மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5 பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 190/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துக்கள் - நடுகற்கள் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இறுதி நூல் இதுவாகும். அவரது மறைவிற்குப் பிறகு இந்நூல் வெளிவந்தது. பிராமி எழுத்துக்கள் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவாகக் கருதலாம். 1960 தொடங்கி ஐராவதம் மகாதேவன் இத்துறை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆய்வுகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். 2004 இல்தான் அனைத்து ஆய்வுகளும் அடங்கிய முழுமையான நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 1970 களின் இறுதிக் காலங்களில் களஆய்வுசெய்து இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியுள்ளார். தமிழ் மொழிக்கென உருவாகிய தொல்லெழுத்துமரபுகள் குறித்த முரண்பட்ட கருத்துக்கள் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருவதைக் காண்கிறோம். தொல்லெழுத்தியல்துறை குறிப்பிட்ட மொழியின் பழமைகுறித்து அறிவதற்கான அடிப்படை மூலத்தரவு ஆகும். ஒலிவடிவம், வரிவடிவம் பெறுதல் என்பது அம்மொழியின் தொல்வரலாறு அறிவதற்கு உதவும். தமிழ் X சமசுகிருதம் என்னும் முரண் சார்ந்த கருத்துநிலை உடையோர், பிராமிஎழுத்துக்கள் தொடர் பாகவும் இவ்வகையான முரண்பட்ட கருத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது களஆய்வு மூலம் திரட்டிய பிராமி கல்வெட்டுக்களை, தமிழ் தொல்லெழுத்தியலாகவே ஆய்வு செய்துள்ளார். தமிழ் மொழியின் மூல எழுத்து வடிவமாக பிராமியைக் கருதியுள்ளார். அக் கண்ணோட்டத்தில் இந்நூலை உருவாக்கியுள்ளார். அரச்சலூர், கொங்கர் புளியங்குளம், குன்னக்குடி, மால கொண்ட, முத்துப்பட்டி, அழகர்மலை, ஆண்டிப்பட்டி, விக்கிரம மங்கலம், அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, மேட்டுப்பட்டி, கீழை வலவு, மருகால்தலை, அரிக்கமேடு, புகழூர், ஐயர்மலை ஆகிய இடங்களில் காணப்படும் பிராமி எழுத்துள்ள கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவை அனைத்து குறித்தும் அறிஞர் ஐ. மகாதேவன் அவர்களால் விரிவான ஆய்வு நிகழ்த்தப்பட்டிருப் பதைக் காணலாம். சங்க காலத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் பிராமி கல்வெட்டுக் களில் காணப்படும் செய்திகளுக்குமான உறவுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்நூலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய வேறு பல பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான கட்டுரைகளையும் இணைத்துள்ளோம். இத்தொகுப்பு, பண்டைய தமிழகம் குறித்த வரலாற்று ஆய்வுக்கு மூலத்தரவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். சங்க கால நூற்பிரதிகளில் காணப்படும் செய்திகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிராமி கல்வெட்டு மற்றும் சங்க கால நடுகற்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் அமைந்துள்ளன. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. ஏப்ரல் 2010 சென்னை - 96. வீ. அரசு தமிழ்ப் பேராசரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள், நடுகற்கள் சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் - முன்னுரை 20 1. அரச்சலூர் பிராமி எழுத்துக்கள் 46 2. கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து 49 3. குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து 55 4. மால கொண்ட பிராமிய எழுத்து 58 5. முத்துப்பட்டி பிராமி எழுத்து 61 6. அழகர் மலைப் பிராமி எழுத்துக்கள் 63 7. ஆண்டிப்பட்டி பிராமி எழுத்து 77 8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு 79 9. அரிட்டாபட்டி 84 10. ஆனைமலை பிராமி எழுத்து 46 11. கருங்காலக்குடி பிராமி எழுத்து 108 12. மேட்டுப்பட்டி (சித்தர்மலை) 111 13. கீழை வளவு பிராமி எழுத்து 118 14. மருகால் தலை பிராமி எழுத்து 121 15. அரிக்கமேடு பிராமி எழுத்து 126 16. திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து 46 17. புகழூர் பிராமி எழுத்து 134 18. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள் 143 பின்னிணைப்பு 1. ‘ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு 146 2. எழுத்து ஆக்கம் 149 3. பழங்காலத்து எழுதுகருவிகள் 156 4. சங்க காலத்து நடுகற்கள் 166 5. இலக்கியத்தில் நடுகல் 174 6. சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம் 181 7. கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள் 188 பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் (1981) என்னும் தலைப்பில் வெளியிட்ட நூல். பதிப்புரை ஒரு நாட்டின் வரலாற்றினைச் செம்மையாக அறிந்து கொள்ள இன்றியமையாதது வேண்டப்படுவனவற்றுள் கல்வெட்டுக்கள் முதன்மையான இடம்பெறத் தக்கவை. ஏனெனில், ஏடுகள்மூலம் கிடைக்கும் சான்றுகளில் மிகைப்படுத்தப்பட்டனவும், மாறுபாடுடைய கருத்துக்களும் இடம் பெறக்கூடும். எனவேதான் இற்றை நாள் ஆராய்ச்சியாளர்கள் தம்முடைய ஆராய்ச்சிக்குக் கல்வெட்டுக்களின் துணையைச் சிறப்பாகக் கருதுகின்றனர். அங்ஙனமே தமிழ் இலக்கியம் பயில்வோர்க்கும் ‘கல்வெட்டு’ ஒரு முதன்மையான பாடமாக வைக்கப்படுகின்றது. சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் என்னும் இவ் வாராய்ச்சி நூல், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டது. பிற கல்வெட்டாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளோடு ஒப்பிட்டு அவற்றுள் காணப்படும் குறைகளையும் நிறைகளையும் எடுத்து விளக்கும் இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித்திறம், ஆராய்ச்சி மாணவர்கட்குப் பெருந்துணை புரியவல்லது. சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள் பல்வேறு நூல்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றிய கருத்துகளும் நூல்களிலும் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்கட்கு அனைத்தையும் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். அந்த அரிய பணியை ஆய்வுப் பேரறிஞராகிய இந் நூலாசிரியர் இந் நூல் வழி எல்லாக் கல்வெட்டுக்களையும் மூல வரிவடிவத்துடன் கொடுத்து எளிமைப்படுத்தியுள்ளார். தமிழ்க் கல்வெட்டுக்களைப் பற்றி ஆயும் வரலாற்று மாணவர்கட்கும், தமிழ் வரி வடிவத்தினைப் பற்றி ஆயும் மொழியாராய்ச்சி மாணவர்கட்கும் இந் நூல் பெருந்துணையாக அமையும். இந்நூலை அச்சிடப் பெருந்துணையாயிருந்தவர் திரு. ஊ. ஜயராமன் அவர்கள். ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய அனைத்தையும் அச்சில் கொண்டுவர வேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டுவருகிறார். அங்ஙனமே இதனைக் கழகவழி வெளியிட இசைவளித்த நூலாசிரியரின் பேத்திமார் ம. அழகம்மாள், ம. அன்புமணி ஆகிய இருவர்க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பல கல்வெட்டுக்களின் மூலப்படியைப் படியெடுக்க உதவியவை South Indian Paleography, கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகிய நூல்களாகும். இரு கல்வெட்டுக்களின் மூலப்படியைப் பெற்றுத் தந்த திரு. கொடுமுடி சண்முகம் அவர்கட்கும் எம் நன்றி உரித்தாகுக. ஆக்கியோர் மறைவுக்குப்பின் வெளிவரும் (Posthumous edition) இதனை, நூலகங்களும் ஆராய்ச்சி மாணவர்களும் வாங்கிப் பயன்படுத்துவதே இந் நூலாசியருக்குக் காட்டும் நன்றிக் கடனாகும். - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் முன்னுரை என் ஆசான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் குறித்துத் தமிழ் ஆராய்ச்சி யுலகுக்கு அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. தம் 80 ஆண்டு வாழ்க்கையில் அவர் 60 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆராய்ச்சித் துறைக்கே தம்மை ஒப்படைத்துக்கொண்டார். ஒழுங்கான கல்வி கேள்வியோடு ஓர் உள்ளுணர்வும் (Insight) அவருக்கு இருந்தது; அது தமிழக வரலாற்றுச் சிக்கல்கள் பலவற்றைச் சுலபமாகத் துலங்க வைத்தது. கடுமையான உழைப்பும், உண்மை காணும் வேட்கையும், அவற்றைக் குழப்பாமல் வெளியிடும் பெற்றியும் அவருக்கேயுரிய சிறப்புகளாகும். அவர் புரிந்த பல ஆராய்ச்சிகளில் கடைசிக் காலத்தில் புரிந்த ஒன்று, சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் பற்றியது. இது தமிழக வரலாற்றின் சில முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க உதவுகிறது; கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை வரையறுக்கத் துணை புரிகிறது; கடைச்சங்க காலத்தை அறுதியிட மெத்தவும் கைகொடுக்கிறது. தமிழகத்து மலைக்குகைகளில் கிடைத்த இப் பிராமிக் கல்வெட்டுகளைச் சில தேர்ந்தஅறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் என்றாலும்,அவற்றைச் சரியாகப் படித்தறியத் தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம்,பண்பாடு, வரன்முறை முதலியவற்றில் ஊன்றிய அறிவு தேவை; கிடைத்த கல்வெட்டுகள் யாவும் ஜைன முனிவர்களுக்கு வழங்கப்பட்ட மலைக்குகைகளிலேயே காணப்படுவதால், ஜைனசமய ஞானமும் ஓரளவு வேண்டும்;இவற்றோடுதமிழகவரலாற்றைப் பொறுப்போடும் கண்ணியாகவும் துல்லியத்துடனும் கணிக்க வேண்டும் என்கிற நல்வெண்ணமும் அவசியம். இவை யாவும் அமைந்தவராக மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விளங்குவதனால், அவருடைய வாசிப்பை Reading நாம் கணிசமாக நம்ப முடியும். எதனையும் தம்மால் இயன்ற அளவு ஒழுங்காகத் தொகுத்து, கூர்ந்து ஆராய்ந்து, உத்தமமாகத் தமிழ் மக்களுக்கும் உலக மக்களுக்கும் படைப்பது மயிலை சீனி. அவர்களின் வழக்கம். அதன்படி, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டு களையும் மிகுந்த உழைப்புடன் சேகரித்து வகைப்படுத்தி வாசகங்களைப் படித்துக் காட்டுகின்றார்; ஏறத்தாழ 18 ஊர்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளை இதில் சேர்த்திருக்கிறார். கடைசியில், தற்போது பத்திரிகைகளில் அதிகமாகப் பேசப்படும் அதிகமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டும் ஆராயப்படுகிறது. இவ் வாராய்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தமிழகத்தின் கடைச் சங்ககாலம் கி.மு. 3லிருந்து கி.பி. 3வரை என்பதும் உறுதியாகும்; இஃது இந்திய வரலாற்றுக்கும் ஒளி சேர்க்கும். தமிழகத்தில் கடைச் சங்க காலத்தில் வழங்கிய எழுத்து முறை (Script) பற்றிஅறிவதற்குக்கூடப் பிராமிக் கல்வெட்டுகள் துணை நிற்கின்றன. இந்திய தேசத்தில் அசோகன் காலத்திலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை பிராமி (Brahmi) எழுத்து முறையே வழக்கில் இருந்தது என்கிற கொள்கையை ஆய்வதற்கும் இவை ஒத்தாசை புரிகின்றன. ஆனால், மலைக் குகை ஜைனக் கல்வெட்டுகளில் கையாளப்பட்ட வரிவடிவத்தை வைத்துக்கொண்டே, தமிழ் மக்கள் தங்கள் மொழியைப் பிராமி எழுத்திலேயே எழுதினர் என்று சொல்ல முடியுமா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கு மயிலை சீனி. அவர்கள் ஒரு பதில் கூறினார். `தற்போது, தமிழகத்துக் குகைக் கல்வெட்டுகளில் பிராமி எழுத்துத் தான் கிடைக்கிறது என்பது உண்மைதான்; ஆனால், அப் பிராமியில் வடபிராமிக்கும் தென்பிராமிக்கும் வேறுபாடு இருக்கிறது; வட பிராமியில் ந, ழ,ள, ற, ஃ போன்ற எழுத்துகள் காணப்படவில்லை; தென் பிராமியில் இவற்றில் சில காணப்படுகின்றன. அப்படியானால், அவ் வெழுத்துக்கள் வேறு ஏதோ உள்நாட்டு வரிவடிவில் (Local Script) இருந்த எழுத்துகளாக இருக்கலாம் அல்லவா? அந்த வரிவடிவு ஏட்டுச்சுவடிகள் மூலம் நமக்குக் கிடைக்க முடியாதே? ஆனால், அக் காலத்திய அஃதாவது, கடைச் சங்க காலத்திய நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் கிடைத்தால், அவற்றில் உள்ள எழுத்தைக் கொண்டு பண்டைக் காலத்தமிழ் வரிவடிவைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமே, என்று அவர் கூறினார். ஆனால், சங்க கால நடுகல் நமக்குக் கிட்ட வேண்டுமே? இதுபோன்ற பல சிந்தனைகள் இந் நூலைப் படிப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும். என் ஆசான் மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் வெளிவந்தாலும், இஃது இன்று மிகவும் பயன்படுவதாக உள்ளது. இதனைத் தனிப்பட்ட ஊக்கம் மேற்கொண்டு தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அழகாக வெளியிட்டிருக்கிறது. கழகப் பொது மேலாளர் (General Manager) அறிஞர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இதற்காகப்பட்ட துன்பங்கள் அதிகம்; அவருக்கு நான் மிகுதியும் கடமைப் பட்டவன். இப்படி மயிலை சீனி. அவர்கள் வெளியிடாது விடுத்துச் சென்ற நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்மக்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு பாரில் ஓங்கியுயர வேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு முடிக்கிறேன். வணக்கம். சென்னை -1 ஊ. ஜயராமன் 23-11-81 (கொற்றன்காரி) சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் முன்னுரை தமிழ்மொழி மிகப் பழைமையானது. மிகப் பழங்காலத்திலேயே தமிழர் தமிழை வளர்த்தனர். அவர்கள் தமிழ்நூல்களைச் சுவடிகளில் எழுதினார்கள். நூல்களை எழுதுவதற்கு எழுத்து வேண்டும். எழுத்துக்களையும் அமைத்து நூல் எழுதினார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நூல்கள் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறிமாறி வந்துள்ளன. எழுத்துக்களின் வரி வடிவம் மாறிக்கொண்டு இருந்தபடியால், பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்தின் வரிவடிவம் இன்னதென்று இப்போது தெரியவில்லை. பண்டைக் காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து போயிற்று. கி.மு. 3ஆம் நூற்றாண்டில், அசோக மாமன்னர் பாரத நாட்டை அரசாண்ட காலத்தில், தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், இலங்கையிலும், பௌத்த மதம் வந்து பரவிற்று. அசோக மாமன்னரின் பாட்டனான சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், வந்து பரவிற்று. சமணம், பௌத்தம், என்னும் இரண்டு மதங்களும் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் அந்த மதங்களின் துறவிகளே. பௌத்த மதத்தோர்களும், சமண சமய முனிவர்களும், ஊர்களிலும், நகரங்களிலும், போய்த் தங்கள் தங்களுடைய மதங்களைப் பரப்பினார்கள். அசோக மாமன்னன் பொறித்துள்ள கல்வெட்டுக்களில் இரண்டு, மாமன்னனாகிய அவர் தமிழகத்திலும், இலங்கையிலும், பௌத்த மதப் பிக்குகளை அனுப்பித் தர்மவிஜயம் (அறவெற்றி) பெற்றதாகக் கூறுகின்றன. அஃதாவது, பௌத்த மதத்தைப் பரவச்செய்ததைக் கூறுகின்றன. அசோக மாமன்னருடைய இரண்டாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும், பதின்மூன்றாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும் இந்தச் செய்தி களைக் கூறுகின்றன. தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் பௌத்த மதத்தைக் கொண்டுவந்து பரவச் செய்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையுங் கொண்டுவந்து பரவச் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே சமண சமயத்தைப் பரப்பி வந்த ஆருகத மதத்து முனிவர்களும் பிராமி எழுத்தையும் பரப்பினர். தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பௌத்த சமண மதங்கள் விரைவாகப் பரவியதற்குக் காரணம் என்னவென்றால், அந்த மதப் பரப்புநர்கள் அந்தந்த நாட்டுத் தாய் மொழி யிலேயே தங்கள் மதங்களைப் பரப்பியதுதான். சமயப் பரப்புப்பணியை, நாட்டு மக்களுக்குத் தெரியாத மொழிகள்மூலம் செய்யக் கூடாது என்பதும், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே மதப் பரப்புதல் செய்ய வேண்டும் என்பதும் பௌத்த சமண சமயங்களின் முக்கியமான கொள்கை. ஆகவே, தமிழகத்துக்கு வந்து பௌத்த சமண சமயங்களைப் பரவச் செய்த தேரர்களும், முனிவர்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பாலி, அர்த்தமாகதி (பிராகிருத) மொழிகள் வாயிலாக வளர்க்காமல், தமிழ்மொழி வாயிலாகவே வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த சமண சமயங்கள் அக் காலத்தில் தமிழகத்தில் விரைவாகப் பரவின. பிராமி எழுத்து ஆனால், அவர்களுடைய மத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டி ருந்தபடியாலும், அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த எழுத்து பிராமி எழுத்தாக இருந்தபடியாலும் அவர்கள் மூலமாகப் பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்தது. இவ்வாறு பௌத்த, சமண சமயங்களோடு பிராமி எழுத்தும் தமிழ் நாட்டில் கால் ஊன்றிது. இவ்வாறு கடைச்சங்க காலத்தில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்து புகுந்தது. அக்காலத்தில் வடஇந்தியா முழுவதும் பிராமி எழுத்து வழங்கி வந்தது. அந்தப் பிராமி எழுத்தைத்தான் அவர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன்னே தமிழகத்தில் தமிழர் ஒருவகையான தமிழ் எழுத்தை எழுதி வந்தனர். அந்தத் தமிழ் எழுத்து, பிராமி எழுத்து வந்த உடனே மறைந்து விடவில்லை. புதிதாக வந்த பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்குச் சில காலஞ் சென்றது. பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டாவது சென்றிருக்க வேண்டும். பௌத்த, சமண சமயங்களை வளர்த்த பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளி என்பது பெயர். அவர்கள், ஊர்ச் சிறுவர்களைத் தம்முடைய பள்ளிகளுக்கு அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்தபடியால் பாடசாலைகளுக்குப் ‘பள்ளிக்கூடம்’ என்று புதிய பெயர் ஏற்பட்டது. அப் பெயர் இன்றளவும் வழங்கி வருகிறது. பள்ளிக்கூடங்களில் அவர்கள் பழைய தமிழ் எழுத்தைக் கற்பித்தார்கள். மத நூல்களைப் படிப்பதற்காகச் சிறுவர்களுக்குப் பிராமி எழுத்தையும் கற்பித்தார்கள். காலப் போக்கில் பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போய்ப் புதிய பிராமி எழுத்து பரவத் தொடங்கியது. பழைய தமிழ் எழுத்து மறைந்துவிடவே புதிய பிராமி எழுத்து நாட்டில் பயிலப்பட்டது. தமிழ்நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. பிராமி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது. வட்டெழுத்து அதன் பிறகு பிராமி எழுத்து வரி வடிவத்தில் மாறுதல் அடையத் தொடங்கி வட்டெழுத்தாக உருவடைந்தது. பிராமி எழுத்து திரிபடைந்த உருவமே வட்டெழுத்தாகும். வட்டெழுத்து ஏறத்தாழ கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் வழங்கிற்று. அப்போது சுவடிகளும், கல்வெட்டுக்களும், வட்டெழுத்திலும் எழுதப்பட்டன. பல்லவ அரசர் காலத்தில் தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும், வடடெழுத்து மறைந்து வேறுவகையான பல்லவர் எழுத்து வழங்கி வந்தது. ஆனால், வட்டெழுத்து பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும் தொடர்ந்து வழங்கி வந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில், சோழர், பாண்டியரை வென்று அரசாண்ட காலத்தில் பாண்டி நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தை மாற்றிச் சோழர் இக் காலத்துத் தமிழெழுத்தைப் புகுத்தினார்கள். ஆகவே, 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டி நாட்டில் வட்டெழுத்து மறைந்து போயிற்று. சேர நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்து பிற்காலத்தில் மாறுதல் அடைந்து கோலெழுத்தாக உருவம் பெற்றது. அண்மைக் காலத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில், மலையாள மொழியின் தந்தை என்று கூறப்படுகிற துஞ்சத்து இராமாநுசன் எழுத்தச்சன், கிரந்த எழுத்திலிருந்து1 இப்போதைய மலையாள எழுத்தை உண்டாக்கினார். அதன் பிறகு மலையாள நாட்டில் கோலெழுத்தும் மறைந்து போயிற்று. நான்குவகை எழுத்துக்கள் தொடக்க காலத்திலிருந்து இன்று வரையில் தமிழர் நான்கு வகையான எழுத்துக்களை எழுதி வந்தனர் என்பதை அறிகிறோம். சங்ககாலத்தில் வழங்கிவந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியிலிருந்து உருவம் பெற்ற வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்து என்பவை அவை. பழந்தமிழ் எழுத்துச் சுவடிகளும், பிராமி எழுத்துச் சுவடிகளும், வட்டெழுத்துச் சுவடிகளும், இக்காலத்தில் அடியோடு மறைந்துபோய்விட்டன. ஏனென்றால் ஓலைச் சுவடிகள் இரண்டு நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருப்பதில்லை. ஆகவே அந்த எழுத்துச் சுவடிகள் இப்போது முழுவதும் மறைந்து விட்டன. ஆனால் வட்டெழுத்தின் வரிவடிவம் இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மலைக் குகைகளிலும், குன்றுப் பாறைகளிலும், செப்பேடுகளிலும், எழுதப்பட்ட வட்டெழுத்துச் சாசனங்கள் அழியாமல் கிடைத்துள்ளன. வட்டெழுத்துக்கு முன்பு வழங்கிவந்த பிராமி எழுத்துக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய தமிழ் எழுத்தின் வரிவடிவம் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. சங்ககாலத்தில் எழுதப்பட்ட பழைய நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டால் ஒருவேளை அந் நடுகற்களின் பழைய தமிழ் எழுத்து வடிவத்தைக் காணக்கூடும். (இப்போது கிடைத்துள்ள நடுகற்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நடுகற்கள்.) பிராமி எழுத்தின் கரந்துறை வாழ்க்கை.(அஞ்ஞாதவாசம்) நம்முடைய இப்போதைய ஆய்வு பிராமி எழுத்தைப்பற்றிய தாதலால் இதைத் தொடர்ந்து ஆராய்வோம். தமிழகத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து ஏறத்தாழ கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்று கூறினோம். ஆனால் மலைக் குகைகளிலும், பாறைக் குன்று களிலும், அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டு கள் அழியாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன. பதினேழு நூற்றாண்டுகள் மறைந்து கிடந்த அந்த எழுத்துக்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. 1700 ஆண்டுகள் மறைந்து கிடந்த பிராமி எழுத்துக்கள், மலைக்குகைகளிலே ஒளிந்துகிடந்த அந்த எழுத்துக்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது வரையில் அவை மறக்கப்பட்டு மறைந்து கிடந்தன. மறக்கப்பட்டு மறைந்து கிடந்ததற்குக் காரணம், இடைக் காலத்திலே புதிய புதிய எழுத்துக்கள் தோன்றி வழங்கி வந்ததுதான். என்ன மொழி? கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மறைந்துபோன பிராமி எழுத்து 20ஆம் நூற்றாண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் ஒருவர் 1906ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு அடுத்த மருகால்தலை என்னும் ஊருக்குச் சென்றவர், அவ்வூருக்கு அருகில் உள்ள குன்றுகளுக்குச் சென்றார். அங்கு ஒரு குன்றில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் வாயிலின் அருகில் சென்ற போது குகைவாயிலின் மேற்பாறையில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டார். பிறகு அவர், அந்த எழுத்துக்களைப் பற்றித் தொல் பொருள்-ஆய்வுத்துறை மேலாளருக்குத் தெரிவித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர் மருகால்தலைக் குன்றுக்குப் போய் அங்கிருந்த எழுத்துக்களைப் படி எடுத்து வந்தனர். பிறகு இந்தச் செய்தியை 1907ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிட்டார்கள். இந்த எழுத்துக்களை அவர்கள் அப்போது படிக்கத் தெரியாமல் இருந்தார்கள். இந்தக் கல்வெட்டெழுத்து, பிராமி எழுத்தாக இருக்கிறபடியால் இந்தக் கல்வெட்டின் வாசகம் பாலி மொழியில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இதற்கு முன்பே வட இந்தியாவிலும், இலங்கையிலும், பிராமி எழுத்துச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை பாலி (பிராகிருத) மொழியில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள். மருகால் தலை பிராமி கவ்வெட்டும் பாலி மொழியில் எழுதப்பட்டதென்று அவர்கள் ஊகித்தார்கள். அவர்கள் தங்களுடைய அறிக்கையில் “அசோக மாமன்னருடைய சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தினால் இந்தப் பாலிமொழிச் சாசனம் எழுதப்பட்டிருக் கிறது. பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், அந்தப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் பாலிமொழி தெரிந்திருந்தது என்பது தெரிகிறது” என்று எழுதினார்கள்.2 இது பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட தமிழ்மொழி வாசகம் என்பதை அறியாமல் அவர்கள் பாலி மொழி வாசகம் என்று கூறினார்கள். மருகால்தலை பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேறு பல பிராமிக் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் மற்ற இடங்களிலும் புதியவாகப் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனைமலை, திருப்பரங்குன்றம், மாங்குளம் (அரிட்டாபட்டி), முத்துப்பட்டி, வரிச்சியூர், அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, மேட்டுப் பட்டி (சித்தர் மலை), விக்கிரமமங்கலம் (உண்டான் கல்லு), கொங்கர் புளியங்குளம், சித்தன்னவாசல், புகழூர், அரச்சலூர், மாமண்டூர், மாலகொண்டா முதலான இடங்களில் பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப் போது எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டன. பிராமிக்கு முந்திய எழுத்து தமிழ் இலக்கியங்களின் பழைமையை அறியாதவர்கள், தமிழ் இலக்கியங்கள் கி.பி, 8ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை என்று அக்காலத்தில் எழுதியும் பேசியும் வந்தனர். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்களுடைய கருத்து தவறு என்பதைக் கண்டார்கள். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை யாகையால், தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே தோன்றிவிட்டன என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பிராமி எழுத்து தமிழகத்திற்கு வருவதற்கு முன்னமே வேறு தமிழ் எழுத்து இருந்தது என்பதையும் அறியாமல் பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்தபிறகுதான் தமிழருக்கு எழுத்து கிடைத்தது என்றும் பிராமி எழுத்தினால் அவர்கள் இலக்கியங்களை எழுதினார்கள் என்றும்; சிலர் சொல்லத் தொடங்கினார்கள். அஃதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் எழுத்தும் இல்லை; இலக்கியமும் இல்லை என்பது இவர்கள் கருத்து. அரிட்டாபட்டி கழுகுமலைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்படுக்கைகள், பிராமி எழுத்துக்கள், இவற்றைப்பற்றி 1907 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறை, இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து. தமிழ் எழுத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றியும், வட்டெழுத்தின் தோற்றம் வளர்ச்சியைப் பற்றியும் விளக்கந் தருகிற அரிய சான்றாக இருக்கிறது என்று எழுதியமை முன்னமே காட்டினோம். ‘தமிழ் நாட்டின் தெற்கு வட்டாரங்களில் பாறைகளிலும், குகைகளிலும், எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப் பட்டவை. அந்தக் கல்வெட்டுக்கள், தமிழ் எழுத்தும் தமிழ்மொழியும் உருவடைந்து கொண்டிருந்த காலத்தைத் தெரிவிக்கின்றன. தமிழரின் வட இந்தியக் கலாசாரத் தொடர்பு வளர்ச்சிக் காலத்தை இவை தெரிவிக் கின்றன’ என்று திரு.கே.ஏ. நீலகண்ட சாத்திரி எழுதியுள்ளார்.3 (கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எழுத்தும் தமிழகம் வந்துவிட்டது. சாத்திரி கி.மு. முதல் நூற்றாண்டு என்று காலத்தைக் குறைத்துக் கூறுகிறார்.) தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரையில் பல தவறான கருத்துக்களை வெளியிட்ட திரு. நீலகண்ட சாத்திரி பிராமி எழுத்தைப் பற்றியும் தவறாகக் கூறியுள்ளார். திரு. நீலகண்ட சாத்திரியின் இந்தத் தவறான கருத்தை ஐரோப்பியத் தமிழறிஞராகிய டாக்டர் கமல் சுவலபில் அவர்களும் ஆராயாமல் இவரைப் பின்பற்றுவது வியப்பாக இருக்கிறது. இந்த அறிஞர், சாத்திரி கூறிய தவறான கருத்தையே பொன்போலப் போற்றி எழுதியுள்ளார். அசோகருடைய காலத்தில் அல்லது அவருடைய காலத்துக்குச் சற்றுப் பிறகு தமிழ் எழுத்து தமிழருக்குத் தெரிந்திருந்தது. கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழிக்குத் தமிழ்-பிராமி எழுத்து அமைத்துக்கொள்ளப்பட்டது. அமைத்துக் கொண்ட நெடுங்காலத் துக்குப் பிறகு அவ்வெழுத்து இலக்கியம் எழுதப் பயன்படுத்தப் பட்டது என்னும் கருத்துப்பட டாக்டர் கமல் சுவலபில் எழுதுகிறார்.4 இந்தத் தவறான கருத்தையே அவர் மீண்டும் இன்னோர் இடத்தில் எழுதுகிறார்: கி.மு. 250ல் அல்லது அதற்குச் சற்றுப்பின்னர் அசோகன் (கி.மு. 272-232) உடைய தெற்குப் பிராமி எழுத்து தமிழ் ஒலி யமைதிக்குப் பொருந்தத் தமிழில் அமைத்துக் கொள்ளப்பட்டது. கி.மு. 200 - 100 க்கு இடையில் பௌத்த-சைனத் துறவிகள் இருந்தஇயற்கைக் குகைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்.5 இவை ஆழ்ந்து ஆராயாமல் மேற்போக்காகக் கூறப்படுகிற கருத்துக்கள். தமிழின் பழைமையை யறிந்தவர், பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை, நூல்கள் இல்லை என்று கூறமாட்டார். தொடக்கக்காலத்தில் தமிழில் ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்குப் புதிதாக வந்த பிறகு, அதற்கு முன்பு வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்து மறைந்துபோய், பிராமி எழுத்து நிலைத்து விட்டது. ‘பழையன கழிதலும் புதியனபுகுதலும், வழுவல கால வகையினானே’ என்பது எழுத்து மாறுதலுக்கும் பொருந்தும். பழைய எழுத்தை மாற்றிப் புதிய எழுத்தை மேற்கொண்டதைத் துருக்கி நாட்டிலும் காண்கிறோம். துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தில் பழைய துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன. அண்மைக் காலத்தில் துருக்கி நாட்டில் சீர்திருத்தங் களை உண்டாக்கிய துருக்கியின் தந்தை எனப்படும் ஆட்டா டர்க் என்பவர் பழைய அரபி எழுத்தை மாற்றிப் புதிதாக இலத்தீன் எழுத்தை (ஆங்கில எழுத்தை) அமைத்துவிட்டார். இப்போது துருக்கியர் துருக்கி மொழி இலக்கியங் களைப் புதிய இலத்தீன் எழுத்தினால் எழுதி வருகிறார்கள். இப்போது இலத்தீன் எழுத்தினால் எழுதி வருவதனால், இலத்தீன் எழுத்து தான் துருக்கி மொழியின் ஆதி எழுத்து, இலத்தீன் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி இலக்கியம் உண்டாயிற்று என்று கூறுவது பொருந்துமா? அப்படிக் கூறுவது தவறு அல்லவா? இதுபற்றி விரிவாக எழுதுவதற்கு இஃது இடம் அன்று. பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழர் இலக்கியம் வளர்த்தனர் என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களும், நூல்களும், எழுதப்பட்டிருந்தன. கி.மு. 8ஆம் நூற்றாண்டிலே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இவற்றையறியாமல் பிராமி எழுத்து வந்த பிறகுதான் தமிழில் இலக்கியம் தோன்றியது என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு பழைய தமிழ் எழுத்து தமிழகத்தில் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வந்த பிறகு பழைய தமிழ் எழுத்து மறைந்துவிட்டது என்பதுதான் தமிழின் பழைமைக்கும் வரலாற்றுக்கும் பொருத்தமானது. வடக்குப் பிராமியும் தெற்கு பிராமியும் பிராமி எழுத்து வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், அக்காலத்தில் வழங்கிவந்தது. ஆனால் தென்னிந்திய பிராமிக்கும், வட இந்திய பிராமிக்கும், வரி வடிவில் சிறு வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை யறியாத காலத்தில் இவை சரியாகப் படிக்கப்பட வில்லை. பிறகு தென்னிந்திய பிராமி எழுத்தைச் சரியாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆந்திர நாட்டிலே கிருஷ்ணா வட்டாரத்தில் பட்டிப்ரோலு என்னும் ஊரில் பழங்காலப் பௌத்தத் தூபி ஒன்று உண்டு. அந்தத் தூபியைத் திறந்து தொல்பொருள் ஆய்வாளர் ஆராய்ந்து பார்த்தபோது அந்தத் தூபிக்குள் வட்ட வடிவமான கல் பேழை காணப்பட்டது. அந்தப் பேழையின் விளிம்பைச் சுற்றிலும் பிராமி எழுத்து வாசகம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிராமி எழுத்துக்கும் வட இந்தியப் பிராமி எழுத்துக்கும் சிறு வேற்றுமை காணப்பட்டது. பட்டிப்ரோலு பிராமி எழுத்து தென் இந்திய பிராமி எழுத்துக்களைச் சரியாகப் படிப்பதற்கு உதவியாக அமைந்தது. தென் இந்தியப் பிராமி எழுத்தைத் திராவிடி என்று கூறினார்கள். பட்டிப்ரோலு பிராமி எழுத்து எபிகிராபியா இண்டிகா என்னும் வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.6 தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்களில் தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள ழ, ற, ன என்னும் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்தச் சிறப்பு எழுத்துக்களைப் பிராமி எழுத்து வருவதற்கு முன்னே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்திலிருந்து எடுத்துப் பிராமி எழுத்துக்களோடு அமைத்துக்கொண்டனர் என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தின் ஒலி வடிவம் பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் வழங்கிவந்த பிராமி எழுத்து பிற்காலத்தில், வேறு எழுத்துக்கள் தோன்றிவிட்ட காரணத்தினால், மறக்கப்பட்டு மறைந்துபோயிற்று. நெடுங்காலத்துக்கு முன்பே பிராமி எழுத்துச் சுவடிகள் மறைந்துவிட்டன. ஆனால், மலைப் பாறைகளிலும் குகைகளிலும் எழுதி வைக்கப்பட்ட பிராமி எழுத்துச் சாசனங்கள் அழியாமல் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் அங்கங்கே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொல்பெருள் ஆய்வுத் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர். பிராமி எழுத்தின் வரி வடிவங்களே காணப்பட்டவை யெல்லாம். அவற்றின் ஒலி வடிவங்கள் மறைந்துபோயின. அவற்றின் ஒலி வடிவங்கள் ஒருவருக்கும் தெரிய வில்லை. அசோக மாமன்னரின் பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களும், மற்றும் வேறு பல பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும், அவ்வெழுத்துக்களின் ஒலி வடிவம் தெரியாதபடியால், படிக்கப் படாமலே கிடந்தன. இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்க, திறவுகோல் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக கி.பி. 18ஆம் நூற்றாண்டில் பிரின்ஸிப் என்னும் பெயருள்ள ஆங்கிலேயர் பல காலம் முயன்று பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படித்துத் திறவுகோலைக் கண்டுபிடித்தார். அஃதாவது பிராமி எழுத்தில் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டுபிடித்தார். அக்காலத்தில் ஆங்கிலேய தளபதிக்கு அங்குப் பழங்காசுகள் கிடைத்தன. அந்தக் காசுகளை அவர் வங்காள நாட்டுக்கு அனுப்பினார். பழம் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரின்ஸிப் அந்தப் பழங்காசுகளை ஆராய்ந்தார். அந்தப் பழங்காசுகள் சிலவற்றில் அசோக மன்னர்காலத்து எழுத்துக்கள் (பிராமி எழுத்துக்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. அக் காசுகளின் மறுபக்கத்தில் பழைய கிரேக்க எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. கிரேக்க எழுத்துச் சொற்களே பிராமி எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது என்பதை யறிந்த இவர் கிரேக்க ஒலியைக் கொண்டு பிராமி எழுத்துக்களின் ஒலியைக் கண்டுபிடித்தார். இப்படிப் பல காலம் உழைத்ததன் விளைவாகப் பழைய பிராமி எழுத்துக்களின் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டறிந்தார். பிராமி எழுத்தின் வரி வடிவத்துக்கு ஒலி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதனால், பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பிராமி எழுத்து வாசகம் 18ஆம் நூற்றாண்டில் படிக்கப்பட்டது. தமிழ்ப் பிராமியின் வாசகம் 1906ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த எழுத்துக்கள் நெடுங்காலம் படிக்கப்படவில்லை. பழம்பொருள் ஆய்வுத் துறையினர், இவ்வெழுத்துக்கள் பாலி மொழி அல்லது பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதாகக் கருதினார்கள். இந்தக் கருத்து பல ஆண்டுகள் நிலவியிருந்தது. இந்தப் பிராமி எழுத்துக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன என்பதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிந்தனர். பிறகு இவ்வெழுத்துக்களைப் படித்த சிலர் தமிழராக இருந்தும் இக் கல்வெட்டுகளின் கருத்தைச் சரியாக அறியவில்லை. காரணம் என்னவென்றால், இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காலத்தில் (கடைச் சங்க காலத்தில்), தமிழ்நாட்டில் இருந்த இலக்கியங் களையும், பழக்க வழக்கங்களையும், நாகரிகங்களையும், அறியாததுதான். மற்றும், வட இந்திய (ஆரிய) தொடர்புகளை இந்தக் கல்வெட்டுக்களோடு இணைக்க வேண்டும் என்னும் கருத்துடன் இவர்கள் ஆராய்ந்தனர். இதனால் இவர்களுடைய ஆராய்ச்சிகள் பிழைபட்டுள்ளன. அவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். தவறு இல்லாமல் சரியாக வாசிக்கப்பட்ட வாசகங்கள் மிகச் சிலவே. வடமொழி வெறி தமிழ்நாட்டிலுள்ள பிராமி எழுத்துச் சல்வெட்டுக்களை ஆராய்ந்து படித்துக் பொருள் காண்பவர் நடுநிலையுள்ளவராக இருக்கவேண்டும். அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்துப் பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மை காணும் கருத்து உள்ளவராகவும், நேர்மையாளராகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெறுப்பு உணர்வு உள்ளவராக இருத்தல் கூடாது. தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஒருவர் அளவுகடந்த சமற்கிருத வெறியுள்ளவராக இருக்கிறார். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் அவர் தமிழ்மொழிமீதும் தமிழர் மீதும் வெறுப்புள்ளவராகவும், தவறான எண்ணமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் அவற்றைத் தம் இடத்திலேயே வைத்துக் கொண்டால் தவறு இல்லை. ஆனால் தமிழ் மொழியைப்பற்றித் தாக்கி எழுதியிருக்கிறார். ஆகவே அதை இங்கு எடுத்துக்காட்ட வேண்டி யிருக்கிறது. திரு.சி. கிருட்டிணராவ் என்பவர் வெறுப்புணர்வுடன் எழுதியுள்ளதை இங்குக் காட்டவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களை முதல் முதலாகப் படித்தவர் எபிகிராபி இலாகாவில் இருந்த ராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரியும், திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யரும் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை சமற்கிருத-பிராகிருத மொழிக் கண்ணோட்டத்தோடு படித்து அரைகுறையான கருத்துக்களைக் கூறினார்கள். இவர்கள் தங்கள் ஆராய்ச்சியில், இந்தக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன என்று கூறினார்கள். இவர்களுக்குப் பிறகு இந்தக் கல்வெட்டெழுத்துக்களை ஆராய்ந்த நாராயண ராவ், இவர்கள் கூறியதை முழுவதும் மறுத்துக் கல்வெட்டுக்களுக்குத் தொடர் பில்லாதவற்றைக் கூறித் தமக்குள்ள தமிழ் வெறுப்பையும் சமற்கிருத வெறியையும் காட்டியுள்ளார். இவர் எழுதியுள்ள தன் சுருக்கம் இது: எபிகிராபி இலாகாவிலிருந்த ராவ் சாகிப்,எச். கிருட்டிண சாத்திரி 1919ஆம் ஆண்டில் புனாவில் நடைபெற்ற அகில இந்திய முதலாவது ஓரியண்டல் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிராமி கல் வெட்டெழுத்துக்களைப் பற்றி ஒரு கட்டுரை படித்தார். திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் அதே பொருள் பற்றி ஒரு கட்டுரை படித்தார். இந்த இரண்டு கட்டுரைகளும் இந்தப் பிராமி எழுத்துக்களின் பொருளை ஒருவாறு கூற முயன்றுள்ளன. இவர்களுடைய இந்த முயற்சிகள் இரண்டு வகையான கேடுகளுக்குக் காரணமாக உள்ளன. 1. இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலே, வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுவதால், அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க முடியாதது ஒன்று. 2. இவர்கள் இருவரும் இந்தக் கல்வெட்டுக்களில் சில தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டிருப்பது இன்னொன்று. திரு. சுப்பிரமணிய அய்யர், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டவை என்று முன்னமேயே முடிவு செய்துகொண்டு இக்கல்வெட்டுக்களில் உள்ள சில எழுத்துக்களுக்கு முன்பின் அறியாத ஒலிகளைக் கற்பித்துக்கொண்டு படித்து அதிகக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார். இந்தக் பிராமி சொற்றொடர்களைத் தமிழ்மொழிச் சொற்றொடர்கள்தாம் என்று நிலை நிறுத்தமுடியாத இவருடைய கற்பனைகள், இவரை இவைபற்றி ஆராய்ச்சி செய்யத்தூண்டி, இவருடைய கருத்துக்களுக்கு ஒப்பப் பல வகையான மாற்றங்களைச் செய்துவிட்டது. கிருட்டிண சாத்திரியும் கூட இவை தமிழ்மொழிக் கல்வெட்டுகள் என்பதை ஒப்புக்கொண்டு இவற்றில் தமிழ்ச் சொற்களையும் பிராகிருத மொழிச் சொற்களையும் கலந்து வாசகங்களைத் தாறுமாறாக்கிவிட்டார். இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. மிகப் பழைய காலமாகிய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவற்றைத் தமிழ்மொழி என்று கூறித் தமிழுக்குப் பழைமை கொடுப்பது கூடாது. கி.மு. 3ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைத் தற்கால தமிழுடன் பொருத்தி உருமாற்றுவது விழிப்புணர்வு இன்றித் தவறான வழியில் செலுத்துவதாகும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வெட்டுக்களைப் படித்த கிருட்டிண சாத்திரி, சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களே அதிகமாக மாறுபடுகிறபோது நான் மட்டும் சரியாகப் படித்துப் பொருள் காண்பேன் என்று நான் சொல்லவில்லை. அப்படிக் கூறுவது அறியாமையாகும். இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனாலும், ஏனைய (வடநாட்டுப்) பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதனாலும், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப் பட்டவையே என்று கருதி இவற்றிற்குப் பொருள் காண முயல்கிறேன். இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில் வைக்க வேண்டும். இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இரண்டொரு எழுத்துக்கள் தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றைக் கிருட்டிண சாத்திரி திறமையாகப் படித்திருக்கிறார். இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் புதுமையாகக் காணப்படுகிற இரண்டொரு எழுத்துக்களைக் கொண்டு இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருதம் அல்லாத மொழி (தமிழ்மொழி) என்று கருதுவது கூடாது. இந்தப் பிராமிக் கல்வெட்டுக்களில், ஏனைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுகின்றன. சில எழுத்துக்கள் வியப்பான புதிய உருவத்தைப் பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டுக்களின் வியப்பான அமைப்பு என்னவென்றால், இவை பிராகிருத மொழியைச் சேர்ந்த பைசாச மொழி என்பதே. பிராகிருத மொழி இலக்கண் ஆசிரியர் கருத்துப்படி, பாண்டி நாட்டிலே பேசப்பட்ட மொழி பைசாச மொழியாகும். அவர்களுடைய இந்தக் கருத்தை இந்தக் கல்வெட்டுக்கள் மிகப் பொருத்தமாக உறுதிப்படுத்து கின்றன. இவ்வாறு திரு.நாராயண ராவ் தமக்குள்ள அளவு கடந்த தமிழ் வெறுப்பினையும், அளவு கடந்த சமற்கிருத வெறியையும் வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.7 இந்தச் சமற்கிருத வெறியருடைய கோமாளித்தனமான ஆராய்ச்சியை, பிராமி எழுத்து ஆராய்ச்சியில் பிறகு பார்ப்போம். இந்தியாவில் வழங்கி வருகிற மொழிகளில் தமிழ்மொழி மிகப் பழைமையானது என்பதையும் அது சமற்கிருதத்தைவிடத் தொன்மையானது என்பதையும் செம்மை மனம் படைத்த அவர்கள் அறிவார்கள். வெறுப்பும், மொழிவெறியுங் கொண்ட நாராயணராவ் போன்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள். என்ன மொழி? தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, கல்வெட்டு ஆராய்ச்சிக்காரருக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. இலங்கையிலும், வடஇந்தியாவிலும் காணப் படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், தமிழ்நாட்டில் காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அவ்வாறே கல்வெட்டு இலாகா ஆண்டு அறிக்கையிலும் இவை பாலி மொழியில் எழுதப் பட்டவை என்று எழுதினார்கள். ஆனால் படிக்க முயன்றபோது பிரா கிருத மொழிக்கு மாறுபாடான வாக்கியங்களும், சொற்களும் காணப் பட்டன. கடைசியில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது தமிழ் மொழி என்று அறிந்தனர். ஆனால், பாலி, அர்த்தமாகதி போன்ற பிராகிருத மொழிச் சொற்களும் இக் கல்வெட்டுக்களின் இடையிடையே காணப்படுகின்றன. இந்தச் சொற்களைச் சமற்கிருத மொழிச் சொற்கள் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து தவறானது. அவை சமற்கிருத மொழிச் சொற்கள் அல்ல; பிராகிருத மொழிச் சொற்கள். இந்தக் கல்வெட்டெழுத்துக்களை எழுதியவர் பௌத்த சைன சமயத்தவர். இவர்கள் பிராகிருத மொழியைப் பயின்றவர். ஆகவே இந்தக் கல்வெட்டு வாக்கியங்களில் பிராகிருத மொழிச் சொற்களைச் சேர்த்து எழுதினார்கள். சங்க காலத்திலே தமிழில் வட இந்திய மொழியான பிராகிருதச் சொற்களே முதலில் கலந்தன. ஏனென்றால், பிராகிருத மொழியைப் பயின்றவர் பௌத்த சமண சமயத்தார்களே. தமிழ்நாட்டில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவை கடைச்சங்க காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. அவை பிராகிரு மொழி பயின்ற பௌத்த சமணர்களால் எழுதப் பட்டவையாகையால் இத்தமிழ் மொழித் தொடரின் இடையிடையே பிராகிரு மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. பிராகிருத மொழிச் சொற்கள் கலவாத தமிழ் மொழித் தொடர்களும் இந்தக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இடர்ப்பாடுகள் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படிப்பதில் இடர்ப் பாடுகள் உள்ளன. இவ்வெழுத்துக்கள் கற்பாறைகளில் எழுதப் பட்டுள்ளபடியால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த எழுத்துக்கள் காலப் பழைமையினாலுந் தட்பவெப்பக் கால நிலைகளினாலும் தேய்ந்தும், மழுங்கியும், உருமாறியும், உள்ளன. கற்பாறைகளில் உள்ள கீறல், பிளவு, வெடிப்பு, புள்ளி புரைசல்கள் முதலானவற்றினால் கல்வெட்டெழுத்துக்களின் சரியான வடிவம் தெரிவதில்லை. சில இடங்களிலே இன்ன எழுத்துதான் என்று அறிய முடியாதபடி சிதைந்துள்ளன. அவற்றின் சரியான வடிவத்தைக் கண்டுபிடித்துப் படிப்பது சங்கடமாக இருக்கிறது. எழுத்தைப் பொறித்த கற்றச்சர் சில சமயங்களில் இடையே எழுத்துக்களைப் பொறிக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. இந்தப் பிழை பெரும்பாலும் ஒற்றெழுத்து இரட்டித்து வரும் இடங்களில் காணப் படுகின்றது. பளி, கொடுபிதவன், குறு, குன்றது, தசன், உபு, இயகன் என்று இடமறிந்து படிக்க வேண்டும். புள்ளி இடப்பட வேண்டிய எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி இல்லாமலே பொறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுகிறோம். பெருங்கடுங் கொன, தமமம, அதிடடானம, கிரன, ஊர, ஆதன என்று பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றைப் புள்ளியிட்டு முறையே பெருங்கடுங்கோன், தம்மம், அதிட்டானம், கீரன், ஊர், ஆதன் என்று படிக்க வேண்டும். இகர ஈற்றுச் சொற்களும் ஐகார ஈற்றுச் சொற்களும் சில இடங்களில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. மனிய், ஆந்தைய், மதிரைய், கனிய், பாளிய், வழுத்திய் என்று எழுதப் பட்டவை முறையே மனி, ஆந்தை, மதிரை, கனி, பாளி, வழுத்தி என்று படிக்கப்பட வேண்டும். சில இடங்களில் இகர ஈற்றுச் சொற்களின் கடைசியில் இகரமும் யகர மெய்யும் சேர்த்து எழுதப்பட்டிருப்பதும் உண்டு. நெல்வெளிஇய், பாளிஇய் என்பனவற்றை நெல்வெளி,பாளி என்று படிக்கவேண்டும். இவ்வாறு எழுதுவது அக்காலத்து முறை. குறியீடுகள் பிராமி எழுத்து வாக்கியங்களின் இறுதியில் சில குறிகள் பொறிக்கப்பட்டிருக் கின்றன. கொங்கர் புளியங்குளம், அழகர் மலை இவ்விரண்டு இடங்களில் உள்ள பிராமி எழுத்துச் சொற்றொடர் களின் கடைசியில் இக்குறிகள் காணப்படுகின்றன. மற்ற இடங்களில் இக்குறிகள் காணப்படவில்லை. அந்தக் குறிகள் இவை. இந்தக் குறியீடுகளும் வேறுசில குறியீடுகளும் இலங்கையில் உள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. இந்தக் குறியீடுகள், வாக்கியத்தின் முடிவைக் காட்டுகின்றன என்று அறிஞர் சிலர் கருதுகிறார்கள். கிருட்டிணசாத்திரி, கே.வி.சுப்பிரமணிய அய்யர், ஐ.மகாதேவன், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் இவ்வாறு கருது கின்றனர். இவர்களுடைய கருத்து தவறானது என்று தோன்றுகிறது. இந்தக் குறிகள் வேறு ஏதோ பொருளைத் தெரிவிக்கின்றன. இந்தக் குறியை சுவஸ்திகம் என்றும் இது மங்கலத்தைக் குறிக்கிறது என்றும் திரு.கிருட்டிண சாத்திரி கருதுகிறார். இவர் கூறுவது தவறு என்று தோன்றுகிறது. சுவஸ்திகத்தின் குறி இப்படி இருக்கும். நாற் சதுரமாக அமைந்த குறி வேறு எதையோ குறிக்கிறது என்று தோன்றுகிறது. மேலே காட்டப்பட்ட குறிகள் ஏதோ எண்ணின் அளவை (பொன் அல்லது நாணயத்தின் மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்று தோன்று கிறது. கொங்கர் புளியங்குளத்துக் கல்வெட்டில், ‘பாகலூர் போத்தன் பிட்டன் ஈந்தவை பொன்’ ‘குட்டு கொடங்கு ஈத்தவன் சிறு ஆதன் பொன்’ என்று எழுதப்பட்டுள்ளன. இந்தச் சொற்றோடர்களின் இறுதியில் உள்ள குறிகள், இவர்கள் செலவு செய்த பொன்னின் மதிப்பைத் தெரிவிக்கின்றன என்பது இந்தக் குறியீடுகளின் முன் உள்ள ‘பொன்’ என்னும் சொல்லினால் அறிகிறோம். எனவே இந்த அடையாளங் கள் இவர்கள் இக் குகைகளில் கற்படுக்கைகளை அமைப்பதற்குச் செலவு செய்த பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்பது ஐயமில்லாமல் தெரிகிறது. அழகர் மலைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் குறியீடுகள் காணப்படுகின்றன. ஆனால், குறியீடுகளின் முன்பு ‘பொன்’ என்னும் சொல் இல்லை. இல்லாமற்போனாலும் இக் குறியீடுகள் செலவு செய்யப்பட்ட பொன்னின் மதிப்பைக் குறிக்கின்றன என்று கருதலாம். அக் குறியீடுகள் இவை: ‘மதுரை பொன் கொல்லன் ஆதன் ஆதன்’ ‘மதுரை உப்பு வாணிகன்’ ‘பணித வாணிகன் நெடுமூலன்’ ‘அணிகன்’ ‘கொழுவாணிகன் இளஞ்சேந்தன்’ இந்தப் பெயர்களின் இறுதியில் உள்ள குறியீடுகள் இப் பெயருள்ளவர் இக்குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகச் செலவு செய்த தொகையைக் குறிக்கின்றன என்பது நன்றாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிவந்த இந்தக் குறியீடுகள் குறிப்பிடுகிற பொன்னின் அளவு (மதிப்பு) இன்னதென்று இப்போது தெரியவில்லை. கற்படுக்கைகள் ஏன்? அந்தப் பழங்காலத்திலே பௌத்த சமயத்துத் தேரர்களும், சைன சமயத்துத் துறவிகளும், ஊர்களில் தங்காமல் ஊருக்கப்பால் காடுகளில், மலைக்குகைகளில் இருந்து தவம் செய்தார்கள். பாயில் படுக்காமல் தரையில் படுப்பது அவர்களுடைய நோன்பு. அவர்கள் இருந்த குகைகளின் கற்றரைகள் இயற்கையாகக் கரடுமுரடாகவும் மேடுபள்ளமாகவும் இருந்தன. ஆகவே, அவர்களுடைய சாவகர்கள் (சாவகர் - சிராவக இல்லறத்தார்) கற்றரைகளைச் சமப்படுத்திச் செம்மையாக்கி வழவழப்புள்ள கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள். மழை பெய்தால் பாறைகளின் மேலிருந்து வழிந்து வருகிற மழைநீர், குகை வாயிலின் மேற்பாறை வழியாக விழுந்து குகையின் உட்புறத்தை நனைத்து ஈரமாக்கிவிடும். குகை வாயிலின் மேற்புறப் பாறையிலிருந்து விழுகிற நீர் காற்றினால் உந்தப்பட்டுக் குகை முழுவதும் பாய்ந்து நனைத்துவிடும். அதனால் குகைக்குள் இருக்கும் துறவிகளின் உடம்பு நனைந்து ஈரமாக்கிக் குளிரும் காய்ச்சலும் ஏற்படும். இவ்வாறு நேராதபடி, குகை வாயிலின் மேற்பாறையிலிருந்து மழைநீர் வாயிற்புறத்தில் விழாதபடி தடுத்து மழைநீர் பாறைகளின் இரு புறமும் பக்கவாட்டமாக வழிந்து போகும்படி உளியினால் மேற்புறப் பாறையைச் செதுக்கித் தூம்புபோல அமைத்தனர். இவற்றை யெல்லாம் கற்றச்சரைக் கொண்டு செய்விக்கவேண்டும். கற்றச்சருக்குக் கூலியாகப் பொருள் தர வேண்டும். பொருள் செலவு செய்து மலைக்குகைகளில் கற்படுக்கைகளை அமைத்தும் மழைநீர் உள்ளே விழாதபடி தடுத்துப் பக்கங்களில் வழிந்து போகும்படி தூம்புகளைச் செதுக்கியும் கொடுத்தனர். தாங்கள் அளித்த கொடைகளைப் பற்றி ஏடுகளில் தங்கள் பெயர்களை எழுதிவைப்பது உலக இயற்கை. இவற்றை அமைத்துக் கொடுத்தவர் தங்கள் பெயர்களைக் கற்படுக்கைகளிலும், குகைவாயில்களின் மேலும் செதுக்கிவைத்தனர். குகைகளில் இருந்த துறவிகள் பௌத்த-சைன மதத்தவர் ஆகையாலும் அவர்களுக்காகப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவரும் அந்த மதங்களைச் சேர்ந்தவர் ஆகையினாலும் அந்த மதத்தார் கையாண்டு வந்த பிராமி எழுத்தினால் இதை எழுதி வைத்தார்கள். (சைவ வைணவ மதத்துத் துறவிகள் காடுகளிலும் குகைகளிலும் வசிக்கவில்லை. ஆகவே அவர்களுக்குக் குகைகளில் கற்படுக்கைகள் அமைக்கப்படவில்லை.) சங்கச் செய்யுட்கள் ஏன் கூறவில்லை? கடைச் சங்க காலத்திலே (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில்) எழுதப்பட்ட சங்கச் செய்யுட்களிலே இந்தக் குகைகளைப் பற்றியும் இங்கு இருந்த முனிவர்களைப் பற்றியும் ஏன் கூறப்படவில்லை என்று கேள்வி எழுகிறது. சங்கச் செய்யுட்களை எழுதினவர் பெரும்பாலும் பௌத்த-சமணர் அல்லாத சைவ-வைணவர்கள். மேலும் அவர்கள் அகப்பொருள் புறப்பொருள்களைப் பற்றி, செய்யுட்களைச் செய்தனர். காதலையும், வீரத்தையும் பற்றிப் பாடின செய்யுட்களில் துறவிகள் (சமண - பௌத்தத் துறவிகள்) இடம்பெற வேண்டிய வாய்ப்பு இல்லை. ஆகவே இவற்றைப் பற்றிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை. ஆனால், சங்கச் செய்யுட்களிலே காடுகளில் - குகைகளில் வசித்த முனிவர்களைப் பற்றிய குறிப்புகள் குறிப்பாகக் காணப் படுகின்றன. சல்லியங்குமரனார் நற்றிணை 141ஆம் செய்யுளில் ‘குன்றுறை தவசியரை’க் குறிப்பிடுகிறார்.8 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், சமண மதத்துத் துறவிகள் மலைப்பக்கங்களில் இருந்ததைக் குறிப்பாகக் கூறுகிறார்.9 கலித்தெகை மருதக்கலி 28ஆம் செய்யுள் ‘கடவுட்பாட்டு’ என்று கூறப்படுகிறது. (கடவுள்-முனிவர், துறவிகள்). இந்தச் செய்யுளிலும் சமண சமயத்துத் துறவிகள் மலையில் இருந்தது குறிப்பாகக் கூறப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமண சமயத் துறவிகள் மலைகளில் இருந்து தவஞ் செய்தனர். இதைத் திருஞான சம்பந்தர் ‘ஆனைமாமலை ஆதியாய இடங்களில்’ சமண சமயத் துறவிகள் இருந்ததைக் கூறுகிறார். பிராமிக் கல்வெட்டுக்களினால் அறியப்படுபவை தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டவை. இதே காலத்தில்தான் சங்கச் செய்யுட்கள் (கடைச் சங்கச் செய்யுட்கள்) பாடப்பட்டன. சங்கச் செய்யுட்கள் பெரும்பாலும் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. அச் செய்யுட்களில் பிராகிருத மொழி வடமொழிச் சொற்களின் கலப்பு மிகச் சிலவே. ஆனால், அக் காலத்தில் வேற்றுமொழி (முக்கியமாக பிராகிருத மொழியும் சமக்கிருத மொழியும்) கலப்பு ஏற்படவில்லை என்று கருதுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. பிராகிருத மொழிச் சொற்கள் கடைச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்ததைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகின்றன. அச் சொற்களைக் காட்டுவோம். தம்மம் (தருமம்), ஸாலகன், நிகமம், உபாசன், விஸுவன் (ஓர் ஆளின் பெயர்) அதிட்டானம், காஞ்சணம், பணிதம், கரஸபன் (ஆளின் பெயர்) காயிபன் (ஆளின் பெயர்) குவிரன், கோயிபன் (கோசிபன்) குலஸ, ஸெட்டி முதலியன. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் கிரேக்க-உரோம நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்த யவனர் வாயிலாக, சில கிரேக்க மொழிச் சொற்கள் சங்க காலத் தமிழில் கலந்துவிட்டதைக் காண்கிறோம். அவை, சுருங்கை, மத்திகை, கலம் (மரக்கலம்), கன்னல் முதலியன. வாணிகத்துக்காக வந்துபோன யவனரின் கிரேக்க மொழிச் சொற்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்றால், மதச் சார்பாகத் தமிழகத்துக்கு வந்து ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பௌத்த-சமண சமயத்தவர்கள் மூலமாகப் பாலி, சூரசேனி என்னும் பிராகிருத மொழிச் சொற்கள் தமிழோடு கலக்காமல் இருக்குமோ? கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வந்து தமிழகத்தோடு கலந்துபோன பௌத்த சமண சமயங்களின் ‘தெய்வ’ மொழியாகிய பாலி, சூரசேனி மொழிச் சொற்கள் சமயச் சார்பாகத் தமிழரிடையே கலக்காமல் இருந்திருக்க முடியுமா? பௌத்த-சமண சமயங்களை மேற்கொண்ட தமிழர் பிராகிருத மொழிகளைக் கற்றனர். வடமொழியையும் கற்றனர். அதனால் அவர்கள் சமயநூல் எழுதினபோது அந் நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்து எழுதினார்கள். சீத்தலைச் சாத்தனார் தமிழை நன்கு கற்றவர். அதனோடமையாமல், பௌத்தர் என்னும் முறையில் பாலி மொழியையும் நன்கு கற்றவர். ஆகவே, அவருடைய மணிமேகலையில் தாராளமாகப் பாலி மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்தவரான இளங்கோ அடிகள் தாய்மொழியாகிய தமிழ்மொழியை நன்றாகக் கற்றவர். அதனோடு அமையாமல், சமணர் என்னும் முறையில் பிராகிருத மொழியையும் நன்கு கற்றவர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பல பிராகிருத மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. அதே காலத்திலிருந்த சங்கப் புலவர்கள் தனித் தமிழ் கற்றவர்கள். அவர்கள் அயல்மொழிகளைக் கற்றவர் அல்லர். அவர்கள் தனித்தமிழ் மொழியில் தமிழ் மரபுப்படி அகப்புறப் பொருள் பற்றிய செய்யுட்களை இயற்றினார்கள். அதனால் அவர்களின் செய்யுட்கள் தனித் தமிழாக உள்ளன. அவர்கள் காலத்தில் வேற்றுமொழிகள் தமிழில் கலக்க வில்லை என்று கூறுவது வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாது. தனித்தமிழ்ப் புலவர்களான சங்கப் புலவர் காலத்திலேயே பிராகிருதச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன என்பதற்கு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் மணிமேகலை சிலப்பதிகாரக் காவியங்களும் சான்று பகர்கின்றன. இந்த வரலாற்று உண்மையை யறியாத சிலர், கடைச் சங்ககாலத்தில் வேறுமொழிச் சொற்கள் கலக்க வில்லை என்றும், தனித் தமிழ் வழங்கிற்று என்றும் கூறுவதும், மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்கள் சங்ககாலத்துக்குப் பிறகு சில நூற்றாண்டு கழித்து எழுதப்பட்டன என்று கூறுவதும் வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாத சான்றுகளாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு (பௌத்த, சமண மதங்களோடு) வந்த பாலி, சூரசேனி முதலான பிராகிருத மொழிச் சொற்கள் கலவாமல், கடைச் சங்கம் முடிகிற வரையில் காத்துக்கொண்டிருந்து, கி.பி, 3ஆம் நூற்றாண்டில் கடைச் சங்கம் முடிந்த பிறகு தமிழில் கலந்தது என்று கூறுவது மொழியின் இயற்கையும் வரலாற்று உண்மையும் அறியாதவர் கூறும் கூற்றாகும். சங்க காலத்திலேயே பிராகிருதம் போன்ற வடமொழிச் சொற்கள் பௌத்தத் தமிழரிடையே புகுந்து பொதுமக்களிடையேயும் பரவி விட்டது என்பதே வரலாற்று உண்மை. அதற்குச் சான்றாக இருப்பது பிராமிக் கல்வெட்டெழுத்துக்களில் காணப்படுகிற பிராகிருத மொழிச் சொற்கள். தமிழ்மொழி உயிருள்ள மொழி. நெடுங்காலமாக வழங்கி வருகிறமொழி. உலகத்திலே, வழங்கி வருகிற உயிருள்ள மொழிகள் எல்லாம் வாணிகம், சமயம், அரசாட்சி, கலை முதலியவற்றின் தொடர்பாக வேற்றுமொழிச் சொற்களையும் பெற்றுக் கொள்வது இயல்பு. இந்த இயல்புப்படி சங்க காலத்திலேயும் சமயத் தொடர்பு பற்றி (பௌத்தம், சமணம்) பிராகிருத மொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன. இந்த வரலாற்று உண்மையை மறுக்க முடியாது. சங்க காலத்தில் அயல்மொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழ் மட்டும் இருந்தது என்று கூறுவது பொருந்தாது. வடநாட்டுப் பௌத்தமும், சமணமும் வந்தபோதே அவர்களோடு பிராகிருத மொழியும் வந்து விட்டது. அவர்கள் வருவதற்கு முன்பு, வேறு மொழித் தொடர்பு இல்லாத காலத்தில், தூய தமிழ் வழங்கியது உண்மை. ஆனால், வேறு மொழிகளைச் சமய மொழியாகக் கொண்ட பௌத்தமும், சமணமும் தமிழகத்திலே வந்து (கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை) 500 ஆண்டுகளாகத் தமிழரோடு உறவாடிக்கொண்டிருந்த காலத்தில் வேறு மொழிச்சொற்கள் கலவாமல் தூய தமிழ்மொழிதான் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தாது. சங்க இலக்கியங்களில் தூய தமிழாக இருக்கின்றன என்றால், அவை தமிழ் மரபுப்படி இயற்றப்பட்டவை. அகப் பொருள், புறப் பொருள்களைப் பற்றிப் பாடப்பட்டவை. ஆகவே பழந்தமிழ் மரபு அவற்றில் காணப்படுகின்றன. ஆனால் அந்தக் காலத்திலேயே தமிழ்மொழியில் வேறு மொழிச் சொற்களும் கலந்துவிட்டன. அந்தத் தமிழ் இலக்கியங்கள்தாம் சிலப்பதிகாரமும், மணிமேகலையும். பிராமிக்கு முன்பு பிராமி எழுத்து பௌத்த-சைன மதங்களின் சார்பாகத் தமிழகத்துக்கு வந்தது. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் வேறுவகையான எழுத்து நடைமுறையில் இருந்தது. தொல்காப்பியம் முதலான பழைய இலக்கண இலக்கிய நூல்கள் பழைய தமிழ் எழுத்தினால் எழுதப் பட்டன. பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்த பிறகு, பழைய தமிழ் எழுத்து மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டுப் புதிய பிராமி எழுத்து மெல்ல மெல்ல முதன்மை பெற்றது. இந்த எழுத்து மாறுதல் திடீரென்று ஏற்படவில்லை. பழை எழுத்து மறைவதற்கும் புதிய எழுத்து இடம் பெறவும் பலகாலம் சென்றிருக்க வேண்டும். இரண்டு நூற்றாண்டு களாவது சென்றிருக்க வேண்டும். பௌத்த-சைன மதங்களின் கொள்கை பரப்புதலினாலே பிராமி எழுத்து தமிழகத்தில் விளக்கமடைந்தது. அறிஞர் சிலர் பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் மொழியில் இலக்கியங்கள் ஏற்பட்டன என்றும், அதற்கு முன்பு தமிழில் இலக்கிய நூல்கள் எழுதப்படவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தவறானது. பிராமி எழுத்து தமிழகத்தில் புகுவதற்கு முன்பே தமிழருக்கு உரிய தமிழ் எழுத்தும், நூல்களும் இருந்தன. தமிழ்நாட்டில் பிராமி கல்வெட்டுக்களை எழுதியவர் நன்றாகத் தமிழ் கற்காதவர். அவர்கள் பிராகிருதச் சொற்களையும் சேர்த்துப் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். அந்தச் சொற்களையும் பிழையாக, பாமரர் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். மணிய் (மணி), கணிய் (கணி), பணஅன் (பணயன்), வழுத்தி (வழுதி), ஆந்தைய் (ஆந்தை), மத்திரை (மதுரை), பளி (பள்ளி), காவிதி இய் (காவிதி), கொட்டுபி தோன் (கொடுப்பித்தோன்) முதலான கொச்சைச் சொற்களைக் காண்க. சில பிராமி எழுத்து வாக்கியங்கள் வினைச்சொல் (பயனிலை) இல்லாமலே எழுதப்பட்டுள்ளன. யானைமலை, குன்றக்குடி, அழகர்மலை என்னும் இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் நன்றாகப் படிக்காதவர்களால் கொச்சைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில் சங்கப் புலவர்களின் உயர்ந்த, சிறந்த செந்தமிழ் நடைச் செய்யுள்களும் வழங்கி வந்துள்ளன. இவ்வாறு, ஒரே சமயத்தில் உயர் தனிச் செம்மொழி நடையும் பிராகிருதம் கலந்த கொச்சைத் தமிழ் நடையும் வழங்கின என்பதை பிராமி எழுத்து வாசகங்களினால் அறிகிறோம். இதற்கு காரணம் பழைய தமிழ் எழுத்தைப் பயின்று வந்ததும் அதே சமயத்தில் புதிய பிராமி பயிலப்பட்டு வந்ததும் என்பது தெரிகிறது. யூபிரிதிஸ், தைகிரிஸ் ஆறுகள் பாயும் மொசப டோமியாவில், பழங்காலத்தில் இருந்த கால்டியா தேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு வகையான எழுத்துக்கள் வழங்கி வந்ததை வரலாற்றில் அறிகிறோம். அந் நாட்டு மதகுருமார் தங்களுக்கென்று ஒருவகை எழுத்தை எழுதினார்களாம். அதே சமயத்தில் பாமரக் குடிமக்கள் இன்னொரு வகையான எழுத்தை எழுதினார்களாம். அதுபோலவே, தமிழ்நாட்டில் சங்கப் புலவர் பயின்ற பழந்தமிழ் எழுத்து ஒன்றாகவும், பௌத்த சமண மதத்தவர் எழுதிய புதிய பிராமி எழுத்து வேறாகவும் இருந்தன. இந்த நிலை ஒன்றிரண்டு நூற்றாண்டு இருந்திருக்க வேண்டும். பிறகு பிராமி எழுத்து மிகப்பரவி வளர்ந்ததனால் பழைய தமிழ் வரி வடிவம் மறைந்து போயிற்று. இதை அறியாமல் சிலர், பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு தமிழில் இலக்கியமும், இலக்கணமும் இல்லை என்றும், பிராமி வந்த பிறகுதான் அந்த எழுத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவது ஏற்கத்தக்கதன்று. அவர்கள் கூற்று தவறு. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இடம் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டு எழுத்து மொழிகள் பௌத்த - சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதினவர் பௌத்த-சமண சாவகர்கள், அவர்கள் பிராகிருதம், தமிழ் இரண்டையும் கலந்த கொச்சைத் தமிழில் பிழையாக எழுதினவைதாம், பிராமியக் கல்வெட்டுக்கள். செந்தமிழ் நடைக்கும் அவர்களுடைய கொச்சை நடைக்கும் தொடர்பு இல்லை. இந்தக் கொச்சை நடையைத்தான் தமிழர் எல்லோரும் வழங்கினார்கள் என்று கூறுவது வரலாறு அறியாதவர் கூற்றாகும். துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தினாலே துருக்கி மொழியின் இலக்கண, இலக்கியங்கள் தொன்று தொட்டு எழுதப்பட்டன. அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தப் புரட்சி காரணமாக, பழைய அரபி எழுத்து மாற்றப் பட்டுப் புதிதாக இலத்தின் (ஆங்கில) எழுத்து அங்கு எழுதப் படுகிறது. துருக்கி மொழி நூல்களும், இலக்கியங்களும் இக்காலத்தில் இலத்தின் எழுத்தினால் எழுதப்பட்டு வருகின்றன. இலத்தின் எழுத்துக்களால் துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்படுவதனால், இலத்தின் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி மொழியின் இலக்கிய இலக்கணங்கள் உருவடைந்தன என்று எந்த அறிஞரும் கூறமாட்டார். துருக்கி மொழியில் எழுத்து மாறிற்றே தவிர, இலத்தின் எழுத்து வந்தபிறகுதான் துருக்கி மொழி இலக்கியங்கள் தோன்றின என்பது தவறு. இது யாவரும் அறிந்ததே. இதுபோலவே, சங்ககாலத்தில், பழந்தமிழ் எழுத்துக்குப் பதில், பிராமி எழுத்து எழுதப்பட்டபோது, எழுத்து மாறிற்றே தவிர, பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் இலக்கியம் தோன்றிற்று என்பதும் தவறு. தமிழ் மரபும் தமிழ்மொழி வரலாறும் அறியாதவரே தவறான கருத்தைக் கூறுவர். படித்த முடிவுகள் தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்டவை என்று கூறினோம். அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப் பட்டவை என்று சொன்னோம். இந்த எழுத்துக்களைப் படித்துப் பொருள் காண அறிஞர் சிலர் முயன்றனர். இராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரி, கே.வி. சுப்பிரமணிய அய்யர், சி. நாராயண ராவ், ஐராவதம் மகாதேவன், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் இந்தக் கல்வெட்டுக்ளைப் படித்துப் பொருள் கூறினார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒரே முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு கருத்துக் களைக் கூறிச் சென்றனர். இதற்குக் காரணம் சில எழுத்துக்களை வெவ்வேறு எழுத்தாகக் கொண்டு படித்தது ஒன்று. எழுத்துக்களைச் சேர்த்து, சொல் சொல்லாகப் பிரித்தபோது ஏற்பட்ட மாறுபாடு இன்னொன்று. ஆரியத் தொடர்பைப் புகுத்திக் கூறவேண்டும் என்று கருதித் தங்களுடைய சொந்தக் கருத்தைப் புகுத்தியது வேறொன்று. இக் கல்வெட்டெழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழக மரபையும், தமிழர் பழக்க வழக்கங்களையும், அறிந்து அதற்கேற்பப் பொருள் காணாதது மற்றொன்று. இந்தக் காரணங்களினாலே தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக்கள் சரியாகப் படிக்கப்படாமல் உள்ளன. ஆகவே இவற்றைப்புதிதாக ஆராய்ந்து முடிவு காண வேண்டி யிருக்கிறது. அவற்றைக் காண்போம். அடிக் குறிப்புகள் 1. கிரந்த எழுத்து என்பது தென் இந்தியாவில் வழங்கிவந்த ஒரு வகையான எழுத்து. இந்த எழுத்தைப் பௌத்தரும், சமணரும், தென்னிந்தியாவில் புதிதாக அமைத்தார்கள். கிரந்த எழுத்தை அவர்கள் பிராமி எழுத்திலிருந்து உருவாக்கினார்கள். கிரந்த எழுத்தைப் பிராகிருத நூல்களை எழுதவும் சமஸ்கிருத நூல்களை எழுதவும் பயன்படுத்தினார்கள். கிரந்த எழுத்து குமரிமுனையி லிருந்து வடக்கே விந்திய மலை வரையில் நெடுங்காலம் வழங்கிவந்தது. 2. Madras Epigraphy Report, 1907. Part II, Para 1. P. 60 3. Sangam literature: its cults and cultures, K.A. Nilakanta Sastri, 1962, p. 4. 4. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p.25. 5. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p.140. 6. P. 323, Epigraphia Indica, Vol. II 7. The Brahmi Inscription of South India, C.Narayana Rao, pp. 362-376. The New Indian Antiquary, Vol.I, 1938-39. 8. “பெரியாரை ஞெ மிர்த்த புழற் காய்க் கொன்றை நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்றுறை தவசியர் போல” (நற். 141 : 3 - 5) (ஆடாமேனித் தவசியர் - அசையாமல் தியானத்தில் இருக்கும் உடம்பையுடைய தவசியர் என்று இதற்குப் பொருள் கொள்வது கூடாது. ஆடாமேனி என்பதற்கு, நீராடாத உடம்பையுடையவர் என்பது பொருள். சைன முனிவர் நீராடுவது கூடாது என்பது அந்த மதக் கொள்கை.) 9. “உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும் கானயானை கவினழி குன்றம்.” (அக நா. 132:1- 4) (மலைகள் நெருங்கிய இடுக்கான காட்டுவழியில், உணவு கொள்ளாமல் பட்டினியிருப்பதனால் வாடிய தோற்றத்தையும் நீராடாத விதத்தையும் உடைய சமண முனிவர் செய்வதுபோல, மலையிடுக்கு வழியில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன என்பது இதன் பொருள்.)ஆகவே, இவற்றைப் புதிதாக ஆராய்ந்து முடிவு காணவேண்டியிருக்கிறது. அவற்றைக் காண்போம். 1. அரச்சலூர் பிராமி எழுத்துக்கள் கோயமுத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில், ஈரோடு காங்கேயம் நெடுஞ்சாலையில் ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது. புகழூருக்கும் அரச்சலூருக்கும் முப்பது கல் தொலைவு இருக்கும். அரச்சலூர் நாகமலைமேல் ஏறத்தாழ அறுபது அடி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையை இவ்வூரார் ஆண்டிப்பாறை என்று கூறுகிறார்கள். இந்தக் குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் உள்ளன. 1961 ஆம் ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி, ஈரோடு புலவர் இராசு மற்றும் சில நண்பர்கள் இந்தக் குகைக்கும் சென்று இங்குள்ள பிராமி எழுத்தை மைப்படி எடுத்து சுதேசமித்திரன், செந்தமிழ்ச் செல்வி இதழ்களில் வெளியிட்டார்கள்.1 பிறகு தொல்பொருள் துறையினர் அங்குச் சென்று இவ்வெழுத்துக்களைப் பார்த்தனர். இதனுடைய வரிவடிவம் இது: இந்தப் பிராமி எழுத்து காலத்தால் பிற்பட்டது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இது இருபத்தேழு எழுத்துக்களைக் கொண்ட ஒரே சொற்றொடராக அமைந்திருக்கிறது. எபிகிருபி இலாகாவின் 1961 - 62 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த எழுத்துக்களைப் பற்றி அறிமுகப்படுத்தி, தற்காலிகமாக இதைப் படித்துள்ளனர்.2 அதில் இவ்வாறு படித்திருக்கிறார்கள். எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன் திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துள்ளார்3. ஏழு தானம் பண் வித்தான் மணிய் வண்ணக்கன் தே(வ)ன் சா(த்த)ன். மணிக்கல் வாணிகனான தேவன் சாத்தன் (இந்த) எழு படுக்கைகளை (இருக்கைகளை) பண்ணுவித்தான் என்று பொருள் கூறியுள்ளார். திரு.டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறியுள்ளார்.4 இவ்வெழுத்துக்களின் தொடக்கத்தில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் ‘சித்தம்’ என்னும் சொல்லைக் குறிக்கிற அடையாளம் என்று கருதுகிறார். ‘(சித்தம்) தித்தம் பூணதத்தான் மாறைய வண்ணக்கன் தேவன் சாத்தன்’. தித்தம் என்பது தீர்த்தம். புனிதம் என்னும் பொருள் உள்ளது. தத்தான் என்றிருப்பது தந்தான் என்றிருக்கவேண்டும். ‘மாறைய’ என்பது ஓர் ஊரின் பெயரைக் குறிக்கிறது. இது மாறை நாட்டைச் சேர்ந்த ஊர் என்பது பொருள். வண்ணக்கன் என்பது நாணயப் பரிசோதகன் என்னும் பொருள் உள்ளது. கடைசிக் சொற்கள், தேவன் சாத்தன் என்பவை. மாறநாட்டு நாணயப் பரிசோதகனாகிய தேவன் சாத்தன் தூய்மை பெறுவதற்குத் தவம் செய்ய (இந்தப் படுக்கைகளைக்) கொடுத்தான் என்பது பொருள். இதை நாம் படித்துப் பொருள் காண்போம். முதலில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் எ என்னும் எழுத்தாகும். சாதாரணமாகப் புள்ளியிடப்படவேண்டிய எழுத்துக்கள் கல்வெட்டில் புள்ளியிடப்படுவது இல்லை. இந்த எகர எழுத்தில் புள்ளியிடப்பட்டிருக்கிறது. ‘எகர ஒகர மெய் புள்ளி பெறும்’ என்பது பழைய எழுத்திலக்கணம். இதில் புள்ளி யிட்டிருப்பதனால் இது எகரக் குற்றெழுத்து என்பது நன்றாகத் தெரிகிறது. பிராமி எகர எழுத்து முக்கோண வடிவமாக எழுதப்படுவது வழக்கம். முக்கோண வடிவம் காலப்போக்கில் வட்டவடிவமாக மாறிவிட்டது. இந்த எழுத்துக்களைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்: எழுத்தும் புணருத்தான் மணிய் வணக்கன் தேவன் சாத்தன். எழுதுதும் என்றிருப்பது எழுத்தும் என்றிருக்கவேண்டும். புணருத்தான் என்பது பொருத்தினான் சேர்த்தான் என்னும் பொருள் உள்ள சொல். இது புணர்த்தான் என்றிருக்கவேண்டும். எழுத்தும் புணர்த்தான் என்பதன் பொருள். எழுத்தையும் சேர்த்தவன் (எழுதினவன்) என்பது. மணிய் என்பது மணி. மணிக்கற்கள். இகர ஈற்றுச் சொல்லில் யகர மெய் சேர்ந்துள்ளது. வண்ணக்கன் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். மணிவண்ணக்கன் என்றால் மணிக்கல் (இரத்தினக்கல்) வாணிகன் என்பது பொருள். தேவன் சாத்தன் - இது மணி வாணிகனுடைய பெயர். வண்ணக்கன் என்பது பொன்னையும் மணிகளையும் பரிசோதிக்கிறவன். புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர்கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன், வண்ணக்கன் சோமருங்குமரனார் என்னும் பெயர்களைச் சங்கச் செய்யுட்களில் காண்கிறோம். மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் (இந்தக் கல்வெட்டின்) எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள். எழுத்தும் என்பதில் உள்ள ‘உம்’ இவன் இன்னும் எதையோ செய்தான் என்று கூறுகிறது. அது என்ன? குகையில் முனிவர் இருப்பதற்குக் கற்படுக்கையை அமைத்ததோடு அல்லாமல் அவனே இந்தக் கல்வெட்டின் எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள். அடிக் குறிப்புகள் 1. சுதேசமித்திரன் 1961 சூன் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு, ‘ஈரோடு அருகே பிராமி எழுத்துச் சாசனம் என்னும் தலைப்பு’ ‘ஈரோடுக்குப் பக்கத்தில் அரச்சலூர் மலையில் மே 26 ஆம் நாள் பிராமி எழுத்துச் சாசனம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அரச்சலூர் மலையிலே ஆண்டிப்பாறை என்னும் குகையிலே இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. மயிலை சீனி வேங்கடசாமியும் அவருடைய நண்பர்களான ஸ்ரீபால், வித்துவான்கள் இராசு, பச்சையப்பன், சென்னியப்பனும் இந்தச் சாசனத்தைத் தற்செயலாகக் கண்டு பிடித்தார்கள்.’ 2. Annual Report on Indian Epigraphy 1961-62 P. 10 3. P. 67. Seminar on Inscriptions 1966. 4. Early South Indian Palaeography, P. 293-298. 2. கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பதரைக் கல் தொலைவில் திருமங்கலம் சாலையில் கொங்கர் புளியங்குளம் என்னும் ஊர் இருக்கின்றது. இவ்வூரின் வடகிழக்கே தாழ்வான பாறைக்குன்றுகள் இருக்கின்றன. இக் குன்றுகள் ஒன்றில் இயற்கையாக அமைந்த ஒரு பொடலில் ஆறு சிறு குகைகள் உள்ளன. இந்தக் குகைகளிலே 33 கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குகையிலே மூன்று பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக் கல்வெட்டு கள் 1910 ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 55, 56, 57 ஆம் எண்ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்த அறிஞர்கள் வெவ்வேறு வகையாகப் படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவற்றைக் கூறுவோம். திரு. கிருட்டிணசாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.1 1. கு ட்டு கொ ட்டு பி நா வா னா ஊ பா சா அ னா (ஊ) பா (ட்டு) வ 2. (கு) ட் (ஊ) கொ ட்டா லகு (ஈ) த தா வினா சே ட்டு அ த (ஆ) னா லே னா 3. பா க னா ஊ ர பே த (ஆ) த (ஆ) னா பி ட்டா னா ஈத தா வெ போ னா குட்டு என்பது திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டில் வருகிற ‘குட்டு’ என்பதாகும். இது கொடு என்னுஞ் சொல்லின் திரிபு. பாகனூர் என்பது மதுரைக்கு வடக்கே உள்ள பாகனூர்க் கூற்றம். லேனா என்பது பாலிமொழிச் சொல். லேனா என்பதன் பொருள் குகை என்பது. திரு.கே.பி. சுப்பிரமணிய அய்யர் படித்து விளக்கங் கூறுவது வருமாறு:2 1. குட்டு கொட்டுபிதாவான் உபாசா அன் உபாருவான் 2. குட்டு கொட்டால கு இதா தாவின் சேட்டு அதான் லேன் 3. பாகனூர் போதாதான் பிட்டான் இதாதாவெ லேன். முதல் வாக்கியத்தில் உள்ள உபாருவன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். உபாசகனான (பக்தனான) உபாருவான் இந்தக் குகையை வெட்டுவித்தான் என்பது இந்த வாக்கியத்தின் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள ‘கொட்டு கொட்டாலகு’ என்பது குகையை வெட்டி அமைக்கிறவன் என்னும் பொருள் உள்ளமு. இதாதாவின் சேட்டு அதான் என்பது ஓர் ஆளின் பெயர். கொத்திக் குகையை உண்டாக்குகிறவனாகிய இதாதாவின் என்பவனுடைய குகை என்பது இதன் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள பாகனூர் என்பது பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்தில் ஓர் ஊர். போதாதான் என்பதன் பொருள் தெரியவில்லை. பிட்டான் இதாதாவெ(ன்) என்பது ஓர் ஆளின் பெயர். பிட்டான் என்பது பட்டாரன் என்பதன் திரிபு. லேன் என்பதன் பொருள் குகை. பாகனூரில் இருக்கும் பிடான் இதாதாவெ என்பவனுடைய குகை என்பது இந்த வாக்கியத்தின் பொருள். பின் இரண்டு சொற்றொடர்களின் கடைசியில் இரண்டு குறிகள் உள்ளன. முதல் குறி சிறு வட்டமும் வட்டத்தின் மேலும் கீழும் இரண்டு கைகளும் உள்ளன. இஃது ஓம் என்பதைக் குறிக்கிறது. அதை அடுத்துச் சதுரமும் அதற்குள் குறுக்கு நெடுக்காக இரண்டு கோடுகளும் காணப்படுகின்றன. இவை சுவஸ்திகத்தின் அடையாளமாகும். 3 திரு. சி. நாராயணராவ் வழக்கப்படி இவற்றைப் பிராகிருதமாக்கிப் பிறகு சமற்கிருதப்படுத்தியும் பொருள் கூறுகிறார்.4 1. ‘குட்டு கொட்டு பிதா வானா உபாசா அவுவா ஊ பாட்டுவ’ (பிராகிருதம்) ‘உபாட்டு-அ குட்டு கொட்டாபிதவான் உபாத்யா யானாம்’ (சமற்கிருதம்) ‘ஊபாட்டு’அ என்பவன் பொக்கிஷத்துக்காக இதை வெட்டினான் என்பது இதன் பொருள். 2. ‘குட்டு கொடாலகு இதாதாவி நா சேட்ட அ தானா லேனா’ (பிராகிருதம்) ‘கோஷ்ட்டம் கோஷ்ட்டாகா-க்ருதே ஹிதார்த்தாய; ஞான - ஸ்ரேஷ்ட்யஸ்ஸ தானம் லயனம்’ (சமற்கிருதம்) நூல் நிலையத்தின் ஆக்கத்துக்கான இடம்; ஞான சிரேஷ்டன் தானமாகக் கொடுத்த குகை என்பது பொருள். 3. ‘பாகானா - ஊரா பேத் (ஆ) தானா பிட்டானா இதாதாவே போனா’ (பிராகிருதம்) ‘பாகானா’ ஊரா வ்ருத்தானாம் தானம் பிட்டாகானாம் ஹிதார் தாய போ (ப்ரோ) தானாம்’ (சமற்கிருதம்) முன்பின்னாக மாறிப்போன (பௌத்த மதத்தின்) பிடகப் புத்தகங்களை மாணவர் நன்மைக்காகப் பாகனூர்ப் பெரியவர்கள் கொடுத்த தானம் என்பது இதன் பொருள்: திரு.ஐ. மகாதேவன் இவற்றை இவ்வாறு படிக்கிறார்.5 1. ‘குற கொடுபிதவன் உபாசன் ஊபறுவ்...’ உபாசகனாகிய உ(ய்)ப றுவ(ன்) இந்தக் கூறையi கொடுப்பித்தான். (இவன் முதல் சொல்லைக் ‘குற’ என்று படித்துக் கூறை என்று பொருள் கூறுகிறார்.) 2. ‘குற கொடல கு-ஈத்தவன் சேற அதன் என்? சேறு அதன் (மேல்கட்டு) கூறையை வேய்ந்தான். 3. ‘பாகன்-ஊர் பேதாதன் பிடன் ஈத்த வேபொன்’ பா(க்)கனூர் பேராதன் பி(ட்)டன் இந்தக் கூரையை வேய்ந்தான். திரு.தி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.6 1. ‘குறு கொடுபிதவன் உபசஅன் உபறுவ’ குறு என்பது கூறு என்னும் சொல். இங்கு இது கற்படுக்கைகளின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. கொடுபிதவன் என்பது சொல். உபசன் என்பது உபாசகன். குறுகோடுவைச் சேர்ந்த உபாசகனான உபறுவன் இதைக் கொடுப்பித்தான் என்பது இதன் பொருள். இதை வேறுவகையாக இப்படியும் படிக்கலாம்: ‘குறு கோடு பிதவான் ஊ பச-அன் ஊபறுவ’ குறுகோடு என்பதை ஓர் ஊர் அல்லது சிறு குன்று என்று பொருள் கொள்ளலாம். பிதவான் என்பது பிதா அல்லது பிதுர் என்னும் சொற்களுடன் சம்பந்தப்பட்ட சொல். இதன் பொருள் தந்தை என்பது. இது தூய்மையான துறவியைச் சுட்டுகிறது. உபசன் என்பது உபாசகன். உபறுவ என்பது ஓர் ஆளினுடைய பெயர். குறுபோட்டுத் தூய துறவியின் பக்தனான உபாசகன் உபாறுவன் என்பது இதன் திரண்ட பொருள். 2. ‘குறு கொடல்கு ஈத தூவின் செறு அதன் போன்’ குறு என்பது கூ. இங்குக் கற்படுக்கையின் ஒரு கூறைக் குறிக்கிறது. ஈத என்பதன் பொருள் இந்திரன். தூவின் என்பது மயில் இறகுக் கத்தை. செறு அதன் என்பது ஓர் ஆளின் பெயர். 3. ‘பாகன் ஊர் பொத்தன் பிடன் ஈத தூ வே போன்’ பானூர் என்பது ஓர் ஊரின் பெயர். பிடன் என்பது ஓர் ஆளின் பெயர். தூ வெ என்பது மயில் இறகுக் கத்தை. போன் என்பது பொன். பொன் என்பதன் பொருள் மலை (மேருமலை, பொன்மலை) மலைக்குகை என்பது. இந்த மூன்று கல்வெட்டெழுத்துக்களை நாம் படிப்போம். 1. குட்டு கொடுபிதவன் உபாசா அன் ஊபட்டூவ் ‘குட்டு கொடுப்பித்தவன் உபாசான் ஊபட்டுவ(ன்)’ என்பது இதன் வாசகம். குட்டு என்பது குன்று. கொடுபிதவன் என்பது கொச்சைச் சொல். இது கொடுப்பித்தவன் என்று இருக்க வேண்டும். உபாசாஅன் என்பதும் கொச்சைச் சொல். இஃது உபாசகன் என்றிருக்க வேண்டும். ஊபட்டுவன் என்பது உபாசனுடைய பெயர். 2. குட்டு கொடாலகு ஈத்தவன் சொறு அதன் பொன். இந்த வாக்கியத்திலும் குட்டு என்னும் சொல் வருகிறது. குட்டு என்பதற்குக் குன்று என்று பொருள் கூறினோம். குன்று என்பதைப் பேச்சு வழக்கில் குட்டு என்று கூறுகிறார்கள். மதுரை வட்டத்து மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவிலுள்ள கருங்காலக் குடியில் இருக்கிற குன்றுகளை அவ்வூரார் குட்டு என்று கூறுகின்றார்கள். அவர்கள் அந்தக் குன்றுகளைப் ‘பஞ்ச பாண்டவர் குட்டு’ என்று கூறுகிறார்கள். இது 1911ஆம் ஆண்டு எபிகிராபி அறிக்கை 57ஆம் பக்கத்தில் கூறப்படுகிறது. குன்று என்னுஞ் சொல் குற்று என்றாகிப் பிறகு குட்டு என்றாயிற்று. இரண்டாவது சொல் ‘கொடாலகு’ என்று இருக்கிறது. இதன் பொருள் தெரியவில்லை. ‘குட்டு கொடாலகு’ என்று இருப்பதைக் கொண்டு, இது, பொடவு ஆக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. குடங்கு என்பதைத் தவறாகக் கொடலகு என்று எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. ஈத்தவன்-கொடுத்தவன். மூன்றாவது சொல் சொறு. சிறு என்று எழுதப்பட வேண்டியதைச் ‘சொறு’ என்று பிழையாக எழுதியிருக்கின்றான் கற்றச்சன். ஆதன் என்பதை அதன் என்று எழுதியிருக்கிறான். சிறு ஆதன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். ‘சொறு அதன் பொன்’ என்பது சிறு ஆதன் கொடுத்த பொன். அவன் குகையின் கற்படுக்கையை அமைக்கப் பொன் கொடுத்தான். அதன் மதிப்பு இரண்டு குறியீடுகளில் காட்டப்பட்டுள்ளது. 3. பாகன் ஊர் பேத்தன் பிடான் ஈத்தவெ பொன் பாகனூர் என்பது ‘பாகன் ஊர்’ என்று பிரித்து எழுதப்பட்டுள்ளது. பாகனூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு வடக்கே இருந்த ஓர் ஊரின் பெயர். இது பாகனூர்க் கூற்றத்தின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேட்டில் பாகனூர்க் கூற்றம் கூறப்படுகிறது. ‘பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர்நாடு’ 7 வேள்விக்குடி என்னும் ஊர் பாகனூர்க் கூற்றத்தில் இருந்தது என்று வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வதானை ஆடல் வேந்தேய்! வேள்விக்குடி என்னும் பெயர் உடையது. ஒங்காத வேற்றானையோ டோதவேல உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது.8 பேத்தன் பிடான் என்பதும் தவறாக எழுதப்பட்டிருக்கின்றது. போத்தன் பிட்டன் என்று இஃது எழுதப்படவேண்டும். பேத்தன் என்றும் பிடான் என்றும் பெயர் இல்லை. போத்தன், பிட்டன் என்னும் பெயர்கள் சங்ககாலத்தில் வழங்கி வந்தன. நாகன் போத்தனார், மதுரைப் போத்தனார், மதுரை மருதங்கிழார் மகனார் இளம் போத்தனார் என்று போத்தன் என்னும் பெயரைச் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன், பிட்டங்கொற்றன் என்னும் பெயர்களையும் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன் கொற்றனைய பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் உள்ளன.9 இந்தச் சான்றுகளைக் கொண்டு இந்தப் பிராமிக் கல்வெட்டில் ‘பேத்தன் பிடான்’ என்றிருப்பது தவறு என்றும் அது போத்தன் பிட்டன் என்றிருக்க வேண்டும் என்பதும் உறுதியாகத் தெரிகின்றது. ‘ஈத்தவெ’ என்றிருப்பதும் கொச்சைச் சொல். இஃது ஈத்தவை என்று இருக்கவேண்டும். ஈத்தவை என்பது ஈந்தவை என்பதன் வலித்தல் விகாரம். ஈந்தவை - ஈத்தவை - கொடுத்தவை. பொன் என்பதன் பக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவை பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன. அந்த அளவு இன்னதென்பது தெரியவில்லை. பாகனூரில் இருந்த போத்தன் பிட்டன் என்பவர் இந்தக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகச் செலவிட்ட பொன் இவ்வளவு என்பதை இந்தக் கல்வெட்டு மொழிகள் கூறுகின்றன. அடிக்குறிப்புகள் 1. 1st Oriental Conference. 2. Third Oriental Conference. 3. Third Oriental Conference. 4. New Indian Antiquary. 5. p.61. Seminar on Inscriptions 1966. 6. p.228 - 231 Early South Indian Palaeography. 7. வேள்விக்குடிச் செப்பேடு, மூன்றாம் ஏடு, பின் பக்கம் 33-34ம் வரி. 8. வேள்விக்குடிச் செப்பேடு, ஏழாம் ஏடு, பின்புறம் வரி 107-110. 9. புறநா. 120, 168, 169, 172. 3. குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து இராமநாதபுர வட்டத்து, திருப்பத்தூர் தாலுக்காவில் குன்னக்குடி (குன்றக்குடி) இருக்கிறது. காரைக்குடியிலிருந்து ஐந்துகல் தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றின் பெயரே இவ்வூரின் பெயராக அமைந்திருக்கின்றது. குன்றின்மேல் முருகப் பெருமா னுக்குக் கோயில் இருக்கின்றது. குன்றின் அடிவாரத்தில் மூன்று குடைவரை (குகைக்)க் கோயில்கள் இருக்கின்றன. மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு மேற்கே இயற்கையாக அமைந்த பொடவு இருக்கிறது. இந்தப் பொடவு இப்போது ஞானியார் மடம் என்று பெயர் கூறப்படுகிறது. இந்தப் பொடவின் மேற்புறப் பாதையின் உட்பக்கத்தில் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கின்றது. 1909ஆம் ஆண்டில் இந்த எழுத்து கண்டுபிடிக்கப் பட்டது. 1910ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறை அறிக்கையில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.1 இந்த எழுத்து 1909 ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பின் 44 ஆம் எண்ணாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.2 குகை வாயிலின் மேற்புறத்துப் பாறையில், உட்புறமாகப் பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள் ஒரே வரியில் பதினொரு எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது. இந்த எழுத்துக்களைப் பொறித்த கற்றச்சன் தவறு செய்துவிட்டான். வழக்கப்படி இடப்புறத்திலிருந்து வலப்புறமாக எழுதாமல், வலப் பக்கத்தி லிருந்து இடப் பக்கமாகப் பொறித்திருக்கின்றான். இந்த நிலையில் இவ் வெழுத்துக்களைப் படிப்பது கடினமாக இருக்கின்றது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது. இதை இடப் புறத்திலிருந்து தொடங்கி வலப் புறமாக எழுதினால் இதன் உருவம் இப்படி அமையும். இதுதான் சரியான வடிவம். திரு. கிருட்டிண சாத்திரியும், திரு. சுப்பிரமணிய அய்யரும் இதைப் படிக்காமல் விட்டனர். திரு. டி.வி.மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார். ‘உர ஊர அதன் சாத்தன்’ என்று படித்துள்ளார். உபி ஊர் ஆதன் சாத்தன் என்று அமைத்து விளக்கங் கூறுகிறார். அதன் என்பது ஆதன். ஆதன் என்பதன் பொருள் ஆட்தன், ஆப்தன் என்பதும் அர்ஹத் என்பதும் ஒன்றே. அர்ஹத் என்னுஞ் சொல்லைப் பௌத்தர், சைனர், ஆசீவகர் பயன் படுத்தியுள்ளனர் என்று கூறுகின்றார்.3 இதை இவர் ‘உபிஊர் ஆதன் சாச்சன்’ என்று படித்தது சரியே. ஆனால் ஆதன் என்பதற்கு இவர் கூறும் விளக்கம் தவறாகவும் குத்திரயுக்தியாகவும் இருக்கின்றது. ஆதன் என்னும் பெயர் சங்க காலத்தில் மக்கள் பெயராக வழங்கி வந்துள்ளது. திரு.ஐ. மகாதேவன் இதைப் படித்ததில் முதல் எழுத்து புரைசல் இடையே சரியாகத் தெரியாமலிருப்பதனால் அந்த எழுத்தை விட்டு விட்டு மற்ற எழுத்துக்களைப் படித்துள்ளார். ‘...பிஊர் ஆதன் சாத்தன்’ என்று படிக்கின்றார்.4 இவர்கள் இருவரும் இந்த எழுத்துக்களைச் சரியாகவே படித்திருக்கின்றார்கள். முதல் எழுத்தாகிய உ புரைசலும் சேர்த்து இருக்கின்றது. அதை உ என்றே படிக்கலாம். மூன்றாவது எழுத்தை டி.வி. மகாலிங்கம் ஃ இவ்வாறு வரைந்து இஊ என்று படித்துள்ளார். தமிழில் இவ்வாறு எழுதுவது மரபு இல்லை. இதை ஊன்றிப் பார்த்தால் (ஊ) என்று தெரிகின்றது. ஊபி ஊர் என்பது உப்பூர். அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வாசகம். சே என்று தவறாக எழுதப்பட்டிருக் கின்றது. இது சா என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பிராமி எழுத்து சகரத்தின் உச்சியில் இடப் பக்கமாகக் கோடு இட்டால் செ ஆகிறது. அந்தக் கோட்டை வலப்பக்கமாக இட்டால் சா ஆகின்றது. வலப் பக்கமாக இடவேண்டிய கோட்டை இடப்பக்கமாக இட்டிருக்கிற படியால் சேத்தன் என்று படிக்கவேண்டியிருக்கிறது. அதைச் சாத்தன் என்று படிப்பதே சரியாகும். உப்பூர் ஆதன் சாத்தன் குன்றக்குடி மலைப் பொடவில் கற்படுக்கைகளைத் தன்னுடைய செலவில் அமைத்தான் என்பது இதன் பொருள். அடிக்குறிப்புகள் 1. Madras Epigraphy Report, 1910 pt. II para 5. 2. Epi. Call. 44 of 1909. 3. Journal of Madras University Vol. XXX No. 1, (page. 5-7) p. 285-287 Early South Indian palaeography 1967. 4. p. 67. Seminar on Inscriptions 1966. 4. மால கொண்ட பிராமிய எழுத்து நெல்லூர் மாவட்டத்து கண்டுகூர் தாலுகாவில் மாலகொண்ட என்னும் மலை இருக்கிறது. கொண்ட என்றால் தெலுங்கு மொழியில் மலை என்பது பொருள். இந்த மலையில் ஒரு குகையும் அதன் அருகில் பிராமி எழுத்தும் காணப்படுகின்றன. இவை 1937ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தென் இந்தியக் கல்வெட்டுத் துறையின் 1937-38 ஆம் ஆண்டு அறிக்கையில் இது கூறப்பட்டிருக்கின்றது.1 இந்தப் பிராமி எழுத்தின் மொழித் தொடர்கள் பிராகிருத மொழித் தொடர்கள். இப்போது ஆந்திரநாட்டில் சேர்ந்துள்ள இந்த இடம் சங்க காலத்தில் தமிழகத்தின் வடஎல்லையைச் சேர்ந்திருந்தது. தமிழகத்தின் வட எல்லை பொதுவாக வேங்கடமலை என்று கூறப்பட்டாலும் அதன் சரியான எல்லை வடபெண்ணை ஆறு. பழைய காலத்துத் தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அக் கோட்டங்களின் முதல் கோட்டம் வடபெண்ணை ஆற்றின் தென் கரையில் இருந்தது. பழந்தமிழகத்தின் வட எல்லையில் இருந்த மால கொண்ட மலையில் உள்ள பிராமி எழுத்தின் வரிவடிவம் இது. (படத்தில் காண்க.) இதன் சொற்றொடர் இது. அர சாள குலஸ தத ஸெடி புதஸ ஸிரி வீரி செ ட்டி நோ தான. அருவாள குலத்து ந(ந்)த செட்டி மகனான ஸிரி வீரி செட்டியி னுடைய தானம் என்று இதன் பொருள். விளக்கம். அரவாள என்பது அருவாள என்னும் சொல். அருவா நாடு அல்லது அருவாள நாடு என்பது தொண்டை மண்டலத்தின் பழைய பெயர். தொண்டை நாடான அருவா நாடு - பழங்காலத்தில் திருவேங்கட நாட்டை (திருவேங்கடக் கோட்டத்தை)த் தன்னுடன் கொண்டிருந்தது. அதன் வட எல்லை வடபெண்ணையாறு. தொண்டை மண்டலமான அருவா நாட்டைத் தாலமி என்னும் கிரேக்கர் அருவர்னொய் (Aruvarnoi) என்று கூறுகின்றார். அருவா நாட்டுக்கு அடுத்து வடக்கேயிருந்த தெலுங்கர் தமிழரை அரவர் என்றும் தமிழ் மொழியை அரவபாஷை என்றும் கூறுவர். அருவா நாட்டவர் அருவா நாட்டு மொழி என்பது இதன் பொருள். குலஸ என்பது குலத்தினுடைய கலத்தைச் சேர்ந்த என்னும் பொருள் உள்ள சொல். ஸ என்பது பிராகிருத மொழி எழுத்து. அருவாள குலஸ என்பதன் பொருள் அருவாள குலத்தைச் சார்ந்த என்பது. எனவே இந்தக் குகையைத் தானஞ் செய்தவர் அருவா நாட்டவர் (தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்) என்று தெரிகின்றார். நதசெடி என்பது நந்த செட்டி என்பதாகும். செட்டி என்பது வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். நந்த செட்டி என்பது வாணிகத் தொழில் செய்த நந்தன் என்று பொருள் உள்ளது. புதஸ என்பது புத்திர னுடைய என்னும் பொருள் உள்ள பிராகிருத மொழிச் சொல். ஸிரி என்பது ஸ்ரீ என்பது. வீரிசெட்டி நோ என்பதன் பொருள் வீரி செட்டி யினால் என்பது. இதிலுள்ள ட்டி என்னும் எழுத்து வடமொழி எழுத்து. தான என்பது தானம் என்னும் சொல். தா என்னும் எழுத்து வடமொழி 3ஆம் தகர எழுத்து. அருவாள குலத்தைச் சேர்ந்த வணிகனான நந்தன் என்பவருடைய மகனும் வாணிகனுமான ஸ்ரீவீரி என்பவன் இந்தத் தானத்தைக் கொடுத்தான் என்பது இதன் திரண்ட பொருள். அடிக்குறிப்புகள் 1. Annual Report, on South Indian Epigraphy 1937-38 part II. para.1. 5. முத்துப்பட்டி பிராமி எழுத்து மதுரையிலிருந்து திருமங்கலத்துக்குப் போகின்ற சாலையில் பத்துக் கல் தொலைவில் முத்துப்பட்டி இருக்கின்றது. இந்தச் சிற்றூரின் சாலையில் இடப்பக்கமாக உம்மணாமலை என்னும் குன்றுகள் இருக் கின்றன. கடைசிக் குன்றிலே இவ்வூருக்கருகில் பெரிய குகை ஒன்று இருக்கிறது. கிழக்கு மேற்காக அமைந்திருக்கிற இந்தக் குகையின் நீளம் 43 அடி, உயரம் 5 அடி. இங்கு முப்பதுக்கு மேற்பட்ட கற்படுக்கைகள் இருக்கின்றன. இங்கு ஐந்து இடங்களில் பிராமி எழுத்துக்கள் வெட்டப் பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டெழுத்துக்கள் படிக்க முடியாதபடி அதிகமாகச் சிதைந்து உள்ளன. இவை 1910 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டு 1910 ஆம் ஆண்டு சாசனத் தொகுதியில் 58, 59, 60 ஆம் எண்ணுள்ளவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வரிவடிவம் இது: திரு. கிருட்டிண சாத்திரி இவற்றை 1. ‘விநதை ஊர, 2. சைய அளனா, 3. கா விய’ என்று படித்துள்ளார்.1 திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு கூறுகின்றார்.2 ‘சைன அளன் விநதை ஊர கவிய்’. கவிய்-காவி-குகை. இந்தக் குகையில் வசித்தவர் பெயர் சையளன் விந்தை ஊரன் என்று பொருள் கூறுகின்றார். திரு.சி. நாராயண ராவ், ‘விநதை’ ஊர ‘சைய அலேன காவிய’ என்று படித்து, ‘விநதை ஊர என்பவருடைய குடைவான குகை ஆசிரமம்’ என்று பொருள் கூறுகின்றார்.3 திரு.டி.வி. மகாலிங்கம், ‘விந்தை ஊர் சையளன் கவிய்’ என்று படித்து ‘விந்தை ஊர சையளனுடைய குகை என்று பொருள் கூறியுள்ளார்.4 திரு.ஐ. மகாதேவன் கூறுவது இது.5 ‘சையளன் விந்தை ஊர் காவிய்’ என்று படித்து, சையளன் (இலங்கையைச் சேர்ந்தவன்) ஆன விந்தை என்பவருடைய காவிய் (குகை) என்று பொருள் கூறுகின்றார். இதை ‘விந்தை ஊர் சையளன் காவய்’ என்று படிக்கலாம். விந்தையூர் சையளன் காவய் என்பவர் இக் கற்படுக்கையை அமைத்தார் என்பது பொருள். அடிக்குறிப்புகள் 1. 1st All India Oriental Conference 1919. 2. 3rd All India Oriental Conference. 3. New Indian Antiquary Vol, I. 4. p. 268 - 271 Early South Indian Palaeography. 5. p. 65 Seminar on Inscriptions 1960. 6. அழகர் மலைப் பிராமி எழுத்துக்கள் மதுரையிலிருந்து பதின் மூன்று கல் தொலைவில் அழகர் மலை இருக்கிறது. இஃது இப்போது பேர்போன வைணவத் திருப்பதியாக இருக்கின்றது. சங்க காலத்தில் இந்த மலைக்குச் சோலைமலை, பழ முதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, இருக்குன்று என்று பல பெயர்கள் இருந்தன. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் கூறப்படுகின்ற திருமால்குன்றம் என்பது இந்த மலையே. இடைக் காலத்தில் இந்த மலை இடபகிரி என்று பெயர் பெற்றிருந்தது. கடைச் சங்க காலத்தில் இந்த மலையில் கண்ணன்-பலராமன் என்னும் இரு பெருந்தெய்வங்களுக்குக் கோயில் இருந்தது. இந்தத் தெய்வங்களை இளம்பெருவழுதி (கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி) என்னும் பாண்டியன் பாடித் துதித்தார். அந்தப் பாடல் பரிபாடலில் 15ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. மதுரையைச் சூழ்ந்திருந்த எண்பெரும் சமணக் குன்றுகளில் அழகர் மலையும் ஒன்று. சங்க காலத்தில் இந்த மலையின் ஒரு பக்கத்தில், சமண முனிவர்கள் இருந்தனர். அவர்கள் இருந்த குகையும் அதிலுள்ள கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1910ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பிராமி எழுத்துக்கள் ஒன்பது தொடர் மொழிகளாக உள்ளன. இவை 1910ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 70 முதல் 79 எண் ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் குகை கிடாரிப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் மலைமேல் அமைந்திருக்கிறது. இந்தக் குகையில் ஒரு பக்கத்தில் சுனை நீர் இருக்கிறது. இங்குள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். இதன் தொடர் மொழிகளை அறிஞர் சிலர் படித்துள்ளனர். அவர்கள் படித்ததையும் பொருள் கூறுவதையும் பார்ப்போம். (இதன் வரிவடிவத்தைத் திரு.ஐ. மகாதேவன் காட்டியுள்ளார்.) திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்.1 ‘மா(த) தி (ரை)ய் போ நா குல வானா அ(த)னா அ த(ஆ)ன திரு.சி.நாராயணராவ், இதைப் பிராகிருதமாகப் படித்துப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.2 ‘மாத்திரைய்-போநா குலவானா அதனா’அ தானா? (பிராகிருதம்) “மாட்டர கீ-புத்ராணம் (பௌத்ராணாம்(?) போதாதரம்(?) (குலபாநாம்) ஆகாநாய (அஸ்தானாய(?) ஆஸ்தாதஸ்ய(?)) தாநானி’ (சமற்கிருதம்) ‘மாட்டரகீ என்பவருடைய மக்கள் (பேரர்கள்?) குலத்தலைவர்கள் (குலத்தவருக்கு?) உணவுக்காகக் கொடுத்த தானம்’ என்று பொருள் கூறுகிறார். திரு.டி.வி.மகாலிங்கம் படித்துப் பொருள் கூறுவது இது.3 ‘மத்திரை பொன் குலவன் அதன் அதன்’ பொன்குலவன் என்பதன் பொருள் பொன் வாணிகன். அதன் அதன் என்பது ஆதனுடைய மகன் அதன். மதிரை (மதுரை)யில் இருந்த பொன் வாணிகன் அதன் உடைய மகன் அதன் இதைச் செய்தான். திரு.ஐ.மகாதேவன் இவ்வாறு படிக்கிறார்.4 ‘மத்திரை பொன் கொலவன் ஆதன் அ தான’. ம(த்)திரையிலிருந்து பொற் கொல்லன் ஆதன் கொடுத்த தானம். நாம் இதைப் படிப்போம். பிராமி எழுத்தின் வாசகம் இவ்வாறு இருக்கிறது. ‘மத்திரைய் பொன் கொல்லன் அதான் அதான்’ ‘மத்திரைய்’ என்பது கொச்சைச் சொல்லாகத் தெரிகிறது. இது ‘மதுரை’ நகரத்தைக் குறிக்கிறது. இதன் இறுதியில் உள்ள யகரமெய், ஐகார ஈற்றுச் சொல்லுடன் சேர்த்து எழுதப்படுகிற அக்காலத்து வழக்கப்படி எழுதப்பட்டுள்ளது. ‘கொல்வன்’ என்பதும் கொச்சைச் சொல். இது கொல்லன் என்றிருக்க வேண்டும். ‘பொன் கொல்லன்’ என்று படித்துப் பொன் வேலை செய்பவன் என்று பொருள் கொள்ளலாம். அதான் அதான் என்பதும் கொச்சைச் சொல். இது ஆதன் ஆதன் என்றிருக்க வேண்டும். ஆதன் ஆதன் என்பது பொற் கொல்லனுடைய பெயர். கடைசியில் உள்ள குறி அவன் தானம் செய்த பொன்னின் அளவைக் குறிக்கிறது. மதுரைப் பொன் வாணிகனான ஆதன் ஆதன் கற்படுக்கையை அமைக்கக் கொடுத்த பொன்னின் மதிப்பு இவ்வளவு என்பது இதன் கருத்து. இனி, அடுத்த சொற்றொடரைப் பார்ப்போம். இது 1910 ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பின் 71ஆம் எண்ணுள்ளது. திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.5 ‘ம (ஆ) த தி ரை கொ (பா) பு வ ணி க னா’ திரு. நாராயண ராவ் பிராகிருதமாக்கிப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.6 ‘மாத்திரை - கொ - பாபு - வாணி கானா?’ (பிராகிருதம்) ‘மாட்டாக் - கிருதே - பாபு - வணிஜாம்?’ (சமற்கிருதம்) கிராமங்களின் வாணிகர்களின் தலைவர்களால் மாட்டாகி சாத்துக்கு (வணிகக்குழுவுக்கு)க் கொடுத்த தானம் என்பது பொருள். திரு. டி.வி. மகாலிங்கம் படித்ததும் கூறும் பொருள் இவை.7 ‘மாத்திரை கொபு புவணிகன்’ ................ கொப்பு (பெண்கள் காதில் அணிகிற கொப்பு என்னும் நகை) வாணிகன் என்பது பொருள். இதை நாம் படித்துப் பொருள் காண்போம். இதன் மொழிகள் ‘மாத்திரை கெ ஊபு வணிகன்’ என்பது. மாத்திரை என்பது முன் வாக்கியத்தில் கூறப்பட்டது போலக் கொள்க. அதாவது மதுரை என்பதன் கொச்சைச் சொல். இதை மதுரை என்று படிக்க வேண்டும். ஐந்தாவது எழுத்து கெ. இதை கொ என்றும் படித்துள்ளனர். இந்த எழுத்து இங்குத் தேவையற்றுக் காணப்படுகிறது. ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதியில் ஈகாரம் இட்டு எழுதுவது அக்காலத்து மரபு. இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை வேறு பிராமி வாசகத்திலும் பார்க்கிறோம். மதுரை என்னும் சொல்லின் கடைசியில் எழுத வேண்டிய ஈகார எழுத்துக்கு ஈடாக இந்த கெ எழுத்தைக் கற்றச்சன் தவறாக எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஊபு என்பது உப்பு என்று படிக்க வேண்டும். இதுவும் கொச்சையாக எழுதப்பட்டிருக்கிறது. வாணிகன் என்பதன் பொருள் தெளிவாகத் தெரிகிறது. மதுரை உப்பு வாணிகன் இக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான். அப் பொன்னின் மதிப்பு இதன் கடைசியில் உள்ள குறியினால் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த தொடர்மொழியை பார்ப்போம். அடுத்த கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.8 ‘ய கா னா கோ ண தி கா னா’ திரு. நாராயணராவ் வழக்கம் போலப் பிராகிருதமாக்கிச் சமற்கிருதம் ஆக்குகிறார்.9 ‘ய கானா கொணதி கானா’ (பிராகிருதம்) ‘யக்ஷாணாம் கொணர் தி கானாம்’ (சமற்கிருதம்) (கொணரத குன்றுகளிலிருந்து வந்தவரும் கொணரத குழுவைச் சேர்ந்தவரும்) எருது வாணிகம் செய்தவருமான வணிகருடைய (யக்ஷருடைய) தானம் என்று பொருள் கூறுகிறார். திரு.டி.வி. மகாலிங்கம் கூறுவது இது.10 ‘வியகன் கணதிகன்’ என்பது இதன் மொழிகள். வியகன் என்பது ஒருவருடைய பெயர். கனத்தி என்பது ஒருவகை மரத்தின் பெயர். மர வாணிகம் செய்கிற வியக்கன் என்பது பொருள். திரு. ஐராவதம் மகாதேவன் முன்பு கூறப்பட்ட சொற்றொடரை இந்தச் சொற்றொடருடன் இணைத்து ஒன்றாகப் படிக்கிறார்.11 ‘மா தவிரை கெ ஊபு வாணிகன் வியகன் கணதிகன்’ என்று படித்து, ‘ பெரிய தவிரைக்கு (ஸ்தவிரைக்கு) உப்பு வாணிகனான வியகன கணதிகன் கொடுத்த தானம்’ என்று பொருள் கூறியுள்ளார். இவர், மத்திரை என்பதை மா தவிரை என்று படித்துள்ளார். இவர் இரண்டு தனித்தனி சொற்றோடரை ஒன்றாகச் சேர்த்துப் படிப்பது தவறு. இரண்டும் தனித்தனியே வெவ்வேறு தொடர்கள். கிருட்டிணசாத்திரியும் டி.வி.மகாலிங்கமும், ஐ.மகாதேவனும் ஒரு தவறு செய்துள்ளனர். முன் தொடரில் உள்ள ‘மதிரை கெ ஊபு வாணிகன்’ என்பதன் இறுதியிலும் அடுத்துள்ள இடகன் கணதிகன் என்பதன் தொடக்கத்திம் இடைநடுவே ஒரு குறி உள்ளது. இந்தக் குறியை இவர்கள் எல்லோரும் பிராமி எழுத்து வி என்று தவறாகப் படித்துள்ளனர். வி என்று தவறாகக் கருதியதை அடுத்து, தொடரின் முதல் எழுத்தாகக் கொண்டு ‘வயகன்’ என்று படித்துள்ளனர். அது வி என்னும் எழுத்து அன்று. பொன்னின் அளவைக் குறிக்கும் குறியீடு, குறியீடுக்கு அருகில் மூன்று புள்ளி இருப்பதை இவர்கள் ஆழ்ந்து காணவில்லை. இனி இதை நாம் படித்துப் பொருள் காண்போம். “இயகன் கணதிகன்” என்பது இதன் மொழித்தொடர். இதில் முதற் சொல்லாகிய ‘இயகன்’ என்பது ககர ஒற்றெழுத்து விடுபட்டுள்ளது. இதன் சரியான தொடர் ‘இயக்கன்’ என்பது. இயக்கன் என்று ஒரு வகை இனத்தார் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தார்கள் (இயக்க இனத்தார் இலங்கையிலும் இருந்தார்கள்) இயக்கன் என்பது யக்ஷன் என்றும் கூறப்படும். ‘ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்’ தன்னுடைய நண்பர்களில் இயக்கன் என்பவனையும் கூறுகிறான்.12 இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற இயக்கன், இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய பெயரைக் கண்திகன் என்று கல்வெட்டு கூறுகிறது. (கண்திகன் என்பதைக் கண்திகள் என்றும் படிக்கலாம்.) (அழகர் மலைக்குகையில் முனிவர்கள் இருப்பதற்கு அமைக்கப்பட்ட கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் களில்) இயக்கன் கண்திகனும் ஒருவன். அவன் அதற்காகச் செலவிட்ட பொன்னின் அளவை இறுதியில் உள்ள குறியினால் அறிகிறோம். இதன் மதிப்பு இவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை. அடுத்துக் கல்வெட்டைப் பார்ப்போம்.13 இதனுடைய வரிவடிவம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைக் கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.14 1. ‘கா ண க அ த (ஆ) னா ம (ஓ) கனா அதனா அதானா’ திரு. நாராயணராவ்,15 ‘காணக’ அ தானா (பிராகிருதம்) ‘கணகஸ்ய தானானீ’ (சமற்கிருதம்) கணக்கனுடைய தானம் என்பது பொருள். 2. ‘மோகனா அதனா’ அ தானா (பிராகிருதம்) ‘மோக்ஷாணாம் ஆஸ்தானாய தானானீ’ (சமற்கிருதம்) ‘நோய் (துன்பம்) நீக்கும் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள்’ என்பது பொருள். திரு. மகாலிங்கம் கூறுவது16 ‘கணக அதன் மகன் அதன்’ கணக என்பது கணக்கர் அதாவது தத்துவ சாத்திரம் அறிந்தவர். (சாஸ்திரம்) கணக்கு அறிந்த ஆதன் மகன் ஆதன் என்பது பொருள். திரு. ஐ. மகாதேவன் படித்துப் பொருள் கூறுவது.17 ‘கணக அதன் முகன் அதன அதன’ கணக்கன் அதனுடைய மகன் அதனுடைய தானம் என்பது பொருள். இதன் வரிவடிவம் கிடைக்காதபடியால் இதுபற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்த பிராமி எழுத்தைப் பார்ப்போம். இதன் வரிவடிவம் இது. திரு. கிருட்டிண சாத்திரி18 ‘ஸா (ம) மி ஸி னா மி த தி’ திரு. நாராயணராவ் இந்தத் தொடரையும் இதற்கு அடுத்த இன்னொரு தொடரையும் ஒன்றாக இணைத்து ஒரே மொழித் தொடராக்கிப் பிராகிருதமாகவும் சமற்கிருதமாகவும் கூறுகிறார்.19 ‘ஸாம மிஸினா மிததிருபா ணிதீ வாணிகனா ணட்ட மலானா (பிராகிருதம்) ‘மைய. மிஸ்ரேண மைத்ரீ - ரூபா நிய்நிஹ் வணிஜாம் நஷ்ட மலானாம்’ (சமற்கிருதம்) பௌத்த மத நம்பிக்கையுடனும் மைத்தீ (நட்பு)யுடனும் இருப்பவரும் ஆன்மாவிலிருந்து மலத்தை (அழுக்கை) நீக்கிய வருமான வாணிகர் தேர்ந்து கொண்ட தர்மம் என்பது இதன் பொருள். திரு. டி.வி. மகாலிங்கம் கூறுவது.20 ‘பைமிஸின் மித்தி’ இதை ஸம்மிஸின் என்றும் படிக்கலாம். மித்தி என்பது உறக்கம் என்னும் பொருள் உள்ளது. சைனருடைய சிறு தெய்வங்களில் ஒன்றான ஸங்க்கர் அல்லது மிதிய என்னும் தெய்வத்தின் பெயராகவும் இருக்கலாம். இஃது ஓர் ஆளின் பெயரைக் குறிக்கிறது. திரு. ஐ. மகாதேவன் 21 ‘ஸாப மிதா ஈன்....பாமித்தி’ பிக்குணி....ஸாபமித்தாவினுடைய என்பது பொருள். இதன் மொழித்தொடரைப் பார்ப்போம். இது பௌத்தமதப் பெண்ணின் பெயர்போல் தோன்றுகிறது. ஸபமிதி என்பது சுபமிதி ஆக இருக்கலாமோ. சுதமதி என்னும் பௌத்தப் பெண் பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படுகிறது. இந்தப் பெயரின் சரியான வடிவம் தெரியவில்லை. இந்தப் பெயருடையவர் கற் படுக்கை அமைக்கப் பொன் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அடுத்த கல்வெட்டு இது. திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இதன் முதல் மூன்று எழுத்துக்களை விட்டுவிட்டு மற்ற எழுத்துக்களைப் படித்து ‘வாணிகன் நெடுமலன்’ என்று கூறுகிறார். இந்தப் பெயர் இந்தக் குகையில் வசித்திருந்த ஒருவருடைய பெயரைக் கூறுகிறது என்று எழுதுகிறார்.22 திரு.டி.வி.மகாலிங்கம் இதை ‘பணிதி வணிகன் நெடுமலன்’ என்று படித்து, ‘அழகுப் பொருள்களை விற்கும் வாணிகனாகிய நெடுமூலன்’ என்று பொருள் கூறுகிறார்.23 திரு. ஐராவதம் மகாதேவன் இதை ‘பானித வணிகன் நெடுமலன்’ என்று படித்து சர்க்கரை வாணிகன் நெடும(ல்)லன்’ என்று பொருள் கூறுகிறார்.24 இங்கு நாம் பொருள் காண்போம். ‘பணித வணிகன் நெட்டு மூலன்’ என்பது இதன் தொடர். பணித வணிகன் என்பதற்கு அழகுப் பொருள் விற்பவன் என்றும் சர்க்கரை வாணிகன் என்றும் டி.வி.மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் பொருள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் இந்தச் சொற்கள் வழங்கவில்லை. ஆனால், பளிதம் என்னும் சொல் வழங்கி வந்தது. ஆகவே இது ‘பளிதவணிகன்’ என்பதாக இருக்கக் கூடும். பளிதம் என்னும் சொல் பணிதம் என்று பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம். பேச்சு வழக்கில் இருந்தபடியே கல்வெட்டில் எழுதப்பட்டது போலும். பளிதம் என்பது பச்சைக் கர்ப்பூரம். இதை வெற்றிலை அடைக்காயோடு சேர்த்து அக்காலத்தில் அருந்தினார்கள். “பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து” என்று மணிமேகலைக் காவியம் (கச்சிமாநகர் புக்ககாதை அடி 243) கூறுகிறது. பாசிலைத் திரையல் - வெற்றிலை, பளிதம் - பச்சைக் கர்ப்பூரம். பௌத்த பிக்குகள் வெற்றிலை யருந்துவது வழக்கம், கர்ப்பூரத்தில் சிலவகை உண்டு. ஒருவகைக் கர்ப்பூரத்தைக் குங்குமம், அகில், சந்தனம் இவற்றை இழைத்த குழம்புடன் சேர்த்து உடம்பில் பூசினார்கள். கர்ப்பூரத்தில் சில வகை உண்டு என்று இதனால் தெரிகிறது. பத்தாம் பரிபாடலில் ‘செங்குங்குமச் செழுஞ்சேறு, பக்கஞ் செய்யகில் பலபளிதம்’ 25 பலபளிதம் - பலவாகிய கருப்பூரம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிபாடல் பலபளிதம் என்று கூறுவதைச் சிலப்பதிகாரம் ‘தொகு கருப்பூரம்’ என்று கூறுகிறது.26 இந்தப் பளிதங்கள் தமிழ் நாட்டுப் பொருளும் அன்று. பாரத நாட்டுப் பெருளும் அன்று. அவை சாவக நாட்டிலிருந்து (கிழக்கிந்தியத் தீவுகள்) கப்பலில் கொண்டு வரப்பட்டவை. இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள பணிதம் என்பது பளிதமாக (கர்ப்பூர வகை) இருக்கக்கூடும். எனவே பணித வணிகன் என்பது பளிதவணிகன் ஆக இருக்கலாம். நெடுமூலன் என்பது ‘நெட்டு மூலன்’ என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது. பளித (பணித) வாணிகனாகிய நெடுமூலன் இந்த மலைக் குகையில் கற்படுக்கை களை அமைப்பதற்காகப் பொன் கொடுத் தான் என்பது இந்தத் தொடரின் பொருள். அவன் கொடுத்த பொன்னின் மதிப்பு இந்தக் குறியினால் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் குறியின் மதிப்பெண் என்ன என்பது தெரியவில்லை. அடுத்த கல்வெட்டு இது. திரு. கிருட்டிண சாத்திரி இதன் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, ‘வாணி கனா யுள னாதன்’ என்று படித்துள்ளார்.27 திரு கே.வி. சுப்பிரமணிய அய்யரும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, மற்ற எழுத்துக்களை “வாணிகன் யுளநாதன்” என்று படித்துள்ளார்.28 திரு. நாராயணராவும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டு விட்டுப் படிக்கிறார். அவர் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக இணைத்துப் பிராகிருதமாக்கிப் பிறகு சமக்கிருதமாக்குகிறார். ‘வாணி கானா யுள நாதனா சிகட்ட-மாதன தானா’ (பிராகிருதம்) ‘வணிஜரம் யூ த (-யுவ-) - நாதானாம் ஸ்ரீ கண்ட (சிகட்ட) மாத்ருணாம் - தானானி’ (சமக்கிருதம்) ஸ்ரீகண்ட மாத்ருகண (சிகட்ட மாத்ருகண)த்தைச் சேர்ந்த தலைமைச் சாத்து (யுலசாத்து) வாணிகத் தலைவர்களின் தானம் என்று இதற்குப் பொருள் கூறுகிறார்.29 திரு.டி.வி. மகாலிங்கம், ‘கொழு வாணிகன் யுளா சாந்தன்’ என்று படித்து, ‘தொழுதைலான இரும்புச் சாமான்களை விற்கிற உரை சேந்தன்’ என்று பொருள் கூறுகிறார்.30 திரு.ஐ. மகாதேவன் ‘கொழு வாணிகன்’ என சந்தன் என்று படித்து, இரும்பு வாணிகன் என சந்தன் என்று பொருள் கூறுகிறார்.31 இவர்கள் இருவரும், ‘கொழு வாணிகன்...சந்தன்’ என்று படித்து திருப்பது சரியே. ஆனால் இடையில் உள்ள இரண்டு எழுத்துக்களை ‘யுள’ என்றும் ‘எளி’ என்றும் படித்ததில் தவறு காணப்படுகிறது. இது ‘இள’ என்னுஞ் சொல்லாகும். இள என்னும் சொல் கொச்சைத் தமிழில் ‘எள’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இளஞ் சந்தன் என்னும் பெயருள்ள கொழு வாணிகன் மலைக்குகையில் கற்படுக்கை அமைப்பதற்கும் பொன்னைக் கொடுத்தார். அந்தப் பொன்னின் மதிப்புத் தெரியவில்லை. இதற்கு அடுத்த கல்வெட்டைப் பார்ப்போம். இதன் வரி வடிவம் இது. திரு. கே.வி. சுப்பிரமணியம் இதை இவ்வாறு படிக்கிறார்.32 ‘சிகற மாறன் தான்’ என்று படித்து, சிகற மாறன் என்பவன் புகழ் பெற்ற தச்சன் என்று கூறுகிறார். இவர் மூன்றாம் எழுத்தையும் 5ஆம் எழுத்தையும் வல்லின ‘ற’ என்று படிக்கிறார். திரு. கிருட்டிண சாத்திரியும், திரு.டி.வி. மகாலிங்கமும் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக்கிப் படிக்கின்றனர். அவர்கள் ஒன்றாக்குவது தவறு. இந்தத் தொடர் இதனோடு முடிகிறது. அந்தத் தொடருடன் தொடர்புள்ளது அன்று. திரு.ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை வேறு முறையாக வரைந்து காட்டுகிறார். இதில் இவர் முதல் எழுத்தாகக் காட்டுங்குறி முந்திய தொடரின் இறுதியைச் சேர்ந்தது. இவர் இந்தக் குறியின் மேற்பகுதியை வைத்துக்கொண்டு அதை ஞ் என்று படிக்கிறார். இது தவறு. இவர் படிப்பது இது.33 ‘ஞ்சி கழு மாறன் தான்’ ஞ்சி என்னும் இடத்தில் இருந்த கழுமாறன் கொடுத்த தானம் என்று பொருள் கூறுகிறார். இரண்டு வரிவடிவங்களிலும் எழுத்து மாறுபாடுகள் காணப் படுகின்றன. ஐ.மகாதேவன் ஞ் என்று தவறாகக் காட்டுகிற எழுத்து முதல் வரிவடிவத்தில் இல்லை. அது ஞ் அன்று, ஒரு வகைக் குறியீடு என்று முன்னமே கூறினோம். முன் வரிவடித்தில் மூன்றாவது எழுத்து வல்லின ற போன்று இருக்கிறது, மகாதேவனுடைய வரி வடிவத்தில் இந்த எழுத்து ம என்று காட்டப்படுகிறது. முந்திய வடிவத்தில் ஆறாவது எழுத்து அ போன்று இருக்கிறது. மகாதேவனுடைய வரிவடிவத்தில் அந்த எழுத்து (7-வது எழுத்து) ன போல இருக்கிறது. கல்வெட்டு எழுத்தில் மைப்படி ஒற்றி எடுத்திருந்தால் ஒரே மாதிரிதான் இருக்கும். ஐ. மகாதேவன் மை ஒற்றி எடுக்காமல் கண்ணால் பார்த்து எழுதினார் என்று தோன்றுகிறது. ஆகவே வரிவடிவில் வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே இந்தக் கல்வெட்டின் சரியான வரி வடிவம் தெரிகிற வரையில் இதைப் படிக்காமல் விடுகிறோம். இதற்குப் பிறகுள்ள பிராமி எழுத்துக்களை எபிகிறாபி இலாகாவும் ஐ. மகாதேவனும் வேறு வேறு விதமாகக் காட்டுகின்றனர். இதிலிருந்து இக் கல்வெட்டுக்களை முழுவதும் படி எடுக்க வில்லை என்பதும், ஐராவதம் மகாதேவன் ஏறக்குறைய முழுவதும் படி எடுத்துள்ளார் என்பதும் தெரிகின்றன. முதலில் கொடுக்கப்பட்ட தொடரில் ‘அணிய் கொடுபித்தவள் அணகன்’ என்று முடிகிறது. ஐ. மகாதேவன் கொடுக்கும் தொடர் “தார அணிய் கொடுபித அவன் கஸபன் அத்விரஅ வரு(ஊ?)ம் குடு பிதோ” என்று இருக்கிறது. முதலில் காட்டப்பட்டதில் ‘அணகன்’ என்னுஞ் சொல், இரண்டாவது தொடரில் இல்லை. இரண்டாவதில் உள்ள கஸபன் என்னும் பெயர் முதல் தொடரில் இல்லை. அழகர்மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைக்கப் பலர் பொருளுதவி செய்துள்ளனர். இன்னின்னார் இவ்வளவு இவ்வளவு பொருள் உதவினார்கள் என்பதும் அவர்களின் பெயர்கள் இன்னின்ன என்பதும் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. அழகர் மலையில் உள்ள இன்னொரு பிராமிக் கல்வெட்டின் வரிவடிவத்தினை 34 திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படிக்கிறார். ‘வேண் பளி ஈ அறுவை வணிகன் என அ அடன்’ என்று படித்து வேண் பள்ளி துணி வாணிகன் என(வ) ஆதன் என்று பொருள் கூறுகிறார். இதை நாம் படிப்போம். இதை வேண்பனி அல்லது வெண்பனி என்றும் படிக்கலாம். பள்ளி என்பது பளி என்று எழுதப்பட்டுள்ளது. ஈகார எழுத்து இகர ஈற்றில் முடிகிற பள்ளி (பளி)யுடன் இணைத்து அக்காலத்து முறைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. இதற்குப் பொருள் இல்லை. வேண்பள்ளி அல்லது வெண்பள்ளி ஓர் ஊரின் பெயர். அறுவை என்பது துணிக்குப் பெயர். இச் சொல் சங்க காலத்தில் வழங்கப் பட்டது. அறுவை வாணிகன் என்பது துணி வாணிகன். (இளவேட்டனார் என்னும் புலவர் மதுரையில் அறுவை வாணிகம் செய்தவர். அவர் பாடிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன).35 ‘எளஅ’ என்பது எளைய என்பது. இளைய என்னும் சொல் எளய என்று கொச்சையாக எழுதப்பட்டுள்ளது. அடன் என்பது வாணிகனுடைய பெயர். எளய அடன் என்பது இவருடைய முழுப்பெயர். அடன் என்பது ஆட்டன் என்னும் பெயர். இது கொச்சையாக அடன் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆட்டன் அத்தி’ என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. இளம் ஆட்டன் என்பது ஆட்டனுடைய தம்பி என்னும் பொருளில் வழங்கிற்று. இளங்கண்ணன், இளநாகன், இளங்கௌசிகன், இளவேட்டன், இளங்கடுங்கோ, இளஎயினி, இளங்குட்டுவன் முதலான பெயர்களைக் காண்க. வெண்பள்ளி ஊரில் இருந்த அறுவை வாணிகனான இள ஆட்டன் இந்தக் குகையில் கற்படுக்கை அமைக்கும் செலவுக்காகப் பொன் கொடுத்தான். அந்தப் பொன்னின் மதிப்பு இந்தப் பெயரின் இறுதியில் ஒரு குறியினால் காட்டப்பட்டுள்ளது. அடிக் குறிப்புகள் 1. 1st All India Oriental Conference 1919. 2. Proceedings and Transaction of the 10th All India Oriental Conference, Tirupati 1940, New Indian Antiquary Vol. page 362 - 76. 3. P. 240 - 41 Early South Indian Palaeography. 4. P. 63 Seminar on Inscriptions 1966. 5. Proceedings of the All India Oriental Conference 1919. 6. New Indian Antiquary Vol. I. 7. P. 241. Early South Indian Palaeography. 8. First All India Oriental Conference 1919. 9. New Indian Antiquary Vol. I. 10. P. 241. Early South Indian Palaeography. 11. P. 63 Seminar on Inscriptions 1966. 12. “பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும், மன்னெயில் ஆந்தையும், உரைசால் அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் நண்பிற் கேளிரொடு” - புறநா. 71 : 11 - 15. 13. 73 of 1910. 14. First All India Oriental Conference, Poona 1919. 15. New Indian Antiquary Vol. I. 16. P. 241. Early South Indian Palaeography. 17. P. 63. Seminar on Inscriptions 1966. 18. 1st All India Oriental Conference 1919. 19. New Indian Antiquary Vol. I. 20. P. 242. Early South Indian Palaeography. 21. P. 63 Seminar on Inscriptions 1966. 22. Third All India Oriental Conference 1924. 23. P. 242-43 Early South Indian Palaeography. 24. P. 63 Seminar on Inscriptions 1966. 25. பரிபாடல் 10 ஆம் பாடல் அடி 81-82 26. சிலப் : ஊர்காண்காதை, வரி 109. 27. 1st All India Oriental Conference. 28. Third All India Oriental Conference. 29. New Indian Antiquary Vol. I. 30. P. 243. Early South Indian Palaeography. 31. P. 64 Seminar on Inscriptions 1966. 32. Third All India Oriental Conference. 33. P. 64 Seminar on Inscriptions 1966. 34. No.43 Corpus of the Tamil Brahmi Inscriptions 1157-73 Seminar on Inscriptions 1966. R. Nagaswamy (Edited By). 35. அகநா. 56, 126, 230, 254, 272, 302. குறுந். 185, நற்றிணை 33, 157, 221, 344; புறநா. 329. 7. ஆண்டிப்பட்டி பிராமி எழுத்து தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்துச் செய்யாறு தாலுகாவில் ஆண்டிப்பட்டி என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊரிலே 1967 ஆம் ஆண்டு பழங்காலப் புதையல் கிடைத்தது. இந்தப் புதையலில் 143 ஈயக்காசுகள் இருந்தன. இக் காசுகள் தேய்ந்து அதிலுள்ள எழுத்துக்கள் மழுங்கிக் காணப்பட்டன. இக் காசுகள் சென்னை நகரப் பொருள் காட்சிச் சாலையில், பழங்காசுப் பிரிவில் இப்போது உள்ளன. இந்தப் புதையலைப் பற்றி ‘ஸண்டே ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையில் செய்தி வெளி வந்துள்ளது.1 பொருட்காட்சிச் சாலையின் பழைய காசு இலாகாவினர் இந்த எழுத்துக்களைத் தற்காலிகமாக ‘அதினன் எதிரான் சேந்தன்’ என்று படித்துள்ளனர். இந்த நாணயங்களிலுள்ள எழுத்துக்கள் சங்க காலத்தில் வழங்கிவந்த பிராமி எழுத்துக்கள். எனவே இந்தக் காசுகள் கடைச் சங்கக் காலத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வெளியிடப்பட்டவை. இந்தக் காசுகளில் ஐந்தாறு காசுகளின் நிழற்படத்தை நான் பார்த்தேன். அவற்றில் இந்த எழுத்துக்களின் முழுச் சொற்கள் கிடைக்கவில்லை. சில எழுத்துக்கள் தெரிந்தும், சில எழுத்துக்கள் மழுங்கியும், சில எழுத்துக்கள் மறைந்தும், உள்ளன. அவற்றில் காணப்பட்ட பிராமி எழுத்துக்களைக் கீழே தருகின்றேன். ...சேந்தன் ஆதி... ...எதிரான் சே... ...எதிரா ...எதினன்? இவற்றிலிருந்து சேந்தன், எதிரான் என்னும் சொற்கள் மட்டும் நன்றாகத் தெரிகின்றன. இந்த எழுத்துக்களின் எகர எழுத்தைக் கவனிக்க வேண்டும். இந்த எழுத்து வட்டவடிவமாக நடுவில் புள்ளி பெற்றுள்ளது. பிராமி எழுத்துக்களில் எகர எழுத்து முக்கோண வடிவமாக இருப்பது வழக்கம். முக்கோண வடிவம் வட்டவடிமாக மாறிப் போய் இப்படியும் எழுதப்பட்டது. இதன் உட்பக்கத்தில் உள்ள புள்ளி, இது குற்றெழுத்து என்பதைத் தெரிவிக்கின்றது. ‘எகர ஒகர மெய்புள்ளி பெறும்’ என்பது தமிழ் எழுத்திலக்கணம். எகர ஒகர எழுத்திலும் மெய் எழுத்திலும் புள்ளியிடவேண்டும் என்பது இந்த நூற்பாவின் கருத்து. புள்ளியிடாமற்போனால் ஏ என்றும் ஓ என்றும் வாசிக்க வேண்டும். மெய் எழுத்துக்களின்மேல் புள்ளி இடாவிட்டால் அவை உயிர்மெய் எழுத்தாகப் படிக்கப்படும். இந்த எகர எழுத்தில் புள்ளியிட்டிருப்ப தனால் இது எ (குறில்) என்பது தெரிகிறது. புகழியூர் கல்வெட்டு ஒன்றில் இதுபோன்று வட்ட வடிவமும் நடுவில் புள்ளி பெற்றதுமான எகர எழுத்து காணப்படுவதை முன்பு கண்டோம். இந்தத் தமிழ்நாட்டுக் காசுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பது போலவே சாதவாகன அரசருடைய நாணயங்களில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதை இந்நூலில் வேறு இடத்தில் காண்க. அடிக்குறிப்புகள் 1. First finds of Sangam age Coins. The Sunday Standard 16-7-1967 8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு மதுரை வட்டத்துச் சோழவந்தானுக்கு அருகில் விக்கிரம மங்கலம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் நாக மலைத்தொடரைச் சார்ந்த ‘உண்டான் கல்’ என்னு மிடத்தில் சிறு குன்று இருக்கிறது. இந்தக் குன்றிலே தெற்கு நோக்கிய குகை ஒன்று இருக்கிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகையின் வாயிற்புறம், உட்புறம் குறுகிச் சரிவாகவும் இருக்கிறது. குகையின் உட் புறத்தில் பாறைச் சுவரின் ஓரமாக இரு பக்கத்திலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் நான்கு படுக்கைகளும்; இன்னொரு பக்கத்தில் எட்டுப் படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தப் படுக்கை களுக்குத் தலையணை அமைப்பு இல்லை. இந்தப் படுக்கைகளில் மூன்று படுக்கைகளின் தலைப்பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. 1926 ஆம் ஆண்டில் இங்குள்ள படுக்கைகளும், பிராமி எழுத்து களும் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை எபிகிராபி இலாகாவில் 1926-27 ஆம் ஆண்டு அறிக்கையில் இவைபற்றிய அறிக்கை வெளியிடப் பட்டது.1 இந்தக் கல்வெட்டெழுத்துக்கள் 1926ஆம் ஆண்டின் தொகுப்பில் 621, 622, 623 எண் உள்ளவையாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆண்டு அறிக்கையில் 74ஆம் பக்கத்தில் இவ்வெழுத் துக்களைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று கருதப் படுகின்றன. அந்தை பிகானி மகன் வேண், பொதிலை குவிரான் என்னும் பெயருள்ள பௌத்த பிக்குகளின் பெயரை இவ்வெழுத்துக்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை கூறுகிறபடி, இப் பெயர்கள் இங்குத் தங்கியிருந்த பௌத்த பிக்குகளின் பெயரைக் கூறவில்லை. இப் பெயர்கள் கற் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயரைக் கூறுகின்றன. இவ்வெழுத்துக்களைப் படித்தவர் இவைபற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் கூறுவது. 1. “அந்தை பிகான் மாகன் வேண் தான”. பிகான் மகனான வேண் இந்த அந்தையைத் தானஞ் செய்தான். (அந்தை - படுக்கை), அந்தை, பிகான் இரண்டையும் ஒன்று சேர்த்து அந்தை பிகான் என்று படித்து, இஃது ஓர் ஆவின் பெயர் என்று கொண்டால், அந்தை பிகான் இந்தக் குகையில் இருந்த துறவியின் பெயர் என்று கூறலாம். 2, 3. “பொதிலை குவீரன் வேண் குவீர் கொட்டு பிதான்’. பொதிலை குவீரன் என்பது இக் குகையில் இருந்தவருடைய பெயர். வேன் குவீரன் கொத்துவித்தான். அதாவது வேண் குவீரன் கற்படுக்கையைக் கொத்தி அமைத்தான். திரு. நாராயண ராவ் கீழ்வருமாறு படிக்கிறார்.2 1. அந்தை பிகானா மாகனாவே னா தான 2. பொதிலை குவீரனா குவிரனா கொ ட்டுபிதா (பிராகிருதம்) 1. ‘அந்யத்தேயம் பிக்ஷுணாம் மஹதாம் வைஸ்யானாம் தானானி. 2. புத்ரஹ் குபேரானாம் வைஸ்யானாம் குபேரானாம் கொட்டபித(வா) (சமற்கிருதம்). இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்துப் பொருள் கூறுகிறார். பிக்குகளுக்கு இன்னொரு தானம். பெரிய குடும்பத்தார், வாணிகர்கள், குபேரர்களுடைய மக்கள், வாணிகக் குடும்ப குபேரர்கள் இவற்றை அமைத்தார்கள்.3 திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துள்ளார்.4 1. அந்தைய் பிகன் வேநா அதன். அந்தை பிகனுடைய மகன் வேண் அதன் என்பது இதன் பொருள். ஆப்தன் என்னும் பிராகிருத மொழிச் சொல் ஆதன் என்றாகிப் பிறகு அதன் என்றாயிற்று. 2. பொதிலை குவிர(ன்) பொதிலை என்பது ஓர் இடத்தின் பெயர். பொதிகைமலை பொதியில், பொதிகை, பொதியம் என்பது போலப் பொதிலை என்பதும் பொதிகை மலையாக இருக்கலாம். குவிரான் என்பது ஒருவர் பெயர். இப் பெயர் சித்தர்மலை எழுத்திலும் காணப்படுகிறது. 3. செங்கு விரன். செம்-செம்மையான, நேர்மையான. குவிரன் - குபேரன். திரு.ஐராவதம் மகாதேவன் கூறுவது இது.5 1. அத் தைய் பிகன் மகன் செய்அ தான அந்தை பிகன் மகன் செய்த தானம். 2. பெதலை குவிரன் பெதலையைச் சேர்ந்த குவிரன். 3. செய் குவீரன் செங்கு வீரன் இஃது ஒரு ஆளின் பெயர். நாம் இவற்றைப் படிப்போம். 1. அந்தை பிகன் மகன் வேண் அதன். அந்தை என்பது ஆந்தை என்னும் பெயர். இப் பெயர் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் நெடுக அந்தை என்றே எழுதப் பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இந்தப் பெயர் ஆந்தை என்று இருப்பதைக் காண்கிறோம். பிகன் என்பது பேகன் என்றிருக்க nடும். சங்க காலத்தில் பேகன் என்னும் பெயர் வழங்கி வந்தது. பிகன் என்பது பேகன் என்பதன் கொச்சை வழக்கு. ஆந்தை பீகனுடைய மகன். வேண் ஆதன். வேண் என்பது ‘வெந்’ என்று எழுதப்பட்டுள்ளது. பிராமி எழுத்து நவின் தலையில் குறுக்கு கோடு அமைத்தால் ண் ஆகிறது. குறுக்குக் கோடு இடாமல் எழுதப் பட்டுள்ளது. அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வழக்குச் சொல். ஆதன் என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கியுள்ளது. 2. பொதலை குவிர(ன்) பொதலை என்னும் ஊரில் இருக்கும் குவிரன் என்பது பொருள். 3. செங்குவிரன் இஃது ஓர் ஆளின் பெயர். செங்கண்ணனார் என்பது போலச் செங்குவிரன் என்பதாகும். இவர்கள் மூவரும் இங்குள்ள கற்படுக்கையை அமைத்தார்கள் என்பது கருத்து. விக்கிரமங்கலத்து உண்டான கல் குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கிறது. அதைத் திரு. ஐ. மகாதேவன் காட்டியுள்ளார். அவர் காட்டும் அந்த எழுத்தின் வரிவடிவம் இது. இதை இவர் இவ்வாறு படிக்கிறார். ‘எம் ஊர் ச அதன் - அ தான’ எங்கள் ஊர் சாதனுடைய தானம் என்பது இதன் கருத்து என்று கூறுகிறார்.6 இவர் படித்துள்ளது சரி என்று தெரியவில்லை. இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கலாம். ‘ஏம ஊர் சஅதன் அதன்’ ஏம ஊர் என்பது ஓர் ஊரின் பெயர். ச அதன் என்பதைச் சாத்தன் என்று படிக்கலாம். அதன் என்பது ஆதன் என்னும் பெயர். ச அதன் அதன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இது சாத்தன் ஆதன் என்று எழுதப்படவேண்டும். பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களில் பல கொச்சைச் சொற்களும் தவறான எழுத்துக்களும் காணப்படுவது போல இங்கும் இத் தவறுகள் காணப்படுகின்றன. ஏம ஊரில் வசித்த சாத்தன் ஆதன் என்பவர் இந்தக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார் என்பது இதன் பொருள். அடிக்குறிப்புகள் 1. Annual Report on South Indian Epigraphy 1926-27 Pt. II Para 8. 2. New Indian Antiquary Vol. I. 3. P. 385 The Brahmi Inscriptions of South India, New Indian Antiquary Vol. I. 4. P. 233-235. Early South Indian Palaeography. 5. P. 61 Seminar on Inscriptions 1966. 6. P. 62 Seminar on Inscriptions 1966. 9. அரிட்டாபட்டி அரிட்டாபட்டியிலுள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டைத் திரு. ஐ. மகாதேவன் கீழ்வருமாறு எழுதியுள்ளார்: கிருட்டிண சாத்திரி கே.வி.சுப்பிரமணிய ஐயர், நாராயண ராவ், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் முதல் வரியை (பத்து எழுத்துக் களை) விட்டு விட்டு மற்றவற்றைப் படித்துள்ளனர். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகப் படித்து, வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் : வெ ள (அ) (டை) ய நி கா மா த () கொ (போ) தி ர (ய) கா ஸ் தீ கா அ (ரிதெ) அ ஸா தா னா பி நா க கொடுபி தோ னா கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்து விளக்கக் கூறுகிறார். வெள் அடைய் நிகாமதா கொ பொதிர் யகாஸீ தி கா அரிதாவ ஸாதான் கிணாக கொடு பி தோன். பொதிர் - புத்திரி. நிகாமதாகொ - நகரத்தாருடைய. யகாஸீதி - ஒருவருடைய பெயர். கா அரிதா - செய்வித்தார். பிணாகன் - பிணக்கன். ‘வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யக்ஷாஸ்தி (இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைச் செய்தான்’ என்று பொருள் கூறுகிறார். திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழியாகப் படித்துப் பிறகு சமற்கிருதமாகக் கற்பித்து அதற் கேற்பப் பொருள் கூறுகிறார். அவற்றை இங்குக் காட்டவில்லை. திரு. டி.வி. மகாலிங்கம், சுப்பிரமணிய அய்யரைப் பின்பற்றிக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்.1 ‘வெள் அடைய் நிகமத கொபிதிர் யக ஸிதிக அரிதெ அ ஸதன் பிணக கொடுபி தோன்’. ‘வெள்ளடையில் வாசிப்பவரின் மகளான யகஸிதி என்பவள் (இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைக் கொத்துவித்தான். திரு. ஐ. மகாதேவன், முதல் வரிசைப் பத்து எழுத்துக்களையும் சேர்த்துக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்:2 கணிஇ ந தா ஸீ ரி ய கு வ வெள் அறைய் நிகமது காவி தி இய் கா ழி திக அந்தை அ ஸுதன் பிணாஊ கொடுபி தோன். உங்கு (உவ) வசிக்கிற கணி நதாவுக்கு வெள்ளறை நிகமத்து காவிதி காழிதிக அந்தையின் மகன் இந்தப் பிணாவூ கொடுப்பித்தான். இவர் ஏறக்குறைய சரியாகவே படித்துள்ளார். இவ்வெழுத்துக்களை நாம் படித்துப் பொருள் கூறுவோம். ‘கணிஇ நதா ஸிரி யகுவ் வெள் அறைய் நிகமது காவிதிஇய் காழி திக அந்தை அ ஸுதன் பிணாஊ கொடுபி தோன். மிகையாயுள்ள எழுத்துக்களைத் தள்ளிவிட்டு, விடுபட்ட எழுத்துக்களைச் சேர்த்து இவற்றை இவ்வாறு படிக்கலாம் : ‘கணி நந்தா ஸிரியற்கு வெள்ளறை நிகமத்து காவிதி காழிதி ஆந்தைய ஸுதன் பிணாவு கொடுபித்தான்! விளக்கம் : கணி நந்தாசிரியர் என்பது முன் இரண்டு கல்வெட்டுக்களில் கூறப்படுகிறது. கணி நதி ஆசிரியர் ஆகும். வ் என்பது தேவையற்ற எழுத்து. அதை ‘வெள் அறை’ என்பதோடு சேர்த்துப் படிக்கலாம். வெள் அறை - வெள்ளறை என்று சேர்த்துப் படிக்கலாம். வெள்ளறை என்னும் ஐகார ஈற்றுச் சொல்லுடன் யகர மெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து முறை. நிகமம் என்பது நியமம். இச்சொல், தெரு என்னும் பொருளில் சங்க காலத்தில் வழங்கப்பட்டது. ‘கருங்கட் கோசர் நியமமாயினும்’ (அகநா. 90 : 12) நியமம் என்பதற்குக் கோயில் என்னும் பொருள் உண்டு. இக் கல்வெட்டுக் கூறுகிற ‘வெள்ளறை நிகமம்’ என்பது ‘வெள்ளறை நியம்’ அஃதாவது வெள்ளறையூரின் அங்காடித் தெரு என்று பொருள் உள்ளது. காவிதி என்பது அரசனால் கொடுக்கப்படும் பட்டப் பெயர். காழிதி ஆந்தை என்பது காவிதி பட்டம் பெற்றவருடைய பெயர். ஆந்தை என்னும் பெயர் சில பிராமிக் கல்வெட்டுக்களில் அந்தை என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆந்தைய’ என்பதன் பொருள் ஆந்தையினுடைய என்பது, அ என்னும் வேற்றுமை உருபு உடைய என்னும் பொருள் உள்ளது. ஸுதன் என்பது வடமொழிச் சொல். மகன் என்னும் பொருள் உள்ளது. பிணா, அல்லது பிணாவு என்பது பின்னப் பட்டது, முடையப் பட்டது என்னும் பொருள் உள்ளது. அல்லது சாமரையைக் குறிக்கிறதா? பிணாவு என்பதன் சரியான பொருள் தெரியவில்லை? கற்படுக்கைகளைக் குறிப்பதாகவும் இருக்கலாம். வெள்ளறை யங்காடித் தெருவில் வசிக்கிற காவிதி காழிதி ஆந்தையினுடைய மகன் கணிநந்தாசிரியற்கு ‘பிணாவு’ கொடுப்பித் தான் என்பது இதன் கருத்தாகும். அரிட்டாபட்டி 5 அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இது: திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்: ச () ந தா ரி தா னா கொ டு பி தோ ன திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்:3 ச () ந த ரி த ன கொ ட்டு பி தொ ன திராவிடியில் இதை இவ்வாறு படிக்கலாம். சந்த ரிதன் கொட்டு பிதோன். சந்தரிதன் என்பவன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படிக்கிறார்: சாந்தாரி தன் கொடு பி தோன் சந்தாரிதன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. கே. வி. சுப்பிரமணிய அய்யர் இதை ‘சான தாரிதான் கொட்டுபி தோன்’ என்று படிக்கிறார். ஆனால் இவர் இன்னொரு சொற்றொடரையும் இதனோடு சேர்த்துப் படிக்கிறார். அது பொருத்தமாக இல்லை. திரு. நாராயணராவ் கூறுவதற்கும் இதற்கும் பொருத்தம் இல்லை. இதன் வாசகத்தை சாந் தாரிதன் கொடுபித்தோன் என்று படிக்கலாம். இந்தக் கற்படுக்கையைச் சாந்தாரிதன் என்பவன் கொடுத்தான் என்பது பொருள். ‘கொடு பித்தோன்’ என்று எழுதவேண்டியது ‘கொட்டு பி தோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. கு வை ட்டு என்றும் த்தோ என்பது தோ என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளன. அரிட்டாபட்டி 6 அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு கல்வெட்டு இது: திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்: வௌ அ டை நி காமா தோ ர கொடி (ஒர) திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்: வெள் - அடை நிகாமதோர் கொடி ஓர். வெள் - அமை என்பது வெள்ளடை என்னும் ‘ஊர்ப் பெயர்’. நிகாமம் என்பது நிகமம். வணிகர் என்பது இதன் பொருள். கொடியோர் என்பது கொட்டுவித்தான் என்னும் சொல். இவ்வாறு கூறுகிற இவர் வேறு பிராமி எழுத்துக்களோடு இதையும் இணைத்துப் பொருள் கூறுகிறார். ஆனால் அது பொருந்தவில்லை. திரு. நாராயணராவ் இதையும் வேறு கல்வெட்டையும் இணைத்து வழக்கம்போல பிராகிருதமாக்கிப் பிறகு அதைச் சமற்கிருதப்படுத்திக் கூறுகிறார். அவர் கூற்றுக்கும் இந்த எழுத்துக்கும் தொடர்பில்லை யாகையால் அதைக் கூறாது விடுகிறோம். திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.46 வெள் - அடை நிகமத்தோர் கொடி ஓர். வெள் - அடை என்பது வெள்ளடை. இஃது ஓர் இடத்தின் பெயர். நிகமதோர் என்பது வணிகச்சாத்தர். கொடியோர் - என்பது கோடியர் (விறலியர்). கோடர் என்பது நாகர். (கார்கோடன் என்னும் பாம்பின் பெயரிலிருந்து உண்டானது.) கோடர் என்னுஞ்சொல் ‘வெள்ளடை என்னும் ஊரில் உள்ள நிகமத்தோர் வாணிகக் குழு)வைச் சேர்ந்த கோடிஓர் (நாகர் இனத்துப் பெண்)’ என்று பொருள் கூறுகிறார். திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.5 ‘வெள் - அறை நிகமதோர் கொடி ஓர்’ என்று படித்து, வெள்ளறையில் உள்ள வாணிகச் சாத்தைச் சேர்ந்தவர் இதைக் கொடுத்தார்கள் என்று பொருள் கூறுகிறார். இதை இவ்வாறு படிக்கலாம்: வெள் அறை நிகமதோர் கொடிஓர் ‘இதை (இந்தக் கற்படுக்கையை)க் கொடுத்தவர் வெள்ளறை வாணிகக் குழுவினர்’ என்பது இதன் பொருள். விளக்கம் : இந்தக் கல்வெட்டில், இடப்புறத்திலிருந்து நான்காவதாக உள்ள எழுத்தை ஒருவரைத் தவிர மற்றெல்லோரும் தவறாகவே படித்துள்ளனர். எச். கிருட்டிணசாத்திரி, கே.வி. சுப்பிரமணய அய்யர், நாராயணராவ், டி.வி. மகாலிங்கம் ஆகிய எல்லோரும் இந்த எழுத்தை டை என்று தவறாகப் படித்துள்ளனர். ஐ. மகாதேவன் மட்டும் றை என்று சரியாகப் படித்துள்ளார். இந்த எழுத்தின் அடிப்பகுதி கீழ்நோக்கி வளைந்திருப்பதே இது றை என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கின்றது. ஆகவே, முன் கூறியவர் எல்லோரும் இது டை என்று கொண்டு வெள்ளடை என்று படித்தது தவறு. திரு.ஐ. மகாதேவன் றை என்று கொண்டு வெள்அறை (வெள்ளறை) என்று படித்ததே சரியாகும். வெள்ளறை என்பது ஓர் ஊரின் பெயர். அந்த ஊர் கற்பாறைகள் உள்ள இடத்தில் இருந்திருக்க வேண்டும். (அறை என்றால் பாறை. வெள் அறை - வெள்ளைப் பாறை) அரிட்டாபட்டி 7 அரிட்டா பட்டி கிராமத்தின் வடமேற்கே அரை மைல் தொலைவில் கழிஞ்சமலை என்னும் பாறைக் குன்று இருக்கிறது. இந்தக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகையின் வாயில் மேற்பாறையில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இதை டாக்டர் கே.வி. இராமனும், திரு.ஒய். சுப்பராயலும் அண்மையில் கண்டுபிடித்தனர்.6 இருபத்தைந்து எழுத்துள்ள இந்தக் கல்வெட்டு ஒரு வரியாக எழுதப்பட்டுள்ளது: இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே தரப்படுகிறது; இந்த எழுத்துக்கள் கண்ணால் பார்த்துக் கையால் வரையப்பட்டவை (மையொற்றுப்படி அன்று) ஆகவே இதில் ஒரு சில தவறுகள் இருக்கவுங்கூடும். இதன் வாசகத்தை இவ்வாறு படித்துள்ளனர்: ‘நெல்வெளி இய் சழிவன் அதனன் வொளியன் மு ஸ கை கொடுவன்’ நெல்வெளி வழிவன் (செழியன்) அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகை கொடுவன். கொடுவன் என்பதன் பொருள் கொடுத்தவன் என்றும், கொத்துவித்தவன் என்றும் பொருள்படும். பாண்டியரின் கீழ் தலைவனாக இருந்த நெல்வெளிசெழியன் அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகையைச் செய்து கொடுத்தான் என்பது கருத்து. இவர்கள் படித்துள்ளதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. நெல்வெளி என்பதை நெல்வேலி என்றும் அதனன் என்பதை ஆதன் என்றும் ஒளியன் அல்லது வளியன் என்பதை வெளியன் என்றும் மாற்றி, நெல்வேலி சழிவன் ஆதன் வெளியன் முஸகை கொடுவன் என்று படிப்பது சரி என்று தெரிகிறது. இதற்கு விளக்கம் வருமாறு: 1. நெல்வெளி இய் பிராமி வெ எழுத்தை வே என்றும் படிக்கலாம். பிராமி ளி க்கும் லி க்கும் வேற்றுமைதான் உண்டு. லியின் வலப்புறத்தின் பக்கத்தில் கீழே வளைவான சிறு கோடு இட்டால் ளி யாகும். அக் கோடு இடாவிட்டால் லி யாகும். மேல் காட்டிய எழுத்தில் ளி என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்து எழுதப்பட்டதாகையால் இதில் தவறும் இருக்கலாம். இந்த எழுத்தை லி என்றே கொள்வோம். ஏனென்றால் நெல்வேலி என்று ஊர் இருக்கிறது. நெல்வெளி என்று ஊர் இருந்ததாக இதுவரையில் தெரியவில்லை. ஆகையால் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நெல்வேலி என்றே கொள்வோம். நெல்வேலி என்பது நெல்வெலிஇய் என்று எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றுச் சொற்களில் இகரத்தையும் யகர மெய்யையும் இட்டு இவ்வாறு எழுதுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, நெல்வேலிஇய் என்பதை நெல்வேலி என்றே படிக்க வேண்டும். 2. சழிவன்: இதன் சரியான உருவம் செழியன் என்பதாகும். செழியன் என்பது பேச்சு வழக்கில் சழிவன் என்று மருவி வழங்கிற்றுப் போலும். செழியன் என்பது பாண்டியரின் பொதுப் பெயர். 3. அதனன்: இதில் இரண்டு றன்னகரங்கள் சேர்த்து எழுதப் பட்டுள்ளன. அதன் என்பது இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அதன் என்பது ஆதன். பிராமி அகர எழுத்தின் மத்தியில் வலப்பக்கமாகச் சிறு கோடு அமைத்தால் ஆகாரம் ஆகும். அமைக்க வேண்டிய அந்தக் கோட்டை அமைக்காதபடியால் அதன் என்று இருக்கிறது, இது கற்றச்சரின் தவறு. மேட்டுப்பட்டி பிராமிக் கல்வெட்டிலும் இந்தத் தவறு காணப்படுகிறது. அங்கும் ஆதன் என்னும் சொல் அதன் என்றும் ஆந்தை என்னுஞ் சொல் அந்தை என்றும் எழுதப்பட்டுள்ளன. விக்கிரம மங்கலம், அழகர் மலையிலும் இவ்வாறே ஆதன், ஆந்தை என்பவை அதன், அந்தை என்று எழுதப்பட்டுள்ளன. ஆதன், ஆந்தை என்பதே சரியாகும். இந்தக் கல்வெட்டிலும் அதன் என்றிருப்பதை ஆதன் என்றே படிக்க வேண்டும். 4. வொளியன்: வொளியன் என்றும் வளியன் என்றும் இதனைப் படித்துள்ளனர். ஒளியன் என்பதை ஒளியர் என்னும் இனத்தாரோடு ஒப்பிடுகின்றனர். வளியன் என்றும் இன்னொரு மொழித் தொடரைக் கூறுகின்றனர். இரண்டு மொழித் தொடரும் தவறு என்று தோன்றுகிறது. இதன் சரியான வாசகம் வெளியன் என்பது. பிராமி எழுத்துத் தலைமேல் கோடு இட்டால் வொ ஆகும். அக் கோட்டையே இடப்பக்கத்தில் மட்டும் இட்டால் வெ ஆகிறது. அதை வெ என்றே கொள்கிறோம். கண்ணால் பார்த்து எழுதியபடியால் இதில் தவறு இருக்கலாம். வெளியன் என்பதே சரியான சொல். ஏனென்றால், சங்க காலத்தில் வெளியன் என்னும் பெயருள்ளவர் இருந்தனர். வெளிமான், வெளியன் வேண்மான், வெளியன் தித்தன், வீரை வெளியன் என்னும் பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டிலும் வெளியன் என்னும் பெயர் காணப்படுவது பொருத்தமானதே. 5. மூஸகை. இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றும், பிராகிருத மொழிச்சொல் என்றும் இதன் சரியான பொருள் விளங்கவில்லை என்றும் கூறினோம். இந்தப் பிராகிருத மொழிச் சொல்லைப் பௌத்த பிக்குகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். இச் சொல் இங்கு, இந்த மலைக்குகையைக் குறிக்கிறது போலும். கொடுவன்: கொடுத்தவன் என்பதன் தவறான வாசகம். இவன் செழியனின் (பாண்டியனுடைய) கற்றச்சன் என்று தோன்றுகிறான். நெல்வேலியில் இருந்த செழியன் ஆதன் வெளியன் என்னும் பெயர் பெற்ற கற்றச்சன் இந்த ‘முஸகை’யைச் செய்து கொடுத்தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்தாகும். அரிட்டாபட்டி கழுகுமலை மதுரை மாவட்டம் மதுரை தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டிக் கிராமம். (இவ்வூருக்கு மாங்குளம் என்றும் பெயர் உண்டு) அரிட்டா பட்டி மதுரையிலிருந்து வடகிழக்கே 14வது கல்லில், மேலூருக்கும் அழகர் மலைக்கும் இடையில் இருக்கிறது. அரிட்டா பட்டியைச் சேர்ந்த மாங்குளம் என்னும் ஊரில் கழுகுமலை என்னுங் குன்றுகள் உள்ளன. கழுகுமலைக்கு ஊவாமலை என்னும் பெயருங் கூறப்படுகிறது. கழுகுமலையின் கிழக்குத் தாழ்வரையில் ஐந்து குகைகளும் அக் குகைகளில் கற்படுக்கைகளும் காணப்படு கின்றன. பழங்காலத்தில் பௌத்த சமய முனிவர்கள் இந்தக் குகைகளில் தங்கியிருந்து தவஞ் செய்தார்கள் என்பதை இங்குள்ள கற்படுக்கைகள் தெரிவிக்கின்றன. கற்படுக்கைகள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மற்றும், இங்குள்ள இரண்டு குகைகளின் மேற்புறத்தில் இரண்டு பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் காணப் படுகின்றன. இந்த எழுத்துக்களை ஆராய்வதற்கு முன்னர், அரிட்டாபட்டி, கழுகுமலை என்னும் பெயர்களின் வரலாற்றை அறியவேண்டும். அரிட்டாபட்டி அரிட்டாபட்டி என்னும் பெயர் பௌத்த சமயத் தொடர்புடையதாகத் தெரிகிறது. இலங்கையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அமைச்சன் அரிட்டன் (அரிஷ்டன்) என்பவன். அரிட்டனை மகாஅரிட்டன் என்றுங் கூறுவர். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில் பாரதநாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி இலங்கையில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ் செய்யப் பௌத்த பிக்குகளை அனுப்பினார். தேவனாம்பிய திஸ்ஸன் அசோக சக்கரவர்த்தியிடத்தில் அமைச்சனான அரிட்டன் தலைமையில் ஒரு தூதுக்குழுவை அனுப்பினான். அசோக சக்கரவர்த்தி புத்த கயையிலிருந்து (போதி) அரச மரக்கிளையையும் பிக்குணி சங்கமித்திரை யையும் இலங்கைக்குக் கடல் வழியாகக் கப்பலில் அனுப்பியபோது அவர்களை அழைத்துக்கொண்டு இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்தவனும் அமைச்சனான அரிட்டனே. பிற்காலத்தில் அரிட்டன் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்த பிக்குவாகிப் பௌத்த மதப் பிரசாரஞ் செய்தார். அவர் பாண்டி நாட்டுக்கு வந்து மாங்குளத்தில் தங்கினார். அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அரிட்டாபட்டி என்று பெயர் வந்தது. அஃதாவது அரிட்டர் இருந்த ஊர் என்பது பொருள். கழுகுமலை அரிட்டாபட்டியில் உள்ள குன்றுகளுக்குக் கழுகுமலை என்று பெயர் உண்டு. அரிட்டரும் இவருடைய சீடர்களும் இந்த மலைக்குக் கழுகுமலை என்று பெயர் இட்டிருக்கவேண்டும். பௌத்த பிக்குகள் தாங்கள் தங்கியுள்ள மலைக்குகைகளுக்குக் கழுகுமலை என்று பெயர் இடுவது வழக்கம். பௌத்த மதத்தை உண்டாக்கின கௌதம புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில், இராசக்கிருக நகரத்துக்கு அருகில் இருந்த கிஜ்ஜரகூடமலைக் குகையில் அடிக்கடி போய்த் தங்குவது வழக்கம். இந்த மலையில் கழுகுகள் இருந்தபடியால் அதற்கு கிஜ்ஜரகூடமலை என்று பெயர் இருந்தது (கிஜ்ஜரம் - கழுகு.) பகவன் புத்தர் கிஜ்ஜரகூட மலையில் தங்கியிருந்ததை நினைவு கூர்ந்து அவருடைய மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் தாங்கள் தங்கியிருந்த மலைகளுக்குக் ‘கழுகுமலை’ என்று பெயரிட்டார்கள். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக் குன்றமும் (கழுகுக் குன்றம் என்பது கழுக்குன்றம் என்று மருவிற்று) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கழுகுமலையும் மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் கழுகுமலையும் பௌத்த மதத் தொடர்புடையவை. அக்காலத்தில் பௌத்த பிக்குகள் இந்த மலைகளில் தங்கி யிருந்தபடியால் இந்த மலைகளுக்குக் கழுகுமலை என்று பெயராயிற்று. ஆகவே, அரிட்டாபட்டிக் கழுகுமலையில் காணப்படுகிற கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் பௌத்த சமயத் தொடர்புடையவை. அரிட்டாபட்டிக் கழுகுமலைகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளிலே தெற்குக் குகையின் வாயிலுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அதற்கு அருகில் கீழ்புறக் குகையின் உட்புற வாயிலுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்த இரண்டு கல்வெட்டெழுத்துக்களும் நெடுஞ் செழியன் என்னும் பாண்டியன் பெயரைக் கூறுகின்றன. தமிழ் நாட்டிலே பாண்டியன் பெயரைக் கூறுகிற மிகப் பழைய கல்வெட்டெழுத்து இதுவே. நெடுங்காலமாக மறைந்து கிடந்த இந்தக் கல்வெட்டெழுத்து 1906 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குகையின் வாயிலுக்கு மேற்பாறையில் ஒரே வரியாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வரிவடிவம் இது: (கீழே காண்க.) இக்காலத்து எழுத்தில் இதை இவ்வாறு எழுதலாம். க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம ஈதா நெ டி ஞ ச ழி யா ன ஸ ல க ன இ ள ஞ சா டி க ன த ந தை ய் ச டி கா ன செயிய பாளிய் புள்ளி இடவேண்டிய எழுத்துக்குப் புள்ளியிட்டால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது: க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம் ஈதா நெடி ஞ் சழியான் ஸலகன் இளஞ் சாடிகன் தந்தைய் சடிகான் செயிய பானிய் இதில், நந்தாஸிரியகு என்பதில் உள்ள ஸகரமும் தமம் என்பதிலுள்ள தகரமும் ஸலகம் என்பதில் உள்ள ஸகரமும் பிராகிருத வடமொழி எழுத்துக்கள். இந்தக் கல்வெட்டை அறிஞர்கள் சிலர் படிக்க முயன்று தங்களுக்குத் தோன்றியபடி படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவர்கள் படித்துப் பொருள் கூறியதைப் பார்ப்போம். திரு.எச்.கிருட்டிண சாத்திரி இதைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:7 காணிய ந()ந தாஸிரியகு அனா பாம இ தா ந டி ஞ சாட்டியனா ஸால() கானா ஈஸாஞ சாடிகானா தாநதைய சாடிகான செஇயா பாளிய இவ்வாறு படித்த இவர் ழி யை ட்டி என்று படித்துள்ளார். சாழியன் என்பதைச் சாட்டிகன் என்று படித்து, இஃது இக் கல்வெட்டில் இரண்டு இடங்களில் வருகிற சாடிகன் என்பதன் வேறு வடிவம் என்று கூறுகிறார். கடைசியில் வருகிற செயிய என்பது சைத்யானி என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார். இறுதியில் இருக்கிற பாளிய் என்பது பால்ய என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தக் கல்வெட்டெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:8 “கா ணியன் நடா ஸிரி யகு அன தமாம இதர நடிஞ் சாறியன் ஸாலாகன் இளஞ்சாறிகன் தாந்தைய் சாறிகான் செ இய பாளிய்” காணியன் என்பது கரணியன். கரணியன் என்பது அநுலோம (கலப்பு) சாதியைக் குறிக்கிறது. நடா என்பது நாத (தலைவன்) என்னும் பொருள் உள்ள சொல். யகுஅன் என்பது யக்ஷன் என்னுஞ் சமற்கிருதச் சொல். பாளிய் என்பது பாழி. “கரணி குலத்தில் பிறந்த புகழ்பெற்ற தலைவனான ஸ்ரீயக்ஷன் இந்தத் தருமத்தைச் செய்தான். இந்தச் சத்தியியத்தை அமைத்தவன் நெடுஞ்சாறிகளின் மைத்துனனும் (சட்டகன்) இளஞ்சாறிகளின் தந்தையுமான சாடிகன்.” திரு.சி. நாராயண ராவ் இந்தக் கல்வெட்டெழுத்தைப் பிராகிருத மொழி என்று தவறாகக் கருதிக்கொண்டு முதலில் பிராகிருதமாகப் படிக்கிறார். பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக அமைக்கிறார்.9 “ காணிய நா நதா ஸிரியகு அநா காமம் இதர நடிஞா சாட்டியந ஸ் இயகா நா இளாந சாடிகா ந தாநதைய; சாடிகாந சே இய பாளிய” (பிராகிருதம்) “ கணகாநாம் நாதா(நாம்) ஸ்ரீயக்ஷாணாம் தர்மம், இதா நர்திநாம் ஸார்த வாஹகநரம் ஸிம் ஹலாநாம் ஸ்ரேஷ்டிகா நாம் சைத்ய பாலிகா” (சமற்கிருதம்) திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்.10 “ காணிய நாந்தாஸிரி யகஅன் தமாம் இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான் இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்” (இவ்வாறு படித்துப் பிறகு இதன் வாசகத்தை இவ்வாறு அமைக்கிறார்) “ கணிய நந்த - (ஆ) ஸிரிய்க உவன் த(ம்)மம் இத(உ)அ நெடிஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகள் தந்தைய் சடிகன் செஇய பளிய்” (இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகிறார்) அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தன் என்னும் துறவிக்குப் படைக்கப்பட்டது. நெடுஞ்செழியனின் மைத்துனனும் (ஸாலகன்) (மைத்துனியின் கணவன்) இளஞ்சடிகளின் தந்தையுமான சடிகனால் இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது. திரு.டி.வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்.11 “கணிய நந்த ஸிரிய் கு அன் ஏமம் இத நெடிஞ் சழியன் ஸலகன் இளஞ்சடிசன் தந்தைய் சடிகன் செய் பாளிய்” (இவ்வாறு படித்துப் பிறகு சில சொற்களுக்கு விளக்கங் கூறுகிறார்) கணி-சோதிடன். நந்த என்பது குபேரனுடைய நிதிகளில் ஒன்றின் பெயர். அல்லது குபேரனுடைய ஓர் ஊழியனின் பெயர். ஸிரிய் என்பது ஸ்ரீ. குஅன் என்பது ஒருவனுடைய பெயர். அது குபேரனுடைய பெயர். இது குஹ்ய, குஹ்யக என்னு இயக்கரைக் குறிக்கிறது. ஏமம் என்பது ஹேமம் என்பதன் திரிபு. இதற்குப் பொன் என்பது பொருள். இவ்வாறு சில சொற்களுக்கு விளக்கங் கூறின பிறகு இவ்வாறு பொருள் கூறுகிறார். “நந்த ஸிரி குபேர (நந்த ஸ்ரீயக்ஷ) என்னும் சோதிடனால் கொடுக்கப்பட்ட பொன்னைக் கொண்டு” இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது என்று முடிக்கிறார். இந்தப் பிராமி எழுத்து வாசகத்தையும் இதன் பொருளையும் நாம் ஆராய்வோம். “காணி ய் நாந்தா ஸிரிய்கு அன தமாம் ஈதா நெடிஞ் சாழியான் ஸாலாகான் ஈளஞ் சாடி கான் தாந்தைய் சடிகான் செ ஈ யா பா ணி ய்” இதில் சில எழுத்துக்கள் நெடிலாக எழுதப்பட்டுள்ளன. பட்டிப் பரோலு கல்வெட்டின் வாய்பாடுப்படி,12 நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாக அமைத்துப் படித்தால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது : “கணிய் நத்தஸிரிய்கு அன தமம் ஈதா நெடிஞ்சழியன் ஸலகன் ஈளஞ் சடிகன் தந்தைய் சடிகன் செஈய பளிய்” இதன் பொருளைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்கிக் கூற வேண்டும். கணிய்-ஈற்றில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லின் சரியான வாசகம் கணி என்பது. இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகரமெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து வழக்கம். கணி என்பதன் பொருள் வான நூலை அறிந்தவர் (கோள்களைக் கணிப்பவர்) என்பது. கணியன் பூங்குன்றனார் என்னும் பெயரைக் கருதுக. கணியன் பூங்குன்றனார் நற்றிணை 226ஆம் செய்யுளையும் புறம்.192ஆம் செய்யுளையும் பாடியவர். இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற கணி என்பவர் வானத்திலுள்ள கோள்களைக் கணிப்பவர். நந்தஸிரிய்கு என்பது தவறாகக் கற்றச்சனால் எழுதப்பட்டுள்ளது. இதன் சரியான சொல் நந்தியாசிரியற்கு என்றிருக்க வேண்டும். நந்தியாசிரியர் என்பது இந்தக் குகையில் வசித்த முனிவரின் பெயர். அவர் வான நூலைக் கணிக்க வல்லவர் ஆகையால் ‘கணிந்தியாசிரியர்’ என்று கூறப்பட்டார். அன என்றிருப்பது ஆன என்றிருக்க வேண்டும். இது கற்றச்சன் செய்த பிழை. தமம் என்றிருப்பது தம்மம் என்றிருக்க வேண்டும். இதன் பொருள் தர்மம் (அறம்) என்பது. ஈதா என்பது ஈந்தான் என்றிருக்கவேண்டும். இந்தத் தர்மத்தை ஈந்தவன் என்பது இதன் பொருள். நெடிஞ்சழியன் என்று எழுதப்பட்டிருப்பது நெடுஞ் செழியன் என்றிருக்கவேண்டும். செ என்னும் எழுத்தை ச என்று எழுதியிருக்கிறான் கற்றச்சன். ஸலகன் என்னும் சொல் பிராகிருத மொழிச் சொல். இதன் பொருள் தெரியவில்லை. ஐ. மகாதேவன் இதற்கு கசலன் (மைத்துனியின் கணவன்) என்று பொருள் கூறுகிறார். இது சரி என்று தோன்றவில்லை. கேசவன் (சேனைத் தலைவன்) என்னும் சொல் இப்படித் தவறாக எழுதப்பட்டதோ என்று ஐயமாக இருக்கிறது. இளஞ்சடிகன். இது பாண்டியன் நெடுஞ்செழியனுடைய சேவகன் பெயர். தந்தைய் என்னும் சொல்லின் ஈற்றில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. இகர ஈறு ஐகார ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகர மெய் இட்டு எழுதுவது அக்காலத்து வழக்கம். அதன் படி தந்தை என்னும் இச் சொல்லின் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப் பட்டிருக்கிறது. சடிகன் என்பது இளஞ்சடிகனுடைய தந்தையின் பெயர் செயிய என்பது செய்த என்னும் பொருள் உள்ளது. பளிய் என்பது ‘பள்ளி’ என்பதன் திரிபு. இகர மெய்யீற்றுச் சொல்லாகையால் இதன் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. பள்ளி என்பது பௌத்த சைன சமயத்துத் துறவிகள் தங்கியிருக்கும் இடம். இது கல்வெட்டின் கருத்து இது: கணியரும் நந்தி என்னும் பெயரையுடையவருமான ஆசிரியருக்கு அறமாக இந்த மலைக்குகை கொடுக்கப்பட்டது. இதைக் கொடுத்தவன் (பாண்டியன்) நெடுஞ்செழியன். அரசனுடைய சேவகனாகிய இளஞ்சடிகனுடைய தந்தையான சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (கற்படுக்கைகளை) அமைத்தான். கணி நந்தாசிரியர் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய குரு என்று தெரிகிறார். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன். அரிட்டாபட்டிக் கழுகுமலையில், இன்னொரு குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இதே பாண்டியன் நெடுஞ்செழியனால் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டும் 1906ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முன் கல்வெட்டை ஆராய்ந்த அறிஞர்கள் இந்தக் கல்வெட்டை ஆராயவில்லை. எச்.கிருட்டிண சாத்திரியும், கே.வி. சுப்பிரமணிய அய்யரும், சி. நாராயணராவும், டி.வி. மகாலிங்கமும் இந்தக் கல்வெட்டைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றுகூட அவர்கள் குறிப்பிடவில்லை. முன் கல்வெட் டெழுத்துப் போன்றே இந்தக் கல்வெட்டும் பாண்டியர் வரலாற்றுக்கு மிக முக்கியமானது. திரு. ஐ. மகாதேவன் இந்தக் கல்வெட்டைப்பற்றி எழுதியுள்ளார். அவர் இந்தப் பிராமி எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:13 “காணிய் நாந்தா அஸிரிய் ஈகுவ அன்கே தம்மாம் ஈத்தா நெடுஞ்சாழியான் பானா அன் காடால அன் வாழுத்திய் கொட்டு பித்தா அ பர்ஸிஇய்” திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்: ‘கணிய்’ நந்தா ஆஸிரிய்கு உவன் தம்மன் ஈத்தா நெடுஞ்சழியன் பணவன் கடலன் வழுத்திய் கொட்டுபித்த பளிஇய்’ இதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: ‘அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தா ஸிரியற்குத் தருமம். நெடுஞ்செழியனி பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுத்தி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’ (இவர் இதையே இன்னொரு வகையாகவும் படிக்கிறார்) ‘அங்கே வசிக்கிற கணி நந்தாஸிரியற்கு கொடுக்கப்பட்டது. நெடுஞ்செழியன் பணவன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’. (இதற்கு இவர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்) ‘பண’ என்பது ‘பஞ்ச’ என்பதன் திரிபு. பணவன் என்பது பஞ்சவன் என்னும் பொருளுள்ளது. பஞ்சவன் என்பது பாண்டியர் களுக்குப் பெயர். கடலன் என்பதும் பாண்டியனுடைய பெயர். கடல்களுக்குத் தலைவன் என்பது இதன் பொருள். கடலன் என்பதைக் கடல் நட்சத்திரத்தில் (சதய நட்சத்திரத்தில்) பிறந்தவன் என்றும் கொள்ளலாம். கடல் நட்சத்திரம், கடல் தெய்வமாகிய வருணனுடன் தொடர்புள்ளது. பிறந்த நட்சத்திரத்தின் பெயரை அரசர்களுக்கு இடுவது வழக்கம். வழுதி என்பது பாண்டியருக்குரிய சிறப்புப் பெயர். இவ்வாறு இவர் இந்தக் கல்வெட்டெழுத்துக்கு இரண்டு பொருள்களைக் கூறுகிறார். கணியன் நந்தி ஆசிரியருக்கு நெடுஞ்செழியனுடைய பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது ஒரு பொருள். நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்னும் பெயருள்ள பாண்டியன், கணி நந்தி ஆசிரியர்க்கு இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது இன்னொரு பொருள். இந்தப் பிராமிக் கவ்வெட்டெழுத்தை நாம் படித்துப் பொருள் காண்போம். பட்டிப் பரோலு எழுத்தின் வாய்பாட்டுப்படி நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாகக் கொண்டு படித்தால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது: “ கணிதி நந்த அஸிரிய் இகுவ் அன்கெ தம்மம் ஈத்தா நெடுஞ்செழியன் பணஅன் கடலஅன் வழுத்திய் கொட்டுபித்த அ பளிஇய்” இந்தக் கல்வெட்டின் கருத்தைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்க வேண்டியிருக்கிறது. கணிய்: இந்தச் சொல்லை முன் கல்வெட்டில் விளக்கினோம். மறுபடியும் இங்கு விளக்கவேண்டியதில்லை. நந்த அஸிரிய் நந்தி ஆசிரியர் என்பதை இவ்வாறு எழுதியுள்ளார். இதுவும் முன்னமே விளக்கப்பட்டது. இகுவ் அனகே. இதன் சரியான உருவம் தெரிய வில்லை. ‘இவனுக்கு’ ‘இவனுக்குரிய’ என்னும் பொருளுள்ளதாகத் தோன்றுகிறது. தம்மம் : இது பாலி (பிராகிருத) மொழிச் சொல். சமற்கிருதத்தில் இது தர்மம் என்று எழுதப்படும். இதன் பொருள் அறம் என்பது. இந்தச் சொல் முன் கல்வெட்டில் தமம் என்று எழுதப்பட்டுள்ளது. ஈத்தா அ நெடுஞ்சழியன்: ‘ஈத்தான் நெடுஞ்செழியன்’ என்று எழுத வேண்டியது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. ஈத்தான் - ஈந்தவன், கொடுத்தவன். செழியன் என்பது சழியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. செழியன் என்பது பாண்டியனுடைய பெயர். பணஅன் என்பது பணயன் என்று எழுதப்படவேண்டும். பணயன் என்றும் பணயகாரன் என்றும் பாண்டியரின் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும், எழுதப் பட்டுள்ளன. பணயன் என்பதன் பொருள் அரசருடைய தச்சன் என்பது. அரசருடைய தச்சனைப் பெருந்தச்சன் என்றும் கூறுவர். இச் சொல் இங்குப் பாண்டியனுடைய கற்றச்சனைக் குறிக்கிறது. பாண்டியனுடைய கற்றச்சன் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்தவன். கடலன் என்பது பணயனான கற்றச்சனுடைய இயற்பெயர். கடலன் என்னும் பெயர் சங்க காலத்தில் பெயராக வழங்கப்பட்டது. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் சங்க காலத்தில் இருந்தார். அவர் அகநானூறு 72ஆம் செய்யுளைப் பாடினவர். வழுத்தி என்பது வழுதி என்றிருக்க வேண்டும். வழுதி என்பது பாண்டியரின் பொதுப் பெயர். பாண்டியன், பணயன் கடலனாகிய கற்றச்சனுக்கு வழுதி என்று சிறப்புப் பெயர் அளித்திருந்தான் என்பது தெரிகிறது. கொட்டு பித்த அ என்பது கொத்துவித்த (பாறையைக் கொத்திக் கற்படுக்கையைச் செய்வித்த) என்னும் பொருளுடையது. இறுதியில் அகர எழுத்து மிகையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இச் சொல் கொத்துவித்த என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பளிஇய் என்பது பள்ளி என்று எழுதப்படவேண்டும். கற்றச்சன் இவ்வாறு எழுத்துக்களை விட்டும் சேர்த்தும் வெட்டியிருக்கிறான். சோதிடத்தில் வல்லவரான அரச குருவாகிய நந்தி ஆசிரியருக்கு இந்த மலை தானமாகக் கொடுக்கப்பட்டது. இதைத் தானங் கொடுத்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பாண்டியனுடைய பணயனாகிய கடலன் வழுதி இக் குகையில் கற்படுக்கைகளைக் கொத்துவித்தான் என்பது இக் கல்வெட்டின் கருத்து. இந்த இரண்டு கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படுவது: ஆசிரியராகிய (குருவாகிய) கணி நந்தி என்பவருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இரண்டு மலைக்குகைகளைத் தானஞ் செய்தான். இரண்டு குகைகளைத் தானஞ் செய்தபடியாலே, அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர் என்பது தெரிகிறது. நெடுஞ்செழியனுடைய சேனைத் தலைவனுடைய தந்தை யான சடிகன் முதற் குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான். பாண்டியனின் பணயகாரனாகிய கடலன் வழுதி இரண்டாவது குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான். அடிக்குறிப்புகள் 1. P. 211. Early South Indian Palaeography. 2. P. 60 No. 3 Seminar on Inscriptions 1966. 3. 209-210. Early South Indian Palaeography. 4. P. 210-211. Early South Indian Palaeography. 5. P. 61 Seminar on Inscriptions 1966. 6. A New Tamil Brahmi Inscription. The Sunday Standard, Madras. Sunday September, 26, 1971. 7. The Caverns and Brahmi Inscriptions of Southern India by H.Krishna Sastri, pp. 327 - 348. Proceedings and Transactions of the First Oriental Conference, Poona (5, 6, 7 November 1919.) 8. PP. 290 - ..... Proceedings and Transactions of the Third All India Oriental Conference (1924). 9. The Brahmi Inscriptions of South India C.Narayana Rao pp. 362 - 376. New Indian Antiquary Vol. I. 1938 - 39. 10. P. 60 Texts and Transactions of Tamil Brahmi Inscriptions I. Mahadevan Seminar on Inscriptions Madras 1966. Historical Tamil-Brahmi Inscriptions paper read at the 1st World Tamil Seminar Conference held at Kwala Lampur 1966. 11. PP. 207-209 Early South Indian Palaeography. T.V. Mahalingam Madras 1967. 12. Battiprolu Script, Epigraphia Indica Vol. II. pp. 323 - 24. 13. P. 60 Test and Translations of Tamil Brahmi Inscriptions. Seminar on Inscriptions 1966. Historical Tamil-Brahmi Inscriptions. I. Mahadevan. Paper read at the 1st World Tamil Seminar Conference held at Kwala Lampur 1966. 10. ஆனைமலை பிராமி எழுத்து மதுரையிலிருந்து மேலூருக்குப் போகிற சாலையில் ஐந்து கல் அளவில் ஆனைமலை இருக்கிறது. இந்த மலை பெரிய கற்பாறை யினால் அமைந்துள்ளது. இந்த மலைப்பாறையின் உருவ அமைப்பு யானையொன்று தன்னுடைய முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு அக் கால்களின் நடுவே தும்பிக்கையை வைத்திருப்பது போலக் காணப்படுகிறபடியால் இதற்கு யானை மலை என்று பெயர் உண்டாயிற்று. யானை மலைக்குன்றில் சில இடங்களிலே சமண சமய தீர்த்தங்கரரின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப் படுகின்றன. இவை கி.பி. 7,8ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த மலையின் அடிவாரத்தில் நரசிங்கமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் பாண்டியனுடைய அமைச்சனாக இருந்த மாறங்காரி கி.பி. 770 இல் நரசிங்கப் பெருமானுக்கு ஒரு குகைக் கோயிலை அமைத்தான் என்று அங்குள்ள வட்டெழுத்து கிரந்த எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன. பிற்காலத்தில் இந்த மலையைப் பற்றிப் புராணக் கதைகள் கற்பிக்கப்பட்டன. சமண சமய முனிவர் தங்களுடைய மந்திர சக்தியினால் ஒரு பெரிய யானையை உண்டாக்கி அதைப் பாண்டிய னுடைய மதுரை நகரத்தை அழித்துவிட்டு வரும்படி ஏவினார்களாம். அந்தப் பெரிய யானை மதுரையை யழிக்க வருவதைக் கண்ட பாண்டியன் சொக்கப் பெருமானை வேண்டிக் கொள்ள அவர் நரசிங்க அம்பு எய்து யானையைக் கொன்றாராம். விழுந்த யானை கல்லாகச் சமைந்துவிட்டதாம். இந்தக் கதை திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகின்றன. இந்த யானைமலை மேல் உயரத்திலுள்ள இயற்கையான குகையும் அக் குகை வாயிலின்மேல் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்தும் நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை. மலையுச்சியிலுள்ள குகைக்குச் செல்வது கடினமானது. குகையின் நீளம் 23 அடி குகைக் குள்ளே முனிவர் இருப்பதற்காகக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குகையின் வாயிலுக்கு மேலேயுள்ள பாறையின் ஓரத்தில், மலை நீர் குகைக்குள்ளே விழாதபடி பக்கங்களில் வழிந்து போகும்படி குழைவான தூம்பு செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியிலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்குச் சற்றுத்தூரத்தில் நீர் ஊற்றுள்ள சுனையொன்று இருக்கிறது. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையில் நீண்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் அவ்வாண்டின் சாசனத் தொகுப்பில் 457 ஆம் எண்ணுள்ளதாக இந்தச் சாசனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வெழுத்துக்களின் வரிவடிவம் இவை: இந்த எழுத்துக்களைப் படித்த அறிஞர்கள் இதற்கு வெவ்வேறு பொருள் கூறியுள்ளனர். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார். இ வ(ம்) ஜெனா டு தூ உடை யுள (பா)த்னதானா ஏரி அதாது வாயிஅரட்டம் ட்டகாயி பானா (ஆரிதனா) இவ்வாறு படித்த இவர் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார். `இவம்ஜெநாடு’ என்பது ஒரு நாட்டின்பெயர். உடையுஎன்பது உடையன் (தலைவன்) என்னும் பொருள் உள்ளது. ஏரி என்பது குளத்தைக் குறிக்கிறது. ஆரிதனா என்பது ஹரிதானா என்னும் சமற்கிருதச் சொல்லின் திரிபு. தாதுவாயி என்பது தந்துவாய என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு. இதன் பொருள் துணி நெய்கிறவன் என்பது.1 திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்; இவ குன்றது உறை உள்நாதன் அ தான ஏரி அநிதன் அத்துவாயி அரட்ட காயிபான் இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகின்றார்: ‘குன்றத்தூரில் வசிக்கிற உள்நாதன் கொடுத்த தானங்கள். பின் உள்ள சொற்கள் இந்தக் குகையில் வசித்தவருடைய பெயரைக் கூறுகின்றன.2 திரு. நாராயணராவ் இதை இவ்வாறு படித்துள்ளார்: ‘இவகு-நாட்டு-தூ உட்டுயுள-பொதன-தானா ஏரி ஆரிதானா அதாந்துவாயி ‘அ-ரட்ட-காயிபானா’ நாடு என்பது திராவிடச் சொல் அன்று; அது நட் என்னும் சமற்கிருத வேர்ச்சொல். போதனா என்பது புதரானாம் அல்லது பௌத்ரானாம் என்னும் சமற்கிருதச் சொல்லைச் சுட்டுகிறது. தான என்பது தானம் என்னும் சமற்கிருதச் சொல். ஏரி ஆரிதனா என்பது ஐராவதானாம் என்னும் சொல்லாகும். ரட்ட என்பது ராஷ்ட்ரம். காயிபானா என்பது காஸ்யபானாம் என்னும் சொல். இவ்வாறு விளக்கங் கூறி இதன் கருத்தையும் தெரிவிக்கிறார். அதாத்து வாயக ராஷ்ட்ரத்து இவது நாட்டிலிருந்து வந்தவர்களான காஸ்யபர்களின் ஐராவத குலத்தைச் சேர்ந்த உட்டுயுல் என்பரின் மக்கள் (அல்லது பேரன்கள்?) செய்த தானங்கள்.3 திரு. ஐராவதம் மகாதேவன் இதைப் படித்துக் கூறுவது இது: இவ குன்றதூர் உறையுள் நாதன் தான அரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன். “குன்ற(த்)தூர் (படுக்கையில் வசிக்கும்) நாதன் என்பவரின் படுக்கைகள் (இவற்றைச் செய்து கொடுத்தவர்) அரி அரிதன், அத்துவாயி, அரட்ட காயிபன்.4 திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், இவ்வாறு படித்து விளக்கமும் பொருளும் கூறுகிறார்: ‘இவ குன்றதூ உறையுள் பாதந்தன் எரி அரிதன் அதன் தூவயி அரிட்ட கோயிபன்’ இவகுன்றம் என்பது யானைமலை. இவம் என்னும் சமற்கிருதச் சொல் இபம் என்றாயிற்று. இந்த மலையின் பழைய பெயர் ‘இவகுன்று’ என்றிருக்கலாம். பதந்தன் என்பது பதந்த என்னும் பாலி மொழிச் சொல். இதன் பொருள் வணக்கத்துக்குரிய ஆசிரியர்’ என்பது. எரி என்பது தீ (அக்கினி). அஃதாவது சூரியனைக் குறிக்கிறது. அரிதன் என்பது ஹாரித என்பதாகும். ஹாரித குலத்தைச் சேர்ந்தவன் என்பது இதன் பொருள். முதல் வாக்கியத்தின் பொருள். ‘இவ குன்றத்தில் வசிக்கிற வணக்கத்துக்குரிய (பத்தந்த) ஏரி ஆரிதன் ‘என்பது இரண்டாவது வரியில்’ அதன் என்பது ஆதன் என்னும் சொல்லின் திரிபு. ஆதன் என்பது அதன் என்று எழுதப்பட்டுள்ளது. தூவி, தூவல் என்னுஞ் சொற்கள் பறவைகளின் சிறகைக் குறிக்கும் சொற்கள். இவை மயில் இறகையும் குறிக்கிறது. தூவயி (தூவை அல்லது தூவையர்) என்பது மயில் இறகைக் கையில் வைத்திருப்பவர் என்னும் பொருள் உள்ளது. திகம்பர சைனர் மயில் இறகுக் கொத்தைக் கையில் வைத்திருப்பது வழக்கம். ஆசீவர்களும் இறகை வைத்திருக்கக் கூடும். அரிட்ட கோயிபன் என்பது ஓர் ஆளின் பெயர். கோயிபன் என்பது காஸ்யபன் என்பதன் திரிபு. இந்த வாக்கியத்தின் பொருள் ‘மயில் இறகுக் கத்தையை வைத்திருக்கிற ஆதனாகிய’ அரிட்ட கோயிபன்’ என்பது.6 இந்த வாக்கியத்தை நாம் படித்து நேரான செம்பொருள் காண்போம். இ வ கு ன ற தூ உ iற யு ள உ த ன ஏ ரி அ ரி த ன அ த தூ வா யி அ ரி ட ட கொ யி ப ன புள்ளி இட்டுப் பதம் பிரித்தால் இவ்வாறு வாக்கியம் அமைகிறது: இவ் குன்ற தூ உறையுள் உதன் ஏரி அரிதன் அத் தூ வா யி அரிட்ட கோ யிபன் இந்த வாக்கியத்தின் பொருள் இது: குன்றிலுள்ள உறையுளையும் (குகையையும்) அதன் அருகில் உள்ள ஏரியையும் அரிதன் அந்துவாயி, அரிட்டகோயிபன் (என்னும் இருவர் தானமாக முனிவர்களுக்குக் கொடுத்தார்கள்). இதற்கு விளக்கம் வருமாறு: இவ் என்பது இவை என்னும் பொருள் உள்ள சொல். இச்சொல் குன்றின் மேலுள்ள குகையையும், அதற்குள் உள்ள கற்படுக்கைகளையும், குன்றின் கீழேயுள்ள ஏரியையும் சுட்டுகிறது. குன்றதூ: இதன் பொருள் குன்றத்து என்பது. கடைசி எழுத்து து என்றிருக்க வேண்டியது. தூ என்று எழுதப்பட்டுள்ளது. த்து என்று தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. வேறு சில பிராமிக் கல்வெட்டுக்களிலும் இவ்வாறே தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. இதை த்து என்று படிப்பதுதான் வாக்கிய அமைதிக்குப் பொருந்துகிறது. உறையுள் என்பது வசிக்கும் இடம் என்னும் பொருள் உள்ள சொல். உறையுள் என்பது இங்கு இம்மலையில் இருந்த முனிவர்கள் குகையைச் சுட்டுகிறது. அடுத்துள்ள உதன் என்பது சுட்டெழுத்து. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களில் அகரம் (உது) நடுவில் (இடையில்) உள்ள பொருளைச் சுட்டுகிறது, என்பது இலக்கணம். இந்த இலக்கணப்படி ‘உதன் என்பது இடையிலுள்ள என்னும் பொருள் உள்ள சொல். இச் சொல் ஏரியைச் சுட்டுகிறது. ஏரி என்பது நீர்நிலையைக் குறிக்கிறது. இந்த யானை மலையின் உச்சியில் குகைக்கு அருகில் நீரூற்றுச்சுனை இருக்கிறது என்று முன்னமே அறிந்தோம். கவ்வெட்டு கூறுகிற ஏரி, இந்தச் சுனை அன்று. மலையில் அடிவாரத்தில் இருந்த ஏரியைக் குறிக்கிறது. குன்றத்தைச் சார்ந்த உறையுளையும் (குகையையும்) குன்றத்தைச் சார்ந்த (அடிவாரத்தில்) இருந்த ஏரியையும் ஆக இரண்டையும் முனிவர்களுக்குத் தானம் செய்தார்கள். இவ்விரண்டு பொருள்களை யும் குறிக்கவே ‘இவ்’ என்னும் சொல் பன்மையில் குறிக்கப்பட்டது. இச் சொல் குன்றத்தை மட்டும் குறிப்பதாக இருந்தால் ‘இக் குன்றத்து என்று ஒருமையில் எழுதப்பட்டிருக்கும். ‘இவ்’ என்று இருப்பதனால் இச் சொல் குகையை (உறையுளை)யும் ஏரியையும் குறிக்கிறது என்பது தெளிவு. உறையுளைத் தானங் கொடுத்தது சரி, ஆனால் ஏரியை ஏன் துறவிகளுக்குத் தானங் கொடுத்தார்கள் என்று ஐயம் உண்டாகலாம். முனிவர்களின் உணவுக்காகத் தானியம் பயிர் செய்வதற்கு இந்த ஏரி தானம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இலங்கையில் ஒரு குகையில் உள்ள பிராமிக் கல்வெட்டு ஒன்று, மலைக் குகையையும் அதன் கீழுள்ள ஏரியையும் தானம் செய்ததைக் கூறுகிறது. பருப்பு களைப் பயிர் செய்வதற்கு அந்த ஏரியைத் தானம் செய்துள்ளனர். அதுபோன்ற இந்த மலையை அடுத்துள்ள ஏரி தானியம் பயிர் செய்யத் தானங் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது. அரிதன் அத்துவாயி, அரிட்ட கோயிபன் என்பவை தானங் கொடுத்தவர்களின் பெயர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து குகையையும் (உறையுளையும்) ஏரியையும் தானம் செய்தார்கள். கடைசியில் தானம் என்னும் சொல் இவ் வாக்கியத்தில் விடுபட்டுள்ளது. ஆகவே இந்த வாக்கியம் பயனிலை இல்லாமல் முடிகிறது. வினைச்சொல்லைச் சேர்த்து இந்த வாக்கியத்தை ‘இவ் குன்றத்து உறையுள் உதன் ஏரி அரிதன் அத்துவாயி அரிட்ட போயிபன் தானம்’ என்று முடிக்கலாம். அடிக்குறிப்புகள் 1. Proceedings and Transaction of the First All India Oriental Conference, Poona 1919. 2. Proceedings and Transaction of the Third All India Oriental Conference, Madras 1924. 3. Proceedings and Transaction of the Tenth All India Oriental Conference, Tirupati 1940; pp 362-367 New Indian Antiquary Vol. I. 4. P. 65 No. Seminar on Inscriptions 1966. 5. PP. 276-278. Early South Indian Palaeography. 11. கருங்காலக்குடி பிராமி எழுத்து மதுரை வட்டத்தின் மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலை வில் கருங்காலக்குடி இருக்கிறது. இவ்வூருக்கு அருகில் இருக்கிற குன்றுகளில் ஒன்று ‘பஞ்சபாண்டவர் குட்டு’ என்று கூறப்படுகிறது. குன்று என்னும் சொல் குட்டு என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இந்தக் குன்றில், இடைக்காலத்தில் செதுக்கியமைக்கப்பட்ட அருகக் கடவுளின் திருமேனிகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் காணப் படுகின்றன. இவை நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை அல்ல. இந்தக் குன்றின் மேலே இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த குகையும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் இருக்கின்றன. இவை 1909 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல்வெட் டெழுத்து 1911 ஆம் ஆண்டின் தொகுதியில் 561ஆம் எண்ணுள்ள தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குகையையும் பிராமி எழுத்தையும் பற்றி 1912ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் 57 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அறிக்கையிலேயே இந்தப் பிராமி எழுத்தின் நிழற்படம் வெளியிடப் பட்டிருக்கிறது.1 இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து பதினொரு எழுத்துக்களைக் கொண்ட சிறு வாக்கியம். இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே காட்டப் பட்டுள்ளது. வலப்புறத்தில் இரண்டாவது எழுத்து தெளிவாக இல்லாமல், கல்லில் உள்ள புரைசலோடு சேர்ந்து வட்டவடிவமாகக் காணப் படுகிறது. திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் : ‘(ஏ) ட்டு யர (உ) ர அரி தினா பாளி’ (வலப்புறத்து இரண்டாம் எழுத்தை இவர் வடமொழி ட்ட என்னும் எழுத்து என்று கருதுகிறார்) முதல் ஐந்து எழுத்துக்களும் ஓர் ஊரின் பெயரைக் குறிக்கின்றன. கடைசி இரண்டு எழுத்துக்கள் ‘பாளி’ என்பது, என்று இவர் விளக்கங் கூறியுள்ளார்.2 திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்: ‘எட் டு ய ரூ ர அரிதின் பாளி’ முதல் சொல்லின் இறுதியில் ன் சேர்ந்து எட்டியூரன் என்று படித்து ‘எட்டியூர் அரிதின் என்பவருடைய குகை’ என்று விளக்கங் கூறியுள்ளார்.3 திரு. நாராயண ராவ், ‘எட்டு யார ஹாரீ தானாம் பாலி-(கி?)’ என்று சமற்கிருதப்படுத்தி எழுதினார்.4 திரு. ஐராவதம் மகாதேவன், வலப் பக்கத்து இரண்டாம் எழுத்தை ழை என்று படித்துள்ளார். (இவ்வெழுத்துடன் கலந்துள்ள புரைசல் இவ்வாறு கருதும்படி இருக்கிறது) இவர் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்: ‘எழை ஊர் அரிதின் பாளி’ ‘எழையூர் அநிதி என்பவருடைய ஆசிரமம்’5 திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், ‘எட்டுய உர அரிதித பாளி’ என்று படித்து ‘(எ)ட்டு யூர் அரிதின் பாளி’ என்று சொல் பிரித்து, ‘எட்டுயூர் (எட்டியூர்) அரிதின் (ஹரித என்பவரின்) படுக்கை’ என்று பொருள் கூறுகிறார்.6 இந்தக் கல்வெட்டின் வலப்புறத்து இரண்டாவது எழுத்து புரைசலுடன் கலந்து தெளிவாகத் தெரியவில்லை. இதை வட்டவடம் என்று கொண்டு சமற்கிருத இரண்டாவது ட்ட என்னும் எழுத்து என்று கருதினார். திரு. கிருட்டிண சாத்திரி. திரு. ஐ. மகாதேவன் இதை ழை என்று கொண்டார். இது தமிழ் டகர எழுத்து. இதை, எ டய் ஊர் அரிதின பாளி என்று படிக்கலாம். எடய் என்பது எட்டிய் என்று இருக்க வேண்டும். டகரம் இரட்டித்து ட்டி என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் இதனொடு யகரமெய்(ய்) சேர்ந்திருப் பதுதான். இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில்(ய்) யகரமெய் சேர்த்து அக்காலத்தில் எழுதப்பட்டிருப்பதை வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் பார்க்கிறோம். ஆகவே, இந்த முதற் சொல் எட்டி என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, டகரம் புரைசலோடு சேர்த்திருப்பதனால் இதன் சரியான வடிவம் தெரியவில்லை. இதை எட்டிய்’ என்று படிக்கலாம். இரண்டாவது சொல் ஊர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. மூன்றாவது சொல் அரிதின என்பது. இதை அரிதின் என்று படிப்பதை விட அரிதின என்று படிப்பதே சரி என்று தோன்றுகிறது. அரிதின என்பது அரிதியின் உடைய என்றும் பொருள் உள்ளது. அ என்பது உடைய இ அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபுச் சொற்கள். பாளி என்பது பாழி என்னும் பொருள் உள்ள சொல். எட்டியூர் அநிதியி னுடைய பாழி என்பது இதன் வாக்கிய அமைதி. எட்டியூரில் வாழ்ந்த அரிதி என்பவர் இந்தப் பாழியை (குகையை)க் கொடுத்தார் என்பது கருத்து. அடிக்குறிப்புகள் 1. Annual Report on South Indian Epigraphy for 1912 Plate facing p. 57. 2. Proceedings and Transactions of the First All Indian Oriental Conference p. 208 - 217 Poona 1919. 3. Proceedings and Transactions of the Third All Indian Oriental Conference, Madras, 1924. 4. New India Antiquary Vol. I. 5. P. 63 Seminar on Inscriptions 1966. 6. P. 213 Early South Indian palaeography. 12. மேட்டுப்பட்டி (சித்தர்மலை) மதுரை மாவட்டத்து நிலக்கோட்டையிலிருந்து தெற்கெ ஆறு கல் தொலைவில் அம்மைய நாயக்கனூரும் அவ்வூரைச் சார்ந்து மேட்டுப்பட்டிக் கிராமமும் உள்ளன. வைகையாறு பேரணைப் பக்கமாகத் திரும்புகிற இடத்தில் ஆற்றங்கரைக்கு அருகில் அழகான இயற்கைச் சூழ்நிலையில் சித்தர்மலை அமைந்திருக்கிறது. மலையின் மேலே சிவன் கோயில் இருக்கிறது. இம் மலையின் தெற்குப்புறத் தாழ்வரையில் பெரிய குகையும், குகைக்குள்ளேயே பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் உள்ளன. இவற்றை ஊரார் பஞ்சபாண்டவர் படுக்கை என்று கூறுகிறார்கள். இந்த நீண்ட குகைக்குள்ளே பக்கத்துக்கு ஐந்து படுக்கையாக இரண்டு வரிசையில் பத்துக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலையணைப் பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் வாயிலை இப்போது கல்லும் மண்ணும் இட்டுச் சுவர் எழுப்பி அடைத்துள்ளனர். சுவரில் உள்ள சிறுவாயிலில் புகுந்து உள்ளே சென்றால் கற்படுக்கைகளைக் காணலாம். கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1908 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.1 இந்தப் பிராமி எழுத்துக்களின் நிழற்படங்களை 1912ஆம் ஆண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் 57ஆம் பக்கத்தில் வெளியிட்டுள் ளனர். இந்த எழுத்துக்கள் கற்படுக்கைகளை அமைத்தவர்களின் பெயர்களைக் கூறுகின்றன. பிராமி எழுத்துக்களின் வரிவடிவத்தையும் அவற்றின் பக்கத்தில் இப்போதைய எழுத்தையும் காட்டுகிறோம். (1) பதன ஊர் அதன் 2) குவிர அந்தைவேள் அதன் 3) திடி இள அதன் 4) அந்தை அரிய்(தி) 5) அந்தை இரைவதன் 6) மதிரை அந்தை விஸுவன் 7) அந்தை சந்த அதன் 8) சந்தந்தை சந்தன் திரு. வெங்கையா அவர்கள், ‘அந்தை அரிய’ என்பதன் பொருள், ‘பௌத்த முனிவர்கள் வசிக்கும் இடம்’ என்று பொருள் கூறுகிறார்.2 திரு. எச். கிருட்டிண சாத்திரி இவற்றை இவ்வாறு படித்துள்ளார்: இவற்றை 1. போ தி னா (ஊ) ர தா (னா) 2. கு வி ரா அ (ந) தை வெ ய அ தா னா 3. கு வி ரா அ ந தை வெ (ய) அ தா னா 4. தி தோ ஈ ல அ தா னா 5. அ ந தை அ ரி ய 6. தி அ ந தை (ஈர) வா த ன 7. ம தி ர (ஆ) அ ந தை (வி) ஜு வா னா 8. சா ந தா ந தை சா ந தா னா 9. அ ந தை வ (எ) ந தா அ தர் னா இவ்வாறு படித்த இவர் இதில் ‘அதானா’ என்னுஞ் சொல் ஆறு இடங்களிலும் ‘அநதை’ என்னுஞ் சொல் ஏழு இடங்களிலும் வந்துள்ளன என்று கூறுகிறார். திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார் : 1. பொதின் ஊர-அ தான. (பொதினூரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தானம்) 2. குவீர அந்தை வேய தான (குவீரருடைய படுக்கை. வேய் கொடுத்த தானம்) 3. திடயில்-அ-தான (திட்டையூரில் இருந்தவர் கொடுத்த தானம்) 4. அந்தை அரை தி (அரை தி என்பவரின் படுக்கை) 5. அந்தை இரவாதான் (இரவாதானின் படுக்கை) 6. மதிர அந்தை (மதிரைக்கு உரிய படுக்கை) 7. விசுவ சானதா அந்தை (விசுவன் சானதானின் படுக்கை) 8. சானதான் அந்தை (சானதானின் படுக்கை) 9. வேன தா-அ-தான (வேனதானின் தானம்) இவர் தான என்பது தானம் (கொடை) என்னும் சொல்லாகக் கொண்டார். அந்தை என்பதை அநதை என்று கொண்டு, அது படுக்கை என்னும் பொருள் உள்ள சொல் என்று கூறுகிற்hர். அநதை என்பது ‘எண்ட’ என்னும் சிங்கள மொழிச் சொல் என்று கூறுகிறார். அந்தை என்பதை ஆந்தை என்றும் கொள்ளலாம். எயின் ஆந்தை, பிசிர் ஆந்தை, அஞ்சில் ஆந்தை முதலான (அகப்பாட்டுப் பாடியவர்) பெயர்களைப் போல என்று கூறுகிறார். தன், தான், என்பதை கீரத்தன், விண்ணத்தார் என்பது போலவுங் கொள்ளலாம் என்று கூறுகிறார். திரு. நாரா யணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத பாஷையாகப் படித்துப் பிறகு அதைச் சமற்கிருதமாக்கிப் பொருள் கற்பிக்கிறார். 1. பொதின ‘ஹ’ அ தான (பிராகிருதம்) பொதின ஊரஸ்ய தானானி (சமற்கிருதம்) போதின ஊர என்னும் கிராமத்தாரின் தானம். 2,3. குவிரா அன தை (பிராகிருதம்) குபேரானாம் தேயம் (சமற் கிருதம்) குபேரன் என்னும் பெயருள்ள இனத்தார் செய்த தானம். 4,5. திடேரயிள அ தான (பௌத்த பிக்கு பிக்குணிகளுக்குக் கொடுக்கப்பட்ட தானம்) 5,6. அரிய தி அநதை (பிராகிருதம்) ஆர்ய ஸ்தீரிணாம் தேயம் (சமற்கிருதம்) கணவன் - மனைவி கொடுத்த தானம். 6,7. இரவாதனா மதிரா அந்தை (பிராகிருதம்) இராவதானாம் மாத்ருனாம் தேயம் (சமற்கிருதம்) இரவாத என்னும் பிரிவினரின் தாய்மார் செய்த தானம். 7,8. விஸுவானா சானதானா தை (பிராகிருதம்) விஸ்வானாம் ஜானபதானாம் தேயம் (சமற்கிருதம்) (எல்லா கிராமத்தாரு டையவும் தானம்) 8,9. சான தானா அந தெ (பிராகிருதம்) ஜானபதானாம் அந்யத் தேயம் (சமற்கிருதம்) (கிராமத்தாருடைய இன்னொரு தானம்) 9. வென தாத் தானா (பிராகிருதம்) விநதாயா தானம் (சமற்கிருதம்) வினதாவினுடைய (அல்லது ஒரு பக்தருடைய) தானம். திரு. டி.வி. மகாலிங்கம் இவ் வெழுத்துக்களை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.3 1. பொ தி ன (ஊ) ர அ த ன என்பது இதன் வாசகம். திராவிடில் இது ‘பொதின ஊர் அதன்’ என்றாகும். இதன் பொருள் ‘பொதின் ஊர் அதன்’ என்பது. 2,3. கூவிரா அந்தாய் வேய அதான, குவிர அந்தாய் வேள் அதன். இது திராவிடில் ‘குவிர அந்தாய் வேள் அதன்’ என்றாகும். இதன் பொருள், ‘(ஆசீவக மதத்தைச் சேர்ந்த) தூய தந்தையான குவிரனும் ஆதனும்’ அடிக்குறிப்பில், இதன் முழு வாசகம் ஒரே ஆளைக் குறிப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார். 4. தீ டா இ ல அ த ன : இது திராவிடில் தி-ட-இல் அதன் என்றாகும். திடியில் அல்லது தீடியில் என்பது மதுரை மாவட்டம் திண்டுக்கல்லுக்கருகில் உள்ள திடியன் என்னும் ஊர். ‘திடியில் ஆதன்’ என்பது இதன் பொருள். 5. அந்தை அரிய என்பது இதன் வாசகம். திராவிடியில் இது ‘அந்தை அரியி’ என்றாகும். இதன் பொருள் ‘தூய தந்தை அரி’ என்பது. 6. தி அ ந தை (இர) வா த ன. இது திராவிடில் ‘தி அந்தை இராவதன்’ என்றாகிறது. இராவதன் என்பது ஐராவதன் என்பதாகும். இந்திரனுடைய ஐராவதம் என்பது. ஐராவதன் என்பது ஓர் ஆளின் பெயர். இரவாதான் என்பது இராவதவன் (யாசிக்காதவன்) என்னும் பொருளுள்ளதாகவும் இருக்கலாம். 7. மதிர அந்தை விஸுவன். இதன் பொருள், மதுரையில் உள்ள தூய தந்தை விசுவன் என்பது. 8. சா ந தா ந தை சா ந தான. திராவிடில் இது சந்தந்தை சந்தன் என்றாகிறது. சந்தன் என்பது இடை எழு வள்ளல்களில் ஒருவன். சந்தன் தந்தை சந்தந்தை. 9. அ ந தை வெ ந த அ தா ன. இதை ‘அந்தை வேந்த அதன்’ என்று படிக்கலாம். வேந்த(ன்) என்பது அரசன் அல்லது இந்திரன் என்பது பொருள். மேலே கூறப்பட்ட எல்லாப் பெயர்களும் ஒரு சமயப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. இவர்கள் ஆசீவக மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும். திரு. ஐ. மகாதேவன் இவ்வெழுத்துக்களைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்.4 1. அந்தை அரிதி (ஓர் ஆண் மகன் பெயர்) 2. அந்தை இரவாதான் (ஓர் ஆண் மகனின் பெயர்) 3. மதிர அந்தை விஸுவன் (மதுரை அந்தை விஸுவன்) 4. அந்தை சேந்த அ தான (சேந்தன் அந்தையினுடைய தானம்) 5. சந்தந்தை சந்தன் (ஓர் ஆண் மகனுடைய பெயர்) 6. பதின் (ஊ)ர் அதை (பதினூர் அந்தை) 7. குவிர அ(ந்)தை செய் அ தான (குவிர அந்தை செய்த தானம்) 8. குவிர அந்தை வேன்-அ- தான (ஒரு வேள் ஆகிய குவிர அந்தை செய்த தானம்) 9. திடி இல் அ தான (திடியில் கிராமத்தவர் செய்த தானம்) இந்தப் பிராமி எழுத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறோம்: இங்குள்ள பத்துக் கற்படுக்கைகளையும் பத்துப் பேர் ஒவ்வொரு படுக்கையை அமைத்தனர். படுக்கைகளை அமைக்கக் கற்றச்சருக்குப் பொருள் கொடுக்க வேண்டும். பத்துப் பேர் சேர்ந்து ஒவ்வொருவரும் பொருள் செலவு செய்து படுக்கைகளை யமைத்துக் கொடுத்தார்கள். அவர்களுடைய பெயர் படுக்கையில் எழுதப்பட்டுள்ளது. ஆதன் என்ற சொல்லைக் கற்றச்சன் அதன் என்று எழுதியுள்ளான். பிராமி அகர எழுத்தின் நடுவில் வலப் பக்கமாக இட வேண்டிய சிறு கோட்டை இடாதபடியால் அதன் என்று படிக்க வேண்டியுள்ளது. பட்டிப்ரோலு (திராவிடி) வாய்பாட்டின்படி இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன. 1. பதன ஊர் அதன் (பதனூர் ஆதன்) 2. குவிர அந்தை வேள் அதன் (குவிர ஆந்தை வேள் ஆதன்) 3. திடி இ ள அதன் (திட்டி இள ஆதன். திட்டி, ஊர்ப் பெயர்) 4. அந்தை அரிய் (தி) (ஆந்தை அரிதி. அரிதி என்பதில் யகர மெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. அரிதி என்பதில் தி என்பது அடுத்த பெயரோடு சேர்ந்துள்ளது. பிரித்துப் படிக்க வேண்டும்) 5. (தி) அந்தை இரைவதன் (ஆந்தை இரைவதன்) 6. மதிரை அந்தை விஸுவன் (மதுரை ஆந்தை விஸுவன்) 7. சந்தந்தை சந்தன் (சந்தந்தை சந்தன்) 8. அந்தை சந்த அதன் (ஆந்தை சந்த(ன்) ஆதன்) இரண்டாவது எண்ணிலுள்ள ‘குவிர ஆந்தை வேள் ஆதன்’ என்பதைக் குவிர ஆந்தை என்னும் வேள் ஆதன் என்றும் இரண்டு பெயர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆறாவது எண்ணில் உள்ள ‘மதிரை ஆந்தை விஸுவன்’ என்பதை மதிரை ஆந்தை என்றும் விசுவன் என்றும் இரண்டு ஆட்களாகக் கொள்ள வேண்டும். இந்தப் பெயருள்ள பத்து ஆட்களும் பத்துப் படுக்கைகளைச் செய்து கொடுத்தார்கள். குவீர ஆந்தை என்னும் பெயரில் உள்ள குவீரன் என்னும் பெயர் விக்கிரம மங்கலப் பிராமிக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. அங்குப் பொதலை குவீரன், செங்குவீரன் என்று குவீகன் என்னும் பெயர் காணப்படுகிறது. நான்காவதிலுள்ள ஆந்தை அரிதி என்னும் பெயரில் உள்ள அரிதி என்னும் பெயர் கருங்காலக்குடி பிராமி எழுத்தில் எட்டியூர் அரிதி என்று காணப்படுகிறது. இதனால், குவீரன் அரிதிஎன்னும் பெயர்கள் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பது தெரிகிறது. ஆந்தை, ஆதன் என்னும் பெயர்கள் பிராமிக் கல்வெட்டில் அந்தை, அதன் என்று விக்கிரமமங்கலத்திலும், அழகர்மலையிலும் இந்த மேட்டுப்பட்டிக் கல்வெட்டில் எழுதப்பட்டிருப்பது போலவே எழுதப்பட்டுள்ளன. அடிக்குறிப்புகள் 1. Madras Epigraphy Report 1908, Part II, Para 5, 6. 2. Madras Epigraphy Report, 1908, Para. 59. 3. Early South Indian Palaeography, 1967, pp. 262-266. 4. Seminar on Inscriptions 1966 Edited by R. Nagaswamy, p. 62. 13. கீழை வளவு பிராமி எழுத்து மதுரை வட்டத்து மேலூரிலிருந்து ஏழு கல் தொலைவில் கீழை வளவு இருக்கிறது. கீழை வளவுக்கும் கீழூருக்கும் இடை நடுவில் தாழ்வான குன்றுத் தொடர்கள் உள்ளன. பாறைகளிலே தீர்த்தங்கரர் திருமேனி உருவங்களும் அவற்றின் கீழே வட்டெழுத்துச் சாசனங் களும் காணப்படுகின்றன. இவை இடைக்காலத்தில் அமைக்கப் பட்டவை. இங்கள்ள குகை ஒன்றிலே கற்படுக்கைகளும் பிராமிக் கல் வெட்டெழுத்தும் உள்ளன. இவை 1903ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டு, அவ்வாண்டு சாசனத் தொகுப்பில் 135ஆம் எண்ணுள்ளதாகப் பிராமி சாசனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டு இதுவே. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையில் பதினைந்தடி உயரத்தில் இந்தப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்க ளின் வரிவடிவம் இவை: இந்த எழுத்துக்களில் சில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப் பட்டுள்ளன. வலப்புறத்திலிருந்து ஐந்தாவது எழுத்தும், ஆறாவது எழுத்தும், பதினொன்றாவது எழுத்தும், பன்னிரண்டாவது எழுத்தும் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.3 அல்லது 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இந்த எழுத்துக்களை அறிஞர் எவ்வாறு படித்துள்ளனர் என்பதைப் பார்ப்போம். தொடக்கத்தில் உள்ள ‘உபாசா’ என்பது உபாத்தியாய என்பதன் திரிபு. லாசோ என்பது அதுபோன்றதே என்று விளக்கங் கூறியுள்ளார், திரு. கிருட்டிண சாத்திரியார்.1 திரு. கே.வி.சுப்பிரமணிய அய்யர் படித்து விளக்கம் கூறுவன இவை: ‘உபா-சா-அ போத ணெட்டுல வோச்சோ கொடு பளிஈ உபாசா என்பது உபாசகன் என்னும் பிராகிருத மொழிச் சொல்லின் திரிபு. போத என்பது புத்திரன் என்னும் பொருள் உள்ள சொல். ணெட்டுல வோச்சோ என்பது ஓர் ஆளினுடைய பெயர். கடைசியில் உள்ள ஈ என்பது இது என்னும் பொருள் உள்ள சொல். ‘உபாசகன் மகன் நெடுலவோச்சன் அமைத்த குகை’ என்பது இவ் வாக்கியத்தின் பொருள்.2 திரு. சி. நாராயண ராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழிபோலப் படித்துப் பிறகு அதைச் சமற்கிருதமாக்கிப் பொருள் கூறுகிறார்: ‘உபாசா’ அ போதா நாட்டலா ஒச்சோ கொடு பாலி’ஈ‘(பிராகிருதம்) உபாத்யாய-புத்ரஹ் நாட்ய கர் ஒ பாத்யாயாற் குட்டபிதா பாவிசா (கி.ஒ) (சமற்கிருதம்) உபாத்தியாயரின் மகனான நாட்டியம் கற்பிக்கிற நட்டுவன் வெட்டி உண்டாக்கிய ஆசிரமம் என்பது இதன் பொருள்.3 திரு. டி.வி. மகாலிங்கம் இதைப் படித்துப் பொருள் கூறுவன இவை: ‘உபாசா அபொதெ ணெடுள வோசோ கொடு பளிஈ’ உபாசன் என்பது உபாஸகன் என்னும் சொல்லின் திரிபு. உவச்சன் என்பதுடன் தொடர்பு படுத்தலாம். அபொதெ ணெடுள வோசோ என்னும் சொற்கள் ஓர் ஆளினுடைய பெயர். இதில் ‘அபொதெ’ என்பது அபுரத்திரன். அபுத்திரன் என்னும் பெயர் ஆபுத்திரன் என்று மணிமேகலை காவியத்தில் கூறப்படுகிறது. நெடுள என்பதில் முதல் எழுத்து ணகரத்தில் தொடங்குகிறது. இது தமிழ் இலக்கணப்படி தவறு. ஆனால், பிராகிருத மொழிப்படி சரியானது. நெடுள என்பது நெடுவேள் (முருகன்) நெடியோன் (விஷ்ணு) என்னும் பொருள் உள்ளது. உபாசகன் ஆபுத்திர நெடுவேளின் வத்ஸன் (மகன்) இந்தத் தானத்தைச் செய்தான் என்பது இதன் கருத்து.4 திரு. ஐ. மகாதேவன் இதுபற்றி இவ்வாறு கூறுகிறார்: ‘ஊ பா ச - அன் தொண்டி - ளவன் கொடி பாளிஈ’ தொண்டிலிருக்கும் உபாசகன் இளவன் கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள்.5 இதை நாம் படித்துப் பொருள் காண்போம். தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைச் சரிசெய்தால் இந்த எழுத்துக்கள் இவ்வாறு அமைகின்றன: ஊ பா ச அ ன த ண டு லா வ ன கொ டு ப ளி ஈ இதை இவ்வாறு பதம் பிரிக்கலாம்: உபா ச அன் தண்டுலாவன் கொடு பளிஇ. உபாசகன் ஆன தண்டுலா வன் (முனிவர்களுக்குக்) கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள். விளக்கம், ஊபாசஅன். இதை ஊபாசான் என்று படிக்கலாம். இதன் சரியான வாசகம் உபாசகன் என்பது. உகரத்துக்கு ஊகாரம் இடப் பட்டுள்ளது தவறு. சகர எழுத்துக்குப் பக்கத்தில் அகரம் சேர்த்து எழுதப் பட்டிருக்கிறது. இது சா என்று எழுதப்பட வேண்டும். அஃதாவது உபாசான் என்று இருக்க வேண்டும். இப்படி எழுதுவதும் பிழை. உபாசகன் என்று எழுதப்பட வேண்டும். உபாசகர் என்பது பௌத்த-சைன மதத்து இல்லறத்தாரின் பெயர். தண்டுலாவன் என்பது ஓர் ஆளின் பெயர். இஃது இந்தப் பள்ளியைத் தானஞ் செய்தவரின் பெயர். கொடு என்பது கொடுத்த என்றிருக்க வேண்டும். பளிஇ என்பது பள்ளி என்பதன் இடைக்குறை. பளிஇ என்று எழுதப்பட்டிருப்பதும் தவறு. பளிய் என்று எழுதப்பட வேண்டும். இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகர மெய் சேர்த்து எழுவது அக்காலத்து வழக்கம். பளிய் என்று எழுதாமல் பளிஇ என்று எழுதியிருப்பது தவறு. சரியாக எழுதத் தெரியாத ஓர் ஆள் இதை எழுதியிருக்கிறான் என்பது தெரிகிறது. அடிக்குறிப்புகள் 1. Proceedings and Transactions of the First All India Oriental Conference, Poona 1919. 2. Proceedings and Transactions of the Third All India Oriental Conference, Madras 1924. 3. Proceedings and Transactions of the 10th All India Oriental Conference, Tirupati, 1940. New Indian Antiquary Vol. I. pp. 362-76. 4. Early South Indian Palaeography, p. 216 - 217. 5. Seminar on Inscriptions, 1966, P. 61. 14. மருகால் தலை பிராமி எழுத்து திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே பத்துக் கல் தூரத்தில் மருகால்தலை கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் பூவினுடையார்மலை என்னுங் குன்றின்மேல் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சில சிறு கோயில்கள் இருக்கின்றன. இந்தக் குன்றின் இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த பொடவு (குகை) ஒன்றிருக்கிறது. இந்தப் பொடவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வசித்திருந்த பௌத்த முனிவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்படுக்கைகள் காணப்படுகின்றன. இந்தக் குகை வாயிலின் மேற்புற நெற்றியில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இந்தப் பிராமி எழுத்து 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டு களாக மறைந்து கிடந்த பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டெழுத்து இதுவே. இது சாசனத் தொகுப்பில் 1906ஆம் ஆண்டு 407ஆம் எண்ணாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.1 சாசன இலாகாவில் 1907ஆம் ஆண்டு அறிக்கையில் 60ஆம் பக்கத்தில், இது ‘அசோகன் சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தில் பாலி மொழி சாசனம்’ என்று கூறப்படுகிறது.2 இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு பாலி மொழியில் எழுதப்பட்டது என்று கருதியபடியால் இதைப் பல ஆண்டுகளாகப் படிக்காமலே வைத்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது தமிழ்மொழிக் கல்வெட்டு என்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்த எழுத்துக்கள் ஒரே வரியில் பதினொரு எழுத்துக்களைக் கொண்டது. இந்த எழுத்துக்களின் அளவு, 1 அடி முதல் 1 அடி 3 அங்குலம் வரையில் உள்ளது. இதன் வரி வடிவம் இது: இந்த எழுத்தின் நான்காவது எழுத்து பிராகிருத ஸி என்னும் எழுத்து. மற்ற எழுத்துக்களெல்லாம் தமிழ் எழுத்துக்களே. திரு. எச். கிருட்டிணசாத்திரி இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு படித்தார்:3 ‘வே ண கோ ஸி பா னா கு டு பி தா க() (ளா) கா ஞ ச ணா ன’ கோஸிபானா என்பதை காஸ்யபானாம் என்னும் சமற்கிருதச் சொல்லோடு ஒத்திருக்கிறது. குடுபிதா என்பது கொட்டுவித்தான் (வெட்டினான்) என்னும் பொருள் உள்ள சொல். கோஸிபானா என்பதில் கோ என்னும் எழுத்து ஸி போலக் காணப்படுகிறது. திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:4 வேண் கோஸிபான் குடுபிதா காள காஞ்சனம். வேண் நாட்டு காஸ்யபன் (அல்லது வேளிர் தலைவன் காஸ்யபன்). கொத்துவித்த சுப முள்ள (அல்லது கல்லினாலான) ஆசிரமம். காள என்பது கல்ய என்னும் சமற்கிருதச் சொல். இது மங்கலம் என்னும் பொருள் உள்ளது. இதற்குக் கல் என்றும் மலை என்றும் பொருள் கொள்ளலாம். குடுபிதான் என்பதிலுள்ள குடு என்பது கொட்டு (அறு) என்னும் பொருள் உள்ளது. காஞ்சனம் என்பது பொதுவாகப் பொன் என்னும் பொருளுடையதானாலும் இங்கு ஆசிரமத்தைக் குறிக்கிறது. திரு. சி. நாராயண ராவ் இதைப் பிராகிருதமாகப் படித்துப் பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக்குகிறார்.5 அவர் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்: ‘வேண கோஸிபான குட்டுபிதா காள காஞ்சனம்’ (பிராகிருதம்) ‘வேணாகி ஸிபான குட்டுபிதா கால காஞ்சனம்’ (சமற்கிருதம்) பௌத்த விநய பிடகத்தைச் சேர்ந்த (அல்லது வேணாகி வேநாயகி என்னும் பெயரையுடைய) சில்பி குலத்தைச் சார்ந்த ஒரு பெண் மகளால் செய்விக்கப்பட்ட கல்கால காஞ்சனம்? திரு. டி.வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:6 வேண் கோஸிபன் குட்டுபித கல் கஞ்சனம். வேள் + கோஸிபன் = வேண் கோஸிபன் என்றாயிற்று. வேள் என்பதற்குத் தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இச் சொல்லுக்கு யாகன் என்னும் பொருளும் உண்டு. பிற்காலத்துச் செவிவழிச் செய்தி, வேள் அல்லது வேளிர் என்பவர் வேள்வித் தீயிலிருந்து தோன்றியவர் என்று கூறுகிறது. குடுபித என்பது குடுப்பித்த அல்லது கொடுப்பித்த என்னுஞ் சொல்லாகும். கல்+கஞ்சனம் என்பதை கல்+கஞ்+சணம் என்று பிரிக்கலாம். கம்+சணம்+கஞ்சணம். கம் என்பதன் பொருள் கம்மியர்; கம்மாளர் என்பது. சணம் என்பது படுக்கை என்னும் பொருளுள்ள சயனம் என்னும் சமற்கிருதச் சொல். உறையுள் அல்லது படுக்கை கல்லினால் அமைக்கப்பட்டு வேண் கோஸிபனால் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பது இதன் கருத்து. திரு. ஐ. மகாதேவன் இதை இவ்வாறு வாசித்துள்ளார்:7 வேண் காஸிபன் கொடுபித கல் கஞ்ச ணம். வேள் காஸிபனால் கொடுக்கப்பட்ட கல்படுக்கை. இதில் திரு. சி. நாராயண ராவ் படித்துப் பொருள் கூறுவது முழுவதும் பொருத்தம் இல்லாதது என்பது நன்றாகத் தெரிகிறது. திரு. எச். கிருட்டிண சாத்திரி, குடுபிதா என்பது கொட்டு வித்தான் (வெட்டுவித்தான்) என்று பொருள் கூறுவது ஏற்கத்தக்கதன்று. திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர், வேண் கோஸிபன் என்பதற்கு வேண் நாட்டுக் காஸ்யபன் என்றும் வேளிர் தலைவன் என்றும் இரு வகையாகப் பொருள் கூறுவது ஏற்கத்தக்கதன்று. காள என்பதற்குச் சுபமுள்ள என்றும் கல்லினால் செய்த என்றும் பொருள் கூறுவதும் ஏற்கத்தக்கதன்று. காள என்பது கல்ய என்னும் சமற்கிருத மொழிச் சொல் என்றும் மக்கலம் என்னும் பொருள் உள்ளது என்றும் கூறுவது பொருத்தமற்றவை. என்பது கொட்டு (அறு) என்று பொருள் கூறுவது பொருத்தமற்றது. திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், வேண் கோசிபன் என்பதை வேள்+கோசிபன் = வேண்கோசியன் என்றாயிற்று என்று கூறுவது புதுமையாக இருக்கிறது. வேள்+கோசிபன் = வேட்கோசிபன் என்றாகுமே யல்லால் வேண்கோசிபன் என்று ஆகாது. வேள்+கோ = வேட்கோ என்றாவது போல் வேள் + கோசிகன் = வேகோசிகன் என்று ஆகும். வேண்கோசிகன் என்றாகாது. ஆகவே இவர் கூறுவது தவறு. வேள் என்பது யாகம் என்னும் பொருள் உடைய சொல் என்றும், வேளிர், வேள்வித் தீயில் இருந்து வந்தவர் என்று செவிவழிச் செய்தியுண்டு என்றும் கூறுகிறார். வேளிர் எல்லோரும் யாகத் தீயில் இருந்து வந்தவர் அல்லர். துவரை (துவாரசமுத்திரம்) யையாண்ட புலிகடிமா வேளிரும், இருங்கோ வேள் பரம்பரையும் வேள்வித் தீயில் இருந்து வந்தவர் என்று கூறுப்பட்டனரே தவிர எல்லா வேளிரும் வேள்வியில் இருந்து தோன்றவில்லை. பகாப்பதமாகிய கஞ்சண என்பதை இவர் கம்+சணம் என்று பிரித்துக் கம் என்பதற்கு கம்மியர், கம்மாளர் என்றும், சணம் என்பதற்குச் சயனம் (படுக்கை) என்றும் பொருள் கூறுவது குத்திரயுக்தியாக இருக்கிறதே தவிர ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. திரு. ஐ. மகாதேவன், இந்தச் சாசனத்தைச் சரியாகவே படித்திருக் கிறார். ஆனால், இவர், வேண் காசிபன் என்பதை வேன்காசிபன் என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. இனி, இந்தப் பிராமி எழுத்து வாசகத்தை நாம் படித்து பொருள் காண்போம். வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம் என்று இதைப் படிக்கிறோம். இதனை விளக்கிக் கூறுவோம். முதற்சொல் வெண் என்பது. பிராமி எழுத்தில் எகரமும் ஐகாரமும் ஒரே மாதிரி எழுதப்படுகிறது. இதை வெண் என்றும் வேண் என்றும் படிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிஞர்கள் இதை ‘வேண்’ என்று படித்துள்ளனர். ஆனால் ‘வெண்’ என்று படிப்பதே இந்த இடத்துக்குப் பெரிதும் பொருந்து கிறது. முதல் ஆறு எழுத்துக்களையும் ‘வெண்காசிபன்’ என்று படிக்கலாம். சங்ககாலத்தில் வெண் என்னும் தொடக்கத்தை யுடையவர் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். வெண்கண்ண னார், வெண் கொற்றனார், வெண்பூதனார், வெண்பூதியார், வெண்மணிப்பூதியார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். வெண்கண்ணனார் அகநானூறு 130, 192ஆம் செய்யுள்களைப் பாடிய புலவர். வெண்கொற்றனார் குறுந்தொகை 86ஆம் செய்யுளைப் பாடிய புலவர். வெண்பூதனார் குறுந்தொகை 83ஆம் செய்யுளைப் பாடியவர். வெண்பூதியார் குறுந்தொகை 97, 174, 219 ஆம் செய்யுள்களைப் பாடியவர். வெண்மணிப்பூதியார் குறுந்தொகை 299 ஆம் செய்யுள்களைப் பாடியவர். ஆகையால், இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தில் கூறப்படுபவரை வெண்காசிபன் என்று கொள்வதுதான் சாலப் பொருத்தம் ஆகும். இப்படிக் கொள்வதுதான் அந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. அடுத்த நான்கு எழுத்துக்கள் ‘குடுபித’ என்றிருக்கின்றன. இந்தச் சொல் ‘குடுப்பித்த’ என்றிருக்க வேண்டும். தகர ஒற்றெழுத்து எழுதப்படவில்லை. இது கற்றச்சனுடைய பிழையாக இருக்கலாம். குடு என்பதும் கொடு என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள். குடு, கொடு என்னும் சொற்கள் சாசனங்களில் பயின்று வந்துள்ளன. இதற்கு அடுத்த இரண்டு எழுத்துக்கள் ‘கல’ என்று எழுதப் பட்டிருக்கிறது. இதைக் கல் என்று வாசிக்கிறோம். புள்ளியிடப்பட வேண்டிய எழுத்துக்கள் புள்ளியிடப்படாமலே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. ஆகவே இதைக் கல் என்று ஐயமில்லாமல் படிக்கலாம். கல் என்றால் மலை என்பது பொருள். கடைசி ஐந்து எழுத்து ‘கா ஞ ச ண ம’ என்றிருக்கிறது. புள்ளி வைக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி வைத்துப் படித்தால் ‘காஞ்சணம்’ என்று படிக்கலாம். இது தமிழ்ச் சொல் அன்று. பிராகிருத மொழிச் சொல்லாக இருக்கலாம். இதனுடைய நேரான பொருள் தெரியவில்லை. இந்த இடத்தில் இது கற்படுக்கைகளைக் குறிக்கிறது. வெண் காஸிபன் கொடுப்பித்த கல் காஞ்சணம் என்று படிக்கிறோம். வெண்காசிபன் என்பவர் முனிவர்களுக்காக மலைக்குகையில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள். அடிக்குறிப்புகள் 1. 407 of 1906. 2. Madras Epigraphy Report, 1907, p. 60. 3. The Caverns and Brahmi Inscriptions of Southern India. Krishna Sastri, pp. 327 - 348. Proceedings and Transactions of the First All India Oriental Research Institute, Poona 1922. 4. Proceedings and Transactions of the Third All India Oriental Conference, 1924. 5. New Indian Antiquary Vol. I, 1938-39. P. 364-65. 6. Early South Indian Palaeography, 1962. p. 221 - 223. 7. Corpus of the Tamil - Brahmi Inscriptions, p. 63. Seminar on Inscriptions, 1966, edited by R. Nagaswamy, p. 57 - 73. 15. அரிக்கமேடு பிராமி எழுத்து வங்காளக் குடாக் கடலின் ஓரத்தில் புதுச்சேரிக்குத் தெற்கே இரண்டு கல் தூரத்தில் அரிக்கமேடு இருக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க யவன வாணிகர் இநத் இடத்தை வாணிக நிலையமாக அமைத்திருந்தனர். உரோம் நாட்டுப் பொருள்களைக் கொண்டுவந்து வைக்கவும் இந்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காகச் சேமித்து வைக்கவும் இந்த இடம் பயன்படுத்தப் பட்டது. இந்த வாணிகத் துறைமுகத்தைப்பற்றிச் சங்கச் செய்யுள்களில் ஒன்றும் கூறப்படவில்லை. கி.பி. முதல் நூற்றாண்டில் வாணி கத் துறையாக இருந்த இடம் பிற்காலத்தில் மறைந்து மண்மூடிப் போயிற்று. 1937இல் இந்த இடத்தில் மணிகளும் இரத்தினக் கற்களும் அவ்வப்போது கிடைத்தன. ஆகவே இந்த இடம் பழம்பொருள் ஆய்வுக்குரிய இடம் என்று கருதப்பட்டு 1941இல் பிரெஞ்சு ஆய்வாளர் சிறு அளவில் அகழ்வாராய்ச்சி செய்தனர். பிறகு 1945இல் இந்திய அரசாங்கத்துப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இந்த இடத்தைப் பெரிய அளவில் ஆழ்ந்து பார்த்தனர். அதன் பலனாக, இந்த இடம் கிரேக்க யவன கப்பல் வாணிக நிலையமாக இருந்தது தெரிந்தது. பல வகையான பொருள்கள் இங்குக் கிடைத்தன. அவற்றில் உரோம் தேசத்து மட்பாண்டங்களும் சீனநாட்டுப் பீங்கான்களும் தமிழ்நாட்டு மட்பாண்டங்களும் கிடைத்தன. இந்தப் பொருள்கள் எல்லாம் முழுமையாகக் கிடைக்காமல் உடையுண்ட துண்டுகளாகக் கிடைத்தன. சில மட்பாண்ட ஓடுகளில் பிராமி எழுத்துக்கள் வரையப் பட்டிருந்தன. உடைந்துபோன ஓடுகளாகக் கிடைத்தபடியால் எழுத்துக்களின் முழுவாசகம் கிடைக்கவில்லை. இரண்டோர் ஓடுகளில் முழுச்சொற்கள் கிடைத்துள்ளன. அந்தச் சொற்கள், மட்பாண்டத்துக்குரியவரின் பெயராகக் காணப்படுகின்றன. நீண்ட வாக்கிய மாக இல்லை. இந்த மட்பாண்டங்களை வனைந்து அவை ஈரமாக இருந்தபோதே எழுத்தாணி போன்ற கருவியினால் எழுத்தைக் கீரிப் பிறகு சூளையில் இட்டுக் கொளுத்தப்பட்டவை இவை என்று தெரிகின்றது. அகல் விளக்கு தொன்றுதொட்டுத் தமிழகத்தில் அகல் விளக்கு பரவலாக உபயோகிக்கப்பட்டது. அகல்விளக்கு மண்ணினால் செய்யப்பட்டன. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடைந்து போன அகல் விளக்கு ஓட்டில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. தற்காலமாக அந்த எழுத்துக்களின் முழு வாக்கியமும் அதில் இருக்கிறது. அந்த விளக்கின் உரிமையாளரின் பெயர் அதில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவ் வெழுத்துக்கள் வரி வடிவம் இது: மு தி கு ழு ர அ ன் அ க ல் என்பது இதன் வாசகம்.1 முதுகுழூரன் என்பவருடைய அகல் என்பது இதன் பொருள். முதுகுழூரில் இருந்து வந்து இங்கு வசித்திருந்தவர் முதுகுழூரான் என்று கூறப்பட்டார். அவருடைய அகல் இது. முதுகுழூரான் என்பதை ‘முதிகுழுர அன்’ என்று எழுதப் பட்டிருக்கிறது. அகல் என்பது அகல் விளக்கு. சட்டி இன்னொரு பிராமி எழுத்து வாசகம் உடைந்து போன சட்டி ஒட்டில் காணப்படுகிறது. இந்தப் பிராமி எழுத்துக்களின் வரி வடிவம் இது:2 சா த் த ன் ஆ வி ஈ நி bச தி ஈ ச ன ஆ தி தை வ னி க - என்பது இதன் வாசகம். ஆர்க்கியாலஜி இலாகாவைச் சேர்ந்தவர் இதைச் ‘சாத்தன் ஆவிஇன் கோதி ஈசன் ஆதிதைவன்’ என்று படித்துள்ளனர். கடைசியில் உள்ள ‘க’ இந்த வாசகத்தின் இறுதியை (முற்றுப் புள்ளியை)க் குறிக்கிறது என்று கூறுகிறார். கோதி என்பது கோத்திரம் என்னும் வடமொழிச் சொல் என்று கூறுகிறார். சாத்தன் ஆலியினுடைய உறவினன் ஈசன் ஆதிதைபன் என்பது இதன் கருத்து என்று கூறியுள்ளார்.3 இந்த வாசகத்தினுடைய சரியான அமைப்பு ‘சாத்தன் ஆவிஈ நிதோதி ஈசன் ஆதி தைவ னிக’ என்பது. இது சாத்தன் ஆவி, நிதோதி ஈசன் ஆதிதைவ னிக(ன்) என்னும் மூன்று பேர்களைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது, மூன்று பெயரும் ஒரே ஆளைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம். ஆவி என்பது அக்காலத்து முறைப்படி இகர ஈற்றுச் சொல்லின் இறுதியில் சேர்க்கிற இகரம் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இது ‘ஆவிய்’ என்று எழுதப்பட வேண்டும். இதில் ‘ஆவிஈ‘ என்று எழுதப்பட்டிருக்கிறது. அலகரை, உறையூர் அகழ்வாராய்ச்சியிலும் பிராமி எழுத்துப் பானை ஓடுகள் காணப்பட்டன. ஆனால் அவை துண்டுதுண்டுகளாக இருப்பதனால் வாசகம் சரியாகத் தெரியவில்லை. 16. திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து மதுரைநகரத்துக்கு அருகிலே பேர்போன திருப்பரங் குன்றமலையும் அதன் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரும் இருக்கின்றன. திருப்பரங்குன்றில் தொன்றுதொட்டு முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கிறார். நக்கீரனார் தம்முடைய திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றத்தையும் பாடியுள்ளார். அவர் காலத்தில், கூடலுக்கு (மதுரைக்கு) மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது என்று (மாடமலி மறுகில் கூடல் குடவாயின்) அவர் கூறியுள்ளார். கடைச்சங்கப் புலவர்களில் சிலர் திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானைப் பரிபாடலில் பாடியுள்ளனர். பரிபாடல் 8ஆம் பாட்டை நல்லந்துவனாரும், 9ஆம் பாட்டைக் குன்றம்பூதனாரும், 17ஆம் பாட்டை நல்வழுதியாரும்,19 ஆம் பாட்டை நப்பண்ணனாரும்,21 ஆம் பாட்டை நல்லச்சுதனாரும் பரங்குன்றத்து முருகவேளினைப் பாடியுள்ளனர். பரங்குன்ற மலையில் பாறைகளிலும் பொடவுகளிலும் சைன சமயதீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் அருகில் வட்டெழுத்து வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடைக்கால நூற்றாண்டு களில் பொறிக்கப்பட்டுவை. மலை உச்சியில் கடைச்சங்க காலத்தில் பௌத்த - சமணசமயத் துறவிகள்தங்கியிருந்த இரண்டு குகைகளும் அவற்றில் கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட் டெழுத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் கூறுவோம். முதலாவது குகை: இது திருப்பரங்குன்றம் இரயில் நிலையத் துக்கு அருகே சாவடி என்னும் கிராமத்துக்கு அருகில் இருக்கிறது. மலைமேல் இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகைக்குப் போவதுகடினம். குகைக்கு ஏறிச் செல்வதற்குக்கரடு முரடான துளைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகக் கால் வைத்து ஏறிச் சென்றால் மேலே வடக்குத் தெற்காக அமைந்துள்ள குகையைக் காணலாம். இந்தக் குகை 56 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ளது. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையிலிருந்து மழைநீர் குகைக் குள்ளே விழாமல் பக்கங்களில் வழிந்து போகும்படிகுழைவான தூம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கு அருகில் குளிர்ந்த நீருள்ள சுனை இருக்கிறது. குகையின் உள்ளே பாறைகளைச் சமப்படுத்தி வழவழப்பாக்கி அமைத்துள்ள கற்படுக்கைகள் இருக்கின்றன. கற்படுக்கைகளின் தலையணைப் பக்கமாகப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகைக்குள்ளே இரண்டு திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு திண்ணை ஐந்து அடி நீளமும் ஒன்றே முக்காலடி உயரமும் உள்ளது. இன்னொரு திண்ணை, ஆறு அடி நீளமும் மூன்று அடி உயரமும் உள்ளது. இந்தக் குகையின் வடக்கு பக்கத்தில் இன்னொரு சிறு குகையும் அதற்குள் இரண்டு கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகையில் கல்வெட்டெழுத்து இல்லை. பெரிய குகையில் கற்படுக்கைமேல் எழுதப்பட்டுள்ள பிராமிஎழுத்தைப் பார்ப்போம் இவை 1908 ஆம் ஆண்டுகண்டு பிடிக்கப்பட்டன. 1908ஆம் ஆண்டின் 333 ஆம் எண்ணுள்ள சாசனத் தொகுப்பாக இவ்வெழுத்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.1 இந்த எழுத்துக்கள் ஒரே வரியாக முப்பத்தொருஎழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வரியின் பதினெட்டு எழுத்துக்கள் பெரியவை யாகவும் அடுத்த பதின்மூன்று எழுத்துக்கள் சற்றுச்சிறியவையாகவும் இருக்கின்றன. பெரிய எழுத்தின் இறுதியில் சிறிய எழுத்தின் தொடக்கத்திலும் இடையிலே செங்குத்தான சிறுகோடு காணப்படுகிறது. எனவே இந்தக் கல்வெட்டெழுத்து இரண்டு பகுதிகளாக அமைந் துள்ளது. இந்தக் கல்வெட்டெழுத்தின் வரிவடிவம் இது. இந்த எழுத்துக்களை அறிஞர்கள் எப்படிப் படித்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு கூறுகிறார். 1. எரு கோ(ட்டூர) இ ஜம் கு டு ம (பிக) னா போ லா வ ச னா 2. ச (ஏ) ய தா ஆ ய சா ய னா னை டு ச(சா) த னா எருகோட்டூர என்பது எருகோட்டூர். குடும்பிகன் என்பது இல்வாழ்வோனைச் சுட்டுகிறது.2 திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படிக்கிறார்: ‘எருகோட்டூர் ஈழ குடும்பிகன் போலாலையன் செய்தா ஆய்ச்சுடன் நெடுசாதன்’ எருகோட்டூர் என்பது ஊரின் பெயர். அகநானூற்றில் தாயங்கண்ணனார் செய்யுளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய ஊர் எருக்கோட்டூர். இழம் என்பது ஈழம். செய்தா என்பது செய்தான் என்னுஞ் சொல். ஈழத்தைச் சேர்ந்தவனுடைய எருக்கோட்டூரில் வசித்தவனுமான போலாலையன் செய்வித்தான். ஆய்ச்யன் நெடுஞ்சாத்தன் செய்தான் என்பது பொருள்.3 திரு. சி. நாராயண ராவ் இவ்வெழுத்துக்களை வழக்கம்போலப் பிராகிருதமாகப் படித்து அதைச் சமற்கிருதமாக மாற்றுகிறார்: 1.‘எருகோடூர ஈழ குடும்பிகனா போலாலையனா சேய்தா’ ஆய-சயனா நெடுசாதனா (பிராகிருதம்) 2. எருகோடீர ஸிம்ஹள-குடும்பி-கானாம் போலால்-ஆர்யானாம் சய்த்ய-கய்யானாம்-நிஷ்ட்டா சைத்யானாம். (சமற்கிருதம்) இலங்கையில் வசிப்பவரும் எருக்காட்டூர் வாசிகளுமான போல நகரத்தார் சைத்தியங்களை நிறுவினார்கள் என்பது பொருள்.4 திரு.ஐ. மகாதேவன் இவ்வாறு கூறுகிறார் : ‘எரு காட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் செய்தா ஆய் சயன் நெடு. சாதன்’ இலங்கையிலிருந்து வந்த எருகாட்டூர் பொலாலையன் இதைக் கொடுத்தான். ஆய், சயன், நெடுசாதன் ஆகிய இயவர்கள் (இதைச் செய்தார்கள்).5 திரு. டி.வி. மகாலிங்கம் படித்து இவ்வாறு பொருள் கூறுகிறார்: ‘எருகோட்டூர் ஈழ-குடும்பிகன் போலாலையன் செய்த ஆய்-சயன-நெடு-சாத ன(ம்)’ இதன் கடைச் சொல்லாகிய சாதன என்பது தியானம் என்னும் பொருள் உள்ள சமற்கிருதச் சொல். நெடு என்பது நீண்ட, ஆழ்ந்த என்னும் பொருள் உள்ளது. நெடு சாதன என்பதன் பொருள் ஆழ்ந்த தியானம் என்பது. சயன என்பது படுக்கை. ‘ஆய்வை’ என்பது உறங்கும் இடம் என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. ‘ஆய்’ என்னுஞ் சொல் தாலாட்டுப் பாட்டிலும் வருகிறது. ‘லொல் லொல் லொல் லொல் ஆயி’ என்னும் தாலாட்டுப் பாட்டில் ‘ஆயி’ என்பது தூங்கு என்னும் பொருள் கொண்டது. எனவே, ‘ஆய்-சயன-நெடு சாசன (ம்)’ என்பதன் பொருள், ‘தூங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட படுக்கை’ என்பது. ‘இலங்கை’ (ஈழம்) யிலிருந்து வந்து எருகோட்டூரில் வசிக்கும் குடும்பிகனான போலாலையன் உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைத்தான் என்பது இதன் கருத்து. அகநானூற்றில் 149, 319, 357 ஆம் செய்யுள்களைப் பாடிய தாயங்கண்ணனார் எருக்கோட்டூரைச் சேர்ந்தவர்.6 இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம். இந்த கல்வெட் டெழுத்துக்கள் பெரிய எழுத்தினாலும் சிறிய எழுத்தினாலும் எழுதப்பட்டு இடையே செங்குத்தான கோட உள்ளதென்று முன்னமே கூறினோம். இந்த வாக்கியத்தை எழுதியவர் சரியாகத் தமிழ் படிக்காதவர் என்பதும் பேச்சுத் தமிழில் இதை எழுதியுள்ளார் என்பதும் இந்த வாக்கிய அமைப்பினால் அறிகிறோம். எரு கா டுர் இழ குடும்பிகன் பொலாலையன் (பெரிய எழுத்து) செய்தா ஆய்சயன் நெடு சாதன். (சிறிய எழுத்து) பெரிய எழுத்து தனி வாக்கியம். சிறிய எழுத்து தனி வாக்கியம் என்று தெரிகிறது. எருகாட்டூர் ஈழக்குடும்பிகன் (வாணிகன்) பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானஞ் செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து அமைத்தவன் ஆய்ச்சயன் நெடுஞ்சாத்தன் என்பது இவ் வாக்கியங்களின் கருத்து. விளக்கம்: இதை எழுதியவர் நன்றாகப் படிக்காதவர் என்றும் பேச்சுத் தமிழில் எழுதியுள்ளார் என்றும் கூறினோம். எருகாட்டூர் என்று எழுதியுள்ளார். ட்டு என்று இரட்டிக்க வேண்டும். இரட்டிக்காமல் தவறாக எழுதியுள்ளார். வேறு இடத்திலும் ட்டு என்பது டு என்று எழுதப்பட்டிருக்கிறது. டு என்பதை ட்டு என்று அக்காலத்தில் ஒப்பித்தார்கள். போலும். ஈழ என்பது இழ என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்திலும் தமிழ்நாட்டவர் ஈழ நாட்டுக்குப் போய் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் குடும்பிகர் என்று கூறப்பட்டனர். ஈழத்துப் பூதன்தேவனார் பாண்டி நாட்டிலிருந்து ஈழஞ் சென்றவர். அவர் பாடியவை சங்கச் செய்யுள்களில் தொகுக்கப் பட்டுள்ளன. எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் என்பவன் (குகையையும் கற்படுக்கைகளையும் திண்ணைகளையும் செய்வித்தான்) என்று வாக்கியம் முடிய வேண்டும். செய்வித்தான் என்னும் வினைச் சொல் விடுபட்டுள்ளது. இரண்டாவது வாக்கியத்தில் செய்தா என்றிருக்கிறது. இது செய்தான் என்று இருக்க வேண்டும். ன் விடுபட்டுள்ளது. ஆய் சயன் நெடு சாதன் என்பது செய்தவனுடைய பெயர். இப் பெயரில் நெடு சாதன் என்பதும் தவறாக எழுதப்பட்டுள்ளது. சாதன் என்பதில் த்த என்னும் சகரம் இரட்டித்து சாத்தன் என்று எழுதப்பட வேண்டும். சாத்தன் என்னும் பெயர் சங்க காலத்தில் பரவலாக வழங்கி வந்தது. நெடுஞ்சாத்தன் என்னும் பெயரும் வழங்கி வந்தது. இந்தக் குகையிலேயே வேறு இடத்தில் தனியே பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவற்றின் பொருள் தெரியவில்லை. எதையோ எழுதத் தொடங்கி முற்றுப்பெறாமல் விடுபட்டு எழுத்துக்கள் என்று தோன்றுகின்றன. அவை: 1. (கய)7 2. (மாரயவ)8 திருப்பரங்குன்றத்தில் இன்னோர் இடத்தில் உள்ள குகையில் எழுதப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். மலையின் உச்சியில் உள்ள இந்தக் குகைக்கு ஏறிச் செல்வது மிகக் கடினமானது. இந்தக் குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி வாசகம் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. இஃது 1951-52ஆம் ஆண்டின் 142வது எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதன் வரி வடிவம் இது: ‘அந்துதன் கொடுபிதவன்’ என்பது இதன் வாக்கியம். திரு. டி.வி. மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் இதைச் சரியாகவே படித்துள்ளனர். ‘கொடுபிதவன்’ என்பதற்கு விளக்கம் கூறுவோம். ப் என்னும் பகர ஒற்றெழுத்தும், த் என்னும் தகர ஒற்றெழுத்தும் இதில் விடுபட்டுள்ளன. ஒற்றெழுத்துக்களைச் சேர்த்துப் படித்தால் ‘கொடுப் பித்தவன்’ என்றாகும். சங்க காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களில் பல ஒற்றெழுத்துக்கள் விடுபட்டுள்ளதைக் காண்கிறோம். இது கற்றச்சரின் தவறாக இருக்கலாம். அல்லது எழுதியவரின் தவறாகவும் இருக்கலாம். பிராமிக் கல்வெட்டு வாசகங்களை எழுதியவர் பெரும்பாலோர் நன்றாகக் கல்வி கற்றவர் அல்லர் என்பது அவர்கள் எழுதியுள்ள வாக்கியங்களிலிருந்து அறிகிறோம். இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்த அந்துவன் என்பவரைப்பற்றிக் கூற வேண்டும். கடைச்சங்க காலத்தில் அந்துவன் என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். அவர்களுடைய பெயரைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அந்துவன் கீரன், அந்துவன் சாத்தன், வேண்மாள் அந்துவஞ்செள்ளை, நல்லந்துவன் என்னும் பெயர்களைப் பார்க்கிறோம். அந்துவன் கீரன் என்னும் அரசனைக் கல்லாடனார் புறம் 359இல் பாடியுள்ளார். அந்துவன் சாத்தனை ஒல்லையூர் பூதப்பாண்டியன் தன்னுடைய வஞ்சினக் காஞ்சியில்9 குறிப்பிடுகிறார். செல்வக்கடுக்கோ வாழியாதனுடைய தந்தையின் பெயர் அந்துவன் பொறையன். நல்லந்துவனார் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) இருந்த பெரும் புலவர். இவர் பாடின செய்யுள்கள் சங்க இலக்கியங்களில் 10 தொகுக்கப்பட்டுள்ளன. கலித்தொகையைத் தொகுத்தவரும் நல்லந்துவனாரே. 33 செய்யுள்களையுடைய நெய்தற்கலிச் செய்யுள்களை இயற்றினவரும் இவரே. இவர் பாடின பரிபாடல் 8ஆம் செய்யுளின் ‘பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்’ என்று கூறியுள்ளார்.11 நல்லந்துவனாரின் சம காலத்துப் புலவரான மருதன் இளநாகனார் தம்முடைய செய்யுளில் நல்லந்துவனார் பரங்குன்றத்து முருகனைப் பாடினதைக் குறிப்பிடுகிறார்.12 திருப்பரங்குன்றத்துப் பிராமி கல்வெட்டில் கூறப்படுகிற அந்துவன் இந்த நல்லந்துவனாராக இருக்கக்கூடும். அல்லது அவருடைய முன்னோரான ஓர் அந்துவனாக இருக்கக்கூடும். சங்ககாலத்தில் மக்களிடையே மதக் காழ்ப்பும் மதப் பூசல்களும் இல்லை. சங்க காலத்தில் சமயப் பகைமை மிகமிகச் சொற்பம். சங்க காலத்துக்குப் பிறகுதான் மதப்பூசல்கள் தமிழகத்தில் தாண்டவம் ஆடின. சங்க காலத்தில் எல்லாச் சமயத்தாரும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நல்லந்துவ னாரே பரங்குன்றத்துக் குகையைத் தானஞ் செய்தவராக இருக்கலாம். அடிக்குறிப்புகள் 1. Fig. 47, No.15, P.113, Plate XLI No.15, Arikamedu, An Indo-Roman Trading Station on the Ease Coast of India by R.E.M. Wheeler, with Contributions by A. Ghosh and Krishna Devar pp. 17-124. Ancient. No. 2. July 1946. 2. P. 112, No.9, Plate XLI, No.9, Ancient India. No. 2, July 1946. 3. P. 113. No. 9. Ancient India. No. 2. 4. Proceedings and Transactions of the 1st All India Oriental Conference. 5. P. 288, Proceedings and Transactions of the Third All India Oriental Conference, Madras 1924. 6. The Brahmi Inscriptions of Southern India, N.1.A. Vol. I. 7. P. 66 No. Seminar on Inscriptions 1966. 8. P. 254-256. Early South Indian Palaeography. 9. No. 140 of 1951- 52. 10. No. 141 of 1951- 52. 11. புறநா. 71. 12. அகநா. 43. நற். 88, பரிபா. 6, 8, 11. 13.பரிபா. 8 : 127-130. 14. ‘சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேள் சினமிகு முருகன் தண் பரங்குன்றத்து, அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ (அகநா. 59) 17. புகழூர் பிராமி எழுத்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் புகழூர் ஒரு நிலையமாகவும் இருக்கிறது. புகழூரின் பழைய பெயர் புகழியூர். இவ்வூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுத பாளையம் என்னும் கிராமமும் அதன் அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்று களும் உள்ளன. இந்தக் குன்றுகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளும், குகைக்குள்ளே தரையில் கற்படுக்கைகளும், கற்படுக்கை களின் ஓரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கடைச்சங்க காலத்தவை என்பதில் ஐயமில்லை. ஆறு நாட்டார் மலையிலுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் பார்ப்போம். முதலில், சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927-28ஆம் ஆண்டின் 343ஆம் எண்ணாகப்1 பதிவு செய்துள்ள கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்துக்கள் இரண்டு வரிசையாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும் இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் உள்ளன. இந்த எழுத்துக்களின் வரி வடிவம் இவை. பாறையில் பொளிவுகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துக்கள் உருத்தெரியாமல் இருக்கின்றன. அனாலும் கூர்ந்து பார்த்து இவற்றைப் படிக்க இயலும். முதல் வரியில் கருவூர் பொன் வாணிகன் என்றும் இரண்டாம் வரியில் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி மற்ற எழுத்துக்களை அதிட்டானம் என்றும் படிக்கலாம். இரண்டாவது வரியில் முதல் எழுத்து பொளிந்து சரியான உருவம் தெரியாமல் இருக்கிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்கள் த்தி என்பவை. திரு. டி.வி. மகாலிங்கமும்2 திரு. ஐ. மகாதேவனும்3 இவற்றைப் படித்துள்ளனர். திரு. டி.வி. மகாலிங்கம் இரண்டாம் வரியில் முதல் நான்கு எழுத்துக்களை நேர்த்தி என்று படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்துகொள்ளுதல் (பிராத்தனை செய்து கொள்ளுதல்) என்று விளக்கங் கூறினார். கருவூர் பொன் வாணிகன் நேர்ந்துகொண்டு அமைத்த அதிஷ்டானம் என்று பொருள் கூறுகிறார். திரு. ஐ. மகாதேவன், இரண்டாவது வரியின் முதல் மூன்று எழுத்தை நத்தி என்று படித்துள்ளார். படித்து ‘கருவூர் பொன்வாணிகன் நத்தி அதிட்டானம்’ என்று வாக்கியத்தை அமைக்கிறார். பிறகு, வாணிகன்+நத்தி என்பதை வாணிகன்+அத்தி என்று பிரித்துக் கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்) என்று பொருள் கூறியுள்ளார். கல்வெட்டில் வாணிகன் என்றும் நத்தி (?) என்றும் சொற்கள் தனித்தனியே பிரிந்துள்ளன. பிரிந்துள்ள சொற்களை இவர் பிரித்துக் காட்டுவது பொருந்தவில்லை. இவர் தவறாகப் படித்துள்ள ‘நத்தி’ என்னும் பெயர் புதுமையாக இருப்பதனால் நத்தியை அத்தி யாக்க எண்ணி, வாணிகன்+நத்தி = வாணிகன் அத்தி என்று எங்கும் இல்லாத இலக்கணத்தைக் கூறி, நத்தியை அத்தி ஆக்குகிறார். மகாலிங்கமும் மகாதேவனும் இரண்டாம் வரியின் முதல் சொல்லை நேர்த்தி என்றும் நத்தி என்றும் படித்தார்கள். காரணம் முதல் எழுத்து பொளிந்துபோய்ச் சரியாக உருத்தெரியாமலிப்பதுதான். இரண்டு வாசகமும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பொளிந்துள்ள முதல் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால் அது பொ என்னும் எழுத்து என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் பொத்தி என்றாகிறது. ஆகவே கருவூர் பொன் வாணிக னுடைய பெயர் பொத்தி என்பது தெரிகிறது. இந்த வாக்கியத்தைக் ‘கருவூர்’ பொன் வாணிகன் பொத்தி அதிட்டானம்’ என்று படிப்பது சரி என்று தோன்றுகிறது. விளக்கம்: பொத்தன், பொத்தி என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்தன. பொத்த குட்டன் என்னும் தமிழன் இலங்கையிலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன் தான் விரும்பியவர்களை இலங்கையின் அரசராகச் சிம்மாசனம் ஏற்றினான் என்று குலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. சங்க காலத்தில் பொத்தியார் என்று புலவர் ஒருவர் இருந்தார். அவருடைய செய்யுள்கள் புறநானூற்றில் (புறநா. 217, 220, 221, 222, 223) தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டின் இரண்டாவது வரியில் உள்ள முதல் மூன்று எழுத்தையும் பொத்தி என்று படித்துப் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்று தீர்மானிக்கலாம். புகழூர்ப் பிராமி எழுத்துக் கல்வெட்டு இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவின் 1927-28 ஆம் ஆண்டுத் தொகுப்பில் 346ஆம் எண்ணுள்ளது.4 இதில் ஒரே வரியில் இருபத்திரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்களின் சரியான வடிவத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. ஆனாலும் படிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது. (இதில் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்) ந ள ளி வ ஊ ப பி ட ந தை மக ன கீ ர ன கொ ற ற ன இந்த எழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறு அமைகிறது: ‘ந ள் ளி வ் ஊ ர் ப் பி ட ந் தை ம க ன் கீ ர ன் கொ ற் ற ன்’ திரு. டி.வி. மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார் :5 ‘நாளாளப ஊர் பிடந்தை மகன் கீரன் கொற்றன்’, இவ்வாறு படித்த பிறகு இவர் ‘பிடந்தை’ என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: ஆதன்+தந்தை = ஆந்தை என்றாவது போலப் பிடன்+தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டாரன், தந்தை = பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன். முதல் ஆறு எழுத்துக்களை ‘நளாளப ஊர்’ என்று இவர் படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பதை பிடன் தந்தை என்று பிரிப்பதும் தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பது ஒரே சொல். அஃது ஓர் ஆளைக் குறிக்கிறது. பிடன் என்பதற்கும் தந்தை என்பதற்கும் இவர் கூறுகிற பொருள்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை. ‘மகன் கீரன் கொற்றன்’ என்று மற்ற எழுத்துக்களைப் படித்திருப்பது முழுவதும் சரி. திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படித்துள்ளார்:6 ‘நல்லிய் ஊர்அ பிடந்தை மகள் கீரன் கொற்ற.....’ நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)’ முதல் ஆறு எழுத்துக்களை இவர் ‘நல்லிய் ஊர’ என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தில் லகரத்துக்கும் ளகரத்துக்கும் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலப் பக்கத்தின் மத்தியில் வளைந்த கோடு இட்டால் அது ளகரமாகிறது. கோடு இடாவிட்டால் லகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகர எழுத்தாகத் தோன்றுகிறது. ஆகவே நள்ளி ஊர் என்பதே சரியாகும். ‘பிடந்தை மகள்’ என்று இவர் படிப்பது தவறு. எழுத்தில் ‘பிடந்தை மகன்’ என்றுதான் இருக்கிறது. மகள் என்று தவறாகப் படித்த இவர், மகள் என்பதற்கு மக்கள் என்று பொருள் கூறுகிறார். கீரன் கொற்றன் என்னும் ஒரே பெயரைக் கீரன் என்றும் கொற்றன் என்றும் இரண்டு பெயர்களாகக் கூறுகிறார். இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்: நள்ளிவ் ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்றன் என்பது இதன் வாசகம். நள்ளி ஊரில் வாழ்ந்த பிடந்தை என்பவருடைய மகனான கீரன் கொற்றன் (என்பவர் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார்) என்பது இதன் பொருள். விளக்கம்: நள்ளியூர் என்று எழுத வேண்டிய சொல்லை வகர ஒற்றுச் சேர்த்து எழுதியிருக்கிறது. இஃது எழுதினவரின் பிழையாகும். நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் இருந்தது என்பது தெரிகிறது. நள்ளி என்னும் பெயருள்ள கடையெழு வள்ளல்களில் ஒருவர் கூறப்படுகிறார். ‘நளிமலை நாடன் நள்ளி’ 7 ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி’8 ‘திண்தேர் நள்ளி’9 ‘வல்வில் இளையர் பெருமகன் நள்ளி’10 ‘கொள்ளார் ஓட்டிய நள்ளி’11 கண்டிரம் என்னும் ஊரின் தலைவனான கண்டீரக்கோப்பெருநள்ளியைச் சங்கச் செய்யுள் கூறுகிறது. நள்ளியூரை இந்தப் பிராமி எழுத்துக் கூறுகிறபடியால் நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் ஒன்று இருந்தது என்பதை யறிகிறோம். பிடந்தை என்பது ஒருவன் பெயர். சங்கச் செய்யுள்களில் பிட்டங்கொற்றன் கூறப்படுகிறான். இவன் வானவன் (சேரனுடைய) மறவன் (சேனைத் தலைவன்) என்று கூறப்படுகிறான்.12 பிட்டங் கொற்றனைப் ‘பிட்டன்’ என்றும் கூறுவர்.13 அவனைக் கொற்றன் என்றும் கூறுவர்.14 பிட்டன் என்றும் கொற்றன் என்றும் கூறப்பட்ட பிட்டங்கொற்றனுக்கு எந்தை என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது. பிட்டங்கொற்றனைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண னார் புறநானூறு 171இல் பாடியுள்ளார். அதன் அடிக்குறிப்பு ‘பிட்டங் கொற்றனைப் பாடியது’ என்று கூறுகிறது. அச் செய்யுளில் அவர் அவனை கொற்றன் (அடி 7) என்றும் எந்தை (அடி 12) என்றும் கூறுகிறார். ஆகவே அவனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்தது தெரிகிறது. இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் பிடந்தை என்பவன் கூறப் படுகிறான். பிடந்தை என்பது பிட்டெந்தை என்பதன் திரிபு. நள்ளியூர்ப் பிடந்தை, சங்கச் செய்யுள்களில் கூறப்பட்ட பிட்டெந்தையாக இருக்கலாம். கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர். இவன் பிடந்தையின் மகன். நள்ளியூரில் இருந்த பிடந்தை (பிட்டனெந்தையின்) மகனான கீரன் கொற்றன் இந்தக் கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தான் என்பது இக் கல்வெட்டின் பொருள். மேலே கூறப்பட்ட கீரன் கொற்றனுடைய தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கையை யமைத்துத் தானம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கீரன் கொற்றி என்பது. இவருடைய பெயரையும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது. இது 1963-64ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பில் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.15 1927-28ஆம் ஆண்டின் 346ஆம் எண்ணுள்ள கல்வெட்டும் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண் கல்வெட்டும் தமயன் தங்கைமாரைக் குறிக்கின்றன என்பதைச் சாசன இலாகா அலுவலகர் ஒருவரும் தெரிந்துகொள்ளவில்லை. இக் கல்வெட்டைப் படித்த திரு.ஐ. மகாதேவனும், இதை அறியவில்லை. இந்த இரண்டு கல்வெட்டுக்களும் தமயன் தங்கையாரைக் காட்டுகின்றன என்பது எம் ஆராய்ச்சியினால் காணப்பட்டது. இந்தக் கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்தின் வரி வடிவத்தைத் திரு. ஐ. மகாதேவன் வெளியிட்டுள்ளார். இதை இவர் நேரில் கண்டு எழுதியதாகத் தோன்றுகிறது. எழுதிய போதுசில கோடுகளை விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. இந்த எழுத்துக்களை இவர் காட்டியபடி இங்கே தருகிறோம். (இதில் மூன்றாவது எழுத்து இடப் புறமாகத் திரும்பியிருக்க வேண்டியது வலப் புறமாகத் திரும்பி இருக்கிறது.) திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்தக் கல்வெட்டுக்களை இவ்வாறு படித்துள்ளார்:16 நல்லி ஊர் அ பிடன் குறும் மகள் கீரன் நொற்றி செயிபித பளி நல்லியூர் பிடனுடைய இளைய மகன்களான கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி. இவர் படித்துப் பொருள் கூறுவதில் சில தவறுகள் உள்ளதை எடுத்துக்காட்டுவோம். நல்லி ஊர் என்பது மேலே முன் சாசனத்தில் கூறப்பட்ட நள்ளியூர், நல்லி என்பது தவறு என்றும் நள்ளி என்பதே சரி என்றும் முன்னே கூறினோம். குறும்மகன் என்பதை இளைய இரண்டு மகன்கள் என்று பொருள் கூறுகிறார். இது தவறு. குறும் மகன் என்பது இரண்டு இளைய மகன்களைக் குறிக்கவில்லை. அதன் பொருள் சிறிய மகன் என்பது. கீரன் ஒற்றி என்பவை இரண்டு மகன்களின் பெயர் என்று கூறுகிறார். இஃது ஒரே ஆளின் பெயரைக் குறிக்கிறது. கீரனும் ஓரியும் என்னும் இரண்டு மகன்கள் என்று எழுதிய இவர், பிறகு கோலாலம்பூர் மாநாட்டில், கீரன் ஓரி என்பது ஒரு மகனின் பெயர் என்று கூறியுள்ளார். இக் கல்வெட்டின் சரியான வாசகத்தையும் கருத்தையும் கூறுவோம்: நள்ளி ஊர் பிடன் குறும் மகள் கீரன் கொற்றி செய்பித பளி ‘நள்ளியூர் பிட்டனுடைய சிறிய மகளான கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’ என்பது இதன் கருத்து. விளக்கம் : நல்லி ஊர் என்றிருப்பது நள்ளி ஊர் என்றிருக்க வேண்டும். நிழற்படத்தையாவது மை யொற்றுப் படியையாவது பார்த்து இதை முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டு சாசனங்களில் நள்ளியூர் பி(ட்)டன் கூறப்படுகிறான். ‘நள்ளியூர் பிடந்தையின் மகன் கீரன் கொற்றனும் மகள் கீரன் கொற்றியும் கூறப்படுகின்றனர். இந்தத் தமயனும் தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்து முனிவர்களுக்குத் தானஞ் செய்தனர்.’ இவர்களுடைய உறவு முறை இது: நள்ளியூர்ப் பிட்டந்தை (பிட்டன் கொற்றன்) (மகன்) (மகள்) கீரன் கொற்றன் 17 கீரன் கொற்றி 18 முன் கல்வெட்டில் நள்ளி ஊர் என்று படித்தோம். ஆகவே இதுவும் நள்ளி ஊராகத்தான் இருக்க வேண்டும். பிராமி எழுத்து ல கரத்துக்கும் ள கரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு என்பதை முன்னமே விளக்கிக் கூறினோம். ல்லி என்னும் எழுத்துக் களின் வலப்பக்கத்தில் தாழச் சிறு வளைவுக்கோடு விடுபட்டிருக்கிறது; அல்லது மறைந்திருக்கிறது. மையொற்றுப் படியைக் கொண்டு அறிய வேண்டும். ‘ஊர்அ’ என்று அடுத்த எழுத்துக்கள் உள்ளன. அ என்பது ‘உடைய’ அது, என்னும் பொருள் உடைய வேற்றுமையுருபு எழுத்து. ஊர்+அ என்பதை ஊர என்று படித்து, ஊரைச் சேர்ந்த, ஊரினுடைய என்று பொருள் கொள்ளலாம். பிடன் என்பது பிட்டன் என்பதே. டகர ஒற்று விடுபட்டிருக் கிறது. பிடன் என்பது முன் சாசனத்தில் கூறப்பட்ட பிடந்தை (பிட்டனெந்தை)யைக் குறிக்கிறது. ‘குறும்மகள்’ என்பது சிறு மகள் என்னும் பொருள் உள்ளது. பிட்டனுடைய மகள் என்பது பொருள். இதில் மகர ஒற்று மிகையாக எழுதப்பட்டிருக்கிறது. குறுமகள் என்றிருக்க வேண்டும். குறுமகள் என்பதை ஐ. மகாதேவன் மகன்கள் என்று படித்திருப்பது தவறு. மகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் குறுமகள் என்பதை இளைய மகள் என்று படித்திருப்பதும் தவறாகும். தமிழில் குறுமகள் என்பதற்கும் குறுமகன் என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. குறுமகள் என்றால் இளம்பெண் என்று பொருள். குறுமகன் என்பது குறுமகளின் ஆண்பாற் பெயர் அன்று. குறுமகன் என்றால் கீழ்மகன் என்று பொருள்.19 பிராமி எழுத்தில் கூறப்படுகிற ‘பிடன் குறுமகள்’ என்பதைப் ‘பிடன் குறுமகன்’ என்று படித்தால் பிட்டனுடைய கீழ்மகன் என்று பொருளாகிறது. கல்வெட்டில் ‘குறுமகள்’ என்னும் சொல் தெளிவாகக் காணப்படுகிறது. ‘குறுமகள்’ என்றால் இளம் பெண். சிறு வயதுள்ள மகள் என்பது பொருள். சங்கச் செய்யுள்களில் குறுமகள் என்னுஞ் சொல்லை நெடுகக் காண்கிறோம்.20 இரண்டாவது வரியில் கீரன் கொற்றி என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கீரன் ஓரி என்று மகாதேவன் படிப்பது தவறு. கீரன் கொற்றி என்பதே சரியானது. கொற்றன் என்று ஆண்மகனுக்கும் கொற்றி என்று பெண்மகளுக்கும் சங்க காலத்தில் பெயர்கள் வழங்கி வந்தன. கீரன் கொற்றி என்பவள் முன்பு கல்வெட்டில் கண்ட கீரன் கொற்றனுடைய தங்கை. இரண்டு கல் வெட்டுக்களும் அடுத்தடுத்து இருப்பதும் இதனைத் தெளிவாக்குகிறது. செயிபித என்பது செய்ப்பித்த என்று இருக்க வேண்டும். செய்வித்த என்னும் பொருள் உள்ளது. பளி என்பது பள்ளி என்றிருக்க வேண்டும். ளகர ஒற்று இடாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்குறிப்புகள் 1. Madras Epigraphic Collection, 343 of 1927-28. 2. Early South Indian Palaeography, 1967, p. 281 - 282. 3. No. 66. Seminar on Inscriptions 1966, p. 67. 4. Madras Epigraphy Collection, 346 of 1927 - 28 5. Early South Indian Palaeography, 1967, p. 283-84. 6. No. 58, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966. 7. சிறுபாண். 107. 8. அகநா. 238 : 14. 9. குறுந். 210 : 1. 10. அகநா. 152 : 15. 11. புறநா. 158 : 16. 12. அகநா. 143 : 10-13 13. புறநா. 170 : 8, அகநா. 77 : 15-16, புறநா. 172 : 8. 14. புறநா. 168 : 17, 171 : 7. 15. Madras Epigraphy Collection, 296 of 1933-34. 16. No. 59, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966. 17. 346 of 1927-28. 18. 296 of 1963-64. 19. ‘குறுமகன் தன்னால்’ (சிலம்பு. 15:95), ‘குறுமகனாற் கொலையுண்ண’ (சிலம்பு. 29 உரைப்பாட்டுமடை.) ‘கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப’ (சிலம்பு. 29, காவற்பெண்டரற்று) குறுமகன் என்பதற்கு ‘கீழ்மகன்’ என்று அரும்பதவுரைகாரர் கூறுகிறார். 20. ‘ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253:5), ‘மேதையங் குறுமகள்’ (அகநா. 7:6), ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகநா.219:9) ‘வாணுதற் குறுமகள்’ (அகநா. 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற். 221:11), ‘மெல்லியற் குறு மகள்’ (அகநா. 93:8), ‘மடமிகு குறுமகள்’ (நற். 319:8), ‘எல்வளைக் குறு மகள்’ (நற். 167:10), ‘அணியியற் குறுமகள்’ (நற். 184:8) முதலியன காண்க. 18. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழித்தலை வட்டத்தில் ஐயர்மலை என்னும் ஊரில் ஐயர்மலை இருக்கிறது. திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள குழித்தலை நிலையத்தி லிருந்து ஆறு கல் தொலைவில் இந்த மலை இருக்கிறது. ஐவர் மலை என்னும் ஊர் இனாம் சத்திய மங்கலத்தைச் சார்ந்தது. ஐயர்மலை என்னும் பெயர் பிற்காலத்தில் அமைந்தது போலத் தோன்றுகிறது. இதன் பழைய பெயர் ‘ஐவர்மலை’ என்றிருக்கவேண்டும். ஏனென்றால் பழைய மலைக் குகைகள் ஐவர்மலை என்றும், பாண்டவமலை என்றும், பஞ்ச பாண்டவமலை என்றும் வேறு சில இடங்களில் பெயர் கூறப்படுவதை அறிகிறோம். மலையில் உள்ள குகைக் குன்றுகள் பாண்டவரோடு இணைத்துப் பெயர் கூறப்பட்டன. ஆகவே ஐயர்மலை என்று இப்போது கூறப்படுகிற பெயர் பழங்காலத்தில் ஐவர்மலை என்று இருந்து பிற்காலத்தில் ஐயர்மலை என்று வழங்குகிறதுபோலத் தோன்றுகிறது. ஐயர்மலை என்னும் இவ்வூரின் நடுவில் இருக்கிற ஐயர்மலை மேல் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை இரத்தின கிரீசுவரர் கோயில் என்று கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த மலைக்கு வாட்போக்கிமலை என்று பெயர் வழங்கி வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரத்தில் வாட்போக்கிமலையில் எழுந்தருளியுள்ள இரத்தினகிரீசு வரரையும் சுரும்பார் குழலியம்மையையும் பாடியுள்ளார்.1 இந்த மலைக்கு மாணிக்கமலை, இரத்தினகிரி என்னும் பெயர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு இந்த மலையின் உச்சியில் இருக்கிறது. இந்த மலைமேல் வேறு இடத்தில் மூன்று இடங்களில் கற்படுக்கைகள் உள்ளன. இவை கடைச் சங்க காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. மூன்று இடங்களில் உள்ள கற்படுக்கைகளுக்கு இவ்வூரார் ‘மஞ்சனமெத்தை’ என்று பெயர் கூறுகிறார்கள். முதல் மஞ்சன மெத்தை, இரண்டாம் மஞ்சன மெத்தை. இவற்றுக்கு மேலேயுள் ளதை மூன்றாம் மஞ்சன மெத்தை என்று பெயர் கூறுகிறார்கள். இந்தப் பெயர் ‘மஞ்சமெத்தை’ என்றிருக்க வேண்டும். மஞ்சன மெத்தை என்று கூறுவது பாமரர் பகர்ச்சி என்று தோன்றுகிறது. மஞ்சனம் என்றால், குளித்தல் நீராடுதல் என்பது பொருள்; மஞ்சம் என்பதற்கு இருக்கை, படுக்கை, உட்காரும் இடம் என்றும் பொருள். ஆகவே, கற்படுக்கை என்னும் பொருளில் மஞ்ச மெத்தை (மஞ்சம்-படுக்கை. மெத்தை-நிலை) எனறு வழங்கப்பட்டுப் பிற்காலத்தில் மஞ்சன மெத்தை என்று தவறாக வழங்கப்படுகிறது என்பது தெரிகிறது. உயரத்தில் உள்ள மூன்றாவது மஞ்ச மெத்தையில் ஆறு கற்படுக்கைகளும் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இந்தக் கல்வெட்டு அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது:2 ப னை து றை வெ ஸ ன அ த ட அ ன ம இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கலாம். பனைதுறை வெஸன் அதடஅனம். இது மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியம். அவை பனைதுறை வெஸன் அதடஅனம் என்பவை இதனை விளக்குவோம்: முதல் நான்கு எழுத்துக்கள் பனைதுறை என்பவை. பனைதுறை என்பது ஓர் இடத்தின் பெயர். அடுத்த சொல்லில் கூறப்படுகிற வெஸன் என்பவர் இவ்வூரில் இருந்தவர் என்று தெரிகிறது. இரண்டாவது சொல் ‘வெஸன்’ என்பது. இதை வேஸன் என்றும் படிக்கலாம். வேஸன் என்பதில் ஸ என்பது வடமொழி எழுத்து. வெஸன் அல்லது வேஸன் என்பது தமிழ்ப் பெயராகத் தோன்றவில்லை; இவர் பௌத்தராகவோ, சைனராகவோ இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இந்தப் பெயருக்கு அடுத்துள்ள ‘அதடஅனம்’ என்னும் சொல்லைக்கொண்டு, இவர் இந்த கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார் என்று தெரிகிறது. மூன்றாவது சொல்லாகிய அதட அனம் என்பது தவறாக எழுதப்பட்டிருக்கிறது. அகரத்தை அடுத்துள்ள தகர எழுத்து நிகரமாக எழுதப்பட வேண்டும். அதற்கு அடுத்த டஅ என்னும் எழுத்துக்களை டா என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால், அக் காலத்து வழக்கப்படி டஆ என்று எழுதப்பட்டுள்ளது. இதை டா என்று படிக்க வேண்டும். டா என்பதிலும் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்து ட்டா என்று எழுதப்பட வேண்டும். ட் என்னும் டகர ஒற்று விடுபட்டிருக்கிறது. தவறாக எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லை அதிட்டாடனம் என்று திருத்திப் படிக்க வேண்டும். சித்தன்னவாசல் பிராமிக் கல்வெட்டிலும் இந்தச் சொல், அதிடஅனம் என்று எழுதப்பட்டிருக்கிறது. (சித்தன்னவாசல் பிராமி எழுத்து காண்க.) ஆனால் புகழியூர் கல்வெட்டில் இந்தச் சொல் அதிட்டானம் என்று சரியாக எழுதப்பட்டிருக்கிறது. அதிட்டானம் என்பது தமிழ்ச் சொல் அன்று. அது பிராகிருத மொழியாகவோ அல்லது சமற்கிருத மொழியாகவோ இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதிட்டானம் என்பது இருக்கை நிலை என்னும் பொருள் உள்ளது போலத் தோன்றுகிறது. பனைதுறை என்னும் ஊரினரான வெஸன் என்பவர் முனிவர்களுக்காக இந்தக் கற்படுக்கைகளை அமைத்தார் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்து. அடிக்குறிப்புகள் 1. அப்பர் தேவாரம்: இரண்டாம் திருமுறை - திருவாட்போக்கி தேவாரம். 2. ‘கொங்கு’ 15, 8. 73, தேனடை 3. தேனீ 8, பக். 201-203. பின்னிணைப்பு 1. *ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு தென்னார்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூரிலிருந்து 16 கல் தொலைவில் ஜம்பை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைத் திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ளது. பல குன்றுகளால் சூழப்பட்டிருப்பதால் இவ்வூர் பார்ப்பதற்கு இனிய காட்சி யளிக்கிறது. இவ்வூர் ‘வாணக்கோப் பாடி நாட்டில்’ இருந்தது எனப் பழைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டொன்றை அண்மையில் தமிழ்நாட்டரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கல்வெட்டியல் மாணவர் திரு. செல்வராஜ் கண்டு பிடித்துள்ளனர். இக் குன்றத்தில் “ஆள் ஏறாப் பாறை”, “சன்யாசி மடம்” “தாசி மடம்” என்னும் பெயர்களுடைய பகுதிகள் உண்டு. தாசி மடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில் தான் இக் கல்வெட்டு இருக்கிறது. ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள இக் கல்வெட்டு பின் வருமாறு: “ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி ஈத்த பாளி” என்பதாகும். இவ்வெழுத்துக்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அதனைப் படித்த தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி கூறியுள்ளார். இக் கல்வெட்டின் சிறப்பு யாதெனின் இதிலுள்ள இரண்டு சொற்றொடர்கள் “ஸதிய புதோ” என்பதும் “அதியந் நெடுமாஞ் அஞ்சி” என்பதுமாகும். அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றி அறிந்திராத கற்றறிந்த தமிழர் இருக்க மாட்டார்கள். தமக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டியான ஒளவையாருக்கு அளித்த வள்ளல் அன்றோ அதியமான் நெடுமான் அஞ்சி! ஒளவையார், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள் நாகையார் ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன. தகடூரை (இன்றைய தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர் அதியமான் மரபின் முன்னோர்கள் ஆவர். இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிடப் பெற்றான். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். முதன்முதலில் புகளூர் ஆர் நாட்டார் மலைக் கல்வெட்டில் மூன்று சேரர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்துச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில் குறிக்கப் பெறுவர். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் காலத்தைக் கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆவர். ஜம்பையில் இப்போது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும் தலைவர்களும் வாழ்ந்து - வீரம் விளைத்துக் குடிகளைக் காத்து - வரலாறு படைத்தவர்களே என ஐயம்திரிபற ஆணித் தரமாக ஆதாரச் சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக் கல்வெட்டு மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இக் கல்வெட்டு அதியன் ஆட்சியில் வேறு யாரோ கொடுத்த தன்று. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அது மட்டுமன்று. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்கப் பாடலால் தெரிகிறது. ஒளவையும் பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. அந்தத் திருக் கோயிலூருக்கு மிக அண்மையிலேயே இந்தக் கல்வெட்டும் இருக்கிறது. எனவே, அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்திக் கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. அதியமான் திருக்கோயிலூரை வென்றதும் உண்மை; அதனை ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு வேறு சான்று என்ன தேவை? அதியன் சிவனடியை வணங்கும் சென்னியான் ஆயினும் சமணர்க்குப் பாளி அமைத்துக் கொடுத்திருக்கிறான் என்பதைக் காணும் போது அவன் எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்ற உண்மையும் தெளிவாகின்றது. அது மட்டுமன்று; “அஞ்சி ஈத்த பாளி” என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது. இக் கல்வெட்டு, தமிழக வரலாற்றுக்கு மட்டுமே அரிய செய்திகளை வழங்கியுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை வழங்கியுள்ளது, எனலாம். அதியனை இது “ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி” என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மௌரியப் பேரரசனான அசோகன். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப் பெருமன்னன் தன் கல்வெட்டுக்களில் சோழர், பாண்டியர், கேரள புத்ரர், ஸத்திய புத்ரா ஆகியோரைக் குறித்துள்ளான். இவர்களின் நாடுகள் அவ் அசோகனின் ஆட்சிக்குட்பட்டவையல்ல. அவர்கள் தனியாட்சி நடத்தி வந்தனர். அங்கெல்லாம் அவன் பௌத்த அறங்கள் பரவும் வகை செய்தான். அசோகன் குறிக்கும் “ஸத்ய புத்ரர்” யார் என்பது இதுகாறும் அறியக்கூடவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ‘வாய்மொழிக் கோசர்’ என்பவராய் இருக்கக் கூடும் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதினர். மகாராட்டிரத்தில் “சத்புதர்” என்போர் உண்டு. இஃது அவர்களா யிருக்கக் கூடும் என்போரும் உளர். சத்ய மங்கலம் இவர் பெயரால் வந்தது என்கின்றனர் சிலர். “ஸதிய புதோ” என்பவர் அதியமான்க ளாக இருக்கக் கூடும் என்பவர்களும் உண்டு. இப்போது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் “ஸத்ய புத்ரர்கள்” அதியமான்கள் தாம் எனத் திட்ட வட்டமாகத் தெளிவாகி விட்டது. அதியனை “பொய்யா எழினி” (சத்யபுத்ரர்) எனப் புறநானூறு கூறுகிறது. 2. எழுத்து ஆக்கம்* பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக் கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்தி விட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும், கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான். முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்க வில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவது போல வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். ஆதி காலத்திலே சித்திர எழுத்துக்களைப் பல நாட்டினரும் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. எகிப்து தேசத்திலும் சீன தேசத்திலும் அமெரிக்காக் கண்டத்து மெக்ஸிகே நாட்டிலும் நமது இந்தியா தேசத்திலும் ஆதிகாலத்தில் ஓவிய எழுத்துக்கள் வழங்கி வந்தன. நமது இந்தியா தேசத்திலே சிந்து நதிக்கரையில் மொஹஞ்ச தாரோ, ஹாரப்பா என்னும் பெயருள்ள இரண்டு நகரங்கள் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறந்த நாகரிகம் உள்ள நகரங் களாக இருந்தன. இந்த நகரங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து மறைந்துவிட்டன. அண்மைக் காலத்திலே இந்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த இடங்களைத் தோண்டிக் கிளறிப் பார்த்தபோது அங்கே பலப்பல பொருள்களைக் கண்டெடுத்தார்கள். அப்படிக் கிடைத்த பொருள் களில், ஒருவகையான சித்திர எழுத்துக்கள் எழுதப்பட்ட முத்திரை களும் ஏராளமாகக் கிடைத்தன. இதனால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் சித்திர எழுத்துக்கள் வழங்கிவந்தன என்பது உறுதியாகத் தெரிகிறது. மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட சித்திர எழுத்துக்களைப் படித்து அதன்பொருளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த பூனா பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஹீராஸ் பாதிரியார் அவர்கள், இந்த சித்திர எழுத்துக்கள் திராவிட (தமிழ்) மொழியுடன் தொடர் புடையன என்று கூறுகிறார். சில சித்திர எழுத்துக்கள், குறள் வெண்பாவாக அமைந்திருக்கின்றன என்றும் கூறுகிறார். ஆனால், இவர் கருத்தை புராதன புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மிகப் பழைய காலத்தில் தமிழ்நாட்டிலும் சித்திர எழுத்துக்கள் வழங்கி வந்தன என்றும், அந்த எழுத்துக்களுக்குக் கண் எழுத்து என்றும் ஓவிய எழுத்து என்றும் உரு எழுத்து என்று வேறு பெயர்கள் உண்டு என்றும் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது. “ காணப்பட்ட உருவம் எல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவில் ஓவியன் கைவினைபோல எழுதப் படுவது உருவெழுத் தாகும்.” என்று ஒரு பழைய இலக்கண சூத்திரம் கூறுகிறது. சித்திர எழுத்துக்கள், எழுதுவதற்குச் சிரமமாக இருந்தது. ஓவிய எழுத்து என்றும், கோடு கருத்துக்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிவிக்க முடியாதனவாக இருந்தன. ஆகவேகாலக்கிரமத்தில் புதுப்புது எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுக் கடைசியாக இப்போது வழங்குகிற ஒலி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒலி எழுத்துக்கள் எழுதுவதற்குச் சிரமம் இல்லாமலும் கருத்துக்களை முழுதும் தெரிவிக்கக் கூடியவை களாகவும் இருக்கின்றன. இந்தியா தேசத்தில் பழைய காலத்திலே சிறப்பாக வழங்கி வந்த ஒலி எழுத்துக்கள் இரண்டு. அவை, கரோஷ்டி, பிராமி என்பவை. கரோஷ்டி, இந்தியாவில் வடமேற்குப் பக்கத்தில் மட்டும் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வட இந்தியா முழுவதும் வழங்கி வந்தது. பிராமி எழுத்தின் உற்பத்தியைப் பற்றிச் சில கதைகள் கூறப்படுகின்றன. பிரமா கண்டு பிடித்தது பிராமி எழுத்து என்பர் சிலர். ரிஷப தீர்த்தங்கரரின் மகளான பிராமி என்பவள் கண்டுபிடித்தது பிராமி எழுத்து என்பர் ஜைனர்கள். கௌதம புத்தர், சித்தார்த்த குமரன் என்னும் பெயரையுடைய சிறுவராக இருந்த போது பிராமி எழுத்தைக் கண்டு பிடித்தார் என்று க்ஷேமேந்திரர் என்பவர் தாம் இயற்றிய புத்த ஜனனம் என்னும் நூரிலே கூறுகிறார். இந்தக் கதைகளை உண்மையான சான்றுகளாகக் கொள்ளாவிட்டாலும், இவற்றிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. அஃது என்னவென்றால், வடஇந்தியாவில் பண்டைக் காலத்தில் பெரிதும் வழக்காற்றில் இருந்துவந்த எழுத்து பிராமி எழுத்து என்பதே. பிராமி எழுத்து கி.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலே கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திலே வழங்கி வந்த தமிழ் எழுத்து இன்னது என்று இப்போது அறிய முடியவில்லை. ஆனால், ஏதோ ஒருவகையான எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். பாண்டிய நாட்டிலே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், என்று மூன்று சங்கங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஏற்படுத்தப்பட்டு முத்தமிழ் நூல்கள் ஆராய்ப்பட்டன என்று வரலாறு கூறுகிறது. அந்தச் சங்கங்களிலே சிவபெருமான், முருகக் கடவுள், கிருஷ்ணன், குபேரன் முதலான கடவுள்கள் அங்கத்தினராக இருந்தார்கள் என்பதையும், அந்தச் சங்கங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன என்பதையும் மிகைபடக்கூறல் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், சங்கங்கள் இருந்தன என்பதையும் அவற்றில் முத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்தச் சங்கங்களிலே தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்றால், அதற்கு ஏதோ ஒருவகையான எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அந்த எழுத்து இன்னது என்பது இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே வழங்கிவந்த எழுத்து பிராமி எழுத்துத்தான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால், இதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வடஇந்தியாவில் வழங்கிவந்த பிராமி எழுத்து தமிழ் நாட்டிற்கு எப்படி வந்தது? பிராமி எழுத்தைத் தென் இந்தியாவிலே பரவச் செய்தவர்கள் பௌத்தபிக்ஷுக்கள் ஆவர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்வதற்காகப் பல நாடுகளுக்கும் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பினார்.அவ்வாறு அனுப்பப்பட்ட பிக்ஷுக்கள் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று பௌத்த மதப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் தம் பௌத்தமதக் கொள்கைப்படி அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலே பௌத்தமதக் கொள்கைகளை பிரசாரம் செய்துவந்தார்கள் என்றாலும், அவர்கள் எல்லா நாடுகளிலும் ஒரேவிதமாகப் பிராமி எழுத்தே வழங்கி வந்தார்கள். இவ்விதமாகப் பௌத்த பிக்ஷுக்களால் முதல்முதல் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்து புகுத்தப்பட்டு வழக்காற்றில் வந்தது. அன்றியும் அசோகச் சக்கரவர்த்தி, தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பல இடங்களில் அரச சாசனங்களைக் கல்வெட்டுகளில் எழுதி அமைத்திருக்கிறார். அந்தச் சாசனங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தச் சாசனங்கள் பிராமி எழுத்தினால் எழுதப் பட்டிருக்கின்றன. இதனால், அசோக சக்கரவர்த்தி காலத்திலே, அதாவது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலே பிராமி எழுத்து தென் இந்தியாவிலும் வழங்கப்பட்டது என்பது நன்கு விளங்குகின்றது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில், சுமார் 600 ஆண்டுகளாகப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கிவந்தது. இதற்கு எபிகிராபி சான்றுகள் தமிழ் நாட்டிலே, முக்கியமாகப் பாண்டிய நாட்டிலே மலைக்குகைகளிலும், மலைப் பாறைகளிலும் காணப்படுகின்றன. அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங் குளம், முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, குன்னக்குடி, மருகால்தலை, ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் காணப்படும் தமிழ்ச் சாசனங்கள் பிராமி எழுத்தினாலே எழுதப்பட்டவை. இவைகளைத் தவிர வேறு புதிய எபிகிராபி சான்று இப்போது கிடைத்திருக்கிறது. புதுச்சேரிக்குத் தெற்கே 2 மைல் தூரத்தில் கடற்கரையோரத்திலே அரிக்கமேடு என்னும் ஒரு மேடு இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த மேட்டைக் கிளறித் தோண்டிப் பார்த்தார்கள். இங்கிருந்து பல பொருள்கள் அகப்பட்டன. அப்பொருள்களுடன், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இவை தமிழ்மொழியாக இருக்கின்றன. அரிக்கமேடு, இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, அதாவது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தச் சான்றுகளினாலே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே தமிழர் பிராமி எழுத்தை வழங்கி வந்தார்கள் என்பது ஐயம் இல்லாமல் தெரிகிறது. தமிழர் பழைமையாக எழுதியிருந்த பழைய எழுத்தைக் கைவிட்டு புதிதாகப் பிராமி எழுத்தை எழுதத் தொடங்கியபோது, தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ள, ழ, ற, ன என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்தில் இல்லாதபடியினால், இவ்வெழுத்துக்களைப் பழைமையாக வழங்கி வந்த எழுத்துக்களில் இருந்தபடியே வழங்கி வந்தார்கள் போலும். சுமார் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலே பிராமி எழுத்து மறைந்து வட்டெழுத்து என்னும் புதுவகையான எழுத்து வழங்கத் தொடங்கிற்று. வட்டெழுத்தும், பிராமி எழுத்திலிருந்து உண்டானதுதான். அக்காலத்தில் பனையோலையும், எழுத்தாணி யும் எழுதுகருவிகளாக இருந்தன. பிராமி எழுத்தைப் பனை யோலையில் எழுத்தாணியால் எழுதும்போது, அவ்வெழுத்தின் உருவம் மாறுதல் அடைந்து கடைசியில் வட்டெழுத்தாக மாறிவிட்டது. பண்டைக் காலத்தில் சரநாடு என்னும் பெயருடன் தமிழ்நாடாக இருந்து இப்போது மலையாள நாடாக மாறிப்போன கேரள நாட்டிலே முற்காலத்தில் வழங்கி வந்த கோலெழுத்து என்பதும் வட்டெழுத்தின் திரிபேயாகும். வட்டெழுத்து தமிழ் நாட்டில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது. பிறகு வட்டெழுத்து மறைந்து இப்போது வழக்காற்றில் இருந்து வருகிற கிரந்த எழுத்து வழங்கி வருகிறது. கிரந்த எழுத்தை உண்டாக்கினவர்கள் தென்னாட்டில் இருந்த பௌத்தரும் ஜைனரும் ஆவர். பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதநூல்களை மாகதி, அர்த்தமாகதி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதியிருந்தார்கள். அவர்கள் தமிழிலே தனித்தமிழ் நூல்களை எழுதியதோடு, தமது மதச்சார்பான நூல்களை பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் மொழியில் உள்ள சொற்களைக் கலந்து மணிப்பிரவாள நடையில் வசன நூல்களை எழுதினார்கள். மணிப் பிரவாள நூல்களை எழுதுவதற்கு, தமிழில் க்ஷ, ஜ, ஷ, ஹ, ஸ முதலான எழுத்துக்கள் இல்லாதபடியினாலே, இவ்வெழுத்துக்களை எல்லாம் அமைத்துக் கிரந்த எழுத்து என்னும் ஒருவகை எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தினாலே மணிப்பிரவாள நூல்களையும், பிராகிருத சமஸ்கிருத நூல்களையும் எழுதினார்கள். இந்தக் கிரந்த எழுத்தையும் அவர்கள் பிராமி எழுத்தில் இருந்துதான் உண்டாக்கினார்கள். இவ்வாறு பௌத்த ஜைனர்களாலே உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்து முதலில் அந்த மதத்தினரால் பயிலப்பட்டு வந்தது. பின்னர், பிற்காலத்துச் சோழ அரசர்கள் இந்தக் கிரந்த எழுத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். ஆகவே, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட ராஜராஜன் (முதலாவன்) பாண்டிய நாட்டை வென்று அந்த நாட்டிலும் கிரந்த எழுத்தை வழங்கத் தொடங்கினான் என்பதற்கு எபிகிராபி சான்று இருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்திலே, பாண்டி நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்து மறைந்து கிரந்த எழுத்து வழங்கத் தொடங்கியது. இந்தக் கிரந்த எழுத்துக் கி.பி. 10-ஆம் நுற்றாண்டு முதல் இப்போதும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து பிராமி எழுத்து தமிழ் நாட்டிலே வழங்கத் தொடங்கி, அதுவே காலக்கிரமத்தில் வட்டெழுத் தாகவும், கோலெழுத்தாகவும், கிரந்த எழுத்தாகவும் வெவ்வேறு உருவம் அடைந்து இன்றளவும் வழங்கி வருகிறது. தமிழ் எழுத்து மட்டுந்தான் பிராமி எழுத்திலிருந்து உண்டா யிற்று என்று நினைக்கவேண்டாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி, தேவநாகிரி முதலிய எழுத்துக்கள் எல்லாம் பிராமி எழுத்திலிருந்தே உண்டானவை. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள எல்லா மொழி எழுத்துக்களும் லத்தீன் எழுத்து எவ்வாறு தாய் எழுத்தாக இருந்ததோ அது போன்று, இந்திய மொழியில் உள்ள எழுத்துக்களுக்கெல்லாம் தாய் எழுத்தாக இருந்தது பிராமி எழுத்தேயாகும். 3. பழங்காலத்து எழுதுகருவிகள்* இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும், எளிதாகவும் அமைந் திருக்கின்றன. ஆனால் காகிதத்தாள் வருவதற்க முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதும், வாய்ப்பும் ஆன எழுது கருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர்க் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள், ஆதி காலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந்தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகையின் ஈரம் உலர்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தக சாலையில் வைத்துப் போற்றினார்கள். அவ்வாறு போற்றி வைக்கப் பட்டிருந்த களிமண் சுவடிகள் பல சமீப காலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் களிமண் சுவடிகள் மேல்நாட்டுக் காட்சிச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. பேபரைஸ் புத்தகம் பண்டைக் காலத்தில், நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் எகிப்தியர் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. அக்காலத்து எகிப்தியர்கள் எழுது கருவியாகப் பயன்படுத்திய பொருள் பேபரைஸ் என்பது. பேபரைஸ் என்னும் இச்சொல்தான் இப்போதும் ‘பேபர்’ என்று காகிதத்தாளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், எகிப்தியர் கையாண்ட பேபரைஸ் வேறு. இப்போதைய பேபர் வேறு. பேபரைஸ் என்பது எகிப்து தேசத்துச் சதுப்பு நிலங்களிலும், தண்ணீர்த் தேக்கமுள்ள இடங்களிலும் வளர்ந்த ஒருவகைக் கோரைச்செடியின் பெயர். இந்தக் கோரை, பத்து அல்லது பதினைந்து அடி உயரம் வளரும். ஒவ்வொரு தாளும் ஓர் ஆளின் கைப்பருமன் அளவு இருக்கும். இக்கோரைத் தாள்களை அறுத்துவந்து, பட்டையை உரித்து ஒரே அளவாக நறுக்கிப் பதப்படுத்தி, வெயிலில் வைத்து உலர்த்துவார்கள். காகிதம் போன்று இருந்த இக்கருவிக்குப் பேபரைஸ் என்னும் அக்கோரையின் பெயரே வாய்த்தது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பேபரைஸ் தாள்களை ஒன்றோ டொன்று ஒட்டிச் சேர்த்து, நீண்ட சுருளையாகச் செய்வார்கள். பெரிய சுருளில் 20 தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும். பேபரைஸ் தாள்கள் பற்பல அளவுகளில் அக்காலத்துக் கடைகளில் விற்கப்பட்டன. அவை இரண்டு அங்குல அகலம் முதலாகப் பதினைந்து அங்குல அகலம் வரையில் இருந்தன. இந்தப் பேபரைஸ் தாள்களில், எழுதுவதற்க ஒரு வகைப் பேனா பயன்பட்டது. இப்பேனா நாணற் செடிகளின் தண்டினால் செய்யப்பட்டது. நாணற் குழாய்களைச் சுமார் 6 அங்குல நீளமுள்ள துண்டுகளாக வெட்டி, அதன் ஒரு முனையைக் கூர்மையாகச் சீவிக் கூரின் நடுவைச் சிறிது பிளந்துவிட்டால், அது நேர்த்தியான பேனாவாக அமையும். இந்தப் பேனாக்களினால் கறுத்த மை கொண்டு, பேபரைஸ் தாள்களில் பண்டைக் காலத்து எகிப்தியர் எழுத்து வேலைகளைச் செய்து வந்தார்கள். இலக்கியம், இலக்கணம், காவியம், கணக்கு, கடிதம் முதலிய எல்லாம் பேபரைஸ் தாளிலேதான் எழுதப்பட்டன. எகிப்தியர் கொண்டிருந்த இந்த வழக்கத்தையே அந்நாட்டுக்கு அடுத்திருந்த தேசத்தாரும் கைக்கொண்டனர். எகிப்து தேசத்துக்கு அண்மையிலிருந்த கிரேக்கரும் (யவனர்), பினீஷியரும், ரோமரும், எபிரேயரும், அர்மீனியரும், எகிப்தியர் வழங்கிய பேபரைஸ் தாள்களையே தமது எழுதுகருவியாகக் கொண்டனர். இக்கருவி பாலஸ் தீனத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உபயோகத்திலிருந்தது வந்தது. கிரேக்கர்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இதை உபயோகித்தனர். ரோமர் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பேபரைஸைப் பயன்படுத்தினர். இந் நாடுகளில், கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரையில் பேபரைஸ் வழக்காற்றில் இருந்துவந்தது. எழுதுவோர் ஓரிடத்தில் அமர்ந்து, பேபரைஸ் சுருளையை வலது பக்கம் வைத்துக்கொண்டு, இடது கையினால், பிரிக்கப்பட்ட தாளைப் பிடித்துக்கொள்வார்கள். விரிந்த தாள் மடியில் படிந்திருக்கும். அதன் மேல், வலது கையினால், விரிந்த பகுதியில் நாணற் பேனாவினால் மை தொட்டு எழுதுவார்கள். ஒரு பத்தி எழுதியான வுடன், எழுதப்பட்ட பகுதியை இடது கையினால் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அடுத்த பத்தியை எழுதுவார்கள். இவ்வாறு சுருளை முழுவதும் பத்திபத்தியாக எழுதப்படும். முழுவதும் எழுதியானவுடன், நன்றாகச் சுருட்டிக் கயிற்றினால் கட்டிவைப்பார்கள். இவ்வாறு எழுதப்பட்ட பேபரைஸ் ஏட்டுச் சுருள்களில் சில இப்போதும் மேல்நாட்டுக் காட்சிசாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. பைபிள் கிரேக்க தேசத்தார், பேபரைஸ் சுருளைகளை பிப்லியன் (Biblion) என்று தமது மொழியில் வழங்கினர். பிப்லியன் என்னும் சொல்லுக்குச் சுவடி (புத்தகம்) என்பது பொருள். ரோமர்கள் தமது லத்தீன் மொழியில் பைபிள் (Bible) என்று வழங்கினர். பைபிள் என்றாலும் சுவடி என்பதுதான் பொருள். எனவே, நூல் அல்லது புத்தகம் என்னும் பொருள் உடைய பைபிள் என்னும் சொல், முற்காலத்தில் பொதுவாகப் புத்தகங்களுக்கு வழங்கப்பட்டு, இக்காலத்தில் கிறித்துவ வேதப்புத்தகத்துக்குச் சிறப்பிப் பெயராக வழங்கப்படுகிறது என்பது விளங்குகிறது. பிப்லியன், பைபிள் என்னுஞ் சொற்கள் பிப்லாஸ் என்னும் சொல்லிலிருந்து உண்டானவை. அக்காலத்தில் கப்பல் வாணிகத்தில் சிறந்த பினீஷியரின் முக்கியத் துறைமுகப்பட்டினம், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையிலிருந்த பிப்லாஸ் பட்டினம். இந்தத் துறைமுகத்திலிருந்து பினீஷியர், பேபரைஸ் தாள்களைக் கொண்டு போய்க் கிரேக்க, ரோம நாடுகளில் விற்றார்கள். கிரேக்கரும் ரோமரும் பிப்லாஸிலிருந்து வந்த பேபரைஸுக்குப் பிப்லியன் என்றும், பைபிள் என்றும் பெயரிட்டார்கள். கோடக்ஸ் புத்தகம் தொடக்கத்திலே நெடுங்காலம் வரையில், பேபரைஸ் நீண்ட சுருளைகளாக அமைந்திருந்தன. பேபரைஸ் சுருளையை முழுவதும் பிரித்துப் பார்த்தால் அன்றி, குறிப்பிட்ட ஒரு பகுதியை வாசிக்க இயலாது. இந்தச் சங்கடத்தைப் போக்குவதற்குப் பிற்காலத்திலே, புத்தக அமைப்பில் பேபரைஸ் தாள்களை அமைத்தனர். ஒரே அளவாக உள்ள பேபரைஸ் தாள்களை இரண்டிரண்டாக மடித்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி ‘பைண்ட்’ செய்தனர்; அதாவது, தற்காலத்திய புத்தக உருவத்தில் அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட பேபரைஸ் புத்தகங்களை எளிதாகப் புரட்டித் தமக்கு வேண்டிய பகுதியை எடுத்து வாசிக்கலாம். இத்தகைய சுவடிகளுக்கு கோடக்ஸ் (Codex) என்பது பெயர். கோடக்ஸ் அல்லது கௌடஸ் என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்குப் பொருள், மரப்பலகை என்பது. மெல்லிய பலகைகளாக அறுக்கப்பட்ட சிறு பலகைகளை நன்றாக இழைத்து, அதன்மேல் மெழுகைப் பூசி, அதில் கூரிய ஆணியால் கடிதம் எழுதுவது ரோமரது பண்டைக் காலத்து வழக்கம். இவ்வாறு அமைக்கப்பட்ட பலகைகளைக் கோடக்ஸ் என்று வழங்கினர். பிறகு, புத்தக வடிவில் அமைக்கப்பட்ட பேபரைஸ் சுவடிகளுக்கும் கோடக்ஸ் என்னும் பெயர் வழங்கப்பட்டது. தோல் புத்தகம் எகிப்து நாடு வெப்பமுள்ள நாடு. அதைவிட வெப்பம் குறைந்த கிரேக்கம், இத்தாலி முதலிய தேசங்களில் பேபரைஸ் விரைவில் கெட்டுப்போனபடியால், அந்நாட்டார் வேறு எழுது கருவிகளைத் தேடலாயினர். மிருகங்களின் தோல்கள், பேபரைஸுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டன. எகிப்து தவிர ஏனைய மத்தியதரைக் கடல் ஓரத்திலுள்ள நாடுகள் தொன்றுதொட்டுத் தோலை எழுது கருவியாக வழங்கிவந்தன. பிறகு, பேபரைஸ் உபயோகப் படுத்தப்பட்டது. பேபரைஸ் விரைவில் கெட்டுப்போவதைக் கண்ட பிறகு, இவர்கள் தோலையே மீண்டும் எழுது கருவியாகப் பயன் படுத்தினர். எகிப்திலுங்கூடத் தோல் எழுதுகருவியாகப் பிற்காலத்தில் பயன் படுத்தப்பட்டது. ஆனாலும், பேபரைஸ் அடியோடு வழக்கொழிந்து விடவில்லை. இரண்டும் கையாளப்பட்டு வந்தன. சாதாரண மிருகங்களின் தோலைவிட, வெள்ளாட்டின் அல்லது செம்மறியாட்டின் தோலை நன்கு பதப்படுத்தி எழுது கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு மெம்ப்ரெனா (Membrana) என்று பெயர் வழங்கினர். ஆட்டுத்தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து, மயிர்களைக் களைந்துவிட்டு, மறுபுறத்தில் உள்ள சதைப் பற்றுகளையும் நீக்கி, மரச்சட்டத்தில் மேல் உலரவைத்து, சீமைச் சுண்ணத்தினாலும் ஒருவகைக் கல்லினாலும் தேய்த்து மெருகு ஏறச் செய்வார்கள். இது நேர்த்தியான எழுது கருவியாகவும், இருபுறத்திலும் எழுதக்கூடியதாகவும் இருந்தது. இதைவிட நேர்த்தியான எழுதுகருவி, கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது. இது வெல்லம் (Vellum) என்று பெயர் பெற்றது. இது ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட எழுது கருவியைவிட மிக நேர்த்தியாகவும், அழகும், மெருகும் உள்ளதாக வும் இருந்தது. கன்றுக்குட்டித் தோல் என்னும் பொருளுடைய ‘வெல்லம்’ என்னும் லத்தீன் மொழிச் சொல் பிறகு ஏனைய மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட எழுதுகருவிகளுக்கும் வழங்கப்பட்டது. பெர்கமேனா தோலினால் செய்யப்பட்ட எழுது கருவிகளுக்கெல்லாம் இன்னொரு பொதுப் பெயரும் வழங்கிவந்தது. அப்பெயர் பெர்கமேனா (Pergamena) என்பது. சிறிய ஆசியாவில் பெர்கமம் என்னும் ஒரு நகரம் இருந்தது. இந்த நகரத்தில் ஏராளமான தோலினால் செய்யப்பட்ட எழுதுகருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்கப்பட்டன. பெர்கமம் நகரத்தில் செய்யப்பட்டபடியால், இத்தோற் கருவிகளுக்குப் பெர்கமேனா என்று அந்நகரத்தின் பெயரே வழங்கப்பட்டது. கலிங்கநாட்டிலிருந்து வந்த துணி களுக்குப் பண்டைக் காலத் தமிழர் கலிங்கம் என்று பெயர் வழங்கியதைப் போல. பெர்கமேனா என்னும் எழுதுகருவி எப்படி வழக்காற்றில் வந்தது என்பது பற்றி வர்ரோ (Varro) என்பவர் கூறும் கீழ்க்கண்ட செய்தியைப் பிளினி (Pliny) என்னும் யவன ஆசிரியர் தமது ‘இயற்கைச் சரித்திர வரலாறு’ என்னும் நூலில் குறித்துள்ளார்; ‘பெர்கமம் நாட்டு அரசனான யூமேனஸ் இரண்டாமவன் (Eumenes II, B.C.197-159) என்பவருக்கும், எகிப்து நாட்டு மன்னரான டாலமி (Ptolemy) என்பவருக்கும் தமது நாட்டுப் புத்தகசாலைகளைப் பற்றிப் போட்டி ஏற்பட்டது. பெர்கமம் நாட்டு நூல்நிலையம், அலெக்ஸாந்திரியா நகரத்து நூல் நிலையத்தை விடச் சிறப்படைந்துவிடுமோ என்று ஐயுற்ற டாலமி அரசன், தனது எகிப்து தேசத்திலிருந்து பேபரைஸ் எழுது கருவி களைப் பெர்கமம் நாட்டுக்கு அனுப்பக்கூடாதென்று உத்தரவிட்டான். இதனால், பெர்கமம் நாட்டில் அதிகமான நூல்கள் எழுதப்படுவது தடைபடும் என்பது அவன் கருத்து. பெர்கமம் நாட்டாருக்கு பேபரைஸ் கிடைக்காமற் போகவே, அந்நாட்டார் மெம்ரேனா என்னும் தோற்கருவிகளைக் கையாண்டனர். இவர் கூறும் இச்செய்தி உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. ஆனால், தோலினால் எழுது கருவிகளை உண்டாக்கி வெளிநாடுகளிலும் விற்பனை செய்து பேர்பெற்ற இடம் பெர்கமம் என்னும் நகரம் என்பது இதிலிருந்து உறுதிப்படுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, தோல் எழுதுகருவி மெல்ல மெல்ல நாடெங்கும் வழங்கலாயிற்று. பேபரைஸ் உபயோகமும் இருந்து வந்தது. படிப்படியாகத் தோற்கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் தோல் எழுது கருவிகள் முக்கிய இடம் பெற்றன. சீசரியா (Caesarea) என்னும் இடத்தில் இருந்த ஒரிஜன் (origen), பாம்பிலஸ் (Pamphilus) என்பவர்கள் அமைத்திருந்த நூல் நிலையங்கள் பாழடைந்துவிட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நூல் நிலையங்களைப் புதுப்பித்துச் செம்மைப்படுத்திய அகசியஸ், யூசொய்யஸ் என்னும் இரண்டு பாதிரிமார்கள், இந்நிலையங்களிலிருந்த சிதைந்து போன பேபரைஸ் சுவடிகளைத் தோல்களில் எழுதிவைக்கும்படி ஏற்பாடு செய்தார்கள். கான்ஸ்டான்டின் என்னும் சக்கரவர்த்தி தமது கான்ஸ்டான்டி நோபில் என்னும் நகரத்திலிருந்த 50 கிறித்துவக் கோயில்களுக்கு 50 விவிலிய நூல்களை வெல்லம் என்னும் தோல்களில் எழுதிவைக்கும் படி கி.பி. 332-இல் உத்தரவு செய்தார். (இத்தோற்கருவிகள், புத்தக உருவ அமைப்பிலே செய்யப்பட்டன.) இத்தகைய சான்றுகளினால் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலே, பேபரைஸ் தாள்களைவிடத் தோற் புத்தகங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகின்றது. பட்டும் மூங்கிலும் ஆதிகாலத்தில் சீனதேசத்தார் மூங்கிற்பட்டைகளின் மேலே எழுதிவந்தனர். பிறகு, பட்டுத் துணி நெய்யும் தொழில் சீன தேசத்திலே தோன்றிற்று. அப்போது அவர்கள் பட்டுத்துணிகளை எழுது கருவியாகக் கொண்டனர். துகிலிகையினால் (பிரஷினால்) மையைத் தொட்டு ஓவியம் எழுதுவதுபோல, அவர்கள் பட்டுத் துணியிலும், மூங்கிற்பட்டையிலும் எழுதிவந்தார்கள். பிறகு, காகிதம் செய்யும் முறையையும் அவர்களே கண்டுபிடித்தார்கள். அப்போது காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் காகிதத் தொழிற்சாலைகள் சீன நாட்டில் ஏற்பட்டன. காகிதத்தில் அச்சடிக்கும் முறையையும் சீனர்களே கண்டு பிடித்தார்கள். ஆனால், தனித்தனி அச்செழுத்துக்களை அவர்கள் உண்டாக்கவில்லை. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மரப் பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி அச்சிட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு மரப்பலகை எழுத்துக்கள் செதுக்கி அச்சிடப்பட்டன. ஓலைச் சுவடிகள் எகிப்தியர், கிரேக்கர், ரோமர், யூதர் முதலிய இனத்தார் பண்டைக் காலத்தில் பேபரைஸ் தாளையும், விலங்குகளின் தோல்களையும் எழுதுகருவியாக வழங்கி வந்த காலத்தில், நமது நாட்டார் பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச் சுவடிகளில் நூல்களை எழுதிவந்தார்கள். பனையோலைகளை ஒரே அளவாக நறுக்கி, ஒன்றாகச் சேர்த்து, இரண்டு மரச்சட்டங்களை இருபுறங்களிலும் நீண்ட பக்கமாக அமைத்து, அவைகளினூடே இரண்டு துளைகளை அமைத்து கயிறுகொண்டு சுற்றிக் கட்டிய சுவடிகள் தாம் ஓலைச்சுவடிகள். இப்பனையோலை ஏடுகளில் இரும்பினால் அமைந்த எழுத்தாணிகளினால் வரைவார்கள். ஓலைச் சுவடிகளைப்பற்றி எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆகையால், அதைப் பற்றி அதிகமாக எழுத வேண்டியதில்லை. இத்தகைய ஓலைச் சுவடிகள்தாம் இந்தியா, பர்மா, இலங்கை முதலிய கீழை நாடுகளில் முற்காலத்தில் வழங்கிவந்தன. கற்பாறையும் செப்பேடும் மலைப்பாறைகளிலும், கருங்கற் பலகைகளிலும் பழங் காலத்து அரசர் தங்களுடைய ஆணைகளையும், வெற்றிச் சிறப்புக்களையும் எழுதிவைத்தார்கள். அதுபோலவே, செப்பேடுகளிலும் (செம்புத் தகடுகள்) சாசனங்களை எழுதிவைத்தார்கள். பாறைகளையும், செப்பேடுகளையும் பொதுமக்கள் எழுது கருவிகளாகப் பயன்படுத்தவில்லை. அரசர்களும் சிற்றரசர்களுமே இவற்றைப் பயன்படுத்தினார்கள். பாறைக் கற்களிலும், செப்பேடுகளிலும் எழுதி வைத்தபடியால் அந்த எழுத்துக்கள் அழிந்து மறைந்து போகாமல் நிலைபெற்று இருக்கின்றன. குறியீடுகள் முதலியன பேபரைஸ், தோல். பனையோலை ஆகிய பண்டைக் காலத்து எழுதுகருவிகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறிகளைக் கொண்டிருக்க வில்லை. அன்றியும், சொற்களைத் தனித்தனியே பிரித்தெழுதாமல் ஒரே கோவையாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப் பட்ட சுவடிகளைப் படிப்பது கடினமாகவும், வருத்தமாகவும் இருந்தது. பழக்கப்பட்டவர்கள் மட்டும் இவைகளைப் படிக்கமுடியும். பழக்கப் படாதவர்களுக்கு வாசகத் தொடரைப் புரிந்துகொள்வது கடினமாய் இருந்தது. மேல் நாட்டார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சொற்களைப் பிரித்து எழுதத் தொடங்கினார்கள். இன்னும் பிற்காலத்தில் புள்ளிகள் முதலிய குறியீடுகளை வழங்கினார்கள். நமது நாட்டு ஓலைச்சுவடிக ளில் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் அமைக்கப்படவில்லை. பேப்பர் கடதாசி வந்த வரலாறு இப்பொழுது பேப்பர் என்று வழங்குகிற எழுதுதாள்களை முதன் முதல் கண்டுபிடித்தவர் சீனர்கள் என்பதை முன்னமே கூறினோம். கந்தைத் துணி, சணல், நார், வைக்கோல், முசுக்கட்டை மரம் முதலிய பொருள்களிலிருந்து காகிதத்தை அவர்கள் செய்து உபயோகப்படுத்தி வந்தார்கள். சீனர் காகிதத் தாளுக்கு என்ன பெயர் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இப்போது வழங்கப்படுகிற பேபர் என்னும் பெயர், ‘பேபரைஸ்’ என்னும் எகிப்திய மொழியிலிருந்து வந்தது. சீனர் கடதாசியைக் கி.பி. முதல் நூற்றாண்டில் உண்டாக்கினார்கள். அக்காலத்தில் சீனர் செய்த காகிதத் துண்டுகளில் சில, சீனநாட்டு நெடுஞ்சுவர்களிலிருந்து இப்பொழுது கண்டெடுக்கப் பட்டன. அன்றியும், சீனநாட்டிலே, புதைபொருள் ஆராய்ச்சியாளர், பழைய சீனநாட்டுக் காகிதங்களைப் பூமிக்குள்ளிலிருந்தும் கண்டெடுத்தனர். எலும்பும் ஓடும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அராபியர் பெரு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் அராபியர் அகலமான எலும்புகளையும், ஓடுகளையும் எழுது கருவிகளாக உபயோகித்து வந்தனர். அவர்கள் இந்தியா, சீனா முதலிய கீழ்நாடுகளுடன் பெருத்த வாணிபம் செய்து வந்தார்கள். அக்காலத்தில் மத்திய ஆசியாவில் சமர்கண்டு என்னும் இடத்தில் சீனர் காகிதப் பட்டரை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, காகிதம் செய்துவந்தனர். சீனருடன் அராபியர் போர் செய்து, சீனர் சிலரைச் சிறைப்பிடித்தனர். சிறைப்பட்ட சீனரில் சிலர் காகிதம் செய்யும் தொழிலையறிந்தவர்; அவர்களிடமிருந்து அராபியர் அத் தொழிலைக் கற்றனர். செய்யும் தொழிலின் இரகசியத்தைத் கி.பி. 650-இல் கண்டுகொண்டனர். பிறகு, தாங்களே காகிதம் செய்யத் தொடங்கினார்கள். இவ்விதமாக, அராபியர் காகிதத் தொழிலைச் சீனரிடமிருந்து கற்றுத் தங்கள் நாடுகளில் பரவச் செய்தனர். கி.பி. 800-இல் பாக்தாத் நகரத்தில் காகிதப் பட்டரை இருந்தது. கி.பி. 900-இல் எகிப்து நாட்டில் ஒரு காகிதப் பட்டரை இருந்தது. கி.பி. 1100-இல் மொராக்கோ தேசத்தில் காகிதத் தொழிற்சாலை இருந்தது. அராபியர், ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் தேசத்தையும் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டார்கள். அக்காலத்தில், அதாவது, கி.பி. 1150-இல் ஸ்பெயின் தேசத்திலும் அராபியர் காகிதத் தொழிற்சாலையை ஏற்படுத்தினார்கள். பிறகு, அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாட்டினர் காகிதம் செய்யக் கற்றுக்கொண்டார்கள். இவ்வாறு, கீழ்நாடாகிய சீன தேசத்திலிருந்து காகிதத் தொழில், அராபியர் வழியாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து அராபியர் மூலமாகவே மேல்நாடுகளுக்குச் சென்றது. பேபரைஸ், தோல் இவைகளைவிடக் கடதாசித்தாள், விலை குறைவாகவும், அதிக வாய்ப்பாகவும் இருந்தபடியால், கடதாசித் தாள்களை மக்கள் நாளுக்கு நாள் அதிகமாகக் கையாளத் தொடங்கினார்கள். ஆகவே, நாளடைவில் பேபரைஸும், தோலும் வழக்கொழிந்துவிட்டன. நமது நாட்டுக்கும் முகம்பதியர்கள் தாம் கடதாசியை முதன் முதல் கொண்டு வந்தனர். கடதாசி வந்தபிறகு ஓலையில் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. இயந்திரக் காகிதம் காகிதப் பட்டரையில் கையினாலேயே கடதாசியை அக்காலத் தில் செய்து வந்தார்கள். ஆகவே, அக்கடதாசிகள் தடித்தனவாயும், முரடாயும் இருந்தன. பிறகு 19-ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே, பிரான்ஸ் தேசத்தில் மெஷின் என்னும் இயந்திரத் தினால் கடதாசித்தாள் செய்யத் தொடங்கினார்கள். இந்த இயந்திரம் பிற்காலத்தில் படிப்படியாகச் சீர்திருத்தப்பெற்று, இப்போது புதிதாகப் பல நுட்பமான கருவிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காகித யந்திரங்களின் மூலமாகப் பல வகையான காகிதங்களை நாம் இன்று பெற்றுக் கொள்ளுகிறோம். காகிதத் தொழில் செம்மைப்படுத்தப்பட்டது போலவே, நாணற் குழாய்ப் பேனாக்களுக்குப் பதிலாகக் குவில்பேனா என்னும் இறகுப்பேனா வந்து, அதற்குப் பிறகு நிப்பு (Nib) உள்ள முட்பேனா உண்டாகி, இப்போது பௌண்டன் பேனாவும் வழக்காற்றில் இருந்து வருகிறது. நாம் இப்போது சாதாரணமாக வழங்கிவருகிற பேபர், பேனாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் காண்பார்களானால், எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார்கள்! 4. சங்க காலத்து நடுகற்கள்* பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போற்றினார்கள். போர்க் களத்தில் புறங்காட்டி ஓடாமல் திறலோடு போர் செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். திறலோடு போர் செய்து களத்தில் விழுந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்களில் காணலாம். வெட்சிப்போர், கரந்தைப்போர், வஞ்சிப்போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் ஏழு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். சங்க காலத்தில் அரசர்கள் போர் செய்வதைத் தங்கள் கடமைகளில் முக்கிய மானதாகக் கருதினார்கள். ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர் செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறளும் கூறுகிறது. ‘என் ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர் என் ஐ முன்நின்று கல்நின் றவர்’ (படைச்செருக்கு) வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. வீரக்கல் நடுவதற்கு ஐந்து துறைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர். அவை காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், வாழ்த்து என்று ஐந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கல்கோள் என்பது தேர்தெடுத்த கல்லைக் கொண்டுவருவது, நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற் பீலிகளையும், மாலைகளையுஞ் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறலையும், புகழையும் வாழ்த்திப் பாடுவது, கல் நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக வீரர்களும் வந்து சிறப்பு செய்வார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும் சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்ஹிர் என்று பெயர் கூறினார்கள். மென்ஹிர் என்றால் நெடுங்கல் அல்லது உயரமான கல் என்பது பொருள். மென்ஹிர் (Menhir) என்பது பிரெடன் (Breton) மொழிச்சொல் (men = stone. Hir = High) இந்தோனேசியத் தீவுகள் எனப்படும் ஜாவா சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே வேறு நாட்டாரும் நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது. வீரர்களுக்கு நடுகல் நட்டதைச் சங்கச் செய்யுள்களில் காண்கிறோம். கரந்தைப் போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 261:13-15.) இன்னொரு கரந்தைப் போரில் வீரமரணம் அடைந்த ஒரு வீரனுக்கு வீரக்கல் நட்டபோது அவன் மீது கையறுநிலை பாடினார் புலவர் உறையூர் இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து மாலைகளாலும், மயிற் பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை அச்செய்யுளில் அவர் கூறுகிறார். (புறம். 264) சேலம் மாவட்டத்திலிருந்த தகடூர் கோட்டையின் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசன் தகடூரின் மேல் படையெடுத்து வந்து அக் கோட்டையை முற்றுகையிட்டான். அதன் காரணமாகப் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. அப்போரில் அதிகமான் நெடுமான் அஞ்சி புண்பட்டு இறந்து போனான். அவனுக்கு வீரக்கல் நட்டு அவன் வீரத்தைப் போற்றினார்கள். அப்போது அவனுடைய புலவராக இருந்த ஒளவையார் கையறு நிலைபாடினார். (புறம். 232) கோவலர் (ஆயர்) வளர்த்து வந்த பசுமந்தைகளைப் பகையரச னுடைய வீரர்கள் வந்து ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதனை யறிந்த அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று வில்லை வளைத்து அம்புமாரி பொழிந்து பகைவரை ஓட்டித் தன்னூர்ப் பசுக்களை மீட்டுக் கொண்டான். ஆனால், வெற்றி பெற்ற அவன் பகை வீரர்கள் எய்த அம்புகளினால் புண்பட்டு மாண்டு போனான். திறலுடன் போர் செய்து மாண்டு போன அவ்வீரனுக்கு அவ்வூர்க் கோவலர்கள் நடுகல் நாட்டார்கள். அந்த நடுகல்லுக்கு வேங்கை மரத்துப் பூக்களினாலும் பனங்குருத்துகளாலும் மாலைகள் கட்டிச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறு கருத்தும்பியார் தம்முடைய செய்யுளில் கூறியுள்ளார். (புறம் - 265) இன்னொரு ஊரில் பகைவர்கள் வந்து அவ்வூர்ப்பசு மந்தை களைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி மந்தைகளை மீட்டுக் கொண்டான். ஆனால். பகைவர் எய்த அம்புகள் உடம்பில் பாய்ந்த படியால் அவன் இறந்து போனான். அவனுக்காக நட்டவீரக் கல்லில் அவனுடைய பெயரைப் பொறித்து மயிற் பீலிகளினால் அக் கல்லை அழகு செய்து போற்றினார்கள் என்று மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடுகிறார். (அகம் 131: 6-11) தன் ஊர்ப் பசுக்களைப் பகைவர் கவர்ந்துகொண்டு போன போது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து பசுக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ் வூரார் அவ்வீரனின் நினைவுக்காக வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின் மேல் அவ்வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும், பீலிகளையுஞ் சூட்டினார்கள். நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி), பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை வடமோதங்கிழாhர் கூறியுள்ளார். (புறம். 260) ஒரு ஊரிலிருந்த பசு மந்தைகளைச் சில வீரர்கள் வந்து பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர் சிலர் அவர்களைத் தொடர்ந்து சென்று பசுக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர் நின்று அம்பு எய்தனர். பகைவரின் அம்புக்கு அஞ்சிச் சில வீரர்கள் ஓடிப்போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர் செய்தான். பகைவீரர்களின் அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து அவன் அக்களத்திலே இறந்து போனான். அவ் விறல்வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் அவ்வூரார். (புறம். 263) ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ்வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள். அந்நாளில் அந்நடுக்கல்லை நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் புகைத்தார்கள். அந்தப் புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. வீட்டில் சமைத்த மதுவை இறந்த வீரனுக்குப் பலியாகக் கொடுத்தனர். இந்தச் செய்தியை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 329) சங்க காலத்துத் தமிழகத்திலே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால் நாடெங்கும் நடுகற்கள் காணப்பட்டன. “நல்லமர் கடந்த நலனுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” என்று (அகம் 67: 8-10) புலவர் நோய் பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன. நடுகற்கள், பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவை. அவை நீண்டதாக இருந்தன. ‘நெடுநிலை நடுகல்’ என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடி கொடிகள் படர்ந்திருந்தன. நடுகல்லில் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்தபடியால் ‘எழுத்துடை நடுகல்’ என்று கூறப்பட்டது. வழிப்போக்கர் வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில சமயங்களிலே அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில எழுத்து மழுங்கி மறைந்து போய் சில எழுத்துக்களே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துக் களைப் படிப்போருக்கு அதன் பொருள் விளங்காமலிருக்கும். சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். எஃகினால் ஆன அம்பு முனையைத் தேய்க்கும்போது நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் சில மாய்ந்து போகும். எஞ்சியுள்ள எழுத்துக்களைப் படிப்போருக்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச்செய்தியை மருதன் இள நாகனார் கூறுகிறார். “இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக் கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல் பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் சூர்முதல் இருந்த ஒமையம் புறவு.” (அகம் 297-5 :11) உப்பு வாணிகராகிய உமணர் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும் போது வழியில் உள்ள நடுகற்களின் மேல் வண்டிச் சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களில் ஒன்றிரண்டு எழுத்துக் களைத் தேய்த்து விடுவதும் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டுங் கூறுகிறார். “மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப் புன்றலை சிதைத்த வன்றலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங் கண்பொரி கவலைய கானகம்” (அகம். 343: 4-9) நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும் பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு. இதுவரையில் கடைச்சங்க காலத்து (கி.மு. 300 முதல் கி.பி. 250 வரையில்) நடுகற்களைப் பற்றி ஆராய்ந்தோம். அக்காலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும், கன்னட நாட்டிலும் வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் இருந்து வந்தது. பிற் காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பிற் காலத்து நடுகற்களில் பிற்காலத்து வட்டெழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் சங்ககாலத்து வீரக்கற்கள் ஒன்றேனும் இதுகாறும் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்து எது? வட்டெழுத்து என்னும் ஒருவகையான எழுத்து முற்காலங்களில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. வட்டெழுத்து வழங்குவதற்கு முன்பு பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கிவந்தது என்பதை இப்போது அறிகிறோம். மலைக் குகைகளிலே பாறைக் கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள பிராஃமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கு முன்பு பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தது என்பதை அறிகிறோம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அதாவது கடைச்சங்க காலத்திலே பிராஃமி எழுத்து தமிழகத்தில் வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கிற பிராஃமி எழுத்துக்கள் தமிழ் நாட்டுப் பௌத்த ஜைன மதத்தார்களால் எழுதப்பட்டவை. பௌத்த ஜைனர் காலத்துக்கு முன்பு, அதாவது பிராஃமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் என்ன எழுத்து வழங்கி வந்தது? தமிழர்களுக்கு வேறு எழுத்து இல்லை என்றும் பிராஃமி எழுத்தைத்தான் தமிழர்களும் கைக்கொண்டார்கள் என்றும், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு முதலிய சங்கநூல்கள் எல்லாம் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகிறவர்கள், (பிராஃமி எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு), தொல்காப்பியம் முதலிய சங்க காலத்து நூல்கள் வட்டெழுத்தினால் எழுதப்பட்டன என்று கூறி வந்தார்கள். இப்போது பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்பது தெரிந்த பிறகு, தொல்காப்பியம் முதலிய சங்க நூல்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள். இன்னொரு சாரார், பிராஃமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையாக எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்றும், பிராஃமி எழுத்து வந்த பிறகு அந்த பழைய எழுத்து மறைந்துவிட்டதென்றும் கூறுகிறார்கள். அந்தப் பழைய எழுத்து இன்ன உருவமுடையது என்பது தெரியவில்லை. பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் வேறு வகையான பழைய எழுத்து இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கும் சான்று இல்லை. இருக்கவில்லை என்று சொல்வதற்கும் சான்று இல்லை. பிராஃமி எழுத்துத்தான் முதன் முதல் தமிழர் அறிந்த எழுத்து, அதற்கு முன்பு எந்த எழுத்தும் தமிழில் இல்லை என்று கூறுகிறவர், வேறு பழைய எழுத்து இருந்ததில்லை என்று கூறுவதற்குச் சான்று காட்டவில்லை. பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இருந்ததா இல்லையா என்னும் கேள்விக்குச் சரியான விடை கூறத்தகுந்தவை சங்ககாலத்து நடுகற்களே. சங்ககாலத்து நடுகற்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை மேலே சான்று காட்டிக் கூறினோம். அந்த வீரக்கற்கள் கிடைக்குமானால், அக் கற்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அந்தக் காலத்தில் வழங்கி வந்த எழுத்தின் வரிவடிவத்தையறியலாம். ஆனால், இது வரையில் சங்க காலத்து நடுகல் ஒன்றேனுங் கண்டுபிடிக்கப்பட வில்லை. பௌத்தர் ஜைனர் மட்டும் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் பிராஃமி எழுத்தை எழுதினார்கள் என்றால், அக்காலத்தில் பௌத்தர் ஜைனரல்லாத தமிழர் வேறு ஒரு வகையான எழுத்தை எழுதியிருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் நிச்சயமாக அக்காலத்து நடுகற்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, கடைச்சங்க காலத்தில் பிராஃமி எழுத்து வழங்கி வந்ததா அல்லது வேறு வகையான எழுத்துவழங்கி வந்ததா என்பதை அறிவதற்கு அக் காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அகழ்வாராய்ச்சி செய்யும் புதை பொருள் ஆய்வாளர் (ஆர்க்கியாலஜி இலாகா) இதுபற்றி இதுவரையில் சிந்திக்கவே இல்லை. இனியாயினும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக. தமிழக அரசு தன் சொந்தச் செலவில் ஆர்க்கியாலஜி இலாகா ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த இலாகா, சங்ககாலத்து நடுகற்களைக் கண்டுபிடித்து உதவுமானால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வீரக்கற்கள் நிலத்திலே ஆழ்ந்து புதைந்து கொண்டிருக்கும் பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்திலும் புதைந்து கிடக்கலாம். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும் தமிழகத்து ஆர்க்கியாலஜி இலாகாவும், மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் இணைந்து ஒன்று சேர்ந்து இதில் முயல்வார்களானால் பயன் காணக்கூடும். தமிழ்நாட்டு ஆர்க்கியாலஜி இலாகாவும் மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் (எபிகிராபி இலாகாவும் உட்பட) கோயில்களிலுள்ள கல்வெட்டெழுத்துகளையும், தரைக்குமேலே காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளையும் மட்டும் கண்டு பிடித்துக் கொண்டிருப்பது போதாது. தரைக்குள் புதைந்து கிடக்கிற வீரக்கல் போன்றவற்றையும் அகழ்ந்தெடுத்து வெளிப்படுத்த வேண்டும். பெயரளவில் மட்டும் செயலாற்றாமல் சுறுசுறுப்பாக முயற்சியோடு செயலாற்ற வேண்டும். “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?” 5. இலக்கியத்தில் நடுகல்* உலகத்திலே எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றினார்கள். எல்லா நாட்டிலும் வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழ் நாட்டிலே வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழர் போரைப் பற்றித் தனி இலக்கணம் எழுதினார்கள். போரைப் பற்றிய இலக்கியங் களும் இருந்தன. அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந் தார்கள். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல்களும், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழில் உண்டு. போர்முறையை ஏழு விதமாகப் பிரித்திருந்தார்கள். நிரை (பசு மந்தை) கொள்ளுதல் வெட்சி என்றும், நிரைமீட்டல் கரந்தை என்றும் பெயர் பெற்றன. நாட்டைப் பிடிக்க ஓர் அரசன் படையெடுத்துப் போருக்கு வரும்போது அவனை எதிர்த்துப் போர் செய்து தன் நாட்டைக் காப்பாற்றுவான் அந்த நாட்டரசன். இவ்விரு அரசருக்கும் நடக்கும் போருக்கு வஞ்சிப்போர் என்பது பெயர். ஓர் அரசன் பகை யரசனுடைய கோட்டைமேல் படையெடுத்துச் சென்று கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகையிடுவது உழிஞைப்போர் என்று பெயர் பெற்றது. முற்றுகையிடப்பட்ட மதிலுக்குள்ளிருக்கும் அரசன் கோட்டைக் குள்ளிருந்து போர் புரிவது நொச்சிப்போர் என்று பெயர் பெற்றது. இரண்டு அரசர்கள் தம்முடைய வீரத்தைக் காட்ட போர் செய்வது தும்பைப் போர் என்று பெயர் பெற்றது. இவற்றைத் தவிர வாகைப் போர் என்று ஒரு வகைப் போர் உண்டு. இது அரசர், போர் வீரர்களுக்கு மட்டு மல்லாமல் இசை பாடுதல், யாழ் வாசித்தல், நாட்டியம் ஆடுதல், சேவல் போர், காடைப் போர், தகர் (ஆடு) போர் முதலிய ஏனை யோருக்கும் பொதுவானது. இவ்வாறு பலவகையான போர்முறைகள் பழந்தமிழ் நாட்டில் இருந்தன. போர்க்காலங்களிலே வீரப்போர் செய்து பின் வாங்காமல் உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு; அவ் வீரர்களுக்குச் சிறப்பு செய்தார்கள். வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலந் தொட்டு இருந்தது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக் கணக்கான நடுகற்கள் தமிழ் நாட்டிலே பல இடங்களிலே காணக்கிடக் கின்றன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் நடுகற்கள் பலவற்றைக் கண்டுபிடித்து அவற்றைப் படி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல நூற்றுக்கணக்கான நடுகற்கள் கண்டுபிடிக்கப்படாமலே யுள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் போரில் மடிந்த வீரர்க்கு நடுகல் நடுவது பற்றி இவ்வாறு கூறப்படுகிறது. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் (சீர்த்த மரபில் பெரும்படை) வாழ்த்தலென்று இருமூன்று மரபில் கல். போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை, மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு, அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி, அதை நட வேண்டிய இடத்தில் நட்டு, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பு செய்து வாழ்த்துவார்கள். இவை ஐந்தும் நடுகல் நடுவதற்குரிய ஐந்து துறைகளாகும். (மேற்சொன்ன தொல்காப்பியச் சூத்திரத்தில் ‘சீர்த்த மரபில் பெரும்படை’ என்று ஒரு தொடர் கூறப்படுகிறது. பெரும்படை என்பது போர்க்காலத்தில் மடிந்துபோன அரசனுக்கு எடுக்கப்படுகிற பள்ளிப்படை. இது பற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீர பத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்பு செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன் கட்டையேறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மாஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும். இந்த வகையான நடுகற்களைப் பற்றியும் இங்கு ஆராய்ச்சி இல்லை. பகைவருடைய (மாற்றாருடைய) ஊரில் போய் அங்குள்ள தொறுக்களைக் (எருமை, பசுமந்தைகளை) கவர்ந்து கொண்டு வருவது பழந்தமிழகத்தில் அடிக்கடி நடந்த சாதாரண நிகழ்ச்சி. இது களவுக் குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த வெட்சிப் போரைச் சிற்றரசர்களும், வீரத்தில் சிறந்த மறவர்களும், அரசர்களுங்கூட செய்தார்கள். முள்ளூர் மன்னன் (மலையமான் திருமுடிக்காரி) இரவில் குதிரை மேல் சென்று அயலூரிலிருந்து ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவது வழக்கம். இதைக் கபிலர் கூறுகிறார். மாயிரு முள்ளூர் மன்னர் மாவூர்ந்து எல்லித் தரீஇய இனநிரை (நற்றிணை-291-7-8) சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாக ஆடுகோட்பாட்டுச் சேர லாதன், தண்டாரணிய நாட்டில் (விந்திய மலைப்பிரதேசத்தில்) சென்று பகைவருடைய பசுக்களைக் கவர்ந்து கொண்டு சேரநாட்டுத் தொண்டிப்பட்டினத்தில் கொண்டு வந்து பலருக்குக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் 6-ஆம் பத்தும் பதிகம் கூறுகிறது. பகைவர் கொண்டு போன ஆனிரைகளை மீட்பதற்காக நடந்த கரந்தைப் போரில் ஒரு வீரன் போர் செய்து ஆனிரைகளை மீட்டான். ஆனால், அவன் வெற்றியடைந்த போதிலும் அவன் பகைவரின் அம்புகளினால் இறந்து போனான். இதை ஒக்கூர் மாசாத்தியார் கூறுகிறார். கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே மேனாளுற்ற செருவிற்கு இவள்தன் ஐ யானை யெறிந்து களத் தொழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டு பட்டனனே. இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம் 279) வெட்சி வீரர் கவர்ந்து கொண்டுபோன ஆனிரைகளை மீட்பதற் காகக் கரந்தை வீரர் செய்யும் போர் கடுமையானது. ஆனிரைகளைக் கவர்ந்து கொண்ட வெட்சி வீரர் எளிதில் ஆனிரைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கடுமையாகப் போர் செய்து கரந்தை வீரர்களைக் கொல்வார்கள். வெட்சி வீரரிடமிருந்து ஆனிரைகளை மீட்கும் கரந்தை வீரர், கடலுக்குள் புகுந்து மறைந்த மண்ணுலகத்தைப் பெருமுயற்சி செய்து மீட்டெடுத்த வராகப் பெருமாளுக்கு உவமை கூறப்படுகின்றனர். கடல் புக்கு மண்ணெடுத்து காரேனக் கோட்டின் மிடல் பெரிதெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதார் உள்ளத் துரந்து நிரைமீட்ட தோள். (பெரும்பொருள் விளக்கம்) கரந்தைப் போரில் வெற்றியோடு உயிர்விட்ட வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் ஏராளமாக உள்ளன. அவர்களைப் பற்றிய செய்யுட்களும் இலக்கியங்களில் பல உள்ளன. அச்செய்யுட்களை யெல்லாம் இங்குக் காட்ட வேண்டுவது இல்லை. ஆனால், ஒரு செய்யுளை மட்டும் கூறி மேற் செல்லுவோம். வடமோதங்கிழார், கரந்தைப் போரில் ஒரு வீரன் ஆனிரைகளைப் பகைவரிடமிருந்து மீட்டின பின்பு அவனுடைய உடல் முழுவதும் பகைவருடைய அம்பு தைத்து அவன் இறந்து போனதைக் கூறுகிறார். சந்திர கிரகணத்தின் போது, முழு நிலாவைப் பாம்பு விழுங்கி விட, அதன் வாயிலிருந்து சந்திரன் மிக அரிதின் முயன்று வெளிப்பட்டது போல, அந்த வீரன் தன் ஊர் ஆனிரைகளைப் பகை வீரரிடமிருந்து கடும் போர் செய்து மீட்டுக் கொண்டான். ஆனால் அந்தோ! அவன் உடம்பு முழுவதும் பகை வீரர்கள் எய்த அம்புகள் தைத்துவிட்டன. அவன் உயிரானது பாம்பு தன் தோலை உரித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது போல, அவனுடைய உடம்பை விட்டுப் பிரிந்து வீரசுவர்க்கத்துக்குப் போய்விட்டது. உயிர் போய்விட்டபடியால், அவனுடைய உடம்பு, அம்புகள் தைத்த இலக்கு மரம்போலக் காணப்பட்டது. அவனுடைய பெயரும் புகழும் அவனுடைய நடுகல்லில் எழுதப்பட்டு விளங்கிற்று என்று அப்புலவர் அழகான ஒரு செய்யுளில் கூறுகிறார். முன்னூர்ப் பூசலில் தோன்றித் தன்னூர் நெடுநிரை தழிஇய மீளியாளர் விடுகணை நீத்தம் துடிபுணை யாக வென்றி தந்து கொன்று கோள்விடுத்து (வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின்) மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த உரையன் ஆகி உரிகளை அரவம் மானத் தானே அரிது செல் உலகிற் சென்றனன் உடம்பே, கானச் சிற்றியாற்று அருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி ஆண்டொழிந் தன்றே உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடஞ்சால் மஞ்ஞை ஆணி மயிர் சூட்டி இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே. (புறம். 260 : 12-28) (குறிப்பு: இச்செய்யுளில், ‘கம்பமொடு துளங்கிய இலக்கம்’ என்பது இலக்கு மரத்தை, வீரர்கள் குறி தவறாமல் அம்பு எய்து பழகுவதற்காக, உயரமாக வளர்ந்த இலவம் பஞ்சுமரம், முருக்கமரம் போன்ற மரங்களைத் தேர்ந்தெடுத்து அந்த மரங்களின் கிளைகளை யெல்லாம் வெட்டிவிட்டு நடுமரத்தை மட்டும் விட்டுவைப்பார்கள். அந்த உயரமான மரத்தின் ஓரிடத்தைக் குறியாக வைத்துக்கொண்டு வில்லிலிருந்து அம்பு எய்து பழகுவார்கள். அம்மரத்தின் மேல் வேல் எரிந்தும் பழகுவார்கள். ‘வென் வேல், இளம்பல் கோசர் விளங்கு படை கன்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெரு மரக் கம்பம்’ என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறம் 169இல் இதனைக் கூறுவது காண்க. இந்த இலக்குக் கம்பத்தில் பல அம்புகள் தைத்துக் கொண்டிருப்பதுபோல, ஆனிரைகளை மீட்ட வீரன் உடம்பில் பகைவீரர் எய்த அம்புகள் தைத்திருந்தன. வட மோதங்கிழார், இலக்குக் கம்பத்தில் அம்புகள் தைத்துக் கொண் டிருப்பது போல, வீரனுடைய உடம்பில் அம்புகள் தைத்துக் கொண் டிருந்தன என்று கூறுவது வெறுங் கற்பனை அன்று. வடஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலைத் தாலுகாவைச் சேர்ந்த செங்கம் என்னும் ஊரில் உள்ள நடுகற்கள் இரண்டில், தொறு மீட்டு இறந்து போனவர் உடம்பில் அம்புகள் தைத்திருப்பது போன்று சிற்ப உருவம் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் விராடபர்வத்தில் தொறு கவர்தலும், தொறு மீட்டலும் கூறப்படுகிறது. துரியோதனனுடைய வீரர்கள் விராட தேசத்துக்கு வந்து அந்த தேசத்தின் பசுமந்தைகளை ஓட்டிச் கொண்டு போனார்கள். அப்போது அங்குப் பேடியின் உருவத்தோடு அஞ்ஞாத வாசஞ்செய்திருந்த அர்ச்சுனன், உத்தரகுமரனைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய்ப் போர் செய்து ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான் என்று மகாபாரதம் கூறுகிறது. கரந்தைப் போரில் தொறு மீட்கச் சென்றவருடைய பகைவருடைய அம்புக்கு அஞ்சித் திரும்பி வருவதும் உண்டு. ஆனால் அவர்களை நாட்டு மக்கள் மதிக்கமாட்டார்கள். தொறுவை மீட்காமல் பகைவருடைய அம்புக்கு அஞ்சிப் புறங்காட்டி ஓடிவந்த ‘வீரர்களை’த் திருத்தக்க தேவர் புகழ்வது போல இகழ்ந்து நகைக்கிறார். இராசமாபுரத்திலிருந்து பசு மந்தைகளை அயல் நாட்டு மறவர்கள் வந்து கவர்ந்து கொண்டு போனார்கள். இதை அறிந்த அரசன் கட்டியங்காரன், தன்னுடைய பிள்ளைகளை அழைத்து மறவர்கள் கவர்ந்து கொண்டு போன ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வருமாறு ஏவினான். அவர்கள் சென்று மறவர்களுடன் போர் செய்தார்கள். ஆனால் மறவர்கள் எய்த அம்புக்கு ஆற்றாமல் போர்க்களத்திலிருந்து ஓடி வந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைச் சிலர் அரசனிடம் சென்று தெரிவித்தார்கள். அரசனுடைய மக்கள் தோற்று ஓடிவந்துவிட்டதை வெகு நயமாகக் கூறினார்கள். வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன் சோர் கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங் கயல் தடங்கண்போலும் அம்பு கொண்டரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார் செம்பு கொண்டன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ! என்றார். (கோவிந்தையார் இலம்பாம் 31) இதில், ‘அம்பு கொண்டரசர் மீண்டார் ஆக்கொண்டு மறவர் போனார்’ என்பது படித்துப் படித்து இன்புறத்தக்கது. போரிலே பின் வாங்காமல் வீரப்போர் செய்து உயிர் விட்டவர்களின் உயிர் விண்ணுலகஞ்சென்று வீரசுவர்க்கத்தைச் சேர்கிறது என்றும், அந்த வீரசுவர்க்கத்தில் அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் என்றும் அக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளியும் ‘போர்’ என்னும் ஊரில் போர் செய்தார்கள். அந்தப் போரில் இரண்டு பேரும் உயிர் விட்டார்கள். இறந்துபோன அவர்கள் ‘அரும்பெறல் உலகத்தை’ யடைந்தார்கள் என்று கழாத்தலையார் என்னும் புலவர் (புறம் 62) கூறுகிறார். வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால். (புறம் 62 : 16-19) சீவகசிந்தாமணி மண்மகள் இலம்பகத்தில், வீரப்போர் செய்து மாண்டவர் வீரசுவர்க்கம் அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது. விபுலனும் வேறு ஒரு வீரனும் போர்செய்தபோது அந்த வீரன் வீரமரணம் அடைந்தான். அப்போது அரமங்கையர் அவன்மேல் மலர்மாரி சொரிந்து தொழுது வீரசுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்கள் என்று சிந்தாமணிக் காவியம் கூறுகிறது எரிந்தார் அயில் இடைபோழ்ந்தமை உணராதவன் நின்றான் சொரிந்தார் மலர் அரமங்கையர் தொழுதார் விசும்படைந்தான் (சீவகசிந்தாமணி மண்மகள் 164) என்னும் செய்யுளும், தற்புரந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தால் கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர் தோய்வர் பொற்ற சொன்மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல்மேல் நிற்பர் தம் வீரந்தோன்ற நெடும்புகழ் பரப்பி என்றான். (சீவகசிந்தாமணி மண்மகன் 201) என்னும் செய்யுளும் போரில் மடிந்த வீரர், வீரசுவர்க்கம் போகிறார் என்பதைக் கூறுகின்றன. சில நடுகற்களிலே கீழ்ப்பகுதி, மேல்பகுதிகளாக இரண்டு சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதி சிற்பம், போர் வீரன் போர் செய்வது போன்று காணப்படுகிறது. அந்த சிற்பத்துக்கு மேலேயுள்ள சிற்பம், அந்த வீரன் போரில் இறந்த பிறகு வீரசுவர்க்கம் சென்று, அங்கு அரமங்கையரோடு இருப்பதைக் குறிக்கின்றன. இவை, வீரமரணம் அடைந்த வீரன், வீரசுவர்க்கம் சென்று இன்பம் அனுபவிக்கிறான் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன. முன்பு சொன்னது போல நடுகற்களைப் பற்றித் தமிழ் இலக்கியங் களிலே பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஏட்டிலே கூறப்படுகிற நடுகற்களைப் போலவே, நாட்டிலும் நடுகற்கள் காட்சியளிக்கின்றன. அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருவாரூர் மும்மணிக் கோவை யில், “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டக்கல்லும்” என்று நடுகல்லைக் கூறுகிறார். 6. சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம்* கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாசனத்தைப் பற்றிச் சென்ற இதழில் எழுதினோம். இந்த இதழிலே கடைச் சங்க காலத்துப் பாண்டியனைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாதனத்தைப் பற்றிக் கூறுவோம். பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகா விலே மதுரை நகரத்துக்கு அருகிலே உள்ள மாங்குளம் என்னும் ஊரிலேயுள்ள மலைப்பாறை யொன்றிலே இந்தப் பிராமி எழுத்துச் சாசனம் செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் வேறு சாசனங்களுடன் எபிஃகிராபி (சாசன) இலாகாவின் 1906-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. (460-465 of 1906, 242 of 1963-64) இந்த சாசனம் கண்டுபிடிக்கப்பட்டு அறுபது ஆண்டுகளாகி யும், இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா வாசித்து வெளியிடாமலே இருந்திருக்கிறது! சமீப காலத்தில்தான் இச்சாசனம் முதன்முதலாகத் திரு. ஐ. மகாதேவன் அவர்களால் படித்து வெளியிடப்பட்டது. மேலே கூறிய இடத்தில், இயற்கையாக அமைந்துள்ள குகைவாயிலின் மேற்புறத்துப் பாறையின் மேலே முன்பக்கத்தில் இந்தச் சாசனம் பெரிய எழுத்துக்களால் ஒரே வரிசையாக எழுதப் பட்டிருக்கிறது. இக்குகையிலே அக்காலத்தில் வசித்திருந்த பௌத்த அல்லது ஜைன (சமண) முனிவர் படுப்பதற்கு ஏற்றதாக இக்குகையின் கற்றரை மழமழவென்று அமைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்து பௌத்த ஜைன முனிவர்கள் ஊரில் தங்கி வசிக்காமல், ஊருக்கப்பால் மலைக்குகைகளிலே தங்கி வசிப்பது வழக்கம். அவர்களுக்கு வசதியாக இருக்கும்படி கற்படுக்கைகளை மழமழப்பாக அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமை. அந்த முறைப்படி ஒருவர் இந்தக் குகையிலே கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்து அக்குகை வாயிலின் மேற்புறத்தில் இந்தப் பிராமி எழுத்துச் சாசனத்தை எழுதிவைத்தார். இந்தச் சாசனம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அல்லது கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சாசன எழுத்தின் உருவ அமைப்பைக் கொண்டு கருதப்படுகிறது. ஒருவேளை இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். அசோக சக்கரவர்த்தி, தமது ஆட்சிக்கு உட்படாத தமிழகத்தில் (சேர சோழ பாண்டிய சத்திய புத்திர நாடுகளில்) பௌத்த முனிவர்களை அனுப்பியதாக அவருடைய சாசனங்களில் இரண்டு சாசனங்கள் கூறுகின்றன. நமது ஆராய்ச்சிக்குரிய இந்தச் சாசனத்திலே அந்தக் குகையில் வசித்த முனிவரின் பெயரும், அக்குகையில் கற்படுக்கைகளை அமைத்தவர் பெயரும், அக்காலத்தில் அரசாண்டிருந்த பாண்டியன் பெயரும் கூறப்படுகின்றன. சங்க காலத்துச் சாசனங்கள் கிடைக்கவில்லை என்று இதுவரை குறை கூறப்பட்டு வந்தது. இந்தச் சாசனம் அந்தக் குறையை நீக்கிவிட்டது. இனி, இந்தச் சாசனம் என்ன கூறுகிறது என்பதை ஆராய்வோம். கணியன் நந்தி என்னும் முனிவர் பெயரும் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பெயரும் குகையைச் செப்பஞ் செய்து கொடுத்த கடலன் வழுதி என்பான் பெயரும் இந்தச் சாசனத்தில் கூறுப்படுகின்றன. நெடுஞ்செழியன் என்னும் பெயர்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய தலையாலங் கானத்துப் போரை வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவனுக்கு முன்பு இருந்த ஆரியப் படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனையும் (இவன் கோவலனைத் தவறாகக் கொன்றவன்) அறிவோம். அந் நெடுஞ்செழியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவர்கள். ஆனால், இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற நெடுஞ்செழியன் அவர்கள் காலத்துக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன். இது இந்தச் சாசன எழுத்தைக் கொண்டு யூகிக்கப்படுகிறது. எனவே இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியன் கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது. இந்தச் சாசனம், குகையின் முன்புறத்தில் பெரிய எழுத்துகளால் ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினோம். ஒரே வரியாக எழுதப்பட்டுள்ள இந்த சாசனத்தை ஐந்து வரியில் அமைத்துக் கீழே காட்டியுள்ளோம். பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள இந்தத் தமிழ் மொழிச் சாசனத்திலே தம்மம் (தர்மம்) என்னும் பிராகிருத மொழிச் சொல் காணப்படுகிறது. இச்சொல் பாலி என்னும் மாகதி மொழி அல்லது சூரசேனி என்னும் அர்த்த மாகதி மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும். ஏனென்றால் பௌத்தரும் ஜைனரும் இந்த மொழிகளைத் தங்கள் தெய்வ பாஷையாக அக்காலத்தில் வழங்கி வந்தார்கள். எனவே இந்தக் குகையில் வசித்த முனிவர் பௌத்த சமயத்தவராக வோ, ஜைன சமயத்தவராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இந்தச் சாசனத்திலிருந்து, கணியன் நந்தி என்னும் முனிவரின் பெயரும் அவருக்காக இக்குகையில் கற்படுக்கைகளை அமைத்த கடலன் வழுதி என்பவரின் பெயரும் இவர்கள் காலத்தில் பாண்டிய நாட்டையரசாண்ட நெடுஞ்செழியன் என்னும் அரசன் பெயரும் கூறப்படுகின்றன. இந்தச் சாசனத்தின் வாசகம் இது: கணிய் நந்தி அஸிரிய் ஈ குவ்அ னிகெ தம்மம் ஈ த்தஅ நெடுஞ்ச ழியன் ப ணஅன் கடல்அன் வழுத்தி ய் கொட்டுபித்தஅ பளிஈய். இந்தச் சாசனத்தின் கருத்தை விளக்கிக் கூறுவதற்கு முன்பு இவ்வெழுத்துக்களைப் பற்றிச் சில கூறவேண்டும். இப்பிராமி எழுத்துச் சாசனத்தில் உயிர்மெய் அகர எழுத்துகள் ஆகாரக் குறியீடு கொடுக்கப் பட்டுள்ளன. (முதல் வரியில் க, ந, இரண்டாம் வரியில் ம, மூன்றாம் வரியில் த, ச, ய ப, நான்காம் வரியில் ண, க, ட, வ, ஐந்தாம் வரியில் த, ப, ஆகிய இவ்வெழுத்துக்கள் ஆகாரக் குறி கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உயிர்மெய் அகர வெழுத்துகளாகப் படிக்க வேண்டும். மேலும், முதல் வரியில் எட்டாவது எழுத்தாகிய ஸி என்பது வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்தாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது வரியில் உள்ள 6, 7, 8, 9-ஆம் எழுத்துகளும் தம்மம் என்று வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்துகளெல்லாம் தமிழ் பிராமி எழுத்துகளே. மேலும் இச்சாசனத்தில் றன்னகரம் தந்நகரம்போல எழுதப் பட்டு முடி வளைந்து காணப்படுகின்றது. (இரண்டாம் வரி நான்காம் எழுத்தும், மூன்றாம் வரி பத்தாம் எழுத்தும், நான்காம் வரி மூன்றாம் எழுத்தும், எட்டாம் எழுத்தும், றன்னகர எழுத்துக்களே. இவை கோடு பெறாதபடியால் இவற்றை ன் என்று மெய்யெழுத்தாகவே வாசிக்க வேண்டும். விளக்கம்:- கணிய் = கணி. அஸிரிய்ஈ = ஆசிரியர். குவ் அனிகெ = குவவனிகெ (குவவனுக்கு). தம்மம் = தர்மம். ஈத்தஅ நெடுஞ் = ஈத்தவன் + நெடுஞ். நெடுஞ்சழியன் = நெடுஞ்செழியன். பண அன் = பணவன் (பணயன்). வழுத்திய் = வழுதி. கொட்டு பித்தஅ = கொத்து பித்த. (கொத்துவித்த), பளிஈய் = பள்ளி. மிகை எழுத்துகளைத்தள்ளி, சந்திகளைப் புணர்த்தி, தவறுகளைச் சரிப்படுத்தினால் இச்சாசனத்தின் வாசகம் இவ்வாறு அமையும்:- கணி நந்தி ஆசிரியர் குவவனுக்குத் தர்மம் ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் கடலன் வழுதி கொத்துவித்த பள்ளி. திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்தச் சாசனத்துக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:- “உவ்விடம் (உவன்) வசிக்கிற முனிவன் (ஆசீரியன்) கணிய நந்திக்குத் தர்மம் நெடுஞ்செழியன் பண(வ)ன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்”1 குவவன் என்பதை உவன் என்று திரு.ஐ. மகாதேவன் வாசிக்கிறார். ஆனால், இந்தச் சாசனத்தின் வாசகத்தைக் கீழ்க்கண்டபடி அமைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது:- கணியனந்தி ஆசீரிய குவவனுக்கு (கொடுத்த) தருமம். (இதை) ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் (ஆகிய) கடலன் வழுதி கொட்டுபித்த (கொத்துவித்த) பள்ளி. (கொட்டுவித்த என்பதன் கருத்து பாறையைக் கொத்திச் செப்பம் செய்து கற்படுக்கையை யமைத்த என்று இருக்கலாம்) இந்தத் தருமத்தை யளித்தவன் அதாவது, முனிவர் வசிப்பதற்குக் குகையைத் தானமாகக் கொடுத்தவன் நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் என்பதும், அந்தக் குகையைச் செப்பஞ்செய்து முனிவர் வசிப்பதற்கு ஏற்றதாகப் பள்ளியாகச் செய்வித்தவன் அப்பாண்டியனுடைய பணயன் ஆகிய (தச்சனாகிய) கடலன் வழுதி என்பதும், இந்தப் பள்ளியைத் தானமாகப் பெற்ற முனிவன் கணியன் நந்தி குவவன் என்பதும் இச்சாசனத்திலிருந்து அறியப்படுகின்றன. திரு. ஐ. மகாதேவன் அவர்கள், இந்தச் சாசனத்தை யளித்த பாண்டியனின் பெயர் நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்று படிக்கிறார். இச்சாசனத்தில் வருகிற பணவன் என்னும் சொல் பிராகிருத மொழி என்றும், அது பஞ்சவன் என்று பொருள்படும் என்றும் அது பஞ்சவனாகிய பாண்டியனைக் குறிக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. பணயன் என்பதே சரியான சொல். அது கற்றச்சன், கருமான் என்னும் பொருள் உள்ளது. அரசனுடைய தச்சனுக்குப் பணயன் என்று அக்காலத்தில் பெயர் வழங்கி வந்தது. பிற்காலத்தில், பணயன் என்னுஞ் சொல் பணயகாரன் என்று வழங்கப்பட்டதைச் சாசனங்களில் காணலாம். வேள்விக்குடி செப்பேடு, சின்னமனூர் செப்பேடு, சீவரமங்கலச் செப்பேடு முதலிய பிற்காலத்துப் பாண்டியரின் செப்பேட்டுச் சாசனங்களை எழுதியமைத்தவரின் பெயர்கள் அச் சாசனங்களில் கூறப்படுகின்றன. அவர்கள் அச்சாசனங்களில் பணயகாரன் என்றே கூறப்படுகின்றனர். எனவே, பணயன் அல்லது பணயகாரன் என்பது அரசரின் கீழ் பணிபுரிந்த தச்சர்களைக் குறிப்பனவாகும் என்பது ஐயமறத் தெரிகின்றது. இந்தச் சாசனத்தில் வருகிற பணயன் என்பதற்குக் கல்தச்சன் என்பதே பொருளாகும். அது பணவன் என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு என்று கருதுவது தவறு ஆகும். அந்தப் பணயனாகிய கற்றச்சனின் பெயர் கடலன் வழுதி என்று சாசனம் கூறுகிறது. கடலன் என்பது தச்சனுடைய சிறப்புப் பெயர். வழுதி என்பது பாண்டி மன்னரின் சிறப்புப் பெயர். அரசரின் கீழ் அலுவல்புரியும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் அரசரின் பெயரையே தாங்களும் சூட்டிக்கொள்வது அக்காலத்து மரபு. இதனைப் பழைய சாசனங்களில் காணலாம். அந்த வழக்கப்படி இந்தக் கல்தச்சனாகிய பணயனும் வழுதி என்னும் பாண்டியன் பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறான். இந்தச் சாசனத்துக்கு இதுவே சரியான பொருள் என்பது தெரிகின்றது. ஈத்தவன் நெடுஞ்செழியன். கொட்டுபித்தவன் (கொத்துவித்தவன் என்று இருக்க வேண்டும். எழுதுவோர் பிழையால் கொட்டுபித்தவன் என்று எழுதப்பட்டிருக்கிறது) பெயர் பணயன் கடலன் வழுதி. வழுதி என்பது வழுத்தி என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது. கொட்டுபித்த என்பதைக் கொடுப்பித்த என்று திரு.ஐ. மகாதேவன் கருதுகிறார். அப்படியானால் ஈத்தவன், கொடுப் பித்தவன் என்று இரண்டு சொற்கள் மிகையாக உள்ளன காண்க. சங்க காலத்துப் பிராமி எழுத்துச் தமிழ்ச் சாசனங்களில் தமிழ் அரசரின் பெயர் காணப்படவில்லை என்றும் அக்காலத்தில் அரசர்கள் இருந்திருந்தால் அவர்களுடைய பெயர்கள் சாசனங்களில் கூறப் படாமல் இருக்குமா? என்றும் ஆகவே, சங்ககாலம் என்பது பொய்க் கதை என்றும் சில போலி ஆராய்ச்சிக்காரர் விதண்டாவாதம் செய்து வந்தனர். அவர்களுக்கு இந்தச் சாசனமும் முன் இதழில் வெளியிட்ட சாசனமும் தகுந்த விடையளிக்கின்றன. இனியேனும் அவர்கள் சங்க காலத்தைப் பற்றி ஐயப்படமாட்டார்கள் என்று கருதுகிறோம். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா படித்து வெளியிடாமல் மறைத்து வைத்திருந்த இரகசியம் புரியவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான சாசனங்களை வெளியிடாமல் இருட்டில் வைத்திருக்கும் காரணம் என்ன? வெளியிடாத சாசனங்களை இனியேனும் வெளியிட்டுத் தமிழ்நாட்டு வரலாறு எழுதுவதற்குத் துணைபுரிவார்களா? இதுகாறும் தூங்கிக்கொண்டிருந்ததுபோலத் தூங்கப் போகிறார்களா? இந்தச் சாசனத்தை முதன் முதலாக வெளியிட்ட திரு. ஐ. மகாதேவன் அவர்களுக்கு எமது நன்றி. 7. கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள்* பிலவ ஆண்டு வைகாசித் திங்கள் 13-ஆம் நாள் வெள்ளிக் கிழமை (26-5-1961) பகல் இரண்டு மணிக்கு நாங்கள் கொங்கு நாட்டு அரச்சலூரையடைந்தோம். நாங்கள் என்றால் இக் கட்டுரையாளரும், சீவபந்து ஸ்ரீபால், வித்துவான் செ. இராசு, வித்துவான் பச்சை யப்பன், வித்துவான் சென்னியப்பன், அவர்களும் ஆகும். அரச்சலூர் ஈரோட்டிலிருந்து பழைய கோட்டை வழியாக 12 ஆவது கல்லில் இருக்கிறது. வெயில் எரிக்கும் பகல் வேளையில் அவ்வூர் மலையடி வாரத்தை ஒட்டிய காட்டுவழியாக ஒருமைல் தூரம் நடந்தோம். பாதை இல்லாத காட்டுவழியாகையால் முட்செடி கொடிகளால் இடர்ப்பாடுகள் விளைந்தன. எப்படியோ தட்டித்தடுமாறி மலையின் மற்றொரு புறத்தி லிருக்கிற ஆண்டிப் பாறை என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆண்டிப் பாறை என்னும் இடம், மலையின் மேலே உள்ள ஒரு பாழி. அதாவது, பொடவு என்று கூறப்படுகிற இயற்கையாக அமைந்த குகை. இந்தக் குகையிலே மேடுபள்ளமாக இருக்கிற பாறையிலே ஐந்து கற்படுக்கைகளும், மூன்று பிராஃமி எழுத்துச் சாசனங் களும் இருப்பதைக் கண்டோம். கற்படுக்கைகள், இக் குகையிலே முனிவர்கள் வசித்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் பௌத்த முனிவர்களாகவோ, ஜைன முனிவர்களாகவோ இருக்கவேண்டும். இந்தக் கற்படுக்கைகளிலே மூன்று சாசனங்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. சாசனங்கள் சுருக்கமாக இரண்டுவரி, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இரண்டு சாசனங்களின் எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றன. ஒரு சாசனம் சிதையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதிலும் மூன்று நான்கு எழுத்துக்கள் சிறிது சிதைந்துள்ளன. சாசன எழுத்துக்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனால். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே வழங்கப்பட்டது அசோக சக்கரவர்த்தி காலத்தில் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த பிக்ஷுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பிராஃமி எழுத்துக்களைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. எனவே, இந்தக்குகையில் பிராஃமி எழுத்துக்கள் காணப்படுவதனாலே, ஏறக்குறைய 2000 ஆண்டு களுக்கு முன்பு இவ் வெழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். படுக்கைகளில் ஓரிடத்தில் ஓர் ஆள் நின்று கொண்டு கைகளை மார்பில் வைத்து வணங்குவது போலக் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இன்னோர் இடத்தில் சூலம் போன்ற வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியே யுள்ள பெரிய பாறைக் கல்லில் மண்டலம் போன்ற ஓர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க சாசன இலாகாவும், பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் (எபிகிராபி, ஆர்க்கியாலஜி இலாகாக்கள்) இதுவரையில் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கவும் இல்லை. எழுத்துக்களைப் படி எடுக்கவும் இல்லை. இந்த இடத்துக்குப் போக நல்லபாதை அமைத்து, இந்தக் குகையையும், இதிலுள்ள எழுத்துக்களையும் பாதுகாப்புப் பழம் பொருள்கள் என்று அரசாங்கத்தார் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிராஃமி எழுத்துக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்னும் படிக்கப்படவில்லை. இத்துறையில் வல்லவர்கள் இதனை செய்வார்கள் என்று நம்புகிறோம். இந்த ஆண்டிபாறைக்குச் சற்றுத் தூரத்தில் அதே மலையில் இன்னொரு குகையும் அதில் எழுத்துக்களும் இருக்கின்றனவாம். அந்தக் குகை மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதனால் நாங்கள் அங்குப் போகவில்லை. சமயம் வாய்க்கும்போது மற்றொரு சமயம் போகக்கூடும். பாண்டிநாட்டு மலைகளிலே பிராஃமி எழுத்து சாசனங்கள் சில முன்னமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொங்கு நாட்டிலே பிராஃமி எழுத்துச் சாசனம் இப்போதுதான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சாசன எழுத்தையும், குகையையும் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அடுத்த நாள் (27-5-61) நாங்கள் ஈரோடு நகரத்தில் ஒரு பழைய கோவிலைக் கண்டுபிடித்தோம். இந்தக் கோவில் பல்லவ அரசர் காலத்துக் கட்டட அமைப்புப்படி கட்டப்பட்டிருக்கிறது. மண்மூடிப் புதைந்து கிடந்த இந்தக் கோவில் சில காலத்துக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டதாம். மகிமாலீசுவரர் கோவில் என்பது இதற்குப் பெயர். இந்தக் கோவில் இருப்பது இதற்கு முன் அறிந்திருந்தாலும், இக் கோயில் பல்லவ அரசர் காலச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கட்டடம் என்பதை ஒருவரும் இதுவரையில் அறியவில்லை. நாங்கள் சென்று பார்த்தபோது, பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கோவில் என்பதைத் தெளிவாக அறிந்தோம். மகாபலிபுரத்துத் “தர்மராச இரதம்” என்னும் கோவில் விமானம் போன்றது இந்தக் கோவிலின் விமானம். எட்டுப்படை விமானம். விமானத்தில் அமைந்துள்ள சாலை, பஞ்சரம், கர்ண கூடு முதலிய உறுப்புகளும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. துவாரபாலகர் திருவுருங்களும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. பல்லவர் காலத்துக் கோவில்களைப் போலவே இந்தக் கோவில் சுவர்களும் நான்கு அடி அகல முள்ளவை யாக உள்ளன. திருவுண்ணாழிகையில் (கர்ப்பக்கிருகத்தில்) உள்ள சிவலிங்கத் திருவுருவம் மகேந்திர வர்ம பல்லவ அரசன் காலத்துச் சிவலிங்கம் போன்றும் பெரிதாகவும் இருக்கின்றது. இந்தக் கோவில் கர்ப்பக்கிருகமும் (திருவுண்ணாழிகையும்) விமானமும் பல்லவர் காலத்துக் கட்டடமாகும். இப்போதுள்ள மகா மண்டபம், முகமண்டபம், அம்மன் கோவில் ஆகியவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. சுவாமியுள்ள திருவுண்ணாழி கையின் வெளிப்புறத்தில் இருந்த துவாரபாலகர் உருவங்களைப் பிற்காலத்தில் மகாமண்டபத்து வாயில் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். கொங்கு நாட்டிலே பல்லவ அரசர் ஆட்சி பரவியதாகத் தெரிய வில்லை. ஆனால், பல்லவ சிற்பக்கலை அங்கும் பரவியிருந்தது என்பது இந்தக் கட்டடத்தினால் தெரிகிறது. ஈரோட்டிலுள்ள இந்த மகிமாலீசுவரர் கோவிலையும் பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்க வேண்டுகிறோம். *** மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப்படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு * அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற இக் கல்வெட்டினைப் பற்றித் தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், தினமணி 12-10-81 இதழில் எழுதிய கட்டுரையினின்று தொகுக்கப்பெற்றது. * மயிலைசீனி. வேங்கடசாமி எழுதிய நுண்கலைகள் (1967) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை. * * ஆராய்ச்சி இதழ் 1:2; 1969. * Seminar on Hero -stones, தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு 1974. * கல்வி - இதழ். டிசம்பர். 1966. * செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு35: 10. 1961.