மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10 தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் தமிழில் சமயம் - பௌத்த கதைகள் - இசைவாணர் கதைகள் 1952இல் பௌத்த கதைகள் எனும் நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பௌத்தமும் தமிழும் என்ற நூலின் தொடர்ச்சியாகவே இந்நூலும் அமைகிறது. மனிதர்களுடைய செயல்பாட்டிற்கும் இயற்கை நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கதைகளாகக் கட்டிக்கூறும் மரபை பௌத்தம் கைக்கொண்டிருபபதைக் காண்கிறோம். சமயப் பரப்புதலில் கதைகூறல் என்பது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாகச் சமயக்கருத்துகளைக் கூறாமல் கதைகளின் மீது அக்கருத்துகளை ஏற்றிக் கூறும் மரபை பௌத்தம் மிகச் சிறப்புடன் செய்திருபபதைக் காண்கிறோம். அவ்வகையில் அமைந்தவையே இத்தொகுதியில் உள்ள கதைகள். இக்கதைகள் பௌத்த கருத்துகளை மிக எளிமை யாகவும் சுவையாகவும் வெளிப்படுத்துபவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு பிடி கடுகு என்னும் கதை, யாரும் இறக்காத வீட்டில் ஒரு பிடி கடுகு வாங்கவேண்டும் என்பது நியதி. அவ்விதம் முயன்றால் கடுகு பெறமுடியாது என்பது யதார்த்தம். இதன்மூலம் இறந்தவர்கள் பிறப்பார்கள் என்னும் இயற்கை நியதியை இக்கதை அழகாகச் சொல்வதைக் காண்கிறோம். இவ்விதம் அமைந்த 16 கதைகளை இத்தொகுதியில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1977ஆம் ஆண்டு இசைவாணர்கதைகள் என்ற பெயரில் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சமயம் தொடர்பான பல்வேறு புராணக்கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகளை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் சிறப்பாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் இன்னொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த கதைகளைப் படிப்பதில்லை. இவ்வாறு சமயக்காழ்ப்புள்ள சூழலில் பல்வேறு சமயக்கதைகளையும் ஒரே தொகுப்பாகக் கொடுப்பதன்மூலம் எல்லோரும் வாசிப்பர். அந்த நோக்கத்தில்தான் இக்கதைகளைத் தொகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இக்கதைகள் பெரும்பகுதி இந்தியச் சூழலில் நடைபெற்ற கதைகளே ஆகும். இக்கதைகளுக்குள் பேசப்படும் சமயம் தொடர்பான செய்திகளை வாசிப்பதன் மூலம் சமய நல்லிணக்கத்தைப் பெறமுடியும் என்று இவர் கருதியுள்ளார். சமயம் தொடர்பான விமர்சனக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த இவர் சமயக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 தங்கள் ஏப்ரல் 2010 வீ. அரசு தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் பௌத்தக் கதைகள் முன்னுரை 18 1. பிச்சைச் சோறு 19 2. ஒரு பிடி கடுகு 23 3. பேருண்டியாளன் பிரசேனஜித்து 28 4. வீட்டுநெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே 32 5. கேமன்: பிறன்மனை நயந்த பேதை 39 6. ஆனந்தர்: அணுக்கத் தொண்டர் 42 7. படசாரி 45 8. சீமான் குரல் 54 9. பிள்ளைத்தாய்ச்சி 65 10. கொலைக் குற்றம் 69 11. அஜாதசத்துருவின் அதிகார வேட்கை 75 12. நச்சுப் பாம்பு 81 13. மலையில் உருண்ட பாறை 86 14. பத்திரை குண்டலகேசி 90 15. கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி 100 16. மூன்று விருந்துகள் 105 இசைவாணர் கதைகள் முகவுரை 112 1. பஞ்சசிகனும் பத்திரையும் 116 2. குட்டிலன் - காசி நகரத்து இசைவாணன் 119 3. ஊர்வசியின் காதல் 128 4. புரூரவசுவும் ஊர்வசியும் 131 5. ஓவியச் சேனனும் ஊர்வசியும் 134 6. நாட்டியப் பெண் தேசிகப் பாவை 138 7. அனந்த வீரியனின் திருமணம் 143 8. சுரமஞ்சரியின் சபதம் 151 9. காந்தருவ தத்தையின் இசைத் திருமணம் 161 10. அமிர்தமதியைக் கவர்ந்த இன்னிசை 171 11. மாளவியும் அக்கினிமித்திரனும் 175 12. உதயணன் - யாழ் வித்தகன் 182 13. வாசுதேவ குமரனின் இசை வெற்றி 197 14. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தில் கலைச் செல்வி 202 15. ஆனாயனார் குழலிசை வித்தகர் 214 16. பாண்டியனும் பாடினியும் 217 17. நீலகண்ட யாழ்ப்பாணர் 224 18. பாணபத்திரன் 228 தமிழில் சமயம் பௌத்தக் கதைகள் குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பௌத்தக் கதைகள் (1952) எனும் தலைப்பில் வெளியிட்ட நூல் முன்னுரை பௌத்தக் கதைகள் என்னும் பெயருள்ள இந்தக் கதைகள் கௌதம புத்தர் காலத்தில் நிகழ்ந்தவை. அவர் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புள்ளவை. மனித இயல்புக்கும் இயற்கைக்கும் உட்பட்ட நிகழ்ச்சிகள் இக்கதைகளில் கூறப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற இன்ப துன்பங்களை இக்கதைகள் காட்டுகின்றன. முற்காலத்திலே நமது நாட்டில் பௌத்த மதம் தோன்றி வளர்ந்து செழித்திருந்தது. பிற்காலத்திலே இந்த மதம் குன்றி மறைந்துவிட்டது. ஆகவே, இந்த மதத்தைச் சார்ந்த பல கதைகளும் மறைந்துவிட்டன. தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் வளர வேண்டும் என்று கூறப்படுகின்ற இக்காலத்திலே, இத்தகைய கதைகளை வெளியிடுவது தகுதியே. நமது நாட்டாருக்கு இது போன்ற மறைந்துள்ள பழைய கதைகள் புதிய ‘விருந்தாக’ இருக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கதைகளில் பல, சூத்திர பிடகத்துக்குக் குட்டக நிகாயப் பிரிவிலேயுள்ள தம்மபதம் என்னும் உட்பிரிவுக்கு, ஆசாரியர் புத்த கோஷர் எழுதிய தம்ம பதார்த்த கதா (தம்மபத அர்த்த கதை) என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன. சில கதைகள், மேற்படி குட்டக நிகாயத்தின் மற்றோர் உட்பிரிவாகிய தேரி காதைக்குத் தமிழராகிய ஆசாரியர் தம்மபால மகாதேரர் இயற்றிய பரமார்த்த தீபனீ என்னும் அர்த்த கதையிலிருந்து எடுக்கப்பட்டன. இந்நூலை அச்சிட்டு வெளிப்படுத்திய திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு என் நன்றி உரியது. மலரகம். மயிலாப்பூர் சென்னை - மயிலை சீனி. வேங்கடசாமி 1. பிச்சைச் சோறு சித்தார்த்த குமாரன் அரண்மனையை விட்டு வெளிவந்து துறவியாய் விட்டார். அரச போகங்களும் இன்ப நலங்களும் அவருக்குப் பிறப் புரிமையாக இருந்தும், அவைகளை வேண்டா மென்று உதறித் தள்ளினார். தாய், தந்தை, மக்கள், அரசுரிமை யாவும் துறந்து வந்து விட்டார். இன்ப நலங்களைக் குறைவில்லாமல் துய்த்து வந்த அவர், தமது இருபத்தொன்பதாவது அகவையிலே (வயதிலே), மனித வாழ்க்கை யின் வளமைப் பருவத்திலே, இல்லற வாழ்க்கையைப் புறக்கணித்துத் துறவுபூண்டார். ஆண்மையை விளக்கும் அழகிய மீசையையும் தாடியையும் தலை முடியையும் சிரைத்து ஆடை அணிகளை நீக்கிக் காவி உடை உடுத்துத் துறவுக்கோலம் பூண்டார். கால்நடையகவே நெடுந்தூரம் நடந்து சென்றார். ராஜகிருக நகரத்தையடைந்து நகர வாயிலைக் கடந்து ஊருக்குள்ளே சென்றார். வீதிகளில் இவரைக் கண்டோர் இவருடைய உடல் தோற்றத்தையும் முகப்பொலிவையும் கண்டு இமை கொட்டாமல் இவரையே பார்த்தார்கள். இவர் மண்ணுலகத்தில் வாழும் மனிதன்தானோ என்று ஐயுற்றார்கள். கடைத்தெருவில் பொருள்களை வாங்கவோரும் விற்போரும் தொழிற்சாலைகளில் தொழில் செய்வோரும் ஏனைய மக்களும் இவரை நெடுநேரம் பார்த்தவண்ணம் வியப்படைந்து நின்றனர். துறவுக்கோலம் பூண்ட சித்தார்த்தர், நேற்று வரையில் அரண்மனையில் அரச போகத்தில் இருந்தவர், இன்று கையில் திருவோடு ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்கிறார். வீட்டில் உள்ளவர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதி உணவை அவருக்கு அளிக்கின்றனர். நகரத்தில், பிம்பிசார அரசனுடைய சேவர்கள் முகப் பொலிவும் அழகான தோற்றமும் உள்ள இந்தப் புதிய துறவியைக் கண்டு வியப் படைந்து அரசரிடம் சென்று இவரைப் பற்றிக் கூறினார்கள். பிம்பிசார அரசன் அரண்மனையின் மாடியில் சென்று இவரைப் பார்த்தான். பர்த்த பிறகு தனக்குள் ஏதோ நினைத்து ‘இந்த ஆள் எங்குச் சென்று என்ன செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்” என்று கட்டளையிட்டு அனுப்பினான். வீதியிலே வீடுதோறும் சென்று ஓட்டிலே பிச்சை ஏற்ற புதிய துறவி தமக்குப் போதுமான உணவு கிடைத்ததும் வந்த வழியே திரும்பி நடந்து நகர வாயிலைக் கடந்து வெளியே வந்தார். நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையை நோக்கி நடந்தார். மலையடி வாரத்தை யடைந்ததும் கிழக்குப்புறமாக அமர்ந்து தாம் கொண்டுவந்த பிச்சைச் சோற்றைச் சாப்பிடத் தொடங்கினார். பாலும் தேனும் பாகும் பருப்பும் மணமும் சுவையும் உள்ள அறுசுவை உணவும் அரண்மனையிலே உணவாகக்கொண்டு பழகிய அரச குமாரன் - சுத்தோதன மன்ன னுடைய ஒரே செல்வக்குமாரன் - தாமாகவே துறவியாகி வீடுவீடாகப் பிச்சைச் சோறு வாங்கி அதை முதன்முதலாக உண்ணத் தொடங்கு கிறார். ஒரு கவளம் கையில் எடுத்து வாயில் வைக்கிறார். வாய் குமட்டுகிறது; இந்த உணவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது; குடலைப் புரட்டுகிறது. அவர் இது வரையில் பிச்சைச் சோற்றைக் கண்ணாலும் பார்த்ததில்லை. இப்போது இதைக் கண்டு இதை உண்ண மனம் மறுக்கிறது. வாயும் வயிறும் உண்ண மறுக்கிறதைக் கண்டு இந்தத் துறவி - புத்த நிலையை யடையப் போகிறவர் - தம் மனத்திற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “சித்தார்த்த! நீ செல்வம் கொழித்த சிறந்த அரச குடும்பத் திலே பிறந்து வேளைதோறும் அறுசுவை உணவுகளை உண்ணவும் தின்னவும் பழகினாய். சாலி நெல் அரிசியால் சமைத்த மணமும் சுவையும் உள்ள சோற்றை உண்டனை. அமிர்தம் போன்ற சுவையுடைய பாலும் தேனும் பாகும் பருப்பும் உட்கொண்டனை இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக் கண்டு, ‘நானும் இவரைப்போலத் துறவுபூண்டு, உணவை இரந்துண்டு வாழும் நாள் எப்போது வரும்; அந்த நிலையை எப்போது அடையப்பெறுவேன்’ என்று நினைத்து ஏங்கினாய்: இப்போது நீ இல்லற வாழ்க்கையை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறாய்! பிச்சைச் சோற்றைச் சாப்பிட ஏன் மறுக்கிறாய்? இதை ஏன் வெறுக்கிறாய்? நீ செய்வது முறையல்லவே. துறவிகள் உண்ண வேண்டியது பிச்சைச் சோறுதானே!” இவ்வாறு இவர் தமக்குள் சொல்லிக் கொண்டபோது, இவர் மனத்தில் இருந்த வெறுப்பு உணர்ச்சி மறைந்தது. இந்த உணவை - இந்தப் பிச்சைச் சோற்றை - முதன் முதலாக மன அமைதியோடு உட்கொண்டார். இவற்றை எல்லாம் மறைந்து இருந்து பார்த்திருந்த அரசரின் சேவர்கள் விரைந்து சென்று பிம்பிசார அரசனுக்குக் கூறினார்கள். அரசரும் உடனே புறப்பட்டுச் சித்தார்த்தர் இருந்த பண்டவமலைக்கு வந்தார். வந்து, இவருடைய உடல் பொலிவையும், முகத்தின் அமைதி யையும் அறிவையும் கண்டு, இவர் அரசகுமாரன் என்பதை அறிந்து கொண்டார். பிறகு இவ்வாறு கூறினார்: “தாங்கள் யார்? ஏன் தங்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கை? உயர் குலத்திலே பிறந்த தாங்கள் ஏன் வீடுகள் தோறும் பிச்சை ஏற்று உண்ணவேண்டும்? இந்தத் துன்ப வாழ்க்கையை விடுங்கள். என் நாட்டிலே ஒரு பகுதியைத் தங்களுக்கு அளிக்கிறேன். தாங்கள் சுகமே இருந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கலாம்.” இதைக் கேட்ட சித்தார்த்தர் கூறுகிறார்: “மன்னரே! அரசர் மரபிலே, உயர்ந்த குலத்திலே பிறந்தவன்தான் நான். துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும் வேண்டிய பல இன்பங்களும் ஆட்சி செய்யக் கபிலவஸ்து நகரமும் எனக்கு இருக்கின்றன. என் தந்தை சுத்தோதன அரசர், நான் அரண்மனையில் இருந்து அரச போகங்களைத் துய்க்க வேண்டு மென்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசரே! இன்ப நலங்களை நுகர்ந்துகொண்டு ஐம்புலன்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு காலம் கழிக்க என் மனம் விரும்பவில்லை. உயர்ந்த அறிவை, பூரண மெய்ஞ் ஞானத்தை அடைவதற்காக இல்லற இன்ப வாழ்க்கையைத் துறந்து வந்தேன். ஆகவே, தாங்கள் அளிப்பதாகக் கூறும் அரச நிலையும் இன்ப வாழ்க்கையும் எனக்கு வேண்டா.” பிம்பிசார அரசர், அரச நிலையையும் இன்ப வாழ்க்கை யையும் ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைத்தார். சித்தார்த்தர் அதனை மீண்டும் மீண்டும் உறுதியோடு மறுத்தார். சித்தார்த்தருடைய துறவி உள்ளத்தைக் கண்ட பிம்பிசார அரசர் வியப்படைந்தார்; இவரது மன உறுதியைக் கண்டு தமக்குள் மெச்சினார். “தாங்கள் புத்த நிலையை அடையப்போவது உறுதி. புத்த பதவியையடைந்த பிறகு தாங்கள் முதன்முதலாக அடியேன் நாட்டிற்கு எழுந்தருள வேணடும்,” என்று அரசர் கேட்டுக் கொண்டார். அரசர் பேசும் போது அவரையறியாமலே அவருடைய தலை வணங்கின்று; கைகள் கூப்பின. சித்தார்த்தர் அவ்வாறே செய்வதாக விடையளித்தார். பிம்பி சாரர் விடைபெற்றுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். வரும் வழியில் அரசருக்குச் சித்தார்த்தரைப்பற்றிய எண்ணமே இருந்தது. “நிறைந்த இன்ப நலங்களையும் உயர்ந்த அரச நிலையையும் வேண்டுமென்றே மனதறிந்து உதறித் தள்ளிய தூய துறவி இவர். இப்படிப்பட்ட உண்மைத் துறவிகளைக் காண்பது அருமை; அருமை. இவர் கட்டாயம் புத்த நிலையை யடைவார். இவர் எண்ணம் நிறை வேறட்டும். இவர் முயற்சி வெல்வதாக.” தம்முள் இவ்வாறு நினைத்துக் கொண்டே பிம்பிசார அரசர் அரண்மனையை யடைந்தார். 2. ஒரு பிடி கடுகு கௌதமைக்குத் தன் குழந்தைமேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள அக்குழந்தையின் சிரிப்பும் களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும் ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தை யின் இனிய முகம் அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டு வதில் பேரானந்தம். அக்குழந்தையை அவள் கண்மணிபோல் கருதிச் சீராட்டிப் பாராட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்த்து வந்தாள். மற்றக் குழந்தைகளுடன் தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, கோழி, குருவி, அணில் முதலியவை களைக் காட்டி அதற்கு மகிழ்ச்சியூட்டுவாள், வானத்தில் நிலவைக் காட்டி அதை அழைக்கச் சொல்வாள். பாட்டுகள் பாடித் தூங்க வைப்பாள். தலை நிறையப் பூக்களைச் சூட்டுவாள். விளையாடுவதற்குப் பொம்மைகளை வாங்கித் தருவாள் அக்குழந்தை அவளுக்கு உயிராக இருந்தது. தலைச்சன் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கு இது இயற்கைதானே. வளர்பிறை போல வளர்ந்த அக்குழந்தைக்கு ஒரு நாள் நோய் கண்டது. கௌதமை மனவருத்தம் அடைந்தாள். வைத்தியர்களைக் கொண்டு மருந்து அளித்தாள். ஆனால் நோய் அதிகப்பட்டது. கடைசியில் அந்தோ! இறந்துவிட்டது. கௌதமை பெருந்துயரம் அடைந்தாள். தன் குழந்தையைப் பிழைப்பிக்க வேண்டும் என்று விரும்பினாள். “என் கண்மணி பிழைக்க மருந்து கொடுப்போர் இல்லையோ” என்று அரற்றினாள். இறந்த குழந்தையைத் தோள் மேல் வளர்த்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், “குழந்தையைப் பிழைப்பிக்க மருந்து கொடுப்போர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்; இவள் நிலைமையைக் கண்டு எல்லோரும் மனம் இரங்கினார்கள்; பரிதாபப் பட்டார்கள்; “அம்மா! செத்தவரைப் பிழைப்பிக்க மருந்து இல்லை. வீணாக ஏன் வருந்துகிறாய்?” என்று ஆறுதலோடு அறிவுரை கூறினார்கள். கௌதமைக்கு அவர்கள் கூறியது ஒன்றும் மனத்தில் ஏற வில்லை. எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை முனிவர்கள் இருக் கிறார்கள்? செத்தவரைப் பிழைப்பித்த முனிவர்கள் உண்டென்று கதைகள் கேட்டும் படித்தும் இருந்த கௌதமைக்குத் தன் குழந்தையைப் பிழைக்கச் செய்யும் பெரியவர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. ஆகவே, அவள் இறந்த குழந்தையைத் தோள் மேல் சார்த்திக் கொண்டு எதிர்ப்படுகிறவர்களிடம் “குழந்தைக்கு உயிர் கொடுப்பவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டாள். எல்லோரும் “பாவம்! செத்த குழந்தைக்கு மருந்து கேட்கிறாள்; பைத்தியக்காரி” என்று சொல்லி அவள்மேல் மனம் இரங்கினார்கள். அவர்களில் ஒருவராவது இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கும் பெரியவரைக் காட்டவில்லை. அறிஞர் ஒருவர் கௌதமையின் துயரத்தைக் கண்டார். இவளுடைய மனோ நிலையை யறிந்தார். “அளவு கடந்த அன்பினாலே இவள் மனம் குழம்பியிருக்கிறாள்; இந்த நிலையில் இவளுக்கு அறிவு பகட்டி உலக இயற்கையைத் தெளிவுபடுத்துவது கடினம். இவளைக் கௌதம புத்தரிடம் அனுப்பினால் இவள் குணப்படுவாள்” என்று தமக்குள் எண்ணினார். அவர் கௌதமையிடம் வந்து, “அம்மா! உன் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் ஒருவர்தான் இருக்கிறார். வேறு ஒருவராலும் முடியாது. வீணாக இங்கெல்லாம் ஏன் அலைகிறாய்? நேரே அவரிடம் போ” என்று கூறினார். இதைக் கேட்டதும் கௌதமைக்கு மனம் குளிர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. “அவர் யார்? ஐயா! எங்கிருக்கிறார் சொல்லுங்கள்?” என்று கேட்டாள். “அவர்தான் பகவன் புத்தர்; அவரிடம் போ” என்றார். இதைக் தெரிவித்ததற்காக அப் பெரியவருக்கு அவள் வாயால் நன்றிகூற நேர மில்லை. அவள் அவருக்குத் தன் கண்களால் நன்றி கூறிவிட்டு மடமட வென்று நடந்தாள். பகவன் புத்தர் எழுந்தருளி இருந்து உபதேசம் செய்கிற ஆராமம் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் ஆராமத்தை நோக்கி வேகமாக நடந்தாள்; இல்லை, ஓடினாள். ஓடோடி வந்து ஆராமத்தை அடைந்தாள். ஆராமத்தில் கௌதம புத்தர் எழுந்தருளி யிருக்கும் கந்த குடிக்குள் நுழைந்தாள். அவர் காலடியில் குழந்தையை வளர்த்திவிட்டுத் தானும் அவர் காலில் வேரற்ற மரம்போல விழுந்து வணங்கினாள். “பகவரே! என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்” என்று கதறினாள். புத்தர் பெருமான் இறந்த குழந்தையையும் கௌதமையின் மன நிலைமையையும் உடனே உணர்ந்துகொண்டார். “குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார். அவர் குரலில் தெய்வத்தன்மை உடைய ஓர் அமைதி இருந்தது. கௌதமை எழுந்து நின்றாள். “உன் குழந்தை இறந்துவிட்டதா? அதற்கு உயிர் கொடுக்க வேண்டுமா? நல்லது. மருந்து கொடுக்கிறேன். கொஞ்சம் கடுகு கொண்டு வா.” “இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறி ஓடினாள். “குழந்தாய்!” என்று கூப்பிட்டார் பகவர். கௌதமை திரும்பி வந்து, “இன்னும் ஏதேனும் கொண்டு வரவேண்டுமோ?” என்று வினவினாள். அவளுக்குத் தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. “வேறு ஒன்றும் வேண்டாம். ஒரு பிடி கடுகு மட்டும் வேண்டும். ஆனால், கொண்டுவரும் கடுகு யாரும் சாகாதவர் வீட்டிலிருந்து கொண்டுவர வேண்டும். ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ ஒருவரும் சாகாதவர் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவர வேண்டும். தெரிகிறதா ... ... ...?” “அப்படியே, இதோ கொண்டு வருகிறேன்.” “குழந்தையைத் தூக்கிக்கொண்டு போ. கடுகுடன் குழந்தையைக் கொண்டு வா.” கௌதமை இறந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு வேகமாக நகரத்திற்குள் சென்றாள். நகரை யடைந்தவுடன் முதல் வீட்டில் சென்று, “ஒரு பிடி கடுகு வேண்டும்” என்று கேட்டாள். வீட்டுக் காரி உடனே சென்று குடுகு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது கௌதமை, “அம்மா! உங்கள் வீட்டில் இதற்கு முன்பு யாரேனும் இறந்திருக்கிறார்களா!” என்று கேட்டாள். “ஏனம்மா கேட்கிறாய்? என் மாமனார் இறந்தார்; என் மாமியார் இறந்தார். இவர்களுக்கு முன்பு இவர்கள் தாய், தந்தையர்கள் இறந்தார்கள்” என்று அவ்வீட்டுக்காரி கூறினாள். “அப்படியானால் கடுகு வேண்டாம்” என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த வீட்டைவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டுக்காரியும் கடுகு கொடுத்தபோது “உங்கள் வீட்டில் யாரேனும் செத்திருக்கிறார்களா?” என்று கேட்டாள் கௌதமை. “போன வாரம் எங்கள் வீட்டு வேலைக்காரன் செத்துப் போனான்.” அப்படியானால் கடுகு வேண்டாம்” செத்தவர் வீட்டுக் கடுகு மருந்துக்கு உதவாது” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள். அவ்வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது, “உங்கள் வீட்டில் யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று வினவினாள். இதைக் கேட்டவுடன் அவ்வீட்டுக்காரியின் கண்களில் நீர் தாரை தாரையாக வார்ந்தது. விம்மிவிம்மி அழுதாள். “ஐயோ! மூன்றாம் நாள் தானே என் மகள் இறந்து போனாள்; நல்ல வெண்கலச் சிலை போல இருந்தாளே” என்று அழுதாள். “அப்படியானால் கடுகு வேண்டாம்” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். இப்படியே அந்தத் தெருமுழுதும், வீடுவீடாக நுழைந்து கேட்டாள். சில வீடுகளில் குழந்தைகள் இறந்திருந்தன. சில வீடுகளில் பெரியவர்கள் இறந்திருந் தார்கள். சில வீடுகளில் கட்டிளமை வயதுடையவர்கள் இறந்திருந்தார்கள். சில வீடுகளில் கர்ப்பவதிகள் இறந்திருந்தார்கள். ஆனால், சாகாதவர் வீடு ஒன்றுமில்லை. கௌதமை அடுத்த தெருவில் நுழைந்தாள். ஒரு வீடு விடாமல் நுழைந்து கடுகு கேட்டாள். சாகாதவர் வீடு ஒன்றேனும் இல்லை. பல தெருக்கள் சென்று வீடுவீடாகக் கேட்டாள். ஒரு வீடுகூட விடாமல் சென்று கேட்டுப் பார்த்தாள். வேண்டிய கடுகு கிடைத்தது; ஆனால், சாகாதவர் வீடுதான் கிடைக்கவில்லை. அவளுக்கு அப்போது தான் உண்மை புலப்பட்டது. சாகாத வீடு கிடைக்காது. ஆகவே, தன் குழந்தை பிழைக்க, மருந்துக்குக் கடுகு கிடைக்காது என்பதை உணர்ந்தாள். ஆனால், ஏதேனும் ஒரு வீடாவது இருக்காதா என்கிற ஆசை அவள் மனத்தில் இருந்தது. ஆகவே, அவள் அந்த சிராவத்தி நகரம் முழுதும், ஒரு வீடு விடாமல் நுழைந்து கேட்டுப் பார்த்தாள். சாகாதவர் வீடு கிடைக்கவே இல்லை. எல்லா வீடுகளும் செத்தவர் வீடுகள்தான். சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது. இருளைப் போக்க வீடுகளிலும் தெருக்களிலும் விளக்கேற்றினார்கள். கௌதமையின் மனத்தில் இருந்த மன மருட்சி - இறந்தவர் பிழைக்க மருந்து உண்டு என்னும் அறியாமை - நீங்கிவிட்டது. பிறந்தவர் எல்லோரும் இறக்கிறார்கள். அகவை முகிர்ந்தவர் என்பது மட்டும் அல்ல. நடுத்தர அகவையுள்ளவர், கட்டிளைஞர், சிறுவர், குழந்தைகள் எல்லோரும் இறக்கிறார்கள். இறந்தவர் மறுபடியும் பிழைப்பது இல்லை என்கிற உண்மை அவள் மனத்தில் தோன்றிற்று. அவள் நேரே சுடுகாட்டிற்குச் சென்றாள். தன் தோள்மேலிருக்கும் இறந்த குழந்தையை அடக்கம் செய்தாள். பிறகு நேரே பகவன் புத்தரிடம் வந்து அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்து நின்றாள். “குழந்தாய்! கடுகு எங்கே?” “கொண்டுவரவில்லை. கிடைக்கவில்லை.” “ஏன்?” “பகவரே நான் மட்டுந்தான் என் குழந்தையைப் பறிகொடுத்தேன் என்று தவறாக எண்ணினேன். என் குழந்தைமேல் இருந்த அன்பினாலே, இறந்த குழந்தையைப் பிழைக்கவைக்க மருந்து இருக்கும் என்றும் தவறாக எண்ணினேன். தாங்கள் என்னுடைய மனநோய்க்கு உண்மை யான மருந்து கொடுத்துப் போக்கிவிட்டீர்கள். உலகத்திலே சாகாதவர் ஒருவரும் இலர். (கணக்கெடுத்தால் செத்தவர் தொகைதான் மிகுதி, சாகாதவர் தொகை குறைவாக இருக்கும்.) குடும்பந்தோறும் நாடு தோறும், ஊர்தோறும் இருக்கிறவர் தொகையைவிட, இறந்தவர் தொகைதான் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.” கௌதமை இயற்கைச் சட்டத்தை அறிந்து கொண்டது மட்டும் அல்லாமல் அதற்கு மேற்பட்ட நல்ஞானத்தையடையும் செவ்வியடைந் திருப்பதையும் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே அவர் இவ்வாறு அருளிச்செய்தார்: “சாவு என்பது உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத சட்டம். அதனை மீறமுடியாது. இயமன் என்னும் அரசன் சாவு என்னும் ஆணையைச் செலுத்தி நடாத்துகிறான். அந்த ஆணையை உயிர்களால் மீற முடியாது. மக்கள், மாடு, மனை முதலிய செல்வங்களில் மனஞ் செலுத்தி மகிழ்ச்சிகொண்டு, செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் மனிதர் இருப்பாரானால் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டைப் பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல, அவரைச் சாவு அடித்துக் கொண்டு போய்விடும்.” இவ்வாறு, பகவன் புத்தர் நிலையாமையையும் சாவையும் சுட்டிக்காட்டி அறநெறியைக் கூறினார். இதனைக் கேட்ட கௌதமை பகவரை வணங்கித் தான் பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவு நெறியில் செல்லத் தன்மீது திருவுளம் கொண்டருள வேண்டுமென்று வேண்டினாள். பகவன் அவளைப் பிக்குணிச் சங்கத்திற்கு அனுப்பித் துறவறத்தில் சேர்ப்பித்தார். துறவு பூண்ட கௌதமையார், பேர்போன ஏழு பௌத்தப் பெண்மணிகளில் ஒருவராக விளங்கி, இறுதியில் வீடு பேறடைந்தார். 3. பேருண்டியாளன் பிரசேனஜித்து பிரசேனஜித்து என்பவர் கோசல நாட்டின் மன்னர். அரச போகங்களைக் குறைவில்லாமல் நிறையப் பெற்றிருந்தும் இவர் வாழ்க்கை இவருக்கே துன்பமாகவே இருந்தது. உடல் நலம் என்பது இவருக்குச் சிறிதளவும் கிடையாது. உடல்நலம் இல்லாமல் போகவே, மன நலமும் இல்லை. எப்போதும் சோம்பலும் உறக்கமுமாக இருப்பார். படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பார். மூக்குக்குமேல் முன்கோபம் வரும். எல்லோரிடத்திலும் சிடுசிடு என்று சீறிவிழுந்து கடுமையாகப் பேசுவார். எந்த வேலையிலும் மனம் செல்லுவதில்லை. அரச காரியங்களையும் கவனிப்பதில்லை. மயக்கமும் சோம்பலும் இவரைவிட்டு அகலவில்லை. இதற்குக் காரணம் என்ன? பிரசேனஜித்து உணவுப் பிரியர். அறுசுவை உணவுகளை அளவுமீறி அதிகமாக உண்பார். மிதமாக உணவு கொள்ள அவர் பழகவில்லை. மீதூண் கொள்வதனாலே உடல்நலம் கெட்டு, அதனால் சோம்பலும் உறக்கமும் மயக்கமும் ஏற்பட்டு, வாழ்க்கையையே துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டார். உடம்பு அவருக்கு ஒரு பாரமாகத் தோன்றியது. “தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோய்அள வின்றிப் படும்” என்னும் பொன்மொழியை அவர் அறியவில்லை. மேலும், தாம் பேருண்டி கொள்வதுதான் தமது உடல் நோய்க்கும் உளநோய்க்கும் காரணம் என்பதை அவர் அறியவில்லை. இவ்வாறு உடல்நலத்தையும் மனநலத்தையும்கெடுத்துக் கொண்டு வாழ்நாளை வீண்நாளாக்கிக் கொண்ட பிரசேனஜித்து, ஒரு நாள் தம் மருகன் சுதர்சனன் என்பவரை அழைத்துக் கொண்டு, பகவன் புத்தர் தங்கியிருந்த விகாரைக்குச் சென்றார். சென்று பகவன் புத்தரை வணங்கினார். அப்போதும் அவருக்குச் சோம்பலும் மயக்கமும் உறக்கமும் மேலிட்டன. இவற்றைத் தடுத்துக்கொள்ள அவ்விடத்தில் உலாவினார். உலாவியும் மயக்கமும் உறக்கமும் மாறவில்லை. அவர் படுத்துக்கொள்ளவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். ஆனால், பெரியாராகிய பகவன் புத்தர் முன்னிலையில் அவ்வாறு செய்வது தவறு என்று கண்டு ஒரு புறமாக அமர்ந்தார். அரசருடைய நிலைமையைக் கண்ட புத்த பகவான், “அரசரே! தூக்கமில்லாமல் கண்விழித்திருக்கிறீர்கள்போல் தோன்றுகிறது” என்று கூறினார். “எனக்கு எப்போதும் இப்படித்தான் சாப்பிட்ட பிறகு சோம்பலும் தூக்கமும் மயக்கமுமாக இருக்கிறது. எதிலும் மனம் செல்லுவதில்லை” என்று விடையளித்தார் அரசர். பகவருக்கு உண்மை விளங்கிவிட்டது. அரசருக்குத் தேக சுகம் கெட்டிருப்பதன் காரணத்தை அறிந்தார். உடல் நலம் பெறுவதற்குரிய வழியை அருள் செய்ய எண்ணங்கொண்டார். ஆகவே, பகவர் இவ்வாறு அருளிச் செய்தார்: “அரசே! அளவு மீறி உணவு கொள்கிறவர்களுக்கு எப்போதும் இதுபோன்ற துன்பங்களும் இன்னல்களும் உண்டா கின்றன. சோம்பலுக்கு இடங்கொடுத்து மிதமிஞ்சி உணவுகொள்கிற பெருந்திண்டிக்காரர்கள், கூழ்வார்த்து வளர்க்கப்படுகிற பன்றிகளைப் போல, மயக்கங்கொண்டு படுத்துப் புரண்டு தூங்கியே காலங் கழிப்பார்கள். இத்தகைய பேதை மக்கள் மறுமையிலும் வீடுபேறடைய மாட்டார்கள்.” அரசர், முயற்சியோடு உறக்கத்தைத் தடுத்துக்கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்திப் பகவர் அருளிய மொழிகளைச் செவிசாய்த்துக் கேட்டார். பகவர் மேலும் அருளிச் செய்தார்: “சாப்பிடும் போது விழிப்புடன் இருந்து மிதமாக உணவு கொள்ளவேண்டும். உணவை அளவோடு சாப்பிடுகிறவர்களுக்கு எப்போதும் உடல் நலம் நன்றாக இருக்கும். இதை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். சாப்பிடும்போது விழிப்பாக இருந்து, மிதமாக உணவு கொள்கிறவர்கள், உடம்பில் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள்; மேலும் நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.” பிறகு பகவன் புத்தர், அரசர் அருகில் இருந்து தம் அறவுரை களைச் செவிசாய்த்து ஊக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்த சுதர்சன குமாரனை அழைத்து, தாம் கூறியதை மனத்தில் வைத்துக் கொண்டு அரசர் உணவு கொள்ளும்போதெல்லாம் அருகில் அமர்ந்து அரசர் காதில் கேட்கும்படி பாராயணம் செய்துவரக் கட்டளையிட்டார். சுதர்சன குமாரனும் அவ்வாறு செய்வதாக உறுதி கூறினான். அன்று முதல், பிரசேனஜித்து அரசர் உணவு கொள்ளும் நேரங்களில், சுதர்சன குமாரன், அரசன் அருகில் அமர்ந்து பகவன் புத்தர் அருளிய வாக்கியத்தைப் பாராயணம் செய்து வந்தான். “சாப்பிடும்போது விழிப்பாக இருந்து மிதமாக உணவு கொள்கிறவர்கள் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள். மேலும், நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.” இந்தச் சொல்லைக் கேட்கும்போது அரசர் அதிகமாக உணவு கொள்வதை நிறுத்திவிடுவார். இவ்வாறு ஓதுதல் நாள் தோறும் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அதனால், நாள்தோறும் மட்டாக உணவு கொள்ளும் வழக்கம் அரசருக்கு ஏற்பட்டது. இதனால் நாளடைவில் அவருக்குத் தேக நலம் உண்டாயிற்று. முன்பிருந்த சோம்பலும் தூக்கமும் மந்தமும் அவரைவிட்டு அகன்றன; சுறுசுறுப்பும் ஊக்கமும் மன மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சிடுசிடுப்பும் முன்கோபமும் பறந்தோடின. அரச காரியங்களிலும் மற்றக் காரியங்களிலும் மனம் செலுத்தித் தமது கடமைகளைச் செவ்வனே செய்யத் தொடங்கினார். எல்லோரிடத் திலும் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்துகொண்டார். இவ்வித மாறுதல் தமக்கு ஏற்பட்டதை அரசர் தாமே உணர்ந்தார். அவருக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. பேருண்டி அருந்திய காலத்தில் தாம் உடம்பிலும் மனத்திலும் அடைந்த துன்பங்களையும், அளவு உணவினால் இப்போது தாம் அடைந்துள்ள இன்பங்களையும் கண்கூடாகக் கண்ட அவர் பேருவகையடைந்தார். இனிய வாழ்க்கை பெற்றதற்காக மனம் மகிழ்ந்து, பெரும்பொருளை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்தார். பின்னர், பகவன் புத்தருக்குத் தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள அவரிடம் சென்றார். சென்று வணங்கி, “பகவரே, தங்கள் அருள்மொழிப்படி நடந்து அளவு உணவு கொண்டபடியினாலே இப்போது சோம்பலும் தூக்கமும் மயக்கமும் முன் சினமும் என்னைவிட்டுப் போய் விட்டன. இப்போது தேக நலம் பெற்றுச் சுறுசுறுப்பாகவும் ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று கூறி, நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது பகவன் புத்தர், அரசனுக்கு இதனை அருளிச் செய்தார்: “உடல் நலத்தோடிருப்பது பெரும் பேறாகும். மன நிறைவுடன் இருப்பது பெருஞ்செல்வம் பெற்றதற்குச் சமம் ஆகும். மன உறுதியும் நன்னம்பிக்கையும் கொண்டிருப்பது, நல்ல உறவினரைப் பெற்றது போலாகும். (மோக்ஷம்) வீடுபேறு பெறுவது இவை எல்லாவற்றிலும் பேரின்பம் தருவதாகும்.” குறிப்பு: புத்தர் பெருமான், உணவுகொள்ளும் அளவைப் பற்றி அருளிச்செய்த பொன் மொழியோடு திருவள்ளுவர் அருளிச்செய்த பொன்மொழிகளையும் மனத்திற் கொள்வது பயனுடைத்து, அப்பொன்மொழிகளாவன: இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு. 4. வீட்டுநெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே கோசல நாட்டின் தலைநகரமான சிராவத்தி நகரத்திலே மிகாரர் என்னும் செல்வச்சீமான் ஒருவர் இருந்தார். இவருடைய மகன் பெயர் புண்ணிய வர்த்தன குமாரன். இவன் வாலிப வயதடைந்து திருமணம் செய்வதற்கு உரிய வயதை அடைந்தான். ஆகவே, பெருஞ் செல்வ ராகிய மிகாரர் இவனுக்குத் திருமணம் செய்துவைக்க முனைந்தார். முதலில் புண்ணியவர்த்தன குமாரன் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினான். இது எல்லா வாலிபர்களும் வழக்கமாகக் கூறுகிற வெற்றுப் பேச்சு என்பதைப் பிரபு அறிவார். ஆகையினாலே, தன் மகனுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக அவன் எப்படிப்பட்ட மங்கையை மணம்செய்ய விரும்புகிறான் என்பதை அறிந்து கொண்டார். ஐந்து சிறப்பு களும் ஒருங்கே அமையப்பெற்ற மங்கையைத்தான் மணம் செய்ய விரும்புவதாக அவன் தெரிவித்தான். ஐந்து சிறப்புகளாவன: மயிர் அழகு, சதை அழகு, எலும்பழகு, தோல் அழகு, இளமை அழகு என்பன. மயிர் அழகு என்பது, மயில் தோகைபோன்று அடர்ந்து நீண்ட கூந்தலைப் பெற்றிருத்தல், கூந்தலை அவிழ்த்து விட்டால் அது கணைக்கால் வரையில் நீண்டு தொங்குவதோடு நுனியில் மேற் புறமாகச் சுருண்டிருக்க வேண்டும். சதையழகு என்பது, வாய் இதழ், கொவ்வைக் கனி (கோவைப் பழம்) போலச் சிவந்து மென்மையாக இருத்தல், எலும்பழகு என்பது, முத்துப் போன்ற வெண்மையான பற்கள் ஒழுங்காகவும், அழகாகவும், வரிசையாகவும் அமைந்திருத்தல், தோல் அழகு என்பது, உடம்பின் மேனி அழகாகவும் செவ்வல்லி மலரைப் போன்று மென்மையாகவும் இருத்தல். இளமை அழகு என்பது, பத்துப் பிள்ளைகளைப் பெற்ற போதிலும் ஒரே குழந்தை பெற்றவள்போல, உடம்பு தளராமல் இளமையோடு இருத்தல். இவ்விதமாக ஐந்து பண்புகளும் ஒன்றாக அமையப் பெற்ற பெண்ணைத் தவிர வேறு ஒருத்தியைத் தான் மணம்செய்ய முடியா தென்று அவன் திட்டமாகக் கூறினான். ஆகவே, இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த பெண் எங்கேனும் இருக்கிறாளா என்று பிரபு தேடலானார். சிராவத்தி நகரம் முழுதும் தேடிப் பார்த்தார். மணமகள் கிடைக்கவில்லை. ஆகவே, பிராமணர் சிலரை அழைத்து, இப்படிப்பட்ட சிறப்புக்களையுடைய மணமகள், நல்ல குலத்தில் பிறந்தவள் எந்த நாட்டிலாயிலும் இருக்கிறாளா என்று தேடிப்பார்க்கும்படி அனுப்பினார். செலவுக்குப் போதிய பொருளைப் பெற்றுக் கொண்டு பிராமணர், பெண் தேடப் புறப்பட்டார்கள். நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் தேடிய பிறகு சகேத நகரத்தை யடைந்தார்கள். சகேத நகரத்திலே தனஞ்சயன் என்னும் செல்வச் சீமான் ஒருவர் இருந்தார். இவருக்கு அளவற்ற செல்வம் இருந்தது. இவருக்கு ஒரே மகள் இருந்தாள். விசாகை என்னும் பெயருடைய இவர் மகள் மிகுந்த அழகுள்ளவள். அதோடு புண்ணியவர்த்தன குமாரன் கூறிய ஐந்து அழகுகளும் வாய்க்கப்பெற்றவள். இவள் மணம் செய்வதற்கு உரிய வயதை யடைந்திருந்தாள். இவள் ஒரு நாள் மாலை வேளையில், பொழுது போக்குக்காக அந்நகரத்துப் பூஞ்சோலைக்குத் தன் தோழியர்களுடன் சென்றாள். அந்தச் சமயத்தில், மணமகளைத் தேடிச்சென்ற பிராமணர்கள், தற்செயலாக அந்தப் பூஞ்சோலைக்கு வந்தார்கள். வந்தவர்கள் விசாகையைப் பார்த்தார்கள். ஐந்து அழகும் பொருந்திய விசாகையைக் கண்டபோது தாங்கள் தேடிவந்த மணமகள் கிடைத்து விட்டாள் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் நகரத்தில் சென்று விசாகையின் குலம், சுற்றம்,செல்வம் முதலிய எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு நேரே சிராவத்தி நகரம் சென்று மிகாரப் பிரபுவினிடம், சகேத நகரத்து தனஞ்சயப் பிரபுவின் மகள் விசாகை எல்லா அழகும் வாய்க்கப் பெற்றிருப்பதைத் தெரிவித்தார்கள். தன்னைவிடச் சிறந்த பிரபுவின் வீட்டில், தகுந்த மணமகள் இருப்பதைக் கேட்ட அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். உடனே விலை யுயர்ந்த பொருள்களைக் கையுறையாகக் கொடுத்துத் தகுந்த பெரியவர் களை அனுப்பித் தன் மகன் புண்ணியவர்த்தன குமாரனுக்குப் பெண் கேட்கும்படி அனுப்பினார். அவர்கள் சகேத நகரம் சென்று தனஞ்சயப் பிரபுவின் மாளிகையை அடைந்து மணம் பேசினார்கள். தனஞ்சயச் சீமான் தன் மகளைப் புண்ணிய வர்த்தன குமாரனுக்கு மணஞ்செய்து கொடுக்க ஒப்புக் கொண்டார். திருமணம், சகேத நகரத்திலே, மணமகள் மாளிகையிலே திருவிழாவைப்போல வெகு சிறப்பாக நடந்தது. தனஞ்சயச் சீமான், தன் மகள் விசாகைக்கு அளவற்ற பொன்னையும் பொருளையும் ஏராளமான பசுமந்தைகளையும் பணிப்பெண்கள், பணியாளர்கள் முதலான ஊழியர்களையும் சீதனப் பொருளாக வழங்கினார். சிறப்புகளும் விருந்துகளும் நடந்த பின்னர், மணமகனுடன் மணமகளைப் புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அனுப்புவதற்கு முன்பு தனஞ்சயச் சீமான் விசாகையை அழைத்து அறிவுரைகள் கூறினார்: “அம்மா, விசாகை! நீ புக்ககத்தில் வாழ்கிறபோது நடந்துகொள்ள வேண்டிய சில முறைகள் உள்ளன. அவற்றைக் கூறுகிறேன்; உன்னிப்பாகக் கேள். கேட்டு அதன்படி நடந்துகொண்டால் நன்மையடைவாய்” என்று சொல்லி அறிவுரைகளை வழங்கினார். அப்போது விசாகையின் மாமனாராகிய மிகாரச் சீமானும் அங்கிருந்தார். தனஞ்சயச் சீமான் தன் மகளுக்குக் கூறிய அறிவுரை இது: “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே; அயலார் நெருப்பை வீட்டுக்குள் கொண்டு வராதே. கொடுக்கிறவர்களுக்குக் கொடு; கொடாதவர்களுக்கு கொடாதே; கொடுக் கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு. சிரித்துக்கொண்டு உட்காரு. சிரித்துக்கொண்டு சாப்பிடு. சிரித்துக்கொண்டு தூங்கு. எரி ஓம்பு. குல தெய்வங்களை வ'99ங்கு.” இவைகளைக் கேட்ட விசாகை, இவ்வாறே செய்வதாகத் தந்தையிடம் கூறினாள். அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மிகாரச் சீமானுக்கு இவை ஒன்றும் விளங்கவில்லை. ‘இது என்ன பைத்தியம்! வீட்டு நெருப்பைக் கொடுக்காதே; அயல் நெருப்பைக் கொண்டு வராதே. சிரித்துக் கொண்டே தூங்கு, இதெல்லாம் என்ன கோமாளித்தனம்’ என்று தமக்குள் எண்ணினார். ஆனால் அப்போது அவர் ஒன்றும் பேசவில்லை. விசாகை, மணமகனுடன் புக்ககம் வந்து சேர்ந்தாள். அவள் தன் கணவ னுக்கும் மாமன் மாமிக்கும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமை களை முறைப்படி சரிவரச் செய்து கொண்டிருந்தாள். சில திங்கள் கழிந்தன. ஒரு நன்னாள், விசாகையின் மாமனார் பொன்தட்டுகளிலே சுடச்சுட நெய்ப்பொங்கலும் பால் பாயசமும் அருந்திக் கொண்டிருந்தார். விசாகை அருகில் நின்று விசிறிக் கொண்டிருந் தாள். அப்போது ஒரு பௌத்தப் பிக்கு அவ்வீட்டில் பிச்சைக்கு வந்தார். மாமனார் அவரைக் கண்டும், காணாதவர்போல உணவை அருந்திக்கொண்டிருந்தார். பிச்சையை எதிர்பார்த்து, பிக்கு காத்துக்கொண்டிருந்தார். மாமனார் அவரைப் பாராதவர் போல இருந்து உணவு கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அப்போது விசாகை, பிக்குவைப் பார்த்து, “இப்போது போய் வா. மாமனார் பழைய சோறு சாப்பிடுகிறார்” என்று சொன்னாள். பிக்கு போய்விட்டார். ஆனால், மாமனாருக்குக் கடுங் கோபம் வந்துவிட்டது. மருமகள் தன்னை அவமானப் படுத்தியதாக நினைத்தார். உடனே, பொங்கலையும் பாயசத்தையும் உண்ணாமல், கையை உதறிவிட்டு, பணியாளரை அழைத்து, “அடே! இதை எடுத்துவிடுங்கள். இந்தப் பெண்ணை வெளியே பிடித்துத் தள்ளுங்கள்” என்று கூவினார். விசாகை பெரிய இடத்துப் பெண். இந்தச் சீமானை விடப் பன் மடங்கு செல்வத்தில் சிறந்தவர் இவள் தந்தை. ஆகவே, அவளை வெளியே துரத்த ஒருவரும் துணியவில்லை. விசாகை மாமனாரை நோக்கி, “ஏன் மாமா நான் வீட்டை விட்டுப் போகவேண்டும்? நான் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டாள். “போதும், வாயை மூடு. பிச்சைக்காரன் எதிரில் என்னை அவமானப்படுத்தவில்லையா நீ, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியே போ, அதிகப் பிரசங்கி...” என்று உறுமினார். “நான் தங்களை அவமானப்படுத்தவில்லை. உண்மையைத் தான் சொன்னேன். இதை நாலு பேர் தப்பு என்று சொன்னால் நான் வெளியே போகிறேன். யாரிடத்திலாவது சொல்லிப் பாருங்கள்.” மாமனாருக்குக் கோபம் அடங்கவில்லை. ஆனாலும், சற்றுச் சிந்தித்தார். இவள் சீமான் வீட்டு மகள். வாளா விரட்டி அனுப்பிவிட முடியாது. இவள் குற்றத்தைப் பலருக்கும் தெரியும் படி கூறி அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே. ஆட்களை அனுப்பி, பஞ்சாயத்தாரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். பஞ்சாயத்தார் வந்தார்கள். அவர்களிடம் மாமனார், மருமகளின் செய்தியை விளக்கமாகக் கூறினார். “ஒரு நல்ல நாளில் நெய்ப் பொங்கலும் பாயசமும் சுடச்சுடச் சாப்பிடும் போது, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லலாமா? அதுவும் பிச்சைக்காரனிடத்திலா சொல்வது! நான் என்ன பழைய சோறு சாப்பிடும் பரம ஏழையா? இந்த நகரத்திலேயே முதல் சீமான் நான் அல்லவா? இந்தப் பெண் என்னை இப்படி அவமானப்படுத்துவதா? என்னை என்னவென்று நினைத் திருக்கிறாள்? மாமனார் என்று மாரியாதை இருந்தால் இப்படிப் பேசுவாளா? நீங்களே சொல்லுங்கள். இனி ஒரு நிமிடமும் இவள் இங்கு இருக்கக்கூடாது.” என்று ஆத்திரத்தோடு பேசினார் “ஏன், குழந்தாய்! நீ அப்படிச் சொல்லலாமா? அது தவறுதானே!” என்று கேட்டார்கள் பஞ்சாயத்துப் பெரியோர். “நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால், அதற்கு அதுவா அர்த்தம்?” “பின்னை, என்னதான் அர்த்தம்.” “மாமா பொங்கலும் பாயசமும் சுடச்சுடத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்தான் விசிறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பிக்கு பிச்சைக்கு வந்தார். மாமா அவரைக் கவனிக்கவில்லை. அவரும் நெடு நேரம் நின்றார். அப்போது எனக்குள் நான் எண்ணினேன்; ‘முன் பிறப்பில் மாமா நல்ல பெரியவர்களுக்கு உண்டியும் உணவும் கொடுத்ததனால், அதன் பயனை, இப்போது சீமானாகப் பிறந்து உண்ணவும் உடுக்கவும் அனுபவித்து வருகிறார். ஆனால், இந்தப் பிறப்பில் இப்போது புதிதாகத் தான தருமம் செய்து புதிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆகவே, பழைய வினையின் பயனை அனுபவிக்கிறபடியால், இவர் பழைய சோறு சாப்பிடுகிறார் என்று சொன்னேன். இப்படிச் சொன்னது எப்படி அவமானப் படுத்துவது ஆகும்?” இந்த அர்த்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வியப்புடன் “அதற்கு இதுவா அர்த்தம்!” என்று கூறி மகிழ்ந்தார்கள். பிரபுவைப் பார்த்து, “குழந்தை சொன்னதில் ஒன்றும் குற்றம் இல்லையே!” என்று கூறினார்கள். அவருக்கும் அப்போதுதான் உண்மை விளங்கிற்று “பழைய சோறு சாப்பிடுகிறார்” என்று கூறியது அவமானப் படுத்துவதற்கு அல்ல வென்றும், அதற்குப் பருப்பொருளைவிட நுண்பொருள் இருக்கிற தென்றும் அறிந்தார். “ஆமாம்! விசாகை சொன்னதில் தவறு ஒன்றும் இல்லைதான்!” என்று சொன்னார். அப்போது விசாகையின் தந்தை அவளுக்குக் கூறிய அறிவுரை நினைவிற்கு வந்தது. அந்த அறிவுரை களிலும் ஏதேனும் நுண் பொருள் இருக்க வேண்டும். என்றும் தான் அவற்றை அலட்சியமாக எண்ணியது தவறு என்றும் நினைத்தார். அவற்றின் பொருள் என்னவென்று அவளைக் கேட்டறிய வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு அப்போது உண்டாயிற்று. அவர் கூறினார்: “விசாகையை இங்கு அனுப்பிவைக்கும்போது தனஞ்சயச் சீமான் சில அறிவுரைகளைக் கூறினார். அதற்கு அர்த்தம் விளங்க வில்லை. ‘வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே, அயலார் நெருப்பை வீட்டில் கொண்டு வராதே’ என்று கூறினார். நெருப்பு இல்லாமல் வாழமுடியுமா? அண்டை அயலார் நெருப்புக் கேட்டால் கொடுக்காமல் இல்லை என்று சொல்லலாமா? நம் வீட்டில் நெருப்பு இல்லையானால், அயலாரிடம் வாங்காமல் இருக்க முடியுமா?1 இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டார். விசாகை இதற்கு விளக்கம் கூறினாள்: “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே என்றால், நெருப்பைக் கொடுக்காதே என்பது அல்ல. கணவன், மாமன், மாமி இவர்களிடத்தில் ஏதேனுங் குற்றங்களைக் கண்டால், நீ போகிற வீடுகளில் அந்தக் குற்றங்களை மற்றவர்களிடம் சொல்லாதே என்பது அர்த்தம். அயலார் நெருப்பை வீட்டுக்குக் கொண்டு வராதே என்றால், புருஷனைப் பற்றியாவது, மாமனார் மாமியாரைப் பற்றியாவது அண்டை அயலில் இருப்பவர்கள் ஏதேனும் அவதூறு சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டு வந்து, “உங்களைப்பற்றி இன்னின்னார் இப்படி இப்படிச் சொன்னார்கள்’ என்று வீட்டில் சொல்லாதே என்று அர்த்தம். இவ்வாறு பேசுவது கலகத்துக்குக் காரணம் ஆகும். ஆகையால் அது நெருப்பு என்று சொல்லப்படும்” இதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள். “சரிதான்! மற்றவற்றிற்கு என்ன அர்த்தம்? ‘கொடுக்கிறவருக்கு மட்டும் கொடு, கொடாதவர்களுக்குக் கொடாதே, கொடுக்கிற வருக்கும் கொடாதவருக்கும் கொடு’ இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று கேட்டார் மாமனார். கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்றால் உன் வீட்டுப் பொருளை யாரேனும் இரவல் கேட்டால் அதைத் திருப்பிக் கொடுக் கிறவர்களுக்கு மட்டும் கொடு என்பது அர்த்தம். கொட்டாதவர்களுக்குக் கொடாதே என்றால், உன் வீட்டுப் பொருளை இரவல் வாங்கிக் கொண்டு போய், அதைத் திருப்பிக் கொடுக்காதவர்களுக்குக் கொடாதே என்பது அர்த்தம். கொடுக்கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு என்றால் உன் உற்றார் உறவினர் உன்னிடம் ஏதேனும் உதவியைக் கோரினால், அதை அவர்கள் திருப்பிக் கொடுத்தாலும், கொடா விட்டாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவி செய் என்பது பொருள். சிரித்துக்கொண்டு உட்காரு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் கண்டால் உட்கார்ந்திராமல் எழுந்து நில் என்பது அர்த்தம், சிரித்துக்கொண்டு சாப்பிடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடு என்பது கருத்து. சிரித்துக்கொண்டு தூங்கு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் தூங்குவதற்கு முன்பு தூங்காதே என்பது, இவர்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்த பிறகு தூங்கு என்பது கருத்து. எரி ஓம்பு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைத் தீச்சுடர் போலக் கருதி நடந்துகொள் என்பது. குலதெய்வங்களை வழிபடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் குடும்பத் தெய்வம்போல எண்ணி இவர் களைப் போற்றி வழிபடு வேண்டும் என்பது. இவற்றைக் கேட்டபோது மாமனாருக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாயின. அவர்கள் விசாகையின் அறிவைப் புகழ்த்தார்கள். மாமனார், அன்று முதல் விசாகை யிடத்தில் நன்மதிப்புக் கொண்டார். விசாகை நெடுங்காலம் வாழ்ந்து, பேரன் பேத்திகளைப் பெற்றெடுத்துப் பெருவாழ்வு வாழ்ந்தார். இவர் பகவன் புத்தரின் முக்கியமான சிராவகத் தொண்டராக இருந்து, புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் அரிய பெரிய தொண்டுகளைச் செய்து வந்தார். பௌத்தப் பிக்குகள் தங்கி வசிப்பதற்கு விகாரைகளைக் கட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்கு அவ்வப்போது தான தருமங்களைச் செய்துவந்தார். தமது முதுமைக் காலத்திலே துறவு பூண்டு பௌத்த பிக்குணியாக இருந்து, பேர்பெற்ற தேரியாக விளங்கி, இறுதியில் வீடுபேறடைந்தார். பௌத்தர்களின் ஏழு சிறந்த பெண்மணிகளில் இவர் ஒருவர். அடிக்குறிப்புகள் 1. தீக்குச்சியும், தீப்பெட்டியும் இல்லாத காலம் அது. அக்காலத்தில் அண்டை அயலில் உள்ளவர் ஒருவர்க்கொருவர் நெருப்பைக் கொடுப்பதும் கொள்வதும் வழக்கம். 5. கேமன்: பிறன்மனை நயந்த பேதை இராசக்கிருக நகரத்தில் பிம்பிசார அரசன் அரசாண்ட காலத்தில், அந்த அரசனுக்குப் பொருள் காப்பாளராக இருந்தவர் பெருஞ் செல்வரான அனாதபிண்டிகர் என்பவர். இவருக்கு அழகில் சிறந்த மருமகன் ஒருவன் இருந்தான். இந்தக் கட்டழகன் பெயர் கேமன் என்பது. கேமன் வாலிப வயது அடைந்து கட்டழகு மிக்க காளையாக விளங்கினான். இவனுடைய உடல் அழகையும் வாலிப வயதின் செவ்வியையும் காணும் மகளிர் இவனைப் பெரிதும் விரும்பினர். கேமனும், ஆண்மகனுக்கு இருக்கவேண்டிய நிறையுடைமை என்னும் மனத்தை அடக்கும் ஆற்றல் இல்லாதவனாகி, பிறன் மனை நயந்து ஒழுக்கந் தவறி நடந்துகொண்டான். ஆகவே, இவனை எல்லோரும் வெறுத் தார்கள். ஒரு நாள் இரவு கூடாவெழுக்கத்தின் பொருட்டு நகரத்தில் சுற்றித்திரிந்த கேமன் பின்னிரவில் தன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். காவல் சேவலர் இவனைப் பிடித்துக் கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள். அரசன் இவன் இன்னான் என்பதை அறிந்து, இவனைத் தண்டித்தால் மந்திரியின் மானம் கெடும் என்று கருதி, மன்னித்து விட்டுவிட்டார். ஆனால், கேமன் தன் தீய ஒழுக்கத்தைத் திருத்திக் கொள்வில்லை. பழையபடியே பிறன்மனை நயந்து ஒழுகினான். மீண்டும் ஒருமுறை நகரக் காவலரிடம் சிக்குண்டான். மீண்டும் அரசர், அமைச்சரின் மானத்தைக் கருதி அவனைத் தண்டிக்காமல் விட்டார். கேமன் அப்போதும் திருந்தவில்லை. தனது தீயொழுக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான். மூன்றாந் தடவையும் கேமன் சேவகரால் பிடிக்கப்பட்டான். அரசர் இவன் செயலைக் கண்டு மனம் வருந்தினார். அறிவுரைகளைக் கூறி அவனை மீண்டும் மன்னித்து விட்டார். ஆனால், கேமன் தனது தீயொழுக்கத்தைத் திருத்திக் கொள்ளவில்லை. தன் மருகனுடைய தீயொழுக்கத்தையும் மூன்று முறை சேவகரிடம் அவன் அகப்பட்டுக் கொண்டதையும் அரசர் தம்பொருட்டு அவனை மூன்று தடவை மன்னித்து விட்டதையும் நகர மக்கள் இவனை இகழ்ந்து பேசுவதையும் அமைச்சர் அனாத பிண்டிகர் கேள்விப்பட்டார். பெரிதும் மனம் வருந்தினார். அவனுக்கு நல்லறிவு கொளுத்தி, நன்னெறியில் நிறுத்தக்கூடியவர் பகவன் புத்தர் என்பதை அறிந்து, கேமனைத் தம்முடன் அழைத்துக்கொண்டு, பகவன் புத்தரிடம் சென்றார். சென்று பகவரை வணங்கி, தாம் வந்த நோக்கத்தை அவருக்குத் தெரிவித்துக் கேமனுக்கு நல்லறிவு புகட்டி யருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தர் பெருமான், கேமனுக்கு நல்லறிவு கொளத்தினார். அதன் சுருக்கம் இது: “பிறன்மனை நயக்கும் பேதை நான்கு தீமைகளைத் தேடிக் கொள்கிறான். முதலில், பாவம் அவனைச் சேர்கிறது. இரண்டாவது அவன் கவலையின்றித் தூங்கும் நல்லுறக்கத்தை இழந்து விடுகிறான். மூன்றாவது, எல்லோராலும் நிந்திக்கப்பட்டுப் பழிக்கப்படுகிறான். நான்காவது, நரகத்தையடைகிறான். ஆகையால் நல்லறிவுள்ள ஆண்மகன் பிறன்மனைவியை விரும்பமாட்டான். “பாவத்தைப் பெற்றுக்கொண்டு மறுமையில் துன்பத்தை யடைகிறபடியினாலும், கூடாவொழுக்கத்தினாலே ஆணும் பெண்ணும் அடைகிற இன்பம் அற்பமானதாகையினாலும், மனத்தில் எப்போதும் அச்சம் குடிகொள்ளுகிறபடியாலும், அரசனால் கடுமையாகத் தண்டிக்கப் படுவதினாலும், அறிஞனாகிய ஆண்மகன் பிறன் மனைவியை விரும்பி ஒழுக்கந்தவறி நடப்பது கூடாது.” புத்தர் பெருமான் அருளிய இந்த நல்லுபதேசத்தைக் கேட்ட கேமன் அன்று முதல் தீயொழுக்கத்தை, பிறன் மனைவியை நாடும் இழிசெயலை விட்டு, நல்லொழுக்கத்தோடு நடந்துகொண்டான். அவன் திருந்தியதைக் கண்டு எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். குறிப்பு : பிறன்மனை விரும்பியொழுகும் தீயொழுக் கத்தைப் பற்றிப் புத்தர் பெருமான் அருளிய பொன்மொழிகளோடு, திருவள்ளுவர் அருளிய நன்மொழிகளையும் மனத்திற் கொள்வது நலம். பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல். அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரில் பேதையார் இல். அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் பெண்மை நயவா தவன். பிறன் மனை நயத்தலைப்பற்றிப் பகவன் புத்தர் அருளிய நல்லுரைகளும் வள்ளுவர் கூறிய நன்மொழிகளும் ஒத்திருத்தல் காண்க. 6. ஆனந்தர்: அணுக்கத் தொண்டர் கௌதம புத்தர் புத்த நிலையை அடைந்த பிறகு ஏறக் குறைய இருபது ஆண்டு வரையில், நிரந்தரமான அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அவ்வப்போது ஒவ்வொரு சீடர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்து வந்தனர். சிலகாலம், நாகச மாலர் அணுக்கத் தொண்டராக இருந்து அவர் செல்லுமிடங் களுக்குத் திரு ஓட்டையும் சீவர ஆடையையும் எடுத்துச் செல்வார். இன்னொரு சமயம், நாகிதர் அணுக்கத் தொண்டராக இருப்பார். வேறொரு சமயம் உபவாணர்; மற்றொரு சமயம் சுனக்கதர். இவ்வாறே சுந்தர், சாகதர், மேகியர் முதலானவர்கள் அவ்வக் காலங்களில் பகவரின் அணுக்கத் தொண்டராக இருந்தார்கள். பகவரும் இன்னார்தான் தமக்கு ஊழியராக இருக்கவேண்டும் என்று விரும்பவில்லை. இவ்வாறு ஆண்டுகள் பல கழிந்தன. கடைசியில், ஏறக்குறைய ஐம்பத்தைந் தாவது வயதில் நிரந்தரமான ஒரு அணுக்கத் தொண்டர் தமக்கு வேண்டுமென்று பகவன் புத்தருக்குத் தோன்றியது. ஒரு நாள் கந்தகுடி என்னும் அரங்கத்திலே பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சீடர்களான பிக்குகள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்; அப்போது பகவர் அவர்களை நோக்கி இவ்வாறு அருளிச் செய்தார். “பிக்குகாள்! எனக்கு வயதாகிறது. எனக்கு அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடை செய்கிற பிக்குகள், இந்தப் பக்கம் போ என்றால், இன்னொரு பக்கம் போகிறார்கள். சிலர் திருவோட்டை யும் சீவரத்தையும் தவறவிடுகிறார்கள். எனக்குத் துணை செய்யக் கூடிய நிரந்தரமான அணுக்கத் தொண்டர் வேண்டும். அணுக்கத் தொண்டராக இருக்க விருப்பம் உள்ளவர் கூறுங்கள்.” இதைக் கேட்டதும் பிக்குகளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று வணக்கத்திற்குரிய சாரி புத்திர தேரர் எழுந்து நின்று தாம் அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார். பகவர், அவரை வேண்டாமென்று மறுத்துவிட்டார். மொக்கல்லான தேரர் எழுந்து தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். இவ்வாறு அங்கிருந்த எல்லாப் பிக்குகளும் ஆர்வத்தோடு அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார்கள். அவர்கள் எல்லோரையும் பகவர் மறுத்துவிட்டார். ஆனந்த தேரர் மட்டும் ஒன்றும் பேசாமல் வாளா அமர்ந்திருந்தார். மற்றப் பிக்குகள் பேசா அவரைப் பார்த்து, “பகவர் தங்களை ஏற்றுக்கொள்வார்; தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது பகவர், “பிக்குகாள்! ஆனந்தருக்கு விருப்பம் இருந்தால் அவரே தமது விருப்பத்தைத் தெரிவிப்பார். நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று அருளினார். அப்போதும் பிக்குகள், “ஆனந்தரே! எழுந்திரும் சொல்லும்” என்று கூறினார்கள். ஆனந்த தேரர் எழுந்து நின்று கூறினார்: “பகவர், நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும், நான்கு பொருள்களை அளிக்கவும் அருள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். எனக்குப் பகவர் மறுக்க வேண்டிய நான்கு பொருள்கள் என்னவென்றால், 1. பகவருக்கு ஏதேனும் நல்ல உணவு கிடைக்குமானால் அதை அடியேனுக்கு கொடுக்கக் கூடாது. 2. நல்ல ஆடைகள் கிடைத்தால் அதையும் அடியேனுக்குக் கொடுக்கக் கூடாது. 3. பகவருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற கந்தகுடி (ஆசனம்) அடியேனுக்குக் கொடுக்கக் கூடாது. 4. பகவரைப் பூசை செய்ய யாரேனும் அழைத்தால் அந்த இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போகக்கூடாது. இந்த நான்கையும் பகவர் எனக்கும் அளிப்பாரானால், மற்றவர்கள், நான் இவற்றைப் பெறுவதற்காகத்தான் அணுக்கத் தொண்டனாக அமர்ந்திருக் கிறேன் என்று சொல்லக் கூடும். ஆகையால் இந்த நான்கையும் பகவர் எனக்கு அளிப்பதில்லை என்று வரம் அருளவேண்டும். “பகவர் எனக்கு அருளவேண்டிய மற்ற நான்கு பொருள்கள் எவை என்றால், 1. என்னைப் பூசைசெய்ய யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. பகவரைக் காண விரும்புகிறவர்களை, நான் அழைத்து வந்தால் அவர்களை மறுக்காமல் பகவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 3. நான் மனம் தடுமாறிக் திகைக்கும் போது பகவர் என்னைத் தேற்றி வழிப் படுத்த வேண்டும். 4. நான் இல்லாத காலத்தில் மற்றவர்களுக்கு உபதேசித்த உபதேசங்களை, எனக்கும் போதித்தருள வேண்டும். இந்த வரங்களைப் பகவர் அருள்வாரானால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருந்து ஊழியம் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்று பணிவோடு கேட்டுக்கொண்டார். பகவன் புத்தர் அவர் கேட்ட எட்டு வரங்களையும் அளித்தார். ஆகவே, ஆனந்த தேரர் அன்று முதல் பகவருக்குப் பணிவிடை செய்து வந்தார். பல் தேய்க்கக் குச்சியும் கை கால் கழுவ நீரும் கொண்டுவந்து கொடுப்பார். செல்லும் இடங்களுக்கு உடன் செல்வார். பகவர் தங்கி இருக்கும் இடத்தைத் திருவலகு இட்டுச் சுத்தம் செய்வார். அருகிலே இருந்து குற்றேவல் செய்வார். இரவில் ஒன்பது தடவைகளில் தடியையும் விளக்கையும் எடுத்துக்கொண்டு கந்தகுடியைச் சுற்றிவருவார். கூப்பிடும் போதெல்லாம் ஏனென்று கேட்பார். இவ்வாறு ஆனந்த தேரர், பகவன் புத்தருக்குக் குற்றேவல் செய்யும் அணுக்கத் தொண்டராக இருந்தார். இவருடைய ஊழியத்தைப் பாராட்டிப் பகவன் புத்தர் ஐந்து சிறந்த குணங்களையுடையவர் இவரென்று புகழ்ந்துள்ளார். கல்வியுடைமை, மனம் விழிப்போடிருத்தல், நடக்கும் ஆற்றல், உறுதியுடைமை, மறதியின்மை என்னும் ஐந்து குணங்கள் இவரிடம் உள்ளன என்று பகவன் புத்தர் இவரைப் பாராட்டினார். ஆனந்த தேரர் பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைகிற வரையில் அவர் உடன் இருந்து அவருக்குத் தொண்டு செய்து வந்தார். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர் அவருடைய சீடர்களான தேரர்கள் ஐந்நூறு பேர், ராஜகிருஹ நகரத்துக்கு அருகிலேயிருந்த ஸத்தபணி என்னும் மலைக் குகையிலே ஒன்று கூடி முதலாவது பௌத்த மகா நாட்டை நடத்தினார்கள். புத்தர் பெருமான் அருளிச்செய்த உபதேசங்களைத் தொகுப்பதற்காக அந்த மகாநாடு கூட்டப் பட்டது. அந்த மகாநாட்டில், புத்தர் அருளிய தர்ம போதனைகளை அவருடைய அணுக்கத் தொண்டராயிருந்த ஆனந்த தேரர் ஓதினார். இவர் ஓதியவற்றை ஒன்று சேர்த்துத் தம்ம பிடகம் என்று பெயர் இட்டனர். பௌத்தர்களின் மூன்று மறை நூல்களில் தம்ம பிடகமும் (அபிதம்ம பிடகம்) ஒன்று. 7. படசாரி காட்டின் வழியே கணவனும் மனைவியும் தனியே நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்டுப்பாதை சிராவத்தி நகரத்திற்குப் போகிறது. இவ்வழிப்போக்கரும் சிராவத்தி நகரத்திற்குத்தான் போகிறார்கள். நடையுடை பாவனைகளில் தொழிலாளி போலக் காணப்படும் அவள் கணவன், தூங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தையைத் தன் மார்பில் சார்த்திக் கொண்டு வழி நடக்கிறான். அவனுடன் செல்லும் அவன் மனைவி இளவயதுள்ளவள். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்போல் காணப்படுகிறாள். முழுக் கர்ப்பவதியாகையால் விரைந்து நடக்க முடியாமல் மெல்ல நடக்கிறாள். கண்ணுக்கெட்டியவரையில் நெடுந்தூரம் காடாக இருக்கும் இந்த இடத்திலே, மனிதரைக் காண முடியவில்லை. மரங்களில் காட்டுப் புறாக் களும் மைனா முதலிய பறவைகளும் பாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சூரியனை மேகங்கள் மறைத்துவிட்டன. காற்று வீசத் தொடங்கியது. தூறல் தூறத் தொடங்கிற்று. இச்சமயத்தில் அப் பெண்மணி, தன் கணவனிடம் வயிறு வலிக்கிறது என்று கூறினாள். நன்றாக மழை பெய்யும்போல் தோன்றுகிறது. நடுக்காட்டில், மக்கள் நடமாடாத இடத்தில், மழை பெய்கிற வேளையில், அவளுக்குப் பிரசவ காலம் ஆரம்பித்து விட்டது. தங்குவதற்கு அங்கே இடம் இல்லை. இடம் காலம் இரண்டும் தனக்கு மாறுபட்டுப் பகையாக இருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தோன்றாமல் அவன் திகைத்தான். வீட்டிலேயே தங்கியிருந்தால் இந்தச் சங்கடம் ஒன்றுமில்லையே என்று எண்ணினான். அவன் மார்பில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. “சிறு குடிசை ஒன்றைக் கட்டுங்கள்” என்றாள் அவள். ஆம், அதைத் தவிர வேறு வழியில்லை. குழந்தையையும் அவளையும் ஒரு வேப்ப மரத் தடியில் விட்டுவிட்டு, குடிசை கட்டக் கிளைகளையும் புல்லையும் கொண்டுவர விரைந்து சென்றான். தூறலாக இருந்த மழை நன்றாகப் பெய்யத் தொடங்கிற்று. அவளுக்கும் பிள்ளைப்பேறு தொடங்கிவிட்டது. வயிறு நொந்தது. அந்தோ பாவம்! உதவி செய்ய அருகில் ஒருவரும் இலர். காற்றடித்தால் என்ன? மழை பெய்தால் என்ன? காட்டில் உதவியில்லாமல் மரத்தடியில் இருந்தால்தான் என்ன? இவற்றை எல்லாம் இயற்கை எண்ணிப் பார்க்கிறதா? பிரசவ வேதனை மும்முரமாக இருந்தது. காட்டில் சென்ற கணவன் இன்னும் வரவில்லை. மழையும் விடவில்லை. பிரசவ நோய் பலப்பட்டுக் கடைசியாகப் பிள்ளைப் பேறும் உண்டாயிற்று. பிறந்த பச்சிளங் குழந்தையை மழையில் நனையாதபடி மார்பில் அனைத்துக் கொண்டு மற்றக் குழந்தையையும் அருகில் அணைத்துக் கொண்டு கவிழ்ந்து குனிந்து கொண்டாள். மழை கொட்டு கொட்டு என்று கொட்டிக்கொண்டிருந்தது. போன ஆள் இன்னும் திரும்பிவரவில்லை. அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டதா? அல்லது அவளைக் கைவிட்டு எங்கேனும் போய் விட்டானா? தான் நேசித்த தன் கணவன் தன்னை இந்நிலையில் கைவிட்டுப் போய்விட்டிருந்தால்...? இதை நினைக்கும்போது அவளுக்குக் கழுத்தைக் கத்தி கொண்டறுப்பது போலத் தோன்றியது. ஆதரவு அற்ற நிலையில், நடுக்காட்டில், இரவு வேளையில், காற்று மழையில் நனைந்துகொண்டு பிரசவம் செய்யும் கொடுந்துன்பத்தை விட மிகமிகக் கொடுந்துன்பமாகத் தோன்றியது. அவன் அவளைக் கைவிட்டான் என்னும் எண்ணம். அவள் உடம்பைக் காற்றும் மழையும் தாக்கியது அவளுக்குத் துன்பமாகத் தோன்றவில்லை. தன் கணவன் தன்னைக் கை விட்டானோ என்னும் ஐயம், அவள் மனத்திலே பெரும் புயலை வீசி அவளைப் பெருந் துன்பத்திற்குள்ளாக்கிற்று. இந்த நிலையிலே உறக்கமின்றிக் காற்றிலும் மழையிலும் நனைந்துகொண்டு, பறவை குஞ்சுகளைச் சிறகுகளால் அணைத்துக்கொள்வது போல, தன் குழந்தைகளை மார்பில் அணைத்துக்கொண்டு, இரவைக் கழித்தாள். கடைசியாக அந்த நீண்ட இரவு கழிந்து, பொழுது விடியத் தொடங்கிற்று. மழையும் ஓய்ந்து நின்றது. ஆனால், காற்று சில்லென்று வீசிற்று. தன் கணவன் திரும்பி வராதது அவள் மனத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல இருந்தது. காலை வெளிச்சத்தில் அவள் குழந்தை களுடன் அவனைத் தேடத் தொடங்கினாள். அவன் சென்ற திசையாகச் சென்று தேடினாள். சிறிது தூரத்திலே ஒரு மேட்டின் மேல் ஓர் ஆள் விழுந்து கிடப்பதைக் கண்டாள். ஓடோடி அருகில் சென்று பார்த்தாள். அந்தோ! தன் கணவன் பிணமாகக் கிடப்பதைக் கண்டாள். அவன் பக்கத்தில் புல் கட்டுகள் கிடந்தன. வெட்டிப் போடப்பட்ட சில களைகளும் கிடந்தன. அவன் காலில் இரத்தம் வடிந்திருந்தது. அருகில் இருக்கும் புற்றிலிருந்த பாம்பு அவனைக் கடித்திருக்க வேண்டும். ஆகவே, அவன் விஷம் ஏறிப் பிணமாய்க் கிடக்கிறான். இந்தக் காட்சியைக் கண்டவுடன் அவளுக்குச் சந்தோஷமும் துக்கமும் கலந்து அவள் உள்ளத்தைத் தாக்கின. அவள் கணவன் அவளைக் கைவிட வில்லை என்று நினைக்கும்போது உண்டானது சந்தோஷம். அவன் குடிசை கட்டப் புல்லையும் கிளைகளையும் வெட்டி இருப்பதே அவளை அவன் கைவிடவில்லை என்பதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்ததற்காக உண்டானது துக்கம். அவள் மனம் பொறாமல் அவன் மேல் விழுந்து அழுதாள். ஓவென்று கதறினாள். காடும் கரையும்படி அழுது புலம்பினாள். இந்த நடுக்காட்டில் இவளுக்கு ஆறுதல் கூற ஒருவரும் இலர். நன்றாகப் பொழுது புலர்ந்துவிட்டது. வெயில் காயத் தொடங்கிற்று. இப்போது வானத்தில் மேகங்கள் இல்லை. மனத்துயரம் தாங்கமுடியாமல், தான் இருக்கும் திக்கற்ற நிலையை நினைத்து நெஞ்சுருகினாள். தான் இப்போது செய்ய வேண்டியது என்ன என்று சிந்தித்தாள். சிராவத்தி நகரம் சென்று தன் உறவினரை அழைத்துக் கொண்டு வந்து இறந்தவனை அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினாள். ஆகவே, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே நடந்தாள். சிராவத்தி நகரத்திலே பெரிய பிரபு ஒருவர் இருந்தார். அந்தப் பிரபுவுக்கு ஒரே பெண்ணும் ஒரே மகனும் ஆக இரண்டு மக்கள் இருந்தனர். மகள் பெரியவளாக வளர்ந்து மணம் செய்யும் வயதடைந்தாள். வயதடைந்திருந்த அவள், அந்த மாளிகையில் வேலை செய்யும் ஏவலாளர்களில் ஒரு வாலிபனுடன் கூடாவெழுக்கம் கொண்டாள். பிரபு, அவளுக்குத் தக்க இடத்திலே திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையறிந்த அந்தப் பெண், தன் காதலனாகிய வேலைக்காரனுடன் ஒருவரும் அறியாமல் புறப்பட்டு ஒரு கிராமத்திற்குப போய்விட்டாள். கிராமத்திலே, அப்பிரபுவின் மகள் அவனுடன் வாழ்ந்து வந்தாள். அவன் ஏதோ தொழில் செய்து அவளைக் காப்பாற்றி வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவள் வயிறு வாய்த்தாள். சூல் முதிரமுதிர அவள், தனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாததை அறிந்து, தன்னைத் தன் பெற்றோர் வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படி, தன் கணவனிடம் கூறினாள். பெற்ற மனம் பித்து என்பார்களே! தன் குற்றத்தைத் தன் பெற்றோர் மன்னித்துத் தன்னுடைய பிள்ளைப்பேறு காலத்தில் தன்னைக் கவனிப்பார்கள் என்று அவள் அவனிடம் சொன்னாள். ஆனால், அவனுக்கு அழைத்துச் செல்ல மனமில்லை. ஆகவே, நாளைக்காகட்டும், பிறகு ஆகட்டும் என்று காலங் கடத்திக் கொண்டிருந்தான். பிரசவ காலம் நெருங்கி விட்டதையும் தன் கணவன் தன்னைத் தாய் வீட்டுக்கழைத்துக் கொண்டு போக மனமில்லாம லிருப்பதையும் அறிந்த அவள், தன்தாய் வீட்டிற்குப் (சிராவத்தி நகரத்திற்கு) போவதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத் தன்னந் தனியே புறப்பட்டுச் சென்றாள். செல்லும் வழியில் ஒரு கிராமத்தையடைந்தபோது அவளுக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று. அந்தக் கிராமத்திலே ஒரு வீட்டிலே தங்கி ஒரு குழந்தையைப் பெற்றாள். பிள்ளைப் பேறு உண்டாகிவிட்டபடியால் இனி, தன் தாய் வீடு போவது பயனற்றது என்று கருதி அவள் குழந்தையுடன் தன் கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அவள் வயிறு வாய்த்துச் சூல் கொண்டாள். ஒன்பது மாதம் நிறைந்து பத்தாவது மாதம் ஆனபோது, தன் தாய் வீட்டில் போய் பிள்ளைப் பேறு பெறவேண்டு மென்று விரும்பினாள். தன் விருப்பத்தைக் கணவனிடம் கூறினாள். அவளை அவள் பெற்றோரிடம் அனுப்ப அவனுக்கும் விருப்பந்தான். ஆனால், அவர்கள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டான். ஆகட்டும், ஆகட்டும் என்று சில நாட்களைக் கழித்தான். பிரசவ காலம் நெருங்கவே அவன் அவளைச் சிராவத்தி நகரம் அழைத்துக் கொண்டு போக உடன்பட்டுக் குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு போனான். ஏழை ஆகையால் வண்டியில் போக முடியாமல் கால்நடையாகவே அழைத்துச் சென்றான். பல கிராமங்களைக் கடந்து, சிராவத்தி நகரத்திற்கு மூன்று கல் தூரத்தை யடைந்தான்; அவ்விடம் காட்டு வழி. அக்காட்டு வழியைக் கடந்தால் சிராவத்தி நகரத்தை யடையலாம். காட்டு வழியாக வரும்போதுதான் மேலே கூறியபடி விடா மழை பிடித்துக்கொண்டது. பிரசவ வேதனையும் உண்டாயிற்று. அவள் தங்கிப் பிள்ளைப்பேறு பெறுவதற்காகச் சிறு குடிசை ஒன்றைக் கட்டுவதற்காகக் காட்டில் சென்றான். சென்று கிளையை வெட்டும் போது பாம்பு கடித்து இறந்துவிட்டான். அவளும் மழையிலும் காற்றிலும் நனைந்துகொண்டு மரத்தடியில் நள்ளிரவில் தன்னந் தனியளாய்ப் பிள்ளையைப் பெற்றாள். பொழுது விடிந்ததும் அவனைத் தேடிக் கொண்டுபோய், பாம்பு கடித்து இறந்து கிடப்பதைக் கண்டாள். சிராவத்தி நகரத்தில் தன் பெற்றோரிடம் சென்று யாரையேனும் அழைத்து வந்து இறந்த கணவனை அடக்கம் செய்யவேண்டும் என்பது அவளுடைய எண்ணம். அவள் தன் இரண்டு குழந்தை களையும் தூக்கிக்கொண்டு வழிநடந்தாள். ஓட்டமும் நடையுமாக நடந்து நெடுந்தூரம் வந்தாள். காட்டு வழியைக் கடந்துவிட்டாள். வழியில் ஒரு சிற்றாறு குறுக்கிட்டது. சாதாரண காலத்தில் இதில் தண்ணீர் இருப்பது அருமை. எல்லோரும் காலால் நடந்தே இந்த ஆற்றைக் கடப்பது வழக்கம். ஆனால், நேற்று இரவு பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்திலும் கஷ்டத்தோடு ஓர் ஆள் இதைக் கடந்துவிடலாம். ஆனால், இரண்டு குழந்தை களைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடக்க அவளால் முடியவில்லை. ஆகவே, அவள் சற்றுச் சிந்தித்தாள். இரண்டு வயதுள்ள பெரிய குழந்தையை இக்கரையில் உட்கார வைத்துவிட்டு, அவள் கைக்குழந்தையுடன் வெள்ளத்தில் இறங்கி மெல்லமெல்ல அக்கரைக்கு சென்றாள். சென்று புல்லின்மேல் அக்குழந்தையைக் கிடத்திவிட்டு, பெரிய குழந்தையை அழைத்துக்கொண்டு வருவதற்காக இக்கரைக்கு வரும் பொருட்டு வெள்ளத்தில் இறங்கினாள். இன்று பிறந்த இக்குழந்தையைத் தனியே கிடத்திவிட்டு வருவது அவளுக்கு மனம் தாழவில்லை. அடிக்கடி குழந்தையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்ட நடு ஆற்றண்டை வந்தாள். அப்போது, அந்தோ!..... எங்கிருந்தோ ஒரு கழுகு வேகமாய்ப் பறந்து வந்து அக் குழந்தையைக் கால்களால் பற்றிக்கொண்டு பறந்தது. புதிதாகப் பிறந்து செக்கச் செவேலென்றிருந்த அக்குழந்தை கழுகின் கண்ணுக்கு மாமிசம்போல் காணப்பட்டது. நெடுந்தூரத்தி லிருந்தும் பார்க்கக் கூடிய கூர்மையான பார்வையுடைய கழுகு எங்கிருந்தோ இதைக் கண்டு வேகமாகப் பறந்துவந்து ஒரேயடியாய்க் கொண்டுபோய்விட்டது. நட்டாற்றில் இருந்து இதைக் கண்ட தாய்க்கு மனம் துடித்தது. அவள் கைகளை வீசி “சூ...சூ...” என்று கூவித் துரத்தினாள். கழுகு குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. அவளுக்குக் குலை நடுங்கிற்று; மனம் பதறிற்று; உயிர் துடித்தது. தன்னுடைய தாய் நாட்டாற்றில் நின்று “சூ...சூ...” என்று கூவிக் கைகளை வீசுவது கண்டு, அக்கரையிலிருந்த குழந்தை, தாய் தன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு, தாயிடம் செல்ல ஓடிவந்து தண்ணீரில் குதித்தது. பெருவெள்ளம் வேகமாய் ஓடி வருகிறபடியால், வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துக் கொண்டு போய்விட்டது. அது “அம்மா! அம்மா” என்று கத்துகிற ஓசையைக் கேட்டு அவள் எதிர்க் கரையைத் திரும்பிப் பார்த்தாள். கரையில் இருந்த குழந்தை காணப் படவில்லை. வெள்ளத்தில் குழந்தை அடித்துக்கொண்டு நெடுந்தூரம் போய்விட்டதைக் கண்டாள். அந்தோ! அவளுடைய இரண்டு குழந்தைகளும் போய்விட்டன! குழந்தையைப் பிடிக்க வெள்ளத்தில் தொடர்ந்து சென்றாள். குழந்தை வெள்ளத்தில் மறைந்துவிட்டது. அந்தோ! இந்தக் குழந்தையும் போய்விட்டது. அவளுக்கு இடிமேல் இடி விழுந்தது போலாயிற்று. என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்தாள். அவள் பித்துப் பிடித்தவள் போலானாள். நிலை கொள்ளாத வெள்ளத்திலிருந்து ஒருவாறு சமாளித்துக் கரையேறினாள். கரை மேல் அடியற்ற மரம்போல் விழுந்து ‘ஓ’ என்று அலறி அழுதாள். அவள் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. நெடுநேரம் வரையில் கோ வென்று அலறி அழுதாள். அவளைத் தேற்றுவதற்கு அருகில் ஒருவரும் இலர். ஒன்றன்பின் ஒன்றாகத் தனக்கு நேர்ந்த துன்பங்களை எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள். முன்னாள் இரவில் கணவன் பாம்பு கடித்து இறந்தான். இன்று காலையில் ஒரு குழந்தையைக் கழுகு கொண்டுபோய் விட்டது. மற்றொரு குழந்தையை வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. அந்தோ, கொடுமை! கொடுமை! தன் ஊழ் வினையை நினைத்து ஒருவாறு தேறினாள். ஆனாலும், அவள் மனம் குழம்பியிருந்தது. சிராவத்தி நகரம் அண்மையில் தெரிந்தது. தன் பெற்றோரிடம் சென்று அவர்களைக் காணவேண்டும் என்று அவள் மனம் துடித்தது. இவளுடைய துன்பங்களைக் கேட்டால் இவள் தாயார் எவ்வளவு வேதனை அடைவாள்! தகப்பனார் எவ்வளவு துன்பம் அடைவார்! சகோதரன் எவ்வளவு வருந்துவான்! இவர்களைத் தவிர இவளுக்கு இந்த உலகத்தில் உறுதுணையாவார் யார்? அவள் உடம்பில் நடக்கச் சக்தியில்லை. தன்னால் கூடுமான வரையில் விரை வாகவே நடந்தாள். கணவனையும் குழந்தை களையும் ஒரே நாளில் இழந்துவிட்டதை நினைத்து அவள் மனம் ஏங்கியது. நகர எல்லைக்கு அருகில் வந்துவிட்டாள். எதிரிலே நகரத்திலிருந்து வரும் ஓர் ஆள் எதிர்ப்பட்டான். தன்னந் தனியே வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருகிற இவள் தோற்றத்தையும் முகவாட்டத்தையும் கண்ட அவன் மனம் இரங்கிற்று. தன்னையறியாமலே, “அம்மா! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். சீமான் பெயரைச் சொல்லி, அவர் வீட்டுக்குப் போவதாகக் கூறினாள். அதைக் கேட்டதும் அந்த ஆளின் முகத்தில் வருத்தக் குறி காணப்பட்டது. “அவர் வீட்டில் எல்லோரும் சுகந்தானே!” என்று கேட்டாள். “ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்......” என்று இழுத்தான் வருத்தத்துடன், அவளுக்கு மனம் துடித்தது. “என்ன? அவருக்கு ஒன்றும் இல்லையே! சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டாள் ஆவலுடன். “நேற்று இரவெல்லாம் நல்ல மழை பெய்ததல்லவா?” “ஆமாம்!” “வீடு இடிந்து விழுந்து அவரும் அவர் மனைவியும் மகனும் இறந்து போனார்கள்.” இதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் ஆனாள். “அதோ, புகைகிறது பார்! அவர்களைக் கொளுத்தும் புகைதான் அது!” என்று அந்தப் பக்கமாகக் கையைக் காட்டினான். அந்தப் பக்கமாகத் திரும்பினாள். சுடுகாட்டிலிருந்து பெரும் புகை எழும்பி வானத்தில் போகிறதைக் கண்டாள். “அவர்களுக்கும் இந்தக் கதியா!” என்று நினைத்தபோது அவள் மனம் பித்துப் பிடித்ததுபோல் ஆயிற்று. மூளை குழம்பிற்று. பைத்தியம் பிடித்தவள்போல் ஓடினாள். ஆடை நெகிழ்ந்துவிட்டதையும் அவள் சரியாக உடுத்தவில்லை. பித்துக் கொள்ளிபோல், பைத்தியக்காரிபோல் ஆனாள். தன் நினைவை இழந்தாள். மனம் போனபடி தெருத் தெருவாகச் சுற்றிலைந்தாள். அவளைக் கண்டவர்கள் துரத்தி விரட்டினார்கள். “தூரப் போ! இங்கே வராதே! போ, போய்விடு” என்று துரத்தினார்கள். ஆடை விலகி நெகிழ்ந்திருந்தது. அது அவளுக்குத் தெரியவில்லை. உணவையும் உறக்கத்தையும் மறந்தாள். இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் திரிந்து அலைந்துகொண்டேயிருந்தாள். அவளை ஏன் என்று கேட்போர் இந்த உலகத்திலே ஒருவரும் இல்லை. அவள் ஏன் இந்த நிலையையடைந்தாள் என்று ஒருவரும் யோசிக்கவில்லை. இவளைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இவ்வாறு பல திங்கள் கழிந்தன. பகவன் புத்தர் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கிறார். பௌத்தப் பிக்குகளும் நகர மக்களும் அமர்ந்து பகவர் அருளும் அறமொழிகளைச் செவி மடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தற் செயலாகப் படசாரி1 அவ்விடத்தில் ஓடி வந்தாள். கூட்டத்தில் நுழையப் பார்க்கிறாள். அங்கிருந்தவர்கள், “இங்கே வராதே அப்படிப் போ, எட்டிப் போ” என்று விரட்டினார்கள். புத்தர் பெருமான் கண்டார். அவள் மனம் துன்பத்தினால் குழப்பம் அடைந்திருப்பதை அறிந்தார். “அவளை விரட்டாதீர்கள். அவள் இங்கே வரட்டும்” என்று அருளினார். கூட்டத்தில் அவளுக்கு வழிவிட்டார்கள். கூட்டத்தில் புகுந்து வந்து “பேந்தப் பேந்த” விழித்தாள். கூட்டத்தில் அமைதி. என்ன நடக்கப்போகிறது என்றறியக் கூட்டத்தில் ஓர் ஆவல். “குழந்தாய்! உன் மனத்தைச் சிதறவிடாதே. மனத்தைத் தன் நிலையில் நிறுத்து” என்று உரத்த குரலாகவும் கம்பீரமாகவும் கணீரென்று அருளிச் செய்தார் பகவன் புத்தர், அவர் குரலில் ஏதோ மந்திர சக்தி பொருந்தியிருப்பதுபோல் தெரிந்தது. அக்குரலில் ஓர் ஆணை-கட்டளை தொனித்தது. இந்தக் கட்டளை வந்த ஓசை வழியே படசாரி மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பினாள். அவள் கண்கள் பகவர் முகத்தில் பதிந்தன. இரண்டு நிமிடம் அவர் முகத்தையே அவள் பார்த்தாள். அந்த முகத்தில் எப்போதும் உள்ளதுபோல் சாந்தியும் தெய்வீக ஒளியும் காணப்பட்டன. எல்லோரும் அவளுடைய முகத்தையே பார்த்தனர். அவள் கண்களில் நிலைத்திருந்த பயங்கரத் தோற்றம் சிறிதுசிறிதாக மறைந்துவிட்டது. முகம் சாந்தம்அடைந்தது. சிதறி உடைந்திருந்த அவள் மனம் குவிந்து இயற்கை நிலையை அடைந்தாள். தன் உணர்வு வரப் பெற்றாள். அப்போதுதான், பெருங்கூட்டத்தின் இடையிலே தான் நிற்பதையும், தன் உடை கிழிந்துவிலகி அரை நிர்வாணமாக இருப்பதையும் உணர்ந்தாள். உடனே வெட்கத்தினால் தலை குனிந்து உடம்பை இரண்டு கைகளினாலும் மூடிக்கொண்டு அவ்விடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் துணி ஒன்றை அவள் மேல் எறிந்தார். அதை எடுத்து அவள் உடம்பில் சுற்றிப் போர்த்திக்கொண்டு எழுந்தாள். நேரே சென்று பகவர் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். “குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார் பகவர். அவள் எழுந்து நின்று, தன் மனத்தில் பதிந்து கிடக்கும் துயரத்தை அவருக்குக் கூறினாள். தன் கணவர் பாம்பு கடித்து இறந்ததையும் ஒரு குழந்தையைக் கழுகு தூக்கிக்கொண்டு போனதையும் இன்னொரு குழந்தையை வெள்ளம்கொண்டு போனதையும், தன் தாயும் தந்தையும் தம்பியும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனதையும் அவள் அவரிடம் கூறிக் கண்ணீர் உகுத்து மனம் புழுங்கினாள். கனிவோடு கேட்ட பகவர் அருளினார்: “குழந்தாய்! நீயடைந் துள்ள துன்பம் பெரிதுதான். நீ சிந்திய கண்ணீரும் பெரிது. சற்றுச் சிந்தித்துப் பார்; பிறந்தவர் இறப்பது உலக இயற்கை. இதற்கு முந்திய பிறப்புக்களில் நீ உன் சுற்றத் தாருக்காகக் சிந்திய கண்ணீரைக் கணக்குப் பார்த்தால் அது ஒரு கடலுக்குச் சமானம் ஆகும். மனம் கலங்காதே. அறிவைச் சிதற விடாதே. உலக வாழ்வின் இயல்பைச் சிந்தித்துப் பார். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம். பிறவார் உறுவது பெரும் பேரின்பம். பிறவா நிலையாகிய வீடு பேற்றை அடைவதற்கு முயற்சி செய்வாயாக” என்று அருளிச்செய்தார். அவள் மனம் இயற்கை நிலையை யடைந்தது. சிந்தித்துப் பார்த்துப் பகுத்தறியும் நிலையை யடைந்தாள். அவளுக்கிருந்த பைத்தியம் - மனமருட்சி, நீங்கிவிட்டது. படசாரி அன்று முதல் நாள்தோறும் பகவன் புத்தர் அருளும் திருமொழிகளைச் சிரம் வணங்கிச் செவிசாய்த்துக் கேட்டு வந்தாள். ஒரு நாள் பகவரை வணங்கித் தன்னைப் பௌத்த சங்கத்தில் சேர்த்து அருளும்படி வேண்டினாள். புத்தர் பெருமான் படசாரியைத் தேரி சங்கத்தில் அனுப்பித் துறவு கொடுக்கச் சொன்னார். தேரியரிடம் துறவு பெற்ற படசாரி முழு ஞானம் அடைந்து பேர்போன பௌத்தப் பிக்குணியாக விளங்கினாள். இறுதியில் வீடுபேற்றை யடைந்தாள். அடிக்குறிப்புகள் 1. அவளைப் படசாரி என்று கூறினார்கள். (படம் அல்லது படாம் - துணி நழுவின துணியோடு நடக்கிறவள் என்பது பொருள்.) 8. சீமான் குரல் வைகறைப் பொழுது. கிழக்கு வெளுத்திருக்கிறது. சேவல்கள் கூவுகின்றன. விடியற்காலத்துக் குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ராஜகிருஹ நகரத்து அரண்மனையிலே பிம்பிசார அரசர், காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆசனத்தில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்கிறார். பக்கத்திலே சண்பகம் என்னும் வெள்ளாட்டி அரசருக்குப் பணிவிடை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறாள். இந்தச் சமயத்தில், சந்தடியற்ற அமைதியான இக்காலை வேளையிலே, ஒரு குரல் அரசர் காதுகளில் விழுந்தது. “விடிந்து விட்டது; எழுந்திருங்கள்; தொழிலுக்குப் போங்கள்; எழுந்திருங்கள்.” இந்தக் குரல், அரண்மனை வேலைக்காரர்கள் குடியிருக்கும் தெருவிலிருந்து வந்தது. யாரோ ஓர் ஆள் இந்த வைகறைப் பொழுதிலே அரசருடைய பணியாளர்களை விழித்தெழும்படி கூவுகிறான்; இந்தக் குரல்தான் அரண்மனையி லிருக்கும் அரசர் காதில் விழுந்தது. பல முறை கூவிக்கொண்டு சென்ற இக்குரல் கடைசியில் மறைந்துவிட்டது. இந்தப் புதுக் குரல் அரசர் மனத்தைக் கவர்ந்தது. அக்குரல் மறையும் வரையில், அரசர் செவிசாய்த்துக்கேட்டுக் கொண்டிருந் தார். இது வெள்ளாட்டி சண்பகத்திற்கு வியப்பை உண்டாக்கிற்று. வேலைக் காரர்கள் விடுதிகளில் வேலைக்காரர்களை எழுப்புகிற ஒரு கீழ்த்தர வேலைக்காரனுடைய குரல், மகத தேசத்து மன்னர் பிம்பிசார அரசனுடைய மனத்தைக் கவர்ந்தது அவளுக்கு வியப்பை உண்டாக் கிற்று. அந்தக் குரலைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அரசர், அக் குரல் மறைந்த பிறகு சண்பகத்தைப் பார்த்து, “இது செல்வச் சீமானுடைய குரல்” என்று கூறினார். சண்பகம் மறுத்துக் கூற எண்ணினாள். ஆனால், அரசரோ சிறந்த அறிவாளி; நுண்மதியுடையவர் என்று பலராலும் புகழப்படுகிறவர். ஆகவே, இவர் கூறுவதில் ஏதோ உண்மை இருக்கலாம் என்று சிந்தித்து, ஓர் ஏவலாளனை அழைத்து வேலைக்கார விடுதிகளில், அவர்களைக் கூவி எழுப்பியவன் யார் என்று அறிந்து வரும்படி அனுப்பினாள். அந்த ஏவலாளன் சென்று அறிந்துவந்து, “இவன் ஒரு பரம ஏழை. பெயர் கும்பகோசன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். வேலைக் காரர்களை அடுத்து ஏதேனும் வேலை கொடுக்கும்படி கேட்டானாம். அவர்கள் இவன்மேல் இரக்கம்கொண்டு, நாள்தோறும் விடியற் காலையில் தங்களைக் கூவி எழுப்ப வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக இவனுக்கு இருக்க ஒரு சிறு வீடும் கொடுத்திருக்கிறார்கள். சாப்பாட்டிற்குப் படி அரிசியும் தருகிறார்கள்” என்று கூறினான். சண்பகம் அரசரிடம் ‘இவன் வேலைக்காரர்களின் வேலைக் காரன்” என்று கூறினாள். அரசர் ஒன்றும் சொல்லாமல் வாளா இருந்தார். அடுத்த நாள் விடியற்காலையிலும் அதே குரல் வேலைக்காரர் குடி யிருக்கும் தெருவிலிருந்து கேட்டது. “எழுந்திருங்கள். விடிந்து விட்டது. தொழிலுக்குப் புறப்படுங்கள்” இந்தக் குரல் பல தடவை கேட்டது. அரசர் செவி மடுத்துக் கேட்டார். கடைசியாக நேற்றுக் கூறியது போலவே, அதிலும் திட்டவட்டமாகச் சண்பகத்தினிடம் கூறினார். “இது ஒரு செல்வச் சீமானுடைய குரல்” என்று. சண்பகம் வியப்படைந் தாள். ‘ஒருவேளை, நேற்று விசாரித்து வந்த ஆள் பொய்ச் செய்தியைக் கூறி இருப்பானோ?’ என்று திகைத்தாள். அந்த ஆள் அப்படிப் பட்டவன் அல்லன். அவள் மனம் குழம்பியது. இன்னொரு பணியாளை அழைத்து, வேலைக்காரர்களை எழுப்பியவன் யார் என்றும் அவன் வரலாறு என்ன என்றும் விசாரித்து வரும்படி அவனை அனுப்பினாள். இந்த ஆள் போய்த் தகுந்தவர்களைக் கண்டு விசாரித்து வந்து, வேலைக்காரன் நேற்றுச் சொன்ன செய்தியையே தெரிவித்தான். சண்பகம் இதையும் அரசருக்குச் சொன்னாள். அரசர் ஒன்றும் கூறாது வாளா இருந்தார். மூன்றாம் நாள் வைகறைப் பொழுதில் அதே குரல், வேலைக் காரர் விடுதியிலிருந்து வந்தது. அரசர் ஊன்றிக்கேட்டார். கடைசியில் சண்பகத்திடம் முன்னினும் திட்டவட்டமாக “இது ஒரு செல்வச் சீமானுடைய குரல்” என்று உறுதியுடன் கூறினார். சண்பகத்திற்கு ஐயமும் வியப்பும் குழப்பமும் உண்டாயின. இன்னோர் ஆளை அனுப்பி அந்த ஆளைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து வரும்படி அனுப்பினாள். அந்த ஆள் சென்று எல்லாவற்றையும் விசாரித்து வந்து முன் கூறியவர்கள் சொன்ன செய்தியையே சொன்னான். நாலாம் நாள் விடியற்காலையிலும் கும்பகோசனுடைய குரல் கேட்டது. அரசர் சண்பகத்தினிடம் “இது ஒரு சீமானுடைய குரல்தான்” என்று கூறினார். சண்பகம் மனத்தில் பலவித எண்ணங்கள் உண்டாயின. ‘மகாராஜா இது செல்வந்தன் குரல் என்கிறார்;அவனோ பரம ஏழை. அரசரோ, செல்வந்தன் என்று துணிந்து, உறுதியாகக் கூறுகிறார். இதன் உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டும். வேறு நாட்டு அரசருடைய ஒற்றர்களில் இவன் ஒருவனோ? இந்த வேடத்துடன் இங்கு இருக்கிறானோ’ என்று பலவாறு எண்ணினாள். அவள் அரசரிடம் விண்ணப்பம் செய்துகொண்டாள்: “மகாராஜா! அவனைப் பிரபு என்று கூறுகிறீர்கள். அவனோ பரம ஏழையாக இருக்கிறான். மகாராஜாவுக்குத் திருவுளம் இருந்தால், உண்மையை நானே நேரில்சென்று கண்டுபிடித்து வருகிறேன்.” அரசர், “இதன் உண்மையை அறிய நமக்கும் எண்ணம் உண்டு. நீ போய் உண்மையைக் கண்டுபிடித்து வா. செலவுக்கு வேண்டிய பொருளை நிதி மந்திரியிடம் பெற்றுக் கொண்டு போ” என்று கட்டளையிட்டார். சண்பகம் செலவுக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றாள். அவளுக்கு மல்லிகை என்ற பெயருள்ள மணமாகாத மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சண்பகம் அழைத்துச் செய்தியை இரகசியமாகக் கூறினாள். பிறகு இருவரும் ஏழைகளைப் போல அழுக்கு ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே புறப் பட்டனர். அரண்மனை வேலைக்காரர்கள் குடியிருக்கும் இடத்தை அடைந்து, தாங்கள் நெடுந்தூரத்திலிருந்து ஊர்ப் பிரயாணம் செய்கிற வர்களைப் போல நடித்து, அங்கிருந்த ஒரு வீட்டில் நுழைந்தாரகள். அவ்வீட்டுக்காரியிடம், “அம்மா தூர தேசத்திற்குப் போகிறோம். நாங்கள் களைப்படைந்திருப்பதால் இங்கே இரண்டு நாள்கள் தங்கி இருக்க இடங் கொடுங்கள்” என்று கேட்டனர். “இந்த வீட்டில் நிறைய ஆட்கள் உள்ளனர். இங்குத் தங்க இடங் கிடையாது. அதா கும்ப கோசன் வீடு காலியாயிருக்கிறது; அங்குப் போய்க் கேளுங்கள்” என்று கூறி அவ்வீட்டுக்காரி, கும்பகோசன் வீட்டைக் காட்டினாள். கும்பகோசன் வீட்டிற்கு இருவரும் சென்றார்கள். கும்பகோசன் தனியே இருந்தான. சண்பகம் அவனைப் பார்த்து “ஐயா! நாங்கள் தூர தேசத்திலிருந்து பிரயாணம் செய்து வருகிறோம். இங்கே, இரண்டு நாட்கள் தங்கிப்போக இடம்தரவேண்டும். நாங்கள் மிகவும் களைத் திருக்கிறோம்” என்றாள். கும்பகோசன், “இங்கே இடமில்லை; வேறு எங்கேனும் போய்க் கேளுங்கள்” என்று கூறினான். அவள் மீண்டும் மீண்டும் வேண்டினாள் அவன் மீண்டும் முடியாது என்று மறத்தான். சண்பகம் விடவில்லை. கும்பகோசன் மனம் இளகும்படி மிகவும் வினயமாக, “ஐயா! நாங்கள் அதிகக் களைப்போடு இருக்கிறோம். பல இடங்கள் சென்று அலைந்துதிரிந்து இடம் பார்க்க எங்களால் முடியாது. உடலில் சக்தி இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் இடம் கொடுங்கள். நாளைப் பொழுது விடிந்ததும் போய் விடுகிறோம்” என்று கூறி அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். அவன் வேண்டாவெறுப்பாக முணுமுணுத்துக் கொண்டே ஒப்புக்கொண்டான். கும்பகோசன் விடியற் காலையில் எழுந்து தன் தொழிலுக்குப் புறப்பட்டான். அப்போது சண்பகம், “ஐயா! சமையல் செய்து வைக்கிறேன். காசு கொடுத்துவிட்டுப் போங்கள்” என்றாள். “வேண்டாம் நான் வந்து சமைத்துக் கொள்வேன்” என்றான். அவள் விடவில்லை. “ஏன் ஐயா உங்களுக்கு வருத்தம்? இன்று ஒரு நாளைக்கு நான் சமைக்கிறேன்; சாப்பிடுங்களேன்” என்று வற்புறுத்தினாள். அவன் சம்மதப்பட்டு, தனக்கு மட்டும் வேண்டிய உணவுக்கு அவளிடம் காசு கொடுத்தான். கொடுத்து வேலைக்குப் போய் விட்டான். விடிந்தவுடன் சண்பகம் கடைக்குப்போய், தான் கொண்டுவந்திருந்த பணத்தில் சமையற் பாத்திரங்களையும் அரிசி, பருப்பு, காய்கறி முதலிய வற்றையும் வாங்கிவந்தாள். அரண்மனையில் சமைத்துப் பழகினவள் ஆகையால் சுவையுள்ள உணவை நன்கு சமைத்து வைத்தாள். கும்ப கோசன் வந்தவுடன் தன் கையாலேயே அவனுக்கு உணவளித்தாள். கும்பகோசன் இத்தகைய உணவை இதுவரையில் உண்டதில்லை. சுவை மிகுந்த உணவை அவன் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் களிப்போடு உட்கார்ந்து இருந்தான். அச்சமயம் சண்பகம், “ஐயா! நாங்கள் அதிக தூரம் பிரயாணம் செய்திருக்கிறோம். இங்கே தங்கிக் களைப்பாற்றிக் கொண்டு எங்கள் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறோம். தயவுசெய்து நாலு நாட்களுக்கு இடம் கொடுத்தால் போதும்” என்று நயமாகக் கேட்டாள். கும்பகோசன் யோசித்தான். ‘நளபாகம், வீமபாக மென்பார்களே! அத்தகைய உணவை இவள் சமைக்கிறாள். அத்தகைய சாப்பாட்டை இன்னும் நான்கு நாட்களுக்குத்தான் சாப்பிடலாமே! ஏன், இன்னும் எத்தனை நாளுக்கேனும் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று தனக்குள் எண்ணினான். கடைசியில், “உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள்” என்று சொல்லித் தன் சம்மதத்தைத் தெரிவித்தான். சண்பகம், காலையிலும் மாலையிலும் அறுசுவையுள்ள உணவை ஆக்கிப் படைத்தாள். அவன் திருப்தியோடு, மனம் மகிழ்ந்து சாப்பிட்டான். மூன்றாம் நாள் சண்பகம், கும்பகோசனிடம், “ஐயா! இன்னும் கொஞ்ச நாட்கள் இங்குத் தங்கிவிட்டுப் போகிறோம்” என்று கேட்டாள். அவன் சரி என்று சம்மதித்தான். சண்பகம் தன் மகளுடன் அந்த வீட்டிலேயே தங்கி இருந்தாள். ஒரு நாள் அவன் வெளியே போயிருந்த நேரத்தில், கூர்மை யான கத்தியால், சண்பகம், அவன் படுக்கிற கயிற்றுக் கட்டிலில் சில கயிறுகளைக் கீறிவிட்டாள். கும்பகோசன் அன்றிரவு கட்டிலில் படுக்கும்போது சில கயிறுகள் அறுந்துவிட்டன. அவன் “எப்படி இந்தக் கயிறுகள் அறுந்துவிட்டன?” என்று வினாவினான். அவள், “அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த வேலையாயிருக்கும்” என்று பிள்ளைகள்மேல் பழிபோட்டாள். “உங்களால் வந்த வினை இது. நீங்கள் வருவதற்கு முன்பு நான் வெளியே போகும்போது கதவைப் பூட்டிவிட்டுப் போவேன். இப்போது கதவு திறந்திருப்பதனால் பிள்ளைகள் வந்து கயிறுகளை அறுத்து விட்டார்கள்” என்று இரைந்து கூறினான். “என்ன ஐயா செய்வது? பிள்ளைகள் வந்தால் வேண்டா மென்று சொல்ல முடியுமா?” என்று சண்பகம் வினயமாகக் கூறினாள். ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலும் அவன் வெளியே போய் விட்ட பிறகு கொஞ்சம்சொஞ்சமாகக் கயிறுகளை அறுத்துவிட்டாள். அவன் படுத்தபோது கயிறுகள் அறுந்து தாழ்ந்துவிட்டன. கும்பசோசன் பெரிதும் சினம்கொண்டு சண்பகத்தைக் கண்டித்தபோதெல்லாம் அக்கம் பக்கத்துப் பிள்ளைகளின்மேல் பழிபோட்டாள். அடுத்த நாள் ஒன்றிரண்டு கயிறு தவிர மற்றக் கயிறுகளை எல்லாம் அறுத்து விட்டாள். அன்று இரவு அவன் படுத்தபோது கயிறுகள் அறுந்துவிட, அவன் தொப்பென்று கீழே விழுந்தான். அவன் கடுஞ் சினத்தோடு, “இப்போது என்ன செய்வது! கயிறுகள் எல்லாம் அறுந்து விட்டன. அக்கம் பக்கத்துப் பிள்ளைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு, இப்படி என் கட்டிலைப் பாழ்படுத்திவிட்டீர்கள். இப்பொழுது நான் எங்கே படுப்பது? நானோ ஏழை. எனக்குப் படுக்கப் பாயும் இல்லையே” என்று கோபமாகக் கண்டித்தான். “அப்பா! நான் என்ன செய்வேன். அந்தப் பாழும் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்துவிட்டுப் போகின்றார்கள். நாளைக்கு ஒரு ஆளைக் கூப்பிட்டுக் கட்டிலைச் சரிசெய்து வைக்கிறேன். கோபப் படாதீர்கள்” என்று கூறினாள். பிறகு அடுத்த அறையில் படுத்திருக்கும் தன் மகள் மல்லிகைக்குக் கேட்கும்படி, “அம்மா, மல்லிகை! உன் பாயில் படுத்துக் கொள்ளஅவருக்குக் கொஞ்சம் இடம் கொடு” என்று உரத்துக் கூறினாள். மல்லிகை தன் பாயில் சிறிது இடம் ஒதுக்கிக் கொடுத்து “இதோ இடம் இருக்கிறது. படுத்துக்கொள்ளுங்கள்” என்று அழைத்தாள். கும்பகோசன் அங்குச் சென்று அவள் பாயில் படுத்துக்கொண்டான். மல்லிகை கூச்சலிட்டாள். நடந்த செய்தியை அறிந்த சண்பகம் அடுத்த அறையில் படுத்துக்கொண்டே “ஏன் மல்லிகா! என்ன?” என்று கேட்டாள். மல்லிகை நடந்ததைக் கூறினாள். சண்பகம் கோபப்படவில்லை. “சரி நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்வது? உன்னையும் ஒருவருக்குக் கலியாணம் செய்து கொடுத்துத் தானே ஆகவேண்டும். அவரும் மணம் செய்துகொள்ள வேண்டியவர் தானே. உனக்கும் அவருக்கும், இப்படிப் பிராப்தம் இருக்கிறதுபோல் இருக்கிறது” என்று சொன்னாள். அன்று முதல் கும்பகோசனும் மல்லிகையும் கணவனும் மனைவியும் ஆக இருந்தார்கள். சில நாட்கள் சென்றன. சண்பகம் அரசருக்கு இரகசியமாகச் செய்தி சொல்லி அனுப்பினாள். அரண்மனை வேலைக்காரர்களுக்கு ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என்றும், அந்ந நாளை அவர்கள் சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்றும் விடுமுறை கொண்டாடாதவர்கள் தண்டனை அடைவார்கள் என்றும் ஆணையிடும்படி தெரிவித்தாள். அரசர் அவ்வாறே கட்டளை யிட்டார். அரசசேவகன் ஒருவன் வேலைக்காரர் விடுதியில் பறையறைந்து அரசர் கட்டளையைக் கூறினான். கும்பகோசனிடம் சண்பகம் இந்தச் செய்தியைச் சொன்னாள். “அரண்மனை வேலைக்காரர்களுக்கு விடுமுறையாமே. விடுமுறை கொண்டாடாதவர்கள் தண்டனை அடைவார்களாமே” என்று கூறினாள். “ஆமாம். அப்படித்தான் அரசர் உத்தரவு. அதனால் எனக் கென்ன? நான் ஏழை. என்பாடே பெரும்பாடாக இருக்கிறது. விடுமுறை கொண்டாட எனக்குக் காசு ஏது?” என்று கூறினான். “அப்படியல்ல. அரசர் ஆணையை மீறக்கூடாது. எப்படி யாவது கடன் வாங்கியாவது விடுமுறை கொண்டாடுங்கள்” என யோசனை கூறினாள் சண்பகம். கும்பகோசன் சற்று யோசித்தான். “அப்படித்தான் செய்ய வேண்டும். எங்கேயாவது போய்க் கடன் கேட்டு வாங்கி வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான். போனவன் இருட்டின பிறகு இரவு வேளையில் வீட்டுக்கு வந்தான். சண்பகம், “காசு எங்கேனும் கிடைத்ததா?” என்று கேட்டாள். “வருந்தித் தேடி இரண்டு காசு கொண்டு வந்தேன். கடனாகக் கிடைத்தது” என்று கும்பகோசன் கூறி, அவளிடம் காசுகளைக் கொடுத்தான். அவற்றைக் கையில் வாங்கிப் பார்த்து ஏதோ புதுமையைக் கண்டவள் போல் வியப்படைந்தாள். ஆனால், வியப்பை மறைத்துக் கொண்டு விருந்துக்கு வாங்கவேண்டிய பொருள்களைப்பற்றிப் பேசினாள். என்னென்ன பலகாரங்கள் செய்வது என்பதைப் பற்றி முடிவு கட்டினார்கள். பின்பு எல்லோரும் நித்திரை செய்யப் போய்விட்டார்கள். சண்பகம் காசைக் கண்டு வியப்படைந்ததற்குக் காரணம் யாதெனில், அது அப்போது வழங்கப்படாத மிகப் பழைய பொற்காசு. ‘இஃது இப்போது கிடைக்காதே; இவனுக்கு எப்படிக் கிடைத்தது’ என அதிசயப்பட்டாள். அரசர் கூறியதுபோல இவன் செல்வந்தனாகத்தான் இருக்கவேண்டும். இது கடன் வாங்கிய காசு அல்ல என்று தீர்மானித் தாள். ஆகவே, அந்தக் காசுகளைப் பத்திரப்படுத்திவிட்டுத் தன் கைக் காசுகளைச் செலவு செய்து விருந்துக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்து பலகாரங்களையும் உணவையும் செய்து வைத்தாள். விருந்து சாப்பிட்டவுடன், கும்பகோசன் விடுமுறை கொண்டாட வெளியே போய் விட்டான். சண்பகம், கும்பகோசன் தந்த இரண்டு பெற்காசுகளையும், வெகு பத்திரமாக ஒரு சேவகனிடம் கொடுத்து, அரசரிடம் சேர்க்கும்படியும், கும்பகோசனை அழைத்து இக்காசு வந்த விதத்தைக் கேட்கச் சொல்லும்படியும் இரகசியமாகச் சொல்லி அனுப்பினாள். விடுமுறை கழிந்த பிறகு அடுத்த நாள் விடியற் காலையில் கும்ப கோசன் தன் வழக்கமான தொழிலுக்குப் போய் வீடு வந்து சேர்ந்தான். சண்பகம் சமைத்த நல்ல உணவைச் சாப்பிட்ட பிறகு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தான். அப்போது ஓர் ஆள் வீட்டு வாசலில் நின்று, “இந்த வீட்டில் கும்பகோசன் இருக்கிறாரா?” என்று உரத்துக் கேட்டான். கும்பகோசன், “யார் அது?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து வெளியில் வந்தான். அரச சேவகன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “நான்தானுங்க கும்பசோசன்; என்ன சங்கதியோ” என்று கேட்டான். சேவகன், “மாட்சிமை தங்கிய அரசர் பெருமான் உங்களை அரச சபைக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உடனே வரவேண்டும்” என்று அரசாங்க பாஷையில் அதிகார தோரணையில் கூறினான். கும்பகோசனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ‘அரசர் ஏன் வரச் சொன்னார்? நான் என்ன தவறு செய்தேன்’ என்று பலவாறு சிந்தித்தான். இதற்குள் சேவகன், “ஏன் நிற்கிறீர்கள் ஐயா? புறப்படுங்கள்” என்றான். கும்பகோசன் சேவகனுடன் புறப்பட்டுச் சென்றான். அவன் மனம், காரணம் தெரியாமல் குழம்பியது. இருவரும் அரண்மனையை அடைந்தனர். அரசர் அமர்ந்திருந்த அவைக்குக் கும்பகோசன் அழைத்துச் செல்லப்பட்டான். கும்பகோசன் ஒன்றும் தோன்றாமல், மனக் குழப்பத்துடன் அரசரை வணங்கி ஒதுங்கி நின்றான். அரசர், கும்ப கோசனை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அருகிலிருந்த சேவகனை நோக்கினார். அவன் ஒரு வெள்ளித் தட்டைக் கொண்டுவந்து அரசர் முன்பு வைத்துச் சென்றான். அதில் இரண்டு பழைய பொற் காசுகள் இருந்தன. அருகில் இருந்த மந்திரி, “கும்பகோசரே இந்தப் பொற் காசுகளைச் சண்பகத்திடம் கொடுத்தீரா? இந்தக் காசுகள் உமக்கு எங்கிருந்து கிடைத்தன?” என்று கேட்டார். கும்பகோசன் தட்டிலிருக்கும் பொற்காசுகளைப் பார்த்தான். பிறகு, என்ன சொல்வது என்று தோன்றாமல் அங்கிருந்தவர் முகங்களை எல்லாம் பார்த்தான். கடைசியில் அவன் பார்வை அந்தச் சபா மண்டபத் தின் கோடியில் இருந்த வாயிலின் கதவருகில் நிற்கும் இரண்டு பெண்கள்மீது பதிந்தது உடனே அவன் திடுக்கிட்டு நோக்கினான். சண்பகமும் மல்லிகையும் உயர்ந்த ஆடையணிகள் அணிந்து அலங்காரம் செய்துகொண்டு நிற்பதையும், தன்னைக் கண்டு நகைப்பதையும் கண்டான். அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது. தன்னுடைய உண்மை நிலையை எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள். இனி, மறைப்பது வீண்முயற்சி என்று அறிந்து அவன் அரசரை வணங்கி இவ்வாறு கூறினான்: “மகாராஜாவே! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபு இந்த நகரத்தில் இருந்தார். அப்போது இந்நகரத்தில் கொள்ளை நோய் உண்டாயிற்று. கொள்ளை நோய் அந்தப் பிரபுவின் வீட்டிலும் பரவிற்று. கொள்ளை. நோய்க்குத் தப்பித்துக்கொள்ள ஜனங்களில் பலர் வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள். அந்தப் பிரபு வேறு இடம் போக வில்லை. பிரபுவின் வீட்டிலே முதலில் ஆடு மாடுகள் இறந்தன. பிறகு அடிமைகளும் வேலையாட்களும் நோய் கண்டு இறந்தனர். பின்பு குடும்பத்திலுள்ளவர்களில் பலர் இறந்துபோனார்கள். கடைசியில் பிரபுவுக்கும் அவர் மனைவிக்கும் அந்நோய் கண்டது, அப்போது அவர்கள் தம் ஒரே மகனான சிறுவனைக் கொள்ளை நோய்க்குத் தப்பித்திருந்த ஒரு கிழ வேலைக்காரனிடம் ஒப்படைத்தார்கள். “நீங்களிருவரும் இந்த இடத்தைவிட்டு வேறு ஊருக்குப் போய் விடுங்கள். கொள்ளை நோய் போனபிறகு இவ்விடம் வந்து இன்ன இடத்தில் தோண்டிப் பாருங்கள். அங்கு ஒரு கோடி பொன், நம் குடும்பச் சொத்து இருப்பதைக் காண்பீர்கள். அதை வைத்துக்கொண்டு சுகமே இருங்கள். நாங்கள் இனிப் பிழைக்க மாட்டோம். உடனே நீங்கள் போய்விடுங்கள்” என்று அனுப்பினார்கள். “நம்பிக்கையுள்ள அவ்வேலைக்காரக் கிழவன் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு ஒரு கிராமத்திற்குச் சென்றான். அது குக்கிராமம். மலையையடுத்த காட்டின் அருகில் இருந்தது. அது அக் கிழவன் பிறந்த கிராமமாகையால் அவன் அச்சிறுவனுடன் தங்கினான். கிழவனும் சிறுவனும் சில ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார்கள். கடைசியில் கிழவன் இறந்துவிட்டான். சிறுவன் மட்டும் அவ்வூரி லேயே தங்கியிருந்தான். ஆண்டுகள் சில சென்றன. சிறுவனும், காளை யானான் அவனுக்குத் தன் தாய், தந்தையர் சொன்னதும் அவர்கள் செல்வம் புதைத்து வைத்திருக்கும் இடமும் ஞாபகத்தில் இருந்தன. ஒருநாள் அவன் புறப்பட்டுக் கால்நடையாக நடந்து இந்நகரத்தை அடைந்தான். அப்போது செல்வந்தனுடைய மாளிகை இருந்த இடம் தெரியாமல் இடிந்துவிழுந்து மண்மேடிட்டு, மரஞ்செடிகள் முளைத் திருந்தது. அந்தப் பிரபுவின் மாளிகை இருந்த இடத்தை இந்நகர வாசிகளில் பழமையானவர்களைக் கேட்டு அறிந்தான். ஒரு நாள் இரவு அவ்விடம் சென்று பிரபு சொன்ன அடையாளமுள்ள இடத்தைக் கண்டுபிடித்துத் தோண்டிப் பார்த்தான். அங்கே அவர் கூறியபடி பொற்காசுள்ள Iடிகள் இருந்தன. பொற்காசுகள் வைத்த படியே குறையாது இருந்தன. “அந்த வாலிபன் பொற்சாடிகளை முன்போலவே மூடி வைத்துவிட்டு நகரத்திற்கு வந்தான். அவன் தனக்குள் எண்ணினான். ‘இந்த புதையலைத் தோண்டி எடுத்து வைத்துக் கொண்டால், இந்த ஏழைக்குச் செல்வப் புதையல் கிடைத்தது எவ்வாறு? என்று மக்கள் என்னைத் தொல்லைப்படுத்துவார்கள். நான் இன்னார் மகன், எனது பரம்பரைச் சொத்து இது என்று கூறினால் அதை ஒருவரும் நம்ப மாட்டார்கள். தகுந்த காலம் ஏற்படும் வரையில் கூலி வேலையாவது செய்து பிழைப்போம்’ என எண்ணினான். ஆகவே, அரண்மனைச் சேவகரிடம் வந்து தனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டான். அவர்கள், ‘அதிகாலையில் எங்களை எழுப்பிவிடு, உனக்குச் சம்பளமும் இருக்க இடமும் தருகிறோம்’ என்று கூறி, அவனை வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அரசர், சேவகர்களுக்கு விடுமுறையளித்தபோது அன்றைய செலவுக்காக அவன் அந்தப் புதையலிலிருந்து இரண்டு பொற்காசுகளை எடுத்துவந்தான். அந்த ஆள்தான் அடியேன். அடியேன் பெயர் கும்பகோசன். அடியேன் கொண்டு வந்த பொற்காசுகளை அதோ நிற்கும் சண்பகத்தினிடம் கொடுத்தேன். அப்போது அவள் என் வீட்டில் தங்கியிருந்தாள். அந்தக் காசுகள்தாம் இதோ இந்தத் தட்டில் இருப்பவை” என்று கூறிக் கும்பகோசன் தன் கதையை முடித்தான். சபையிலிருந்தோர் வியப்படைந்தனர். கும்பகோசன் சொல்லிய படி, ஒரு கோடி பொன் நிறைந்த ஜாடி, அவன் காட்டிய இடத்தில் அகப் பட்டது. அரசர் கும்பகோசனை அரண்மனைப் பொருள் காப்பாளராக அமர்த்தி அவனுக்குத் தகுந்த பதவியை அளித்தார். அரசரிடம் உத்தியோகத்தில் அமர்ந்த பிறகும் கும்பகோசன் முன் போலவே அடக்கமாகவும் பெருமிதமில்லாமலும் நடந்துகொண்டான். ஒரு நாள் பிம்பிசார அரசர், கும்பகோசரை அழைத்துக் கொண்டு பகவன் புத்தரிடம் சென்றார். சென்று வணங்கிக் கும்ப கோசருடைய அடக்கமான தன்மையை அவரிடம் கூறினார். அதைக் கேட்ட பகவர் மகிழ்ந்தார். “ஊக்கத்தோடு நல்ல காரியங்களைச் செய்து கொண்டு நீதிநெறியில் நடந்து அடக்கமாக இருப்பவர், மக்கள் வாழவேண்டிய முறைப்படி வாழ்கிறவர் ஆவர்” என்று புத்தர் பெருமான் அருளிச்செய்தார். எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்பது தமிழ்மறை வாக்கு அன்றோ? 9. பிள்ளைத்தாய்ச்சி ஜேதவனம் என்னும் இடத்திலே பகவன் புத்தர், வழக்கம் போல மாலை நேரத்திலே அறவுரைகளை விளக்கிக் கூறி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். நகரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்து சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந் தார்கள். பகவன் புத்தருடைய செல்வாக்கு அதிகமா யிருந்தபடியினாலே நகரத்துச் செல்வர்களும் சீமான்களும் வந்து இக்கூட்டத்திலே அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் ஒரு புறம்; பெண்கள் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். புத்தருடைய சீடர்கள் இன்னொரு புறத்தில் அமர்ந் திருந்தார்கள். சொற்பொழிவு உச்சநிலையை அடைந்தது. கூட்டத்திலே எல்லோரும் தம்மை மறந்து பகவன் புத்தர் கூறுவதையே ஊன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான இந்தப் பெருங்கூட்டத்திலே புத்தர் பெருமானுடைய குரல் வெண்கல ஓசைபோலக் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த வேளையிலே சுமார் முப்பது வயதுள்ள ஒரு பெண்மணி இந்தக் கூட்டத்தில் வந்தாள். வந்து கூட்டத்தைக் கடந்து பகவன் புத்தர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலே சென்றாள். இவள் கண்ணையும் மனத்தையும் கவரத்தக்க நல்ல அழகு வாய்ந்தவள். நிறைந்த சூல் கொண்டவள்போல அவள் வயிறு பருத்திருந்தது. சந்நியாசிப் பெண்கள் உடுத்தும் புடைவையை உடுத்தியிருந்தாள். சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள இந்தச் சந்நியாசினியை அவ்வூரார் நன்கறிவார்கள். பௌத்த மதத்திற்கு மாறுபட்ட வேறு மதத்தைச் சேர்ந்தவள் இவள். பகவன் புத்தரின் அருகிலே இவள் வந்து நின்றபோது, அங்கிருந்தவர், “இவள் ஏன் இங்கு வந்து நிற்கிறாள்! பகவர் கொள்கையை இவள் மறுத்துப் பேசப்போகிறாளா! சமய வாதம் செய்ய வந்திருக்கிறாளா?” என்று தமக்குள் எண்ணினார்கள். இவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக நோக்கினார்கள். அவள் புத்தரைப் பார்த்து இவ்வாறு சொன்னாள்: “பகவரே! விரிவுரையைச் சற்று நிறுத்துங்கள். நான் கேட்பதற்கு முதலில் விடை கூறுங்கள்.” தன் சூல்கொண்ட வயிற்றைச் சுட்டிக்காட்டி மேலும் பேசினாள்: “என்னை இந்த நிலையில் விட்டுவிட்டுத் தாங்கள் அறவுரை போதித்துக் கொண்டிருந்தால், என் கதி என்னாவது? எனக்கு என்ன வகை செய்தீர்கள்? இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப்போகிறது. பிரசவத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்” என்று கூறினாள். இவள் தன்னை எல்லாரும் காணும்படி அங்கு நின்றாள். இவள் பேசியதைக் கேட்ட பகவன் புத்தர் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக இருந்தார். கூட்டத்தில் ஒரே அமைதி காணப்பட்டது. ஆனால், எல்லோருடைய உள்ளத்திலும் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. வியப்பும் திகைப்பும் பலவித எண்ணங்களும் எல்லோருடைய மனத்தையும் அலைக்கழித்தன. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். சூல்கொண்ட பிள்ளைத்தாய்ச்சியாக அவள் காணப்பட்டாள். பெரிய சபையிலே, பலர் முன்னிலையிலே, பகவன் புத்தர்மீது குற்றம் சாட்டுகிறாள். அவள் கூறுவது உண்மையாயிருக்கமோ? பகவருக்கும் அவளுக்கும் தொடர்பு - கூடா ஒழுக்கம் - உண்டோ? இந்தத் தொடர்பின் பயனாக இவள் வயிறுவாய்த்துச் சூல்கொண்டாளோ? இது உண்மையாயிருக்குமோ? இதற்குப் பகவர் என்ன விடை கூறப்போகிறார்! பகவன் புத்தர் மௌனமாக இருந்தார். அவர் மௌனமாக இருந்தது. இவள் சாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டது போல அங்குள்ளவருக்குத் தோன்றியது. அப்போது மேலும் அவள் பேசினாள்: “ஏன் மௌனமாக இருக்கிறீர்? என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு, இந்த நிலையில் என்னை அனாதையாக விடுவது அழகா? என் பிள்ளைப் பேறுக்காகவும் மருத்துவத்திற்காகவும் வழிவகை செய்து கொடுங்கள்.” இதைக் கேட்டுப் பகவன் புத்தர், மேலும் மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார். பகவர் மௌனமாக இருந்தது. சிஞ்சாமாணவிகை கூறியது உண்மை என்று ஒப்புக்கொள்வது போல அங்கிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவள்மீது இரக்கமும் பகவன் புத்தர் மீது வெறுப்பும் அக்கூட்டத்திலிருந்தவர்களில் பலருக்கும் ஏற்பட்டன. பகவன் புத்தர்மேல் இருந்த நல்லெண்ணமும் உயர்ந்த மதிப்பும் அங்கிருந்தவர்களில் பலருக்கு இல்லாமல் போயின. இதனால், எல்லோர் உள்ளத்திலும் ஒருவிதப் பரபரப்புத் தோன்றியது. ஆனால், கூட்டத்தில் அமைதி நிலவியது. பகவர் மௌனமாக இருந்தது. சிஞ்சா மாணவிகைக்கு மேலும் ஊக்கம் அளித்தது. அவள் “ஏன் பேசாமல் இருக்கிறீர்? எனக்கு ஒரு வழி செய்து கொடுங்கள்” என்று கூறினாள். பகவர் அப்போதும் மௌனமாகவும் அமைதியாகவும இருந்தார். அப்பெரிய கூட்டத்திலே பெண்மணிகள் அமர்ந்திருந்த இடத்திலே சற்று வயதுசென்ற அம்மையார் ஒருவர் எழுந்து நின்றார். எல்லோருடைய பார்வையும் அந்த அம்மையாரிடம் சென்றன. அம்மையார் இவ்வாறு கேட்டார்: “சிஞ்சா மாணவிகே! உங்களுக்கு எத்தனை மாத கர்ப்பம்? “ஒன்பது மாதம் நிறைந்துவிட்டது. இது பத்தாவது மாதம்!” இவை வேண்டப்படாத கேள்வியும் விடையும் என்று பல்லோரும் எண்ணினார்கள். மூதாட்டியார், “இல்லை. உனக்குக் கர்ப்பமே இல்லை. நீ பொய் சொல்லுகிறாய்! வீணாகப் பொய்க் குற்றம் சாட்டுகிறாய்!” மூதாட்டியார் கூறியது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தோன்றிற்றுப் பலருக்கு. வயிற்றைப் பார்த்தாலே தெரிகிறதே முழுக் கர்ப்பம் என்று. இல்லை என்று சொல்லுகிறார் அம்மையார். இது என்ன பைத்தியக்காரத்தனம்! மூதாட்டியார், சிஞ்சா மாணவிகை அருகில் சென்றார். சிஞ்சா மாணவிகை, “அருகில் வராதே, தூரத்தில் நில்” என்றாள். அம்மையார் நிற்கவில்லை. அருகில் சென்றார். கர்ப்பவதி, அம்மையாரைத் தள்ளினாள். அம்மையார் அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தார். மாணவிகை தன்னைத் தொடவிடாமல் சண்டித்தனம் செய்தாள். அம்மையார் விடவில்லை. இருவருடைய சச்சரவுக்கிடையே மாணவிகையின் வயிற்றிலிருந்து ஒரு கனத்த பொருள் தொப்பென்று கீழே விழுந்தது. அம்மையார் அந்தப் பொருளைக் கையில் எடுத்தார்; அது திரண்டு அரை வட்ட வடிவாகச் செய்யப்பட்ட ஒரு மரத்துண்டு! அம்மையார் அதைக் கையில் பிடித்து உயரத் தூக்கிக்காட்டி, “இதோ பாருங்கள். இதுதான் சிஞ்சா மாணவிகையின் ஒன்பது மாதக் கர்ப்பம்” என்று கூறினார். அதே சமயத்தில் சிஞ்சா மாணவிகையின் வயிறு சுருங்கிக் காணப்பட்டது. அவள் உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப் பனியைப் போலத் திகைத்தாள். அம்மையார் கூறினார்: “இவள் மரக்கட்டையை வயிற்றில் கட்டிக்கொண்டு, சூல்கொண்டவள்போல நடித்து பகவர்மேல் வீணாகப் பழிசுமத்துகிறாள். இப்போது இவள் வயிற்றைப் பாருங்கள். வயிற்றில் கர்ப்பம் இல்லையே. அது எங்கே போயிற்று? இவளைப் பார்க்கும்போதே தெரியவில்லையா இவளுக்குச் சூல் இல்லை என்று? சூல் கொண்டவர்களுக்கு முகத்திலும் மற்ற உறுப்புகளிலும் மாறுதல்கள் ஏற்படுவது வழக்கம். அப்படிப் பட்ட மாறுதல்கள் இவள் உடம்பில் இல்லையே! இவள் நீலி! பழிகாரி” என்று கூறினார். கூட்டத்தில் ஆத்திரம் உண்டாயிற்று. “மோசக்காரி,” “சண்டாளி”, “பழிகாரி”, “துரத்துங்கள் அவளை”, “விரட்டியடியுங்கள்,” “மகாபாபி.” மக்கள் இப்போது உண்மையைத் தெரிந்துகொண்டார்கள். அமைதி கலைந்து கூச்சலும் சந்தடியும் ஏற்பட்டது. சிஞ்சா மாணவிகை கூட்டத்தைவிட்டு ஓடினாள். மக்கள் அவளை விரட்டித் துரத்தினார்கள். தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று அவள் விரைவாக ஓடிவிட்டாள். சிஞ்சா மாணவிகை, வேறு மதத்தைச் சேர்ந்த சந்நியாசினி, பௌத்த மதம் சிறப்படைந்து செல்வாக்கடைந்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட வேறு மதத்துச் சந்நியாசிகள் பகவன் புத்தர்மீது அபவாதம் உண்டாக்கி, அவருடைய மதத்தை அழிக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் சிஞ்சா மாணவிகையை ஏவி இவ்வாறு அவதூறு சொல்லச் செய்தார்கள். ஆனால் அவளே அவமானப்பட்டு ஓடினாள். 10. கொலைக் குற்றம் ஜேதவனம் என்னும் ஆராமத்திலே பகவன் புத்தர் பிக்கு சங்கத்துடன் எழுந்தருளியிருந்தபோது, வழக்கம்போலக் காலையிலும் மாலையிலும் சொற்பொழிவு செய்துவந்தார். அவருடைய சொற் பொழிவைக் கேட்பதற்காக நகரத்திலிருந்து மக்கள் திரள்திரளாகச் செல்வார்கள். இது நாள்தோறும் வழக்கமாக நடந்துவந்த நிகழ்ச்சி மாலைநேரச் சொற்பொழிவு முடிந்தவுடன் மக்கள் நகரத்திற்குத் திரும்பிவரும்போது இரவு வந்துவிடும். ஒரு நாள் இரவு மக்கள் நகரத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, சுந்தரி என்னும் சந்நியாசினிப்பெண் அவர்கள் எதிரில் வந்து கொண்டிருந்தாள். சுந்தரி தன் பெயருக்கேற்ப அழகுள்ளவள். நடுத்தர வயதுள்ளவள். பௌத்த மதத்திற்குப் புறம்பான வேறு மதத்தைச் சேர்ந்த சந்நியாசினி. இவள், பூ, பழம், சந்தனம் முதலியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு ஜேதவனச் சாலை வழியாக வருவதை மக்கள் கண்டார்கள். ‘இந்த அகால வேளையில், இந்தப் பொருள்களுடன் தனித்து இவள் எங்கே போகிறாள்?’ என்று மக்களுக்கு வியப்புத் தோன்றிற்று. அவர்கள், “எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். “கௌதமரிடம் போகிறேன்” என்று அவள் விடை சொன்னாள். அடுத்த நாள் காலையில் மக்கள் ஜேதவன ஆராமத்திற்குப் புத்தரின் உபதேசங்களைக் கேட்கச் சென்று கொண்டிருந்த போது, சுந்தரி எதிரில் வந்துகொண்டிருந்தாள். அவர்கள் வியப்படைந்து “எங்குச் சென்று வருகிறீர்?” என்று கேட்டார்கள். “கௌதமரிடம் இருந்து வருகிறேன். இராத்திரி அங்குத் தங்கியிருந்தேன்” என்று கூறினாள். அன்று மாலையிலும் சுந்தரி அவர்களுக்கு எதிர்ப்பட்டாள். “எங்குப் போகிறீர்கள் அம்மா?” என்று கேட்டார்கள். “கௌதம முனிவரிடம் போகிறேன். இரவு முழுதும் அங்கே தங்கியிருப்பேன்” என்று விடைகூறிச் சென்றாள். அடுத்த நாள் காலையிலும் அவள் அவர்களுக்கு எதிர்ப்படடாள். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். “ஏன்? கௌதம முனிவரிடம் இரவில் தங்கிவிட்டு வருகிறேன்” என விடை கூறிச் சென்றாள். இவ்வாறு பல நாட்கள் சென்றன. ஒவ்வொரு நாளும் சுந்தரி காலையிலும் மாலையிலும் ஐனங்கள் வரும்போதும் போகும் போதும் எதிர்ப்பட்டாள். எதிர்ப்படும் போதெல்லாம் அவர்கள் சுந்தரியை “எங்கே போகிறாய்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்பார்கள். “கௌதம புத்தரிடம் போகிறேன், இரவில் அவருடன் தங்கியிருப் பேன்” “கௌதமரிடமிருந்து வருகிறேன், இரவில் அவருடன் தங்கி யிருந்தேன்” என்று அவள் விடை கூறுவாள். ஜனங்கள் பலவாறு பேசத் தலைப்பட்டார்கள். இவளுடைய வயது, அழகு, எடுத்துச் செல்லும் பொருள்கள், செல்லும் நேரம், திரும்பும் காலம் இவையெல்லாம் மக்கள் மனத்தில் ஐயம் உண்டாக்கிவிட்டன. ‘சந்நியாசினியாகிய சுந்தரிக்கும் துறவியாகிய கௌதம புத்தருக்கும் ஏதோ கூடா ஒழுக்கம் உண்டு போல் தெரிகிறது’ என்று பேசிக்கொண்டார்கள். ஊர் வாயை மூட உலை மூடியுண்டா? அதிலும், அவளே தன் வாயால் சொல்லும்போது, மக்கள் அவதூறு பேசுவதற்குச் சொல்ல வேண்டுமா! இந்தச் செய்தி நகரத்தில் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டது. இதன் உண்மையை அறிய மக்கள் காலையிலும் மாலையிலும் அவ்வழியாக வரத் தொடங்கினார்கள். சுந்தரி, தவறாமல் அவர்களுக்கு எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தாள். நகரம் முழுவதும் இதைப் பற்றிய பேச்சு பேசப்பட்டது. பௌத்த பிக்ஷுக்களைப் பற்றியும், கௌதம புத்தரைப் பற்றியும் இழிவாகப் பேசத் தலைப்பட்டனர். ஒரு நாள் காலையில் சுந்தரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய உடம்பு, ஜேதவன ஆராமத்துக்கு அருகில் குப்பை மேட்டிலே கிடந்தது. மார்பில் கத்தியால் குத்துப்பட்டுப் பிணமாகக் கிடந்தாள். இச்செய்தியறிந்து ஏராளமான ஜனக்கூட்டம் கூடிவிட்டது. சுந்தரி சார்ந்திருந்த மதத்துத் துறவிகளும் பெருங் கூட்டமாய் அவ்விடம் வந்து விட்டனர். அவர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘எங்கள் மதத்துச் சுந்தரியை பௌத்தப் பிக்ஷுக்கள் கொலை செய்து விட்டார்கள்’ என்று குற்றம் சாட்டினர். பிறகு அந்தத் துறவிகள் கூட்டமாகச் சேர்ந்து அரசனிடம் முறையிடச் சென்றார்கள். அவர்கள் பின்னே ஜனக்கூட்டம் பெருந்திரளாகச் சென்றது. அரண்மனையை யடைந்து அரசன் அவைக்களம் சென்றார்கள். “எங்கள் மதத்தைச் சேர்ந்தவளாகிய சுந்தரி என்னும் சந்நியாசினியை, பௌத்த பிக்ஷுக்கள் கொலைசெய்து குப்பைமேட்டில் போட்டு விட்டார்கள். இது முறையா? தகுமா?” என்று முறையிட்டார்கள். “ஏன் கொலை செய்தார்கள்?” என்று கேட்டார் அரசர். “சுந்தரி அழகுள்ள ஸ்திரீ. அவளுக்கும் கௌதம புத்தருக்கும் சில காலமாகக் கூடாவொழுக்கம் ஏற்பட்டிருந்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அந்தக் குற்றத்தை மறைப்பதற்காக அவருடைய சீடர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்” என்று கூறினர் சமயவாதிகள். “இன்னார் கொலை செய்தார் என்பதற்குச் சான்று ஏதேனும் உண்டோ?” “இல்லை. இன்று காலையில் சுந்தரியின் பிணம் பௌத்த பிக்ஷுக்களுடைய குப்பைமேட்டில் கிடக்கிறது என்று கேள்விப் பட்டோம். போய்ப் பார்த்தோம். அங்கே பிணம் கிடக்கிறது” என்றார்கள். “நல்லது! குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது எங்கள் வேலை. நீங்கள் போய், உங்கள் மதத்துச் சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்யுங்கள்” என்று கூறினார் அரசர். சமயவாதிகள் திரும்பிவந்து, சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்வதற்காகச் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு போனார்கள். போகும்போது, “பௌத்த பிக்ஷுக்கள் சுந்தரியைக் கொன்று போட்டார்கள்” என்று தெருவில் கூச்சலிட்டுக் கொண்டு சென்றார்கள். பௌத்தர்களைப் பற்றியும் கௌதம புத்தரைப் பற்றியும் முன்னமே ஏற்பட்டிருந்த அபவாதத்தோடு இவர்கள் செய்த பிரசாரம், மக்களிடத்தில் வெறுப்பை யுண்டாக்கிற்று. பௌத்த பிக்ஷுக்களைப் பற்றிப் பலவாறு அவதூறு பேசத் தொடங்கினார்கள். போலித் துறவிகள், பகல் சந்நியாசிகள் என்றும் கொலைகாரக் கூட்டம் என்றும் மக்களை ஏமாற்றுகிறவர்கள் என்றும் நகரமெங்கும் பௌத்த பிக்ஷுக் களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். பிக்ஷுக்களைக் காண்கின்ற இடத்தில் அவர்களை நிந்தித்துப் பேசியும் இழிவுபடுத்தியும் அவமரியாதை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டது. பௌத்தர்களுக்கு முன்பிருந்த பெருமதிப்பும் கௌரவமும் மரியாதையும் பறிபோயின. நிந்தனையும் ஏசலும் கேலிப்பேச்சும் பிக்ஷுக்களின்மேல் வீசி எறியப்பட்டன. பிக்ஷுக்களின் நிலைமை மோசமாய்விட்டது. அவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அவர்கள் பகவன் புத்தரிடம் சென்று, தங்கள்மீது மக்கள் சுமத்தும் பழியையும் நிந்தனை களையும் கூறினார்கள். தங்கள்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை நீக்கா விட்டால், தங்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் வீண் பழியைப் போக்கா விட்டால், பௌத்த மதமே அழிந்து விடும் என்று முறையிட்டார்கள். பகவன் புத்தர் அமைதியோடு இவர்கள் கூறியதைக் கேட்டார். கடைசியில், “பிக்ஷுக்களே! பொய் கூறுகிறவர்கள் நரகம் அடைவார்கள். வீண் பழி சுமத்துகிறவர்களும் நரகம் அடைவார்கள். உண்மை வெளிப்படும். நீங்கள் அஞ்சவேண்டா” என்று அருளினார். நகரத்துக்கு வெளியேயிருக்கும் மதுபானக் கடையிலே வழக்கம்போலக் குடிகாரர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமா யிருந்தது. வெறியாட்டமும் கூச்சலும் ஏசலும் பிதற்றலும் பேச்சும் உச்சநிலையில் இருந்தன. சுந்தரியின் கொலையைப் பற்றிய பேச்சும் அங்குப் பேசப்பட்டது. “சுந்தரியைக் கொன்னுபூட்டாங்கடா. அவன்களை சும்மா விடரனா பார்” என்று ஒரு வெறியன் மார்தட்டி மீசையை முறுக்கிக் கொண்டு, குடிமயக்கத்தில் நிற்கமுடியாமல் தள்ளாடினான். அப்பொழுது இன்னொரு குடியன். “அடே, என்னடா சொன்னே! என்ன செய்வே நீ? கிட்ட வாடா. அவளெ குத்தின மாதிரி ஒரே குத்துலே யமலோகம் அனுப்பிடுறேன்” என்று சொல்லி, கத்தியால் குத்துவது போலக் கையை ஓங்கி அவனைக் குத்தவந்தான். ஆனால், குடி மயக்கத்தினால் கீழே விழுந்தான். எழுந்திருக்க முடியாமல் உடகார்ந்தபடியே மேலும் உளறினான். “டேய்! நான் யார் தெரியுமா? ஆம்பளேடா; சிங்கக் குட்டி!” என்று வீரம் பேசி மீசையை முறுக்கினான். “ஆமாண்டா பொம்பளெயே கொன்னுபூட்ட ஆம்பளேடா இவன்! ஆம்பளேயாம். ஆம்பளே மீசையெ பாரு” என்று பேசினான் மற்றவன். “என்னடா சொன்னே? இதோ பார் உன்னை கொன்னுடறேன்” என்று கோபத்தோடு எழுந்து பாய்ந்தான்; வெறி மயக்கத்தில் விழுந்தான். இந்தச் சமயத்திலே நாலைந்து ஆட்கள் அவர்களை அணுகி அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் சாதாரண ஆட்களைப்போலக் காணப்பட்ட போதிலும், உண்மையில் அரசாங்கச் சேவகர்கள்; சுந்தரியின் கொலையைப் பற்றிப் புலன் விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட சேவகர்கள். குடிகாரர்கள் அடுத்த நாள் நீதிமன்றத்திலே நிறுத்தப் பட்டனர். விசாரணையில், சுந்தரியைக் குத்திக்கொன்றவன் அந்தக் குடிகாரன் என்றும், மற்றக் குடிகாரன் அவனுக்கு உதவியாக இருந்தவன் என்றும் தெரிந்தது. “சுந்தரியை ஏன் கொலை செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு யாரும் எதிர்பாராத விடை வந்தது. பௌத்த மதத்தாருக்கு மாறாக இருக்கிற வேறு மதத்துச் சந்நியாசிகள் சிலர், தங்களுக்குச் காசு கொடுத்து, சுந்தரியைக் கொன்று பௌத்த சந்நியாசிகள் தங்கியிருக்கும் ஜேதவனத்துக் குப்பைமேட்டில் போட்டு விடும்படி சொன்னார்கள் என்றும் பெருந்தொகை கொடுத்தபடியால் அதற்குத் தாங்கள் உடன்பட்டு அவளைக் கொன்றுவிட்டதாகவும் சொன்னார்கள். இந்தச் செய்தி பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. பணம் கொடுத்துக் கொலை செய்யச் சொன்ன சந்நியாசிகள் இன்னின்னார் என்பதையும் அவர்கள் கூறினார்கள். அந்தச் சந்நியாசிகள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் முதலில் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறினார்கள். ஆனால், தப்ப முடியவில்லை. இவர்கள்தாம் தங்களை இரகசியமாக அழைத்துச் சுந்தரியைக் கொலை செய்யும்படித் தூண்டினாரகள் என்று கொலை செய்தவர்கள் சான்றுகளோடு கூறினார்கள். கடைசியில் சந்நியாசிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். “உங்கள் மதத்தைச் சேர்ந்த சந்நியாசினியாகிய சுந்தரியை நீங்களே கொலை செய்யச் செய்ததின் காரணம் என்ன?” என்ற கேள்விக்கு விசித்திரமான விடை கிடைத்தது. பௌத்த மதத்துக்கு நாட்டில் பெரிய செல்வாக்கும் மதிப்பும் இருக்கிறபடியினாலே, தங்கள் மதத்தை மக்கள் முன்போல் மதிப்பதில்லை. ஆகையினாலே, பௌத்தமதத்துத் தலைவராகிய புத்தர் மேல் கூடாவொழுக்கப் பழி சுமத்தி அவர் செல்வாக்கைக் குறைக்கவேண்டுமென்று அவர்கள் கருதினார்களாம். அதற்குச் சுந்தரியின் உதவியை நாடினார்களாம். அவளும் அதற்கு உடன்பட்டு நாட்டிலே பொய் வதந்தியை உண்டாக்கினாள். தனக்கும் புத்தருக்கும் கூடாவொழுக்கம் உண்டு என்பதாக மக்களைக் கருதும்படி செய்தாள். மக்களில் பெரும்பான்மையோர் இந்த வதந்தியை நம்பினார்கள். இந்தச் சமயத்தில் சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று மக்கள் நம்பினால், பௌத்தர்களுக்கு அடியோடு செல்வாக்கு இல்லாமல் போகும் என்று கருதிச் சுந்தரியைக் கொலை செய்யும்படி ஏற்பாடு செய்தார்களாம். இந்தச் செய்தி விசாரணையில் வெளியாயிற்று. கொலை செய்யத் தூண்டியவர்களையும் கொலை செய்தவர் களையும் நகரத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போய் இவர்கள் செய்த சூதுகளையும் புரட்டுக்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தும்படி அரசர், சேவர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படியே இவர்கள் நகரமெங்கும் சுற்றிக் கொண்டு வரப்பட்டனர். பிறகு, அவர்கள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டனை கொடுக்கப் பட்டனர். நகர மக்கள் உண்மை அறிந்த பிறகு ஆச்சரியமடைந்தார்கள். சுந்தரி வேண்டுமென்றே பொய்ப்பிரசாரம் செய்து மக்களை நம்பச் செய்ததை எண்ணி அவள் மேல் கோபங்கொண்டார்கள். பௌத்த பிக்ஷுகளின்மேல் மக்கள் வீணாக அவதூறு பேசி நிந்தனை செய்ததை எண்ணி மனம் வருந்தினார்கள். பௌத்த மதம் நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு அடைந்து சிறப்புப் பெறுவதைப் பொறாமல், வேறு மதத்துச் சந்நியாசிகள் வஞ்சனையாகச் செய்த சூது, வீண் பழி என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார்கள். அன்று முதல் பௌத்தர்களிடம் மக்களுக்கு முன் பிருந்ததை விட நல்ல அபிப்பிராயமும் நன்மதிப்பும் ஏற்பட்டன. அன்பாகவும் ஆதரவாகவும், புத்தரைப் போற்றினார்கள். 11. அஜாதசத்துருவின் அதிகார வேட்கை பகவன் புத்தருக்கும் அவருடைய பௌத்த மதத்திற்கும் நாட்டிலே அதிகச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. மகத நாட்டு மன்ன ராகிய பிம்பசார அரசர், புத்தருடைய தொண்டராக இருந்து பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காகப் பல பெருந் தொண்டுகள் செய்து வந்தார். ஆகவே, மற்ற மதங்களைவிடப் பௌத்த மதம் அதிகப் புகழும் பெருமையும் மதிப்பும் பெற்று இருந்தது. புத்தருடைய மருகன் தேவத்தன் என்பவன் பௌத்த மதத்தில் சேர்ந்து பிக்ஷுவாக இருந்தான். பௌத்த மதத்திற்கிருந்த புகழையும் பெருமையையும் கண்டு இவனுக்கு ஓர் ஆசை - தகுதியற்ற ஒரு பேராசை உண்டாயிற்று. பிக்ஷு சங்கத்திற்கும் பௌத்த மதத்திற்கும் தானே தலைவனாகவேண்டும். பகவன் புத்தர் அடைந்துள்ள சிறப்பை யும் புகழையும் தான் அடைய வேண்டும் என்பதுதான் இவனுக்கு உண்டான பேரவா. இந்தப் பதவிக்குச் சிறிதும் தகுதியற்ற இவன், இந்தப் பதவியில் அமர உறுதி செய்துகொண்டான். ஆனால், பகவன் புத்தரும் பிம்பசார அரசரும் உயிரோடு உள்ளவரையில் தனக்கு இந்தத் தலைமைப் பதவி கிடைக்காது என்பதை நன்றாக அறிந்தான். ஆகவே பகவன் புத்தரைக் கொன்றுவிட்டு அவர் இடத்தைத் தான் கைப்பற்றவும், பிம்பசார அரசனைக் கொன்றுவிட்டு அவர் இடத்தில் அவருடைய மகனும் தன் சீடனுமாகிய அஜாதசத்துருவை அரசனாக்க வும் எண்ணங் கொண்டான். இந்த எண்ணத்தில் உறுதியும் ஊக்கமும் கொண்டு, தன்னுடைய கருத்து நிறைவேறும் வகையில் சுறுசுறுப்பாக வேலைசெய்யத் தொடங்கினான். அரசகுமாரனான அஜாதசத்துரு அரண்மனையிலே தனித் திருந்த சமயத்தில் தேவதத்தன் சென்று அவனைக் கண்டான். தேவதத் தனிடத்தில் அஜாதசத்துரு பயபக்தியுடையவன். அவனிடத்தில் மதிப்புடையவன்; தேவதத்தனும் அரச குமாரனைத் தன் சீடன் முறையில் வைத்துப் பழகிவந்தான். அஜாதசத்துரு, தேவதத்தனைப் போலவே இயற்கையில் தற்பெருமையும் அதிகார ஆசையும் உள்ளவன். தேவதத்தன், ஆசை வார்த்தைகளைப் பேசி அஜாத சத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையைத் தூண்டிவிட்டான். “நீ அரசகுமாரன், இளைஞன், ஊக்கமும் ஆற்றலும் உள்ள வீரன்! நீ அரசனாக இருந்தால் மற்ற அரசர்கள் எல்லோரையும் வென்று நீ சக்கர வர்த்தியாக விளங்குவாய். இந்தக் கிழ அரசர், பிம்பசார அரசர், சிம்மா சனத்தில் அமர்ந்து வீணாகக் காலங்கழிக்கிறார். உன்னைப் போன்ற வாலிபன் அன்றோ அரசனாக அமர வேண்டும்? நீ ஏன் அரசனாகக் கூடாது? உன்னுடைய ஆற்றலையும் வீரத்தையும் திறமையையும் வீணாக்கிவிடுகிறாய். நீ மகத தேசத்தின் அரசனாகவும் நான் பௌத்த மதத்தின் தலைவனாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கிழவர்களாகிய பிம்பசார அரசனும் பகவன் புத்தரும் ஏன் பதவிகளில் இருக்கவேண்டும்? இந்தப பதவிகளில் நம்மைப் போன்ற இளைஞர்கள் அமர்ந்தால் எவ்வளவோ காரியங்களைச் செய்யலாமே” என்று பேசினான். தேவதத்தன் பேசிய வார்த்தைகள், அஜாதசத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையையும் அரச பதவி ஆசையையும் தூண்டிவிட்டன. தன் தந்தையாகிய பிம்பசார அரசரைப் பதவியிலிருந்து நீக்கி மகத நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து, அரசாட்சியையும் அதிகாரத்தையும் தான் செலுத்தவேண்டும் என்னும் ஆசைத் தீ அவன் மனத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிற்று. உடனே அவன் செயல் ஆற்றத் தொடங்கினான். குற்றுவாள் ஏந்திய கையுடன் அரண்மனையிலேயே அஜாதசத் துரு இரவும் பகலும் சுற்றித் திரிந்தான். அவனுடைய கண்களும் நடவடிக்கையும் அவன் ஏதோ தகாத செயலைச் செய்யத் துணிந்தவன் போலக் காணப்பட்டன. பிம்பசார அரசர் தனித்திருக்கும்போது அந்த அறையிலே குற்றுவாளுடன் புகுவதற்குப் பல முறை முயன்றான். அவன் அவ்வாறு நுழை வதைக் காவல் சேவகர் தடுத்துவிட்டனர். அரச குமாரனுடைய நடவடிக்கைகள் காவல் சேவகர் மனத்தில் ஐயத்தை உண்டாக்கின. அவர்கள் அரசனிடம் சென்று இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் இவர்கள் கூறியதை நம்பவில்லை “அரச குமாரன் இவ்வாறு செய்யமாட்டான். நீங்கள் ஐயப்படுவது தவறு” என்று அவர் கூறினார். அஜாதசத்துரு தன் எண்ணத்தை முடிக்க ஊக்கமாக இருந்தான். கட்டாரியும் கையுமாக அரசர் இருக்கும் இடங்களில் நடமாடிக் கொண்டிருந்தான். சேவகர் அவனைக் காணும்போது, அவர்கள் முகத்தில் விழிக்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். காவல் சேவகருக்கு அரசகுமாரன் மீது மேன்மேலும் ஐயம் அதிகப்பட்டது. அவர்கள் மற்றும் ஒரு முறை அரசகுமாரன் நடவடிக்கையைப்பற்றிஅரசரிடம் கூறினார்கள். அரசர் அஜாதசத்துருவை அழைத்து, “குமார! கட்டாரியும் கையுமாக அரண்மனையிலே இரவும் பகலும் நடமாடுவதாகக் காவல் சேவகர் கூறுகிறார்கள். நீ யாரையோ கொலை செய்ய எண்ணங் கொண்டிருப்பதாக அவர்கள் ஐயப்படுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் அல்லவா?” என்று கேட்டார். “அவர்கள் கூறுவது உண்மை” என்றான் அரச குமாரன். இந்த விடை அரசருக்கு வியப்பை யுண்டாக்கிற்று. “நீ ஏன் அவ்வாறு செய்கிறாய்?” “தங்களைக் கொல்வதற்காக!” “எதற்காகக் கொல்லவேண்டும்?” “அரச பதவிக்காக.” “பிள்ளையின் பகைமையோடு அரசாள்வது சிறந்ததன்று. நீ விரும்புவதுபோல உனக்கு ஆட்சியைத் தருகிறேன். இன்று முதல் நீயே மகத தேசத்து மன்னன்!” அரசர் அப்பொழுதே அஜாதசத்துருவிடம் அர சாட்சியைக் கொடுத்துவிட்டார். அன்று முதல் மகத தேசத்தின் மன்னன் அஜாதசத்துரு என்பதை நாட்டில் பறையறைந்து தெரிவிக்கச் செய்தார். அஜாதசத்துரு அரசாட்சியைப் பெற்றுக்கொண்டவுடன், தன் தந்தையாகிய பிம்பசார மன்னனுக்கு உயர்ந்த மரியாதைகளைச் செய்தான். ஆனால், தேவதத்தனுக்கு இது பிடிக்கவில்லை. பிம்பசார அரசன் உயிரோடு உள்ளவரையில் தன் எண்ணம் நிறைவேறாது என்று அவன் கருதினான். அவன், அரச பதவியில் இருக்கும் அஜாத சத்துருவிடம் வந்து தனது தீய எண்ணங்களை அவனுக்குக் கூறி அவனை மேலும் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டினான். “நீ அரசாட்சியைப் பெற்றுக் கொண்டதினாலே மட்டும் பயன் இல்லை. உன் தந்தை பிம்பசார அரசனிடம் இன்னும் அதிகாரம் இருக்கிறது. அவரைப் பின்பற்றி அவரை ஆதரிப்பவர் பலர் நாட்டில் இருக்கிறார்கள். உன் தந்தை உயிருடன் இருக்கிற வரையில், உனக்கு முழு அதிகாரமும் கிடைக்காது. அது போலவே, புத்தருடைய செல்வாக்கு நாட்டிலே பலமாக இருக்கிறது. அவரை ஒழிக்கும் வரையில் எனக்கும் பௌத்த மதத் தலைமைப் பதவி கிடைக்காது.......” என்று பற்பல கொடிய யோசனைகளைக் கூறினான். அதிகாரங்களைப் பெறுவதற்குப் பேரவாக் கொண்டிருந்த அரசகுமாரன், தேவதத்தனுடைய யோசனைகளைச் சிந்தித்துப் பார்க்க வில்லை. முழுவதும் ஏற்றுக்கொண்டான். தன் தந்தையைக் கொன்று விட மனம் துணிந்தான். பகவன் புத்தரைக் கொல்வதற் காகத் தேவதத்தனுக்கு உதவி செய்யவும் துணிந்தான். தன் தந்தையாகிய பிம்பசார அரசனைப் பட்டினி போட்டுக் கொல்ல முடிவு செய்தான். ஆகவே, தன் தந்தையைச் சிறைச் சாலையில் அடைத்து அவருக்கு ஒருவரும் உணவு கொடுக்கக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான். அரண்மனையின் ஒருபுறத்திலே பிம்பசார அரசன் அமைத் திருந்த புத்த சேதியத்தை யாவரும் தொழக்கூடா தென்றும் அதற்குச் சிறப்புச் செய்யக்கூடாதென்றும் கண்டிப்பான கட்டளை யிட்டான். இந்தப் புத்த சேதியத்திலே (சிறு கோயிலிலே) பிம்பசார அரசர், பகவன் புத்தருடைய, தலைமயிர் ஒன்றைப் பொற் பேழையில் வைத்து அதை நாள்தோறும் போற்றிச் சிறப்புச் செய்துவந்தான். அரண்மனை யில் இருந்தவர் எல்லோரும் இந்தச் சேதியத்தைத் தொழுது வந்தார்கள். புத்தருடைய செல்வாக்கைக் குறைக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு அஜாதசத்துரு இந்தச் சேதியத்தை ஒருவரும் தொழக்கூடாதென்று கட்டளை யிட்டான். அரசனுடைய ஆணைப்படி ஒருவரும் சேதியத்திற்குச் செல்லவில்லை. சேதியம் பாழடைந்து காணப்பட்டது. திருவலகிட்டுத் தரையைத் தூய்மைப்படுத்தாதபடியினாலே புழுதி படிந்திருந்தது. திருவிளக்கு ஏற்றாதபடியினாலே இருளடைந் திருந்தது. அரண்மனையிலே ஊழியம் செய்யும் சிறீமதி என்பவள் பகவன் புத்தரிடம் பற்றுடையவள்; மிகுந்த பக்தியுடையவள்; சமயம் கிடைக்கும்போதெல்லாம் புத்தருடைய உபதேசங்களைக் கேட்டு இன்புறுகிறவள். சிறீமதி, சேதியம் பாழடைந்து கிடப்பதைக் கண்டாள். அதன் காரணத்தையும் அறிந்தாள். மனம் வருந்தினாள். அரசன் ஆணையை மீறிச் சேதியத்தைச் சிறப்புச் செய்யத் துணிந்தாள். இப்படிச் செய்வதனாலே தன் உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதை இவள் நன்கறிவாள். உயிரைக் கொடுக்கவும் முடிவு செய்து கொண்டாள். சிறீமதி சேதியத்துக்குச் சென்றாள். சென்று, திருவல கிட்டுத் தூய்மைப்படுத்தினாள். விளக்கு ஏற்றி வைத்தாள். மலர்களை மாலையாகக் கட்டி அதனைக் சூட்டி அழகு படுத்தினாள். சேதியம் பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு மனம் பூரித்தாள். தலை வணங்கிப் பணிந்து தொழுதாள். அப்போது அவளுடைய மனத்திலே அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிற்று. சிறீமதி சேதியத்திற்குச் சிறப்புச் செய்து வணங்கிய செய்தி அஜாதசத்துருவின் காதுக்கு எட்டிற்று. அரண் மனை ஊழியக்காரி ஒருத்தி தன் ஆணையை மீறி நடந்ததற்காக அவன் அடங்காச் சினங்கொண்டாள். அவளை அழைத்துவரும்படி ஆணை யிட்டான். சிறீமதி தனக்குக் கிடைக்கப்போகிற தண்டனை இன்ன தென்பதை நன்றாக அறிவாள். ஆனாலும், அவள் சிறிதும் கவலைப் படாமல் மகிழ்ச்சியோடு அரசன் முன் சென்று வணங்கி நின்றாள். அஜாதசத்துருவின் கண்களில் தீப்பொறி பறந்தன. “நமது கட்டளையை மீறி நீ சேதியத்திற்குச் சிறப்புச் செய்தாயா?” என்று கேட்டான். “ஆம். அரசே! அரசருடைய கட்டளையை மீறி நடந்தேன். ஆனால், பழைய அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்.” இறுமாப்புள்ள அஜாதசத்துருவுக்கு, இவள் கூறிய விடை பெருஞ்சினத்தையுண்டாகிற்று. அவன் கோபத்தினால் ஆவேசங் கொண்டான். “ஆ ... ...” என்று எழுந்தான். அதே சமயத்தில் அவனுடைய இடதுபுறத்து அரையில், உறையிலே கிடந்த குற்றுவாள் அவனுடைய வலக்கையில் காணப்பட்டது. அடுத்த வினாடியில், கட்டாரி அவள் மார்பிலே பாய்ந்தது. இந்த முடிவைச் சிறீமதி முன்னமே அறிந்து எதிர்பார்த் திருந்தவள் ஆகையால், அவள் வியப்படையவில்லை. வருத்தம் அடையவும் இல்லை. வேரற்ற மரம்போல் கீழேவிழுந்தாள். குத்துண்ட மார்பிலிருந்து குபுகுபுவென்று சூடான சிவந்த இரத்தம் வெளிப்பாய்ந் தோடியது. உடலைவிட்டுப் பிரியும் உயிர் சிறிதுநேரம் துடிதுடித்தது. ஆனால், என்ன வியப்பு! அவள் முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் காணப்பட்டன. தான் சாகிறதற்காக அவள் வருத்தம் அடையவில்லை. ‘பகவன் புத்தருடைய சேதியத்தைச் சிறப்புச் செய்தேன். விளக்கேற்றி வணங்கினேன்’ என்னும் எண்ணம் அவளுக்கு மன அமைதியைத் தந்தது. பிறகு சில நிமிடங்களில் அவள் உயிர் உடலை விட்டு நீங்கியது. அவள் பிணமானாள். ஆனால்...! அந்தச் சிரிப்பும் மகிழ்வும் அமைதியும் அவள் முகத்தை விட்டு நீங்கவில்லை. 12. நச்சுப் பாம்பு நள்ளிரவு; சிராவத்தி நகரத்தின் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டுச் சேவகர் கண்ணுறங்காமல் காவல்புரிகின்றனர். நகர மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் அமைதி. இந்த நள்ளிரவிலே கள்ளர் சிலர் கோட்டைக்குள் புகுந்தார்கள். மதில்சுவரில் ஏறி அவர்கள் உள்ளிறங்கவில்லை. நகரத்துக் கழிவுநீர், அகழியில் விழுகிற பெரிய சுருங்கை (சாக்கடை) வழியாகப் புகுந்து கள்ளர்கள் நகரத்திற்குள்ளே நுழைந்தார்கள். காவல் சேவகர் கண்களிற்பாடாமல், அந்நகரத்துச் செல்வப் பிரபுவின் மாளிகையை அடைந்தார்கள். சுவரில் கன்னம் வைத்து உள்ளே புகுந்து பொற் காசுகளையும் தங்க நகைகளையும் இரத்தினமாலை, முத்துமாலை முதலியவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு மறுபடியும் சாக்கடை வழியே அகழியில் இறங்கி வெளியே போய்விட்டார்கள். போகும் கள்ளர்கள் நகரத்துக்கப்பால் உள்ள வயல்களின் வழியாக நடந்தார்கள். வைகறைப்போது ஆயிற்று. வயலில் ஒருபுறம் உட்கார்ந்து, களவாடிய பொருள்களைப் பங்கிடத் தொடங்கினார்கள். கள்ளர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிடுவதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும்போது சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டது. “சுருக்காக நடங்கடா” என்னும் குரலும் கேட்டது. கள்ளர்கள், அரச சேவகர் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று கருதி அச்சங்கொண்டு எழுந்து ஓட்டம் பிடித்தார்கள். உயிருக்குத் தப்பி ஓடுகிற அவசரத்தில் பொற்காசு மூட்டையையும் முத்துமாலைகளை யும் விட்டு ஓடிவிட்டார்கள். கள்ளர்கள் நினைத்ததுபோல நகரக் காவலர் அங்கு வரவில்லை. அங்கு வந்தவன் அந்த வயலுக்குரிய குடியானவன். விடியற்காலையில் வயலை உழுவதற்காக அவன் எருதுகளை ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் எருதுகளிடத்தில் அன்புள்ளவன். அவன் எருதுகளிடம் “சுருக்காக நடங்கடா” என்று கூறியதைத் தான் கள்ளர் தங்களைச் சேவகர் பிடிக்க வருவதாகக் கருதி ஓட்டம் பிடித்தார்கள். குடியானவன் தன் வயலுக்கு வந்ததும் எருதுகளை ஏரில் பூட்டி நிலத்தை உழத் தொடங் கினான். கள்ளர் தன் வயலில் தங்கியிருந்ததும், தன் வருகையை யறிந்து அவர்கள் ஓடிவிட்டதையும் அவன் அறியவில்லை. தன் வயலில் ஒரு பக்கத்திலே பொற்காசு மூட்டையும் முத்து மாலையும் கிடப்பது அவனுக்குத் தெரியாது. வைகறை இருட்டிலே வயலை உழுது கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பகவன் புத்தர் சிராவத்தி நகருக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்திலே எழுந்தருளியிருந்தார். விடியற் காலையில் ஆசனத்தில் அமர்ந்து, அன்று உலகத்திலே நடைபெறப் போகிற விசேஷ காரியங்களைத் தமது ஞானக்கண்களாற் காண்பது அவருடைய வழக்கம். இவ்வழக்கப்படி பகவன் புத்தர் ஞானக் காட்சியில் அமர்ந்திருந்தபோது, கள்ளர்கள் விட்டுச் சென்ற பொற்காசு மூட்டையினால் இந்தக் குடியானவனுக்குக் கொலைத் தண்டனை கிடைக்கப்போவதை அறிந்தார். குற்றமற்ற இக்குடியானவன் வீணாக உயிரிழக்கப்போவதைத் தடுக்கவேண்டும் என்று திருவுளங் கொண்டார். தம்முடைய அணுக்கத் தொண்டரான ஆனந்தரை விளித்து “ஆனந்த! சற்று உலாவி வரலாம் வா” என்றார். “அப்படியே” என்று ஆனந்தர் பகவருடைய கைத்தடியைக் கொண்டுவந்து கொடுத்து வணங்கினார். இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள். குடியானவன் உழுது கொண்டிருந்த வயலின் பக்கமாக அவர்கள் வந்தார்கள். பகவரைக் கண்ட குடியானவன் உழுவதை நிறுத்தி, அவரிடம் வந்து வணங்கிக் கும்பிட்டான். பிறகு ஏரைப் பிடித்து முன்போல உழத்தொடங்கினான். பகவர், ஆனந்தருடன் நடந்தார். ஒரு பக்கத்தில் பணப்பையும் முத்து மாலையும் கிடப்பதைக் கண்டார். அவற்றை ஆனந்தருக்குக் காட்டி, “ஆனந்த! இதோ பார். ஒரு நச்சுப்பாம்பு” என்று கூறினார். அவற்றைக் கண்ட ஆனந்ததேரரும், “ஆமாம், பகவரே! கொடிய நச்சுப்பாம்பு” என்று சொன்னார். இவ்வாறு பேசிக் கொண்டே இருவரும் போய்விட்டார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட குடியானவன், தனக்குள் எண்ணினான்; ‘இந்த வயலைக் காலா காலமாக உழுது பயிரிட்டு வருகிறேன். இதுவரையில் ஒரு பாம்பையும் இங்கு நான் கண்டதில்லை இவர்கள் கூறுகிறபடி இங்கு நச்சுப் பாம்பு இருக்குமோ! போய் அதைக் கொன்றுபோடுகிறேன்’ என்று பலவாறு நினைத்து அவன் உழுவதை நிறுத்தித் தாற்றுக்கோலைக் கையில் எடுத்துக்கொண்டு அவ்விடத் திற்குப் போனான். போனவன், அங்குப் பாம்பைக் காணவில்லை. பொற்காசுகள் நிறைந்த பணப்பையும் முத்துமாலையும் கிடப்பதைக் கண்டான். கண்டு திகைத்தான். இதைத்தான் ‘நச்சுப் பாம்பு’ என்று பகவன் புத்தரும் ஆனந்ததேரரும் கூறினார்கள் என்று அறிந்தான். என்ன செய்வதென்று தோன்றாமல் தயங்கினான். பிறகு, மண்ணை வாரி அதன் மேல் போட்டுவிட்டுப் பழையபடி ஏர் உழுது கொண்டிருந்தான். பொழுது விடிந்தவுடன் சிராவத்தி நகரத்துச் சீமான் மாளிகையில் எல்லோரும் விழித்துக்கொண்டார்கள். மாளிகையில் கன்னம் வைக்கப் பட்டிருப்பதையும் பொன்னும் பொருளும் களவாடப்பட்டிருப்பதையும் அறிந்தார்கள். கள்வரைக் கண்டு பிடிப்பதற்காகப் பிரபுவின் வேலைக் காரர்கள் புறப்பட்டுப் பல திசைகளிலும் சென்றார்கள். அவர்களில் சிலர் நகரத்துக்கு வெளியே வயல் பக்கமாகக் காலடிச் சுவடுகள் இருப்பதைக் கண்டு அவற்றின் வழியே போனார்கள். கடைசியில் கள்வர் தங்கியிருந்த வயலுக்கு வந்தார்கள். அங்கு வயலை உழுது கொண்டிருந்த குடியானவனையும் ஒரு புறத்தில் அரைகுறையாக மறைக்கப்பட்ட பணப் பையையும் கண்டார்கள். குடியானவன் மேல் அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இரவில் களவாடிய பணமூட்டையை வயலில் வைத்துவிட்டு, தன்னைச் சந்தேகப் படாமலிருப்பதற்காக ஏர் உழுகிறான் என்று கருதினார்கள். பணப்பையையும் முத்து மாலையை யும் எடுத்துக்கொண்டு குடியானவனையும் பிடித்துக் கொண்டு போனார்கள். போய் அரசன் முன்பு நிறுத்தினார்கள். அரசர் வழக்கை விசாரணை செய்தார். கிடைத்த சான்றுகளைக் கொண்டு குடியானவன் கள்வனே என்று தீர்மானித்து, அக்காலத்து முறைப்படி களவுக் குற்றத்திற்குக் கொலைத்தண்டனை கொடுத்தார். ஆகவே, சேவகர் குடியானவனைக் கொல்லக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோனார்கள். போகும் வழியில் அவனை அடித்துக் கொண்டேபோனார்கள். சேவகர் அடித்த போதெல்லாம் குடியானவன், அன்று காலையில் புத்தர் பெருமானும் ஆனந்ததேரரும் பேசிய மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறினான். “இதோ பார். ஆனந்த! நச்சுப்பாம்பு.” “ஆமாம். பகவரே! கொடிய நச்சுப் பாம்பு.” இந்த மொழிகளைத் தவிர அவன் வேறொன்றையும் கூறவில்லை. இதைக் கேட்ட சேவகர் வியப்படைந்தனர். “புத்தர் பகவான் பெயரையும் ஆனந்ததேரர் பெயரையும் அடிக்கடி நீ சொல்லுவதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்கள். “இந்த இரகசியத்தை அரசரிடம் தவிர வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது” என்றான் குடியானவன். “இதில் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது போலும்” என்று சேவகர் தீர்மானம் செய்து, அவனை மறுபடியும் அரசர் முன்பு கொண்டுபோய், நடந்த செய்தியைக் கூறினார்கள். அரசர், “நீ கூறியதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார். குடியானவன்அன்று காலையில் நடந்ததைக் கூறினான். தான் விடியற்காலையில் வயலுக்குச் சென்று உழுது கொண்டிருந் ததையும், அப்போது பகவன் புத்தர் ஆனந்ததேரருடன் அங்கு எழுந்தருளி வந்ததையும், அவர்கள் அங்கிருந்த பணப்பையைக் கண்டு பேசிக் கொண்டவற்றையும் விளக்கமாகக் கூறினான். கூறி “அவர்கள் பண மூட்டையை நச்சுப்பாம்பு என்று சொன்னது என் விஷயத்தில் உண்மை யாய் விட்டது. நான் பணத்தைக் களவு செய்யாதவனாக இருந்தும் இந்தப் பணம் என் உயிருக்கு நஞ்சாக இருக்கிறது” என்று சொன்னான். இதைக்கேட்ட அரசர் தமக்குள் யோசித்தார். ‘இந்த ஆள், உலகத்துக்கே பெரியவர்களாக உள்ளவர்களைச் சான்று கூறுகிறான். இவனைப் பிடித்து வந்த சேவகர் கூறிய சான்றுகளோ இவன் கள்வன் என்பதைத் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இவன்மீது தவறாகத் திருட்டுக் குற்றம் சாற்றப்பட்டிருக்குமோ? இதைத் தீர விசாரிக்கவேண்டும்’ என்று இவ்வாறு யோசித்து அரசர், குடியானவனைக் கொலை செய்யாமல் சிறையில் வைக்கும்படி கட்டளை இட்டார். அன்று மாலை அரசர், புத்தர் பெருமான் எழுந்தருளியிருந்த சோலைக்குச் சென்று, பகவரை வணங்கி, “பகவரே! இன்று காலையில் தாங்கள் ஒரு குடியானவன் உழுது கொண்டிருந்த வயலுக்கு எழுந்தருளினீர்களோ” என்று கேட்டார். “ஆமாம், அரசரே!” “அங்குத் தாங்கள் என்ன கண்டருளினீர்கள்?” “பொற்காசு நிறைந்த பணப்பையையும் முத்து மாலையையும் கண்டோம்.” “அப்பொழுது தாங்கள் என்ன அருளிச் செய்தீர்கள்?” தாம் ஆனந்தரிடம் கூறியதையும் அதற்கு ஆனந்தர் மறுமொழி யாகக் கூறியதையும் பகவர், அரசனுக்குத் தெரிவித்தருளினார். அரசருக்கு உண்மை புலப்பட்டது. குடியானவன் களவு செய்தவன் அல்லன். வேறு யாரோ களவு செய்து அவன் வயலில் போட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். பகவன் புத்தர் பணப்பையைப் பார்த்த பிறகுதான் குடியானவன் அதைக் கண்டிருக்கிறான். குடியானவன் களவாடினவ னாக இருந்தால் அவ்விதமாக எல்லோர் கண்களுக்கும் படும்படி அதை வைத்திருக்க மாட்டான். இவ்வாறு யோசித்து அரசர், பகவரிடம் இவ்வாறு கூறினார்: “பகவரே! இந்தக் குடியானவன் தங்கள் திருப் பெயரைச் சான்று கூறியபடியால் உயிர் பிழைத்தான். இல்லையேல் அவன் உயிர் இன்றோடு முடிந்திருக்கும்” என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றார். அரண்மனைக்குச் சென்று, குடியானவன் திருட்டுக் குற்றம் செய்தவன் அல்லன் என்றும், அவனை உடனே விடுதலை செய்யும் படியும் சேவகருக்குக் கட்டளையிட்டார். குடியானவன் உயிர் பிழைத்துப் பகவன் புத்தரை வாழ்த்திக்கொண்டே வீடு சென்றான். 13. மலையில் உருண்ட பாறை இராசகிருக நகரத்துக்கு அருகிலே குன்றுகளும் காடுகளும் தோட்டங்களும் தோப்புகளும் இருந்தன. ஆகவே, இவ்விடத்தில் இயற்கை அழகும் இனிய காட்சிகளும் நிறைந்திருந்தன. கழுக்குன்றம் என்னும் பொருள் உள்ள கிச்சரகூடமலையும், அதன்மேல் வெளு வனம் என்னும் மூங்கில் காடும் இருந்தன. இந்தக் சிச்சரகூடமலையில் இருந்த வெளுவனத்திலே பகவன் புத்தர் தமது பிக்ஷு சங்கத்துடன் தங்கியிருந்தார். இந்த மலைக்கு அருகிலே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. முனிவர்மலை என்னும் பொருள் உள்ள இசிகிலி அல்லது இசிகிரி என்னும் குன்று இன்னொரு புறம் காட்சியளித்தது. சித்திரகூட பர்வதம் என்னும் குன்று மற்றொரு பக்கத்தில் அமைந்திருந்தது. இம் மலையின் மேல் காளசிலை என்னும் பெயருள்ள கரிநிறமுள்ள பெரும் பாறை பார்ப்பவர் உள்ளத்திலே அச்சத்தையும் வியப்பையும் உண்டாக்கிக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் பண்டவமலை இருந்தது. மத்தருச்சி என்னும் இடமும் மிருகதாய வனமும் இங்கு இருந்த மனத்திற்கினிய காட்சிக்குகந்த இடங்கள். மலைகளும் காடுகளும் தோப்புகளும் தோட்டங்களும் சூழ்ந்திருந்த இந்த இடம் இயற்கைக் காட்சியின் எழிலும் வளமும் அமைந்திருந்தது. சூரியன் மறைகிற மாலை நேரத்திலே, செவ்வானம் பலவிதமான நிறங் களோடு காட்சி வழங்குகிற அந்திப்பொழுதிலே, இவ்விடம் பேரழகு பெற்று விளங்கிற்று. எழில் நிறைந்த இந்த இடத்திலே, மாலை நேரத்திலே பகவன் புத்தர் தமது சீடர்களுடன் நடந்து உலாவுவது வழக்கம். ஒரு நாள், மாலை நேரத்திலே சூரியன் மேற்கே மறைந்து கொண்டு பழுக்கக் காய்ச்சிய தங்கத்தகடு போல் காணப் படுகிறான். பற்பல நிறங்களோடு செவ்வானம் காட்சியளிக்கிறது. அடர்ந்த மரங்களிலே பறவை இனங்கள் கூட்டங்கூட்டமாக அமர்ந்து அடங்கு கின்றன. அவ்வாறு அடங்கும் பறவைகள் கலகல வென்று சிலம்பொலி போல இசைக்கும் ஆரவாரம் எங்கும் கேட்கிறது. வெண்ணிறக் கொக்குகள் கூட்டங்கூட்டமாக ஆகாயத்தில் சுற்றிச் சுற்றிப் பறந்து உயரமான மரத்தின்மேல் ஒருங்கே அமர்வதும், மீண்டும் ஒருங்கே கிளம்பி வட்டமிட்டுப் பறந்துபோய் மற்றொரு மரத்தில் அமர்வதுமாக இருக்கின்றன. பகல் முழுதும் அடங்கிக் கிடந்த வௌவால் பறவைகள் வெளிப்பட்டு ஆகாயத்திலே பறக்கத் தொடங்கின. மெல்லிய காற்று இனிமையாக வீசிக்கொண்டிருக்கிறது. இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன. அமைதியும் அழகும் ஆனந்தமும் ஆகிய பண்புகள் இங்குக் குடி கொண்டிருக்கின்றன. பகவன் புத்தர், தமது வழக்கப்படி இதோ நடந்து போகிறார். தொடர்ந்து, சற்றுப் பின்னால், சில சீடர்கள் நடக்கிறார்கள்; கிச்சரக்கூட மலையின் அடிவாரத்திலே இவர்கள் நடக்கிறார்கள். மலைச்சரிவில் மரங்கள் இல்லாத இடம். சூரியன் மறைந்து விட்டான். இருள் சூழ்கிறது. செவ்வானம் ஒளி மழுங்கிக் கொண்டிருக்கிறது. பறவைகள் மரங்களில் சந்தடியின்றி அடங்கி விட்டன. அமைதியான இந்த நேரத்திலே மலை யுச்சியிலே கடகடவென்று ஒரு பயங்கர ஓசை கேட்கிறது. எல்லோரும் மலையுச்சியைப் பார்க்கிறார்கள். அந்தோ! கரிய பெரும் பாறை ஒன்று மலைமேலிருந்து உருண்டு வேகமாக வருகிறது. அது உருண்டு விழப் போகிற இடத்தில்தான் பகவன் புத்தர் நடக்கிறார்! பாறை அவரை உருட்டி நசுக்கி விடுவது உறுதி. மலைச்சரிவிலே பாதி தூரம் பாறை உருண்டுவந்துவிட்டது. இதைக் கண்ட சீடர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. அடுத்த நிமிடத்தில் பாறை பகவன் புத்தர் மேல் உருண்டு விழப்போகிறது! சீடர்கள் இமை கொட்டாமல் வாயடைத்து மனம் துடித்து நிற்கிறார்கள். நல்லவேளை கடகடவென்று உருண்டுவரும் பாறை திடீரென்று இடை வழியிலே மலைச்சரிவிலேயே நின்றுவிட்டது! ஆனால், சிதறுண்ட சிறு கற்கள் வேகமாக உருண்டு வந்தன. அவைகளில் ஒரு கல் பகவரின் காலில்பட்டது. காயம்பட்டு இரத்தம் வடிகிறது. வலி பொறுக்க முடியாமல் அவர் தரையில் உட்கார்ந்தார். சீடர்கள் ஓடித் தாங்கிக்கொள்கிறார்கள். வேகமாக உருண்டுவந்த பாறை, மலைச்சரிவிலே தலை தூக்கி நின்ற இரண்டு பாறைகளுக்கு இடையிலே அகப்பட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டது. ஆனால், அது உருண்டுவந்த வேகத்தினாலே சில பாறைக்கற்கள் சிதறி ஓடின. அவ்வாறு சிதறிய கற்களில் ஒன்று தான் பகவர் காலைக் காயப்படுத்திவிட்டது. அந்தப் பெரும்பாறை அங்கே தடைப்படாமல் உருண்டு வந்திருக்குமானால்.....! இவ்வளவு பெரிய பாறை மலையுச்சியிலிருந்து எவ்வாறு உருண்டு வந்தது? இதை உருட்டித் தள்ளியவர் யார்? மழை காலமாக இருந்தால் வெள்ளத்தினால் மண் இளகி பாறை உருண்டது என்று கருதலாம்; அல்லது இடி விழுந்து பாறை புரண்டது என்று நினைக்கலாம். இதுவோ மழையற்ற வெயில் காய்கிற வேனிற்காலம்; பாறை தானாகவே உருண்டுவந்தது என்பது நம்பக் கூடியதன்று. சீடர்கள் மலையுச்சியை நோக்கினார்கள். மலையுச்சியிலே தேவ தத்தன் நின்றுகொண்டு மலையடிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறான். பகவன் புத்தரைக் கொல்லச் சதிசெய்து, மலையுச்சியிலிருந்து பாறையைப் புரட்டித் தள்ளியவன் அவன் தான். தான் கருதிய காரியத்தைப் பாறை செய்து முடித்ததா என்பதை அறிய, பாறையை உருட்டித்தள்ளிய அவன், மேலிருந்த படியே கீழே பார்க்கிறான். முன்பு இரண்டு முறை, ஆட்களை ஏவிப் புத்தரைக் கொல்ல முயற்சிசெய்து அந்த முயற்சிகளில் தோல்வியுற்றான். இப்போது தானே தன் கைகளால் பாறையை உருட்டித்தள்ளி அவரைக் கொல்ல முயன்றான். ஆனால், இப்போதும் அவன் வெற்றி பெறவில்லை. பாறை இடைவழியிலே தங்கிவிட்டது. தேவதத்தன், புத்தருடைய நெருங்கிய உறவினன். புத்தரிடம் வந்து துறவு பூண்டவன். பௌத்த மதம் நாட்டிலே செல்வாக் கடைந்து பெருமையும் சிறப்பும் பெற்றிருப்பதைக் கண்டு. பகவன் புத்தருக்குப் பதிலாகத்தானே தலைவனாக இருந்து பெருமை யடைய வேண்டும் என்று எண்ணினான். தன் கருத்தைப் புத்தரிடம் கூறித் தன்னைத் தலைவனாக்கும்படி வேண்டினான். பகவர், “புத்த பதவி ஒருவர் இன் னொருவருக்குக் கொடுத்துப் பெறக்கூடிய நிலையன்று. அவர வருடைய விடா முயற்சியினாலே, உழைப்பினாலே பெறவேண்டிய நிலை” என்று கூறிவிட்டார். ஆகவே, தேவதத்தன் புத்தரைக் கொன்று அந்த இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய உறுதிகொண்டான். அதன் காரணமாகத்தான்அவரைக் கொல்ல முயன்றான். மூன்று முறை முயன்று பார்த்து மும்முறையும் தோல்வியுற்றான். காலில் காயம் அடைந்த பகவன் புத்தரைச் சீடர்கள் தூக்கிக் தாங்கிக்கொண்டு அருகிலே இருந்த மத்தருச்சி என்னும் இடத்திற்குக் கொண்டுபோனார்கள். பகவர், அருகிலிருக்கும் மருத்துவன் சீவகனுடைய மாந்தோப்புக்குத் தம்மை அழைத்துச் செல்லும்படி கூறினார். அவ்வாறே மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார்கள். சீவகன் மருத்துவத் தொழிலில் பேர்போன வைத்தியன். அவன், பகவர் காலில் பட்ட காயத்திற்குத் தகுந்த மருந்து இட்டுக் கட்டுக்கட்டினான். அடுத்த நாளே பகவருடைய காயம் ஆறிவிட்டது. மாலை நேரமானவுடன் புத்தர் வழக்கம்போல நடந்து உலாவி வரப் புறப்பட்டார். சீடர்கள் தடுத்தார்கள். “தேவதத்தன் மீண்டும் சதிசெய்வான். வெளியே போகவேண்டாம்” என்று கூறித் தடுத்தார்கள். அப்போது பகவர் கூறினார்: “பிக்ஷுக்களே! ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் முடியாது. ததாகதர் உயிரோடிருக்க வேண்டிய நாள் வரையில் உயிருடன் இருப்பார். ததாகதர் உயிருக்குத் தீங்கு நேரிடும் என்று நீங்கள் அஞ்சவேண்டா” என்று கூறினார். பிறகு கைத்தடியை எடுத்துக்கொண்டு வழக்கம் போல உலாவச் சென்றார். சீடர்களும் பின்தொடர்ந்து சென்றார்கள். 14. பத்திரை குண்டலகேசி பதினாறு வயது நிரம்பிய பத்திரை என்னும் கன்னிகை, செல்வம் படைத்த சீமானுடைய மகள். இளமையும் அழகும் செல்வத்தின் செழுமையும் வாய்க்கப்பெற்ற பத்திரை, அந்த ராஜக்கிருக நகரத்துக் கன்னிப்பெண்களுள் சிறந்த அழகுள்ளவள். மேலும், பெற்றோருக்கு ஒரேமகள். வேறு மக்கள் இல்லாத படியினாலே, தாய் தந்தையர் இவளைத் தமது உயிர்போலவும் கண்போலவும் ஆசையோடு வளர்த்து வந்தார்கள். பொருள் வளத்தினால் பெறக்கூடிய எல்லா இன்பங்களை யும் பெற்று, பத்திரை மகிழ்ச்சியோடு காலங்கழித்து வந்தாள். ஒரு நாள் அந்த வீதியிலே பெரும் பரபரப்பு உண்டாயிற்று. வீடுகளில் இருந்த ஆண் பெண்களும் சிறுவர் சிறுமிகளும் வெளியில் வந்து நின்று எதையோ ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந் தார்கள். பத்திரையும் தோழிகளுடன் மாளிகையின் மாடியில் நின்று கொண்டிருந்தாள். சத்துருகன் என்னும் பெயருள்ள பேர்போன கள்ளன், சேவகர் கையில் அகப்பட்டுக்கொண்டான். கொலைக் தண்டனை விதிக்கப் பட்ட அவனைக் கொலைக் களத்திற்குக் கொண்டு போனார்கள். இதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். மக்கள் கள்ளனைப்பற்றிப் பலவாறு பேசிக்கொண்டார்கள். “இத்தனைக் காலம் அகப்படாம லிருந்தவன் இப்போது அகப்பட்டுக் கொண்டான். இன்றோடு அவன் ஆயுள் முடிந்தது. எத்தனை வீடுகளைக் கொள்ளையடித்தான்! இன்றோடு இவன் தொல்லை ஒழிந்தது. பல நாள் கள்ளன் ஒரு நாளைக்கு அகப்படாமலா போவான்?” என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறெல்லாம் தெருவில் நின்றவர் பேசிக் கொண்டிருந்தபோது, “அதோ வருகிறான்; அதோ வருகிறான்” என்று ஒரு குரல் கேட்டது. எல்லோருடைய கண்களும் அந்தப் பக்கம் திரும்பின. அரசனுடைய சேவகர் கள்ளனைக் கொலைக்களத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அவனுடைய கைகள் பின்புறமாகப் பிணைத்துக் கட்டப் பட்டுள்ளன. உடல்வலிவும் உறுதியான தோற்றமும் உள்ள வாலிபன் இவன். வாலிப வயதின் செவ்வி அவன் முகத்திலும் உடம்பிலும் காணப்படுகிறது. ஆழ்ந்த சிந்தனையோடு நடந்து வருகிறான். அவனைச் சூழ்ந்து அரச சேவகர் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டு நடக்கிறார்கள். “ஐயோ, பாவம்! வாலிபன், சிறு வயது. இந்த வயதில் இவனுக்கு இந்தக் கதியா ஏற்படவேண்டும். இவன் தலைவிதி இது!” என்று இவனைக் கண்டவர் பலர் பேசிக்கொண்டார்கள். சேவகர் சூழ்ந்துவர, பேர்போன கள்ளன் தெரு வழியே வருவதைப் பத்திரையும் பார்த்தாள். ஆம், நன்றாய்ப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை. அவனைக் கண்ட பத்திரையின் மனத்தில் ஏதோ உணர்ச்சி உண்டாயிற்று. தன் மாளிகையைக் கடந்து போகிற வரையில் அவனை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்தக் கட்டழகனைக் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டாள். பிறகு ‘ஓ’ என்று அலறித் தரையில் விழுந்தாள்; மூர்ச்சையடைந்தாள்; தோழிகள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். தூக்கிக்கொண்டுபோய்ப் படுக்கையில் கிடத்தினார்கள். முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்து மெல்ல விசிறினார்கள். பத்திரை கண் திறந்து பார்த்தாள். “அவருக்குக் கொலைத் தண்டனையா? அதைத் தடுக்க முடியாதா?” என்று ஆவலோடு கேட்டாள். “ஆமாம் கொலைத் தண்டனைதான். அரசன் கட்டளையை யார் தடுக்க முடியும்?” “அவர் உயிர் இருந்தால் என் உயிரும் இருக்கும். அவர் உயிர் போனால் என் உயிரும் போய்விடும்” என்று கூறி, பிறகு “ஐயோ” என்று அலறினாள். இதற்குள், இச்செய்தி கேட்டு, பத்திரையின் தாயார் அவ்விடம் வந்தார். தோழியர் நடந்தவற்றை எல்லாம் சொன்னார்கள். தாய்க்குக் காரணம் விளங்கிவிட்டது. கன்னி வயதின் உணர்ச்சி இது என்பதை அறிந்தாள். பத்திரைக்கு ஏற்பட்டிருந்த மன அதிர்ச்சியைப் பலவித சிகிச்சைகளால் நீக்கினார்கள். அவள் எழுந்து உட்கார்ந்தாள். பத்திரைக்குத் திருமணம் செய்ய, தகுந்த இடத்தில் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவளுக்குச் சொன்னார்கள். பத்திரை வேறு ஒருவரை மணஞ் செய்து கொள்ள விரும்பவில்லை. கொலைக் களத்துக்குச் சென்ற கள்ளனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று உறுதியாகக் கூறினாள். “அவரையல்லாமல் வேறு ஒருவரையும் பார்க்கவும் மாட்டேன். இது உறுதி. அவர் உயிர் போய்விட்டால் என் உயிரும் போய்விடும். அவரைக் காப்பாற்றுங்கள். இல்லை யானால் நானும் இறந்துவிடுவேன்” என்று திட்டமாகக் கூறி விட்டாள். பத்திரைக்குத் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராஜகிருக நகரத்தின் சீமான் மகளுக்கு ஒரே மகளுக்குத் திருமணம் நடக்கிறதென்றால், அதன் சிறப்பையும் வைபவத்தையும் சொல்ல வேண்டுமோ? அறுசுவை விருந்துகள், மேளதாள வாத்தியங்கள், இசைப்பாட்டுக் கச்சேரிகள், நாட்டிய அரங்கங்கள், தான தருமங்கள் முதலிய எல்லாம் குறைவில்லாமல் நடைபெற்றன. திருமணத்தின் சிறப்புக்களைப்பற்றி நகரமக்கள் வியந்து புகழ்ந்து பேசினார்கள். திருமணத்திற்குப் பிறகு பத்திரை தன் மணவாளனுடன் மகிழ்ச்சி யோடிருந்தாள். பத்திரை இயற்கையில் அழகுள்ளவள். அதோடு அவளுடைய ஆடையணிகள் முதலிய செயற்கை யழகுகள் கலந்து அவள் தெய்வ மகள்போலக் காணப்பட்டாள். பொன் காய்ந்த மரம் என்பார்களே, அதுபோல இல்லாமல் முத்துமணி முதலிய நவரத்தினங் கள் காய்ந்த மரம் போல் இருந்தாள். செல்வச் சீமானின் ஒரே மகள் அல்லவா? இவளை மணந்த மணவாளனும் பாக்கிய வானாகத்தானே இருக்க வேண்டும்? அவன் யார்? பத்திரையை மணந்த மணவாளன், அன்று அவள் கண்ட கள்ளன்தான்! சேவகர் காவலில் கொலைக்களத்திற்குச் சென்ற அதே கள்ளன் சத்ருகன்தான்! தன்னுடைய ஒரே மகளான பத்திரையின் பிடிவாதத்தையும், அவள் மனோநிலையையும் அறிந்த அவள் தந்தை, வேறு வழியில்லாமல் பெருந் தொகையான பொருளைக் கொலைச் சேவகனுக்குக் கைக் கூலியாகக் கொடுத்துக் கள்ளனை மீட்டுக் கொண்டு வந்தார். அவனை நீராட்டி ஆடையணிகள் அணிவித்து மணமகன் கோலம் புனையச் செய்தார். வெகு சிறப்பாகத் திருமணத்தை முடித்துவைத்தார். ஆனால், மணமகன், பேர் போன சத்ருகன் என்னும் கள்வன் என்பது மற்றவர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவனை நல்ல குடும்பத்துப் பிள்ளை என்றே எண்ணிக்கொண்டார்கள். பத்திரை தான் விரும்பிய கள்ளனையே கணவனாகப் பெற்றாள். செல்வச் சீமானுடைய ஒரே மகளை மனைவியாகப் பெற்ற சத்ருகன் மனம் மகிழ்ந்தானா? தன் நல்வினைப் பயன் தன்னைப் பெருஞ் செல்வனாக்கியதை நினைத்து வியப்படைந்தானா? செல்வத்தினால் அடையக் கூடிய இன்ப சுகங்களைத் துய்க்க வாய்ப்புக் கிடைத்ததற் காக உளம் களித்தானா? இல்லை, இல்லை. தான் அடைந்த கிடைத்தற் கரிய உயர்ந்த நிலையை, வேதனை தருகின்ற துன்ப வாழ்க்கையாக அவன் கருதினான். தான் ஒரு சங்கடமும் அபாயகரமுமான ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நினைத்தான். அல்லலைத் தருகிற வேதனையுள்ள சூழலில் அகப்பட்டுக்கொண்டதாகக் கருதி அச்சங் கொண்டான். இவ்வாறு அவன் எண்ணியது, உலகத்தை வெறுத்துத் தவம் செய்யத் துணியும் துறவியின் தூய உள்ளம் அவனுக்கு ஏற்பட்டதாகக் கருத வேண்டா. பின்னை எதனால் என்றால், கள்ளனுடைய இழிந்த மனப்பான்மையினால், கொலை செய்வதும் கொள்ளையிடுவதும் கசடர்களோடு சேர்ந்து கள்ளுண்டு களிப்பதும் மனம்போனபடி திரிவதும் நல்லவரோடு உறவாடாமல் தூர்த்தரோடு சேர்ந்து நாடோடியாகத் திரிவதும், அவன் இளமையில் பழகிக்கொண்ட வாழ்க்கை முறை. நாகரிகமான வாழ்க்கையை அமைதியாக நடத்திச் செல்ல அவன் பழகியறியான். ஆகவே, மதிப்புள்ள நல்ல வாழ்க்கையை அவன் மனம் விரும்பவில்லை. நாகரிகமான அமைதியுள்ள நல் வாழ்க்கை அவனுக்கு அல்லலைத் தருகிற துன்ப வாழ்க்கையாகத் தோன்றியது. தன் எதிரிலே, பொன்னும் மணியும் காய்த்த பொற் பதுமை போல நிற்கும் இளமங்கையின்அழகிலும் அன்பிலும் அவன் மனம் செல்லவில்லை. தன் மனைவியின் நகைகள் தனக்குரியன என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கொன்று அவள் அணிந் திருக்கும் நகைகளைக் களவாடிக் கொண்டு போய் அவற்றை விற்றுக் கள்ளுக்கடையில் கள்ளர்களோடு களியாட்ட மாட அவன் கருதினான். ஆகவே, அவளைக் கொல்லவும் அவள் நகைகளைக் களவாடவும் எண்ணினான். ‘மன வாட்டமாக இருக்கிறீர்களே! என்ன காரணம்?” என்று கேட்டாள் பத்திரை. “ஒன்றுமில்லை. ஒரு பிரார்த்தனை செய்துகொண்டேன்; அதைச் செய்து முடிக்க யோசிக்கிறேன்.” “என்ன பிரார்த்தனை? எதற்குப் பிரார்த்தனை?” “இந்த ஊருக்கு அப்பால், காட்டிலே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையுச்சியில் ஒரு தெய்வம் உண்டு. என்னைக் கொல்லு வதற்காகச் சேவகர், அன்று கொலைக் களத்திற்குக் கொண்டு போன போது, அந்தத் தெய்வத்திற்கு, என் உயிர் தப்பினால் பொங்கலும் பூவும் பழமும் படைக்கிறேன். என்று பிரார்த்தனை செய்துகொண்டேன். அதை இன்றைக்குச் செய்ய வேண்டும்.” “அதற்கென்ன? அப்படியே செய்தால் போகிறது. அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்கிறேன்” என்று கூறி, பத்திரை வேலை யாட்களை அழைத்துப் பூசைக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டாள். பணிவிடையாளர் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவைத்தார்கள். வண்டியும் ஆயத்தமாக மாளிகை வாயிலில் நின்றது. பத்திரையின் தோழியரும் அவளோடு புறப் பட்டார்கள். அவன் “இவர்கள் யாரும் வரவேண்டாம், நாம் மட்டும் போவோம்” என்றான். பத்திரை, தோழியரை நிறுத்திவிட்டுத் தனியே கணவனுடன் வண்டியேறினாள். வண்டி விரைந்து சென்று மலையடி வாரத்தையடைந்தது. வண்டிக்காரனை மலையடிவாரத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவன் பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். மலைமேல் ஏறும்போது அவன் ஒன்றும் பேசாமலே மௌனமாக நடந்தான். வண்டியில் வந்த போதும் அவன் அவளிடம் பேசவில்லை. இவனுடைய மௌனமும் முகக்குறியும் ஆழ்ந்த சிந்தனையும் பத்திரையின் மனத்தில் கலவரத்தையுண்டாக்கின. அவள், அவன் முகத்தை நோக்கினாள். முகம் கடுமையாகக் காணப்பட்டது. அவள் மனத்தில் அச்சம் ஏற்பட்டது. மௌனமாகவே இருவரும் மலைமேல் ஏறினார்கள். மலை யுச்சியை அடைந்தார்கள். அவன் அவளை ஒரு புறமாக அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெரிய அகலமான பாறை இருந்தது. அதன் அருகில் சென்றதும் அவள் திடுக்கிட்டு நின்றாள். அந்தப் பாறைக்குப் பக்கத்தில் படுபாதாளம் தெரிந்தது. தவறி அதில் விழுகிறவர்கள் கதி அதோகதிதான். ஒரு சிறு எலும்பும் மிஞ்சாது. ஆ! எவ்வளவு பயங்கரமான இடம்! மலையுச்சி ஆகையால் காற்று விசையாக வீசிக்கொண்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த பட்டாடை காற்றின் வேகத்தினால் படபட என்று அசைந்தது. “இதுவா தெய்வத்திற்குப் பூசை செய்யவேண்டிய இடம்” என்று கேட்டாள். “தெய்வமாவது பூதமாவது! உன் நகைகளைக் கழற்றி வை” என்றான் கள்ளன். இதைக் கேட்டதும் திடுக்கிட்டுப்போனாள். அச்சமும் ஐயமும் அதிகப்பட்டன. ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது என்று அவள் மனம் அறிந்துகொண்டது. “ஏன்? நகைகள் எதற்கு?” என்று கேட்டாள். “உன்னைக் கொன்றுவிடப் போகிறேன். சீக்கிரம் கழற்றி வை” என்ற இந்தக் குரலில் கண்டிப்பும் உறுதியும் கலந்திருந்தன. இதைக் கேட்டவுடனே அவள் நடுநடுங்கினாள். “நான் உங்கள் மனைவிதானே. இந்த நகைகள் எல்லாம் உங்களுக்குத்தானே சொந்தம்? இது மட்டுமா? என் தகப்பனார் சொத்து முழுவதும் உங்களுக்குத்தானே சேரப்போகிறது? என்னை ஏன் கொல்ல வேண்டும்?” என்று வினயமாகக் கூறினாள். “அதெல்லாம் எனக்குத் தெரியாது! கழற்றிவை. ஆகட்டும்!” என்று உரத்த குரலில் மிரட்டினான். அறிவுரை பேசுவதில் பயனில்லை. காரியம் மிஞ்சிவிட்டது. கொலை செய்வதற்கென்றே முன்யோசனையுடன் இங்கு அழைத்து வந்திருக்கிறான். கத்தி, வாள் ஏதும் ஆயுதங்கள் அவன் கையில் இல்லை. படுபாதாளத்தில் தன்னைத் தள்ளிக் கொல்லப் போகிறான் என்பது உறுதி. இந்த ஆபத்தில் இருந்து எப்படித் தப்பவது? மின்னல் வேகத்தில் அவள் அறிவு வேலைசெய்தது. ‘தற்கொல்லியை முற் கொல்ல வேண்டும்’ என்னும் பழமொழி அவள் நினைவுக்கு வந்தது. உடனே நகைகளைக் கழற்றத் தொடங்கினாள். ஒவ்வொரு நகையாகக் கழற்றிக்கொண்டே, “அன்று தங்களைக் கண்டு தங்கள்மீது ஆசைகொண்டேன். இப்போதும் தங்களை என்னுயிர்போல் நேசிக்கிறேன். தாங்கள்தான் எனக்குத் தெய்வம். ஆகையால், முதலில் தங்களைச் சுற்றி வலம் வந்து கும்பிடுவேன். பிறகு, உங்கள் இஷ்டப்படி என்னைக் கொலை செய்துவிடுங்கள்” என்று பணிவுடன் கூறினாள். கழற்றிய நகைகளை அவன் எதிரில் காலடியில் வைத்தாள். அவன் கால்களைத் தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டாள். பிறகு, கைகூப்பியபடியே அவனைச் சுற்றி வலம்வரத் தொடங் கினாள். “சுருக்காக ஆகட்டும்” என்றான் அவன். அவன் எண்ணமும் கண்களும் நகைமீது பதிந்தன. தங்கமும் நவரத்தினங்களும் சேர்ந்த நகைக்குவியல் சூரிய வெளிச்சத்தில் பளிச்சென்று பிரகாசித்தன. அவன் கருத்து முழுவதும் அவற்றில் பதிந்துகிடந்தது. அடுத்த வினாடியில், “ஆ!” என்று அலறினான். எதிரில் இருந்த பாதாளப் படுகுழியில் விழுந்தான். கடகட வென்று புரண்டுகொண்டே படுகுழியில் மறைந்துவிட்டான். அவனைச் சுற்றி வலம்வந்த பத்திரை பின்புறமாக வந்தவுடனே, மின்னல் வேகத்தில் தன் இரண்டு கைகளாலும் அவன் முதுகை ஊக்கித் தள்ளினாள். நகைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்துத் தன்னை மறந்திருந்த அவன், அவள் ஊக்கித் தள்ளிய வேகத்தினால் பயங்கரப் படுகுழியில் விழுந்தான். குற்றமற்ற தன் மனைவியை, இளம் பெண்ணைப் படுகுழியில் தள்ளிவிட எண்ணிய அவன், தானே அப்படுகுழியில் விழுந்து மறைந்தான். அவன் கதி அதோகதியாய் விட்டது! பயங்கரப் படுகுழியிலே ‘ஓ’ வென்று அலறிக்கொண்டே விழுந் ததைக் கண்ட பத்திரைக்கு மனம் பதைத்தது. அந்த இடத்திலேயே அவள் மரம்போல அசைவற்று நின்றுவிட்டாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தாள் என்பது அவளுக்குத் தெரியாது. கடைசியாகத் தன்னுணர்வு வரப்பெற்றாள். மாலை வெயில்பட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் நவரத்தின நகைகள் அவளைப் பார்த்துச் சிரிப்பது போலத் தரையில் கிடந்தன. பாறைகளின் மேலே வேகமாக ‘விர்விர்’ என்று வீசிக் கொண்டிருக்கும் காற்றைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. எங்கும் அமைதியாக இருந்தது. தன்னந்தனியே நிற்கும் அவள், தன் வாழ்க்கை நிலையைப் பற்றித் தனக்குள்ளே சிந்திக்கலானாள். கணவனைத் தான் கொலை செய்துவிட்டதாகக் கூறினால், எல்லோரும் தன்னை நிந்திப்பார்கள். ‘கணவனைக் கொன்ற காதகி,’ ‘புருஷனைக் கொன்ற பாதகி’ என்று சுடுசொல் கூறுவார்கள். அவன், தன்னைக் கொலை செய்யத் துணிந்தான் என்று கூறினால் அதை ஒருவரும் நம்பமாட்டார்கள். ‘பொய்யாக வீண்பழி சுமத்துகிறாள்’ என்று தூற்றுவார்கள். என் செய்வது! கொலைக்களத்திலிருந்து அவன் உயிரை மீட்பதற்குக் காரண மாய்இருந்த தான், தன்கைகளாலேயே அவனைக் கொல்ல நேர்ந்த ஊழ்வினையை எண்ணி அவள் மனம் பதறினாள். இந்நிலையில் தன் பெற்றோரிடம் செல்வது தகுதியல்ல வென்று நினைத்தாள். இனித் தனக்கு இவ்வுலக வாழ்வு மறைந்துவிட்டது என்று உறுதி செய்துகொண்டாள். அப்போது அவள் மனத்திலே ஏதோ ஒரு துணிவு ஏற்பட்டது. உடனே அந்த மலையுச்சியி லிருந்து மடமட வென்று கீழே இறங்கினாள். ஏறின வழியே இறங்காமல், வேறுபுறமாக இறங்கி மலையடிவாரத்தை அடைந்தாள். எங்கும் பாறைகளும் புதர்களும் மரங்களும் காணப்பட்டன. முள்ளும் கல்லும் நிறைந்த அக்காட்டின் வழியே அவள் நடந்துசென்றாள். நெடுந்தூரம் நடந்தாள். பின்னர்க் காட்டைக் கடந்து வெட்ட வெளியான இடத்திற்கு வந்தாள். அங்கு ஒற்றையடிப்பாதை காணப்பட்டது. அப்பாதை வழியே நடந்தாள். அந்தப் பாதை சற்றுத் தூரத்திற்கப்பால் மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பிற்கொண்டு போய்விட்டது. தோப்பிற்குள் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. பத்திரை அதற்குள் சென்றாள். மழித்த தலையும் தூய வெள்ளிய ஆடையும் அணிந்த மகளிர் சிலர் அங்குக் காணப் பட்டார்கள். இவர்களைக் கண்டதும், இது ஆரியாங்கனைகள் மடம் (சமண சமயத்துக் கௌந்திகள் வசிக்கும் மடம்) என்பதை அறிந்து கொண்டாள். தான் மேற் கொள்ள நினைத்திருந்த வாழ்க்கை நிலைக்கு ஏற்ற இடம் என்று தனக்குள் கூறிக்கொண்டாள். பத்திரையைக் கண்டதும் சில ஆரியாங்கனைகள் அவளை அழைத்துக்கொண்டு ஆசிரமத்திற்குள்ளே சென்றார்கள். தலைமை ஆரியாங்கனையிடத்தில் பத்திரை தனது வரலாற்றை முழுவதும் கூறினாள். பின்னர், தான் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவதாகத் தன் கருத்தைத் தெரிவித்தாள். இவள் விருப்பத்திற்கு உடன்பட்டு அவர்கள், இவளைத் துறவியாகச் சேர்த்துக் கொண்டார்கள். தமது சமய ஒழுக்கப்படி, பத்திரையின் கூந்தலை மழித்து, தூய வெள்ளிய ஆடையை உடுத்தினார்கள். அன்று முதல் பத்திரை அந்த மடத்தில் தங்கி இருந்தாள். அவளுடைய மழித்த தலையில் மயிர் மீண்டும் வளர்ந்து சுருண்டுகிடந்தது. ஆகவே, பத்திரை, குண்டல கேசி - சுருட்டை மயிர் உடையவள் என்று அழைக்கப்பட்டாள். மடத்திலே குண்டலகேசி வீணாகக் காலங்கழிக்கவில்லை. கற்றுத் தேர்ந்த ஆரியாங்கனைகளிடம் சமய சாத்திரங்களை ஓதி உணர்ந்தாள். சாக்கிய மதம், ஜைன மதம் முதலிய சமய நூல்களையும் தர்க்க சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தாள். ஆகவே, பத்திரையின் புகழ் நாடெங்கும் பரவிற்று. படிக்கவேண்டிய நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, கல்விக் கடலைக் கரைகண்ட குண்டலகேசியார், பல ஆண்டுகள் மடத்தி லேயே தங்கியிருந்தார் கடைசியாகச் சமயவாதம் செய்ய எண்ணங் கொண்டு, மடத்தைவிட்டுப் புறப்படடு நாடுகள் தோறும் சுற்றித் திரிந்தார். ஊர்ஊராகச் சென்று சமயவாதம் செய்தார். செல்லும் ஊர்களில் நாவல் (நாக மரம்) மரக்கிளையை நட்டு, படித்தவர் இருந்தால், வாதுக்கு வரலாம் என்று அழைப்பார். யாரேனும் வந்தால், அவ்வூரார் முன்னிலையில் வாதப்போர் செய்து வந்தவரைத் தோல்விப் படுத்துவார். இவரோடு வாதப்போர் செய்து தோற்றவர் பலர். ஆகவே, பத்திரை குண்டலகேசி யாரின் புகழ் நாடெங்கும் பரவியது. செல்லும் இடங்களிலெல்லாம் நாவல் கிளைகளைத் தம்முடன் கொண்டு போவார். அந்தக் கிளை உலர்ந்துவிட்டால், அதை எறிந்துவிட்டுப் பசுமையான வேறு கிளையை எடுத்துக் கொள்வார். பல நாடுகளையும் நகரங்களையும் சுற்றிக்கொண்டு பத்திரை குண்டலகேசியார், சிராவத்தி நகரம் வந்தார். வந்து அந்நகரத்து நடுவில் மணலைக் குவித்து நாவல் கிளையை நட்டு, என்னுடன் வாதுக்கு வருகிறவர் இந்தக் கிளையைப் பிடுங்கி ஏறியலாம் என்று அறை கூவினார். பிறகு, வீடுகள் தோறும் சென்று ஐயம் ஏற்ற உணவு அருந்தி ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அதே காலத்தில் பகவன் புத்தர் தம் சீடகோடிகளுடன் சிராவத்தி நகரத்திற்கு வந்து அருகிலிருந்த ஒரு வனத்திலே தங்கியிருந்தார். பகவருடைய சீடர்களில் ஒருவராகிய சாரிபுத்திர தேரர், ஐயம் ஏற்க அந்நகரத்திற்குள் வந்தார். வந்தவர், தெரு நடுவில் மணலில் நாவல் கிளை நடப்பட்டிருப்பதைக் கண்டு, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார். அவர்கள் குண்டலகேசியார் அறைகூவி நாவல் நட்டிருப்பதைக் கூறினார்கள். சாரிபுத்திர மகா தேரர், நாவல் கிளையைப் பிடுங்கி எறியும்படி அவர்களுக்குக் கூறினார். அவர்கள் அதைச் செய்ய அஞ்சினார்கள். சாரிபுத்திரர் தாம் வாது செய்யப் போவதாகவும் கிளையைப் பிடுங்கி எறியும் படியும் சொன்னார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். குண்டலகேசியார் அங்கு வந்து, நாவல் கிளை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு வியப்படைந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று கேட்டார். அங்கிருந்தவர் சாரி புத்திர தேரர் இப்படிச் செய்தார் என்று கூற, குண்டல கேசியார், அந்நகர மக்களை அழைத்துச் சபை கூட்டச் செய்தார். நகரத்திலே ஐயம் ஏற்று ஆகாரம் உண்ட பின் சாரிபுத்திர தேரர் சபைக்கு வந்துசேர்ந்தார். குண்டலகேசியார் முதலில் கேள்விகள் கேட்பதென்றும், அதற்குச் சாரிபுத்திரர் விடைகூறவேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டு, அதன்படி கேசியார் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். சாரிபுத்திரர் அக்கேள்விகளுக்குக்குத் தகுந்த விடைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பல கேள்விகள் கேட்டாய் விட்டன. மேலும் எதைக் கேட்பதென்று தோன்றாமல் பத்திரையார் வாளா இருந்தார். அப்போது, சாரிபுத்திரர் தாம் கேட்கும் கேள்விக்கு விடை கூறவேண்டும் என்று கூற, பத்திரையார் உடன்பட்டார். தேரர், “ஏகம் நாமகிம்?” (ஒன்று, அது யாது?) என்று கேட்டார். கேசியார் இதற்குப் பல விடை சொல்ல முடியும் என்று கருதினார். ஆனால், தகுந்த விடை கூற முடியாமல் திகைத்தார். பலவாறு யோசித்தும் விடை கூற முடியவில்லை. கடைசியில் தாம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, சாரிபுத்திரை வணங்கினார். அவர் கேட்ட கேள்விக்கு அவரே விடை கூறித் தெரிவிக்க வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு விடை தாம் கூற முடியு மானாலும், தமது குருநாதராகிய பகவன் புத்தரிடம் நேரில் கேட்டறிவது சிறப்புடையது என்று சாரிபுத்திரர் கூறினார். அதற்கு உடன்பட்டுக் குண்டலகேசியார், சாரிபுத்திரருடன் பகவன் புத்தரிடம் சென்றார்; சென்று பகவரை வணங்கி ஒரு புறமாக இருந்தார். பகவன் புத்தர் இதன் பொருளை நன்கு விளக்கிப் பத்திரைக்கு உபதேசம் செய்தார். பகவர் உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்து வியந்த கேசியார் புத்தரை வணங்கி, தாம் பௌத்த சங்கத்தில் சேர விரும்புவதாகக் கூறினார். பகவர் இவரைப் பிக்குணி மடத்திற்கு அனுப்பி, இவரைப் பௌத்தத் துறவியாக்கினார். பௌத்தத் தேரியான பிறகு, குண்டலகேசியார் பௌத்த மதச் சாத்திரங்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்து, பேரும்புகழும் பெற்று இறுதியில் வீடுபேறடைந்தார். 15. கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி பகவன் புத்தருடைய முக்கியச் சீடர்களில் மகா கச்சானரும் ஒருவர். மகா கச்சாரும் ஒருவர். மகா கச்சானர் அவந்தி நாட்டிலே கூரராக நகரத்திலே சென்று அந்நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மேல் தம்முடைய சீடர்களுடன் தங்கியிருந்தார். அவர் நாள் தோறும் அறவுரை கூறி விரிவுரை ஆற்றுவது வழக்கம். இவர் கூறும் நல்லுரையைக் கேட்பதற்காக நகர மக்கள் இவரிடம் திரண்டு வந்தார்கள். மகா கச்சான மகாதேரர் அருளிச்செய்யும் அறவுரைகளை நாள் தோறும் விடாமல் கேட்டு வந்தவர்களில் ஒரு வாலிபனும் ஒருவன். இவன் பெயர் சோணன் குட்டிக் கண்ணன் என்பது. செல்வம் கொழித்த குடும்பத்திலே பிறந்தவன். காத்தியானி என்னும் அம்மையாரின் மகன். முனிவரின் அறவுரைகளைக் கேட்டு வந்த இவனுக்குத் துறவியாக வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, மகாகச்சான மகாதேரரிடம் சென்று தான்துறவியாக விரும்புவதாகவும் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படியும் அவரிடம் கூறினான். செல்வஞ் செழித்த குடும்பத்திலே பிறந்து சுகவாழ்க்கை வாழ்ந்து பழகிய இவனுடைய நிலையையும் இளமை வயதையும் அறிந்த மகா கச்சானர், இவன் வேண்டுகோளை மறுத்தார். உற்றார் உறவினரை விட்டுத் தனியே இருப்பதும், தன்னந்தனியே இரந்துண்பதும், தனியே இருந்து மனத்தை அடக்கித் துறவு வாழ்க்கையைச் செலுத்துவதும் கடினமானது என்பதை அவனுக்கு விளக்கிக் கூறினார். சோணன் குட்டிக் கண்ணன் விடவில்லை; மீண்டும் சென்று தனக்குத் துறவுநிலையை அளிக்க வேண்டும் என்று வேண்டினான். மீண்டும் அவர் மறுத்தார். மற்றும் ஒரு முறை வேண்டினான். அப்போதும் மறுத்துவிட்டார். குட்டிக் கண்ணன் இளைஞனானபோதிலும் உறுதியான உள்ளம் உடையவன். ஆகவே, எப்படியாவது பௌத்தப் பிக்கு ஆகவேண்டும் என்று உறுதிசெய்து கொண்டான். அதனால், மறுபடியும் அவரிடம் சென்று கட்டாயம் தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி வேண்டினான். இவனுடைய மனவுறுதியைக் கண்ட தேரர், ஒருவாறு இணங்கி, இவனைச் சீடனாக்கிக் கொள்ளுவதாகவும், சில ஆண்டு கழித்துத் துறவறத்தில் சேர்ப்பதாகவும் கூறி இவனைச் சீடனாக்கிக் கொண்டார். இவன் மூன்று ஆண்டு அவரிடம் சீடனாக இருந்தான். இந்த மூன்று ஆண்டுக்குள் புத்தருடைய உபதேசங்களில் முக்கியமானவை களைப் பாராயணம் செய்து கொண்டதோடு அவற்றின் கருத்தையும் தெள்ளத் தெளிய ஓதி உணர்ந்தான். அன்றியும், அறவுரைகளை ஓதி விரிவுரை செய்யவும் கற்றுக் கொண்டான். இவ்வாறு பௌத்த மறைகளை ஓதியுணர்ந்த குட்டிக் கண்ணர், மூன்றாண்டுக்குப் பின்னர், ஆசிரியரிடம் விடை பெற்றுப் பகவன் புத்தரை வணங்கச் சென்றார். அவந்தி நாட்டைக் கடந்து வெகு தூரத்திற் காப்பாலுள்ள ஜேதவனத்தை அடைந்தார். அங்குப் பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த கந்தகுடியில் சென்று புத்தர் பெருமானைக் கண்டு அடிவணங்கித் தொழுதார். பகவர் இவரை அன்புடன் வர வேற்றார். குட்டிக் கண்ணர் கந்தகுடியிலே தங்கினார். வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து, பகவர் உத்தரவு பெற்றுத் தான் ஓதியுணர்ந்த பௌத்த மறையை நன்கு ஓதினார். இவர் ஓதிய முறையையும் தெளிவையும் கருத்தூன்றிக் கேட்டருளிய பகவன் புத்தர், இவரைப் பெரிதும் புகழ்ந்து வியந்து மகிழ்ந்தார். அங்கிருந்த மற்றத் தேரர்களும் புகழ்ந்து மெச்சினார்கள். இதனால், இவருடைய புகழ் நாடெங்கும் பரவிற்று. அவந்திநாட்டிலே கூரராக நகரத்திலே இருந்த இவருடைய அன்னையார் காத்தியானி அம்மையார் காதிலும் இவருடைய புகழ் எட்டிற்று. “என் மகன் இந்த ஊருக்கு வருவானானால், அவனிடம் அறவுரை கேட்க வேண்டும்” என்று அம்மையார் தமக்குள் கூறிக்கொண்டார். சோணன் குட்டிக் கண்ணர், சில நாட்கள் பகவன் புத்தரிடம் தங்கி யிருந்து, அவர் திருக்கைகளினாலே சீவரம் பெற்றுத் துறவியானார். பின்னர், மீண்டும் அவந்தி நாட்டிற்கு வந்து தமது ஆசிரியரான மகா கச்சானரிடம் தங்கியிருந்தார். இருவரும் வழக்கம் போல, நகரத்தில் சென்று இல்லங்களில் உணவுப் பிச்சை எற்று வந்தனர். ஒரு நாள் காத்தி யானி அம்மையார் இல்லத்திற் சென்று பிச்சை ஏற்றனர். இவர்களுக்கு அம்மையார் உணவளித்த பிறகு, தாம் நெடுநாளாகக் கருதியிருந்த எண்ணத்தைத் தமது மகனான சோணன் குட்டிக் கண்ணருக்குத் தெரிவித்தார். அதாவது, தனக்கு அறவுரை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரும் அதற்கு உடன்பட்டார். அந்நகரத்தின் முக்கியமான ஒரு இடத்திலே பலரும் வந்து அறவுரை கேட்பதற்குக் காத்தியானி அம்மையார் ஏற்பாடு செய்தார். சோணன் குட்டிக் கண்ணர் இந்த இடத்தில் சென்று நாள்தோறும் அறவுரை கூறி விரிவுரை வழங்கினார். மக்கள் திரண்டுவந்து கேட்டு மகிழ்ந்தார்கள். காத்தியானி அம்மையாரும், தமது மாளிகையில் உள்ள ஏவலாளர், பணிவிடையாளர் எல்லோரும் அறவுரை கேட்பதற்காக விடுமுறையளித்துத் தாமும் சென்று அறவுரை கேட்டார். அவர் மாளிகையில் ஒரே ஒரு வேலைக்காரி மட்டும் தங்கியிருந்தாள். காத்தியானி அம்மையார் பெருஞ்செல்வம் உள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினோமல்லவா? அக்காலத்தில் அந்த நகரத்திலே கொள்ளையடிக்கும் கள்ளர் இருந்தனர். அவர்கள் காத்தியானி வீட்டுச் செல்வத்தின்மேல் நெடுங் காலமாகக் கண் வைத்திருந்தார்கள். எப்போது சமயம் வாய்க்கும் என்று அவர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மையார் வேலைக் காரர்களுடன் அறவுரை கேட்கும் செய்தியை அறிந்து, இதுவே தகுந்த சமயம் என்று தெரிந்து அம்மையார் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றார்கள் கன்னம் வைத்து வீட்டிற்குள் புகுந்து பொருள்களையும் பணங்காசு களையும் கொள்ளையிடத் தொடங்கினார்கள். கள்வர் தலைவன், அம்மையார் அறவுரை கேட்கும் கூட்டத்திற்கு வந்து ஒரு புறமாக இருந்து அம்மையாரைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். தன் வீட்டைக் கள்ளர் கொள்ளையிடுவதை அறிந்து, அம்மையார் கள்ளரைப் பிடிக்க முயற்சி செய்தால் அப்போது அவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதற்காகத்தான் கள்ளர் தலைவன் அங்குச் சென்றிருந்தான். வீட்டிற்குள் புகுந்த கள்ளர்கள் செம்பு நாணயங்கள் வைத்திருந்த அறைக்குள் புகுந்து அதை வாரி மூட்டை கட்டினார்கள். கள்ளர் புகுந்து கொள்ளையிடுவதைக் கண்ட ஊழியப் பெண், அம்மையாரிடம் விரைந்து வந்து செய்தியைச் சொன்னாள். இதனைக் கேட்ட அம்மையார், “நல்லது; அதைப் பற்றிக் கவலையில்லை” என்று கூறிச் சொற் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டிற்குத் திரும்பிச் சென்ற ஊழியப் பெண், இப்போது கள்ளர் வெள்ளி நாணயங்கள் வைத்துள்ள அறையில் புகுந்து வெள்ளிக் காசுகளை மூட்டை கட்டிக் கொண்டிருப் பதைக் கண்டாள். ஆத்திரங்கொண்டாள். ஆகவே, அவள் மறுபடியும் ஓடோடிச் சென்று அம்மையாரிடத்தில் வெள்ளிக் காசுகள் பறி போவதைக் கூறினாள். அம்மையார், “சரி போகட்டும். அதைப்பற்றிக் கவலைவேண்டாம். நீ போ” என்று கூறி மீண்டும் சொற்பொழிவைக் கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். மிக வருத்தத்தோடு வீடு திரும்பிய வேலைக்காரி, கள்ளர்கள் வெள்ளிக்காசுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, இப்போது பொற்காசு உள்ள அறைக்குள் புகுந்து தங்க நாணயங்களை மூட்டை கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டு மனம் பதறி, மறுபடியும் ஓடோடி வந்து அம்மையாரிடம் பொற்குவியல் கொள்ளை போவதைக் கூறினாள். அப்போதும் அம்மையார் அறவுரையிலே கருத்தூன்றி யிருந்தார். அவர் அவளைப் பார்த்து, “போனால் போகட்டும். இப்போது தொந்தரவு செய்யாதே” என்று கூறி முன்போலவே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஊழியப் பெண் அடிக்கடி ஓடிவந்து அம்மையாரிடம் கூறியதை யும் அம்மையார் அவளிடம் கூறியதையும் கள்ளர் தலைவன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். மூன்று தடவை வேலைக்காரி வந்து செம்பு, வெள்ளி, பொன் நாணயக் குவியல்கள் கொள்ளை போவதைக் கூறியபோதும், அம்மையார் அதனைப் பொருட்படுத்தாமல், அறவுரை யில் கருத்தூன்றியிருந்ததைக் கண்டு அவனுக்கு வியப்பு உண்டா யிற்று. அம்மையார் மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. அவன் உள்ளத்திலே நல்லறிவு தோன்றியது. ‘இவ்வளவு நல்லவருடைய பொருளைக் கொள்ளையடித்தால் என் தலை மேலே இடிவிழும்! இவர் பொருளைத் தொடுவது பெரும் பாவம்!’ என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான். உடனே, அவன் அவ்விடத்தைவிட்டு விரைந்து நடந்தான். அம்மையார் வீட்டை யடைந்தான். கள்ளர்கள் அப்போது, கொள்ளை யடித்த பொருள்களை மூட்டை கட்டி, அவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மூட்டை களை இறக்கி வீட்டிற்குள்ளேயே வைத்துவிடும்படி அவன் அவர்களுக்குச் சொன்னான். அதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். ஆனால், ஒன்றும் பேசாமல் தம் தலைவன் கட்டளைப்படியே மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தார்கள். மூட்டைகளை இறக்கியானவுடன் அவர்களை அழைத்துக்கொண்டு அம்மையார் இருந்த கூட்டத்திற்கு வந்தான். வந்து ஒருபுறமாக அமர்ந்து அறவுரைகளைக் கேட்டான். சொற்பொழிவு முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். காத்தி யானி அம்மையாரும் தமது இல்லத்திற்குப் புறப்பட்டார். கள்ளர் தலைவன், அம்மையார் எதிரில் சென்று அவரை வணங்கிக் கும்பிட்டான். தான் அம்மையார் வீட்டில் கொள்ளை யடித்ததையும், அதை அறிந்தும் அம்மையார் அதைப் பொருட் படுத்தாமல் அறவுரையிலேயே மனம் செலுத்தியிருந்ததையும் சொல்லி, இவ்வளவு நல்லவருடைய செல்வத்தைக் கொள்ளை யிடத் துணிந்ததற்காகத் தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டான். அம்மையார் மன்னித்தார். கள்ளர் தலைவன், அம்மையாரை விடவில்லை. “நான் பிக்குச் சங்கத்தில் சேரப்போகிறேன். இன்றோடு என் கொள்ளைத் தொழிலை விட்டுவிட்டேன். இவ்வாழ்க்கையில் இனி எனக்கு ஆசையில்லை. துறவு பூண்டு, மிகுந்திருக்கும் வாழ்நாளை நல்வழியில் செலுத்த எண்ணங்கொண்டேன். தங்கள் குமாரரான குட்டிக் கண்ணரிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்” என்று வேண்டினான். இதைக் கேட்ட அம்மையார் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அம்மையார், குட்டிக் கண்ணரிடம் இச்செய்தி களையெல்லாம் கூறிக் கள்ளனைச் சீடனாக்கிக் கொள்ளும்படி பரிந்து பேசினார். கள்ளனுடைய மனம் உண்மையிலேயே தூய்மையடைந்து செம்மையாக இருப்பதை அறிந்து குட்டிக் கண்ணர் அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டார். அவனைச் சேர்ந்த மற்ற கள்ளர்களும் துறவு பூண்டனர். 16. மூன்று விருந்துகள் 1. பால் பாயசம் சுஜாதை ஒரு நாள் காலை சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண் டிருந்தாள். குடம் நிறையப் பாலைக் கறந்து நுரை பொங்கப்பொங்கக் குடத்தைச் சமையல் அறைக்குக் கொண்டு வந்தாள். தண்ணீர் இல்லாமலே, முழுதும் பாலினாலேயே பாயசம் சமைக்க முற்பட்டாள். சுஜாதை, சேனானி கிராமத்துத் தலைவனுடைய மகள். மூன்று ஆண்டு களுக்கு முன்பு, தான் மணமாகாத கன்னிகையாக இருந்தபோது, தன் கிராமதேவதைக்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டாள். தனக்கு உகந்த கணவன் வாய்த்து, முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்குமானால், அந்தத் தெய்வத்திற்குப் பால் பாயசம் படைப்பதாக அவள் நேர்ந்து கொண்டாள். சேனானி கிராமத்துக்கு அருகிலே உள்ள அஜபால ஆலமரம் என்னும் ஆலமரத்தில் ஏதோ ஒரு தேவதை இருக்கிறதென்பதும், அதைப் பிரார்த்தித்துக் கொண்டால், அத் தேவதை தங்கள் குறைகளைத் தீர்த்து வேண்டிய வரங்களை அளிக்கும் என்பதும் அந்தக் கிராமத்து மக்கள் நம்பிக்கை. அந்தக் கருத்துப்படி சுஜாதையும் ஆலமரத்துத் தெய்வத்தை வேண்டினாள். அவள் எண்ணப்படியே அவளுக்கு உகந்த கணவன் வாய்த்துத் திரு மணமும் முடிந்து, அடுத்த ஆண்டிலே ஓர் ஆண் குழந்தையையும் பெற் றெடுத்தாள். தன் விருப்பம் நிறைவேறவே, அந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனையைச் செலுத்தப் பால் பாயசம் சமைத்துக் கொண்டிருந் தாள். அன்று வைகாசித் திங்கள் முழு நிலா நாளாகிய வெள்ளுவா நாள். நீர் கலவாமல் முழுவதும் பாலினாலே பாயசத்தைச் சுவைபடச் சமைத்தாள். பிறகு, தன் தோழிகளையும் பணிப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு, பாயசப் பாத்திரத்தைத் தானே தன் கையில் ஏந்திக்கொண்டு அஜபால ஆலமரத்தை நாடிச் சென்றாள். அந்த மரம் கிராமத்திற்கு அப்பால் காட்டிற்கு அருகிலே இருந்தது. புத்த ஞானத்தை நாடி இல்லறத்தை விட்டுத் துறவறம் பூண்டு காடுகளையும் நாடுகளையும் சுற்றித் திரிந்த சித்தார்த்தர், அந்தக் காலத்தில் சேனானி கிராமத்தை அடுத்த காட்டிலே நேரஞ்சர ஆற்றுக்கு அருகிலே தங்கியிருந்தார். அவர் அங்குச் சில காலம் வரையில் அப்பிரணத்தியானம் என்னும் மூச்சை நிறுத்தும் யோகத்தைச் செய்து கொண்டிருந்தார். உணவு கொள்ளாமலே அப்பிரணத்தியானத்தைக் கடுமையாகச் செய்து கொண்டிருந்த படியினாலே, சித்தார்த்தத் துறவிக்கு உடம்பு சுருங்கி வற்றிப் போயிற்று. அதனால் அவர் பெரிதும் துன்பப்பட்டார். ஆகவே, அந்த யோகத்தை நிறுத்திவிட்டார். அவர் உடம்பு மிகவும் இளைத்துக் களைப்படைந் திருந்தது. ஆனால், அன்று வைகாசித் திங்கள் வெள்ளுவா நாளில், தாம் புத்த ஞானம் அடைந்து புத்தராகப் போவதை அவர் அறிந்திருந்தார். அன்று காலை, புத்தராகப் போகிற சித்தார்த்தர், காலைக்கடனை முடித்துக்கொண்டு தற்செயலாக அஜபால ஆலமரத்துக்குச் சென்று அதன் கீழே அமர்ந்து தமக்குப் புத்த ஞானம் கிடைக்கப் போவதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். முற்பகல் வேளை, பாயசத்தைப் படைக்க சுஜாதை தன் தோழி களுடன் ஆலமரத்துக்கு வந்தாள். அந்த மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் முகத்தில் ஒருவிதத் தெய்விக ஒளி தோன்றிற்று. அமைதியுள்ள சாந்தமூர்த்தியாகக் காணப்பட்டார். மனித இயல்பைக் கடந்த தெய்விக புருஷனாகத் தோன்றினார். இவரைக் கண்ட சுஜாதை, அவரை ஆலமரத்தில் குடியிருக்கும் தெய்வம் என்று கருதினாள். தான் படைக்கப் போகும் பால் பாயசத்தை ஏற்றுக் கொள்வற்காக அந்தத் தேவதை அங்கு எழுந்தருளியிருப்பதாக நம்பினாள். தோழிகளுடன் அருகில் சென்று பாயசப் பாத்திரத்தை அவர் எதிரில் வைத்து வணங்கினாள். பிறகு மூன்று முறை அவரைச் சுற்றி வலம் வந்தாள். “சுவாமி! இதைத் தங்களுக்கு அளிக்கிறேன். அருள் கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டிப் பின் தன் தோழிகளுடன் கிராமத்திற்குப் போய்விட்டாள். சித்தார்த்தருக்கு நல்ல பசி. அவர் சுஜாதை அளித்த பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங் கரைக்குச் சென்றார். அங்கு சுப்ரதிட்டை என்னும் துறையில் ஒரு மரத்தடியில் பாத்திரத்தை வைத்துவிட்டு, துறையில் இறங்கி நீராடினார். பிறகு கரைக்கு வந்து மரத்தின் நிழலிலே அமர்ந்து சுஜாதை கொடுத்த பால் பாயசத்தைச் சாப்பிட்டார். இது, சித்தார்த்தர் புத்தராவதற்கு முன்பு, அன்று பகலில் உட்கொண்ட இனிய பால் பாயசம். 2. அரிசி அடை சித்தார்த்தர் போதிஞானம் அடைந்து புத்தரான பிறகு அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அந்தச் சீடர்களான பிக்ஷுக் களுடன் பகவன் புத்தர் நாடுகளிலும் நகரங்களிலும் சென்று தமது பௌத்தக் கொள்கையை மக்களுக்குப் போதித்து வந்தார். ஒருசமயம் ராஜகிருக நகரத்துக்கு அருகிலே ஒரு ஆராமத்திலே பகவன் புத்தர் தமது சீடர்களான பிக்ஷுக்களுடன் தங்கியிருந்தார். அந்த நகரத்து அரசரும் செல்வர்களும் நிலக் கிழவர்களும் பகவன் புத்தரையும் அவருடைய சீடர்களையும் தமது வீடுகளுக்கு அழைத்து உணவு கொடுத்தார்கள். யாரும் அழைக்காத நாட்களில் புத்தரும் சீடர்களும் நகரத்தில் வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்று உணவு கொள்வார்கள். அந்த நகரத்திலே பூரணை என்னும் பெயருள்ள ஓர் அம்மையார் இருந்தார். இந்த அம்மையாருக்கு உற்றார் உறவினர் இலர். ஏழையாகிய இவர் வீடுகளில் குற்றேவல் செய்து தன் வாழ்க்கையைக் கழித்துவந்தார். ஒரு நாள் பூரணைக்குக் கொஞ்சம் நொய் அரிசி கிடைத்தது. அதை மாவாக அரைத்து அடை சுட்டாள். அது வெல்லம், தேங்காய், எண்ணெய் சேராத வெறும் உப்பு அடை. அந்த அடையை அம்மையார் மடியில் வைத்துக் கொண்டு குடத்தை எடுத்துக் கொண்டு நீர் கொண்டுவர நகரத்துக்கு வெளியேயுள்ள ஆற்றுக்குச் சென்றார். ஆற்றங் கரையிலே மரத்தினடியில் உட்கார்ந்து அடையைத் தின்னலாம் என்று அம்மையார் எண்ணினார். பூரணை நகரத்துக்கு வெளியே சாலை வழியாகச் செல்லும் போது, புத்தர் எதிரிலே நகரத்தை நோக்கிப் பிச்சைக்காக வந்து கொண்டிருந்தார். பகவன் புத்தரைக் கண்டதும் பூரணைக்கு ‘புத்த பகவருக்குப் பிச்சை கொடுக்க வேண்டும் என்று பல நாளாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் வரும் போது என்னிடம் ஒன்றும் இருப்பதில்லை. ஏதாவது உணவு இருக்கும்போது அவர் வருவது இல்லை. இப்போது என்னிடம் அரிசி அடை இருக்கிறது. புத்தரும் எதிரிலே வருகிறார். இன்றைக்கு இதை இவருக்குக் கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட பூரணை, நீர்க்குடத்தைத் தெருவின் ஓரத்தில் ஒருபுறமாக வைத்துவிட்டு அவரிடம் சென்று வணங்கினாள். மடியிலிருந்த அடையை எடுத்து, “பகவரே, இந்த அற்ப அடையை ஏற்றருள வேண்டும்” என்று வேண்டினாள். பகவர், திரும்பிப் பின்னால் நின்ற ஆனந்தர் என்னும் அணுக்கத் தொண்டரை நோக்கினார். குறிப்பையறிந்த ஆனந்தர், தமது சீவர ஆடையில் மறைத்து வைத்திருந்த திருவோட்டை எடுத்துப் பகவர் கையில் கொடுத்தார். பகவர் திருவோட்டை வாங்கிப் பூரணை யிடம் நீட்ட, பூரணை அதில் அடையை இட்டாள். அந்தத் திருவோடு பகவருக்கு ஒரு அரசன் அளித்தது. அரசன் அளித்த திருவோட்டிலே பரம ஏழையளித்த அடையைப் பகவர் ஏற்றுக்கொண்டார். பிச்சை ஏற்ற பகவர், தமது வழக்கப்படி, நன்றியறிதல் கூறுமுகத்தால் அம்மை யாருக்குச் சில அறவுரை களை வழங்கினார். அவற்றைக் கேட்ட அம்மையார் அவரை வணங்கினார். அப்போது பூரணைக்கு, ‘செல்வர்களும் சீமான்களும் நமது வீடுகளுக்கு அழைத்து அவர்கள் கொடுக்கும் நல்ல உணவுகளைச் சாப்பிடும் பகவர், இந்த அற்ப அரிசி அடையைச் சாப்பிடுவாரா!’ என்ற ஐயம் உண்டாயிற்று. பகவன் புத்தர் ஆனந்தரிடம், மரத்தினடியில் உட்கார வேண்டும் என்று கூறினார். ஆனந்தர், ஒரு சீவர ஆடையை மடித்து மரத்தின் நிழலில் தரையில் விரித்தார். பகவர் அதில் அமர்ந்து அடையை எடுத்து உண்ணத் தொடங்கினார். இதற்குள் ஆனந்தர் போய் ஆற்றிலிருந்து நீர் கொண்டுவந்து கொடுக்க, அதைக் குடித்துவிட்டுப் பகவர் எழுந்து, நகரத்திற்கு வராமலே தமது ஆராமத்திற்குத் திரும்பிப் போய்விட்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூரணைக்கு மனத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின. தான் அளித்த அற்ப உணவாகிய வறட்டு அடையை அவர் சாப்பிட்டது. அம்மையாருக்குப் பெரிய வியப்பு. புத்தருக்கு உணவளிக்க வேண்டுமென்ற தன் எண்ணம் நிறைவேறியது அவருக்குப் பெருமகிழ்ச்சி. பகவர் விருப்பு வெறுப்பு அற்ற உயர்நிலையையடைந்தவர். அவருக்கு அரசர் அளிக்கும் சுவைமிக்க பெருவிருந்துகளும் ஏழைகள் அளிக்கும் எளிய உணவுகளும் ஒரே தன்மையன. 3. இறைச்சி உணவு எண்பது வயது நிறைந்த முதிர்ந்த வயதிலே பகவன் புத்தர் பிக்ஷு சங்கத்துடன் பாவாபுரிக்குச் சென்றார். சென்று அந்நகரத்தை அடுத்ததோர் மாந்தோப்பில் தங்கினார். அந்த மாந்தோப்பிற்கு உரியவன் அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பவன். பகவன் புத்தர் தன்னுடைய மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதைக் கேள்விப்பட்ட சுந்தன், பகவரிடம் வந்து வணங்கி வரவேற்றான். அடுத்த நாள், தன் இல்லத்தில் பிக்ஷு சங்கத்தோடு உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். பகவர் அதற்கு உடன்பட்டார். அடுத்த நாள் உணவுகொள்ளும் வேளைக்குப் பகவர் தமது பிக்ஷு சங்கத்துடன் சுந்தன் இல்லம் சென்றார். சுந்தன் அவர்களை வரவேற்று, எல்லோருக்கும் இருக்கை அளித்து, உணவு பரிமாறினான். காட்டுப்பன்றி இறைச்சி உடல்நலத்துக்கு உகந்த உணவு என்பது அவன் எண்ணம். ஆகவே புத்தரும் பிக்ஷு சங்கமும் உடல்நலத்தோடு இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இந்த இறைச்சியை யும் சமைத்திருந்தான். பகவன் புத்தர் இதனை அறிந்து கொண்டார். அதனை உட் கொண்டால் பிக்ஷுக்களுக்கும் தமக்கும் உடல்நலம் கெடும் என்பதைப் பகவர் அறிவார். ஆனால், சுந்தன் நிறைந்த உள்ளன் போடும் நல்லெண்ணத்தோடும் அளிக்க விரும்பிய உணவை விலக்கினால், அவனுக்கு மனவருத்தம் உண்டாகும் என்பதையும் பகவர் அறிவார். அவர், சுந்தனை அருகில் அழைத்து இவ்வாறு கூறினார்: “சுந்த! இறைச்சியைப் பிக்ஷுக்களுக்குப் பரிமாறாதே. எனக்கு மட்டும் பரிமாறு. மிகுதியை எடுத்துக் கொண்டுபோய்ப் பள்ளந்தோண்டி அதில் கொட்டிப் புதைத்து விடு. பிக்ஷுக் களுக்கு வேறு உணவைப் பரிமாறு” என்று அருளிச்செய்தார். சுந்தன் அவர் கட்டளைப்படியே பிக்ஷுக் களுக்கு வேறு உணவைப் பரிமாறினான். இறைச்சியைப் புத்தருக்கு மட்டும் பரிமாறிவிட்டு மிகுந்ததைக் கொண்டுபோய்ப் பூமியில் பள்ளந்தோண்டிப் புதைத்துவிட்டு வந்தான். உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும் சுந்தனுடைய அன்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்றுக்கொள்வதற்காகப் பகவர் அவ்விறைச்சி உணவைத் தாம் மட்டும் உண்டருளினார். பகவன் புத்தர் கடைசியாக அருந்திய உணவு இதுவே. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டும் பவர் என்னும் வாக்குப்படி, தமக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும், அருள் உள்ளத்தோடு உண்டருளினார். அதனால், அவருக்குப் பொறுக்க முடியாத வயிற்றுவலியும் வேதனையும் உண்டாயின. அவர் அவற்றை வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டார். பிறகு, நன்றிகூறு முகத்தான் பகவர், சுந்தனுக்கு அறவுரைகளைக் கூறிய பிறகு அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டார். அவருக்கு வயிற்றிலே பொறுக்கமுடியாத வேதனையும் குடல்வலியும் அதிகப்பட்டது; மரணவேதனை போன்ற வலி ஏற்பட்டது. “ஆனந்த! குசிநகரம் போவோம்” என்று கூறி வழிநடந்தார். வேதனையையும் வலியையும் பொறுத்துக்கொண்டு வழி நடந்தார். இளைப்பும் களைப்பும் மேலிட்டது “ஆனந்த! படுக்கையை விரி” என்றார். ஆனந்தர் சீவர ஆடையை நான்காக மடித்து வழியிலிருந்த ஒரு மரத்தின் நிழலிலே விரித்தார். சற்று நேரம் அங்குப் படுத்தார் பகவர். பிறகு நீர்விடாய் உண்டாயிற்று. ஆனந்தர் நீர்கொண்டு வந்து கொடுக்க அதனை அருந்தினார். மறுபடியும் எழுந்து வழி நடந்தார். இடைவழியிலே சுகுந்தர என்னும் ஆறு இருந்தது. அதில் இறங்கி நீராடினார். பிறகு அருகிலே இருந்த ஒர மாஞ்சோலைக்குச் சென்றார். வயிற்று வலியும் வேதனையும் அதிகமாகவே இருந்தது. மாமர நிழலிலே ஆனந்ததேரர் சீவர ஆடையை விரித்தார். அதன்மேல் பகவன் புத்தர் படுத்தார் தாம் பரிநிர்வாணம் அடையும் காலம் அணுகி விட்டது என்பதை அறிந்தார். அப்போது ஆனந்தரிடம் இவ்வாறு கூறினார்: “ஆனந்த! சுந்தன் அளித்த உணவினாலே புத்தர் நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்று சிலர் கூறுவார்கள். அது தவறு. ‘சுந்த! நீ கொடுத்த உணவுதான் புத்தர் அருந்திய கடைசி உணவு. அவ்வுணவை உட்கொண்ட பிறகு பகவான் பரிநிர்வாணம் அடைந்தார் ஆகையி னாலே, நீ புண்ணியவான். புத்தருடைய வாயினாலே இவ்வாறு கூறியதை நான் காதால் கேட்டேன்’ என்று நீ சுந்தனிடம் கூறு. “ஆனந்த! இரண்டு உணவுகள் ததாகதருக்குத் துணைபுரிந்தன. அவற்றில் முதலாவது, ததாகதர் போதி ஞானத்தை அடைவதற்கு முன்பு சுஜாதையளித்த பால் பாயசம். இரண்டாவது, ததாகதர் பரிநிர்வாணம் பெறுவதற்கு முன்பு சுந்தன் அளித்த இந்த விருந்து. இந்த இரண்டு விருந்துகளையும் ததாகதர் ஒன்றுபோல மதித்தார் என்று சுந்தனுக்குக் கூறு” என்று அருளினார். இசைவாணர் கதைகள் குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் `இசைவாணர் கதைகள்’ (1977) எனும் தலைப்பில் எழுதிய நூல் இது. முகவுரை நற்கலை, நுண்கலை, கவின்கலை என்று சொல்லப்படுகிற அழகுக் கலைகளை ஐந்து பிரிவுகளாகக் கூறுவர். கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்னும் ஐந்தும் அழகுக் கலைகளில் அடங்குவன. பழமை வாய்ந்த இந்த அழகுக் கலைகளில் மிகப் பழமையானது இசைக்கலை. கூத்தும் நாடகமும் இசைக் கலையைச் சேர்ந்தவை. ஆதிகாலம் முதல் இசைக்கலை மக்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. உலகத்திலே ஒவ்வொரு தேசத்தாரும் அவரவர் மரபுக்கும் இயல்புக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் இசைந்த படி இசைக்கலையை வளர்த்துள்ளார்கள். இசையுடன் யாழ், குழல், முழவு முதலான இசைக் கருவிகள் மிக நெருங்கிய தொடர்புடையன. இசைக்கலையும் கூத்துக் கலையும் சகோதரிகள்-தமக்கை தங்கையர். இசைக்கலை செவிக்கு இதந்தருகிறது. கூத்துக்கலை கண்ணுக்குக் காட்சி அளிக்கிறது. இசையும் கூத்தும் ஒன்றாகச் சேரும்போது அவை ஒரே சமயத்தில் காதுக்கும் கண்ணுக்கும் இன்பம் பயந்து மனத்தை மகிழ்விக்கின்றன. இசையும் கூத்தும் ஏனைய நாடுகளில் வளர்ந்து வருவது போலவே நம்முடைய பாரத தேசத்திலும், சிறப்பாகத் தமிழ் நாட்டிலும் தொன்று தொட்டு வளர்ந்து வருகின்றன. பழந்தமிழர் வளர்த்த முத்தமிழில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் இடம் பெற்றிருந்தன. இசையையும் நாடகத்தையும் நடத்துவதற்கென்றே பாணர் என்னும் இனம் பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது. பாணரில் பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இரு வகையோர் இருந்தனர். பாணர் இனத்து மகளிரும் இசைக் கலையிலும் கூத்துக்கலையிலும் நாடகக் கலையிலும் வல்லவர். அவர்கள் விறலி என்றும் பாடினி என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் இசைக் கருவிகளைத் திறம்பட வாசிப்பதிலும் வல்லவர்கள். பிற்காலத்திலே பாணர் இனம் மறைந்து போயிற்று. பாணரைப் பற்றியும் விறலியரைப் பற்றியும் பழந்தமிழ் இலக்கியத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் இசைவேளாளர் என்னும் இனத்தார் தமிழகத்தில் இசைக் கலையையும், நாட்டியக் கலையையும் நன்றாக வளர்த்து வந்தனர். வளர்த்து வருகின்றர். பரதநாட்டியம் தமிழ் நாட்டுக்கே உரிய உலகப் புகழ் பெற்ற அழகுக் கலையாகும். இசை பாடியும், நடனமாடியும் மனித இனம் மகிழ்ந்து வருகிறது. இசை நடனங்களை விரும்பாதவர் எவரும் இலர். எல்லா மக்களும் இசையையும் கூத்தையும் விரும்புகிறார். வெறுப்பவர் எரும் இலர். ஆனால், மிக அபூர்வமாக, இசையையும் கூத்தையும் வெறுத்த ஒரே ஒரு ஆளைப்பற்றி வரலாற்றிலே படிக்கிறோம். அவர் மொகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் அவர் கி.பி. 1657 முதல் 1707 வரையில், தில்லியில் இருந்து பாரத தேசத்தை அரசாண்டவர். ஒளரங்கசீப் இசைக் கலையையும் நடனக் கலையையும் வெறுத்தாராம். இந்தக் கலைகளை அவர் ஆதரிக்கவில்லையாம். ஆகவே, இந்தக் கலைகள் அவருடைய அரண்மனையில் இடம்பெறவில்லையாம். அவருடைய ஆட்சிக் காலத்தில் இசையும் கூத்தும் ‘இறந்து’விட்டனவாம். ஆகவே, ஒரு நாள் இசைவாணரும் நடனக் கலைஞரும் ஒன்று கூடி சவப்பெட்டி யொன்றைத் தோளில் சுமந்து கொண்டு சாலைவழியே கூட்டமாக இடுகாட்டை நோக்கிச் சென்றார்களாம். அந்தச் சமயம் ஒளரங்கசீப் மசூதியில் தொழுகை செய்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாராம். கலைஞர்கள் பின் தொடர்ந்து வருகிற பெரிய சவஊர்வலத்தைக் கண்ட அவர், ‘இறந்து போன பெருமகன் யார்’? என்று வினவினாராம். ‘இசைக்கலைப் பெரு மகள் இறந்துபோனாள், அவளைப் புதைக்க இடுகாட்டுக்குக் கொண்டு போகிறோம்’ என்று அவர்கள் விடையளித்தார்களாம். அதுகேட்ட பாதுஷா ‘மீண்டும் எழுந்து வராதபடி அவளை ஆழமாகப் புதையுங்கள்’ என்று கூறினாராம். இது வரலாறு கூறுகிற செய்தி. இசை நடனங்களை வெறுத்த இந்த ஒரு ஒளரங்கசீப் பாதுஷாசைத் தவிர வேறு ஒளரங்கசீப்கள் இருந்ததாக நமக்குத் தெரியவில்லை. அல்லல், இன்னல், துன்பம், துயரம் சூழ்ந்த உலக வாழ்க்கை யிலே ஓரளவு இன்பந்தருவது இசையும் கூத்துமாகும். மனித குலம் இசை பாடியும் கூத்து ஆடியும் மகிழ்ந்து வருகிறது. முற்காலத்தைவிட இக்காலத்தில் இசையும், கூத்தும் நாடகமும் பெரிதும் வளர்ந்து வருகின்றன. இசைச் சங்கங்களும் இசைக் கழகங்களும் நாடக அரங்கங்களும், வானொலி நிலையங்களும் திரைப்பட நிலையங் களும் இசை, கூத்து, நாடகங்களை வளர்த்து வருகின்றன. உலகத்திலே மனித குலம் உள்ளவரையில் இசையும் கூத்தும் நாடகமும் நடனமும் இருந்தே தீரும். இசைவாணர்களைப் பற்றியும், நடனக் கலைஞர்களைப் பற்றியும் உலகத்திலே பல கதைகள் வழங்கி வருகின்றன. நம்முடைய பாரத தேசத்திலேயும் கலைவாணர்களைப் பற்றின கதைகள் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. இந்தக் கதைகளில் சில ‘புராணக் கதைகள்’ அதாவது, மண்ணுலகத்திலும் விண்ணுல கத்திலும் நடந்ததாகக் கூறப் படுகிற கற்பனைக் கதைகள். சில கதைகள் மண்ணுலகத்திலே உண்மையாக நடந்த வரலாற்றுக் கதைகள். இந்தக் கதைகளில் சில பௌத்த சமயக் கதைகள், சில சமண சமயக் கதைகள், சில சைவ சமயக் கதைகள், சில ‘இந்து’ சமயக் கதைகள். இந்தக கதைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தக் கதைகளை ஏன் எழுதினேன்? நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல் களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன் நான். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மை யோர் படிப்பதில்லை. மிகச் சிறுபான்மையோரேபடிக்கின்றனர். இதை நான் நன்றாக அறிவேன். மிகச் சுருங்கிய தொகையினர் தான் படிக்கிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன். ஆராய்ச்சிக்குப் பல நூல்களை, பலதுறை நூல்களைப் படிக்க வேண்டும். அதாவது சிறு நூல் எழுதுவதாக இருந்தாலும், பல நூல்களைப் படித்து ஆதாரத்தோடு ஆராய்ச்சி நூல்களை எழுத வேண்டும். கதை எழுதுவதற்குப் பல நூல்களைப் படிக்கத் தேவை யில்லை. சிறு கருத்தை வைத்துக் கொண்டு அதைக் கற்பனைகளாலும் சொல் அலங்காரங்களாலும் புனைந்து கதையையோ நவீனங் களையோ எழுதிவிடலாம். ஆராய்ச்சி அவ்வளவு எளிது அன்று. கடலில் முழுகி முத்து எடுப்பது போன்ற கடினமான செயல் ஆராய்ச்சி. பலர் படிக்காத மிகமிகச் சிலர் மட்டுமே படிக்கிற ஆராய்ச்சி நூல்களை எழுதுகிற நான் இந்தக் கதைகளை ஏன் தொகுத்து எழுதினேன்? கதைகளைத் தொகுப்பதும், தொகுத்தவற்றை எழுதுவதும் ஆராய்ச்சி நூல் எழுதுவது போன்ற கடினமான செயல் அன்றே. ஏன் இதை எழுதினேன்? ஆராய்ச்சியாளர் பலதுறை நூல்களைப் படிக்கவேண்டும்; பல சமய நூல்களையும் படிக்க வேண்டும்; பல இலக்கிய நூல்களையும் படிக்கவேண்டும். இந்த முறையில் பலதுறை நூல்களையும் பல சமய நூல்களையும் படித்தபோது இடையிடையே ஆராய்ச்சிக்கு வேண்டாத பல செய்திகள் கிடைத்தன. அவற்றில் கலை வாணர்களைப் பற்றிய கதைகளும் கிடைத்தன. இந்தக் கதைகளைப் பொதுமக்களுக்குத் தரவேண்டுமென்று கருதினேன். இந்தக் கதைகளை மறைந்து கிடக்கவிடக்கூடாது என்று விரும்பினேன். ஏனென்றால் சில கதைகள் பௌத்தமதக் கதைகள். இந்த இருபதாம் நூற்றாண்டிலும், தங்கள் மத சம்பந்தமானவற்றையல்லாமல், பிற மத சம்பந்தமான கதைகளைப் படிக்கக் கூடாதென்று கருதுகிறவர் நமது நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் பௌத்த மதக் கதைகளைப் படிப்பதில்லை சமண சமயக் கதைகளைப் பிற சமயத்தவர் படிப்பது இல்லை. சைவ சமயக் கதைகளை ஏனைய மதத்தவர் படிப்பது கிடையாது. ‘இந்து’ சமயக் கதைகளைப் பௌத்த சமணர் படிப்பது இல்லை. இவ்வாறு மதக் காழ்ப்பும் வெறுப்பும் உள்ள நமது நாட்டில், பல மதச்சார்பான இந்தக் கதைகள் மறைந்து கிடக்கக்கூடாது. இந்தப் பல மதக்கதைகளை எல்லோரும் படித்துப் போற்ற வேண்டும் என்னும் எண்ணம் தான் இந்தக் கதைகளைத் தொகுப்பதற்குத் தூண்டிற்று. எங் கெங்கோ வெவ்வேறு இடங்களில் மறைந்து கிடந்த இக்கதைகளைத் தொகுத்தேன். இவை பழங்காலத்துக் கதைகள், இவற்றைப் புதிதாக நான் படைக்கவில்லை. ஆனால், இக்கதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளேன். இந்தக கதைகள் நம்முடைய பாரத நாட்டுக் கலைவாணர்களைப் பற்றிய கதைகள். அயல்தேசத்துக் கலைவாணர் கதைகள் இதில் இடம் பெறவில்லை. பாரத நாட்டில் வழங்கி வருகிற கலைவாணரைப் பற்றிய எல்லாக் கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன என்று கூற முடியாது. சில கதைகள் விடுபட்டும் இருக்கக்கூடும். என்னுடைய பார்வைக்கு வந்த கதைகளையே இங்குக் கூறியுள்ளேன். பாரத தேசத்துக் கலைவாணர்களைப் பற்றிய கதைத் தொகுப்பில் இதுவே முதலாவதாகக் கருதுகிறேன். இந்நூலை அச்சிட்டு வெளியிட்ட வேணி நூலகத்தாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மயிலாப்பூர், சென்னை-4 மயிலை சீனி. வேங்கடசாமி 5.9.75 1. பஞ்சசிகனும் பத்திரையும் தேவலோகத்தில் இந்திர சபையில் ஆடல் பாடல்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்திர சபையில் நடன அரங்கத்தில் இசை யாசிரியராகவும் நடன ஆசிரியராகவும் இருந்து. கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர் தும்புரு. தும்புருவின் மகள் பத்திரை என்பவள். கட்டழகி; நடனம் ஆடுவதிலும் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும தேர்ந்தவள். தும்புருவும் பத்திரையும் இந்திர சபைக்குப் போய்க் கொண்டிருந்தபோது வழியிலே அவர்களைப் பஞ்சசிகன் கண்டான். அவன் பத்திரை மேல் காதல் கொண்டான். இளைஞனான பஞ்சசிகன் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் வல்லவன். அவனுடைய யாழுக்கு ‘பிலுவ பண்டு வீணை’ என்பது பெயர். தேவேந்திரன் அவனைத் தன்னுடைய தூதனாக அமர்த்தி யிருந்தான். இந்திரன், யாரிடத்திலேனும் தூது அனுப்பக் கருதினால் பஞ்சசிகனைத் தூதனாக அனுப்புவது வழக்கம் பஞ்சசிகன் தூதுபோய் யாழ் வாசித்து இசைப் பாடித் தான் கருதிச் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வருவான். அதுபற்றி இந்திரனுக்கு அவனிடத்தில் மிகுந்த அன்பிருந்தது. பஞ்சசிகன் அடிக்கடி விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்குத் தூது செல்வது வழக்கம். இவன் மூலமாக மண்ணுலகத் தில் சிறப்பாக நடைபெறுகிற செய்திகளை அவ்வப்போது விண்ணுலகத்தில் இந்திரன் அறிந்துகொள்வது வழக்கம். பஞ்சசிகன் மண்ணுலகத்துக்கு வந்து நான்கு திக்குப் பாலகர்களைக் கண்டு அவர்கள் தெரிவிக்கும் மண்ணுலகச் செய்திகளை அறிந்துகொண்டு விண்ணுலகஞ் சென்று அச்செய்திகளை இந்திரனுடைய நண்பனும் தேரோட்டியுமான மாதலியிடம் கூறுவான். மாதலி அச்செய்திகளை இந்திரனுக்கு அறிவிப்பான். இவ்வாறு பஞ்சசிகன் மண்ணுலகத்துக்கும் விண்ணுலகத்துக்கும் தூதனாக இருந்தான். வழியில் பத்திரையைக் கண்டு அவள்மேல் காதல்கொண்ட பஞ்சசிகன் அவளைத் தனியாகச் சந்தித்துத் தன்னுடைய காதலை அவளிடம் கூறினான். ஆனால், அவள் அதற்கு இணங்கவில்லை. இந்திரனுடைய தேர்ப்பாகனான மாதலியின் மகன் சிகண்டியை அவள் காதலித்தாள். ஆகையால் பஞ்சசிகனை மணஞ் செய்து கொள்ள அவள் இணங்கவில்லை. பஞ்சசிகனோ பத்திரையை மணஞ்செய்து கொள்ளப் பெரிதும் விரும்பினான். கலைஞனான அவன் பத்திரை யிடத்தில் தனக்கிருக்கும் ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தி ஆழமான சில காதற்செய்யுட்களை எழுதினான். அந்தச் செய்யுட்களுக்குத் தானே இசை வகுத்தான். இசை வகுத்த பாடல்களைத் தன்னுடைய யாழில் அமைத்துப் பாடினான். அந்தப் பாடல்களில் காதல் செய்திகள் மட்டு மல்லாமல் பகவன் கௌதமபுத்தருடைய சிறப்புகளும் கலந் திருந்தன. அவன், தான் பாடின அந்தச் செய்யுட்களை பத்திரை யிடத்தில் சென்று பாடினான். செம்மையாவும் அழகாகவும் இனிமையாவும் இருந்த அவனுடைய காதல் பாட்டுகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. அந்தக் காதல் பாட்டுகளில் பகவன் புத்தரின் புகழையும் பாடியிருந்தபடியால், புத்தருடைய உபதேசங்களில் ஈடுபட்டிருந்த பத்திரைக்கு அப்பாட்டுகள் பெரிதும் மகிழ்ச்சியைத் தந்தன. இவனுடைய இசைப் பாடல் களைக் கேட்டு மகிழ்ந்த பத்திரை இவன்மேல் விருப்பங்கொண்டு இவனை மணஞ்செய்து கொள்ள இசைந்தாள். அதனால் பஞ்சசிகன் பெருமகிழ்ச்சியடைந்தான் இவ்வா றிருக்கும்போது, மண்ணுலகத்தில் உபதேசஞ் செய்து கொண்டிருந்த பகவன் புத்திரிடம் வந்து அவருடைய உபதேசங்களைக் கேட்க தேவேந்திரன் விரும்பினான். அதற்கு ஏற்ற சமயத்தை அறிந்து வரும்படி அவன் பஞ்சசிகனைப் பகவன் புத்தரிடம் அனுப்பினான். பஞ்சசிகன் புத்திரிடத்தில் வந்தபோது அவர் மகத நாட்டு இந்திர சாலைக் குகையில் தங்கியிருந்தார். அவர் தனியே இருப்பதை அறிந்த பஞ்சசிகன் அருகில் சென்று யாழ் இசைத்து இன்னிசை பாடினான். அவன் பாடின பாட்டு அவனுடைய காதற்பாட்டு தான். அந்தப் பாட்டில் புத்தருடைய புகழும் இருந்தது. அவன் வீணை வாசித்துப் பாடின இசைப் பாடல் தேவகானமாக மனத்தைக் கவர்ந்தது. பகவன் புத்தர் அந்த இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பாடல்களை இயற்றியவர் யார் என்று அவனைக் கேட்டார். பத்திரையைக் காதலித்துத் தான் இயற்றின பாடல்கள் என்று அவன் அடக்கமாக வணங்கிக் கூறினான். பகவன் புத்தர் மகிழ்ந்து அவனை வாழ்த்தி யருளினார். பிறகு, தான் வந்த காரணத்தைத் தெரிவித்து இந்திரன் அவரைச் சந்திக்கும் நோக்கத்தைக் தெரிந்துகொண்டு போய் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் பகவரிடம் வந்து வணங்கி அவரிடத்தில் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு தன்னுடைய தேவலோகஞ் சென்றான். தனக்கும் பகவன் புத்தருக்கும் சந்திப்புச் செய்து கொடுத் ததற்காக இந்திரனுக்குப் பஞ்சசிகன் மேல் மகிழ்ச்சியுண்டாயிற்று. தேவேந்திரன், பஞ்சசிகன், பத்திரையைக் காதலிப்பதை அறிந்து அவனுக்கு அவளைத் திருமணஞ் செய்விக்க எண்ணினான். தேவலோகத்திலே பஞ்சசிகனுக்கும் பத்திரைக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. இசை நாடகக் கலைகளில் வல்லவர்களான இயக்கர்களும் கந்தவர்களும் மற்றும் தேவர்களும் திருமண விழா வுக்கு வந்து சிறப்பித்தார்கள் இசைக் கலை ஆசரியரும் பத்திரையின் தந்தையுமான தும்புரு எல்லோரையும் வரவேற்று உபசரித்தார். தேவேந்திரனும் திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்தி யருளினான். மணமக்களான பஞ்சசிகனும் பத்திரையும் இசைபாடி இனிது வாழ்ந்து வந்தனர். இரண்டு இசைவாணர்கள் வாழ்க்கைப் பட்டால் அவ் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகத்தானே இருக்கும். 2. குட்டிலன் - காசி நகரத்து இசைவாணன் மிகமிகப் பழங்காலத்திலே காசியைப் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் குட்டிலன் என்னும் இசைக் கலைஞன் அந்நகரத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கினான். குட்டிலன் இசைபாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் வல்லவன். அவனுடைய இசைக் கலையை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தார்கள், பிரமதத்த அரசன் இக்கலைவாணனைத் தன்னுடைய அரண்மனைப் புலவனாக அமர்த்திச் சிறப்புச் செய்தான். குட்டிலனுடைய பெற்றோர் வயது சென்ற கிழவர்கள். வயது முதிர்ச்சியினால் பார்வையிழந்திருந்த அவர்களை மன மகிழச் செய்தான். அவர்களுடைய கட்டளையைத் தலைமேற் கொண்டு நடத்தினான். இவ்வாறு குட்டிலன் தன் வாழ்நாளைக் கழித்து வந்தான். காசியிலிருந்து வாணிகச் சாத்தர்கள் வெகு தூரத்திலுள்ள உச்சயினி நகரத்துக்குப் போய் சிலகாலந் தங்கி வாணிகஞ் செய்து பொருள் ஈட்டிக்கொண்டு காசி நகரத்துக்கு வருவது வழக்கம். அந்த வழக்கப்படி சில வாணிகர்கள் காசியிலிருந்து உச்சயினிக்குச் சென்று அங்குச் சில காலந் தங்கி வாணிகஞ் செய்தார்கள். வாணிகஞ் செய்து முடிந்தபிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணினார்கள். புறப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். குளித்து முழுகி நறுமணத் தயிலம் பூசி நல்லாடைகளை யுடுத்தி சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். அந்த உச்சயினி நகரத்திலிருந்த முகிலன் என்னும் இசைவாணனை அழைத்துப் பொருள் கொடுத்து இசைக் கச்சேரி நடத்தினார்கள். முகிலன் யாழை இசைத்து வாசித்தான். அவன் இசைக் கலையில் தேர்ந்தவன் அல்லன். அவன் வாசித்த இசை அவர்கள் மனதைக் கவர வில்லை. ஆகவே, அவனுடைய இசையை அவர்கள் பாராட்ட வில்லை. அது கண்ட அவன் ‘உச்ச நிலையில் இசைக்கிறது போலும், சற்று சுருதியை இறக்கி வாசிப்போம்’ என்று எண்ணி நடுத்தரத்தில் அமைத்து இசைத்தான். அந்த இசையும் அவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்கவில்லை. தன்னுடைய இசையைப் பாராட்டாமலும் ரசிக்காமலும் இருந்ததைக் கண்டு முகிலன். இவர்கள் இசையறியாத மூடர்கள் போலும் என்று தனக்குள் கருதினான். நரம்புகளைத் தளர்த்தி வாசித்தான். அப்பொழுதும் அந்த இசை அவர்கள் மனத்தைக் கவர வில்லை. அவர்களால் அவனுடைய இசையை ரசிக்க முடியவில்லை. அப்போது அவன் அவர்களைக் கேட்டான். “நீங்கள் ஏன் என்னுடைய இசையை ரசிக்காமலிருக்கிறீர்கள். இது உங்கள் காதுக்கு இனிக்க வில்லையா? உங்கள் மனத்தைக் கவரவில்லையா?” “நீர் இசை வாசித்தீரா! நரம்பைச் சுருதி கூட்டினீர் என்றல்லவா எண்ணினோம்.” “என்னுடைய இசையை யறிந்து பாராட்ட உங்களுக்குப் போதிய அளவு இசையறிவு இல்லை என்று கூறுகிறேன். இதைவிட இனிமையான சிறந்த இசையை நீங்கள் கேட்டிருக் கிறீர்கள்?” “நாங்கள் காசி நகரத்துப் பேர்போன இசைப்புலவரான குட்டில ருடைய தேவ கானத்தைக் கேட்டிருக்கிறோம். அந்த இசை எங்கே, உம்முடைய இசை எங்கே! குழந்தையின் அழுகையை நிறுத்தப் பெண்கள் பாடும் பாட்டுப் போல இருக்கிறது உம்முடைய இசை.” இதைக் கேட்டு முகிலன் “அப்படியா!” என்று அதிசயப் பட்டான். “காசியில் இருக்கும் குட்டிலப் புலவரை நான் பார்க்க விரும்புகிறேன். இதோ நீங்கள் கொடுத்த உங்கள் காசைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் காசிக்குப் போகும் போது என்னையும் தயவு செய்து உங்களோடு அழைத்துக் கொண்டு போகவேண்டும்.” என்று அவன் அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் இவன் வேண்டுகோளுக்கு இணங்கினார்கள். வாணிகச் சாத்தர் காசிக்குத் திரும்பி வந்தபோது முகிலனையும் கூட்டிக்கொண்டு வந்து குட்டிலப் புலவரின் வீட்டைக் காட்டிச் சென்றார்கள். குட்டிலப் புலவரின் வீட்டுக்கு முகிலன் சென்றபோது இசை வாணர் வீட்டில் இல்லை. வயது சென்ற அவருடைய தாய் தந்தையர் மட்டும் வீட்டிலிருந்தார்கள். முகிலன் அங்கு வந்ததைக் கண் பார்வை யற்றிருந்த அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை. சுவரின் மேலே முனையில் மாட்டித் தொங்கவிட்டிருந்த யாழைக்கண்டு முகிலன் அதைக் கையில் எடுத்து வாசித்தான். யாழ் ஒலியைக்கேட்ட அவர்கள், எலி யாழ் நரம்பைக் கடிக்கிறது போலும் என்று கருதி ‘சூ....சூ....உஸ் ... உஸ்’ என்று துரத்தினார்கள். முகிலன் யாழை இருந்த இடத்தில் வைத்து விட்டு அவர்களிடத்தில் வந்து அவர்களை வணங்கினான். தான் குட்டிலப் புலவரைக் காண வந்ததைத் தெரிவித்தான். ‘எங்கள் மகன் வெளியே போயிருக்கிறான். விரைவில் வந்து விடுவான்’ என்று அவர்கள் கூறினார்கள். குட்டிலக் கலைஞன் வீட்டுக்கு வந்தபோது புதியவன் இருப்பதைக் கண்டு “நீ யார்? எங்கிருப்பவன், எதற்காக வந்தாய்” என்றுகேட்டான். தான் உச்சயினி நகரத்தவன் என்றும் தன்னுடைய பெயர் முகிலன் என்றும் குட்டிலனிடம் இசை பயில வந்ததாகவும் முகிலன் கூறினான். புருஷ லக்ஷணங்களை அறியும் கலை பயின்ற குட்டிலன் முகிலனை அடி முதல் தலை வரையில் நோக்கி அவனுடைய அங்க அடையாளங்களைக் கண்டு, தனக்குள் ‘இவன் நல்லவன் அல்லன்’ என்று கருதினான். “இசைக்கலை உனக்குத் தகுந்த கலையன்று, நீ போகலாம்” என்றுசொல்லி அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்தான். அது கேட்ட முகிலன் மனம் வருந்தினான். அவன் குட்டிலனுடைய பெற்றோரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு ‘என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு இசை கற்பிக்கும்படி உங்கள் மகனுக்குக் கூறுங்கள்’ என்று அவர்களை வேண்டிக்கொண்டான். அவனுடைய வேண்டுகோளுக்கு மனமிரங்கிய பெற்றோர், அவனுக்கு யாழ் வித்தையைக் கற்பிக்கும்படி தங்கள் மகனாகிய குட்டிலனுக்குக் கூறினார்கள். பெற்றோர் சொல்லை மறுக் காதவனாகையினால் குட்டிலன் முகிலனைச் சீடனாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு யாழ் வித்தையைக் கற்பித்தான். குட்டிலன் தான் கற்றறிந்த இசைக்கலைகளை எல்லாம் ஒன்றையும் மறைக்காமல் கற்றுக்கொடுத்தான். யாழ் வாசிக்கும் நுட்பங்களை யெல்லாம் விளக்கமாகத் தெரிவித்தான். சில மாதங் களுக்குள் முகிலன் தேர்ந்த இசைக் கலைஞனானான். “நான் அறிந்த வித்தைகளை யெல்லாம் உனக்குக் கற்பித்துவிட்டேன். இனி உனக்குக் கற்பிக்க ஒன்றுமில்லை” என்று குட்டிலன் தன்னுடைய சீடனுக்குக் கூறினான். குட்டிலன் கருதியது போல முகிலன் நல்லவன் அல்லன். இசைக் கலைகளைக் கற்றுத்தேர்ந்த அவன் தன்னுடைய குருவுக்குத் துரோகம் செய்ய எண்ணினான். அவனுடைய சுயநல வேட்கை, அவனுடைய ஆசிரியனுக்குத் துரோகம் செய்யத் தூண்டியது. ஒரு நாள் முகிலன் குட்டிலனுடன் அரண்மனைக்குப் போனான். பிரமதத்த அரசன் குட்டிலனை “இசைவாணரே! இவன் யார்?” என்று வினவினான். “அரசர் பெருமானே! இவன் அடியேனுடைய மாணவன். முகிலன் என்பது இவனுடைய பெயர்” என்று விடை கூறினான் இசை வாணன். பிறகு அடிக்கடி முகிலன் இசைவாணருடன் அரண் மனைக்குப் போய்க்கொண்டிருந்தான். பிறகு அவன் அரசனுக்கு அறிமுகமானான். முகிலன் தனக்குள் எண்ணினான்: ‘இசைக் கலையில் நான் தேர்ந்தவனாய்விட்டேன். என்னுடைய ஆசிரியர் கிழவர் ஆகி விட்டார். நான் அரண்மனையில் இசைப் புலவராக அமர்ந்து அரசாங்கப் புலவராக இருப்பது எவ்வளவு மேன்மையானது! இந்தக் காசிமாநகரம் பாரத நாட்டின் தலைநகரம். இந்த நகரத்தின் இசைப் புலவராக இருப்பது எவ்வளவு சிறப்பு! இவ்வாறு எண்ணிய முகிலன் ஒரு நாள் தன்னுடைய ஆசிரியரிடங் கூறினான்: “ஐயா நான் அரண்மனையில் ஊழியஞ்செய்ய விரும்புறேன்” என்றான். “நல்லது இதுபற்றி அரசர் பெருமானிடம் கூறுகிறேன்” என்றார் நல்லவராகிய ஆசிரியர். அவர் அரசனைக் கண்டு, “அடியேனுடைய மாணவன் அரண்மனையில் இசைப் புலவனாக ஊழியஞ்செய்ய விரும்புகிறான். அவனுடைய ஊதியம் எவ்வளவு என்பதைத் தெரிவித்தருள வேண்டும்” என்று கேட்டார். “உம்முடைய ஊதியத்தில் செம்பாதியாக இருக்கும் உம்முடைய மாணவனுடைய ஊதியம்” என்றார் அரசர் பெருமான். ஆசிரியர் இதைக் தம்முடைய சீடனிடத்தில் கூறினார். அது கேட்ட அவன், “தாங்கள் பெறுகிற ஊதியம் எவ்வளவோ அவ்வளவு ஊதியம் எனக்கும் கிடைக்க வேண்டும்” என்று கூறினான். “ஏன்?” “தாங்கள் கற்ற வித்தைகளையெல்லாம் நானுங் கற்றிருக் கிறேன் அல்லவா?” “ஆமாம். நான் அறிந்த இசைக் கலைகளையெல்லாம் நீயும் அறிவாய்.” “ஆகவே, தாங்கள் பெறுகிற ஊதியத்தின் அளவு ஊதியம் நானும் பெற வேண்டும்.” குட்டிலப் புலவர் இவனுடைய கருத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசர், “உம்மைப் போல முழுக் கலையையும் உம்முடைய மாணவர் அறிந்திருந்தால் முழு ஊதியம் பெறட்டும்” என்று கூறினார். பிறகு அரசர் பெருமான் முகிலனை அழைத்து, “உம்முடைய ஆசிரியருக்குச் சமமாக ஊதியம் பெற விரும்புகிறீர். அவரைப்போல நீர் இசைக் கலையில் முழு ஆற்றல் பெற்றிருக்கிறீரா?” என்று கேட்டார். “அதற்கென்ன ஐயம். அரசர் பெருமான் விரும்பினால் இசைப் போட்டி நடத்திப் பாருங்கள்” என்று கூறினான் முகிலன். “ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இசைப் போட்டியா!” என்று கூறி அரசர் பெருமான் அதிசயப்பட்டார். இவன் நல்லவன் அல்லன் என்பதை அரசரும் அறிந்தார். முகிலன் கூறினான்: “பெருமான் அடிகளே! எனக்கும் என்னுடைய ஆசிரியருக்கும் இசைப்போட்டி நடக்கட்டும். எங்களில் தேர்ந்த கலைஞர் யார் என்பதை உலகம் அறியட்டும்.” இவ்வாறு முகிலன் கூறிச் சென்ற பிறகு. அரசர் பெருமான் குட்டிலப் கலைவாணரை அழைத்து முகிலன் அவருடன் இசைப் போட்டி நடத்த விரும்புவதைக் தெரிவித்தார். அது கேட்ட அவர் “அவன் இசைப் போட்டி நடத்த விரும்பினால் நானும் அதற்கு இசைகிறேன்” என்று கூறினார். இருவரும் இசைப் போட்டிக்கு உடன்பட்ட படியால், பிரமதத்த அரசன் முரசு அறைவித்து இசைப் போட்டி அரங்கம் நடக்கப் போவதை நகரமக்களுக்கு அறிவித்தார். நகர வீதிகளில் முரசு முழங்கிற்று. “காசி நகரத்தில் வாழும் பெருமக்களே, கேளுங்கள்! இன்று ஏழாம் நாள் குட்டிலராகிய இசை யாசிரியருக்கும் அவருடைய மாணவராகிய முகிலருக்கும் இசைப் போட்டி அரங்கு அரண்மனையில் நடக்க இருக்கிறது. யார் இசைக் கலையில் சிறந்தவர் என்பதை அன்று சபையில் அறியலாம். நகரப் பெருமக்கள் வந்து காணுங்கள்” என்று நகர மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. குட்டிலக் கலைஞர் தமக்குள் எண்ணினார்: ‘முகிலன் இளைஞன். தெம்பும் துடிப்புமுள்ளவன். நானோ கிழவன், வலிமையற்றவன், தெம்பு இல்லாதவன். கிழவன் செய்யுங் காரியங்கள் போற்றப்படமாட்டா. போட்டியில் என்னுடைய மாணவன் தோல்வியடைந்தால், அதனால் எனக்குப் பெருமையோ புகழோ இல்லை. அவனிடம் நான் தோல்வியடைந்தால் - அந்த வெட்கக் கேட்டைவிடப் போட்டிக்குப் போகாமல் காட்டுக்குப் போய் உயிர் விடுவதே மேலானது.’ இவ்வாறு தமக்குள் எண்ணியக் குட்டிலப் புலவர் வீட்டைவிட்டுத் காட்டுக்குப் போனார். போனவர் சாவதற்கு அஞ்சி வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டுக்கு வந்தவர் மானத்துக்கு அஞ்சிக் காட்டுக்குப் போனார். போனவர், சாவதற்கு அஞ்சி மீண்டும் வீட்டுக்கு வந்தார். இவ்வாறு காட்டுக்குப் போவதும் வீட்டுக்கு வருவதுமாக ஆறு நாட்கள் கழிந்தன. தேவலோகத்தில் சக்கரன் (இந்திரன்) தன்னுடைய சிம்மாசனத் தில் வெண்மையான பாண்டு கம்பளத்தின் மேல் அமர்ந்திருந்தான். அப்போது அந்தக் கம்பளம் சூடு கொண்டது. பூலோகத்தில் ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கும்போது இந்திரனுடைய பாண்டு கம்பளம் சூடு கொள்வது வழக்கம். கம்பளம் சூடுகொண்ட காரணத்தை யறிந்த சக்கரன், குட்டிலப் புலவர் மனவருத்தத்துடன் காட்டில் இருப்பதை அறிந்து அவரிம் மனித உருவங் கொண்டுவந்தான். வந்து, “கலைவாணரே! ஏன் இந்தக் காட்டுக்கு வந்தீர்?” என்று வினவினான். கலைவாணர்: “நீர் யார் ஐயா!” “நான் சக்கரன், இந்திரன்.” “தேவர் கோமானே! இசைப்போட்டியில் என்னுடைய மாணவனிடம் தோல்வியடைவேன் என்று அஞ்சுகிறேன். தோல்வியடைந்து மானம் இழந்து வாழ்வதைவிட செத்துப் போவது சாலச் சிறந்ததென்று கருதுகிறேன். யாழ் நரம்புகளை இசைத்து இனிமையான பண் உண்டாக்க நான் அவனுக்குக் கற்பித்தேன். இப்போது அவன் தன்னுடைய ஆசிரியனையே வெல்வதற்குப் போட்டியிடுகிறான். தேவர் கோமானே! தாங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.” இது கேட்ட சக்கரன் கூறினார்: “இசைவாணரே! அஞ்சாதீர். நான் உமக்குப் புகலிடமாகவும் பாதுகாவலனாகவும் இருப்பேன். உற்ற வேளையில் உமக்கு உதவிசெய்து உம்முடைய இசைப் புலமையை வெளிப்படுத்துவேன். உம்முடைய மாணவனைவிட நீர் இசைக் கலையில் வல்லவர் என்பதில் சந்தேகமில்லை. உம்முடைய மாணவனுக்கு நீர் அஞ்சாதீர்.” இவ்வாறு கூறிய சக்கரன். மேலும் கூறினார்: “அஞ்சாமல் வீட்டுக்குப் போம். நாளைக்கு அரண்மனைக்குப் போய் யாழ் வாசியும். யாழை வாசிக்கும்போது யாழின் ஒரு நரம்பை அறுத்து வாசியும். அதனால் இசை சிறிதும் கெடாது. உம்முடைய மாணவனும் ஒரு நரம்பை அறுத்து வாசிப்பான். அப்போது அவனுடைய யாழின் இசைத் கெடும். நீ ஏழு நரம்புகளையும் ஒவ்வொன்றாக அறுத்து யாழ் வாசிக்கும் போது, உன்னுடைய மாணவனும் நரம்புகளை அறுத்து வாசிப்பான். அவனுடைய இசை கெடும். உன்னுடைய யாழிசை சற்றும் பண் கெடாது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். நீ அஞ்சாமல் வீட்டுக்குப் போ. உனக்கு வெற்றி கிடைக்கும்” என்று இந்திரன் கூறினான். குட்டிலப் புலவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அடுத்த நாள் அரண்மனையில் யாழ் இசைப் போட்டி தொடங்கிற்று. அந்த அழகான பெரிய மண்டபத்திலே நகரப் பெருமக்கள். வந்து அமர்ந்திருந்தனர். பிரமதத்த அரசன், அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழுவுடன் வந்து அரியாசனத்தில் அமர்ந்தார். குட்டிலப் புலவர் யாழுடன் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். முகிலனும் அமர்ந்திருந்தான். இசைப் போட்டி தொடங்கிற்று. முதலில் இரண்டு கலைவாணரும் சேர்ந்து யாழை வாசித்தார்கள். இருவரும் ஒரே பண்ணை இசைத்தார் கள். அந்தப் பண் இசை எல்லோருக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கிற்று எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இது சபையோருக்கு வணக்கஞ் செய்ய இசைத்த இன்னிசை. அடுத்தபடியாக குட்டில இசைவாணர் யாழ் வாசித்தார். அவர் ஒரு நரம்பை அறுத்துவிட்டு வாசித்தார். ஒரு நரம்பு அறுந்தும் இசைப் பண் குறையவில்லை. முகிலன் பிறகு யாழ் வாசித்தான். அவனும் ஒரு நரம்பை அறுத்தவிட்டு வாசித்தான். அப்போது அவனுடைய இசை தட்டுப்பட்டது. குட்டிலர் அடுத்து அடுத்து முறையே இரண்டாவது மூன்றாவது நரம்புகளை அறுத்துவிட்டு இசை வாசித்தார். நரம்பு அறுக்கப்பட்டும் இசை சற்றும் குறையவில்லை. முகிலனும் நரம்புகளை அறுத்து விட்டு வாசித்தான். ஆனால், இசை எழவில்லை. பிறகு குட்டிலர் எல்லா நரம்புகளையும் அறுத்துவிட்டு யாழின் தண்டை மட்டும் இசைத்தார். யாழ் இசை சற்றும் குறையாமல் இனிமையாக ஒலித்தது. முகிலனும் எல்லா நரம்புகளையும் அறுத்துவிட்டு இசை வாசித்தான். இசை எழவில்லை. ஆசிரியர் நரம்புகளை அறுத்துவிட்டு யாழ் வாசித்து இனிய பண் உண்டாக்குவதையும், மாணவன் நரம்புகளை அறுத்துவிட்டு யாழ் வாசிக்கும்போது பண் உண்டாகாததையும் சபையோர் கண்டு வியந்தார்கள். அவர் வாசித்த பண் மண்டபம் முழுவதும் இனிதாகக் கேட்டது. எல்லோரும் கேட்டு மகிழ்ந்தார்கள் . ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று பாராட்டினார்கள். கடைசியாக குட்டிலர் வெறும் யாழின் மரச்சட்டத்தை வாசித்துப் பண் எழுப்பி இசை இசைத்தார். முகிலனும் யாழின் சட்டத்தை வாசித்தான். அதில் ஓசையும் பண்ணும் உண்டாக வில்லை. அப்போது அரசன் கையை அசைத்துக் குறிப்புக் காட்டினான். ‘முகிலன் இசையில் தோற்றான்’ என்பது அதன் பொருள். சபையி லிருந்தவன் “நீ உன் ஆசிரியனுக்கு மாறாகத் துரோகம் எண்ணினாய். குருத் துரோகி” என்று அவனை வைதார்கள். சிலர் முகிலன் மேல் கல்லையும் கட்டையையும் எறிந்தார்கள். சிலர் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் நகரத்தின் குப்பை மேட்டில் தள்ளினார்கள். பிரமதத்த அரசன் குட்டில இசைவாணருக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புச் செய்தான். எல்லோரும் மகிழ்ந்து கலை வாணரைப் புகழ்ந்துப் போற்றினார்கள். தேவலோகத்தில் இந்திர சபையில் சக்கரன் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனைச் சூழ்ந்திருந்த தேவர்கள் அவன் பூலோகத்துக்குச் சென்றிருந்த காரணம் என்னவென்று கேட்டார்கள். சக்கரன், மண்ணுலகத்திலே குட்டிலப் புலவருக்கும் முகிலனுக்கும் நடந்த இசைப் போட்டியை அவர்களுக்கு கூறினான். அப்போது அச்சபை யிலிருந்த அரம்பை, மேனகை முதலான நாடக மகளிரும் இசையாசிரியனாகிய சயந்தகுமரனும் குட்டிலரின் யாழிசையைத் தாங்களும் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி சக்கரன் தன்னுடைய தேர்ப்பாகனாகிய மாதலியை அழைத்துத் தேரை மண்ணுலகத்துக்கு ஓட்டிக்கொண்டு போய் குட்டிலப் புலவரை அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே மாதலி தேரை ஓட்டிக்கொண்டு போய் காசி நகரத்திலிருந்த குட்டிலக் கலைஞரை ஏற்றிக்கொண்டு இந்திர சபையில் கொண்டு வந்து விட்டான். குட்டிலக் கலைஞரை எல்லோரும் வரவேற்றார்கள். இந்திரனும் அவரை வரவேற்று “இசைவாணரே! இங்குள்ள கலைவாணர்கள் உம்முடைய இன்னிசையைக் கேட்க விரும்புகிறார்கள். அன்பு கூர்ந்து யாழ் வாசியுங்கள்” என்று கூறினான். இசைவாணர் தம்முடைய யாழை வாசித்து இசை யமுதத்தை வழங்கினார். அவர் வாசித்த பண் தேவலோகத்து இசையைவிட மிக இனிமையாக இருந்தது. தேவர்கள் அந்த இசையமுதத்தைப் பருகி மனமுருகி மகிழ்ந்தார்கள். எல்லோரும் அவருடைய இசையைப் புகழ்ந்து மெச்சினார்கள். குட்டிலப் புலவர் ஏழு நாட்கள் இந்திரசபையில் யாழ் வாசித்து இசை யமுதத்தை வழங்கினார். சக்கரன் (இந்திரன்) புலவருக்கு விலையுயர்ந்த பொருள் களைப் பரிசாக வழங்கினார். பிறகு மாதலி அவரைத் தேரில் ஏற்றிக் கொண்டு விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்து குட்டிலப் புலவரை அவருடைய வீட்டில் விட்டுச் சென்றான். குட்டிலப் புலவரின் புகழ் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் பரவியிருந்தது. 3. ஊர்வசியின் காதல் மண்ணுலகத்தின் அரசனான புரூரவசுவும் விண்ணுலகத்தின் அரசனான தேவேந்திரனும் நண்பர்களாக இருந்தார்கள். நட்புக் காரணமாகப் புரூரவசு அடிக்கடி மண்ணுலகத்தைவிட்டுப் புறப்பட்டு ஆகாய வழியே விண்ணுலகத்துக்குப் போய் வருவது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு நாள் புரூரவசு விண்ணில் பிரயாணஞ் செய்து கொண்டருந்தபோது கேசி என்னும் அசுரன் ஆகாய வழியே பிரயாணஞ் செய்வதைக் கண்டான். ஊர்வசி, சித்திரலேகை ஆகிய இரண்டு தேவ கன்னியரை அவன் தேரில் ஏற்றிக்கொண்டு போனான். அந்தத் தெய்வப் பெண்கள் அச்சத்தினால் அழுது புலம்பித் தங்களை விட்டுவிடும்படி கேசியைக் கெஞ்சிக் கேட்டார்கள். கேசி அவர்களை விடாமல் பலாத்காரமாகத் தேரில் ஏற்றிக்கொண்டு போனான். ஊர்வசி தேவேந்திரனுடைய சபையில் ஆடல் பாடல் செய்பவள். சித்திரலேகையும் தேவ கன்னிகை. அதனைக் கண்ட புரூரவசு அரசன் அந்தத் தெய்வக்கன்னியர் மேல் இரக்கங்கொண்டு அவர்களை விடுவிக்க எண்ணினான். தன்னுடைய தேரைக் கேசியின் அருகில் செலுத்தி அவனுடன் போர் செய்தான். கேசியும் பின் வாங்காமல் புரூரவசுவுடன் போர் செய்தான். இருவருக்குங் கடும் போர் நடந்தது. போரின் கடுமையைக் கண்டு தேவகன்னியர் என்ன ஆகுமோ என்று அஞ்சி நடுங்கினார்கள். போரிலே புரூரவசு அரசன், கேசி அசுரனைக் கொன்று வெற்றி யடைந்தான். அசுரனுடைய தேரில் இருந்த ஊர்வசியையும் சித்திரலேகையையும் விடுவித்து அவர்களைத் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு தேவலோகத்துக்குக் கொண்டு போய் இந்திரனிடஞ் சேர்த்தான். புரூரவசுவின் இந்தச் செயலைத் தேவேந்திரன் மெச்சிப் புகழ்ந்தான். ஏனென்றால், கேசி என்னும் அசுரன் தேவேந்திரனுடைய பகைவன். புரூரவசு அவனைக் கொன்றதற்காகவும் தேவ கன்னியரைச் சிறை மீட்டுக் கொண்டு வந்ததற்காகவும் இந்திரன் மகிழ்ந்து அவனுக்கு வரங்களை வழங்கினான். புரூரவசுவுக்கு மேன்மேலும் திருஷம் ஆற்றலும் பேரும்புகழும் வளரவேண்டுமென்று தேவேந்திரன் வாழ்த்தினான். கேசியிடமிருந்து தன்னை விடுவித்த புரூரவசுவின் மேல் ஊர்வசிக்கு நன்றியுணர்ச்சியும் அன்பும் ஏற்பட்டது. அவள் அவனுக்கு நன்றி கூறினாள். பிறகு நாளடைவில் அவளுடைய நன்றியுணர்ச்சி காதலாக வளர்ந்தது. ஊர்வசி புரூரவசுவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அதை அவள் வெளிப்படையாகவும் தெரிவித்தாள். இந்திர சபையில் நாட்டிய நடனங்களும் ஆடல் பாடல் களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. இசை நாடக ஆசிரியராகிய பரதர் புதிய புதிய நாடகங்களையும் இசைப் பாட்டுகளையும் அமைத்து அரங்க மேடையில் நிகழ்த்திக் காட்டுவார். இந்திரனும் தேவர்களும் அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ்வார்கள். பரதர் புதிதாக ஒரு நாட்டிய நாடகத்தை எழுதி அமைத்தார். அதன் பெயர் ‘இலக்குமியின் திருமணம்’ என்பது. இலக்குமி விஷ்ணுவின் மேல் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டதாக அந்த நாட்டிய நடனம் அமைந்திருந்தது. இந்தப் புதிய நாட்டிய நாடகத்தை நடத்திக் காட்டும் படி தேவேந்திரன் பரதனிடம் கட்டளையிட்டான். இந்த நாட்டிய நாடகத்தைப் பார்ப்பதற்கு தேவர்கள் இந்திர சபையில் வந்து கூடினார்கள். புரூரவசு அரசனும் பூலோகத்திலிருந்து இந்திர லோகத்துக்குச் சென்று இந்திரனுக்கு அருகில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாடகம் தொடங்கிற்று. பரதன் இசை பாடினார். யாழ், குழல், முழவு, தாளங்கள் ஒலித்தன. மேனகை, அரம்பை, ஊர்வசி ஆகியோர் கதாபாத்திரங்களாக நடித்தார்கள். அரம்பை விஷ்ணு வாகவும், ஊர்வசி இலக்குமியாகவும், மேனகை தோழியாகவும் நடித்தார்கள். இலக்குமி யாக நடித்த ஊர்வசி அரங்க மேடைமேல் வந்தபோது, தான் காதலிக்கும் புரூரவசு அரசன் தேவேந்திரன் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அப்போது அவளுக்கு அவன் மீதிருந்த காதல் பெருகியது. அவள் தான் அரங்க மேடையில் நடிப்பதையும் மறந்து போனாள். நாடகத்தில், இலக்குமி யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் என்று தோழி கேட்கும் கட்டம் வந்தது. அந்தக் கேள்விக்கு ‘நான் விஷ்ணுவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று இலக்குமி பதில் சொல்ல வேண்டும்.’ தோழி இலக்குமியைப் பார்த்துக் கேட்டாள்: “நீ யாரைத் திருமணஞ் செய்ய விரும்புகிறாய்!” என்று. இலக்குமியாக நடித்த ஊர்வசி தான் நடிப்பதை மறந்து தன்னுடைய உண்மை யான கருத்தைக் கூறினாள். “நான் புரூரவசுவைத் திருமணஞ் செய்து கொள்ளப்போகிறேன்” என்று அவள் விடை கூறினாள். நாடகத்துக்குச் சம்பந்தம் இல்லாமல் ஊர்வசி பேசியதைக் கேட்டுச் சபையிலிருந்தவர் எல்லோரும் கைகொட்டிக் கொல்லென்று நகைத்தார்கள். நாடக ஆசிரியராகிய பரதருக்குச் சீற்றம் உண்டாயிற்று. நடிப்பதை மறந்து நாடகத்தைக் கெடுத்துவிட்ட ஊர்வசியை அவர் சினந்து சபித்தார். நீ காதலிக்கிற புரூரவசுவை நீ அடையாமல் போவாயாக. நீ காட்டிலே கொடியாகப் பிறந்து வளர்வாயாக என்று அவர் அவளுக்குச் சாபங் கொடுத்தார். ஊர்வசி தன்னுடைய தவற்றையுணர்ந்தாள். தன்னை மன்னிக்கும் படியும் தனக்குச் சாபவிடை தரவேண்டும் என்றும், வணங்கிக் கேட்டுக் கொண்டாள். பரதர் அவளுக்குச் சாப விடையளித்தார். ‘நீ காட்டிலே சென்று கொடியாக வளர்வாய். ஐம்பத்தைந்து ஆண்டு கழித்த பிறகு மீண்டும் உன் தெய்வ உருவைப் பெறுவாய் என்றும், புரூரவசு அரசனை மணஞ் செய்து வாழ்வாய்’ என்றும் அவர் சாபவிடையளித்தார். ஊர்வசி காட்டிலே சென்று ஒரு கொடியாகப் பிறந்து வளர்ந்தாள். அந்தக் கொடி ஓடிப்படர்ந்து பூவுந் ஓகாயுங் காய்த்து ஐம்பத்தைந்து ஆண்டு செழித்திருந்தது. பிறகு அவள் சாபம் நீங்கி மீண்டும் ஊர்வசியானாள். அவள் புரூரவசு அரசனைத் திருமணஞ் செய்து கொண்டு எட்டு மக்களைப் பெற்று அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். 4. புரூரவசுவும் ஊர்வசியும் புரூரவசு அரசன் சிறந்த விஷ்ணு பக்தன். அந்த அரசன் நாள் தோறும் விஷ்ணுவைப் பூசித்து வணங்கி வந்தான். அதனால் விஷ்ணு வின் திருவருள் அவனுக்கு இருந்தது. ஒரு நாள் அவ்வரசன் ‘நந்தனவனம்’ என்னும் பெயருள்ள சோலைக்குப்போய் அச்சோலையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். கடம்பு, வேங்கை, ஆல், அரசு, மருது, புன்னை முதலிய மரங்கள் வானளாவ ஓங்கி வளர்ந்து கண்களுக்குக் காட்சியளித்தன. கடம்பு, கோங்கு, பூ மருது, கொன்றை, புன்னை மரங்கள் பூத்து நின்றன. குன்றின் மேலிருந்து பாய்ந்து வரும் அருவி சலசலவென்று இனிய ஓசையுடன் பாய்ந்து அவ்விடம் தண்ணென்று குளிர்ந்திருந்தது. மரம் செடி கொடிகளின் எழில் மிக்க காட்சி கண்ணைக் கவர்ந்தது. கிளி, மயில், குயில் முதலான பறவைகள் இங்குமங்குமாகப் பறந்து கூவி விளையாடின. எங்கும் மலர்களின் மணம் வீசிற்று. இயற்கையாக அமைந்திருந்த குளத்தில் வெண்தாமரை, செந்தாமரை மலர்கள் பூத்துக் காட்சியளித்தன. இன்னொரு குளத்தில் செவ்வல்லி வெள்ளல்லிகள் படர்ந்து பூத்து மகிழ்ச்சி யளித்தன. உயர்ந்து வளர்ந்த முருக்க மரங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் சிவந்த மலர்களில் நாறைவாய்ப் பறவைகள் (மைனா) அலகினால் தேனை உறிஞ்சிக்கொண்டிருந்தன. மரக்கிளைகளின் மேல் குரங்குகள் அமர்ந்து காய் கனிகளைப் பறித்துக் கையில் வைத்துக் கடித்துத் தின்றுகொண்டும், கிளை களுக்குக் கிளை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டு மிருந்தன. மான்கள் துள்ளிக்குதித்து ஓடின. மெல்லிய காற்று வீசி மகிழ்ச்சியளித்தது. இத்தகைய இனிய காட்சிகளைக் கண்டு கொண்டிருந்த அரசன் அந்தச் சோலையில் உலாவிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில், சாபம் நீங்கித் தன் உண்மை உருவத்தை யடைந்த ஊர்வசி என்னும் கந்தர்வப் பெண் தேவலோகத் திலிருந்து அந்த நந்தவனத்துக்கு வந்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு கொண்டே உலாவிக்கொண்டிருந்தாள். அப்போது புரூரவசுவும் ஊர்வசியும் ஓரிடத்திலே தற்செயலாகச் சந்தித்தார்கள் அவர்களுக்குக் காதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் திருமணஞ் செய்துகொள்ள விரும்பினார்கள். தன்னுடைய பக்தனான புரூரவசு, ஊர்வசியின் மேல் காதல் கொண்டதை பகவான் விஷ்ணு அறிந்தார். அவனுக்கு அவளைத் திருமணஞ் செய்துவைக்க அவர் கருதினார். ஊர்வசி, தேவலோகத் திலே இந்திர சபையில் நடனமாடும் நாட்டியப் பெண்ணாகையால், இந்திரனுடைய சம்மதம் பெற்றுத் திருமணஞ் செய்ய வேண்டியதாக இருந்தது. ஆகவே விஷ்ணு, இந்திர சபையில் இசைப் புலவராக இருந்த நாரதர் மூலமாக இந்திரனுக்குச் செய்தி சொல்லி இந்திரனுடைய சம்மதம் பெற்று ஊர்வசியைப் புரூரவசுவுக்குத் திருமணஞ் செய்து வைத்தார். திருமணம் ஆன பிறகு ஊர்வசி தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்து புரூரவசுவின் அரண்மனையில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அரண்மனையில் ஊர்வசி இனிது பாடியும் நடனம் ஆடியும் அரசனை மகிழ்வித்தாள். அந்தக் காலத்தில் மாயாதரன் என்னும் அசுரனுக்கும் தேவேந் திரனுக்கும் பகை ஏற்பட்டுப் போர்மூண்டது. இருவருடைய சேனை களும் போர்க்களத்திலே சந்தித்தன. அந்தப் போரிலே புரூரவசு அரசன் இந்திரனுக்கு உதவியாக இருந்து மாயாதரனுடன் போர் செய்து போர்க்களத்தில் அரக்கனைக் கொன்றான். அதனால், இந்திரனுக்கு வெற்றி கிடைத்தது. இந்திரன் வெற்றி விழாவைத் தேவலோகத்திலே கொண்டாடினான். நன்றாக அலங்காரஞ் செய்யப்பட்டிருந்த இந்திர சபையிலே வெற்றி விழா கோலாகலமாக நடந்தது. தேவர்கள் எல்லோரும் வந்து விழாவைச் சிறப்புறச் செய்தார்கள். இந்திரனுடைய அழைப்பின் மேல் புரூரவசு அரசனும் மண்ணுலகத்திலிருந்து இந்திரலோகஞ்சென்று இந்திர சபையில் இந்திரனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அந்தச் சபையிலே அரம்பை என்னும் தெய்வ மகள் நடனம் ஆடினாள். இசையாசிரியராகிய தும்புரு நடனத்தை நடத்தினார். யாழுங் குழலும் முழவும் இசைந்து முழங்கின. தும்புரு இசை பாடினார். எல்லோரும் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால், புரூரவசு அரசன் ரசித்து மகிழவில்லை. அவன் நடனத்தை மெச்சாமல் இகழ்ந்து பேசினான். தன்னுடைய மனைவியாகிய ஊர்வசிக்கு ஈடாக ஒருவரும் நடனமாட இயலாது என்று அவன் அரம்பையின் நடனத்தை இகழ்ந்து பேசினான். தன்னுடைய நடனத்தைப் புரூரவசு இகழ்ந்து பேசியதைக் கேட்டு அரம்பை அவன்மேல் சீற்றங்கொண்டாள். “என்னுடைய நடனத்தில் நீர் என்ன குற்றங் கண்டீர்? கலையாசிரியர் தும்புருவிடம் கலை பயின்று நடனமாடுகிறேன் நான். மனிதனாகிய நீர் தேவலோகத்து ஊர்வசியை மணஞ்செய்து கொண்டபடியால் தேவலோகத்து நடனக் கலையை நீர் இகழ்ந்து பேசுகிறீர்?” என்று அவள் சினந்து கூறினாள். புரூரவசு அரசன் அரம்பையின் நடனத்தை இகழ்ந்து பேசியது நாடக ஆசிரியரான தும்புருவுக்கும் சினத்தை உண்டாக்கிற்று. அவர் புரூரவசுவை சபித்தார்: “தேவலோகத்துக் கலையை இகழ்ந்து பேசுகிற நீர் உம்முடைய கலைச் செல்வி ஊர்வசியைப் பிரிந்து வாழக்கடவீர்” என்று அவர் சாபம் இட்டார். புரூரவசு தன்னுடைய குற்றத்தை யுணர்ந்தான். நடனத்தை இகழ்ந்து பேசியதற்காகத் தன்னை மன்னிக்கும்படி அவன் தும் புருவை வணங்கிக் கேட்டுக்கொண்டான். தனக்குச் சாபவிடை அருளவேண்டுமென்று வேண்டினான். “ஊர்வசியைப் பிரிந்து இருந்த பிறகு கண்ணனுடைய திருவருளைப் பெற்று நீ மீண்டும் ஊர்வசியை யடைவாய்’ என்று தும்புரு சாபவிடையருளினார். புரூரவசு தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்தான். தன்னுடைய அரண்மனையை யடைந்து பார்த்தபோது அங்கு ஊர்வசியைக் காணவில்லை. அவள் எங்குச் சென்றாள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அவள் எப்படியோ மாயமாக மறைந்து விட்டாள். தும்புரு இட்ட சாபம் பலித்துவிட்டதை அரசன் உணர்ந்தான். ஊர்வசியின் பிரிவு அவனுக்குப் பெருந் துன்பமாக இருந்தது. அவன் பெரிதும் மனம் வருந்தினான். ஊர்வசியை மீண்டும் பெறுவதற்காக அவன் பதரிகர சிரமஞ் சென்று தவஞ் செய்தான். திருமாலைக் குறித்து அவன் கடுமையாகத் தவஞ்செய்தான். சில காலத்துக்குப் பின்னர் கண்ணபிரான் அவனுக்குக் காட்சி யளித்தார். ஊர்வசியைத் தனக்கு மீண்டும் அளிக்குமாறு அவன் அவரை வேண்டினான். திருமாலின் திருவருளைப் பெற்று அவன் மீண்டும் ஊர்வசியை யடைந்தான். ஊர்வசி அரண்மனைக்கு வந்து புரூரவசுவுடன் இனிது வாழ்ந்திருந்தாள். 5. ஓவியச் சேனனும் ஊர்வசியும் விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல் பாடல் கூத்து நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறு வதுண்டு. கந்தருவரும் இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அகத்திய முனிவர் ஒரு நாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் பொருட்டுச் சிறப்பாக ஆடல் பாடல்களை நடத்தினான். அவ்வமையம், உருப்பசி (ஊர்வசி) என்னும் கத்தருவ மகள் நாட்டியம் ஆடினாள். ஓவியச் சேனன் நாராதவீணை என்னும் யாழை வாசித்தான் (ஓவியச் சேனனுக்கு சித்திரச் சேனன் என்றும் சயந்தகுமரன் என்றும் வேறு பெயர்கள் உண்டு). தோரிய மடந்தையர் பாட்டுப் பாடினார்கள். குழலும், யாழும், மத்தளமும், தாளமும் முழங்கின. நாட்டியம் தொடங்கிற்று. இசையுங் கூத்தும் இயைந்து நடந்தன. அகத்திய முனிவரும் இந்திரனும் சபையோரும் நடனத்தையும் பாட்டையும் கண்டுங் கேட்டும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வமையம் நடக்கத்தகாத நிகழ்ச்சியொன்று நிகழ்ந்துவிட்டது. மேடை மேல் நாட்டியமாடிக் கொண்டிருந்த ஊர்வசி சயந்த குமரனுடைய அழகிலே மனஞ் செலுத்தினாள். சயந்த குமரனும் அவளுடைய அழகிலே மனத்தைச் செலுத்தி அதில் ஈடுபட்டான். அவர்கள் வீணை வாசிப்பதையும் நடனம் ஆடு வதையும் மறந்தனர் ஆகவே வீணை தவறி இசைத்தது; அவளும் நாட்டியத்தைத் தவறாக ஆடினாள். இவ்வாறு பாடல்கள் ஒன்றாகவும் வீணை இசை வேறாகவும், நடனம் இன்னொன்றாகவும் இயைபில்லாமல் இருப்பதை அகத்தியர் உணர்ந்தார். இவ்வாறு திடீரென்று மாறுபடுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனித்தார். சயந்த குமரனும் ஊர்வசியும் இசையிலும் கூத்திலும் மனஞ் செலுத்தாமல் புறம்பான வேறு விஷயத்தில் மனஞ் செலுத்தியதே காரணம் என்பதை அறிந்தார். சபையை மதிக்காமல் இவ்வாறு தவறு செய்ததற்காக அவர்கள் மேல் சினங்கொண்டார். அகத்தியர் அவர்களுக்குச் சாபங்கொடுத்தார். “ஊர்வசி! நீ செய்த குற்றத்துக்காக விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்தில் போய்ப் பிறப்பாயாக.” “சயந்த குமரா! உன் குற்றத்துக்காக நீயும் மண்ணுலகத்தில் சென்று மூங்கிலாகப் பிறப்பாயாக.” இதுதான் அகத்திய முனிவர் அவர்களுக்குக் கொடுத்த சாபம், சயந்த குமரன் தன் குற்றத்தை உணர்ந்து அகத்தியரை வணங்கி வேண்டினான். “முனிவரே எனக்குச் சாப விடை தரவேண்டும்” என்று இரந்து கேட்டான். அகத்தியர் மனமிரங்கினார். “மண்ணுலகத்திலே மலையின் மேலே நீ மூங்கிலாகப் பிறந்து வளரும்போது அந்த மூங்கிலிலிருந்து தலைக்கோல் அமைப்பார்கள். அப்போது உன் சாபம் நீங்கி உன் உருவம் ஏற்று விண்ணுலகத்துக்கு வருவாய்” என்று முனிவர் சாப விடை கொடுத்தார். சயந்த குமரன் (ஓவியச் சேனன்) மண்ணுலகத்திலே தமிழ் நாட்டு மலையிலே மூங்கிலாகப் பிறந்து வளர்ந்தான். முனிவருடைய சாபத்தைப் பெற்ற ஊர்வசி விண்ணுலகத்தி லிருந்து மண்ணுலகிலே தமிழகத்துச் சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினத்தில் மாதவி என்னும் பெயருடன் பிறந்து நாடக மங்கையாக விளங்கினாள். ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து உலகப் புகழ் பெற்று விளங்கினாள். சோழ மன்னன் அவளுக்குத் தலைக்கோல் பட்டங் கொடுக்க எண்ணினான். மலை மேல் வளர்ந்துள்ள மூங்கிலைக் கொண்டு வந்து தலைக்கோல் அமைக்கும்படி கட்டளை யிட்டான். மலைக்கு வந்து தலைக்கோலைத் தேடினவர் ஓரிடத்தில் கெட்டியான அழகுள்ள மூங்கில் வளர்ந்திருப்பதைக் கண்டார்கள். சாபத்தினால் சயந்த குமரன் மூங்கிலாகப் பிறந்து வளர்ந்த மூங்கில் அதுவே. தலைக்கோல் அமைப்பதற்காகத் தகுதியான மூங்கில் இதுவே என்று கருதி அந்த மூங்கிலை வெட்டிக்கொண்டுபோய் அதனால் தலைக்கோல் செய்தார்கள். கெட்டியானதும் சாணுக்கு சாண் கணு வுள்ளதுமான அந்த மூங்கிலை எட்டு சாண் நீளமுள்ளதாக அறுத்து அதன் இரு தலையிலும் கணுக்களிலும் தங்கப் பூண் கட்டி நவரத்தினங்கள் இழைத்து அழகான தலைக் கோலாகச செய்தார்கள். மூங்கிலைத் தலைக்கோலாகக் செய்தவுடன் சயந்த குமரன் சாபம் நீங்கப் பெற்று தேவ உருவம் பெற்று இந்திரலோகஞ் சென்று முன் போல் யாழாசிரியனாக இருந்தான். மாதவி சோழ அரசனுடைய சபையிலே தான் கற்ற ஆடல் பாடல்களை அரங்கேற்றினாள். இசை நாட்டியக்கலை இலக்கணப் படி முறையாக அவள் நிகழ்த்திய ஆடல் பாடல்களைக் கலைஞர்களும் அரசனும் மெச்சிப் புகழ்ந்தார்கள். சோழ அரசன் அவளுக்குத் தலைக்கோலி என்னும் பட்டத்தை அளித்து அதற்கு அடையாளமாக தலைக்கோலைக் கொடுத்துப் பாராட்டினான். அது முதல் தலைகோல் ஏற்ற கலைவாணரான ஆடவர் ‘தலைக்கோல் ஆசான்’ என்றும் மகளிர் ‘தலைக்கோலி’ அல்லது ‘தலைக்கோல் அரிவை’ என்றும் பெயர் பெற்றனர். சோழ மன்னனிடத்தில் தலைக்கோலையும் ‘தலைக்கோலி’ என்னும் பட்டத்தையும் பெற்ற மாதவி சோழ நாட்டிலே ஆடல் பாடல் களை நடத்திக்கொண்டு பேரும் புகழும் பெற்றாள். கடைசியில் அவள் மண்ணுலகத்தைவிட்டு இந்திரலோகஞ் சென்று முன் போலவே ஊர்வசியாகி இந்திர சபையில் நாட்டிய நடனங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். (அந்த மாதவியின் பரம்பரையில் வந்த கணிகைப் பெண்கள் அவளைப் போலவே ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து காவிரிப் பூம்பட்டினத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பரம்பரையில் கடைசியாக வந்தவள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற இசை நாட்டியக் கலைகளில் பேர்போன மாதவி. இவள், கரிகாற் சோழனுடைய அவையில் அரங்கேறி ‘தலைக்கோலி’ பட்டம் பெற்று பூம்புகாரில் வாழ்ந்தாள். ஆடற்பாடல் கலைகளில பேரும் புகழும் பெற்றவள் கோவலனுடைய காதற்கணிகையாக இருந்தாள்.) சயந்த குமரன் ஊர்வசியரின் சாப வரலாற்றைக் கீழ்க்கண்ட செய்யுளில் காண்க: வயந்த மாமலை சயந்த முனிவரன் எய்திய அவையின் இமையவர் வணங்க இருந்த இந்திரன் ‘திருத்திசை யுருப்பசி ஆடல் நிகழ்க பாடலொடு ஈங்’ கென ஓவியச் சேனன் மேவினன் எழுந்து கோலமுங் கோப்பும் நூலொடு புணர்ந்த இசையும் நடமும் இசையத் திருத்திக் கரந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலில் பொருமுக எழினியில் புறந்திகழ் தோற்றம் யாவரும் விழையும் பாவனை யாகலின் நயந்த காதல் சயந்தன் முகத்தின் நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப் பாடல் முதலிய பல்வகைக் கருவிகள் எல்லாம் நெகிழ்தலின், ஒல்லா முனிவரன் ஒருதலை யின்றி இருவர் நெஞ்சினும் காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு சுந்தர மணிமுடி இந்திரன் மகனை ‘மாணா விறலோய்! வேணு வா’ கென இட்ட சாபம் பட்ட சயந்தன் ‘சாப விடையருள் தவத்தோய் நீ’ என மேவினன் பணிந்து மேதக வுரைப்ப ‘ஓடிய சாபத் துருப்பசி தலைக்கட்டுங் காலைக் கழையும் நீயே யாகி மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத் தலையாங் கேறிச் சார்தி’ என்றவன் கலக நாரதன் கைக்கொள் வீணை அலகில் அம்பணம் ஆகெனச் சபித்துத் தந்திரி யுவப்பத் தந்திரி நாரிற் பண்ணிய வீணை மண்மிசைப் பாடி ஈண்டு வருகெனப் பூண்ட சாபம் இட்டவக் குறுமுனி யாங்கே விட்டனன் என்ப வேந்தவை யகத்தென். இந்த ஊர்வசி ஓவியச்சேனன் கதை சிலப்பதிகாரத்தில் கூறப் பட்டுள்ளது. 6. நாட்டியப் பெண் தேசிகப் பாவை பஃலவ தேசத்தின் அரசனான உலோக பாலன், சந்திராபம் என்னும் தன்னுடைய எழில்மிக்க நகரத்தில் வாழ்ந்திருந்தான். அப்போது சீவக குமரன் என்னும் ஒரு அரச குமரன் அவனிடம் விருந்தினனாக வந்து சில காலம் தங்கினான். விருந்தினனான சீவககுமரன் ஏமாங்கத நாட்டின் அரசன். ஆனால், அவனுடைய நாட்டைக் கட்டியங்காரன் கைப்பற்றிக்கொண்டபடியால் அவன் தான் இழந்த அரச பதவியை மீட்டுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் பல நாடுகளுக்குஞ் சென்று நண்பர் களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, உலோக பாலனிடத்தில் வந்து சில நாட்கள் அவனுடன் தங்கினான். உலோக பாலனுடைய அரண்மனையில் அவ்வப்போது நாடகங்களும் நடனங்களும் இசைப் பாட்டுகளும் நடப்பது வழக்கம். அந்த நகரத்தில் பேர் போன நாட்டியக்காரியான தேசிகப்பாவை என்னும் கணிகைப்பெண் வழக்கமாக அரண் மனைக்கு வந்து நடனம் ஆடினாள். தேசிகப் பாவை எழில் உள்ளவள். இசைக் கலையிலும் நாடகக் கலையிலும் வல்லவள். அவளுடைய நாட்டியத்தைக் காண்ப தற்கு நகரப்பெருமக்களும் அரசனும் அமைச்சரும் வந்திருந்தார்கள். விருந்தினனான சீவக குமரனும் நாடக அரங்கத்துக்கு வந்திருந்தான். தேசிகப் பாவையின் கூத்து எல்லோருடைய மனத்தையுங் கவர்ந்தது யாழுங் குழலும் மத்தளமும் தாளமும் பாட்டுக்கு இசைய முழங்கிப் பாட்டுக்கு ஏற்ப தேசிகப் பாவை அபினயம் பிடித்து ஆடினாள். குழலெடுத்து யாத்து மட்டார் கோதையில் பொலிந்து மின்னும் அழலவிர் செம்பொற் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி நிழலவிர் அல்குற்காசு சிலம்பொடு சிலம்ப நீள்தோள் அழகி கூத்தாடு கின்றாள் அரங்கின்மேல் அரம்பை யன்னாள் (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 89) தண்ணுமை முழவம் வீணை குழலோடு குயிலத் தண்பூம் கண்ணோடு புருவம் கைகால் கலையல்குல் நுசுப்புக் காமர் ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை யுருவம் நோக்கி வெண்ணெய் தீ யுற்றவண்ணம் ஆடவர் மெலிகின் றாரே (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 90) பாடலோ டியைந்த ஆடல் பண்ணமை கருவி மூன்றும் கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற ஓடரி நெடுங்கண் அம்பால் உளங்கிழிந் துருவ எய்யா வீடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடு கின்றாள் (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 91) இவ்வாறு தேசிகப் பாவை அரங்கத்தில் ஆடும்போது புதியவனாக வந்திருக்கும் சீவககுமரன்மேல் அவளுடைய பார்வை சென்றது. இளமையும் வனப்பும் மிடுக்குமுடைய அரசகுமரனின் தோற்றம். அவ ளுடைய மனத்தை ஈர்த்தது. நாட்டியம் ஆடிக் கொண்டே அவளுடைய பார்வையை அவள் அடிக்கடி அவன் மேல் செலுத்தினாள். சீவக குமரனும் கலைகளில் வல்லவன். அவனும் அவளுடைய ஆடலிலும் பாடலிலும் அழகிலும் ஈடுபட்டு அவளை நோக்கினான் வாணுதல் பட்டம் மின்ன வார்குழை திருவில் வீசப் பூண்முலைப் பிறழப் பொற்றோடு இடவயின் நுடங்க ஓல்கி மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்குகின்றாள் காண்வரு குவளைக் கண்ணால் காளைமேல் நோக்கினாளே (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 92) தேசிகப் பாவை சீவக குமரனைக் காதலித்தாள், அவனை அல்லாமல் வேறு ஒருவரையும் விரும்புவதில்லை என்று உறுதி செய்துகொண்டாள். இவனையல்லாமல் வேறு ஒருவரையும் விரும்பேன். ‘கணிக்கை மகளுக்குப் பொன்னைக் கொடுத்தால் கற்பை விற்றுவிடுவாள் என்று கூறுவார்கள். அந்தச் சொல் என்னிடத்தில் பொய்யாகும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். கன்னிமை கனிந்து முற்றிக் காமுறக் கமழுங் காமத்து இன்னறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே; பிறர்கள் இல்லை. பொன்னினால் உடையும் கற்பென்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் இன்னிசை இவற்கல்லால் என் நெஞ்சிடம் இல்லை என்றாள் (சீவகசிந்தாமணி, பதுமையார் இலகம்பகம், 95) தேசிகப் பாவையும் சீவக குமரனும் ஒருவரையொருவர் விரும்பினார்கள். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப் பில்லை. அவளோ கணிகைப் பெண். இவனோ அரசகுமரன். அயல் நாட்டில் அரச விருந்தினரைக் கவர்ந்திருப்பவள். இவன் கணிகைப் பெண்ணை நாடிப் போக இயலுமா? கணிகைப் பெண்ணும் புதியவனாகிய இவனைத் தேடி வர இயலுமா? சில நாட்கள் கழிந்து ஒரு நாள் தற்செயலாக இருவரும் சந்திக்க வாய்ப்பு நேரிட்டது. ஒரு நாள் மாலை நேரத்தில் தேசிகப் பாவை பொழுது போக்குக்காகத் தன்னந்தனியே அரண்மனைப் பூங்காவில் ஓரிடத்தில் அமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந் தாள். அதேநேரத்தில் சீவககுமரன் அப்பூங்காவில் இன்னொரு இடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது வீணையின் இசையைக் கேட்டு அவன் அவ்விசை வந்த வழியை நோக்கி நடந்தான். நடந்து வந்து தற்செயலாகத் தேசிகப் பாவையைக் கண்டான். அவளும் அவனைக் கண்டு வியப்படைந்தாள். முன்னமே அவர்கள் நாடக அரங்கத்தில் ஒருவரை யொருவர் விரும்பியவராகையால் இந்தச் சந்திப்பில் அவர்கள் மனமொத்த நண்பராகவும் காதலராகவும் ஆனார்கள் இவர்கள் பின்னர் நாள்தோறும் சந்தித்தார்கள். சில நாட்கள் சென்ற பிறகு சீவக குமரன் தன்நாட்டுக்குச் சென்று விட்டான். சில மாதங்கள் வரையில் அவனைப்பற்றிய செய்தியொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. கடைசியில் சீவக குமரனைப்பற்றி அரண்மனையில் பேசிக்கொண்டதை அவள் கேட்டறிந்தாள். சீவக குமரன் கட்டியங்காரனுடன் போர் செய்து வென்று தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். இப்போது அவன் முடிசூடிக்கொண்டு ஏமாங்கத நாட்டின் அரசனாக வாழ்கிறான். இவ்வாறு அவள் சீவனைப்பற்றிக் கேள்விப் பட்டாள். தன்னைக் காதலித்த அவன் தன்னை அரண்மனைக்கு அழைத்துக்கொள்வான் என்று தேசிகப் பாவை காத்திருந்தாள். நாட்கள் கழிந்து மாதங்கள் சென்றன. ஓராண்டு ஆயிற்று. அவள் எண்ணியது போல அவளுக்கு அழைப்பு வரவில்லை. அவளை அவன் அழைத்துக் கொள்வதான குறி யொன்றும் காணப்படவில்லை. தேசிகப் பாவை கடைசியாகத் தனக்குள் எண்ணினாள். ஏமாங்கத நாட்டின் மன்னனாக முடிசூடி அரசாள்கிறான் சீவக குமரன். அதிகாரத்திலும் செல்வத்திலும் அவன் முழுகியிருக்கிறான். அதனால் அவன் என்னை மறந்துவிட்டான். அன்றியும் அவன் அரச குலத்தில் பிறந்தவன். நானோ கணிகையர் குலத்தில் பிறந்தவள். அப்படிப் பட்டவன் என்னை ஏற்றுக் கொள்வானா? சப்பி உமிழப்பட்ட மாங் கொட்டையைப் போல அவன் என்னை நினைத்திருப்பான். இவ்வா றெல்லாம் எண்ணிய அவள் அவனை வெறுக்கவில்லை. அவன் மேலிருந்த அன்பும் காதலும் அவளுக்குக் குறையவில்லை. ஆனால், அவன் இப்போது இவளை ஏற்றுக் கொள்வானா? எதற்கும் நேரில் போய்க் காண்பதுதான் சரி என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டையாளும் சீவக குமரன் கணிகைக் குலத்தில் பிறந்தவளான தன்னை ஏற்றுக்கொள்ளாமற் போனால் என்ன செய்வது என்ற கேள்வி அவளுடைய மனத்தில் உதித்தது. எதற்கும் நேரிலே போய்ப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். பஃலக நாட்டை விட்டுப் புறப்பட்டு அவள் பல நாட்கள் பயணஞ் செய்து ஏமாங்கத நாட்டுக்குச் சென்றாள். சென்று இராசகிரிய நகரத்தையடைந்தாள். அங்குச் சில நாட்கள் தங்கியருந்து, சீவக குமரனுடைய பழைய செய்திகளை அங்கிருந்தவரிடத்தில் கேட்டறிந்தாள். சில ஆண்டு களுக்கு முன்பு அனங்க மாலை என்னும் கணிகை குலத்துப் பெண் ஒருத்தி சீவக குமரனைக் காதலித்ததையும் அவன் அவளைக் காதலிக் காததையும், தேசிகப் பாவை அறிந்தாள். இதைப் பயன்படுத்திக் கொண்டு சீவக மன்னனிடம் போக அவள் முடிவு செய்து கொண்டாள். ஆகவே, தேசிகப் பாவை மாறுவேடம் பூண்டு சீவகனைக் காண விரும்பினாள். தன்னை அனங்கமாலையின் பணிவிடைப் பெண் என்று கூறிக்கொண்டு அனங்கமாலை எழுதியதாகத் தானே பொய்யாக ஒரு கடிதம் சீவகனுக்கு எழுதிக்கொண்டு அரண்மனைக்குப் போனாள். சீவகன் தனியே இருக்கும் சமயம் அறிந்து காவற்காரனிடம் அரசனைக் காணவந்ததாகத் தெரிவித்தாள். அவன் சென்று ஊழியப் பெண் ஒருத்தி வந்திருப்பதைக் கூறினான். சீவகன் அவளை உள்ளே வரவிடும்படி கட்டளையிட்டான். ஊழியப் பெண் போல மாறுவேடம் பூண்ட தேசிகப் பாவை உள்ளே போய் அரசனுடைய கால்களில் விழுந்து வணங்கினாள். தான் அனங்க மாலையின் ஊழியப் பெண் என்று கூறித் தான் கொண்டு வந்த திருமுக ஓலையை வணக்கத்தோடு அரசனிடத்தில் கொடுத்தாள். சீவகன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்முறுவல் கொண்டான். பிறகு திருமுக ஓலையை பிரித்து வாசித்தான். அது அனங்கமாலை தனக்கு எழுதிய கடிதமாக இருந்தது அந்த ஓலை. அந்தக் காதற் கடிதத்தைப் படித்த பிறகு சீவக குமரன் தேசிகப் பாவையை அருகில் அழைத்துத் தழுவிக்கொண்டு தன் அருகில் அமரச்செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான். “அரசர் பெருமானே! நான் ஓர் ஊழியப் பெண்” என்று தேசிகப் பாவை கூறினாள். “ஆம் ஊழியப் பெண் வேடத்தில் இருக்கும் தேசிகப் பாவை நீ என்பதை அறிந்தேன். அரச போகத்திலும் செல்வச் செருக்கிலும் முழுகி உன்னை மறந்துவிட்டேன் என்று கருதாதே. உன்னை நான் மறந்தேனில்லை” என்று கூறி மகிழ்ந்தான். அதைக் கேட்டு தேசிகப் பாவை விம்மிதமடைந்து பேருவகைக் கொண்டாள். அருளு மாறென்னை? அநங்கமாலை, அடித்தோழி யன்றோ? எனத் தெருளலான் செல்லக் களிமயக்கினால், திகைக்கும் என்றென் அறிவு அளக்கிய மருளாற் சொன்னாய், மறப்பனோ நான், நின்னை? என்ன, மகிழ் ஐங்கணை உருளும் முத்தார் முகிழ் முலையினாள் உள்ளத் துவகை தேற்றினாளே (சீவகசிந்தாமணி, இலக்கணையார் 216) சீவக அரசன் அவளைத் தன்னுடைய அரண்மனையில் வைத்துக் கொண்டான். அரண்மனை நாடக அரங்கத்தில் தேசிகப் பாவை நாள்தோறும் இசை பாடியும் நடன நாட்டியங்கள் செய்தும் அரசனை மகிழ்வித்தாள். அரண்மனையில் தேசிப் பாவையின் இசையுங் கூத்தும் நெடுங் காலம் நடந்தன. நரம்பு மீது இறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலும் ஏங்கக் கிண்கிணிசிலம்பொ டார்ப்பப் பரந்தவாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித் தாளே (சீவகசிந்தாமணி, இலக்கணையாளர் 219) 7. அனந்த வீரியனின் திருமணம் முன்னொரு காலத்திலே பாரத தேசத்தில் வச்சாவதி நாட்டை அபராஜிதன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அபராஜித னுடைய தம்பியான அநந்த வீரியன் இளவரசனாக இருந்தான். தமயனும் தம்பியுமான இவர்கள் தலைநகரமான பிரபங்கர நகரத்தில் அரண்மனையில் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்தவர்கள். இசை நடனக் கலைகளைக் கற்றவர்கள் கலை ரசிகர்கள். இவர்களுடைய அரண்மனையில் நாடக அரங்கத்தில் பர்பரை, சிலாதிகை என்னும் இரண்டு நாட்டியப் பெண்கள் நடனம் ஆடி வந்தனர். அவர்களுடைய நடனத்தை அபராஜிதனும், அனந்த வீரியனும், அரண்மனையிலிருந்தவர்களும் கண்டு மகிழ்ந்தனர். வழக்கம்போல ஒரு நாள் அரண்மனையில் நடனக் கச்சேரி நடந்தது. யாழும் பாட்டும் இசைத்தன. முழவும் தாளமும் ஒலித்தன. நடனத்தில் சிலம்பொலி அதிர்ந்தது. பர்பரையும் சிலாதிகையும் ஆடின நடனம் அபராஜிதனையும், அனந்த வீரியனையும் கவர்ந்தன. அவர்கள் நடனக் கலையில் ஈடுபட்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் இசை நாடகக் கலைஞரான நாரதர் அங்கு வந்தார். நடனக் கலையில் ஈடுபட்டு அதிலேயே மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அபராஜிதனும் அனந்த வீரியனும் நாரதர் வந்ததைக் கவனிக்கவில்லை. ஆகவே, அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அதனால் நாரதர் அவர்கள் மேல் சினங்கொண்டார். அவர்கள் தன்னை மதிக்கவில்லை என்று அவர்கள் மேல் சீற்றங்கொண்டார் இவர்களுக்கு இவ்வளவு இறுமாப்பா, இவர்களுடைய இறமாப்பை அடக்குகிறேன் பார் என்று கறுவிக்கொண்டே அவ்விடத்தைவிட்டு அகன்றார். கலகஞ் செய்வதில் கைதேர்ந்தவரான நாரதர் வச்சாவதி நாட்டை விட்டுச் சிமந்திரபுரம் என்னும் ஊருக்குப் போனார். அவ்வூரை அரசாண்டு கொண்டிருந்த தமிதாரி என்னும் அரசனிடம் சென்றார். தமிதாரி நாரதரை வரவேற்று உபசரித்தான். வந்த காரியம் என்ன வென்று கேட்டான். நாரதர் கூறினார்: “அரசர் பெருமானே! உம்முடைய பெருமை என்ன, சிறப்பு என்ன, அந்தஸ்து என்ன! உம்முடைய பேரும் புகழும் உலக மெங்கும் பரவியிருக்கிறது. ஆனால், ஒரே ஒரு குறைதான் உண்டு. பிரபங்க நகரத்தில் இருக்கிற அபராஜித, அனந்த வீரியர் இடத்தில் இரண்டு சிறந்த நடன மாதர்கள் இருக்கிறார்கள். அழகும் இளமையும் உள்ளவர்கள். பர்பரை, சிலாதிகை என்பது அவர்களுடைய பெயர். அவர்களுடைய நடனக் கலை மகா அற்புதமானது. இந்தரசபையில் உள்ள அரம்பை ஊர்வசிகளின் நடனத்தைவிட அவர்கள் நடனம் சிறந்தது. அந்த நர்த்தகிகள் உம்முடைய சபையில் இல்லாதது. பெருங்குறையாகும். மகாராஜராகிய உம்முடைய அரண்மனையில் அந்த நடனமாதர் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்!” என்று நாரதர் தமிதாரி அரசனிடம் கூறினார். நாரதர் பேசியது தமிதாரி அரசனுக்கு ஆசையை உண்டாக்கிற்று. அந்த நர்த்தகிகளைத் தன்னுடைய அரண்மனைக்கு அழைக்க வேண்டும். என்னும் எண்ணம் அரசர் மனத்தில் தோன்றிற்று. தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை அறிந்த நாரதர் அரசனிடம் விடைபெற்றுக் கொண்டு போனார். போகும் போது, தமக்குள் எண்ணினார். ‘விதை விதைத்துவிட்டேன். தமிதாரி இனி சும்மா இருக்க மாட்டான். நர்த்தகிகளைத் தன்னிடம் அனுப்பும்படி அபராஜித, அனந்த வீரியரைக் கேட்பான். அவர்கள் அனுப்பமாட்டார்கள். பிறகு தமிதாரி அவர்கள் மேல் போருக்குச் செல்வான். நாம் வேடிக்கைப் பார்க்கலாம். நம்மை அவமதித்ததன் பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.’ நாரதர் எண்ணியது போலவே தமிதாரி அரசன், நர்த்தகி களைத் தன்னிடம் வரவழைத்துக் கொள்ளக் கருதினான். பர்பரையும் சிலாதிகையும், அரம்பை ஊர்வசியரைவிடச் சிறந்த நர்த்தகிகள் என்று கலையில் வல்லவரான நாரதரே புகழ்கிறார் அப்படிப்பட்ட நடனமாதர் நம்முடைய சபையில் இருக்கவேண்டும். அவர்கள் நம்மிடம் இருப்பது நமக்குப் புகழையும் பெருமையையும் மதிப்பையும் அதிகப்படுத்தும். உடனே அவர்களை வரவழைக்க வேண்டும். நர்த்தகிகளை அபராஜித, அனந்த வீரியர் அனுப்பா விட்டால், அவர்களோடு போர்செய்து நர்த்திகளைக் கைப்பற்றி கொண்டுவர வேண்டும் என்று அவன் தனக்குள் எண்ணினான். இவ்வாறு கருதிய தமிதாரி அரசன் ஒரு திருமுகம் எழுதி அதைத் தூதர்கள் மூலமாக அபராஜித, அனந்த வீரியருக்கு அனுப்பினான். தூதர்கள் திருமுக ஓலையை எடுத்துக்கொண்டு வந்து அபராஜித அரசனிடங் கொடுத்தார்கள். திருமுருக் கடிதத்தை அபராஜிதனும், அனந்தவீரியனும் படித்தார்கள். பிறகு, மந்திராலோசனைச் சபைக்குச் சென்று தனியே அமைச்சர்களுடன் கலந்து யோசித்தார்கள். தமிதாரி அரசன் நம்முடைய நர்த்தகிகளைத் தன்னிடம் அனுப்பும் படி கேட்கிறான். அனுப்பினால் அவனுக்கு அஞ்சிப் பணிந்து அனுப்பியதாகக் கருதுவான். அனுப்பாவிட்டால் அவர்களைக் கொண்டுப்போகப் படையெடுத்து வருவான். இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயத்தையும் கருதவேண்டும். தமிதாரிக்கு கனகஸ்ரீ என்னும் ஒரே மகள் இருக்கிறாள். நம்முடைய இளவரசருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கனகஸ்ரீயை அனந்த வீரியனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், நம்முடைய நர்த்தகியரை அனுப்பக்கூடாது. இவ்வாறு மந்திர சபையில் அமைச்சர்களுடன் கலந்து யோசித்து முடிவு செய்தார்கள். பிறகு, நர்த்தகியரை அனுப்பிவைப்பதாகக் கூறி ஒரு திருமுகக் கடிதம் எழுதித் தூதரிடம் கொடுத்து அனுப்பினார்கள் தூதர் கொண்டு வந்த திருமுகக் கடிதத்தைப் படித்த தமிதாரி அரசன் மனமகிழ்ந்து நர்த்தகிகளின் வருகையை எதிர்பார்த் திருந்தான். ஆனால் இவர்கள் நர்த்தகிகளை அனுப்பவில்லை அபராஜிதனும், அனந்த வீரியனும் நடனக் கலைகளை நன்கு பயின்ற வராகையால் தாங்களே நர்த்தகியர்போலப் பெண் வேடம் பூண்டு செல்வதென்றும், சென்று தமிதாரி அரசனுடைய அரண்மனையில் இடம் பெற்று அவனுடைய குமாரியான கனகஸ்ரீயைக் கொண்டு வந்து அனந்த வீரனுக்குத் திருமணம் செய்து வைப்பதென்றும் முடிவு செய்திருந் தார்கள். இவர்கள் சென்று திரும்பிவரும் வரையில் அமைச்சர்கள் அரசாட்சியை நடத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று முடிவுசெய்து அமைச்சர்களிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு நர்த்தகியர் வேடம் பூண்டு புறப்பட்டுச் சென்றார்கள். ‘நர்த்தகி’களும் அவர்களைச் சேர்ந்த நடனக் குழுவும் தமிதாரி அரசனின் அரண்மனையை யடைந்தார்கள். தமிதாரி அரசன், நர்த்தகிகளுக் குரிய மரியாதை செய்து அவர்களை வரவழைத்து அவர்களுக்குக் கென்று தனியிடங் கொடுத்தான். ‘நர்த்தகியரும்’ அவருடைய இசை வாணப் பரிவாரங்களும் அந்த இடத்தில் தங்கினார்கள். அபராஜிதன் பர்பரையாவும் அனந்த வீரியன் சிலாதிகை யாகவும் பெண் வேடம் பூண்டிருந்தார்கள். அவர்களைப் பெண் வேடம் பூண்ட ஆண்கள் என்று ஒருவரும் கருதவில்லை. உண்மையான நர்த்தகியர் என்றே கருதினார்கள். அரண்மனை அரங்கத்தில் பர்பரை, சிலாதிகையரின் நடனம் நடந்தது. தமிதாரி அரசனும், அமைச்சர்களும், நகரப் பெருமக்களும் வந்து நடனத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பேர்போன புதிய நர்த்தகிய ராகையால் மண்டபத்தில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. நர்த்தகியரும் அவருடைய குழுவும் நடனத்தையும் இசைப்பாட்டு பக்கவாத்தியம் முதலியவற்றைத் திறமையாவும், செவ்வையாகவும் செய்தார்கள். அவர்களுடைய திறமையைக் கண்டு எல்லோரும் புகழ்ந்து மெச்சினார்கள். அபராஜிதனும் அனந்த வீரியனும் இசை, நாட்டியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவராகையால், அவர்கள் நடனத்தை நன்றாகச் செய்தார் கள். அவர்களின் பெண் வேடமும் பொருந்தி யிருந்தது. பெண் வேடம் பூண்ட ஆண்கள் என்று அவர்களை ஒருவரும் சந்தேகப்படவே இல்லை. தமிதாரி அரசன் நர்த்தகிகளை பர்பரையும், சிலாதிகையும் என்றே உண்மையாக நம்பிவிட்டான். அவன் அவர்களுக்கு ஆடை யணிகளைப் பரிசாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். மேலும், அவ்வரசன் தன்னுடைய மகளான கனகஸ்ரீக்கு நடனக் கலையைக் கற்பிக்கும்படி ‘நர்த்தகி’களை ஆசிரியர்களாக அமைத்தான். இவ்வாறு ஆசிரியர்களாக அமைத்தது ‘நர்த்தகி’ களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு இந்த நியமனம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. ‘நர்த்தகி’கள் இராஜ குமாரி கனகஸ்ரீயின் கன்னிமாடத்துக்குச் சென்று தங்கி அங்கே அவளுக்கு நடனக்கலையைக் கற்பித்து வந்தார்கள். கன்னிடமாடத்தில் ஊழியர்களாக இருந்தவர் எல்லோரும் பெண்களாகையாலும் ஆண்கள் அங்கு ஒருவரும் இல்லாத படியாலும் இவர்கள் அங்குத் தங்கியிருக்க நல்ல வாய்ப்பாக இருந்தது. கன்னிமாடத்தில் குமாரி கனகஸ்ரீ நடனக் கலையைக் கற்றுவந்தாள். ‘நர்த்தகிகள்’ அவளுக்கு நடனக்கலையைக் கற்றுத்தந்து வந்தார்கள். நடனக் கலையைக் கற்பித்தபோது இடையிடையே அடிக்கடி அனந்த விஜயம் என்னும் தெய்வத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அனந்த வீரியன் என்னும் தெய்வம் நடனக் கலையில் முக்கிய இடம் பெற்றிருந்தது. கனகஸ்ரீ நடனக் கலையைச் சில நாட்கள் கற்று வந்தாள். ஒரு நாள் கனகஸ்ரீ தன்னுடைய நடன ஆசிரியைகளான ‘நர்த்தகி’ களைக் கேட்டாள்: “அனந்த வீரியன் என்னும் தேவனைப் பற்றி பலவாறு பாராட்டிப் பேசுகிறீர்கள் அந்தத் தேவனை நான் இதற்கு முன்பு கேள்விப்படவில்லை. அது என்ன, அவ்வளவு சிறந்த தேவனா? அந்தத் தேவன் உண்மையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறீர்கள். அந்தத் தேவனை நான் பார்க்க முடியுமா? நீங்கள் அவனைக் காட்ட முடியுமா?” “அப்படி ஒரு தேவன் உண்டு. அது உபாசகருக்குக் கண் கண்ட தெய்வம். அந்தத் தேவனுடைய மந்திரத்தை உச்சரித்தால் அந்தத் தேவனை நேரில் காணலாம்” என்றார்கள். “நான் அந்தத் தேவனை நேரில் காண விரும்புகிறேன்; எனக்கு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டாள் கனகஸ்ரீ. மூத்த ஆசிரியையான பர்பரை (அந்த வேடத்தில் இருந்த அபராஜிதன்) அவளுக்கு அனந்த வீர மந்திரத்தை ஓதிக் கொடுத்து, இந்த மந்திரத்தைத் தனியான ஒரு அறையில், யாருமில்லாத இடத்தில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு பக்தியோடு ஜெபிக்க வேண்டும். ஜெபித்த பிறகு கண்ணைத் திறந்துபார்த்தால் அனந்த வீரிய தேவன் எதிரே சுய உருவத்துடன் காட்சியளிப்பான் என்று கூறினான். கனகஸ்ரீ அந்தப்படியே ஓரறையில் தனிமையாக இருந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டு அனந்தவீரிய மந்திரத்தை பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஜெபித்து முடித்த பிறகு கண்களை திறந்தாள். என்ன ஆச்சரியம்! எதிரிலே இளமையும் வனப்பும் உள்ள ஒரு ஆண் உருவம் நிற்பதைக் கண்டாள். அந்தத் தெய்வத்தின் எழிலில் ஈடுபட்டு அந்த உருவத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் அந்தத் தேவனை வணங்கினாள். கண் இமைக்காமல் பார்த்தாள். அவளுக்கு ஐயம் உண்டாயிற்று. கண்ணையும் மனதையும் கவரும் இந்த அழகான உருவம் தேவனா! மனிதனா!! கண்கள் இமைக்கின்றன. கால்கள் தரையில் படிகின்றன. தேவர்கள் கண் இமைக்கமாட்டார்கள் என்றும், அவர்கள் கால் தரையில் படிவதில்லை என்றும் கூறுவார்கள். கண் இமைக்கிற படியாலும் கால்கள் தரையில் படிகிறபடியாலும் இது தெய்வமாக இருக்க முடியாது. இது தேவனா? மனிதனா? இந்த ஐயம் அவளுக்கு உண்டாயிற்று. அவள் கேட்டாள்: “நீர் தேவனா, மனிதனா, உண்மையைச் சொல்லும்”. “உண்மையைச் சொல்லுகிறேன். உண்மை தவிரப் பொய் பேச மாட்டேன். உண்மையில் நான் தேவன் அல்லன், நான் மனிதன். அரசகுமாரன். வச்சரவதி நாட்டின் இளவரசன். என் பெயர் அனந்த வீரியன்!” “நீர் எப்படி இங்கு வந்தீர்! ஏன் வந்தீர்!” “என்னை நினைத்து என்னுடைய மந்திரத்தை ஜெபித்த படியால் வந்தேன்.” இளவரசனான அனந்த வீரியனுடைய அழகில் அவள் ஈடுபட்டாள். அவனைக் காதலித்தாள். அழகும் வனப்பும் உள்ள ஒரு இளவரசனை அரசகுமாரத்தி ஒருத்தி காதலிப்பது தகாத செயலன்று. அது உலக இயல்பு. அனந்த வீரியனும் அவளைக் காதலித்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் காதலையும் தெரிவித்துக் கொண்டார்கள். அரச குமாரிகள் தாங்கள் காதலிக்கும் அரசகுமாரரைத் திருமணஞ் செய்துகொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. கனகஸ்ரீ, இளவரசன் அனந்த குமரனைத் திருமணஞ் செய்து கொள்ள விரும்பினாள். தன்னுடைய பிரபங்கர நகரத்துக்கு அவளை அழைத்துக்கொண்டுபோய் அங்கு அரச மரியாதையுடன் அவளைத் திருமணஞ் செய்து கொள்வதாகக் கூறினான். பிறகு அவள் உண்மையாக நடந்தவைகளை அறிந்தாள். தன்னுடைய தந்தை தமிதாரி அரசன் நர்த்தகிகளை அனுப்பும் படி திருமுகக் கடிதம் எழுதியதும், அபராஜிதனும் அனந்த வீரியனும் நர்த்தகியர் வேடம் பூண்டு வந்ததும், தன்னை அனந்த வீரியன் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு மாறுவேடம் பூண்டு வந்ததும், எல்லாவற்றையும் அவள் அறிந்தாள். இந்த நிலையில் தான் அனந்த வீரியனை மணஞ்செய்து கொள்வதாகத் தன் தந்தையிடம் கூறினால், விபரீதமாக முடியும். தமதாரி அரசன் அனந்த வீரியனையும் அபராஜிதனையும் சிறைப்படித்து வைப்பான். திருமணமும் நடைபெறாமற் போகும். இதற்குச் செய்ய வேண்டிய தென்ன? விஷயத்தை வெளியிட்டால், அவளும் அனந்த வீரியன் அபராஜிதனுடன் புறப்பட்டுப் பிரங்க நகரத்துக்குப் போக வேண்டும். போன பிறகு அவளை அரசவைபவத்துடன் அனந்த வீரியன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்த தீர்மானத்துக்கு அவள் உடன் பட்டாள். எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவுப்படியே அவர்கள் ஒருநாள் விடியற் காலையில் புறப்பட்டு நகரத்தை விட்டுச் சென்றார்கள். ‘நடிகை’யரும் அவர்களுடைய பரிவாரக் குழுவும் இளவரசியும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். கன்னிமாடத்தில் அரச குமாரத்தியானவள் காணாமற் போனதும் அவளுக்கு நடனங் கற்பித்த நர்த்தகிகளும் அவர்களுடன் வந்திருந்த பரிவாரங்களும் காணப்படாததும் பொழுது விடிந்து வெகுநேரஞ் சென்ற பிறகுதான் கன்னிமாடத்து ஊழியப் பெண்களுக்குத் தெரிந்தன. இந்செய்தியை ஊழியப் பெண்கள் அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசன், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று எண்ணிச் சினங் கொண்டு, அவர்களைப் பிடித்துக்கொண்டு வரும்படி தன்னுடைய வீரர்களை அனுப்பினான். அரச ஊழியர்கள் தேடிச்சென்று நகரத்துக்கு வெளியே அவர்களைக் கண்டு வழிமறித்து அவர்களை எதிர்த்தார்கள். போர்க் கலையில் வல்லவர்களான, அபராஜிதனும் அனந்த வீரியனும் (இப்போது அவர்கள் வேடம் நீங்கிச் சுய உருவத்துடன் இருந்தார்கள்) எதிர்த்த வீரர்களை எளிதில் அடித்துத் துரத்திவிட்டார்கள். விஷயம் தெரிந்ததும் தமிதாரி அரசன் பெருஞ்சினங்கொண்டு தானே சேனையை அழைத்துக்கொண்டு போருக்கு வந்தான். இதற்குள்ளாக முன் ஏற்பாட்டின்படி வச்சாவதி நாட்டிலிருந்து வந்த அபராஜித, அனந்த வீரியரின் சேனைகள் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தன. இரண்டு சேனைகளுக்கும் போர் நடந்தது. கடைசியாக அந்தப் போரில் தமிர்தாரி அரசன் தோற்றுப் போனான். வெற்றி பெற்ற அபராஜித அனந்த வீரியர்கள் தங்கள் சேனையுடனும் இளவரசியுடனும் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அபராஜிதன் தன்னுடைய பட்டத்து யானைமேல் அமர்ந்து சேனைகள் புடைசூழ வெற்றி முழக்கத்துடன் நகரத்துக்குள் வந்தான். அனந்த வீரியனும் அவளும் இன்னொரு யானை மேல் அமர்ந்து நகரத்துக்கு வந்தார்கள். அமைச்சர்களும் நகரப் பெருமக்களும் அவர்களை மகிழ்ச்சி ஆரவாரத்தோடு எதிர் கொண்டு அழைத்தார்கள். அனந்த வீரியனுக்கும் கனகஸ்ரீக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இசையும் நடனமும் சிறப்பாக நடந்தன. பர்ப்பரை, சிலாதிகையரின் நாட்டியக் கச்சேரி விருந்தினர் மனத்தைக் கவர்ந்தன. 8. சுரமஞ்சரியின் சபதம் ஏமாங்கத நாட்டின் தலைநகரமான இராசமாபுரத்தில் ஆண்டு தோறும் நீராட்டு விழா நடப்பது வழக்கம். அந்த வழக்கப்படி நீராட்டு விழா கொண்டாடப்பட்டது. நகரப் பெருமக்கள், முக்கியமாக நம்பியரும் நங்கையரும், நீராடுவதற்காகவும் வேடிக்கை பார்ப்பதற்காகவும் ஆற்றங் கரைக்குச் சென்றார்கள். இராசமாபுரத்துச் செல்வர்களில் ஒருவரான குபேர மித்திரரின் மகளான குணமாலையும் இன்னொரு செல்வரான குபேரதத்தரின் மகளான சுரமஞ்சரியும் தத்தம் தோழியருடன் பல்லக்கில் அமர்ந்து நீராடுவதற்காக ஆற்றங்கரைக்குப் போனார்கள். அவர்கள், தேய்த்துக் குளிப்பதற்காக நறுமணமுள்ள சுண்ணப் பொடியையும் தங்களுடன் கொண்டு போனார்கள். அக்காலத்தில், மணமுள்ள சுண்ணப்பொடி தேய்த்து நீராடுவது வழக்கம். இந்தப் பெண்மணிகள் கொண்டுபோன சுண்ணப்பொடி இவர்களாலேயே உண்டாக்கப்பட்டது. ஆற்றங்கரைக்குச் சென்ற பிறகு சுரமஞ்சரி தன்னுடைய பொடியைக் குணமாலைக்குக் காட்டி “இது நான் செய்த சுண்ணப் பொடி. இதன் மணத்தைப் பார். இதுபோன்ற சுண்ணப் பொடி எங்குமே கிடையாது” என்று கூறினாள். குணமாலை அந்தப் பொடியைக் கையிலெடுத்து முகர்ந்து பார்த்து “இது அவ்வளவு சிறந்தது அன்று. இதோ என்னுடைய பொடியைப் பார்” என்று கூறித் தன்னுடைய சுண்ணப்பொடியை அவளுக்குக் காட்டினாள். சுரமஞ்சரி, அந்தப் பொடியை விரலினால் எடுத்து முகர்ந்து பார்த்து “இது சிறந்தது அன்று, என்னுடைய சுண்ணத்துக்கு ஈடாக எதுவுங் கிடையாது” என்று சொன்னாள். இது பற்றி அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. இருவரும் தங்கள் தங்கள் பொடிதான் உயர்ந்தது என்று வாதாடினார்கள். “இந்தப் பொடிகளை யாரிடமாவது காட்டுவோம். அவர்கள் எது நல்லது என்று கூறுகிறார்களோ அந்தப் பொடியே சிறந்தது” என்று சொன்னாள் குணமாலை. சுரமஞ்சரி அதற்குச் சம்மதித்தாள். சுண்ணப்பொடியில் வென்றவர்தான் ஆற்றில் நீராட வேண்டும், தோற்றவர் ஆற்றில் நீராடக்கூடாது என்று அவர்கள் பந்தயம் போட்டுக் கொண்டார்கள். தங்களுடைய சுண்ணங் களை யாரிடமாவது காட்டி அவர்கள் எது சிறந்ததென்று கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துவரும்படி தங்களுடைய தோழிமாரை அனுப்பினார்கள். குணமாலையின் தோழி மாலை என்பவளும் சுரமஞ்சரியின் தோழி கனகபதாகையும் நடுவரை நாடிச் சென்றார்கள். பணிப் பெண்கள் இரண்டு தட்டுக்களில் சுண்ணப் பொடிகளை வைத்துத் துணியினால் மூடி எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்பற்றிப் போனார்கள். ஆற்றங்கரையில் இருந்தவர்களிடம் அவர்கள் சுண்ணப் பொடிகளைக் காட்டினார்கள். அவர்கள் இரண்டு பொடி களையும் சோதித்துப் பார்த்து, இரண்டும் நல்ல பொடிகளே ஏற்றத் தாழ்வு சொல்வதற்கில்லை என்று கூறினார்கள். வேறு சிலரும் இவ்வாறே கூறினார்கள். மற்றுஞ் சிலரிடத்தில் காட்டினபோது ‘இந்தப் பொடிகளின் ஏற்றத் தாழ்வுகளை எங்களால் அறிய முடியவில்லை. சீவக நம்பியிடம் கொண்டு போய்க் காட்டுங்கள்’ என்று சொன்னார்கள். மங்கையர் சீவக நம்பியை நாடிச் சென்றனர். சீவகன் ஆற்றங்கரை மணலில் தன்னுடைய தம்பியருடனும், நண்பர்களுடனும் அமர்ந் திருந்தான். அவ்விடம் சென்று இந்தப் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த சுண்ணப்பொடியைக் காட்டி, இவற்றில் எது சிறந்தது என்பதைக் கூறும்படி கேட்டுக்கொண்டார்கள். சீவகன் பொடிகளைத் தனித்தனியே கையில் எடுத்து நோட்டம் பார்த்தான். பின்னர் முகர்ந்து மணம் பார்த்தான் கடைசியில் “இந்தச் சுண்ணந்தான் (குணமாலையின் சுண்ணம்) சிறந்தது” என்று கூறினான். “காரணம் என்ன?” என்று கேட்டனர் தோழிப் பெண்கள். “இந்தப் பொடி (சுரமஞ்சரியின் பொடி) மழை காலத்தில் செய்யப் பட்டது. இந்தப் பொடி (குணமாலையின் பொடி) வேனிற் காலத்தில் செய்யப்பட்டது. வேனிற் காலத்தில் செய்யப்பட்ட பொடி தான் சிறந்தது” என்று சீவகன் அவர்களுக்கு விளக்கங் கூறினான். பெண்கள் அவன் கூறிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கி னார்கள். தெளிவாகத் தெரியும்படி காட்டுங்கள் என்று கேட்டனர். “காட்டுகிறேன் பாருங்கள்” என்று கூறிச் சீவகன் இரண்டு தட்டி லிருந்தும் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஒவ்வொரு படிச் சுண்ணத்தை எடுத்து மரத்தண்டை மொய்த்துப் பறந்து கொண்டிருந்த வண்டுகளிடையே தூவினான். வண்டுகள் சுரமஞ்சரியின் பொடியில் படியவில்லை. குணமாலையின் பொடியில் மொய்த்துப் பறந்தன. “இப்பொழுது இதிலிருந்து எந்தப் பொடி சிறந்தது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்” என்று சுட்டிக்காட்டினான் சீவகன். பெண்கள் திரும்பி வந்து சீவகன் கூறிய தீர்ப்பையும் காட்டிய சான்றையும் குணமாலைக்கும் சுரமஞ்சரிக்குங் கூறினார்கள். சுரமஞ்சரி தான் தோற்றதை எண்ணி மனம் வருந்தினாள். இவ்வாறு தீர்ப்புக் கூறின சீவகன் மேல் சினங்கொண்டாள். அவனை இகழ்ந்து பேசினாள். “சீவகன் மழை வள்ளல். நல்ல இடம் தீய இடம் என்பதை அறியாமல் மழை பெய்கிறது போல, சீவகனுக்கு எது நல்லது எது தீயது என்பது தெரியவில்லை” என்று கூறி, “சீவகன் என்னிடம் வந்து கெஞ்சும்படி செய்கிறேன் பார்’ என்று சூளுரைத்தாள். மாற்றம்’ ஒன்றுரையாள் மழை வள்ளல் என் ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் தோற்று வந்தென் சிலம்படி கைதொழ நோற்பன். தோற்றனை நீ யென ஏகினாள் (குணமாலையார் 49) பிறகு தோழியருடனும் பணிப்பெண்களுடனும் ஆற்றில் நீராடா மலே தன்னுடைய மாளிகைக்குத் திரும்பிவிட்டாள். சுரமஞ்சரி நீராடாமல் திரும்பி வந்ததைக் கண்டு அவளுடைய தாய் அதன் காரணமென்னவென்று கேட்டாள். தோழியர், ஆற்றங்கரையில் நடந்ததைத் தெரிவித்து, இனி எந்த ஆடவரையும் பார்ப்பதில்லை, அவர் பெயரைக் காதாலுங் கேட்பதில்லை, பார்த்தாலும், கேட்டாலும் அன்று உணவு கொள்வதில்லை என்று சபதஞ் செய்திருக்கிறாள் என்பதையுங் கூறினார்கள். இதைக் கேட்டு, இவளுடைய தாய் மனம் வருந்தினாள். அவள் தன்னுடைய கணவனான குபேரதத்தனிடம் சென்று இந்தச் செய்தியை அவனிடங் கூறினாள். குபேரதத்தன் சிந்தித்துப் பார்த்தான். தன்னுடைய மகளின் கருத்துப்படியே செய்வேன் என்று முடிவு செய்தான். அவள் இருக்கும் கன்னிமாடத்தின் வழியே ஆண்மகன் எவனும் வராதபடி செய்வேன் என்று உறுதிகொண்டான். பிறகு தன் மாளிகையில் இருந்த விலையுயர்ந்த மாணிக்க மாலையை எடுத்துக்கொண்டு அரசனுடைய அரண்மனைக்குச் சென்று அரசனைக் கண்டான். தன்னுடைய மகளின் சபதத்தைத் தெரிவித்து அவள் இருக்கும் கன்னிமாடத்துத் தெரு வழியே ஆடவர் ஒருவரும் வராதபடி ஆணையிட வேண்டுமென்று அரசனைக் கேட்டுக் கொண்டு தான் கொண்டு வந்த மாணிக்க மாலையைக் காணிக்கை யாகக் கொடுத்தான். அரசன் குபேரதத்தனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி சுரமஞ்சரி இருக்கும் கன்னி மாடத் தெருவழியே ஆண்மகன் எவனும் போகக்கூடாதென்று ஆணை கொடுத்தான். அன்று முதல் ஆடவர் எவரும் அந்தத் தெரு வழியே போவதில்லை. சுரமஞ்சரி ஆடவரைப் பார்ப்பதில்லை என்னும் சூளுறைவுடன் தன்னந்தனியே தன்னுடைய கன்னிமாடத்தில் தோழிமாருடனும் பணிப் பெண்களுடன் இருந்தாள். வீணை வாசிப்பதும் இசை பாடுவதும் அவர் களுடைய பொழுதுபோக்காக இருந்தன. இவ்வாறு பல திங்கள் கழிந்தன. சுரமஞ்சரியின் சபதத்தைச் சீவகன் அறிந்தான். அவளுடைய சூளுறையை மாற்றித் தன்னுடைய இசைப்பாட்டினால் அவளை வசப் படுத்தி அவளை மணம் புரிய எண்ணினான். இது பற்றித் தன்னுடைய நண்பனுடன் யோசித்தான். கன்னிமாடத் தெருவில் ஆடவர் நுழைய முடியாதபோது கன்னிமாடத்துக்குள் எப்படி நுழைய முடியும்? ஆனால், பிச்சைக்காரக் கிழப் பிராமணன் செல்லலாம் அல்லவா, பிச்சைக்காரன், அதிலும் கிழப் பிராமணன். அவனைத் தடுப்பவர் யார்? சீவகக் குமரன் கன்னிமாடம் போகத் துணிந்தான். ஒரு நாள் கன்னிமாடத் தெருவில் வயது முதிர்ந்த கிழப் பிராமணன் கூனிக் குனித்து கையில் தண்டு ஊன்றி பையப்பையத் தள்ளாடி நடந்து வந்தான். வெயிலை மறைக்கத் தாழங்குடை பிடித்திருந்தான். அணங் கரவு உரித்ததோல் அனைய மேனியன் வணங்கு நோன்சிலை யென வளைந்த யாக்கையன் பிணங்கு நூல் மார்பினன் பெரிதோர் புத்தகம் உணர்ந்து மூப் பெழுதினது ஒப்பத் தோன்றினான் வெண்ணரை உடம்பினான் விதிர்ந்த புண்ணியன் நுண்ணவிர் அறுவையன் நொசித்த நோக்கினான் கண்ணவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினான் இப்படி மூத்து முதிர்ந்த கூனக் கிழப் பிராமணன் அந்தத் தெருவில் நடந்தான் தண்டு ஊன்றித் தள்ளாடிக் குனிந்து தரையை நோக்கித் தெருவிலே நடக்கும் கிழவகைக் கண்டு ஆண்களும் பெண்களும் ‘ஐயோ பாவம்!’ என்று மனமிரங்கி னார்கள். நற்றொடி மகளிரும் நகர மைந்தரும் எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன் பற்றிய தண்டொடு பைய மெல்லவே கன்னிமாடத் தெருவில் நுழைந்தபோது, இந்தத் தெருவில் ஆண்மக்கள் போகக்கூடாது என்று காவலர் தடுத்தார்கள். “நீ யார், எங்கே போகிறாய்” என்று அதட்டிக் கேட்டார்கள். கிழப் பிராமணன் அவர்கள் முகத்தைப் பார்த்து “முன்பு பால் சோறு உண்டேன். இப்போது என்ன சோறு கொடுத்தாலும் உண்பேன்” என்று கூறினான். ‘இவன் செவிட்டுக் கிழவன் போலும், நாம் ஒன்று கேட்டால் இவன் ஒன்று சொல்லுகிறான். பாவம்! கிழப் பிராமணன். பசித்திருக் கிறான் போலிருக்கிறது’ என்று கருதி அவனைப் பிச்சைக்காரன் என்று எண்ணி உள்ளே நுழைய விட்டார்கள். கிழவன் மெல்லமெல்லத் தள்ளாடித் தடியை ஊன்றி நடந்து கன்னிமாடத்தின் வாயிலண்டை வந்தான். காவல் இருந்த பெண்கள் “உள்ளே வரக்கூடாது போ போய்விடு” என்று விரட்டினார்கள். கிழவன் அங்கேயே நின்றான். மாளிகைக் குள்ளிலிருந்து சில ஊழியப் பெண்கள் வந்து பார்த்து. “இந்தக் கிழப் பிராமணன் பிச்சைக்கு வந்திருக்கிறதாகத் தோன்றுகிறான்” என்று எண்ணி மாளிகைக்குள்ளே சென்று சுரமஞ்சரியிடங் கூறினார்கள். சுரமஞ்சரி தன் தோழியருடன் அங்கு வந்தாள். பிராமணக் கிழவன் நிற்பதைக் கண்டு “எங்கு வந்தீர்” என்று கேட்டாள். “குமரியாட” என்றார் கிழவன். இரண்டு பொருள்படும்படி இவ்வாறு கூறினான். கன்னியா குமரியில் நீராடப் போவதாகக் கூறுகிறான் என்று சுரமஞ்சரி கருதினாள். “குமரியாடினால் என்ன பயன்?” என்று கேட்டாள். “என்னை மூடியிருக்கும் மூப்புப் போய்விடும்.” இதிலும் இரு பொருள்படும்படி அவன் கூறினான். “குமரியாடி மூப்பு நீங்கினவர் யாரேனும் உண்டா?” என்று சுரமஞ்சரி கேட்டாள். “துறையறிந்து ஆடினால் மூப்புத் தீரும்” என்றான் கிழவன். “ஏனையோர் அறியாத துறை உமக்குத் தெரியுமோ? “நன்றாகத் தெரியும்.” சுரமஞ்சரி தோழிகளிடம், “இந்தக் கிழப் பாப்பனன் பித்துக் கொள்ளி போல் தெரிகிறான். ஆனாலும், இவன் பசித்திருக்கிற படியால் உணவு சமைத்துக் கொடுங்கள்” என்று கூறினாள். பிறகு கிழவனை நீராடி வரும்படி சொன்னாள். கிழவன் நீராடி வந்து அமர்ந்தான். தோழிகள் உணவு கொண்டு வந்து பொன் தட்டில் இட்டுப் பரிமாறினார்கள். கிழவன் சாப்பிட்டுக் கொண்டே “இது போலச் சுவையான உணவு நான் உண்டதில்லை” என்று சொல்லி வியந்தான். சாப்பிட்டான பிறகு கிழவன் வெற்றிலையருந்தி ஓரிடத்தில் அமர்ந்தான். அப்போது சுரமஞ்சரி அவனைக் கேட்டாள். “உமக்கு என்ன வித்தை தெரியும்?” “நான் மறை வல்லவன்?” என்று இரு பொருள் தரும்படி விடை கூறினாள். இவன் மறை (வேதம்) வல்லவன் என்று கருதி அவள், ‘எவ்வளவு கற்றீர்? என்று கேட்டாள். “பொருள் எய்தும் வரையில்” என்று விடை கூறினான் கிழவன். “எத்தனை காலம் கற்றீர்?” “எனக்கு நினைவில்லை” என்று கூறி உறக்கங் கொண்ட வனைப் போலத் தூங்கி விழுந்தான். பாவம்! வழி நடந்த களைப்புப் போலும் என்று கருதி “நீர் இங்கே படுத்து உறங்கும்” என்று சொல்லி அவள் மாடிக்குச் சென்றான். மாலை நேரங் கழிந்து இரவு வந்தது. சுரமஞ்சரியும் தோழி மாரும் பாற்சோறு அருந்தி அத்தாழம் முடித்துக்கொண்டு மாடிக் கூடத்தில் இருந்து யாழ் வாசித்தும் இசை பாடியும் நேரம் போக்கினார்கள். அந்தச் சமயத்தில் யாரோ பாடுவது அவர்கள் காதில் கேட்டது. அவர்கள் தங்கள் பாட்டை நிறுத்திச் செவியோர்ந்து கேட்டார்கள். ஆம்! இனிய இசைப் பாட்டுதான். இவ்வளவு இனிய தேவகானம் எங்கிருந்து வருகிறது! சீவகன் குரல் இசை போலல்லவா இருக்கிறது! கன்னிமாடத்தில் ஆண் மகன் ஒருவனும் வர முடியாதே. சீவகன் இங்கு எப்படி வந்தான் என்று அதிசயப்பட்டார்கள். அவர்கள் மாடியை விட்டுப் படியிறங்கிக் கீழே வந்தார்கள். அவர்களுடன் சுரமஞ்சரியும் வந்தாள். கீழ் நிலையில் படுத்திருந்த கிழவன் இசை பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந் தார்கள். இந்தக் கிழவனா இவ்வளவு இனிமையாக இசைபாடு கிறான் என்று எண்ணி ஆச்சரியத்தோடு ஓசைப்படாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மகளிர் வந்து நிற்பதையறிந்த கிழவன் இசைப் பாடுவதை நிறுத்திவிட்டான். “நான் கிழவன் என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கூறினான். பிறகு, “நீங்கள் வாலிபனைக் கண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான். “ஆண் மகன் என்னும் பெயரும் ஒழிக” என்றாள் ஒரு தோழி. “ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆண் மகன் யாரேனும் உங்களுக்குத் தீங்கு செய்தானோ? ஆண்கள் செய்த குற்றம் என்ன?” “எங்கள் தலைவியின் சுண்ணத்தைச் சீவகன் தீது என்று பழித்தான். ஆகையால் இவள் ஆண் மக்களையே வெறுத்து விட்டாள்” என்று விளக்கங் கூறினாள் ஒருத்தி. “அந்தச் சீவகன் ஒழிக. அவன் சாகட்டும்” என்று சபித்தான் கிழவன். “ஐயோ பாவம் சீவகன் நூறாண்டு வாழட்டும்” என்று வாழ்த்தினாள் ஒருத்தி. “சுரமஞ்சரி இதுவரையில் ஆடவர் ஒருவரையும் இந்தக் கன்னி மாடத்தில் வரவிட்டதில்லை. இன்று உமக்குச் சோறு கொடுத்து உண்பித்து உபசரித்தாள். ஆடவரிடத்திலிருந்த கோபம் நீங்கினாள். நீர் சீவகன்போல மிக நன்றாக இசை பாடுகிறீர். அருள் கூர்ந்து இன்னொரு ஒரு முறை இசை பாடுங்கள். இல்லையேல் உம்மை விடமாட்டோம்” என்று அவனை அவர்கள் இசை பாடும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்போட்டி எமக்கோர் கீதம் பாடுமின் அடித்தியாரும் முன்பட்ட தொழிந்து துங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார் பொன் தொட்டோம், யாமும் நும்மைப் போகொட்டோம் பாடல் கேளாது என்பட்டு விடினும் என்றார் இலங்கு பூங் கொம்போ டொப்பார். “பொன் கொடுத்தால் இசை பாடுவேன்” என்றான் கிழவன். “கொடுப்பேன், பாடுக” என்றாள் சுரமஞ்சரி. கிழவன் இசை பாடினான். அந்த இசை கிழவன் குரலாக இல்லை; வாலிபன் குரலாக இருந்தது. மிக இனிமையாக அவன் பாடின இசைப் பாட்டு அவர்களின் மனத்தைக் கவர்ந்தது. சுரமஞ்சரி பெரிதும் அந்த இசையில் ஈடுபட்டு அந்த அமிர்தகானத்தைக் கேட்டு மனமகிழ்ந்தாள். அவன் நெடுநேரம் பாடினான். பாடி முடிந்த பிறகு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தாள். அவள் தான் மேற்கொண்டிருந்த ஆடவரைக் காண்பதும் இல்லை, அவரை நினைப்பதும் இல்லை என்னும் சபதத்தை விட்டுவிட்டாள். சீவகனை மணஞ்செய்து கொண்டு வாழ வேண்டும் என்று அவள் விரும்பினாள். நாளைக் காலையில் காமன் கோட்டத்துக்குப் போய்ச் சீவகனை மணஞ் செய்து கொள்ள வரம் வேண்டுவேன் என்று முடிவு செய்துகொண்டாள். இவ்வாறு அவள் கொண்ட சபதம் முடிவுற்றது. பாடினான் தேவகீதம் பண்ணினுக் கரசன் பாடச் சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்சை ஒத்தார் ஆடகச் செம்பொற் பாவை அந்தணற் புகழ்ந்து செம்பொன் மாடம்புக்கு அனங்கன் பேணி வரங் கொள்வல் நாளை என்றாள் பொழுது விடிந்தது. சுரமஞ்சரி துயில் உணர்ந்து காமன் கோட்டத்துக்குப் போக ஆயத்தமானாள். அவள் நீராடிப் பட்டுடுத்தித் தோழியருடன் வண்டியில் ஏறினாள். அந்த வண்டியை ஒரு பணிப் பெண் ஓட்டிக்கொண்டு போய் காமன் கோட்டத்தில் விட்டாள். பார்ப்பனக் கிழவனும் வண்டியைப் பின்பற்றிக் காமன் கோட்டத்துக்கு வந்தான். சுரமஞ்சரி காமன் கோட்டத்துக்கு வந்த போது அங்கிருந்த ஆடவர் எல்லோரும் அவளுடைய கண்ணில் படாமல் விலகிப் போனார்கள். சுரமஞ்சரி கோட்டத்துக்குள் தோழியருடன் சென்றாள். கோட்டத்தின் முன்புறத்தில் இருந்த அறையில் கிழவன் தங்கினான். சுரமஞ்சரி காம தேவனைப் பூவும் புகையும் இட்டு வணங்கினாள். வணங்கிச் சீவகனைத் தன்னுடைய கணவனாகப் பெற வேண்டும் என்று வரம் வேண்டினாள். அப்போது “ நீ சீவகனைப் பெறுவாய்” என்று ஒரு குரல் கேட்டது. அதைக்கேட்ட அவள் காம தேவன் ஆகாய வாணியாக இதைக் கூறினான் என்று அவள் கருதினாள். காமன் உருவத்தில் இருக்கும் தெய்வம் இதைக் கூறவில்லை. உண்மையில் இதைக் கூறியவன் கோட்டத்துக்கு அருகில் மறைந்திருந்த சீவகனுடைய நண்பனே. அவன் ஒருவரும் அறியாமல் அங்கு வந்து ஒளிந் திருந்து இதைக் கூறினான். சுரமஞ்சரி காம தேவனை வணங்கி மகிழ்ச்சியோடு வெளியே வந்தாள். அங்கு அறையில் இருந்த கிழவன் காணப்படவில்லை. இளமை யும் வனப்பும் உள்ள சீவகன் அங்குக் காட்சியளித்தான். சீவகன்தான் பார்ப்பனக் கிழவனாக வந்து இசை பாடினான் என்பதும், அக்கிழவனே இப்போது சுயவுருவத்துடன் சீவகனாகக் காட்சியளிக்கிறான் என்பதும் அவளுக்கு எப்படித் தெரியும்! காம தேவனே சீவகனைத் தன் முன்பு வரவழைத்துக் காட்டியதாக அவள் கருதினாள். அவர்கள் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டார்கள். சுரமஞ்சரி தான் கொண்ட ‘ஆடவர் முகத்தைப் பார்ப்ப தில்லை’ என்னும் விரதத்தை விட்டுவிட்டுச் சீவகனைத் திருமணஞ் செய்து கொள்ள விரும்பினாள். ஒருவரையொருவர் கண்ட அவர்கள், அகப் பொருள் இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் களவியல் துறையை யடையப் பெற்றனர். கலைபுறஞ் சூழ்ந்த அல்குல் கார்மயில் சாய லாளும் மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவில் தடக்கை யானும் இலைபுறங் கண்ட கண்ணி இன்தமிழ் இயற்கை இன்பம்1 நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார். பிறகு, சுரமஞ்சரி தோழிமாருடன் வண்டியில்அமர்ந்து கன்னி மாடஞ் சென்றாள். அவளுடைய தோழி சுரமஞ்சரியின் தாயினிடம் நிகழ்ந்ததைத் தெரிவித்தாள். சுரமஞ்சரி தன்னுடைய சபதத்தை நீக்கிக் காமன் கோட்டஞ் சென்று வழிபட்டதையும், அங்குச் சீவகனைக் கண்டு அவன்மேல் காதல் கொண்டதையும் அவள் சீவகனைத் திருமணஞ் செய்துகொள்ள இருப்பதையும் ஆதியோடந்தமாகக் கூறினாள். இவற்றைக் கேட்ட அவளுடைய தாய் மனம் மகிழ்ந்து தன்னுடைய கணவனான குபேரதத்தனிடம் இவற்றைக் கூறினாள். குபேரதத்தன் பெரிதும் மனம் மகிழ்ந்தான். தன்னுடைய மகளைச் சீவகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க இசைந்தான். அரசனையும் நகர மக்களையும் திருமணத்துக்கு அழைத்தான் தன்னுடைய மாளிகையில் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தான். எல்லோரும் மணமக்களை வாழ்த்தினார்கள். சுரமஞ்சரி சீவககுமரனுடன் இனிது வாழ்ந்திருந்தாள். அடிக்குறிப்புகள் 1. `இன் தமிழ் இயற்கை இன்பம்’ - அகப் பொருளாகிய காதல். 9. காந்தருவ தத்தையின் இசைத் திருமணம் இராசமாபுரம் இன்று பரபரப்பாகக் காணப்படுகிறது. பெரு வீதிகளிலும் குறுந் தெருக்களிலும் மக்கள் திரள்திரளாகக் காணப் படுகின்றனர். ஆடவரும் மகளிரும் புத்தாடை அணிந்து ஒப்பனை செய்து அழகாகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் களிப்பும்திருவிழாக் காணப் போகிறவரை நினைவூட்டு கின்றன. இராச வீதியில் கூட்டம் இன்னும் அதிகமாக காணப்படுகிறது. ‘ஆறு கிடந்தன்ன அகனெடுந் தெருவில்’ மக்கள் கூட்டங் கூட்டமாகப் போவது பேராற்றில் நிறைவெள்ளம் போவது போல் காணப்படுகின்றது. சீமான்களும் சீமாட்டிகளும் பல்லக்கு ஏறிச் செல்கின்றனர். கூட்டத்தினிடையே வெண்மை, செம்மை, பசுமை, பொன்மை முதலான நிறமுள்ள பல்லக்குகள் செல்வது இனிய காட்சியாக விளங்குகிறது. சில சீமாட்டிகள் ‘வையம்’, ‘பாண்டில்’ என்னும் அழகான வண்டிகளில் போகிறார்கள். இந்த வண்டிகளை மிடுக்கான காளை மாடுகள் கழுத்தில் அணிந்த சிலம்புகள் ஒலிக்க வேகமாக இழுத்துச் செல்கின்றன. சீமாட்டிகள் ஏறிச் செல்லும் இவ் வண்டிகளை ஓட்டுகிறவரும் பெண் மகளிரே. அரச குமாரர்களும் குறுநில மன்னர்களும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மேல் அமர்ந்து பரிவாரங்கள் புடைசூழ இராஜவீதி வழியே செல்கிறார்கள். எங்கும் சிரிப்பும் களிப்பும் கேளிக்கையும் வேடிக்கையுமாகக் காணப் படுகின்றன. இதன் காரணம் என்ன? இவர்கள் எங்குச் செல்கின்றனர். இன்று காந்தருவதத்தையின் சுயம்வரம் நடைபெறுகின்றது. இவர்கள் எல்லோரும் சுயம்வரத்தைக் காணச் செல்கின்றனர். அழகின் செல்வி என்றும் இசையரசி என்றும் உலகம் போற்றும் காந்தருவதத்தை இராசமாபுரத்துச் செல்வச் சீமான்களில் முதல்வராகிய கிறீதத்தருடைய வளர்ப்பு மகள். காந்தருவதத்தைக்குத் திருமணம்! இந்த விழாவைக் காண்பதற்குத்தான் மக்கள் திரண்டு செல்கிறார்கள். சுயம்வரம் என்றால் இது சாதாரண சுயம்வரம் அன்று. அரச குமாரர்களையும், நம்பிக் குமரர்களையும் அலங்கார மண்டபத்தில் அமரச்செய்து, மணப்பெண் தன் மனதுக்குப் பிடித்த குமரனுக்கு மாலை சூட்டி மணஞ்செய்து கொள்கிற திருமணம் என்று நினைக்கிறீர்களா? அஃதன்று இது. வில்வித்தையில் பேர்போன காளைகளான நம்பியரைக் கூட்டி, கம்பத்தின் உச்சியில் இயந்திரப் பொறியினால் சுழன்று கொண்டிருக்கிற பன்றியைக் குறி தவறாமல் அம்பு எய்து மணஞ்செய்து கொள்கிற திரிபன்றி எய்யும் சுயம்வரம் என்று கருதுகிறீர்களா? அதுவும் அன்று. தோள் வலிமிக்க நம்பியர், கட்டுக் கடங்காத முரட்டுக் காளை மாடுகளைத் தமது ஆண்மையினால் அடக்கி ஒடுக்கி வசப்படுத்தி மணமகளை மணந்துகொள்ளும் ‘ஏறு தழுவுதல்’ என்னும் சுயம் வரம் என்று நினைக்கிறீர்களா? அன்று, அன்று. காந்தருவ தத்தையின் இந்தச் சுயம்வரம் இசை வெற்றித் திருமணம். காந்தருவதத்தையை யார் இசைப் பாட்டில் வெல்கிறாரோ அவருக்கு மாலை சூட்டி மணஞ் செய்கிற இசைப் பாட்டுத் திருமணம். கிறீதத்தச் சீமானுடைய வளர்ப்புப் புதல்வியாகிய காந்தருவ தத்தை, இசைக்கலையை நன்றாகக் கற்றவள். இசைக் கலை இவளிடத்தில் தாண்டவமாடுகிறது. இவளுடைய மெல்லிய விரல்பட்டவுடன் யாழும் வீணையும் கொஞ்சி விளையாடுகின்றன. தாளமும் மத்தளமும் இவளிடத்தில் தாம்தீம் என்று தாண்டவம் ஆடுகின்றன. இசையரசி யாகிய காந்தருவதத்தையின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. இவளுடைய இசையிலும் அழகிலும் ஈடுபட்டு அரசகுமாரர்களும் நம்பியர்களும் இவளைத் திருமணஞ் செய்துகொள்ள விரும்பினார்கள். தத்தையின் தந்தைக்கு இவளை யாருக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று தோன்றவில்லை. இதுபற்றித் தன்னுடைய மகளின் கருத்து யாதென்று அறிய இவளை அழைத்துக் கேட்டார். “இசை பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் யார் என்னை வெல்கிறாரோ அவரையே நான் திருமணஞ் செய்து கொள்வேன்” என்று தன்னுடைய கருத்தை அவள் உறுதியாகக் கூறிவிட்டாள். அதனால் தான் கிறீதத்த சீமான் அவளுடைய விருப்பப்படி இசைப் போட்டி நடத்துகிறார். காந்தருவதத்தைக்கு இசைப்பாட்டுத் திருமணம் நடக்கப் போகிற செய்தி நாடெங்கும் பரவியது. இராசமாபுரத்திலும், வெளியூர் களிலும் இருக்கும் குமரர்கள், அவளை இசைக் கலையில் வென்று மணஞ்செய்து கொள்வதற்காக, இசை பாடவும் யாழ் பயிலவும் தொடங்கி விட்டார்கள். காந்தரு வதத்தையை இசைப்போட்டியில் வென்று அவளைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஒவ்வொருவரும் விரும்பினார்கள். கிறீதத்தச் சீமான் நாட்டையாளும் அரசனிடஞ்சென்று நவரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, தம்முடைய அருமந்தமகள் காந்ததருவதத்தையின் இசைச் சுயம்வரத்தைக் கூறி இதை நடத்த விடைதர வேண்டுமென்றும் இதற்கு அரசர் பெருமானே தலைமை தாங்கி முடித்துத்தர வேண்டுமென்றும் வேட்டுக்கொண்டார். தன்னுடைய நாட்டின் முதல் சீமானாகிய கிறீதத்தரின் விருப்பத் துக்கு இணங்கி, அரசர் இசைப் போட்டி நடத்த விடை கொடுத்ததோடு விழாவிற்குத் தலைமை தாங்கவும் உடன்பட்டார். உடனே கிறீதத்தர் இசைத் திருமணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிவிட்டார். இராசமாபுரத்தில் மட்டுமல்ல, சுற்றுப்புற நாடுகளிலும், நகரங் களிலும் இசைப் போட்டி நடக்கும் நாளையும் நடைபெறப் போகிற முறைகளையும் பறையறையச் செய்தார். ஆயிரக் கணக்கானவர் இருக்கத்தக்க பெரியதோர் அரங்கத்தை அமைத்தார். அரங்குகள் பெரிதாகவும் விசாலமாகவும் அழகாகவும் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டது. அரங்கத்தின் எதிரில் எல்லோரும் காணத்தக்கபடி மேடையொன்று அலங்காரமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அரங்கத்தில் அமர்வதற்காகப் பால் போன்ற வெண் மணல் நிரப்பி மெத்தென்று காணப்படுகிறது. தோரணங்களும், கொடிகளும் அரங்கத்தை அழகு செய்கின்றன. அரசரும் அமைச்சரும் பிரபுக் களும் இருக்க ஆசனங்கள் மேடையருகே இடப்பட்டிருக் கின்றன. எல்லோரும் எதிர்பார்த்திருந்த நாள் இது. முன்னர்க் கூறியபடி எல்லோரும் இசையரங்கத்தை நாடி வருகின்றனர். பலர் முன்னமே வந்து இடம் பிடித்துவிட்டனர். ஆடவருக்குரிய இடத்தில் ஆடவரும் மகளிர்க்குரிய இடத்தில் மகளிரும் சீமான் களுக்குரிய இடத்தில் சீமான்களும், அவரவர்க்குரிய இடங்களில் அவரவர் அமர்ந்திருக் கிறார்கள். அரசர் பெருமான் அமைச்சர் களுடன் வந்து ஆசனத்தில் அமர்கிறார். எல்லோரையும் கிறீதத்தச் சீமான் வரவேற்று அவரவர் இருக்கையில் அமரச் செய்கிறார். இசைப் போட்டி அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மண்ணிடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார் ஒண்ணிற வுரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண்பொ னாட்சித் தெண்ணிற விசும்பின் நின்ற தெளிமதி முகத்து நங்கை கண்ணிய வீணை வாட்போர்க் கலாமின்று காண்டும் என்றே. இதோ மணமகள் காந்தருவதத்தை வருகிறாள். மகளிர் சிலர் நிறைகுடம், விளக்கு, கண்ணாடி, சாமரை, கொடி, பூ முதலான எட்டு வகை மங்கலப் பொருள்களை ஏந்திக்கொண்டு முன்னே வருகின்றனர். ஒருத்தி வெள்ளித்தட்டில் பொன்னரி மாலையை ஏந்திக் கொண்டு வருகிறாள். இப்பொன்னரிமாலை, இசைப் போட்டியில் வென்ற ஆடவனுக்கு மணமகள் சூட்டுவதற்காகும். சில மகளிர் சில யாழ்களை ஏந்தி வருகின்றனர். இசைப் போட்டியில் கலந்துகொள்பவர் இக்கருவிகளை வாசித்து இசை பாட வேண்டும். வென்றவன் அகலம் பூட்ட விளங்கொளி மணி செய்திருப்பின் நின்றெரி பசும்பொன் மாலை போந்தது நெறியிற் பின்னர் ஒன்றிய மணிசெய் நல்யாழ் போந்தன உருவமாலை தின்றுதேன் இசைகள் பாடத் திருநகர் சுடர அன்றே. ஏவல் மகளிரைத் தொடர்ந்து காவற் பெண்கள் பலர் வருகிறார்கள். இவர்களுடைய முதுகுப் புறத்தில் அம்பறாத் துணியும் இடது கையில் வில்லும் வலது கையில் அம்பும் காணப்படுகின்றன. இவர்களுக்கு மத்தியில், மணமகள் காந்தருவதத்தை தன்னுடைய தோழியர்களோடு வருகிறாள். இவளைப் பின் தொடர்ந்து மற்றும் சில காவற் பெண்கள் வருகின்றனர். இவர்கள் கையில் கேடயமும் வாளும் வேலும் ஏந்தியுள்ளனர். இவ்வாறு ஏவல் மகளிரும் காவற் பெண்களும் உடன்வர காந்தருவதத்தை இசையரங்கத்தை யடைந்து மேடைக்கு வருகிறாள். எல்லோருடைய பார்வையும் மணமகள் மேல் செல்கின்றன. அவளுடைய உருவம், இளமை, வனப்பு முதலியவற்றைக் கண்டு வியக்கின்றனர். காந்தருவதத்தை மேடைமேற் சென்று நீலநிறத்திரைக்கு முன்னர் நின்று அரசனுக்கும் சபைக்கும் கைகூப்பி வணக்கஞ் செய்து அமர்கின்றாள். அமர்ந்து வீணை வாசித்து இசைப் பாட்டுப் பாடுகிறாள். சபையோர்க்கு இசைப்பாடி அளித்த இசையமிர்தத்தை எல்லோரும் செவியாரப் பருகி வியந்து மகிழ்கின்றனர். மணமகள் சபையோருக்கு இசைப் பாடலைப் பாடி முடித்த பிறகு, வீணாபதி என்னும் தோழி எழுந்து மேடை மேல் நின்று அருகிலுள்ளோரை நோக்கி இசைப்போட்டி நடைபெற வேண்டிய முறையை விளக்கிக் கூறுகிறாள். மணமகள் இசை பாடினால் போட்டியிடுவோர் பாட்டுக்கு இசைய வீணை வாசிக்க வேண்டும். மணமகள் வீணை வாசித்தால் அந்த இசைக்கு ஏற்பப் போட்டியிடு கிறவர் பாட்டுப் பாட வேண்டும். இம்முறைப்படி ‘இசைப் போர்’ நிகழும் என்று அவள் கூறுகிறாள். தளையவிழ் கோதை பாடித் தானமர்ந் திருப்பத் தோழி விளைமதுக் கண்ணி வீணாபதி யெனும் பேடி, ‘வேற்கண் இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல், அன்றேல் வளையவள் எழாலின் மைந்தர் பாடுக, வல்லை’ என்றாள். இசைப் போட்டி தொடங்குகிறது. ஓர் அரச குமரன் வந்து அமர் கிறார். மனமகள் இசை பாடுகிறாள். அரசகுமரன் வீணை வாசிக்கிறான். மணமகள் அதற்கு ஒப்ப இசை பாடுகிறாள். இசை பொருந்தாமல் தோற்றுப் போகிறான். இவ்வாறு ஒருவருக்குப் பிறகு ஒருவராக அரச குமாரர்கள் வந்து இசை பாடியும் வீணை வாசித்தும் போட்டியிடு கின்றனர். அவர்கள் ஒவ்வொரு குறைபாடு உள்ளவர்களாய்த் தோற்றுப் போகிறார்கள். காந்தருவதத்தை பாடுவதும் வீணை வாசிப்பதும் அமிர்தம் போன்று இனிக்கின்றன. போட்டியிடுவோரின் பாட்டும் வாசிப்பும் ஏதோ ஒரு வகையில் குறைபாடுள்ளதாக மாண்பற்றிருக்கின்றன. அரங்கத்தில் உள்ள இசைக் கலையைக் கரைகண்ட இசைப் புலவர்கள் மணமகளின் இசையைப் புகழ்ந்து போற்று கிறார்கள். போட்டியிடுவோரின் இசை மரபுக்கு மாறுபட்ட இசைகளைக் கேட்டு வெறுக்கிறார்கள். இவ்வாறு அரச குமாரர் இசைப் பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் தோற்றுப் போகின்றனர். இன்றைய இசைப் போட்டி முடிகின்றது. மீண்டும் நாளைக்கு இசையரங்கம் தொடரும். மண்டபத்திலிருந்து மக்கள் வெளியேறித் தத்தம் இடத்துக்குச் செல்கிறார்கள். எல்லோரும் இன்று நடந்த இசையைப் பற்றியே பேசுகின்றனர். இன்று இரண்டாம் நாள். நேற்றைய கூட்டத்தைவிட இன்று கூட்டம் அதிகம். குறித்த நேரத்தில் எல்லோரும் வந்திருக்கிறார்கள். மன்னர் பெருமானும் வந்துவிட்டார். இசைப்போட்டி தொடங்குகிறது. இசை பயின்ற நம்பியர் ஒவ்வொருவராக வந்து பாடியும், வாசித்தும் செல்கின்றனர். ஒருவரும் வெற்றி பெறவில்லை. இன்னும் பல பேர் போட்டிக்குக் காத்திருக்கிறார்கள். அடுத்த நாளைக்கும் தள்ளி வைக்கப்படுகிறது. மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாட்களிலும் தொடர்ந்து இசைப் போட்டி நடைபெறுகிறது. ஒருவராலும் மணமகளை வெல்ல முடியவில்லை. அடுத்த நாளைக்கும் போட்டி தள்ளி வைக்கப்படுகிறது. இன்று ஆறாம் நாள். இன்றும் மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். காந்தருவதத்தையை எவரும் வெல்ல முடியாது என்று பேசிக்கொள் கின்றனர். இசைப் போட்டி தொடங்குகிறது. போட்டியிட வந்தவர் தோற்றுப் போகிறார்கள். காந்தருவதத்தை வெற்றியடைகிறாள். ஒருவராலும் அவளை வெல்ல முடிய வில்லை. திருமலர்க் கமலத் தங்கண் தேனினம் முரல்வ தொப்ப விரிமலர்க் கோதை பாட எழால்வகை வீரர் தோற்றார். எரிமலர்ப் பவழச் செவ்வாய் இன்னரம் புளர மைந்தர் புரிநரம் பிசைகொள் பாடல் உடைந்தனர், பொன்ன னாட்கே பொழுது கழிந்துவிட்டது. அரசர் பெருமான் ஆசனத் திலிருந்து எழுந்து சபையோரை நோக்கிப் பேசுகிறார். “ ஆறு நாட்களாக இசைப் போட்டியும் வீணைப் போட்டியும் நடந்தன. நூற்றுக்காணக்கானவர் வந்து போட்டியிட்டார்கள். ஒருவரேனும் வென்றார் இல்லை. மணமகளே எல்லோரையும் வென்றாள். காந்தருவதத்தையை இசையில் வெல்வோர் இவ்வுலகத்திலே ஒருவரும் இல்லை. ஆகையால், இவ் விசைப் போட்டியை இன்றோடு நிறுத்திக் கொள்வோம் என்று கூறி முடிக்கிறார். எல்லோரும் அரசன் சொன்னதற்கு உடன் படுகின்றனர். கிறீதத்தப் பிரபுவின் முகம் வாட்டமடைகிறது. பாவம்! இந்த இசைத் திருமணத்தில் தன்னுடைய மகளுக்கு மணமகன் கிடைக்கவில்லையே என்கிற கவலை அவருக்கு. இந்தச் சமயத்தில் மண்டபத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. எல்லோரும் மண்டபத்தின் வாயிற் பக்கம் நோக்குகிறார்கள். “சீவக நம்பி வருகிறார். சீவக நம்பி! சீவக நம்பி!” என்னும் குரல் அரங்கத்தில் கேட்கிறது. இராசமாபுரத்தில் எல்லோருக்கும் அறிமுகமான சீவகநம்பி தன்னுடைய நண்பர்களோடு மண்டபத்தில் நுழைகிறார். கலைகள் பலவற்றிலும் தேர்ந்தவர் என்று புகழப்பெற்ற சீவகசாமி இசைப் போட்டியில் கலந்து கொள்ள வருகிறார். எல்லோருக்கும் புதியதோர் ஊக்கம் உண்டாகிறது. உற்சாகம் பிறக்கிறது. சீவக நம்பிக்கு இசைப் போட்டியில் இடந்தர வேண்டும் என்று சபையோர் தங்களுடைய கருத்தை வெளியிடுகின்றனர். அரசர் பெருமானும் இசைகிறார். சீவக நம்பி அரங்க மேடைக்குச் செல்கிறார். கூட்டத்தில் சிலர் ‘சீவக நம்பி இசை வெல்வார்’ என்று கூறுகின்றனர். ‘இல்லை. காந்தருவதத்தையை வெல்ல முடியாது’ என்கின்றனர் வேறு சிலர். அரங்கத்தில் புதிய உற்சாகமும் தெம்பும் ஏற்படுகிறது. மேடைக்கருகில் வந்த சீவக நம்பியை மணமகள் காந்தருவ தத்தை நோக்குகிறாள். இந்தக் குமரனுடைய இளமை, ஆண்மை, அழகு, மிடுக்கு, விநயம் முதலியவை அவளுடைய மனத்தைக் கவர்கின்றன. ஆறு நாட்களாக நூற்றுக்கணக்கான குமரர்களை இசைப் பாட்டில் வென்ற இவளுக்கு, சீவக நம்பியைக் கண்டபோது, காதல் உணர்ச்சி உண்டாகிறது. இவ்வுணர்ச்சியைக் காந்தருவதத்தை மனத்திற்குள் அடக்கிக் கொள்கிறாள். நீங்கஞம் பெருத்திற் றூங்கி ஈயின்றி யிருந்த தீந்தேன் நாம்கணாற் பருகியிட்டு, நலனுரைப் பட்ட நம்பி ‘பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ, நெஞ்சே!’ என்றாள் வீங்கிய காமம் வென்றார் விளைத்தஇன் பத்தோ டொப்பாள். சீவகன் மாட்டுக் காதல் கொண்ட மணமகள் காந்தருவ தத்தை, இவன் இசைக் கலையில் வல்லவன்தானோ என்பதை யறிய ஆவல் கொள்கிறாள். இவள் தான் தோழி வீணாபதியை நோக்கி ‘இவரிடம் வீணையைக் கொடு’ என்னுங் குறிப்புத் தோன்றக் கண்ணைக் காட்டினாள். இவளுடைய கருத்தைக் குறிப்பினால் உணர்ந்த வீணாபதி, ஒரு வீணையை எடுத்துச் சீவகனிடம் கொடுக்கிறாள். சீவகன் வீணையை வாங்கி அதை நோக்குகிறான். வீணையை விரலால் தட்டிப் பார்க்கிறான். நரம்புகளைத் தடவிப் பார்க்கிறான். பார்த்து “இது தண்ணீரில் இருந்து இளகின மரத்தினால் செய்யப்பட்டது. இது வேண்டாம்” என்று சொல்லி அதைத் திருப்பிக் கொடுக்கிறான். தோழி இன்னொரு வீiணயைக் கொடுக்கிறாள். அதையும் சீவகன் சோதித்துப் பார்க்கிறான். “இது தண்ணீரில் கிடந்து அழுகிப் போன மரத்தினால் செய்யப்பட்டது” என்று கூறி அதையும் திருப்பிக் கொடுக்கிறான். தோழி இன்னொரு வீணையைக் கொடுக்கிறாள். அதை வாங்கி சீவகன் ஆராய்ந்து பார்த்து “இது வெட்டுண்ட மரத்தினால் செய்யப்பட்டது. இதை எடுத்துச் செல்” என்று திருப்பிவிடுகிறான். இன்னொரு வீணை தரப்படுகிறது. இதனை யாராய்ந்து பார்த்து “இடி விழுந்து சிதைந்த மரத்தினால் செய்யப்பட்டது. இது வேண்டாம்” என்று இதையும் திருப்பி விடுகிறான். வீணாபதி மற்றும் ஒரு வீணையைக் தருகிறாள். ஆராய்ந்துபார்த்து “இது சுடப்பட்டு வெந்துபோன மரத்தினால் செய்யப்பட்டது. இதுவும் வேண்டாம்” என்று நீக்கிவிடுகிறான். மற்றொரு வீணையைக் கொடுக்கிறாள். இதை ஆராய்ந்து பார்த்து ‘இது நல்ல மரத்தினால் செய்யப்பட்டது தான். ஆனால், நரம்பில் குற்றம் இருக்கிறது. நரம்போடு நரம்பாக மயிர் முறுக்கிக் கொண்டிருக்கிறது பார்!’ என்று கூறி நரம்புடன் சேர்ந்திருக்கிற மயிரை எடுத்து காட்டி இந்த வீணையையும் ஒதுக்கி விடுகிறான். தோழி கொடுத்த வீணைகளை யெல்லாம் வாங்கிப் பார்த்து சீவக நம்பி அவற்றிலுள்ள குற்றங்களை ஒவ்வொன்றாகக் கூறி அவற்றை நீக்கிவிட்டதைக் கண்ட அவையிலுள்ளோர் இவனுடைய இசைக் கலை நுட்பத்தை மெச்சிப் புகழ்கின்றனர். ‘சீவக நம்பி போட்டியில் வெற்றியடைவது உறுதி’ என்று கூறுகின்றனர். ‘முன்பு வந்தவர் யாரும் இந்தக் குற்றங்களை யறிந்தார்களில்லையே. குற்றமுள்ள வீணை, குற்றமில்லாத வீணை என்று கூட அவர்கள் அறியாமற் போனார்களே’ என்று கூறி வியப்படைகின்றனர். சீவக நம்பி தன் நண்பனான நபுலனிடம் இருந்த குற்றமற்ற நல்ல வீணையை வாங்கிக்கொண்டு அதனை வாசித்து இசையோடு பாடுகிறான். இசை மரபு பிறழாமலும் இனிய குரலோடும் பாடுகிற இவனுடைய இசைப் பாட்டைக் கேட்டு அவையோர் மெய்ம்மறந்து மகிழ்கின்றனர். சீவகனுடைய இசை விருந்து அமிர்தம் போன்று இனிக்கிறது. இது என்ன தேவகாணமோ! இவன் மண்ணுலகில் வாழும் மனிதன்தானோ! இவனுடைய இசைப் பாட்டு கல்மனத்தையுங் கனியச் செய்கின்றது. சீவகநம்பியின் வாய்ப்பாட்டும் வீணையும் நாதமும் இணைந்து தேனும் பாலும் கலந்தது போல இன்பம் அளிக்கின்றன. வீணையின் நாதமும் இசைப் பாட்டும் கலந்தொலிப்பதை இதோ இப்பாடல்களில் கேளுங்கள். கன்னி நாகங் கலங்க மலங்கி மின்னும் இரங்கும் மழைஎன் கோயான். மின்னும் மழையின் மெலியும் அரிவை பொன்ஞாண் பொருத முலைஎன் கோயான் கருவி வானங் கான்ற புயலின் அருவி அரற்றும் மலையென் கோயான் அருவி அரற்றும் மலைகண் டழுங்கும் மருவார் சாயல் மனம்என் கோயான்.’ வான மீனின் அரும்பி மலர்ந்து கானம் பூத்த கார்என் கோயான் கானம் பூத்த கார்கண் டழுங்கும் தேனார் கோதை பரிந்தென் கோயான். சீவக நம்பியின் இசையமிர்தத்தைச் சபையோர் செவியாரப் பருகி இசை வசமாகின்றனர். பாட்டின் இசையும் யாழின் ஒலியும் அடங்கியவுடன் சபையோர் பளபளவென்று கைதட்டி ஆர்க்கின்றனர். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் எழும்புகிறது. ‘தெய்வப் பாட்டு! தேவகானம்! அமிர்தகானம்!’ என்று மெச்சிப் புகழ்கிறார்கள். மணமகள் காந்தருவதத்தையும் மகிழ்ச்சியடைகிறாள். ‘சீவக நம்பி வென்றார்! சீவகச்சாமி வெற்றிபெற்றார்!’ என்று குரல்கள் கிளம்புகின்றன. ‘அவசரப்படாதே. மணமகள் பாடட்டும்’ என்று எதிர்க் குரல் எழும்புகிறது. இதோ, மணமகள் காந்தருவதத்தை இசை பாடத் தொடங்குகிறான். அமைதி நிலவுகிறது. எல்லோரும் உன்னிப்பாகக் கேட்கிறார்கள். கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடும் காதின் ஒளிர்ந் திலங்கக் காமர்நுதல் வியப்ப மாதர் எருத்தம் இடங்கோட்டி மாமதுர கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். இப்போது காந்தருவதத்தை பாடிய இசையும் வாசித்த வீணையும் இனிமையாக இல்லை. இசையும் நாதமும் ஒத்திருக்க வில்லை. பாட்டின் ராகம் ஒன்றாகவும் வீணையின் நாதம் வேறாகவும் பொருந்தாமல் இருக்கின்றன. காந்தருவதத்தையா, இசைக்கலைச் செல்வி காந்தருவதத்தையா இப்படிப் பாடுகிறாள்! இது என்ன விந்தை! கடந்த ஆறு நாட்களாக இசைப் போட்டியில் இசை வாணவர்களைத் திணற வைத்து வெற்றிகண்ட காந்தருவதத்தை இப்போது பாடுகிற பாடல்கள் இசை முறை தவறிப் பண் பாடல் ஒன்றாகவும் வீணையின் நாதம் ஒன்றாகவும் தோன்றுகிறது. நூற்றுக்கணக்கான பாடகர்களை வெற்றிகண்ட காந்தருவ தத்தை இப்போது சீவக நம்பியிடம் தோல்வியடைந்தாள். பண்ணொன்று பாடல் அதுஒன்று பல்வளைக்கை மண்ணொன்று மெல்விரலும் வாள் நரம்பின் மேல்நடவா விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே. காந்தருவதத்தையின் தோல்வி வெளிப்படையாகத் தெரிகிறது. சீவக நம்பி இசை வென்றதற்காக அவையில் மகிழ்ச்சியாரவார ஒலி எழுகின்றது. சீவக நம்பி எழுந்து நின்று சபையோரை வணங்கு கின்றான். காந்தருவதத்தை மெல்ல எழுந்து வெள்ளிப் பேழையி லிருந்து பொன்னரி மாலையை எடுக்கிறாள். பொன்னரி மாலை தகதக வென்று மின்னுகிறது. மெல்ல வந்து சீவகன் கழுத்தில் மாலையைச் சூட்டி வணங்குகிறாள். எல்லோரும் கைகொட்டி ஆரவாரஞ் செய்து மகிழ்கிறார்கள். சீவக நம்பியும் காந்தருவதத்தையும் மணமகனும் மணமகளுமாகக் காட்சி யளிக்கிறார்கள். நீலநிறத் திரை மெல்லத் தவழ்ந்து வந்து மேடையை மறைக்கிறது. சீவக நம்பிக்கும் காந்தருவதத்தைக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! 10. அமிர்தமதியைக் கவர்ந்த இன்னிசை அவந்தி தேசத்தின் தலைநகரமான உஞ்சையில் (உச்சியினியில்) அரண்மனையில் மேல் மாடியில் இராணி அமிர்தமதி கட்டிலிற் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். அந்த நள்ளிரவிலே அரண்மனையும் நகரமும் ஓசையடங்கி அமைதியாக இருந்தன. குளிர்ந்து தணிந்து அமைதியாக இருந்த அந்த நள்ளிரவிலே எங்கிருந்தோ இனிய இசைப்பாட்டு கேட்டது. இந்த அமைதியான நேரத்தில் யாரோ இன்னிசை பாடிக் கொண்டிருந்தார். அந்த இசைப் பாட்டு கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. அரண்மனையின் சயன அறைக்கு அருகிலிருந்து அந்த இசைப்பாட்டு வந்தபடியால் அது உறங்கிக் கொண்டிருந்த இராணியின் செவியில் புகுந்து அவளைத் துயில் எழுப்பியது. துயில் உணர்ந்து விழித்துக் கொண்ட இராணி அமிர்தமதி அந்த இன்னிசையை ஓர்ந்து கேட்டாள். அது மாளவ பஞ்சமப் பண். கேட்கக் கேட்க இனிமையாக இருந்தது. இந்த இசைப் பண் இராணியின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அவள் இசையைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். சில நேரத்துக்குப் பிறகு இசைப்பாடல் நின்றுவிட்டது. இது, நள்ளிரவில் நடு யாமத்தில் நடந்தது. இசைப் பாட்டில் மனத்தைப் பறிகொடுத்து விட்ட இராணிக்குத் தூக்கம் வரவில்லை. ‘இவ்வளவு இனிமையாக இசை பாடியவன் யார்? அரண்மனை ஊழியனாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய மனம் அவனைக் காணவேண்டு மென்று அவாவுகிறது. அவனை யடைய வேண்டுமென்று விரும்புகிறது. அவன் அரண்மனை ஊழியனாகத் தான் இருக்க வேண்டும். பொழுது விடிந்த பிறகு விசாரிப்போம்’ என்று அவள் தனக்குள் எண்ணினாள். அவள், தூக்கம் இல்லாமல், இசைப் பாட்டைப் பற்றியும், அதைப் பாடினவனைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருந்தாள். மெல்லப் பொழுது விடிந்தது. இராணி எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டாள். தன்னுடைய பணிப் பெண்ணாகிய குணவதி என்பவளைத் தனியே அழைத்து இரகசியமாகப் பேசினாள். முன் இரவு தான் கேட்ட இனிய இசைப்பாட்டின் சிறப்பைக் கூறி, அதைப்பாடின ஆள் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டாள். “எனக்குத் தெரியாது. மகாராணி! தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்” என்று விடை சொன்னாள் குணவதி. “கண்டுபிடித்து வந்துச் சொல்லு. அந்த ஆளை நான் காண வேண்டும். ஒருவருக்குந் தெரியாமல் அழைத்துக்கொண்டு வா. யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது. இது உன் வரையில் இருக்கட்டும்” என்று கட்டளையிட்டாள் இராணி. இராணியின் விபரீதமான தகாத எண்ணத்தை ஊழியப் பெண் குணவதி தெரிந்துகொண்டாள். இராணியின் எண்ணத்தைத் தடுக்க முயன்றாள். “தேவி! தாங்கள் உறக்கத்தில் கண்ட கனவை நனவாகக் கருதிக்கொண்டீர்கள் என்று தோன்றுகிறது. இந்த எண்ணத்தை விட்டு விடுங்கள். இது வெறுங்கனவு” என்று குணவதி பணிவாகத் கூறினாள். “இல்லையடி, இல்லை. நான் கனவு காணவில்லை. நனவு தான். நீ போய் அந்த ஆளைக் கண்டுபிடித்து என்னுடைய மனக் கருத்தைத் தெரிவித்து என்னைச் சந்திக்கச் சொல்லு விரைவாக போ” என்று கட்டளையிட்டாள். அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் குணவதி இசை பாடினவனைத் தேடிக்கொண்டு போனாள். அவளுடைய மனத்தில் பல எண்ணங்கள் தோன்றின. ‘நள்ளிரவில் இசை பாடினவன் அரண்மனை ஊழியனாகத்தான் இருக்கவேண்டும்’ அரசி உறங்கும் மாளிகைக்கு அருகில் இருப்பது யானைப்பந்தி ஆகையால், யானைப் பந்தியி லிருந்துதான் அந்த இசைப் பாட்டு வந்திருக்க வேண்டும். அதைப் பாடினவன் யானைப் பந்தியின் ஊழியனாக இருக்கவேண்டும். அவ்வளவு இனிமையாகப் பாடினவன் உருவத்திலும் அழகிலும் மன்மதனாக இருப்பானோ? போய்ப் பார்ப்போம்.’ என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே குணவதி யானைப் பந்திக்குச் சென்றாள். குணவதி கருதியது போலவே அந்த ஆண் யானைப் பந்தியில் இருந்தான். அவனைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். அவள் கருதியதுபோல் அவன் மன்மதனாக அழகனாக இல்லை. அவன், அருவெறுக்கத்தக்க குரூபியாக இருந்தான். அவனுடைய விகாரமான உருவம் அருவெறுக்கத்தக்கதாக இருந்தது. பேய் போன்ற உருவம், நரம்புகள் உடம்பில் அங்கங்கே முடிச்சுப் போட்டதுபோல கட்டிக்கொண்டிருந்தன. வற்றிப் போன சிறிய முகத்தில் கண்கள் குழி விழுந்து கிடந்தன. பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. கூனல் முதுகும் நீண்டு மெலிந்த கைகளும் மெலிந்து போன விரல்களும் உள்ளவன். அவன் நடக்கும்போது அவனுடைய முட்டிகள், கழுதை நடக்கும் போது முட்டிக்கொள்வது போல முட்டிக்கொண்டன. இவ்வளவு அவலட்சணமும் போதாதென்று உடம்பில் புண்களும் இருந்தன. இவன்தான் முன் இரவு மாளவப் பஞ்சம இராகத்தில் இசை பாடினவன். இவனுடைய பெயர் அட்டமா பங்கன். அவனுடைய விகாரமான உருவத்துக்கு ஏற்ற பெயர். இவ்வளவு அவலட்சணமும் விகாரமும் பொருந்தியவனைக் கண்ட போது தான் குணவதி திடுக்கிட்டு வியப்படைந்தாள். வெறுக்கத்தக்க இவனை உலகத்திலே எந்தப் பெண் விரும்புவாள்! நிச்சயமாக இராணி இவனை விரும்ப மாட்டாள். இதுவும் ஒரு நன்மைக்கே என்று நினைத்தாள். தான் வந்த காரியத்தைப் பற்றி ஒன்றும் அவனிடம் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள். விரைந்து இராணியிடம் வந்தாள். இவளுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த இராணியிடம் வந்து குணவதி தான் கண்ட அருவறுக்கத்தக்க விகார உருவத்தைக் கூறினாள்; இவ்வளவு குரூபியான இவனைப் பற்றின எண்ணத்தை இராணி விட்டு விடுவாள் என்று அவள் கருதினாள். மன்னமா தேவி! நின்னை வருத்துவான் வகுத்த கீதத் தன்னவன் அத்திமாகன், அட்டமா பங்கன் என்பான். தன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன் என்னைநீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கீ தென்றாள். (அத்திபாகன்- யானைப்பாகன்; முனிதி- கோபிப்பாய்; இசைக்கலன்- சொல்லவில்லை.) நரம்புகள் விசித்த மெய்யன், நடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன், சிறுமுகன், சினவு சீரில் குரங்கனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன், நெருங்கலும் நிரலுமின்றி நிமிர்ந்துள சிலபல் என்றாள் பூதிகந் தகத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா சாதியுந் தக்கதன்றால் அவன்வயின் தளரும் உள்ளம் தவிர்த்திட்டு நெஞ்சில் நிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட உள்ள குணவதி கொம்மன் னாளே! குணவதி சொல்லியவை அரசியின் மனத்தை மாற்ற வில்லை. குணவதி மீண்டும்மீண்டும் கூறிய அந்த அருவறுக்கத் தக்க விகார உருவத்தை அவள் சிந்திக்கவில்லை. இராணியின் மனம் மாறாதத பற்றிக் குணவதி வியப்படைந்தாள். இராணிதன் எண்ணத்தை நிறை வேற்றிக்கொண்டாள். அவள் அந்த ‘அழகனோடு’ கூடாவொழுக்கங் கொண்டாள். அது அவளுடைய ஊழ்வினை போலும். விதியின் திருவிளையாடல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்வது! ‘இவனுடைய இசைப் பாட்டைக் கேட்பதற்கு முன்பு இராணி இவனைக் கண்டிருந்தால் இவனை விரும்பியிருப்பாளா? இவனுடைய இசைப்பாட்டு அல்லவா இவளை இவனிடம் இச்சை கொள்ளச் செய்தது? என்னே விபரீதம் இது’ என்று குணவதி தனக்குள்ளே எண்ணிக் கொண்டாள். 11. மாளவியும் அக்கினிமித்திரனும் அக்கினிமித்திரன் என்னும் அரசன் விதீச நகரத்தில் தன்னுடைய அரண்மனையில் மூத்த இராணி தாரிணியுடனும் இளைய இராணி ஐராவதியுடனும் இனிது வாழ்ந்து வந்தான். அரண்மனையின் நாடக அரங்கத்தில் நாட்டிய நாடகங்களை நடத்துவதற்கு இரண்டு கலைஞர்கள் நியமித்திருந்தான். கணதாசன் என்றும் அரதத்தன் என்றும் பெயர் பெற்றிருந்த அவர்கள் நாட்டிய நாடகக் கலைகளில் வல்லவர்கள். இவர் களுடைய கலைகளில் இவர்களுக்குத் தனிமதிப்பு உண்டு. பண்டிதர் முதல் பாமரர் வரையில் எல்லோரும் இவருடைய நாட்டிய நாடகங்களைக் கண்டு ரசித்து மகிழ்கிறார்கள். ஆகவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்தக் கலை மிகச் சிறந்தது என்பது இவர்களுடைய உறுதியான நம்பிக்கை. அரண்மனையில் நாடகங்களும் நடனங்களும் நாள்தோறும் நடந்துகொண்டிருந்தன. தாரிணி இராணியிடம் புதிதாக ஒரு ஊழியப் பெண் வந்து வேலைக்கு அமர்ந்தாள். அவளுடைய அழகும் தோற்றமும் நடையுடை பாவனைகளும் அவள் உயர்ந்த குலத்தில் பிறந்தவள் என்பதைக் காட்டின. ஆனால், அவள் தன்னை ஏழைப் பெண் என்று சொல்லிக் கொண்டாள். அவளுடைய பெயர் மாளவி. இராணி அவளைத் தன்னுடைய சொந்த ஊழியப் பெண்ணாக அமைத்துக் கொண்ட பிறகு அப்பெண்ணின் இளமையும் வனப்பும் தோற்றமும் அரசனுடைய மனத்தைக் கவர்ந்துவிடுமோ என்று அஞ்சினாள். ஆகவே அவளை அரசனுடைய கண்ணில் படாதபடி மறைத்து வைக்கக் கருதினாள். தன்னுடைய ஆளான கணதாசனை அழைத்து அவளிடம் மாளவியை ஒப்பித்து அவளுக்கு நடனக் கலையைக் கற்பிக்கும்படியும் அவளை ஒருவரும் காணாதபடி தனியே வைத்திருக்கும்படியும் கட்டளையிட்டாள். நாடகாசிரியன் கணதாசன் அரசியின் கட்டளைப்படி தன்னுடைய இல்லத்தில் மாளவியை வைத்து நடனக் கலையைக் கற்பித்துக்கொண்டிருந் தான். மாளவி நடனக் கலையை நன்றாகப் பயின்று வந்தாள். அதுபற்றி அவளைக் கணதாசன் பாராட்டினான். எத்தனையோ மாணாக்கர்களுக்கு நான் கலைகளைக் கற்பித்திருக்கிறேன். அவர்கள் எல்லோரையும்விட மாளவி மிக நன்றாகக் கற்று வருகிறாள் என்று அவன் பெருமைப் பட்டுக் கொண்டான். ஓவியக் கலைஞன் ஒருவன் வந்து இராணியின் உருவத்தை வண்ணச் சித்திரமாக எழுதினான். அப்போது அவளுடன் ஊழியப் பெண்ணாகிய மாளவியின் எழிலும் சாயலும் அழகாக இருந்தபடியால் அவள் உருவத்தையும் அந்தச் சித்திரத்தில் எழுதினான். ஓவியம் எழுதி முடிந்த பிறகு அந்தப் படத்தை அரண்மனையின் ஓவியச் சாலையில் அமைத்து வைத்தான். அந்தப் படத்தைப் பார்ப்பதற்காக இராணி தன்னுடைய தோழி வசுலட்சுமியுடன் சித்திரச் சாலைக்கு வந்தாள். இராணி ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அரசன் தற் செயலாக அவ்விடத்துக்கு வந்தான். வந்து அவனும் அந்த ஓவியத்தைப் பார்த்தான். பார்த்து “ஓவியத்தில் உன்னுடன் இருக்கிற இவள் யார்? இவளுடைய பெயர் என்ன?” என்று அரசியைக் கேட்டாள். அரசனுடைய கண்ணில் படாதபடி தான் மறைத்து வைத்த பணிப்பெண்ணை அரசன் ஓவியத்தில் கண்டு விட்டானே என்று இராணி திகைத்தாள். அவள் ஒன்றும் பேசாமல் வாளா இருந்தாள். அருகிலிருந்த வசுலட்சுமி “அவள் பெயர் மாளவி” என்று கூறினாள். “மாளவி! மிகவும் எழிலாக இருக்கிறாள்” என்று அரசன் கூறினான். படத்தில் மாளவியைக் கண்ட அரசன் அவளை நேரில் காண வேண்டுமென்று கருதினான். ஆனால், அவன் இராணியிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. அரசிக்குத் தெரியாமல் அவளைக் காணவேண்டுமென்று எண்ணினான். இதை அரசி அறிந்தால் தன்மீது கோபங் கொள்வாள் என்று அஞ்சினான். என்னசெய்வது என்று சிந்தித்தான். தனியே இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அரண்மனையில் விதூஷகனாக இருந்த கௌதமன் என்னும் பார்ப்பனன் அங்கு வந்தான். இவனைக் கொண்டு காரியத்தை முடிக்கலாம் என்று கருதி அரசன் அவனை அருகில் அழைத்து ரகசியமாக தன் கருத்தை அவனிடங் கூறினான். விதூஷகன் அரண் மனையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தவனாகையால், “மாளவியா! மாளவி கணதாசனிடம் நாட்டியக் கலை கற்று வருகிறாள்” என்று அரசனிடஞ் சொன்னான். “அவளை நான் காணும்படிச் செய்ய வேண்டும்” என்று அரசன் அவனிடம் கூறினான். விதூஷகன் அதற்குச் சம்மதித்தான். விதூஷகன் நடன ஆசிரியர்களைத் தனித்தனியே கண்டு அவர்களுடைய கலைத் திறமையை மெச்சிப் பேசினான். இவ்வளவு பெரியவராகிய உங்களை அந்த அரதத்தன் இழிவாகப் பேசினான் என்று கணதாசனிடம் கூறினான். அரதத்தனிடஞ் சென்று அவனை வானளாவப் புகழ்ந்து பேசி உங்கள் கலையைக் கணதாசன் குறைவாகப் பேசுகிறான் என்று அரதத்தனிடங் கூறினான். இவ்வாறு இரண்டு நாடகாசிரியர்களுக்குள் பகை யுண்டாக்கிப் பூசலை வளரச் செய்தான். இது விதூஷகனின் சூழ்ச்சி என்பதையறியாமல் அக் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் பகைகொண்டார்கள். கடைசியில் அரசனிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டார்கள். “அரசர் பெருமானே! இந்த அரதத்தன் என்னை, ‘இவன் என் கால் தூசுக்குக்கூட இணையாக மாட்டான்’ என்று என்னை இகழ்ந்துப் பேசினான்” என்று கணதாசன் அரசனிடம் முறை யிட்டான். “அரசர் பெருமானே! இந்தக் கணதாசன் தான் என்னை முதலில் இகழ்ந்துப் பேசினான். ‘இந்தக் கடலுக்கு இணையாகுமா இந்தக் குட்டை’ என்று இவன் என்னைத் தாழ்த்திப் பேசினான்” என்று முறையிட்டான் அரதத்தன். இந்த நாடகாசிரியர்களின் வழக்கைக் கேட்ட அரசன், இது கௌதமன் செய்து வைத்த கலகம் என்று அறிந்துகொண்டு இந்த வழக்கைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணினான். பிறகு அரசன் கூறினான்: “நீங்கள் இருவரும் சிறந்த கலைஞர்கள். உங்களுக்குச் சமமான கலைஞர்கள் உலகத்திலே ஒருவரும் இலர், உங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால் என்ன செய்வது? உங்களில் யார் சிறந்தவர் என்று தீர்ப்புக் கூறுவதற்கு ஒரே வழியுண்டு. உங் களுடைய சீடர்களை அழைத்து வந்து அரண்மனை அரங்கத்தில் நாட்டியமாடச் செய்யுங்கள். யாருடைய சீடர் திறமையாக நடிக்கிறாரோ அவருடைய ஆசிரியர் கூத்துக் கலையில் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்கலாம்.” அரசன் கூறிய இந்த யோசனைக்குக் கலைஞர்கள் இணங் கினார்கள். அடுத்த நாள் மாணவியரை அழைத்து வந்து நாட்டிய மாடச் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. அடுத்த நாள் இரண்டு நாடகாசிரியர்களும் தங்கள் தங்கள் மாணவியரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அரசனும் விதூஷகனும் அரங்கத்துக்கு வந்து அமர்ந்தார்கள். மூத்த ராணி தாரணியும் இளைய ராணி ஐராவதியும் வந்திருந்தனர். முதலில் மூத்த ஆசிரியராகிய கணதாசனின் மாணவி மாளவி அரங்கின் மேல் ஏறி ஆடினாள். மூத்த இராணி அரசன் மேல் சந்தேகப்பட்டாள். மாளவியைப் பார்ப்பதற்காக அரசன் குழ்ச்சிசெய்து இந்தப் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறான் என்று அவள் கருதினாள். அரசனுக்கு மாளவியை நேரில் காண நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆடல் பாடல்கள் ஆரம்பமாயின. மத்தளம் முழங்கிற்று. யாழும் குழலும் இசைத்தன. பாடலுக்கு ஏற்ப மாளவி அபிநயம் பிடித்து நாட்டியம் செய்தாள். அவளுடைய ஆடலும் அழகும் பாட்டும் முறைப்படி செம்மையாகவும் ஒழுங்காகவும் இருந்தன. அவளுடைய ஆடலை எல்லோரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். அரசனுக்குப் பெரும் மகிழ்ச்சியாயிற்று. அடுத்தபடியாக, அரதத்தரின் மாணவி நடனம் ஆட வேண்டும். அதைத் தொடங்குகிற சமயத்தில், அரண்மனை வைதானிகரின் பாடல் கேட்டது. நேரம் பிற்பகல் ஆகிவிட்டது என்பதைத் தெரிவிப்பது தான் வைதானிகர் பாடல். அதைக் கேட்ட அரசன் “நேரமாய் விட்டது. அடுத்த நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்வோம்” என்று கூறி எழுந்தான். எல்லோரும் அரங்கத்தை விட்டுச் சென்றார்கள். அரசன் விதூசகனைத் தனியே அழைத்து, மாளவியைத் தான் நேரில் காண்பதற்கு வழி செய்ததற்காக அவனை மெச்சினான். பிறகு, மாளவியின் மேல் தான் காதல் கொண்டதைத் தெரிவித்து எப்படியாவது அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அரசிகள் இதற்கு விரோதமாக இருப்பார்கள் என்றும் அவ்வாறு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினான். விதூசகனும் அதற்குச் சம்மதித்தான். அரண்மனைப் பூங்காவில் அசோகமரம் மலர்வதைக் காண்பதற்கு அரசியர் சென்று பார்க்க ஏற்பாடாகி இருந்தது. இராணி தாரணியின் ஊழியப் பெண்ணாகிய மாளவி அச் சமயம் அரசியுடன் வருவாள் என்று விதூசகன் அறிந்தான். உடனே அரசனிடம் வந்து அவளைச் சந்திப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறினான். உடனே அரசர் விதூசகனுடன் பூஞ்சோலைக்கு வந்தான். அங்கு அசோக மரத்தண்டை மாளவி தனியே இருந்தாள். மூத்த இராணிக்குக் காலில் சிறிதுவலி ஏற்பட்டிருப்பதனால் அவள் அங்கு வர வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை அரசன் பயன்படுத்திக்கொண்டு, மாளவியிடம் வந்து அவளுடைய ஆடல் பாடல்களை மெச்சிப் புகழ்ந்து பேசினான். அது கேட்டு அவள் மகிழ்ச்சியடைந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அரசன் தன் காதலை அவளுக்குக் கூறினான். விதூசகன் விலகித் தூரத்தில் நின்று கொண்டிருந்தான். அக்கினி மித்திரனும் மாளவியும் தனியே பேசிக்கொண்டிருந்த போது இளைய இராணி ஐராவதி தன் தோழியுடன் பூங்காவுக்கு வந்தாள். அரசனும் மாளவியும் தனியே பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களுக்குத் தெரியாமல் மறைவாக வந்து ஒரு பூம்புதரின் அருகில் நின்று செவிகொடுத்துக் கேட்டாள். அவர்கள் காதல் விஷயம் பேசுகிறார்கள் என்பதை அறிந்து சினங்கொண்டாள். உடனே தன்னுடைய தோழியை மூத்த இராணியிடம் இச்செய்தியைச் சொல்லி வரும்படி அனுப்பி விட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று அவர்கள் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். இது பற்றி முன்னமே அரசன் மேல் சந்தேகங் கொண்டிருந்த மூத்த இராணி இந்த விஷயத்தைக் கேட்டபோது அவளுக்குச் சினம் உண்டாயிற்று. அவள் மாளவியைச் சிறையில் அடைத்துத் தன்னுடைய நாகமுத்திரை மோதிரத்தைக் கண்டால் அன்றி அவளைச் சிறையி லிருந்து வெளிவிடக்கூடாது என்று சிறைச் சாலைச் சேவகனுக்குக் கட்டளையிட்டாள். மாளவி இராணியின் சிறையில் இருப்பதனால் அரசன் அவளை மறுபடியும் காண முடியவில்லை. அரசன் விதூஷச கனின் உதவியை மீண்டும் நாடினான். மாளவியைச் சிறையிலிருந்து விடுவித்துத் தன்னை அவளுடன் பேசும்படி குழ்ச்சி செய்து முடிக்க வேண்டும் என்று கூறினான். விதூஷகன் அதற்கும் உடன்பட்டான். விதூஷகன், அரண்மனைப் பூங்காவில் பூ கொய்தபோது பாம்பு ஒன்று அவன் கைவிரலில் கடித்துவிட்டது என்று அரண் மனையில் வதந்தி யுண்டாயிற்று. பாம்பு விஷத்தை இறக்க மந்திரவாதி அழைக்கப் பட்டான். மந்திரவாதி நாகமுத்திரை யுள்ள ஒரு மோதிரம் வேண்டு மென்றும் அந்த மோதிரத்தைக் கொண்டு மந்திரித்தால் விஷம் வெளி வந்துவிடும் என்று கூறினான். உடனே நாகமுத்திரையுள்ள மோதிரத்தைத் தேடினார்கள். நாகமுத்திரை மோதிரம் தாரணி இராணி அணிந்திருப்ப தாக அறிந்து இராணியிடம் அந்த மோதிரத்தை இரவலாகக் கொடுக்கும் படி கேட்டார்கள். விதூஷகன் ஆபத்தான நிலைமையிலிருப்பதால் இராணி இரக்கங்கொண்டு அந்த மோதிரத்தை விரலிலிருந்து சுழற்றிக் கொடுத்தனுப்பினாள். உண்மையில், அவனை பாம்பு கடித்தது என்பது வெறும் கற்பனையே. அந்த மோதிரத்தைக் கொண்டுபோய்ச் சிறைச் சாலைக் காவல்காரனிடம் காட்டி சிறையிலிருக்கும் மாளவியை விடுவிப்பதற்காகச் செய்த சூழ்ச்சி இது. விதூஷகன் அரசியின் நாகமுத்திரையுள்ள மோதிரத்தைக் கொண்டுபோய் சிறைச்சாலைக் காவலனிடம் காட்டி, மாளவியை இராணி விடுதலை செய்து அழைத்து வரச் சொன்னார் என்று கூறினான். இராணியின் நாகமுத்திரை மோதிரத்தைக் கண்ட காவல்காரன் மாளவியைச் சிறையிலிருந்து விடுவித்தான். அக்கினி மித்திர அரசன் மாளவியைப் பூங்காவில் சந்தித்து அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வமயம் இளைய இராணி ஐராவதி தோழியுடன் பூஞ் சோலைக்கு வந்தாள் வந்தவள் அரசனும் மாளவியும் காதலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சினங்கொண்டாள். அவள் தன் தோழியை அனுப்பி இந்தச் செய்தியை மூத்த இராணிக்குத் தெரிவித்தாள். மூத்த இராணி தாரணி அவ்விடம் வந்து அரசனும் மாளவியும் தனித்திருப்பதைக் கண்டு சினந்தாள். அவர்களை அவள் வைதாள். ஒரு பணிப் பெண்ணிடத்தில் அரசன் இவ்வாறு காதல்கொள்வது அரசிகளுக்கு வெட்க மாகவும் இழிவாகவும் தோன்றிற்று. இதை நாட்டு மக்கள் அறிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்! இராணிக்குத் தன்னுடைய பணிப்பெண்ணாகிய மாளவியின் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று. இந்தச் சமயத்தில் விதர்ப்ப தேசத்து அரசன் அக்கினி மித்திரனுக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த பொருள்களைத் தூதரிடம் கொடுத்து அனுப்பினான். அந்தத் தூதர்களுடன் இரண்டு பணிப் பெண்களும் வந்திருந்தார்கள். தூதர்களும் அவர்களுடன் வந்த பணிப்பெண்களும் தாங்கள் கொண்டு வந்த காணிக்கையை அரசனுக்கு அளித்தார்கள். அவ்வமயம் அங்கிருந்த மாளவியைப் பணிப் பெண்கள் கண்டு மகிழ்ச்சியோடு “ஓகோ! எங்கள் அரசகுமாரி” என்று சொல்லிக் கொண்டு அவளருகில் வந்து அவளை வணங்கினார்கள். இதைக் கண்டபோது, அரசனுக்கும் அரசிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெருவியப்பு உண்டாயிற்று. இதுபற்றித் தூதர்களைக் கேட்டபோது அவர்கள் ‘மாளவி’ உண்மையில் விதர்ப்ப தேசத்து அரச குடும்பத்தில் பிறந்தவளென்றும் அவர் சில காலம் ஊழியப் பெண்ணாக இருந்து பிறகு இராணியாவாள் என்று சித்திகர் ஜாதகங் கணித்துக் கூறியபடி இங்கு வந்து ஊழியக் காரியாக இருந்தாள் என்றும் கூறினார்கள். மாளவி அரச குடும்பத்தில் பிறந்த அரசகுமாரி என்பதை அறிந்த பிறகு இராணிகள் அரசன் கருத்துக்கு இணங்கிவிட்டார்கள். அரசன் மாளவியை மூன்றாவது மனைவியாக மணஞ் செய்து கொண்டான். பிறகு, மாளவி தான் கற்ற ஆடல் பாடல்களை அரண் மனையில் சிலசமயம் நடத்தினாள். அரசனும் மற்ற இராணியரும் இவளுடைய கலையின் செவ்வியைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர். 12. உதயணன் - யாழ் வித்தகன் வத்தவநாட்டு அரசன் சதானிகன் தன்னுடைய இராணி மிருகா பதியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான். அவர்களுக்கு ஒரு அருமை யான ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். உதயணன் தன்னுடைய தாய் தந்தையருடன் அரண்மனை யில் நெடுங்காலம் வளரவில்லை அவன் தன்னடைய தாய்ப் பாட்டனான சேடக முனிவரிடஞ் சென்று அவரிடம் வளர்ந்து வந்தான். சேடக முனிவர் விபுலகிரி மலைக்காட்டில் ஓர் ஆசிரமத்தில் இருந்தார். சேதி நாட்டின் அரசனாக வாழ்ந்திருந்த அவர் அரசாட்சியை வெறுத்துத் தன்னுடைய மகனான விக்கிரமனுக்குப் பட்டங்கட்டித் தான் துறவு பூண்டு விபுலகிரிக் காட்டுக்குச் சென்று ஆசிரமம் அமைத்து வசித்து வந்தார். அவருடன் வேறு சில முனிவர்களும் தங்கித் தவஞ்செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் பிரமதத்தர் என்பவர். உதயணன் தன் பாட்டனாரான சேடக முனிவருடன் விபுலகிரிக் காட்டிலே இருந்தபோது அவனுக்கு அவர் வில் வித்தை, வாட்போர் முதலிய வித்தைகளைக் கற்பித்தார். இந்த வித்தகைளுடன் பாடல் கலையாகிய இசைக் கலையையும் கற்பித்துக் கொடுத்தார். பிறகு குழல் வாசிக்கவும் கற்பித்தார். உதயணன் இந்தக் கலைகளெல்லாங் கற்று அக்கலைகளில் வல்லவனானான். அந்த ஆசிரமத்தில் இருந்த பிரமதத்த முனிவர் உதயணனுக்குத் தன்னிடம் இருந்த கோடபதி என்னும் இசைக் கருவியை வாசிக்கக் கற்பித்துக் கொடுத்தார். அவனும் யாழ் வாசிப்பதில் வல்லவனானான். இவ்வாறு உதயண குமரன் இசைக் கலைகளில் வல்லவனாக விளங்கினான். பிரமதத்தர் உதயண குமாரனுக்கு யானையை வசப்படுத்தும் வித்தையையும் கற்றுக் கொடுத்தார். விபுலகிரிமலையைச் சார்ந்த பெரிய காட்டிலே யானைகளும் இருந்தன. இப்போது வளர்ந்துவிட்ட உதயணகுமரன் காட்டில் போய் யாழ் வாசித்தும், இசை பாடியுங் காலங் கழித்தான். காட்டிலே போய் அவன் கோடபதி யாழை வாசிக்கும்போது அந்த யாழின் இனிய பண்ணோசையைக் கேட்டுக் காட்டிலிருந்த யானைகளும் மான் மரை முதலான விலங்குகளும் பறவைகளும் கூட்டமாக வந்து செவி மடுத்துக் கேட்டு மகிழ்ந்து செயலற்று இருந்தன. இதனைக் கண்ட பிரமதத்த முனிவர் அந்தத் தெய்வீக யாழை உதயணனுக்கே கொடுத்து “நீ இசைக் கலையில் மேன் மேலும் சிறந்து விளங்குக” என்று வாழ்த்தியருளினார். உதயண குமரனும் இசைச் கலையை நன்றாகப் பயின்று யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் வல்லவனாகி ஒப்புயர்வற்று விளங்கினான். வழக்கம் போல ஒரு நாள் உதயண குமரன் காட்டுக்குச் சென்றான். நெடுந்தூரஞ் சென்றபோது யானை மந்தை ஒன்றைக் கண்டான். அந்த மந்தைகளின் நடுவே ஒரு களிற்று யானை நிற்பதைக் கண்டான். அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்த அந்தக் களிற்றை வசப்படுத்திப் பழக்கித் தன்னிடம் வைத்துக்கொள்ள எண்ணினான். அவன், அருகிலிருந்த ஒரு பாறைக் கல்லின்மேல் அமர்ந்து கோடபதி யாழை இசைத்து வாசித்தான். யாழின் இசை ஒலி காட்டில் பரந்து இசைத்தது. யாழின் இன்னிசையைக் கேட்ட யானை மெல்ல அவனருகில் வந்து நின்று இசையைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டு நின்றது. அது யாழிசையில் சொக்கிவிட்டது. நெடுநேரம் மெய் மறந்து இசையைக் கேட்டுக்கொண்டு நின்றது. கடைசியில், அவனுடைய யாழிசையில் ஈடுபட்டு அவனுக்கு அடங்கி விட்டது. யானை தனக்கு இசைந்துவிட்டதைக் கண்ட உதயணன் அதன் மேல் ஏறியமர்ந்து அதைத் தானிருந்த ஆசிரமத்துக்குச் செலுத்திக்கொண்டு போனான். அன்று முதல் அந்தக் களிறு உதயணனுக்கு ஊழியஞ் செய்து வந்தது. அவன் அதன் மேல் ஏறிக்கொண்டு காடுகளில் சுற்றித் திரிந்தான். அவன் நாள்தோறும் யாழ் வாசிக்கும் போதெல்லாம் அந்த யானை அங்கு வந்து இசையைக் கேட்டுப் பரவசமடைந்தது. ஒரு நாள் உதயணன் உறங்கிக்கொண்டிருந்த போது அவனுடைய கனவில் யானை தோன்றி அவனிடம் இந்தச் செய்தியைக் கூறிற்று: “நான் உன்னுடைய ஊழியன் ஆனேன். உன்னைவிட்டுப் பிரியமாட்டேன் ஆனால், நீ எனக்கு மூன்று வாக்குத் தரவேண்டும். அவை: ‘உன்னைத் தவிர என் மேல் வேறு யாரும் ஏறுவது கூடாது. என் கால்களைத் தோல் கயிறினால் கட்டக்கூடாது. நான் உணவு கொள்வதற்கு முன்பு நீ உணவு கொள்வது கூடாது. இதற்கு மாறாக நடந்தால் உன்னை விட்டுப் போய்விடுவேன்” இவ்வாறு கனவில் வந்து யானை சொல்லியதைக் கேட்ட உதயணன் அதை நனவில் கேட்பதாகக் கருதி அதன்படியே நடந்து கொண்டான். ஒரு நாள் சேடக முனிவரின் ஆசிரமத்துக்குச் சேதி நாட்டரச னான விக்கிரன் வந்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அரசாட்சியில் தனக்கு வெறுப்பு ஏற்பட் டிருக்கிறதென்றும் தான் துறவு பூண்டு காட்டுக்குப் போய்த் தவம் செய்ய விரும்புவதாகவும் அவன் தன் தந்தையிடம் கூறினான். தனக்குப் பிள்ளைப் பேறில்லாதபடியால் ஆட்சியை....... சேதி நாட்டுக்கு அரசனான உதயணன் தலைநகரமான வைசாலியில் இரந்து அரசாண்டான். தன்னுடைய நண்பனும் தன்னுடன் இசை பயின்றவனுமான யூகியைத் தன்னுடைய அமைச்சனாக்கினான். தன்னுடைய யானையைப் பட்டத்து யானையாக்கினான். இவ்வாறு சேதிநாட்டை அரசாண்டு கொண்டிருந்தபோது இவனுடைய தந்தையான வத்த நாட்டரசன் துறவு கொள்ள எண்ணித் தன்னுடைய மகனான உதயணனை அழைத்து வத்தநாட்டரசனாகப் பட்டங்கட்டி முடி சூட்டி வைத்து, தவஞ் செய்யக் காட்டுக்குப் போய்விட்டான். ஆகையால், உதயணன் சேதி நாட்டுக்கும் வத்தநாட்டுக்கும் அரசனாகி இரண்டு நாடுகளையும் அரசாண்டு கொண்டிருந்தான். அவன் சுற்றுப்புறங்களில் இருந்த நாடுகளின் மேல் படை யெடுத்துச் சென்று அந்த நாடுகளை வென்று தன்னுடைய இராச்சியத்தை விரிவுபடுத்தினான். அந்தப் போர்களில் அவனுடைய யானை அவனுக்குப் பெரியதும் உதவியாக இருந்தது. அரண்மனையில் நாடக அரங்கத்தில் ஆடல் பாடல்களும் நாட்டிய நடனங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. இசைக் கலையில் தேர்ந்தவனான உதயண அரசன் ஆடல் பாடல்களை கண்டுங் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நாடக அரங்கத்தில் நிகழ்ந்த இசையுங் கூத்தும் அவனுடைய மனதைப் பெரிதுங் கவர்ந்தமையால் பசியையும் மறந்து அவன் கலைகளை ரசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் பசியினால் அவன் சோர்வடைந்து விட்டான். நேரங்கழித்து உணவருந்திய அவன் பிறகு தன்னுடைய கோடபதி யாழை எடுத்து இசைத்துக் கொண்டிருந்தான். யாழின் இனிய இசை அரண்மனை முழுவதும் பரந்து இசைத்தது. வழக்கம் போல அங்கு வந்து இசையைக் கேட்டுக்கொண்டிருந்த யானை அன்று அங்கு வரவில்லை. உதயணன் அதன் காரணத்தை சிந்தித்துப் பார்த்தான். யானைக்கு முதலில் உணவு கொடுத்து பிறகு தான் உணவு கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக இன்று அதற்கு உணவு கொடுக்கும் முன்பு தான் உணவு கொண்டபடியால் யானை வரவில்லை என்பதை யுணர்ந்தான். தான் செய்த தவறுக்காகப் பெரிதும் மனம் வருந்தி அதைத் தேடி கண்டுபிடிக்கும்படி சேவகர்களை நாற்புறமும் அனுப்பினான். சேவகர்கள் பல இடங்களிலும் சென்று தேடிப் பார்த்தும் யானை காணப்படவில்லை. தான் அன்பாகப் பழகிய யானையைப் பிரிந்திருக்க அவனால் முடியவில்லை. உதயணன் தானே காட்டுக்குப் போய் யானையைத் தேடத் தொடங்கினான். காட்டில் யாழ் வாசித்துக் கொண்டு யானையைத் தேடினான். யாழின் இசையைக் கேட்டு யானை வரும் என்று அவன் கருதினான். காட்டில் நெடுந்தூரஞ்சென்று அவன் யாழ் வாசித்தபோது தூரத்தில் ஒரு பெரிய யானை தன்னை நோக்கி வருவதைக் கண்டான். கண்டு அது தன்னுடைய யானை என்று கருதித் தன்னுடன் இருந்தவர்களைத் தூரத்தில் இருக்கச் சொல்லித் தான் மட்டும் யானையை நோக்கி யாழ் வாசித்துக் கொண்டே சென்றான். யானையும் அவனை நோக்கி அவன் பக்கமாக வந்துகொண்டிருந்தது. அருகில் வந்தவுடன் யானை நின்றது. அப்போது அதன் உடம்பிலிருந்து சில போர் வீரர்கள் வெளிப்பட்டு வந்து உதயணனைப் பிடித்துச் சிறைப்படுத்திக் கொண்டு போனார்கள். காட்டில் வந்த யானை உண்மையான யானையன்று. யானை போல செய்யப்பட்ட ஒரு பொய்யுருவம் அது. அது பொறிகளின் உதவியால் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பொய் யானையின் உடம்பில் புகுந்துகொண்டு அந்த வீரர்கள், யானை உதயணனுக்கு அருகில் வந்துவுடன் அதனுள்ளிருந்து வெளிப் பட்டு அவனைச் சிறைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அவந்தி நாட்டரசனான பிரச்சோதனன் இவ்வாறு சூது செய்து உதயணனைக் காட்டில் வஞ்சகமாகச் சிறை செய்து கொண்டு போனான். உதயணனுடன் நேரில் போர் செய்து வெற்றி பெற முடியாது என்று அறிந்து பிரச்சோதன அரசன் இவ்வாறு சூதாகச் சிறைப் பிடித்துக்கொண்டு போனான். சிறைப்பட்ட உதயணன் அவந்தி நாட்டின் தலைநகரமான உச்சயினி நகரத்தில் சிறைச் சாலையில் வைக்கப்பட்டான். உதயண அரசன் உச்சயினி நகரத்தின் சிறைச்சாலையில் இருந்தபோது, சில நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத நிகழ்ச்சி யொன்று ஏற்பட்டது. பிரச்சோதன அரசனுடைய பட்டத்து யானைக்கு வெறி பிடித்துக் கட்டுக்களை யறுத்துக் கொண்டு யானைப் பந்தியிலிருந்து வெளிப்பட்டு நகரத்தில் புகுந்து தெருக்களில் எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கொன்று நகர வீதிகளில் திரிந்தது. யானைப் பாகர்கள் வந்து அதை அடக்க முயன்றபோது அவர்களையும் அது கொன்றுவிட்டது. நகர மக்கள் வீதிகளில் நடமாட அஞ்சினார்கள். இந்தச் செய்தியை அரசன் அறிந்து இன்னசெய்வதென்று அறியாமல் திகைத்தான். அப்போது அமைச்சன் அரசனுக்கு யோசனை கூறினான். “நம்மிடம் சிறையில் இருக்கிற உதயணஅரசன் யானைகளை அடக்குவதில் பேர் பெற்றவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து அவனைக் கொண்டு யானையை அடக்க வேண்டும். அவனை யல்லாமல் வேறு ஒருவரும் இந்த மத யானையை அடக்க முடியாது.? அமைச்சர்கள் கூறிய யோசனையை அரசன் ஏற்றுக் கொண்டு, சிறைச்சாலையிலிருந்து உதயணனை விடுத்துத் தன்னிடம் அழைத்து வரும்படி கட்டளையிட்டான். உதயணன் சிறைச்சாலையிலிருந்து அரண்மனைக்கு வந்த போது பிரச்சோதன அரசன் அவனை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து அவனிடம் இவ்வாறு கூறினான்: “நான் உம்மைச் சூழ்ச்சியினால் சூதாகச் சிறைப்பிடித்து வந்தது தவறு. அந்தத் தவற்றை நான் உணர்ந்து வருத்தம் அடைகிறேன். நான் செய்த குற்றத்தைப் பொறுத்து அருள வேண்டும். தாங்கள் யானைகளை அடக்குவதில் தேர்ந்தவர் என்று அறிகிறேன். இப்போது நம்முடைய பட்டத்து யானை வெறிகொண்டு நகரத்தில் திரிகிறது. அதனை அடக்கியருள வேண்டும்.” இவ்வாறு பிரச்சோதன அரசன் கேட்டுக்கொண்டதற்கு உதயணன் இணங்கினான். உதயணன் யாழை எடுத்துக்கொண்டு யானை இருந்த இடத்துக்குப் போனான். வெறிகொண்ட யானையின்அருகில் அவன் போவதைக் கண்டவர் யானை இவனைக் கொன்றுவிடும் என்று எண்ணி அச்சமும் ஆச்சரியமும் அடைந்து என்ன ஆகுமோ என்று நினைத்துத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். உதயணன் தன்னுடைய யாழை இசைத்துக் கொண்டே யானையின் அருகில் சென்றான். இசையைக் கேட்ட யானை அவன் பக்கமாகத் திரும்பி நின்றது. பிறகு இசையைக் கேட்டுக்கொண்டே அசைவற்று இருந்தது. உதயணன் அதன் அருகில் சென்று சில மந்திர வசனங்களைக் கூறினான். பிறகு மீண்டும் யாழ் வாசித்துக் கொண்டிருந்தான். யாழிசையைக் கேட்டுக்கொண்டு நின்ற யானை வெறி நீங்கி இயற்கை நிலையை யடைந்தது. பிறகு அது முழுவதும் அவனுக்கு அடங்கி விட்டது. அவன் அப்போது அதன் மேல் ஏறி அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டே அதை யானைப் பந்திக்குச் செலுத்தினான். அதை யானைப் பந்தியில் விட்டுவிட்டுப் பிரச்சோதன அரசனிடம் வந்தான். உதயணன் வெறிகொண்ட யானையை அடக்கியதைக் கண்டு அரசனும் நகரப் பெருமக்களும் பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர். அரசன் உதயணனை ஆசனத்தில் அமர்த்தி நன்றி கூறினான். தன்னுடைய அரண்மனையிலே உதயணனைத் தங்கும் படிக் கேட்டுக்கொண்டான். அரசனுக்குரிய சிறப்புக்களுடனும் மரியாதையோடும் அவனை நடத்தினான். வாட்போர் விற்போர் முதலிய போர்க் கலைகளிலும் இசைக் கலைகளிலும் வல்லவன் என்பதை அறிந்து மன்னன் தன்னுடைய பிள்ளைகளாகிய அரச குமாரர்களுக்குப் போர்ப் பயிற்சி கற்பிக்குமாறும் தன்னுடைய மகளான வாசவதத்தைக்கு இசைக் கலையைக் கற்பிக்குமாறும் உதயணனைப் பணித்தான். அவனும் அதற்கு இணங்கி அவர்களுக்குக் கலைகளையும் வித்தைகளையும் கற்பித்து வந்தான். அரசகுமாரர்களும் அரசகுமாரத்தியும் உதயணனிடத்தில் முறையே போர்ப் பயிற்சிகளையும் இசைக் கலைகளையும் கற்றுவந்தனர். சில மாதங்களுக்குள் அவர்கள் வித்தைகளையும் கலை களையுங் கற்றுத் தேர்ச்சியடைந்தனர். அப்போது பிரச்சோதன அரசன் தன்னுடைய குமாரர்கள் கற்ற வித்தைகளை அரங்கேற்றச் சபை கூட்டினான். அமைச்சர்கள், சேனாதிபதிகள், போர்வீரர்கள், நகரப் பெருமக்கள் முதலியோர் இருந்த சபையிலே அரசகுமாரர்கள் தாங்கள் உதயணனிடமிருந்து கற்ற வித்தைகளைச் செய்து காட்டினார்கள். அவர்களின் திறமையைக் கண்டு எல்லோரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு அரசகுமாரி வாசவதத்தையின் இசைக்கலையை அரங்கேற்றுவதற்கு அரசன் சபை கூட்டினான். இசையாசிரியர், யாழ்வித்தகர் முதலியோரும் அமைச்சர்களும் பிரபுக்களும் நகரப் பெருமக்களும் அழைக்கப்பட்டனர். வாயிற் கூடத்தும் சேரிப் பாடலும் கோயில் நாடகக் குழுக்களும் வருகென யாழுங் குழலும் அரிச்சிறு பறையும் தாழ முழவும் தண்ணுமைக் கருவியும் இசைச் சுவை தரீஇ எழுபவும் ஏறிபவும் விசைத்தெறி பாண்டிலோடு வேண்டுவ பிறவும் கருவியமைந்த புரிவளை யாயமொடு பல்லவை இருந்த நல்லா சிரியர் அந்தர உலகத்து அமரர் கோமான் இந்திரன் மாண்நகர் இறைகொண் டாங்கு. அரங்க மண்டபம் வந்து சேர்ந்தார்கள். மண்டபத்தின் எதிரே இசையரங்கமேடை அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அரச குமாரி வாசவதத்தை தோழிப் பெண் களுடன் அரங்க மேடையில் வந்து அமர்ந்தாள். பிறகு செவிலித்தாய் சபைக்கு வணக்கங் கூறச் சொன்னபடி அவைப் பரிசாரமாக அவையை வணங்கினாள். பிறகு யாழ்க் கருவியை வாசித்தாள். இசை இலக்கணப் படி முறையாகவும் இனிமையாகவும் யாழ் வாசித்ததைக் கேட்டுச் சபையோர் மகிழ்ச்சியடைந்தார்கள். பின்னர் வாசவதத்தை இசை பாடினாள். ஐவகைக் கதியும் அற்றம் இன்றித் தெய்வ நல்யாழ் திருந்திழை தைவர மெய்பனிப் பதுபோல் மொய்யவை மருள நாற்பெரும் பண்ணும் எழுவகைப் பாலையும் மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ இயம்வெளிப் படுத்தபின் இசைவெளிப் படீஇய எரிமலர்ச் செவ்வாய் எயிறுவெளிப் படாமைத் திருமலர்த் தாமரைத் தேன்முரன் றதுபோல் பிறந்துழி யறியாப் பெற்றித் தாகிச் சிறந்திபம் பின்குரல் தெளிந்தவண் எழுவச் சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும் குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் மாத்திரை கடலா மரபிற் றாகிக் கொண்ட தானங் கண்டத்துப் பகாமைப் பனிவிசும்பு இயங்குநர் பாடோர்ந்து நிற்பக் கனிகொள் இன்னிசைக் கடவுள் வாழ்த்தித் தேவகீதமொடு தேசிகந் தொடர்ந்த வேக இன்னிசை விளங்கிழை பாட அரங்கத்திலிருந்தவர் கேட்டு இன்பமும் மகிழ்ச்சியும் அடைந்து இந்தப் பாடகி மானிடப் பெண்ணா தெய்வப் பெண்ணா என்று வியந்து புகழ்ந்தார்கள். பிரச்சோதன அரசன் தன்னுடைய மகளுக்கு இசைக் கலைக் கற்பித்த உதயணனுக்குப் பட்டாடைகளும் முத்து மாலைகளும் நவரத்தினங்களும் வழங்கி ஆசிரிய காணிக்கை செலுத்தி மகிழ்ந்தான். உதயணன் சிலகாலம் அங்குத் தங்கியிருந்து பிறகு தன்னுடைய இராச்சியத்துக்குப் போக விரும்பினான். பிரச் சோதன அரசனிடம் விடைபெற்றுத் தன்னுடைய நண்பனான வயந்தகனுடன் ஒரு யானை மேல் அமர்ந்து பயணந் தொடங்கினான். யானை மேல் அமர்ந்து தன்னுடைய யாழை வயந்தகனிடங் கொடுத்துவிட்டுத் தான் யானையைச் செலுத்தி நடத்தினான். நெருந்தூரஞ் செல்ல வேண்டி யிருந்தபடியால் யானையை மிக வேகமாகச் செலுத்தினான். யானை முல்லை நிலத்தைக் கடந்து பிறகு மலைகளுங் குன்றுகளும் காடுகளும் உள்ள குறிஞ்சி நிலத்தைக் கடந்துவிட்டது. பிறகு பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. பாலை நிலத்தில் பகல் வேளை யில் வெயில் கடுமையாகக் காய்ந்து அனல் வீசியபடியால், அந்த நிலத்தை இரவில் கடந்து செல்லக் கருதி அவ்வாறே இரவில் யானை மேல் ஏறிப் பயணஞ் செய்தார்கள். யானையும் காற்றைப் போல வேகமாகச் சென்றது. இடைவழியிலே மூங்கிற் புதர்களில் மூங்கில்கள் உயரமாக வளர்ந்திருந்தன. அதன் பக்கமாக யானை சென்றபோது, வயந்தகன் கையில் இருந்த உதயணனுடைய கோடபதி யாழ் மூங்கிலில் சிக்கிக் கொண்டது. யானை போகிற வேகத்தில், மூங்கிலில் சிக்கிக்கொண்ட யாழை எடுக்க முடியவில்லை. அப்போது வயந்தகன், “உதயண! உன்னுடைய யாழ் மூங்கிலில் சிக்கித் தொக்கிக் கொண்டது. அதை எடுக்கவேண்டும். யானையைச் சற்று நிறுத்து” என்று கூறினான். இதற்குள்ளாக யானை வெகுதூரம் வந்துவிட்டது. வேகமாகப் போகிற நிலையில், மிக அவசரமாய்ப் போக வேண்டியிருந்த நிலையில் அவன் யானையை நிறுத்தவில்லை. நலமிகு புகழோய்! நாலிரு நூற்றுவில் சென்றது கடிது இனிச் செய்திறன் இதன்மாட் டொன்று மில்லை உறுதி வேண்டின் தந்த தெய்வம் தானே தரும். என்று வயந்தகனுக்குக் கூறி உதயணன் யானையை வேகமாகச் செலுத்தினான். இவ்வாறு உதயணன் பிரயாணத்தின்போது தன்னுடைய கோடபதி யாழை இழந்து தன்னுடைய இராச்சி யத்துக்கு வந்து சேர்ந்தான். உதயணன் சிலகாலம் தன்னுடைய நகரத்தில் தங்கின பிறகு, மகதநாட்டு மன்னனுடன் நட்புக்கொள்ள விரும்பித் தன்னுடைய நண்பர்களுடனும் சேவர்களுடனும் புறப்பட்டுப் போனான். சில காரணங்களை முன்னிட்டு இவர்கள் தாங்கள் இன்னார் என்று தெரியாதபடி மாறுவேடம் பூண்டு சென்றார்கள். மகத நாட்டின் தலைநகரமான இராசகிரிய நகரத்தையடைந்தபோது சேவகர்கள், வெவ் வேறிடங்களிலும் உதயணனும் நண்பர்களும் வேறு இடங்களிலும் தங்கினார்கள். உதயணன் தன் நண்பர்களுடன் நகரக் கோட்டைக்கு வெளியே யிருந்த தாபதப்பள்ளியில் தங்கினான். அப்போது அவன் தன்னுடைய இயற்கை யுருவத்தை மறைத்து பிராமணன் போல மாறு வேடம் பூண்டிருந்தான். அவ்வமயம் காமகோட்டத்தில் காமதேவனுக்குத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. நகர மக்கள் காமகோட்டத்துக்கு வந்து காமதேவனை வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். நகரத்தில் கன்னிமாடத்தில் இருந்த பதுமாபதி என்பவள் தோழியரோடு பல்லக்கில் ஏறிவந்து காமதேவனை வழிபட்டாள். அவள் அவ்வூர் அரசனுடைய தங்கை. கோயிலுக்கு வந்த அவள், பிராமணன் வேடத்தோடு கோயிலுக்கு அருகில் இருந்த உதயணனைக் கண்டாள். அவனும் அவளைக் கண்டான். நாள் தோறும் கோட்டத்துக்கு வந்தபோதெல்லாம் பதுமாபதியும் உதயணனும் ஒருவரையொருவர் கண்டார்கள். அவர்களுக்குள் காதல் உணர்ச்சி ஏற்பட்டது. அடுத்த நாள் பதுமாபதி கோட்டத்துக்கு வந்து வணங்கி கன்னி மாடத்துக்குத் திரும்பியபோது அவளுடைய தோழி ஐராவதி, கன்னி மாடத்தில் பிராமணருக்குத் தானம் வழங்கப் போவதாக அங்கிருந்த பிராமணருக்குத் தெரிவித்தாள். அப்போது பிராமணன் வேடத்தி லிருந்த உதயணன் ஐராவதியைத் தொடர்ந்து சென்று அவளுடைய யஜமானியின் பெயர், அவள் இருக்கும் இடம், தானங்கொடுக்கப்படுகிற இடம் முதலியவை களைக் கேட்டான். இந்தப் பார்ப்பான் தானம் பெறுவதற்காக வருகிறான் என்று எண்ணி ஐராவதி தன் தலைவியின் பெயர், அவள் இருக்கும் கன்னிமாடத்தின் முகவரி முதலியவைகளை அவனுக்குக் கூறினாள். உதயணன் விபரந் தெரிந்துகொண்டு கன்னிமாடத்துக்குச் சென்றான். கன்னிமாடத்தில் பதுமாபதி அவனைக் கண்டு அவனுடைய ஊர், பெயர், வந்த காரணம் முதலியவற்றைக் கேட்டாள். மாறுவேடங் கொண்டிருந்த உதயணன் தன்னுடைய உண்மை நிலையை மறைத்துக் கூறவேண்டியவனானான். “காந்தார நாட்டு இரத்தினபுரம் என்னுடைய ஊர். அவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்த சாண்டியன் என்பவர் என்னுடைய தந்தை. என் பெயர் மாணகன். இங்கு இந்த நகரத்தைப் பார்க்க வந்தேன்” என்று அவன் அவளுக்குக் கூறினான். பதுமாபதி இவனுடைய வார்த்தையை நம்பவில்லை. பிராமண வேடத்துடன் காணப்பட்டாலும், உண்மையில் இவன் அரசகுலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று இவனுடைய தோற்றத்தைக் கொண்டு அவள் தனக்குள் எண்ணினாள். இவன் ஏதோ காரணத்துக்காகத் தன்னுடைய உண்மை நிலையை மறைத்துக் கூறுகிறான் என்று அவள் கருதினாள். பிறகு உள்ளே சென்று தன்னுடைய தோழி ஐராவதியிடம் இவனுடைய உண்மை நிலையைச் சோதித்து அறியவேண்டும் என்று இரகசியமாகக் கூறினாள். ஐராவதி உதயணனிடம் வந்து நயமாகப் பேசி, “உமக்கு என்னென்ன வித்தைகள் தெரியும்” என்று கேட்டாள். வேஷத்துக்குத் தகுந்தபடி பேசவேண்டும் என்று அவன் விழிப்பாக விடை கூறினான். “பிராமணர் வேள்வி செய்வதைத் தவிர வேறு வித்தைகளைக் கற்பதில்லை. நான் வேள்வி செய்யக் கற்றிருக்கிறேன். சில சமயங் களில் என்னுடைய மனைவி என் மேல் கோபங்கொண்டு சமையல் செய்யாமல் சண்டித்தனம் செய்வாள். அப்போது நானே பானைகளை எடுத்துச் சமையல் செய்வேன். சமையல் செய்யும்போது பானையைக் குடமுழாவாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன்” என்று கூறினான். இதைக் கேட்ட ஐராவதி நகைத்தாள். அப்போது பதுமாபதி யாழைக் கொண்டுவரும்படி ஐராவதியிடங் கூற அவள் அதைக் கொண்டு வந்து கொடுத்தாள் பதுமாபதி அதனைக் கையில் வாங்கி திவவைத் தளர்த்த ஆணி களை திருப்பினாள். திவவு மிக அழுத்தமாக இருந்தபடியால் அதைத் தளர்த்திக் கொடுக்கும்படி பிராமணனிடந் தரும்படி அவள் தன் தோழிக்குக் குறிப்புக் காட்டினாள். ஐராவதி அதை வாங்கிப் பிராமணனிடங் கொடுத்தாள். அவன் “யாழ் வாசிக்க எனக்குத் தெரியாது. கற்றுத் தந்தால் கற்றுக் கொள்வேன்” என்று கூறினான். “நீர் யாழ் வாசிக்க வேண்டாம். திவவுகளைத் தளர்த்தித் தரவேண்டும்” என்று அவள் கூற, அவன் அதனைக் கையில் வாங்கி திவவைத் தளர்த்தி நரம்புகளை நிறுத்திப் பண் அமைக்க விரலினால் வருடினான். நரம்புகள் சரியாக அமைந்து நன்றாக இசைத்தன. உடனே அவன் அதை மாற்றிப் பகை நரம்பை வைத்தான். இவன் யாழைக் கையினால் வாங்கின விதமும் திவவு களைத் தளர்த்திய விதமும் நரம்புகளை விரலினால் தெரித்துப் பார்த்த விதமும் பிறகு வேண்டுமென்றே தவறாக நரம்புகளை அமைத்த விதமும் ஆகிய இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பதுமாவதி இவன் யாழ்க் கலையில் வல்லவன் என்பதை அறிந்தாள். இவனைப் பற்றின உண்மை நிலையை மேலும் சோதித்துத் தெரிந்து கொள்ள வேண்டு மென்று அவள் தோழியிடம் மறைவாகக் கூறினாள். கொண்ட வாறும் அவன்கண்ட கருத்தும் பற்றிய வுடனவன் எற்றிய வாறும் அறியா தான்போல் மெல்ல மற்றதன் உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும் செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும் மாழை நோக்கி மனத்தே மதித்தவன் அகத்தை யெல்லாம் முகத்தினி துணர்ந்து புறத்தோன் அண்மை திறப்படத் தெளிந்து தாழிருங் கூந்தல் தோழியைச் சேர்ந்து ‘இவன் யாழறி வித்தகன் அறிந்தருள்’ என்றலின் தோழி இவனை மேலும் சோதிக்கத் தொடங்கினாள். யாழை வாசித்து ஒரு பண் பாடவேண்டும் என்று அவள் அவனை வேண்டிக்கொண்டாள். இவன், ‘நாம் யாழ் வித்தையை அறிந்துள்ளோம் என்பதை இவள் எப்படியோ தெரிந்து கொண்டாள். இவள் நுண்ணறிவினாள்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். ஆனாலும், “நான் யாழ் வித்தையில் வல்லவன் அல்லன்” என்று கூறினான். “மிக்க அறிஞராகிய உமக்கு இந்தவித்தை தெரியாம லிருக்காது அன்பு கூர்ந்து யாழை இசைத்து ஒரு பண் பாடியருள்க” என்று ஐராவதி அவனை இரந்து வேண்டினாள். பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம் பாடல் வேண்டுமென்று ஆடமைத் தோளி மறுத்துங் குறைகொள. மறத்தகை மார்பன் ‘என்கட் கிடந்த எல்லாம் மற்றிவள் தன்கண் மதியில் தான்தெரிந் துணர்ந்தனள் பெரிதிவட் கறிவு’ எனத் தெருமந் திருந்து ‘இது வல்லுநன் அல்லேன் நல்லோய்! நான்’ என ‘ஒருமனத் தன்ன ஒற்றார்த் தேற்றா அருவினை இல்லென அறிந்தோர் கூறிய பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலோடு இன்ப மயக்கம் எய்திய எம்மாட்டு அன்பு துணையாக யாதொன் றாயினும் மறாஅது அருள்’ என ஐராவதி அவனைக் கேட்டுக் கொண்டாள். அதற்கு இவன் இணங்கினான். தன்னுடைய கோடபதி யாழ் பிரிந்து போன பிறகு வேறு யாழை வாசிக்காமலும் இசை பாடாமலும் இருந்த இவன் இப்போது யாழ் வாசித்து இசை பாடினான். அந்த இசையமுதம் அங்கிருந்த புறா, கிளி முதலியவை களின் மனத்தையுங் கவர்ந்தது. ஆறாக் காதலில் பேரிசை கனியக் குரலோர்த்துத் தொடுத்த குருசில் தழீஇ இசையோர் தேய இயக்கமும் பாட்டும் நசைவித்தாக வேண்டுதிர் நயக்கெனத் குன்றா வனப்பில் கோட பதியினை அன்றாண்டு நினைத் தஃது அகன்ற பின்னர் நலத்தகு பேரியாழ் நரம்பு தொட்டறியா இலக்கணச் செவ்விரல் ஏற்றியும் இழித்தும் தலைக்கண் தாழ்வும் இடைக்கண் நெகிழ்ச்சியும் கடைக்கண் முடுக்கும் கலந்த காணமும் மிடறும் நரம்பும் இடைதெரி வின்றி பறவை நிழலிற் பிறர்பழித் தீயாச் செவிச்சுவை அமிர்தம் இசைத்தலின் மயங்கி மாடக் கொடுமுடி மழலையம் புறவும் ஆடமை பயிரும் அன்னமுங் கிளியும் பிறவும் இன்னன பறவையும் பறவா ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோர கேட்டு மகிழ்ந்தனர். அப்போது அவர்கள், “உண்மை யறியாமல் உம்மை இசை யறியா மூடன் என்று கருதினோம். உம்மிடம் நாங்கள் இசை பயில விரும்புகிறோம். நாங்கள் உம்முடைய மாணாக்கியர். எமக்கு யாழ் வித்தையைக் கற்பிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். உதயணனும் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினான். பலவிதமாக அமைந்த யாழ்களை உதயணன் அவர்களுக்குக் காட்டி இந்திந்த யாழ்களில் இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் கூறினான். ஒரு யாழை எடுத்துக்காட்டி “இது பட்டுப் போய் உளுத்துப்போன மரத்தினால் செய்யப்பட்டது. ஆகையால் இது வாசிக்க உதவாது” என்று விளக்கினான். இன்னொரு யாழை எடுத்து “இது நல்ல மரத்தினால் செய்யப்பட்ட செம்மையான யாழ்; ஆனால், இதன் நரம்புகள் நன்றாக உலர்வதற்கு முன்பே இணைக்கப்பட்ட படியால் இதன் நரம்புகள் அதிகமாக முறுக்கேறிக் கொண்டன. ஆகையால் இது வாசிக்க உதவாது; வேறு நரம்புகளைக் கொடுங்கள்” என்று கேட்டு வேறு நரம்புகளைப் பெற்றான். அந்த நரம்புகளிலும் சில குற்றங்கள் இருப்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினான். ‘இந்த நரம்பின் முறுக்கினுள் மணல் சேர்ந்துள்ளது. இது உதவாது. இந்த நரம்பிலும் மயில் சேர்ந்து முறுக்குண்டிருக்கிறது. இதுவும் உதவாது’ என்று நரம்புகளின் குற்றங்களை அவர்களுக்கு விளக்கிக் காட்டினான். பிறகு நல்ல செம்மையான நரம்புகளை எடுத்து விசித்துத் திவவுகளில் கட்டியமைத்துக் காட்டினான். பிறகு யாழ் வாசிக்கும் முறைகளையும் அவர்களுக்குக் கற்பித்தான். அப்போது அந்நாட்டரசனாகிய தருசகன், தன்னுடைய தந்தை பெரியந்திக் குவியலைப் புதைத்து வைத்த இடம் அறியாமல் அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயன்றும் அந்தப் புதையல் இருக்குமிடம் அவனுக்குத் தெரிய வில்லை. இந்தச் செய்தியறிந்த உதயணன் தருசக அரசனிடம் சென்று தான் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி, அது இருக்குமிடத்தைக் கண்டு எடுத்துக் கொடுத்தான். அதனால் தருசகன் இவனிடம் நண்பனானான். உதயணன் அந்நாட்டின் பூமியினுள் மறைந்து கிடக்கும் நீர்நிலைகளை யும் மன்னனுக்குக் காட்டினான். மன்னன் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்து அங்கு நீர்த்தேக்கம் இருப்பதைக் கண்டு நீர்நிலைகளை யுண்டாக்கி நாட்டின் விவசாயத்தை வளப்படுத்தினான். பிறகு தருசக மன்னன், இவன் வத்தவ நாட்டரசனான உதயணன் என்பதை அறிந்து மகிழ்ந்தான். கன்னிமாடத்திலிருந்து பதுமா பதியும் பிராமணன் வேடத்துடன் இருந்தவன் உண்மையில் வத்தவ நாட்டரசன் உதயணனே என்பதையறிந்தாள். பிறகு தருசகன் தன் தங்கையான பதுமாபதியை உதயணனுக்குத் திருமணம் செய்து வைத்தான். உதயணன் பதுமாபதியை அழைத்துக் கொண்டு தன் இராச்சியத் துக்குப் போய் அரசாண்டு கொண்டிருந் தான். அவன் முன்னமே வாசவ தத்தையைத் திருமணஞ் செய்திருந்த படியால், வாசவதத்தையும் பதுமாபதியும் அரண்மனையில் உதய'99னுடன் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அரண்மனைக்கு எதிர்ப்பக்கத்தில் யாரோ யாழ் வாசிக்கின்ற இசையொலியை உதயணன் கேட்டான். அந்த யாழிசையை ஓர்ந்து கேட்டபோது அது முன்பு தன்னிடமிருந்து மறைந்து போன கோடபதி யாழின் இசைபோல இருந்ததை யறிந்து வியப்படைந்தான். அதிசயமடைந்த அவன் தன்னுடைய அமைச்சனும் நண்பனுமான வயந்தகனை அழைத்து இச் செய்தியை அவனிடங் கூறினான். வயந்தகன் அந்த வீட்டுக்குச் சென்று அங்கு வாசித்துக் கொண்டிருந்த இசையாசிரியனைக் கண்டு அவனை யாழுடன் அரண் மனைக்கு அழைத்து வந்தான். உதயணன் அந்த யாழைக் கண்டதும், தான் முன்பு யானைமேல் யாத்திரை செய்தபோது வழியில் மூங்கில் புதரில் சிக்கிக்கொண்ட அது தன்னுடைய பழைய கோடபதி யாழ் என்பதை அறிந்து மிகவும் வியப்படைந்து “இந்த யாழ் உம்மிடம் எப்படி வந்தது” என்று வினவினான் அதற்கு அந்த இசைப் புலவன் கூறினான்: “நான் உச்சயினி நகரத்தில் இருப்பவன், இசை பாடுவதும் யாழ் வாசிப்பதும் என்னுடைய குலத்தொழில். என்னுடைய உறவினர் இந்தக் கேசம்பி நாட்டில் வாழ்கிறபடியால் அவர்களைக் காண்பதற்காக இங்கு வந்தேன். வருகிற வழியில் பெரியபெரிய காட்டைக் கடந்து வர வேண்டியிருந்தது. அந்தக் காட்டில் யானைகள் கூட்டமாக நீர் அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டு அஞ்சி அந்த யானைகள் போகும் வரையில் ஒரு மரத்தின் மேல் ஏறி மறைந்திருந்தேன். யானைகள் நீரைக் குடித்துவிட்டுப் போய்விட்டன. பிறகு நான் மரத்தை விட்டு இறங்கும்போது பக்கத்திலிருந்த மூங்கில் புதரில் இந்த யாழ் சிக்கித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கண்டு இதை எடுத்துக்கொண்டு வந்து அறுந்துபோன நரம்புகளைச் செப்பஞ் செய்து இதை வாசித்தேன். இதிலிருந்து இனிமையான நாதம் வருவதைக் கண்டு மனமகிழ்ந்தேன்” இவ்வாறு இசைவாணன் தான் யாழைக் கண்டெடுத்த வரலாற்றைக் கூறினான். உதயணன் தன்னுடைய கோடபதி யாழை மீண்டும் கண்டது பற்றிப் பெரு மகிழ்ச்சியடைந்தான். “நீர் உம்முடைய ஊருக்கு போக வேண்டியதில்லை. இங்கே வாழலாம். உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நான் அமைத்துத் தருகிறேன்” என்று இசைவாணனுக்குக் கூறி அவனுக்கு வீடும் மனையும்அமைத்துக் கொடுத்து அவன் மன மகிழும்படி பொன்னையும் பொருளையும் வழங்கினான். அவனிட மிருந்து தன்னுடைய கோடபதி யாழை வாங்கி அதற்குத் தங்கப் பூண் கட்டி அழகுற அமைத்து அதை முன்போல் நாள்தோறும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். மீண்டும் யாழ் கிடைத்தது தனக்குப் பெரும் பேறாகக் கருதினான். நாள்தோறும் அரண்மனையில் கோடபதி யாழோசை இனிமை யாக இசைத்துக்கொண்டிருந்தது. 13. வாசுதேவ குமரனின் இசை வெற்றி சம்பாபுர நகரத்தை நோக்கிப் புதியவனொருவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய பெயர் வாசுதேவ குமரன். வாசுதேவன் ஒரு மன்னனுடைய மகன். அவன் தன்னுடைய தந்தையாகிய மன்னனிடத்தில் மனவருத்தங் கொண்டு அரண் மனையைவிட்டு வெளிப்பட்டு அயல் நாடுகளில் சாதாரண ஆளைப்போல வேடம் பூண்டு திரிந்துகொண்டிருந்தான். அவனை அரசகுமாரன் என்று ஒருவரும் கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சம்பாபுர நகரத்தை நெருங்கியவுடன் ஆற்றங்கரைமேல் ஒரு ஆலமர நிழலில் அமர்ந் திருந்த நகரவாசியைக் கண்டு அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தான். அமர்ந்து நகரவாசியுடன் வார்த்தையாடினான். அவன் தன்னுடைய உண்மை வரலாற்றைக் கூறாமல் தன்னை ஒரு வணிகன் என்று கூறிக்கொண்டான். அவர்கள் இருவரும் சம்பாபுரத்துச் செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். நகரவாசி நகரச் செய்தியைக் கூறினான். சம்பாபுர நகரத்து அரசனுக்கு ஆண்பேறு இல்லை. ஒரே ஒரு மகள்தான் இருக்கிறாள். அவள் இசைப்பாட்டுப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவள். கந்தருவ (இசை) வித்தையைக் கற்றவளான படியால் அவளுக்குக் காந்தருவதத்தை என்றும் பெயர் கூறப்படுகிறது. அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. யார் ஒருவன் வீணை வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் அவளை வெல்கிறானோ அவனை அவள் மணஞ் செய்துகொள்ள இருக்கிறாள். அதற்காக அரசன் இசை யரங்கு நடத்த ஒரு நாளைக் குறிப்பிட்டிருக்கிறான். இசைப்போட்டியில் வென்று அவளைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அரச குமரர் களும் பிரபுக்களின் குமாரர்களும் இசை பாடவும் வீணை வாசிக்கவும் பயின்று வருகிறார்கள். நகரத்தில் பேர்போன இசைக்கலை யாசிரியரான மனோகரன் என்பவரிடத்தில் அவர்கள் இசைக்கலையைக் கற்று வருகிறார்கள். இசைப் போட்டிக்கு இன்னுஞ் சில நாட்களே உள்ளன. இந்தச் செய்திகளை யெல்லாம் நகரவாசியிடமிருந்து வாசுதேவகுமரன் அறிந்து கொண்டான். வசுதேவன் இசைக் கலையில் வல்லவன். இசை பாடவும் யாழ் வாசிக்கவும் நன்றாகப் பயின்றிருந்தான். நகரத்தில் நடக்க இருக்கும் இசைப்போட்டியில் கலந்துகொண்டு இசையில் வென்று அரச குமாரியைத் திருமணஞ் செய்துகொள்ள அவன் எண்ணினான். அவன் நகரவாசியிடம் விடை பெற்றுக்கொண்டு நகரத்துக்குள்ளே வந்தான். இசைப்போட்டியில் இடம் பெறுவதற்கு இசையாசிரியரின் பரிந்துரை வேண்டுமல்லவா? ஆகவே அவன் மனோகர இசையாசிரியரிடஞ் சென்றான். இசையாசிரியர் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து அவன் அவருடைய இல்லத்தை அடைந்தான். இசையாசிரியர் மனோகரிடத்தில் பல மாணவர் இசை பயின்று கொண்டிருந்தார்கள். வாசுதேவன் அவரிடஞ் சென்று வணங்கித் தனக்கு இசைப் பயிற்சி தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டான். இசையாசிரியர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து, தகுந்த இசை மாணாக்கன் என்றறிந்து அவனைத் தன்னுடைய மாணவனாக ஏற்றுக் கொண்டார். மற்ற மாணவர்களுடன் இவனுக்கும் இசை கற்பித்துக் கொண்டிருந்தார். இசைக் கலையில் தேர்ந்தவனான வாசுதேவன் தன்னுடைய இசைக்கலைத் திறமையை மற்ற மாணவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வந்தான். மறைத்தது மட்டுமல்லாமல் தன்னை இசை யறியாத மூடன் என்று அவர்கள் கருதும்படியும் நடந்து கொண்டான். வீணை வாசிக்கும்போது நரம்பைப் பிய்த்து விடுவான். வீணையின் தண்டை உடைப்பான். பத்தரைப் பொத்தல் செய்வான். இவனுடைய போக்கைக் கண்ட மற்ற இசை மாணாக்கர் இவனை முழு முட்டாள் என்று கருதி ஏளனஞ் செய்து நகையாடினார்கள் ‘வாசுதேவன்தான் இசையை வென்று காந்தருவதத்தையைத் திருமணஞ் செய்யப் போகிறான்’ என்று புகழ்வது போலப் பழித்தார்கள். ஆனால், இசையாசிரியருக்கு மட்டும் இவனுடைய இசைப் புலமை நன்றாகத் தெரிந்திருந்தது. அவர் இவனிடத்தில் நன்மதிப்புக் கொண்டிருந்தார். நாட்கள் கடந்தன. இசைப்போட்டிக்குரிய நாள் வந்தது. அரண் மனையில் அலங்காரஞ் செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் இசைப் போட்டிக்காரர் எல்லோரும் வந்து அமர்ந்திருந்தார்கள் அவர்களோடு வாசுதேவ குமாரனும் அமர்ந்திருந்தான். நகரப் பெருமக்களும் இசைப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். அமைச்சர்களும் வந்திருந்தார் கள். அரசனும் பரிவாரங்களுடன் வந்து ஆசனத்தில் அமர்ந்தான். அரச குமாரி காந்தருவதத்தை தோழிமாருடன் வந்து அரங்க மேடையில் அமர்ந்தாள். முதலில் சபை மரியாதைக்காக அவள் யாழ் வாசித்து இசைபாடினாள். பிறகு இசைப்போட்டி தொடங்கியது. வெற்றி தோல்வி களைக் கூறுவதற்கு நடுவர்களாகச் சில இசையாசிரியர்கள் சபையில் இருந்தார்கள். போட்டிக்கு வந்தவர் ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வந்து இசை பாடியும் யாழ் வாசித்துஞ் சென்றார்கள். நன்றாக இசை பாடினவர் யாழ் வாசிக்கத் தவறிவிட்டார்கள். நன்றாக யாழ் வாசித்தவர் செம்மையாக இசைபாடவில்லை. பாட்டைப் பாடி யாழ் வாசித்தவர்களிடத்திலும் சில குறைகள் காணப்பட்டன. ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒரு குறை காணப்பட்டது. வெற்றி பெற வேண்டிய முறைப்படி யாரும் இசை பாடவும் இல்லை; யாழ்வாசிக்கவும் இல்லை. இசையில் வல்லவர்கள் என்று தங்களை உயர்வாக மதித்துக் கொண்டிருந்தவர் வெற்றி பெறாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். போட்டிக்குப் பலபேர் வந்திருந்த படியால் இன்னும் போட்டி முடிவுபெற நெடுநேரம் ஆயிற்று. இத்தனை பேரில் ஒருவரேனும் வெற்றி பெறாத படியால் காந்தருவதத்தைக்குத் திருமணம் நடைபெறாது போலிக்கிறதே என்று அரசன் கவலை யடைந்தான். அமைச்சர்களும் அவ்வாறே கருதினார்கள். இறுதி வரையில் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்த வாசுதேவ குமாரன் கடைசியாக மேடைக்கு வந்தான். இவனாவது வெற்றி பெறுவானா, பார்ப்போம் என்று சபையிலிருந்தவர் எண்ணினார்கள். சபையில் அமைதி ஏற்பட்டது. எல்லோரும் மேடையை நோக்கினார் கள். இவனோடு இசை பயின்று போட்டியில் தோற்றுப் போனவர்கள் இவன் மேடைக்கு வந்ததைக் கண்டு பரிகாசம் செய்தார்கள். ‘யாரும் சாதிக்க முடியாததை இவன் சாதிக்க வந்துவிட்டான்’ என்று இகழ்ந்து பேசினார்கள். இவனுடைய ‘முட்டாள் தனத்தை’ அவர்கள் முன்னமே அறிந்திருக்கிறார்கள் அல்லவா? தோழிப் பெண் ஒருத்தி ஒரு வீணையைக் கொண்டுவந்து வாசு தேவனிடங் கொடுத்தாள். அவன் அதைக் கைகளில் வாங்கித் தண்டையும் பத்தரையும் தட்டிப் பார்த்தான். நரம்பு களைத் தெரித்துப் பார்த்தான். பிறகு, இது வேண்டாம் வேறு வீணை கொடு என்று கேட்டான். தோழி வேறு வீணையைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதையும் அவன் சோதித்துப் பார்த்து இதுவும் வேண்டாம், வேறு வீணை கொண்டு வரும்படி கூறினான். அதையும் சோதித்துப் பார்த்து; இதுவும் வேண்டாம் வேறொரு நல்ல வீணை கொண்டுவா என்று சொன்னான். இன்னொரு வீணை கொடுக்கப்பட்டது. அதை வாங்கிச் சோதித்துப் பார்த்து, “இது நல்ல வீணைதான். ஆனாலும் இதைவிட வேறு நல்ல வீணையைக் கொடு” என்று கேட்டான். “ஏன்? இதில் என்ன குற்றம் இருக்கிறது?” என்று கேட்டாள் தோழிப் பெண். “இது குற்றம் இல்லாத நல்ல வீணைதான். இதைவிட நல்ல வீணை அரண்மனையில் இருக்கிறது. அதைக் கொண்டு வந்தால் வாசிக்கலாம்” என்று கூறினான் வாசுதேவகுமரன். “அது எந்த வீணை?” என்றுகேட்டார் அரண்மனை இசையாசிரியர். வாசுதேவன் கூறினான்: “ஆதிகாலத்தில் உலகத்திலே நான்கு தெய்வவீணைகள் இருந்தன. அவற்றின் பெயர் கோஷணை யாழ், சுகோஷணை யாழ், மகாகோஷணை யாழ், கோஷவதி யாழ் என்பன. அந்த நான்கு யாழ்களில் இப்போது இரண்டு யாழ்கள் உலகத்தில் இல்லை; அவை மறைந்து தெய்வலோகத் துக்குப் போய்விட்டன. இப்போது உலகத்தில் இருப்பவை மகாகோஷனை யாழும், கோஷவதி யாழுந்தான். இவ்விரண்டு யாழ்களில் கோஷவதி யாழ் பரம்பரை பரம்பரையாக இந்த அரண்மனையில் இருந்து வருகிறது. அந்த யாழை இங்கு அழைப் பித்தால் அதை வாசிக்கலாம்.” இதைக் கேட்டபோது சபையிலிருந்தவர் வியப்படைந்தனர். ‘இப்படியொரு யாழ் இருக்கிறதா? இது வரையில் இந்தச் செய்தி ஒருவருக்குந் தெரியவில்லையே’ என்று கூறி அவர்கள் அதிசயப் பட்டார்கள். ‘இவனுக்கு இந்த யாழைப் பற்றின விஷயம் எப்படித் தெரிந்தது,’ என்று மன்னனும் ஆச்சரியப் பட்டான். ‘இவன் இசைக் கலையையும் இசை மரபையும் அறிந்தவன் போலத் தெரிகிறான். இவன் இப்போட்டியில் வெற்றியடைவான்’ என்று சபையோர் கருதினார்கள். அமைச்சரும் இசைப் பேராசிரியர்களும் அரசனை நோக்கினார்கள். அரண்மனையில் உள்ள கோஷவதி யாழைக் கொண்டு வரும்படி மன்னன் சேவர்களுக்குக் கட்டளையிட்டான். அரண்மனையிலிருந்து கோஷவதி யாழ் சபைக்குக் கொண்டு வரப்பட்டது. எல்லோரும் அதை வியப்புடன் நோக்கினார்கள். வாசுதேவன் அந்த யாழைக் கைதொழுது வாங்கினான். வாங்கி அதை இசை மீட்டினான். பிறகு பாடத் தொடங்கினான். அவனுடைய இசைப் பாட்டும் யாழிசையும் ஒத்திருந்தன. எவ்விதக் குற்றமும் இல்லாமல் அவன் இசை பாடினான். அந்த இசைப் பண் தேவகானம் போல இசைத்தது. மண்டபம் முழுவதும் இன்னிசை பரவிற்று அமைதியாக இருந்த மண்டபத்தில் அந்த இசை சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்ததுபோல இருந்தது. இசைக்கலையில் வல்லவளான காந்தருவதத்தை அந்தத் தேவகானத்தைக் கேட்டு மகிழ்ந்தாள். மன்னனும் மந்திரியும் இசைக் கலைஞரும் மகிழ்ச்சியடைந் தார்கள். இவ்வித இன்னிசையை இதுவரையில் கேட்டதில்லை என்று கூறிச் சபையோர் பெரு மகிழ்ச்சியடைந் தார்கள். இசை பாடி முடிந்தவுடன் மண்டபத்திலிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் வானளாவ ஒலித்தது. வாசுதேவ குமரன் இசையில் வென்றான். மணமாலை இருந்த தங்கத் தட்டைத் தோழிப் பெண் காந்தருவ தத்தையிடம் நீட்டினாள். அரசகுமாரி மண மாலையைக் கைகளால் எடுத்து வாசுதேவகுமாரனுடைய கழுத்தில் சூட்டினாள். திரைச்சீலை இறங்கிவந்து மேடையிலிருந் தவர்களை மறைத்துவிட்டது. பிறகு, காந்தருவதத்தைக்கும் வாசுதேவ குமரனுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. 14. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தில் கலைச் செல்வி செல்வமும் நாகரிகமும் செழித்திருந்த காவிரிப்பூம் பட்டினத் திலே கணிகையர் குலத்திலே பிறந்த சித்திராபதி என்பவள் இசை நடனக் கலைகளைக் கற்றுத் தேர்ந்து சிறப்பாக வாழ்ந்து வந்தாள். அவள் தன் மதிப்புள்ளவள். தன்னுடைய குலத்தைப் பற்றியும் தன்னுடைய கலைகளைப் பற்றியும் பெருமையாகப் பேசிக் கொள்வாள். முன் ஒரு காலத்திலே தேவலோகத்திலே இந்திர சபையிலே மாதவி என்னும் நாடக மடந்தை இருந்தாளாம். ஒரு சமயம் அவள் இந்திர சபையில் நடனம் ஆடினபோது அங்கிருந்த சயந்தகுமரன் மேல் காதல் கொண்டு நடனத்தை முறைப்படி ஆடாமல் தவறாக ஆடினாளாம். அதனால் அவள் மேல் சினங் கொண்ட நாடக ஆசிரியராகிய நாரதர் அவளை மண்ணுலகத்தில் பிறக்கும்படி சாபங் கொடுத் தாராம். அந்தச் சாபத்தின் காரணமாக மாதவி காவிரிப் பூம்பட்டினத் திலே மனிதப்பெண்ணாகப் பிறந்து இசைக்கலை நாடகக் கலைகளைப் பயின்று வாழ்ந்தாளாம். அவளுடைய மரபிலே பிறந்த கணிகையர் பலர் பரம்பரை பரம்பரையாக இசை நாடகக் கலைகளைக் கற்றுப் பேரும் புகழும் பெற்று வாழ்ந்தார்களாம். அந்தப் பேர்பெற்ற பரம்பரையில் வந்தவள் தான் சித்திராபதியாகிய நான் என்று அவள் தன் பரம்பரை வரலாற்றைக் கூறிப் பெருமிதமடைந்தாள். இளமையில் நடனமாடியும் இசைபாடியும் கலை நிகழ்ச்சி களைச் செய்து வந்த சித்திராபதி இப்போது வயது முதிர்ந்தவளாகையால் அரங்கத்தில் ஏறி ஆடுவதில்லை. இப்போது அவளுடைய தொழில் தோரிய மடந்தைத் தொழில். அதாவது நாடக அரங்கத்தில் நாட்டியம் ஆடுகிறவர்களுக்குப் பின் பாட்டுப் பாடுவது. சித்திராபதிக்கு ஒரு பெண் மகள் இருந்தாள். அவளுடைய பெயர் மாதவி. சித்திராபதி தன் மகள் மாதவிக்கு ஆடற், பாடற் கலைகளைக் கற்பித்தாள். ஐந்து வயது தொடங்கிப் பன்னிரண்டு வயது வரையில் ஏழு ஆண்டுகளாக மாதவி இசைக் கலை, நாட்டியக் கலைகளைப் பயின்று தேர்ச்சியடைந்தாள். இசை நாடகங்கள் அவளுடைய குல வித்தையாகையால் மாதவி ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து பன்னிரண்டு வயதையடைந்தாள். அப்போது சித்திராபதி, மாதவியை சோழ அரச சபையில் அரங்கேற்றஞ் செய்ய ஏற்பாடு செய்தாள். அதன்படி, சோழன் கரிகால் பெருவளத்தரசனுடைய சபையிலே கலை வல்லவர் முன்னிலையிலே மாதவி அரங்கேறி ஆடல், பாடல், அழகு இவற்றில் தன் திறமையைக் காட்டினாள். அவையில் இருந்தவர் இவளுடைய கலைத் திறமையை மெச்சிப் புகழ்ந்தார்கள். சோழ மன்னன் கரிகால் வளவன் மாதவிக்குத் ‘தலைக்கோலி’ என்னும் பட்டத்தைக் கொடுத்து, அதற்கு அடையாளமாகத் தலைக் கோலைக் கொடுத்தான். தலைக்கோல் என்பது கெட்டியான மூங்கிற் கழியின் இரு தலையிலும் தங்கப் பூண் கட்டி இடையிடையே பொன் கட்டு இட்டு நவரத்தினங்களை இழைத்து அமைக்கப்பட்ட கோல். அந்தக் காலத்தில் இசைக் கலையில் தேர்ந்தவர்களுக்குத் தலைக் கோல் பட்டமும் தலைக்கோலும் கொடுப்பது வழக்கம். கரிகாற் சோழன் மாதவிக்குத் தலைக்கோலை யளித்துத் ‘தலைக்கோலி’ பட்டத்தை வழங்கினதுமல்லாமல் தலைவரிசையாக ஆயிரத் தெட்டுக் கழஞ்சு பொன்னால் அமைத்த தங்கமாலையையும் அவளுக்குப் பரிசாக அளித்தான். அரசனிடத்திலே பட்டமும் பரிசும் பெற்ற மாதவி கலைஞர்களால் நன்கு மதிக்கப்பட்டாள். அந்தக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சீமானாக இருந்தவன் இளைஞனாகிய கோவலன். கோவலன் செல்வச் சீமான் மட்டுமல்லன்; அவன் இசைக் கலையையும் பயின்றவன். யாழ் வாசிப்பதிலும் இதைப் பாடுவதிலும் வல்லவன், கலை ரசிகன். அவன் மாதவியின் அழகு ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவளைத் தன்னுடைய காமக்கிழத்தியாகக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டுதோறும் இந்திர விழா நடந்தது. ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாள் தொடர்ந்து நடந்த இந்திர விழாவைச் சோழ மன்னன் அரசாங்கச் செலவில் சிறப்பாக நடத்தினான். விழாக் காலத்தில் மாதவியின் ஆடல் பாடல்கள் முக்கிய இடம் பெற்றன. நாடக அரங்கத்தில் யாழ் வாசித்தல், இசை பாடுதல், நடன நாட்டியங்களை ஆடுதல் முதலிய நிகழ்ச்சிகளை மாதவி செய்து நகர மக்களை மகிழ்வித்தாள். இந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் மாதவி பதினொரு விதமான ஆடல்களையும் நிகழ்த்தினாள். கொடுகொட்டியாடல், பாண்டரங்கக் கூத்து, அல்லிய ஆடல், மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, பேடியாடல், மரக்காலாடல், பாவையாடல், கடையக்கூத்து என்னும் பதினொரு ஆடல்களையும் அவள் ஆடினாள். பதினொரு வகையான ஆடல்களை ஆடினபோது அந்தந்த ஆடல்களின் தலைவர்களாகிய சிவபெருமான், கண்ணபிரான், செவ்வேள் (முருகன்), காமன், கொற்றவை, திருமகள், இந்திராணி ஆகியவர்களின் வேடத்துடன் அவரவர்களின் ஆடையணிகளை அணிந்து ஆடிய காட்சியும் நடிப்பும் இசையும் பாட்டும் காண்பவரின் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து மகிழ்வித்தன. இவ்வாறு இந்திர விழா, மாதவியின் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளினால் சிறப்படைந்திருந்தது. இவளுடைய நாட்டியம், நடிப்பு, இசைப் பாட்டு முதலியவைகளைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த நகர மக்கள் இவளுடைய கலைத் திறமையைப் புகழ்ந்து மெச்சினார்கள். இவளுடைய புகழ் பூம்புகார் நகரத்தில் மட்டுமல்லாமல் சோழ நாடு முழுவதும் பரவிற்று. அதற்கப்பால் பாண்டிய நாட்டிலும் சேரநாட்டிலும் பாரதநாடு முழுவதும் இவளுடைய புகழ் பரவிற்று. பன்னிரண்டு ஆண்டுகளாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவி ஆடல் பாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கோவலனும் அவளுடன் வாழ்ந்து வந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைக்கு மணி மேகலை என்று பெயரிட்டு வளர்த்தார்கள். நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மணிமேகலை தன்னுடைய தாயான மாதவியைப் போலவே இசை நடனக் கலைகளைக் கற்று வந்தாள். பதியிலாராகிய கணிகையர் குலத்தில் பிறந்தவளானாலும் மாதவி நல்லொழுக்கமும் நற்குணமும் உள்ளவளாக இருந்தாள். கணிகையர் குலமகளிருக்கு இயற்கையான, காசு உள்ள செல்வரை நாடிச் செல்லும் இழிசெயல் இவளிடம் இருந்ததில்லை. பூவில் உள்ள தேனை யருந்தின வண்டு தேன் வற்றின பூவைவிட்டுத் தேன் உள்ள வேறு பூக்களை நாடிச் செல்வது போன்றது பதியிலாராகிய பொதுமகளிரின் செயல். ஆனால், மாதவியிடம் இந்த இழிச் செயல் இல்லை. நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூ துறக்கும் வண்டு போன்ற இயல்பு இவளிடம் இல்லை. சிப்பியில் பிறந்த முத்துப் போலவும் சேற்றில் பிறந்த தாமரை போலவும் இவள் விளங்கினாள். குலமகளைப் போலவே இவள் கோவலனுடன் வாழ்ந்து வந்தாள். ஆனால், மாதவியிடத்தில் ஒரே ஒரு குற்றம் இருந்தது. அந்தக் குற்றம் என்னவென்றால், தன்னுடைய பொருளாதார நிலைமைக்குத் தக்கபடி செலவு செய்யாமல் அளவுக்கு மீறின படாடோப வாழ்க்கை கொண்டிருந்ததுதான். இது எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும், கணிகையருக்கும் நடிகையருக்கும் உள்ள குற்றமாகும். காவிரிப்பூம்பட்டினம் போன்ற நாகரீக நகரங்களிலே இப்படிப் பட்ட பகட்டு வாழ்க்கை இயற்கைதான். மாதவியும் பகட்டான படாடோப வாழ்க்கையே வாழ்ந்து வந்தாள். அந்தக் காலத்தில் ஆடைகளை அதிகமாக அணியும் வழக்கம் இல்லை. ஆனால் நகைகளை அதிகமாக அணியும் நாகரிகம் வளர்ந்திருந்தது. தங்க நகைகளும் முத்து, பவழம், மாணிக்கம், பச்சை, நீலம் முதலிய நவரத்தினக் கற்களும் அமைந்த நகைகளைச் செல்வர்கள், அக்காலத்தவர் அதிகமாக அணிந்தார்கள். நவரத்தின நகைகளை அணிவது அக்காலத்தில் நாகரிகத்துக்கும் செல்வத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அக்காலத்து வழக்கப்படி மாதவியும் நவரத்தின நகைகளையும் பொன் நகைகளையும் அணிந்திருந்தாள். அவள் பாதம் முதல் முடிவரையில் அணிந்திருந்த நகைகளைச் சிலப்பதிகாரக் காவியங் கூறுகிறது. அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகங் காலுக கமைவுற அணிந்து, குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறந்திகழ் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரங் சேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள் செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து கயிற்கடை யொழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திரபாணி தகைபெறு கடிப்பினை யங்காது அகவயின் அழகுற அணிந்து தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீ ரோதிக்கு மாண்புள வணித்து மாதவி பொன்னும் மணியுங் காய்த்த பூங்கொடி போலக் காணப் பட்டாள். கோவலன் செல்வச் சீமான்தான். குன்றத்தனைச் செல்வமானாலும் மிதமிஞ்சிச் செலவு செய்தால் மலையளவுள்ள பொருளும் குன்றிப் போகும் அல்லவா? மாதவியின் ஆடம்பரச் செலவும் கோவலனின் ஊதாரித்தனமும் அவனுடைய பெருஞ் செல்வத்தைக் குறைத்து விட்டன. கடைசியில் அவன் ஏழ்மையடைந்து வறியவனானான். வழக்கம் போல அந்த ஆண்டும் இந்திரவிழாவும் மாதவியின் ஆடல்பாடல்களும் நடைபெற்றன. விழா முடிந்த அடுத்தநாள் நகர மக்கள் கடற்கரைக்குச் சென்று நீராடுவது வழக்கம். நகரத்துச் செல்வர் கடற்கரையில் திரைச் சீலையால் கூடாரம் அமைத்து அதில் சென்று தங்கியிருந்து மாலையானவுடன் விடுதி திரும்புவார்கள். நகரத்துச் செல்வரைப் போலவே கோவலனும் மாதவியும் அன்று காலையில் கடற்கரைக்குப் போனார்கள். மாதவி வண்டியில் அமர்ந்து சென்றாள். கோவலன், அக்காலத்து நாகரிகப் பிரபுக்களின் வழக்கப்படி அத்திரி (கோவேறு கழுதை) ஏறிச் சென்றான். சென்று கடற்கரை மணலில் இவர்களுக்கென்று அமைத்திருந்த கூடாரத்தில் தங்கினார்கள். தங்கி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார்கள். பொழுது கழிந்தது. மாலை நேரம் வந்தது. மாதவி யாழைக் கோவலனிடங் கொடுத்து அதனை வாசித்துப் பாட்டுப் பாடும்படி கேட்டாள். கோவலனும் யாழை வாங்கி நரம்பைப் பண் அமைத்துப் பாடினான். முதலில் காவிரியாற்றின் வளத்தையும் சோழ அரசனின் சிறப்பையும் பாடினான். பின்னர் அகப்பொருள் துறையமைந்த பாடல் களைப் பாடினான். ஊழ்வினை போலும். அவள் கருதாமலே அந்தப் பாடல்கள் காதலன் ஒருவன் புதிதாகத் தான் கண்ட ஒருத்தி மீது தன் காதலைத் தெரிவிக்கும் களவியல் துறைப் பாட்டாக இருந்தது. கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. திரைவிரி தரு துறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிவிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே. இவை போன்ற அகத்துறைப் பாடல்களைக் கோவலன் மனம் போன போக்கிலே மகிழ்ச்சியோடு பாடினான். அப்போது மாதவி ஊழ்வினை வலிபோலும், அவனைத் தவறாகக் கருதினாள். அவன் வேறு ஒருத்திமேல் காதல் கொண்டதை இப்பாடல்களின் மூலம் குறிப்பிடுகிறான் என்று அவள் தவறாகக் கருதிக் கொண்டாள். கோவலன் பாடி முடித்த பிறகு மாதவி அவன் கையிலிருந்த யாழைத் தன் கையில் வாங்கிப் பண் அமைத்துத் தானும் சில பாடல்களைப் பாடினாள். அந்தப் பாடல்களும் அகப்பொருள் துறை யமைந்ததாக இருந்தன. பெண் ஒருத்தி தன்னுடைய காதலனை எண்ணிப் பாடுவதுபோல அப்பாடல் அமைந்திருந்தது. வாரித் தளர நகைசெய்து வண்செம்பவள வாய் மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில் திரையுலாவு கடற்சேர்ப்ப மாரிப் பீரத் தலர் வண்ணம் மடவாள்கொள்ளக் கடவுள் வரைந்து ஆரிக்கொடுமை செய்தா ரென்று அன்னையறியின் எண் செய்கோ? கதிரவன் மறைந்தனனே காரிருள் பாரந்ததுவே எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீர் உகுத்தனவே தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார் நாட் டுளதாங்கொல் வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை இவை போன்ற அகப்பொருள் துறைப் பாடல்களை (காதற் பாடல்களை) மாதவி பாடியபோது - மீண்டும் ஊழ் வலிபோலும் -கோவலன் இவள் வேறு யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தன்னுள் கருதிக்கொண்டான். உண்மையில் இவர் இருவரும் எவ்வித மன வேறுபாடும் இல்லை என்றாலும் ஒருவரைப்பற்றியொருவருக்குத் தவறான எண்ணம் உண்டாய்விட்டது அவர்கள் அன்பில் குறை வில்லை. ஆனால், காரணம் இல்லாமலே அவர் களுக்கு ஒருவரைப் பற்றி ஒருவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆகவே கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து போனான். தான் ஏழ்மையடைந்துவிட்ட படியால் மாதவி தன்னை வெறுத்து வேறு ஒருவனைக் காதலிப்பதாக அவன் தவறாகக் கருதினான். கோவலன் திடீரென்று பிரிந்து சென்றதன் காரணம் மாதவிக்குப் புரியவில்லை. தற்காலிகமாகப் பிரிந்துசென்றான். மீண்டும் வருவான் என்று அவள் எண்ணினாள். ஆனால், அவன் திரும்பவே இல்லை. அவன் வராமற் போகவே அவனுக்குக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலையிடங் கொடுத்து அனுப்பினாள். கோவலன் அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்காமலே திருப்பியனுப்பிவிட்டான். அதனால் மாதவி பெரிதும் வருத்தம் அடைந்தாள். கோவலன் தான் இது வரையில் மறந்திருந்த மனைவியான கண்ணகியிடஞ் சென்றான். அவளிடமிருந்த செல்வங்களையும் கோவலன் முன்னமேயே செலவு செய்துவிட்டபடியால் இப்போது கண்ணகியிடம் காற்சிலம்புகள் மட்டும் எஞ்சியிருந்தன. கண்ணகி பெருஞ் செல்வனின் மகள் ஆகையால் அந்தச் சிலம்புகள் பொற் சிலம்புகளாக இருந்தன. அந்தக் சிலம்புகளை விற்று அந்தப் பணத்தை முதலாக வைத்து வணிகஞ் செய்து பொருள் ஈட்ட வேண்டுமென்று கோவலன் கருதினான். தான் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து வந்த காவிரி பூம்பட்டினத்திலே, இப்போதைய ஏழ்மை நிலையில் வாழ்வதற்கு அவன் விரும்பாமல் தொலைதூரத்தில் பாண்டிநாட்டு மதுரைக்குச் சென்று வாணிகஞ் செய்து வாழக்கருதினான். கோவலன் தன்னுடைய தற்போதைய ஏழ்மை நிலைமை மற்றவர்க்குக் காட்டாமல் மறைக்கவே, கோவலனும் கண்ணகியும் தம்முடைய உற்றார் உறவினர் நண்பர் முதலியோர் ஒருவருக்குஞ் சொல்லாமல் அவர்கள் இரவோடு இரவாக நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள். கோவலன் தன்னை மெய்யாகவே வெறுத்துவிட்டான் என்று அறிந்த மாதவி அவனுக்கு இன்னொரு கடிதம் உருக்கமாக எழுதி அதைக் கோசிகன் என்னும் பார்ப்பனனிடங் கொடுத்துக் கோவலனிடம் கொடுக்கும்படி அனுப்பினாள். கோசிகன் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய் கோவலன் இருக்கு மிடமறியாமல் பல இடங்களிலும் தேடித் திரிந்து கடைசியாக மதுரை நகரத்துக்கு அருகில் கோவலனைக் கண்டுபிடித்து, காதலியின் கடிதத்தைக் கொடுத்தான். கோவலன் அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தான். அந்தக் கடிதத்தின் வாசகம் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனங்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியுங் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது கையனும் நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய்! போற்றி இந்த வாசகத்தைப் படித்த கோவலனுக்கு மாதவியின் மேலிருந்த வெறுப்பு நீங்கிற்று. ஆனால் அவன் பூம்புகாருக்குத் திரும்பி வரவில்லை. மதுரை நகரத்துக்கே போய்விட்டான். அங்கும் ஊழ் வினை அவனைத் தொடர்ந்தது. தன்னுடைய பொற்சிலம்புகளை விற்கச் சென்ற கோவலன் மேல் பாண்டி யனுடைய ராணியின் காற் சிலம்பை அவன் களவாடினான் என்று பொய்க் குற்றஞ் சாற்றி அவனைக் கொலை செய்து விட்டார்கள். கோவலனின் ஊழ்வினை இப்படி முடிந்தது. கோவலன் இறந்துபோன செய்தியை மாடலன் என்பவன் மூலமாக அறிந்த மாதவி தீராத்துயரம் அடைந்தாள். வாழ்க்கையை வெறுத்தாள். அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்துவதை முழுவதும் நிறுத்திவிட்டாள். கணிகையர் குலத்தில் பிறந்தவளாயிருந்தும் குலமகள் போலக் கைம்மை நோன்பை மேற்கொண்டாள். பட்டாடைகளையும் நவ ரத்தினப் பொன் நகைகளையும் அணிந்து பொன் பூத்த பூங்கொடிபோல் இருந்த அவள் இப்போது நகைகளைக் களைத்துவிட்டு, இலையுதிர்ந்த மரம் வெறும் கிளைகளுடன் இருக்கும் காட்சிபோலக் காணப்பட்டாள். கணிகைத் தொழிலை மேற்கொள்ளாமலும் அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்தாமலும் மாதவி குலமகள்போலக் கைம்மை நோன்பிருப் பதைக் கண்ட அவளுடைய தாய் சித்திராபதி அவளுடைய மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். கணிகையர் குலப்பெண்கள் காசிலேயே கருத்தாயிருக்க வேண்டும்; ஒரு செல்வன் போனால் இன்னொரு செல்வனைப் பிடிக்கவேண்டும்; குல மகளைப்போலப் பத்தினிப் பெண்ணாக இருப்பது கணிகையருக்குப் பொருந்தாது; பொருள் ஈட்டுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருக்கவேண்டும் என்று அவள் தன்னுடைய மகளுக்குக் கணிகையர் குலத்துக்கு உரிய கொள்கையை உபதேசஞ் செய்தாள். பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தங் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும்இயல்பினம். அன்றியும் நறுந்தாது உண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம். வினையொழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் என்று தன் குலத்தொழிலை விளக்கிக் கூறினாள். மேலும் இதையே வற்புறுத்திச் சொன்னாள். கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்னூறு கணவன் சாவுறிற் காவலும் நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிதர்தங்குடியில் பிறந்தாய் அல்லை ஆடவர் காண நல்லரங் சேறி ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச் கருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப் பண்தேர் மொழியில் பயன்பல வாங்கி வண்டில் துறக்கும் கொண்டி மகளிரேம். இவ்வாறெல்லாம் சித்திராபதி கணிகையர் வாழ்க்கையின் இயல்பை மாதவிக்கு எடுத்துரைத்தாள். ஆனால் மாதவியோ கணிகை வாழ்க்கையை விரும்பவில்லை. அவள் கணிகைத் தொழிலை மேற்கொள்ளாமல், அரங்கம் ஏறி ஆடல் பாடல் செய்யாமல் குலமகளிர் கைம்மை வாழ்க்கையை உறுதியாகப் பிடித்தாள். மாதவி கணிகைத் தொழிலில் ஈடுபடாதபடியினாலே சித்திராபதி அவள்மேல் வெறுப்படைந்தாள். ஆனாலும் மாதவியின் மகளும் தன்னுடைய பேர்த்தியுமான பன்னிரண்டு வயதுள்ள மணிமேகலையைக் கணிகைத் தொழிலில் புகுத்த எண்ணினாள். மணிமேகலையை அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்து அவளை நாடக நடனங்களைச் செய்து கணிகையர் தொழிலை மேற்கொள்ளும்படி செய்ய அவள் விரும்பினாள். சோழ மன்னனுடைய மகனான உதயகுமரனிடஞ் சென்று மணிமேகலையைக் காமக்கிழத்தியாக்கிக் கொள்ளும் படி அவனைத் தூண்டினாள். ஆனால், மாதவியோ தன் மகள் மணிமேகலையைக் கணிகை வாழ்க்கையில் புகுத்த விரும்பவில்லை. அவளைக் குலமகள் வாழ்க்கையில் புகுத்த விரும்பினாள். குலமகன் ஒருவனுக்கு அவளை மணஞ் செய்துவைக்க எண்ணினாள். ஆகவே, சித்திராபதியிடமிருந்து பிரிந்து வந்தால் அல்லாமல் தனக்கும் தன் மகள் மணிமேகலைக்கும் நல்வாழ்க்கை ஏற்படாதென்று மாதவி அறிந்தாள். அதன்படி சித்திரபதியிடமிருந்து பிரிந்து வாழ உறுதி கொண்டாள். அக்காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சூழ்நிலை மாதவியின் கருத்துக்கு ஆதரவு காட்டவில்லை. சாதி அமைப்புகள் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது கணிகையர் குலத்தில் பிறந்தவர் கணிகை யாகவே இருக்கவேண்டும். அவர்கள் ஒருவனையே மணந்து குலமகள் போல் வாழக்கூடாது என்னும் தவறான கருத்து அக்காலத்துச் சமுதாயத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் இருந்த சைவம் வைணவம் வைதிகம் ஜைனம் என்னும் சமயங்களும் மாதவி யின் சீர்திருத்த வாழ்க்கைக்கு ஆதரவு காட்டவில்லை. வேசியர், கணிகையர் போன்ற விழுந்தவரைக் கைகொடுத்துத் தூக்கி உயர்த்தி, அவர்களுக்குச் செம்மையான வாழ்க்கையைத் தர அக்காலத்துச் சமூகமும் சமயங்களும் இடந்தரவில்லை. அக்காலத்தில் மாதவிக்கு ஒரே ஒரு புகலிடம் மட்டும் இருந்தது. அந்தப் புகலிடந்தான் பௌத்த மதம். பௌத்த மதம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டிலே, முக்கியமாகச் சோழ நாட்டிலே செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. புத்தர் பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே கள்வர், கணிகையர் போன்ற தாழ்ந்த செயல் செய்தவரையும், அவர் திருத்தி உயர்நிலையடையச் செய்தார். அவர் கணிகையொருத் தியையும் நல்வழிப்படுத்தினார். அவரைப் பின்பற்றிப் பௌத்த மதமும் தீயவழியில் நடந்தவர் களையும் நல்வழிப்படுத்திக் கைதூக்கிவிட்டது. இதனை மாதவி நன்கறிந்திருந்தாள். தன்னையும் தன் மகளான மணி மேகலையையும் கைதூக்கி நல்வாழ்க்கையில் செலுத்தப் பௌத்த மதந்தான் உறுதுணை என்பதை அவள் அறிந்தாள். ஆகவே, சித்திரா பதியிடமிருந்து பிரிந்து வந்து பௌத்த மதத்தில் அடைக்கலம் புகுந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த விகாரையும் பௌத்த சங்கமும் அக்காலத்தில் இருந்தன. அக்காலத்தில் பௌத்தச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவி, இவர் பௌத்த பிச்சுச் சங்கத்தின் சங்கபாலராக (தலைவராக) இருந்தார். மாதவி மணிமேகலையுடனும் தன் தோழி சுதமதியுடனும் பௌத்த விகாரைக்குச் சென்று அறவண அடிகளை வணங்கி அவருக்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தாள். தங்களைப் பௌத்த மதத்தில் சேர்த்தருளும்படி வேண்டிக் கொண்டாள். அறவண அடிகள் அதற்கு இணங்கினார். மாதவியும் மணிமேகலையும் சுதமதியும் அறவண அடிகளிடம் திரிசரணமும் பஞ்சசீலமும் பெற்றார்கள். புத்தஞ் சரணங் கச்சாமி தம்மஞ் சரணங் கச்சாமி சங்கஞ் சரணங் கச்சாமி என்னும் மும்மணிகளைப் புகலடைந்து மாதவியும் மணி மேகலையும் சுதமதியும் பௌத்த மதத்தைச் சேர்ந்தார்கள். பிறகு அறவண அடிகள் அவர்களுக்குப் பஞ்சமூலங்களைப் போதித்தார். அன்று முதல் அவர்கள் பௌத்தர்களாகிப் பௌத்த சமூகத்தவர் ஆனார்கள். அந்த ஆண்டும் வழக்கம்போல காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழாத் தொடங்கிற்று. விழாவில் மாதவி சென்று கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே, விழா சிறப்புப் பெறவில்லை. சித்திராபதி இந்திர விழாவில் வந்து ஆடல் பாடல் நிகழ்த்தும்படி மாதவியை அழைத்தாள். வயந்தமாலை என்பவளிடம் சொல்லி யனுப்பினாள். மாதவி நாடக அரங்கத் துக்குப் போக மறுத்துவிட்டாள். “புத்தம் தன்மம் சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணம் அடைந்து பஞ்சமூலம் பெற்றுப் பௌத்தராக வாழ்கிறறோம். இனி, மீண்டும் கணிகையர் தொழிலுக்கு வரமாட்டோம். நீ போய் இச்செய்தியை என் தாய் சித்திராபதிக்குச் சொல்லு” என்று வயந்த மாலையிடம் மாதவி கூறினாள். மாதவியின் கலை நிகழ்ச்சிகள் இல்லாதபடியால் இந்திர விழா சிறப்படைய வில்லை. மாதவியும் மணிமேகலையும் சுதமதியும் பௌத்த மதத்தில் நின்று பௌத்தராக வாழ்ந்தார்கள். அவர்கள் அறவண அடிகளிடம் பௌத்த தர்மங்களைக் கேட்டறிந்தார்கள். மாதவி சிறந்த பௌத்த மதப் பக்தியுள்ளவளானாள். அவள் காலையிலும் மாலையிலும் பௌத்த விகாரையில் புத்தர் பெருமான்மேல் இசை பாடிக்கொண்டிருந்தாள். அடுத்த ஆண்டு புயல் வீசிற்று. பெருமழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம். புரண்டோடியது. கடல் கொந்தளித்தது. கடல் நீரும் காவிரியாற்றின் வெள்ளமும் கரைபுரண்டு வந்து காவிரிப்பூம் பட்டினத்தில் புகுந்தன. நகரம் வெள்ளத்தில் முழுகிற்று. நகரமக்கள் நகரத்தைவிட்டு வேறு இடம் சென்றார்கள். அரசனும் பெருங்குடி மக்களும் வேறு இடஞ் சென்றார்கள் அறவண அடிகள் காஞ்சி புரத்துக்குச் சென்று அங்குத் தரும தவனம் என்னும் பூஞ்சோலையில் இருந்த பௌத்தப் பள்ளியில் தங்கினார். 15. ஆனாயனார் குழலிசை வித்தகர் தமிழகத்திலே மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் ஊர் இருந்தது. முல்லை நிலமாக அமைந்திருந்தபடியால் அவ்வூரைச் சூழ்ந்து சிறு காடுகளும் குன்றுகளும் புல்வெளிகளும் இருந்தன. மான்களும் முயல்களும் ஆடு மாடுகளும் கன்று கனிகளும் துள்ளி விளையாடின. கிளி, குயில் மயில் முதலிய பறவைகளும் அங்கு மிங்கும் பறந்தன. அந்த ஊரில் ஆயர் (இடையர்) வாழ்ந்திருந்தனர். அவர்கள் பசுமந்தைகளையும் எருதுகளையும் வளர்த்து வந்தார்கள். அவ்வூரில் ஆயர் ஒருவர் இருந்தார். அவர் அவ் ஊர்ப் பசுக்களை ஓட்டிக் கொண்டுபோய் காட்டில் மேய்ப்பார். அதனால் அவருக்கு ஆனாயர் (ஆன்-பசு, ஆயர்-இடையர்) என்று பெயர் உண்டாயிற்று. அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் மறைந்து போயிற்று. ஆனாயர் இசைப் புலவர். குழல் வாசிப்பதில் வல்லவர். இசைக் கருவிகளில் யாழும் குழலும் இனிமையானவை யல்லவா? குழலினிது யாழினிது என்று திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் கூறுவார்கள். ஆனாயர் இனிய குழல் வாசித்து இசையமுதத்தை வழங்கினார். ஆனாயர், பசுமந்தைகளைக் காட்டில் ஓட்டிக்கொண்டு போய் மேயவிடுவார். இயற்கையழகு மிகுந்த சூழ்நிலையில் குன்றுகளில் ஆனிரைகள் மேய்ந்துகொண்டிருக்கும்போது ஆனாயர் மரநிழலில் அமர்ந்து குழல் வாசித்தார். அது இயற்கையழகுள்ள சூழ்நிலை குன்றுகளும் குறுங்காடுகளும் அமைந்த இடம். அவர் கடவுள் பக்தராகையால் பக்தியோடு அவர் குழல் வாசித்தார். அவருடைய குழல் இசையில் தெய்வீகம் கலந்திருந்தது. அவருடைய குழல் இசை செவிக்கும் மனதுக்கும் இன்பமாக இருந்தது. பசுக்கள் வயிறாறப் புல் மேய்ந்தப் பிறகு, ஆனாயர் குழல் ஊதும் இடத்துக்கு வந்து அவரைச் சூழ்ந்து இருந்து குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தன. காடுகளில் இருந்த மான்களும் முயல்களும் வேறு விலங்குகளும் அங்கு வந்து அசைவற்று நின்று குழலிசையைச் செவியாறக் கேட்டு மகிழ்ந்தன. மயில்களும் பறவைகளும் வந்து கேட்டு இன்புற்றன. அழகான இயற்கைக் காட்சிகள் உள்ள அந்தக் காட்டிலே அமைதியான சூழ் நிலையில் ஆனாயர் இசைக்கும் வேய்ங்குழல் இசை தேவகானமாக, இன்னமுதமாக செவி குளிர இசைத்தது. அந்த இன்ப இசையில் விலங்குகளும் பறவைகளும் ஈடுபட்டுத் தம்மை மறந்து அசைவற்று இருந்தன. வேய்ங்குழல் வித்தகர் ஆனாயர் இசை இலக்கண முறைப்படி குழல் இசைத்தார். மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரற் றொழில்கள் அளவுபெற அசைத்தியக்கிச் சுந்தரச் செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண எண்ணியநூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ண இசை வகை யெல்லாம் மாதுரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்குநடை முதற்கதியில் பண்ணமைய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார் (ஆனாய நாயனார் புராணம் 27, 28) புல்வயல்களுக்கிடையே ஆங்காங்கே மரஞ்செடிகள் வளர்ந்துள்ள அந்த முல்லை நிலத்திலே சரக்கொன்றை மரங்களும் இருந்தன. பூக்கும் காலத்தில் சரக்கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சரஞ்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. கொன்றை மரங்களில் கிளைகள் தோறும் மஞ்சள் நிறமான பூக்கள் சரஞ்சரமாக பூத்துத் தொங்கும் எழில் பொன்பூத்தது போலக் காட்சிக்கு இனிமையாக இருந்தது. அந்தக் காட்சி அம்முல்லை நிலத்துக்குப் பேரழகைத் தந்தது. ஆனாயருக்கு பூக்காட்சி மனத்தைக் கவர்ந்தது. சரக்கொன்றைகள், சிவபெருமான் தம்முடைய திருமுடியில் அணிந்துள்ள கொன்றை மலர் போல் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது அவர் குழல் ஊதிக் கடவுளின் புகழை இசையிலிட்டுப் பாடுவார். அந்த வேய்ங்குழ லோசை தேனும் பாலும், பாகும் அமுதமும் கலந்தது போன்ற தேவ கானமாகத் திகழ்ந்தது. வழக்கம்போல பசுக்களும் விலங்குகளும் பறவைகளும் வந்து, அமைதியாகக் கேட்டு இன்புற்றன. கோவலரும் வந்து இசை கேட்டு இன்புற்று மகிழ்ந்தார்கள். ஆனிரைகள் அறுகருத்தி அசைவிடாது அணைந்தயரப் பால் நுரைவாய்த் தாய்முலையில் பற்றும்இளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர்முகிழ்த்து வந்தணைய ஆடுமயில் இனங்களும் அங்கசைவற்று மருங்கணுக ஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபணிந்து உணர்வொழிய மருங்கு தொழில் புரிந்தொழுகும் கூடிய வண் கோவலரும் குறைவினையின் துறை நின்றார் (ஆனாய நாயனார் புராணம் 30, 31) இயற்கை எழில் மிகுந்த அந்த முல்லைநிலக் காட்டிலே குழலிசை வல்ல ஆனாயர், இசையமுதத்தை வழங்கிக் கொண்டிருந்தார். நெடுங் காலம் தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழல் இசைத்துக் கொண்டிருந்தார். அந்த இசைக் குழலில் தெய்வீகமும் அமைதியும் நிறைந்திருந்தது. மனம் அமைதியடைந்தது. இன்பத்தில் திளைத்தது. நெடுங்காலம் ஆனாயனார் வேய்குழல் இசைத்து இன்னிசை யமுதத்தை வழங்கிக் கொண்டிருந்து கடைசியில் இயற்கை எய்தினார். இவருடைய குழல் இசைத் தொண்டினை நினைவுகூர்ந்து இவருக்குச் சிவன் கோயில்களில் உருவச்சிலை யமைத்திருக் கிறார்கள். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஆனாயரும் ஒரு வேளடியாக விளங்குகிறார். 16. பாண்டியனும் பாடினியும் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்1 பாண்டி நாட்டை அரசாண்ட காலத்தில் அவன் இலங்கை மேல் போருக்குச் சென்று இலங்கை யரசனான சேனனை வென்றான். போரிலே தோற்றுப் போன சேனன் தன்னுடைய நகரமான அநுராதபுரத்தைவிட்டு மலைய நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். வெற்றிபெற்ற ஸ்ரீவல்லபன் அநுராதபுரத்திலிருந்த செல்வங்களைக் கைப்பற்றினான். மலைய நாட்டுக்குப் போன சேனன் பிறகு பாண்டியனோடு உடன்படிக்கை செய்துகொண்டு அநுராதபுரத்துக்கு வந்து மீண்டும் அரசாண்டான். சிங்கள நாட்டுப் போரை வென்ற ஸ்ரீவல்லபன் திரும்பி வந்து சோழ நாட்டின் மேலும் போர்செய்து அந்நாட்டையும் வென்றான். அவனுக்குப் பரசக்கர கோலாகனன் என்னும் பெயர் ஏற்பட்டது. ஸ்ரீவல்லபன் சிற்றின்பப் பிரியன். அவனுக்குப் பல மனைவியர் இருந்தார்கள். அவன் சிற்றின்பப் பிரியன் என்பதை ஒரு பாண்டியச் செப்பேடு அவனை ‘வேய்போலும் தோழியர் கேள்’ என்று அழகு மொழியில் கூறுகிறது. அதாவது, மூங்கில் போன்ற அழகான தோள் களையுடைய பெண்களோடு உறவு உள்ளவன் என்பது பொருள். இவன் பாண்டிய நாட்டை அதன் தலைநகரமான மதுரையிலிருந்து அரசாண்டான். அந்தப் பாண்டியனுடைய சபையில் பாணபத்திரன் என்னும் இசைப் புலவன் உலகப் புகழ் பெற்றிருந்தான். பாணபத்திரனுடைய மனைவியான பாடினியும் இசைக் கலையில் வல்லவள். அவள் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசியர்களிடத்தில் இசை பாடி வந்தாள். சின்றின்பப் பிரியனாகிய ஸ்ரீவல்லபன் அந்தப்புரத்தில் ஒரு நாள் இசைச் செல்வி பாடினியைக் கண்டான். கண்டு அவளைப் பெண்டாள நினைத்தான். கற்புடைய அவள், அவன் கருத்துக்கு இசையவில்லை. அவள் அரசனை வெறுத்து நோக்கினாள். “அரசனாகிய நீ நேர்மையாக நீதியாக நடக்க வேண்டும். சொக்கப் பெருமான் மேல் ஆணை. உன் தீய எண்ணத்தை விட்டுவிடு” என்று கூறினாள். அது கேட்டு அரசன் அவள் மேல் சீற்றங் கொண்டான். (இவ்வாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி தம்முடைய திருவாலவாயுடையார் திருவிடையாடற் புராணத்தில் கூறுகிறார். இசைவாது வென்ற திருவிளையாடல் 1-5) ஸ்ரீ வல்லவனுக்குப் பல மனைவியர் இருந்தார்கள். அவர் களில் ஒருத்தி அரசனுடைய அன்பையும் ஆதரவையும் அதிகமாகப் பெற்றிருந்தாள். அந்த அரசிக்கும் கலைக் செல்வியாகிய பாடினிக்கும் இசைக் கலை காரணமாக இகல் ஏற்பட்டது. இறுமாப்பை அடக்க எண்ணி, பாடினியை அவமானப்படுத்தி இறுமாப்பை அடக்க வேண்டுமென்று அரசனிடங் கூறினாள். அரசன் அதற்கு இசைந்து பாடினியை அவமானப்படுத்த எண்ணினான். (இவ்வாறு பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில் கூறுகிறார். இசைவாது வென்ற படலம் 2-4) எந்தக் காரணமாக இருந்தாலும் சரி. பாண்டியன் பாடினியை அவமானப்படுத்த எண்ணினான். வெளிநாட்டிலிருந்து இசைக் கலையில் வல்லவளான ஒரு விறலியை அழைத்து வந்து அவளைக் கொண்டு பாடினியை அவமானப்படுத்தக் கருதினான். கருதி, தான் வென்ற இலங்கைத் தீவிலிருந்து பாணர் குலத்தில் பிறந்த இசைக்கலை பயின்ற ஒரு விறலியை ஒருவரும் அறியாதபடி மறைவாக வரவழைத்தான் அவளுக்குப் பொருளைப் பரிசாகக் கொடுத்து “பாணபத்திரனுடைய மனைவியான பாடினி இசைக்கலையில் வல்லவள் என்று இறுமாப்புக் கொண்டிருக்கிறாள். அவளை நீ இசைவாதில் தோற்பிக்க வேண்டும். அவள் அந்தப்புரத்துக்கு இராணிகளிடம் இசை வாசிக்க வருவாள். அவளை நீ வாதுக்கு அழைத்து உன்னுடன் இசைபாடச் செய். அதற்கு அவள் இணங்காவிட்டால் அவளை இகழ்ந்து பேசு. அப்போது அவள் ஆத்திரமடைந்து உன்னுடன் இசைவாது செய்ய ஒப்புக்கொள்வாள். இருவரும் சபையில் பாடுங்கள். நான் உன் சார்பாக இருப்பேன். நீதான் போட்டியில் வென்றாய் என்று கூறுவேன். நீ அஞ்சாதே!” என்று அவளிடம் இரகசியமாகக் கூறினான். இலங்கையிலிருந்து வந்த விறலி, அதற்கு இணங்கினாள். “மன்னர் பெருமானே! நீர் இருக்கும் போது என்னை வெல்பவர் யார்?” கூறி அரசன் கருத்துக்கு இசைந்தாள். அரசன் “இந்த விஷயம் இரகசியமாக இருக்கவேண்டும். ஒருவருக்கும் தெரியக்கூடாது. நீயே அவளை வாதுக்கு அழைப்பது போல இருக்கவேண்டும். நான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருவருக்கும் தெரியக்கூடாது. எப்படியாவது உன்னுடன் இசை பாட அவளைச் சபைக்கு அழைத்து வா” என்று கூறி அவளை அனுப்பினான். மறுநாள் பாடினி வழக்கம் போல அரண்மனையில் அந்தப் புரத்துக்கு வந்தாள். புதியவளாகிய விறலியும் அங்கு வந்தாள். அரசிகளும் அரசனும் அங்கு இருந்தார்கள். அப்போது விறலி பாடினியை வம்புக்கு அழைத்தாள். “உனக்கென்னடி தெரியும்? இசை பாட வந்துவிட்டாய்; சங்கீதத்தில் உனக்கு ‘அ’ என்ற அட்சாரம் தெரியுமா? சரி கம பத நிசா தெரியுமா? என்னோடு இருந்து நீ இசை பாட முடியுமா? கற்றுக்குட்டிகளெல்லாம் இந்தக் காலத்தில் இசைபாட வந்துவிடுதுகள்” என்று இகழ்ந்து பேசி வம்புக்கு இழுத்தாள். குற்றம் எத்தனை, எத்தனை குணங்கள் யாழ்க் கோலுக்கு உற்ற தெய்வம் எது இசைப்பது எவ்வுயிர் உடம்பு உயிர்மெய் பெற்ற ஓசை எவ்வளவு அவைக் குத்தரம்பேசி மற்றெனோடு பாடு. இல்லையேல் வசை உனக்கு என்றாள் விறலியின் இந்த வம்புப் பேச்சுக்கும் ஏசலுக்கும் விடை கூறாமல் பொறுத்துக்கொண்டு வாளா இருந்தாள். விறலி விடவில்லை. மேலும் மேலும் அவளை வைது தன்னுடன் இசைபாடி வெல்லும்படி அழைத்தாள். அது கேட்ட பாடினி, ‘நீ என்னை உன்னுடன் இசைபாட அறைகூவி அழைப்பதனால் நான் உன்னுடன் இசை பாடுவேன். பாடலாம் வா” என்று வாதுக்கு இசைந்தாள். அரசியுடன் இருந்து இதையெல்லாங் கேட்டுக் கொண்டிருந்த அரசன், தக்க சமயம் வாய்த்தது என்று எண்ணி அவர்களைச் சமாதானம் செய்வது போலக் கூறினான். ‘நீங்கள் இரண்டு பேரும் வாதாடுவது ஏன்? உங்களுடைய கலைத் திறமையைக் காட்ட விரும்பினால் சபையில் வந்து பாடுங்கள். யார் இசையில் வல்லவர் என்பதைச் சபை தீர்மானிக் கட்டும்?” “அரசர் பெருமான் சொல்வதே சரி. நான் அதற்குச் சம்மதிக்கிறேன்” என்று கூறினாள் இலங்கை நாட்டு விறலி. “நானும் சம்மதிக்கிறேன்” என்றாள் பாடினி. “நாளைக்கு நீங்கள் இருவரும் சபைக்கு வந்து பாடுங்கள்” என்று கூறினான் அரசன். பிறகு, “வென்றவருக்குப் பரிசு என்ன? தோற்றவர் வென்ற வரைத் தோளின்மேல் ஏற்றிச் சபை நடுவில் சுமக்க வேண்டும். இதுதான் வெற்றியின் பரிசாக இருக்க வேண்டும்” என்று அரசன் கூறினான். இதற்கு கலைவாணிகள் இருவரும் சம்மதித்தார்கள். மறு நாள் அரச சபையில் இசை வாது நிகழ்ந்தது. அமைச்சரும், அரசனின் பரிவாரங்களும் கூடியிருந்தனர். கலை வாணிகள் இருவரும் அரச சபைக்கு வந்து இசை பாடினார்கள். முதலில் பாடினி யாழ் வாசித்து இசை பாடினாள். அரச சபையில் இருந்தவர் அவளுடைய இசைப் பாட்டைப் பாராட்டி வியந்து கைகொட்டி மகிழ்ந்தார்கள். பிறகு விறலி பாடினாள். அதை ஒருவரும் பாராட்ட வில்லை. ஆனால், அரசன் மாறாக விறலியை மெச்சினான். அவளைப் பாராட்டிப் புகழ்ந்தான். அரசன் கூறியதைக் கேட்டுச் சபையிலிருந்தவர் திகைத்தார்கள். உண்மைக்கு மாறாக விறலியை அரசன் பாராட்டி யதைக் கண்டு அதிசயப்பட்டார்கள். பிறகு, அரசனுடைய விருப்பம் இது என்று அறிந்து தங்களுடைய முன்னைய முடிவை மாற்றிக் கொண்டு விறலியின் இசையே சிறந்தது, விறலியே இசை வல்லவள் என்று கூறினார்கள். ‘இராஜன் மெச்சினவள் இரம்பை’ என்பது பழமொழியல்லவா? தென்னனவன் உட்கோள் எல்லை தெரிந்தனர் அவையத் துள்ளார் அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தனர் அவளைத் தானே முன்னவன் அருளைப் பெற்று மும்மையுந் துறந்தா ரேனும் மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்கா றன்றோ? பாண்டியன் தனக்குள் சிந்தித்தான். சபையோர் பாடினியின் பாட்டை மெச்சினார்கள். விறலியின் பாட்டை மெச்சவில்லை. நாம் விறலியின் இசையைப் புகழ்ந்ததைக் கண்டு இவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு விறலியைப் புகழ்ந்தார்கள். இந்த நிலையில் நாம் விறலியின் சார்பாக முடிவு கூறுவது சரியன்று. நாளைக்கும் இசைப்போட்டியை நடத்தினால் சபையோரும் என்னுடன் சேர்ந்து விறலியைப் புகழ்வார்கள். அப்போது விறலியின் சார்பாக முடிவு கூறுவோம். இவ்வாறு சிந்தித்து அரசன் ‘இசைப் போட்டியை நாளைக்குத் தொடர்ந்து நடத்துவோம். அப்போது ஒருமுகமான முடிவை காண்போம்” என்று கூறி இசைப்போட்டியை மறுநாளைக்குத் தள்ளி வைத்தான். பாடினி சபையில் நடந்ததை நன்றாக உணர்ந்தாள். முதலில் தன்னை வெற்றி பெற்றதாகக் கூறியவர்கள், பிறகு அரசனுடைய மாறுபட்ட கருத்தை யறிந்து விறலி வென்றதாகக் கூறினார்கள். அரசன் நீதி வழங்காமல் அநீதி பேசுகிறான். நாளைக்கும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசன் கருத்தையே தங்களுடைய கருத்தாகக் கூறுவார்கள். அரச சபையில் நடுநிலையான தீர்ப்புக் கிடைக்காது. இவ்வாறு கருதிய பாடினி அரசனை வணங்கி, “மன்னர் பெருமானே! நாளைக்கு நிகழும் இசைப் போட்டியைச் சொக்கப் பெருமான் திருக்கோயில் மண்டபத்தில் நடத்த அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள். அரசன் மறுக்க இயலாமல் “அவ்வாறே ஆகட்டும்” என்று ஆணையிட்டான். தென்னாரே றனையாய்! ஞாலம் மனுவழிச் செங்கோல் ஓச்சும் மன்னரே றனையாய்! வார வழக்கினை யாதலால் நீ சொன்னவா றவையுஞ் சொல்லத் துணிந்தது. துலைநா வன்ன பன்னகா பரணர் முன்போய்ப் பாடுவோம். பாடும் எல்லை. இருவரேம் பாட்டுங் கேட்டுத் துணிந்திவள் வென்றாள் என்னா ஒருவர் சந்நிதியிற் சொன்னாற் போதும் என்றுரைத்தாள் பாண்டித் திருமகன் அனைய வாறே செய்மின் நீர் செய்மின் என்ன மருவளர் குழலினார் தம் மனைபுகுந்து இருந்தார் அன்னாள் பாண்டியன் ஓரஞ்சாய்ந்து பேசியதைப் பற்றிப் பாடினி மனம் நொந்து வருந்தினாள். நேர்மையோடு நீதி வழங்க வேண்டிய அரசன் நடுவுநிலையில்லாமல் ஓரம் பேசியது பற்றி மனம் புழுங்கினாள். அரசன் நீதியாக இல்லாதபடியால் இனி நீதி வழங்க வேண்டியவர் சொக்கநாதக் கடவுளே என்று மனம் தேறினாள். அவள் சொக்கப் பெருமானை வணங்கி அவரிடம் முறையிட்டாள். தென்னவன் ஆகிவையம் செய்ய கோல் செலுத்திக் காத்த மன்னவ! வழுதி வார அழிவழக் குரைப்ப தானான் அன்னவன் கருத்துக்கேற்ப அவையரும் அனையர் ஆனார் பின் நடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவர், ஐயா! என்று கடவுளிடத்தில் முறையிட்டுக் கொண்டாள். மறுநாள் சொக்கநாதர் ஆலயத்தின் மண்டபத்திலே சபை கூடிற்று. அரசனும் அவனைச் சார்ந்த அரச சபையோரும் சபைக்கு வந்தார்கள். நகரத்துப் பெரு மக்களும் சபையில் வந்திருந்தார்கள். இசைப் போட்டிக்காரராகிய பாடினியும், விறலியும் வந்திருந்தனர். அரசன் இசைப் போட்டியைத் தொடங்கும்படி கட்டளையிட்டான். இசை யரங்கு தொடங்கிற்று. முதலில் விறலி பாடினாள். சபையோர் அவள் பாடலை ஓர்ந்து கேட்டார்கள். அவளுடைய இசை செம்மையாக இல்லை. அவளுடைய இசையை ஒருவரும் வியக்கவில்லை. புனைபெருக் குரல் கடத்தல் புரைத்தன் மேல் ஒருக்கல் மிக்க வினைபடு காக லோசை காகுளி விலங்கல் நீங்காத் தனிபடு கட்டை எட்டின் தகுதியில் திகழும் பொல்லா இனிமைஇல் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்தா ரில்லை விறலி பாடி முடிந்த பிறகு பாடினி இசை பாடினாள். இவளுடைய இசை சிறந்து இனிமையாக இருந்தது. கேட்டவர் வியந்து அதிசயித்தார்கள். ஆக்கரி முரற்சி யென்ன அருங்குயில் ஓசை என்ன வாங்கிருங் கடலுள்வாழும் வலம்புரி முழக்கம் என்ன ஓங்கிய சராசரங்கள் உருகிடப் பாடும் நீதி தூங்குமூ விசையைக் கண்டு துதித்தனர் இருந்தோர் யாரும் தணிலின் மாத்திரை ஒன்பானும் தானங்கள் எட்டினானும் நணுகிய கிரியை பத்து நன்பதின் மூன்றெழுத்தால் அணுகிய தொழிலால் ஓங்கு மைந்தினால் விளங்கு மும்மைத் திணையெழு பாடல்கண்டு தேவரும் அதிசயித்தார் விறலி பாடின இசைப்பாட்டுச் சிறக்காமலும் பாடினி பாடின இசைப்பாட்டுச் சிறந்தும் இருந்ததை எல்லோரும் அறிந்தார்கள். பாண்டிய மன்னனும் இதனை நன்குணர்ந்தான். உண்மைக்கு மாறாக விறலி வென்றாள் என்று தன்னுடைய அரச சபையில் நேற்றுக் கூறியதுபோல இந்தச் சபையில் கூறினால் மக்கள் தன்னைப் பழித்து நிந்திப்பார்கள் என்பதை அறிந்தான். அவன் என்ன செய்ய எண்ணினானோ அதைச் செய்ய அவனால் முடியவில்லை. நகர மக்கள் உள்ள இடத்தில் நடுநிலை தவறிப் பேச இயலவில்லை. ஆகவே, “பாடினி இசை வென்றாள்; விறலி தோற்றாள்” என்று உண்மையான தீர்ப்புக் கூறினான். சபையோர் எல்லோரும் சம்மதித்து மகிழ்ச்சியாரவாரஞ் செய்தார்கள். பிறகு, வென்றவர் தோற்றவரின் தோளின் மேல் ஏற வேண்டும் என்னும் தீர்மானப்படி இசை வென்ற பாடினியைத் தோற்ற விறலியின் தோள் மேல் ஏறி அமரச் செய்தார்கள். பின்னர் பாண்டியன் பாடினிக்குப் பட்டு, பொன், பொருள் முதலியவைகளைக் கொடுத்துப் பாடினியைச் சிறப்புச் செய்தான். பாடினியை இழிவுபடுத்தி அவமானம் செய்ய எண்ணிய அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதற்கு மாறாகப் பேரும் புகழும் சிறப்பும் பாடினிக்கு உண்டாயிற்று. பிறகு பாடினி நெடுங்காலம் பாண்டியன் அரண்மனையில் இசைவாணியாக இருந்தாள். இவளுடைய இசைக் கலையை உலகம் புகழ்ந்து பேசிற்று. (இந்த வரலாற்றைப் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத் திலும், பெரும்பற்றப் புலியூர் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்) அடிக்குறிப்புகள் 1. பாண்டியன் ஸ்ரீவல்லபன் கி.பி. 816 முதல் 862 வரையில் அரசாண்டான். 17. நீலகண்ட யாழ்ப்பாணர் தமிழ்நாட்டில் பாணர் என்னும் இனத்தார் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் பழங்காலத்தில் பேர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் யாழ் என்னும் இசைக்கருவி தமிழகத்தில் சிறப்பாக இருந்தது. யாழை வாசித்ததனால் அவர்களுக்கு யாழ்ப்பாணர் என்று பெயர் உண்டா யிற்று. பாணர் குலத்து மக்களும் இசைபாடுவதிலும் நாட்டியம் நாடகம் நிகழ்த்துவதிலும் வல்லவராக இருந்தனர். ஆகையால் அவர்கள் விறலியர் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் பாணர்கள், சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டு அரசர்களிடத்திலும், செல்வந்த ரிடத்திலும் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். பாணர் குலத்திலே பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் எருக்கத்தம் புலியூரில் வாழ்ந்தவர். பண் பாடுவதிலும் யாழ் இசைப்பதிலும் வல்லவர். அவர், பாணர் குலத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்னும் மங்கையை மணஞ் செய்து வாழ்ந்தார். மதங்க சூளாமணியும் நீலகண்டரைப் போலவே பண் பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவர். பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருந்த காலம்அது. நீல கண்டரும் சிவபக்தர். ஆகையால் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டுக் கோயில்களுக்குப் போய் யாழ் வாசித்து இசை பாடிக் கடவுளை வணங்கினார். அவருடைய இசைப் பாட்டினாலும் யாழின் இனிய நாதத்தினாலும் மனங்கவரப்பட்டு மக்கள் திரள்திரளாகச் சென்று அவருடைய இசையமுதத்தைப் பருகி மகிழ்ந்தார்கள். ஊர்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் இசைபாடி பக்தி செய்து வந்தபடியால் அவருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. சோழ நாட்டுக் கோயில்களில் இசை பாடி முடித்த பிறகு திரு நீல கண்டர் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையில் கோயில் கொண்டிருக் கும் சொக்கநாதப் பெருமானை வணங்கி, கோயிலின் வெளியே நின்று யாழ் வாசித்துப் பண் பாடினார். அவர் பாடின தேவகானத்தைக் கேட்டு மதுரை மக்கள் மனம் மகிழ்ந்தார்கள் அன்று இரவு சொக்கநாதப் பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந்தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்,” என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது அடியார்கள் தாங்கள் கண்ட கனவை யுணர்ந்து திருநீலகண்டரைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டுபோய்ப் பலகையிட்டு அதன் மேல் இருந்து இசை பாடச் சொன்னார்கள். அவர் அவ்வாறே பலகையில் அமர்ந்து இசை பாடினார். சிவபெருமானுடைய சிறப்புக்களை யாழில் இசைத்துப் பாடினார். திரிபுரம் எரித்தவாறும் நேர்மிசை நின்றவாறும் கரியினை யுரித்தவாறும் காமனைக் காய்ந்த வாறும் அரியயற் கரிய வாறும் அடியவர்க் கெளியவாறும் பிரிவினால் பாடக்கேட்டுப் பரமனார் அருளினாலே அந்தரத் தெழுந்த ஓசை அன்பினிற் பாணர் பாடும் சந்த யாழ் தரையிற் சீதத் தாக்கில் வீக் கழியும் என்று சுந்தரப் பலகை முன் நீர் இடும் எனத் தொண்டர் இட்டார் செந்தமிழ்ப் பாணனாரும் திருவருள் பெற்றுச் சேர்ந்தார் (திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம் 5, 6) சில நாட்கள் அங்குப் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண் டிருந்த பிறகு சோழ நாட்டுக்குத் திரும்பி வந்து திருவாரூரில் தங்கி அந்தக் கோயிலில் யாழ் இசைத்துப் பண்பாடிக் கொண்டிருந்தார். நீலகண்டனாருடைய இசையின் புகழும் பக்தியின் மேன்மையும் எங்கும் பரவின. அந்தக் காலத்தில் சீகாழியில் ஞானசம்பந்தர் என்னும் சிவபக்தர் தோன்றிக் கோயில்கள் தோறும் சென்று பக்திப் பாடல்களாகிய திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் செய்தியை நீல கண்டர் கேள்விப்பட்டார். ஞானசம்பந்தர் பாடும் இசைப் பாடல்களைத் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசிக்க வேண்டுமென்று கருதித் தம்முடைய மனைவியார் மாதங்கியாருடன் சீகாழிக்கு வந்தார். வந்து ஞானசம்பந்தத்தைக் கண்டு அவருக்குத் தம்முடைய கருத்தைத் தெரிவித்தார். ஞான சம்பந்தரும் இவருடைய இசையைப் பற்றி முன்னமே கேள்விப் பட்டிருந்தபடியால் இவரை வரவேற்றார். தோணியப்பர் திருக்கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய் யாழ் இசைத்து இசை பாடுமாறு கூறினார். நீலகண்டர் யாழ் வாசிக்க மதங்கசூளாமணியார் பாட்டுப் பாடினார். அவ்விசைப் பாடலைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்து புகழ்ந்தார்கள். தானா நிலைக் கோல்வடித்துத் படிமுறைமைத் தகுதியினால் ஆன இசை ஆராய்வுற்று அங்கணர்தம் பாணியினை மானமுறைப் பாடினியார் உடன்பாடி வாசிக்க ஞானபோ னகர் மகிழ்ந்தார் நான்மறையோர் அதிசயித்தார் யாழில் எழும் ஓசையுடன் இருவர்மிடற் றிசை ஒன்றி வாழிதிருத் தோணியுளார் மருங்கணையும் மாட்சியினைத் தாழும்இரு சிறைப்பறவை படிந்துதனி விசும்பிடை நின்று ஏழிசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார் (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 135, 136) அன்று முதல் திருஞான சம்பந்தரும் திருநீலகண்ட யாழ்ப் பாணரும் தமிழ்நாட்டுத் தலங்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் கடவுளை வணங்கி இசை பாடினார்கள். ஞான சம்பந்தர் பதிகங்களைப் பாட அந்தப் பாடல்களை யாழ்ப்பாணர் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசித்தார். இவ்விசைச் செல்வர்களின் இசையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தார்கள். இவர்களுடைய புகழ் நாடெங்கும் பரவி இவர்களுடைய இசையைக் கேட்பதற்கு ஊர்கள் தோறும் மக்கள் திரள் திரளாகக் கூடினார்கள். திருஞான சம்பந்தரும் திருநீல கண்டரும் திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் தோறும் சென்று பண் பாடியும் யாழ் வாசித்தும் இசையமுதம் வழங்கினார்கள். பல ஊர்களுக்குச் சென்று பிறகு தருமபுரம் என்னும் ஊருக்கு வந்தார்கள். தருமபுரம் நீலகண்டரின் தாயார் பிறந்த ஊர். அவ்வூர் மக்கள் திரளாக வந்து இவர்களை வர வேற்றார்கள். அவ்வூர்ப் பாணர் குலத்து மக்களும் வந்து இவர்களை வர வேற்றார்கள். அவர்கள் நீலகண்டருடன் அளவளாவி மகிழ்ந்தார்கள். அப்போது, திருநீலகண்டர் அவர்களிடத்தில், “சம்பந்தப் பிள்ளையார் பாடும் திருப்பதிகப் பாட்டுகளை அடியேன் யாழில் இட்டுப் பண் இசைக்கும் பேறுபெற்றேன்” என்று கூறி மகிழ்ந்தார். இதைக்கேட்ட பாணர்கள், “பதிகங்களை யாழில் இசை யமைத்துப் பாடுக. அதனால் உலகத்தில் இசைக் கலை வளரட்டும்” என்று கூறினார்கள். நீலகண்டர், “யாழில் பண் அமைத்து இசை வாசிக்க முடியாத பாடல்களும் உள்ளன” என்று கூறி, அவ்வாறு பண் அமைத்து யாழ் வாசிக்க முடியாத பதிகத்தைப் பாடும்படி சம்பந்தப் பிள்ளை யாரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே ஞானசம்பந்தர் பதிகம் பாடினார். மாதர் மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடையுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமோ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வேண்டிரை யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே இது போன்று பதினொரு செய்யுட்களை ஞானசம்பந்தர் பாடினார். இதற்கு யாழ்முறிப்பதிகம் என்பது பெயர். இந்த இசையை யாழில் பண் அமைத்து இசைக்க முடியவில்லை யாகையால், நீலகண்டர், “இந்த இசையை யாழில் யமைக்க முடியாது, இந்த யாழ் இருந்து என்ன பயன்?” என்று கூறி அதைத் தரையில் அறைந்து உடைக்க முயன்றார். அப்போது ஞானசம்பந்தர் தடுத்து “இந்த இசையை யமைத்து வாசிக்க முடியாமற் போனாலென்ன? மற்ற இசைகளை அமைத்து வாசிக்கலாமல்லவா?” என்று கூறினார். நீலகண்டருக்கு அவர் கூறியது சரி என்று தெரிந்தது. பிறகு அந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்று பக்திப் பிரசாரஞ் செய்து இசை பாடினார்கள். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன. திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருஞான சம்பந்தரும் இசை வாசித்தும் பதிகம் பாடியும் பக்தி இயக்கத்தை நாட்டில் வளர்த்தார்கள். திருஞானசம்பந்தருக்குத் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஊரில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்குப் பல பெரியவர்களும் அடியார்களும் வந்திருந்து சிறப்புச் செய்தார்கள். திருமணத்துக்குப் பிறகு மணப்பந்தலில் பேரொளி தோன்றிற்று. ஞானசம்பந்தர் அந்தச் ஜோதியில் புகும்படி எல்லோரையும் அனுப்பினார். அவர்களோடு நீலகண்டப் பெரும்பாணரையும் மதங்க சூளாமணியாரையும் அனுப்பினார். கடைசியில் ஞானசம்பந்தர் தம்முடைய மணப்பெண்ணுடன் ஜோதியில் புகுந்து மறைந்தார் என்று புராணம் கூறுகிறது. பக்தி இயக்க காலத்தில் இசைக்கலை மூலமாகப் பக்தியை வளர்த்தவர் களில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். 18. பாணபத்திரன் பாண்டிய நாட்டை வரகுண மகாராஜன் கி.பி. 862 முதல் 882 வரையில் அரசாண்டான். இவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியனின் மகன். இவனை இரண்டாம் வரகுணபாண்டியன் என்று கூறுவார்கள். இவன் இசைக் கலையில் வல்லவன் சிறந்த சிவ பக்தன். இந்தப் பாண்டியனுடைய அரண்மனையில் இசைப் புலவனாக இருந்தவன். இசைக் கலையில் பேர்போன இவன் பாணர் குலத்தவ னாகையால் இவனைப் பாணபத்திரன் என்று கூறினார்கள். வரகுண பாண்டியனுடைய தந்தையாகிய ஸ்ரீ வல்லபன் காலத்திலும் பாணபத்திரன் அரண்மனையில் இசைப் புலவனாக இருந்தான். அரண்மனைப் புலவனாகையினால் அதன் அடையாளமாக பாணபத்திரன் பட்டும் மணிமாலையும் பெற்றிருந்தான். இசைப் புலவன் பாணபத்திரனும் சிவபக்தன். அரண்மனையில் இசைபாடின பிறகு மதுரைச் சொக்கநாதர் ஆலயத்துக்குப் போய் அங்கு இசைபாடிக் கடவுளை வணங்குவான். இவனுடைய மனைவியான பாடினி ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இசைவாது வென்று புகழ் பெற்றவள். யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும் வல்லவனான பாணபத்திரனின் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது. அந்தக் காலத்தில் சோழநாட்டிலே ஏமநாதன் என்னும் பேர் போன இசைப் புலவன் இருந்தான். ஏமநாதன் தன்னுடைய இசைப் புலமையைப் பாண்டி நாட்டில் புலப்படுத்த வேண்டு மென்று எண்ணினான். புகழ் பெற்ற பாணபத்திரனை இசைப் போட்டியில் வெல்லவேண்டும் என்றும் ஆசைப்பட்டான். ஆகையால் அவன் தன்னுடைய சீடர்களோடு பாண்டி நாட்டுக்கு வந்து மதுரை மாநகரத்தில் பாண்டியனுடைய சபையில் இசை பாடினான். அவனுடைய இசையைக் கேட்டு மகிழ்ந்த வரகுண பாண்டியன் அவனுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புகள் செய்தான். பரிசு களைப் பெற்றுக் கொண்ட ஏமநாதன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே! என்னை இசைக் கலையில் வெல்பவர் இந்த உலக்தில் ஒருவரும் இல்லை” என்று தன்னைப் புகழ்ந்து கொண்டான். மின்னும் புகழ்க்கு நல்லானே! வீராகரனே! வியனுலகின் மன்னர் பரவும் மன்னவனே! மலயா நிலஞ்சேர் நாட்டரசே! முன்னை நெறி நூல் இயல் இசைகள் முழுதும் உணர்ந்த (பெருமானே? என்னை ஒழிய இசை வல்லார் இல்லை உலகில் (எனவுரைத்தான் இதைக்கேட்ட பாண்டியன் தன்னுடைய இசைப் புலவனான பாண பத்திரனின் இசைப் புலமையையும் ஏமநாதனுடைய இசைப் புலமையையும் அறிய எண்ணினான். ஆகவே இவ்விரு இசைப் புலவர்களுக்கும் இசைப் போட்டி நடத்தக் கருதினான். ஏமநாதன் தங்குவதற்கு வீடு முதலியவை களை அமைத்துக்கொடுத்தான். அந்த இல்லத்தில் ஏமநாதன் தன்னுடைய சீடர்களுடன் தங்கியிருந்தான். பிறகு, அரசன் தன்னுடைய இசைப் புலவனான பாணபத்திரனை அழைத்துச் சோழ நாட்டு இசைப் புலவன் ஏம நாதனுடன் இசை வாது செய்து அவனை வெல்ல முடியுமா என்று கேட்டான். பாணபத்திரன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே! அவ்வாறே செய்வேன். அஞ்சேன் அஞ்சேன் ஒருவர்க்கும் அஞ்சா திங்கு வந்தவனை மிஞ்ச அஞ்சும் படிபாடி வென்றே ஓட்டிவிடக் கடவேன்” என்று கூறினான். அரசன் இசைப் போட்டிக்கு நாள் குறித்து அந்த நாளில் இரண்டு இசைவாணர்களும் அரச சபைக்கு வந்து இசை பாட வேண்டும் என்று அறிவித்தான். இந்தச் செய்தி நகரமெங்கும் பரவிற்று. ஏமநாதனுக்கும் பாணபத்திரனுக்கும் இசைப் போட்டி நிகழப் போவதை அறிந்த போது மதுரை நகரத்து மக்கள் பரபரப்படைந்தார்கள். இசைப் போட்டி நடப்பதைக் காண அவர்கள் விரும்பினார்கள். இதற்கிடையில் ஏமநாதனுடைய சீடர்கள் நகரத்தில் சென்று கடை வீதியிலும் வேறு இடங்களிலும் இசை பாடித் தங்களுடைய இசைக் கலையின் சிறப்பை நகர மக்களுக்குப் புலப்படுத்தினார்கள். சுந்தர அணி அணிந்து தொகுமுடிச் சுற்றுஞ் சுற்றிச் சிந்துரப் பொட்டும் இட்டுச் சிறந்த குப்பாயம் இட்டுச் சந்தனம் இட்டு வீணை தண்டு யாழ் கையில் வாங்கி வந்த தந்திரி திருத்திப் பாடினார் மயங்க எங்கும் அவர்கள் பாடின இசைப் பாட்டுகள், கேட்டவர் மனத்தைக் கவர்ந்து மகிழ்வித்தன. நகர மக்கள் அவர்களை மெச்சிப் புகழ்ந்தார்கள். பாண்டியனுடைய இசைப் புலவரான பாணபத்திரனும் அந்தச் சீடர்களுடைய இசையைக் கேட்டு வியந்தான். ‘சீடர்களே இவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள் என்றால் ஆசிரியனுடைய இசை மிகவும் சிறந்ததாகும் என்பதில் ஐயமில்லை ஏமநாதனுடன் பாடி இசை வெல்வது கடினமாகத் தான் இருக்கும் போலும். எதற்கும் சொக்கப் பெருமான் இருக்கிறான். கடவுள் திருவருள் இருந்தால் இசை செல்வேன்’ என்று பத்திரன் தனக்குள் கூறிக் கொண்டான். வழக்கம் போல சொக்கநாதர் திருக்கோயிலுக்குச் சென்று யாழ் வாசித்து இசை பாடி வீட்டுக்குச் சென்றான். நாளைக்கு அரச சபையில் பாணபத்திரனுக்கும் ஏம நாதனுக்கும் இசைப் போட்டி நடக்கப்போகிறது. ஏமநாதனும் பாணபத்திரனும் தேர்ந்த இசைப் புலவர்கள். இசைப் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். யார் இசையில் வெற்றி பெறப் போகிறார்களோ பார்ப்போம் என்று நகர மக்கள் பேசிக் கொண்டார்கள் நாளைக்கு நடைபெறப் போகிற இசையரங்கைப் பற்றி நகரமெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அன்று மாலை நேரத்தில் விறகு விற்கும் ஒருவன் விறகுக் கட்டு ஒன்றைக் தலைமேல் சுமந்துகொண்டு மதுரை நகரத்து வீதி வழியே நடந்துகொண்டிருந்தான். அவன் சற்று வயது சென்றவன். அவன் கையில் யாழ் ஒன்று இருந்தது. தெருக்கள் தோறும் சுற்றித் திரிந்து அலுத்தவன் போலத் தோன்றினான். அவன், இசைக் கலைஞன் ஏமநாதன் தங்கியிருந்த தெருவிலே நுழைந்தான். தலைமேல் விறகுக் கட்டும் கையில் யாழுமாகக் காணப்படுகிற அவனுடைய விசித்திரக் காட்சி அவனைப் பார்த்தவரின் மனத்தை ஈர்த்தது. விறகுக்கும் யாழுக்கும் என்ன சம்பந்தம்! ஏமநாதன் இருந்த வீட்டண்டை வந்தபோது அவன் இளைப்பாற எண்ணி விறகுக்கட்டை அவ்வீட்டுத் திண்ணையின் மேல் இறக்கி வைத்து ‘அப்பாடா’ என்று திண்ணைமேல் அமர்ந்தான். சற்று நேரம் களைப்பாறின பிறகு அவனுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்பட்டது. அவன் தெம்பொடு இசைபாடத் தொடங்கினான். யாழைக் கையில் எடுத்துத் திவவுகளை வீக்கி யாழ் நரம்புகளைச் சரிப்படுத்தி மெல்ல யாழ் வாசித்துக்கொண்டு இசை பாடினான். யாழின் இசையும் பாட்டின் இசையும் ஒன்றியிணைந் திருந்தன. மதுரை ஆலவாய்த் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சொக்கப் பெருமான் மீது அவன் இசைப்பாட்டுப் பாடினான். அப்போது அவன் பாடின இசை சாதாரிப் பண். விரைசார் மலரோன் அறியா விசிர்தன் அரைசாய் மதுரை அமர்ந்தான் என்னே! அரைசாய் மதுரை அமர்ந்தான் அவனென் புரைசார் மனனும் புகுந்தான் என்னே! பாடல் மறையும் தெளியாப் பரமன் கூடல் கோயில் கொண்டான் என்னே! கூடல் போலக் கொடியேன் அகமும் ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே! நீல வண்ணன் தேரு நிமலன் ஆல வாயில் அமர்ந்தான் என்னே! ஆல வாயான் அலரில் வாசம் போலேன் உளமும் புகுந்தான் என்னே! அவன் பாடின சாதாரிப்பண் அண்டை அயலில் இருந்தவர் காதுகளில் புகுந்து மனத்தைக் கவர்ந்தது. அவர்கள் வியப்புடன் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து நின்றனர். விறகு வெட்டியின் அமிழ்தம் போன்ற இசைப்பாட்டு தேவகானமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் தம்மை மறந்து இசையில் மனம் ஒன்றி அசை வற்று நின்றார்கள். வீட்டுக்குள் இருந்த இசைப் புலவன் ஏமநாதனும் இவ்வினிய இசை கேட்டு அதிசயப்பட்டு வெளியே வந்தான். எளியவனான விறகு வெட்டி யொருவன் அழுக்கடைந்த மேனியுடன் புழுதி படிந்த ஆடையுடன், திண்ணைமேல் அமர்ந்து தேவகானம் பாடு பதைக் கண்டு ஆச்சரியப் பட்டு அசைவற்று நின்று சாதாரிப் பண்ணைச் செவிமடுத்துக் கேட்டான். இசை பாடி முடிந்தவுடன் ஏமநாதன் அவன் அருகில் சென்று, “நீ யார்? எங்கிருப்பவன் நீ? இது என்ன விறகுக் கட்டு” என்று வினவினான். “ஐயா! நான் ஏழை. விறகு விற்றுப் பிழைக்கிறேன். முன்பு எங்கள் இசையாசிரியர் பாணபத்திரரிடத்தில் மாணவனாக இருந்து இசை பயின்றேன். என்னை, இசை பாடத் தகுதியற்றவன் என்றும், உதவாக்கறை, கடை மாணாக்கன் என்றும் கூறி என்னை விலக்கி விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு விறகு விற்கிறேன்.” ஏமநாதன் தன்னுடைய மனத்துக்குள்ளே சிந்தித்தான்: ‘என்ன பாணபத்திரனுடைய கடைமாணாக்கன்! உதவாக் கறை! உதவாக்கறையே இப்படி இசை பாடினால் இவனுடைய ஆசிரிய னுடைய இசை எப்படியிருக்கும்? நாளை நடக்க இருக்கும் போட்டியில் பாணபத்திரனை எப்படி வெல்ல முடியும்!’ இவ்வாறு மனதுக்குள்ளே எண்ணிக்கொண்ட ஏமநாதன், “நீ இப்போது பாடின சாதாரிப் பண்ணை இன்னொரு முறை பாடுக” என்று கேட்டான். விறகுவெட்டி மறுபடியும் சாதாரிப் பண்ணைப் பாடினான். அவனுடைய பாட்டின் இசையும் யாழின் இசையும் இயைந்து தேனும் பாலும் போலக் கலந்து இனித்தது. அவன் பாடின பாட்டு முன்னையதை விட மிகச் சிறப்பாக இருந்தது. எல்லோரும் இசையைக் கேட்டுச் சொக்கி மயங்கி அதிசயித்து வியந்து பாராட்டினார்கள். “பொழுது சாய்ந்துவிட்டது. வயிற்றுப் பசிக்கு வழி தேடவேண்டும். இங்குப் பாடிக் கொண்டிருந்தால் என் வயிற்றுப் பாடு எண்ணாவது. நாழி அரிசிக்கு வழி தேட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு அவன் விறகுக் கட்டைத் தூக்கித் தலை மேல் வைத்துக் கொண்டு, ‘விறகோ விறகு, விறகு வாங்கலையோ விறகு’ என்று கூவிக்கொண்டே வீதியில் நடந்தான். அங்கிருந்தவர் களும் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றனர். ஏமநாதன் மட்டும் அங்கு நின்ற வண்ணமே அசைவற்று நின்று விறகுவெட்டி தெருக்கோடியில் போகிறவரையில் அவனையே பார்த்துக்கொண்டிருந்து பிறகு பெருமூச்சு விட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றான். அவனுடைய மனதில் ஏதோ அச்சம் புகுந்து விட்டது. தனக்குள் ஏதேதோ எண்ணினான். ‘இவ்வளவு நேர்த்தியாக தேவகானம் பாடுகிற விறகு வெட்டி பாணபத்திரனுடைய கடை மாணாக்கன்! இவனை இசைப் பாட்டுக்கு உதவாதவன் என்று பாணபத்திரன் ஒதுக்கித் தள்ளி விட்டான்! அப்படியென்றால் பாணபத்திரன் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருக்க வேண்டும்! பத்திரனை இசைப் போட்டியில் வெற்றி கொள்வது கடினம் போலத் தோன்றுகிறது. நாளைக்கு அரச சபையில் தோற்று மானம் இழந்து இழி வடைகிறதைவிட சபைக்குப் போகாமலிருப்பது நல்லது. ஊரில் இருந்துகொண்டே சபைக்குப் போகாமலிருப்பது சரியன்று. இன்று இரவிலேயே ஊரைவிட்டுப் போய் விடுவதுதான் உத்தமம்.’ இவ்வாறு ஏமநாதன் தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தான். நகரத்துக்குள் இசை பாடச் சென்றிருந்த அவனுடைய சீடர்கள் மாலையானபோது வந்து சேர்ந்தார்கள். ஏமநாதன் அவர்களை அருகில் அழைத்து தணிந்த குரலில் ஏதோ மெல்லப் பேசிக்கொண்டிருந்தான். இரவு நடுசாமம் ஆயிற்று ஊரடங்கிவிட்டது. நகர மக்கள் கதவடைத்துத் தங்கள் தங்கள் இல்லங்களில் உறங்கிக் கொண்டிருந் தார்கள். எங்கும் அமைதி நிறைந்திருந்த அந்த நள்ளிரவிலே ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுக் கதவு மெல்லத் திறந்தது. ஏமநாதனும் அவ னுடைய சீடர்களும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியே வந்தார்கள். மௌனமாக வீதிவழியே நடந்து சென்றார்கள். அவர்கள் நள்ளிரவில் ஒருவருக்கும் தெரியாமல் நகரத்தை விட்டுப் போய் விட்டார்கள். இரவு கடந்து வைகறையாயிற்று. கிழக்கு வெளுக்கத் தொடங்கிற்று. வானத்தில் மின்னிக் கொண்டிருந்த விண்மீன்கள் ஒளி மங்கி மறைந்து கொண்டிருந்தன. பொழுது விடிந்து ஊர் விழித்துக் கொண்டது. இன்று அரச சபையில் பேர் போன இரண்டு இசைப் புலவர்களுக்கு இசைப் போட்டி நடக்கப் போகிற நாள். நகரத்தில் இதே பேச்சாக இருந்தது. குறித்த வேளையில் மண்டபத்தில் மக்கள் வந்து சேர்ந்தார்கள். நகரப் பெருமக்களும், அமைச்சர்களும் மண்டபத்துக்கு வந்தார்கள். பாணபத்திரன் இசைக் கருவியுடன் வந்து அரங்கத்தில் அமர்ந்தான். குறித்த நேரம் வந்தும் ஏமநாதனோ இன்னும் வரவில்லை. வரகுணபாண்டியன் பரிவாரங்களோடு வந்து சிம்மா சனத்தில் அமர்ந்தான். இசைப்புலவன் இன்னும் வராததைக் கண்டு சபையோர் மண்டபத்தில் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஏமநாதனோ அவனைச் சார்ந்தவர்களோ ஒருவரும் சபையில் காணப்படவில்லை. ஏமநாதன் வராததைக் கண்ட அமைச்சர் சேவகரை அழைத்து ஏமநாதனை அழைத்துவர விரைந்து அனுப்பினார். விரைந்து சென்ற சேவகர் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டை யடைந்து அங்கு ஒருவரும் இல்லாததை யறிந்து, இசை யரங்கத்துக்குப் போயிருப்பான் என்று கருதி விரைந்து திரும்பி வந்தனர். ஏமநாதன் வீட்டின் இல்லாததை அமைச்சரிடம் அறிவித்தார்கள். அவனை எப்படியாவது கண்டுபிடித்து விரைவாக அழைத்து வரும் படி அமைச்சர் மீண்டும் சேவகரை அனுப்பினார். சேவகர் மறுபடியும் அங்குவந்து இசைப் புலவர் வீட்டில் இல்லாததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவரைக் கேட்டார்கள். ஏமநாதனும் அவனுடைய சீடர்களும் எப்போது எங்கே போனார்கள் என்பது அண்டை அயலாருக்கும் தெரியவில்லை. ஆனால் நேற்று மாலை அங்கு நடந்ததை அவர்கள் கூறினார்கள். விறகு வெட்டி ஒருவன் வந்து அந்த வீட்டுத் திண்ணை மேல் இருந்து இசைப் பாட்டுப் பாடினதையும் அதைக் கேட்டு எல்லோரும் வியந்துப் பாராட்டியதையும் வீட்டுக்குள்ளிருந்த இசைப் புலவன் ஏமநாதனும் வெளியே வந்து அந்த இசைப் பாட்டைக் கேட்டு அதிசயப் பட்டதையும் இன்னொரு முறை அவர் அந்தப் பாட்டை பாடச் சொல்லிக் கேட்டதையும் அந்த விறகு வெட்டி, தன்னைப் பாண பத்திரனின் சீடனாக இருந்து ஒதுக்கப்பட்டவன் என்று சொன்னதையும் அவர்கள் சேவர் களிடம் கூறினார்கள். இந்தச் செய்திகளையெல்லாம் சேவகர் அறிந்து கொண்டு விரைவாக மண்டபத்துக்குப் போய் அமைச்சரிடம் தாங்கள் கேட்ட செய்தியைக் கூறினார்கள். அமைச்சர் இதையெல்லாம் அரசனுக்குத் தெரிவித்தார். பிறகு அமைச்சரும் அரசரும் யோசித்து ஏமநாதன் மறைந்து போன காரணத்தை ஊகித்து அறிந்தார்கள். பாணபத்திரன் தன்னுடைய சீடனை, ஏமநாதன் இருக்கும் தெருவிற்கு அனுப்பி அவன் அறியும்படி இசைப்பாட்டுப் பாடும்படி செய்திருக்கிறான். அந்தச் சீடன் பாடின இசையைக் கேட்டு ஏமநாதன் பாணபத்திரனுடன் இசை பாடி வெல்ல முடியாது என்று பயந்து நள்ளிரவில் யாருக்கும் கூறாமல் ஊரைவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் ஊகித்தறிந்தார்கள். பத்திரன் ஏன் அப்படிச்செய்ய வேண்டும்? தன் சீடனை விட்டுப் பாடச் செய்து ஏமநாதனை விரட்டியது தவறு என்று அரசன் பத்திரன் மேல் வெறுப்படைந்தான் சபையில் அமர்ந்திருந்த பத்திரனை அழைத்து இசைப் போட்டிக்கு நாள் குறித்திருக்கும்போது சபையில் வந்து இசைப் போட்டியில் பாடாமல் சீடனை அனுப்பிப் பாடச் செய்து ஏமநாதனை விரட்டியது ஏன் என்று வினவினான். பாணபத்திரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே தாங்கள் கூறுவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றான். அருகிலிருந்த அமைச்சர் பத்திரனைப் பார்த்து வினவினார்: “அந்த விறகு வெட்டி உம்முடைய சீடர்தானே.” “விறகு வெட்டியா! என்னுடைய சீடனா! எனக்கு அப்படி யாரும் சீடன் கிடையாதே!” நேற்றுப் பிற்பகல் உன்னுடைய சீடனை ஏமநாதன் வீட்டண்டை சென்று இசை பாட நீர் அனுப்பவில்லையா? ஏமநாதனை ஊரைவிட்டுப் போகும்படி விரட்டவில்லையா? “இல்லை. யாரையும் நான் அனுப்பியதில்லை. விறகு வெட்டி யாரும் எனக்குச் சீடனாக இருந்ததில்லை. இது உண்மை. ஏமநாதனுடைய சீடர்கள் நகரத்தில் ஆங்காங்கே பாடியதை நான் கேட்டு வியந்த துண்டு. ஆனால், என்னுடைய சீடர்களை ஏமநாதனிடம் அனுப்பி நான் இசைபாடச் செய்யவில்லை. இது முக்காலும் உண்மை! உண்மை! உண்மை!” பாணபத்திரன் உண்மையைக் கூறுகிறான் என்பது தெரிந்தது. பாண பத்திரன் தன்னுடைய சீடனை அனுப்பி ஏம நாதனை விரட்டிவிட்டான் என்று தாங்கள் ஊகித்தது தவறு என்று உணர்ந்தார்கள். அப்படியானால் அந்த விறகுத் தலையன் யார்? அவன் ஏன் தன்னைப் பாணபத்திரனின் சீடன் என்று சொல்லிக் கொண்டான்? இதுபற்றி எல்லோரும் வியப்படைந்தார்கள். பாணபத்திரனும் வியப்படைந்தான். இது எல்லோருக்கும் புதுமையாக இருந்தது. பாணபத்திரன் சொக்கப் பெருமானுடைய பக்தன். அவன் நாள்தோறும் இரவில் சொக்கநாதர் கோவிலுக்குப் போய் உருக்கமாக இசை பாடுகிறான். சொக்கப் பெருமானே விறகு வெட்டி போல வந்து பத்திரனுடைய சீடன் என்று சொல்லிக் கொண்டு ஏமநாதனிடம் இசை பாடி இருக்க வேண்டும். அந்த இசைப் பாட்டைக் கேட்டு ஏமநாதன் ‘சீடனுடைய இசையே இப்படி என்றால் ஆசிரியனுடைய இசை எப்படி இருக்கும்’ என்று எண்ணி அச்சங்கொண்டு இரவோடு இரவாக ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். சிவபக்தனாகிய வரகுண பாண்டியன் இவ்வாறே எண்ணினான். வரகுண பாண்டியன் பாணபத்திரன் மேல் பெருமதிப்புக் கொண்டான். “நீர் இன்று முதல் என்னுடைய இசைப் புலவர் அல்லர். எம் பெருமான் சொக்கப் பெருமானுடைய இசைப் புலவராவீர்” என்று கூறினான். பத்திரனுக்குப் பெரும் பொருளைப் பரிசாக வழங்கி அனுப்பினான். அரண்மனையில் இசைப்புலவனாக இருந்த பாணபத்திரன் அன்று முதல் சொக்கநாதர் கோவிலில் சொக்கப் பெருமானுடைய இசைப் புலவனாக அமர்ந்தான். அரசனே அவனைக் கோயில் இசைப் புலவனாகச் செய்துவிட்டாரல்லவா? திருக்கோயில் சபையார் பத்திரனைத் தங்கள் கோவில் இசைவாணராக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். பாணபத்திரன் நாள் தோறும் காலையிலும் மாலையிலும் திருக்கோயிலுக்குச் சென்று இசை பாடிக் கொண்டிருந்தான். அயன் தலை யறுத்தல் பாடி யரக்கனை யடர்த்தல்பாடிக் கயந்தனை உரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புரம் எரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடி சயந்தரும் புகழ்கள் மற்றும் பாடினான் சால வாழ்த்தி கோவிலுக்கு வந்து கடவுளை வணங்கிய பிறகு மக்கள் பாண பத்திரனுடைய இசைப் பாட்டை நாள்தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள். இவ்வாறு இருக்கும் காலத்தில் ஒருநாள் இரவு திடீரெனப் பெருமழை பெய்தது. எங்கும் வெள்ளமும் சேருமாயிற்று. இடி மின்னல் மழைகளையும் பாராமல் பாணபத்திரன் வழக்கம் போலச் சொக்கர் ஆலயஞ் சென்றான். சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. அவனுக்குக் குளிரினால் உடல் நடுங்கிற்று. யாழின் நரம்புகள் நனைந்துவிட்டன. ஈரத் தரையில் நின்று கால்கள் சிலிர்த்துவிட்டன. இவ்வளவு துன்பத்திலும் அவன் சொக்கப்பெருமான் மேல் பக்தியோடு இசைபாடினான். மைக்குலம் ஏற்றுங்கல்லால் அம்பினால் மாமருந்தால் தக்கமெய் சால நோவோன் தந்திரி யாழ் நனைந்து மிக்க கூர் உசிர்நனைந்து விரல் நடுக்குறவும் போகான் சிக்கன உடனே நின்று பாடினான் சிவனையுன்னி நரம்பு நனைந்து இசைமழுங்க நனைந்து உடலம் பனிப்பஇசை வரம்பொழுகு விரல் மிறைத்து வலிவாங்க மயிர் சிலிர்ப்ப நிரம்பிய சேறு அடிபுதைப்ப நின்றுநிறை யன்பிசையாய் அரும்புதல் போல் என்புருக்கும் அமுத இசை பாடுமால்! அப்போது கோயிலில் இருந்த எல்லோர் காதிலும் ஒரு குரல் தெளிவாகக் கேட்டது, ‘பத்திரன் சேற்றில் நின்று கொண்டு பாடுகிறான். அவனுக்குப் பலகை இடுங்கள், பத்திரன் பலகை மேல் இருந்து பாடட்டும்.’ இவ்வாறு அந்தக் குரல் கூறியது. இந்த ஆகாயவாணி ‘தெய்வக் கட்டளை’ போலத் தோன்றிற்று. இது கடவுளுடைய தெய்வ வாக்கு என்று எல்லோரும் கருதினார்கள். ஒருவர் மனைப் பலகை ஒன்றைக் கொண்டு வந்து பாணபத்திரன் அருகில் தரைமேல் இட்டார். அதன் மேல் இருந்து பாண பத்திரன் யாழ் வாசித்து இசை பாடினான். காண்டகு குரலொடு துத்தங் கைக்கிளை வேண்டிய உழை இளி விளரி தாரம் என்று ஈண்டிய நெறியின் ஏழிசையும் இன்புறப் பூண்ட தந்திரிகளில் புரிந்து பாடினான் நெடுநேரம் பத்திரன் பக்தியோடு சொக்கப் பெருமான் மேல் பாடினான். பெய்த பெருமழை நின்றுவிட்டது. ஆகாயத்தில் மேகங்கள் மறைந்துவிட்டன. தூயவானத்திலே விண்மீன்கள் வெளிப்பட்டு மின்னின. காலமல்லாக் காலத்தில் திடீரென்று பெரு மழை பெய்து பிறகு அறவே நின்றுவிட்டது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அன்று முதல் பாணபத்திரன் அந்தப் பலகைமேல் இருந்து இசை பாடிக் கொண்டிருந்தான். பாண்டியன் பரிசாகக் கொடுத்த பெரும் பொருளைப் பாணபத்திரன் தன்னுடைய உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்தப்படியால் அவன் நாளடைவில் வறியவனானான். ஏழ்மையினால் வருந்தினான். அவனுடைய வறுமை நாளுக்கு நாள் அதிகமாயிற்று. ஆனாலும் அவன் நாள்தோறும் வந்து திருக்கோயிலில் இசை பாடிக் கொண்டிருந்தான். கடவுளை இசைப் பிரியர் என்பர். பத்திரன் நாள்தோறும் அவருக்காகவே பாடிக் கொண்டிருக்கும் இசையை அவர் கேட்டு மகிழ்ந்திருப்பார். அன்றியும் அவன் பக்தியோடு பாடுகிறான். அந்த இசை அவருக்குப் பேரின்பமாகத்தான் இருந்திருக்கும். அவர், தன்னுடைய இசைப்பாணன் வறுமையினால் வருந்து வதையறிந்து அவனுடைய வறுமையை நீக்க எண்ணினார். பாணபத்திரன் உறங்கிக் கொண்டிருந்தபோது சொக்கப் பெருமான் அவனுடைய கனவில் தோன்றினார். “உனக்கு நாளைக்கு ஒரு திருமுகக்கடிதம் அளிப்போம். அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் சேர நாட்டை ஆளுகிற சேரமான் பெருமானிடம் கொடு. அவன் உனக்குப் பொருள் கொடுப்பான். பெற்றுக்கொள்” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கனவு கண்ட இசைப் புலவன் இக்கனவைப் பற்றி அதிசயமடைந்தான். அந்தக் காலத்தில் சேரநாட்டை யரசாண்டவன் சேரமான் பெருமான் என்னும் அரசன். அவனுக்குக் கழறிற்றறிவார் என்றும் பெயர் உண்டு. அவன் சிறந்த சிவபக்தன். சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சைவ சமய குரவரும் அக்காலத்தில் இருந்தவரே. சேரமான் பெருமாளும் சுந்தர மூர்த்தி நாயனாரும் நண்பர்களாக இருந்தார்கள் சிவபெருமான் சேரமான் பெருமாளின் கனவிலும் தோன்றினார். “பாண்டிய நாட்டிலிருந்து பாணபத்திரன் என்னும் அன்பன் உன்னிடம் வருவான். அவன் வறுமை நீங்கும் அளவு பொருள் கொடுத்து விடுக” என்று கூறி அருளினார். அடுத்த நாள் காலையில் பாணபத்திரன் வழக்கம் போல சொக்கநாதர் ஆலயஞ்சென்று யாழ் வாசித்து சிவபெரு மானுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தான். பக்தர்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இசைப் பாட்டு முடிந்த பிறகு திருவுண்ணாழி கையில் (கர்ப்பக்கிருகம்) அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் கையில் ஓலை ஏட்டுடன் வந்து பாணபத்திரனிடத்தில் கொடுத்தார். “சொக்கப் பெருமானுடைய திருவடியண்டை இந்த ஓலை இருந்தது. இது உமக்குரியது” என்று அவர் கூறினார். பாணபத்திரன் அதிசயத்தோடு அதை அன்போடு இரு கைகளாலும் பெற்றுக் கொண்டான். தான் முன் நாள் இரவு கண்ட கனவு நனவானதை யறிந்து வியப்படைந்தான். அந்தத் திருமுக ஓலையில் ஒரு செய்யுள் எழுதப் பட்டிருந்தது. அதை அவன் வாசித்துப் பார்த்தான். அச்செய்யுள் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: மதிமலி புரிசை மாடக்கூடல் பதிமிசை நிலவும் பால்நிற வரிச் சிறை அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவனியான் மொழி தரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுசைக்கும் சேரலன் காண்க. பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன், தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே இந்தத் திருமுகச் செய்யுளைப் படித்துப்படித்து அளவிலா மகிழ்ச்சியடைந்தான் பாணபத்திரன். முன்னாள் இரவு கனவில் தோன்றி இறைவன் கூறியதும் இன்று காலை திருமுக ஏடு கிடைக்கப் பெற்றதும் ஆகிய இவற்றை எண்ணி எண்ணி மனங் கனிந்தான். திருமுகக் கடிதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு தலைமேல் வைத்துப் போற்றினான். இவற்றை எல்லாம் அருளிய இறைவனுடைய திருவருளை வியந்தான், வணங்கினான். விரைந்து இல்லத்துக்குச் சென்று தன் மனைவி பாடினியை அழைத்துத் திருமுகத்தை அவளுக்குப் படித்துக் காட்டினான். இறைவன் நம்முடைய வறுமையைப் போக்கத் திருவுளங் கொண்டார். இன்றே சேரமானிடம் செல்கிறேன் என்று கூறினான். பாடினி பெரிதும் மகிழ்ந்தாள். இறைவன் திருவருளை எண்ணி அவர்கள் சொக்கப் பெருமானை வணங்கினார்கள். பாணபத்திரன் சேரமான் பெருமாளை நாடிச் சேர நாட்டுக்குப் புறப்பட்டான். நாட்டு வழிகளையும் காட்டு வழிகளையும் கடந்து சில நாட்களில் கொடுங்கோளூர்ப் போய்ச் சேர்ந்தான். முன்னமே பத்திரனுடைய வருகையை அறிந்திருந்த சேரமான் பெருமாள் பத்திரனை அன்போடு வரவேற்றார். “எம்பெருமான் உம்முடைய வருகையை எமக்கு முன்னமே அறிவித்தருளினார். உம்முடைய வருகையை நாம் எதிர்பார்த் திருந்தோம்!” என்று கூறி வரவேற்று உபசரித்துப் போற்றினார். பாணபத்திரன் தான் ஆலவாய்த் திருக்கோயிலிலிருந்து கிடைத்த திருமுக ஓலையைச் சேரமான் கையில் கொடுத்தார். அதனைப் பெற்றுச் சேரமான் அதைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு தலை மேல் வைத்து இறைவனை நினைத்து வணங்கினான். பிறகு படித்துப் பெரு மகிழ்ச்சி யடைந்தான். பாணபத்திரன் சேரமான் பெருமாளின் சபையில் யாழ் வாசித்து இறைவனுடைய புகழைப் பாடினான். தேனினும் இனிய அவனுடைய இசைப் பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்பக் கடலில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள். அவனுடைய தேவகானத்தைப் புகழ்ந்து மெச்சினார்கள். சேரமான் பத்திரனுக்குப் பெரும் பொருளைப் பரிசாக அளித்தார். தன்னுடைய பொக்கிஷ அறையைத் திறந்து இன்னும் உமக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்க என்று வேண்டினான். “அரசர் பெருமான் ஈந்த பொருள்களே போதும், மேலும் எனக்குப் பொருள் தேவை யில்லை” என்று பத்திரன் வணங்கிக் கூறினான். பிறகு சேரமானிடம் விடை பெற்று மதுரைக்குத் திரும்பி வந்தான். சொக்கப் பெருமான் கோயிலுக்கு வந்து தான் கொண்டு வந்த செல்வத்தைக் கடவுள் திருமுன்பு வைத்து வணங்கினான். பிறகு வீட்டுக்குச் சென்று தான் கொண்டு வந்த பொன்னையும் பொருளையும் பாடினிக்குக் கொடுத்தான். தன் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொன்னான். பாணபத்திரன் வறுமை நீங்கி வாழ்ந்தான். நாள்தோறும் திருக் கோயிலுக்குச் சென்று வழக்கம் போல பக்தி கலந்த இசைப் பாடலை வழங்கிக்கொண்டிருந்தான். அவன் கடவுளுக்கு வழங்கின இசை யமுதத்தை மக்களும் செவிமடுத்துக் கேட்டு மனம் மகிழ்ந்தார்கள். பாணபத்திரன் சொக்கப் பெருமானுடைய திருமக ஓலையைக் கொண்டுபோய்ச் சேரமானிடம் கொடுத்துப் பொருள் பெற்று வந்த செய்தியைப் பக்தனான வரகுண பாண்டியன் அறிந்தான். சேர மன்னன் கொடுத்தது போலவே தானும் பொருள் கொடுக்க எண்ணினான். நெல் வயல்களைப் பாணபத்திரனுக்குத் தானமாகக் கொடுத்தான். இவற்றைப் பெற்றுப் பாணபத்திரனும் பாடினியும் வறுமை இல்லாமல் வாழ்ந்து கடவுளின் மேல் இசைபாடிக் கொண்டிருந் தார்கள். பாணபத்திரனுடைய திருவுருவம் சிவன் கோயில்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இன்றும் போற்றப் படுகிறது.