மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11 தமிழில் சமயம் புத்த ஜாதகக் கதைகள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 176 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பௌத்தக் கதைகள் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1960 ஆம் ஆண்டில் எழுதிய நூல் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். தமிழகத்தில் பௌத்தத்தின் பல்வேறு போக்குகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் செய்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்தர் கூறியதாக வழங்கப்படும் இக்கதைகளையும் தொகுத்துள்ளார். இக்கதைகளில் இறப்பு, வறுமை, துறவு, உபதேசம், நன்றியறிதல் பிக்குகளின் வாழ்க்கைமுறை, சோம்பேறித்தன்மை, சீடர்களின் தன்மை ஆகிய பல்வேறு தன்மைகள் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளன. புத்தர் ஒருகுறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்து வதற்கு இவ்வகையான கதைகளைக் கூறினார் என்பதை புத்த ஜாதகக் கதைகள் என்ற தொகுப்பின் மூலம் அறிகிறோம். ஜாதகக் கதைகள் என்பவை ஒரு வகைமையாகவே அமைந்துள்ளன. பல்வேறு மொழிகளில் பல்வேறு வேறுபாடுளுடன் இக்கதைகள் வழங்கப்படுவதைக் காண்கிறோம். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழ்ச்சூழலுக்கு ஏற்றவகையில் இக்கதைகளைத் தொகுத்திருப்பதை அறிகிறோம். இதன்மூலம் பௌத்த சமயக் கருத்துகள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் காணமுடிகிறது. பல்வேறு இடங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு பயணங்களில் புத்தர் இக்கதைகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. புத்த சமயம் ஒருகாலத்தில் வெகுமக்கள் சமயமாக இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஜாதகக் கதைகளின் அமைப்புகள் உள்ளன. இக்கதைகள் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங் களை மிகச் சுவையாகவும் எளிதாகவும் சொல்லுவதாக அமைந்திருக் கின்றன. இக்கதை மரபை உள்வாங்கி வேறுபல சமயங்களிலும் இவ்வகையான கதைகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை 96 தங்கள் ஏப்ரல் 2010 வீ.அரசு தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. தமிழில் சமயம் புத்த ஜாதகக் கதைகள் குறிப்பு : மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்தர் ஜாதகக் கதைகள் (1960) எனும் தலைப்பில் வெளியிட்ட நூல் இது. 1. தசரத ஜாதகம் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, ஒரு குடும்பி, தன் தந்தை இறந்ததற்காக வருந்தியது பற்றி இக்கதையைச் சொன்னார். தனது தந்தை இறந்ததற்காக வருந்தி யாதொன்றிலும் மனம் செல்லாமல் தன் கடமையையும் தொழிலையும் செய்யாமல் இருந்தான் ஒரு குடியானவன். பகவன் புத்தர் விடியற்காலையில் யோகத்திருந்த போது இந்தக் குடியானவனின் பக்குவ நிலையையறிந்தார். பின்னர், சாவித்தி நகரத்தில் உணவுக்காகச் சென்றபிறகு தமது சீடர்களை யெல்லாம் தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டுத் தமது முதல் சீடருடன் குடியானவன் வீட்டுக்குப்போய் அவனுக்கு வாழ்த்துக்கூறி அமர்ந்தார். “நீர் வருத்தமாக இருக்கிறீர், அன்பரே!” என்றார். “ஆமாம், பகவரே! என்னுடய தந்தையின் பொருட்டு நான் பெரிதும் வருந்துகிறேன்” என்றான் குடியானவன். அதற்குப் பகவன் புத்தர் கூறினார்: “சாவகரே! முற்காலத்தில் இருந்த அறிஞர்கள் உலகத்தின் எட்டு வகையான1 இயல்புகளை நன்கு அறிந்து, தமது தந்தையார் இறந்தபோதும் சிறிதும் துயரம் அடையவில்லை.” குடியானவன் அதைக் கூறும்படிக் கேட்டான். பகவன் இக்கதையைச் சொன்னார். முன் ஒரு காலத்தில், புகழ்படைத்த தசரதன் என்னும் அரசன், காசியில் இருந்து அரசாட்சி செய்தான். அவன் குடிமக்களின் துன்பங்களை நீக்கி நன்மைகளைச் செய்து நீதியோடு அரசாண்டான். அவனுடைய பதினாயிரம் மனைவியரில் மூத்த இராணியார் இரண்டு ஆண்மக்களையும் ஒருபெண் மகவையும் பெற்றார். இவர்களில் மூத்த மகனுக்கு இராமபண்டிதர் (அதாவது: அறிஞனாகிய இராமன்) என்றும், இளைய மகனுக்கு இலக்கண குமரன் (அதாவது: அதிர்ஷ்டமுள்ளவன்) என்றும், பெண் மகளுக்குச் சீதை என்றும் பெயரிட்டார்கள். சில காலத் துக்குப் பிறகு, மூத்த இராணியார் இறந்து போனார். அரசன் மிகுந்த துயரங்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் கூறியதன் மேல் ஈமக் கடமைகளைச் செய்து முடித்தார். வேறு மனைவி பட்டத்தரசியானார். இந்த அரசியார், அரசனுக்கு உகந்தவர்; அவரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். சில காலங் கழிந்தபிறகு, இந்த அரசியாருக்கு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்குப் பரதன் என்று பெயரிட்டனர். தசரத அரசன் இந்தக் குமாரனிடம் அதிக அன்பு பாராட்டினார். அவர் அரசியாரைப் பார்த்து, “தேவி! உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன். வேண்டியதைக் கேள்” என்றார். அரசியார் வரத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால், வேண்டியது என்ன வென்பதைப் பிறகு எப்போதாவது சொல்வதாகக் கூறினார். குழந்தை வளர்ந்து ஏழு வயதுச் சிறுவனான போது இராணி, அரசனிடம் சென்று, “அரசர்பெருமானே! என்னுடைய மகனுக்கு ஒரு வரம் கொடுப்பதாகக் கூறினீர்கள். அதை இப்போது கொடுத்தருள்வீரா?” என்று கேட்டார். “ என்ன வேண்டும், கேள்” என்றார் அரசர். “பெருமானடிகளே! என் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்தருளவேண்டும்” என்று கேட்டார் இராணியார். அரசர் தமது விரல்களை உதறிப் பதறினார். “கொடும்பாவி! என்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகள் விளக்குப்போல ஒளியுடன் இருக்கிறார்கள். அவர்களைக் கொன்று உன்னுடைய மகனுக்குப் பட்டங்கட்டப் பார்க்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டார். அரசியார் அச்சங் கொண்டு அந்தப்புரத்துக்குப் போய்விட்டார். ஆனால், அரசனிடம் அடிக்கடி இந்த வரந்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். அரசன் இந்த வரத்தைக் கொடுக்க மறுத்தார். அரசர் பெருமான் தமக்குள் எண்ணினார்: “பெண்கள் நன்றி கெட்ட துரோகிகள். இவள் பொய்க்கடிதம் எழுதியாவது, கைக்கூலி கொடுத்தாவது என்னுடைய பிள்ளைகளைக் கொன்றுவிடக்கூடும்.” இவ்வாறு நினைத்த அரசர் பெருமான், தமது பிள்ளைகள் இருவரையும் அழைத்து அவர்களிடம் இச்செய்தியைக் கூறியபிறகு, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிடும். அடுத்த தேசத்துக்காவது, காட்டுக்காவது போய்விடுங்கள். என்னுடைய உடம்பு சுடப்பட்ட பிறகு வந்து, உங்களுக்கு உரியதான இந்த ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” இவ்வாறு கூறியபின் அரசர் பெருமான் நிமித்திகரை அழைத்துத் தன்னுடைய ஆயுட் காலத்தைக் கணித்துக் கூறும்படி சொன்னார். நிமித்திகர் கணித்துப் பார்த்து, அரசர் இன்னும் பன்னிரண்டு ஆண்டு உயிர் வாழ்ந்திருப்பார் என்று அறிவித்தார். தசரதர் தமது மக்களிரு வருக்கும் “குழந்தைகாள்! பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்து உங்கள் கொற்றக் குடையை உயர்த்துங்கள்” என்று கூறினார். அவர்கள் அவ்வாறே செய்வதாகக் கூறி, தந்தையினிடம் விடைபெற்று அழுது கொண்டே அரண்மனையை விட்டுச் சென்றார்கள். தசரத அரசனுடைய மக்கள் மூவரும், நாட்டு மக்கள் கூட்டமாகச் சூழ்ந்து பின்தொடர்ந்து வர, நாட்டைவிட்டுச் சென்றார்கள். காட்டை யடைந்த பிறகு, எல்லோரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக இமய மலைச் சாரலுக்கு வந்தார்கள். அங்கே நீர்நிலைகள் உள்ளதும் பழங்கள் கிடைக்கக் கூடியதுமான ஒரு இடத்தில் குடிசை கட்டிக்கொண்டு, அங்குத் தங்கிக் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு வாழ்ந்தார்கள். இலக்கண பண்டிதரும் சீதையும் இராம பண்டிதரிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்: “தாங்கள் இப்போது எங்க ளுக்குத் தந்தையின் இடத்தில் இருக்கிறீர்கள். தாங்கள் வீட்டி லேயே தங்கியிருங்கள். நாங்கள் போய் பழங்களைக் கொண்டு வருகிறோம்” இவர்கள் கூறியதற்கு இராமபண்டிதர் இசைந்தார். ஆகவே, இராம பண்டிதர் வீட்டிலேயே இருந்தார். இவர்கள் மட்டும் காட்டில் சென்று பழங்களைப் பறித்து வந்து, அண்ணனுக்குக் கொடுத்து உண்பித்தார்கள். இவர்கள் இப்படிக் காட்டிலே காய்கனிகளை உண்டு உயிர் வாழுங்காலத்தில், தசரத அரசன் மக்களின் பிரிவுக்காக மனக்கவலை கொண்டு, ஒன்பதாவது ஆண்டிலேயே இறந்து போனார். இறந்துபோன அரசருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை எல்லாம் செய்தான். பிறகு, இராணி தன் மகன் பரதகுமரனுக்குப் பட்டங் கட்டும் படி கட்டளையிட்டார். பட்டத்துக்கு உரியவர்கள் காட்டிலே இருக்கிறார் கள் என்று கூறிப் பரதகுமாரனுக்குப் பட்டங்கட்ட அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது பரதகுமரன் “என்னுடைய தமையனார் இராமபண்டிதரை நான்போய் அழைத்து வருகிறேன். அவருக்குப் பட்டங்கட்டலாம்” என்று சொல்லி, ஐந்து அரச சின்னங்களுடனும்2 நால்வகைச் சேனைகளுடனும் புறப்பட்டுக் காட்டுக்குப் போனான். காட்டுக்குச் சென்று சேய்மையிலேயே பாசறை அமைத்து அங்குச் சேனைகளை விட்டுவிட்டு, பரதன் அமைச்சர்களுடன் இராமபண்டிதர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான். இராமபண்டிதர் மட்டும் குடிசை யின் முன்புறத்தில் கவலை இல்லாமல் பொற்பதுமைபோல அமர்ந் திருந்தார். பரதன் சென்று அவர் காலில் விழுந்து வணங்கியபின் ஒரு புறமாக நின்று அழுது கொண்டே அரசர் பெருமான் இறந்துபோன செய்தியைக் கூறினான். இச்செய்தியைக் கேட்ட இராம பண்டிதர் வருந்தவும் இல்லை; அழவும் இல்லை; யாதொரு மெய்ப்பாடும் அவரிடம் காணப்படவில்லை. பரதன் அழுது ஓய்ந்து ஒருபுறம் அமர்ந்தான். பொழுது சாய்ந்தபோது தம்பியும் தங்கையும் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களைத் தூரத்தில் கண்ட வுடனே இராம பண்டிதர் தமக்குள் இவ்வாறு எண்ணினார். அவர்கள் இளைஞர்கள்; என்னைப்போன்று அறிவு விளக்கம் அவர்கள் இன்னும் பெறவில்லை. தந்தையார் இறந்த செய்தியை அவர்களுக்குத் திடீ ரென்று கூறினால், வருத்தந் தாங்கமுடியாமல். அவர்களின் இருதயம் வெடித்தாலும் வெடித்துவிடும்.அவர்களை அதோ அந்தக் குளத்துக்கு அனுப்பிப் பிறகு மெல்ல செய்தியைக் கூற வேண்டும்.’ இவ்வாறு தமக்குள் எண்ணிய இராமபண்டிதர், அவர்கள் அருகில் வந்தவுடனே, அவர்களிடம் சினங்கொண்ட வரைப் போலக் கூறினார்: “நீங்கள் நேரங் கழித்து வந்தீர்கள். நீங்கள் குளத்தருகில்போய் நில்லுங்கள். அதுதான் உங்களுக்குத் தண்டனை.” தம்பியும் தங்கையும் அவர் கூறியபடியே குளத்தருகில்போய் நின்றார்கள். அப்போது இராமபண்டிதர், “நமது தந்தையார் - அரசர் பெருமான் இறந்துவிட்டதாகப் பரதன் கூறுகிறான்” என்று அவர்களிடம் சொன்னார். இச்செய்தியைக் கேட்டு அவர்கள் மயங்கி மூர்ச்சையடைந்து நீரிலே விழுந்தார்கள். இரண்டாவது முறையும் இச்செய்தியைக் கூறினார். மறுபடியும் அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். மூன்றாவது தடவையும் கூறினார். அப்போதும் மூர்ச்சை யடைந்து விழுந்தார்கள். அப்போது, அமைச்சர்கள், அவர்களைத் தூக்கிவந்து கரையில் கிடத்தினார்கள். மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது எல்லோரும் அழுது புலம்பி வருத்தம் அடைந்தார்கள். அப்போது பரத குமரன் தனக்குள் இவ்வாறு எண்ணினான்: ‘அண்ணன் இலக்கணனும், தமக்கை சீதையும், தந்தை காலமான செய்தியைக் கேட்டு வருத்தம் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அழுது புலம்பினார்கள். ஆனால், இராம பண்டிதர் மட்டும் வருந்தவும் இல்லை, அழவும் இல்லை. அவர் வருத்தம் அடையாத காரணம் தெரியவில்லை. இதைக்கேட்டு அறிய வேண்டும்.’ இவ்வாறு எண்ணிய பரத குமரன், இராம பண்டிதரிடம் இவ்வாறு கூறினான்: “தகப்பனார் காலமானார் என்று கேட்டவுடன், துயரம் அடையவேண்டிய நீர், மனம் வருந்தாமல் இருந்த காரணம் என்ன?” இதைக்கேட்ட இராமன், தான் ஏன் மனக்கவலைப் படவில்லை என்பதற்கு இந்தக் காரணத்தைக் கூறினார்: “அழுது புலம்பினாலும் சென்றது திரும்பிவராது என்பதை அறிந்தும், அறிவுள்ளவன் எதற்காக அழுது புலம்பவேண்டும்?” “இளையவரும் முதியவரும் பாமரரும் பண்டிதரும் ஏழையும் செல்வரும் எல்லோரும் மறைய வேண்டியவர்களே!” “பழுத்த பழங்கள் மரத்திருந்து உதிர்வதுபோல மனிதரும் இறக்க வேண்டியவர்களே!” “காலையில் இருந்தவர் மாலையில் இல்லை. மாலையில் இருந்தவர் காலையில் இல்லை. இவ்வாறு நிலையற்றது மனித வாழ்க்கை.” “பாமரர்கள் அழுது புலம்புவதனால், இறந்தவரை மீட்கக் கூடும் என்றால், அறிஞர்களும் அழுது புலம்பி இறந்தவரை எழுப்பலாம். ஆனால், அழுவதும் துன்புறுவதும் உடம்பை வாட்டி இளைக்கச் செய்கிறதே தவிர இறந்தவரை எழுப்ப உதவுவதில்லை.” “தீப்பற்றி எரிகிற வீட்டை நீரைக்கொட்டி அவிப்பது போல, கற்றறிந்த நல்லறிஞர்கள், காற்றிலே பஞ்சு பறப்பது போலத் தங்கள் துன்பங்களைப் பறக்கவிட்டு, துன்பத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்.” “இறப்பதும் பிறப்பதும் இயற்கை. நூல்களைப் படித்து, இம்மை மறுமைகளின் இயல்பை ஆழ்ந்து உணர்ந்த அறிஞர்கள், எவ்வளவு பெரிய துன்பம் நேரிட்டாலும் அதனை மனத்தில் கொண்டு துன்பப் படமாட்டார்கள்.” சென்றவர்களுக்காக வருத்தம் அடையாமல், இருக்கிற உற்றார் உறவினரைப் போற்றிக் காப்பாற்றுவது நமது கடமை. இதுவே அறிவாளியின் செயல்.” இவ்வாறு இராமன் நிலையாமையின் இயல்பையும், இருக்கிறவர் செய்ய வேண்டிய கடமையையும் விளக்கிக் கூறினார். இதைக்கேட்ட எல்லோரும் துன்பம் நீங்கி மன அமைதியடைந்தார்கள். பிறகு, பரதன் இராமரை வணங்கி வாரணாசி நாட்டுக்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்படி இராம பண்டிதரை அழைத்தார். அப்போது இராமர் கூறினார்: “தம்பி! சீதையையும் இலக்கணனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போ. போய் நீயே நாட்டை அரசாட்சி செய்.” “இல்லை. தாங்கள்தான் அரசாளவேண்டும்.” “பரத! பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும்படி தந்தையார் கட்டளையிட்டார். இப்போது நாட்டுக்கு வருவேனானால், அவர் கட்டளையை மீறியவனாவேன். மூன்று ஆண்டு சென்றபிறகு வருவேன்.” “அதுவரையில் ஆட்சியை நடத்துவது யார்?” “நீயே நடத்து.” “நான் மாட்டேன்.” “ அப்படியானால், நான் வருகிற வரையில் இந்தப் பாதுகைகள் அரசாளட்டும்” என்று சொல்லி, இராமர் தமது காலில் அணிந்திருந்த கோரைப் புல்லினால் செய்யப் பட்ட பாதுகைகளைப் பரதனிடம் கொடுத்தார். பாதுகையைப் பெற்றுக்கொண்ட பரதன், சீதையையும் இலக் கணனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இராமரிடம் விடை பெற்று அமைச்சரும் பரிவாரமும் புடைசூழப் புறப்பட்டுக் காசி மாநகரத்திற்கு வந்தார். மூன்று ஆண்டுவரையில் பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்தன. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமானால், அமைச்சர்கள் பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து அருகில் இருந்து வழக்குகளைக் கேட்டுத் தீர்ப்பளிப்பார்கள். தீர்ப்புகள் நேர்மையற்றதாக இருந்தால், பாதுகைகள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும். அப்போது, தீர்ப்பு சரியானதன்று என்பதை அமைச்சர்கள் அறிந்து மீண்டும் வழக்கைச் சரிவர விசாரணை செய்து தீர்ப்பளிப்பார்கள். அமைச்சர்கள் செய்த தீர்ப்பு சரியானதாக இருந்தால் பாதுகைகள் வாளா இருக்கும். மூன்று ஆண்டுகள் சென்றபிறகு இராம பண்டிதர் காட்டிலிருந்து காசிக்கு வந்து, ஒரு பூஞ்சோலையிலே தங்கினார். இவர் வருகையை யறிந்து அரசகுமரர்கள் அமைச்சரும் பரிவாரங்களும் சூழப் புறப் பட்டுப் பூஞ்சோலைக்குச் சென்று, சீதையைப் பட்டத்தரசியாக்கி இராமருக்கும் சீதைக்கும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். முடிசூட்டிய பின்னர், இராமர் அழகான தேரில் அமர்ந்து மக்கள் கூட்டம்சூழப் புறப்பட்டு நகரத்தை வலமாக வந்து, சுசந்தகம் என்னும் பெயருள்ள அரண்மனைக்குச் சென்று தங்கினார். பதினாறாயிரம் ஆண்டு நீதியோடு ஆட்சி செய்தபிறகு மேலுலகம் அடைந்தார். இக்கதையைக் கேட்ட குடியானவன் சுரோத்தா பத்தி பலனை அடைந்தான். பகவன் புத்தர், இவ்வாறு ஒப்புமை கூறினார்: “அந்தக் காலத்தில் சுத்தோதன அரசர் தசரதராகவும் 3 பட்டத்தரசி மாயாதேவி யாகவும், இராகுலன்4 தாய் சீதையாகவும், ஆனந்ததேரர் பரதனாகவும், நான் இராம பண்டிதராகவும் இருந்தோம்” என்று விளக்கினார். அடிக்குறிப்புகள் 1 (எட்டு வகையான உலக இயல்புகள்: ஊதியம், இழப்பு, புகழ்ச்சி, இகழ்ச்சி, சிறப்பு, சிறப்பின்மை, இன்பம், துன்பம்) 2 (ஐந்து அரச சின்னங்களாவன: கொற்றவாள், கொற்றக்குடை, பொன்முடி, மிதியடி, விசிறி என்பன. நால்வகைச் சேனைகளாவன: யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை) 3 (சுத்தோதனரும் மாயாதேவியாரும் புத்தருடைய தாய் தந்தையர்.), 4 (இராகுலன், புத்தருடைய மகன்.) 2. சாம ஜாதகம் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, வறுமை யடைந்த தனது பெற்றோரைப் போற்றிவந்த ஒரு பிக்குவைப் பற்றி, இந்தக் கதையைக் கூறினார். சாவித்தி நகரத்திலே பதினெட்டுக் கோடி செல்வம் உள்ள ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். வாலிபனாகிய இந்த மகன் ஒருநாள் மாடிமேல் சாளரத்தின் அருகில் நின்று தெருவில் பார்த்துக் கொண்டிருந்தபோது கூட்டங்கூட்டமாக மக்கள் பூவையும் சந்தனத்தையும் எடுத்துக் கொண்டு போவதைக் கண்டான். அவர்கள் பகவன் புத்தருடைய உபதேசங்களைக் கேட்பதற்காக ஜேதவன ஆராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த இளைஞனும் பூவும் சந்தனமும் எடுத்துக் கொண்டு ஆராமத்துக்குப் போய் பகவரை வணங்கி ஒருபுறம் அமர்ந்தான். பகவன் புத்தர் எல்லோருக்கும் அறவுரை கூறி உலகப் பற்றுக்களினால் வரும் துன்பங் களையும், வீட்டு நெறியின் மேன்மையையும் விளக்கி உபதேசம் செய்தார். கூட்டம் கலைந்துபோனபிறகு இந்த வாபன், தான் துறவு கொள்ள விரும்புவதாகப் பகவன் புத்தரிடம் சொன்னான். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வாலிபருக்குத் துறவு கொடுக்க முடியாது என்று அவர் கூறினார். ஆகவே, அந்த இளைஞன் வீட்டுக்குப் போய் ஒருவாரம் வரையில் உணவு கொள்ளாமல் இருந்தான். அவன் பிடிவாதத்தைக் கண்ட அவன் பெற்றோர், அவன் துறவு பெறச் சம்மதம் கொடுத்தனர். அவன் புத்தரிடம் போய்த் துறவுபூண்டு பிக்கு ஆனான். பிறகு, குருவினிடம் சமயநூல்களை ஐந்து ஆண்டு கற்றுத் தேர்ச்சி யடைந்தான். பிறகு, யோகம் அப்பியசிக்கக் கற்றுக்கொண்டு ஊருக்கு அப்பாலுள்ள ஒரு காட்டுக்குப் போய் அங்கு பன்னிரண்டு ஆண்டு யோகம் செய்துகொண்டிருந்தான். ஆனால், யோகத்தில் சித்தி பெறவில்லை. செல்வம் உள்ளவராக இருந்த இவனுடைய பெற்றோர்கள், காலப் போக்கில் ஏழையராயினர். நிலபுலங்களையும் வாணிகத்தையும் கவனிப்பதற்குக் குடும்பத்தில் தகுந்த ஆள் இல்லாதபடியால், நிலங்களில் வேலை செய்தவர்களும், வாணிகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களும் நகைகளையும் பொருள்களையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இவ்வாறு, அவர்கள் வருவாய் குறைந்து பொருள் நஷ்டமடைந்தார்கள். வயது முதிர்ச்சியினாலே அவர்கள் அலுவல்களைக் கவனிக்க முடியாமற் போயிற்று. தண்ணீர்ப் பானையும் இல்லாத ஏழ்மை நிலையை யடைந்தார்கள். கடைசியில் பிச்சை ஏற்று உயிர் வாழ்ந்தனர். பன்னிரண்டு ஆண்டுக்குப் பிறகு ஜேதவன ஆராமத்திருந்து ஒரு பிக்கு, அந்நகரத்துக்கப்பாலிருந்த காட்டுக்கு வந்தார். அங்கு யோகம் செய்துகொண்டிருந்த பிக்குவைக் கண்டார். யோகி, அவரிடம் பகவன் புத்தரைப்பற்றி விசாரித்தார். பிறகு, மற்ற பிக்குகளைப்பற்றி விசாரித்தார். கடைசியில், சாவித்தி நகரத்திருந்த தமது பெற்றோரைப் பற்றி விசாரித்தார். புதிதாக வந்த பிக்கு கூறினார்: “நண்பரே! அவர்களைப்பற்றி என்னைக் கேட்காதீர்.” “ஏன் ஐயா?” “அந்தக் குடும்பத்தில் ஒரு மகன் இருந்தானாம். அவன் துறவுகொண்டு பிக்குவாகப் போய்விட்டானாம். அவன் போய் விட்டபிறகு குடும்பம் நொடிந்துபோய்விட்டது. செல்வம் எல்லாம் போய், வறுமை யடைந்து இப்போது கிழவராகிய தாயும் தந்தையும் பிச்சை எடுத்துக் கொண்டு அலைகிறார்கள்.” இதைக் கேட்டவுடனே யோகியராகிய பிக்கு மனம் வருந்தி வாய்விட்டு அழுதார். “ ஏன் ஐயா அழுகிறீர்?” என்று புதிதாக வந்தவர் கேட்டார். “ஐயா, அவர்கள் என்னுடைய தாய் தந்தையர். நான் அவர்களுடைய மகன்.” “ஐயா, உம்மால் அவர்கள் இந்தத் தாழ்ந்த நிலையை அடைந்தார்கள். நீர் போய் அவர்களைப் போற்றிக் காப்பாற்றும்.” யோகியாராகிய பிக்கு தமக்குள் எண்ணினார்: ‘நான் பன்னிரண்டு ஆண்டு யோகம் செய்துவருகிறேன். ஆனால், அதில் சித்தி கிடைக்க வில்லை. நான் போய் இல்லறத்தில் இருந்து என் தாய் தந்தையரைப் போற்றிக் காப்பாற்றி நற்கதியடைவேன்.’ இவ்வாறு எண்ணிய அவர், உடனே புறப்பட்டு வழிநடந்தார். நெடுந்தூரம் இருந்த வழியைக் கடந்து சாவித்தி நகரத்துக்கு அருகில் வந்து சேர்ந்தார். அங்குவழி இரண்டாகப் பிரிந்து ஒரு வழி ஜேதவனத் துக்கும், மற்றொரு வழி சாவித்தி நகரத்துக்கும் போகிறது. முதல் எங்கு போவது என்று யோசித்துக் கடைசியில் ஜேத வனத்தில் போய் பகவன் புத்தரைப் பார்த்தபிறகு நகரத்துக்குப் போய்ப் பெற்றோரைப் பார்ப்பது என்று முடிவு செய்து, அவ்விதமே ஜேதவனம் சென்றார். ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் மாதிபோத்தக சூத்திரத்தை உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதில், துறவு பூண்டோரும், துறவு நிலையில் இருந்து கொண்டே பெற்றோ ரைக் காப்பாற்றலாம் என்பதை விளக்கினார். அதைக்கேட்ட பிக்கு, துறவியாக இருந்துகொண்டே தமது பெற்றோரைக் காப்பாற்ற முடிவு செய்துகொண்டு தமது பெற்றோரைத் தேடிக்கொண்டு சாவித்தி நகரம் சென்றார். தெருவில், பிக்குவின் முறைப்படி பிச்சை ஏற்றுக்கொண்டே போய், தமது பெற்றோர் இருந்த வீட்டுக்கு வந்தார். அவ்வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். வீட்டுக்கு எதிரில், சுவர்ப்பக்கத்தில், தெருவின் ஓரத்தில் ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்திருந்தனர். கிழவி பிச்சை எடுத்து வந்த உணவைச் சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் தமது பெற்றோர் என்பதை அறிந்து அவர்கள் நிலைமைக்கு மிகவும் மனம் வருந்தி, அங்குச் சென்று மௌனமாக நின்றார். இவரது கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் இவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இவர் பிச்சைக்காக நிற்கிறார் என்று எண்ணிய அந்தக் கிழவி, “ ஐயா, உமக்குக் கொடுக்கத்தக்க உணவு எங்களிடம் இல்லை, போய் வா” என்று கூறினாள். அப்போது அவருக்குத் துக்கம் முன்னைவிட அதிகமாக மூண்டெழுந்தது. அதை அடக்கிக் கொண்டு, கண்களில் நீர்வழிய அங்கேயே நின்றார். இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் போகச் சொன்ன போதும் அவர் அங்கேயே நின்றார். கிழவன், “இது உன்மகன்போலத் தெரிகிறது. கிட்டே போய்ப்பார்” என்று கூறினார். கிழவி, அருகில் வந்து பார்த்துத் தன் மகன் என்பதை அறிந்து அவர் கால் விழுந்து கதறி அழு தாள். கிழவனும் அழுதான். துறவியாகிய மகனும் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுது புலம்பினார். பிறகு, தான் பிச்சை ஏற்றுக்கொண்டு வந்த உணவை அவர்களுக்குக் கொடுத்து உண் பித்து, அவர்களை அங்கேயே உட்கார வைத்துவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனார். வாங்கிவந்த பிச்சை உணவை அவர் களுக்குக் கொடுத்துத் தாமும் அருந்தினார். இவ்வாறு அன்று முதல், பிச்சை ஏற்றுத் தமது பெற்றோரைக் காப்பாற்றி வந்தார். நாளடைவில் இந்தப் பிக்கு உடல் மெந்து இளைத்துப் போனார். தாம் பெறுகிற பிச்சை உணவைத் தமது பெற்றோருக்குக் கொடுத்து மீந்த உணவை இவர் சாப்பிட்டபடியால் அது உடல் போஷிப்புக்குப் போதாமல் அவர் உடல் மெந்து இரத்தம் குறைந்து உடம்பு வெளுத்தது. அப்போது இவரைக் கண்ட மற்றப் பிக்குகள், “முன்பு உடம்பு நன்றாக இருந்தீர். இப்போது இப்படி மெலிந்து வெளுத்துக் காணப்படுகிறீர். உமக்கு உடம்பில் ஏதோ நோய் இருக்கிறது போலும்” என்று கூறினார்கள். பிக்கு, காரணத்தை அவர்களுக்குத் தெரிவித்தார். “பிச்சை ஏற்ற உணவைப் பிக்குகள் வீணாக்கக் கூடாது என்பது பகவர் ஆணை. மேலும், பிக்குகள் இல்லறத்தாருக்குத் தானம் வழங்குதல் கூடாது. நீர் உமது பிச்சை உணவைத் துறவிகள் அல்லாதவருக்குக் கொடுப்பது தவறு” என்று பிக்குகள் கூறியதோடு, இச்செய்தியைப் பகவன் புத்தரிடம் தெரிவித்தார்கள். பகவர், இந்தப் பிக்குவை வரவழைத்துக் கேட்க, இவர் “ஆம்” என்று ஒப்புக்கொண்டார். “நீர்காப்பாற்றுகிற அந்த இல்லறத்தார் யார்?” என்று கேட்டார் பகவன் புத்தர். “ வயதுசென்ற என் தாய் தந்தையர்” என்று விடை கூறினார் பிக்கு. உடனே பகவர் இவரைத் தட்டிக் கொடுத்து, “நீர் செய்வது நல்லது” என்று மும்முறை கூறினார். தாமும், முற்பிறப்பில் தமது பெற்றோரைக் காப்பாற்றியதாகவும் பிக்குகளுக்குக் கூறினார். பிக்குகள் அதைக் கூறும்படி கேட்க, பகவன் புத்தர் இந்தக் கதையைச் சொன்னார். முன் ஒரு காலத்திலே, வாரணாசிக்கு அருகிலே, ஒரு ஆற்றங் கரையிலே, ஒரு வேடர் கிராமம் இருந்தது. அந்த ஆற்றின் எதிர்க் கரையிலே இன்னொரு வேடர் கிராமமும் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்நூறு குடும்பம் இருந்தது. இரண்டு ஊர்களின் வேட்டுவத் தலைவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது வாலிப வயதிலே தமக்குள் பேசிக்கொண்டார்கள், தமக்குள் யாருக்கேனும் மகள் பிறந்தால், அந்த மகளை மற்றவருடைய மகனுக்கு மணம் செய்விக்கவேண்டும் என்று. சில காலஞ் சென்றபிறகு இக்கரையில் இருந்த தலைவனுக்கு ஒரு ஆண் குழந்தையும் அக்கரையில் இருந்த தலைவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தைக்குத் துகூலகன் என்று பெயர் இட்டனர். பெண் குழந்தைக்குப் பாரிகை எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டு குழந்தைகளும் அழகாக இருந்தன. வேடர் குடியில் பிறந்தும் அக்குழந்தைகள் பறவைகளையும் விலங்குகளையும் கொல்வது இல்லை. துகூலகன் பெரியவனாக வளர்ந்து பதினாறு வயதடைந்து ஆண் மகனாக விளங்கினான். அப்போது அவனுடைய பெற் றோர் அவனிடம், “தம்பி! உனக்குத் திருமணம் செய்யப் பெண் பார்க்கப் போகிறோம்” என்று கூறினார்கள். துகூலகன், முற் பிறப்பில் பிரம லோகத்தில் இருந்தவனாகையால், தூய உள்ளம் உடையவனாக இருந்தான். அவன் இல்வாழ்க்கையை விரும்ப வில்லை. ஆகவே அவன், “இல்வாழ்க்கையில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று கூறினான். பலமுறை அவர்கள் இவனுடைய திருமணத்தைப் பற்றி வற் புறுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் அவன் மணம் வேண்டாம் என்று மறுத்தான். பாரிகையும் வளர்ந்து மணம் செய்யத்தக்க கன்னிப்பெண் ஆனாள். அவளுடைய பெற்றோர் அவளிடம். “நமது நண்பர் மகன் துகூலகன் அழகாக இருக்கிறான். அவனுக்கு உன்னைத் திருமணம் செய்யப்போகிறோம்” என்று சொன்னார்கள். அவளும் முற்பிறப்பிலே பிரமலோகத்தில் இருந்தவளா கையினாலே, அவளுக்கும் இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை. துகூலகன், ஒருவரும் அறியாதபடி பாரிகையிடம் ஆள் அனுப்பி, “நீ மணம் செய்துகொள்ள விரும்பினால், வேறு குடும்பத்திலே யாரை யேனும் மணம் செய்து கொள். நான் மணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை செலுத்த விரும்பவில்லை” என்று செய்தி தெரிவித்தான். பாரிகையும் அவனுக்கு அவ்வாறே செய்தி சொல்லியனுப்பினாள். இவ்வாறு இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், இவர்களுடைய பெற்றோர், இவ்விருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் ஆனபிறகும் இவர்கள் இருவரும் பிரமசரிய விரதத்தோடு தூயவாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள். துகூலகன் வேட்டைக்குப் போவதில்லை; மான் மரை முதலிய மிருகங்களைக் கொல்வதில்லை. ஆற்றில் மீன் பிடிப்பது இல்லை. வீட்டிலுள்ளவர் மீன் பிடித்துக்கொண்டு வந்தால், அதைக் கொண்டு போய் விற்பதும் இல்லை. அவனுடைய பெற்றோர் மனக்கவலை யடைந்தனர். “நீ வேடர் குலத்தில் பிறந்தும் வேட்டையாடுவதில்லை. குடும்ப வாழ்க்கையை நீ வெறுத்து இருக்கிறாய். இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? பிற்காலத்தில் உன்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவாய்?” என்று அவர்கள் அவனைக் கேட்டார்கள். “எனக்குக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நீங்கள் உத்தரவு கொடுத்தால் இப்பொழுதே நான் காட்டுக்குப் போய்த் துறவியாக வாழ்வேன்” என்று கூறினான் துகூலகன். அவர்களும் அவன் விருப்பத்துக்கு இசைந்தார்கள். ஆகவே, துகூலகனும் பாரிகையும் அவர்களை வணங்கி விடைபெற்றுக் காட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் கங்கைக்கரை வழியே நடந்து இமயமலைப் பக்கமாகச் சென்றார்கள். கடைசியாக, மிகசம்மத என்னும் சிற்றாறு மலையிருந்து ஓடிவந்து கங்கையாற்றுடன் கலக்கிற இடத்தில் வந்தார்கள். அங்குக் கங்கை ஆற்றைவிட்டு மிகசம்மத ஆற்றங்கரை வழியே நடந்தார்கள். அப்போது தேவலோகத்திலே சக்கன் (இந்திரன்) அமர்ந் திருந்த சிம்மாசனம் சூடு கொண்டது. சக்கன் அதன் காரணத்தை யறிந்தான். அவன், தேவலோகத்துச் சிற்பியாகிய விசுவகர்மனை அழைத்துக் கூறினான்: “இரண்டு பெரியவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்து இமயமலைச் சாரலுக்குப் போகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கவேண்டும். மிகசம்மத ஆற்றங்கரையிலே இத் துறவிகளுக்கு தகுந்த இடத்தில் குடில் அமைத்துவிட்டு வருக” இந்திரன் கட்டளைப்படியே விசுவகர்மனும் ஆற்றங்கரையிலே தகுதியான இடத்திலே இரண்டு குடில்களை அமைத்துவிட்டுப் போனான். துகூலகன் இந்த இடத்திற்கு வந்து குடிசைகளைக் கண்டு “இந்திரன் அமைத்துக் கொடுத்த குடில்கள் இவை” என்று சொல்லி அதனுள் சென்று தனது ஆடைகளைக் களைந்து மரவுரி அணிந்து துறவியானார். பாரிகைக்கும் துறவு கொடுத்தார். இருவரும் இந்தக் குடிசைகளில் தங்கித் துறவியாக இருந்தார்கள். கணவன் மனைவி என்கிற தொடர்பு இல்லாமல் தூய துறவற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். காட்டில் வாழும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் நட்பும் உள்ளவர்களாக இருந்தபடியினாலே, விலங்குகளும் பறவைகளும் இவர்களிடத்தில் நட்பும் நேசமுமாக இருந்தன. பாரிகையம்மை, ஆற்றிருந்து நீர் கொண்டு வருவாள். ஆசிரமத்தை அலகினால் துப்புரவு செய்து தூய்மைப் படுத்துவாள்.இருவரும் காட்டுக்குச் சென்று கிழங்குகளையும் பழங்களையும் பறித்துக்கொண்டு வந்து உண்பார்கள். பிறகு, இருவரும் தத்தமக்குரிய குடிசையில் சென்று துறவு முறைப் படித் தவம் செய்வார்கள். இவ்வாறு நாட்கள் பல கடந்தன. ஒருநாள் சக்கன் இவர்களுக்கு நேரிடப்போகிற துன்பத்தை அறிந்தான். இவர்களுக்குக் கண்பார்வை மறைந்து துன்புறப் போகிறார்கள் என்பதை உணர்ந்தான். ஆகவே, சக்கன் விண்ணுலகத் திலிருந்து வந்து துகூலக முனிவரிடம் சென்று வணங்கி ஒருபுறமாக அமர்ந்து இவ்வாறு கூறினான்: “முனிவரே! எதிர் காலத்தில் ஒரு துன்பம் நேரப் போகிறது. அக்காலத்தில் உமக்கு உதவிசெய்ய ஒருமகனைப் பெற்றுக் கொள்ளும். இல்லற வழியில் நடந்துகொள்ளும்” என்று கூறினான். “தேவர்களுக்கு அரசரே! ஏன் இவ்வாறு கூறுகிறீர். நான் வீட்டில் இருந்தபோதும் சிற்றின்பத்தை வெறுத்தவனாயிற்றே. இப்போது காட்டில் வந்து துறவியாக இருக்கும்போது சிற்றின்பத்தை நாடுவேனா?” என்று விடை கூறினார் முனிவர். “நல்லது. அப்படியானால், ஒரு நல்ல நேரத்தில் பாரிகை யம்மையின் கொப்பூழைத் தங்கள் கையினால் தொட்டால் போதும்” என்றார் சக்கன். அப்படிச் செய்ய முனிவர் ஒப்புக் கொண்டார். சக்கன் வணங்கி விடைபெற்றுப் போய்விட்டான். முனிவர் இந்தச் செய்தியைப் பாரிகைக்குத் தெரிவித்தார். பிறகு ஒருநாள் நல்ல நேரத்திலே பாரிகையின் கொப்பூழை முனிவர் தமது கையினால் தொட்டார். அப்போது துடித லோகத்தி ருக்கும் போதி சத்துவர் இறங்கி வந்து பாரிகையம்மையின் வயிற்றிலே கருவாக அமர்ந்தார். பத்துத் திங்கள் சென்றபிறகு அவருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. காட்டிலே மலைமேல் வாழும் கின்னர மகளிர் வந்து பாரிகைக்கு மருத்துவம் செய்தார்கள். குழந்தைக்குச் சாமன் என்று பெயரிட்டார்கள். குழந்தை பொன்னிறமாக இருந்தபடியால் சுவர்ணசாமன் - அதாவது பொன்னன் சாமன், என்று அழைத்தார்கள். பொன்னன் சாமன் வளர்பிறைபோல வளர்ந்து பதினாறு வயதுள்ள இளைஞன் ஆனான். அவனைக் குடிலில் விட்டுவிட்டு, பெற்றோர் காட்டில் சென்று காய்கனிகளையும் கிழங்குகளையும் கொண்டு வருவார்கள். அவ்வாறு, வழக்கம் போல ஒருநாள் அவர்கள் காட்டுக்குப்போய் காய்கனிகளைப் பறித்துக் கொண்டு மாலை நேரத்தில் தமது இருப்பிடம் திரும்பி வந்தனர். குடிலுக்கு அருகே வந்தபோது வானத்திலே மேகங்கள் சூழ்ந்து கொண்டு மழை பெய்தன. அவர்கள் ஒரு பெரிய மரத்தினடியில் மழைக்கு ஒதுங்கினார்கள். மரத் தினடியில் இருந்த பாம்புப் புற்றின்மேல் நின்றார்கள். மழை நீர். அவர்களின் உடம்பை நனைத்து வியர்வையுடன் கலந்து புற்றினுள் ஒழுகிற்று. புற்றுக்குள் இருந்த பாம்பின் மூக்கிலே வியர்வை நாற்றம் புகுந்தது. வியர்வை நாற்றத்தினால் சினங்கொண்ட பாம்பு சீறிப் பெரு மூச்சு விட்டது. பாம்பின் நச்சுக் காற்று இவர்கள்மேலே பட்டது. அப்போது இவர்களுக்குக் கண்பார்வை மறைந்துவிட்டது. ஒருவரை யொருவர் பார்க்க முடியவில்லை. துகூலிகர் பாரிகையிடம், “எனக்குப் பார்வை தெரியவில்லை. உன்னை நான் காணமுடியவில்லை” என்று கூறினார். பாரிகையும் அவரிடம் அவ்வாறே சொன்னார்: “ இனி நமக்கு வாழ்க்கை இல்லை” என்று அவர்கள் கூறிப் புலம்பிக் கொண்டே வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி நடந்தார்கள். முற் பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ என்று அவர்கள் ஏங்கி னார்கள். இவர்கள் முற்பிறப்பிலே மருத்துவர் குடும்பத்திலே பிறந்து பிணியாளர்க்கு மருந்து கொடுக்கும் தொழிலைச் செய்து வந்தார்கள். ஒரு சீமானுடைய கண்ணில் நோய் உண்டாக, அவர் இவரிடம் வந்து மருந்து போட்டுக்கொண்டார். ஆனால், நோய் நீங்கியபிறகு சீமான் இவருக்குக் காசு கொடுக்கவில்லை. மருத்துவர் தன் மனைவியிடம் தெரிவித்து இதற்கு என்ன செய்வது என்று கேட்டார். மனைவி, சீமான் மேல் சினங்கொண்டு, “அவனிடம் காசு கேட்கவேண்டாம். மருந்து கொண்டு போய் அவன் கண்ணில் விட்டு ஒரு கண்ணைக் குருடாக்கிவிடு” என்று கூறினாள். அந்த யோசனையை வைத்தியர் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தார். பிரபுவுக்கு ஒரு கண் குருடாகிவிட்டது. இந்தப் பாவத்தின் பலனாக இவர்களுக்கு இந்தப் பிறப்பிலே இரண்டு கண்களும் குருடாயின. குடிலில் தங்கியிருந்த போதிசத்துவரான பொன்னன் சாமன் தமக்குள் எண்ணினார்: “வழக்கமாக நமது பெற்றோர் இந்த நேரத்திற்குள் வந்து விடுவார்களே! இன்று ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ? போய்ப் பார்ப்போம்” என்று நினைத்து, வெளியேறி வந்து தமது பெற்றோரைத் தேடிப்பார்க்கத் தொடங்கினார். தேடிச் சென்றவர் உரத்த குரல் அவர்களைக் கூவி அழைத்தார். மகனுடைய குரலைக் கேட்டு அவர்களும் பதிலுக்குக் குரல்கொடுத்தார்கள். சாமன் அவர் களிடம் ஓடினார். “நெருங்கி வராதே. இங்கு ஆபத்து இருக்கிறது” என்று அவர்கள் கூவினார்கள். சாமன், நீளமான மூங்கில் ஒன்றை எடுத்து அவர்கள் பக்கமாக நீட்டினான். அவர்கள் மூங்கிலைப் பிடித்துக்கொண்டே இவனருகில் வந்தார்கள். பெற்றோர் பார்வையற்றிருப்பதைக் கண்டு சாமன், அதன் காரணத்தை வினவினான். “மழைக்காக மரத்தடியில் ஒதுங்கினோம். அங்கே பாம்புப்புற்று இருந்தது. பாம்பு எங்களைக் குருடாக்கிற்று” என்று அவர்கள் சொன்னார்கள். “புற்றில் பாம்பு கோபம் கொண்டு சீறி மூச்சுவிட்டிருக்கும். நச்சுக்காற்றினால் பார்வை மறைந்தது” என்று கூறினான் சாமன். இவ்வாறு கூறிய சாமன் அழுதான்; பிறகு சிரித்தான். “ஏன் அழுகிறாய், பிறகு சிரிக்கிறாய்?” என்று அவனைக் கேட்டார்கள். “நீங்கள் கண் இழந்த துன்பத்திற்காக அழுதேன். உங்களுக்குத் தொண்டு செய்து, ஊழியம் புரிய வாய்ப்பு ஏற்பட்டதற்காகச் சிரித்தேன்” என்று விளக்கம் கூறினான் சாமன். “இனி உங்களுக்கு வேண்டிய வற்றை நான் செய்வேன். நீங்கள் குடிலில் தங்கியிருங்கள் நான் போய்க் காய்கனிகளைக் கொண்டு வருவேன்” என்று சொல்லி அவர்களைக் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அன்றுமுதல் சாமன் தனது பெற்றோருக்குப் பணி விடைகள் செய்துவந்தான். காட்டுக்குச் சென்று காய்கனி கிழங்குகளைக் கொண்டு வருவான். காலையில் ஆசிரமத்தை அலகிட்டுத் துப்புரவு செய்வான். ஆற்றுக்குப் போய்க் குடத்திலே நீர் கொண்டு வந்து அவர்களுக்குக் கைகால் முகம் கழுவக் கொடுப்பான். குடிப்பதற்கு நீர்கொண்டு வருவான். அவர்கள் நடப்பதற்கு உதவியாகக் கயிறுகளை அங்கங்கே கட்டிவைத்தான். அக் கயிறுகளைப் பிடித்துக்கொண்டே அவர்கள் அங்கும் இங்கும் நடப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்த பிறகு, அவர்களை வணங்கி விடைபெற்றுக் கொண்டு காய்கனி கிழங்குகளைக் கொண்டுவருவதற்குக் காட்டுக்குப் போவான். அங்கிருந்த மான்கள், இவன் போகும் இடங்களுக்கெல்லாம் இவனுடன் சேர்ந்து போயின. மலைமேலே வாழும் கின்னரர்களுடன் சேர்ந்து இவனும் காய்கனி கிழங்குகளைப் பறித்துக் கொண்டு மாலைநேரம் ஆனவுடன் ஆசிரமத்துக்கு வருவான். குளிர் காலத்திலே நெருப்பு மூட்டி அவர்களைக் குளிர்காயச் செய்வான். குளிப்பதற்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பான். அவர்களுக்கு உணவு கொடுத்து உண்டபின் மிகுந்ததைத் தான் உண்பான். இவ்வாறு சாமன் தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். அக்காலத்திலே வாரணாசி நாட்டை பிலியக்கன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த மன்னனுக்கு மான் இறைச்சி உண்பதில் அதிக ஆசை உண்டு. அவன் மான் வேட்டையாடுவதற்குப் புறப்பட்டு, அரசாட்சியைத் தன் தாயிடம் ஒப்படைத்துத் தன்னந்தனியே இமய மலைச் சாரலில் சென்று வேட்டையாடினான். வேட்டையாடிய அரசன் கடைசியில் மிகசம்மத ஆற்றண்டை தற்செயலாக வந்தான். அந்தத் துறை, சாமன் நாள் தோறும் நீர் எடுக்கும் துறையாகும். அங்கு மான்களின் காலடிச் சுவடுகளைக் கண்ட அரசன் வில்லும் அம்புமாக அங்கு மறைந்து இருந்து, மான்களின் வருகையை எதிர்நோக்கியிருந்தான். அப்போது சாமன் நீர் எடுப்பதற்காகக் குடத்துடன் ஆற்றங் கரைக்கு வந்தான். அவனுடைய பொன்நிறமான உடல் அமைப்பும், இளமையும், அழகும், வளமும் அரசனுடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் தனக்குள்ளே வியந்து இவ்வாறு எண்ணினான்: ‘இங்கு நான் பலமுறை வந்திருக்கிறேன் இது வரையில் மனிதர் ஒருவரையும் இங்கு நான் கண்டதில்லை. தேவன்போலக் காணப்படுகிற இவன் யார்? நாக குமாரனா, அல்லது தேவ குமாரனா? இவனை யார் என்று அறிய அருகில் போவேனானால், தேவகுமாரனாக இருந்தால் சட்டென்று ஆகாயத்தில் மறைந்துவிடுவான்; நாக குமாரனாக இருந்தால் இமைக்குமுன் மண்ணுக்குள் மறைந்துவிடுவான். நான் நாட் டிற்குத் திரும்பிச் சென்றால், அமைச்சர்களும் மற்றவர்களும் இமயமலைச் சாரல் ஏதேனும் அதிசயத்தைக் கண்டீரா என்று கேட்பார்கள். ஒரு தெய்வகுமாரனைக் கண்டேன் என்று சொன்னால் அவன் பெயர் என்ன என்று கேட்பார்கள். அவன் பெயர் தெரியாது என்று கூறினால் என்னை ஏளனம் செய்து நகைப்பார்கள். ஆகவே, இந்தத் தெய்வீக ஆள் மறைந்து விடாதபடி முதலில் இவனை அம்பு எய்து காயப்படுத்தி விழச்செய்து பிறகு இவனைப்பற்றிய செய்தியை அறிவேன்.’ இவ்வாறு அரசன் தனக்குள் எண்ணிக் கொண்டிருந்த போது, மான் கூட்டம் வந்து ஆற்றில் சென்று நீரைக் குடித்தன. அவை நீரைக் குடித்துத் திரும்பிய பிறகு, சாமன் ஆற்றில் இறங்கிக் குடத்தில் நீரை முகந்து தோளின்மேல் வைத்துக் கொண்டு திரும்பினான். அப்போது, மறைந்திருந்த அரசன் நஞ்சு ஊட்டிய அம்பை அவன் மார்பிலே குறிவைத்து எய்தான். அம்பு மார்பில் தைத்தது. சாமன் புண்பட்டதைக் கண்ட மான்கள் அச்சங்கொண்டு ஓடின. சாமனுக்குத் தளர்ச்சி உண்டாயிற்று. அவன் நீர்க்குடத்தைக் கரைமேல் வைத்துவிட்டு, ஆற்று மணலைக் குவித்து அதன்மேல் தலையை வைத்துப் படுத்துத் தன் பெற்றோர் இருக்கும் திசையில் கையை நீட்டினான். மாலை வெயில், வெண் மணற் பரப்பிலே பொன் நிறச் சாமன் படுத்துக்கிடப்பது, வெள்ளித் தரையில் பொற்பதுமை கிடப்பது போலத் தோன்றிற்று. சோர்வடைந்த சாமன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘இந்த இமயமலைக் காட்டிலே எனக்குப் பகை யானவர் ஒருவரும் இலர். நானும் யாரிடத்திலும் பகைமை உடையவன் அல்லன்.’ அதற்குள்ளாக அரசன் அவ்விடம் வந்தான். சாமனுடைய மார்பிலும் வாயிலும் இரத்தம் வழிந்தது. “நான் நீரை முகந்தபோது மறைந்திருந்து அம்பு எய்தவர் நீர்தானோ? என்னுடைய இறைச்சி தின்பதற்கு உதவாது. என்னுடைய தோலும் எதற்கும் பயன்படாது. என்னைக் கொன்று நீர் அடையக்கூடிய ஊதியம் என்ன? என்னைக் கொன்ற நீர் யார்? உமது பெயர் என்ன?” என்று சாமன் கேட்டான். இதைக்கேட்ட அரசன் தனக்குள் எண்ணினான்: ‘என் அம்பினால் இவன் அடிபட்டு விழுந்தும் இவன் என்னை நிந்திக்க வில்லை. கோபித்துச் சபிக்கவில்லை. சினமும் பகையும் இல்லாமல் இவன் பேசுகிறான். அருகில் செல்லுவோம்’ என்று நினைத்து அருகில் சென்று இவ்வாறு கூறினான்: “நான் வாரணாசி நாட்டின் அரசன், என்னைப் பியக்கன் என்று அழைப்பார்கள். வில்வித்தையில் வல்லவன். மான் வேட்டையாட இக்காட்டிற்கு வந்தேன். என் அம்புக்கு நாகர்களும் தப்பிக்கொள்ள முடியாது. அதிருக்கட்டும், நீர் யார்? யாருடைய மகன்? உமது பெயர் என்ன? எந்தக் குடும்பத்தில் பிறந்தவர்? உமது தந்தையின் பெயர் என்ன? சாமன் விடை கூறினான்: “என்னைச் சாமன் என்று அழைப்பார் கள். நான் வேடர் குலத்தில் பிறந்தவன். மறைந்து இருந்து என்னை அம்பு எய்தீர். அம்புபட்ட மான்போல நான் இதோ மணலில் விழுந்து கிடக்கிறேன். நஞ்சு தோய்ந்த அம்புப்பட்ட புண்ணிருந்து இரத்தம் வழிந்தோட செயலற்றுக் கிடக்கிறேன். இளைப்பும் களைப்பும் ஓய்ச்சலும் எனக்கு வந்துவிட்டன. சாகும்தறுவாயில் உம்மைக் கேட்கிறேன். ஏன் மறைந்திருந்து என்னைக் கொல்ல நினைத்தீர்? என் உடம்பின் மாமிசம் உணவுக்கு உதவாது. என் உடம்பின் தோல் எதற்கும் பயன்படாது. என்னைக் கொல்வதினாலே உமக்கு உண்டாகும் நன்மை என்னை? அரசன் உண்மையை மறைத்துப் பொய்யாக விடை கூறினான்: “உன்மேல் எனக்குப் பகை இல்லை. ஒரு மான் என் கண்ணில் பட்டது. அதன்மேல் அம்பு எய்த நினைத்தேன். அதற்குள் நீ இங்கு வந்தாய். உன்னைக்கண்ட மான் பயந்து ஓடிற்று. அதன்மேல் எய்த அம்பு உன் மார்பில் பட்டுவிட்டது.” சாமன்: “நான் சின்னஞ்சிறுவனாக இருந்ததுமுதல் இது வரையில் எந்த மிருகமும் என்னைக்கண்டு ஓடியது இல்லை. ஏன்? கொடிய விலங்குகளும் என்னுடன் நட்பாக இருக்கின்றன. அப்படியிருக்க மானா என்னைக்கண்டு பயந்து ஓடிற்று?” குற்றமற்ற இவனைப் புண்படுத்திவிட்டதோடு பொய்யையும் பேசிவிட்டேன் என்று அரசன் தனக்குள் எண்ணி இனி உண்மையைப் பேசவேண்டும் என்று கருதி இவ்வாறு கூறினான்: “சாம! மான்மேல் அம்பு எய்தேன் இல்லை. கோபமும் வெறுப்பும் கொண்டு உன்மேல் அம்பு எய்தேன்” என்று சொல், இவன் தன்னந்தனியே இக்காட்டில் இருக்க மாட்டான். இவனைச் சேர்ந்தவர்களும் இங்கு இருப்பார்கள்; அவர்களைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்து, “நண்பா! நீ எங்கிருந்து வந்தாய்? உன்னை நீர் கொண்டு வரும்படி அனுப்பியவர் கள் யார்?” என்று வினாவினான். சாமனுக்கு உடம்பில் மிகுந்த வலி உண்டாயிற்று. காயத்திலிருந்து இரத்தம் வடிந்ததோடு வாயிலிருந்தும் இரத்தம் வழிந்தது. சாகும் தறுவாயிலிருந்தான். “என்னைப் பெற்றோர், அதோ அங்கே இருக்கிறார்கள். பார்வை இழந்து என் ஆதரவிலே இருப்பவர்கள். அவர்களுக்குத் தான் நான் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்” என்று கூறி சாமன் அவர்களுடைய பரிதாபமான நிலைமையை எண்ணிக் கவலைகொண்டு அழுது அரற்றினான். “அவர்கள் வாழ்க்கை அணைந்துபோகும் தறுவா யிலிருக்கிற விளக்குப் போன்றது. அங்குள்ள காய் கிழங்குகள் ஒரு வாரத்திற்கும் காணாது! தண்ணீர் இல்லாமல், அந்தோ! அவர்கள் என்ன செய்வார்கள்! கண்ணற்ற அவர்கள் தாகத்தினால் நா வறண்டு, அந்தோ! இறந்து போவார்கள். நான் சாவதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்றைக்காவது ஒரு நாளைக்குச் சாகவேண்டியவன்தானே! சாவதற்கு முன்பு அவர்கள் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லையே! என் தாயார் - ஓ என் அம்மா! என்னை நினைத்து நினைத்து வருந்தித் துன்பம் அடைவார். இரவும் பகலும் கண்ணீர் உகுத்து ஏங்கி அழுது கவலைப் படுவார். என் தந்தை - ஓ என் அப்பா! நினைத்து நினைத்துத் துக்கப் பட்டுத் துன்பம் அடைந்து வருந்துவார். இரவும் பகலும் கவலைப் பட்டுக் கண்ணீர் விடுவார். இவ்வளவு நேரம் ஆகியும் நான் போகாததற் காகக் கவலையோடு எதிர்பார்த்திருப்பார்கள். கண்ணற்ற அவர்கள் காட்டிலே அலைந்து அலைந்து என்னைத் தேடுவார்கள். இதை நினைக்கும்போது இன்னொரு அம்பு என் நெஞ்சைத் துளைப்பது போல இருக்கிறதே! இங்கே மண்ணில் கிடந்து செத்துக்கொண்டிருக்கிற நான், அந்தோ! அவர்கள் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவும் முடியாதவனாய் இருக்கிறேனே!” இவ்வாறு சாமன் அரற்றி அழுதான். இதைக் கேட்ட அரசன் மனம் உருகினான். கண்ணற்ற பெற்றோரைக் காப்பாற்றும் இவன், அவர்களின் பரிதாப நிலை மைக்காக வருந்துகிறான். சாகும் தறுவாயிலுள்ள இவன், தன் நோயை மறந்து அவர்களுக்காக ஏங்குகிறான். இவ்வளவு நல்லவனுக்குப் பெருந்தீங்கு செய்துவிட்டேன். எவ்வாறு இவனுக்கு ஆறுதல் கூறுவேன்? அரசனாக இருந்தும் நரகத்தைத் தேடிக் கொண்டேன்! இவன், தன் பெற்றோரைக் காப்பாற்றியது போல, அவர்களைப் போற்றிக் காப்பாற்றுவதுதான், நான் இவனைக் கொன்ற பாவத்திற்குச் செய்யத்தகுந்த கழுவாய் ஆகும் என்று தனக்குள் எண்ணிக்கொண்டு, சாகுந்தறுவாயிலிருக்கும் சாமனைப் பார்த்துக் கூறுகிறான்: “சாம! துன்புறாதே. கவலைப்படாதே. உன்னுடைய பெற்றோருக்கு வேண்டிய பணிவிடைகளையும் உதவிகளையும் நான் செய்வேன். உனக்குப் பதிலாக அவர்களைப் பராமரித்துக் காப்பாற்றுவேன். என் சொல்லை உறுதியாக நம்பு. காய்கனிகளைக் கொண்டு வந்து கொடுத்து அவர் களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்வேன், சாம! அவர்கள் இருக்கும் இடத்தைச் சொல்லு. அங்குச்சென்று அவர்களுக்கு வேண்டியவற்றை நான் செய்கிறேன்.” இதைக்கேட்ட சாமன் கூறினான்: “ஓ! அரசர் பெருமானே! அப்படியே செய்க. அவர்களைக் காத்து அருள்க!” என்று கூறி ஆசிரமத்துக்குப் போகும் வழியைக் கை நீட்டிக் காட்டினான். “என் தலை இருக்கும் திசைவழியே போனால் காலடிப் பாதை தெரியும். அப்பாதை வழியே நூறு வில் தூரம் மரங்களிடையே போனால் என் பெற்றோர் உள்ள ஆசிரமம் இருக்கிறது. அங்கே சென்று அவர்களுக்கு உதவி செய்தருள்க” என்று கூறி வலியைப் பொறுத்துக்கொண்டு மிகுந்த கஷ்டத்தோடு தன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்துக் கூப்பி அரசனை வணங்கிக் கொண்டே மேலும் சொன்னான்: “வாரணாசி மன்னரே! உம்மை வணங்குகிறேன். ஆதரவு அற்ற என்னுடைய குருட்டுப் பெற்றோரைக் காத்தருளும். அவர்களுக்கு உதவி செய்யும்படி உம்மை வேண்டுகிறேன். அரசே! உம்மைக் கைகூப்பி வணங்குகிறேன்; தலை தாழ்த்தி இறைஞ்சுகிறேன். என் தாய் தந்தையருக்கு என்னுடைய வணக்கத்தைக் கூறும். அவர்களைப் போற்றிக் காத்தருளும்.” அரசன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். சாமன் அதற்கு மேல் ஒன்றும் பேசமுடியாமல் கண்களை மூடிச் செய லற்றுக் கிடந்தான். அவனுடைய வாயும் கண்களும் மூடிக் கொண்டன. கைகளும் கால்களும் விறைத்துக்கொண்டன. உடம்பு முழுவதும் இரத்தம் ஒழுகிக் கிடந்தது. “இதுவரையிலும் பேசிக்கொண்டிருந்த இவனுடைய மூச்சு நின்று விட்டது. உடம்பு விறைத்துக்கொண்டது. சாமன் இறந்துவிட்டான்” என்று சொல்லி அரசன் வருத்தம் அடைந்து, தன் கைகளினால் தலையில் அறைந்துகொண்டு வாய்விட்டு அழுதான். கந்தமாதன மலைமேலே ஒரு தெய்வமகள் வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் பகசோதரி என்பது. அவள் ஏழு பிறவிகளுக்கு முன்பு சாமனின் தாயாக இருந்தவள். சாமன் அம்பு பட்டு மணலில் விழுந்து கிடப்பதை அவள் அறிந்து, தனக்குள் இவ்வாறு எண்ணினாள்: ‘இப்போது நான் சாமனிடம் போகவிட்டால், அவன் இறந்து போவான். அவனைக் கொன்ற வருத்தத்தினால் காசி மன்னனும் மனவேதனை அடைவான். சாமனுடைய பெற்றோர்கள் நீர் வேட்கையினாலும் அவனைக் காணாததாலும் உயிர்விடுவார்கள். நான் அங்கே போவே னானால், அரசன் நீர்க் குடத்தைக் கொண்டு போய் பெற்றோர்களுக்குக் கொடுத்து நீர்வேட்கை தீர்ப்பான். நானும், சாமன் உடம்பில் ஏறியுள்ள நஞ்சை நீக்கி அவனைப் பிழைக்கச் செய்வேன். பிறகு, அவ னுடைய பெற்றோரின் கண்படலத்தை நீக்கி அவர்களுக்குப் பார்வையை யுண்டாக்குவேன். அரசனையும் தருமவானாக்குவேன்’ என்று எண்ணினாள். ஆகவே அந்தத் தெய்வமகள் ஆற்றங்கரைக்கு வந்து அரசன் கண்ணுக்குத் தெரியாமல் அருவமாக இருந்து இவ்வாறு கூறினாள்: “அரசனே! நீ கொடிய தவறு செய்தாய். பெரிய பாவம் உன்னைச் சார்ந்திருக்கிறது. இந்த இளைஞனும் இவனுடைய பெற்றோரும் ஒரு குற்றமும் செய்யாதவர்கள். உன்னுடைய அம்பு இந்த மூன்று பேரையும் கொன்றுவிட்டது. ஆனாலும் உனக்கு ஓர் கழுவாய் உண்டு. நீ போய் குருடராக உள்ள இவனுடைய பெற்றோருக்கு உதவி செய்க. அப்படிச் செய்வது உனது பாவத்தைக் கழுவும் கழுவாயாகும்.” ஆகாயத்திருந்து வந்த இந்தப் பேச்சைக்கேட்ட அரசன், அதனை வாய்மை என உணர்ந்தான். சாமனுடைய குருட்டுப் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டுவது தனது கடமை என்றும், தன்னுடைய நற்கதிக்கு வழி என்றும் கருதினான். இராச்சியமும் அரசாட்சியும் இருந்து என்ன செய்யும்? நான் செய்த பாவத்தைப் போக்க ஆசிரமம் சென்று அவர்களுக்குப் பணிவிடை செய்வதே தக்கதென்று உறுதி கொண்டான். பிறகு, அவன் பூக்களைப் பறித்துவந்து சாமனுடைய உடம்பில் வைத்து நீர் தெளித்து மும்முறை வலமாக வந்து நான்கு திசைகளையும் தொழுதான். பின்னர், நீர்க்குடத்தை எடுத்துக்கொண்டு, இளைஞன் இறந்த தற்காக வருந்திகொண்டே ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஆசிரமத்தின் வாயிற்படியில் உட்கார்ந்து சாமன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துகூலக முனிவர் தன் மகன்தான் வருகிறான் என்று நினைத்தார். ஆனால், காலடி ஓசை வேறுவித மாக இருப்பதையறிந்து, இவ்வாறு கூறினார். “ இது சாமனுடைய காலடி ஓசையல்ல. வேறு காலடி ஓசையாக இருக்கிறது. புதியவர் யாரோ வருகிறார். யார் ஐயா தாங்கள்?” இதைக்கேட்ட அரசன் தனக்குள் எண்ணினான்: “நான் அரசன் என்பதைச் சொல்லாமல் இவருடைய மகனைக் கொன்றவன் என்பதை மட்டும் சொன்னேனானால், இவர் சினம்கொண்டு என்னை வைதுசபிப்பார். அப்போது எனக்குச் சினம் உண்டாகும். அதனால், இவருக்கும் ஏதேனும் துன்பத்தைச் செய்ய நேரிடும். அதனால் மேலும் பாவத்தைத் தேடிக்கொண்டவன் ஆவேன். அரசனுக்கு அஞ்சாதவர் ஒருவரும் இலர். ஆகையால், முதலில் நான் அரசன் என்பதைத் தெரிவிக்கவேண்டும்” என்று நினைத் தான். பிறகு நீர்க்குடத்தை அதன் இடத்தில் வைத்துவிட்டு, வாயிலண்டை நின்றுகொண்டு இவ்வாறு சொன்னான்: “நான் வாரணாசி நாட்டு மன்னன். என்னைப் பிலியக்கன் என்று கூறுவார்கள். நாட்டைவிட்டு மான் வேட்டைக்காகக் காட்டுக்கு வந்தேன். வில்வித்தையில் என்னை ஒப்பவர் ஒருவரும் இலர். நான் எய்யும் அம்புக்குத்தப்பிப் பிழைப்பவர் ஒருவருமிலர். நாககுமரரும் என் அம்புக்குத் தப்பிப் பிழைக்கமுடியாது.” அதைக்கேட்ட முனிவர் மகிழ்ந்து கூறினார்: “வருக வருக! வாரணாசி மன்னரே! தங்கள் வரவு நல்வரவாகுக. தங்கள் புகழையும், வீரத்தையும் உலகம் புகழ்கிறது. தங்கள் வருகைக்கு நாங்கள் மனம் மகிழ்கிறோம். இனிய கிழங்கும் சுவையுள்ள பழங்களும் குளிர்ந்த நீரும் இங்கு உள்ளன. தங்களுக்கு விருப்பமானால், அவற்றை உண்டருளுங்கள்.” தன்னை வரவேற்கிற முனிவரிடம், தான் சாமனைக் கொன்ற செய்தியைத் திடீரென்று கூறுவது சரியல்ல; முதல் வேறு செய்திகளைப் பற்றிப் பேசிய பின்னர் சொல்லுவதுதான் முறை என்று அரசன் தனக்குள் எண்ணினான். “பார்வையற்றவராகிய தாங்கள் இந்தப் பழங்களைக் காட்டிருந்து பறித்து வந்திருக்க முடியாது. நானாவிதமான இந்த நல்ல பழங்களைப் பறித்து வந்தவர் நல்ல கூர்மையான பார்வையுடையவராக இருக்கவேண்டும்” என்று பேசினான் அரசன். பெரியவர், தன் மகன் சாமன் பறித்து வந்ததைத் தெரி வித்தார். “எங்கள் மகன் சாமன் ஆண்டில் இளையவன். இன்னும் நன்றாக வளராதவன். கண்ணுக்கு இனியன் - அழகன். அவனுடைய நீண்ட கருமையான மயிர் சுருண்டு சுருண்டு தொங்கிக் கொண்டிருக்கும். அவன்தான் இப்பழங்களைப் பறித்துக்கொண்டு வந்தான். நீர்கொண்டு வர ஆற்றுக்குப் போயிருக்கிறான்.இப்போது வந்து விடுவான்” என்று கூறினார். “சாமன் - உங்கள் பணிவுள்ள அழகான மகன் - அவனை நான் அம்பு எய்து கொன்றுவிட்டேன். அவனுடைய நீண்ட தலை மயிர் இரத்தந்தோய்ந்து கிடக்க, அவன் இறத்துவிட்டான்.” புதியவர் ஒருவர் பேசும் குரலைக்கேட்ட சாமனுடைய தாயார், கயிற்றைக் கையினால் தடவிக்கொண்டே துகூலக முனிவரின் அருகில் வந்து நின்றுகொண்டிருந்தவள், தன் மகன் கொல்லப் பட்டதைக் கேட்டு மனம் துடித்தாள். தன் கணவனைப் பார்த்து, “இவர் யார்? நமது சாமன் இறந்தானா! ஐயோ! நமது இளைஞன் - கண்மணி சாமன் - இறந்து விட்டானா? இந்தச் செய்தி என் மனத்தை ஈட்டிபோல் குத்துகிறதே!” என்று சொல்லித் துடித்தாள். பெரியவர் கூறினார்: “இவர் வாரணாசி நாட்டுமன்னர். இவருடைய பொல்லாத அம்பு நமது சாமனைக் கொன்றுவிட்டது. சாமன் ஆற்றங் கரையில் இறந்து கிடக்கிறான். நீ இவரைச் சபித்து வையாதே.” “அருமைக் கண்மணி, ஆருயிர் சாமன். அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேனே! அவனைக் கொன்றவரைக் கோபிக்காமல் என் மனம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கும். ஐயோ சாமா!” கண்மணி சாமன். ஆருயிர் மகன். அவன் வரவை எதிர் பார்த்திருந்தோம். ஆனால், தவறு செய்தவரையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று துன்பத்தோடு கூறினார் முனிவர். பெற்றோர் இருவரும் மார்பில் அறைந்துகொண்டு தலையில் அடித்துக்கொண்டு சாமனை நினைத்து அழுதார்கள். அவனுடைய அறிவையும் அழகையும் அன்பையும் குணங்களையும் கூறி அரற்றினார்கள். துன்பத்தில் மூழ்கி வருந்தினார்கள். அப்போது அரசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்: “பெரியோர்களே! துன்பப்படாதீர்கள். உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களை நான் பராமரித்துக் காப்பாற்றுவேன். காட்டிலிருந்து காய்கனி களையும் ஆற்றிலிருந்து நீரையும் கொண்டு வந்து கொடுப்பேன். உங்களுக்குப் பணிவிடை செய்து உங்களின் ஊழியனாக இருப்பேன். கவலைப் படாதீர்கள்” என்று சொல்லித் தேற்றினான். அரசன் கூறியதைக்கேட்டு அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “தாங்கள் அரசன்; நாட்டை ஆள்பவர். தாங்கள் இப்படிச் சொல்வது தகாது. தாங்கள் எங்களுக்குப் பணிவிடை செய்வது முறையன்று. நாங்கள் தங்களுடைய குடிமக்கள்; தங்களைப் பணிந்து வணங்குகிறோம்.” இதைக்கேட்டு அரசன் தனக்குள் எண்ணினான்: ‘இது வியப்பாக இருக்கிறது. இவர்கள் என்னைச் சபிக்கவில்லை, சுடுசொல் கூற வில்லை. கடுஞ்சொல் சொல்லி என் மனத்தைச் சுடவில்லை. இவர் களுடைய அருமை மகனைக் கொன்று பெரும் பாவம் செய்த குற்ற வாளியாகிய என்னை இவர்கள் அன்புடன் வரவேற்கிறார்கள்’ என்று அரசன் எண்ணினான். பிறகு அவர்களிடம் இவ்வாறு கூறினான்: “ஐயா! தாங்களே என் தந்தை. அம்மா! தாங்கள் என் அன்னை.” அவர்கள் அரசனை வணங்கிக் கூறினார்கன்: “எங்களைச் சாமன் இருக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் விடுங்கள். இந்த மூங்கில் கோலின் ஒரு முனையை நாங்கள் பிடித்துக் கொள்ளுகிறோம். மற்ற முனையைத் தாங்கள் பிடித்துக்கொண்டு எங்களுக்கு வழிகாட்டியருளுங்கள்” என்று வேண்டினர். இதற்குள் பொழுது போய்விட்டது; சூரியன் மறைந்து விட்டது. அரசன் தனக்குள் எண்ணினான்: ‘இவர்களைச் சாமன் இருக்கு மிடத்தில் அழைத்துக்கொண்டு போனால் துக்கத்தினால் இவர் களுடைய இருதயம் வெடித்துவிடும். இவர்களின் உயிர் போய்விடும். மூன்று பேரைக்கொன்ற பாவத்திற்கு நான் ஆளாவேன். என்னைப் பாவம் சூழ்ந்துகொண்டு நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஆகையால் இவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போவது சரியல்ல.’ இவ்வாறு தனக்குள் நினைத்து, அரசன் கூறினான்: “சாமன் கிடக்கும் இடம் ஆபத்தானது. கொடிய காட்டு மிருகங்கள் அங்கேயிருக்கின்றன. இப்போது இரவு நேரத்தில் அங்குச் செல்வது கூடாது.” “எத்தனை கொடிய மிருகங்களுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். அவை எங்களை ஒன்றும் செய்யா. எங்களை அங்கே அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்” என்று கூறி அவர்கள் வற்புறுத்தினார்கள். அரசன் தடுக்க முடியாமல் அவர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்துக்குப்போய், “இதோ உங்கள் மகன்” என்று காட்டினான். தாயும் தந்தையும் மகனுடைய உடம்பின்மேல் விழுந்து அழுதார்கள். அவனுடைய முகத்தையும் தலையையும் உடம்பையும் கைகால்களையும் தொட்டுப் பார்த்துக் கதறினார்கள். சந்திரன் போன்று தரையில் விழுந்து கிடக்கும் சாமனைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். “சாமா! தூங்குகிறாயா? எழுந்திரு. எங்கள்மேல் கோபமா உனக்கு? எங்களை மறந்து விட்டாயா? சாமா! கண்மணி! ஏன் பேசாமலிருக்கிறாய்?” “எங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்தாயே! உண்ண உணவும் குடிக்க நீரும் தந்தாயே! குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாயே! எங்களை விட்டுப் போய் விட்டாயே! குருட்டுக் கிழவராகிய நாங்கள் மட்டும் உயிருடன் வாழ்வதோ? இனி எங்களுக்கு யார் துணை? வீட்டைத் துப்புரவு செய்பவர்யார்? காய்கனி கொடுப்பவர்யார்? குருடராகிய எங்களுக்கு நீர்கொண்டு வருபவர் யார்?” இவ்வா றெல்லாம் அவர்கள் வாய்விட்டுக் கூறி மனம் உருகி அழுது அரற்றினார்கள். நெடுநேரம் தாய் அழுதாள். கடைசியில் ஒருவாறு தேறி, ஏதோ ஆழ்ந்து சிந்தித்தாள். கடைசியில் இவ்வாறு கூறினாள்: “இதெல்லாம் வீண் துக்கம். என் மகன் இறக்கவில்லை. அவன் உடம்பில் விஷம் ஏறி மயங்கிக் கிடக்கிறான். சத்தியவாக்கு கூறி இவன் உடம்பிலுள்ள நஞ்சை வெளிப்படுத்துவேன்” என்று இதைச் சொன்னாள்: “சாமன் தூய உள்ளம் உடையவன் என்பது உண்மை யானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு இறங்கட்டும். சாமன் தன் பெற்றோருக்கு உண்மையாகப் பணிவிடை செய்தான் என்பது உண்மையானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு வெளிப்படட்டும். இவனுடைய பெற்றோ ராகிய நாங்கள் தவம்செய்து புண்ணியம் உடையவர்களாயிருப்பது உண்மையானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு வெளிப்பட்டு இவன் உயிர்பெற்று எழட்டும்.” இவ்வாறு தாயார் கட்டுரை கூறியபோது, அசைவற்றுக் கிடந்த சாமன் ஒருபுறமாகத் திரும்பினான். பிறகு, அவனுடைய தகப்பனாரும் அவனுடைய அன்னை கூறியதுபோன்று கட்டுரை கூறினார். அப்போது சாமன் இப்புறமாகத் திரும்பினான். அப்போது அவர்களுக்குத் தெரியாமல் அங்கு இருந்த பகுகோதரி என்னும் தெய்வமகள் இவ்வாறு கட்டுரை கூறினாள். அவள் கூறிய சொற்கள் இவர்கள் எல்லோருக்கும் கேட்டன. “மானிடர்களில் சாமனை நான் நேசிக்கிறேன் என்பது உண்மை யானால், இவன் உடம்பில் உள்ள நஞ்சு நீங்கி உயிர்பெற்று எழட்டும். இவனுடைய பெற்றோரின் கண்படலமும் நீங்கட்டும்.” இச்சொற்களைப் பேசியவுடன், போதிசத்துவராகிய சாமன் நஞ்சுநீங்கி எழுந்து உட்கார்ந்தான். அவனுடைய உடம்பு பழையபடி அழகும் வலுவும் பெற்று விளங்கிற்று. அவனுடைய பெற்றோரும் கண் படலம் நீங்கிப் பார்வை பெற்றனர். அவ்வமயம் பொழுதும் விடிந்தது. சாமன் உயிர்பெற்று எழுந்ததும், அவனுடைய பெற்றோர்கள் பார்வை பெற்றதும் ஆகிய இவை தெய்வ மகளின் அருளினால் நிகழ்ந்தன. தங்களுடைய மகன் உயிர்பெற்றுப் பிழைத்ததற்காகவும் தாங்கள் கண்பார்வை பெற்றதற்காகவும் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். அப்போது சாமன் கூறினான்: “நான் உயிருடன் இருக் கிறேன். நீங்கள் வருந்தவேண்டாம். கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள். அரசர் பெருமானே! தாங்கள் எங்களுடைய மன்னன். தங்கள் கட்டளைப்படி செய்யக் காத்திருக்கிறோம். எங்கள் குடிலுக்கு எழுந்தருளி, கனியும் கிழங்கும் அருந்திப் பசியாறுங்கள்” என்று அரசனை வேண்டினான். இப்புதுமையைக் கண்டு அரசன் வியப்படைந்தான். “எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் வியப்பாக இருக்கின்றன. நீ இறந்து போனதை நான் கண்ணால் கண்டேன். இப்போது உன்னை உயிருடன் காண்கிறேன். இது என்ன புதுமை?” சாமன் கூறினான்: “அறத்தைக் கடைப்பிடித்து, பெற்றோ ருக்குத் துன்பம் வந்த காலத்தில் அவர்களைப் போற்றி ஊழியம் செய்கிறவர் களுக்குத் தெய்வம் மனம் இரங்கி அருள் செய்யும். பெற்றோரைப் பேணிப் போற்றுகிறவர்களுக்குத் தெய்வம் இம்மையிலும் மறுமை யிலும் அருள் செய்யும்.” அரசன் வியந்து கூறினான்: “சாம! நீயே என் குரு. நீயே எனக்கு ஆசிரியன். எனக்கு அறநெறியைப் புகட்ட வேண்டும்.” சாமன் சொன்னான்: “அரசர் பெருமானே! மக்கள் வாழ்க்கை அற நெறியை அடிப்படையாகக் கொண்டது. அறநெறி என்பது கடமை. கடமையை ஒழுங்காகச் செய்தால் இம்மை யிலும் மறுமையிலும் நன்மை பெறலாம். அறநெறி அல்லது கடமை என்பது யாது? பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்க. மனைவி மக்களைக் காப்பாற்றி அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்க. நண்பர்களிடத்திலும், அமைச்சர்களிடத்திலும், மற்றவர்களிடத் திலும், கடமை மறவாமல் அறநெறியுடன் நடந்து கொள்க. நகர மக்களுக்கும் உன் கடமையைச் செய்து நன்மை செய்க. பறவைகளிடத்திலும், விலங்குகளிடத்திலும் அன்புடன் இருக்கவேண்டும். எல்லாரிடத்திலும் அறநெறியோடு அன்போடு கடமையைச் செய்து நன்மை புரிந்தால் இம்மையில் புகழும் நன்மையும் மகிழ்ச்சியும் பெறலாம். மறுமையிலும் நற்கதி கிடைக்கும்” என்று கூறியபின் போதி சத்துவராகிய சாமன் ஐந்து ஒழுக்கங்களையும் கூறினார். “பொய் பேசாதே. பொய் பேசுவது பாவமாகும். பொய்யை ஒழித்து மெய் பேசவேண்டும். மயக்கந்தருகிற கள் முதலிய மது பானங்களை அருந்தாதே. மது உண்டால் அறிவு மயங்கும். அறிவு மயங்கினால், நன்மை தீமைகளை உணர முடியாமல் பாவமும் தவறும் செய்ய நேரிடும். விபச்சாரம் செய்வது பாவம்; பிறர்மனை விரும்பாமல் கற்புடன் இருப்பது புண்ணியம். பிறர் பொருளை விரும்பாதே. பிறர் பொருளைக் களவுசெய்வது இழிவும் பாவமும் ஆகும். உயிரைக் கொல்லாதே. எல்லா உயிரையும் அன்புடன் நேசித்து உயிர்களைக் காத்தல் மேலான புண்ணியம்.” இவ்வறநெறிகளைக் கேட்டு அரசன் வணங்கி விடைபெற்றுக் கொண்டு தன் நாடு சென்றான். சென்று அறநெறிப்படி நடந்து எல்லோருக்கும் நன்மை செய்து பேரும் புகழும் படைத்து வாழ்ந்தான். போதிசத்துவராகிய பொன்னன் சாமனும் தனது தாய் தந்தையருடன் ஆசிரமம் சென்று, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டும், தபசு செய்து கொண்டும் நெடுங் காலம் இருந்தான். கடைசியில் யாவரும் இவ்வுலக வாழ்வை நீத்துத் தெய்வப் பிறப்பை யடைந்தார்கள். இந்த கதையைச் சொன்னபிறகு பகவன் புத்தர், “பிக்குகளே! அறிஞர்கள் தமது பெற்றோரைக் கைவிடாமல் போற்றிக் காப்பாற்றுவது தொன்றுதொட்டுள்ள வழக்கம்” என்று கூறினார். பிறகு, அந்தப் பிறப்பிலும் இந்தப் பிறப்பிலும் உள்ள தொடர்பை விளக்கினார். அப்பிறப்பில் அரசனாக இருந்தவர் ஆனந்தர், தெய்வ மகளாக இருந்தவர் உப்பலவன்னை, சக்கனாக இருந்தவர் அநுருத்தர், தகப்பனாக இருந்தவர் கஸ்ஸபர், தாயாக இருந்தவர் பத்தா காபிலானி, பொன்னன் சாமனாக இருந்தவர் நான்தான் என்று விளக்கினார். 3. மகா ஜனக ஜாதகம் ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். ஒருநாள், பிக்குகள் புத்தர் பெருமானின் பெருந்துறவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது புத்தர் அங்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு கூறினார்: “ததாகதர் பெருந்துறவு கொண்டது இதுதான் முதல் தடவையன்று; இதற்கு முன்பும் துறவு பூண்டிருக்கிறார்” என்று சொல்லி, இந்தக் கதையை அவர்களுக்குக் கூறினார்: விதேக நாட்டின் மிதிலை மாநகரத்திலே மகா ஜனகன் என்னும் பெயருள்ள அரசன் முன்னொரு காலத்தில் அரசாண் டான். அவ்வரச னுக்கு அரிட்ட ஜனகன் என்றும், பொல ஜனகன் என்றும் பெயருள்ள இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களில் மூத்த மகனை இளவரசனாகவும், இளைய மகனைச் சேனைத் தலைவனாகவும் அமர்த்தினான். சிலகாலம் சென்றபிறகு மகா ஜனகன் இறந்துவிட அரிட்ட ஜனகன் அரச பதவியையும், பொல ஜனகன் இளவரசு பதவியையும் அடைந்தனர். இவ்வாறு சிலகாலம் சென்றபிறகு, அரண் மனைச்சேவகன் ஒருவன் அரசனிடம் வந்து, இளவரசர் அரிட்ட ஜனகனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்ற நினைத்திருப்பதாகக் கூறினான். இந்தச் செய்தியை பலமுறை கூறக்கேட்ட அரசன் கடைசியில் தன் தம்பி மேல் ஐயம் கொண்டான். ஆகவே இளவரச னுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைத்துக் காவல் வைத்தான். சிறைப்பட்ட பொல ஜனகன் தனக்குள் இவ்வாறு கூறிக் கொண்டான்: ‘நான், அரசனாகிய என் தமயனிடம் பகைமை கொண் டிருந்தால் விலங்குகள் முறியாதிருக்கட்டும்; சிறைக்கதவு திறவாதிருக் காட்டும். உண்மையிலேயே என் அண்ணனிடம் அன்புள்ளவனாக இருப்பேனானால் விலங்குகள் முறியட்டும்; சிறைக்கதவு திறக்கட்டும்.’ இவ்வாறு பொல ஜனகன் எண்ணிய போது அவனுடைய விலங்குகள் தாமாகவே உடைந்துவிட்டன. சிறைக்கதவுகள் திறந்துகொண்டன. இளவரசன் வெளியே வந்து நகரத்தை விட்டுச்சென்று கடைசியில் எல்லைப்புறத்திலே ஒரு ஊரைச் சேர்ந்தான். அவ்வூரார், இவன் இளவரசன் என்பதைத் தெரிந்து இவனைப்போற்றி ஆதரித்தனர். அரிட்ட ஜனகன் இவனை மீண்டும் சிறைப்பிடிக்க முடியவில்லை. சிலகாலம் சென்றபிறகு, எல்லைப்புறப் பகுதிக்குப் பொல ஜனகன் அரசனானான். பெருஞ்சேனையைச் சேர்த்துக்கொண்டான். ‘முன்பு நான் என் அண்ணனிடம் பகைமை பாராட்டவில்லை; ஆனால், இப்போது பகைமை பாராட்டுகிறேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான் அவன் சேனை யுடன் புறப்பட்டு மிதிலாபுரியின்மேல் படையெடுத்துச் சென்றான். சென்று நகரத்திற்கு வெளியே பாசறை அமைத்துத் தங்கினான். பொல ஜனக னுடன் நகரத்து மக்கள் பலர் வந்து சேர்ந்துகொண்டனர். சுற்றுப்புறத்து ஊர்களில் இருந்தவர்களும் இவனை ஆதரித்தார்கள். பொல ஜனகன், அரிட்ட ஜனகனிடம் தூது அனுப்பி, “முன்பு நான் தங்களுக்குப் பகைவனாக இருந்த தில்லை. ஆனால், இப்போது நான் தங்களுக்குப் பகைவன். கொற்றக்குடையை என்னிடம் கொடுங்கள்; அல்லது என்னுடன் போர்செய்ய வாருங்கள்” என்று செய்தி தெரிவித்தான். தூதர்கள் சொன்ன செய்தியைக்கேட்ட அரிட்ட ஜனகன் போர் செய்ய உடன்பட்டான். போர்க்களம் போவதற்கு முன்னே, வயிறு வாய்த்துப் பிள்ளைத்தாய்ச்சியாக இருந்த அரசியிடம் சென்றான்: “நான் போர்க்களம் செல்கிறேன். போரிலே வெற்றி கிடைக்குமா, தோல்வி கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. போரிலே நான் இறந்து விடுவேனானால், உனக்குப் பிறக்கபோகிற இந்தக் குழந்தையைக் கவலையுடன் நன்கு பாதுகாத்துக்கொள்” என்று கூறிஅரசியினிடம் விடை பெற்றுத் தன் சேனையுடன் புறப்பட்டுப் போர்க்களம் சென்றான். போரிலே அரசனான அரிட்ட ஜனகன் உயிர் நீத்தான். அரசன் இறந்த செய்தியை அறிந்த நகர மக்கள் குழப்பம் அடைந்தனர். நகரத்தில் கூச்சலும் குழப்பமும் சந்தடியுமாக இருந்தன. அரசன் இறந்த செய்தியை அறிந்த இராணி, பொன் நகை களையும் நவரத்தினங்களையும் விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்துக் கூடையில் வைத்து அதன்மேல் துணியினால் மூடி, அதன் மேல் அரிசியைப் பரப்பி, ஏழைக் குடியானவப் பெண்ணைப்போல ஆடை உடுத்திக்கொண்டு, கூடையைத் தலையின் மேல் வைத்துக் கொண்டு யாரும் அறியாமல் புறப்பட்டு அரண்மனையைவிட்டுச் சென்றாள். அரண்மனைக்கு அப்பால் கோட்டையின் வடக்குவாயில் வழியாகச் சென்ற இராணி, மேலே செல்ல வழியறியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் திகைப்படைந்தாள். அங்கு ஓரிடத்தில் உட்கார்ந்து சிந்தித்துக் கடைசியில் காளசண்பை என்னும் ஊருக்குப் போக உறுதி செய்துகொண்டாள். பிறகு, காளசண்பைக்குப் போகிறவர் யாரேனும் உளரா என்று அங்குள்ளவரைக் கேட்டாள். அரசியார் வயிறு வாய்த்திருந்தார் அல்லவா? அவர் வயிற்றிருந்த கரு சாதாரண குழந்தையன்று. பாரமிதைகளைக் குறைவறச் செய்திருந்த போதிசத்துவரே, அவர் வயிற்றில் கருவாக அமர்ந்திருந்தார். அப்போது, தேவலோகத்திலே சக்கனுடைய சிம்மாசனம் சூடு கொண்டது. அதன் காரணத்தைச் சிந்தித்துப் பார்த்த சக்கன், அரசியின் வயிற்றிலே போதிசத்துவர் கருவாகி இருப்பதை அறிந்தார். போதி சத்துவருக்குத் தீங்கு நேராமல் காப் பாற்ற வேண்டுவது சக்கனுடைய கடமையாகையினாலே, சக்கன் அரசிக்கு உதவிசெய்ய வந்தான். சக்கன், வயது முதிர்ந்த கிழவனைப்போல உருமாற்றிக்கொண்டு மூடு வண்டி ஒன்றை ஓட்டிக்கொண்டு அரசியார் அமர்ந்திருந்த வீட்டுக்கு எதிரில் வந்து வண்டியை நிறுத்தினான். நிறுத்தி, காளசண்பைக்குப் போகிறவர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டான். மாறுவேடம் பூண்ட அரசியார், “நான் போகிறேன், தாத்தா” என்று கூறினார். “அப்படியானால் வண்டியில் ஏறுங்கள், அம்மா!” என்றான் கிழவன். “தாத்தா, இந்தக் கூடையை மட்டும் வண்டியில் வைத்துக் கொள்ளுங்கள். நான் நடந்து வருகிறேன். ஏனென்றால், வண்டி போகும் போது இப்புறமும் அப்புறமும் அசைந்து ஆடும். அதிர்ச்சியினால் எனக்கு உடம்பு கெடும்” என்று கூறினார். “அம்மா! அதற்காகக் கவலைப்படாதீர்கள். வண்டி அதிராதபடி ஓட்டுவேன். வண்டியில் படுக்கை இருக்கிறது. அதை விரித்துப் போட்டுப் படுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சமும் அதிர்ச்சி இருக்காது” என்று சொல்லி, படுக்கையை விரித்துப்போட்டான். அரசியார் வண்டியில் ஏறிப் படுக்கையில் படுத்துக்கொண்டார். வண்டி சென்றது. தெய் வந்தான் தனக்குத் துணை செய்கிறது என்று நினைத்துக் கொண்டே அரசியார் தூங்கிவிட்டார். முப்பது யோசனை தூரம் சென்றபிறகு வண்டி ஒரு ஆற்றங்கரையண்டை வந்து நின்றது. சக்கன், அரசியாரை எழுப்பி, “இறங்கிப்போய் ஆற்றில் நீராடுங்கள் அம்மா. உடுத்திக் கொள்ள வண்டியில் நல்ல துணி இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போங்கள். நீராடிய பிறகு உண்பதற்கு வண்டியில் பணிகாரம் இருக்கிறது” என்று கூறினான். அவன் கூறியபடியே அரசியார் ஆற்றில் நீராடிப் பணி காரத்தை அருந்தியபின் மீண்டும் வண்டியில் படுத்துக் கொண் டார். வண்டி புறப்பட்டுச் சென்றது. மாலை நேரமானதும் வண்டி காளசண்பை நகரத்தையடைந்தது. அரசியார், “இது என்ன ஊர்?” என்று கேட்டார். “காளசண்பை நகரம்” “என்ன? அறுபது யோசனை தூரத்தைக் கடந்து இவ்வளவு விரைவாக வந்துவிட்டாயா?” “ஆமாம், அம்மா! நான் குறுக்குவழியாக வந்தேன். இதுதான் தெற்கு வாயில். இங்கே இறங்கி நகரத்துக்குப் போங்கள். நான் இந்த வழியாகக் கொஞ்சதூரம் போக வேண்டும்” என்று சொல்லி, அரசியாரை இறக்கிவிட்டுப் போய்விட்டான். அரசியார் கோட்டை வாயிலில் நுழைந்து நகரத்தில் சென்று அங்கு ஒரு மண்டபத்திலே தங்கினார். அவ்வமயம் அந்நகரத்தில் வசிக்கும் ஒரு பிராமணன், தனது சீடர்களுடன் ஆற்றில் நீராடுவதற்காக அவ்வழியே வந்தவன் அரசியார் இருப்பதைக்கண்டு, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிந்தான். கரு வாய்த்திருக்கும் அவ்வம்மை யாருக்கு உதவிசெய்யவேண்டும் என்னும் எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. அவன் சீடர்களைத் தெருவில் நிறுத்திவிட்டு, மண்டபத் தில் சென்று, “தங்காய்! தாங்கள் எங்கே இருப்பவர்?” என்று கேட்டான். “நான் மிதிலை நாட்டு அரிட்ட ஜனக ராஜனின் பட்டத்து அரசி” என்று விடைகொடுத்தார். “ஏன் இங்கு வந்தீர்கள்?” “அரசன் போரில் கொல்லப்பட்டார். நாட்டைப் பொல ஜனகன் பிடித்துக்கொண்டான். அங்கிருந்தால் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் என்று அஞ்சி இங்கு வந்தேன்.” “தாங்கள் உறவினர் யாரேனும் இந்நகரத்தில் இருக்கிறார்களா?” “ஒருவரும் இல்லை, அண்ணா! “கவலைப்படாதீர்கள். நான் இந்நகரத்திலே நல்ல குடும்பத்தில் பிறந்த பிராமணன். தங்களை என் தங்கைபோல நான் கவனித்துக் கொள்வேன். தாங்கள் என்னை உங்கள் சொந்த அண்ணனைப்போல நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, என் காலைக் கட்டிக் கொண்டு அழுது கூவுங்கள் என்றான். அவளும் அவன் காலைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டு அழுதாள். பிராமணனும் அழுது புலம்பினான். இதைக்கண்ட, தெருவில் நின்று கொண்டிருந்த இவனுடைய சீடர்கள், ஓடிவந்து என்ன என்று கேட்டார்கள். “ இவள் என்னுடைய தங்கை. நெடுநாளாக இவளைக் காணவில்லை. இப்போது தற்செயலாக இங்கு கண்டேன்” என்று கூறி அழுதான் பிராமணன். “ஐயா, ஏன் வருந்துகிறீர்கள்? அவர்கள்தான் இப்போது வந்துவிட்டார்களே! அழவேண்டாம்” என்று சொல்லி சீடர்கள் அவரைத் தேற்றினார்கள். பிராமணன் ஒரு மூடுவண்டியைக் கொண்டு வரச் சொல், அதில் அரசியாரை ஏற்றித் தன் வீட்டுக்கு அனுப்பி, அவள் தனது தங்கை என்றும், அவளுக்கு வேண்டியதை யெல்லாம் செய்யும் படியும் தனது மனைவியிடம் சொல்லும்படி ஒரு ஆளை அனுப்பி னான். அவன் மனைவி, அவரை வரவேற்று வெந்நீரில் நீராட்டி, பிறகு படுக்கையை விரித்து அதில் படுக்க வைத்தார். ஆற்றுக்குச் சென்று பிராமணன் நீராடிய பிறகு வீட்டுக்கு வந்தான். உணவு கொள்ளும்போது தனது தங்கையையும் தன்னுடன் உட்காரவைத்து உணவு கொண்டான். தகுந்தகாலத்தில் அரசியார் ஒரு ஆண் மகவைப் பெற்றார். அக் குழந்தைக்கு மகா ஜனகன் என்று பாட்டன் பெயரையே சூட்டினார். குழந்தை வளர்ந்து, சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடினான். சிறுவர்கள் மகா ஜனகனுக்குக் கோப மூட்டி னால், துணிச்சலும் வலிவும் உள்ள இவன் அவர்களை நன்றாக அடித்துவிடுவான். அப்போது அவர்கள் கூச்சலிட்டு அழுவார் கள். யார் அடித்தது என்று யாரேனும் கேட்டால், அவர்கள் “ அந்தக் கம்மினாட்டி மகன் அடித்தான்” என்று கூறுவார்கள். அவ்வாறு கூறுவதைக்கேட்ட மகா ஜனகன், ‘இவர்கள் எப்போதும் என்னைக் கைம்பெண் மகன் என்று கூறுகிறார்கள். இதைப்பற்றி அம்மாவைக் கேட்கவேண்டும்’ என்று எண்ணினான். அவன் தன் தாயிடம் சென்று, “அம்மா! நான் யாருடைய மகன்?” என்று கேட்டான். தாயார், தன் மகனுக்கு விடை சொல் லாமல் தட்டிக் கழித்தாள். ஆனால், சிறுவன் விடவில்லை, வற் புறுத்திக் கேட்டான். அப்போது அவள் உண்மையைக் கூறினாள்: “கண்ணே! நீ அரிட்ட ஜனகன் என்னும் அரசனுடைய மகன். உன் தந்தையை உன் சிற்றப்ப னாகிய பொல ஜனகன் போரில் கொன்று விட்டார். உனக்கு ஆபத்து வராமல் காப்பாற்ற நான் இந்த நகரத்துக்கு வந்தேன். இந்தப் பிராமணன் என்னைத் தன் தங்கைபோல ஆதரித்து வருகிறார்” என்று கூறினாள். அதுமுதல், சிறுவர்கள் இவனைக் ‘கைம்பெண் மகன்’ என்று கூறிய போது இவன் சினங் கொள்ளவில்லை. பதினாறு வயது ஆகும் முன்பே இவன் கல்வியைக் கற்றுத் தேர்ந்தான். பதினாறு வயது ஆனபோது அழகான வாலிபனாக விளங்கினான். அப்போது மகாஜனகன், தன் தந்தையின் நாட்டைத் தான் பெற வேண்டும் என்று எண்ணினான். அன்னையினிடம் சென்று “தங்கள் கையில் செல்வம் இருக்கிறதா? இல்லையானால், நான் வாணிகம் செய்து பொருள் ஈட்டுவேன்” என்று கூறினான். “மகனே! நான் வெறுங் கையோடு வரவில்லை. முத்துக்களும் மாணிக்கங்களும் நகைகளும் நவரத்தினங்களும் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றைக்கொண்டு நீ அரசாட்சியைப்பெற முடியும். நீ உன் அரசாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்க. நீ வாணிகம் செய்து பொருள்தேட வேண்டியதில்லை” என்று தாயார் கூறினாள். அவன் தன் தாயிடமிருந்து செல்வத்தில் ஒரு பகுதிப் பொருளைக் கொண்டு பலவிதமான சரக்குகளை வாங்கி அவற்றைக் கப்பலில் ஏற்றினான். தாயினிடம், தான் சுவர்ணபூமிக்கு (பர்மாதேசம்) சென்று வாணிகம் செய்யப்போவதாகக் கூறினான். “அப்பா! நீ ஏன் கடல் கடந்து போய் வாணிகம் செய்ய நினைக் கிறாய்? நீ அரசாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய். நம்மிடம் போதுமான செல்வம் இருக்கிறது. கடல் சென்றால் ஊதியத்தைவிட ஆபத்து அதிகம் உண்டு” என்று சொல்லித் தடுத்தாள். குமாரன் தாய்சொல்லைக் கேளாமல், பிடிவாதமாக இருந்தபடியினாலே அவளும் அவனுக்கு விடைகொடுத்தாள். மகா ஜனகன் வேறு வணிகருடன் கப்பல் ஏறிப் புறப்பட்டான். அதே நாளில் மிதிலை நாட்டு அரசனான பொல ஜனகனுக்கு உடம்பில் நோய் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் கிடந்தான். மகா ஜனகன் புறப்பட்டுச் சென்ற கப்பல் ஏழுநாட்கள் கடலிலே சென்றது. நடுக்கடலே சென்றபோது கப்பல், நீரின் அடியில் இருந்த பாறையிலே மோதிக் கொண்டது; கப்பலுக்குள் நீர் ஏறத்தொடங்கியது. பிறகு சிறிது சிறிதாகக் கடல் மூழ்கத் தொடங்கியது. மாலுமிகளும் வணிகர்களும் ஆபத்தை அறிந்து அழுது புலம்பித் தத்தம் தெய்வங் களை வேண்டிக் கொண் டார்கள். போதிசத்துவராகிய மகா ஜனகன் புலம்பி அழவில்லை. கப்பல் முழுகப்போவது உறுதி என்று எண்ணி யவராய் மனவுறுதியோடு முயற்சியுள்ளவரானார். அவர் உடம்பு முழுவதும் ஒருவகைத் தைலத்தைப் பூசிக்கொண்டு, வயிறு நிறைய உணவு அருந்தி, எண்ணெய் தோய்க்கப்பட்ட சட்டைகளை உடம்பில் இறுக்கமாக அணிந்து பாய்மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கப்பல் நீரில் முழுகிப் பாய்மரம் மட்டும் நீருக்குமேல் நின்றது. அப்போது சுறா முதலிய கொடிய மீன்கள் கப்பலைச் சூழ்ந்துகொண்டன. அவை கப்பலில் இருந்தவர்களின் கால்களையும் கைகளையும் கடித்துத் துண்டித்தன. அதனால், கப்பலைச் சூழ்ந்து கடல்நீர் இரத்தக் கறையாக இருந்தது. போதிசத்து வராகிய மகா ஜனகன், பாய்மரத்தின் உச்சியில் ஏறிநின்று, கப்பலைச் சூழ்ந்துகொண்டிருந்த மீன்களுக்கு அகப் படாமல், நூற்று நாற்பது முழந்தூரத்துக்கப்பால் நீரில் குதித்தார். குதித்து விரைவாக நீந்தி அப்பால் சென்றார். நீந்திச்செல்லும்போது ஒரு மரக் கட்டை அங்கு மிதந்து கொண்டிருந்தது. மகா ஜனகன் அக் கட்டையைப் புணையாகக்கொண்டு கடலை நீந்தினார். அப்போது மிதிலை நாட்டு மன்னனான, நோயாய்க் கிடந்த பொல ஜனகன் இறந்து போனான். மகா ஜனகன் மரக்கட்டை யின் உதவி கொண்டு கடல் ஏழு நாட்கள் வரையில் நீந்தினார். ஏழாம்நாள் வெகு தூரத்துக்கப்பால் கரை காணப்பட்டது. தெய்வமகளான மணிமேகலை என்னும் தெய்வம் கடல் களின் காவல் தெய்வமாக ஏற்படுத்தப்பட்டிருந்தாள். சதுர்மகா ராஜிகர் என்னும் திக்குப்பாலகர்கள் மணிமேகலையைக் கடற் காவல் தெய்வமாக ஏற்படுத்தினார்கள். அறவழியில் நடக்கும் நல்லவர்கள் யாரேனும் கடல் ஆபத்துக்குட்பட்டால், அவர்களைத் துன்பத்திருந்து காப்பாற்றவேண்டுவது அவளது கடமை என்று கட்டளையிட்டார்கள். அதுமுதல் மணிமேகலை, கடல் அல்லலுறும் நல்லவர்களைக் காப்பாற்றி வந்தது. அந்த தெய்வம், தேவலோகத்துக்குப்போய் தேவ சபையிலே இருந்தபடியால் ஏழு நாட்களாகக் கடல்களைப் பார்க்க வில்லை. ஏழாம்நாள் மணிமேகலை, தனக்குத்தானே, ‘ஏழு நாளாக நான் கடலைப் பார்க்கவில்லை. யாரேனும் கடல் அகப்பட்டுத் துன்புறுகிறார் களா என்று பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டு கடற்பரப்பை நோக்கிற்று. அப்போது போதிசத்துவர் கடல் துன்புற்று நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர் அருகில் சென்று ஆகாயத்தில் நின்று, “நீ யார்? நடுக் கடலிலே இப்பெருங்கடலைக் கையினால் நீந்திக்கொண்டிருக்கிறீர். இந்த ஆபத்திலிருந்து உம்மைக் கரையேற்றுபவர் யார்?”... என்று கேட்டது. இதைக்கேட்ட போதிசத்துவர். ‘ஏழு நாட்களாகத் தன்னந் தனியே கடல் நீந்துகிறேன். இதுவரையில் ஒருவரையும் நான் காணவில்லை. இப்போது யாரோ பேசுகிற குரல் கேட்கிறது’ என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, குரல் வந்த திசையை அண்ணாந்து பார்த்தார். ஆகாயத்தில் ஒரு தெய்வ மகள் நிற்பதைக் கண்டு, இத்தெய்வந்தான் பேசிற்று என்று அறிந்து இவ்வாறு விடை கூறினார்: “இவ்வுலத்தில் முயற்சியுடன் உழைக்கவேண்டியது என்னுடைய கடமை. ஆகையால் கரைகாணாத இந்தக் கடலிலே நான் நீந்திக் கரைகாண முயற்சி செய்கிறேன்.” “கரைகாணாத இந்தக் கடற்பரப்பிலே, ஆழமுள்ள இந்தப் பௌவத்தைக் கையினால் நீந்திக் கரைகாண முடியுமா? இது வீண் முயற்சி. நீ கடல் மூழ்கி இறக்க வேண்டியவன்தான்.” “தெய்வ மகளே! ஏன் இவ்வாறு கூறுகிறாய்? ஊக்கத்தோடும் உறுதியோடும் முயற்சிசெய்த பின்பு மூழ்கி இறந்து விடுவே னானால் அது என்னுடைய குற்றம் அல்ல. ஊக்கத்தோடு முயற்சி செய்யாமல் உயிரை இழப்பேனானால், அது என்னுடைய தவறு ஆகும். ஊக்கமும் உறுதியும் உள்ளவனைத் தெய்வம் காப்பாற்றும். முயற்சி செய்த பிறகும் இறந்து விடுவேனானால், அப்போதும் எனக்கு மன ஆறுதல் ஏற்படும்.” “வீணாக உழைப்பதனால் என்ன பயன்? ஊக்கங்கொண்டு உழைத்தாலும் கடலிலே மூழ்கி இறக்க வேண்டியதுதானே கை கண்ட பலன்! முயற்சியில் வெற்றிகாணாமல் உடல்வருந்தி இறக்கப் போகிறாய்!” “முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டு. என்னுடன் கப்பலில் வந்தவர்கள், கப்பல் முழுகிப் போவதைக் கண்டு மனவுறுதி இழந்து முயற்சி செய்யாமல் மாண்டு போனார்கள். நான் மட்டும் மன உறுதி இழக்காமல் முயற்சி செய்கிறேன். ஏழு நாட்களாகக் கடலில் சுழன்று அலைகிறேன். இப்போது உன்முன் நிற்கிறேன். நானும் நெஞ்சம் அழிந்துவாளா இருந்திருந்தால், அவர்களைப் போலவே நானும் அழிந்து போயிருப்பேன். எனக்குச் சக்தி உள்ளவரையில் மனவுறுதி யுடன் முயற்சிசெய்து இக்கடலை நீந்திக் கரைசேரப் பார்க்கிறேன்” என்று கூறினார் போதிசத்துவர். இதைக்கேட்ட மணிமேகலா தெய்வம் இவனுடைய உறுதிக்காகவும், முயற்சிக்காகவும் மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறிற்று: “அச்சத்தைத் தருகிற இந்தப் பெருங்கடலிலே ஊக்கமும் உறுதியும் கொண்டு நீந்துகிற நீ கடமையைச் செய்வதில் பின்வாங்காத நீ, எண்ணிய காரியத்தில் வெற்றிபெறுவாய். உனக்கு ஒரு துன்பமும் நேரிடாது.” இவ்வாறு வாழ்த்திய மணிமேகலா தெய்வம், “நீபோக விரும்புகிற இடத்தைச்சொல்லு. உன்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன்” என்று கூறிற்று. “மிதிலாபுரிக்குப் போக விரும்புகிறேன்” என்று கூறினார் போதிசத்துவர். மணிமேகலா தெய்வம், தாய் குழந்தையைத் தூக்குவது போல அவரைத் தூக்கிற்று. களைப்பும் சோர்வும் அடைந்திருந்த போதி சத்துவர் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். தெய்வம், அவரைத் தூக்கிக் கொண்டுவந்து மிதிலாபுரியின் ஒரு மாஞ்சோலையிலே ஒரு மரத்தின் கீழே வளர்த்திவிட்டுப் போய்விட்டது. காலஞ்சென்ற மிதிலை மன்னன் பொல ஜனகனுக்கு ஆண் மக்கள் இலர். ஒரே ஒரு பெண்மகள் மட்டும் இருந்தாள். இந்தப் பெண் மகளுக்குச் சீவாலிதேவி என்று பெயர். இக் குமாரி அழகும் அறிவும் கல்வியும் உடையவள். அரசன் இறப்பதற்கு முன்பு அமைச்சர்கள், “அரசர் பெருமானே! தங்களுக்குப் பிறகு யாருக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அரசர் பெருமான், “சீவாலி குமாரிக்கு உகந்த அரசகுமாரனை அரசு கட்டிலில் ஏற்றுங்கள். அல்லது சதுரக்கட்டிலில் முகப்பைக் கண்டுபிடிக்கிறவனை, வளைக்க முடியாத வில்லை வளைக்கிறவனை, பூமிக்குள் இருக்கும் பதினாறு நிதிகளையும் எடுக்கிறவனை அரசனாக்குங்கள்” என்று கூறினார். அதற்கு அமைச்சர்கள், “ பதினாறு நிதிகள் எவை” என்று கேட்டார்கள். அரசன் அந்த நிதிகளைக் கூறினார்: “தோன்று பகலவ னும், மறையும் பகலவனும், வெளியே உள்ளதும்,உள்ளே உள்ளதும், உள்ளும் வெளியும் இல்லாததும், ஏறும் இடத்ததும், இறங்கும் இடத்ததும், சாலை மரத்தூண்கள் நான்கும், யோசனை வட்டமும், பல்லின் நுனியும், வாலின் நுனியும்,கேபுகமும், மரங்களின் கோடியும் எனப் பதினாறு நிதிகளாம். இவை உள்ள இடத்தில் பதினாறு நிதிப் புதையல்கள் உள்ளன. ஆயிரம் பேர் வளைக்கக்கூடிய வில்லும். சதுரக் கட்டிலும் அரசகுமாரியை மகிழச் செய்வன” என்று அரசன் கூறினான். பிறகு அரசன் இறந்துபோனான். அரசர் இறந்தபிறகு அவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தனர். பிறகு ஏழாம்நாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி யோசித்தார்கள். காலஞ்சென்ற அரசர் பெருமான், சீவாலி குமாரியின் மனதுக்கு உகந்த ஆளை அரசனாக்கும்படிக் கூறினார். அரச குமாரி யின் மனதுக்கு உகந்தவர் யார்? என்று யோசித்தபோது, சேனைத் தலைவன் அரசகுமாரியின் மனதுக்கு உகந்தவனாக இருக்கக்கூடும் என்று கருதினார்கள். ஆகவே சேனாதிபதியை அழைத்துச் சீவாலி குமாரியிடம் அனுப்பினார்கள். சேனாதிபதி அரசகுமாரி இருந்த மாளிகைக்குச் சென்று வாயிலின் அருகில் நின்றார். இவர் வந்த காரியத்தை அறிந்து கொண்ட அரச குமாரி, அரசனுக்கு இருக்கவேண்டிய நுண்ணறிவு இருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க எண்ணினாள். எண்ணி, “சேனாதி பதியே இங்கு வாருங்கள்” என்றாள். உடனே சேனாதிபதி விரைவாகப் படிகளை ஏறிப்போய் மாடியின்மேல் அரசகுமாரியின் அருகில் நின்றார். அரசகுமாரி, “கீழே போங்கள்” என்றாள். உடனே விரைவாகக் கீழே இறங்கித் தரையில் நின்றார். “இங்குவந்து என் காலைப் பிடியும்” என்றாள். சேனாதிபதி அப்படியே செய்தார். அரசகுமாரி, அவரை மார்பிலே காலால் உதைக்க, அவர் மல்லாந்து விழுந்தார். அப்போது அரசகுமாரி, ‘இந்த அறிவற்ற மூடனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்’ என்று கூறுவதுபோல தனது அருகில் இருந்த சேடி மார்களுக்குக் கண்ணினால் குறிப்புக் காட்டினாள். அப்படியே அவர்களும் அவரை விரட்டித் துரத்தினார்கள். “சேனாதிபதியே, என்ன செய்தி?” என்று அமைச்சர்கள் அவரை வினவினார்கள். “என் செய்தியைக் கேட்காதீர்கள். அரச குமாரி மானிடப்பெண் அல்ல” என்றார் சேனாதிபதி. பிறகு பொக்கிஷ அமைச்சரை அனுப்பினார்கள். அவருக்குப் பிறகு கொற்றக்குடை அதிகாரியை அனுப்பினார்கள். பின்னர், கொற்ற வாள் அதிபதியை அனுப்பினார்கள். எல்லோரும் சென்று அரச குமாரியிடம் அவமானம் அடைந்து வந்தனர். அமைச்சர்கள் மறுபடியும் சபைகூடி யோசித்தார்கள். அரச குமாரியை மகிழ்விப்போர் ஒருவரும் இலர். ஆயிரம்பேர் சேர்ந்து வளைக்கக்கூடிய வில்லை, ஒருவனே வளைக்கக் கூடியவன் யார்? அவனைக் கண்டறிந்து அரசாட்சியை அவனுக்குக் கொடுப்போம் என்று சிந்தித்துப் பறையறைந்து தெரிவித்தனர். ஒருவராலும் வில்லை வளைக்க முடியவில்லை. பிறகு அமைச்சர்கள் பதினாறு நிதிகளைக் கண்டெடுப்போரை அரசனாக்குவதாகப் பறையறைவித்தனர். ஒருவராலும் கண்டெடுக்க முடியவில்லை. அமைச்சர்கள் மீண்டும் சபைகூடி யோசித்தார்கள். அரசன் இல்லாமல் அரசாட்சியை நடத்துவது முடியாது. யாரை அரச னாக ஏற்படுத்துவது? என்று சிந்தித்தனர். அப்போது அரசகுரு ஒரு யோசனை கூறினார். கொற்றத்தேரை ஊரில் அனுப்பி அரசாட்சிக் குரியவரை ஏற்றிக்கொண்டு வருபவரை அரசனாக்கலாம் என்பது அவர் சொன்ன யோசனை. இதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, அரசனுடைய தேரை அலங்காரம் செய்து, குதிரைகளைப் பூட்டி, தேரில் அரச சின்னங்களை அமைத்து நால்வகைச் சேனைகள் சூழ, வாத்தியங்கள் முழங்கத் தேரை அனுப்பினார்கள். குதிரைகள் தேரை இழுத்துச்சென்றன. அரண்மனையை வலமாகச் சுற்றிக்கொண்டு இராஜ வீதிகள் வழியாகத் தேர் சென்றது. இராஜ வீதிகளில் வசித்த சேனைத் தலைவர், அமைச்சர்கள் முதலியவர்கள், தேர் தங்கள் வீட்டருகில் நின்று தங்களை ஏற்றிக்கொண்டு போகும் என்று ஒவ்வொரு வரும் ஆவலாக இருந்தார்கள். தேர் எங்கும் நிற்கவில்லை. நகரத்தின் கிழக்கு வாயிலைக் கடந்து நகரத்துக்கப்பால் இருந்த மாந் தோப்பில் நுழைந்தது. எல்லோரும் தேரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஒரு பெரிய மாமரத்தின் அடியில் ஒரு பெரிய பாறை இருந்தது. தேர் அந்தப் பாறையின் அருகில் போய் நின்றது. அந்தப் பாறையின்மேல் போதிசத்துவராகிய மகாஜனகன் படுத்துக் கொண்டிருந்தார். அவரைக்கண்ட அரசகுரு, இவன் அரசாட்சிக்குத் தகுதி உள்ளவன்தானா என்று அறிய எண்ணினார். இவன் அறிவுடைய வனாக இருந்தால் நம்மைக் கண்டு அஞ்சாமல் வாளா இருப்பான். அறிவற்ற மூடனாக இருந்தால் நம்மைக் கண்டு அஞ்சி நடுங்குவான் என்று எண்ணி அவர் வாத்தியங்களை முழங்கச் சொன்னார். வாத்தியங் கள் கடல் ஒலி போல ஒலித்தன. ஒலியைக் கேட்ட போதிசத்துவர் எழுந்து உட் கார்ந்து, கூட்டம் இருப்பதைப் பார்த்துவிட்டு, மறுபடியும் இடதுபுறமாகத் திரும்பித் துணியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார். அப்போது அரசகுரு, அவர் அருகில் போய், போர்வை யை விலக்கி அவருடைய உள்ளங்கால் இரேகைகளின் அடையா ளத்தைப் பார்த்தார்.பிறகு, மறுபடியும் வாத்தியங்களை முழங்கும்படி சொன்னார். பெரிய ஓசையைக் கேட்ட போதி சத்துவர் மறுபடியும் எழுந்து உட்கார்ந்து பார்த்துவிட்டு, வலது புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். அப்போதும் அரசகுரு அவருடைய பாதக் குறிகளைக் கண்டு, இவர் பெரிய அரசனாக இருக்கக்கூடியவர் என்று அறிந்தார். அரசகுரு போதிசத்துவரைப் பார்த்து, “பெருமானே! எழுந்து வாரும். அரசு தங்களுடையது” என்று தலைவணங்கி கைகட்டி வணக்க மாகக் கூறினார். “அரசர் எங்கே?” “அரசர் காலமாய்விட்டார்.” “அவருக்குப் பிள்ளைகளாவது, தம்பிகளாவது இல்லையா?” “ஒருவரும் இலர்.” “அப்படியானால் நான் அரசாட்சியை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அக்கருங்கல்லின்மேல் பதுமாசனமாக அமர்ந்தார். அப்போது அமைச்சர்களும் நகரத்துப் பிரபுக்களும் மற்றவர்களும் வந்து அவருக்கு அங்கேயே அபிஷேகம் செய்து, அவரை அரசனாக்கினார்கள். மகாஜனகன் என்று பெயரையும் வழங்கினார்கள். இவ்வாறு அரசனாகிய மகாஜனகன் தேரில் அமர்ந்து ஐம்பெருங் குழுவும் நால்வகைச் சேனைகளும் சூழ்ந்துவர வாத்திய கோஷங் களுடன் நகரிற் சென்று ஊர்வலமாகப்போய் அரண்மனைக்குச் சென்றார். சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து, தனக்குரிய அமைச்சர் களையும், சேனாதி பதியையும் அரச குருவையும் இன்னின்னார் என்று ஏற்படுத்தினார். இவை எல்லாம் ஆனபிறகு, சீவாலி அரசகுமாரி, புதிய அரச னுடைய அறிவைச் சோதிக்க எண்ணி, “சீவாலிகுமாரி தங்களை அழைக்கிறார். விரைவாக வரும்படிச் சொன்னார்” என்று அரச ரிடம் தெரிவிக்கும்படி ஒரு ஆளை அனுப்பினாள். ஏவலாளன் போய் அரசரிடம் செய்தி தெரிவித்தான். அரசர் அதைக்கேட்டுப் பொருட்படுத்தாமல், அரண்மனைக் காரியத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இந்த இடம் இப்படி அமைக்கப்பட வேண்டும், இது இப்படி இருக்க வேண்டும் என்று அவர் யோசனை சொல்லிக்கொண்டிருந்தார். பணியாள் திரும்பிவந்து, அரச குமாரியிடம் அரசர் பொருட்படுத்தாமல் இருப்பதைத் தெரிவித்தான். “இவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது” என்று அரச குமாரி தனக்குள் எண்ணிக்கொண்டு, மீண்டும் இரண்டுமுறை வெவ்வேறு ஆட்களைத் தனித்தனியே அனுப்பி அரசரை அழைத்தார். மன்னன் மெல்ல எழுந்து பெருமிதத்துடன் நடந்து படிகளைச் சாவதானமாக ஏறிச்சென்று அரசகுமாரி இருந்த இடத்திற்கு வந்தார். அவருடைய கம்பீரமான தோற்றத்தையும் பெருமிதத்தையும் கண்ட அரசகுமாரி எழுந்து போய் கைலாகு கொடுத்து வரவேற்றார். அரசர், சீவாலி குமாரி யின் கையைப் பிடித்து அவளுடன் வெண்கொற்றக் குடையின் கீழ்ச் சிம்மாசனத்தில் அமர்ந்து அமைச்சர்களை அழைத்து, “அரசர் இறக்கும் சமயத்தில் என்ன சொன்னார்?” என்று கேட்டார். “சீவாலி குமாரியை மகிழ்விப்பவர் யாரோ அவருக்கு அரசாட்சியைக் கொடுக்கச் சொன்னார்” என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள். “நான் வந்தபோது சீவாலிகுமாரி தனது கையினால் எனக்குக் கைலாகு கொடுத்ததிலிருந்தே, நான் அவரை மகிழ்வித்தேன் என்பது வெளிப் படுகிறது. காலஞ்சென்ற அரசர் பெருமான் வேறு ஏதேனும் சொன்னாரோ?” “சதுரக் கட்டிலின் தலைப்பக்கத்தைக் கண்டுபிடிப்பவருக்கு அரசாட்சியைக் கொடுக்கும்படி சொன்னார்.” “இதைக் கண்டு பிடிப்பது கடினந்தான். ஆனால் ‘உபாயத்தினால் கண்டுபிடிக்கலாம்’ என்று தமக்குள் எண்ணிக்கொண்டு அரசன் தமது தலையிருந்து கொண்டை ஊசியை எடுத்து அரச குமாரியிடங் கொடுத்து இதை இதன் இடத்தில் வை என்று கூறினார். அரச குமாரி அதை வாங்கிக் கட்டிலின் தலைப் புறத்தில் வைத்தாள். இந்தக் குறிப்பைக் கொண்டு, கட்டிலின் தலைப்புறம் இது என்று அமைச்சர்களுக்கு காட்டினார். அவர்கள் வியப்படைந்தார்கள். “இன்னும் ஏதேனும் அரசர் பெருமான் சொன்னாரோ?” என்று கேட்டார் மகாஜனக அரசன். “ஆம், அரசே!” “என்று அது?” “ஆயிரம் ஆள் பலமுள்ள வில்லை வளைத்து நாணேற்றவேண்டும். அந்த வில்லைக் கொண்டுவரச் சொல்லி, கட்டிலில் அமர்ந்த வண்ணமே, வெகு எளிதில் வில்லை வளைத்து நாணேற்றினார். இன்னும் ஏதேனும் செய்யவேண்டியது உண்டோ என்று அமைச்சர்களை அரசன் வினாவினார். பதினாறு இடங்களில் உள்ள செல்வப் புதையல்களை எடுப்பவருக்கு அரசாட்சியைத் தரும்படி அரசர் பெருமான் கூறினார் என்றார்கள். அந்தச் செல்வப் புதையல்களின் பெயரைச் சொல்லச் சொன்னபோது அவர்கள், தோன்றும் பகலவன், மறையும் பகலவன் முதய இடங்களில் உள்ள செல்வப் புதையல்களின் பட்டியலைக் கூறினார்கள். இதைக் கேட்டபோது, மகா ஜனகமன்னனுக்கு அவற்றின் உட்பொருள், வானத்தில் வெண்ணிலாவைப் போல விளக்கமாகத் தெரிந்தது. “இன்றைக்கு நேரம் இல்லை. நாளைக்குப் புதையல்களைத் தோண்டி எடுக்கலாம் என்று சொல்லி அமைச்சர்களை அனுப்பிவிட்டார். அடுத்த நாள் அமைச்சர்களை அழைத்து, காலஞ்சென்ற அரசர் பெருமான், பிரத்தியேக புத்தர்களுக்கு1 உணவு அளிப்பது வழக்கம் உண்டா என்று வினவினார். ஆம் என்று விடை கூறினார்கள். பகலவன் அல்லது சூரியன் என்பது பிரத்தியேக புத்தர்களுக்குப் பெயர். ஆகையினாலே தோன்றும் பகலவன் என்றால், பிரத்தியேக புத்தர் அரண் மனைக்கு வந்து நிற்கும் இடம் ஆகும் என்று அறிந்து அமைச்சர் களைப் பார்த்து, “பிரத்தியேக புத்தர் அரண்மனைக்கு வந்தால் அவர் எங்கே நிற்பது வழக்கம்?” என்று கேட்டார். அவர்கள் அவ்விடத்தைக் காட்டினார்கள். மகாஜனகன் அந்த இடத்தைத் தோண்டி அங்கிருக்கிற செல்வப் புதையலை எடுக்கச் சொன்னார். அவர்களும் அவ்விடத்தைத் தோண்டியபோது, செல்வப் புதையலைக் கண்டு அதை வெளியே எடுத்தார்கள். “பிரத்தியேக புத்தர்கள் அரண் மனையில் உணவு அருந்தித் திரும்பிப் போகும்போது அரசர் பெருமான் அவர்கள் பின் சென்று வழிவிடுவது வழக்கம் அல்லவா? எந்த இடத்தில் நின்று வழி யனுப்புவார்? “என்று மகாஜனகன் அமைச்சர்களைச் கேட்டபோது, அவர்கள் அந்த இடத்தைக் கூறினார்கள். அரசன் அந்த இடத்தைத் தோண்டி அங்கிருந்த புதையலை எடுக்கச் சொன்னார். இவ்வாறு புதையல்களை மகா ஜனக மன்னன் எடுத்தபோது எல்லோரும் வியப்படைந்து அரசனுடைய அறிவைப் புகழ்ந்தனர். தோன்றும் பகலவன், மறையும் பகலவனென்றால், சூரியன் புறப்படு கின்ற இடம், சூரியன் மறைகின்ற இடம் என்று அர்த்தம் செய்து கொண்டு எங்கெங்கேயோ தோண்டிப்பார்த்து ஏமாந்து போனோம். இப்பொழுதுதான் இதன் உண்மைப் பொருள் தெரிந்தது என்று கூறி அவர்கள் அரசனுடைய நுண்ணறிவைப் புகழ்ந்தார்கள். அகநிதி என்பது, அரண்மனையின் வெளிவாயிலுக்கு உள்பக்கம் உள்ள நிதி என்றும், புறநிதி என்பது, அரண்மனை வாயிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள நிதி என்றும் அரசன் யூகித்து அந்த இடங்களைத் தோண்டும்படி கட்டளையிட்டார். தோண்டியபோது அவ்விடங்களில் செல்வப் புதையல்கள் இருந்ததைக்கண்டு அவைகளை வெளியே எடுத்தார்கள். அகப்புறநிதி என்பது அரண்மனை வாயிலுக்கு உள்பக்கமும், வெளிப் புறமும் இல்லாமல், வாயிலுக்குக் கீழே உள்ள புதையல் என்று அறிந்து அவ்விடத்தையும் தோண்டிப் புதையலை எடுத்தார். ஏறும் நிதியை எடுப்பதற்காக, அரசன் அமைச்சரைப் பார்த்து, “காலஞ் சென்ற அரசன் பெருமான் யானைமேல் ஏறுவதற்காக மரப்படியை வைக்கும் இடம் எது?” என்று கேட்க, அவர்கள் அவ்விடத்தைக் கூறினார்கள். அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த புதையலை அரசர் எடுத்தார். பிறகு, அரசர் பெருமான் யானையினின்றும் இறங்கும் இடத்தை அறிந்து அவ்விடத்தையும் தோண்டி அங்கிருந்த செல்வத்தை எடுத்தார். சாலை மரத்தூண்களில் உள்ள நிதி என்பது, அரசனுடைய சிம்மாசனத்துக்கு நான்கு பருத்த சாலை மரத்தினால் செய்த கால் கள் என்று யூகித்து அறிந்து சிம்மாசனத்தின் நான்கு காலண்டைத் தரையைத் தோண்டி அங்கிருந்த செல்வப் புதையல்களை எடுத்தார். யோசனை வட்டத்தில் இருக்கும் நிதி என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்து, தேரின் நுகத்தடிக்கு யோசனை என்னும் பெயர் உண்டு என்று அறிந்து சிம்மாசனத்துக்கு ஒரு நுகத்தடி தூரம் என்று உணர்ந்து அங்குத் தோண்டி அங்கிருந்த புதையலை எடுத்தார். பல்லின் நுனியில் உள்ள நிதியை, அரசனுடைய கொற்றத்து யானை நிற்கும் யானைப் பந்தியிலே யானையின் பற்களாகிய தந்தத்திற்கு நேரே தரையில் உள்ள நிதி என்று யூகித்து, அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த செல்வப் புதையலை எடுத்தார். அவ்வாறே, வாலின் நுனியில் உள்ள செல்வம் என்பதை, அரசனுடைய குதிரை நிற்கும் குதிரைப் பந்தியிலே, குதிரை யின் வால்புறத்தின் கீழே உள்ள செல்வம் என்று பொருள் அறிந்து அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த செல்வத்தை எடுத்தார். கேபுக நிதி என்பதை, கேபுகம் என்றால் தண்ணீர். எனவே நீர்நிலையில் உள்ள நிதி என்று கண்டு, அரசாங்கத்து ஏரியின் நீரை இறைத்து, அவ்வேரி யின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நிதியை எடுத்தார். மரங்களின் கோடியில் உள்ள நிதி என்பது, அரண் மனையின் நந்தவனத்தில் இருக்கும் சாலை மரத் தோப்பிலே உச்சி வேளையில் மரநிழல் விழுகிற இடத்தில் இருக்கும் செல்வப் புதையல் என்று அறிந்து அங்குத் தோண்டி அப் புதையலை எடுத்தார். இவ்வாறு பதினாறு இடங்களில் இருந்த நிதிகளை எல்லாம் வெளியில் எடுத்தபிறகு, “இன்னும் ஏதேனும் உண்டா? “என்று அரசர் வினவினார். அமைச்சர்கள், “இல்லை” என்று கூறினார்கள். மகா ஜனக அரசன், தமது நுண் அறிவினாலே செல்வப் புதையல் களைப் பூமியில் இருந்து எடுத்ததையறிந்து எல்லோரும் மகிழ்ந்தார் கள். பிறகு, அரசன், “இந்தச் செல்வங்களை எல்லாம் அறக்கடவுளின் வாயிலே போடப்போகிறேன்” என்று சொல்லி, ஐந்து அறச்சாலைகளை நகரத்திலே அமைத்தார். நகரத்தின் நான்கு வாயிலண்டையும் நகரத்தின் நடுவிலும் ஆக ஐந்து அறச் சாலைகளை அமைத்து, அச்சாலைகளில் ஏழை எளியவர்களுக்குத் தான தருமங்களை நாள்தோறும் செய்துவந்தார். பிறகு, மகா ஜனகராசன், காளசண்பை நகரத்திலிருந்த தன் னுடைய தாயையும் பிராமணனையும் வரவழைத்து அவர்களுக்குப் பெரிய சிறப்புகளைச் செய்தார். விதேக தேசத்தில் மகா ஜனக அரசன் நீதியோடு செங்கோல் செலுத்தினார். மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து அரசர் பெருமானைக் காண்பதற்குத் திரண்டு வந்தார்கள். அரண்மனையைச் சூழ்ந்து கொண்டு, தாங்கள் கொண்டுவந்த கையுறைகளை அரசனுக்கு அளித்து மனம் மகிழ்ந்தார்கள். திருவிழாக் கொண் டாடி சந்தோஷப்பட்டார்கள். மக்களுக்குத் துன்பம் நேராமல் அரசன் செங்கோல் செலுத்தினார். அறுசுவை உணவு அருந்திப் பட்டாடை அணிந்து, அரசி யுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒருபுறம் அமைச்சரும் சேனாபதி முதலியோரும், மற்றொருபுறம் செல்வரும் பிரபுக்களும் இருக்க நாடகங் கள் கண்டும், இன்னிசை கேட்டும் மகிழ்ச்சியாகக் காலங் கழித்தார். இந்திரலோகத்திலே தேவ சபையிலே தேவேந்திரன் வீற்றிருப்பது போல மகா ஜனக மன்னன் அரசபோகத்தை அனுபவித்தார். அப்போது முன்பு நடுக்கடல் கப்பல் மூழ்கித்தான் கடலில் நீந்தித் துன்புற்றதைக் கருதினார். கருதி, “மனிதனுக்கு முயற்சி மிக முக்கியமானது. கடலில் விழுந்து தத்தளித்தபோது, மன உறுதியும் ஊக்கமும் கொண்டு முயற்சி செய்திராவிட்டால், இந்தப் போகங்களை எல்லாம் இப்போது அனுபவிக்க முடியுமா?” என்று தமக்குள் எண்ணி மகிழ்ந்தார். இவ்வாறிருக்கும்போது சீவாலி தேவியார் எல்லா நலமும் அமைந்த ஒரு ஆண் மகவைப் பெற்றார். அந்தக் குழந்தைக்குத் தீகாவு குமரன் என்று பெயரிட்டார்கள்.அந்தக் குமாரன் பெரிய வனாக வளர்ந்தபிறகு அவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினார். ஒருநாள் தோட்டத்தில் இருந்து பலவிதமான பூக்களையும் பழங்களையும் பறித்துக்கொண்டு வந்து அரசனுக்குக் காணிக்கையாகக் கொடுத்து வணங்கினார்கள். அரசன் மகிழ்ந்து தான் வந்து தோட்டங்களைக் காண விரும்புவதாகக் கூறினார். தோட்டக்காரர்கள் தோட்டத்தை அழகுப் படுத்தி வைத்தார்கள். அரசர் யானைமேல் ஏறி அமைச்சர் முதலிய குழுவினர் பின் தொடர்ந்து வர, தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் இரண்டு பெரிய மாமரங்கள் இருந்தன. ஒரு மாமரம் முழுவதும் பூத்துக் காய்த்துக் குலைகுலையாகத் தொங்கிற்று. மற்றொரு மாமரம் காய்க்காமல் இலை தழைகளால் நிறைந்திருந்தது. காய்த்துத் தொங்கிய பழங்களை, அரசர் பெருமான் அருந்தாதபடியினால், ஒருவரும் அவற்றைப் பறிக்காமல் இருந்தனர். மாமரத்தில் பழங்களைக் கண்ட அரசர், யானைமேல் இருந்த படியே ஒரு பழத்தைப் பறித்து அருந்தினார். பழம் மிகுந்த இனிப்பாக இருந்தது. திரும்பி வரும்போது பறித்துத் தின்னலாம் என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, தோட்டத்தின் காட்சிகளைக் காணச் சென்றார். அரசர் பெருமான் மாம்பழத்தை முதல் சாப்பிட்டபடி யால், அவர் உடன்வந்த இளவரசர், சேனாபதி, அமைச்சர்கள் முதலியவர்களும் மரத்தில் இருந்த மாம்பழங்களைப் பறித்து அருந்தினார்கள். மிகுந்த வற்றை யானைப்பாகர் தேர்ப்பாகர் முதலியவர்கள் பறித்து அருந்தினார் கள். பறிக்கும்போது இலை களையும் கொம்புகளையும் பிய்த்துப் போட்டார்கள். பழங்கள் நிறைந்து அழகாக இருந்த மரம் சற்று நேரத்திற் குள் காய்கனிகளை இழந்து இலைகளும் கிளைகளும் ஒடிக்கப்பட்டுப் பொலிவின்றிக் காணப்பட்டது. அருகில் இருந்த பழம் இல்லாத மரம் இலை தழைகளால் நிறைந்து அழகாகக் காணப்பட்டது. அரசர் பெருமான் தோட்டத்தில் சென்று இயற்கைக் காட்சி களைக் கண்டு மகிழ்ந்து திரும்பினார். மாமரத்தண்டை வந்த போது, அது காய்கனிகள் இல்லாமலும் இலைகள் ஒடிக்கப்பட்டும் அழகு குன்றியிருப்பதைக் கண்டார். அமைச்சர்களை நோக்கி, “இது ஏன் இப்படியாற்று?” என்று கேட்டார். “அரசர் பெருமான் மாங்கனி அருந்திய பிறகு உடன்வந்த பரிவாரங்கள் இந்த மரத்தின் கனிகளைப் பறித்து அருந்தினார்கள். அவர்கள் கனிகளை அறுக்கும்போது இலை தழைகளையும் கொம்புகளையும் கிளைகளையும் ஒடித்து அழகைக் கெடுத்து விட்டார்கள்.” என்று கூறினார். “ஆனால், மற்ற மரம் முன் போலவே அழகாகக் காணப்படுகிறதே?” “அது காய்த்துப் பழுக்க வில்லை. ஆகவே, அதைப் பறித்துப் பிய்த்துப் போடவில்லை.” இவ்விடையைக் கேட்டு அரசர் பெருமான், மறுபடியும் அந்த மரங்களைப் பார்த்தார். அப்போது அவர் உள்ளத்தில் இவ்வாறு எண்ணம் தோன்றியது. ‘இந்த மரம் காய்த்துப் பழுத்த படியால் இப்போது பொலிவு இழந்தது. அந்த மரம் காய்த்துப் பழுக்காதபடியால் பொலிவோடு இருக்கிறது. என்னுடைய அரச போகமும் இந்தப் பழுத்துப் பொலிவிழந்த மரம் போன்றது. துறவு வாழ்க்கை காய்த்துப் பழுக்காத அந்த மரம் போன்றது. பொருள் உள்ளவருக்குத்தான் துன்பம். பொருள் இல்லாதவருக்குத் துன்பம் இல்லை. பழுத்த மரத்தைப் போல இருக்கிற நான், பழுக்காத மரம்போல் ஆகவேண்டும். அரச பதவியையும் செல்வத்தையும் துறந்து, துறவறம் பூணவேண்டும்’ என்று தமக்குள் எண்ணினார். அரண்மனைக்கு வந்து யானையிலிருந்து இறங்கியவுடன் சேனாதிபதியை அழைத்து, அவரிடம் இவ்வாறு கூறினார்: “இன்று முதல் ஒருவரும் என்னைப் பார்க்கக்கூடாது. என்னிடம் இரண்டு ஆட்கள் மட்டும் வரலாம். ஒருவர் உணவு கொடுக்கவும். மற்றொருவர் தண்ணீர் கொடுக்கவும் மட்டும் வரலாம். அமைச்சர், அவையத்தார் துணைகொண்டு நீர் அரசாட்சியை நடத்தி வருக. நான் பிக்குவின் வாழ்க்கையைக் கொள்ளப் போகிறேன்.” இவ்வாறு கூறியபிறகு அரசர் பெருமான், அரண்மனையின் மேல்மாடியில் இருந்த அறைக்குச் சென்று தனியே இருந்து பிக்குவின் வாழ்க்கை மேற்கொண்டார். இவ்வாறிருக்க, அரசன் காணப்படாததைக் கண்டு குடிமக்கள் அரண்மனைக்கு வந்து, “அரசர் பெருமான் எங்கே?” என்று கேட்டார்கள். “அரசர் பெருமான் தன்னந்தனியே இருந்து பிக்குப்போல வாழ்கிறார். அவர், ஒருவரையும் பார்ப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை” என்று கூறினார்கள். நான்கு திங்கள் வரையிலும் மகா ஜனகராசன் தன்னந் தனியே இருந்தார். அப்போது அவருக்கு அந்த இடமும் நரகம் போலத் தோன்றிற்று. அந்த இடத்தைவிட்டு இமயமலைச் சாரலுக்குப் போய்விட வேண்டும் என்றும் எண்ணம் தோன்றிற்று. அவர் ஒரு ஆளை அனுப்பி, பிக்குகள் அணியும் மஞ்சள் ஆடை களையும் மண்பாண்டம் ஒன்றையும் வாங்கி வரும்படி அனுப்பினார். மற்றொரு ஆளை அனுப்பி அம்பட்டனை அழைத்துவரச் சொன்னார். அம்பட்டன் வந்த போது தலை மயிரையும் தாடி மீசைகளையும் மழித்துவிடும்படிக் கூறினார். அவனும் அப்படியே செய்து போய்விட்டான். பிறகு, அரசர் பெருமான் பிக்குகள் அணியும் சீவர ஆடைகளை அணிந்து மட் பாண்டத்தை ஒரு பையில் போட்டு அதைத் தோளில் மாட்டிக்கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்துக்கொண்டு அறையில் உலாவினார். அப்போது அவர் பிரத்தியேக புத்தரைப்போலக் காணப்பட்டார். அரசர் பெருமானைக் கண்டு நான்கு திங்கள் ஆயின. அவரைக் காணவேண்டும் என்று சீவாலிதேவியார் நினைத்து அழகிலும், ஆடல் பாடல்களிலும் தேர்ந்தவரான எழுநூறு தாதிமார்களுடன் அரசர் இருந்த மேல்மாடிக்கு வந்தார். அரசியார் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மஞ்சள் ஆடை அணிந்து ஒரு பிக்கு மாடியிருந்து படிகளில் இறங்கி வந்தார். அவர் யாரோ பிரத்தியேக புத்தர். அரசருக்கு உபதேசம் செய்ய வந்தவர் என்று எண்ணிக்கொண்டு அரசியார் ஒருபுறமாக ஒதுங்கி நின்று, வணக்கஞ் செய்தார். அவர் போனபிறகு அரசியார், மாடி மேலிருக்கும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒருவரும் காணப் படவில்லை. களையப்பட்ட மீசை தாடி மயிர்களும் அங்கு இருந்தன. இதைக் கண்டபிறகு, படிவழியாக இறங்கிச்சென்ற பிக்கு, அரசர் பெருமான் என்று உணர்ந்து விரைவாகக் கீழே இறங்கிவந்து, தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டு பிக்குவைப் பின் தொடர்ந்து சென்றார். தாதிகளும் அழுது புலம்பிக் கொண்டு பின்சென்றார்கள். “ஏன் பிக்கு கோலம் பூண்டீர்? அரசர் பெருமானே!” என்று அவர்கள் அழுதுகொண்டே கேட்டார்கள். இந்தச் செய்தி நகரம் முழுவதும் பரவியது. “அரசர் பெருமான் துறவு பூண்டாராம். இவரைப் போன்ற நல்ல அரசரை எங்கே காணப்போகிறோம்?” என்று சொல்லி அவர்கள் வருத்தம் அடைந்தார்கள். எல்லோரும் சென்று எவ்வளவோ வேண்டியும் அவர் மனம் மாறாமல் நேரே வடக்கு நோக்கி நடந்தார். மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அரசர், அமைச்சரிடம் சொல்லி மக்களைத் தொடர்ந்து வர வேண்டாம் என்று தடுத்தும் அவர்கள் கேளாமல் தொடர்ந்தனர். அரசியார், அரசரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது இமயமலையில் தவம் செய்யும் நாரதர் என்னும் முனிவர், மகா ஜனகராசன் துறவு பூண்டதையறிந்து, அரசனைக் காண வந்தார். வந்தவர் வழியிலே அரசனைக் கண்டு? “ஏன் இங்குக் கூச்சலும் சந்தடியுமாக இருக்கிறது?” என்று கேட்டார். “நான் துறவு பூண்டதற்காக இவர்கள் அழுது விசனப்படு கிறார்கள்.” “நீர் முழுவதும் துறவு பூண்டதாகக் கருதாதீர். உமக்கு இன்னும் பல தடைகள் உள்ளன. அத்தடைகளையும் நீர் வெல்ல வேண்டும்.” “அறிந்ததும் அறியாதது மான சுகபோகங்கள் என்னைத் தடுக்கமுடியாது. வேறு எந்தப் பகைவர் என்னைத் தடுக்க முடியும்?” “தூக்கம், சோம்பல், சிற்றின்ப ஆசை, பேருண்டி, திருப்தியற்ற மனம் - இவை எல்லாம் துறவுக்குப் பகைகள். இவைகளுக்குத் துறவிகள் இடந்தரலாகாது” என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் போனபிறகு மற்றொரு முனிவர், மிகாஜினர் என்னும் பெயருள்ளவர் இமயமலையிலிருந்து வந்து, மகா ஜனகனுக்கு எதிர்ப் பட்டார். அவர் துறவுகொண்ட அரசனைப் பார்த்து “யானை, சேனை, செல்வம், அரசாட்சி, போகம் முதலியவை களெல்லாம் இருந்தும் நீர் ஏன் துறவு கொண்டீர்? உமது மனம் வருந்தும்படி யாரேனும் உமக்குத் துன்பம் செய் தார்களோ?” என்று வினாவினார். “ஒருவரும் எனக்குத் துன்பம் செய்யவில்லை. நானே இல்வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டேன்” என்று விடை கூறினார். “குரு உபதேசம் இல்லாமல் ஒருவரும் துறவுபூண மாட் டார்கள். துறவறத்துக்கு வழிகாட்டும் குரு இல்லாமல் யாரும் துறவு கொள்வது இல்லை. உமக்கு உபதேசம் செய்த குரு யார்?” “எனக்கு உபதேசம் செய்தவர் ஒருவரும் இலர். காய்த்துப் பழுத்து நிறைந்த மாமரத்தையும், காய்க்காமல் இருந்த மரத்தையும் கண்டு, இல்லறத்தை வெறுத்துத் துறவு பூண்டேன்.” இதைக்கேட்ட மிகாஜின முனிவர் மனவுறுதியோடியிருக்கும் படி மகாஜனகருக்குச் சொல்விட்டுப் போய்விட்டார். அரசனைத் தொடர்ந்துவந்த சீவாலி அரசியார், “தங்கள் துறவுக்காக நாட்டு மக்களும் மற்றவர்களும் நாங்களும் அழுது துன்புறுகிறோம், எங்கள் துன்பத்தை நீக்கத் தாங்கள் வந்து அரசாளுங்கள்” என்று கூறினார். “எல்லோரையும், எல்லாவற்றையும் நான் துறந்துவிட்டேன். நாட்டை ஆள உன் மகன் தீகாவு இருக்கிறான்” என்று அரசர் விடை யளித்தார். அரசியார், அரசனை விடாமல் பின்தொடர்ந்தார். இவ்வாறு பேசிக்கொண்டே தூணா என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு ஆள், இறைச்சியை வாங்கிவந்து, அதை வாணலில் வறுத்து, உண்பதற்காக ஆறவைத்தான். அப்போது அங்குவந்த ஒரு நாய் ஒரு துண்டை வாயில் கௌவிக்கொண்டு ஓடியது. அதைக்கண்ட அவன் அந்த நாயைத் துரத்திக்கொண்டு ஓடினான். நாய் அகப்படாமல் ஓடிற்று. இருவரும் நெடுந்தூரம் ஓடினார்கள். கடைசியில் அந்த ஆள் களைப் படைந்து நின்று விட்டான். நாய் ஓடியது. அப்போது அத்துறவியும் அரசியும் அங்கு எதிரில் வருவதைக் கண்ட நாய் அச்சங்கொண்டு இறைச்சித் துண்டைப் போட்டுவிட்டு ஓடிற்று. அப்போது துறவியார் எண்ணினார். இந்த இறைச்சியை நாய் போட்டு விட்டு ஓடிவிட்டது. இதற்கு உரியவர் யாரும் இலர். இதை நான் எடுத்து உண்பேன்’ என்று இவ்வாறு நினைத்து இறைச்சியை எடுத்துத் தூசியைத்தட்டி உதறி விட்டு அதைத் தமது மண் பாத்திரத்தில் வைத்துக் கொண்டார். பிறகு, நீர் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று கைகால்களைக் கழுவி உட்கார்ந்து அந்த இறைச்சியை எடுத்து அருந்தினார். இதைக் கண்ட அரசியார், ‘இராச்சியத்தை அரசாளத்தக்க தகுதியுடையவராக இருந்தால், இவர் நாய் போட்டுவிட்டுப் போன இந்த மாமிசத்தை எடுத்து உண்ணமாட்டார். இவர் என் கணவனாக இருக்கத் தகுதியுள்ளவர் அல்லர்’ என்று தமக்குள் எண்ணினார். பிறகு, வெளிப்படையாக, “அரசர் பெருமானே! தாங்கள் இந்த அருவருப்புள்ள உணவை உண்ணலாமா?” என்றுகேட்டார்: “நீ தவறாக நினைக்கிறாய். துறவிக்கு மனிதர் கொடுக்கும் பிச்சையும் நாய் கொடுக்கும் பிச்சையும் ஒன்றுதான்” என்று கூறினார். அரசிக்குத் தன்மேல் வெறுப்பு ஏற்பட வேண்டும் என் பதற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.ஆனால், அரசியார் அவ ரைவிட்டுப் பிரிவதாகத் தெரியவில்லை. பல ஊர்களுக்கு நெடுந் தூரம் சென்றபிறகும் அரசியார் அவரைவிட்டுப் போகவில்லை. கடைசியாக, சாலையின் ஓரத்தில் முளைத்திருந்த முஞ்சம் புல்லைக்கண்டு, ஒரு இலையைக் கிள்ளி, அரசியாருக்குக்காட்டி அதை இரண்டாகப் பிய்த்தார். “இதோ பார். இந்தப் புல் இலைகள் மறுபடியும் ஒன்றாகச் சேராது. நம்முடைய உறவும் இப்படித்தான்” என்று கூறினார். இதைக்கேட்ட அரசியார் துக்கத்தினால் மயங்கிக் கீழே விழுந்தார். அவர் மயங்கிக் கிடப்பதை அறிந்து, துறவியார் இதுதான் சமயம் என்று விரைவாகக் காட்டுக்குள் நுழைந்து மறைந்து விட்டார். அமைச்சர்கள் அரசியாருக்கு சிகிச்சைகள் செய்தனர். நெடுநேரத்திற்குப் பிறகு, மயக்கந்தெளிந்து எழுந்து அரசியார், “அவர் எங்கே?” என்று கேட்டார். “அவர் போய்விட்டார்” என்று கூறினார்கள். அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி பல திசையிலும் ஆட்களை அனுப்பினார்கள். அரசர் எங்கும் காணப்படவில்லை. அவர் இமயமலைச் சாரலுக்குப் போய் விட்டார். பகவன் புத்தர், இந்தக் கதையைக் கூறியபிறகு அப்பிறப்பிலும் இப்பிறப்பிலும் உள்ள ஒப்புமைகளைக் கூறினார். அப்பிறப்பில், மணிமேகலை என்னும் கடல் தெய்வமாக இருந்தவர் உப்பல வன்னை. நாரதராக இருந்தவர் சாரிபுத்தர், மகா ஜனகராக இருந்தவர் மொக்கல் லானர், சீவாலியாக இருந்தவர் இராகுலனுடைய தாயார், தீகாவு அரச குமாரனாக இருந்தவர் இராகுல குமாரன், மகாஜனக அரசனாக இருந்தவர் நான்தான் என்று பகவன் புத்தர் விளக்கினார். 4. சிரீகாள கன்னி ஜாதகம் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, அனாத பிண்டிகளைப் பற்றிப் பகவன் புத்தர் இந்தக் கதையைச் சொன்னார். புத்தருடைய உபதேசத்தைக் கேட்டுப் பௌத்தனான பிறகு, அனாதபிண்டிகள் பஞ்ச சீலத்தின்படி ஒழுகி அதைத் தவறாமல் நடந்துவந்தார். அவனுடைய மனைவியும் மக்களும் வேலைக்காரர்களும் அவ்வாறே ஒழுகி வந்தனர். பிக்குகள் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பகவன் புத்தர் அவ்விடம் வந்தார். அவர்கள் பேசுவது இன்ன தென்பதை அறிந் தார். அப்போது இந்தக் கதையை அவர்களுக்குச் சொன்னார். நெடுங்காலத்துக்கு முன்பு, பிரமதத்தன் அரசாண்ட காலத்தில், காசியிலே போதி சத்துவர் வணிகனாகப் பிறந்தார். அவர் தானங்கள் செய்து சீலத்தில் நின்று அறநெறிப்படி நடந்து வந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பெண்களும் அவ்வாறே பஞ்சசீலத்தைக் கடைப்பிடித்து ஒழுகினார்கள். அவருடைய ஊழியர்களும் வேலைக் காரர்களுங் கூட அவரைப் போலவே அறவொழுக்கத்தில் நடந்தனர். ஆகையினாலே அந்த வணிகருக்குச் சுசிபரிவாரர் என்னும் பெயர் ஏற்பட்டது. அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: ‘யாரேனும் நம்மை விட ஒழுக்க சீலர்கள் வந்தால், அவர்கள் இருக்க என்னுடைய இருக்கையையும், படுக்க என்னுடைய படுக்கையும் உதவுவது கூடாது அவர்களுக்குப் புதிய இருக்கையையும், புதிய படுக்கையையும் கொடுத்து உதவவேண்டும்.’ இவ்வாறு எண்ணிய அவர் தமது இல்லத்தில் ஒரு அறையில் தூய ஆசனத்தையும், தூய படுக்கையையும் அமைத்து வைத்தார். நான்கு திசைகளுக்கு அரசர்களாகத் தேவலோகத்திலே நான்கு தெய்வ அரசர்கள் உண்டு. அவர்களில் திருதராட்டிரன் வடக்குத் திசைக்கு அரசன்; விரூளாக்கன் தென்திசைக்கு அரசன்; விரூபாக்கன் மேற்குத் திசைக்கு அரசன்: வெசவணன் கிழக்குத் திசைக்கு அரசன். ஒருநாள் விரூபாக்க அரசனுடைய மகள் காள கன்னியும், திருதராட்டிரன் மகள் சிரீயும் பூமாலைகளையும், வாசனைச் சுண்ணங்களையும் எடுத்துக்கொண்டு அனோதத்தம் என்னும் ஏரியில் குளிக்கச் சென்றார்கள். அந்த ஏரியிலே குளிப்பதற்குப் பல துறைகள் இருந்தன. புத்தர்கள், பிரத்யேக புத்தர்கள், அர்கந்தர்கள், தேரர்கள் முதயவர்கள் குளிப்பதற்குத் தனித் தனியே துறைகள் இருந்தன. ஆறு வகையான காமலேகத்துத் தேவர்கள் குளிப்பதற்கும் வெவ்வேறு துறைகள் இருந்தன. இந்தத் தெய்வ மகளிர் இருவரும் இங்கு வந்து யார் முதல் குளிப்பது என்பது பற்றித் தமக்குள் சச்சரவு செய்து கொண்டார்கள். “உலகத்தை நான் ஆட்சி செய்கிறேன். ஆகையால், நான்தான் முதல் நீராடவேண்டும்” என்று காள கன்னி கூறி னாள். “மனிதருக்குத் தலைமைப் பதவியைத் தருகிற நன்னடத்தைக்கு நான் தலைமை தாங்கு கிறேன். ஆகையால் நான்தான் முதல் நீராடத் தகுதியுள்ளவள்” என்று சிரீ கூறினாள். பிறகு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “நான்கு மன்னர்களும் நம்மில் யார் முதலில் நீராடவேண்டியவர் என்பதைக் கூறு வார்கள்” என்று சொல்லி, அவர்கள் சதுர் மகாராஜர்களிடம் போனார்கள். போய், தங்களில் யார் அனோதத்த ஏரியில் முதலில் நீராடத்தகுந்தவர்கள் என்பதைச் செல்லும்படிக் கேட்டார்கள். திருதராட்டிர அரசனும் விரூபாக்க அரசனும், “எங்களால் தீர்ப்புச் சொல்ல முடியாது” என்று சொல்லி விரூளாக்கன், வெசவணன் என்னும் அரசர்களிடம் போய்க் கேட்கும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் சென்று கேட்டபோது. “எங்களால் தீர்ப்புச் சொல்ல முடியாது. நமது பெருமானடிகளிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி, சக்கனிடம் அவர்களை அனுப்பினார்கள். இவர்களுடைய வழக்கைக்கேட்ட சக்கன் (இந்திரன்), “நீங்கள், எனக்குக்கீழ் அரசாட்சி செய்கிற அரசர்களின் மக்கள். இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது” என்று சொல்லி, இந்த யோசனையைக் கூறினார். “காசி நகரத்திலே சுசி பரிவாரன் என்னும் பெயருள்ள வணிகன் இருக்கிறான். அவனுடைய வீட்டில் ஒருவரும் உபயோகப் படுத்தாத ஆசனமும் படுக்கைவும் இருக்கின்றன. உங்களில் யார் அவற்றில் உட்காரவும் படுக்கவும் இடம் பெறுகிறீர்களோ, அவர்களே முதலில் நீராடத்தக்கவர்.” இதைக்கேட்ட உடனே காளகன்னி, நீலநிற ஆடை அணிந்து நீலநிற அணிகலன்களைப் பூண்டு விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத் துக்கு விரைவாக இறங்கி வந்தாள். வந்தவள் காசி நகரத்தில் வணிகன் இருக்கும் மாளிகையில் அவன் படுத்திருக்கும் இடத்தில் நள்ளிரவில் வந்து நீலநிறமான ஒளியை வீசினாள். நீல நிறமான வெளிச்சத்தைக் கண்ட வணிகன் அப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் காள கன்னியைக் கண்டான். அவனுடைய கண்களுக்கு அவள் வெறுப்பாக வும், விகாரமாகவும் காணப்பட்டாள். அப்போது வணிகன் கூறினான்: “கறுப்பாகவும் விகாரமாகவும் காணப்படுகிற நீ யார்? உன் பெயர் என்ன? நீ யார் மகள்?” காளகன்னி கூறினாள்: “நான் விரூபாக்க மகா ராஜனுடைய மகள். என்னுடைய பெயர் காளகன்னி. நான் துர திஷ்டத் தின் தேவதை - உம்முடைய வீட்டில் எனக்கு இடந்தர வேண்டும்.” “உன் இயல்பு என்ன? உன்னுடைய நடத்தை யாது? எத்தகையவர் களிடம் நீ பழகினாய்? என்பதை எனக்குக் கூற வேண்டும்” என்றான் வணிகன். “கபடம், வஞ்சகம், பொறமை, குறும்பு, பேராசை, துரோகம் ஆகிய குணமுடையவர்களிடம் நான் நெருங்கிப் பழகுகிறேன். அத்தகையவர்களை நான் நேசிக்கிறேன். அவர்களை முழுவதும் நாசப் படுத்துவதற்காக அவர்களின் ஊதியத்தைப் பறிக்கிறேன்” என்று கூறினாள். மேலும், காளகன்னி இதைச் சொன்னாள்: “சினத்தையும், பகைமையையும், பழி கூறுவதையும், கலகத்தையும்,அவதூறு பேசு வதையும், கொடுமை செய்வதையும் நான் விரும்புகிறேன். நல்லதை யறியாத. நற்புத்தி கேளாத, நல்ல நண்பர்களை ஒதுக்கித் தள்ளுகிற துர்ப்புத்தியுள்ளவர்களை நேசித்து நட்புக்கொள்கிறேன்.” இதைக்கேட்ட சுசிபரிவாரன் கூறினான்: “காளியே! இவ் விடத்தை விட்டுப் போய்விடு. உனக்கு விருப்பமானது இங்கு ஒன்றும் இல்லை. வேறு நாட்டுக்கு, அயல்தேசத்துக்குப் போய்விடு.” “ஆம் உண்மைதான். எனக்குப் பிடித்தமானது இங்கு ஒன்றும் இல்லைதான்” என்று சொல்லிக் காளகன்னி போய் விட்டாள். காளகன்னி போனபிறகு, சிரீ என்னும் தெய்வ மகள் பொன் னிறமான ஆடை அணிந்து பொன்னிறமான அணிகலன்களைப் பூண்டு வணிகன் இருக்கும் இடத்திற்கு வந்து, பொன்னிறமான ஒளியை வீசி நின்றாள். பொன் நிறமான வெளிச்சத்தைக் கண்டவுடன் போதி சத்துவர் திரும்பிப் பார்த்தார். அங்குச் சிரீ என்பவள் நிற்பதைக் கண்டு, இவ்வாறு கூறினார்: “திவ்விய ஒளியோடு இங்கு நிற்பது யார்? உன் பெயர் என்ன? நீ யார்? நீ யார் மகள்?” “நான் திருதராட்டிரன் என்னும் அரசனுடைய மகள். அதிர்ஷ்டத்திற்கும் செல்வத்திற்கும் நான் தெய்வம். அறிவுடை யவர்களை நான் நேசிக்கிறேன். உம்முடைய வீட்டில் எனக்கு இடந்தர வேண்டும்” என்று சிரீ கூறினாள். அதைக்கேட்ட வணிகன் கூறினான்: “நீர் யாரை நேசிக்கின்றாய்? எப்படிப்பட்டவரை நீ விரும்புகிறாய்? என்பதை எனக்குச் சொல்.” “வெயிலும் காற்றிலும், குளிரிலும் சூட்டிலும், பசியிலும் தாகத்திலும், இரவிலும் பகலும் தமது கடமைகளைச் செய்து முடிக்கிறவர்களை நான் விரும்பி நேசிக்கிறேன்.” “பொறுமையும் நட்பும், நேர்மையும் தாராளமும், வஞ்சக மின்மையும் நாணயமுடைமையும், முயற்சியும் வீரமும், அடக்க மும் மேன்மையும் உள்ளவர்களிடத்தில் பழகுகிறேன்.” “நண்பரையும் நண்பர் அல்லாதவரையும், நல்லவரையும் கெட்டவரையும், உதவி செய்கிறவரையும் உதவி செய்யாத வரையும் அன்பாக நேசித்துக் கொடுஞ்சொல் கூறாதவரை நான் நேசிக்கிறேன்.” “ஆனால், என் அன்பைப் பெற்ற யாரேனும் கர்வமும் அகம் பாவமும் உள்ள மூடராக இருந்தால், அப்படிப்பட்ட குறும்பர்களின் அழுக்குக் கறை என்மேல் படாதபடி அவர்களை விட்டு அகன்று போவேன்.” “அவரவருடைய செல்வமும் வறுமையும் அவரவர்களாலே உண்டாக்கப்படுவன; மற்றவர்களால் உண்டாக்கப்படுவன அல்ல. செல்வமும் வறுமையும் ஒருவர் மற்றவர்களுக்காக உண்டாக்க முடியாது.” இவ்வாறு சிரீதேவி போதிசத்துவருக்கு விடை யளித்தாள். போதிசத்துவர் இந்த விடையைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்தார். “உனக்குத் தகுதியான இருக்கையும், படுக்கையும் இதோ இருக்கின்றன. நீ அங்கு உட்காரவும் படுக்கவும் செய்ய லாம்” என்று கூறினார். சிரீ அங்குத் தங்கியிருந்தாள். அடுத்தநாள் காலையில், சதுர்மகாராஜிகர் இருக்கும் விண்ணுலகத்துக்குப் போய், அனோதத்த ஏரியிலே முதல் நீராடினாள். சிரீமகள் படுத்த படுக்கை சிரீசையம் என்று பெயர்பெற்றது. அதிருந்து சிரீசயனம் என்னும் சொல் உண்டாகி இப்போதும் வழங்கப் படுகிறது. “அக்காலத்தில் சிரீமகளாக இருந்தவள் உப்பலவன்னை. சுசிபரிவாரன் என்னும் வணிகனாக இருந்தவன் நானே” என்று பகவன் புத்தர் பிறப்பு ஒப்புமை கூறினார். 5. அகித்த ஜாதகம் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, சாவித்தி நகரத்தில் இருந்த ஒரு கொடையாளியைப் பற்றிக் இந்தக் கதையைக் கூறினார். இந்தக் கொடையாளி பகவன் புத்தரை ஏழுநாட்கள் தனது இல்லத்தில் அழைத்து அவருக்கும் அவருடன் சென்றவர் எல்லோருக்கும் தான தருமங்களைச் செய்தார். கடைசி நாள், பிக்ஷுக்கள் எல்லோருக்கும் அவர்களுக்கு இன்றியமையாமல் வேண்டிய பொருள்களைத் தானம் செய்தான். அப்போது பகவர் அவனுக்கு நன்றி கூறினார். “சாவகரே! நீ செய்த ஈகை பெரியது. பெரிதும் கடினமான செயலை நீர் செய்தீர். தானங் கொடுப்பது பழைய காலத்து மக்களின் பழைய வழக்கம். உலகத்தில் இல்லறத்தில் வாழ்ந்தாலும், துறந்து துறவறத்தில் இருந்தாலும் தானம் கொடுக்கவேண்டும். முற்காலத்தில் இருந்த அறிஞர்கள், உலக வாழ்க்கையை வெறுத்துக் காட்டிலே சென்று இருந்த போதுங்கூட, உப்பும் மிளகும் இல்லாமல் வேகவைத்த காரை இலை உணவைத் தம்மை வந்து இரந்தவர்களுக்குக் கொடுத்துத் தாங்கள் பட்டினி கிடந்து மகிழ்ச்சி யோடு இருந்தார்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அவர், “பகவரே! பிக்குகளுக்கு வேண்டிய பொருள்களைத் தானம் செய்வது என்பது தெளிவாக விளங்குகிறது. ஆனால், தாங்கள் சொல்லிய செய்தி விளங்க வில்லை” என்றார். அப்போது, பகவன் புத்தர் இவர் வேண்டுகோளின் படி பழைய கதையைச் சொன்னார்: பிரமதத்த அரசன் வாரணாசி நாட்டை அரசாண்ட முன் னொரு காலத்தில் செல்வம் படைத்த ஒரு பிராமணக் குடும்பத் திலே போதி சத்துவர் பிறந்தார். அந்தக் குடும்பத்தின் செல்வம் எட்டுக் கோடிப் பொன் உடையது. அக் குடும்பத்தில் பிறந்த போதிசத்துவருக்கு அகித்தி என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தை வளர்ந்து நடக்கும் பருவம் அடைந்தபோது, இக் குழந் தைக்குத் தங்கையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப் பெண் குழந்தைக்கு யசவதி என்று பெயர் சூட்டினார்கள். போதிசத்துவர் காசிக்குப் போய் பதினாறு வயதளவும் கற்கவேண்டிய கல்விகளை யெல்லாம் படித்துத் தேர்ந்து தன் இல்லத்திற்குத் திரும்பி வந்தார். சில காலத்துக்குப் பின்னர், அவருடைய தாயும் தந்தையும் காலமானார்கள். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமை களையெல்லாம் செய்தபிறகு, தமது குடும்பத்தின் செல்வத்தைப் பற்றி ஆராய்ந்தார். இன்னார் இன்னார் இவ்வளவு செல்வத்தைத் திரட்டி வைத்து இறந்தார்கள். அவர்களுக்கு பிறகு இன்னார் இன்னார் இவ்வளவு செல்வத்தைத் தேடி வைத்துப் போனார்கள் என்று கணக்குப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்தபோது அவர் மனத்தில் குழப்பம் உண்டா யிற்று. அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: ‘செல்வம் நாம் காணும்படி இங்கே இருக்கிறது. ஆனால், இதைச்சேர்த்து வைத்தவர்கள் காணப்பட வில்லை. அவர்கள் எல்லோரும் செல்வத்தை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால், நான் இறந்து போகும் போது என்னுடன் இவற்றை எடுத்துக்கொண்டு போவேன்.’ இவ்வாறு எண்ணிய அவர் தமது தங்கையை அழைத்து, “இந்தச் செல்வத்தை எல்லாம் நீ பொறுப்பேற்றுக் கொள்க” என்று கூறினார். “அண்ணா! உங்கள் கருத்து என்ன? என்று கேட்டாள். “துறவுகொள்ளப் போகிறேன்” என்றார் தமையன். “ஐயோ! நீங்கள் வாயால் துப்பிவிட்டதை நான் என்தலைமேல் வைத்துக் கொள்ளமாட்டேன். இவையெல்லாம் எனக்கும் தேவை யில்லை. நானும் துறவு கொள்ளுவேன்” என்றாள்தங்கை. ஆகவே அரசனுக்குத் தெரிவித்து அவருடைய அனுமதி பெற்று, நகரமெங்கும் முரசு அறைவித்தார். “காசு வேண்டியவர்கள் அகித்திப் பிரபுவின் வீட்டுக்குப் போய்ப் பெற்றுக் கொள்ளலாம்” என்று நகரம் எங்கும் முரசறைவிக்கப்பட்டது. ஏழு நாட்களாக அவர் தமது செல்வத்தை வந்தவர்களுக்கெல்லாம் வாரிவாரி இறைத்தார். அப் பொழுதும் செல்வம் குறையவில்லை. பிறகு அவர் தனது மாளிகையின் கதவுகளை எல்லாம் திறந்துவிட்டு, “வேண்டியவர்கள் வந்து பொருளைக் கொண்டுபோங்கள்” என்று கூறினார். இவ்வாறு தமது செல்வத்தை யெல்லாம் கொடுத்துவிட்டு, சுற்றத்தார்கள் எல்லோரும் சூழ்ந்து புலம்ப, இவரும் இவர் தங்தையும் துறவுபூண்டு வெளியேறினார்கள். இவர்கள் கடந்துசென்ற நகரத்தின் வாயில் அகித்தி வாயில் என்றும், இவர்கள் ஆற்றைக் கடந்துசென்ற துறை அகித்தித் துறை என்றும் பெயர்பெற்றன. இவர், காத தூரம் சென்று ஒரு நல்ல இடத்தில் குடிசை அமைத்து அதில் இவர் தமது தங்கையுடன் துறவியாகத் தங்கி யிருந்தார். இவர் துறவு பூண்டு வந்தபிறகு மற்றவர்களும், கிராமங்களிருந்தும், நகரத் திருந்தும் வந்து துறவு பூண்டு இவருடன் தங்கினார்கள். இவ்வாறு துறவிகளின் கூட்டம் பெருகியது. மதிப்பும் மேன்மையும் உண்டாயிற்று. அப்போது போதி சத்துவர் தமக்குள் எண்ணினார்: ‘இங்கே மதிப்பும் மேன்மையும் கிடைக்கின்றன. நிறைய உணவும் கிடைக்கின்றது. நம்மைச் சுற்றிலும் பெருங்கூட்டம் சூழ்ந்திருக்கிறது. பெருமையும் முதன்மையும் தரப் படுகிறது. இவையெல்லாம் எனக்கு ஏன்? தன்னந்தனியே இருக்க விரும்புகிறேன். ‘இவ்வாறு எண்ணிய இவர் ஒருநாள் யாரும் அறியாமல், தங்கைக்கும் சொல்லாமல் தனியே புறப்பட்டுப் போய் விட்டார். போனவர் நெடுந்தூரம் கடந்து கடைசியாக தமிள இராச்சியத்திலே1 கவீர பட்டணத்துக்கு அருகிலே ஒரு சோலையிலே வந்து தங்கினார். தங்கி, யோகத்தில் அமர்ந்து ஆனந்த மோன நிலையையும் தெய்வீகமான சக்தியையும் பெற்றார். இவ்விடத்திலேயும் மக்கள் கூட்டம் திரளாக வந்து, அவரைப் போற்றி வணங்கியும், அவருக்கு உணவு கொடுத்தும் வழிபட்டனர். இவற்றை இவர் விரும்பாமல், தன்னந் தனியே இருக்க எண்ணி, வானத்தில் எழுந்து நாகத்தீவுக்கு2 அருகில் உள்ள 3காரைத்தீவுக்குச் சென்றார். அக்காலத்திலே காரைத் தீவுக்கு அஹிதீபம் அதாவது பாம்புத் தீவு என்று பெயர். அங்கே ஒரு காரை மரத்தின் அடி யிலே ஒரு குடிசை அமைத்து அதில் போதிசத்துவர் தங்கியிருந் தார். இவர் இங்குத் தங்கியிருப்பதை ஒருவரும் அறியவில்லை. இவருடைய தங்கையார் தமயனைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்து கடைசியில் தமிள இராச்சியத்திற்கு வந்தார். வந்தும் தமய னாரைக் காணவில்லை. இவர் தங்கியிருந்த அதே இடத்தில் தங்கினார். ஆனால், அவர் மோன நிலையையடைந்தும் தெய்வீக சக்தியைப் பெற வில்லை. காரைத்தீவில் தங்கிய போதிசத்துவர் வேறு எங்கேயும் போகாமல் அவ்விடத்திலேயே தங்கி, காரைப்பழம் பழுக்கிற காலத்தில் அப்பழத்தை உணவாகக் கொண்டும், அம்மரம் தழைக்கின்ற காலத்தில் தழையை நீரில் வேகவைத்து உட்கொண்டும் காலங்கழித்தார்.இவ்வாறு இவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, இவருடைய தவத்தின் பெரு மையினால், சக்கனுடைய (இந்திரனுடைய) பளிங்குச் சிம்மானம் சூடு கொண்டது. “என் பதவியிலிருந்து என்னை இறக்குபவர் யார்?” என்று எண்ணிச் சக்கன் ஊன்றிப் பார்த்தபோது, சக்கன் போதிசத்துவர் தவம் செய்வதை அறிந்தான். “ஏன் அந்தத் துறவி தவம் செய்கிறான்? சக்க (இந்திர) பதவிக்காகவா அல்லது வேறு காரணத்துக்காகவா? இதை அறிய வேண்டும். காரைக்கீரையை நீரில் வேகவைத்துத் தின்று மிகுந்த துன்ப மான நிலையில் வசிக்கிறான். இவன் சக்க பதவியை விரும்பினால் இவனுடைய வெந்த கீரையை எனக்குக் கொடுப்பான். இல்லையானால், தரமாட்டான்” என்று தனக்குள் சக்கன் எண்ணிக்கொண்டு பார்ப்பனன் போல உருமாறிப் போதிசத்துவரிடம் சென்றான். போதிசத்துவர் காரைக்கீரையைச் சமைத்து, ஆறினபிறகு அருந்தலாம் என்று எண்ணிக்கொண்டு குடிசைக்கு வெளியே வந்து உட்கார்ந்தார். அவ்வமயம் சக்கன் அவர் எதிரிலே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு நின்றான். போதிசத்துவர் பிச்சைக் காரனைக் கண்டு, மனத்தில் மகிழ்ச்சியடைந்தார். ‘மகிழ்ச்சி! பிச்சைக்காரன் வருகிறான். இன்று ஒருவனுக்கு உணவு கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது’ என்று நினைத்தார். உள்ளே சென்று தன் உணவாகிய கீரையைப் பாத்திரத்தில் கொண்டுவந்து, சக்கனிடம் சொன்னார்: “இதுதான் என்னிடம் உள்ள உணவு இதைப் பெற்றுக்கொள்க” என்று கூறித் தனக்கு வைத்துக் கொள்ளாமல் அதைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட பார்ப்பனன், சிறிதுதூரம் சென்று மறைந்துவிட்டான். போதிசத்துவர் அன்று வேறு இலைக்கறி சமைக்கவில்லை. தாம் ஒருவனுக்குப் பிச்சை கொடுத்த மகிழ்ச்சியினால் அன்று உணவு கொள்ளவில்லை. மறுநாளும் அவர் காரைக்கீரையைச் சமைத்து வைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தார். சக்கன் முன் போலவே பார்ப்பனன் உருவத்தில் வந்து பிச்சைக் கேட்டான். இன்றும் போதி சத்துவர் தமக்கென இருந்த உணவு முழுவதையும் அவனுக்குக் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் இருந்தார். அடுத்த நாளும் அவர் பிச்சை கொடுத்தார். ‘அற்பமான கீரையாக இருந்தாலும், அதுவும் தானம் செய்து புண்ணியம் பெற உதவுகிறது’ என்று நினைத்துத் தமக்குள் மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறு நிறைமனம் அடைந்து மகிழ்ச்சிகொண்ட போதிசத்துவர் மூன்று நாட்கள் உணவு கொள்ளாததால் தளர்ச்சியோடு உட்கார்ந்தார். அப்போது சக்கன் தனக்குள் எண்ணினான்: ‘இந்தப் பிராமணன் மூன்று நாளாகப் பட்டினி கிடந்தும், பசியுடன் களைப்படைந்திருந்தும், தன் உணவைத் தானம் செய்து மகிழ்ச்சியுடனும், நிறைமனத்துடனும் இருக்கிறான். இவனுடைய கருத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அவனைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்’ என்று எண்ணி, மாலை நேரம் ஆனவுடன், சக்கன் இளமையும் ஒளியும் பொருந்திய தெய்வ உருவத்துடன் போதிசத்துவரின் முன்பு தோன்றினான். தோன்றி, “ஓ முனிவரே! உப்புநீர் சூழ்ந்த சூடான காற்று வீசுகிற இந்தக் காட்டிலே இருந்து நீர் எதற்காகத் தவம் செய்கிறீர்?” என்று கேட்டான். இதைக்கேட்ட போதிசத்துவர், இவர் சக்கன் என்பதை அறிந்து இவ்வாறு விடை கூறினார்: “பிறப்பு, மூப்பு, சாவு இவை எல்லாம் துன்பம் தருவன. ஆகையால், சக்கவாசவ! அமைதியோடு இங்கு இருக்கிறேன்.” இவ்வாறு சொல்லக் கேட்ட சக்கன் உளம் மகிழ்ந்து தனக்குள் எண்ணினான்: ‘இவன் எந்தப் பிறப்பையும் விரும்பாதவர். நிர்வாண மோக்ஷத்துக்காக இவர் காட்டில் வாழ்கிறார். இவருக்கு ஏதேனும் வரம் தரவேண்டும்’ என்று நினைத்து, “முனிவரே! நன்கு சொன்னீர். உமக்கு வேண்டிய ஏதேனும் வரம் ஒன்றைக் கேளும்; நான் தருகிறேன்” என்று கூறினார். “மனைவி, மக்கள், செல்வம், பொன், பொருள் இவை எல்லாம் மன அமைதியைத் தருவதில்லை. தேவர் தலைவ! இவைகள் ஒன்றையும் என் மனம் விரும்பவில்லை.” “நன்று நன்று. முனிவரே! இவை தவிர உமக்கு வேண்டிய வேறு வரத்தைக் கேளும், தருகிறேன்” என்றான் சக்கன். “நில புலன்களும், பொன்னும் பொருளும், ஆட்களும், அடி மைகளும், ஆடுமாடுகளும் இவை எல்லாம் நிலையற்றவை. இவை களை எல்லாம் என் மனம் விரும்பாமல் இருப்பதாக” என்று கூறினார் அகத்திமுனிவர். “இவையெல்லாம் தேவையில்லாவிட்டால் வேறு எதையேனும் கேளும்; தருகிறேன்” என்று சொன்னான் சக்கன். “அப்படியானால், இந்த வரம் தந்தருளும். மூடர்களைப் பார்க்கவும், மூடர்களைப் பற்றிக் கேட்கவும், அவர்களோடு பேசவும், அவர்களுடன் பழகவும் நேரிடாதபடி எனக்கு வரம் தந்தருள வேண்டும்” என்று கேட்டார் அகித்திமுனிவர். “மூடர்கள் உமக்கு என்ன தீமை செய்தார்கள்? அவர்களின் உறவு வேண்டாம் என்று ஏன் கேட்கிறீர்?” “மூடர்கள் தீமைகளைச் செய்கிறார்கள். தீமைகளைச் செய்து, தாங்கமுடியாத மனச்சுமைகளை ஏற்றிக் கொள்கிறார்கள். நற்செயல்கள் அவர்களுக்குத் தீமையாகத் தெரிகின்றன. நன்மைகளைக் கூறினால் அவர்கள் வெறுப்படைகிறார்கள். நன்நெறியை அறியமாட்டார்கள். ஆகவே அவர்கள் உறவு வேண்டியதில்லை.” “நன்று நன்று. முனிவரே! மூடர் உறவு இல்லாத வரத்தைத் தந்தேன். வேறு ஏதேனும் வரங் கேட்கலாம்.” “அறிஞர்களைக் காணவும், அறிஞர்களின் சொற்களைக் கேட்கவும் அவரோடு பழகவும், அவரோடு வசிக்கவும் எனக்கு வரம் தந்தருள வேண்டுகிறேன்.” “முனிவரே! அறிஞர்கள் உறவு வேண்டுகிறீர். அவர்கள் உமக்கு என்ன நன்மை செய்தார்கள்?” “அறிஞர்கள் நன்மையையே செய்கிறார்கள். அவர்கள் தீமை செய்து பாவத்தைச் சுமக்கிறதில்லை. நன்மை செய்வதையே அவர்கள் நாடுகிறார்கள். நல்ல வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். நல்ல வழியிலே நடக்கிறார்கள். ஆகவே அறிஞர் களான நல்லவர் உறவை வேண்டுகிறேன்” என்று கூறினார் அகித்தி முனிவர். “நன்று நன்று. அறிஞர்களான நல்லவர் உறவு கிடைக்கும்படி வரம் தந்தேன். வேறு வரத்தையும் கேட்கலாம்” என்றான் சக்கன். “ஆசை என்னும் தீய எண்ணம் என்னிடம் உண்டாகாமலிருக்க வேண்டும். தூய ஞானிகள் வந்து, என் அறிவுக்கு உணவாக ஞானத்தைப் புகட்டவேண்டும். நான் மற்றவர்க்குத் தானம் செய்ய வேண்டும். செய்த தானத்தைப்பற்றி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இந்த வரத்தை எனக்குத் தந்தருளவேண்டும்.” “நீர் வேண்டியதை வேண்டியவாறே தந்தேன். வேறு ஏதேனும் வரம் கேளுங்கள்.” “சக்கனே! தாங்கள் என் முன்பு இனி வராமலிருக்க வரம் வேண்டுகிறேன்.” “நல்லவர்களாக வாழ்கிற ஆண்களும் பெண்களும் என்னைக் காண விரும்புகிறார்கள். நீர் மட்டும் என்னை வரவேண்டாமென்று கூறுகிறீர். என்னைப் பார்ப்பதனால் உமக்கு என்ன ஆபத்து நேரிடும்?” “தங்களுடைய தெய்வீகமும் மேன்மையும் புகழும் உயர்ந் தவை. தங்களை நான் காணும்போது இந்தச் சிறப்புகள் என் மனத்தை மாற்றி, அவற்றைப் பெறுவதற்கு என் மனத்தில் ஆசையைத் தூண்டவும் கூடும். இதுவே நான் தங்களைப் பார்ப்பதனால் உண்டாகும் ஆபத்து” என்று கூறினார் அகித்தி முனிவர். சக்கன், “நல்லது முனிவரே! இனி நான் தங்களிடம் வரமாட்டேன்” என்று கூறி, அகித்தி முனிவரிடம் விடைபெற்றுப் போய் விட்டார். அகித்தி முனிவர், தாம் வாழ வேண்டிய காலம் வரையில் வாழ்ந்து யோகத்தின் மூலம் மனத்தைப் பண்படுத்திப் பின்னர் பிரமலோகத்தில் பிறந்தார். இந்தக் கதையைக் கூறியபின் பகவன் புத்தர் “அந்தக் காலத்தில் அனுருத்தர் சக்கனாகவும், நான் அகித்தி முனிவராகவும் இருந்தோம்” என்று பிறப்பு ஒற்றுமையைக் கூறினார். 6. அசம்பதான ஜாதகம் பகவன் புத்தர் வெளுவன ஆராமத்தில் இருந்தபோது தேவ தத்தனைப்பற்றி இக்கதை சொல்லப்பட்டது. தேவதத்தனின் நன்றியற்ற தன்மையையும் பகவருடன் ஒன்றுபடாததையும் பற்றிப் பிக்குகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, பகவன் புத்தர் அங்கு வந்தவர் இவர்கள் பேசுகிற பொருளைப் பற்றி அறிந்து, “தேவதத்தன் இப்போது மட்டுமல்ல, முற்பிறப்பிலும் நன்றியற்ற வனாக இருந்தான்” என்று கூறினார். பிக்குகள் அதை விளக்கிக் கூறும்படி கேட்டபோது, புத்தர் பெருமான் இந்தக் கதையைச் சொன்னார்: முற்காலத்திலே இராஜகிருக நகரத்திலிருந்து மகத நாட்டை அரசர்கள் அரசாண்ட காலத்திலே, போதிசத்துவர் கோடீசுவரனாகப் பிறந்து நிதியமைச்சராக இருந்தார். எண்பதுகோடிப் பொன் உடைய அவர் கோடீசுவரன் என்னும் பெயர்பெற்றுச் சிறப்பாக வாழ்ந்திருந்தார். அதே காலத்தில் வாரணாசி நகரத்திலும் பிலியன் என்னும் பெயருள்ள நிதியமைச்சர் கோடீசுவரன் என்னும் பெயரோடு வாழ்ந்திருந்தார். கோடீசுவரர்களான போதிசத்து வரும் பிலியனும் நண்பர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும்போது வாரணாசியில் இருந்த பிலியன், தன்னுடைய பொருளையெல்லாம் இழந்து ஏழையாகி வறுமையடைந் தான். வறுமை நிலையில் அவனுக்கு உதவி செய்வோர் ஒருவரும் இல்லை. ஆகவே, பிலியன் வாரணாசியை விட்டுத் தன் மனைவியுடன் புறப்பட்டுப் கால்நடையாக நடந்துகடைசியில் இராஜ கிருக நகரத்திற்கு வந்தான். வந்து போதிசத்துவராகிய தனது கோடீசுவர நண்பனைக் கண்டான். போதிசத்துவர் பிலியனுடைய நிலைமையையறிந்து, அவனை வரவேற்று அன்புடன் உபசரித்தார். பிறகு, பிலியன் வந்த காரியத்தை வினவினார்: “நான் என் செல்வங்களை எல்லாம் இழந்து வறுமையடைந்தேன். ஏழையாகிய நான் தங்களிடம் உதவிபெற வந்தேன்” என்று சொன்னான் பிலியன். “அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் உதவி செய்வேன்” என்று போதிசத்துவர் கூறி, தனது பண்டாரத்தைத் திறந்து, தமது செல்வத்தின் செம்பாதியாகிய நாற்பது கோடி பொன்னை யெடுத்துப் பிலியனுக்குக் கொடுத்தார். மேலும், தமது ஆடுமாடுகளையும் நிலங்களையும் அடிமை ஆட்களையும் செம்பாதியாகப் பகிர்ந்து தன் நண்பனுக்குக் கொடுத்தார். இந்தச் செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பிலியன் தனது ஊராகிய வாரணாசிக்குச் சென்று முன்போலவே சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான். சிலகாலஞ் சென்றது. போதிசத்துவராகிய கோடீசுவரருக்குக் கெட்டகாலம் ஏற்பட்டு அவருடைய செல்வம் எல்லாம் போய் விட்டன. நிலபுலங்களும், ஆடுமாடுகளும் போய்விட்டன. ஏழ்மை நிலை யடைந்து வறுமையினால் துன்புற்றார். வறுமைக்காலத்தில் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. கடைசியில், முன்பு தான் பிலியனுக்கு உதவிசெய்ததை நினைத்து அந்தக் கோடீசுவரனிடத்திற்குப் போக எண்ணினார். தமது மனைவியை அழைத்துக்கொண்டு, கால்நடை யாகவே வாரணாசிக்குப் போனார். நகரத்தின் எல்லையை அடைந்ததும், தமது மனைவியை ஒரு நிழலான இடத்தில் விட்டு, “நீ நகரத்துக்கு வரவேண்டாம். நான்போய், நண்பனுடைய வண்டியைக் கொண்டுவந்து உன்னை அழைத்துக் கொண்டுபோகிறேன்” என்று சொல்லி, தான் மட்டும் நகரத்துக்குள் சென்றார். சென்று பிலியனுடைய மாளிகையை அடைந்து, இராஜகிருக நகரத்திருந்து கோடீசுவரன் வந்திருப்பதாகச் சொல்லும்படி, வாயிலில் இருந்த ஆளினிடம் சொல்லியனுப்பினார். “அவரை உள்ளே அழைத்துவா” என்றான் பிலியன். போதி சத்துவர் உள்ளே போனார். இவருடைய ஏழ்மை நிலையைக் கண்டதும், பிலியன் இவரை மதிக்காமலும், எழுந்துவந்து வரவேற்காமலும், நல்வரவு கூறாமலும், “இங்கு ஏன் வந்தீர்?” என்று கேட்டான். “தங்களைக் காணவந்தேன்” என்று விடையளித்தார் போதிசத்துவர். “எங்கே தங்கியிருக்கிறீர்?” “இதுவரையில் எந்த இடமும் இல்லை. மனைவியை ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டு உம்மிடம் வந்தேன்.” “இங்கு இடம் இல்லை. அரைப்படி அரிசி தருகிறேன். கொண்டுபோய்ச் சமைத்துச் சாப்பிட்ட பிறகு திரும்பிப் போய்விடுங்கள். மறுபடியும் இங்கு வரவேண்டாம்” என்று சொல்லி, தன் பணியாளனிடம் அரைப்படி அரிசி அளந்து கொண்டுவந்து கொடுக்கும்படி கூறினான். அன்றுதான் ஆயிரம் வண்டி அரிசி மூட்டைகள் அவனுடைய களஞ்சியத்தில் வந்து இறங்கின. முன்பு நாற்பதுகோடி பொன்னையும், நில புலன்களையும், ஆடுமாடுகளையும், அடிமைகளையும் தாராள மாக வழங்கிய போதிசத்துவருக்கு, இன்று இவன் அரைப்படி அரிசியைப் பிச்சைக்காரனுக்குப் பிச்சை கொடுப்பதுபோலக் கொடுக்கிறான்! பணியாளன் அரிசியைக் கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொள்வதா, வேண்டாமா என்று போதிசத்துவர் தமக்குள் எண்ணினார். இந்த நன்றிகெட்டவன் என்னுடைய வறுமை காரணமாக நட்பையும் மறந்துவிட்டான். இந்த அரிசியை வேண்டாம் என்று மறுத்தால், நானும் இவனைப் போல் நட்பை மறந்தவனாவேன் என்று எண்ணியவராய், தமது துணியின் ஒரு மூலையில் அரிசியை முடிந்துகொண்டு, அதை மனைவியிடம் கொண்டுவந்தார். “என்ன கொடுத்தார்?” என்று கேட்டார் மனைவியார். “அரைப் படி அரிசியைக் கொடுத்து என்னைக் கைகழுவிவிட்டான்” என்று கூறினார் போதிசத்துவர். “ஏன் அதை வாங்கி வந்தீர்கள், நாற்பது கோடி பொன்னுக்கு ஈடா இது?” என்று சினங்கொண்டு உரத்துப் பேசினாள். “நண்பனின் கஞ்சத்தனம் மனத்தைத் துன்புறுத்துகிறது. ஆனால் நட்பு போகக்கூடாது என்பதற்காக வாங்கிக்கொண்டேன். நீ சினம் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். அந்த அம்மாள், இறைந்து பேசிப் பிலிய னுடைய கருமித்தனத்தை இகழ்ந்து பேசினாள். அவ்வமயம் வயல் வேலை செய்யும் ஆள் ஒருவன் அவ் வழியாகப் போனான். இந்த அம்மாள் இறைந்து பேசுவதைக் கேட்டு அந்த ஆள் அருகில் வந்தான். அவன், முன்பு போதிசத்துவரிடம் அடிமை ஆளாக வயலில் வேலை செய்தவன். பிலியனுக்குப் போதிசத்துவர் கொடுத்த அடிமை ஆட்களில் ஒருவனாக வாரணாசிக்கு வந்தவன். தனது பழைய எஜமானியம்மாளின் குரலைக்கேட்டு அங்கு வந்து இவர்களைக் கண்டான். கண்டு இவர்கள் காலில் விழுந்து வணங்கி, இவர்களின் இப் போதைய நிலைமையைக்கண்டு மனம் வருந்தி அழுதான். போதி சத்துவர், தாம் செல்வத்தை இழந்து வறுமையை யடைந் ததையும், வாரணாசிக்கு வந்து பிலியனைக் கண்டதையும், அவன் அரைப்படி அரிசி கொடுத்து அனுப்பிவிட்டதையும் அந்த ஆளிடம் கூறினார். அவன் இவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், இவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்தான். பிறகு, அந்த ஆள் மற்ற ஆட்களுக்குப் பழைய எஜமானர் வந்திருப்பதையும், அவர் வறுமையடைந்து வாரணாசிக்கு வந்ததையும், பிலியன் பிரபு அவரை நடத்திய விதத்தையும் தெரிவித்தான். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒருநாள் அரசர் பெருமானுடைய அரண் மனைக்குப் போய், ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் இட்டார்கள். அரசர் பெருமான் அவர் களை அழைத்து, அவர்கள் முறையீட்டைக் கேட்டார். ஆட்கள் செய்தியைக் கூறினார்கள். அரசர் பெருமான் இரண்டு பேரையும் அழைப்பித்து விசாரணை செய்தார். “நீர் நாற்பதுகோடி பொன்னைப் பிலியனுக்குக் கொடுத்து உதவியது உண்மைதானா?” என்று அரசர் பெருமான் கேட்டார். “ஆம், பெருமானடிகளே! பிலியன் வறுமையடைந்து என்னிடம் வந்தபோது நாற்பதுகோடி பொன்னைக் கொடுத்தது உண்மைதான். அது மட்டுமல்ல, என்னிடமிருந்த நிலபுலங்கள், ஆடுமாடுகள், அடிமை யாட்கள் இவைகள் எல்லாவற்றிலும் செம்பாதி பங்கிட்டுக் கொடுத்தேன்.” “இவர் கூறுவது உண்மைதானா?” என்று பிலியனை நோக்கி வினவினார் அரசர் பெருமான். “ஆம். உண்மைதான் பெருமானடிகளே!” என்று விடை யளித்தான் பிலியன். “உமக்கு இவ்வளவு பொருளைக் கொடுத்து உதவிய இவ் வள்ளல் வறுமையடைந்து உம்மிடம் வந்தபோது என்ன கொடுத்தீர்?” என்று அரசர் பெருமான் கேட்டார். பிலியன் வாய்பேசாமல் வாளா இருந்தான். “அரைப்படி அரிசியை அவருக்குக் கொடுத்தீரா?” பிலியன் இக் கேள்விக்கு விடைகூறாமல் மௌனமாக இருந்தான். அரசர் பெருமான் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, பிலியனுடைய முழுச் செல்வத்தையும் போதிசத்துவருக்குக் கொடுக்கும்படி தீர்ப்புச் செய்தார். இத்தீர்ப்பை நிறைவேற்றி வைக்கும்படி அமைச்சர்களுக்கு ஆணை யிட்டார். அப்போது போதிசத்துவர் கூறினார்: “பெருமானே! பிலியனுடைய செல்வம் முழுவதும் எனக்கு வேண்டாம். நான் அவ ருக்குக் கொடுத்த நாற்பது கோடிப் பொன்னையும், அடிமை களையும் கொடுத்தால் போதும்.”அரசரும் அவ்வாறே ஆணை கொடுத்தார். போதிசத்துவர், தமது செல்வத்தையும், அடிமை களையும் பெற்றுக்கொண்டு இராஜ கிருக நகரம் வந்து சிறப்பாக வாழ்ந்தார். தான தருமங்களையும் செய்து கொண்டிருந்தார். இக்கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர், “அப்பிறப்பில் தேவதத்தன் பிலியனாகவும், ததாகதர் போதிசத்துவராகவும் இருந்தோம்” என்று ஒப்புமை கூறினார். 7. சிவி ஜாதகம் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, இணையற்ற கொடை’ என்பது பற்றி இந்தக் கதையைக் கூறினார். (இந்தச் சந்தர்ப்பம் கோவீர ஜாதகத்திலும் கூறப்பட் டுள்ளது.) அரசன் ஏழாம் நாள் பிக்குச் சங்கத்துக்கு வேண்டிய வற்றையெல்லாம் கொடுத்து வாழ்த்துரை கூறும்படிக் கேட்டான். ஆனால், பகவர் வாழ்த்துரை கூறாமலே போய் விட்டார். அடுத்த நாள் காலையில் அரசர் உணவு அருந்தியபின் விகாரைக்குச் சென்று பகவரைத் தொழுது, வாழ்த்துக் கூறாததற்குக் காரணம் கேட்டார். பகவன், மக்கள் தூய மனத்துடன் இல்லாதது பற்றி வாழ்த்துரை வழங்கவில்லை என்று காரணங்காட்டிய பிறகு, பேராசைக் காரர்கள் மறுமையில் நல்லுலகம் அடைய மாட்டார்கள் என்பது பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைக் கேட்ட அரசன் பெரிதும் மகிழ்ச்சி யடைந்து ஆயிரம் பொன் விலை யுள்ள சிவி அரச ஆடையொன்றை நன்கொடை கொடுத்து அரண் மனைக்குச் சென்றான். அடுத்தநாள் பிக்குகள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “அரசர் பெருமான் இணையற்ற நன்கொடை வழங்கியதோடு அல்லாமல், இன்றும் தசபலரின் அறவுரைகளைக் கேட்டு மகிழ்ந்து ஆயிரம் பொன் மதிப்புள்ள சிவி ஆடையையும் ஈந்தார். தானம் செய்வதில் அரசர் மனம் சப்பதில்லை” என்று புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவ்விடம் வந்த பகவர், அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்குச்சொன்னார்: “பிக்குகளே! புறப்பொருள்க ளாகிய பொன்னையும் பொருளையும் தானம் வழங்குவது எளிதுதான். பண்டைக் காலத்திலே பரதகண்டம் முழுவதும் புகழ் பரப்பி நாள் தோறும் ஆறு கோடி பொன்தானம் வழங்கிய கொடை வள்ளல், புறப் பொருள்களைக் கொடுப்பதனால் மனநிறைவு அடையாமல், அக உறுப் பாகிய தனது கண்ணையும் பிடுங்கித் தானமாக வழங்கினார்” என்று கூறி இக்கதையைச் சொன்னார்: முற்காலத்திலே சிவி என்னும் பெயருள்ள அரசன், அரிட்டபுரம் என்னும் நகரத்திலிருந்து சிவி நாட்டை அரசாண்டு வந்தான். அந்த அரசனுக்குப் போதிசத்துவர் மகனாகப் பிறந்தார். அந்தக் குழந்தைக்கும் சிவி என்றே பெயர் சூட்டினார்கள். குழந்தை வளர்ந்து கல்வி கற்கும் வயதடைந்தபோது, தக்கசீல பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வியையும் கலைகளையும் கற்றுத் தேர்ந்து மீண்டும் தனது நாடு வந்தார். வந்து தந்தையாகிய அரசனுக்குத் தமது கல்வித் திறமைகளை எல்லாம் புலப்படுத்தினார். அரசனும் மகிழ்ச்சிகொண்டு, அவருக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். சிலகாலஞ் சென்றபிறகு, அரசன் காலஞ் சென்றான். அப்போது இளவரசராகிய சிவி அரசாட்சியை ஏற்று, தீமைகள் வராமல் தடுத்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து நாட்டைச் செம்மையாக அரசாண்டார். நகரத்தின் நான்கு வாயில்களுக்கு அருகிலும், நகரத்தின் நடுவிலும், அரண்மனைக்கு அருகிலும் ஒவ்வொரு அறச்சாலையை அமைத்து, அச்சாலைகளில் நாள் தோறும் ஆறு இலக்ஷம் பொன்னை ஏழை எளியவர்களுக்குத் தானம் வழங்கினார். வெள்ளுவா நாட்களில் அவர் அறச்சாலை களுக்குச் சென்று தானம் வழங்குவதை நேரில் கண்டுவருவார். முழு நிலா நாளாகிய வெள்ளுவா நாளிலே, ஒரு நாள் காலையில் வெண்கொற்றக் குடையின்கீழே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது, அவ்வரசர் தமது தான தருமங்களைப் பற்றித் தமக்குள்ளே எண்ணினார். ‘நான் தானம் வழங்காத பொருள் ஒன்றும் இல்லை. எனக்குப் புறம்பாக உள்ள இந்தப் பொன்னையும் பொருளையும் தானங் கொடுப்பதைவிட, எனக்கே உரிய என் உடம்பிலுள்ள உறுப்புகளைத் தானம் செய்வதுதான் எனக்கு விருப்பம். நல்லது. இன்று நான் அறச் சாலைக்குப் போவேன். அங்கு யாரேனும் என்னுடைய உடம்பின் உறுப்புகளைத் தானங்கேட்டால் அதை வழங்குவேன். என்னுடைய இருதயத்தைக் கேட்டால் உடனே என் மார்பைப் பிளந்து அதனுள் இருக்கும் இருதயத்தைக் குளத்தில் இருக்கும் தாமரைக் கொடியை வேரொடு பிடுங்குவதுபோல, இரத்தம் சொட்டச் சொட்டப் பிடுங்கி எடுத்து அதைத் தானமாக வழங்குவேன். என் உடம்பின் தசையை யாரேனும் கேட்டால் அதையும் அரிந்து கொடுப்பேன். உடம்பில் ஓடுகிற இரத்தத்தைக் குடிக்கக் கேட்டாலும், என் இரத்தத்தை அவர்கள் வாயிலாயினும், பாத்திரத் திலாயினும் ஊற்றுவேன். ‘அடிமை வேலை செய்ய ஆள் இல்லை. நீ வந்து அடிமை வேலை செய்’ என்று யாரேனும் என்னைக் கேட்டாலும், என்னையே நான் தானமாகக் கொடுத்து அவருக்கு அடிமைத் தொழில் செய்வேன். இன்னும் யாரேனும் வந்து என் கண்ணைத் தானமாகக் கொடுக்கும்படி கேட்டால், பனங் குருத்தைப் பிடுங்குவதுபோல கண்ணைப் பிடுங்கிக் கொடுப்பேன். இவ்வாறு சிவி அரசர் தமக்குள் எண்ணித் தான தருமம் செய்வதில் அவாவுள்ளவரானார். பிறகு அவர் சென்று பதினாறு குடம் பனி நீரினால் நீராடி சிறந்த ஆடை அணிகளைச் சிறப்புற அணிந்து, அறுசுவை உணவு அருந்திய பின்னர் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் அமர்ந்து அறச்சாலைக்குப் போனார். அப்போது தேவர்களின் அரசனாகிய சக்கன், சிவி அரசன் அன்று காலை தமக்குள் உறுதி செய்துகொண்டதை அறிந்து, தனக்குள் இவ்வாறு எண்ணினான்: ‘சிவி அரசர் யாரேனும் கண்ணைத் தானங் கேட்டால், தனது கண்களையும் பிடுங்கித் தானம் கொடுப்பதாக உறுதி செய்து கொண்டார். உண்மையிலே இவர் தனது கண்ணைத் தானங் கொடுக்கிறாரா என்பதை நானே போய் அறிந்து வருகிறேன்.’ இவ்வாறு எண்ணிய சக்கன் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார். வந்து, குருட்டுக் கிழப் பிராமணன்போல உருவுகொண்டு தெருவிலே ஒரு மேடான இடத்திலே நின்றுகொண்டிருந்தார். அப்போது சிவி அரசன் யானைமேல் அமர்ந்து அவ்வழியாக அறச்சாலைக்கு வருவதைக்கண்டு கிழப் பிராமணன் தனது கையை நீட்டி, “அரசர் பெருமான் பல்லாண்டு வாழ்க! முடிமன்னன் நீடூழி வாழ்க!” என்று உரத்துக் கூறினான். அரசன் யானையை அவ்விடம் செலுத்தி அருகில் சென்று, “பிராமணா! என்ன வேண்டும்?” என்று கேட்டார். சக்கனாகிய பிராமணன் கூறினான்: “கொடை வள்ளலே! இந்த உலகத்திலே தங்களுடைய கொடைப்புகழ் பரவாத இடமே இல்லை. நானோ குருடன். உமக்கோ இரண்டு கண்கள் உள்ளன. உம்முடைய கண்களில் ஒன்றைத் தானம் பெறுவதற்காக நான் தொலைதூரத்திலிருந்து வந்தேன். வள்ளலே! அருள்கூர்ந்து உமது இரண்டு கண்களில் ஒரு கண்ணை எனக்குக் தானம் வழங்க வேண்டும். வழங்கியருளினால், எனக்கு ஒரு கண்ணும் உமக்கு ஒரு கண்ணும் இருக்கும்.” இதைக்கேட்ட அரசன் தமக்குள் எண்ணினான்: ‘என்ன! இதைத் தானே இன்று காலையில் நினைத்தேன். இது ஓர் நல்ல வாய்ப்பு. இன்று நான் எண்ணிய எண்ணம் நிறைவேறுகிறது. மனிதர் யாரும் இதுவரையில் வழங்காத கொடையை இன்று நான் வழங்கப் போகிறேன்.’ இவ்வாறு தமக்குள் எண்ணி மகிழ்ந்த அரசன், பிராமணனைப் பார்த்துச் சொன்னார்: “ஓ தவசியே! கண்ணைத் தானங் கேட்கும்படி தொலை தூரத்திலிருந்து உம்மை இங்கு அனுப்பியவர் யார்? மனித உடம்பிலே முக்கியமான உறுப்பு கண் அல்லவா? யாரும் கண்ணைத் தானமாக வழங்க மாட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா?” குருட்டுக் கிழவன் கூறினான்: “விண்ணுலகத்திலே தேவர் களினால் சுஜம்பதி என்றும், மண்ணுலகத்திலே மனிதர்களால் மாகவான் என்றும் பெயர்கூறப்படுகிற சக்கன், என்னை இங்கு வந்து ஒரு கண்ணைத் தானமாகப் பெற்றுக்கொள்ளும்படி அனுப்பியருளினார். எல்லாத் தானத்திலும் நான் முதன்மையாக விரும்புகிற தானம் இதுதான். கொடை வள்ளலே! குருடனாகிய எனக்கு உம்முடைய கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுத் தருளும். இல்லை என்று சொல்லாமல் இந்தச்சிறந்த தானத்தை எனக்குத் தந்தருளும், கண்ணைக் கொடுப்பவர் உலகத்திலே இலர் என்று கூறுகிறார்கள்.” சிவி அரசன் கூறினார்: “ஓ பிராமணா! நீர் எதைக்கருதி இங்கு வந்தீரோ, நீர் எதைப்பெறுவதற்கு ஆசைப்பட்டீரோ, அதை நீர் பெறுவீர். இதோ தந்தேன். என் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்க. நீர் ஒரு கண்ணைக் கேட்டீர். நான் இரண்டு கண்களைத் தருகிறேன். என் கண்களைக் கொண்டு உமது பார்வையைப்பெற்றுச் சுகமே போவீராக.” இவ்வாறு கூறிச் சிவி மன்னர் தமது கண்களைத் தானம் வழங்கினார். தானம் வழங்குவதற்கு அந்த இடம் தகுந்ததல்ல வாகையினாலே அரசர் பிராமணனைத் தம்முடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரியாசனத்தில் அமர்ந்து, சீவகன் என்னும் பெயருள்ள மருத்து வனை அழைப்பித்தார். மருத்துவர் வந்தபோது அரசர் அவரிடம், “என் கண்ணை வெளியே எடுக்கவேண்டும்” என்று கூறினார். சிவி அரசர் தமது கண்ணைப் பிடுங்கிக் குருட்டுப் பிராம ணனுக்குத் தானம் வழங்குகிறார் என்னும் செய்தி விரைவில் நகர மெங்கும் பரவிற்று. அமைச்சர்களும், சேனைத் தலைவர் களும், அரசர் பெருமானின் சுற்றத்தார்களும் விரைந்து வந்தார் கள். வந்து அரசரைத் தடுத்து அழுதுவேண்டினார்கள். “மன்னர் பெருமானே! கண்ணைக் கொடுக்காதீர். பொன்னைக் கொடுங்கள். பொருளைக் கொடுங்கள். முத்து, பவழம், மாணிக்கம், மரகதம், வச்சிரம், வைடூரியங்களைத் தானமாக வழங்குங்கள். குதிரைகள் பூட்டிய தேர்களையும், அலங் கரிக்கப்பட்ட யானைகளையும் தானம் கொடுங்கள். நாட்டையும் நகரத்தையும் நிலபுலங்களையும் கொடையாக வழங்குங்கள். வேந்தரே! கண்ணை மட்டும் கொடுக்காதீர்” என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளைக் கேட்டுக் கொடை வேந்தன் கூறினார்: “கொடுப்பதாக வாக்களித்துப் பிறகு அவ்வாக்கை நிறை வேற்றாதவன் கழுத்தைப் பாசக்கயிற்றினால் இறுக்கிச் சுருக்கிட்டுக் கொல்லும் அறக்கடவுள். கொடுப்பதாக வாக்களித்துப் பின்னர் மாட்டேன் என்று மறுக்கிற பாவி நரகத்திற்குச் செல்கிறான். வேண்டாத பொருளை வழங்குவதனால் யாது பயன்? பிராமணன் விரும்பிக்கேட்ட பொருளையே கொடுக்க இசைந்தேன். நீங்கள் தடை செய்யாதீர்கள்.” அப்போது அமைச்சரும் சுற்றத்தாரும் அரசர் பெருமானை இவ்வாறு கேட்டார்கள்: “கண்கெட்ட பிறகு அரசர் பெருமான் எதை விரும்பு கிறார்? அழகு, உடல்நலம், இன்ப வாழ்வு, நீண்ட நாள் வாழ்க்கை இவை களைப்பெற விரும்புகிறாரா? பேரும் புகழும் பெற விரும்புகிறாரா? அல்லது மறுமையில் கிடைக்கப்போகிற சுவர்க்கபோகத்தின் பொருட்டுப் பெருமானடிகள் கண்ணைத் தானம்செய்ய விரும்புகிறாரா?” அரசர் கூறினார்: “கண்ணைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறு எதையும் பெறுவதற்கு நான் நினைக்கவில்லை. பேருக்காகவும், புகழுக் காகவும், விண்ணுலக போகத்துக்காகவும் அல்ல நான் தானம் வழங்குவது. நான் அறவிலை வாணிகம் செய்யவில்லை. பிரதிபலனை எதிர்பாராமல், என்னிடம் உள்ள சிறந்த பொருளைத் தானமாக வழங்க வேண்டும் என்னும் ஒரே கருத்துடன்தான் கண்ணைக் கொடுக்கிறேன்.” இதைக் கேட்டபிறகு, அமைச்சரும் சுற்றத்தாரும் மேலும் பேசாமல் வாளா இருந்தனர். அப்போது சிவி மன்னர் மருத்துவரிடம், “சீவகரே! நீர் எமக்கு நண்பரும் அன்பருமாக இருக்கிறீர். நாம் கூறுவது போலச் செய்யும். எமது கண்ணை வெளியே எடுத்து இந்தக் குருடன் கையில் கொடும். இதுவே எமது மனமுவந்த விருப்பம்”என்று கூறினார். சீவக மருத்துவர் அரசரைப் பணிந்து கூறினார்: “பெருமானே! சிந்தித்துக் கூறுங்கள். கண்ணைக் கொடுப்பது எளிதான காரியம் அன்று.” “சீவக! நன்றாகச் சிந்தித்துப் பார்த்த பிறகுதான் சொல்லு கிறோம். தாமதம் செய்ய வேண்டாம். நாம் சொல்லியபடி செய்க.” அப்போது சீவகர், ‘என்னைப்போன்ற மருத்துவக் கலையில் தேர்ந்தவர், அரசருடைய கண்ணை ஆயுதத்தினால் தோண்டி எடுப்பது முறையல்ல’ என்று தமக்குள் சிந்தித்தார். பிறகு, அவர் சில மருந்து களுடன் மூலிகைகளைச் சேர்த்து அதனுடன் நீலத் தாமரையின் சாற்றைப் பிழிந்து அரைத்துக் குழைத்து அந்த மருந்துக் குழம்பைத் துகிலி கையினால் எடுத்து அரசருடைய வலது கண்ணைச் சுற்றிலும் பூசினார். அப்போது அரசருக்குக் கண்ணில் எரிச்சல் உண்டாயிற்று. விழி சுழன்றது. “பெருமான் அடிகளே! சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினார் மருத்துவர். “ஒன்றும் பேசாதே. கண்ணை வெளியே எடு. தாமதம் செய்யாதே”என்றார் அரசர். மருத்துவர், அந்த மருந்தையே மீண்டும் கண்ணைச் சுற்றிலும் பூசினார் அப்போது, முன்னைவிட வயும் எரிச்சலும் அதிக மாயிற்று. விழி பிதுங்கி வெளியே வந்தது. “அரசே! இப்போதுங்கூட கண்ணைச் சரிப்படுத்திவிட முடியும். சிந்தித்துப் பாருங்கள்” என்றார் மருத்துவர் “சிந்திக்க வேண்டியது ஒன்றும் இல்லை, விரைவாக ஆகட்டும்.” மருத்துவர் வேறு மருந்தைக் குழைத்து அதைத் துகிலிகை யினால் எடுத்துக் கண்ணில் பூசினார். அப்போது, பிதுங்கி வெளிப்பட்டிருந்த கண் விழி, கண் குழியை விட்டு வெளியே விழுந்து நாளத்தில் ஒட்டிக் கொண்டு தொங்கிற்று. “வேந்தே! இப்போதுங்கூட கண்ணைச் செம்மைப்படுத்த முடியும். கட்டளை யிடுங்கள், விழியை முன் போலவே கண்ணில் வைத்துவிடுகிறேன்” என்று வேண்டினார் சீவகர். “வேண்டாம், விரைவாக வெளியே எடு” என்றார் அரசர். அப்போது அரசருடைய கண்ணில் வலியும் நோவும் எரிச்சலும் அதிகமாயிற்று. இரத்தம் ஒழுகி ஆடையில் நனைந்து கறையாயிற்று. அரசியும் சுற்றத்தாரும் அரசர் கால் வீழ்ந்து அழுதார்கள், “வேண்டாம், கண்ணை எடுக்க வேண்டாம்” என்று கெஞ்சி வேண்டினார்கள். அரசர், கடுமையான வலியைப் பொறுத்துக்கொண்டு, “சீவகரே! ஆகட்டும், விழியை எடும்” என்று கூறினார். சீவகன் ஒன்றும் பேசாமல் பந்துபோலத் தொங்குகிற விழி யைத் தனது இடது கையினால் தாங்கிக்கொண்டு, வலது கை யினாலே சிறிய கூர்மையான கத்தியினால் நாளத்தை அறுத்தார். பிறகு விழியை அரசர் பெருமானுடைய உள்ளங்கையில் மெல்ல வைத்தார். கொடை வள்ள லாகிய சிவி அரசர், தமது இடது கண்ணினாலே தமது கையில் இருக்கிற வலது விழியைப் பார்த்தார். தமது கண் குழியில் உள்ள வலியை வெளிக் காட்டாமல் அடக்கிக்கொண்டு, “பிராமணரே! இங்கே வாரும்” என்று அழைத்தார். பிராமணன் அருகில் வந்து நின்றான். “இதோ,இந்த விழியைப் பெற்றுக்கொள்ளும். இந்த ஊனக் கண்ணைவிட எல்லாவற்றையும் அறிகிற ஞானக்கண் நூறு மடங்கு மேலானது” ஏன்? ஆயிரம் மடங்கு மேலானது என்று கூறி, தமது விழியைப் பிராமணன் கையில் கொடுத்தார். பிராமணன் அதனைத் தன் கையில் வாங்கித் தனது குருட்டுக் கண்ணில் பதியவைத்தான். அவ்விழி, எல்லோரும் வியக்கத்தக்கபடி, அவனுடைய கண்ணில் பதிந்து நீலத் தாமரை பூத்ததுபோல அழகாக விளங்கிற்று. அரசர் பெருமான், தமது இடது கண்ணினாலே பிராமண னுடைய முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார், தமது மற்றக் கண்ணையும் வெளியே எடுக்கும்படி சீவகனுக்குக் கட்டளை யிட்டார். சீவகரும் அப்படியே அரசருடைய மற்றொரு விழியையும் வெளியே எடுத்தார். அரசர் அந்த விழியையும் பிராமணனுக்குத் தானம் வழங்கினார். பிராமணனாக வந்த சக்கன் இந்த விழியையும் தனது கையினால் வாங்கித்தன் கண்ணில் பதிய வைத்தார். தெய்வீகச் சக்தியினாலே, பிராமணனுடைய கண்கள் பார்வை பெற்றன. சிவி மன்னர் பார்வை இழந்து குருடர் ஆனார். சில நாட்களில், அரசருடைய கண்களில் வலியும் நோவும் நீங்கி விட்டன. கண் குழியில் தசை வளர்ந்தது. அப்போது அரசர் தமக்குள் எண்ணினார், ‘குருடனுக்கு அரசாட்சி ஏன்? நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்வது சிறந்தது.’ இவ்வாறு எண்ணிய அரசர் அமைச்சரை அழைத்துத் தமது கருத்தைக் கூறி, ஒரு ஆள் மட்டும் தமக்குப் பணிவிடை செய்யத் தம்முடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிறகு, காட்டிற்குப் போகத் தேரைக் கொண்டுவரக் கட்டளையிட்டார்.அமைச்சர், தேரில் போகவேண்டாம் என்று தடுத்துப் பொற்சிவிகை கொண்டுவரச் சொல்லி அதில் அரசரை அமரச் செய்து பரி வாரங்கள் சூழ அரசரைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சென்று, இயற்கை அழகும் தங்கி இருக்கத் தகுதியும் ஆன ஒரு ஏரியின் அருகிலே அரசரை விட்டார்கள். பணிவிடை செய்ய ஒரு ஆளையும் அமைத்தார்கள். பிறகு, எல்லோரும் அரசரிடம் விடை பெற்று நகரத்திற்குப் போய் விட்டார்கள். தவம் செய்வதற்கு ஏற்ற, அந்த அமைதியான ஏரிக் கரையிலே அரசர் அமர்ந்திருந்தார். அப்போது, தேவகேத்தில் இருந்த சக்கனுடைய சிம்மா சனம் சூடுகொண்டது. சக்கன் அதன் காரணத்தை அறிந்தான். ‘நான் போய்க் காட்டில் தவம் செய்கிற சிவி அரசருக்கு வரம் தந்து அவருக்குப் பார்வையையளிப்பேன்’ என்று நினைத்துச் சக்கன், அரசன் இருந்த ஏரிக்கரைக்கு வந்தான். வந்து அரசர்க்குப் பக்கத்தில் உலாவிக் கொண்டிருந்தான். புதிய ஆள் நடக்கும் அரவத்தைக் கேட்ட அரசர், “யார் அது?” என்று வினவினார். “நான் சக்கன். தேவர்களின் அரசன். உமக்கு வரம் தரு வதற்காக வந்தேன். உமக்கு வேண்டியதைக் கேளும். தருகிறேன்.” “அரசாட்சி, பெருஞ்செல்வம், சிறப்பு, ஆனைசேனை முதலிய எல்லாவற்றையும் விட்டுக் காட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு வேண்டியது ஒன்று இல்லை. நான் குருடனாக இருக்கிறேன். இப்போது எனக்கு வேண்டியது மரணம் ஒன்றுதான்” என்று கூறினார்அரசர். “சிவி மன்னா! நீர் மரணத்தை விரும்பும் காரணம் யாது? குருடனாக இருப்பதனால் மரணத்தை விரும்புகிறீரா?அல்லது வாழ்க்கையை வெறுத்து மரணத்தை விரும்புகிறீரா?” “குருடனாக இருப்பதனால் மரணத்தை விரும்புகிறேன்.” சக்கன் கூறினார்: “தருமம் செய்ய வேண்டும் என்பதற்காகவே யாரும் தானம் செய்வது இல்லை. பிற்காலத்தில் ஏதேனும் தகுந்த பலன் கிடைக்கும் என்று கருதித்தான் எல்லோரும் தான தருமம் செய்கிறார்கள். அல்லது, இந்த உலகத்திலேயே பேரும் புகழும் பெற விரும்பித் தான தருமம் செய்கிறார்கள். ஒரு கண்ணைக் கேட்டபோது நீர் இரண்டு கண்களைத் தானமாகக் கொடுத்தீர். நீர் செய்த தானத்தின் உண்மையான நோக்கத்தை ஒளிக்காமல் கூறினால், நீர் கண்ணைப் பெறுவீர்.” “சக்க! நான் செய்த தானத்தின் பலனாக எனக்குப் பார்வை தர விரும்பினால், அதைக் கொடும், வேறு எதையும் கூற வேண் டாம்” என்றார் சிவி அரசர். “நான் சக்கன், தேவர்களின் அரசன் என்னும் பெருமை இருந்தாலும், பிறருக்குக் கண்ணைக் கொடுக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. நீர் செய்த தான தருமங்களின் பலன்தான் உமக்குக் கண்ணைக் கொடுக்கமுடியும் என்றார் சக்கன். அப்போது சிவி அரசர் தமது கொடையைப் பற்றி இக் கட்டுரையைக் கூறினார்: “இன்னார் இனியர் என்று கருதாமல், யார் எது கேட்டாலும், மனம் உவந்து பிரிதிபலன் கருதாமல், அவர்களுக்குத் தானம் செய்தது உண்மையாக இருக்குமானால், எனக்குப் பார்வை உண்டாகட்டும்.” இதைச் சொல்லி முடித்த உடனே, அரசனுக்கு ஒரு கண் பார்வை உண்டாயிற்று. பிறகு அவர் மற்றக்கண் பார்வை பெற மற்றொரு கட்டுரை கூறினார்: “பிராமணக் குருடன் வந்து ஒரு கண்ணைக் கேட்டபோது நான் இரண்டு கண்களையும் தானம் செய்தேன். அவ்வாறு கண்களைத் தானம் செய்தபோது, மகிழ்ச்சியோடு மனம் உவந்து கொடுத்தது உண்மையானால், எனக்கு மற்றக் கண் பார்வையும் உண்டாகட்டும்.” இதைக் கூறியபோது மற்றக் கண்ணும் பார்வை பெற்றது. ஆனால், இந்தக் கண்கள் இயற்கைக் கண்களும் அல்ல, தெய்வீகக் கண்களும் அல்ல. பிராமணன் பார்வை பெற்றது இயற்கைக் கண்களால் அல்லவே. தெய்வீகக் கண்களும், புண் பட்ட இடத்தில் உண்டாகாது. எனவே சிவி அரசர் பெற்ற கண் பார்வை, உண்மை என்னும் பார்வையும் நிறையறிவு என்னும் பார்வையும் ஆகும். இப் பார்வைகள் அரசருக்குத் தோன்றியபோது, சக்கனுடைய விருப்பத் தினாலே, அமைச்சரும் பரிவாரங்களும் அரசரைக்காண அங்கு வந்தார்கள். அப்போது, யாவரும் கேட்கும்படி சக்கன் கூறினான்: “அரச! நீர் கூறிய மெய்ப்பொருள் கட்டுரையினாலே நீர் தெய்வீகப் பார்வை பெற்றீர். சுவர்களுக்கும் பாறைகளுக்கும் அப்பால் உள்ளதையும், மலை களுக்கும் காடுகளுக்கும் அப்பால் உள்ளதையும், நூறு காதத்திற்கு அப்பால் உள்ளதையும் உம்முடைய தெய்வீகப் பார்வை யால் காண முடியும்.” இவ்வாறு சொல்ய சக்கன் ஆகாயத்தில் மறைந்து போனான். பிறகு, அரசர் பெருமான் பரிவாரங்களுடன் புறப்பட்டு நகரத்திற்குச் சென்று சந்தகம் என்னும் அரண்மனையை யடைந்தார். சிவி அரசன் பார்வைபெற்ற செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டு மக்கள் எல்லோரும் கையுறையுடன் வந்து அரசரைக் கண்டு மகிழ்ந்தார்கள். நகரமக்கள் கூடியிருந்தபடியினாலே அவர்களுக்கு அறத்தின் பெருமையைக் கூற இதை வாய்ப்பாகக் கொள்ள அரசர் எண்ணினார். அவர், சிம்மாசனத் தில் அமர்ந்து இவ்வாறு அறிவுரையைக் கூறினார். “வறியவர் வந்து இரந்து கேட்டால் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் ‘இல்லை’ என்று கூறுபவர், எனக்குக் கிடைத்துள்ள தெய்வீகப் பார்வையைக் கண்டாவது தானம் செய்வார்களாக.” “தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கிறவர் மனிதரில் மேலானவர். நான் என்னுடைய ஊனக் கண்ணைக் கொடுத்தேன். ஆனால், உயர்ந்த ஞானக்கண்ணைப் பெற்றேன்.” “அன்பர்களே! ஏழைகளுக்குக் கொடுத்து நீங்களும் உண்ணுங்கள். அவரவர்களால் இயன்றவரையில் அறஞ்செய்து வாழுங்கள். அறத்தை மறவாதீர்கள். இம்மையில் அறஞ் செய்தோர் மறுமையில் மேலுலகம் அடைவர்.” இவ்வாறு அரசர் பெருமான் மக்களுக்கு அறவுரை வழங்கி னார். உவா நாட்களில் இவ்வாறே மக்களுக்கு அறவுரை வழங்கி னார். இவ் வறவுரையைக் கேட்ட மக்கள், தங்களால் இயன்ற வரையில் தான தருமம் செய்து கொண்டு உலகத்தில் வாழ்ந்து மறுமையில் நற்கதி பெற்றார்கள். இக்கதையைக் கூறியபின்னர் பகவன் புத்தர் கூறினார்: “பிக்கு களே! அறிஞர்கள் பண்டைக் காலத்திலே பொன்னையும் பொருளை யும் ஊனையும் உணவையும் தானம் வழங்கியது மட்டும் அல்லாமல், தங்கள் முகத்தில் இருந்த கண்களையுங் கூடத் தானம் வழங்கினார்கள்.” இவ்வாறு கூறிய பின்னர் பகவர் “அந்தக் காலத்தில் ஆனந்தர் சீவகன் என்னும் மருத்துவராகவும், அநுருத்தர் சக்கனாகவும், புத்தர் போதனையைப் பின்பற்றி நடப்பவர்கள் நாட்டு மக்களாகவும், ததாகதர் சிவி அரசனாகவும் இருந்தோம்” என்று முற்பிறப்பு ஒப்புமை கூறினார். “விண்ணவர் நாயகன் வேண்டக் கண்இனி தளித்த காதற் புண்ணியன் இருந்த போதி நண்ணிட நோய் நலியாவே.” 8. உம்மாதந்தி ஜாதகம் ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் தங்கியிருந்த போது, துறவறத்திலிருந்து வழுக்கிய ஒரு பிக்குவின் பொருட்டு இக் கதையைக் கூறினார். இந்தப் பிக்கு சாவத்தி நகரத்திலே ஐயம் ஏற்கச் சென்றபோது, துணிமணிகளை நன்கு அணிந்த கட்டழ குடைய கவர்ச்சிகரமான ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டார். தமது விகாரைக்குத் திரும்பி வந்த பிறகும், அந்த அழகியின் நினைவை மாற்றமுடியாமல், அவளையே நினைத்து நினைத்து மனம் உருகினார். இவ்வாறு ஏங்கி எதிலும் மனம் செல்லாமல் உடல் மெந்து இளைத்துப் போனார். இதனை அறிந்த ஏனைய பிக்குகள் அவரைக் கேட்டார்கள். “ஐயா, முன்பெல்லாம் நீர் மன அமைதியுடன் கவலையற்று இருந்தீர்கள். இப்போது அப்படி இராதது ஏன்?” இதற்கு அவர், “எனக்கு எதிலும் மனம் செல்லவில்லை” என்று விடையளித்தார். அவர்கள் கூறினார்கள்: “ஆசையே பிறவித் துன்பத்திற்குக் காரணம் என்பதை அறிந்து, பிறவா நிலையை யடைவதற்காக நீர் உற்றார் உறவினரை விட்டுத் துறவு பூண்டீர். துறவுபூண்ட பிறகும் நீர் ஆசைக்கு இடந்தருகின்றீர். ஆசையே பெருந்துன்பத் திற்குக் காரணம் என்பதை அறியீரா?” என்று அவருக்கு அறிவுரை புகட்டினார்கள். இவ்வுரைகளைக் கேட்டபிறகும் பிக்கு திருந்தவில்லை. அப்போது, பிக்குகள் பகவன் புத்தரிடம் அவரை அழைத்து வந்து, இவர் நிலைமையை அவருக்குக் கூறினார்கள். பகவன் புத்தர், அவர்கள் கூறுவது உண்மைதானா என்று கேட்டார். பிக்கு, ஆம் என்று ஒப்புக்கொண்டார். அப்போது, பகவர், “பிக்குகளே! முற்காலத்திலே நல்லறிவு வாய்ந்த மெய் யறிஞர் அரசாட்சியை நடத்தும் பொறுப்பு வாய்ந்திருந்தும், தமது உள்ளத்திலே காம இச்சை புகுந்து அலைக்கழித்தபோது, சிறிது காலம் அவ்விச்சை யினாலே மனம் வருந்திப் பின்னர் அந்த எண்ணத்தை நீக்கி நல்லறிவு பெற்றனர்” என்று சொல்லி இக்கதையைக் கூறினார்: முன்னொரு காலத்தில் சிவி நாட்டின் தலைநகரமாகிய அரிட்ட புரத்திலே சிவி என்னும் பெயருள்ள அரசன் அரசாண்டார். அக் காலத்தில் போதிசத்துவர் அவருக்கு மகனாகப் பிறந்தார். அந்தக் குழந்தைக்கும் சிவி என்றே பெயர் சூட்டினார்கள். அதே காலத்தில் அரசருடைய சேனாதிபதிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு அஹிபாரகன் என்று பெயரிட்டார்கள். இக்குழந்தைகள் இருவரும் சிறுவராக வளர்ந்தபிறகு, தக்கசீலப் பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் பதினாறு வயது வரையிலும் அங்குக் கலைகளையும் கல்விகளையும் கற்றார்கள். எல்லாக் கலைகளையும் படித்த பிறகு அவர்கள் இருவரும் காளைப் பருவத்தில், மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அரசன் தன் மகனாகிய சிவி குமரனுக்குப் பட்டஞ்சூட்டி அரசாட்சியை அளித்தார். அஹிபாரக குமரன் சேனாதிபதி பதவி யடைந்தான். அந்நகரத்திலே ஒரு பெரிய வணிகன், எண்பது கோடி பொன் உடையவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் திரீதவச்சன் என்பது. அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அப்பெண் மிக்க அழகும் கவர்ச்சியும் செல்வமும் உடையவளாக இருந்த படியால் அவளுக்கு உம்மாதந்தி என்று பெயரிட்டார்கள். கட்டழகு வாய்ந்த அவள் பதினாறு வயது அடைந்தபோது தெய்வ லோகத்துப் பெண்போல விளங்கினாள். அவளைக் கண்டவர்கள், அவளுடைய கட்டழகினால் கவரப்பட்டுக் காதல்கொண்டு, கள் அருந்தி மயங்கியவர்களைப்போல, அறிவு இழந்து துன்புற்றார்கள். இப்பெண்ணின் தந்தையாகிய திரீதவச்சன் அரசனிடம் போய்க் கூறினான்: “அரசர் பெருமானே! என்னிடத்தில் அரசருக்கு மனைவியாக இருக்கும் தகுதிவாய்ந்த பெண் இரத்தினம் இருக்கிறாள். சோதிடர்களை அனுப்பி, அவளுடைய அங்க அடையாளங்களைத் தெரிந்து, பிறகு தங்களுடைய விருப்பப்படிச் செய்யுங்கள்.” இதைக்கேட்ட அரசன், அப்பெண்ணின் அங்க லக்ஷ்ணங்களை அறிந்துவரும்படி சோதிடர்களை அனுப்பினான். சோதிடர்கள் வணிகச் சீமானின் வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் மிக்க மதிப்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர். ஆசனங்களில் அமர்ந்தபிறகு பாயசம் அளிக்கப்பட்டது. சோதிடர்கள் பாயசம் பருகிக்கொண்டிருந்தபோது உம்மாதந்தி நல்ல ஆடையணிகளை அணிந்துகொண்டு அங்கே வந்தாள். தெய்வ மகள்போல இருந்த அவளைக் கண்டபோது சோதிடர்கள் அவளுடைய அழகினால் மயங்கி, மது அருந்தியவர்களைப் போல மயக்கங் கொண்டனர். அவர்கள் உணர்வு கலங்கித் தங்களையே மறந்தார்கள். ஒருவர் பாயசத்தை வாயில் ஊற்று வதற்காகச் செம்பைத் தூக்கியவர் அதைத் தலையில் ஊற்றிக் கொண்டார். ஒருவர், மனத் தடுமாற்றத் தினால் பாயசத்தை வாயில் ஊற்றும் போது அதை மார்பின்மேல் ஊற்றிக்கொண்டார். மற்றொருவர் தோளில் ஊற்றிக்கொண்டார். இன்னொருவர் பாயசத்தை மடிமேல் ஊற்றிக் கொண்டார். இவ்வாறு சோதிடர்கள் தமது உள்ளத்தைப் பறிகொடுத்து உணர்வு இழந்தார்கள். இவர்கள் செயலைக்கண்ட உம்மாதந்தி பணியாளர்களை அழைத்து “இவர்கள் அங்க அடையாளங்களைக் கண்டு சோதிடர் சொல்ல வந்தார்களாம்! இவர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்” என்று கட்டளையிட்டாள். விரட்டித் துரத்தப்பட்ட சோதிடர்கள் உம்மாதந்தியின்மேல் சினங் கொண்டு, அரசனிடம் சென்று தவறான செய்தி கூறினார்கள். “அரசர் பெருமானே! அந்தப் பெண் தங்களுக்குத் தகுந்தவள் அல்லள். அவள் ஒரு மாயக்காரி, மந்திரக்காரி” என்று அரசனிடம் சொன்னார்கள். இதைக்கேட்ட அரசன் உண்மை என்று நம்பி, மந்திரக்காரியை மணம் செய்யலாகாது என்று கருதி வணிகச்சீமானுக்கு செய்தி அனுப்பாமல் வாளா இருந்துவிட்டான். இச்செய்தியை அறிந்த உம்மாதந்தி, ‘மந்திரக் காரி, மாயக்காரி என்று அவர்கள் சொல்லியதைக் கேட்டு மன்னன் என்னை மணஞ்செய்யவில்லை. நான் மந்திரக்காரிதான், மாயக்காரி தான், எப்போதாவது அரசனை நான் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வ தென்று எனக்குத் தெரியும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுக்கு அரசன்மேல் வெறுப்பு உண்டாயிற்று. உம்மாதந்தியை,1 அவளுடைய தந்தை, சேனாதிபதியாகிய அஹிபாரகனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவள் அவனுக்கு மனத்துக்குகந்த மகிழ்ச்சிக்குரிய கண்மணியாக விளங்கினாள். வழக்கம்போலக் கார்த்திகை விழா வந்தது. முழு நிலா தோன்றும் வெள்ளுவா நாளில் அரிட்டபுரம் முழுவதும் அலங் காரம் செய்யப் பட்டுக் கார்த்திகை விழா கொண்டாட ஏற்பாடாயிற்று. சேனாபதியாகிய அஹிபாரகன் தனது அலுவலுக்குச் சென்றான். போவதற்கு முன்பு, தன் மனைவியாகிய உம்மாதந்தி யிடம் கூறினான்: “உம்மாதந்தி, இன்று கார்த்திகை விழா. அரசர் பெருமாள் ஊர்வலம் புறப்பட்டு வரும் போது முதலில் நமது வீட்டுப் பக்கமாகத்தான் வருவார். நீ அவர் கண்ணில் படக்கூடாது. உன்னைக் கண்டால், அரசர் மன உறுதியை இழந்து விடுவார்.”உம்மாதந்தி, “அப்படியே ஆகட்டும்” என்று கூறினாள். அஹிபாரகன் போய்விட்டபிறகு, அவள் ஊழியப் பெண்ணை அழைத்து, மன்னர் ஊர்வலம் வீட்டுக்கருகில் வரும்போது தன்னிடம் வந்து சொல்லும்படி கட்டளையிட்டாள். மாலை நேரம் வந்தது. சூரியன் மறைந்தது. முழுநிலா வானத்தில் தோன்றி பால்போல் வெளிச்சத்தைத் தெளித்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த நகரம் முழுவதும், தீவட்டிகளும் விளக்குகளும் ஏற்றப்பட்டுத் தெய்வ லோகம் போலக் காணப் பட்டது. மன்னர் பெருமான் ஆடையணிகள் அணிந்து, அழகான குதிரைகள் பூட்டிய தேரிலே அமர்ந்து, பரிவாரங் கள் சூழ்ந்துவரப் புறப்பட்டு ஊர்வலம் வந்தார். ஊர்வலம் முதன்முதல் அஹிபாரகனின் மாளிகையண்டை வந்தது. மாளிகை, செந்நிறச் சுண்ணம் பூசிய சுற்று மதில்களையும் வாயில்களையும் சிகரங் களையும் உடையதாய் காட்சிக்கு இனியதாக இருந்தது. அரசர் ஊர்வலம் வருகிற செய்தியைப் பணிப்பெண் வந்து தெரிவித்தாள். உடனே, உம்மாதந்தி மாளிகையின் மேற்புறத்தில் உள்ள சாளரத்தண்டை கூடை நிறைய பூக்களைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, வனப்பு வாய்ந்த தெய்வ மகள்போல நின்றுகொண்டு, அரசன்மேல் பூக்களைச் சொரிந்தாள். மேருந்து பூக்கள் விழுவதைக்கண்ட அரசன் தலை நிமிர்ந்து பார்த்தான். உம்மாதந்தியின் கவர்ச்சிகரமான பேரழகைக்கண்டு மயங்கிக் காமவசப்பட்டான். தன் மனத்தை அடக்கமுடியாமல் தன்னையே மறந்தான். அது சேனாபதி அஹிபாரகன் மாளிகை என்பதும் நினைவில்லாமல் தேர் ஓட்டுகிறவனைக் கேட்டான்: “சுநந்த, இது யார் வீடு? இதில் இருக்கிற அழகி யார்? இவள் திருமணம் ஆனவளா? கன்னிப்பெண்ணா?” தேரோட்டும் சுநந்தன் விடை கூறினான்: “மன்னவ, இந்த அம்மாள் பிறந்த இடமும், புகுந்த இடமும் உயர்ந்த குடும்பம். இவருடைய கணவன், தங்களிடம் அல்லும் பகலும் உண்மையாக உழைத்து ஊழியம் செய்துவருகிற சேனாதிபதி அஹிபாரகர். இந்த அம்மாள் உம்மாதந்தி என்னும் பெயருள்ள, அவருடைய மனைவியார்.” “உம்மாதந்தி என்பது சரியான பெயர்தான். உம்மாதந்தி என்னைப் பார்த்த பார்வை உள்ளத்தை மயக்கி உன்மத்தனாக்கிவிட்டது” என்று அரசன் கூறினான். அரசன், தன்னைக்கண்டு மனக் கலக்கமடைந்ததை அறிந்த உம்மாதந்தி உடனே சாளரத்தை மூடிக்கொண்டு தன் அறைக்குப் போய் விட்டாள். உம்மாதந்தியைக் கண்டபிறகு, சிவி அரசகுமாரனுக்கு நகரத்தைச் சுற்றி ஊர்வலம் வருவதில் மனம் செல்லவில்லை. “சுநந்த, இது நமக்குத் தகுந்த ஊர்வலம் அல்ல. நமது நண்பர் சேனாபதியாகிய அஹி பாலருக்கே ஊர்வலம் தகுந்தது. என் சிம்மாசனம்கூட அவருக்குத்தான் தகுதி யானது. தேரைத் திருப்பி அரண்மனைக்குச் செலுத்துக” என்று தேர்ப் பாகனிடம் கூறினார். அரண்மனையை யடைந்ததும், அரசகுமரன் தமது அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தார். உம்மாதந்தியின் எண்ணமே அரசன் மனத்தில் இருந்தது. உம்மாதந்தியைப் பற்றித் தமக்குத்தாமே பேசிக்கொண்டார். “மலர்கள்போலும் அழகான மங்கை. கண்கவரும் ஆடை யணிந்து மான்விழி போலும் கண்களினால் என்னை மாடிமேலிருந்து பார்த்தபோது, அவள் முகம், வானத்தில் காணும் வெண்ணிலாவுடன் போட்டி போடுவது போன்றல்லவா இருந்தது!” “காட்டில் வாழும் கான் அறத்தெய்வமகள், மலைமேல் நின்று தன் அழகினால் மனத்தைக் கவர்வதுபோல, இவள் மாளி கையின் சாளரத்தில் நின்று தன் பார்வையினால் என் மனத்தைக் கவர்ந்துவிட்டாள்!” “காதுகளில் குண்டலங்கள் மின்ன, இக்கட்டழகி ஒற்றை ஆடை அணிந்து பெண்மான்போலக் கவர்ச்சிகரமாக நின்ற காட்சிதான் என்னே!” நீண்டு செழித்து வளர்ந்த கருங்கூந்தலும், சந்தனம் பூசிய மெதுவான கைகளும், மெல்லிய விரல்களும் செந்நிறம் பூசிய நகங்களும், வசிகரமான தோற்றமும் உள்ள இந்த அழகி எப்போது என்னிடம் வந்து புன்முறுவல் செய்வாள்?” “சிற்றிடை மங்கை, பொன்மாலை மின்னும் மார்பழகி, காட்டிலே மரத்தின் மேலே படரும் பூங்கொடிபோல, என்னைப் புல்லித் தழுவ எப்போது வருவாள்?” “மதுவை மேலும் மேலும் குடித்து வெறியேறுவதுபோல, இவ்வழகிய மங்கை, எப்பொழுது எனக்கு முத்தங்கள் கொடுத்து என்னை மகிழச் செய்வாள்?” “பலகணி அருகே உம்மாதந்தி நின்றதை நான் பார்த்த உடனேயே, என் உணர்வு இழந்து அறிவு மயங்கினேன். அமைதியை இழந்து தூக்கத்தையும் இழந்தேன்.” இவ்வாறு சிவி அரசன் அறிவழிந்து அரற்றிக் கொண் டிருந்தான். அரசனுடைய ஆயத்தார் அஹிபாரகனிடம், “அரசர் பெரு மான் நகர்வலம் செய்யப் புறப்பட்டு, உம்முடைய மாளிகை யண்டை வந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பி வந்துவிட்டார்” என்று கூறினார்கள். அஹிபாரகன் தனது மாளிகைக்குச் சென்று, அரசன் காணும்படி உம்மாதந்தி சென்றாளா என்று கேட்டான். அதற்கு அவள் கூறினாள்: “யாரோ ஒருவன் - பானைபோன்ற பெரு வயிற்றையும், முறம் போன்ற பற்களையும் உடையவன் - தேரில் ஏறிக்கொண்டு இந்த வழியே வந்தான். அவனை அரசனோ யாரோ என்று சொன்னார்கள். நான் போய் சாளரத்தண்டை நின்று பூக்களைப் போட்டேன். பிறகு, அவன் தான் வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.” இதைக்கேட்ட அஹிபாரகன், “ஐயோ, நீ என்னைக் கெடுத்துப் போட்டாய்” என்று கூறி, உடனே அரண்மனைக்குப் போனான். அரண் மனைக்குள் அரசன் இருந்த அறையண்டை சென்றான். அரசன் பிதற்றிக்கொண்டு உம்மாதந்தியின் பெயரைக் கூறியதைக் கேட்டான். கேட்டுத் தனக்குள் நினைத்தான்: ‘உம்மாதந்தியின்மேல் அரசன் காதல் கொண்டிருக்கிறான். அவளைப் பெறாவிடில் இறந்துவிடுவான் போலிருக்கிறது. எனக்கும் அரசனுக்கும் அவமானமும் பாவமும் நேரிடாத வகையில் இதற்கு ஒரு வழி காணவேண்டுவது என்னுடைய கடமை.’ இவ்வாறு எண்ணிய அஹிபாரகன் தன் மாளிகைக்குத் திரும்பி வந்தான். அஹிபாரகன் தன்னுடைய ஊழியர்களில் மன உறுதியும், வீரமும் உள்ள ஒரு ஆளை அழைத்து, “இன்று இரவு நீ போய் ஊர்க் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தெய்வீகமான மரத்தின் பொந்தில் புகுந்துகொண்டிருக்கவேண்டும். நான் நாளைக் காலையில் அவ்விடம் வந்து சில செய்திகளைக் கேட்பேன். அதற்கு நீ பொந்துக்குள் இருந்து கொண்டு இவ்வாறு பதில் சொல்லவேண்டும்” என்று சொல்லி, அவன் சொல்லவேண்டிய பதிலையும் அவனுக்குத் தெரிவித்தான். அவன் சொல்லவேண்டிய பதிலைப் பலமுறை சொல்லச்சொல்லி மனப்பாடஞ் செய்துவைத்தான். மனப்பாடஞ் செய்துகொண்ட அந்த ஊழியன் அன்று இரவு யாருக்குந் தெரியாமல் கோவிலுக்கு அருகில் உள்ள குறி சொல்லுகிற மரத்தின் பொந்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டான். பொழுது விடிந்த உடனே அஹிபாரகன் கோவிலுக்குப் போய் வணங்கியபிறகு குறி சொல்லுகிற மரத்தின் அருகில் வந்து இவ்வாறு கூறினான்: “ஓ தெய்வமே, எங்கள் அரசர் பெருமான் கார்த்திகை விழாவில் ஊர்வலம் புறப்பட்டு வந்தவர், திடீரென்று அரண்மனைக்குத் திரும்பிப் போய்விட்டார். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு ஏதேதோ பேசிக்கொள்கிறார். அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்? அவர் உடம்புக்கு என்ன நோய்! என்பதைத் தெரிவித்தருள வேண்டும். அரசர் பெருமான் ஆண்டுதோறும் தெய்வங்களுக்குப் பெரும்பொருள் செலவுசெய்து பூசை செய்து வருகிறார். அப்பெருமானுக்கு என்ன நோய் என்பதை அருள் கூர்ந்து சொல்ல வேண்டும்.” இவ்வாறு அஹிபாரகன் குறி சொல்லும் மரத்தில் இருப்பதாகக் கருதப்படும் இயக்கன் என்னும் தெய்வத்தை வேண்டியக்கொண்டபோது, அம்மரத்திருந்து விடை கிடைத்தது. “ஓ சேனாபதியே, அரசனுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை. அரசன் உன் மனைவியாகிய உம்மாதந்தியின் மேல் காதல் கெண்டிருக்கிறான். உம்மாதந்தியை அடைந்தால் அவன் பிழைப்பான். இல்லையானால் பிழைக்க மாட்டான். அரசன் உயிர்பிழைக்க வேண்டுமானால் உம்மாதந்தியை அரச னுக்குக் கொடு.” தெய்வீக மரத்தில் இருந்து கிடைத்த இந்த விடையைக்கேட்ட அஹிபாரகன், அவ்விடத்திலிருந்து அரண்மனைக்குப் போனான். அரசன் இருந்த அறைக்கதவை மெல்லத் தட்டினான். அரசன், “யார் அது?” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான். அஹிபாரகன் உள்ளே சென்று இவ்வாறு கூறினான்: “கோவிலுக்குப் போய்த் தொழுத பிறகு அங்குள்ள குறி சொல்லும் மரத்தினிடம் போனேன். மரத்தில் இருக்கும் இயக்கன், ‘அரசர் பெருமானை உம்மாதந்தி மயக்கி விட்டாள்’ என்று கூறியது. ஆகவே, உம்மாதந்தி அரசர் பெருமானுக்கு உரியவள் ஆவள்.” அரசன்: “அஹிபாரக, உம்மாதந்தியின்மேல் நான் காதல் கொண்டதாக இயக்கன் தெய்வம் சொல்லிற்றா?” “ஆமாம், மன்னவ!” என்றான் அஹி பாரகன். அரசன் தனக்குள் எண்ணினான்: ‘என்னுடைய இழிசெயலை உலகம் முழுவதும் அறிந்துவிட்டது.’ அரசனுக்கு வெட்கம் உண்டாயிற்று. அரச நெறியில் இருந்து பேசினான்: “அறநெறி யில் இருந்து நான் நழுவினேன். பிறர் மனைவியை விரும்பிய என் செயலை அறிந்து உலகம் என்னை இகழும். உம்மாதந்தியைப் பிரிந்தால் உமது மனமும் வருந்தும்.” அப்போது சிவி அரசனுக்கும் சேனாதிபதிக்கும் இவ்வாறு பேச்சு நிகழ்ந்தது: சேனாபதி: “எனக்கும் தங்களுக்கும் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரியாது. உம்மாதந்தியைத் தங்களிடம் அனுப்புகிறேன். உமது காதல் தீர்ந்தபிறகு அவளை அனுப்பிவிடும்.” அரசன்: “தான் செய்யும் பாவத்தை உலகத்தில் ஒருவரும் அறியவில்லை என்று ஒருவன் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், தெய்வங்களும் அறிஞர்களும் அவன் செய்த குற்றத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். நான் அவளைக் காதலிக்கவில்லை என்று நீர் சொன்னாலும், உலகம் அதை நம்பாது. அன்றியும் உமது மனம், உம்மாதந்தியைப் பிரிந்தபின், எவ்வளவு வேதனை அடையும்?” சேனாபதி: “மன்னவ, அவள் எனக்கு உயிர்போன்று அருமையானவள் தான். நல்ல மனைவியாகவும் உள்ளவள்தான். ஆனால், காட்டில் வாழும் மிருகங்கள் சிங்கத்திற்கு உரிமையாதல்போல, அரசராகிய தங்களுக்கு அவள் உரியவள்.” அரசன்: “அறிவுள்ளவர் எவ்வளவுதான் துன்பம் அடைந் தாலும் அந்தத் துன்பத்தைத் தீர்த்துக் கொள்ள நீதி தவறிப் பாவச் செயலைச் செய்ய மாட்டார்கள். அறிவற்ற மூடனாக இருந்தாலும், நீதிநெறியின் மேன்மையை அறிந்திருந்தால், அவன் குற்றம் செய்ய உடன்படமாட்டான். சேனாபதி: “மன்ன! தாயுந் தந்தையாகவும், அரசனாகவும் ஏன், தெய்வம் போலவும் தாங்கள் இருக்கிறீர்கள். உமது அடிமையாகிய நானும் என் மனைவியும், ஊழியர்களும் உமக்கு உரியவர்கள். ஆகையால், அரச தங்கள் விருப்பப்படி எங்களை நடத்தலாம்.” அரசன்: “எல்லா அதிகாரமும் இருக்கிறது. எதையும் செய்யலாம் என்னும் இறுமாப்பினாலே மற்றவருக்குத் தீங்கு செய்கிறவன் ஒருநாளும் வாழ மாட்டான். அவன் செயலைத் தெய்வமும் நிந்தித்து இகழும். நான் என் உடல் இன்பத்தைப் பெறாமல் என் உயிரையும் போக்கிக் கொள்ளலாம். ஆனால், அநீதியைச் செய்து அறம் என்னும் நன்னெறியை அழிக்கக் கூடாது.” சேனாபதி: “அறிவு சான்ற ஐய! அவள் என் மனைவி என்னும் காரணம் பற்றி அவளை நீர் மறுப்பதாக இருந்தால், அவளை விலக்கிவிடுகிறேன். அவள் இது முதல் என் மனைவி அல்லள், இப்போது, அவளை அடிமைப் பெண்ணாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்.” அரசன்: “என்பொருட்டுக் குற்றம் அற்ற உன் மனைவியை நீர் விலக்கி விட்டால், உலகம் உம்மைப் பழிக்கும். எல்லோரும் உம்மை நிந்தனை செய்வார்கள்.” சேனாபதி: “உலகம் பழிக்கும் என்பது பற்றியும், நிந்தனை செய்யும் என்பது பற்றியும் எனக்குக் கவலை இல்லை. யார் எதையும் சொல்லட்டும். அதுபற்றித் துன்பம் இல்லை. சிவியரசே! அவளை ஏற்றுக்கொள்ளும்.” அரசன்: “புகழையும் இகழையும் உயர்வையும் இழிவையும் கருதாதவன், வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போனபிறகு வெறுந்தரை மட்டும் இருப்பதுபோல, நன்மைகளும் மேன்மைகளும் போய் வெறும் ஆளாய் விடுவான்.” சேனாபதி: “இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி, உயர்வு தாழ்வு ஆகிய எது வந்தாலும், நன்மைகளையும் தீமைகளையும் பொறுத்துக் கொள்ளுகிற பூமியைப்போல, நான் தாங்கிக் கொள்வேன்.” அரசன்: “என்னுடைய இன்பத்திற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய நான் உடன்பட மாட்டேன். என் மனத்துன்பத்தை நான் தாங்கிக்கொள் வேனே தவிர, அதைத் தீர்க்கும் பொருட்டு மற்றவருடைய உரிமையை யும் அமைதியையும் கெடுக்கமாட்டேன்.” சேனாபதி: “தெய்வத்துக்குக் காணிக்கை செலுத்துவது போல, அரசர் பெரு மானாகிய உமக்கு உம்மாதந்தியைக் காணிக் கையாகத் தருகிறேன். ஏற்றுக்கொண்டருள்க.” அரசன்: “நீர் என்னிடம் அளவுக்கு மீறி அன்பு பாராட்டுகிறீர், நீரும் உமது மனைவியும் எனது நண்பர்கள். நண்பர்களுக்குத் தீங்கும் அநீதியும் செய்கிறவனைத் தெய்வமும் அறிஞரும் பழித்து இகழ்வார்கள்.” சேனாபதி: “குடிமக்களும் மற்றவர்களும் உம்மை நீதியற்ற அக்கிரமக்காரன் என்று நிந்திக்கமாட்டார்கள். ஏனென்றால், நானாகவே விரும்பி உம்மா தந்தியை உமக்குக் கொடுக்கிறேன். சிலகாலத்துக்குப் பின்னர் அவளைத் திருப்பி அனுப்பிவிடலாம்.” அரசன்: “அன்பரே, நீர் என்னிடம் சிறுவயது முதல் மிகுந்த அன்பு காட்டி வருகிறீர். அன்பனுக்கு இழிவு செய்தல் ஆகாது. அறநெறியின்படி நடக்கிறவன் புகழ், உலகம் எங்கும் போற்றிச் சிறப்பிக்கப்படும். அநீதி செய்கிறவனை எல்லோரும் நிந்தித்து இகழ்வார்கள்.” சேனாபதி: “அறிவு சான்ற மன்ன! நன்னெறியில் நின்று நீதி கோணாத நீர் நெடுங்காலம் வாழ்க. உமது புகழ் ஓங்குக! அறவழியிலே என்றென்றும் உலகத்தைக் காத்தருள்க.!” சிவி அரச குமரன் உம்மாதந்தியின் காதல் மயக்கத்திலிருந்து நீங்கினார். இந்தக் கதையைக் கேட்டபோது, காதல் மயக்கத்தில் இருந்த பிக்கு அதிருந்து நீங்கி, சுரோத்தாபத்தி நிலையை யடைந்தார். பகவன் புத்தர், அக்காலத்தில் இக்கதையில் உள்ளவர்களையும், இப்போதுள்ளவர் களையும் சுட்டிக் காட்டினார். அக்காலத்தில் ஆனந்தர், சுநந்தர் என்னும் தேரோட்டியாகவும், சாரிபுத்தர் அஹி பாரகனாகவும், உப்பலவன்னை உம்மாதந்தியாகவும், புத்தரின் சீடர்கள் அரசனுடைய பரிவாரங்களாக வும், தாம் சிவி அரச குமாரனாகவும் இருந்ததாகவும் புத்தர் பெருமான் கூறினார். 9. சேரிவான் ஜாதகம் பகவன் புத்தர் சாவத்தி நகரத்தில் இருந்தபோது, முயற்சி யில்லாத பிக்குவைப் பற்றி இக்கதையைக் கூறினார். அந்தப் பிக்குவைப் பார்த்துப் பகவன் புத்தர் கூறினார்: “பிக்குவே! பெருமையுள்ள அறநெறியினால் நற்கதியடையும் வாய்ப்புப் பெற்றிருந்தும், முயற்சி இல்லாமல் இருந்ததால், சேரிநாட்டுக் கன்னான் பொன்கலயத்தை இழந்ததுபோல, நீரும் நன்மையை இழந்து விடுவீர்” என்று கூறினார். இதைக்கேட்ட மற்ற பிக்குகள் சேரிநாட்டுக் கன்னான் கதையைக் கூறும்படி கேட்டார்கள். பகவன் புத்தர் இக்கதையை அவர்களுக்குச் சொன்னார். ஐந்து கற்பகாலத்துக்கு முன்பு ஒரு காலத்திலே சேரி நாட்டிலே போதிசத்துவர் தட்டுமுட்டுச் சாமான் விற்கும் கன்னானாக இருந்தார். அவரை எல்லோரும் சேரிவான் என்று அழைத்தார்கள். இன்னொரு கன்னர் கூட்டத்திலே தட்டு முட்டுச் சாமான் விற்கும் ஒரு ஆள் இருந்தான். அவனையும் சேரிவான் என்று மக்கள் அழைத்தார்கள். அவன் பேராசைக்காரன். அவன் தேவவாகை என்னும் ஆற்றைக் கடந்து அண்டபுரம் என்னும் நகரத்துக்கு வந்தான். கன்னார் இருவரும் நகரத்தை இரு பிரிவாகப் பிரித்துக்கொண்டு அந்தத் தெருக்களில் சாமான்களை விற்கச் சென்றார்கள். அந்த நகரத்திலே நொந்துபோன ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பம் முன்னொரு காலத்தில் செல்வத்தோடு வாழ்ந்திருந்தது. நமது கதை நிகழ்கிற இக்காலத்தில் அக்குடும்பம் ஏழையாகி, ஆண்மக்கள் எல்லோரும் இறந்துபோய், ஒரு கிழவியும் அவள் பேத்தியும் ஆக இரண்டுபேர் மட்டும் இருந்தார்கள். இவர்கள் வீடுகளில் வேலைசெய்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், இவர்கள் வீட்டிலே சட்டி பானைகளோடு ஒரு பொன் தட்டு இருந்தது. இந்தப் பொன் தட்டிலே, முன்னொரு காலத்தில் அவ்வீட்டுத் தலைவனான சீமான் உணவு அருந் தினான். ஆனால், அந்தத் தட்டு நெடுநாளாக உபயோகப்படாமல் அழுக்குப்பிடித்துத் தூசு படிந்திருந்தது. அது பொன் தட்டு என்பதை இவர்கள் அறியார். ஏதோ அழுக்கடைந்த பித்தளைத் தட்டு என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். பேராசைக்காரக் கன்னான், “ஓட்டை உடைசல் சாமான்கள் வாங்குகிறது, ஓட்டை உடைசல் சாமான் வாங்குகிறது” என்று கூவிக்கொண்டே இவர்கள் வீட்டண்டை வந்தான். அப்போது பேத்தி பாட்டியைப் பார்த்து, “பாட்டி காதுக்குப் போட்டுக் கொள்ள ஏதேனும் நகை வாங்கிக்கொடு” என்று கேட்டாள். “நம்மிடம் காசு ஏது, கண்ணே! எதை விற்றுக் காசு பெறுவது?” “ஏன் அந்தப் பழைய தட்டு இருக்கிறதே. அது நமக்கு ஏன்? அதைக் கொடுத்துக் காசு வாங்கலாம்.” பாட்டி கன்னானை வீட்டில் அழைத்து அவனிடம் பழைய தட்டைக் கொடுத்து, “இதை எடுத்துக்கொண்டு ஏதேனும் காசு கொடு ஐயா!” என்றாள். பேராசைக்காரக் கன்னான் தட்டைக் கையில் வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அது பொன் தட்டு என்று ஐயம் உண்டாகவே, அதை ஒரு ஓரத்தில் ஊசியினால் கீறினான். அது உண்மையாகவே பொன் தட்டு என்பதை அறிந்தான். உண்மையை அவர்களுக்குத் தெரிவிக்காமல் அவர்களை ஏய்க்க எண்ணினவனாய்,” இது என்ன தட்டு? அரைக்காசு பெறாது” என்று சொல்லி அதைத் தரையில் எறிந்து விட்டு எழுந்து வீட்டைவிட்டுப் போய்விட்டான். கன்னார் செய்துகொண்ட ஒப்பந்தப் படியே, நகரத்தின் ஒரு பகுதியைச் சுற்றிவிட்டு, போதி சத்துவராகிய கன்னான் இந்தப் பகுதிக்கு வந்தார். அவர் கிழவியின் வீட்டுப்பக்கமாக, “ஓட்டை உடைசல் சாமான் வாங்குகிறது, ஓட்டை உடைசல் வாங்குகிறது” என்று கூவிக்கொண்டு வந்தார். அப்போது பேத்தி, பாட்டியிடம் முன்போலவே சொன்னாள். கிழவி, “ஏன் அம்மா! அந்தக் கன்னான் தட்டை போட்டுவிட்டு எழுந்து போய்விட்டானே! விற்பதற்கு வேறு என்ன சாமான் இருக்கிறது?” என்றாள். “அந்த ஆள் கெட்டவன். இந்த ஆள் நல்லவராகத் தெரி கிறார். இவர் இந்தத் தட்டை வாங்கிக்கொள்வார்” என்றாள் சிறுமி. “அப்படியானால் இந்தக் கன்னானைக் கூப்பிடு.” கன்னான் வந்து உட்கார்ந்தவுடன் பாட்டி பழைய தட்டை அவனிடம் கொடுத்தாள். இது பொன் தட்டு என்பதை அறிந்து அவன் சொன்னார்: “அம்மா! இது ஆயிரம் காசு பெறும். இப்போது என்னிடம் ஆயிரம் காசு கிடையாது.” “ஐயா, முன்னே வந்த கன்னான் இது அரைக்காசு பெறாது என்று சொல்லித் தட்டைப் போட்டுவிட்டுப் போனான். நல்லவராகிய உமது கை பட்டுத்தான் இது பொன்னாக மாறிற்று. உம்மிடம் உள்ள காசைக் கொடுத்துவிட்டு இந்தத் தட்டை எடுத்துக்கொண்டு போ” என்று கூறினாள் பாட்டி. அச்சமயம் போதிசத்துவரிடம் ஐந்நூறு காசும், சில செம்புப் பித்தளைச் சாமான்களும் இருந்தன. “தராசு, படிக்கல், பை இவைகளை யும் எட்டுக் காசையும் வைத்துக்கொள்கிறேன். மீதியுள்ள காசையும் இந்தச் சாமான்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். சம்மதம்தானா?” என்று கேட்டார் போதிசத்துவராகிய கன்னான். பாட்டி இதற்குச் சம்மதப் பட்டாள். ஆகவே, போதிசத்துவர் காசுகளையும் செம்புப் பித்தளைச் சாமான் களையும் கொடுத்து விட்டுத் தட்டை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு போனார். போனவர் நேரே ஆற்றங்கரைக்குப் போய், படகுக்காரனுக்கு எட்டுக்காசு கொடுத்துப் படகில் ஏறிக்கொண்டார். அவர் போனபிறகு, பேராசைக்காரக் கன்னான் திரும்பிவந்தான். வந்து, “அரைக்காசு, ஒருகாசு தருகிறேன். அந்தத் தட்டைக் கொண்டுவா” என்று பாட்டியிடம் கூறினான். பாட்டி அவனைச் சீறினாள்: “ஆயிரம் காசு பெறுமானமுள்ள அந்தத்தட்டு அரைக் காசு பெறாது என்று கூறினாய். நீ போனபிறகு நேர்மையுள்ள ஒரு நல்ல ஆள் வந்து, அது பொன் தட்டு, ஆயிரம் காசு பெறும் என்று சொல்லி ஆயிரம் காசு கொடுத்துவிட்டுத் தட்டை எடுத் துக்கொண்டு போனார்” என்று கூறினாள். இதைக்கேட்ட பேராசையுள்ள கன்னான் இடிவிழுந்த மரம் போலானான். “நூறாயிரம் காசு பெறுமானமுள்ள தங்கத் தட்டை அவன் கொண்டுபோனான். அவன் எனக்குப் பெருநஷ்டத்தை உண்டாக்கி விட்டான்” என்று கூவினான். அவனுடைய உள்ளத்திலே பெருஞ் சினம் மூண்டது. அவன் பொறுமை இழந்து மனக்குழப்பம் அடைந்தான். தன்னிடமிருந்த காசுகளையும் சாமான் களையும் வீசி எறிந்தான். ஆடை அவிழ்ந்து விழுவதையும் பாராமல் தராசுக் கோலைக் கையிலே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடினான். படகு ஆற்றிலே பாதி வழியைக் கடந்துவிட்டதைக் கண்டு படகுக்காரனைக் கூவிப் படகை இக்கரைக்குக் கொண்டு வரும்படி சொன்னான். ஆனால், படகிலிருந்த போதிசத்துவர் தடுத்து, படகை அக்கரைக்குக் கொண்டுபோகச் சொன்னார். படகு அக்கரைக்குச் சென்றது. படகு போய்விட்டதைக் கண்ட பேராசைக்காரன் அதிக வருத்தம் அடைந்தான். அவன் இருதயம் துடித்தது. வாயில் இரத்தம் வந்தது. காய்ந்துபோன குளத்தில் களிமண் வெடிப்பதுபோல அவன் இருதயம் வெடித்தது. போதி சத்துவரிடம் அவன் கொண்ட வெறுப்பி னாலும், பகையினாலும் அவன் அவ்விடத்திலே இறந்து அழிந்தான். போதிசத்துவர் பல அறச்செயல்களையும் நற்காரியங்களையும் செய்து பிறகு நற்கதியடைந்தார். இக்கதையைக் கூறிய பிறகு, “நற்கதியடைவதற்குரிய அறநெறியில் முயலாமல் சோம்பலினால் சோர்வு அடைபவர், பேராசை யுள்ள கன்னானைப்போல ஊதியத்தை இழப்பார்கள்” என்று பகவன் புத்தர் கூறினார். பிறகு அந்தப் பிறப்பை இந்தப் பிறப்போடு ஒப்பிட்டுக் காட்டினார். அந்தக் காலத்தில் தேவதத்தன் பேராசையுள்ள கன்னானாக வும், ததாகதர் நேர்மையுள்ள கன்னானாகவும் இருந்தோம்” என்று கூறினார். 10. குட்டில ஜாதகம் இந்தக் கதையைப் பகவன் புத்தர் வெளுவனம் என்னும் மூங்கிற் காட்டில் தங்கியிருந்தபோது கூறினார். புத்தரின் சீடர்கள் தேவதத்தனிடம் இவ்வாறு கூறினார்கள்: “தேவ தத்தரே, பகவன் புத்தர் உமது ஆசிரியர். அவரிடம் பிடகம் முதலிய நூல்களைத் தாங்கள் கற்றீர்கள். உமது ஆசிரியருக்கு நேர் மாறாக நீர் பகைமை பாராட்டுவது கூடாது” என்று கூறினர். அதற்குத் தேவதத்தன், “என்ன? கௌதம முனிவர் எனது ஆசிரியரா? ஒருபோதுமில்லை. என்னுடைய சொந்த அறிவினாலே நான் பிடகம் முதலிய நூல்களை அறிந்தேன்” என்று கூறி, பகவன் புத்தரைத் தனது ஆசிரியர் என்று ஒப்புக்கொள்ள மறுத்தான். கந்தகுடிக்குச் சென்ற சீடர்கள் தேவதத்தனைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டனர். “தேவதத்தன், பகவன் புத்தருக்குப் பகைவனாகி விட்டான். அவன் பகவரைத் தனது குருவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அவனுக்கு என்ன கதி கிடைக்குமோ?” என்று சொல்லிக்கொண்டனர். அவ்வமயம் பகவன் புத்தர் அங்கு வந்தார். அவர்கள் பேசிக்கொண்ட செய்தியை அறிந்தார். “பிக்ஷுகளே! இதுதான் முதல் தடவையன்று. தேவதத்தன் இதற்கு முன்பும் தன் குருவைப் பகைத்துத் துன்ப மடைந்தான்” என்று பகவன் புத்தர் கூறி இந்தக் கதையைச் சொன்னார்: வாரணாசி நாட்டைப் பிரமதத்தன் என்னும் அரசன் அரசாண்ட முன்னொரு காலத்திலே, போதிசத்துவர் இசை வாணர் குலத்திலே பிறந்தார். அவருடைய பெயர் குட்டிலன் என்பது. அவர் இளமையி லேயே இசைக்கலையில் தேர்ச்சியடைந்து, குட்டிலப் புலவன் என்னும் பெயர்பெற்றுப் பரதகண்டம் முழுவதிலும் இருந்த இசைப் புலவருக் கெல்லாம் தலைவராக விளங்கினார். அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை. வயது முதிர்ச்சியினால் பார்வையிழந்திருந்த தமது தாய் தந்தையரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார். அக்காலத்திலே வாரணாசி நாட்டிருந்து சில வணிகர்கள் உச்சையினி நகரம் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்கள் விடுமுறை நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். குளித்து முழுகி நறுமணங் களையும் வாசனைத் தைலங்களையும் தேய்த்து, நல்லாடைகள் அணிந்து, பலவகையான சுவையுள்ள உணவுகளையும், இனிப்புகளை யும் அருந்தி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அக்காலத்தில் உச்சையினி நகரத்திலே மூசிலன் என்னும் பெயருள்ள இசைவாணன் இருந்தான். அவனை வணிகர்கள் அழைத்துப் பொருள் கொடுத்து இசையரங்கு நடத்தினார்கள். மூசிலன், யாழ் என்னும் இசைக் கருவி வாசிப்பவன். அவன் இசையரங்கில் அமர்ந்து தனது யாழை உச்சநிலையில் நிறுத்தி வாசித்தான். வாரணாசியிலே குட்டிலப் புலவ னுடைய இன்னிசையைக் கேட்டவர்களாகையினாலே, வணிகர் களுக்கு மூசிலனுடைய இசை இனிமையாக இல்லை. பாயைக் கீறுவது போல இருந்தது. ஆகவே ஒருவரும் இவனுடைய இசையை ரசித்து மகிழவில்லை. தன்னுடைய இசையை அவர்கள் ரசிக்காததைக் கண்ட மூசிலன், ‘அதி உச்சத்தில் இசைக்கிறது போலும்; சற்றுச் சுருதியைக் குறைப்போம்’ என்று எண்ணி நடுத்தரத்தில் அமைத்து வாசித்தான். அப்போதும் அவர்களின் மனத்தை அவனது இசை கவரவில்லை. அப்போது அவன் , ‘இவர்கள் இசையைச் சுவைக்க அறியாதவர் போலும்’ என்று தனக்குள் எண்ணி நரம்புகளைத் தளர்த்தி வாசித்தான். அப் போதும் அவன் வாசித்த இசை அவர்களின் மனத்தைக் கவரவில்லை. கடைசியில், “ஐயா. என்னுடைய இசை உங்களுக்கு ஏன் மகிழ்ச்சி யளிக்கவில்லை?” என்று கேட்டான். “என்ன? நீர் இசை வாசித்தீர்? நரம்பைச் சுருதி கூட்டுகிறீர் என்றுதானே எண்ணினோம்” என்று அவர்கள் விடையளித் தார்கள். “என் வித்தையை யறிய உங்களுக்கு இசைஞானம் போதாது போலத் தோன்றுகிறது. இதைவிட இனிமையான இசையை எங்கேனும் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டான் மூசிலன். “நாங்கள் காசி மாநகரத்திலே குட்டிலப் புலவனின் இன் னிசையைக் கேட்டிருக்கிறோம். நீர் வாசிக்கும் இசை, குழந்தையின் அழுகையை நிறுத்தப் பெண்பிள்ளை பாடும் பாட்டுபோல இருக்கிறது” என்று கூறினார்கள் வணிகர்கள். “அப்படியா! இதோ உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காசிக்குப் போகும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போங்கள்” என்று மூசிலன் அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் அவனது வேண்டுகோளுக்கு இணங்கி, அவனைத் தம்முடன் காசி மாநகரத்திற்கு அழைத்துக்கொண்டு போய், குட்டிலப் புலவன் வீட்டைக் காட்டிவிட்டுத் தமது இல்லம் சென்றார்கள். மூசிலன், போதிசத்துவரின் வீட்டிற்குள் சென்றான். வீட்டிற்குள் சுவரருகில் அழகான யாழ் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். யாழைக் கையில் எடுத்து வாசித்தான். அதைக்கேட்ட பார்வையற்றிருந்த முதியவர்களான குட்டில னுடைய பெற்றோர்கள்: “சூ...சூ...எலி யாழைக் கடிக்கிறது. சூ...சூ...” என்று கூச்சட்டுத் துரத்தினார்கள். அப்போது, மூசிலன் யாழ்க் கருவியை வைத்துவிட்டு அவர்களை வணங்கினான். “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று அவர்கள் வினவினார்கள். “உச்சையினி நகரத்திலிருந்து வந்தேன். இசைப்புலவரின் காலடியில் இருந்து இசை கற்றுக்கொள்ள வந்தேன்” என்று விடை கூறினான். “அப்படியா? நல்லது” என்றார்கள். “இசைப்புலவர் எங்கே?” என்று கேட்டான் மூசிலன். “அவன் வெளியே போயிருக்கிறான், அப்பா. இப்போது வந்துவிடுவான்” என்றார்கள் பெற்றோர். மூசிலன் போதிசத்துவர் வருகிற வரையில் காத்திருந்தான். அவர் வந்தபிறகு அவருடன் நல்ல வார்த்தைகள் பேசி, பிறகு, தான் வந்த காரியத்தைக் கூறினான். உடம்பில் காணப்படுகிற குறிகளைக்கொண்டு மனிதரின் குணங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் போதிசத்துவருக்கு இருந்தது. இவனுடைய குறிகளைக்கண்டு இவன் நல்லவன் அல்லன் என்பதை அவர் தெரிந்துகொண்டார். ஆகவே, இவனுக்கு இசைக் கலையைக் கற்றுக்கொடுக்க மறுத்தார். “இந்தக்கலை உனக்குத் தகுந்த தல்ல. நீ போய்வா” என்று கூறினார். மூசிலன், போதிசத்துவருடைய பெற்றோரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டான். “எனக்கு வித்தையைக் கற்றுக்கொடுக்கச் சொல்லுங்கள்” என்று அவர்களை வேண்டிக்கொண்டான். அவர்களும் மனமிரங்கி, அவனுக்கு இசை கற்பிக்கும்படி தமது மகனுக்குக் கூறினார்கள். தனது பெற்றோர் அடிக்கடி வற்புறுத்திக் கூறியதை மறுக்கமுடியாமல் போதிசத்துவர், மூசிலனுக்கு யாழ் வித்தையைக் கற்பித்தார். இசைக்கலையைக் கற்றுக்கொண்ட மூசிலன், போதிசத்து வருடன் அரண்மனைக்குப் போனான். மூசிலனைக் கண்ட அரசன், “இசைவாணரே! இவர் யார்?” என்று கேட்டான். “பெருமானடிகளே! இவன் என்னுடைய மாணவன்” என்று விடை கூறினார். அரசர் பெருமான் மூசிலனைப்பற்றி பையப்பைய அறிய லானார். போதிசத்துவர் இசைக்கலையை ஒளிக்கவில்லை. தாம் அறிந்த இசை பற்றிய எல்லா வித்தைகளையும் தன் மாண வனுக்குக் கற்பித்தார். கடைசியில், “நான் அறிந்த வித்தையை எல்லாம் உனக்குக் கற்பித்து விட்டேன்” என்று கூறினார். மூசிலன் தனக்குள் எண்ணினான்: ‘இசைக்கலையில் நான் தேர்ச்சியடைந்துவிட்டேன். இந்தக் காசி மாநகரம் பாரத நாட்டின் தலை நகரமாக விளங்குகிறது. என்னுடைய ஆசிரியரோ கிழவர் ஆகி விட்டார். நான் இந்த நகரத்திலேயே தங்குவது நல்லது என்று இவ்வாறு எண்ணிய மூசிலன் தனது ஆசிரியரைப் பார்த்து, “ஐயா, நான் அரண் மனையில் ஊழியம் செய்ய எண்ணுகிறேன்” என்று கூறினான். “நல்லது. இதுபற்றி அரசர் பெருமானிடம் பேசுகிறேன்” என்றார் ஆசிரியர். அவர் அரசனிடம் சென்று கூறினார்: “என்னுடைய மாண வன், பெருமானடிகளிடம் ஊழியம் செய்ய விரும்புகிறான். அவ னுடைய ஊதியம் எவ்வளவு என்பதைத் தெரிவித்தருள வேண்டும்.” “உமது ஊதியத்தில் செம்பாதியாக இருக்கும் உமது மாண வனுடைய ஊதியம்” என்று கூறினார் அரசர் பெருமான். போதிசத்துவர் தன் மாணவனிடம் இதைத் தெரிவித்தார். மூசிலன் கூறினான்: “தங்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை அரசர் பெருமான் கொடுத்தால் அவரிடம் ஊழியம் செய்வேன். இல்லையேல் முடியாது.” “ஏன்?” “தங்கள் அறிந்த வித்தைகளை எல்லாம் நானும் அறிந் திருக்கிறேன் அல்லவா?” “ஆமாம். நான் அறிந்த இசைக் கலை யாவற்றையும் நீ அறிவாய்.” “அப்படியானால், தங்களுக்குக் கொடுக்கும் ஊதியம்போல சரிபங்கு ஊதியம் தராமல் அரசர் பெருமான் ஏன் செம்பாதி ஊதியம் தரவேண்டும்?” போதிசத்துவர் இதை அரசனுக்குத் தெரிவித்தார். அரசன், “உம்மைப் போல முழுக் கலையையும் உமது மாணவன் அறிந் திருந்தால், முழு ஊதியம் பெறட்டும்” என்று கூறினார். போதி சத்துவர் அரசரின் விருப்பத்தைத் தமது சீடனுக்குத் தெரிவித்தார். சீடனும் ஊழியம் செய்ய உடன்பட்டான். சீடனுடைய உடன்பாட்டை அரசர் அறிந்தபோது அவர் கூறினார்: “நன்று, என்றைக்கு நீங்கள் இசையரங்கு நடத்தப் போகிறீர்கள்?” “பெருமான் அடிகளே! இற்றைக்கு ஏழாம் நாள் இசையரங்கு ஏற்படுத்தலாம்” என்றார் போதிசத்துவர். அரசர் பெருமான், மூசிலனை அழைப்பித்து, “உமது ஆசிரிய ருடன் இசைப்போட்டி நடத்த ஆயத்தமாக இருப்பதாக அறிகிறேன். உண்மைதானா?” “ஆமாம், பெருமானே!” அரசர் பெருமான் அதைத் தடுக்க முயன்றார். “போட்டி இசை யரங்கு வேண்டாம். ஆசிரியருக்கும் மாணவருக்கும் போட்டி நடப்பது கூடாது.” மூசிலன் மறுத்துக் கூறினான்: “பெருமானடிகளே! தடுக்க வேண்டாம். இன்று ஏழாம்நாள் எனக்கும் எனது ஆசிரியருக்கும் இசைப் போட்டியரங்கு நடக்கட்டும். எங்களில் தேர்ந்த கலைஞர் யார் என்பதை உலகம் அறியட்டும்.” அரசர் பெருமான் உடன்பட்டார். முரசு அறைவித்து இசைப் போட்டி அரங்கம் நடக்கப்போவதை நகர மக்களுக்கு அறிவித்தார். “காசி நகரத்தில் வாழும் பெருமக்களே! கேளுங்கள். இன்று ஏழாம்நாள் குட்டிலப் புலவராகிய இசை ஆசிரியருக்கும், அவருடைய மாணவ ராகிய மூசிலருக்கும், இசைப் போட்டி அரங்கு அரசர்பெருமான் முன்னிலையில் அரண்மனையில் நடக்கப்போகிறது. இசைக்கலையில் தேர்ந்தவர் யார் என்பதை அன்று சபையில் அறியலாம். நகர மக்கள் யாவரும் வந்து அவர் கள் புலமையைக் காணுங்கள்” என்று நகர மக்களுக்கு அறிவிக்க பட்டது. போதிசத்துவர் தமக்குள் எண்ணினார்: ‘இந்த மூசிலன் இளைஞன், துடிப்புள்ளவன். நானோ, கிழவன்; வலிமையற்றவன். கிழவன் செய்யும் காரியங்கள் போற்றப்பட மாட்டா. என் மாணவன் தோல்வியடைந்தால், அதனால் எனக்குப் பெருமையோ புகழோ இல்லை. அவனிடம் நான் தோல்வியடைந்தால், அந்த வெட்கக்கேட்டைவிட காட்டுக்குப்போய் உயிர்விடுவது மேலானது’ இவ்வாறு எண்ணி குட்டிலப் புலவர் காட்டுக்குப் போனார். போனவர் சாவுக்கு அஞ்சி வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்தவர் மானத்துக்கு அஞ்சி மீண்டும் காட்டுக்குப் போனார். இவ்வாறு வீட்டுக்கு வருவதும், காட்டுக்குப் போவதுமாக ஆறு நாட்கள் கழிந்தன. நடந்து நடந்து கால் தேய்ந்து புல்லில் பாதையும் ஏற்பட்டுவிட்டது. அப்போது சக்கனுடைய சிம்மாசனம் சூடுகொண்டது. (சக்கன் என்பவன் சக்கரச் செல்வன், இந்திரன், தேவர்களின் அரசன்.) சக்கன் ஆய்ந்து பார்த்துக் காரணத்தை அறிந்து கொண்டார். ‘இசைவாண ராகிய குட்டிலப் புலவர் தமது மாணவனால் துன்பமுற்றுக் காட்டில் கிடக்கிறார். அவருக்கு நான் உதவி செய்ய வேண்டும்’ என்று எண்ணிய சக்கன் வானுலகத்திருந்து இறங்கிவந்து போதிசத்துவரின் எதிரில் நின்றார். நின்று, “கலைவாணரே! ஏன் காட்டுக்கு வந்தீர்?” என்று வினவினார். “நீர் யார், ஐயா?” என்றார் கலைவாணர். “நான் சக்கன்” என்று விடை கிடைத்தது.” “தேவர் கோமானே! நான் காட்டுக்கு வந்த காரணம் இது: என் மாணவனால் நான் தோல்வியடைவேன் என்று அஞ்சு கிறேன். மானம் இழந்து வாழ்வதைவிட காட்டில் இருந்து சாவது மேலானது என்று நினைக்கிறேன். ஏழு நரம்புடைய யாழின் இனிய இசையை உண்டாக்க நான் அவனுக்குக் கற்பித்தேன். இப்போது அவன் தன்னுடைய ஆசிரியனை வெல்ல போட்டி போடுகிறான். கோசிய! தங்கள்தான் எனக்கு உதவி செய்யவேண்டும்” என்று வேண்டினார் குட்டிலப் புலவர். “அஞ்சாதீர்!” என்ற சக்கன் கூறுகிறார்: “நான் உமக்குப் புகலிடமாக வும், பாதுகாவலனாகவும் இருப்பேன். உற்ற வேளையில் உமக்கு உதவி புரிந்து உமது இசைப்புலமையை வெளிப்படுத்து வேன். உமது மாணவனைவிட நீர் புலமை மிக்கவர் என்பது உறுதி. உமது மாணவருக்கு நீர் அஞ்சாதீர்” என்று சொல்லி, மேலும் சக்கன் கூறினார்: “யாழை வாசிக்கும்போது அதன் நரம்பு ஒன்றை அறுத்துவிட்டு வாசியும். அதனால் இசை சிறிதும் கெடாது. மூசிலனும் உம்மைப்போல ஒரு நரம்பை அறுத்து வாசிப்பான். ஆனால், அவனுடைய யாழ் இசைக்காது. அவன் தோல்வியடைவான். அப்போது நீர், ஒவ்வொன் றாக ஏழு நரம்பு களையும் அறுத்து வாசியும். உமது யாழ் இனிமையாக இசைக்கும். நரம்புகளை எல்லாம் அறுத்தபிறகு யாழின் சட்டத்தை வாசியும். இன்னிசை உண்டாகிக் காசி மாநகரம் முழுவதும் பன்னிரண்டு யோசனை தூரம் பரவும்” என்று கூறி, மூன்று பகடைக் காய்களை குட்டிலரிடம் கொடுத்து, மேலும் கூறினார்: “உமது யாழ் இசை நகரம் முழுவதும் கேட்கும்போது, இந்தப் பகடையில் ஒன்றை உயரத்தில் வீசி எறியும். முந்நூறு மங்கையர் தேவலோகத்திலிருந்து வந்து உம்மைச் சூழ்ந்து நடனம் ஆடுவர். அப்போது மற்றொரு பகடையையும் உயரஎறிந்தால் மேலும் முந்நூறு மகளிர் வந்து நடனம் புரிவர். பிறகு, மூன்றாம் பகடையையும் எறிந்தால் மற்றும் முந்நூறு மங்கையர் வந்து அரங்கம் முழுவதும் நடனம் புரிவர். அப்போது நானும் அங்கு வருவேன். அஞ்சாமல் வீட்டுக்குப்போம்” என்று கூறினார். காலை வேளையில் போதிசத்துவர் வீடு திரும்பி வந்தார். அரண்மனை வாயிலண்டை பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு, அரசர் பெருமான் அமர்வதற்குச் சிம்மாசனமும் இடப்பட்டிருந்தது. அந்தப் பெரிய அழகான மண்டபத்திற்கு அரசர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். அரசரைச் சூழ்ந்து ஆயிரக்கணக்கான ஊழியரும், அழகாக உடுத்திய மங்கையரும், அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவும் இருந்தனர். நகர மக்கள் எல்லோரும் திரண்டுவந்து வரிசை வரிசையாக அமர்ந்தார்கள். போதிசத்துவர் நீராடி, நறு மணம் பூசி, உணவு அருந்தி, கையில் யாழை ஏந்திக்கொண்டு மண்டபத்தில் வந்து தமக்குரிய இடத்தில் அமர்ந்தார். சக்கனும் யாருக்கும் புலப்படாமல் தேவர்கள்சூழ வந்து ஆகாயத்தில் தங்கினான். போதிசத்துவர் மட்டும் சக்கன் வந்திருப்பதை அறிந்தார். மூசிலனும் மண்டபத்திற்கு வந்து தனக்குரிய இடத்தில் அமர்ந்திருந் தான். மண்டபம் முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தது. முதல் இரண்டு இசைவாணரும் யாழை வாசித்தார்கள். இருவரும் ஒரே இசையை இசைத்தனர். மண்டபத்திலிருந்த மக்கள் இன்பம் அடைந்து கைகொட்டி மகிழ்ந்தார்கள். சக்கன் உயரத்திருந்து, “ஒரு நரம்பை அறுத்து விடு” என்று போதி சத்துவருக்குக் கூறினான். போதி சத்துவர் யாழின் வண்டு நரம்பை அறுத்துவிட்டார். நரம்பு அறுந்த போதிலும் யாழிலிருந்து இனிய இசை உண்டாயிற்று. அது தெய்வீகமான இன்னிசையாக இருந்தது. மூசிலனும் தன்னுடைய யாழில் ஒரு நரம்பை அறுத்துவிட்டான். அப்போது அதிலிருந்து இனிய இசை உண்டாக வில்லை. அவனுடைய ஆசிரியரோ இரண்டாவது, மூன்றாவது நரம்புகளையும் அறுத்து வாசித்தார். இவ்வாறு ஏழுநரம்பு களையும் அறுத்துவிட்டார். கடைசியில் யாழின் சட்டத்தை வாசித்து இசை எழுப்பினார். அவர் வாசித்த இசைப்பண் அரங்கம் முழுவதும் சூழ்ந்தது. பிறகு, அரங்கைக்கடந்து நகரம் முழுவதும் பரவிற்று. இசைப் பண்ணைக் கேட்ட மக்கள் மனமுருகி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி தாங்காமல் தமது மேலாடையை உயர வீசி எறிந்து கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். போதிசத்துவர் ஒரு பகடையை உயர வீசி எறிந்தார். அப்போது முந்நூறு அரம்பையர் இறங்கி வந்து நடனம் புரிந்தனர். இரண்டாவது, மூன்றாவது பகடைகளையும் எறிந்த போது, தொள்ளாயிரம் தேவலோக மங்கையர் அரங்கத்தில் வந்து நடனம் செய்தார்கள். அப்போது அரசர் பெருமான் குறிப்பாக ஒரு சைகை காட்டினார். அதைக்கண்ட கூட்டத்தினர் எழுந்து, “நீ உன் ஆசிரியருக்கு மாறாகக் கிளம்பி தவறு செய்தாய். உன் நிலையை நீ உணரவில்லை” என்று கூறி மூசிலனை வைதார்கள். அவர்கள் கல்லையும், கட்டையையும் கையில் கிடைத்த பொருள்களையும் எடுத்து அவனை அடித்துப் புடைத்துக் கொன்றார் கள். கடைசியில் காலைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் குப்பை மேட்டில் போட்டார்கள். அரசர் பெருமான் மகிழ்ச்சியடைந்து போதிசத்துவருக்குப் பரிசுகளை வழங்கினார். நகர மக்களும் அவருக்குப் பரிசுகளை வழங் கினார்கள். சக்கன் இனிய வார்த்தைகளைக் கூறினான்: “இசைவாணரே! எனது தேர்ப்பாகன் மாதலியுடன் ஆயிரம் குதிரை பூட்டிய எனது தேரைத் தங்களிடம் விரைவில் அனுப்பி வைப்பேன். அந்தத் தேரில் அமர்ந்து தாங்கள் தேவலோகத்துக்கு வரவேண்டும்” என்று கூறித் தனது இருப்பிடம் சென்றான். சக்கன் தேவலோகம் சென்று தமது அரண்மனையிலே நவ ரத்தினங்கள் இழைத்த சிங்காசனத்திலே அமர்ந்திருந்தார். அப்போது தெய்வ மங்கையர் வந்து, “அரசர் பெருமானே! தாங்கள் எங்குச் சென்றிருந் தீர்கள்?” என்று கேட்டார்கள். சக்கன், தான் சென்றிருந்த இடத்தையும், அங்கு நிகழ்ந்த செய்திகளையும் விளக்கமாகச் சொல்லி, போதிசத்துவரின் குணங்களைப் புகழ்ந்து பேசினான். அதைக்கேட்ட தேவமங்கையர், “ஓ அரசர் பெருமானே! அந்த இசைப்புலவரை நாங்கள் பார்க்கவேண்டும் அவரை இங்கு அழையுங்கள்” என்று வேண்டினர். சக்கன், மாதலியை அழைத்தார், “தேவ மங்கையர், இசைப் புலவன் குட்டிலனைக் காண விரும்புகிறார்கள். என்னுடைய தேரைக் கொண்டு போய் அதில் அவரை ஏற்றி அழைத்துக்கொண்டு வா” என்று கட்டளை யிட்டார். தேர்ப்பாகனான மாதலி, போதி சத்துவரை அழைத்துக்கொண்டு வந்தான். சக்கன் அவரை அன்புடன் வரவேற்று, “புலவரே! தேவ மங்கையர் உம்முடைய இன்னிசையைக் கேட்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். “தேவர் பெருமானே! இசைவாணராகிய நாங்கள் எங்கள் தொழிலினாலே வாழ்க்கையை நடத்துகிறவர்கள். ஊதியம் பெற்று இசைபாடுவது எங்கள் வழக்கம்” என்று கூறினார் போதிசத்துவர். “அப்படியே ஆகட்டும், இசையை வாசியுங்கள். பிறகு ஊதியம் தருவோம்.” “எனக்கு வேறு ஊதியம் தேவையில்லை. இந்தப் புண்ணிய மான தேவலோகத்தில் வந்து பிறப்பதற்கு இந்தத் தேவகன்னிகைகள் முற் பிறப்பில் என்ன நற்காரியங்களைச் செய்தார்கள் என்பதைச் சொன்னால், அதுவே எனக்குப் போனதுமான ஊதியம் ஆகும்.” “அந்தக் காரணங்களைப் பிறகு சொல்லுவோம். புலவரே! முதல் உமது இசையை வாசியும்.” என்றனர் தேவ கன்னிகையர். போதிசத்துவர் ஒருவாரம் வரையில் யாழ் வாசித்துப் பண் இசைத்தார். இவர் இசைத்த பண், தேவலோகத்து இசையைவிட இனிமையாக இருந்தது. பின்னர், தேவ மங்கையர் தேவலோகத்தில் வந்து பிறப்ப தற்குக் காரணமாயிருந்த அவர்களின் முற்பிறப்புச் செயல்களைச் சொல்லும் படி போதிசத்துவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் முற்பிறவியிலே செய்த நற்செயல்களைக் கூறினார்கள். தேவ கன்னிகைகளில் மூத்தவள் கூறினாள்: “கஸ்ஸப புத்தர் வாழ்ந்திருந்த முன்னொரு காலத்திலே ஒரு பிக்குவுக்குச் சீவர ஆடையைத் தானம் செய்தேன். அந்தப் புண்ணியத்துக்காக அடுத்த பிறப்பிலே சக்கனுடைய தேவலோகத்திலே தேவ கன்னியரில் முதல் மகளாகப் பிறந்து, ஆயிரம் அரம்பையரைத் தோழியாகப் பெற்று வாழ்கிறேன்’ என்று அவள் கூறினாள். மற்றொரு தெய்வமகள், பிச்சை கேட்ட பிக்குவுக்கு உணவு கொடுத்துப் பூசைக்குப் பூவும் கொடுத்தபடியால் இப்பிறப்பில் தெய்வமகளாகப் பிறந்ததாகக் கூறினாள். இன்னொரு தேவமகள், பிக்குகளின் அறவுரை கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்த புண்ணியத்தினால் தெய்வ மகளாகப் பிறந்த செய்தியைத் தெரிவித்தாள். மற்றொருத்தி, உணவு அருந்திய பிக்குவுக்குக் கைகழுவ நீர் கொடுத்த புண்ணியத்தினால் பொன்னுலக வாழ்க்கையடைந்த தாகச் சொன்னாள். வேறொருத்தி, மண்ணுலகத்தில் மானிடப் பெண்ணாக இருந்த போது தனது மாமனார் மாமியாருக்கு முகங்கோணாமல் கடமைகளைச் சரியாகச் செய்தபடியால், இப்பதவி பெற்றதாகக் கூறினாள். இன்னொரு தெய்வமகள், தான் மண்ணுலகத்தில் அடிமைப் பெண்ணாக இருந்தபோது, தனக்குக் கிடைத்த ஊதியத்தைத் தான தருமம் செய்தபடியால் விண்ணுலக வாழ்வு பெற்றதாகக் கூறினாள். இவ்வாறு, முப்பத்தேழு தேவ கன்னியர் ஒவ்வொருவரும், தாம் முற்பிறப்பில் செய்த நற்செயல்களையும், அதற்குப் பயனாக இந்திர லோக பதவி பெற்றதையும் போதிசத்துவருக்குக் கூறி னார்கள். இவற்றையெல்லாம் கேட்ட போதிசத்துவர், “நான் இங்கு வந்தது மிகவும் நல்லதாயிற்று. சிறிய நற்செயல்களும், சிறு தானங்களும் எவ்வளவு பெரிய நன்மையை யளிக்கின்றன என்பதை நான் அறிந்தேன். நான் மண்ணுலகம் சென்று என்னாலான புண்ணியச் செயல்களைச் செய்வேன்” என்று கூறினார். இவ்வாறு ஏழு நாட்கள் சென்றபிறகு, தேவலோகத்து அரசன், குட்டிலப் புலவனைத் தேரில் ஏற்றி வாரணாசி நகரத்தில் கொண்டுபோய் விட்டுவரும்படி மாலதிக்குக் கூறினான். வார ணாசி வந்த போதிசத்துவர் தாம் தேவலோகத்தில் கண்டவற்றை மக்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள், தாங்களும் தங்களால் இயன்ற அளவு புண்ணியச் செயல்களைச் செய்வதாக உறுதி செய்து கொண்டார்கள். இந்தக் கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர் இப்பிறப்பை முற்பிறப்போடு ஒப்பிட்டுக் காட்டினார். அந்தப் பிறப்பிலே தேவதத்தன் மூசிலனாகவும், அநுருத்தர் சக்கனாகவும், ஆனந்தர் அரசனாகவும், ததாகதர் குட்டிலப் புலவனாகவும் இருந்தோம் என்று கூறினார். 11. காரண்டிய ஜாதகம் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது இந்தக் கதையைச் சாரிபுத்திரன் பொருட்டுக் கூறினார். புத்தரின் தலை மாணவராகிய சாரிபுத்தர் தம்மிடம் வருகிற வேடர், மீன்பிடிப்போர் முதலியவர்களுக்கும் பஞ்ச சீலங்களையும், அற நெறியையும் போதித்தார். அவர்களும், அவரிடம் கொண்டுள்ள நன் மதிப்பின் பொருட்டு அவர் கூறும் அறவுரை களையெல்லாம் கேட்டார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பது இல்லை. இதைக் கண்ட சாரிபுத்தர், மற்ற பிக்குகளுடம் இதைச் சொல்லி வருந்தினார். அவர்கள் அதைக் கேட்டு இவ்வாறு கூறினார்கள். “தேரரே! அவர்கள் விரும்பாத அறநெறியைத் தாங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். தங்கள் மீது உள்ள நன்மதிப்புக்காக அவர்கள் தாங்கள் கூறுவதைப் பணிவுடன் கேட்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு அறவுரை கூறுவதை நிறுத்தி விடுங்கள். இதைக்கேட்ட சாரிபுத்தர் மனத்தாங்கல் அடைந்தார். பிக்குகள் இதைப்பற்றித் தமக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, பகவன் புத்தர் அவ்விடம் வந்து, அவர்கள் பேசுவது இன்னதென் றறிந்தார். அறிந்து, “பிக்குகளே! இப்பிறவியில் மட்டும் அல்ல, முற் பிறவியிலும்கூட, விரும்பிக் கேட்காதவர்களுக்கும் இவர் அறவுரை போதித்தார்” என்று கூறி, இந்தக் கதையைச் சொன்னார்: வாரணாசியைப் பிரமதத்த அரசன் ஆண்ட முன்னொரு காலத்திலே, போதிசத்துவர் ஒரு பிராமண குடும்பத்திலே பிறந்து, தக்க சீல பல்கலைக் கழகத்திலே, உலகப் புகழ்படைத்த ஒரு ஆசிரியரிடத் திலே மாணவராக அமர்ந்தார். இந்த ஆசிரியர், தான் காண்கிற எல்லோருக்கும், வேடர், வலைஞர், கொலைஞர் முதலியவர்களுக்குங் கூட, அறநெறிகளையும் நல்லொழுக்கங்களையும், அவர்கள் அதைக் கேட்க விரும்பாமலிருந்தும் போதித்து வந்தார். அவர் போதனைகளை அவர்கள் கேட்டபோதிலும், அதன்படி அவர்கள் நடப்பதில்லை. இதைப்பற்றி இவர் தமது மாணவர்களிடம் பேசினார். “ஐய! அவர்கள் விரும்பிக் கேளாததைத் தாங்கள் வலியச் சென்று அவர்களுக்குப் போதிக்கிறீர். ஆகவே, அவர்கள் அதன் படி நடப்ப தில்லை. இனிமேல், விருப்பம் உள்ளவருக்கு மட்டும் உபதேசம் செய்து, விருப்பம் இல்லாதவருக்கு உபதேசம் செய் யாமல் இருங்கள்” என்று மாணவர்கள் கூறினார்கள். இவர்கள் சொல்லியதைக் கேட்டு ஆசிரியர் மனவருத்தம் அடைந்தார். ஆனாலும், தாம் பார்க்கிற எல்லோருக்கும் அறவழி கூறுவதை நிறுத்தவே இல்லை. இப்படி நிகழும்போது ஒருநாள், அருகில் இருந்த ஒரு ஊரிலிருந்து சிலர் வந்து, பிராமணர்களுக்குத் தானம் வழங்கப்போவ தாகவும், ஆசிரியர் அவர்களும் மாணவர்களோடு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். ஆசிரியர், காரண்டியன் என்னும் பெயருள்ள தமது தலைமை மாணவரை அழைத்து, “நான் போய் தானம் பெறமுடிய வில்லை. நீ மற்ற ஐந்நூறு மாண வர்களையும் அழைத்துக்கொண்டு போய், தானம் பெற்று என் னுடைய பங்கையும் கொண்டுவா” என்று சொல்லி, அவனை அனுப்பினார். மாணவன் கிராமத்துக்குப் போய் தானத்தைப் பெற்றுக்கொண்டு தன் ஆசிரியரிடம் திரும்பினான். வருகிற வழியிலே, ஒரு மலைக்குகையைக் கண்டான். கண்டு, தனக்குள் இவ்வாறு எண்ணினான்: ‘நம்முடைய ஆசிரியர், தாம் பார்க்கிற எல்லோருக்கும் - அவர்கள் விரும்பாமல் இருந்துங்கூட, உபதேசம் செய்துவருகிறார். இனிமேல் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்களுக்கு மட்டும் உபதேசிக்குபடி செய்வேன்.’ இவ்வாறு எண்ணிய தலை மாணவன், பெரிய கல்லைத் தூக்கி அதைக் குகைக்குள் எறிந்தான். இவ்வாறே பெரிய பெரிய பாறைகளை எடுத்துக் குகைக்குள்ளே எறிந்தான். இதைக்கண்ட மற்ற மாணவர்கள், “என்ன ஐயா இது! என்ன செய்கிறீர்? ஏன் பாறைகளை எடுத்துக் குகைக்குள் போடுகிறீர்?” என்று கேட்டார்கள். காரண்டியன் விடை கூறாமல், பாறைகளை எடுத்துக் குகைக்குள்ளே எறிந்து கொண்டிருந்தான். மாணவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் போய்த் தமது ஆசிரியரிடம் இதைச் சொன்னார்கள். ஆசிரியர் வந்து, காரண்டி யனிடம் இவ்வாறு கேட்டார். “காட்டில் உள்ள இந்தக் குகையில் ஏன் கற்களைப் போடுகிறாய்? மலைக்குகையைக் கல்லினால் நிரப்பி மூடப்போகிறாயா?” அப்போது காரண்டியன் இவ்வாறு சொன்னான்: “இந்த உலகத்தை எல்லாம் சமமாக்கப் போகிறேன். குன்றுகளையும் குகைகளையும் சமமாக நிரவப்போகிறேன்.” “இதுமனிதர் செய்யக்கூடிய காரியமா! இந்த ஒரு குகையைத் தானும் உன்னால் அடைக்க முடியுமா? இது என்ன பைத்தியக் காரத்தனம்” என்றார் ஆசிரியர். “என்னால் உலகத்தை நிரவிச் சமப்படுத்த முடியாவிட்டால், தங்களால் மட்டும் உலக மக்களை எப்படித் திருத்தமுடியும்?” என்று வினாவினான் காரண்டியன். இதைக்கேட்ட ஆசிரியருக்குத் தனது மாணவனின் உண்மைக் கருத்து விளங்கிற்று. இனி நான் கண்டவருக்கெல்லாம் அறவுரை கூற மாட்டேன்’ என்று தமக்குள் உறுதிசெய்துகொண்டு, இவ்வாறு கூறினார். “காரண்டிய! நீ ஏன் இப்படிச் செய்தாய் என்பதை அறிந் தேன். உலகத்தை ஒருவராலும் சமப்படுத்த முடியாது. எல்லா மக்களையும் நல்வழிப்படுத்தவும் முடியாது.” இவ்வாறு ஆசிரியர் கூறி, தமது மாணவனைப் புகழ்ந்தார். பிறகு ஆசிரியர் மாணவருடன் தமது இல்லம் சென்றார். இந்தக் கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர் “அக்காலத்தில் சாரிபுத்தர் ஆசிரியராகவும், நான் காரண்டிய மாணவனாகவும் இருந்தோம்” என்று ஒப்புமை கூறினார். 12. அவாரிய ஜாதகம் இந்த ஓடக்காரன் கதையைப் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது கூறினார். அறிவற்ற மூடனான இவன், நன்மை தீமைகளை உணராமல், முரடனாகவும், முன்கோபியாகவும், ஆவேசமுள்ளவனாகவும் இருந்தான். ஒருநாள் வெளியூரிருந்து ஒரு பிக்கு பகவன் புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். வழியிலே அசிராவதி யாற்றைக் கடக்கவேண்டி இருந்த படியால், ஓடக்காரனிடம், “நான் அக்கரைக்குப் போகவேண்டும். ஓடத்தில் ஏறலாமா?” என்று கேட்டார். “சாமி! இப்போது நேரமாய்விட்டது. இவ்விடத்திலேயே தங்கி விடுங்கள்” என்று ஒடக்காரன் சொன்னான். “நான் இங்குத் தங்க முடியாது. இப்போதே போகவேண்டும்” என்றார் பிக்கு. ஓடக்காரன் சினங்கொண்டு, “அப்படியானால் படகில் ஏறு” என்று சொல்லிப் படகைச் செலுத்தினான். சுக்கானை முரட்டுத்தனமாகத் திருப்பிப் படகில் தண்ணீர் சிதறும்படி செய்தான். அதனால், பிக்குவினுடைய ஆடை நனைந்து ஈரமாய்விட்டது. நெடுநேரம் கழித்து இருட்டான உடனே அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான். பிக்கு, ஆசிரமத்துக்குச் சென்று பகவன் புத்தரைப் பார்க்கமுடியவில்லை. அடுத்தநாள் போய், புத்தரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தார். புத்தர் பெருமான் அவரை வரவேற்று “எப்பொழுது வந்தீர்?” என்று கேட்டார். “நேற்று வந்தேன்” என்றார். “நேற்றே வராமல் ஏன் இன்று வந்தீர்?” என்று கேட்க, பிக்கு நடந்ததைச் சொன்னார். அப்போது புத்தர் கூறினார்: “இப்போது மட்டும் அவன் இப்படிச் செய்யவில்லை. முற்காலத்திலும் அவன் மூர்க்க னாகவும், முரடனாகவும் இருந்தான். ஓடத்தில் போகிறவர்களைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தான்” என்றார். அந்தக் கதையைக் கூறும்படி பிக்கு கேட்க புத்தர் இவ்வாறு கூறினார்: ஓரானொரு காலத்திலே, பிரமதத்த அரசன் வாரணாசியை அரசாண்டபோது, போதிசத்துவர் பிராமண குடும்பத்தில் பிறந் திருந்தார். அவர் தக்கசீல பல்கலைக்கழகத்திலே கல்வி கற்றுத் தேர்ந்த பிறகு துறவியானார். துறவு பூண்ட அவர் இமயமலைக் காட்டிலே நெடுங்காலம் இருந்து காய்கனிகளை உண்டு காலங் கழித்தார். பிறகு, உப்பும் காடியும் பெறுவதற்காக வாரணாசிக்கு வந்தார். வந்தவர், அரண் மனையை அடுத்த சோலையிலே தங்கி அடுத்தநாள் பிச்சைக்காக நகரத்திற்குச் சென்றார். அப்போது அரசன் அரண்மனை வாயிலில் அவர் செல்வதைக்கண்டு அவருடைய ஒழுக்கத்திற்கு மகிழ்ந்து அவரை அழைப்பித்து உணவு கொடுத்தான். பின்னர், அவரைத் தனது தோட்டத்திலே தங்கும்படி கேட்டுக்கொண்டு, நாள்தோறும் அவரிடம் வந்து வணங்கினான். அரசன் தன்னிடம் வரும்போதெல்லாம் துறவி இந்த அறி வுரையைக் கூறினார்: “அரசர் பெருமானே! அரசன் தன் நாட்டை நீதியோடும் நேர்மையோடும் அரசாள வேண்டும். தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்து பொறுமையும், அன்பும், ஆதரவும் உள்ளவனாய் இருக்கவேண்டும். மன்னர் பெருமானே! சினத்தைத் தவிர்த்துப் பொறுமையை மேற்கொள்ளவேண்டும். கோபம் இல்லாத அரசன் போற்றத்தக்கவன். நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், கடலில் இருந்தாலும், கரையில் இருந்தாலும் கோபம் இல்லாமல் பொறுமையைக் கொள்க. இதுதான் உமக்கு நான் கூறும் நல்லுரை.” இவ்வாறு போதிசத்துவர் நாள்தோறும் அரசனுக்கு அறிவுரை வழங்கினார். அரசர் மகிழ்ந்து, நூறாயிரம் காசு வரு மானம் உள்ள ஊர் ஒன்றை அவருக்குத் தானமாக வழங்கினான். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் பன்னிரண்டு ஆண்டு அங்குத் தங்கியிருந்தார். ஒருநாள் அவர் தமக்குள் எண்ணினார்: ‘நெடுங்காலம் இங்குத் தங்கிவிட்டேன். உலகத்தில் பிரயாணம் செய்து பின்னர் வருவேன்’ என்று எண்ணி, அரசனுக்குக் கூறாமல், தோட்டக் காரனிடம், “நாட்டில் சுற்றித்திரிந்து பிரயாணம் செய்யப்போகிறேன். பிறகு திரும்பி வருவேன். இதை அரசர் பெருமானிடம் சொல்லுக” என்று கூறிப் பயணம் புறப்பட்டார். புறப்பட்டுப் போனவர் கங்கையின் கரையிலே ஒரு துறையை யடைந்தார். அந்தத் துறையிலே மூர்க்கனான ஓடக்காரன் ஒருவன் இருந்தான். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் வேறுபாட்டை அவன் அறியான். அவாரியன் என்னும் பெயருள்ள அந்த ஓடக்காரன், கங்கையைக் கடந்து போகிறவர்களிடம் முதல் காசு பெற்றுக் கொள்ளாமல், படகில் ஏற்றிக்கொண்டு அக்கரைக்குக் கொண்டுபோய் விடுவான். பிறகு காசு கேட்பான். அவர்கள் காசு கொடாவிட்டால் அவர்களிடம் சண்டை பிடிப்பான். அவர்கள் அவனை வைது அடிப்பார்கள். இவ்வாறு இவனுடைய மூடத்தனத்தினாலே வசவுகளை யும் அடியையும் சண்டைகளையும் பெற்றுவந்தான். போதிசத்துவர் ஓடக்காரனிடம் வந்து, “நண்ப! என்னை அக்கரைக்குக் கொண்டுபோய் விடு” என்று சொன்னார். “பிக்குவே! எனக்கு என்ன கொடுப்பீர்?” என்று கேட்டான். “உன்னுடைய வருவாயையும் உனது நன்மையையும் உனது அறிவையும் வளர்த்துக் கொள்ளும் வழியை உனக்குச் சொல்லுவேன்” என்று கூறினார். இவர் கட்டாயம் ஏதேனும் கொடுப்பார் என்று ஓடக்காரன் நினைத்துக் கொண்டு, ஓடத்தில் ஏற்றி அக்கரைக்குக் கொண்டுபோய் இறக்கி, “எனக்கு காசு கொடு”என்று கேட்டான். போதிசத்துவர், அவன் எவ்வாறு வருவாயை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறினார். “அக்கரைக்குப் போகி றவர்களிடம் முன்னமே காசு வாங்கிக்கொண்டு பிறகு அவர்களை அக்கரைக்குக் கொண்டுபோய் இறக்கு. ஏனென்றால், மக்கள் பலவிதமாக இயல்புடையவர்கள். துறையைக் கடப்பதற்கு முன்பு ஒரு எண்ணமும், கடந்தபிறகு வேறு எண்ணமும் கொள்வார்கள். ஆகவே, முதலில் காசு பெற்றுக்கொண்டு பிறகு அக்கரைக்குக் கொண்டுபோய் விடு.” ஓடக்காரன், ஏதோ அறிவு கூறுகிறார்; பிறகு காசு கொடுப் பார் என்று எண்ணிக்கொண்டான். பிறகு, போதிசத்துவர் கூறினார்: “நீ வருவாயை வளர்த்துக்கொள்ளும் வழியைக் கூறினேன். இனி உன்னுடைய நன்மையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளும் வழியைக் கூறுகிறேன் கேள். நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், கடலில் இருந்தாலும், கரையில் இருந்தாலும் கோபம் கொள்ளாதே.” மந்த புத்தியுள்ள ஓடக்காரன், அறவுரையின் நன்மையையுணராமல், “பிக்குவே! இது தானா? நீ எனக்குக் கொடுக்கும் கூலி” என்று கேட்டான். “ஆமாம் நண்ப!” “இது எனக்குத் தேவையில்லை. வேறு ஏதேனும் கொடு.” “நண்ப! இதைத்தவிர, உனக்குக் கொடுக்க என்னிடம் வேறு ஒன்றும் இல்லை.” “அப்படியானால் ஏன் என் படகில் ஏறிவந்தீர்?” என்று சொல்லி ஆற்றங்கரையின்மேல் துறவியைத் தள்ளி அவர் மார்பின்மேல் உட்கார்ந்துகொண்டு அவர் வாயில் அடித்தான். அப்பொழுது பிக்கு, மூடர்களுக்கு புத்திமதி கூறுவது தவறு; தகுந்தவர்களுக்கு மட்டும் புத்தி மதி கூறுவது நல்லது’ என்று எண்ணினார். ‘நல்ல அறிவுரைக்கு அரசன் எனக்கு ஒரு ஊரின் வரும்படியைக் கையுறையாகத் தந்தான். அதே அறவுரைக்கு இந்த ஓடக்காரன் என்னைக் கீழே தள்ளி அடி கொடுக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டார். அவ்வமயம் ஓடக்காரன் மனைவி, அவனுக்குச் சோறு கொண்டு வந்தாள். பிக்குவைக் கண்டவுடன், கணவனைப் பார்த்து, “ஐயோ! இவரை அடிக்கவேண்டாம். இவர் அரசருடைய தோட்டத்தில் இருப்பவர்” என்று கூறித் தடுத்தாள். ஓடக்காரன் கோபங்கொண்டு, “இந்த வேஷக்காரனை அடிக்கவேண்டாம் என்கிறாயா?” என்று கூறி அவள் மேல் பாய்ந்து அவளை அடித்தான். சோற்றுப்பானை கீழே விழுந்து உடைந்து போயிற்று. படாத இடத்தில் அடிபட்டு அவள் வயிற்றிலிருந்த குழந்தை இறந்தது. அப்போது கூட்டம் கூடிவிட்டது. “கொலைகாரப் போக்கிரிப் பயலே! அரசனிடம் வா” என்று கூறிஅவனைப் பிடித்து அரச சபைக்குக் கொண்டுபோனார்கள். அரசன் விசாரணை செய்து அவனுக்கு தகுந்த தண்டனை அளித்தார். இக்கதையைக் கூறிய பிறகு பகவன் புத்தர், “இந்த ஓடக் காரனே அக்காலத்தில் ஓடக்காரனாக இருந்தான். ஆனந்ததேரர் அரசனாக இருந்தார். துறவியாக இருந்தார் ததாகர்” என்று ஒப்புமை கூறினார். 13. வெசந்தர ஜாதகம் பகவன் புத்தர் கபிலவத்து நகரத்துக்கு அருகில் ஆலமரச் சோலையில் தங்கி இருந்தபோது பெய்த மழையைப் பற்றி இந்தக் கதையைச் சொன்னார். பகவர் பௌத்த மத தர்மத்தை உலகமெங்கும் உபதேசம் செய்து கொண்டு இருந்தபோது இராஜகிருக நகரத்துக்கு வந்து அங்கு மழைக் காலத்தைக் கழித்தார். பிறகு, உதாயிதேரருடன், இருபதினாயிரம் தேரர்கள் சூழ்ந்துவரக் கபிலவத்து நகரத்துக்குப் போனார். கபிலவத்து, புத்தர் பெருமான் பிறந்த ஊர். அங்குள்ள சாக்கிய குலத்தவர், புத்தரை வரவேற்பதற்கு அழகான ஆலமரச் சோலையை இடமாகக் கொண்டார்கள். பகவர் வந்தபோது பூக்களையும் சந்தனத்தையும் ஏந்தி எதிர்கொண்டு அழைத்தார்கள். முதலில் சிறுவர் சிறுமிகளும், பிறகு இளங் காளைகளும், இள மங்கையரும் வந்து அவருக்கு வணக்கம் செலுத் தினார்கள். சாக்கியர்கள் இறுமாப்புடையவர்கள். அவர்கள் பகவருக்கு வணக்கம் செலுத்தாமல் வாளா இருந்தார்கள். இதைக்கண்ட பகவன் புத்தர், ‘எனது இனத்தார் எனக்கு வணக்கம் செலுத்தவில்லை. நல்லது. அவர்களை வணங்கும்படி செய்வேன்’ என்று தமக்குள் எண்ணிக்கொண்டு, தமது யோக சித்தியினால் உயரக் கிளம்பி ஆகாயத்தில் நின்றார். புத்தருடைய தந்தையாராகிய சுத்தோதன அரசன் வியப்படைந்து, “நீர் குழந்தையாக இருந்தபோது காள தேவல முனிவர் வந்து உம்மை வணங்கின காலத்தில், நானும் உம்மை முதல் தடவை வணங்கி னேன். பிறகு சிறுவனாக இருந்தபோது வப்பமங்கல விழாவின் போது நீர் யோகத் தில், அமர்ந்திருந்ததைக்கண்டு இரண்டாவது தடவையாக வணங்கி னேன். இப்போது, உம்மை மூன்றாவது முறையாக வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார். அரசர் வணங்கவே மற்ற வயதுசென்ற சாக்கியர்கள் எல்லோரும் புத்தரை வணங்கினார்கள். சாக்கியர் எல்லோரும் வணங்கியபிறகு பகவர் கீழே இறங்கி வந்து தமக்கென இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அமர்ந்து மன அமைதி கொண்டனர். அச்சமயத்தில் வானத்தில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இறைச்சலுடன் பெருமழை பெய்தபோதிலும், நனைய விரும்பியவர் மட்டும் நனைந்தனர். நனைய விரும்பாதவர்மேல் மழை விழவில்லை. இந்தப் புதுமையைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தனர். புத்தருடைய ஆற்றலைப் பாருங்கள். நமது நாட்டில் பெருமழை பெய்யச் செய்தார் என்று அவர்கள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர். அப்போது பகவன் புத்தர், “இதுதான் ததாகதர் செய்த முதல் புதுமை யன்று. இதற்கு முற்பிறப்பிலும் மழைபொழியச் செய்திருக்கிறார்” என்று சொன்னார். அவர்கள் அந்தக் கதையைச் சொல்லும்படி அவரைக் கேட்டபோது, அவர்களுக்கு இக்கதையைச் சொன்னார். முன்னொரு காலத்தில் சிவி நாட்டைச் சிவி என்னும் பெயருள்ள அரசன் ஜேதுத்தர நகரத்தில் இருந்து அரசாட்சி செய்துவந்தார். அந்தச் சிவி அரசனுக்குச் சஞ்சயன் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சஞ்சய குமாரன் வயதடைந்தபோது, மத்தநாட்டரசன் மகள் பூவதி என்னும் அரச குமாரத்தியைச் சிவி அரசன் மணஞ்செய்து வைத்தார். பிறகு, சிவி அரசன் தன் மகன் சஞ்சயனுக்குப் பட்டங்கட்டி சிவி நாட்டிற்கு அரச னாக்கினார். அரசனாகிய சஞ்சயனும் அரசியாகிய பூவதியும் மன மொத்து இன்பமாக வாழ்ந்தார்கள். அப்போது பூவதி வயிறு வாய்த்தாள். தேவர் கோமானாகிய சக்கன் இதையறிந்து, பூவதி அரசியின் திரு வயிற்றிலே போதிசத்துவரைப் பிறக்கும்படிச் செய்ய எண்ணினார். அக்காலத்தில் முப்பத்து மூன்று தேவர் உலகத்திலே போதி சத்துவர் ஒரு தேவனாகப் பிறந்திருந்தார். சக்கன் அவரை அணுகி, “உமக்குத் தேவர் உலகில் இருக்கவேண்டிய காலம் கடந்துவிட்டது. தாங்கள் இப்போது பூவதி அரசியின் வயிற்றில் மகவாகப் பிறந்து சிவி நாட்டை அரசாளவேண்டும்” என்று வேண்டினார். போதி சத்துவர், சக்கனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, சிவி நாட்டு அரசி பூவதியின் வயிற்றில் கருவாகத் தங்கினார். பூவதி அரசி தான் வயிறு வாய்த்திருப்பதைச் சஞ்சய மன்னனுக்குத் தெரிவித்தார். தெரிவித்து அரண்மனையிலும், நகரத்தின் நடுவிலும், நான்கு திசைகளிலும் உள்ள நகர வாயில்கள் நான்கிலும் ஆக ஆறு அறச்சாலைகளை அமைத்து அதில் நாள் தோறும் ஆறு லட்சம் பொன் தானம் செய்ய விரும்புவதாகக் கூறினார். சஞ்சய மன்னன் சோதிடரை அழைத்து, நிமித்தம் சொல்லக் கேட்டான். அவர்களும் ஆராய்ந்து பார்த்து, “திருவயிறு வாய்த்திருக் கும் குழந்தை தன் ஆயுள்காலம் வரையிலும் தான தருமம் செய்வதி லேயே கண்ணுங் கருத்துமாயிருக்கும். எவ்வளவு தான தருமம் செய்தாலும் அக்குழந்தை திருப்தி அடையாது” என்று கூறினார்கள். அரசன் அதைக்கேட்டு மகிழ்ந்து, முன் சொன்னதுபோல, ஆறு அறச் சாலைகளை அமைத்து அதில் நாள் தோறும் ஆறு இலட்சம் பொன் தான தருமங்களைச் செய்தார். போதிசத்துவர் பூவதி அரசியின் திரு வயிற்றிலே கருவாக அமர்ந்தது முதல், சிவி நாட்டரசன் சஞ்சயனுக்குச் செல்வம் பெருகுவதாயிற்று. நாவலந் தீவிலுள்ள மன்னர்கள் அனைவரும் சஞ்சய மன்னனுக்குப் பொன்னையும் பொருளையும் கையுறையாக வழங்கினார்கள். அரசியார் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப் போது அவர் நகரத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினார். அரசன் நகர வீதிகளைப் புனைந்து அலங்கரித்து, அரசியாரைத் தேரில் அமர்த்தி அனுப்பினான். அரசியார், யானை சேனை சூழ்ந்துவரப் புறப்பட்டு நகர்வலம் வரும் போது, பிள்ளைப் பேறுக்காலம் வந்தது. இதையறிந்த அரசன் அத்தெரு விலே ஒரு நல்ல மாளிகையில் இடம் அமைத்துக் கொடுத்தார். அவ் விடத்திலே போதிசத்துவர், அரசியார் வயிற்றில் ஆண் குழுந்தையாய் பிறந்தார். அக்குழந்தைக்கு வெசந்தரகுமரன் என்று பெயரிட்டார்கள். அரசன் அறுபதினாயிரம் செவிலித் தாய்மாரை அமைத்துக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தான். வெசந்தரகுமாரன் பிறந்த அதே நாளில், காட்டில் ஒரு பெண் யானை, ஒரு கன்றை ஈன்றது. நல்ல ஓரையில் பிறந்த இந்த யானைக் கன்று உடல் முழுவதும் வெண்ணிறம் உடையதாக இருந்தது. இக் கன்றை ஈன்ற பிடியானை அக்கன்றைக் கொண்டு வந்து அரசனுடைய யானைப் பந்தியில் விட்டுச் சென்றது. குழந்தைப் பருவம் முதற்கொண்டு வெசந்தர குமாரனுக்குத் தானம் வழங்குவதில் மனஞ்சென்றது. ஐந்து வயதானபோது, அரசர் பெருமான், நூறாயிரம் பொன் பெறுமதியுள்ள பொன்னரி மாலையை இக்குமாரனுக்குக் கழுத்தில் அணிவித்தார். குமரன் அந்த மாலையை எடுத்து அதைத் தன் செவிலித் தாயாருக்கு வெகுமதியாக அளித்தான். செவிலித்தாயார் இச்செய்தியை அரசனுக்குக் கூற அரசன், “என் மகன் தானமாகக் கொடுத்தது தானந்தான். அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அரசர் பெருமான், தன் அருமை மகனுக்கு ஒன்பது தடவை பொன்னரி மாலைகளை - ஒவ்வொன்றும் நூறாயிரம் பொன் மதிப்புள்ள மாலைகளை அளித்தார். அவை ஒவ்வொன்றையும், அரசகுமரன் தனது செவிலித் தாயாருக்குத் தானமாக வழங்கி விட்டார். சின்னஞ் சிறுவனாக இருந்தபோதே தான தருமஞ் செய்வதற்கு இந்த அரசகுமரன் மிகவும் ஆசையுள்ளவராக இருந்தார். வெசந்தர குமாரன் எல்லாக் கலைகளையும் வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவருக்குப் பதினாறு வயது ஆனபோது, சஞ்சய மன்னன் தன் மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணித் தன் அரசியாகிய பூவதியுடன் யோசித்தார். யோசித்து மத்தநாட்டரசனான தன் மாமனாரின் பேத்தியாகிய மாதி என்னும் அரசகுமாரியை வெசந்தர குமாரனுக்குத் திருமணம் செய்துவித்துப் பின்னர் அவருக்கு இளவரசுப் பட்டமும் கட்டினார். சிவி நாட்டின் இளவரசனான பிறகு வெசந்தர குமாரன், முன்னை விடப் பன்மடங்கு தான தருமங்களைச் செய்து வந்தார். அவர் நாள்தோறும் ஆறு லட்சம் பொன் தானம் செய்துவந்தார். வெசந்தர இளவரசரின் மனைவி மாதியார் ஒரு ஆண் மகவைப் பெற்றார். அந்தக் குழந்தைக்கு ஜாலி என்று பெயர் சூட்டினர். அக் குழந்தை நடக்கும் வயதடைந்தபோது, மாதியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றார். இப்பெண் குழந்தைக்குக் கண்ணாஜினா என்று பெயர் சூட்டினார்கள். வெசந்தர குமாரன் திங்களுக்கு ஆறுமுறை, தமது புகழ்பெற்ற வெள்ளை யானையின்மேல் அமர்ந்து ஆறு அறச்சாலைகளுக்குஞ் சென்று அறச்செயல்கள் செவ்வனே நடக்கின்றனவா என்பதை நேரே சென்று பார்த்து வருவார். அப்போது கங்க நாட்டில் பெரிய வற்கடம் உண்டாயிற்று. மழை இல்லாமல், நிலபுலங்கள் விளையாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் கொள்ளையும், களவும் செய்யத் தலைப்பட்டனர். பசித்துன்பம் பொறுக்க முடியாமல் கங்க நாட்டு மக்கள் தங்கள் அரசனிடம் சென்று அவரைக் குறை கூறினார்கள். அவர்களின் குறைபாட்டைக் கேட்ட அரசன், “நல்லது, மழையைத் தருவிக்கிறேன், போங்கள்” என்று சொல்லி அனுப்பினார். பிறகு மழை பெய்வதற்காக நோன்பு நோற்று, தவம் இருந்து கடவுளை வேண்டினான். அப்பொழுதும் மழை பொழியாமற் போகவே, கலிங்க நாட்டரசன் தனது குடிமக்களை அழைத்துக் கூறினான். “ஏழு நாட்கள் நோன்பிருந்து கடவுளை வேண்டினேன். மழை பெய்ய வில்லை. நான் என்னசெய்யட்டும்?” இதைக்கேட்ட ஜனங்கள் இதைக் கூறினார்கள்: “தங்களால் மழை பெய்விக்க முடியாமற்போனால், ஜேதுத்தர நகரத்தில், சஞ்சய மன்னன் மகன் வெசந்தரகுமாரன், வரையாது கொடுக்கும் வள்ளலாக வாழ்கிறார். அவரிடம் பெருமை வாய்ந்த வெள்ளை யானை ஒன்று உண்டு. அந்த யானை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் நிறைய மழை பெய்கிறது. அந்தக் குமரனிடம் பிராமணர்களை அனுப்பி அந்த யானையை நமது நாட்டிற்குக் கொண்டுவரச் செய்யுங்கள். அந்த யானை இங்கு வந்தால் நமது நாட்டில் மழை பெய்யும்” என்று சொன்னார்கள். அவர்கள் கூறிய யோசனையைக் கங்க நாட்டரசன் ஏற்றுக் கொண்டார். அவர், பிராமணர்களை அழைத்து அவர்களில் எண்மரைத் தேர்ந்தெடுத்து யாத்திரைக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து. “நீங்கள் போய் வெசந்தர குமாரனிடத்தில் உள்ள வெள்ளை யானையைக் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார். பிராமணர் புறப்பட்டுச் சென்றார்கள். உரிய காலத்தில் ஜேதுத்தர நகரத்தையடைந்து அங்கு ஒரு இடத்தில் தங்கினார்கள். வெள்ளுவா நாளில், வெசந்தர குமாரன் அறச்சாலைக்கு வரும்போது, அவரிடம் வெள்ளை யானையைத் தானம் பெறுவதற்காகக் கிழக்கு வாயில் அறச்சாலைக்கு வந்தார்கள். வெசந்தர குமாரன் காலையில் பதினாறு குடம் பனிநீரில் குளித்து முழுகி முத்தாழம் உண்டபிறகு, அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை யானைமேல் அமர்ந்து கிழக்குத் திசை அறச்சாலைக்குச் சென்றார். அவ்விடத்தில் தானம் பெறுவதற்குப் பிராமணர் களுக்குச் சமயம் வாய்க்கவில்லை. ஆகவே, அவர்கள் தெற்கு வாயில் அறச்சாலைக்குச் சென்று அங்கு உயரமான ஓரிடத்தில் நின்று காத்திருந்தனர். வெசந்தர குமாரன் வெள்ளை யானைமேல் அமர்ந்து அவ்விடம் வந்தார். அப்போது பிராமணர்கள், “வள்ளல் வாழ்க! வெசந்தர குமரன் வாழ்க!” என்று வாழ்த்தினார் கள். இளவரசன் பிராமணர்களைக் கண்டு, அவர்கள் இருந்த இடத்திற்கு யானையைச் செலுத்தி அருகில் போய், “பிராமணர்களே! ஏன் கையை நீட்டிக் கொண்டு ஆரவாரம் செய்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “வள்ளலே! தங்களுடைய குடி ஜனங்கள் உயிர்போலக் கருதி வருகிற உயர்ந்த பொருளை நாங்கள் தானம் கேட்கிறோம். தங்களுடைய வெள்ளை யானையை எங்களுக்குத் தானம் செய் தருள வேண்டுகிறோம்” என்று இரந்து வேண்டினார்கள். இதைக்கேட்ட வெசந்தர குமாரன் தமக்குள் யோசித்தான். ‘எனக்குரிய பொருள்கள் எதுவானாலும் நான் கொடுக்க தயங்க மாட்டேன். என் தலையையும் தானமாகக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால், எனக்கு உரியதல்லாத, அரசாங்கத்துக்கே உரியதான கொற்றத்து யானையை இவர்கள் தானம் கேட்கிறார் கள். ஆனாலும், இவர்கள் விரும்பியபடியே இதை இவர்களுக்குத் தானமாக வழங்குவேன்’ என்று தமக்குள் எண்ணினார். பிறகு பிராமணர்களிடம், “தானம் ஈவதே என் வழக்கம். இல்லை என்று கூறுவது எனக்கு உகந்த தல்ல. நீங்கள் கேட்கிறபடியே இந்த அருமையான யானையை உங்க ளுக்குத் தானமாகத் தருகிறேன்” என்று கூறி, யானையை விட்டிறங்கி அதன் தும்பிக்கையைப் பிடித்துப் பிராமணர் கையில் கொடுத்தார். யானையின் கால்களில் நூறாயிரம் பொன் மதிப்புள்ள பொன் அணிகள் அணியப்பட்டிருந்தன. அதன் முகத்திலும் தந்தங்களிலும் முதுகிலும் பலகோடி பொன் பெறுமானமுள்ள பொன் நகைகளும் வெள்ளி அணிகளும் அணியப்பட்டிருந்தன. யானையின்மேல் இருந்த பொன் அம்பாரி நூறுகோடி பொன் பெறத்தக்கது. இவ்வாறு பெரும் பொருள் மதிப்புள்ள அணி களையணிந்த புகழ் பெற்ற வெள்ளை யானையையும் அதற்கு ஊழியம் செய்யும் யானைப் பாகர், ஏவலாளர் முதலிய ஐந்நூறு ஆட்களையும் அரசகுமரன் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்போது விண்ணுலகமும் மண்ணுலகமும் அதிர்ந்தது. தேவர்கள் புகழ்ந்து வியந்தார்கள். ஜேதுத்தர நகரம் அதிர்ந்தது. யானையைத் தானமாகப் பெற்ற பிராமணர்கள் யானையின் மேல் அமர்ந்து யானைப்பாகர் சூழ்ந்துவர, தெற்கு வாயிலிலிருந்து நகரத்தின் நடுவே சென்றார்கள். அவர்களைக் கண்ட நகர மக்கள், “பிராமணர் களே, எங்கள் யானையின்மேல் அமர்ந்து அதை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று வினவினார்கள். வெசந்தர வள்ளல் இந்த யானையை எங்களுக்குத் தானமாக கொடுத்தார். நீங்கள் யார் எங்களைக் கேட்க? என்று இறுமாந்து விடைகூறி, யானையை வடக்குப் புற வாயில் வழியாகச் செலுத்தி நகரத்தைக் கடந்து சென்றார்கள். தங்கள் யானை போய்விட்டதைக் கண்ட நகர மக்கள் வெசந்தர குமாரன்மேல் சீற்றம் கொண்டு அவரைக் குற்றங்கூறிப் பழித்தார்கள். அருமையான யானை போய்விட்டதற்காக மனந்துடித்துச் சினங் கொண்டு எல்லோரும் திரண்டு பெருங் கூட்டமாக அரண்மனைக்கு வந்து அரசனிடம் முறையிட்டார் கள். “அரசர் பெருமானே! உமது நாடு அழிந்துவிட்டது. எங்களால் உயிர்போலக் கருதப்படுகிற மழைவளம் தருகிற வெள்ளை யானையை இளவரசர் பார்ப்பனருக்குத் தானம் செய்துவிட்டார். பார்ப்பனருக்கு உணவும் உடையும் உறையுளும் தானம் செய்யட்டும். பொன்னையும் பொருளையும் தானம் செய்யட்டும். வேறு எதையும் தானம் செய்யட்டும். நாங்கள் தடுக்கவில்லை. நாட்டுக்கே செல்வமாக விளங்குகிற வெள்ளை யானையை வெசந்தரகுமரன் ஏன் தானங்கொடுத்தார்? குடிமக்களாகிய எங்கள் முறையீட்டை அரசராகிய தாங்கள் கேட்டு முறை செய்யவேண்டும். தாங்கள் நீதிப்படி முறை செய்யா விட்டால், நாங்களே தங்களையும் தங்கள் குமாரனையும் தக்கபடி தண்டிக்க முற்படுவோம்” என்று கண்டிப்பாக முறையிட்டார்கள். நாட்டு மக்களின் சீற்றத்தையும், அவர்கள் பேசிய வார்த்தை களையும் கேட்ட அரசர் பெருமான், தன் குமரனுக்கு கொலைத் தண்டனை கொடுக்கும்படி அவர்கள் கூறுவதாக ஐயங்கொண்டார். “எமது வெசந்தர குமாரனுக்குக் கொலைத் தண்டனை கொடுக்க நாம் உடன் படோம். குமாரன் அத்தகைய குற்றம் ஒன்றும் செய்யவில்லை” என்று கூறினார் அரசர் பெருமான். “இளவரசரைக் கொலை செய்யும்படி நாங்கள் சொல்ல வில்லை. சிறையில் அடைக்கவும் சொல்லவில்லை. அவரை நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று நாட்டு மக்கள் கூறினார்கள். இதைக்கேட்ட அரசன், “நல்லது, அப்படியே ஆகட்டும். இன்று இரவு முழுவதும் இங்கே இருக்கட்டும். நாளைக் காலை யில் நீங்களே வந்து இளவரசனை நாடுகடத்திவிடுங்கள்” என்றுகூறி அவர்களை அனுப்பிவிட்டார். பிறகு, சஞ்சய மன்னன் வெசந்தர குமாரனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லும்படி ஒரு தூதனை அனுப்பினார். தூதன் இளவரசரின் அரண்மனைக்குப் போய் அவரைக்கண்டு வணங்கி, செய்தியைச் சொன்னான்: “பெருமான்அடிகளே! அடியேனை மன்னித்தருள்க. துன்பமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். சிவி நாட்டு மக்கள் - உயர்ந்தவர் தாழ்ந்தவர், செல்வர் வறியவர் முதலிய எல்லோரும் ஒருங்குதிரண்டு வந்து, தங்களை நாடுகடத்தும் படி மன்னர் பெருமானிடம் கூறினார்கள். இன்று இரவு கழிந்து நாளை பொழுது விடிந்தவுடன் ஜனங்கள் வந்து தங்களை, அந்தோ! நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். மன்னர் பெருமான் இதைத் தங்களுக்கு அறிவிக்கச் சொன்னார்” என்று வருத்தத்தோடு கூறினான். “நாட்டு மக்களுக்கு நான் செய்த தீங்கு என்ன? என்னை ஏன் அவர்கள் நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்ப விரும்புகிறார்கள்?” “தாங்கள் வரையாது வழங்கும் வள்ளலாக இருப்பதுதான், தாங்கள் செய்த குற்றம்.” “எமது உடம்பின் உறுப்புக்களாகிய கண்ணையும், இரு தயத்தையுங்கூட நான் தானங்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். அப்படியிருக்க, புறப்பொருளாகிய செல்வங்களை-பொன்னையும் பொருளையும், முத்தையும் மணிகளையும் தானங்கொடுக்கத் தயங்குவேனா? மக்கள் என்னை நாடு கடத்தட்டும். இல்லை; எம்மைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லட்டும். நாம் தானம் செய்வதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். தானம் செய்வதே எமக்கு இன்பகரமான காரியம்” என்று கூறினார் இளவரசர். “சிவி நாட்டு மக்களின் எண்ணத்தை அடியேன் தெரிவித் தேன். நாடு கடத்தப்பட்டோர் போகிற, ஆரஞ்சர மலையின் அருகில் ஓடுகிற கொந்திமார ஆற்றண்டை தாங்கள் செல்வது நல்லது” என்று தூதன் கூறினான். “நல்லது. அந்த இடத்துக்கே நான் போவேன். அந்த அருமை யான யானையைத் தானங்கொடுத்ததற்காக எம்மை நாடுகடத்த விரும்புகிறார்கள். நாம் நாட்டைவிட்டுப் போவதற்குமுன் எழுநூற்றுத் தானம் செய்ய விரும்புகிறேன், ஆகையால் நாளைப் பகல் முழுவதும் நகரத்தில் இருக்க அனுமதிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொள்கி றோம். தானம் செய்து முடிந்தவுடன் அடுத்த நாள் காலையில் காட்டுக்குப் போய் விடுகிறோம்” என்று கூறி னார் இளவரசர். “இச்செய்தி மக்களுக்கு அறிவிக்கப்படும்” என்று சொல்லித் தூதன் வணங்கி விடைபெற்றுச் சென்றான். தூதன் சென்றபிறகு, வெசந்தர குமாரன் அமைச்சரை அழைத்துக் கூறினார்: “நாளைக்கு எழுநூற்றுத் தானம் செய்ய விரும்புகிறோன். அதற்காக எழுநூறு யானைகளையும் எழுநூறு குதிரைகளையும், எழுநூறு தேர்களையும், எழுநூறு கன்னிகைகளையும், எழுநூறு ஆண்பால் அடிமைகளையும், எழுநூறு பெண்பால் அடிமைகளையும் தானங் கொடுக்க ஆயத்தம் செய்துவைக்க வேண்டும்.” மேலும் பொன், பொருள், உணவு, உடுப்பு முதலிய தானங் கொடுக்கத்தக்க பொருள்களையும் ஆயத்தம் செய்து வைக்கவேண்டும். இவ்வாறு அமைச்சரிடம் தெரிவித்தபிறகு, மாதி அரசியார் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போனார். போய் மாதியாரிடம் கூறினார்: “நாம் உமக்கு அளித்த பொன்னையும் பொருளையும், முத்துக்களையும் நவமணிகளையும், உமது தந்தையார் சீதனமாக அளித்த செல்வங்களையும் மற்றும் உமக்கு உரிய செல்வப் பொருள் களையும் நல்ல இடத்தில் வைத்து விடுக.” “இந்தச் செல்வங்களை எல்லாம் எந்த இடத்தில் சேமித்து வைப்பது?” என்று கேட்டார் மாதி அரசகுமாரி. “தக்கவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, வறுமையால் வாடித் துன்புறுகிறவர்களுக்குக் கொடுப்பதுதான் இப்பொருள்களை வைக்கவேண்டிய இடம்” என்று கூறினார் போதிசத்துவராகிய இளவரசர். “நல்லது” என்று மாதியார் ஒப்புக்கொண்டார். பிறகு, இளவரசர் மாதியைப் பார்த்துக் கூறினார்: “மாதி! உமது மக்களிடத்தில் அன்பாக இரு. எமது பெற்றோராகிய உமது மாமனார் மாமியாரிடத்திலும், நாம் வணக்கமாக இருப்பது போலவே, வணக்கமாக நடந்து கொள். நாம் போய்விட்ட பிறகு உம்மை ஒருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லையானால், நீரே உமக்கு விருப்ப முள்ள கணவன் ஒருவனைத்தேடி மணந்து கொள்.” இதைக்கேட்டு மாதியார், ‘என் தலைவர் ஏன் இவ்வாறு கூறுகிறார்?’ என்று தமக்குள் எண்ணி, “தலைவரே! ஏன் தாங்கள் இவ்வாறு கூறத்தகாதவற்றைக் கூறுகிறீர்?” என்று வினவினார். “நாம் அரசாங்கத்துக்குரிய யானையைத் தானங்கொடுத்த படியால், நாட்டு மக்கள் சீற்றங்கொண்டு நம்மை நாடுகடத்தப் போகிறார் களாம். நாளைக்கு எழுநூற்றுத் தானம் செய்தபிறகு நான் நாட்டை விட்டுப் போய்விடவேண்டும்” என்று விளக்கம் கூறினார் இளவரசர். “தாங்கள் மட்டும் காடு செல்வது முறையன்று. தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம், களிறு செல்லும் இடங்களுக் கெல்லாம் பிடியானை பின் தொடர்ந்து செல்லுவதுபோல, நானும் செல்வேன். நான் மட்டும் தனியே இருக்க இயலாது. தனியே விட்டுச் செல்வதாக இருந்தால், தீ வளர்த்து அத்தீயில் விழுந்து இறப்பேன். நமது குழந்தைகளுடன் தங்களோடு வருவேன். என்னால் தங்களுக்கு யாதொரு துன்பமும் உண்டாகாது” என்று அரசகுமாரி கூறினார். பிறகு இமயமலைக் காட்டைப் பற்றித் தாம் அங்குச் சென்று பழகியவர்போலப் புகழ்ந்து பேசினார். “மரம் அடர்ந்த காடுகளில் நமது குழந்தைகள் சிரித்து விளை யாடுவதைக் கண்டால் தாங்கள் தங்களையே மறந்து விடுவீர்கள். காட்டில் சென்று வாழும்போது நமது சிறுவர்களின் மழலைப்பேச்சு செவிக்கு இனிமையைத் தரும். அருமைக் குழந்தைகள் செடிகளை வளர்ப்பதைக் கண்டால் மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் குதித்துக் கூத்தாடி விளையாடு வதைக் கண்டால் மெய்மறந்து விடுவீர்.அவர்கள் பூக்களைப் பறித்து வந்து மாலைதொடுத்து விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.” “அறுபது வயதுள்ள யானை தலைமை தாங்கி முன்னே நடக்க அதைப் பின்தொடர்ந்து செல்லுகிற யானைகளின் கூட்டத்தைக் கண்டால் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! காடுகளில் விலங்குகள் கத்துவது காதுக்கு மகிழ்ச்சியளிக்கும். சூரியன் மறைகிற மாலை வேளையில் மான் கூட்டங்கள் வருவது இனிய காட்சி. ஆற்றங் கரையில் அலைகள் மோதுவதும் நீர் அறமகளிரின் இன்னிசைப் பாட்டும் உள்ளத்தைக் கவரும். மலைக்குகைகளில் ஆந்தைகள் அலறுவதும், காண்டாமிருகமும் காட்டெருமையும் புலியும் சிங்கமும் கூவிக் கர்ச்சிப்பதும் காட்டையே அதிரும்படிச் செய்யும். மலைகள் மேலே ஆண் மயில்கள் தோகை விரித்துப் பெண்மயில்கள் காணும்படி ஆடும் காட்சி காணத்தக்கது. பல வர்ணப் பறவைகள் மரங்களில் அமர்ந் தும் பறந்தும் பாடுவது செவிக்கு இனிமையாக இருக்கும். பூக்கும் காலங்களில் மரங்கள் பூத்து இனிய நறுமணத்தை அள்ளி வீசும். இவை எல்லாம் இனிமை தருவன” என்று தான் காட்டிலே நெடு நாள் பழகியவர்போல இளவரசியார் கூறினார். இவ்வாறு மாதி, இளவரசரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அரச மாதேவியார் தமது மகன் நாடு கடத்தப்படுவதைக் கேள்வியுற்று மன வருத்தம் அடைந்து, தமது மகனைக்காண மூடுவண்டியில் ஏறி இளவரசன் இருக்கும் அரண்மனைக்கு வந்தார். வந்தவர் வெசந்தர குமாரனும் மாதியும் காட்டுக்குப் போவதுபற்றி உரையாடிக் கொண் டிருப்பதைக் கேட்டார். கேட்டுத் தாங் கொணாத் துயரம் அடைந்தார். ‘ஐயோ. வெசந்தரகுமாரனைக் காட்டுக்கு அனுப்புவதா? இதைக் காண்பதைவிட நஞ்சு உண்டு இறப்பது நல்லது. மலை யேறி வீழ்ந்து மாய்வது மேலானது; கழுத்தில் கயிறு கட்டிச் சுருக் கிட்டுச் சாவது சிறந்தது’ என்று தமக்குள் கூறிக்கொண்டார். பிறகு, தமது மனத்தில் நிறைந்து கிடக்கும் துயரத்தை அடக்கிக் கொண்டு தமது மகனுக்கும் மருமகளுக்கும் ஆறுதல் வார்த்தை கூறினார். பிறகு அரசரிடம் போனார். போய், “நமது அருமை மகனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டால், நகரம் நரகமாக மாறிவிடும் அல்லவா? பெருஞ் செல்வத்தைத் தொலைத்து விட்டு வறுமை யடைந்தவனைப் போலல்லவா துன்பப்பட வேண்டும். நீர் வற்றிப் போன குளத்தில், சிறகுகள் அறுக்கப்பட்ட அன்னப்பறவை துன்புறுவதுபோல அன்றோ மனம் துடிக்கும். நாட்டு மக்கள் சொல்லுகிறார்கள் என்று அருமை மகனைக் காட்டுக்கு அனுப்புவதா? வேண்டாம். அவனைக் காட்டுக்கு அனுப்பவேண்டாம்” என்று அரசனிடம் வருந்தி வேண்டிக் கொண்டார். “குமாரனை நாடு கடத்துவது நான் அல்ல. நாட்டு மக்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களின் தீர்ப்புக்கு உடன்படுவது அரச னாகிய என்னுடைய கடமை. என் கடமையிலிருந்து நான் தவறுவது கூடாது” என்று அரசர் பெருமான் விளக்கிக் கூறினார். இதைக்கேட்ட அரசியாரின் மனம் உடைந்துவிட்டது. அவர் வாய்விட்டுக் கதறி அழுதார். “பூத்து மலர்ந்த காடுபோல, கொடிகளை ஏந்திப் பரிவாரமும் சேனையும் சூழ, யானை ஏறி உலாவிவந்த என் மகன் தன்னந் தனியே காட்டுக்குச் செல்வதோ!” “பல்லக்கிலும் தேரிலும் யானையிலும் ஊர்வலம் வந்த வெசந்தரகுமாரன், இன்று கால்கடுக்க தரையில் நடந்து கானகம் செல்வதோ!” “பாட்டுப்பாடி துயில் எழுப்பி பனிநீரில் குளித்து நறுஞ் சாந்து பூசி பட்டாடை உடுத்திச் செல்வமாக வளர்ந்த செல்வ மகன், தோல்ஆடை அணிந்து வெட்டரிவாளும் கோடரியும் சுமந்து காட்டில் வாழ்வதோ!” “காசிப்பட்டும் பால் ஆவிபோலும் மெல்லிய கலிங்க ஆடையும் உடுத்த இளவரசி, மரவுரியும் புல் ஆடையும் எவ்வாறு அணிவளோ?” “சிவிகையிலும் வண்டியிலும் அமர்ந்து சென்ற அழகிய மாதி, மெல்லிய பாதங்கள் நோவக் காட்டிலே கல்லிலும் முள்ளிலும் நடக்கவோ!” “ஆயிரம்பேர் ஏவல் செய்யச் சுகமாக வாழும் என் மருமகள், தன்னந்தனியே காட்டில் வாழ்வதோ?” “நரியின் குரலைக் கேட்டும், ஆந்தையின் அலறலைக் கேட்டும் நடுங்குகிற இவள், காட்டில் கொடிய மிருகங்களின் கூச்சலைக் கேட்டு என்ன ஆவாள்?” “கூட்டில் வளர்ந்த குஞ்சுகள் கொல்லப்பட்டதைக் கண்டு கதறுகிற பறவையைப்போல, என் மக்கள் காட்டுக்குப் போனால் என் மனம் பதறுமே!” இவ்வாறு பலவாறு சொல்லி அரசியார் அழுதாள். வெசந்தரகுமாரன் தானம் செய்யப்போகிற செய்தி நாடெங் கும் பரவிற்று. பல திசைகளில் இருந்தும் மக்கள் தானம் பெறவந்தார்கள். அரச குலத்தாரும், பிராமணரும், வைசியரும், சூத்திரரும் எல்லோரும் வந்து தத்தமக்கு வேண்டிய பொருள்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டு போனார்கள். நாள் முழுவதும் ஓயாமல் தானம் செய்தும் மேன்மேலும் மக்கள் கூட்டம் வந்துகொண்டேயிருந்தது. இளவரசர் எல்லோருக்கும் தானம் வழங்கினார். பொழுது மறைந்து இரவு வந்தது. இளவரசர், பெற்றோரிடம் விடைபெறுவதற்காகச் சென்றார். சென்று தந்தையிடம், “காட்டுக்குப் போகிறேன். நாட்டு மக்களுக்கு நான் செய்த குற்றம் தானம் வழங்கியதேயாகும். அவர்கள் தீர்ப்புப்படி நான் நாடு கடந்து காட்டுக்குப் போகிறேன்” என்று கூறி, தமது அன்னையாரிடம், “அன்னையே! காட்டுக்குப் போகிறேன். ஆசியளியுங்கள்” என்று கூறினார். “என்னுடைய ஆசி நிறைய உண்டு. மாதியையும் குழந்தை களையும் இங்கே விட்டுவிட்டுப் போ.” “மாதிக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருக்கட்டும். இல்லை யானால், என்னுடன் வரட்டும்.” சஞ்சய அரசன், மாதியை அரண்மனையில் தங்கும்படிக் கூறினார். “மென்மையான உன் உடம்பு, மரவுரி உடுத்திப் புழுதியிலும் அழுக்கிலும் புழுங்குவதற்கு ஏற்றதல்ல” என்று கூறினார். “இளவரசர் இல்லாத இடம் எனக்குச் சுகமான இடம் அல்ல” என்று கூறினார் மாதியார். அரசன் காட்டின் துன்பங்களை விளக்கிக் கூறினார்: “அங்கே புழுக்களும் பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் எறும்புகளும் வண்டு களும் நிறைய உண்டு. அவை கடித்தால், உன்னால் நோவு பொறுக்க முடியாது. விஷப்பாம்புகளும் மலைப்பாம்பு களும் உண்டு. சடை பிடித்த கரிய மயிருள்ள கரடிகள் கொடி யவை. மரத்தின்மேல் ஏறிக் கொண்டாலும், மரமேறி வந்து ஆளை அடித்துக் கொல்லும். கடாமான்கள் கூர்மையான கொம்புகளால் குத்திக் கொல்லும். குரங்குக் கூட்டங்களுக் கிடையில் அகப்பட்டுக் கொண்டால், அவை உன்னை அச்சுறுத்திப் பயப்படுத்தும். நரியின் கூச்சலைக் கேட்டாலும் அஞ்சி நடுங்கும் நீ அங்கே போனால் என்ன ஆவாய்! பட்டப்பகலிலும், பறவைகள் அமைதியாக இருக்கும்போதும், காடு பயங்கரமானது. நீ ஏன் அங்கே போகிறாய்? காட்டு வாழ்க்கை துன்பகரமானது.” மாதியார் கூறினார்: “காட்டு வாழ்க்கை கடினமானதுதான். ஆனாலும் இவருடனே நான் போவேன். கணவனுக்கு ஊழியம் செய்ய, என் கடமையைச் செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன். சாணி எடுத்து வரட்டி தட்டியும், நெருப்பு மூட்டிச் சமைத்தும், நீரை முகந்து எடுத்தும் நான் வேலை செய்வேன். கணவன் இல்லாத வாழ்க்கை, அரசு இல்லாத நாடும், நீர் இல்லாத ஆறும் போன்று வெறுமையானது. செல்வத்தில் வாழ்ந்தாலும் வறுமையில் வாடினாலும் கணவனுடன் இருப்பதுதான் மனைவியின் கடமை. இளவரசர் நாடு கடத்தப்பட்டால் நானும் நாடு கடத்தப்பட்டவள்தான்.” “அப்படியானால் குழந்தைகளை இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்று கூறினார் அரசர். “இவர்கள் என் உயிர் போன்றவர்கள்; இவர்களைப் பிரிந்தால் என் உயிரே போய்விடும்” என்று கூறினார் மாதியார். அரசர் பெருமான் கூறினார்: “நன்றாகச் சமைத்த சுவையுள்ள உணவைச் சாப்பிட்டுப் பழகிய இக்குழந்தைகள் காட்டில் காய் கிழங்குகளைத் தின்று துன்புறுவார்கள். தங்கத் தட்டிலும் வெள்ளிப் பாத்திரத்திலும் உணவு அருந்திய இவர்கள் காட்டிலே இலைகளிலே உணவு சாப்பிட வேண்டும். காசிப்பட்டும் மெல்லிய உடைகளும் உடுத்தியவர்கள், புல் ஆடைகளையும் மரப்பட்டைகளையும் உடுக்க வேண்டும். வண்டியிலும் பல்லக்கிலும் போய்ப் பழகியவர்கள், காட்டிலே கால்நடையாகக் கல்லிலும், முள்ளிலும் நடக்கவேண்டும். கட்டிலிலும் தொட்டிலிலும் படுத்து உறங்கியவர்கள், மரத்தின் கீழே மண்ணில் படுத்துத் தூங்கவேண்டும். சந்தனமும் நறுமணச் சாந்தும் பூசிய இவர்கள் தும்பு தூசிகளையும் சேற்றையும் மண்ணையும் பூசவேண்டும். மயில் இறகு விசிறியும் வெண்சாமரையும் வீசி உறங்கிய இவர்கள், ஈயும் எறும்பும் கொசுவும் வண்டும் கடிக்க உறங்கவேண்டும்.” இவ்வாறு இவர்கள் காட்டு வாழ்க்கையின் துன்பங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டது. அப்போது, நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டு வந்து அரண்மனைக்கு எதிரில் நிறுத்தினார்கள். இளவரசியார், அரசியையும் அரசனையும் வணங்கி விடை பெற்று, மற்றவர்களிடத்திலும் விடை பெற்றுத் தமது சிறுவர்களுடன் தேரில் அமர்ந்தார். இளவரசரும் பெற்றோரை வணங்கி விடை பெற்றுத் தேரில் அமர்ந்து ஓட்டினார். சூழ நின்ற மக்களைப் பார்த்து, “காட்டுக்குப் போகிறேன். தருமம் செய்வதை மறவாமல் சுகமாக இருங்கள்” என்று கூறினார். அப்போது, அவர் தாயார், இரண்டு வண்டி நிறைய பொன்னையும் பொருள்களையும் அனுப்பினார். அவற்றை இளவரசர் வழிநெடுகத் தானம் செய்து கொண்டே போனார். எல்லாவற்றையும் தானம் செய்தபிறகு, தான் அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளையும், மாலைகளையும் தானம் செய்தார். நகரத்துக்கப்பால் சென்றபிறகு ஒரு மேடான இடத்தை யடைந்த போது, வெசந்தரகுமாரன் வண்டியை நிறுத்தி நகரத்தைத் திரும்பிப் பார்த்தார். பார்த்து இளவரசிடம், “பார், மாதி! நாம் வாழ்ந்த அழகான மாளிகை அதோ தெரிகிறது” என்று கூறினார். பின்னர், தம்மைப் பின் தொடர்ந்து வந்த நண்பர்களையும், நகர மக்களையும் நகரத்துக்குப் போகும்படி அனுப்பிவிட்டு,வண்டியை ஓட்டினார். வண்டி வேகமாகச் சென்றது. அவர், மாதியிடம், “யாரேனும் இரவலர் பின் தொடர்ந்து வரு கிறார்களா பார்?” என்று கூறினார். இளவரசியார், வண்டியில் அமர்ந்த படியே பின்னால் பார்த்தார். இளவரசர், நகரத்திலே எழுநூற்றுத் தானம் செய்தபோது, தானம் பெறுவதற்காகத் தூரத்திலிருந்து வந்த நான்கு பிராம ணர்கள், அந்நாளில் நகரத்துக்கு வந்து தானம் பெற முடிய வில்லை. அவர்கள் நகரத்துக்கு வந்து இளவரசர் காட்டுக்குப் போய்விட்டதைக் கேள்வியுற்று, “அரச குமரன் எதையேனும் கொண்டுபோனாரா, வெறுங்கையோடு போனாரா?” என்று கேட்டார்கள். வண்டியில் ஏறிக்கொண்டு போனார் என்று சொல்லக் கேட்டு, அப்பிராமணர்கள் விரைந்து அவரைப் பின் தொடர்ந்தார்கள். தேரில் பூட்டியுள்ள நான்கு குதிரைகளையும் தானம் பெறவேண்டும் என்று கருதியே அவர்கள் அரசகுமரனைப் பின் தொடர்ந்து விரைவாக வந்தார்கள். அவர்கள் வருவதைக்கண்ட மாதி, “இரவலர் வருகிறார்கள்” என்று கூறினார். உடனே இளவரசர் தேரை நிறுத்தினார். பிராமணர் வந்து தேரில் பூட்டியுள்ள குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி கேட்டார்கள். அரசகுமரன், தேரில் பூட்டியிருந்த நான்கு குதிரை களையும் அவிழ்த்து ஆளுக்கு ஒவ்வொரு குதிரையைத் தானமாகக் கொடுத்தார். பிராமணர் நால்வரும் குதிரைகளை ஓட்டிக்கொண்டு போனார்கள். அவ்வமயம் இன்னொரு பிராமணன் அங்கு வந்து, வண்டியைத் தானமாகக் கொடுக்கும்படி இரந்து வேண்டினான். வெசந்தர குமாரன், வண்டியில் அமர்ந்திருந்த தமது மனைவியையும் மக்களையும் கீழே இறக்கிவிட்டு, வண்டியை அவனுக்குத் தானமாக வழங்கினார். பிறகு, அவர்கள் கால்நடையாகவே நடந்து போனார்கள். மத்தி, இளைய குழந்தையாகிய கணாஜினாவைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். இளவரசன் மூத்த மகனாகிய ஜாலியை தூக்கிக்கொண்டார். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டே கால் நடையாக வழிநடந்தார்கள். அரண்மனையின் இனிய வாழ்க்கையை யும் சுகபோகங்களையும் இழந்துவிட்டோமே என்னும் எண்ணம் அவர்களுக்குச் சிறிதும் இல்லாமல், மகிழ்ச்சியோடு நடந்தார்கள். எதிர்ப் பட்டவர்களிடம் வங்க மலைக்குச் செல்லும் வழியையும், அது உள்ள தூரத்தையும் கேட்டுக்கொண்டே போனார்கள். வழிப்போக்கர் வழியையும் தூரத்தையும் கூறி, இவர்களுடைய நிலைமைக்கு வருந்தி மன மிளகினார்கள். வழியிலே இருபுறங்களிலும் இருந்த மரங்களில் பூக்களும் காய்களும் இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த குழந்தை கள் அவைகளைப் பறித்துத் தரும்படி கேட்டார்கள். பழங்களையும் பூக்களையும் பறித்துக் கொடுத்துக் கொண்டே இருவரும் வழி நடந்தார்கள். நெடுந்தூரம் நடந்து கடைசியில், துன்னி வத்தம் என்னும் கிராமத்தையடைந்தார்கள். மேலும் வழி நடந்து மாலை நேரத்திலே சேதநாட்டை அடைந்தார்கள். இந்தச் சேதநாடு, வெசந்தரகுமரனின் மாமனும், மத்தியின் தந்தையுமான மத்த அரசனுடையது. இவர்கள் நகரத்துக்குள் போகாமல், நகர வாயிலுக்கு வெளியேயுள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார்கள். இளவரசி, வெசந்தரகுமரனின் கால்களைக் கழுவியபின், பாதத்தை வருடிக் கால் வலியை நீக்கினாள். பிறகு, சிவி நாட்டு இளவரசன் வந்திருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதற்காக, நகரத்துப் பெண்கள் பார்வையில் படும்படி மண்டபத்தின் வாயிலின் வெளியே வந்து நின்றாள். இளவரசியைக் கண்டவர்கள், பல்லக்கிலும் தேரிலும் வர வேண்டிய அரசகுமாரி, தனது தந்தையின் நகரத்திற்குக் கால்நடையாக வந்திருப் பதைக் கண்டு வியப்படைந்து இச்செய்தியை அரண்மனையில் தெரி வித்தார்கள். அரண்மனையில் இருந்து அரச குமரர்கள் விரைந்து வந்து மண்டபத்திலிருந்த வெசந்தரகுமாரனைக் கண்டு வரவேற்றார்கள். “வருக, வருக, இளவரசரும், அரசர் பெருமானும் நலம்தானே? சிவி நாட்டில் எல்லோரும் சுகந்தானே? பெருமான் அடிகளே, பரிவாரங் களும் பணிவிடையாளரும் இல்லாமல், சிவிகையிலும் தேரிலும் வராமல், யானை சேனைகள் இல்லாமல் ஏன் கால் நடையாகத் தன்னந்தனியே வந்தீர்கள்? பகை அரசர் யாரேனும் வந்து நாட்டைப் பிடித்துக் கொண் டார்களோ?” என்று வருத்தத் துடன் மனங்கலங்கிக் கேட்டார்கள். “எல்லோரும் நலம். அரசர் பெருமானும், அன்னையாரும், மற்ற எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள். சிவி நாட்டிற்கு உரியதான, கிடைப்பதற்கு அருமையான, கொற்றத்து யானையை - கயிலாய மலை போன்ற அந்தச் சிறந்த வெள்ளை யானையை - நாம் பிராமணர் களுக்குத் தானமாக வழங்கினோம். அதனாலே, நகர மக்களும், அரசர் பெருமானும் எம்மீது சினங்கொண்டு எம்மை நாடு கடத்திவிட்டார்கள். ஆகவே, வங்கமலைக்குப் போகிறோம். போகும் வழியிலே இங்குத் தங்கினோம். வங்க மலைக்குச் செல்ல எமக்கு வழிகாட்டி யருளுங்கள்.” “வேந்தர் பெருமானே! தாங்கள் இந்த ஊரிலேயே தங்கி இருக் கலாம். தாங்களே இந்த நாட்டை அரசாளலாம்.” “தங்களுடைய அன்புக்கு எமது நன்றி. நாடு கடத்தப் பட்டோம். ஆகவே, வங்கமலைக்குச் சென்று அங்குத் தங்கு வோம்.” “சிவி மன்னருக்குச் செய்தி தெரிவித்துத் தங்களைத் திரும்பி அழைத்துப் போகச் செய்கிறோம்.” “எம்மைத் திருப்பி அழைக்க அரசர் பெருமானிடம் செய்தி அனுப்ப வேண்டாம். அவர் இதைச்செய்ய உரிமை இல்லாதவர். அரசர் பெருமான் எம்மை மீண்டும் அழைத்தால், நகர மக்கள் அவர் மீது சினங்கொண்டு அவருக்குத் தீங்கு இழைப்பார்கள்.” “அப்படியானால், இந்த நாட்டிலேயே தங்கி இருங்கள். இந்தச் சேதநாடு செழிப்பும் வளப்பமும் உள்ளது. இந்த நாட்டின் அரசாக இருந்து அரசாளுங்கள். இது தங்களுக்குரியது.” “நாடு கடத்தப்பட்டவர் நாடாள்வது முறையன்று. நாம் இங்குத் தங்கினால், எமது சிவி நாட்டு மக்கள் எம்மை ஆதரிக்கும் உங்கள்மீது சினங்கொண்டு பகைமை பாராட்டிக் கலகஞ் செய்வார்கள். எம் பொருட்டு இரண்டு நாடுகளிலும் கலகமும் போரும் ஏற்படுவது கூடாது. உங்கள் அன்புக்கு எமது நன்றி. நாம் வங்கமலைக்குப் போகவேண்டும். வழிகாட்டியருளுங்கள்.” வெசந்தர குமாரன் இவ்வாறு அவர்களின் வேண்டுகோளை மறுத்தார். நகரத்தின் உள்ளே போகவும் மறுத்தார். ஆகவே, அவர்கள் இளவரசர் தங்கியிருந்த மண்டபத்தைச் சூழத் திரைகளை அமைத்து, அவர் தங்கியிருக்க ஆசனங்களும் இருக்கைகளும் செய்து கொடுத்தார்கள். இளவரசர் ஒரு பகலும் ஒரு இரவும் அங்கே தங்கினார். அடுத்த நாள் காலையில் வங்கமலைக்குப் புறப்பட்டார். சேத நாட்டு அரச குமரர்களும் புறப்பட்டு அவரை வழியனுப்ப அவருடன் சென்றார்கள். பதினைந்து யோசனை தூரம் கடந்து சென்று காட்டின் முனையை யடைந்தார்கள். பிறகு வெசந்தர குமரனிடம் விடைபெற்றுத் திரும்பினார்கள். திரும்புவதற்கு முன்பு இவ்வாறு கூறினார்கள். “இங்கிருந்து பதினைந்து யோசனை தூரம் இருக்கிறது வங்க மலை என்னும் கந்தமாதனமலை. பாறைகள் நிறைந்த அந்த மலை யிலே தாங்கள் மனைவி மக்களுடன் தங்கலாம். சேத நாட்டினராகிய நாங்கள், கண்களில் நீர்வழிய மனம் வருந்தித் தங்களை வடக்கு நோக்கிச் செல்ல வழியனுப்புகிறோம். போகிற வழியிலே குளிர்ந்த நிழலைத் தருகிற மரங்கள் அடர்ந்த விபுலமலை இருக்கிறது. அங்கு, மலை மேலிருந்து ஓடிவருகிற ஆழமான குளிர்ந்த நீருள்ள கேதுமதி என்னும் ஆற்றைக் காண்பீர்கள். அழகான ஆற்றங்கரையிலே தங்கி, மீன்கள் நிறைந்த ஆற்று நீரிலே குளித்துச் சற்று நேரம் தங்கிக் குழந்தைகள் விளையாடிய பிறகு புறப்பட்டுச் செல்லுங்கள். அப்பாலே காட்சிக்கினியதான, குன்றின்மேலே பெரியதோர் ஆலமரத்தைக் காண்பீர்கள். பழங்கள் நிறைந்த அந்தக் குளிர்ச்சியான ஆலமரத்தைக் கடந்து சென்றால், காடு அடர்ந்த நாலிக மலையைக் காண்பீர்கள். அங்குப் பலவிதமான பறவைகள் பல்வேறு குரல்களில் கூவும் இனிய ஓசைகளைக் கேட்பீர்கள். அக்காட்டைக் கடந்து மேலும் வடக்கு நோக்கிச் சென்றால், முசலிந்தம் என்னும் ஏரியைக் காண்பீர்கள். அந்த ஏரியின் நீரிலே நீலநிறத் தாமரையும், வெண் ணிறத் தாமரையும் பூத்து மலர்ந்திருக்கும். ஏரிக்கு அப்பால், மேகம் சூழ்ந்ததுபோல அடர்ந்த காடு உண்டு. அங்குத் தரையிலே புற்கள் அடர்ந்து இருக்கும். உயரமான மரங்களில் பூக்களும் பழங்களும் நிறைந்து இருக்கும். பலநிறப் பறவை களின் பாட்டு களைக் கேட்கலாம். இரைதேடித் திரியும் சிங்கங்களும் உண்டு. காட்டின் ஊடே ஓடுகிற அருவி வழியே சென்றால் தாமரைப் பூக்களும், மீன்களும் நிறைந்த தூய நீரையுடைய ஆழமான ஏரி யொன்றைக் காண்பீர்கள். அமைதியான அந்த இடம் தங்கியிருப்பதற்குத் தகுதியானது. அங்கே இலைகளினால் குடிசை அமைத்துக் கொண்டு அதில் தங்கி இருங்கள்.” இவ்வாறு போகவேண்டிய வழியைக் கூறியபிறகு அவர்கள் விடைபெற்றுத் திரும்பித் தமது நகரம் போனார்கள். திரும்பிப் போவதற்கு முன்னர், தமது நாட்டைச் சேர்ந்தவனும் அறிவும் ஆற்றலும் உள்ளவனும் காட்டில் நன்கு பழகியவனுமான ஒரு ஆளை இளவரசனோடு அனுப்பினார்கள். வெசந்தர குமரன் மனைவி மக்களுடன் வடக்கு நோக்கிப் புறப் பட்டார். காட்டில் நடந்துசென்று விபுல மலைச்சாரலையடைந்து கேதுமதி யாற்றங்கரையைச் சேர்ந்தார்கள். அங்கு, அழகான அந்த ஆற்றங்கரை யில் தங்கி இளைப்பாறினார்கள். அவர்களுடன் சென்ற ஆள் காட்டிலிருந்து பறித்துவந்த பழங்களை, அருந்திப் பசி நீங்கினார்கள். அந்த ஆளுக்குத் தனது பொன்கொண்டை ஊசியை வெகுமதியாக அளித்தார் இளவரசர். பிறகு, ஆற்றில் நீரருந்தி, நீராடிய பின்னர் வழி நடந்தார்கள். அமைதியோடும் கவனமாகவும் ஆற்றைக் கடந்து குன்றின் மேல் உள்ள ஆலமரத்தின் கீழே தங்கினார்கள். அங்கு ஆலம் பழத்தைத் தின்றார்கள். அங்கிருந்து புறப்பட்டுச் சென்று நாக மலையை அடைந்தார்கள். பிறகு, அங்கிருந்து போய் முசலிந்த ஏரிக்கரையை அடைந்தனர். அந்த ஏரியின் வடகிழக்கு மூலையாகச் சென்று, காலடிப் பாதை வழியே நடந்து காட்டுக்குள் நுழைந்தனர். காட்டையடைந்து அங்குள்ள அருவியின் பக்கமாக நடந்து அவ்வருவி உற்பத்தியாகிற இடத்தையடைந்து, அப்பால் அழகான ஏரிக்கரையைச் சேர்ந்தார்கள். அப்போது தேவர்களின் அரசனாகிய சக்கன் (இந்திரன்), இங்கு நிகழ்ந்ததை அறிந்து தனக்குள் எண்ணினான்: ‘போதி சத்துவர் இமயமலைச்சாரலுக்குப் போகிறார். அவர் அங்கே தங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கவேண்டும்.’ இவ்வாறு எண்ணிய சக்கன், தேவ சிற்பியாகிய விசுவகர்மனை அழைத்து, “வங்கமலைக் காட்டில் முனிவர் தங்கி இருப்பதற்கு ஒரு நல்ல இடம் அமைத்துவிட்டு வருக” என்று கூறினார். அவ்வாறே விசு வகர்மனும் இமயமலைச்சாரலுக்கு வந்து, அழகான இயற்கைச் சூழ்நிலையுள்ள இடத்தில் இரண்டு குடிசைகளை அமைத்தான். அக்குடிசைகளில், பகல் வேளையில் இருப்பதற்கு ஒரு அறையையும் இரவில் படுத்து உறங்குவதற்கு மற்றொரு அறையையும் வகுத்தான். குடிசைகளுக்கு அருகில் வாழை முதலிய மரங்களையும், பூச்செடிகளையும் நட்டான். ஆசிரமத்திலிருந்து ஏரிக்குச் செல்ல சிறு பாதைகளையும் அமைத்தான். இவற்றை யெல்லாம் செய்து முடித்தபிறகு, ஒரு பலகையில், “தவம் செய்ய விரும்பு வோர் இந்த ஆசிரமத்தில் தங்கி இருக்கலாம்” என்று எழுதிக் குடிசையின் வாயிற்புறத்தில் வைத்துவிட்டுச் சென்றான். வெசந்தர குமாரனாகிய போதிசத்துவர் மனைவி மக்களுடன் ஏரிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து வழி போவதைக்கண்டு அந்த வழியே நடந்தார். அந்த வழி அவரை ஆசிரமத்துக்குக் கொண்டு வந்து விட்டது. மனைவி மக்களை அவர் வெளியே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் குடிசையருகில் போனார். அங்குப் பலகையில் எழுதப் பட்டிருந்த வாசகத்தைக் கண்டு, கதவைத்திறந்து உள்ளே சென்றார். சென்று தமது வில்லையும் வாளையும் ஒருபுறம் வைத்துவிட்டுத் தமது ஆடை அணிகளைக் களைந்துவிட்டு அங்கிருந்த மரவுரி ஆடைகளை அணிந்துகொண்டார். பிறகு, துறவுக்கோலத்துடன் வெளியே வந்தார். மத்தி, அவர் காலில் விழுந்து வணங்கித் தானும் குடிசைக்குள் சென்று தமது ஆடை அணிகளைக் களைந்துவிட்டு மரவுரி ஆடைகளை அணிந்து கொண்டார். தமது மக்களுக்கும் மரவுரி ஆடையை உடுத்தினார். இவ்வாறு நால்வரும் வங்கமலைக் காட்டில் முனிவர் வாழ்க்கையை மேற்கொண்டனர். மத்தி, போதிசத்துவரிடத்தில் ஒரு வரம் வேண்டினார். “தாங்கள் குழந்தைகளுடன் ஆசிரமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்: நான் காட்டில் போய் கனி கிழங்குகளைக் கொண்டு வருவேன்” என்பதுதான் அவர் விரும்பிய வரம். அவர் அதற்கு இசைந்தார். அவரும், மத்தி யிடத்தில் ஒரு வரம் கேட்டார். “இப்போது நாம் துறவிகள். பிரமச்சரிய விரதம் காக்க வேண்டியவர்கள். இது முதல் நாம் தனித்த வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்பது தான் அவர் விரும்பிய வரம். மத்தியும் இதற்கு இசைந்தார். நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் இளவரசியாகிய மத்தி, ஏரிக்குப் போய் கைகால் கழுவுவதற்கும், பருகுவதற்கும் நீர் முகந்து கொண்டு வருவார். வீட்டு அறைகளைக் கூட்டித் துப்புரவு செய்வார். உணவு கொடுத்து மக்களைக் கணவருடன் விட்டு விட்டு, மண் வெட்டியும் கூடையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போவார். பழங்களைப் பறித்தும் கிழங்குகளை அகழ்ந்து கொண்டும் மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வருவார். வந்து குழந்தைகளை நீராட்டிக் குளிப்பாட்டுவார். பின்னர், நால்வரும் வாயிலண்டை அமர்ந்து பழங் களையும் கிழங்குகளையும் உண்பார்கள். அத்தாழம் அருந்திய பிறகு மத்தி, தமது மக்களை அழைத்துக் கொண்டு தமது குடிசையில் படுத்து உறங்குவார். போதிசத்துவர் தமது குடிசையில் தனியே படுத்து உறங்குவார். இவ்வாறு ஏழு திங்கள் கழிந்தன. அக்காட்டிலிருந்த பறவைகளும் மிருகங்களும் இவர்களுடன் அன்பாகப் பழகின. அந்தக் காலத்திலே கலிங்க தேசத்திலே துன்னி விட்டம் என்னும் கிராமத்திலே பிராமணர் வசித்து வந்தனர். அவர்களில் ஜூஜகன் என்னும் ஏழைப் பிராமணன் ஒருவன் பிச்சை எடுத்து இரந்து உண்டு வாழ்ந்திருந்தான். பிச்சை எடுத்துச் சிறிது சிறிதாக அவன் நூறு காணம் சேர்த்தான். அதை அவன் அடுத்த கிராமத் தில் ஒரு பிராமணனிடம் கொடுத்துவிட்டு அயலூருக்குப் போனான். போனவன் நெடுங் காலமாகத் திரும்பி வரவில்லை. அந்தப் பிராமணன் நூறு காணத்தை யும் தன் குடும்பத்துக்குச் செலவு செய்துவிட்டான். நெடுங்காலத்திற்குப் பிறகு ஜூஜகன் திருப்பி வந்து காணத்தைக் கேட்டான். பிராமணன். காணத்தைத் திரும்பிக் கொடுக்கமுடியாமல் தன் மகளாகிய அமித்ததாவனை என்பவளை அவனுக்குக் கொடுத்தான். அவளை அழைத்துக் கொண்டு ஜூஜகன், துன்னிவிட்டம் என்னும் தன் கிராமத்துக்கு வந்து தங்கினான். அமித்ததாவனை, தன் கணவனாகிய ஜூஜகனுக்குப் பணி விடைகள் செய்து கொண்டிருந்தாள். அதனைக்கண்ட அக் கிராமத்துப் பிராமணர்கள், தம் மனைவிமாரிடம் அவளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள், “அவளைப் பாருங்கடி. அந்தக் கிழ அகம்படியானுக்கு அவள் எவ்வளவு பணிவிடை செய்கிறாள்! உங்களுடைய வாலிப அக முடையான்களுக்கு நீங்கள் பணிவிடை செய்வதில்லையே” என்று அவர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டினார்கள். இப்படிப் பேசுவது, அந்த இளம் பார்ப்பனிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அமித்ததா வனையை அந்தக் கிராமத்திலிருந்து ஓட்டிவிட வேண்டும் என்று எண்ணினார்கள். ஆகவே, ஆற்றங்கரையிலும் மற்ற இடங்களிலும் அமித்ததாவனையைப் பற்றி அவள் காதில்படும்படி பலவாறு பேசத்தொடங்கினார்கள். “என்ன அநியாயம் பாருங்கோ மாமி! இளம் பெண்ணை அந்தக் கிழவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்களே! இந்தக் கிழடுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க இவள் அம்மா எப்படி மனம் ஒப்பி னாளோ? அவள் அப்பாவும் அம்மாவும் இவளுக்கு விரோதிகளோ இப்படிச் செய்ய? இருந்தாலும் இவளுடைய மனுஷர்கள் மகா கொடிய வர்கள். கிழப் பிராமணனைக் கட்டிக் கொண்டு வாழ்வதைவிட எங்கே யாகிலும் குளம் குட்டையில் விழுந்து சாகலாம். கிளிபோல அழகாக இருக்கிற இந்த இளம் பெண்ணுக்கு லோகத்திலே ஒரு வாலிபப் புருஷன் கிடைக்கவில்லையா? போயும் போயும் இந்தக் கிழவனுக்குத் தானா இவளைக் கயாணம் செய்துவைக்க வேண்டும் . முன் பிறப்பில் இவள் என்ன பாவம் செய்தாளோ? இந்தப் பிறப்பில் இந்தக் கிழட்டுப் பிராமண னுக்கு வாழ்க்கைப்பட்டாள். கிழவனுடன் இளம் பெண் மகிழ்ச்சியாக வாழமுடியுமா? அம்பு தைத்தாலும், ஈட்டி குத்தினாலும் பொறுத்துக் கொள்ளலாம். கிழப் புருஷனின் முகத்தைப் பார்க்கவும் சகிக்க முடியாதே! இன்பமும், மகிழ்ச்சியும், சுக வாழ்க்கையும் கிழப் புருஷனிடம் எப்படிக் கிடைக்கும்?” என்று இப்படியெல்லாம் அவளைப் பற்றி பேசி வம்பளந்தார்கள். பார்ப்பனப் பெண்களின் சுடுமொழிகளைக் கேட்ட அமித்ததா வனை, மனம் வெதும்பினாள். அவள் அழுது கொண்டே நீர்க்குடத் துடன் வீட்டுக்கு வந்தாள். “என்ன இது? ஏன் அழுகிறாய்?” என்று ஜூஜகன் வினவினான். “இனி நான் ஜலம் கொண்டுவரப் போகமாட்டேன். அவர்கள், கிழப்பிராமணனைக் கலியாணம் செய்து கொண்டேன் என்று பரிகாசம் செய்கிறார்கள்.” “நீ போக வேண்டாம். நான் போய் ஜலம் கொண்டு வருகிறேன்.” “நன்னா இருக்கு. நீங்கள் போய் ஜலம் கொண்டு வருவதா? இது என்ன வழக்கம்? இப்படி எல்லாம் செய்தால் நான் இங்கு இருக்க மாட்டேன். எங்கேயாவது போய்விடுவேன். ஜலம் கொண்டு வரவும், கடைக்குப் போய்வரவும் ஒரு ஆளை அமர்த்துங்கள்.” “வேலைக்கு ஆள் வைக்க என்னிடம் காசு ஏது? நானே போய் ஜலம் கொண்டு வருகிறேன். நீர் வெளியே போக வேண்டாம்.” “வங்கமலைக் காட்டிலே வெசந்தர ராஜா என்று ஒருத்தர் இருக்கிறாராமே? அவரிடம் போய்க்கேட்டால், கேட்ட பொருளைத் தானம் கொடுக்கிறாராம். அவரிடம் போய், வேலை செய்ய ஒருஅடிமை ஆளைத் தானங்கேட்டு வாங்கி வாருங்களேன்.” “வங்கமலைக்காடு எங்கே இருக்கிறது! நான் எங்கே இருக் கிறேன்? இந்த வயசிலே அவ்வளவு தூரம் நான் போகமுடியுமா? அது முடியாத காரியம். உனக்கென்ன, நான்போய் ஜலம் கொண்டு வருகிறேன்.” “ஓய், பிராமணா, நீர் போய் ஜலம் கொண்டுவந்தால் அவர்கள் எல்லோரும் கே பேசுவார்கள். வீட்டு வேலை செய்ய ஒரு ஆளை ஏற்பாடு செய்யும். இல்லாவிட்டால் இந்த வீட்டை விட்டு நான் போய் விடுவேன். நான் போய்விட்டால் கிழவராகிய உமக்குப் பணிவிடை செய்ய யார் இருக்கிறார்கள் நீர் கஷ்டப் பட வேண்டியதுதான்” என்று கண்டிப்பாகக் கூறினாள். கிழப் பிராமணன் சிந்தித்துப் பார்த்தார். “ஆகட்டும் அடி. வங்கமலைக் காட்டுக்குப் போய் வெசந்தர ராஜாவிடம் ஒரு அடிமையாளைத் தானம் வாங்கி வருகிறேன். போய்த் திரும்பிவரப் பல நாட்கள் செல்லும். வெல்லம் போட்டுத் தித்திப்பு அடை செய்துகொடு.” அவன், வழிப் பயணத்தில் சாப்பிடுவதற்காக, அவள் அடை களைச் செய்து மூட்டைகட்டிக் கொடுத்தாள். ஜூஜகன், தன் குடிசை யின் பிய்ந்துபோன இடங்களை எல்லாம் சரிப்படுத்திக் கதவை ஒழுங்கு செய்து வீட்டில் ஒருவரும் நுழையாதபடி செப்பம் செய்தான். அவள் கொடுத்த அப்பங்களை வாங்கிப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக் கொண்டு, அவளை வலமாகச் சுற்றிப் புறப்பட்டான். “வீட்டில் பத்திரமாக இரு. அகால வேளையில் வெளியே போகாதே” என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டான். நெடுந்தூரம் நடந்து சென்றான். அவன் போகிற வழியில் சிவி நாடு இருந்தது. அந்த நாட்டில் புகுந்து தலைநகரமாகிய ஜேதுத்தர நகரத்தை யடைந்தான். ஜனங்கள் கூட்டமாக இருந்த இடத்தையடைந்து, “வெசந்தரராஜா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டான். இவன் கலிங்கத்திலிருந்து வந்தவன் என்பதை அறிந்த அவர்கள் கூறினார்கள்: “கலிங்க நாட்டுப் பார்ப்பனர்களால்தான் எங்கள் வெசந்தரகுமாரன் வங்கமலைக்குப் போகும்படி நேரிட்டது. அவர்கள் வந்து எங்கள் வெள்ளை யானையைத் தானமாக வாங்காமலிருந்தால், அவர் எங்கள் ஊரிலேயே இருப்பார். போதாக்குறைக்கு நீயும் வந்துவிட்டாயா?” என்று கூறி அவர்கள் அவனைத் தடியாலும் கொம்பாலும் அடித்துத் துரத்தி விரட்டி னார்கள். வெசந்தரகுமாரன் வங்கமலைக் காட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பார்ப்பனன் அக்காட்டுக்குச் சென்றான். காட்டில் வழி தெரியாமல் இடர்ப்பட்டான். ஒருவாறு வழி தெரிந்து காட்டில் நெடுந் தூரம் சென்றான். “வெயிலில் நடந்து களைப்படைந்தவருக்கு நிழல் கொடுத்து உதவும் ஆலமரம்போல, இரப்பவருக்குத் தானங்கொடுத்து உதவும் வெசந்தரகுமாரன் எங்கே இருக்கிறார்?” என்று உரத்துக் கூவிக் கொண்டே சென்றான். காட்டைக் காக்கும் வேடனுடைய நாய்கள் இவனை வந்து சூழ்ந்துகொண்டு குரைத்தன. வேடன் இவனைக்கண்டு தனக்குள் எண்ணினான்: ‘இந்தப் பார்ப்பான் வெசந்தரகுமாரனைத் தேடிக் கொண்டு வருகிறான். இவன் நல்ல எண்ணத்தோடு வருகிறவன் அல்லன். மத்தியையோ, அவர்களுடைய மக்களையோ தானமாகப் பெற்றுக்கொண்டு வேலையாளாகக் கொண்டு போக வருகிறான் போலும். இவனை உயிரோடு விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டு அவன் அருகில் சென்று வில்லை வளைத்து அம்பு ஏற்றி நின்று இவ்வாறு கூறினான்: “உன்னைப்போன்ற பார்ப்பனருக்குக் கொடுத்துக் கொடுத்துக் கடைசியில் வெசந்தர குமாரன் காட்டுக்கு வந்தார். இங்கு அவருடைய மனைவி மக்கள் தவிர வேறு ஒன்றும் அவரிடம் இல்லை. மீன்களைத் தின்ன விரும்பும் கொக்கு ஆற்றைத் தேடிக்கொண்டு போவது போல நீ ஏன் இங்கு வந்தாய்? உன்னை உயிரோடு விடப் போவதில்லை. உன்னைக் கொன்று மார்பைப் பிளந்து இருதயத்தை எடுத்து வயிற்றைக் கீறி ஈரலை எடுத்து, உடம்பில் உள்ள கொழுப்பை யும் எடுத்து யாகம் செய்வதுபோல நெருப்பில் போட்டு ஆகுதி செய்யப் போகிறேன். எங்கள் அரசர் பெருமானின் குடும்பத்தை இன்னும் நாசம் செய்யவா இங்கு வந்தாய்?” என்று சினந்து கூறினான். பார்ப்பனன் பயந்து நடுங்கினான். பொய் சொல்லி ஏய்க்க எண்ணங் கொண்டு, “நான் கெட்ட எண்ணத்தோடு இங்கு வரவில்லை. யான் யார் தெரியுமா? நான் இராஜ தூதனாக்கும். நாட்டு மக்களும் அரசர் பெருமானும் அரசியாரும், வெசந்தர குமாரனை அழைத்து வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்கள். ஆகையால், இந்த நல்ல செய்தியைச் சொல்ல அவரிடம் போகிறேன். அவர் இருக்கும் இடத்தைச் சொல்லு” என்று சமயத்துக்குத் தக்கவாறு நயமாகப் பொய் பேசினான். இதைக்கேட்ட வேடன் நாய்களைக் கட்டிவிட்டு, பார்ப்பனனை உட்காரச் செய்து, இதைக் கூறினான்: “தூதரைக் கொல்வது தவறு. நீர் நல்ல எண்ணத்தோடு வந்திருக்கிறீர். இதோ, இந்தத் தேனையும் மான் இறைச்சியையும் அருந்தும்” என்று சொல்லி குடுக்கை நிறையத் தேனை யும், மானின் கால் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தான். பிறகு, “அதோ தெரிகிறதே கந்தமாதனமலை. அந்த மலையிலே அரசர் பெருமான் தங்கியிருக்கிறார்” என்று கூறி வழியைக் காட்டினான். ஜூஜகன் சந்தோஷப் பட்டு அவனை வணங்கி, “இந்தா இதோ இந்த இனிப்பு அடையைச் சாப்பிடு” என்று தன்னிடமிருந்த அடையைக் கொடுத்தான். வேடன், “எனக்கு அடை வேண்டாம். தேனையும் மான் கால் இறைச்சியையும் எடுத்துக் கொள்ளும்” என்று கூறி அவற்றைக் கொடுத்தான். பார்ப்பனன் அதைப் பெற்றுக்கொண்டு வழிநடந்தான். “இடை வழியிலே ஒரு முனிவர் ஆசிரமம் இருக்கிறது. அவரிடம் கேட்டால், வெசந்தரகுமாரர் இருக்கும் வழியைக் காட்டுவார்” என்று வேடன் மீண்டும் சொன்னான். நல்லது என்று பார்ப்பனன் வழி நடந்தான். நெடுந் தூரம் சென்று முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். ஆசிரமத்தில் சென்று அச்சதர் என்னும் அம்முனிவரைக் கண்டு வணங்கினான். முனிவர், இவன் வந்த காரியத்தைக் கேட்டபோது, வெசந்தரகுமாரனைக் காண வந்ததாகக் கூறினான். “நீர் அவரைப் பார்க்க வந்தது நல்ல காரியத்துக்காக அல்ல என்று தோன்றுகிறது. அவரிடத்தில் இப்போது தானமாகக் கொடுக்க ஒன்றும் கிடையாது. அவருடைய மனைவியை அல்லது மக்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டு போய் வீட்டில் வேலையாளாக வைக்க எண்ணி வந்தீர் போலும்” என்று முனிவர் கூறினார். அவரிடத்திலும் பார்ப்பனன் பொய் பேசினான். “இல்லை இல்லை. நான் ஒருவருக்கும் தீமை செய்ய வர வில்லை. நல்லவர்களைக் காண்பது மனத்துக்கு மகிழ்ச்சி. ஆகையால், கொடை வள்ள லாகிய அவரைக் காணவந்தேன்” என்று அவன் பொய் பேசி னான். முனிவரும் அதனை உண்மை என்று நம்பி, வெசந்தர குமாரன் இருக்கும் ஆசிரமத்திற்குப் போகும் வழியைக் கூறினார். ஜூஜகன் அவர் கூறிய வழியே சென்று கடைசியில் ஏரியண்டை வந்து சேர்ந்தான். அவன் தனக்குள் எண்ணினான்: ‘இப் போது மாலை நேரம் ஆகிவிட்டது. இப்போது ஆசிரமத்திற்குப் போனால், பிள்ளை களின் தாய் அங்கே இருப்பாள். பிள்ளைகளைத் தானம் செய்வதைத் தாயானவள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாள். நாளைக் காலையில், மத்தி காய்கனிகளைப் பறிக்கக் காட்டுக்குப் போனபிறகு, வெசந்தர அரசனிடம் போய் மக்களைத் தானம் பெறுவேன்.’ இவ்வாறு எண்ணிய அவன், அருகில் இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அங்கே சமதரை யிலே ஒரு வாய்ப்பான இடத்தில் படுத்து உறங்கினான். அன்று விடியற்காலையில் மத்தி, துன்பகரமான கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தாள். அந்தக் கனவு இது: கருநிறமுள்ள ஒரு ஆள், இரண்டு மஞ்சள் ஆடைகளை அணிந்து, இரண்டு காதுகளிலும் சிவந்த நிறமுள்ள பூக்களைச் செருகிக்கொண்டு, குடிசைக்குள் நுழைந்து மத்தியின் தலைமயிரைப் பிடித்துக் கொண்டு இழுத்து வெளியே வந்து கீழே தள்ளி, அவள் கதறக் கதறக் கண்களைப் பிடுங்கி, இரண்டு கைகளையும் வெட்டி, மார்பைப் பிளந்து இரத்தம் சொட்டச் சொட்ட அவள் இதயத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான். இத்தகைய பயங்கரக் கனவைக் கண்ட மத்தி, விழித்தெழுந்து கணவன் இருந்த குடிசையின் கதவைத் தட்டினாள். “யார் அது?” “நான்தான் மத்தி.” “இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தாய்?” “பொல்லாத கனவு கண்டேன். அதைச் சொல்ல வந்தேன்.” “என்ன கனவு சொல்லு?” மத்தி, தான்கண்ட கனவைக் கூறினாள். இதைக்கேட்ட போதி சத்துவர் தமக்குள் எண்ணினார்: ‘இன்று என்னுடைய தானப் பாரமிதை நிறைவுறப் போகிறது. இன்று ஒரு இரவலன் வந்து என் மக்களைத் தானங்கேட்டு வாங்கிக்கொண்டு போகப் போகிறான். ஆனால் மத்தியைச் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும். ‘இவ்வாறு தமக்குள் எண்ணிய போதி சத்துவர் இவ்வாறு கூறினார்: “மத்தி! நீ ஒன்றுக்கும் அஞ்சாதே. வயிற்றில் உணவு சமிக்காதபடியினாலோ, உறக்கம் இல்லாத படியினாலோ, இந்தக் கனவு ஏற்பட்டது. அதுபற்றிக் கவலைப்படாதே, போ” என்று கூறி மனத்திற்குச் சாந்தி உண்டாக்கினார். பொழுது புலர்ந்தது. மத்தி வீட்டு வேலைகளை எல்லாம் வழக்கம் போல செய்து முடித்துவிட்டு, சிறுவர்களை அழைத்துக் கட்டித் தழுவி முத்தமிட்டாள். “நேற்று இரவு தீய கனவு கண்டேன். பத்திரமாக இருங்கள்” என்று அவர்களிடம் கூறினாள். அவர்களைத் தமது கணவனிடம் கொண்டுபோய் விட்டு, விழிப்பாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, மண் வெட்டியை யும் கூடையையும் எடுத்துக்கொண்டு, நீர் வடியும் கண்ணைத் துடைத்துக் கொண்டு காட்டுக்குள் போனாள். மத்தி, காட்டுக்குப் போய் இருப்பாள் என்பதை அறிந்து ஜூஜகன் ஆசிரமத்தை நோக்கி வந்தான். போதிசத்துவர் வெளியே வந்து அங்கிருந்த பெரிய பாறைக்கல்லின்மேல் அமர்ந்தார். அவருக்கு அருகில் அவருடைய சிறுவர்களிருவரும் விளையாடிக் கொண்டிருந் தார்கள். ‘இன்று ஒரு இரவலன் வரப்போகிறான்’ என்று எண்ணி அவர் மனம் மகிழ்ந்தார். கள்ளுண்டு வெறி கொண்டவன், மீண்டும் மீண்டும் கள் உண்ண அவாவுறுவது போல, தானங்கொடுத்துக் கொடுத்துப் பழகிய இவர், இரவலன் வரவை எதிர்நோக்கியிருந்தார். பார்ப்பனன் அருகில் வந்ததும், “வருக வருக” என்று கூறி வரவேற்றார். சிறுவ னாகிய ஜாலி அவன் அருகில்போய், “வருக வருக” என்று கூறி கை கொடுத்து அழைத்தான். இவனைத்தான் தானம் பெறப்போகிறோம் என்பதைக் குறிப்பினால் அறிந்த பார்ப்பனன், இவனிடம் அன்பு காட்டக் கூடாது என்று நினைத்து, “போ, போ” என்று சிடு சிடுத்துக் கூறினான். ஜாலி, ‘இவன் முரடன் போலும்’ என்று எண்ணிய வண்ணம் அப் பார்ப்பனனுடைய உடம்பை நோக்கி னான். அவன் உடம்பிலே பதினெட்டு வகையான அவலக்ஷணக் குறிகள் காணப்பட்டன. பார்ப்பனன் வள்ளலின் அருகில் வந்து வணக்கமாக நின்று, “தாங்கள் எல்லோரும் சுகம்தானே? காய்கனிகள், உணவுகள் போதுமானபடி கிடைக்கிறதா? ஈ, கொசு, எறும்பு, வண்டுகளால் துன்பம் இல்லாமலிருக்கிறதா?” என்று கேட்டான். “இங்கு எல்லோரும் சுகந்தான். காய்கனிகள் நிறைய உண்டு. ஈ, எறும்பு, புழுப் பூச்சிகள் தொந்தரவு ஒன்றும் இல்லை. தாங்கள் பசியோடு இருக்கிறீர்கள். இந்தப் பழங்களை அருந்தி நீரைக் குடித்து அலுப்புத் தீருங்கள்” என்று கூறி வள்ளல் உபசாரம் செய்தார். பிறகு, ‘இந்தக் காட்டில் இந்தப் பிராமணன் காரியம் இல்லாமல் வந்திருக்கமாட்டான்’ என்று எண்ணி, “தாங்கள் இங்கு வந்த காரியம் என்னவோ?” என்று வினவினார். “பெருமான் அடிகளே! என்றும் வற்றாத ஊருணி நீரைச் சுரந்து கொண்டே மக்களுக்கு வழங்குவதுபோல, கொடை வள்ளலாகிய தாங்கள் எப்போதும் தானம் வழங்கி வருகிறீர்கள். தங்களிடம் இரந்து வேண்டுகிறேன். தங்களுடைய சிறுவர்கள் இரண்டு பேரையும் எனக்குத் தானமாக வழங்க வேண்டுகிறேன்.” “ஐயுற வேண்டாம். என்னுடைய மக்களைத் தானமாக வழங்குவேன். சற்று இரும். மாலையானதும் இவர்களின் தாயார் வருவாள். வந்து இவர்களை நீராட்டிப் பூச்சூட்டுவாள். பிறகு இவர்களை உமக்குத் தானமாக வழங்குவேன்.” “வள்ளல் பெருமானே! நான் இப்பொழுதே போகவேண்டும். தாய் வந்தால், பிள்ளைகளைத் தானமாகக் கொடுக்க உடன்பட மாட்டாள். உண்மையிலேயே தாங்கள் தங்கள் மக்களைத் தானம் செய்வதாக இருந்தால், இவர்கள் தாயின் முகத்தைப் பாராமலும், தாய் இவர்களின் முகத்தைப் பாராமலும் இருக்கும்போதே தானம் வழங்கி அருளுங்கள்.” “இவர்களின் தாயைப் பார்க்க நீர் விரும்பாவிட்டால், இனிமையாகப் பேசுகிற இவர்களை அழைத்துக்கொண்டு போய் இவர்களின் பாட்டன் இடத்தில் விடும். இவர்களைக் கண்டவுடன் அவர் மகிழ்ச்சியடைந்து உமக்கு வெகுமதிகளை அளிப்பார்.” “இவர்களின் பாட்டனாரிடம் போனால், அவர் என்னை நன்றாகத் தண்டிப்பார். என்னைக் கொன்றுவிடுவார்.” “அவர் நல்லவர். சிவி நாட்டு மக்களும் நல்லவர்கள். இவர் களைக் கண்டவுடன் பாட்டனார் மகிழ்ந்து, உமக்கு விலை யுயர்ந்த பரிசுகள் வழங்குவார். இவர்களை அங்கு அழைத்துக் கொண்டுபோம்.” “இல்லை. இச்சிறுவர்களை எனக்கு அடிமைகளாகத் தானம் செய்ய வேண்டுகிறேன். இவர்களை என் மனைவியிடம் கொண்டு போய் அவளுக்கு ஏவல் வேலை செய்யும் ஆட்களாகக் கொடுக்கப் போகிறேன்.” இச்சொற்களைக் கேட்ட சிறுவர்கள் அச்சங்கொண்டு நடுங் கினார்கள். குடிசைக்குப் பின்னால் ஓடி ஒளிந்தார்கள். அங்கேயும் பார்ப்பனன் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று கருதி, அங்கிருந்து ஓடிப் புதர்களில் ஒளிந்தார்கள். அங்கேயும் வந்து விடுவானோ என்று பயந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். இவ்வாறு ஓடி ஓடிக் கடைசியில் ஏரியண்டை வந்தார்கள். பிறகு, ஏரியில் இறங்கிக் கழுத்தளவுத் தண்ணீரில் நின்றுகொண்டு தாமரை இலைகளில் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஜூஜகன், சிறுவர்கள் அங்கு இல்லாததைக்கண்டு போதி சத்துவரைக் குறை கூறினான்: “ஓ, வள்ளலே! தங்களுடைய கபடம் நன்றாகத் தெரிகிறது. தங்கள் மக்களை ஜேதுத்தர நகரத்திற்கு அழைத்துக்கொண்டு போகமாட்டேன்; வீட்டுக்குக் கொண்டுபோய் அடிமை வேலைக்காக என் மனைவியிடம் விடப்போகிறேன் என்று சொன்னவுடன், அவர்களுக்குக் குறிப்புக் காட்டி வெளியே அனுப்பி விட்டு, ஒன்றும் அறியாதவர்போல இருக்கிறீர், தங்களைப் போன்ற வாக்குத் தவறுகிறவர்களை நான் கண்டது இல்லை.” இதைக்கேட்டு, வெசந்தரகுமாரன் மனம் சலித்தார். சிறுவர்கள் அவ்விடத்தில் இல்லாததைக் கண்டார். “அப்படி நினைக்க வேண்டாம். அவர்களைத் தேடி அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி, சிறுவர்களைத் தேடிச்சென்றார். குடிசைகளின் பின்புறம் போய்ப் பார்த்தார். அங்கு இல்லாததைக் கண்டு, காட்டில் ஓடியிருப்பார்கள் என்று நினைத்துக் காலடிச் சுவடுகளைப் பார்த்துக்கொண்டே போய்க் கடைசியில் ஏரியருகிதல் வந்தார். அங்குச் சிறுவர்கள் தண்ணீரில் இறங்கிய காலடிச் சுவடுகளைக் கண்டு, ஏரியில் ஒளிந்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்து, “ஜாலி, ஜாலி, குழந்தாய்! ஜாலி” என்று கூவியழைத்தார். நீரில் ஒளிந்திருந்த ஜாலி தனக்குள், ‘பார்ப்பான் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அப்பாவின் சொற்படி நடக்க வேண்டும்’ என்று எண்ணி ஏரியிலிருந்து கரைக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து அவருடைய வலதுகாலைப் பிடித்துக்கொண்டு அழுதான். “ஜாலி, உன் தங்கை எங்கே?” என்று கேட்டார் தகப்பனார். “அச்சங் கொண்டவர், புகலிடம் நாடிச் செல்வது இயற்கைதானே?” என்றான் ஜாலி. “கண்ணா! கண்மணி கண்ணா! எங்கிருக்கிறாய்?” என்று அழைத்தார் தந்தையார். ‘அப்பா அழைக்கிறார். அவர் சொற்படி நடக்கவேண்டும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டு சிறுமி நீரிலிருந்து கரைக்கு வந்து அப்பாவின் காலில் விழுந்து இடது காலைப் பிடித்துக் கொண்டு அழுதாள். வெசந்தர மன்னனின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிறுவர்களின் பொன் நிறமான முதுகில் விழுந்தன. அவர்களைத் தூக்கி நிறுத்தி ஆறுதல் கூறினார்: “ஜாலி, தானபாரமிதையின் உச்ச நிலையை இன்று நான் அடையப்போகிறேன். தானம் கொடுக்கும்போது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கூறினார். பிறகு ஆடு மாடுகளுக்கு விலை கூறுவது போல, அவர்களுக்கு விலையையும் கணித்தார். “ஜாலி, நீ பிராமணனிடமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், ஆயிரம் காணம் கொடுத்து விடுதலை பெறவேண்டும். உன் தங்கை மிகவும் அழகானவள். அவளை எவரும் மணம் செய்ய வருவார்கள். தாழ்ந்தவர்களுக்கு அவள் வாழ்க்கைப்படக் கூடாது. அவளை விடுதலை செய்து மணம்புரிய விரும்புவோர் நூறு ஆண் அடிமைகளையும், நூறு பெண் அடிமைகளையும் , நூறு யானை, நூறு குதிரை, நூறு எருதுகளையும், நூறு காணம் பொன்னையும் கொடுத்து விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர்களின் விடுதலைக்குரிய தொகையையும் தெரிவித்தார். பிறகு, சிறுவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்தார். பார்ப்பனனை அருகில் அழைத்து அவன் கையில் செம்பிலிருந்து நீர்வார்த்து, “என் அருமை மக்களைவிட நூறு மடங்கு, நூறாயிரம் மடங்கு புண்ணியத்தைப் பெறுவேனாக” என்று சொல்லித் தமது உயிர்போன்ற மக்களை அவனுக்குத் தானமாக வழங்கினார். அப்போது நிலம் நடுங்கிற்று. வானம் துலங்கிற்று. பயங்கர மான ஓசை உண்டாயிற்று. தமது கண்மணிகளாமக்களைத்தானம் வழங்கிய போதிசத்துவர் தமது மக்களைப் பார்த்தவண்ணம் (சிறிதும் மனம் கலங்காமல்) அவர்களைத் தானம் கொடுத்ததற் காக மனம் மகிழ்ந்தார். சிறுவர்களைத் தானம்பெற்ற பார்ப்பனன், அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். காட்டில் வளர்ந்திருந்த உறுதியான கொடியைக் கடித்து ஒடித்து அதனால் ஜாலியின் வலது கையையும் கண்ணாவின் இடது கையையும் சேர்த்துக் கட்டினான். வேகமாக நடக்கும்படி, அந்த உறுதியான கொடியினால் ஆடுமாடுகளை ஓட்டுவதுபோல, தந்தையின் கண் முன்பாகவே முதுகில் அடித்தான். சுரீர் என்று பட்ட அடி அவர்களின் தோலைக் கிழித்து இரத்தம் கசிந்தது. அவர்கள் கதறி அழுதார்கள். அடிபட்ட இடத்தைக் கையினால் தடவி விட முடியாமல் சிறுவர்கள் முதுகோடு முதுகை உராய்ந்து கொண் டார்கள். இவ்வாறு காட்டில் போகும்போது , பார்ப்பனன் கால் இடறிக் கீழே விழுந்து புரண்டான். அந்தச் சமயத்தில் அவர்கள் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய் தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்கள். “அப்பா! அம்மா வருகிறவரையில் இங்கேயே இருக்கிறோம். அம்மா இல்லாதபோது எங்களை அனுப்பவேண்டாம். அம்மா வந்தபிறகு நாங்கள் போகிறோம். பிறகு, இந்தப் பார்ப்பான் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஐயோ! அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே! தொந்தி வயிறும் தொங்குகிற சதையும் கண்ணும் விழியும் விகாரமான முகமும் அவனைப் பார்க்கும் போதே அச்சமாக இருக்கிறது. அவன் மனம் கல்லா, இரும்பா, கொடிய அரக்கன் போல இருக்கிறான். ஆடு மாடுகளைப்போல எங்களைக் கட்டி அடிப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! கண்ணா எவ்வளவு மென்மையானவள்! அவளையாவது விடுதலை செய்யுங்கள்” என்று வேண்டினான் ஜாலி. இந்தச் சொல்லைக் கேட்டும் போதிசத்துவர் ஒன்றும் பேசாமல் வாளா இருந்தார். அப்போது ஜாலி இவ்வாறு சொல்லி அழுதான்: “நான் சாவதாக இருந்தாலும் எனக்கு அச்சமில்லை. அம்மாவின் முகத்தைப் பார்க்காமல், அப்பாவின் முகத்தைப் பார்க்காமல் நான் எப்படிப் பிரிந்து இருப்பேன்? எங்களைப் பிரிந்து அப்பாவும் அம்மாவும் மனம் வருந்தித் துன்பப்படுவார்கள். கண்ணாவைக் காணாவிட்டால் அம்மா எவ்வளவு துன்பம் அடைவார்கள். நாங்கள் நட்டு வளர்த்த மரம் செடிகளையும், விளையாடின பொம்மைகளையும் விட்டுவிட்டுப் போகிறோம். அவைகளைப் பார்த்து அம்மாவின் மனம் எவ்வளவு துன்பம் அடையும். அவ்வமயம் ஜூஜகன் வந்து சிறுவர்களை ஓட்டிக் கொண்டு போனான். போதிசத்துவருக்கு மனம் பதைத்தது. துக்கம் மூண்டது. சிங்கத்தினால் தாக்குண்ட யானையைப் போலவும், இராகுவினால் விழுங்கப்படும் நிலாவைப் போலவும் அவருடைய உடம்பு நடுங்கிற்று. துக்கம் பொறுக்கமுடியாமல் அவர் குடிசைக்குள்ளே போய் கண்களில் நீர்வழிய அழுது புலம்பினார்: ‘காலையிலும் மாலையிலும் அவர்கள் பசியினால் அழும்பொழுது அவர்களுக்குப் பசிதீர யார் உணவு கொடுப்பார்? வெறுங்காலுடன் இவர்கள் அவ்வளவு தூரம் எப்படி நடந்துபோவார்கள்? என் கண் முன்பாகவே, இந்தப் பிராமணன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொடியினால் அடித்து ஓட்டுகிறான். திட்டியும் அடித்தும் ஓட்டுகிறான். நானோ, ஒன்றும் செய்யமுடியாமல், வலையில் அகப்பட்ட மீனைப்போலத் துடிக்கிறேன்.” இவ்வாறு சொல்லிப் புலம்பினார். தம் அருமைக் குழந்தைகளின்மீது உள்ள அன்பினால், அவர்கள் படும் வேதனைகளைக்கண்டு மனம் வெம்பினார். இரக்கமில்லா அரக்கனைப்போல அவன் அடிப்பதைக் கண்டு மனம் புழுங்கினார். உடனே ஓடிப்போய், அவனைக் கொன்று போட்டு மக்களை அழைத்துக்கொண்டு வரலாமா என்று எண்ணினார். அப்படிச் செய்வது தவறு, பிள்ளைகள் என் றாலும் அவர்கள் தானமாக வழங்கப்பட்ட பொருள்கள்தானே! தானமாக வழங்கிய பொருள்களை மீண்டும் பறித்துக்கொள்வது அறம் அல்ல; அப்படிச் செய்வது தகாது என்று கருதி, மக்க ளுக்காக மனம் வருந்தினார். காட்டில் ஓட்டிப் போகப்படும் சிறுவர்கள் தமக்குள் சிந்தித்தார் கள்: ‘அப்பாவும் அம்மாவும் எவ்வளவு அன்பாகவும் ஆசையாகவும் இருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஆடுமாடுகளை அடிப்பது போல அடிக்கிறானே!’ என்று சிந்தித்த வண்ணம் நடந்தார்கள். அப்போது பார்ப்பனன் ஒரு மேட்டிலிருந்து கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தான். அப்பொழுது சிறுவர்கள் மீண்டும் தமது தந்தை இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். சிறு பெண் உடல் நடுங்கி அழுதாள். “பார் அப்பா. அடிமைக்குப் பிறந்தவளைப் போலக் கருதி என்னை இவன் அடிக்கிறான். பிராமணர்கள் அன்புள்ளவர்கள் என்று கூறுகிறார்களே! இவன் பிராமண உருவுகொண்ட அரக்கன் போலும். எங்களை இவன் அடிப்பதைப் பார்த்துக் கொண்டும் சும்மா இருக்கிறீர்களே?” இதற்குள்ளாகப் பள்ளத்தில் விழுந்த பார்ப்பனன் எழுந்து ஓடி வந்து, மறுபடியும் சிறுவர்களைப் பிடித்துக் கைகளைச் சேர்த்துக் கட்டிக் காட்டுவழியே ஓட்டிக்கொண்டு போனான். தன் அருமை மகள் கூறியதையும், அவர்கள் படும் துன்பத்தையும் கண்டு, போதிசத்துவர் மனத்தில் பெருந்துன்பம் அடைந்தார். துக்கம் நெஞ்சையடைக்க, அவர் தேம்பித்தேம்பி அழுதார். கண்களிலிருந்து சூடான நீர் வழிந்தது. பிறகு அவர் தமக்குள் சிந்தித்தார்: ‘இந்தத் துன்பம் எல்லாம் அன்பு காரணமாக, பற்றுக் காரணமாக ஏற்படுகின்றன. அன்பையும், பற்றையும் நீக்கிப் பொறுமையையும் அமைதியையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று இவ்வாறு எண்ணி அறிவினால் சிந்தித்து மனத் துயரத்தை நீக்கிப் பொறுமையாக இருந்தார். போதிசத்துவர் தமது மக்களைத் தானமாக வழங்கியதையும், அவர்கள் அழுதுகொண்டு காட்டு வழியே பார்ப்பனனுடன் போவதை யும் அறிந்த தேவர்கள், தேவலோகத்திலே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்: “மத்தி, ஆசிரமத்துக்குப் போய் குழந்தைகளைக் காணாமல் அவர்களைப் பற்றி வெசந்தர குமாரனைக் கேட்பாள். அவர்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதை அறிந்ததும், அவர்களைத் தேடிக்கொண்டு காட்டில் ஓடுவாள். அப்போது அவளுக்கு, ஏதேனும் தீங்கு நேரிடக்கூடும். ஆகையால், பொழுது மறைவதற்கு முன்னே மத்தியை ஆசிரமத்துக்குப் போகவிடக்கூடாது.” இவ்வாறு தேவர்கள் தமக்குள் யோசித்தார்கள். அவர்களில் மூன்று பேர், மத்தியை வெளிச்சம் இருக் கும்போது ஆசிரமத்துக்குப் போகாதபடி தடுக்க முன் வந்தார்கள். அவர்களில் ஒருவர் சிங்கமாகவும், ஒருவர் வரிப்புலியாகவும், மற்றொருவர் சிறுத்தைப் புலியாகவும் உருவங்கொண்டு, மத்தியார் ஆசிரமத்துக்குத் திரும்பி வருகிற வழியில் படுத்துக் கொண்டிருந்தார்கள். கிழங்குகளையும் கனிகளையும் கொண்டுவருவதற்குக் காட்டுக்குச் சென்ற மத்தி, ‘நேற்று இரவு துன்பகரமான கனவு கண்டேன். இன்று விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும்’ என்று தமக்குள் எண்ணினாள். மண்வெட்டி தவறி விழுந்தது. கூடையும் தவறிற்று. வலது கண் புருவம் துடித்தது. பழங்கள் இல்லா மரங்கள் பழம் உள்ள மரங்கள் போலவும், பழம் உள்ள மரங்கள் பழம் இல்லாத மரங்கள் போலவும் அவளுக்குத் தோன்றின. தான் நடக்கிறாளா, ஓடுகிறாளா என்பதும் தெரியவில்லை. பழங்களையும் கிழங்குகளையும் விரைவாகப் பறித்துக் கொண்டு, பொழுது சாயும் முன்பே வீட்டுக்குப் புறப்பட்டாள். வழி, நீண்ட ஏரிக்கரையின் ஓரமாக அமைந்திருந்தது. ஆசிர மத்துக்கு வர வேறு வழி கிடையாது. இந்த வழியாக வந்து கொண் டிருக்கும்போது, சிங்கமும், புலியும், சிறுத்தையும் வழியிலே படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டு மனமும் உடம்பும் நடுங்கி தூரத்திலேயே நின்று விட்டாள். மனம் துடித்தது. பொழுது சாயுமுன் வீட்டுக்குப் போக வேண்டும் என்னும் துடிப்பும், போகமுடியாமல் வழியிலே துஷ்ட மிருங்கள் படுத்திருக்கிற அச்சமும் அவர் மனத்தில் குடிகொண்டு, மனத்தை ஊசல் ஆட்டின. இது தவிர வேறு வழியும் கிடையாது. ‘ஐயோ, பொழுது போகிறதே! வெகுதூரம் போகவேண்டுமே!’ என்று சிந்தித்த வண்ணம் தூரத்திலேயே ஒளிந்திருந்தாள். பொழுது போயிற்று. சூரியன் சாய்ந்து மாலையும் வந்தது. மிருகங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. செவ்வானம் வந்தது. கடைசியில் சூரியனும் மறைந்துவிட்டது. குழந்தைகள் பசியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். பசுவை ஆவலோடு எதிர்பார்க்கும் கன் றைப்போல அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். கணவரும் காத்துக் கொண்டிருப்பார். என்றும் இல்லாதபடி இன்று மட்டும் இந்தக் கொடிய மிருகங்கள் ஏன் வழி மறிக்கின்றன? சூரியன் மறைந்தபிறகு மிருகங்கள் மெல்ல எழுந்து காட்டுக்குள் போய்விட்டன. அதைக்கண்ட மத்தி, ஓடோடியும் ஆசிரமத் துக்கு வந்தாள். அன்று முழு நிலா நாள். வானத்திலே வெண் ணிலா நிலவைப் பரப்பி வெளிச்சந் தந்தது. ஆசிரமத்துக்கு அருகே ஏரிக்கரையண்டை வந்தபோது , ஜாலியும் கண்ணாவும் வழக்கம்போலக் காணப்படவில்லை. நாள்தோறும் அவர்கள் அங்கு வந்து மத்தியைச் சந்திப்பது வழக்கம். “தாய் மானைக் கண்ட மான் குட்டிகள் காதுகளை உயர்த்திக்கொண்டு ஓடி வருவதுபோல, என் குழந்தைகள் சிரித்துக்கொண்டு சந்தோஷ மாக ஓடிவருவார்களே! இன்று அவர்களைக் காணோமே! குருவி, குஞ்சுகளைக் கூட்டிலும், சிங்கம் தன் குட்டிகளைக் குகையிலும் விட்டு விட்டு இரை தேடிக்கொண்டு வருவதைப்போல, நானும் காட்டில் போய் உணவு கொண்டுவருகிறேன். என் குழந்தை களைக் காணோமே! ஜாலியும் கண்ணாவும் ஏரிக்கரையில் மணலைக் குவித்து வீடுகட்டி விளையாடுவார்களே! என்னைக் கண்டதும் ஓடிவந்து இடுப்பைக் கட்டிக்கொண்டும், கழுத்தைக் கட்டிக்கொண்டும் கொஞ்சுவார்களே! அவர்களை இன்று காணோமே! இதோ விழுந்து கிடக்கும் வில்வப் பழம் அவர்கள் விளையாடியதுதான். ஆசிரமம் சந்தடி இல்லாமல் ஓய்ந்திருக்கிறதே! என் குழந்தைகள் இறந்து விட்டார்களோ!’ இவ்வாறு தனக்குள் பலவாறு எண்ணிக்கொண்டு மனம் துடிக்க ஓடிவந்தாள். வெசந்தர குமாரன் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகில் குழந்தைகள் காணப்படவில்லை. பழக்கூடையை வைத்துவிட்டு இவ்வாறு கேட்டாள்: “குழந்தைகள் எங்கே? ஏன் சந்தடி இல்லாமல் இருக்கிறது? அவர்கள் எங்கே போனார்கள்? வழிதவறிக் காட்டில் போய்விட்டார்களா? துஷ்ட மிருகங்கள் அவர்களைக் கொன்று விட்டனவா? அவர்கள் இறந்துவிட்டார்களா? நான் கண்ட கனவு நனவாய்விட்டதா? அவர்கள் உறங்கு கிறார்களா? விளையாட்டுக்காக ஒளிந்து கொண்டிருக்கிறார்களா? அவர்களைக் காணோமே?” அப்போதும் போதிசத்துவர் வாய் பேசாமல் மௌனமாக வாளா இருந்தார். மத்தியாருக்கு மேலும் துக்கம் உண்டாயிற்று. “தாங்கள் ஏன் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கிறீர்கள்? குழந்தை களைக் காணாமல் இருப்பது அம்புபோல் ஒருபக்கம் மனத்தைத் தைக்கிறது. தாங்கள் மௌனமாக இருப்பது இன்னொரு பக்கம் வாள்போல் அறுக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் கோபம் ஏன்? எனக்கு உயிர் போவதுபோல் இருக்கிறது.” அப்போது, போதிசத்துவர், ‘கடுமையாகப் பேசி, குழந்தைகளைப் பற்றிய வருத்தத்தை ஆற்றவேண்டும்’ என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, இவ்வாறு கேட்டார்: “மத்தி! காலையில் காட்டுக்குப் போன நீ, ஏன் இவ்வாறு நேரங்கழித்து வந்தாய்?” “வருகிற வழிலே புலியும், சிங்கமும், சிறுத்தையும் படுத்துக் கொண் டிருந்தன. அவை உறுமிக் கர்ச்சித்த கர்ச்சனைகளைத் தாங்களும் கேட்டிருப்பீர்களே! அவைகளுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந் தேன். குழந்தைகளை அவை கொல்லாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். மாலை நேரம் ஆன பிறகுதான் அந்தத் துஷ்ட மிருகங்கள் எழுந்து போய்விட்டன. பிறகு, நான் ஓடோடி வந்தேன்.” போதிசத்துவர் அன்றிரவு முழுவதும், தாம் சிறுவர்களைத் தானங் கொடுத்த செய்தியைச் சொல்லவில்லை. மத்தி குழந்தை களைக் காணாமல் அழுதாள். “வெள்ளாட்டுத் தோலினால் சட்டை தைத்து உடுத்தினேன். உண்பதற்காகக் காட்டிலிருந்து கிழங்குகளையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுத்தேன். விளையாடுவதற்குக் காட்டிலிருந்து காய்களையும் பூக்களையும் பறித்து வந்து கொடுத்தேனே! செந் தாமரைப் பூவையும் வெண் தாமரைப் பூவையும் அவர்களுக்குக் கொடுத்தீர்களே! ஜாலிக்கு வெள்ளைநிற அல்லிப் பூவையும் கண்ணாவுக்கு நீலநிற அல்லிப் பூவையும் கொடுத்தீர்களே! பூமாலைகளை அணிந்து கொண்டு அவர்கள் கூத்தாடிச் சிரித் தார்களே! கண்ணா இனிமையாகப் பாடுவதைக் கேட்டு மகிழ்வோமே! கண்மணிக் குழந்தைகளைக் காணவில்லையே! நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்கு வந்தது முதல் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தோம். இந்தத் துக்கம் பொறுக்க முடியவில்லையே! கண்ணாவும் ஜாலியும் எங்கே போனார்கள்? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேனோ, என் தலை விதி என் குழந்தை களைக் காணாமல் தவிக்கிறேன்.” இவ்வாறெல்லாம் கூறி மத்தி அழுதுங்கூட அவளுக்குப் போதி சத்துவர் உண்மையைச் சொல்லாமல் வாளா இருந்தார். மத்தி, நடுக்கத் தோடு அழுதுகொண்டு, நிலா வெளிச்சத்திலே, அச்சிறுவர்களைத் தேடிக்கொண்டு வழக்கமாக அவர்கள் விளையாடுகிற இடங்களில் எல்லாம் போய்த் தேடினாள். அவர்கள் விளையாடின மரங்கள், செடிகள், புதர்கள் முதலிய இடங்களில் தேடினாள். ஏரிக்கரையில் போய்த் தேடினாள். காடுமேடுகளில் தேடினாள். அவர்கள் விளையாடிய முயல்களும் மான் குட்டிகளும் வாத்துகளும் இருந்தன. அவர்கள் வைத்து விளையாடின பொருள்களும் கருவிகளும் இருந்தன. ஆனால், அவர்கள் காணப்படவில்லை. எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு, மறுபடியும் போதி சத்துவரிடம் வந்து தலை குனிந்தவண்ணம், “ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்? ஜாலியும், கண்ணாவும் எங்கே?” என்று கேட்டாள். போதி சத்துவர் விடை சொல்லாமல் மௌன மாகவே இருந்தார். அதனால், மேலும் துன்பம் அடைந்த மத்தி, காணாமற்போன குஞ்சுகளைத் தேடியலையும் கோழியைப்போல, மறுபடியும் போய் முன்பு தேடிய இடங்களையெல்லாம் தேடிப் பார்த்தாள். அவர்களைக் காணவில்லை. மறுபடியும் வந்து, “கணவரே, அவர்களைக் கொன்றவர் யார்? காக்கை குருவிகளும்கூட மௌனமாக இருக்கின்றனவே!” என்று கேட்டாள். அப்போதும் போதிசத்துவர் வாய்பேசாமல் அமர்ந்திருந்தார். மத்தி, மூன்றாந் தடவையும் போய்ப் பிள்ளைகளைத் தேடாத இடங்களில் எல்லாம் தேடினாள். அவர்கள் காணப்படவே இல்லை. அவள் அன்று நடந்து அலைந்தது பத்து யோசனை தூரம் இருக்கும். பொழுது விடியும் நேரம் ஆயிற்று. மத்தி, பல இடங்களிலும் தேடித் திரிந்து பிள்ளைகளைக் காணாமல், ‘அவர்கள் இறந்துபோனார்கள்’ என்று தீர்மானம் செய்து கொண்டாள். துக்கத்தோடு போதி சத்துவரிடம் வந்தாள். தாங்கமுடியாத துன்பத்தி னால் அவள் நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது. தொப் பென்று கீழே விழுந்து பிணம் போலானாள். இதனைக்கண்ட வெசந்தரகுமாரன், “என் அருமை மத்தி இறந்து போனாள்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து தூக்கினார். “நீ நமது நாட்டில் இறந்துபோனால், எவ்வளவு சிறப்பாக உன்னை அடக்கம் செய்வார்கள். காட்டில் தன்னந்தனியனாய் இருக்கும் நான், உனக்கு என்ன செய்ய முடியும்?” என்று கூறி மனம் வருந்தினார். மத்தியின் மார்பில் கை வைத்துப் பார்த்தார். சூடு இருந்தது. கண்ணீர் வடிய, மனந் துடிக்க மத்தியைத் தூக்கித் தலையை மடியில் வைத்துக்கொண்டு முகத்தில் நீரைத் தெளித்தார். உடம்பைத் தடவினார். சற்றுநேரம் கழித்து மத்தி, உணர்வு பெற்றுக் கண்ணைத் திறந்தாள். எழுந்து உட்கார்ந்து கணவனைப் பார்த்து, “குழந்தைகள் எங்கே?” என்று கேட்டாள். “அவர்களைப் பிராமணனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டேன்.” “இதைச் சொல்லாமல் ஏன் என்னை இரவு முழுவதும் அலைய வைத்தீர்கள்?” “உடனே சொன்னால், உன் இருதயம் வெடித்து நீ உயிர் நீப்பாய் என்று எண்ணி, அப்போது சொல்லவில்லை. மத்தி! பிராமணன் ஒருவன் வந்து பிள்ளைகளைத் தானங் கோட்டான். அவர்களை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். அவர்கள் சாகவில்லை. உயிருடன் இருக்கிறார்கள். இறந்து போனார்கள் என்று எண்ணி மனம் வருந்தாதே. அவர்களை மீட்டுக் கொள்ளலாம். தானம் கேட்டால், எப்படி இல்லை என்று சொல்லுவது? பெற்ற பிள்ளைகளை, அருமந்தக் குழந்தைகளைத் தானம் செய்வதைவிட உயர்ந்த தானம் என்ன இருக்கிறது? மத்தி, நீயும் இந்தத் தானத்தைப்பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும்.” தன் அருமைக் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்த மத்தி, ஒருவாறு துக்கம் நீங்கினாள். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, விண்ணுலகத்திலே சக்கன் (இந்திரன்), தனக்குள் எண்ணினான்: ‘நேற்று வெசந்தர மன்னன் தன் அருமை மக்களைத் தானமாகக் கொடுத்துவிட்டார். அதனால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இடி முழங்கிற்று. வேறு யாரேனும் இழிந்த மனமுள்ள தூர்த்தன் வந்து, மத்தியைத் தானமாகக் கேட்டால், அவளையும் இவர் தானம் கொடுத்து விடுவார். அப்படி நிகழ்வது கூடாது. நான் போய், மத்தியைத் தானமாகப் பெற்று, மறுபடியும் அவருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு வருவேன். ஒரு தடவை தானம் வழங்கியவரை மறுபடியும் வேறு யாருக்கும் தானங்கொடுக்கமாட்டார். இவ்வாறு எண்ணிய இந்திரன், அதிகாலையில் ஓர் பார்ப்பனன் வடிவங்கொண்டு தடியூன்றி நடந்து காட்டுக்கு வந்தார். இவர்கள் இருந்த ஆசிரமத்தையடைந்தார். வெசந்தரகுமாரனைக் கண்டு, “தாங்கள் நலமாயிருக்கிறீர் களா? கனிகளும் கிழங்குகளும் கிடைக்கின்றனவா? உணவுக்கு முட்டுப்பாடில் லாமல் இருக்கிறீர்களா? ஈ எறும்புகளினாலும், காட்டு விலங்குகளி னாலும் துன்பம் இல்லாமல் இருக்கிறீர்களா?” என்று வினவினார். வெசந்தரகுமாரன் அவரை வணங்கி வரவேற்றார். ஆசனத்தில் அமரச் செய்தார். “நாங்கள் நலமாக இருக்கிறோம். காய்கனிகள் போதுமானவை கிடைக்கின்றன. காட்டு மிருகங்களினால் யாதொரு துன்பமும் இல்லை. நாங்கள் இங்கு வந்து ஏழு திங்கள் ஆகின்றன. இங்கு வந்தவர்களில் தாங்கள் இரண்டாவது பிராமணர். கை கால் கழுவிக்கொண்டு, இந்தப் பழங்களை அருந்துங்கள். குளிர்ந்த நீரைப் பருகுங்கள்” என்று கூறிக் கிழங்குகளையும் கனிகளையும் கொடுத்தார். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பிறகு வெசந்தரகுமாரன், பிராமணரைப் பார்த்து, “இந்தப் பெரிய காட்டில், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்த காரணம் யாதோ?” என்று வினவினார். பிராமணன் கூறினான்: “என்றும் வற்றாத ஊருணிபோல, வரையாது வழங்கும் வள்ளலாக இருக்கிறீர். நானோ வயது சென்ற கிழப் பிராமணன். எனக்குப் பணிவிடை செய்ய ஒரு மனைவி வேண்டும். தங்களுடைய மனைவியை எனக்குத் தான மாகக் கொடுப்பீர்களா?” போதிசத்துவர் ஒன்றும் பேசவில்லை. ‘நேற்றுத்தான் என் அருமை குழந்தைகளைத் தானமாகக் கொடுத்தேன். இன்று என் ஆருயிர் மனைவியை மகிழ்ச்சியுடன் தானமாகக் கொடுப்பேன். தானத்தைவிடச் சிறந்த புண்ணியம் என்ன இருக்கிறது? பொன்னையும் பொருளையும் விடச் சிறந்த பொருள் மனைவி. இந்தச் சிறந்த பொருளைத் தானம் செய்வதுதான் உண்மையான தானமாகும்’ என்று தமக்குள் சிந்தித்துக்கொண்டு, செம்பைக் கையில் எடுத்துப் பிராமணன் கையில் நீரை வார்த்து மத்தியைத் தானமாக வழங்கினார். அப்போது பூமி அதிர்ந்தது. வானம் நடுங்கிற்று. இடி ஓசை முழங்கிற்று. ‘மத்தியை நான் வெறுக்க வில்லை. என் உயிர்போல அவளைக் காதலிக்கிறேன். அப்படிப்பட்ட சிறந்த பொருளைத் தானமாகக் கொடுப்பதுதானே உண்மையான தானம் ஆகும்’ என்று எண்ணிக்கொண்டு, மத்தி என்ன நினைக்கிறாள் என்று அறிய அவள் முகத்தை நோக்கினார். மத்தியின் முகம் அமைதியாக இருந்தது. ‘இவருக்கு நான் இளமையில் வாழ்க்கைப் பட்டேன். இவர் கருத்துப்படி நடந்துவந்தேன். இப்பொழுதும் இவர் விருப்பப்படியே நடப்பேன்’ என்று மத்தி தமக்குள் எண்ணினார். அப்போது பிராமணன் கூறினான்: “வெசந்தர வள்ளலே! உம்முடைய மனைவியாரை நான் மறுபடியும் உமக்கே கொடுக் கிறேன். இருவரும் சுகமாக வாழ்ந்திருங்கள். நான் உண்மையில் பிராமணன் அல்லன், சக்கன். இந்திரலோகத்திலிருந்து வந்தேன். உமக்கு வேண்டிய வரத்தைக்கேளும், தருகிறேன்.” போதிசத்துவர், “என் தந்தையார் என்னை மறுபடியும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளும்படி வரம் அருளவேண்டும். நாள்தோறும் தானங்களைச் செய்வதற்கு வேண்டிய பொருளை யும் வாய்ப்பையும் தந்தருள வேண்டும். உலகத்திலே, அறவழியிலே நடந்துகொள்ள வரம் அருளவேண்டும்” என்று வேண்டினார். “நீர் விரும்பிய வரங்களைத் தந்தேன்” என்று கூறி, இந்திரன் மறைந்து போனான். வெசந்தர குமரானும், மத்தியும் தன்னந்தனியே காட்டில் இருந்தனர். ஜூஜகப் பார்ப்பனன் சிறுவர்களை நடத்திக்கொண்டு காட்டு வழியே போனான். அறுநூறு யோசனை தூரம் கால் நடையாகவே நடந்தார்கள். இரவு ஆனதும், அவன் அவர்களின் காலையும் கையையும் கட்டி மரத்தின் அடியில் விட்டுவிட்டுக் காட்டு மிருகங்கள் தன்னைத் தொந்தரவு செய்யாதபடி தான் மட்டும், மரத்தின்மேல் ஏறிக் கிளையின் கவைகளில் உட்கார்ந்து உறங்குவான். இரவு நேரங்களில் இரண்டு தெய்வங்கள் சிறுவர்களைக் காத்து வந்தன. வெசந்தரகுமரானைப் போலவும், மத்தியைக் போலவும் உருவங்கொண்டு இரண்டு தெய்வங்களும் குழந்தை களிடம் வந்து, கட்டுக்களை அவிழ்த்து நீராட்டி, உணவு கொடுத்து உறங்கச் செய்யும். விடியற் காலையில், முன் போலவே கைகால்களைக் கட்டிவிட்டுப் போய்விடும். இந்தத் தெய்வங்களின் உதவியினாலே சிறுவர்கள் யாதொரு துன்பமும் இல்லாமல் காட்டைக் கடந்தனர். ஜூஜகனை இந்த தெய்வங்கள் வழிதிருப்பி விட்டன. அவன் கங்கதேசம் போகாமல் சிவி நாட்டுக்குப் போகும்படி அவனைச் செலுத்திவிட்டன. பதினாறு நாட்களுக்குப் பிறகு, இவர்கள் ஜேதுத்தர நகரத்தை அடைந்தார்கள். அன்று இரவு சிவி நாட்டு மன்னன் ஒரு கனவு கண்டார். தாம் சபையிலே சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவும், அப்போது ஒரு ஆள்வந்து இரண்டு பூக்களைத் தம்மிடம் கொடுத்தது போலவும், அப்பூக்களைத் தமது காதுகளில் அணிந்துகொண்டது போலவும் அப்பூக்களில் இருந்து பூந்தாது கள் தமது மார்பில் உதிர்ந்தது போலவும் அவர் கனவு கண்டார். பொழுது விடிந்தபிறகு இந்தக் கனவை நிமித்திகரிடம் கூறினார். அவர்கள், நெடுநாள் பிரிந்திருந்தவர் தங்களிடம் வருவார்கள் என்று இக்கனவுக்கு விளக்கம் கூறினார்கள். அன்று, அரசர் பெருமான் அரசவையிலே அமர்ந்திருந்த போது, ஜூஜகப் பார்ப்பனன் சிறுவர்களுடன் அங்கு வந்தான். சிறுவர்களைத் தூரத்தில் கண்ட அரசர் கூறினார்: “தங்கப் பதுமைகள்போலக் காணப் படுகிற இந்தச் சிறுவர்கள் யார்? சிங்கக் குட்டிகள்போல் தோன்றுகிற இவர்கள் யார்? ஜாலியைப் போலவும், கண்ணாவைப் போலவும் இருக்கிறார்களே?” என்று கூறி, அவர்களை அருகில் அழைத்துவந்த போது, அரசர் கூறினார்: “ஓய் பிராமணா! இந்தச் சிறுவர்களை எங்கிருந்து கொண்டுவருகிறாய்?” “பதினைந்து நாட்களாக இவர்களைக் காட்டிலிருந்து அழைத்து வருகிறேன். இவர்களைத் தானமாக வாங்கி வருகிறேன்” என்று கூறினான் ஜூஜகன். அரசன்: “யாரும் குழந்தைகளைத் தானம் கொடுக்க மாட் டார்களே? யாரிடம் இவர்களைத் தானம் பெற்றாய்?” ஜூஜகன்: “யாருக்கும் இல்லை என்று மறுக்காமல் தானம் வழங்குகிற வெசந்தரகுமாரன், காட்டில் வசிக்கிறார். அவரிடம் இச் சிறுவர்களைத் தானமாகப் பெற்றேன்.” இதைக் கேட்டவுடன் சபையில் இருந்தவர் திடுக்கிட்டனர். பிறகு, சினம்கொண்டு பேசிக்கொண்டார்கள்: “பொன்னைப் பொருளைத் தானம் கொடுக்கலாம். யானை, குதிரைகளைத் தானம் கொடுக்கலாம். மனிதர்களில் அடிமையாக உள்ளவர்களைத் தானமாகக் கொடுக்கலாம். தான் பெற்ற குழந்தைகளை எப்படித் தானம் வழங்கலாம்?” அப்போது தன்னுடைய தந்தையைக் குறை கூறுவதைப் பொறாமல், ஜாலி கூறினான்: “அவரிடம் யானை, குதிரை, அடிமை யாட்கள் இல்லாதபோது எதைத் தானம் கொடுப்பார்?” அரசன்: “குழந்தாய், உன் தந்தையைக் குறை கூறுவதற்கு இல்லை. உங்களைத் தானம் செய்தபோது அவர் மனம் எப்படி இருந்தது?” ஜாலி “சொல்ல முடியாத துன்பம் அடைந்தார். உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, கண்ணீர் வடிய வடியத்தான் எங்களைத் தானமாகக் கொடுத்தார்.” ஜூஜகப் பார்ப்பான் சிறுவர்களை இழுத்துத் தன்னிடம் நிறுத்திக் கொண்டான். அரசன், “குழந்தைகளே! ஏன் தூரத்தில் நிற்கிறீர்கள். இங்கே வந்து என் மடிமீது அமருங்கள்.” ஜாலி “நாங்கள் அரசகுலத்தில் பிறந்தவர்கள்தாம். எங்கள் அம்மா அரசி. எங்கள் அப்பாவும் அரசர். ஆனால், இப்போது நாங்கள் அடிமைகள்.” அரசன்: “குழந்தாய் அப்படிச் சொல்லாதே. என் மனம் வேகிறது. இப்போது நீங்கள் அடிமைகள் அல்லர். உங்களைத் தானம் கொடுத்த போது உங்கள் தகப்பனார், உங்களை மீட்பதற்கு எவ்வளவு விலை மதிப்பு கூறினார்?” ஜாலி “எனக்கு விலை ஆயிரம் பொன், தங்கைக்கு விலை நூறு யானை, நூறு குதிரை, நூறு எருது, நூறு ஆண் அடிமை கள், நூறு பெண் அடிமைகள், இவற்றோடு ஆயிரம் பொன்.” அரசர் பெருமான் அவ்வாறே பொன்னையும் பொருளையும் ஜூஜகனுக்குக் கொடுக்கும்படி அமைச்சருக்குக் கட்டளை யிட்டார். அன்றியும், ஒரு மாளிகையையும் அவனுக்குத் தானமாகக் கொடுத்தார். பிராமணன் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாளிகையில் தங்கினான். அடிமையிலிருந்து விடுபட்ட இளைஞர்கள் நீராடிப் பட்டுடுத்தி, அறுசுவை உணவு அருந்தினார்கள். அரசர் பெருமான் ஜாலியையும், அரசியார் கண்ணாவையும் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள். அப்போது அவர்கள், தமது மகனைப் பற்றியும், மருமகளைப் பற்றியும் விசாரித்தார்கள். “மத்தியும் வெசந்தரகுமாரனும் சுகமாய் இருக்கிறார்களா? காட்டிலே துன்பம் இல்லாமல் இருக்கிறார்களா?” “சுகமாக இருக்கிறார்கள். அம்மாவுக்கு வேலை அதிகம். அம்மா நாள்தோறும் காட்டுக்குப்போய் கிழங்குகளையும் பழங் களையும் கொண்டு வருவார்கள். ஏரியிலிருந்து நீர் கொண்டு வருவார்கள். நெருப்பு மூட்டிச் சமைப்பார்கள். எல்லோரும் பழங்களையும் கிழங்குகளையும் உண்போம். வெயிலிலும் காற்றிலும் காட்டில் அலைந்து அம்மாவுக்கு உடம்பு மெந்து விட்டது. உடம்பு நிறம் மாறிவிட்டது. நீண்ட தலைமயிர் முள்ளில் சிக்கி அறுந்துவிட்டது. தரையில்படுத்து உறங்குவார்” என்று ஜாலி சொன்னான் பிறகு, பாட்டனாரைப் பார்த்து, “உலகத்திலே தகப்பன்மார் தங்கள் பிள்ளைகள் இடத்தில் அன்பாக இருக்கிறார்களே, தாங்கள் மட்டும் ஏன் தங்கள் பிள்ளையிடம் அன்பு காட்டவில்லை?” என்று கேட்டான். சஞ்சய அரசன், தனது குற்றத்தைப் பேரனிடம் ஒப்புக் கொண்டார். “நாட்டு மக்களின் பேச்சைக்கேட்டு நான் என் மகனுக்குத் தவறு செய்துவிட்டேன். நான் செய்தது பிசகுதான் இப்போது உணர்கிறேன். இந்தச் செல்வங்கள் எல்லாம் யாருக்கு? வெசந்தர குமாரன் வந்து அரசாளட்டும்” என்று சஞ்சய மன்னன் கூறினார். “நான் போய் அழைத்தால் அவர் வரமாட்டார். அவரைக் காட்டுக்கு அனுப்பியவர்கள் போய் அழைத்தால் வருவார்” என்றான் ஜாலி. சஞ்சய மன்னன் அமைச்சர்களையும் குழுவினரையும் அழைத்து, வெசந்தரகுமாரனை நகரத்திற்கு அழைப்பதுபற்றி யோசித்தார். நாட்டின் முக்கியமானவர்களும், அரசர் பெருமானும் யானை சேனைகளுடன் போய்க் காட்டிலிருந்து வெசந்தர குமாரனை அழைத்துவர முடிவு செய்தார்கள். வங்கமலைக் காட்டுக்குப் போவதற்காக அகலமான சாலைகளை அமைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜூஜகப் பார்ப்பான், தான் பெற்ற சுகபோகங்களில் திளைத்து, மட்டுமிதம் இல்லாமல், வயிறு புடைக்க உணவு சாப் பிட்டபடியால், நோய்கொண்டு செத்துப்போனான். வங்கமலைக் காட்டுக்குப் போக ஜேதுத்தர நகரத்திலிருந்து புதிதாகச் சாலை போடப்பட்டது. வெகுதூரம், பல யோசனை தூரம் உள்ள இந்தச் சாலை, அகலமாக அமைக்கப்பட்டிருந்தது. சிவி அரசன் தமது குடும்பத்துடனும் அமைச்சர், குடிமக்கள் முதலிய பரிவாரங்களுட னும், யானையிலும் தேரிலும் அமர்ந்து புறப்பட்டுச் சென்றார். யானை சேனைகளும் அவர்களுடன் சென்றன. வழியில் இடை இடையே தங்கிப் பலநாள் பிரயாணம் செய்து கடைசியாக முசலித ஏரியண்டை வந்து, பாசறை அமைத்துத் தங்கினார்கள். யானைகளின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பும், சேனைகளின் கூச்சலும் சந்தடியும், அப்பெரிய ஏரியின் எதிர்கோடியில் இருந்த ஆசிரமத்தில் கேட்டன. இதன் காரணம் என்னவென்பதை அறிய வெசந்தரகுமாரன் மத்தியுடன் அருகில் இருந்த குன்றின்மேல் ஏறிநின்று பார்த்தார். ஏரியின் எதிர்கோடியிலே கொடிகளும் தோரணங்களும் காற்றில் பறப்பதையும், யானைகளும் குதிரைகளும் கட்டப்பட்டிருப்பதையும் கண்டார். “யாரோ அரசன் காட்டில் வேட்டையாட வந்திருக்கிறான். அவன் நமக்குப் பகைவனாக இருந்தால் நம்மைக் கொன்று போடுவான்” என்று கூறினார் வெசந்தரகுமாரன். மத்தி, கூர்ந்து நோக்கி, “அந்தச் சேனை நமது நாட்டுச் சேனைபோலத் தெரிகிறது” என்று கூறினார். வெசந்தரகுமாரனும் கூர்ந்து பார்த்துவிட்டு, “அப்படித்தான் தோன்றுகிறது” என்று சொன்னார். இருவரும் இறங்கிவந்து ஆசிரமத் தில் இருந்தார்கள். பாசறையில் இருந்த சஞ்சய மன்னன் தனது இராணியிடம் கூறினார்: “நாம் எல்லோரும் சேர்ந்து திடீரென்று போனால் மகிழ்ச்சி யினால் அவர்களுடைய இருதயம் அதிர்ச்சிடையும். அதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடவும் கூடும். ஆகையால் ஒவ்வொருவராகப் போவது நலம். முதலில் நான் போகிறேன். பிறகு நேரங் கழித்து நீ வரலாம். நீ வந்த சில நேரங்கழித்துச் சிறுவர்கள் வரட்டும்.” இவ்வாறு சொல்லியபிறகு, அரசர் பெருமான் யானையின் மேல் அமர்ந்து, வெசந்தரகுமாரன் இருக்கும் ஆசிரமத்துக்கு வந்தார். வந்து, யானையை விட்டுக் கீழே இறங்கினார், அரசரைக் கண்டதும், வெசந்தர குமாரனும் மத்தியும் விரைவாகப் போய் அவரை வரவேற்றுக் காலில் விழுந்து வணங்கினார்கள். அரசர் பெருமான் அவர்களைத் தழுவி, மன வருத்தத்தோடு, “சுகமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டார். வெசந்தர குமாரன் கூறினார்: “நாங்கள் சுகந்தான். தங்களைப் பார்க்காத வருத்தந்தான் எங்களுக்கு உண்டு. அந்த வருத்தமும் இப்போது நீங்கிற்று. ஜாலியையும் கண்ணாவையும் ஒரு பார்ப்பனன் கொண்டு போய்விட்டான். அவர்களைப் பிரிந்த பிறகு, பாம்பு கடித்து விஷம் ஏறியவர்களைப்போல மயங்கிக் கிடக்கிறோம். சிறுவர்களைப் பற்றி தாங்கள் ஏதேனும் அறிவீர்களா?” “குழந்தைகளைப்பற்றி இனிக் கவலை வேண்டாம். அவர் களுக்கு உரிய விலையைக் கொடுத்து ஜாலியையும் கண்ணாவை யும் மீட்டுக்கொண்டோம்.” இச்செய்தியைக் கேட்டவுடனே அவர்களுக்கு மனம் குளிர்ந்தது. முகம் மலர்ந்தது. மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். “அம்மா நலமாக இருக்கிறார்களா? எங்களைப்பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். நாட்டில் எல்லோரும் சுகம்தானே?” என்று வெசந்தரகுமாரன் கேட்டார். இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அரசியார், இதற்குள்ளாக இவர்கள் மன அமைதி பெற்றிருப்பார்கள் என்பதை அறிந்து, பரிவாரங்களுடன் அங்கு வந்தார். அரசி யாரைக் கண்டவுடன் விரைந்துசென்று வரவேற்று மத்தியும் இளவரசனும் காலில் விழுந்து வணங்கினார்கள். சற்று நேரங் கழித்து ஜாலியும் கண்ணாவும் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட மத்தி, கன்றைப் பிரிந்த பசு மீண்டும் கன்றைக் கண்டது போல ஆவலுடன் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தாள். இவ்வாறு அரச குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்தனர். நாட்டிலிருந்து வந்த ஜனத் தலைவர்கள், வெசந்தர குமாரனை நாட்டுக்கு வரும்படி அழைத்தார்கள். சஞ்சய மன்னனும், நாட்டுக்கு வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும் படி கூறினார். “தாங்கள் எல்லோரும் சேர்ந்துதானே என்னைக் காட்டுக்கு அனுப்பினீர்கள்?” என்று கேட்டார் இளவரசன். “நாட்டு மக்களின் பேச்சைக்கேட்டு நானும் தவறு இழைத்து விட்டேன். தவற்றை உணர்ந்து இப்போது அழைக்கிறோம். நாட்டுக்கு வருக” என்று கூறினார் மன்னர் பெருமான். அவ்விடத்திலேயே அரச குமரனுக்குக் குடமுழுக்காட்டிப் பட்டங் கட்ட ஏற்பாடு செய்தனர். இளவரசனும் மத்தியும் மரவுரி ஆடையைக் கழற்றிவிட்டு, பட்டாடையணிந்து வந்தனர். அங்கிருந்த பெரிய கற்பாறையின்மேல் அவர்களை அமரச்செய்து குடங்களில் நீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்து நீராட்டிப் பட்டங் கட்டினார்கள். இராணியார் அனுப்பிய பட்டாடைகளை அணிந்து, அழகுடன் பொலிந்து காணப்பட்டனர். அவர்களை யானையின்மேல் அமரச் செய்து எல்லோரும் பாசறைக்குச் சென்றார்கள். பாசறைக்குச் சென்று அங்கே எல்லோரும் சிலநாள் தங்கியிருந்து, காட்டில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருந்தார்கள். இவ்வாறு சில நாட்கள் இருந்த பிறகு எல்லோரும் புறப்பட்டு நாட்டுக்குச் சென்றார்கள். ஜேதுத்த நகரத்தைத் தோரணங்களினாலும் வாழை முகடு முதலியவைகளினாலும் அலங்கரித்து, நாட்டு மக்கள் இளவரசரையும் இளவரசியையும் வரவேற்று மகிழ்ந்து விழாக்கொண்டாடினார்கள். வெசந்தர குமாரன் ஜேதுத்தர நகரத்திலே சிம்மாசனம் ஏறி அரசாண்டார். நீதி தவறாமல் செங்கோல் செலுத்தினார். முன்போலவே, நாள்தோறும் தான தருமங்களைச் செய்து கொண்டிருந்தார். இந்திரன், நாட்டிலே மழை பெய்வித்து, செழிப்பாக்கிச் செல்வம் பெருகும்படி செய்தான். அச்செல்வங் களைத் தகுந்த ஏழை எளியவருக்குத் தானம் செய்து வெசந்தர மன்னர் வாழ்ந்துவந்தார். இக்கதையைக் கூறியபிறகு பகவன் புத்தர் இவ்வாறு அடை யாளங் கூறினார்: “தேவதத்தன் ஜூஜகப் பார்ப்பனனாகவும், சிஞ்சா அமித்தாபன்னியாகவும், சன்னன் சேத புத்திரராகவும், சாரிபுத்தர் அச்சுத முனிவராகவும், அநுருத்தர் சக்கனாகவும், சுத்தோதன மன்னர் சஞ்சய அரசனாகவும், மகாமாயா தேவியார் பூசதி ராணியாகவும், இராகுலன் தாயார் மத்தி இளவரசியாகவும், இராகுலன் ஜாலியாகவும், உப்பலவன்னை கண்ணாஜினாவாகவும், ததாகதர் வெசந்தர குமாரனாகவும் அப்பிறப்பில் இருந்தோம்” என்று விளக்கிச் சொன்னார். “வண்டுளங்கொள் பூங்குழலாள் காதலனே உன்றன் மக்களைத் தாசத்தொழிற்கு மற்றொத்தர் இல்லென்று எண்டுளங்கச் சிந்தையளோர் பார்ப்பனத்தி மூர்க்கன் இரத்தலுமே நீர்கொடுத்தீர் கொடுத்தலுமத் தீயோன் கண்டுளங்க நும்முகம்பே ஆங்கவர்கள் தம்மைக் கடக்கொடியாலே புடைத்துக் கானகலும் போது மண்டுளங்கிற்று எங்ஙனே நீர்துளங்க விட்டீர் மனந்துளங்கு மால் எங்கள் வானோர் பிரானே!” *** மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப்படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு