களால் கட்டப்பட்ட யானைக்கோயில்கள் என்பன. மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட அக்காலத்து யானைக்கோயில்கள் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றன. அந்தப் பாறைக்கோயில்களைப் பார்த்து அதன் அமைப்பு எப்படி யிருந்தன என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால், அந்த யானைக்கோயில்களின் உட்புற அமைப்பும் முகப்பு (வாயிற்புற) அமைப்பும் எவ்வாறு இருந்தன என்பது மட்டும் இவைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அக்கோவில்களில் மேற்புற அமைப்பு பாறைக்கோயில்களில் அமைக்கப்படவில்லை. அக் கோயில்களின் மேற்புறங்கள் (விமானங்கள்) பாறையில் அமைக்கப் படாமல் வெறும் பாறையாகவே விடப்பட்டிருக்கிறபடியால், மேற்புற அமைப்பைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பௌத்தக் காலத்தில் செங்கற்களினால் கட்டப்பட்ட யானைக் கோயில்கள். ஏறக்குறைய எல்லாம் அழிந்துவிட்டன. ஏனென்றால் செங்கற்கட்டடங்கள் நெடுங்காலம் நிற்பது இல்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில், சம்பாபதி என்னும் பௌத்தத் தெய்வத்துக்குக் குச்சரக்குடிகை (குஞ்சரக்குடிகை) என்னும் கோயில் அமைந்திருந்தது என்றும், அது யானைக்கோயில் உருவமாக அமைந்திருந்ததென்று அதன் பெயரிலிருந்து (குச்சரக் குடிகை - குஞ்சரக்குடிகை - யானைக்கோயில்) தெரிகிறது என்றும் இச்செய்தி மணிமேகலை காவியத்திலிருந்து அறியப்படுகிறது என்றும் கூறினோம். அந்தக் கோயில் இப்போது மறைந்து போயிற்று. தமிழ் நாட்டிலிருந்த பௌத்தக் காலத்து யானைக்கோயில்கள் எல்லாம் அவை செங்கல்களால் கட்டப்பட்டபடியால் ஒன்றைத் தவிர மற்றவை அடியோடு அழிந்துபோயின. ஆனால், ஆந்திர தேசத்தில் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோயில்களின் முழுகட்டடங்கள் அழிந்துபோனபோதிலும் அவற்றின் அடிப்பகுதிகளாவது இப்போதும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் பௌத்தக் காலத்து யானைக்கோயில் கட்டடங்கள் முழுவதும் அழிந்துபோக, ஆந்திர நாட்டுப் பௌத்தக்கால யானைக் கோயில்களின் அடிப்பகுதிகளாவது அழியாமல் நிலைபெற்றி ருப்பதற்குக் காரணம் என்ன? தமிழ் நாட்டிலே பத்தி இயக்கம் தோன்றிச் சைவநாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் வெளிப் பட்டுப் பௌத்த ஜைன மதங்களுடன் சமயப்போர் செய்தார்கள். தமிழ் நாட்டில் சமயப்போர் தொடங்கிய சில நூற்றாண்டுக்குப் பிறகு ஆந்திர நாட்டில் சமயப் போர் ஆரம்பித்தது. ஆகவே, தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர் காலத்து யானைக்கோயில் கட்டடங்கள் போற்றுவார் இல்லாமல் விரைவாக அழிந்துப்பட்டன. ஆந்திர நாட்டில் பௌத்த மதம் சில நூற்றாண்டுக்குப் பிறகும் நிலைபெற்றிருந்து பிறகு அழிக்கப் பட்டது. ஆகையினால்தான் ஆந்திர நாட்டில் பௌத்தக்கால யானைக்கோயில்களில் சிதைவுகள் இப்போதும் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டிலே காடுகளிலும் குன்றுகளிலும் ஆங்காங்கே சிதைந்து அழிந்து கிடக்கிற பௌத்தக் கோயில்களை அரசாங்கத்துப் புதைபொருள் ஆராய்ச்சிக்காரர் (ஆர்க்கியாலஜி இலாகா) கண்டு பிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களுள் நமது ஆராய்ச்சிக்குரிய யானைக்கோயிற் கட்டடங்களும் காணப் படுகின்றன. அவை, மேற் கூரையும் சுவர்களும் இல்லாமல் தரைப் பகுதி மட்டும் காணப்படுகின்றன. இத்தரை யமைப்பைக் கொண்டு அக்கோயில்கள் நீண்ட அரைவட்டமாக இருந்தன் என்பதை அறிகிறோம். நாகார்ச்சுனகொண்ட என்னும் மலை முற்காலத்தில் பேர்போன பௌத்தத் திருப்பதியாக இருந்தது. இது ஆந்திர நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே கிருஷ்ணையாற்றக்கரையிலே இருக்கிறது. குண்டூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வண்டியில் மாசெர்வா என்னும் இடத்துக்குப் போய் அங்கிருந்து 16 மைல் சென்றால் இந்த மலையை அடையலாம். இங்கு, அழிந்துபோன சில பௌத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் மூன்று யானைக்கோயில் அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் தரையமைப்பைப் படத்தில் காண்க. அழிந்துபோய் தரையமைப்பு மட்டும் காணப்படுகிற இந்தப் பௌத்த யானைக்கோயில் கட்டடத்தைக் கட்டியவர் சாந்திஸ்ரீ என்னும் அரசியார். இவர் அக் காலத்தில் இப்பகுதியை யரசாண்ட இக்காகு (இஷ்வாகு) அரச குலத்தைச் சேர்ந்தவர். இச்சயித்தியக் கோவிலை இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கட்டினார். இந்தக் கோவிலின் தரையிலே கல்லில் மேல் எழுதப்பட்ட சாசன எழுத்து இவ்வாறு தொடங்குகிறது. “ஸித்தம் நமோ பகவதோ புத்தஸ சேதிய கரா இதன் பொருள் : “பகவானுக்கு வணக்கம். புத்தருடைய சேதிய கிருகம்” இதனால், இது பகவன் புத்தருக்கு அமைக்கப்பட்ட சயித்தியக்கோயில் என்பது தெரிகிறது. இவ்விடத்திலேயே வேறு இரண்டு யானைக்கோயில்களில் தரையமைப்புக்கள் கானப்படுகின்றன. இவற்றைக் கட்டியவர், மேற்படி இக்காகு அரச குலத்தைச் சேர்ந்த போதிஸ்ரீ என்னும் அரசியார். (The Buddhist antiquities of Nagarjuna Konda, Madras Presidency. by, A. H. Loguhurst Members of the Archaeological Survey of India No. 54) குண்டபல்லி கிராமம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எல்லூர் தாலுகாவில் இருக்கிறது. இக்கிராமத்தில் இடிந்துபோன பௌத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் யானைக்கோயிலும் ஒன்று. இதன் தரையமைப்பு நீண்ட அரைவட்டமாக இருக்கிறது. இதன் நீளம் 53 அடி, 7 அங்குலம். அகலம் 14 அடி, 5 அங்குலம். சுவரின் கனம் 4 அடி, 3 அங்குலம். (Plate XXI. Annual Report of Archaeology 1916-17) கஞ்சம் மாவட்டம் சிக்ககோல் தாலுகாவில் வம்சதாரை என்னும் ஆற்றில் தென்கரையில் சாலிஉறாண்டம் என்னும் கிராமம் இருக்கிறது. கலிங்கபட்டணம் என்னும் துறைமுகத்திற்குத் தெற்கே 6 மைலில் இது இருக்கிறது. இந்தக் கிராமத்தையடுத்துள்ள குன்றின் மேலே உள்ள அழிந்துபோன பௌத்தக்கட்டடங்களில் ஒன்று யானைக்கோவிலின் தரையமைப்புடையது. இதன் நீளம் ஏறக்குறைய 24 அடி, அகலம் 12 1/2 அடி. சுவரின் கனம் 3 அடி. இக்கட்டடம் கி.பி. 7ஆ நூற்றாண்டு முன்பு கட்டப்பட்டிருக்கவேண்டும். இக்கட்டடச்சுவரில் உள்ள செங்கற்கள் 18x11x 3 அளவுள்ளன. (Annual Report of Archaeology 1919-20 P. 36. Fig 2. Plan of the Chaitya with Broken Buddha) விசாகப்பட்டணம் மாவட்டத்தில் உள்ள விஜயநகரத்திலிருந்து வடகிழக்கே 8 மைலுக்கப்பால் இராமதீர்த்தம் என்னும் கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் வடக்கேயுள்ள குருபக்தி கொண்ட என்னும் குன்றின்மேல் இடிந்துபோன பௌத்தக் கட்டடங்கள் சில உள்ளன. அவற்றில் ஐந்து கட்டடங்கள் யானைக் கோயில்கள் இவற்றில் தரையமைப்பு அகலநீளங்கள் வருமாறு: 1-ஆவது யானைக்கோயில் : இது மேற்குப் பக்கத்தில் உள்ளது. உட்புறமாக இதன் நீளம் 40 அடி, அகலம் 11 அடி. வாயிலின் அகலம் 4 அடி, சுவரின்கனம் 4 1/2 அடி. இதில் 7 அடி உயரம் உள்ள கருங்கல்லால் அமைந்த தாதுகர்ப்பம் (சேதியம்) காணப்படுகிறது. 2-ஆவது யானைக்கோயில் : இது 4 அடி 8 அங்குல உயரம் உள்ள மேடை மீது கட்டப்பட்டிருக்கிறது. நீளம் 26 அடி 9 அங்குலம். அகலம் 11 அடி 4 அங்குலம். வாயிலின் அகலம் 4 அடி 5 அங்குலம். சுவர் கனம் 2 அடி 4 அங்குலம். இதில் 9 அடி உயரம் உள்ள கருங்கல்லினால் அமைந்த சேதியம் இருக்கிறது. 3-ஆவது யானைக்கோயில் : இது மேலே கூறப்பட்டவற்றை விடச் சற்றுப் பெரியது. இதன் முன்புற வாயிலரன் அகலம் 4 அடி 10 அங்குலம். இதில் இருந்த தாதுகம்பத்தின் அடிப்புறம் மட்டும் காணப்படுகிறது. இதன் சுற்றளவு. 9 அடி 9 அங்குலம். 4-ஆவது யானைக்கோயில் : இதன் நீளம் 33 அடி 5 அங்குலம். அகலம் 11 அடி 6 அங்குலம். சுவர் கனம் 4 அடி 9 அங்குலம். இதிலும் கருங்கல்லினால் அமைந்த சேதியம் காணப்படுகிறது. 5-ஆவது யானைக்கோயில் : இதன் நீளம் 30 அடி. அகலம் 13 அடி 6 அங்குலம். சுவர் கனம் 3 அடி 6 அங்குலம். (Plate x L. Page 79. Buddhist Monastries in the Guru Bhakta Konda and Durga Konda Hills of Rama Tirtham by A. Roa. PP. 78-88. Archacological Survey of India Annual Report 1910-1911) குருபக்த கொண்டாவுக்கு வடக்கே கால் மைலுக்கப்பால் துர்க்ககொண்ட என்னும் குன்று இருக்கிறது. இங்கு அழிந்து கிடக்கும் பௌத்தக்கட்டடங்களில் ஒன்று யானைக்கோவில். இதன் நீளம் 60 அடி, அகலம் 13 அடி. (Plate XLVI. Do Do Do P. 86) சாஞ்சி என்னும் இடம் போபால் சமஸ்தானத்தில் இருக்கிறது. சாஞ்சியின் பழையபெயர் சேதியகிரி என்பது. சேதியகிரி என்பது சிதைந்து சாஞ்சி என்று கூறப்படுகிறது. இங்குப் பௌத்தக் கட்டடங்கள் சிதைந்து இடிந்து உள்ளன. இவற்றில் மூக்கியமான கட்டடம் புப்புலாகாரமாக அதாவது நீர்க்குமிழிபோன்ற அமைப்புடையது. இங்குள்ள ஒரு கட்டடம் யானைக்கோயில் அமைப்பாக இருந்தது. (Plate 47. Fergusion) இதுகாறும் இடிந்து சிதைந்து அழிந்துபோன யானைக் கோயில் களின் செங்கற்கட்டடங்களின் தரையமைப்பைக் கண்டோம். யானைக் கோவிலின் செங்கற்கட்டடங்களை முழு உருவத்துடன் பார்க்க வில்லை. பௌத்தக் காலத்து யானைக்கோவில்களின் முழு உருவமுள்ள யானைக்கோவில்கள் உண்டா என்பதைப் பார்ப்போம். ஆம் உண்டு. சிறிதும் சிதையாமல், முழு உருவத்தோடு உள்ள, செங்கற்களால் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோயில்கள் மூன்று இருக்கின்றன. அந்த மூன்று யானைக் கோவில்கள் இப்போது கபோதேசுவரர் கோவில் என்றும், திரிவிக்ரமன் கோவில் என்றும் தூங்காளைமாடம் என்றும் பெயர் பெற்றுள்ளன. இந்தப் பௌத்த காலத்து யானைக்கோவில்களைப் பார்த்து, ஆதிகாலத்தில் எவ்வாறு யானைக்கோயில்கள் செங்கற்களால் அமைக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதிகாலத்து யானைக்கோவில், அதாவது பௌத்தக் காலத்தில் கஜபிருஷ்ட விமானக்கோயில், இப்போது முழு அமைப்போடு உள்ளவை கபோதேசுவரர் கோவிலும் திரிவிக்கிரமன் கோவிலும் பெண்ணாகடத்து யானைமாடக்கோவிலும் என்று கூறினோம் இக்கட்டடங்களின் அமைப்பை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பு இக்கோவில்களைப் பற்றிய பொதுவான சில வரலாறுகளைத் தெரிந்துகொள்வோம். கபோதெசுவரர் கோவில்: ஆந்திர தேசத்துக் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 15 மைல் தூரத்தில் உள்ள சேஜர்லா கிராமத்தை யடைந்தால் அங்குக் கபோதேசுவரர் கோவிலைக் காணலாம். முற்காலத்தில் பௌத்தமதக் கோயிலாக இருந்த இது பிற்காலத்தில் சைவசமயக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. திரிவிக்கிரமன் கோவில் இது பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்தது. இப்போதைய மகாராஷ்டிர தேசத்தில் உள்ளது. ஷோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்சி என்னும் நகரத்திலிருந்து கிழக்கே 30 மைலுக்கப்பால் தேர்னா ஆற்றின் கரைமேல் உள்ள தேர் என்னும் கிராமத்தில் இக்கோயில் இருக்கிறது. தேர் கிராமத்தின் பழைய பெயர் தகரை என்பது. தேர் என்னும் இக் குக்கிராமம் பண்டைக்காலத்தில் தகரை என்று பேர்பெற்றிருந்த வாணிகம் செழித்த நகரமாக இருந்தது. பழம்பெருமையை இழந்து இப்போது குக்கிராமமாக இருக்கிற இவ்வுரில், பௌத்தக் காலத்து யானைக்கோவில் அழியாமல் இருக்கிறது. பௌத்தக் கோவிலாக இருந்த இது பிற்காலத்தில் வைணவக் கோவிலாக மாற்றப்பட்டுத் திரிவிக்கிரமன் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. செங்கல்லினால் கட்டப்பட்ட பௌத்தக்காலத்து யானைக் கோவில்கள் அழியாமல் முழு உருவத்துடன் இருப்பவை இவ்விரண்டு கோவில்கள் மட்டுமே. இவை இரண்டும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்று கருதப்படுகின்றன. இக்கோவில்களைச் சூழ்ந்து முன்பக்கத்திலும் சுற்றுப்புறங் களிலும் மண்டபங்களும் கட்டடங்களும் பிற்காலத்தில் புதிதாக அமைக்கப்பட்டன. ஆதிகாலத்தில் இந்த மண்டபங்களும் கட்டடங் களும் இல்லை. இக்கோவில்களைப் பௌத்தரிடமிருந்து சைவ வைணவர்கள் கைப்பற்றிக்கொண்ட பிறகு. புதிய மண்டபங்களும் கட்டடங்களும் மூலக் கோவிலைச் சூழ்ந்து கட்டினார்கள். சுற்றிலுமுள்ள கட்டடங்களே நீக்கிவிட்டுப்பார்த்தால் நடுவில் உள்ள பழைய பௌத்தக்காலத்து யானைக்கோயிலைக் காணலாம். இனி இவற்றின் கட்டட அமைப்பைப் பார்ப்போம். (Plates 50, 51, 52. Archaeological Survey of India. Annual Report 1902-03) இரண்டு கட்டடங்களும் ஒரேவிதமாக அமைப்புள்ளவையாகத் தெரிகின்றன. தரையமைப்பு நீண்டு பின்புறம் வளைந்து அரை வட்டமாக இருக்கின்றன. சுவர்களும் அதே அமைப்புள்ளதாக இருக்கின்றன. மேற்கூரை (விமானம்) யானை முதுகுபோன்று வளைவாக இருக்கிறது. அதாவது படகைக் கவிழ்த்து வைத்தது போன்று இருக்கிறது. முன்புறத்தில் வாயிலும் வாயிலுக்கு மேலே ‘நெற்றி முகமும்’ அமைந்துள்ளன. இரண்டு கட்டடங்களிலும் உள்ள செங்கற்கள் ஒரே அளவுள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கல்லும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளதாக இருக்கிறது. முழுவதும் சுடுமண்ணால் (செங்கல்லினால்) கட்டப்பட்டு வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் வெண்சுதை பூசப்பட்டுள்ளன. யானையை நிறுத்தி அதைப் பின்புறத்திலிருந்தும் பக்கங்களிலிருந்தும் பார்த்தால் எப்படி இருக்குமோ அவ்வித அமைப்புள்ளதாக இந்த யானைக்கோவில் கட்டடங்கள் இருக்கின்றன. இரண்டு கட்டடங்களிலும் சுவரில் சிறு வேறுபாடுகள் காணப் படுகின்றன. கபோ தேசுவரர் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே ‘கழுத்து’ என்னும் உறுப்பு இல்லாமல் சுவரும் கூரையும் ஒன்றாக இருக்கின்றன. ஆனால், திரிவிக்கிரமன் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே ‘கழுத்து’ என்னும் உறுப்பு அமைந்திருக்கிறது. மேலும், சுவரில் இடையிடையே சுவரோடு சுவராகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள். ‘கழுத்து’ வரையில் அமைந்துள்ளன. ‘கழுத்து’க்குக் கீழே எழுதகம் அமைந்திருக்கிறது. ‘கழுத்து’ தூண்கள், எழுதகம் ஆகிய இவை யெல்லாம் இக்கட்டடத்துக்கு அழகு தருகின்றன. இச்சிறு வேறுபாடுகள் தவிர இரண்டு கட்டடங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. இரண்டு கட்டடங்களில் (பக்கங்களிலும் பின்புறத்திலும்) சாளரங்கள் இல்லை. வாயிலுக்கு மேலேயுள்ள ‘நெற்றி முகம்’ சாளரங்களாக அமைந்துள்ளன. இதன் வழியாகக் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துள் சென்றன. இப்போது, சைவ வைணவர்கள், இச்சாளரங்களை அடைத்துவிட்டார்கள். ஆனால், ‘நெற்றிமுகம்’ அமைக்கப்பட்டதன் முதல் நோக்கம் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துக்கு உள்ளே வருவதற்காகவே. கபோதேசுவரர் கட்டடத்தில் உட்புறத்தில் 7 1/2 அடி உயரத்துக்கு மேலே, விதானம் அமைத்துபோல (தளம் இட்டதுபோல) மேற்புறம் தெரியாதபடி மறைத்து விட்டார்கள். இது பிற்காலத்தில் அமைக்கப் பட்டது. திரிவிக்கிரமன் கட்டடத்தில் இவ்வாறு அடைக்கப்படவில்லை. இரண்டு யானைக்கோவில்களும் செங்கல் கட்டடங்கள் என்றும், இச்செங்கற்கள் ஒவ்வொன்றும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளன என்றும் கூறினோம். இக்கற்களின் அளவைக் கொண்டு இக்கட்டடங்கள் அமைக்கப் பட்ட காலத்தைக் கன்டறியலாம். இக்கற்கள் மௌரிய அரசர் காலத்துக் கற்களைவிடச் சற்றுச் சிறியவையாகவும், குப்த அரசர் காலத்துக் கற்களைவிடக் சற்றுப் பெரியதாகவும் இருக்கின்றன. ஆகவே இக்கட்டடங்கள், இவ்விரண்டு அரச பரம்பரையார் ஆண்ட காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இவை கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். வேறு சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டவை என்று கூறுகின்றனர். எப்படியிருந்தபோதிலும் இந்த யானைக்கோவில் கட்டடங்கள் ஆதிகாலத்துக் கட்டடங்களாகும். அதாவது பௌத்தக் காலத்து யானைக்கோவில் கட்டடங்களாகும். ஆனைமாடம் தமிழ் நாட்டிலேயுள்ள ஆதிகாலத்து (பௌத்தக்காலத்து) யானைக்கோவில் ஒன்று இருக்கிறது என்று கூறினோம். இக்கோவிலைக் ‘கடந்தைத்தூங்கானைமடம்’ என்று கூறுவர். பெண்ணாகடம் என்னும் ஊரில் இக்கோவில் இருக்கிறது. (திருவானைக்கா என்றும் பெயர் கூறுவர்.) விழுப்புரம் - திருச்சி இருப்புப்பாதையில் பெண்ணாகடம் ரெயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு நாழிகை தூரத்தில் இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலைக் கட்டியவன் சோழன் செங்கணான் என்பவன். சோழன் செங்கணான் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் இருந்தவன். அவனால் கட்டப்பட்ட இந்த யானைமாடக்கோவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அமைந்தது. எனவே, கபோதேசுவரர், திருவிக்கிரமன் யானைக் கோவில் களைவிட இது பழமையானது. யானைக்கோவில் அமைப்பாக உள்ள இந்தக் கட்டடம், ஏனைய பௌத்தக் காலத்து யானைக்கோவிலைப் போன்றதே. இது சிவபெருமானுக்காகச் சோழன் கட்டிய கோவில். ஆனால், இதைப் பௌத்தக்காலத்துக் கோவில் என்று ஏன் கூறுகிறோம் என்றால், பௌத்த மதத்தார்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தபடியால் இப்பெயர் கூறுகிறோம். இது ஆதிகாலத்திலிருந்தே சிவனுக்காகக் கட்டப்பட்ட கோவில். அதாவது பௌத்தக் கோவிலாக இருந்து சைவக்கோவிலாக மாற்றப்பட்டது அன்று. இந்தப் பெண்ணாகடத்து யானைக்கோவில் கட்டடத்தில், ஏனைய யானைக்கோவில் கட்டடங்களில் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால் இக்கட்டடத்தின் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருப்பதுதான். இருபுறத்துச் சுவர்கவிலும் பின்புறத்துக் சுவரிலும் ஒவ்வொரு சாளரம் வீதம் மூன்று சாளரங்கள் இக்கட்டடத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. இது அக்கட்டடத்துக்கே உரிய தனிச் சிறப்பு. ஆதிகாலம் இடைக்காலம், பிற்காலம் ஆகிய காலங்களில் அமைக்கப்பட்ட யானைக்கோவில் கட்டடங்கள் ஒன்றிலேனும் இதுபோன்ற சாளர அமைப்புகள்கிடையா. செங்கட் சோழன் கட்டிய இந்த யானைக்கோவிலில் மட்டும், தனிச் சிறப்பாகச் சாளரங்கள் இருக்கின்றன. ஏன்? இதன் காரணம் என்ன? இந்த யானைமாடக் கோவிலில் அகநாழிகையில் (அகநாழிகை - திருவுண்ணாழிகை - கருப்பக்கருகம்.) எப்போதும் நீர் இருந்து கொண்டேயிருக்கிறது. நீரிலே இலிங்க உருவம் எழுந்தருளப் பட்டிருக்கிறது. இது பஞ்சபூத இலிங்கங்களில் அப்புலிங்கம். ஆகவே இது நீரின் இடையே அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பர் சுவாமிகள் தாம் அருளிய திருவானைக்கா திருந்தாண்டகத்தில், நீரில் எழுந்தருளி யுள்ள இச் சிவலிங்க மூர்த்தியைச் ‘செழுநீர்த்திரள்’ என்று கூறுகிறார். சூரியவெளிச்சம் படாத இடத்தில் நீர் தேங்கியிருந்தால் அந்நீர் கெட்டுப்போகும். காற்றும்வெளிச்சமும் புகாதபடி இக்கோவிலில் நீர் இருந்தால் கெட்டுப்போகும் அல்லவா? ஆகவே, காற்றும் சூரியவெளிச்சமும் உள்ளே புகும்படியாக இந்த யானைக் கோவில் கட்டடத்தில் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருக் கிறார்கள். இதுதான் இக்கட்டடத்துக்குத் தனிச்சிறப்பாகச் சாளரம் அமைக்கப் பட்டிருப்பதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் செங்கட்சோழனால் கட்டப்பட்ட இத்தூங்கானை மாடக்கோவிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரப் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் ‘கடந்தையுள் தூங்கானைமாடம்’ என்றும் ‘பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானைமாடம்’ என்றும் கூறுகிறார். திருஞானசம்பந்த சுவாமிகள் ‘கடந்தைத் தடங்கோயில் தூங்கானைமாடம்’ என்றும் ‘பெண்ணாகடத்துப் பெருங்கோயில்’ என்றும் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியினாலே பௌத்தக்காலத்து யானைக் கோவிலின் அமைப்பைக்கண்டோம். அந்தக் காலத்து யானைக் கோவில்கள் நீண்ட சதுரமாய்ப் பின்புறம் அரைவட்ட வளைவாய் அமைந்த தரையமைப்பையும் சுவர் அமைப்பையும் உடையதாய் யானை முதுகு போன்ற (அல்லது படகைக் கவிழ்த்து வைத்தது போன்ற) கூரையையுடைய முன்புற வாயிலுக்கு மேலே ‘நெற்றி முகம்’ என்னும் சாளரம் அமைந்திருந்தது. செங்கல்லினால் கட்டப்பட்டு உட்பக்கமும் வெளிப்பக்கமும் சுதையும் சுண்ணமும் பூசப்பட்டது. நெற்றிமுகத்தைத் தவிர வேறு சாளரங்கள் இல்லாதது. (பெண்ணா கடத்து யானைக்கோவில் இதற்கு விதிவிலக்காக உள்ளது.) யானையின் உருவம்போல அமைந்திருந்த படியால் யானைக்கோவில் என்றும் குஞ்சரக்குடிகை (குச்சரக்குடிகை) என்றும், கஜபிருஷ்டம், உறஸ்தி பிருஷ்டம் என்றும் பெயர் பெற்றது. இக்கட்டட அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், ஏனைய கோவில் கட்டட அமைப்புகளில் கழுத்தாகிய பிரஸ்திரத்துக்கு மேலே அமைக்கப் படுகிற கர்ணகூடு பஞ்சரம்சாலை என்னும் உறுப்புகள் அக்காலத்து யானைக்கோவில்களுக்குக் கிடையா. மேலும், சுவரின் வெளிப் புறத்தில், ஏனைய கோவில் கட்டடங்களில் அமைக்கப்படுகிற ‘கோஷ்ட பஞ்சரம்’ என்னும் உறுப்பும் ஆதிகால யானைக் கோவில் களில் கிடையா. ஏறத்தாழக் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்தில் எழுதப்பட்ட காமிகாகமத்தில் கஜபிருஷ்ட உறஸ்திபிருஷ்டக் கோவில்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏனைய சிற்ப சாத்திர நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் கி.பி. 600 முதல் 900 வரையில் அமைக்கப்பட்ட யானைக் கோவில் கட்டங்களுக்கும் பல்லவர் காலத்துயானைக் கோவில்கள் என்று பெயர் கூறலாம். ஏனென்றால் பல்லவ அரசர் ஆட்சி கி.பி. 600க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த தோடு இக்காலத்திலே பல்லவ அரசர்கள் பலவிதமான கோவில் கட்டடங் களைச் சிறப்பாகச் செய்து அமைத்தார்கள் என்று சரித்திரங் கூறுகிறது. கி.பி. 600-க்கு முற்பட்ட காலத்து யானைக் கோவில்களைப் பௌத்த கால யானைக் கோவில்கள் என்று பெயர் சூட்டினோம். பல்லவர் காலத்து யானைக் கோவில்கட்டடங்கள் சில இப்போதும் உள்ளன. சில அழிந்து மறைந்து போயின. முதலாம் மகேந்திரவர்மன் காலம் முதல் அபராஜிதவர்மன் காலம் ஈறாக அமைக்கப்பட்ட யானைக் கோவில்களைத்தான் பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் என்று கூறுகிறோம். இவைகளில், காஞ்சிபுரத்துக்கு அடுத்துள்ள கூரம் கிராமத்தில் இருந்த விச்சாதர பல்லவேச்சுரம் என்னும் யானைக் கோவில் அழிந்து மறைந்துவிட்டது. இதுபற்றிப் பின்னர்க் கூறுவோம். இப்போது நன்நிலையில் உள்ள பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் நாம் அறிந்த வரையில் நான்கே. அவை, மாமல்லபுரத்துச் ‘சகாதேவரம்’ எனப்படுகிற யானைக் கோவிலும், ஒரகடத்து வாடாமல்லீச்சுரர் கோவிலும், குடிமல்லத்துப் பரசுராமேச்சுரக் கோவிலும், திருத்தணிகை வீரட்டாவேச்சுரர் கோவிலும் ஆகும். இவற்றின் அமைப்புகளை ஆராய்ந்து பார்ப்போம். மாமல்லபுரத்து யானைக் கோவில் மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தின் உள்ள செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 18-மைல் தூரத்தில் கடற்கரை யோரத்தில் இருக்கிறது. இங்குப் பாறைகளைச் செதுக்கியமைக்கப்பட்ட சிற்பங்களும் கோவில்களும் உள்ளன. இப்பாறைக் கோவில்களில் ‘பஞ்சபாண்டவர்கள்’ என்னும் பெயருள்ள தொகுதி ஒன்றுண்டு. இத்தொகுதிகளைச் சேர்ந்த ஒன்று தான் நாம் கூறுகிற மாமல்லபுரத்து யானைக் கோவில் என்பது. இந்தக் கோவில் அமைப்பைப் பாமரமக்கள் ‘நகுல சகாதேவ ரதம்’ என்று பெயர் கூறுகிறார்கள். “பஞ்சபாண்டவரதங்கள்” என்று பெயர் கூறப்படுகிற இவை உண்மையில் இரதங்கள் அல்ல. கோவில்களாகும். அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த கோவிற் கட்டட அமைப்புக்களின் உருவத் தோற்றத்தை இக்கருங்கற்பாறைகளில் அக்காலத்துச் சிற்பிகள் அமைத்துக்காட்டியுள்ளனர். இளங்கோயிலின் அமைப்பு, இரண்டு நிலை மூன்று நிலை மாடக்கோவில்கள் யானைக் கோவில் முதலிய கோவில்களின் வெளித்தோற்றமும் அமைப்பும் எவ்வாறிருந்தன என்பதைக் காட்டுவதற்காகவே இக் கோவில்கள் கருங்கற்களில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கட்டடங்களின் உட்புற அமைப்புகளைக் காட்டுவது இவற்றை அமைத்த சிற்பிகள் நோக்கம் அன்று. உட்புற அமைப்புக்களையும் அமைத்துக்காட்டுவது அச் சிற்பிகளின் நோக்கமாயிருந்தால், உட்புற அமைப்புகளையும் அமைத்துகாட்டியிருப்பார்கள். அவ்வாறில்லாமல், பலவிதக் கோவில் அமைப்புகளில் வெளித் தோற்றத்தை மட்டும் காட்டுவதே அவர்கள் நோக்கமாக இருந்தபடியால், கருவறையாகிய திருவுண்ணாழி கைகளை அமைக்காமல், விமானங்கள் சுவர்கள். கூடுகள் கூட கோஷ்டபஞ்சரங்கள் ஆகிய வெளித் தோற்றங்களைமட்டும் செம்மையாகவும் செப்பமாகவும் அமைத்துக்காட்டியுள்ளனர். சில பாறைக்கோவில்களின் விமான அமைப்புகளைமட்டும் நுணுக்க மாகவும் செப்பமாகவும் செய்துவிட்டு, மற்றப்பகுதிகளைச் செம்மை யாக முடிக்காமல் விட்டிருக்கின்றனர். இந்த நோக்கத்தைக் கொண்டுதான், அதாவது கோவில் கட்டடத்தின் விமானத்தையும் சுவர் அமைப்பு கூடகோஷ்ட பஞ்சர அமைப்பு ஆகியவற்றைமட்டும் (கர்ப்பகிரகமாகிய உண்ணாழி கையின் அமைப்பைக் காட்டுவது நோக்கமாக இல்லாமல்) கொண்டுதான். ‘நகுலசகாதேவரதம்” என்று பெயர் கூறப்படுகிற யானைக் கோவிலையும் அமைத்திருக்கிறார்கள். இது வெறும் யானைக்கோவில் அமைப்புமட்டுமன்று, யானைக்கோவில் மாடக் கோவில் அமைப்பும் ஆகும். இந்த யானைக் கோவில் மூன்று நிலையுள்ள மாடக் கோவிலாகும். கி.பி. 600-க்கு முற்பட்ட “பௌத்தர்காலத்துயானைக் கோவில் கட்டிடங்களில் இரண்டு நிலைமாடக் கோவில் மூன்று நிலைமாடக் கோவில்கள் காணப்படவில்லை. ஆனால், மூன்று நிலையுள்ள மாடக் கோவிலாக அமைந்த யானைக் கோவில் மாமல்லபுரத்தில் காண்கிறோம். இது மாடக் கோவில் கட்டிடங்களின் புதிதாகப் புகுத்தப்பட்ட மாறுதல் ஆகும். இரண்டுநிலை மூன்று நிலைகளை யுடைய யானைக் கோவில்களைக் காமிகாகமம் கூறுகின்றது.’ என்றும் சாமிகாகமம் பெயர்கூறுகின்றது (காமிகாகமம் 60 ஆவது ஏகபூமியாதி விதிபடலம்) ஆனால் இரண்டு நிலை மாடமாக அமைந்த யானைக் கோவில் கட்டிடம் இப்போது காணக்கிடைக்கவில்லை. முன்பு இருந்து பிற்காலத்தில் மறைந்து விட்டனபோலும். ஆனால், மூன்று நிலைமாடமாக அமைந்த யானைக்கோவில் மாமல்லபுரத்து ‘நகுலசகாதேவஇரதம்’ ஒன்றே. யானைக் கோவில் அமைப்பில் உள்ள மூன்று நிலைமாடக் கோவில் இதைத் தவிர வேறொன்றும் கிடையாது. இதன் அமைப்பை ஆராய்ந்துபார்ப்போம். நீண்ட அரை வட்டமாக அமைந்துள்ள இந்த யானைக் கோவில் தெற்கு நோக்கி நிற்கிறது. தெற்கு வடக்காக இதன் நீளம் 18 அடி அகலம் 11 அடி, உயரம் ஏறத்தாழ 16 அடி. இக்கட்டிடத்தின் முன் பாகத்தில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்தை இரண்டு சிங்கத்தூண்கள் தாங்குகின்றன. இந்தமண்டபம் இக்கட்டிடத்துக்கு அழகையளிக் கின்றது. மண்டபத்துக்குள் நுழைந்தால் கட்டிடத்தின் உள்ளே நுழைய வாயில் நிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாயிலுக்குள் நுழையமுடியாது. ஏனென்றால், முன்பு கூறியது போன்று திருவுண் ணாழிகை என்னும் அகநாழிகை (கருவறை) அமைக்கப்படாமல் இருக்கிறது. வாயிலின் இருபக்கங்களிலும் யானையின் முன்பக்க உருவம் (யானையின் தும்பிக்கையும் தலையும் காதுகளும்) சிற்பமாக அமைந்துள்ளன. இதன் முதல்நிலை யமைப்பைப் பார்ப்போம். இதன் சுவர் அமைப்பு நீண்ட அரைவட்டமாக அமைந்து, ‘அதிஷ்டானம்’ என்னும் சிறு மேடையின்மேல் நிற்கிறது. சுவர்களில் இடையிடையே சுவர்களைச் சார்ந்து (திரிவிக்கிரமன்யானைக் கோவிலில் கண்டது போல) தூண்கள் அமைந்து கட்டிடத்துக்கு அழகு தருகின்றன. இதன் இரண்டாம் நிலையின் சுவர் அமைப்பும் முதல் நிலைச்சுவர் அமைப்புப்போன்றே நீண்ட அரைவட்டமாகவும் சுவரின் இடையிடையே தூண்களுடையதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், முதல் நிலைச் சுவரைவிடச்சற்று உள்ளடங்கியிருக்கிறது. இரண்டாம் நிலையின் சுற்றுப்புறங்களில், முதல் நிலைச் சுவரையொட்டி ‘கூடகோஷ்டபஞ்சரங்கள், அமைந்து கட்டிடத்துக்கு அழகைத் தருகின்றன. மூன்றாவது நிலையின் சுவர்கள் இரண்டாவது நிலைச்சுவரை விடச்சற்று உள்ளடங்கி, நீண்ட அரைவட்ட அமைப்பாக இடை யிடையே தூண்களைப் பெற்றிருக்கிறது. முன்றாம் நிலையில் சுற்றுப்புறங்களிலும், இரண்டாம் நிலையில் உள்ளதுபோலவே கடகோஷ்ட பஞ்சரங்கள் அமைத்துள்ளன. இவ்வாறு மூன்று நிலை களும் அழகுபட அமைந்துள்ளன. மூன்றாவது நிலைக்குமேல் உள்ள விமானத் (கூரை)தின் அமைப்பு யானையின் முதுகு போன்று அமைந்திருக்கின்றது. இந்தவிமானத்தைப் பக்கங்களில் இருந்து பார்த்தால் யானைமுதுகின் தோற்றம் போன்றும் பின்புறத்திலிருந்துபார்த்தால் யானையின் பின்தோற்றம் போலவும் காணப்படுகின்றது. விமானத்தின் உச்சியில் வரிசையாகக் கலசங்கள் இருந்தன, இப்போது அவை காணப்பட வில்லை. அவை இருந்த அடையாளங்கள் மட்டும் தெரிகின்றன. இந்த விமானத்தின் முன்புறம் ‘நெற்றிமுகம்’ என்று பெயர் பெறும் நெற்றிமுகத்தின் மேலே, மூன்று கொம்புள்ள மனிதன் தலையுருவம் அமைந்திருக்கிறது. அது உடைந்திருக்கிறது. விமானத்தின் முன்புறமாகிய நெற்றிமுகத்தில், மூன்று வாயில்கள் போன்ற அமைப்பும் நடுவாயிலின் மத்தியில் சேதியம் (தாகோப-தாதுகர்ப்பம்) போன்ற உருவமும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன, கோவிலின் திருவுண்ணாழிகை (கர்ப்பக் கிருகம்) அமைக்கப்பட்டிருந்தால், அதனுள் எழுந்தருளப்பண்ணி யிருக்கும் சேதியத்தில் உருவம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை இது காட்டுகிறது. நெற்றி முகத்தில் காணப்படுகிற இந்தச் சேதிய உருவப் புடைப்புச்சிற்பம், யானைக் கோவில்கள் பௌத்தர் வழிவந்த கட்டிடம் என்பதை நினைவூட்டுகின்றன. இந்தப் பௌத்தச் சேதிய அடையாளங்கள் பல்லவர் காலத்திலும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளது என்பது கருதத்தக்கது. பௌத்தர் காலயானைக் கோவில் விமானங்களில் காணப்படாத புதிய அமைப்பு இந்த விமானத்தில் காணப்படுகிறது. அது விமானத்தின் மூன்று பக்கங்களிலும் பின்புறத்திலும் நீண்டு குறுகிய மூன்று பஞ்சரங்கள்’ அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பஞ்சரங்கள் இரதவிமானத்துக்கு அழகு தருகின்றன. இந்த யானைக் கோவிலின் கிழக்குப்பக்கத்தில், யானை ஒன்று நிற்பது போலக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது (படம் காண்க) இந்த யானையின் உருவம் இங்கு இருப்பது காரணமாக, இக்கட்டிடம் இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஜராவதம் என்னும் வெள்ளை யானை இந்திரனுடைய ஊர்தி என்பது உன்மைதான். ஆனால் இந்தயானைக் கோவில் இந்திரனுக்காக அமைக்கப்பட்டது அன்று. ஏனென்றால் இது அமைக்கப்பட்ட கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் (இக்கோவில் மாமல்லன் என்னும் நரசிம்மவர்மன் முதலாவன் வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் காலத்தில்) அமைக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே, இந்திரன் வழிபாடு குறைந்து விட்டது. ஆகவே இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோவில் அன்று. இந்த யானையின் உருவம் இக்கட்டிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறகாரணம் என்னவென்று இது யானையின் முதுகு போன்ற விமானத்தை (உச்சியை) யுடைய கஜ பிருஷ்ட விமானக்கோவில் என்பதைக் காட்டுவதற்க்காகத்தான் என்று தோன்றுகிறது. இந்த யானையின் உருவத்தைப் போலவே இக்கட்டிடத்தின் உருவமும் அமைந்திருக் கிறது என்பதைக் கூறுவதுபோல இக்கட்டிடத்தை யமைத்து சிற்பி இந்த யானையின் உருவத்தையும் அமைத்தார் போலும். மாமல்லபுரத்து அழகான கோவிற் சிற்பங்களில் இந்த யானைக்கோவில் சிற்பமும் கண்ணுக்கும் காட்சிக்கும் இனிமை யானது. இதையமைத்த சிற்பியின் பெயரை வாழ்த்துவதற்கு அவன் பெயர் கூடத் தெரியவில்லையே. படவிளக்கம் வண்ண ஒவியம் .... பக்கம்-304 சித்தன்ன வாசல் குகைக் கோயிலின் உள்ள நடனமங்கை ஓவியம். சென்னை சித்திர கலாசாலை ஓவியப் புலவர் எஸ். தனபால் அவர்கள் நேரில் சென்று. அவ் ஓவியம் தற்பொழுது உள்ள நிலையில் தீட்டியது. படம் -1 ... பக்கம்-304 கருவறைகளின் தரையமைப்பு 1. சதுர அமைப்பு; கருவறையும் அர்த்தமண்டபமும். 2. வட்டமான அமைப்பு, காஞ்சீபுரத்துச் சுரஹரீசுவர் கோயிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த நார்த்தா மலை, மேல்மலையில் உள்ள விஜயாலய சோழீசுரமும் இவ்வமைப் புடையன. 3. பல்லவர் காலத்துக் குகைக்கோயிலின் தரையமைப்பு. சித்தன்னவாசல். 4. நீண்ட அரைவட்டம். யானைக் கோயில் அமைப்பு. 5. நீண்ட சதுரம்; காஞ்சீ கயிலாசநாதர் கோயிலில் உள்ள மகேந்திரப் பல்லவேச்சுரமும், மகாபலிபுரத்துக் “கணேச ரதமும்” வேறு சில கோயில்களும் இவ்வமைப்புடையன. 6. பனமலையில் (தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் தாலுகா) உள்ள பல்லவர் காலத்துக் கோயில் அமைப்பு. 7. காஞ்சீபுரத்துக் கயிலாசநாதர் கோயில் (இராஜசிம்மேசுவரம்) தரையமைப்பு. படம் -2 .... பக்கம் 305 கோயில் கட்டிட உறுப்புக்கள் படம் - 3 கோயில் கட்டிடத் தூண்கள் 1. பல்லவர் காலத்துத் தூண்கள் 2. பிற்காலத்துத் தூண்கள் படம் - 4 ... பக்கம் 306 சுவர் உறுப்புக்கள் 1. கும்ப பஞ்சரம் 2. கோஷ்ட பஞ்சரம் தோள் உறுப்புக்கள் ... பக்கம் - 307 1. கர்ணகூடு 2. பஞ்சரம் 3. சாலை படம் - 4 ... பக்கம் 308 விமானங்கள் 1. இளங்கோயில் (ஸ்ரீகரக்கோயில்) 2. கரக்கோயில் (விஜயம்) 3. மணிக் கோயில் (ஸ்கந்தகாந்தம்.) 4. ஆலக்கோயில் (ஆனைக்கோயில்) படம் - 6 ... பக்கம் - 309 திருப்புவனம் 1. சோழர் காலத்துக் கற்றளிக்கோயில் படம் - 7 புடைப்புச் சிற்பம் - பல்லவர் காலம். 1. மகாபலிபுரத்து மகிஷாசுர மர்த்தனி குகைக் கோயிலில் உள்ளது. படம் 8-9 பிரதிமை உருவங்கள் (தத்ரூப உருவங்கள்) 1. சோழர்காலத்துப் பஞ்சலோக வார்ப்பு படம் - 10 1. சோழர் காலத்துச் சிவன். வார்ப்பு உருவம் மகேந்திர வர்மன் பதிப்புரை நம் தமிழகத்தில் முடியுடை வேந்தர்கள் மூவர் ஆட்சி முடிந்தபின், பிற்காலத்தே ஆண்ட வேற்று மொழி வேந்தர்கள் பலராவர். அவருள், பல்லவ மன்னர்களென்பவர் நாட்டைக் கைக்கொண்டு அரசாண்டனர். அம் மன்னர் வழியில் வந்தோன், மகேந்திரவர்மனெனப் பெயரிய வேந்தனாவன். இம்மன்னனால் நம் நாட்டில் கலையும் இசையும் பெருகி வளரலாயின. இவன் காலத்தே சிற்பக்கலை செழித்தோங்கிச் சிறந்திருந்தது. இவ்வரசன் வரலாற்றைப் பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டு, கோயில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் முதலியவற்றின் துணைக்கொண்டு தம் நுண்ணிய பேரறிவால் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதி உதவியுள்ளனர். இதன்கண் வரலாற்றுச் சான்றுடன் கூடிய நிழலோவியப் படங்களும் சிற்ப உருவப்படங்களும் இன்றியமையாத இடங்களில் விளக்கத்துக்காக இணைத்து நன்முறையில் நூலுருவாக்கி ‘மகேந்திர வர்மன்’ என்னும் பெயர்சூட்டி வெளியிட்டுள்ளோம். தமிழ் அன்பர்கள் வாங்கிக் கற்றுப் பழங்கால உண்மை வரலாறு கண்டுணர்ந்து இன்புறுவார்களென நம்புகின்றோம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். உரிமை விளக்கம் இந்நூலில் உள்ள படங்களில், முகப்புப் படங்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12-ம், 117, 118, 119, 122 ஆம் பக்கங்களில் உள்ள படங்களும் இந்திய அரசாங்க ஆர்க்கியாலஜி இலாகாவுக்கு உரிமையானவை. மற்றப் படங்கள் ஏ. ஹெச். லாங்ஹர்ஸ்ட் அவர்கள் எழுதிய ‘பல்லவர் சிற்பங்கள்’ என்னும் நூலிலிருந்தும், ழுவோ-துப்ராய் அவர்கள் எழுதிய ‘பல்லவர் பழமைகள்’, ‘திராவிடச் சிற்பம்’ என்னும் நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலை சீனி. வேங்கடசாமி. முன்னுரை ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையாகும். ஆனால், வரலாற்று நூல்களை எழுதும் வழக்கம் நம் நாட்டிலே பண்டைக் காலத்தில் இருந்ததில்லை. ஆகவே நமது நாட்டுப் பழைய வரலாறுகள் நமக்குக் கிடைக்க வில்லை. முஸ்லீம்களும், ஐரோப்பியரும் வரலாற்று நூல் எழுதும் வழக்கமுடையவராயிருந்தனர். ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது. அண்மைக்காலத்திலே மேல்நாடுகளில் ஆர்க்கியாலஜி, எபிகிராபி1 சாத்திரங்களில் மூல மாக வரலாற்று ஆராய்ச்சி முறை பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த நூல்களின் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறைந்துபோன எகிப்தியர், பாபி லோனியர், யவனர் (கிரேக்கர்), உரோமர் முதலான பழங்கால மக்களின் வரலாறுகளும் நாகரிகங்களும் இப்போது கண்டறியப் பட்டுள்ளன. நமது நாட்டிலிருந்த ஆங்கிலேய ஆட்சியினர், ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாகாக்களை நமதுநாட்டிலும் ஏற்படுத்தி அவற்றின் மூலமாக மறைந்துபோன பழஞ்செய்திகளையும் நாகரிகங்களையும் வரலாறுகளையும் கண்டறிய வழிசெய்தனர். இதனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா, நாகார்ச்சுனகொண்ட, நாலாந்தா, பாடலிபுரம் (இராசக்கிருகம்) முதலிய பல அழிந்து மறைந்துபோன நகரங்களின் நாகரிகங்களும் வரலாறுகளும் கண்டறியப்பட்டன. அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துச் சாசனங்களும், ஏனைய அரசர்களின் கல்வெட்டெழுத்துக் களும், செப்பேட்டுச் சாசனங்களும் கண்டறியப்பட்டு, அவற்றின் உதவியினாலே இந்திய நாட்டின் பழைய கலை, நாகரிகம், வரலாறு முதலிய செய்திகளை அறிய முடிந்தது. நந்தமிழ் நாட்டிலேயும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மறைந்து மறந்துபோன சேர சோழ பாண்டியர் முதலிய அரசர்களின் வரலாறுகளும், நாகரிகங்களும், செய்திகளும், ஆர்க்கியாலாஜி எபிகிராபி ஆராய்ச்சியின் பயனாக, இப்போது நாம் அறிந்து கொள்ள இடமேற்பட்டிருக்கிறது. இதில் சிறப்பான செய்தி என்னவென்றால், முழுவதும் மறைந்துகிடந்த பல்லவ அரசர்களைப்பற்றிய வரலாறு களும், செய்திகளும் இப்போது மீண்டும் நமக்குக் கிடைத்திருப்பது தான். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவ அரசர் களின் வரலாறுகளும் செய்திகளும் நமக்கு ஒன்றுமே தெரியா திருந்தது. இப்போது, அவர்களைப் பற்றிய பல செய்திகளையும் வரலாறுகளையும் நாம் அறிந்துகொள்ள, ஆர்க்கியாலஜி, எபிகிராபி ஆராய்ச்சி பெரிதும் உதவிசெய்திருக்கிறது. ஏறத்தாழ கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் பல்லவ அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் அரசாண்டு வந்தனர். அவர்களுள் பேரும் புகழும் படைத்து விளங்கியவர் சிலர். இச் சிலரில் முதன்மை யானவன் மகேந்திரவர்மன் ஆவன். இவ் வரசனைப்பற்றிய வரலாறும் இவன் காலத்து வரலாறும் இந் நூலில் கூறப்படுகிறது. மகேந்திரவர்மன் வாழ்ந்த காலம் கி. பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் காலத்திலே தமிழ் நாட்டிலே சமண சமயமும் பௌத்த மதமும் பரவிச் சிறப்பு பெற்றிருந்தன. சைவ வைணவ மதங்கள் குன்றி மங்கிக்கிடந்தன. ஆனால், பத்திநெறி தோன்றி யிருந்தது. இவ்வரசன் காலத்திலே தான் அப்பர் சுவாமிகள் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகள் வாழ்ந்திருந்தார். சமண சமயத்தவனாக இருந்த மகேந்திரவர்மனை இவர் சைவ சமயத்தில் சேர்த்தார். அன்றியும் பக்திநெறியையும் சைவ சமயத்தையும் வளர்த்து நாடெங்கும் பரவச் செய்தார். மகேந்திரவர்மன் பேரும் புகழும் படைத்த அரசனாக மட்டும் வாழவில்லை; சிற்பம் ஓவியம் காவியம் இசை முதலிய நற்கலைகளை நன்கு கற்ற கலைச்செல்வனாகவும் விளங்கினான். கலைச்செல்வனாக விளங்கியதல்லாமல் கலை வள்ளலாகவும் வாழ்ந்தான். இவன் அளித்த கலைச்செல்வங்கள் இப்போதும் தமிழ்நாட்டில் நின்று நிலவுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ் வரசனைப்பற்றியும் இவன் காலத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் இவன் அமைத்த குகைக்கோயில் முதலிய கலைகளைப் பற்றியும் இந்நூலில் ஆராயப்படுகின்றன. ஆர்க்கியாலஜி எபிகிராபி ஆராய்ச்சி மட்டுமல்லாமல், ஏனைய சிற்பம் ஓவியம் இலக்கியம் முதலியவற்றின் துணைக்கொண்டும் இந்நூல் ஒருவாறு எழுதப்பட்டது. இந்நூலைப் படிப்போர் செய்யவேண்டிய கடமையுண்டு. மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் அவற்றில் உள்ள சிற்பங்களையும் கண்டுகளித்து, அக் கலைச்செல்வங்களை அழிவுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இதைப் படிப்போர்களைச் சார்ந்தன. ஏனென்றால், நம் நாட்டுக் கலைச்செல்வங்கள் நமக்குச் சொந்தமானவை என்பதை நம்மவரில் பெரும்பாலோர் இன்னும் உணரவில்லை. இப் பொறுப்பை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். இக் கலைச்செல்வங்களைப் பொன்னேபோல் போற்றவேண்டும். இந்நூலை நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கும், அக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையாபிள்ளை அவர்களுக்கும் எனது நன்றி யுரியதாகும். மலரகம், மயிலாப்பூர் சென்னை - 4 மயிலை.சீனி. வேங்கடசாமி 10-3-55 BIBLIOGRAPHY Annual Report on Archaeology, Madras 1917-18, 1918-19, 1919-20. Annual Report of Archaeological Survey of India. 1929-30. Annual Report on Epigraphy, Madras 1893, 1896, 1900, 1905, 1908-9, 1916, 1932-33. Bulletin of the Oriental Studies, London Institution. Vol. V. (Matta Vilasa. Translated by L. D. Barnett) Cave Inscriptions at Vallam. P. P. 340-341. South Indian Inscriptions Vol. II Conjeevaram Inscription of Mahendravarman I. by G. Jouveau - Dubreuil. Culavamsa............Translated by Wilhelm Geiger. Dravidian Architecture by G. Jouveau - Dubreuil. Epigraphia Indica Vols. III, IV, VI, VII, VIII, X, XII. History and Culture of the Indian People Vol. III. The Classical Age. - Bharatiya Vidya Bhavan. Indian Antiquary Vols. VIII, LII. Kasakudi Plates of Nandivarman Pallava Malla. S. I. I. Vol. II. Kudimiyamalai Inscriptions on Musie, Edited by Rao Bahadur P. R. Bhandarkar. PP. 226-237. Epi. Ind. Vol. XII. Manual of Pudukottai State Vol. II. Part II. Mysore Archaeological Report 1909-10. Origin and Early History of Saivism in South India - C. V. Narayana Ayyar. Pallava Antiquities Vols. I & II. by G. Jouveau - Dubreuil. Pallava Architecture Parts I & II. by A. H. Longhurest. Pallavas of Kanchi by R. Gopalan. South Indian Inscriptions Vols. I, II, XII. Studies in Indian Painting by Mehta. Studies in South Indian Jainism by M. S. Ramaswami Aiyengar The Pallavas............by G. Jouveau - Dubreuil. The Mattavilasa Prahasana of Mahendra vikrama varman - Trivandrum Sanskrit series No. LV. (1917) The Cave Inscriptions at Dalavanur by Prof. E. Hultzsch pp. 225-226. Epi. Ind. Vol. XII Trisashti Salaka Purusha Charitra Vols. I & II. - Helen M Johnson’s Translation. (Gaekwad’s Oriental Series) Triveni Vol. III. (1930). Velurpalaiyam Plates of Vijaya Nandi Varman III. S. I. I. Vol. II. PP. 342-361. Velvikudi Grant of Nedunjadaiyan. PP. 291-309. Epi. Indi. Vol. XVII. ABBREVIATIONS Epi. Indi. - Epigraphia Indica. Epi. Rep. - Annual Report on Epigraphy, Madras. Ind. Ant. - Indian Antiquary. M. P. S. - Mannual of Pudukottai State. Mys. Arch. Rep. - Mysore Archaeological Report. S. I. I. - South Indian Inscriptions. வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் பதிப்புரை வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகை ஆண்ட முடியுடைவேந்தர் மூவர்களான சேர சோழ பாண்டிய வேந்தர்கட்குப்பின், சிறு சிறு பிரிவுகளாக ஆக்கிக்கொண்டு நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் பற்பலராவர். அவர்களுள், பல்லவ வேந்தர்களும் ஒரு பகுதியராவர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலை ஒவியக்கலை இசைக்கலை எங்கும் தலைசிறந்து ஓங்கி மிளிர்ந்தன. அக் கலைகளை வளர்த்த பல்லவ மன்னர்கள் வரிசையில் சிறந்துரிமை யுடையனாகக் கொள்ளத் தக்கவன், மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பெயர்பூண்ட அரசனாவன். இம் மன்னன் அரசு கட்டிலேறி ஆட்சிகொண்டிருந்த காலம் சற்றேறக்குறையக் கி.பி. ஏழாம் நூற்றாண்டென்று இற்றை ஞான்றை ஆராய்ச்சி வல்லுநர் கருதுகின்றனர். இக்கருத்தைக் கல்வெட்டு முதலிய அகச்சான்றுகள் அரண்செய்கின்றன. இவன் காலத்தே சமணசமயம், நம் தமிழகமெங்கும் பரவியிருந்ததாகக் காணக் கிடக்கின்றது. இக் காலத்தே தான், நம் சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய நாயன்மார்களும், பேய், பூதம், திருமழிசை ஆழ்வார் முதலிய திருமாலடியார்களும் வாழ்ந்தி ருந்ததாகும். இவன், வாள்வலி தோள்வலி படைவலிகளில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் தலைசிறந்து விளங்கினான். இவன்மேற் போர்முற்றிப் பொருத சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைப் போர்க் களத்தில் புறங்கண்டு முறியடித்து, அவன் தலைநகரான வாதாபி நகரின்மேற் படையெடுத்துச் சென்றான். இவற்குப் படைத்துணையாகத் தலைமை தாங்கிச்சென்றவர், அறுபான்மும்மைத் தொண்டருள் ஒருவராக வாளான் மகவரிந்து இறைவற்கு அமுதூட்டிய அரும்பெற்ற செயலினராகப் போற்றப் பெறும் சிறுத்தொண்டரென்னும் பெயரின ராகிய பரஞ்சோதியாராவர். இவர்தம் துணைவலியானே அந்நகரைப் பிடித்துத் தன துரிமையாக்கிக்கொண்டான்: அந் நினைவுக்குறியாக வெற்றித் தூணும் நாட்டினான். இச் சிறப்பால் அந் நகரோடடைவு கொண்டு அதுமுதல் இவன்பெயர், வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் என்னும் பெயரால் வழங்கலாயிற்று. இவ் வரலாற்றைச் சேக்கிழார்பெருமான், தம் திருத்தொண்டர் புராணத்துள், ‘மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்’ (பெரிய. சிறுத்தொண்டர்: சு.) எனவரும் செய்யுளால் அறியலாம். இத்தகைய வெற்றிவேந்தன் நரசிம்மவர்மன், போரிற் சிறந்திருந் தமைபோலவே அரசியலிலும், அறத்தினும், பிற நல்லியல்புகளிலும் மேம்பட்டு விளங்கினான். இவன் மேற் கொண்டிருந்த சமயம், சைவம்; இவன் மாமல்லபுரத்தில் ‘இரதங்கள்’ என் வழங்கும் பாறைக்கோயில் களையும், குகைக் கோயில்கள் சிலவற்றையும் அமைத்துள்ளான்; பிற வரலாறுகளை இந்நூலகத்து ஆங்காங்கே காண்க. நம் தமிழ்மொழிக்கண் வரலாற்றுண்மை காணும் நூல்கள் மிக்குப் பல்கவில்லை. அவை மிகப்பெருக வருதல் நலமென்பது எமது வேணவா. அவ் வேடங்கையின் விளைவாக இந் நூலாசிரியரான, திரு. மயிலை சீனி. வேங்கடசாமியவர்களைக்கொண்டே முன்னரேயே சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மகேந்திர வரமன் என்னும் நூல்களை வரைவித்து வெளியிட்டுள்ளோம். இப்போதும் இந் நூலை அவர்கள் தம் அஃகியகன்ற அறிவின் மதுகையாலும், ஆய்புலத் தானும், கல்வெட்டு முதலிய சான்றுகளானும் அவ்வவற்றுக்குரிய விளக்கப் புகைநிழலோவியங்களுடன் விளக்கி எழுதித் தந்துள் ளார்கள். பெருமை சான்ற இவ் அருமை நூலை நன்முறையில் அச்சியற்றி நூலுருவாக்கி, எம் கழகவழிக் கண்கவர் வனப்புற வெளி யிட்டுள்ளோம். ஆய்புலவாணரும், அறிஞரும், வரலாற்றுண்மையும் நம் செந்தமிழ்த் திருநாட்டின் செம்மையும் உணர்ந்தின் புறுதலுடன், எம்மையும் இவ்வாக்கமிக்க வரYற்றுண்மை காணும் பணிக்கண் ஊக்க முன்வருவார்களென நம்புகின்றோம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். முன்னுரை மகாபலிபுரம் என்று வழங்குகிற மாமல்லபுரம் இக்காலத்தில் உலகமெங்கும் பேர்பெற்ற ஊராகும். உலகத்தின் நானா திசை களிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகிறவர், மாமல்லபுரத்திற்குவந்து இங்குள்ள சிற்பக்கலைகளைக் கண்டு இன்புறுகிறார்கள். அரசியல் தலைவர்களும், கலைவாணர்களும், காவியப்புலவரும், ஒவியக் கலைஞரும், பாவலரும், நாவலரும், பண்டிதரும் பாமரரும் மாமல்ல புரம் சென்று குகைக்கோயில்களையும் பாறைக்கோயில் களையும் கற்றளிகளையும் அழகிய சிற்பங்களையும் கண்டு செல்கின்றனர். இந்தச் சிற்பங்களை அமைத்தவன் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன். காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக்கொண்டு தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் ஒரு குடைக்கீழ் வைத்து அரசாண்ட பல்லவ மன்னர்களில், மகேந்திரவர்மனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்றவன், நரசிம்மவர்மன். நரசிம்மவர்மனுடைய இயற் பெயர் மாமல்லன் என்பது. மாமல்லன், பல்லவரின் துறைமுகப்பட்டினத் துக்குத் தன் பெயரைச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். தன் பெயரைச் சூட்டியதல்லாமல், இப்பட்டினத்திலிருந்த பாறைக் குன்றுகளைக் கலைக்கோயில்களாக அமைத்து அழகு படுத்தினான். பல்லவர் காலத்தில் பெரிய துறைமுகப் பட்டினமாயிருந்த மாமல்ல புரம், இப்போது பெருமை குன்றி சிறு கிராமமாக இருக்கிறது. மாமல்ல புரம் என்னும் பெயர் திரிந்து மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன் புகழ்பெற்ற சிறந்த மன்னன். இவ்வரசன் படையெடுத்துவந்த சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்றதோடு அமையாமல், புலிகேசியின் தலைநகரமான வாதாபிநகரத்தின்மேல் படை யெடுத்துச் சென்று அந்நகரத்தைப் பிடித்து, அங்கு வெற்றிக்கம்பம் நாட்டினான். இதனால் இவனுக்கு, ‘வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இவ்வரசன் வாதாபி நகரத்தை வென்றபோது, இவனுடைய யானைப்படைக்குத் தலைவனாக இருந்தவர் பரஞ் சோதியார் எனப்படும். சிறுத்தொண்ட நாயனார். தனக்குரிய இலங்கை அரசாட்சியை இழந்து பகைவருக்கு அஞ்சிக் காஞ்சிபுரத்துக்கு வந்து இவ்வரசனிடம் அடைக்கலம் புகுந்த மானவர்மன் என்னும் இலங்கை மன்னனுக்கு அரசாட்சியை மீட்டுக்கொடுத்தவனும் வாதாபிகொண்ட நரசிம்மவர்மனே. சைவ சமயத்தையும் பக்தி இயக்கத்தையும் நிலைநாட்டிய திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள் முதலிய சைவ அடியார்களும், பாண்டி நாட்டை அரசாட்சிசெய்து சமண சமயத்த வனாக இருந்து பின்னர் சைவசமயத்தைச்சேர்ந்த கூன் பாண்டியன் என்னும் நெடுமாற நாயனாரும் அவன் அரசியாரான மங்கையர்க் கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் மற்றும் சில நாயன்மார்களும் வாழ்ந்திருந்த காலமும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலேதான். அதுபோலவே, வைணவ சமயத்தையும் பக்தி இயக்கத்தையும் நிலைநாட்டிய ஆழ்வார்களாகிய திருமழிசை யாழ்வாரும், பேய் பூதம் பொய்கை என்னும் முதலாழ்வார் மூவரும் வாழ்ந்திருந்த காலமும் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் காலத்திலேதான். பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டிலே நிலைபெற்றுச் சிறப்படைந்திருந்த பௌத்த சமயமும் சமண சமயமும், சைவ வைணவர்களின் பக்தி இயக்கத்தினால் தாக்குண்டு, பழைய செல்வாக்கையும் சிறப்பையும் இழக்கத் தொடங்கிய காலமும் நரசிம்மவர்மன் காலத்திலேதான். இவ்வாறு பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்திலே அரசாண்ட வாதாபிகொண்ட நரசிம்மவர்ம னுடைய வரலாற்றையும் அக்காலத்து ஏனைய வாலாற்றையும் நம்மவர் அனைவரும் அறியவேண்டும் என்னும் நோக்கத்தோடு இந்நூலை எழுத முற்பட்டேன். ஏறக்குறைய கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து 10-ஆம் நூற்றாண்டுவரையில், பல்லவ அரசர்கள் சோழநாட்டையும் தொண்டை நாட்டையும் அரசாண்டார்கள். 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பல்லவருக்குக் ‘கீழடங்கியிருந்த சோழர்கள், மீண்டும் முதன்மைபெற்றுப் பல்லவ அரசரை வீழ்த்திய பிறகு, பல்லவ அரசர் வரலாறு முழுவதும் மறக்கப்பட்டு மறைந்துகிடந்து. கர்ணபரம் பரையாகவும் இலக்கிய நூல்கள் வாயிலாகவும் சிறிதளவாவது சேர சோழ பாண்டியர்களின் பெயர் அறியப்பட்டது போன்ற அளவு கூட பல்லவ அரசரின் பெயர் அறியப்படாமல் முழுவதும் மறைந்துகிடந்தது. தமிழ்நாட்டிலும் பாரத தேசத்திலும் ஆதிகாலம் முதல் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்ததில்லை. ஆங்கிலேயர் தொடர்பு ஏற்பட்ட பின்னரே, சரித்திரமும் வரலாறும் எழுதும்முறை கற்பிக்கப் பட்டது என்பதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ளவேண்டும். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் நமது நாட்டு வரலாற்றை அறிய விரும்பினார்கள். சரித்திர நூல்கள் இல்லாததை அறிந்தார்கள். சரித்திரச் செய்திகளைச் சிறிதளவு கொண்டுள்ள கல்வெட்டுச் சாசனங்களும் செப்பேட்டுச் சாசனங்களும் பற்பல இடங்களில் வெவ்வேறு ஊர்களில் சிதறிக்கிடந்து மறைந்து ஒளிந்து இருளடைந் திருந்தன. அம்மட்டோ? பழைய எழுத்துக்கள் மறைந்து புதிய எழுத்துக்கள் தோன்றிவிட்டபடியால், பழைய கல்வெட் டெழுத்துக்களும் செப்பேட்டு எழுத்துக்களும் மறக்கப்பட்டுப் படிக்க முடியாமற்போயின. இவ்வாறு வரலாற்றுச் செய்திகள் இருளடைந்து கிடந்த காலத்தில், சென்ற 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே, ஆங்கில அரசாங்கத்தார் ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருளா ராய்ச்சித் துறையையும், எபிகராபி என்னும் சாசன ஆராய்ச்சித் துறையையும் ஏற்படுத்திச் சிதறிக்கிடந்த சாசனங்களைத் தொகுத்துப் படிக்கமுடியாமற்கிடந்த சாசனங்களைப் படித்து அவற்றை இக் காலத்து எழுத்துக்களில் எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். இதனாலே நமது நாட்டுப் பழைய வரலாறுகளும் சரித்திரங்களும் சிறிதளவாவது வெளிப்படலாயின. இவ்வாறு நமக்குக் கிடைத்த வரலாறுகளை ஏனைய சான்றுகளுடன் ஒத்திட்டு ஆராய்ந்து பார்த்து, நமது நாட்டைப் பொறுத்த வரையில், சேர சோழ பாண்டியர் சிற்றரசர் வரலாறுகளையும் அக்காலத்து நாகரிகம் வாழ்க்கை முதலியவற்றைப் பற்றியும் இப்போது தெரிந்துகொள்கிறோம். ஆயினும் இந்தச் சாசனங்கள், வரலாற்றை ஓரளவுதான் அறிவிக்கின்றனரேவயன்றி முழு வரலாற்றையும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அவை எழுதப்பட்ட தன் நோக்கம் வரலாற்றைத் தெரிவிப்பதற்கன்று. எனினும், இந்த அளவாகிலும் பழைய வரலாற்றை அறிய முடிகிறதே என்று நினைக்கும் போது சிறிது ஆறுதல் ஏற்படுகிறது. தமிழிலே சரித்திர நூல்கள் இன்னும் சரியாக வெளிவர வில்லை. எழுதப்படவேண்டிய வரலாற்று நூல்கள் இன்னும் பலப்பல உள்ளன. நமது நாட்டு வரலாறு இன்னும் முழுவதும் வெளிவராமலும், மக்களுக்குத் தெரியாமலும் இருக்கின்றன. பழைய அரசியல், சமூக இயல், சமய இயல், கலை இயல், இலக்கிய இயல் முதலியவற்றின் வரலாறுகளை நாம் அறியவில்லையானால், நாகரிகத்தில் நாம் வளர்ச்சியடைய முடியாது. பழைய வரலாறுகள் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் விளக்குப்போன்றவை. ஆகவே, நமது நாட்டைப்பற்றிய பலதுறை வரலாறுகள் நமக்கு மிகமிகத் தேவையாயுள்ளன. நான் சரித்திரத்துறையில் பயின்றவன் அல்லன். ஆயினும், நமது நாட்டுப் பழைய வரலாறுகளை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் இந் நூலை எழுதத் தூண்டியது. காய்தல் உவத்தல் இல்லாமல், விருப்பு வெறுப்புக்களை அகற்றி, நடுநிலைநின்று என்னால் இயன்றவரையில் ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். ஆதாரங்களையும் சான்றுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன். சிற்சில இடங்களில் ஒரே செய்தியை மீண்டும் கூறியுள்ளேன். இதனைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல் தெளிவுபடுத்தும் பொருட்டு அநுவாதமாகக் கூறியதாகக் கொள்ளவேண்டும். இச் சிறு நூல், நமது நாட்டு வரலாற்றின் ஒரு பகுதியை யறிவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூலை நல்லமுறையில் அச்சியற்றி வெளியிட்ட திருநெல் வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு எனது நன்றியுரியது. மயிலாப்பூர், இங்ஙனம், சென்னை - 4 சீனி. வேங்கடசாமி இந்நூலில் மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள் 1. ஆழ்வார்கள் கால நிலை - மு. இராகவையங்கார் 2. கலிங்கத்துப் பரணி - கவிசக்கரவர்த்தி சயங்கொண்டார். 3. காமிகாகமம், தமிழுரையுடன் -மயிலை அழகப்ப முதலியார் பதிப்பு. 4. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரையுடன் - டாக்டர். உ. வே. சாமிநாதையர் பதிப்பு 5. தக்கயாகப் பரணி, பழைய உரையுடன் - டாக்டர். உ. வே. சாமிநாதையர் பதிப்பு 6. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி. 7. தேவாரம் - திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் 8. நாலாயிரப் பிரபந்தம் - ஆழ்வார்கள் அருளியது. 9. பெரிய புராணம் - சேக்கிழார் சுவாமிகள் 10. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி 11. யானைக் கோயில்கள் - மயிலை சீனி, வேங்கடசாமி (கையெழுத்துப் பிரதி) BIBLIOGRAPHY 1. Administration and social life under the Pallavas, - C.Minakshi. 2. Age of Tirugnana Sambandar - P. Sundaram Pillai. 3. Ancient geography of India - General Cunningham. 4. Badami stone Inscription - Ind. Ant. Vol. IX. p. 99. Copper plate grants from Sinnamanur, p. 463. S. I. I. Vol. III. 5. Culavamsa - Translated by Wilhelm Geiger. 6. Early History of the Vellar Basin - M. Arokiaswami. 7. Gadval Plates of Vikramaditya - Epi. Ind. Vol. X. p. 101. 8. History of Sri Vaishnavas - T. A. Gopinatha Rao. 9. History of the Pallavas of Kanchi - R. Gopalan. 10. Kasakudi Plates of Nandivarman Pallavamalla. S.I.I. Vol. II p. 342-361. 11. Karnul Plates of the third year of King Vikramaditya I. J. B. B. R. A. S. Vol. XVI, p. 223. 12. Karnul Plates of the tenth year of king Vikramaditya I. J. B. B. R. A. S. Vol. XVI, p. 228. 13. On Yuan Chuang’s Travels in India, Vol. II, Thomas Watters. 14. Pallava Antiquities Vol. I - G. Jouveau Dubreuil. 15. Pallava Architecture Part, II-A. H. Longhurst, M.A.S.I. No. 33. 16. Tamil Studies - M. Srinivasa Aiyengar. 17. The Pandian Kindgom - K. A. Nilakanta Sastri. 18. The Pallavas - G. Jouveau Dubeuil. 19. The date of Bhuti Vikramakesari, J. R. A. S. 1935. pp. 475- 481. 20. The victory of Bhuti Vikramakesari over the Pallavas. J.R.A.S. 1934. p. 53-54. 21. Two Statues of Pallava Kings and Five Pallava Inscriptions in a Rock-cut Temple at Mahabalipuram. H. Krishna Sastri, M.A.S.I. No. 26. 22. Udayendram plates of Nandivarman Pallava Malla. S.I.I. Vol. II. pp. 361-371. 23. Velvikudi grant of Nedunjadayan. Epi. Ind. Vol. XVII p. 291-309. 24. Velurpalayam plates of Nandivarman. S.I.I. Vol. II. pp. 501- 517. ABBREVIATIONS Epi. Indi. - Epigraphia Indica. Ep. Rep. - Epigraphy Report, Madras. E. Z. Epigraphia Zeylanica. Ind. Anti. - Indian Antiquary. S. I. I. South Indian Inscriptions. J. R. A. S. - Journal of Royal Asiatic Society of Great Britain and Ireland. B.B.R.A.S. - Journal of Bombay Branch of Royal Asiatic Society. J.B.B.R.A.S - Journal of Bombay Branch of Royal Asiatic Society. J.O.R. - Journal of oriental Reserach, Madras. J.O.R.M. - Journal of oriental Reserach, Madras. M. A. S. I. - Memoris of the Archaeological Survey of India. Ins. Pudu. State - Inscriptions (Texts) of the Pudukkottai State. Chro-Ins-Pudu. State. - Chronological list of Pudukkottai State. மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப்படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு