மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4 பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 4 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 255/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் - பண்பாடு சங்க நூற்பிரதிகளில் காணப்படும் பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வணிக முறைமைகளை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாடலிபுரம், சாவகம், மலேயா, பர்மா, இலங்கை, அரபு நாடுகள், எகிப்து, உரோம் ஆகிய பிற பகுதிகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. ‘சாத்து’ எனப்படும் வணிகக் குழுக்கள் மேற்குறித்தப் பகுதிகளுக்குச் சென்று வணிகம் செய்தனர். பேரா. நொபுரு கரோஷிமா தலைமையில், தொல்பொருள் துறைசேர்ந்தஅறிஞர்கள் பலர், தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகச் சாத்துகள் தொடர்பான பல்வேறு கல்வெட்டுக்களை அண்மையில் கண்டறிந்துள்ளனர். வணிகம் செய்தவர்கள் யார்? அவர்களுக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை எவ்வகையில் அமைந்திருந்தது? ஆகியவை குறித்த பல்வேறு விவரங்களையும் அறிய முடிகிறது. திணை சார்ந்த வாழ்க்கை முறை பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். இவர்களிடத்தில் பண்ட மாற்று முறையே பெரிதும் நடைமுறையில் இருந்ததைக் காணமுடிகிறது. இம்முறைமை நடைமுறையில் இருந்தபோதே காசுகளும் புழக்கத்தில் இருந்ததை மயிலை சீனி. குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டுமே நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். அண்மைக் காலத்தில் கிடைத்துள்ள சங்க காலக் காசுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன. வணிகத்தை மேற்கொண்டவர்கள் எவ்வகையான போக்கு வரத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பதும் முக்கியமாகும். கோவேறு கழுதைகள், குதிரைகள், மாட்டுவண்டிகள், கழுதைகள் ஆகிய பிற புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தரை வாணிகம் புழக்கத்தில் இருந்த காலத்தில், கடல் வாணிகமும் நடைமுறையில் இருந்தது. ஆழ்கடல் பயணம் இருந்ததா? அல்லது கடலோரத்தில் மட்டுமே பயணம் செய்தனரா? என்ற விவாதம் எழுப்பப்பட்டது. பசிபிக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் வணிகம் நிமித்தம் பயணம் செய்திருப்பதை மயிலை சீனி. உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம் ஆழ்கடல் பகுதி களுக்கும் சென்றிருப்பதை அறியமுடிகிறது. அரபு நாட்டினர், யவணர், சாவக நாட்டினர், ஆகிய பிறர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகைபுரிந்தனர். இதற்காக பல்வேறு துறைமுகங்களும் உருவாக்கப்பட்டன. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டின துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிபூம்பட்டின துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டின துறைமுகம், தொண்டி, முசிறி துறைமுகங்கள், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததைஅறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. சங்க காலத்தில் காவிரிபூம்பட்டினம், மதுரை ஆகிய பிறபெரும் நகரங்களாக விளங்கியமையைக் காண முடிகிறது. வஞ்சி, சேரநாட்டின் தலைநகரமாக விளங்கியதை மயிலை சீனி. ஆய்வு செய்துள்ளார். உறையூர் எப்படி மறைந்துபோயிற்று என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். சிறுபாணாற்றுப்படையை அடிப்படையாகக் கொண்டு, “சிறுபாணன் சென்றபெருவழி” எனும் கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இன்றைய நிலவியற் போக்கில் அவ்வழியை மயிலை சீனி. கண்டறிந்துள்ளார். கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்து திண்டிவனம் வழியாக வேலூர் வரை செல்வதாக அவ்வழி அமைந்துள்ளது. சங்கப் பாடல்களில் காணப்படும் செய்திகள் எவ்வகையில் நேரடியான வரலாறாக அமைகிறது என்பதற்கு இக்கட்டுரை அரிய சான்றாக உள்ளது. பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து அறிவதற்கு இத்தொகுதி பெரிதும் உதவும். பண்டைத்தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கான அடிப்படைத் தரவாகவும் இந்நூல் அமைகிறது. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. ஏப்ரல் 2010 வீ. அரசு சென்னை - 96. தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பண்டைத் தமிழகம் வணிகம் , நகரங்கள் மற்றும் பண்பாடு முகவுரை 19 1. சங்க கால மக்கள் வாழ்க்கை 21 2. பண்டமாற்று 27 3. போக்குவரத்துச் சாதனங்கள் 36 4. தமிழ்நாட்டு வாணிகர் 42 5. பிறநாட்டு வாணிகர் 60 6. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள் 71 7. தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள் 93 8. இலங்கைத் துறைமுகங்கள் 101 9. விளைபொருளும் உற்பத்திப் பொருளும் 105 10. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை 136 11. சங்க காலத்து நகரங்கள் 173 12. வஞ்சிக் கருவூர் சங்க காலச்சேரநாட்டின் தலைநகரம் 207 13. சங்க காலத்து இசைச் செய்தி 227 14. உறையூர் மறைந்த வரலாறு 233 15. பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை 240 16. சிறுபாணன் சென்ற பெருவழி 245 17. சேர நாட்டுமுத்து 253 18. தமிழ் நாட்டில் யவனர் 258 19. வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள் 264 பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் எழுதிய பழங்காலத் தமிழர் வணிகம் (1974) (சங்ககாலம்) என்னும் தலைப்பில் வெளியிட்ட நூல் இதுவாகும் (1-9 கட்டுரை.) முகவுரை ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்னும் இந்தப் புத்தகம் கடைச் சங்க காலத்தில் (அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக் கரை மேற்குக் கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), மலேயா, பர்மா முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலக்சாந்திரியம் (எகிப்து) உரோம் சாம்ராச்சியம் (யவன தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்க காலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும், புதைபொருள் ஆய்வுகளிலிருந்து கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது. அந்தப் பழங்கால வாணிகத்துக்கும் இக்காலத்து விஞ்ஞான உலக வாணிகத்துக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பழங் காலத்தவர், அக்காலத்து இடம், பொருள், ஏவல்களுக்கும் சூழ்நிலை களுக்கும் தக்கப்படித் தரைவாணிகத்தையும் கடல் வாணிகத்தையும் நடத்தினார்கள். அவர்கள் கூட்டாகச் சேர்ந்து ‘சாத்து’ அமைத்துப் பெரிய வாணிகத்தை நடத்தினார்கள். தரை வாணிகஞ் செய்த வாணிகத் தலைவர் மாசாத்துவர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகத் தலைவர் மாநாய்கர் (மாநாவிகர்) என்று பெயர் கூறப்பட்டனர். அக்காலத் தமிழகத் திலே பல மாசாத்துவர்களும் பல மாநாய்கர்களும் இருந்தார்கள். சங்ககாலத்துத் தமிழரசர்கள் தங்களுடைய நாடுகளில் வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள். அவர்கள் தங்களுடைய நாடுகளில் வாணிகக் கப்பல்கள் வந்து போகவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் துறைமுகப் பட்டினங்களை அமைத்தார்கள். இராக்காலத்தில் கடலில் வருகிற கப்பல்கள் திசை தப்பிப் போகாமலும், துறைமுகத்தைக் காட்டவும் கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள். துறைமுகங்களில் உள்ள வாணிகப் பொருள்கள் களவு போகாதபடி காவல் வைத்தனர். வாணிகஞ் செய்து பெரும் பொருள் ஈட்டின வணிகப் பெரு மக்களுக்கு ‘எட்டி’ என்னும் சிறப்புப் பெயரையும், ‘எட்டிப்பூ’ என்னும் பொற் பதக்கத்தையும் அளித்துச் சிறப்பினைச் செய்தார்கள். தரை வாணிகமும் கடல் வாணிகமும் பெருகவே, அவற்றைச் சார்ந்து பயிர்த் தொழில் வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும் பெருகிப் பொருள் உற்பத்தி அதிகப்பட்டது. பொருள்களின் உற்பத்தியினாலும் வாணிகத்தினாலும் பொருளாதாரம் உயர்ந்து நாடு செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் வாணிகம் முக்கிய காரணமாக இருந்தது. நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர் களுடைய வரலாறு மட்டும் அன்று. அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திரமாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக்காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப் புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மயிலாப்பூர் - சென்னை மயிலை சீனி. வேங்கடசாமி 6-4-1974 1. சங்க கால மக்கள் வாழ்க்கை சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும். சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு. இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்ட மாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிக மும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன. அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது. அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்துவிதமாக அமைந் திருந்தது. குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது. மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச் சாரல்களிலும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லைநிலம் என்று பெயர்பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர்பெற்றன. சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையை யடுத்திருந்த சேர நாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ்நாடாக இருந்தபடியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது. கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள்தோறும் கடலில் வெகுதூரம் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வறண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழ வில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது. இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தன. அவர் களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப் பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்து இருளர் என்று கூறப்படுகின்றனர். இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டுவிடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப் பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு. குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத் தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப் பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன. மலைகளிலும் மலைச்சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினை என்னும் அரிசியையும் பயிர் செய்தார்கள். மரம் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண் படுத்தினார்கள். பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை. மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப் பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடினார்கள். தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கி னார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன்மேல் தினைத் தாளையும், ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கை யாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று. பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித் தோல், அகில் கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை. முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்று களும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடி களும் கொன்றை (சரக்கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்). இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள். வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களி லிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். மழையை எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால், தயிர், நெய்களையும் உணவாக உண்டார்கள். இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந் தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள். இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்டமாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர்கள் அவர்களைவிட நன்றாகவும் நாகரிக மாகவும் வாழ்ந்தார்கள். மருத நிலத்து மக்கள் வாழ்க்கை ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நில வளமும், நீர்வளமும் உள்ள மருத நிலத்தில் மண்வளம் மிக்க வயல் களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமை களையும் பூட்டிய ஏர்களினால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர் பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட் டார்கள். காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு முட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையை விடப் பல மடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப் படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகமும் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது. உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே. ஆகவே மருத நிலத்திலேதான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத் தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள். நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடலைச் சார்ந்த நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை. ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகுதூரம் போய் வலைவீசி மீன்பிடித்து வந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்து வந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள். சில இடங்களில் கடற்கரையோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடினமான வாழ்க்கையே. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை ஒரு வகையில் கடினமானது என்றால் நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை வேறு வகையில் கடினமானது. கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறைமுகங்கள் இருந்தன. துறைமுகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின. ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின. பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை என்று கூறினோம். வாழ்வதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லாத பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை. வாழ்ந்தவர்களும் மனிதராக வாழவில்லை. மாக்களைப் போல வாழ்ந்தார்கள். இவ்வாறு வெவ்வேறு இயற்கையான சூழ்நிலைகள் அமைந்த இடங்களில் வசித்த அக்காலத்துத் தமிழர் வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். விரைவான போக்குவரத்துச் சாதனங் களும் தந்தி தபால் வசதிகளும் மற்றும் இக்காலத்து வசதிகள் பலவும் அக்காலத்தில் இல்லாதபடியால் கல்வி, பொருளாதாரம், நாகரிகம் முதலியவை வளர்ச்சியடைய இயலாமற் போயின. இக்காலத்தில் மிக எளியமக்கள் பெறுகிற வசதியைக் கூடச் செல்வம் பெற்றவர் பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் இருந்தது. இத்தகைய சூழ்நிலை தமிழருக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா நாட்டிலும் இப்படிப்பட்ட நிலை தான் இருந்தது. அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரிகம் மருத நிலத்திலும் துறைமுகப் பட்டினங்களிலும் வளர்ந்தன என்று கூறினோம். ஆம், பட்டணங்களிலும் பட்டினங்களிலும் தான் அக்காலத்து தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலைகள் எல்லாம் வளர்ந்தன. தமிழரின் வாணிகம் அக்காலத்தில் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிறு விலையுள்ள பொரு ளுக்கும் அதிக விலையுள்ள பொருளுக்கும் காசு பயன்படுகிறது. ஆனால் காசு (நாணயம்) ஆதிகாலத்தில் ஏற்படவில்லை. ஆதிகாலத்தில் பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பெறுவது நடந்தது. பிறகு பையப் பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்டமாற்றும் நாணயச் செலவாணியும் நடைபெற்றன. *** 2. பண்டமாற்று சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம். இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்) ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்: ‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப் புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ் உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள்மோர் மாறும் நல்மா மேனிச் சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள் குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள் அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’ என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார். (நுரை - வெண்ணெய்; அளை - மோர்; மாறும் - பண்டமாற்று செய்யும். கிளையுடன் - சுற்றத்தாரை. அருத்தி - உண்பித்து) ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார்கள். குறிப்பிட்ட தொகை காசு சேர்ந்த போது அக்காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று இந்தப் புலவரே கூறுகிறார். ‘நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பொறூஉம் மடிவாய்க் கோவலர்’. (பெரும்பாண்; 164-166) (விலைக்கு அட்டி - விலைக்காக அளந்து; பசும்பொன் கொள்ளாள் - நெய் விலையாகவுள்ள காசைப் பெறாமல் அவர்களிடத்திலேயே சேமித்து வைத்து. நல்லான் - பசு. நாகு - பெண் எருமை.) வேடன் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதைக் கோவூர்கிழார் கூறுகிறார். இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டனர் என்று இப்புலவரே கூறுகிறார். ‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாடு’ (புறம் 33:1-8) (வட்டி - பனையோலையால் முடைந்த சிறு கூடை. தசும்பு - பானை. குளக்கீழ் விளைந்த - ஏரிக்கரையின் கீழே விளைந்த. முகந்தனர் கொடுப்ப - அளந்து கொடுக்க) பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் (ஆறு, ஏரி, குளங்களில்) வலை வீசியும் தூண்டில் இட்டும் மீன்பிடித்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களைப் பாண் மகளிர் ஊரில் கொண்டு போய்ப் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றினார்கள் என்று ஓரம் போகியார் கூறுகிறார். ‘முள் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன்பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும்பயறு நிறைக்கும்’ (ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 47) (பாண்மகள் - பாணர் பெண்; கெடிறு - கெளுத்தி மீன். மனையோள் - குடியானவன் மனைவி) ‘வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்’. (ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 48) (வராஅல் - வரால் மீன். ஆண்டுகழி வெண்ணெல் - ஒரு ஆண்டு பழமையான நெல்) ‘அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் சின்மீன் சொரிந்து பன்னெற் பெரூஉம்’ (ஐங்குறு, மருதம், புலவிப்பத்து 49) கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில் நெய்தல் நிலமக்கள் உப்பு விளைத்தார்கள். உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளிலே நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து உப்பை மாற்றிக்கொண்டு போனார்கள் என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. ‘தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... உமணர் போகலும்’. (நற்றிணை. 183) (தந்நாடு - உப்பு வாணிகரின் மருதநிலம். பிறநாடு - உப்பு விளையும் நெய்தல் நிலம். உமணர் - உப்புவாணிகர்.) நெய்தல் நிலத்து முதுமகள் ஒருத்தி தன் உப்பளத்தில் விளைந்த உப்பை மாற்றி நெல் கொண்டுவரச் சென்றாள் என்று கல்லாடனார் கூறுகிறார். ‘ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்’?(குறும். 269: 4-6) (ஆய் - அன்னை, தாய். தரீஇய - கொண்டுவர) ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் உப்பை நெல்லுக்கு மாற்றினதை அம்மூவனார் கூறுகிறார். ‘கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் சேரிவிலை மாறு கூறலின்’ . (அகம். 140: 5-8) (சேரி - தெரு; விலைமாறு - பண்டமாற்று) ‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளிரோவெனச் சேரிதொறும் நுவலும்’ (அகம், 390: 8-9) உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதைக் கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார். ‘குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி’ என்று (பட்டினப்பாலை 28-30) அவர் கூறுகிறார். உப்பை நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகிறார். ‘உமணர் தந்த உப்பு நொடை நெல்’ (நற்றிணை, 254:6) கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால் முதலான மீன்களைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்று குன்றியனார் கூறுகிறார். ‘இனிது பெறு பெருமீன் எளிதினில் மாறி’ (நற்றிணை, 239:3) பரதவர் மகளிர் கடல் மீனை நெல்லுக்கு மாற்றியதை நக்கீரரும் கூறுகிறார்: ‘பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்’ (அகம், 340: 14-15). ‘உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு’ என்று குடவாயில் கீரத்தனார் கூறுகிறார் (அகம் 60:4) பரதவ மகளிர் கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர்களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார், ‘திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழையணி அல்குல் செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகரும் கானலஞ் சிறுகுடி’ (அகம், 320:2-5) மீனை நெல்லுக்கு மாற்றினார்கள், பண்ட மாற்றினால் கிடைத்த நெல்லை அம்மியில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே வந்ததைப் பரணர் கூறுகிறார். ‘மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனைமறுக்குந்து’ (புறம், 343:1-2) உழவர் மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறுகிறார். ‘துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப் புதுமலர் தெருவுதொறும் நுவலும் நொதுமலாட்டி’ (நற்றிணை, 118: 8-11) (துகிலிகை - ஓவியர் வண்ணங்களைத் தொட்டு எழுதும் கோல் (Brush); பாதிரி - பாதிரிப்பூ. அலரி - அலரிப்பூ) பெண் ஒருத்தி மலர் விற்றதைப் பாண்டியன் மாறன் வழுதி தம்முடைய செய்யுளில் கூறுகிறார். ‘துய்த்தலை இதழபைங் குருக்கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை யுழவர் தனிமடமகள்’ (நற்றிணை, 97:6-9) பூ விற்ற பெண்களும் பூவை நெல்லுக்குப் பண்டமாற்று செய்தனர் என்பதைச் சொல்லாமலே விளக்குகிறது. வேடர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொண்டு போய்க் கொடுத்து மதுபானம் அருந்தினதை மாமூலனார் கூறுகிறார். ‘வரி மாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்’ (அகம், 61:8-10) (நறவு - மது; நெல்லின் நாண்மகிழ் - நெல்லரிசியினால் உண்டாக்கப் பட்ட மது) வேடர் தேனையும் கிழங்கையும் கொண்டு வந்து மதுபானக் கடையில் மாற்றி அதற்கு மாறாக வறுத்த மீன் இறைச்சியையும் மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும், அவலையும் கொண்டு வந்து கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மான் இறைச்சியையும் மதுவை யும் பெற்று உண்டு மகிழ்ந்ததையும் முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார். ‘தேனெய்யொடு கிழங்கு மாறியோர் மீனெய்யொடு நறவு மறுகவும் தீங்கரும்பொடு அவல் வகுத்தோர் மான்குறையோடு மது மறுகவும்’ (பொருநர் ஆற்றுப்படை, 214-217) (தேன்நெய் - தேன். மாறியோர் - மாற்றினவர்கள். மீன்நெய் - வறுத்த மீன். நறவு - மது, கள். மான்குறை - மான் இறைச்சி) கொற்கைக் குடாக் கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர், கொற்கைக் கடலில் மீன்பிடித்த போது அதனுடன் முத்துச் சிப்பிகளும் கிடைத்தன. அந்தச் சிப்பிகளை அவர்கள் கள்ளுக் கடையில் மாற்றிக் கள் குடித்ததைப் பேராலவாயர் கூறுகிறார். ‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’ (அகம், 296: 8-10) (இப்பி - முத்துச் சிப்பி) குறிப்பு : பாண்டி நாட்டிலிருந்த பேர் போன கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போய்விட்டது. எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்துக்கு வந்து எந்தப் பொருளும் இல்லாதபடியால், ‘காட்டில் வேட்டை யாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுப்போம். அதற்கு ஈடாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு’ என்று கேட்டதை மருதன் இளநாகனார் கூறுகிறார். ‘அரிகிளர் பணைத்தோள் வயிறணி திதலை அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின் மகிழ்நொடை பெறாஅர் ஆகி நனைகவுள் கான யானை வெண்கோடு சுட்டி மன்றாடு புதல்வன் புன்றலை நீவும் அருமுனைப் பாக்கம்’ (அகம், 245: 8-13) கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப் பதனால், தங்களிடமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்துக்கு மாற்றிச் சோறு சமைத்து உண்டனர் என்று கபிலர் கூறுகிறார். ‘காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரை’ (குறுந்தொகை 100:3-5) (சிலம்பு - மலை. வேழத்துக் கோடு - யானைத் தந்தம். ஓரி - ஓரி என்னும் தலைவன்) காசு (நாணயம்) இவற்றிலிருந்து சங்ககாலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலை யுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்ட மாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்துகொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். அந்தக் காசுகள் நெல்லிக் காயின் வடிவம் போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகிறார். பாலை நிலத்து வழி யிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக்காய்கள், பொற்காசுகள், உதிர்ந்து கிடப்பன போலக் காணப்பட்டன என்று அவர் கூறுகிறார். ‘புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய் கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப் பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம் அத்தம்’ (அகம், 363; 6-8) (புகர் இல் - துளை இல்லாத, கெட்டியான. கடுவளி - பெருங்காற்று. பொலம் செய் காசு - பொன்னாற் செய்த காசு) உகா மரத்தின் பழம் போல மஞ்சள் நிறமாகப் பொற்காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார் கூறுகிறார். ‘குயில்கண் அன்ன குரூஉக் காய்முற்றி மணிக்கா சன்ன மானிற இருங்கனி உகாஅ மென்சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ்சுரம்’ (அகம், 293: 6-9) (குரூஉ - குரு = நிறம். காசு அன்ன - காசு போன்ற. உகா - உகா மரம். சினை - கிளை) பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அறையைச் சுற்றி (மேகலை போல) அணிந்துகொண்டதைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் கூறுகிறார்). ‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’ (புறம், 353: 1-2) காசுகளை மாலையாகச் செய்து அரையில் அணிந்திருந்த பெண் ஒருத்தியை மதுரைப் போத்தனார் கூறுகிறார். ‘அம்மா மேனி ஐதமை நுசுப்பில் பல்காசு நிரைத்த கோடேந் தல்குல் மெல்லியல் குறுமகள்.’ (அகம் 75: 18-20) (ஐது - அழகிய, நுசுப்பு - இடுப்பு, இடை, குறுமகள் - இளம்பெண்) காசுமாலை அணிந்த இன்னொரு பெண்ணை ஓதலாந்தை யார் கூறுகிறார். ‘பொலம் பசும் பாண்டில் காசு நிறை அல்குல் இலங்குவளை மென்றோள்.’ (ஐங்குறு, பாலை, செலவழுங்குவித்த பத்து 10) களங்காய்க் கண்ணி, நார்முடிச் சேரலைப் பாடிய காப்பி யாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் (நான்கு) இலட்சம் அவன் பரிசாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது (பதிற்றுப் பத்து நான்காம் பத்து, பதிகம்) இங்குப் பொன் என்பது பொற்காசு என்று தோன்றுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மேல் 6ஆம் பத்துப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளை யார்க்கு அவ்வரசன், நகை செய்து அணிவதற் காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் (காணம் - அக் காலத்தில் வழங்கின பொற்காசு) கொடுத்தான். செல்வக் கடுங் கோவாழி யாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம் பத்துப் பதிகம் கூறுகிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதைப் பதிற்றுப்பத்து 8ஆம் பத்துப் பதிகத்தினால் அறி கிறோம். இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய பெருங் குன்றூர் கிழார்க்கு முப்பத்திராயிரம் காணம் பரிசாகக் கொடுத் தான் என்பதை 9ஆம் பத்துப் பாயிரத்தினால் அறிகிறோம். பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குச் சோழன் கரிகாலன் நூறாயிரங்காணம் பரிசு வழங்கினான். இவ்வாறு, காணம் என்னும் பொற்காசு அக்காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். செங்கம் என்னும் ஊரில் (தொண்டை நாடு), ஈயக் காசுகள் வழங்கிவந்ததை அங்கிருந்து கிடைத்த பழங்காசுகளிலிருந்து அறிகிறோம். அந்த ஈயக் காசுகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதனால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்தவை என்பது தெரிகிறது. அந்தக் காசில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத் தெரியாமல் மழுங்கிப் போனமையால் அவ்வெழுத்துக்களின் வாசகத்தை அறிய முடிய வில்லை. அந்தச் சான்றுகள் எல்லாம் அக்காலத்தில் காசு வழங்கி வந்தது என்பதைச் சந்தேகம் இல்லாமல் தெரிவிக்கின்றன. இந்தக் காசுகள் அல்லாமல், அக்காலத்தில் கடல் கடந்த கப்பல் வாணிகத்தின் மூலமாக உரோம (யவன) தேசத்து நாணயங்கள் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. அக்காசுகள் சமீப காலத்தில் ஏராளமாகப் புதையல்களிலிருந்து கிடைத்துள்ளன. அந்தக் காசுகளைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம். *** 3. போக்குவரத்துச் சாதனங்கள் வாணிகப் பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவ தில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் உற்பத்தி யானபடியால், அப்பொருள் களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வாணிகர் கால்நடைகளையும் வண்டிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இக்காலத்தில் உள்ள உந்து வண்டிகள், இரயில்வண்டிகள், வானஊர்திகள் போன்ற விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் இருப்பது போல அக்காலத்தில் இல்லை. ஆகவே அவர்கள் எருது, கழுதை வண்டி, படகு, பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தி னார்கள். எருமைக்கடாவை ஏர் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். எருமைகளைப் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் பயன்படுத்த வில்லை. பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. எருதுக்கு அடுத்தபடியாகக் கழுதை பொதி சுமக்கப் பயன்பட்டது. கழுதைகள் வண்டியிழுக்கப் பயன்படவில்லை. சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. அவை கடல் வழியாகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. குதிரைகளை அரசர் போர்செய்யப் பயன்படுத்தினார்கள். நால்வகைப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று. தேர்ப் படையில் தேர்களை (போர் வண்டிகளை) இழுக்கவும் குதிரைகள் பயன்பட்டன. குதிரை வண்டிகளை அரசரும் செல்வரும் பயன்படுத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் தமிழர் குதிரைகளைப் பொதி சுமக்கவும் வாணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு போகிற வண்டிகளை இழுக்க வும் ஏர் உழவும் பயன்படுத்தவில்லை. அத்திரி (கோவேறு கழுதைகள்) வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப் பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், பொதி சுமக்கவும் சரக்கு வண்டிகளை இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்த வில்லை. ஊர்தியாக மட்டும் பயன்படுத்தி னார்கள். அத்திரிக்கு இராச வாகனம் என்று பெயர் வழங்கப்பட்டது. பாண்டி நாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்று சேந்தன் கண்ணனார் கூறுகிறார். “கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண” (அகம், 350: 6-7) அத்திரியை ஒருவன் ஊர்ந்து சென்றதை நக்கீரர் கூறுகிறார். “கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ” (அகம், 120: 10-11) கடற்கழி வழியாக ஒருத்தன் அத்திரி ஊர்ந்து வந்ததை உலோச்சனார் கூறுகிறார். “கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி குளம்பிலும் சேயிறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே” (நற்றிணை, 278: 7-9) மதுரையில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவிலே சிலர் அத்திரி யூர்ந்து வந்தார்கள் என்று பரிபாடல் (10-ஆம் பாடல் 17 - அடி கூறுகிறது) காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த செல்வக் குடிமகனாகிய கோவலன் கடலாடுவதற்குக் கடற்கரைக்குச் சென்றபோது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (கடலாடு காதை, அடி 119). சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘அத்திரி - கோவேறு கழுதை, அஃதாவது குதிரையில் ஒரு சாதி’ என்று உரை எழுதியுள்ளார். பழைய அரும்பத உரையாசிரியர், ‘இராச வாகனமாகிய அத்திரி’ என்று உரை எழுதியுள்ளார்; ஆகவே அத்திரி அக்காலத்தில் உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது. குதிரை குதிரை வெளிநாடுகளிலிருந்து வந்ததையும், அவை போர்க் களங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூறினோம். அவை வண்டியிழுக்கவும் பயன்பட்டன. குதிரை வண்டிகள் தேர் என்று கூறப்பட்டன. குதிரை வண்டிகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன; சிறுபாணாற்றுப்படை குதிரை வண்டியைக் கூறுகிறது. (சிறுபாண், 251-261). புலவர் உலோச்சனார் ஒருவர் குதிரை வண்டியில் வந்ததைக் கூறுகிறார் (அகம், 400: 9-16). அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் தம்முடைய செய்யுள்களில் குதிரை வண்டிகளைக் கூறுகிறார். (அகம் 244: 12-13, 344: 7-11, 314: 8-10). மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார் தம்முடைய செய்யுளில் குதிரை வண்டியைக் கூறுகிறார் (அகம், 334: 11-15) மருதன் இளநாகனாரும் நான்கு குதிரை பூட்டிய வண்டியைக் கூறுகிறார் (அகம், 104-3) மாங்குடி மருதனாரும் (குறும், 173: 1-3) புல்லாளங் கண்ணியாரும் (அகம் 154: 11-13) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனாரும் (அகம் 80: 8-13) அரிசில் கிழாரும் (புறம் 146:11) இடைக்காடனாரும் (அகம், 194: 17-91) குதிரை வண்டிகளைத் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அக்குதிரை வண்டிகள் வாணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளாகப் பயன்படுத்தப்படவில்லை. மாடும் மாட்டு வண்டியும் வாணிகப் பொருள்களைக் கொண்டு போவதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டு வண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக் கொண்டுபோனார்கள். வாணிகர் பலர் ஒன்றாகச் சேர்ந்து பொருள்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். இதற்கு வாணிகச் சாத்து என்பது பெயர். அவர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஏனென் றால் காட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரர் வந்து பொருள்களைக் கொள்ளை யடிப்பதும் உண்டு. கொள்ளைக்காரர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தினர் வீரர்களையும் தம்முடைய சாத்துடன் அழைத்துச் சென்றார்கள். கழுதை வாணிகர், வாணிகப் பொருள்களை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்குக் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். பாறைகளும் குன்றுகளும் உள்ள நாடுகளுக்குச் செல்லக் கழுதைகள் முக்கியமாகப் பயன்பட்டன. கழுதைகளின் முதுகுகளின் மேல் சரக்குப் பொதிகளை ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து (வணிகக் கூட்டம்) ஒன்று சேர்ந்து போயிற்று. எல்லைப் புறங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர் வழி பறித்துக் கொள்ளையிடுவதும் உண்டு. அவர்களை அடித்து ஓட்டுவதற்கு வாணிகச் சாத்தர் வில் வீரர்களையும் வாள் வீரர்களையும் துணையாக அழைத்துச் சென்றார்கள். வாணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் நாள் நிமித்தம் பார்த்து நல்ல வேளையில் புறப்பட்டனர். வழிப்பறிக் கொள்ளைக்காரர் இவ்வீரர் களையும் கொன்று பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு. ‘விளரி பரந்த கல்னெடு மருங்கின் விளரூன் தின்ற வீங்குசிலை மறவர் மைபடு திண்டோள் மலிர ஆட்டிப் பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பு.’ (அகம், 89: 9-14. மாங்குடி மருதனார்) (பொறைமலி - பாரம் நிறைந்த. நெடுநிறை - நீண்ட வரிசை) ‘நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை புறம்நிறைப் பண்டத்துப் பொறை’ (அகம், 343: 12-13. மருதனிளநாகனார்) (ஏற்றை - ஆண் கழுதை) பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப் பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வணிகச் சாத்தர் ஊர்ப்பயணஞ் சென்றனர். இடைவழியில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்தினார்கள். சுங்கச் சாவடிகளில் வில் வீரர்கள் காவல் இருந்தனர். ‘தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு’ (பெரும்பாண், 77-82, கடியலூர் உருத்திரங்கண்ணனார்) (மிரியல் - மிளகு) கிழக்குப் பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை, மூட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர். ‘அணங்குடை முந்நீர் பரந்த செருவின் உணங்குதிறம் பெயர்த்த வெண்கல அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செ யாடவர் நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதைக் குறைகுளம்பு தைத்த கல்பிறழ் இயவு’ (அகம், 207: 1-6. சேந்தம்பூதனார்) (வெண்கல் அமிழ்தம் - உப்பு. உய்ம்மார் - கொண்டு போக. புள் ஓர்த்து - நிமிர்த்தம் பார்த்து) வணிகச் சாத்தரை வென்று கொள்ளைக்காரர் வழி பறித்ததைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார். `சாத்தெறிந்து அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்.’ (அகம், 167: 7-9) பாண்டி நாட்டவராகிய மருதன் இளநாகனாரும் இதைக் கூறுகிறார். ‘மழைபெயல் மறந்த கழைதிரங் கியவில் செல்சாத் தெறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்’ (அகம், 245: 5-7) (கழை - மூங்கில். சாத்து - வணிகர் கூட்டம். இளையர் - வீரர்) சங்ககாலத்து வாணிபம் தரை வழியாகவும் கடல் வழியாகவும் நடந்தது. தரைவழியாக வாணிகம் செய்த பெருவணிகருக்கு மாசாத்து வன் என்பது பெயர். அக்காலத்தில் சாலைகள் அதிகமாக இல்லை. சாலைகளிலும் எல்லைப் புறங்களிலும் கொள்ளைக்காரர் இருந்தார்கள். கடல் வழியாக நடந்த வாணிகம் தரை வாணிகத்தைவிடச் சற்று அதிக மாகவும் நன்றாகவும் நடந்தது. கடல் வாணிகத்தை நடத்தின பெரிய வாணிகருக்கு மாநாய்கன் (மாநாவிகன், மா+ நாவிகன்) என்பது பெயர். கடற் பிரயாணத்திலும் காற்று, புயல்களினால் கப்பல்களுக்குச் சேதம் உண்டாயின. கடற் கொள்ளைக்காரர் அதிகம் இல்லை. கடல் வாணிகம் இரண்டு விதமாக நடந்தது. கரைவழி ஓரமாகவே கப்பல்களை ஓட்டி நடத்தின வாணிகம் ஒன்று. கரைவழி ஓரமாகச் செல்லாமல் நடுக்கடலில் கப்பல்களைச் செலுத்திக் கடல் கடந்த நாடுகளுக்குப் போய்ச் செய்த வாணிகம் இன் னொன்று. தரைவழி வாணிகமாக இருந்தாலும், கடல்வழி வாணிகமாக இருந்தாலும், இக்காலத்து வசதிகளைப் போல, அக்காலத்தில் வசதிகள் இல்லை. ஆனாலும் அந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தரை வாணிகமும், கடல் வாணிகமும் நடந்தன. தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள். மேற்கே இத்தாலி, கிரேக்கதேசம் (யவன நாடு) முதல் கிழக்கே சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) பர்மா, மலாயா வரையிலும் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கங்கைக் கரைப் பிரதேசம் வரையிலும் அக்காலத்துத் தமிழர் வாணிகம் நடந்தது. *** 4. தமிழ்நாட்டு வாணிகர் தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்த படியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணஞ் செய்வதிலும் கப்பல் வணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில்போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான். ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!’ என்று புறநானூற்றுச் செய்யுள் (66) கூறுகிறது. பழைய காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும், கூறப் படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற் பிரயாணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பிரயாணம் செய்வதைத் தமிழர் ஆதிகாலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த செயலாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாக வும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு வணிகச் சாத்து என்பது பெயர். தரை வாணிகம் அயல்நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகஞ் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கூட்டமாகச் சென் றார்கள். அவர்கள் போகிற வழிகளில், மனித வாசம் இல்லாத பாலை நிலங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் வந்து கொள்ளையடித்தார்கள். அவர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அன்று; இந்தியா தேசம் முழுவதுமே அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளை செய்த வேடர்கள் இருந்தார்கள். ஆகையினாலே வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்ட மாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படைவீரர்களை யும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகர் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன. மருதன் இளநாதனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார். ‘மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்.’ (அகம், 245: 5-7) கடியலூர் உருத்திரங் கண்ணனாரும், வழிப்பறிக் கொள்ளை யிட்ட வில் வேடரைக் கூறுகிறார். ‘சாத்தெறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்’ (அகம், 167: 7-9) பலாப் பழம் அளவாகக் கட்டின மிரியல் (மிளகு) மூட்டைகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்தர் தங்களுடைய வில் வீரர்களோடு சென்றனர். ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள். இதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார். ‘சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவி லோச்சிய கண்ணகன் ஏறுழ்த்தோள் கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர் தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் புணர்ப் பொறைதாங்கிய வடுவாழ் நோன் புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட்டியவு’ (பெரும்பாண், 73-82) வாணிகச் சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை மாங்குடி மருதனார் கூறுகிறார். ‘களரி பரந்த கல்நெடு மருங்கில் விளரூன் தின்ற வீங்குசிலை மறவர் மைபடு திண்டோள் மலிர ஆட்டிப் பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய திருந்துவான் வயவர் அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பு.’ (அகம், 89: 9-14) வேறு நாடுகளுடன் வாணிகம் செய்த வாணிகச் சாத்துக்கு அக்காலத் தில் அப்படிப்பட்ட துன்பங்கள் இருந்தன. அவர் களுடைய பொருளுக் கும் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அந்த ஆபத்துக்களையும் கருதாமல் அவர்கள் வாணிகம் செய்தார்கள். சாத்துக்களின் தலைவ னான வாணிகனுக்கு மாசத்துவான் என்று பெயர் வழங்கிற்று. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த மாசாத்துவர் களில் ஒருவன் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவானும் ஒருவன். அவன் சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் பெருங்குடி மக்களில் முதல் குடிமகனாக இருந்தான். அவனைச் சிலப்பதி காரம் இவ்வாறு கூறுகிறது. ‘பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க் காற்றும் மாசாத்துவா னென்பான் இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் டகவையான்.’ (சிலம்பு, மங்கல வாழ்த்து) கடல் வாணிகம் கடல் வாணிகத்தையும் அக்காலத் தமிழர் வளர்த்தார்கள். மரக் கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று, அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். தங்கள் நாவாய்களை அவர்கள் கடலில் கரையோரமாகச் செலுத்திக் கொண்டு போய்க் கரையோரமாக இருந்த ஊர்களில் தங்கிப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்குக் கிழக்கே வெகுதூரத்தில், ஆயிரம் மைலுக் கப்பால் இருந்த சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) காழகம் (பர்மா) கடாரம் முதலான கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றபோது நடுக்கடலில் நாவாய் ஓட்டிச் சென்றார்கள். தொல்காப்பியர் காலத்துக்கு, கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழர் கடல் வாணிகம் செய்து கொண்டிருந் தார்கள். அக்காலத்துத் தமிழர், கடலில் பிரயாணஞ் செய்யும்போது தங்களுடன் மகளிரை அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். தொல்காப்பியர் தம்முடைய இலக்கணத்திலும் அவ்வழக்கத்தைக் கூறியுள்ளார். ‘முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை’ என்று அவர் பொருளதிகாரம், அகத்திணை இயலில் கூறி யுள்ளார். (முந்நீர் - கடல். வழக்கம் - வழங்குவது, போவது, மகடூ - மகளிர்) மகளிர் கடலில் பிரயாணம் செய்யக் கூடாது என்னும் கொள்கை நெடுங் காலமாகத் தமிழரிடத்தில் இருந்தது. அண்மைக் காலம் வரையில் இருந்த அந்த வழக்கம் சமீப காலத்தில் தான் மாறிப் போயிற்று. ஆகவே சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் மகளிர் கடலில் கப்பற்பிரயாணம் செய்யவில்லை. பழங்காலத் தமிழர் வருணன் என்னும் கடல் தெய்வத்தை வழிபட்டார்கள். இதையும் தொல்காப்பியரே கூறுகிறார். ‘வருணன் மேய பெருமணல் உலகம்’ நெய்தல் நிலம் எனச் சொல்லப்படும் என்று அவர் கூறியுள்ளார். (பொருளதிகாரம் அகத்திணையியல்), பழங்காலத்துப் பாண்டியன் ஒருவன் முந்நீர்த் திருவிழாவைக் கடல் தெய்வத்துக்குச் செய்தான். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனுக்கு முன்பு இருந்த அந்தப் பாண்டியன் நெடியோன் என்று கூறப்படுகிறான். முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திய நெட்டிமையார் அவனை இவ்வாறு வாழ்த்துகிறார். ‘எங்கோ வாழிய குடுமி! தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.’ (புறம். 9: 8-11) பழமையாக நடந்துவந்த வருண வழிபாடு கி.மு. முதல் நூற்றாண்டிலேயே மறைந்துவிட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பௌத்த மதம் தமிழகத்துக்கு வந்தது. அந்த மதம் கி.மு. இரண்டாம் முதலாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பரவிச் செல்வாக்குப் பெற்றது. அப்போது அம் மதத்தின் சிறு தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் வருணனுக்குப் பதிலாக வணங்கப்பட்டது. கடல் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் கடலில் பிரயாணம் செய்கிற நல்லவருக்குக் கடலில் துன்பம் நேரிட்டால் அது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்றுகிறது என்னும் நம்பிக்கை பௌத்த மதத்தில் இருந்தது. பௌத்தம் தமிழகத்தில் பரவிய போது, தமிழ்நாட்டு வணிகர் மணிமேகலா தெய்வத்தையும் கடல்தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழி பட்டார்கள். இதைச் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுங் காவியங் களிலிருந்து அறிகிறோம். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர் நாவிகர் என்று பெயர்பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் என்று பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்கர் என்று வழங்கப் பட்டது. (நாவாய் - மரக்கலம்). நாவாய்களில் வாணிகம் செய்தவன் நாவிகன் - நாவிகன் என்பது நாய்கன் என்று மருவிற்று. சிலப்பதி காரக் காவியத் தலைவியாகிய கண்ணகி காவிரிப் பூம்பட்டினத்தி லிருந்த ஒரு மாநாய்கனுடைய மகன். கி.பி. இரண்டாம் நூற் றாண்டிலிருந்த அந்த மாநாய்கனையும் அவன் மகளான கண்ணகியையும் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது. ‘நாகநீள் நகரொடு நாக நாடதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்’ (சிலம்பு. மங்கல வாழ்த்து) கரையோர வாணிகம் கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ்வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப்பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறை முகப்பட்டினம்) முதலான பட்டினங் களுக்குச் சென்றனர். பிறகு கங்கை யாறு கடலில் கலக்கிற புகர்முகத்தின் ஊடே கங்கையாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகம் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போக்குவர் கொல்லோ’ என்று நற்றிணை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்தபோது, கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகத நாட்டையரசாண்ட நந்த அரசர் தங்களுடைய, தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ் நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார். ‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ’ (அகம், 265: 4-6) நந்த அரசரின் செல்வப்புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை இந்தச் செய்யுளில் இருந்து அறிகிறோம். வடநாட்டுப் பழைய நூல்களில் இந்தச் செய்தி கூறப்படவில்லை. தமிழ் வாணிகர் கலிங்க நாட்டிலேபோய் வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை யரசாண்ட கார வேலன் என்னும் அரசன் தமிழ் வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டுபோய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள் பருத்தித் துணி. பெருவாரி யாகக் கலிங்க துணி தமிழ்நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத் துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப் பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் ‘சந்தனக் கல்’ `வடவர் தந்த வான் கேழ் வட்டம்.’ ஆந்திர நாட்டிலே பேர்போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்) சங்க காலத்திலே தமிழ் வாணிகர் சென்று வாணிகஞ் செய்தனர். அங்கிருந்த அமராவதி பௌத்தத் தூபி கி.மு. 200இல் தொடங்கி கி.பி. 200 வரையில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பலர் பல வகையில் உதவி செய் தார்கள். அப்போது அங்கு வாணிகஞ் செய்து கொண்டிருந்த தமிழ் வாணிகரும் அக்கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்தனர். தமிள (தமிழ) கண்ணன் என்னும் வாணிகனும் அவனுடைய தம்பியாகிய இளங்கண்ணனும் அவர்களுடைய தங்கை யாகிய நாகையும் அமராவதி தூபி கட்டுவதற்குக் கைங்கரியம் செய் துள்ளனர். இந்தச் செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல் சாசனத்தினால் தெரிகிறது. 3½ அடி உயரமும் 2 அடி 8 அங்குல அகலமும் உள்ள ஒரு கல்லில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு சாசனம் இதைக் கூறுகிறது. இப்போது இந்தக் கல் இங்கிலாந்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டு அங்கு இலண்டன் மாநகரத்துக் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக் கிறது. இதனாலும் கலிங்க நாட்டில் தமிழர் வாணிகஞ் செய்த செய்தி அறியப்படுகிறது.1 தமிழ் வாணிகச் சாத்து (வாணிகக் குழு) கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அக்காலத்துத் தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தில் வாணிகஞ் செய்ததை அங்குள்ள ஒரு பிராமி எழுத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. வாணிகச் சாத்தினுடைய மாளிகை இற்றைக்கு 2,2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தது. பிற்காலத்தில் மறைந்துபோன அந்த மாளிகை பல நூற்றாண்டுகளாக மண்மூடி மறைந்து கிடந்தது. அண்மைக் காலத்தில், மழை நீரினால் அந்த மண்மேடு கரைந்து அங்குக் கல்லில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் வெளிப்பட்டன. கற்பாறையோடு சார்ந்திருந்த அந்த மாளிகையில் அக்காலத்தில் தமிழக நாவாய்த் தலைவன் அமர்ந் திருந்த இடத்திலும் மற்ற வாணிகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடங் களிலும், அவர் களுடைய பெயர்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ் வாணிகர் அநுராதபுரத்தில் பெரிய வாணிக நிலையம் அமைத்திருந்தது தெரிகிறது.2 கி.மு. இரண்டு, ஒன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் வேறு சில தமிழ் வாணிகர் இருந்ததை அக்காலத்துப் பிராமிய எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.3 தமிழ்நாட்டு வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்ததைச் சங்க இலக்கியங்கள் கூறவில்லை. தமிழ் வாணிகர் இருவர் இலங்கையைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டதை இலங்கை நூல்கள் கூறுகின்றன. சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழ் வணிகர் அக்காலத்தில் இலங்கையை அரசாண்ட சூரத்திஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று புத்த சகாப்தம் 306 முதல் 328 வரையில் (கி.மு. 177 முதல் 155 வரையில்) இருபத்திரண்டு ஆண்டு நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சமும் (xxi:10-11) தீபவம்சமும் (XVIII: 47F) கூறுகின்றன. இவ்விருவரும் அஸ்ஸநாவிகர் (அஸ்ஸம் - அஸ்வம் = குதிரை) குதிரை வணிகர் என்று கூறப்பட்டுள்ளனர். நடுக்கடல் வாணிகம் தமிழகத்துக்குக் கிழக்கே வெகு தூரத்தில் வங்காளக்குடாக் கடலுக்கு அப்பால் பசிபிக் மகா சமுத்திரத்தில் பெருந்தீவுகளின் கூட்டம் இருக்கிறது. அந்தத் தீவுகளுக்கு இக்காலத்தில் கிழக் கிந்தியத் தீவுகள் என்றும் இந்தோனேஷியத் தீவுகள் என்றும் பெயர். சங்க காலத்திலே இந்தத் தீவுகளைத் தமிழர், சாவகம் என்றும் சாவக நாடு என்றும் கூறினார்கள். சாவக நாட்டோடு அக்காலத் தமிழர் கடல் வழியாக வாணிகஞ் செய்தனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சாவகத் தீவுகளுக்கு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலிலே கப்பலோட்டிச் சென்றார்கள். சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) என்பது பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான தீவுகளின் கூட்டமாகும். இத்தீவுகளில் முக்கிய மானது சாவா தீவு (ஜாவா). இதை வடநாட்டார் யவதீபம் என்று கூறினார்கள். சீன நாட்டார் இதை யெ தீயவோ (Ye Tiao) என்று பெயர் கூறினார்கள். இது செழிப்பும் நிலவளமும் நீர் வளமும் உள்ளது. சாவா தீவுக்கு அடுத்து சுமாத்ரா, கலிமந்தன் (போர்னியோ). ஸுலவெஸி, செலிபீஸ், மின்டனாயோ, ஹல்மஹீரா முதலான தீவுகளும் கணக்கற்ற சிறுசிறு தீவுகளும் சேர்ந்ததே தமிழர் கூறிய சாவக நாடு. சாவக நாட்டுக்கு அப்பால் வடக்கே சீன தேசம் இருந்தது. சீன தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடை நடுவிலே கடலில் இருந்த சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற வாணிக மத்திய இடமாக இருந்தது. அக்காலத்தில் உலகத்திலே வேறு எங்கும் கிடைக்காத வாசனைச் சரக்குகள் அங்கேதான் கிடைத்தன. ஆகவே சாவகத்தின் வாசனைப் பொருள்களை வாங்குவதற்குச் சீனர் தங்கள் தேசத்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு கப்பல்களில் அங்கே வந்தார்கள். அக்காலத்தில் சீன தேசத்தில் முக்கியமான பொருள் பட்டு. பட்டுத்துணி அக்காலத்தில் சீன நாட்டில் மட்டும் உண்டாயிற்று. சீனர் பட்டுத் துணிகளையும் பீங்கான் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சாவகத்துக்கு வந்தார்கள். தமிழ்நாட்டிலிருந்தும் வடஇந்தியாவிலிருந்தும் வாணிகர் கப்பல்களில் சாவகம் சென்றார்கள். சாவக நாட்டில் சாவா தீவின் மேற்குப் பகுதியான சுந்தரத் தீவிலும் அதற்கு அடுத்த சுமாத்ரா தீவிலும் மிளகு உற்பத்தியாயிற்று. ஆனால் இந்த மிளகு, தமிழகத்துக்குச் சேர நாட்டில் உண்டான மிளகு போன்று அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் சாவகத்து மிளகு தமிழகத்தின் கிழக்குக் கரை நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டது. ஏனென்றால், பேர் போன சேர நாட்டு மிளகை, யவனர் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் உரோமபுரி முதலான மேல் நாடுகளில் விற்றார்கள். ஆகவே சேர நாட்டு மிளகு போதுமான அளவு தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. பற்றாக்குறையை ஈடு செய்யச் சாவக நாட்டுமிளகு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. சுமத்ரா, ஜாவா தீவுகளிலும், தைமர் (Timor) தீவிலும் சந்தன மரங்கள் விளைந்தன. அந்தச் சந்தனக் கட்டைகள் வெண்ணிற மாகவும், மணமுள்ளவையாகவும் இருந்தன. தமிழ்நாட்டிலே பொதிகை மலை, சைய மலை (மேற்குத் தொடர்ச்சி மலை)களில் சந்தன மரம் விளைந்தது. ஆனால் இந்தச் சந்தன மரத்தைவிட சாவக நாட்டுச் சந்தன மரக் கட்டைகள் மணத்திலும் தரத்திலும் உயர்ந்தவை. அந்தச் சந்தன மரம் மருத்துவத்துக்குப் பயன்பட்ட படியால் சீனர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். இலவங்கம் (கிராம்பு) ஒருவகை மரத்தின் பூ. இது ஹல்ம ஹீரா தீவுக்கு மேற்கே கடலில் உள்ள ஐந்து சிறிய தீவுகளில் விளைந்தது. பான்ட கடலில் ஸெராங் தீவுக்குத் தெற்கேயுள்ள ஆறு சிறு தீவுகளில் சாதிக்காய் விளைந்தது. சுமத்ரா தீவில் கற்பூர வகைகள் உண்டாயின. கற்பூரம் என்பது ஒரு வகையான மரத்தின் பிசின். கற்பூரத்தில் ஒருவகை பளிதம் என்பது. பளிதத்தை அக்காலத்துத் தமிழர் வெற்றிலையோடு சேர்த்து அருந்தினார்கள். வெற்றிலையோடு அருந்திய கற்பூரம் பச்சைக் கற்பூரம் என்று பெயர் கூறப்பட்டது. அதற்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. பௌத்த பிக்குகளும் மற்றவர்களும் உணவு உண்ட பிறகு தாம்பூலத்துடன் பளிதம் சேர்த்து அருந்தினார்கள் என்பதை மணிமேகலை நூலினால் அறிகிறோம். ‘போனகம் ஏந்திப் பொழிதினிற் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து’ (மணி, 28: 242 - 243) பளிதத்தில் (கற்பூரத்தில்) பலவகையுண்டு. “பல பளிதம்” என்று 10ஆம் பரிபாடல் (அடி 82) கூறுகிறது. ஒருவகைப் பளிதத்தைச் சந்தனத்துடன் கலந்து உடம்பில் பூசினார்கள். கடல்களும் தீவுகளும் கலந்த சாவக நாட்டிலே பவழம் (துகிர்) உண்டாயிற்று. பவழம் (பவளம் - துகிர்) என்பது பவழப் பூச்சிகளால் உண்டாகும் பவழப் புற்று. கடலில் பவழப் பூச்சிகளால் உண்டாகும் பவழம் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து கிடைத்தது. (மத்தியத் தரைக் கடலில் உண்டான பவழத்தை யவனர் கொண்டுவந்து விற்றனர்.) தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து போய் அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவழத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துகிலையும் கொண்டு வந்து பழந் தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்றுவிட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டு வந்த பட்டுக்களை, அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘நூலாக்க லிங்கம்’ என்று கூறியதைச் சங்க இலக்கியங் களில் காணலாம். சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசப் பொருள்களை விற்றவர் வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம், ‘தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோ டைந்து.’ என இவை, தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்கு சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெறவில்லை. மணி பல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது; அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தூரத்திலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர் மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத் தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடை யில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் நக்கசாரணர் என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றனர். ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவ தில்லை. சாதுவன் என்னும் வாணிகன் நாகர்மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத்தீவுக் கருகில் சென்ற போது புயற் காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் மூழ்கிப் போனார்கள். சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக் கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்லகாலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங்களைப்பும் அடைந்து சோர்ந்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கிவிட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டா மென்றும் கப்பல் மூழ்கிப் போனதால் தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டுபோனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கி யிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர்மலைத் தீவின் பக்கமாக வந்த போது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட் டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலைக் காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது. பாண்டிய நாட்டு வாணிகரும் சாகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருந்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ‘மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின் ஊனுயிர் மடிந்தது உரவோய் என்றலும் ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக் கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல்லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள்.’ (பாத்திர மரபு கூறிய கதை 76.72) தமிழகத்திலிருந்து சாவகநாடு நெடுந்தூரத்திலிருந்தும் தமிழ் வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர். காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாக நாட்டில்தான் கிடைத்தன. கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள். முரசு கடிப்படைய அருந்துறை போகிப் பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய வினைவர் போல. (பதிற்று, 8ஆம் பத்து 6) கடலில் செல்லும் கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, சமயத்தில் நீரில் முழ்குவதும் உண்டு. கடலில் முழ்கும் கப்பல், இருள் சூழும்போது மலை மறைவது போலக் காணப்பட்டது என்று புலவர் கொல்லன் அழிசி கூறுகிறார். (குறுந், 240: 5-7) கடுங்காற்றினால் தாக்குண்ட திண்மையான கயிறுகளையும் அறுத்து, பாய்மரத்தை ஒடித்து, நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகிறார். ‘பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் வீங்குபிணி நோன்கயிறு அரீஇதை புடையூக், கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்துடன் கடுங்காற்று எடுப்பக் கல்பொருது இரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்’ (மதுரைக் காஞ்சி 375 - 379) சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து சாவக நாட்டுக்குக் கப்பலில் பிரயாணஞ் செய்தபோது, அவனுடைய கப்பல் நாகர்மலைத் தீவுக்கு அருகில் காற்றினால் சாய்ந்து முழ்கிப் போனதையும் அவன் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு தீவில் கரையேறியதையும் மணிமேகலை கூறுகிறது. ‘நளியிரு முந்நீர் வளிகலன் வவ்வ ஒடிமரம் பற்றி யூர்திரை யுதைப்ப நக்கசாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்’ (மணி, 16: 13-16) மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்த கம்பளச் செட்டி என்பவனுடைய மரக்கலம் இரவில் கரையை யடைகிற சமயத்தில் கவிழ்ந்தது என்பதை மணிமேகலை கூறுகிறது. ‘துறைபிறக் கொழியக் கலங் கொண்டு பெயர்ந்த அன்றே காரிருள் இலங்குநீர் அடைகரை யக்கலங் கெட்டது’ (மணி, 25: 189-191) இவ்வாறு நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் இடுக்கண்களும் துன்பங்களும் நேர்ந்தும் அவை களையும் பொருட் படுத்தாமல் வாணிகர் நாவாய்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாக ஏற்படுகிற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வாணிகருக்குக் கடற் கொள்ளைக்காரராலும் துன்பங்கள் நேரிட்டன. ஆனால், கடற்கொள்ளைக்காரர் கிழக்குக் கடலில் அக்காலத்தில் இல்லை. மேற்குக் கடலிலே (அரபிக்கடல்) கப்பற் கொள்ளைக்காரர் இருந்ததை அக்காலத்தில் சேர நாட்டுத் துறைமுகத்துக்கு வந்து சென்ற யவனர் எழுதியுள்ளனர். துளுநாட்டின் ஏழில் மலைக்கு நேரே, கடலில் இருந்த ஒரு கடல் துருத்தியில் (சிறு தீவு) கடற்குறும்பர் தங்கியிருந்து வாணிகத்தின் பொருட்டு அவ்வழியாக வருகிற கப்பல்களைக் கொள்ளையடித்த னர் என்றும் ஆகவே அவ்வழியாகக் கப்பல்கள் போவது ஆபத்து என்றும் பிளைனி என்னும் யவனர் எழுதியுள்ளார். ஆனால், அக்காலத்தில் சேர நாட்டையரசாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அந்தக் கடற்குறும்பரை வென்று அடக்கினான். கடற்குறும்பர் அழிந்தபிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறை முகங்களுக்கு வந்து போயின. கடல் துருத்தியில் இருந்த கடற்குறும்பர் அத்தீவில் கடம்ப மரம் ஒன்றை வளர்த்து வந்தனர். அவர்கள் அத்தீவிலிருந்து கொண்டு அவ் வழியாக வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல்களை முசிறித் துறைமுகத்துக்கு வாராதபடி தடுத்தனர். ஆகவே, அவர்களை அழிக்க இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்னுடைய மக்கள் நால்வரில் ஒருவனான சேரன் செங்குட்டுவனைக் கப்பல் படையின் தலைவனாக அமைத்து அனுப்பினான். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்றுருத்திக் குறும்பரை வென்று அவர்கள் வளர்த்த கடம்ப மரத்தை வெட்டி அதன் அடி மரத்தினால் முரசு செய்தான். இவ்வாறு கடற்குறும்பர் அழிக்கப் பட்ட பிறகு யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங் களுக்கு வந்தன. நெடுஞ்சேரலாதன் கடம்பரை அழித்த செய்தியைப் பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளினால் அறிகிறோம். ‘பவர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபணை செய்தவெல் போர் நாரரி நறவின் ஆரமார்பின் போரடு தானைச் சேரலாத.’ (2ஆம் பத்து 1: 12-16) இதில் இவன் கடம்பரை நேரில் சென்று அடக்காமல் தன் மகனை ஏவினான் என்பது கூறப்படுகிறது. ஏவப்பட்டவன் இவனுடைய மகனான செங்குட்டுவன், ‘இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி.’ (2ஆம் பத்து 10: 2-5) செங்குட்டுவன் கடல் துருத்திக் குறும்பரை வென்றபடியால் அவன் `கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான். இவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர். ‘தானை மன்னர் இனியா ருளரோ நின் முன்னு மில்லை. மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவரி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே’ (5ஆம் பத்து 5: 17-22) என்று கூறுகிறார். தன் தந்தையின் ஏவலின்படி செங்குட்டுவன் கடற் குறும்பரை வென்று அடக்கினான் என்பது இவற்றிலிருந்து தெரிகிறது. குறிப்பு : கடல் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த குறும்பரும் பிற்காலத்தில் சரித்திரப் புகழ் பெற்ற வனவாசிக் கதம்பரும் ஒருவரே என்று சிலர் கருதுவர். அப்படிக் கருதுவது தவறு. கடல் தீவில் இருந்த கொள்ளைக் குறும்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும், வனவாசிக் கடம்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் காரணமாக இருவரும் ஒருவரே என்று கூறுவது தவறு. கடல் கொள்ளைக்காரருக்குக் கடம்பர் என்னும் பெயர் இருந்ததில்லை. வனவாசிக் கதம்பர் கடல் கொள்ளைக் காரராக இருந்ததும் இல்லை. நெடுஞ்சேர லாதனும் சேரன் செங்குட்டுவனும் வென்ற கடல் குறும்பர் கி.பி. 2ஆம் நூற்றாண் டில் இருந்தவர். வனவாசிக் கதம்பர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர். இருவரையும் ஒன்றாகப் பிணைப்பது தவறு. சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுபோலக் கடம்பர் என்று பெயர் இருந்ததில்லை. கதம்பர் என்றுதான் சாசனங்கள் கூறுகின்றன. கடலில் நாவாயோட்டும் தொழில் செய்பவருக்கு மீகாமர் என்பது பெயர். கப்பலோட்டும் தொழில் செய்தவர் பரதர் என்றும் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் துறை முகப்பட்டினங்களில் குடியிருந்தார்கள். கப்பல்கள் துறைமுகத்தை யடைந்தவுடன் கப்பல்களில் தொழில் செய்யும் மாலுமிகள் கள்ளையுண்டனர். அவர்களுக்காகத் துறைமுகங்களில் கள் விற்கப்பட்டது. ‘வேறுபன் னாட்டுக் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் களிமடைக் கள்ளின் சாடி’ (நற்றிணை 295: 5-8) துறைமுகங்களில் விற்கப்பட்ட கள்ளைக் குடித்து மாலுமிகள் மகிழ்ச்சியாக இருந்ததை மணிமேகலை கூறுகிறது. ‘முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணி’ (மணி, 7: 20-72) நாவாய்க் கப்பல்கள் துறைமுகத்தையடைந்தபோது அதை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டழைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது. ‘தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல்’ (பரிபாடல் 10: 38-39) நாவாயில் கப்பலோட்டுந் தொழில் செய்த ஓர் இளையவன் தன் புது மனைவியைப் பிரிந்து கப்பலில் தொழில்செய்யச் சென்றான். அவ னுடைய மனைவி அவன் எத்தனைக் காலங்கழித்து திரும்பி வரு வானோ என்று மனக் கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள் என்று மருதன் இளநாகனார் கூறுகிறார். ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே யழிபடர் அகல, வருவர்’ (அகம், 255: 1-8) (நீகான் - மீகாமன்) எட்டிப் பட்டம் வாணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக் காலத்துத் தமிழ் வாணிகர், வாணிகத் தொழிலை அயல்நாடுகளோடு தரை வழியாகவும், கடல் வழியாகவும் சென்று நடத்திப் பொருள் ஈட்டினார்கள். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழர் வாக்கு. சேர சோழ பாண்டியராகிய தமிழரசர் வாணிகரை ஊக்கினார்கள். வாணிகத்தில் பெருஞ்செல்வத்தை ஈட்டின மாசாத்துவர்களுக்கும் மாநாய்கர் (மாநாவிகர்)களுக்கும் எட்டிப்பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப் பதக்கம் போன்ற அணி. பெரும் பொருள் ஈட்டிய வாணிகச் செல்வர் களுக்கு எட்டிப்பட்டம் அளிக்கும் போது இப்பொற் பூவையும் அரசர் அளித்தனர். எட்டிப்பட்டம் பெற்ற வாணிகரைப் பழந்தமிழர் நூல்கள் கூறுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சாயலன் என்னும் வாணிகன் எட்டிப்பட்டம் பெற்றிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘எட்டி சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில்’ (அடைக்கலக் காதை, 163-164) குறிப்பு : எட்டி சாயலன் என்போன் ஒரு வாணிகன். எட்டி - பட்டப் பெயர் என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார். எட்டிப் பட்டம் பெற்றிருந்த ஒரு வாணிகனை மணிமேகலை காவியங் கூறுகிறது. (நாலாம் காதை, வரி 58, 64) காவிரிப் பூம்பட்டினத் தில் இருந்த தருமதத்தன் என்னும் வாணிகன் பாண்டி நாட்டு மதுரைக்குப் போய் அங்கு வாணிகஞ் செய்து பெரும் பொருளைச் சேர்த்தான். பாண்டிய அரசன் அவனுக்கு எட்டிப்பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தான் என்று மணிமேகலையே கூறுகிறது. தருமதத்தன் - ‘வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில் எட்டிப் பூப் பெற்று இருமுப்பதிற் றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்’ (மணி, 22: 111-114) *** அடிக்குறிப்புகள் 1. No 80 p. 20 Notes on the Amaravati Stupa. by J. Bargess. (18/2 Archaeology Survey of South India.) 2. Tamil House - holders’ Terrace Anuradhapura by S. Paranavatana. P.P. 13-14, Annual Bibliography of India Archaeology. Vol. xiii. 1938. Journal of Ceylon branch of the Royal Asiatic Society Colomba Vol. XXXV 1942. P.P. 54-56. Inscriptions of Ceylon Vol. I (1970) P. 7. No. 94 (a). 3. P. 28. Nos (19) 357 (20) P. 37. No 430. Inscription of Ceylon Vol. I (1970) Edited s. Paranavalana. 5. பிறநாட்டு வாணிகர் பழங்காலத்துத் தமிழர் தரை வழியாகவும், கடல் வழியாக வும் பாரதநாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள். உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம் முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்) அருமணவன் (Ramanna), தக்கோலம் (Takkola), கிடராம் (கடாரம்), சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்ததை முன்னமே கூறினோம். தமிழ் வாணிகர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கே அநுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருந்தனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டினால் அறியப்படுகிறது என்பதையும் கூறினோம். தமிழக வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்ததுபோலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல்நாடுகளி லிருந்து கப்பலோட்டி வந்த வேறு பாஷைகளைப் பேசின மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும் இலங்குநீர் வரையும்’ (சிலம்பு, 5: 10-12) ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ (சிலம்பு, 6:43) ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்.’ (பட்டினப்பாலை, 216-218) அரபு வாணிகர் தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்துவந்த அராபிய வாணிகர் சேர நாட்டின் முசிறித் துறைமுகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் வாணிகஞ் செய்த இடத்துக்குப் பந்தர் என்று பெயரிட்டிருந் தார்கள். பந்தர் என்றால் அரபு மொழியில் கடைவீதி என்பது பொருள். முசிறித் துறைமுகத்துப் பந்தரில் முத்துக்களும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன. பதிற்றுப்பத்து 6ஆம் பத்தில் (செய்யுள் 5) “நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர்” என்றும், 7ஆம் பத்து 7ஆம் செய்யுளில், “பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” என்றும், 8ஆம் பத்து 4ஆம் செய்யு ளில் “பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்” என்றும் பந்தர் அங்காடி கூறப் படுகிறது. அராபியர் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்த படியால் அரிசி என்னுந் தமிழ்ச் சொல் அரபு மொழியில் சென்று ஓரூஜ் என்று வழங்குகிறது. அராபியர், அக் காலத்தில் தமிழ்நாடாக இருந்த சேரநாட்டிலிருந்து மூங்கிலைக் கொண்டுபோய் அரபி நாட்டில் வளர்த்தார்கள். அராபியர், தமிழ்நாட்டுப் பொருள்களை, முக்கியமாகச் சேரநாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறை முகங்களிலும் எகிப்து நாட்டில் நீல நதி, கடலில் கலக்கும் இடத்திலிருந்தது. அலக் சாந்திரியத் துறைமுகப்பட்டினத்திலும் விற்றார்கள். அங்கிருந்த பொருள்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் அராபியர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்யவில்லை. தமிழர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் போய் அங்கிருந்து கொண்டுவந்த பொருள்களை இங்கிருந்து அராபியர் வாங்கிக்கொண்டு போய் வெளிநாடுகளில் விற்றார்கள். தூரக் கிழக்கு நாடுகளில் உண்டான பொருள்களை மேற்கு நாடுகள் வாங்கிக்கொண்டு போவதற்குத் தமிழ்நாடு அக்காலத்தில் மத்திய வாணிக இடமாக அமைந்திருந்தது. யவன வாணிகர் கிரேக்க நாட்டாரும் உரோம் நாட்டாரும் அக்காலத்தில் யவனர் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்கள். உரோம் சாம்ராச்சிய காலத்தில், கி.மு. முதலாம் நூற்றாண்டில், எகிப்து தேசத்தை உரோமர் கைப்பற்றிக் கொண்டார்கள். அக்காலத்தில் எகிப்து நாட்டில் மத்திய தரைக்கடல் ஓரத்திலிருந்த அலக் சாந்திரியத் துறைமுகப்பட்டினம், ஆசிரியா - ஐரோப்பாக் கண்டங்களின் மத்தியத் துறைமுகப்பட்டினமாக இருந்தது. அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினத்தில் உலகத்தின் பல பாகங்களிலிருந்து பலநாட்டு வாணிகர் வந்தனர். ரோமபுரியிலிருந்து யவன வாணிகர் அங்கு வந்து தங்கி வாணிகஞ் செய்தார்கள். உரோமர் எகிப்து நாட்டைக் கைப்பற்றின பிறகு அவர்கள் அராபியரின் வாணிகத்தையும் கைப்பற்றினார்கள். அராபியர் வாணிகஞ் செய்திருந்த செங்கடல் துறை முகப்பட்டினங்களைக் கைப்பற்றி அராபியரின் வாணிக ஆதிக்கத்தை ஒழித்தார்கள். செங்கடல் வாணிகத்தைக் கைப்பற்றின யவனர், செங் கடலைக் கடந்து வந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குகரைப் பட்டினங்களிலும், பாரசீகக் குடாக்கடலிலும் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தார்கள். யவனர் செங்கடலுக்கு இட்ட பெயர் எரித்தரைக் கடல் (Maris erythraei) என்பது. எரித்ரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்குச் செங்கடல் என்பது பொருள். பாரசீகக் குடாக்கடலில் வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் குடாக் கடலுக்கும் எரித்ரைக் கடல் என்று பெயரிட்டனர். அக் காலத்தில் அவர்கள் நடுக்கடலில் கப்பல் பிரயாணஞ் செய்யாமல் கரையோரமாகவே பிரயாணஞ் செய்தார்கள். சிலகாலஞ் சென்றபிறகு யவனர் பாரசீகக் கடலிலிருந்து சிந்து, கச்சு, குஜராத்தி நாடுகளுக்குக் கடல் வழியே வந்து வாணிகஞ் செய்தார்கள். பிறகு இந்தியாவில் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் சேரநாட்டு முசிறிப் பட்டினத்துக்கும் வந்தார்கள். அவர்கள் அரபிக் கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அரபிக் கடலுக்கும் எரித்ரைக் கடல் (செங்கடல்) என்றே பெயர் கூறினார்கள். பிறகு குமரிக்கடல், வங்காளக் குடாக்கடல் ஆகிய கடல்களுக்கு வந்து தமிழகத்தின் கிழக்குக் கரையிலும் வாணிகஞ் செய்தார்கள் அவர்கள். குமரிக் கடலுக்கும் வங்காளக் குடாக் கடலுக்கும் எரித்ரைக் கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள். யவனர் அக்காலத்தில் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை ஓரமாகவே பிரயாணம் செய்தபடியால், அவர்கள் முசிறி முதலான தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போகப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் அரபிக் கடலின் ஊடே நடுக்கடலில் பருவக்காற்றின் உதவியினால் பிரயாணஞ் செய்ய அக்காலத்தில் அறியவில்லை. ஆனால், பருவக்காற்றின் உதவி யினால் வெகு விரைவில் நடுக்கடலினூடே பிரயாணஞ் செய்யத் தமிழரும் அராபியரும் அறிந்திருந்தார்கள். பருவக்காற்றின் உதவியை அறியாத காரணத்தினால் யவனர் முசிறித் துறைமுகப் பட்டினத்துக்குக் கரையோரமாக வந்துபோக நெடுங்காலஞ் சென்றது. கடைசியாகக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பிரயாணம் செய்யும் இரகசியத்தைக் கண்டுபிடித்தான். அது முதல் யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவன் பெயராகிய ஹிப்பலஸ் என்னும் பெயரையே சூட்டினார்கள். ஹிப்பலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் நேராகத் தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. அதனால் யவனக் கப்பல் வாணிகம் பெருகிற்று. இந்தக் கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோம் சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் சீஸர் அரசன், யவன - தமிழர் வாணிகத்தை விரிவுபடுத்தினான். உரோமாபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் சமீப காலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் பழங்காசுகள் சங்க காலத்தில் நடந்த தமிழர் - யவனர் வாணிகத் தொடர்புக்குச் சான்று பகர்கின்றன. அக்காலத்தில் நடந்த தமிழர் யவனர் வாணிகத் தொடர்பைப் பற்றிப் பிளைனி, தாலமி முதலான யவனர்கள் எழுதிய நூல்களிலிருந்து அறிகிறோம். ஒரு யவனர் கிரேக்க மொழியில் எழுதிய செங்கடல் வாணிகம் என்று பெயருள்ள ஒரு நூல் உண்டு (Periplus of the Erythraei) அதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அந்நூலில் தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் யவன வாணிகர் செய்த வாணிகத்தைப் பற்றிக் கூறப் படுகிறது. உரோம் சாம்ராச்சியத்தையாண்ட அகஸ்தஸ் சக்கரவர்த்திக்கு மதுரை யிலிருந்து ஒரு பாண்டியன் தூது வரையனுப்பினான். வாணிகத்தின் பொருட்டு வந்த யவனர் துறைமுகங்களுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதி முடிந்தவுடன் அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். யவனர் சிலர் தமிழ் நாட்டிலே தங்கித் தொழில் செய்தார்கள். அவர்கள் தச்சுத் தொழிலில் தேர்ந்தவர்கள். “யவனத் தச்சர்” என்று மணிமேகலை (19:108) கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே (அரிக்கமேடு என்னும் இடத்தில்) இருந்த யவனப் பண்டக சாலையில் யவனத் தொழிலாளிகள் சிலர் கண்ணாடி மணிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது. பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை அக்காலத்தில் கோட்டை மதிலுக்குள் இருந்தது. கோட்டை வாயில்களில் யவன வீரர்கள் காவல் இருந்தனர். கோவலன் மதுரைக்குச் சென்றபோது கோட்டை வாயிலை யவன வீரர்கள் காவல் காத்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ (சிலம்பு. ஊர்காண். 66-67) பாண்டியனுடைய பாசறையில் யவன வீரர்கள் இருந்ததை முல்லைப் பாட்டு கூறுகிறது. முழங்கால் வரையில் குறுகிய பாவாடை போன்ற ஆடை (வட்டுடை) அணிந்து உடம்பில் மெய்ப்பை (சட்டை) அணிந்து குதிரையோட்டும் மத்திகையை (சம்மட்டியை)க் கையில் வைத்திருந்தனர். அவர்களுடைய தோற்றம் அச்சஞ் தருவதாக இருந்தது. ‘மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என்று முல்லைப்பாட்டு (அடி 59-61) கூறுகிறது. யவன - தமிழர் வாணிகத் தொடர்பின் காரணமாகச் சில கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் முதலான கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. சங்கச் செய்யுட்களிலே இந்தச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி. இச்சொல் முல்லைப் பாட்டு 59ஆம் அடியில் பயிலப்பட்டுள்ளது. சுருங்கை என்பது கிரேக்க மொழிச்சொல். சுரங்கம் என்றும் கூறப்படும். இது தரைக்குள் அமைக்கப்படுவது. ‘சுருங்கை நெடுவழி’ (பரிபாடல் 20:104) ‘சுருங்கை வீதி’ (சிலம்பு 14:65) “சுருங்கை - கரந்துறை ஒழுகுநீர் புகுகையை ஒருத்தருமறியாதபடி மறைத்துப் படுத்த வீதி” என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். கலம் என்னுஞ் சொல் கிரேக்கம். தமிழ் என்னும் இரண்டு மொழி களுக்கும் உரிய சொல். கிரேக்க மொழியில் (Kalom) கலம் என்னும் சொல்லுக்கு மரவீடு என்பது பொருள். இந்தச் சொல்லை யவனர் கப்பல் களுக்கும் பெயராக வழங்கினார்கள். யவனர் வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது இச்சொல்லைத் தமிழர் அறிந்தனர். அறிந்து செய்யுட்களிலும் பயன்படுத்தினார்கள். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ (அகம். 149) “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறம் 56). தமிழிலும் கலம் என்னுஞ் சொல் உண்டு. இத்தமிழ்ச் சொல் லுக்குப் பானை, சட்டி என்பது பொருள். ஒரே ஓசையுள்ளதாக இந்தச் சொல் இருந்தபடியால் தமிழர் அடைமொழி கொடுத்து இச்சொல்லை வெவ்வேறு பொருளில் பயன்படுத்தினார்கள். கிரேக்கச் சொல்லை மரக்கலம் என்றும் தமிழ்ச் சொல்லை மட்கலம் என்றும் கூறினார்கள். கன்னல் என்னுஞ் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் கொள்ளப்பட்ட சொல். காலத்தையளக்குங் கருவிக்குக் கன்னல் என்று பெயர். மேலுங் கீழுமாக இரண்டு பாத்திரங்களை ஒன்றாக அமைத்து அதன் நடுவில் இருந்த சிறுதுளை வழியாக மேல் பாத்திரத்திலிருந்து நீர் கீழ்ப் பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாக விழும்படியமைப்பார்கள். விழுந்த நீரின் அளவைக் கொண்டு காலத்தையறிந்தார்கள். கன்னல் என்னும் இந்தக் கருவி யவன நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது. ‘பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப’ (முல்லைப்பாட்டு, 55-58) தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல் என்று சிலர் கூறுவர். அவர் கூற்று தவறு. தொல்காப்பியத் திலும் சங்கச் செய்யுட்களிலும் ஓரை என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழ்ச் சொல். கிரேக்க மொழிச் சொல் அன்று. கிரேக்க மொழியில் வானநூல் சம்பந்தமாக ஹோரா என்னும் சொல் உண்டு. அது தமிழில் ‘ஓரை’ என்று வழங்கியதாகச் சிலர் கருது கின்றனர். முகுர்த்தம் என்னும் பொருளில் ஓரை என்னும் சொல் தமிழில் வழங்கவில்லை. தமிழில் வழங்கும் (ஓரை மகளிர்) ஓரை என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல் அன்று. தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க ‘ஹோரா’ என்பதன் திரிபு என்று கருதுவது உண்மையறியாதார் கூற்று. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், இந்நூலாசிரியர் எழுதிய “சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்” என்னும் நூலில் 20-34ஆம் பக்கங்களில் காண்க. அரிசி என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் ஒரிஜா (Oryza) என்று வழங்கப்படுகிறது. இச்சொல்லை யவனர் தமிழிலிருந்து எடுத்துக் கொண்டனர். யவன வாணிகர், தமிழ்நாட்டு ஊர்களான சோழ பட்டினத்தைச் சோ பட்மா என்றும் காவிரியைக் கபிரிஸ் என்றும் முசிறியை முசிரிஸ் என்றும் கருவூரைக் கரோரா என்றும் மதுரையை மதோரா என்றும் ஆய்நாட்டை ஆயோய் என்றும் கூறினார்கள். அந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் எண்ணெய் விளக்கு உபயோகிக்கப்பட்டது. மண்ணால் செய்த அகல் விளக்கையும், இரும்பினால் செய்த விளக்கையும் (இரும்பு செய் விளக்கு, நெடுநல் வாடை, 42) தமிழர் உபயோகித்தார்கள். யவன நாட்டிலிருந்து வந்த அன்னப் பறவையின் உருவமாக அமைக்கப்பட்ட ‘ஓதிம’ விளக்கையும் பெண் வடிவமாக அமைத்த ‘பாவை’ விளக்கையும் தமிழர் உபயோகித் தார்கள். இவ்விளக்கைச் செல்வர் வாங்கி உபயோகித்தார்கள். ‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி’ என்றும் (நெடுநல்வாடை 101:103), “பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ” என்றும் (முல்லைப்பாட்டு 85) பாவை விளக்கு கூறப் படுகிறது. சிலப்பதிகாரமும் (5:154) மணிமேகலையும் (1:45) பாவை விளக்கைக் கூறுகின்றன. “யவனர் ஓதிம விளக்கைப்” பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது (வரி 316-317) யவன வாணிகர் பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்துத் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிக்கொண்டு போனார்கள். யவனக் காசுகள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் கிடைக்கின்றன. அந்தப் பழங்காசுகள் தற்செயலாகப் பூமி யிலிருந்து அண்மைக் காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. பழைய தமிழ்நாடான சேர நாட்டிலே திருவனந்தபுரத்துக்கு வடக்கே 150 மைல் தூரத்தில் உள்ள பூஞ்சாரிலும் திருச்சூருக்கு வடமேற்கே 22 மைல் தூரத்திலுள்ள எய்யலிலும் 1945ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழங்காசுகள் கிடைத்தன. கொங்கு நாட்டில் கரூர், காட்டன் கன்னி, குளத்துப்பாளையம், பென்னார், பொள்ளாச்சி, வெள்ளலூர் முதலான இடங்களிலும் பாண்டி நாட்டில் மதுரை, கலியம்புத்தூர், கரிவலம் வந்த நல்லூரிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கருக்காகக் குறிச்சியிலும், தஞ்சாவூர், மகாபலிபுரம் முதலான ஊர்களிலும் யவன நாணயங்கள் (உரோமபுரிப் பழங்காசுகள்) கிடைத்துள்ளன. இக்காசுகள் அக்காலத்தில் நடந்த தமிழ - யவன வாணிகத்துக்குச் சான்றாக இருக்கின்றன. சாவகம் தமிழகத்துக்குக் கிழக்கே நெடுந்தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் கிழக்கிந்தியத் தீவுகள் உள்ளன. அந்தத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரியவையும் சிறியவையும் மிக நுண்மையுமான தீவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவையுள்ளன. சங்ககாலத் தமிழர் அக்காலத்தில் அந்தத் தீவுகளுக்குக் கடல் கடந்து போய் வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் அந்தத் தீவுகளுக்குச் சாவக நாடு என்று பெயரிட்டிருந்தார்கள். மணிமேகலைக் காவியம் சாவகநாட்டைக் கூறுகிறது. அந்தத் தீவுகளிலே சில தீவுகளில் மட்டும் நாகரிகம் அடைந்த மக்கள் அக்காலத்தில் இருந்தனர். பெரும் பான்மையான தீவுகளில் இருந்தவர் அக்காலத்தில் நாகரிகம் பெறாதவர் களாக இருந்தார்கள். நாகரிகம் பெற்றிருந்த தீவுகளில் முக்கியமானது சாவகத் தீவு. இந்தத் தீவின் பெயரைத்தான் அக்காலத்தில் தமிழர் அங்கிருந்த எல்லாத் தீவுகளுக்குப் பொதுப் பெயராகக் கூறி னார்கள். சாவகத் தீவில்தான் தமிழர் முக்கியமாக வாணிகம் செய்தார்கள். சாவகத் தீவை யரசாண்ட அரசர்கள் வாணிகத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். இதைச் சூழ்ந்திருந்த மற்ற தீவுகளில் உற்பத்தியான பொருள்கள் எல்லாம் சாவகத் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழ் வாணிகரும் வடஇந்தியாவிலிருந்து சென்ற இந்திய வாணிகரும் சீன நாட்டிலிருந்து சென்ற சீன வாணிகரும் சாவகத் தீவுடன் வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் சாவகம் சீன நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே மத்திய வாணிக நிலையமாக இருந்தது. இந்தத் தீவுகளில் எரிமலைகள் அவ்வப்போது நெருப்பையும் சாம்பலையும் கக்கின. இந்தச் சாம்பல் அந்தப் பூமிக்கு வளத்தை யும் செழிப்பையும் தந்தது. அக்காலத்தில் மற்ற நாடுகளில் கிடைக்காத பொருள்கள் (இலவங்கம், சாதிக்காய், குங்குமப் பூ, பளித வகை (கர்ப்பூர வகை) முதலான வாசப் பொருள்கள்) அங்கு உண்டாயின. சாவா தீவின் வடக்கே அதையடுத்து ‘மதுரா’ என்னும் சிறு தீவு இருக்கிறது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து போய்க் குடியேறின. அக்காலத்துத் தமிழர் தங்கியிருந்த இடமாகையால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. சாவா தீவில் மலைகளிலிருந்து தோன்றி வடக்கே ஓடிக் கடலில் விழுகிற ஆறுகளில் ஒன்றின் பெயர் ஸோலோ என்பது. ஸோலோ ஆறு மதுரா தீவுக்கு அருகில் கடலில் விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகப் பழைய மனிதனுடைய எலும்புக்கூடு அகழ்ந் தெடுக்கப்பட்டது. அது 35,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்பு என்று கூறுகிறார்கள். இந்த எலும்புக் கூடு எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே இன்னொரு எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது முன்னையை எலும்புக் கூட்டைவிட மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த எலும்புக் கூட்டுக்கு ‘ஜாவா மனிதன்’ என்று பெயரிட்டிக்கிறார்கள். தமிழர் சாவகம் என்று பெயரிட்ட இந்தத் தீவை வடநாட்டார் யவதிவம் என்று பெயரிட்டிருந்தார்கள். அக்காலத்துச் சீனர் இந்தத் தீவை ‘யெ தீயவோ’ என்று பெயரிட்டழைத்தார்கள். ‘யவதீபம்’ என்பதைத்தான் சீனர் ‘யெ தீயவோ’ என்று கூறி னார்கள். சீன நாட்டார் யவதீவுடன் (சாவா தீவுடன்) இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிருஸ்து சகாப்தத் தின் தொடக்கத் திலேயே வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சங்க காலத்துத் தமிழர் அக்காலத்திலேயே சாவகத் தீவுடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சாவகத் தீவை அவர்கள் ஆபுத்திர நாடு என்றும் கூறினார்கள் என்பதை மணி மேகலைக் காவியத்திலிருந்து அறிகிறோம். ஜாவா தீவின் தலைநகரம் நாகபுரம் என்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாவகத்தை யரசாண்ட அரசன் பூமி சந்திரனுடைய மகனான புண்ணியராசன் என்றும் இந்த அரசர் பரம்பரை இந்தி அரசர் பரம்பரை என்றும் மணிமேகலை கூறுகிறது. ‘நாக புரமிது நன்னகர் ஆள்வோன் பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன்’ (மணி, 24: 179-180) நாகபுரத்து அரண்மனையைச் சார்ந்த சோலையில் தரும சாரணர் என்னும் பௌத்த சமயத் துறவி இருந்தார் (மணி, 25:2) காவிரிப் பூம் பட்டினத்திலிருந்த மணிமேகலை (கோவலன் - மாதவியின் மகள்) பௌத்த மதத்தைச் சார்ந்து பிக்குணியான பிறகு, அப்பட்டினத்திலிருந்து சாவகத் தீவின் தலைநகரான நாகபுரத்துக்குப் போய் அங்கிருந்த தரும சாரணரை வணங்கி அங்குச் சிலநாள் தங்கியிருந்தாள். அவள் புண்ணிய ராசனைக் கண்டு பிறகு திரும்பி வந்தாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. (மாதவி மகளான மணி மேகலைச் சாவகத்துக்குப் போனதும் அங்கிருந்து திரும்பி வந்ததும் ஆகாயத்தின் வழியாக என்று மணி மேகலைக் காவியம் கூறுகிறது. (மணிமேகலை 25ஆம் காதை) மணி மேகலை சாவகத்துக்குப் போனது கடல்வழியாகக் கப்பலிலேதான். ஆனால் அவள் ஆகாய வழியாகப் பறந்து சென் றாள் என்று காவியங் கூறுகின்றது. (ஏன் அப்படிக் கூறுகின்றது என்பதை விளக்கி இந் நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண் வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.)1 கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாவகத் தீவை யரசாண்ட புண்ணியராசன், அக்காலத்தில் சோழ நாட்டுக் காவிரிப் பூம் பட்டினத் தையும் அதனைச் சூழ்ந்த நெய்தலங்கானலையும் அரசாண்ட நெடுமுடிக்கிள்ளியிடம் (இவனுக்குக் கிள்ளிவளவன் என்றும் வடிவேற் கிள்ளி என்றும் பெயர் உண்டு) தூது அனுப்பினான். அந்தத் தூது வாணிகத் தொடர்பான தூதாக இருக்கக் கூடும். சாவகத்திலிருந்து பூம்புகாருக்குக் கப்பலில் வந்த தூதர் சோழனைக் கண்டனர். பிறகு அந்நகரத்தில் பௌத்த விகாரையின் தலைவராக இருந்த அறவண அடிகளையும் கண்டு, திரும்பிச் சென்றார்கள். இதனை மணிமேகலைக் காவியமே கூறுகிறது. ‘கிள்ளி வளவனோடு கெழுதகை வேண்டிக் கள்ளவிழ் தாரோய்! கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன் மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்கு ஓதினன் என்றியா னன்றே யுரைத்தேன்’ (மணி, 25:14-19) இவ்வாறு சோழ அரசனுக்கும் சாவக அரசனுக்கும் நல்லுறவும் நட்பும் இருந்தபடியால் இரு நாடுகளுக்கும் வாணிகம் செவ்வையாக நடந்து வந்தது. குறிப்பு: பிற்காலத்தில், இரு நாடுகளுக்கும் நிகழ்ந்த அரசியல் போர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்கு இப்போது நாம் எழுதுவது சங்க காலத்து வாணிகத்தைப் பற்றி மட்டுமே. சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் அக்காலத் தமிழ் வாணிகர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்ததுபோலவே, சாவகத் தீவிலிருந்த சாவக வாணிகரும் தமிழ்நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதில் ஐயமில்லை. பலநாட்டுக் கப்பல் வாணிகர், அக் காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த காவேரி பூம்பட்டினத்திலே வந்து தங்கியிருந்ததைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. (பட்டினப்பாலை, 216-218, சிலப்பதிகாரம், இந்திர விழா, 9-12, கடலாடுகாதை, 130-131) அங்கு வந்திருந்த அயல்நாட்டு வாணிகரில் சாவகத் தீவிலிருந்து வந்தவர் களும் இருந்தனர் என்று கருதலாம். அக்காலத்தில் சாவகத் தீவின் வாணிகர் கப்பல்களிலும் குறும் படகுகளிலும் பல கடல்களைக் கடந்து சென்றார்கள். பசிபிக் மகா சமுத்திரத்தில் வாழ்ந்த அவர்கள் வங்காளக்குடாக் கடலைக் கடந்து தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்தனர். பிறகு குமரிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கே கடல் நடுவிலிருந்த மடகாஸ்கர் தீவுக்கும் சென்றார்கள். மடகாஸ்கர் தீவு அக்காலத்தில் மனிதர் இல்லாத வெறுந்தீவாக இருந்தது. அந்தத் தீவில் சாவகத்து வாணிகக் கப்பலில் வந்து தங்கித் தங்கள் நாட்டுப் பொருள்களை விற்றார்கள். அத்தீவுக்கு மேற்கிலிருந்து ஆப்பிரிக்க மக்களும், வடக்கே இருந்து அராபியர்களும் வந்து அவர்களுடைய பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இவ்வாறு மடகாஸ்கர் தீவை மையமாகக் கொண்டு சாவக வாணிகர் வாணிகஞ் செய்தார்கள். அவர்களில் பலர் அந்தத் தீவிலேயே நிலையாகத் தங்கிவிட்டனர். பிற்காலத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்து ஆப்பிரிக்க மக்களும் மடகாஸ்கர் தீவுக்கு வந்து அத்தீவின் வடக்கில் குடி யேறினார்கள். அவர்கள் சாவகர் பேசின மடகாசி மொழியையே பேசக் கற்றுக் கொண்டு அந்த மொழியையே பேசினார்கள். இப்போதும் மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிற மொழி மலகாசி மொழியே. மடகாஸ்கர் தீவு இப்போது மலகாசிக் குடியரசு நாடு என்று பெயர் பெற்றிருக்கின்றது. சங்க காலத்திலே தமிழ்நாட்டோடு வாணிகஞ் செய்த வேற்று நாட்டார் அராபியர், யவனர், சாவகர் என்று தெரிகின்றனர். அக்காலத் தில் சீன வாணிகர் தமிழகத்துக்கு (இந்தியாவுக்கு) வந்து வாணிகஞ் செய்யவில்லை. வட இந்தியாவில் கங்கை நதிப் பிரதேசத்திலிருந்தும் கலிங்க நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். *** 6. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள் கடல் வழியாகக் கப்பல்களில் வாணிகம் நடைபெற்றது. தரை வாணிகத்தைவிடக் கடல் வழி வாணிகம் அதிகமாக நடந்தது. தரை வாணிகத்தைவிடக் கடல் வாணிகம் அதிகச் செலவில்லாமலும் விரைவாகவும் இருந்தபடியால் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்தது. கடல் வாணிகத்துக்குக் கப்பல்கள் தேவை. கப்பல் கட்டும் தொழில்கள் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தன. கப்பல்களைக் கடலில் ஓட்டிக் கொண்டுபோய்ப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு அந்தந்த நாடுகளில் துறைமுகங்கள் தேவை. ஆகவே, ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகப் பட்டினங்கள் ஏற்பட்டிருந்தன. பெரும்பாலும் துறைமுகப் பட்டினங்கள், ஆறுகள் கடலில் சேர்கின்ற புகர் முகங்களில் இருந்தன; ஆற்று முகத்துவாரங்கள் இல்லாத துறைமுகப் பட்டினங் களும் சில இருந்தன. ஒவ்வொரு பெரிய துறைமுகங்களிலும் கலங்கரை விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்கம் வாங்கப்பட்டது. அந்தச் சுங்கப்பணம் அந்தந்த நாட்டை யாளும் அரசர்களுக்குரியது. வட இந்தியாவில் கங்கையாறு முக்கியமான பெரிய ஆறு. அது கடலில் சேர்கிற இடத்தில் கப்பல்கள் உள்நாட்டில் நுழைந்து காசி (வாரணாசி), பாடலிபுரம் முதலான துறைமுகங்களுக்குப் போயின. அக்காலத்திலே பாரத தேசத்திலே இருந்த துறைமுகப் பட்டினங் களைக் கூறுவோம். பாரத நாட்டின் கிழக்குக் கரையில் (தமிழ்நாட்டுக்கு வடக்கே) இருந்த பேர்போன துறைமுகங்கள் தமிலிப்தியும் கலிங்கப் பட்டினமும் ஆகும். தமிலிப்தி என்பது அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற பெரிய துறைமுகம். அது கங்கையாறு கடலில் கலக்கிற இடத்தில் வங்காள தேசத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே கலிங்க தேசத்தில் கலிங்கப்பட் டினத்தில் ஒரு துறைமுகப்பட்டினம் இருந்தது. இந்தத் துறைமுகப் பட்டினங்களுக்கு இடையே வேறு சில துறைமுகப் பட்டினங்களும் அக்காலத்தில் இருந்திருக்கக்கூடும். அவற்றைப் பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை. அக்காலத்துத் தமிழகத்தின் துறைமுகப்பட்டினங்களைக் கூறுவோம். கிழக்குக்கரைத் துறைமுகங்கள் தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்த பழங்காலத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். இவை குணகடலில் (வங்காளக்குடாக் கடலில்) இருந்தவை. அந்தத் துறைமுகப் பட்டினங்கள் பிற் காலத்தில் மறைந்து போய்விட்டன. (வேறு புதிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன). பழைய துறைமுகப்பட்டினங்களைப் பற்றிப் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்து அறிகிறோம். தமிழ்நாட்டின் கிழக்குக் கரைத் துறை முகங்கள் கொல்லத் துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்க மேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி, மருங்கை, கொற்கை என்பவை. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள இலங்கைத் தீவுடன் அக்காலத்தில் தமிழர் வாணிகம் செய்த படியால் அங்கிருந்த முக்கியத் துறைமுகப் பட்டினங்களையும் இங்குக் கூறுவோம். அவை மணிபல்லவம் (ஜம்பு கொலப் பட்டினம்), திருக்கேத்தீச்சரம் என்பவை. தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரியில் குமரித் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகங்களை விளக்கிக் கூறுவோம். கொல்லத் துறை கொல்லத் துறை என்னும் துறைமுகப்பட்டினம் வடபெண்ணை யாற்றின் தென்கரையில் அந்த ஆறு கடலில் கலக்கிற முகத்துவாரத்தில் இருந்தது. இதற்கு மேற்கே நெல்லூர் வட பெண்ணையாற்றின் கரை மேல் இருக்கிறது. இக்காலத்தில் இவை ஆந்திர தேசத்தைச் சேர்ந்து இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கடைச்சங்க காலத்திலேயும் இவை தமிழ்நாடாக இருந்தன. அக்காலத்தில் இது தொண்டை நாட்டுத் துறைமுகப்பட்டினமாக இருந்தது. கொல்லத்துறை, நெல்லூர், பெண்ணையாறு என்னும் பெயர்களே தமிழ்ப் பெயர்களாக இருந்தன. கொல்லத்துறை பழந்தமிழ் நாட்டின் வடகோடியில் கிழக்குக் கரையில் இருந்தது. கொல்லத் துறை என்னும் பெயர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கண்ட கோபாலபட்டினம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அதன் பழைய பெயர் மறைந்துவிடவில்லை. கொல்லத் துறையான கண்ட கோபால பட்டினம் என்று அது கல்வெட்டுச் சாசனங்களில் கூறப்படுகின்றது. தமிழ்நாட்டின் வடஎல்லை வேங்கடமலை (திருப்பதிமலை) என்று பழந்தமிழ் நூல்கள் கூறினாலும் அதன் சரியான வட எல்லை வட பெண்ணையாறே. ஆற்றைக் கூறாமல் மலையை எல்லையாகக் கூறியதன் காரணம் அது மலை என்பதற்காகவே. பழந்தமிழ் நாட்டின் வடஎல்லை வட பெண்ணையாற்றின் தென்கரையாக இருந்தது. தொண்டை நாட்டின் (அருவா நாட்டின்) இருபத்து நான்கு கோட்டங் களில் வடகோடிக் கோட்டமாக இருந்த பையூர் இளங்கோட்டம் வட பெண்ணை யாற்றின் தென்கரையில் இருந்தது என்பதைக் கல்வெட் டெழுத்துச் சாசனங்களில் அறியப்படுகின்றது. பழந்தமிழ் நாட்டின் வட எல்லைக்கும் பழைய ஆந்திர நாட்டின் தென் எல்லைக்கும் வரம்பாக வட பெண்ணையாறு அமைந்து இருந்தது. வட பெண்ணையாற்றின் முகத்துவாரத்தில் தென்கரை மேல் இருந்த கொல்லத்துறை அக் காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. கொல்லத்துறைத் துறைமுகத்தைப் பற்றிச் சங்கச் செய்யுட்களில் கூறப்படவில்லை. எல்லாத் துறைகளையும் கூறுவது அச்செய்யுட்கள் இயற்றப்பட்டதன் நோக்கமும் அன்று. தற் செயலாகத் தமிழகத்தின் சில துறைமுகப்பட்டினங்களை அச் செய்யுட்களில் சில கூறுகின்றன. அச் செய்யுட்கள் கூறாத வேறு சில துறைமுகப்பட்டினங்களும் இருந்தன. உதாரணமாக எயிற் பட்டினமாகிய சோ பட்டினத்துக்கும் (இப்போதைய மரக்காணம்) காவிரிப்பூம்பட்டினத்துக்கும் இடையில் ஒரு துறை முகமும் யவனரின் பண்டகசாலையும் இருந்தன. சோ பட்டினத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் கூறுகிற சங்கச் செய்யுட்கள் இந்தத் துறைமுகத்தைக் கூறவில்லை. ஆனால் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கூறப்பட்டுள்ளது. இத்துறை முகத்தை அந்நூல் போதவுக்கே (Poduke) என்று கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே யுள்ள அரிக்கமேடு என்னும் மண்மேட்டை 1945இல் தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்து பார்த்தபோது அங்குக் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பொருள்களும் யவனர் (கிரேக்க- ரோமர்) களின் அக் காலத்துப் பொருள்களும் கிடைத்தன. அந்த இடம் அக்காலத்தில் துறை முகமாகவும் பண்டக சாலையாகவும் இருந்தது என்பது வெளியாயிற்று. பெரிப்ளூஸ் நூல் கூறுகிற ‘போதவுகே’ துறைமுகம் இதுதான் என்பதும் இப்போது அறியப்படுகிறது. ஆகவே, சங்கச் செய்யுட் களில் கூறப்படாத வேறு சில துறைமுகப்பட்டினங் களும் இருந்தன என்பதும் அவற்றில் கொல்லத் துறையும் ஒன்று என்பதும் தெரிகின்றது. கொல்லத்துறை கடைச்சங்க காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. அங்குக் கடல் வாணிகமும் நடைபெற்றது. யவனர் கப்பல்களில் வந்து அங்கு வாணிகம் செய்தார்கள். அதற்குச் சான்றாக, அத்துறைக்கு மேற்கேயுள்ள பழைய பட்டின மாகிய நெல்லூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத் துள்ளன. உரோம் தேசத்துப் பழங்காசுகள் அடங்கிய ஒரு பானைப் புதையல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. கொல்லத் துறைத் துறைமுகத்துக்கு அருகிலே யுள்ள நெல்லூரில் கிடைத்த இந்தப் புதையல் அக்காலத்தில் யவன வாணிகர் இங்கு வந்து வாணிகஞ் செய்ததைத் தெரிவிக்கின்றது.1 தொல் பொருள் ஆய்வாளர் அரிக்கமேட்டை அகழ்ந்து பார்த்துக் கண்டுபிடித்தது போல, கொல்லத் துறையான இவ்விடத்தையும் அகழ்ந்து பார்த்தால் இங்கும் பழைய பொருள்கள் கிடைக்கக் கூடும். கிடைக்கும் பொருள்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளை அறிய இயலும். இதுவரையில் இங்கு அகழ் வாராய்ச்சி நடக்கவில்லை. தொல்பொருள் ஆய்வாளர் இனியேனும் இந்த இடத்தை அகழ்ந்து ஆராய வேண்டும். எயிற் பட்டினம் (சோ பட்டினம்) சங்க காலத்திலே தொண்டை நாட்டில் முக்கியத் துறைமுகப் பட்டினமாக இருந்தது எயிற் பட்டினம். இதற்குச் சோ பட்டினம் என்றும் பெயர் இருந்தது. எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள். இந்தத் துறைமுகப் பட்டினத்தைச் சூழ்ந்த மதில் இருந்த படியால் இப்பெயர் பெற்றது. இது பிற்காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்றது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் இந்தப் பட்டினத்தைச் ‘சோ பட்மா’ என்று கூறுகிறது. சோ பட்மா என்பது சோ பட்டினம் என்பதன் மரூஉ. இடைக்கழி நாட்டுநல்லூர் நத்தத்தனார் தாம் பாடிய சிறுபா ணாற்றுப் படையில் இந்தப் பட்டினத்தைக் குறிப்பிடு கிறார். “மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய, பனிநீர்ப் படுவிற் பட்டினம்” (சிறுபாண். 152-153) என்று கூறுகிறார். ‘ஓங்கு நிலை யொட்டகம் துயில் மடிந்தன்ன வீங்குதிரை கொணர்ந்த விரைமா விறகு’ என்று (சிறுபாண், 154-155). இவர் கூறியபடியால் விரைமரம் (அகில் கட்டை) இங்கு இறக்குமதியான பொருள்களில் ஒன்று எனத் தெரிகிறது. இந்த விரை மரம், கடலில் இருந்து வந்தது என்று கூறுகின்றபடியால் இது சாவக நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரிகிறது. அகிற் கட்டை, சந்தனக் கட்டை முதலான பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து வந்தன. முடிச்சு உள்ள அகில் மரக்கட்டை, படுத்துத் தூங்கும் ஒட்டகம் போன்ற உருவமாக இருந்தது என்று கூறுகிறார். ‘வாளைலுப் புரவியொடு வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படைப்பை மாடமோங்கிய மணல் மலி மறுகில் பரதர் மலித்த பல்வேறு தெருவின்’ (பெரும்பாண், 320-323) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். இதனால், இத் துறை முகப்பட்டினத்தில் நாவாய்களில் வந்து இறங்கின பொருள்களில் குதிரைகளும் வடஇந்தியப் பொருள்களும் இருந்தன என்று கூறுகிறார். வடவளம் (வடநாட்டுப் பொருள்கள்) இன்னவை என்று இவர் கூற வில்லை. பரதர் (கப்பலோட்டிகள்) மலிந்த தெருக்கள் இங்கு இருந்தன என்று கூறுகிறபடியால் கப்பல் வாணிபம் இங்குச் சிறப்பாக நடந்தமை தெரிகிறது. இங்கிருந்த கலங்கரை விளக்கைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறப்பாகக் கூறுகிறார். பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடினவரும் இவரே). கடலில் ஓடுகிற கப்பல்கள் இராக் காலத்தில் துறைமுகம் உள்ள இடத்தையறிந்து கரைசேர்வதற் காகக் கலங்கரை விளக்குகள் துறைமுகங்களில் அமைப்பது வழக்கம் (கலம் = மரக்கலம், நாவாய். கரை - அழைக்கிற, கூவுகிற. விளக்கம் = விளக்கு நிலையம்). எயிற் பட்டினத் துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கை இவர் இவ்வாறு கூறுகிறார். ‘வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்தியை வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை’ (பெரும்பாண், 346-350) கலங்கரை விளக்கு நிலையம் உயரமான கட்டடமாக (வானம் ஊன்றிய மதலை போல) இருந்தது. அது சாந்து (சுண்ணம்) பூசப்பட்டுத் தள வரிசையுள்ளதாக (வேயாமாடமாக) இருந்தது. அதன் உச்சியில் இராக் காலத்தில் தீயிட்டு எரித்தார்கள். உச்சியில் ஏறி விளக்கு ஏற்றுவதற்கு (தீ ஏற்றுவதற்கு) ஏணிப்படிகள் இருந்தன. இவ்வாறு கலங்கரை விளக்கின் அமைப்புக் கூறப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திலும் அக்காலத்தில் கலங்கரை விளக்கு நிலையம் கட்டப்பட்டிருந்ததை இளங் கோவடிகள் சிலப்பதி காரத்தில் கூறுகிறார். ‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ (கடலாடு காதை, 141) இதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர் பொருள் கூறுவது இது. ‘கலங்கரை விளக்கம் - திக்குக் குறிகாட்டிக் கலத்தை (நாவாய்களை) அழைக்கிற விளக்கம்’ இன்னொரு உரை யாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்று உரை எழுதியுள்ளார். துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் கட்டப் பட்டிருந்தன. அவை உயரமாக மணல் மேட்டின் மேல் கட்டப்பட்டிருந் தன. மீகாமர் கலங்கரை விளக்கின் உதவியினால் மரக் கலங்களை இராக் காலத்தில் துறைமுகங்களுக்கு ஓட்டினார்கள். கலங்கரை விளக்குக்கு மாடவொள்ளெரி என்ற பெயரை மருதன் இளநாகனார் கூறுகிறார். ‘உலகுகிளர்ந் தன்ன உருகெழுவங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான் மாடவொள்ளெரி மருங்கறிந்து ஒய்யா (அகம், 255: 1-6) இதனால் எயிற்பட்டினம் முதலான துறைமுகங்களில் கலங்கரை விளக்குகள் இருந்தமை தெரிகிறது. எயிற் பட்டினத் துறை முகத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. அரிக்கமேடு (பொதவுகே) எயிற் பட்டினத்துக்கு (மரக்காணத்துக்கு)த் தெற்கே ஒரு துறைமுகம் சங்ககாலத்தில் இருந்தது. அது இப்போதைய புதுச் சேரிக்குத் தெற்கே இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. அதன் பெயர் இன்னதென்று தெரிய வில்லை. சங்கச் செய்யுட்களிலும் அத்துறைமுகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்போது அந்த இடம் அரிக்கமேடு என்று கூறப் படுகிறது. அது கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்த யவனருடைய பண்டகசாலையாக இருக்கவேண்டும் என்று சமீப காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் காமராவுக்கு (காவிரிப்பூம்பட்டினத்துக்கு) வடக்கே 60 மைல் தூரத்தில் போதவுகே (Podouke) என்னும் பட்டினத்தைக் குறிக்கிறது. அந்தப் போதவுகே இந்த அரிக்க மேடாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. உரோம் சாம்ராச்சியத்தை ஆட்சிசெய்த அகுஸ்தஸ் (கி.மு. 23-க்கும் கி.பி. 14-க்கும் இடையில் அரசாண்டவன்) காலத்தில் தமிழ்நாட்டுக்கும் ரோமாபுரிக்கும் கடல் வாணிகம் விரிவாக்கப் பட்டது. அக்காலத்தில் அரிக்கமேடு, யவன வாணிகரின் பண்டக சாலையாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற் றாண்டுகளில் சிறப்பாக இருந்த இந்தத் துறைமுகம் பிற்காலத்தில் மண் மூடிமறைந்து போயிற்று. சமீப காலத்தில் 1945இல் இந்த இடம் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. இங்கே கிடைத்த பல பொருள்களிலிருந்து இந்த இடம் கி.பி. முதற் நூற்றாண்டில் யவனருடைய பண்டக சாலையாக இருந்தென்பது தெரிகிறது. கி.பி. 45-க்கும் 50-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பாண்டங் களும், அம்போரெ என்னும் மது (ஒயின்) வைக்கும் சாடிகளும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இவை உடைந்து கிடந்தன. அக்காலத்து அரசர், யவனர் கொண்டு வந்த மது பானத்தை யருந்தினார்கள் என்பது நக்கீரர் பாட்டினால் தெரிகிறது. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை அவர் இவ்வாறு வாழ்த்துகிறார். ‘யவனர், நன்கலம் தந்ததண் கமழ்தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கினி தொழுகுமதி ஓங்குவாள் மாற’ (புறம், 56: 18-21) நக்கீரர், யவனர் கொண்டுவந்த ‘தண் கமழ் தேறலை’க் கூறுவதற்கு ஏற்பவே யவனருடைய மதுச்சாடிகள் அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில் அகப்பட்டுள்ளன. சிவப்புக் களிமண்ணால் செய்யப்பட்ட யவன விளக்கின் உடைந்த துண்டுகளும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன. சங்க இலக்கியங்களிலே யவன விளக்குகள் கூறப்படுகின்றன. யவன விளக்கை நக்கீரர் கூறுகிறார். ‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத் திரி கொளீய குரூஉத்தலை நிமிர்ஒளி’ (நெடுநல்வாடை, 101-103) என்று பாவை விளக்கைக் கூறுகிறார். கடியலூர் உருத்திரங்கண்ணனார் ‘யவனர் ஓதிம விளக்’கைக் கூறுகிறார். ஓதிம விளக்கு என்பது அன்னப்பறவையின் உருவம் போன்றது. மீன்குத்திப் பறவை வேள்வித் துணிகள் மேல் அமர்ந் திருப்பது ‘யவனருடைய ஓதிம விளக்கு’ போல இருந்தது என்று உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார் (பெரும்பாணாற்றுப் படை, 311-318). ஆனால் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யவனர் விளக்குத்துண்டு யவனருடைய பாவை விளக்கும் அன்று; ஓதிம விளக்கும் அன்று. அது சாதாரணமான கைவிளக்கின் உடைந்த பகுதி. இந்த விளக்கு கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அரிக்கமேடு துறைமுகப் பண்டகசாலை கி.பி. முதல் நூற் றாண்டில் இருந்தது என்பதற்கு மற்றொரு சான்று. அங்குக் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் எழுதியுள்ள பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அக்காலத்து மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகள் அங்குக் கிடைத்தன. அவ்வோடுகளில் சில வற்றின் மேல் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. அரிக்கமேட்டில் கிடைத்த பானை யோடுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதனால் அவை கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பானைகள் என்பது தெரிகின்றது. இவ்வாறு, அரிக்கமேடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த துறைமுகப் பண்டக சாலை என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், ‘ஏன்ஷியன்ட் இந்தியா’ என்னும் வெளியீட்டின் இரண்டாவது எண்ணில் (பக்கம் 17 முதல் 124) கண்டு கொள்க.2 காவிரிப்பூம்பட்டினம் சங்க காலத்திலே சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக் கிற புகர்முகத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டினம் அக்காலத்திலே உலக புகழ் பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்னும் பெயர் உண்டு. பழைய பௌத்த மத நூல்களில் இது கவீரபட்டனம் என்று பெயர் கூறப்படுகிறது. காகந்தி என்றும் இதற்கு ஒரு பழைய பெயர் உண்டு. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமபுரியிலிருந்து யவன வணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். தூரக் கிழக்கி லிருந்தும் சாவக நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். சோழ நாட்டுக் கப்பல் வாணிகர் இந்தத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சாவக நாடு, காழகம், கங்கைத் துறைமுகம் முதலான இடங்களுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கமரா என்று கூறப்படுகிறது. கமரா என்பது காவிரிப்பூம்பட்டினம் என்பதன் சுருக்கமாகும். தாலமி என்னும் கிரேக்க யவனர் இத்துறைமுகத்தைச் சபரிஸ் துறைமுகம் என்று கூறுகின்றார். சபரீஸ் என்பது காவிரி என்பதன் திரிபு. சோழநாட்டின் முக்கியமான துறைமுகப்பட்டினமாகையால் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். கரிகாற் சோழனுக்குப் பிறகு இருந்த கிள்ளிவளவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தான். இவன் காலத்தில் இப்பட்டினத்தில் சிலப்பதி காரம், மணிமேகலை என்னும் காவியங்களின் தலைவர் களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்திருந் தார்கள். பேர் போன பௌத்த மதத் தலைவராகிய அறவண அடிகளும் அக்காலத்தில் இப்பட்டினத்தில் இருந்தார். காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் அவ்வாற்றின் வடகரைமேல் காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்தது. இப் பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாகப் பிரிந்திருந் தது. இரண்டு பிரிவுக்கும் இடை நடுவில் நாளங்காடி என்னும் தோட்டம் இருந்தது. கடற்கரையோரமாகக் காவிரி ஆற்றின் கரைமேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. கலங்கரை விளக்குக்கு அருகில் கப்பல்கள் வந்து தங்கிய துறை முகம் இருந்தது. இங்கு ஏற்றுமதி இறக்கு மதி செய்யப்பட்டன. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்குச் சோழ அரசனுடைய அலுவலர்கள் சுங்கம் வாங்கினார்கள். சுங்கம் வாங்கின தற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே சோழ அரசனுடைய புலி முத்திரையைப் பொறித்தார்கள். இதைப் பட்டினப்பாலை கூறுகிறது. “நல் இறைவன் பொருள் காக்கும், தொல்லிசைத் தொழில் மாக்கள்......... வைகல் தொறும் அசைவின்றி, உல்கு செயக்குறை படாது........ நீரினின்றும் நிலத்தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பல பண்டம், வரம்பறியாமை வந்தீண்டி, அருங்கடிப் பெருங் காப்பின் வலியுடை வல்லணங்கினோன், புலி பொறித்துப் புறம் போக்கி, மதி நிறைந்த மலி பண்டம்” (பட்டினப்பாலை, 120-136) (உல்கு - சுங்கவரி) காவிரியாற்றின் முகத்துவாரம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. வாணிகக் கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தைக் கழிக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தையடைந்தன. ‘கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியுங் கடற்பல தாரத்த நாடுகிழ வோயே’ (புறம்: 30) என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங் கிள்ளியைப் புகழ்கிறார். துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய்கள் (கப்பல்கள்), யானைப்பந்தியில் நிற்கும் யானைகள் அசைந்து கொண்டு நிற்பனபோல, அசைந்து கொண்டிருந்தன. பாய் மரத்தின் மேலே கொடிகள் பறந்தன. ‘வெளில் இளங்கும் களிறு போலத் தீம்புகார்த் திரை முன்துறைத் தூங்கு நாவாய் துவன்றிருக்கை மிசைக் கூம்பின் நசைக் கொடி’ (பட்டினப்பாலை, 172-175) துறைமுகத்தை யடுத்த மருவூர்ப்பாக்கத்தில் அயல்நாடுகளி லிருந்து கப்பல் ஓட்டி வந்த மாலுமிகளும், கப்பலோட்டிகளும் கடற் கரைப் பக்கத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு நாடுகளி லிருந்து வந்தபடியால் வெவ்வேறு மொழிகளைப் பேசினார்கள். அவர்களில் யவனரும் (கிரேக்கர்) இருந்தார்கள். ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ (பட்டினப்பாலை, 216-218) என்று பட்டினப்பாலை கூறுகின்றது. ‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பு’ (5:11-12) என்று சிலப்பதிகாரமுங் கூறுகின்றது. (கலம் - மரக்கலம், புலம் பெயர் மாக்கள் - அயல்நாடுகளிலிருந்து வந்த கப்பலோட்டிகள்) ‘கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பு’ (சிலம்பு, 6:130-131) (கலம் - மரக்கலம், நாவாய். புலம் பெயர் மாக்கள் - வெளி நாட்டிலிருந்து வந்த கப்பலோட்டிகள். வாலுகம் - மணல்). இவர்களை மணிமேகலை, “பரந்தொருங் கீண்டிய பாடை மாக்கள்” என்று கூறுகின்றது (1:16) அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இரவு முழுவதும் விளக்கு எரிந்தது. “மொழி பெயர்தே எத்தோர் ஒழியா விளக்கம்” (சிலம்பு, 6:143) (ஒழியா விளக்கு - விடிவிளக்கு) வெளிநாட்டுக் கப்பலோட்டி களோடு யவனர்களும் (கிரேக்க ரோமர்) தங்கியிருந்தார்கள். ‘கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும்’ (சிலம்பு, 5:9-10) இப்படிப்பட்ட சிறந்த பட்டினத்தில் தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகர் பலர் இருந்தார்கள். பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது. (நாவிகர் - கப்பலையுடையவர். நாவாய் - கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. கண்ணகியின் தந்தை ஒருமாநாவிகன் (மாநாய்கன்). கோவல னுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து - வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அந்தக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கின பொருள்களைக் கடியலூர் உருத்திரங்கண்ண னார் கூறுகிறார். இந்தப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாகக் கப்பல்களில் வந்தவை. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’ (பட்டினப்பாலை 185-193) இவற்றை ஆராய்வோம். பரிப்புரவிகள் (குதிரைகள்) கடல் வழியாகக் கப்பல்களில் வந்து இறங்கின. குதிரை தமிழ்நாட்டுக்கோ அல்லது பாரத நாட்டுக்கோ உரிய விலங்கு அன்று. அவை பாரசீகம், சிந்து தேசம் முதலான நாடுகளிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டவை. அக்காலத்து அரசர்கள் நான்கு வகையான படைகளை வைத்திருந் தார்கள். அப்படை களில் குதிரைப்படையும் ஒன்று. தேர்ப்படைக்கும் குதிரை தேவைப்பட்டது. ஆகவே வெளிநாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டன. காவிரிப்பூம்பட்டினத்தில் குதிரைகளும் இறக்குமதியாயின என்பது இதனால் தெரிகின்றது. தமிழ் வாணிகர் குதிரைகளை இலங்கைக்குக் கொண்டு போய் விற்றார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழர் இலங்கையரசனை வென்று இருபது ஆண்டு இலங்கையை யரசாண்டார்கள் என்றும் அவர்கள் அஸ்ஸ (அசுவ - அசுவம் - குதிரை) வாணிகனின் மக்கள் என்றும் மகாவம்சம் என்னும் சிங்கள நாட்டு வரலாற்று நூல் கூறுகின்றது. சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசன் இலங்கையை அரசாண்ட காலத்திலே சேனன், குட்டகன் என்னும் பெயருள்ள இரண்டு தமிழர் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி அனுராதபுரத்திலிருந்து நீதியோடு இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டார்கள். இவர்கள் அஸ்ஸ (அசுவ) நாவிகனின் மக்கள் என்று மகாவம்சம் (XXI: 10-11) கூறுகிறது. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள். காலின் வந்த கருங்கறி மூடையும் என்பது காற்றின் உதவியினால் கப்பல்களில் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட கறி (மிளகு) மூட்டை. அக்காலத்தில் சிறந்த மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில்தான் உண்டாயிற்று. அதற்கு அடுத்தபடியாகச் சாவக நாட்டில் (ஜாவா சுமத்ரா தீவுகளில்) மிளகு உண்டாயிற்று. ஆனால், சாவக நாட்டு மிளகு சேர நாட்டு மிளகைப்போல அவ்வளவு சிறந்ததன்று. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் வந்து பெருவாரியாக வாங்கிக் கொண்டு போன படியால் அது பற்றாக்குறைப் பொருளாக இருந்தது. ஆகவே கிழக்குக் கரைப்பக்கத்திலிருந்த சோழ நாட்டு வாணிகர் சாவக நாட்டிலிருந்து மிளகைக் கொண்டு வந்து விற்றார்கள். இந்த மிளகைத் தான் ‘காலின் வந்த கருங்கறி மூடை’ என்று கூறப் பட்டது. (கால் - காற்று, காலின் வந்த - காற்றின் உதவியினால் கப்பலில் வந்த) வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் என்பன இமயமலைப் பக்கத்தில் கிடைத்த மணியும் பொன்னும். இவை வட இந்தியாவி லிருந்து கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடலில் வந்தவை. குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்பன மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (சைய மலைகள்) உண்டான சந்தனக் கட்டை, அகிற் கட்டையாகும். இதைத் தெய்வங்களுக்கும் மகளிர் கூந்தலை உலர்த்து வதற்கும் அக்காலத்தில் பெரிதும் உபயோகப்பட்டவை. சந்தனம் சாந்தாக அரைக்கப்பட்டு உடம்பில் பூசப் பட்டது. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைத்தன. (இவையல்லாமல் ஆரமும் அகிலும் சாவக நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.) தென்கடல் முத்து என்பது பாண்டி நாட்டுக் கடல்களில் (கொற்கை, குமரி முதலான இடங்களில்) உண்டான முத்து. பாண்டி நாட்டுக் கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது. குணகடல் துகிர் என்பது கிழக்குக் கடலில் உண்டான பவழம். (துகிர் - பவழம், குணகடல் - கிழக்குக் கடல்) சாவக நாட்டில், பசிபிக் மாக்கடல்களில் பவழப் பூச்சிகளால் உண்டான பவழங்கள் அந் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. (இவை யல்லாமல் மத்திய தரைக் கடலில் உண்டான பவழங்களை யவன வாணிகரும் மேற்கிலிருந்து கொண்டு வந்தனர்) கங்கை வாரி என்பது வடக்கே கங்கையாற்றங்கரை மேலிருந்த பாடலிபுரம், வாரணாசி (காசி) முதலான ஊர்களிலிருந்துகொண்டு வரப்பட்ட பொருள்கள். அப்பொருள்களின் பெயர் கூறப்படவில்லை. காவிரிப் பயன் என்பது காவிரியாறு பாய்கிற சோழநாட்டுப் பொருள்கள். இவை உள்நாட்டுப் பொருள்கள். இவற்றின் பெயர் கூறப்படவில்லை. இவை ஏற்றுமதிக்காக இத்துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. ஈழத்து உணவு என்பது இலங்கையில் உண்டான உணவுப் பொருள்கள் (ஈழம் - இலங்கை). அந்த உணவுப் பொருள்களின் பெயரும் தெரியவில்லை. காழகத்து ஆக்கம் என்பது காழகத்து (பர்மா தேசம்) பொருள்கள். இவற்றின் பெயரும் கூறப்படவில்லை. அரியவும் பெரியவும் என்பது தமிழ்நாட்டில் கிடைத்ததற்கு அருமை யானவையும் விலையுயர்ந் தவை யும் ஆன பொருள்கள். இவ்வாறு பல அயல்நாட்டுப் பொருள்கள் காவிரித் துறைமுகத் துக்குக் கொண்டுவரப்பட்டன என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ‘மலைப்பஃ றாரமும் கடற்பஃ றாரமும் வளம் தலை மயங்கிய துளங்குகல இருக்கை’ என்று சிலம்பு (6:153-155) கூறுகிறது. (தாரம் - பண்டங்கள்) மலையில் உண்டாகும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள் களும் இத்துறைமுகத்தில் இறக்குமதியாயின. இவ்வாறு வாணிகப் புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயற்காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில்முழுகிவிட்டதை மணிமேகலை கூறுகிறது. ஆனால் இப்பட்டினம் அடியோடு முழுகிவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்) காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். அவர் துறவி யாவதற்கு முன்பு இப்பட்டினத்தில் பேர் போன கப்பல் வாணிகனாக (மாநாய்கனாக) இருந்தார். பிற்காலச் சோழர் காலத்திலும் காவிரிப்பூம் பட்டினம் பேர் பெற்றிருந்தது. பிறகு இப்பெரிய பேர் போன பட்டினம் சிறப்புக்குன்றிச் சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக் கிறது. இங்கு அண்மையில் தொல்பொருள் துறை ஆய்வாளர் நிலத்தை யகழ்ந்து பார்த்த போது பல பழம்பொருள்கள் கிடைத்தன. அவை இப்பட்டினத்தின் பழங்காலச் சிறப்புக்குச் சான்றாக இருக்கின்றன. தொண்டித் துறைமுகம் சங்க காலத்திலே கிழக்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் இரண்டு தொண்டிப் பட்டினங்கள் இருந்தன. இரண்டும் துறைமுகப் பட்டினங்கள். ஒரு தொண்டி சேரநாட்டில் மேற்குக் கடற்கரையில் இருந்தது; மற்றொரு தொண்டி பாண்டிநாட்டில் கிழக்குக் கடற்கரையில் இருந்தது. இந்தத் தொண்டி கிழக்குக் கரையிலிருந்த பாண்டி நாட்டுத் தொண்டியாகும். கடைச் சங்க காலத்துப் புலவரான அம்மூவனார் ஐங்குறு நூற்றில் நெய்தற்றிணையில் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். அது சேர நாட்டுத் தொண்டி. அந்தப் புலவரே அகநானூறு பத்தாம் செய்யுளில் பாண்டி நாட்டுத் தொண்டியைப் பாடியுள்ளார். இந்தத் தொண்டியை இவர் இவ்வாறு கூறுகிறார். ‘கொண்ட லொடு குரூஉத் திரைப் புணரி யுடைதரும் எக்கர்ப் பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி’ (அகம். 10: 8-13) கிழக்குக் கடலிலிருந்து வீசுகிற கடற்காற்றுக் கொண்டல் காற்று என்பது பெயர். இந்தத் தொண்டி கிழக்குக் கடற்கரையிலிருந்தது என்பதைக் கொண்டல் காற்று வீசுகிற தொண்டி என்று கூறுவதிலிருந்து அறிகிறோம். இந்தத் தொண்டி பாண்டி நாட்டில் இப்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் இருந்தது என்று தோன்றுகிறது. இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியரசு’. (ஊர் காண் காதை, 106-112) இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில் இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப் படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம். அகில் இது ஒருவகை மரத்தின் கட்டை. நெருப்பில் இட்டுப் புகைக்கப் படுவது; புகை மணமாக இருக்கும். கோவில்களில் தெய்வங்களுக்கு நறுமணம் புகைக்கவும், மகளிர் கூந்தலுக்குப் புகைத்து மணமேற்றவும் மற்றும் சிலவற்றுக்கும் உபயோகிக்கப் பட்டது. அகில் மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இருந்தன. ஆனால் சாவக நாட்டு அகில் தரத்தில் உயர்ந்தது, பேர் போனது. கிழக்குக் கோடி நாடுகளிலிருந்து வந்த காரகில் சிறந்தது என்பதைச் சிலப்பதிகாரம் “குணதிசை மருங்கில் காரகில்” என்று (சிலம்பு, 4:36) கூறுகின்றது. துகில் துகில் என்பது இங்குப் பட்டுத் துணிகளைக் குறிக்கிறது. சங்க காலத்தில் பட்டுத் துணிகள் சீன நாட்டில் மட்டும் கிடைத்தன. அக் காலத்தில் பட்டு வேறு எங்கும் கிடைக்கவில்லை. சீன நாட்டு வாணிகர் பட்டு முதலான பொருள்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்து சாவக நாட்டில் (கிழக்கிந்தியத் தீவுகளில்) விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. சாவக நாட்டோடு நின்றுவிட்டார்கள். அவர்கள் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்த பட்டுகளைத் தமிழ்நாட்டு வாணிகர் அங்கிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். தமிழ் நாட்டிலிருந்து பட்டுத் துணியை மேல்நாட்டு வாணிகர் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள் ஆரம் ஆரம் என்பது சந்தனம். சந்தன மரம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை (சய்ய மலை)களிலும் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தனத்தைவிடச் சாவக நாட்டுச் சந்தனம் தரத்திலும் மணத்திலும் உயர்ந்தது. அது வெண்ணிறமாக இருந்தது. அகிற்கட்டையைப் போலவே சந்தனக் கட்டையும் சாவக நாட்டிலிருந்து அக்காலத்தில் இங்கு இறக்குமதி யாயிற்று. வாசம் வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை. கருப்பூரம் கருப்பூரம் என்பது சாவக நாட்டில் சில இடங்களில் உண்டான ஒருவகை மரத்தின் பிசின். கருப்பூரத்தில் பலவகையுண்டு. ஆகை யினால் இது ‘தொடு கருப்பூரம்’ என்று கூறப்பட்டது. கருப்பூர வகைக்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. ஒருவகைப் பளிதம் தாம்பூலத்துடன் அருந்தப்பட்டது. அது மணமுள்ளது, விலையுயர்ந்தது. கிழக்குக் கடற்கோடியில் கடல் கடந்த சாவக நாட்டுத் தீவு களில் உண்டான இந்தப் பொருள்கள் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதி யானதைச் சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து அறிகிறோம். தொண்டித் துறைமுகத்தைப் பற்றி நாம் அறிவது இவ்வளவுதான். ‘தொண்டியோர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் தம்முடைய உரையில் ‘சோழ குலத்தோர்’ என்று உரை எழுதுகிறார். இது தவறு என்று தோன்றுகின்றது. தொண்டி இவர் காலத்தில் சோழர் ஆட்சிக்குக் கீழடங்கியிருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகாரக் காலத்தில் தொண்டி, கூடல் (மதுரை) அரசனாகிய பாண்டியனுக்குக் கீழடங்கியிருந்தது. தொண்டியில் பாண்டிய குலத்து அரசன் ஒருவன் இருந்தான் என்று தோன்று கிறது. பாண்டி நாட்டின் முக்கியத் துறைமுகமாகிய கொற்கையில் பாண்டிய குலத்து இளவரசன் இருந்து போலவே, தொண்டித் துறைமுகப் பட்டினத்திலும் ஒரு பாண்டிய இளவரசன் இருந்திருக்கக் கூடும். தொண்டித் துறைமுகப் பட்டினம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றி இக்காலத்தில் குக்கிராமமாக இருக்கிறது. மருங்கூர்ப் பட்டினம் மருங்கூர்ப் பட்டினம் மருங்கை என்றும் கூறப்பட்டது. இது பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த துறைமுகம். பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர், காயல்களும் (உப்பங்கழிகள்) தோட்டங்களும் உள்ள மருங்கூர்ப் பட்டினத்தின் கடைத்தெரு செல்வம் கொழித்திருந்தது என்று கூறுகின்றார். ‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்’ (அகம், 227: 19-21) அங்காடியில் குவித்து வைத்திருந்த இறால்களைக் கவர்ந்து கொண்டு போய்க் காக்கைகள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல் களின் பாய்மரக் கம்பத்தில் அமர்ந்து தின்றன என்றும் அவர் கூறுகிறார். “அகலங்காடி யசை நிழல் குவித் பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் மருங்கூர்ப் பட்டினம்” (நற்றிணை, 258: 7-10) மருங்கூர்ப் பட்டினத்துக்கு மேற்கே அதைச் சார்ந்து ஊணூர் என்னும் ஊர் இருந்தது. ஊணூர் மதில் அரண் உடையதாக இருந்தது. “கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்” (அகம், 227: 18-20) ஊணூரைச் சூழ்ந்து நெல்வயல்கள் இருந்தன. ‘முழங்குகடல், ஓதம் காலைக் சொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் (அகம் 220) கூறுகிறார். சோழநாட்டிலிருந்த பேர் போன காவிரிப்பூம்பட்டினத்தின் துறை முகப் பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் நகர்ப்பகுதி பட்டினப் பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்ததுபோல இவ்வூரும் மருங்கூர்ப் பட்டினம், ஊணூர் என்று இருகூறாகப் பிரிந்திருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தின் பட்டினப்பாக்கம் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது போல ஊணூரும் மதில் சூழ்ந்திருந்தது. மருங்கூரும் ஊணூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் என்று பெயர் பெற்றிருந்தது என்பதை மதுரைக் காஞ்சியினால் அறிகிறோம். தாலமி என்னும் கிரேக்கர்கள் கூறுகிற சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூர் ஆகும். மதுரைக் காஞ்சி இந்த நெல்லூரின் துறைமுகத்தைக் கூறுகிறது. தொடுவானம் பொருந்திய அச்சந்தருகின்ற பெரிய கடலிலே (அக்கரைத் தீவுகளிலிருந்து) அலைகளைக் கிழித்துக் கொண்டு காற்றின் உதவியினால் இக்கரையை யடைவதற்குப் பாய்களை விரித்துக் கொண்டு வந்த பெரிய நாவாய்கள் இந்தத் துறைமுகத்திலே கூட்டமாக வந்து தங்கின. நாவாய்களிலிருந்து பண்டங்களை இறக்குமதி செய்த போது முரசு முழங்கிற்று. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருந்த காட்சி யானது வெள்ளத்தை முற்றுகை செய்யும் மலைபோலத் தோன்றிற்று. இப்படிப்பட்ட வாணிக வளமுள்ள சாலியூரைக் (நெல்லூரை) கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று பொருளுள்ள செய்யுளைக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி: ‘வான் இயைந்த இருமுந்நீர்ப் பேஎ நிலைஇய பெரும் பௌவத்துக் கொடும் புணரி விலங்கு போழக் கடுங் காலொடு கரை சேர நெடுங் கொடிமிசை இதை எடுத்து இன்னிசைய முரசம் முழங்கப் பொன் மலிந்த விழுப் பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ’ (அடி 75-88) பாண்டி நாட்டுக் கடற்கரை வளத்தையும் வாணிகத்தையும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் கூறுகிறார். கடலில் உண்டான முத்துக்களும் சங்குகளை அறுத்து உண்டாக்கின வளைகளும், கப்பல் வாணிகர் கொண்டு வந்த நவதானியங்களும், மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்திய உப்புக் கண்டங்களும் (கருவாடு) ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிக் கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று அங்கிருந்து குதிரை முதலான பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்ததைக் கூறுகிறார். ‘முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம் அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை பரதர் தந்த பல்வேறு கூலம் இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப் பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல் விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும் வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’ (மது.கா. 315-324) கொற்கை மருங்கூர்ப் பட்டினத்துக்குத் தெற்கே கொற்கைக் குடாக் கடலும் அதன் மேற்குக் கரையில் கொற்கைப் பட்டினமும் இருந்தன. கொற்கையை, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல் கொல்கிஸ் (Kolkius) என்று கூறுகின்றது. தாலமியும் இதைக் கூறுகிறார். கொற்கைக் குடாக் கடல் அக்காலத்தில் நிலத்தின் உள்ளே ஐந்து மைல் ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச் சிப்பிகளும் சங்கு வளைகளும் உண்டாயின. கொற்கை முத்து உலகப் புகழ்பெற்றது. கொற்கைக் குடாக் கடலில் அக்காலத்தில் தாமிர பரணி ஆறு சென்று விழுந்தது. அந்த ஆற்றின் கரைமேல் கடற் கரைப் பக்கத்தில் பேர் போன கொற்கைப் பட்டினம் இருந்தது. இங்குப் பாண்டிய இளவரசன் இருந்தான். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கொற்கைக் குடாக் கடல் மண் தூர்ந்துடைய மறைந்து போய் இப்போது நிலமாக மாறிவிட்டது. கொற்கைக் குடாக்கடல் நிலமாக மாறிப் போனதற்குக் காரணம், தாமிரபரணி ஆறு அடித்துக் கொண்டு வந்த மணலும் கடல் அலை அடித்துக் கொண்டு வந்த மணலும் ஆக இரண்டு புறத்திலும் மணல் தூர்ந்தபடியினால்தான். மணல் தூர்ந்தது வெகுகாலமாக நடந்து கொண்டு வந்து கடைசியில் கடலே மறைந்து போயிற்று. கொற்கைப்பட்டினம் இருந்த இடம் இப் போது கடற் கரைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் மாற மங்கலம் என்னும் பெயர் பெற்றிருக்கின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொற்கையிலிருந்த பாண்டிய இளவரசன் வெற்றிவேற்செழியன். கொற்கைப் பட்டினம் துறைமுகப்பட்டினமாக இருந்தது மல்லாமல், அங்கு முத்துக்களும் சங்குகளும் விற்கப்பட்டன. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் உண்டான படியால் இங்கு முத்துக் களும் சங்குகளும் கிடைத்தன. குமரி இது பாண்டி நாட்டின் தெற்கே குமரிக் கடலில் இருந்தது. கன்னியாகுமரி என்றுங் கூறப்படும். இது துறைமுகப்பட்டின மாகவும் புண்ணியத் தீர்த்தமாகவும் இருந்தது. இந்தத் துறை முகத்தைத் தாலமி, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்கர்கள் குறிப் பிட்டுள்ளனர். கொமரா, கொமராய், கொமரியா என்று அவர்கள் குமரியைக் கூறியுள்ளனர். இத் துறைமுகத்தைக் ‘குமரியம் பெருந்துறை’ என்று மணிமேகலை கூறுகின்றது. பாண்டியனைக் ‘கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்’ என்று சிலம்பு கூறுகின்றது. பிற்காலத்தில் இராமேசுவரம் புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுவதற்கு முன்பு கொற்கைத் துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டு, கங்கையில் நீராடினவர் குமரிக்கு வந்து நீராடிச் சென்றார்கள். பிற்காலத்தில் இந்தத் துறைமுகத்துக்கு வாணிகக் கப்பல்கள் வருவது நின்று போயிற்று. கொற்கைத் துறைமுகத்துக்கு அப்பால் கொற்கை என்னும் ஊர் இருந்த தென்றும், அங்குக் கோட்டைகள் அமைந்திருந்தன வென்றும், அங்கு ஒரு கப்பல் தொழிற் சாலையிருந்ததென்றும் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் கூறுகின்றது. *** அடிக்குறிப்புகள் 1. (Hoard of Roman Coins in a pot Latest recond of Coin of Antonius piu (S.A.D. 161) Asiatic Researches. II (1970. P.P. 331 - 32). 2. Arikamedu; (An Indo - Roman Trading - Station on the east coas of India’. PP. 17 - 124. Ancient India. Number 2. July 1946). 7. தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள் பாரத தேசத்தின் மேற்குக் கரையில் இருந்த பழைய காலத்துத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். அவை குடக்கடலின் (அரபிக் கடலின்) கரையில் இருந்தன. அக்காலத்தில் வடக்கே இருந்த பேர் போன துறைமுகம் மின்னகரம் என்பது. மின்னகரம் சிந்து நதி கடலில் சேரும் புகர் முகத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே புரோச் (Broach) என்னும் பாரிகச்சத் துறைமுகமும், சோபாரா ‘சூரத்துத்’ துறைமுகமும் இருந்தன. இந்தத் துறைமுகங்களில் அராபிய, யவன வாணிகர்கள் மேற்கிலிருந்து வந்து வாணிகம் செய்தார்கள். இந்தத் துறைமுகங்கள் அக்காலத்தில் அப்பகுதிகளை யரசாண்ட சதகர்ணி (சாதவாகன) அரசர்களுக் குரியவை. இந்தத் துறைமுகங்களைக் கைப்பற்றச் சாகர் என்னும் அரசர்கள் சதகர்ணி அரசர்களோடு அடிக்கடி போர் செய்து கொண்டிருந்தார்கள். இத்துறைமுகங்கள் சில காலம் சதகர்ணிகளுக்கும் சில காலம் சாகர்களுக்கும் உரியதாக இருந்தன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவ்விதமாக இந்தத் துறைமுகப் பட்டினங்கள் இருவர் ஆட்சியிலும் மாறிக் கொண்டிருந்தன. அக்காலத் தமிழகம், மேற்குக் கரையில் துளு நாட்டையும் (தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் மேற்குக் கரையில் வடகோடியி லிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினம் மங்களூர். மங்களூர் இப்போதும் சிறிய துறை முகமாக இருக்கின்றது. ஆனால் சங்க காலத்தில் அது பெரிய பேர் போன துறைமுகமாக இருந்தது. துளு நாட்டை அக்காலத்தில் நன்னன் என்னும் பெயருள்ள வேள் அரசர்கள் அரசாண்டார்கள். மங்களூருக்குத் தெற்கே இருந்த துறைமுகப் பட்டினம் நறவு. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்திருந்தது. நறவுக்குத் தெற்கே தொண்டி, பரக்கே, நீல்கண்ட முதலான துறைமுகங்கள் இருந்தன. இவை சேர நாட்டைச் சேர்ந்த துறைமுகங்கள். இத்துறைமுகங்களைப் பற்றிக் கூறுவோம். மங்களூர் சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது துளு நாடு. துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள அரசர் பரம் பரை ஆண்டு வந்தது. துளு நாட்டின் முக்கியத் துறைமுகமாக இருந்தது மங்களூர். நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தது. இப்போதும் மங்களூர் சிறு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. மங்களூரில் இருந்த மங்கலாதேவி கோயில் பேர் போனது. சிலப்பதிகாரம் மங்கலா தேவி கோயிலைக் கூறுகின்றது. மங்களூர் துறைமுகத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். தாலமி என்னும் யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை மகனூர் என்று கூறியுள்ளார். மங்களூரைத்தான் இவர் இப்படிக் கூறி யுள்ளார். பிளைனி என்னும் யவனர் இதை நைத்ரியஸ் (Nitrias) என்று கூறி யுள்ளார். நைத்ரியஸ் என்பது நேத்திராவதியாறு. நேத்திராவதி ஆற்று முகத்துவாரத்தில் இருக்கிறபடியால் இதை நைத்ரியஸ் என்று கூறினார் போலும். மேலும், இவர் இந்த இடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்றும் கூறுகின்றார். மங்களூருக்கு மேற்கே கடலில் ஒரு சிறு தீவில் குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்திருந்தார்கள். அவர்கள் வாணிகத்துக்காக வெளிநாடு களிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். அதனால் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு யவனக் கப்பல்கள் வருவது தடைப்பட்டது. அப்போது, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் இளைய மகனான செங்குட்டுவன் தலைமையில் கடற்படையையனுப்பிக் கடற்கொள்ளைக் குறும்பரையடக்கினான். இச் செய்திகளைப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளால் அறிகின்றோம். நறவு துளு நாட்டிலே மங்களூர்த் துறைமுகத்துக்குத் தெற்கே நறவு என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்தது. துளுநாட்டு நன்னன் ஆட்சியில் இது இருந்தது. நறவு என்னும் சொல்லுக்கு கள், மது என்னும் பொருளும் உண்டு. ஆகையால் நறவு என்னும் பெயர் உள்ள இந்தப் பட்டினத்தைத் தமிழ்ப் புலவர் ‘துவ்வா நறவு’ (உண்ணப் படாத நறவு) என்று கூறினார். சேர மன்னர் துளு நாட்டு நன்னனைவென்று துளுநாட்டு ஆட்சியைக் கைக்கொண்ட போது, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (சேரன் செங்குட்டுவனுடைய மாற்றாந் தாயின் மகன்) இந்த நறவுத் துறைமுகப் பட்டினத்தில் இருந்தான் என்று பதிற்றுப் பத்து (6 ஆம் பத்து 10 ஆம் செய்யுள்) கூறுகின்றது. யவன நாட்டுக் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். அவர்கள் நறவை நவ்ரா என்று கூறினார்கள். தொண்டி இது மேற்குக் கடற்கரையில் சேர நாட்டில் இருந்த தொண்டி. (பாண்டி நாட்டில், கிழக்குக் கடற்கரையிலும் ஒரு தொண்டி இருந்தது) ஐங்குறுநூற்றில் நெய்தற் பத்தைப் பாடிய அம் மூவனார் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட் களைப் பாடியுள்ளார். இவர் பாடிய தொண்டி இந்தச் சேர நாட்டுத் தொண்டியாகும். இந்தத் தொண்டிப் பட்டினம் கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களின் ஆட்சியிலிருந்ததாகத் தெரிகின்றது. பொறையர் சேர அரசர்களின் இளைய வழியினர். கொங்கு நாட்டையரசாண்ட அவர்களுக்கு, உள் நாடாகிய கொங்கு நாட்டில் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய தொண்டியை வைத்திருந்தனர் என்று தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாகிய (மாற்றாந்தாயின் மகன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வடக்கே தண்டாரணியத்திலிருந்து கொண்டு வந்த வருடைப் பசுக்களைத் தொண்டிக்குக் கொண்டு வந்து தானங் கொடுத்தான். ‘தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுட் டந்து கொடுப்பித்து’ (6ஆம் பத்து, பதிகம்) சங்க காலத்திலிருந்த பொய்கையார் என்னும் புலவர் இந்தத் தொண்டி யில் வாழ்ந்தவர் (புறம், 48). தொண்டித் துறைமுகத்தில் அக்காலத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தனர். தாலமி (Ptolemy) என்னும் யவனர் இந்தத் தொண்டியைத் தைண்டிஸ் (Tyndis) என்று கூறியுள்ளார். இங்கு நடந்த வாணிகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை. மாந்தை சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய மாந்தை ‘துறை கெழு மாந்தை’, ‘கடல்கெழு மாந்தை’ என்று கூறப்படுகின்றது. மாந்தை மரந்தை என்றும் கூறப்பட்டது. மாந்தைப் பட்டினத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொன் வயிரம் மணி முதலான பெருஞ்செல்வத்தை ஆம்பல் கணக்கில் (ஆம்பல் என்பது கணிதத்தில் பெருந் தொகையைக் குறிப்பது) புதைத்து வைத்திருந் தான் என்று மாமூலனார் கூறுகிறார். இந்தப் பெருஞ்சேரலாதன் கடற் கொள்ளைக்கார குறும்பரை அடக்கினவன். “வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குறைஇ அன்றவண் நிலத்தினத் துறந்த நிதியம்” (அகம், 127: 3-10) இந்தத் துறைமுகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை. முசிறித் துறைமுகம் முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங் களில் பேர்போனது. அக்காலத்தில் அது கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையி லிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக் காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரி யாற்றின் கரைமேல் இருந்தது. வஞ்சி நகரத்திலே சேரஅரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்குநாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன). சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்து மேற்கே கடற் கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது. முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முசிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இரமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழியில் முரசி ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பி களும் உண்டாயின. சிப்பியி லிருந்து முத்துக் கிடைத்தது. முசிறி யில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத் துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து, கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரிந்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப் பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முத்துக்களும் கொடுமணம் என்னும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப் பட்டன என்று பதிற்றுப் பத்து கூறுகிறது. இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் கமழுந தாழைக் கானலம் பெருந்துறை (6 ஆம் பத்து5) பந்தரிலும் கொடுமணத்திலும் முத்துக்களும் நன்கலங்களும் (நகைகள்) விற்கப்பட்டன என்று 7 ஆம் பத்து 7ஆம் செய்யுள் கூறுகின்றது. ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்’ என்று 8ஆம் பத்து (4: 5-6) கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். பந்தர் என்றால் ஆவணம், கடைவீதி என்பது பொருள். அக்காலத்திலேயே அரபியர் இங்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். கி.மு. முதல் நூற்றாண்டில் தென்மேற்குப் பருவக்காற்றை ஹிப்பலஸ் என்னும் யவன மாலுமி அரபு வாணிகரிடமிருந்து அறிந்து கொண்டு, அக்காற்றின் உதவியினால் நடுக்கடலினூடே கப்பலை முசிறிக்கு ஓட்டிக் கொண்டு வந்தான். தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியை யவனர் அறிவதற்கு முன்பு கப்பல் களைக் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுவந்தனர். அதனால் நெடுங்காலம் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தது. பருவக் காற்றின் உதவி கண்டுபிடித்த பிறகு யவனக் கப்பல்கள் நேரே முசிறித் துறைமுகத்துக்கு விரைவாகவும் கால தாமதம் இல்லாமலும் வரத் தொடங்கின. இந்தப் பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்று பெயரை (அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ் என்பவனின் பெயரை) யவனர் சூட்டினார்கள். யவனக் கப்பல்கள் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலான பொருள்களைக் கொண்டு வந்து முசிறியில் இறக்குமதி செய்து இங்கிருந்து பல பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு போயின. ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானதும் அதிகமாக வும் இருந்தது மிளகுதான். யவனர் மிளகை ஏராளமாக ஏற்றுமதி செய்து கொண்டு போனார்கள். உரோம் நாட்டில் மிளகு பெரிதும் விரும்பி வாங்கப் பட்டது. யவனர் மிளகை ஆவலோடு விரும்பி வாங்கினபடியால் அதற்கு ‘யவனப் பிரியா’ என்ற பெயர் உண்டாயிற்று. பெரிய யவனக் கப்பல் வாணிகர் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். தாயங் கண்ணனார், யவனர் பொன்னைக் கொடுத்து மிளகை ஏற்றிக் கொண்ட போனதைக் கூறுகிறார். ‘சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி’ (அகம், 149: 8-11) சுள்ளியம் (பேரியாறு - பெரியாறு. நன்கலம் - நல்ல மரக்கலம். கறி - மிளகு) முசிறித் துறைமுகம் ஆழமில்லாமல் இருந்தபடியால் யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் தூரத்திலேயே நின்றன. ஆகவே தோணிகளில் மிளகை ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் ஏற்றிவிட்டு அதன் விலையாகப் பொன்னை வாங்கிக் கொண்டு வந்தார்கள். பரணர் இதை இவ்வாறு கூறுகின்றார். ‘மனைக்குவைஇய கறிமூடையால் கலிச் சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. முழங்குகடல் முழவின் முசிறி’ (புறம். 343 : 3-10) (மனைக்குவை இய - வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட, கறி மூடை - மிளகு மூட்டை. கலம்தந்த - யவன மரங்கலங்கள் கொண்டு வந்த. பொற்பரிசம் - விலையாகிய பொன்) கிரேக்கரும் ரோமரும் மட்டும் மிளகை வாங்கவில்லை. அக் காலத்தில் உலகத்திலே எல்லா மக்களும் மிளகை வாங்கினார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாதபடியால் எல்லாரும் மிளகை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள். பாரத நாட்டு மக்களும் மிளகைப் பயன்படுத்தினார்கள். முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு கொண்டு போகப்பட்டபடியால் மிளகுக்கு ‘மரிசி’ என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது. கிபி. 1341 இல் பெய்த பெருமழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்தப் புதிய காயல்களும் துருத்தி களும் (மணல் தீவு) ஏற்பட்டன. முசிறித் துறைமுகம் முழுகிப் போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது. குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப் பட்டினம் என்றும் சங்ககாலத் துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது. வைக்கரை இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப்பட்டினம். கோட்ட யத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறைமுகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறை முகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. மேல்கிந்த தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Molkynda) என்றும், பெரிப்ளூஸ் என்னும் நூல் நெல்கிந்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. விழிஞம் இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப்பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார். இது ஆயோய் (ஆய்) நாட்டில் இருந்ததென்று கூறுகின்றார். ஆய் நாடு பாண்டிய நாட்டில் இருந்தது. பொதிகை மலையைச் சூழ்ந்திருந்தது ஆய்நாடு. ஆய் மன்னர் பாண்டியருக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். ஆய் நாட்டில் இருந்த துறைமுகத்தைத் தாலமி இலங்கொன் என்று குறிப்பிடுவது விழிஞம் என்னும் துறைமுகப் பட்டினமாகும். விழிஞம் மிகப் பழமையான சரித்திரப் புகழ் பெற்ற துறைமுகப்பட்டினம். *** 8. இலங்கைத் துறைமுகங்கள் மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்) மணிபல்லவம் என்றும் ஜம்புகொல பட்டினம் என்றும் பெயர் பெற்ற மிகப் பழைய துறைமுகப்பட்டினம் இலங்கையின் வடகோடியில் இருந்தது. இது இப்போதைய யாழ்ப்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. மணிமேகலைக் காவியம் இதை மணிபல்லவம் என்றும் இலங்கைப் பாலிமொழி நூல்கள் ஐம்புகொலபட்டினம் என்றும் கூறு கின்றன. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. அக்காலத்தில் பேர் போன துறைமுகப்பட்டினமாக விளங்கிய இங்கு வாணிகப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக இல்லை. கப்பல் போக்குவரத்துக் குரிய துறையாகவும், தமிழ் நாட்டிலிருந்து கிழக்கே நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கிக் குடிநீர் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருந்தது. இத்துறைமுகத்திலிருந்து தெற்கே இலங்கையின் அக்காலத்துத் தலைநகரமான அநுராத புரத்துக்கு (அநுரைக்கு) நெடுஞ்சாலை யிருந்தது. இலங்கையை யரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் (கி.மு. 247-97) என்பவர் இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட அசோக சக்ர வர்த்தியிடம் தூதுக் குழுவை அனுப்பின போது அத்தூதுக் குழு மணி பல்லவத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிப் புறப் பட்டது. புறப்பட்டு ஏழுநாள் வடக்கே கடற்பிரயாணஞ் செய்து தாமலித்தி துறைமுகத்தை யடைந்து அங்கிருந்து கங்கை யாற்றில் புகுந்து பாடலிபுரத்துக்குச் சென்று அசோக சக்கரவர்த்தியைக் கண்டது (மகா வம்சம் XI: 23-24). பிறகு, மீண்டும் அதே வழியாகக் கப்பலில் பிரயாணஞ் செய்து ஜம்புகொல பட்டினத்தை யடைந்தது (மகாவம்சம் XI : 33) அசோக சக்கரவர்த்தி புத்த கயாவிலிருந்த போதி மரத்தின் கிளையை வெட்டிச் சங்கமித்திரையின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பின போது சங்கமித்திரையும் அவருடைய பரிவாரமும் போதி (அரச) மரக்கிளையுடன் மரக்கலம் ஏறி ஜம்புகொலப் பட்டினத்துக்கு வந்து இறங்கினார் (மகாவம்சம் XIX : 23), தேவனாம்பிரிய திஸ்ஸன் அமைச்சர்களுடனும் பரிவாரங்களோடும் ஜம்புகொல துறைக்கு அருகில் பன்னசாலை (பர்ண சாலை - ஓலைக் கொட்டகை) அமைத்துக் கொண்டு அங்குத் தங்கியிருந்து போதி மரக்கிளையையும் சங்க மித்திரையையும் வரவேற்றான். அவன் தங்கியிருந்த இடம் சமுத்த பன்னசாலை (சமுத்திர பர்ண சாலை) என்று பெயர் பெற்றது (மகாவம்சம் XIX : 26) பிறகு அந்த அரசன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான் (மகாவம்சம் XIX : 27, 28). போதி மரக்கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒன்றை அவன் அந்த இடத்தில் நட்டான் (மகாவம்சம் XiX : 60). பிறகு இந்தப் போதிமரத்துக்குக் கீழே புத்தருடைய பாத பீடிகை யமைக்கப்பட்டது. இதற்கு மணி பல்லங்கம் (மணிப் பலகை, மணிப்பீடம்) என்று பெயர். மணிப் பல்லங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கிற்று என்று தோன்றுகின்றது. இந்தப் புத்த பீடிகையை மணிமேகலைக் காவியம், மணிப் பீடிகை என்றும் தரும பீடிகை என்றும் கூறுகின்றது. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிபல்லவத்துறை இருந்தது. (மணிமேகலை 6 : 211 - 13). தமிழகத்திலிருந்து (சோழ நாடு பாண்டிய நாடு களிலிருந்து) கிழக்கே வெகு தூரத்திலிருந்த சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) வாணிகத்தின் பொருட்டுச் சென்ற தமிழக நாவிகர்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்குப் புத்தபாத பீடிகைக்கு எதிரில் இருந்த கோமுகி என்னும் ஏரியிலிருந்து குடிநீரைக் கப்பல்களில் எடுத்துக்கொண்டு பிறகு பிரயாணந் தொடங்கினார்கள். பாண்டி நாட்டுக் கப்பல் வாணிகர் சாவகத் தீவுகளுக்கு வாணிகத் தின் பொருட்டுக் கடலில் சென்ற போது இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் சென்றார்கள் (மணி 14 : 79-84). கோவலன் மகள் மணிமேகலை பௌத்த மதத்தைச் சேர்ந்த பிறகு மணி பல்லவஞ் சென்று அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள் (மணி 25 : 120 - 127. இலங்கையின் வட பகுதியாகிய இப்போதை யாழ்ப் பாண தேசம் அக்காலத்தில் நாக நாடு என்று பெயர் பெற்றிருந்தது. அந்த நாக நாட்டை அக்காலத்தில் அரசாண்ட வளைவாணன் என்னும் நாகுல மன்ன மகள் பீலிவளை என்பவள் மணிபல்லவத் துறையிலிருந்து புறப்பட்டுக் காவிரிப் பூம் பட்டினத்துக்கு வந்து கடற்கரைச் சோலையிலே தங்கியிருந்தபோது அப்பட்டினத்தில் இருந்த வடிவேற்கிள்ளி என்னும் சோழன் அவளுடன் உறவு கொண்டான். சில காலங்கழித்து அவள் தன்னுடைய ஊருக்குத் திரும்பிப் போனாள். அங்கு அவள் ஆண் குழந்தையைப் பெற் றெடுத்து, அக்குழந்தையை மணிபல்லவத் துறையில் வந்து தங்கின கம்பலச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து அக் குழந்தையைச் சோழனிடம் சேர்க்கும்படி அனுப்பினாள். கம்பலச் செட்டி குழந்தையுடன் கப்பலில் புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது இடைக்கடலில் கப்பல் கவிழ்ந்து குழந்தை இறந்து போயிற்று (மணி 25 : 178 - 192) சோழ நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற மணிமேகலை சாவக நாட்டு அரசன் புண்ணியராசனைக் கண்டு அவனோடு புறப்பட்டு மணிபல்லவத்துக்கு வந்து அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கினாள் (மணி 25 : 120 - 127). இலங்கையிலிருந்து சோழநாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் வந்த பௌத்த பிக்குகள் ஜம்பு கொல பட்டினத்திலிருந்து கப்பலேறி வந்தார்கள். இவ்வாறு எல்லாம் பழைய நூல்களில் மணி பல்லவ - ஜம்புகொல பட்டினம் கூறப்படுகின்றது. மாதிட்டை இது இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார் குடாக் கடலில் பாண்டி நாட்டுக்கு எதிர்க்கரையிலிருந்த பேர் போன பழைய துறை முகப்பட்டினம். மாதிட்டை என்பது மகாதிட்டை என்றுங் கூறப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டியன் மகளை மணஞ்செய்து கொண்டான். அவனுடைய எழுநூறு தோழர்களும் பாண்டி நாட்டில் பெண் கொண்டு திருமணஞ் செய்து கொண்டார்கள். மணமகளிர் பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் சென்ற போது அவர்களும் அவர்களுடன் சென்ற பரிவாரங்களும் பதினெட்டு வகையான தொழில்களைச் செய்தவர்களின் குடும்பங்களும் மாதிட்டைத் துறைமுகத் தில் இறங்கிச் சென்றார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் VII : 58) கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கை யரசாண்ட சோழ நாட்டுத் தமிழனாகிய ஏலேலன் (ஏலாரன்) மீது துட்டகமுனு என்னும் அரசன் இலங்கையில் போர் செய்த போது ஏலேலனுக்கு உதவியாகச் சோழ நாட்டிலிருந்து படை திரட்டிக் கொண்டுபோன பல்லுகன் என்னும் அரசன் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கினான். (மகாவம்சம் XXV : 80) வட்டகாமணி அரசன் (கி.மு. 44-29) இலங்கையை யரசாண்ட போது ஏழு தமிழ்நாட்டு வீரர்கள் படையெடுத்துச் சென்று இலங்கையில் போர் செய்தார்கள். அவர்கள் (கி.மு. 29) மாதிட்டைத் துறையில் இறங்கினார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகா. XXXIII : 39). அந்தத் தமிழர்கள் வட்டகாமணி அரசனை வென்று சிங்கள நாட்டைப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு. 29-17) வரையில் அரசாண்டார்கள். மாதிட்டை பிற்காலத்தில் மாதோட்டம் என்று பெயர் கூறப் பட்டது. தேவாரத்தில் மாதோட்டம் என்று கூறப்படு கின்றது. மாதோட்டத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ள திருக்கேதீச் சுரத்தைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மாதிட்டையாகிய மாதோட்டம் மிகப் பழங்காலத்திலிருந்து முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது. *** 9. விளைபொருளும் உற்பத்திப் பொருளும் வெல்லமும் சர்க்கரையும் சங்க காலத்தில் வெல்லமும் சர்க்கரையும் செய்யப்பட்டன. வெல்லமும் சர்க்கரையும் செய்வதற்குக் கரும்பு வேண்டும். கரும்பும் பயிர் செய்யப்பட்டது. ஆகவே அக்காலத்தில் கரும்பும் வெல்லமும் முக்கியமான விவசாயப் பொருளும் உற்பத்திப் பொருளுமாக இருந்தன. கொங்கு நாட்டில் தகடூர் வட்டாரத்தை யரசாண்ட அதியமான் அரச பரம்பரையில் வெகு காலத்துக்கு முன்பு இருந்த ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் பயிர் செய்தான் என்று கூறப்படுகின்றான். ‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீரக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் முன்னோர்’ (புறம். 99 : 1-4) என்றும், ‘அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே’ (புறம். 392 : 20-21) என்றும் ஒளவையார் கூறுவதிலிருந்து இதனை அறிகின்றோம். இதனால் கொங்கு நாட்டு அதியமான் அரசன் ஒருவன் ஏதோ தூர தேசத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகப் பயிர் செய்தான் என்று தெரிகின்றது. தமிழ் நாடெங்கும் கரும்புப் பயிர் செய்யப்பட்ட இடம் கரும்பின் பாத்தி என்று கரும்பின் கழனி என்றும் கூறப்பட்டது. கரும்பைப் பழன வெதிர் என்று ஒரு புலவர் கூறியுள்ளார். (பழனம் - கழனி. வெதிர் - மூங்கில். மூங்கில் மலைகளில் தானாகவே வளர்வது. கரும்பு, கழனியில் பயிர் செய்யப்படுவது. மூங்கிலைப் போலவே கரும்பும் கணு உள்ளது. ஆகையால் கழனிகளில் பயிர் செய்யப்படுகிற மூங்கில் என்று கரும்பு கூறப்பட்டது) கரும்பு தமிழ்நாடு எங்கும் பயிரிடப்பட்டது. ‘அகல்வயல் கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ’ (அகம், 235 : 11-12) ‘அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூ’ (அகம், 217 : 3-4) ‘விரிபூங் கரும்பின் கழனி’ (2ஆம் பத்து 3:13) ‘தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பு.’ (குறுந், 85 : 4) கரும்பைச் சாறு பிழியும் எந்திரங்களும் கருப்பஞ்சாற்றை வெல்லங் காய்ச்சும் ஆலைகளும் ஊர்கள் தோறும் இருந்தன. பாண்டி நாட்டுத் தேனூரில் கரும்பைச் சாறுபிழியும் எந்திரமும் வெல்லங் காய்ச்சும் ஆலையும் இருந்தன. ‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனூர்’ என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. வெல்லத்துக்கு விசயம் என்று பெயர் கூறப்பட்டது. வெல்லக் கட்டியைச் சுருக்கமாகக் கட்டி என்றும் கூறினார்கள். வெல்லம் ‘கரும்பின் தீஞ்சாறு’ என்றும் கூறப்பட்டது. ‘எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும் ‘கரும்பின் தீஞ்சாறு’ விரும்பினர் பெறுமின்’ (பெரும்பாண். 260-261) என்றும், ‘ஆலைக் கலமரும் தீங்கழைக் கரும்பே!’ (மலைபடு கடாம் : 119) என்றும், ‘மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்’ (மலைபடு கடாம் : 340 - 341) என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. திருவிழாக் காலத்தில் வீடுகளை அலங்கரித்த போது வாழை மரத்தையும் கருப்பங் கழிகளையும் கட்டி அலங்காரம் செய்தார்கள். ‘காய்க்குலைக் கமுகும், வாழையும், வஞ்சியும் பூங்கொடி வல்லியும், கரும்பும் நடுமின்’ (மணிமேகலை 1 : 46-47) வெல்லத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தியமையால் வெல்லங் காய்ச்சும் தொழிலும் கரும்பு பயிரிடும் விவசாயமும் தமிழகத்தில் சிறப்பாக நடந்தன. வெல்லம் சர்க்கரை விற்ற வாணிகருக்குப் பணித வாணிகர் என்பது பெயர். மதுரைக்குப் பதின்மூன்று கல் தூரத்தில் அழகர் மலை என்னும் மலையும் கோயிலும் உள்ளன. அழகர் மலைக்கு அருகே கிடாரிப் பட்டி என்னும் ஊருக்கு அருகில் இந்த மலையின் மேல் இயற்கையாக அமைந்த ஒரு குகை இருக்கின்றது. இந்தக் குகையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த, ஜைன மதத்து முனிவர்கள் இருந்து தவஞ் செய்தார்கள். அந்த முனிவர்கள் தங்குவதற்காக அந்தக் குகையைச் செப்பஞ் செய்து குகைக்குள் கற்படுக்கைகளைச் சில செல்வர்கள் அமைத்தார்கள். கற்படுக்கைகளை யமைத்தவரின் பெயர்கள் அக் குகையிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ஒருவர் பெயர் பணித வாணிகன் நெடுமூலன் என்று எழுதப்பட்டிருக் கின்றது.1 பணித வாணிகன் என்றால் வெல்லக் கட்டி சர்க்கரை விற்கும் வாணிகன் என்பது பெயர். இந்தப் பிராமி எழுத்தின் அமைப்பைக் கொண்டு இது கிருத்துவுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறகிறார்கள். எனவே அந்தப் பணித வாணிகன் நெடுமுலன் 2200 ஆண்டுகளுக்கு முன்னே கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது. அந்தக் காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்தவர் களுக்குக் கரும்பும் கரும்புக் கட்டியும் தெரியாது. அவர்கள் தேனையுண்டனர் தேனும் போதிய அளவு கிடைத்திருக்காது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியருக்குக் கரும்பும் வெல்லமும் தெரிந்தன. ஐரோப்பாவில் விளைத்த பீட்ரூட் கிழக்கிலிருந்து சர்க்கரையைக் காய்ச்சும் விதத்தை அவர்கள் 18ஆம் நூற்றாண்டில் அறிந்தனர். பாரத நாட்டிலும் தமிழகத்திலும் 2,000 ஆண்டு களுக்கு முன்பே கரும்பும் கரும்புக் கட்டியும் தெரிந்திருந்தன. தமிழகத்தில் கரும்புப் பயிர் செய்வது கரும்புக் கட்டிக் காய்ச்சுவதும் சங்க காலம் முதல் நடைபெற்று வருகின்றன. கள்ளும் மதுவும் ஆதிகாலம் முதல் உலகமெங்கும் மதுவும் கள்ளும் அருந்தப் பட்டன. தமிழகம் உட்பட பாரத நாடு முழுவதும் அக்காலத்தி லிருந்து மதுபானம் அருந்தப்படுகின்றது. தமிழ்நாட்டிலே எல்லாத் தரத்து மக்களும் கள்ளையும் மதுவையும் அருந்தினார்கள் என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகின்றோம். முடியுடை மன்னரும் குறுநில அரசரும் புலவர்களும் போர் வீரர்களும் ஆண்களும் பெண்களும் செல்வரும் வறியவரும் எல்லோரும் மது அருந்தினார்கள். பௌத்த, சமண மதத்தாரும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களும் கள்ளுண் பதைக் கண்டித்த போதிலும் மக்கள் கள்ளையும் மதுவையும் அருந்தி வந்ததைச் சங்கச் செய்யுட்கள் சான்று கூறுகின்றன. இருக்கு வேதம் கூறுகிற ‘சோமயாக’த்தைத் தமிழ்நாட்டு ஆரிய பிராமணர் தமிழ் நாட்டில் செய்ததாகச் சான்று இல்லை. ஆனால் வேள்வி (யாகம்) செய்து மது மாமிசம் அருந்தியதைச் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் தமிழகத்தில் நடக்காத சோம யாகத்தைப் பிராமணர் பிற் காலத்தில் பக்தி இயக்கக் காலத்தில் பெருவாரி யாகச் செய்தனர். சோம பானத்தைக் கொண்டு சோமயாகம் செய்து சோமயாஜி என்று பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான சோமயாஜிப் பிராமணரைப் பாண்டியர் செப்பேடுகளும் பல்லவர் செப்பேடுகளும் கூறுகின்றன. சோம யாஜிப் பார்ப்பனன் ஒருவன் சோம பானத்தைக் குடித்துக் குடித்துத் தம்முடைய மனத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டதாக (மனோ அத்தர் ஆகியதாக!) ஒரு பாண்டிய செப்பேட்டுச் சாசனம் கூறுகின்றது. (தளவாய்ப்புரச் செப்பேடு, வரி, 138) ஆனால் நம்முடைய இப்போதைய ஆய்வு சங்க காலத்தோடு மட்டும் நிற்கிறபடியால் அந்த ஆராய்ச்சிக்குப் போக வேண்டியதில்லை. சங்க காலத்துத் தமிழகத்திலே கள்ளும் மதுவும் உற்பத்தி செய்யப் பட்டன. ஆனால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக வில்லை. உள்நாட்டிலேயே செலவாயின. கள், தேறல், தோப்பி, பிழி, நறவு, மகிழ், மட்டு முதலான பெயர்கள் மது பானங்களுக்குப் பெயராகக் கூறப்பட்டுள்ளன. தென் கட்டேறல் (அகம், 336 : 6) பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம், 348 : 7) பாம்பு வெகுண்டன்ன தேறல் (சிறுபாண் - 237) ‘தண்கமழ் தேறல்’ (புறம், 24), ‘மணங்கமழ் தேறல்’ (மதுரை. 780), ‘பூக்கமழ் தேறல்’ (பொருநர், 157), ‘இன்களி நறவு’ (அகம், 173 : 16), ‘தீந்தண் நறவம், (புறம் 292)’, ‘மணநாறு தேறல்’ (புறம், 397 : 14), ‘அரவு வெகுண்டன்ன தேறல்’ (புறம், 736 : 14), ‘மகிழ்தரல் மரபின் மட்டு’ (புறம் 390 : 16) என்று சங்கச் செய்யுட்கள் மது பானங்களைப் புகழ்கின்றன. தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கப்பட்டது. நெல், தினை முதலான தானியங்களிலிருந்து மது வகைகள் உண்டாக்கப் பட்டன. ‘கொழு மடல் தெங்கின் விளைபூந்தேறல்’ (மணி, 3: 89) என்று தென்னங்கள் கூறுப்படுகின்றது. ‘இரும்பனம் தீம்பிழி’ (நற். 38:3) என்றும், பிணர்ப்பெண்ணைப் பிழி (பட்டினப், 89) என்றும், நுளை மகள் அரித்த பழம்படு தேறல் (சிறுபாண், 58) என்றும், இரும்பனம் தீம்பிழி யுண்போர் மகிழும் (நற் 38.8) என்றும் பனங்கள் கூறப்படுகின்றது. நெல், தினை முதலான தானியங்களிலிருந்தும் மதுபானங்கள் உண்டாக்கப்பட்டன. இவற்றிற்குத் தோப்பிக்கள் என்று பெயர் கூறப்பட்டது. இவற்றை வீடுகளில் காய்ச்சினார்கள். `இல்லடு கள்ளின் தோப்பி (பெரும்பாண். 142) ‘துகளற விளைந்த தோப்பி’ (அகம், 205) சாடிகளில் தோப்பிக்கள் காய்ச்சப்பட்டன. வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த வெந்நீரரியல் விரலலை நறும்பிழி (பெரும்பாண். 281) என்று கூறப்படுகின்றது. தினைக் கள் உண்ட தெளிகோல் மறவர்’ (அகம், 284:8) என்று தினையரிசிக் கள் கூறப்படுகின்றது. மலைநாடுகளில் இருந்த குறவர் அங்குக் கிடைத்த பொருள் களிலிருந்து மதுவை உண்டாக்கிக் கொண்டார்கள். மலையுச்சி யில் மலைப்பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைகளிலும் மலைச் சாரல்களிலும் பலா மரங்களும் பலாப் பழங்களும் கிடைத்தன. மலைகளில் மூங்கில் புதர்கள் வளர்ந்தன. குறவர் பலாச்சுளைகளி லிருந்து ஒரு வகையான மதுபானத்தை உண்டாக்கி னார்கள். ‘தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்’ (அகம், 128:3, 182:3) மூங்கிற் குழாய்களில் மலைத் தேனைப் பெய்து வாயை யடைத்து நிலத்தில் புதைத்து வைத்து ஒருவித மதுபானத்தை யுண்டாக்கினார்கள். `வேய்பெயல் விளையுள் தேக்கட்டேறல் குறைவின்றிப் பருகி நறவு மகிழ்ந்து’. (மலைபடு கடாம் 171-172) (வேய்-மூங்கில்) ‘திருந்தமை விளைந்த தேக்கட்டேறல்’ (அமை-மூங்கில்) (மலைபடு, 523), ‘நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்’ (புறம், 120 : 12), ‘வாங்கு அமைப் பழுநிய தேறல், (புறம், 129:2) (அமை-மூங்கில்) ‘ஆம்பணை விளைந்த தேக்கட்டேறல்’ (அகம், 368 : 14) (பணை-மூங்கில்) ‘அமை விளை தேறல் மாந்திய கானவன்’ (சிலம்பு, 27 : 217) பாரியின் பறம்பு மலையில் இருந்தவர்களும் மூங்கிற் குழையில் தேனைப் பதப்படுத்தி மதுவாக்கி உண்டனர். ‘நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்’ (புறம், 120 : 12) மலைவாழ் குறவர் பலாச் சுளையையும் தேனையும் கலந்து மூங்கில் குழையில் பெய்து பதப்படுத்திய மதுவை உண்டு மகிழ்ந் தனர். `தேன்தேர் சுவைய, திரளமை மாஅத்துக் கோடைக் கூழ்த்த கமழ் நறுந் தீங்கனி பயிர்ப்புற பலவின் எதிர்ச்சுளை யளைஇ இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் நெடுங்கண் ஆடமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக்கடுப் பன்ன தோப்பிவான் கோட்டுக் கடவுளோங்கு வரைக் கோக்கிக் குறவர் முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி” (அகம். 348:2-9) ரோமாபுரியிலிருந்து வாணிகத்துக்காக வந்த யவனர் மது பானத்தையும் கொண்டு வந்தார்கள். அது திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்பட்ட கொடிமுந்திரிச் சாறு (Wine). அது விலையதிகமாகையால் அரசர்கள் மட்டும் வாங்கியருந்தினார்கள். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனை நக்கீரர் வாழ்த்தின போது, யவனர் தந்த தேறலை உண்டு மகிழ்ந்திருப்பா யாக என்று வாழ்த்தினார். ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி, நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற.’ (புறும். 56) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்திய போது `மணங்கமழ் தேறலை’ உண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தினார். ‘இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்தினிது உறைமதி பெரும’ (மதுரை, 779-81) மாங்குடி மருதனார் இன்னொரு செய்யுளிலும் அப்பாண்டி யனை அவ்வாறே வாழ்த்தினார். `ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கினி தொழுகுமதி பெரும’ (புறம். 24: 31-33) சேரமான் மாவெண்கோவும் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருங்கிள்ளியும் ஒருங்கிருந்த போது அவர்களை அவ்வையார், ‘பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து’ (புறம், 367 : 6-7) இருப்பீர்களாக என்று வாழ்த்தினார். ‘வேந்தர்க் கேந்திய தீந்தண் நறவம்’ (புறம், 291-1) அரிக்கமேடு என்னும் இடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு கி.மு. முதல் நூற்றாண்டில் யவனர் (கிரேக்க - ரோமர்) தங்கியிருந்த வாணிக நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குக் கிடைத்த பல பொருள்களில் கிரேக்க நாட்டுச் சாடிகளும் கிடைத்தன. அந்தச் சாடிகள் உரோம் தேசத்தில் செய்யப்பட்டவை. அக்காலத்தில் யவனர் மதுபானங்களை வைப்பதற்காக உபயோகப் பட்டவை. யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் என்று சங்கச் செய்யுள் கூறியதற்குச் சான்றாக இந்த யவனச் சாடிகள் உள்ளன. பாலாறு கடலில் கலக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்த போது அவ்விடத்தில் கிடைத்த பொருள்களுடன் யவனருடைய மதுச் சாடிகளும் கண்டெடுக்கப்பட்டன. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்ட இந்த மதுச்சாடிகளுக்கு அம்பொரே (Amphorae) என்பது பெயர். வட இந்திய அரசர்களும் யவன மதுவை வாங்கியுண்டனர். அசோக சக்கரவர்த்தியின் தந்தையான பிந்துசார மன்னன் யவன மதுவை வரவழைத்து அருந்தினான் என்று கூறப்படுகின்றது. அரசர், வீரர், புலவர், மாலுமிகள், உழவர் முதலான எல்லா வகையான மக்களும் அக்காலத்தில் மது அருந்தினார்கள். அந்த மது வகைகள் தமிழ்நாட்டிலே உற்பத்தியாகி உள்நாட்டிலேயே விற்பனை ஆயின. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை கள்ளையும் மதுவையும் விற்றவர் பெண்டிர். மிளகு (கறி) சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் உணவுக்கு மிகவும் முக்கியமான பொருளாக இருந்தது மிளகு. ஆனால் மிளகு எல்லா நாடுகளிலும் உண்டாகவில்லை. சேர நாட்டிலே மலைச் சாரல்களில் (சைய மலை என்னும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்) மிளகுக் கொடிகள் வளர்ந்தன. சேர நாட்டில் வாழ்ந்த அக் காலத்துத் தமிழர் இக்காலத்து மலையாளிகளைப் போல, மிளகைப் பயிரிட்டு மிளகு உற்பத்தி செய்தார்கள். கிழக்கிந்தியத் தீவுகளாகிய சாவக நாட்டிலேயும் அக்காலத்தில் மிளகு உண்டாயிற்று. ஆனால் அந்த மிளகு சேர நாட்டு மிளகைப் போன்று சிறந்தவையல்ல. சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டிலும் (இப்போதைய தென் கன்னட மாவட்டம்) மிளகு உண்டாயிற்று. சங்க காலத்தில் சேர நாடும் துளு நாடும் தமிழ் பேசும் தமிழ் நாடாகவே இருந்தன. பிற்காலத்தில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழ், மலையாள மொழியாகவும் துளு நாட்டில் பேசப்பட்ட தமிழ், துளு மொழியாகவும் மாறிப் போயின. துளு நாட்டிலும் சேர நாட்டிலும், மிளகு நன்றாக விளைந்தது. மிளகு, உணவைப் பக்குவப்படுத்துவதற்கு இன்றியமையாத பொருளாக இருந்தபடி யால் அது உலகம் முழுவதும் தேவைப்பட்டது. (இக்காலத்தில் சமையலுக்கு உபயோகப்படுகின்ற மிளகாய் அக்காலத்தில் கிடையாது. அக்காலத்தில் அமெரிக்கா கண்டம் இருந்தது ஒருவருக்கும் தெரியாது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா கண்டம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அங்குத் தென் அமெரிக்காவிலிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இது நிகழ்ந்தது சமீப காலத்தில்தான்.) சேரநாட்டு மிளகு அக்காலத்தில் உலக முழுவதும் பேர் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தி லிருந்த யவனர்கள் சேர நாட்டு மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டு போனார்கள். அதனால் மிளகுக்கு யவனப்பிரியா என்று பெயர் உண்டாயிற்று. மிளகுக்குக் கறி என்றும் மிரியல் என்றும் பெயர் உண்டு. சோழ நாட்டுக்குச் சாவக நாட்டிலிருந்து மிளகு இறக்குமதியாயிற்று என்பதைப் பட்டினப் பாலையி லிருந்து அறிகின்றோம். சங்கச் செய்யுட்களிலே சேர நாட்டு மிளகும் மிளகுக் கொடி யும் கூறப்படுகின்றன. குடபுலத்தில் (சேர நாட்டில்) கறிக்கொடி (கறி=மிளகு) பலாமரங்களில் மேலே படர்ந்து வளர்ந்ததை நத்தத்தனார் கூறுகிறார். `பைங்கறி நிவந்த பலவின் நீழல்’ (சிறுபாணாற்றுப்படை. அடி. 43) மலைகளில் சந்தன மரங்களின் மேலேயும் மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்தன. `கறி வளர் சாந்தம்’ (அகம், 2:6) மலைகளில் மிளகுக் கொடி வளர்ந்தது. `கறி வளர் அடுக்கம்’ (குறும், 288:1) (அடுக்கம் - மலை) கருவூர் கதப் பிள்ளைச் சாத்தனாரும் `கறிவளர் அடுக்க’த்தைக் கூறுகிறார். (புறம் 168:2) `கறிவளர் சிலம்பை’ ஆகூர் மூலங் கிழார் கூறுகின்றார். (அகம் 112:14) (சிலம்பு - மலை) மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், `துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை’யைக் கூறு கிறார். (அகம் 272 : 10) (படப்பை - தோட்டம்) நக்கீரர் திருமுரு காற்றுப்படையில் (அடி 309) கறிக்கொடியைக் கூறுகின்றார். மிளகாய் இல்லாத அந்தக் காலத்திலே மிளகு உணவுக்கு மிகவும் பயன்பட்டது. உப்பு எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாத பொருளாக மிளகு இருந்தது. காய்கறிகளை உணவாகச் சமைத்த போது அதனுடன் கறியை (மிளகை)யும் கறிவேப்பிலையையும் பயன்படுத்தினார்கள். ‘பசுங்காய்ப் போழொடு கறிகலந்து கஞ்சக நறுமுறி யளைஇ’ என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 307, 308) கூறுகின்றது. நமது நாட்டில் மட்டுமன்று. உலகத்திலே மற்ற நாடுகளிலும் மிளகு தேவைப்பட்டது. ஆகவே மிளகு வாணிகம் மிகச் சிறப்பாக நடந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளையடுத்த சேர நாட்டிலும் துளு நாட்டிலுமே மிளகு உண்டானபடியால் இந்த இடங்களிலிருந்தே மிளகு மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்றது. பாண்டிநாடு, சோழ நாடு, கொங்குநாடு, தொண்டை நாடு முதலான தமிழகத்து நாடுகளுக்குத் தமிழகத்துக்கு அப்பால் வடக்கேயுள்ள பாரத தேசத்து நாடுகளுக்கும், பாரசீகம் எகிப்து உரோமாபுரி கிரேக்கம் முதலான தேசங்களுக்கும் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் மேற்குக் கரை யோரங்களில் விளைந்த மிளகு கிழக்குக் கரையோரத்திலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துக்கும் வண்டிகளிலும் பொதி மாடு பொதி கழுதைகளிலும் கொண்டு வரப்பட்டது. காலின் வந்த கருங்கறி மூடை என்று இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறு கிறார் (பட்டினப் பாலை, அடி 186) (கால் - வண்டி, பொதிமாடு முதலியன. கறி மூடை = மிளகு மூட்டை) (வணிகச் சாத்து - வணிகக் கூட்டம்). மிளகுப் பொதி களைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலை வழியே சென்றதையும் மிளகு மூட்டைகள் பலாக்காய் அளவாக இருந்ததையும் வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரச ஊழியர் சுங்கம் வாங்கினதையும் அந்தப் புலவரே கூறுகிறார். ‘தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவி கழுதைச் சாத்தோடு வழங்கும் உல்குடைப் பெருவழி’ (பெருண்பாண். 77- 80) (பலவின் முழு முதல் - பலா மரத்தின் அடிப்புறம். பலா மரத்தின் அடிப்பக்கத்தில் பலாப் பழங்கள் காய்ப்பது இயல்பு. கடுப்ப - போல. மிரியல் - மிளகு, கறி. நோன்புறம் - வலிமையுள்ள முதுகு. சாத்து - வணிகக் கூட்டம். உல்கு - சுங்கம், சுங்கச் சாவடி) காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் மிளகு மூட்டைகள் தரைவழியாக வந்தன என்று கூறப்படுவதனால், இந்த மிளகு மூட்டைகள் மற்றப் பொருள்களோடு வெளி நாடுகளுக்குக் கப்பலில் ஏற்றியனுப்பப்பட்டன என்று கருத வேண்டியிருக்கின்றது. அரபு தேசத்து அராபியர் பழங்காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து மிளகை வாங்கிக் கொண்டு போய் எகிப்து உரோமாபுரி முதலான மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் விற்றனர். கி.மு. முதல் நூற்றாண்டில், யவனர் (கிரேக்கரும் உரோமரும்), அராபியரிடமிருந்து மிளகு வாணிகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் நேரடியாகத் தாங்களே கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங் களுக்குக் கொண்டு வந்து முக்கியமாக மிளகையும் அதனுடன் மற்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் முக்கியமாக முசிறித் துறைமுகப் பட்டினத்துக்கு வந்தனர். அவர்கள் முசிறியை முசிறிம் (Muziris) என்று கூறினார்கள். கி.மு. முதல் நூற்றாண்டில் தொடங்கின யவனரின் கப்பல் வாணிகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. யவனர்கள் கிரேக்க மொழியில் அக்காலத்தில் எழுதி வைத்த `செங்கடல் வாணிபம்’ (Periplus of Eritherian Sea) என்னும் நூலிலும் பிளைனி என்பார் எழுதிய நூலிலும் யவன - தமிழக் கடல் வாணிபச் செய்திகள் கூறப்படு கின்றன. யவனர்கள் தமிழகத்துக்கு வந்து சேரநாட்டு மிளகையும் கொங்கு நாட்டு நீலக் கல்லையும் பாண்டிநாட்டு முத்தையும் வாங்கிக் கொண்டு போனார்கள். யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதை அக்காலத்தில் நேரில் கண்ட தாயங்கண்ணனாரும் பரணரும் கூறுகிறார்கள். ‘சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி’ (அகம், 149 : 8-11) என்று தாயங்கண்ணனார்கூறுகிறார். சேரர்களுடைய முசிறிப் பட்டினத் துக்கு யவன வாணிகர் வந்ததையும் அவர்களுடைய `வினைமாண் நன் கலம்’ அழகாக இருந்ததையும் அவர்கள் பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதையும் இவர் கூறுவது காண்க. சேர நாட்டில் விளைந்த மிளகை வீடுகளில் மூட்டைக் கட்டி வைத்தார்கள். யவனக் கப்பல்கள் வந்த போது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே ஆற்றில் சென்று துறைமுகத்தில் தங்கியிருந்த யவனக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து அதற்கான பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டு வந்தனர் என்று பரணர் கூறுகிறார். ‘மனைக்குவைஇய கறிமூடையால் கலிச்சும்மைய கரைகலக் குறுந்து. கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியால், கரைசேர்க்குறுந்து’ (புறம். 343) (மனைக்குவைய - வீடுகளில் குவித்து வைத்த. கறி மூடை - மிளகு மூட்டை. கலம் - (யவனரின்) மரக்கலம். பொற்பரிசம் - பொற்காசு) யவனக் கப்பல்கள் சேரநாட்டுக்கு வந்து வாணிகம் செய்தபடியால் சேர மன்னருக்குப் பொருள் வருவாய் அதிகமாயிற்று. இதனைக் கண்ட துளு நாட்டு அரசனான நன்னன் இந்த வாணிகத்தைத் தன்நாட்டில் வைத்துக்கொள்ள எண்ணினான். நன்னனுடைய துளு நாட்டில் அக் காலத்தில் முக்கியமான துறைமுகப்பட்டினமாக இருந்தது மங்கலபுரம் என்னும் மங்களூர். இந்தத் துறைமுகம் நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்தது. பிளைனி என்னும் யவனர் அந்தத் துறைமுகத்தை நைத்ரியாஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். இவர் கூறுகிற நைத்ரியாஸ் என்பது நேத்திராவதி. நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தபடியால் இத்துறைமுகப் பட்டினத்தை அவர் நைத்ரியாஸ் என்று கூறினார் என்று தோன்று கின்றது. சேர நாட்டுக்கு வருகிற கப்பல்கள் துளு நாட்டு மங்களூர்த் துறைமுகத்தைக் கடந்துதான் வரவேண்டும். ஆனால் யவனக் கப்பல்கள் மங்களூர்த் துறைமுகத்துக்கு அதிகமாக வருவதில்லை. யவனர் தமிழ்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்தது முக்கியமாக மிளகுக்காகவே. யவனர் தமிழர் - கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடை பெற்றதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் யவனரின் நூல்களிலிருந் தும் அறிகின்றோம். இந்த வாணிகச் செய்தியைத் தமிழகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட பழங்காசுப் புதையல்களிலிருந்து கிடைத்த உரோம தேசத்துப் பழங்காசுகள் வலியுறுத்துகின்றன. உலக முழுவதும் அக்காலத்தில் புகழ்பெற்று இருந்த மிளகை வட இந்தியரும் உபயோகித்தனர் என்பது சொல்லாமலே அமையும். வடநாட்டார் மிளகை மரிசி என்று சொன்னார்கள். வடமொழியிலும் (சமஸ்கிருதம்) மிளகுக்கு மரிசி என்பது பெயர். மரிசி என்பது முசிறி என்பதன் திரிவு. முசிறித் துறைமுகத்தி லிருந்தே மிளகு வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டத னால் அந்தப் பட்டினத்தின் பெயர் மிளகுக்கு ஏற்பட்டது. முசிறி என்னும் சொல் முரசி என்று திரிந்து பிறகு மரிசி என்றாயிற்று. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காக் கண்டத்தி லிருந்து மிளகாய் கொண்டு வரப்பட்டது. இப்போது மிளகாயும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால் மிளகின் பெருமையும் சிறப்பும் இன்றும் குறையவில்லை. அறுவை (துணி) தமிழ்நாட்டில் பருத்திப் பஞ்சு விளைந்தது. பருத்தியை நூல் நூற்று ஆடை நெய்தார்கள். ஆகவே பருத்தி பயிரிடும் தொழிலும், பருத்தியிலிருந்து நூல் நூற்கும் தொழிலும், நூற்ற நூலைத் துணியாக நெய்யும் நெசவுத் தொழிலும் அதனை விற்கும் வாணிபத் தொழிலும் நடைபெற்றன. தமிழகத்தில் துணி விற்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சங்கச் செய்யுள்களிலிருந்து அக்காலத்துப் பருத்தித் தொழிலைப் பற்றி அறிகிறோம். கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி, (அகம், 129 ; 6-8), ‘பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும், புன்புலந்தழீஇய அங்குடிச் சிறூர்’ (புறம், 304 : 7-8) என்றும், ‘காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தியாக்கும் தீம்புனல் ஊரன்’ (அகம், 156 : 6-7) என்றும், ‘பருத்தி வேலிச் சீறூர் மன்னன்’ (புறம், 299 : 1) என்றும் பருத்தி பயிரிடப்பட்டது கூறப்படுகின்றது. பருத்திக்காய் முற்றி முதிர்ந்து வெடித்துப் பஞ்சு வெளிப்பட்ட போது அவற்றைக் கொய்து கொண்டு போய் வீட்டில் வைத்தார்கள். `கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த, மூடைப் பண்டம் இடை நிறைந்தன்ன’ (புறம், 393 : 12-13) ‘வில் அடித்துப் பஞ்சிலிருந்து கொட்டை நீக்கப்பட்டது. கொட்டை நீக்கப்பட்ட பஞ்சு வெண்மேகம் போலக் காணப் பட்டது. ‘வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்’ (அகம். 133:6) கொட்டை நீக்கிய பஞ்சியை நூலாக நூற்கிறார்கள். அக்காலத்தில் கையினாலே நூல் நூற்கப்பட்டது. நூலை நூற்றவர்கள் மகளிர், ஆண்மகன் ஆதரவு இல்லாத பெண்டிர் பஞ்சை நூலாக நூற்றார்கள். அவர்கள் இரவிலும் சிறு விளக்கு வெளிச்சத்தில் நூல் நூற்றார்கள். ‘ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற்றிணை, 353 : 1-2) ‘பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கம்’ (புறம் 326 : 5) நூலினால் முரட்டுத் துணிகளும் மெல்லிய துணிகளும் நெய்யப்பட்டன. குளத்தில் படரும் பாசி போன்ற (ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசிவேர்) போன்ற நூலினால் முரட்டுத் துணிகள் நெய்யப்பட்டன. நுண்மையான நூல்களினால் மெல்லிய துணிகள் நெய்யப்பட்டன. பால் ஆவி போன்ற மெல்லிய துணி களும் பாம்புத் தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும் பல வகையாக நெய்யப்பட்டன. `இழை மருங்கறியா நுழை நூற் கலிங்கம்’ (மலைபடு, 156) ‘பாம்புரித் தன்ன பொன்பூங்கலிங்கம்’, (புறம் 397 : 15), ‘போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம்’ (புறம், 393 : 17-18) `நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து, அரவுரி யன்ன அறுவை’ (பொருநர், 82-83) `காம்பு சொலித்தன அறுவை’ (சிறுபாண், 236) இவ்வாறு பலதரமான ஆடைகள் நெய்யப் பட்டன. அக்காலத்துத் தமிழர் சட்டை அணியவில்லை. அரையில் ஓர் ஆடையும் தோளின் மேல் ஓர் ஆடையும் ஆக இரண்டு துணி களை மட்டும் அணிந்தார்கள். இக்காலத்தில் உடுப்பது போல அதிகமாக ஆடைகளை அணியவில்லை. `உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறம் 189 : 5) துணியைச் சட்டையாகத் தைத்து அணியும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. அரச ஊழியர்களில் முக்கியமானவர் மட்டும் மெய்ப்பை (சட்டை அணிந்தார்கள்) பாண்டிய அரசனுடைய அரசாங்கத்து ஊழியர் மெய்ப்பை (சட்டை) அணிந்திருந்தனர். பாண்டியனுடைய பொற்கொல்லன் சட்டையணிந்திருந்தான். அவனைக் கோவலன் மதுரை நகரத் தெருவில் சந்தித்தான். `மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவிற் கைக் கோற் கொல்லனைக் கண்டன னாகி, (சிலம்பு 16 : 107-108 ) மெய்ப்பை - சட்டை; பாண்டியனுடைய தூதர்களும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார்கள். (சிலம்பு , 26 : 166-172) சேரன் செங்குட்டுவனுடைய தூதர்களும் அவர்கள் தலைவனாகிய சஞ்சயனும் தலைப்பாகையும் கஞ்சுகமும் (சட்டையும்) அணிந்திருந் தனர். சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற, கஞ்சுக முதல்வர் ஈரைஞ்நூற்றுவர் (சிலம்பு 26 : 137-138) செங்குட்டுவனுடைய ஒற்றரும் அவர்களின் தலைவனான நீலனும் கஞ்சுகம் (சட்டை) அணிந்திருந்தார். நீலன் முதலிய கஞ்சு மாக்கள் (சிலம்பு, 28 : 80) அரசாங்கத்துக்கு முக்கிய ஊழியர் தவிர, சங்க காலத்தில் மற்ற யாவரும் சட்டையணியவில்லை. தமிழகத்திலிருந்து வெளி நாடுகளுக்கும் துணி ஏற்றுமதி யாயிற்று. பாடலிபுரம் காசி போன்ற கங்கைக்கரைப் பிரதேசங் களுக்குத் தமிழ்நாட்டுத் துணிகள் அனுப்பப்பட்டன. கவுடல்யரின் அர்த்த சாத்திரம் மாதுரம் என்னும் துணியைக் கூறுகின்றது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சென்றபடியால் அதற்கு மாதுரம் என்று பெயர் கூறப்பட்டது. அர்த்த சாத்திரம் சந்திர குப்த மௌரியன் காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறப்படுகின்ற படியினால் அக்காலத்திலேயே தமிழ்நாட்டு ஆடைகள் வட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது தெரிகின்றது. தமிழ் நாட்டிலிருந்து ஆடைகள் சாவக நாட்டுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளாகிய இந்தோனேஷியா வுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் அந்நாடுகளில் பஞ்சும் துணியும் உற்பத்தி செய்யப்பட வில்லை. ஆனால், தமிழகத்துத் துணிகள் அங்குக் கொண்டு போகப்பட்டதற்குச் சான்றுகள் இல்லை. தமிழர் கலிங்க தேசத்துக்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சென்று வாணிபம் செய்தனர் என்று ஹத்தி கும்பா குகைச்சாசனம் கூறுகின்றது. கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த தமிழர் அங் கிருந்து பருத்தியாடைகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தனர். கலிங்க நாட்டிலிருந்து வந்த ஆடைக்குக் கலிங்கம் என்று பெயர் கூறப்பட்டது. தமிழகத்தில் கலிங்க ஆடைகள் அதிகமாக விற்கப்பட்டன. கலிங்கத் துணி களுக்குச் சிறப்புப் பெயராக வழங்கப்பட்டது. கலிங்கம் என்ற பெயர் பிற்காலத்தில் எல்லாத் துணிகளுக்கும் பொதுப் பெயராக வழங்கப் பட்டது. சங்கச் செய்யுட்களில் கலிங்கம் என்னும் பெயர் பொதுவாக எல்லாத் துணிகளுக்கும் வழங்கப்பட்டதைக் காண் கின்றோம். தமிழ்நாட்டிலே அக்காலத்திலும் பட்டாடைகள் உடுத்தப் பட்டன. செல்வர் பருத்தியாடையும், பட்டாடையும் அணிந்தார்கள். `பட்டு நீக்கித் துகில் உடுத்தும்’ என்று பட்டினப்பாலை (அடி 105) கூறுகின்றது. `கொட்டைக் கரைய பட்டுடை’ என்று பொருநர் ஆற்றுப்படை (அடி 155) கூறுகின்றது. `அரத்தப்பூம்பட்டு அரை மிசை உடீஇ’ என்று சிலப்பதி காரம் கூறுகின்றது (சிலம்பு, 4:86) பட்டுத் துணி தமிழகத்தில் உற்பத்தி யாகவில்லை. அந்தக் காலத்திலே பட்டு சீன நாட்டில் மட்டும் உற்பத்தி யாயிற்று. வேறெங்கும் அக்காலத்தில் உற்பத்தியாகவில்லை. சீனர்கள் பட்டுத்துணியைச் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்து விற்றார்கள். வாணிகத்துக்காகச் சாவக நாட்டுக்குச் சென்ற தமிழர் அங்கிருந்த பட்டுத்துணிகளைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். தமிழர்களிட மிருந்து பட்டுத் துணிகளை யவனர் வாங்கிக் கொண்டு போனார்கள். சீன நாட்டுப் பட்டு சாவகத் தீவுக்கு வந்து அங்கிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து யவன நாட்டுக்குக் கொண்டு போகப் பட்டது. பாரசீகம் எகிப்து ரோமாபுரி முதலான நாடுகளுக்குப் (பட்டுத் துணி சீன நாட்டி லிருந்து மத்திய ஆசியா வழியாகவும் தரைவழியாகச் சென்றது) பாண்டி நாட்டுத் தொண்டித் துறைமுகத்திலே கிழக்குக் கடலி லிருந்து (சாவக நாட்டிலிருந்து வந்த பொருள்களில்) பட்டுத் துணியும் கூறப்படுகின்றது. ஓங்கிரும் பரப்பின் வங்க வீட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து (சிலம்பு, 14: 106-110) இவை கிழக்குக் கடல்களிலிருந்து கொண்டல் (கிழக்குக்) காற்றின் உதவியினால் கப்பல்களில் வந்தவை. இவற்றில் துகில் என்பது பட்டுத் துணி. கிழக்கிலிருந்து வந்த பட்டைத் தமிழ் நாட்டிலிருந்து அரபியரும் யவனரும் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள். தமிழ்நாட்டிலுண்டான பருத்தித் துணிகளுக்குச் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலான சாயம் ஊட்டினார்கள். ஆனால், வெண்மையான துணிகளையே தமிழர் பெரிதும் விரும்பினார்கள். வெள்ளையாடை சிறப்பாகவும் உயர்வாகவும் மதிக்கப்பட்டது. பிறந்த நாளாகிய வெள்ளணி நாளிலே வெள்ளாடை யுடுத்துவது சிறப்பாக இருந்தது. சங்க காலத்திலே பருத்தி பயிர் செய்வதும் நூல் நூற்பதும் துணி செய்வதும் ஆடை விற்பதுமாகிய தொழில் சிறப்பாக நடந்தது. துணிகளை விற்ற வணிகருக்கு அறுவை வாணிகர் என்று பெயர் கூறப்பட்டது. மதுரையில் இருந்த இளவேட்டனார் என்னும் புலவர் அறுவை வாணிகம் செய்தார். ஆகையால் அவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்று பெயர் பெற்றார். அவர் இயற்றிய பன்னிரண்டு செய்யுட்கள் சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. (அகம், 56, 124, 230, 254, 272, 302 குறும், 185. நற்றிணை 33, 157, 221, 334, புறம். 329) உப்பு `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி உணவுக்குச் சுவை அளிப்பது உப்பு. ஆகையால் இது வெண்கல் அமிழ்தம் எனப்பட்டது. ஆதிகாலத்திலிருந்து உப்பு மனிதருக்கு உணவாகப் பயன்படுகின்றது. உணவுக்கு மட்டுமல்லாமல், ஊறு காய், கருவாடு (உப்புக் கண்டம்) முதலானவைக்கும் உப்பு வேண்டப் படுகின்றது. ஆகவே உப்பை எல்லா நாடுகளிலும் உண்டாக்கினார்கள். தமிழகத்திலும் உப்பு செய் பொருளாகவும் வாணிகப் பொருளாகவும் உணவுப் பொருளாகவும் இருந்து வருகின்றது. நெய்தல் நிலமாகிய கடற்கரை தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த படியால் ஆங்காங்கே உப்பளங்கள் இருந்தன. ஆகையால் தமிழகத்துக்கு எக் காலத்திலும் உப்புப் பஞ்சம் ஏற்பட்ட தேயில்லை. உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவித்தார்கள். பாத்திகளில் பாய்ச்சப்பட்ட கடல் நீர் வெயிலில் ஆவியாகிப் போய் உப்பு பூக்கும். இதுவே கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு (நற் : 345 : 8) ஏர் உழாமல் உவர் நிலத்திலே உப்பு விளைவித்தபடியால் அவர்கள் `உவர்விளை உப்பின் உழாஅ உழவர்’ (நற். 331 : 1) என்று கூறப்பட்டார்கள். உப்பளங்களில் உப்பு விளைந்த பிறகு உப்பைக் குவியல் குவியலாகக் குவிந்து வைத்தார்கள். பிறகு, உப்பை வாங்குவதற்கு வருகிற உப்பு வாணிகரை எதிர்பார்த்திருந்தார்கள். ‘உவர்விளை உப்பின் உழாஅ உழவர் ஒகை உமணர் வருபதம் நோக்கி கானல் இட்ட காவற் குப்பை’ (நற். 331 : 1-3) (உவர் - உவர்நிலம், உப்பளம். உமணர் - உப்பு வாணிகர். கானல் - கடற்கரை. குப்பை - குவியல்) உமணர் (உப்பு வாணிகர்) மாட்டு வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் பெரிதும் பண்ட மாற்று வாணிகம் நடந்தது. ஆகையால் காசு கொடுத்து வாங்காமல் பண்டங்களை மாற்றினார்கள். நெல்லுக்கு மாற்றிய உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் மனைவி மக்களொடு வந்து உப்பை வாங்கி கொண்டு குடும்பத்தோடு ஊர் ஊராக வண்டியை ஓட்டிக் கொண்டு போய் உப்பை விற்றார்கள். ‘தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து உமணர் போகலும்’ (அகம், 183 : 1-5) (தம்நாடு - உமணருடைய நாடு. பிறநாடு - (இங்கு) நெய்தல் நிலம். கொள்ளை சாற்றி - விலை கூறி. ஒழுகை - வண்டி. அவண் - அங்கே. ஒக்கல் - சுற்றம்.) உமணர் உப்பு வண்டிகளை ஒட்டிக் கொண்டு கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள். ‘உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி அதர்படு பூழிய சேண்புலம் படரும் ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக் கணநிரை வாழ்க்கை’ (அகம், 390 : 1-4) கடற்கரைக்கு அப்பாலுள்ள உள்நாடுகளுக்கும் மலைநாடுகளுக் கும் எருதுகள் உப்பு வண்டியை இழுத்துக் கொண்டு போயின. ‘கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடைய நோன்தாள் பகடு’ (புறம். 60 : 7-9) (கழி - உப்பங்கழி. கல்நாடு - மலைநாடு. சாகாடு - வண்டி. ஆழ்ச்சி போக்கும் - பள்ளத்திலிருந்து மேட்டின்மேல் செல்லும். பகடு - எருது). உமணர் ஒரே ஊரில் தங்காமல் ஊர்கள் தோறும் சென்றனர். அவர்கள் குடும்பத்தோடு நிலையா வாழ்க்கையை நடத்தினார்கள். ‘உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் கணங்கொள் உமணர்’ (நற். 138 : 1-3) பாரமான வண்டியை இழுத்துக்கொண்டு எருதுகள் மேட்டில் ஏறியும் பள்ளத்தில் இறங்கியும் செல்லும் போது வண்டியின் அச்சு முறிந்து விடுவதும் உண்டு. அதன் பொருட்டு ஆயத்தமாகச் சேம அச்சுக் கொண்டு போனார்கள். (புறம். 102 : 1-2) உமணர் பாதிரிப் பூவையும் அலரிப் பூவையும் தொடுத்துக் கட்டின பூமாலையைத் தலையில் அணிந்து காலில் செருப்புத் தொடுத்து கையில் தடி ஏந்திச் சென்றார்கள். ‘அத்தப் பாதிரித் தூய்த்தலைப் புதுவீ எரியிதழ் அலரியொடு இடைபட விரைஇ வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணித் தோல்புதைச் சீற்றடிக் கோலுடை யுமணர்.’ (அகம், 191 : 1-4) உமணர் ஆங்காங்கே வழியில் தங்கி உணவு சமைத்து உண்டு ஓய்வு கொண்டு மீண்டும் பிரயாணஞ் செய்தார்கள் (அகம், 159 : 1-4). சில இடங்களில் சமைக்கவும் உண்ணவும் நீர் கிடைக்காது. அவ்விடங்களை அகழ்ந்து குழி உண்டாக்கிச் சுரக்கும் நீரை உண்டனர் (அகம், 295 : 9: 14) தீக்குச்சி இல்லாத காலமாகையால் அவர்கள் தீக்கடை கோலினால் தீயுண்டாக்கிச் சோறு சமைத் தார்கள் (அகம், 169 : 5-8). போகிற வழியில் தங்கி ஊருக்குள் சென்று உப்பு விற்றார்கள். உமண ஆடவர் ஊர்க்குள் சென்று உப்பு விற்பதில்லை. உமணப் பெண்கள் உப்பை ஊர்க்குள் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் காசுக்கு உப்பு விற்கவில்லை. உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். ‘நெல்லும் உப்பும் நேரே, ஊரீர் கொள்ளீரோ வெனச் சேரிதொறும் நுவலும்’ (அகம், 390 : 8-9) (சேரி - தெரு. நுவலும் - சொல்லும்) ‘கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எவ்வளை தெளிர்ப்ப வீசி, நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் சேரிவிலைமாறு கூறலின்’ (அகம், 140 : 5-8) ஆறுகளும் கால்வாய்களும் உள்ள ஊர்களில் படகுகளில் உப்பை ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றி அந்த நெல்லைப் படகில் ஏற்றிக் கொண்டு போனார்கள் என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகின்றார். ‘கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துத் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி பணை நிலைப் புரவியின் அணைமுதற்பிணிக்கும் கழிசூழ் படப்பை’ (பட்டினப்பாலை, 27-32) மாட்டுவண்டிகள் போகமுடியாத பாறைகளும் மலைகளும் மேடுகளும் உள்ள ஊர்களுக்கு உப்பு மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து நல்ல நிமித்தம் பார்த்து வீரர்களையும் அழைத்துக் கொண்டு மலைநாடு களுக்குப் போனார்கள். கொள்ளைக்காரர் இடைவழியில் வந்து கொள்ளையிடுவதும் உண்டு. ஆகையினால் அவர்கள் தங்களுடன் வீரர்களை அழைத்துக் கொண்டு போனார்கள். ‘அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செய் ஆடவர் நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக் குறைக்குளம்பு தைத்த கற்பிறழ் இயவு’ (அகம். 207 : 1-6) (புள் ஒர்த்து - நன்னிமித்தம் பார்த்து. படை அமைத்து - வீரர் களை அமைத்து. கல் பிறழ் இயவு - பாறைக் கற்கள் உள்ள வழி) ‘பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய திருந்துவாள் வயவர்’ (அகம், 89 : 12-13) உப்பு மூட்டைகள் மட்டுமல்லாமல் மிளகு முதலான வேறு பண்டங்களைச் சுமந்துகொண்டு போகக் கழுதைகளையும் அக்காலத் தில் பயன்படுத்தினார்கள். ‘இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார் நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறநிறைப் பண்டத்துப் பொறையசாக் களைந்து’ (அகம், 343 : 11-13) உப்பு உற்பத்தியும் உப்பு வாணிகமும் செம்மையாக நடந்தன. தமிழகத்துக்கு உப்பு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாக வில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஏற்றுமதி செய்யவும் இல்லை. தமிழகத்திலே உண்டாக்கப்பட்டுத் தமிழகத்திலேயே செலவு செய்யப்பட்டது. வளை (சங்கு) சங்குக்குத் தமிழ்ப் பெயர் வளை என்பது. தமிழகத்தின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் வளை அதிகமாகக் கிடைத்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும் வலம் புரிச் சங்கு என்றும் இருவகையுண்டு. வலம்புரிச் சங்கு கிடைப்பது அருமை. ஆகையால் வலம்புரிச் சங்குக்கு விலையதிகம். சங்குகளை வளை களாக அறுத்து வளையல் செய்தார்கள். அக்காலத்துத் தமிழ் மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்தார்கள். கண்ணாடி வளையல் அணிவது அக்காலத்து வழக்கம் அன்று. சங்கு வளை யணிவது மங்கலமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் வாழ்ந்த அரச குமாரிகள் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழைமகள் வரையில் எல்லோரும் அக்காலத்தில் சங்கு வளைகளை அணிந்தார்கள். ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல் உண்டாக்கும் தொழில் அக்காலத்தில் சிறப்பாக நடந்தது. கடல்களி லிருந்து சங்குகள் எடுக்கப்பட்டன. கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்கு களும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்த போது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரிவித்தார்கள். ‘இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை’ (அகம். 350: 11-13) (வலம்புரி - வலம்புரிச் சங்கு. பரதவர் - கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள். கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்கு களைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில். பணிலம் ஆர்ப்ப - சங்க முழங்க) கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய்தார்கள். ‘வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை’ (நற்றிணை, 77 : 8-9) வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக்கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் இத்தொழில் கூறப்படுகின்றது. அரம்போழ் அவ்வளை (ஐங்குறு நூறு, நெய்தல் 106, `கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை’ (ஐங்குறு, வளைபத்து 48) `கோடீர் எல்வளை’ (ஐங்குறு, வளைபத்து) `கோடீர் இலங்குவளை’ (குறும். 31 : 5) (கோடு - சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர் களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர். ‘வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து வளைகளைத் தொழிந்த கொழுந்து’ (அகம், 24 : 1-2) வேளாப் பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விசுவப் பிராமணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வகைகளை விற்கும் தொழிலும் அக்காலத் தில் சிறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழில் நடந்தது. `அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்’ (சிலம்பு 5-47) சோழ நாட்டு வஞ்சிமா நகரத்தில். ‘இலங்கரம், பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்’ (மணிமே. 28 : 44-45) இருந்தன. சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிக மாகக் கருதினார்கள். அன்றியும் அது மங்கலமாகவும் கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள். `அணி வளை முன்கை ஆயிழை மடந்தை’ (அகம், 361 : 4) `சின்னிரை வால் வளைக் குறுமகள்’ (குறும். 189-6) ‘வளைக்கை விறலி’ (புறம், 135 : 4) ‘வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை அகன்தொடி செறிந்த முன்கை’ (நற். 77 : 8-10) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந் திருந்தது கூறப்படுகின்றன. சொக்கப் பெருமான் வளையல் விற்றதாகத் திருவிளையாடற் புராணத்தில் (வளையல் விற்ற படலம்) கூறப் படுகின்றது. இடம் புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள். வலம்புரிச் சங்குகள் விலை யதிகமானபடியால் செல்வச் சீமாட்டிகளும் இராணிகளும் அணிந் தார்கள். செல்வ மகளிர் பொற்றோடு (பொன் வளையல்) அணிந்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணிந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கைகளில் தங்க வளையல்களை அணிந் திருந்ததோடு வலம்புரிச்சங்கு வளையலையும் அணிந்திருந்தாள். ‘பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து’ (நெடுநெல்வாடை, 141-142) என்று நெடுநெல்வாடை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே பேர் போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கன் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்திருந்தாள். மதுரையில் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு வளையைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. `கொற்றவை வாயிலில் பொற்றொடீ தகர்த்து’ (கட்டுரைக் காதை, 181) பொற்றொடி - பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உரை) மணமகன், தான் மணக்க இருக்கும் மணமக்களுக்குச் சங்கு வளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பாரதநாடு முழுவதிலும் அக்காலத்தில் இருந்தது. இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே சிந்துவெளியில் இருந்த ஹரப்பா நகரத்துத் திராவிட நாகரிக மகளிரும் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்பது அங்கு அகழ்ந்தெடுத்தப் பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் சங்கு வளைகளும் இருந்ததனால் அறிகிறோம்.2 கொற்கை காவிரிப் பூம்பட்டினம் உறையூர் முதலான ஊர்களில் நிலத்தை அகழ்ந் தெடுத்த போது அங்கிருந்து கிடைத்த பழம் பொருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்தன. இதனால், சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறு கின்றது. சங்கு முழங்குவது மங்கலமாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண் மனைகளிலே காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசனைத் துயிலெழுப்பினார்கள். அரண்மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை, ‘தூக்கணங் குரீஇத் தூங்கு கூடேய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி ஞாலங் காவலர் கடைத்தலைக் காலைத் தோன் றினும்’ (புறம். 225 : 11-14) என்றும், ‘மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால் வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்ப’ (சிலம்பு, 14:12 - 14) என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில் - அரண்மனை) பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணிந்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற்பட்ட பிறகு கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பழைய சங்க வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழி லும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழிலும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவது விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது. முத்து தமிழ்நாட்டுக் கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச் சிப்பி என்னும் ஒருவகைக் கிளிஞ்சிலில் முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள் கடலில் கலக்கிற புகர் முகங்களிலேயே முத்துச் சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டிநாட்டு முத்து பேர் போனது. ‘தென் கடல் பவ்வத்து முத்து’ என்று புகழப்படுகின்றது. முத்து நவரத்தினங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டது. ஆகவே அது விலை மதிப்புள்ளது. அரசர்கள் ‘ஏகவடம்’ என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். ஏகவடம் அரசர்களுக்குரிய அடை யாள அணிகளில் ஒன்று. செல்வர் வீட்டுப் பெண்களும் அரச குமாரிகளும் இராணிகளும் முத்து மாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர். தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இங்கிருந்து வாங்கிக் கொண்டு போன பொருள்களில் முத்தும் ஒரு பொருளாக இருந்தது. தமிழகத்துக்கு முத்துக்களில் பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றிருந்தது. கொற்கைக் குடாக் கடலில் விளைந்த முத்து சங்கச் செய்யுள்களில் புகழப்படுகின்றது. ‘முத்தப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ (நற். 23-6). ‘கொற்கையன் பெருந்துறை முத்து’ (அகம், 27:9) சங்க காலத்தில் பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போயிற்று. அக்கடல் உள்நாட்டில் ஐந்து மைல் ஊடுருவிக் குடாக் கடலாக அமைந்திருந்தது. அக்காலத்தில் தாமிர பரணியாறு கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. அந்தப் புகர் முகத்திலே முத்துச் சிப்பிகளும், இடம்புரி, வலம் புரிச் சங்குகளும் உண்டாயின. ஆறுகள் கடலில் கலக்கிற புகார் முகங்களிலே முத்துக்களும் சங்குகளும் அதிகமாக உண்டாயின. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் கடலில் விழுந்த புகர் முகத்திலே உண்டான முத்தைத்தான் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் தாம்ரபர்ணிகம் என்று கூறுகின்றது. கொற்கைக் கடல் ஓரத்தில் தாமிர பரணி ஆறு கடலில் கலந்த இடத்தில் கொற்கைப் பட்டினம் இருந்தது. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தபடியாலும் துறை முகப் பட்டினமாக இருந்தபடியாலும் கொற்கைப் பட்டினத்தில் பாண்டியனுடைய இளவரசர்கள் தங்கி வாழ்ந்தார்கள். முத்துச் சிப்பிகளையும் சங்குகளையும் மூழ்கி எடுக்கும் போது அச்செய்திச் சங்கு முழங்கித் தெரிவிக்கப்பட்டது. ‘சீருடைய விழுச்சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் இலங்கு வளை யிருஞ்சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கையோர் நசைப் பொருந’ என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ் செழியன் கூறப்படுகின்றான் (மதுரைக். 134 - 138) கொற்கைக் கடலில் மீன் பிடிக்கும் போது மீனுடன் முத்துச் சிப்பியும் கிடைத்தனவாம். மீன் பிடிப்போர் அச்சிப்பிகளைக் கொண்டு போய்க் கள்ளுக் கடையில் கொடுத்து அதற்கு மாறாகக் கள்ளை வாங்கியுண்டனர். ‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’ (அகம், 296 : 8-10) பழயர் மகளிர் கொற்கைக் கடலில் கடல் தெய்வத்தை வணங்கிய போது முத்தையும் வலம்புரிச் சங்கையும் கடலில் இட்டு வணங்கினராம். ‘பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்றுறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணிப் பொலிந்த கோடேந்தல்குல் பழையர் மகளிர் பனித்துறை பரவ’ (அகம். 201 : 4-7) ஒருவன் குதிரை மேல் அமர்ந்து கடற்கரையோரமாகச் சென்ற போது குதிரையின் குளம்புகளில் முத்துக்கள் தட்டுப் பட்டனவாம். ‘இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை’ (அகம். 130 : 9-11) உப்பு வாணிகப் பெண்கள் கொற்கைக் கடற்கரைக்கு வந்து உப்பு வாங்கின பொது அவர்கள் வளர்த்த குரங்குகளும் அவர் களின் சிறுவர்களும் கிளிஞ்சில்களின் உள்ளே முத்துக்களை யிட்டுக் கிலி கிலியாடினார்களாம்! ‘நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளம்பூம் புதல்வரொடு கிலி கிலி யாடும் தத்துநீர் வரைப்பிற் கொற்கை’ (சிறுபாண், 55-62) இதிலிருந்து கொற்கைக் குடாக் கடலில் முத்துக்கள் மலிந் திருந்தன என்பது தெரிகின்றது. மகளிர் கால்களில் அணிகிற சிலம்பு என்னும் அணியின் உள்ளே சிறுசிறு கற்களைப் பரல் கற்களாக இடுவது வழக்கம். கொற்கைக் கடலில் முத்துக்கள் அதிகமாகக் கிடைத்தபடியால் பாண்டிய அரசருடைய அரச குமாரிகள் அணிந்த சிலம்புகளிலே முத்துக்களைப் பரலாக இட்டிருந்தனர். ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமா தேவியின் சிலம்பினுள்ளே முத்துக்கள் பரலாக இடப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. (வழக்குரை காதை 69) ‘தாம்ரபர்ணிகம்’ என்றும் முத்தை அர்த்தசாஸ்திரம் கூறுவது போலவே பாண்டிய கவாடகம் என்னும் முத்தையும் கூறுகின்றது. இந்தப் பெயரே இது பாண்டி நாட்டில் உண்டானது என்பதைத் தெரிவிக் கின்றது. சேர நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய முசிறிப் பட்டினத்தி லும் முத்துக்கள் கிடைத்தன. பேர் போன பெரியாறு முசிறிக்கு அருகில் கடலில் கலக்கிற இடத்தில் முத்துக்கள் உண்டாயின. அந்த முத்துக்கள் முசிறியின் ஓர் இடமாகிய பந்தர் என்னும் இடத் தில் விற்கப்பட்டன என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் (பதிற்று 8ஆம் பத்து 4 ஆம் செய்யுள்) 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் தெண்கடல் முத்தம் என்று கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். இதன் பொருள் அங்காடி என்பது. கவ்டல்லியரின் அர்த்தசாத்திரம் சேர நாட்டு முத்தையுங் கூறுகின்றது. அந்த முத்தை அர்த்தசாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பெரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் ஒரு பெயர் உண்டு. பெரியாறாகிய சூர்ணியாறு கடலில் கலக்கும் புகர் முகத்தில் உண்டான படியால் அந்த முத்து சௌர்ணேயம் என்று கூறப்பட்டது. சூர்ணி யாற்றில் உண்டாவது சௌர்ணேயம். (தாமிரபர்ணியாற்றில் உண்டான முத்து தாம்ரபர்ண்ணியம் என்று கூறப்பட்டது போல) சௌர்ணேயம் என்றும் பெயர் மருவி கௌர்ணேயம் என்றாயிற்று.3 காவிரி ஆறு கடலில் கலக்கிற இடமாகிய காவிரிப்பூம் பட்டினத் திலும் அந்தக் காலத்தில் முத்தும் சங்கும் உண்டாயிருக்கவேண்டும். ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் முத்துச் சிப்பியும் சங்கும் உண்டாவது மரபு. ஆனால், காவிரி ஆற்று முகத்துவாரத்தில் முத்தும் சங்கும் உண்டாயிற்றா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. யானைக் கோடு (தந்தம்) மலைகளிலும் மலையைச் சேர்ந்த காடுகளிலும் யானைகள் இருந்தன. கொங்கு நாட்டைச் சேர்ந்த யானை மலைக்காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தன. கொங்கு நாட்டு யானை மலை களும் அதனைச் சேர்ந்த காடுகளும் அக்காலத்தில் உம்பற்காடு (உம்பல் - யானை) என்று பெயர் பெற்றிருந்தன. யானைகளைப் பிடித்துப் பழக்கி அவைகளைப் போர்க்களங்களில் போர்செய்வதற்குப் பயன்படுத்தினார்கள். அக்காலத்து அரசர்கள் வைத்திருந்த நான்கு வகையான சேனைகளில் யானைப் படையும் ஒன்று. குட்டுவன் என்னும் சேர அரசன் மிகப் பெரிய யானைப் படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று பெயர் பெற்றான். (யானைச் செல் - யானைக் கூட்டம்) கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட பொறையர் என்னும் சேர அரசர் யானைகளை அதிகமாக வைத்திருந்தார்கள். அவர் களுடைய யானைகள் பசு மந்தைகளைப் போலக் காணப்பட்டனவாம். அக்காலத்தில் குறிஞ்சி (மலை)களில் வாழ்ந்த குறவர்கள் யானைகளை வேட்டையாடிக் கொன்று அவற்றின் கோடுகளைச் (தந்தங்களை) சேர்த்து வைத்தார்கள். அவர்களுக்குச் சோற்றுப் பஞ்சம் வந்த காலத்தில் தந்தங்களை விற்று உணவு வாங்கி உண்டனர். யானைகளை வேட்டையாடிக் கொன்றார்கள். புலியொடு போர்செய்து புண்பட்டு இளைத்துப்போன யானையைக் கானவர் அம்புஎய்து கொன்று அதன் கோடுகளைக் கைக் கொண்டார்கள். ‘புலியொடு பொறாத புண்கூர் யானை நற்கோடு நயந்த அன்பில் கானவர் விற்சுழிப்பட்ட நாமப் பூசல்’ (நற்றிணை, 65 : 5-7) கொல்லி மலையில் இருந்த குறவர் உணவு கிடைக்காமல் பசித்திருந்தபோது தங்களிடமிருந்த யானைக் கோடுகளை விற்று உணவு அருந்தினார்கள். ‘காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்துண்ணும் வவ்வில் ஒரி கொல்லிக் குடவரை’ (குறுந், 100 : 3-5) வேங்கடமலையில் வாழ்ந்தவர் ஒன்று சேர்ந்து யானையை வேட்டையாடிக் கொன்று அதன் கோடுகளைக் கொண்டு போய் மதுக்கடையில் கொடுத்து மது அருந்தினார்கள். மதுவை நெல்லுக்கு மாற்றுவது வழக்கம். இவர்கள் நெல்லுக்குப் பதிலாக யானைக் கோட்டைக் கொடுத்தனர். ‘வரிமாண் நோன் ஞான் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ (அகம், 61 : 7 - 13) மலைவாழ் குறவர்கள் அந்தந்த நாட்டு அரசருக்குப் பண்டங்களைக் காணிக்கை செலுத்தும்போது யானைத் தந்தங்களையும் கையுறை யாகக் கொடுத்தார்கள். சேரன் செங்குட்டுவன், பெரி யாறு, மலையி லிருந்து விழுகிற இடத்தில் மலையடிவாரத்தில் வழக்கமாகச் சென்று தங்கி வேனிற் காலத்தைக் கழிப்பது வழக்கம். அவன் மலையடி வாரத்துக்கு வரும்போது மலையில் வாழுங் குறவர்கள் அவனுக்குக் காணிக்கைச் செலுத்தினார்கள். மலைகளில் கிடைக்கும் பொருள்க ளாகிய சந்தனக் கட்டை, அகிற்கட்டை, தேன், பலாப்பழங்கள், மிளகு முதலிய பொருள் களையும் யானைத் தந்தங்களையும் அவர்கள் கொண்டுபோய்க் கொடுத்தார்கள் என்று சிலப்பதிகாரம் (25:37) கூறுகின்றது. யானைத் தந்தங்களினால் பலவகையான பொருள்கள் செய்யப் பட்டன. அயிரைமலைக் கொற்றவைக்குத் தந்தத்தினால் செய்த கட்டில் (ஆசனம்) இருந்தது (பதிற்றுப் பத்து 8 ஆம் பத்து 9). யானைக் கோட்டை ஈர்வாளினால் அறுத்தும் கடைந்தும் பொருள்களைச் செய்தார்கள். அந்தத் தொழில் மதுரையில் நடை பெற்றதைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வேதினத் துப்பவும் கோடு கடை தொழிலவும் (சிலம்பு 14 : 176) என்று கூறுகின்றது. அரும் பதவுரையாசிரியர் இதற்கு வேதினத் துப்பவும் - ஈர்வாளால் வலியப் பெற்றனவும் என்றது ஈருங்கருவியாற் பண்ணப்பட்டன. கோடு - தந்தம் என்று உரை எழுதுகிறார். சீப்பு, சிமிழ் முதலான பொருள்கள் தந்தத்தினால் செய்யப்பட்டன. யானைக் கோடுகளை வெளியூர் வாணிகர் வாங்கிக் கொண்டு போனார்கள். யவனர்களும் மற்ற பொருள்களோடு யானைக் கோடு களையும் வாங்கிக்கொண்டு போனார்கள். சங்க காலத்தில் யானைக்கோடு வாணிகப் பொருள்களில் ஒன்றாக இருந்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யுண்டு. யானை இறந்தால் அதன் தந்தங்களும் எலும்புகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டபடியால் இறந்தும் ஆயிரம் பொன் என்று கூறப் பட்டது. யானைத் தந்தங்களும் அக்காலத்தில் முக்கியமான வாணிகப் பொருளாக இருந்தன. நீலக்கல் கொங்கு நாட்டிலே சங்க காலத்தில் விலையுயர்ந்த மணிக் கற்கள் கிடைத்தன. சங்கச் செய்யுட்களில் அந்த மணிகள் கூறப்படுகின் றன. கொங்கு நாட்டில் கதிர்மணி கிடைத்ததைக் கபிலர் கூறுகின்றார். ‘இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு’ (7 ஆம் பத்து, 6 : 19-20) அரிசில் கிழாரும் அங்குக் கிடைத்த திருமணியைக் கூறு கின்றார். உழவர் ஏர் உழுத பொழுது அந்த மணிகள் வெளிப் பட்டனவாம். ‘கருவி வானந் தண்டளி சொரிந்தெனாப் பல்விதை யுழவர் சில்லே ராளர் பனித்துறைப் பகன்றறைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு’ (8ஆம் பத்து, 6 : 10-15) கொங்கு நாடு, சங்க காலத்தில், வடக்கே மைசூர் வரையில் இருந்தது. கன்னட நாட்டில் பாய்கிற காவிரியாறு வரையில் கொங்கு நாடு அக் காலத்தில் பரவியிருக்கிறது. அந்த வடகொங்கு நாட்டிலே புன்னாடு என்னும் ஒரு பகுதியில் அக்காலத்தில் கோமேதகச் சுரங்கம் இருந்தது. புன்னாட்டின் தலைநகரம் கட்டூர். அது கப்பணி ஆற்றின் கரை மேல் இருந்தது. கப்பணி ஆறு, காவிரியில் கலக்கிற உபநதிகளில் ஒன்று. கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்த கட்டூர் பிற்காலத்தில் கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது பிற்காலத்தில் கிட்டிபுரம் என்றும் பிறகு தீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. கட்டூர் அல்லது கிட்டூரைத் தலைநகரமாகக் கொண்ட புன்னாட்டை அக்காலத்தில் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். நவமணிகளில் கோமேதகம் என்பது ஒருவகை. கோமேதங்களில் பல வகையுண்டு. நீலம், பச்சை, மஞ்சள், பழுப்பு நிறம் முதலான வகைகள் கோமேதகத்தில் உண்டு. இவைகளில் நீல நிறமான கோமேதகத்தை உரோமர் ஆக்வாமரினான் (Aqua Marine) என்று கூறினார்கள். அந்த நீலக்கல் கடல் நீர் போன்ற நிறம் உள்ளது. அது அக்காலத்தில் புன்னாட்டைத் தவிர வேறெங்கும் கிடைக்க வில்லை. ஆகவே யவனக் கப்பல் வாணிகர் தமிழகத்துக்கு வந்து அவற்றை வாங்கிக் கொண்டு போனார்கள். புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் ஒன்று அக்காலத்தில் இருந்தது. அந்த நீலக்கற்கள் அக்காலத்தில் உலகத்திலே வேறெங்கும் கிடைக்காத அழகான கற்கள். புன்னாட்டு நீலக்கற்களை யவன வாணிகர் வாங்கிக் கொண்டு போய் ரோமாபுரியில் விற்றார்கள். ரோமாபுரிச் சீமாட்டிகள் இந்த நீலக்கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். ரோம் தேசத்தார் இந்த நீலக்கற்களை ஆக்வா மரினா (Aqua Marina) என்று கூறினார்கள். கடல் நீரின் நிறம் போல இருந்தபடியால் இப்பெயர் கூறப் பட்டது. யவனர் இந்த நீலக்கல்சுரங்கத்தைப் பற்றியும் நீலக்கற்களைப் பற்றியும் எழுதியுள்ளனர். புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் இருந்ததைப் பிளினி என்னும் யவனர் எழுதியுள்ளார். யவனர், புன்னாட்டை பவ்ன்னாட என்று கூறினார்கள். புன்னாடு உள்நாடு என்றும் அங்கு நீலக்கற்கள் கிடைத்தன என்றும் எழுதியுள்ளனர். புன்னாட்டில் நீலக்கல் சுரங்கம் இருந்தபடியால் இந்நாட்டைக் கைப் பற்றிக் கொள்ள அந்நாட்டுக்கு அருகில் இருந்த துளுநாட்டு நன்னன் விரும்பினான். அவ்வாறே அவன் சிற்றரச னாகிய புன்னாட்டு அரசன் மேல் போருக்குச் சென்றான். அதனை அறிந்த சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் தன்னுடைய சேனைத் தலைவனாகிய ஆய் எயினன் தலைமையில் சேனையை அனுப்பிப் புன்னாட்டை நன்னன் கைப்பாற்றாதபடி தடுத்தான். இதைப் பரணர் கூறுகின்றார்: ‘பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி யாங்கண் அஞ்சலென்ற ஆஅய் எயினன் இகலடு கற்பிற் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன்’ (அகம், 396 : 2-6) கொங்குநாட்டிலே படியூரிலும் (சேலம் மாவட்டம்) வாணியம்பாடியிலும் (கோயம்புத்தூர் மாவட்டம்) கதிர்மணிகள் கிடைத்தன. இவைகளை யவனர் வந்து வாங்கிக் கொண்டுபோனார்கள். 10. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை 1. தொல்காப்பியம் : ஐயர் யாத்தனர் கரணம் ஆதிகாலத்தில் ஆணும் பெண்ணும் தாமாகவே ஒருவரை யொருவர் விரும்பி ஒன்று சேர்ந்து வாழ்ந்து குடும்பத்தை நடத்தினார்கள். அக்காலத்தில் திருமணச் சடங்கு செய்யும் முறை இல்i வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குள்ளே மனம் ஒன்றுபட்டு வாழ்க்கையை நடத்தினார்கள். இந்த வழக்கம் உலகத்திலே எல்லா நாட்டிலும் எல்லா மக்களிடையிலும் நிகழ்ந்த முதல் நிகழ்ச்சி. பிறகு இவ்வித வாழ்க்கையிலே பொய்யும் வழுவும் ஏற்பட்டுச் சமூக வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாயின. அத்துன்பங்கள் உண்டாகாதபடி சமூகத் தலைவர்கள் அக்காலத்தில் கரணத்தைக் கற்பித்தார்கள். அதாவது மணமகனும் மணமகளும் பலர் அறியத் திருமணஞ் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று திருமணச் சடங்கை அமைத்தார்கள். இது ஆதிகாலத்தில் உலகத்திலே எல்லா நாட்டிலும ஏற்பட்ட நிகழ்ச்சி. இவ்வாறே தமிழ் நாட்டிலும் ஆதிகாலத்தில் கரணம் (திருமணம்) செய்யும் முறை ஏற்பட்டது. மிகப் பழைய காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் இச்செய்தி கூறப்படுகிறது. தமிழ் நாட்டிலேயும் பழங்காலத்தில் ஆணும் பெண்ணும் தமக்குள் ஒருவரையொருவர் காதலித்துக் கணவன் மனைவியாக இருந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்கள் என்றும், இவ்வாறு நிகழ்ந்தபோது நெடுங்காலத்துக்குப் பிறகு மக்களில் சிலரிடையே பொய்யும் வழுவும் உண்டாகிச் சமூக வாழ்க்கையில் ஒழுங்கீனமும் துன்பமும் குழப்பமும் ஏற்பட்டன என்றும், அவ்வொழுங்கீனத்தை தடுத்துச் சமூக வாழ்க்கையில் அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்துவதற்காக ஐயர், கணவன் மனைவியாக வாழவிரும்பும் ஆணும் பெண்ணும் பலர் அறியத் திருமணம் செய்யவேண்டும் என்று கரணத்தை (திருமணச் சடங்கை) அமைத்தார்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல் சூத்திரம். இந்தச் சூத்திரத்திலே “ஐயர், யாத்தனர் கரணம் என்ப” என்று கூறப்படுகிறது. இதில் கூறப்படும் ஐயர் என்பவர் யார் என்பதை இங்கு ஆராய்வோம். ஐயர் என்றால் ரிஷிகள், ஆரியப் பார்ப்பனர், பிராமணர் என்று இக்காலத்தில் சிலர் உரை எழுதியுள்ளனர். அதாவது, தமிழருக்குக் கரணம் (திருமணம் செய்யக் கற்பித்தவர் ஆரியப் பார்ப்பனர் என்றும், கற்பு ஒழுக்கத்தைத் தமிழுக்கு ஆரியப் பார்ப்பனர் கற்பித்தனர் என்றும் உரை எழுதியுள்ளனர் இவ்வாறு உரை எழுதினவர்கள் எல்லோரும் பார்ப்பனர் என்பது அறியத்தக்கது. பண்டைக் காலத்திலே ஆரியருக்கு முன்பே, நாகரிகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் திருமணம் செய்து கொண்டு வாழத் தெரியாமலே இருந்தார்களா? அவர்களுக்கு ஆரியப் பார்ப்பனர் வந்து திருமணம் செய்யும் முறையைக் கற்பித்தார்களா? பார்ப்பனச் சிலர் இவ்வாறு உரை எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையா என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். இந்தத் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் என்னும் பிராமணர் இவ்வாறு உரை எழுதுகிறார். “ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்து அந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் காட்டினார் என்று கூறுவர் என்றவாறு. ஈண்டு `என்ப’ என்றது முதனூலாசிரியரையன்று, வடநூலோரைக் கருதியது.” பிற்காலத்தில் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகிற நச்சினார்க்கினியர் ஆகிய பிராமணர், இவ்வாறு `ஐயர்’ என்பதற்கு இருடிகள் என்று பொருள் எழுதினார். அதாவது ஆரிய முனிவர் என்று கூறினார். இனி, மு. இராகவையங்கார் அவர்கள் ஐயர் என்பதற்கு ஆரியர் அதாவது ஆரியப்பிராமணர் என்று பொருள் எழுதியுள்ளார். மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு இவர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார். “ஆரியராகிய அந்தணர் அரசர் வணிகர் மூவர்க்கும் இருடிகள் ஒருகாலத்தே விதித்துப் போந்த சடங்கொடு கூடிய கற்பு முறையைத் தம் புராதன முறையொன்றில் நின்றொழுகிவந்த தமிழ் நாட்டார்க்கும் ஐயர் விதிக்கும்படி நேர்ந்த காலமுமுண்டென்றும், அங்ஙனம் விதிக்க நேர்ந்ததன் காரணம் - பொய்வழு முதலிய குற்றங்களின்றி நடைபெற்று வந்த புராதன ஒழுக்கமாகிய தமிழர் மணத்தில், பிற்காலத்தே அவை புகுந்து அதன் பழஞ்சிறப்பைக் கெடுத்தமையால் அந்த மணம் ஒழுங்காக நிகழ்தற்பொருட்டேயாம் என்றும் ஆசிரியர் கருதினாராதல் மேற் சூத்திரங்களால் உய்த்துணரப்படும்..... முன்னியல்களிற் களவுக் கூட்டத்துக்குரியர் என்று கூறப்பட்ட தமிழர்க்கு ஆரியரது கரண விதியைக் கூறியதன் காரணமென்னை? என்ற ஆசங்கையை நீக்குதற்கே இச் சூத்திரங்கள் கற்பியலின் தொடக்கத்தே ஆசிரியராற் கூறப்பட்டன என்று உணர்க.”1 இனி, பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதுவதைப் பார்ப்போம். `அது (கற்பு முறை) ஆரியர்களால் ஆரியர் அல்லாதவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது’ என்று எழுதுகிறார்2. மேலும், இவர் தாம் எழுதிய தொல்காப்பிய ஆங்கில உரையில் இவ்வாறு எழுதுகிறார். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. “காதலர் தவறாக நடக்கத் தொடங்கிய பிறகும் பெண்கள் தகுதியற்றவர் என்று கருதப்பட்ட பிறகும் ஆரியரால் கரணம் ஏற்பட்டது என்பர்”. “குறிப்பு: 1. ஐயர் என்னும் சொல் ஆரியர் என்னும் சொல்லின் தற்பவமாகும். ஆரியர் என்னுஞ் சொல் பொதுவாகப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியரைக் குறிக்குமானாலும் இச்சொல் பிராமணரையே குறிக்கும். ஏனென்றால், வட இந்தியாவிலிருந்து பிராமணர் மட்டுந்தான் தெற்கே வந்தனர் என்று கூறப்படுகின்றனர்”. They say that Karanam was introduced by Aryas after the lovers began to páove false and ladies were considered unworthy. “Note; Aiyer is the tadbbava of Arya. Though Arya generally refers ot Brahman Kshatriya and Vaisiya, yet is may refer here only to Brahmin since Brahman alone is said to have gone south from north India.”3 தமிழ் நாட்டிலே இருந்துவரும் தெலுங்கராகிய சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி (தமக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிக்கொண்டே தமிழ் இலக்கியக் காலங்களைப் பற்றித் தவறாக எழுதிக்கொண்டிருப்பவர்) இந்த “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதற்குத் தமது கருத்தையும் எழுதியுள்ளார். “தமிழ் நாட்டிலே திருமணத்தை மதச்சடங்காக நிறுவினவர் ஆரியர் என்று தொல்காப்பியம் திட்ட வட்டமாகச் சொல்லுகிறது” என்று இவர் உண்மையைக் கண்டவர் போல எழுதிவிட்டார். மேலும் எட்டு வகையான திருமணம் ஆரியருடையதென்றும் அதனைத் தொல்காப்பியம் கூறுகிறதென்றும் எழுதுகிறார்.4 இவ்வாறு நச்சினார்க்கினியரும், மு. இராகவையங்காரும், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் ஆகிய பார்ப்பனர்கள் ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று முன்பின் ஆராயாமலும் அச்சமில்லாமல் எழுதிவிட்டார்கள். ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் உண்டா? ஐயர் என்னும் சொல் பார்ப்பனருக்கு சாதிப் பெயராக எக்காலத்தில் ஏற்பட்டது? சங்க காலத்தில் இச்சொல் எந்தப் பொருளில் வழங்கப்பட்டது? இந்தப் பார்ப்பனர்கள் இந்தச் சூத்திரத்திற்கு எழுதிய பொருள் செம்பொருள்தானா? இது ஏற்கத் தகுந்ததுதானா? இவற்றை இங்கு ஆராய்ந்து உண்மை காண்போம். ஐயர் என்னும் சொல் தமிழ் நாட்டில் பிராமணருக்குச் சாதிப் பெயரைச் சுட்டுஞ் சொல்லாக இப்போது வழங்கப்படுகிறது. இச்சொல் பிராமணருக்குச் சார்த்தி வழங்குவது மிகச் சமீப காலத்து வழக்கம். விஜயநகர அரசர் காலந்தொடங்கி (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி இச்சொல் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஐயர் என்னும் சொல் பிராமணரைச் சார்த்தி வழங்கப்படவில்லை. பழைய கல்வெட்டெழுத்துச் சாசனங்களிலும் பிராமணருக்கு ஐயர் என்னும் பெயர் கூறப்படவில்லை. சங்க காலத்திலும் ஐயர் என்னும் சொல் பிராமணருக்கு வழங்கவில்லை. ஐ, ஐயன், ஐயர் என்னும் சொற்கள் சங்க இலக்கியங்களில், அண்ணன், தகப்பன், பெரியவன் என்னும் பொருளில் பொதுவாகவும், அரசன் அரசர் குலத்தைச் சார்ந்தவன் என்னும் பொருளில் சிறப்பாகவும் வழங்கி வந்துள்ளன. ஐய, அய என்னும் சொல் தமிழ், சிங்களம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளிலும் மாகதி (பாலி) அர்த்த மாகதி முதலிய பிராகிருத (பாகத) மொழிகளிலும் வழங்கப்பட்ட பழைய சொல். இச்சொல் பிற்காலத்தில், சமஸ்கிருத மொழியில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆர்ய என்று வழங்கப்பட்டது. சமஸ்கிருதத்திலும் ஆர்ய (ஐய) என்னும் சொல், அரசர், உயர் நிலையில் உள்ளவர் முதலியவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஐயர், ஐயங்கார் முதலிய சொற்கள் மிகமிகப் பிற்காலத்திலே தான் பிராமண சாதியைக் குறிக்கும் சொல்லாகத் தமிழ் நாட்டில் வழங்கப்பட்டன. ஐயர் என்னும் சொல்லுக்கு இக்காலத்துப் பொருள் வேறு, முற்காலத்துப் பொருள் வேறு. பழங்காலத்தில் வழங்கிய ஐயர் என்னும் சொல்லுக்கு இக்காலத்துப் பொருளையும், பிற்காலத்தில் வழங்கும் ஐயர் என்னும் சொல்லுக்கு முற்காலத்துப் பொருளையும் மாற்றி வழங்குவது அறியாமையாகும், தவறும் ஆகும். அவ்வாறு செய்வது, மொழியின் வரலாறு அறியாதவரின் பிழைபட்ட செயலாகும். மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்படுகிற ஐயர் என்னும் சொல்லுக்கு, மிகப்பிற்காலத்துப் பொருளாகிய பிராமணர் என்னும் பொருளைப் பொருத்திப்பொருள் கூறுவது, வரலாறு அறியாதவரின் தவறான செயலாகும். ஐயர்என்னும் சொல் சிறப்பாக அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர் களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் எனக்கூறினேன். உதாரணமாக “ஐயன் ஆரிதன்” என்பதாகும். கடைச்சங்க காலத்துக்குப் பிற்காலத் திலே, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை எழுதியவர் ஐயன் ஆரிதனார். இவர் சேர அரசர் மரபைச் சேர்ந்தவர். அரசமரபைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதற்காகவே `ஐயன்’ என்னும் அடை மொழியுடன் இவர் கூறப்படுகிறார். ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமான் ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப் பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே என்னும் சிறப்புப் பாயிரத்தினால் இதனை அறியலாம். ஸ்தாணுரவி என்னும் சேர அரசன் வழங்கிய கோட்டயம் செப்பேட்டுச் சாசனத்திலே, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் “ஐயன் அடிகள்” என்று கூறப்படுகின்றார்.5 ஐயடிகள் காடவர்கோன் என்பவர் சைவ நாயன்மார்களில் ஒருவர். காடவர்கோன் என்பது இவர் பல்லவ அரசர் குலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கிறது. அடிகள் என்பது உயர்வுச் சிறப்பைக் காட்டுகிறது. ஐ என்பது ஐயன் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, ஐயடிகள் காடவர்கோன், அரசபரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிகின்றது. இதனால் அரச குலத்தைச்சேர்ந்தவர்களுக்கு ஐயன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியது அறியலாம். தமிழ்நாட்டுக்கு அருகிலிருக்கும் சிங்களத் தீவாகிய இலங்கைத் தீவிலேயும் பண்டைக் காலத்தில் அரசாண்ட அரச குலத்தவர் அய (ஐயன்) என்றுபெயர் வழங்கப்பட்டனர். இலங்கையில் கலனிப் பகுதியை அரசாண்ட மன்னனின் தம்பி உத்தியன் என்பவன் ஐயன் என்று கூறப்படுகிறான். (மகாவம்சம் XXII.VI 5)6 இலங்கையிலே ராஜகல என்றும் ராஸஹெல என்றும் கூறப்படு கிற இடத்திலே மலைக்குகைகளிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலே பௌத்த பிக்குகள் இருந்தார்கள். அந்தப் பிக்குகளுக்குச் சத்தாதிஸ்ஸன் என்னும் அரசனுடைய பிள்ளைகள் இருவர் தானம் வழங்கினார்கள். அந்தச் செய்தியை அவ்விடத்திலுள்ள சாசன எழுத்து கூறுகிறது. இந்தச் சாசனத்திலே, தானம் அளித்த அரச குமாரர்கள் “மஹா அய” என்றும் “திஸ்ஸ அய” என்றும் கூறப்படுகின்றனர். மஹா அய என்பது (பெரிய ஐயன்) மூத்த அரச குமாரன் என்றும் பொருள் உள்ளது. (இந்த மஹா அய என்பவன் முடி சூடிய பிறகு லாஞ்ச திஸ்ஸன் என்னும் பெயருடன் (கி.மு. 119 முதல் 110 வரையில் அரசாண்டான்). திஸ்ஸ அய என்பது திஸ்ஸ ஐயன் (திஸ்ஸன் என்னும் பெயருள்ள அரச குமாரன்) என்னும் பொருள் உள்ளது. இலங்கையரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அய (ஐயன்) என்று சிறப்புப் பெயர் வழங்கப்பட்டதற்கு இன்னும் பல சான்றுகள் சாசனங்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் காட்டலாம். விரிவஞ்சி நிறுத்துகிறேன். இதனால், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐயன், அய என்று கூறப்பட்டனர் என்பதை அறிகிறோம். எனவே, தொல்காப்பியச் சூத்திரத்தில் கூறப்பட்ட ஐயர் என்னும் சொல்லுக்குப் பொருள் அரசர் என்பது தெளிவாக விளங்குகிறது. சமுதாயத்திலே ஒரு புதிய வழக்கத்தை ஏற்படுத்துவது அரசர்களாலும், அவர் ஆணைபெற்ற அவர் மரபினராலும் தான் இயலும். எனவே, `ஐயர் யாத்தனர் கரணம்’ என்பதற்கு அரசர்கள் திருமணச் சடங்கை ஏற்படுத்தினார்கள் என்பது பொருள். இதுவே சரியான நேரான செம்பொருளாகும். இளம்பூரண அடிகள் என்னும் பழைய உரையாசிரியரும் இக்கருத்தையே கூறுகிறார். (இவர் பிராமணர் அல்லர்) அவர் கூறும் உரை வருமாறு:- பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்றது கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று. “பொய் கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு”. “இரண்டுந் தோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின் முதலூழியிற் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றினதென்பதூஉம் கூறியவாராயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவையிரண்டும் நிகழாவாமாதலாற் கரணம் வேண்டுவ தாயிற்று”. இதில் இளம்பூரண அடிகள் ஐயர் என்பதற்கு முனைவர் என்று பொருள் கூறுவது காண்க. முனைவர் என்பது முதன்மையானவர், மக்கள் சமூகத்தின் தலைவர் என்று பொருள் உள்ள சொல்லாகும். எனவே, `ஐயர் யாத்தனர் கரணம்’ என்பதற்கு, அரசர்கள் கரணத்தை (திருமணச் சடங்கை) ஏற்படுத்தினார்கள் என்பது பொருள். எனவே, ஆரியப் பார்ப்பனர் திருமண முறையை அமைத்தார்கள் என்று இக்காலத்துப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள உரை, போலியுரை என்று விடுக. தமிழ்மொழி குறைந்தது மூவாயிரம் ஆண்டு பழமையுடைய மிகப்பழைய மொழி. ஆகவே, இம்மொழிச் சொற்கள் பல, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருளில் வழங்கப்பட்டன. அந்த மரபை அறிந்து பொருள்கொள்ள வேண்டுமே யல்லாமல், மரபு அறியாமல் கண்டதை எழுதிக் குழப்புவது அறிவுடைமையாகாது. ஆராய்ச்சி ஆகாது. தொல்காப்பியத்தில் கூறப்படுகிற ஐயர் என்னும் பழைய சொல்லுக்குப் பார்ப்பனர், ரிஷிகள் என்னும் பிற்காலத்துப் பொருளைப் பொருத்திக் கூறிப் பார்ப்பனர் தமிழ் நாட்டில் திருமண முறையை ஏற்படுத்தினார்கள் என்று சரித்திரத்துக்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லி அதனால் தொல்காப்பியம் ஆரியர் தமிழகத்துக்கு வந்த பிறகு எழுதப்பட்ட நூல் என்று இக்காலத்துப் பார்ப்பனர் சிலர் எழுதியிருப்பது பிழைப்பட்ட பொய்க்கூற்று என்பது இதனால் தெளிவுறுத்தப்பட்டது. ஐயர் என்பது அரசர் என்னும் பொருளுள்ள பழைய சொல் என்பதும், தமிழ்ச் சமூகத்தில் பொய்யும் வழுவும் தோன்றியபோது, தமிழ்நாட்டு ஐயர் (அரசர்) கரண (திருமண) முறையை ஏற்படுத்தினார்கள் என்பதும் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டன. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. மு. இராக வையங்கார். 2. “It (Karpu System) was introduced by Aryas to those other than they” An Enquiry into the relationship of Sanskrit and Tamil by P.S. Subramanya Sastri, University of Travancore. 1946. 3. P. 92. Tolkappiyam porul Athikaramï by P.S. Subramaniya Sastri, Kuppusami Sastri Research Institute. Mylapore, Madras 1949. 4. P. 124. A History of South India, K.A. Nilakanta Sastri. Second Edition 1958, Oxford University Press. 5. Travancore Archaeological Series. Vol. II P. 61 6. (P. 82, Epigraphia zeylanica Vol. III) 2. வேந்தனும் வருணனும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் என்று தொல்காப்பியம் (பொருள். அகத்திணையியல், நூற்பா. 5) கூறுகிறது. இதில் கூறப்பட்ட வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் எவை? அத்தெய்வங்களின் வரலாறு என்ன? சிலர் கருதுவது போல அத்தெய்வங்கள் ஆரியத் தெய்வங்கள்தானா? என்பதை ஆராய்வோம். தீம்புனல் உலகமாகிய மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றும், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் இந்த இரண்டு தெய்வங்களும் தமிழர்களால் வணங்கப்பட்டனர் என்பது தெரிகின்றது. பிற்காலத்திலே இந்த இரண்டு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின. வேந்தன் - இந்திரன் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள், மிகமிகப் பிற்காலத்தில் இருந்தவர்கள். இவ்வுரையாசிரியர்களில் இளம்பூரணர் முற்பட்டவர். நச்சினார்க்கினியார் முதலிய ஏனையோர் பின்னும் பிற்காலத்தவர். பிற்காலத்து உரையாசிரியர்களாகிய இவர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் எழுதி யிருக்கிறார்கள். எனவே, இவர்கள் தொல்காப்பிய வேந்தனை, இந்திரன் என்று கூறுகின்றனர். அதாவது திராவிடருடைய வேந்தன் என்னும் தெய்வம், ஆரியருடைய இந்திரன் என்று கூறப்படுகிறான். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள கூறினார்கள். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (அசோக சக்கரவர்த்தி காலத்தில்) தொடங்கிற்று என்று கருதலாம். ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்படாத மிகப் பழைய காலத்தில், திராவிடராகிய தமிழ; வணங்கிய மருதநிலக் கடவுளாகிய வேந்தன் என்னும் தெய்வம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பின் காரணமாக ஆரியரின் இந்திரனோடு இணைக்கப்பட்டு, இந்திரன் என்னும் பெயரினால் வழங்கப்பட்டது. பிறகு, பையப் பையப் பழைய வேந்தன் என்னுந் தெய்வம் மறக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய இந்திரன் வழிபடப் பட்டான். சங்க காலத்துக்குப் பிறகு, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்திரனும் மறக்கப்பட்டு மறைந்து போனான். வேந்தன் என்னுஞ் சொல், வேந்து, வேந்தமை என்னும் சொல்லடியாகத் தோன்றி அரசர்களின் தெய்வம் என்னும் பொருளில் வழிபடப்பட்டது என்று கருதலாம். ஆளுகை சம்பந்தப்பட்ட இத்தெய்வம் அரசர்களின் தெய்வமாக இருந்தது போலும். தீம்புனல் உலகமாகிய மருத நிலத்திலே அதாவது ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் மக்களுடைய நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சரித்திரங் கூறுகிறது. ஏனென்றால், ஆற்றங்கரையும் ஏரிக்கரையுமாகிய நீர் வளமுள்ள மருதநிலத்திலேதான் உணவுப் பொருள்கள் பயிராயின. உணவு முட்டுப்பாடின்றிக் கிடைத்த இவ்விடங்களிலே மக்களின் நாகரிகம் தோன்றி வளர்ந்ததைச் சரித்திரக்காரர்கள் எல்லோருங் கூறுகிறார்கள். இது உலகத்திலே எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சி. இந்த முறைப்படித்தான் தமிழ் நாட்டிலும் மருத நிலங்களில் உணவுப் பொருள்கள் அதிகமாக விளைந்தன. உணவு உற்பத்தி இருந்தாலும் அமைதியும் ஒழுங்கும் மக்களிடத்தில் நிலைபெற்றால்தான் மனித சமூகம் நாகரிகமாக வாழ முடியும். மக்கள் சமூகத்திலே அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினவர், ஆதி காலத்தில் பெரும்பாலும் அரசர் தான். ஆகவே தமிழ் நாட்டு அரசர்கள் வேந்தன்மையை (ஆட்சி முறையை) நடத்தினார்கள். வேந்தன்மைக்குத் தெய்வம் வேந்தன். இந்த வேந்தனாகிய தெய்வத்தை தான் பழந்தமிழகத்தின் மருத நிலமக்கள் தெய்வமாக வணங்கினார்கள். அதனால் தான் தொல்காப்பியர் மக்களிடத்தில் இருந்த இந்தத் தெய்வ வழிபாட்டைத் தம்முடைய தொல்காப்பியத்தில் கூறினார். தொல்காப்பியர் காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலத்தில், பல நூற்றாண்டுக்குப் பிறகு, திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பு (இணைப்பு) ஏற்பட்டது. இந்தக் கலாசாரக் கலப்பு முக்கியமாகத் தெய்வ வழிபாட்டிலே ஏற்பட்டது. திராவிட தெய்வ வழிபாட்டை ஆரியரும் ஆரிய தெய்வ வழிபாட்டைத் திராவிடரும் பையப் பைய ஏற்றுக் கொண்டனர். திராவிடருடைய தெய்வங்களாகிய சிவன், மாயோன் முதலிய தெய்வங்களுடன் ஆரியருடைய உருத்திரனும் விஷ்ணுவும் இணைக்கப்பட்டது போல, வேந்தன் என்னும் திராவிடத் தெய்வத்துடன் இந்திரன் என்னும் ஆரியத் தெய்வம் இணைக்கப்பட்டது. இவ்விதத் திராவிட - ஆரிய கலாசாரக் கலப்பு ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியனும் அவன் பேரனான அசோக சக்கரவர்த்தியும் அரசாண்ட காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும். இவ்வாறு வேந்தன் என்னும் தெய்வத்துடன் இந்திரன் என்னும் தெய்வம் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டது. பின்னர் சில நூற்றாண்டுக்குப் பிறகு இரு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின. வேந்தன் தெய்வம் இந்திரனாக்கப்பட்டது மூன்று ஆரிய மதத்தினரின் தொடர்பினால் என்பது தெரிகிறது. பௌத்தர் ஜைனர் வைதீகர் ஆகிய மூன்று ஆரிய மதத்தாரின் தொடர்பினால் தமிழரின் வேந்தன், இந்திரனாக்கப்பட்டான். பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களில் இந்திரனுக்கு முதன்மையான இடம் உண்டு. அது போலவே வேதத்தை முதன்மையாகக் கொண்ட வைதிக மதத்தாருக்கும் இந்திர வழிபாடு உண்டு. ஆனால், வைதிக மதத்தார் இந்திரனை யாகஞ் செய்து வழிபட்டனர். பௌத்த ஜைன மதத்தார் தங்களுடைய இந்திரனை யாகத்தினால் வழிபடவில்லை. மூன்று ஆரிய மதத்தாருக்கும் உடன்பாடான இந்திரன், தமிழரின் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுத் தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகஞ் செய்து பூசிக்கப் படவில்லைதிருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பௌத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம்கொண்டு அந்நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பௌத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ் நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன் வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது. பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தருமத்தையும் உலகத்தில் நிலைநிறுத்துகிறான் என்பது பௌத்தர் கொள்கை. மணிமேகலை முதலிய சிறு தெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்திப் பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்தமத இந்திரனாகக் கருதப்பட்டான் என்பதும் தெரிகின்றன. பிற்காலத்தில் இந்திரனும் வேந்தனும் ஒரே தெய்வமாகக் கற்பிக்கப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரிகிறது. திராவிட வருணனும் ஆரிய வருணனும் இனி வருணனைப்பற்றி யாராய்வோம். வருணன், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமக்கள் வணங்கிய தெய்வம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியங் கூறுகிற வருணன், இக்காலத்தில் பலரும் தவறாகக் கருதுவதுபோல, வைதீக ஆரியர் வழிபட்ட வருணன் அல்லன், தொல்காப்பியம் கூறுகிற வருணனை வைதீக மதத்தாரின் வேதத்தில் கூறப்படுகிற வருணன் என்று கருதுவது பெரும் பிழையாகும். தமிழர் வணங்கிய வருணன் ஆரியக் கடவுள் அல்லன். ஆரிய வேதத்தில் கூறப்படுகிற வருணன் திராவிடக் கடவுளாகிய வருணனே. ஆய்த்தோய்ந்து பாராமல் மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு வருணன் ஆரியர் தெய்வம் என்று தோன்றினாலும் ஆதிகாலத்தில் அது ஆரிய தெய்வம் அன்று. ஆரியர் அயல் நாட்டிலிருந்து இந்தியா தேசமாகிய பாரத தேசத்தில் புகுந்த போது, வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிடருடன் கலக்க வேண்டியவரானார்கள். அக்காலத்து வடநாட்டுத் திராவிடருக்கும் புதிதாக வந்த வேதகால ஆரியருக்கும் அந்தத் தொடக்கக் காலத்திலே கலாசாரக் கலப்பு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட கலப்பினாலே வடநாட்டில்வாழ்ந்திருந்த திராவிடரின் தெய்வமாகிய வருணனை ஆரியர் தங்களுடைய தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக்கொண்டு அத்தெய்வத்தைப் பற்றி இருக்கு வேதத்தில் பாடி வைத்தார்கள். அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்துவந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும் அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர். வருணன் முக்கியமாகக் கடல் தெய்வமாகக் கருதப்பட்டான். திராவிடர் அக்காலத்தில் பெரிய கடல் வாணிகராக இருந்தனர். அவர்கள் வருணனை முக்கியமாக வணங்கினார்கள். வேதகாலத்து ஆரியர் வட இந்தியாவில் நுழைந்தபோது அவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட கலாசாரத் தொடர்பினால், ஆரியர் திராவிட வருணனைத் தம் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால், வருணன் வணக்கம் ஆதியில் ஆரியர்களுக்குரியதன்று. இவை எல்லாம் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிற செய்திகள். எனவே, திராவிடராகிய தமிழர் ஆதிகாலத்தில் வருணனைக் கடல் தெய்வமாக வழிபட்டது வியப்பன்று. தமிழர் வணங்கிய திராவிட இனத்துக் கடவுளாகிய வருணனைத்தான் தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் கூறினார். மேலும், கடற் கரையில் வாழ்ந்த நெய்தல் நிலத்துத் தமிழர், வருணனை வணங்கியதாகக் கூறுகிறார். அந்த வருண வணக்கமும் திராவிட முறைப்படி செய்யப்பட்டது. சினைச்சுறவின் கோடு நட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான். என்று பட்டினப்பாலையில் (அடி. 86-87) கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியரும் இதை நன்கு விளக்கிக் கூறுகிறார்: `இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇக் சுறவுக்கோட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்றார்’ (தொல், பொருள் - அகத்திணை - 5ஆம் சூத்திர உரை) ஒருவகைச் சுறா மீனின் வாய்ப்புறத்தில் நீண்ட கோடு (கொம்பு) உண்டு. அது நான்கு அடி நீளம் வரையில் நீண்டு வளர்வதும் உண்டு. தட்டையாக நீண்டு வளர்ந்துள்ள சுறாமீன் கோட்டில் இருபுறங்களிலும் முள்ளுகள் உண்டு. இந்தச் சுறாமீன் கோட்டை நட்டுத் தமிழ்நாட்டு நெய்தல் நிலமக்கள் வருணனை வணங்கினார்கள். ஆரியர் தங்கள் வருணனை இவ்விதமாக வணங்கவில்லை. வருணனை முதலில் போற்றிப் பாடிய ஆரியர் பிறகு அத்தெய்வத்தை இகழ்ந்து பாடியதாகவும் தெரிகிறது. தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகரும் வருணனை வணங்கினார்கள். தமிழ்நாட்டு வாணிகன் ஒருவன் இலங்கைத் தீவின் தென்கோடியில் இருந்த தேவநுவர என்னும் ஊரில் (காலி என்னும் ஊரில்) கடல் தெய்வமாகிய வருணனுக்கு ஒரு கோவில் கட்டினான் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. எனவே, தொல்காப்பியம் கூறுகிற தமிழரின் வருணன், ஆரியர் வணங்கிய வருணனைக் கடனாகப் பெற்ற தெய்வம் அன்று. ஆதிகாலத்தில் இருந்து திராவிட இனத்தார் வழிபட்டு வந்த வருணனைத் தமிழர் வணங்கினார்கள். அத்தெய்வத்தைத்தான் தொல்காப்பியர் கூறினார். இவற்றையெல்லாம் ஆராயாமல், ஆரிய வேதத்தில் வருணன் கூறப்படுகிறபடியால், அந்த வருணனைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வணங்கினார்கள் என்று கூறுவதும், வருணனைக் கூறுகிற தொல்காப்பியம், ஆரிய திராவிடர் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று கூறுவதும் ஆழ்ந்து பாராமல் மேற் போக்காகக் கூறுகிற போலி யாராய்ச்சியாகும். எனவே, இந்திரன் வருணன் என்னும் தெய்வங்களைக் கூறுகிற தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்க தன்று. வருணன் வணக்கம் தமிழ்நாட்டில் மறைந்து போனதற்குக் காரணம் பௌத்த மதம். பௌத்த மதத்தின் கடற் காவல் தெய்வமாக மணிமேகலா தெய்வம் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலைக் காவியம் முதலிய தமிழ் நூல்களும் புத்த ஜாதகம் முதலிய பௌத்தமத நூல்களும் மணிமேகலா தெய்வத்தைக் கூறுகின்றன. பௌத்த மதம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது, தமிழரின் கடல் தெய்வமாகிய வருணன் இடத்தை மணிமேகலா தெய்வம் பிடித்துக் கொண்டது ஆகவே, வருணன் பையப்பைய நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து போனான். பின்னர் மணிமேகலா தெய்வமும் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று. இதுகாறுங் கூறியவற்றால், இந்திரன் வருணன் வழிபாட்டைக் கூறுகிற தொல்காப்பியம் ஆரிய - திராவிடர் கலாச்சாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று சிலர் தவறாகக் கூறுவது பொருந்தாது, ஏற்கத்தக்கதன்று என்பது விளக்கப்பட்டது. மேற்பார்வைக்கு மெய்போலத் தோன்றுகிற இப்பொய்க் கூற்றைத் தவறான, உண்மைக்கு மாறுபட்ட பொய்ச் செய்தி என விலக்கித் தள்ளுக. 3. தொல்காப்பியர்காலம்: அர்த்த சாஸ்திரம்* தொல்காப்பியச் செய்யுளியலின் இறுதியிலே முப்பத்திரண்டு தந்திர உத்திகள் கூறப்படுகின்றன. `ஒத்தகாட்சி உத்திவகை விரிப்பின்’ எனத் தொடங்கும் நூற்பாவிலே அவ்வுத்திகள் கூறப்படுகின்றன. இந்த முப்பத்திரண்டு உத்திகள், வடமொழியிலே கௌடல்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் இறுதியிலும் கூறப்படுகின்றன. சில ஆராய்ச்சிக் காரர்கள் இதைச் சுட்டிக்காட்டி, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து முப்பத்திரண்டு உத்திகளையும் தொல்காப்பியர் எடுத்துக்கொண்டார் என்று கூறித் தொல்காப்பியம் அர்த்த சாஸ்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர். வித்தியாரத்தினம் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, தாம் எழுதிய `சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுரை’ என்னும் ஆங்கில நூலிலே இதைக் கூறுகிறார்: `தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்படுகிற தந்திர உத்திகள் பல, கௌடல்யருடைய அர்த்த சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளன என்று அவர் எழுதியுள்ளார்.1 இந்த உத்திகளை எந்த நூலிலிருந்து எந்த நூல் எடுத்துக்கொண்டது என்பதை இவர் சொல்லவில்லை. ஆனால், இவர் எழுதியதின் முன்பின் தொடர்பை நோக்கும்போது, அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் எடுத்துக்கொண்டது என்னும் கருத்துத் தொனிக்கும்படி எழுதியுள்ளார். திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையும், தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று தாம் வழக்கம்போல் கூறுகிற ஆதாரமற்ற ஆதாரங்களில் இதையும் ஒன்றாகக் கூறியுள்ளார். “கௌடல்யரின் அர்த்த சாஸ்திரம் தொல்காப்பியத்துக்கு விஷயம் கொடுத்திருக்கிறது. அதாவது, இரண்டு நூல்களின் இறுதியிலும் கூறப்படுகிற முப்பத்திரண்டு உத்திகள், ஆனால், கௌடலியரின் காலம் விவாதத்துக்கு உரியதாகை யால் இதைப்பற்றிக் கூறாமல் விட்டுவிடலாம்.” என்று அவர் எழுதுகிறார்.2 தாமே சந்தேகப்படுகிற ஒரு சான்றை இவர் ஏன் கூறவேண்டும்? அர்த்த சாத்திரத்தின் காலம் விவாதத்துக்குரியது, ஆகவே அந்தச் சான்றைக் காட்டவேண்டுவதில்லை என்று கூறுகிறவர், அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் 32 உத்திகளை எடுத்துக் கொண்டது என்று ஏன் கூறவேண்டும்? இது இவருடைய தாழ்வுமனப் பான்மையைக் காட்டுகிற தன்றோ? சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தமிழில் நூல் எழுத விஷயம் எடுக்கவேண்டும் என்னும் சமஸ்கிருத மூடபக்தி இவரை இப்படியெல்லாம் எழுதச் செய்தது போலும். இவ்வாறு சிலர் கூறுவதுபோல, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்பதை ஆராய்வோம். அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடல்யர், அசோக சக்கரவர்த்தியின் பாட்டானாகிய சந்திரகுப்த மௌரியன் காலத்தில் இருந்தவர் என்றும், அவ்வரசனுக்கு அமைச்சராக இருந்தவர் என்றுங் கூறப்படுகிறார். அவர் எழுதிய அர்த்த சாத்திரத்தில், அவருக்குப் பின்னால் வந்த சில ஆசிரியர்கள் பல விஷயங்களை அதில் சேர்த்து எழுதிவைத்தனர் என்றுங் கூறப்படுகிறது. அதாவது, கௌடல்யர் தொடங்கி எழுதிவைத்த அர்த்த சாத்திரத்தில், அவர் எழுதாத பல விஷயங்களை அவருக்குப் பிற்காலத்தில் இருந்தவர்கள் அவ்வக்காலங்களில் புதிய புதிய கருத்துக்களையும் எழுதி அதனுடன் சேர்த்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. எனவே, கௌடல்யரின் அர்த்த சாத்திரத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டு, கௌடல்யர் எழுதிய கருத்து மட்டும் இல்லாமல் வேறு பலருடைய கருத்துக்களும் பிற்காலங்களில் நுழைக்கப்பட்டன என்று தெரிகிறது. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் விஷ்ணு குப்தர் என்னும் பிராமணர் என்றுங் கூறப்படுகிறது. இவர் தென்னாட்டுப் பிராமணர் என்றுங் கூறப்படுகிறார். தென்னாட்டுப் பிராமணராகிய விஷ்ணுகுப்தர் தொல்காப்பியத்தை அறிந்தவராகவும் இருக்கலாம். அவர், அர்த்த சாஸ்திரத்தில் சில புதிய விஷயங்களை இடைச் செருகலாகப் புகுத்திச் சேர்த்ததில் தொல்காப்பியரின் 32 உத்திகளையும் அர்த்த சாத்திரத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, தொல்காப்பியத்தை அறிந்த வேறுயாரோ அந்த உத்திகளை அர்த்த சாத்திரத்தில் புகுத்தி எழுதியிருக்கலாம். இவ்வாறு இடைச் செருகல்களைக் கொண்டிருக்கிற அர்த்த சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் 32 உத்திகளை எடுத்தார் என்று கூறுவதும், ஆகவே, தொல்காப்பியம் அர்த்த சாத்திரத்துக்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவதும் ஆதாரமற்ற, ஏற்கக் கூடாத சந்தேகத்துக்கு இடமான சான்று அல்லவா? அர்த்த சாத்திரத்தின் காலத்தைப் பற்றி உறுதியாகக் கூறமுடியவில்லை. இந்திய ஆராய்ச்சிக்காரர்கள் சிலர் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்கிறார்கள். மேல்நாட்டு ஆராய்ச்சிக்காரர்கள் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்கிறார்கள். சம்ஸ்கிருத இலக்கியச் சரித்திரம் எழுதிய கீத். (A.B. Keith) என்பவரும், ஜர்மனி பாஷையில் இந்திய இலக்கிய வரலாறு எழுதிய வின்டர்னிட்ஸ் (Winternitz) என்பவரும் அர்த்த சாத்திரம் கிருஸ்துவுக்குப் பிறகு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். இவ்வாறு வேறுபட்ட காலங்கள் அதற்குக் கூறப்படுகின்றன. சிலர் கருதுவது போல அர்த்த சாத்திரம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொண்டாலும் அதில் இடையிடையே அந்தந்தக் காலத்தில் இடைச் செருகல்கள் புகுத்தப்பட்டிருப்பதால், இதை ஒரு ஆதாரமாகக் கொள்வது கூடாது. பாண்டிய நாட்டு முத்துக் களையும் சேரநாட்டு மிளகையும் முத்தையும் மதுரைச் சேலைகளையும் கூறுகிற அர்த்த சாத்திரம், தொல்காப்பியரின் 32 உத்திகளையும் கூறியதில் என்ன ஆச்சரியம் உண்டு? தமிழ்நாட்டுப் பரதநாட்டியக் கலை வடமொழியில் பரத சாத்திரத்தில் இடம்பெற்றது போலவும், தமிழ் இலக்கியக் கருத்துக்களை பல வடமொழி இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பது போலவும், தொல்காப்பியத்தின் 32 உத்திகளும் அர்த்த சாத்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இங்கிருந்து அங்குச் சென்றது என்று கூறாமல் அங்கிருந்து இங்கு வந்தது என்று கூறுவதுதான் தமிழ்நாட்டுப் பிராமணருக்கும் அவரைப் பின்பற்றும் வையாபுரியார்களுக்கும் பரம்பரை வழக்கமாய்ப் போய்விட்டது. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. எனவே இதை ஆதாரமற்ற செய்தி என விடுக. அடிக்குறிப்புகள் 1. P. 56. An Enquiry to the relationship of sanskrit and Tamil. P. S. Subramanya Sastri, University of Trarvancore, 1946. 2. P.14,History of Tamil Language and Literature, Prof S. Vaiyapuri pillai, 1956. 4. தொல்காப்பிய ஆய்வுரை - அறிவர் தொல்காப்பியத்தில் அறிவர் என்போர் கூறப்படுகின்றனர். அறிவர் என்பவர் யார்? அவர்கள் இல்வாழ்வோரா, துறவியரா? அறிவர் என்பர் முழுதுணர்ந்தவர் என்று பொருள் கூறுகிறார் நச்சினார்க்கினியர். அதாவது இல்லற வாழ்க்கையைத் துறந்து தவம் செய்யும் முனிவர் என்று கூறுகிறார். இளம்பூரணர், அறிவர் என்பவர் இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவன் என்று பொருள் கூறுகிறார். “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனத் தொடங்கும் தொல்: பொருள் புறத்திணையில் 16ஆம் சூத்திரத்தில் அறிவன் கூறப்படுகிறான். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயம் என்று தொல்காப்பியர் அறிவனைக் கூறுகிறார்.“காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கமும்” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். அதாவது, முன் கூறியதுபோலவே, அறிவனைத் துறவி என்று கூறுகிறார். இளம்பூரண அடிகள் உரை இது: “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன்” இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றலாவெனில், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடத்துள். பனியும் வெயிலுங் கூதிரும் யாவும் துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய தனிவுற் றறிந்த கணிவன் முல்லை எனவும் ஓதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்று தலாவது `பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் `நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்: புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி. இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார். ஆகவே, நச்சினார்க்கினியர் கருத்துப்படி அறிவன் என்பவன் துறவுபூண்டு தவஞ்செய்து இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் அறியும் முழுதுணர்வுடையவன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. இளம்பூரணர் கருத்துப்படி, அறிவன் என்பவன் மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் வானத்தில் நிகழும் கோள்களின் நிலையினையும் அறிந்து பயன் கூறும் கணிவன் என்று கருதவேண்டியிருக்கிறது. மாறுபட்ட இவ்விரண்டு கருத்துகளில் எது உண்மை என்பதை ஆராய்வோம். வேறு சில தொல்காப்பியச் சூத்திரங்களும் அறிவரைக் கூறுகின்றன. அவை: சொல்லிய கிளவி அறிவர்க்கு முரிய (தொல். பொருள். கற்பியல் 13) இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொல். பொருள். கற்பியல் 14) (இதில், அவர் என்றது அறிவரை யுணர்த்திற்று) தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் விருந்தினர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. (தொல். பொருள். கற்பியல். 52) பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்த்தே. (தொல். பொருள். செய்யுள். 189) பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த வறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர் (தொல். பொருள். செய்யுள். 182) இச் சூத்திரங்களை நோக்கும்போது அறிவன், அறிவர் என்பவர் துறவிகளாகிய முனிவர் அல்லர் என்பதும், இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவர் என்பதும், கணவன் மனைவியருக்குள் ஊடல் முதலிய நிகழ்ந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி இல்லற நெறியில் நிறுத்தினவர் என்பதும் தெரிகின்றன. எனவே, அறிவர் என்பதற்கு நச்சினார்கினியர் கூறும் துறவிகளாகிய முனிவர் என்னும் பொருள் தவறு என்பதும் இளம்பூரண அடிகள் கூறுகிற கணிவர் என்பதே சரியான பொருள் என்பதும் தெரிகின்றன. அறிவர் முகூர்த்தம் கணித்துத் திருமண நாளைக் கூறினர் என்பதைக் கலித்தொகை (குறிஞ்சிக்கலி 39 ஆம் பாட்டு) கூறுகிறது. நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும் மாயப் புரணர்ச்சியு மெல்லா முடனீங்கச் சேயுவர் வெற்பனும் வந்தனன் என்பது அச்செய்யுட் பகுதி. இதில் மணமகன் சான்றவரையும் அறிவனையும் முன்னிறுத்தித் திருமணத்துக்கு வந்தான் என்று கூறப்படுகிறது. வந்த அறிவன் முகுர்த்த நாளை நன்கறிந்தவன் என்று கூறப்படுகிறபடியால், அறிவன் கணிவன் என்பதில் ஐயமில்லை. அகநானூறு 98 ஆம் செய்யுளில் அறிவர் கூறப்படுகிறார். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லு வாளாய்ச் சொல்லியது என்னும் துறையுடைய குறிஞ்சித்திணைச் செய்யுளில் இவர் கூறப்படுகிறார்: அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே. குறுந்தொகை 277 ஆம் செய்யுளிலும் அறிவர் கூறப்படுகிறார். ஆசில் தெருவின் ஆசில் வியன்கடை செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஓரிற் பிச்சை ஆர மாந்தி அற்சிரை வெய்ய வெப்பத் தெண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை எக்கால் வருவர் என்றி அக்கால் வருவரெங் காத லோரே. தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியதைக் கூறுகிறது இச்செய்யுள். கார்காலத்தின் இறுதியில் திரும்பி வருவதாகச் சொல்லித் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான் தலைமகன். அவன் சொன்ன கார்காலத்தின் இறுதியை அறிவதற்காகத் தோழி அறிவனைக் கண்டு கேட்கிறாள். இச்செய்யுளில் அறிவன் என்னும்சொல் ஆளப்படவில்லை. செய்யுள் அடிக் குறிப்பிலிருந்து அறிவன் என்பது தெரிகிறது. அறிவன் நன்கு மதிக்கப்பட்டவன் என்பதும் வீடுதோறும் பிச்சை ஏற்று உண்ணாமல் ஒரே வீட்டில் உணவு கொண்டான் (ஓரிற்பிச்சை ஆர மாந்தி) என்பதும், அவன் வைத்திருந்த சேமச்செப்பில் வெந்நீர் அருந்தினான் என்பதும் காலத்தைக் கணித்துக் கூறினான் என்பதும் அறியப்படுகின்றன. ஆனால் இவன் துறவியல்லன்; இல்லறத்தானே. பிற்காலத்து நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையில் அரசமுல்லை, அரசவாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை கூறப்படுவதுபோலவே கணிவன் முல்லை, அறிவன் வாகை கூறப்படுகின்றன. இதில் கணிவனும் அறிவனும் ஒருவரே என்பது தெரிகின்றது. (முல்லை என்பது இயல்பால் பெற்ற வென்றி; வாகை என்பது முயற்சியால் பெற்ற வென்றி என்பர்.) புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் படலம் ஓம்படையில் அறிவன் கூறப்படுகிறான். இன்னது செய்த லியல்பென விறைவன் முன்னின் றறிவன் மொழிதொடர்ந் தன்று. என்பது அச் செய்யுள். ஆகவே, இளம்பூரண உரையாசிரியர் கூறுவது போல, கணிவனும் அறிவனும் ஒருவரே என்பதும் அவர்கள் வான நூலை அறிந்து முகுர்த்தம் முதலிய காலங்களைக் கூறினார்கள் என்பதும் தெரிகின்றன. நச்சினார்க்கினியர் கூறுவதுபோன்று அறிவர் துறவு பூண்ட முனிவர் அல்லர். அறிவர் என்பவர் பிற்காலத்தில் கணிவர் என்று பெயர்பெற்றனர். பண்டைக் காலத்தில் தமிழ் நாடாக இருந்து இப்போது மலையாள மொழி பேசும் நாடாக மாறிப்போன மலையாள தேசத்தில் கணியர் (கணிவர்) இன்றும் இருக்கிறார்கள். பழைய தமிழ் நாட்டுச் சொல்லாட்சியையும் பழைய திராவிடப் பழக்கவழக்கங்கள் சிலவற்றையும் அழியாமல் பாதுகாத்து வருகிறது குடநாடாகிய துளு நாடு. திராவிட இனத்தைச் சேர்ந்தவராகிய துளுவர் சமூகத்திலே பழைய அறிவர் இன்றும் இருந்து வருகின்றனர். இப்போது அவர்கள் அறுவர் என்று பெயர் கூறப்படுகின்றனர். சங்ககாலத்தில் தமிழ்நாட்டிலே அறிவர் என்னும் பெயருடன் இருந்தவர்தான் இப்போது துளு நாட்டிலுள்ள அறுவர் என்பவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திராவிட இனத்தவராகிய துளுவருக்குத் திருமணம் செய்து வைக்கிற புரோகிதராகத் துளு நாட்டு `அறுவர்’ இன்றும் இருந்து வருகின்றனர். இதனாலும் தமிழ் நாட்டுக்கும் மற்றத் திராவிட நாட்டுக்கும் பண்டைக்காலத்தில் இருந்த ஒருமைப்பாட்டை அறிகிறோம். அறிவர் என்னும் பெயர் பெற்ற கணியர் என்னும் வானநூல் அறிஞர் தமிழ் நாட்டிலும் ஏனைய திராவிட நாடுகளிலும் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்று தெரிகின்றனர். இதனால், பண்டைத் தமிழகத்தில் அறிவர் என்னும் இனத்தார் இருந்தனர் என்பதும் அவர்கள் பிற்காலத்தில் கணிவர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படுகின்றன. 5. நடுகல் என்னும் வீரக்கல் சங்க காலத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தவை வீரமும் காதலுமே. அக்காலத்து மக்கள் காதலையும் வீரத்தையும் போற்றினார்கள். ஆகவே, அக்காலத்துப் புலவர்கள், காதல் துறையைக் கூறுகின்ற அகப்பொருட் செய்யுட்களையும் போர்வீரருடைய வீரத்தைக் கூறும் புறப்பொருட் செய்யுட்களையும் அதிகமாகப் பாடினார்கள். சங்ககாலத்திலே முதன்மையான இலக்கியங்கள் இவை இரண்டுமே. பிற்காலத்தில் பக்திப் பாடல்கள் (சமயத் துறைச் செய்யுட்கள்) முதலிடம் பெற்றதுபோல, சங்ககாலத்தில் சமயத்துறைச் செய்யுட்கள் முதலிடம் பெறவில்லை. வீரத்தைப் போற்றிய சங்ககாலத் தமிழர், போர்க்களத்திலே புறங்கொடாமல் போர் செய்து வெற்றிபெற்ற வீரனைப் போற்றினார்கள். வீரன் போர்க்களத்தில் உயிர் நீத்தால், அவன் வீரத்தைப் போற்றுவதற்காகவும் அவனை நினைவு கூர்வதற்காகவும் நடுகல் என்னும் வீரக்கல் நட்டு வாழ்த்தினார்கள். அக்காலத்துத் தமிழர், ஒவ்வொருவகைப் போருக்கும் வெவ்வேறு பெயர் கொடுத்திருந்தனர். பகையரசன் நாட்டிற் சென்று அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவதற்கு வெட்சிப்போர் என்றும், ஆனிரைகளை மீட்பதற்காகச் செய்யும் போருக்குக் கரந்தைப்போர் என்றும், நாட்டைப் பிடிப்பதற்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ ஒரு அரசன் மற்றொரு அரசன்மேல் படையெடுத்துச் சென்று செய்யும் போருக்கு வஞ்சிப்போர் என்றும், படையெடுத்து வந்தவனுடன் எதிர்த்துச் செய்யும் போருக்குத் தும்மைப் போர் என்றும், கோட்டை மதிலை வளைத்துக்கொண்டு முற்றுகையிடும் போருக்கு உழிஞைப் போர் என்றும், கோட்டை மதிலுக்குள்ளிருந்து முற்றுகையிட்டவனுடன் செய்யும் போருக்கு நொச்சிப்போர் என்றும் பெயரிட்டிருந்தார்கள். எந்தப் போராக இருந்தாலும், போர்க்களத்தில் நின்று பகைவரை ஓட்டியவனின் வீரத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அவ்விரல் வீரன் போர்க்களத்தில் போர் செய்து உயிர்விட்டால், அவனது வீரத்தைப் போற்றி அவனை நினைவு கூர்தற்கு அவன் பெயரால் நடுகல் என்னும் வீரக்கல்லை நட்டார்கள். அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறுகிற தொல்காப்பியர், அக்காலத்தில் இருந்த நடுகல் நடும் வழக்கத்தையும் தமது நூலில் கூறினார். “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனத் தொடங்கும் சூத்திரத்தின் இறுதியில், காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மறபிற் கல்லொடு புணர (தொல். புறத்திணையியல்) என்று கூறினார். போரில் புறங்கொடாமல் வீரப்போர் செய்து களத்தில் வீழ்ந்த வீரனுக்கு நடுகல் நடும்போது, அதற்குரிய கல்லைத் தேடித் தெரிந்தெடுத்தலும், அக்கல்லைக் கொண்டுவருதலும், அக்கல்லில் இறந்தவன் பெயரையும் அவன் இறந்த விதத்தையும் எழுதி நீராட்டுதலும், அக்கல்லை நடுதலும், அவ்வீரனுடைய புகழை வாழ்த்திப் போற்றலும் என்னும் நிகழ்ச்சிகள் நடந்தன. (சீர்தகு சிறப்பில் பெரும்படை என்பது, போரில் புறங்கொடாமல் இறந்த வீரன் அரசனாக இருந்தால் அவனுக்கு நடுகல் நட்டு அதன்மேல் பெரும்படையாகக் கோவில் அமைப்பது. இதுபற்றித் தனியே கூறுவோம்.) தொல்காப்பியருக்குப் பிறகு, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே இயற்றப்பட்ட சிலப்பதிகாரமும் நடுகல்லைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையே கூறுகின்றது. “காட்சி கால்கோல் நீர்ப்படை நடுகல், வாழ்த்து” என்று சிலப்பதிகாரப் பதிகம் (வரி. 84, 85) கூறுகின்றது. அதற்கேற்பவே காட்சிக்காதை, கால்கோட்காதை, நீர்ப்படைகாதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை என்று ஐந்து காதைகளையும் கூறுகின்றது. வீரருக்கு நடுகல் அமைத்தது போலவே வீரபத்தினியாகிய கண்ணகிக்கும் வீரக்கல் அமைத்து அவரைப் போற்றியதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். நடுகல் நடும் வழக்கம் தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இருந்து வந்தது. அண்மைக்காலம் வரையில், கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில், அதாவது பிற்காலச் சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் வீரக்கல் அமைக்கும் வழக்கம் இருந்து வந்தது. திருவள்ளுவர் தமது திருக்குறளிலே நடுகல்லைப் பற்றிக் கூறுகிறார்: என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ முன்நின்று கல்நின்றவர் (படைச்செருக்கு) வீரக்கல் நட்டுப் போரில் உயிர்விட்ட வீரனை நினைவு கூரும் வழக்கம் தொல்காப்பியர் காலந்தொட்டு ஏறத்தாழ கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தது என்று கூறினோம். சங்க இலக்கியங்களிலே நடுகல்லைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பல்லா தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட நிரையிவண் தந்து நடுகல் லாகிய வென்வேல் விடலை (புறம். 261: 11 - 16 ஆவூர் மூலங்கிழார்) சிலையே றட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி யதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டுஞ் சுரன் (அகம். 289 - 1-4 இளங்கீரனார்) கடுமான் என்னும் வீரன் போரில் இறந்தபோது அவனுக்கு நடுகல் நட்டதைக் கோனாட்டு முகையலூர்ச் சிறுகருத்தும்பியார் பாடியது இது: ஊர்நனி யிறந்த பார்முதிர் பரந்தலை ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நிறுவீப் போந்தையந் தோட்டில் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் கல்லா யினையே கடுமான் தோன்றல். (புறம். 265: 1-5) அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் சிற்றரசன் போர்க்களத்தில் உயிர் நீத்தபோது அவனுக்கு நடுகல் நட்டு மயிற்பீலியால் அலங்கரித்து மதுபானத்தைப் படைத்தனர். அப்போது ஒளவையார் பாடிய செய்யுள் இது: நடுகல் பீலி குட்டி நார்அரி சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளாதோனே (புறம். 232:3-6) நடுகல்லில், இறந்த வீரனுடைய பெயரும் அவன் போரில் இறந்த காரணமும் எழுதப்படுவது வழக்கம், இதை “எழுத்துடை நடுகல்” என்று கூறுகிறார் சீத்தலைச்சாத்தனார். (அகம். 53: 11). நடுகல்லுக்கு மயிற்பீலி சூட்டித் துடி (பம்பை)யை ஒலித்துப் போர் வீரர்களுக்கு உணவைவிட உகந்த தாகிய மதுபானத்தைப் படைத்து ஆட்டுக் குட்டியைப் பலிகொடுத்து இறந்த வீரனைப் போற்றினார்கள் என்று அம்மூவனார் என்னும் புலவர் கூறுகிறார். நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர் முனையாத் துந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம் (அகம். 35: 4-10) பண்டைக்காலத்து நடுகற்கள் நமக்குக் கிடைக்காமற் போனாலும் பிற்காலத்து நடுகற்கள் சில கிடைத்துள்ளன. எபிகிறாபி என்னும் சாசன எழுத்து இலாகாவும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் சில நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளன. நடுகற்களில் எழுத்துக்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்தபோனதும், தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததுமான சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா காப்பள்ளெ கிராமத்தில் உள்ள தமிழ் எழுத்துச் சாசனம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு. வைதம்ப குலத்துப் பள்ளொ (பல்லவ?) அரசனான சாதெ அரசன் ஆட்சியில், கோணக்கி என்பவன் படையுடன் வந்து தொறு (ஆனிரை) கொண்டு போனதையும், அவ்வமயம் முத்துக்கூரு உடையான் வைதம்ப சூலத்து சூவப்பராசா மகன் போரிகடேசரே என்பவன் சாதே அரசனுக்கு உதவியாகத்தொறு மீட்டுக் கொடுத்ததையும், மீட்ட பிறகு அப்போரில் இறந்ததையும் கூறுகிறது இந்த நடுகல் சாசனம்1. வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். இந்தச் சாசனக் கல்லில், வில்லும் அம்புங்கொண்டு போர் செய்கிற ஒரு வீரனுடைய புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. விசய நரசிம்மவர்மனுடைய இரண்டாவது ஆண்டில் எழுதப்பட்டது இச்சாசனம். வாணசேகரன் அதியரசர் சேவகனாகிய மீக்கொன்றை நாட்டு மேல்வேளூர் அதிபர் பரயம் ஆளியார் என்பவர், தமது ஊர்த்தொறுவைப் பகைவர் கொண்டுபோனபோது, போர் செய்து தொறுவை மீட்டார். ஆனால், அப்போரில் உயிர் துறந்தார். அவருடைய வீரத்தைப் பாராட்டி நடப்பட்டது இந்த நடுகல்.2 வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். சுந்தர சோழன் II உடைய 16ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. மீகொன்றை நாட்டைச் சேர்ந்த வேலூரை வாணகோவரையர் என்னும் சிற்றரசர் ஆண்டபோது, அவ்வூர்த் தொறுவைப் பகைவர் கொண்டுபோக, வாணகோவரையரின் சேவகராகிய (போர்வீரனாகிய) பொங்கள தொண்டைமான் மகன் வேம்படி என்பவர் பகைவருடன் போர் செய்து தொறுமீட்டார். ஆனால், போரில் உயிர்விட்டார் என்று இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.3 வட ஆர்க்காடு மாவட்டம் செந்தாட்டூரில் உள்ள நடுகல் சக ஆண்டு 832 (கி.பி. 910) செந்தாட்டூரில் பகைவர் வந்து தொறுக்கவர்ந்து சென்றபோது, இகல் மறைமங்கலத்து மாவலிவாணராயரான குடி பரிதாண்டிக்காமனார் அத்தொறுவை மீட்டுப் போரில் இறந்தார் என்பதை இந்நடுகற் சாசனம் கூறுகிறது. வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் தாலுகா ஆம்பூர் காங்கரெட்டித் தெருவில் உள்ள இரண்டு வீரகற்கள். (ஆம்பூரின் பழைய பெயர் ஆமையூர் என்று இச்சாசனங்களிலிருந்து தெரிகின்றது.) கோவிசைய நிருபதுங்கவர்மர் என்னும் அரசன் காலத்தில் நிகழ்ந்த கரந்தைப் போரைக் கூறுகின்றன இவ்வீரக் கற்சாசனங்கள். இச்சாசனங்களின் வாசகம் இவை: “ஸ்ரீ கோவிசைய நிருபதொங்க விக்கிரம பருமர்க்கு யாண்டு இருபதாவது. படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங்கரையர் சேவகர் பெருணகரக் கொண்டக் காவிதி அகளங்கத்துவராயர் மகன் சண்ணன் தளரா வீழ்ந்துபட்டான்.” (காவிதி என்பது சேனைத் தலைவருக்கு அரசரால் அளிக்கப்படும் பட்டம்.) “கோவிசைய நிருபதொங்க விக்கிரமபருமர்க்கு யாண்டு இருபத்தாறாவது, படுவூர்க் கோட்டத்துமேல் அடையாறு நாட்டு ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங் கரையர் சேவகர் அகளங்கத்துவரையர் மருகன் மசிழு.... னி வேடன் கலியராமன் பட்டான்4”. மேற்படி மாவட்டம் முக்குத்தூரில் உள்ள மற்றொரு நடுகல் சாசனம்: “கோவிசெய நரசிங்க பருமற்கு யாண்டு மூன்றாவது. வின்று நாட்டு வடகரை ஆளுந்தகடூர் நாடர் வலிமதுர சேவகர் பாக்கத்துக்குடி அதிகமத்தார் முருகன் முக்குட்டூர்த்தொறு சன்மதுரரு கொள்ளத்தொறு மீட்டுப்பட்டார்5”. வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா குளிதிக்கி கிராமத்தில் ஆற்றுக்கு அருகில் உள்ள சாசனம். இது விஜயநந்திவர்மன் என்னும் பல்லவ அரசனின் 52 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. “ஸ்ரீ கோவிசெய நந்திச்சுர பருமற்கு யாண்டு ஐம்பத்திரண்டாவது. பெருமானடிகள்மேல் பல்லவரையன் படை வந்து பெண்குழிக் கோட்டை அழித்த ஞான்று வாணவரையர் மாமாடி திரிக எனத்திரிந்து பட்டார் கற்காட்டூர் உடைய கங்கதியரையர் கன்னாடு பெருங்கங்கர்6.” தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் சாவடிக்கு அருகில் நடப்பட்டுள்ள நடுகல். இக்கல்லில், வீரன் ஒருவன் கையில் வாளை ஏந்திச் செல்வதுபோல புடைப்புச் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. முற்காலத்தில் இவ்வூரில் யானைகளைக்கொண்டு கொந்தளிப்பு உண்டாக்கி ஊரை அழித்தபோது, இவ்வூர் மாதிரன் என்பவன் எதிர்த்துப் போராடி இறந்ததை இக்கல்லெழுத்து கூறுகிறது. இதன் வாசகம்: “கம்பப்பெருமான் ஆனையாடின கொந்தளத்து இவ்வூரழிந்த நாட்பட்டான் இவ்வூர் தொதுபத்தி மாதிரன், ஸ்வஸ்தி ஸ்ரீ7”. சேர நாட்டில் ஆரம்பொழி என்னும் ஊரில் இருந்த வீரகல். இவ் வீரகல்லை, மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கண்டுபிடித்து அதைக் கொண்டுவந்து திருவனந்தபுரம் காட்சி சாலையில் வைத்தார். இதன் ஒரு பக்கத்தில் ஒரு வீரன் இடது கையில் வில்லையும், வலது கையில் கட்டாரியையும் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல, புடைப்புச் சிற்பம் இருக்கிறது. பின்புறத்தில் கீழ்க்கண்ட சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. “ஸ்ரீ கோமாறஞ்சடையற் கிருபத்தேழாமாண்டு சேரமானார் படை விழஞத்து புறத்து விட்டுழக்க கரைக்காட்டை அழிப்பான் வர பெருமானடிகளன்பு மிக்குள இரணகீர்த்தியு அமர்க்கழிஉம் உள்ளீட்டி னொற்றைச் சேவர் கோட்டை யழியாமைக் காத்தெறிந்து பலரும்பட்ட இடத்து இரணகீர்த்தி உள்வீட்டுச் சேவகன் கொழுவூர்க் கூற்றத்துப் பெருவூர்த் தாதம் பெருந்திணை ஆத்திரத்தாற் பலரோடுங் குத்திப் பட்டான்...........”8 போர்க்களத்தில் வீரங்காட்டியவர்களுக்கு மட்டுந்தான் வீரக்கல் நடப்பட்டது என்று கருதவேண்டா. புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகற்கள் அமைக்கப்பட்டன. பண்டைக்காலத்துத் தமிழர் வீரச்செயலைப் போற்றும் பண்பினர் ஆகையால், எத்தகைய வீரர்களுக்கும், நடுகற்கள் நட்டுச் சிறப்புச் செய்தார்கள். புலியுடன் போராடுவது, மனிதருடன் போர் செய்வதைவிட அதிக வீரமான செயல். இக்காலத்தில் யானைகளின்மேல் அமர்ந்து, பல பாதுகாப்பான சூழ்நிலைகளுடன் தூரத்தில் இருந்து கொண்டு துப்பாக்கியினால் சுட்டுப் புலிகளைக் கொல்லும் வேட்டையன்று பண்டைக்காலத்துப் புலிவேட்டை. நேருக்கு நேர் புலியுடன் நின்று போரிட வேண்டும். அவ்வாறு புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகல் நட்டுப் பாராட்ட வேண்டியதுதானே. ஆகவே, வீரத்தைப் போற்றிப் பாராட்டிய அக்காலத் தமிழர் அவர்களுக்கும் நடுகல் நட்டனர். அவ்வீர கற்கள் சிலவற்றைக் காட்டுவோம். வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா கீழ்முத்துக்கூர். (இவ்வூரின் பழைய பெயர் முக்குத்தூர்.) இங்குள்ள ஒரு நடுகல்லில் ஒரு வீரன் தனித்து நின்று கட்டாரியினால் ஒரு புலியைக் குத்தி கொல்வது போன்று புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இதிலுள்ள சாசன வாசகம் இது: “ஸ்ரீ மதுரை கொண்ட கோப்சரகேசரிவன்மற்கு யாண்டு முப்பத்து இரண்டாவது. வடகரை முக்குத்தூர் குமாரனடி புழலப்பன் புலிகுத்தின கரைநாடு”.9 கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள நடுகல் சாசனம் ஒன்று, புலிவேட்டையில் வில்லி ஒருவர் புலியுடன் பொருது உயிர்விட்டதைக் கூறுகிறது.10 தமிழ் நாடாக இருந்து இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்துபோன சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா எடூரு என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு அப்பால் சிறிது தூரத்தில் ஒரு வயலில் உள்ள புலிராயி என்னும் புலிக்கல். தமிழ்ச் சாசனம். குலோதுங்கசோழனுடைய 39 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஜயங்கொண்ட சோழமண்டலத்து பெரும் பாணப்பாடி புலிநாட்டு இடையூர் ஆன சென்பியன் ஸ்ரீகரநல்லூரில் இருந்த வில்லி அபிமான முத்தரையன் மகன் மாச்சன் என்பவன் ஒரு புலியுடன் பொருது அதனைக் குத்திக் கொன்று தானும் இறந்தான் என்னும் செய்தியை இவ்வீரக்கல் சாசனம் கூறுகிறது. வீரபல்லி அரசனான குமாரபல்லி அரசன் சாலிவாகன சகாப்தம் 1289இல் (கி.பி. 1367 இல்) எழுதிய வீரகல் சாசனம். இவர் 150 புலிகளைக் கொன்றதாக இச்சாசனம் கூறுகின்றது.11 “ஸ்வஸ்திஸ்ரீ. சகாப்தம் ஆயிரத்து இருநூற்று எண்பத் தொன்பதின்மேல் செல்லா நின்ற பிலவங்க சம்பவத்சரத்து விருஷப ஞாயற்று பூர்வபக்ஷத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற ரோஹிணி. நாம் தியாக சமுத்திரப்பட்டை அயோத்யாபுர வாரத்சர ஆபீரராய மாநமர்த்தன் அவிராய மானமர்த்தன் இராயகண்ட பேருண்ட பங்களராய பங்கள சக்கரவர்த்தி சுரியக்கார மகாமகேஸ்வர மத்யம தேசாதிபதி வீரஸ்ரீ வீரபல்லி அரசர் குமாரபல்லி அரசர் நான் இந்நாள்வரைக்கும் கொன்ற புலி நூற்றைம்பது.”12 உதாரணத்துக்காகச் சில நடுகற்களை மட்டும் இங்குக் காட்டினோம். இதுபோன்று நூற்றுக்கணக்கான வீரக்கற்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் கூறினால் தனி நூலாகும் என்று அஞ்சிக் கூறாமல் விட்டனம். தமிழ் நாட்டுக்கு வடக்கேயுள்ள வடுக தேசமாகிய கன்னட நாட்டிலும் வீரக்கற்களாகிய நடுகல் நடும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்தது. கன்னட நாட்டு வீரக்கற்களைப் பற்றி இங்கு எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சி அவற்றை இங்கு எழுதாது விடுகிறேன். அடிக்குறிப்புகள் 1. (Epi. Report. 165 of 1933 - 34). 2. (Epi. Rep. 69 of 1933 - 34). 3. Epi. Rep. 67 of 1933 -34. 4. Two Tamil Inscriptions at Ambur. E. Hultzsch. Epigraphia Indica Vol. IV, P. 189-180, Ep. Rep. 1896, P 2. 5. Kil Muthugur Inscriptions P 360. Epigraphia Indica Vol. IV. 6. Kulidikki Inscription of Vijaya Nandisvara Varman P. 110-115. Epigraphia Indica Vol. XXII 1933 - 34. 7. No. 112. S.I.I. Vol. XII. 8. Thavandram Museum stone Inscription of Maranjadaiya. P. 153-159. Travancore Archaeological Series; Vol. I. Ranakirti Tatam A South Indian Warrior of the Eighth Century, P. 146. Kerala Society Papers, Vol. I. (1928-30) 9. Three Tamil Inscriptions at Kil - Muthugur. Epigraphia Indica. Vol. IV. PP. 177-179. 10. (348 of 1921). 11. (205 of 1931 - 32). 12. (No. 471. S.I.I. Vol. VIII P. 249). 6. பெரும்படை இனி, தொல்காப்பியச் சூத்திரத்தில் பெரும்படை என்று கூறப்பட்டிருப்பதைப் பற்றி ஆராய்வோம். காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகுமரபில் பெரும்படை வாழ்த்தலென்று இருமூவகையில் கல்லொடு புணர என்பது தொல்காப்பிய புறத்தினையியல் 3ஆம் சூத்திரப்பகுதி. இதில் “சீர்த்தகு மரபில் பெரும்படை” என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை பொருந்தாது. இளம் பூரணர் கூறும் உரை சரியானது. இதற்கு இளம் பூரணர் கூறும் உரை இது: சீர்தகு மரபின் பெரும்படை - மிகவும் தக்க மரபினையுடைய பெரும்படை, அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. இவ்வுரையிலும் முழு விளக்கம் தரப்படவில்லை. நாட்டிய கல்லிற்குக் கோட்டம் (கோவில்) அமைத்தல் என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறார். பெரும்படை என்பது, அரசர்கள் போர்க்களத்தில் உயிர் நீத்தால் அவர்களுக்கு நடுகல் நட்டு அக்கல்லுக்குமேல் கோவில் (கோட்டம்) கட்டடம் அமைத்தல் என்பது பொருள். சாதாரண போர் வீரர்களுக்குக் கோட்டம் இல்லாத வெறும் நடுகல்லும், அரசர்களுக்குப் பெரும்படை என்னும் கோட்டமும் அமைக்கும் வழக்கத்தை இது அறிவிக்கிறது. பெரும்படை என்பதற்குச் சாசனங்களில் பள்ளிப்படை என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் இறந்த அரசருக்குப் பெரும்படையாகிய பள்ளிப்படை அமைக்கும் வழக்கம் உண்டென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதற்கு ஏற்பவே, சாசனச் சான்றும் கிடைக்கின்றது. அது வருமாறு: “ஸ்ரீ கோவிராஜ கேசரி பன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29-ஆவது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெருபாணப்பாடி தூநாட்டு மேற்பாடி யாகிய ராஜாஸ்ரயபுரத்து நகரத்தோம் ஆற்றூர்த் துஞ்சினதேவர்க்குப் பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அருஞ்சிகை ஈஸ்வரத்து மகாதேவர் கோயில்”.1 இந்தச் சாசனத்தில் கூறப்படுவது என்ன வென்றால்: அருஞ்சிகை என்னும் பெயருள்ள ராஜராஜ சோழன் (முதலாவன்) இவ்வூரில் பகைவரோடு போராடுகையில் போர்க்களமாக இருந்த ஆற்றங்கரையில் மாண்டு போனான். அதன் காரணமாக ஆற்றூர்த் துஞ்சிய தேவர் என்று அவனுக்குப் பெயர் உண்டாயிற்று. அவன் இறந்த இடத்தில் நடுகல்லுக்குப் பதிலாகப் பள்ளிப்படை (பெரும்படை) யாகக் கோவில் கட்டப்பட்டது என்பதாம். சித்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமா நாட்டில், முதலாம் ஆதித்த சோழனுக்குப் பள்ளிப்படை (கோட்டம்) அமைக்கப்பட்டிருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.2 எனவே, நடுகல் என்னும் வீரக்கல் சாதாரண வீரர்களின் பொருட்டும், பெரும்படை என்பது பெரிய அரசர்களின் பொருட்டும் அமைக்கப்பட்டன என்பது தெரிகின்றது. அடிக்குறிப்புகள் 1. (S.I.I. Vol. III, Part. I. Nos. 15, 16, 17). 2. Annual Report of the Archaeological Dept. South Circle, Madras, Part II 1915 - 16) 7. வாள் மண்ணுதல் தொல்காப்பியம் புறத்திணையியலில் “குடையும் வாளும் நாள் கோள் அன்றி” எனத் தொடங்குகிற சூத்திரத்தில் “வென்றவாளின் மண்ணு” என்று ஒரு துறை கூறப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதல்”, என்று எழுதுகிறார் வாள்மண்ணுதலுக்கு வாண்மங்கலம் என்றும் பெயர் கூறுவர். வாள்மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச்சான்று கிடைத்திருக்கிறது. இந்தச் சாசனம் இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்) என்னும் அரசன் காலத்தில் கி.பி. 949 - 50 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மைசூர் நாட்டில் மைசூர் மாவட்டத்தில் மந்தியா தாலுகாவில் ஆதகூர் என்னும் ஊரில் இந்தச் சாசனம் இருக்கிறது. கங்கவாடி தொண்ணூற்றாராயிரம் நாட்டை அரசாண்டவனாகிய பூதுகன் என்னும் சிற்றரசன், கன்னர தேவனுக்குக் கீழ்ப்பட்டவன். பூதுகனிடத்தில் மணலேரன் என்னும் ஒரு சேனைத் தலைவன் இருந்தான். அக்காலத்தில் கன்னர தேவனாகிய இராஷ்டிரகூட அரசனுக்கும் இராஜாதித்தியன் என்னும் சோழனுக்கும் போர் நடந்தது. இந்தப் போரிலே கன்னரதேவன் பக்கத்தில் பூதுகனும் அவனுடைய சேனைத் தலைவனாகிய மணலேரனும் போர்க்களஞ் சென்று போர் செய்தார்கள். சோழன் வெற்றிபெறும் நிலையில் இருந்தான். அப்போது பூதுகனின் சேனைத் தலைவனான மணலேரன் கள்ளத்தனமாகப் போர் செய்து சோழனைக் கொன்று விட்டான். ஆகவே வெற்றி கன்னர தேவனுக்காயிற்று. இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைந்த கன்னரதேவன் பூதுகனுக்குப் பல ஊர்களைத் தானமாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். பூதுகன், இப்போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய வீரனாகிய மணலேரனுக்கு ஆதுகூர் பன்னிரண்டையும் பெள்வொள நாட்டில் காதியூரையும் தானமாகக் கொடுத்தான். இச்செய்தியைக் கூறுகிற இச்சாசனம் `வாள்கழுவிக் கொடுத்தான்’ என்று கூறுகிறது. இந்தக் கன்னடச் சாசனத்தின் இப்பகுதி வாசகம் இது: 20. ஸ்வஸ்திஸ்ரீ. எறியப்பன மகம் ராசமல்லனம் பூதுகம் காதிகொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ கன்னர தேவம் சோழனம் காதுவந்து பூதகம் ராஜாதித்தயம் பிஸுகெயெ கள்ளனாகி ஸுரிகிறிது 21. காதிகொந்து பனவஸெ பன்னிர்ச் சாஸிரமும் பெள்வொள மூநூறும் புரிகெரெ மூனூறும் கிஸுகாடெழ்பதும் பாகெநா டெழ்பத்துவம் பூதுகங்கே கன்னரதேவம் மெச்சு கொட்டம். பூதுகனும் மணலேரம் 22. தன்ன முந்தே நிந்திரிதுதர்க்கெ மெச்சி ஆதுகூர்ப் 23. பன்னெரடும் பெள்வொளத காதியூருமம் பாள். 24. கச்சுகொட்டம். மங்கள மஹாஸ்ரீ.1 இச்சாசனத்தின் இறுதியில் பாள் கச்சு கொட்டம் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள்: பாள், பாளு - வாள், கச்சு, கர்ச்சு, கழ்ச்சு - கழுவு பாள் கச்சு கொட்டம் - வாள் கழுவிக் கொடுத்தான். இது பற்றி டி. ஏ. கோபிநாதராயர் அவர்களும் எழுதியுள்ளார்.2 வெற்றிவாளை, வெற்றிக்கடவுளாகிய கொற்றவை (துர்க்கை) மேல் இரத்தக்கறை போகக் கழுவும் வழக்கம் இன்னொரு சாசனத்திலும் கூறப்படுகின்றது. சேர நாட்டில் இரவி வேந்தன் (வீரரவி கேரளவர்மன் திருவடி) என்னும் அரசன் காலத்தில் இச்சாசனம் எழுதப்பட்டது.இது இப்போது வாள் விச்சகோட்டம் என்று பெயருள்ள ஊரில் உள்ள பகவதி (கொற்றவை) கோவிலில்இருக்கிறது. வாள்விச்ச கோட்டம் என்று தவறாக வழங்கப்படுகிற இப்பெயரின் சரியான பெயர் வாள் வைத்த கோட்டம் என்பது. இந்தச் சாசனம் செய்யுளாக எழுதப்பட்டிருக்கிறது. ஆதி யெழு நூற்றுடன் தொண்ணூற்றையா மாண்டி லற்பசியேழ் முற்றசமி யவிட்டம் வெள்ளி மாதிசைசேரின்னாளி லிரவி வேந்தன் மனமகிழப் பகவதி வாள் வைத்த கோட்டத் தோதிலுறு மிறைவி யிருப்பதற்கு மேன்மையுறும் முகமண்டபமா மதற்கு நாப்பண் மூதறிவா லொருகலின் மண்டபமுஞ் செய்வித்தான் முல்லைமங்கலன் திருவிக்கிரமன் தானே.3 அடிக்குறிப்புகள் 1. (Atakur Inscriptions of Krishna III and Bituga II -A. D. 949-50. PP. 50-57. Epigraphia Indica. Vol. VI. 1900 - 01). 2. (A Note on the World Balgalchchu. Indian Aniquary, Vol, X L. 1911. Balgalchchu Gottam, Epigraphia Indica, Vol. VI. P. 35.) 3. No. 125. Three Records of Valvichcha Kottam. Travancore Archaeological Series. Vol. VI, Part. I). 8. கழுதை ஏர் உழுதல் ஒரு அரசன் பகையரசனுடைய கோட்டையை அழித்து ஏரில் கழுதையைப் பூட்டி ஏர் உழும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இவ்வழக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால், “தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு” என்று தொடங்கும் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திரத்தில் வருகிற `மன்னெயில் அழித்த மண்ணுமங்கலமும்’ என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கழுதை ஏர் உழுதலைக் கூறுகிறார். “மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங்கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்” என்பது அவர் கூறும் உரை. பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெருவழுதி தன் பகைவருடைய அரண்களை வென்று இடித்துத் தகர்த்துக் கழுதைகளைப் பூட்டிய ஏரினால் உழுதான் என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகின்றது. கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்தனை யவர் நனந்தலை நல்லெயில் (புறம். 15, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமியை நெட்டிமையார் பாடியது.) அதியமான் மகன் பொருட்டெழினி, பகைவருடைய கோட்டையை அழித்துக் குருதி ஈரத்தோடு இருந்த அந்த இடத்தைக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுது வரகும் கொள்ளும் விதைத்தான் என்று இன்னொரு செய்யுள் கூறுகிறது. உருகெழு மன்னர் ஆரெயில் கடந்த நிணம்படு குருதிப் பெருமபாட் டீரத்து அணங்குடை மரபின் இருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைகல் உழவ. (புறம். 392. அதிகமான் மகன் பொருட்டெழினியை ஒளவையார் பாடியது.) சேரன் செங்குட்டுவனும் பகைவரை வென்று கழுதை ஏர் உழுத செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி கவடி வித்திய கழுதையேர் உழவன் குடவர் கோமான் வந்தான். (சிலம்பு. நீர்ப்படை காதை, 225-227) இவ்வாறு சங்க இலக்கியங்களில், வென்ற அரசர் பகையரசரின் கோட்டைகளை அழித்துக் கழுதையினால் ஏர் உழுத செய்தி கூறப்படு கின்றன. இதே வழக்கம் வடநாட்டிலும் இருந்திருக்கிறது. காரவேலன் என்னும் கலிங்க நாட்டு அரசன் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்) ஹத்திகும்பா குகைக்கோவிலில் பிராகிருத மொழியில் எழுதி வைத்திருக்கிற சாசனத்தில் இச்செய்தியைக் கூறியுள்ளான். (ஹதிகும்பா என்னும் இடம் ஒரிசா நாட்டிலே பூரி மாவட்டத்தில் உள்ள புவனேசுவரம் என்னும் ஊருக்கு மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது). இவ்வரசனுடைய பல செய்திகளைக் கூறுகிற இந்தச் சாசனம், காரவேலன் பிதுண்ட நகரத்தை அழித்துக் கழுதை பூட்டிய ஏரினால் உழுத செய்தியையும் கூறுகிறது. அந்தச் சாசனத்தின் 11வது வரியிலே, “ச ஆவராஜ நிவேஸிதம் பீதுண்டம் கதபநம் கலேன காஸயதி” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, ஆவ அரசன் அமைத்த பிதுண்டம் என்னும் கோட்டையைக் கழுதை ஏரினால் உழுதான் என்பது பொருள்.1 ஹரிபத்ரீ என்பவர் எழுதிய ஆவஸ்யக விருத்தி என்னும் நூலிலும், ஹேமசந்திரர் எழுதிய வீரசரித்திரத்திலும் இச்செய்தி கூறப்பட்டிருக்கிறதாம். கோணிகன் என்னும் அரசன் வைசாலி நாட்டரசனை வென்று அவனுடைய கோட்டையை இடித்துத் தகர்த்துக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுதான் என்று அந்த நுல்கள் கூறுகின்றன. என்பர். இதனால், அரசர் கழுதையினால் ஏர் உழுத வழக்கம் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கலிங்க தேசம், வைசாலி முதலிய வடநாடுகளிலும் இருந்தது என்பது தெரிகின்றது. இதுகாறுங் கூறப்பட்டதிலிருந்து, தொல்காப்பியப் பொருளதி காரத்தில் கூறப்பட்ட செய்திகள் அக்காலத்தில் மக்களிடத்திலிருந்த பழக்க வழக்கங்களைத்தான் விளக்குகின்றன என்பது தெரிகின்றது. அந்தப் பழக்க வழக்கங்கள் பிற்காலத்திலும் நெடுங்காலம் வரையில் நடைமுறையில் இருந்தன. என்பதும் சாசனச் சான்றுகளால் அறியப்படுகின்றன. அடிக்குறிப்புகள் 1. The Hatigumpa Inscriptions of Karavela. Pp. 71-89. Epigraphia Indica. Vol. XX. 11. சங்க காலத்து நகரங்கள்* 1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினம் கடைச்சங்க காலத்தில் சோழநாட்டின் தலைநகரம் உறையூராகவும் அதன் முக்கிய துறைமுகப்பட்டினம் காவிரிப்பூம்பட்டினமாகவும் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் எவ்வாறு இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம். காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் உள்ளன. காகந்தி என்றும் சம்பாபதி என்றும் வேறு பெயர்களும் உண்டு. பாலி மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமையான புத்த ஜாதகக் கதைகளிலே அகித்தி ஜாதகத்தில் இந்தப் பட்டினம் டமிள நாட்டுக் கவீரபட்டணம் என்று கூறப்படுகிறது. (டமிள நாடு - தமிழ் நாடு) போதிசத்துவராகிய புத்தர், தமது பழம் பிறப்பிலே அகித்தி முனிவராகப் பிறந்து காவிரிப்பூம் பட்டினத்திலே ஒரு தோட்டத்திலே தங்கித் தவஞ் செய்திருந்தார் என்று அதில் கூறப்படுகிறார். கி.மு. முதல் நூற்றாண்டிலே இலங்கையை அரசாண்ட கமுனு (துட்டகமுனு) என்னும் அரசனுடைய மனைவி, அவளுடைய முற்பிறப்பிலே காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு கப்பல் தலைவனுடைய குடுத்பத்தில் பிறந்திருந்தாள் என்று கூறப்படுகிறாள். இலங்கை நாட்டிலே வழங்குகிற இரசவாகினி என்னும் நூலிலே, காவிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தப் பள்ளிகள் கூறப்படுகின்றன. பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலாசிரியர் காவிரிப்பூம்பட்டினத்தைக் ‘கமரா’ என்று கூறுகிறார். டாலமி என்னும் யவனர் இப்பட்டினத்தை ‘கபேரிஸ் எம்போரியன்’ என்று எழுதியிருக்கிறார். இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு, காவிரிப்பூம் பட்டினம் உலகப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று. கீழ் நாடுகளிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்த அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் சந்திக்கும் இடமாக இப்பட்டினம் இருந்தது. அவர்களில் குறிப்பிடத் தக்கவர் யவனர் எனப்படும் கிரேக்கர் ஆவர். புகார் நகரத்துக் கப்பல் வாணிகர் இங்கிருந்து கப்பல்களில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஈழம் (இலங்கை), சாவகம் (ஜாவா முதலிய கிழக்கிந்தியத் தீவுகள்), காழகம் (பர்மா தேசம்), கடாரம் (மலாய தேசம்) முதலிய நாடுகளில் சென்று வாணிகம் புரிந்தனர். சீகாழிக்குத் தென்கிழக்கே ஒன்பது மைல்தூரத்திலே காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பேர்போன காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. அப்பட்டினம் இப்போது சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு இருந்தது என்பதைச் சங்ககாலத்து நூல்களில் இருந்து ஆராய்வோம். கீழ்க்கடல் என்றும் குணகடல் என்றும் தொடுகடல் என்றும் அக் காலத்தில் பெயர் பெற்றிருந்த இப்போதைய வங்காள குடாக்கடலில், காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர்முகத்தில், காவிரி ஆற்றுக்கு வடகரையில் புகார்ப் பட்டினம் அமைந்திருந்தது. காவிரி ஆற்றின் புகர் முகத்தில் அமைந்திருந்தபடியால், இப்பட்டினத்துக்குப் புகார்ப்பட்டினம் என்றும் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் அமைந்தன. இந்த நகரத்தின் சுற்றளவு நான்கு காதம் என்று கூறப்படுகிறது. ‘பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்’. என்று சிலப்பதிகாரம் (5ஆம் காதை 131 - 134) கூறுவதிலிருந்து இப்பட்டினம் நான்கு காத சுற்றளவிருந்தது என்பது பெறப்படுகின்றது. (‘காத நான்கும் - ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்’ என்பது அரும்பதவுரையாசிரியர் உரை. ‘காத நான்கும் என முற்றும்மை கொடுத்தலானே ஊர் நாற்காத வட்டகை என்பது உணர்க்’. அடியார்க்கு நல்லார் உரை.) காதம் என்பது ஏறக்குறை பத்து மைல். புகார் நகரம் நாற்காத வட்டகையாக இருந்தது என்பதனாலே அது நாற்பது மைல் சுற்றள வுள்ளது என்பது பெறப்படுகிறது. இப்பட்டினம் நீண்ட சதுரமாக அமைந்திருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், 5வது காதையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். கிழக்கு மேற்காக நீண்டும், வடக்குத் தெற்காக அகன்றும் இப்பட்டினம் அமைந்திருந்தது. மணல் பரந்த கடற்கரை, நெய்தலங்கானல் என்று பெயர் பெற் றிருந்தது. நெய்தலங்கானலுக்கு மேற்கே காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாக இருந்தது. மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத் துக்கும் இடை நடுவே ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இந்தத் தோட்டத்தில் பகல் வேளையில் பண்டங்கள் விற்கப்பட்டன. ஆகவே இந்த இடம் நாளங்காடி என்று பெயர் பெற்றிருந்தது. இனி, இப்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே பார்ப்போம். நெய்தலங்கானல் இது கடற்கரையைச் சார்ந்த மணல் பரந்த இடம். நெய்தலங் கானலில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இரண்டு குளங்களும் காமவேள் கோவிலும் இருந்தன. இந்தக் குளங்களில் நீராடிக் காமவேளை வழிபடும் மங்கையர் இம்மையில் கணவனைப் பெற்று இன்பந் துய்த்துப் பின்னர் மறுமையில் போகபூமியில் போய்ப் பிறப்பார்கள் என்று அக்காலத்துப் புகார்ப் பட்டினத்து மக்கள் நம்பினார்கள். ‘கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோம குண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர் உலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்’ என்று சிலம்பு (9ஆம் காதை 57-62) கூறுகிறது. நெய்தலங்கானலில் இருந்த சோமகுண்டம் சூரிய குண்டங் களை, ‘இருகாமத்து இணை ஏரி’ என்று பட்டினப்பாலை கூறுகிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதை இவ்வாறு விளக்குகிறார். ‘இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காமவின்பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகள். இனி, வளகாமரேரி, வணிகாமரேரி என்றும் சங்கிராமகாமம் வணிக்கிராமகாமம் என்றும் உரைப்ப”. காவிரிப்பூம் பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நிகழ்ந்த இந்திர விழாவின் இறுதியில் நகர மக்கள் இந்த நெய்தலங்கானலுக்கு வந்து எழினிகளால் அமைந்த கூடாரங்களில் தங்கிக் கடலில் நீராடிச் செல்வது வழக்கம் என்று சிலம்பு, கடலாடு காதையினால் அறிகிறோம். மருவூர்ப்பாக்கம் கடற்கரையாகிய நெய்தலங்கானலை அடுத்துப் புகார்ப்பட்டினத்தின் ஒரு பகுதியாகிய மருவூர்ப்பாக்கம் இருந்தது. மருவூர்ப் பாக்கத்தின் தெற்கே காவிரிக் கரையில், துறைமுகமும் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களை வைக்கும் பண்டகசாலையும் இருந்தன. மருவூர்ப்பாக்கத்தில் மீன் பிடிக்கும் பரதவர், கப்பலோட்டிகள், உப்பு வாணிகர், தச்சர், கருமார், கன்னார், பொற்கொல்லர்; பாணர், கூல வாணிகர் முதலியோர் குடியிருந்தனர். அக்காலத்தில் தமிழ்ச் சமூகம் சிறுகுடி என்றும் பெருங்குடி என்றும் இது பெரும் பிரிவாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இப்பிரிவு, நகரங்களிலே சிறப்பாக இருந்தது. சிறுகுடி என்பது செல்வந்தர் அல்லாத சாதாரண மக்களும் தொழிலாளரும் அடங்கிய பிரிவு. மருவூர்ப்பாக்கத்தில் வசித்தவர் சிறுகுடி மக்களாகிய தொழிலாளரும் சாதாரண மக்களுமாவர். மருவூர்ப்பாக்கத்தில் வசித்திருந்தவர்களைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது: ‘பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த வூன்மலி இருக்கையும் கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொஃறச்சருங் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் றுன்னரும் கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் குழலினும் யாழினுங் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன்மரபில் பெரும்பா ணிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்’ (இந்திரவிழவூரெடுத்த காதை, 22-39) இதனால் மருவூர்ப்பாக்கத்தில் தொழிலாளர் முதலிய சிறுகுடி மக்கள் இருந்தனர் என்பது தெரிகின்றது. மருவூர்ப்பாக்கத்திலேதான் சோழமன்னனுடைய படை வீரர்களும் இருந்தார்கள். இதனை, ‘மருவூர் மருங்கின் மறங்கொள் வீரர்’ என்று சிலம்பு 5ஆம் காதை 76ஆம் அடியினால் அறிகிறோம். அன்றியும் வெளிநாடுகளில் இருந்து கப்பல் ஓட்டிக்கொண்டு புகார்த் துறை முகத்துக்குவந்த மாலுமிகள் - யவனர் முதலியோர், மருவூர்ப் பாக்கத்தின் தென் பகுதியில் துறைமுகத்துக்கு அருகில் தங்கி யிருந்தனர் என்பதும் தெரிகின்றது. இதனை, ‘கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ என்றும், (சிலம்பு - இந்திரவிழவூர் 9-12) ‘மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்’ என்றும், (சிலம்பு - கடலாடு 143ஆம் அடி) கூறுவதிலிருந்து அறிகிறோம். இதனையே, ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஏத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று பட்டினப்பாலை (216-218) கூறுகின்றது. பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் முக்கிய பகுதி இதுவே. இப் பட்டினப் பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் நன்னீர் அகழி இருந்தது. பட்டினப் பாக்கத்தின் தெற்கே காவிரி ஆறும், மற்ற மூன்று பக்கங்களிலும் அகழியாகிய கிடங்கும் இருந்தன. அகழிக்கு உட்புறத்தில் கோட்டை மதிலும், சோழ மன்னனுடைய அரண்மனையும், நகர மக்கள் வாழ்ந்த வீதிகளும், அரண்மனைக்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் தருநிலை, வச்சிர நிலை என்னும் இரண்டு கோட்டங்களும் இருந்தன. இதனை மணிமேகலை (5ஆம் காதை 109-118 அடிகள்) நன்கு விளக்குகின்றது. ‘புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நன்னீர் அகழிப் புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயின் மருங்கியன்ற வான்பணைத் தோளி தருநிலை வச்சிரம் எனவிரு கோட்டம் எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேத்தற்குப் பேரள வியற்றி யூழி யெண்ணி நீடுநின் றோங்கிய ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி’ என்னும் அடிகளினால் இதனை அறிகிறோம். இதனால், சோழ மன்னனுடைய அரண்மனை உயரமான பெரிய கட்டடமாகவும், அதற்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் இருந்த தருநிலை, வச்சிரநிலை என்னும் கோட்டங்கள் அரண்மனையைவிடச் சிறிய கட்டடங்களாகவும் இருந்தன என்பது தெரிகின்றது. (சங்க காலத்திலே கோவில் கட்டடங்கள் அரண்மனைகளை விடச் சிறியவாக இருந்தன. பிற்காலத்திலே தான் கோவில் கட்டடங்கள் உயரமாக அமைக்கப்பட்டன.) பூம்புகார் நகரத்தின் கோட்டை வாயில் உயரமாகவும், மேற்புறம் மகர உருவம் உள்ள சிற்பம் அமைந்ததாகவும் இருந்தது என்று பரணர் என்னும் புலவர் (அகம் 181-ஆம் செய்யுள்) கூறுகிறார். ‘மகர நெற்றி வான்றோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில் புகாஅர் நன்னாடு’ என்பது அச்செய்யுள் வாசகம். நகர மக்களின் போக்குவரத்துக் குரியதாக இருந்த இந்தக் கோட்டை வாயிலை, ‘மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி’ என்று சிலப்பதிகாரம் (நாடுகாண் 26-27) கூறுகிறது. கோட்டை வாயிலின் கதவிலே சோழ மன்னனுடைய அடையாளமாகிய புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பட்டினப்பாலை கூறுகிறது. ‘புலிப் பொறிப் போர்க் கதவிற் திருத் துஞ்சும் திண்காப்பு’ என்று கூறுகிறது. பட்டினப்பாக்கத்திலே, சோழ மன்னனுடைய அரண்மணை, காவிரி ஆற்றின் வடகரையிலே இருந்தது. அரண்மனையைச் சார்ந்து இராசவீதியும் பெருநிலக்கிழார் பெருங்குடி வாணிகர் தெருக்களும் பீடிகைத் தெருக்களும் அமைச்சர் படைவீரர் மறையோர் முதலியவர் வாழ்ந்திருந்த தெருக்களும் இருந்தன. பட்டினப்பாக்கத்திலே பெருங்குடி மக்களான செல்வந்தர் வாழ்ந்தனர். (மருவூர்ப்பாக்கத்தில் சிறுகுடி மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை முன்னமே கூறினோம்) கணிகையரில் சிறுதனக்கணிகையர் மருவூர்ப் பாக்கத்திலும் பெருந் தனக்கணிகையர் பட்டினப்பாக்கத்திலும் இருந்தனர். சிறுகுடியினராகிய போர்வீரர் மருவூர்ப் பாக்கத்திலும், படைத்தலைவராகிய பெருங்குடி மக்கள் பட்டினப்பாக்கத்திலும் வாழ்ந்திருந்தார்கள். இதனை, ‘கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோர் இருக்கையும் வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் சூதர் மாகதர் வேதாளிக ரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயிறொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கம்.’ என்று சிலம்பு (இந்திரவிழவூர் 40-58) கூறுகிறது. பட்டினப்பாக்கத்திலே பல சமயத்தாருக்கும் கோவில்கள் இருந்தன. திருமால் கோவிலாகிய மணிவண்ணப் பெருமாள் கோவிலும், சிவ பெருமான் கோவிலாகிய ஊர்க்கோட்டமும், முருகனுடைய வேற் கோட்டமும், பௌத்தர்களின் இந்திர விகாரைகளும், ஜைனரின் சினகர மும், இந்திரன் கோட்டங்களும் ஏனைய கோவில்களும் இருந்தன. “பிறவாயாக்கைப் பெரியோன் கோவிலும் ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும் வாள்வளை மேனி வாலியோன் கோவிலும் நீலமேனி நெடியோன் கோவிலும் மாலை வெண்குடை மன்னவன் கோவிலும்” (சிலம்பு - இந்திரவிழவூர் 169 - 173) ‘அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்’ (சிலம்பு - கனாத்திறம் 9-13) என்று புகார்ப்பட்டினத்திலிருந்த கோவில்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. (அமரர் தருக்கோட்டம் - தருநிலை. கற்பக மரம் நிற்கும் கோவில். வெள்ளையானைக் கோட்டம் - ஐராவதம் நிற்கும் கோவில். புகர் வெள்ளை நாகர் கோட்டம் - அழகிய பலராமர் கோவில். உச்சிக்கிழான் கோட்டம் - சூரியன் கோவில். ஊர்க்கோட்டம் - கயிலாயநாதனாகிய சிவபெருமான் கோவில். வேற்கோட்டம் - முருகன் கோவில். வச்சிரக் கோட்டம் - வச்சிராயுதம் இருக்கின்ற கோவில். புறம்பணையான் கோட்டம் - மாசாத்தன் கோவில். நிக்கந்தன் கோட்டம் - அருகப் பெருமான் கோவில். நிலாக்கோட்டம் - சந்திரன் கோவில்). இந்தக் கோவில்கள் அந்தந்தச் சமயத்தாரால் வழிபடப்பட்டன. ஆனால், எல்லாச் சமயத்தாரும் வழிபட்டது இந்திரன் கோவில்கள். புகார்ப் பட்டினத்தில் இந்திரனுக்கு மூன்று கோவில்கள் இருந்தன. அவை வச்சிரக் கோட்டம், தருநிலைக் கோட்டம், ஐராவதக் கோட்டம் என்பன. வச்சிரம் (இடி) இந்திரனுடைய ஆயுதம். தரு (கற்பக மரம்) இந்திர லோகத்தில் உள்ள இந்திரனுக்குரிய மரம். இது நினைத்த பொருள் களைத் தரும் தெய்வத் தன்மை யுடையது. ஐராவதம் இந்திரனுடைய வாகனம். இது வெள்ளை யானை. இந்த மூன்று கோட்டங்களும் சோழன் அரண்மனைக்கு அருகில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத் தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. நகர மக்கள், ‘வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து’ (சிலம்பு-இந்திரவிழவூர் 140-147) ‘ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் றொகுதியர் இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி அரசுமேம் படீஇய வகனிலை மருங்கில் உரைசால் மன்னவன் கொற்றங் கொள்கென மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணருங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணக மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி’ (சிலம்பு-இந்திரவிழவூர் 157-168) இந்திரவிழாக் கொண்டாடினார்கள். நாளங்காடி காவிரிப்பூம்பட்டினம், மருவூர்ப்பாக்கம் என்றும் பட்டினப் பாக்கம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்று அறிந்தோம். இரண்டு பாக்கங்களும் ஒன்றையொன்று நெருங்கி யிராமல் விலகியிருந்தன. இரண்டு பாக்கத்துக்கும் இடைநடுவிலே தோட்டம் ஒன்று இருந்தது. அந்தத் தோட்டத்திலே நாள்தோறும் சந்தை கூடினபடியினாலே அதற்கு நாளங்காடி என்று பெயர் கூறப்பட்டது. ‘இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபரற் பகுதியின் இடைநிலை மாகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளடங்காடி’ என்று இந்த இடத்தைச் சிலம்பு (இந்திரவிழவு 59-63) கூறுகின்றது. (‘பெரிய வேந்தர் இருவர் போர் குறித்து வந்துவிட்ட பாசறை யிருப்புக்கு நடுப்பட்ட நிலம் போர்க்களமானற்போல முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமுமென இரண்டு கூறுபட்ட ஊர்க்கு நடுப்பட்ட பொதுநிலமாகிய நாளங்காடி; அஃது எத்தன்மைத்தாகிய நாளங்காடியெனின், நிரைபடச் செறிந்த சோலையின் மரங்களிற் கால்களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய கொடுப்போர் கொள்வோரோதை இடையறாது நிலைபெற்ற நாளங்காடியென்க’ அடியார்க்கு நல்லார் உரை.) பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்ப்பாக்கத்துக்குசசென்ற பெரிய சாலை, இந்த நாளங்காடியின் ஊடே அமைந்திருந்தது. நாளங்காடியின் நடுவிடத்திலே நான்கு தெருக்கள்கூடுகின்ற நாற்சந்தியிலே சதுக்கப் பூதத்தின்கோவில்இருந்தது. சதுக்கப்பூதம், காவிரிபூம்பட்டினத்தின்காவல் தெய்வம் (மதுரைமா நகரத்தின் காவல்தெய்வம் மதுராபதி தெய்வமாகஇருந்ததுபோல) மக்கள் சமூகத்தின் அமைப்பையும் ஒழுங்கையும் அமைதியை யும் கெடுக்கும் தீயொழுக்கம் உள்ளவரைத் தண்டித்துச் சமூகத்தின் அமைப்பை காத்து வந்தது இப்பூதம். தவமறைந்து ஒழுகும் தன்மையிலாளர் அவமறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர் அறைபோகமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக்கைப்படுவோரெனக் காத நான்குங் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கம் என்று சிலம்பு (இந்திரவிழவு 128-134) கூறுகின்றது. இந்தக் காவற்பூதம், இந்திரனுடைய ஆணைப்படி சோழ மன்னனுக்கு உதவியாக நகரத்தைக் காவல் செய்ததாம். இதனை, வெற்றிவேன் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனத் தேவர்கோமான்ஏவலிற் போந்த காவற்பூதத்துக்கடைகெழு பீடிகை என்றுசிலம்பு(இந்திரவிழவூ 65-77) கூறுவது காண்க. மருவூர் மருங்கின் மறங்கொள்வீரரும் பட்டினமருங்கிற் படைகெழு மாக்களும் ஏனைய நகரமக்களும் சதுக்கபூதம்என்னும்தெய்வத்தைப் பயபக்தியுடன்வழிபட்டார்கள். நாளங்காடிக்கு வடக்கே உவவனம் என்னும்பௌத்தப்பள்ளி ஆராமம் இருந்தது அந்தஆராம உவ வனத்திலே கண்ணாடியால் அமைந்த பளிக்கறை மண்டபமும் அதனுள் புத்தபாத பீடிகையும் இருந்தன என்று ‘மணிமேகலை’ யினால் அறிகிறோம். (மணி 3: 62-66., 4: 87-88., 5: 95-97.) துறைமுகம் காவிரிபூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கத்துத் தெற்கே, காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பூம்புகார்த் துறைமுகம் இருந்தது. அந்தத் துறைமுகம் ஆழமும் அகலமும் உடையதாக, மரக்கலங்கள் பாய்களைச் சுருட்டாமலே உள்ளே வந்து தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது. ‘கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅ இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே’ என்று (புறம் 30) உறையூர் முதுகண்ணனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியின் புகார்த்துறை முகத்தைப் பாடுகிறார். (‘பாய் களையாது பரந்தோண்டாது’ என்றதனால்’ துறை நன்மை கூறியவாறாம். பழைய உரை.) இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய் (கப்பல்)கள், கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல, துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்று கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார். ‘வெளில் இளக்கும் களிறு போலத் தீம்புகார்த் திரை முன் றுறைத் தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை மிசைக் கூம்பின் அசைக் கொடியும்’ என்று அப்புலவர் பட்டினப்பாலையில் (172-175 அடி) கூறுகிறார். மருவூர்ப் பாக்கத்துக்குத் தெற்கே புகார்த்துறை முகம் இருந்தது என்று கூறினோம். மருவூர்ப்பாக்கத்தின் தெற்கே ஆற்றங்கரையிலே, துறைமுகத் தின் அருகிலே பண்டகசாலை இருந்தது. இங்கு, ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’ (பட்டினப்பாலை (185-193) என்று பட்டினப்பாலை கூறுகிறது. ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களுக்குச் சோழ மன்னனுடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்டுச் சங்கம் பெறப்பட்டது. இதை, ‘நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி’ என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை 129-135) கூறுகிறார். துறைமுகத்துக்கு அருகிலே வெள்ளிடைமன்றம் என்னும் கோவில் இருந்தது. அம்மன்றத்துத் தெய்வம், துறைமுகத்துப் பண்டகசாலையில் இருந்த பொருள்களை ஒருவரும் களவு செய்யாதபடி காத்து வந்ததாம். ‘வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த வெண்ணுப் பல்பொக் கடைமுக வாயிலுங் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போர் உளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயா துள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்’ என்று இந்த மன்றத்தைச் சிலப்பதிகாரம் (இந்திரவிழவூர் 111-117) கூறுகிறது. துறைமுகத்துக்கு அருகிலே கலங்கரை விளக்கம் அமைந்திருந் தது. வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் இராக்காலத்தில் கடலிலே திசைமாறிப் போகாமல் துறைமுகத்தைக் காட்டுவதற்கு இந்தக் கலங் கரை விளக்கம் உதவியாக இருந்தது. இதை ‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ என்று சிலம்பு (கடலாடு காதை 141) கூறுகிறது. (‘கலங்கரை விளக்கம்’ என்பதற்குத் ‘திக்குத் குறி காட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம்’ என்று அரும்பத உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார். ‘பாடை வேறு பட்டதேயத்து நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.) கடைச்சங்க காலத்திலே, தொண்டை நாட்டின் கடற்கரைத் துறை முகப்பட்டினம் ஒன்றிலே இருந்த ‘உரவுநீரழுவத்து ஓடுகலம் கரையும்’ விளக்குக் கூண்டைக் கூறுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில், ‘வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை.’ (பெரும்பாணாற்றுப்படை 346-351) இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரை: ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி யோங்கின மாடம். தன்னிடத்துச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய மாடம். கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்தை, இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு, உலாவுகின்ற கடற்பரப்பிலே வந்து, நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறோர் துறைக்கண் ஓடுங்கலங்களை இது நந்துறை என்றழைக்கின்ற துறை.’) காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கலங்கரை விளக்கமும் இதுபோன்று அமைந்த செங்கற் கட்டடமாக இருந்திருக்க வேண்டும்.1 இதனால், கலங்கரை விளக்கக் கட்டடம் செங்கல்லினால் அமைக்கப்பட்டுச் சாந்து பூசப்பெற்ற காரைக் கட்டடம் என்பது தெரிகின்றது. எகிப்து நாட்டிலே, நீல நதி, மத்திய தரைக்கடலில் கலக்கிற இடத்திலே அமைந்திருந்த அலெக்சாந்திரியத் துறைமுகத்தில் அமைந்திருந்த கலங்கரை விளக்கம் இங்கு நினைவுறத்தக்கது. சுடுகாடு பிறப்பும் இறப்பும் எல்லா ஊர்களிலும் எக்காலத்திலும் நிகழ்கிற நிகழ்ச்சி. இறந்தவர்களைப் புதைக்கவும் கொளுத்தவும் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தின் சுடுகாடு நகரத்துக்கு வடக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. சுடுகாட்டின் அருகிலே காடமர் செல்வியாகிய கொற்றவையின் கோயில் இருந்தது. மேலும் சுடுகாட்டிலே, வாகை மரத்தின் அடியில் வாகை மன்றமும், விளாமரத்தின் அடியில் வெள்ளில் மன்றமும், இலந்தை மரம் இருந்த இரத்திமன்றமும் வன்னிமரம் இருந்த வன்னிமன்றமும், வெளியான இடத்தில் இருந்த வெள்ளிடை மன்றமும்2 என ஐந்து மன்றங்கள் இருந்தன. சம்பாபதி கோவில் சுடுகாட்டுக்கு அருகில் சம்பாபதி கோவில் இருந்தது. இந்தக் கோவிலுக்குக் குஞ்சரக் குடிகை (குச்சரக் குடிகை) என்னும் பெயர் உண்டு. இங்குச் சம்பாபதி தெய்வம் வழிபடப்பட்டது. சம்பாபதிக் குக் கன்னி, குமரி, முதியாள் என்று பல பெயர்கள் உண்டு. சுடுகாட்டுக்குத் தென்புறத்துச் சுவருக்குத் தென்புறத்தில் (நாளங்காடிக்கு வடக்குப் புறத்தில்) இருந்த உவவனம் என்னும் பௌத்த ஆராமத்துக்கும் சம்பாபதி கோவிலுக்கும் ஒரு வழி இருந்தது. உவவன ஆராமத்தின் மேற்குப் பக்கத்தில் கோட்டைச் சுவரைச் சார்ந்து சிறுவாயில் இருந்தது. அந்த வாயில் வழியாக மேற்குப் பக்கம் சென்றால் சம்பாபதி கோவிலை யடையலாம். உவவனத்துக்குச் சென்ற சுதமதி என்பவள், உவவனத்திலிருந்து இந்த வாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டமாகிய சம்பாபதிக் கோவிலுக்கு வந்தாள் என்று ‘மணிமேகலை’ கூறுகிறதிலிருந்து இதனை யறியலாம். ‘பெருந்தெரு ஒழித்துப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயில் குடபால் சிறுபுழைபோகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்காற் கங்குல் கழியினும் கடுநவை எய்தாது’ என்றும், (சக்கரவாளக்கோட்டம் 21-25) ... .. ... .. ... .. ... .. ... .. ... .. பூம்பொழில் திருந்தெயிற் குடபால் சிறுபுழை போகி மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கட் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறிவியின் ஒருபுடை யிருத்தலும்’ என்றும் மணிமேகலை (துயிலெழுப்பிய காதை 88-93) கூறுவது காண்க. சம்பாபதி கோவிலுக்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் சக்கர வாளக் கோட்டம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தபடியால் சுடுகாட்டுக்கோட்டம் என்று பெயர் வந்தது. ‘இடுபிணக் கோட்டத்து எயிற்புற மாதலிற் சுடுகாட்டுக்கோட்ட மென்றலது உரையார்’ என்று மணிமேகலை (சக்கரவாளக்கோட்டம் 203-204) கூறுகிறது. சம்பாபதி கோவிலின் கோபுரவாயிலின் மேலே சக்கரவாளத்தின் சிற்ப உருவம் அமைக்கப்பட்டிருந்தபடியால், இந்த கோவிலுக்குச் சக்கரவாளக்கோட்டம் என்று பெயர் வந்தது என்று ‘மணிமேகலை’ சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை கூறுகிறது.3 குஞ்சரக்குடிகை என்னும் சம்பாபதிக் கோவிலிலே இரண்டு செங்கற்றூண்களிலே கந்திற்பாவை (கந்து - தூண், பாவை - பதுவை) என்னும் இரண்டு தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. கந்திற்பாவைகளில் ஒன்றுக்குத் துவதிகன் என்றும் மற்றொன்றுக்கு ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்றும் பெயர். இந்தச் தெய்வப் பாவைகள் கடந்தகால நிகழ்ச்சிகளையும் எதிர்கால நிகழ்ச்சிகளை யும் நகரமக்களுக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது. சம்பாபதி தெய்வத்தின் திருவுருவம் ஒன்று, இப்போதைய காவிரிப்பூம்பட்டினத்தின் திருச்சாய்க்காட்டுக் கோவிலில் இருக்கிறது. இந்த உருவம், பிற்காலத்துச் சோழ அரசர் நாட்களில் பஞ்ச லோகத் தினால் செய்யப்பட்ட உருவம். சம்பாபதிக் கோவிலைச் சார்ந்த உலகவறவி என்னும் அம்பலம் இருந்தது. இங்குக் குருடர், செவிடர், முடவர், ஆதரவு இல்லாதார் முதலியவர்களுக்குப் பௌத்த மதத்தார் உடை, உணவு, உறையுள் கொடுத்துப் போற்றினார்கள் என்று மணிமேகலை நூல் கூறுகிறது. ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து மன்றங்கள் இருந்தன. இந்த மன்றங்கள் இப்பட்டினத்தின் சுடுகாட்டில் இருந்த ஐந்து மன்றங்களின் வேறானவை. அவை வேறு இவைவேறு. இந்த ஐந்து மன்றங்களின் பெயர் வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதச் சதுக்கம், பாவைமன்றம் என்பன. இந்த ஐந்து மன்றங்களிலும் ஐந்து பூதங்கள் (தெய்வங்கள்) இருந்து மக்களின் ஒழுக்கம், ஒழுங்கு, நீதி, நியாயம் முதலியவைகளைக் காத்து வந்தன என்று நம்பப்பட்டது. வெள்ளிடை மன்றம் துறைமுகத்துக்கு அருகில் இருந்ததென் பதை முன்னமே கூறினோம். இலஞ்சி மன்றம் இப்பட்டினத்தில் எங்கு இருந்ததென்பது தெரிய வில்லை. இந்த மன்றத்தின் அருகில் இலஞ்சி (தடாகம்) இருந்தது. அதில் நீராடின தொழு நோயாளர் முதலியோர் நோய் நீங்கப்பெற்றனர் என்று கூறப்படுகிறது. நெடுங்கல் மன்றம் இருந்த இடமும் தெரியவில்லை. மயக்க மடைந்தோர், நஞ்சுண்டோர், பேய்பிடித்தோர், பாம்பினால் கடி யுண்டோர் முதலியவர்களின் நோய்களை இந்த மன்றத்திலிருந்த தெய்வம் நீக்கியருளிற்று என்று நம்பப்பட்டது. சதுக்கப்பூதம் என்றும் பூதசதுக்கம் என்றும் பெயர்பெற்ற இடம் மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் நடுவிலே, நாளங்காடி யின் மத்தியில் இருந்தது என்று முன்னமே அறிந்தோம். கூடாவொழுக்கமுள்ள துறவிகள், அலவைப் பெண்டிர், பிறர்மனை நயப்போர், பொய்க்கரி கூறுவோர் முதலியவர்களைத் தண்டித்துச் சமுதாயத்தின் ஒழுங்குமுறையை இப்பூதம் காத்துவந்ததாக நம்பப்பட்டது. பாவை மன்றமும் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. இது நீதிமன்றத்தின் அருகில் இருந்திருக்க வேண்டும். அரசன் கொடுங் கோலாட்சியினால் தீங்கு செய்தபோதும், நீதிமன்றத்தில் அநீதி நிகழ்ந்தபோதும் இம்மன்றத்தில் இருந்த பாவை கண்ணீர் வடித்து அழுது அநீதிகளை உலகத்துக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது. பூஞ்சோலைகள்: காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து பூஞ்சோலைகள் இருந்தன. அவை இலவந்திகை, உய்யானம், உவவனம், சம்பாபதிவனம், கவேர வனம் என்பன. இலவந்திகைச் சோலையும், உய்யானமும் சோழ அரசனுடைய அரண் மனையைச் சேர்ந்தவை. இவைகளில் பொதுமக்கள் போவது இல்லை. காவிரிக் கரையில் அரண்மனையைச் சார்ந்து இவை இருந்தன. ‘கலையி லாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற் கிறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்தி கையின் எயிற்புறம்’ (சிலம்பு : நாடுகாண் 28-31) என்றும், ‘பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்’ (மணிமேகலை : மலர்வளர் 44-46) என்றும் இலவந்திகைச் சோலை கூறப்படுகிறது. உய்யானம் என்னும் பூஞ்சோலை எங்கிருந்தது என்பதும் தெரியவில்லை. ‘மண்ணவர் விழையார் வானவர் அல்லது பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும் வாடா மாமலர் மாலைகள் தூக்கலிற் கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று உய்யா னத்திடை உயர்ந்தோர் செல்லார்’ (மணிமேகலை : மலர்வனம் 48-51) என்று உய்யானத்தைப் பற்றி அறிகிறோம். உய்யானத்தில் இருந்த பூதம் (தெய்வம்), பூதச்சதுக்கத்தில் இருந்த பூதம் (தெய்வம்) அன்று. அது வேறு இது வேறு. உவவனம் : நாளங்காடியின் வடக்குப் பக்கத்தில் சுடுகாட்டு மதிலுக்குத் தெற்கே இது இருந்தது என்று முன்னமே கூறப்பட்டது. இது பௌத்த முனிவர்களின் ஆராமம். பௌத்த பிக்ஷுக்கள் தங்கியிருந்த விகாரை இங்கு இருந்தது. அன்றியும் புத்தருடைய பாதபீடிகை இருந்த பளிக்கறை (கண்ணாடி மண்டபம்) மண்டபம் இங்கு இருந்தது. இந்த உவவனத்தின் மேற்குப் பக்கத்தில் நகரத்து மதில் பக்கமாக இருந்த வாயில் வழியாகச் சென்றால் சம்பாபதி கோவிலுக்குப் போகலாம். உவவனத்தின் இயற்கை வனப்பை மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 159 - 163 அடிகளில் காண்க. இங்கிருந்த புத்தருடைய பாத பீடிகையைப் பற்றிய செய்தியை, மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 61-67 அடிகளில் காண்க. சம்பாதிவனமும் கவேர வனமும் காவிரிப்பூம்பட்டினத்தில் எந்த இடங்களில் இருந்தன என்பது தெரியவில்லை. ‘வெங்கதில் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி யிருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரனாங் கிருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய’ என்று மணிமேகலை (மலர்வனம் 53- 57) கூறுகிறது. புத்தருடைய பழம்பிறப்புகளைக் கூறுகிற புத்த ஜாதகத்தில், அகித்தி ஜாதகத்திலே போதிசத்துவர், அகித்தி முனிவராகப் பிறந்து டமிள (தமிழ்) நாட்டுக் கவீரபட்டினத்தில் ஒரு சோலையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. (கவீரபட்டினம் - காவிரிப்பூம்பட்டினம்.) சிறைக்கோட்டம் : இதுவும் நகரத்தில் எந்த இடத்தில் இருந்தது என்பது தெரிய வில்லை. (நகரத்துக்கு வெளியே இருந்திருக்க வேண்டும்.) குற்ற வாளிகளைச் சிறையில் அடைத்து வைத்த இடம் சிறைக்கோட்டம். காவிரிவாயில்: பட்டினப்பாக்கத்துக் கோட்டையின் மேற்குப்புறத்தில் இருந்த வாயில் இது. இவ்வாயிலிருந்து உறையூருக்குச் செல்லும் பெருவழி காவிரிக்கரை வழியாக அமைந்திருந்தது. இவ்வாயிருக்குப் பக்கத்தில், கோட்டைச் சுவருக்கு வெளியே காவிரி ஆற்றில் ‘திருமுகத்துறை’ இருந்தது. இத்துறையில் மக்கள் நீராடினார்கள். இந்தக் காவிரிவாயிலை, ‘தாழ் பொழிலுடுத்த தண்பதப் பெருவழிக் காவிரிவாயில்’ என்று சிலப்பதிகாரமும் (நாடுகாண் 32, 33) ‘காவிரிவாயில்’ என்று மணிமேகலையும் (சிறை செய். 43) கூறுகின்றன. காவிரிப்பூம்பட்டினம் கடலில் முழுகியதாகக் கூறப்படுகிறது. மணிமேகலை என்னும் கடற்தெய்வத்தின் சாபத்தினால் இப்பட்டினம் கடலில் முழுகியதாக மணிமேகலை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப்பெருக்கினால் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் பட்டினம் முழுவதும் வெள்ளத்தில் முழுகி அழிந்துபோயிற்று என்பது காவியப் புலவனின் கற்பனையேயாகும். ஏனென்றால் கடைச்சங்க காலத்துக்குப் பிறகும் (கி.பி. 200-க்குப் பிறகும்) காவிரிப்பூம்பட்டினம் பேர்போன துறைமுகமாக இருந்தது. கி.பி. 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்துப் பிள்ளையார் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய கப்பல் வாணிகராக இருந்தார் என்று அறிகிறோம். ஆகவே, கடைச்சங்க காலத்திலே பூம்புகார்ப் பட்டினம் கடல்கொள்ளப்பட்டது என்று கருதுவது தவறு. மருவூர்ப்பாக்கம் மிகப்பிற்காலத்தில் கடலில் முழுகியிருக்கக் கூடும். தமிழ்நாட்டின் கிழக்குக்கரையூர்கள் சில, கடல் நீரோட்டத்தின் காரணமாக அழிந்தும் சிதைந்தும் போயின. அவ்வப்போது புயல் காற்றினால் வெள்ளச் சேதமும் நேரிட்டன. இப்போது சிறு தீவாக உள்ள இராமேசுவரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்துடன் இணைந்திருந்தது. பாண்டி நாட்டில் இருந்த பேர்போன கொற்கைத் துறைமுகம், பிற்காலத்தில் உள்நாட்டு பட்டினமாக மாறிவிட்டது. அங் கிருந்து கடல் ஐந்து மைல் அகன்று போய்விட்டதால், கொற்கைத் துறை முகம் பிற்காலத்தில் உள்நாட்டுப் பட்டினமாகிவிட்டது. இவ்வாறு பல மாறுபாடுகள் கடற்கரையோரங்களில் நிகழ்ந்து வந்தது உண்மையே. ஆனால், கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது என்பது உண்மையன்று; அது காவியப் புலவனின் கற்பனையே. ஆனால் அடிக்கடி உண்டாகிற வெள்ளப் பெருக்கினால் காவிரிப்பூம்பட்டினம் துன்புற்றதுபோல, மணிமேகலை காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப் பெருக்கினால் துன்புற் றிருக்கலாம். அவ்வெள்ளப் பெருக்கினால் அதிக சேதமும் ஏற்பட்டிருக் கலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதி கடலில் மறைந்தது பிற்காலத்திலாகும். பிற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தின் கிழக்குப் பகுதி கடலில் மறைந்தது உண்மையே. பிற்காலத்தில் நிகழ்ந்த இதை மணிமேகலை காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதுவது தவறு. காவிரிப்பூம்பட்டினத்துக்குக் காகந்தி என்றும் ஒரு பெயர் உண்டு என்று கூறினோம். திருவேங்கடத்துக்கு அருகில் கிழக்குக் கரையிலே காகந்தி என்று ஒரு நாடு இருந்தது. அது பிற்காலத்திலே கடலில் மூழ்கிப் போயிற்று. அதைக் கடல் கொண்ட காகந்தி என்று சாசனங்கள் கூறு கின்றன. அப்பகுதியை தெலுகு சோடர் (தெலுங்குச் சோழர்) என்பவர் அரசாண்டிருந்ததும் அங்கும் காகந்தி இருந்ததும் ஆராய்ச்சிக்கு உரியன. அந்தக் காகந்தி பவத்திரிக் கோட்டத்தில் இருந்தது. பவத்திரிக் கோட்டத்தின் ஒரு பகுதி கடலில் முழுகி இப்போது பழவேற்காட்டு ஏரி என்று பெயர் பெற்றிருக்கிறது. அடிக்குறிப்புகள் 1. சோழன் கரிகாற் பெருவளத்தானின் காவிரிப் பூம்பட்டினத்தைப் பட்டினப் பாலையில்பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே அச்சோழனின் உறவினனாகிய தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும் பாணாற்றுப்படையைப் பாடினார். தொண்டை நாட்டுத்துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பைக் கூறியது போல காவிரிப் பூம்பட்டினத்தின்கலங்கரை விளக்கின் அமைப்பை இவர் பட்டினப் பாலையில் கூறவில்லை. ஆயினும் பெரும் பாணாற்றுப்படையில் கூறப்பட்ட கலங்கரை விளக்கின் அமைப்பைப் போன்றே பூம்பூகார்ப்பட்டினத்தின் கலங்ரை விளக்கம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதலாம். 2. சுடுகாட்டில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் துறைமுகத்துப் பண்டகசாலைக்கு அருகில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் ஒன்று எனக் கருதுவது கூடாது. இது வேறு அது வேறு சுடுகாட்டில் இருந்த, பிணத்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றம் வேறு பண்டகசாலைக்கு அருகில் இருந்த, பண்டங்களைக் களவாடுவோரை வெளிப்படுத்திய, `உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்’ வேறு. இதனை மணிமேகலை சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை 53, 83, 85, 87, 89, 91 அடிகளால் அறியலாம். 3. சக்கர வாளம் என்பது பௌத்த சமயத்தாரின் `பிரமாண்டம்’ சக்கரவாளத்தின் விவரத்தை `மணிமேகலை’ சக்கரவாளக் கோட்ட முரைத்த காதை 176 - 183 அடிகளிலும், 192 - 202 அடிகளிலும் காண்க. பௌத்த நாடாகிய இலங்கைத் தீவிலே பொலநறுவை என்னும் புலத்தி நகரத்திலே ஒரு பாறைக் கல்லிலே சக்கர வாளத்தின் உருவப்படம் வரையப்பட்டிருக்கிற தென்று இலங்கை ஆர்க்கியாலஜி அறிக்கையொன்று கூறுகிறது. 2. சங்க காலத்து மதுரை கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், மதுரைமா நகரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பது பற்றிச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராய்வோம். மதுரை, பாண்டிய நாட்டின் தலைநகரம். அதற்கு கூடல் என்றும் நான்மாடக் கூடல் என்றும் பெயர்கள் உண்டு. கண்ணபிரான் பிறந்த வடமதுரையி லிருந்து பிரித்து அறிவதற்காக இதனைத் தென்மதுரை என்றும் தக்கிண மதுரை என்றும் கூறுவர். (தலைச் சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்ததும் ஒரு மதுரையே. அந்த மதுரைமா நகரம் கடல் கொண்டுவிட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய இந்த மதுரைமா நகரம் கடைச் சங்க காலத்தில் இருந்த மதுரைமா நகரமாகும். அது இப்போதைய மதுரை அன்று.) கடைச்சங்க காலத்து மதுரைமாநகரம் வைகையாற்றின் தென் கரையில் இருந்தது. மதுரைக்கு மேற்கே பேர்போன திருப்பரங் குன்றமும், திருப்பரங்குன்றத்துக்குக் கிழக்கே மதுரை நகரமும் இருந்தன. இதனை, ‘மாடமலி மறுகிற் கூடற்குடவயிற் ... ... குன்றம்’ என்று திருமுருகாற்றுப்படை (71-77 அடிகள்) கூறுவதிலிருந்து அறியலாம். தாயங்கண்ணார் என்னும் புலவரும், மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்ததைக் கூறுகிறார்: ‘கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய ஒடியா விழவின் நொடியோன் குன்றம்’ (அகம் 149-ஆம் செய்யுள்) என்று கூறுகிறார். மதுரைமா நகரத்தின் தரையமைப்பு தாமரைப் பூவைப் போல அமைந்திருந்தது. தாமரைப்பூ, நந்தியாவட்டப்பூ, சுவஸ்திகம் முதலிய வற்றின் உருவ அமைப்பு போல நகரங்களை அமைப்பது பழைய காலத்து வழக்கம் என்பதைச் சிற்ப சாஸ்திர நூல்களிலிருந்து அறிகிறோம். அந்தப் பழைய வழக்கப்படியே பாண்டிய அரசருடைய மதுரைமா நகரம் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தது. இதைப் பரிபாடற் செய்யுள் கூறுகிறது: ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீருர்: பூவின் இதழகத் தனைய தெருவம் : இதழகத்து அரும்பொகும் டனைத்தே அண்ணல் கோயில்; தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள், தாதுண் பறவை யனையர் பரிசில் மாக்கள்’ என்பது அந்தச் செய்யுள். மாயோனாகிய திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைப் பூவைப்போல வட்ட வடிவமாக மதுரை மாநகரம் அமைந்திருந் தது. தாமரைப் பூவின் இதழ்களைப்போல நகரத்தின் தெருவுகள் அமைந்திருந்தன. தாமரை இதழ்களின் நடுவே இருக்கிற ‘பொகுட்டு’ப் போல பாண்டிய மன்னனுடைய அரண்மனை அமைந்திருந்தது. தாமரைப் பூவிலுள்ள தாதுக்களைப்போல மதுரை மாநகரத்து மக்கள் இருந்தனர். தாமரை மலரின் தேனைக் குடித்து மகிழும் தேனீக்களைப் போல, பரிசு பெற்று வாழும் புலவரும் கலைவாணரும் இருந்தனர் என்பது இந்தப் பாட்டின் கருத்து. (மகத நாட்டின் தலைநகரமாகிய இராசகிருகம் என்னும் நகரமும் மதுரையைப்போலவே தாமரைப் பூவின் அமைப்பாக இருந்ததாம். மகத நாட்டையரசாண்ட உதயணனுடைய தலைநகரமான இராசக் கிருகம் தாமரைப் பூவின் உருவம்போல அமைந்திருந்தது என்று பெருங்கதை’ என்னும் காவியம் கூறுகின்றது. “போகச் சேரி புறவிதழ் ஆக” “பெருங்கடி யாளர் அருங்கடிச் சேரி புறவிதழ் மருங்கிற் புல்லிதழ் ஆக” “பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி புல்லிதழ் பொருந்திய நல்லிதழ் ஆக” “தந்தொழில் திரியாத் தரும நெஞ்சின் அந்தண் சேரி அகவிதழ் ஆக” “கற்றுப் பொருள் தெரிந்த கண்போற் காட்சி அருமதி யமைச்சர் திருமதிற் சேரி மாசில் பைந்தாது சுமந்த மத்தகத் தாசில் பன்மலர் அல்லி யாக” “வாயில் அணிந்த வான்கெழு முற்றத்துக் கோயில் கொட்டை யாகத் தாமரைப் பூவொடு பொலியும் பொலிவிற் றாகி” “இன்பங் கலந்த இராச கிரியம்” என்று பெருங்கதை (மகத காண்டம்) இராசகிரியம் புக்கது கூறுகின்றது.) வட்டவடிமான நகரங்கள் பல பண்டைக்காலத்தில் அமைந் திருந்தன. வட்டவடிமாக இருந்த காரணத்தினாலேயே அவையெல் லாம் தாமரைப் பூவைப்போல இருந்தன என்று கருதக்கூடாது. சோழனுடைய உறந்தையும் (உறையூர்), தொண்டைமானுடைய கச்சியும் (காஞ்சீபுரம்), வட்டவடிவமான கோட்டைக்குள்ளே அமைந்திருந்தன. ஆனால், அக்கோட்டைக்குள்ளே இருந்த தெருவுகள் தாமரைப்பூவின் இதழ்களைப்போல அமைந்திருக்கவில்லை. மதுரை மாநகரத்தின் கோட்டையின் அமைப்பும் வீதிகளின் அமைப்பும் அரண்மனையின் அமைப்பும் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தன. தாமரைப் பூவின் நடுவில் உள்ள ‘கொட்டை’ (பொகுட்டு) போல பாண்டியனுடைய அரண்மனை, நகரத்தின் நடுவிலே இருந்தது. பொகுட்டைச் சூழ்ந்துள்ள தாமரைப் பூவின் இதழ்களைப் போல நகரத்தின் வீதிகள் அமைந்திருந்தன. தாமரைப்பூ வட்ட வடிவமாக இருப்பதுபோன்று, நகரத்தின் கோட்டை மதில்களும் வட்ட வடிவமாக இருந்தன. தாமரை மலர் தண்ணீரில் இருப்பதுபோல, மதுரை மாநகரமும் அகழிக்கு நடுவில் இருந்தது. இந்த மதுரைமா நகரத்தின் சுற்றளவு எத்தனை காதம் என்பது தெரியவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தைப் போல நான்கு காத வட்டகையாக இருந்திருக்கக்கூடுமோ? அகழி: மதுரைமா நகரத்தின் கோட்டை மதிலுக்கு வெளிப்புறத்தில் ஆழமான அகழி, மதிலைச் சூழ்ந்திருந்தது. இது ஆழமும் நீர் நிறைந்ததுமாக இருந்தது. இந்த அகழியை ‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு’ என்று மதுரைக் காஞ்சியும் (அடி 351), ‘குண்டு நீர் வரைப்பில் கூடல்’ என்று புறநானூறும் (செய்யுள் 347) கூறுகின்றன. கோட்டைச் சுவரின் வடக்குப் பக்கத்தில் வைகையாறு, மதில் ஓரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியும் வைகையாற்றுடன் இணைந்திருந்தது. அகழியிலும் ஆற்றிலும் எப்போதும் நீர் நிறைந்து இருந்தது. இதனை, “வந்த மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாஅய் அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு” என்று பரிபாடலும் (12ஆம் பாடல் 9-10 அடி), “வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற் றொன்றறியாத புரிசைசூழ் புனலூரன்” என்று கலித்தொகையும் (67ஆம் பாடல்) கூறுவதிலிருந்து அறியலாம். மதுரைமா நகரத்துக்கு ஆலவாய் என்றும் பெயர் உண்டு. நீர் நிலைக்கு நடுவே இருந்தபடியால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது. ஆல், ஆலம் என்னும் சொல்லுக்கு நீர்நிலை என்பது பொருள். இச்சொல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் முதலிய திராவிட இனமொழிகளில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். (இதுபற்றிய என்னுடைய விரி வான கட்டுரையைக் கலைக்கதிர், செப்டம்பர் 1960, ஆல்-நீர்) காண்க. (பிற்காலத்தில், ஆலவாய் என்பதன் உண்மைப் பொருளை யறியாத புராணிகர், பகைவரால் ஏவப்பட்ட பாம்பு ஒன்று மதுரையை அழிக்க வந்து நஞ்சைக் கக்கியது என்றும் அதனால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் பொருந்தாக் கதையைக் கற்பித்தார்கள்.) காவற்காடு: நீரரணாகிய அகழிக்கு வெளியே நகரத்தைச் சூழ்ந்து காவற்காடு அமைந்திருந்தது. காவற்காட்டுக்கு மிளை என்பது பெயர். மிளைக்காடு முட்புதர்களும் மரங்களும் அடர்ந்து பகைவர் உள்ளே வரமுடியாதபடி இருந்தது. ‘மிளையும் கிடங்கும்’ (சிலம்பு, அடைக்கல - 207) என்றும், ‘கருமிளையுடுத்த அகழி’ (சிலம்பு, புறஞ்சேரி 183) என்றும், “இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர் பரப்பின் வலம்புணர் அகழி” என்றும் சிலம்பு (ஊர்காண் 62-63) கூறுகிறது. (இளை - அரண்காவல். மிளை - அதனைச் சூழ்ந்த காவற்காடு. அரும்பதவுரை.) கோட்டைச்சுவர்: அகழிக்கு உட்புறத்தில் நகரத்தைச் சூழ்ந்து கோட்டைச்சுவர் அமைந்திருந்தது. ‘உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவரணாம் என்றுரைக்கும் நூல்’ என்று திருக்குறள் மதிலரணைப் பற்றிக் கூறுவது போல, இந்த மதில்கள் உயரமும் அகலமும் திண்மையும் கிட்டுதற்கு அருமையுமுடையதாக இருந்தன. இந்தக் கோட்டைச் சுவர்கள் புறமதில் என்றும் அகமதில் என்றும் இரண்டாக அமைந்திருந்தன. சுவரின் மேலே, பகைவரைத் தாக்குவதற்காகப் பலவகையான போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. ‘விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை’ என்று மதுரைக்காஞ்சி (352ஆம் அடி) கூறுகிறது. புறமதின் மேல் வைக்கப்பட்டிருந்த போர்க் கருவிகள் என்னென்ன என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது : ‘மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிற லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில்’ என்று கூறுகிறது (அடைக்கலக் காதை 207 - 216). நகரத்துக்குள்ளே செல்வதற்கு நான்கு வாயில்கள் இருந்தன. அவ்வாயில்களில் வடக்குப் புறவாயில் வையை யாற்றினால் அடை பட்டிருந்தது. ஆகவே கிழக்கு மேற்கு தெற்குப் புறத்து வாயில்கள் மட்டும் போக்குவரத்துக்கு உரியனவாக இருந்தன. கோவலனுடன் மதுரைக்குச் சென்ற கண்ணகியார், கிழக்கு வாயிலில் நுழைந்து கோவலனை இழந்த பிறகு மேற்கு வாயிலின் வழியே வெளிப்போந்தார். ‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென’ (சிலம்பு. கட்டுரை. 182 - 183) மதுரைமா நகரத்தின் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் தொங்கவிடப்பட்டிருந்தன என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. ‘செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர் தேய்த்த போரரு வாயில்.’ (திருமுருகு 67 - 69) “போரை வென்று விரும்பிக் கட்டின சேய் நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கருகே, நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியே விடும்படி, பொருவாரை இல்லையாக் குகையினாலே எக்காலமும் போர்த்தொழிலரிதாகிய வாயில். பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்கு தூக்கின பந்தும் பாவையும்” என்பது நச்சினார்க்கினியர் உரை. (சேர மன்னனுடைய வஞ்சிமா நகரத்துக் கோட்டை வாயிலிலும், மதுரைக் கோட்டையிலிருந்தது போல எந்திரப் பொறிகள் அமைக்கப் பட்டிருந்ததுடன், சிலம்பும் தழையும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன என்று பதிற்றுப்பத்து 6ஆம் பத்து 3ஆம் செய்யுள் கூறுகிறது. ‘தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொடு அணிதழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் கோள்வல் முதலைய குண்டுகண் அகழி வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை’ (5 - 9) ‘சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது ஈண்டுப் பொரு வீருளீரேல் நுங்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடை யினையு மொழித்து. இச் சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவா றென்க. இனி, அவற்றை அம் மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர்.’ பழயவுரை.) மதுரைமா நகரத்தின் கோட்டைவாயிலை யவன வீரர்கள் காவல் புரிந்தனர். ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராதுபுக்கு’ (சிலம்பு, ஊர்காண். 66 67) அரண்மனை: நகரத்தின் நடுமையத்தில் பாண்டிய மன்னனுடைய அரண்மனை, தாமரைப்பூவின் நடுவில் உள்ள ‘கொட்டை’ அல்லது ‘பொகுட்டு’ப் போல அமைந்திருந்தது. இதனை ‘அரும் பொகுட்டனைய அண்ணல் கோவில்’ என்று பரிபாடற் செய்யுள் கூறுகிறது. வீதிகள்: அரண்மனையிலிருந்து வீதிகள் எட்டுத் திசைகளிலும் அமைந் திருந்தன. அரண்மனையைச் சுற்றிலும் வீதிகள் அமைந்திருந்தன. வீதிகளின் அமைப்பு தாமரைப் பூவின் இதழ்களைப் போல அமைந் திருந்தது. கோட்டை வாயிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாகச் சென்ற வீதி அரண்மனைப் பக்கமாக அமைந்திருந்தது. அது போலவே தெற்கிலிருந்து வடக்குப் புறமாகச் சென்ற வீதியும் அரண்மனைப் பக்கமாகச் சென்றது. வடக்குப் பக்கத்தில் மதிலுக்கப்பால் வைகையாறு இருந்தபடியால், அவ்வீதி வடக்குவாயிலோடு நின்று விட்டது. புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் புறஞ்சேரி என்று பெயர் பெற்றிருந்தன. அங்குப் பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர். வயிரம், மரகதம், முத்து, மாணிக்கம், பவழம் முதலிய நவமணிகள் விற்கும் வீதியும், வெள்ளி பொன் நகைகள் விற்கும் வீதியும், அறுவை (ஆடை) கூலம் (தானியம்) முதலியவை விற்கும் வீதிகளும் பலவகை மக்கள் வாழ்ந்த வீதிகளும் இருந்தன. நாளங் காடியும் அல்லங்காடியும் இருந்ததை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. (அடி 430 544). ‘வையங் காவலர் மகிழ்தரு வீதியும்’ (ஊர்காண் 145). ‘எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்’ (௸ 167). ‘அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்’ (௸ 179), ‘நறுமடி செறிந்த அறுவை வீதியும்’ (௸ 207), ‘கூலங் குவித்த கூல வீதியும்’ (௸ 211), ‘பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும்’ (சிலம்பு. ஊர்காண். 211-214) அமைந்திருந்தன. சுருங்கை: வீடுகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீர் நகரத்துக்கு வெளியே போய் அகழியில் விழும்படி சுருங்கைகள் அமைந்திருந்தன. வீடுகளி லிருந்து வெளிப்படும் கழிவு நீர் சேக்கடை வழியாகத் தெருக்களில் அமைந்திருந்த சுருங்கைகளில் சென்று விழுந்தது. அந்தச் சுருங்கை நீர் பெரிய சுருங்கைகளில் கலந்தது. பெரிய சுருங்கைகளிலிருந்து நகரத்துக் கழிவு நீர் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியில் விழுந்தது. அகழியில் கழிவு நீர் விழும் இடம் யானையின் தும்பிக்கை போல அமைந்திருந்தது. ‘நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து கடுமா களிறணத்துக் கைவிடு நீர்போலும் நெடுநீர் மலிபுனல் நீண்மாடக் கூடல் கடிமதில் பெய்யும் பொழுது.’ என்று பரிபாடல் (20. 104-07) கூறுகிறது. “நெடிய பெரிய சுருங்கை நடுவாகிய வழியைப் போந்து பெருந் தன்மை மிக்க புனலைக் கடிமதில் சொரியும்பொழுது, அப்புனல் கடுமா வாகிய களிறுகள் கையை எடுத்துவிடும் நீர்போலும்” என்பது பரிமேழலகர் உரை. நகரத்தில் சேக்கடை நீர் செல்லும் சுருங்கை வெளியே தெரியாதபடி மேற்புறம் மூடி மறைக்கப்பட்ருந்தது. ‘சுருங்கை வீதி’ (சிலம்பு. ஊர்காண். 65) என்பதற்கு, ‘மறைத்துப் படுத்த வீதி வாய்த்தலை’) என்று அரும்பதவுரையாசிரியரும், ‘சுருங்கை - கரந்து படை’ என்று அடியார்க்கு நல்லாரும் உரை எழுதுவது காண்க. சுருங்கைகள் வீதிகளின் ஓரங்களில் அமையாமல், நடுவில் அமைந்திருந்தன போலும். கரந்துபடை என்னும் பொருளுள்ள சுருங்கை என்பது கிரேக்க மொழிச் சொல். கோவில்கள் : ஐயை என்னும் கொற்றவைக்கு மதுரைமா நகரத்திலே கோவில் இருந்தது. (சிலம்பு : கட்டுரை. 107-109, ௸ 125; ௸ 181). மதுரைமா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதிக்கும் ஒரு கோயில் இருந்தது. (சிலம்பு : அழற்படு. 156, கட்டுரை 1-13) மதுராபதிக்கு மதுரைமா தெய்வம் என்னும் பெயர் உண்டு (சிலம்பு: கட்டுரை 177) சிவபெருமான், திருமால், பலதேவன், முருகன் முதலிய தெய்வங்களுக்கும் மதுரையில் கோவில்கள் இருந்தன. ஜைன பௌத்தப் பள்ளிகளும் இருந்தன. ‘நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்’ என்று சிலம்பு (ஊர்காண். 7-11) கூறுகின்றது. சிவபெருமான் கோவிலில் வெள்ளியம்பலம் இருந்தது. ‘அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்’ என்று சிலம்பு (பதிகம் 39-41) கூறுகிறது. இந்த வெள்ளியம்பலத்திலே பெருவழுதி என்னும் பாண்டியன் துஞ்சினான் என்றும், ஆனதுபற்றி அப்பாண்டியன் ‘வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி’ என்று பெயர் பெற்றான் என்றும் புறநானூறு (58ஆம் செய்யுள்) கூறுகிறது. ‘திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமு மவரு மோராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியும்’ என்று மதுரைக்காஞ்சி (461-467), மதுரையில் பௌத்த பள்ளி இருந்ததைக் கூறுகின்றது. சமணப் பள்ளி (ஜைனப் பள்ளி) இருந்ததையும் கூறுகின்றது: ‘வண்டுபடப் பழுதிய தேனார் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமு நிலனுந் தாமுழு துணரும் சான்ற கொள்கைச் சாயா யாக்கை யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந் தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்பப் மேக்குயர்ந் தோங்கி யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்’ (மதுரைக்காஞ்சி 475 - 487) என்று மதுரைக்காஞ்சி கூறுகின்றது. சிந்தாதேவி கோவில் என்னும் கலைமகள் கோவிலும் மதுரையில் இருந்தது. இது பௌத்தப் பள்ளியைச் சார்ந்து இருந்தது. ‘இருங்கலை நியமத்து தேவி சிந்தாவிளக்கு’ என்றும், ‘சிந்தா தேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கு நாமிசைப் பாவை’ என்றும் மணிமேகலை (பாத்திர மரபு 10-11, 17-18) கூறுகின்றது. ஆபுத்திரன் என்பவன், ‘தக்கிண மதுரை தான்சென் றெய்தி சிந்தா விளக்கின் செழுங்கலை நியமம்’ சேர்ந்தான் என்று மணிமேகலை (13 ஆபுத்திரன் திறம் (105-108) கூறுகின்றது. உய்யானம்: உய்யானம் என்னும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. இது அரசனுக்கு உரிய பூங்கா. அரண்மனையைச் சார்ந்து இருந்தது. பெருந்துறை: வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகரத்துக்குப் போக ஆற்றில் பாலம் அமைந்திருக்கவில்லை. ஆற்றைக் கடக்க ஓடங்கள் இருந்தன. இந்த ஓடங்களின் முன்புறத்தில் யானை முகம், குதிரை முகம், சிங்க முகங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. ஓடங்களில் ஏறி ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு மக்கள் சென்றனர். ‘பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும் அரிமுக வம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை’ என்று சிலம்பு (புறவஞ்சி : 176 - 78) கூறுகிறது. புறஞ்சேரி : கோட்டை மதிலுக்கும் காவற் காட்டுக்கும் வெளியே புறஞ்சேரி இருந்தது. புறஞ்சேரியில் தவசிகள் மட்டும் தங்கியிருந்தார்கள். ‘அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் புறஞ்சிறை மூதூர்’ என்று சிலம்பு (புறஞ்சேரி. 195 - 196) கூறுகிறது. மதுரை நகரம் எறிந்ததா? மதுரைமா நகரத்தைக் கண்ணகியார் எரியூட்டி அழித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பலரும் அப்படித்தான் கருதுகிறார்கள். நகர் அல்லது நகரம் என்பதற்குப் பட்டணம் என்றும் அரண்மனை என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. நகரம் எரியுண்டது, *** 12. வஞ்சிக் கருவூர் சங்க காலச் சேரநாட்டின் தலைநகரம்* சங்க காலத்துச் சேரநாடு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தச் சேரநாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்று பெயர் பெற்றி ருந்தது. வஞ்சி நகரத்துக்குக் கருவூர் என்று இன்னொரு பெயரும் வழங்கியது. வஞ்சிக் கருவூர் சேரநாட்டிலே மேற்குக் கடற்கரை ஓரத்தில் சுள்ளியாற்றின் கரைமேல் இருந்தது. அந்தக் காலத்திலேயே கொங்கு நாட்டின் தலைநகரமும் வஞ்சி என்றும் கருவூர் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிளைனி என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ஒரு கருவூரைக் குறிப்பிடுகிறார். அந்தக் கருவூரை அவர் கரவ்ரா என்று கூறுகிறார். அந்தக் கருவூர் கடற்கரைக்கு அப்பால் உள்நாட்டிலே இருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறுகிற கருவூர், கொங்கு நாட்டுக் கருவூராகும். கொங்கு நாட்டுக் கருவூர் இப்போது திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் கரூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. பிளைனி கூறுகிற கருவூர் ஒருவேளை சேர நாட்டுக் கருவூராகவும் இருக்கக் கூடும். எப்படியென்றால், சேரநாட்டுக் கருவூர் முசிறித் துறைமுகத் துக்குக் கிழக்கே சிறிது தூரத்தில் உள்நாட்டில் இருந்தது. ஆகையால், பிளைனி கூறுகிற கரவ்ரா என்னும் கருவூர் சேரநாட்டுக் கருவூரா அல்லது கொங்கு நாட்டுக் கருவூரா என்பதை அறுதியிட்டுக் கூற முடிய வில்லை. கருவூர் என்னும் பெயரோடு இரண்டு ஊர்கள், சேர நாட்டில் ஒன்றும், கொங்கு நாட்டில் ஒன்றும் இருந்தன. இரண்டு கருவூர்கள் இருந்தன என்பதையறியாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்தார்கள். அவர்களில் சிலர், கொங்கு நாட்டில் உள்ள கரூரே, சேர நாட்டின் தலைநகரம் என்று கூறினார்கள். வேறு சிலர், சேரநாட்டுத் தலைநகரமான கருவூர் சேர நாட்டிலே மேற்குக் கடற்கரையையடுத்து இருந்தது என்று கூறினார்கள். ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதின திரு. கனகசபைப்பிள்ளை, வஞ்சிக் கருவூர் சேரநாட்டில் இருந்தது என்று அந்நூலில் எழுதினார். வேறு சில அறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். கொங்கு நாட்டுக் கருவூரே சேரர்களின் தலைநகரம் என்பதை நிலைநாட்டுவதற்காகத் திரு. ரா. இராகவையங்கார் ‘வஞ்சிமாநகர்’ என்னும் நூலை எழுதினார். இந்த நூல் தெளிவு இல்லாமல் படிப்பவருக்குக் குழப்பத்தையும் ஐயத்தையும் மேன்மேலும் கிளப்பிவிட்டது. இவரை ஆதரித்துத் திரு.மு. இராகவையங்கார் தாம் எழுதிய ‘சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலில் எழுதினார்கள்.1 சேரநாட்டை அரசாண்ட சேரமன்னர்களின் தலைநகரம், சேர நாட்டிலே முசிறி துறைமுகத்துக்குக் கிழக்கே இருந்தது. அதற்கு வஞ்சி நகரம் என்றும் கருவூர் என்றும் பெயர்கள் வழங்கின. சேர மன்னர், தங்களுடைய சேரநாட்டுக்குக் கிழக்கேயுள்ள கொங்கு நாட்டைக் கைப் பற்றி அந்நாட்டையும் அரசாண்டார்கள். அப்போது அவர்கள் கொங்கு நாட்டின் தலைநகரத்துக்குத் தங்களுடைய தலைநகரமான வஞ்சிக் கருவூரின் பெயரையே சூட்டினார்கள். ஆகவே, சங்க காலத்திலேயே சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி (கருவூர்) என்னும் பெயருள்ள இரண்டு ஊர்கள் இருந்தன.2 இந்த வரலாற்று உண்மையை அறியாதபடியால், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள், கருவூர் (வஞ்சி) பற்றி இருவேறு கருத்துக்களைக் கூறி விவாதம் செய்தார்கள். இரண்டு வஞ்சிமா நகரங்களையும் (கருவூர்களையும்) சங்க நூல்கள் கூறுகின்றன. இடைக்காலத்தில் சேரநாட்டு வஞ்சிக் கருவூர் என்னும் பெயர் மறைந்து, அஞ்சைக்களம் என்றும் கொடுங்கோளூர் என்றும் பெயர் பெற்றது. பிற்காலத்தில், அஞ்சைக்களமும் (கொடுங்கோளூரும்) மறைந்து போயிற்று. சங்க காலத்தில் சேரநாட்டின் தலைநகரமாக இருந்த வஞ்சிக் கருவூரின் அமைப்பு, எப்படி இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம். இந்த ஆய்வுக்குப் பேருதவியாக இருப்பவை சங்க நூல்களே. வஞ்சிமா நகரத்தின் அமைப்பைக் கூறுவதற்கு முன்பு சேரநாட்டின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அக்காலத்தில் குடகடல் என்று குறிப்பிடப்பட்ட இப்போதைய அரபிக்கடல், சேர நாட்டின் மேற்கு எல்லையாக இருந்தது. சேரநாட்டின் கிழக்கு எல்லை சையமலைத் தொடர்களாகும். சையமலைத் தொடர் இக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்னும் பெயர் பெற்றுள்ளன. அரபிக் கடலுக்கும் சையமலைக்கும் இடையேயுள்ள சேரநாடு, அகலம் குறைந்தும் வடக்குத்தெற்காக நீண்டும் உள்ளது. கடலுக்கும் மலைக்கும் இடையேயுள்ள அகலம், ஐம்பது மைலுக்குள்ளாகவே உள்ளது. அயிரிமலையும் பெரியாறும் சேரநாட்டின் கிழக்கு எல்லையாக இருந்தது சையமலைத் தொடர் என்று கூறினோம். சையமலைத் தொடரில் உள்ள ஒரு மலைக்கு அயிரிமலை என்பது பெயர். அயிரிமலை மேல் பேரியாறு (பெரியாறு) தோன்றிப் பாய்ந்தது. அந்த இடத்தில், அந்த ஆற்றுக்கு அயிரியாறு என்பது பெயர். அயிரிமலைமேல் அயிரியாறு தோன்றிய இடத்துக்கு அருகில் கொற்றவை கோயில் இருந்தது. அந்த கொற்றவைக்கு அயிரிக் கொற்றவை என்பது பெயர். அயிரிக் கொற்றவை சேர அரசர்களின் ........... அகநானூறு 177-ம் பாடலிலும் (அகம். 177. 11), 253-ம் பாடலிலும் (அகம். 253. 20) கூறப்படுகிற அயிரை ஆறு வேறு. அந்த அயிரையாறு எருமை நாட்டில் (மைசூர் நாட்டில்) இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற அயிரை ஆறு, சேரநாட்டு அயிரிமலைமேல் தோன்றி சேரநாட்டில் பாய்ந்த பெரியாற்றின் வேறு பெயர்.4 அயிரிமலைமேல் தோன்றி, அம்மலைமேல் அயிரியாறு என்று பெயர் பெற்ற ஆறு, தரையில் இழிந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் விழுந்தது. தரையில் பாய்ந்தபோது அந்த ஆற்றுக்குப் பேரியாறு என்று பெயர். இதைப் பெரியாறு என்றும் வழங்குவர். பெரியாற்றுக்குச் சுள்ளி ஆறு என்னும் பெயர் உண்டு.4 பெரியாறு வரலாற்றுச் சிறப்புடையது. பெரியாறு மலைமேலிருந்து தரையில் இழிந்து சம நிலத்தில் பாய்கிற இடத்தில், சேரன் செங்குட்டுவன் ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் பாசறை அமைத்து, சுற்றத்தோடு, அங்குத் தங்கியிருந்து வேனிற் காலத்தைக் கழித்தான். இந்தச் செய்தியைச் செங்குட்டுவனைப் பாடிய பரணர் கூறுகிறார்: பல்பொறிமார்ப! நின்பெயர் வாழியரோ நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே5 வேனிற்காலத்தில் பெரியாற்றங்கரையில் செங்குட்டுவன் தங்கியிருந்த காலத்தில், அவனுடைய இளவலான இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் அந்த இடத்துக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு வருவது வழக்கம். ஓராண்டு செங்குட்டுவன் மலையடி வாரத்துக்குச் சென்று தங்கியிருந்தபோது குன்றக் குறவரும் சீத்தலைச் சாத்தனாரும் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் செய்தியைக் கூறினார்கள்.6 இந்தச் செய்தியை யறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்கு பத்தினிக் கோட்டம் அமைக்க எண்ணினான்.7 பெரியாறு சேரநாட்டில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் விழந்தது. பெரியாறு கடலில் கலந்த இடத்தில் முத்துச்சிப்பிகள் உண்டாயின. முத்துச் சிப்பியிலிருந்து முத்துக்கள் கிடைத்தன. இங்கு உண்டான முத்துக்களைக் கௌர்ணேயம் என்று கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் கூறுகிறது.8 வடமொழி அர்த்த சாத்திரத்துக்குப் பழைய தமிழ் மலையாள உரை ஒன்று உண்டு. அந்த உரை இந்த முத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறது. அதன் வாசகம் இது. “கௌர்ணேய மாவிது மல (மலை) நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணியாற்றிலுள வாமவு.” இதில் முரசி என்பது முசிறிப்பட்டினம். இதைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஆனால், சேரநாட்டு முத்தைப் பற்றிச் சங்க நூல்களில் காணப்படவில்லை. கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் இதைக் கூறுகிறது. பெரியாற்றுக்குச் சுள்ளியாறு என்று தமிழில் வேறு பெயர் இருந்ததையறிவோம். சூர்ண்ணி ஆறு என்னும் வடமொழிப் பெயர், சுள்ளி என்னும் சொல்லிலிருந்து உண்டானது போலும். சுள்ளி என்னும் பேரியாறு கடலில் கலந்த புகர் முகத்தில் ஆற்றின் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் முசிறி என்னும் பேர்போன துறை முகப்பட்டினம் இருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிரிஸ் என்றும், வடமொழிக்காரர் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள். வஞ்சிமாநகரம் இப்போது நமது ஆராய்ச்சிக்குரிய வஞ்சி நகரத்துக்கு வருவோம். வஞ்சி மாநகரம் கரூவூர் என்றும் பெயர் பெற்றிருந்ததை முன்னமே அறிந்தோம். சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்த இந்த வஞ்சி மாநகரம் முசிறித் துறைமுகத்துக்குக் கிழக்கே பேரியாற்றின் வடகரை மேல் இருந்தது. வஞ்சி நகரத்தின் அமைப்பைப் பெரிதும் மணிமேகலை காவியத்திலிருந்தும் சிலப்பதிகாரக் காவியத்திலிருந்தும் அறிகிறோம். சுள்ளியாற்றின் வடகரைமேல் கிழக்கு மேற்காக, நீண்ட சதுரமாக அமைந்திருந்த வஞ்சிமாநகரம் பெரிய நகரமாகப் பரந்திருந்தது. இந்த நகரத்திலே வழக்குரை மன்றம், பொதியில் சதுக்கம், செய்குன்று, பூங்கா, அறச்சாலை, நீர் நிலைகள், சிவபெருமான் கோயில், திருமால் கோயில், பௌத்த சமணப்பள்ளிகள் முதலானவை இருந்தன.9 தெருக்கள் கிழக்கு மேற்காகவும் வடக்குத் தெற்காகவும் அமைந் திருந்தன. நகரத்தின் மையத்தில் அகலமும் நீளமும் உள்ள பெரிய நெடுஞ்சாலை கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலை இந்த நகரத்திலிருந்து முசிறித் துறைமுகப் பட்டினத்திற்குச் சென்றது. நகரத்துத் தெருக்களில் பலவகையான தொழிலாளர்களும் வசித் திருந்தனர். பலவகைப் பொருள்கள் விற்கப்பட்ட கடைத்தெருக்கள் இருந்தன. நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்கள் இருந்தன. மதிலைச் சார்ந்திருந்த தெருக்களில் மீன், உப்பு, கள், இறைச்சி, அப்பம், பிட்டு முதலான பொருள்களை விற்கும் வாணிகர் இருந்தார்கள்.10 இந்தத் தெருக்களை அடுத்து, மட்பாண்டம் செய்வோர், செம்பு பித்தளை வெண்கலப் பாத்திரம் செய்வோர், இரும்புக் கருவிகளைச் செய்வோர், பொன் வெள்ளி நகை செய்வோர், மரத் தொழில் செய்வோர், கட்டட வேலை செய்வோர், தோல் கருவிகள் செய்வோர், துணி தைப்போர் முதலான தொழிலாளிகள் குடியிருந்த தெருக்கள் இருந்தன.11 மாலைகட்டுவோர் இசைவாணர் சங்குவளை அறுப்போர் நடன ........... பொன்வாணிகர் முதலானோர் இருந்த வீதிகளும் இருந்தன.13 அமைச்சர், அரச ஊழியர், அரண்மனை ஊழியர் முதலானோர் வீதிகளும் குதிரைப் பந்தி, யானைப்பந்தி முதலான இடங்களும் இருந்தன.14 வீடுகளில் இருந்து வெளிப்படும் கழிவுநீர் சாக்கடைகள் வழியாகச் சுருங்கைகளில் ஓடி நகரத்துக்கு அப்பால் நகரத்தைச் சூழ்ந்திருந்த அகழிகளில் விழுந்தன.15 அரண்மனைகள் சேரமன்னர்களின் அரண்மனைகள் வஞ்சிமா நகரத்தின் நடுவிலே அமைந்திருந்தன. ஒன்று, ‘பொன் மாளிகை’ என்று பெயர் பெற்றிருந்தது. ‘கொடிமதில் மூதூர்நடுநின்றோங்கிய தமனிய மாளிகை’ 16 (தமனியமாளிகை-பொன்மாளிகை) இந்தப் பொன் மாளிகையின் நிலா முற்றத்தில் இருந்து, பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தைச் செங்குட்டுவனும் அவனுடைய அரசியும் கண்டு மகிழ்ந்தார்கள்.17 இந்தப் பொன்மாளிகையிலேதான், சேர அரசர் அரசியல் நடத்திய ‘வேத்தியல் மண்டபம்’ இருந்தது.18 அரண் மனைக்கு அருகிலேயே சிவபெருமான் கோயிலும் அறிதுயில் அமர்ந்தோன் (திருமால்) கோயிலும் இருந்தன.19 பொன்மாளிகைக்குத் தெற்கே பேரியாற்றின் கரைமேல் இன்னோரு மாளிகை இருந்தது. அதற்கு ‘வெள்ளிமாடம்’ என்பது பெயர்.20 இந்த வெள்ளி மாளிகை இலவந்திகைச் சோலையில் அமைந் திருந்தது.21 ‘விளக்கு இலவந்தி வெள்ளிமாடம்’. இலவந்திகைச் சோலைக்கு நீராவிச் சோலை என்றும் பெயருண்டு. இலவந்திகை அல்லது நீராவிச் சோலை அரச குடும்பத்துக்குரிய சோலை. அதில், அவர்களைத் தவிர ஊர்ப் பொதுமக்கள் நுழையக் கூடாது. வெள்ளி மாடத்தில் சேர அரசரின் குடும்பம் வாழ்ந்து வந்தது. செங்குட்டுவன், இளவேனிற் காலத்தில், மலையிலிருந்து பெரியாறு இழிந்த இடத்திற்குச் சென்றபோது, வெள்ளி மாடத்திலிருந்து புறப்பட்டுப் போனான்.22 இதுகாறும் நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி நகரத்தைச் சூழ்ந்திருந்த கோட்டை மதில்களை பற்றிப் பார்ப்போம். கோட்டை மதில்கள் வஞ்சிமா நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்களும் அகழியும் காவற்காடும் இருந்தன. கோட்டை மதில் காவல் உடையதாக இருந்தபடியால் ‘கடிமதில்’ என்று கூறப்பட்டது.23 மதிலைச் சூழ்ந்து, மதிலுக்கு வெளியே அகழி இருந்தது. அகழியில் மீன்களும் முதலை களும் இருந்தன; தாமரை அல்லி முதலான நீர்ப்பூக்களும் இருந்தன.24 நகரத்தில் இருந்து தூம்புகளின் வழியாகவும் சுருங்கைகளின் வழியாக வும் வந்த கழிவுநீர் அகழியில் வந்து விழுந்தது.25 (சங்க காலத்து மதுரை நகரத்தில், கழிவு .......... சுகாதார அமைப்போடு இருந்ததை அறிகிறோம். வஞ்சிமா நகரத்தின் தெற்கே சுள்ளியாறு (பேரியாறு) பாய்ந்தபடியால் அந்த ஆறே அகழியாக அமைந்திருந்தது. மற்றக் கிழக்கு மேற்கு வடக்குப் பக்கங்களில் கோட்டைச் சுவரைச் சூழ்ந்து அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. (தரைப்படம் காண்க). அகழிக்கு உள்பக்கத்தில் நகரத்தைச் சூழ்ந்து மதிற் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்கள் புற மதில்களாகும். இந்தப் புறமதில்களின் மேலே போர்க் கருவிகளும் இயந்திரப் பொறிகளும் வைக்கப்பட்டு காவலுடையதாக இருந்தன.26 அகழி சூழ்ந்த கோட்டைமதிலின்மேல் போருக்குரிய எந்திரக் கருவிகள் வைக்கப்பட்டிருப்பதைப் பதிற்றுப்பத்து ஆறாம் பத்தும் கூறுகிறது. எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் கோள்வன் முதலைய குண்டுகண் அகழி வானுறவோங்கிய வளைந்துசெய் புரிசை 27 இந்தக் கோட்டைச் சுவரின் வாயிலின் மேல் சிலம்பும் தழையும் தொங்க விடப்பட்டிருந்தன. ‘செம்பொறிச் சிலம்பொடு அணி தழை தூங்கும்.28 இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: ‘சிலம்பும் தழையும் புரிசைக் கண்தங்கினவென்றது ஈண்டுப் பொருவீருளரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமின் என அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க. இனி அவற்றை அம்மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர். சங்க காலத்து மதுரைக் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் கட்டித் தொங்விடப் பட்டிருந்தன29 என்பது இங்கு நினைவுகூரத்தகக்து. வஞ்சிமாநகரத்தின் புறமதிலுக்கு உள்ளே மிளைக்காடு (காவற் காடு) இருந்தது. புறமதில்களைச் சூழ்ந்திருந்த மிளைக்காட்டுக்கு அப்பால் உள்மதில்கள் இருந்தன. உள்மதில்கள் வெண்சுதை பூசப் பெற்று வெள்ளிக்குன்று போலக் காணப்பட்டன.30 இதனால் வஞ்சி மாநகரத்தின் கோட்டைச் சுவர்கள் அகமதில் என்றும் புறமதில் என்றும் இரண்டு மதிற்சுவர்களைக் கொண்டிருந்ததை யறிகிறோம். கோட்டைச் சுவர்களின் மேலே வாயிலுக்குமேல் கொடிகள் பறந்தன. நகரத்துக் குள்ளே போவதற்கு வாயில்கள் இருந்தன. குணவாயிலும் குடவாயிலும் நகரத்துக்கு மத்தியில் அகலமான நெடுஞ்சாலையொன்று கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சென்றது. அந்த நெடுஞ்சாலை கோட்டையின் கிழக்கு வாயிலிருந்து மேற்கே நகரத்தின் மத்தியில் அரண்மனைப் பக்கமாகச் சென்று குடவாயிலைக் கடந்து மேற்கே கடற்கரைப் பக்கத்தில் ........... கோட்டையின் மேற்கு வாயிலுக்குக் குடவாயில் என்று பெயர். நகரத்தின் நடுமையத்தில் அரண்மனைக்கு எதிராக ஓர் அகன்றசாலை வடக்குப் பக்கமாகச் சென்று வடக்கு வாயிலைக் கடந்து சென்றது. கோட்டையின் குணவாயிலுக்கு அருகில், கோட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சோலை இருந்தது. அங்குப் பலசமயத்துத் துறவிகள் தங்கியிருந்தனர். சைவ வைணவக் கோயில்களும் பௌத்த சமணப் பள்ளிகளும் ‘நற்றவ முனிவரும் கற்றடங்கினவரும்’ மதிலுக்கு வெளியேயிருந்த சோலையில் இருந்தனர்.31 இந்த இடத்துக்குக் குண வாயிற் கோட்டம் என்பது பெயர். இந்தக் குணவாயிற் கோட்டத்தில் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகள், துறவு பூண்டுத் தங்கியிருந்தார்.32 குணவாயில் கோட்டத்தைப் ‘பகல் செல்வாயில்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.33 (பகல் செல் வாயில்-சூரியன் போகிற வழி; கிழக்குத்திசை. குணவாயில் - கிழக்கு வாயில்-குணக்கு-கிழக்கு) சங்க காலத்துக்குப் பிறகு, முசிறித் துறைமுகப்பபட்டினமும் வஞ்சி மாநகரமும் மறைந்துபோன பின்னரும் குணவாயிலும், குணவாயிற் கோட்டமும் அழியாமல் இருந்தன. பிற்காலத்தில் மலையாளிகள் குணவாயிற் கோட்டத்தை ‘த்ருக்கணா மதிலகம்’ என்று கூறினார்கள். இது, திருக்குண மதிலகம் என்பதன் சிதைவு. ‘த்ரு’ என்பது திரு என்னும் சொல்லின் சிதைவு. ‘கணா’ என்பது குண என்பதன் சிதைவு. மதிலகம் என்பது கோட்டை மதில் உள்ள இடம் என்னும் பொருளுள்ளது. வஞ்சி நகரம் அழிந்துபோன பிறகு, அதன் பகுதியாக எஞ்சியிருந்த குண வாயிலும் அதன் அருகில் இருந்த கோட்டமும் ‘த்ருக்கணா மதிலகம்’ என்று மலையாளிகளால் கூறப்பட்டன. இந்த இடத்தைப் பற்றி இக்காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து கட்டுரை எழுதியுள்ளனர்.34 குணவாயில் கோட்டத்தில் பலசமயக் கோயில்களும் பல சமயத்துத் துறவிகளும் சமயத் தத்துவங்களைக் கற்ற சமயச் சான்றோர்களும் இருந்தனர். இங்கிருந்த சமயவாதிகளிடத்தில் மணிமேகலை சமயக் கணக்குகளை (சமயத் தத்துவங்களைக்) கேட்டறிந்தாள் என்பதை மணிமேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். மணிமேகலை 27-ஆம் காதையின் தலைப்புக்கு விளக்கம் கூறுகிற கொளு, ‘வஞ்சிமா நகர்ப்புறத்துச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட பாட்டு’ என்று கூறுகிறது. இதனாலே, குணவாயிற் கோட்டத்தில் இருந்த பல சமயவாதி களிடத்தில், அவள் பல்வேறு சமயக் கொள்கைகளைத் தெரிந்து கொண்டாள் என்பது விளங்குகிறது. குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலேயே, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்தான் என்பதை மணி மேகலையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தில் முழுகிப் போனதை மணிபல்லவதீவில் கேள்விப்பட்ட மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போகாமல் நேரே வஞ்சிமா நகரத்துக்கு ......... சேரன் செங்குட்டுவன் எடுத்திருந்த பத்தினிக் கோட்டஞ் சென்று வணங்கவேண்டும் என்பது அவளுக்குத் தோன்றிய ஆர்வமாகும். அவள் நேரே பத்தினிக் கோட்டஞ் சென்று கண்ணகியின் படிவத்தை வணங்கினாள் என்று மணிமேகலை காவியங் கூறுகிறது. கண்ணகி யின் படிவத்தை வணங்கின பிறகு, மணிமேகலை நகரத்துக்குள் சென்றாள் என்றும், சென்றவள் தற்செயலாக நகரத்தின் குடவாயி லண்டைத் தன்னுடைய பாட்டனான மாசாத்துவானைக் கண்டனள் என்றும் மணிமேகலை காவியம் கூறுகிறது. இவளுடைய பாட்டனான மாசாத்துவான், கோவலனும் கண்ணகியும் இறந்தபிறகு வாழ்க்கையை வெறுத்துத் துறவுபூண்டு வஞ்சிமாநகரத்தில் இருந்த பௌத்த விகாரை யில் தங்கியிருந்தான். இந்த பௌத்தவிகாரை வஞ்சி நகரத்தின் மேற்கு வாயிலருகில் இருந்தது. மணிமேகலை, குணவாயிலில் (கிழக்கு வாயிலில்) நுழைந்து நகரத்துக்குள் சென்று, மேற்கு வாயிலண்டை தன்னுடைய பாட்டனைக் கண்டாள் என்று தெரிகிறது. மணிமேகலை காவியம் 26-வது காதையின் தலைப்புக்கு விளக்கங் கூறுகிற அதன் கொளு, ‘மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு’ என்று கூறுகிறது. இதிலிருந்து, கண்ணகி கோட்டம் நகரத்துக்கு வெளியே (கோட்டை மதிலுக்கு வெளியே) இருந்ததென்பது திட்டமாகத் தெரிகிறது. குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலே, அமைக்கப்பட்டிருந்த பத்தினிக் கோட்டத்துக்குப் பக்கத்தில் வைதிக மதத்தவரின் வேள்விச் சாலை இருந்தது. பத்தினித் தெய்வம் மன்னர்களுக்கு வரங்கொடுத்த பிறகு, செங்குட்டுவன் மன்னர்களுடன் மாடலமறையவனுடனும் வேள்விச் சாலைக்குச் சென்றனன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.35 செங்குட்டுவன் பத்தினிக் கோட்டத்தைவிட்டு வேள்விச் சாலைக்குப் போன பிறகு, குணவாயிற் கோட்டத்திலிருந்த இளங்கோ அடிகள் பத்தினிக் கோட்டஞ் சென்றார்.36 இவற்றிலிருந்து குணவாயில் கோட்டத்துக்கு அருகிலேயே பத்தினிக் கோட்டமும் வேள்விச் சாலையும் இருந்தன என்பது தெரிகின்றன. குணவாயில் கோட்டத்துக்கு அருகில், கோட்டை வாயிலுக்கு வெளியே, அரசாங்க மாளிகையொன்று இருந்தது. இது வேள் ஆவிக்கோ மாளிகை என்று பெயர் பெற்று இருந்தது. வேளாவிக் கோ மாளிகை, நீர் சூழ்ந்த பொழிலின் நடுவிலே அமைந்திருந்தது. பேரிசைவஞ்சி மூதூhப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக் கோ மாளிகை என்று இதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.37 வேளாவிக்கோ மாளிகை, அரசாங்கத்து விருந்தினர் வந்தால் அவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது போலும். ........... கோட்டத்தை வணங்கின பிறகு, அங்கே குணவாயிற் கோட்டத்திலிருந்த சமயவாதிகளின் சமயக் கணக்குகளைக் கேட்ட மணிமேகலை, கிழக்கு வாயிலின்வழியே நகரத்துக்குள் சென்று மேற்கு வாயிலருகிற் சென்றபோது தன்னுடைய பாட்டனைக் கண்டாள். அவனுடைய முன்னோர்களில் ஒருவன் அந்த இடத்தில் பௌத்தச் சயித்தியம் ஒன்றைக் கட்டியிருந்தான். அந்தச் சயித்தியம் வானளாவி உயர்ந்து வெண்சுதை பூசப்பெற்றிருந்தது. அந்தப் புத்த சயித்தியத்தைக் கட்டினவன், கோவலனுக்கு முன்பு (ஒன்பது தலைமுறைக்கு முன்னர்) இருந்தவன். அவனும் கோவலன் என்று பெயர் பெற்றிருந்தான். கோவலனுடைய தந்தையான மாசாத்துவான் பௌத்த பிக்குவாகத் துறவுபூண்டு இந்தச் சயித்தியத்துக்கு வந்திருந்தான். இவனை மணிமேகலை கண்டு வணங்கினபோது இச் செய்திகளையெல்லாம் அவன் அவளுக்குக் கூறினான்.38 பிறகு, மணிமேகலை வஞ்சி மாநகரத்தின் மேற்கு வாயில் பக்கத்திலிருந்து ஆகாயவழியே பறந்து காஞ்சிபுரத்துக்குச் சென்றாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. இது ஏற்கத்தக்கது அன்று. காவியப் புலவர் ஏன் இப்படி கற்பனை செய்தார் என்பதை இக்கட்டுரையாளர் எழுதிய ‘மணிமேகலையின் விண்வழிச் செலவு’ என்னும் கட்டுரையில் காண்க.39 வஞ்சிமா நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த அரண்மனை வாயிலில் இருந்து, வடக்கே ஒரு பெருஞ்சோலை இருந்தது. அது கோட்டையின் வடக்கு வாயிலைக் கடந்து சென்றது. கோட்டையின் வடக்கு வாயிலுக்கு வெளியே புறநிலைக் கோட்டம் என்னும் கோயில் இருந்தது. செங்குட்டுவன் இமய யாத்திரைக்குப் புறப்பட்டபோது நல்ல முழுத்தத்தில் கொற்றவாளையும் கொற்றக்குடையையும் வடக்கே எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். அவ்வாறே நல்ல முழுத்தத் தில், கொற்றவாளையும் கொற்றக் குடையையும் கொற்றயானையின் மேல் ஏற்றிக் கொண்டுபோய் புறநிலைக் கோட்டத்தில் வைத்தார்கள்.40 கோட்டை மதிலுக்கு வெளியேயும் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நகரத்துக்குப் புறத்திலே (வெளியிலே) குடியிருந்தபடியால் புறக்குடி மக்கள் என்று கூறப்பட்டனர். அவர்கள் கோட்டை மதில் களுக்கு வெளியே குடியிருந்தபடியால், கோட்டையைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிடுபவர் போலக் காணப்பட்டார்கள். வாங்குவில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும் போல் புறஞ்சுற்றிய புறக்குடி41 இதுகாறும் சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி, அதனோடு தொடர்புடைய முசிறித் துறைமுகப்பட்டினத்தைப் பற்றிக் காண்போம். ......... வஞ்சிமாநகரத்துக்கு மேற்கே சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த இடத்தில், அதன் வடகரைமேல் கடற்கரையையொட்டி முசிறித் துறை முகமும் முசிறிப்பட்டினமும் இருந்தன. அக்காலத்தில் அது பெரிய நகர மாகவும் இருந்தது. அக்காலத்தில், முசிறி உலகப் புகழ் பெற்ற பேர் போன நகரமாக இருந்தது. கிரேக்க யவனர் இந்தப் பட்டினத்தை முசிறிஸ் என்று கூறினார்கள். வடஇந்தியர் இந்தப் பட்டினத்தை மிரிசி பதனம் என்று குறிப்பிட்டனர். முசிறி என்பதைத் தான், அவர்கள் மிரிசி என்று திரித்துக் கூறினார்கள். அந்தக் காலத்தில் சேரநாட்டிலிருந்து மிளகு பெருவாரியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று. ஆகவே, சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு, மிரிசி என்று பெயர் கூறப்பட்டது. முசிறிப் பட்டினமாகிய மிரிசி பட்டினத்திலிருந்து வந்தமையால் வட மொழியாளர் அந்த நகரத்தின் பெயரையே மிளகுக்கு மிரிசி என்று கூறினார்கள். சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த புகர்முகத்தில் முத்துச் சிப்பிகள் விளைந்தன. அந்த சிப்பிகளிலிருந்து முத்துக்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சேரநாட்டு முத்தினைக் கௌர்ணெயம் என்று கௌடல்லியரின் அர்த்தசாத்திரம் கூறுவதை முன்னமே குறிப்பிட்டோம். முசிறியை மிரிசி என்று கூறியதுபோலவே வடமொழியாளர் சுள்ளி (பேரியாறு) யாற்றைச் சூர்ணி என்று கூறினார்கள். சூர்ணி ஆற்றில் உண்டான முத்து சௌர்ணெயம் என்று பெயர் பெற்று, பிறகு அந்தச் சொல் கௌர் ணெயம் என்றாயிற்று. முசிறிப் பட்டினத்தை சங்கப்புலவர் நக்கீரர் ‘முன்னுறை முதுநீர் முசிறி’ என்று கூறுகிறார்.42 இன்னொரு சங்கப்புலவரான நக்கீரர் ‘முழங்கு கடல் முழவின் முசிறி’ என்று கூறுகிறார்.43 அராபியரும் கிரேக்க யவனரும் மேற்கக் கரைத் துறைமுகங்களுக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அவர்களின் முக்கியமான குறிக்கோள் முசிறித் துறை முகமாக இருந்தது. யவன வாணிகர் தங்களுடைய அழகான பெரிய நாவாய்களை எகிப்து நாட்டு அலெக்சாந்திரிய துறைமுகப் பட்டினத்தி லிருந்து செங்கடல் வழியாகச் செலுத்திக் கொண்டு, அரபிக் கடலுக்கு வந்து முசிறி, தொண்டி முதலான துறைமுகப் பட்டினங்களுக்குச் சென்று கடல் வாணிகஞ் செய்தார்கள். கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ரோமப் பேரரசை ஆட்சியெத் பேர்போன அகுஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தக் கப்பல் வாணிகத்தை நிலைநிறுவினார். அவர் செங்கடல் பகுதியில் இருந்த அராபியரை அடக்கி, யவனக் கப்பல்கள், செங்கடல் பட்டினங்களிலும் அரபிக் கடல் பட்டினங்களிலும் சென்று வாணிகஞ் செய்ய வழிசெய்தார். அக்காலத்தில், கப்பல்கள் நடுக்கடலில் செல்லாமல் கரையோரமாகவே சென்று வந்தன. அதனால், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்பட்டது. பருவக் காற்றின் துணைகொண்டு செங்கடலிலிருந்து நடுக் கடலில் கப்பல் ஓட்டி, முசிறித் துறைமுகத்துக்கு விரைவில் வந்து போகும் ............... அராபிய வாணிகரும் அறிந்திருந்தார்கள். இவர்கள் அறிந்திருந்ததை கிரேக்க மாலுமியாகிய ஹிப்பலஸ் என்பவன் எப்படியோ அறிந்து கொண்டு, யவனக் கப்பல்களை நடுக்கடல் வழியே செலுத்திக்கொண்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அதுமுதல் யவனக் கப்பல்கள் விரைவாக நடுக்கடல் வழியே முசிறித் துறைமுகத்துக்கு வந்து போகத் தொடங்கின. பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்பவன் பெயரையே யவனர் சூட்டினார்கள். ஹிப்பலஸ் கி.பி. 40-ல் இந்தப் பருவக் காற்றைப் பயன்படுத்தினான் என்பர். கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் சேரநாட்டுத் துறைமுகங்களோடு யவனர் செய்த கப்பல் வாணிகம் உச்ச நிலையில் இருந்தது. இந்த யவன-தமிழ் வாணிகத்தைச் செம்மையாக வளர்த்த அகுஸ்தஸ் சக்கரவர்த்திக்கு கிரேக்க வாணிகர் முசிறிப் பட்டினத்தில் ஒரு கோயிலைக் கட்டிப் பாராட்டினார்கள்.44 சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் அரிக்கமேடு துறைமுகத்திலும் யவன மாலுமிகள் தங்கியிருந்தது போலவே, முசிறி பட்டினத்திலும் யவன மாலுமிகள் தங்கியிருந்தார்கள். சங்க காலத்திலே அரபு வாணிகர்கள் முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தனர். அவர்கள் தங்கியிருந்து வாணிகஞ் செய்த இடம் ‘பந்தர்’ என்று பெயர்பெற்றிருந்தது. பந்தர் என்னும் அரபுச் சொல்லின் பொருள், அங்காடி அல்லது கடைத்தெரு என்பது. முசிறி நகரத்து பந்தரில் அரபு வாணிகர் முக்கியமாக முத்துக்களை விற்றார்கள். பந்தருக்கு அருகில் இருந்த கொடுமணம் என்னும் ஊர், பொன் நகைகளுக்கு பேர் பெற்றிருந்தது. முசிறிப் பட்டினத்துப் பந்தர் கொடுமணம் என்னும் ஊர்களில் நகை வாணிகம் சிறப்பாக இருந்தது. கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை முதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை45 கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் மூத்தம்46 முசிறித் துறைமுகத்திலிருந்து கிரேக்க யவனர் பல பொருள்களை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். அப்பொருள்களில் முக்கியமான ஏற்றுமதிப் பொருள் மிளகு. அதிக அளவான மிளகை ஏற்றிக் கொண்டு போவதற்காக யவனக் கப்பல்கள் பெரிதாக இருந்தன. மத்திய தரைக் கடல் நாடுகளில் மிளகு அக்காலத்தில் அதிகமாகச் செலவாயிற்று. யவனர் மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டுபோனபடியால் மிளகுக்கு ‘யவனப் பிரியா’ என்று வடமொழியாளர் பெயரிட்டனர். யவனக் கப்பல் வாணிகர் முசிறித் துறைமுகத்துக்கு வந்து மிளகை வாங்கிச் சென்றதை சங்கப்புலவர் தங்கள் செய்யுட்களில் கூறியுள்ளனர். யவனர் மரக்கலங்களில் முசிறித் துறைமுகத்துக்கு வந்து பொன்னைக் கொடுத்து கறியை (கறி - மிளகு) ஏற்றிக் கொண்டு போனதைப் புலவர் தாயங்கண்ணனார் கூறுகிறார். சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி47 முசிறித் துறைமுகத்தில் நடந்த மிளகு வாணிகத்தைப் புலவர் பரணரும் கூறுகிறார். உள்நாடுகளில் விளைந்த மிளகைப் பறித்துச் சேர்த்து மூட்டைகளாகக் கட்டி முசிறித் துறைமுகத்துக்கு அனுப்பி னார்கள். யவனக் கப்பல்கள் வந்தபோது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு போய்ப் பெரிய யவன நாவாய்களில் ஏற்றினார்கள். ஏற்றின மிளகுக்கு ஈடாக யவனர் தந்த பொற்காசு களை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்று பரணர் கூறுகிறார். மனைக் குவைஇய கறிமூடையால் கலிச்சும்மைய கரை கலக்குறுத்து கலந் தந்த பொற்பரிசம் கழித் தோணியாற் கரைசேர்க்குந்து48 (மனைக்குவை இய - வீடுகளில் குவித்துவைத்த, கறிமூடை -மிளகு மூட்டை, கலம்தந்த - யவனரின் மரக்கலம் கொண்டுவந்த, பொற் பரிசும் - பொன்விலை) இச்செய்யுளில் ‘கழித்தோணி’ கூறப்படுகிறது. கழிகள் (உப்பங்கழிகள்) முசிறித் துறைமுகப்பட்டினத்தில் இருந்தன என்பது இதனால் தெரிகிறது. உப்பங்கழிகள் இக்காலத்தில் ‘காயல்’ என்று கூறப்படுகின்றன. முசிறித் துறைமுகம், முசிறிப் பட்டினத்தில் சுள்ளியாறு கடலில் கலக்கிற இடத்தில் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்தது. அந்தத் துறை முகத்தில் அரபுநாடு முதலான நாடுகளிலிருந்து வந்த படகுகள் வந்து தங்கின. ஆனால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் வந்து நிற்கவில்லை. ஏனென்றால், பெரியாறு அடித்துக் கொண்டுவந்த மணல் நெடுங்காலமாக துறைமுகத்தில் தூர்ந்து கொண்டு, அந்த இடத்தை ஆழம் இல்லாமல் செய்துவிட்டது. யவனக் கப்பல்கள் பெரிதாகவும் உயரமாகவும் இருந்தபடியால் அவை துறைமுகத்தில் வந்து நிற்காமல், தூரத்தில் கடலிலேயே நின்றன. ஆகையால் சரக்குகளைத் தோணி களில் ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் இறக்கினார்கள். இந்தச் செய்தியை யவனர்கள் எழுதிய குறிப்பிலிருந்து அறிகிறோம். துறைமுகத்தைச் சார்ந்து முசிறிப்பட்டினம் பெரிதாக இருந்தது. வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் வீதிகள் அமைந்திருந்தன. அங்குக் கரையோரங்களில் நெய்தல் நிலமக்களின் குப்பங்கள் இருந்தன. அவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து, விற்று வாழ்ந்தனர். அயல்நாடுகளிலிருந்து வாணிகத்துக்காக வந்த அராபியர், யவனர் முதலானவர் தங்கியிருந்த இடங்களும் இருந்தன. தொழிலாளிகளும் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதிசெய்த வாணிகர்களும் அந் நகரத்தில் வாழ்ந்தனர். வஞ்சிமா நகரத்தில் கிழக்கு மேற்காக அமைந் திருந்த நெடுஞ்சாலை தொடர்ந்து கடற்கரை வரையில் சென்றது. கடற்கரைப் பக்கமாக, உரோம நாட்டு சக்கரவர்த்தி அகுஸ்தஸ் ஸீசரின் கோயில் கடற்கரையோரத்தில் இருந்ததை முன்னமே கூறினோம். முசிறிப்பட்டினத்தின் நடுவில் ஒரு கோவில் இஐந்தது. அந்தக் கோயில் எந்தத் தெய்வத்துக்குரியது என்பது தெரியவில்லை. அந்தக் கோயிலில் இருந்த படிமத்தை (தெய்வ உருவத்தை)ப் பாண்டியன் ஒருவன் கவர்ந்துகொண்டு போனான். பாண்டியன் முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு நகரத்தை வென்று அங்கிருந்த படிமத்தை கொண்டு போனான் என்று தாயங்கண்ணனார் கூறுகிறார். வளங்கெழு முசிறி யார்ப்பெழவளைஇ அருஞ்சமங்கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்49 முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டுப் போர் செய்த செழியன் (பாண்டியன்) அந்தப் போரை வென்று, சேரனுடைய யானைப் படையில் இருந்த யானைகளைக் கவர்ந்தான் என்று நக்கீரர் கூறுகிறார். கொய் சுவற்புரவிக் கொடித்தேர்ச் செழியன் முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் களிறுபட பெருக்கிய கல்லென் ஞாட்பு50 முசிறிப் பட்டினத்தில் போர்செய்த பாண்டியன், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனாகத் தோன்றுகிறான். இவனுடைய போர் செய்து தோற்ற சேரன், குட்வன் சேரல் என்று தோன்றுகிறது. குட்டுவன் சேரலுக்குக் கோக்கோதை மார்பன் என்னும் பெயரும் வழங்கியது. குட்டுவன் சேரலாகிய கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கோக்கோதை மார்பனும் சமகாலத்தவர். நகரங்களின் அழிவு சங்க காலத் தமிழகம் கிழக்கு மேற்கு தெற்கு ஆகிய மூன்று பக்கங்களில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கடற்கரை யோரங்களிலிருந்த பல ஊர்களைக் கடல் அழித்துவிட்டது. கடற்கோள் களினால் பல ஊர்கள் அழிந்துபோனதைத், தமிழ் இலக்கியங்களும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. முன் ஒரு காலத்தில்... .... ... இலங்கைத் தீவாக மாறிவிட்டது என்பதை நில நூல் வல்லவர் கூறுகின்றனர். பழைய இலங்கையிலும் இரண்டு கடல் கோள்கள் நிகழ்ந்ததை மகாவம்சம் கூறுகிறது. பழங்காலத்தில் பாண்டி நாட்டுக் குள்ளே (ஐந்து மைல் உள்ளே) வந்திருந்த கொற்கைக்குடாக்கடல், தாமிரபரணியாற்றினாலும் கடல் அலைகளினாலும் மணல் தூர்ந்து பையப் பையப் பிற்காலத்தில் மறைந்து, அந்தக்கடல் பகுதி நிலமாக மாறிவிட்டதையறிகிறோம். தொண்டை நாட்டில் கடற்கரையோரத்தில் இருந்த பவத்திரிக்கோட்டம் பிற்காலத்தில் கடலில் முழுகி மறைந்து போய், இப்போது பழவேற்காடு ஏரி என்று பெயர் பெற்றிருந்தது. இவ்வாறு ஒரு பெரிய கோட்டம் ஒன்று முழுகிப் போயிற்று. இராமநாதபுரத்தோடு இணைந்து கடலுக்குள் இருந்த நிலப் பகுதி, பிற்காலத்தில் உடையுண்டு, இப்போது இராமேசு வரத் தீவாக மாறிப் போயிற்று. இவ்வாறு தமிழகத்தின் கரையோரங் களில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு கரையிலிருந்த பழைய சேரநாட்டிலும் பல கடற்கோள்களினால் கடற்கரைப் பட்டினங்களும் ஊர்களும் மறைந்து போயின. சேரநாட்டின் கடற்கரையோரத்தில் இருந்த பேர்போன மூலவாசம் என்னும் ஊர், புத்தக் கோவிலுக்குப் பெயர் பெற்றிருந்தது. அந்த ஊர் ஸ்ரீ மூலவாசம் என்று உலகப்புகழ் படைத்திருந்தது. பிற்காலத்தில் (கி.பி. 11-ம் நூற்றாண்டில்) அந்த ஊர் கடலினால் அழிக்கப்பட்டு மறைந்து போயிற்று. இவற்றைப் போலவே, சேரநாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த வஞ்சி மாநகரமும் முசிறிப் பட்டினமும் பிற்காலத்தில் கடலில் முழுகி, மறைந்து போயின. முதலில் கடற்கரைக்கு அருகில் இருந்த முசிறித் துறைமுகமும் பட்டினமும் அழிந்து போயின. பிறகு, பிற்காலத்தில் வஞ்சிமா நகரத்தின் பெரும்பகுதி ஊர்கள் மறைந்து போயின. இந்த நகரங்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது சுள்ளி ஆறாகிய பேரியாறுதான். மேற்குத் தொடர்ச்சிமலையில் அயிரிமலைமேல் தோன்றி, தரையில் இழிந்து நாட்டில் பாய்ந்து, கடலில் புகுந்த பேரியாறு, பல நூற்றாண்டுகளாக மணலை அடித்துக் கொண்டுபோய் கடலுக்கு அருகில் இருந்த துறைமுகத்தைத் தூர்த்துக் கொண்டு வந்தது. துறை முகத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், இந்த ஆறே தூர்ந்துகொண்டு ஆழமில்லாமற் போயிற்று. முசிறித் துறைமுகம் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போனபடியால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரமுடியாமற் போனதை முன்னமே கண்டோம். பெரியாற்றில் எப்போதும் வெள்ளம் இருந்தது என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். கோடை நீடக் குன்றம் புல்லென அருவியற்ற பெருவறற் காலையும் நிவந்து கரையிழிதரு நனந்தலைப் பேரியாறு என்று பாலைக் கவுதமனார் பாடினார்.51 ‘புனல் பேரியாறு’ என்று பெருங்குன்றூர் கிழார் பாடினார்.52 வறண்ட காலத்திலும் பேரியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது என்றும் அந்த வெள்ளம் கரைகளை உடைத்துப் பக்கங்களில் பரவிற்று என்றும் பரணர் பாடினார். குன்று வறங்கூரச் சுடர்சினந்திகழ அருவியற்ற பெருவறற் காலையும் அருஞ்செயற் பேராறு இருங்கரையுடைத்து53 ஆற்று வெள்ளம் இரு கரைகளிலும் வழிந்து பாய்ந்தது என்று கூறுகிற படியால், ஆறே காலப்போக்கில் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போயிற்று என்று தெரிகிறது. இவ்வாறு மணல் தூர்ந்து ஆழமில்லமற் போன பேரியாறு, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஓராண்டில் பெரும் மழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அப்போது கடலும் கொந்தளித்து அலைபொங்கியது. அதனால், முசிறிப் பட்டினமும் அதனைச் சார்ந்த கடற்கரை ஊர்களும் கடலில் மூழ்கி, மறைந்து போயின. சேரநாட்டு வஞ்சிநகரமும் முசிறிப்பட்டினமும் பிற்காலத்தில் மறைந்துபோயின. மறைந்துபோன அந்த நகரங்களைப் பற்றின செய்திகளைச் சங்க காலத்து நூல்களும் சங்கச் செய்யுட்களும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நூல்களின் உதவியினால் மறைந்துபோன அந்த நகரங்களின் அமைப்புகளை ஒருவாறு படம் எழுதிப் பார்க்கிறோம். *** அடிக்குறிப்புகள் 1. Vancimanagar or the Great city calledVanciï C.S. Cheluva Aiyar. PP. 113-134. Journal of Oriental Research Madras. Vol. IIIï The Karora of Ptolemy. K.V. Krishna Ayyar. PP. 119-120. Indian Historical quarterly. Vol. V; Vanchi or Karuvur - the ancient Chera Caital K. G. Sesha Ayyar PP. 249-259, Kerala Society Pers Trivandrum Series. 9-10. Vanci Mutur K.G. Sesha Ayyar Rama Varma Reswearch Institute Bulletin No. 3 PP. 1-9. Ganganur - A’ Study K.R. Pisharoti. PP. 33-36. Rama Varma Research Institute Bulletin Volo. I., Ganganur - A Reply. Raja K. Rama Varma. Rama Varma Research Institute Bulletin. NO. 2 PP. 64-071., Karuvur or Vanjimanagar C.M. Ramachandran Chettiar. Quarterly Journal of the Mythic Society Vol. XXVI. PP. 144- 46. 2. கொங்கு நாட்டு வரலாறு. மயிலை. சீனி வேங்கடசாமி, 1974. பக்கம். 18. 3. பதிற்றுப்பத்து, மூன்றாம் பத்து 1.29., பதிகம். `அயிரை மரைஇ’ இதன் பழைய உரை காண்க. ஏழாம் பத்து, 10.26., `உரு கெழுமரபின் அயிரைபரைஇ’ 9-ம் பத்து 8.12. இதன் பழைய உரை காண்க. 10.19. 4. `சுள்ளியம் பேரியாறு’ என்று அகம் 149. கூறுகிறது. 5. பதிற்றுப்பத்து. ஐந்தாம் பத்து. 8. 12-18. 6. ............................ 7. ௸ அடி. 107-15. 8. கௌடல்லியர், அர்த்த சாத்திரம். 3-ம் பகுதி, 11ஆம் அதிகாரம். மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய `சேரநாட்டு முத்து’ என்னும் கட்டுரை காண்க. தெ.பொ.மீ. மணிவிழா மலர். பக்கம். 493-498. 9. மணிமேகலை 28ஆம் காதை அடி. 59-66. 10. ௸ 31-34. 11. ௸ 34 - 43. 12. ௸ 43 - 47 13. ௸ 49 - 54 14. ௸ 56 - 58. 15. ௸ 5 - 22 16. சிலப்பதிகாரம், 28-ம் காதை. 49 - 50 17. ௸ 50 - 77 18. ௸ 78 - 79 19. ௸ 26ம் காதை. 54 - 57, 62 - 63. 20. ௸ 25 ம் காதை. 4. 21. ௸ 22. ௸ 3-9, 21-23. 23. மணிமேகலை, 28ம் காதை. அடி. 24. 24. ௸ 18-22. 25. ௸ 5 - 17. 26. மணிமேகலை 28-ம் காதை. அடி. 23 - 24. 27. பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து. 3: 7 -9. 28. ௸ 3. 6. 29. திருமுருகாற்றுப்படை. 67 -71. 30. மணிமேகலை. 28-ஆம் காதை. அடி. 24 - 28. 31. ௸ 26ம் காதை. அடி. 72 - 76. 32. சிலப்பதிகாரம், பதிகம். அடி. 1-2. 33. ௸ 30-ம் காதை. அடி. 179. 34. A Note on Gunavayil Kottam. A Govinda Wariar. P. 232 ff. Quarterly Journal of Mythic Society Bangalore. Vol. XIX, Kunavayirkkottam and Vanci. Rao Sahib Sahityabushana. S. pramesvera Aiyar PP. 241 - 254. Professor K. V. Rengaswami Aiyengar Comjemmoration Volume 1940. ‘விஞ்ஞான தீபிகா’ மூன்றாம் தொகுதி பக்கம். 21. தொகுதி 4. (மலையாள மொழி) 35. சிலப்பதிகாரம் 30-ம் காதை. அடி. 168 - 170. 36. சிலப்பதிகாரம் 30-ம் காதை அடி. 170-171. 37. சிலப்பதிகாரம் 28-ம் காதை அடி. 196-198. 38. மணிமேகலை 28-காதை. அடி. 123 - 132. 39. `மணிமேகலையின் விண்வழிச் செலவு’ மயிலை. சீனி. வேங்கடசாமி. பக்கம். 176.-182 கரந்தைத் தமிழ்ச் சங்கம் மணிவிழா மலர். 1973. 40. ....................... 41. மணிமேகலை, 28-ம் காதை அடி. 2-4. 42. அகநானூறு, 57: 15. 43. புறநானூறு, 343 : 10. 44. Sir Mortimer Wheeler., Rome Beyond the Imperial Frontiers. P. 209. 45. பதிற்றுப்பத்து, ஏழாம்பத்து. 7.1-4. 46. ௸ 8: 4.5-6 `நன்கல வெறுக்கை துஞ்சும்பந்தர்’ 5 : 5.4. 47. அகநானூறு. 149 . 7-11. 48. புறநானூறு, 343. 3-6. 49. அகநானூறு, 149. 11-13. 50. ௸ 57. 14-16. 51. பதிற்றுப்பத்து, 3: 8.8-10. 52. ௸ 9: 8. 25. 53. ௸ 5: 3.13-15. 13. சங்ககாலத்து இசைச்செய்தி* நிலவுலகத்திலே மிருகம்போலத் திரிந்து வாழ்ந்த ஆதிகாலத்து மனிதர், நாகரிகம் அடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக் கலையை வளர்த்து வருகிறார்கள். உலகத்திலே இசைக்கலை நெடுங் காலமாக வளர்ந்து வருகிறது. முழு நாகரிகம் பெறாமல் காட்டுமிராண்டி களாக வாழும் மக்களுங்கூட இக்காலத்தில் இசைபாடி மகிழ்கிறார்கள். துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஓய்வு கொண்டு இசையைப் பாடியும் இசையைக் கேட்டும் மனச்சாந்தியடை கிறது மனித இனம்; இசையைப் பயின்று இசையைப் பாடி இசையைக் கேட்டு இசையில் திளைத்து இசையில் முழுகி மகிழ் கின்றனர் மனிதர். இசைப்பாட்டைச் சுவைத்து இன்பமடையாதவன் மனிதன் அல்லன்; அவனைக் கொடிய துஷ்டமிருகம் என்று கூறலாம். இசைக்கலையாகிய நுண்கலை மானிடர் எல்லோருக்கும் உரியது. குழந்தை முதல் கிழவர் வரையில் எல்லோரையும் இசைக்கலை இன்புறுத்தி மகிழ்விக் கிறது. மனித குலத்தின் வரப்பிரசாதமாக, இன்சுவை அமுதமாக, ஆனந்தத் தேனாக இசைப்பாட்டின் இன்பவூற்று மக்களின் மனத்தை மகிழ்விக்கிறது. தொன்றுதொட்டு இசைக்கலையைத் தெய்விகப் பொருளாகக் கருதிவருகின்றனர் தமிழர். தமிழ்நாட்டின் புனிதமான, விழுமிய பொருளாக இருக்கிறது இசைச்செல்வம். கடவுளுக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கையை, பக்தியை, இசைப் பாட்டாகக் கொடுத்தான் தமிழன். வைணவ ஆழ்வார்கள் இசைத்தமிழைப் பாடித் திருமாலின் திருவருளைப் பெற்றார்கள்; சைவ அடியார்களும் இசைத் தமிழைப் பாடியே சிவபெருமானின் திருவளைப் பெற்றார்கள். பௌத்தரும் சமணருங்கூட புத்த பகவனையும் அருக தேவனையும் இசைத்தமிழ் பாடி மனமுருகி வணங்கினார்கள். பண்டைக் காலத் தமிழர், சங்கம் அமைத்துத் தமிழை ஆராய்ந் தார்கள். அவர்கள் வெறும் இயற்றமிழைமட்டும் ஆராயவில்லை. இயற்றமிழோடு இசைத்தமிழையும் ஆராய்ந்தனர்; இசையோடு இயைபுடைய நாடகக்கலையையும் ஆராய்ந்தனர். எனவே, அவர்கள் ஆராய்ந்தது முத்தமிழ்; அதாவது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று தமிழ். இயல் இசை நாடகத்தைச் சங்கப் புலவர்கள் ஆராய்ந்தனர் என்பது ஒருபுறமிருக்க, நாரத முனிவரும் அகத்திய முனிவரும் தமிழிசையை வகுத்த பெரியோர் என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இசைக்கலையை ஆராய்ந்த தமிழர் அதை ஏழாகப் பிரித்து, எழு பெயர்களைச் சூட்டினார்கள். அவர்கள் சூட்டிய ஏழு இசைப்பெயர்கள் இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்பன. அப் பழைய பெயர்களை மாற்றி இப்போது ஷட்ஜம், இருஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று புதுப் பெயர்கள் கூறுகிறார்கள். இசைப்பாட்டை வேறும் வாய்ப்பாட்டாகப் பாடினால் போதாது. அதற்குப் பக்கத் துணையாக வேறு இசைக் கருவிகளும் வேண்டும். மத்தளம். யாழ், குழல் மூன்றையும் சங்காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பழைய காலத்திலே தமிழ்நாட்டிலே சிறப்பாக வழங்கிவந்தது. மிகப் பழைய காலத்திலே உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ். யாழ் என்னும் இசைக் கருவி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இங்குக் கூறுவது பொருத்தமாகும். வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பண்டைக் காலத்திலே-அணுக்குண்டும், வெடிகுண்டும், துப்பாக்கியும், பீரங்கியும் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னே-மனித இனத்துக்கு வேட்டையாடவும் போர் செய்யவும் முக்கிய ஆயுதமாக இருந்தது வில்லும் அம்பும்தான். வில்லில் நாணைப் பூட்டி அதில் அம்பைத் தொடுத்து நாணைப் பலமாக இழுத்து அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியினால் ஒருவித மான ஓசை உண்டாயிற்று. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம்போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக வில்யாழ் என்னும் இசைக் கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க் கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறிற்று. இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது. இந்த யாழின் ஏழு இசைகளையும் அமைத்து வாசிக்கத் தமிழன் கற்றுக் கொண்டான். சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் புகழ் பெற்றிருந்தார்கள். காலஞ் செல்லச்செல்ல யாழிற்குப் பிறகு வீணை என்னும் இசைக்கருவி உண்டாக்கப்பட்டது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கிவந்தது. பிறகு பையப்பைய, கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், யாழ் என்னும் இசைக்கருவி மறைந்துபோய் வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது. யாழ் மறைந்து இப்போது ஏறக்குறைய 1000 ஆண்டுகள் சென்றுவிட்டபடியால்,அக்கருவியைப் பற்றி ஒன்றும் அறியமுடியவில்லை. அதைப் பற்றிப் பதினைந்து ஆண்டு ஆராய்ச்சி செய்து, முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு விபுலாநந்த அடிகள், 1947ஆம் ஆண்டில் ‘யாழ் நூல்’ என்னும் ஓர் அரிய நூலை எழுதி யிருக்கிறார்கள். யாழை மறைத்துவிட்ட வீணையும் இப்போது மறைந்து கொண்டிருக்கிறது. சென்ற 19ஆம் நூற்றாண்டிலே தஞ்சாவூர் அரண்மனையில் இசைவாணராக இருந்த வித்துவான் வடிவேலுப் பிள்ளை அவர்கள், பிடில் என்னும் ஐரோப்பிய இசைக்கருவியை ஆராய்ந்து அதனை நமதுநாட்டு இசைப்பாட்டிற்கு ஏற்ற இசைக்கருவியாக அமைத்துக் கொடுத்தார். (வடிவேலுப் பிள்ளை பிடில் வாசித்ததைக் கேட்டு மகிழ்ந்த திருவாங்கூர் அரசரான சுவாதித் திருநாள் மகாராஜா அவர்கள், தந்தத் தினால் செய்த பிடில் கருவியொன்றை 1834ஆம் ஆண்டில் பிள்ளை அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள்.) அதுமுதல் பிடில் என்னும் இசைக் கருவி வாய்ப்பாட்டிற்குத் தகுந்த துணைக்கருவியாக வழங்கிவருகிறது. வாய்ப்பாட்டிற்கு மற்றொரு துணைக்கருவியாக இருந்தது புல்லாங் குழல் அல்லது வேணு என்பது. புல் என்றாலும், வேணு என்றால் மூங்கில் என்று அர்த்தம். ஆதிகாலத்தில் மூங்கிற் குழையினால் செய்யப்பட்ட கருவியாதலால், இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. புல்லாங் குழல் எப்படி இசைக்கருவியாயிற்று தெரியுமா? காட்டில் வளர்ந்த மூங்கிற் புதர்களில், சில மூங்கிற் குழாய்களை வண்டுகள் துளைத்துத் துளைகள் உண்டாக்கின. அந்தத் துளைகளின் வழியாகக் காற்று புகுந்து விசையோடு வெளிப்பட்டபோது, அந்தக் குழையிலிருந்து இனிமையான ஓசை உண்டாயிற்று. அதைக் கேட்டு வியப்படைந்த மனிதன், அந்த மூங்கிற் குழாயை ஆராய்ந்து பார்த்தான். பிறகு அதில் துளைகளை அமைத்து ஊதி அதை இனிய இசைக் கருவியாக்கினான். பிற்காலத்திலே வெண் கலக் குழையினாலும் மரத்தினாலும் புல்லாங்குழலை உண்டாக் கினார்கள். பழைய வில்யாழ் மறைந்துவிட்டதுபோலப் புல்லாங்குழல் மறைந்து போகாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கிறது. உலகம் உள்ள அளவும் இந்த இசைக்கருவி நிலைபெற்றிருக்கும். மத்தளமும் ஆதிகாலமுதல் இன்றுவரையும் இருந்து வருகிற பழைய இசைக்கருவியாகும். இசைக்கலையை மிக உயர்ந்த நிலையில் வளர்த்த தமிழர் வெறும் பாட்டோடுமட்டும் நின்றுவிடவில்லை. பாட்டோடு தொடர் புடைய ஆடற்கலையையும் வளர்த்தார்கள். இக்காலத்தில் தமிழ் நாட்டு இசைக்கலையும் பரதநாட்டியமும் உலகப் புகழ்பெற்று விளங்கு கின்றன என்றால் அதற்குக் காரணம் அக்காலம்முதல் தமிழர் இக் கலைகளை வளர்த்து வந்ததுதான். யாழ் வாசிப்பதிலும், இசை, பாடுவதிலும், நாட்டியம் ஆடுவதிலும் சிறந்தவர்களுக்குப் பட்டங் களையும் பரிசு களையும் வழங்கி மேன்மைபடுத்தினார்கள் அக் காலத்துத் தமிழர்கள், யாழ் வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி என்று தமிழ் நூல்களில் கூறப்படுவது கலைஞர்களுக்குப் பட்டமும் பரிசும் வழங்கியதேயாகும். இசைக்கலை நாட்டியக் கலைகளில் தேர்ந்தவர்களுக்குத் தலைக்கோலி என்னும் பட்டமும், தலைக் கோல் பரிசும் வழங்கப்பட்டன. தலைக் கோல் ஆசான் என்று ஆண் மகனுக்கும், தலைக்கோலி என்று பெண் மகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. தலைக்கோல் என்பது தங்கத் தினாலும் வெள்ளியி னாலும் பூண்கள் அமைத்து நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கெட்டியான மூங்கிற் கோலாகும். இக்காலத்தில் பொற்பதக்கங்கள் பரிசளிப்பது போல அக்காலத்தில் தலைக்கோல் பரிசளிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் தமிழர் இசைக் கலையை வளர்த்த வரலாற்றின் சுருக்கம் இது. இனி சங்ககாலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் எவை என்பதைக் கூறுவோம். அக்காலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அந்நூல்களின் பெயர்கள் மட்டும் நமக்குத் தெரிகின்றன. சிலப்பதிகாரக் காவிய உரை, இறை யனார் அகப்பொருள் உரை, சீவக சிந்தாமணி உரை, யாப்பருங்கல உரை முதலிய உரை நூல்களில் சங்ககாலத்து இசை இலக்கியங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. பெருநாரை, பெருங்குருகு என்னும் இரண்டு இசையிலக்கிய நூல்களை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். முதுகுருகு, முது நாரை என்னும் இரண்டு நூற் பெயர்களை இறையனார் அகப்பொருள் உரை யாசிரியர் கூறுகிறார். பெருநாரைக்கு முதுகுருகு என்றும், பெருங் குருகுக்கு முதுநாரை என்றும் பெயர்கள் வழங்கினார்கள் போலும். இந்நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. இசை நுணுக்கம் என்பது ஓர் இசைத் தமிழ் நூல். இதன் பெயரே இது இசைக்கலையைப் பற்றிய நூல் என்பதைத் தெரிவிக்கிறது. இந் நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் சிகண்டி என்பது. சயந்தகுமாரன் என்னும் அரச குமாரனுக்கு இசைக் கலையைக் கற்பிப்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது. பஞ்சபாரதீயம் என்னும் இசைநூலை நாரதர் என்பவர் இயற்றினார். பஞ்சமரபு என்னும் நூலை எழுதியவர் அறிவனார் என்பவர். இசைத்தமிழ் பதினாறு படலம் என்னும் நூலை சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூல் 16 படலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஒவ்வொரு படலமும் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. யாமளேந்திரர் என்பவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலை எழுதினார். முறுவல், சயந்தம், செயிற்றியம் என்னும் பெயருள்ள இசை நூல்களும் இருந்தன. பரதம், அகத்தியம் என்னம் இசை நூல்களும் அக்காலத்து நூல்களே. பரதசேனாபதீயம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். பாண்டியன் மதிவாணனார் என்பவர் மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் என்னும் பெயருள்ள நூலை இயற்றினார். இவை இசை, நாடகம் இரண்டையும் கூறுகிற நூல்கள். இத்தனை நூல்கள் அக்காலத்தில் இருந்தன என்றால், அக்காலத்தில் இசைக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததென்பது தெரிகிறதல்லவா? இசைக்கலை உயர்ந்த நிலையில் இருந்ததற்குக் காரணம், அக்காலத்து அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களை ஆதரித்து வந்ததுதான். சங்ககாலத்துப் பிறகு வேறு சில இசை நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றை இங்குக் கூறவேண்டியதில்லை. சங்ககாலத்திலே இசைப்பாட்டுகளை அமைப்பதற்குக் கலிப்பா வும் பரிபாடலும் உபயோகப்பட்டன. “கலியும் பரிபாடலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் தொல்காப்பிய உரையில் கூறுகிறார். பரிபாடலும் கலிப்பாவும் கடவுளை வாழ்த்துவதற்கும், இன்பச் செய்திளைக் கூறுவதற்கும் இசைப்பாட்டாகப் பயன்பட்டன என்று வேறு ஓர் உரையாசிரியர் கூறுகிறார். கணக்கற்ற பரிபாடல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டன. ஆனால், அவை பிற்காலத்திலே மறைந்துபோயின. கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட எழுபது பரிபாடல்களில் பல பரிபாடல்கள் மறைந்துவிட்டன. இப்போது நமக்குக் கிடைத் திருப்பவை 22 பரிபாடல்களே. இவை கிடைத்திருப்பது நமது நல்ல திர்ஷ்டமே ஆகும். மாதிரிக்காகவாவது 22 பரிபாடல்கள் கிடைத்திருக் கின்றனவே என்று மகிழ்கிறோம். கிடைத்துள்ள பரிபாடல்களில், அப் பாடல்களைச் செய்த ஆசிரியர் பெயர்களும், அவற்றிற்கு இசை வகுத்தவர் பெயர்களும், அப்பாடல்களை எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்னும் குறிப்பும் அப்பாடல்களின்கீழ் எழுதப்பட்டிருக் கின்றன. இக்காலத்தில் பரிபாடலைப் பாடும் கலைவாணர் இலர்; எப்படிப் பாடவேண்டும் என்பதும் தெரியாது. பரிபாடலிலிருந்து ஒன்றைமட்டும் நாம் தெரிந்து கொள்கிறோம். பரிபாடல்கள் தெய்வங்களையும், மலைகளையும், ஆறுகளையும், ஊர்களையும் சிறப்பித்துப் பாடுகின்றன. இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் இதைக் கூறுகிறார். “பரிபாடற்கண் மலையும், யாறும், ஊரும் வருணிக்கப்படும்” என்று அவர் எழுதுகிறார். இதற்கு ஏற்பவே, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல்கள் தெய்வங்களையும், மதுரை நகரத்தையும், திருப்பரங்குன்றம் என்னும் மலையையும், வைகையாற்றையும் புகழ்ந்து பாடுகின்றன. இக்காலத்து இசைக்கலைஞர்கள் தெய்வங்களைப் பற்றிய இசைப்பாட்டுகளையே பாடுகிறார்கள். மலைகள், ஆறுகள், கடல்கள், நாடுகள், நகரங்கள் முதலியவற்றைப் பாடுகிறதில்லை. சங்க காலத்து இசைக்கலைவாணர்களோ தெய்வங்களைப் பற்றித் தேவபாணி பாடியதோடு மலை, ஆறு, கடல், காடு, நாடு நகரங்களையும் பாடினார்கள். அது போலவே இக்காலத்துப் பாடகர்களும் நமது பாரததேசத்தின் கடல்வளம், காட்டுவளம், ஆற்றுவளம், மலைவளம், நாட்டுவளம், நகரவளம், தொழில்வளம் முதலிய வளங்களையெல்லாம் இன்னிசைப் பாவினால் பாடித் தேசபத்தியையும் நாட்டுப் பற்றையும் வளரச் செய்வார்களாக. *** 14. உறையூர் மறைந்த வரலாறு* ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றினாலும், கடற் பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்து போன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டிய போது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக்காலத்துக் கட்டடங்களையும், தெருக் களையும், பாண்டங்களையும், எலும்புக்கூடுகளையும், ஏனை பொருள் களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்க மேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெளிநாட்டவர் இங்கு வந்து வாணிகஞ் செய்தனர். இந்தத் துறைமுகப்பட்டினத்தைப் பற்றித் தமிழ் நூல்களில் யாதொரு குறிப்பும் இதுவரை காணப்படவில்லை. பிற்காலத்தில் இப்பட்டினம் மண்மூடி மறைந்து போயிற்று. அண்மைக் காலத்தில் இவ்விடத்தை அகழ்ந்து பார்த்தபோது, மட்பாண்டங்களும், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்களும், யவன நாட்டு நாணயங் களும், யவனருடைய மட்பாண்டங்களும், ஏனைய பொருள்களும் ஏராளமாகக் கிடைத்தன. சங்ககாலத்திலும் அதற்குப் பின்னும் முத்துகளுக்குப் பேர் போன கொற்கைப் பட்டினமும் மண்ணில் மறைந்துவிட்டது. இவ்வாறு அழிந்துபோன பல நகரங்களும் பட்டினங்களும் அகழ்ந் தெடுக்கப்பட்டன. அகழ்ந்தெடுக்கப்படாத, பூமியில் புதையுண்டிருக் கிற ஊர்கள் இன்னம் பல உள. அவற்றுள் ஒன்று உறையூர். பண்டைக் காலத்திலே புகழ் பெற்று விளங்கிய உறையூர், பிற் காலத்திலே எவ்வாறு அழிந்துவிட்டது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில், உறையூரைப் பற்றிச் சங்க நூல்களிலும் பிற நூல்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம். சோழர்களின் உள்நாட்டுத் தலைநகரமாக இருந்தது உறையூர். உறையூரை, உறந்தை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இது காவிரி யாற்றின் தென்கரையில் இருந்தது. உறையூருக்குக் கிழக்கே நெடும் பெருங்குன்றம் ஒன்று இருந்தது என்று அகநானூறு 4ஆம் பாட்டுக் கூறுகின்றது: “கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்.” அந்த நெடும்பெருங் குன்றம், இப்போது திருச்சிராப்பள்ளி மலை என்று வழங்கப்படுகிறது. பிடவூர் என்னும் ஊர். உறையூருக்குக் கிழக்கே இருந்ததாகப் புறநானூறு (395) கூறுகிறது. உறையூரைக் கோழி என்றும், கோழியூர் என்றும் கூறுவர். “கோழியோனே கோப்பெருஞ் சோழன்” என்பது புறம், 212ஆம் பாட்டு. “உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான் கோப்பெருஞ் சோழன்” என்பது இதன் பழைய உரை. “வஞ்சியும் கோழியும் போல” என்பது, பரிபாடல் திரட்டு, 7ஆம் செய்யுள் அடி. கோழி என்னும் சொல்லின் வேறு பெயர்களாகிய வாரணம், குக்குடம் என்னும் பெயர்களும் உறையூருக்கு உண்டு. உறையூருக்குக் கோழியூர் என்று பெயர் வந்த காரணத்தைச் சிலப்பதிகாரம் கூறுகிறது: “முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்தென்” (சிலப், நாடுகாண் காதை) “முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத் தொடு (கௌந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும்) புக்கா ரென்க” என்பது அடியார்க்கு நல்லார் உரை. இதனால், உறையூரில் கோழி யொன்று யானையும் போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று தெரிகிறது. “வைகறை யாமத்து வாரணங் கழிந்து” என்று சிலப்பதிகாரம், காடுகாண் காதையில் வருகிறது. இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், “கோழியூரை வைகறை யாமத்தே கழிந்து. வாரணம்-கோழியூர்” என்று எழுதியிருப்பது காண்க. நீலகேசி என்னும் சமண சமய மூதாட்டியார், உறையூரிலிருந்து சமதண்டம் என்னும் ஊருக்குச் சென்றதாக நீலகேசி என்னும் நூல் கூறுகிறது. அவ்வாறு கூறும்போது, உறையூரைக் குக்குடமாநகர் (அசீவகவாதச் சருக்கம், 8) என்று கூறுகிறது. உறையூரின் நீதிமன்றம் நேர்மைக்கும் முறைமைக்கும் பேர்பெற்றது என்று சங்க நூல்கள் கூறுகின்றன: “அறங்கெழு நல்லவை யுறந்தை” “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து அறநின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமை நின் புகழும் அன்றே ... .. ... ..” (புறம், 39) “மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழும் அல்லவே” என்பது இதன் பழைய உரை. “நீயே, அறந்துஞ் சுறந்தைப் பொருநனை” (புறம், 58) “நீ அறந் தங்கும் உறையூரின்கண் அரசன்” என்பது இதன் பழைய உரை. “மறந்கெழு சோழர் உறந்தை யவையத்து அறங்கெட அறியா தாங்கு ... .. ... ..” (நற்றிணை, 400) இவையும் உறையூரின் நீதிமன்றத்தின் சிறப்பைக் கூறுகின்றன. உறையூர் பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்தது என்பதை, “செல்லா நல்லிசை உறந்தை” (புறம்., 395) என்றும், “கெடலரு நல்லிசை உறந்தை” (அகம்., 369) என்றும் வருவதனால் அறியலாம். பண்டைக் காலத்து நகரங்களைப்போலவே, உறையூரும் மதிலரண் வாய்ந்திருந்தது என்பதை, “நொச்சிவேலித் தித்தன் உறந்தை” (அகம்., 122) என்றும், “உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுக்கி” (சிலம்பு., நாடுகாண் காதை) என்றும் வருவதனால் அறியலாம். நொச்சி என்பது மதில். இதனால், உறையூரைச் சூழ்ந்து கோட்டை மதில் அமைந்திருந்த செய்தியை அறியலாம். சோழன் நலங்கிள்ளி உறையூரின்மேல் படையெடுத்துச் சென்று, அவ்வூர்க்கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகையிட்டான் என்றும், கோட்டைக்குள்ளிருந்த நெடுங்கிள்ளி வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான் என்றும் (புறம்., 45) கூறப்படுவது இதனை வலியுறுத்துகின்றது. உறையூரில், பங்குனி உத்திரத் திருவிழா பேர் போனது. என்னை? “மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி யுத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்” என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுவது காண்க. உறையூரில் ஏணிச்சேரி என்னும் ஒரு தெரு இருந்தது (சேரி = தெரு). இந்த உறையூர் ஏணிச்சேரியில் முடமோசியார் என்னும் புலவர் வாழ்ந்திருந்தார். இவர் அல்லாமல் இன்னும் சில புலவர்களும் இவ் வூரில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் சல்லியங்குமரனார், உறையூர்ச் சிறுகந்தனார், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முது கந்தனார் முதலியோர் இவர்கள் இயற்றிய செய்யுள்கள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. உறையூர் அரசனுடைய மாளிகை பெரிய கட்டடம். “பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன்” (புறம், 69) என்பது காண்க. உறையூரை ஆண்ட சோழ அரசர்களைப் பற்றியும் ஏனைய வரலாறுகளைப் பற்றியும் ஈண்டு எழுதவேண்டுவதில்லை. சைவ நாயன்மார்களில் ஒருவராகிய புகழ்ச் சோழநாயனாரும், ஆழ்வார்களில் ஒருவராகிய திருப்பாணாழ்வாரும் உறையூரில் இருந்தவர்கள். உறையூர் எப்படி அழிந்தது? இவ்வாறு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் சிறப்புற்றிருந்த உறையூர் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மண்காற்றடித்து மண்ணால் மூடுண்டு அழிந்துபோயிற்று என்பதைப் பிற்காலத்துத் தமிழ் இலக்கியங்களாலும், அவற்றின் உரையினாலும் அறியக் கிடக்கிறது. இதனை ஆராய்வோம். உறையூர் அழிந்த செய்தி தக்கயாகப் பரணி உரையிலிருந்து தெரியவருகிறது. சமணர்கள் தமது மந்திரவலிமை யினாலோ, தவவலிமையினாலோ கல்மழையும் மண் மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்பது அவ்வுரைச் செய்தி: “மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார் மிசைவந்து சிலாவருடஞ் சொரிவார் நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற் கிவரிற் பிறர்யாவர் நிசாசரரே” என்பது ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி 70ஆம் தாழிசை. இதற்குப் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “உறையூரில் கல்வருஷமும் மண்வருஷமும் (வருஷம்-மழை) பெய்வித்து, அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்). அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளியாயிற்று.” இதனால் நாம் தெரிந்துகொண்டது என்ன? ‘உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது; இவ்வூர் மண்மூடிப் புதையுண்டதற்குக் காரணமாக இருந்தவர் சமணர்’ என்பதை இவ்வுரைப் பகுதியால் அறிகிறோம். தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக்கூத்தருக்கும், அதன் உரையாசிரியருக்கும் (இவர் பெயர் முதலியவை தெரியவில்லை) பிற்பட்ட காலத்ததாய செவ்வந்திப் புராணம் என்னும் நூலும் உறையூர் மண்ணில் புதையுண்டு மறைந்த செய்தியைக் கூறுகிறது. ஆனால், அதை அழித்தவர் சமணர் என்று கூறவில்லை. சிவபெருமான் சோழ அரசன் மேல் சீற்றங் கொண்டு அவ்வூரை அழித்தான் என்று இந்தப் புராணம் கூறுகிறது. இப்புராணத்தை இயற்றியவர் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்தவராகிய சைவ எல்லப்ப நாவலர். செவ்வந்திப் புராணத் துக்குத் திருச்சிராப்பள்ளிப் புராணம் என்னும் பெயரும் உண்டு. இப் புராணத்திலே, உரையூரழிந்த சருக்கம் என்னும் சருக்கத்திலே, பராந்தகன் என்னும் சோழ அரசன்மீது சிவபெருமான் கோபங் கொண்டு, அவனது நகரமாகிய உறையூரை அழித்தார் என்னும் செய்தி கூறப்படுகிறது: “மாமுகிற்கணம் இடத்ததிர்ந்து எழுந்துமண் மழையைத் தீமுகங்களாய் இறைத்தன புனலையும் சிதறி.” “சண்டமாருதஞ் சுழன்றுறை யூரெலாஞ் சலியா வெண்டிசாமுகந் திரிந்திட ஒன்றிலொன் றெடுத்துக் கொண்டுகீழ்விழ வெறிந்தன பலபல குவையாய் மண்டிரண்டன மலைபெருங் குழவிகண் மான.” “மாடமாளிகை மறைந்தன மறைந்தன மணித்தேர் ஆடரங்கெலாம் புதைந்தன புதைந்தன அகங்கள் கூடகோபுரம் கரந்தன கரந்தன குளங்கள் மேடுபட்டன காவுடன் ஆவண வீதி.” இவ்வாறு உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது. அது மறைவ தற்குக் காரணம் சமணரா, சிவபெருமானா என்னும் ஆராய்ச்சி வேண்டுவதில்லை. பழைய உறையூர் மண்ணுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதை இலக்கியச் சான்று கொண்டு அறிகிறோம். இந்த ஊரை அகழ்ந்து பார்த்தால், அங்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தமிழர் நாகரிகம், பண்டைய சரித்திரம், சமயம் முதலிய பல செய்திகளை அறியலாம். பழைய கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும், மறைந்துபோன இடங்களை அகழ்ந்து எடுப்பதற்கும் என்றே இந்திய அரசாங்கத்தார் ஆர்க்கியாலஜி இலாகா1 என்னும் ஓர் இலாகாவை அமைத்திருக்கிறார்கள். இதன் கிளை இலாகா சென்னை மாகாணத்திலும் இருக்கிறது. இந்த இலாகா உறையூர் போன்ற மறைந்த இடங்களைத் தோண்டிப் பார்க்க முயற்சி செய்யவில்லை. வடநாடுகளில் வேலை செய்வதைவிட மிகக் குறைந்த அளவில்தான் இந்த இலாகா தென்னிந்தியாவில் வேலை செய்கிறது. அதிலும் தமிழ் நாட்டைப் பற்றி இந்த இலாகா சிறிதும் கருத்துச் செலுத்தவில்லை. தனிப்பட்ட முறையில் டூப்ரேயில் என்னும் பெயருள்ள பிரேஞ்சு நாட்டவர் தமிழ் நாட்டில் செய்த அளவு வேலைகூட இந்த இலாகா செய்யவில்லை என்றால், இதன் போக்கை என்னென்று சொல்வது! இந்த இலாகா கண்டுபிடிக்காமல் விட்டிருந்த சுமார் பன்னிரண்டு குகைக்கோயில்களையும் சாசனங்களையும் டூப்ரேயில் துரை அவர்கள் கண்டுபிடித்துக் காட்டினார். தமிழ்நாட்டுக் கோயில்களில் மறைந்து கிடந்த ஓவியங்களில் பலவற்றைக் கண்டுபிடித்துத் தெரிவித்தவரும் அவரே. அவருக்கு நமது நன்றி. அப்பெரியார் காலமாய்விட்டதற்காக வருந்துகிறோம். உறையூர், மதுரை, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, பழையாறை, கும்பகோணம், நாகப்பட்டினம் முதலிய மிகப் பழைய இடங்கள் இன்றுவரை அகழ்ந்து பார்க்கப்படவில்லை. இவற்றை யெல்லாம் ஆர்க்கியாலஜி இலாகா செய்யாமலே இருக்கிறது. செல்வர் களும், தனிப்பட்ட சங்கங்களும் அரசாங்கத்தார் உத்தரவு பெற்று அகழ்ந்து பார்க்கலாம். இத்தகைய செயல்களில் கருத்தைச் செலுத்த வேண்டும்; கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். ஆர்க்கியாலஜி இலாகாவை அடிக்கடி தூண்டி ஊக்கப்படுத்த வேண்டும். (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆர்க்கியாலஜி இலாகா உறையூரில் ஓரிடத்தை அகழ்ந்துபார்த்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. ஆனால், அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. சரியான இடங்களைத் தக்கபடி ஆராய்ந்து பார்த்தால், உறையூரின் பழங்காலப் பொருள்கள் பல கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.) *** 15. பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை* பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்கும் போதெல் லாம் நெடியோன் குன்றமாகிய வேங்கடமலையை மட்டுமே பண்டை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர். ‘வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகம்’ என்று கூறிப்போந்தது தொல்காப்பிய சிறப்புப் பாயிரம். “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னாட்டு” (சிலப்., வேனிற்காதை) என்றும், “குமரி வேங்கடம் குணகுட கடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்” (சிலப்., வஞ்சி, கட்டுரை) என்றும் இளங்கோவடிகள் கூறியுள்ளார். பிற்காலத்து நன்னூலாரும், “குணகுடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்” என்று வேங்கடமலையினையே வடவெல்லையாகக் கூறியிருக்கின்றார். இங்கு நாம் ஆராயப்புகுவது நன்னூலார் கூறிய தமிழ்நாட்டு எல்லையைப் பற்றி அன்று; இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுக்கு முற்பட்ட, அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த தமிழ் நாட்டில் வடவெல்லையைப் பற்றியே இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றது. திருவேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லையாக இருந்த தென்பதில் சற்றும் ஐயமில்லை. ஏனென்றால், பண்டை ஆசிரியர் அனைவரும் வடவெல்லையாகக் கூறியுள்ளனர். திருவேங்கட மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது என்பதை, “பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்தர்” (அகம்., 211) என்று மாமூலனார் என்னும் புலவர் கூறுகின்றார். அக்காலத்து, திருவேங்கட மலையையும் அதைச் சூழ்ந்த நாட்டினையும் புல்லி என்னும் சிற்றரசன் ஆண்டான் என்றும் (அகம்., .......) அப்புலவரே கூறுகின்றார். அன்றியும், வேங்கடமலைக்கு அப்பால் உள்ள மொழி பெயர் தேயத்தில் வடுகர் வாழ்ந்ததாக அப்புலவரே கூறியுள்ளார். “புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம்....” (அகம்., 295) எனவே, வேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லை என்பதும், அம்மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. ஆனால், வேங்கடமலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது எவ்வாறு பொருந்தும்? வேங்கடமலை தமிழகத்தின் வடக்கே குணகடல் முதல் குடகடல்வரையிலும் கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் ஒரு மலையன்று; அது குணகடலின் பக்கமாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஒரு பகுதிமட்டுமே. எனவே, கீழ்க் கடற்பக்கமுள்ள ஒரு மலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது தமிழ்நாட்டின் வடவெல்லையை முற்றும் குறிப்பிட்டமாகுமோ? தமிழ் நாட்டின் வடக்கே மேற்கடற் பக்கமாகவும் ஓர் எல்லை கூறவேண்டுவது இன்றியமையாததன்றோ? அவ்வாறு ஓரெல்லை இருந்தே தீர வேண்டும். இல்லையென்றால், அது தமிழகத்தின் வடவெல்லை முழுவதும் கூறப்பட்டதாகாது. கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள வேங்கடமலையை வடவெல்லையாகக் கூறியதுபோல மேற்குத் தொடர்ச்சி மலையிலும் ஓர் எல்லை கூறப்படவேண்டும். அவ்வாறு ஏதேனும் ஓர் எல்லை இருந்ததா? சங்க நூல்களில் இதற்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா என்பதை ஆராய்வோம். இந்த ஆராய்ச்சிக்கும் மேற்குறித்த சங்கப் புலவர் மாமூலனாரே நமக்குத் தோன்றத்துணையாக இருந்து வழிகாட்டுகின்றார். குடகடலுக்கு அருகில், தமிழ் நாட்டின் வடஎல்லையாக ஒரு மலையை அவர் குறிப்பிடுகின்றார். அது ஏழில்மலை அல்லது ஏழிற் குன்றம் என்பது. தலைமகன் (காதலன்) பிரிவின்கண் தலைமகள் (காதலி) தோழிக்கு சொல்லியதாக இப்புலவர்பெருமான் செய்த செய்யுள் ஒன்றில் தற்செயலாக இதனைக் குறிப்பிடுகின்றார். அது வருமாறு: “அரம்போ ழல்வளை செறிந்த முன்கை வரைந்துதாம் பிணித்த தொல்கவின் றொலைய வெவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன் தெரிகோ லன்ன செயிர்தீர் செம்மொழி யுலைந்த வொக்கல் பாடுநர் செலினே யுரன்மலி யுள்ளமொடு முனைபா ழாக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்ன னன்னாட்டு ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொளத் திருந்தரை நிவந்த கருங்கால் வேங்கை யெரிமருள் கவள மாந்திக் களிறுதன் வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை கல்லூர் பாம்பிற் றோன்றும் சொல்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே” (அகம், 349) நன்னன் என்னும் சிற்றரசனது ஏழிற் குன்றத்துக்கப்பால் மொழிபெயர் தேயம் - அஃதாவது, தமிழ் அல்லாத வேறுமொழி வழங்கும் தேசம் இருந்த தென்பது இப்பாட்டில் பெறப்படுகின்றது. இந்த ஏழிற்குன்றம் குடகடற் பக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொங்கண நாடாகிய துளுநாட்டில் உள்ளது. எனவே, தமிழ் நாட்டின் வடவெல்லை மேற்கடற் பக்கமாகவுள்ள ஏழிற் குன்றத்தையும் கீழ்க்கடற் பக்கமாகவுள்ள வேங்கட மலையையும் கொண்டிருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஏழில்மலை இப்போது மலபார் மாவட்டத்தில் உள்ள கண்ண னூருக்கு வடக்கே பதினெட்டு மைலுக்கப்பால் இருக்கிறது. இங்கு ஏழில்மலை என்னும் இரயில் நிலையமும் உண்டு, ஏழில்மலை என்பதை உச்சரிக்கத் தெரியாதவர்கள் அதனை எலிமலை என்று வழங்கினர். பிற்காலத்தில் அந்த எலிமலையை வடமொழியில் மூஷிக மலை (மூஷிகம்-எலி) என்று மொழி பெயர்த்துக்கொண்டனர். அந்த மலைப்பகுதியை ஆண்ட அரசகுலத்தைப் பற்றி ‘மூஷிக வம்சம்’ என்னும் வடமொழி நூலையும் எழுதிவிட்டனர். பிற்காலத்தில் போர்ச்சு கீசியர் இந்த மலையை மவுண்ட டி எல்லி என்று கூறினர். தமிழ் நாடாக இருந்த சேரநாடு பிற்காலத்தில் மலையாள பாஷை பேசும் நாடாக மாறி விட்ட பிறகு, ஏழில் மலை தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்காமற் போயிற்று. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கரையில் வடவெல்லையாக இருந்தது ஏழில்மலை என்பது நன்கு தெரிகின்றது. பண்டைத் தமிழ்நாட்டின் வடவெல்லை கீழ்ப்புறமாக வேங்கட மலையும், மேற்புறமாக ஏழிற்குன்றமும் என அறிந்தோம். இனி, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள நாடுகளில் வடவெல்லை யாக இருந்தவை .......... என்பதையும் ஆராய்வோம். இதனையும் மாமூலனார் விளக்குகின்றார். “குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேயம்!” (குறும்.....) என்று கட்டி என்னும் சிற்றரசனது நாடு தமிழ்நாட்டின் வடவெல்லை யாக இருந்ததென்றும், அவனது நாட்டுக்கப்பால் வேறு மொழி பேசப்படும் தேயம் இருந்ததென்று அவர் கூறுகின்றார். அகநானூறு 44ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்கு துணையாக இருந்தனர் என்றும், அவர்களுள் கட்டி என்ப வனும் ஒருவன் என்றும் அறியக் கிடைக்கின்றது. குறுந்தொகை கூறும் கட்டியும், அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச் சியில் விளங்குகின்றது. கட்டியரசர் கொங்கு நாட்டின் பகுதியை ஆண்டனர். அன்றியும், சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்.....) இந்தக் கங்கன் என்பவனும் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான். சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டி கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதை சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கம் அன்று. சிலப்பதிகாரம், காட்சிக் காதை 157ஆம் அடியில் “பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்” என்று பங்களரைக் கூறுகிறது. பங்களரும் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்தவர் என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன. “பாணன் நன்னாட் டும்பர்” (அகம்., 113:17) என்றும், “பல்வேற் பாணன் நன்னாடு” (அகம்., 325:17) என்றும், கூறப்படுகிற வாணாதிராயரின் நாடும், தமிழகத்தின் வட வெல்லையில் இருந்ததாகும். எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது. இதுகாறும் ஆராய்ந்தவற்றால், வேங்கடமலைமட்டும் தமிழகத் தின் வடவெல்லை அன்றென்றும், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லையென்றும், இம்மலைகளுக் கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர் முதலியோர் வாழ்ந்து வந்தனரென்றும், இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்தனவென்றும் அறிந்தோம். 16. சிறுபாணன் சென்ற பெருவழி** சிறுபாணாற்றுப் படை என்பது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், நல்லியக்கோடன் என்னும் வள்ளலைப் பாடியது சிறுபாணாற்றறுப் படை. இதில் நல்லியக் கோடனிடம் சென்று பரிசு பெறும்படி நத்தத்தனார் ஒரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார். (ஆறு = வழி. ஆற்றுப்படுத்தல் = வழிகூறுதல்.) சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக் கோடன், ஓய்மா நாட்டின் அரசன். எயிற்பட்டினம், மாவிலங்கை, கிடங்கில் முதலிய ஊர்கள், இவனுக்கு உரியன. ஆகவே, எயிற்பட்டின நாடன், மாவிலங்கை மன்னன், கிடங்கிற்கோமான் என்று போற்றப் படுகிறான். ஓவியர் குலத்தில் பிறந்தவனாகலின் ஓவியர் பெருமகன் என்றும் கூறப்படுகிறான். “தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்னருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள் உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்றும் (சிறுபாண். 120-122) “இழுமென ஒலிக்கும் புனலம் புதவிற் பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்” என்றும் (புறம். 176) புகழப்படுகிறான். நல்லூர் நத்தத்தனார், நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊருக்குச் சிறுபாணனை ஆற்றுப் படுத்திய வழியை ஆராய்ந்து படம் வரைந்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். சிறுபாணன், கிடங்கிலை நோக்கிச் சென்ற பெருவழியின் இடையிலே எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன. எயிற்பட்டினம் என்பது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்த ஓர் துறைமுகப் பட்டினம். எயிற்பட்டினத்தைச் சூழ்ந்து மதிற்சுவர் கோட்டையாக அமைந்திருந்தது. ஆகவே, இது எயில் பட்டினம் என்றும் சோ பட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. (எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள்.) “பாடல் சான்ற நெய்தல் நெடுவழி மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனினீர் படுவிற் பட்டினம்” என்று இப்பட்டினம் (சிறுபாண். 151-153) கூறப்படுகிறது. கடல் ஓரமாக நெய்தல் நிலத்திலே இருந்த எயிற் பட்டினத்துக்கு மேற்கே குறிஞ்சி நிலத்திலே, நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊர் இருந்தது. இதனை, “குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக் கோடன்” என்று (சிறுபாண். 267-269) ஆற்றுப்படை கூறுகிறது. நெய்தல் நிலத்து எயிற் பட்டினத்துக்கும் குறிஞ்சி நிலத்துக் கிடங் கிலுக்கும் இடையிலே வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன. இவ்வூர்கள் எல்லாம் ஓய்மா நாட்டில் அடங்கியிருந்தன. ஓய்மா நாடு என்பது இப்போதைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில் இருந்தது. சிறுபாணன் சென்ற பெரு வழியைப் பார்ப்பதற்கு முன்னர் நத்தத் தனார் இருந்த ஊரை அறியவேண்டும். இவர் நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார். தமிழ் நாட்டிலே நல்லூர் என்னும் பெயருள்ள ஊர்கள் பல உள்ளன. நத்தத்தனார் இருந்த நல்லூர் எது என்று இடர்ப் படாதபடி, இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார். இடைகழி நாடு என்பது எது? இடைகழி நாடு இப்போது எடக்கு நாடு என்று வழங்கப்படுகிறது. எடக்குநாடு என்பது இடைகழி நாடு என்பதன் திரிபு. இடைகழி நாடாகிய எடக்கு நாடு, செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தாலுகாவில் இருக்கிறது. இந்த எடக்கு (இடைகழி) நாட்டிலே இப்போதும் ஒரு நல்லூர் என்னும் சிற்றூர் இருக்கிறது. இந்த இடைகழி நாட்டு நல்லூரிலே நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தவ ராதல் வேண்டும். இடைகழி நாட்டுக்கு அண்மையிலே, தெற்குப் பக்கத்திலே நல்லியக் கோடனுடைய ஓய்மா நாடு இருந்தது. இனி, நத்தத்தனார் சிறுபாணனை ஆற்றுப்படுத்திய பெரு வழியைக் காண்போம். இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து தெற்கே சென்றால், ஓய்மா நாட்டின் கிழக்குப் பகுதியாகிய பட்டின நாட்டை அடையலாம். பட்டின நாடு கடற்கரையைச் சார்ந்த நாடு. பட்டின நாட்டிலே கடற்கரை ஓரமாக எயில் (சோ) பட்டினமும் துறைமுகமும் இருந்தன. ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாடு, பெரும்பான்மையும் நீரும் நிலமுமாக அமைந்திருந்தபடியினாலே, அது மாவிலங்கை என்று பெயர் பெற்றது. கடற்கரை ஓரமாக நீரும் நிலமும் ஆக அமைந்த இடம் இலங்கை என்று பெயர் பெறும். ஆறுகள் கடலில் கலக்கிற இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீரும் திடலுமாக அமைவது உண்டு. அன்றியும் காயல் என்னும் பெயருள்ள நீர்த்தேக்கமும் கடற்கரை ஓரமாக அமைவதும் உண்டு. இவ்வாறு நீரும் திடலுமாக அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர் இன்றும் வழங்குவர். நீரும், திடலுமாக அமைந்திருந்த பட்டின நாடு மாவிலங்கை என்றும் பெயர் பெற்றிருந்தது. (லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிட மொழிச் சொல் என்று தோன்றுகிறது.) இப்போதும் ஓய்மா நாட்டு மாவிலங்கைப் பகுதியில் ஏரிகளும் ஓடைகளும் உப்பளங்களும் காணப்படுகின்றன. ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாட்டிலே, (மாவிலங்கையிலே), கடற்கரை ஓரத்தில் எயில் (சோ) பட்டினம் இருந்த தென்று கூறினோம். பண்டைக் காலத்தில் இருந்த எயிற் பட்டினம் இப்போது மறைந்துவிட்டது. அந்த இடத்தில் இப்போது மரக்காணம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரில் பிற்காலச் சோழர்களின் சாசன எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்தச் சாசனங்களிலே, ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டு மரக்காணம்’ என்றும் ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டுப் பட்டினம்’ என்றும் ‘பட்டின நாட்டு எயிற் பட்டினம்’ என்றும் இவ்வூர் கூறப்படுகிறது. எனவே, பழைய எயிற்பட்டினந்தான் பிற் காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்து என்று கருதலாம். இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் இப்போதைய கூடலூர்தான் பழைய எயிற்பட்டினம் என்று கருதுகிறார். (Idenfication of Sopatama by S.S. Desikar. pp. 129 - 140. Quarterly Journal of Mythic Society, Vol. XXI.) அது தவறு. கூடலூர் துறைமுகம் பிற்காலத்திலே, ஐரோப்பிய வர்த்தகர்களால் அமைக்கப்பட்ட துறைமுகமாகும். ஆகவே, கூடலூரைப் பழைய எயிற்பட்டினம் என்று கூறுவது தவறாகும். இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறுபாணன், ஓய்மா நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய எயிற் பட்டினத்துக்குச் சென்றான். சென்றவன் அங்குத் தங்கினான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தென்மேற்கே நெடு வழியே நடந்தான். நெடுந்தூரம் நடந்து வேலூர் என்னும் ஊரை யடைந்தான். இது முல்லை நிலத்தில் இருந்த ஊர். “திறல்வேல் நுதியில் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் உறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு தேமா மேனிச் சில்வளை ஆயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்.” என்று (சிறுபாண். 172-179) நத்தத்தனார் இந்த வேலூரைப் பாணனுக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த வேலூரை, வட ஆர்க்காடு மாவட்டத்தில், காட்பாடி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வேலூர் என்று இலக்கணவிளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் கருதுகிறார். (Idenfication of Sopatama by S.S. Desikar. pp. 129 - 140. Quarterly Journal of Mythic Society, Vol. XXI.) இது தவறு. நத்தத்தனார் கூறுகிற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஓய்மா நாட்டில் இருக்கிறது. தேசிகர் கூறும் வேலூர், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் இருக்கிறது. இரண்டு ஊர்களும் வெவ்வேறிடங்களில் உள்ள வெவ்வேறு ஊர்கள். நத்தத்தனார் கூறும் வேலூர் அக்காலத்தில் சிறப்புற்றிருந்து, இப்போது குக்கிராமமாக இருக்கிறது. இப்போது வட ஆர்க்காடு மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் வேலூர் அக்காலத்தில் இருந்ததா என்பது ஐயத்துக்கிடமாக இருக்கிறது. சிறு பாணன் சென்ற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில், கிடங்கிலுக்கும் எயிற்பட்டினத்திற்கும் இடைவழியில் இப்போது குக்கிராமமாக இருக்கிற வேலூரே என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த வேலூர் ஓய்மா நாட்டு வேலூர் என்று பெயர் பெற்றிருந்தது. இந்த வேலூரின் தலைவன் ‘ஓய்மா நாட்டு வேலூருடையான்’ என்று ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான். (No. 25.S.I.I. Vol. XIII.) வேலூரில் தங்கிய சிறுபாணன், அவ்வூரிலிருந்து புறப்பட்டு வடமேற்காகச் செல்லும் பெருவழியே சென்றான். சென்று மருத நிலத்தில் உள்ள ஆமூர் என்னும் ஊரையடைந்தான். “மருதஞ் சான்ற மருதத் தண்பணை அந்தணர் அருகா அருங்கடி வியநகர் அந்தண் கிடங்கின் அவனாமூ ரெய்தின் வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின் உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப விழுங்கா லுலக்கை யிருப்புமுகந் தேய்த்த வவைப்பு மாணரிசி யமலைவெண் சோறு கவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவிர்.” என்று (186-195) சிறுபாணனுக்கு ஆமூரில் கிடைக்கக்கூடிய உணவைக் கூறுகிறார் நத்தத்தனார். இந்த ஆமூர் எது என்பது தெரியவில்லை. நல்லாமூர் என்று பெயருள்ள ஊர் ஒன்று இருக்கிறது. இந்த நல்லாமூர் சிறுபாணாற்றுப் படை கூறுகிற ஆமூராக இருக்கக்கூடும். பழைய ஆமூரும் இப்போதைய நல்லாமூரும் ஒரே ஊராக இருக்கக்கூடும். ஏனென்றால் இந்த நல்லாமூர் கிடங்கிலுக்கு அருகில் இருக்கிறது. ஆமூரிலிருந்து புறப்பட்டு மேற்கே நெடுவழியே சென்றால், கடைசியில் நல்லியக்கோடனுடைய கிடங்கில் என்னும் ஊரை யடையலாம் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. எனவே, கிடங்கிலுக்குச் சிறுபாணன் சென்ற பெருவழி, அல்லது நத்தத்தனார் சென்ற பெருவழி இது: இடைகழிநாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டு, இப்போதைய மரக்காணமாகிய எயிற்பட்டினத்துக்குப் போய் அங்கிருந்து வேலூருக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டு ஆமூரை அடைந்து, ஆமூரிலிருந்து கிடங்கிலை யடைந்தார் என்பது தெரிகிறது. (படம் காண்க) கிரேக்க ஆசிரியரின் குறிப்புகள்: யவனராகிய கிரேக்கர் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்துடன் வாணிபம் செய்தனர். கிரேக்க நூலாசிரியர்கள், தமிழ் நாட்டிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சோபட்டினமாகிய எயிற்பட்டினமும் குறிக்கப்பட்டிருக்கிறது. பெரிப்ளஸ் என்னும் நூலாசிரியர், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் கமரா, பொடுகா, சோபட்மா (Camara, poduca, sopatma) என்னும் துறைமுகப் பட்டினங்களைக் குறிப்பிடுகிறார். டாலமி என்னும் கிரேக்க நூலாசிரியரும் காமரா, போடுகே, மேலங்கே (Kamara, Poduke, melenge) என்னும் துறைமுகப் பட்டினங்களைக் கூறுகிறார். பெரிப்ளசும், டாலமியும் கூறுகிற கமரா என்னும் பட்டினம் சோழ நாட்டில் பேர் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்ப் பட்டினம்) ஆகும். பொடுகா என்றும் பொடுகே என்றும் அவர்கள் குறிப்பிடுகிற துறைமுகத்தைச் சிலர், இப்போதுள்ள புதுச்சேரி என்று கருதுகிறார்கள். இது தவறு எனத் தோன்றுகிறது. புதுச்சேரி பழைய துறைமுகப் பட்டினம் அல்ல. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரரால் புதுச்சேரி துறைமுகப்பட்டின மாக்கப்பட்டது. எனவே, புதுச்சேரி பழைய துறைமுகம் அல்ல. பொடுகா அல்லது பொடுகே என்று கிரேக்க நூலாசிரியர் குறிப்பிட்ட இடம், புதுச்சேரிக்கு அருகிலே, தெற்குப் பக்கத்தில் கடற்கரை ஓரமாக உள்ள அரிக்கமேடு என்னும் இடமாக இருக்க வேண்டும். அரிக்கமேட்டை அண்மைக் காலத்தில் அகழ்ந்து பார்த்தபோது, அது கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த துறைமுகப் பட்டினம் என்பது தெரிந்தது. அங்கிருந்து கண்டெடுக்கப் பட்ட பொருள்கள், அங்கு யவன வாணிகர் தங்கியிருந்ததையும் அது துறை முகப்பட்டினமாக இருந்தது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. இது பற்றி ‘பண்டைய இந்தியா’ என்னும் ஆங்கில வெளியீட்டில் விபரமாக அறியலாம். (Arikamedu : An Indo-Roman Trading Station on the East Coast of India. By R.E.M. Wheeler, A. Ghosh and Krishna Deva. Pp. 17-124. “Ancient India”. No. 2. 1946) இதற்கு வடக்கே இருந்தது சோபட்மா என்னும் துறைமுகப் பட்டினம் என்று பெரிப்ளஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சோபட்மா என்பது சோபட்னா என்பதன் திரிபு. சோபட்னா என்பது சோபட்டினம் ஆகும். அதாவது எயிற்பட்டினம். சோ என்றாலும் எயில் என்றாலும் மதில் என்பது பொருள். மதில் சூழ்ந்த கோட்டைக்குள் அமைந்திருந்த படியால் எயில் பட்டினம் என்றும் சோபட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. எயிற் பட்டினமாகிய சோபட்டினத்தை டாலமி என்பவர் மேலங்கே என்று கூறுகிறார். மேலங்கே என்பது சிறுபாணாற்றுப் படை கூறுகிற மாவிலங்கை ஆகும். ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதிக்குப் பட்டினநாடு என்பது பெயர். பட்டின நாட்டில் நீரும் திடலும் அதிகமாகக் காணப்பட்ட படியால் அப்பகுதி மாவிலங்கை என்று பெயர் பெற்றிருந்தது என்று மேலே கூறினோம். டாலமி ஆசிரியர் மேலங்கே என்று கூறுகின்ற மாவிலங்கை, மாவிலங்கையில் இருந்த எயில் (சோ) பட்டினந்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன நாட்டு யாத்திரிகர், பல்லவ அரசர்களின் துறைமுகப் பட்டினமாகிய மாமல்லபுரத்தைக் கூறும்போது, அது காஞ்சிபுரத்தைச் சேர்ந்திருந்தபடியால், காஞ்சிபுரத் துறைமுகம் என்று கூறியிருப்பது இங்கு கருதத்தக்கது. அதுபோலவே மாவிலங்கையிலிருந்து எயிற் பட்டினம் என்னும் துறைமுகத்தை டாலமி, மேலங்கே என்று குறிப்பிட்டுள்ளார். பெரிப்ளஸ் கூறுகிற சோபட்மா என்பதும், டாலமி கூறுகிற மேலங்கே என்பதும் ஐயமில்லாமல் சோபட்டினமாகிய எயில் பட்டினம் என்பது தெளிவாகிறது. எயில் பட்டினம் இப்போது மரக்காணம் என்று பெயர் பெற்றிருக்கிறது என்பதை மேலே கூறியுள்ளேன். குறிப்பு : கிடங்கில் என்னும் ஊரிலிருந்து மரக்காணத்திற்கு (எயில் பட்டினத்துக்குச் செல்லும் நேர் வழி ஒன்று இப்போது இருக்கிறது. இப்பெரு வழியைப் புள்ளிக் கோட்டினால் படத்தில் காட்டியுள்ளேன். இந்தப் பெருவழி சிறுபாணாற்றுப் படை காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இது பிற் காலத்தில் அமைந்த வழியாக இருக்கலாம். பழைய சாலைகள் மறைந்து போவதும் புதிய காலைகள் புதிதாகத் தோன்றுவதும் இயற்கையே. உதாரணமாக மாமல்லபுரத்திலிருந்து நேரே காஞ்சிபுரத்திற்குச் சென்ற பழைய பல்லவர் காலத்துப் பெருவழி, இக்காலத்தில் முழுவதும் மறைந்து போய், புதிய சாலைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறோம். சிறுபாணாற்றுப்படையில் கூறப்படுகிற ஊர்களைக் கொண்டும் நாட்டுப் படத்தில் காணப்படுகிற அவ்வூர்களின் அமைப்பைக் கொண்டும், இந்தப்படமும் கட்டுரையும் எழுதப்பட்டன. இதனை ஆராய்ந்து பார்த்து இது சரியா தவறா என்பதை முடிவு செய்வது வாசகர் கடமையாகும். *** 17. சேரநாட்டு முத்து** இக்காலத்தில் மலையாள நாடாக மாறிப்போன சேரநாடு, பண்டைக் காலத்திலே தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டைச் சேர மன்னர்கள் அரசாண்டார்கள். சேர நாட்டின் பழைய வரலாற்றுக் குறிப்புகள் பழைய தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன. பழைய சங்க நூல்களிலே காணப்படுகிற செய்திகளில் சேரநாட்டு முத்தைப் பற்றிய செய்தியும் ஒன்றாகும். இச் செய்தியைக் கேட்பவர் வியப்படைவார்கள். “இது என்ன புதுமை! பாண்டிநாடு தானே முத்துக்குப் பேர்போனது. சேர நாட்டிலும் முத்து உண்டாயிற்றா!” என்று கூறுவர். ஆம். பாண்டிய நாட்டுக் கொற்கைக் கடலிலே உண்டான முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவைதான். தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் பாண்டி நாட்டு முத்துக்களைப் புகழ்ந்து பேசுகின்றன. பாரத தேசத்தில் மட்டும் அல்லாமல் எகிப்து தேசத்திலும் உரோமாபுரியிலும் பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்கள் புகழ் பெற்றிருந்தன. உரோமாபுரிச் சீமாட்டிகள் தங்கள் நாட்டுப் பொன்னைக் கொடுத்துத் தமிழ் நாட்டு முத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். மேல் நாட்டு யவன கப்பல்கள் தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து ஏனைய பொருள்களோடு முத்துக்களையும் வாங்கிக் கொண்டு போயின. பேர்போன பாண்டிய நாட்டு முத்துக்கள் உண்டான அதே காலத்தில் மேற்குக் கடற்கரையிலே சேர நாட்டிலேயும் முத்துக்கள் உண்டாயின. பாண்டிய நாட்டு முத்துக்களுக்கு அடுத்தபடியாகச் சேர நாட்டு முத்துக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சிறப்பும் மதிப்பும் பெற்றிருந்தன. இதற்குத் தமிழ் நூலில் மட்டுமல்லாமல் வடமொழி நூலிலும் சான்று கிடைக்கின்றது. சேர அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப்பத்து என்னும் சங்கத் தமிழ் நூலிலே சேர நாட்டில் முத்து உண்டான செய்தி கூறப் படுகிறது. பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தில், கபிலர் என்னும் புலவர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். அதில், சேர நாட்டுப் பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்கும் கொடுமணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்கும் பேர் பெற்றிருந்தது என்று கூறுகிறார். “கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபில் கைவல் பாண! தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை” என்று (7-ஆம் பத்து 7-ஆம் செய்யுள்) பாடுகிறார். இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார். “கொடுமணம் என்பது ஓரூர். பந்தர்ப் பெயரிய - பந்தர் என்று பெயர்பெற்ற. கைவல் பாண! நெடுமொழி யொக்கலொடு நீ சான்றோர் பெருமகன் நேரிப்பொருநனாகிய செல்வக் கோமானைப் பாடிச் செல்லின், பந்தர்ப் பெயரிய மூதூர் தெண்கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க”. இவ்வாறு கூறுகிறபடியினாலே, சங்க காலத்திலே பந்தர் என்னும் ஊர் சேர நாட்டுக் கடற்கரையில் இருந்ததென்பதும் அவ்வூர்க் கடலில் முத்து குளிக்கப்பட்ட தென்பதும் தெரிகின்றன. இதே செய்தியை அரிசில்கிழார் என்னும் புலவரும் கூறுகிறார். பதிற்றுப்பத்து எட்டாம் பத்தில், பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னனை அரிசில்கிழார் பாடுகிறார். அதில் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களைக் கூறுகிறார். “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” என்று (8-ஆம் பது, 4-ஆம் செய்யுள்) கூறுகிறார். இதில், கொடுமணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்குப் பேர்பெற்றிருந்ததும், பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்குப் புகழ் பெற்றிருந்ததும் கூறப்படுகின்றன. வடமொழியில் அர்த்தசாஸ்திரம் என்னும் பொருளியல் நூலை எழுதிய கவுடல்லியர், அந்நூலில் சேரநாட்டு முத்துக்களைப் பற்றியும் கூறுகிறார். புகழ் பெற்ற அர்த்தசாஸ்திரத்தை எழுதிய கவுடல்லியர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே மகத நாட்டை அரசாண்ட சந்திரகுப்த மௌரியனின் (அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்) அமைச்சராக இருந்தார் என்பது யாவரும் அறிந்த தொன்றே. அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் பகுதியில் பதினோராம் அதிகாரத்தில் பல தேசத்து முத்துக்களைப் பற்றிக் கூறுகிறார். முதலில் தாம்ரபர்ணிகம், பாண்டிய கவாடகம் என்னும் முத்துக்ளைக் கூறுகிறார். இப் பெயர்களிலிருந்தே இவை பாண்டிய நாட்டில் உண்டான முத்துக்கள் என்பதை அறிகிறோம். பிறகு பாஸிக்யம் என்னும் முத்தைக் கூறுகிறார். பாஸிக்யம் என்பது மகத நாட்டில் பாடலிபுரத்துக்கு அருகில் உண்டான முத்து. பின்னர் கௌலேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌலேயம் என்பது இலங்கையில் ஈழ நாட்டில் உண்டான முத்து. அதன் பிறகு கௌர் ணேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌர்ணேயம் என்பது சேரநாட்டிலே மேற்குக் கடலிலே உண்டான முத்து. கவுடலிய அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ் - மலையாளத்தில் உரை எழுதிய ஒருவர் இதைப்பற்றி நன்றாக விளக்கி எழுதியுள்ளார். (பெயர் அறியப்படாத இந்த உரையாசிரியர், தமிழிலிருந்து மலையாள மொழி தோன்றிக்கொண்டிருந்த காலத்தில் இருந்தவர். ஆகவே, இவருடைய உரையில் தமிழ் - மலையாளச் சொற்கள் அதிகமாகக் கலந்துள்ளன.) இந்த உரையாசிரியர் கௌர்ணேயம் என்னும் சொல்லை இவ்வாறு விளக்குகிறார். “கௌர்ணேயமாவிது மல நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணி யாற்றிலுளவாமவு’ என்று விளக்கம் கூறியுள்ளார். இதைத் தமிழில் சொல்லவேண்டுமானால், “கௌர்ணேயம் ஆவது மலை நாட்டில் முரசி ஆகிய பட்டினத்தின் அருகே சூர்ணி ஆற்றில் உண்டாவது” என்று கூறவேண்டும். இந்த உரையில் முரசி பட்டினமும் சூர்ணியாறும் கூறப்படு கின்றன. இவற்றை விளக்கவேண்டும். முரசி என்பது முசிறி, புறநானூறு முதலிய சங்க நூல்களிலே கூறப்படுகிற முசிறிப்பட்டினம் இதுவே. யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து தங்கிய துறைமுகங்களில் இதுவும் ஒன்று. யவனராகிய கிரேக்கர் முசிறியை (Muziris) என்று கூறினர். முசிறியை வடமொழியாளர் முரசி என்றும் மரிசி என்றும் வழங்கினார்கள். பிற்காலத்தில் மலையாளிகள் முசிறியை முயிரி என்று வழங்கினார்கள். முயிரி, முயிரிக்கோடு என்றும் கூறப்பட்டது. (முசிறிக்கு அருகிலே சேர மன்னனின் தலைநகரமான வஞ்சிமா நகர் இருந்தது. வஞ்சி, வஞ்சிக்களம் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் திருவஞ்சிக்களம், திருவஞ்சிக்குளம் என்று மருவிற்று) முசிறி பிற்காலத்தில் கொடுங்கோளுர் என்றும், பின்னர் கொடுங்ஙல்லூர் என்றும் பெயர் பெற்றது. சூர்ணியாறு என்பது பெரியாற்றின் வடமொழிப் பெயர். மருத்விருத ஆறு என்றும் இதற்குப் பெயர் உண்டு. பெரியாற்றைப் பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. “நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப” என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23) எனவே, இவ் வுரையாசிரியர் கூறுகிற முரசி, முசிறித் துறைமுகம் என்பதும் சூர்ணியாறு பெரியாறு என்பதும் ஐயமற விளங்குகின்றன. பெரியாறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகிலே சேரனுடைய தலை நகரமான வஞ்சியும் அதற்கு அருகில் முசிறியும் இருந்தன. வஞ்சிமா நகரத்துக்கு அருகில் இருந்தவை கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள். பந்தர் என்னும் ஊரிலேதான் முத்துக் குளிக்கும் சலாபம் இருந்தது. பந்தர் என்னும் பெயர் அரபிச் சொல். பந்தர் என்னும் அரபிச் சொல்லுக்கு அங்காடி அல்லது கடைத்தெரு என்பது பொருள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே யவனராகிய கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிகம் செய்ய வந்தார்கள். யவனர் வருவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே அராபியர் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந் தனர். அவர்கள் இந்த இடத்துக்குப் பந்தர் என்று பெயர் சூட்டியிருக்கலாம். சேர நாட்டில் உண்டான முத்துக்குக் கௌர்ணேயம் என்று ஏன் பெயர் வந்தது? இது பற்றி ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. கௌர் ணேயம் என்பது சௌர்ணேயம் என்னும் சொல்லின் திரிபு என்று தெரிகிறது. சௌர்ணேயம் என்றால், சூர்ணியாற்றில் தோன்றியது என்பது பொருள். சூர்ணியாறு கடலில் கலக்கிற இடத்தில் உண்டானபடியினால் அந்த முத்துக்களுக்குச் சூர்ணேயம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். வடமொழி இலக்கணப்படி சூர்ணேயம் சௌர்ணேயம் ஆயிற்று. பிறகு சகரம் ககரமாக மாறிற்று. சேரம் கேரம் (சேரலன் - கேரளன்) ஆனது போல. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் கடலில் உண்டாகிற முத்துக்குத் தாம்ரபர்ணிகம் என்று பெயர் ஏற்பட்டது போல, சூர்ணி ஆறு கடலிற் கலக்கிற புகர்முகத்தில் உண்டான முத்துக்குச் சௌர்ணேயம் என்று பெயர் உண்டாயிற்று என்று கருதலாம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப்படுகிற கவுடல்லியர் தமது அர்த்தசாஸ்திரத்திலே சேர நாட்டில் முத்து உண்டா னதைக் கூறியுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப் படுகிற கபிலரும், அரிசில் கிழாரும் சேர நாட்டில் பந்தர் என்னும் பட்டி னத்தில் முத்துக் குளிக்கும் இடம் இருந்ததைப் பதிற்றுப்பத்தில் கூறி யுள்ளனர். இவற்றிலிருந்து இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேர நாட்டில் முத்துச் சலாபம் இருந்த செய்தி தெரிகிறது. சேர நாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிமா நகரமும் (இதற்குக் கருவூர் என்றும் கரூர்ப்பட்டணம் என்றும் வேறு பெயர் உண்டு. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இப்போது இருக்கின்ற கருவூர் (கரூர்) அன்று கருவூர்ப்பட்டினமாகிய வஞ்சிமாநகரம்) சேர நாட்டின் துறைமுகப்பட்டினமாக இருந்த முசிறியும் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களும் அடுத்தடுத்துக் கடற்கரை ஓரமாக இருந்தன. கொடுமணம் பந்தர் என்னும் ஊர்கள் வஞ்சிமா நகரத்துடன் இணைந்திருந்த ஊர்கள் என்று தெரிகின்றன. இந்தப் பட்டினங்களும் ஊர்களும் பிற்காலத்தில் மறைந்துவிட்டன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி. 1341-ல் பெய்த பெரு மழையினாலே, பெரியாறு வெள்ளம் தாங்கமாட்டாமல் கரைவழிந் தொடிப் பல இடங்களை அழித்துவிட்டது. அதனால், பழைய நில அமைப்புகள் மாறியும் அழிந்தும் போகப் புதிய காயல்களும் கழிகளும் தோன்றிவிட்டன. சேர நாட்டின் தலைநகரமான பழைய வஞ்சி மூதூர் (கருவூர்), இப்போது கொடுங்ஙலூர் (ஆங்கிலத்தில் cranganur) என்னும் பெயருடன் ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. பழைய துறை முகமாகிய முசிறி மறைந்து போயிற்று. பிற்காலத்தில் கடற்கரை ஓரமாகப் புதிதாக அமைந்த நீர்நிலைப் பகுதியில் இப்போது கொச்சி துறைமுகம் காட்சியளிக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்தன. ஆனால், பழைய இலக்கியங்கள் பழைய சிறப்புக்களை நினை வுறுத்திக் கொண்டிருக்கின்றன. *** 18. தமிழ் நாட்டில் யவனர்** ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில், மத்தியதரைக் கடல் ஓரத்தில் கிரேக்க நாடு இருக்கிறது. கிரேக்க நாட்டுக் கிரேக்கர்கள் பண்டைக் காலத்திலே வீரத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் கலையிலும் சிறப்படைந்திருந்தார்கள். அவர்கள் வளர்த்த சிற்பக் கலைகள் (கட்டிடக் கலையும் உருவங்களை அமைக்கும் கலையும்) உலகப் புகழ்பெற்றவை. அதுபோலவே அவர்கள் மரக்கலம் அமைப்பதிலும் அவற்றைக் கடலில் ஓட்டிக் கப்பல் பிரயாணம் செய்வதிலும் பேர் பெற்றிருந்தார்கள். கிரேக்க நாட்டின் ஒரு பகுதிக்கு அயோனியா (Ionia) என்று பெயர். அயோனிய கிரேக்கருக்கு அயோனியர் என்று பெயர். அயோனியர், தமிழில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். ஆகவே யவனர் என்றார் கிரேக்கர் என்பது பொருளாகும். சுதந்தரமாக நல் வாழ்வு வாழ்ந்திருந்த யவனர்களாகிய கிரேக்கர்கள், பிற்காலத்தில், அவர்களுக்குப் பக்கத்து நாடாகிய இத்தாலி நாட்டுக்குக் கீழடங்கி யிருந்தார்கள். இத்தாலி நாட்டின் உரோம சாம்ராச்சியம் ஒருகாலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் மிகப் புகழ் பெற்றிருந்தது. கிரேக்கராகிய யவனர், உரோத சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கியபோதிலும், கல்வி, பண்பாடு, கலை முதலியவற்றில் முன்போலவே மேம்பட்டிருந்தார்கள். உரோமர்கள், கப்பல் படைகளை வைத்திருந்தது உண்மைதான். ஆனாலும், அவர்கள் கிரேக்கர்களாகிய யவனர்களைப் போலச் சிறந்த நாவிகர்கள் அல்லர். உரோம சாம்ராச்சிய காலத்திலும் யவனர்கள்தாம் கப்பல் வாணிகராகவும் நாவிகர்களாகவும் திகழ்ந்தார்கள். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னனான மகா அலக் சாந்தர் என்பவன் கிழக்கே சிந்துநதிக்கரை வரையில் உள்ள நாடுகளை வென்றான். அவன், எகிப்து தேசத்திலே நீலநதி மத்திய தரைக் கடலில் கலக்கிற இடத்திலே அலக்சாந்திரியம் என்னும் துறைமுகத்தை அமைத்தான். அந்தத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்று விளங்கிற்று. கிரேக்கராகிய யவனர்கள், அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினத்திலே குடியேறியிருந்தார்கள். ..... ஆனால், பெரிய சாம்ராச்சியத்தை வைத்திருந்த உரோமர்கள் அராபியரின் வாணிகத்தைத் தடுத்துச் செங்கடல் துறைமுகங்களைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் கீழ்க் கொண்டு வந்தார்கள். அதன் காரணமாக, உரோம சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கிய துறைமுகப் பட்டினங்களின் மேற்பார்வைக்காரர்களாகச் சில அலுவலாளர்களை நியமித்தார்கள். அவ் அலுவலாளர்கள் பெரும்பாலும் கிரேக்கராகிய யவனர்களாக இருந்தார்கள். யவனர்கள் ஆப்பிரிக்காக் கண்டத்திற்கும் அரபி தேசத்துக்கும் இடையில் உள்ள கடலை எரித்ரை கடல் (maris Ery thraei) என்று பெயரிட்டனர். எரித்ரை கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, யவனர்கள் அரபி நாட்டின் கடற்கரை ஓரமாகவும் பாரசீக வளைகுடாவின் கடற்கரை ஓரமாகவும் வந்தார்கள். பிறகு, இந்தியா தேசத்தின் மேற்குக் கரை ஓரமாக உள்ள துறைமுகப்பட்டினங் களுக்கு வந்தார்கள். அவர்கள் பாரசீக வளைகுடாவிற்கும், மேற்குக் கடலுக்கும் (அரபிக் கடல்) எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டார்கள். அரபிக் கடலைக் கடந்து குமரிக் கடலுக்கும் (இந்து மகா சமுத்திரம்), கீழ்க்கடலுக்கும் (வங்காள விரிகுடா) வந்தார்கள். யவனர்கள் இந்தக் கடல்களுக்கும் எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள். அக்காலத்தில் யவனர்கள் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணம் செய்யவில்லை; கரை ஓரமாகவே பிரயாணம் செய்தார்கள். கரை ஓரமாகக் கப்பல் பிரயாணம் ......... நெடுங்காலம் ஆயிற்று. ஆனால், இந்தியர்களும் அராபியரும் நடுக்கடலில் பாய் விரித்துக் கப்பல் ஓட்டிப் பிரயாணம் செய்தார்கள். இவர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணத்தை விரைவாக முடித்துக்கொள்ளும் இரகசியத்தை யவனர்கள் ஆதிகாலத்தில் அறியவில்லை. ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில், இப்பலஸ் (Hippalus) என்னும் பெயருள்ள யவனக் கப்பல் நாவிகன், தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியினால் அரபிக்கடலின் நடுவில் பிரயாணம் செய்து வெகுவிரையில் சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான். அது முதல், யவனர்களும் நடுக்கடலில் கப்பல் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் பருவக்காற்றுக்கு இப்பலஸ் என்பவன் பெயரையே பெயராக வழங்கினார்கள். இப்பலஸ் பருவக் காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவன வியாபாரம் தமிழ்நாட்டுடன் அதிகமாவும் விரைவாகவும் நடைபெற்றது. யவனர்கள் தமிழ்நாட்டுடன் கப்பல் வாணிகத் தொடர்பு கொண்டது கி.மு. முதல் நூற்றாண்டில். இந்த வியாபாரத் தொடர்பு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நீடித்திருந்தது. அதாவது, கடைச் சங்க காலத்தில், கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் சேர சோழ பாண்டிய நாடுகளில் அக்காலத்தில் இருந்த முக்கியமான துறைமுகப் பட்டினங்களில் வந்து வியாபாரம் செய்தார்கள். .................... மொழி தோன்றவில்லை. தமிழ் மொழி வழங்கிற்று. சேரநாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிப் பட்டினத்துக்கு அருகில் இருந்த முசிறிப் பட்டினம், தொண்டி, வக்கரை முதலிய துறைமுகங்களிலும், பாண்டி நாட்டுலிருந்த குமரித் துறைமுகம் கொற்கைத் துறைமுகம் முதலிய துறைமுகங்களிலும், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறைமுகங்களிலும், தொண்டை நாட்டுச் சேரபட்டினம் (மாவிலங்கை) முதலிய துறைமுகங்களிலும் யவனர்கள் கப்பலில் வந்து வியாபாரம் செய்தார்கள். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள இலங்கையுடனும் வியாபாரம் செய்தார்கள். தமிழரின் கப்பல்களும், பாரத நாட்டு ஏனையோரின் கப்பல் களும், அராபியரின் கப்பல்களும் அக்காலத்தில் நடுக்கடலிலும் செல்லத்தக்க தரமுடையனவாக இருந்த போதிலும், அவை யவன ருடைய கப்பல்களைப் போலச் சிறந்த வேலைப்பாடுடை யவை யல்ல. யவனக் கப்பல்கள் நல்ல வேலைப்பாடும் உறுதியும் அழகும் உள்ளன வாக இருந்தன. யவனரின் நல்ல கப்பல்களைக் கண்ட சங்கப் புலவராகிய தாயங்கண்ணனார் என்னும் புலவர் “யவனர் தந்த வினை மாண் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (புறம். 149). மற்றொரு சங்கப் புலவராகிய நக்கீரர் என்னும் புலவரும் “யவனர் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (நெடுநல்வாடை). யவனர்கள் தமிழ்நாட்டிலிருந்து முக்கியமாக மிளகு, முத்து, நவமணிகள், அகில், சந்தனக்கட்டை முதலிய பொருள்களையும், இலங்கையிலிருந்து இலவங்கம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் முதலிய .............. மாற்று வியாபாரம் செய்யவில்லை. பொன்னைக் கொடுத்துப் பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். இதனால் உரோமாபுரியிலிருந்து நாணயங்கள் நமது நாட்டில் குவிந்தன. உரோமா புரியிலிருந்த அறிஞர்கள், தங்கள் நாட்டிலிருந்து வாணிகத்தின் மூலமாகத் தமது நாட்டுப் பொன் அயல் நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி அக்காலத்தில் முறையிட்டிருக்கிறார்கள். யவனர்கள் வியாபாரத்தின் பொருட்டுக் கொண்டுவந்த உரோம நாட்டு நாணயக் குவியல்கள், சமீப காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இலங்கையிலும் பூமியி லிருந்து தோண்டி எடுக்கப்பட்டன. தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலே யவன வியாபாரிகள் தங்கியிருக்க விடுதிகள் இருந்தன. அன்றியும், யவன வீரர்கள் பாண்டியனுடைய மதுரைக் கோட்டை வாயில்களைக் காவல் காத்தனர் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரம், நெடுநல்வாடை முதலிய நூல்களி லிருந்து அறிகிறோம். சங்கச் செய்யுளில் காணப்படாத செய்தியொன்று அண்மைக் காலத்தில் தெரியவந்தது. அது, புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் யவனர்களின் பண்டகசாலை இருந்தது என்பதாகும். பிரெஞ்சு நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் ஒருவர் தற்செயலாக அரிக்கமேட்டில் யவனர்களின் பண்டக சாலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பிறகு தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்தை நன்கு தோண்டிப் பார்த்தனர். அங்கு யவனர்கள் வைத்திருந்த பீங்கான்களும் மட்கலங்களும், பிராமி எழுத்து எழுதப்பட்ட பானை ஓடுகளும் பிறபொருள்களும் காணப் பட்டன. இந்த .................. யவனர்களின் பண்டகசாலை இருந்த செய்தி அறியப்பட்டது. (Arikamedu : An Indo-Roman Trading station on the east coast of India. P. 17-24. Ancient India No.2) அகஸ்தஸ் ஸீஸர் என்னும் உரோமச் சக்கரவர்த்தியின் பேரால், முசிறித் துறைமுகத்தின் அருகில் யவனர்கள் ஒரு கோயிலை அமைத்திருந்தார்கள். அந்தக் கோயிலும் முசிறித் துறைமுகமும், பெரியாற்று வெள்ளப்பெருக்கினால் அழிந்துவிட்டன. யவனர்களின் ஓதிம விளக்குகளும், பாவை விளக்குகளும் தமிழ்நாட்டுச் சீமான்களின் மாளிகைகளில் அக்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட செய்தியைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் யவனரின் தமிழ்நாட்டு வாணிகத் தொடர்பு நின்றுவிட்டது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில், ஏறக்குறைய முன்னூறு ஆண்டு களாக யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினாலே, யவன (கிரேக்க) மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு நாட்டார் மற்ற நாட்டாருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் மொழிச் சொற்கள் மற்ற மொழியுடன் மற்ற மொழியுடன் கலப்பது இயற்கை. இந்த இயற்கை, இறந்துபோய் வழக்கிலில்லாத மொழியைவிட, பேச்சு வழக்கில் உள்ள மொழிகளுக்கு மிகவும் பொருத்தமாகும். தமிழ் மொழியில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் எவை என்று இன்னும் நன்கு **** பேச்சு வழக்கில் கலந்த கிரேக்க மொழிச் சொற்கள் பல இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொகள் முழுவதும் ஆராயப்படவில்லை. இப்போது தெரிந்தவரையில், தமிழில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் இரண்டே. அவை மத்திகை, சுருங்கை என்பன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி (சவுக்கு) என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். சுருங்கை என்பது நகரத்துக் கழிவுநீர் (சாக்கடை நீர்) போவதற்காகப் பூமியில் அமைக்கப் படுகிற கால்வாய் என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். இவ் விரண்டு சொற்களும் சங்க காலத்துத் தமிழ் நூல்களிலும் பிற்காலத்துத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. ஓரை என்னும் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லி லிருந்து தமிழ் மொழியில் புகுந்தது என்று சிலர் கருதுகிறார்கள். இது பற்றிக் கருத்து வேற்றுமை உண்டு. ஓரை என்னும் சொல், வட மொழியில் உள்ள யவனிகா என்னும் சொல்லைப் போல ஓசையினால் கிரேக்க மொழி போல மயங்கச் செய்கிற ஒரு சொல்லாகும். நாடக மேடைகளில் கட்டப்படுகிற திரைச்சீலைக்கு வடமொழியில் யவனிகா என்றுபெயர். யவன நாட்டிலிருந்து வந்த திரைச் சீலை யாகையால், இதற்கு யவனிகா என்று பெயர் வந்தது. பண்டைக் காலத்தில் யவனர்கள் (கிரேக்கர்கள்) தமது நாடக மேடைகளில் திரைச்சீலை உபயோகப் படுத்தவில்லை. திரைச்சீரை உபயோகப்படுத்தப்படாத நாட்டிலிருந்து திரைச்சீலை வட மொழியாளருக்கு வந்தது என்றால் அதை எப்படி நம்புவது? தமிழர் நாடக மேடைகளில் உபயோகித்து வந்த திரைச் சீலைக்கு எழினி என்பது பெயர். எழினி என்னும் சொல்லை வடமொழி யாளர் உச்சரிக்க முடியாமல் அதை யவனிகா என்று உச்சரித்தனர் என்று தோன்றுகிறது. யவனர் என்னும் சொல்லும் யவனிகா என்னும் சொல்லும் ஓசையினால் ஒத்திருப்பதனால், யவனிகா என்பது கிரேக்க மொழிச் சொல் என்று மயங்குவதற்கு இடமாயிருப்பது போலவே, ஓரை என்னும் தமிழ்ச் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல்லுடன் ஓசையால் ஒத்திருப்பது கொண்டு அதனைச் சிலர் கிரேக்க மொழிச் சொல் என்று கருதுகிறார்கள். இதுபற்றி இப்போது ஆராய்ந்தால் இடம் பெருகும் என்னும் அச்சத்தினால் ஆராயாது விடுகிறோம். கடைச் சங்க காலத்தின் பிற்பகுதியிலே, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக யவனர்கள் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும், அவ்வாணிகத்தைக் கடல் வழியாகச் செய்தனர் என்பதும் இக்கட்டுரையினால் ஒருவாறு விளக்கப்பட்டன.\ *** 19. வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள்* முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் பழனியும் முக்கியமான இடம். மற்ற படைவீடுகளைப் போலவே பழனியும் மிகப் பழமையானது. சங்க காலத்திலே பழனி, பொதினி என்று பெயர் பெற்றிருந்தது. பொதினி என்னும் பெயர் பிற்காலத்தில் பழனி என்று மருவி வழங்குகிறது. பழனி (பொதினி)யைச் சூழ்ந்திருந்த நாடு அந்தக் காலத்தில் ஆவிநாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. ஆவி நாட்டையரசாண்ட அரசர் ஆவியர் என்றும் வையாவிக்கோ என்றும் வேள் ஆவி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மாமூலனார், வேள் ஆவியரசரையும் அவர்களுடைய பொதினியையும் கூறுகிறார். “வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அறுகோட் டியானைப் பொதினி (அகம். 1 : 1-4) என்றும், “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி (அகம். 61: 15-16) என்றும் அவர் கூறுகிறார். ஆவி நாட்டில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை நக்கீரர், ‘ஆவினன் குடி முருகன்’ என்று கூறுகிறார். (‘ஆவினன்குடி அசைதலும் உரியன்’. திருமுருகாற்றுப்படை, 176) பொதினி (பழனி)யும் வையாவி நாடும் இந்தக் காலத்திலே பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகாவில் இணைந்திருக் கின்றன. சங்க காலத்திலே இவை கொங்கு நாட்டைச் சார்ந்திருந்தன. பழைய கொங்குநாட்டின் தென்கோடியிலே வையாவி நாடும் பொதினி யும் அமைந்திருந்தன. கடைச்சங்க காலத்திலே வையாவி நாட்டை அரசாண்ட வேள் ஆவிக் கோக்களில் பேர்போன அரசன் பேகன் என்பவன். அவனை வையாவிக் கோப் பெரும் பேகன் என்றும் கூறுவர். வையாவிக் கோப்பெரும்பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான். புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவன் பொன்னையும் பொருளையும் வழங்கினான். ஆகவே கபிலர் அவனைக் “கைவண் ஈகைக் கடுமான் பேகன்” என்று கூறுகிறார். (புறம் 144). மேகம் சூழ்ந்து மழை பெய்கிறபோது மயில்கள் மகிழ்ச்சியினால் தோகையை விரித்து ஆடுவது இயல்பு. மேகத்தைக் கண்டால் மயில் களுக்கு மகிழ்ச்சியுண்டாகும். இந்த இயற்கையின்படி மயில் ஒன்று மழைகாலத்தில் தன் தோகையை விரித்து அசைந்து ஆடிற்று. அதனைக்கண்ட வையாவிக் கோப் பெரும்பேகன், அந்த மயில் குளிரினால் நடுங்கி வருந்துகிறது என்று கருதினான். கருதி, அந்த மயிலுக்குப் போர்வையை விரித்துப் போர்த்தினான். மகிழ்ச்சியினால் ஆடுகிற மயிலைக் குளிரினால் நடுங்குகிறது என்று கருதியது அவனுடைய அறியாமை என்று கருதுவதைவிட அவனுடைய வள்ளன்மையான அருள் உள்ளத்தைக் காட்டுகிறது என்று கருதுவது சிறப்பாகும். பாணர் அவனுடைய இந்தச் செயலைப் பாராட்டியுள்ளார். “மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான்பேகன்.” (புறம் 145.) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் தாம் பாடிய சிறுபாண் ஆற்றுப் படையில், பேகன் மயிலுக்குப் போர்வையளித்ததைக் கூறுகிறார். “வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்.” (சிறுபாண். 84-87) வையாவிக் கோப்பெரும்பேகனுக்குக் கண்ணகி என்ற பெயர் கொண்ட மனைவி ஒருத்தியிருந்தாள். சங்க காலத்திலே கண்ணகி என்னும் பெயர் மகளிர்க்குப் பரவலாக வழங்கப்பட்டது. கண்ணகி என்பது கண்ணழகி என்பதன் திரிபு. மகளிரின் கண் அழகைச் சுட்டுகிற பெயர்களை மகளிர்க்குச் சூட்டுவது வழக்கம். இந்த வழக்கம் அக்காலத்திலும் இக் காலத்திலும் இருந்து வருகிறது. கண்ணகி (கண்ணழகி), நக்கண்ணை, காமக்கண்ணி, கயற்கண்ணி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அஞ்ச னாட்சி முதலான பெயர்களைச் சூட்டுவது அக்காலத்தும் இக்காலத்தும் உள்ள மரபு. கோவலனுடைய மனைவியின் பெயரும் கண்ணழகியே. வையாவிக் கோப் பெரும் பேகன் தன்னுடைய மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியோடு வாழ்ந்து வந்தான். இதனை யறிந்த புலவர்கள் வள்ளலாகிய இவனிடஞ் சென்று இவனுடைய மனைவியோடு சேர்ந்து வாழும்படி வேண்டினார்கள். கண்ணகி காரணமாக வையாவிக் கோப் பெரும்பேகனைப் பெருங்குன்றூர் கிழார் (புறம் 146) கபிலர் (புறம் 143) பாணர் (புறம் 144, 145) அரிசில்கிழார் (புறம் 146) முதலானோர் பாடினார்கள். வையாவி நாட்டு அரசர்களில் பேர் போன இன்னொரு வேள் அரசன் பெயர் பதுமன் என்பது. இவனை வேள் ஆவிக் கோமான் பதுமன் என்றுங் கூறுவர். வையாவிக் கோமான் பதுமனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவி என்று பெயரிட்டான். அந்தப் பெண்களைச் சேர அரசர் குலத்தில் மணஞ் செய்து கொடுத்தான். மூத்த மகளைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இளைய மகளைப் பெறையர் என்னும் சேர மன்னர் மரபைச் சேர்ந்த செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். செல்வக் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டையரசாண்டான். குடக்கோ நெடுஞ்சேர லாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் தாயாமி முறைத் தமயன் தம்பியர் ஆவர். வையாவிக்கோ பதுமனுடைய மகளிரான தமக்கை தங்கையரை இந்தத் தமயன் தம்பிமார் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். எனவே இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு பெண்களும் இரண்டிரண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அவர்களுடைய பெயர் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் (4-ம் பத்தின் தலைவன்), ஆடுகோட்பாடுச் சேரலாதன் (6-ம் பத்தின் தலைவன்), பெருஞ்சேரல் இரும்பொறை (8-ம் பத்தின் தலைவன்) குட்டுவன் இரும்பொறை என்பவை. இவர்களுடைய வழிமுறை கீழே காட்டப்பட்டுள்ளது. வேள் ஆவிக் கோமான் பதுமன் இவ்வாறு, வேள் ஆவிக் கோமான் பதுமனுடைய இரண்டு பெண் களுக்கு நான்கு அரசகுமாரர்கள் பிறந்தனர். ஆனால், பதுமனுடைய மூத்த மகளை மணஞ் செய்திருந்த குடக்கோ நெடுஞ்சேரலாதன் இன்னொரு மனைவியையும் மணஞ் செய்திருந்தான். அந்த மனைவி சோழஅரசன் மகளான நற்கோணை என்பவள். நற்சோணைக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகவே, குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரிடத்திலும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். நற் சோணைக்குப் பிறந்த மக்கள், தமிழக வரலாற்றில் புகழ் பெற்றவனான செங்குட்டுவனும் தமிழில் ஆதிகாவியத்தை இயற்றிப் புகழ் பெற்றவரான இளங்கோவடிகளும் ஆவர். குடக்கோ நெடுஞ் சேரலாத னுடைய வழிமுறையைக் கீழே காண்க. குடக்கோ இவர்களில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் (மாற்றாந்தாய் வழித்) தமயன் தம்பியர் ஆவர். தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் இவர்களுக்குத் தாயாதிச் சகோதரர் ஆவர். இந்தச் சகோதரர் எல்லோரும் ஏறத்தாழச் சமகாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்கள். இவர்களில் இளங்கோவடிகளும் குட்டுவன் இரும்பொறையும் தவிர மற்றவர் எல்லோரும் பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்குத் தலைவர் ஆவர். இவர்களில் அதிக காலம் அரசாண்டவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் ஐம்பத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவனுடைய மற்றச் சசோதரர்கள் எல்லோரும் இவனைவிடக் குறைந்த காலம் அரசாண்டார்கள். இவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு ஆண்டும் தாயாதித் தமயனான பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு ஆண்டும் அரசாண்டார்கள். இவர்கள் எல்லோரையும்விட அதிகக் காலம் (55 ஆண்டு) அரசாண்டவன் செங்குட்டுவன் ஒருவனே. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். அவன் விழாச் செய்தது அவனுடைய ஐம்பதாம் ஆட்சி ஆண்டில் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த விழாவைச் சிறப்புச் செய்ய அயல் நாடுகளிலிருந்து சில அரசர்கள் வந்திருந்தனர் என்றும் அவர்களில் இலங்கை அரசனான கயவாகுவும் (கஜபாகுவும்) ஒருவன் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு (கஜபாகு) வேந்தன்’ கி.பி. 171 முதல் 193 வரையில் இருபத்திரண்டு ஆண்டு இலங்கையை அரசாண்டான் என்று மகா வம்சம் என்னும் நூல் கூறுகிறது. எனவே, கஜபாகுவும் செங்குட்டு வனும் சமகாலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றனர். கஜபாகு ஏறத்தாழ கி.பி. 175-ல் வஞ்சிமா நகரத்துக்கு வந்து பத்தினி விழாவைச் சிறப்புச் செய்தான் என்று கொள்வோமானால், அந்த ஆண்டு செங்குட்டுவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டாக அமைகிறது. செங்குட்டுவன் 55-ஆண்டு ஆட்சி செய்தபடியால், அவன் கி.பி. 175க்குப் பிறகு ஐந்து ஆண்டு ஆட்சி செய்து கி.பி. 180-ல் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எனவே, செங்குட்டுவன் ஏறத்தாழ கி.பி. 125 முதல் 180 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இதில் இவனுடைய இளவரசுக் காலமும் சேர்ந்தது. செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன் ஐம்பத் தெட்டு ஆண்டு அரசாண்டான். ஆகையால் அவன் ஏறத்தாழ கி.பி. 72 முதல் 130 வரையில் அரசாண்டிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பெண் கொடுத்த மாமனாகிய வேள் ஆவிக்கோ பதுமன் அவனைவிட மூத்தவனான படியால் அவன் ஏறத்தாழ கி.பி. 20 முதல் 80 வரையிலும் வாழ்ந்தவனாதல் வேண்டும் என்று கருதலாம். ஆகவே வேள் ஆவிக்கோ பதுமன் கி.பி. முதல் நூற்றாண்டிலும், அவனுடைய மருமகனான நெடுஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து இரண்டாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலும், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலும் வாழ்ந்தவர்கள் எனக் கருதலாம். வையாவிக்கோ மன்னர்களைப் பற்றி இவ்வளவுதான் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அவர்கள், சங்க காலத்தில் கொங்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்திருந்த வையாவி நாட்டை அரசாண் டார்கள் என்றும் சேர அரசரோடும் கொங்குச் சேரரோடும் உறவு கொண்டிருந்தனர் என்றும் தெரிகின்றனர். சங்க காலத்துக்குப் பிறகு வையாவி நாடும் பொதினி நகரமும் பாண்டியர் ஆட்சிக்குட் பட்டுப் பாண்டிய நாட்டோடு இணைந்துவிட்டது. கடைச்சங்க காலத்தில் பொதினி என்று பெயர் பெற்றிருந்த நகரம் இப்போது பழனி என்று புகழ்பெற்று விளங் குகிறது. இந்த வரலாறுகளைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். ***